சேக்சுபியர் கதைகள் - 4
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : சேக்சுபியர் கதைகள் - 4 (அப்பாத்துரையம் - 38)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 24+344= 368

  விலை : 460/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

சேக்சுபியர் கதைகள் - 4

முதற் பதிப்பு - 1945

இந்நூல் 2002 இல் ஏழுமலை பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.

நான்காம் ஹென்ரி

** (Henry IV)**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.நான்காம் ஹென்றி அரசன்: ரிச்சர்டுக்குப் பின் அவனை விலக்கி அரசனானவன். ரிச்சர்டின் சிற்றப்பனான ஜான் ஆப்காண்டின் மகன்.

2.ஹென்ரி இளவரசன் அல்லது ஹால் : நான்காம் ஹென்ரி அரசனுடைய மூத்தமகன். இளமையில் ஃபால்ஸ்டாஃப் கூட்டத்தாருடன் இன்ப வாழ்விலீடுபட்டவன்.

3.  ஜான் இளவரசன் : ஹென்ரி இளவரசன் தம்பி; நான்காம் ஹென்ரியின் இளைய மகன்.

4.  ஓவென் கிளென்டோவர் : வேல்ஸ் தலைவன்.

5.எட்மன்ட் மார்ட்டிமர்: மார்ச் இளங்கோவன் - ரிச்சர்டுக்குச் சிற்றப்பன் மகன் நான்காம் ஹென்ரியின் பெரியப்பன் மகன்-ரிச்சர்டிற்குப் பின் வரன்முறைப்படி அரசுக்கு உரிமையுடையவன்- வேல்ஸ் தலைவன் ஓவென் கிளென்டோவர் மகளை மணந்தவன்.

6.நார்தம்பர்லந்துக் கோமகன் : ரிச்சர்டு அரசனுக்கெதிராக நான்காம் ஹென்றிக்கு உதவி செய்து, அவனுக்கும் எதிராகத் திரும்பியவன் - ஹென்ரிபெர்ஸி அல்லது ஹாட்ஸ்பரின் தந்தை.

7.  ஹென்ரி பெர்ஸி அல்லது ஹாட்ஸ்பர் : பெருவீரன், அடங்காத் தறுதலை - ஸ்காட்லந்திலிருந்து படைத்தலைவன் டக்ளஸைச் சிறைப் பிடித்து விடுதலை செய்து நட்பாக்கிக் கிளர்ச்சியில் சேர்த்துக் கொண்டவன். ஹென்ரி இளவரசனுடன் ஒத்த அகவையுடையவன்- அவன் எதிரி.

8.டக்ளஸ் : ஸ்காட்லந்துப் படைத்தலைவன்.

9.ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃப்: வீழ்ச்சியற்ற பெருங்குடியாளன்-ஒப்பற்ற நகைச்சுவையுடையவன்-இளவரசன் கீழ்நிலைத் தோழருட் சிறந்தவன்.

10.கார்லைல் தலைமகன் : ரிச்சர்ட்டின் தெய்வீக உரிமையை வற்புறுத்தி நான்காம் ஹென்ரியால் கொலையுண்டவன்.

11.பார்டால்ப் : ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃபின் தோழருள் ஒருவன்.

12.ஸர் வால்ட்டர் பிளன்ட்: அரசர் பக்கத்து நின்று ஷ்ரூஸ்பரீச் சண்டையின் முன்தூதனாகச் சென்றவன்.

13. வொர்ஸ்டர்: கிளர்ச்சிக்காரர் பக்கத்திலிருந்த ஸ்ரூஸ் பரிச்சண்டையின் முன் தூதராகச் சென்றவர்கள்.

14. வெடர்னன்:

15. பாயின்ஸ் : ஸர் ஜான் ஃபாஸ்ல்டாஃப் தோழன்.

16.ஸர்ஜான் : பால்ஸ்டாஃபின் வேறு தோழன்.

17.தண்டத்தலைவணன்.

18.யார்க் பெருந் தலைமகன் : இரண்டாம் கிளர்ச்சியைத் தலைவருள் ஒருவன்.

19. மேப்ரே : இரண்டாம் கிளர்ச்சித் தலைவருள் ஒருவன்.

20. திருவாளர் பொள்ளல் : ஸர் ஜான் ஃபால்ஸ்டாஃப் சேர்த்த சொத்தைப்படை வீரர்கள்.

21. திருவாளர் வாய்மூடி:

22. ஹேஸ்டிங்ஸ் : இரண்டாம் கிளர்ச்சித் தலைவருள் ஒருவன்

23. வெஸ்டு மோர்லந்து : இரண்டாம் கிளர்ச்சிக் காலத்தில் ஜான் இளவரசனுடன் இருந்த தலைவன்.

24. வார்விக் பெருமகன்: அரசவையிலுள்ள பெருமக்களுள் ஒருவன்.

25.ஸர் ஹென்ரி காஸ்காயின்: ஸர் ஜான் ஃபால்ஸ்டாஃபை வெறுத்த வழக்கு மன்றத் தலைவன்.

** கதைச்சுருக்கம்**
நான்காம் ஹென்ரி அரசன் தனக்கு முன் இருந்த ரிச்சர்டு அரசனை வீழ்த்தி அரசனானவன். ரிச்சர்டு அரசனிடம் பொறாமை கொண்ட பெருமக்கள் ஆதரவினாலும், நல்ஆட்சிமுறைகளால் பெற்ற பொதுமக்கள் ஆதரவினாலுமே அவன் அரசனாக முடிந்தது. அவனுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிரிகள் பலர். வடக்கே ஸ்காட்லாந்தில் டக்ளஸ் என்ற படைத்தலைவனும் மேற்கே வேல்ஸ் தலைவன் ஓவென் கிளென்டோவரும் அவனுக்கு அடங்காதவர்களா யிருந்தார்கள். அதோடு அவ்விரண் டெல்லையிலும் உள்ள இரண்டு பெருங்குடியினரும் அவனுக்கு முன்போல் உட்பகையாயினர். அவருள் வேல்ஸ் எல்லையிலிருந்த மார்ச் கோமான் எட்மன்ட் மார்ட்டிமர் ரிச்சர்டிற்குப் பின் வரன்முறைப்படி அரசனாக வேண்டியவன். இன்னொருவன் ஸ்காட்லாந்து எல்லையிலுள்ள நார்தம்பர்லந்துப் பெருமகன். இவன் ஹென்ரிக்கு அரசனாக உதவியவன். இவன் மகன் ஹென்ரி பெர்ஸி என்ற ஹாட்பஸ்பருக்கு மார்ட்டிமரின் தங்கையை மணம்புரிவித்ததன் மூலம் இவன் மார்ட்டிமர் நட்பைப் பெற்றான். அதோடு மார்ட்டிமர் வேல்ஸ் தலைவனால் சிறைப் படுத்தப் பட்டபோது அவன் புதல்வியைக் காதலித்து மணந்தான். ஸ்காட்லாந்துப் படைத்தலைவன் டக்ளஸும் இங்கிலாந்து மீது படையெடுத்துக ஹாட்ஸ்பரால் சிறைப் பிடிக்கப் பட்டான். அரசன் அவனைத் தன் கையில் ஒப்படைக்குமாறு கேட்டதற்கு ஹாட்ஸ்பர் மார்ட்டிமரை மீட்க வற்புறுத்தினான். அரசன் அதற்கு இணங்காமையால் டக்ளஸிற்கு விடுதலை தந்து அவனையும் நண்பனாக்கினான். இங்ஙனம் எல்லா எதிரிகளும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சி செய்து ஷ்ரூஸ்பரி என்னுமிடத்தில் அரசனை எதிர்க்கக் காத்திருந்தனர்.

ஹாட்ஸ்பருடன் ஒத்த அகவையுடைய ஹென்ரி இளவரசன். அவனுக்கு நேர்மாறாய்க் கீழ்மக்கள் கூட்டுறவை விரும்பி அவர்களுடன் கீழான விடுதிகளில் சுற்றி அலைந்தான். அவனுடன் தோழரா இருந்தவருள் நகையரசனான ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃபும் ஒருவன். காட்ஸ்ஹில் என்ற இடத்தில் அவர்கள் நடத்திய சிறு திருட்டில் கூட அவன் உடன் கலந்து காவலருடையில் ஃபால்ஸ்டாஃபை ஏளனம் செய்தான். ஆனால், தந்தைக் கெதிரான கிளர்ச்சி பற்றிக் கேட்டதும் அவன் குணம் மாறி ஃபால்ஸ்டாஃப் முதலிய பலருதவியால் பெரிய நாட்டுப் படையைத் திரட்டிக் கொண்டு ஷ்ரூஸ்பரி சென்றான். கிளர்ச்சிகாரரிடையில் கோலைத்தனத்தால் நார்தம்பர்லந்து விலகி நிற்க, ஹாட்ஸ்பரின் முன் சினத்தால் கிளென்டோவரும் விலகி நின்றான். கிளென்டோவரின் மருமகனாகிய மார்ட்டிமரும் வேண்டாவெறுப்பாகச் சண்டை செய்தான். கிளர்ச்சிக்காரர் தோற்றனர். ஹாட்ஸ்பர் ஹென்ரி இளவரசன் கையால் இறந்தான். ஃபால்ஸ்டாஃப் இறந்த ஹாட்ஸ்பரைத் தூக்கிச் சென்று தன் கைவேலை என்று கூறிக் கேலி நாடகம் நடித்தான்.

எப்பக்கம் வென்றாலும் அதனுடன் சேர்வதென்று காத்து நின்ற நார்தம்பர்லந்து மகன் இறந்த செய்தி கேட்டுத் திகைத்தான். யார்க் தலைமகன் தோற்றுவிக்கும் இரண்டாம் கிளர்ச்சியில் சேர்ந்து பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தைத் துயரால் மனமுறிந்த அவன் மனைவியும் புதல்வியும் தடுக்க, இரண்டாம் முறையும் அவன் கிளர்ச்சிக்காரரை ஏமாறவைத்தான். ஹென்ரி இளவரசன் வேல்ஸ் தலைவனை அடக்கச் சென்றிருந்தால் ஜான் இளவரசன் அரசர் படைத்தலைமை தாங்கினான். அவன் தூதர் மூலம் கிளர்ச்சிப் படையோர் குறைகளை அகற்றுவதாகக் கூறி அவர்களைக் கலைத்தான். இளவரசனுடன் துணைத் தலைவனாயிருந்த வெஸ்டு மோர்லந்தின் சூழ்ச்சித்திறத்தால் இளவரசன் படைமட்டும் கலையாதிருந்தது. கிளர்ச்சித் தலைவர் ஏமாந்து சிறைப்பட்டனர்.

முதுமையாலும் துயர்களாலும் பிணியாலும் நலிவுற்று மன்னன் படுக்கையில் கிடந்தான். அவன் சோர்வைப் பிரிவென்றெண்ணி இளவரசன் துயரும், தனக்குப் பொறுப்பு வந்துற்றதே என்ற எண்ணமும் உந்த, முடியுடன் கடவுளை வணங்கச் சென்றிருந்தான். அதற்கிடையே விழித்தெழுந்த மன்னன் அதற்குள் முடியைக் கவர அவன் விரைந்தான் என்றெண்ணி ஐயமும் சினமும் கொண்டான். பின் அவன் ஹென்ரி இளவரசன் சொற்களால் உண்மை யுணர்ந்து மகிழ்வுடன் உயிர்நீத்தான்.

இளவரசன் ஹென்ரி தன் முன்னைக் குணம் மறந்து புது மனிதனாய் இங்கிலாந்தின் ஒப்பற்ற அரசனானான். நற்குணமுடையவனாயினும், அரசனைத் தன் வழியிலிருக்க முயன்ற ஃபால்ஃடாப்ஃப் கூட்டத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களை இளவரசனுடன் சட்டப்படி தண்டித்த ஸர்ஹென்ரிகாஸ்காயின் என்ற தண்டத்தலைவன் நன்கு மதித்துப் போற்றப் பட்டான்.

1.துணைக்கருவிகளே பகைக்கருவிகளானது

பிறப்புரிமையால் அரசராகாது குடிகள் இணக்கம் பெற்று அரசிருக்கை ஏறிய ஆங்கில மன்னருள்¹ நான்காம் ஹென்ரி அரசன் ஒருவன்.

அவனுக்குமுன் ஆண்ட² இரண்டாம் ரிச்சர்டு மன்னனுக்கு அவன் சிற்றப்பன் மகன். ஆனால், அவன் தந்தைக்கும் மூத்தவனான இன்னொரு சிற்றப்பனுடைய மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர்³ எட்மன்டு மார்டிமர். அரசுரிமை ஒழுங்குப்படி அவனே அரசனாய் வந்திருக்க வேண்டும். ஆனால், ரிச்சர்டின் தன்னாண்மை ஆட்சியைப் பெருமக்கள் எதிர்த்தபோது, ஹென்ரிதான் அவர்களுக்குத் தலைமை பூண்டான். எனவே, ரிச்சர்டு முடி துறந்தபோது அவனே அப்பெருமக்களின் இணக்கத்தாலும் துணையாலும் தன்னை அரசனாக்கிக் கொள்ள முடிந்தது.

தன்னலத்தின் வயப்பட்டு ரிச்சர்டின் போக்கைக் கண்டித்தே ஹென்ரி அரசனானான். ஆயினும் அங்ஙனம் அரசனானபின் அவனும் அந்த ரிச்சர்டைப் போலவே, தன்னாண்மையுடன் அரசாளத் தொடங்கினான். அப்போது பெருமக்கள், ரிச்சர்டை வெறுத்தததைவிட மிகுதியாக அவனை வெறுக்கத் தொடங்கினர். “ரிச்சர்டாவது முறைப்படி அரசனாயிருந்தவன்; அப்படியல்லனே இவன்; இவன் மணிமுடி நம் கைப்படக் கொடுத்த கொடைதானே; இவனுக்கென்ன இத்தனை தன்னாண்மை?” என்று அவர்கள் சீறினர்.

மேலும் ரிச்சர்டின் தன்னாண்மைக்கு அவன் இன்பவிருப்பும் சோம்பல் வாழ்வுமே காரணம். தன்னலமன்று. அரசன் என்ற முறையிலல்லாது தனிமனிதன் என்ற முறையில் அவன் நற்குணமும் பீடும் பெருந் தன்மையும் உடையவன். ஹென்ரியோ இதற்கு மாறாகத் தன்னலமும் சூழ்ச்சியும் உடையவன். எடுத்த காரியத்தை நிறைவேற்றும் வகையில் அவன் எத்தகைய முறையையும் கையாளத் தயங்காதவன். அவன் கையில் அரசுரிமை வந்ததே. அவன்தான் ரிச்சர்டின் கொடுமையோடுகூட அவனிடம் இல்லாத சிறுமையும் உடையவன் என்று காட்டிக்கொண்டான்.

ஹென்ரி, ரிச்சர்டை அகற்றித்தானே அரசனாகப் போகும் நாட்களில் அவனை அரசவையில் எதிர்த்துநின்று, “அரசுரிமை தெய்வீகமாகவும் பிறப்புரிமைப்படியும் வருவது; தெய்வத்தாலன்றி மனிதர் எவராலும் அஃது எடுக்கப்படவோ கொடுக்கப்படவோ கூடியதன்று” என்று 1கார்லைல் தலைமகன் கூறியிருந்தான். அதன் பயனாக ஹென்ரி அவனைத் தூக்கிலிட நேர்ந்தது. சமயத்துறையினுள் தலைமையான ஒருவன். நடுநிலை உரிமை கூறியதற்காக உயிரிழந்தது கண்டு, அச்சமயத் துறையிலுள்ள தலைமக்கள் எல்லாம் பிறரும் ஹென்ரியிடம் பகைமை கொள்ளலாயினர்.

மக்கள் ஹென்ரியை வெறுக்குந்தோறும் ரிச்சர்டின் நற்குணங்களையும் பெருந்தன்மையையும் ஓய்ந்து அவனை ஒழித்து விட்டோமே என்று கழிவிரக்கமுங் கொள்ளலா யினர். ரிச்சர்டின் காலத்தில் அவனுக் கெதிராகக் கிளர்ச்சி செய்தவருள் முதன்மையான ²நார்தம்பர்லந்துக் கோமகன்தான் இப்போது ஹென்ரியை எதிர்ப்பதிலும் முதல்வனாயிருந்தான்.

இவ்வுட்பகைவரேயன்றி ஹென்ரி அரசனுக்கு வெளிப்பகைவரும் வேறு சிலர் இருந்தனர். அவரே வேல்ஸ் நாட்டுத் தலைவனான ³ஓவென் கிளென்டோவரும், ஸ்காட்லந்துப் படைத்தலைவன் ⁴டக்ளஸும் ஆவர். இருவருள் ஓவென்கிளேன்டோவர் பிற வேல்ஸ் மக்களைப் போலவே வேல்ஸ் நாட்டின் பழைய பழக்க வழக்கங்களிலும், புனைவியல் கதைகளிலும் தெய்வ வரலாற்றிலும் பற்றுடையவனாயினும், இங்கிலாந்தின் பல்கலைக் கழகப் பயிற்சியுடையவனாயினும், இங்கிலாந்தின் பல்கலைக் கழகப் பயிற்சியுடையவனாதலின், புது நாகரிக மேற்பூச்சும் எய்தப் பெற்றவன். அவன் தலைவனான பின் அடிக்கடி எல்லைப்புறத்தில் வந்து சூறையாடுவான். அவனும், அவனைப்போலவே ஸ்காட்லந்து எல்லையில் டக்ளஸும் ஆங்கில அரசுக்கு இரு முள்போல் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.

இவ்விரு பகைவர்களிடமிருந்தும் நாட்டைப் பாதுகாக்கவே ஆங்கில அரசர் இரண்டு எல்லையிலும் இரு பெருங்குடிகளைச் செல்வாக்குடனும் வலிமையுடனும் விட்டு வைத்திருந்தனர். அவர்களே நார்தம்பர்லந்துப் பெருமகனும் மார்டிமரும் ஆவர்.

ஆனால், வேலியே பயிரை அழிக்கத் தொடங்கியது போல், இவ்விர பெருங்குடிகளும் அவ்வெளிப்பகைகளை எதிர்த்து அரசனை வலுப்படுத்துவதற்கு மாறாகத் தாமே உட்பகையாய்த் தழைத்து அவ்வெளிப் பகையுடன் ஒன்றுபட்டு அரசனுக்கு ஓர் உயிர்ப்பொறியாய் அமைந்தனர்.

இவருள் ஓவென் கிளென்டோவர் ஒருகால் போரில் எல்லைப் புறக் குடியினனாகிய எட்மன்டு மார்டிமரைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். சிறையிலிருந்தே மார்டிமர் கிளென்டோவரின் அழகிற் சிறந்த புதல்வியுடன் நட்புக் கொண்டு அவளை மணந்து கொண்டான். இதனால் மார்டிமருக்கும் கிளென்டோவருக்குமிடையே இருந்த பழம் பகைமை நீங்கி அவர்களிடயே இணையறா உறவு ஏற்பட்டது.

மார்டிமரின் உடன்பிறந்தாள். ஏற்கெனவே நார்தம்பர் லந்தின் மகனாகிய ஹாட்ஸ்பர் என்று வழங்கிய ¹ஹென்ரி பெர்ஸியை மணந்திருந்தாள். எனவே, கிளென்டோவருடன் மார்டிமரும் நார்தம்பர்லந்தும் ஆங்கில அரசர்க்கெதிராய் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் அரசன் நார்தம்பர்லந்தின் வளர்ச்சி பற்றி இன்னும் அச்சமும் அழுக்காறும் கொள்ளச் செய்யும் செயல் ஒன்று நிகழ்ந்தது.

ஸ்காட்லாந்து வீரனான டக்ளஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து நார்தம்பலந்தால் முறியடிக்கப்பட்டான். இதுவரை எப்போரிலும் புறங்கொடா வீரனாகிய அவன் மிகுந்த ஊக்கத்துடன் இருபத்தையாயிரம் பேர்கொண்ட பெரும்படை ஒன்று திரட்டி மீண்டும் படையெடுத்தான். இத்தடவை ஹாட்ஸ்பர் என்ற இளங்காளை அவனையும் அவன் பெரிய படையையும் முன்னையிலும் பன்மடங்கு நலிய முடியடித்து அவனையும் அவன் வீரர்கள் பலரையும் சிறைப் பிடித்தான். அதோடு போர்க் கருவிகளும் பொருட்குவையும் அளவிலாது அவன் கையுட்பட்டன.

வெளிப்பகையாகிய டக்ளஸை விட உட்பகையாகிய தன் பெருங் குடியினுக்கே மிகுதியாக அஞ்சிய ஹென்ரி, தன் சூழ்ச்சியால் அக்குடியினரை எப்படியாவது தன் வயப்படுத்த எண்ணி, அவர்களை அழைத்து நயவஞ்சக மொழியால் அவர்கள் வீரத்தையும் அரசுப் பற்றையும் புகழ்ந்து, பின் நளினமாகப் போரில் பிடிபட்ட சிறையாளிகளையும் பொருட்குவையினையும் தருமாறு கேட்டான். நார்தம்பர்லந்து அவற்றை விட்டுக்கொடுக்க மனமில்லாதபடி தக்காட்டினான். அருகிலிருந்த வொர்ஸ்டர் முதலிய பெருங்குடி மக்களும் அவனையே பெரிதும் தாங்கி நின்றனர்.

ஆனால், நார்தம்பர்லந்தின் மகனான ஹென்ரி ஹாட்ஸ்பர் தன் தந்தை முதலியவருடைய வெளிப்பூச்சு முறைகளை விரும்பாது நேரிடையாகவே அரசனை எதிர்க்க எண்ணினான். எண்ணி அவன். ஓவென கிளென்டோவரிடம் அதுபோது சிறைபுகுந்துள்ள தன் மைத்துனனாகிய எட்மன்டு மார்டிமரைச் சிறைமீட்டுக் கொடுப்பதாயின், தான் டக்ளஸையும் பிற சிறையாளிகளையும் கொடுப்பதாகக் கூறினான்.

