சுத்தமானதும், ஒளிமயமானதுமான ஓர் இடம் - எர்னஸ்ட் ஹெமிங்வே

தமிழில் : குறிஞ்சிவேலன்.


ஒரு வயதான மனிதர் தவிர அனைவருமே ``கபே’’வை விட்டுச் சென்றிருந்தார்கள். மின்விளக்கின் கீழ் மரநிழலில் அவர் இருந்தார். பகல்நேரம் பாதைமுழுவதும் மகரந்தப் பொடிகளால் மூடப்பட்டிருந்தது. ஆனால், இரவின் பனித்துளிகள் அந்தத் தூள்களை அகற்றியிருந்தது கிழவர் நேரம் அதிகமானாலும் தன்னந்தனியாக இருப்பதையே விரும்பினார். அவரது கேள்வித்திறன் முழுமையாகவே கெட்டுவிட்டது. அமைதியான இரவில் அதற்கேற்றதான மாற்றத்தை அவரால் தெரிந்து கொள்ள இயலும். கபேயின் இரண்டு வெயிற்றர்களும் கிழவர் மிக்க போதையில் உள்ளார்  என்பதை அறிந்திருந்தார்கள். அவர் மிகச்சிறந்த வாடிக்கையாளராக இருந்தாலும் போதை அதிகமாகிவிட்டால் சிலநேரங்களில் பணம்செலுத்தாமலேயே வெளியேறிவிடுவார் என்பதையும் அறிந்திருந்தார்கள். எனவேதான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

``கடந்த வாரம் அவர் தற்கொலைக்கு முயன்றார்.’’ ஒரு வெயிற்றர் கூறினான்.

``எதற்கு’’

``கனவுகள் பொய்த்துப் போன நிலையில் அவர் இருந்தார்’’

``எதைப் பற்றி’’

``ஒன்றுமில்லை’’

``எதுவுமில்லையென்று உனக்கு எப்படித் தெரியும்’’

``அவருக்கு நிறைய பணமிருந்தது’’

கபேயின் கதவு அருகிலுள்ள சுவருடன் சேர்ந்தவாறு அவர்கள் இருந்தார்கள். இளங்காற்றில் நடனமாடி நின்ற மரக்கொம்பு நிழலில் அமர்ந்திருந்த கிழவரைத் தவிர யாரும் இல்லை.

ஒரு பட்டாளக்காரரும், இளம் பெண்ணும் பாதையில் நடந்து சென்றார்கள். அவரது காலரில் பொறிக்கப்பட்டிருந்த பித்தளை எண்கள் தெருவிளக்கு வெளிச்சம்பட்டு பளபளத்தது. பெண்ணின் தலையில் எதுவுமே இல்லை. அவள் வேகமாக அவருடன் நடந்தாள். ``காவலர் கண்டிப்பாக அவனைப் பிடிக்காமலிருக்க மாட்டான்.’’ ஒரு வெயிற்றர் கூறினான். ``அவருக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தால் என்ன தவறிருக்கு’’

``இப்போது அவர் தெருவிலிருந்து மறைந்து செல்வது நல்லது. காவலர்கள் பிடிப்பார்கள். ஐந்து நிமிடம் முன்தான் அவர்களும் இது வழியாகச் சென்றார்கள்’’

தணலின் அருகில் இருந்த கிழவர், கப்பைச் சாசரில் உரசி சப்தமெழுப்பினார். இளைஞரான வெயிற்றர் இதைக் கவனித்து அவரருகே சென்றார்.

``என்ன வேண்டும் ஐயா?’’

``இன்னுமொரு பிராண்டி கொண்டுவா’’

``நீங்கள் குடித்து நிலை தடுமாறுவீர்கள்’’

கிழவர் நேரே அவனைப்பார்த்தார். வெயிற்றர் அத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

``அவர் இரவுமுழுக்க இங்கே இருப்பார்’’ அவன் இன்னொரு வெயிற்றரிடம் கூறினான்.

``இப்போது எனக்குத் தூக்கம் வருகிறது. மூன்று மணிக்கு முன் நான் எப்போதுமே தூங்கச் செல்வதில்லை. கடந்த வாரம் அவர் தானாகவே கொலை செய்யப்பட வேண்டியவராக இருந்தார்’’ வெயிற்றர் பிராந்தி பாட்டிலும் உள்பக்கக் கவுண்டரிலிருந்து இன்னுமொரு சாசருமெடுத்துக் கொண்டு கிழவர் இருந்த மேசையை நோக்கி நடந்து சென்றான். பிராந்தியை நிரப்பினான்.

