வியப்பூட்டும் சிறுகதைகள்
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : வியப்பூட்டும் சிறுகதைகள் (அப்பாத்துரையம் - 40)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 24+288 = 312

  விலை : 390/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

** -கல்பனா சேக்கிழார்**

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!

தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப்
படிக்கும் தரகரிடை
உப்பாய் உணவாய் உடம்பாய்த்
தமிழை உயிர்த்திருந்து,
‘முப்பால் ஒளி’யாய் முகிழ்த்து
’மணிவிளக்’ காய்எரிந்த
அப்பாத் துரையார் எனும்அறி
வாட்சி அடங்கியதே!

ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று)
உயிர்வாழ உடல்களிடை
மப்பாய்த் திரண்டு மழையாய்ப்
பொழிந்து தமிழ்வளர்த்துக்
கொப்பாய்க் கிளையாய் மலராய்க்
கனியாய்க் குலம்புரந்த
அப்பாத் துரையார் எனும்தமிழ்
மூச்சிங் கொடுங்கியதே!

செப்போ இரும்போ மரமோ
மணலோ எதுதரினும்
எப்போ திருந்தமிழ் மாறி
உயிர்வாழ் இழிஞரிடை
முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே
களைத்த மொழிப்புலவர்
அப்பாத் துரையார் எனும்மூ
தறிவும் அயர்ந்ததுவே!

ஒருமொழிப் புலமை உறற்கே
வாணாள் ஒழியுமெனில்,
இருமொழியன்று, பன் மூன்று
மொழிகள் இருந்தகழ்ந்தே
திருமொழி எனநந் தீந்தமிழ்த்
தாயைத் தெரிந்துயர்த்திக்
கருவிழி போலும் கருதிய
கண்ணும் கவிழ்ந்ததுவே!

குமரிஆரல்வாய் குமிழ்த்தமுத்
தம்மைக்குக் காசிநாதர்
திமிரிப் பயந்தஅப் பாத்துரை
என்னும் திருவளர்ந்து
நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில
மெங்கும் நிலைப்படுத்தும்
அமரிற் படுத்திங் கயர்ந்ததே
ஆரினி ஆந்துணையே!

செந்தமிழ் ஆங்கிலம் இந்தி
பிரெஞ்சு செருமனுடன்
வந்தச மற்கிரு தம்ருசி
யம்சப்பான் என்றயல்சார்
முந்துபன் மூன்று மொழிபயின்
றேபன் மொழிப்புலமை
வெந்துநீ றானதே, தாய்ப்புலம்
விம்ம வெறுமையுற்றே!

-   பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158-59)

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் முத்துக்கள் 10

தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

1.  குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம், சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.

2.  சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றா. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.

3.  திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணி யாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.

4.  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம்
    குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.

5.  சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.

6.  தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சி களில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் குமுரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.

7.  ‘சரித்திரம் பேசகிறது’ சென்னை வரலாறு’, கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.

8.  அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.

9.  ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றம், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.

10. அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.

வியப்பூட்டும் சிறுகதைகள்

முதற் பதிப்பு - 1957

இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

பண்ணன் பண்ணை

குறுங்குடி என்ற ஊரில் பண்ணன் என்ற ஓர் ஏழை அம்பட்டன் இருந்தான். அவன் சிறு பிள்ளைப் பருவமுதலே மிகவும் சோம்பேறியாக இருந்தான். ஆனாலும் அவன் அழகிற் சிறந்தவன். நுண்ணறிவுடையவன். யாரையாவது உருட்டிப் பசப்பி வாழப் படித்திருந்தான்.

அவன் பசப்புக்களுக்கு ஆளாகி, ஒரு பெண் அவனை மணந்துகொள்ள இணங்கினாள். அவள் பெயர் பைந்தொடி. அவள் பெற்றோரும் உறவினரும்கூட அவன் நயநாகரிகப் போக்கில் ஈடுபட்டிருந்தார்கள். ஆகவே, அவளை அவன் மணந்து கொள்ள இசைந்தார்கள். பண்ணன் பைந்தொடியுடன் தனிக்குடித்தனம் தொடங்கி நடத்தலானான்.

பண்ணன் நாடோடி வாழ்வுடன் அவன் பெற்றோர் வாழ்வு எப்படியோ ஒத்துக்கொண்டது. ஏனென்றால், அவன் தந்தை உழைத்து வீட்டுக்கு வேண்டியவற்றைச் செய்து தந்தார். ஆனால், அவன் மணமான சில நாட்களுக்குள் தந்தை காலமானார்.

பண்ணன் ஊர் சுற்றி எப்படியோ தன் வயிறு கழுவினான். அவன் மனைவி படிப்படியாகக் கால்பட்டினி, அரைப்பட்டினியாக அவதிப்பட்டாள். மாமியிடமிருந்தும் அவள் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியவில்லை. ஏனெனில், அவளும் உணவுக்கும், உடைக்கும் ஆலாப் பறக்கலானாள்.

உழைத்து ஏதாவது பணம் திரட்டும்படி தாயும், மனைவியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். பண்ணனுக்குப் பொறுப்புணர்ச்சியும் வரவில்லை. அவர்கள் துன்பங்கண்டு இரக்கங்கூட உண்டாகவில்லை. “என்னால் உழைக்கமுடிவில்லை. வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? வேறு எந்த ஊருக்குப் போனாலும் நிலைமை மாறாது. இந்த ஊர் பழகிவிட்டதுபோல, அந்த ஊர் பழக்கப்பட்டதாயிராது” என்றான்.

“தன் ஊரில் தன் வயிறு கழுவ முடியும் வரை, அடுத்தவர்களைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை” என்று தாயும் மனைவியும் கண்டார்கள். அவர்கள் தங்கள் தங்களாலான ஊழிய வேலைகளைச் செய்யத் துணிந்தார்கள். அப்படியும் அவர்கள் நல்வாழ்வு வாழமுடியவில்லை. அரும்பாடு பட்டும் அவல வாழ்வு வாழ்ந்தனர். அந்த வாழ்விலுங்கூடப் பண்ணன் நாணமில்லாமல் அவர்களைப் பசப்பி அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு காசு கைப்பற்றி வந்தான்.

கணவன் மானமற்றப் போக்கு பைந்தொடியின் உள்ளத்தைச் சுட்டது. ஒரு நாள் அவள் மனம் விட்டுப் பேசினாள். “அன்பரே, பெண்களுக்குக்”கணவன் கல்லானாலும் காவலன், புல்லானாலும் பூமான்" என்பார்கள். நீங்கள் என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் என் உள்ளத்தில் உங்களுக்குக் கட்டாயம் இடமிருக்கும். ஆனால், ஊரார் உங்களைப்பற்றி எண்ணுவதும் பேசுவதும் கேட்க எனக்கு மானம் பிடுங்கித் தின்கிறது. கணவனைப் பறிகொடுத்த கைம்பெண்கள்தான் தன் கைவேலையால் அவலவாழ்வு வாழ்வார்கள். அப்போதுகூடத் தங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் அந்த நிலைக்குஅவர்களைப் பிள்ளைகள் விடமாட்டார்கள். ஆனால், நீங்கள் உங்கள் தாய்க்குப் பிள்ளையாயிருந்தும் தாயை ஊரில் அலையவிடுகிறீர்கள். நீங்கள் உயிருடனிருக்கும் போதே என்னைக் கைம்பெண் போல வாழும்படி செய்து வருகிறீர்கள். இதைக்கண்டு நையாண்டி செய்பவர்களிடமே நீங்கள் சென்று பசப்பி ஒட்டி வாழ்கிறீர்கள். நீங்கள் இதை அறியாமல் வாழமுடிகிறது. என்னால் இதைத் தாங்கிக் கொண்டு நெடுநாள் வாழமுடியாது. மானத்துடன் வாழ முடியவில்லையானால், நான் உயிரையாவது விட்டுவிடவேண்டும். நான் கைம்பெண்ணாக இருப்பதைவிட, நீங்கள் மனைவியற்றவராக இரப்பதுதான் உங்கள் போக்குக்குப் பொருத்தமும், மதிப்பும் ஆகும்" என்றாள்.

பண்ணன் சோம்பேறி மட்டும்தான். மானமற்றவன் அல்லன். மனைவியின் சொற்கள் மிகையுரைகளல்ல, மெய்ம்மொழிகளே என்பதை அவன் நன்கு உணர்ந்தான். “இந்த நிலைமையை நான் விரைவில் போக்குகிறேன். நீ கவலைப்பட வேண்டாம். எப்படியும் பணம் திரட்டிக்கொண்டு விரைவில் வருகிறேன்” என்றான்.

மலடி ஒரேயடியாக மூவிரட்டையாகப் பிள்ளைகளைப் பெற்றாற் போன்ற அதிர்ச்சியும், கவலையும் பைந்தொடியை வாட்டின. “நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் இங்கிருந்து முடிந்த அளவு சற்று உழைத்தால் போதும். உங்களை விட்டுத் தனியாய் இருக்கவும் எனக்கு விருப்பமில்லை” என்றாள் பைந்தொடி.

