மனஓசை
சந்திரவதனா 

மனஓசை


நூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும்
மாறா அன்பு நூல் மனங்களைத் தொடுக்குமே

சந்திரவதனா

 

 

மனஓசை
சிறுகதைகள்
ஆசிரியர் - சந்திரவதனா செல்வகுமாரன்


முதற்பதிப்பு – ஆவணி 2007
பதிப்புரிமை © – சந்திரவதனா

ஓவியம் - மூனா
புத்தக வடிவமைப்பு - மூனா

MANAOSAI
A Collection of Shortstories
Author – Chandravathanaa Selvakumaran
(Chandra Selvakumaran)


First Edition – August 2007
© – Chandravathanaa

Illustration - Muunaa
Cover Design – Muunaa


Chandravathanaa Selvakumaran
Schweickerweg 29
74523 Schwaebisch Hall
Germany
email - chandra1200@gmail.com


Printed by
Kumaran Printers (Pvt) Ltd
e-mail : kumbh@sltnet.lk

Price : Rs 300.00 (Sri Lanka)


சில வார்த்தைகள்

என் பெற்றோர்கள் மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் கற்றுத் தந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எனக்கு எழுதவும் பிடிக்கிறது. நான் எப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் சில துளிகளையே உங்களிடம் தருகிறேன்.

எந்த வார்த்தைகளாலும் ஆற்ற முடியாத ஆற்றாமைப் பொழுதுகளை எனது எழுத்துக்களாற்றான் நான் தேற்றியிருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருக்கும் போது, என் வசப்பட்ட எனதான வாழ்வை நான் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சில இழப்புகள் என்னை நிலைகுலைய வைத்தன. அந்தப் பொழுதுகளில் என் துயரங்களின் வடிகால்களாயும்,

என்னால் தாங்க முடியாத, அல்லது நம்ப முடியாத சில விடயங்களைக் கண்டு நான் வெகுண்டெழுந்த போது என் கோபத்தின் தெறிப்புகளாயும்,

எனது சமூகத்தின் போட்டிகளும், பொறாமைகளும், நான், நீ.. என்ற அகம்பாவங்களும், ஆண், பெண் என்ற பேதங்களும் அதனாலான ஏற்றத் தாழ்வுகளும் என் கண்களில் பட்ட போதும், என் மேல் படர்ந்த போதும், அவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாத என் எதிர்ப்புக்களாயும், மறுப்புக்களாயும், சுட்டல்களாயும்,

சமயத்தில், இயலாமையின் சொரிவுகளாயும்,

வாழ்வின் ஒவ்வொரு படியிலுமான சந்தோசத்தின் பொழிவுகளாயும் வெளிப்பட்ட உணர்வுகளின் கோலங்களே இவை.

இவைகள் வெறும் கதைகள் அல்ல. என்னைச் சுற்றியுள்ள எதார்த்தங்கள்.

நட்புடன்
சந்திரவதனா.

உள்ளடக்கம்

1. பொட்டுகிளாஸ் 5
2. குண்டுமணிமாலை 11
3. சொல்லிச் சென்றவள் 21
4. நாகரிகம் 30
5. கணேஸ்மாமா 33
6. வேசங்கள் 40
7. பயணம் 47
8. பாதை எங்கே? 53
9. அக்கரைப் பச்சைகள் 58
10. அந்த மௌன நிமிடங்களில்… 61
11. தீர்க்கதரிசனம் 69
12. கல்லட்டியல் 75
13. உபதேசம் 81
14. விழிப்பு 85
15. மேடைப்பேச்சு 94
16. எதனால்? 96
17. என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ? 103
18. அம்மாவுக்குத் தெரிந்தது 107
19. விலங்குடைப்போம் 113
20. சங்கிலித் துண்டங்கள் 123
21. ஏன்தான் பெண்ணாய்? 130
22. வசந்தம் காணா வாலிபங்கள் 135
23. கனவான இனிமைகள் 141
24. இளங்கன்று 147
25. முரண்களும் முடிவுகளும் 153
26. இவர்களென்ன மார்க்கண்டேயர்களா? 161
27. மரணங்கள் முடிவல்ல 167
28. விவாகரத்து 175
29. சுமைதாளாத சோகங்கள் 179
30. பதியப்படாத பதிவுகள் 188

 

பொட்டுகிளாஸ்

டொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல முடியாமல் உள்ளது. மீண்டும் மீண்டும் சில வரிகளை வாசிப்பதுவும் அப்படியே மாண்டு போகாது என் மனசுக்குள்ளே பதிந்து போயிருக்கும் சிறுவயது நினைவுகள் மீட்டப்பட்டு அந்த சம்பவங்களுடன் நான் சங்கமித்துப் போவதும் சில வாரங்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நானும் பார்வையால், பேச்சால், செயலால் பஞ்சமரை வதை செய்த கர்வம் பிடித்த சமூகத்தில் இருந்து வந்தவள்தான்.

இன்றும் அவரது அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். என் மனசு ஓடிப் போய் என் வீட்டு ஒட்டிலும், பொட்டுக் கிளாஸிலும் அமர்ந்து கொண்டு விட்டது. தாய்க்காரி எவ்வளவுதான் சொல்லி விட்டாலும் வெள்ளத்தைக் கண்டதும் நின்று விடும் பள்ளிப் பிள்ளை போல மனசு தொடர்ந்து வாசிக்க மறுத்தது. வெள்ளத்தைக் கண்ட பிள்ளையின் மனதிலாவது வெள்ளத்துடனான லயிப்பிலும், தப்பலிலும் ஒரு வித சந்தோசம் இருக்கும். என்னுள்ளே இனம் புரியாத அசௌகரியமான ஸ்தம்பிதம்.

துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் பாட்டாவை நேர் எதிரே கண்டதும், தனது துண்டை இழுத்து கக்கத்துள் வைத்துக் கொண்டு “உடையார்" என்று குழைந்து கூழைக் கும்பிடு போடும், எங்கள் ஊர் சாவுச் சடங்குகளுக்குப் பறையடிக்கும் மாணிக்கம்...

எங்கள் அழுக்குத் தலைமயிரைப் பிடித்து அழகாகக் கத்தரித்து விட்டு, எங்கள் வீட்டு ஒட்டில் மட்டும் அமர அனுமதிக்கப் படும் நாவிதன் கதிரமலை...

எங்கள் தென்னையில் ஏறி, கள்ளுச் சீவும் கந்தசாமி...

எங்கள் அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தோளிலே சுமந்து சென்று தோய்த்துக் கொண்டு வந்து தரும் வயதான கோபால்... இப்படி ஒவ்வொருவராக என் முன்னே தோன்றிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களில் நாங்கள் ´கட்டாடி´ என்று சொல்லும் கோபால் சில சமயங்களில் எங்கள் வீட்டுச் சடங்குகளுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதிக்கப் படுவான். ஆனாலும் மூத்தவர்களை ´வாங்கோ, போங்கோ´ என்று கதைக்க வேண்டும் என்று சொல்லித் தந்த அம்மாதான் அவனை ´அவன், இவன்´ என்று நான் அழைக்க அனுமதித்தா.

அப்பாவின் வயதை ஒத்த அவனை “கோபாலு.." என்று கூப்பிட்டு “எனக்கு திங்கட்கிழமை வெள்ளைச் சட்டை கட்டாயம் வேணும். கொண்டு வந்து தந்திடு" என்று சொல்வேன்.

அவன் சின்னப் பெண்ணான என்னைப் பார்த்து “ஓமுங்கோ..! நான் கொண்டு வந்து தாறன்.” என்று பணிவோடு சொல்வான். திங்கட்கிழமை விடிய கொண்டு வந்தும் விடுவான். ஊத்தை உடுப்புகளைத் தனது பின் முதுகில் சுமந்துதான் அவன் முதுகில் அப்படியொரு கூனல் விழுந்ததோ?

கள்ளுச் சீவும் கந்தசாமி தென்னையில் ஏறும் லாவகமே ஒரு தனி அழகுதான். ஆனால் அவன் எங்கள் வீட்டு ஒட்டில் கால் வைத்து நான் கண்டதில்லை. ஒட்டுக் கரையோடு முற்றத்தில் நின்றுதான் அம்மாவோடும், அப்பாவோடும் கதைப்பான்.

பறையடிக்கும் மாணிக்கம் ஒட்டிலிருந்து எட்டடி தள்ளி நின்றே கதைப்பான். கிட்ட வந்தாலே ஏதாவது ஒட்டி விடும் என்று நினைத்து அவனை அப்படித் தள்ளி வைத்தார்களோ?

கதிரமலை எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குத் தலைமயிர் வெட்ட வேண்டுமென்றால் மட்டும் ஒட்டில் வந்து இருந்து வெட்டுவான். மற்றும் படி எட்டத்தான் இருப்பான்.

´ஒட்டு´ என்றால் என்ன என்ற யோசனை உங்களுக்கு வரலாம். எனக்குக் கூட ஆரம்பத்தில் ஏன் அந்த ஒட்டு என்று விளங்கவில்லை. வழுவழுப்பான எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையுடன் சேர்த்து ஒரு சொருசொருப்பான விறாந்தை கட்டப் பட்டிருந்தது. ஆனால் அது எங்கள் பெரிய விறாந்தையிலிருந்து அரை அடி பதிவாகவே இருந்தது. மிகச் சின்ன வயதில் அது எனக்கு தொங்கி விளையாட நல்ல சாதகமான சாதனமாய் இருந்தது.

எனக்குள் சிந்தனைகள் விரியத் தொடங்கிய, ஒவ்வொரு விடயத்திலும் பூராயம் தேடத் தொடங்கிய, “ஏன்..?" என்ற கேள்விகளை மற்றவர்களிடம் அடுக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில்தான் நான் எனது அம்மம்மாவிடம் அந்த ஒட்டு பற்றி விசாரித்தேன்.

“அம்மம்மா, ஏன் அதுக்கு ஒட்டு எண்டு பெயர்? அதேன் பெரிய விறாந்தையை விடப் பதிஞ்சிருக்கோணும்?"

அதற்கு அம்மம்மா சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நம்ப முடியாதிருந்தது. அவ பஞ்சமர்களின் பெயர்களை அநாயசமாக அடுக்கி “அவையள் வந்தால் இருக்கிறதுக்குத்தான்" என்று சொன்னா.

உண்மையிலேயே நான் ஆச்சரியப் பட்டுப் போனேன். அதற்காக என்றே ஒரு விறாந்தையை எமது விறாந்தையுடன் ஒட்டி விட்டுள்ளார்களா! என்ன மனிதர்கள் இவர்கள்!

“ஏன் அம்மம்மா! அவையள் இந்த மேல் விறாந்தையிலை இருந்தால் என்ன?"

“சீ... மொக்குப் பிள்ளை மாதிரிக் கதைக்காதை. நாங்கள் இந்த விறாந்தையிலை இருந்து கதைக்கிற பொழுது அவையளும் இதிலை இருந்தால் என்ன மாதிரி? அவையள் எங்களுக்குக் கீழைதான் இருக்கோணும்."

அம்மம்மாவின் பதில் எனக்குள் ஒருவித அதிருப்தியான உணர்வையே தோற்றுவித்தது. எமது வீட்டின் ஒவ்வொரு காரியத்திலும் பங்கு கொள்ளும் அவர்களை(பஞ்சமர்)த் தாழ்த்தி வைத்துப் பார்க்கும் இந்தக் குரோதம் இவர்களுக்குள் எப்படி வந்தது? ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? எனக்குள் பலவிதமான சிந்தனைகள் எழுந்தன.

அதன் பின்தான் நான் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் என் வீட்டுப் பெரியோரைச் சீர்திருத்தும் அளவுக்கு எனக்கு வயது போதவில்லை. என் சொற்களோ, செயல்களோ அங்கு எடுபடவில்லை. என்ன கதைத்தாலும் “மொக்குப் பிள்ளை..! ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர இவளுக்கு அறிவு வளரேல்லை.." போன்ற ஆலாபனைகள்தான் எனக்குக் கிடைத்தன.

அதனால், எனக்குள் எழுந்த சிந்தனைகள் அறுபடவில்லை. அவை இன்னும் இன்னும் பெரிதாக விரிந்தன. கதிரமலையோ, கோபாலுவோ வீட்டுக்கு வந்தால் அவர்களும் மனிதர்கள்தான் என்ற நினைப்போடு அவர்களோடு நானும் போய் ஒட்டில் இருந்து கதைக்கத் தொடங்கினேன். இவைகளைப் பார்த்து அம்மா என்ன நினைத்தாவோ தெரியாது. ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை.

அவ சொந்தமான எந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் தைரியம் இன்றி அவவின் பெற்றோரான எனது பாட்டாவும், அம்மம்மாவும் வகுத்த படி சமூகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்திருக்கிறா. ´இது தப்பு, இது சரி´ என்று பகுத்தாயும் தன்மையும், திறனும் அவவுக்குள் இருந்தாலும், ´இவைதான் நியதி´ என்று எண்ணி அதன் படி வாழும் மனப்பக்குவமும் அவவுக்குள் தாரளமாக இருந்தது. மற்றும் படி அவவிடம் சாதித் தீயோ, மனிதர்களை மண்டியிட வைக்கும் மனிதமல்லாத குணமோ இல்லை. அதனால்தான் அவ எதுவும் சொல்லவில்லையோ!

ஆனால் நான் அப்படி சமமாக இருந்து கதைப்பதை பாட்டாவோ, அம்மம்மாவோ கண்டு விட்டால் போதும். நான் அவர்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாகி வசைமாரிகளை வாங்கிக் கட்டிக் கொள்வேன். எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அம்மா பேசினால் மட்டுந்தான் எனக்கு அழுகை வரும். மற்றவர்கள் பேசினால், என்னில் பிழை இல்லை என்று தெரிந்தால், மனம் கொண்ட மட்டும் என் மனசுக்குள்ளேயே அவர்களைத் திட்டி விட்டு இருந்து விடுவேன்.

அன்று சனிக்கிழமை. இற்றைக்கு 30 வருடங்களுக்கு (1972) முந்தைய காலகட்டம். கதிரமலை வந்திருந்தான். எனது தம்பிமார், சித்தப்பாமார்.. என்று ஒவ்வொருவராக முற்றத்தில் கதிரை போட்டு அமர, கதிரமலை நின்ற படி அவர்களுக்குத் தலைமயிர் வெட்டி விட்டான். கனபேருக்கு வெட்டியதால் களைத்தும் விட்டான்.

அம்மா, அன்று இரண்டாவது தேநீர் அவனுக்காகப் போட்டு விட்டு, வழமை போல, அவனுக்கென வைத்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, என்னைக் கூப்பிட்டுத் தந்தா. எனக்கு என்னவோ போல இருந்தது. அம்மாவோடு இது பற்றி ஏற்கெனவே கதைத்திருந்தும், அம்மா யோசிப்பதாகச் சொன்னாவே தவிர செயற் படுத்துவதாய்த் தெரியவில்லை. எனக்கு கோபமும் இல்லை, கவலையும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு உணர்வு.

“அம்மா, இண்டைக்கு நான் அவனுக்குக் கிளாசிலைதான் ´ரீ´ குடுக்கப் போறன்." எனது அந்தத் தீர்க்கமான பேச்சு அம்மாவைச் சங்கடப் படுத்தியிருக்க வேண்டும். ஆனாலும் அம்மாவிடம், தான் நினைப்பதைத்தான் தனது பிள்ளைகள் செய்ய வேண்டுமென்ற திணிப்புத் தன்மையோ, கண்டதையும் எதிர்க்கும் தன்மையோ இல்லாததால் என்னை மௌனமாகப் பார்த்த படி நின்றா. அவவையும் பஞ்சமரைத் தாழ்த்தும் இந்தப் பண்பற்ற செயல்கள் புண் படுத்தியிருந்தனவோ..? எனக்குத் தெரியவில்லை.

நான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பொட்டுக் கிளாஸை எடுத்து, அதனுள் அந்தத் தேநீரை ஊற்றிக் கொண்டு போய் களைத்துப் போயிருந்த கதிரமலையிடம் “இந்தா கதிரமலை, தேத்தண்ணியைக் குடி.." என்று நீட்டினேன்.

அவன் தீப்பட்டவன் போலத் துடித்துப் பதைத்து எழுந்து, அந்தப் பொட்டுக் கிளாஸையும், என்னையும் கண்கள் அகல விரிய ஆச்சரியமாகப் பார்த்தான். எனக்கு சந்தோசமாய் இருந்தது. ஒரு ஜீவனை அசைத்திருக்கிறேன். அதுவும் சந்தோசமாக அசைத்திருக்கிறேன் என்ற சந்தோசம்.

“பிடி கதிரமலை, உனக்குத்தான்."

அவன் கண்களுக்குள் என்ன உணர்வோ! நிட்சயமாய் நன்றி கலந்த உணர்வு! அதற்கு மேலும் ஏதோ சொல்ல விளையும் தவிப்பு.
“இருந்து குடி கதிரமலை"

ஏதோ ஒரு சந்தோசம் அவன் முகத்தில் தவழ கிளாஸை பக்குவமாகப் பிடித்துக் குடிக்கத் தொடங்கினான். எனக்கு அன்று மனசு நிறைந்திருந்தது. அம்மாதான் “இக்கணம், பாட்டா கண்டால் பேசப் போறார்" என்று பயந்து கொண்டிருந்தா.

“ஏதும் ஒட்டிக் கொண்டு வந்திடும் எண்டு பயமெண்டால் நல்லாச் சாம்பல் போட்டு மினுக்குங்கோ. அல்லது ´விம்´ போட்டுக் கழுவித் துடைச்சு வையுங்கோ." தொண்டை வரை வந்த வார்த்தைகளை வெளியே சிந்த முன் அப்படியே முழுங்கிக் கொண்டேன்.

அன்றைய பொழுது எனக்கு அர்த்தமுள்ளதாய், ஆனந்தமானதாய் இருந்தது. சிட்டுக் குருவியின் சிறகசைப்பு எனக்குள். அடுத்த நாள் விடிய எழும்பி பல்லு மினுக்கும் போது குசினிக்குள் அம்மா ஆட்டுப் பால் தேநீரை ஆத்தும் வாசம் கிணற்றடி வரை வந்து மூக்கைத் தொட்டது.

ஆசையோடு தேநீருக்காய் குசினிக்குள் நுழைந்த போது “பொட்டுக் கிளாசுக்குள்ளைதான் எனக்குத் தேத்தண்ணி வேணும்" என்று தம்பி அடம் பிடித்துக் கொண்டிருந்தான். அம்மா ஒன்றும் பேசாமல் தேநீரை கிளாசுகளுக்குள் ஊற்றிக் கொண்டிருந்தா. அவைகளுக்குள் பொட்டுக் கிளாசைக் காணவில்லை.

அது குசினிக்குப் பின்னால் வெளியில் உள்ள, விறகு வைப்பதற்கென இறக்கப் பட்ட பத்தி மூலைக்குள் பத்திரமாகக் கழுவிக் கவிழ்க்கப் பட்டிருந்தது.

19.11.2002

 

குண்டுமணி மாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது.

ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது.

நான் இப்படித்தான். ஜேர்மனியிலும் ஒவ்வொரு காலையிலும் வேலைக்குப் போகும் போது அந்த ஸ்வெபிஸ்ஹால் நகர ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டும் போது ஏதேதோ நினைவுகள் என்னை ஆக்கிரமிக்க என்னையே மறந்து போய்க் கொண்டிருப்பேன்.

எனது அப்பா ஸ்ரேசன் மாஸ்டராக இருந்ததாலோ என்னவோ ரெயினும், ரெயில்வே ஸ்ரேசனும் என் வாழ்க்கையில் எப்போதும் சுகந்தம் தருபவையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் குடும்பமாக, குதூகலமாக ரெயினில் பயணித்ததை என்னால் மறக்க முடிவதில்லை. நினைக்கும் போதெல்லாம் குப்பென்று என்னில் சந்தோச வாசனை வீசும்.

ரெயினுக்குள் என்னைத் தவிர எல்லோருமே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஆழ்ந்து தூங்குவதாகத் தெரியவில்லை. பயம்..! பயம்..! கொழும்பு(கோட்டை) ரெயில்வே ஸ்ரேசனில் பார்த்த போதே உணர்ந்து கொண்டேன், யாருமே இயல்பாக இல்லை என்பதை. என்னைப் போல அதீத பயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் யார் கண்களிலும் துறுதுறுப்பு இருக்கவில்லை.

பொட்டு வைக்கவே துணிவில்லாத பாழடைந்த நெற்றிகள். குலுங்கிச் சிரிப்பதை மறந்தே போய் விட்ட குமருகள். உறவுகளைத் தொலைத்து விட்டு சோகங்களை மட்டும் துணையாக்கிக் கொண்ட சொந்தங்கள் என்று அங்கு நின்ற தமிழர்கள் எல்லோருமே முகமிழந்து நின்றார்கள். அவர்கள் எல்லோருமே வவுனியாவை நோக்கித்தான்.

ரெயின் வந்ததும் எல்லோரும் ஏதோ அவசரத்துடன் விரைந்து ஓடி ஏறினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் சிலிப்பரேட்ஸ் கதவுகள் திறக்கும் வரை காத்திருந்து, திறந்ததும் ஏறி, தாம் ஏற்கெனவே பணம் கொடுத்துப் பதிவு செய்து வைத்த இலக்க இருக்கைகளைத் தேடி அமர்ந்தார்கள்.

சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவுகளை வெளியில் இருந்து யாராலும் திறக்க முடியாது என்பதால் கொழும்பிலிருந்து வவுனியா போவதற்கிடையில் காடையர்களால் தமக்கு எந்த வித ஆபத்தும் நேராதென அவர்கள் நம்பினார்கள்.

அந்தக் கொம்பார்ட்மெண்டில் ஏறியவர்களில் அனேகமானோர் வவுனியாவில் ஆசிரியர்களாகவோ அல்லது வேறு நல்ல பதவிகளிலோ இருப்பவர்கள் என்பதை அதற்குள் ஏறிய பின்தான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லோருமே அனேகமான வெள்ளிகளில் கொழும்பு வந்து ஞாயிறு இரவு ரெயினில் வவுனியா திரும்புவது வழக்கமாம்.

எனக்குப் பகல் ரெயினில் வவுனியாவுக்குப் பயணம் செய்யத்தான் விருப்பமாக இருந்தது. ஆனால் நான் எனது தாய்நாட்டில் நடமாட எனக்குப் ´பொலிஸ் ரிப்போர்ட்´ வேண்டுமாம். விமான நிலையத்தில் வைத்தே மாமா சொன்னார்.

“ஏன் அப்பிடி? என்னட்டை ஜேர்மனியப் பாஸ்போர்ட் இருக்குது. ஐசி இருக்குது. இது போதாதோ என்னை அடையாளம் காட்ட..!" சற்று எரிச்சலுடன் கேட்டேன்.

“இதுக்கே எரிச்சல் பட்டால்..! இன்னும் எத்தினை அலங்கோலங்களை எல்லாம் நாங்கள் இங்கை காணுறம். தமிழராய் பிறந்திட்டம். தாங்க வேணுமெண்ட விதி." சலிப்பும் கோபமும் இழைந்தோட மாமா சொன்னார்.

என் எரிச்சல் யாரை என்ன செய்தது? பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியிருக்கவில்லை.

இரண்டு தரமாகப் பொலிஸ் ஸ்ரேசன் வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுக்கையில் ஒரு நாளைத் தொலைத்திருந்தேன். இன்னுமொரு நாளைத் தொலைக்க விரும்பாத நான் இரவு ரெயினிலேயே மாமாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்.

ஓடிக் கொண்டிருக்கும் ரெயினின் யன்னலினூடாக இருளில் ஒளிந்திருக்கும் என் தாயகத்தின் அழகைத் தேடித் தேடிப் பார்த்தேன்.

அடிக்கடி விழித்துக் கொண்ட மாமா கேட்டார் “என்ன சந்தியா, நீ நித்திரையே கொள்ளேல்லையோ? நேற்றிரவும் செக்கிங், அது இதெண்டு நித்திரையே இல்லை. இனி வவுனியா போய்ச் சேர்ந்தால் பன்னிரண்டு வருஷக் கதையளை அம்மா, அப்பாவோடை கதைக்கோணுமெல்லோ..!" நான் மாமாவைப் பார்த்து முறுவலித்தேன்.

பன்னிரண்டு வருடங்களில் மாமாவில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. தளர்ந்து போயிருந்தார். கொழும்பு வாழ்க்கை என்றாலும் கொடுமைகளில் மனம் குமுறிப் போயிருந்தார்.

மாமா மீண்டும் தூங்கிப் போய் விட்டார். சிங்களக் குடில்களும், வீடுகளும் இருளில் ஓடிக் கொண்டிருந்தன. எனக்குக் குருநாகல் ரெயில்வே ஸ்ரேசனையும் பார்த்த பின் கொஞ்ச நஞ்சம் இருந்த பஞ்சியும் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

குருநாகல் ரோட்டில் நாங்கள் அப்பாவுடன் கைகோர்த்து நடந்ததை விட, அடுத்து வரப் போகும் நாகொல்லகமவில், ரெயில்வே குவார்ட்டர்ஸில் நாங்கள் எல்லோரும் விடுமுறையில் வந்து நிற்கும் போது குருநாகல் வரை அப்பா போய் தேங்காய்ப் பூரான் எங்களுக்கு வாங்கி வந்த நாட்கள்தான் அதிகம்.

நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசன் ஒரு சின்ன அடக்கமான ரெயில்வே ஸ்ரேசன். சின்னனென்று புகையிரதப் பெட்டியிலேயே அமைக்கப் பட்ட ரெயில்வே ஸ்ரேசன் அல்ல. அழகாகக் கட்டப்பட்ட பெரிய கட்டடம். அழகான பெரிய பிளாற்ஃபோம்(Platform). Platform இற்கு நேர் எதிரே தண்டவாளங்களுக்கு மற்றைய பக்கத்தில் ஒரு புல்வெளி.

அங்குதான் அப்பா தன் சக வேலையாட்களுடன் வொலிபோல்(Volleyball) விளையாடுவார். அந்த இடத்திலிருந்து இருநூறு மீற்றர் நடந்து போனால், பெரிய தாமரைக்குளம். தாமரையும், அல்லியுமாகப் படர்ந்திருக்க அழகிய சிங்களப் பெண்கள் நீண்ட கூந்தலுடன் முங்கி முங்கி எழுந்து மீன் போல நீந்தும் காட்சியால் குளம் அழகின் உச்சத்தில் நிற்கும்.

அந்தக் குளத்தில்தான் அப்பா எனக்கு நீச்சல் கற்றுத் தந்தார். “நான் மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு..!" தயங்கிய என்னைத் தன் கைகளில் ஏந்தி இரண்டு நாட்களில் பயம் தெளிய வைத்து…

ரெயினின் ஓட்டத்துக்கு எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் எல்லாவற்றையும் விட வேகமாக என் நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன.

நாகொல்லகமவுக்கு அப்பா மாற்றலாகிய இரண்டு கிழமைகளில் எங்களுக்குப் பாடசாலை விடுமுறை. அப்பா பருத்தித்துறைக்கு வந்து எங்களையும் கூட்டிக் கொண்டு எல்லோருமாக நாகொல்லகமவுக்கு வந்து சேர்ந்தோம்.

ரெயினால் இறங்கும் போதே போர்ட்டர் மார்ட்டின் வந்து “மாத்தயா..! மாத்தயா..!" என்று குழைந்து கொண்டு நின்றான். எங்கள் சூட்கேஸ்களில் இரண்டைத் தூக்கிக் கொண்டு எங்களுடன் நடந்தான்.

சண்டிங் ரூமிலிருந்து வெளியே வந்த சில்வாவிடம் பணம் கொடுத்து “நல்ல ரோஸ் பாணும், கோழிக்கூடு(கப்பல்) வாழைப்பழமும் வாங்கி வா" என்று அப்பா சிங்களத்தில் சொன்னார். அண்ணன் எங்கள் வீட்டுக் கோழிக்கூட்டை நினைத்துக் கொண்டு சிரிசிரியென்று சிரித்தான். நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.

சிலிப்பர் கட்டைகளால் எல்லை போடப்பட்ட அந்த வீட்டின் சிலிப்பர் கட்டை கேற்றைத் திறக்கும் போதே பொன்னாங்கண்ணிச் செடிகள் இரண்டு பக்கமும் பரந்திருக்க பாதை மிகவும் சுத்தமாக வீட்டு முகப்பு வரை நீண்டிருப்பது தெரிந்தது. வீட்டின் இடது பக்க முற்றம் வாழைகளால் நிறைந்து வாழைப் பொத்திகளும், வாழைக் குலைகளுமாய் எம்மை வரவேற்றது. வீட்டுக்குள் நுழைந்ததுமே அம்மாவுக்கு அந்த வீடு நன்றாகப் பிடித்து விட்டது என்பது அம்மாவின் பிரகாசித்த முகத்தில் தெரிந்தது.

முன்னுக்குத் தனியாக இருக்கும் அறையில் அப்பாவின் அஸிஸ்டென்ட் ´டிக்சன்´ இருக்கிறார் என அப்பா சொன்னார். டிக்சன் அங்கிளின் அறைக்கு முன்னால் கதவுக்கு மேலே குருவிக்கூடு இருந்தது. குருவிகள் வந்து கீச்சிட்டு, சண்டை பிடித்துச் சென்றன. தம்பி ஆர்வமாய் அவைகளைப் பார்த்தான்.

அப்பா சூட்கேஸ் தூக்கிய மார்ட்டினின் கையில் சில்லறையைத் திணிக்க, அம்மா தேநீர் தயாரிக்க, நானும், அண்ணனும் குசினியின் பின் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தோம்.

பின் முற்றத்தில் பெரிய பெரிய பப்பாளிப் பழங்களுடன் பப்பாளி மரங்களும், மரவெள்ளி மரங்களும் நிறைந்து நின்றன. அங்காலை ஒரு கிணறு. ஆழம் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. ஓடிப்போய் எட்டிப் பார்த்தோம். அண்ணன் ஒரு சின்னக் கல்லை எடுத்துப் போட்டு விட்டு, கல் விழுந்ததால் அழகாகக் கலங்கிய கிணற்று நீரைப் பார்த்து ரசித்தான்.

“அது சரியான ஆழம். இங்காலை வாங்கோ." அறைக்குள் உடை மாற்றுகையில் யன்னலால் எம்மைக் கண்டு விட்ட அப்பா சத்தம் போட்டார்.

அப்போதுதான் கண்டேன் அந்த மரத்தை. அது பெரிய மரமில்லை. செடி போன்ற சிறிய மரம். அதன் கீழே குண்டுமணிகள். ஒரு பக்கம் சிவப்பும், மறுபக்கம் கறுப்புமான குண்டுமணிகள்.

´வாவ்..! குண்டுமணி மரம்.´ வாழ்க்கையில் முதன் முதலாகக் குண்டுமணி மரத்தைக் கண்டதில் என் எட்டு வயது மனம் துள்ளிக் குதிக்க, நான் துள்ளினேன்.

பயித்தங்காய் போல. ஆனால் பயித்தங்காய் போல நீளம் நீளமாய் இல்லாமல் சின்னச் சின்னக் காய்கள் அந்த மரத்தில். ஒரு காயைப் பிய்த்துப் பார்த்தேன். உள்ளே குண்டுமணிகள். ஆனால் காயாமல். அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸின் சந்தோசம் எனக்கு.

அன்று மாலையே நிறையக் குண்டுமணிகள் பிடுங்கிச் சேர்த்து மாலை கோர்க்க ஆரம்பித்தேன். தம்பி பார்த்திபன் குண்டுமணிகள் சேர்க்க எனக்கு உதவி செய்தான்.

குண்டுமணிகள் காயாமல் ஈரத்தன்மையுடன் பச்சையாக இருந்ததால் ஊசி சுலபமாக ஏறியது. மாலை கோர்த்த பின் தும்புத் தடியில் கொழுவி ஓட்டில் காய வைத்தேன். எனக்குப் பெருமையோ பெருமை. ஊரில் பருத்தித்துறையில் நான் ஒருநாளும் குண்டுமணி மரம் பார்க்கவில்லை. விடுமுறை முடிந்து போகும் போது குண்டுமணி மாலையுடன் போய் எனது சினேகிதிகளைப் பொறாமைப் பட வைக்கலாம்.

அன்றிரவு குண்டுமணி மாலைக் கனவுகளுடனேயே தூங்கிப் போனேன். அடுத்த நாள் விடிந்ததும் விடியாததுமாய் ஓடிப் போய் காய வைத்த குண்டுமணி மாலையைப் பார்த்தேன். காணவில்லை. சோகமாகிப் போனேன்.

“குருவி தூக்கிக் கொண்டு போயிருக்கும்." அப்பா சொன்னார்.

குருவிக் கூட்டில் கீச்சிட்ட குருவிகளைக் கலைத்தேன்.

“நங்கி..! நங்கி..!"

குரல் வந்த திசையைப் பார்த்தேன். டிக்சன் அங்கிள் சற்றுக் கோபமாக.. “துரத்தாதை குருவிகளை..! வீட்டிலை உள்ள செல்வமெல்லாம் போயிடும்." சிங்களத்தில் தடுத்தார்.

இப்போது அவரது நீண்ட மூக்கு எனக்கு விகாரமாகத் தெரிந்தது. “கிளி மூக்கு" மனதுக்குள் திட்டிக் கொண்டேன். வெளியில் அசடு வழிந்த படி “சொறி அங்கிள்" என்றேன்.

எனக்குக் கவலை, எப்படி ஒரு குண்டுமணி மாலை கோர்த்துக் காய வைத்து ஊருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று. வீட்டுக்குள்ளே காய வைத்தால் குண்டுமணி சுருங்கிப் போகிறது. வெளியிலே காய வைத்து, பலதடவைகள் கோர்த்த குண்டுமணி மாலைகளைக் குருவிக்குக் கொடுத்து விட்டேன். எப்படித்தான் ஒளித்துக் காய வைத்தாலும் கண்டு பிடித்து விடுகின்றனவே இந்தக் குருவிகள். விடுமுறையும் முடிகிறது. மரத்திலும் முற்றிய குண்டுமணிகள் முடிந்து பிஞ்சுகள்தான் எஞ்சியிருக்கின்றன. தம்பி பார்த்திபனும் என் கவலையில் கொஞ்சம் பங்கு எடுத்துக் கொண்டு தேடித் தேடிக் கொஞ்சம் குண்டுமணிகள் பொறுக்கித் தந்தான்.

இரண்டு நாட்களில் ஊர் திரும்பப் போகிறோம். முற்றத்தில் ஒரு பேப்பர் போட்டு, நான் கோர்த்த மாலையை அதன் மேல் வைத்து வெயிலில் காய விட்டேன். நானும் பக்கத்தில் இருந்து காய்ந்தேன்.

தங்கையை இடுப்பில் தூக்கிய படியே “உச்சி மண்டையிலை வெய்யில் சுடுது. உள்ளை வா!" அம்மா சத்தம் போட்டா. “எள்ளேன் காயுது எண்ணெய்க்காக. எலிப்புழுக்கை ஏன் காயுது கூடக் கிடந்த குற்றத்துக்காக." என்றும் ஏதேதோ புறுபுறுத்தா. ஆனாலும் குண்டுமணிகளை மாலையாக்க நான் படும் பாடு தெரிந்ததாலோ என்னவோ என்னை வலுக் கட்டாயமாக உள்ளே அழைக்கவில்லை.

ஊர் திரும்புகையில் ஒரு குண்டுமணி மாலை என்னிடம் பத்திரமாக இருந்தது. எனக்குப் பெருமையோ பெருமை.

“நானே கோர்த்தேன்." என்று பெருமையாகச் சொல்ல, ஊரில் என் நண்பிகள் நம்பாது வியந்து வியந்து பார்த்தார்கள்.

ரெயின் ஒரு தரம் குலுங்கி ஓடியது.

ஏன் எல்லாவற்றையும் விட்டிட்டு ஓடிப் போனேன். பதினெட்டு வருடங்களாகப் பொத்தி வைத்திருந்த குண்டுமணி மாலையை மட்டுமா..? எல்லாவற்றையும் விட்டிட்டு ஏன் ஜேர்மனிக்கு ஓடிப் போனேன்!

ஏன்..? ஏன்..?

பருத்தித்துறைக் கடலில் இருந்து காலம் நேரம் பாராது எம்மை நோக்கி வந்த ஷெல்களாலா? ஹெலியில் இருந்து நீண்ட துப்பாக்கிகளில் இருந்து எங்கள் வீட்டிலும் சன்னங்கள் சிதறியதாலா? வீடு வீடாகச் சென்ற சிங்கள இராணுவம் ஆண்களைச் சுட்டு வீழ்த்தி, பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக எண்ணி தம் இச்சை தீர்த்துக் கொண்டதாலா? குறுக்கே கட்டியபடி, குளித்த குறையில் துலாக் கயிற்றை இழுத்துத் தண்ணி வாளியைப் பிடித்துக் கொண்டு நேரம் போவதே தெரியாமல் தங்கையுடன் கதையளந்த காலம், எங்கே ஷெல் வந்து எம் தலையில் விழுந்து விடுமோ, எந்தப் பக்கத்தால் ஆமி எங்கள் வீட்டுக்குள் குதிப்பானோ என்ற அச்சத்தில் காக்காக் குளிப்புக் குளிக்கும் காலமாக மாறியதாலா? என் பிள்ளைகளும் இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற சுயநலம் கலந்த பயத்தாலா?

ஏன் ஓடிப் போனேன்?
போய்... என்ன கண்டேன், ஜேர்மனியில்..!

வெறுமை, தனிமை, குளிரின் கொடுமை, பாஷை தெரியாத பரிதவிப்பு, “தொங்கிக் குதிக்கக் கூடத் தடையா இங்கே..?" என்ற வினா முகங்களில் தொக்கி நிற்க மனம் வாடி நின்ற என் பிள்ளைகள். எதையோ பறிகொடுத்து விட்ட வேதனையை முகத்தில் தெரிய விடாமல் மறைக்கப் பிரயத்தனப்படும் எனது கணவர். இவை தவிர வேறு என்ன கண்டேன்! தமிழ் முகங்களையே காண முடியாத ஒரு நகரம்.

பல்லைத் தீட்டி, துலாவில் தண்ணீரை இழுத்து வாய் கொப்பளித்து, முகம் கழுவி வர சுடச்சுட ஆட்டுப்பால் தேநீர் தரும் அம்மா இல்லை. களைத்துப் போய் வந்தால், “அக்கா, நல்லாக் களைச்சுப் போட்டியள் போலை இருக்கு. முதல்ல இதைக் குடியுங்கோ." அன்போடு கோப்பையை நீட்டும் தங்கைமார் இல்லை. “அக்கா, நல்ல கிளிச்சொண்டு மாங்காய் கொண்டு வந்திருக்கிறன். நைஸா, அம்மாக்குத் தெரியாமல் உப்பும், தூளும் கொண்டு வாங்கோ." என்கிற தம்பிமார் இல்லை. என் பிள்ளைகளை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தோட்டத்து மாதுளம் பழத்தைப் பிரித்து, மணிமணியாக எடுத்து பிள்ளைகளின் வாய்க்குள் நசித்து சாறைச் சுவைக்க விட்ட படியே காகமும் வடையும், குரங்கும் அப்பமும்... கதைகள் சொல்லும் அப்பா இல்லை.

இன்னும் எத்தனை இல்லைகள்!

இருந்தும் ஏன் போனேன், ஜேர்மனிக்கு?

..? ...?

போகாமல் இருந்திருந்தாலும் எப்படி அல்லல் பட்டிருப்பேன். 1987-1989 காலப் பகுதியில், தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவம் எங்கள் குடும்பத்தைப் படுத்தின பாட்டை தங்கை பக்கம் பக்கமாக எழுதியிருந்தாள். நின்றிருந்தால் நானும் பட்டிருப்பேன். அவள் அந்தக் கொடுமைகளைக் கூட கதை போல நேர்த்தியாக எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பாள்.

ஒரு கடிதத்தில் “அக்கா, அந்தச் சண்டாளர் ஒவ்வொரு முறை வாற பொழுதும் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு, குடைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போறாங்கள். சாறியள், எவர்சில்வர் சாமான்கள்... எண்டு ஒண்டையும் விடவில்லை” என்றாள்.

“அதையிட்டு ஒண்டும் கவலைப் படாதைங்கோ. உங்களுக்கு ஒண்டும் நடக்காதது தெய்வச் செயலே..!" ஆறுதல் கூறும் கடிதங்களாகவே எனது கடிதங்கள் பறந்தன.

என்ன கஷ்டத்திலும் “அக்கா..!" என்று அன்பைத் தோய்த்து எழுதும் அவளின் கடிதங்கள் நாளுக்கு நாள் சோகத்தால் நிறைந்து கனத்தன.

அப்படி வந்ததில், எந்தப் பேரலையிலும் தொலைந்து போய் விடாமல் நான் இறுகப் பற்றியிருந்த நம்பிக்கை என்னும் நூலை அறுத்து, உலகப் பெருவெளியில் ´நான்´ என்ற என்னை மல்லாக்காக வீழ்த்திப் புரண்டு புலம்ப வைத்த.. “எங்கள் தம்பியை, இந்தியப் படையினர் 500 பேர் ஒன்றாகச் சுற்றி வளைத்து, அவனுடன் நேர் நின்று போராட முடியாத கட்டத்தில் ´பசூக்கா ஷெல்´ லால் அடித்து வீழ்த்தி விட்டார்கள். கடைசி மூச்சு வரை போராடி எங்கள் தம்பி வீரமரணமடைந்து விட்டான்..!” என்ற வாக்கியங்களுடன், வந்த கடிதத்துக்கு முந்தைய கடிதத்தில் வந்த செய்தி...

“அக்கா, இம்முறை அவர்கள்(இந்திய இராணுவத்தினர்) ஐந்து பேர்களாக வந்தார்கள். ஒருவன் என்னை இழுத்து வீழ்த்தி என் நெஞ்சின் மேல் காலை வைத்துக் கொண்டு, தம்பி “மொறிஸ் எங்கே?" என்று கேட்டு உறுமினான். இன்னொருவன் எங்கள் குட்டித் தங்கையின் அழகிய பின்னல்களைப் பிடித்து இழுத்து, நெஞ்சிலே துவக்கின் பின் பக்கத்தால் இடித்து, “எங்கே மொறிஸ்? சொல்லு..!" என்று அதட்டினான். அவள் வலி தாங்காமல், வார்த்தைகள் வராமல் புரண்ட போது கூட அவன் இரக்கப் படவில்லை. மற்றவன் அப்பாச்சிக்கு உலக்கையால் அடித்தான். அப்பாச்சியின் அலறல் நெஞ்சைப் பிளந்தது. நல்ல வேளையாக அம்மா நிற்கவில்லை. அப்பாவிடம் யாழ் சென்றிருந்தா.

மற்றவன், மைத்துனர் ராகுலனைப் பிடித்து முகத்தில் துவக்கால் அடித்து, இரத்தம் பீறிட்டுப் பாய இழுத்துக் கொண்டு போனான். ஐந்தாவது ஆமி வழமை போல் உங்கடை அலுமாரியளைக் குடைஞ்சு எதையெல்லாமோ இழுத்துக் கொண்டு போனான். அந்த நேரம் வெளியிலிருந்து வந்த ஒரு தமிழ் ஆமியால்தான் எங்கள் கற்பும், உயிரும் காப்பாற்றப் பட்டன. எல்லாரும் போய் நாங்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்தான் பார்த்தேன். உங்கடை குண்டுமணிமாலை அறுந்து, ராகுலன் சிந்திய இரத்தத்தில் சிதறிப் போயிருந்ததை..!"

ரெயின் விசுக்கென்று நாகொல்லகம ரெயில்வே ஸ்ரேசனைத் தாண்டிச் சென்றது. அங்கே ரெயின் நிற்கவில்லை. ஆனாலும் நான் அவசரமாகப் பார்த்ததில் அந்த நீலவீடு இப்போ மஞ்சளாகி இருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. வெள்ளை சேர்ட், வெள்ளை ரவுசர், வெள்ளைத் தொப்பி போட்ட ஸ்ரேசன் மாஸ்டர் ரபிளெற்(Tablet) உடன் ஸ்ரேசனில் நிற்பதும் தெரிந்தது. ஆனால் அது என்ரை அப்பா இல்லை.

அப்பா..! உயிரோடு போராடும் அந்தக் கனமான வேளையிலும் என் முகம் பார்க்க ஏங்கி வழி மேல் விழி வைத்து என் வரவுக்காய் வவுனியாவில் காத்திருக்கிறார்.

ரெயின் இப்போ மாகோவை நோக்கித் தன்பாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஏனோ நெஞ்சு கொள்ளாமல் கண்களால் வழிந்தது. மாமா பார்த்து விடக் கூடாதே என்று துடைக்கத் துடைக்க வழிந்தது.

12.12.1997

 

சொல்லிச் சென்றவள்

பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.

விமானத்திலிருந்து குதிக்க முடியுமா? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்!

விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது பிள்ளைகளுடன் ஓடி விடுவோமா? மனசு நிலை கொள்ளாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டே இருந்தது. பேதைத் தனமாக எதையெதை எல்லாமோ எண்ணிக் குழம்பியது.

எப்படிப் போய் யார் முகத்தில் முழிப்பது? பணம் போய் விட்டது. ஜேர்மனி ஆசை மண்ணாகி விட்டது. அவரைக் காணும் களிப்பும் கனவாகி விட்டது.

எல்லோருக்கும் பயணம் சொல்லி ஊரிலிருந்து புறப்பட்டு, அகதிகளாய் வவுனியா கொறவப்பத்தானை ரோட் தேவாலயத்தில் அவதிப் பட்டு, கொழும்பிலும் பயணம் சொல்லி, விமானம் ஏறிய பின் மொஸ்கோவில் விசா சதி செய்யும் என்று யார் கண்டது!

அப்பவே பக்கத்து வீட்டு மகேசக்கா சொன்னவ, “நீ... சரியான துணிச்சல்காரிதான். மூண்டு பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு தனிய பிளேன் ஏறப் போறியே! அதுவும் களவா.. ஏஜென்சிக் காரனுக்கு இவ்வளவு காசைக் கொட்டி... காசைக் கரியாக்கிற வேலையள்தான் இதுகள்!"

வார்த்தைகளை அவ கொட்டிய விதத்திலேயே நான் ஜேர்மனிக்குப் போவதில் அவவுக்கு உள்ள அதிருப்தி அப்பட்டமாகத் தெரிந்தது. நான் எனது கணவரிடம் போவது அவவுக்குப் பிடிக்கவில்லை.

இப்போ நான் திரும்பி வந்து விட்டேன் என்ற உடனே “நான் சொன்னன் கேட்டியோ!" என்று நாடியைத் தோள்ப்பட்டையில் இடிக்கத்தான் போறா. அவவாவது எனக்கு முன்னால் இடிப்பா. எனக்குப் பின்னால் இடிக்கப் போகிறவர்கள் எத்தனை பேர்?

மனசு இந்த அவமானங்களைத் தாங்கும் துணிவின்றி அல்லாடிக் கொண்டிருந்தது.

“அக்கா, எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. செத்திடலாம் போலை இருக்கு." எனக்கு நான்கு சீற் தள்ளியிருந்த சாந்தி அரை குறை அழுகையுடன் சொன்னாள்.

என்னையும், எனது பிள்ளைகளையும் சேர்த்து எல்லாமாக 32 இலங்கையர் மனசுக்குள் அழுத படி இந்த விமானத்துள். ஐந்து நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயர்லங்காவில் ஏறிய போது இப்படி எல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் கூட ஏஜென்சி மகாதேவனுக்கு சுளையாக 75,000 ரூபா கொடுத்தேன். ஜேர்மனிய மார்க் எட்டு ரூபா பெறுமதியாக இருந்த 1986ம் ஆண்டில் இந்த 75,000 ரூபா கொஞ்சக் காசில்லை.

எல்லாம் ஏஜென்சிமாரின் பிழைதானாம். சரியாக விசாரிக்காமல் மூன்று ஏஜென்சிமார் 32 பேரிடமும் காசை மட்டும் சுளையாக வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏற்றி விட்டு, ஹாயாக இருந்து விட்டார்கள். மொஸ்கோ வரை ஒரு பிரச்சனையுமில்லை.

“அக்கா, உங்கடை அவர் ஜேர்மனியிலை எங்கை இருக்கிறார்?" முதலில் வெறுமனே சிரித்த சாந்தி இப்படித்தான் என்னுடன் விமானத்துள் கதைக்கத் தொடங்கினாள். எத்தனை தரம் கடிதம் எழுதி, கடித உறையில் அவரின் விலாசம் எழுதி அஞ்சல் செய்திருப்பேன். ஆனாலும் அந்தப் பெயர் வாயில் நுழையவோ, நினைவில் நிற்கவோ மறுத்தது.

எந்தச் செக்கிங்கிலும் யார் கண்ணிலும் பட்டு விடாதபடி விலாசத்தைச் சுருட்டி எனது சட்டை மடிப்புக்குள் சொருகியிருந்தேன். நான் ஜேர்மனிக்குத்தான் போகிறேன் என்பது யாருக்கும் தெரியக் கூடாது. பெய்ரூட்(Beirut) போவது போலத்தான் எல்லாம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜேர்மனியில் ஃபிராங்போர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் விமானம் தரிக்கும் போது இறங்கி அகதி விண்ணப்பம் கோர வேண்டும்.

விமானத்துள் வந்த ஒவ்வொரு தமிழரும் போக எண்ணிய இடங்கள் சுவிஸ், பாரிஸ், ஹொலண்ட், இத்தாலி... என்று வேறு பட்டிருந்தாலும் எல்லோரும் பெய்ரூட் போவது போலத்தான் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

ஃபிராங்போர்ட்(Frankfurt) இல் எப்படிக் கதைக்க வேண்டுமென வெளிக்கிடுவதற்கு முதல் நாள் இரவே எனது கணவர் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் செக்கிங்கின் போது எனது சிறிய புகைப்பட அல்பத்தில் இருந்த எனது கணவரைப் பார்த்து அவர் இருக்கும் இடம், வளம்... என்று கேள்விகளை அடுக்கினார்கள். வாய் கூசாமல் “பெய்ரூட்" என்று பொய் சொல்லி வைத்தேன்.

“திரும்பி வருவாய் தானே..?"

அதற்கும் “ஓம்" என்று பொய்தான் சொன்னேன்.

விமானம் மேலெழும்பிய போது ஊரை, உறவுகளை விட்டுப் பிரியும் துயரில் மனதின் ஒரு பக்கம் கனமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கனவுகள், கற்பனைகள் என்று இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது.

கோழிக்குருமா சுவைத்தது. மூன்று சின்னப் பிள்ளைகளுடன் பறக்கிறேன் என்பதால் அக்கறையாகக் கவனிக்கப் பட்டேன். பிள்ளைகள் அந்த உணவுகளின் சுவைகளை ருசிக்க முடியாதவர்களாக இருந்ததால் அடிக்கடி பழங்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

நான்கு இருக்கைகள் தள்ளியிருந்த சாந்தி ஆரம்பத்தில் சிரித்து, பின் கொஞ்சமாய்க் கதைக்கத் தொடங்கி… மொஸ்கோவைச் சென்றடைவதற்குள் கிறீம் தந்து “கையுக்குப் பூசுங்கோ அக்கா" என்று சொல்லுமளவுக்கு நட்பாகி விட்டாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கனவுகளையும், ஆசைகளையும் கண்களுக்குள் நிறையவே தேக்கி வைத்திருந்தாள். கணவனை இரண்டு வருடங்களின் பின் சந்திக்கப் போவதில் என்னைப் போலவே ஆவலாய் இருந்தாள்.

