அருணாசலக்கவிராயர் எழுதிய
குலோத்துங்கசோழன் கோவை

kulOttungka cOzan kOvai
of aruNAcalak kavirAyar
In tamil script, unicode/utf-8 format

அருணாசலக்கவிராயர் எழுதிய
குலோத்துங்கசோழன் கோவை

Source
"குலோத்துங்கசோழன் கோவை"
மதுரைத் தமிழ்ச்சங்கம் நூற்பரிசோதகர்
மு. ரா. அருணாசலக்கவிராயர் செய்த அரும்பதவுரையுடன்
மதுரை ஜில்லா முறையூர் ஸ்ரீமாந் பழ. சி. சண்முகஞ்செட்டியார்
அவர்கள் பொருளுதவியால்
மதுரை வேகபாநு அச்சியந்திரசாலையில்
பதிப்பிக்கப்பெற்றது.
சாதாரண வருடம் --- ஆவணி மாதம் ---
இதன் விலை அணா 12. ] காப்பிரைட்
-------------------------


இப்புத்தகத்திலடங்கியவை.


சிவமயம்.

குலோத்துங்கசோழன் கோவை
1. முகவுரை


அறம் பொருள் இன்பம் வீடு என்னு நான்கனுளொன்றாகிய இன்பத்தைப்பற்றிய நூல்களுள் தலைமைவாய்ந்தது அகப்பொருட்கோவை யென்பது; அஃதாவது:- ** இருவகைப்பட்ட முதற்பொருளும் # பதினான்குவகைப்பட்ட கருப்பொருளும் $ பத்துவகைப்பட்ட வுரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளையாதிய அன்புடைக் காமப் பகுதியவாங் களவொழுக்கத்தினையுங் கற்பொழுக்கத்தினையுங் கட்டளைக் கலித்துறையால் ~ பன்னிரண்டகப் பாட்டுறுப்புந் தோன்றப் பல துறைகளமையப் பாடப்படும் அரிய பெரிய நூலாம். வாதுபாடில் வண்ணம்பாடு. யாவையும் பாடிக் கோவைபாடு என்னும் பழமொழியே யிதற்கொரு சான்றாதலறிக.

------------
** நிலம், காலம் என்பன.
# தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, வாச்சியம், யாழ், பண், தொழில் என்பன.
$ புணர்தல், புணர்தற்குக்காரணம், பிரிதல், பிரிதற்குக்காரணம்,
இருத்தல், இருத்தற்குக்காரணம், ஊடல், ஊடற்குக்காரணம், இரங்கல்,
இரங்கற்குக்காரணமென்பன.
~ திணை, கைகோள், கூற்று, கேட்போர்,
இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை என்பன.

அன்புடைக்காமத்தைக் கூறுதலால் இத்தகைய கோவை, ஐந்திணைக்கோவை யெனப்படும். "ஐந்திணை யென்ப தன்புடைக் காமம்” என்னும் அகப்பொருள் அகத்திணையியல் 4-ஆம் சூத்திரத்தாலறிக. இவ் ஐந்திணைக்கோவையுட் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைவரென்றும் காமத்தலைவரென்றும் இருவராவார்; அவ்விருவருள் பாட்டுடைத் தலைவருக்கு நாடு, நகரம், பெயர்முதலியவை கூறப்படும். காமத்தலைவருக்கு அவற்று ளொன்றேனுங் கூறப்படாது; அங்ஙனமே, குமார குலோத்துங்கசோழனைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்ட இக்கோவையென்னு நூல் மேற்சொல்லிய எல்லா இலக்கணங்களும் அமையப்பெற்றதுடன் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் விளங்கும் மோனை, எதுகை, சிலேடை, கற்பனையாதிய நயங்கள் முழுதும் பரக்க இருத்தலிற் படிப்பவர் மனத்தைப் பரவசப் படுத்தும் பான்மையுள்ளது.

இந்நூலை, திருநெல்வேலி வித்துவ சிகாமணியாகிய ஸ்ரீமான் நெல்லையப்பன் கவிராஜரவர்கள் அச்சியற்றி வெளிப்படுத்த நினைந்து சிலவருடங்கட்குமுன் தமது புத்தகசாலையிலிருந்த ஏட்டுப்பிரதியொன்றுடன், வேறுசில பிரதிகள் கொண்டு பரிசோதித்துத் தமது திருக்கரத்தாற்றீட்டிய புத்தகப்பிரதியொன்றையு மென்னிடங்கொ
டுத்தருளினார்கள். திருவருள் கூட்டாமையால் உடனே அச்சுப்பதிப்பதிற் சிறிது முயற்சிசெய்யாதிருந்தனன். தற்காலந் திருவருள் கூட்டியதனால் திருக்கயிலாச பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்திலிருந்து என்னுடைய பெரியபிதா அவர்களாகிய சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான் மு.கந்தசாமிக்கவிராயரவர்க ளெழுதிப்படித்த சுத்தப்பிரதியொன்றும், தென்காசி மகா-ள-ள-ஸ்ரீ முத்துக்குமாரசாமியா பிள்ளையவர்கள் ஏட்டுப்பிரதியொன்றுங் கிடைத்தமையால் எல்லாச் சுவடிகளையும் ஒப்புமைநோக்கி யாராய்ச்சிசெய்து உள்ளதை யுள்ளவாறே சுத்த பாடமாக்கிக் கல்லாதார் அறியும்பொருட்டு அரும்பதவுரை யொன்றெழுதிப் பிற்பாகத்திற்சேர்த்து மதுரைஜில் லா முறையூரில் கனவினுங் கற்றாருக்கே பெரும்பொருளீந்துவக்குங் கற்பகமாகிய ஸ்ரீமாதந் பழ. சி. சண்முகஞ்செட்டியாரவர்கள் பொருளுதவிபெற்று, அச்சியற்றி வெளிவரச்செய்தனன். ஏட்டுச் சுவடிகள் அதிகங் கிடையாமையா லதுபற்றிக் காலந் தாழ்க்காமல் பெற்றதுகொண்டு திருப்தியடையவோமென்னுங் கருத்தாலிங்ஙனம் விரைந்து பதிப்பித்து முடித்தேன்; இதினுந் திருத்தமான பாடங்கள் கிடைக்கப்பெற்ற கனவான்கள் எனக்குத் தெரிவித்து, அவற்றை யுதவுவார்களாயின் அவர்களுக்கு நன்றியறிதல் கூறி, இரண்டாம் பதிப்பில் அவ்வாறு பதிப்பித்து வெளிப்படுத்தும் பேரவாவுடையனாயிருக்கின்றேன்.

இந்நூலாசிரியராவார் இன்னாரென்று நூலுள் எங்கேனுங் குறிப்பாகக் கூடக் காணவில்லை. கன்னபரம்பரையில் மகாகவியாகிய ஒட்டக்கூத்தரென்று பெரும்பாலார் கூறுகின்றனர். ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழதேவர் காலத்திலிருந்து அவருக்கும், அவர் மைந்தர் குலோத்துங்கசோழதேவர் காலத்திலும், அவர் மைந்தர் இராசராச சோழதேவர் காலத்திலுமிருந்து, அவ்விருவருக்குந் தனித்தனி யொவ்வோர் உலாப்பிரபந்தம் பாடியுள்ளார்; அம்மூன்றுலாப்பெற்ற மூன்றரசர்களது வழியில், சில தலைமுறைகளுக்குப்பின் றோன்றியவன் சங்கமராசனென்னும் சோழனாவான்; இவனுக்கு மைந்தராகிய நல்லமன், குமாரகுலோத்துங்கன், சங்கரன் என்னு மூவருளொருவனாகிய குமார குலோத்துங்கன் காலத்திலுமிருந்து, கூத்தர் இக்கோவை பாடினாரென்ப தொருசிறிதும் பொருந்தாமைகாண்க.

அற்றன்று. கூத்தரது இரண்டாவது உலாப்பெற்றவனும் விக்கிரமசோழன் மகனுமாகிய குலோத்துங்கசோழனே இப்பாட்டுடைத் தலைவனென்று கொண்டாலென்னையெனின்? குமாரகுலோத்துங்கனென்றுஞ், சங்கரன் முன்னோன் குலோத்துங்கனென்றும், (63) சங்கமராச குலோத்துங்கன் (2) என்றும் இந்நூலுட் பிரயோகங்கள் காணப்படுவனவாதலால், இப்பெயர்கள் விக்கிரமசோழன் மகனாகிய குலோத்துங்கசோழனுக் கியையாமைகாண்க; சங்கமராசன் மகனே இக்குமாரகுலோத்துங்கன் என்பதும், இவன் சங்கரசோழனது சகோதரனென்பதும், சங்கரசோழ னுலாவில்

என வருவனவற்றாலறிக. ஆதலின், கூத்தருலாப்பெற்ற குலோத்துங்க சோழனும் கோவைப்பிரபந்தம்பெற்ற குமார குலோத்துங்க சோழனும் ஒருவரல்லரென்பதற்கும் கோவை நூலாசிரியர் கூத்தரல்லரென்பதற்கும் ஐயமில்லை.

இவற்றை விரிவாகத் தெரியவேண்டுமேல், மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் மூன்றாந்தொகுதி 164-ஆம் பக்கமுதல் 170-ஆம் பக்கம் வரையும் செந்தமிழ்ப் பத்திராசிரியர் ஸ்ரீமத் ரா. இராகவையங்காரவர்கள் தக்க பிரமாணங்களோடு நன்காராய்ந் தெழுதியுள்ளார்கள்; ஆண்டுக்காண்க. இனி, "கோவையுலாவந்தாதிக் கொட்டக்கூத்தன்" எனக்கூறியதென்னையெனின்? அது புதுவைக்காங்கேயன் மேற் கூத்தர்பாடியதாகத்தெரியும் நாலாயிரக் கோவை பற்றியே என்க; இஃதறியாதார் மேற்கூறிய வாக்கியங்களைக் கொண்டு குமார குலோத்துங்கன் கோவையே கூத்தர்பாடியகோவையென்று கன்ன பரம்பரையில் வழங்கிவந்தனர் போலும், ஒருவாற்றானும் இந்நூலாசிரியர் இன்னாரென்பது தெரியவிலை. பலவாற்றானு நுணுகிய ஆராய்ச்சியுள்ள பேரறிவாளர்க ளெங்காவது இந்நூலாசிரியரின்னாரென்று தெரிந்து தயைகூர்ந்து எனக்குத்தெரிவித்தால் இரண்டாம் பதிப்பிலேவெளிப்படுத்தச் சித்தனாயிருக்கின்றேன்.
சுபம், சுபம், சுபம்.

இங்ஙனம்,
மு. ரா. அருணாசலக் கவிராயர்,
மதுரைத்தமிழ்ச்சங்க நூற்பரிசோதகர்.

சிவமயம்.

குலோத்துங்கசோழன் கோவை.
காப்பு.


நூல்.
முதலாவது: - களவியல்.


அஃதாவது-பொருளதிகாரத்துட் கூறப்பட்ட உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் பிறவுந் தம்முளொத்த பதினைந்தாண்டும் பத்துமாதமுஞ்சென்ற தலைவனும் பதினொராண்டும் பத்து மாதமுஞ்சென்ற தலைவியும் கொடுப்போரும் பிறருமின்றி யூழ்வயத்தாற் றாமேயெதிர்ப்பட்டுப் புணர்தற்றன்மை. இங்ஙனம் புணர்தல்- வேதத்துட்கூறிய எண்வகைமணத்துட் காந்தருவமணமாய்க் கைக்கிளை முதல் வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதலீறாகிய பதினேழு கிளீவித்தொகைகளையுடையது. அவை வருமாறு :--

முதலாவது-- கைக்கிளை.

அஃதாவது-தலைவன்மாட்டாவது தலைவிமாட்டாவது நிகழுமொரு தலைக்காமம்; அவற்றுளிது-தலைவன்பாற்படு மொருதலைக் காமமாய்க் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் என நான்குவகைப்படும்; அவை வருமாறு:-

காட்சி.

(இ--ள்.) தலைவன் தலைவியை ஒரு பூஞ்சோலையிடத்துக் காணுதல்.

ஐயம்.
(இ-ள்.) கண்டதலைவன் இவள் எந்த வுலகத்துப் பெண்ணோவென்று சந்தேகப்படுதலைக் கூறுதல்.

துணிவு.

(இ-ள்.) சந்தேகிக்கப்பட்ட தலைமகள் பாதம்பூமியிற் படிதலாலுங் கண்புடை பெயர்ச்சியாலும் பூலோகத்துப் பெண்ணெனத்தெளிந்து கூறுதல்.

குறிப்பறிதல்.

(இ-ள்.) தெளிந்ததலைமகன் தலைவியின்வேட்கை அவள் பார்வையாற் றன்னிடத்துள்ள தென்றறிதலைக் கூறுதல்.

1-கைக்கிளை முற்றிற்று.
---------

இரண்டாவது - இயற்கைப்புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவதுகூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க. அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்குவகைப்படும்; அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:-

இரந்துபின்னிற்றற் கெண்ணல்

(இ-ள்.) தலைவன் தலைவியை யாசித்துப் பின்னிற்றற்கு நினைத்தல்.

இரந்துபின் னிற்றல்.

(இ-ள்.) அங்ஙனமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே நிற்றல்.

முன்னிலை யாக்கல்.

(இ-ள்) தலைவிநிற்பது தன் காரியத்திற்குவேண்டுங் காரணமென்றெண்ணி அவளைத் தலைமகன் முன்னிலையாக்கி மொழிதல்.

மெய்தொட்டுப் பயிறல்.

(இ-ள்) தலைவன் தலைவி சரீரத்தினோருறுப்பைத் தீண்டிப் பழகுதல்; அஃதாவது: கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல்போலத் தோளைத் தொட்டுரையாடல்.


பொய் பாராட்டல்

(இ-ள்.)தலைமகன் தலைமகள்மாட் டுள்ளது மில்லதுங்கூறிப் புகழ்ந்து கொண்டாடுதல். ஆயின், உள்ளது கூறுதலும் பொய் பாராட்டலோவெனின்? அற்றன்று. மற்றென்னையெனின்? இல்லது கூறுவான் உள்ளதை விட்டு விடுவானல்லனென்க.

இதுவுமது.

இடம்பெற்றுத் தழால்.

(இ-ள்.) தலைவன் தலைவியைத் தழுவுதற்கு வாய்த்த இடத்தைக்கண்டு கூறுதல்.

வழிபாடு மறுத்தல்.

(இ-ள்.) இரந்துபின்னிற்றன் முதலாகப் பொய் பாராட்டலீறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவிமறுத்தல்.


இடையூறு கிளத்தல்.

(இ-ள்.) தலைவி வெட்கமுற்றுக் கண்ணை மூடிக்கொண்டு நிற்றலினா லெழுந்த துன்பத்தைக் கூறுதல்.

நீடுநினைந் திரங்கல்.

(இ-ள்.) புணர்ச்சியெய்தாமையா லிவளுள்ள மெஞ்ஞான் றியையுமோவென நெடுநேரந் தலைவனினைந்து தலைவியைப் பார்த்துக் கூறுதல்.

மறுத்தெதிர் கோடல்.

(இ-ள்.) முன் வழிபாடு மறுத்ததனை மறுத்துத்தலைவி தலைவன் கூறியசொல்லை யேற்றுக் கோடலைக் கூறுதல். போரேற்றா னென்பதற்குப் போரெதிர்ந்தானென் புழிப்போல எதிர்தல் – ஏற்றல்.

இதுவுமது.

வறிது நகைதோற்றல்.

(இ-ள்), தலைவி முகத்திலே சிறுநகை தோன்றுதல். வறிது – சிறிது.

இக்கவி உரைப்போருங் கேட்போரு மின்மையாற் கவிக் கூற்றென்று கொள்க.

முறுவற் குறிப்புணர்தல்.

(இ-ள்.) தலைவி சிறுநகையின் குறிப்பைத் தலைவனுணர்தல்.

முயங்குத லுறுத்தல்.

(இ-ள்.) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வற்புறுத்திக் கூறுதல்.

இதுவுமது

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைக் கலத்தலான் மகிழ்தல்.

புகழ்தல்.

(இ-ள்.) தலைவியினது நலத்தைத் தலைவன்வியந்து பாராட்டல்.

இப்பதினைந்து துறைகளுள், இரந்துபின்னிற்றற் கெண்ணல் முதல்நீடுநினைந்திரங்கலீறாகிய ஒன்பதினுள், வழிபாடு மறுத்த லொழிந்த எட்டும் வேட்கையுணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலொன்றும மறுத்தற்கும், மறுத்தெதிர் கோடலும் வறிதுநகை தோற்றலுமாகிய இரண்டும் உடன்படற்கும், ஏனையநான்குங் கூட்டத்திற்கு முரியன.

2-இயற்கைப்புணர்ச்சி முற்றிற்று.
-------------

மூன்றாவது-வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்; அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்; அவை: அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்ற லீறாகிய ஆறுவிரிகளையுடையன; அவை வருமாறு:-

அணிந்துழி நாணீய துணர்ந்து தெளிவித்தல்.

(இ-ள்.) புணர்ச்சியிடத்துத் தலைவி புனைந்த முத்தார முதலிய கொங்கையணி குழலணிகள் வேறுபட்டவற்றைத் தலைவன் றன் கையினால் வேறுபாடுதீரப் புனைந்துழித் தலைவி பாங்கியா லணியப்பட்ட அணிக்கு இவர் கையாலணியும் அணி வேறுபடுமென்றும் அதைப் பாங்கி யறியில் ஐயம் பிறக்குமென்றும் நாணுற்று வெட்கப்பட்டாளாக அதைத் தலைவனறிந்து தலைவியைத் தெளிவித்தல்


பெருநயப் புரைத்தல்.

(இ-ள்.) இனி, தலைவன் வருவானோ வாரானோவென்று தலைவி முகம் வேறுபட அதைத் தலைவன் குறிப்பாலுணர்ந்து தனது மிகுந்த காதலைக் கூறுதல்.

தெய்வத்திறம் பேசல்.

(இ-ள்.) மேற்கூறியதைத் தலைவி தெளியாதவளாகத் தலைவன் அவளூழ் வலியின் றிறத்தைக் கூறுதல்.

பிரியே னென்றல்

(இ-ள்.) தலைவன் பிரிவனென்னுங் கவற்சியால் தலைவி யுடல் விளர்ப்பக்கண்ட தலைவன் உன்னைவிட்டுப் பிரியமாட்டே னென்று கூறுதல்.

பிரிந்து வருகென்றல்.