அதற்கு ஹென்ரி, “உண்மையில் எதிரி பக்கமே சேர்ந்துவிட்ட நாட்டுப் பகைவனான மார்டிமரை நாட்டுப் பணத்திலிருந்த மீட்பது என்பது வெட்கக்கேடு” என்று கூறினான். ஹாட்ஸ்பர் சினந்து, “என மைத்துனனையா நாட்டுப் பகைவன் என்று கூறுவது? நாட்டுப் பகைவன்தான் நாட்டுக்காகப் போர்புரிந்து படுகாயம் அடைவனோ!” என்று வீறுடன் பேசி அகன்றான்.

தன்னை அரசனாக்க மிகுதியும் உதவிய அந்தக் குடியே இன்று தனக்கு நேர் பகையாகிப் பிற பகைவர்களையும் தூண்டி ஒன்றுசேர்த்து வருவது கண்டு ஹென்ரி மிகவும் மனம் புழுங்கினான்.

ரிச்சர்டு தன் இறுதி நாட்களிற் கூறிய வெஞ்சினத்தின் படியே, அன்று அவ்வரசனுக்கு எதிராகத் தன் கிளர்ச்சிக்கு உதவிய அக்கைக் கருவிகள் இன்று தன் அரசுக்கும் எதிராகப் பிற கிளர்ச்சிகாரருக்கு உதவுவதையும், எத்துணையோ தன்னலத்தாலும், சூழ்ச்சியாலும் தூண்டப்பெற்றத் தான் பெருமுயற்சியின் பயனாகப் பெற்ற இம்மணிமுடி, இறுதியில் ஒரு முள் முடியோயாய்த் தனக்குத் தாங்கருஞ் சுமையாய் விட்டதையும் நினைத்து அவன் புலம்பினான்.

2.இந்த ஹென்ரியும் அந்த ஹென்ரியும்

ஆண்டு முதிர்வு ஒருபுறம், அரசியல் சுழல்களினால் ஏற்பட்ட கவலை ஒருபுறம், பிணி ஒருபுறம் அரசன் உடலை அரித்துத் தின்றன. அதனிடையே வெளியினின்றும் இருபெருங்கூர்வாள்கள் அவன் உள்ளத்தைப் பசையற ஈர்க்கலாயின. அவற்றுள் ஒன்று மேற்சொன்ன பகைவர்கள் வளர்ச்சியும், கலப்பும், இன்னொன்று அவன் மகன் ஹென்ரி இளவரசனது நடவடிக்கை.

ஹென்ரி இளவரசனும் ஹென்ரி ஹாட்ஸ்பரும் ஏறக்குறைய ஒரே பெயரும் அகவையும் தோற்றமும் உடையவர்கள். ஆனால் இளமையில் இருவரது போக்கும் இருவேறு வகைப்பட்டதாயிருந்தது.

ஹாட்ஸ்பர் போர்க்குதிரை போன்ற வீரமும் படபடப்பும் தன்னாண்மையும் உடையவன். அதனாலேயே அவனை மக்கள் ஹாட்ஸ்பர் அல்லது ‘வெய்யதார்முள்’ என்று அவனுக்குப் பெயர் வைத்திருந்தனர். அவனுக்குப் போரே பருகும் நீரும் உயிர்க்கும் உயிர்ப்புமாயிருந்தது. அவன் உண்ணும்போதும் உடுக்கும்போதும் கேளிக்கையின் போதும் பேசுவதெல்லாம் போர்ப் பேச்சுத்தான். அவன் மனைவியுடன் கூட அவன்போர் மறத்தையன்றி வேறெவ்வகைப் பேச்சிலும் நேரம் போக்குவதில்லை. இதற்கேற்ப அவன் சென்ற போர்களிலெல்லாம் அவனுக்கு வெற்றியும் புகழும் கிடைத்தன. அவன் பெயர், புகழுக்கொரு மாற்றுச் சொல்லாகவே கருதப்பட்டு வந்தது.

ஹென்ரி இளவரசன் நடை இதற்கு நேர்மாறாயிருந்தது. குடிமக்களிடைப் பிறந்த அந்த ஹென்ரி புகழை எத்துணை நாடினானோ அத்துணை அரசுரிமை பெறப் பிறந்த இந்த ஹென்ரி இகழையே விரும்பி நாடிதாகத் தோற்றிற்று. அவன் ஓயாது தெருச்சுற்றும் கீழ்மக்களுடன் ஊடாடியும், அவர்கள் நடமாடும் கீழ்த்தர விடுதிகளில் உண்டாட்டயர்ந்தும், அவர்கள் சிறு சச்சரவுகளிலும் பூசல்களிலும் சிறுகளவுகளிலும் மறைவு நடமாட்டங்களிலும் ஈடுபட்டு உலகத்தவர் நகையாடலுக்கு ஆளாகி வந்தான்.

இம்மாற்றங்கள் அரசன் செவியிற் பட்டபோது முதலில் அரசன் அவற்றை நம்பவில்லை. பின் நம்பியும் நம்பியதாகக் காட்டாது மறைத்தான். அதன்பி அவன் படிப்படியாக இளவரசனை இன்மொழிகளாலும் எச்சரிக்கைகளாலும் இறுதியில் வன்மொழியாலும் திருத்த முயன்றான். எதுவும் அவன் போக்கை மாற்றுவதாகக் காணவில்லை.

அரசியல் அவமதிப்பால் திருந்துவானோ என்று எண்ணி அவனை அரசவைத்தலைமையினின்று விலக்கி, அதில் அவன் தம்பியாகிய ஜானை அமர்த்திப் பார்த்தான். இதனாலும் பயன் இல்லை. ஹென்றி ஏளன நகை நகைத்த, “அப்பாடா! இந்தச் சோம்பேறிக் கூட்டத்திற்குப் போய்க் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் தொல்லை ஒழிந்தது” என்று தெறிபேசிக் கொண்டு தன் பதடி வாழ்க்கையில் இன்னும் ஆழமாகத் தங்குதடையின்றி இறங்கினான்.

இளமையிலேயே பெருநோக்கங் கொண்டு அந்நோக்கங்கள் நிறைவேறித் தன் இளமையிலேயே பெருவாழ்வு கண்ட தனக்காக இத்தகைய பிள்ளை பிறக்கவேண்டும்’ என்று அரசன் தன் மகனை எண்ணி வயிற்றில் அடித்துக் கொண்டான். அதுமட்டுமா? தனக்குப் பிறந்த இப்பதரை ஏளனஞ்செய்தவற் காகவே போலும் தன் மாற்றானான நார்தம்பர்லந்துக்கு இத்துணைக்கும் நேர்மாறான பிள்ளை பிறந்தது! ’ஆ, என் மகன் நார்தம்பர்லந்து மகனாகவும், நார்தம்பர்லந்து மகன் என் மகனாகவும் பிறந்திருந்தால் - ஆ கருவில் வைத்தே எங்கள் பிள்ளைகளை யாதேனும் ஒரு தெய்வம் வந்து மாற்றி யிருந்தால், எவ்வளவு சிறப்பாயிருந்திருக்கும்!- அந்தோ என் தலையெழுத் திருந்ததிவ்வாறு! என்று அவன் பலகால் பெருமூச்சுவிட்டு நொந்து கொள்வான்.

இளவரசனை அவனது ஈனவாழ்வில் பெரிதும் இழுத்து அவனது கவனத்தை அரசியல் வாழ்விலிருந்து முற்றிலும் கவர்ந்த தோழருள் முதன்மையானவன் 1ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃப் என்பவன் இவன் இங்கிலாந்தின் வீழ்ச்சியுற்ற பெருங்குடி ஒன்றிற் பிறந்து அப்பெருங்குடிக் குரிய மதிப்பும் வெளி நாகரிகமும் இழந்தும், அப்பெருங்குடியிலும் காணுதற்கு அரிதான உயரிய உளப்பண்புகளும் அன்புள்ளமும் நகைத் திறமும் கொண்டவன். வேறெத்தகையவன் மனத்தையும் முறித்துப் பித்தாக்கத்தகும். அத்துணைத் துன்பங்களை அவன் தன் நகைத் திறனாலும் மக்களுடன் ஊடாடி அளவளாவுவதனாலும் உதறித் தள்ளிவிட்டு உண்டு குடித்து ஆடிப்பாடி நாட்போக்கி வந்தான்.

அவனது இவ்வின்ப வாழ்க்கைக் கொத்தபடி அவன் உடலும், நகையாதவரையும் நகைக்க வைக்கும் வண்ணம் அகண்டாகாரமாய் விரிந்து பெருகி நின்றாலும் கிடந்தாலும் இருந்தாலும் ஏறக்குறைய ஒரே உயரமாம் படி சரிசம உருளையாய் வளர்ந்திருந்தது. இயற்கையிலேயே அவன் சிரித்தால் சிரிக்காதவர்கள் இரார். ஒருவேளை சிரிக்கப் படாதென்று பல்லைக் கடித்துகொண்டிருந்தாலும்கூட அவன் சிரிக்கும் போது அவன் முதம் செக்கக் சிவந்து வழிவதையும் அவன் உடலின் சதைப்பற்றுக்கள் எழுந்தெழந்து நடமிடுவதையும் காணின் விலாப் புடைக்கத் தாமும் நகையாதிருக்க முடியாது.

அவனது நகைத்திறன் அவன் உடல், உளம், பேச்சு, நடிப்பு முதலிய யாவற்றையும் கவிந்திருந்தது. அவன் பேசும் நொடிப் பேச்சுக்களையும் நகைத்துணுக்குகளையும் மக்கள் பலவிடங் களிலும் புதுப்புது மனிதர்க்குப் பேசிக் காட்டி இன்புறுவர்.

மேலும், அவனது நகைத்திறனுக்கு யாவரும் ஆளாயினும், அதனால் துன்புற்றவரோ நொந்தவரோ மட்டும் யாரும் கிடையாது. அவனுடன் நகையாடும் எவரேனும் அவனையே குறியாகக் கொண்டு எள்ளி நகையாடினும், அவன் அவர்களையும் மடக்கி நகையாடுவதல்லாது அதனால் சினங்கொள்ள மாட்டான். தீமையில்லாத நகைக்களஞ்சியமான அவன் நகைச்சுழலில் பட்டு அவனை நாடாதவர் மிகக் குறைவு இன்ப வேட்கையும் குறும்புணர்ச்சியும் உடைய இளவரசம் அவனை நாடித் திரிந்ததில் வியப்பெதுவும் இல்லை.

3.நகையரசு

ஹென்ரி ஹாட்ஸ்பர் ஸ்காட்லந்து வீரர்களை வென்று வாகை சூடும் அதே சமயத்தில் இளவரசனும் அவன் தோழர்களும் அதற்கு முற்றிலும் மாறுபட்ட தொரு நகைப் போரில் ஈடுபட்டு அதில் வாகை சூடுவலராயினர்.

அன்று ஃபால்ஸ்டாஃப் இளவரசனுடன் அளவளாவிப் பேசிக் கொண்டிருக்கையில் வழக்கம்போல் தனது ஒப்பற்ற நகைத்திறனால் எல்லோரையும் களிக்கச் செய்த கொண்டிருந் தான். அவன் பக்கத்திலிருந்த குடிவகையைச் கொஞ்சங் கொஞ்சமாக ஊற்றிப் பருகிக் கொண்டே இளவரசனை அவன் செல்வப் பெயரால் ‘ஹால்’ என்றழைத்து, "ஹால், இப்போது மணி என்ன இருக்கும்? கேட்டான்.

இளவரசன்: ஃபா அல், உனக்கும் மணிக்கும் என்ன தொடர்பு? பகலும் இரவும் உனக்கு ஒன்றுதானே! நீ பகலில் குடிக்கிற குடிதான் இரவிலும் குடிக்கிறாய்! இரவில் தூங்குகிற தூக்கம்தான் பகலிலும் தூங்குகிறாய்! பகலில் படுக்கிற நாற்காலிதான் இரவிலும் படுக்கை அப்படி இருக்க உனக்கு மணி ஒன்றா கெட்டக்கேடு?

பால்ஸ்டாஃப் : ஹால்! நீ கெடாதவையும் கெடுத்து விடுவாய் போலிக்கிறது. நகரெங்கும் நான் உன்கூடச் சேர்ந்து கெட்டு விடுகிறேன் என்று தூற்றுகிறார்கள். அதில் தப்புத்தான் என்ன? உன்னிடம் முனியரசர் வரினும் நெறிபிறழவே செய்வர். இன்னும் சிலநாள் உன்னோடு பழகினால் நானும் கிட்டத்தட்டக் காலாடி ஆய்விடுவேன் போலிருக்கிறது. நான் இனி, உன்னுடன் சேர்ந்து தீவினை தீர அங்கியணிந்து இறைவனை வழிபட வேண்டும்.

இளவரசன் : (தனக்குள் நகைத்துக்கொண்டு) அது கிடக்கட்டும். ஃபாஅல், இன்று யார் மடியில் கைவைத்து மாலைச்செலவு கழிக்கலாம்?

பால்ஸ்டாஃப் : (தன்னை மறந்து) யார் மடியிலானால் என்ன? ஹால்! பிள்ளையார் பங்கு எனக்கு என்பதை மட்டும் மறக்காதே.

இது கேட்டதே இளவரசன் கைகொட்டி, “பலே, பலே ஃபாஅல். இறைவனை வழிபடும் முனிவனெங்கே, திருட்டிலும் பிள்ளையார் பங்கு கேட்கும் பக்காத் திருடனெங்கே?” என்று கூறி நகைத்தான்.

ஃபால்ஸ்டாஃப் இதற்கு மறுமொழி பகராது பல்லைக் காட்டினான்.

அச்சமயம், வழித்திருப்பு ஒன்றில் மறைந்து வழிப்பறி செய்யும் அவர்கள் ஆட்களில் ஒருவன் காட்ஸ்ஹில் பக்கம் அன்று நல்ல வேட்டை அகப்படும் என்று சொல்லி அனுப்பினான். வழிப்பறியில் தான் நேரடியாகச் சேரப்படாதென இளவரசன் சற்றே விலகப்போனான்.

அதுகண்ட ஃபால்ஸ்டாஃப், “குற்றமற்ற வழிப்பறியில் பங்கு கொள்ள அஞ்சும் இளவரசே! நீர் அரசரானால் அங்ஙனம் ஆகும் நாட்டில் நான் இருக்கமாட்டேன். இருந்தால் நான் உமக்கெதிராகக் கிளர்ச்சி செய்து நாட்டுப் பகைவனாகத் தான் வேண்டும்” என்றான்.

இளவரசன், “அரசனானபின் ஆவதை அப்புறம் பார்க்கலாம். இப்போது போய்வருகிறேன்” என்றான்.

அந்நேரம் ஃபால்ஸ்டாப் நாவில் கலைமகளின் அருளுணாப் போன்றதோர் அரிய நகைத்துணுக்கு எழுந்து அனைவர்க்கும் இன்பமூட்டிற்று. அரசன் என்று பொருள் கொள்ளும் ‘இறை’ என்ற சொல்லுக்கு இருபது வெள்ளி கொண்ட பொற்காசு என்ற பொருளும் இருப்பதைக் குறிப்பாகக் கொண்டு அவன் இளவரசனை நோக்கி, “ஹால், இன்று ஒரு பத்து வெள்ளிக்குக்கூட உதவாத நீ நாளை அரை இறைகூட ஆகமாட்டாய்” என்றான். அதுகேட்டு அனைவரும் இளவரசனைப் பார்த்து அவன் இளவரசன் என்பதைக் கூடமறந்து கையொட்டி நகைத்தனர்.

இச்சிரிப்பினிடையே எப்படியாவது நழுவிச் சென்றுவிட வேண்டும் என்று முயன்ற இளவரசன் காதில் அவர்கள் கூட்டாளிகளுள் ஒருவனான பாயின்ஸ் என்பவன் ஏதோ கூற இளவரசன் சட்டெனத் திரும்பி மலர்ந்த முகத்துடன் “ஆகட்டும், இப்பணியில் நானும் சேர்கிறேன்” என்றான்.

அன்று காட்ஸ்ஹில் பக்கம் இளவரசனும் ஃபால்ஸ்டாஃபும் பின்னும் நான்கு தோழரும் வந்து சேர்ந்தனர். இளவரசனே செயல்முறைத் தலைவனாக்கப் பெற அவன் அவர்களை இரு திறத்தினராகப் பிரித்தான். ஒரு திறத்தில் ஃபால்ஸ்டாஃபும் இன்னும் மூவரும் இருந்தனர். இவர்கள் வருபவர்களை மடக்கி அவர்களிடமுள்ள காசைப் பறிக்க வேண்டும்; சற்றுப்பின் இளவரசனும் இன்னொருவனும் நின்று தப்பியோடுபவர்களை மறித்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படியே நால்வரும் தம் குதிரைகளை மறைவில் கட்டிவிட்டுக் குந்தி இருந்தனர். வழிப்போக்கர் வந்ததும் அவர்களை மறித்துத் திட்டப்படிபொருள் பறிக்கப்பட்டது. அதனை மற்ற இருவருக்கும் தெரியாமல் தமக்குள்ளேயே பங்கிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி அவர்கள் நால்வரும் இருந்து பங்கிடலாயினர். பங்கிட்டுக் கொண்டிருக் கையில் திடீரெனக் குதிரை மீது காவலர் உடையில் இருவர் இரைந்து அதட்டிய குரலில், “அடி, பிடி, பிடி கள்வர்” என்று கூறிக்கொண்டு வந்தனர். நால்வரும் உடனே கொள்ளையிட்ட பொருளைக்கூட எடுக்காமல் விட்டு விட்டுத் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடத்தலைப்பட்டனர்.

நால்வரிலும் ஃபால்ஸ்டாப் ஓடுவதுதான் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அவர்கள் சற்று நேரத்தில் குதிரைகளைக் கட்டிய இடம் சென்றனர். அங்கே யாரோ ஒரு குதிரையை அப்புறப்படுத்தியிருக்க வேண்டாம் . மூன்று குதிரைகளே முன்சென்ற மூவரும் மூன்று குதிரைகளிலும் ஏறி மறைந்தனர். அவர்களுக்கு நெடுநேரம் பிந்திவந்த ஃபால்ஸ்டாஃப் தன் குதிரையைக் காணாமல் திகைத்தான். இளவரசன் தான் தன் குதிரையை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணி அவனை வைதான். பின் தன் தோழர்களை தன்னையும் ஏன் உடன் கொண்டு ஓடப்படாது என்று அவர்களை ஏசினான். குதிரை கொண்டு போனவர்கள்தாம் எல்லாக் குதிரை களையும் கொண்டு போனாலென்ன; துணையாவது இருக்குமே என்று அங்கலாய்த்தான்.

ஆனால், அங்கலாய்க்கும் நேரமன்று அது. “அதோ ஒரு திருடன் ஓடமுடியாமல் இருக்கிறான். அவனைப் பிடி! பிடி!” என்ற இரைச்சல் கேட்டது. “ஐயோ, ஐயோ, பணம் போனதுதான் போயிற்று. காவலன் கையிலும் அகப்பட்டு விட்டால் நாளை இளவரசன் முதலானவர்கள் சிரிப்பார்களே” என்று சொல்லிக் கொண்டு ஃபால்ஸ்டாஃப் கடகட வென்றடித்துக் கொள்ளும், தன் பெரிய தொந்தியை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு விழுந்து எழுந்திருந்து ஓடினான்.

உண்மையில் அவர்களை அச்சுறுத்தித் துரத்திய இருவரும் காவலர்களேயல்லர்; மாற்றுருக்கொண்ட இளவரசனும் அவன் தோழனுமேயாவர். ஃபால்ஸ்டாஃப் பட்ட பாட்டைக் கண்டு இருவருந் தமக்குள் விழுந்து விழுந்த சிரித்தனர். ஆயினும் இளவரசனுக்கு மட்டும் உள்ளுற ஃபால்ஸ்டாஃப் மீது இரக்கமும் பரிவும் ஏற்பட்டன. அதனை வெளிக்காட்டாமல் அவனும் தோழருடன் சேர்ந்து அவர்களைப் பின் தொடர்ந்து ஏமாற்றி நகையாடுவதில் கலந்து கொண்டான்.

ஃபால்ஸ்டாஃபும் அவன் தோழர்களும் தம்முன் சண்டையிட்டபின், எப்படியும் தம்மைவிட்டுப்போன மற்ற இருவர் முன்னும் தன் தோல்வியைக் காட்டக் கூடாதென்று பேசிகொண்டனர். ஆகவே. இளவரசனும் அவன் தோழனும் வந்து நயமாக “இரவு உங்களை வந்து பார்க்குமுன் ஓடி விட்டீர்களே, செய்தி என்ன? என்று கேட்க அவர்கள்”திருடர் பலர் வந்து எங்களை எதிர்த்தனர். நாங்கள் நெடுநேரம் சண்டை செய்தோம். கொள்ளையிற் கிடைத்த பொருளை ஒரு சிலர் கொண்டு ஓடத் தலைப்பட்டனர். பலரைக் கொன்று குவித்துவிட்டு அவர்களையும் பின்பற்றித் துரத்தினோம். அப்போதம் இறந்தவர் போக மீதிப் பேர் தப்பியோடிவிட்டனர் சண்டையினால் களைத்த வந்திருக்கிறோம். எங்களை விட்டோடின தோழர்களாகிய நீங்கள் வந்து தொந்தரவு வேறு கொடுக்கிறீர்கள்" என்றனர்.

இளவரசன் புன்சிரிப்புடன், " திருடர் பலர் என்கிறீர்களே செத்தவர் எத்தனை? ஓடியவர் எத்தனை?" என்று கேட்டான்.