திருமணத்துக்குப்பின் முதல் தடவையாக அவன் அவளிடம் கனிவுடன் பேசினான். “நீ கவலைப்டவேண்டாம். பைந்தொடி! நான் கூடிய விரைவில் வந்துவிடுவேன். உன் கணவன் என்ற மதிப்பை விரைவில் வந்து காப்பேன். நீ நாளை எண்ணிக் கொண்டு இரு. நீ எதிர்பார்ப்பதற்குள் வந்து உன்னை நன்னிலைப் படுத்துவேன்” என்று தேற்றி இன்மொழி கூறிச்சென்றான்.

தன் ஊரில் உழையாதவன் இப்போது ஊர் ஊராக சென்று உழைத்தான். விரைவில் வீடு திரும்பும் ஆர்வத்துடன், மிகுதி உழைத்தான்; மிகுதி அலைந்தான். சிறுகச் சிறுகச் செலவு செய்து, மிகுதி மீத்தான். ஆனால், அவன் திருத்தம் கண்டு தெய்வம் மகிழ்ந்திருக்க வேண்டும். அவன் நீண்ட நாள் உழைக்கத் தேவையில்லா நிலையை ஒரு சிறு நிகழ்ச்சி ஏற்படுத்திற்று.

ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு அவன் காட்டுவழியாகச் சென்றான். அன்று வழக்கத்தைவிட வழி தொலை மிகுந்ததாக இருந்தது. இரவில் அவன் காட்டிலேயே தங்கிவிட நேர்ந்தது. ஒரு கோணற் பனைமரத்தடியில் அவன் தன் பணிக்கலப் பெட்டியுடன் படுத்து உறங்கினான்.

அந்த பனைமரத்தில் ஒரு பனை மரப்பூதம் குடி கொண்டிருந்தது. பகலெல்லாம் அது தன்னை ஒரு ஒரு ஓலையாக்கிக்கொண்டு, பனை ஓலையுடன் பனை ஓலையாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இரவு வந்ததும் அது பனைமரப் பூதமாக முழு உருவெடுத்தது. அச்சமயம் அதன் உடல் ஒரு பனைமரத்தளவு நீண்டு உயர்ந்தும் தலை பனை மண்டை அளவு பெருத்தும் இருந்தன. அதன் கைகள் அரைப்பனை மரம் நீளமும் பருமனும் உடையனவாய் விளங்கின.

நள்ளிரவு கழிந்தவுடன், பனைமரப் பூதம் இறங்கிவந்தது. முழுவுருவுடன் நின்று, பண்ணனை நோக்கி அலறிற்று. பண்ணன் கண்ணை விழித்துப் பார்த்தான். பூத உருவைக்கண்டு அவன் உடல் முழுவதும் நடுங்கிற்று. ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதற்கு அவன் இயற்கையான சோம்பல் மட்டும் காரணமன்று. சமயத்துக்கேற்ற அறிவமைதியும் அதற்குத் துணைநின்றது. அவன் மெல்லப் பூதத்தை ஏற இறங்கப் பார்த்தான்.

பூதம் மீண்டும் அலறிற்று. “எழுந்திரடா, மடப்பயலே, இதோ நான் உன்னை விழுங்கப் போகிறேன்” என்றது அது.

அவன் தன் அச்சத்தை வலிந்து அடக்கிக் கொண்டு. ஆர்ந்தமைந்து பேசினான். “நீயா என்னை விழுங்கப்போகிறாய்? நன்று நன்று! நான் இங்கு வந்திருப்பதே எதற்காக என்பதை அறியாமல், என் கையில் வந்து சிக்கினாய்? இதோ இன்றிரவே என் பையில் உன்னைப் போலவே ஒரு பூதத்தைப் பிடித்து அடைத்திருக்கிறேன். உன்னோடு உருப்படி இரண்டாயிற்று. ஓர் இரவுக்கு இது போதும், பையிலிருக்கும் உன் தோழனை நீயே பார்?”என்றான்.

பூதம் பைக்குள் பார்வையைச் செலுத்திற்று.

பண்ணன் தன் அம்பட்ட வேலைக்காக வைத்திருந்த முகக்கண்ணாடியை நிமிர்த்திக் காட்டினான். பூதம் தன் நிழலையே கண்டு மற்றொரு பூதம் என்று நினைத்தது. அதன் பனையளவு உயர்ந்த கால்கள் நடுங்கின. குரல் கரகரத்தது. அது ஓடத் துணிந்தது.

பண்ணன் அதை எட்டிப் பிடிப்பவன் போல் எழுந்தான். பூதம் அதன் நெடிய உடலை வளைத்து அவனை வணங்கிற்று. “நான் தெரியாமல் உன்னருகே வந்துவிட்டேன். அப்பனே! என்னை விட்டுவிடு. உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் தருகிறேன். எப்போது என்ன வேண்டுமானாலும் கொடுப்பேன்!” என்றது.

“பனை மண்டையா! என்னை ஏமாற்றவா எண்ணுகிறாய்? பூதங்கள் சொல்லை யார் நம்புவார்கள்? காரியத்துக்கு எதுவும் சொல்லிப் பின் ஓடி விடுவது தானே உங்கள் வழக்கம்! பேசாது என் பையில் இடம்பெற்றுவிடு. வேறு வழியில்லை” என்று பண்ணன் மீண்டும் அதட்டுவதாகப் பாவனை செய்தான்.

பனைப்பூதம் முன்னிலும் கெஞ்சிற்று “என்னை இங்கேயே தேர்ந்து பாருங்கள். நான் ஒரு கணத்துக்குள் இங்கிருந்தே ஆயிரம் பொன் வரவழைத்துத் தருவேன். அதன் பின் விட்டு விடுங்கள். என்ன வேண்டுமானாலும் அதன் பிறகு கூடத் தங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்.” என்று மீண்டும் பணிவுடன் கேட்டுக் கொண்டது.

“சரி, சொன்னபடி இந்த இடத்தில் நின்று கொண்டே ஆயிரம் பொன் வரவழைத்துக்கொடு அப்புறம் பார்ப்போம்” என்றான் பண்ணன்.

பூதத்தின் கால்கள் அங்கேயே நின்றன. ஆனால், கைகள் பனைமரத்தை வேருடன் பிடுங்கின. அதனடியில் ஒரு புதையல் இருந்தது. பூதம் அதை எடுத்து, அதிலுள்ள ஆயிரம் பொன்னை எண்ணிக் கொடுத்தது. பண்ணன் ஓரளவு மனம் அமைந்தவன் போலப் பேசினான்.

“சரி, நீ அவ்வளவு மோசமான பூதமல்ல, அருகே குறுங்குடி என்று ஓர் ஊர் இருக்கிறது. அதில் என் வீடு தென்கோடியில் இருக்கிறது. முன் நிற்கும் வேப்பமரத்தால் அதை நீ அடையாளம் கண்டுகொள்ளலாம். நாளை ஒரு நாள் இரவுக்குள் நீ அதன் பின்புறம் ஆயிரம் கலம் நெல் கொள்ளத்தக்க பத்தாயம் கட்டவேண்டும். அந்த இரவுக்குள்ளேயே அது நிறையும்படி நெல்லும்கொட்டவேண்டும். நெல் நல்ல மணி நெல்லாய் இருக்க வேண்டுமென்று சொல்லத் தேவையில்லை?” என்று கண்டிப்பாகக் கூறினான்.

“அவ்வாறே கட்டாயம் செய்கிறேன். ஐயனே! அதில் ஒரு சிறு பிசகு நேர்ந்தாலும் தண்டியுங்கள்!” என்று கூறிப் பூதம் விடை பெற்றுக்கொண்டது.

பண்ணன் ஆயிரம் பொன்னைக் கந்தையில் கட்டிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டான்.

அவன் சென்று சில நாட்கள்தான் ஆயின. அதற்குள் அவன் திரும்பியது கண்டு உண்மையிலேயே அவன் மனைவி பைந்தொடி ஆறுதலடைந்தாள். பணம் ஈட்டினார்களா என்றுகூட அவள் கேட்கவில்லை. பணம் பற்றிய பேச்சால் அவனை விட்டுப் பிரிய நேர்வதைவிட, உழைத்து அவனையும் ஊட்டுவதே நன்று என்ற துணிவுக்கு அவள் வந்திருந்தாள். ஆனால், ஒரு பொன்னையே அவன் அவளிடம் தந்தான். “இதனைக்கொண்டு இன்றைய வீட்டுச்செலவு கழி. நான் சிறிது வெளியே போய் வருகிறேன்” என்று அவன் அகன்றான்.