(இ-ள்.) பிரியேனென்றது கேட்டு மகிழ்ந்த தலைவிக்குத் தலைவன் பின் பிரிந்து வருவேனென்று கூறுதல்.

இடமணித் தென்றல்.

(இ-ள்.) தலைவனூர் தூரத்திலுள்ளதோ? சமீபத்திலுள்ளதோ? வென்று தலைவி வருந்திய அதனைக் குறிப்பாற்கண்ட தலைவன் ஊரிருக்குமிட மிகச் சமீபத்திலுள்ளதென்று கூறுதல்.

இவற்றுள் முன்னையமூன்றும் ஐயந்தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கு முரியன.

3-வன்புறை முற்றிற்று.
--------

நான்காவது – தெளிவு.

அஃதாவது – தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்தாற்றுவது; இது – வகையும் விரியுமில்லாமனின்றது.

4 – தெளிவு முற்றிற்று.
____________

ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.

அஃதாவது – பிரிந்துபோகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக்கண்டு தலைவன்மகிழ்தல்; இது – வகையினறிச் செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லலும் பாகனொடு சொல்லலுமாகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-

செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்.

(இ-ள்.) புனர்ச்சிக் குறியிடத்தினின்றும் பெயர்ந்து செல்லா நின்ற தலைமகளது செலவைக்கண்டு தலைவன் றன்னெஞ்சொடு சொல்லுதல்.

பாகனொடு சொல்லல்.

(இ-ள்) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில் தலைவி செல்லுதலைக் காட்டிக் கூறுதல்.

5-பிரிவுழிமகிழ்ச்சி முற்றிற்று.
--------------------------------------------

ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.

அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது. அது - மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டுவகைப்படும். அவை: ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயாமோவென்றல் முதல் கண்படை பெறாது கங்குனோத லீறாகிய ஐந்து விரிகளை யுடையன;
அவை வருமாறு:-

ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது மாயமோவென்றல்.

(இ-ள்) தலைவியைப்பிரிந்த மாதர்கூட்டம் வந்து வழிபடுதலைக் கண்டு இம்மாதர் கூட்டத்துள்ளாளென்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ? வென்று தலைவன் மயங்கிக் கூறுதல்.

வாயில்பெற் றுய்தல்.

(இ-ள்) தலைவி உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதலைப் பார்த்துத் தலைவன் அப்பாங்கியைத் தூதாகப்பெற்று உய்வதாகக் கூறுதல். பாங்கி - பக்கத்திலிருக்கு முயிர்த்துணைவி.

பண்புபாராட்டல்.

(இ-ள்.) தலைவியின தழகைத் தலைவன் வியந்துகொண்டாடுதல். பண்பு - ஈண்டு அழகின்மேனின்றது.

பயந்தோர்ப்பழிச்சல்.

(இ-ள்.) தலைவியைப் பெற்றோரைத் தலைவன்வாழ்த்தல்.

கண்படைபெறாது கங்குனோதல்.

(இ-ள்.) அன்றிரவிலே தலைவி தந்த ஆசையால் நித்திரை பெறாது இருட்காலத்தைத் தலைவன் நொந்து கூறுதல்.

இவற்றுள் - முன்னையதொன்றும் மருளுற்றுரைத்தற்கும், பின்னைய நான்குந் தெருளுற்றுரைத்தற்கு முரியன.

6-பிரிவுழிக்கலங்கல் முற்றிற்று.

காட்சிமுதல் கண்படைபெறாது கங்குனோதலிறுதியாகக் கூறிய முப்பத்து மூன்று துறைகளும் முதல் நாள் நிகழ்ச்சியென்க.
------------

ஏழாவது--இடந்தலைப்பாடு.

அஃதாவது- இயற்கைப்புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந்தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:--

தந்ததெய்வந் தருமெனச்சேறல்.

(இ-ள்.) முன் கூட்டியவிதி யின்னுமவ்விடத்திற் சென்றாற் கூட்டுமெனத் தலைவன் சேறல்.

முந்துறக்காண்டல்.

(இ-ள்.) முன்போலத் தலைவியைத் தலைவன்காணுதல்.

முயங்கல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் புணர்தல்.

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் றலைவியைப் புகழ்ந்து கூறுதல்.

ஆயத் துய்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல்.

இவற்றுள் - தந்ததெய்வந் தருமெனச் சேறலொன்றுந் தெய்வந் தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங் கூடற்கும், ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டா நாள் நிகழ்ச்சி.

7- இடந்தலைப்பாடு முற்றிற்று.
-----------------

எட்டாவது - பாங்கற்கூட்டம்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித் தீராதென்றெண்ணி அவனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றதுவினாவல்

(இ-ள்.) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு இவ்வேறுபாடு வந்ததற்குக் காரண மென்னை யென்று கேட்டல்.

-------
* மௌவல் வாணகையென்றும் பாடம்.

தலைவ னுற்ற துரைத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் றனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல்.

கற்றறி பாங்கன் கழறல்.

(இ-ள்.) வேதாகமங்கள்யாவுங் கற்றறிந்த பார்ப்பனப் பாங்கன் தலைவனை யிடித்துக்கூறல். இடித்துக்கூறல் – உறுதிச்சொற் சொல்லுதல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

(இ-ள்.) பாங்கன் கூறிய உறுதிமொழியைத்தலைவன்மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

(இ-ள்.) அங்ஙனங்கூறிய தலைவனைப் பாங்கன் நிந்தித்துக் கூறுதல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

(இ-ள்.) அதுகேட்ட பாங்கன் எம்பெருமான் ஆற்றானா யிவ்வாறு கூறினால் அதற்கு நானென் சொல்வேனென்று தன்னுள்ளே வருந்துதல்.

இதுவுமது.

பாங்கன் றலைவனோடழுங்கல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்திய பாங்கன் சகியாதவனாய்த் தலைவனோடு வருந்துதல்.

எவ்விடத்தெவ்வியற்றென்றல்.

(இ-ள்.) பாங்கனிவ்வாறு கூறியும் தலைவன் வருந்துதலைக்கண்டு இவன் தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறித் தலைவனை நோக்கி நின்னாற் காணப்பட்ட உரு எந்தவிடத்து எந்தவியலையுடையதென்று வினாவுதல்.

அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல்.

(இ-ள்) தலைவன் என்னாற் காணப்பட்டவுரு இந்தவிடத்து இந்த இயலையுடையதென்று கூறுதல்.

பாங்கனிறைவனைத் தேற்றல்.

(இ-ள்.) இவ்வாறு நீ வருந்தாதொழிக. நீ சொன்ன குறியிடத்துச் சென்று தலைவியைக்கண்டு யான்வருகிறேனென்று தலைவனைப் பாங்கன் தேற்றல்.

குறிவயிற்சேறல்.

(இ-ள்.) தலைவன் கூறிய குறியிடத்துத் தலைவியைக்காணப் பாங்ஙன் தேடிப்போதல்.

இறைவியைக்காண்டல்.

(இ-ள்.) அங்ஙனந் தேடிச்சென்ற பாங்கன் தலைவியைக் காணுதல்

இகழ்ந்த்தற்கிரங்கல்.

(இ-ள்.) தலைவி பேரழகைக் கண்ட பாங்கன் காணாமுன்னம் எம்பெருமானை யறிவின்றியிகழ்ந்தன மென்றிரங்கிக் கூறுதல்.

தலைவனை வியத்தல்.

(இ-ள்.) தலைவிகண்வலையிற்சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்துவந்தது வியப்பென்று பாங்கன் அதிசயித்துக்கூறுதல்.

தலைவியை வியத்தல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கன் வியந்துகூறுதல்.

இவ்வைந்து பாடலும் பாங்கன்றன்னுட்கூறியவை.

தலைவன்றனக்குத் தலைவிநிலைகூறல்.

(இ-ள்.) தலைவிகுறியிடத்துத் தனித்துநிற்கின்ற நிலையைப் பாங்கன் கண்டுவந்து தலைவனுக்குக்கூறுதல்.

தலைவன் சேறல்.

(இ-ள்.) தலைவன் பாங்கன் சொற்படி குறியிடத்துப் போதல்.

தலைவியையக் காண்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப்பார்த்தல்.

கலவியின் மகிழ்தல்.

(இ-ள்.) புணர்ச்சியின் மகிழ்தல்.

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் புணர்ந்தபின் றலைவியைப் புகழ்ந்துகூறுதல்.

பாங்கியொடு வருகெனப்பகர்தல்.

(இ-ள்.) இனிநீ யுன்னுயிர்ப் பாங்கியுடனேவருவாயென்று தலைவிக்குத் தலைவன் கூறுதல்.

பாங்கிற்கூட்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்துதல். ஆயம் – மாதர் கூட்டம்.

இவற்றுள் முன்னைய மூன்றுஞ் சார்தல் கேட்டல் சாற்றலென்னு மூன்றற்கும், பாங்கன் கழறல் முதல் கிழவோன்வேட்கை தாங்கற் கருமை சாற்றலீறாகிய நான்கும் எதிர்மறைக்கும், பாங்கன்றன் மனத் தழுங்கல்முதல் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறலீறாகிய பதுனொன்றும் நேர்தற்கும், தலைவன்சேறல் முதல் புகழ்தலீறாகிய நான்கும் கூடற்கும், தலைவன் றலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் தலைவன் றலைவியைப் பாங்கிற் கூட்டலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்குமுரியன.

8-பாங்கிற்கூட்டமுற்றிற்று.
______________

ஒன்பதாவது--பாங்கிமதியுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்; அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானேகூட்ட முண்மையறிதல்; அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலென மூன்றாம்; அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்; அவை வருமாறு:-


நாற்றங்கண்டையுறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியிடத்துப் பண்டுபயின்றறியாததோர் புதிய வாசனை கண்டு ஐயுற்று ஆலோசித்தல்.

தோற்றங்கண்டையுறல்.

(இ-ள்.) புணர்ச்சியாற் பெற்றதோ ரழகுகண்டு சந்தேகித்தல்.

ஒழுக்கங்கண்டையுறல்.

(இ-ள்.) தெய்வந்தொழாமை முதலியகண்டு சந்தேகித்தல்.

உண்டிகண் டையுறல்.

(இ-ள்,) முன்னைநாளிற் குறைந்த வுணவுகண்டு சந்தேகித்தல்.

செய்வினை மறைப்புக்கண் டையுறல்.

(இ-ள்.) தலைவி தலைவன்பாற்பட்ட தன்னினைவுந் தொழிலும் பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல்கண்டு சந்தேகித்தல்.

செலவுகண் டையுறல்.

(இ-ள்.) தலைவி ஆயத்தை நீங்கித் தனியே பெயர்தல்கண்டு சந்தேகித்தல்

பயில்வுகண் டையுறல்.

(இ-ள்.) தலைவியெப்போது மோரிடத்தே நிற்றல்கண்டு சந்தேகித்தல்.

பிறைதொழு கென்றல்.

(இ-ள்.) பிறைச்சந்திரனைக் காட்டிப் பாங்கி தொழுது நின்று தலைவியை நோக்கி "நீயுமிதனைத் தொழுவாயாக" வென்று கூறி அவளது புணர்ச்சிநிலையை யறிதல், கன்னியர் பிறைதொழுவதுங் கலந்தவரது செய்யாமையும் உலகவழக்கு.

ஐயங்கரந்து தையலை வினாவுதல்.

(இ-ள்.) பலவாறாகத் தோன்றிய சந்தேகத்தைப் பாங்கி தன்னுண் மறைத்துக்கொண்டு தலைவியை வினாவுதல்.

கரந் துரை.

(இ-ள்.) பாங்கி தன் கள்ளத்தை வெளிப்படுத்தப் பலகால் வினாவியும் அக்கள்ளத்தை யொளித்துத் தலைவி வேறு கூறுதல்.

சுனைவியந் துரைத்தல்.

(இ-ள்.) தலைவியங்ஙனங்கூறப்பின்னும் விடாதவளாய்ப் பாங்கி தலைவியுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தச் சுனையை வியந்து சொல்லுதல். சுனை - நீர்நிலை.

இதுவுமது.

நாணநாட்டம்.

(இ-ள்.) தலைவி நினைவை வையமறத்துணிந்த தோழி அவள் நாணும்படி நாடுதல்.

தகையணங்குறுத்தல்.

(இ-ள்.) தலைவிவேற்றழகுகண்டு அவளைத் தெய்வப் பெண்ணாகப் பாங்கி வலியுறுத்திக் கூறுதல்.

நடுங்கநாட்டம்.

(இ-ள்.) தலைவி நடுங்கத்தக்கதாகப் பாங்கி யாராய்ந்தல்.

இப்பதினான்கும் முன்னுறவுணர்தலின் வகையாகிய ஐயமுற்றோர்தலின் விரியென்க. ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலாகிய இரண்டின் விரி காணப்படவில்லை. இத்துணையு மூன்றா நாள் நிகழ்ச்சியென்க.

முன்னுறவுணர்தல் முற்றிற்று.
______________

குறையுறவுணர்தல்.

அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக்கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-

பெட்டவாயில்பெற் றிரவு வலியுறுத்தல்.

(இ-ள்.) இயற்கைப்புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவுழிக் கலங்கலின்வாயில் பெற்றுய்தலென ஆண்டுவிரும்பப்பட்ட பாங்கியைத் தலைவன் தூதாகப்பெற்றுக் குறையிரத்தலை வற்புறுத்திக் கூறுதல்.

ஊர்வினாதல்.

(இ-ள்.) தலைவன் கண்ணியுந் தழையுமேந்திக் குறையற்றவன் போலவந்து நின்று ஊர்யாதென்று பாங்கியைக் கேட்டல்.

பேர்வினாதல்.

(இ-ள்) வெளி.

கெடுதிவினாவல்.

(இ-ள்.) கெட்டபொருளைத் தலைவன் பாங்கியிடத்து வினாவுதல்.

நெஞ்சு வினாதல்.

(இ-ள்.) தலைவன் தன் மனத்தைப் பாங்கியிடை வினாவுதல்.

வழிவினாதல்.

(இ-ள்.) தலைவன் றான்செல்லும் வழியைப் பாங்கியிடைக் கேட்டல்.

மொழியாமை வினாதல்.

(இ-ள்.) பாங்கி யொன்றும் பேசா திருத்தலைத்தலைவன் கேட்டல்.

இடைவினாதல்.

(இ-ள்.) தழையைக்காட்டித் தலைவன் றன்கருத்தறிவித்து நுங் குழலுமுலையு மதிபாரமாயிராநின்றன; இவையிவ்வாறுநிற்றலெங்ஙனம்? நும் இடை யெங்கே? யென்று தலைவியைக் கேட்டல்.

ஊர்பெயர் கெடுதியோடொழிந்தவை வினாதல் முற்றிற்று.
_______________

தேர்தல்.

(இ-ள்.) வெளி.
யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத்தேர்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு கண்ணியுந்தழையு மேந்திவந்து ஊர் முதலியவை வினாவி நின்றவர் யாவரோ? இவர் மனத்தினினைப்பு யாதோ? எனப்பாங்கி தன்மனத்தில் ஆராய்ச்சி செய்தல்.

எண்ணந்தெளிதல்.

(இ-ள்.) தலைவனினைப்பைப் பாங்கிதெளிதல்.

இவ்விரண்டுங் குறையுற வுணர்தலின் விரியென்க.

குறையுறவுணர்தல் முற்றிற்று.
__________

இருவருமுளவழியவன் வரவுணர்தல்

அஃதாவது-தலைவியுந் தானுமொருங்கிருந்த விடத்தில் தலைவன் றனிவரப் பாங்கிகண்டு அதனானே கலப்புண்மை யறிதல், அதன்விரி வருமாறு:-
கையுறையேந்திவருதல்.

(இ-ள்.) தலைவியும் பாங்கியுஞ் சேர்ந்திருப்பது கண்டு தலைவன் கையுறை யேந்திவருதல். கையுறை-காட்சிப்பொருள்.


புனங்கண்டு மகிழ்தல்.

(இ-ள்.) அவ்விருவரு மிருக்கப்பெற்ற வனத்தின் வளப்பத்தைப் பார்த்து மகிழ்தல்.

இருவரும் உளவழிச்சேறல்.

(இ-ள்.) பாங்கியுந் தலைவியுந் தனித்திருக்குமிடத்துத் தலைவன் செல்லுதல்.

தலைவனவ்வகை வினாதல்.

(இ-ள்.) தலைவன் முன் கெடுதிவினாதல்போல மீண்டுங் கலை வந்ததோவென்று வினாவுதல்.

எதிர்மொழி கொடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் வினாவுக்கு விடைகூறுதல்.

இறைவனை நகுதல்.

(இ-ள்.) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடல். அசதியாடல்-சிரித்துப் பேசுதல்.

இதுவுமது.

பாங்கி மதியி னவரவர் மனக்கருத்துணர்தல்.

(இ-ள்.) பாங்கி தன்னறிவால் தலைவன் தலைவியென்ற இருவர் மனக்குறிப்பை யாராய்தல்.

இதுவுமது.

இவ்வேழு மிருவருமுளவழியவன் வரவுணர்தலின் விரியென்க.

9-பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று.
______________

பத்தாவது- பாங்கியிற்கூட்டம்.

அஃதாவது-பாங்கியாற்கூட்டுவிக்கத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம், அஃது – இரந்துபின்னிற்றல் சேட்படை மடற்கூற்று மடல் விலக்கு உடன்படல் மடற்கூற்றொழிதல் குறைநயப்பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் ஆயங்கூட்டல் வேட்டல் எனப் பன்னிரண்டு வகையினையுடைத்து; அவை வருமாறு:-

தலைவ னுட்கோள்சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தான் தன்னுள்ளத்தின்கட் கொண்ட காதலைக் கூறுதல்.

பாங்கி குலமுறைத்தல்.

(இ-ள்.) தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையா லியையாதென மறுத்துக் கூறுதல்.

தலைவன் றலைவிதன்னை யுயர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை யுயர்த்திக் கூறுதல்.

இதுவுமது.

பாங்கி யறியாள்போன்று வினாதல்.

(இ-ள்.) தலைவன் தலைவியிடத்துக் காதல்கொண்ட தறியாள்போல நீ யெவளிடத்துக் காதல்கொண்டாயெனப் பாங்கி வினாதல்

இறையோனிறைவி தன்மையியம்பல்.

(இ-ள்.) தலைவன் தான் காதலித்த தலைவி தன்மை கூறுதல். தன்மை – இலக்கணம்.

பாங்கி தலைவி யருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவி கிடைத்தற்கரியளென்று பாங்கிகூறுதல்.

தலைவனின்றியமையாமையியம்பல்.