அதற்கு மறுமொழியாகப் ஃபால்ஸ்டாஃபின் தோழரில் ஒருவன் “நால்வர்” என்றான். இன்னொருவன், “இல்லை; ஆக அறுவர் என்றான். ஃபால்ஸ்டாஃப்”என்னடா குறைத்துச் சொல்கிறாய், எட்டுப்பேர் இருப்பார்கள். என்கையினால் மட்டும் ஆறுபேர் இறந்தார்கள் காயம் பட்டவர்கள் வெறும் இரண்டுபேர் போக நால்வர் ஓடினர்" என்றான். இளவரசன் " எட்டுப்பேர் தாமே வந்தனர்; இறந்த அறுவரும் காயம்பட்ட இருவரும் போக மீதி ஏது" என்று கூறி நகைத்தான். ஃபால்ஸ்டாஃப் சினங்கொண்டு “நான்தான் சொன்னேனே சேர்த்துக் கணக்குக் கூட்டிக்கொள்!” என்று கூறிவிட்டுப் பின்னும் ஓடியவர்களுள்ளுந்தான் என்ன? கால் ஒடிந்தவர் ஓர் எட்டுப்பேர் இருப்பர்; மீதி ஏழு பேர்தான் மறைந்திருக்க வேண்டும்" என்றான்.

இவ்வாறாக வாலுந் தலையுமில்லாமல் கூறிய பொய்களை ஏளனம் செய்தபின் இளவரசன் நேரடியாகப் பேசத் தொடங்கித் தாங்கள் செய்த சூழ்ச்சியை வெளிப்படுத்தி எங்கள் இரண்டு பேருக்கு அஞ்சியோடிய கோழைகளா எட்டுப் பேரையும் பத்துப் பேரையும் கொன்றீர்கள்? கோழைத் தனத்தோடு புளுகும் வேறா குறை?" என்றனர்.

ஃபால்ஸ்டாஃப் அப்போதும் விடாமல், “நான் மட்டிலும் கோழையல்லன். நான் அங்ஙனம் ஓடியது உண்மையேயாயினும், அதற்கு உள்ளூற ஒரு காரணமுண்டு” என்று கூறித் தன் சிவந்த மீசையை முறுக்கி நிமிர்ந்தான்.

இஃது ஏதோ புதுவகைப் புளுகு என்று கண்டு ஆர்வத்துடன் இளவரசன், “அஃது என்ன காரணம்?” என்றான்.

ஃபால்ஸ்டாஃப்:- (பெருமிதப் பார்வையுடன்) என்மனம் ஓடப்படா தென்றுதான் நின்றது. ஆனால், உள்ளுணர்ச்சி ஒன்று தெய்வீகமாக ஏற்பட்டுக் கால்களை ஓடும்படி தூண்டியிருக்க வேண்டும்.

இளவரசன்: அஃதென்ன உள்ளுணர்ச்சி?

ஃபால்ஸ்டாஃப் : பொறு, பொறு; எம்போன்ற சிங்கங்கள் காட்டரசர். தாம் நாட்டரசர் ஆகப்போகிறவர். நாட்டரசரைக் காட்டரசர் எதிர்க்கலாமா? அதுவும் காட்டில் நாட்டரசர் விருந்தினர் ஆயின்?

பேச்சுக்கிடமில்லாமல் அகப்பட்டுக் கொண்டதுபோல் தோன்றிய அவ்விடத்தும் புதுத் துணுக்கு ஒன்றை உண்டுப் பண்ணிய அவன் அறிவுத்திறத்தை இளவரசன் மெச்சினான்.

அச்சமயம் ஒரு தூதன் வந்து, “மார்டிமரும் கிளென்டொவரும் ஹென்ரி ஹாட்ஸ்பரும் டக்ளஸும் எல்லாரும் ஒருபங்கு சேர்ந்துக் கொண்டு ஆங்கில அரசரை எதிர்க்கக் கச்சை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்” என்று கூறினான். ஃபால்ஸ்டாஃப் உடனே இளவரசைப் பார்த்து “ஹால், இனி என்ன செய்வாய்? நாளை உன் தந்தை உன்னை அழைத்து இத்தகைய நெருக்கடியில் நீ என்ன கோழையாய் இருந்து விட்டாய் என்பாரே. அப்போது என்ன மறுமொழி கூறுவாய் என்பதை நான் பார்க்கிறேன்” என்றான்.

இளவரசன் "ஏன் அதை இப்போதே வேண்டுமானால் பாரேன். நான் அரசர் உடையணிந்து அரசனாக இருக்கிறேன். நீ என் உடையை உடுத்தி இளவரசனாயிரு. அரசர் என்ன சொல்வார் என்று நான் சொல்லிக் காட்டுகிறேன்’ என்றான்.

ஃபால்ஸ்டாஃப் உடனே இளவரசன் உடையை மேலே போட்டுக் கொண்ட இளவரசனது வீறாப்பான நடை நடந்து அரசனாக நடிக்கும் இளவரசனிடம் வந்து "அரசே, தங்களுக்கு உடம்புக்குக் குணமில்லை என்று கேட்டேன்; நான் செய்யவேண்டுவது ஏதேனும் உண்டா? என்று கேட்டான்.

இளவரசன், “அசட்டுப் பயலே, தந்தையிடம் இப்படிப் பேசத்தானாடா கற்றுக்கொண்டாய் இத்தனை நாளும்? நீ என்ன செய்வாய் பாவம். நீ நீயாயிருக்கும் வரையில் எவ்வளவோ நல்லவனாய்த் தான் இருந்தாய். அந்த ஃபால்ஸ்டாஃப் கீல்ஸ்டாஃபோ என்றொரு சாராயப் பீப்பாய் இருக்கிறதாமே; அதன் சேர்க்கை என்று வந்து சேர்ந்ததோ அன்றே கவைக்குதவாதவனாய் விட்டாய். அவன் தோழமையை ஒழித்து நம் குடும்பத்தார்க்கும் அரசியலுக்கும் நேர்ந்த களங்கத்தை என்று ஒழிப்பாயோ எனத் தவங்கிடக்கிறேன்” என்றான்.

அரசன் மொழியில் வைத்துத் தன்னைக் குறை கூறியதற்குப் ஃபால்ஸ்டாஃப் விடை பகருமுன் அந்நகர்ப்புறத்தத் ¹தண்டத்தலைவன் வந்து "ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃப் ஸர்ஜான் ஃபால்ஸ்டாஃப் என்று கதவைத் தட்டினான். இஃது அண்மையில் நடந்த கொலையைப் பற்றியது என்று கண்டு அனைவரும் ஃபால்ஸ்டாஃப் திரைமறைவில் வைத்துக் கொண்டு தண்டத் தலைவனை ஏமாற்றி அனுப்பிவிட்டனர்.

அதன்பின் திரை நீக்கியபோது அந்தச் சில நொடிகளுக்குள் ஃபால்ஸ்டாஃப் தன் பாரிய மலைபோன்ற உடல்மீது பூசணிக்காய்கள் போன்ற தன் கன்னங்களைச் சாய்த்துக் கொண்டு அயர்ந்து உறங்கி விட்டதை கண்டனர். உறங்குபவர் பொருளை எடுத்துக்கொள்ளும் வழக்கமுடைய அவர்கள், அவ்வழக்கப்படி அவன் சட்டைப் பையைத் தேட, அதில் ஒன்றுமில்லாது ஓர் உண்டி விடுதிச் சீட்ட மட்டும் இருக்கக் கண்டனர். அச்சீட்டிலிருந்து அவன் கைப்பணமிழந்து காசில்லாமல் போனாலும் கடன் வாங்க மனமின்றி இரண்டு நாளாய் அரைக்காசு உண்டியுடன் இருந்து வந்திருக்கிறான் எனக் கண்டனர். அவனது வெள்ளை மனத்தையும் உயர்வையும் கண்ட இளவரசன் மறைவில் “ஆ! என் அழுக்கினுள் மாணிக்கமே! உன்னை விட்டு நான் எப்படிச் செல்வேன்; ஆயினும் சில நாளில் செல்லத்தானே வேண்டும்” என்று புலம்பினான். அவன் கண்கள் கலங்கி அவனையும் அறியாமல் ஒரு சொட்டுக் கண்ணீர் நிலத்தில் வடித்தது.

4.இளவரசன் உருமாற்றம்

அன்று விடிவதற்குள் போருக்குப் புறப்பட்டு வர இளவரசனுக்கு அழைப்பு வந்தது. கழிந்த இரவுடன் தன் வாழ்க்கையின் முதல்இரவே கழிந்து விடிந்தது போல் தன் பழைய வாழ்வாகிய துயிலையும் கனாவையும் உதறித்தள்ளிய உள்ளத்துடன் இளவரசன் அரசவைக்குச் சென்றான்.

வெளிக்கான உயிரற்றுத் தவங்கிடப்பதுபோல் தூங்கும் தாள்சுருள் கண்கவர் வனப்பும் சுறுசுறுப்பும் கொண்ட வண்ணாத்திப் பூச்சியாய் மாறுவது போல், விளையாட்டு மனப்பான்மையிலும் குறும்பிலும் மறைந்து கிடந்த இளவரசனின் வினையாண்மை சரியான நேரம் வந்ததும் விரைந்து சற்றுச் சார்புகளுக்கேற்ப மாறிப் புத்துயிர் பெறலாயிற்று. நகைப்பையன்றி வேறொன்றையும் காணாத அவன் பிள்ளையுள்ளத்தில் அன்பும், பிறர் துன்பங்கண்டு பரியும் பரிவும், நன்மை தீமை ஆராயும் ஆராய்ச்சிக் குணமும் படிப்படியாய் ஏற்படலாயின.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அவன் திரிந்த நாட்களில் ஃபால்ஸ்டாஃபின ஒரு பண்பே, அஃதாவது அவனது இன்ப வேட்கை ஒன்றே. அவன் கண்ணுக்குத் தோன்றிற்று; ஃபால்ஸ்டாப் உள்ளூறப் படும்பாட்டைக் காணும் கண்ணும் அதற்காக அவன்மீது பரிவு கொள்ளும் உள்ளமும் அவனுக்கு நாளடைவில்தான் ஏற்பட்டன. ஃபால்ஸ்டாஃப் உறவால் தனக்கும் தன் தந்தைக்கும் ஏற்படும் அவதூறும், அதனால் தந்தைக்கேற்பட்ட தப்பெண்ணமும் துயரும் இன்னொரு புறம் அவனை வாட்டின. இவ்வுறவை நீடிப்பது தவறு என்றும், அஃது அரசனுக்குத் துயர் விளைவிப்பதாகும் என்றும் அவன் அறிந்தான் ஆனால், அவ்வுறவை முறிக்கலாம் என்றாலோ அதுவும் கொடுமையாகும். இரண்டில் எது செய்வது என மிகவும் ஊசலாடியது அவன் உள்ளம்.

இத்தயக்க நிலையில் அவன் அரசனைக் கண்டு அவனடி வணங்கி நின்றான். அவனது மனநிலையில் அவன் நாஒன்றும் பேசுமாறில்லை. ஆகவே, அவன் மொட்டையாக, “அரசே, தம் உடலுக்கு நலமில்லை என்று கேட்டேன்” என்று கூறி வாளா நின்றான்.

அரசன் கண்களுக்கு செவிகளுக்கும், அவ்விருவினுள்ளும் அம்மொழிகளின் பின்னும் கிடந்த எண்ணங்கள் எப்படிப் புலனாகும்? இதுவரை இளவரசனைப் பற்றி அவன் கேட்டதற்கேற்ப இச்சொற்கள் அவனுக்குப் பொருள் தந்தன. தன் மகனுக்குத் தன்னைக் காணவே நேரமில்லையாதலால் சுருங்கப் பேசித் தொலைத்துவிட்டுப் போக வேண்டமென்று வந்திருக்கிறான் என்றும், அவனுக்கும் தன்மீது அன்போ, தன்னைப்பற்றிய கவலையோ இல்லை என்றும் அவன் நினைத்தான்.

தான் ரிச்சர்டுக்குச் செய்த தீவினையே தன் பிள்ளையுருவாகத் தன் முன் நின்றதென அவன் அப்போது நினைத்தான்.

அவன் உள்ளத்தில் அவன்மீது இறைவன் கொண்ட பழி என நின்றது. அவன் பழைய நண்பன் நார்தம்பர்லந்தின் மகனாகிய அந்த மற்ற ஹென்ரியின் உருவம்.

ஆயினும் பிள்ளை மனம் என்ன கல்லானாலும் பெற்ற மனம் பித்து என்பதற்கேற்ப, அவன் தசையும் குருதியும் தம்முட் கலந்தாலென்ன மகனை வாரி எடுத்தணைத்து, அவன் தோள்களையும் தன் தோள்களையும் ஒத்து நோக்கி “ஆ இத்தோள்களின் சுமையைத் தாங்கும் தோள்களைப் படைத்தும் இத்தலை தாங்கும் முடியினைத் தாங்கும் தலையினை மட்டும் இறைவன் படைத்திலனே” என்று தன் வருத்தந் தோன்றக் கூறினான்.

“தந்தையே, நான் இயற்கையுணர்ச்சியின் பாற்பட்டுச் சிறுபிள்ளைத் தனமாக இருந்துவிட்டேன் என்பது உண்மையே ஆனால், வேண்டும் போது நான் பொறுப்புணரக் கூடாதவன் அல்லன். இன்றுவரை நான் வாழ்ந்த சோம்பல் வாழ்வினையும் இயற்றிய தீங்குகளையும் மனமார மன்னிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். அவற்றையெல்லாம் என் நற்செயலால் இனிக் கழுவுவேன்” என்றான் அவன்.

மகன் இவ்வளவு இனிய மொழிகளாவது சொல்கிறானே என்று பேராறுதலடைந்து அரசன் நெஞ்சம். ஆனால், இன்னும் மகன் உண்மையில் கழிவிரக்கங் கொள்ளுவதாகவோ திருந்துவதாகவோ அவன் நம்பக் கூடவில்லை. ஆதலின் சற்றுத் தாழ்ந்த குரலில், மகனே உனது நல்லெண்ணத்திற்கு நன்றியுடையேன். பிற பிள்ளைகள் தந்தைக்கு ஆற்றும் கடனைக் கேட்கும்போதெல்லாம், பிற பிள்ளைகள் தந்தையிடம் காட்டும் அன்பைக் காணும் போதெல்லாம் நான் என் வயிற்றையும் என் தீவினையும் நொந்துகொள்கிறேன். நீ கவலையற்று இன்பவாழ்க்கை வாழ்கிறாய்" என்றான்.

தந்தையின் ஆற்றாமை கண்டு, மகன் உளநைந்து தந்தையிடம். “கழிந்ததை நினைத்து மனம் புண்பட வேண்டாம் என்று தங்களை வேண்டுகிறேன். இனித்தங்கள் முகம் மலரும்படி செய்வது என் கடமை. ஆம், அஃது என் கடமை. இனி எந்தப் பிள்ளையையும் எந்தத் தந்தையையும் கண்டு தாங்கள் மனம் நையவோ தலைகுனியவோ வேண்டாம்” என்றான்.

ஏற்கெனவே ஆறுதலுற்ற அரசன் உள்ளத்தில் மின்னலின் நிழல் போலும் ஓர் ஒளி வீசிற்று. அரசன் தன் மகன் தலையைத் தடவி, “ஆ! சீர்திருத்தத்தின் குறி உன்னிடம் காண்கிறது. அந்த நார்தம்பர்லந்து மகனுக்கு இணையான புகழ் என் மகன் அடைய நான் என்று காண்பேனோ, இறைவனே!” என்றான்.

இளவரசன் உள்ளத்தின் ஆழத்தில் கிடந்த தன் ஆண்மை, வீரம் முதலிய யாவற்றையும் இச்சொல் முழுமையும் கிளப்பிற்று. தந்தை கண்ணில் நார்தம்பர்லந்து மகனுக்கிருந்த உயர்வும் தனக்கிருந்த தாழ்வும்-கேவலம் குடிமக்களுள் ஒருவனுடைய பிள்ளையைக் கண்டு அழுக்காறுடன் மனம் புழுங்கும் நிலையிலேதான் தன் தந்தையை வைத்திருக்கிறோம் என்ற நினைவும்-எல்லாம் சேர்ந்து, அவனை உயிருடன் கொன்றது என்னல் வேண்டும். நெடுநேரம் கற்சிலை போல் நின்றிருந்து பின் அரசனை நோக்கிய, " அரசே! என் தந்தையே! நீர் பெரிதாகிக் கொள்ளும் அந்த ஹாட்ஸ்பரின் உயிர் குடித்தன்றியான் உயிருடன் இப்போரில் நின்று மீளேன்! அன்றேல் தாங்கள் தற்போது அணைத்துக்கொண்ட தோள்களைத் தீண்டத் தகுதியுடையவன் ஆகேன்!" என்று கூறிக்கொண்டு மின்னென மறைந்தான்.

5.பகைக்கலத்தில் உட்கீறல்

ஹென்ரி இளவரசனின் கோள் இப்போது கீழ்வானில் எழலாயிற்று. ஹென்றி ஹாட்ஸ்பரின கோள் அதே சமயத்தில் உச்சத்தில் சென்று திரியலாயிற்று.

கிளர்ச்சிக்காரர் நால்வரும் ஒன்று சேர்வதாக வாக்களித்த நாளே ஹாட்ஸ்பரின் செல்வாக்கு உச்சத்தில் நின்ற நாள். அன்று அவன் சொல்லுக்கு மேற்சொல் இல்லை. அவனைக் காண்பதினும் அன்று வேறு பேறு இல்லை. வீர இளைஞர் தம் காதற் கன்னியரின் முத்தங்களைக் கூடப் புறக்கணித்துவிட்டு அவன் கடைக்கண் பார்வைக்கும் அவன் புகழில் பங்கடைவதற்கும் அங்கலாய்த்து நின்றனர். மங்கையர் தம் கிளிகளுக்கும் பூவைகளுக்கும் " ஹாட்ஸ்பர், அதோ ஹாட்ஸ்பர்" என்று கூறக் கற்றுக் கொடுத்திருந்தனர். அவர்கள் தம் நெஞ்சினுள்ளாக ஹாட்ஸ்பரை ஒத்த மைந்தர் பிறக்கவேண்டும் என்று இறைவனை வணங்குவதும், பிறந்தாகவே கனாக் காண்பதுமாக இருந்தனர்.

ஹாட்ஸ்பரின் பெயர் கேட்டதே வீரரெல்லாரும் “வெற்றி நமதே, புகழ் நமதே” என ஆரவாரித்த வண்ணம் நின்றனர். நாலா பக்கங்களினின்றும் வந்து குவியும் வீரர்களால் படை எழுகடலும் திரண்டு வந்ததுபோல் பெருகிற்று.

ஆனால், பொன்னும் மணியும் பதித்து நறுமலர் மாலைசூட்டி வெளி அழகு நிறைந்த வீணையில் உட்கீறல் மறைந்து கிடந்தால் எப்படியோ, அப்படியே கிளர்ச்சித் தலைவர்களான வொர்ஸ்டர், ஸர் ரிச்சர்டு, வெர்னன் முதலியவர்களுடைய உள்ளத்தில் இத்தனை கோலாகலங்களுக்கு இடையேயும், ஒருவகை அவநம்பிக்கை ஏற்படலாயிற்று. ஹாட்ஸ்பர் எங்கோ அங்கு வெற்றி என்று நம்பியிருந்த படைவீரர்களையோ அவர்களுடைய அன்றைய தனிப்பெருந்தலைவன் ஹாட்ஸ்பரையோ இது தாக்கவில்லை.

படைத் தலைவர்களது இவ் அவநம்பிக்கைக் காரண மில்லாமலில்லை. கிளர்ச்சியில் சேர்ந்தவர் நார்தம்பர்லந்து, கிளென்டோவர் ஆகிய இருவரும் நாவளவில் படையில் சேர்வதாகச் சொல்லிக்கொண்டு காலங்கடத்தி வந்தனர். ¹ஷ்ரூஷ்பரி என்னுமிடத்தில் வந்து கலந்த ஹாட்ஸ்பரின் படையும் டக்ளஸின் படையும் அவர்களுக்காக நாள் கணக்கில் காத்திருந்தன.

கிளென்டோவரின் தாமதத்திற்கு ஹாட்ஸ்பர்தான் காரணம். வேல்ஸ் நாட்டு மக்கள் வெள்ளை மனமுடையவர்கள் தம் நாட்டிலும், தம் இலக்கியத்திலும், தம் பழங்கதைகளிலும் பெரும் பற்றும் வீறும் கொண்டவர்கள் விருந்தினரை ஏற்று முகமன் கூறுவதிலும் நண்பரையும் அண்டினோரையும் உயிரைக் கொடுத்துக் காப்பதிலும் அவர்களுக்கு இணை வேறு இல்லை. ஆனால். அவர்கள் மயிர்படின் வாழாக் கவரிமான் அன்ன மானமும், தொட்டால் வாடியன்ன கடுஞ்சொல் பொறாமனமும் கொண்டவர்கள், கலையுணர்ச்சியோ ஈரநெஞ்சமோ அற்ற வடநாட்டானும் முன்பின் அறியாது பாயும் இளங்காளையுமாகிய ஹாட்ஸ்பர் அவன் தற்பெருமையைக் குலைத்து வெட்டி வெட்டிப் பேசி, அவனை மீண்டும் மீண்டும் புண்படுத்தினான்.

இருவருக்கும் உறவினனான மார்டிமர் ஹாட்ஸ்பரை எவ்வளவோ அமைதிப்படுத்த முயன்றும் முடியாமல் இறுதியில் கிளென்டோவரையே அமைதிப்படுததி இருவரையும் சேர்த்து வைத்தான்.