‘தன் அம்பட்டத் தொழிலுக்கு இனி முழுக்குப் போட்டு விடலாமா?’ என்று அவன் முதலில் எண்ணினான். ஆனால், வழக்கமான அவன் கூரிய நுண்ணறிவு வேலை செய்தது. அவன் அதைக் கைவிடவில்லை. அதை உண்மையிலேயே ஊக்கமாக நடத்தினான்.

முதல் நாளிரவில் பனைமரப் பூதம் முன்னிரவிலேயே பண்ணன் வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டது. பூதங்களின் வழக்கப்படி நள்ளிரவுக்குள்ளேயே பின்புற வெளியில் நாற்புறமும் சுவரெழுப்பிப் பத்தாய வேலையை முடித்துவிட்டது. பின் அது நாலாபுறமும் பல புலங்களுக்கும் தாவிச்சென்று கதிரறுத்து அடித்து, கலம் கலமாக நெல்லைக் கொண்டுவந்து குவித்தது. விடியற் காலத்திற்குள் பத்தாயம் நிரம்பி வழிந்தது.

ஊரார் ஓரிரவுக்குள் எழுப்பிய பத்தாயத்தைக் கண்டு வியப்படைந்தனர். ஆனால், பண்ணன் சமயத்துக்கேற்ற கதை கட்டிக் கூறினான்.

“உண்மை உழைப்பால் நான் சிறிது ஈட்டினேன். ஆனால், என் உழைப்பிடையே நான் காட்டில் ஓர் அரசரையே காண நேர்ந்தது. அவரை ஒரு மலைப்பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது. என் மழிப்புக் கத்தியால் பாம்பைக் கிழித்து அவரை விடுவித்தேன். அவர் எனக்குப் பரிசு தந்தனுப்பினார். அத்தடன் என் மனங்குளிர, நான் எதிர்பாராமலே, இந்த பத்தாயத்தையும் ஆள்விட்டுக் கட்டி நெல் குவித்திருக்கிறார். அவருக்கும் அவரைக் காப்பாற்ற உதவிய இந்தக் கத்திக்கும் நான் கோயிலெழுப்ப எண்ணியிருக்கிறேன்” என்றான்.

பண்ணன் மீது எல்லாருக்குமே முன்பு இரக்கமும், நல்லெண்ணமும் இருந்தன. ஆகவே, இவ்வளவு நற்பேற்றையும் செல்வத்தையும் கண்டு யாரும் பொறாமைப்படவில்லை. அவனும் நண்பர் உறவினர்களுக்கெல்லாம் வாரி வழங்கி, அவர்கள் ஆதரவு பெற்றான். அவன் தாயையும் அழைத்துக் குறைவில்லாப் பணிவிடை செய்தான்.

பனைமரப்பூதம் பத்தாயம் கட்டிய இரவில், அதன் வீட்டிற்கு ஓர் அரிய விருந்தாளி வந்திருந்தது. அது தொலை நாட்டில் இருந்த அதன் மருமகன் பேரீந்தமரப் பூதமே. மாமனைக் காணாமல் அது இரவெல்லாம் அங்கலாய்த்தது. கடையாமத்தில் சேறும் செண்டும் அடர்ந்து சோர்ந்த நடையுடன் மாமன் பூதம் வந்து சேர்ந்தது. இரவெல்லாம் உழைத்தனால் அதற்குப் பேசக் கூட முடியவில்லை.

மெள்ள மெள்ளப் பண்ணன் பையிலுள்ள பூதத்தின் கதையை முழுவதும் பேரீந்தப் பூதம் கேட்டது. அது விலாப்புடைக்கச் சிரித்தது. ஆயிரம் பொன் பரிசு! ஓரிரவுக்குள் ஒரு பத்தாயம்! அது நிறைய ஆயிரம் கலம் நெல்!’ என்று போட்டபோது அதன் சிரிப்பு சீற்றமாயிற்று. “மாமா! நீ இப்படி ஒரு மட்டி மாமாவாக இருப்பாய் என்று தெரிந்திருந்தால், உன் பெண்ணைக் கட்டியிருக்கவே மாட்டேன். போகட்டும், இனி இப்படிப்பட்ட சில்லுண்டி மனிதரைக் கண்டு அஞ்சாதே!” என்றது.

பனைமரப்பூதம், உள்ளூரப் புழுங்கிற்று. “ஏன், நீ அவ்வளவு அறிவுடையவனாயிருந்தால், அந்தச் சில்லுண்டி மனிதனை ஒரு கை பார்க்கிறதுதானே” என்றது.

“பார்! இரவு முடியவில்லை; விடிவதற்குள் உன் முன் அவன் குடலையும் மூளையையும் கொண்டு வருகிறேன் பார்!” என்று கூறிவிட்டுப் பேரீந்த மரப் பூதம் புறப்பட்டது. பண்ணன் இரவெல்லாம் உண்மையில் விழித்திருந்தான். தனக்கு வாழ்வளித்த முகக்கண்ணாடியை அவன் வீட்டுப் பலகணியில் வைத்திருந்தான். விண்மீன் ஒளியால், கண்ணாடி யிலேயே பூதத்தின் வரவு போக்கு வேலைகளைக் கூர்ந்து கவனித்தான். பூதம் போனபின்பும் அவன் பத்தாய நெல்லைப் பயன்படுத்தும் வகை, அவ்வகையில் ஊராருக்குக் கூறவேண்டிய விளக்கக் கதை ஆகியவைபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பனைமரப் பூதத்தைவிட உயரிய ஒருபூதத்தின் உருவம் கண்ணாடியில் தெரிவது கண்டு அவன் வியப்படைந்தான்.

உண்மையில் அது பேரீந்தமரப்பூதமே, வீட்டை அடையாளம் கண்டபின், அது சுற்றிப் பார்த்தது. பலகணி திறந்திருக்கவே எட்டிப் பார்த்தது. அதுவும் தன் நிழலைக் கண்ணாடியில் கண்டது. புதுப் பூதத்திற்கு புதிய அச்சம் பிடித்தது. “ஒரு பேரீந்த மரப் பூதத்தையுமல்லாவா அடைத்து வைத்திருக்கிறான்? என்ன காரியம் செய்தோம். ஓடிவிடுவோம். தலை தப்பினால் போதும்” என்று அது ஓடத் திரும்பிற்று.

கண்ணாடியில் யாவும் பார்த்துக் கொண்டிருந்தான் பண்ணன். அது ஓடத் திரும்புவது கண்டதும், “எங்கே போகிறாய்? பூதமே!நில்! உன் தோழனுடன், உன்னையும் அடைக்கிறேன் பார்” என்று கூறினான்.

பேரீந்தமரப் பூதம் வியர்த்து விறுவிறுத்தது. “அண்ணா! மாமா பனைமரப்பூதம் தான் என்னை அனுப்பினார், ஒரு பத்தாயம் நெல் போதுமா? இன்னொரு பத்தாயம் அரிசியாகவும் இருக்கட்டுமா? என்று கேட்டுவரச் சொன்னார்” என்றது.

"அடே! இதைச் சொல்லாமல், ஏண்டா ஓடப் பார்த்தாய்? நீ வெளிநாட்டுப் பூதம் போலிருக்கிறது. உன்னை இலேசிலே விடப்படாது. நீ இங்கிருந்தே பத்தாயிரம் பொன் கொடு. அத்துடன் பனைமரப் பூதம் சொல்லியபடி இன்

னொரு பத்தாயம் அரிசியையும் ஓரிரவுக்குள் ஏற்பாடு செய்! இல்லாவிட்டால் உன்னையும், உன் மாமனையும் தொலைத்து விடுவேன்!" என்றான்.பேரீந்தமரப் பூதத்தின் குரல் கீச்சுக்குரலாயிற்று. “இங்கிருந்தே பத்தாயிரம் பொன் தர, என் பிறப்பிடம் இங்கில்லையே. ஆனால் ஒரு பகலிரவு தவணை தாருங்கள். மாமாவைப் பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம். நானே இரவுக்குள் உங்கள் பலகணிக்குள் பத்தாயிரம் பொன்னைக் குவிக்கிறேன். புதிய பத்தாயம் அரிசியும் இரவுக்குள் தருவிக்கிறேன். என் மீது இரங்கி என்னை விட்டவிட வேண்டும்” என்றது.

“சரி, முன்னிரவில் பொன் வராவிட்டாலும் சரி, விடியற்காலம் பத்தாயவேலை முடியாவிட்டாலும் சரி, நான் உன் நாட்டுக்கே கிளம்பிவிடுவேன்” என்று கூறி பண்ணன் பூதத்துக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

அன்று மாலையே பத்தாயிரம் பொன் கிழி பலகணிக்குள் வந்து விழுந்தது. பண்ணன் அதை ஏற்கெனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆகவே, அதை எடுத்துப் பாதுகாப்பாக வைத்தான். இரவிலும் அவன் கண்ணாடியின் மூலம் பத்தாய வேலையைக் கவனித்தான். விடிவதற்குள் பத்தாயம் முற்றுப்பெற்றதுடன் அது நிறைய அரிசியும் பொங்கி வழிந்தது.