(இ-ள்.) தலைவியில்லாது வாழ்வெனக்கில்லையெனத் தலைவன் கூறுதல்.

இதுவுமது.

பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்.

(இ-ள்.) தலைவியினிடத்துநினக்கு வேண்டுவனவற்றை நீயே சொல்லென்று பாங்கிகூறுதல்.

பாங்கியைத் தலைவன்பழித்தல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை நிந்தித்துக் கூறுதல்.

குறையுறவுணர்தன்முத லிதுகாறு நான்காநாள் நிகழ்ச்சியென்றுணர்க.

பாங்கிபேதைமை யூட்டல்.

(இ-ள்.) தலைவி பிறர்துயரமறியாளென அவளது பேதைமையைப் பாங்கி தலைவனுளங் கொளச் சாற்றல்.

காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல்.

(இ-ள்.) அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி முதிர்ந்த அறிவினையுடையாள் தலைவியாதலின் அவளை யங்ஙனங் கூறற் பாலை யல்லையென்று தலைவன் கூறுதல்.

முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட பாங்கிமுன் நின் வேட்கை தீர்த்தாளென்று கூறினையே அங்ஙனமே யின்னங்கூடுகவென்று கூறுதல்.

தன்னிலை தலைவன்சாற்றல்

(இ-ள்.) அது கேட்ட தலைவன் வேட்கை நோயால் வருந்துந் தன்னிலைமையைப் பாங்கிக்குக் கூறுதல்.

பாங்கி யுலகிய லுரைத்தல்.

(இ-ள்.) உலகில் வேட்கை கொண்டார் சான்றோரை முன்னிட்டு வரைந்துகொள்வர். அவ்வாறுலகியலாதல் நீயும் வரைந்து கொள்கவெனப் பாங்கி கூறுதல்.

தலைமகன் மறுத்தல்.

(இ-ள்.) அவ்வுலகியலைத்தலைவன் வேட்கை யாற்றானாய் மறுத்தல்.

இதுவுமது.

பாங்கி யஞ்சி யச்சுறுத்தல்.

(இ-ள்.) இந்நிகழ்ச்சி பிறரறிவரென்று பயந்தவளாய்த் தலைவனை யப்புனம்விட்டுப்போக அச்சமுறுத்திக் கூறுதல்.

தலைவன் கையுறைபுகழ்தல்.

(இ-ள்.) இனிக்காலந் தாழ்க்கலாகாதென்று தான்கொண்டு வந்த கையுறையைத் தலைவன் புகழ்ந்து கூறுதல். கையுறை காட்சிப் பொருள்.

இதுவுமது.

பாங்கி கையுறைமறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனம் புகழப்பட்ட கையுறையைப் பாங்கியிகழ்ந்து மறுத்துக் கூறுதல்.

இதுவுமது.

ஆற்றா நெஞ்சினோ டவன்புலத்தல்.

(இ-ள்.) பாங்கி மறுத்தலைச் சகியாத நெஞ்சுடனே தலைவன் வருந்திக் கூறுதல்.

இதுவுமது.

பாங்கி யாற்றுவித் தகற்றல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்துதலைக்கண்ட பாங்கி தலைவனை யஞ்சாதே! நாளைவாவெனக் கூறிவிடுத்தல்.

இவற்றுள்-தலைமகன் கூற்றாயினவெல்லாம் இரந்து பின்னிற்றற்கும், பாங்கி கூற்றாயினவெல்லாஞ் சேட்படுத்தற்கு முரியன. இதுகாறும் ஐந்தாநாள் நிகழ்ச்சி யென்க.

இரந்துகுறைபெறாது வருந்தியகிழவோன் மடலேபொருளெனமதித்தல்.

(இ-ள்.) மறுநாட் காலையில் வந்த தலைவன் பாங்கியாற் காரியமின்றெனக்கருதி இரந்து குறைமுடியாதாயினோமென்று வருத்த முற்று இனி நமக்குப்பொருளாவது *மடலேறலேயெனத் தன்னுள்ளே மதித்துக் கூறுதல்.

பாங்கிக் குலகின்மேல் வைத்துரைத்தல்.

(இ-ள்.) தலைவன் அம்மடலேற்றின் யுலகின்மேல் வைத்துப்பாங்கிக்குக் கூறுதல்.

*மடலேறலாவது - பனங்கருக்காற் குதிரையும் பனந்தருவினுள்ளன வற்றால் வண்டி முதலானவுஞ்செய்து அக்குதிரையின் மேலேறுவது. அங்ஙன மேறுவான் நிருவாணியா யுடலெங்கு நீறு பூசித்தான் காமித்த தலைவியினுருவை யொருபடத்திற் றன் கையாலெழுதி அப்படத்தின் றலையிலே தன்பெயரை யெழுதித் தன்கையிற் பிடித்து நடுவூருள்ளே நாற்சந்தியி லாகார நித்திரையின்றி அப்படத்தின் மேற்பார்வையையு மனத்தையுமிருத்தி ஆசைவயத்தனாய் வேறுணர்ச்சியின்றி ஆவுரிஞ்சினும் அழல் மேற்படினு மறிதலின்றி மழை வெயில் காற்றான் மயங்காதிருப்புழி, அவற்றைக்கண்ட அவ்வூரிலுள்ளார் பலருங் கூடி வந்து நீ மடலேறிச் சோதனை தந்தால் நீ யிச்சித்த பெண்ணைக் கொடுக்கச் செய்வோமென்று கூற, அதற்கவனிசைந்தானாயி னரசனுக் கறிவித்து அவனேவலால் ஏறவேண்டும்; அங்ஙனமேறும்போது பூனையெலும்பு எருக்கம்பூ இவைகளாற் கட்டிய மாலைபுனைந்து கொள்ளல் வேண்டும். அக்குதிரையின் வடத்தை யிழுத்தலும் அக்குதிரை யந்திரத்தினுருளை யுருண்டோடும்போது பனங்கருக்கு அறுத்த வீடமெல்லாம் இரத்தம் வெளிப்படாது வீரியம் வெளிப்படின் அப்போதவளை யலங்கரித்து அவனுக்கு அரசன் கொடுக்கச்செய்தல் வேண்டும். இரத்தம் வெளிப்படி லவனை யரசனாற் கொலைசெய்துவிடல்வேண்டும் என்பது புலவரா னிருமிக்கப்பட்ட வழக்கு.

அம்மடலேற்றினைத் தன்மேல்வைத்துச் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் அம்மடலேறுவேனென்றுபாங்கிக்குக்கூறுதல்.

பாங்கி தலைமக ளவயவத் தருமைசாற்றல்.

(இ-ள்.) அவ்வாறு கூறக்கேட்ட பாங்கி படமெழுதியபின்னன்றோ? மடலேறுவது. ஆதலால் தலைவியவயவந் தீட்டுதற் கருமையென்று கூறுதல்.

தலைமகன் றன்னைத்தானே புகழ்தல்.

(இ-ள்.) இவ்வாறெழுத லரிதென்று கூறிய பாங்கியைநோக்கித் தலைவன் றன்னைத் தானே புகழ்ந்து கூறுதல்.

பாங்கி யருளியல் கிளத்தல்.

(இ-ள்.) அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி அருண் முறைமை கூறுதல்.

கொண்டுநிலை கூறல்.

(இ-ள்.) தலைவனுயிரைத் தாங்கிக்கொண்டு நிற்கு நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறுதல்.

இவற்றுள்-தலைமகன் கூற்றாயின வெல்லா மடற் கூற்றிற்கும் பாங்கி கூற்றாயின வெல்லாமடல் விலக்கிற்கு முரியன.

தலைவி யிளமைத்தன்மை பாங்கி தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவியினது மங்கைப்பருவ நிரம்பாமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

தலைவன் தலைவி வருத்திய வண்ணமுரைத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறீய இளைமைப்பருவமே தன்னை வருத்திய விதத்தைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

பாங்கி செவ்வியருமை செப்பல்.

(இ-ள்.) பாங்கி தலைவியின் சமையத்தினருமை தலைவனுக்குக் கூறுதல்.

தலைவன் செவ்வி யெளிமை செப்பல்.

(இ-ள்.) தலைவன் றன்குறைசொல்லுதற்குத் தலைவி சமைய மெளிதெனக் கூறுதல்.

பாங்கி யென்னை மறைத்தபி னெளிதென நகுதல்.

(இ-ள்.) நீ விரிருவரு மெனக்குத் தெரியாமன் மனமொத்துக் கலந்தபின் இக்களவொழுக்க மொழுகுதற்கினியெளிதென நகையாடிப் பாங்கி கூறுதல்; எனவே யென்னையன்றி யுங்கள் களவொழுக்க நிகழாதென்பது குறிப்பாற் பெறப்பட்டது.

அந்நகை பொறாஅ தவன்புலம்பல்.

(இ-ள்.) பாங்கி நகையாடிக் கூறுதல் சகியாமற்றலைவன் வருந்திக்கூறுதல்.

பாங்கி தலைவனைத் தேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவனைப்பாங்கி நின்கருத்து முடிப்பலெனத் தெளிவித்தல்.

பாங்கி கையுறை யேற்றல்.

(இ-ள்.) தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் பாங்கி யங்கீகரித்து வாங்கிக்கொள்ளுதல்.

கிழவோனாற்றல்.

(இ-ள்.) தலைவன் துன்ப நீங்கிச்சொல்லுதல்.

இவற்றுள்-பாங்கி கூற்றாயின வெல்லாங் குறைநேர்தற்குந் தலைவன் கூற்றாயின வெல்லாமடற் கூற்றொழிதற்கு முரியன.

இறைவன்றனக்குக் குறைநேர்பாங்கி யிறைவிக்கவன் குறையுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வருத்தந் தணிப்பலென்று சொல்லிய பாங்கி அவ்வருத்தத்தைத் தலைவிக்குக் கூறுதல்.

இறைவியறியாள் போன்று குறியாள் கூறல்.

(இ-ள்.) பாங்கி யிவ்வார்த்தைகூறவே தலைவிகேட்டுத் தானொன்று மறியாள்போல மனத்திற் கருதாதவேறொன்றைக் கருதிக்கூறல்.

பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனின்வயத்தனாக வந்தவதனைக் கண்டேனென்று கூறுதல்.

பாங்கியைத் தலைவி மறைத்தல்.

(இ-ள்.) தலைவி தன்களவொழுக்கத்தைப் பாங்கிக்கு மறைத்துக் கூறுதல்.

பாங்கியென்னை மறைப்ப தென்னெனத் தழாஅல்.

(இ-ள்.) இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியை யுனக்கு நான் வேறோ? வென்று உவகையாகத் தழுவிக்கொண்டு கூறுதல்.

பாங்கி கையுறை புகழ்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன்கொடுத்த காட்சிப் பொருளைப் புகழ்ந்து கூறுதல்.


இவற்றுள் – பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லா மறுத்தற்கு முரியன.

தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்

(இ-ள்.) பாங்கி தலைவனது வேட்கைகொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறுதல்.

மறுத்தற்கருமைமாட்டல்.

(இ-ள்.) இவ்வாறு பாங்கி கூறிய சொற்கட்கு விடையின்மையால் இனி அத்தலைவன்வரி லென்னான் மறுத்தற்கரிதெனப் பொருத்திக் கூறுதல். மாட்டல் – பொருத்தல்.

தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்.

(இ-ள்.) தலைவனெண்ணுங் குறிப்பு நம்பாலிரப்பவன்போற் றோற்றவில்லை. வேறு நினைப்பானாகத் தோன்றியதென் றொழுங்குபடப் பாங்கி கூறுதல்.

பாங்கி தலைவியை முனிதல்.

(இ-ள்.) தலைவி யொன்றுக்கு மறுமொழி கொடாளாக அவளைச்சினந்து பாங்கி கூறுதல்.

தலைவி பாங்கியை முனிதல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய பாங்கி சொற்களைப்பொறாதவளாய்த் தலைவி பாங்கியைக் கோபித்துக் கூறுதல்.

தலைவி கையுறை யேற்றல்.

(இ-ள்.) அங்ஙனங்கூறியபின் இனி, பாங்கியையன்றி யொன்று முடியாதென்று கருதி அவள் கொடுத்த கையுறைப் பொருளைத்தலைவி வாங்கிக் கொள்ளுதல்.

இவற்றுள் – பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லாங் குறைநேர்தற்கு முரியன.

இறைவி கையுறையேற்றமை பாங்கி யிறைவற்குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தழைமுதலியவற்றை யேற்றுக்கொண்டமையைத் தலைவனுக்குப் பாங்கி கூறுதல்.

இதுவுமது.

பாங்கி தலைவனுக்குக் குறியிடங் கூறல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு ஒருஅறிகுறியுள் இடத்தைப் பாங்கி கூறுதல். அறிகுறி – அடையாளம்.

பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டுசேறல்.

(இ-ள்.) முன்சொன்ன அடையாளமுள்ள இடத்துக்குத் தலைவியைப் பாங்கி கூட்டிக்கொண்டு செல்லுதல்.

பாங்கி தலைவியைக் குறியிடத்துய்த்து நீங்கல்.

(இ-ள்.) கூட்டிச்சென்ற தலைவியைக் குறியிடத்து நிறுத்திவிட்டுப் பாங்கி நீங்குதல்.

நீங்கும் பாங்கி தலைவற்குணர்த்தல்.

(இ-ள்.) அங்ஙனநீங்கிய பாங்கி தலைவியைத் தலைவனுக்குக் கையடையாகக் காட்டிக்கொடுத்துக் கூறுதல்.

இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல்

(இ –ள்) தலைவியைத் தலைவனேரே வந்து காணுதல்

இதுவுமது

புணர்ச்சி மகிழ்தல்
(இ-ன்) வெளி

இதுவுமது

புகழ்தல்
(இ-ள்) வெளி

தலைமகளைத் தலைகன் விடுத்தல்
(இ-ள்) தலைவியைத் தலைவன் ஆயக்கூட்டத்தில் செல்ல விடுதல்

பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்.

(இ-ள்.) குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன்போ யினபின் தான் கையுறை கொண்டுவரப்போயின பாவனையாகக் கையுறை கொண்டுவந்து காட்டல்.

தலைவியைப் பாங்கிற்கூட்டல்.

(இ-ள்.) பாங்கிதலைவியை மகளிர் கூட்டத்திற் சேர்த்தல்.

நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்.

(இ-ள்.) தலைமகளை ஆய்த்துட்சேர்த்து மீண்டுவந்து பாங்கி தலைவற்கு ஓம்படை சொல்லுதல். ஓம்படை - மறவாமை.

உலகியன் மேம்பட விருந்து விலக்கல்.

(இ-ள்.) உற்றார் அயலூரிலிருந்து வந்தாலவர்க்கு உணவு கொடுத்துபசரித்-தலுலகியல் பாதலா லவ்வுலகியல் பெருமைப்படத் தலைவனை யெம்மூர்க்கு வந்திருந்து விருந்துண்டு போமெனப் பாங்கி தலைவன் செல்லுதலை விலக்குதல்.

விருந்திறை விரும்பல்.

(இ-ள்.) அவ்வுணவைத் தலைவன் விரும்பிக் கூறுதல்.

இவற்றுள்- பாங்கி கூற்றாயினவெல்லாம் கூட்டற்கும் பாங்கிற்கூட்டற்கும், தலைவன் கூற்றாயினவெல்லாங் கூட்டற்கும், வேட்டற்கு முரியன.
இத்துணையும் ஆறாநாள் நிகழ்ச்சியென்க.
10-பாங்கியிற் கூட்ட முற்றிற்று.
____________


பதினொராவது - ஒருசார் பகற்குறி.

அஃதாவது-ஒருகூற்றுப் பகற்குறி; அது - யாதெனில்? தலைவன் மறுநாள் தன்வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்துவந்து நிற்கத் தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திப்போதல். ஆதலாற் பகற்குறியாகாது ஒருசார் பகற்குறியாயிற்று; அஃது-இரங்கல், வன்புறை இற்செறிப்புணர்த்தலென மூவகைப்படும்; அவை வருமாறு:-

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுதுகண்டிரங்கல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு தலைவன் பிரிந்துபோகத் தலைவி மாலைக் காலத்தைக் கண்டுவருந்துதல்; இக்கூற்றுப் பாங்கியை நோக்கிக் கூறுதலு மாலையை நோக்கிக் கூறுதலுந் தன்னுட் கூறுதலுமென மூன்றாம்; அவற்றுளிது தன்னுட் கூறுதல்.

பாங்கிபுலம்பல்.

(இ-ள்,) தலைவி வருத்தங்கண்டு பாங்கி வருந்துதல்.

தலைவனீடந் தலைவி வருந்தல்.

(இ-ள்.) தலைவன் வாராது நாழிகை நீடிக்கத் தலைவி வருந்திக் கூறுதல்.

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை நீ வருந்துவது முறைமையன்றெனக் கட்டுரைத்தல்-கழறல்-கட்டுரை, இடித்துக் கூறல், உறுதிச்சொல்.

தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்.

இ-ள்.) பாங்கி யெதிரே நிற்கவுந் தலைவி அவண்மேல் வெறுப் பாலவளை நோக்கிக் கூறாது புறமாய்க் கூறுதல்.

தலைவி பாங்கியொடு பகர்தல்.

(இ-ள்.) வெறுப்பால் முன்னிலைப் புறமொழிகேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலாலவ் வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு தலைவிகூறுதல்.

தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறியுந் துன்பமுறுந் தலைவியை யது நீங்குமாறு பாங்கி பயமுறுத்திக் கூறுதல்.

நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்.

(இ-ள்.) தலைவன் றன்னைவிட்டு நீங்கற்கருமையைத் தலைவி நினைந்து தன்னுள்ளிரங்கிக் கூறுதல்.

தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) அங்ஙன மனமிரங்குந் தலைவிக்குத் தலைவன் வருதலைப் பாங்கி கூறுதல்.

தோழிசிறைப் புறமாகச் செறிப்பறுவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் சிறைப்புறமாக்க் குறியிடத்துவரப் பாங்கி தங்களுக்குள்ள செறிப்பை யறிவுறுத்திக் கூறுதல். சிறைப்புறம்-வெளிப்புறம். செறிப்பு-கானவர் தினைகொய்யப் புறத்தினில் வந்திருத்தல்.

தோழி தலைமகற்கு முன்னிலைப் புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் முன்னிலையாய் நிற்பத் தோழி தலைமகளைக் காணாதவள் போலப் புறமொழியாய்ப் புட்கள் விலங்குகளை நோக்கிக் கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல்.