ஹாட்ஸ்பர் உண்மையில் யாவரிடமும் தெறி பேசு வோனாதலால், இதில் பகைமையுணர்ச்சியும் கொள்ளவில்லை. அதனை நினைவில் வைக்கவும் இல்லை. ஆனால் கிளென்டோவர் மனத்தில் அவன் சொற்கள் நின்று அரித்தன. போரிலும் நேரிலும் எதிர்ப்பயாத வீரனாகிய அவன், விருந்தினனாய் வந்துவிடத்துப் பெற்ற இவ் அவமதிப்பை நினைத்துப் பலகாலும் புழுங்கினான். மார்டிமர், தான் உயிரினும் அருமையாகப் பாராட்டிய தன் வேல்ஸ் நாட்டு மனைவி இந்தக் கிளென்டோவர் தந்தையும் வணங்கும் நாட்டுத் தெய்வமுமாக இருந்தமையின், அவனும் ஹாட்ஸ்பர் மீது பெருஞ்சினம் கொண்டானெனினும், ஹாட்ஸ்பர் தன் மைத்துனனானமையால் அதனை அடக்கி, அரை மனதுடன் அவன் பக்கம் நின்றான்.

கிளர்ச்சிகாரருள், விலகி நின்ற மற்றத் தலைவன் ஹாட்ஸ்பரின் தந்தையாகிய நார்தம்பர்லந்தே. அவன் ரிச்சர்டுக்கு வஞ்மிழைத்தவன்; ரிச்சர்டு கற்பரசியான மனைவியுடன் சில நொடிகள் பேசுவதைக்கூடத் தடுத்த மாபாவி. ரிச்சர்டு அன்று அவனிடம் “நீ முடியரசனுக்கு இழைத்த வஞ்சம் நின் கைப்பிடி அரசனுக்கும் இழைப்பாயாக; நீ பிறர் குடிக்கு இழைத்த வஞ்சம் நின்குடிக்கும் இழைப்பாயாக!” என்று கூறியிருந்தான். அம்மொழி பொய்க்கா வண்ணம் இன்று அவன் மனம் தயங்கலாயிற்று. இதற்கும் அவன் கோழைத்தனமே காரணம் பெரும்பாலும் வெற்றித் தன்மகன் நின்றபுறமே என்று அவன் நம்பிய போதிலும் தோல்வியுற்றால். அப்போதும் தான் வெளியில் நின்று அவனை மீட்கலாமே என்றும் அவன் கோழையுள்ளம் அவனுக்குப் பகர்ந்தது. ஆகவே, அவனும் வடக்கில் தங்கி நின்று கிளென்டோவரைப் போல நாட்கடத்திக் கொண்டே வந்தான்.

அரசன் பக்கத்தின் நிலைமை இவ்வளவு நம்பிக்கைக் குறைவாயில்லை. ஹென்ரி அரசன், பழைய அரசனாகிய ரிச்சர்டைப் போலாது, தன் படைகளை நல்ல நிலைமையில் பயிற்றுவித்தும், மன நிறைவுடன் வைத்துக் காத்தும் வந்தவன். அத்துடன் அவன் பெருங்குடி மக்களைப் பகைத்தனனேயன்றிப் பொதுமக்கள் இன்மொழிகளாலும் நடுநிலை ஒழுங்காலும் தண்ணளியாலும் காத்துப் பாராட்டி வந்தான். அதனால் அவர்கள் அவன் படையின் குறைவை நிறைபடுத்தி ஆயிரக் கணக்கில் வந்து சேர்ந்தனர். மேலும் இளவரசன் அரசன் பக்கம் நின்றுழைத்தது. அரசன் நினைத்ததைவிட மிகவும் நல்ல பயனளித்தது. இளவரசன் இழிந்த மக்களுடன் ஒப்ப நடந்தது நாடு முற்றிலும் அவனுக்குக் கெட்ட பெயர் தந்திருக்கின்றது என்று அரசன் செவியிற்பட்டிருந்தது இஃது ஓரளவு உண்மையே. இளவரசன் நல்லன், எளியவர்க்கெளிவன் என்று மக்கள் கொள்ளினும், அவன் போர், அரசியல் இவற்றில் துணிந்திறங்காதவன் என்றே அவர்கள் கொண்டடினர். அவனைப் பெருமக்களும் அரசனும் கொண்டதேபோல் அவர்கள் இன்பவிருப்பினனும் சோம்பேறியும் என்றே கொண்டனர். ஆனால், அவன் அதையெல்லாம் விட்டுப் பேருக்கெழுந்து ஆள்சேர்க்க இறங்கியதே மக்கள், “எம் அன்னை வருக! எம் அப்பன் வருக! எம்குலவிளக்கே வருக! எம் நாட்டுத் தெய்வமே வருக!” என்று அவன் கொடியைச் சூழ்ந்து மொய்க்கலாயினர். விரைவில் அரசன் படைக்கொத்த அளவும், அதனினும் பன்மடங்கு கொந்தளிப்பும், ஆர்வமும் கொண்ட நாட்டுப்படையுடன் இளவரசன் போர்க்கெழுந்தான்.

இளவரசனிடம் இதற்குமுன் ஃபால்ஃடாஃப் ஒரு தடவை, “ஹால், நீ அரசனுடன் சண்டைக்குச் சென்றால் என்னையும் அழைத்துச் செல்வாயா?” என்று கேட்டிருந்தான். இளவரசன், “நீ என்ன செய்ய முடியும்” என்று ஏளனஞ் செய்ய, ஃபால்ஸ்டாப், “நீ மட்டும் என்னை என் பொறுப்பிலேயே ஒரு சிறுபடை வகுப்பின் தலைவனாக்கிப் பார். அப்போது உன் வெற்றி தோல்விக்கு நான் எவ்வளவு உதவுவேன் என்று காண்பாய்” என்றான். ஃபால்ஸ்டாப் இவ்வேடிக்கைப் பேச்சை மறந்து விட்டான். இளவரசன் மறவாது அவனிடம் சென்று, “ஃபாஅல், நான் அரசனுக்காகப் போருக்குச் செல்கிறேன். இதோ உன் உடையும் உன் உரிமைத்தாளும். நீ இப்போது ஒரு காலாள் தலைவன், நீயும் தக்க வீரரைச் சேர்த்துக் கொண்டு விரைவில் வருக” என்று கூறியகன்றான்.

அதேசமயம் அவன் ஃபால்ஸ்டாஃபின் தோழரில் ஒருவனான பார்டால் பை இளவரசன் ஜானிடம் தூதனாக அனுப்பி அவனையும் விரையில் படையுடன் வரும்படி ஏவினான்.

தன் உரிமைத்தாளை வைத்துக்கொண்டு ஃபால்ஸ்டாஃப் முதலில் நல்நிலையுடைய நடுநிலை மக்கள், வணிகர், மணஞ்செய்யும் நிலையிலுள்ள இளைஞர் முதலியவரையண்டி அரசர் படையில் சேருமாறு வற்புறுத்தினான். அவன் எதிர்த்தபடியே அவர்கள் பணத்தைக் கொடுத்து விடுதலை பெற மன்றாடினர். இங்ஙனம் சேர்த்த பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு சோற்றுக் கற்றவர், சிறையிலிருந்து விடுதலை பெற்றுப் பிழைக்க வழிதெரியாதவர் ஆகியவற்றால் மக்களைச் சேர்த்த ஒரு சிறு காலாள் வகுப்புடன் அவன் போருக்குப் புறப்பட்டான்.

மன்னர் படை வருகிறது என்று கேட்டதே கிளர்ச்சிக்காரப் படைகளிடையே பரபரப்பும் போருக்கு ஒருக்கம் செய்யும் அரவமும் எழுந்தன. அப்படையுடன் இளவரசனும் வருகிறான் என்றறிந்த ஹாட்ஸ்பர் அவனை எதிர்க்க ஆவலுடன் விரைந்தான். இளவரசன் இதுவரை போரில் தன்னைப் போல் ஈடுபடாவிடினும், மக்கள் மனமாகிய கோயிலில் தன் இடம்பெறப் போட்டிக்கு நிற்பவன் என்று ஹாட்ஸ்பர் அறியாமலில்லை. போராலும வெற்றியாலும் தான் வீரரால் எவ்வளவு போற்றப்பெறினும், இளவரசனிடம் காட்டும் அன்பை யாரும் தன்னிடம் காட்டவில்லை என்பதை அவன் உணர்ந்தான். அதன் காரணம் இளவரசன் மக்களிடம் உயர்வுத்தாழ்வின்றி ஊடாடும் தன்மையே என்று அவன் அறியான். இதுவரை அவன் வழி வேறு, தன் வழி வேறாயிருந்தால் அவனை நேரிட்டெதிர்ந்து வெல்ல வகையில்லாதிருந்தது. அவனை நேரிட்டெதிர்த்து வெல்ல வகையில்லாதிருந்தது. இபபோது அவன் வருகிறான் என்று கேட்டதே அவனை எதிர்த்தடக்க அவன் உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்று தனித்தனி கொதித்தெழுந்தது. தம் உயிர்ப் பகைவன் வருகிறான் என அவை துடித்தன போலும்!

இந்நிலையில் அரசர் பக்கம் நின்று ¹ஸர்வால்ட்டர் பிளன்ட் என்ற தூதன் கிளர்ச்சிக்காரரிடம் வந்து அமைதி கோரிப் பேசினான். ஹாட்ஸ்பர் அவனிடம் சீற்றத்துடன். “நார்தம் பர்லந்துக் குடி. நும் அரசருக்கு முடியளித்ததற்கு அவர் காட்டிய நன்றி போதும். அப்போதவதறித்த வாக்குறுதிகள் என்னவாயின என்றறிந்த பிறகு அவர் வாக்குறுதியை இன்னும் ஏற்கத்தக்க பித்தராயில்லை நாங்கள்” என்று கூறியனுப்ப இருந்தான். ஆனால் ²வொர்ஸ்டர் முதலிய பிற தலைவர்கள் அவ்வளவு திமிராய்ப் பேசவேண்டாம் என்றதன்மேல், அவர்களையே அரசனிடம் அனுப்பி ஒப்பந்தம் செய்ய ஏற்றான்.

மறுநாள் கீழ்வான் குருதி கக்கி நிற்கும் நேரத்தில் கிளர்ச்சிக்காரரது படை வீட்டினின்று வொர்ஸ்டரும் ³வெர்னனும் அரசன் படைவீட்டிற்குச் சென்றனர். அரசன் முன்னும் நார்தம்பர்லந்துக் குடியின் பழங்குறைகள் படிக்கப்பட்டன. அரசன் அவற்றை ஆராய்ந்து வேண்டுவன செய்வதாகவும் போர் நிறுத்தும் கிளர்ச்சிக்காரர் குற்றங்களைத் தண்டனையின்றி மன்னிப்பாதாகவும் வாக்களித்தான். அரசன் பக்கத்தில் நின்ற இளவரசன் மட்டும் குறும்பாக, “இவற்றை ஏற்காவிடில் இருபுறத்தும் நாட்டுக்குடிகள் வீணில் போர் செய்து அழிவதைவிட உம் பக்கத்தலைவனான ஹாட்ஸ்பர் என்னுடன் தனிச் சண்டைக்கு வரும்படி கூறுங்கள். அவன் வருவதாயின் அதன்மூலம் வெற்றி தோல்விகளை எளிதில் வரையறுத்து விடலாம்” என்றான்.

இளவரசன் வாக்கு விளையாட்டானது என்றறிந்து வெர்னன் அரசனது வாக்கை நம்பிக்கையாக, ஏற்பதென்றே முடிவுகொண்டான். ஆனால், வொர்ஸ்டருக்கு அரசன் வாக்குப் பிடிக்கவில்லை. வன்மையுள்ள ஹாட்ஸ்பர், நார்தம்பர்லந்து முதலியவர்களுக்குக் கொடுக்கப்படும் மன்னிப்பு. வலிகுன்றிய ஆனால், தீமையில் முந்திக்கொண்ட தன்போல்பவருக்குக் கொடுக்கப்படாதென்று அவன் நினைத்தான். ஆகவே, அரசன் காரியம் கைகூடும்வரை பசப்புமொழி பகர்வானென்றும் ஆதலின் அவன் சொல்லை நம்பி அப்படியே போய்ச் சொல்ல வேண்டாம் என்றும், எதிரிகள் அப்படியே போய்விட்டால் மன்னிக்க மட்டும் அரசன் ஒருப்படுவதாகக் கூறவேண்டும் என்றும் வெர்னனிடம் வற்புறுத்தினான். மேலும், “இறவரசன் ஹாட்ஸ்பருக்குத் தந்த போரழைப்பையும் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்க வேண்டும்” என்றான்.

இதன் பயனாகக் கிளர்ச்சிக்காரரும் போர்செய்வதென்று தீர்மானஞ்செய்தனர்.

6.ஷுருஸ்பரிப் போர்

இளவரசனது போரழைப்புக் கேட்ட ஹாட்ஸ்பர் மதயானையின் முழக்கங்கேட்ட வேங்கையென்னச் சீறிப் பாய்ந்தான்.

அன்று ஷுருஸ்பரியில் நடந்த அப்போரில் முதலில் வெற்றி கிளர்ச்சிக்காரர் பக்கமாகவே தோன்றிற்று. அரசன் படைகள் எவ்வளவு பயிற்சி பெற்றவையாயிருப்பினும், டக்ளஸினுடைய ஸ்காட்லந்துப் படையின் தாக்குதலுக்கு முன் நிற்கமாட்டாமல் பின்னடையத் தொடங்கின. அதேசமயம் கிளர்ச்சிக்காரர் பக்கத்துள்ள மார்டிமரின் ளேவல்ஸ் நாட்டு வில்லாளிகள் கூரிய அம்புகளால் படையின் பக்கங்களைத் துளைத்தனர். டக்ளஸ் தன் ஒப்பற்ற குதிரை மீதேறி வலசாரி இடசாரியாகச் சுழன்று கைவாளால் எதிரியின் அம்புகளைத் தடிந்து, எதிரிகளையும் அவர்கள் குதிரைகளையும் தட்டின்றிவெட்டி வீழ்த்தினான். ஆயினும், இவற்றால் மனநிறைவு அடையாமல் எப்படியாவது அரசனைக் கண்டுபிடித்து அவனை அழிக்கவேண்டும் என அவன் வந்தான்.

அரசன் உயிர் போரில் மிகவும் விலையேறியதாதலின் இளவரசன ஏற்பாட்டின்படி, அரசனுடை அணிந்து அரசன்போல் நடிப்பவர் பலர், படையின் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டனர். அவர்களின் ஒருவன் ஃபால்ஸ்டாஃப் டக்ளஸ். அவனைத் தொலைவில் கண்டு அரசன் என்று மனத்துட்கொண்டு அவனை நோக்கி வந்தான். அதுகண்ட ஃபால்ஸ்டாஃப் குதிரையை விட்டிறங்கிச் சரேலென்று மண்ணில் கிடையாய் வீழ்ந்துகிடந்து, செத்தவன்போல் நடித்தான். அவன் உருவாலும் நடிப்பாலும் அவன் அரசனல்லன் என்று கண்டு டக்ளஸ் அவனை விட்டுவிட்டுப் பின்னும் அரசனையே நாடிச் சென்றான்.

டக்ளஸால் நிலைகுலைந்து வரும் மன்னன் படைப்பக்கம் இளவரசன் தனது உணர்ச்சி மிக்க படையுடன் வந்து தாக்கி எதிரியைப் பின்வாங்கச் செய்து வீரரை ஊக்கினான். அன்றைய போரில் அவன் மூக்கில் ஆழமாக ஓர் அம்பு பாய்ந்தது. அதனையெடுத்து மருந்திட்டபின் அவன் மருத்துவர் அறிவுரையைக் கூடக் கேட்காது மீண்டும் போர்க்குப் பாய்ந்தெழுந்தான்.

இறுதியில் அவன் ஃபால்ஸ்டாஃப் கீழே விழுந்து போர்த் தடுமாற்றங்களுக் கிடையில் எழுந்திருக்க முடியாமல் கிடக்கும் பக்கமாகப் படைகளைப் பிளந்துகொண்டு செல்கையில் நேருக்கு நேராகத் தான் எதிர்க்க விரும்பிய பகைவனாகிய ஹாட்ஸ்பரைக் கண்ணுற்றான்.

இருவருக்கும் தம் நான்-மாளாப் புகழோ மாள்வோ வந்தெய்தும் நாள்-வந்தெனத் தெற்றென விளங்கிற்று இனியும் உலகில் இவ்விரு ஞாயிறுகளும் எழுந்து ஒளிவீச முடியாது. ஒருவர்க்குத்தான் இவ்வுலகில் இடமுண்டு என்பதை இருவரும் அறிந்தனர். இருவரும் பாயப்பதுங்கும் புலிகள்போல் சற்றே பின்வாங்கிப் பின் ஒருவர் மேல் ஒருவர் சீறி விழுந்தனர். முதலில் ஈட்டியுடன் ஈட்டி மோதின. அவை முறிந்தபின் வாளொடுவாள் பொருதன. பின் மீண்டும் குதிரை மீதேறி ஒருவர் மீதொருவர் சாடினர். ஹாட்ஸ்பர், இளவரசன் குதிரையை மூன்றுதரம் வீழ்த்தினான். இளவரசன், ஹாட்ஸ்பரின் தலையணியைப் பலகால் உதைத்தான். இருவர் உயிரும் உடலும் உரம் பெற்றவைபோல் தோன்றின. அடிக்கடி இருதிறத்தார் கவனத்தையும் பிரிக்க அவர்களுடைய எதிரிகள் முயன்றனர். ஆயின் புலியேற்றையும் சிங்கவேற்றையும் எதிர்க்கவல்லது பிற ஏறாகுமோ! அவர்கள் தமக்குத்தாமே இணையாய்-நெடுநேரம் நின்று பொருதனர்.

அவ்விருவர் குணவேற்றுமைகளும் அவர்கள் போர்முறையில் விளங்கின. ஹாட்ஸ்பர் மதயானைபோல் பொங்கி எழுவான். பாம்புபோல் சீறுவான்; புலிபோல் வெறித்த நோக்குடன் வாளுந் தானுமாய் இளவரசனை நோக்கிப் பாய்வான். ஆனால், இளவரசனோ தன் நிலை குலையாது. வைத்தகால் பின் வாங்காது நின்று எதிரி வன்மை குறைந்தவுடன் பரபரவென்று சிலந்தி த வலையிலகப்பட்ட பூச்சியைச் சுற்றுவது போலச் சுற்றி அவன் உடல் முற்றும் வாளால் சல்லடை சல்லடையாகத் துளைத்தான். இறுதியில் குருதி தோய்ந்த ஹாட்ஸ்பர் உடலம், வலியற்றுக் குற்றுயிராய்க் கீழே விழுந்தது.

ஹாட்ஸ்பர் வீழ்ந்தான் என்னும் சொல் எப்படியோ நம்பிக்கையற்ற அவன் படைகளூடு நெடுக விரைந்து சென்றது. மின்வலியேற்ற நெடுமரம் என்ன, அச்செய்தி கேட்ட படைவீரர் தம்நிலை குலைந்து வலியிழந்து நின்றனர். பகைவர் அம்பு மாரிக்கும் வாள் வீச்சுக்கும் ஆற்றாது படைகள் சிதறத் தொடங்கின. பிற தலைவர்கள் எவ்வளவோ முயன்றும் ஓடும் ஓட்டத்தைத் தடுப்பதற்கு மாறாக அதன் இழுப்பு வன்மையிற்பட்டுத் தாமும் ஓடவே நேர்ந்தது. போர் அரசனுக்கும் இளவரசனுக்கும் ஒப்பற்ற வெற்றியாய் முடிந்தது.

போர் முடிவில் இளவரசனும் அரசர் பக்கத்துத் தலைவர்களும் இளைப்பாறிச் சிற்றுணா அருந்திக் கொண்டிருக்கையில் ஃபால்ஸ்டாஃப் ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு “ஹால், இதோ பார்! உன் வெற்றி என்ன வெற்றி? உன் பகைவனை நான் அல்லனோ கொன்று தூக்கிக் கொண்டு வருகிறேன்” என்றான்.

இளவரசன் என்ன இது? ஹால்! ஏன் பிணத்தைத் தூக்கிச் சுமந்து வருகிறாய்?

ஃபால்ஸ்டாஃப் பிணமன்று. ஹால் இஃது உன் பகைவன் போர்க்கஞ்சா இளஞ்சிங்கம் ஹாட்ஸ்பர்; உன்னால் கொல்ல முடியாதென்று விடப்பட்ட இவனை நான் என் கைவாளால் வெட்டிக்கொன்று தூக்கி வருகிறேன்.

இளவரசன்: இவனை நீ கொல்லவில்லை. நான் கொன்று போட்டிருந்தேன். அதோடு இவன் பக்கமே நீயும் செத்துக் கிடந்ததைக் கண்டேனே.

ஃபால்ஸ்டாஃப் : சிவசிவா! இளவரசன் ‘இள’ அரசனா யிருக்கும் போதே இவ்வளவு பொய் சொல்கிறானே; இனி அரசனாய்விட்டால் எவ்வளவு சொல்வானோ! நான் உயிருடனிருக்கும்போதே செத்து விட்டேன் என்று கூறியது போலத்தானிருக்கும் ஹாட்ஸ்பர் இருக்கும் போது கொன்று விட்டதாக நீ கூறுவதும்! அப்பாடா! அவனும் நானும் சண்டை செய்து களைத்து ஓய்ந்து கிடந்தோம் என்பது மட்டும் மெய். அப்போது இளவரசன் வந்து பார்த்துவிட்டு நாங்கள் இருவரும் செத்துவிட்டோம் என்று நினைத்து என் வீரத்தையும் புகழையும் எளிதில் திருடி மேற்கொண்டு விடலாம் என்று பார்த்திருக்கிறான்; என்ன இருந்தாலும் இங்கிலாந்து அரசராக, இவ்வளவு திறம் வேண்டியதுதான்!