பண்ணன் வாக்களித்தபடி மழிப்புக் கத்திக்கு ஒரு கோயில் கட்டினான். அதன் முன் கூடம் மிகப் பெரிதாயிருந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அம்பட்டர்களை வரவழைத்த அவன் விருந்து நடத்தினான். அதனையடுத்து அம்பட்ட மாநாடு ஒன்றும் நடத்தி, அச்சமூகத்தினர் வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டம் வகுத்தான்.

கோவேந்தன்

முக்காணிகள் தமிழகத்தின் மிகப் பழங்குடிகள். மூவரசரும் அவர்களுக்குக் காணி அளித்திருந்தனர். அதனாலேயே அவர்கள் முக்காணிகள் என்று அழைக்கப்பட்டனர். முருகன் படை வீடுகளின் கோயிலுரிமை அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அந்த உரிமையை அவர்கள் குடியின் ஆண்கள் வழிவழியாக ஆண்டுவந்தனர். ஆயினும் அதன் மரபு ஆண்மரபாக இல்லை. பழைய தாய் மரபாகிய பெண்மரபாகவே இருந்தது.

ஒவ்வோர் ஆடவன் ஆட்சியுரிமையும் அவனிடமிருந்து அவன் உடன் பிறந்தாள் பிள்ளைக்கே சென்றது. இதனால் முக்காணிப் பெண்களின் மதிப்பு, பன்மடங்கு உயர்ந்தது. எந்த இளைஞனும் முக்காணிப் பெண்களின் தாய் தந்தையருக்குப் பெரும்பொருள் கொடுத்தாலல்லாமல் அவர்கள் கைப்பிடிக்கும் உரிமையைப் பெற முடியாதிருந்தது.

மானூர் என்ற சிற்றூரில் நொடிந்துப் போன ஒரு முக்காணிக் குடும்பம் இருந்தது. அதில் கோமாறன் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவன் தந்தை இளமையிலேயே அவனை விட்டு உலகு நீத்தார். வறுமையின் சூழலிலே அவன் தாய் பூமாரி அவனை வளர்த்து வந்தாள். வாழ்வுக்கே அவர்கள் நிலை தடுமாற்றமாய் இருந்தது. இந் நிலையில் திருமணம் எட்டாக் கனியாய் அமைந்தது. தாய் இதுபற்றி மிகவும் கவலைப்பட்டாள். ஆனால், கோமாறன் அவளைத் தேற்றினான். தானே தன் முயற்சியால் மணம் புரிந்து கொள்வதாக அவன் உறுதி கூறினான்.

மானூர் செந்தில்மாநகரின் அருகிலேயே இருந்தது. செந்தில்மாநகரில் முக்காணிச் செல்வர் பலர் வாழ்ந்து வந்தார்கள், கோமாறன் அவர்களை அணுகினான். செல்வர் இரங்கிச் சிறுசிறு தொகை அளித்தார்கள். ஆனால், செல்வப் பெண்டிரே மிகுதியும் பரிவு கொண்டனர். அந்த ஏழை இளைஞனுக்கு அவர்கள் சற்றுத் தாராளமாகவே பொருளுதவி செய்தார்கள். எனவே, கோமாறன் ஒரு நல்ல குடும்பப் பெண்ணையே தேர்ந்தெடுக்க முடிந்தது, அப்பெண்ணின் பெயர் குணமாலை. பெயருக்கேற்ப, அவள் நற்குணச் செல்வியாக அமைந்தாள். அவள் பெற்றோருக்குக் கோமாறன் கைநிறையப் பணம் கொடுத்தான். அவளையே தன் இல்லம் கொண்டுவந்து மணம் முடித்துக் கொண்டான்.

மணவினைதான் ஆயிற்று. மணவாழ்வின் பொறுப்பு இன்னும் பெரிதாயிருந்தது. ஆனால், கோமாறன் இதற்கும் சளைக்கவில்லை. அத்துடன் இத்தடவை அவன் பிறர் உதவி கோரவும் எண்ணவில்லை. தொலை சென்றாவது. தன் முயற்சியாலேயே பொருள் திரட்ட எண்ணினான்.

தன் எண்ணத்தை அவன் தன் மனைவிக்கும் தாய்க்கும் எடுத்துக் கூறினான். இளமனைவி குணமாலை பிரிவாற்றாமையால் வருந்தினாள் அவன் தக்க நல்லுரை கூறி அவளைத் தேற்றினான் அன்னையிடமும் அவன் போகும் இன்றியமையாமையை விளக்கி விடைபெற்றான். மனைவியை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு அவன் மதுரைக்குப் புறப்பட்டான்.

கோமாறனுக்கு மும்முடி என்ற ஒரு நண்பன் இருந்தான். போகும் பரபரப்பில் அவன் அந்நண்பனிடம் விடைபெற மறுத்தான். ஆனால் ஊரெல்லை தாண்டிச் சிறிது தொலைவிலேயே அந் நண்பன் எதிர்ப்பட்டான். அப்போது பொழுது சாயத் தொடங்கிவிட்டது. நண்பர் இருவரும் ஓர் இலுப்பை மரத்தடியில் அமர்ந்தனர்.

தான் கொண்டுவந்திருந்த சிற்றுண்டியில் அவன் நண்பனையும் வற்புறுத்தி உண்பித்தான். பின்பு அவர்கள் மாலை நெடுநேரம் வரையில் உரையாடிக்கொண்டு இருந்தார்கள். பிறகு நண்பன் ஊருக்குத் திரும்பினான். கோமாறன் அடுத்த ஊர் சென்று, ஒரு விடுதியில் இரவு தங்கிப் புறப்பட்டான்.

கோமாறன் இந்நிகழ்ச்சியை ஒரு நன்னிமித்தமாகவே கொண்டான். வெளியூர் வாழ்க்கை பற்றியமட்டில், அது நன்னிமித்தமாகவே இருந்தது. ஏனெனில், ஓராண்டுக்குள்ளாகவே அவன் மதுரையில் போதிய பொருள் திரட்டினான். அதுமட்டுமின்றி, அவன் ஆவலுடன் தன் ஊருக்கு மீண்டு வந்தான். ஆனால், புறப்படும் சமயம் ஏற்பட்ட ஒரு சிறு நிகழ்ச்சி, ஊரில் அவனுக்கு எதிர்பாராத் தடங்கலை உண்டாக்கக் காரணமாக இருந்தது. இது அவன் அறியாத, அறியமுடியாத மாயமாய் அமைந்தது.

நண்பன் மும்முடியுடன் கோமாறன் தங்கிப் பேசிய மரத்தில் ஒரு குறளி குடியிருந்தது. மாலை நேரமானதால் அது விழித்துக்கொண்டது. நண்பர் பேச்சு முழுவதையும் அது கேட்டுக்கொண்டு இருந்தது. கோமாறனைப் பற்றிய பல செய்திகள் அதற்குத் தெரிய வந்தன. அதன் பயனாக அதன் குறும்புள்ளத்தில் ஒரு நைப்பாசை உருக்கொண்டது. கோமாறன் குடும்பவாழ்வில் ஒரு குழப்பம் உண்டுபண்ணி, வேடிக்கை பார்க்க அது திட்டமிட்டது. சமயமும் சூழ்நிலையும் இதற்கு நல்ல வாய்ப்பளித்தன.

நண்பர்கள் பிரிந்து வேறுவேறு திசையில் சென்றதும். குறளி மும்முடியைப் பின்பற்றிச் சென்றது. குறளியின் மெய்யுருவம் ஆவியுருவமானதால், மும்முடி அதைக் கவனிக்க முடியவில்லை. மும்முடியின் வீட்டையும் ஆட்களையும் குறளி நன்கு அடையாளம் கண்டறிந்தபின் மீண்டும் இலுப்பை மரத்துக்கே வந்தது. ஆனால் மறுநாள் விடியுமுன் அதன் திட்டம் ஒரு பெரிய திருவிளையாட்டாயிற்று. அது கோமாறன் உருவிலே திரும்பவும் ஊருக்குள் வந்தது. மும்முடியின் வீட்டுக்கும் அது சென்றது.

கோமாறன் உருவில் வந்தது குறளிமாறனே என்பது மும்முடிக்குத் தெரியாது. ஆகவே, வெளியூர் செல்ல விடைபெற்ற கோமாறன் திரும்பி வந்தது கண்டு அவன் வியப்படைந்தான். ஆனால், இவ்வகையில் குறளிமாறன் அவனுக்குப் பொருத்தமான விளக்கம் தந்தான்.

“இளமனைவியைவிட்டு இப்போதே செல்வானேன், சில நாள் சென்று செல்லலாமே!”என்று மும்முடி கோமாறனிடம் வாதாடியிருந்தான். குறளிமாறன் அதை இப்போது எடுத்துச் சுட்டிக் காட்டினான்.