பாங்கி தலைமகன் முன்னின் றுணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவனுக்கேதிரேநின்று தினையறுத்தலாலினி யெம் மூர்க்குப் போவோம் இப்புனத்திகண் வருதலொழிகவெனக் கூறுதல்.

பாங்கி முன்னின்றுணர்த்தி யோம்படைசாற்றல்.

(இ-ள்.) அங்ஙன முன்னின்று கூறிய பாங்கி யெம்மை மறவாமைக் காக்கவேண்டுமென்று கூறுதல்.

கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கோடு பெறாமல் நெஞ்சுடன் கூறுதல்.

இதுவுமது.

இவற்றுள் – கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டிரங்கலும் பாங்கி புலம்பலுந் தலைவனீட்த் தலைவி வருந்தலு முன்னிலைப்புறமொழி மொழிதலுந் தலைவி பாங்கியொடு பகர்தலும் நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கலுங் கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிழத்தலுமாகிய வேழு மிரங்கற்கும், தலைவியைப் பாங்கி கழறலும் பாங்கி யச்சுறுத்தலும் பாங்கி யவன்வரல் சாற்றலும் வன்புறைக்கும், பாங்கி சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தலு முன்னிலைப் புறமொழி மொழிந் தறிவுறுத்தலு முன்னின்றுணர்த்தலு மோம்படை சாற்றலுமாகிய நான்கு மிற்செறிப்புணர்த்தற்கு முரியன. முன்னைய வேழில் நெஞ்சொடுகிளத்தலொழிந்த வாறும் வரைதல் வேட்கைக்கும் பின்னைய நான்கும் வரைவுகடாதற்கு முரியன.

11. ஒருசார் பகற்குறி முற்றிற்று.
__________


பன்னிரண்டாவது – பகற்குறியிடையீடு.

அஃதாவது:- பகற்குறிக்கண்வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடுபட்டுப் போதல். இடையீடு – தடை; அது-விலக்கல் சேறல் கலக்கமென மூவகைப்படும்; அவை வருமாறு:-

இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) இனி அடிக்கடி தாய்வருவன். நீவந்தாற் பழியுண்டாமென்று தலைவனைப் பகற்குறியிடத்து வராதேயென்று பாங்கிகூறுதல்.

இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) பாங்கி தலைவியைநோக்கி யுன்னுடைய தன பாரங்களினழகை யையுற்றுத் தாய் பார்த்துக் கவல்கின்றன ளினியிப்புனத்தில் வரலொழிவாயென்று கூறுதல்.

இறைமகளாடிடநோக்கி யழுங்கல்.

(இ-ள்.) தலைவி தான் விளையாடிய இடங்களைவிட்டுப் பிரிதற் கஞ்சி வருந்தல்.

பாங்கி யாடிடம்விடுத்துக்கொண் டகறல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கி விளையாடிடத்தைவிட்டுத் தம்மூர்க்குக் கொண்டுபோதல்.

இதுவரையும் ஏழாநாள் நிகழ்ச்சி யென்க.
___________

பின்னாள் நெடுந்தகை குறிவயி னீடுசென்றிரங்கல.

(இ-ள்.) எட்டாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப் பந்தரிடத்துவந்து காலநீட்டித்துத் தலைவியை நினைந்து வருந்துதல்.


தலைவன் வறுங்களநாடி மறுகல்.

(இ-ள்.) தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கித் தலைவன்வருந்துதல்.

இதுவுமது.

குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல்.

(இ-ள்.) தலைவியி னூர்தேடிச் செல்வோமானால் அறிந்திலமென்று தலைவன் மதிகலங்கிக் கூறுதல்.

இவற்றுள்-இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலு மிறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், ஆடிடம் விடுத்துக்கொண் டகறலொன்றுஞ் சேறற்கும், இறைமகளா டிடநோக்கி யழுங்கல் முதலிய நான்கும் கலக்கத்திற்குமுரியன.

12.- பகற்குறி யிடையீடு முற்றிற்று.
____________________


பதின்மூன்றாவது - இரவுக்குறி.

அஃதாவது:- தலைவன் றலைவியை யிரவுக்குறியிற் கூடுதல்; அது-வேண்டல் மறுத்தல் உடன்படல்கூட்டல் கூடல் பாராட்டல் பாங்கிற் கூட்டல் உய்ங்கல் நீங்கல் ஆகிய ஒன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

இறையோ னிருட்குறி வேண்டல்.

(இ-ள்.) தலைவன் இருட்குறியைவிரும்பிப்பாங்கியுடன் கூறுதல்.

பாங்கி நெறியின தருமைகூறல்.

(இ-ள்.) அதுகேட்ட தோழி தலைவன் வரும்வழியில் சிங்க முதலிய மிருகங்கள் சஞ்சரித்தலால் அவ்வழிவர லரிதென்று கூறுதல்.

இறையோ னெறியின தெளிமைகூறல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய வழியிலுள்ள மிருகங்களுக் கஞ்சேனாதலால் அவ்வழி வருத லிலேசென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

பாங்கியவனாட்டணியியல்வினாதல்.

(இ-ள்.) தலைவனது நாட்டுப் பெண்களணியுமணியையு மியலையும் பாங்கி வினாவுதல்.

தலைவ னவணாட் டணியியல் வினாதல்.

(இ-ள்.) பாங்கி குறிப்பறிந்து தலைவன் அவளுடைய, நாட்டிலுள்ள வணிகலன் முதலியவற்றை வினாவுதல். குறிப்பறிதல் – வேண்டுவன கொடுத்தற்கென்க.

தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல்

(இ-ள்) வெளி

இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல்

(இ-ள்) பாங்கி தலைவனை யோரிடத்து நிறுத்திவிட்டுத தலைவியிடத்திற்சென்று தலைவன் குறையையறிவித்தல்.

நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்

(இ-ள்) இவ்வாறு கூறக்கேட்ட தலைவி யியையாது தன்னெஞ்சுடன் சொல்லுதல்

நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்.

(இ-ள்.)நெஞ்சொடு கூறியதலைவி தோழியோடுடன்பட்டுக்கூறுதல்.

நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல்

(இ-ள்) தலைவி யுடன்பட்டமையைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்

குறியிடை நிறீஇத் தாய்துயிலறிதல்

(இ-ள்) பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது நித்திரையையறிதல்

இறைவிக் கிறைவன் வரவறிவுறுத்தல்.

(இ-ள்) தலைவிக்குத் தோழி தலைவன்குறியிடத்துவருதலை யறிவித்தல்.

இதுவுமது.

தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்

(இ-ள்) தலைமகன் வந்துநிற்குங் குறியிடத்துக்குத் தலைவியைப் பாங்கி யழைத்துக்கொண்டு செல்லுதல்.

குறியுய்த்தகறல்.

(இ-ள்.) பாங்கிதலைவியைக் குறித்தகாவிடத்திலே செலுத்திநீங்குதல்.

வண்டுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல்

(இ-ள்.) தலைவன் தலைவியை நேர்வந்து காணுதல்.

பெருமக ளாற்றின தருமை நினைந்திரங்கல்.

(இ-ள்.) தலைவிதலைவன் வரும்வழியின தருமை நினைந்து வருந்துதல்

புரவலன் றேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவியைத் தலைவன்றெளிவித்தல்.


புணர்தல்

(இ-ள்) வெளி

புகழ்தல்.

(இ-ள்) வெளி.

இறைமக ளிறைவனைக் குறிவரல் விலக்கல்.

(இ-ள்) யானையைச் சிங்கமோது மிராக்காலத்திலே வரிற்றுன்ப மிகவுண்டாமென்று பயந்து தலைவிதலைவன் வருதலை விலக்கல்.

இறைவியை யில்வயின்விடுத்தல்.

(இ-ள்) தலைவன் றலைவியை வீட்டினிடத்துச் செல்லென விடுத்தல்.

இறைவியை யெய்திப் பாங்கி கையுறைகா்டல்

(இ-ள்) குறியிடத்து நீங்கிய பாங்கி தலைவியையடைந்து கையுறை காட்டுதல்

பிற்சென் றிறைவனை வரவு விலக்கல்.

(இ-ள்.) தோழி தலைவியை மனையிற் சேர்த்தபின்பு தலைவன் பாற்சென்று இவ்விருளில் நீ வராதேயென்று விலக்கிக் கூறுதல்.

பெருமகன் மயங்கல்.

(இ-ள்.) பாங்கி யிவ்வாறு இரவுக்குறி விலக்கியசொற் கேட்டுத் தலைவன் மனங்கலங்கிக் கூறுதல்.

தோழி தலைமக டுயர்கிளந்து விடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனுக்குத் தலைவிக்குநேருந் துயரைக் கூறி நீ ஊர்போய்ச் சேர்ந்த செய்தி யாமறியும்படி அடையாளங் காட்டென்று கூறிவிடுத்தல்.

திருமகட் புணர்ந்தவன் சேறல்.

(இ-ள்.) தலைவியைக் கலந்த தலைவன் றன்னூர்க்குப்போதல்.

இவற்றுள் - இறையோ னிருட்குறி வேண்டலும் நெறியினதெளிமை கூறுதலும் தலைமகனவணாட் டணியியல் வினாதலும் பாங்கி இறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலுமாகிய நான்கும் வேண்டற்கும், பாங்கி நெறியின தருமை கூறலும் இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கலும் பாங்கி இறைவனை வரவு விலக்கலுமாகிய மூன்றும் மறுத்தற்கும், பாங்கி யவனாட் டணியியல் வினாதலும் அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கி சாற்றலும் நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தலுமாகிய மூன்றும் உடன்படற்கும், தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைவற்-குணர்த்தலும் குறியிடை நிறீஇத்தாய் துயிலறிதலும் இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தலும் அவட்கொண்டு சேறலுமாகிய நான்குங் கூட்டற்கும், தலைமகன் தலைமகளை யெதிர்ப்படுதலும் தேற்றலும் புணர்தலுமாகிய மூன்றும் கூடற்கும், தலைமகன் புகழ்தலும் கையுறை காட்டலுமாகிய இரண்டும் பாராட்டற்கும், தலைமகன் தலைவியை யில்வயின் விடுத்தலும் பாங்கி தலைமகளை இற்கொண்டேகலுமாகிய இரண்டும் பாங்கி கூட்டற்கும், நேராதிறைவி நெஞ்சொடு கிளத்தலும் தலைமகள்
ஆற்றினதருமை நினைந்திரங்கலும் பெருமகன் மயங்கலும் தோழிதலை மகள் துயர்கிளந்துவிடுத்தலுமாகிய நான்கும் முயங்கற்கும், பாங்கிகுறியுய்த் தகறலும் திருமகட் புணர்ந்தவன் சேறலுமாகிய இரண்டும் நீங்கற்கு முரியன. முயங்கல் - வருந்துதல்.

இதுவரையும் எட்டாநாள் நிகழ்ச்சி.

13 - இரவுக்குறி முற்றிற்று.
----------


பதினான்காவது - இரவுக்குறி யிடையீடு.

அஃதாவது - இரவுக்குறிக்கண்வந்த தலைமகன் அல்ல குறிப்பறிதலால், இடையீடுபட்டுப்போதல்; அஃது - அல்லகுறியெனவும் வருந்தொழிற் கருமையெனவு மிரண்டு வகைப்படும்; அவை வருமாறு:- [இடையீடுபடுதல் - குறி தவறுதல்.]

இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்.

(இ-ள்.) மறுநாளிரவில் தலைவன் வருதலைத் தலைவிக்குப் பாங்கி கூறுதல்.

தான் குறிமருண்டமை தலைவி யவட்குறைத்தல்

(இ-ள்) தலைவி தான் அல்லற்குறியிடத்துத் தலைவனைக் காணாமையால் மீண்டு விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறுதல். அல்லகுறியிடம் = குறிதவறிய இடம்

குறிபிழைத்தழுங்கல்
(இ-ள்) அடையாளமிட்ட இடம் தவறியதாற் தலைவி தலைவனைக் காணாது வருந்துதல்

பாங்கி தலைவனின் தீங்கெடுத் தியம்பல்
(இ-ள்) தோழி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறுதல்

தகைவன் புலர்ந்து போதல்
(இ-ள்) தலைவன் தான் குறிக்கப்பட்ட இடத்திலிருந்து தலைவி
அல்லகுறியடைந்து வாராமையால் வருந்தி தன்னூர் போதல்

இதுவரையும் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல்.

(இ-ள்.) ஒன்பதாநாள் இருள்புலர்ந்தபின் தலைவி வெற்றிடத்தைக் கண்டு வருந்துதல். இருள்புலர்தல் - விடிதல்.

தலைவி தன்றுணைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தன்றுன்பத்தைத் தன்றோழிக்குச் சொல்லுதல்.

தலைமக ளவலம் பாங்கி தணித்தல்.

(இ-ள்.) தலைவியின் றுன்பத்தைத் தோழி தணித்துக்கூறுதல்.

இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்

(இ-ள்.) பத்தாநா ளிரவுக்குறியில் வந்த தலைவன்மேற் பாங்கி அல்லகுறிப்பட்ட குற்றமேற்றிக் கூறுதல்.

இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்.

(இ-ள்.) மேற்கூறிய குற்றத்தைத் தலைவன் றலைவிமேலேற்றிக்கூறுதல்.
-----
** நானிலஞ்சங்கமாகிய பேரை என்றும் பாடம்.

இதுவுமது

அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல்.

(இ-ள்.) தலைவி குறிமயங்கியதைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

அவன் மொழிக்கொடுமைசென் றவளவட் கியம்பல்.

(இ-ள்.) தலைவன் சொல்லியகொடுமையைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல்.

என்பிழைப் பன்றென் றிறைவிநேர்தல்.

(இ-ள்.) குறிபிழைத்தது என்பிழையன்றென்று தலைவி நேர்ந்து கூறுதல்.

இப்பன்னிரண்டும் அல்ல குறியின் விரியென்க. அல்லகுறி - குறிதவறுதல்.

இதுவரையும் பத்தாநாட் பகல் நிகழ்ச்சி.

தாய் துஞ்சாமை

(இ-ள்.) தாய் விழித்திருத்தல்.

நாய் துஞ்சாமை.

(இ-ள்.) தாயுறங்கியபின் ஊரிலுள்ள நாயுறங்காதிருத்தல்.

ஊர் துஞ்சாமை

(இ-ள்.) நாயுறங்கினும் ஊரிலுள்ளா ருறங்காதிருத்தல். ஊர்- ஆகுபெயர்.

காவலர் கடுகுதல்.

(இ-ள்.) ஊர் துஞ்சியபின் நகர்காப்போர் பறையடித்துக் கொண்டு ஊர் சுற்றிக் கடுகிவருதல். கடுகல் - விரைதல்.

நிலவு வெளிப்படுதல்.

(இ-ள்.) தலைவன் வருதற்கிடையூறாய் நிலாவெளிப்படுதல்.

கூகை குழறுதல்.

(இ-ள்.) கூகை குழறக் கேட்ட தலைவி யஞ்சிக் கூறல்.

கோழி குரல் காட்டுதல்.

(இ-ள்.) இருவர்க்கு மிடையூறாய்க் கோழி கூவுதல்.

இவ்வேழும் இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற்கருமையின் விரி; இவ்வேழில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு நாழிகையாகக் கொள்க. இதுவரையும் பத்தாநாளிரா நிகழ்ச்சி.

14- இரவுக்குறி யிடையீடு முற்றிற்று.
------------


பதினைந்தாவது-வரைதல் வேட்கை.

அஃதாவது-இடையீடுபட்டதனாற் பதினொறாநாள் தலைவி மணஞ் செய்தலை விரும்பல்; அஃது-அச்சம் உவர்த்தல் ஆற்றாமையென மூன்றுவகைப்படும்; அவை வருமாறு:-

தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல்.

(இ-ள்.) தலைவி துன்பமுற்றிருத்தலைத் தோழி கேட்டல்.

அருமறை செவிலி யறிந்தமை கூறல்

(இ-ள்) தலைவி யரிய களவொழுக்கத்தைச் செவிலித்தாயறிந்தமை பாங்கிக்குக் கூறுதல்

தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவி தலைவன், வருதற் கருமையைப் பாங்கிக்குக் கூறுதல்.

தலைமக னூர்க்குச் செலவொருப்படுதல்.

(இ-ள்) தலைவனிருப்பிடத்துக்குப் போதற்குத் தலைவி துணிந்து பாங்கிக்குக்கூறுதல்.

பாங்கி யிறைவனைப் பழித்துரைத்தல்

(இ-ள்) தோழி தலைவனை நிந்தித்துக் கூறுதல்.

இறைவி யிறையோன்றன்னை நேர்ந் தியற்படமொழிதல்.

(இ-ள்) பாங்கி தலைவனியலைப்பழித்தது பொறாளாய்த் தலைவி தலைவனோடுடன் பட்டவளா யவனியலைக்கூறுதல்

இதுவரையும் பதினொராநாள் நிகழ்ச்சி.

கனவுநலி புரைத்தல்

(இ-ள்) தலைவன் கனவிற்கூடினானாக, விழித்தபின்பு பொய்யாய்ப் போன துன்பத்தைப் பன்னிரண்டாநாள் தலைவி பாங்கியினிடத்திற் கூறுதல்.

கவினழி புரைத்தல்.

(இ-ள்) விகாரத்தாற் றலைவிதன் னலனழிந்ததைப் பாங்கியுடன் கூறுதல்.

தன்றுயர் தலைவனுக்குணர்த்தல் வேண்டல்.

(இ-ள்) தலைவிதன் றுன்பத்தைத் தலைவனுக்கு அறிவிக்க வேண்டுமென்று பாங்கியுடன் கூறுதல்.

துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்.

(இ-ள்) யான் துயரடைதலைத் தலைவற்கு நீ சென்று சொல்லென்று தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கி கூறுதல்.

அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி.

(இ-ள்) ஊரிலுள்ளார் சொல்லும் பழிச்சொல்லைக் கருதி அதனாலுற்ற பயத்தாற் றலைவி கூறுஞ்சொல்.

ஆறுபார்த் துற்ற அச்சக்கிளவி.

(இ-ள்) வழியைப்பார்த்து அதனாடைந்த பயத்தாற் றலைவி பாங்கியைநோக்கிக் கூறுஞ்சொல். பார்த்தல்-கருதல்.

காமமிக்க கழிபடர் கிளவி.

(இ-ள்) தலைவி ஆசைமிகுந்து சிறப்பச் சிந்தித்துச் சொல்லுஞ் சொல்; இக்கிளவிக்கு கடல், கானல், விலங்கு, புள் முதலியவற்றை விளித்துத் தலைவி யிரங்கிக் கூறுதன்மரபு.

இதுவுமது.