``கடந்த வாரம் நீங்கள் சுயமாகவே கொலை செய்யப்படும் நிலையில் இருந்தீர்கள்’’ அவன் செவிடான மனிதருடன் பேசினான். கிழவர் தன்விரல்களால் சைகை செய்தார். ``கொஞ்சம்கூட’’. வெயிற்றர் மீண்டும் சாசரில் நிரம்பிவழிவது வரை பிராந்தியை நிரப்பினான்.

``உங்களுக்கு நன்றி’’ கிழவர் கூறினார். வெயிற்றர் காலி பாட்டிலை எடுத்துச் சென்றான். மீண்டும் தனது நண்பனின் அருகில் அமர்ந்தான்.

``அவர் பயங்கரமான போதையில் உள்ளார்?’’

``ஒவ்வொரு இரவிலும் அவர் இப்படித்தான்?’’

``எதற்காக அவர் தற்கொலைக்குத் தயாராகிறார்?’’

``அது எனக்கு எப்படித் தெரியும்?’’

``அவர் எந்த முறையில் அதற்குத் தயாரானார்?’’

``ஒரு கயிற்றில் தூக்குப் போட்டுக் கொள்ள முயன்றார்?’’

``கயிரைக் துண்டித்து விட்டது யார்?’’

``அவரது மருமகள்?’’

``அவள் எதற்காக அப்படிச் செய்தாள்?’’

``அவரது ஆத்மாவுடனான பயத்தால்தான்?’’

``அவருக்கு எவ்வளவு பணம் இருக்கும்?’’

``ஏராளமான பணம் கையில் இருக்கிறது.’’

``அவருக்கு எப்படியிருந்தாலும் எண்பது வயதிருக்கலாம்?’’

``அவர், வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மூன்று மணிக்கு முன் என்னால் ஒரு கணம் கூட தூங்கச் செல்ல இயலாது. படுப்பதற்குச் செல்லும் நேரம்தான் எப்படிப்பட்டது’’

``அவருக்கு விருப்பமுள்ளதால்தானே இங்கேயேத் தங்குகிறார்.’’

``அவர் தனிமையில் உள்ளார். நான் தனிமையில் வாழ்பவனல்ல. எனக்காகவேப் படுக்கையில் காத்திருக்கும் மனைவி ஒருத்தி இருக்கிறாள்.’’

``ஒரு சமயத்தில் அவருக்கும் மனைவி இருந்திருப்பாள்’’

``இப்போதைய நிலைமையில் அவரின் மனைவி இருந்தாலும் எதுவும் செய்ய இயலாது.’’

``அப்படிச் சொல்ல இயலாது. மனைவியுடனான வாழ்க்கையில் அவருக்கு நல்லதோர் வாழ்க்கைக் கிடைக்காமல் போகாதே.’’

``அவரது மருமகள் அவரைச் சரியாகத்தான் கவனித்துக் கொள்கிறாளே.’’

``அவள் அவரைச் சிதறடித்து விட்டதாகத்தானே நீங்கள் கூறினீர்கள்.’’

``எனக்குத் தெரியும்’’

``அந்தளவுக்கு வயதாகியுள்ளதாக கருதுவதற்கு நான் தயாராயில்லை. வயதான ஒருவர் . . . பார்வைக்கு மேசாமான உருவம்தான்’’

``எப்போதும் எப்படி இருக்க வேண்டுமென்றில்லை. இந்தக் கிழவர் நேர்வழிக்காரர். தத்தளித்துச் சளைக்காமல் அவரால் குடிக்க முடிகிறது. இப்போதுகூட குடிபோதையில்தான் உள்ளார். அவரையே உற்றுப்பாருங்கள்’’

``எனக்கு அவரைப் பார்க்க விருப்பமே இல்லை. அவர் வீட்டிற்குச் சென்றால் போதும் என்றுதான் விரும்புகிறேன். வேலை செய்பவர்களை அவர் மதிப்பதேயில்லை’’

கிழவர் கண்ணாடி மூலம் வெயிற்றர்களைப் பார்த்தார்.