“உன் அறிவுரையை மீறித்தான் போக இருந்தேன். ஆனால், அமைந்து சிந்தித்தபின், நான் அதையே பின்பற்றுவதென்று திட்டமிட்டேன். இளமனைவியின் துயர் தோய்ந்த முகமும் அன்னையின் வாட்டமும் உன் பக்கமே இருந்தன. ஆகவே, ஒப்பற்ற நண்பனாகிய உன்னையும் அவர்களையும் விட்டுப்போக மனமில்லாமல் வந்துவிட்டேன். மேலும், முயற்சி செய்பவனுக்கு எந்த ஊரானால் என்ன? என்னிடம் இன்னும் சிறிது பணம் இருக்கவே இருக்கிறது. அதைக்கொண்டு ஏதேனும் தொழில் செய்யலாம் என்று எண்ணுகிறேன். நண்பனாகிய உன் அறிவுரையும் ஒத்துழைப்பும் அதில் மிகுதி தேவைப்படும். அதனாலேயே திரும்ப வீடு செல்லுமுன் உன்னையும் என்னுடன் இட்டுப் போகவந்தேன். என் கருத்தை மாற்றிய நண்பன் நீ. ஆகவே, உன்னைக்காண என் மனைவியும் தாயும், மகிழ்வது உறுதி. ஆதலால் என்னுடன் அன்பு கூர்ந்து வீட்டுக்கு வா. என் விருந்தினனாக இருந்து எனக்கு ஆதரவளி” என்று கைப்பற்றி இழுத்தான்.

நண்பன் மும்முடி எப்போதுமே கோமாறனிடம் பற்றார்வம் கொண்டவன். ஆயினும் கோமாறன் இவ்வளவு குளிர்ச்சியாகப் பேசி அவன் என்றும் கேட்டதில்லை. இது அவன் உள்ளத்தில் புத்தார்வம் எழுப்பிற்று. அவன் கோமாறன் உருவில் வந்த குறளிமாறனுடன் புறப்பட்டான். குறளிமாறன் திட்டத்தின் ஒரு பெரும்பகுதி இப்போது வெற்றி பெற்றது. ஏனென்றால், மும்முடியின் உதவி கொண்டே அவன் கோமாறன் மனைவியையும் தாயையும் கண்டுணர்ந்து, அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளப் பழகினான். மும்முடியின் பேச்சு, போனவன் உடனே திரும்பியதற்கான விளக்கமும் அளித்தது. கோமாறன் வாழ்வுபற்றிய பல செய்திகளைக் குறளிமாறன் அறிந்து பயன் படுத்தவும் முடிந்தது.

குறளிமாறன் முன்பு குடியிருந்த மரத்தடியில் ஒரு புதையல் இருந்தது. அவன் அதைப் பல ஆண்டுகள் காத்துக்கொண்டே வந்திருந்தான். இப்போது ஓர் இரவில் அவன் அங்கே சென்று அதை எடுத்து வந்தான். கோமாறன் வீட்டிலேயே ஓரிடத்தில் அதை ஒளித்துவைத்தான்.

அதில் சிறு தொகை எடுத்து, அதன் புதுத் தொழில் தொடங்கினான். தொகையுடன் தொகை எளிதில் பயன்படுத்தப்பட்டது. தொழில் விரைந்து வளமடைந்தது. மும்முடிக்கு அவன் பல பரிசுகளும், மறை உதவிகளும் செய்தான். மும்முடியின் நட்பு இதனால் வளர்ந்து வேரூன்றிற்று. ஊரில் குறளிமாறன் மதிப்பும் முன்பு கோமாறனுக்கு இருந்த மதிப்பை விடப் பன்மடங்காக வளர்ந்தோங்கிற்று.

கோமாறன் வாழ்வின் மாறுதல் கண்டு எல்லாரும் மகிழ்ந்தார்கள். இருவரும் வியப்படையவில்லை. ஏனெனில், அதன் ஒவ்வொரு பகுதியும் இயல்பாகவே தோன்றிற்று. கோமாறன் குறளிமாறனாக மாறியிருந்ததை மட்டும் யாரும் கவனிக்க முடியவில்லை. ஆனால், உண்மை நிலையை அறியாமலே, மாறுதல் கண்டு மறுகிய இரண்டு உள்ளங்கள் இருந்தன. ஒன்று கோமாறன் தாய் பூமாரி; மற்றது அவன் மனைவி குணமாலை.

மைந்தன் தன்னுடன் முன்பு பழகியது போல இப்போது பழகவில்லை என்பதைப் பூமாரி கண்டாள். ஆனால், இது புதுச்செல்வத்தின் பயன் என்று மட்டுமே அவள் எண்ணினாள். இது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால், மகன் மீது வெறுப்புக்கொள்ள இதில் எதுவும் இல்லை.

புது மாறுதலைக் கண்டு பூமாரியைவிட மறுகியவள் குணமாலையே. பிரிந்து செல்லும்போது கணவனுக்கு இருந்த ஆர்வம், திரும்பி வந்தபோது ஏன் இல்லை என்று அவள் தனக் குள்ளேயே ஓயாது கேட்டுக்கொண்டாள். இந்தக் கேள்விக்குச் சரியான விளக்கம் ஒன்றுமே ஏற்படவில்லை. உண்மையில் அது ஒரு புதிராகவே வளர்ந்துவந்தது. ஏனெனில், கணவனின் மாறுதலின் காரணமறியும் வரை அந்தக் காரிகை அவனிடம் நெருங்கிப் பேசாமல் இருந்தாள். குறளிமாறன் அவள் பேசாதவரை, தானாகப் பேசி மாட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை.

இந்நிலையில் கோமாறன் தாயுடன் குறளி மாறன் தொலை உறவினன் போலவே நடந்தான். ஆனால், கோமாறன் மனைவியுடனோ, இந்த அளவு கூடப் பழகவில்லை. அவன் அவளை யாரோ எவரோபோல் நடத்தினான். கற்புடைய மனைவியாயினும் குணமாலை மானமுடைய நங்கை. அவளும் வாய்பேசாது தண்ணீருடன் ஒட்டாது ஒழுகும் எண்ணெய்போல் ஒழுகி வந்தாள்.

உள்ளூர, மும்முடியின் நட்பும் அறிவுரையும் தான் கணவனை மாற்றியிருக்கவேண்டும் என்று அவள் கருதினாள். இந்த எண்ணம் அவள் வாழ்க்கையின் தனிமையை இன்னும் பெருக்கிற்று. தன்னிடம் விளக்கம் கூறாமலே, நண்பனுடன் கணவன் மேன்மேலும் நெருங்கிப் பழகுவதை அவள் கண்டாள். அந்நட்பு வளருந்தோறும், அவள் பெண்மைப்பாசம் அவள் உடலுக்குள்ளேயே அடங்கி ஒடுங்கிற்று.

குடும்பத்தில் நிலவிய இந்தப் பிளவு ஊரறியாத பிளவாக இருந்தது. மும்முடிகூட இதை முற்றிலும் கவனிக்கவில்லை. கவனித்த அளவிலும் குறளிமாறன் நட்பை அவள் குடும்ப நட்பாகக் கொள்ள எந்தத் தூண்டுதலும் காணவில்லை.

தன் தாயும் மனைவியும் நண்பனை ஆர்வமாக வரவேற்பார்கள் என்று குறளிமாறன் கூறியிருந்தான். ஆனால், அவர்கள் வரவேற்பில் அவன் அத்தகைய ஆர்வத்தைக் காண வில்லை. அத்துடன் கோமாறன் மனைவி குணமாலை கோமாறனைக் கூட ஆர்வமாக வரவேற்கவில்லை என்பதை அவன் குறிக்க நேர்ந்தது. இது அவனுக்குப் புதிராக இருந்தது. அவன் மீது பரிவும் அன்பும் வளர்ந்தன. இது அவன் நேசபாசத்தை இன்னும் பெருக்கிற்று.

வரவர மகனைப்பற்றிய கவலையும் பாசமும் தாய் உள்ளத்திலிருந்து விலகிற்று. அந்த இடத்தில் அவள் ஆண்டவன் பற்றுக்கே இடமளித்தாள். இது அவள் முதுமைக்கு ஏற்ற பண்பாய் அமைந்தது. குறளிமாறன் மதிப்பை அது இன்னும் உயர்த்திற்று. ஆனால், இளநங்கையான குணமாலை நிலைமையும் அம் முதியவள் நிலைமையிலிருந்து வேறுபடவில்லை. கணவன் செல்வம் வளர்ந்தாலும், அவளுக்கு அவன் அன்புச்செல்வம் சிறிதும் கிட்டவில்லை. இது தெய்வங்களின் கோபமாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவளிடம் வளர்ந்தது.