தன்னுட் கையா றெய்திடுகிளவி

(இ-ள்) தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுச் சொல்லுஞ்சொல்.

நெறி விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி தலைவன்வரும்வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

குறி விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி தலைவன்வரு மிரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

வெறி விலக்குவித்தல்

(இ-ள்) தாய்தந்தையர் வெறியாடுதலை விலக்கும்படி பாங்கிக்குத் தலைவி கூறுதல். வெறியாடுதல்-ஆடுவெட்டிப் பலியிடுதல்.

பிற விலக்குவித்தல்.

(இ-ள்) தலைவி யிதரவரவைத் தலைவற்குச் சொல்லி அவர் வரவை விலக்கெனப் பாங்கிக்குக் கூறுதல்.

குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.

(இ-ள்.) நந்தலைவர் விட்ட பெரியோர் மணம்பேசிவர அவரை நம்மவர் எதிர்கொண் டழைக்குமாறு செய்யெனத்தலைவி பாங்கியோடு கூறுதல்.

இவற்றுள் – அருமறை செவிலியறிந்தமை கூறலுந் தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றலும் அலர் பார்த்துற்ற அச்சக்கிளவியும் ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியும் நெறிவிலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும் வெறி விலக்குவித்தலும் பிற விலக்குவித்தலு குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தலுமாகிய ஒன்பதும் அச்சத்திற்கும், தலைமகனூர்க்குச் செலவொருப்படுதலும் பாங்கி யிறைவனைப் பழித்தலும் தலைவி யிறையோன்றன்னை நேர்ந்தியற்பட மொழிதலுமாகிய மூன்றும் உவர்த்தற்கும், பாங்கி பருவரல் வினவலும் கனவுநலிபுரைத்தலும் கவினழி புரைத்தலும் தன்றுயர் தலைவற்குணர்த்தல் வேண்டலும் துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லும் காமமிக்க கழிபடர் கிளவியும் தன்னுட் கையா றெய்திடுகிளவியுமாகிய ஏழும் ஆற்றாமைக்குரியன. பருவரல் வினவிய பாங்கியென்பதற்கு வினவலுமொரு துறையாக்லாற் சூத்திரத்திற் கூறிய பதினெட்டுக்குமேற் பத்தொன்பதாயிற்று.

இதுவரையும் பன்னிரண்டாநாள் நிகழ்ச்சி.

15-வரைதல் வேட்கை முற்றிற்று.
_____________


பதினாறாவது - வரைவுகடாதல்.

அஃதாவது – பாங்கி தலைவனுடன் வரைவுகடாதல். வரைவுகடாதல் – மணம் வினாவுதல்; அது பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.

(இ-ள்.) முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலியறிந்தமை கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும் அதற்குத் தான் மறைத்துக் கூறியதாகவுந் தலைவற்குக் கூறுதல்; இக்கிளவிமுதல், பின்வருங் கவினழிபுரைத்த லீறாகக் கூறியகிளவிகள் பலவற்றுள்ளும் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவியவாறு கண்டுகொள்க.

அலரறி வுறுத்தல்.

(இ-ள்.) ஊரில் தலைவியைத் தூற்றும் அலர்விரிந்ததென்று தலைவனுக்குப் பாங்கி யறிவுறுத்தல். அலர் - பழிமொழி. அறிவுறுத்தல் - அறியும்படி கூறுதல்.

தாயறி வுறுத்தல்

(இ-ள்.) தலைவியின் களவைத் தாயறிந்தாளென்று தலைவனுக்குத் தோழி யறிவுறுத்தல்.

வெறி யச்சுறுத்தல்.

(இ-ள்.) அன்னை வெறியாடுதல் செய்ய நினைத்தாளென்று தலைவனுக்குப் பயமுறுத்திப் பாங்கி கூறுதல்.

பிறர்வரை வுணர்த்தல்.

(இ-ள்.) பிறர் மணங்குறித்து வந்ததைத் தலைவற்குப் பாங்கி கூறுதல்.

வரைவெதிர் வுணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் நோக்கி நீ மணங்குறித்துத் தூதனுப்பினால் தலைவி சுற்றத்தா ரெதிர்கொண்டு வருவரெனக் கூறுதல்.

வரையுநா ளுணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுக்குப் பாங்கி மணஞ்செய்யுநாளை யறிவித்தல்.

அறிவறி வுறத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைமகளறிவைத் தலைவனுக் கறியக்கூறுதல்.

குறிபெயர்த்திடுதல்.

(இ-ள்.) பாங்கி யிக்குறி யியல்பல்ல வேறோர் குறியிடை வருகவென்று தலைவனுக்குக் கூறுதல்.

இதுவரையும் பதின்மூன்றாநாள் நிகழ்ச்சி.

பகல்வருவானை யிரவு வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

இரவு வருவானைப் பகல் வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

இதுவரையும் பதினான்காநாள் நிகழ்ச்சி.

பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.

(இ-ள்.) பகற்காலத்தும் இராக்காலத்தும் நெருங்கிவருகவெனப் பாங்கி தலைவற்குணர்த்தல். பயிலல் - நெருங்கல்.

பகலினு மிரவினு மகலிவணென்றல்.

(இ-ள்.) பகற்காலத்து மிராக்காலத்து நீ யிவ்விடத்து வராதேயென்று தலைவனைப் பாங்கி விலக்குதல்.

உரவோ னாடு முருங் குலனும் மரபும் புகழும் வாய்மையுங் கூறல்.

(இ-ள்) பாங்கி தலைவனைநோக்கி நாடுமுதலியவற்றாற் சிறந்த நீ மணஞ்செய்யாது வந்துபோவது தகுதியன்றெனக் கூறுதல்

ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்.

(இ-ள்) வரும் வழியைக்கருதி அவ்வழியிற் றிரிதரும் விலங்காற்றோன்றும் பயத்தைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்.

ஆற்றாத்தன்மை யாற்றக் கூறல்

(இ-ள்) தலைவியின் ஆற்றாத்தன்மையை யாற்றுதல் செய்யத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

காவன் மிகவுரைத்தல்

(இ-ள்) குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல் மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

காம மிக வுரைத்தல்.

(இ-ள்.) தலைவி வேட்கை மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

கனவு நலிபுரைத்தல்.

(இ-ள்.) தலைவிக்குக் கனவினால் வந்ததுன்பத்தைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

கவினழி புரைத்தல்.

(இ-ள்.) தலைவியழகழிந்திருத்தலைத்தோழிதலைவனுக்குக்கூறுதல்.

இவற்றுள் - வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப் பிறர் வரைவுணர்த்த லீறாகக் கூறிய வைந்தும் பொய்த்தற்கும், குறிபெயர்த் திடுதலும் பகல் வருவானை யிரவு வருகென்றல் முதலிய நான்கும் மறுத்தற்கும், உரவோன் நாடு மூருங் குலனு மரபும் புகழும் வாய்மையுங் கூறலொன்றுங் கழறற்கும், வரைவெதிர் வுணர்த்தல் முதலாகிய ஏனைய ஒன்பதும் எய்துதற்குமுரியன; இவையெல்லாங் குறிப்பினானும் வெளிப்படையானும் வரைவுகடாவிய வாறுணர்க.

16 - வரைவு கடாதல் முற்றிற்று.
---------------------


பதினேழாவது - ஒருவழித் தணத்தல்.

அஃதாவது - மேற்கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலைவன் தன்னூர்க் கொருவழி போய்வருகிறேனென்று போதல்;

அது - செலவறிவுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன் படுத்தல் செலவுடன்படுதல் சென்றுழிக்கலங்கல் தேற்றியாற்றுவித்தல் வந்துழிநொந்துரைத்தல் என எழுவகைப்படும்; அவைவருமாறு:-

தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தன்னூர்க்குப் போய்வருதலைப் பீரங்கிக்குக்கூறுதல்.

பாங்கி விலக்கல்.

(இ-ள்.) தலைவன் பிரிதலைப் பாங்கி விலக்குதல்.

தலைவ னீங்கல் வேண்டல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை யுடன்படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறுதல்.

தலைவனைப் பாங்கி விடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை யூர்க்குப்போய்வருகென விடுத்தல்.

பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி தலைவன் பிரிவைச் சொல்லுதல்.

தலைவி நெஞ்சோடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி மனத்தொடு வருந்திக் கூறுதல்.

இதுவரையும் பதினைந்தாநாள் நிகழ்ச்சி.

சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர் கிளவி.

(இ-ள்.) தலைவன் மாலைக்காலம்வரையும் வராமல் வரவு நீட்டித்தலாற் காமமிக அதனால் மிகுந்த நினைவொடு கூறுதல்.

பிறைகண் டிரங்கல்.

(இ-ள்.) தலைவி பிறைச்சந்திரனைக் கண்டு வருந்துதல்.

பிறையொடு புலம்பல்.

(இ-ள்.) மேற்கூறிய பிறையொடு தன்றுயர்கூறித் தலைவியிரங்கிக் கூறுதல்.

குருகொடு புலம்பல்.

(இ-ள்.) நாரைப் பறவையொடு இரங்கிக் கூறுதல்.

விடியாமைக் கிரங்கல்.

(இ-ள்.) இரவு விடியாதிருத்தலுக்குத் தலைவி வருந்திக்கூறுதல்.

தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு வருந்திய தலைவியைப் பாங்கி வருத்தத்தைதீ தணியச்செய்தல்.

இதுவரையும் பதினாறாநாள் நிகழ்ச்சி

தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வந்தசெய்தி தலைவிக்குத் தோழிகூறுதல்.

வந்தோன் றன்னொடு நொந்துவினாதல்.

(இ-ள) பாங்கி வந்த தலைவனொடு துன்பப்பட்டு வினாவுதல்.

தலைவன் பாங்கியொடு நொந்துவினாதல்.

(இ-ள்) எவ்வண்ணந் தலைவியை யாற்றியிருந்தாயென்று தலைவன் றோழியோடு வருந்திக் கேட்டல்.

பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமை கூறல்.

(இ-ள்) வெளி.

இவற்றுள் தன் பதிக்ககற்சி தலைவன் சாற்றலும் பாங்கி தலைவிக்வன் லவுணர்த்தலுமாகிய இரண்டுஞ் செலவறிவுறுத்தற்கும், தலைமகனைப் பாங்கி விலக்கலொன்றுஞ் செல வுடன்படாமைக்கும், நீங்கலவேண்டலொன்றுஞ் செலவுடன் படுத்தற்கும், பாங்கி விடுத்தலொன்றுஞ் செலவுடன்படுதற்கும், தலைமகன் நெஞ்சொடு புலத்தல் முதலிய ஆறுஞ் சென்றுழிக்கலங்கற்கும் , தலைமகளை யாற்றுவித்தலும் தலைமகன் வந்தமை தலைமகட் குணர்த்தலுமாகிய இரண்டுந் தேற்றி யாற்று வித்தற்கும், பாங்கி வந்தோன் றன்னொடு நொந்து வினாதல் முதல் மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்கு முரியன.

17-ஒருவழித்தணத்தல் முற்றிற்று.
-------------------

பதினெட்டாவது – வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்.

அஃதாவது-விவாகத்தை யிடையிலே நிச்சயித்து விவாகத்துக்கு வேண்டும் பொருள் காரணமாகத் தலைவன் பிரிதல்; அது-பிரிவறிவுறுத்தல் பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழி மகிழ்ச்சி யென வொன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்.

(இ-ள்) விவாகத்துக்காகப் பொருள்கொண்டு வருதற்குப் பிரியும் என்னுடைய பிரிவைத் தலைவிக்குச் சொல்லென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

நின்பொருட் பிரிவுரை நீயவட்கென்றல்.

(இ-ள்) விளி.

நீடேனென்றவ னீங்கல்

(இ-ள்) தலைவன் நீட்டித்திராது விரைந்து வருவேனென்று பாங்கியொடு கூறி நீங்குதல். நீட்டித்தல்-காலந்தாழ்த்தல்.

சூளெடுத் துரைத்தல்

(இ-ள்) பாங்கி தலைவனுக்குச் சபதமெடுத்துச் சொல்லுதல்.

இதுவரை பதினேழாநாள் நிகழ்ச்சி.

பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்.

(இ-ள்.) பொருள்வயிற் பிரியுந் தலைவன் செல்லுதலைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

பூங்குழையிரங்கல்.

(இ-ள்) தலைவி வருந்தல்.

பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்) இவ்வாறு நீ யிரங்குவதென்னென்று தோழி தலைவியை நோக்கிக் கொடிய சொல்லைச் சொல்லுதல்.

தலைவி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்) மேற்கூறியபாங்கியைமனத்தினானொந்துதலைவிகூறுதல்.

வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்.

(இ-ள்.) பாங்கிதலைவர் திரும்பிவருவரென்றுகூறுதல். வலித்தல் - வற்புறுத்திக் கூறுதல்.

பருவங்கண்டு பெருமகள் புலம்பல்.

(இ-ள்.) தலைவன் பிரியும்போது கார்காலத்துக்கு முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப் போயின னாதலாலே கார்ப்பருவங்கண்டு தலைவி புலம்பிக் கூறுதல்.

இதுவுமது

இகுளை வம்பென்றல்.

(இ-ள்.) அவ்வாறு புலம்பிய தலைவி தேறும் வண்ணம் பாங்கி இது-காலத்தின் வந்த மேகமன்று. இடையே வம்பாகத் தோன்றிய தென்று கூறுதல். வம்பு - காலமல்லாத காலத்திற் றோன்றும் பொருள்.

இறைமகள் மறுத்தல்.

(இ-ள்.) தலைவி பாங்கி கூறியவதனை மறுத்துக் கூறுதல்.

அவர்தூதாகி வந்தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்.

(இ-ள்.) தலைவி கார்காலம் வந்ததென்று கூறிய சொற்கேட்ட பாங்கி தலைவன் தான் வருகின்ற செய்தியை யறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் தூதாய்வந் தடைந்த்தென்று கூறுதல்.

தலைவி யாற்றல்.

(இ-ள்.) தலைவி துன்பத்தைச் சகித்திருத்தல்.

அவனவட் புலம்பல்.

(இ-ள்.) பொருளீட்டச்சென்ற தலைவன் தன்கருமமுற்றிய பின்றையே யவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்புதல்.

இதுவுமது.

இதுவரையும் பதினேழாநாள் நிகழ்ச்சி.

பாகன்றன்னொடு சோகங்கொண்டவன் சொல்லல்.

(இ-ள்.) சோகங்கொண்ட தலைவன் தேர்ப்பாகனோடு தேரை விரைந்து நடாத்தச் சொல்லுதல்.

இதுவுமது.

மேகந் தன்னோடு சொல்லல்.

(இ-ள்.) தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிக் கூறுதல்.

பாங்கி வலம்புரிகேட்டவன் வரவறிவுறுத்தல

(இ-ள்.) வலம்புரிச் சங்கோசையைக் கேட்டுத் தோழி தலைவன் வரவைத் தலைவிக் கறிவித்தல்.

வலம்புரிகிழத்தி வாழ்த்தல்.

(இ-ள்.) வலம்புரிச்சங்கைத் தலைவி வாழ்த்தல்.

இதுவுமது.

தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமை வினாதல்.

(இ-ள்.) தலைவன் வந்தவிடத்துத் தோழி தலைவியை நினைத்த துண்டோவென்று கேட்டல்.

வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைவன் பொருளீட்டி வந்த இற்றைத்தினம் முப்பத்து நான்கா நாளென்க; முப்பத்து நான்கென்னுங் கணக்கு ஏற்றாற்பெற்றதெனின், "களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டந், திங்க ளிரண்டி னகமென மொழிப" என்னும் இறையனாரகப் பொருட் சூத்திரவுரையில் பொருளீட்டிவந்த தலைவன் ஆறு நாளில் வரைவு முடிப்பபெனென்று கூறியதனாலும் தலைவன் றலைவியைக் கண்ட பதினெட்டாநாளிற் பொருள்வயிற் பிரிந்ததனாலும் ஐம்பத்தாறாநாள் வரைவு முடிந்ததாகக் கூறுதலாலும் என்க. அற்றேல், "வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோ, ரிருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்" எனக்கூறி னாராலோவெனின், இருதிங்களென்றது எல்லை கடவாமைக்குக் கூறியதன்றி இருதிங்களுள் வரக்கூடாதென்னும் யாப்புறவின்மையினென்க. ஆயின், "வரைவினீட்டந் திங்களிரண்டினக" மென்றதனால் அறுபதாநாள் மணமுடிந்ததாகக் கூறினாலென்னையெனின், அச்சூத்திரவுரையில் திங்களிரண்டினு நான்கு நாளிருக்க மணமுடிப்பதியல் பென்று கூறியதானால் கூறலாகாதென்க. மாதத்தினந்தமாகிய நான்கு நாட்கள் மணத்துக்கு விலக்கப்பட்டனவென்று சோதிடநூலார் சிலர் கூறுதலாலிங்ஙனங் கூறியது போலும்.

தலைவ னினைத்தமை செப்பல்.

(இ-ள்.) வெளி.

ஆற்றுவித் திருந்த அருமை சாற்றல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

இவற்றுள் – என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றலும் பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் பிரிவறிவுறுத்தற்கும், நின்பொருட் பிரிவுரை நீயவட் கென்றலொன்றும் பிரிவுடன் படாமைக்கும், நீடேனென்றவ னீங்கலொன்றும் பிரிவுடன்படுத்தற்கும், தலைவியிரங்கலும் பாங்கி கொடுஞ்சொற் சொல்லலும்பருவங்கண்டு பெருமகள் புலம்பலும் இறைமகண் மறுத்தலும் அவனவட் புலம்பலுமாகிய ஐந்தும் பிரிவுழிக் கலங்கற்கும், வருகுவர் மீண்டெனப் பாங்கி
வலித்தலும் இகுளை வம்பென்றலும் அவர் தூதாகி வந்தடைந்த திப் பொழுதென்றலுமாகிய நான்கும் வன்பொறைக்கும், பிணை விழியாற்றலொன்றும் வற்புறைக்கும், பாகனொடு சொல்லலும் மேகத்தொடு சொல்லலுமாகிய இரண்டும் வரும்வழிக் கலங்கற்கும், வரவறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்குமுரியன.

18-வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் முற்றிற்று.

முதலாவது களவியல் முற்றிற்று.
___________


இரண்டாவது வரைவியல்.