மொஸ்கோவில் விமானம் தரையிறங்கும் போது காது விண்ணென்று வலித்தது. பிள்ளைகள் வாந்தி எடுத்தார்கள். எமக்கு அங்கே ரான்ஸ்சிட்(வசயளெவை). நாம், அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட விடுதி ஒன்றில் ஒரு நாள் தங்கி அடுத்த நாள் மதியம் லுஃப்தான்சாவில்(Lufthansa) ஜேர்மனி புறப்படுவதாய்த்தான் ஏற்பாடு.

விமான நிலையத்திலிருந்து எம்மை பேரூந்தில் விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மொஸ்கோ குளிரில் உறைந்து ஒரு வரண்ட பிரதேசம் போல் காட்சி அளித்தது. பேரூந்தில் இருந்து இறங்கி, விடுதியினுள் நுழையும் போது குளிர் அறைந்தது. காது மடல்கள் விறைத்தன. ஆனாலும் அவை என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

மூன்று பிள்ளைகளுடன் உள்ளே சமாளிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு 19வது மாடியில் இரட்டை அறை ஒன்று தந்திருந்தார்கள். ஓரளவு வசதியான அறை. யன்னலால் வெளியில் பார்க்கப் பயமாக இருந்தது.

அதே மாடியில் இன்னும் சில தமிழருக்கு அறைகள் கொடுக்கப் பட்டிருந்தன. மிக அமைதியாக இருந்த மாடி எம்மவரின் வருகையில் சற்று அல்லோல கல்லோலப் பட்டிருப்பது போலத் தெரிந்தது.

எவ்வளவுதான் வசதியாக அந்த அறை இருந்தாலும் ஏதோ வசதிக் குறைவு போலவே மனசு சங்கடப் பட்டது. பிள்ளைகளைக் குளிக்க வைத்து சாப்பிடுவதற்காக வெளியில் கீழே கன்ரீனுக்கு அழைத்துப் போன போதுதான் 32 தமிழர்களையும் ஒன்றாகக் கண்டேன்.

பரிச்சயமில்லாத உணவுகளைச் சாப்பிட முடியாமல் சங்கடப் பட்டோம். இரண்டு மேசை தள்ளியிருந்த நான்கு இளைஞர்களில் ஒருவனான ராஜன் சீனியென நினைத்து தேநீருக்கு உப்பைப் போட்டு விட்டு சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரவுடித் தனமாய்த் தெரிந்தான்.

இரவானதும், சாந்தி பிள்ளைகளுடன் என் அறைக்கு வந்தாள். முகம் தெரியாதவனை மணம் செய்து கொள்ளச் செல்லும் சில பெண் பிள்ளைகளும், வெளிநாடு எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று தெரியாத பதினெட்டு, பத்தொன்பது வயது நிரம்பிய அப்பாவித்தனம் கலையாத ஆண் பிள்ளைகளும் வந்தார்கள்.

எங்கள் கதைகள், ஊரில் விட்டு வந்த உறவுகளைப் பற்றியும், புகலிடத்தில் சந்திக்கப் போகும் உறவுகளைப் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. சிலருக்கு கண்கள் கலங்கி கன்னங்களில் வழிந்தன. நடு இரவில், நினைத்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொருவரும் தத்தமது அறைகளுக்குப் போனார்கள்.

அடுத்த நாள் மதியம் எமக்கான பேரூந்தில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்று ரிக்கெற்றை ஓகே பண்ணுவதற்காக வரிசையில் நின்ற போதுதான் விதி சதி செய்திருப்பதை அறிந்து கொண்டோம். ஒவ்வொருவராக விமானம் ஏறுவதற்கான அனுமதி மறுக்கப் பட்டோம். நானும், சாந்தியும் குழந்தைகளுடன் இருப்பதால் எங்களுக்கு மற்றவர்களை விடக் கூடிய சலுகை வழங்கப் படுமென எதிர்பார்த்து ஏமாந்தோம். ரான்ஸ்சிற் விசா இல்லாமல் லுஃப்தான்சா விமானம் எங்களை ஏற்க மறுத்து விட்டது.

எத்தனையோ விதமாகக் கதைத்துப் பார்த்தோம். கெஞ்சிப் பார்த்தோம். ம்..கும்.. எங்கள் விமானம் எங்களை மொஸ்கோ விமான நிலையத்தில் விட்டு விட்டு தன்பாட்டில் பறந்த போது அழுகை வந்தது. ஆனாலும் கெஞ்சிக் கூத்தாடி வென்று விடமாட்டோமா, என்ற நப்பாசையோடு போராடினோம்.

திரும்ப அந்த விடுதிக்கே அனுப்பப் பட்டோம். விடுதியில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை என்று சொல்லலாம். அவர்களுடன் எங்கள் பிரச்சனைகளைப் பேசுவதே பெரும் பிரச்சனையாக இருந்தது. கன்ரீனில் அவர்கள் சாப்பாடுகளைப் பரிமாறும் போது முதல் நாள் இருந்த மரியாதை குறைந்து போனது போலத் தெரிந்தது.

காவலுக்கு நின்ற பொலீசிடம் போய் எங்கள் நாட்டுப் பிரச்சனைகளைச் சொல்லி எங்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுப் பார்த்தோம். அவர் உரியவர்களோடு ரஷ்ய மொழியில் பேசி விட்டு “அவர்கள் உங்களை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரை
பொறுத்திருங்கள்." என்று சொன்னார். நம்பிக்கையுடன் நல்ல முடிவுக்காய் காத்திருந்தோம்.

அடுத்த நாள் ராஜனையும், இன்னொருவனையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடத் தொடங்கினார்கள். என்ன செய்யலாம், என்பதே எல்லோரது கேள்வியும். இப்போது எல்லோரும் தத்தமது நிலைப்பாடுகளை ஆற்றாமையோடு வெளியே சொல்லத் தொடங்கினார்கள்.

பதினெட்டு வயது நிரம்பிய சேகரை அவனது அம்மா வீட்டை ஈடு வைத்துத்தான் அனுப்பியிருந்தா. இருபது வயது லோகனுக்கு அவனது அக்கா தாலிக்கொடியை அடகு வைத்துப் பணம் கொடுத்திருந்தாள். இப்படியே ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கதை. வீணாய்ப் போன பணத்தையும், தடைப்பட்டு விட்ட பயணத்தையும் நினைத்து நினைத்து எல்லோரும் மிகவும் வேதனைப் பட்டுக் கொண்டே இருந்தோம்.

விமானநிலையத்தில் இருந்து ஒவ்வொரு விமானமும் மேலெழுந்து பறக்கும் போது அந்தச் சத்தம் மனதை என்னவோ செய்தது. யன்னலால் வெளியில் பார்த்த போது மொஸ்கோ குளிர் நிறைந்த பாலைவனம் போலவே காட்சியளித்தது. மெது மெதுவாக மனசுக்குள் வெறுமை சூழத் தொடங்கியது.

ஒவ்வொரு அறையிலிருந்தும் வேறு நாட்டவர்கள் ஃபிளைற்றுக்காக(flight) உடமைகளுடன் வெளியேறும் போது ஆதங்கம் தலை தூக்கியது.

எனது கணவருக்கு எப்படியாவது விடயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதால் ஒரு கடிதம் எழுதி விட்டு அஞ்சல் செய்ய இடம் தேடிய போது ஒரு பின்லாந்து வயோதிபரைச் சந்தித்தேன். அவரிடம் எங்கள் 32பேரது நிலைமைகளையும்

சொன்ன போது, அவர் மிகவும் இரக்கப் பட்டு, கடிதத்தை தானே அஞ்சல் செய்வதாகச் சொல்லி வாங்கிச் சென்றார்.

போகப் போக ராஜனின் கதைகள் ஏடாகூடமாக இருந்தன. அவன் நீர் கொழும்பைச் சேர்ந்தவனாம். அவனது தமிழே ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அவன் ஒரு குரூரமான யுக்தி சொன்னான். “ஒரு குழந்தையை யன்னலால் தூக்கிப் போட்டு விட்டால் எங்களைத் திருப்பி அனுப்ப மாட்டார்கள்." என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு தரம் நெஞ்சு துடிக்க மறந்து பின் படபடத்தது. அவன் குறிப்பிட்டது எனது மூன்று பிள்ளைகளில் ஒருவரையோ அல்லது சாந்தியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரையோதான்.

அதன் பின் எனக்கும் சாந்திக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியும் பஞ்சாய் பறந்து விட்டது. சாந்தி ஒரேயடியாக பிள்ளைகளுடன் எனது அறையில் வந்து இருந்து விட்டாள். “அவன் செய்தாலும் செய்வான் அக்கா. எனக்கு அவனைப் பார்க்கவே பயமாக இருக்கு" என்றாள்.

எங்கு சென்றாலும் நானும், சாந்தியும் பிள்ளைகளுடன் ஒன்றாகவே சென்றோம். விடுதியை விட்டு வெளியில் எங்காவது ஓடி விடுவோமா, என்று மனசு அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது. எப்படி? அது சாத்தியமாகுமா! விடுதியை விட்டு வெளியில் காலடி வைக்கவே எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை.

விடுதியினுள் எங்கு பார்த்தாலும் ரஷ்ய மொழியிலேயே எல்லாம் எழுதப் பட்டிருந்தன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பதே பெரும்பாடாக இருந்தது.

நான்காம் நாள், எம்மைத் திருப்பி அனுப்புவதாக முடிவெடுத்து விட்டதாக அறிவித்தார்கள். இரண்டு பொலீஸ்காரர்கள் ஒவ்வொரு அறையாக வந்து “நாளை விடிய மூன்று மணிக்கு ரெடியாக நில்லுங்கள்." என்று சொல்லிச் சென்றார்கள்.

அந்த இரவு, ராஜனைத் தவிர மற்றைய எல்லோரும் எனது அறைக்குள் வந்து கூடி விட்டார்கள். ராஜன் வந்து பார்த்து விட்டு, ஒரு பிள்ளையின் உயிரைத் தியாகம் பண்ண மறுத்து விட்டேன், அதனால்தான் எல்லாம் என்பது போல என்னில் கோபப் பார்வை ஒன்றை வீசி விட்டுச் சென்றான்.

அன்று எங்களில் யாருமே நித்திரை கொள்ளவில்லை. பெண்பிள்ளைகளில் சிலர் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யாரும் அவரவர்க்குரிய அறைகளில் இல்லை என்பதை எப்படியோ அறிந்து கொண்ட பொலீஸ் கூட்டம் இரண்டரை மணியளவில் என் அறையை வந்து மொய்த்து விட்டது.

உடைகளை மாற்றி வெளிக்கிடும் படி கட்டாயப் படுத்தப் பட்டோம். நாங்களும் முடிந்தவரை மறுத்துப் பார்த்தோம். எதுவும் பயன் அளிக்கவில்லை. திருப்பி அனுப்புவதற்காக எங்களை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார்கள். “போனால் செத்து விடுவோம்" என்றும் சொல்லிப் பார்த்தோம். அவர்கள் மசியவில்லை.

காலை ஏழு மணிக்குப் பறக்கப் போகும் விமானத்துக்காக எம்மை மூன்று மணிக்கே கூட்டிச் சென்று ஒரு குளிரான இடத்தில் நிற்பாட்டி வைத்தார்கள்.

விமானத்துக்கான பேரூந்தின் வரவுக்கான காத்திருப்பு நீண்டதாக, தண்டனை தருவது போல அமைந்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தின் பின் பிள்ளைகள் சுருண்டு விழத் தொடங்கினார்கள். குளிரில் அவர்களின் கால்களில் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. மனசு துடித்தது.

´இனி முடியாது´ என பெரியவர்கள் நாங்களும் ஓய்ந்து போய் நிலத்தில் சாய்ந்த ஒரு கட்டத்தில் பேரூந்து வந்து கட்டாயப் பயணம் ஆரம்பித்தது. ஒவ்வொருவர் மனதிலும் போராட்டம். எல்லோர் வாயிலும் அவர்களை அறியாமல் வந்த வார்த்தைகள் “செத்து விடுவோமா!" என்பதுதான்.

விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது எல்லாம் பச்சையாகத் தெரிந்தது. இறங்கி ஓடி விடுவோமா, என மனசு அந்தரித்தது. எதுவும் என் கையில் இருக்கவில்லை.

கட்டுநாயக்காவில் வந்திறங்கிய போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏமாற்றம். எதிர் கொள்ளப் போகும் உறவினர்களிடம் எப்படி முகம் கொடுப்பது என்ற மனப் போராட்டம்.

வெள்ளவத்தையில் இருக்கும் மாமாவைத் தொலைபேசியில் அழைத்து விடயத்தைச் சொல்லி விட்டு ரக்சியில் ஏறினேன்.

சாந்தி கலங்கிய கண்களுடன் ஓடி வந்து என் கைகளை அழுத்திக் கொண்டு “அக்கா, நான் எப்பிடியக்கா ஊருக்குப் போறது? செத்திடலாம் போலை இருக்கக்கா!" என்று சொல்லி விட்டு இன்னொரு ரக்சியில் பிள்ளைகளுடன் ஏறினாள்.

அவளுக்கு கொழும்பில் யாரும் இல்லையாம். லொட்ஜ் இல் தங்கி விட்டு விடிய யாழ் புறப்படுகிறாளாம்.

மாமா வீட்டில் இரவுச்சாப்பாடு இடியப்பமும், உருளைக்கிழங்குக் கறியும். எதுவும் ருசிக்கவில்லை.

விடயமறிந்து ஜேர்மனியிலிருந்து கணவர் தொலைபேசியில் அழைத்து “அவசரப்பட்டு ஊருக்குப் போக வேண்டாம். வேறை ஏதாவது வழி இருக்கோ எண்டு பார்ப்பம்." என்று சொன்னது சற்று ஆறுதலாக இருந்தது.

அடுத்தநாள் மதியம் இன்னொரு ஏஜென்சியிடம் போவதற்கு நானும் மாமாவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம், ´யாழ்
நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகோவுக்கும், அனுராதபுரத்துக்கும் இடையில் பயணிகளுடன் சேர்த்து எரிக்கப் பட்டு விட்டது´ என்ற செய்தி வந்தது.

அவசரமாய் சாந்தி இருந்த லொட்ஜ்க்குத் தொலைபேசி அழைப்பை மேற் கொண்டேன். “அவள் அறையைக் கான்சல் பண்ணிக் கொண்டு காலை பஸ்சில் புறப்பட்டு விட்டாள்" என்றார்கள்.

29.11.2002

 

நாகரிகம்

“என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?"

“ஓம், நான் போடுறேல்லை."

“என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே!"

அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக் கொண்டாள்

நான் உடுத்திய ஜோர்ஜெட் சேலை கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைப் போல சருகைக் கரை போட்ட சேலையுடன்தான் அங்கு எல்லாப் பெண்களும் வருவார்களாம். கழுத்தோடு ஒட்டியபடி கல்லுப் பதித்த அட்டியலும் அணிந்திருந்தாள்.

நான் மேகவண்ண நீல ஜோர்ஜெட் சேலை உடுத்தி, ஒரு தும்புச் சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டிருந்தேன்.

இது அவளுக்குப் பெரிய அவமானமாம். என்னைத் தனது சொந்தம் என்று சொல்லவே வெட்கமாம். அதுதான் இந்தத் தொணதொணப்பு. பிறந்தநாள் கொண்டாடும் வீட்டுக்குள் நுழையும் வரை அவளின் தொணதொணப்பு ஓயவில்லை. ஏன்தான் இவளைச் சந்திக்க என்று ஜேர்மனியிலிருந்து லண்டன் வந்தேனோ, என்றிருந்தது.

பிறந்தநாள் கொண்டாடும் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருந்தார்கள். தாலி சேலைக்குள் சாடையாக மறைந்தாலும் எடுத்தெடுத்து வெளியே விடுவதும், தாலிச் சரட்டைப் பிசைவதுமாய் சில பெண்களும், பஞ்சாபிகளுடன் இன்னும் சில பெண்களும் ஒரு புறம் இருக்க, ஆண்கள் அடிக்கடி பல்கணியில் போய்ப் புகைப்பதுவும், பெரிய பெரிய போத்தல்களிலிருந்து வார்த்து வார்த்துக் குடிப்பதுமாய் இருந்தார்கள்.

அவள் சற்று சங்கடத்துடன் “இவ ஜேர்மனியிலையிருந்து வந்திருக்கிறா" என என்னை மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள். அங்குள்ள மற்றவர்களும் நகைகளையும், சேலையையும் வைத்துத்தான் என்னை அளந்தார்களோ தெரியாது. எனக்கு அது பற்றிக் கவலையில்லை. அவள்தான் இதை மறந்து போகாதவளாய் “பஞ்சப் பிரதேசத்திலை இருந்து வந்த ஆள் மாதிரி வந்திருக்கிறீர்." என்று எனது காதுக்குள் முணுமுணுத்தாள்.

பிறந்தநாள் பிள்ளையை மட்டும் காணவில்லை. ´உள்ளை எங்கையோ விளையாடுதாம். வந்திடுமாம்.´ இதனிடையே கோழிக்கால்கள், கட்லட்டுகள் என்று பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பெண் ஒரு தட்டில் ஏதோ குடிக்கக் கொண்டு வந்தாள்.

“ம்... வைன் போலை இருக்கு." என்னை அறியாமலேயே முகத்தைச் சுளித்து விட்டேன்.

“ஓம் வைன்தான். இது பொம்பிளையளுக்கு." சொன்ன படி அந்தப் பெண் என்னிடம் வைன் கிளாஸை நீட்டினாள்.

“சீ.. எனக்கு வேண்டாம். நான் உதுகள் குடிக்கிறேல்லை."

அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கொஞ்சம் அவமானப் பட்டது போன்றதான பின் வாங்கல்.

நிலைமை புரிந்தது. அவளைப் சங்கடப் படுத்தி விட்டேனோ!

“சொறி. குறை நினைக்காதைங்கோ. எனக்கு ஒறேஞ்யூஸ் இருந்தால் தாங்கோ. நான் அற்ககோல் குடிக்கிறேல்லை." சமாளித்தேன்.

“இஞ்சை லண்டனிலை இது கட்டாயம் குடிக்கோணும். இல்லாட்டி மரியாதையில்லை. உம்மைச் சரியான பட்டிக்காடு எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்." அவள் நியமான எரிச்சலுடன் என்னைக் கடிந்து கொண்டாள்.

ஓ.. வைன் குடிக்காத பெண்கள் பட்டிக்காடுகளோ..? இது லண்டன் நாகரிகமோ..? நினைத்தபடி நான் யூஸைக் குடிக்கத் தொடங்கினேன்.

12..3.2003

 

 

கணேஸ்மாமா

பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. “அப்பாச்சி.., இது அண்டங்காகமோ.., அரிசிக்காகமோ..?" தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன்.

பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு அதை அவசரமாக எடுத்து எறிந்த படியே.. “சொல்லேலுதில்லை மேனை, பார்த்தால் அரிசிக்காகம் போலை இருக்கு. ஆனால் தொண்டையை விரிச்சுக் கத்துறதைப் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரி இருக்கு" என்றா.

எனக்கு ஆசை. அது அரிசிக்காகமாக இருக்கோணும். ஜேர்மனியில் இருந்து என் கணவரின் கடிதம் வரோணும் என்பதுதான். அதே நேரம் அது அண்டங்காகமாக இருந்து அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாதென்ற அங்கலாய்ப்பும் என்னுள் இருந்தது.

நேற்றும் இப்படித்தான் காகம் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அப்பாச்சி அடித்து வைத்துச் சொல்லி விட்டா. அது அரிசிக்காகம் என்றும், யாரோ வரப் போகிறார்கள் என்றும்.

அப்பாச்சி சொன்னது போலவே நேற்று கணேஸ்மாமா வந்தார். கணேஸ்மாமா எனக்கொன்றும் உறவு முறை மாமா இல்லை. ஊரே அவரைக் கூப்பிடுவது கணேஸ்மாமா என்றுதான். அவருக்கும் எங்களுக்கும் நட்பு வந்த கதையே சுவையானது.

வீட்டில் அவரது மனைவி எப்படித்தான் சுவை வகையாகச் சமைத்துப் போட்டாலும் பருத்தித்துறைத் தோசையைச் சுவைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லையாம். பருத்தித்துறைத் தோசைக்காகவே பொலிகண்டியிலிருந்து சைக்கிளை உழக்கிக் கொண்டு தினமும் பருத்தித்துறை ரவுண் வரை வந்து விடுவாராம்.

என் கணவரும் பருத்தித்துறைத் தோசைக்கு அடிமைதான். பல தடவைகள் நான் சமைத்து வைத்து விட்டுக் காத்திருக்க தோசை சாப்பிட்டு விட்டு வந்து என் கோபத்தைக் கிளறியிருக்கிறார்.

தோசை சுவைத்தவர்களுக்கு இடையிலான பேச்சும் சுவைத்ததோ என்னவோ! ஓடக்கரைத் தோசைக்கும், லாலாக்கடைக் கொத்துரொட்டிக்கும் கூட்டாகவே போகுமளவுக்கு இருவரும் நண்பர்களாகி விட்டார்கள்.

நட்பு வீடு வரை வந்த போதுதான் தேநீர் கிளாசுடன் கணேஸ்மாமாவை முதன்முதலாகச் சந்தித்தேன். படங்களில் வரும் வில்லன் போல் ஒரு மல்லன் தோற்றம். பேச நா எழவில்லை. சிரிப்புக் கூட யதார்த்தமாக வரவில்லை. ஒப்புக்குச் சிரித்து விட்டு உள்ளே ஓடி விட்டேன். பின்னர் “நட்புக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா?" என கணவரைக் கடிந்தேன்.

“பொலிகண்டியார் அப்பிடித்தான். அவன் பார்க்கிறதுக்குத்தான் மல்லன். பழகிறதுக்கு நல்லவன்." என்றார் என் கணவர்.

அடுத்த முறை கணேஸ்மாமா வீட்டுக்கு வரும் போது எட்டு எவர்சில்வர் ரம்ளர்களும், ஒரு எவர்சில்வர் றேயும் கொண்டு வந்தார். பொலிகண்டியார் கிளாசில் தேநீர் அருந்துவதில்லையாம். ரம்ளரில்தான் அருந்துவார்களாம்.

நாங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், விரத நாட்களிலுந்தான் சில்வர் பாத்திரங்களைப் பாவிப்போம் என்பதைச் சொல்ல நினைத்தும் சொல்லாது தவிர்த்தேன்.

கால ஓட்டத்தில் உயர்ந்த, பருத்த, முரட்டுத்தனமான அந்த உருவத்துள் ஒளிந்திருக்கும் நல்ல மனதைக் கண்டு நானும் நட்பாகி விட்டேன்.

தேநீருடன் எமது வீட்டுக்குள் ஆரம்பித்த அந்த நட்பு குடும்ப நட்பானது. கணேஸ்மாமாவின் மனைவி ராணிஅக்காவும் குழந்தை மனம் கொண்டவதான். ´எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட பெரிய கொண்டையும், பளபளக்கும் முகமும், பெரிய குங்குமப் பொட்டும், கழுத்து நிறைய நகைகளும் பொலிகண்டியாருக்;கே உரிய தனிக்களையாம்´ அம்மா சொன்னா.

ராணிஅக்கா முதன் முதல் எங்கள் வீட்டுக்கு வந்த போது கணேஸ்மாமாவுடன் ஒட்டி ஒட்டிக் கொண்டே நடந்தபடி கள்ளமற்ற சிரிப்புடன் என்னைக் கவர்ந்தா. கையிலுள்ள பெரிய பார்சலை என்னிடம் தந்து “இதுக்குள்ளை புண்ணாக்கு இருக்கு. எல்லாருமாச் சாப்பிடுங்கோ." என்றா.

எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. நாங்கள் பிண்ணாக்கை ஆட்டுக்குத்தான் வைப்போம். இவ எங்களைச் சாப்பிடச் சொல்கிறா. யோசனையுடன் அம்மாவிடம் கொண்டு போய்க் கொடுத்து “அம்மா, புண்ணாக்காம், கொண்டு வந்திருக்கினம், சாப்பிடட்டாம்." முகத்தையும், வாயையும் சுளித்த படியேதான் சொன்னேன்.

அம்மா சிரித்த படியே “பொலிகண்டியார் எள்ளுப்பாவைத்தான் புண்ணாக்கு எண்டு சொல்லுறவை. சாப்பிட்டுப் பார். அவையளின்ரை எள்ளுப்பாகுவுக்குத் தனி ருசி." என்றா.

பொலிகண்டியும், பருத்தித்துறையிலுள்ள எனது ஆத்தியடியும் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கின்றன. ஆனால் பேச்சு வழக்கிலும், பழக்க வழக்கங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் எப்படி வந்தன? மனசு வினாவியது.

அன்று அவர்களுக்கு எங்கள் வீட்டில் மதியச் சாப்பாடு. பின் றப்பில் இரண்;டு சேவல்களைக் கட்டித் தூக்கி, துடிப்பதை பெண்கள் யாரும் பார்க்காமல்... மணக்க மணக்க கோழி இறைச்சி. உறைப்பில் மூக்கு நுனி வேர்க்க ஒரு பிடி பிடித்தோம். மச்சம் என்பதால் எங்கள் வழக்கப்படி சில்வர் பாத்திரங்களைத் தவிர்த்து பீங்கான் கோப்பைகளில் சாப்பிட்டு, கிளாசில் தண்ணீர் குடித்தோம்.

அடுத்த முறை கணேஸ்மாமா எங்கள் வீட்டுக்கு வந்த போது, எங்களிடம் சில்வர் கோப்பைகளே இல்லையென நினைத்து பத்து சில்வர் கோப்பைகளும், ஒரு சில்வர் செம்பும் கொண்டு வந்து தந்தார்.

“பொலிகண்டியார் சொம்பிiலைதான் தண்ணி குடிப்பினம்." அப்பாச்சி சொன்னா. பொலிகண்டியாருடனான இந்த அனுபவம் எனக்கு சற்று வித்தியாசமாக ஆனால் சந்தோசமாக இருந்தது.

இந்த சந்தோசங்களில் யார் கண் பட்டதோ? நாமுண்டு, நம் சொந்தமுண்டு, கூடிக் குதூகலிக்க நட்பு உண்டு என்று சந்தோசித்து வாழ்ந்திருந்த எமக்கும், எம் மண்ணுக்கும் வந்ததே கேடு.

ஆர்ப்பரித்த பருத்தித்துறைக் கடலின் அலை ஓசை, சீறி வந்த பீரங்கிக் குண்டுகளுக்குள் அமிழ்ந்து போகத் தொடங்கியது. நெடிதுயர்ந்த பனை உதிர்த்த பனம்பூவை நுகர்ந்தபடி நாம் நடந்த பனங்கூடல் பாதைகளும், அரசு உதிர்த்த இலைகள் சரசரக்க நாம் நடந்த வீதிகளும் சிங்கள இராணுவங்களின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபடத் தொடங்கின.

கூடி வாழ்ந்த நாமெல்லாம் கல்லெறி பட்ட பறவைக் கூட்டங்களாய் சிதறத் தொடங்கினோம். பயமும், ஓட்டமும் வாழ்வாகிப் போக சிறகிழந்த பறவைகளின் சோகம் எங்கள் சொந்தமாகத் தொடங்கியது.

திக்கம், பொலிகண்டி மக்கள் எல்லோரும் அகதிகளாயினர். ஓடிய கணேஸ்மாமாவும், ராணிஅக்காவும், பிள்ளைகளும் எம் வீட்டில் அடைக்கலமாயினர். அதுவும் எத்தனை காலம். எம் வீடும் இராணுவத்தின் கண்களுக்குள் வீழ்ந்த போது அவர்கள் இடம்மாறி இடம்மாறி ஓடிக் கொண்டிருந்தார்கள். என் கணவரும் தன்னைக் காக்க வழி தெரியாது நாட்டை விட்டே ஓடி விட்டார்.

அதன் பின் கணேஸ்மாமா, ராணிஅக்கா அவர்களுடனான தொடர்பும் எனக்கு இல்லாது போனது. மீண்டும் கணேஸ்மாமா எமது வீட்டுக்கு வந்த போது, கிரனைட் நிறைந்த துணிப்பையை தோளில் கொழுவியிருந்தார். இடுப்பிலே கைக்கிளிப் சொருகியிருந்தார். தான் பெடியளின் படகோட்டியாகி விட்டதாகச் சொன்னார். ராணி அக்காவும், பிள்ளைகளும் “ஏதோ வாழ்கிறார்கள்" என்றார்.

நேற்றும் துணிப்பையுடன்தான் வந்தார். சைக்கிளை கேற் வாசலில் சாத்தும் போது தபால்காரன் என்றுதான் நினைத்தேன். கேற்றைத் திறந்து படிகளில் ஏறி அவர் வரும் போதுதான் கணேஸ்மாமா என்று கண்டேன். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாகப் புன்னகையுடன் வந்தார்.

“வாங்கோ கணேஸ்மாமா" வரவேற்றேன்.

“தங்கைச்சி, எப்பிடி இருக்கிறீங்கள்?" என்று தொடங்கியவர், நிறையக் கதைத்தார்.

இடையிலே “புட்டு இருக்கு. சாப்பிடுங்கோவன்." என்றேன்.

“வேண்டாம் தங்கைச்சி. இண்டைக்கு இரவு நான் அங்காலை போறன். அதுதான் சொல்லிப் போட்டுப் போவமெண்டு வந்தனான்." என்றார்.

அதற்கு அர்த்தம், பெடியளை பயிற்சிக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ படகில் இந்தியாவுக்குக் கூட்டிப் போகப் போகிறார் என்பதுதான்.

“திரும்பி வந்து ராணி, பிள்ளையளையும் அங்காலை கொண்டு போய் விடப் போறன்" என்றார். எனக்கு ஏனோ கவலையாக இருந்தது. குசினிக்கு ஓடிப்போய் அம்மாவிடம் விடயத்தைச் சொன்னேன். அவர் பசியோடு இருக்கிறார் போலவே எனக்குத் தெரிந்தது.

வளவுத் தென்னையில் பிடுங்கிய இளவல் தேங்காய் போட்டு அவித்த பிட்டும், முதல் நாள் பொன்னாத்தையிடம் வாங்கிய தம்பசிட்டித் தோட்டத்துக் கத்தரிக்காயில் வைத்த பிரட்டல் கறியும் காலையில் நாம் சாப்பிட்டது போக எஞ்சி இருந்தன. அம்மா அவசரமாய் முட்டையும் பொரித்துத் தரக் கொடுத்தேன். சுவைத்துச் சாப்பிட்டார்.

தான் காலையில் வேளைக்கே வெளிக்கிட்டு விட்டதால் ஒன்றுமே இன்னும் சாப்பிடவில்லை என்று சாப்பிடும் போதுதான் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் நினைவாக அவர் தந்த செம்பிலேயே தண்ணீரைக் கொடுத்தேன். விறாந்தையில் நின்ற படியே கையை நீட்டி பிச்சிமரப் பாத்திக்குள் செம்பைச் சரித்து கையைக் கழுவியவர், நிமிர்ந்து அண்ணாந்து செம்புத் தண்ணீரைக் குடிக்கத் தொடங்கினார். ஒரு மிடறு தண்ணீர்தான் உள்ளே போயிருக்கும்.

கேற் திறந்த சத்தத்தைத் தொடர்ந்து தம்பி அவசரமாக ஓடி வந்தான். பாடசாலை போனவன் அரைகுறையில் பதட்டமாக ஓடி வருவது இப்போது சில நாட்களாகவே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கணேஸ்மாமாவைக் கண்ட அவன் முகத்தில் மெல்லிய சந்தோசம் மலர்ந்து உடனே கலக்கமாகி “கணேஸ்மாமா, சந்தியெல்லாம் ஆமி. வீடு வீடாய்ப் பூந்து பயங்கர செக்கிங் நடக்குது. எங்களையும் ஸ்கூலிலை இருந்து அனுப்பீட்டினம்." என்றான்.

எனக்கு நெஞ்சு திக்கென்றது. கணேஸ்மாமா அப்படியே செம்பை என் கையில் தொப்பென்று போட்டு விட்டு ஓடினார். எங்கள் கேற்றிலிருந்து ஐந்து யார் தூரத்தில் சந்தி. கேற்றோடு ஒட்டியபடி இறங்கி, சைக்கிளில் ஏறி மறுபக்கத்தில் பறந்தார்.

எனக்கு வேர்த்துக் கொட்டியது. அம்மா, அப்பாச்சி எல்லோரும் பதறிப்போய் செய்வதறியாது நின்றார்கள். இதற்குள் கச்சேரியில் வேலை செய்யும் தங்கையும் திரும்பி விட எங்கள் கவலை சென்றிக்கு நிற்கும் மற்றத் தம்பியிடமும் திரும்பியது.

அன்றைய பொழுது எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. சென்றிக்கு நின்ற தம்பி மொறிஸ் பற்றியோ, கணேஸ்மாமா பற்றியோ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இரவெல்லாம் பருத்தித்துறைக் கடலில் ஒரே சத்தம். நித்திரையைத் தொலைத்த நிம்மதியற்ற நடு இரவில் கிரனைட் பையுடன் தம்பி வந்து போனான். தம்பிக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் நடு இரவுக்குப் பின் தூங்கி… எழுந்து விட்டேன்.

வழமை போல் சூரியன் உதிக்க, எல்லாமே நடந்து கொண்டிருந்தன. காகம் விடாது கத்திக் கொண்டே இருந்தது. கலைத்தும் பார்த்தேன். கொப்புக்குக் கொப்பு தாவியதே தவிர, பிச்சிப்பூ மரத்தை விட்டுப் போக மனமின்றி கத்திக் கொண்டு நின்றது.

அம்மா சோறும் வடித்து விட்டா. கறிகளும் ஓரளவு முடிந்து விட்டன. தபாற்காரன் இன்னுமா வரவில்லை என்று நான் கேற்றைப் பார்த்த போது யாரோ வருவது தெரிந்தது.

அட தேவியக்கா! கணேஸ்மாமாவின் உறவுக்காரப் பெண். அவர் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான் அவவின் வீடு.

“வாங்கோ தேவியக்கா!" வரவேற்ற போதுதான் பார்த்தேன்.

என்ன கோலம் அது! பொட்டு இல்லாமல், நகைகள் இல்லாமல், எண்ணெய் பூசி வாரி இழுத்துப் போட்ட கொண்டை இல்லாமல், பறந்த தலையுடன் மூளியாகத் தேவி அக்கா.

“தேவிஅக்கா, என்ன..! என்ன இது கோலம்?" வினாவினேன்.

“எல்லாம் முடிஞ்சிட்டுது தங்கைச்சி" என்றா, பதறியபடி. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

தேவிஅக்கா திடீரென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறியழத் தொடங்கி விட்டா.

அழுகையினூடே... “கணேஸ்மாமா நேற்றுப் போன படகு, சிறீலங்கா கடற்படையின்ரை தாக்குதலுக்கு உள்ளாகி, கணேஸ்மாமாவும் அவரோடை போன பதினேழு பேரும் வீரச்சாவு அடைஞ்சிட்டினம்" என்றா.

உடலங்கள் கரையில் ஒதுங்கியதைச் சொல்லும் போது அவவிடம் இருந்து அழுகை பீறிட்டது.

காலம் - 14.4.1985

12.4.2000

 

வேசங்கள்

காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

எப்படி அவனால் முடிந்தது! எப்படித் துணிந்து சொன்னான்? காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருட தாம்பத்திய வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி, அவர்களின் செல்ல மகள்.

நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்! நடித்தானா..? காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

“உமா, உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான்.
அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதிய படி “சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.

“நீர், அழக் கூடாது."

“சும்மா சொல்லுங்கோ."

சில கணங்கள் நிதானித்து “உமா, நான் இண்டையிலையிருந்து முன்சனில் தங்கப் போறன்."

“ஏன்..?" மிகவும் திடுக்கிட்டவளாய்.

“ஒவ்வொரு நாளும் பயணம் செய்யிறது சரியான கஸ்டமாயிருக்கு."

“இவ்வளவு நாளும் செய்தனிங்கள்தானே! இப்ப மட்டும் என்ன வந்தது?"

“பார்த்தீரே! இப்பவே ரென்சன் ஆகிறீர். நான் இன்னும் விசயத்துக்கே வரேல்லை."

“......." சந்துருவின் புதிருக்கு மௌனமாக தனக்குள் விடை தேடினாள்.

“உமா, உமக்குத் தெரியுந்தானே என்னோடை அந்தச் சக்கி எண்ட செக்கொஸ்லாவியப் பொம்பிளை வேலை செய்யிறது?"

“ஓமோம். புருசன்காரன் விட்டிட்டுப் போயிட்டான் எண்டு சொன்னனிங்கள். அவள்தானே, பாவம்... அவளின்ரை மகன் எப்பிடி இருக்கிறான்?"

“அது வந்து... உமா, அவளின்ரை மகன் சரியான சுகமில்லாமல் இருக்கிறான். அவளுக்கு என்ரை உதவி தேவைப் படுது. அதுதான் என்னை வந்து..."

“வந்து..."

“தன்னோடை இருக்கச் சொல்லிக் கேட்கிறாள்."
“அதுக்கு..!"

“அதுதான் அவளோடை போய் கொஞ்ச நாளைக்கு இருப்பமெண்டு தீர்மானிச்சிருக்கிறன்."

விக்கித்துப் போன உமா விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து விட்டாள். ஒரு கணம் துடிக்க மறந்த அவளது இதயம் மீண்டும் அவசரமாகத் துடிக்கத் தொடங்கியது. வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

“யோசிக்காதையும். நான் உம்மட்டையும் வந்து வந்து போவன். உமக்கென்ன குறை இஞ்சை இருக்கு. ஊரிலை போலை அடுப்பை ஊதி... உடுப்பைக் கல்லிலை அடிச்சுத் தோய்ச்சு... இப்பிடி ஒரு கஸ்டமும் இல்லைத்தானே... எல்லா வசதியளும் இருக்குத்தானே."

“இதெல்லாம் நீங்களாகுமோ? நீங்கள் அவளை விரும்பிறிங்களோ?"

“இல்லை... இல்லை... அவள்தான் என்னை உயிருக்குயிராய் விரும்புறாள். நான் இல்லையெண்டால் அவளுக்கு ஒரு துணையும் இல்லை."

“நானும் அம்மா, அப்பா, சகோதரங்களையெல்லாம் விட்டிட்டு வந்திருக்கிறன். இந்தப் பெரிய ஜேர்மனியிலை உங்களையும், நிலாவினியையும் விட்டால் எனக்கும் வேறை ஆர் இருக்கினம்?" இப்போது அவளிடம் அழுகை பொங்கியது.

“ஏன் இப்ப அழூறீர்? நான் உம்மட்டையும் வருவன்தானே. நீர் படிச்ச பொம்பிளை, இதை அனுசரிச்சுப் போகோணும். ஊருலகத்திலை நடக்காத விசயமே இது!"

“நோ... என்னாலை ஒரு நாளும் இதுக்கு ஒப்புக் கொள்ளேலாது."

உமா கோபமாக முன்னேறி மூர்க்கத்தனமாக அவனது மார்பில் குத்தினாள். நுள்ளினாள். முகமெல்லாம் பிறாண்டினாள். அவன் அவளைத் தள்ளி விட்டு “பொம்பிளை மாதிரி நடந்து
கொள்ளும்." என்று கத்தினான்.

அவனது இடது கன்னத்தில் இவளது நகம் பட்டு இரத்தம் துளிர்த்து நின்றது. வலியோடு அதைத் தடவியவன் கையில் பட்ட இரத்தத்தை அவளிடம் காட்டி, “இங்கை பாரும் எனக்கு இரத்தக் காயம் வர்ற அளவுக்கு பிறாண்டியிருக்கிறீர். இதுக்கு மேலை என்னைத் தொட்டீரோ… நடக்கிறது வேறை. நானும் சும்மா இருக்க மாட்டன். என்ரை முடிவு முடிவாகீட்டுது. ஒத்துப் போனீர் எண்டால் உமக்கும் நல்லது. எனக்கும் நல்லது. நிலாவினிக்கும் நல்லது. இல்லாட்டி நீர்தான் கஸ்டப் படுவீர். நிலாவினிக்கு இதொண்டும் தெரியத் தேவையில்லை."

உமாவுக்கு மலைப்பாக இருந்தது. தனது மூர்க்கத் தனமான செய்கையில் எரிச்சலாகவும், வெட்கமாகவும் இருந்தது. என்னவெல்லாம் இவன் சொல்கிறான் என்று கலக்கமாகவும் இருந்தது. சக்கியைப் பற்றி சந்துரு ஏற்கெனவே சொல்லியிருக்கிறான். அவளுக்காக உமாவும் பரிதாபப் பட்டிருக்கிறாள். அதுக்காக சந்துருவே போய் சக்கிக்கு வாழ்க்கை கொடுப்பதென்பது எந்த வகையில் நியாயமானது? இவன் சொல்வதெல்லாம் உண்மைதானா அல்லது தன்னைச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறானா, என்று குழம்பினாள்.

நிலாவினியும் வீட்டில் இல்லை. பாடசாலையோடு ´ரூர்´ என்று போய் விட்டாள். திரும்பி வர இன்னும் எட்டு நாட்களாகும்.

“நீங்கள், சும்மா பகிடிக்குத்தானே சொல்லுறிங்கள்..?" ஒரு நப்பாசையோடு கேட்டாள்.

“இல்லை உமா. சீரியஸாத்தான் சொல்லுறன். எனக்கு உம்மையும் விருப்பந்தான். ஆனால் இப்ப சக்கிக்கு என்ரை உதவி தேவை."

இயலாமை என்ற ஒன்று இப்போ உமாவை ஆக்கிரமித்தது. “ஓ..." வென்று குழறினாள்.

“ஏனப்பா, இப்பிடிக் குழறுறீர்? பக்கத்து வீட்டுச் சனத்துக்கெல்லாம் கேட்கப் போகுது. என்ன நினைக்குங்குள். ஊரெண்டு நினைச்சீரே. ஏதோ மூண்டாந்தரக் குடும்பங்கள் மாதிரிக் கத்திறீர்!"

“ஆர் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நீங்கள் செய்யத் துணிஞ்சது மட்டும் முதலாந்தரமா இருக்கோ?"

வார்த்தைகள் மிகச் சூடாக, அநாகரிகமாக நீண்டு... ஒன்றோடொன்று மோதி.. உமாவுக்கு, சந்துரு முரட்டுத்தனமாக அடிக்க, உமா தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி, இழுத்துப் பறித்து கதவில் இருந்த திறப்பையும் இழுத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினாள்.

கொஞ்ச நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள், காரையும் எடுத்துக் கொண்டு இலக்குத் தெரியாமல் ஓடி.. சிவப்பு லைற்றில் தரித்து நின்றாள். சிக்னல் பச்சையாக, பின்னிருந்த காரோட்டி கோன் அடித்து “தூங்குகிறாயா?" என்று சைகை காட்டிச் சினக்க, சிந்தனையிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, மீண்டும் பலம் கொண்ட மட்டும் அக்சிலேட்டரை அழுத்தி, சீறிக் கொண்டு பறந்தாள்.

ஒரு பாடசாலையின் முன் ஒரு குழந்தை வீதியைக் கடப்பதைக் கடைசி செக்கனில் கண்டு அவசரமாக பிறேக்கை அழுத்தினாள். ´கடவுளே..! நான் என்ன செய்கிறேன். அந்தப் பிள்ளை அடிபட்டிருந்தால்..!´ முனகினாள். அப்படியே போனவள் வழியில் உள்ள மைக்கல் தேவாலயத்தின் அருகில், காரை நிறுத்தி விட்டு தேவாலயத்துக்கான படிகளில் ஏறி ஓரிடத்தில் அமர்ந்தாள். அடக்க முடியாமல் அழுதாள். திடீரென்று நிர்க்கதியாகப் போய் விட்டது போல உணர்ந்தாள். பைத்தியம் பிடித்தவள் போல அரற்றினாள். யோசிக்க முடியாமல் மூளைப்பகுதி நொந்தது. கண்களின் முன்னே மெல்லிய புகைமண்டலம் போல எதுவோ மறைத்தது. எதையும் சரியாகச் சிந்திக்க முடியாமல் திண்டாடினாள்.

சந்துருவுக்கும், அவளுக்கும் இடையில் அடிக்கடி சின்னச் சின்னச் சண்டைகள், சச்சரவுகள் என்று வரத் தவறுவதில்லைத்தான். சண்டைகள், கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களா? சில சமயங்களில் சந்துருவின் மேல் சந்தேகங்களும் வந்து பொங்கியிருக்கிறாள்தான். அவையும் சந்துரு கூறும் பொய்ச் சமாதானங்களில் பொங்கிய வேகத்தில் அடங்கியும் போயிருக்கின்றன. ஆனால் இந்தளவுக்கு தன்னை அப்படியே விட்டு விட்டுப் போய் இன்னொருத்தியுடன் வாழத் துணிந்த அவன் துணிவும், அதை மிகச் சாதாரண விடயம் போல அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவன் வேண்டுகோளும், அவளை நிலைகுலைத்து விட்டன. தன்னவன் இன்னொருத்திக்குச் சொந்தம் என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால்தான் நிலைகுலையாமல் இருக்க முடியும்.

தேவாலயம் உயர்ந்து கம்பீரமாக நின்றது. உல்லாசப் பிரயாணிகள் உள்ளே சென்று அதன் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள். சிலர் உச்சியில் நின்று நகரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் ஒரு விபரீத ஆசை வந்தது. தானும் போய் ஏறினாள். அதிக எண்ணிக்கையான வளைந்து வளைந்து செல்லும் படிகளில், ஒவ்வொன்றாக ஏறும் போது மனச்சோர்வுடன் உடற் சோர்வும் சேர்ந்து கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. ஆனாலும் ஏறி விட்டாள். மூச்சு வாங்கியது. மேலே நின்று பார்த்தாள். எதுவும் தெளிவில்லாமல் ஏதோ ஒரு மெல்லிய புகைமண்டலம் முன்னே தெரிந்தது. பச்சை மரங்கள் கூட புகை போர்த்தி வெண்மை பேர்ந்த பச்சைகளாகத் தெரிந்தன. யாரும் எதிர் பார்க்காத ஒரு கணத்தில் எம்பிக் குதித்தாள்.

அங்கு நின்ற எல்லோருமே அதிர்ச்சியில் அவலக்குரல் எழுப்ப, அவள் இரத்தமும், சதையுமாய் தேவாலயத்தின் படிகளில் சிதறினாள். ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற அந்த இடத்தை பொலிஸ் வாகனங்களும், அம்புலன்ஸ் வண்டியும் அல்லோல கல்லோலப் படுத்தின. சிவப்பும், வெள்ளையும் கலந்த தடுப்பு நாடாக்கள் கட்டப்பட்டு அந்த வீதியிலான போக்குவரத்துக்களும், மக்கள் நடமாட்டமும் தடைப்படுத்தப் பட்டது.

இது மூன்றாவது சாவு. முதலில் 14வயது நிரம்பிய ஒரு ஜேர்மனிய மாணவி. அடுத்து ஒரு இந்தியத் தமிழ்ப்பெண். இப்போ இலங்கைத் தமிழ்ப்பெண். ´தேவாலய உச்சிக்கு இனி யாருமே ஏற முடியாது´ என்ற அறிவித்தலோடு தேவாலயத்தினுள்ளே இருந்த உச்சிக்கு ஏறும் படிகளை மறித்து கேற் போட்டு, பெரிய மாங்காய்ப்பூட்டு போடப் பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து... சாக்கில் கட்டப் பட்ட உமாவின் உடல் என்று சொல்லப் பட்ட சதைப்பிண்டம் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. சந்துருவைத் துக்கம் விசாரிக்க உறவினர்கள் என்ற பெயரில் சிலரும், நண்பர்களும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சந்துரு சோகமாய், தாடியை மழிக்காமல் தேவதாஸ் வேடம் போட்டிருந்தான். யார் வீட்டுக்கு வந்தாலும் ஒரு சோகப் பாட்டுள்ள இசைத்தட்டைச் சுழல விட்டு தன் சோகத்தை இன்னும் பலமாக மற்றவர்களுக்குக் காட்டினான்.

அழுவாரைப் போல இருந்து “அவ பாருங்கோ சரியான நல்லவ. ஆனால் ஜேர்மனியிலை இருக்கிற எல்லாப் பொம்பிளையளுக்கும் உள்ள அதே பிரச்சனைதான் அவவுக்கும். தனிமைதான் எல்லாத்துக்கும் காரணம். தாய் தகப்பன் ஊரிலை. சொந்தம் எண்டு சொல்லிக் கொள்ள ஒருவரும் பக்கத்திலை இல்லை. நானும் வேலையோடை. மகள் நிலாவினி பள்ளிக்கூடம், ரூர் எண்டு திரிவாள். இவ நாள் முழுக்க வீட்டிலை தனியத்தானே. அதுதான் அவவுக்கு சரியான மனஅழுத்தம். எப்பவும் சும்மா இருந்து அழுறதும்..." அலுக்காமல் சலிக்காமல் சொல்லிக் கொண்டே இருந்தான்.

7.3.2005

 

பயணம்

இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர் புகையிரதத்தில் வரும் படியும் கேட்டுக் கொண்டார்.

எப்போதும் இந்தக் காரில்தானே..! அதுவும் அதிவேக வீதியில் அவசரமாய் பயணிப்பது. நீண்ட பொழுதுகளின் பின் புகையிரதத்தில் போக இப்படியொரு வாய்ப்பு என்றதும் உண்மையிலேயே எனக்கு சந்தோசந்தான்.

எனக்குத் தேவையான எல்லாவற்றையும் காருக்குள்ளேயே அடைத்து அனுப்பி விட்டேன். சிறிய கைப்பையுடன் ஒரு கொப்பியும், பேனையுமாக ஏறிய போது புகையிரதத்தினுள் யன்னலோரமாக இருக்கை கிடைத்தது. மனசுக்குள் சந்தோசம் துள்ளியது.

வெயிலின் முறைப்பும் இல்லாமல், குளிரின் குத்தலும் இல்லாமல் காலைச் சிலிர்ப்போடு இயற்கை கண்களை இதமாக வருடியது. காற்று யன்னல் வழி மேனியைத் தழுவியது. இயற்கையை ரசித்த படி மனசு ஏகாந்தத்தில் சுகிக்கத் தொடங்கியது. புகையிரதம் தாலாட்டியது.

வெளி அழகாய்... மரங்கள் எல்லாம் அவசரமாய் நகர்ந்து கொண்டிருந்தன. குருவிகள் கெந்துவதும், ஏதோ நினைத்து விட்டு மீண்டும் பறந்து மரங்களில் குந்துவதுமாய் இருந்தன. கவிஞர் சோலைக்கிளி இதைக் கண்டால் கட்டாயம் ஒரு குருவிக் கவிதை புனைந்திருப்பார். எனக்கும் ஏதேதோ மனசுக்குள் பூத்தன. கவிதையாய் வடிக்க வார்த்தைகள்தான் வர மறுத்தன. ´இனிது இனிது ஏகாந்தம் இனிது´ ஒளவைப் பாட்டியின் வரிகளின் அர்த்தம் புரிந்தது.

திடீரென்று, புரியாத ஏதோ ஒரு பாசையில் யாரோ கதைக்கும் பெரிய சத்தம் கேட்டது. ம்... புகையிரதம் நின்றது கூடத் தெரியாமல்... நான். அதற்கிடையில் அடுத்த தரிப்பு நிலையம் வந்து விட்டது. ஏறுவோரும், இறங்கியோரும் தத்தமது திசைகளில் வெளியில் விரைய.. ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த சில பெண்களும், ஒரு ஆடவனும் தமது உயர்ந்த குரல்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யுமே என்ற எந்த வித பிரக்ஞையுமின்றி அடிக்குரலில் உரத்துப் பேசிய படி நானிருந்த பெட்டியினுள் ஏறினார்கள்.

நான் மீண்டும் யன்னல் வழி பார்வையைச் செலுத்தி இயற்கையுடன் ஐக்கியமாகினேன். மனசுக்குள் இனிமையான கவிதையொன்று பிரசவமாவது போன்றதொரு மகிழ்வான உணர்வு. சோதியா, சோலைக்கிளி..., போன்றோரின் கவிதைகள் இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பிரசவித்தனவோ!