``இன்னுமொரு பிராண்டி. . .’’

``இன்றைக்கு இதற்கு மேல் இல்லை. சீக்கிரமாக முடித்துக் கொள்ளுங்கள்’’

``ஒன்று மட்டும்’’

``இல்லை முடிந்துவிட்டது’’

கிழவர் எழுந்து நின்று மெதுவாகச் சாசர்களின் எண்ணிக்கைச் சரிதானா எனத் தெரிந்துகொள்ள முயன்றார். பாக்கெட்டிலிருந்து தோல்பர்ஸை எடுத்தார். ``அரை பிஸட்டா’’ டிப்புடன் மதுவின் விலையைச் செலுத்தினார்.

வெயிற்றர் அவர் தெருவில் செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். மிகவும் வயதான நிலையில் சரியாக நடக்க முடியாமல் இருந்தாலும் அவர் தனது மதிப்பைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார் என்றுதான் தோன்றியது. ``அவரை இங்கே தங்குவதற்கும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கவும் நீ ஏன் அனுமதிக்கவில்லை’’ இன்னொரு வெயிற்றர் கேட்டபடி ஷட்டர்களைத் தாழ்த்தத் துவங்கினார்.

``இப்போது மணி இரண்டரைக் கூட ஆகவில்லையே.’’

``எனக்கு வீட்டிற்குச் சென்று படுக்க வேண்டும்.’’

``ஒரு மணி நேரம் பொறுத்தால் என்ன.’’

``அவரைவிட என் நேரத்திற்கு அதிகமாக மதிப்பிருக்கிறது.’’

``மணி நேரம் என்பது இரண்டு பேருக்கும் சமம்தானே.’’

``நீங்களும் ஒரு கிழவரைப் போலப் பேசிக் கொள்ளலாம். அவர் வெளியிலிருந்து ஒரு பாட்டில் வாங்கி வீட்டில் வைத்தே குடிக்கலாமே.’’

``அது எப்படியாயினும் இது போன்று இருக்காது.’’

``இல்லை இல்லை. அப்படியல்ல.’’

``நான் அவருக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்குச் சற்று அவசரம் அவ்வளவுதான்.’’

``அது உனது விஷயம், நீ சரியான சமயத்தில் செல்வதை விட கொஞ்ச நேரம் முன்னால் சென்றால் எந்த பயமும் இல்லையா.’’

``நீ என்னை ஆட்சேபிக்க முயல்கிறாயா’’

``இல்லை. நான் விளையாட்டிற்காகத்தான் கூறினேன்’’

``இல்லை’’

``எனக்குச் சக்தியுள்ளது. நான் தேவையான சக்தியுள்ளவன்தான்’’ வயதான வெயிற்றர் கூறினார்.

``உனக்கு இளமை, ஆத்ம நம்பிக்கை, ஒரு வேலை இதுவெல்லாம் இருக்கிறது’’

``உங்களுக்கும் கூட எல்லாம் உள்ளது’’

``இல்லை. எனக்குக் கொஞ்சம் கூட தன்னம்பிக்கை இல்லை. அது மட்டுமல்ல ; எனக்கு இளமையில்லை’’

``இதையெல்லாம் முடித்துக் கொண்டு வருகிறீர்களா? நான் பூட்டிவிட்டுப் போக வேண்டியுள்ளது’’

``நான் கபேயிலிருந்து பெரும்பாலும் தாமதமாகிச் செல்வதற்கு விருப்பமுள்ளவன்தான்’’ வயதான வெயிற்றர் கூறினார்.

``இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு விருப்பமில்லாதவர்களுடன் இருக்கலாம் அல்லவா? இரவில் கொஞ்சம் வெளிச்சம் விரும்புவோர்களுடன்’’

``நாம் இரண்டு பேரும் இரண்டு வேறு குணங்களைக் கொண்டவர்கள்.’’