அஃதாவது – தலைவன் தலைவியைக் குரவர் முதலாயினோர் கொடுப்பவுங் கொடாதொழியவும் கற்பிற்குநிமித்தமாகிய வதுவைச் சடங்கொடு பொருந்தி மணஞ்செய்துகோடல்; ஆதலாலிதுகற்பின் பாற்படுமென்க; இவ்வரைவு-வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலுமாகிய இரண்டுவகைப்படும்; அவற்றுள்,

பத்தொன்பதாவது.-வரைவு மலிவு.

அஃதாவது-வரைவு தொடங்கி நடக்கு முயற்சிமிகுதல்; அது- வரைவு முயல்வுணர்த்தல் வரைவெதிர் வுணர்த்தல் வரைவறிந்து மகிழ்தல் பராவல் கண்டு வத்தலென நான்கு வகைப்படும்; அவைவருமாறு:-

காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தனவிலையாகத் திரவியங் கொடுத்ததைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

காதலி நற்றா யுள்ள மகிழ்ச்சி யுள்ளல்.

(இ-ள்.) தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக்கண்டு நம்மகட்கு மணஞ்செய்யுங்கால‌மென்று நற்றாய் மகிழுமுள்ளத்து மகிழ்ச்சியைப் பாங்கி நினைத்துக் கூறுதல்.

பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தமர்மணங்கூறி வந்துழித் தலைவி தமர் மணமெதிர்ந்தமை பாங்கிதலைவிக் குணர்த்தல்.

தலைமக ளுவகை யாற்றா துளத்தொடு கிளத்தல்

(இ-ள்) தலைவி மகிழ்ச்சியடங்காது நெஞ்சொடு கூறுதல்.

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

தலைவி மணம்பொருட்டாக வணங்கைப் பராநிலை காட்டல்

(இ-ள்) தலைவி மணம் நிமித்தமாக தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து வாழ்த்திக்கொண்டு நிற்கு நிலையைப்பாங்கி தலைவனுக்குக் காட்டுதல்.

இதுவுமது

கண்டோன் மகிழ்தல்.

(இ-ள்) தலைவி தெய்வத்தை வாழ்த்துதலைக் கண்ட தலைவன் மகிழ்தல்.

இவற்றுள்-காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தலும் தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டலுமாகிய விரண்டும் வரைவு முயல்வுணர்த்தற்கும் , பாங்கி தமர்வரை வெதிர்ந்த மை தலைமகட்குணர்த்தலாகிய வொன்றும் வரைவெதிர் வுணர்த்தற்கும், நற்றாயுள்ள மகிழ்ச்சியுள்ளலும் உவகையாற்றாதுளத் தொடுகிளத்தலுந் தலைவனைப் பாங்கிவாழ்த்தலுமாகிய மூன்றும் வரைவெதிர்ந்துமகிழ்தற்கும், தலைமகளணங்கைப்பராநிலைகண்டோன் மகிழ்தலாகிய வொன்றும் பராவல் கண்டுவத்தற்கு முரியன.

இதுவரை ஐம்பத்தொன்றாநாள் நிகழ்ச்சி.

19-வரைவு மலிவு முற்றிற்று.
------------------------

இருபதாவது-அறத்தொடு நிற்றல்.

அஃதாவது-களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல். முறையே வெளிப்படுத்தி நிற்றலாவது, தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்றல். பாங்கி செவிலிக்கறத்தொடு நிற்றல். செவிலி நற்றாய்க் கறத்தொடுநிற்றல். நற்றாய் தன்னையர்க் கறத்தொடு நிற்றலெனக் கொள்க. அறத்தொடு நிற்றற்குப் பொருள், முறையே வெளிப்படுத்தி நிற்றலென்பது; இப்பொருள் எவ்விடத்திற்கு மாகாது இவ்விடத்திற்கு மாத்திரமென்று
கொள்க; அது-முன்னிலை முன்னிலைப்புறமொழியென இருவகைபடும், அவை வருமாறு:-

கையறு தோழி கண்ணீர் துடைத்தல்.

(இ-ள்) கிளவுப் புணர்ச்சியால் மிகவும் அலரெழுதல் கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்புற்ற தறிந்த தலைவன் பிரிந்தேக, அப்பிரிவாற்றாமையாலழுது கொண்டிருந்த தலைவியை ஆற்றிக் கையற்ற தோழி யருகிருந்து கண்ணீர் துடைத்தல். கையறல்-செயலறல்.

கலுழ்தற்குக் காரணங் கூறல்.

(இ-ள்) தலைவி யழுதற்குக் காரணஞ் சொல்லுதல்.

தலைவன் தெய்வஙகாட்டித் தெளிப்பத் தெளிந்தமை யெய்தக்கூறல்

(இ-ள்) தலைவன் றெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல மெய்யென்று தெளிந்த அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறுதல்.

இறைவி தலைவ னிகந்தமை யியம்பல்

(இ-ள்) தலைவி தலைவ னீங்கினமை பாங்கிக்குக் கூறுதல்.

பாங்கி யியற்பழித் துரைத்தல்.

(இ-ள்) தலைமகனியலைப் பாங்கி பழித்துக் கூறுதல்.

தலைமக ளியற்பட மொழிதல்

(இ-ள்) அங்ஙனங் கூறக்கேட்ட தலைமகள் தலைமகனியற்கை யோரியல்புபட மொழிதல்.

தெய்வம் பொறைகொளச் செல்குவ மென்றல்.

(இ-ள்) தலைவர் தெய்வத்தின்மேற் பிரியேனென்றாணை கூறிப் பிரிந்துபோனா ராதலால் அத்தெய்வம் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தாரல்லர் நீ பொறுத்துக்கொள்ளென்று வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவேமென்று தலைவி பாங்கியுடன் கூறுதல்

இல்வயிற் செறித்தமை செப்பல்

(இ-ள்) தலைவி தன் மெய் வேறுபட்டாலும் ஊரிலுள்ளா ரலர் தூற்றுதலாலும் நற்றாயுளத்தில் வெறுப்பாகி மனையிடத்திலென்னைக் காவல்செய்தாளென்று பாங்கிக்குக் கூறுதல்.

செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமை கூறல்

(இ-ள்) செவிலித்தாய் செறிந்த இருட்குறியிடத்துத் தலைவன் வரக் கண்டாளெனத் தலைவி பாங்கிக் குணர்த்தல்.

செவிலி தலைமகள் வேற்றுமைக் கேது வினாதல்.

(இ-ள்) செவிலித்தாய் தலைவியின் தவயவ வேறுபாட்டுக்குக் காரண மென்னையென்று பாங்கியைக் கேட்டல்.

பாங்கி வெறிவிலக்கல்.

(இ-ள்.) செவிலித்தாய் வெறியாட்டாளனையழைத்து மகட்கு நோயுற்றவாறும் அதுதீருமாறுஞ் சொல்லவேண்டுமென்று கேட்புழித் தெய்வம் வந்தாடும்போது பாங்கி அத்தெய்வத்தை யாடவேண்டாவென்று விலக்குதல். வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தாற் றீருமென்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்கலெனினு மமையும்.

வெறி விலக்கியவதனாற் செவிலி பாங்கியை வினாதல்.

(இ-ள்.) வெறியாடல் விலக்கிய காரணத்தைப் பாங்கியுடன் செவிலித்தாய் கேட்டறிதல்.

தோழி பூத்தரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) பூவைக் கொடுத்தனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்தித் தோழி கூறுதல்.

புனறரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) புனலாற்கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக்கூறுதல்.

களிறுதரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) யானையைத் தடுத்துக் காத்துக் கூடும்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல்.

தலைமகள் வேற்றுமைகண்டு நற்றாய் செவிலியை வினாதல்.

(இ-ள்.) தலைவி வேறுபாட்டை நற்றாய் தெரிந்து அதனுண்மையைச் செவிலியைக் கேட்டறிதல்.

செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியா லறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) முன்னிலைப் புறமொழியா லுணர்த்தாது முன்னிலை மொழியினாலே களவை வெளிப்படுத்தி நற்றாய்க்குச் செவிலி கூறுதல்.

இவற்றுள்-வெறி விலக்கலொன்று முன்னிலைப் புறமொழிக்கும், ஏனைய பதினேழு முன்னிலை மொழிக்கு முரியன.

20 - அறத்தொடு நிற்றல் முற்றிற்று.
---------------------

இருபத்தொராவது-உடன்போக்கு.

அஃதாவது-தலைவன் தன்னூர்க்குத் தலைவியை யுடன்கொண்டு போதல்; அது-போக்கு கற்பொடுபுணர்ந்த கவ்வை மீட்சியென மூன்றுவகைப்படும்; அவற்றுள்-போக்காவது-போக்கறிவுறுத்தல் போக்குடன்படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல விலக்கல் புகழ்தல் தேற்றல் என எட்டுவகைப்படும்; அவ்வெட்டும்பாங்கி
தலைவற்குடன் போக்குணர்த்தல் முதல் தலைவன் றன்பதியடைந்தமை தலைவற் குணர்த்தலீறாகிய பதினெட்டு விரிப்படும்; அவைவருமாறு:-

பாங்கி தலைவற் குடன்போக் குணர்த்தல்.

(இ-ள்) காவலதிகப்படுதலால் தலைவியை யுன்னூர்க் குடன் கொண்டுபோதியெனப் பாங்கி தலைவனுக்குக்கூறுதல்.

ஆங்கவன் மறுத்தல்

(இ-ள்) தலைவிகொடிய பாலையில் நடக்கச் சகியாளென்று தலைவன் தடுத்துக் கூறுதல்.

போக்குடன் படுத்தல்

(இ-ள்) தலைவியைத் தலைவன் கூட்டிப்போதற்குப் பாங்கியுடன் படுத்திக் கூறல்.

தலைவன் போக்குடன் படுதல்.

(இ-ள்) தலைவன் தலைவியை யுடன்கொண்டுபோதற்குச் சம்மதித்தல்.

பாங்கி தலைவிக் குடன்போக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுடன் தலைவி போதலை யவளுக்குப் பாங்கி கூறுதல்.

தலைவி நாணழி விரங்கல்.

(இ-ள்.) உடன் போக்கில் நாணழியுமேயென்று அதற்குத் தலைவி வருந்துதல்.

கற்பு மேம்பாடு பாங்கி கழறல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி கற்பின் பெருமை கூறுதல்.

தலைவி யொருப்பட் டெழுதல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் துணிந்துபோகச் சம்மதித்தல்.

பாங்கி சுரத்தியல் புரைத்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாலைநிலத்தின் கொடுமையைப் பாங்கி கூறுதல்.

சுரத்தியல் புரைத்துழிச் சொல்லல்.

(இ-ள்.) பாலையின் கொடுமை கூறிய தோழிக்குத் தலைவி கூறுதல்.

பாங்கி கையடை கொடுத்தல்.

(இ-ள்.) தலைவனுக்குத் தலைவியைப் பாங்கி யடைக்கலங் கொடுத்தல்.

பாங்கி வைகிருள் விடுத்தல்.

(இ-ள்.) இருளார்ந்த இடையாமத்திற் பாங்கி தலைவியைத் தலைவனுடன் விடுத்தல்.

இதுகாறும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென்றுணர்க.

தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப் பாலையிற் செலுத்துதல்.

தலைமக ளசைவறிந் திருத்தல்.

(இ-ள்.) தலைவியினது வருத்தத்தையறிந்து தலைவ னவளுடனிருத்தல்.

உவந்தலர் சூட்டி யுண்மகிழ்ந் துரைத்தல்.

(இ-ள்.) தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு மலரைச்சூட்டி யதனாற் பரவசமகிழ்ச்சியடைந்து கூறுதல். உவகை - அறிவொடு கூடியது, மகிழ்ச்சி-அறிவழிந்தது. என்னை? "உள்ளக்களித்தலுங் காண மகிழ்தலுங் கள்ளுக்கில் காமத்திற்குண்டு" என்னுந்திருக்குறட்குப் பரிமேலழகர் கூறிய வுரையானு முணர்க.

கண்டோ ரயிர்த்தல்.

(இ-ள்.) வடிவின் மேம்பாட்டாற் றலைவனையுந் தலைவியையுங் கண்டோரைய முறக்கூறுதல். கண்டோர் - பாலைநிலத்தெயிற்றியர்.

கண்டோ ரிரங்கல்.

(இ-ள்.) அங்ஙனம் ஐயுற்றோர் வருந்திக் கூறுதல்.

காதலின் விலக்கல்.

(இ-ள்) மேற்கூறிய கண்டோர் ஆசையுடன் இங்கிருந்து நாளைப் போகலாமென்று வழிச்செலவு விலக்குதல்.

தன்பதி யணிமை சாற்றல்.

(இ-ள்.) இவ்விடத்தில் வைகிப்போதல் வேண்டுமென்ற தலைவிக்குத் தலைவனுடைய பதி சமீபத்திலுள்ளதென்று கண்டோர் கூறுதல்.

தலைவன் றன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

இவற்றுள்- பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தலும் தலைவிக்குடன் போக்குணர்த்தலுமாகியவிரண்டும் போக்கறிவுறுத்தற்கும், தலைமகன் மறுத்தலும் தலைவி நாணழிந் திரங்கலுமாகிய விரண்டும் போக்குடன் படாமைக்கும், பாங்கி தலைவனையுடன்படுத்தலும் தலைவிகற்பு மேம்பாடு பாங்கி கழறலுமாகிய விரண்டும் போக்குடன் படுத்தற்கும், தலைவன் போக்குடன்படுத்தலும் தலைவியொருப் பட்டெழுதலும்பாங்கி சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலுமாகிய மூன்றும் உடன்போக்குடன் படுதற்கும், பாங்கி கையடை கொடுத்தலும் வைகிருள் விடுத்தலும் தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்தலுமாகிய மூன்றும் போக்கற்கும், தலைவன் தலைவியசைவறிந்திருத்தலும் கண்டோர் காதலின் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், தலைவன் தலைவியை யுவந்தலர் சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தலும் கண்டோரயிர்த்தலுமாகியவிரண்டும் புகழ்தற்கும், கண்டோர் தன்பதியணிமை சாற்றலும் தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்தலுமாகிய விரண்டுந் தேற்றற்குமுரியன. சுரத்தியல் புரைத்தல் - சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலினுங், கண்
டோரிரங்கல் - கண்டோரயிர்த்தலினு மடங்குமென்க.

21-உடன் போக்கு முற்றிற்று.
_______________

இருபத்திரண்டாவது - கற்பொடு புணர்ந்த கவ்வை.

அஃதாவது - தலைவி தலைவனதுடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலருமறிதல்; அது – செவிலிபுலம்பல் நற்றாய்புலம்பல் மனைமருட்சி (நற்றாய்மருட்சி) கண்டோரிரக்கம் செவிலி பின்றோடிச்சேறல் என ஐந்துவகைப்படும்; அவை வருமாறு:-

செவிலி பாங்கியை வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தேடிக் காணாமற் செவிலி பாங்கியைக் கேட்டல்.

பாங்கி செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் சென்றதைப் பாங்கி செவிலிக்குக் கூறுதல்.

பாங்கியி னுணர்ந்த செவிலி தேற்றுவோர்க் கெதிரழிந்து மொழிதல்.

(இ-ள்.) வெளி, அழிந்து கூறல்-நொந்து கூறுதல்.

செவிலி் தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தல்.

(இ-ள்,) தலைவி போதற்குத் தன் குறிப்பினா லறிவித்த தன்மையை யறிந்திலேனென்று தன்னறிவின்மையை நொந்து செவிலி கூறுதல், நோதல்-வருந்துதல்.

செவிலி தெய்வம் வாழ்த்தல்.

(இ-ள்.) தலைவிக்கு இடையூறு நிகழாவண்ணந் தெய்வத்தைச் செவிலி வாழ்த்துதல்.

இவ்வைந்தும் செவிலி புலம்பலின் விரியென்க.

செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க்குத் தலைவி தலைவனுடன் போக்கை வெளிப்படுத்திக் கூறுதல்.

நற்றாயிரங்கல்

(இ-ள்) நற்றாய் வருந்திக் கூறுதல்.

நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல்.

(இ-ள்) நற்றா யுயிர்த் பாங்கியுடன் வருந்திக் கூறுதல்.

நற்றாய் பாங்கியர் தம்மொடு புல்பல்.

(இ-ள்) நற்றாய் பாங்கியருடன் வருந்திக் கூறுதல்.

நற்றா யயலார் தம்மொடு புலம்பல்

(இ-ள்) வெளி

நற்றாய் பயிலிடந் தம்மொடு புலம்பல்

இ-ள்) தலைவி பழகி விளையாடு மிடங்களோடு நொந்து நற்றாய் வருந்திக் கூறுதல்.

இவ்வாறும் நற்றாய் புலம்பலின் விரியென்க.

நிமித்தம் போற்றல்

(இ-ள்) தலைவி வருதற்குத் தக்க சகுனத்தைத் துதித்து நற்றாய் கூறுதல்.

சுரந் தணிவித்தல்.

(இ-ள்) தலைவிக்குப் பாலைநிலத்தின் வெப்பந்தணியுமாறு நற்றாய் பிரார்த்தித்தல்.

தன்மகள் மென்மைத்தன்மைக் கிரங்கல்.

(இ-ள்) நற்றாய் தன்மகள் மெல்லியதன்மைக்கு இரங்கிக் கூறுதல்.

தன்மக ளிளமைத் தன்மைக் குளமெலிந் திரங்கல்.

(இ-ள்) நற்றாய் தன்மக ளிளமைத் தன்மைக்கு மனமெலிந்து வருந்திக் கூறுதல்.

அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கல்.

(இ-ள்.) நற்றாய் தலைவியது வெருவுந் தன்மையை நினைந்துதான் பயமுற்று வருந்துதல்.

இவ்வைந்தும் மனமருட்சியின் விரியென்க.

கண்டோரிரக்கம்.

(இ-ள்.) வழியுற் கண்ட மாதர் தலைவியைநோக்கி வருந்தி யழுங்கல். இரக்கம்-அழுங்குதல்.

இஃதொன்றுங் கண்டோரிரக்கம்; இதற்கு விரியில்லை.

செவிலி யாற்றாத் தாயைத் தேற்றல்.

(இ-ள்.) தலைமகள் பிரிவைச் சகியாத நற்றாயைச் செவிலி தேறுமாறு கூறுதல்.

இதுவுமது.

ஆற்றிடைமுக்கோற் பகவரை வினாதல்.

(இ-ள்.) செவிலி தேடிப்போங்கால் வழியிடையெதிர்வருந்திரி தண்டமுடைய அந்தணரை வினாவுதல்.

மிக்கோ ரெதுக் காட்டல்.

(இ-ள்.) செவிலி வினாயதற்கு உயர்ந்தோர் அஃது உலகவியல்பென்று காரணங்காட்டிக் கூறுதல்.