இளவரசன் அடே, உன்கூடப் பேச எனக்கு நேரமில்லை. உன்பொய்க் கோட்டையைக் கட்டிப் புளுகுக் கொடி பறக்கவிட்டு நீயே அரசனாயிரு. நான் படுகள நிலையைப் பார்வையிடச் செல்கிறேன் (செல்லுகிறான்)

போரில் தோற்றவருள் டக்ளஸ் இனிச்சண்டை செய்வதால் பயனில்லை என்று கண்டதன் பின் களத்தினின்றும் ஓடுகையில் குதிரை தள்ளிக் காயம் பட்டு வீழ்ந்து சிறைப்பட்டான். அவன் தூய வீரனும் தன்னாட்டுப் பற்றுமிக்கவனும் ஆனவன் என்ற காரணத்தால் அவனை மன்னித்து விடுதலை செய்து அவன் நாட்டிற்கு அனுப்புமாறு இளவரசன் அரசனை வேண்டினான்.

வொர்ஸ்டரும் வெர்னனும் சிறைப்பட்டனர். இவர்கள் தூதில் பொய்சொன்ன தன்னலக் கயவராதலால் இவர்களைத் தூக்கிவிடும்படி இளவரசன் கட்டளையிட்டான். பகைவரேயாயினும் டக்ளஸைப் போல் உண்மையாக நின்று தம் தலைவருக்குதவினால் தோற்ற பகைவருக்குரிய மன்னிப்பு இவருக்கும் உண்டு. இவர்கள் பகைவரையன்றித் தமரையும் பகைத்தவராதலின் தெய்வத்துக்கும் உண்மைக்கும் பகைவராவர். இவ்வுலகில் மக்கள் பழியால் உயிர்ப் பிரிவும் மறுஉலகில் இறைவன் பழியால் எல்லையில்லாத ஓய்வற்ற நரகமும் இவர்க்குரியன என்று இளவரசன் அவர்களைத் தூக்கிலிடுகையில் மக்களுக்குக் கூறினான்.

ரிச்சர்டு அரசனைக் கொன்ற பழியின் ஒரு பகுதி ஹென்ரி அரசனது ஆட்சியை விழுங்க முயன்றது. இளவரசனது தூய உள்ளத்தின் மாண்பால் அப்பழியின் பகுதியை ஹென்ரியின் ஆட்சி விழுங்கி நின்றது.

7.முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்

ஷுருஸ்பரிப் போரில் அடைந்த வெற்றியில் ரிச்சர்டு மன்னனின் பழி முற்றிலும் போய்விடவில்லை. ஒரு பகுதி இன்னும் மிகுந்தே இருந்தது. மன்னன் நல்லாட்சி முறையாலும் இளவரசன் நல்லெண்ணத்தாலும் பொதுமக்கள் துணையாலுமே, அப்பழி தற்காலிகமாகவேனும் அமைதியுறலாயிற்று. பின் ஐந்தாம் ஹென்ரி அரசனான இளவரசனது நன் முயற்சி யினளவே அதன் தடையின் அளவாக நின்று, அஃது இரண்டாண்டுக்குப்பின் மீண்டும் எழுந்து ஏழாம் ஹென்ரியின் ஆட்சியிலேயே ஓயலாயிற்று. அதற்கிடையில் அது தனக்கு இரையாகக் கொண்ட குருதி வெள்ளம் மட்டற்றது.

ஷுரூஸ்பரிப் போரில் சேராதிருந்த பகைவர் இருவர். அவருள் முதல்வன் வேல்ஸ் தலைவன் கிளென்டோவர். இவன் ஷுரூஸ்பரிப் போர்க்குப்பின் வேல்ஸ் மலைகளிடையில் பதுங்கிநின்று அடிக்கடி இங்கிலாந்திடம் தன் மருமகன் தோல்விக்குப் பழிவாங்கி வந்தான்.

இதே சமயம் நார்தம்பர்லந்து போர்க்களத்திற்கு நெடுந்தொலைவில் நின்றுகொண்டு போர்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். கிளர்ச்சிக்காரர் வெல்வது போலிருந்த சமயம் தானுஞ் சென்று சேர்ந்துகொள்ளலாமா என்று அவன் நினைப்பான். அடுத்த நொடி மன்னன் படை முன்னேறுகிறதென்று கேட்டுப் பின்னடைவான். ஒரு சமயம் டக்ளஸின் வீரச் செயல் கேட்டுக் களிப்பான். பின் இளவரசன் எதிர்பாரா வீரங்காட்டினான் என்று மனமுட்குவான். தன் மகன் களந்தூள்பட வாளுழவு உழுகின்றான் என்று கேட்டு இறும்பூது எய்துவான். அவ்விறும்பூதினிடையே, அத்தகைய மகனுக்கு உதவாமல் உயிரை வெல்லமாக வைத்துக் கொண்டிருக்கிறோமே’ என்றும் மனம் நைவான்.

இந்நிலையில், ஹாட்ஸ்பரும் இளவரசும் நெடுநேரம் தனிப்போர் செய்கின்றனர் என்று கேட்டான். அதன்பின் ஒரு செய்தியும் வரவில்லை.

பலர் அவ்வழியே போயினும் அவர்களுள் ஒருவரேனும் அவன் முன் வாயிலில் நில்லாமலும், உள்வாராமலும் சென்றனர். அவர்கள் முகமும் நடையும் நற்செய்தி கொண்டு செல்பவராகக் காணவில்லை.

ஆனால், அவரிடம் சென்றுதான் கேட்போமே என்றால் அதற்குந் துணிவு வரவில்லை. எப்படி வரும்! போரில் முன்னணியில் நிற்க வேண்டியவன் அவன்; போர்த் தலைவருள் தலைவராயிருக்க வேண்டும். நிலையுடையவன் அவனே. அப்படியிருக்க, எப்படிப் போரினின்றும் மீண்டு வருகிறவர் களிடம் போய் அவன் ’போரில் வெற்றியா தோல்வியா என்ற செய்தி வினவுவான்?

“இறைவா! நான் அஞ்சியவாறேதான் நிகழ்ந்து விட்டதோ? இறைவா! நீயே என் தீவினைகளுக்கு என்னைத் தண்டிக்கவேண்டும்! - ஆம் அதுவுந்தான்: இதற்கேது தண்டனை? தற்பகைக்கும் தன் மகன் பகைக்கும் தக்கதண்டனை நரக வாழ்வின்றி வேறுண்டோ? இறைவா, என் பிழை பொறுப்பாய்” என்றிவ்வாறு பிதற்றி அறிவழிந்து நின்றான் ஹாட்ஸ்பரைப் பெற்ற தந்தை.

"ஆ, தோல்வி என்பதற்கையமில்லை. ஆனால் என்மகன் என் ஒப்பற்ற மகன், என் போர்ச்சிங்கம் என்ன ஆனான்?

"ஆ, அன்று ஒரு மன்னனைத் தன்னையறியாமல் பறிகொடுத்து உயிர்விடத் துணிந்து நின்றானே அவ்விசயன்! இன்று யான் அவ் அபிமன்னனை ஒத்த நின்னை என் கையாற் கொன்று நின்றேனோ!

“ஆ, என் மகனே, நீ இறந்தாயா? இருக்கின்றாயா? யார் பகர்வர்! யாரேனும் இப்பக்கம் வந்ததாலோ அல்லது திரும்பினாலோ அல்லது சற்று நின்றாலன்றோ கேட்கலாம்” என்றெண்ணி நின்றான் அவன்.

அச்சமயம் பெருமகனொருவன் குதிரை மீதேறி ஓட்டமாக வந்தவன் நெடுந்தொலை ஓடி இளைத்தவனாய் அவன் வாயிலில் இறங்கி நின்றான்.

நார்தம்பர்லந்து அவனிடம் சென்று, "ஐயனே, போர் என்னவாயிற்று? என் மகன் - இல்லை ஹாட்ஸ்பர் நிலை என்ன? என்று கேட்டான்.

வந்தவன் நார்தம்பர்லந்தை ஏற இறங்கப் பார்த்தான் பின் குறும்பாக, “ஏன் உமக்குத் தெரியாதோ? மன்னர் படையும் போயிற்று; மன்னரும் போனார். இளவரசர் கூடப் பிழைக்க வில்லை. ஜானும் ஒரு சிலரும் தலைபிழைத்தது தம்பிரான் புண்ணியம் என ஓடினர்” என்றான்.

மிகத் தேறுதலான வாக்கு; உண்மை மட்டுமாயின் ஆனால், எதை நம்புவது, கண்ணையா காதையா?

அடுத்த தூதன் எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கினான். தந்தையின் நெஞ்சம் பதைத்தது. “ஆ! ரிச்சர்டு ரிச்சர்டு, எது பொய்ப்பினும் நின் நாப் பொய்க்காது. ஆ என் ஒரே பிள்ளையையா நீ பலி வாங்கவேண்டும். என் பகைவன் ஹென்ரியின் மகனைத்தான் பலி வாங்கக்கூடாதா” என்று கூறி அவன் நிலத்தில் வீழ்ந்தான். யாரும் அவனை வந்து தேற்றாமலே அரைநாழிகை கிடந்து பின் எழுந்தான். பின் விசயன் போலவே. “என் மகன் கொலைக்குப் பழி வாங்குவேன்” என்றெழுந்து அவன் கடற் கரையிலுள்ள தனது தனியிருக்கையாகிய வார்க்வர்த் கோட்டைக்குச் சென்றான்.

8.மீண்டும் ரிச்சர்டு நாவிற் பிறந்த பழி

மன்னன் தான் இதுகாறும் நொந்துகொண்ட இளவரசன் தனக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் உதவுவது கண்டு மனங்குளிர்ந்து முன்னையினும் ஊக்கத்துடன் தன் பகைவர்களை ஒறுக்கும் வேலையில் இறங்கினான். ஆனால், உளம் ஊக்கம் பெறினும் அவன் உடல் வளங்குன்றியதனால் இளவரசன் அவனுடன் உதவியாகச் சென்றான். முதன்முதல் அவர்கள் வென்றடக்க முயன்றது மலைநாட்டரசனாகிய வேல்ஸ் தலைவனையே அந்நாடு ஆங்கிலேயர் சென்றுபோர் புரிவதற் கேற்றதன்று. அகன்ற உயர்நிலம், குன்றுகள், பள்ளத்தாக்குகள், தலை குப்புற விழும் அருவிகள் ஆகியவை நிறைந்தது அந்நாடு. மலைநாட்டரசர்க்கன்றி வேறேவர்க்கும் உணவோ, இடமோ அளிக்காத நாடு அது. அதில் தங்குதடையின்றித் திரியும் குரக்கினப் படைபோன்ற வேல்ஸ் மக்களை அடக்க அவர்களுக்குப் பல ஆண்டுகள் பிடித்தன.

இப்போர் தொடர்ந்து நடைபெறாது அவ்வப்போதே நடந்து வந்த தொன்றாகையால், இளவரசன் இடை இடையே ஓய்வு ஏற்படும் போதெல்லாம் லண்டனுக்கு வந்து நாட்டின் ஆட்சியிலும் தந்தைக்கான உதவிகள் செய்துவந்தான்.

ஃபால்ஸ்டாஃப் ஷுரூஸ்பரிப் போரில் காலாள் தலைவனாக இருந்தபோதிலும் வேல்ஸ் போராட்டத்தில் மலைநாட்டின் ஏற்ற இறக்கங்களில் நடமாடத் தக்கவன் அல்லனாதலால், அவன் பணியின் முழுமதிப்புடனும் நாட்டிலேயே திரிய இணக்கம் பெற்றான். இளவரசன் ஆணைப்படி அவன் மதிப்பைக் காக்க அவன்பின் வாள் தாங்கிவர ஒரு பணிப்பையன் அமர்த்தப் பட்டான்.

ஆனால், பொருளை வைத்துத் துய்த்தறியாத ஃபால்ஸ் டாஃப், அதைத் தானும் பையனும் குடித்தும், உண்டும் நண்பர்களுக்கு விருந்தளித்தும், கடனுதவியும் கைப்பொருளைத் தொலைத்தான். அவனுக்குக் கடன் கொடுக்கத் தெரியுமேயன்றி வாங்கத் தெரியாதாதலால் அதன்பின் அவன் பட்டினி கிடக்க நேர்ந்தது. பையன் உணவிற்குக்கூட அவனிடம் வழியில்லாமல் போகவே, அப்பையனும் தன் செலவிலேயே உண்டு அவனைப் பின்னால் நின்று கேலி செய்யலானான்.

இதற்கிடையில் வார்க்வர்த் சென்ற நார்தம்பர்லந்து, அங்கே தன் மனைவியும் புதல்வியும் இருப்பதைக் கண்டான் இவன் வரப் பார்த்ததுமே அவர்கள் இருவரும் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டனர்.

அப்போது ஒரு தூதன் வந்து, “ஹாட்ஸ்பர் இறந்தது கேட்ட வடநாட்டுக் குடிகள் அவன் உயிருக்குப் பழிவாங்க வேண்டுமென்று எழுந்து கிளர்ச்சி செய்கின்றனர் என்றும் அவர்களிடையே ¹யார்க் பெருந்தலைமகன் சென்று”மக்களே கடவுளறிய உங்கள் அரசர் ரிச்சர்டேயன்றி வேறு யாருமிலர் அவன் இறந்தாலென்ன? அதனாலும் ஹென்ரி அரசனாய் விடமாட்டான்? இவனை வீழ்த்தி ரிச்சர்டின் அடுத்த உரிமைப் பிள்ளையை அரசனாக்குவோம்! அதற்கு உதவும்படி ரிச்சர்டின் உயர்நிலையே உதவட்டும்! அவன் குருதி இன்னும் மணிக்கூண்டுச் சிறையில் தோய்ந்து கிடக்கின்றது. அதனை இதோ உம்முன்கொண்டு வந்துள்ளேன்; அதன் பேரால் எழுந்து பகைகளை அழிக்க எழுவீர்" என்று வெறியூட்டி வருகிறான். ஹேஸ்டிங்ஸ் பெருமகனும், மோப்ரே பெருமகனும், பார்டால்ப் பெருமகனும் துணையாய் நிற்கின்றனர். தெய்வீகமாய் எழுந்த இப்போரில் தம்மையும் சேரும்படி தலைவர் அழைக்கிறார்கள்!" என்று கூறினான்; நார்தம்பர் லந்து காலிழந்தவனுக்கு ஒருகோல்போல் வந்த இச்செய்தியை அவன் உடனே வரவேற்றுப் போன உயிரின் பகுதி மீண்ட தென்ன எழுந்தான்; எழுந்து பணியாட்களை அழைத்துப் “படைகளையும் படைத்தலைவரையும் திரட்டுக” என்றான். தானும் தன்போர்க் கருவிகளை எடுக்கவும் குதிரை ஏறவும் விரையலானான்.

நார்தம்பர்லந்து தான் எண்ணியபடி இரண்டாம் கிளர்ச்சியுடனாவது முழு வன்மையுடனும் சென்று சேர்ந்திருந்தால் மன்னனை ஆட்சியினின்றும் விலக்கி அழித்திருக்க இடமுண்டு, வடக்கே இப்பெருங்கிளர்ச்சியையும் மேற்கே வேல்ஸ் படைகளையும், அவற்றிற்குத் துணையாக மில் போர்டு ஹேவனில் வந்திறங்கிய பிரான்சுப் படைகளையும் ஒருங்கே முடியடித்தல் என்பது அருமையான காரியமாய் விடக்கூடும். ஆனால் அந்நார்தம்பர்லந்தின் குடியாலேயே. படையெழுச்சிக்கு விரையும் நார்தம்பர்லந்தை இதுகாறும் அவன் முகம் காணப்பெறாது நின்ற அவன் மனைவியும் புதல்வியும் வந்து தடுத்து “மகனைப் பறிகொடுத்த சமயம் கைகட்டி வாய் புதைத்து நின்ற வீரரே! இனி வீரத்தைக் காட்டி யாரைக் கொல்லப் போகிறீர்? உம் கோழைத்தனத்தைக் கண்டு உலகம் சிரிப்பது போதாதா?” இனி உம் வீரத்தைக் காட்டி வேறு சிரிக்க வைக்க வேண்டுமோ?" என்று இடித்துரைத்தனர்.

நார்தம்பர்லந்து கண்களில் நீர் சொட்டவில்லை; செந்நீர் சொட்டக் குறை ஒன்றுதான் உண்டு. அவன் உடல் கனலிலிட்டு வாட்டிய மாதிரி அழலாய்க் கொதித்தெழுந்தது.

அவன் கவிழ்ந்த முகத்துடன் அவர்களை நோக்கி, “என் ஒளியிழந்த கண்கள் போலவே உயிர் இழந்தது போதும் உயிரினும் சிறந்த பழிவாங்குதலையும் ஏன் தடை செய்கின்றீர்? பழிவாங்கி அன்றோ இனி அமைதியுடன் இறக்கவேனும் முடியும்?” என்றான்.

இன்னும் அவர்கள் விடாப்பிடியாய்ப் போக வேண்டா மென்று தடுத்தனர். " எம் விருப்பை அன்று மீறி இக்கோலம் கண்டீர். இன்றேனும் யாம் கூறுவதைக் கேளும் இந்நாட்டெல்லை கடந்து ஸ்காட்லாந்தில் சென்று காத்திருந்தால் நாட்டின் எழுச்சி முதிர்ச்சி அடைந்தபின் வந்து பெருங்கிளர்ச்சி செய்து பகைவனை அழித்துப் பழிவாங்கலாம். இச்சிறு கிளர்ச்சியுடன் சேர்ந்து நாம் நம் வன்மையிழந்து பகைவனுக்கே நாட்டை விட்டுவிட வேண்டாம்" என்றார்கள்.

அன்று நார்தம்பர்லந்தின் காலில் வந்திருந்து மகனை உதவாமற் பண்ணிய அதே ரிச்சர்டின் பழி, இன்று அவன் மனைவி புதல்வி ஆகிய இருவருடைய நாவிலும் வந்திருந்து இரண்டாவது கிளர்ச்சியையும் அழித்தது.

மன்னனாய் விட்ட ஹென்ரியைக் கூட விட்டு விட்டு, அந்த ரிச்சர்டை மன்னனாக்க உதவியவனும் அரசியல் பகையோடு தனக்குக் குடிப்பகையானவனுமான நார்தம்பர்லந்தை அழிப்பதே கடன் என நின்றது அந்த ரிச்சர்டின் பழி.

முதற் கிளர்ச்சிக்காரர் நின்றமாதிரியே நார்தம்பர்லந்துக் காக இரண்டாம் கிளர்ச்சிக்காரரும் காத்து நின்றனர். ஆனால் அவன் வரமாட்டானென்று பல நாட்களுக்குப் பின்னரே தெரிந்தது. என்ன செய்வது! படைகளை அணிவகுத்தாயிற்று. போர் நோக்கம் தெய்வீகமான தென்று கூறியதாயிற்று. வெற்றியோ தோல்வியோ முன்வைத்த காலைப் பின் வைக்கலாகாதென வீரருக்கு முழங்கி ஆயிற்று. இனித் தலைவர் பின்னடைவதெப்படி?

“தெய்வம் உங்கள் கைவாளில் நின்று உங்களுக்கு வெற்றியைத் தரும்” என்று வீறுடன் வீரருக்கு முழங்கிய அதே நாக்கு, இப்போது “தெய்வந்தான் நம் கைவாளில் நின்று நமக்கு வெற்றியளிக்க வேண்டும்” எனத் தணிந்த குரலில் கூரலாயிற்று.

9.கரைப்பட்ட வெற்றி

இளவரசன் இச்சமயம் மன்னனுடன் வேல்ஸில் போர் செய்து கொண்டிருந்தான் ஆகவே, அவன் ஃபால்ஸ்டாஃபை அனுப்பி ஜானை வடபுலக் கிளர்ச்சியை அடக்க ஏவினான். ஜானுடனேயே ஃபால்ஸ்டாஃபையும் அவனால் சேர்க்க இயன்ற படைகளுடன் செல்லுமாறு தூண்டினான்.

ஃபால்ஸ்டாஃபின் பெருமைக்கு இது மிகவும் உகந்த சமயம். அவன் தன்னிலையில் இருந்த காலத்தில் அவனுக்கு நண்பர்களாய் இருந்த தற்போது நலிந்து வருபவர்களான ¹திருவாளர் பொள்ளலையும், திருவாளர் ²வாய்மூடியையும் தேடி அவர்களுக்கும் ஆட் சேர்க்கும் உரிமை வழங்கினான். பார்டால்ஃபும், ஃபால்ஸ்டாஃபும் அங்ஙனம் சேர்த்து ஆட்களிடம் கைப்பணம் பெற்று நல்லவர்களை விட்டுவிட்டு போலிகளை மட்டுங் கொண்டு சென்றான்.

ஜான் படை வந்தடுத்தது எனக்கேட்டதும் கிளர்ச்சிக்காரர் போருக்கு ஒருங்கலாயினர். இளவரசன் போர் செய்யாமலே அவர்களை அமைதிப்படுத்த எண்ணினான். ஆனால், இந்தத் தடவை கிளர்ச்சிக்காரர் பணியக்கூடாதென நின்றனர். ஏனெனில் படைவீரர் இந்தத தடவை நார்தம்பர்லந்து போன்ற பெருமக்களின் தன்னலத்திற்காகப் போரிடவில்லை. போலி அரசனாகிய ஹென்ரியை வீழ்த்தி உண்மை அரசனாகிய ரிச்சர்டின் பேரால் அவன் உரிமையாளனாகிய மார்டிமரை அரசனாக்கவே அவர்கள் இன்று போர்த்தொடுத்தனர். தலைவரிடையும் பலர் தத்தம் குடிப்பழிகளுக்குப் பழிவாங்க நின்றனர்.