விஜயராகவனின் நுங்குக் கவிதை அடிக்கடி மனசுக்குள் எட்டிப் பார்த்தது. அவருக்குக் கவிதையை அழகாக வாசிக்கவும் தெரியும். ஒரு தரம் அவரது நுங்குக் கவிதையை ஐபிசி-தமிழ் வானொலியில் கேட்டு விட்டு இரவெல்லாம் ஒரே நுங்குக் கனவு. பாட்டா சீக்காய்களை எல்லாம் ஒரு பக்கமாய் ஒதுக்கி விட்டு, தன் வீட்டு முன்றலில் நின்ற ஒற்றைப் பனையிலிருந்து கந்தசாமியைக் கொண்டு இறக்குவித்த பருவ நுங்கைப் பக்குவமாய் சீவி பெருவிரலால் குத்தி இழுத்து பனைமுகிழில் விட்டு... ம்...ம்... நாக்கில் சுவை நரம்புகள் சுரந்து...

பக்கத்தில் அடிடாஸ் ஆஃப்ரர்சேவின் வாசனை கமகமக்க “ஹலோ" என்றது ஒரு குரல். நுங்கை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன். சற்று முன்னர் வந்த ஆபிரிக்கப் பிரஜைகளில் ஒருவனான அந்த ஆடவன்தான் என் அருகில் அமர்ந்தான். இவனோடு கூட வந்த பெண்களுக்கருகில் இவனுக்கு இடம் கிடைக்கவில்லைப் போலும். பதிலுக்கு
“ஹலோ" சொல்லி விட்டு மீண்டும் யன்னலினூடு நான் இயற்கையிடம் சென்றேன்.

“மன்னிக்கோணும், உனக்கு என்ன பெயர் என்று சொல்லுவியோ..?" ஆபிரிக்கன் ஜேர்மனிய மொழியில் வினவினான்.

திரும்பி “கோகிலா" என்றேன்.

“ம்... கோ..லா.. நல்ல பெயர்."

எனது பெயரை அவன் அப்படித்தான் உச்சரித்தான்.

“நன்றி" சொல்லி விட்டு அவனது பெயரைக் கேட்காமலே மீண்டும் யன்னல் வழி வெளியோடு ஐக்கியமானேன்.

“கோ...லா...! எங்கை போறாய், ஸ்ருட்கார்ட்டுக்கோ?"

“ம்... "

“அங்கை வேலை செய்யிறியோ? "

“இல்லை. எங்கடை நாட்டுக் கலைநிகழ்ச்சி ஒன்றுக்குப் போறன்."

“உன்னை எனக்குத் தெரியும். நீ உன்ரை தங்கைச்சியை சங்கீத வகுப்புக்குக் கூட்டிக் கொண்டு வாற பொழுது நான் காணுறனான்."

“அப்பிடியோ..! எனக்கு உன்னைத் தெரியாது. நான் உன்னை ஒரு நாளும் கண்டதில்லை. அதுபோக அது என்ரை தங்கைச்சி இல்லை… மகள்."

“நான் நம்ப மாட்டன். நீ இவ்வளவு இளமையா இருக்கிறாய். ஆசியப் பொம்பிளையள் எல்லாரும் இப்பிடித்தான் அழகாக இருப்பினையோ?"

ம்... தொடங்கி விட்டான். ´இந்த ஆண்களே இப்படித்தானோ! தமது மனைவியரல்லாத வேறு எந்தப் பெண்ணைக் கண்டாலும்… நீ அழகு.., நீ இளமை… என்று´ சின்னதான எரிச்சல் மனசுக்குள் தோன்றியது.

மீண்டும் யன்னல் வழி வெளியே லயிக்க முனைந்த போதெல்லாம்.. “கோ..லா..! கோ..லா..!" என்று அழைத்து எனக்குக் கோபமூட்டினான். ஒவ்வொரு தரிப்பிலும் இறங்குவோரும், ஏறுவோருமாகப் பயணிகள் மாறிக் கொண்டிருக்க இவன் மட்டும் என்னருகில் என் தனிமையைக் குலைக்க என்றே இருந்தான். என் சந்தோசத்தை மெதுமெதுவாகச் சூறையாடினான்.

“கோ...லா, என்னோடை ஒரு நாளைக்கு கோப்பி குடிக்க வருவியோ..?"

ம்.. ஜேர்மனியில் ஒருவன் ஒரு பெண்ணை இப்படிக் கேட்கிறான் என்றால், அதன் அர்த்தம் வெறுமனே கோப்பி குடிப்பதற்கான அழைப்பல்ல. அதற்கும் மேலான சம்மதம் தேடல் அது. அருகமர்ந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்கிடையில் அவன் தேடல்.. அவனைச் சொல்லிக் குற்றமில்லை. இது ஜேர்மனிய நாகரிகங்களில் ஒன்று.

“இல்லை. எனக்கு நேரமில்லை." வார்த்தைகளோடு எரிச்சலும் ஒட்டியபடி வெளியில் கொட்டியது.

“பிளீஸ்... ஒரு நாளைக்கு. ஒரே ஒரு நாளைக்கு..."

“இல்லை, எனக்கு இவைகளுக்கு நேரமுமில்லை. இவைகளில் ஆர்வமுமில்லை. நான் திருமணமானவள். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்."

“அதனால் என்ன..? நானும் திருமணமானவன்தான்."

“அப்பிடியெண்டால், உன்ரை மனைவியோடை போய், கோப்பியைக் குடியன்." சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கிக் கொண்டேன்.

அவனது கரைச்சல் தொடர்ந்தது. கெஞ்சிக் கேட்டான். பொதுவாக ஜேர்மனியர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ´எனக்கு நேரமில்லை´ என்று ஒரு தரம் சொன்னால் போதும். அப்படியே ஒதுங்கி விடுவார்கள். நாளாந்தம் சந்திப்பவர்களாக இருந்தால் அந்த எண்ணத்தை அப்படியே விட்டு விட்டு மீண்டும் நட்பாகப் பழகத் தொடங்கி விடுவார்கள்.

இவன் ஆபிரிக்க நாட்டவன் என்பதாலோ என்னவோ எனக்கு விருப்பமில்லையென்று சொன்ன பின்னும் “தொலைபேசி இலக்கத்தைத் தாறியோ..? முகவரியைத் தாறியோ.." என்று கரைச்சல் படுத்திக் கொண்டே இருந்தான்.

இயற்கையோடு நான் ஒன்றும் போதெல்லாம் என்னைக் குழப்புவதிலேயே குறியாக இருந்தான். அவனைத் திசை திருப்ப எண்ணி, வெளியிலே தாயின் கையைப் பிடித்த படி செல்ல நடை போடும் ஒரு குழந்தையைக் காட்டி “அந்தக் குழந்தையைப் பார்த்தியா? எவ்வளவு அழகாக இருக்கிறாள்?" என்றேன். உண்மையிலேயே அந்தக் குழந்தை துறுதுறுத்த கண்களுடன் துடிப்பாய் தெரிந்தாள். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல ஆசை வந்தது. ஆனால் அவனால் அக் குழந்தையிடம் லயிக்க முடியவில்லை. என்னைச் சம்மதிக்க வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான்.

எனது இன்றைய தனித்த ரெயில் பயணத்தில், ஏகாந்தமாய் இருக்கலாம் என்ற என் இனிமையான நினைப்பு தொலைந்து வெகு நேரமாகியிருந்தது. ´இதற்கு மேலும் தாங்காது வேறு எங்காவது போய் இரு.´ என்று மனசு சொல்லியது. எரிச்சலோடு எழுந்து பார்த்தேன். எல்லா இருக்கைகளுமே நிரம்பி வழிந்தன. பரவாயில்லை, ஏதாவதொரு மூலையில் போய் நிற்பது உத்தமமெனத் தீர்மானித்த படி எனது கைப்பையையும், கொப்பியையும், பேனையையும் எடுத்துக் கொண்டு அவனைத் தாண்டி நடந்தேன்.

“கோ..லா, எங்கை போறாய்..?"

“அங்காலை போய் இருக்கப் போறன்."

“ஏன்..?"

நான் பதில் சொல்லவில்லை. விரைந்து நடந்தேன்.

இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. வெளிச் செல்வதற்கான கதவோடு அண்டிய ஒரு மூலையில் போய் நின்று எனது கொப்பியைப் பார்த்தேன். அது எதுவுமே எழுதப் படாமல் வெறுமையாக இருந்தது.

நேரத்தைப் பார்த்தேன். ம்.. இன்னும் சில நிமிடங்களில் ஸ்ருட்கார்ட் வந்து விடும். ஏமாற்றத்தின் நடுவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு.

10.6.2003

 

 

பாதை எங்கே?

அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.

அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம். எங்கே உடைப்பது, எங்கே ஓடுவது, என்று தெரியாத பயமும் குழப்பமும் அவளுள்.

ஜேர்மனிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்லவில்லை. அவள் சென்றிருப்பாள். மரியதாஸ்தான் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.

குசினி யன்னலினூடே வெளியிலே தெரிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திரிவது போலவும், தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.

இப்படியெல்லாhம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு ஜேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அரிநாயகம்தான் பெரிதும் சந்தோசப் பட்டார். ஆமி, ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும், அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும், சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கு என்றிருந்த அந்த நிலத்தையும், அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.

“வேண்டாம் அப்பா, எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமையோணும் எண்டால், எனக்கு அப்பிடியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா" கலங்கித் தடுத்தாள் அவள்.

ஒரு கணம் நோய்வாய்ப் பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும், அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அரியநாயகம் “இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும், தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படுற பாடு கொஞ்சமில்லை. எப்ப ஆமி வருவானோ, எப்ப ஷெல் வந்து விழுமோ, எப்ப புக்காரா குண்டு பொழியுமோ, எண்டு எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைச்ச படியேதான் கிடக்குது. வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால், நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே? உங்கள் இரண்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால், நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன்" என்றார்.

அப்பா அரியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மௌனம் சம்மதமாக, வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. மனம், குணம்… என்று எதுவுமே தெரியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஜேர்மனியில் வாழும் மரியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.

விசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மரியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் ஆக்கியது. எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சரி வந்து மரியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ரிக்கற் எடுத்து விமானம் ஏறினாள்.

அப்பா, தம்பி இருவரையும் பிரிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விரித்தபடிதான் வானில் பறந்து ஜேர்மனி வந்து சேர்ந்தாள்.

ஃபிராங்போர்ட் விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மரியதாஸ் அவளையும், அவள் மரியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மரியதாசுக்;கும், நேரே பார்க்கும் மரியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்றிலுமே சற்று வித்தியாசம் இருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் சமாளித்துக் காரில் ஏறினாள்.

வழியில் காருக்குள்ளேயே மரியதாஸ் “என்ன நீங்கள் ஃபோட்டோவிலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிரி இருக்கிறீங்கள்?" என்று நக்கலும், சிரிப்புமாய் அவளைக் கேட்டான். அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. ஆனாலும் ´சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான்´ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிரித்து, கலங்கிய கண்களை மறைத்து மௌனமாகி விட்டாள்.

அவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊரில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.

இவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அரியநாயகத்துக்கோ, தம்பிக்கோ எழுதவில்லை.

தன் கண் முன்னாலேயே மரியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் “நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ" என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.

ஆனால் அந்த ஜடத்தனத்தைக் கூடச் சீண்டிப் பார்ப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று, தொலைதூரத்தில் அவளுக்குத் தெரிந்த சின்னஞ் சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்டது அந்த விமானச்சீட்டு.

அதை, வேலையால் வரும் போது மரியதாஸ்தான் கொண்டு வந்தான்.

“நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிரி இருக்கிறிங்கள். இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ரிக்கற் எடுத்திட்டன்." விமானச்சீட்டுடன் வந்த மரியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.

துணுக்குற்றவள் “உங்களோடை மூண்டு மாசங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் அங்கை போய் என்ன செய்யிறது? நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான், அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார். என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உழைச்சுக் குடுத்திருப்பான்." சொல்லிக் கதறினாள்.

“நீங்கள், இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன்." என்றான். பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.

“நீங்கள், இப்ப என்னைச் சட்டப்படி கலியாணம் செய்தால், எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்குந்தானே! நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கலியாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன்." என்றாள்.

“இஞ்சை பார், நான் இங்கை மரியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊரிலை போய்ச் சா." இரக்கமின்றிக் கத்தினான்.

மரியதாஸ் ஜேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு, இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து, பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.
இவனுக்கு, என்ன மரியாதை இங்கிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தெரிந்தது.

இப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.

எங்காவது ஓடி விடலாமா, என்று யோசித்தாள். எங்கு ஓடுவது? ஸ்பொன்சரில் வந்ததால், அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தெரியாத நாடு. தெரியாத வீதி. ஆங்கிலம் தெரியாது. டொச்சில் ஒரு வார்த்தை தெரியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

´இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறானா? வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா?´ குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.

தமிழர்கள் கூட அதிகம் இல்லாத இந்த நகரில் யாரிடம் போவது? என்ன கேட்பது? யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மரியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

உடைகளை மாற்றிக் கொண்டு எங்கே போவது, என்று கூடத் தெரியாமல் வெளியில் இறங்கினாள். அந்தப் பாதை எங்கே வளைகிறது, என்பதும் அவளுக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் மரியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.

10.2.2000

 

 

அக்கரைப் பச்சைகள்

என் சின்னவன் எனது மடிக்குள் கிடந்து பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள்.

சொந்தம் என்பதையும் விட ஒன்றாகப் படித்து, ஒன்றாக இலந்தைப் பழம் பொறுக்கி, ஒன்றாக மாங்கொட்டை போட்டு, ஒன்றாகக் கிளித்தட்டு விளையாடி... என்று அரிவரியில் இருந்து ஒன்றாகவே என்னோடு உயர்தரம் வரை பயணித்தவள். எப்போதும் ஒன்றியிருக்கும் எமக்குள் பரீட்சைப் புள்ளிகளில் மட்டும் தவிர்க்க முடியாமல் போட்டி வரும். ஒரு தரம் government test இல் கணிதத்துக்கு பாடசாலையே வியக்கும் படியாக அவளுக்கும் எனக்கும் ஒரே புள்ளிகள்.

இப்படியெல்லாம் படித்து விட்டு நான் ஒரு அவசரக் குடுக்கை. அவசரப் பட்டு கல்யாணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்று, குடும்ப சாகரத்தில் விழுந்து விட்டேன். கண்டறியாத காதல் எனக்கு.

அவள் trousers ம் போட்டுக் கொண்டு வந்து “ஹாய்" என்ற படி என் வீட்டு விறாந்தை நுனியில் அமர்ந்தாள். சின்ன வயசிலிருந்தே அவளும் நானும் அமர்ந்திருந்து கதைக்கும் இடம் அதுதான்.

பிச்சிப்பூ வாசத்தை நுகர்ந்த படி, கப்போடு சாய்ந்து கொண்டு படிக்கும் போது கதையளந்ததுக்கும் இப்போதுக்கும் கனக்க வித்தியாசம். சுவாரஸ்யமான கதைகளில் முன்னர் போல மூழ்க முடியாமல் என் கவனம் பிள்ளைகளின் பக்கம் சிதறிக் கொண்டே இருந்தது.

அவள் பல்கலைக்கழகப் புதினங்களை அளந்து கொண்டே இருந்தாள். எனக்கு என் மேலேயே கோபமாய் வந்தது. நானும் போயிருக்கலாந்தானே. எத்தனை தரமாய் எல்லோரும் சொன்னார்கள். பெரிய ரோமியோ, யூலியட் காதல் என்பது போல ஒரே பிடியாய் நின்று... இப்போ அவள் ஒரு சுதந்திரப் பறவை. நான் பிள்ளைகளோடு மாரடிக்கிறேன்.

அம்மா ஆடிப்பிறப்புக்கு கொழுக்கட்டை அவிக்க என்று முதல் நாட்தான் பயறு வறுத்து, உடைத்து, கொழித்தவ. கொழித்து வந்த பயத்தம் மூக்கை எப்பவும் போல ஹொர்லிக்ஸ் போத்தலுக்குள் போட்டு வைத்தவ. அதில் ஒரு பிடி எடுத்து சர்க்கரையும், தேங்காய்ப்பூவும் போட்டுப் பிசைந்து இரண்டு சிறிய கோப்பைகளில் போட்டுக் கொண்டு வந்து தந்தா. அவளுக்கு அது நல்லாகப் பிடிக்கும் என்று அம்மாவுக்குத் தெரியும். அவள் அதை ரசித்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

நான் ஒரு கரண்டியை வாயில் போட்டு விட்டுப் பக்கத்தில் வைத்தேன். மூத்தவன் வந்து “அம்மா, ஆ... ஆ..." என்று வாயைத் திறந்தான். ஒரு கரண்டியை அவனுக்கு ஊட்டி விட்டேன். இரண்டாமவன் வந்து “தம்பியைத் தொட்டிலிலை போடுங்கோ. நான் மடியிலை படுக்கப் போறன்" என்று மழலை பொழிந்தான்.

பல்கலைக்கழகப் புதினங்களை அவள் நிறுத்தி நிறுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். சின்ன வகுப்பில் எங்களோடு படித்த தேவநாயகத்துக்கும், சுகுணாவுக்கும் காதலாம். எனக்கு நம்ப இயலாமல் இருந்தது. எங்களோடு படிக்கிற பொழுது தேவநாயகம் நெற்றியில் வடியத் தக்கதாக தலையில் எண்ணெய் தப்பிக் கொண்டு, கன்ன உச்சியும் பிறிச்சுக் கொண்டு...

“சுகுணா அவனைக் காதலிக்கிறாளோ..?"
சுகுணா எங்களுக்கு அடுத்த batch.

“உனக்கு இளப்பமா இருக்கே? அவன் இப்ப எஞ்சினியர் தெரியுமே! இப்ப அவனைப் பாத்தாய் எண்டால், நீயே லொள்ளு விடுவாய்."

எனக்கு அவளின் கதைகளைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவே இருந்தது. ´காதல்´ என்ற சொல்லைச் சொல்வதே பாவம் என்பது போல இருந்தவள், பல்கலைக்கழகம் போகத் தொடங்கிய பின் இப்படித்தான் லொள்ளு.., அது இது என்று புதுப் புதுச் சொற்களாய் உதிர்க்கிறாள். கூச்சம் என்பதே இல்லாமல் பட் பட்டென்று மனதில் தோன்றுவதை எல்லாம் வெளியில் கொட்டுகிறாள். பொறாமையோடு அவளைப் பார்த்தேன். இத்தனையையும் இழந்து விட்டேனே என்ற ஆதங்கத்தில் எனக்குள் வெம்பினேன்.

அந்த நேரம் பார்த்து அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு. “உனக்கென்ன..? நீ கலியாணம் கட்டிப் போட்டு குழந்தைகள், குட்டிகள் எண்டு எவ்வளவு சந்தோசமா இருக்கிறாய். எனக்கு எரிச்சல்தான் வருது. இன்னும் படிப்பு, பரீட்சை எண்டு புத்தகங்களையும் காவிக் கொண்டு..."

மனசுக்குள் சில்லென்ற ஒரு உணர்வு.

மூத்தவன் மீண்டும் வந்து என் முதுகுப் பக்கமாக வளைந்து என்னைக் கட்டிப் பிடித்தான். அந்த ஸ்பரிசம் வழமையையும் விட அதீத சுகமாய்...

நான் அவனை அப்படியே இழுத்து, இறுக அணைத்துக் கொண்டேன்.

காலம் - 1982

27.5.2004

 

 

அந்த மௌன நிமிடங்களில்…

நூற்றுக் கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பங்களுக்கென மண்டபத்தின் முன் வரிசையில் ஒதுக்கப் பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.

தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக அமைக்கப் பட்டிருந்த துயிலும் இல்லமும், அதைச் சுற்றி வைக்கப் பட்டிருந்த மலர்களும், ஒலித்துக் கொண்டிருந்த மாவீரர் கானமும்... ஜேர்மனியின் வர்த்தக நகரான டோர்ட்மூண்ட் நகரின் மத்தியில் அமைந்துள்ள அந்த மண்டபத்தின் உள்ளே நுழைந்த போதே எனக்குள்ளே ஒரு பயபக்தியை ஏற்படுத்தி விட்டது. நான் வேறொரு உலகத்தினுள் வந்து நிற்பது போலவே உணர்ந்தேன். ஜேர்மனியின் நெரிசல் நிறைந்த சாலைகளும், அழுத்தம் நிறைந்த வாழ்வும் எனக்கு மறந்து விட்டது.

பண்போடும், மரியாதையோடும் எம்மை வரவேற்ற சகோதர அன்பர்கள் தமது வேலைகளை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் கவனிப்பது மட்டுமல்லாது அவ்வப்போது வந்து எமக்கு ரோஜாப் பூக்களையும் தந்து சென்றார்கள்.

புனிதமான உலகத்தினுள் இருப்பது போன்ற உணர்வில் என் மனது நெகிழ்ந்து போயிருந்தது.

திடீரென்று, “தாயகத்தை உயிரிலும் மேலாக நேசித்து, அந்த உன்னத இலட்சியத்துக்காக மடிந்த எமது தேசத்தின் வீரர்களை நெஞ்சங்களிலே சுமந்து, அந்த உத்தமர்களுக்கு வணக்கம் செலுத்த நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். விலைமதிக்க முடியாத அவர்களுக்காக எழுந்து நின்று அகவணக்கம் செய்வோம்." ஒலிபெருக்கி முழங்கியது.

பேரிரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த கிசுகிசுச் சத்தம் அப்படியே அடங்கிப் போக மண்டபத்தினுள் அமர்ந்திருந்த அத்தனை நெஞ்சங்களும் அந்த ஒரு நிமிட அஞ்சலிக்காய் எழுந்து, மனதுக்குள் பேசிய படி மௌனம் காத்தன.

இரண்டு நிமிடங்களில் மௌனம் கலைந்து, கொடியேற்றலும், வணக்கமும். தாய்நாட்டைக் காக்க தன்னை ஈந்த ஒரு வீரனின் தாய் ´ஈன்ற பொழுதில் நெஞ்சு பெரிதுவக்க´ கொடியை ஏற்றினார். ஏறுகையில் நெஞ்செல்லாம் புல்லரித்தது. நான்கு நிமிடங்களில் கொடி பறக்க மனசு பரபரத்தது. கண்கள் பனித்தன.

அடுத்து, தாய் நாட்டில் ஒளி வீசுவதற்காய் தம்மை அணைத்துக் கொண்ட இரு வீரர்களின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றினார்.

திரையிலே ஈழத்தில் நடைபெற்ற உணர்வு பொங்கும் ஈகைச் சுடரேற்றல் ஓடிக் கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என்னை நிலைகுலைய வைத்த அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கு கூவிடும் எங்கள் குரல்மொழி கேட்குதா ஒளியினில் வாழ்பவரே... என் மனதும் பாடலுடன் சேர்ந்து கூவத் தொடங்கியது.

...உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம். அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம் எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்...

மனசு ஓலமிட, கண்களில் நீர் திரையிட்டது. மண்டபத்தினுள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை.

மனத்திரை விசாலமாக விரிய அங்கு எத்தனை முகங்கள். மண்ணுக்கு வித்தான பல முகங்கள். அக்கா, அக்கா..! என்று என் முன்னே சிரித்து விட்டு அடுத்த கணமே காவியமாகி கல்லறையில் துயில் கொள்ளும் உயிர்ப்பூக்கள்.

அங்கு அவனும் வந்தான்.

அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா.

தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் சென்றிக்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும்; பணியில் இருந்தான். அத்தோடு பெடியளின் நியாய விலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான்.

இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாய விலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் கவலையும் வரும்.

இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடி பண்ணிக் கொண்டிருந்தோம். அவன் அதற்கு மேலால் வேறு பகிடிகள் சொல்லி எங்களைச் சீண்டிக் கொண்டிருந்தான்.

எங்கள் கதைகள் திசைமாறித் திசைமாறி எங்கெங்கோ சென்று திரும்பின. “டேய்... நீ, தோளிலை கொழுவியிருக்கிற உந்த கிரனைட் பையையெல்லாம் கொண்டு போய் அவையளிட்டைக் குடுத்திட்டு வந்து போசாமல் படி." நான் சொன்னேன்.

தங்கையும் என் ஆலோசனை நல்லதென்பது போலப் பக்கப் பாட்டுப் பாடினாள்.

“பேசாமல் வாறதோ..! என்ன சொல்லுறிங்கள்..?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஓமடா, எத்தினை பெடியள் இருக்கிறாங்கள். நீ உதெல்லாத்தையும் விட்டிட்டு வந்து முதல்லை படிச்சு முடி. அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு அழுறவ தெரியுமே!"

இப்போ அவன் சற்று ஆக்ரோசத்துடன் “அக்கா, நீங்கள் படிச்சனிங்கள்தானே. நீங்களே இப்பிடிச் சொன்னால்..! உங்கடை தம்பி மட்டும் படிக்கோணும். மற்றவங்கள் படிக்கத் தேவையில்லையோ? அவங்களுக்கும் அக்காமாரும், அம்மாமாரும் இருக்கினந்தானே! ஒவ்வொரு அம்மாமாரும் அழுது தடுத்தால் ஆர் வருவினம்?"

“.................."

“அக்கா, நீங்கள் என்னை மனசோடை, துணிவோடை அனுப்போணும்."

“.................."

அதுக்கு மேல் என்னால் பேச முடியவில்லை. மீண்டும் எங்கள் பேச்சு இயல்புக்கு மாறி நாங்கள் சிரித்துக் கொண்டிருக்கும் போது “அக்கா, என்ரை கறுத்த ரவுசரை அயர்ண் பண்ணி வையுங்கோ. நாளைக்கு போட்டோ (புகைப்படம்) எடுக்கிறதாம்." என்றான்.

“ஏன் போட்டோ?" நானும் தங்கைமாரும் கோரஸாகக் கேட்டோம்.

“நான் செத்தால் நோட்டீசிலை போடுறதுக்குத்தான்." அவன் மிகவும் சாதாரணமாகச் சொன்னான். அப்படியே எங்கள் சிரிப்பு அடங்க, நாங்கள் மௌனமாகி விட்டோம். மனசு மட்டும் திக்கிட்டது. ஏதோ ஒரு பயப் பந்து நெஞ்சுக்குள் உருள்வது போலிருந்தது.

அன்று அவன் அப்போது போய் விட்டான். இரவு வந்து நியாயவிலைக்கடைக் காசை எண்ணி என்னிடம் தந்தான்.

“ஏன் எண்ணித் தாறாய்? என்னிலை உனக்கு நம்பிக்கை இல்லையோ?” செல்லமாகக் கேட்டேன்.

“அக்கா, எனக்கும் உங்களுக்கும் இடையிலை அன்பைத் தவிர வேறை ஒண்டுமே இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் காசிருக்கே. இது என்ரையில்லை. இது எங்கடை நாட்டின்ரை காசு. அதை நான் உங்களிட்டைத் தரக்கிளையும் சரி, வாங்கக்கிளையும் சரி எண்ணிறதுதான் நல்லது." மூச்சு விடாமல் சொன்னான்.

என்னை விடப் பத்து வயது குறைந்தவனின் பொறுப்பான பேச்சில் ஆச்சரியமும், பெருமையும் என்னை ஆட்கொள்ள, எண்ணிய காசைப் பையில் போட்டு எனது அறையினுள் வைத்து விட்டு “சாப்பிடன்" என்றேன்.

“குளிச்சிட்டு வாறன்" என்றான்.

குசினிக்குள் போனேன். அடுப்பில் தணல் இருந்தது. குழம்புச் சட்டியை அடுப்பில் வைத்து விட்டு, பிரட்டலை குக்கரில் வைத்து, குக்கரைப் பற்ற வைத்தேன். மண்(ணெண்)ணெய் மணம் ´பக்´ கென்று வந்து போனது.

“அக்கா..!" கூப்பிட்டான்.

“என்னடா?"

“என்ரை முதுகைத் தேய்ச்சு விடுங்கோ."

“சாமம் பன்ரெண்டு மணிக்கு கிணத்தடியிலை நிண்டு உனக்கு முதுகு தேய்க்கோணுமோ?!"

“என்ரை அக்கா இல்லே..!"

லக்ஸ் சோப்பைப் போட்டுத் தேய்த்து விட்டேன். கிணற்றில் அள்ளி அள்ளி ஊற்றி ஊற்றிக் குளித்தான்.

“இஞ்சை பார்! கெதிலை குளிச்சு முடி. ´ஷெல்´ வந்து கிணத்தடியிலை விழுந்தால் எல்லாம் சரியாப் போடும்." பருத்தித்துறைக் கடலில் இருந்து ஓயாது பறந்து கொண்டிருந்த ´ஷெல்´ தந்த பயத்தில் நான் அவனை அவசரப் படுத்தினேன்.

சாப்பாட்டைக் கொடுக்க அவன் ஆசை ஆசையாக அள்ளிச் சாப்பிட்ட போது எனது கண்கள் பனித்தன.

போகும் போது “படுத்து நல்ல நித்திரை கொள்ளோணும் போலை இருக்குதக்கா." என்றான்.

“அப்ப, கொஞ்சம் படன்."

“இல்லை நான் போய் சென்றிக்கு நிண்டு கொண்டு வெள்ளையை விடோணும்."

“நித்திரை தூங்கிப் போடுவாய்..!"

“படுத்தாத்தானே நித்திரை கொள்ளுறது..!"

“இண்டைக்கு எந்தப் பக்கம்..?"

“ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு அங்காலை இருக்கிற பனங்காணிக்குள்ளை பனைக்குப் பின்னாலை நிற்பன்." அதை மட்டும் மிகவும் குசுகுசுப்பாக என் காதுக்குள் சொன்னான்.

தொடர்ந்து “நித்திரை வராது... பகலெண்டால் ஆராவது தேத்தண்ணி கொண்டு வந்து தருவினம்." என்றான்.

“கால் நோகாதே..?" அக்கறையோடு கேட்டேன்.

“கால் நோகுமெண்டு சொல்லி நாங்கள் நிக்காட்டி ஆமி உள்ளை பூந்திடுவான் இல்லே. உங்களைப் போல எத்தினை அக்காமார் எங்களை நம்பி வீடுகளுக்குள்ளை இருக்கினம்" என்றான். சில மாதங்களின் முன் ஆலடி வீடுகளுக்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் ஒரே நாளில் எழுபது பெண்களை மானபங்கப் படுத்திய வெறித்தனம் என் நினைவில் வந்து என் உடல் ஒரு தரம் நடுங்கியது.

“அக்கா, என்ன யோசிக்கிறீங்கள்? நான் வெளிக்கிடப் போறன். நாளைக்கு வருவன். அந்தக் கறுத்த ரவுசரை எடுத்து ரெடியா வையுங்கோ. நல்ல சேர்ட்டும் வையுங்கோ. நோட்டீசிலை படம் வடிவா வரோணும்." என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தபடி சொன்னான்.

பிறகு என்னைக் கனிவாகப் பார்த்தபடி “அக்கா, நான் ஏன் இப்பிடிச் சொல்லுறன் தெரியுமே! ஒண்டும் சொல்லாமல் நான் செத்துப் போட்டன் எண்டால் உங்களாலை தாங்கேலாது.

சாவு என்னை எந்தக் கணத்திலும் தழுவலாம். அதைத் தாங்க நீங்கள் இப்ப இருந்தே உங்களைத் தயார் படுத்தி வைச்சிருக்கோணும். அம்மாவையும் நீங்கள்தான் தயார் படுத்தோணும். என்ரை சாவு உங்களை வருத்தக் கூடாது. அக்கா, உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது. அதுதான் என்ரை ஆசை." சொல்லிக் கொண்டே சைக்கிளில் ஏறிப் பறந்து விட்டான்.

அடுத்த நாள் காலை வந்து அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு, நியாயவிலைக் கடைக் காசுடன் புறப்பட்டான். போகும் போது “ரவியையும் இண்டைக்கு போட்டோ எடுக்கினம். போட்டோ எடுத்து முடிய அவனோடை வருவன். ரவிக்கு வடை விருப்பம். ஏலுமெண்டால் சுட்டு வையுங்கோ" என்று சொல்லிக் கொண்டே போனான்.

அவன் போய் சில மணி நேரங்களில் கிரனைட்டுகளும், ஷெல்களும், துப்பாக்கி வேட்டுக்களுமாய் ஒரே சத்தம்.

“அந்தக் குறுக்கால போவார் வெளிக்கிட்டிட்டாங்கள் போலை கிடக்கு." அப்பாச்சி தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டினா.

பருத்தித்துறையே அல்லோலகல்லோலப் பட்டது. சென்றிக்கு நிற்கும் பிள்ளைகளின் வீடுகளிலெல்லாம் அன்று உலை கொதிக்கவில்லை. மனம் பதைக்க பெற்றவரும், உற்றவரும் பிள்ளைகளின் வரவுகளுக்காய் வாசல்களில் காத்திருந்தார்கள்.

நீண்ட காத்திருப்பின் பின் எம் நெஞ்சம் குளிர தம்பி வந்தான். மீண்டும் உயிர் வந்தது போல் நாம் பெருமூச்சு விட்டோம். ஆனால் அவன் சோர்ந்து போயிருந்தான். எதையோ பறி கொடுத்தவன் போல் வெறித்துப் பார்த்தான்.

“என்னடா..!" தங்கைதான் கேட்டாள்.

“ரவி போயிட்டான்..!" வார்த்தைகளோடு உணர்வும் வெடித்துச் சிதற குலுங்கி அழுதான். களத்தில்; பாய்பவனின் இளகிய மனம் கண்டு நாமும் அழுதோம்.

திடீரென்று ஒளிப்பிரவாகம். ஒலி பெருக்கி முழங்கியது. “தொடர்ந்து... மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரருக்கு அஞ்சலி செய்வார்கள்."

“அக்கா உங்கடை கண்ணிலை இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது." என் பிரிய தம்பியின் வார்த்தைகளையும் மீறி என் கண்கள் சொரிந்தன.

நான் 1985 இலிருந்து 2000 இற்கு மீண்டு ஈகைச்சுடரேற்றும் வரிசையில் ரோஜா மலருடன் நகர்ந்தேன்.

மாவீரர்களின் வரிசையில் என் தம்பியும் அழகாக…

அவன் கண்கள் என்னையே ஊடுருவிப் பார்த்து “அக்கா, அழாதையுங்கோ" என்று சொல்வது போல்..!

30.11.2000

 

 

தீர்க்கதரிசனம்

பன்னிரண்டாவது மாடியின் பல்கணியில் நின்று பார்த்த போது பகலை விட மின்விளக்குகள் கீழேயும், நட்சத்திரங்கள் மேலேயுமாய் மின்னிக் கொண்டிருக்கும் இரவு அழகாயிருந்தது.

பகல் பார்த்த போது கனடா ஒன்ராறியோவின் எக்லிங்ரன் அவெனியூவின் நீண்டு விரிந்து தெரியும் விளையாட்டு மைதானம் ஆங்காங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கால்பந்து, கைப்பந்து போன்ற ஆட்டங்களால் ஆர்ப்பாட்டமாகத் தெரிந்தது. பல்கணிக்கு நேரே கீழே உள்ள சிறிய நீச்சல் தடாகம் நீச்சலடிக்கும் சிறிசுகளின் சண்டையும், சந்தோசமும் கலந்த கூக்குரல்களில் கலகலத்துக் கொண்டிருந்தது.

இப்போது அவைகள் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் நிசப்தத்தைக் குலைக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. காற்று எங்கிருந்தோ அழகிய தமிழ்ப்பாடலை அள்ளி வந்து கொண்டிருந்தது.

´இந்த நேரத்தில் இத்தனை சத்தமாகப் பாடலா!´ பல்கணியில் நின்ற படியே காற்று வந்த திசையைக் கூர்ந்து பார்த்தேன். மைதானத்தின் ஓரமாக அடுத்த வீட்டு பல்கணிக்கு எதிரே கீழே ஒரு கார் நிற்பாட்டப் பட்டு கதவு திறந்திருந்தது. ஒரு இளைஞன் எதிர் வீட்டு பல்கணியையே அண்ணாந்து பார்த்தபடி நின்றான்.

பாடல் வரிகள் தெளிவாக காதில் விழுந்தன. “காதலா.. காதலா.. காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்…”

´ஏன் இப்பிடிச் சத்தமாய்..!´

“இந்த இரவு நேரத்திலை.. இப்பிடிச் சத்தமாப் பாட்டுப் போடலாமே?” மைத்துனரின் மகனை வியப்போடு கேட்டேன்.

“சித்தி, இது ஒவ்வொரு நாளும் நடக்கிற விசயந்தான். அந்த வீட்டு எட்டாவது மாடியிலை ஒரு வடிவான தமிழ்ப்பிள்ளை இருக்கு. அதுதான்.. இவன்…"

ம்... எனக்கு விளங்கி விட்டது. இது கனடா ஸ்ரைலில் ஒன்றாக இருக்க வேண்டும்.

“ஜேர்மனியிலை எண்டால் உந்தச் சேட்டையள் சரிவராது. பத்துமணிக்குப் பிறகு வீட்டுக்குள்ளையே சத்தமாப் பாட்டுப் போடக் கூடாது. இப்பிடி ரோட்டிலை நிண்டு அதுவும் இவ்வளவு சத்தமாப் பாட்டுப் போட்டால்.. பொலிஸ் பிடிச்சுக் கொண்டு போயிடும்."

“சித்தி, இண்டைக்குத்தானே கனடாவுக்கு வந்தனிங்கள். போறதுக்கிடையிலை இன்னும் கனக்க விசயங்கள் பார்ப்பிங்கள்"

அவன் சொன்னது போலவே எனக்காகக் கனக்கக் காத்திருந்தன. அடுத்த நாள் காலையில் லிப்ற்றில் நுழைந்த போது ஒரு மாநிறமான பெண் நின்றாள். தமிழ்ப்பெண் போலத் தெரிந்தாள்.

“வணக்கம்" என்றேன்.

அவள் மௌனம்.

“சித்தி, அது தமிழ் இல்லை. அவை பிஜி தீவிலையிருந்து வந்தாக்கள்."

“பார்க்க தமிழ் மாதிரி இருக்கு."

“இல்லை, அவையளுக்குத் தமிழ் தெரியாது. இந்த பில்டிங்கிலை இப்பிடி நிறையப் பேர் இருக்கினம். "

´புலம் பெயர்ந்த எமது ஐரோப்பியத் தமிழர்களின் சந்ததியினரும் ஒரு காலத்தில் இப்படித்தான் தமிழ் தெரியாத தமிழர்களாய் இருப்பார்களோ?´ மனதுக்குள் ஒரு சிறிய அச்சம் தோன்றியது.

வாசலில் செக்கியூரிட்டியைத் தாண்டி வெளியில் போனபோது சில்லென்ற காற்று வேகமாக வந்து முகத்தில் மோதி, தலையின் முன் முடிகளைக் கலைத்தது. கோடைகாலம் என்றாலும் இரவின் சில்லிப்பு இன்னும் விலகாமலே இருந்தது. அந்தச் சில்லிப்பையும் பொருட்படுத்தாது ஒரு வயதானவர் வீதியோரமாக இருந்த பெரிய கற்களில் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்கு எனது பாட்டாவின் வயதுதான் இருக்கும் போல் தெரிந்தது.

எனது பாட்டா இப்பவும் ஊரில்தான் இருக்கிறார். அவரும், கனடாவுக்கு வராவிட்டாலும் அமெரிக்காவுக்குப் போயிருக்கலாம். இப்படி கல்லிலிருந்து காற்று வாங்கியிருக்கலாம். ம்.. ஏனோ மறுத்து விட்டார். அவருக்கு ஊரில் கோர்ட்டில் உறுதி எழுதும் வேலை. அதை விட்டிட்டுப் போக விருப்பமில்லையோ என்னவோ!

பாட்டாவின் தம்பி அவரது பிள்ளைகளோடு அமெரிக்காவில்தான். அவ்வப்போது அவரின் கடிதங்கள் பாட்டாவுக்கு வரும். இடைக்கிடை சிறிது டொலர்களும் கடிதத்துக்குள் வைக்கப் பட்டிருக்கும். நான் அந்தக் கடிதங்களில் ஒட்டி வரும் அமெரிக்கா முத்திரைகளை ஆசையோடு எடுத்து எனது அல்பத்தில் ஒட்டி வைப்பேன்.

அப்படித்தான் ஒரு முறை கடிதம் வந்தது. பாட்டா வாசித்துக் கொண்டிருக்கும் போதே நான் கடித உறையை கேத்தில் ஆவியில் பிடித்து முத்திரையைக் கழற்றி எடுத்து விட்டேன். பாட்டா கடிதத்தை வாசித்து முடித்ததும் என்னிடம் தந்து விட்டு கோர்ட்டுக்குப் போய் விட்டார். அதில் எழுதியிருந்த வரிகளைப் பார்க்கப் பார்க்க எனக்குப் புல்லரித்தது. பாட்டாவை அமெரிக்காவுக்கு வந்து விடும்படி பாட்டாவின் தம்பி எழுதியிருந்தார். எல்லாச் செலவையும் அவரே பார்க்கிறாராம். ரிக்கெற்றையும் அனுப்புகிறாராம்.

பாட்டியும் இறந்த பின் மனதாலும், உடலாலும் வாடித் தளர்ந்து போயிருக்கும் பாட்டா அமெரிக்காவுக்குப் போனார் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருப்பார். இவ்வளவு நல்ல விடயத்தைப் பற்றி என்னோடு ஒன்றுமே கதைக்காமல் போயிட்டாரே! எனக்கு மத்தியானம் பாட்டா வீட்டுக்கு வரும் வரை இருப்புக் கொள்ளவில்லை. கடிதத்தை இரண்டு மூன்று முறையாக வாசித்துப் பார்த்தேன்.

பாட்டா அமெரிக்காவுக்குப் போனால்… என்ன, எங்கடை வீட்டுத் தென்னம் பாத்திகளுக்கு நாங்கள் குளிக்கும் போது வாய்க்கால் வழி ஓடும் சவர்க்காரம் கலந்த தண்ணீரை மாத்தி, மாத்தி விடவும், தென்னம் பாத்திகள் சிதைந்து போகாமல் சுற்றிவர பொச்சு மட்டைகளை அழகாக அடுக்கி பாதுகாக்கவும் ஆளில்லாமல் போகும். வேலிச் சிதம்பரத்தம் பூக்கள் தீண்டுவாரின்றி வாடி வீழும். பாட்டாவின் சுவாமியறை பூவின்றி, சாம்பிராணிப் புகையின்றி நாஸ்திகக் கோலம் கொள்ளும்…

நினைவுகள் பாட்டாவை அமெரிக்காவுக்கு அனுப்பிப் பார்த்து அதன் நன்மை, தீமைகளை ஆராய்ந்து கொண்டிருக்க ஒருவாறு மதியம் வந்து விட்டது. பாட்டாவும் வெள்ளை வேட்டி கசங்காமல் நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையுமாக வந்தார். உறுதி எழுதி வந்த காசில் ஒரு பகுதியையும், சந்தையில் வேண்டிக் கொண்டு வந்த நாவற்பழப் பையையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, வெள்ளை சேர்ட்டுக்கு மேல் போட்டிருக்கும் சால்வையைக் கூட எடுத்துக் கீழே வைக்காமல் அம்மா சமைத்த கும்பிளா மீன் குழம்பையும், செம்பாரைக் குஞ்சுப் பொரியலையும் சேர்த்து மதிய உணவைச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

நான் பக்கத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு பாட்டா சாப்பிடும் அழகை ரசித்த படியே “பாட்டா நீங்கள் அமெரிக்கா போறதை நினைக்க எனக்குச் சந்தோசமாயிருக்கு. எவ்வளவு நல்ல சான்ஸ்." என்றேன்.

“சும்மாயிரு மேனை. நான் போக மாட்டன்."

“ஏன் பாட்டா? "

“இங்கை என்ரை பேரப்பிள்ளையள் நீங்கள் எல்லாரும் இருக்க, உங்களை விட்டிட்டு நான் அங்கை போய்... எனக்கு அது சரிவராது."

“அவர் உங்கடை தம்பிதானே பாட்டா..!"

“அவன் அங்கையிருந்து என்ன கஸ்டப் படுறானோ ஆருக்குத் தெரியும்? மகளும், மருமகனும் அங்கை டொக்டர் எண்டாப்போலை அமெரிக்கா எங்கடை மண்ணாகிடுமோ? இல்லை அவன்ரை பேரப்பிள்ளையளும், பிள்ளையளும் என்ரை ஆகிடுமோ? நான் போக மாட்டன்." பாட்டாவின் குரல் தழுதழுத்தது.

´பாட்டா பிழை விட்டிட்டார், நல்ல ஒரு எதிர்காலத்தை காலுக்குள்ளை போட்டு மிதிச்சிட்டார்.´ என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.

அப்போது மட்டுமல்ல யாரும் எதிர் பார்க்காத விதமாக நாமெல்லோரும் கட்டாயமாக எமது நாட்டை விட்டு வெளிநாட்டை ஏகிய பின்னும், அந்த நினைவு வரும் போதெல்லாம் ´பாட்டா அமெரிக்காவுக்குப்
போயிருக்கலாமே´ என்று மனசுக்குள் ஒரு குறுகுறுப்பு ஏற்படும். இப்போதும் கல்லில் இருந்த பெரியவரைப் பார்த்ததும் மனசு குறுகுறுத்தது.

அருகே செல்லும் போது ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்து “வணக்கம்" சொன்னேன். அவருக்கு சற்று அதிர்ச்சி கலந்த சந்தோசம். கனடாவில் அந்த 1996 காலப்பகுதியில் ´வணக்கம்´ சொல்லும் வழக்கம் இல்லையாம். கூனிக் குறுகி அமர்ந்திருந்த அவர் கண்களுக்குள் எதையோ பறி கொடுத்த சோகம். கஸ்டப் பட்டுச் சிரித்த சிரிப்பில் உயிர்ப்பு வாடி இருந்தது. அவரைத் தாண்டிச் சென்ற பின்னும் ´ஏன்?´ என்ற கேள்வி என்னைக் குடைந்தது. அதிக நேரம் குடைச்சலைத் தாங்க முடியாததால் மைத்துனரின் மகனிடம் கேட்டும் விட்டேன்.

அவன் சொன்னான். “சித்தி, அவர் இங்கை தன்ரை மகனோடையும், மருமகளோடையுந்தான் இருக்கிறார். அவையள் காலைமை வேலைக்குப் போற பொழுது இவரையும் வெளியிலை விட்டுக் கதவைப் பூட்டிப் போட்டுப் போயிடுவினம்.

பின்னேரம் வேலையாலை வந்தாப்போலைதான் இவரும் உள்ளை போகலாம். "

“அப்ப, அவர் மத்தியானம் சாப்பிடுறது. ரொயிலற்றுக் போறது எல்லாம்... "

“எல்லாம் அவையள் வந்தாப் போலைதான்"

“அப்ப ஏன் அவர் இங்கை இருக்கிறார். நாட்டுக்குத் திரும்பிப் போகலாந்தானே!"

“அவையள் விட மாட்டினம். அவற்றை பெயரிலை வெல்ஃபெயர் வருகுதில்லோ."

சத்தமில்லாமல் ஒரு கொடுமை நடந்து கொண்டிருப்பது புரிந்தது. அதற்கு மேல் பேச மனம் வரவில்லை.

ரவுணுக்குள் வேலைகளை முடித்து விட்டுத் திரும்பும் போது மதியமாகியிருந்தது. அப்போது அங்குள்ள கற்களில் இன்னும் சில வயதானவர்கள் சேர்ந்து, சோகத்தைச் சுமந்தபடி கூட்டமாக இருந்தார்கள்.

அவர்களில் சிலருக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு எத்தனை மணிக்கு வேலை முடிகிறதோ அப்போதுதான் மதியச் சாப்பாடு என்று தெரிந்த போது மனசு கனத்தது.

நாடு விட்டு நாடு வந்து, வீடிருந்தும் ஆறி அமர இருக்கைகளோ, நிழலுக்குக் கூரைகளோ இல்லாதவர்கள் போல்... இத்தனை காலம் கழிந்து ஏதோ ஒன்று புரிந்தது.

23.5.2003

 

 

கல்லட்டியல்

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும், வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டன.

எங்கு பார்த்தாலும் வெண்மை. வானம், பூமி, மரங்கள், வீடுகள் எல்லாமே வெண்பனிப் போர்வையில் கண்களைக் கொள்ளை கொண்டன.

இந்த அழகையெல்லாம் ரசிக்க பெண்களுக்கெங்கே நேரம்! அழகிய வெண்பனிக் குவியலுக்குள் எழுந்து நிற்கும் வீடுகளுக்குள் எல்லாம் பெண்கள் அவசரமாய்த்தான் திரிவார்களோ?!

காலையின் கருக்கலைக் கூடத் துடைத்தெறிந்த பனியின் வெண்மையில் ஒளிர்ந்திருந்த ஜேர்மனியின் நகரங்களில் ஒன்றான ஸ்வெபிஸ்ஹாலின் மலைச்சரிவொன்றில் அமைந்திருந்த அந்தச் சாம்பல் நிற வீட்டுக்குள் லலிதா பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள்.

எல்லாப் பெண்களுக்கும் உள்ள அதே அவசரம். அதே வேலைச் சுமைகள். ஊதிப் பற்ற வைத்த அடுப்பு மின்சாரத்தில் இயங்கினால் என்ன!ஆட்டுக்கல்லும் குளவியும் கிரைண்டர் ஆனால் என்ன! பெண்களுக்கு வேலைகளுக்குக் குறைவில்லை.

சுந்தரேசனை மட்டும் இந்தக் காலைப் பரபரப்பு எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை. லலிதா போட்டுக் கொடுத்த தேநீரை உறிஞ்சி உறிஞ்சிச் சுவைத்த படி, அவன் அன்றைய பத்திரிகையை நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

ஒருவேளை சுந்தரேசனுக்கு மனைவியாக லலிதா வாய்த்தது போல், லலிதாவுக்கும் ஒரு மனைவி வாய்த்திருந்தால் லலிதாவின் காலைகளும் நிதானமாக விடிந்திருக்குமோ?!

லலிதா தேநீர், சாப்பாடு எல்லாவற்றையும் ஆயத்தப் படுத்தி மேசையில் வைக்கும் போதே பிள்ளைகளின் அறைகளில் அலாரங்கள் அலறின. அலாரங்கள் எப்படித்தான் அலறினாலும், அவள் போகாமல் அவர்கள் எழும்ப மாட்டார்கள்.

லலிதா பிள்ளைகளின் அறைகளுக்குள் விரைந்தாள். மூத்தவன் மணிக்கூட்டின் அலாரபட்டனை அழுத்தி விட்டு, மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தான். சின்னவனோ அலாரத்தின் அலறல் பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நடுவனோ “அம்மா, இன்னும் கொஞ்சம் படுக்கப் போறன்." என்று கெஞ்சினான்.

மூன்று பேரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாப்பாடு கொடுத்து, பாடசாலைக்கு அனுப்பி, சுந்தரேசனையும் வேலைக்கு அனுப்புவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது. நேரமும் 7.30 ஐத் தொட்டு விட்டதால் ´அப்பாடா´ என்று அமரக் கூட முடியாமல் அவசரமாகத் தலை சீவி, சப்பாத்தையும் போட்டு, ஜக்கெற்றையும் போட்டுக் கொண்டு, கைப்பையுடன் படிகளில் ஓடி இறங்கினாள்.