எயிற்றியோடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி பாலைநிலத்துப் பெண்ணொடு வருந்துதல்.

குரவொடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி குராமரத்தொடு வருந்துதல்.

சுவடுகண் டிரங்கல்.

(இ-ள்.) நிலத்தின்மேற் காலழுந்திய குறியைச் செவிலி கண்டிரங்கிக் கூறுதல்.

கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்.

(இ-ள்.) உடன் போக்குப்போய தலைவனுந் தலைவியும்போல அன்புகலந்து வழியிடை வருவோ ரிருவரைக்கண்டு செவிலிவினாதல்.

அவர் புலம்ப றேற்றல்.

(இ-ள்.) செவிலி யிரங்கிப் புலம்புதலை யெதிர்வந்தோர் தெளிவித்தல்.

செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்.

(இ-ள்.) செவிலி தன் புதல்வியைக் காணாது துன்பமிகுதல்.

இவ்வொன்பதுஞ் செவிலி பின்றேடிச்சேறலின் விரியென்க.

22. கற்பொடு புணர்ந்த கவ்வை முற்றிற்று.
-----------------------------------------------------------

இருபத்து மூன்றாவது ---- மீட்சி

அஃதாவது-மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும் உடன்போய தலைவனுந் தலைவியு மீண்டுவருதலு மடங்கப் பொதுப்பட மீட்சியென்றார். அது தெளிதல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென நான்கு வகைப்படும்; அவை தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல் முதல் நற்றாய்கேட் டவனுளங்கோள்வேலனை வினாத லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு -

தலைவி சேணகன்றமை செவிலி தாய்க் குணர்த்தல்.

(இ-ள்) தலைவி நெடுந்தூரம் போனதைச் செவிலி நற்றாய்குச் சொல்லுதல்

இதுவரை ஐம்பத்துமூன்றாநாள் நிகழ்ச்சி.

தலைவன் நம்மூர் சார்ந்தமை சாற்றல்.

(இ-ள்) ஐம்பத்து நான்காநாள் தலைவன் மீட்சியில் தமதூரைத் தாஞ்சார்ந்தமை தலைவிக் குணர்த்தல். தம்மென்பது தலைவன் றலைவியரிருவரையும்.

தலைவி முன்செல்வோர் தம்மோடு தன்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுதல்.

(இ-ள்) தலைவி தனக்கு முன்னே போகும் அந்தணரிடத்தில் தன் வரவைத் தன் தோழிகட்குச் சொல்லி அனுப்புதல்.

முன்சென்றோர் பாங்கியர்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

நற்றாய்கேட் டவ னுளங்கோள் வேலனை வினாதல்.

(இ-ள்.) நற்றாய் தன்மகள் வரவையறிந்து தலைவனுட் குறிப்பின்னதென்று வெறியாட்டாளனைக் கேட்டல் .


இவற்றுள்- தலைவி சேணகன்றமை செவிலி தாய்க் குணர்த்தலுந் தலைவன் றம்மூர் சார்ந்தமை சாற்றலுமாகிய இரண்டுந் தெளிதற்கும், தலைவிமுன் செல்வோர் தம்மொடு தன் வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தலும் பாங்கி நற்றாய்க் குணர்த்தலுமாகிய இரண்டும் மகிழ்ச்சிக்கும், நற்றாய் தலைமக னுளங்கோள் வினாதலொன்றும் வினாதற்கும், பாங்கியர்க்கு முன்சென்றோ ருணர்த்தலொன்றுஞ் செப்பற்கு முரியன.

23- மீட்சி முற்றிற்று.
________________

இருபத்து நான்காவது.-- தன்மனைவரைதல்

அஃதாவது: உடன்போய் மீண்டுவந்த தலைவன் றலைவியைத் தன்னூர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்து கோடல். அது-வினாதல் செப்பல் மேவலென மூன்று வகைப்படும்; அவை- நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்முதல் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்த லீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:-

நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்.

(இ-ள்) தலைவி நற்றாய் தனமனையின் மணஞ்செய்யும் விருப்பினாற் செவிலியை வினாவுதல்.

செவிலிக் கிகுளை வரைந்தமை யுணர்தல்

(இ-ள்) பாங்கி செவிலித்தாய்க்குத் தலைவன் தலைவியை மணந்தமை தூதராற் றெரிந்து கூறுதல்.

வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்) வெளி

தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க் கியம்பு சென்றென்றல்.

(இ-ள்) விவாகமுடித்து மீண்டுவந்த தலைவன் றலைவியை விவாகஞ் செய்தமை உன் சுற்றத்தார்க்குச் சென்று சொல்லென்று பாங்கியினிடத்துக் கூறுதல்.

பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல்.

(இ-ள்) வெளி.

இவற்றுள்-நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதலொன்றும் வினாதற்கும் , வரைந்தமை பாங்கி செவிலிக் குணர்த்தலும் வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தலும் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலுமாகிய மூன்றும் செப்பற்கும், யான் வரைந்தமை நுமர்க்கியம்புசென்றென்ற லொன்றும் மேவற்கு முரியன.

இதுவரை ஐம்பத்து நான்காநாள் நிகழ்ச்சி.

24-தன்மனை வரைதன் முற்றிற்று
-----------------

இருபத்தைந்தாவது-உடன்போக் கிடையீடு.

அஃதாவது-நம்மனையில் வரைந்துகொள்ளாது தன்னூரில்வரைந்தானென்று தலைவி சுற்றத்தார்வெறுப்படைதலால் தலைவியையுடன் கொண்டு போம்போது தலைவி சுற்றத்தா ரிடையீடுபட்டு மீண்டு தலைவி வருதல். அது-போக்கறிவுறுத்தல் வரவறிவுறுத்தல் நீக்கம் இரக்கமடுமீட்சி என நான்கு வகைப்படும்; அவை:-நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்திவிடுத்தல் முதல் தலைமகளவன் புற நோக்கிக் கவன்றாற்ற லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு:-

நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்தி விடுத்தல்.

(இ-ள்) ஐம்பத்தைந்தாநாள் தன்னூரைவிட்டு நீங்குந் தலைவி எதிர்வருவார் தம்மொடு தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்குச் சொல்லியனுப்புதல்.

தலைமக டன்செல வீன்றாட் குணர்த்தி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் போதலைத் தன்றாய்க்குச் சொல்லியனுப்புதல்.

ஈன்றாட் கந்தண ருரைத்தல்.

(இ-ள்.) வெளி.

ஈன்றா ளறத்தொடு நிற்றல்.

(இ-ள்.) நற்றாய் தலைவியின்களவை வெளிப்படுத்துதல்.

தமர்பின் சேறலைத் தலைவி கண்டு தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) சுற்றத்தார் பின்வருதலைத் தலைவி பார்த்துத் தலைவனுக்கு அறிவித்தல்.

தலைமகளைத் தலைமகன் விடுத்தல்.

(இ-ள்.) வெளி.

தமருடன் செல்பவ ளவன் புறநோக்கிக் கவன் றாற்றல்.

(இ-ள்.) சுற்றத்தாருடன் செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதல்.

நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தலும் தன்செலவீன்றாட் குணர்த்தி விடுத்தலும் ஈன்றாட் கந்தணர் மொழிதலுமாகிய மூன்றும் போக்கறிவுறுத்தற்கும், ஈன்றாளறத்தொடு நிற்றலும் அறத்தொடு நிற்றலிற் றமர்பின் சேறலைத் தலைவிகண்டுடைத்தலுமாகிய விரண்டும் வரவறிவுறுத்தற்கும், தலைமகளைத் தலைமகன் விடுத்தலொன்று நீக்கற்கும், தமருடன் செல்ப வளவன் புறம் நோக்கிக்கவன் றாற்றலொன்றும் இரக்கமொடு மீட்சிக்கு முரியன.

இதுவரை ஐம்பத்தைந்தா நாள் நிகழ்ச்சி.

25 - உடன் போக்கிடை யீடு முற்றிற்று.
----------------

இருபத்தாறாவது - வரைவு.

அஃதாவது - ஐம்பத்தாறாநாள் தலைவன்மீண்டு தலைவியில்லில் பின்வராநின்றுழித் தலைவி தமரெதிர்கொண்டு போயழைத்து வந்தபின் உலகவியற்கையின்படி பலவிதமாக அருங்கலமுதலிய வேண்டுவனகொடுத்து அந்தணரையுஞ் சான்றோரையு முன்னிட்டு மணச்சடங்குடனே வதுவை முடித்தல், இதற்கு வகையும் விரியுமில்லை.

அந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலந் தந்து வரைதல்.

(இ-ள்.) பிராமணரையும் பெரியவரையு முன்வைத்துக்கொண்டு தலைவன் அரிய ஆபரணங்களைத் தலைவிக்குக் கொடுத்து விவாகஞ் செய்தல்.

கண்டோர் மகிழ்ந்து கூறல்.

(இ-ள்.) அங்ஙனஞ் செய்த மணத்தைப் பார்த்தவர் மகிழ்ந்து சொல்லுதல்.

இங்ஙனமொரு தலைவனுக்குந் தலைவிக்கும் ஒருகால் மணமுடிப்பதன்றிப் பலகான் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவதன்றே, இவ்வாறு கூறியதென்னை யெனின்? உடன்போய்த் தன்னூரின் கண்ணே வரைதலு மீண்டுவந்து தன் மனையின் கண்ணே வரைதலும் அந்தணர் சான்றோரை முன்னிட்டுத் தாய்தமரறிய மணச் சடங்கின் முறையே முடியாமையான் அவையிரண்டும் மணமாகா; அஃதென்னையெனின்? உலகியல்பின்கண் தாய்தமரறியாது மணச்சடங்குமின்றி ஒருவன் உரிமைகருதித் தாலிகட்டு மணம் மணமென்றுலகின் கணுள்ளார் கைக்கொளார்; அவர்க்கேமீண்டு மணச்சடங் குடனே மணமுடிப்பார்; ஆதலா லந்தணர் முதலாயினாரை முன்னிட்டு அவள் மனையின் சடங்குடனே முடித்தலின், இதுவே மணமாயின வாறுணர்க. இதுவரை ஐம்பத்தாறாநாள் எனக் கணக்கிட்டது போல மேல் நிகழ்ச்சி கணக்கிட முடியாதென வறிக.

26-வரைவியல் முற்றிற்று.

இரண்டாவது வரைவியல் முற்றிற்று
---------------

மூன்றாவது கற்பியல்.


கற்பென்பது-கற்பிக்கப்படுவது, கற்பித்தலாவதென்னையெனின்? தலைவிக்கு அறிவும் ஆசாரமுந் தலைவனாலும் இருமுது குரவராலும் செவிலியாலும் அந்தணர்முதலிய சான்றோராலும் போதித்தல்; ஆதலாலிவ்வியல் கற்பியல் எனப்பெயராயிற்று.

ஆயின், இவ்வாறு களவின்கணொழுகல் கற்பின்க ணொழுகல் உலகின் கணின்றெனில்? கூறுதும், அறிவுடையோர் மக்கட்கு மணஞ்செய்யுங்கால் இத்தனமையானை நினக்கு மணஞ்செய்ய நினைத்தோம்; இது நினக்கியைபோ? இயைபின்மையோ? எனவினாவி அவரவர் கூற்றின்படி செய்வர்: அவர் கூறாக்கால் குறிப்பானுணர்ந்து செய்வரெனக்கொள்க.

இங்ஙனம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ்செய்தலியல் பாயிற்று. ஆகவே உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சி நிகழ்ந்த போதேமெய்யுறு புணர்ச்சிநிகழ்ந்ததாயிற்று. இதனை "உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வே மெனல்" என்னுங் குறட்குப் பரிமேலழகருரையில் நினைத்தலுஞ் செய்தலோ டொக்கு மெனக் கூறியதனானுணர்க. எனவே, உலகின்க ணிகழுங்கற் பொழுக்க மெல்லாங் கந்தருவ மணத்தின் வழிக்கற்பென்றே கொள்க. இக்கற்பு-மகிழ்வும் ஊடலும் ஊடலுணர்த்தலும் பிரிவும் பிறவும் பொருந்தியதாய், இல்வாழ்க்கை பரத்தையிற்பிரிவு ஓதற்பிரிவு காவற்பிரிவு தூதிற் பிரிவு துணைவயிற்பிரிவு பொருள்வயிற்பிரிவு என ஏழு பாகுபாடுடையது; அவற்றுள்,இருபத்தேழாவது.-இல்வாழ்க்கை.

அஃதாவது- தலைவனுந் தலைவியும் இல்லின் கண்ணே வாழுதலைக் கூறுதல், அது-கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சி யென நான்குவகைப்படும்; அவை-தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதல் அன்னவர்காத லறிவித்த லீறாகிய பத்துவிரிகளையுடையன; அவைவருமாறு:-

தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.

(இ-ள்.) வெளி.

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.

(இ-ள்.) வெளி.

பாங்கிதலைவியை வரையு நாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல்.

(இ-ள்.) தோழி தலைவியை நோக்கித் தலைவன் மணஞ்செய்யுமிதுகாறும் பொறுத்திருந்தமையைச் சொல்லென்று கேட்டல்.

பெருமக ளுரைத்தல்.

(இ-ள்.) தலைவி தான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்குக் கூறுதல்.

தலைவனைப் பாங்கி வரையு நாளளவு நிலைபெற வாற்றிய நிலைமை வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் விவாகஞ்செய்யும்வரை யுயிர்தரித் திருக்கச்செய்த நிலைமையைத் தோழி அத்தலைவனிடங் கேட்டல்.

மன்றன் மனைவரு செவிலிக் கிகுளை யன்புற வுணர்த்தல்.

(இ-ள்.) கலியாண மனையில் வந்த செவிலிக்குப் பாங்கி இருவரது அன்பையும் பொருந்தக் கூறுதல்.

பாங்கி வாழ்க்கை நன்றென்று செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவியின் இல்வாழ்க்கை நல்லதென்று செவிலித்தாய்க்குக் கூறுதல்.

மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியனற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) விவாகஞ்செய்யப்பட்ட வீட்டுக்குப்போய்ப் பார்த்து வந்த செவிலித்தாய் தலைவியின் கற்புத்தன்மையை நற்றாய்க்குச் சொல்லுதல்.

நன்மனை வாழ்க்கைத் தன்மை யுரைத்தல்.

(இ-ள்.) செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைமகளது நல்ல மனைவாழ்க்கைத் தன்மையைச் சொல்லுதல்.

அன்னவர் காத லறிவித்தல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க் கிருவராசையையுங் கூறுதல்.

இவற்றுள் - தலைவன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தலொன்றுங் கிழவோன் மகிழ்ச்சிக்கும், தலைவனைப் பாங்கி வாழ்த்தல் முதல் பாங்கி வாழ்க்கை நன்றென்று செவிலிக்குணர்த்த லீறாகியவாறனுள் பெருமகளுரைத்தலொன்றுங் கிழத்தி மகிழ்ச்சிக்கும், அல்லனவைந்தும் பாங்கி மகிழ்ச்சிக்கும், மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியனற்றாய்க் குணர்த்தலாதிய மூன்றுஞ் செவிலி மகிழ்ச்சிக்கு முரியன.

27-இல்வாழ்க்கை முற்றிற்று.
-------------

இருபத்தெட்டாவது-பரத்தையிற் பிரிவு.

அஃதாவது-தலைவன் பரத்தைமேற்காதலாய்த் தலைவியைப்பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல். அது-வாயில்வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என நால்வகைப்படும்; அவை-காதலன் பிரிவுழிக்கண்டோர் புலவிக்கேதுவிதா மவ்விறைவிக் கென்றல் முதல் புணர்ச்சியின் மகிழ்த லீறாகிய பதின்மூன்றும் உணர்த்தவுணரு மூடலெனவும், வெள்ளணியணிந்து விடுத்துழிப் புள்ளணி மாலைவேலண்ணல் வாயில் வேண்டல் முதல் இணர்த்தார் மார்பனையிகழ்தலும் பிறவுமிறுதியாகிய அனைத்தும் உணர்த்த வுணரா வூடலென வுமிருவகைப்படும்; அவை வருமாறு:-

காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக் கேதுவிதா மவ்விறைவிக் கென்றல்.

(இ-ள்) தலைவன் தலைவியைப்பிரிந்து பரத்தையர் சேரிக்குப் போதலைப் பார்த்தோர் இவன்போத லூடலுக்குக் காரணமென்று கூறுதல்.

தனித்துழி யிறைவி துனித்தழு திரங்கல்.

(இ-ள்) தலைவி தலைவனைப் பிரி்ந்து தனித்த இடத்துத் துன்பமுற்று அழுது வருந்துதல.

ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.

(இ-ள்) பாங்கி தலைவியை நோக்கி நீயழுதுகொண்டிருத்தற்குக் காரண மென்னென்று வினாதல்.

இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தல்.

(இ-ள்) தலைவன் றன்னிடத்தொழுகு மொழுக்கமின்றிப் பரத்தையரிடத் தொழுகுகின்றானென்று தலைவி பாங்கிக்குக் கூறுதல். புறத்தொழுக் கென்பதற்குப் பொருள்-பரத்தையரிடத்தொழுகு மொழுக்கமென்று பொருள் கொண்டவாறென்னை-யெனின்? வடநூலார் புறமுரைப்பாமென்று கூறுவ ராதலாற் பரத்தையரென்னுஞ் சொற்குப் புறமுடையவரென்னும் பொருள் கூறிநின்றவா றுணர்க. புறமுடையரென்ப தென்னையெனின்? இவரின்ப மின்பமன்றென்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் வரைவின் மகளிரென்னு மதிகாரத்தில் இன்பத்திற்குப் புறம் இவரின்பமென்று கூறியவாற்றானுணர்க. "இருமனப் பெண்டிரும்" என்னுந் திருக்குறளானு முணர்க.

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்) தலைவிக்குப் பாங்கி புத்திகூறுதல்.

தலைவி செவ்வணி யணிந்து சேடியை விடுத்தல்.

(இ-ள்) தலைவி பூத்தகாலை மூன்றாநாட் போக்கி நாலாநாள் நீராடியபின் இவற்றி னறிகுறியாகச் செம்பூவும் செவ்வாடையுஞ் செஞ்சாந்தும் புனைவித்துத் தோழியைப் பரத்தையினிடத் திருக்குந்தலைவனிடந் தூதாக அனுப்புதல்.

அவ்வணி யுழையர்கண் டழுங்கிக் கூறல்.

(இ-ள்.) அவ்வலங்காரத்தைத் தோழியிடத்து அயல் மனையினுள்ளார் பார்த் திரங்கிக் கூறுதல்.