அது முதல் அவளுக்கு அவள் வாழ்க்கை ஒரு நீடித்த நோன்பாயிற்று. அடிக்கடி மாமியுடனேயே அவள் ஆண்டவன் பணியில் ஈடுபட்டாள். அத்துடன் துணையற்ற சிறுவர் சிறுமியர் ஏழைகள் ஆதரவிலும் தொண்டிலும், அவள் பாச உள்ளம் படர்ந்தது. அவள் இளமையின் பாசத்துடிப்பு தாய்மையின் பாச ஆர்வமாக வளர்ந்தது. ஒரு சிறிய உலகத்தாயின் உள்ளமாக அது நாளடைவில் விரிவடைந்தது.

கோமாறன் ஊருக்குத் திரும்பியபோது அவன் இங்ஙனம் ஒரு புத்தம் புதிய உலகத்தைக் கண்டு மருட்சியடைந்தான். ஊரெல்லையில் அவனைக்கண்ட சிலர் அவனைக் குறளி மாறனாகவே எண்ணிப் பேசினர். அவர்கள் அவனுக்கு அறிமுகமானவர்களே. ஆனால், அவர்கள் பேச்சு அவனுக்குப் புரியவில்லை.

ஒருவன் அவன் கொடாத பணத்துக்கு நன்றி கூறினான். மற்றொருவன், “என்ன , வீட்டுப் பக்கம் வந்து மாதம் ஒன்றாகிறதே, எங்களிடம் மனத்தாங்கலா, என்ன?” என்று கேட்டான்.

ஒரு பெண், “உங்கள் கடையில் இப்போது நீலச் சிற்றாடை ஒன்று வந்திருக்கிறதாமே; என் மகளுக்கு அது பிடித்திருக்கிறதாம். நாளை வருகிறேன். ஒன்று கடனாகக் கொடுங்கள்” என்றாள். இந்த மாயவுரைகள் அவன் மனத்தைக் கலக்கின.

குடும்பத்தில் அவன் கண்ட காட்சி அவனுக்கு இன்னும் மிகுதியான அதிர்ச்சி தந்தது. தன்னைப்போலவே அங்கே ஒரு கோமாறன் இருந்தான். அவன் தன் தாயிடம் அவள் மகனாகவே நடந்து கொண்டான். குணமாலையிடம் அவன் அவளுடைய கணவனாகவே நடித்தான். அவர்களும் இதை வாளா பார்த்துக்கொண்டிருந்தனர். ஊரார்கூட இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. கருதவில்லை. இவற்றைக் கண்டு அவன் தலை சுழன்றது.

மறுபுறம் பூமாரி, குணமாலை நிலைமைகளைக் கூறவேண்டியதில்லை. தம் மெய்யான மைந்தனும் கணவனுமே முன் நிற்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? ‘தன் மைந்தனைப் போலவே இன்னொருவன் எப்படி வந்தான்’ என்று தாய் உற்று நோக்கினாள். தன் கணவனையே உரித்து வைத்தாற்போல இன்னொருவன் எங்கிருந்து வந்தான். இது என்ன மாயம்?" என்று குணமாலை குமுறினாள். தெய்வக் கோபம் தீரவில்லை என்பதற்கு இஃது ஓர் அத்தாட்சியே என்று அவள் கலங்கினாள்.

“யார் கோமாறன்? யார் போட்டியிடும் மாயமாறன்?” என்ற பூசல் குடும்பச் சூழலைக் கலக்கி ஊரிலும் அமளிப்பட்டது. ஆனால், பொதுவாக எல்லோரும் குறளிமாறனையே கோமாறன் என்று நினைத்தனர். அவனுக்காகவே இரங்கினர். பரிந்து பேசினர். மும்முடிக்கோ, குறளிமாறன் தான் கோமாறன் என்ற உறுதி ஏற்பட்டிருந்தது.

உண்மையில் குறளிமாறன் உருவிலும் செயலிலுமே அவன் நட்பு வேரூன்றியிருந்தது. குறளிமாறனுக்கு ஏற்பட்ட இக்கட்டுப்பற்றி அவன் எல்லோரிடமும் உணர்ச்சிவேகத்துடன் பேசினான். எதிரியாகிய கோமாறனை அவன் மாய மாறன் என்று கூறி ஏசினான். “ஊரார் இதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, மாயமாறனைப் பிடித்து நன்றாய் உதைக்க வேண்டும்” என்று அவன் எல்லாரிடமும் வலியுறுத்திப் பேசினான்.

“இந்த நண்பனுக்கு நான் என்ன செய்தேன்? இப்படி என் குடி கெடுக்க முனைந்து கச்சை கட்டுகிறானே” என்று கோமாறன் வெம்பிப் புழுங்கினான்.

அடிக்கடி அவன் தன் தாயிடமும் மனைவியிடமும் ஆத்திரமாகப் பேசினான். ஆனால், அவர்கள் மிரளமிரள விழித்தனர். இதையும் அவன் அறிய முடியவில்லை. "ஆண்டவனே, இஃது என்ன திருக்கூத்து! நீயுண்டு, நாங்கள் உண்டு என்று இருந்தோமே, அது போதாதா? இன்னும் ஏன் எங்களைச் சோதிக்கிறாய்? என்று அவர்கள் புலம்பினார்கள். ஆனால், அவர்கள் புலம்பலின் முழு வெப்பத்தை யாரும் அறிந்து கொள்ளவில்லை. அந்த ஆண்டவன்தான் அறிந்திருக்கக் கூடும்.

பூசல்வழக்காயிற்று. கொற்கைமா நகரிலுள்ள இளவரசன் கேள்வி மன்றத்தில் குறளிமாறனும் கோமாறனும் நின்றனர். குறளிமாறன் பக்கமே சான்றுகள் வலுத்தன. ஆனால், கோமாறன் கொந்தளிப்புக் கண்டு யாருமே திகைத்தனர். எனினும் பேயின் அமைதிக்கு எதிராக, மனித உணர்ச்சியின் கொந்தளிப்பு என்ன செய்யமுடியும்? இளவரசன் மன்றத்திலிருந்து கோமாறனுக்கு எந்தத் தெளிவும் ஏற்படவில்லை.

அரசன் அளியாத நீதி தேடி, அவன் ஆண்டவனிடம் சென்றான். செந்தில் மாநகர் திருவீதிகளெங்கும் அவன் அழுது புலம்பிக்கொண்டே சென்றான்.

“என் திருமணத்திற்குப் பணம் உதவிய செல்வச் சீமான்களே, இப்போது என்னை ஏன் கைவிட்டீர்கள்? மனைவி இல்லாத இளைஞனாயிருந்தபோது, என்னைக் கண்டு பரிந்து பணத்தை வாரித் தந்த தங்கைமார்களே, தாய்மார்களே! மனைவியை உயிருடனேயே இழந்து தவிக்கும் என்னைக் கண்டு, கருணை இல்லையா? அந்த ஊற்று வற்றி விட்டதா? ஆண்டவன் செந்தின் மாநகரில் இல்லையா? எங்கே போய்விட்டார்?” என்று அலறாத வண்ணம் அவன் அலறி அரற்றினான்.

கோயில் திருக்கூட்டம் கூடிற்று. திருக்கூட்டத்தார் உள்ளங்களெல்லாம் கோமாறன் பொங்கும் துயர் கண்டு கலங்கின. அவர்கள் மதுரை உயர்முறை மன்றத்துக்கே தெரிவித்து, மதுரையிலிருந்து சான்றாளர்கள் தருவித்தனர்.

கோமாறனுக்கும் இப்போது குறளிமாறனைப் போலவே சான்றுகள் கிட்டின. ஆனால், இதனால் அவனுக்கு எதுவும் நன்மை ஏற்படவில்லை, ஏனெனில், வழக்கு உண்மையிலேயே மாயவழக்கு என்ற முடிவுதான் ஏற்பட்டது. “ஆண்டவனே நேரில் வந்து தீர்த்தாலல்லாமல், மாயம் தீர வழியில்லை” என்று திருக்கூட்டத்தார் அறிவித்துவிட்டனர்.

“அரசன் நீதியும் கிட்டவில்லை. ஆனமட்டும் பார்த்தும் ஆண்டனும் வாய்திறக்கவில்லை. இனி என்ன செய்வேன்? எந்த உலகத்திற்குச் செல்வேன்?” என்ற புலம்பலுடன் வேறு எதுவும் அறியாமல், கோமாறன் எங்கெங்கும் திரிந்தான்.

வழக்கம்போல ஒரு நாள் அவன் தன் ஊர்ப்புறத்திலேயே ஓர் ஆயர்பாடியருகில் புலம்பிக் கொண்டு சென்றான். பக்கத்திலுள்ள மரத்தடியில் ஏதோ ஒரு கும்பல் கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்தது. அதிலிருந்து ஒரு சிறுவன் அவனை நோக்கி வந்தான். “யாரப்பா நீ? உனக்கு என்ன நேர்ந்தது? அரசனையும் ஆண்டவனையும் ஏன் பழிக்கிறாய்? அதோ அரசர் இருக்கிறார். அவரிடம் வந்து உன் குறையைத் தெரிவி. அவர் ஆராய்ந்து முடிவு கூறுவார்.” என்றான்.