வாயிற் கதவைத் திறந்ததும், சில்லென்ற குளிர்ந்த காற்று முகத்திலறைய, காது மடல்கள் விறைக்க வேறுவழியின்றி பனிக்குவியலுக்குள் காலை வைத்த போது இடது பக்கமிருந்து வந்து கொண்டிருந்த ´றூடி´யுடன் மோதப் பார்த்தாள். ஆனாலும் மிகவும் பிரயத்தனப் பட்டு மோதுவதைத் தவிர்த்துக் கொண்டாள்.

ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைத்தபடி ஜக்கெற்றைக் கூடப் பூட்டாமல் விரையும் அவளைச் சிரிப்புடன் பார்த்த றூடி, “உன்னோடு மோதியிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஒரு இனிமையான நிகழ்வைத் தவிர்த்து விட்டாயே!" என்று சலிப்படைந்த பாவனையுடன் ஜேர்மனிய மொழியில் சொன்னார்.

63 வயது நிரம்பிய ஜேர்மனியரான றூடியின் குறும்பு எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவரது அப்படியான குறும்பு அவளை என்றைக்குமே கோபப் படுத்தியதில்லை. காரணம் அவளின் அப்பாவின் வயதுதான் றூடிக்கும். ´அப்பாவைப் போலவே எப்போதும் குறும்பு.´ நினைத்துக் கொண்டவள் சிரித்தாள்.

சற்று நேரத்துக்கு முன்பு வரை அவளுள் இருந்த இறுக்கமான நிலைமாறி மனசுக்குள் ஒரு மகிழ்வு ஓடியது.

காரில் குவிந்திருந்த பனியை வழித்தெறிந்து, இறுகப் படிந்திருந்த பனியைத் தேய்க்கும் போது, குளிரில் கைவிரல்கள் கொதித்தன. விரல்களை ஊதிவிட்டு, ஊதிவிட்டு பனியைச் சுரண்டியெறிந்து விட்டு காரினுள் ஏறினாள். ஹியரிங்கைப் பிடித்த போது ஏற்கெனவே குளிரில் கொதித்த விரல்களும், கைகளும் நடுங்கின. கார் கண்ணாடிகளைப் புகார் மறைத்தது. எதுவுமே தெரியவில்லை. நெஞ்சுக்குள் குளிர்ந்தது.

´வேளைக்கே வெளிக்கிட்டு பஸ்சிலேயே போயிருக்கோணும். கராச் இல்லாமல் வின்ரரில் கார் சரி வராது.´ மனசு முணுமுணுத்தது. குளிரில் உடம்பே நைந்து போனது போல இருந்தது. கைவிரல்களின் நுனிகள் வெடித்து, இரத்தம் கசியத் தயாராக இருந்தது.

இந்த வதைகளைத் தாங்க மாட்டாத அவள் ´என்ன வேலை, அதுவும் இந்தக் குளிரிலை. பேசாமல் வீட்டிலை நிண்டு றேடியோ கேட்டு, புத்தகங்களை வாசிச்சு… சந்தோஷமாக வாழ முடியாமல் வேலை வேலையெண்டு... என்ன வாழ்க்கையோ..´ மனதாரச் சலித்தாள்.

கார் கண்ணாடியைக் கீழே இறக்கி விட்டாள். றூடி நிதானமாகத் தனது பென்ஸ் காரைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற கையைக் கூடத் தூக்க முடியாத நிலையில் தலையை மட்டும் ஆட்டி விடை பெற்ற லலிதாவுக்குக் கார் ஓட்டுவதே கஷ்டமாக இருந்தது. குளிர் புகாராகக் கண்ணாடிகளை மறைத்தது. கார் வெப்பமூட்டியின் வெப்பத்தில் புகார் விலகி கார்க் கண்ணாடிகள் தெளிவாகும் வரை மிகுந்த சிரமப் பட்டாள்.

தெளிந்த கார் கண்ணாடிகளினூடே பனிப்பூக்கள் பூத்த மரங்கள் மிகவும் அழகாகத் தெரிந்தன. அவளின் மனமோ ஊரிலிருக்கும் அப்பாவிடம் தாவி மெல்லிய சோகத்துள் ஆழ்ந்து போனது. ஸ்மார்ட்டாக காரின் பனியைத் தேய்த்துக் கொண்டிருந்த றூடியையும் முந்தநாள் தபாலில் வந்த புகைப்படத்தில் இருந்த அப்பாவின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததின் விளைவே லலிதாவின் சோகம்.

லலிதாவின் அப்பாவும் ஒரு காலத்தில் ஸ்மார்ட்டாகவும், குறும்பாகவும் இருந்தவர்தான். பெண்களைப் பெற்றதால் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அவர் வாழ்க்கையை அநுபவிப்பதில் ஆசை கொண்டவர். ஆனால் பெண்களின் பிறப்பே இன்னொருவனின் கையில் ஒப்படைக்கப் படுவதற்காகத்தான் என்று கருதும் சமுதாயத்தில், அவர் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தது அவர் செய்த தப்பு. அதற்குத் தண்டனையாக நகைக்கும், வீடு, வாசல்களுக்குமாய் பெண்களைப் பெற்ற எல்லா அப்பாமார்களையும் போல அவரும் தன்னையும், தன் தனித்துவமான ஆசைகளையும் கரைத்துக் கொண்டது நியம்.

இந்த நியந்தான் லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சமுதாயக் கோட்பாடுகளில் நெரிபட்டவர்கள் பெண்கள் மட்டுந்தானா? பெண்களைப் பெற்றவர்களுந்தான். சமூகத்தின் மேல் அவளுக்குக் கோபந்தான் ஏற்பட்டது.

அவளுக்கு இப்போதும் நல்ல ஞாபகம். அப்பாவுக்கு சுற்றுலா என்றால் நிறையவே பிடிக்கும். இலங்கையின் எல்லாப் பாகங்களையும் மனைவி, குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட்ட அவருக்கு இந்தியாவின் மகாபலிபுரம் போன்ற அழகிய இடங்களையும் மனைவி குழந்தைகளுடன் சுற்றிப் பார்த்து விட வேண்டுமென்ற அளவிலாத ஆசை.

அப்போ அவருக்கு சம்பளத்துடன் ´அரியஸ்´ ஆக ஒரு தொகைப் பணம் வந்திருந்தது. அப்பணத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதாகத்தான் அவர் எண்ணியிருந்தார். அரியஸ் பணத்துடன் வீட்டுக்கு வரும் போதே அவர் முகத்தில் உற்சாகம் பொங்கியிருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தான் லலிதா பூப்பெய்த வேண்டுமா? வீட்டிலே நடந்த ஒரு சந்தோசத்தில் இன்னொரு சந்தோசம் கரைந்து விட்டது.

பெரியவளாகி நிற்கும் லலிதாவையும், தொடர்ந்து வரிசையில் நிற்கும் மூன்று பெண் குழந்தைகளையும் காட்டி நகை, நட்டு, காணி, வீடு என்று அவர்களுக்குச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் கூறி லலிதாவின் அம்மா, அப்பாவின் சுற்றுலா ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

அம்மாவின் விருப்பப்படி அப்பணத்தில் லலிதாவுக்குக் கல்லட்டியலும், மிகுதியில் தங்கைமாருக்குச் சில நகைகளும் செய்வதாகத் தீர்மானிக்கப் பட்டது.

சில நாட்களில் அப்பாவின் அரியஸ் பணம் சிவப்பு வெள்ளைக் கற்களுடன் அழகிய அட்டியலாகவும், சங்கிலிகளாகவும், காப்புகளாகவும் மாறிவிட்டது.

லலிதா அட்டியலைப் போட்டுக் காட்டிய போது அப்பாவின் முகத்திலும் பூரிப்புத் தெரிந்தது. ஆனாலும் அப்பாவின் சுற்றுலா ஆசை அட்டியலுக்குள் தொலைந்து விட்டதே என்ற கவலை லலிதாவைப் பற்றிக் கொண்டது.

தொடர்ந்த காலங்களிலும் அப்பாவுக்கு வரும் பணமெல்லாம் காணி வாங்குவதில், வீடு கட்டுவதில், நகைகளில், ஒவ்வொரு பெண்ணினதும் கல்யாணச் செலவில் என்று கரைந்தது. வேலையும், ஊதியமும் கடமையாய், கட்டாயமாய் என்றாகி விட்டது.

லலிதா வேலை செய்யத் தொடங்கி வெகு நேரமாகியும் அப்பாவின் நினைவாகவே இருந்தாள். மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையிலும் அவளின் நினைவுகளின் ஓரத்தில் சோகம் இழைந்தோடிக் கொண்டிருந்தது. ´நாங்களாவது பக்கத்தில் இருந்திருந்தால் அப்பா பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். பொல்லாத நாட்டுப் பிரச்சனை அதற்குக் கூட வழியில்லாது செய்து விட்டதே.´ பேதலித்த மனதுடன் காரை விட்டு இறங்கினாள்.

முன்னாலிருந்த சிறுவருக்கான விளையாட்டு மைதானத்தில் குளிரையும் பொருட்படுத்தாது சில ஜேர்மனியக் குழந்தைகள் பனிகளைச் சேர்த்து பெரிய ஐஸ் மனிதன் ஒன்றைச் செய்து விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னும் சில குழந்தைகள் ஐஸ் கட்டிகளை உருட்டி, உருட்டி ஒருவரையொருவர் கலைத்துக் கலைத்து எறிந்தார்கள்.

அவர்களின் விளையாட்டில் லலிதா தன்னை மறந்து லயித்திருந்த அந்தக் கணத்தில் ஒரு சிறிய ஐஸ்கட்டி சில்லென்று அவளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பினாள். றூடி ஒரு பெரிய ஐஸ் உருண்டையுடன் நின்று, லலிதாவுக்கு எறியப் போவது போலப் பாவனை காட்டினார்.

Nein... Nein... (நோ.. நோ..) லலிதா சிரித்தவாறு கத்திக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.

அவளுக்குள் இருந்த இறுக்கம் கலைந்து மீண்டும் அவள் மனசு இலேசாகியிருந்தது. அந்த உஷாருடன் வீட்டுக்குள் மீண்டும் பம்பரமாய் சுழலத் தொடங்கினாள்.

30.1.2000

 

 

உபதேசம்

நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன்.

என்னை விடப் பத்து வருடங்கள் இளையவளானாலும் நட்போடு பழகக் கூடியவள். நான் எனது சிறு குழந்தைகளுடன் ஜேர்மனிய வாழ்க்கையை ஆரம்பித்த சில காலப் பொழுதுக்குள், ஒரு நாள் ஸ்ருட்கார்ட் புகையிரத நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்தேன். அப்போதுதான் திருமணமாகி அவளும், அவள் கணவனும் கல்யாணக்களை கலையாத புத்தம் புதுத் தம்பதிகளாய் தெரிந்தார்கள்.

அவளது பேச்சும், அவளிடம் இருந்த நாட்டுப் பற்றும், முதற் சந்திப்பிலேயே என்னுள் அவள்பால் ஓர் பிடிமானத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்த ஓரிரு முறைகளிலான சந்திப்பில் வயது வித்தியாசம் பாராது நாங்கள் நட்பாகி விட்டோம்.

தமிழ்ப் பெண்களைக் காணுவதே அரிதான அந்தக் காலகட்டத்தில், அவள் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தெரிந்தாள். அதனால் தூரம் என்றும் பார்க்காமல் மாதம் ஒரு முறையாவது பிள்ளைகளையும் இழுத்துக் கொண்டு, ரெயின் ஏறி அவளைச் சந்தித்து வருவேன்.

எனது பிள்ளைகளுடன் அவள் பேசும் விதமே எனக்கு மகிழ்வூட்டுவதாக இருக்கும். உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஒருவரும் இல்லாத அந்நிய தேசத்தில், அவள் ஒரு மாமியாய், சித்தியாய்.. நின்று என் பிள்ளைகளுக்குப் புத்திமதிகள் சொல்லும் போது ஒரு நெருக்கமான உறவு கிடைத்து விட்டதான உணர்வில் மனம் நிறைவேன்.

எனது மகனுக்கு அவளை நன்கு பிடிக்கும். “மாலதி அக்கா! மாலதி அக்கா!" என்று அன்போடு பழகுவான். அவளும் அவனோடு அன்பாகப் பழகுவாள். எப்போதும் நாட்டைப் பற்றியே பேசுவாள். “நாங்கள் எல்லாரும் எப்பிடியாவது நாட்டுக்குப் போயிடோணும்" என்பாள். ஏதாவது அந்தரம், அவசரம் என்று வந்தால் கூட நம்பி அவளிடந்தான் எனது பிள்ளைகளை விட்டுச் செல்வேன்.

என்னோடு பேசும் போதெல்லாம் “அக்கா, எனக்குப் பிள்ளையள் பிறந்தால், ஒரு பத்துப், பன்னிரண்டு வயசுக்கு மேலை அதுகளை இந்த நாட்டிலை வைச்சிருக்க மாட்டன். எப்பிடியாவது எங்கடை நாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போடுவன். இங்கை இருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். நீங்களும் உங்கடை பிள்ளையளை பிறந்தநாள் விழா, அது இதெண்டு சொல்லி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கோ அல்லது வேறை ஜேர்மன் களியாட்டங்களுக்கோ விட்டிடாதைங்கோ" என்பாள்.

எனது பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வரும் போது அவள் சொன்னது போல வளர்ப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்தது. வகுப்புப் பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது எமது நகரில் நடைபெறும் களியாட்டங்களுக்கோ என் பிள்ளைகள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. பத்துப் பன்னிரண்டு வயது வந்ததும், அவர்களது படிப்பைக் குழப்பிக் கொண்டு, ஒரு சுமூக நிலைக்கு வராத எனது நாட்டுக்கு ஓடவும் முடியவில்லை.

அதன் பின்னான பொழுதுகளில் மாலதி என்னை அடிக்கடி கண்டித்தாள். “நீங்களக்கா, பிள்ளையளுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் குடுக்கிறிங்கள். இப்ப இந்த வயசிலை இப்பிடி ஜேர்மன் பிள்ளையளின்ரை வீடுகளுக்கு விட்டிங்கள் எண்டால், நாளைக்கு 14, 15 வயசு வரக்கை டிஸ்கோவுக்கும் விட வேண்டி வரும்" என்பாள்.

ஒரு தரம் எனது மூத்தவன் சினிமாப் பாடல் ஒன்றை மிகவும் ரசித்துக் கேட்ட போது, அவள் அவளது கணவனோடு சேர்ந்து “பாருங்கோ அக்கா... இவன் கேட்கிற பாட்டை! இவனக்கா மெதுமெதுவா நாட்டை மறக்கிறான். எல்லாம் நீங்கள் குடுக்கிற இடந்தான்.." எனக் கடிந்தாள்.

இன்னொரு தரம், மைக்கல் ஜக்சனின் பாட்டு ஒன்று தொலைக்காட்சியில் போன போது, தொலைக்காட்சியின் சத்தத்தையும் கூட்டி விட்டு, உடம்பை நெளித்து நெளித்து ஒரு ரசனையுடன் அவன் ஆடிய போது, அவள் போட்ட கூச்சலில் நானே ஆடிப் போய் விட்டேன்.

அவளது இந்த உபதேசங்கள் எமக்கிடையேயான நட்புக்கு எந்தக் குந்தகமும் விளைவிக்காத போதும், அவள் சொல்வது போல என்னால் என் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்பதால் அவளிடம் அடிக்கடி செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன்.

இந்த இடையில் அவளுக்கும் ஒவ்வொன்றாக மூன்று குழந்தைகள் பிறந்து விட்டார்கள். அந்த சந்தோசங்களில் கலந்தும், அடிக்கடி தொலைபேசியில் கதைத்தும் எங்களுக்குள்ளான உறவைத் தொலைத்து விடாது காத்து வந்தேன்.

ஆனாலும் காலப் போக்கில் ஐரோப்பிய அவசரங்களுக்குள் தொலைபேசும் இடைவெளிகள் கூட நீண்டு கொண்டே போயின. அவளது பிள்ளைகளும் வளர்ந்து கொண்டிருக்கும் போது அவளுக்கான அவளுடைய நேரங்களும் குறுகிப் போயின. நேரடிச் சந்திப்புகள் மிகவும் அரிதாக, இப்படித்தான் ஏதாவதொரு விடயம் சாட்டாக வரும் போது தொலைபேசிக் கொண்டோம்.

இப்போது அவள் நாட்டுக்குப் போய் வந்தது சாட்டாகி விட்டது. அழைத்தேன். தொலைபேசியின் சில தரச் சிணுங்கல்களுக்குப் பின்பே இணைப்பில் வந்தாள். கொஞ்சம் களைப்பாக இருந்தாள். பயண அலுப்பு இன்னும் தீரவில்லை என்பது தெரிந்தது. பின்னணியில் “சுற்றிச் சுற்றி வந்தீக..." படையப்பா படப் பாட்டு சத்தமாகக் கேட்டது.

“கொஞ்சம் சத்தத்தைக் குறை" என்று திரும்பிக் கத்தி விட்டு, “இவன் சஞ்சுதன் அக்கா, படையப்பா பாட்டுப் போடாமல் சாப்பிட மாட்டான். ஒரு நாளைக்கு மூண்டு தரத்துக்;குக் குறையாமல் எங்கடை வீட்டை படையப்பா ஓடுது." சலிப்படைந்த பாவனையுடன் பேசினாலும் அதைச் சொல்லும் போது ஏதோ ஒரு பெருமிதம் அவள் குரலில் ஒலித்தது.

“எப்பிடி நாடு இருக்கு?" நான்தான் ஆவலோடு கேட்டேன்.

“சா.. அதையேன் கேட்கிறிங்கள் அக்கா? ஒரே இலையான்.. வெய்யில்.. சீ.. எண்டு போச்சுது."

தொடர்ந்து நிறையவே கதைத்தோம்.

“இனி எப்ப நாட்டுப் பக்கம் போற ஐடியா?"

“நாட்டுக்கோ..! இதுதான் கடைசியும் முதலும். இந்தப் பிள்ளையளாலை அதைத் தாங்கேலாது. பாவம் பிள்ளையள். அந்த வெய்யிலும்.. இலையானும்.. காய்ஞ்சு போய்க் கிடக்கு எல்லாம். இதுக்குள்ளை நுளம்பு வேறை. இதுகளுக்கு அந்த நாடு ஒத்து வராது. இனி அந்தப் பக்கமே போறேல்லை எண்டு தீர்மானிச்சிட்டன்."

பேசுவது மாலதிதானா? மனசு வினாவியது. அதற்கு மேல் எனக்குப் பேச்சே வரவில்லை.

4.11.2004

 

 

விழிப்பு

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து இந்து குமுறினாள். “நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ?"

“இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா, சிரிச்ச முகத்தோடை வரவேற்கோணும்" சினந்தான் சங்கர்.

அவன் ஸ்ரெபியுடன் சுற்றி விட்டுத்தான் இவ்வளவு தாமதமாக வருகிறான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்ததால் “அந்த ஆட்டக்காரியோடைதானே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வாறிங்கள். எனக்குத் தெரியும்." என்றாள் எரிச்சலும் கோபமுமாக.

“சும்மா காகம் கத்திற போலை எப்பவும் கத்திக் கொண்டிராதை. குடும்பம் எண்டால் இப்பிடிக் கனக்க இருக்கும். பொம்பியைள்தான் இதையெல்லாம் அனுசரிச்சுப் போகோணும். ஏன் உனக்கு கொம்மா இதொண்டும் சொல்லித் தரேல்லையே? என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாவோ? ஒரு நல்ல பழக்கங்கள் கூடப் பழக்காமல்..! உன்னைப் போய் கலியாணம் கட்டினனே!" சங்கர் வழக்கம் போலவே வக்கிரத் தனமாகக் கதைத்தான்.

இந்துவால் அவனது அலட்சியம் கலந்த வக்கிரப் பேச்சை அணுவளவேனும் ரசிக்க முடியவில்லை. செய்வதையும் செய்து விட்டு அதற்கு வேறு, நியாயம் தேடும் அவனது நியாயமற்ற பேச்சு அவளை கோபத்தில் கொதிக்க வைத்தது. ஏற்கெனவே மனதை வதைத்துக் கொண்டிருந்த வேதனைக்கும், ஏமாற்றத்துக்கும் கோபம் தூபம் போட “நானும் இப்பிடி வேறொருத்தனோடை சுத்திப் போட்டு வந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்ளுவிங்களோ? அல்லது உங்களாலை சகிக்கத்தான் முடியுமோ?" சீற்றத்துடன் கேட்டாள்.

சங்கருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. “என்னடி கதைக்கிறாய்? ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். அது சகயம். அதுக்காண்டி பொம்பிளையளும் அப்பிடிச் செய்யிறதோ?" கத்தினான்.

“ஏன் செய்யக் கூடாது." கோபம் அழுகையாக வெடிக்க கேவலுடன் வார்த்தைகளை வீசினாள் இந்து.

“பெண் எண்டால் தாய். தாய் தெய்வத்துக்குச் சமமானவள். அந்த தெய்வத்துக்குச் சமமான தாய் பிள்ளையளைப் பெத்து பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்க வேண்டியவள். அவள் அப்பிடிச் செய்யக் கூடாது." கோபம் கொப்பளிக்க சங்கர் இன்னும் சத்தமாகக் கத்தினான்.

இந்துவும் விடவில்லை. “பெண்ணெண்டால் தெய்வம் எண்டது உங்களுக்குத் தெரியுது. நீங்கள் செய்யிறது ஒரு செய்யத் தகாத வேலை எண்டதும் உங்களுக்குத் தெரியுது. இருந்தும் அப்பிடியொரு வேலையைச் செய்து பெண்ணெண்ட தெய்வத்துக்குத் துரோகம் செய்யி.." இந்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை.

அதற்கிடையில் இடைமறித்த சங்கர் “இப்ப கதையை நிப்பாட்டு. விட்டால் கதைச்சுக் கொண்டே போவாய். புருசன் வந்திருக்கிறன். சாப்பிட்டியோ, குடிச்சியோ எண்டு கூடக் கேட்காமல், உன்னை இங்கை கூப்பிட்டன் பார். அது என்ரை பிழை. ஊரிலை எண்டால் இப்பிடிக் கதைப்பியே? வாய் வெத்திலை போட்டிருக்கும். நீ திரும்பி ஊருக்கே போயிடு." என்றான். அவன் வார்த்தைகளில் நையாண்டியும், அதிகாரமும் தொக்கி நின்றன.

இந்து கொதித்துப் போனாள். “இப்பிடியே போனால் நான் தற்கொலை செய்து செத்துப் போடுவன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு என்ரை அருமை தெரியும்."

இப்போது சங்கர் பெரிய நையாண்டிச் சிரிப்பொன்றைச் சிரித்தான். இந்துவுக்கு அவனைப் பாhக்கவே அருவருப்பாக இருந்தது.

சிரித்தது போதாதென்று “நீ எங்கை சாகப் போறாய்? நீ செத்தாயெண்டால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதலாள் நானாத்தான் இருக்கும்" என்றான்.

இந்துவை அவன் வார்த்தைகள் தீயாகச் சுட்டன.

சங்கர் தொடர்ந்து “போன முறையும் இப்பிடித்தான் சாகப் போறன் எண்டு சொல்லி மருந்து குடிச்சியே, அப்ப நான் உன்னைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் கொஸ்பிட்டல்லை போட்டனே, அதுதான் நான் செய்த பெரிய தப்பு" என்றான்.

மகன் கோகுலை கிண்டர்கார்டனில் விட்டு விட்டு பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்த இந்துவின் மனதில் முதல் நாள் சங்கருடன் நடந்த சண்டையும், சங்கரின் ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே சுழன்று கொண்டிருந்தன. கோபத்தில் உடம்பு கொதிப்பது போல் இருந்தது.

போனவருடம் இப்படித்தான். சண்டையில் வாக்குவாதம் உச்சக் கட்டத்துக்கு வர இந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னாள். உடனே சங்கர் “நல்லாச் செய். அப்பாடா ஒரு சனியன் துலைஞ்சுது எண்டு நான் நிம்மதியா இருப்பன்" என்றான்.

கோபம் தலைக்கேற இந்து ஓடிப்போய் மலசலகூடம் கழுவும் மருந்தை எடுத்துக் குடித்து விட்டாள். மருந்து உள்ளே போகும் போதுதான் தான் செய்தது எத்தகையதொரு மடைத்தனமான வேலை என்பதை உணர்ந்தாள். உணர்ந்து என்ன பயன்? உடலுக்குள் தீப்பற்றி எரிவது போன்ற வேதனையில் துடித்து விழுந்தாள்.

சங்கர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பயந்து போய் விட்டான். வேதனையில் புரளும் இந்துவைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் காரில் ஏற்றினான். இந்து அப்படியே மயங்கி விட்டாள்.

அவள் மீண்டும் கண் விழித்த போது மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தாள். உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது. எழும்ப முயற்சித்தாள். அவளால் அசையக் கூட முடியவில்லை. நடந்த விடயங்களை மெல்ல அசை போட்டுப் பார்த்தாள். மனசை சோகம் நிறைக்கக் கண்கள் கலங்கின. அழக் கூட அவளால் முடியவில்லை. அசதியில் மீண்டும் தூங்கி விட்டாள்.

மீண்டும் அவள் கண் விழித்த போது சங்கர் கோகுலுடன் வந்திருந்தான். கோகுல் சோகமாய் இருந்தான். இந்துவின் கைகளைப் பிடித்த படி அழுதான். “எப்ப அம்மா வீட்டை வருவீங்கள்?" என்று ஏக்கத்துடன் கேட்டான். இந்துவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நா உலர்ந்திருந்தது. அவனை அணைத்துக் கொள்ள எண்ணி கைகளை நீட்ட எத்தனித்தாள். அவளால் கைகளை அசைக்கவே முடியவில்லை. சங்கரைப் பார்த்தாள். கொஞ்சம் கலைந்து போய் இருந்தான்.

“தவறுதலா மருந்தைக் குடிச்சிட்டன் எண்டுதான் டொக்டரிட்டைச் சொல்லு. பிறகு ஏதாவது ஏடாகூடாமாச் சொல்லி என்னை மாட்டிப் போடாதை." என்றான்.

இந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு கோகுலைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

சங்கர் போன பின் தாதியைக் கேட்டு, வேறொரு நகரில் இருக்கும் அண்ணன் மாதவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவைகளைச் சொன்னாள். அவன் அடுத்த சில மணிகளிலேயே பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். “நான் சங்கரை என்னெண்டு கேட்கிறன். நீ கவலைப் படாதை" என்றான். பக்கத்தில் இருந்து ஆறுதலாகக் கதைத்தான். ஆனால் கடைசியில் போகும் போது “இந்து, இனி இப்பிடியான வேலையளைச் செய்து போடாதை, என்னெண்டாலும் பொம்பிளையள்தான் அனுசரிச்சுப் போகோணும்" என்று சொல்லி விட்டுப் போனான்.

பின்னர் இந்து நோர்வேயில் இருக்கும் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது அவனும் மாதவனைப் போலவே பதறினான். சங்கர் மேல் கோபம் கொண்டு திட்டினான். ஆனால் கடைசியில் “இந்து, ஆம்பிளையள் எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம். பொம்பிளையள்தான் கெட்டித்தனமா அதுகளை உணர்ந்து நடக்கோணும். உனக்கு கெட்டித்தனம் போதாது" என்று சலித்தான். தொலைபேசியை வைக்கும் போது “இந்து, இனி இப்பிடி புத்தி கெட்ட முடிவுகளை மட்டும் எடுத்துப் போடாதை. சங்கரைத் திருத்தப்பார்." என்றான்.

இந்துவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´எல்லாரும் என்னிலைதானே பழியைப் போடினம். சங்கரின்ரை தவறு ஒருத்தருக்கும் தவறாத் தெரியேல்லையே! சங்கராவது என்ரை நடவடிக்கையாலை திருந்தினானோ எண்டு பார்த்தால் அவன் கூடத் திருந்தினதாத் தெரியேல்லையை´ என்று மனசுக்குள் பெரிதும் குழம்பினாள்.

சங்கர் இந்துவைப் பார்க்க இடைக்கிடை மருத்துவமனைக்கு வந்து போனான். மாதவன் வந்து இந்துவைப் பார்த்துப் போன மறுநாளே கோகுலை மாதவன் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். பொறுப்பான அப்பாவாக வீட்டில் நின்று கோகுலைப் பார்க்கவில்லை. எல்லாவற்றையும் மருத்துவமனையின் தனிமையில் இருந்து யோசித்துப் பார்த்த இந்துவுக்கு கோகுலை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. ´சங்கருக்காக கோகுலைத் தண்டிச்சுப் போட்டனோ´ என்ற நினைவு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

இப்படியே சில வாரங்கள் ஒடி இந்துவும் ஓரளவு குணமாகினாள். “மிஸிஸ் சங்கர், உங்கடை குடல் மிகவும் பலவீனமாப் போட்டுது. இந்த முறை ஏதோ அதிர்ஸ்டவசமாத் தப்பீட்டிங்கள். இன்னொருக்கால் இப்பிடி நீங்கள் மருந்தைக் குடிச்சால் எங்களாலை உங்கiளைக் காப்பாற்றேலாமல் போயிடும். இது உங்கடை உடம்பு. நீங்கள்தான் உங்கடை உடம்பிலை கவனமா இருக்கோணும்..." என்ற அன்பான, கண்டிப்பான பல நிபந்தனைகளோடு டொக்டர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்த பின் சங்கரிடம் தென்பட்ட சில மாற்றங்களை வைத்து சங்கர் திருந்தி விட்டான் என்றே இந்து நினைத்தாள். அவளின் அந்த நம்பிக்கை எல்லாம் சில நாட்களுக்குத்தான். நாட்கள் போகப் போக அவன் திருந்தவில்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். தாங்க முடியாமல் அடிக்கடி குமுறினாள். அந்தக் குமுறலின் பிரதிபலிப்புத்தான் நேற்றைய காரசாரமான சண்டையும்.

மீண்டும் தனக்கும் சங்கருக்கும் இடையில் மனதளவில் இவ்வளவு தூரம் விரிசல் ஏற்பட்டு விட்டதில் அவளுக்குச் சரியான கவலையாக இருந்தது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் “நீ செத்தால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதல் ஆள் நானாத்தான் இருக்கும்." அவளுக்குள் திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

இந்தச் சண்டை நடந்த போது கோகுல் நித்திரை என்றுதான் இந்து நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சண்டை முடிந்து சங்கர் போய்ப் படுத்த பின் அவள் வெகு நேரமாக அந்தக் கதிரையிலேயே இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது கோகுல் வந்து “அம்மா அழாதைங்கோ, வந்து படுங்கோ" என்றான். அவன் கண்கள் நீண்ட நேரம் அழுததற்குச் சான்றாக வீங்கிச் சிவந்திருந்தன.

அதை நினைக்க நினைக்க இந்துவுக்கு ஒரே கவலையாக இருந்தது. கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ´ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாகப் பிறந்தானோ? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற அழுமுஞ்சி அம்மா, யாரோ ஒருத்தியோடு நாளெல்லாம் ஊர் சுற்றி விட்டு நேரம்; கழித்தே வீட்டுக்கு வருகிற அப்பா. இவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அந்தப் பிஞ்சு மனசில் என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்குமோ´ என்ற நினைவுகளெல்லாம் வந்து அவளைக் குழப்பின.

இவ்வளவு நாளும் இவைகளைப் பற்றிச் சொட்டுக் கூடச் சிந்திக்காமல் இருந்தததை எண்ணி இந்து தனக்குள்ளே குறுகினாள். வெட்கப் பட்டாள். கலங்கினாள். கோகுலுக்காக மனங் கசிந்தாள். சங்கர்தான் இப்படி விட்டேற்றியாக, பொறுப்பற்றவனாக, கோகுலின் பிஞ்சு மனசு பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பாராதவனாய் தன் பாட்டில் திரிகிறான் என்றால் தனக்கு மட்டும் எங்கே அறிவு போய் விட்டது, என்று தன்னையே தான் கேட்டு மனசுக்குள் நொந்து கொண்டாள். தனது இந்தச் செய்கையால் கோகுலின் வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள்.

அவளுக்குத் தன் மீதே கோபம் கோபமாக வந்தது. ´எனக்கென்ன அறிவில்லையோ, அல்லது அழகில்லையோ, அல்லது கெட்டித்தனந்தான் இல்லையோ! சங்கர் ஏன் என்னை விட்டிட்டு இன்னொரு பெண்ணோடை சுத்தோணும்! இப்பிடிப் பட்ட ஒரு சுயநல விரும்பிக்காண்டி நான் ஏன் என்ரை வாழ்க்;கையையும், கோகுலின்ரை வாழ்கையையும் வீணாக்கிக் கொண்டிருக்கோணும்!´ என்று தனக்குள்ளே பொருமினாள். வாய் விட்டுச் சத்தமாக அழவேண்டும் போல சோகம் அவளைப் பிசைந்தெடுத்தது.

இந்த உலகத்து ஜீவராசிகள் அத்தனையுமே சந்தோசமாக இருப்பது போலவும், தான் மட்டும் தனிக்காடொன்றில் விடப்பட்டுத் தண்டிக்கப் படுவது போலவும் உணர்ந்தாள். ஓடிப் போய் அம்மாவின் மடியில் அப்படியே முகத்தைப் புதைத்து வைத்து அழ வேண்டும் போல அவளுக்கு இருந்தது.

இந்து தாயகத்தில் அம்மா அப்பாவின் அன்பிலும், நல்ல வழி நடத்தலிலும் மிகவும் ஒழுக்கமாகவும், வசதியாகவும் வாழ்ந்தவள். ஏழு வருடங்களுக்கு முன் அண்ணன்மார் பேசிய கல்யாணத்தில் சங்கர் குடி இல்லை, சிகரெட் இல்லை, அருமையானவன் என வர்ணிக்கப்பட்டு எல்லாப் பெண்களையும் போல மணாளனின் நிய முகமும், சுய குணமும் தெரியாமலே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையின் இனிமைகளைப் பற்றிய கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தவள்.

சங்கருடனான அவளது ஆரம்ப நாட்கள், வாரங்கள், மாதங்களாய் இனிப்பாகத்தான் இருந்தன. எப்போது மாறியது என்றே தெரியவில்லை. எல்லாமே மாறிப் போய் விட்டன.

அவளுக்கு சங்கரை விட்டுவிட்டு யார் கண்ணிலும் படாது எங்கேயாவது ஓடி விடவேண்டும் போலிருந்தது. எங்கே? அதுதான் தெரியவில்லை. என்ன வந்தாலும் போகும் போது கோகுலை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்

ஆனால் போய் என்ன செய்வது? எப்படி வாழ்வைத் தொடர்வது? என்ற கேள்விகள் அவளைக் குடைந்து கொண்டே இருந்தன. இங்கு ஜேர்மனியில் இப்படியான நிலையில் சமூகநல உதவிகள் கிடைக்குந்தான். அத்தோடு சங்கரும் கோகுலின் செலவுக்கு, குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் என சட்டப் படி தீர்மானிக்கப் படும். அவளுக்கோ இதற்கு மனம் ஒப்பவில்லை. சங்கரை விட்டுப் போக நினைத்த பின் அவனின் பணத்தை எடுக்க விருப்பம் வரவில்லை. யாரிடமும் தங்கி தான் வாழக் கூடாது, என்று எண்ணிக் கொண்டாள். முக்கியமாகச் சங்கரைச் சாரக் கூடாதென மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அன்று வேலையிடத்தில் வேலைகளின் மத்தியிலும், வேலை முடிந்து வீடு திரும்புகையிலும், கோகுலைக் கிண்டர்கார்டினால் கூட்டிக் கொண்டு வரும் போதும் இது பற்றி நிறையவே சிந்தித்தாள். இறுதியில் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள்.

´நல்ல வேலையொண்டு எடுக்கோணும். அதுக்கு ஏதாவதொரு தொழில் சம்பந்தமாப் படிக்கோணும். எல்லாத்துக்கும் முதல்லை டொச்சைப் (ஜேர்மன் மொழியைப்) படிக்கோணும்…´ நினைவுப் படிகளை அடுக்கத் தொடங்கினாள், தான் எடுத்துக் கொண்ட முடிவைச் செயற்படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் கொள்ள.

தற்போது அவளுக்குத் தெரிகின்ற ஜேர்மன் மொழி ஒரு தொழிற்கல்வி கற்பதற்குப் போதுமானதா, என்பது அவளுக்கே தெரியாது. அன்றே அவள் இது சம்பந்தமான அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த டொச்சில்(ஜேர்மன் மொழி) ஆலோசனைகள் கேட்டாள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த நாளே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டுப் போய் அவர்களை நேரடியாகச் சந்தித்தாள்.

இந்து ஜேர்மனிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் டொச் படிப்பதற்கு அவர்களால் எந்த விதமான பண உதவியும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளுக்கு எந்த ஒரு நிலையான தொழிலும் இல்லாததால் அதுவும் அவள் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இருப்பதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் தொழிற்கல்வி கற்பதற்கான செலவை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். அவளுக்கு ஓரளவு டொச் தெரிந்ததால் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருக்கும் கொம்பியூட்டர் கோர்ஸ் இல் அவள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள்.

இருள் நிறைந்த தன் வாழ்விலும் ஒளி வீச வாய்ப்புண்டு என்பதைக் கண்டு இந்து உற்சாகமானாள். கலக்கமான முகத்துடன், அவள் உள் நுழைந்த நேரத்திலிருந்து அவளையே கவனித்துக் கொண்டு அங்கு கடமையிலிருந்த இன்னொரு பெண் இவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டவளாய், இவள் நன்றி சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடை பெறும் போது “மிஸிஸ் சங்கர், உங்களுக்கு விருப்பம் எண்டால் இந்த நாலு மாசமும் நீங்கள் உங்கடை செலவிலை ஒரு டொச் கோர்ஸ் செய்து உங்கடை டொச் அறிவைக் கூட்டிக் கொள்ளுங்கோ." என்று ஆலோசனை கூறினாள்.

தனக்கு ஆலோசனை கூறவும், தனக்கு உதவி செய்யவும், தன்னுடன் இன் முகத்துடன் பேசிக் கொள்ளவும் கூட இந்த அந்நிய தேசத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள், என்ற நியத்தை நினைத்து இந்து நியமாகவே மகிழ்ந்தாள்.

நேரங்களையோ, காலங்களையோ வீணடிக்காமல் உடனடியாகவே தனது பகுதி நேர வேலைக் காசில் டொச் படிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தாள்.

இம்முறை அவள் முடிவு அவளுடையதாகவே இருந்தது. கணவன் என்ற பெயரில் அவளைக் கலங்க வைக்கும் சங்கரிடமோ, பெண் என்றால் வாய் மூடி மௌனியாக வாழ வேண்டுமென்று நினைக்கும், இன்னும் பழமையிலேயே ஊறிப் போயிருக்கும் அண்ணன்மாரிடமோ அவள் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவர்கள் ஏதாவது சொல்வார்களே என்று பயப்படவும் இல்லை. ´இது என் வாழ்வு. என் மகன் கோகுலின் வாழ்வு. நாமிருவரும் வாழாது ஊருக்குப் பயந்து நரகத்துழல்வது வீண்.´ தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

சங்கர் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக இருந்தால் அடுத்த கணமே அவனை விட்டுப் பிரிந்து போகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். படுக்கைக்குப் போகும் போது இந்துவின் மனசு மிகவும் லேசாக இருந்தது.

அன்றும் வழமை போல நேரங்கழித்தே இந்துவுடன் சண்டை போடத் தயாராக வீட்டுக்குள் நுழைந்த சங்கர் ´இப்போதாவது விழித்துக் கொண்டேனே!´ என்ற புத்துணர்வு தந்த திருப்தியிலும், எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை தந்த பலத்திலும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இந்துவைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் விழித்தான்.

1997

 

 

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும், எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாது எத்தனையோ பேருடன் வாய் குளறி… தடுமாறி இருக்கிறேன்.

அப்படியான சமயங்களில் “எழுத்தின் ஆங்காரம், பேச்சில் ஓங்கவில்லையே" எனப் பலர் என்னிடம் ஆச்சரியப் பட்டுள்ளார்கள். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒத்திகை பார்ப்பு என்பது எனக்குள்ளே அரங்கேறும்.

அவர் மீது எனக்கு நல்ல மதிப்பு. அதனால்தான் இன்று இத்தனை தரமாய் ஒத்திகை பார்ப்பு. மேடைகளிலும், வானொலிகளிலும் வாய் திறந்தாலே அருவியாகக் கொட்டும் அவர் தமிழில், நான் மெய் மறந்து போயிருக்கிறேன். வார்த்தைகளில் அழகு மட்டுமா? வயதான அவரிடம் இருந்து வெளிப்படும் முற்போக்குச் சிந்தனையுடனான, புதுமை நிறைந்த, சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் என்ன ஒரு தெளிவு. அடித்து வைத்துச் சொல்லும் கருத்துக்களிலுள்ள நியாயம். உண்மையிலேயே நான் வியந்து போவேன்.

கடந்த வாரமும் ஐரோப்பிய வானொலி ஒன்றில் கிட்டத்தட்ட 40 நிமிட நேரங்கள் அவரது வீச்சான உரை ஒலிபரப்பானது. எடுத்துக் கொண்ட விடயம், ´ஐரோப்பியாவில் நடைபெறும் ஆடம்பரமான சாமத்தியச் சடங்குகள் அவசியமானதுதானா..?´

என்றதாக இருந்தது. இன்றைய எமது கணினி உலகப் பெண்களே சாமத்தியச் சடங்கு அவசியந்தான் என்று எண்ணி தமது பெண் குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருக்கும் அவல நிலையில் அவர் ´அது அவசியமே இல்லை´ என்று வாதிட்டு, வானொலி அறிவிப்பாளருக்கு இடையிடையே எழுந்த அது சம்பந்தமான சந்தேகங்களுக்கும், தங்கு தடையின்றிப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஐம்பதைத் தொட்ட ஒருவர் இப்படி முற்போக்கு நிறைந்த ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்ததில் எனக்கு மெய்சிலிர்த்தது. அவரைக் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

அந்த எனது நினைப்பை இன்று எப்படியாவது செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில், மீண்டும் ஒரு முறை மனசுக்குள் எப்படி அவருடன் பேசுவது என ஒத்திகை பார்த்து விட்டு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்.

வழமைக்கு மாறாக எனக்கும் இன்று தங்கு தடையின்றிப் பேச வந்தது. பாராட்டினேன். அவரை நியமாகவே மனசாரப் பாராட்டினேன். அவரின் தமிழ்ப்புலமையை, பேசுந்திறனை, பொருள் கொண்ட கருத்துக்களை, அதைச் சபையோர்க்குத் தரும் விதத்தை... என்று பாராட்டினேன். பேச்சு அலுக்கவில்லை. இருந்தாலும் பின்பொருமுறை பேசுகிறேன் என்று சொல்லி தொடர்பைத் துண்டிக்க முனைந்தேன்.

அவர் பல தடவைகள் நன்றி சொன்னார். “இண்டைக்கெண்ட படியால் என்னைப் பிடிச்சிங்கள். இனி இரண்டு கிழமைக்கு எனக்கு ஒண்டுக்கும் நேரமிராது" என்றார்.

“ஏன் நாட்டுக்குப் போறிங்களோ..?" இன்றைய இப்போதைய நிலையில் புலத்தில் இதுதானே சகயம் என்பதால் உடனேயே எந்த சிந்தனையுமின்றிக் கேட்டு விட்டேன்.

“இல்லையில்லை..., மகள் பெரியபிள்ளையாகி ஒரு மாசமாச்சு. வாற சனிக்குத்தான் ஹோல் கிடைச்சுது. அதுதான் அந்த வேலையளோடை ஓடித் திரியிறன். எல்லாருக்கும் கார்ட் குடுத்திட்டன்…" அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நான் தொலைபேசியை வைத்து விட்டேன்.

21.8.2003

 

 

எதனால்?

அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது.

எனது எதிர்பார்ப்பு மாமாவின் பிள்iளைகளுடனான சந்திப்பும், அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் தன் தங்கையைக் கொழும்புக்குக் கூட்டிப் போன மாமாவின் மேல் இருந்தது.

“எத்தினை தரம் சொன்னனான். கொழும்பு வாழ்க்கை வேண்டாம். நீ போய் வேலையைச் செய்திட்டு லீவுக்கு வா. தங்கச்சியும், பிள்ளையளும் இங்கை இருக்கட்டும் எண்டு. கேட்டவனே?! 58 இலை வேண்டின அடி அவனுக்குக் காணாது. இப்ப என்ரை தங்கைச்சியையும் அவதிப்பட வைச்சிட்டான்."

இன்று முழுக்க அப்பாவின் புறுபுறுப்பு இப்படித்தான் தொடர்கிறது.

அம்மாவுக்குக் கூட ஆத்தியடிச் சனமெல்லாம் கொழும்பில் ஒரு வீடு, இங்கு ஆத்தியடியில் ஒரு வீடு என்று வைத்துக் கொண்டு, கொழும்பில் போய் இருந்து பிள்ளைகளை கொழும்புப் பாடசாலைகளில் படிக்க வைப்பதைப் பார்த்து, நாங்களும் அப்படிச் செய்தாலென்ன என்ற நப்பாசை இடைக்கிடை வரும்.

அப்பாவோ “இஞ்சை பாரும் உந்த ஆசையளை மட்டும் விட்டுத் தள்ளும். எங்கடை இடம் இதுதான். கொழும்பிலை இருக்கிற ஆக்கள் பாரும், ஒரு நாளைக்கு நல்லா வேண்டிக் கட்டிக் கொண்டு ஓடி வருவினம்." என்று ஒரேயடியாகச் சொல்லி விடுவார்.

தான் கொழும்பில் வேலையாய் இருக்கும் காலங்களிலும் பாடசாலை விடுமுறைக்கு மட்டும் எங்களை அங்கு கூட்டிப் போவாரே தவிர எந்தக் கட்டத்திலும் எங்களை அங்கு நிரந்தரமாக இருக்க விட மாட்டார்.

இப்படி இருக்கையில்தான் யாழ்ப்பாண அரச மருத்துவமனையில் கடமையிலிருந்த மாமாவுக்கு 1971 இல் தெகிவளை மருத்துவமனைக்கு மாற்றலாகியது. மாமா தனியப் போக விரும்பாது மாமி, பிள்ளைகளையும் தன்னோடு அழைத்துப் போய் விடத் தீர்மானித்தார். அப்பா எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். மாமா கேட்கவில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு தெகிவளைக்கு மாமி, பிள்ளைகளுடன் போய் விட்டார்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அல்லும் பகலும் பழகி வளர்ந்த மச்சாள் சுகி, மச்சான் கோபு எல்லோரும் போய் விட்டதில் எனக்கும் கவலைதான்.

அவர்கள் இன்று வரப் போகிறார்கள். சும்மா இல்லை. அடி வேண்டிக் கொண்டு வருகிறார்கள். அடி வேண்டியது மட்டுமல்லாமல், உடைமைகளையும் தொலைத்து விட்டு வருகிறார்களாம். எழுபத்தி ஏழுக் கலவரம் தெரியுந்தானே. அவதிப்பட்டு, அவலப்பட்டு எங்கேயோ ஒழித்து இருந்து தப்பிப் பிழைத்து வருகிறார்கள்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. பல தடவைகள் மதிலால் எட்டிப் பார்த்து விட்டேன். ஆத்தியடிச் சந்தியில் யாராவது பயணத்தால் வருவது தெரிகிறதா என்று.

கடைசியாக அவர்கள்; ஒரு பாடசாலை லீவுக்கு வந்து போய், ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. அவர்கள் நின்ற அந்த ஒரு மாதமும் நல்ல பம்பல். விளையாட்டு, சிரிப்பு, கேலி, பந்தயம்… என்று ஒரே கும்மாளம்.

அவர்கள் போவதற்கு முதல் நாள் அவர்களுக்குக் கொடுத்து விட என்று அம்மா குசினிக்குள் பலகாரங்கள் செய்து கொண்டிருந்தா. அம்மம்மாவும், மாமியும் அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க அப்பாவும், மாமாவும் கூட இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவர்கள் குசினிக்குள் கலகலக்க, நாங்கள் பிள்ளைகள் வீட்டின் முன் பக்கம் மல்லிகைப் பந்தலின் கீழிருந்து விளையாடிக் கொண்டிருந்தோம். எங்கள் விளையாட்டுக்கள் லூடோ, கரம் என்று துவங்கி அது அலுக்க கெந்திப் பிடித்து விளையாடி அதுவும் களைக்க ஆளாளாக படிகளிலும், விறாந்தை நுனிகளிலுமாகக் குந்தி விட்டோம். வேர்த்து ஊத்தி சட்டைகள் தெப்பமாக நனைந்திருக்க ஆளாளுக்கு ஏதேதோவெல்லாம் கதைத்தோம். எங்கள் கதைகள் எங்கெல்லாமோ சுற்றி கடைசியில் கடவுள் நம்பிக்கை பற்றிய கதையில் வந்து நின்றன. கடவுள் இருக்கிறார் என்றும், இல்லை என்றும் பல விதமாக வாதம் பண்ணினோம்.

மாமாவின் மகன் கோபு அடித்து வைத்துச் சொல்லி விட்டான். “கடவுளும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நான் உதுகளை ஒரு நாளும் நம்பவே மாட்டன்" என்று.

என்னுடைய தம்பி பார்த்திபனால் அவனுடைய நாஸ்திகத் தனத்தை ஆமோதிக்க முடியவில்லை. “என்ன நீ, இப்பிடிச் சொல்லுறாய். எங்கடை ஆத்தியடிப் பிள்ளையாரிலை கூட உனக்கு நம்பிக்கையில்லையோ?!" ஆச்சரியமாகக் கேட்டான்.

கோபு “இல்லை" என்று திடமாகப் பதிலளித்தான்.

“உனக்கு உள்ளுக்கை நம்பிக்கை இருக்கு. வெளீலை சும்மா லெவலுக்கு கடவுள் இல்லை எண்டுறாய்." என்று மறுதலித்தான் பார்த்திபன்.

“எனக்கு நம்பிக்கை இல்லையெண்டுறன். கடவுளே இல்லாத போது ஏன் நான் நம்போணும்?" கோபு அறுத்துறுத்துச் சொன்னான்.

இப்படியே பார்த்திபனுக்கும், கோபுவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டு பந்தயம் வரை வந்து விட்டது.

கோபு தனக்கு கடவுளில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபிக்க, ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்குப் போய் பிள்ளையாரின் மேல் துப்பி விட்டு வருவதாகத் தீர்மானிக்கப் பட்டு, எங்கள் சம்பாஷணை இடை நிறுத்தப் பட்டது.

அவர்கள் பிள்ளையார் கோவில் வரை போக ஆயத்தமானார்கள். எனக்கும் போக ஆசைதான். நான் வளர்ந்த பெண்பிள்ளை என்பதால் பாடசாலை தவிர்ந்த நேரத்தில் அம்மாவைக் கேளாது வெளியில் போகத் துணிவு வரவில்லை. எனது சின்னத் தம்பிமாரும், தங்கைமாரும் மட்டும் அவர்களுடன் சேர்ந்து போனார்கள். நான் கேற் வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

எனது அரை மணி நேரக் காத்திருப்பின் பின் அவர்கள் திரும்பி வந்தார்கள். என்னுடைய முழு நம்பிக்கையும் ´கோபு சும்மா சொல்லியிருப்பான். ஆனால் கடைசி மட்டும் பிள்ளையாரின் மேல் துப்பியிருக்க மாட்டான்´ என்பதே.

அந்த நம்பிக்கையுடன் சிரித்த படி “என்ன பார்த்திபன், பந்தயத்திலை கோபுப்பிள்ளை தோத்திட்டாரே?" கேட்டேன்.

“இல்லை நான்தான் தோத்திட்டன்" பார்த்திபனின் குரலில் பந்தயக் காசு கொடுக்க வேண்டுமே என்ற கவலை தெரிந்தது.

“உண்மையா பிள்ளையாருக்கு மேலை துப்பினவனே?" நம்ப முடியாததால் சந்தேகத்துடன் மீண்டும் நான் கேட்டேன்.