யார்க் பெருந்தலைமகன், மோப்ரே முதலியோரிடம் இத்தகைய தன்னலம் இருந்தது. ஆனால், ஹேஸ்டிங்ஸ் நாட்டுப்பற்று ஒன்றேயன்றி வேறு பற்றற்றிருந்தான். ஆதலால் வெட்ஸ்மோர்லந்த மூலம் ஜான் கிளர்ச்சிக்காரர் குறை அறிந்து அமைதியை நிலைநிறுத்துவதாகக் கூறியபோது, அதனை ஏற்க வேண்டுமென்று அவன் வற்புறுத்தினான். நார்தம்பர்லந்து வாராததால் சற்றே மனம் தளர்ந்த பிற தலைவரும் இதனை ஏற்றனர்.

ஜான் பெயரால் வெஸ்ட்மோர்லந்துப் பெருமகன் கிளர்ச்சிக்காரரை நோக்கி, "நீர் எக்காரணங் கொண்டு மன்னர் ஆட்சியை எதிர்க்கின்றீர்? நிலைபெற்ற ஆட்சியுடன் ஒத்துழைக்க உம் தடைகள் அல்லது உம் குறைகள் யாவை? என்று கேட்டான்.

யார்க் பெருந்தலைமகன் ஹென்ரி ஆட்சியின் கொடுமைகளை எடுத்தெடுத்தக் கூறினான். ஜான் அவற்றை நேர்மையுடன் கவனித்து ஆவன செய்வோம் என்றான். படைவீரருட் பலரும் உடனிருந்ததால் இம்மறுமொழியை ஏற்காதிருக்க முடியவில்லை. இருபடைகளுக்கு மிடையில் கிளர்ச்சித் தலைவர்களும் ஜானும் உடன்படிக்கை செய்வதென முடிவு செய்யப்பட்டது.

அதில் குடிமக்கள் குறைகள் எழுத்து மூலம் எழுதிக் கொடுக்கப் பெற்று அவை நீக்கப்படுவதாக வாக்களிக்கப் பட்டது. பட்டபின், இருபுறமும் படைகள் கலைவதெனவும் அவ்வப் பக்கத்துத் தலைவரால் ஆணைகள் தரப்பட்டன. ஆனால் சற்று நேரத்திற்குள் ஜானின் அருகிலிருந்த பெருமகன் ஒருவன், இருபுறப் படைகளையும் தலைவர்கள் முன்னிலையில் வரிசையாகப் போகச் செய்யலாமே என்றான். உடனே முன் உத்தரவை அகற்றிப் புது உத்தரவுகள் இருபுறமும் பிறப்பிக்கப்பட்டன.

ஆனால், ஜான் முன்னமே தன் பக்கத்துப் படைகளிடம் “நான் நேரில் இடாத கட்டளைகளை நிறைவேற்ற வேண்டா” என்று கூறியிருந்தான். அதன்படி படைகள் கலைவதென்ற முதல் உத்தரவு விலையற்றுப் படைகள் உலையாது நின்றன. கிளர்ச்சிக்காரர் பக்கமோ, ‘படைகள் கலைக’ என்ற உத்தரவு உடனே நிறைவேற்றப்பட்டு, இரைச்சலுடனும் குழப்பத் துடனும் கலைந்தன. இரண்டாம் உத்தரவு வருவதற்கு முன் படைகள் இருந்த இடமே தெரியாமல் ஆங்காங்கு ஒன்றிரண்டு பேரே மீந்து நின்றனர்.

இதனால், அரசர் பக்கம் தலைவர்கள் படைவன்மை குறையாதிருந்தனர். கிளர்ச்சிக்காரர் பக்கமோ படைகளே இல்லாமல் வெறும் தலைவர்கள் மட்டுமே தங்கி நின்றனர். அத்தறுவாய்க்கே காத்திருந்த வெஸ்டுமோர்லந்துப் பெருமகன் உடனே அவர்கள் முன்வந்து “நாட்டுப் பகைவர்களே, உங்களை விலங்கிடுகிறோம்” என்றான்.

அவர்கள் திடுக்கிட்டு, "இஃது என்ன ஐயன்மீர், அரசர் வாக்குறுதி இதுவா? என்று கேட்டனர்.

அதற்கு விடையாக “வாக்குறுதி குடிமக்களுக்கன்றோ? அவர்கள் குறைகள் தீர்க்கப்படுமென்பதில் தடங்கல் எதுவும் இல்லை. உங்களுக்கு யார் வாக்குறுதி கொடுத்தது? நீங்கள் பொதுமக்களை ஏமாற்றிக் கிளர்ச்சிக்குத் தூண்டியவர்களா யிற்றே. உங்களுக்கு அரசர் சட்டப்படி தண்டனை தரப்படும்” என்று கூறப்பட்டது. கிளர்ச்சிக்காரர் ஏமாந்தனர்.

மன்னர் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், இறைவன் அளிக்கும் வெற்றிக்குக் காத்திராமல் மனித வஞ்சத்தால் பெற்ற இவ்வெற்றி தன் வெறுமையை இரண்டாட்சிக்குப் பின் காட்டலாயிற்று.

10.மணிமுடியிற் கரந்த மாத்துயர்

இங்ஙனம் இரண்டாங் கிளர்ச்சி அடக்கப்படும் நாட்களில் மன்னனை ஆண்டு முதிர்வும், நெடுநாட் பிணியும், நீண்ட கவலையும், கடுமுயற்சியுமாகச் சேர்ந்து அழுத்தவே, அவன்படுத்த படுக்கையாய்க் காலனழைப்பிற்குக் காத்துக் கிடந்தான். உறவினரும் மக்களும் மன்னன் படுக்கையைச் சூழ்ந்து கவலையிலாழ்ந்திருந்தனர்.

மன்னன் இப்போது தன் மணிமுடியை அடிக்கடி எடுத்துப்பார்த்து, “ஆ, நீ மணிமுடியோ, மண் முடியோ? உன்னை ஓர் அணிகலமாக்க நினைக்கின்றனர் சில பேடிகள்; மாந்தர் விழைவின் உச்சமாகவும், இன்ப வாழ்வுக்கும் உயர்வுக்கும் ஆற்றலுக்கும் அறிகுறியாகவும் நினைப்பர் ஏழை மக்கள்; உன் சுமை இவ்வளவு நீ தரும் கவலை இத்தனை என்பதை யாரே யறிவார்!” என்பான். இன்னும் சில சமயம் அவன் “ஆ, ரிச்சர்டு, இஃது எனக்கு முள் முடியாகும் என்று நன்கு சொன்னாய்! ஆயின் நின் வாக்குக் கூட இவ்வொன்றில் குறைவுடையதே. ஏன்? முள்முடி உறுத்துமேயன்றித் தாங்கருஞ் சுமையாய் அழுத்துமோ? அம்மம்ம? இவ்வகன்ற நாட்டில் எண்ணில் கோடிக் குடிகளில் ஏழ்மையில் மிக்க ஏதேனும் ஓர் ஆண்டியின் வெறுந்தலைக்கு இம்மணிமுடி தாங்கும் தலையை மாற்றாக இறைவன் மாற்றாக இறைவன் அருளியிருக்க லாகாதா? ஆ! என்ன சொன்னேன்? என் விருப்பம் இஃது எனக் கூறின் இதனை யார் நம்புவர்? ஆயின் மன்னர் முடியின் அருமையை, அதன் தன்மையை மன்னரேயறிவர் என்பது மிகையாகாது” என்பான். சிலபோது. “ஆம், என் எண்ணம் தவறுதான். இதன் சுமை தாங்க மன்னர் இலரேல், மலர்தலை உலகில் அமைதியும் இன்பும் நிலைபெறுவது எங்ஙனம்? ஆயினும் கொடுமை! கொடுமை!! குடிகளில் ஒவ்வோர் ஏழையும் அடையும் இன்பத்திற்கும் தன்னாண்மைக்கும் விலையாக மன்னர் மன அமைதியும் தன்னாண்மையும் விலைப்பட வேண்டுமோ?” என்று புலம்பலானான். அச்சமயம் ரிச்சர்டின் அழகிய உரு அவன் முன் நின்று புன்முறுவல் பூத்தது. அரசன் அயர்ந்ததுயிலுள் ஆழ்ந்தான்.

11.தப்பெண்ணமும் தெளிவும்

இளவரசன் அச்சமயம் மன்னனைப் பார்க்க வந்தான். வடபுலக் கிளர்ச்சி அடங்கி வெற்றி கிடைத்த செய்தியைச் சொல்ல விரைந்து வந்தான் அவன் வெளி அறையில் வெஸ்டுமோர்லந்து, ¹வார்விக் முதலிய பெருங்குடிமக்கள் நிலநோக்கிய முகத்துடன் நின்றிருந்தனர். இளவரசன் தம்பி ஜானும் அவ்விடத்தில் கண்ணீர் வடித்து நின்றான். இளவரசன் நெஞ்சு திடுக்கிட்டது. ஆ என்றலற வாய் திறந்தான். அதற்குள் ஜானும் பெருங்குடி மக்களும் முன்வந்து அவனிடம் “அரவம் செய்யற்க; எம் ஐயனே! அரசன் அயர்ந்து உறங்குகிறான்” என்று சைகை செய்தனர்.

மன்னன் அறையை எட்டி நோக்கினான் இளவரசன் படுக்கையில் செயலற்று கிடந்த தந்தையைக் கண்டதே அவன் துயரமீதூரப் பெற்றுப் பிறரை வெளியே இருக்கும்படி சைகை செய்துவிட்டுத் தான் மட்டும் உட்சென்று தந்தையருகிலிருந்து உடலைக் காக்கும் உயிரென அவனைக் கவலையுடன் காத்து நின்றான்.

வாழ்க்கை ஒளியற்றுக் காலன் கைப் பதிப்பிட்டதுபோல் தோன்றிய அம்முகத்தை நோக்க இளவரசனுக்கு அரசன் இறந்தேவிட்டான் என்று தோன்றிற்று. தன் ஐயந்தீரப் பல இடங்களிலும் தொட்டு நோக்கிப் பிணம் போல் சில்லென்றிருக்கக் கண்டு, “இது சாவே ஆ! என் தந்தையே என் அரசே, நீ வாழ்ந்த வாழ்க்கையின் முடிவா இது? நின் வீரக்கையும் காலும் ஓய்ந்த ஓய்வும் இதுவோ!” என்று கண்ணீர் வடித்தான்.

பின் மன்னன் கையருகிலுள்ள மணிமுடியையும் அவன் முகம் அப்பக்கம் சாய்ந்திருப்பதையும் நோக்கி, “ஆ, இம்மணிமுடியன்றோ என் அரசன் உயிரைக் குறுக்கி அதனைத் துன்பம் நிறைந்ததாக்கிற்று! அதனையடைய எடுத்துக்கொண்ட முயற்சியிலும் அதனைத் தாங்க வேண்டிவரும் முயற்சி எத்தனை மிகையானது! அரசே-என் தந்தையே இச்சுமையை எனக்கா-இன்ப வாழ்விலீடுபட்டிருக்கும் எனக்கா விட்டு வைத்துச் சென்றீர்? நும் அன்பிற்குப் பிற பிள்ளைகளும் இச்சுமைக்கு நானுமாகவா பிறந்தோம்?…. ஆ, இனி ஃபால்ஸ்டாஃப் எங்கே, என் நகையரசுடன் வாழ்ந்த வாழ்வெங்கே! நான் ஜானாயிருந்தால் அதெல்லாம் துய்க்கலாம் அதனால் என்ன? நான் உமக்கு மகனல்லனோ? உம் சுமையை நான் சுமப்பேன் என்ற உறுதி இருந்திருந்தால்கூட இம்முகம் இன்னும் சில நாள் வாழ்க்கை ஒளிவீசு நின்றிருக்குமே” என்று பலவாறு புலம்பினான்.

அவன் மனத்தகத்திருந்த துயர், வெறுப்பு முதலிய அனைத்தும் அச்சிறு மனத்தில் இடம் போதாமல் நீருருவில் கண்களாகிய மடைச் சீப்புகளைத் துருவி வெளிவந்து வழிவது போல் வழியலாயின. அதனைப் பிறரறியாது மறைக்கவும். பொறுப்பு வாய்ந்த அம் மணிமுடியின் சுமையைப் பொறுப்புடனும் கடமையுணர்ச்சியுடனும் ஏற்பதாக இறைவன் முன் வாக்களித்துத் தந்தை உயிர்க்கு அமைதி தரவும் எண்ணி, அவன் தனிமையை நாடினான். நாடி அம்மணிமுடியையும் கையிலெடுத்து அவ்வறையிலேயேயுள்ள மாடிப்படியேறி உப்பரிகையில் தனியிடத்திலிருந்து இறை வணக்கத்திலாழ்ந்து தன்னை மறந்துவிட்டான்.

இளவரசன் மனம் இறைவனுள்ளத்துடன் கலந்து நிற்கும் அத்தறுவாயில் அயர்வுற்றிருந்த அரசன் வரவரத் தெளிவுற்றுக் கண் திறந்தான். அவன் பார்வை மங்கலாயிருந்தது. மேற் கட்டியில் இருந்த உருக்கள் ரிச்சர்டின் உருக்கள் போல் தோன்றின. அவன் கண்களைச் சாய்த்து நாற்புறமும் நோக்கினான். அறையில் யாருமில்லை: யாதோர் அரவமுமின்றிக் கல்லறை போன்ற அமைதி நிலவியிருந்தது கண்டு வியப்புற்று ஈனக்குரலில், “யார் அது?” என்றான்.

மறுமொழி ஒன்றுமில்லை. கீழ்உலகில் இருந்து வருவது போன்ற அச்சொற்கள் ஒருவர் செவியிலும் விழவில்ல. சற்றே உரத்த குரலில் அவன் மீண்டும் வெஸ்ட்மோர்லந்து, வார்விக், ஜாக்" என்றான்.

மூவரும் முன்வந்து தனித்தனியாக, “அரசே, அரசே, அரசே” எனக் கைகுவித்து நின்றனர்.

“என்னை ஏன் தனியே விட்டுச் சென்றீர்கள்?” என்று கேட்டான் அரசன்.

“தனியே விடவில்லை அரசே இங்கே இளவரசர் இருந்தனர்” என்றனர் மூவரும்.

“இளவரசர்! அவன் எங்கே? அவன் எப்போது வந்தான்? எங்கே போய்விட்டான்?” என்று கேட்டான் அரசன்.

ஜான், “அரசே! நாங்கள் வெளியேதான் நிற்கிறோம். அவர் வெளியே எங்களைக் கடந்து செல்லவில்லை. உள்ளேதான் இருக்க வேண்டும். ஒருவேளை உப்பரிகையில் சென்றிருக்கலாம்” என்றான்.

அரசன் தற்செயலாய்ப் படுக்கைமீது கண் செலுத்தினான். அங்கே முடியைக் காணோம். அவன் மனத்தில் பழைய ஐயங்கள், தலைதூக்கி நின்றன. "ஆ! அவன் இடையில் நடித்த நடிப்பெல்லாம் பொய்யன்றோ? இன்றோ நாளையோ அவன் நல்வினையால் நான் இறப்பேன். அதுவரையிற் கூடப் பொறுக்கவில்லையா அந்தச் சிறுமை உள்ளம்? ஆ. மணிமுடி என்ன, தந்தை உயிரினும் அத்தனை தன்னலமும் வஞ்சகமும் எப்படி என் உடலினின்று மனித உருவெடுத்து வந்தது? ஆ அவன் இடையில் நடித்த நடிப்பெல்லாம் பொய்யன்றோ? இன்றோ நாளையோ அவன் நல்வினையால் நான் இறப்பேன். அதுவரையில் கூடப் பொறுக்க வில்லையா அந்தச் சிறுமை உள்ளம்? ஆ, மணிமுடி என்ன, தந்தை உயிரினும் அத்தனை வெல்லமென்றா நினைத்தாய்? இறைவனே! இத்தனை தன்னலமும் வஞ்சகமும் எப்படி என் உடலினின்று மனித உருவெடுத்து வந்தது? இறைவனே! நான் எத்தனை தீமை செய்யினும் நான் அதன் பயனாக வேறெந்தத் தண்டனையும் அடையத் தயங்கேன். ஆனால், எனக்கும் எண்ணற்ற குடிமக்களுக்கும் இறைவனுக்குங்கூட அரிதான ஒப்பற்ற இங்கிலாந்தை, இக்கடலிற் பதித்த மணியை, இவ்விடுதலைக் கொழுந்தை இந்நாகரிக ஊற்றைச் சிறுமைப்பட்ட ஒருவன் கையில் விழாது தடுப்பீராக! என்று பலபடப் பேசிக் கரைந்தான்.

பேச்சு முடிவில் அவன் திரும்பிப் பார்க்க, அப்பேச்சைக் கேட்டுக் கொண்டே இளவரசன் மணிமுடியுடன் அருகில் நிற்பதைக் கண்டான், அவன் கண்களும் முகமும் வழியும் கண்ணீராலும் கைகளாலும் மறைப் பட்டிருந்தன. அவன் அழுதுகொண்டே, “அரசே என்மீது தாங்கள் தப்பெண்ணங் கொண்டு தங்கள் மனதைப் புண்படுத்த வேண்டாம் தங்கள் மணிமுடி இதோ பாதுகாப்புடன் இருக்கிறது தாங்கள் நெடுநாள் அதை அணிந்து என் சுமையை எளிதாக்க வேண்டும். அதற்குள் நானும் தகுதியுடையவனாகி விடுவேன். எல்லோருக்கும் தங்கள் பிரிவு ஒரே பிரிவாகும். எனக்கு அஃது இரட்டிப்புப் பிரிவு, தந்தையை ஒப்பற்ற தந்தையை அரசை இழந்த பிரிவு ஒன்று. தமது கவலையும் வெறுப்பும் நிறைந்த வாழ்க்கைக் கடனை என் வாழ்க்கை முற்றும் நடத்திச் செல்லும் வண்ணம், நான் என் இன்ப வாழ்வையும் விடுதலையையும் விட்டுப் பிரியும் பிரிவு இன்னொன்று ஆயின் அந்நாள் என்றுவரினும், அதனால் எத்தகைய துயர் நேரினும் அதனைத் தமக்காகவும், தம் நற்பெயருக்காகவும், நம் முன்னோர் புகழிற்காகவும், நம் அரிய தாய்நாட்டின் முன்னேற்றத்திற் காகவும், தலைமேல் தாங்கும் கடப்பாடும் பெருமையும் உடையவனாவேன்” என்றான்.

12.முடிவு

அரசன் துயர், ஏக்கம், எல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போயின. அவன் முகத்தில் அரசிருக்கை ஏறியபின் அன்றே புன்சிரிப்புத் தவழ்ந்த நாள் என்னலாம்.

அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் மன்னன், உயிருக்கும் பிரிவுக்குமிடையே ஊசலாடினான். ஆனால், மன அமைதியுடன் மக்களை வாழ்த்தி இறுதியில் தன்னை மகிழ்வுடன் அழைக்கும் ரிச்சர்டை நோக்கி, "ஆ, என் கடன் தீர்த்தேன்; வருகின்றேன். நான் தீர்க்காத குறைத் தீவினைகளை என் பிள்ளையும் பிள்ளையின் பிள்ளையும் அவர்கள் தலைமுறையினரும் தீர்ப்பர். அவர்களுக்குத் தண்டனை கொடுத்தாலும் இறுதியில் தண்ணருளையும் கொடுப்பாயாக என்று கூறி உலக வாழ்வினின்றும் விடைகொண்டான்.

இளவரசன் மூன்று நாள் அரசனின் மணிமுடியைக் கையிலேந்தி ஊணுறக்கம் துறந்து தந்தையை நினைந்து நினைந்து அழுதான். பின்தம்பியும் பெருநில மக்களும் தேற்றத்தேறி அரசுரிமை கொள்ளலானான்.

அவன் குடிகளைப் பார்வையிட்டு முடியணியப் போகும் ஊர்வலத்தில் அவனைக் காண ஃபால்ஸ்டாஃபும் அவன் கூட்டத்தினரும் வழியில் காத்து நின்றனர். ஃபால்ஸ்டாஃப் தன் ஹால் அரசனாகிவிட்டான் என்று கேட்டவுடன் தன் நண்பர்களிடமெல்லாம் ஆரவாரத்துடன் உனக்கு அது தருவேன், உனக்கு இது தருவேன் எனப் பொன்னும் மணியும் பணியும் உரிமையும் வாயார வழங்கினான். அவையனைத்தை யும் ஒருநொடியில் நிறைவேற்றி வைக்க அவன் காத்திருந்தான்.

இளவரசன் முன்னம் போர்க்கெழும்போது ஃபால்ஸ் டாஃப் கூட்டத்தினர் செய்த திருட்டில் தொடர்பு வைத்ததாக அவனையும் சிறைப்படுத்தத் துணிந்த ¹ஸர் ஹென்றி காஸ்காயின் என்ற வழக்குமன்றத் தலைவனும் அங்கே வந்து காத்திருந்தான். பாவம் அவனை ஃபால்ஸ்டாஃப் அச்சுறுத்தி உன் நாள் போயிற்று; இஃது என் நாள். உன் தண்டனையை ஏற்க வா" என்று இழுத்து வந்திருந்தான். அந்நடுநிலை ஒழுங்காளன் இறைவனை வணங்கி கையுடனும் பதைபதைக்கும் உடலுடனும் உலக நலனுக்காக வேண்டித் தூக்கிற்குப் போகக் காத்து நிற்கும் முனிமகன் போன்று நின்றான்.