“தம்பி! அரசனாலும் தீர்க்க முடியவில்லை என் வழக்கை. ஆண்டவன் திருக்கூட்டத்தாலும் தீர்க்கமுடியவில்லை. மீண்டும் நான் ஏன் அரசனைப் பார்க்கவேண்டும்?” என்று கோமாறன் சீறினான்.

சிறுவன் புன்முறுவல் பூத்தான். “அந்த அரசனைச் சொல்லவில்லை, அன்பரே! அதோ நாங்களாகத் தேர்ந்தெடுத்த எங்கள் அரசர் இருக்கிறார். அவர் கட்டாயம் வழக்குத் தீர்த்துக் கூறுவார். ஏனென்றால், அவர் தீர்க்காவிட்டால், நாங்கள் எங்கள் குடியரசுத்திட்டப்படி அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிடுவோம். அதுமட்டுமல்ல நீதிகாணாத மன்னன் என்பதற்காகத் தண்டனையும் அளிப்போம். ஆகவே, துணிவுடனும் நம்பிக்கையுடனும் வா” என்றான்.

வேறொரு சமயமானால், கோமாறன் சிறுவனையும் அவன் உரையும் கேட்டுச் சிரித்திருப்பான். குழம்பிய நிலையில் அவன் சிறுவனைப் பின்பற்றிச் சென்றான்.

மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு சிறுவன் மன்னனாக வீறுடன் உட்கார்ந்திருந்தான். அடுத்த கிளைகளில் வேறு சிலர் அமைச்சர், தலைவர்களாக அமர்ந்திருந்தனர். காவலர், ஏவலர், வீரர், குடிகளாக வேறு பலர் அழகுபடக் கீழே நின்று நடித்தனர். ஆய்ச்சிறுவர்களாகிய அவர்கள் அன்று தான் விளையாட்டாக ஒரு குடியரசு நிறுவியிருந்தார்கள். கோமாறனை அழைத்து வந்த சிறுவன் உண்மையில் இந்தப் புதிய குடியரசின் புதுப்பணியாளே.

“கோவேந்தன் வாழ்க! கோவேளிர் புகழ் ஓங்குக!” என்று காவலர் மன்னன் புகழ் பாடினர்.

ஏவலன் ஒருவன் கழியுடன் வந்து முன்னின்றான். அரசனை வணங்கி, “கோவேந்தே! வழக்கு மன்றம் தொடங்கிற்று; இதோ அடுத்த நாட்டிலிருந்து வந்த ஓர் அயலானே தங்களிடம் குறையிரந்து நின்றான். உங்கள் நீதி எங்கும் பரவட்டும்” என்றான்.

மன்னன் கோவேந்தன் கேள்வி தொடங்கினான். கோமாறன் சிரிக்கவில்லை; சினக்கவில்லை. ஒன்றொன்றாகத் தனக்கு நேர்ந்தவற்றை எல்லாம் கூறினான்.

கோவேந்தன் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் என்ன சொல்லப்போகிறான் என்று கோமக்கள் ஆவலாக இருந்தனர். “இது எவ்வளவோ சிறிய வழக்குத்தான். ஆயினும் எதிர்தரப்பினரை அழைக்காமல் தீர்ப்புச் சொல்ல முடியாது. தீர்ப்பை நடைமுறைப் படுத்தவும் முடியாது. ஆகவே, நாளை இந்நேரத்துக்குள் எதிர்தரப்பாளரையும் அழைக்கிறேன். தீர்ப்பு நாளையே கூறப்படும்” என்று ஆய்ந்து அமைந்து பேசினான்.

கோமாறன் ‘சரி’ என்று போய்விட்டான். அவன் உள்ளத்தில் புதிய நம்பிக்கை எதுவும் எழவில்லை. ஆனால், புதிய அவநம்பிக்கைக்கும் எதுவும் தோன்றவில்லை. மறுநாள் வரை அவன் அந்தப் பக்கத்திலேயே சுற்றித் திரிந்தான்.

கோவேந்தனாக நடித்த சிறுவனை மற்றத் தோழர்கள் சுற்றிவளைத்தனர். “தோழனே! என்ன அவ்வளவு எளிதாகப் பேசிவிட்டாய். நாளை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டார்கள்.

அவன் சிரித்தான். “நாளைச் செய்வதை நாளை பார்க்கலாம். நீங்கள் தாம் சரியான தீர்ப்பு அளிக்காவிட்டால், என்னைப் பதவியிலிருந்து நீக்கித் தண்டிக்கப் போகிறீர்களே; ஆனால், சரியாகத் தீர்த்துவிட்டால், என்ன பரிசோ?” என்றான்.

“குடியரசனுக்கு வேறு என்ன பரிசு இருக்கமுடியும்? குடிமக்களின் அன்புதான் பரிசு நாங்கள் பெரியவர்களான பின்னும் உன்னையே அரசனாக்குவோம்” என்றான். பணியாளனாக நடித்த சிறுவன்.

கோவேந்தன் பணியாளன் பக்கம் திரும்பினான். “இப்போது உனக்கு வேலை இருக்கிறது. நீ மீண்டும் பணியாளாக வேண்டும். ஊர் காவலரிடம் நான் தரும் முடங்கலைக்கொண்டு போய்க் கொடு, அவர் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றான். கோவேந்தன் காரியத் திறமைகண்டு, சிறுவர் மீண்டும் வியப்புடன் அமைந்தார்கள். கோவேந்தன் கொடுத்த தாள் நறுக்குடன் பணியாள் அகன்றான்.

"காவலின் கண்ணியப் பொறுப்புடைய பெரியீர், நான் சிறுவர்களால் விளையாட்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டரசன்தான். ஆனால், அந்த நிலையிலேயே கோமாறன் வழக்கு என்னிடம் வந்தது, அதை நான் கேட்டேன். அதன் மாயம் எனக்குப் புரிந்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. யாவருக்கும் விளக்கமாக நான் அதைத் தீர்த்துவிட்டால், அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் நீங்கள் தாமே! ஆகவே, எதிர்தரப்பாளராகிய மற்றக் கோமாறனையும், மனைவியையும் தாயையும் நண்பனையும் தங்கள் சார்பிலேயே என் மன்றத்துக்கு வரக் கட்டளை பிறப்பிக்கும்படி கோருகிறேன்.

“என்னிடம் பணியாளாக நடிக்கும் சிறுவன் தங்கள் காவலருடன் சென்று, முறைப்படி எதிரிகளை அழைத்து வரவும் அருள்புரியுங்கள்”

இதுவே கோவேந்தனின் முடங்கல்.

முடங்கலைப்பார்த்து ஊர்காவலன் புன்னகை செய் தான். ஆனால், அதன் அமைதியும் அறிவும் பண்பும் அவனை வயப்படுத்தின. தீர்ப்பைக் காணும் ஆர்வமும் அவனுக்கு ஏற்பட்டது. ஆகவே, அவன் எதிர்பார்த்ததைவிட மிகுதி ஒத்துழைப்பைக் காட்டினான். சிறுவனுடன் தலையாரியையே அனுப்பினான். வேண்டிய கட்டளையும் பிறப்பித்தான்.

அத்துடன் மற்ற வழக்கு நடவடிக்கைகளில் உதவ, ஏவலர் காவலர்களுடன் அவனே நேரில் வந்தான், எனினும் எவரும் கலவரமடையாத படி, பணிச்சார்பற்ற உடையிலே உருமாற்றிக் கொண்டு, யாரோ பார்வையாளர் போல வந்து அகல இருந்தான்.

மரத்தடியிலேயே மறுநாள் கேள்வி மன்றம் கூடிற்று. எல்லாம் முன்னாள் போலவே நடைபெற்றது. ஆனால் குறளிமாறன், பூமாரி, குணமாலை, மும்முடி ஆகிய அத்தனை பேரையும் பணியாளான சிறுவன் காவலர் உதவியுடன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான். காவலர் சிறுவன் ஆட்கள் போலப் பின்னணியிலேயே நின்றார்கள்.

முறைமன்ற நடவடிக்கைகள் போலவே கேள்விகள், குறுக்குக்கேள்விகள் எல்லாம் நடைபெற்றன. ஆனால், சான்றாளர்கள் வரவழைக்கப்படவும் இல்லை. அதுபற்றிய பேச்சும் இல்லை. எப்படித் தெளிவு ஏற்படமுடியும் என்று ஆயர் சிறுவர்களும், பிறரும் கவலைப்பட்டனர். அதே எண்ணம் தோன்றிக் காவலர்க்கும் ஊர்காவல் தலைவர்க்கும் வியப்பூட்டிற்று.

கோவேந்தன் இறுதியில் கையமர்த்தினான். தீர்ப்புக் கூறப்போகும் பாவனையிலே, ஒரு குறிப்பேட்டையும் எழுதுகோலையும் கையிலெடுத்தான். அவன் பேச்சையே யாவரும் எதிர்பார்த்து நின்றார்கள்.