“ம்;கும்… கதவு பூட்டியிருந்திச்சு. அதாலை பிள்ளையாருக்கு நேரே இருக்கிற தலைவாசல் கதவைக் காலாலை உதைஞ்சு போட்டு, பிறகு கதவிலை துப்பியும் போட்டு வந்தவன்." பார்த்திபன் கொஞ்சம் அசாதாரணமாகத்தான் சொன்னான்.

“நான் நம்ப மாட்டன். எந்தக் காலாலை உதைஞ்சவன்?" என்னிடம் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற தீர்க்கமான எந்த முடிவும் அப்போது இல்லையென்றாலும், ´கடவுள் இல்லை´ என்று சொல்லி எங்கள் ஊர் பிள்ளையாரை அவமதிக்க ஒரு போதும் சம்மதமில்லை. அதனால்தானோ என்னவோ என் குரலும் அசாதாரணமாகவே ஒலித்தது.

கோபு வலது காலைத் தூக்கி எங்கள் மதிலை உதைந்து காட்டி, “இப்பிடித்தான், இந்தக் காலாலைதான் உதைஞ்சனான், மச்சாள்" என்றான். எனக்கு நம்ப முடியவில்லை. தம்பி பார்த்திபன் பந்தயக்காசு கொடுக்க வேண்டுமென்று அம்மாவிடம் ஒரு ரூபாவுக்குக் கெஞ்சிய போது கூட இரண்டு பேரும் நடிக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன்.

“உண்மையா உதைஞ்சவன், அக்கா." தம்பி என்ரை கையில் அடித்து சத்தியம் பண்ணிய போதுதான் நம்பினேன். அதன்பின் அன்றைய பொழுது எனக்கு என்னவோ போலவே இருந்தது.

அடுத்த நாள் மாமா குடும்பம் பயணமாகி விட்டது. வழமை போல் அவர்கள் பயணமான அன்றைய நாள், எங்கள் வீடு வெறிச்சோடி, அமைதியாக இருந்தது. அடுத்த நாள் மீண்டும் நானும் தம்பியும் தனியாக கரம், அது இது என்று விளையாடத் தொடங்கி விட்டோம். ஆனால் கோபு செய்த வேலையை மட்டும் மறக்காமல் அடிக்கடி நினைத்தோம். ´அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது´ என்று பலமுறை கதைத்தோம்.

இன்றும் அந்த நினைவு என் மனத்திரையில் பல முறை முகம் காட்டி விட்டது. கோபுவின் பிடிவாதமான முகத்தை நினைத்த படியே மீண்டும் மதிலால் எட்டிப் பார்த்தேன்.

´வாவ்..! மக்கள் வெள்ளம்.´ எனக்குள் சந்தோஷம் மின்னலிட்டது. அப்பாவின் முகத்திலும் சந்தோஷம். ஆனால் அது ஒரு இனம் புரியாத கோபமும், சோகமும் கலந்த சந்தோஷம்.

நான் ஓடிப்போய் கேற்றைத் திறந்து மனித வெள்ளத்தை முழுமையாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் களைப்பு. நடைகளில் தளர்வு.

எல்லோரும் எமது ஊர்க்காரர்கள்தான். அப்பா விழுந்து விழுந்து எல்லோரையும் விசாரித்தார்.

“அநுராதபுரம் மாதிரி கொழும்பிலை அடி விழேல்லைத் தம்பி. சில சில இடங்களிலைதான் அவங்கள் தங்கடை வேலையைக் காட்டிப் போட்டாங்கள். எனக்குத்தான் காங்கேசன் துறையிலை வந்து இறங்கு மட்டும் ஒரே சத்தி. இந்தக் கப்பல் பயணம் எனக்கு ஒத்து வராது தம்பி." சுந்தரிப்பாட்டி இழுத்து இழுத்து சொல்லிக் கொண்டு போனா.

“அப்ப, தங்கச்சியவையளும் உங்கடை கப்பலிலேயே வந்தவை?" அப்பா அவசரமாய் கேட்டார்.

“ஓமடா தம்பி. அங்கை பின்னுக்குப் பார். வந்து கொண்டிருப்பினம்." சுந்தரிப்பாட்டி சொல்லி வாய் மூடவில்லை.

தூரத்தில் வரும் மாமா என் கண்களுக்குள் அகப்பட்டு விட்டார். பக்கத்தில் கொஞ்சம் பின்னால் மாமி மிக மெதுவாக நடந்து கொண்டு வந்தா.
´அது யார் நொண்டியபடி, காலை இழுத்து இழுத்து..?´ வடிவாகப் பார்த்தேன். ´அட, அது கோபு. ஏன் இவன் நொண்டுறான்? ஏதும் விழுந்து கிழுந்து போட்டானோ?´ நான் யோசித்துக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

அப்பா நிம்மதிப் பெரு மூச்சோடு அவர்களை உள்ளே அழைத்தபடி, “இவன் கோபு ஏன் கிழவங்கள் மாதிரி காலை இழுத்திழுத்து நடக்கிறான். என்ன நடந்தது இவனுக்கு?" மாமியைக் கேட்டார்.

“அதையேன் அண்ணை கேக்கிறிங்கள்? பள்ளிக்கூடத்திலை புற்போல்(football) விளையாடக்கை முழங்காலுக்கை முறிஞ்சு போட்டுதாம். உடனையே பிரின்சிப்பல் ரெலிபோன் பண்ணிக் கூப்பிட்டவர். இவர் போய் ரக்ஸி பிடிச்சு, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனவர். எல்லாம் உடனையே கவனிச்சு, ஒப்பிரேசன் எல்லாம் செய்தும் போட்டாங்கள். பிறகுதான் கண்டு பிடிச்சாங்கள், எலும்பு சரியாப் பொருந்தேல்லையெண்டு. திருப்ப ஒப்பிரேசன் செய்யிறதுக்கெண்டு நாளெல்லாம் குறிச்சிருக்கக்கைதான் இந்தப் பிரச்சனையெல்லாம் வந்திட்டுது. டொக்டேர்ஸ்(doctors) எல்லாரும் ஸ்றைக்(strike) பண்ணீட்டினம். ஒண்டும் செய்யேலாமல் போட்டுது. எல்லாரும் இவற்றை ப்ரெண்ட்ஸ்தான். இவருக்காண்டியாவது வந்து செய்யிறம் எண்டு சிலர் சொன்னவைதான். ஆனால் ஸ்றைக் எண்ட படியால் ஆஸ்பத்திரியிலை ஒப்பிரேசன் செய்யக் கூடிய நிலைமையளும் இருக்கேல்லை. இதைப் பாத்துக் கொண்டு நிண்டு உயிரையே குடுக்க வேண்டி வந்திடும் எண்டு வெளிக்கிட்டிட்டம். அவனுக்குத்தான் எங்களிலை கோவம். நிண்டு ஒப்பிரேசனை முடிச்சிட்டு வெளிக்கிட்டிருக்கலாம் எண்டு வழியெல்லாம் ஒரே புறுபுறுப்பு."

“அப்ப, இனி என்ன நடக்கும்?" அப்பா அக்கறையுடன் வினவினார்.

“என்ன, எலும்பை பொருத்திறதெண்டு சொல்லி ஒரு எலும்புக்கு மேலை மற்ற எலும்பை வைச்சு தங்கடை வேலையை முடிச்சிட்டாங்கள். இப்ப எனக்கு இந்த வலது கால், இடது காலை விட நீளத்திலை ஒரு ´இஞ்´ குறைஞ்சிட்டுது. ஒப்பிரேசன் செய்யிறதெண்டால் உடனையே செய்யோணுமாம். நாள் போனால் ஒண்டுமே செய்யேலாதாம். அம்மாக்கும், அப்பாக்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். கேட்கேல்லை. என்னை இங்கை இழுத்துக் கொண்டு வந்திட்டினம். இனி என்ன? இப்பிடியே வாழ்நாள் பூரா கிழவன்கள் மாதிரி நான் காலை இழுத்து இழுத்து நடக்க வேண்டியதுதான். கப்பலுக்குள்ளை கூட சாப்பாடு குடுத்த ஆக்கள் என்னைப் பின் பக்கமாப் பார்த்திட்டு, ஒரு சின்னப் பெடியனைக் கூப்பிட்டு, ´அந்தக் கிழவனுக்கு இந்தப் பாணைக் குடு´ எண்டு சொன்னாங்கள். நானொண்டும் கிழவனில்லை. எனக்கு இப்பதான் பதினாலு வயசு எண்டு கத்தோணும் போலை இருந்திச்சு." கோபு மிகவும் சலிப்பும் வேதனையும் இழைந்தோடச் சொன்னான். எனக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

பார்த்திபன் என்ன நினைத்தானோ, விரைந்து கோபுவின் அருகில் சென்று “நீ பிள்ளையாருக்கு உதைஞ்சதுக்கு, பாத்தியோ கிடைச்சிட்டு" என்றான்.

“காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை சொல்லாதை." கோபு அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பதை வலியுறுத்தினான்.

நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பாபு இன்று வரை வலது காலை விட ஒரு அங்குலம் நீளமாக இருக்கும் இடது காலை மெதுவாக இழுத்து இழுத்துத்தான் நடக்கிறான்.

2002

 

 

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது, “என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ" எண்டு.

என்னெண்டு முடியிறது? காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப்படுத்தி, அவசரமாய் சமைச்சு, அதுக்கிடையிலை சின்னச் சின்னதா வீட்டிலை உள்ள மற்ற வேலையளைப் பார்த்து, அதோடை சமையலையும் முடிச்சு இந்த மனுசனுக்கு சாப்பாடும் குடுத்திட்டன்.

மனுசன் நித்திரையாலை எழும்பி படுக்கையைக் கூட விரிக்காமல் வந்து இருந்து நான் போட்டுக் குடுத்த கோப்பியைக் குடிச்சிட்டு, நான் கீழை போய் தபால் பெட்டிக்குள்ளை இருந்து எடுத்துக் கொண்டு வந்த பேப்பரை வைச்சு நீட்டிலை வாசிச்சுக் கொண்டு இருந்திச்சு. நான் பம்பரமாய் சுழண்டனே! ஒரு உதவி செய்வம் எண்டில்லை. சரி உதவத்தான் முடியேல்லை. உபத்திரமாவது தராமல் இருந்துதே!

இருந்து கொண்டு “இஞ்சரும், அந்தக் கண்ணாடியை எடுத்துத் தாரும். இஞ்சரும், இந்தக் கோப்பி கொஞ்சம் ஆறிப்போட்டுது. புதுசா ஒண்டு போட்டுத் தாரும்…" எண்டு தொல்லை வேறை.

அது மட்டுமே “எங்கையப்பா, அண்டைக்கொரு என்வெலப் தந்தனே! அதையொருக்கால் தாரும்."

ம்... தானே வைக்கலாந்தானே. கொண்டு வந்ததை என்னட்டைத் தாறது. பிறகு “எங்கையப்பா அது?" எண்டுறது. இதெல்லாம் நல்ல புத்தி சாதுரியமான வேலையள் எண்டு மட்டும் எனக்குத் தெரியாதே. கதிரைக்குள்ளை இருந்து கொண்டு காரியம் சாதிக்கிற தன்மையள்.

சரி பேப்பரை வாசிச்சு முடிச்சிட்டு பாத்ரூமுக்குள்ளை போன மனுசன் சேவ் பண்ணுறன், அது இது எண்டு சொல்லி ஒரு மணித்தியாலமாய் வெளிலை வரேல்லை.

அதுக்குள்ளை நான் பிள்ளையளின்ரை வேலையளை ஓடி ஓடி முடிச்சிட்டன்.

அதுகளும் எங்கை..? அப்பா கதிரைக்குள்ளையும், சோபாவுக்குள்ளையும் இருக்க அம்மாதானே வேலையெல்லாம் செய்யிறா. அப்பிடியெண்டால் வேலையெல்லாம் அம்மாக்குத்தான் சொந்தம் எண்டு நினைக்குதுகள். அல்லது அம்மா வேலை செய்யிற மெஷின் எண்டு நினைக்குதுகளோ!

மனுசன் குளிச்சிட்டு வெளிலை வருறதுக்கு முன்னமே சாப்பாட்டை ரெடியா மேசையிலை வைச்சிட்டன். மனுசன் ஏதோ நான் சமைக்கிறதுக்கெண்டே பிறந்தவள் எண்டு நினைச்சுதோ என்னவோ, ´நல்லாயிருக்கப்பா´ எண்டு ஒரு வார்த்தை பேசேல்லை. வேறை ஏதோ எனக்குத் தேவையில்லாத கதையளைச் சொல்லுறதும் “நாளைக்கு அந்த வேலையைச் செய். அங்கை அப்பொயிண்ட்மெண்ட் எடுத்து வை…" எண்டு எனக்கு கட்டளைகள் இடுவதுமாய் இருந்திச்சு.

எனக்கு பயங்கர எரிச்சல் மனசுக்குள்ளை. என்ரை எரிச்சலை இந்த மனுசனுக்குக் காட்டி ஏதும் பிரயோசனமிருக்கோ எண்டு நினைச்சுக் கொண்டு மனுசன் சாப்பிட்டு முடிச்ச கையோடை தேத்தண்ணியைப் போட்டுக் குடுத்தன்.

தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டே மனுசன் தொடங்கீட்டுது. “என்னப்பா நீ இன்னும் வெளிக்கிடேல்லையோ" எண்டு.

எனக்குக் கோவந்தான் வந்துது. என்னெண்டு வெளிக்கிடுறது? கொஞ்சம் கூட ஒத்தாசை பண்ணாமல்… சாப்பிட்டு முடிய சாப்பாட்டைக் கூட மேசையிலை இருந்து எடுத்து வைக்காமல்... போய் தொலைக்காட்சிக்கு முன்னாலை இருந்து கொண்டு...

எனக்கு வந்த கோவத்துக்கு “ஏனப்பா, இஞ்சை வாங்கோ. இதுகளை நீங்கள் எடுத்து வைச்சீங்களெண்டால்… நான் ´டக்´ கெண்டு வெளிக்கிட்டிடுவன்தானே!" எண்டு சொல்லோணும் போலை இருந்திச்சு.

ம்... இப்ப சொல்லப் போய், அதுவும் வெளிக்கிடுற நேரம், பிறகு மனுசன் “நான் என்ன உன்னைப் போலை சும்மா வீட்டிலையே இருக்கிறன். வேலைக்குப் போற மனுசனை ஒரு நேரம் ஆறுதலா இருக்க விட மாட்டாய்" எண்டு தொடங்கீடும்.

பிறகு எனக்கு மூட் அவுட் ஆகி… ஏன் பிரச்சனையை எண்டிட்டு வாயை மூடிக் கொண்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சன்.

மனுசன் ஆற அமர இருந்து தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டு, தொலைக்காட்சியை ரசிச்சுக் கொண்டு இருந்திச்சு. எனக்கு குளிச்சுப் போட்டு வரவும் வேர்த்துக் கொட்டிச்சு.

ஒரு மாதிரி சாறியை உடுத்திட்டு வந்து தலையை இழுக்கிறதுக்கு சீப்பை தலையிலை வைக்கவே மனுசன் திரும்பத் தொடங்கீட்டுது. “என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ" எண்டு

நல்லா திருப்பிக் குடுக்கோணும் போலை எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வருது. ம்... குடுத்தென்ன! மனுசன் பிறகு இன்னும் சிடுசிடுக்கும்.

சரி, ஒரு மாதிரி வெளிக்கிட்டாச்சு. மனுசன் இப்ப எழும்பிப் போய், வெளிக் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிண்டு “நீ வெளிக்கிட்டு வாறதுக்கிடையிலை அங்கை புரோக்கிராம் முடிஞ்சு எல்லாரும் வீட்டையும் போடுவாங்கள். ஏன் தான் இந்தப் பொம்பிளையள் வெளிக்கிடுறதுக்கு இவ்வளவு நேரமோ…" எண்டு என்னை மட்டுமில்லாமல் பொம்பிளை வர்க்கத்தையே பேசிக் கொண்டு நிக்குது.

நானும் ஏதும் சொல்லோணும் எண்டு துடிக்கிற நாக்கை அப்படியே மடக்கி, வாயை இறுக்கி மூடிப் போட்டன்.

வெளிலை போறதுக்கு முன்னம் வீட்டிலை எல்லாம் சரியா இருக்கோ எண்டு பார்த்தன். அதையேன் பேசுவான். வழக்கம் போலை லைற் எரியுது. தொலைக்காட்சி போட்ட படியே இருக்குது. நிற்பாட்டேல்லை. அது மட்டுமே..? மனுசன் வாசிச்ச பேப்பர் மேசையிலை விரிச்ச படி இருக்கு. குடிச்ச கோப்பை கதிரைக்குப் பக்கத்திலை கீழை நிலத்திலை இருக்குது. எனக்கு என்ரை மனுசனிலை வந்த கோவம், சும்மா கொஞ்ச நஞ்சமில்லை.

எண்டாலும் வந்த கோவத்தை அப்பிடியே எனக்குள்ளையே அடக்கிட்டன். ஏனெண்டால் மனுசன் கதவையும் திறந்து வைச்சுக் கொண்டு நிக்குது. இப்ப போய் நான் என்ரை கோவத்தைக் காட்டுறன் எண்டு சொல்லிக் கத்த, எதிர் வீட்டுக் காரர் சொல்லுவினம் “ஒரு அடக்கமில்லாத பொம்பிளை, என்னமா புருஷனைத் திட்டுது. கலிகாலம் முத்திப்போச்சு. பாவம் அந்த மனுசன்..." எண்டு.

அதுதான் சாறியை இழுத்து இடுப்பிலை சொருகிக் கொண்டு ஓடி ஓடி லைற்றை நிற்பாட்டி, தொலைக்காட்சியை நிற்பாட்டி, பேப்பரை மடிச்சு வைச்சு, கோப்பையையும் எடுத்து வைச்சிட்டு... மனுசனோடை மௌனமா நடந்து போறன். மனசுக்குள்ளை மட்டும் கோவம் ஆறாமல் இருக்குது. அது ஆரை என்ன செய்யப் போகுது!

2001

 

 

அம்மாவுக்குத் தெரிந்தது

எனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு ஒலிப்பேழையுடன் வந்து பாடல்களை எரித்து எடுத்துக் கொண்டு போவார்கள். எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமே! அம்மாவும், அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் நானே இந்தப் பாடல்களை எவ்வளவு சத்தமாகப் போட்டுக் கேட்பேன். இப்போது எல்லாமே போய் விட்டன. ஏதோ ஒரு கண்டறியாத வைரஸ். எப்படி அது எமது கணினிக்குள் வந்து சேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி இவ்வளவு பாடல்களையும் திருப்பித் தரவிறக்கம் செய்வது என்பது இலேசான காரியமே!

என்னை விட அண்ணா இன்னும் கவலையாக இருந்தான். அவனது பாடசாலை விடயமெல்லாம் இந்தக் கணினிக்குள்தான். பரீட்சையும் வருகிற நேரம் பார்த்து வைரஸ் எங்கள் கணினியை ஆக்கிரமித்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக் கொண்டு இருக்கிறான். இரண்டு மூன்று கிழமைகளாக இராப்பகலாக இருந்து ஒரு ரிப்போர்ட் எழுதினவன். அதுக்காக வாசிகசாலை, இணையம் என்று எத்தனை இரவு பகல்களைச் செலவழித்து, தேடல்கள் செய்திருப்பான். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. அதற்குப் பாடசாலையில் நல்ல புள்ளிகள் கிடைக்கும் என்று நம்பியிருந்தவன், இப்போது எதைப் பாடசாலையில் காட்டுவது என்ற யோசனையில் குழம்பிப் போய் இருக்கிறான்.

“அன்ரிவைரஸ் புரோக்கிராமை ஏன் தரவிறக்கம் செய்து வைக்கேல்லை" என்று அப்பா அண்ணாவை இரண்டு மூன்று தரமாகப் பேசி விட்டார். அதை அப்பாவே செய்திருக்கலாம். ஆனால் அண்ணாவால் அப்பாவைத் திருப்பிப் பேச முடியாதுதானே!

அப்பாவுக்கும் பயங்கரக் கவலைதான். அவரது கலைமன்றக் கணக்குகள், வீட்டுக் கணக்குகள்... என்று எல்லாவற்றையும் எக்செல்லில் எழுதி வைத்திருந்தவர். அவைகளோடு மன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்.. போன்ற பல விடயங்கள் தொலைந்து போய் விட்டதில் அப்பா மிகவும் ரென்சனாகி இப்போது சோர்ந்து போயிருக்கிறார்.

இந்தப் பிரச்சனைகளில் பொழுதுபட்டு விட்டதும் மூளையில் உறைக்காமல், மின்விளக்கைப் போட வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் நாங்கள் இருக்க, அம்மா வேலை முடித்து வந்து கதவைத் திறந்தா. அம்மாவுக்கு மின்விளக்கைப் போடாமல் இருந்தால் பிடிக்காது. எப்போதும் வெளிச்சமாகப் ´பளிச்´ என்று இருக்க வேண்டும். இருண்ட வீட்டுக்குள் நுழையும் போது, அம்மாவின் முகத்தில் இருந்த சந்தோசத்தில் பாதி குறைந்து விட்டது போலத் தெரிந்தது.

எங்கள் கோலங்களைப் பார்த்ததும் அம்மா தனது அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் “என்ன எல்லாரும் கப்பல் கவிண்டு போனது போல கவலையிலை இருக்கிறிங்கள்?" என்றா. நாங்கள் ஒருத்தரும் ஒரு பதிலையும் சரியாகச் சொல்லவில்லை. அப்பா சொல்வார் என்று பார்த்தேன். அவரும் சொல்லவில்லை. அவர் பார்வையில் ஒரு வித அலட்சியம். ´இப்ப அதை உமக்குச் சொல்லி எங்களுக்கு என்ன ஆகப் போகிறது!´ என்பது மாதிரியான அலட்சியப் பார்வை அது.

அப்பாவின் அலட்சியப் பார்வையை அம்மா உணர்ந்து கொள்ளாமலில்லை. ஆனாலும் வழமை போலவே மனசைக் கிள்ளிய அந்தக் கணநேர உறுத்தலை இன்னுமொரு படி அதிகமான அலட்சியத்துடன் தூக்கி எறிந்து விட்டு “பிரச்சனையைச் சொல்லுங்கோ. என்னாலை உதவேலுமோ எண்டு பார்க்கிறன்" என்றா.

உடனேயே அப்பா “இது கொம்பியூட்டர் பிரச்சனை. உமக்கெங்கை இதுகளைப் பற்றித் தெரியப் போகுது? நாங்களே என்ன செய்யிறதெண்டு தெரியாமல் முளிச்சுக் கொண்டிருக்கிறம். நீர் பிறகு கொமான்ட் பண்ண வந்திட்டீர். கெதியிலை தேத்தண்ணியைப் போடும். உமக்குத் தேவையில்லாத ஆராய்ச்சியளை விட்டிட்டு.." தனது எரிச்சல்களை எல்லாம் கொட்டுவதற்கு ஒரு ஆள் கிடைத்து விட்ட திருப்தியில், அப்பா அவசரமாகக் கொட்டினார்.

எனக்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. அம்மாவுக்குக் கணினியில் ஒன்றும் தெரியாது என்றில்லை. நாங்கள் இல்லாத நேரங்களில் அவ ஏதோ கணினியில் செய்து கொண்டுதான் இருப்பா. வாசிப்பா. எழுதுவா. ஆனாலும் நானோ, அண்ணாவோ, அப்பாவோ யார் வந்தாலும், எழும்பி வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுவா. தப்பித்தவறி அவ கணினிக்கு முன்னால் கதிரையில் தொடர்ந்து இருந்தா என்றாலும், அப்பா போய் கதிரைக்குப் பின்னால் நின்றதும் அவ எதை வாசித்துக் கொண்டிருந்தால் என்ன, எதை எழுதிக் கொண்டிருந்தால் என்ன, அரைகுறையில் அப்படியே விட்டிட்டு எழும்பி விடுவா. அது ஏதோ எழுதாத சட்டம் போலத்தான். அப்பா வந்தால் அம்மா கணினியை அவருக்காக விட்டு விட வேணும். அந்த நேரத்தில் அம்மாவின் முகத்தில் வருவது கோபமா, கவலையா, இயலாமையா என்பது எனக்கு இன்று வரைக்கும் பிடிபடவில்லை.

இப்போதும் அப்படித்தான். அப்பாவின் கதையில், அம்மாவின் முகத்தில் வந்தது என்ன என்பதை என்னால் இனம் பிரித்துக் காண முடியவில்லை. ஆனாலும் அம்மா சட்டென்று வாடி விட்ட முகத்துடன் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு வந்தா.

அம்மா வீட்டில் இருக்கும் போது வேலையால் அப்பா வந்தாலும் சரி, பாடசாலையால் நாங்கள் வந்தாலும் சரி எங்களின் களைப்பையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு “களைப்போ? சாப்பாடு வேணுமோ? தேத்தண்ணி போடட்டோ?" என்ற கேள்விகளுடன் எங்களை அணுகுவா. இதே அம்மா வேலைக்குப் போய் வந்தால் “களைப்போ, அலுப்போ, தேத்தண்ணி போடட்டோ?" என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தோன்றாது. மாறாக, களைத்து வரும் அம்மாவே அவசரமாக உடை மாற்றி வந்து நாங்கள் குடித்தோமா, நாங்கள் சாப்பிட்டோமா என்று பார்க்க வேண்டி இருக்கும். ´இன்னும் கெதியாக வந்து எங்கள் தேவைகளைக் கவனி´ என்று சொல்வது போலவே அப்பாவின் எதிர்பார்ப்புகளும், செய்கைகளும் இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. எனக்கும் அம்மா வந்து தேநீர் போட்டுத் தந்தா என்றால் நல்ல சந்தோசமாகத்தான் இருக்கும்.

அம்மாவோடு சில கரைச்சல்களும் இருக்கின்றன. எப்ப பார்த்தாலும் “வீடு ஏன் குப்பையாக் கிடக்குது. நான் வேலைக்குப் போகேக்கை எல்லாம் அடுக்கி வைச்சிட்டுத்தானே போனனான்.." என்று பேசிக் கொண்டு இருப்பா. நான் என்ன செய்யிறது? எப்படியும் அது குப்பையாகுது.

இன்றும் அப்படித்தான். திறந்து வாசித்த பேப்பர் சரியாக அடுக்கி, மூடி வைக்கப் படாமல் அரையும் குறையுமாக அங்காலும் இங்காலுமாக எட்டிப் பார்த்த படி கதிரையில் கிடக்கிறது. வானொலிக்குப் பக்கத்தில் ஒலிப்பேழை ஒன்றின் கவர் ´ஆ´ வென்று திறந்த படி இருக்கிறது. இன்னொரு ஒலிப்பேழை கவருக்குள் வைக்கப் படாமல் வானொலிக்கு மேல். ஒரு ரீசேர்ட் கதிரைப் பிடியில்.. குடித்த கோப்பைகள் ஒன்றுக்குப் பத்தாய் டிஸ்வோசருக்குள் வைக்கக் கூடப் பொறுமையின்றிய அவசரத்துடன் குசினி மேசையிலும், தண்ணித் தொட்டிக்குள்ளும்... என்று குசினி அலங்கோலமாய்...

இவைகளை எல்லாம் அடுக்கி வைக்கிறது பெரிய வேலை இல்லைத்தானே! ஏன்தான் அம்மா இதுக்கெல்லாம் கோபப் படுகிறாவோ எனக்குத் தெரியாது. அப்பா கூட பல தடவைகள்

“இதுகள் என்ன பெரிய வேலையே? ஊரிலை சாம்பல் போட்டு மினுக்கின உங்களுக்கு டிஸ்வோசர் இருக்கிறது போதாதே?" என்று அம்மாவைப் பேசி இருக்கிறார். அந்த நேரங்களில் மீண்டும் அம்மாவின் முகம் இனம் பிரிக்க முடியாத உணர்வுக் கோலங்களில் வாடிப் போகும். அப்படி அம்மாவின் முகம் வாடிப் போகிறதைப் பார்த்தால் எனக்கும் கவலையாகத்தான் இருக்கும். அதுக்காண்டி எப்பவும் அம்மா “அடுக்கி வை. ஒழுங்கா வை” என்று கரைச்சல் படுத்திறதும் எனக்குப் பிடிக்கிறதில்லை.

அது மட்டுமே! “படிச்சனியோ? என்ன இண்டைக்கு ஸ்கூலிலை நடந்தது?” என்று எரிச்சல் படுத்திக் கொண்டே இருப்பா.

ஆனால் இன்று அம்மா மூச்சும் விடவில்லை. நாங்களே ஏதோ பிரச்சனையில் ஆழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவளாய், தேநீரைத் தயாரித்து எங்களுக்குத் தந்து விட்டு எங்கள் உணவுகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தா. இடையிடையே நாங்கள் மூவரும் விதைத்து வைத்தவைகளை அடுக்கினா.

அப்பா மீண்டும் தனது எரிச்சலை வைரஸின் மேல் கொட்டத் தொடங்கினார். “எந்த வேலை வெட்டி இல்லாதவன்ரை வேலையோ! ஏன்தான் இப்பிடி வைரசுகளை தயாரிச்சு கொம்பியூட்டருகளை நாசமாக்கிறாங்களோ, தெரியேல்லை" என்றார். வினாடிகள் கழித்து “சிலருக்கு மூளை கூடித்தான் இந்த வில்லங்கம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாங்கள்" என்றார்.

அதற்கு அண்ணா “அப்பிடிச் சொல்லேலாது. இந்த அன்ரிவைரஸ் புரோக்கிராம்களைத் தயாரிக்கிற நிறுவனங்களே இப்பிடி வைரஸ்களையும் எங்கடை கொம்பியூட்டர்களிலை பரவச் செய்யலாந்தானே. இது நல்ல வியாபார தந்திரந்தானே" என்றான். அவனது பிஸ்னஸ் மூளை அப்படிக் கணித்தது.

இந்தக் கதைகள் சமையலறையில் நின்ற அம்மாவின் காதுகளிலும் விழ அம்மா அவசரமாக வெளியில் வந்து “என்ன, வைரஸ் பிரச்சனையே?" என்றா.

இப்போது நான் “ஓமம்மா, எல்லாம் போயிட்டுது. ஏதோ ஒரு வைரசாலை கொம்பியூட்டரிலை இருந்த எல்லாமே அழிஞ்சு போட்டுது" என்றேன். எனக்கு அழுகையே வந்து விட்டது.

அம்மாவின் முகத்தில் சட்டென்று ஒரு ´பளிச்´. மெதுவாகச் சிரித்தா. அப்பாவுக்குக் கடுப்பாகி விட்டது. “அதென்ன ஒரு சிரிப்பு உமக்கு? எல்லாம் போட்டுது என்று நாங்கள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். நீர் என்னடா எண்டால் சந்தோசமாச் சிரிக்கிறீர்" என்றார்.

“இதுக்குத்தான் ஒழுங்கு வேணும் எண்டு சொல்லுறது. உங்கடை ஆவணங்களை அப்ப அப்ப நீங்கள் ´பக்அப்´ செய்து வைச்சிருக்கலாந்தானே. நான் சொன்னால் கேட்க மாட்டிங்கள்..." சொல்லிக் கொண்டே அறைக்குள் போன அம்மா அலுமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து மேசையில் வைத்தா.

பெட்டிக்குள்... என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. முழுக்க ஒலிப்பேழைகள். கணினிக்குள் இருந்த எமது ஆவணங்கள் ஒவ்வொன்றையும் கிழமைக்குக் கிழமை தவறாது எரித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்காக, திகதி வாரியாகப் பிரித்து...

15.8.2006

 

 

விலங்குடைப்போம்

சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ... கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்... என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது.

ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்... என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது.

அந்த அழகில் மனம் ஒருகணம் லயித்தது. இதுவே இரண்டு கிழமைகளுக்கு முன்னதாக இருந்திருந்தால் அவள் சேகரையும் இழுத்துக் கொண்டு ஓடிப் போய் அந்தப் பனியில் துள்ளியிருப்பாள். அப்படியொரு அழகு அந்தப் பனிக்கு.

அவளின் வீட்டுப் பல்கணி வரை, கிளை பரப்பியிருக்கும் காசல் நட்ஸ் மரம், அவள் இங்கு ஆவணியில் சேகரிடம் வந்த போது காசல் நட்ஸ் காய்த்துக் குலுங்க பச்சைப் பசேலென்று இலைகளுடன் குளிர்ச்சியாக அழகாக இருந்தது.

பின்னர் இலைகள் மஞ்சளாகி... இலைகளே இல்லாமல் மொட்டையாகி... அது கூட அழகாகத்தான் இருந்தது. இன்று அது பனியால் மூடப்பட்டு, ஒவ்வொரு கொப்பிலும் பனித்துளிகள் குவிந்து, பரந்து அழகே அழகாய்...

மனசுக்குள் சுமையாக அழுத்தும் சோகத்தையும் மறந்து சங்கவி சில நிமிட நேரங்கள் அந்த அற்புத அழகில் லயித்துப் போயிருந்தாள். அந்த லயிப்பில் ஏற்பட்ட சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாமல் தனித்துப் போய் விட்ட உணர்வு மனதில் தோன்ற மீண்டும் அவள் சோகமானாள்.

அவளுக்கும், சேகருக்கும் இடையில் மௌனப் போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களாயிற்று. அவளுக்கு சேகரைப் பார்க்கவே பிடிக்கவில்லை. சேகரின் அருகில் படுக்கவும் பிடிக்கவில்லை. படுக்கையறைப் பக்கமே போகாமல் விருந்தினருக்கான அறையிலே படுக்கத் தொடங்கியும் இரண்டு வாரங்களாகி விட்டது.

இந்த இரண்டு வாரங்களும் தூக்கம் அவளை விட்டுத் தூர விலகிப் போயிருந்தாலும், சேகர் காலை எழுந்து போகும் வரை அந்த அறையை விட்டு வெளியே வராமல் ´அவன் முகத்தைக் கூடப் பார்க்கக் கூடாது, அவன் விழிகளில் விழிக்கக் கூடாது´ என்ற வைராக்கியத்துடன் அடைபட்டுக் கிடந்தாள்.

ஆனால் மீண்டும் திங்கட்கிழமை சேகர் வேலைக்குப் போனதும் வழமை போல் வெளியில் வந்து சமைத்து, தானும் அரைகுறையாகச் சாப்பிட்டு, சேகருக்கும் வைத்து விட்டு அழுதாள். வானொலி கேட்டாள். நகர மறுக்கும் நேரத்தைச் சபித்தாள். சேகர் வீடு திரும்பும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாக மீண்டும் அந்த அறைக்குள் புகுந்து, கதவைத் தாளிட்டு முடங்கிக் கொண்டாள்.

இப்படியே நாட்கள் நத்தையாய், சோகமாய் நகர்ந்தன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடுமளவுக்கு சங்கவி ஒன்றும் புதுமைப் பெண்ணல்ல. மிகமிகச் சாதாரண பெண். எல்லாப் பெண்களைப் போலவும் சின்னச் சின்னக் கனவுகளும், ஆசைகளும் இவளிடமும் இருந்தன. அந்தக் கனவுகளுடனேயே ஜேர்மனி வரை சேகரிடம் வந்து சேர்ந்தவள்.

தாலியைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அசட்டுத்தனம் அவளிடம் இல்லாவிட்டாலும், தாலி பெண்ணுக்கு அவசியம் என்பதில் அசையாத நம்பிக்கை இருந்தது.

நாற்குணம் என்றும், நற்பண்பு என்றும் வேலிகள் போட்டு பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாணும் படியாக போர்க்கொடி ஏந்தி நாட்டினைக் காக்கின்ற வீரப் பெண்கள் வாழ்கின்ற ஈழத்திலிருந்து வந்த சங்கவி தனக்குத்தானே சிறைபோட்டுக் கொண்ட பேதைத்தனம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

அதனால் தானோ என்னவோ ´விட்டுப் பிடிப்போம்´ பாணியில் ´வழிக்கு வருவாள்´ என்ற நம்பிக்கையுடன் அமைதியான காத்திருத்தலுடன் சேகர் நாட்களைக் கழிக்கிறான். அத்தோடு இவளின் இந்தச் சிறைவாசம் எந்த விதத்திலும், எந்த விதமான அவமானத்தையும் அவனுக்கு ஏற்படுத்தாது என்பதிலும் நிம்மதியாக இருந்தான்.

ஆனாலும் பல தடவைகள் அறைக் கதவைத் தட்டி, “சங்கவி வெளியாலை வாரும், நான் எல்லாம் விளங்கப் படுத்துறன்” என்று கேட்டுப் பார்த்து விட்டான். பதிலாக சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் அவனுக்குக் கேட்பதில்லை.

பூட்டிய அறைச் சுவரில் அழகாக, நேர்த்தியாக மாட்டப் பட்டிருக்கும் மகாபாரதக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து சங்கவிக்கு அலுத்துப் போயிருந்தது. தேர்ச்சில்லுகளைப் பார்த்து, எண்ணி.. போதும் என்றாகி விட்டது. கதவுக்கு நேரே மேலே சுவரில் கண்ணனின் மடியில் ஒய்யாரமாய் சாய்ந்திருக்கும் ராதையையும், கண்ணனையும் பார்த்து, அதை அத்தனை அழகிய வர்ணத்தில் தீட்டியிருந்த ஓவியனையும் நினைத்து நினைத்து வியந்தாயிற்று. அம்மாவிற்கும், அக்காவிற்கும் கடிதம் எழுதத் தொடங்கி கிழித்துக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டாயிற்று.

இன்னும் என்ன செய்வது இந்த அறையினுள். மீண்டும் திரைச் சீலையை விலக்கிப் பார்த்தாள். வெண்பனியில் கால்கள் புதைய சிலர் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள்.

கதவு அடித்துச் சாத்தப்படும் சத்தம் கேட்டது. சேகர் வேலைக்குப் போகிறான் என்பது தெரிந்தது. சேகர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் வரை யன்னலில் காத்திருந்தாள். சேகரின் கார் இன்னும் தெரியவில்லை. ´காரில் படிந்து விட்ட பனியைச் சுரண்டுகிறானோ..´

சில நிமிடக் காத்திருத்தலில் சில்லு பனியுள் புதைந்து, மோட்டார் உறுமி, சில்லுகள் சுழன்று புகார் படிந்த கண்ணாடிகளுடன், பனிகள் சிதறிப் பறக்க சங்கவியின் கண்களிலிருந்து கார் மறைந்தது.

கூண்டுக்குள் இருந்து வெளியே பறக்கும் பறவையின் துடிப்புடன் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சங்கவி. சிறு குழந்தையைப் போல் வீட்டுக்குள் ஓடித் திரிந்தாள். வானொலியை முடுக்கினாள். குளியலறைக்குள் சென்று பல் துலக்க முற்பட்டவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அழுது அழுது சிவந்திருந்த கண்களைச் சுற்றி இலேசான கருவளையம் தெரிந்தது. கன்னங்கள் சற்று உள்ளே போயிருந்தன. அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.

´வந்திருக்கக் கூடாது, இங்கை வந்திருக்கக் கூடாது. யாரையும் நம்பி வந்திருக்கக் கூடாது´ மனம் நொந்து முனகினாள்.

´எப்பிடி ஏமாந்தன்?´

அன்றைய நாள், அவளை இந்தச் சிறைவரை இழுத்து வந்த நாள் மீண்டும் அவள் மனத்திரையில் ஓடியது.

நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் முன்றலில் பூத்திருந்த கொன்றைப் பூக்களை விட அழகாகச் சிரித்தது சந்தோச வெள்ளத்தில் மிதந்த சங்கவியின் மனம்.

சில நிமிடங்களுக்கு முன்புதான் நெல்லண்டையில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஜேர்மனியில் இருக்கும் சேகருடன் முதன் முதலாக தொலைபேசியில் கதைத்து விட்டு வந்திருந்தாள். அவளது மனதிற்குள் வர்ணம், வர்ணமாய்க் கவிதைகள் பூத்தன.

நிறந்தெரியா
உன் முகம் காண
மனம் ஏங்குதே!
உன் குரல் தந்த ஸ்பரிசத்தில்
சிலிர்த்தேங்குதே!


சேகரின் குறும்பான பேச்சும், சிரிப்பும் அவளை எங்கோ அழைத்துச் சென்றிருந்தன. போன மாதமே அவளின் அக்கா கொழும்பிலிருந்து அம்மாவுக்கு கடிதம் போட்டிருந்தாள். ´அம்மா, ஜேர்மனியிலை சங்கவிக்கு ஏற்றதா ஒரு மாப்பிளை இருக்கிறார். நல்ல பெடியனாம். குடிகிடி, சிகரெட் ஒண்டும் இல்லையாம். பெயர் சேகர். விபரமா எல்லாம் அறிஞ்சிட்டுத்தான் எழுதுறன். என்னோடை சில தடவைகள் கதைச்சவர். சங்கவியின்ரை போட்டோவை அவருக்கு அனுப்பினனான். அவருக்கு நல்லாப் பிடிச்சிட்டுதாம். அவற்றை போட்டோவை அனுப்பியிருக்கிறார். அழகாத்தான் இருக்கிறார். நீங்கள் சங்கவியைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வாங்கோ. ஏஜென்சி சரிவந்த உடனை அவள் ஜேர்மனிக்குப் போயிடலாம். செலவையெல்லாம் அவரே பார்க்கிறாராம்…´

கடிதம் கண்ட உடனேயே அம்மா பரபரப்பாகி விட்டாள். போட்டது போட்டபடி விட்டிட்டு உடனேயே கொழும்புக்குப் பயணம் செய்ய முடியா விட்டாலும் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி விட்டாள். ஆனால் அக்காவின் கடிதமோ, அம்மாவின் பரபரப்போ சங்கவியிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த நேரம் அவளிடம் கல்யாணக் கனவுகள் இருக்கவில்லை. நாட்டின் நிலைமைகளினால் மனம் அழுத்தப் பட்டிருந்தது. அதைவிட கொழும்புக்குப் போவது பற்றி இலேசான பயம் கூட இருந்தது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் போவதற்கிடையில் எத்தனை சோதனைச் சாவடிகள்.

ஒரு நம்பிக்கையற்ற, எதிர்பார்ப்பற்ற நிலையில் அவள் இருந்த போதுதான் அன்று காலை நெல்லண்டைத் தொலைத்தொடர்பு நிலையத்தில் இருந்து ஒருவர் வந்து சேகரிடம் இருந்து அழைப்பு வந்தது பற்றியும், இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் மீண்டும் அழைப்பு வரும் என்றும் சொல்லி, அவளது பெயர் எழுதப் பட்ட துண்டைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

சலனமற்ற சங்கவியின் மனம் கூட படபடத்தது. மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் வரை நடந்தே போனவள், பிள்ளையாரை வணங்கி விட்டு மீண்டும் வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி ஏறினாள். திரும்பி, பிள்ளையாரைப் பார்த்து நெற்றியில் தொட்டுக் கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஏறி உழக்கத் தொடங்கினாள்.

சேகரின் அழைப்புக்காக அரை மணித்தியாலம் காத்திருந்த போது சேகரைப் பற்றிய கனவுகள் எதுவும் இல்லா விட்டாலும் என்ன கதைப்பது என்ற பயம் அவளுக்குள் இருந்தது. எதிர்பார்த்த அழைப்பு வந்த போது ஒரே படபடப்பாக இருந்தாள். ஆனால் சேகரோ மிகவும் இயல்பாக, குறும்பாக, பொறுப்பாகக் கதைத்த போது அவளும் இயல்பாகி விட்டாள்.

சேகருடன் கதைத்த பின், சங்கவியின் மனம் சேகரைக் கணவனாக்கிக் கொள்ள முழுமையாக சம்மதம் கொண்டிருந்தது. அந்த சந்தோசம் மனத்தை நிறைக்க தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து நேரே நெல்லண்டைப் பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று நன்றியுடன் வழிபட்டாள். நெஞ்சு நிறைந்த சந்தோசத்துடன் வீடு திரும்பியவள் அம்மா, தங்கையை தனியே விட்டுப் போவதை நினைத்துக் கவலைப்பட்டாள். தடுமாறினாள்.

ஆனால் தொடர்ந்த நாட்களில் அடிக்கடி சேகர் தொலைபேசியில் அழைத்துக் கதைத்தான். பருவமும், சேகரின் குறும்பான, இதமான கதைகளும் சேர இனிய கனவுகளில் மிதக்க ஆரம்பித்தாள்.

சேகர் பணம் அனுப்ப, சங்கவி விமானத்தில் கொழும்பு போவது தீர்மானமான போது அம்மா மிகவும் சந்தோசப் பட்டாள். எல்லோரும் விமானத்தில் செல்ல நிதி நிலைமை சரிவராது என்பதால் சங்கவி மட்டும் தனியாக அம்மா தங்கையிடம் விடைபெற்றுக் கொண்டு கொழும்புக்குப் பயணமானாள்.

கொழும்பில் அக்காவிடம் வந்து சேர்ந்த போது, அம்மா தங்கையின் பிரிவில் மனம் கலங்கினாலும் சேகரின் புகைப்படத்தைப் பார்த்ததிலும், அவன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வதாலும் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

மூன்று மாதங்களில் எல்லாம் சரி வந்தது. அக்காவிடம் விடைபெற்றுக் கொண்டு விமானத்தில் பறந்த போது சங்கவியின் மனத்தில் சேகரின் நினைவு ஒருவித சந்தோச எதிர்பார்ப்பைத் தந்தாலும், அம்மா சகோதரர்களின் நினைவு பொங்கிப் பொங்கி வந்தது.

பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி தன் முகத்தை ஒத்த வேறொருவரின் பாஸ்போர்ட் காட்டி ஏற்கெனவே பிரெஞ் பாஷையில் பாடமாக்கிக் கொண்டு வந்தபடி, அவர்கள் கேள்விகளுக்கு ஒரு சொல் விடைகளாக அளித்து வெளியில் வந்தாள். இருவர், தாம் சேகரின் நண்பர்கள் என்று சொல்லி முதலில் தீர்மானித்தபடி ஒரு வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றார்கள்.

கணங்கள் யுகங்களாக, ஒரு பகலும், இரவும் கழிய சேகர் வந்து சேர்ந்தான். சேகரைப் பார்த்ததும் சங்கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்திலும், நேரிலும் நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன. முன்பக்கம் தலையில் வழுக்கை விழுந்திருந்தது. ஆனாலும் அழகாகச் சிரித்தான். குறும்பாகக் கதைத்தான். இதமாக அணைத்தான்.

அன்றே காரில் பயணமாகி சேகரின் வீட்டுக்குள் நுழைந்த போது நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த சேகரின் வீடு சங்கவியை வரவேற்றது. அதுவே சங்கவிக்கு சேகரின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்தியது. சேகர் சீடி ஸ்ராண்டில் இருந்து ஒரு சீடியை எடுத்து வானொலியில் போட்ட போது இனிய பாடலொன்று ஒலித்தது. இனிமையான பாடலும், சேகருடனான நெருக்கமும் என அன்றைய பொழுது இனிமையாகக் கழிந்தது.

இப்படியே தொடர்ந்த சந்தோசங்களுக்கு மத்தியில் சேகர் அங்கோடி இங்கோடி எல்லா விடயங்களையும் பார்த்து சங்கவிக்கு ஜேர்மனியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அலுவல்களையும் செய்து கொண்டிருந்தான். ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, மண்டபம் எடுத்து, நண்பர்களை எல்லாம் அழைத்து, சங்கவியின் கழுத்தில் தாலியும் கட்டினான். நண்பர்களில் அனேகமானோர் குடித்துக் கும்மாளமிட்ட போதும் சேகர் மட்டும் மதுவிலிருந்து ஒதுங்கி நின்றபோது சங்கவி பெருமையின் உச்சத்தில் நின்றாள். சேகரின் புகழ் பாடி அம்மாவுக்கும், அக்காவுக்கும் கடிதங்களாக எழுதித் தள்ளினாள்.

இனித்த அவள் வாழ்க்கையில் கிணற்றில் விழுந்த கல்லாய் ஒரு செய்தி காதில் வீழ்ந்து சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று சேகரின் நண்பன் ஒருவனின் கல்யாண விழாவில் எல்லோரும் கலகலப்பாக இருந்த போது, இரு பெண்கள் “சேகரின்ரை பிள்ளையளைப் பற்றி சங்கவிக்கு ஏதாவது தெரியுமோ? என்னெண்டாலும் அவன் பயங்கரக் கெட்டிக்காரன்தான். இரண்டு குழந்தையளையும் வைச்சுக் கொண்டு ஒரு இளம் பிள்ளையையும் கூப்பிட்டுக் கட்டிப் போட்டான்” என்று குசுகுசுத்தது, சங்கவியின் காதுகளில் நாராசமாய் விழுந்தது.

சந்தோசத்தைக் கலியாண வீட்டில் தொலைத்தவள் ´அவர்கள் கதைத்தது என் சேகரைப் பற்றியல்ல´ என்று தனக்குத்தானே சமாதானம் கூற முனைந்தாள். ஆனாலும் எதுவோ அவளைக் குழப்பியது.

அவளுக்கு மேற்கொண்டு கலியாண வீட்டில் நிற்கவே பிடிக்கவில்லை. சேகரிடம் சென்று “எனக்கு ஒரேயடியா தலை இடிக்குது. வீட்டை போவமோ?” என்றாள். புரிந்துணர்வு உள்ளவனாய் சேகர் நண்பர்களிடம் விடை பெற்றான்.

´இவன் ஏதும் தப்புகள் செய்வானா?´ எடைபோட முடியாமல் தடுமாறினாள். தனக்குள்ளேயே மேலும் போராட முடியாமல் காருக்குள்ளேயே வெடித்தாள். அதிர்ந்த சேகர் ஆரம்பத்தில் மறுத்தாலும், வீட்டுக்கு வந்ததும் மெதுமெதுவாக உண்மைகளைச் சொல்லத் தொடங்கினான்.

“சங்கவி, நான் உமக்குச் சொல்லுறதுக்கு எத்தினையோ தரம் எத்தனிச்சனான். நீர் எந்தளவுக்குத் தாங்குவீர் எண்டு தெரியாததாலைதான் எனக்குத் தயக்கமா இருந்தது. எனக்கும் ஒரு ஜேர்மனியப் பொம்பிளைக்கும் ஏற்பட்ட உறவிலை எனக்கு இரண்டு பிள்ளையள், ஆறு வயசிலையும், நாலு வயசிலையும். இப்ப எனக்கு அவளோடை ஒரு தொடர்பும் இல்லை. என்ன இருந்தாலும் எங்கட சிறீலங்காப் பொம்பிளையள் போல இவையள் இருப்பினையோ… அதுதான். மாதத்தில ஒரு நாளைக்குப் போய் பிள்ளையளைப் பார்த்திட்டு வருவன். இரண்டு பிள்ளையளுக்குமாய் 900மார்க் மாசம் மாசம் கட்டுறன். அவ்வளவுதான்.”

அப்படியெதுவும் இல்லையென்றுதான் சேகர் சொல்லுவான் என எதிர்பார்த்த சங்கவி, சேகரின் வார்த்தைகளால் கொதிப்படைந்து சீறினாள். “நீங்கள், முதலே சொல்லி இருக்கலாந்தானே. நான் அங்கை அம்மாவோடை நிம்மதியா இருந்திருப்பன். நீங்கள், என்னை ஏமாத்தீட்டீங்கள். உங்களோடை என்னாலை வாழேலாது…” தாங்க முடியாத ஆத்திரமும், வேதனையும் சங்கவியிடம் இருந்து வெளியேறி நெருப்பு வார்த்தைகளாகச் சேகரைச் சுட்டன.

´சாது மிரண்டால் காடு கொள்ளாது´ என்பதை அன்றுதான் சேகர் கண்டான். அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத சங்கவி உருத்திர தாண்டவம் ஆடினாள். அவளின் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாத சேகர், வேறு வழியின்றி அவளைப் பளாரென அறைந்தான்.