மன்னனாய் ஐந்தாம் ஹென்ரியாகப் போகும் இளவரசன் தொலைவில் நின்றே ஃபால்ஸ்டாஃபைக் கண்டான். அவன் மனம் அன்பால் உருகிற்று. அவன் முகம் “வன்பினால்” கல்லுருவென உறுதியுடன் காணப்பட்டது. அவன் ஃபால்ஸ்டாஃபை நோக்கிச் “சிறியோய், அரசர் நிலையுறப் போகும் தறுவாயில் இடையூறு செய்யற்க. அது நாட்டுப் பகைமைக் குற்றத்தின் பாற்படும், நின் வாழ்வு என்னளவில் செத்தது; நீ போகலாம்” என்றான்.

நகையரசு அரசிழந்தது; நகையிழந்தது; நகையற்று செயலற்றுத் தன் விடுதி சென்றது. " ஹால் உன் பிரிவிற்கு வருந்துகிறேன். ஐந்தாம் ஹென்ரி, உன் வருகைக்கு மகிழ்கிறேன். என் இறந்தபோன ஹால், என்னுடன் மறு உலகில் வந்து வாழ்க! ஐந்தாம் ஹென்ரியும் அவன் சிறிய உலகும் இங்கேயே நிலைக்கட்டும்" என்று எழுதியனுப்பிவிட்டு அன்றே அவன் தன் மலையுடலை வைத்து மக்கள் மலைவடையச் செய்துவிட்டு ஆவி நீத்தான்.

இதையறித் புதிய மன்னன் ஐந்தாம் ஹென்ரி இன்பமும் துன்பமும், இறும்பூதும், இளிவரலும் ஒருங்கே அடைந்தான். அவன் நகையரசன் உயிர்க்கு உறுதிதர இறைவனை வணங்கினான்.

வழக்கு மன்றத் தலைவனை முதலில் முனிவால் உறுக்கி அதன் உயர்வை உலகறியக் காட்டியபின் அவனை உச்சிமேற்கொண்டு பாராட்டி உரிமைகளும் பட்டங்களும் வழங்கித் தன் அரசவையில் ஓர் உறுப்பினனாக்கிக் கொண்டான்.

நான்காம் ஹென்ரியின் தீவினைக்கு முற்றிலும் ஆளாகாமல் நல்லெண்ணமும் நன்மனமும், நன்முயற்சியும் கொண்டு ஐந்தாம் ஹென்ரி அரசிருக்கையேறி நான்காம் ஹென்ரி அரசனுக்கு நற்புகழ் ஈந்தான்.

மன்னன் ஜான்

** (King John)**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்.**
1.  மன்னன் ஜான்: மன்னன் ரிச்சர்டு அரிமாநெஞ்சினன் தம்பி, மன்னன் இரண்டாம் ஹென்ரி மகன் - ஆர்தரின் தந்தை காலஞ்சென்ற ஜொஃப்ரே தம்பி.

2.  ஃபிலிப் : ஃபிரான்சு அரசன் ஜானின் எதிரி.

3.  ஆர்தர்: ஜானின் இறந்துபோன அண்ணன் ஜொஃபிரே மகன் - ஜானைவிட அரசுரிமைக்கு அணித்தானவன்-சிறு பையன் - கான்ஸ்டன்ஸின் பிள்ளை.

4.  சார்லஸ் : ஃபிலிப்-மகன் பிளான்ஷிச் சீமாட்டியை மணந்தவன்.

5.  ஃபால்கன் பிரிட்ஜ் : ரிச்சர்டு அரிமா நெஞ்சினன் காமக் கிழத்தியின் மகன் - வீரன் - நாட்டுப்பற்று மிக்கவன்.

6.  லிமோஜிஸ் : தற்பெருமை மிக்க பிரான்ஸ் நாட்டுப் பெருமகன் ரிச்சர்டு அரிமா நெஞ்சினனைக் கொன்ற அம்மை எய்ததாக வீம்படித்தவன்.

7.  அங்கியர்ஸ்: நகர வாயாடி

பெண்டிர்

1.  எலினார் : இரண்டாம் ஹென்ரி அரசன் மனைவி, ரிச்சர்டு நெஞ்சினனுக்கும் ஜானுக்கும் தாய். ஆர்தர் பாட்டி.

2.  கான்ஸ்டன்ஸ்: இறந்துபோன ஜொஃப்ரேயின் மனைவி -ஆர்தரின் தாய்.

3.  பிளான்ஷிச் சீமாட்டி: கஸ்டைல் அரசன் மகள், ஜானின் மருகி, ஃபிரான்சு அரசன் மகன் சார்லஸுக்கு வாழ்க்கைப்பட்டவள்.

** கதைச்சுருக்கம்**
ஜான் மன்னன் பேரரசன் இரண்டாம் ஹென்ரியின் மகன். அவனுக்கு முன் அரசனாயிருந்தவன். அவன் அண்ணன் ரிச்சர்டு அரிமா நெஞ்சினன். ரிச்சர்டுக்குப்பின் அவனுக்கிளைய ஜொஃப்ரே இறந்து போனதனால் ஜொஃப்ரேயின் பிள்ளை ஆர்தருக்கே அரசுரிமை செல்லவேண்டும். ஆர்தர் சிறுவனாத லால் ஜான் அரசனானான். அவனது ஃபிரெஞ்சு அரசு வட்டங்களில் சில ஆர்தரையே ஏற்றன. ஃபிரான்சு அரசன் ஃபிலிப்பும் அவனை ஆதரிக்கவே இரு கட்சிக்கும் சண்டை மூண்டது. இரு கட்சியினரும் ஆங்கியர்ஸ் என்ற பிரெஞ்சு நகரினைத் தம் பக்கமாக முயல, நகர வாயாடி ஒருவன் இருவருள் வென்றவர் பக்கம் நகர் சேருமென்றான். ரிச்சர்டு அரிமாநெஞ்சினன் காமக்கிழத்தி மகனாகிய ஃபால்க் பிரிட்ஜின் தூண்டுதலால் இரு கட்சியினரும் சேர்ந்து நகரை எதிர்க்கத் துணிந்தனர். அப்போதும் தளராது வாயாடி ஃபிரான்சு அரசன் மகன் சார்லஸையும் ஜான் மருகி பிளான்ஷிச் சீமாட்டியையும் மணம் செய்வித்து இரு கட்சியையும் இணைத்துத் தப்பிக் கொண்டான். ஆர்தர் மட்டும் தனியே விடப்பட்டு ஜானால் மணிக்கூண்டுச் சிறையில் அடைப்பட்டான். அவ்விடத்தில் வைத்து ஜானின் தூண்டுதலால் அவன் கையாளான ஹியூபர்ட் கொலைகாரர் உதவியுடன் ஆர்தர் கண்ணைப் பழுத்த இரும்புக் கம்பிகளால் போக்க முயன்றான். ஆனால் ஆர்தர் இளமழலைச் சொற்களுக்கிரங்கி ஹியூபெர்ட் அவனைக் கொல்லாது கொன்றதாக அரசனுக்குச் சொல்லி அனுப்பினான்.

கான்டர்பரித் தலைமகன் இடத்தை நிரப்பும் வகையில் உலகின் சமயத் தலைவராகிய ஜானை எதிர்த்துப் பல வகையில் ஒறுத்தும் பயனில்லாமல் போகவே, இறுதியில் பான்டல்ஃப் என்ற தூதன் மூலம் ஃபிலிப் அரசனை அவன்மீது ஏவிப்படை யெடுக்கச் செய்தான். ஆர்தர் கொலைச் செய்திகேட்டு ஆங்கில மக்கள் ஃபிலிப்பை ஆதரித்ததுடன், ஹியூபெர்ட்டையும் பிடித்து ஒறுக்க, அவன் ஆர்தரைக் காட்டுகிறேன் என்று சிறைக்கு வந்தான். தற்செயலாய் அதே சமயம் ஆர்தர் நம்பிக்கையிழந்து பலகணி வழி தப்ப முயன்று கீழே விழுந்து இறந்து கிடந்தான். தன் செயலால் வந்த துயர் பொறாது ஜான் இறக்கவும், ஆங்கில மக்கள் சினம் தீர்ந்து புதிய அரசனாகிய மூன்றாம் ஹென்ரியை ஆதரித்தனர். ஃபிலிப்பும் ஃபிரான்சு திரும்பினான்.

1.அரசுரிமையா ஆற்றலுரிமையா?

மன்னன் ஜானின் ஆட்சி ஆங்கில நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்று ஆகும்.

இஃது அவன் ஆட்சி செங்கோல் ஆட்சி என்பதனால் அன்று. உண்மையில் அவன் ஒரு கொடுங்கோல் மன்னனேயாவன்.

அவன் நற்குணக் குன்று என்பதாலும் அன்று அது. நேர்மாறாக ஒரு வகையில் அவனைத் தீக்குணக் குன்று என்றுகூடச் சொல்லல் ஆகும்.

பின் அவன் ஆட்சியின் சிறப்புத்தான் என்ன எனில் அவன் தீக்குணங்கள் கூட ஆங்கிலேயருடைய நாட்டுரிமை உணர்ச்சியையும் விடுதலை உணர்ச்சியையும் தூண்டி அவற்றிற்கு நிலவரமான பாதுகாப்பளிக்கும் சட்ட திட்டங்களை ஏற்படுத்த உதவின என்பதேயாகும்.

மன்னன் ஜானுக்குமுன் அரசனாயிருந்தவன் அவன் அண்ணன் ரிச்சர்டு அரிமா நெஞ்சினன் என்ற முதல் ரிச்சர்டு அரசன்¹ ஆவன். இவன் போரும் மறமுமே உயிர் வாழ்க்கை எனக்கொண்டு வீரமும் புகழும் நாடிப் பாலஸ்தீனம், ஃபிரான்சு முதலிய நாடுகள் சென்று போர் செய்து வெற்றிக்கொடி நாட்டி வாழ்ந்தவன். அவன் தன் நாட்டுடனோ நாட்டின் அரசியலுடனோ தொடர்பே வைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தன் போர்ச் செலவிற்கான ஒரு பணப்பை என்று மட்டுமே கணித்திருந்தான்.

ஜானிடம் ரிச்சர்டின் போர் மறம் இல்லாமலில்லை ஆனால், ரிச்சர்டின் பெருந்தன்மையும் தன்னலமற்ற புகழ் விருப்பம் இவனிடம் இல்லை. இவற்றோடு ரிச்சர்டிடம் இல்லாத சிறுமையும் பொய்மையும் கொடுமையும் இவனிடம் மிகுந்திருந்தன.

இன்னொரு வகையிலும் ஜான் ரிச்சர்டிடமிருந்து வேறுபட்டவன். ரிச்சர்டு பெரும்பாலும் வெளிநாட்டிலேயே இருந்ததனால் ஆங்கில நாட்டுப்பற்றும் கூடக் குறைந்தவன். ஜானோ இங்கிலாந்திலேயே இருந்து அந்நாட்டார் பழக்க வழக்கங்களையும் இயல்பையும் அறிந்தவன். மிகுந்த நாட்டுப்பற்றுங் கொண்டவன். அவன் தீயகுணங்கள் பலவாயிருந்தாலும் இந்த ஒரு நல்ல குணத்தால்தான் ஆங்கில மக்கள் சினந்தும் அவன் இனத்திலேயே இருந்தனர். ஆயினும் அதற்கேற்ப மக்களைத் தான் எத்தனை கொடுமையாய் நடத்தினும், பிறநாட்டவருக்கு அவர்களையோ தன்னையோ அவன் விட்டுக் கொடுப்பதில்லை.

ரிச்சர்டுக்கும் ஜானுக்குமிடையில் அவர்கள் தந்தையாகிய பேரரசன் இரண்டாம் ஹென்ரிக்கு ¹ஜொஃப்ரே என்றொரு புதல்வன் இருந்தான். அவன் தந்தையிருக்கும் போதே இறந்துவிட்டான். ஆயினும் அவனுக்கு ²ஆர்தர் என்றொரு பிள்ளை உண்டு. ரிச்சர்டு அரசர்க்குப் பின் ஒழுங்குப்படி அரசனாக வேண்டியவன் அவனே. ஆனால், அச்சமயம் அவன் பால்மணம் மாறாச் சிறுவனாயிருந்ததனாலும், அவன் தன் தாய் ³கான்ஸ்டன்ஸுடன் அயல் நாடாகிய ஃபிரான்சிலிருந்த- தனாலும் ஜானே அரசனானான். அவன் திறமையும் நாட்டுப் பழக்கமும் அவன் தாய் எலினாரின் உதவியும் இதில் அவனுக்கு மிகவும் துணை நின்றன.

எலினாருக்கு ஆர்தரும் பிள்ளையின் பிள்ளையேயாவான். ஆயினும் ஜானே அவளுக்குச் செல்வப் பிள்ளையாயிருந்த படியால், அவள் மற்ற யாரையும் விட்டு அவனுக்கே உடந்தையாய் இருந்தாள். இரண்டாம் ஹென்ரி ஆண்ட நாடுகள் இங்கிலாந்து மட்டமல்ல. ஃபிரான்சின் மூன்றிலிலொரு பிரிவை உள்ளடக்கிய பல சிறு அரசு வட்டங்களும் அவற்றுள் அடங்கியவையே ஆகும். எலினாரின் செல்வாக்கு இங்கிலாந்திலும் ஃபிரான்சு அரசு வட்டங்களுள் ⁴நார்மன்டி முதலிய சிலவற்றிலும் மிகுதியாயிருந்தது. எனவே அவ்விடங்கள் அவள் முயற்சியால் மிக எளிதாக ஜானை அரசனாக ஏற்றன. இவ்வட்டங்கள் அனைத்திற்கும் பெயரளவில் மேற்பார்வையாளனும் ஃபிரான்சு அரசனும் ஆன ⁵இரண்டாம் பிலிப், ஆங்கில அரசனுடைய செல்வாக்கு விரிந்த ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றை உன்னி அவனிடம் அழுக்காறு கொண்டிருந்தான். ஜானை ஒத்த ஆற்றல் மிக்க ஒருவன் ஆங்கில அரசனாயிருப்பதைவிட ஒன்றுமறியாச் சிறுபைதலாகிய ஆர்தர் அரசனாயிருப்பது அவனுக்குப் பிடித்தமாயிருந்தது. ஆகவே, அவன் ஜானை அரசனாக ஏற்காமல் ஆர்தரையே அரசனாக ஏற்றான்.

அரசவட்டங்களுடன் சில இருகட்சிகளுள் எதனுடன் சேரலாம் என்ற உறுதியற்றவனாயிருந்தன. தோற்கும் கட்சியுடன் சேர்த்தவர்க்குத் தோல்வியும் தோல்வியின் பயனான தீங்குகளும் இறுதியில் கிட்டுமாதலால் எக்கட்சி வெல்லும் என்றறிந்து அதனுடன் சேரலாம் என்று அவை காத்திருந்தன. அத்தகைய பகுதிகளில் மிகவும் தலைமை வாய்ந்தது ⁶.ஆங்கியர்ஸ் என்னும் நகரமாகும்.

2.வல்லவனுக்கு வல்லவன்

அவ் ஆங்கியர்ஸ் நகரின் ஒருபுறம் ஆங்கிலேயரது படை வந்து கூடாரமடித்து நின்றது. இன்னொரு புறம் ஆர்தர் கட்சிக்காக ஃபிலிப்பும் அவனது ஃபிரெஞ்சுப்படையும் வந்து காத்திருந்தனர். இரு கட்சியினரும் நகர மக்களைத் தங்கள் தங்களுடன்தான் சேரவேண்டும் என வற்புறுத்திப் பார்த்தனர். நகர மாந்தரிடையே பல இடங்களிலும் சுற்றி அடிப்பட்ட வாயாடி ஒருவன் இருந்தான். அவன் தன்னைத்தானே அவர்கள் ஆட்பெயராக்கிக் கொண்டு நகர் மதிலில் வந்து நின்று இருபுறத்தும் தலைமை தாங்கும் அரசரையே நோக்கிப் பேசினான்.

மன்னர்களே, நீங்கள் இருவரும் உலகின் இரு பெரு வல்லரசுகள். நீங்கள் ஒருவரை ஒருவர் எதிர்க்கும் வரை எம்போல்பவர்க்கு ஓர் உறுதி உண்டு. உடங்களில் எவரேனும் எங்களை எதிர்ப்பதாயின் அடுத்தவர் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அதே சமயம் உங்களில் எவரையேனும் நாங்கள் சார்ந்தால் அடுத்தவர் பகைத்து எதிர்ப்பதும் உறுதி. ஆகவே, நாங்களாக வலய உங்கள் பகைமையை வாங்குவதைவிட உங்கள் நட்பை வாங்கவே விரும்புகிறோம். அதுவும் உங்களில் எவர் ஆற்றல் மிக்கார் என்று கண்டு அவருடனேதான் நட்புகொள்ள விரும்புகிறோம். அதனால் நீங்கள் வெறும் பசப்பு மொழிகளைச் சொல்லி எங்களை உங்களில் ஒருவர் பக்கம் சேர்க்கலாம் என்று காத்திருப்பது வீணேயாகும். விரைவில் உங்கள் ஆற்றல் மிகுதியை ஒருவர் மீது ஒருவர் போரால் நிலைநிறுத்தி விடுங்கள். யாதொரு தடையுமின்றி நாங்கள் அங்ஙனம் வெற்றி வீரனாகும் கட்சியினருக்குத் தலைவணங்கிக் கோட்டை வாயில் திறந்து வரவேற்போம்" என்றான்.

அவன் கூறியது வெறும் வாயடியே; ஆனால் அவ்வாயடியிலுள்ள உண்மை உலகின் பெரிய வல்லரசுகளான அவ்விருவரையும் திணற வைத்து, ஒரு சிறு நகரம்; அது நம்மை இப்படிப் ‘பித்துக்குளி’ யாக்கி விட்டதே என்று இரண்டு திறத்து வீரர்களும் மனம் வெம்பினர். இனி என் செய்வது? ஒருவருக்கொருவர் பகையான இரு கட்சியினரிடையேயும் நகரைப் பற்றிய அளவில் ஒரே சீற்றமும் புழுக்கமும் பழிச்சொல்லுமே நிறைந்திருந்தன.

‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு’ என்றபடி அந்நகர வாயடிக்காரனுக்கு மிஞ்சியவள் ஒருவன் ஜானின் படையில் இருந்தான். அவன் ரிச்சர்டு அரசனுடைய காமக்கிழத்தியின் மகன். அவனிடம் ரிச்சர்டின் வீரமும் தாயின் ஆங்கிலநாட்டுப் பற்றும் பிடிவாதமும் ஒன்றுபட்டிருந்தன. அவனும் ரிச்சர்டுடன் கூடப் பல நாடுகளிலும் சென்று போரில் பழகியவன்; அதோடு அந்நாளைய படைத்திறப் பயிற்சிக்குரிய நூல்களையும் போர் வரலாறுகளையும் நாட்டு வரலாறுகளையும் மேலேழுந்தவாரியாகப் அவன் பெயர் ¹ஃபால்கன் பிரிட்ஜ்.

அவன் மூளைக்கு அந்நகர வாயாடிக்காரனது வாயாடியின் மிக்கதொரு வாயடி தென்பட்டது. அவன் வாசித்த போர் வரலாறுகளில் முன் இதேபோல் இரண்டு பகைவர்களைக் கிண்டிவிட முயன்ற ஒரு சூழ்ச்சிக் காரனை அவ்விரு பகைவர்களும் ஒன்றுபட்டழித்து. அதன்பின் நேரடியாய்த் தங்கள் பகைமையைத் தீர்த்துக் கொண்டனர் என்று அவன் கண்டிருந்தான். இப்போதும் அதேமாதிரி செய்தாலென்ன என்று அவன் இருபுறத்தவர்க்கும் கூறினான்.

நகரமக்கள் மீதுள்ள வெப்பத்தால் இருபுறமும் வீரர் உள்ளம் வைக்கோற் போர்கள்போல் காய்ந்து கிடந்ததனால், இக்குறும்புச் சொல் காற்று வாக்கிற்பட்ட பொறிபோல பிடித்துக்கொண்டது.இத்தகைய வெட்கங்கெட்ட சொற்கள் அம்பலமேறும் வெட்கங்கெட்ட காலம் அது. ஆதலால் பகைவர்கள் பகையல்லாத மூன்றாம் கட்சியை அழிக்க வேண்டித் தம் பகைமையைச் சுருட்டிவைத்துக் கொண்டு அத்தீவழியில் ஒன்றுசேர்ந்து முளையலாயினர்.

நகர மக்கள் பார்த்தனர்; தம் நிலை அசைக்க முடியாதது என்று நினைத்துபோக, இப்போது முடியாதெனத் திரிந்தது கண்டனர். கண்டு இனியாது செய்வது எனக்கூடி ஆராய்ந்தனர். முதலில் தம் கட்சியை எடுத்துக் கூறியவனையே எல்லாரும் இடித்துக்கூறி, “இப்போது என்ன சொல்லுகிறாய்! உன் சொல் செல்லவில்லையே” என்றனர்.

அவ்வாயடிக்காரன் சமயத்துக்கொத்த அறிவு நிரம்பியவன். நகர மக்கள் திக்குமுக்காடும் அந்நேரத்திலும் அவன் ஒரு புதுவழியை அவர்களுக்குக் காட்டினான். “முதலில் வல்லரசுகள் இருவரும் தம்முட் பகைத்து நம் நட்பை நாடினர். இப்போது தம்முட் பகைநீத்து நம்மைப் பகைக்கலாயினர். சரி, இவ்வளவு தொலை பகை நட்பாகவும் மாறும்போது ஏன் அவ்விருவரே போல் நாம் மூவரும் பகைநீத்து ஒத்துப் போகப் படாது” என்றான் அவன்.