“வழக்காடிகளே உங்கள் இருவர் சார்புகளையும் நான் நன்கு கேட்டாய்விட்டது. சான்றாளராக நான் எவரையும் அழைக்கவிரும்பவில்லை. நான் விரும்புவது கண்கூடான சான்றையே. இந்த வழக்கின் எல்லாக் கோணங்களையும் நன்கு கண்டிருக்கக்கூடிய சான்றாளர் ஒருவர்தாம் இருக்கிறார். அவரையே சான்றாளராக அழைக்கப் போகிறேன். அவர் முடிவே என் தீர்ப்பின் முடிவாக இருக்கும்” என்றான் கோவேந்தன்.

வழக்காடிகள் உட்பட யாவரும் சுற்றிப் பார்த்தார்கள். அத்தகைய புதுவகைச் சான்றாளர் யார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.

கோவேந்தன் மீண்டும் பேசினான்.

“நான் கூறும் சான்றாளரைக் காண நீங்கள் எங்கும் சுற்றிப் பார்க்கவேண்டாம். அவர் ஆண்டவன் தான். அவர் உங்கள் கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. ஆனால், அவர் தீர்ப்பை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்” என்றான்.

கோவேந்தன் பேச்சு வழக்கின் புதிரை விடப் புதிராக இருந்தது. “புதிர் தீர்க்கும் இப் புதிர் யாதோ?” என்ற கேள்விக்குறி எல்லார் நெற்றிகளிலும் இருந்தன.

கோவேந்தன் மடியிலிருந்து ஒரு சிறிய புட்டி எடுத்தான். அது நீலநிறமான புட்டி. அதன் மூடி திருகுமூடியாய் இருந்தது. அந்தப் புட்டியை அவன் வழக்காடிகள் இருவருக்கும் இடையே வைத்தான்.

“கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை” என்று கூறிக்கொண்டு, வழக்காடிகள் ஒவ்வொருவரும் இந்தப் புட்டிக்குள் தம் கை, கால், உடல், தலை எல்லாவற்றையும் அடக்க வேண்டும். யாரால் புட்டிக்குள்ளே சென்று உள்ளிலிருந்து பேச முடியுமோ, அவன் தான் உண்மையில் கோமாறன் ஆவான். இதுவே என் தீர்ப்பு" என்றான்.

தீர்ப்பு கேட்டு எல்லோரும் திகைத்தனர்.

கோமாறனுக்கு, வழக்கிலே முதல் தடவையாகக் கோபம் வந்தது. “இது என்ன தீர்ப்பு? நடித்த நடிப்பெல்லாம் இந்தக் குறும்புக்குத் தானா?” என்று அவன் சீறினான்.

“இதோ கோமாறனுக்கு உரியவர்கள் நிற்கிறார்கள். அவர்கள் சான்றாகக் கடவுளே உண்மைக் கோமாறனை அறிவிக்க இருக்கிறார். அதற்குள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய், வழக்காடியே?” என்றான் கோவேந்தன்.

கோமாறன் சீற்றம் அடங்கவில்லை. அவன் அடங்கிய கொந்தளிப்புடன் நின்றான்.

குறளிமாறன் முகம் மகிழ்ச்சியால் சிவந்தது. “கடவுள் சான்றாக, நான் கூறுவது முற்றிலும் உண்மை” என்று கூறிக் கொண்டு, அவன் புட்டி மீது குதித்தான். அவன் கால்கள் புட்டிக்குள் நுழைந்தன. உடல் நுழைந்தது. கைகள் முடங்கி அதனுள் நுழைந்தன. “பார்த்தீர்களா, என் மெய்மையை?” என்ற பெருமிதத் தோற்றத்துடன், தலையையும் அவன் உள்ளுக்கு இழுத்தான். புட்டிக்குள் இருந்துகொண்டே, “போதுமா சான்று” என்று கூவினான்.

காவலர், ஊர்க்காவலர் உட்பட, எல்லோரும் திகைத்து நின்றனர். ஆனால், கோவேந்தன் திகைக்கவில்லை. அவன் அவசர அவசரமாகப் புட்டியின் மூடியை எடுத்தான். “போதுமையா சான்று, எல்லாம் விளங்கிவிட்டது!” என்ற சொற்களுடன், மூடியைப் புட்டி மீது திருகினான்.

“நடந்தது என்ன, நடப்பது என்ன” என்றே யாரும் தெளிவாக அறியவில்லை. புட்டிக்குள் இருந்த குறளிக்குக் கூட எதுவும் தெரியவில்லை. ஆனால், மூடி நன்றாக இறுகியபின், கோவேந்தன் அதை எடுத்து எல்லோருக்கும் தெரியும்படி காட்டினான். அதைக் கோமாறன் முன்னே நீட்டினான்.

“அப்பனே, நீ தான் கோமாறன், உன் எதிரியாக நின்றவன் ஒரு குறளி. இதை ஆண்டவன் காட்டிவிட்டார். சற்றுமுன்பு நீ எவ்வளவோ கோபப்பட்டாய் படபடத்தாய். ஆனால், அதற்கும் பலன் இல்லாமல் போகவில்லை. உன் மனைவி, தாய், நண்பன் ஆகியவர்கள் சான்றுகளை இனி நீ கேட்பாய். முழு உண்மையும் அதன்பின் தான் உனக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்” என்றான்.

ஊர்க்காவல் தலைவர், காவலர் வியப்புக்கு இப்போது எல்லையில்லை; தீராத மாயத்தைக் கோவேந்தன் அறிவுத்திறம் தீர்த்துவிட்டது என்பதை அவர்கள் கண்டனர். ஆனால் இன்னும் என்ன முழு உண்மை என்று காணும் ஆர்வத்துடன், அவர்கள் வெளிப்படத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல் அமைந்து நின்றனர்.

“அன்பர்களே, வழக்கின் முடிவை நீங்கள் பார்த்தாய்விட்டது. எதிரியும் தண்டனை அடைந்து முடிந்துவிட்டது. இத்தனையும் ஆண்டவன் திருமுன்பிலே நிகழ்ந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதே ஆண்டவன் திருமுன்பில், இப்போது உங்களில் ஒவ்வொரு வரும் உங்கள் உள்ளத்தைத் திறந்து பேசவேண்டுகிறேன். முதலில் கோமாறன் தனக்கு நடந்தவை, தான் எண்ணியவை எல்லாம் கூறட்டும்” என்றான்.

கோமாறன் நடந்ததுமட்டுமின்றி, அதனால் தனக்கு ஏற்பட்ட குழப்பங்களையும் மன உடைவையும் எடுத்துரைத்தான். அது கேட்டு நண்பன் மும்முடி உள்ளம் அவனைச் சுட்டது. தாய் பூமாரி துடிதுடித்தாள். மனைவி குணமாலை பாகாய் உருகினாள்.

அடுத்தபடி நண்பன் தான் கண்டதும் கேட்டதும் கூறினான். நண்பனாக எண்ணிய கோமாறன் மாறுதலையும், அவன் மனைவியைப்பற்றிய தன் தவறான கருத்தையும் கூட எடுத்துக்கூறி வருந்தினான்.

நண்பன் உரைகள் தாய் உள்ளத்தில் பூட்டை உடைத்தன. அவள் மனம் விட்டுப் பேசினாள். கோமாறனிடம் கண்ட மாறுதலை மகனின் மாறுதல் என்று கொண்டதால், அவளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பையும், அதன் பயனாக ஆண்டவனிடம் அவள் செலுத்திய புதுப்பாசத்தையும் அவள் கல்லும் உருக எடுத்து விளக்கினாள்.

நண்பன் உரையும், தாய் உரையும் குணமாலை உள்ளத்தை ஒரே உணர்ச்சிவெள்ளம் ஆக்கி விட்டன. அவள் கணவன் அன்பில்லாதவன் என்ற தன் எண்ணத்தை எடுத்துரைத்து மன்னிப்புக் கோரினாள். ஆயினும் அதற்காகத் தான் ஆற்றிய நோன்பு, சமூகப்பணி ஆகியவைகள் பலித்து விட்டதற்காகக் கழிபேருவகை கொள்வதாக அவள் முடித்தாள். கோமாறன் வாழ்வில் புயலின் பின் தென்றல் வீசிற்று.

கோவேந்தன தீர்ப்பின் முழுப்பெருமையும் தமிழகமெங்கும் பரந்தது. மதுரைப் பேரரசனே அவனுக்குக் கோவேந்தன் என்ற பட்டத்துடன் ஆய்ப்பாடி முழுவதும் ஆளும் உரிமையும் அளித்தான். கோமக்களாகிய ஆயர் கோவேந் தனையே தம்குடி தழைக்கவந்த புதியதொரு கண்ணபெருமானாக வாழ்த்தி மகிழ்ந்தனர்.