``அது எப்போதுமே இளமை, தன்னம்பிக்கையின் பிரச்சனை அல்ல. இவைகள் மிக அழகானதாக இருந்தால் கூட. ஒவ்வொரு இரவிலும் கபேயை மூடுவதற்கு எனக்கு விருப்பமேயில்லை. ஏனென்றால் அது தேவைப்படுவோர் யாராவது இருப்பார்கள்’’

``இரவு முழுவதும் திறந்திருக்கும் வேறு கடைகள் எதுவுமில்லையா, ஸ்பானிஷ்கார மனிதரே’’

``உங்களுக்கு ஒன்றும் புரியாது. இது சுத்தமானதும் அமைதியானதுமான கபே. இங்கு நல்ல ஒளி இருக்கிறது. மிக உயர்ந்த ஒளி அமைப்பு இங்குதான் உள்ளது. இப்போது கூடப் பாருங்கள். அங்கே இலைகளின் நிழல்கள் வீழ்ந்து இருப்பதை...’’

``குட் நைட்’’ இளமையான வெயிற்றர் கூறினார்.

``குட் நைட்’’ மற்றவர் சொன்னார். தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார். ``வெளிச்சம் தேவையான ஒன்றுதான். ஆனால், இங்கே சுத்தமாக இருக்கவேண்டும். அழகானதாயும் இருக்கவேண்டும்.

உங்களுக்கு இசையின் தேவையேதும் இல்லையே. அல்லது ஒரு பாரின் முன்னால் பெருமையுடன் நிற்கக்கூட இயலாது. இந்த நேரங்களில் மிகவும் தேவை இசைதான்.

அவர் என்னதான் பயப்படுகிறார். அது பயமோ எதிர்பார்ப்போ அல்ல. அவருக்குச் சரியாகத் தெரிகின்ற ஒன்றுமில்லைதான்.

மொத்தமாக அது ஏதுமில்லாத நிலைதான். எல்லா மனிதருமே ஒரு ஏதுமில்லாமையின் உருமாற்றம்தான்.

அது வேறெதுமில்லை. அதற்குத் தேவையானது வெளிச்சம் மட்டும்தான். கூட சுத்தமும், வரிசைத் தன்மையும்.

அதற்குள்ளேயும் சிலர் வாழ்கிறார்கள். ஆனால் அவர் அது ஒன்றுமே தெரியாமல் இருக்கிறார். இதுவெல்லாம் வெறும் சூனியம் என்று அவருக்கும் தெரியும். ஏதுமில்லாமையின் உள் உள்ள ஏதுமில்லாமைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் ஏதுமில்லாமையும் வாழ்கிறது. அவன் சிரித்துக்கொண்டே பார் முன் நின்றான். பளபளத்துக் கொண்டிருந்த நீராவியினால் இயங்கும் ஒரு காப்பி இயந்திரம் அவரருகில் இருந்தது.

``உங்களுக்கு....என்ன’’ பார்மேன் கேட்டார்.

``ஒரு சிறிய கப்’’ வெயிற்றர் கூறினான்.

பார்மேன் நிரப்பிக் கொடுத்தார்.

``வெளிச்சத்தின் தன்மையும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவையான அந்தஸ்தும் அதற்குள். ஆனால் பார் அழகுபடுத்தப்பட்டு பளபளப்பு இல்லாமல் இருக்கிறது’’ வெயிற்றர் கூறினார்.

பார்மேன் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தும் அவர் ஏதும் கூறவில்லை. நடுச்சாமம் வாதத்திற்குத் தகுந்த நேரமுமல்ல.

``உங்களுக்கு இன்னும் தேவையா’’ பார்மேன் கேட்டார். ``வேண்டாம். நன்றி.’’ வெயிற்றர் கூறினார். அவன் வெளியே வந்தான். அவன் பார்களையும், பலசரக்குக் கடைகளையும் வெறுத்து வந்தான். ஒரு சுத்தமான, வெளிச்சம் அதிகமுள்ள கபே என்றால் அதன் சிறப்பே வேறுதான். இப்போது அதிகமாக ஏதும் சிந்திக்காமல் அவனுக்கு வீட்டில் தனது அறைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. பதுமைமிகு மெத்தையில் சாய்வான். கடைசியாக பகல் ஒளி உள்ளபோது தூக்கத்தில் ஆழ்ந்து செல்வான். தனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வான். சில நேரங்களில் தூக்கமில்லாமையாகவும் இருக்கும். அனேகமாக இது பலருக்கும் ஏற்படுவது என்னவோ உண்மையாகவே உள்ளது.