“என்னை மிருகமாக்காதை. உனக்கு ஜேர்மனியிலை இப்பிடி ஒரு வாழ்க்கை கிடைக்கிறதுக்கு, நீ குடுத்து வைச்சிருக்கோணும். ஊர் உலகத்தில இல்லாததையே நான் செய்திட்டன்!”

சேகரின் வார்த்தைகளில் சங்கவி விக்கித்துப் போனாள். அவன் செய்த தப்பை விட, அவன் அதை நியாயப் படுத்தியது அவளை இன்னும் வெகுண்டெழச் செய்தது. கோபமாக, அந்த இடத்தை விட்டு ஓடிப் போய் விருந்தினர் தங்குவதற்கான அறையில் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விடுமோ என்று பயந்த சேகர், “சங்கவி வெளியிலை வாரும். கதவைத் திறவும்... ” என்று எத்தனையோ தரம் முயன்றான். சங்கவியின் விசும்பலைத் தவிர வேறெதுவும் வெளியில் கேட்கவில்லை.

பின்னர் சேகர் என்ன நினைத்தானோ.., ´இவளை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்´ என்று நினைத்தானோ. வெளியே வரும்படி அதிகமாக வற்புறுத்தாமல் திரிகிறான்.

கழுத்தில் தொங்கும் தாலிக்கொடியைக் கைகளால் பிசைந்தபடி நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சங்கவி நினைவுகளில் இருந்து விடுபட்டவளாய் சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் வீட்டு வானொலியின் ஊடாகவும் இசை பரப்பிக் கொண்டிருந்த ஐரோப்பிய வானொலி ஒன்றின் செய்திச் சுருக்கம் ஆரம்பமாகி இருந்தது. அந்தச் செய்திகளிலும் மனம் நாட்டம் கொள்ளாமல் இருக்க, அவள் தேநீர் தயாரித்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

செய்திச் சுருக்கம் முடிந்து விளம்பரங்கள் ஒலித்து அடுத்து ´புதுமைப் பெண்´ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகப் போவதாக அறிவித்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் சங்கவி தேநீரை உறிஞ்சினாள்.

இனிய பெண் குரல் ஒன்று பெண்களுக்குத் துணிவு தரும் வகையில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தது. தேநீரையும் மறந்து சங்கவி அந்தக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்த நாட்களில் அவள் சிந்தனைகள் மாறியிருந்தன. ஒருவித தன்னம்பிக்கையான எண்ணங்கள் அவளுள் ஓடின. ´எனக்கு நானே இந்த அறையைச் சிறையாக்கிக் கொண்டிருக்கிறேனே! என்ன ஒரு பேதைத்தனம் எனக்கு! நான் என்ன தப்புச் செய்தேன்? சிறை வைக்கப்பட வேண்டியவன் என் கணவன் சேகர் அல்லவா! இல்லையில்லை சேகர் என் கணவன் இல்லை. தாலி கட்டினால் உடனே கணவனா? அப்படியானால் அவள்..? அந்த ஜேர்மனியப் பெண்..? அவளுக்கு இவன் யார்? தாலி கட்டாத கணவனா?´

பலமாகச் சிரிக்க வேண்டும் போல இருந்தது சங்கவிக்கு. கழுத்தில் தொங்கிய தாலி ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்த எழுதிய சாஷனத்தில் கையெழுத்திடப் பட்ட முத்திரை போல அவளுக்குத் தெரிந்தது. ஏதோ யோசித்துக் கொண்டவள் தாலியை நிதானமாகக் கழற்றி மேசையில் வைத்தாள். கூடவே சேகர் என்ற உறவையும்…

பங்குனி-1999

 

 

சங்கிலித் துண்டங்கள்

அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்த மகிழ்வலைகளில் என் மனம் குதூகலிக்க மறுத்தது.

இந்து என் மனநிலையைப் புரிந்து கொண்டவளாய், என்னை சந்தோஷப் படுத்த எண்ணி ஏதேதோ கதைத்தாள். சிரித்தாள். நானும் ஒப்புக்குச் சிரித்துக் கொண்டு நடந்தேன்.

ஆரவாரப்பட்டுக் கொண்டு வேகமாக ஓடி வந்த கடல் அலைகளில் ஈரமாகிப் போன என் சட்டையின் கீழ்ப்பகுதி என் கால்களில் ஒட்டிக் கொண்டு நின்றது. என் மனசு மட்டும் எதிலுமே ஒட்டாமல் வெறுமையாக இருந்தது.

அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கைமாருடன் இந்தக் கடற்கரையில் நடந்த இனிய காலங்கள்... சிரித்து, ஓடி, விழுந்து… எத்தனை இனிமை! நினைவுகள் தந்த சிலிர்ப்பில் மனம் களித்து, உடனேயே கலைந்தது.

“சந்தியா, என்ன மௌனமாகீட்டாய்? எதையும் நினைச்சு நினைச்சு மனசைக் குழப்பிக் கொண்டிராதை. இந்தளவாவது வந்து அப்பாவோடை இருக்க முடிஞ்சதை நினைச்சுச் சந்தோஷப்படு." என் சோகத்தை எல்லாம் துடைத்தெறிந்து விடுவதாய் கங்கணம் கட்டிக் கொண்டவளாய் இந்து என்னை அன்பாகக் கடிந்தாள்.

ஊற்றாய் சுரந்து, எனக்குள்ளே அருவியாகப் பிரவாகித்துக் கொண்டிருந்த சோகம் அவளின் அன்புத் தொடுகையில் தடுமாறி அணைமீறி விழிவழி பாய்ந்து கடலுடன் கலந்தது.

அப்பா..! போயிட்டார். முந்தநாள் எல்லாம் முடிந்து போய் விட்டது. என்ரை அப்பா என்னை விட்டுப் போயிட்டார். இந்த உலகத்தை விட்டே போயிட்டார்.

எத்தனை வாட்டசாட்டமாக இருந்தவர். மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு… இராஜ ராஜ சோழன் சிவாஜியைப் பார்த்து அப்பாதான் நடிக்கிறாரோ என்று சின்ன வயசில் எனக்கு ஒரு சந்தோசமான சந்தேகம் வரும். அப்படி ஒரு அழகும், ஆளுமையும் அப்பாவிடம். அவர் வாழ்வு இத்தனை வேகமாக முடிந்திருக்கத் தேவையில்லை. எதையும் நம்பவும் முடியாமல், ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் மனசு விம்மி விம்மித் துவண்டது.

வவுனியாவில் வைத்தியர்கள் பற்றாக்குறையாம். பாதிக்கப் பட்டது யார்? எம் தமிழர்கள்தான். பத்துக்கு மேற்பட்ட வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய மூன்று பெரிய வைத்தியசாலைகளுக்குமாக மூன்றே மூன்று வைத்தியர்கள் மட்டுமே. அடிபட்டுப் போன தமிழர்களில் என் அப்பாவும் ஒருவர் என்ற போதுதான் கொடுமையின் தீவிரம் என்னையும் குதறியது. மனம் குமுறியது.

ஆனாலும் நேற்று வவுனியா புகையிரத நிலையத்துக்கு வரும் வரை நான் அழவேயில்லை. அம்மாவைக் கட்டித் தழுவி விடை பெறுகையில் என்னையும் மீறி ஏக்கம் பெருமூச்சாய் வெளி வந்தது. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. அப்போதும் நான் அழவேயில்லை. எங்கே அம்மா அழுது விடுவாளோ என்ற பயம் தான் என்னைத் தடுத்திருக்க வேண்டும்.

திடீரென்று, அம்மா ஜேர்மனிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ´அப்பா மரணத்தின் வாசலில் நிற்கிறார்´ என்ற போது மனம் புலம்ப, விழி கசிய அவசரமாய் விமானமேறி விட்டேன். வழியெல்லாம் அப்பாவை நினைத்து அழுத மனசு, ஜேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளையும் நினைத்து அழுதது. ´உயிருக்கு உத்தரவாத மில்லாத தாய்நாட்டை நோக்கிய இந்தப் பயணம் சரிதானா´ என்ற கேள்வி என்னைக் குடைந்தெடுத்தது.

வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் ரோட்டின், அந்த வீட்டுக்குள் நுழைந்த போது, ஏக்கம் தோய்ந்த விழிகளுடன் காத்திருந்த அப்பா, வாடி, வதங்கி நோயின் வலியில் வேதனை ஓடி இருந்த விழிகள் ஒரு கணம் பிரகாசிக்க, தினவெடுத்த அந்தத் தோள்கள் சற்று ஒடுங்கிப் போயிருந்தாலும், பாசப்பிரவாகத்தில் துடிதுடிக்க “ஓ..” வென்று கதறியபடி எனை ஆரத்தழுவி விம்மிய போது குடைந்தெடுத்த குற்ற உணர்வுகள் பறந்தோட, அவர் விழி துடைத்து, தலை கோதித் தாயானேன்.

என்னைத் தன் தோளில் சுமந்து, சமுதாயத்தில் தலை நிமிர்த்தி வாழும் படியாக நேர்த்தியாக வளர்த்தெடுத்த என் அப்பாவுக்கு தன் தலை சாய்க்க, என் தோள் தேவைப் பட்டிருந்தது.

ஏழு நாட்கள்..! ஏழே ஏழு நாட்கள். பன்னிரண்டு வருடங்களின் பின் அப்பாவுடனான அந்த ஏழு நாட்களில் ஒரு குழந்தையாய் அப்பா நடந்து கொண்ட விதம் என் பயணத்துக்கு அர்த்தம் கூறியது. அனர்த்தம் நிறைந்த எனது நாட்டை நோக்கிய என் வரவுக்கான அவசியத்தைக் கூறியது. இன்னும் என்னவெல்லாமோ கூறியது. அப்பாவின் இந்த இறுதி நாட்களிலாவது, எங்கோ அந்தகாரத்துக்குள் பிள்ளைப் பாசத்தைத் தேட வையாது, ஓடி வந்து இந்த ஏழு நாட்களையும் உயிர்ப்புடைய தாக்கியதில் எனக்குள் நிம்மதி நிறைந்த தாய்மைப் பூரிப்பு ஏற்பட்டது.

அதனால்தானோ என்னவோ எட்டாவது நாள், அப்பாவின் ஜீவன் அவரை விட்டுப் போன போது, நான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. என் மனம் மட்டும், அப்பாவுடன் கை கோர்த்து என் அழகிய பருத்தித்துறை மண்ணில் நடந்த நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நினைவுகளும் மீட்டப்பட்டு மனம் சிலிர்த்தது.

கண்ணின் மணி போலக் காத்து, என்னை வளர்த்த என் அப்பாவை விட்டு... எப்படி முடிந்தது என்னால்? பன்னிரண்டு வருடங்கள்... நான்... எனது கணவர், எனது பிள்ளைகள்... என்று ஒரு வகை சுயநலத்துடன் இருந்து விட்டேனே! இந்தப் பன்னிரண்டு வருடங்களின் ஒவ்வொரு கணத்தையும் என்னைப் பெற்றெடுத்து, தாலாட்டி, சீராட்டி வளர்த்து இந்த சமூகத்தில் நடமாட வைத்த அப்பா, அம்மா என்ற இந்த இரண்டு ஜீவன்களும் எப்படிக் கழித்திருப்பார்கள்! எனக்கு என் பிள்ளைகள் முக்கியமாகி விட்டார்கள். இவர்களுக்கு நான் பிள்ளையில்லையா? இவர்களுக்கு முக்கியமான நான் எங்கோ இருந்து விட்டேனே! தள்ளாத வயதில் என்னைப் பெற்றவர்களைத் தவிக்க விட்டு, பிள்ளைப் பாசத்துக்காக ஏங்க விட்டு, நான் சுமந்து பெற்ற என் பிள்ளைகளுக்காக என்னை அர்ப்பணித்து... மனசு கிடந்து அல்லாடிக் கொண்டே இருந்தது.

ஊரில், பருத்தித்துறையில், சொந்த வீட்டில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராச்சியத்தையே கட்டியாண்டவர்களை, சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத படி தாண்டிக்குளம் தாண்டி வந்து வவுனியாவில் தன்னந் தனியாகத் தங்க விட்டு… நினைவுகள் சாட்டைகளாக மனசை விளாசிக் கொண்டேயிருந்தன. வந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஜேர்மனிக்குப் போனதோடு என் மனம் கல்லாகி விட்டதென்று. வந்தவர்கள் யாரும் சொந்தக்காரர்கள் அல்லர்.

குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவப் படைகளுக்கு கேட்கும் படி குழறியழும் துணிவு யாருக்கும் இல்லையென்றாலும் அவர்கள் எல்லோரும் மூச்சிழுத்து அழுது கொண்டிருந்தார்கள். மூக்கைச் சீறி சேலைத் தலைப்பால் துடைத்தார்கள்.

அப்பாவுக்கும், அப்பாவைச் சுற்றிக் கொண்டு நின்று அழும் இவர்களுக்கும் இடையிலான பிணைப்பு சொந்தம் இல்லை. ஆனால் சொல்லில் வடிக்க முடியாத பந்தம்.

அப்பாவின் கால் மாட்டில் இருந்து அழும் நாகேஸ் அன்ரி என்னை விட இளையவள். அவள்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரி. எண்பத்தாறில் நடந்த ஒரு கொடூரத்தில் அநுராதபுரத்தில் இவள் கணவனும் வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டானாம். அப்பா.., அப்பா.., என்று உருகி உருகி அழுதாள்.

அப்பாவின் வலது பக்கம் நின்றழும் பக்கத்து அறை பரிமளாவும் அப்பா.., அப்பா.., என்று விசும்பினாள். என் வயதிலிருக்கும் அவளும் கணவனை இழந்தவள்தான். மதவாச்சியில் அவள் கணவன் கண்ட துண்டமாக்கப்பட்டு காலங்கள் ஓடி விட்டதாம்.

இப்படியே அந்த வீட்டுக்குள் இருக்கும் ஏழு குடும்பங்களும் தமக்குள் ஒவ்வொரு சோகக் கதையைச் சுமந்து கொண்டு என் அப்பாவுக்காக விம்மி விம்மி அழுதன.

அவர்கள் எல்லோருக்கும் என் அப்பா, அப்பா முறையாக இருந்தார். அம்மா, அம்மா முறையாக இருந்தார். இதே போல் என்னை விட இளைய நாகேஸ் அன்ரி எல்லோருக்கும் நாகேஸ் அன்ரிதான். அப்பாவும் அவளை நாகேஸ் அன்ரி என்றுதான் கூப்பிடுவாராம். பாதிக்கப் பட்டவர்கள் என்ற முறையில் அவர்கள் தமக்குள் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அன்ரி.. என்ற உறவு முறைகளை ஏற்படுத்தி பாசப் பிணைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் அப்பாவில் அவர்களுக்கிருக்கும் உரிமை எனக்கில்லைப் போல் ஒரு குற்ற உணர்வு என்னைக் குத்திக் கொண்டிருந்தது. அப்பா படுக்கையில் வீழ்ந்த போது, நான் ஜேர்மனியில் இருக்க சொந்தப் பிள்ளைகள் போல், சகோதரர்கள் போல் பாசத்தைக் கொட்டிப் பார்த்தவர்கள் இவர்கள் தானே! இவர்கள் பாசத்தின் முன் நேசத்தின் முன் நான் எம்மாத்திரம்..! மனசு கூசிப் போயிருந்தது.

எல்லாம் முடிந்து, அன்றைய இரவு எங்கள் மனங்களைப் போலவே அப்பாவின் படுக்கையும் வெறுமையாகக் கிடக்க, ´ஷெல்´ கள் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி காற்றைக் கிழித்து, இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டிருந்தன.

“அம்மா, இனி இங்கை தனிய இருந்து என்ன செய்யப் போறியள்? நாளைக்கு நீங்களும் என்னோடை வாங்கோ. வந்து அங்கை கொழும்பிலை இருங்கோ. கொழும்பிலை இருந்தியள் எண்டால் நான் ஜேர்மனிக்குப் போனாப் பிறகும் உங்களோடை பிரச்சனையில்லாமல் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கும் கொஞ்சம் வசதியாயிருக்கும்." அம்மாவைக் கேட்டுப் பார்த்தேன்.

“இல்லை. அப்பாவுக்குச் செய்ய வேண்டிய கடமையளை எல்லாம் செய்து முடிச்சுப் போட்டுத்தான் இந்த இடத்தை விட்டு நகருவன்." அம்மா ஒரேயடியாக மறுத்து விட்டா.

அம்மாவுக்கு அப்பா மீதுள்ள பிடிப்பும், பிரியமும் நான் அறியாததல்ல. அப்பா கூட வயது போன காலத்திலும் அம்மா மீது மிகவும் பிரியமாகவே இருந்தார். இந்த நிலையில் அம்மாவை எந்த வற்புறுத்தலும் அசைக்காது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.

அதுக்காக, அம்மா அப்பாவுக்கான கடமைகளை முடிக்கும் வரை காத்திருக்க எனக்கு அவகாசம் இல்லை. எனக்கு அவசரம். எனது பிள்ளைகள் ஜேர்மனியில். நான் அவர்களிடம் போய்ச் சேர வேண்டும். வேலைக்கு மேலதிக லீவு போட இயலாது. நாளைக்கு ஃப்ளைட் (Flight). எல்லாவற்றிற்கும் மேலால் வவுனியா பாஸ் நாளையுடன் முடிவடையப் போகிறது. புதுப்பிப்பதென்றால் கொழும்பு வரை போய் திரும்பி வர வேண்டும். அதற்கெல்லாம் எனக்கு நாட்கள் காணாது. என் பிள்ளைகளிடம் நான் போய் விட வேண்டும். அதனால் நான் புறப்பட்டு விட்டேன்.

உயிர் தந்து தன் உடலில் எனைச் சுமந்த என் அம்மாவை விட உயிர் கொடுத்து நான் என் உடலில் சுமந்த என் பிள்ளைகள் எனக்கு முக்கியமாகப் பட்டதால் என் அம்மாவைத் தன்னந்தனியாக விட்டு விட்டு நான் புறப்பட்டு விட்டேன்.

வவுனியா ரெயில்வே ஸ்ரேசனில் ரெயின் வரும் வரை காத்திருந்த போதுதான் அதுவரை அடக்கி வைத்திருந்ததெல்லாம் அணை உடைத்த வெள்ளமாய் மனமுடைத்து வெளிப் பாய்ந்தது.

நான் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டேன். பக்கத்தில் நின்ற பெண்தான் என் சோகத்தின் முழுக் காரணம் தெரியாவிட்டாலும் சோகம் பற்றித் தெரிந்தவளாய் என்னைச் சமாதானப் படுத்தினாள்.

ரெயின் வந்து சிலிப்பரேட்ஸ் கொம்பார்ட்மெண்ட் கதவு திறந்து ஏறிய பின்பும் என் விசும்பல் அடங்கவில்லை. அம்மாவைத் தன்னந்தனியாக விட்டுச் செல்கிறேன் என்ற நினைவே என்னைக் கொன்றது.

இறாகமவில் சிங்கள இராணுவப் படைகள் ரெயினுக்குள் ஏறி செக்கிங் என்ற பெயரில் எம்மைக் குடைகிறவரை என் விழியோரம் கசிந்து கசிந்து கொண்டேயிருந்தது.

பக்கத்திலிருந்த இளம்பெண் கட்டிக் கொண்டு வந்த இடியப்பப் பார்சலைக் கூட திறந்து காட்டச் சொல்லி அவர்களில் ஒருவன் கிளறிப் பார்த்த போது, விழி நீர் உறைந்து, மனசு அழ மறந்து பயத்தில் வெட வெடத்தது. மிடறு விழுங்கக் கூட துணிவில்லாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தது நான் மட்டுமல்ல. அந்த கொம்பார்ட்மெண்டுக்குள் இருந்த அனைவருந்தான். துணிவாகக் காட்சியளித்தவர்கள் கூட விழி பிதுங்க விறைத்தது போல இருந்தார்கள்.

கொழும்புக் கோட்டையில் நிம்மதி மூச்சுடன் இறங்கிய போது சில பேரின் நிம்மதிகள் இராணுவத்தினரால் சூறையாடப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபதைத் தாண்டிய ஆண்கள் சிலரும், பருவ வயதிலுள்ள பெண்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைதாகி இருந்தார்கள். அவர்கள் இனிக் காணாமற் போய் விடலாம். அல்லது களுத்துறைச் சிறையிலோ வேறெங்கோ அடைத்து வைக்கப்படலாம்.

நினைவுகள் சுமைகளாக அழுத்த ரணமான மனத்துடன் வெள்ளவத்தை வந்த எனக்கு ஒத்தடமாக இருப்பவள் எனது பால்ய காலத்து நண்பியான இந்த இந்துதான்.

ஒத்தடத்தையும் மீறிய வலி எனக்குள். வெள்ளவத்தைக் கடற்கரையின் இயற்கை அழகிலோ, இந்துவின் ஆறுதல் வார்த்தைகளிலோ சமாதானப்பட மறுத்தது என் மனம். நாளை நான் ஜேர்மனியை நோக்கிப் பறக்கப் போகிறேன். என் அம்மாவைத் தனியாக விட்டு விட்டு, ஜேர்மனியில் விட்டு வந்த என் குழந்தைகளிடம் ஓடப் போகிறேன்.

என் முடிவு சரிதானா? என் குழந்தைகளுக்காக என்னைப் பெற்ற தெய்வத்தை விட்டுச் செல்வது சரிதானா? குற்ற உணர்வுகள் என்னைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன.

பேச்சிலே, பாட்டிலே, கவிதையிலே பெற்றவளைத் தெய்வம் என்று புகழ்வது மிகவும் சுலபம். நியத்திலே அந்த தெய்வத்தை தவிக்க விட்டு விடுவதுதான் இங்கு அதிகம். அதைத்தான் நானும் செய்யத் தயாராகியிருந்தேன்.


1997

 

 

ஏன்தான் பெண்ணாய்?

எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்லை. எல்லாரிலையும் கோபம் கோபமா வருது. எதுக்கெடுத்தாலும் “பொம்பிளைப் பிள்ளை நீ" எண்டு கொண்டு..! ஏன்தான் இப்பிடிப் பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனோ!

ஞாயிற்றுக்கிழமை எண்டால் எல்லாரும் எவ்வளவு சந்தோசப் படுவினம். எனக்கு மட்டும் ஞாயிறுகள் எல்லாம் ஏன்தான் வருதோ எண்டிருக்கு.

பின்னை என்ன, ஞாயிறு எண்டு சொல்லி என்னைப் படுக்கக் கூட விட மாட்டினமாம். “பொம்பிளைப் பிள்ளை இப்பிடி வெய்யில் படு மட்டும் நித்திரை கொள்ளுறதோ” எண்டு அப்பா சத்தம் போட்டு எழுப்பிப் போட்டார். இந்த அப்பா எப்பவும் இப்பிடித்தான். அம்மாவும் அப்பா சொல்லுறதுக்கு மறுத்து ஒண்டும் சொல்ல மாட்டா.

அம்மா சொல்லலாம் தானே “அவளை ஏனப்பா எழுப்பிறிங்கள். ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் படுக்கட்டுமன் விடுங்கோ" எண்டு. அதில்லை, அப்பா ஊதுற சங்கை தான் இன்னும் கொஞ்சம் பெலத்தா ஊதுறதுதான் தனக்கு அழகு எண்டு நினைக்கிறா அம்மா. நான் என்ன செய்யிறது?

என்ரை வகுப்புப் பிள்ளையளெல்லாம் சொல்லுங்கள், தாங்கள் ஞாயிற்றுக் கிழமையிலை பன்னிரண்டு மணி மட்டும் நித்திரை கொண்ட கதையளையும், இரண்டு மணி மட்டும் நித்திரை கொண்ட கதையளையும். அதையெல்லாம் கேக்க எனக்குப் பொறாமையா இருக்கும். எனக்கு அதுகளைப் போல நீண்ட நித்திரைக்கெல்லாம் வழியே இல்லை.

எனக்குப் பார்த்தால் சில வேளை அம்மாக்கே ஞாயிறிலை கன நேரம் நித்திரை கொள்ள ஆசை இருக்கிற போலை தெரியும். ஆனால் அப்பா விடியக் காத்தாலை கண்ணை முழிச்சிடுவார். அவருக்கு தேத்தண்ணி குடிக்கிறதுக்கு அம்மா வேணும். ஒரு தேத்தண்ணி போடுறது பெரிய வேலையே. எழும்பிப் போய் போட்டுக் குடிக்கிறதுதானே. ஒரு தேத்தண்ணிக்காண்டி அம்மான்ரை நித்திரையைக் குழப்பி எழுப்போணுமே. ஆனாலும் எழுப்பிப் போடுவார். அம்மா பெட்(bed) தேத்தண்ணி குடுத்தாப் போலைதான் அவர் படுக்கையை விட்டு எழும்புவார்.

இந்த பெட்-கோப்பி, பெட்-ரீ எல்லாம் வெளிநாட்டு ஸ்ரைலிலை நடக்கும். அந்த ஸ்ரைலும் அப்பாக்கு மட்டுந்தான். எழும்பி பல்லைத் தீட்டி முகத்தைக் கழுவிப் போட்டு தேத்தண்ணியைக் குடிக்கலாந்தானே! கேட்கத்தான் மனம் வரும். ம்..கும் பிறகு நான் கேட்கப் போக அப்பா கத்த, பிறகு அம்மா கத்த... ஏன் அந்தக் களேபரமெல்லாம்! அந்தக் களேபரத்தோடை என்ரை பிரச்சனை தீர்ந்திடுமெண்டாலும் பரவாயில்லை. அப்பா பிடிச்ச முயலுக்கு எப்பவும் மூண்டு கால்தான். அதை ஓமெண்டு சொல்லிச் சொல்லியே அம்மாக்கும் பழகீட்டுது. அதுக்காண்டி நானும் ஓமெண்டேலுமே!

நித்திரை மட்டுந்தான் பிரச்சனை எண்டால் பரவாயில்லை. ஞாயிற்றுக் கிழமை எண்டாலே நாள் முழுக்க நான் இந்த வீட்டுக்குள்ளைதான் அடைஞ்சு போய்க் கிடக்கோணும். அண்ணா, தம்பி இரண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணுமெண்டாலும் மூசி மூசி நித்திரை கொண்டிட்டு எழும்புவாங்கள். பிறகு சாப்பிட்டிட்டு ஊர் சுத்தப் போடுவாங்கள்.

நான் மட்டும் இங்கை தனிய இருந்து எப்பவும் இந்த ரீவீ யைப் பார்த்துக் கொண்டு… எனக்கு அப்பாவிலை சரியான கோபம் கோபமாய் வருது. அம்மாவாவது சில நேரம் சிலதுக்கு அநுமதிப்பா. ஆனால் அவவும் சமயம் வாற போது அப்பான்ரை பக்கம் சாய்ஞ்சிடுவா.

இண்டைக்கு மிகைலாவின்ரை பிறந்தநாள். ஆறு மணியிலை இருந்து பத்து மணி வரை பார்ட்டி. என்ரை வகுப்புப் பிள்ளையள் எல்லாரும் போவினம்.

“அதென்ன இரவிலை பார்ட்டி! நாங்கள் ஜேர்மனியிலை வாழ்ந்தாலும் சிறீலங்கன்ஸ்தான். அதை மறந்திடாதை" எண்டு அப்பா கோவமாச் சொல்லித் தடுத்துப் போட்டு குசினிக்குள்ளை போய் அம்மாட்டை “இஞ்சை பாரும், இப்பிடி பார்ட்டி அது இதெண்டு போய்த்தான் பிள்ளையள் கெட்டுப் போறதுகள். அவளுக்குச் சொல்லி வையும், இனி இப்பிடியான விசயங்களுக்குப் போப்போறன் எண்டு என்னைக் கேட்கக் கூடாதெண்டு" எண்டு கத்துறார். எனக்கு அழோணும் போலை இருந்திச்சு.

நான் அழுதாலும் இவையளுக்கொண்டும் பிரச்சனையில்லை. அம்மாவைப் பார்த்தால் சிலவேளை எனக்காண்டிக் கவலைப் படுறா போலை இருக்கும். ஆனால் ஒண்டும் சொல்ல மாட்டா.

ஏதோ, வெளிநாட்டுக் காரர் பிள்ளையளை வளர்க்கிறது சரியில்லை எண்ட மாதிரி என்ரை அப்பா, அம்மா, அவையளின்ரை சினேகிதர்கள் எல்லாரும் சேர்ந்து கதைப்பினம். ஆனால் உண்மையிலை வெளிநாட்டுக் காரர்தான் பிள்ளையளின்ரை மன உணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து வளர்க்கினம் எண்டது இவையளுக்குத் தெரியேல்லை. இதுகளை நான் சொல்லப் போனால் இவையள் கேட்பினமே!

ஒரு பதினாலு வயசுப் பிள்ளைக்கு எத்தினை ஆசையள் இருக்கும். என்ரை வயசுப் பிள்ளையளெல்லாம் எவ்வளவு சந்தோஷமா எங்கையெல்லாம் சுத்திக் கொண்டு திரியுதுகள். நான் மட்டும் இப்பிடி வீட்டுக்குள்ளை அடைஞ்சு போய்க் கிடக்கோணும் எண்டு இவையள் நினைக்கிறது சரியோ! என்னெண்டு நான் இதையெல்லாம் இவையளுக்கு விளங்கப் படுத்துறதோ தெரியேல்லை.

வெளியிலை போனால் இப்ப என்ன வந்திட்டுது! அண்ணா, தம்பியவையள் மட்டும் நல்ல ´ஹாயா´ எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வருவினம். அதுக்கு அம்மாவும் அப்பாவும் ஒண்டுமே சொல்ல மாட்டினம். ஏனெண்டால் அவையள் ஆம்பிளைப் பிள்ளையளாம்.

அவையள் சுத்திப் போட்டு வந்து “ஒரு தேத்தண்ணி போடு" எண்டுவினை. “ஏன்... நீ போட்டுக் குடியன்" எண்டு சொல்லத்தான் எனக்கு மனம் வரும். அதுக்கிடையிலை அம்மாவே சொல்லிப் போடுவா “பிள்ளை, அவனுக்கு அந்த வடையையும் எடுத்துக் குடு" எண்டு. ஏன் ஆம்பிளைப் பிள்ளையளுக்கு கை, கால் ஒண்டும் இல்லையோ! ஏன் நான் எடுத்துக் குடுக்கோணும்! இதையெல்லாம் கேட்கேணும் போலை இருக்கும். என்னெண்டு கேட்கிறது!

அவங்களும் லேசில்லை. சும்மா புதுமை கதைப்பாங்கள். சேர்ட்டை மாத்துற மாதிரி அடிக்கடி கேர்ள் பிரண்டையும் மாத்துவாங்கள். தாங்கள் வெளிநாட்டுப் பெட்டையளோடை உதட்டோடை உதடு உரசி அன்பைப் பரிமாறுறது ஒண்டும் தப்பில்லையாம். ஆனால் தங்கடை சகோதரி மட்டும் பெடியங்களைக் கண்டால் சிரிப்பைக் கூட அளந்துதான் உதிர்க்கோணுமாம்.

அது மட்டுமே, தங்களுக்கு மனைவியா வரப் போறவள் பயங்கர சுத்தமா இருக்கோணுமாம். அவள் கண்டிப்பா தாயகத்திலை இருந்து அடக்கமான, பண்பான தமிழச்சியா வரோணுமாம், எப்பிடியிருக்கு இவையளின்ரை நியாயங்கள்.

இதுகளைப் பற்றி நான் மூச்சே விடக் கூடாதாம். ஏனெண்டால் அம்மா, அப்பாவும் அண்ணாவையளின்ரை கொள்கையளுக்கு நல்ல சப்போர்ட். அம்மாவோடை சாடை மாடையா இதைப் பற்றி ஒரு நாள் கதைச்சுப் பார்த்தன். அவை ஆம்பிளைப் பிள்ளையளாம். அம்மா சொல்லி அந்த சப்டரையே என்னைத் தொடர விடாமல் குளோஸ் பண்ணீட்டா.

அம்மாவாலை என்னெண்டுதான் இப்பிடி எல்லாம் வாழ முடியுதோ, எனக்கெண்டால் தெரியேல்லை. வாற கோபத்துக்கு எல்லாருக்கும் ஏதாவது சொல்லோணும் போலை கிடக்கு. என்னெண்டு சொல்லுறது! உடனை அப்பா கத்துவார், “உப்பிடி வாய் காட்டிப் பழகாதை. பொம்பிளைப் பிள்ளை மாதிரியே வளர்ந்திருக்கிறாய்!" எண்டு. அது மட்டுமே! பிறகு அம்மாவோடையும் கத்துவார், “நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறீர்" எண்டு.

எனக்கு ஒண்டு விளங்கேல்லை. ஏன் பொம்பிளையள் ஏதும் கதைச்சால் அதை வாய் காட்டுறது எண்டு சொல்லோணும். என்ரை கருத்தை நான் சொல்லுறதுக்கு எனக்கு உரிமை இல்லையே!

எனக்கு எல்லாரையும் விட அப்பாவிலைதான் பயங்கரக் கோவம். அப்பாவைக் கூப்பிட்டு இதையெல்லாம் கேக்கோணும் எண்டு இருக்கும்.

ஏதோ சனநாயகம், சர்வாதிகாரம்... எண்டெல்லாம் பெரிய அரசியல் கதைப்பார் அப்பா. இது கூட ஒரு வித சர்வாதிகாரம்தானே.

என்னை ஜேர்மன் ஸ்ரைலிலை பிறந்தநாள் விழாவுக்குப் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டு, தான் மட்டும் வெளிநாட்டு ஸ்ரைலிலை மேசையிலை போத்தலுகளும், கிளாசுகளுமா வைச்சுக் கொண்டிருந்து தன்ரை சினேகிதரோடை குடிச்சுக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரே எரிச்சலும், கோபமும்தான் வருது. எவ்வளவு நேரத்துக்கெண்டு இந்த ´ரீவீ´ (தொலைக்காட்சி) யைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் அப்பாக்கும், அவற்றை சினேகிதருக்கும் பிடிச்ச நிகழ்ச்சியளை மட்டும்.

அம்மா ரேஸ்ருக்கு(taste) ´ரோல்ஸ்´ செய்து அப்பாவைக்குக் குடுத்திட்டு, இடியப்பமும் அவிச்சு கறி, பொரியல், சொதியெல்லாம் செய்திட்டா. அப்பாவையள் ´ரோல்ஸ்´ ஐச் சாப்பிட்டு முடிச்சிட்டினம். அதாலை ரேஸ்ருக்கு(taste) க்கு இன்னும் ஏதாவது வேணுமாம். அப்பா வந்து அம்மான்ரை காதுக்குள்ளை குசுகுசுத்துப் போட்டுப் போறார். அம்மா களைச்சுப் போட்டா எண்டிறது எனக்குத் தெரியுது. ஆனாலும் அம்மா முடுக்கி விட்ட பொம்மை மாதிரி வாயை மூடிக் கொண்டு ´கட்லட்´ செய்ய ஆயுத்தப் படுத்துறா. என்னைக் கூப்பிட்டு வெங்காயம் வெட்டித் தரச் சொல்லுறா.

எனக்கு அம்மாவோடை கதைக்கக் கூடப் பிடிக்கேல்லை. நாளைக்கு பள்ளிக்கூடத்திலை என்ரை பிரண்ட்ஸ்(friends) எல்லாரும் கேட்பினம் “ஏன் நீ Birthday partyக்கு வரேல்லை" எண்டு. ஏதாவது பொய் சொல்லோணும். அதுகளுக்கு இப்ப என்ரை நிலைமை ஓரளவு விளங்கீட்டுது. “துருக்கி அப்பாமார் மாதிரி உன்ரை அப்பாவும் பொல்லாதவரே? உன்னை ஒரு இடமும் விடமாட்டாரே?" எண்டு அண்டைக்கு ஸ்ரெபி கேட்டவள். எனக்கு எவ்வளவு வெக்கமா இருந்ததெண்டு இந்த அம்மாக்கோ, அப்பாக்கோ விளங்குமே?

இதுக்குள்ளை பிறகு அம்மா சொல்லுறா “பிள்ளை, இந்தக் கோப்பையளைக் கழுவு" எண்டு. ´மாட்டன்´ எண்டு சொல்லோணும் போலை பயங்கரக் கோவம் எனக்கு வருது. ஆனால் என்னெண்டு சொல்லுறது. பேசாமல் கோப்பையளோடை சேர்த்து என்ரை ஆசையளையும் கழுவிக் கொண்டிருக்கிறன்.

ஒரு மனசு.

2001

 

 

வசந்தம் காணா வாலிபங்கள்

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி அழைப்பில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நான்கு மணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்து எறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான்.

இந்த அகால வேளையில் இப்படி தொலைபேசி அலறினால் அது ஊரிலிருந்து வரும் அழைப்பாகத்தான் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். ´வேறு யார் அப்பாவாகத்தான் இருக்கும்.´ மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

முன்னர் என்றால் ஊரிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பில் காசு கரைந்தாலும், அப்பாவுடன் பேசுவதில் அவனிடம் உற்சாகம் பிறக்கும். இப்போது போட்டி போட்டுக் கொண்டு பல ரெலிபோன் கார்ட்டுகள் வந்து தொலைபேசிச் செலவைக் குறைத்திருந்தாலும் அவனது உற்சாகம் முன்னரைப் போலில்லாது குறைந்து விட்டது.

ஊரில் உள்ளவர்கள் பாடு கஷ்டந்தான். அவன் இல்லையென்று சொல்லவில்லை. மாடு போல் உழைத்து… அப்படிச் சொல்வதையும் விட அதிகமாகத் தன்னை வருத்தி, உழைத்து உழைத்து ஊருக்குத்தான் அனுப்பினான்.

பதினைந்து வருடங்களின் முன் 84 இல் அவன் ஜேர்மனிக்கு வந்த போது, அவன் இருபது வயது கூட நிரம்பாத அழகிய வாலிபன். வாழ்க்கையின் கனவுகள், வசந்தத்தின் தேடல்கள் எல்லாமே அவனுள்ளும் நிறைய இருந்தன.

ஆமியிடம் பிடிபட்டு பூசாவில் அடைபடவோ அல்லது அநியாயமாகச் சுடுபடவோ விரும்பாமல் அம்மா, அப்பாவின் ஆலோசனையுடன் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்தவன்.

வெளிநாடு, அதுவும் ஐரோப்பா… கோட், சூட்டுடன், ´ரை´யும் கட்டிக் கொண்டு... அழகிய நினைவுகளும், இனிய கனவுகளும் ஜேர்மனியில் முகாம்களுக்குள் எட்டுப் பேரை அல்லது ஒன்பது பேரை ஒரு அறைக்குள் விட்ட போது முழுவதுமாகக் கலையாது போனாலும் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையத் தொடங்கின.

ஊருக்குக் கடிதம் எழுதவும், சில்லறைச் செலவுகளுக்கும் போதுமாயிருந்த அவர்கள் கொடுத்த பொக்கற்மணி 70மார்க்கும், வேலையும் இல்லாது வேறு இடம் போக அனுமதியும் இல்லாது இருந்ததில் வெறெதுவும் செய்ய வழி தெரியாது பியர்கேஸ் இற்கும், சிகரெட்டுக்கும் அடிமையாகிப் போன கூட இருந்தவர்களுடன் கூட வைத்துக் காணாமற் போயின.

களவாய் ஸ்ரோபெரி பழம் பிடுங்கும் வேலை செய்ததில் சிறிது பணம் சேர்ந்தாலும் அழகாய் இருந்த கைகளும், சுகமாக இருந்த முதுகும் கறுக்கவும், வலிக்கவும் தொடங்கின.

ஆரம்பத்தில் கறுத்துப் போன கன்னங்களையும், வெடித்துப் போன விரல்களையும் பார்த்து மனம் சிறிது வெறுத்துப் போனாலும் ஊருக்கு அனுப்பப் பணம் கிடைத்ததில் தொடர்ந்து வெலை செய்ய மனம் மறுக்கவில்லை.

முகாமில் கிடைக்கும் ஜேர்மனியச் சாப்பாட்டைச் சாப்பிட முடியாமல், ஆளுக்கு 1மார்க் என்று முகாமிலிருந்த எல்லாத் தமிழர்களுமாய் போட்டு வாங்கிய மின்சார அடுப்பை அறைக்கு அறை மாற்றி, கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்து ´ஹவுஸ்மைஸ்ரர்´ இற்குத் தெரியாமல் சமைப்பதே ஒரு சாதனையாகி, ஒரு கோழியை ஒன்பது பேர் பகிர்ந்துண்பது அதை விடப் பெரிய சாதனையாகி, கொட்டும் பனியில், குளிரின் கொடுமையில் வாழ்க்கையே வேதனையாகியதில், படிக்கும் நினைவும், ஐரோப்பிய வாழ்க்கை பற்றிய கனவும் கலைந்த போதுதான் ஆளுக்கொரு நகரமாய் அனுப்பப் பட்டார்கள்.

கோபுவுடன் இன்னொரு தமிழனையும் அனுப்பினார்கள். அவனுக்கு அந்த நகர் பிடிக்கவில்லை என்று, யாரையோ பிடித்து, எப்படியோ கதைத்து கனடா போய்ச் சேர்ந்து விட்டான்.

முகாமை விட்டு வெளியில் வந்த சந்தோசத்தை வாய் விட்டுச் சொல்லக் கூட ஒரு தமிழ்க்குருவி இல்லாது கோபு தனித்துப் போய் விட்டான். தனிமையில் பேசி, தனிமையில் சிரித்து வேலை செய்ய அனுமதியோ, வேறு நகரம் செல்ல ஒரு விதியோ இல்லாத நிலையில் பைத்தியக்காரன் போலத் திரிந்தான்.

வாழ்க்கைச் செலவுக்கென அவர்கள் கொடுக்கத் தொடங்கி விட்ட 350மார்க்கில் சோறையும், கோழியையும் சாப்பிட்டு விட்டு மீதியை ஊருக்கு அனுப்பினான். பணம் கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும், தங்கை தம்பிமாரும் எப்படியெல்லாம் மகிழ்வார்கள் என நினைத்துத் தனக்குள் மகிழ்ந்தான்.

“என்ரை ராசா…” என்ற படி பாசம் பொங்க ஊரிலிருந்து வந்த கடிதங்கள் நியமாகவே பாசத்தைச் சுமந்து வந்தாலும் போகப் போக “சாமான் விலையேற்றம், கூட அனுப்பு.” என்றன.

பாஷை தெரியா விட்டாலும் படிகள் ஏறி “வேலை இருக்கா?” என்று கேட்டதில் பேக்கரி, பிற்சேரியா, ரெஸ்ரோறன்ற்… என்று வேலைகள் கிடைத்தன. வேலைக்கான அனுமதிப் பத்திரம் இல்லாது களவாய் வேலை என்பதால் வேலை கொடுத்தவர்களும் போதிய ஊதியம் கொடுக்க மறுத்தார்கள். வேலையை மட்டும் நன்றாக வாங்கினார்கள். ஊரிலுள்ள உறவுகளின் தேவைகள் அவனால்தான் தீர்க்கப்பட வேண்டும் என்பதால் ´வேண்டாம்´ என்று வேலையை விட்டுப் போகவும் வழி தெரியாது கூட்டல், கழுவல், துடைத்தல், சலாட் கழுவுதல்... என்று எல்லா வகையான வேலைகளையும் செய்தான்.

இப்படியே வாழ்க்கை மாறி, அழகிய இருபது வயது வாலிபனான கோபு குளிரிலும், பனியிலும், வேலையிலும் ஆறு வருடங்களைக் கழித்த பின்னே வேலை செய்யவும், வேறு நகரம் செல்லவும் அனுமதி கிடைத்தது.

இனியாவது வாழ்க்கை சிறப்பாகி விடுமென்ற நம்பிக்கையில் ஓடி ஓடி வேலை தேடினான். வேறு நகரங்களுக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தான்.

பாஷை தெரியாத நாட்டில் படித்த படிப்புக்கோ, பகட்டான வேலைக்கோ இடமில்லை என்பதை வேலை தேடிய போதும், நண்பர்களுடன் பேசிய போதும் தெரிந்து கொண்டான்.

படிக்க என்று ஆசை வந்தது. ஊருக்குப் பணம் அனுப்ப வேண்டிய பாரிய பிரச்சனையில் ஆசை ஆசையாகவே இருக்க களவாய் செய்த வேலைகளையே அனுமதியுடன் தொடர்ந்தான்.

ஊரில் தங்கைமார் வளர வளர, ஒரு வேலையில் கிடைத்த பணம் போதாமல் இரண்டு வேலை, மூன்று வேலை என்று தேடி வாழ்க்கை பணத்துக்கு ஓடுவதாய் மாறி விட்டது.

“பக்கத்து வீடு மாடியாய் எழுந்து விட்டது. நாங்கள் மட்டும் இப்பிடி இருக்கிறது உனக்குத்தான் அழகில்லைத் தம்பி!”

“தங்கைச்சிக்கு ஒரு வரன் சரி வந்திருக்கு. கனடாப் பெடியன். ஆறு இலட்சம் சீதனம் கேட்கினம். இந்தியாவிலை கலியாணத்தை வைக்கோணுமாம்... உன்ரை கையிலைதான் அவளின்ரை வாழ்க்கை தங்கியிருக்கு…”

இப்படியாகத் தொடர்ந்த ஊர்க் கடிதங்கள் அவனைப் பணத்துக்காகத் துரத்தின. பஸ்சிலும், ரெயினிலும் ஓடிக் களைத்தவன் சொந்தமாகக் கார் வாங்கி ஓடி இன்னும் களைத்தான். பாசம் ´பேசாதே´ என்று கட்டிப் போட அலுத்தான்.

உழைத்து உழைத்து அனுப்பியவன், முப்பதைத் தாண்டிய பின்னும் ´உனக்கொரு கல்யாணம் செய்து பார்க்க எமக்காசை´ என அம்மாவோ, அப்பாவோ ஒரு வரி எழுதாததில் மனதுக்குள் சலித்தான்.

வாழ்க்கையின் ஆசைகளும், வசந்தத்தின் தேடல்களும் ஏக்கங்களாய் மாறின. நரையோடத் தொடங்கி விட்ட தலையில் மெல்லிய வழுக்கையும் விழத் தொடங்கியது.

அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து ஆதங்கப் படும் பலநூறு ஐரோப்பியத் தமிழ் இளைஞர்களின் வரிசையில், 35 வயதைத் தொட்டு நிற்கும் பிரமச்சாரியாக அவனும் நின்ற போதுதான் அவன் மதுவைக் கண்டு கொண்டான்.

மதுவின் சினேகம் அவனைத் தென்றலாய் தழுவியது. அவள் அன்பில் தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான். தனக்கும் ஒரு வாழ்வு வரப் போகிறதென்ற மகிழ்வில் அது பற்றி ஊருக்கு எழுதினான்.

“இன்னுமொரு தங்கை இருபந்தைந்து வயதில், கல்யாணமாகாமல் இருக்க... உனக்கென்ன அவசரம்?” என்றது ஊர்க்கடிதம். வாழ்க்கை ஆசை அவனை வாட்ட, யார் சம்மதமுமின்றி பதிவுத் திருமணம் செய்து மதுவை மனைவியாக்கிக் கொண்டான்.

அதுதான் இப்போது பிரச்சனை. “தங்கை இருக்க, நீ கல்யாணம் செய்தது மாபெருந்தப்பு” என்று அம்மாவும், அப்பாவும் மட்டுமல்ல, மாமா, மாமி, சித்தப்பா சித்தி... என்று எல்லோருமே மனங் கொண்ட மட்டும் திட்டி எழுதி விட்டார்கள்.

மனம் சலித்து விட்டது. யாரும் அவனுக்கு இப்போது கடிதம் எழுதுவதில்லை. ஆனாலும் மாசம் தவறாது வவுனியா வரை வந்து, தொலைபேசியில் அழைத்து, பணத்தை உண்டியல் மூலம் எடுத்துப் போக அப்பா மறப்பதில்லை.

ஓடிப்போனவன், ரெலிபோனை எடுத்தான். அப்பாவின் அழைப்புத்தான் அது. ஒரு நிமிட அழைப்பில் “திருப்பி எடு” என்று சொல்லி விட்டு அப்பா வைத்து விட்டார். திருப்பி எடுத்தான். ஊர் நிலைமை பற்றி, கஷ்டங்கள் பற்றி அப்பா நிறையச் சொன்னார். அம்மா, சகோதரங்கள் பற்றி நாத்தழுதழுக்க விசாரித்தான்.

“தம்பி, இந்த முறை கொஞ்சங் கூடவா அனுப்பு தம்பி! நீ அனுப்பிறது ஒரு மூலைக்கும் போதுதில்லை. எல்லாம் விலை. கொக்கான்ரை பிள்ளைக்கும் பிறந்தநாள் வருது. அதுவும் பெரிசாச் செய்யாட்டி உனக்குத்தான் மரியாதையில்லை. ஒரு ஆயிரமாவது கூட அனுப்பு... நாளைக்குக் காசு கொண்டு வந்து தந்திடுவினைதானே?” அப்பா மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

ஏற்கெனவே ஏஜென்சிக்குக் காசு கட்டிவிட்டு மொஸ்கோவில் இரண்டு வருடங்களாக நிற்கும் தம்பியை வெளியில் எடுக்க இன்னும் சில ஆயிரங்கள் ஏஜென்சிக்குக் கொடுக்க வேண்டும். அந்தப் பணப் பிரச்சனையே கோபுவின் தலைக்குள் சுமையாக இருக்க, அப்பா இன்னுமொரு ஆயிரம் கூடக் கேட்கிறார்.

ஏற்கெனவே குற்றவாளிக் கூண்டில் உறவுகளால் நிறுத்தப் பட்ட அவனால் அப்பாவின் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.

“ஓமப்பா, நான் அனுப்புறன். நாளைக்கே காசைக் கொண்டு வந்து தருவினம்.” என்றான்.

“உன்ரை மனைவி மது எப்பிடி இருக்கிறாள்?” என்று அப்பா ஒரு வார்த்தை கேட்கவில்லை. தொலைபேசி வைக்கப் பட்டு விட்டது.

கோபுவின் மனம் வேதனைப் பட்டது. ´இந்த ஆயிரங்களை எப்படிச் சமாளிக்கலாம்´ என்ற யோசனையில் மூளை குழம்பியது. ஆறுதல் படுத்த இருக்கும் மனைவியுடனும் ஆறி இருந்து பேச நேரமில்லை. அடுத்த வேலைக்குப் போவதற்கிடையில் இன்னும் ஒரு மணித்தியாலந்தான் படுக்கலாம். ஓடிப் போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் அவனை விட்டுத் தூர விலகியிருந்தது.

3.10.2000

 

 

கனவான இனிமைகள்

இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ, திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை.

நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும், ஊருக்குப் பணம் அனுப்பும் விடயத்தில்தான் ஆரம்பித்தது.

சுமதியின் அம்மாவிடமிருந்து நேற்றுக் கடிதம் வந்திருந்தது. அதில் ´பொம்பிளைப் பிள்ளையைக் கேட்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்யிறது பிள்ளை, என்னாலை ஒண்டையும் சமாளிக்கேலாமல் கிடக்கு. சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருக்கு. ஏதாவது உதவி செய் பிள்ளை...´ என்று எழுதியிருந்தது.

சுமதி இதைப் பற்றி முதலே கணவன் மாதவனோடு கதைக்கத்தான் விரும்பினாள். ஆனால் மாதவனோ ´இவள் இது பற்றிக் கதைத்து விடுவாளே´ என்ற பயத்தில், தான் முக்கியமான வேலையில் இருப்பது போல கொம்பியூட்டரின் முன் இருந்து ஏதோ தேடுவது மாதிரியும், ரெலிபோனில் முக்கிய விடயங்கள் பேசுவது மாதிரியும் பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தான்.

இவள் காத்திருந்து சலித்து படுக்கைக்குப் போய் அரை மணித்தியாலத்தின் பின்பே அவன் படுக்க வந்தான்.