இதுவுமது.

செவ்வணி பரத்தையர்கண்டு பழித்தல்.

(இ-ள்.) அச்சேரியிற்போகிய தோழியின் செவ்வணியைப் பரத்தையர் பார்த்து நிந்தித்துக் கூறுதல்.

பரத்தைய ருலகிய னோக்கி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி நீராடிய ஞான்று பரத்தையர் தங்கள் சேரியில் தலைவனிருத்தல் உலக முறைமைக்கு இயலாதென்று அவனை யனுப்புதல். உலக முறைமைக்கு இயலாமை "பூத்த காலைப் புனையிழை மனைவியை, நீரா டியபின் னீராறு நாளுங், கருவயிற்றுறூஉங் கால மாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்" என்பதனானு முணர்க. (அகப்பொருள் – அகத்திணையியல் 91.)

தலைமகன் வரவுகண்டு வாயில்கண் மொழிதல்.

(இ-ள்.) தலைவன் வருதலைக் கண்ட தாதிகள் பாங்கிக்குச்சொல்லுதல்.

வரவுணர் பாங்கி யரிவைக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வரவுணர்ந்த பாங்கி தலைவனை யெதிர்கொள்ளத் தலைவிக்குச் சொல்லுதல்.

முதிராவிளமுலை யெதிர்கொண்டு பணிதல்.

(இ-ள்.) தலைவனைத் தலைவி யெதிர்சென்று வணங்குதல்.

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) வெளி.

இப்பதின்மூன்று துறைகளும் உணர்த்தவுணரு மூடற்குரியன.

வெள்ளணி யணிந்து விடுத்தல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாக வெள்ளிய ஆபரண முதலியன வணிந்து சேடியைத் தலைவனிடத்துச் செவிலித் தாயர் விடுத்தல்.

புள்ளணி மாலைவேலண்ணல் வாயில்வேண்டல்.

(இ-ள்.) வெள்ளணியணிந்து வந்த தோழியைத் தலைவன் தூதாக வேண்டிக் கூறுதல்.

தலைவி நெய்யாடிய திகுளை சாற்றல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப்பெற்று நெய்யாடியதனைப் பாங்கி தலைவனுக்குச் சொல்லுதல். நெய்யாடுதல் - நெய்தேய்த்து நானஞ் செய்தல்; இது - பிள்ளைப்பேற்றுச் சடங்கினொன்று.

தலைவன் றன்மனத் துவகை கூறல்.

(இ-ள்.) வெளி.

தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) வெளி.

தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வருதலைத் தெரிந்து ஊடுதல்.

தலைவன் மகவேந்தல்.

(இ-ள்.) சேடியர் கொண்டுவந்து கொடுத்த பிள்ளையைத் தலைவன் கையிற் றாங்குதல்.

பாணன் வாயில் வேண்டல்.

(இ-ள்.) தலைவன் விடுத்த தூதாகவந்த பாணன் தலைவிக்குச் சமாதானஞ் சாற்றுதல்.

தலைவிபாணனை மறுத்தல்.

(இ-ள்.) வெளி.

தலைவி பாணனை முனிதல்.

(இ-ள்.) மறுக்கப்பட்ட பாணனை மீண்டுந் தலைவி சேடியர் முன்னிலையிற் கோபித்தல்.

தலைவி முனிந்தமை பாணன் தலைவற் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி கோபித்ததைப் பாணன் தலைவனுக்குச் சொல்லுதல்

இதுவுமது.

பாடினி வாயில் வேண்டல்.

(இ-ள்.) தலைவியிடத்துப் பாடும்பெண் தலைவனுக்காகத் தூது சொல்லுதல்.

பாடினி வாயின் மறுத்தல்.

(இ-ள்.) பாடும் பெண்ணுடைய தூதைத் தலைவி மறுத்துக்கூறுதல்.

கூத்தர் வாயில் வேண்டல்.

(இ-ள்.) கோடியர் தூது சொல்லுதல். கோடியர் - கூத்தாடுகின்றவர்.

கூத்தர் வாயின் மறுத்தல்.

(இ-ள்.) கோடியர் தூதைத் தலைவி மறுத்துக் கூறுதல்.

காமக்கிழத்தி வாயில் வேண்டல்.

(இ-ள்.) வெளி.ஈண்டுக்காமக்கிழத்தியென்றது, பாங்கியை.

தலைவி காமக்கிழத்திதன்னோ டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் பரத்தையரைச் சேர்ந்து தன்னை வெறுத் தமையைத் தலைவி பாங்கியொடு வருந்திக் கூறுதல்.

இறையோன் விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்.

(இ-ள்) தலைவன் விருந்தினருடன் வந்த இடத்துத் தலைவி தலைவன் குற்றத்தைச் சகித்தல்.

விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண் டிறையோன் மகிழ்தல்.

(இ-ள்) வெளி.

இறைமகள் விருந்துகண் டொளித்த வூடல் வெளிப்படல்.

(இ-ள்) தலைவி விருந்தினரைக்கண்டு மறைத்த வூடல் வெளிப்படுதல்.

விருந்துகண் டொளித்த வூடல் வெளிப்பட னோக்கிச் சீறேலென்றவள் சீறடி வணங்கல்.

(இ-ள்) வெளி.

இஃதெங்கையர் காணி னன்றன் றென்றல்.

(இ-ள்) என் தங்கைமாராகிய பரத்தையர் கண்டால் நீர்செய்த பணிவு குற்றமாமென்று தலைவனுக்குத் தலைவி கூறுதல்.

அங்கவர் யாரையு மறியே னென்றல்.

(இ-ள்) அப்பரத்தையர் யாரையுந் தெரியேனென்று தலைவன் தலைவிக்குக் கூறுதல்.

இதுவுமது.

காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல்.

(இ-ள்) தலைவி அப்பரத்தைமாரைப் பார்த்ததைத் தலைவனுக்குக் கூறுதல்.

தாமக் குழலியைப் பாங்கி தணித்தல்.

(இ-ள்) தலைவி கோபத்தைப்,பாங்கிதணித்தல்.

தலைவி யூட றணியா ளாதல்.

(இ-ள்.) பாங்கி அங்ஙனந் தணித்துந தலைவியூடல் தனியாளாதல்.

தலைமக னூடல்.

(இ-ள்.) தலைவியூடல் தணியாமையைக் கண்டு தலைவன் ஊடுதல்.

அணிவளைப் பாங்கி யன்பிலை கொடியை யென் றிணர்த்தார் மார்பனை யிகழ்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை அன்பில்லாய் நீ கொடியவனென்றிகழ்ந்து கூறுதல்.

வெள்ளணி யணிந்துவிடுத்தல் முதல் அணிவளைப்பாங்கி யன்பிலை கொடியையென் றிணர்த்தார் மார்பனை யிகழ்தலீறாகிய இவ் இருபத்தொன்பது துறைகளும் உணர்த்த வுணரா வூடற்குரியன.

ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயிலாக வரவெதிர் கோடல்.

(இ-ள்.) தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப்போம்போது தெரிந்தெடுத்த ஆபரணங்களை யணிந்த புதல்வ னெதிரே நிற்ப அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக்கொண்டு தலைவனாற்றாமையுடன் வந்த இடத்துப் புதல்வனுந் தலைவனாற்றாமையுந் தூதாகத் தலைவி தலைவனை யெதிர்கொள்ளல்.

மணந்துழி மகிழ்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியைப் புணர்ந்த இடத்து மகிழ்தல்.

மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ டிணங்கிய மைந்தனை யினிதிற் புகழ்தல்.

(இ-ள்) வெளி.

தலைவி தலைவனைப் புகழ்தல்.

(இ-ள்) வெளி

சிலைநுதற் பாங்கி தலைவியைப் புகழ்தல்.

(இ-ள்) வெளி,

---------
* வெட்டுமென்றும் பாடம்.

ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாக வரவெதிர் கோடல்முதல் சிலைநுதற் பாங்கி தலைவனைப் புகழ்தலீறாகிய இவ்வைந்து துறைகளும் மேற்கூறிய விருவகை யூடல்களோடு சேர்ந்து பரத்தையிற் பிரிவின் விரியாமென்க; எனவே யிம் முப்பத்து நான்கு துறைகளும் வாயில் வேண்டல் வாயின்மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என்னும் நான்கு வகைக்குமேற்ற பெற்றியறிந்து முடித்துக் கொள்க.

28 - பரத்தையிற் பிரிவு முற்றிற்று.
------------

இருபத்தொன்பதாவது. - ஓதற்பிரிவு.

அஃதாவது - தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். தலைவன் தலைவியையெய்தியிருந்தும் ஓதற்குப் பிரிவுகுறைபா டாகாதோவெனின்? ஆகாது, என்னை? புலமைநிரம்பாமலக்குறைதீர்ப்பான் ஓதற்குப் பிரிதலன்று. பண்டேகுரவராற் கற்பிக்கப்பட்டு, அறம்பொருள் இன்பம் வீடு நுதலிய நூல்களெல்லாங் கற்றான் பரதேயத்து அவை வல்லாருளரெனிற்சென்று தன்னறிவை மேற்படுத்திக் காட்டற் கென்க. இவ்வோதற்பிரிவு முதலிய எல்லாப் பிரிவுகளும் - பிரிவறிவுறுத்தல் பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழிமகிழ்ச்சி என வொன்பது வகைப்படும். ஆங்காங்குக்காண்க.

தலைவன் பாங்கிக் கோதற் பிரிவுரைத்தல்.

(இ-ள்.) வெளி.

பாங்கி யோதற்பிரிவு மறுத்தல்.

(இ-ள்.) வெளி.

ஓதற்குப் பிரிந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் ஓதற்குப் பிரிந்து சென்றதைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

ஓதற்குப் பிரிந்துழி தலைவி கார்ப்பருவங் கண்டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் ஓதற்குப் பிரிந்தவிடத்துக் கார்காலம் வர அதுகண்டு தலைவி வருந்துதல்.

ஓதற்குப் பிரிந்துழித் தலைவி பனிப்பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்.) வெளி.

ஓதற்குப்பிரிந்த தலைவன் மீண்டமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) ஓதற்குப்பிரிந்த தலைவன் வந்தமையைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

29. ஓதற்பிரிவு முற்றிற்று
__________

முப்பதாவது.-காவற்பிரிவு.

அஃதாவது நாடுகாத்தற்குப் பிரியும் பிரிவு. அங்ஙனமாயின் தலைவன் நாட்டை நலிதலுங் கைக்கொள்வதும் உளராக, அவைதீர்க்கச் செல்வானாயின் வலியிலனாதல் வேண்டுமெனின்? அற்றன்று, நாட்டகத்தினின்று நகரத்துவந்து குறைசொல்ல மாட்டாத மூத்தோரும் பெண்டிரும் கூனரும் குருடரும் பிணியுடையாருமாகிய இத்தொடக்கார் முறைப்பாடு கேட்டுத் திருத்துதல் காரணமாகவும் வளனில்வழி வளந்தோற்று வித்தற்கும் ஆலயம் அறச்சாலை முதலியவற்றை யாராய்தற்கும் உயிர்கள் தாயைக் கண்டின்புறுதல்போல் தன்னாற் காக்கப்பட்ட அவ்வுயிர்கள் தன்னைக்கண்டின் புறத்தன்னுருவு காட்டுதற்கு மென்க.

தலைவன் காவற்பிரிவு தோழிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தன்னாடு காத்தற்குப் பிரிதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

தோழி காவற்பிரி வுடன்படாமை.

(இ-ள்.) வெளி.

தோழியைக் காவற் பிரி வுடன்படுத்தல்.

(இ-ள்.) தலைவன் காவற் பிரிவுக்குப் பாங்கியைச் சம்மதிக்கச் செய்தல்.

தலைவிக்குத் தோழி காவற் பிரிவுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் காவற் பிரிவு தோழி தலைவிக்குக் கூறுதல்.

காவற்குப் பிரிந்துழித் தலைவி கார்காலங் கண்டிரங்கல்.

(இ-ள்.) தலைவன் நாடுகாவலுக்குப் பிரிந்த இடத்துக் கார் காலங்கண்டு தலைவி வருந்துதல்.

தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.
(இ-ள்.) வெளி.

30 - காவற் பிரிவு முற்றிற்று.
----------------

முப்பத்தொன்றாவது - தூதிற்பிரிவு

அஃதாவது - இரண்டரசர் தம்மிற் பொருகின்றவிடத்து அவரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவெனின், தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வார்; அவரொப்பில்லா ராவா ரென்பதென்னையெனின்? இரண்டரசரும் நாளைப் பொருவோமென்று முரண்கொண்டிருந்த நிலைமைக்கண் தானருளரசனாதலின் மக்களும் விலங்குகளும் பலபடல் சகியாது இப்போரை யொழிப்பேனென்று, இருவரையு மிரந்து சமாதானஞ் செய்வித்தலாலென்க. அன்றி, தேவரு மசுரரும் பொருதகாலத்துத் தேவரையு மசுரரையு மிகைசெய்தாரை யானொறுப்பலென்று பாண்டியன் மாகீர்த்தி சமாதானஞ் செய்வித்ததுபோல இவரையு மிகை செய்தாரை யொறுப்பலென்று தூதாகச் செல்லுதலென்றலுமொன்று.

தலைவன் பாங்கியுடன் தூதிற் பிரிவுணர்த்தல்.

(இ-ள்.) இரண்டரசர்பொருட்டுத் தூதுக்குச் செல்லுதல் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

தூதிற் பிரிவு பாங்கி மறுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவியைப் பிரிந்து தூதுக்குச் செல்லுந் தலைவனைத் தடுத்தல்.

தலைவன் பாங்கியைத் தூதிற் பிரிவுடன்படுத்தல்.

(இ-ள்.) வெளி.

தலைவிக்குத் தூதிற்பிரிவு தோழியுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தூதின்பொருட்டுப் பிரிதலைப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

தூதிற் பிரிந்துழித் தலைவி முன்பனிப்பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்.) வெளி.

தூதிற் பிரிந்த தலைவன் மீண்டமை தோழி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.


31- தூதிற் பிரிவு முற்றிற்று.
-------------

முப்பத்திரண்டாவது - தூணைவயிற் பிரிவு.

அஃதாவது - நட்பாகிய அரசனுக்குப் பகையரச ரிடையூறுற்ற வழி, அது தீர்த்தற்குத் தலைவன் றுணையாகப் பிரிதல். தன்னுழையரிலொருவனைப் படைகூட்டிச் செல்லவிடாது தான் போதல் வேண்டுமென்ப தென்னையெனின்? நட்பு மிகையால் தானே யவனாயிருத்தலின் அவன் கருமந் தன் கருமமாக வெண்ணி விரைவினெழுந்து அப்பகை தீர்க்கத் தானே போனானெனக்கொள்க.

தலைவன் பாசறைப் பிரிவு பாங்கிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் அரசர்க்குத் துணையாகப் படைவீட்டுக்குப் பிரிந்து போதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

தலைவன் பாசறைப் பிரிவு பாங்கி யுடன்படாமை.

(இ-ள்.) வெளி.

உதவியிற் பிரிவு பாங்கியை யுடன்படுத்தல்.

(இ-ள்) தலைவனுதவியாகப் பாசறைக்குப் பிரியும் பிரிவுக்குப் பாங்கியைச் சம்மதிக்கச் செய்தல்.

உதவிக்குப் பிரிந்தமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி.

உதவிக்குப் பிரிந்துழித் தலைவி பின்பனிப் பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்) வெளி.

தலைவன் பாசறைப் புலம்பல்

(இ-ள்) தலைவன் தலைவியைப் பிரிந்த வருத்தஞ் சகியாமற்படை வீட்டிலிருந்து துன்புறுதல்.

மீளுந் தலைவன் மின்பதி சேய்த்தென மெலிதல்.

(இ-ள்) பாசறையை விட்டுவருந் தலைவன் தலைவியிருந்த நகரந் தூரமாயிருக்கிறதென்று பாகனொடு வருந்திச் சொல்லுதல்.

மீளுந் தலைவனைப் பாங்க னாற்றல்.

(இ-ள்.) திரும்பிவருந் தலைவனைப் பாங்கன் சீக்கிரந் தேர் செலுத்துவேனென்று கூறிக் கவலை தணித்தல்.

உருவெளிக் காண்டல்.

(இ-ள்.) தலைவ னிடைவழியில் தலைவி வடிவம்போலத் தோன்றுமவறைக் காணுதல்.

உதவியிற் பிரிந்த தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக்குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

32-துணைவயிற் பிரிவு முற்றிற்று.
____________

முப்பத்து மூன்றாவது.-பொருள்வயிற் பிரிவு.

அஃதாவது – பொருளீட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு. ஆயின், முன் பொருளிலனாம். ஆகவே, "எள்ளுநர்ப் பணித்தலு மிரந்தோர்க் கீதலு, நள்ளுநர் நாட்டலு நயவாரொறுத்தலும்" என்னு மிவையெல்லாம் பொருட் குறைபாடுடையார்க்கு நிகழாமையின், இக்குறைபாடெல்லா முடையனாம்; அவையுடையன தொப்பின்மை யென்னையோவெனின்? பொருளில்லாதவனாய்ப் பிரியுமென்பதன்று. தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பல வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாவற்றையுங் கொண்டு பயன்றுய்ப்பது ஆண்மைத் தன்மை யன்றெ
னத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்தற் பொருட்டென்க; இஃதன்றித்தனது முயற்சியாற் கிடைத்த பொருள் கொண்டு செய்த கருமங்கள் தனக்கே பயன்படும் பொருட்டுமாம்.

தலைவன் பொருள்வயிற் பிரிவு பாங்கிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி.

தலைவன் பொருள்வயிற் பிரிவு பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) வெளி

பொருள்வயிற் பிரிந்துழித்தலைவி யிளவேனிற் பருவங்கண் டிரங்கல்.

(இ-ள்) வெளி.

பொருள்வயிற் பிரிந்துவந்த தலைவன் பாகனை வியத்தல்.

(இ-ள்) பொருள் காரணமாகப் பிரிந்து மீண்ட தலைவன் விரைந்து தேர்செலுத்திய சாரதியை மகிழ்தல்.

தலைவன் மீண்டமை பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்) தலைவன் திரும்பிவந்ததைத் பாங்கி தலைவிக்குச்சொல்லி மகிழச் செய்தல்.


33 பொருள் வயிற்பிரிவு முற்றிற்று.
குலோத்துங்க சோழன் கோவை முற்றுப்பெற்றது.

------------

This file was last updated on 15 Feb. 2014
Feel free to Webmaster