அம்மாவின் கடிதம், சாப்பாட்டுக்கே காசில்லையென்று, பணம் கேட்டு வந்த நிலையில் எந்த மகளால் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும். சுமதி நிம்மதியின்மையோடு படுக்கையில் புரண்ட படியே “இஞ்சருங்கோ..! அம்மான்ரை லெட்டர் பார்த்தனிங்கள்தானே. தம்பியவங்கள் என்ன கஷ்டப் படுறாங்களோ தெரியேல்லை. என்ரை இந்த மாசச் சம்பளத்திலை கொஞ்சக் காசு அனுப்பட்டே?" மாதவனிடம் கேட்டாள்.

மாதவனிடமிருந்து மௌனந்தான் பதிலாய் வந்தது.

“என்ன… சொல்லுங்கோவன். அனுப்பட்டே?" சுமதி கெஞ்சலாய்க் கேட்டாள்.

“உன்னோடை பெரிய தொல்லை. மனுசன் இராப்பகலா வேலை செய்திட்டு வந்து நிம்மதியாக் கொஞ்ச நேரம் படுப்பம் எண்டால் விட மாட்டாய். லைற்றை நிப்பாட்டிப் போட்டுப் படு." கத்தினான் மாதவன்.

சுமதிக்கும் கோபம் வந்து திருப்பிக் கதைக்க, வாய்ச்சண்டை வலுத்தது.

“..............."

“..............."

“..............."

இறுதியில் “நீயும், உன்ரை குடும்பமும் கறையான்கள் போலை எப்பவும் என்னைக் காசு, காசெண்டே அரிச்செடுப்பீங்கள்." மாதவன் இரவென்றும் பாராமல் கத்தினான்.

“என்ரை குடும்பத்துக்கு நீங்களென்ன அனுப்பிக் கிளிச்சுப் போட்டிங்கள். நான் வந்து பத்து வருஷமாப் போச்சு. இப்ப மட்டிலை ஒரு ஆயிரம் மார்க் கூட நீங்கள் என்னை அனுப்ப விடேல்லை. நானும் வேலை செய்யிறன்தானே. என்ரை காசை வீட்டுச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உங்கடை காசை உங்கடை அண்ணன்மார் கனடாவிலையும், அமெரிக்காவிலையும் வீடு வேண்டுறதுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறிங்கள்." சுமதியும் ஆக்ரோஷமாகச் சீறினாள்.

மாதவனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வர “என்ரை குடும்பத்துக்குக் காசு அனுப்புறதைப் பற்றி, நீ என்னடி கதைக்கிறாய். நான் ஆம்பிளை அனுப்புவன். அதைப் பற்றி நீயென்ன கேட்கிறது?" கத்திய படியே எழுந்து, சுமதியின் தலையைக் கீழே அமத்தி, முதுகிலே ஓங்கி ஒரு குத்து விட்டான்.

சுமதி வலி தாளாமல் “அம்மா..!" என்று அலறினாள். மீண்டும் மாதவன் கையை ஓங்க, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய சுமதி அவன் கைகளை அமத்திப் பிடித்துத் தள்ளினாள்.

“என்னடி எனக்கு நுள்ளுறியோடி..? உனக்கு அவ்வளவு திமிரோ..? மாறி மாறி அவள் நெஞ்சில், கைகளில், முதுகில் என்று தன் பலத்தை எல்லாம் சேர்த்து மாதவன் குத்தினான்.

சுமதியால் வலியைத் தாங்க முடியவில்லை. “மிருகம்" என்று மனதுக்குள் திட்டியவாறு அப்படியே படுத்து விட்டாள்.

மாதவன் விடாமல் திட்டிக் கொண்டே அருகில் படுத்திருந்தான். சுமதி எதுவுமே பேசவில்லை. மௌனமாய்ப் படுத்திருந்தாள், மனதுக்குள் பேசியபடி.

கண்ணீர் கரைந்தோடி தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது. மனசை நிறைத்திருந்த சோகம் பெருமூச்சாய் வெளியேறிக் கொண்டிருந்தது.

சுமதி படுத்திருந்தாள். மாதவனின் திட்டல்கள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.

அப்போது அவள் முன்னே ஒரு அழகிய ஆண்மகன் குளித்து விட்டு ஈரத்தைத் துடைத்த படி, பின்புறமாக நின்றான். திரண்ட புஜங்களுடன் மாநிறமான ஒரு ஆண் மகன் ஈரம் சொட்ட நின்ற போது, சுமதிக்கு அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து அந்த ஆண்மகன் சுமதியின் பக்கம் முகத்தைத் திருப்பினான். அழகிய முகம்.

அவன் புன்னகை சுமதியைக் கொள்ளை கொண்டது. ´என் இலட்சிய புருஷன் இவன்தான்´ சுமதியின் மனம் நினைப்பிலே களிப்புற்றது. சுமதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் இன்னொருவன் வந்து நின்றான். அந்த இன்னொருவனைப் பார்க்கச் சுமதிக்குப் பிடிக்கவில்லை. தன் மனங்கவர்ந்த முதலாமவனை அவள் தேடினாள். முதலாமவனின் கண்கள் அந்த இன்னொருவனையும் தாண்டி இவளுள் எதையோ தேடின.

தேடியவன் மெதுவாக இவளருகில் வந்தமர்ந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ இடையே வந்து விட அவன் போய் விட்டான்.

அடுத்த நாள் அவனைப் பற்றிய நினைவுகளுள் மூழ்கிய படியே சுமதி லயித்திருந்தாள். அவன் வந்தான்.

தனக்காக, தன்னைத் தேடி, தனக்குப் பிரியமான ஒருவன் வந்திருக்கிறான், என்ற நினைப்பில் சுமதி மிகவும் சந்தோஷப் பட்டாள்.

அதற்கடுத்த நாளும் அவன் நினைவுகளைச் சுமந்த படி ´வருவானா..!´ என்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்வியோடு, அவள் வீட்டிலிருந்து வெளியேறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். அது இரு பக்கமும் மரங்களடர்ந்த ஒரு அமைதியான, அழகான பாதை.

அந்த ரம்மியமான சூழலில், காதல் உணர்வுகள் மனதை நிறைக்க, அதில் அவன் நினைவுகளை மிதக்க விட்ட படி சுமதி நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் அவன் வந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவள் இனம் புரியாத இன்பத்தில் மிதந்தாள்.

´எனக்காக வருகிறான். எனக்கே எனக்காக வருகிறான். தேநீரோ, சாப்பாடோ கேட்க அவன் வரவில்லை. என்னில் காதல் கொண்டு, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பார்க்க ஆசை கொண்டு வருகிறான். என்னோடு கதைத்துக் கொண்டு இருக்க வருகிறான். என்னைச் சமையலறைக்குள் அனுப்பி விட்டு தான் ஒய்யாரமாக இருந்து தொலைக்காட்சி பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை. என்னைச் சாமான்கள் வாங்கக் கடைக்கு அனுப்பி விட்டு, நான் தோள் வலிக்கச் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வரும் போது, ரெலிபோனில் நண்பருடன் அரட்டை அடிப்பது மட்டுமல்லாமல், “நான் என்ரை மனிசிக்கு முழுச் சுதந்திரமும் குடுத்திருக்கிறன்." என்று சொல்லுகிற வக்கிரத்தனம் அவனுக்கு இல்லை.

அவனிடம் எந்த சுயநலமும் இல்லை. எனக்கே எனக்காக, என்னைப் பார்க்க, என்னைத் தேடி வருகிறான். என்னைப் பக்கத்தில் வேலைக்காரி போல வைத்து விட்டு, ஊர்ப் பெண்களுடன் அரட்டை அடித்துத் திரியும் கயமைத்தனம் இவனிடம் இல்லை.´ ஆயிரம் நினைவுகள் சுமதியை ஆக்கிரமிக்க ஆவலுடன் அவன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அன்று போல் அரை குறை ஆடையுடன் இன்று அவன் இல்லை. தூய உடை அணிந்திருந்தான். அவன் நெருங்க நெருங்க சுமதி அவனை முழுமையாகப் பார்த்தாள்.

புன்னகையால் அவள் மனதை ஜொலிக்க வைத்த அவன் தலையில், மெலிதாக நரையோடியிருந்தது. சுமதி அவன் வரவில் மகிழ்ந்தாள். வானத்தில் பறந்தாள். ஏதோ தோன்றியவளாய் பக்கத்தில் இருந்த பாதையில் திரும்பினாள். அவன் இரண்டு அடி தள்ளி அவள் பின்னே தொடர்ந்தான். அது ஒரு பூங்கா. அங்கு ஒரு சிறு குடில். அவன் அதனுள் நுழைந்து அங்கிருந்த வாங்கிலில் அமர்ந்து சுமதியைக் கண்களால் அழைத்தான். சுமதி அவன் பார்வைக்குக் கட்டுண்டவள் போல், போய் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

அவன் சுமதியின் வலதுகை விரல்களை பூக்களைத் தொடுவது போல், மிகவும் மெதுவாகத் தொட்டுத் தூக்கி, தன் மறுகையில் வைத்தான். அவன் தொடுகையில் உடற் பசியைத் தீர்க்கும் அவசரமெதுவும் இல்லை. அன்பு மட்டுமே தெரிந்தது.

சுமதியின் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியத் தொடங்கின. அவள் மிகமிகச் சந்தோஷமாயிருந்தாள். வாழ்க்கையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.

திடீரென்று, அவளை யாரோ தோளில் பிடித்து உலுப்பியது போல இருந்தது. திடுக்கிட்ட சுமதி விழிகளைத் திறந்து பார்த்தாள்.

அங்கே பூங்காவும் இல்லை. புஷ்பங்களும் இல்லை. கனவுக் காதலனும் இல்லை. மாதவன்தான் விழிகளை உருட்டியபடி, கோபமாக “அலாம் அடிக்கிறது கூடக் கேட்காமல் அப்பிடியென்ன நித்திரை உனக்கு வேண்டிக் கிடக்கு. எழும்படி. முதல்லை பொம்பிளையா லட்சணமா இருக்கப் பழகு.!

கெதியாத் தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வா. நான் வேலைக்குப் போகோணும்." கத்தினான்.

ஏதோ ´பொம்பிளையளுக்குச் சுதந்திரம் கிடைச்சிட்டு´ என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கினம். சுமதிக்குச் ´சுதந்திரம்´ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியவில்லை.

அம்மாவின் கடிதம் மேசையில் மடித்த படி இருந்தது. மனசு கனக்க, அவள் மௌனமாய் தேநீரைப் போடத் தொடங்கினாள். உடலெல்லாம் வலித்தது. அன்றைய கனவு மட்டும் மனதின் ஓரத்தில் அமர்ந்திருந்து, வாழ்க்கையின் இனிமை எங்கோ தொலைந்து விட்டது என்பதை அவளுக்கு உணர்த்தியது.

6.12.2000

 

 

இளங்கன்று

கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது சில வாரங்களாகவே வீட்டில் புயல். இன்று உச்சக் கட்டம். மகன் அமெரிக்காவுக்குப் போவதில் சந்தியாவுக்கும் எந்தவித உடன்பாடும் இல்லைத்தான். அதற்காக அப்பா சுந்தரேசனும், மகன் கவினும் இத்தனை வாக்குவாதங்களும், சண்டைகளும் போட்டுக் கொள்ள வேண்டுமா?

பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள். இந்த விடயம் தவிர்க்க முடியாததாய், அவள் கையை விட்டு நழுவி முற்று முழுதாகச் சுந்தரேசனிடம் சென்று விட்டது. அதுவும் கவின் இப்படி கதவை அடித்துச் சாத்தி, வீட்டை விட்டு வெளியில் போகுமளவுக்கு வந்து விட்டதே என்பதில் அவளுக்கு நியமாகவே வருத்தம். அவளால் அதைத் தாங்க முடியவில்லை.

எல்லாம் இந்த இணையத்தால் வந்ததுதான். சட், எஸ்.எம்.எஸ் என்று எல்லாப் பிள்ளைகளையும் போலத்தான் கவினும் கணினியோடும், கைத்தொலைபேசியோடும் திரிவான். படிப்பிலும் படு கெட்டிக்காரன் என்பதால் அவன் கணினியோடு மினைக்கெடும் போது சந்தியாவோ அன்றி சுந்தரேசனோ அவ்வளவான கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. ஆனால் அது இப்படி முகம் தெரியாத ஒருத்தி மீது காதலை ஏற்படுத்தும் என அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

´இங்கை, ஜேர்மனியிலை இல்லாத பொம்பிளையையே கொம்பியூட்டருக்குள்ளை கண்டிட்டான்´ என சந்தியா சலித்துக் கொள்வதும் உண்டு. ஆனாலும் அது இணையத்தோடே போய்விடும் என்றுதான் நினைத்திருந்தாள். இந்தளவு தூரம் வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

“அண்ணாவை மட்டும் அவுஸ்திரேலியாவிலை ஒரு வருசம் போயிருந்து படிக்க விட்டீங்கள். ஏன், நான் போனால் என்ன? என்னையும் விடுங்கோ" இதுவே அவன் அடிக்கடி பாவிக்கும் ஆயுதமாக இருந்தது.

“அண்ணாவுக்குப் பதினெட்டு வயசாகீட்டுது. அவனாலை இப்பத் தனிய இருந்து படிக்கேலும். அதாலை பயமில்லாமல் விட்டம். உனக்கு இப்பத்தானே பதினாறு வயசு. உனக்கும் பதினெட்டு வயசு வரக்கை பார்ப்பம்." என்று எத்தனையோ தடவைகள் சுந்தரேசன் சொல்லி விட்டான்.

கவினும் விடுவதாயில்லை. “உங்களுக்கு அண்ணனிலைதான் பாசம். என்னிலை இல்லை. அவன் என்ன கேட்டாலும் விடுவீங்கள். செய்வீங்கள். நான் கேட்டால்தான் உங்களாலை ஏலாது." என்பான்.

“அவுஸ்திரேலியா போலையோ அமெரிக்கா. அங்கை ஒரு நாளும் உன்னைத் தனிய விடேலாது." சந்தியாவும் முந்திக் கொண்டு கத்துவாள்.

வாக்குவாதங்களும், கருத்து முரண்பாடுகளின் வெளிப்பாடுகளும் இப்படித்தான் சில வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. இன்றோ, எப்படியாவது அப்பாவைச் சம்மதிக்க வைத்து விடுவது என்ற முடிவோடுதான் கவினும் ஆரம்பித்திருக்கிறான். அவனுக்கு அங்கு அமெரிக்காவில் இருக்கிற யூலியா என்ற பெண்பிள்ளை மேல் காதலாம். அந்தப் பிள்ளை பாவமாம். அதுன்ரை அம்மா கான்சர் வந்து இறந்து விட்டாவாம். அது அம்மம்மாவோடைதான் வாழ்கிறதாம். அதுவும் இவனைப் பார்க்கத் துடியாய்த் துடிக்கிறதாம். கணினியூடு வந்த அந்தப் பிள்ளையின் படங்களை இவன் பிறின்ற் பண்ணி தன் அறைச் சுவர் முழுவதும் கொழுவி வைத்திருக்கிறான்.

சுந்தரேசனுக்குத் தெரியாத காதலே. அவன் அதைப் பற்றி ஒன்றுமே கதைக்க மாட்டான். “நீ, அமெரிக்காவுக்கு இப்போதைக்குப் போகேலாது. முதல்லை இங்கை படிச்சு முடி. பிறகு பார்ப்பம்." என்று அடித்துச் சொல்லி விடுவான்.

சந்தியாதான் “அவள் சும்மா ஒரு படத்தை அனுப்பியிருப்பாளடா. உன்னை விட வயசு கூடவாயும் இருக்கும். வீணா அவளை நினைச்சுக் கொண்டிராதை" என்று அவனைச் சமாதானம் செய்யப் பார்ப்பாள்.

எப்படியோ இன்றைய சுந்தரேசனுக்கும், கவினுக்குமான வாக்குவாதம் சற்றுக் காரமாகவேதான் இருந்தது. சுந்தரேசன் என்னவோ அமைதியாக, நிதானமாகத்தான் கதைத்தான். கவின்தான் வீட்டின் மேற்கூரையில் போய் முட்டாத குறையாகத் துள்ளிக் குதித்தான். “நீங்கள் ஒரு அப்பாவோ?" என்று வாய்க்கு வாய் கேட்டான். சுந்தரேசன் அசையவில்லை. “முடியாது" என்று திடமாகச் சொல்லி விட்டான்.

அந்தக் கோபந்தான். தான் வீட்டை விட்டுப் போகிறேன், என்று சொல்லி, கவின் அந்த இரவில் விறைக்கும் குளிருக்குள் வெளியில் போய் விட்டான்.

அவன் இப்படி விறைக்கும் குளிருக்குள் போக, சுந்தரேசன் தன்பாட்டில் போய்ப் படுத்துக் கொண்டது சந்தியாவை இன்னும் கோபத்துக்கும், கவலைக்கும் ஆளாக்கியது. கவினின் வேண்டுதல் நியாயமற்றதுதான். என்றாலும் இந்த நிலையில் சுந்தரேசனின் பாராமுகம் அவளைக் குமுற வைத்தது. படுக்கையறைக்குள் ஓடிச் சென்று “நீங்கள் ஒரு அப்பாவே? அவன் இந்தக் குளிருக்குள்ளை விறைச்சுச் சாகப் போறான். நீங்கள் நிம்மதியாப் படுப்பிங்களோ? போய் அவனைக் கூட்டிக் கொண்டு வாங்கோ!" கத்தினாள்.

சுந்தரேசன் மிகவும் அமைதியான சிரிப்புடன் “உனக்கு வேணுமெண்டால் நீ போய்ப் பார். கூட்டிக் கொண்டு வந்து உன்ரை அன்பு மகனைப் படுக்க வை. எனக்கு நாளைக்குக் காலைமை வேலை. நான் படுக்கப் போறன்." என்று விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.

சந்தியாவுக்கு மனங் கொள்ளவில்லை. அழுகை அழுகையாக வந்தது. ஓடிச் சென்று ஜன்னலாலும், பல்கணியாலும் எங்காவது அவன் தெரிகிறானா என எட்டிப் பார்த்தாள். குளிர் மட்டுமே உறைந்து கிடந்தது. வேறு எந்த அசுமாத்தமும் இல்லை.

சுந்தரேசனை எட்டிப் பார்த்தாள். அவன் தூங்கி விட்டான் போலிருந்தது. மெதுவாக ஜக்கற்றை எடுத்துப் போட்டு, சப்பாத்தையும் போட்டுக் கொண்டு வெளியில் இறங்கினாள். குளிர், செவிப்பறையை அறைந்தது. சப்பாத்தையும் தாண்டி கால்விரல்களில் ஊசியாகக் குத்தியது. அவளோ தன் குளிரைப் பொருட்படுத்தாது ´கவின் இந்தக் குளிரில் எங்கு உறைந்து கிடப்பானோ´ என்ற பதைப்போடு வீட்டைச் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் ஓடி ஓடித் தேடினாள். இளைப்பாறுவதற்கென ஆங்காங்கு வைக்கப் பட்டிருக்கும் வாங்கில்கள், கதிரைகள் என்று எல்லாவற்றையும் பார்த்தாள்.

12மணியாகப் போகும் அந்த நடுநிசியில் அவள் தனியாக அலைந்தாள். இடையிடையே ஒளி பாய்ச்சிச் செல்லும் மோட்டார் வாகனங்கள், குருவியோ, கோட்டானோ எழும்பும் ஓசைகள், அவ்வப்போது அவளைத் தாண்டிச் செல்லும் ஓரிரு மனிதர்கள் தவிர வேறெதையும் அவளால் காண முடியவில்லை. குளிரையும் விட தூரத்து இருள்களே அவளை அடிக்கடி அச்சத்தில் சில்லிட வைத்தன. ஒரு தரம் கவினின் நண்பன் ஒருவன் அவளைத் தாண்டிய போது மனதில் நம்பிக்கை ஒளி வீச ஓடிச்சென்று “கவினைக் கண்டாயா?" என்று கேட்டாள். அவனும் “இல்லை" என்ற போது அப்படியே ஏமாற்றத்தில் மனம் துவண்டாள்.

அவனைக் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை தளர, கூடவே, இனி அந்தக் குளிரில் முடியாது என்று கால்களும், கைகளும் கெஞ்ச… வீடு திரும்பினாள்.

சுந்தரேசன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். ´எப்படி இந்த மனுசனால் முடிகிறது?´ என்ற வியப்பும், கோபமும் மனதை விள்ள கதிரையில் அமர்ந்தாள். அவளால் முடியவில்லை. அழுகையும், பயமும் அவளின் அமைதியைக் குலைத்தன. ´இந்தக் குளிரில் அவன் எங்கே போவான்! சொந்தம் என்று சொல்ல யாரும் இல்லாத ஊர். நண்பர்கள் வீடுகளுக்கும் இந்த நடுநிசியில் எப்படிப் போவது? குளிரில் உறைந்து விடுவானோ?´ அவளுக்கு நடுங்கியது. மீண்டும் சப்பாத்தையும், ஜக்கற்றையும் போட்டுக் கொண்டு வெளியில் படியில் இறங்கினாள்.

ஏதோ ஒரு நப்பாசையில் வெளிக்கதவைத் திறவாமல் கெலருக்கான(நிலவறை) படிகளில் இறங்கி, கீழே போனாள். அங்கும் அவர்களுக்கான அறையின் திறப்பு அவனிடம் இல்லை. ஆனாலும் ஒரு தரம் திறந்து பார்த்தாள். இல்லை. அவன் இல்லை. ஏமாற்றம் இன்னும் ஒரு படி அவளைச் சோர வைக்க அந்த வீட்டின் பிளாற்றுகளில் வசிக்கும் எல்லோருக்கும் பொதுவான சைக்கிள்கள் வைக்கும் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கும் ஒருத்தரையும் தெரியவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் இன்னும் உள்ளே போய்ப் பார்த்தாள்.

ம்.. உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. அவன் இருந்தான். கூனிக் குறுகி குளிர் தாங்க முடியாமல் கைகளைக் குறுக்காகப் போட்டு தன்னைத் தானே கட்டிப் பிடித்த படி, கவின் நடுங்கிக் கொண்டு இருந்தான். இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை அடக்க முடியாமல் பீறிட, சந்தியா குமுறிக் கொண்டு அவனைக் கட்டிப் பிடித்தாள்.

“ஏனடா, ஏனடா இப்பிடியெல்லாம் செய்யிறாய். இந்தக் குளிரிலை இப்பிடிக் கெலருக்கை(நிலக்கீழ் அறை) இருக்கிறது உனக்கு நல்லாயிருக்கோ? வா, மேலை வா."

“ம்.. நான் வர மாட்டன். நான் அமெரிக்காவுக்குப் போப்போறன்." வார்த்தைகள் இன்னும் திமிறலோடே வெளி வந்தன.

“முதல்லை மேலை வா. அங்கை போயிருந்து கதைப்பம்"

“இல்லை, அந்தாள் இருக்கிற இடத்துக்கு வரமாட்டன்."

“டேய், அவர் உன்ரை அப்பாவடா. அவர் உன்ரை நல்லதுக்குத்தான் சொல்லுறார்."

“அவர் அப்பாவே?"

“அதைப் பிறகு கதைப்பம். முதல்லை வா."

ஒருவாறு அவனை மேலே கூட்டிக் கொண்டு போய் படுக்க வைப்பதற்குள் சந்தியாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

அடுத்த நாள் காலையில் சுந்தரேசன் “என்ன, மோன் வந்திட்டாரே?" என்றான்.

“ம்..." என்றாள் சந்தியா. அவளுக்கு சுந்தரேசன் அப்படிப் பாராமுகமாகப் படுத்து விட்டதில் மெலிதான கோபம்.

“வேறையெங்கை போறது? வருவார் என்று எனக்குத் தெரியும். நீதான் சும்மா தேவையில்லாமல்..."

சந்தியா பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் வந்தது காணும் என்றிருந்தது அவளுக்கு.

3.4.2007

 

 

முரண்களும் முடிவுகளும்

இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, “அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன்." என்று துளசி சொன்ன போது கோமதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்ன நீ விளையாடுறியே..? அதென்ன பிடிக்கேல்லை எண்டிறதும் அவரை விட்டிட்டுத் தனிய வாழப் போறன் எண்டிறதும்..! எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. உனக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிட்டுதே?" கோமதி அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கத்தினாள்.

“இல்லை அம்மா. எனக்குப் பைத்தியமும் இல்லை. கியித்தியமும் இல்லை. அவரோடை வாழத்தான் பிடிக்கேல்லை. துளசி சற்று எரிச்சலுடன் கீச்சிட்டாள்.

´என்ன கிரகசாரமடா இது! ஐநூறு கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற ஹனோபர் வரை போய் தில்லையம்பலத்தார் நல்ல சாத்திரி எண்டு எல்லாரும் சொல்லுகினம் எண்டு அவரட்டைச் சாதகத்தைக் காட்டி பொருத்தம் பார்த்து, பிறகு ஐயரிட்டைப் போய் நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்துத்தானே எல்லாம் செய்தது. பிறகேன் இப்பிடி நடக்குது.´ கோமதி குழம்பினாள்.

ஊர் கூட்டி, உறவுகளுக்கெல்லாம் சொல்லி, உலகின் அந்த அந்தத்திலிருந்து இந்த அந்தம் வரை பார்த்துப் பார்த்து ஈமெயிலாய் அனுப்பி, ரெலிபோனாய் அடித்து, கடிதங்களாய் எழுதி தம்பட்டம் அடித்து, ஹோல் எடுத்து மணவறை போட்டு, இல்லாத அருந்ததி பார்த்து எல்லாரும் வாழ்த்தத்தானே திருமணம் நடந்தது. ஐந்து மாதங்கள் கூட சரியாக நகரவில்லை. அதற்கிடையில் இவளுக்கு என்ன வந்தது. ஏன் இப்படி அதிரடி முடிவெடுத்தாள்? கோமதிக்குத் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

“நீ கெட்டிக்காரி. மோளுக்கு நல்ல ஒரு பெடியனாப் பார்த்துக் கட்டிக் குடுத்துப் போட்டாய். ஜேர்மனியிலை இப்பிடிப் படிச்ச, நல்ல குடும்பத்து மாப்பிளை கிடைக்கிறதெண்டால் லேசில்லை. நீ கெட்டிக்காரிதான். இனியென்ன! உனக்கு ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரித்தான்." ஏதாவது விழாக்களிலோ அல்லது கடைத் தெருக்களிலோ யாராவது தெரிந்த தமிழ்ப் பெண்களைச் சந்திக்கும் போது அவர்கள் இப்படித்தான் சொல்லி கோமதியின் மனதைக் குளிர வைப்பார்கள்.

´நல்லாத்தான் இப்பப் பாரம் குறைஞ்சிருக்கு. இவள் என்ரை தலையிலை பாறாங்கல்லை எல்லோ தூக்கிப் போட்டிருக்கிறாள்.´ கோமதியின் மனசு முணுமுணுத்தது.

துளசியோ ஒரு கவலையுமில்லாமல் சீடீ ஸ்ராண்;ட்டில் இருந்து சீடீ ஒன்றை எடுத்துப் போட்டு, பாட்டை ஓட விட்டிட்டு இடுப்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தாள்.

கோமதிக்கு அவளின் இந்த அலட்டிக் கொள்ளாத தன்மை எரிச்சலையே தந்தது.

கோமதியும் அந்த நாட்களில் ஆடினவள்தான். ஆனால் அது பரதநாட்டியம். அதுவும் அவளின் கழுத்தில் எப்போ தாலி ஏறியதோ அன்று வரைக்குந்தான். அதற்குப் பிறகு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

அவளுக்கும் அந்த நாட்களில் வீட்டில் சில சமயங்களில் ஆடவேண்டும் போல ஆசை வரும். இனி ஆட முடியாதென்னும் போது அழுகையும் வரும். ஆடவேண்டும் போல் காலும், கையும் பரபரக்கும் போதெல்லாம் “நீ ஆடுறது எனக்குப் பிடிக்கேல்லை” என்று அவள் கணவன் அதுதான் துளசியின் அப்பா முதலிரவன்றே சொன்ன வார்த்தைகள் நினைவுகளில் ஒலிக்க, அப்படியே கண்கள் பனிக்க கோமதி தன்னைக் கட்டிப் போட்டு விடுவாள்.

பரதநாட்டியம் மட்டுமே! இப்படி எத்தனை விடயங்கள் திருமண பந்தத்தில் உருவழிந்து போய் விட்டன. அதற்காக இந்த இருபத்தைந்து வருடத்தில் ஒருக்காலும் அவள் தன் கணவனை விட்டிட்டுப் போக வேண்டும் என்று நினைத்ததில்லையே!

ஆனால் ஐந்தே ஐந்து மாதத்தில், அவள் பத்து மாதங்கள் சுமந்து பெற்ற அவள் மகள் துளசி வந்து, வேண்டிக் கொடுத்த பொம்மையை வேண்டாம் என்று சொல்வது போல கணவனை வேண்டாம் என்கிறாளே! என்ன செய்வதென்று தெரியாமல் கோமதி குழம்பினாள்.

இந்தக் காலப் பிள்ளைகளிடம் எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் தன்மையும், எதையும் தூக்கி எறிந்து பேசும் தன்மையும் சற்று மிகையாகவேதான் உள்ளன. அதுவும் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள், ஒரு விதமான இரட்டைக் கலாச்சாரத்துக்குள் அகப்பட்டு, அவர்களை அழுத்தும் மனஉளைச்சல் காரணமாகவோ அல்லது எதிலும் முழுமையாக ஒட்ட முடியாத இயலாமை காரணமாகவோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல பெற்றோருடன் முட்டி, மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு கோமதியின் மகளும் விதி விலக்கானவளல்ல.

இரவுகளில் பிறந்தநாள் விழாக்களுக்கோ, அல்லது வேறு விழாக்களுக்கோ, அல்லது டிஸ்கோவுக்கோ செல்ல அனுமதி மறுக்கப்படும் போது துளசியின் முட்டி மோதல்களையும், வாக்குவாதங்களையும் சட்டை செய்யாதவள் போல் கோமதி நடித்திருந்தாலும், இந்த ஜேர்மனிய வாழ்வில் அது எத்தகையதொரு பாதிப்பை துளசியிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதை அவள் உணராமலில்லை. அதனால் சமயம் வரும் போதெல்லாம் துளசியை தன்னுடன் அழைத்து, அன்பால் அணைத்து, ஆறுதலான வார்த்தைகளால் அறிவுரை சொல்லுவாள். அது துளசியின் ஆதங்கங்களை முற்றாகச் சமாதானப் படுத்தவில்லை என்பது கோமதிக்குத் தெரிந்தாலும் கோமதியாலும் ஒன்றும் செய்ய முடியாமலே இருந்தது.

கோமதியும் பெண்தானே. அவளும் இந்தக் கலாச்சாரம், பண்பாடு என்ற போர்வைகளுக்குள் மூச்சடங்கி முக்குளித்தவள் தானே. ஆனாலும் “இந்தக் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ ஐரோப்பியக் கலாச்சாரத்துடன் வாழ்" என்று தன் பெண்ணிடம் சொல்ல, மற்றைய சாதாரண பெண்கள் போலவே கோமதிக்கும் மனம் துணியவில்லை.

என்னதான் புதுமை, புரட்சி என்று பேசினாலும், எழுதினாலும் தமது குடும்பம் என்று வரும் போது, ´என் பெண் இந்தக் கலாச்சாரம், பண்பாடுகளிலிருந்து நழுவி விடக் கூடாதே´ என்ற முனைப்போடுதான் பெண்களைப் பெற்ற பலர் நடந்து கொள்வார்கள். இந்த நிலையில் தானுண்டு, தன் குடும்பமுண்டு என்றும், சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தும் வாழும் கோமதியின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

கோமதி கூட ஒரு இரண்டும் கெட்டான் மனநிலையில் போராடுபவள்தான். படித்த, உலகம் தெரிந்த அவள் மனதுக்கும், நான் ஆண் என்ற திமிர்த்தனம் சற்றும் குறையாத கணவனுடனான அவள் வாழ்வுக்கும் இடையில் அவள் நிறையவே போராட்டம் நடத்தி விட்டாள். ஆனால் அவள் போராட்டம் எப்பொழுதுமே அவள் மனதுக்குள்தான். மற்றும் படி கணவன் “எள்” என்ற உடனே இவள் ´எண்ணெய்´யாக நிற்பாள்.

இந்த மனதோடு ஒரு வாழ்வு, நியத்தில் ஒரு வாழ்வு என்ற இரட்டை வேஷம் கோமதி அறியாமலே கோமதியிடம் ஒரு வித மன உளைச்சலைக் கூட ஏற்படுத்தியிருந்தது. அதனால்தானோ என்னவோ கோமதி துளசியின் விடயத்தில், துளசியின் சின்னச் சின்ன ஏமாற்றங்களையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவளாக இருந்தாள். இருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாத நிலையில் துவண்டாள்.

பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சில சின்னச் சின்ன விடயங்களில் கூட தடைகள் விதிக்கப்பட்டு, அனுமதிகள் மறுக்கப் பட்ட போது, துளசி அப்பா, அம்மாவை மீற முடியாத இயலாமையில் பொங்கி எழுந்து, அழுது ஆர்ப்பரிக்கையில் கோமதியும் அழுதாள். நாங்கள் தமிழ்ப் பெண்கள் என்பதையும், பண்பாட்டின் பெருமையையும் விளக்கி அவளைச் சமாதானப் படுத்தினாள். ஆனாலும் துளசியின் ரீன்ஏஜ் பருவம் துளசிக்கு மட்டுமல்லாமல், துளசியைத் திருப்திப் படுத்த முடியாத கோமதிக்கும் கூட மிகுந்த மன உளைச்சலான, வேதனையான கால கட்டமாகவே இருந்தது.

அதன் பிரதிபலன்தான் இதுவோ! துளசி கணவனை வேண்டாம் என்று சொல்வது ஏதோ பழி தீர்க்கும் படலம் போலவே கோமதிக்குத் தோன்றியது.

கட்டுப்பாடுகளை உடைத்தெறிய அன்று பதின்னான்கு வயதில் அவளுக்கு முடியவில்லை. இன்று இருபத்தி நான்கு வயதில் அவள் அப்பாவை மட்டுமல்ல இந்த சமூகத்தையே பழிவாங்க நினைக்கிறாளோ!

கோமதியின் சிந்தனை பல விதமாக எண்ணியது. இருபத்தி நான்கு வயதுப் பெண்ணுக்கு அடித்தோ, உதைத்தோ ஒன்றையும் திணிக்க முடியாது. அதுவும் துளசி அப்பா போலவே பிடிவாதக்காரி. அவளிடம் அன்பால் மட்டுந்தான் எதையாவது சாதிக்க முடியும். கோமதிக்கு அது நன்கு தெரியும்.

என்ன செய்யலாம், துளசியை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்ற யோசனைகளோடே அன்றைய இரவு அமைதியின்றிய அரை குறைத் தூக்கமும், யோசனை நிறைந்த விழிப்புமாய் அவளுக்குக் கழிந்தது. விடிந்தும் விடியாத பொழுதிலேயே தூக்கம் முழுவதுமாய்க் கலைந்து விட எழுந்து வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள். நினைவு மட்டும் துளசியுடன் எப்படிப் பேசலாமென்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது. கணவருக்குக் கூட இன்னும் நிலைமையைச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஒரு குதி குதித்து, ஆர்ப்பாட்டம் பண்ணி “நல்ல வளர்ப்புத்தான் வளர்த்து வைச்சிருக்கிறாய்" என்று கோமதியையும் சாடி விட்டு வேலைக்குப் போயிருப்பார். அவளின் எண்ணம், கணவரின் காதுக்கு விடயம் எட்டாமலே துளசியின் மனத்தை மாற்றி விட வேண்டும் என்பதுதான்.

அவள் நினைவுகளுடன் போராடியபடி இருக்க துளசி எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு வந்தாள். வந்தவள் “அப்பா என்னவாம்" என்றாள்.

“அப்பாக்கு நானொண்டும் சொல்லேல்லை. சொன்னால் இப்ப ஒரு பிரளயமெல்லோ நடந்திருக்கும். ஏதோ இண்டைக்கு நேற்றுத்தான் உனக்கு அப்பாவைத் தெரியும் போலை இருக்கு உன்ரை கேள்வி. இதை என்னெண்டு அப்பாட்டை நான் சொல்லுறது!" கோமதி தனது எரிச்சலையும், கோபத்தையும் வெளியில் காட்டாமல் துளசியின் வினாவுக்குப் பதிலளித்தாள்.

“அம்மா, இது மறைக்கிற விசயமில்லை. அப்பா குதிப்பார் எண்டதுக்காண்டி முழுப் பூசணிக்காயை சோத்துக்குள்ளை மறைக்கேலாது." துளசி கத்தினாள். “இஞ்சை பார் துளசி. இங்கை கத்திறதிலையோ, ஆர்ப்பாட்டம் பண்ணுறதிலையோ ஒரு அர்த்தமும் இல்லை. கொஞ்சமாவது யதார்த்தத்தை யோசிக்கோணும். கலியாணம் எண்டிறது ஆயிரம் காலத்துப் பயிர். அதை நீ, இப்பிடித் தூக்கி எறிஞ்சிட்டு வாற விசயமெண்டு மட்டும் நினைக்காதை. ஏன், அவருக்கும் உனக்கும் இடையிலை என்ன பிரச்சனை நடந்தது? இன்னொருக்கால் அவரோடை கதைச்சுப் பார்க்கலாந்தானே!" கோமதி துளசியின் குணம் தெரிந்தவளாய் துளசியை ஆறுதல் படுத்தும் விதமாகக் கதைத்தாள்.

“அம்மா, நானும் அவரும் கதைச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனாங்கள். எனக்கும் அவருக்கும் ஒத்து வராது. என்ரை இன்ரெஸ்ற் வேறை, அவற்றை இன்ரெஸ்ற் வேறை. அது தான்…" துளசி இழுத்தாள்.

“கலியாணம் எண்டு நடந்தால், இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து இன்ரெஸ்றுகளை மாத்தித்தான் வாழோணும். அதை விட்டிட்டு, இதுக்காண்டி ஆரும் எல்லாத்தையும் தூக்கி எறிவினமோ? என்ன ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்திருக்கிறாய்?" வினவினாள் கோமதி.

“பின்னை என்ன உங்களை மாதிரி என்னையும் வாழச் சொல்லுறிங்களே? நீங்கள் ஆசை ஆசையாப் படிச்ச பரதநாட்டியத்தை அப்பாக்காண்டி விட்டது போலை…

அம்மா, நான் வாழ ஆசைப்படுறன். ஆருக்காண்டியும் என்ரை ஆசையளை, கனவுகளை புதைக்க நான் தயாரா இல்லை. ஒருவருக்கொருவர் விட்டுக் குடுத்துத்தான் வாழோணும் எண்டு பேச்சுக்குச் சொல்லலாம். ஆனால் வாழுற போது அப்பாக்காண்டி நீங்கள் எல்லாத்தையும் விட்டுக் குடுத்திங்கள். உங்களுக்காண்டி அப்பா என்னத்தை விட்டுத் தந்தவர் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம். எங்கடை ஆக்கள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுக்கிறது எண்டு சொன்னால் அதுக்கு அர்த்தம் பொம்பிளையள் எல்லாத்தையும் விட்டுக் குடுக்கோணும் எண்டிறதுதான். என்னாலை அது முடியாது.” துளசி ஆக்ரோசமாகக் கத்தினாள்.

கோமதி சில நிமிடங்களுக்கு வாயடைத்துப் போனாள். பிறகு நிலைமை விபரீதமாகப் போகப் போவதை உணர்ந்து கொண்டவளாய் “என்ன செய்யிறது துளசி. வாழ்க்கை எண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருக்கும். பொம்பிளையள்தான் ஒரு மாதிரி சமாளிச்சு, விட்டுக் குடுத்து கெட்டித்தனமா வாழோணும். இஞ்சை பார் நான் இருபத்தைஞ்சு வருசமா உன்ரை அப்பாவோடை வாழேல்லையே?” என்று சமாளிக்கும் வகையில் கதைத்தாள்.

“அம்மா, நீங்கள் வாழுறது ஒரு வாழ்க்கையே! நீங்கள் வாழுறிங்களே, அதுக்குப் பேர் வாழ்க்கையெண்டு மட்டும் சொல்லாதைங்கோ. திருமணம் எண்ட பேரிலை ஒரு அடிமை சாசனம் எழுதி, அதுக்கு வாழ்க்கை எண்டு ஒரு பெயர் வைச்சிருக்கிறிங்கள். எனக்குப் பிடிக்காத, எனக்கு சந்தோசம் தராத வாழ்க்கையை நான் வாழோணுமெண்டு ஏன் என்னைக் கட்டாயப் படுத்திறிங்கள்?” மிகவும் எரிச்சலுடன் துளசி சத்தம் போட்டாள்.

கோமதிக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. பதினாறு வயதில் கதைத்தே துளசியின் காதலைக் கத்தரித்தது போல, இருபத்தி நான்கு வயதில் துளசியைக் கதைத்து வெல்வது சுலபமான விடயமல்ல என்பது. கட்டுப்பாடுகள், அதனால் வந்த ஏமாற்றங்கள் மட்டும் என்றில்லாமல், புலம் பெயர் மண்ணின் பல்கலைக்கழகப் படிப்பும் துளசியைப் புடம் போட்டு எடுத்திருந்தது.

இனி என்ன நடக்கப் போகிறது, என்ற யோசனையில் கோமதியின் மனம் கவலை கொள்ளத் தொடங்கியது. “மகளை நல்ல இடத்தில் கட்டிக் குடுத்திட்டாய்” என்று வாயாரப் புகழ்ந்தவர்கள் எல்லோரும் இப்போ முன்னால் நீலிக் கண்ணீர் வடித்திட்டு, பின்னால், முகவாய்க்கட்டையை தோள் மூட்டில் இடித்து “பாரன் நல்ல வளர்ப்பு வளர்த்திருக்கிறா” என்று சொல்லி நையாண்டி பண்ணப் போகிறார்கள், என்ற நினைப்பே கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.

இனி செய்வதற்கொன்றும் இல்லை. கடைசி ஆயுதம் இந்த மனுசன்தான். அப்பாவை எதிர்க்கும் தைரியம் துளசியிடம் இருந்ததில்லை, என்று நினைத்துக் கொண்டு கோமதி மௌனமாகி விட்டாள்.

ஆனாலும் மாலையில் கணவன் வந்ததும் ஒரு பெரிய பிரளயமே நடக்கப் போகின்றது என்ற பயத்தில் மனதுக்குள் போராடினாள்.

அவர் வேலையால் வந்து சாப்பிட்டு முடித்து, ஆறுதலாக அமர்ந்த போதுதான் மெதுவாக விடயத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

நெற்றியில் யோசனைகள் கோடுகளாக, அவர் துளசியை அழைத்துப் பேசத் தொடங்கினார். வழமையான துள்ளல்கள் எதுவும் இன்றி மிகவும் நிதானமாக பிரச்சனைகளைச் செவிமடுக்கத் தொடங்கியவர், துளசி சொல்லச் சொல்ல மெதுமெதுவாகப் பொறுiமையை இழக்கத் தொடங்கினார். அவளது கணவனின் போக்குச் சரியில்லை, என்று கோபப் பட்டார். செயல்கள் நியாயமற்றவை எனக் கொதித்தார். துளசியின் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் தடையாக இருக்கிறானே என்று வருந்தினார்.

இறுதியில், கோமதியை தான் கீறிய கோட்டிற்குள் வைத்திருக்கும் அவர், துளசி அப்படியொரு கோட்டுக்குள் நிற்கத் தேவையில்லை என்பதை ஆமோதித்தார்.

எல்லாம் பிழைக்கப் போகின்றது என்பதை உணர்ந்த கோமதி “என்னப்பா, நீங்களும் அவளோடை சேர்ந்து பாடுறிங்கள்...” என்று தொடங்கிய போது “உனக்கென்ன தெரியும். நீ வாயை மூடிக் கொண்டிரு. எங்கடை பிள்ளையை இதுக்கே நாங்கள் இப்பிடி வளர்த்து வைச்சிருக்கிறம். அவன் ஆர் எங்கடை பிள்ளையிலை இப்பிடி ஆதிக்கம் செலுத்த...” சீறினார்.

துளசியிடம் சொன்னார் “உன்ரை முடிவை நீயே எடு. உனக்கு அவனோடை வாழ்க்கை சரிவராது எண்டு பட்டால் விட்டிடு. உன்னை என்னத்துக்கு நான் படிக்க வைச்சிருக்கிறன். நீ, உன்ரை கால்லை நிக்கோணும் எண்டுதானே! அவசரப்படாமல் நிதானமா யோசிச்சு எது நல்லது, எது கெட்டது எண்டு நீயே தீர்மானி. நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை” என்றார்.

கோமதியால் அவரது நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனைவிக்கும், மகளுக்கும் இடையிலான அவர் பார்வையின் பேதம் அவளை ஆச்சரியப் படுத்தியது. பிரளயத்தை எதிர்பார்த்த படி காத்திருந்தவள் பேச முடியாமல் நின்றாள்.

மே-2002

 

 

இவர்களென்ன மார்க்கண்டேயர்களா?

சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தினை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள்.

அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம்.

மாப்பிள்ளை ஜேர்மனியாம். அப்ப அவருக்கு முப்பத்தெட்டு வயசு. சங்கவியை விட பதின்மூண்டு வயசு கூட எண்டாலும் பரவாயில்லை. சீதனம் ஒண்டும் வேண்டாம், எண்டெல்லே சொல்லியிருக்கிறார். இனி இதுக்குள்ளை வயசைப் பார்த்துக் கொண்டிருக்கேலுமே!

போதாதற்கு சங்கவிக்குப் பின்னாலை 23, 20, 16 எண்டு மூண்டு குமருகள் எல்லோ காத்துக் கொண்டு நிக்குதுகள். அதுதான் மாப்பிள்ளைக்கு தலை முன்பக்கத்தாலை வெளிச்சுப் போனதைப் பற்றிக் கூட ஒருத்தரும் அக்கறைப் படேல்லை.

இந்த விசயத்திலை சங்கவி கோயில் மாடு மாதிரித்தான். பெரியாக்கள் எல்லாருமாப் பேசித் தீர்மானிச்சிட்டினம். அவள் தலையை ஆட்ட வேண்டியதுதான் பாக்கி இருந்தது. அவளுக்கு வேறை வழியில்லை. ஆட்டீட்டாள்.

என்ன..! அம்மா கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் எண்டு எல்லாச் சஞ்சிகைகளையும் வேண்டிப் படிச்சதோடை விடாமல், அதிலை வந்த தொடர்கதைகள் எல்லாத்தையும் சேர்த்துக் கட்டி வைச்சிருந்தவள். அந்தப் புத்தகங்களுக்கை இருந்த பொன்னியின் செல்வன், ராஜமுத்திரை போன்ற அரச கதையளை எல்லாம் வாசிச்சு வாசிச்சு, அதிலை வாற ராஜகுமாரர்களைப் போலவும், இளவரசர்களைப் போலவும் தனக்குள்ளை ஒரு இலட்சிய புருசனை வரிச்சு வைச்சிருந்தவளுக்கு, இப்ப கறுப்பா, கட்டையா வழுக்கைத் தலையோடை ஒருத்தன் வரப் போறான். ஆனால் வெளிநாட்டிலை இருந்து வரப் போறான்.

கதைகளிலை வந்த மாநிறமான வீரபுருசர்களைக் கற்பனையிலை கண்ட சங்கவிக்கு, ஜேர்மனி மாப்பிள்ளைதான் இனி தன்ரை புருசன் எண்டதை மனசிலை பதிய வைக்கிறதுக்குக் கொஞ்சக் காலங்கள் தேவைப்பட்டுது.

அது பல காலங்கள் ஆகியிருந்தால் கூட ஒண்டும் ஆகியிருக்காது. ஏனெண்டால் நியம் பார்க்காமல், நிழற்படம் பார்த்து, இரண்டு வருச கடிதக் குடித்தனத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் மாப்பிள்ளையைத் தூக்கி ஜெயில்லை போட்டுட்டாங்களாம். என்ன, அவர் ஒண்டும் பெரிய பிழை விடேல்லையாம். தூள் வித்தவராம். கறிக்குப் போடுற தூள் இல்லை, மற்றது.

ஜேர்மனிய சட்டதிட்டங்களும், பொலிஸ் கெடுபிடியளும் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மாப்பிள்ளையோடை சேர்ந்து இன்னும் நாலு பேராம். சங்கவி ராஜகுமாரர்களை எல்லாம் களைஞ்சு போட்டு, ஜேர்மனிய மாப்பிள்ளையை மனசுக்குள்ளை குடி வைச்ச பிறகுதான் இந்தப் பிரச்சனை வந்ததெண்ட படியால், பிறகு ஜேர்மனி மாப்பிள்ளையையும் மனசிலை இருந்து களைஞ்செறிய அவளுக்குத் துணிவு வரேல்லை.

இனி என்ன செய்யிறது! ´கிரிமினல் குற்றவாளி´ என்ற பட்டப் பெயரோடை வெளியிலை வரப்போற மாப்பிள்ளைக்காண்டி இன்னும் ஐஞ்சு வருசம் காத்திருக்க வேண்டி வந்திது.

இதுவே இப்ப எண்டால் மாப்பிள்ளையை நேரே கொண்டு போய் நாட்டிலை இறக்கி விட்டிருப்பாங்கள். அந்த நேரம் அந்தக் கடும் சட்டம் வராத படியால் மாப்பிள்ளையாலை ஜேர்மனியிலையே இருக்க முடிஞ்சுது.

சங்கவி காத்திருந்தாள். மனசு ஒண்டையே சுத்திச் சுத்திக் காத்துக் கொண்டிருக்க வயசு மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாய் ஓடி 32 ஐத் தொட்டிட்டுது.

ஜெயிலிலை இருந்து வெளியிலை வந்தவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு திருமணத்துக்காண்டி சிங்கப்பூரை நோக்கின பயணத்துக்கு ஆயுத்தமாக இன்னும் 3 வருசங்கள் தேவைப்பட்டுது.

அதிலையென்ன வந்தது இப்ப..? சங்கவி 35 ஐத் தொட்டிட்டாள். அவ்வளவுதான். மனசு மட்டும் இன்னும் 25 போலை மிகவும் இளமையாய் கனவுகளோடை காத்திருந்திச்சுது.

மாப்பிள்ளை எல்லாச் செலவுகளையும் பார்க்கிறார் எண்டுதான் பேச்சு. ஆனால் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு சிங்கப்பூருக்கு வாறதுக்கிடையிலை சங்கவின்ரை அம்மாவுக்குத்தான் கொஞ்ச ஆயிரங்கள் செலவழிஞ்சிட்டுது.

எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தால் இன்னும் கூடப் போயிருக்கும். தனிய சங்கவியின்ரை 16 வயசுத் தங்கைச்சி பார்கவியையும், - அவளுக்கு இப்ப 26 ஆச்சு - அப்பா இல்லாத படியால் துணைக்கு மாமாவையுந்தான் கூட்டிக் கொண்டு வந்தவள். அப்பா கடைசித் தங்கைச்சிக்கு 10 வயசா இருக்கக்கையே மாடு மிதிச்சுச் செத்திட்டார்.

சங்கவிக்கு காசெல்லாம் செலவழியுது எண்டு கொஞ்சம் அந்தரமாத்தான் இருந்தது. ஆனால் கலியாணக் கனவுக்கு முன்னாலை அது சிம்பிள்தான். சிங்கப்பூருக்கு வந்து இரண்டு கிழமை பறந்தோடிட்டு. நல்ல காலமா சிங்கப்பூரிலை சங்கவியின்ரை தூரத்து உறவு மாமா குடும்பத்தோடை இருந்ததாலை ஹொட்டேல் செலவு இல்லாமல் தங்க வழி கிடைச்சிட்டு. மாப்பிள்ளை ஹொட்டேல் செலவை தான் பார்க்கிறன் எண்டு ஹொட்டேல்லை தங்கச் சொன்னவர். அவரும் எவ்வளவுக்கெண்டு தாறது. அவர் அங்கையிருந்து வந்தாப் பிறகு, “இவ்வளவு நாளும் ஹொட்டேல்லை இருந்து சாப்பிட்ட காசைத் தாங்கோ" எண்டு கேக்கேலுமே!

சங்கவிக்கு சிங்கப்பூரிலை ஒண்டுமே தெரியாது. வந்ததுக்கு ஒண்டையும் பார்க்கவும் இல்லை. எதையும் அறியோணும், பார்க்கோணும் எண்ட ஆர்வம் கூட பெரிசாய் இல்லாமல், வரப்போற மாப்பிள்ளையையே மனசு வட்டமிட்டுக் கொண்டிருந்திச்சுது.

மீண்டும் மீண்டுமாய் அரசகதைக் கதாநாயகர்கள் நினைவிலை வந்து போச்சினம். கச்சை கட்டின ராஜகுமாரிகளைப் போலை தன்னைக் கற்பனை செய்து கொண்டாள். அரண்மனைக்குச் சொந்தமான நீச்சல் தடாகத்திலை, தான் குளிச்சுக் கொண்டிருக்க குதிரையிலை வந்த மாப்பிள்ளை, தன்ரை அழகைக் கள்ளமாய் ரசிப்பது போலை... சங்கவிக்குக் கன்னம் எல்லாம் சிவந்து... தனக்குள்ளை தானே நாணி..!

குளிச்சு, சேலை உடுத்தி, முகத்தை நேர்த்தியாக்கிப் போட்டு நேரத்தைப் பார்த்தாள். இன்னும் மூண்டு மணித்தியாலங்கள். ´சே... இந்த நேரம் ஏன் இப்பிடி நத்தை மாதிரி நகருது?´ காத்திருக்கிறது சுகமானதுதான். ஆனால் எத்தினையோ வருசமாக் காத்திருக்கிற பொழுது தோன்றாத அவஸ்தை இறுதி நாளிலை தோன்றிறது விசித்திரந்தான். நேற்று இரவிலையிருந்து சங்கவிக்குள்ளை இன்னதெண்டு சொல்ல முடியாத போராட்டம். ´இன்னும் காத்திருக்க வேணுமோ´ எண்ட ஏக்கம். மணித்தியாலங்களை எண்ணி எண்ணி ´இன்னும் இத்தனை மணித்தியாலங்கள் காக்க வேணுமே!´ எண்ட மலைப்பு.

மாப்பிள்ளையின்ரை சொந்தங்கள், அக்காமார், அண்ணாமார் எல்லாரும் சுவிஸ், ஜேர்மனி, பாரிஸ் எண்டு பரந்திருக்கினம். அவையளும் எல்லாரும் இண்டைக்கு சிங்கப்பூர் வந்து, சங்கவியைப் பார்க்கச் சேர்ந்து வருவதாத்தான் திட்டம்.

சங்கவி பொறுமை இழந்து மீண்டும் நேரத்தைப் பார்த்தாள். குறிப்பிட்ட நேரம் தாண்டீட்டுது. அம்மா, தங்கைச்சி பார்கவி, மாமா எல்லாரும் கூட குளிச்சு, வெளிக்கிட்டு மாப்பிள்ளையை வரவேற்க ரெடியா இருந்திச்சினம்.

´ஆ... வந்திட்டினம்.´ சங்கவியின்ரை கால்கள் இரண்டும் பின்னிப் பிணைஞ்சு தடுமாறி, முடியேல்லை அவளாலை. ஓடீட்டாள் அறைக்குள்ளை.

உள்ளையிருந்து திறப்புத் துவாரத்துக்குள்ளாலை வாறவயளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ´எங்கை, மாப்பிள்ளையைக் காணேல்லை. இவர் எங்கை போட்டார்? வரேல்லையோ?´ மனசு படபடத்திச்சு. இதயம் அடிச்சுக் கொண்டு இருந்திச்சு. வண்ண வண்ணச் சீலையளிலை பொம்பிளையள், சிட்டுக்களாய் குழந்தையள்... ´இவர் மட்டும் எங்கை?´

“சங்கவீ..! வெளீலை வா" அம்மா கூப்பிட்டாள். சங்கவி மெல்லிய ஏமாற்றத்தோடை வெளியிலை வந்தாள். எல்லாரின்ரை பார்வையளும் சங்கவிக்கு மேலை மேய்ஞ்சு, பிறகு பார்கவிக்கு மேலை பாய்ஞ்சன. சங்கவியின்ரை கண்களோ மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. ம்..கும் காணேல்லை. “எங்கை, அவர் வரேல்லையோ?" வெட்கத்தை விட்டிட்டுக் கேட்டிட்டாள்.

இப்ப எல்லாரின்ரை பார்வையளும் ஒருமிச்சு அவற்றை பக்கம்... அதுதான் ´கொல் கொல்´ எண்டு இருமிக் கொண்டிருந்த ஒருவரின்ரை பக்கம் திரும்பின. ´இவர்தானோ அவர்?!´ சங்கவியாலை நம்பவே முடியேல்லை. விரிஞ்சிருந்த கற்பனைச் சிறகுகள் சட்டென்று மடிஞ்சன. ஒரு கணந்தான். சுதாரிச்சிட்டாள்.

´38வயசு மாப்பிள்ளையும் பத்து வருசத்திலை 48வயசைத் தொட்டிருப்பார்தானே. என்ரை மரமண்டைக்குள்ளை இதேன் ஏறேல்லை? அது மட்டுமே 5வருசம் ஜெயிலுக்கை இருந்தவரில்லோ! வருத்தம் பிடிச்சிருக்குந்தானே! அவரும் அதுக்குப் பிறகு ஒரு போட்டோவும் அனுப்பேல்லை. ம்ம்… ஆர் நினைச்சது! இப்பிடிக் கேவலமாப் போயிருப்பார் எண்டு.´ மனசைச் சமாளிச்சாள்.

ஒருவாறு சம்பிரதாயப் பேச்சுக்கள், சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு, அண்டைய பொழுதும் இருண்டு கொண்டு போச்சுது. அதுக்கிடையிலை மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஏதேதோ குசுகுசுத்திச்சினம். மாப்பிள்ளையின்ரை அக்கான்ரை புருசன், மாமாவை வெளியிலை வரச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போனார்.

திரும்பி வரக்கை மாமா பேயறைஞ்சது போலை வந்தார். அவையள் ஹொட்டேல் புக் பண்ணியிருக்கிறதாச் சொல்லிப் போட்டுப் போயிட்டினம். சங்கவி எதிர்பார்த்த போலை மாப்பிள்ளை அவளோடை தனியா ஒண்டுமே கதைக்கேல்லை. கடிதங்களிலை கதைச்ச மாப்பிள்ளை இப்ப சற்று அந்நியப் பட்டுப் போனார் போலை உணர்ந்தாள். மாமா நிறையப் பேசேல்லை. கவலையா இருந்தார்.

சங்கவிக்கு, மாப்பிள்ளை வரமுன்னம் மனசுக்குள்ளை இருந்த குழுகுழுப்பான நினைவுகள் எல்லாம் இப்ப இல்லாமல் போன போலை ஒருவித வெறுமையா இருந்திச்சு. தங்கைச்சிதான் சும்மா சும்மா சீண்டிக் கொண்டிருந்தாள்.

இரவு நெடு நேரத்துக்குப் பிறகு, மாமா அம்மாட்டை குசுகுசுக்கிறது சங்கவியின்ரை செவிகளிலை நாராசமாய் விழுந்திச்சு.

“35வயசு வந்த பொம்பிளையை ஆராவது கலியாணம் கட்டுவினையோ எண்டு அத்தான்காரன் கேட்டான். சங்கவின்ரை தங்கச்சியை வேணுமெண்டால் மாப்பிள்ளை கட்டுறாராம். 35 வயசான சங்கவியைக் கட்டி என்ன பிரயோசனமாம்."

சங்கவிக்கு, வானம் தரையிலை இடிஞ்சு விழுறது போலையொரு பிரமை.

´எனக்கு மட்டுந்தான் வயசு ஏறியிருக்கோ, அவருக்கு வயசென்ன இறங்கியிருக்கோ, 48 வயசுக் கிழடுக்கு 26 வயசுப் பொம்பிளை தேவைப்படுதோ..?´ நாடி, நரம்பெல்லாம் புடைச்சு, கோபம் அனல் கக்கிச்சுது. ´நாளைக்கு வரட்டும் கேட்கிறன்.´ சங்கவி மனசுக்குள்ளை கறுவிக் கொண்டாள்.

“சங்கவிக்குத்தான் வாழ்க்கை அமையேல்லை. பார்கவியாவது வாழட்டும்" எண்டு அம்மாவும் மாமாவுமாத் தீர்மானிச்சது அவளின்ரை காதுகளிலை விழேல்லை.

பங்குனி-2002

 

 

மரணங்கள் முடிவல்ல

சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.

இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் ´வெள்ளை´ என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடி வதங்கியபடி கண்டதும் செல்வமலர் சந்தோசம், துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய “பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா..?!" என்றபடி கட்டியணைத்துக் கதறினாள்.

´களத்தில் நின்றபோதும் அம்மா, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை´ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் செல்வமலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும், அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.

கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வர முடிந்தது என்றாலும், இந்தச் சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் செல்வமலருக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சி வரை போன கணவன் கனகசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

இப்போ, வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவார், என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.

“என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்திடோணும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன்…" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதி கொடுத்தாள். அவள் மன்றாட்டம் வீண் போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை கனகுவும் வந்து சேர்ந்து விட்டான். செல்வமலரின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.

நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். கனகுவுக்குக் கூட அவளது குழந்தைத் தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்து விட்டு பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.

அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து ´அமைதி காக்க´ என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய பின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக்கோட்டில் வாழ்கின்ற செல்வமலரையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும், காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடு வரை வரவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் கடந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும், கொப்புளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.

கனகு மாங்காய்ப்பூட்டைக் கொண்டு போய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான். வலது பக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய வீதியிலும் சரி, இடது பக்கம் பல்லப்பையை நோக்கிய வீதியிலும் சரி எந்த வித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை.

பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டி விட்டு உள்ளே வந்தவன் படுத்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூன்று பிள்ளைகளும், கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவு போல் அந்தச் சத்தம் கேட்டது.

“கனகசுந்தரம்... கனகசுந்தரம்... கதவைத் திற."

முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்ட போதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

´மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்குகிறேன்´ என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கனகுவும் திடுக்கிட்டுக் கண் விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.

´அது இந்தியப்படைதான்.´ பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும், செல்வமலரும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.

“கனகசுந்தரம்..!"

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.

“டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா" செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி, கிசுகிசுப்பாக, தழதழத்த குரலில் ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.

“கனகசுந்தரம், கதவைத் திற!"

மீண்டும் அதட்டலாய் ஒலித்த அந்தக் குரல் செல்வமலரினதும், கனகுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும், தீபிகாவும் உசாராகி விட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகி விட்டான்.

“அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப் போயிடடா." செல்வமலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து, துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.

“தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்." கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக் கொடிகள், ரோஜாச் செடிகள்… எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க, அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும், கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.

கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின் பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.

கவிதா வெலவெலத்துப் போனாள். “தம்பி போகாதை, இங்காலை வா" மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச் சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத் தனமாக அழுத்திப் பிடித்தது. “இங்கை புலி இருக்குது." பார்வையால் அவளை விழுங்கிய படியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். “இல்லை, இல்லை" செல்வமலர் நடுங்கிய படி மறுத்தாள். அவன் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன், நடுவீதியில் இருத்தினான்.

“ஐயோ… என்ரை பிள்ளையளும், மனுசனும் உள்ளை" கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும், கனகுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறி பார்த்து நீட்டிய படி நின்றான்.

கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். செல்வமலர்தான் அவனை அனுப்பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளைகளையும் இவர்கள் கண்களில் பட விடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்றும் அவளுக்குப் புரியவில்லை. பின் பக்கம் போன கவிதாவும், ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. ´எப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்.´ பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.

அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக் கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.

´என்ரை பிள்ளையைக் காட்டிக் குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?´ செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும், புட்டளையிலிருக்கும் புட்டளைப் பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.

இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

“தம்பி.., தம்பி.., எங்கையடா நீ.." கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை “அக்கா..!" என்ற படி ராஜன் கட்டிப் பிடித்தான்.

“அக்கா, தண்ணி.." திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.

“தம்பி..!" இறுகக் கட்டிப் பிடித்தாள்.

“அக்..கா.., தண்...ணி.."

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.

“விடு... என்ரை தம்பி" கவிதா திமிறினாள்.

“தம்பிக்குத் தண்ணி..." அவள் முடிக்க முன்னரே இன்னுமொரு முரட்டுக்கை அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது.

“அ..க்..கா..!" மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.

இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப் பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், “தம்..பி..!" குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.

மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.

நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக் களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர.. கனகு அவர்களிடம் போய் “என்ரை பிள்ளை..?" கேட்டான்.

“நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் ´புலி´ எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்டு எடுத்துக் கொண்டு போ." சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார்கள் அவர்கள்.

களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும், உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கனகசுந்தரமும், செல்வமலரும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காலம் - 4.12.1987

செப்டெம்பர் 1999

 

 

விவாகரத்து

யன்னலினூடு தெரிந்த கஸ்தானியன் மரங்களோ, அதை அசைத்துக் கொண்டு வந்த தென்றலோ இன்று யாரையும் இதமாகத் தழுவவில்லை. றோசியின் புறுபுறுப்பும், கரகரப்பும், இடையிடையே தெறித்து விழுந்து கொண்டிருந்த அநாகரிகமான வார்த்தைகளும் அறையிலிருந்த எல்லோரையும் ஓரளவுக்கு மௌனிகளாக்கி விட்டிருந்தன.

அவளது தொணதொணப்பு அவளருகிலிருந்த எனக்குத் தாங்கவில்லை. வந்ததிலிருந்து கீறுபட்ட கிராமபோன் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாள். எள்ளும், கொள்ளும் அவள் முகத்தில் வெடித்துக் கொண்டே இருந்தன.

எனக்கு இதற்கு மேல் கேட்க முடியவில்லை என்பதை அவளுக்கு உணர்த்துவதற்காக இரண்டாவது தடவையாகவும் எழுந்து சென்று தேநீர் போட்டு, குசினிக்குள்ளேயே நின்று குடித்து விட்டு வந்தேன்.

வந்து இருந்ததும் மீண்டும் தொடங்கி விட்டாள். “இந்த முறை நான் தீர்க்கமான முடிவெடுத்திட்டன். அந்தப் பன்றியை எப்பிடியாவது விவாகரத்துச் செய்யப் போறன். என்ன நினைக்கிறான் அவன். சரியான இடியட்..."

அவள் பன்றி என்றது அவளது கணவனைத்தான். என்னிடம் ´ஸ்வைனுக்கான´ தமிழ்ச் சொல்லை தனது கணவனைத் திட்டுவதற்காகவே கேட்டுப் பாடமாக்கி வைத்திருக்கிறாள்.

வழமை போலவே நேற்று மதியமும் இவள் சமைத்த பன்றிப் பொரியலும், உருளைக்கிழங்கு சலாட்டும் அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காததற்குக் காரணம் சுவை சம்பந்தமானதல்ல. முதல்நாளிரவு அவன் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு வந்ததால், இவள் நாய்க்கத்தல் கத்தி விட்டு அவனை வரவேற்பறையில் படுக்க விட்டிருக்கிறாள். அதற்கான பழி தீர்ப்புத்தான் அது.

பன்றிப்பொரியல் பிடிக்கவில்லை என்று அவன் சாப்பிடாமல் போயிருந்தால் இவளுக்கு இத்தனை தூரம் கோபம் ஏற்பட்டிருக்காது. நானும் இந்தத் தொணதொணப்பில் இருந்து தப்பியிருப்பேன். அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே இவளது முக அலங்காரத்தைப் பற்றி நையாண்டியாகச் சொல்லியிருக்கிறான். “உன்னை விடக் குரங்கு வடிவு" என்று நெளித்துக் காட்டியிருக்கிறான். அதுதான் இவளை உச்சக்கட்டக் கோபத்துக்குத் தள்ளியிருக்கிறது.

“நாளையிலை இருந்து எனக்கு விடுதலை. அப்ப பாரன் இவன் எவ்வளவு பாடுபடப் போறான் எண்டு.." மீண்டும் தொடங்கினாள்.

“இப்ப நீ இதை எத்தனையாவது தரம் சொல்லிப் போட்டாய்? நூறாவது தடவையா? இருநூறாவது தடவையா? அல்லது ஆயிரமாவது தடவையா?" இரண்டாவது மேசையில் இருந்த ரெகீனா எரிச்சலும், கோபமும் பீறிட கேலித் தொனியில் கேட்டாள்.

“நீ சும்மாயிரு. உனக்கென்ன தெரியும் அந்த ஸ்வைனைப் பற்றி.. இதுக்கு மேலையும் என்னாலை அவனோடை வாழேலாது. நான் தீர்க்கமான முடிவுக்கு வந்திட்டன். கண்டிப்பா அவனை விவாகரத்துச் செய்யப் போறன்."

“எனக்கு உன்ரை கணவனைத் தெரியுமோ இல்லையோ, உன்னை நல்லாத் தெரியும். உன்னோடை வேலை செய்யிற இந்தப் 13 வருசத்திலை.. நான் நினைக்கிறன், ஆயிரம் தடவைக்கு மேலை உன்ரை கணவனை விவாகரத்துச் செய்யிறதாய் சொல்லிப் போட்டாய். ஆனால் இன்னும் செய்யேல்லை. நான் உனக்குச் சொல்லக் கூடியது என்னெண்டால் உடனடியா விவாகரத்தைச் செய். அப்பதான் நாங்கள் தொடர்ந்து இந்த வேலையிலை இருக்கலாம். இல்லையெண்டால் உன்ரை தொணதொணப்பைக் கேட்டே எங்களுக்குத் தலை வெடிச்சிடும்."

“ஏ...ய். கத்தாதை. என்ரை புருசன் எனக்குக் கடுப்பேத்தினது காணும். நீயும் பிறகு என்ரை எரிச்சலைக் கிளறாதை. இந்த முறை கண்டிப்பா விவாகரத்துத்தான். நான் வீடு கூடப் பார்த்திட்டன். தளபாடங்கள்தான் பிரச்சனை. அதுகளை நான் வங்கியிலை கடனெடுத்தாவது வேண்டிப் போடுவன்."

இம்முறை அவள் சொல்வதைப் பார்த்தால் நியமாகவே விவாகரத்துச் செய்து விடுவாள் போல இருந்தது. நாளைக்கே வீடு மாறக் கூடிய விதமாக ஒரு நண்பி அவளது வீட்டின் மேல் மாடியை ஒதுக்கிக் கொடுத்து விட்டாளாம்.

என்ன இருந்தாலும் 13 வருடங்களாக என்னோடு வேலை பார்க்கிறாள். அவளைச் சமாதானப் படுத்தி விவாகரத்து எண்ணத்திலிருந்து மீட்க வேண்டும். மனம் எண்ணிக் கொண்டது.

“இஞ்சை பார். விவாகரத்துச் செய்து போட்டுத் தனிய வாழுறது மட்டும் பெரிய நல்ல விசயம் எண்டு நினைக்கிறியே. மொக்கு வேலை பார்க்காமல் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு. விவாகரத்து எண்டிறது விளையாட்டு இல்லை."

“நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். இவனோடை என்னாலை வாழேலாது."

“விவாகரத்துச் செய்து போட்டு எத்தினை காலத்துக்குத் தனிய வாழப் போறாய்! அடுத்ததா கிடைக்கப் போறவன் இவனை விட நல்லவனா இருப்பான் எண்டிறதுக்கு என்ன உத்தரவாதம்?"

“சும்மா பேய்க்கதை கதைக்காதை. இவனை விடக் கூடாதவன் இந்த உலகத்திலையே இருக்க மாட்டான்."

அந்த நேரம் அவளோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்ன நடக்குமோ, என்று மனது சற்று அச்சப் பட்டது. அவள் தொடர்ந்தும் தொணதொணத்துக் கொண்டே இருந்தாள். கலகலப்பாகக் கழிய வேண்டிய எங்கள் வேலை நேரம் இவளது தொணதொணப்பில் விரயமாகக் கரைந்து போனது. வேலைகள் கூட சரியான முறையில் முடியவில்லை.

நேற்றைய சண்டை காரணமாக “காரைத் தொடக் கூடாது" என அவன் சொல்லி விட்டானாம். அவசரமாய் ஜக்கற்றைப் போட்டுக் கொண்டு கைப்பையையும் கொழுவிக் கொண்டு சூஸ்(bye bye) சொல்லிய படி எங்களுக்காகக் காத்திராமல் லிப்றுக்குள் புகுந்து கொண்டாள். பேரூந்தைப் பிடிக்க வேண்டுமென்ற அவசரம் அவளுக்கு.

அவளை விட அவசரமாய் லிப்ற் இறங்கியது. நானும், மற்றவர்களும் நிதானமாக எமது ஜக்கற்றுகளைப் போட்டுக் கொண்டோம். அவளுக்காக ஒரு சிலர் பரிந்துரைத்து அவள் கணவனை மனங் கொண்ட மட்டும் திட்ட.. ரெகினா மட்டும் உதட்டை நெளித்துச் சிரித்தாள். “இப்பத்தான் காதுக் குடைச்சல் தீர்ந்தது. பிறகு நீங்களும் தொணதொணக்காதைங்கோ" என்றாள்.

ஒருவரும் யன்னலைப் பூட்டுவதாகத் தெரியவில்லை. ´வளவளா´ என்று கதை அளப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கஸ்தானியன் மரங்களின் அசைவில் யன்னல் சேலைகள் ஆடிக் கொண்டே இருந்தன. ஓடிச் சென்று யன்னலைப் பூட்ட முனைந்த நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் வெளியில் எட்டிப் பார்த்தேன்.

ம்... யாரது? யன்னலுக்கு நேரே கீழே... பெரிய பூங்கொத்து ஒன்று கைகளில் மலர்ந்திருக்க, றோசியும், அவளது கணவனும் உதட்டோடு உதடு பதித்து... இறுக அணைத்து..

நான் கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவர்களேதான். ´என்னை மன்னிச்சுக்கொள்´ என்ற வாக்கியம் பூங்கொத்தில் சொருகப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

என் காதுகளுக்குள் இன்னும் அவளது தொணதொணப்பு ஒட்டிக் கொண்டே இருந்தது. அவர்களோ ஒருவரின் இடுப்பை ஒருவர், கைகளால் வளைத்த படி நடக்கத் தொடங்கினார்கள். இடை இடையே கண்களால் நோக்கி, உதடுகளைக் கவ்வி... உலகின் அதி அற்புதமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி போல...

திரும்பினேன். இவர்கள், அதுதான் எனது சக வேலைத் தோழிகள் றோசியின் விவாகரத்துப் பற்றி அநுதாபத்தோடும், அது சரியா, பிழையா என்பது பற்றி அக்கறையோடும் விவாதித்துக் கொண்டு லிப்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.

12.9.2004

 

 

சுமைதாளாத சோகங்கள்

வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம்.

இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறன். வருகிற பாடாவே தெரியேல்லை. நல்லா வேலை குடுத்திட்டாங்களோ? பிள்ளையளும் ரியூசனுக்குப் போயிட்டினம்.

மே மாதம் எண்ட படியால் பனி போய் வெய்யிலும் வந்திட்டுது. இந்த ஜேர்மன் சனம் வெய்யிலைக் கண்டால் வீட்டுக்குள்ளையே இருக்காதுகள். எப்பவும் வெளியிலைதான் நிக்குங்கள்.

எனக்கென்னவோ ஜேர்மனிக்கு வந்து மூண்டு வருசமாகியும் ஒண்டிலையும் மனசு ஒட்ட மாட்டனெண்டுது. நான் 10.5.1986 இலை ஜேர்மனிக்கு வந்தனான். இண்டைக்கு கலண்டர் 2.5.1989 எண்டு காட்டுது. இந்த மூண்டு வருசத்திலையும் இந்த மனசு எப்பிடி எப்பிடியெல்லாம் கிடந்து தவிக்குது. என்ரை மூண்டு பிள்ளையளையும், என்ரை கணவரையும் விட்டால் வேறை ஒண்டையுமே எனக்கிங்கை பிடிக்கேல்லை.

எப்பவும் ஊரிலை விட்டிட்டு வந்த தம்பிமாரையும், தங்கச்சிமாரையும், அண்ணனையும், அப்பா அம்மாவையுந்தான் மனசு நினைச்சுக் கொண்டு இருக்குது. எப்பிடிச் சொன்னாலும் நான் ஒரு சுயநலக்காரிதான். எனக்கு மனசு வந்ததுதானே, அதுகளை அங்கை விட்டிட்டு இங்கை மட்டும் ஓடி வர. இப்ப இருந்து புலம்பிறன். என்ன பிரயோசனம்..!

எனக்கு அங்கை போகோணும். அம்மான்ரை முகத்தைப் பார்க்கோணும். தங்கைச்சிமாரோடை சினிமாப் பாட்டிலை இருந்து அரசியல் வரை எல்லாத்தைப் பற்றியும் அரட்டை அடிக்கோணும். முக்கியமா தம்பியைப் பிடிச்சு, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சோணும்.

அவனை இந்தியன் ஆமியள் தேடுறாங்களாம். “அவன் எங்கை, அவன் எங்கை..?" எண்டு கேட்டுக் கேட்டு என்ரை சகோதரங்களை மட்டுமில்லை, ஊர்ச்சனங்களையும் சித்திரவதைப் படுத்திறாங்களாம். தங்கைச்சிதான் இதெல்லாம் எனக்கு எழுதிறவள்.

நேற்றும் சாமத்திலை கனவிலை தம்பிதான். அவன் சாப்பிடுறதுக்கெண்டு மேசையிலை இருக்க, அம்மா சோறு போட்டுக் கொண்டிருக்க, ஆமி வந்திட்டான் போலையும், தம்பி சாப்பிடாமலே ஓடுற மாதிரியும் கனவு. நான் முழிச்சிட்டன். எனக்கு ஒரே அழுகையா வந்திட்டுது.

எத்தினை நாளைக்கெண்டுதான் என்ரை தம்பிமார் சாப்பிடாமல், குடியாமல், நித்திரை கொள்ளாமல் ஓடித் திரியப் போறாங்கள். கடவுளே..! எல்லாத்தையும் நிற்பாட்டு. என்ரை தம்பிமார் மட்டுமில்லை. எல்லாப் பிள்ளையளும் வீட்டுக்குப் போயிடோணும்.

தலைக்கு மட்டும் தலேணி(தலையணி) இருந்தால் போதாதெண்டு காலுக்கொரு தலேணி, கையுக்கொரு தலேணி எண்டு வைச்சுப் படுக்கிறவங்கள் என்ரை தம்பிமார். இப்ப எங்கை, எந்தக் கல்லிலையும், முள்ளிலையும் படுக்கிறாங்களோ!

நான் போகோணும். அவங்களோடை வாழோணும். எனக்கு அடக்கேலாமல் அழுகை வந்திட்டுது. விக்கி விக்கி அழத் தொடங்கீட்டன். சத்தத்துக்கு இவர் எழும்பீட்டார்.

“என்ன இப்ப நடந்திட்டுதெண்டு இப்பிடி அழுறாய்?" ஆதரவாய்த்தான் கேட்டார்.
“நான் போப்போறன், ஊருக்கு. எனக்கு அம்மாவைப் பார்க்கோணும். பரதனைப் பிடிச்சுக் கொஞ்சோணும் போலை இருக்கு."

“என்ன, இப்பிடிப் பைத்தியக் கதை கதைக்கிறாய். இப்ப அங்கை போயென்ன சாகப் போறியே? நீயாவது இங்கை இருக்கிறாயெண்டு கொம்மாவும், கொப்பரும் எவ்வளவு நிம்மதியா இருப்பினம்."

“..................."

“இன்னும் ஒரு வருசத்திலை பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும். அதுக்குப் பிறகு நாங்களேன் இங்கை இருக்கப் போறம். அஞ்சு பேருமாப் போவம். இப்பப் படு. நாளைக்கு நேரத்துக்கு எழும்போணுமெல்லோ!"

“ஓம்" எண்டு சொல்லிப் படுத்திட்டன். ஆனால் நித்திரையே வரேல்லை. கண்ணை மட்டும் மூடிக் கொண்டு படுத்திருந்தன். மனசு மட்டும் அப்பிடியே கொட்டக் கொட்ட விழிச்சுக் கொண்டு இருந்திச்சு.

´என்ரை தம்பிமாரைக் காப்பாற்று. அம்மா, அப்பா, தங்கைச்சிமாருக்கு ஒண்டும் நடந்திடக் கூடாது. எல்லாரையும் காப்பாற்று.´ எண்டு மனசு எல்லாத் தெய்வங்களையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்திச்சு. பிறகு எப்பிடியோ நித்திரையாகீட்டன்.

காலைமை எழும்பி இவரையும் வேலைக்கு அனுப்பி, பிள்ளையளையும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிப் போட்டன். எனக்கு வேலை செய்ய அனுமதி இல்லை. இந்த நகரத்தையும் விட்டு ஒரு இடமும் போகக் கூடாது. எனக்கு அதிலை எல்லாம் கவலை இல்லை. கவலை எல்லாம் ஊரிலை இருக்கிற என்ரை உறவுகளைப் பற்றித்தான். எண்டாலும் களவா ஒரு ஸ்ரூடியோவிலை இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யிறன். Workpermit இல்லாமல் வேலை தர அந்த லேடி பஞ்சிப் பட்டவதான். பிறகு ஏதோ ஓமெண்டு தந்திட்டா. நல்லவ. பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வரமுன்னம் வேலையை முடிச்சிட்டு ஓடி வந்து சமைச்சுப் போடுவன்.

என்னை அறியாமலே என்ரை கண்கள் அவர் வாறாரோ எண்டு யன்னலுக்காலை பார்த்துக் கொண்டுதான் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கவே அவர் வாறார்.

என்ன..! ஒரு மாதிரி தளர்ந்து போய் வாறார். பாவம், நல்லா வேலை வாங்கிப் போட்டாங்களோ! ஊரிலை எத்தினை பேரைத் தனக்குக் கீழை வைச்சு வேலை வாங்கினவர். இங்கை வந்து இவங்களுக்குக் கீழை..!

ஏன் இப்பிடியெல்லாம் நடந்தது? ஏன் இந்த ஜேர்மனிக்குத் தனியாக வந்து சேர்ந்தம். எல்லாம் ஏதோ பிரமையாய்... நம்ப முடியாததாய்...

எனக்கு ஓடிப் போய் அம்மான்ரை மடியிலை முகத்தை வைச்சு அழோணும் போலை இருக்கு. அம்மா முதுகைத் தடவி, தலையைக் கோதி விடுவா. அப்பான்ரை கையைப் பிடிச்ச படி கதைச்சுக் கொண்டு ஊரெல்லாம் சுத்தோணும் போலை ஆசை ஆசையா வருது. எங்கையாலும் போட்டு வந்தால் “அக்கா, களைச்சுப் போட்டியள். இந்தாங்கோ இதைக் குடியுங்கோ." எண்டு தங்கைச்சிமார் ஏதாவது குடிக்கத் தருவினம். அந்த அன்பு வேணும் எனக்கு. அதிலை நான் குளிக்கோணும்.

மனசு சொல்லுக் கேளாமல் அடம் பிடிச்சுக் கொண்டு ஊரையும், உடன் பிறப்புக்களையும் சுத்திச் சுத்திக் கொண்டே நிக்குது.

இப்பிடியே நான் மனசை அலைய விட்டுக் கொண்டிருக்க இவர் வீட்டுக்குள்ளை வந்திட்டார். நான் என்ரை கவலையொண்டையும் இவருக்குக் காட்டக் கூடாதெண்டு, டக்கெண்டு சிரிச்சுக் கொண்டு “என்ன, வேலை கூடவே! லேற்றா வாறிங்கள்?" எண்டு கேட்டுக் கொண்டே குசினிக்குள்ளை போய் தேத்தண்ணியைப் போட்டன்.

தேத்தண்ணியோடை வெளியிலை வந்து பார்த்தாலும் இவர் ஒரு மாதிரித்தான் இருக்கிறார். வழக்கம் போலை முஸ்பாத்தியும் விடேல்லை. சிரிக்கவும் இல்லை. இவர் இப்பிடி இருக்க மாட்டார். முஸ்பாத்தி விடுவார். இல்லாட்டி கோபப் படுவார். கவலைப் படுற மாதிரி எல்லாம் காட்ட மாட்டார். இண்டைக்கென்ன நடந்திட்டு! ஏன் இப்பிடி இருக்கிறார்! சரியாக் கதைக்கவும் மாட்டாராம்.

நான் இவற்றை ´மூட்´ ஐ நல்லதாக்க பிள்ளையளின்ரை பகிடியளைச் சொல்லிப் பார்த்தன். கிண்டர்கார்டன் ரீச்சர் சொன்ன கதையளையும் சொல்லிப் பார்த்தன். ஒண்டுக்கும் மாற மாட்டாராம். அப்பிடியே இருக்கிறார்.

இப்ப ஏதோ சொல்ல வாறார் போலை இருக்கு. நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தன்.

“பரதன் போயிட்டான்" எண்டார். எனக்கொண்டுமே புரியேல்லை.

“பரதன் எங்களையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டான்" எண்டார் மீண்டும். இப்ப எனக்கு எதுவோ உறைச்சது. சடாரென்று ஆரோ என்ரை நெஞ்சிலை சுத்தியலாலை ஓங்கி அடிச்சது போலை இருந்திச்சு. அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக் கொண்டு நான் இருந்திட்டன்.

“என்ரை தம்பி..! பரதா..! போயிட்டியோ..!" இப்ப அழத் தொடங்கீட்டன்.

இருக்காது. அவன் செத்திருக்க மாட்டான். அவனை நான் பார்க்கோணும். ஏதோ ஒரு நப்பாசையோடை இவரைப் பார்த்தன். என்ன செய்யிறதெண்டு தெரியாமல் அப்பிடியே இருக்கிறார்.

“உண்மையான நியூஸ்தானோ அது?" இவரைக் கேட்டன்.

´இல்லை´ எண்டு சொல்ல மாட்டாரோ எண்ட எதிர்பார்ப்பும், ஏக்கமும் நிறைஞ்ச அவா எனக்குள்ளை.

“தகவல் நடுவச் செய்தியளிலை அப்பிடித்தான் சொல்லுறாங்கள். பிழையான செய்தியாயும் இருக்கலாம்." இவர் இப்ப என்னை ஆறுதல் படுத்தச் சும்மா சொன்னார்.

எனக்கு அவன் செத்திட்டான் எண்டு நம்பவே ஏலாதாம். நானும் தகவல் நடுவங்களுக்கு அடிச்சுப் பார்த்தன். புனைபெயர், அப்பான்ரை பெயர், வயசு எல்லாம் சரியாச் சொல்லுறாங்கள். ´மே முதலாந்திகதி பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் மொறிஸ் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதி வீரமரணமடைந்து விட்டார்.´ எண்டு சொல்லுறாங்கள். பருத்தித்துறையெல்லாம் கர்த்தாலாம். கதவடைப்பாம். கறுப்புக் கொடியாம்.

கடவுளே..! இந்தச் செய்தியெல்லாம் பொய்யா இருக்கோணும். நான் பள்ளிக்கூடத்தாலை வீட்டை மத்தியானம் சாப்பிடப் போற பொழுது அப்பிடியே தவண்டு வந்து “மூ..மூ...த்தக்கா" எண்டு கொண்டு ஐஞ்சு விரலையும் என்ரை வெள்ளைச் சட்டையிலை பதிச்சிடுவான். நான் அவனைத் தூக்கி, கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். அம்மாதான் “வெள்ளைச்சட்டை ஊத்தையாகுது." எண்டு கத்துவா.

எனக்குப் பத்து வயசாயிருக்கிற பொழுதுதான் பிறந்தவன். அவன் பிறந்த உடனை அப்பாவோடை மந்திகை ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தனான். பஞ்சு மாதிரி இருந்தவன். என்ரை விரலைக் குடுக்க அப்பிடியே இறுக்கிப் பொத்தி வைச்சிருந்தவன். அப்பா, அம்மாவோடை கதைச்சுக் கொண்டிருக்க நான் அவனைத்தான் பார்த்துக் கொண்டும், தொட்டுக் கொண்டும் இருந்தனான். எனக்கு அவனை விட்டிட்டுப் போகவே மனம் வரேல்லை.

வோச்சர் வந்து “ஆறு மணியாச்சு. எல்லாரும் போங்கோ." எண்டிட்டான். அப்பா அவன்ரை கையுக்குள்ளை இரண்டு ரூபாவைத் திணிச்சு விட்டார். இன்னும் கொஞ்ச நேரம் நிற்க விட்டான்.

எனக்கு அப்பாவோடை வீட்டை திரும்பிப் போற பொழுதும் அவன்ரை மெத்தென்ற பாதம்தான் நினைவுக்குள்ளை இருந்திச்சு. சுருட்டை மயிரோடை எவ்வளவு வடிவாயிருந்தவன்.

இப்ப அவன் இந்த உலகத்திலையே இல்லையோ..! நெஞ்சு கரைஞ்சு, கண்ணீராய் ஓடிக் கொண்டே இருந்திச்சு.

முதன் முதலா அவன் நடக்கத் தொடங்கின பொழுது எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு. கொஞ்சம் வளர்ந்தாப் போலை, இரவு படுக்க வைக்கிற நேரத்திலை “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ." எண்டு அடம் பிடிப்பான். ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் முடிஞ்சிடும். “மூத்தக்கா, கதை சொல்லுங்கோ. இல்லாட்டிப் படுக்க மாட்டன்." என்பான்.

பிறகு, நானே இயற்றி இயற்றிக் கதையெல்லாம் சொல்லுவன். அப்பிடியே என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு நித்திரையாப் போடுவான்.

இப்ப எனக்கு அவனைக் கட்டிப் பிடிக்கோணும் போலை ஒரே அந்தரமா இருக்குது. நெஞ்செல்லாம் ஏக்கமா இருக்குது. அவனைப் பார்க்கோணும். நிறையக் கதைக்கோணும். ´மூத்தக்கா´ எண்டு கூப்பிடுறதைக் கேக்கோணும். அப்பிடியே பல்லெல்லாம் காட்டிக் குழந்தையா சிரிப்பானே. அதைப் பார்க்கோணும்.

கடவுளே..! இனி இதெல்லாம் ஏலாதே!

உலகத்துச் சோகமெல்லாம் என்னை அழுத்த எனக்கு அழுகை அழுகையாக வந்து கொண்டே இருக்குது.

இன்னும் வளர்ந்தாப் போலை எப்பிடியெல்லாம் முஸ்பாத்தி விடுவான். நான் அவனுக்குச் சொன்ன கதையளை எல்லாம், அவன் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லுவான். அவசரத்துக்கு என்னைச் சைக்கிளிலை கூட ஏத்திக் கொண்டு போவான். என்ரை பிள்ளையளோடை எப்பிடியெல்லாம் செல்லங் கொஞ்சுவான்.

தம்பி..! அவன் செத்திருக்க மாட்டான். நான் எத்தினை கடவுள்களை எல்லாம் மன்றாடினனான். அப்பிடி நடந்திருக்காது.

அவனையே நினைச்சு நினைச்சு, அழுது அழுது கண்ணீர் ஆற்று நீரின்ரை கணக்கிலை ஓடிக் கொண்டே இருக்குது. வத்தவேயில்லை.

எனக்கு இப்ப அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரையும் கட்டிப் பிடிச்சு அழோணும் போலை இருக்கு. ரெலிபோன் கூட பருத்தித்துறைக்கு அடிக்கேலாது.

தம்பியின்ரை மறைவிலை அப்பா, அம்மா, தங்கைச்சிமார் எல்லாரும் எப்பிடி அழுவினை எண்டு நினைக்க எனக்கு இன்னும் அழுகை கூடவாய் வருது. எனக்கு ஒண்டையும் தாங்கேலாதாம். “பரதா..! என்னட்டை ஒருக்கால் வாடா!" மனசுக்குள்ளை அவனைக் கூவி அழைச்சேன்.

படுக்கையறைக்குள்ளை ஏதோ சரசரத்துக் கேட்டிச்சு. ஆவியோ..! மனசு பரபரக்க ஓடிப்போய் படுக்கையறையைப் பார்த்தன். இரண்டு நாளைக்கு முன்னம் சின்னவன் கிண்டர்கார்டினிலை இருந்து ஈயப் பேப்பரிலை வெட்டின ஒரு படம் கொண்டு வந்து தந்தவன். அதை லைற்றிலை கொழுவி விட்டனான். அதுதான் யன்னலாலை வந்த காத்துக்கு ஆடிக் கொண்டிருந்திச்சு. எனக்கு ஒரே ஏமாற்றமாப் போட்டுது.

அடுத்த நாள் இவர் வேலைக்குப் போகாமல் நிண்டு மத்தியானம் சமைச்சுப் போட்டு, சாப்பிடச் சொல்லி கோப்பையிலை போட்டும் தந்தார். எனக்கு ஒரு வாய் வைக்கவே தம்பி இந்த உலகத்திலையே இல்லை எண்ட நினைவிலை அழுகை வந்திட்டுது. உப்புக் கரிச்சுது.

“இங்கை பார். அவன் மாவீரனாப் போயிருக்கிறான். நீ அழக் கூடாது. நீ இப்பிடியே அழுது கொண்டிருந்தால் நானும் வேலைக்குப் போக, பிள்ளையளை ஆர் பார்க்கிறது?" இவர் என்னைப் பேசினார்.

அவர் சொல்லுறது சரிதான். அதுக்காண்டி அழுகை நிண்டிடுமோ! இல்லை என்ரை சோகந்தான் வடிஞ்சிடுமோ!

சும்மா சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் எத்தினை தரம் கவலைப் பட்டிருப்பன். அழுதிருப்பன். இப்பதான் தெரியுது அதெல்லாம் ஒண்டுமே இல்லையெண்டு. சாவைப் போல சோகம் வேறையொண்டும் இல்லை. ஆராவது தெரியாதவையள் செத்தாலே கவலைப் படுறம். இளம் பிள்ளையள் செத்ததைக் கேட்டால் வயிறு கொதிக்குது. மனசு பதைக்குது. இந்தக் கவலையளும், சோகங்களும் எல்லாருக்கும் தெரியும். ஏன் எல்லாரும் அனுபவிச்சும் இருப்பினம். நானும் அனுபவிச்சிருக்கிறன்.

மில்லர் போலை ஒவ்வொரு பெடியளும் மரணத்தைக் குண்டுகளாய் உடம்பிலை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு கை காட்டிப் போட்டுப் போறதை, அவையள் வெடிச்ச பிறகு வீடியோவிலை பார்க்கிற பொழுது அப்பிடியே மனசைப் பிய்ச்சுக் கொண்டு சோகம் கண்ணீராய்க் கொட்டும். இந்த அனுபவமெல்லாம் எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இருக்கும்.

ஆனால் இந்த சோகங்களையெல்லாம் அப்பிடியே முழுங்கி விடுற அளவு சோகமும் உலகத்திலை இருக்குதெண்டு எல்லாருக்கும் தெரியாது. அதை அனுபவிச்சவைக்கு மட்டுந்தான் தெரியும்.

உங்களுக்குப் பிரியமானவை ஆராவது செத்தவையோ? பிரியமானவை எண்டு மிகமிகப் பிரியமான ஆராவது. அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை... இப்பிடி ஆராவது..?

அப்பிடியெண்டால் உங்களுக்கும் புரியும், என்ரை அந்த சோகத்திலை ஒரு இத்தனூண்டு சோகத்தைத்தான் நான் சொல்லியிருக்கிறன் எண்டு. மிச்சம் சொல்லேலாது. உணரத்தான் முடியும்.

மரணத்துக்கு முன்னாலை மற்றதெல்லாம் பூச்சியந்தான். அதை நான் என்ரை தம்பி என்னை விட்டுப் போன பொழுதுதான் முழுமையா உணர்ந்தன்.

இத்தினை தூரம் மனசு அழுது அழுது அவலப் பட்டுக் கொண்டிருக்கிற பொழுதும் நூலிழையிலை ஒரு நம்பிக்கை தொங்கிக் கொண்டிருந்திச்சு. ´தம்பி சாகேல்லை´ எண்டு தங்கைச்சி எழுதின கடிதமொண்டு ஊரிலை இருந்து வருமெண்டு.

அந்த நம்பிக்கை நூலைப் பிடிச்சுக் கொண்டு நடக்கையில், இருக்கையில், படுக்கையில், பயணிக்கையில்... எண்டு எந்தநேரமும் நினைவுகளுக்குள்ளையே மூழ்கி, அழுத விழிகளைத் துடைக்க மறந்து, ஏதோ ஒரு உலகத்திலை நான் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுதுதான், சரியா 21 ம் நாள் அந்தக் கடிதம் என்னை வந்தடைஞ்சிச்சு.

´கூட வந்த தோழர்களிற்கு ஓட வழி செய்து விட்டு, தனித்திரண்டு பெடியளுடன் களத்தினிலே சமர் செய்து பாரதத்துப் படைகளது பாவரத்தம் களம் சிதற கோரமுடன் படை சரித்து எங்கள் தம்பி வீரமுடன் மண் சாய்ந்து விட்டான்´ எண்டு என்ரை தங்கைச்சிதான் அதை எழுதியிருந்தாள்.

அது இன்னுமொரு சுமை தாளாத சோகம் நிறைந்த நாள்.

1.5.1999

 

 

பதியப்படாத பதிவுகள்

´சோ´ வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.

சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.

கதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா? மகள் சங்கவி ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.

கதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு, வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து, அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன், வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.

பின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும், செல்லத்தையும் அழைத்துக் கொண்டு கடற்கரை, பூங்காவனம், படம்… என்று சுற்றித் திரிவார்.

பருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து ´கள்´ விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.

கதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி “ஏனப்பா போறிங்கள்? இங்கையே வேண்டுங்கோவன்." பொறுமை இழந்து கேட்பாள்.

கதிரேசர் “இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை." என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி, குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடுபெட்டியைக் கொடுத்து “முப்பது தோசை சுட்டு வையணை." என்கிற போது “என்ரை ராசா வந்திட்டியே." என்பாள் தோசை சுடும் பெண்.

ஏதோ அவளும், கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. “நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை." கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை, பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.

வவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அம்மா, அப்பா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.

“என்ன சங்கவி, ஆமியைக் கண்டு பயந்து போட்டியே? இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு." மிகவும் ஆதரவாகவும், ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த

கதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.

சற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.

பக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி, மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.

அவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை ´மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது. எல்லாம் கை நழுவி விட்டது.´ என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் ஜேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.

தாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும், துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.

“பொட்டை அழித்து விடு." பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. ´ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்?´ என்று குமுறலாகக் கூட இருந்தது.

விமான நிலையத்தில் மாமாவை இனம் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கு இடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள். “அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே" என்று மாமாவிடம் குமுறினாள்.

“வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்." மாமா ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் சங்கவி ஓடவில்லை.

அதன் பலனாக வவுனியா புகையிரத நிலையத்தை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.

அலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு எல்லாவற்றையும் மீறிய ஆர்வத்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் சீருடையுடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.

6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.

அப்பா கதிரேசர் வவுனியாவில் புகையிரத நிலைய அதிபராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த பிளாட்ஃபோம்(platform) இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை சீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.

சங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ, இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து, பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து, பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து, கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது ´அப்பாடா´ என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.

எல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை. சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்டிக் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.

“மாமா, என்ன இது? எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..?" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.

“ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ..! உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்."

மாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. கைப்பைக்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து, திறந்து அது பத்திரமாக இருக்கிறதா, எனப் பார்த்துக் கொண்டாள்.

“ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள்? ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன?" திருப்தியின்மையுடன் கேட்டாள்.

“உடனை அப்பிடித் தரமாட்டினம்."

“அப்ப, நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ? ஏன் இந்தளவு கெடுபிடி? இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு?"

“எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்."

“அப்ப இங்கை பெடியளே இல்லையோ..?"

“இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்."

சங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.

“என்ன பிள்ளை.., ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ?" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

“இல்லையப்பா.., இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்ரேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும், மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க, நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள் இதுக்குள்ளை வரேலாதோ..?"

இப்போது கதிரேசர் குனிந்து இரகசியமாக, அவள் காதுக்குள்.. “எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்?" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும், தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் அந்த வேளையிலும் குறையாமல் இருந்தன.

சங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் “என்ன பிள்ளை, அப்பிடிப் பார்க்கிறாய்? உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்." என்றார்.

“இல்லையப்பா, அப்பிடியொண்டும் நடக்காது..." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞன் ஒருவன் இறங்கி உள்ளே வந்தான்.

பக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது “வா விமலன், வா." கதிரேசரும், செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.

மாவீரனான தம்பி மொறிஸ் இப்போது உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

நடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து, சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து, அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.

யார் வந்தாலும் வெளிவிறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும், அப்பாவும் நடந்து கொண்ட விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. கதிரேசர் கட்டிலில் அமர்வதற்கு உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். “எப்பிடியப்பு இருக்கிறாய்?" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.

´யார் இவன்..?´ சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.

“நீங்கள்..?" சங்கவி அவனை நோக்கினாள்.

“அக்கா, நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்."

தம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து “நான் வந்தது எப்பிடித் தெரியும்?" என்றாள்.

“எல்லாம் தெரியும்." என்றான் அர்த்தத்துடன்.

இப்போது செல்லம் கிசுகிசுத்தாள். “விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு..."

செல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.

அப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பிஸ்ரோல் (pistole)கள்.

´எப்படி..! எப்படி இது சாத்தியம்! இத்தனை தடைகளை மீறி..!´

´இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான்! குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..!`
"எப்பிடி விமலன்..? எப்பிடி இதெல்லாம் சாத்தியமாயிற்று? உங்களட்டைப் பாஸ் இருக்கோ?" கேள்விகளை அடுக்கினாள்.

“இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை."

“அப்ப... பிடிபட்டால்..?" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.

விமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும், படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.

காலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் சங்கவியின் நினைவில் வர, அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

21.12.1997

 

 

என்னைப் பற்றி்

பிறந்தது 1959இல், ஈழத்தில், பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள ஆத்தியடி என்னும் கிராமத்தில்.

1975இல் எழுதும் எண்ணம் உந்த, பேனாவைத் தொட்ட கைகள், இன்று கணினி விசைப் பலகையிலும் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்று, கற்றதனாலான பயனாக இன்று எழுத்துலகில் ஒரு படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

ஈழத்தில் எழுதும் போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்ததாபனம் எனது எழுத்துக்களுக்கு அங்கீகாரம் தந்து உள்வாங்கிக் கொண்டது. இன்று ஜேர்மனியில் வாழும் போது ஐபிசி தமிழ் வானொலி உற்சாகமாக வரவேற்று எனது எழுத்துக்களை உள்வாங்கிக் கொண்டது.

கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் எனப் பல தரப்பட்டு எழுதும் போதும், அவை வானொலிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் எனப் பலவற்றிலும் பரவி நிற்கும் போதும், நிறைந்த திருப்தியே ஏற்படுகிறது.

எழுத்தும், அதனூடான எனது கருத்துக்களும் தொடரும்.

நட்புடன்
சந்திரவதனா

 

 


மின்னூல் வடிவம் : தி. கோபிநாத் (2008)
அண்மைய மாற்றம் : 06.03.2008