முதலில் அவன் கூறுவது புரியாமல் நகரமக்கள் விழித்தனர். பின்னர் அவன் விளக்கமாகத் தன் கருத்தை எடுத்துக் கூறினான்:

“பேச்சளவில் இப்போதுள்ள சண்டை ஜானுக்கும் ஆர்தருக்கும் ஆயினும் உண்மையில் படைவலியுடன் போர் புரியும் கட்சிகள் ஃபிரான்சு அரசனும் ஆங்கில அரசனும்தாமே! அவர்களிடையே எப்படியாயினும் நட்பை உண்டாக்க முடியுமானால் இங்கே சண்டையுமிராது; நமது இக்கட்டும் அதனுடன் போகுமன்றோ? அத்தகைய நட்புக்கொரு வழி எனக்குத் தோன்றுகிறது. ஃபிரான்சு அரசன் மகனாகிய சார்லஸுக்கு மணம் செய்தால் என்ன?”

நகர மக்களுக்கு இது துன்பநேரத்தில் வந்த தெய்வ அருட்பேறுபோல் விளங்கிற்று. இதனைச் செவியுற்ற படை வீரரும், “தோல்வி என்ற பெயரின்றியும் சண்டையின்றியும் விடுபட்டோம்” என்று கலகலத்துக் கொண்டனர்.

கான்ஸ்டன்ஸின் பழி

ஆர்தருக்கு அரசாட்சி கொடுப்பதினின்றும் ஃபிரஞ்சு அரசனை எதிர்த்துப் போரிடுவதினின்றும் தவிர்தலின் ஜான் இதனை ஏற்றான் என்று சொல்ல வேண்டுவதில்லை. ஃபிலிப் மட்டும் இதனை ஏற்றுச் சற்றுத் தயங்கினான். ஒருபுறம் இதனால் ஆங்கில நாட்டரசுகூட ஒருவேளை தன் மகனுக்கே வரக்கூடும் என்ற அவர் அவனை இழுத்தது; இன்னொருபுறம் அவன் மனச்சான்று ஆர்தருக்கு அவன் செய்யும் வஞ்சகத்தைக் குறை கூறிற்று. ஆனால், அதனைச் சரிபடுத்த ஜான் ஆர்தருக்கு ஆங்கியர்ஸையும் , பிரிட்டனில் ரிச்மண்டு முதலியவற்றையும் கொடுப்பதாகச் சொல்லவே, அவன் தயக்கமின்றி அந்த உறவை ஏற்றான். அதன்படியே சார்லஸுக்கும் பிளான்ஷிச் சீமாட்டிக்கும் கடிமணம் நடந்தேறியது.

ஏழை ஆர்தரையும் அவன் தாய் கான்ஸ்டன்ஸையும் முதலில் தன் நலத்திற்காகத் தலைக்குமேல் ஏற்றிய ஃபிலிப் இப்போது அதே தன்னலத்தால் தூண்டப்பட்டு அவர்களை மீண்டும் துணையற்றவராக விட்டுவிட்டான்.

இங்ஙனம் தன் பகைவருடன் நண்பரும் சேர்ந்து தம்மைக் கைவிட்டனர் என்று கான்ஸ்டன்ஸ் கண்டாள். உலகியல் வாழ்வில் வாள்வலி இன்றேல் ஒழுங்கு என்பது மட்டிலும் தனிப்படப் பயனுடையதன்று என்பதை அவள் அறிந்து தற்காலிகமாகக் கிடைத்ததை ஏற்றுக் கொண்டிருந்தால் அவளுக்கும் அவள் மைந்தனுக்கும் வேறிடையூறின்றி வாழ்வாவது கொடுத்து வைத்திருக்கும். வாய்ப்பு நேர்ந்தால் வெற்றிகூடக் கிடைத்திருக்கலாம். ஆனால் ஊழ் யாரை விட்டது! அவள் தன் பெருந்- துன்பத்திலும், ஓங்கி எழுந்த தன் சினத்திலும் தன் வலிமையின்மையும், துணையின்மையும் மறந்தாள். மறந்து தன் பகைவனாகிய ஜானையும் நண்பனாக நடித்துத் தன்னையும் தன் குதலை மைந்தனையும் காட்டிக் கொடுத்த ஃபிலிப்பையும் வாயார வைதாள். அவர்கள் தம்மைப் பிணைக்கும்படி ஏற்படுத்தய அக் கடிமணத்தையும் மணமக்களையும் ‘பழி சேர்க்’ என அவள் வன்சொல் கூறிப் பழித்தாள்.

அவளது பழிச்சொல், அவளது கண்ணீர் பயனற்றுப் போய்விட வில்லை என்பது மட்டிலும் உண்மை. அம் மணமக்கள் நெடுநாள் மனமார வாழக் கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் எதிர்ப்பார்த்ததுபோல் அந்த மனம் அவர்கள் குடும்பங்களைப் பிணைக்கவுமில்லை. விரைவில் அவளைக் கைவிட்டு ஒன்று கூடிவிட நினைத்த இரு வல்லரசுகளும் ஒருவர் கழுத்தை ஒருவர் கடித்துக் குருதி கொப்பளிக்கவும். ஒருவர் அவாக்களை ஒருவர் அழிக்கவும் செய்ததன்றி அது வேறு வாழ்வு காணவில்லை. ஆனால் அப்பழிச் சொல்லால் பிறர்க்கு இத்தனை கேடு விளைந்தும் அச்சொல்லைக் கூறிய கான்ஸ்டன்ஸுக்கு எவ்வகை நன்மையும் கிட்டவில்லை. அவள் தீவினைப்பயனை அவள் துய்த்தே தீரவேண்டுமன்றோ? அதுமட்டுமன்று, ஊழ் அவளுக்கு இன்னும் பெருந்துன்பம் தந்து அவள் வாயிலிருந்து வரும் பழியை இன்னும் மிகைப்படுத்தவே செய்தது.

3.வீரனும் போலி வீரனும்

இச்சமயம் ஃபிலிப்பின் அரசவையில் லிமோஜில் என்றொரு பெருமகன் இருந்தான். அவன் பெயருக்குத்தான் பெருமகனேயன்றிப் பெருமகனுக்குரிய எவ்வகை உடைமையோ உரிமையோ அற்றவன். அவன் தீவிழிகளால் தனக்கிருந்த பெருநிலக்கிழமை, பொருள்நிலை முதலியயாவும் இழந்தவன். ஆனால் காரியம் போகினும் வீரியம் போகவில்லை என்றபடி அவன் தற்பெருமை மட்டிலும் மாளவில்லை. அது மேன்மேலும் மிகுதியாயிற்று என்றுகூடச் சொல்லவேண்டும். யார் யார் உயர்நிலைக்கு வந்தாலும் அவர்களிடம் பல்லைக் காட்டி இளித்து முகமன்கூறி வாழ்ந்த பேதை அவன்? எப்படியோ, அவன் எய்த அம்போ, அல்லது அதே சமயம் அவனது என்னும்படி வாய்ப்பாக உடன் எய்யப்பட்ட வேறு அம்போ ரிச்சர்டு அரசன் கண்மீது பட்டு அவன் இறந்துவிட்டான் என்ற காரணத்தால், அன் தன்னை, ரிச்சர்டையும் வென்ற வீரன் என்று கூறி வீம்படித்துக் கொள்வான். இதற்கு அறிகுறியாக அவன் ரிச்சர்டு அரிமாநெஞ்சினைக் குறிப்பாகக் காட்டும் முறையில் அரிமாவின் தோல் ஒன்றைத் தோளில் இட்டிருந்தான்.

ஜான் படையும் ஃபிலிப்பின் படையும் எதிரெதிர் நின்றிருந்தபோது இருபுறமிருந்தும் கான்ஸ்டன்ஸும் ஜானின் தாயாகிய எலினாரும் ஒருவரை ஒருவர் வைது கொண்டனர். லிமோஜிஸ் அவரிடையே பெருமிதத்துடன் நடுநிலை ஒழுங்கு பேசவந்து. இருவர் சினத்துக்கும் ஆளானதோடு ஃபால்கன் பிரிட்ஜினையும் மிகவும் பகைத்துக் கொண்டான்.

லிமோஜில் அதோடு தற்போது கான்ஸ்டன்ஸின் துயரிடையே வந்து தன் வழக்கமான பல்லவியாகிய ஃபிரான்சு அரசன் பெருமையையும் தன் வீரத்தையும் பற்றிப் பேசவே, கான்ஸ்டன்ஸ் அவன் மீது சினந்து “போ, போ பசப்புக்கார கோமாளி, உன்னை யார் இங்கே வரச் சொன்னது? நீ பெரிய வீரன் என்று நினைத்தா உலகப் பெருவீரன் ரிச்சர்டின் அறிகுறியாகிய கேசரியின் தோலைப் போர்த்திருக்கிறாய்? உனக்குக் கிடைக்கத்தக்க தோல் கேசரியின் தோல் அன்று; கேசரியின் தோலே” என்றாள்.

அவள் சொல்லி வாய்மூடு முன் காது செவிடுபடும்படி சிரிப்புடனும், களைப்புடனும் ஒரு குரல், “ஆகா ஆகா, நன்று சொன்னாய், நன்று சொன்னாய்! ஆயினும் அதிலும் ஒரு பிழை இல்லாமலில்லை. அவன் வேசரியின் தோலைத்தான் போய்த் தேடவேண்டுமே தவிர வேசரியின் தோலைப் போய்த் தேடவேண்டியதே இல்லை; அவனேதான் ஒரு வேசரியாயிற்றே!” என்றது.

அதுகேட்டு, அங்கே நின்ற ஆண் பெண்களனைவரும், துன்பத்துள் தோய்ந்த கான்ஸ்ட்ன்ஸும் ஆர்தரும் கூடக் கைகொட்டி நகைத்தனர். அங்ஙனம் நகைத்தது யார் என்று லிமோஜிஸ் சீற்றத்துடன் திரும்பிப் பார்க்க, அது தான் அவமதித்து வரும் ரிச்சர்டின் அன்புடைப் புதல்வன் ஃபால்கன் பிரிட்ஜ் என்று கண்டான்.

அது வேறு யாராயினும், அன்று அவன் தன் வெற்று வீச்சுக்களையேனும் காட்டியிருப்பான். ஃபால்கன் பிரிட்ஜின் வீரத்தோற்றத்தையும் சிங்க நோக்கையும் கண்டதுமே அவன் உண்மையிலேயே ஒரு வேசரியாய் நடுங்கி ஒடுங்கி வெளியே நகர்ந்து நழுவலுற்றான்.

4.போப்பின் சீற்றம்

கான்ஸ்டன்ஸின் தீவினை அவளை முற்றிலும் விழுங்கு முன்னதாகவே, அவள் வாயின் பழிச்சொல்லின் முழுவன்மையும் வெளிவரு முன்னதாகவே அவ் ‘ஏழை யழுத கண்ணீரின்’ பழி தன் வேலையைத் தொடங்கிற்று. ஜானுக்கும் ஃபிலிப்புக்கும் இடையே ஒரு புதிய வேறுபாடு ஏற்பட்டது. அதுவும் அவர்களைப் பிணைக்க ஏற்பட்ட திருமணத்தின் விளைவாகவே.

இங்கிலாந்தில் ¹காண்டர்பரிப் பெருந்தலைவனான ஹ்பெர்ட் வால்ட்டர் இறந்தபின் அடுத்த பெருந்தலைவனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஜானுக்கும் அந்நாளைய கிறிஸ்துவ சமயத்தில் உலகத் தலைவனாகிய ‘திருப்பெருந் தந்தைக்கும்’ வேற்றுமை ஏற்பட்டது. ஜான் தேர்ந்தெடுக்க ஜான்டிகிரேயை மறுத்துத் ‘திருப்பெருந் தந்தை’ ஸ்டீஃபென் லாட்டனை அனுப்பினான். @ஜான் இங்ஙனம் தன் நாட்டிலேயே தன் ஆற்றலை எதிர்க்க முயன்ற திருப்பெருந்தந்தைமீது சினங்கொண்டு அவனுடைய ஆளான ஸ்டீஃபென் லாங்டனை இங்கிலாந்தில் காலடி எடுத்து வைக்கவொட்டாமல் தடை செய்யலானான்.

அவ்வந்நாட்டு மக்களின் உலகியல் வாழ்க்கைக்குத் தலைவரான அவ்வவ்நாட்டு அரசரைப் போலாது எல்லா நாட்டுக் கிறிஸ்துவ மக்களின் உடல்பொருளாவி மூன்றிற்கும் திருப்பெருந் தந்தை உரிமையாளனாகக் கருதப்பட்டு வந்ததனால், அவனது ஆற்றலும் ஆணையின் அளவும் அரசரையும் பேரரசரையும் அதிரச் செய்யத் தக்கதாயிருந்தன. ஜான் தன்னை எதிர்த்து மீறத் துணிந்தான் என்றறிந்ததுமே அவன் எழுமுகிற்கிறைவன் சினந்தெழுந்ததுபோல் சினந்தெழுந்து மின்படையும் இடிப்படையும் போன்ற தன் பேராணைகளை வீசி எறிந்தான். இவற்றுள் ஒன்றால் ஜான் சமய வினைகள் அனைத்தினின்றும் விலக்கப்பட்டான். அதனையும் அவன் சட்டை செய்யாதிருக்கவே இரண்டாவது ²ஆணையால் ஜான் ஆளும் நாட்டையே சமய வினைகளினின்றும் விலக்கி வைத்தான். இதன் கொடுமை மக்களனை வரையும் தாக்கியது. பிறந்த பிள்ளைக்குப் பெயரிடவும். இறந்தவரை நன்முறையில் அடக்கவும் செய்யவும், மணமக்களை மணவினையால் பிணைத்து வைக்கவும் ³சமயத் தலைவரும் ⁴சமய வினைஞரும் மறுத்தனர்.

இவ்விரு பேராணைகளாலும் எதிர்பார்க்கப்பட்ட பயன் ஏற்படவில்லை. சமயத்தின் திருவுருப் போன்ற சமயத்தலைவர் மீது சீற்றங்கொண்ட ஜானுக்குச் சமயவிலக்கு ஒரு பொருட்டாகத் தோன்றாதது இயல்பே. ஆனால் இரண்டாவது ஆணை நாட்டுமக்கள் அனைவரையும் தாக்குவதனால் அதனால் பெரும்பயன் ஏற்படும் எனத் திருப்பெருந் தந்தை எதிர்பார்த்தார். ஓரளவு அதனால் ஆங்கிலேயர்-சிறப்பாகச் சமயப் பற்றுமிக்கார்-மன அமைதி குலைந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், சமயத்தின் பேரால் வெளி நாட்டான் ஒருவன்-அது திருப்பெருந் தந்தையாயிருந்தாலும் கூட-தம் அரசனை-அவன் எவ்வளவு கெட்டவனாயிருப்பினுங்கூட அடக்கியாள அவர்கள் ஒருப்படவில்லை. எத்தனையோ வகைகளில் அனுக்கு மாறாயிருந்த பல்வகை ஆங்கில அரசியல் கட்சியினரும் திருப்பெருந் தந்தையை எதிர்க்கும் ஓர் இடத்தில் மட்டும் அவனுக்கு மனமாரத் துணை தந்தனர். இக்காரணத்தால் திருப்பெருந்தந்தையின் இரண்டாவது ஆணையை அவர்கள் பொறுத்து எதிர்த்தனர்.

ஆற்றல் மிக்கார் பெருந்தோல்விகளால் வீறெய்துவரேயன்றி மலைவதில்லை. ஜானேயன்றி நாட்டு மக்களும்கூடத் தன்னை அசட்டை செய்கிறார்கள் என்று கண்ட திருப்பெருந்தந்தை சூரபன்மனுடைய மாயத்தோற்றங்களால் ஒரு சிறிதும்கலங்காது கைவேலெறிந்த முருகவேள் போன்று தன் முழு ஆற்றலையும் செலுத்துவதென்று துணிந்து ஜானை அவனது அரசிருக்கையி னின்றும் நீக்கினான். இதனை முதலிரு ஆணை களையும்போல் சொல்லளவிற் செய்தால் பயனில்லை என்று கண்டு அதனை நிறைவேற்றி வைக்கும்படி ஃபிலிப்புக்கு ஆணை தந்தான்.

5.நட்பும் பகையும்

ஃபிலிப்புக்கும் ஜானுக்கும் இடையே மீண்டும் பகைமை என்னும் பயிர் வளர இவ்வாணையே விதையாயமைந்தது. இவ்விதை வளர்வதற்குஅவர்கள் தம் உறவைப் பிணைக்க ஏற்படுத்திய மணமே உரமாகவும் நின்றது. ஏனெனில் நன்மையை நாடிய தூய வீரனல்லனாயினும் தீமையைச் செய்யும் வகையிலும் கோழையேயான ஃபிலிப்முன் ஆர்தரைக் கைவிடத் தாங்கிய போது திருபெருப் தந்தையின் தூதனாகிய பான்டல்ஃப் அவனிடம், “உரிமைப்படி கூட ஆர்தருக்கடுத்தபடி அரசன் உன் மகனே ஆதலால் அவனுக்காகவும் ஜான்மீது நீ போர் செய்யக் கடமைப்பட்டிருக்கிறாய்” என்றான். அதற்கும சற்றுத் தயங்குவதாக ஃபிலிப் காட்டிக்கொள்ளவே. பான்டல்ஃப் ஒப்பற்ற சூழ்ச்சித்திறத்துடன், “அரசே, திருப்பெருந்தந்தையின் ஆணை இறைவன் ஆட்பெயரின் ஆணை; அதனுடன் ஆர்தருக்கும் நீரே துணைவர்; இடையில் அவனுக்கு நீர் செய்த வஞ்சததை நீர் இதனால் தணிக்கலாம். அவ்வஞ்சங்கூட இறைவன் உமக்கு ஆங்கில நாட்டரசுரிமைதர உம்மனத்தில் தூண்டிய தூண்டுத லாகவே இருக்கவேண்டும். இன்று இப்போரில் இறங்குவதால் அவ்வஞ்சனையின் தீவினையினின்றும் விடுபடலாம்” என்றான்.

ஃபிலிப் பின்னும், “அங்ஙனமாயின் ஆர்தரையன்றோ அரசனாக்க வேண்டும்; திருப்பெருந்தந்தை என்னை அரசனாக்கியது என்னாவது?” என்றான்.

பான்டல்ஃப் ஃபிலிப்பைப்போல் எத்தனையோ கோழைகளையும் ஜானைப்போல் எத்தனையோ வீரரையும் பார்த்துப் பழமும் தின்று கொட்டையுமிட்ட பழம்பூனை. ஆகவே அவன் திறம்படி, “அரசே, தெய்வ உள்ளத்தின் போக்கை நீர் அறியீர். ஆர்தருக்கிடும் போர் உம் போராயிருக்க வேண்டும் என்பது இறைவன் உள்ளம். நீர் ஆர்தருக்காகப் போரிட்டால் போதும். அப்போர் முடியுமுன் உன் பகைவன் ஜானே ஆர்தரைக் கொன்று விட்டிருப்பான். ஆதலால் நீர் உம் பெயரால் முயலாமலே அரசுரிமைக் குரியவராவீர்” என்றான்.

தொலைநோக்குடன வகுத்த அந்நுண்ணிய பொறியில் ஃபிலிப் மாட்டிக் கொண்டான்.

அவனை வன்மையாக அவ்வலையின் பக்கம் இழுத்தது ஆங்கில நாட்டின் நிலைமை. அவனை அதில் தூண்டிய திருப்பெருந் தந்தைகூட அவனை அதினின்றும் பின்னால் இழுக்க முடியவில்லை.

6.படுகொலைக்கஞ்சா மன்னன்

ஜானிடம் போர் வீரம் இருந்ததே ஒழிய நெஞ்சு வீரமாகிய மானமும் உரமும் இல்லை. அவனது கொடுங்கோன்மையால் மக்கள் துன்புற்று அவனைப் பகைத்தனர். அவனது தன்னாண்மையால் பெருமக்ள் எழுந்து கிளர்ச்சி செய்தனர். திருப்பெருந் தந்தையின் எதிர்ப்பால் விளைந்த கெடுதல்கள் வேறு. இவை அனைத்திற்கும் மேலாகக் திருப்பெருந் தந்தையின் தூண்டுதலால் ஃபிலிப் அரசன் படையெடுப்பதாகவும் அவன் கேட்டான். இவையனைத்தையும் எப்படிச் சமாளிப்பதென்று அறியாமல் அவன் திகைத்தான்.

இத்தனை எதிர்ப்பையும் நெஞ்சிலேற்றுச் சாகு உயர்நெறியும், தன் மறுப்பும், தூயவீரமும் அவனிடம் இல்லை. ஆனால், அவற்றிற்கு மடங்கிப் பணியும் கோழைத்தனமும் அவனிடம் இல்லை. வஞ்சனையாலும் சூழ்ச்சியாலும் போலிப் பணிவிடைனாலும் ஏன் எல்லாரையும் ஏமாற்றித் தப்பக் கூடாது என்று நினைக்கும் இரண்டக வஞ்சமும் கீழ்மையும் மட்டும் அவனிடம் நிறைந்திருந்தன.

அவன் பகைவருள், பச்சை மதலையாகிய ஆர்தரை மட்டுமே ஊழ் அவன் கையில் கொண்டு வந்துவிட்டது. விட்டு அவன் மூலம் மீண்டும் அவனுக்கு இம்மையிலேயே இகழும் ஒறுப்பும் அறிவும் தந்தது.

ஃபிலிப் போர் தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே ஆர்தர் அவன் கையிற் பட்டான். படவே அவனை உடனே இங்கிலாந்துக்கனுப்பி ¹மணிக்கூண்டுச் சிறையில் வைத்துக் காக்கும்படி அனுப்பினான். அவனைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜானின் நெருங்கிய நண்பனும் கொலைக்கஞ்சாக் கல்நெஞ்சின னுமாகிய ² ஹியூபெர்ட் டிபர் என்பவன் கையில் ஒப்படைக்கப் பட்டது. அங்ஙனம் ஒப்படைக்கும்போதே ஜான் அவனிடம் தனிமையாகவும், குறிப்பாகவும் தான் அவன் கொலையை விரும்புவதாகக் காட்டினான்.

சிலநாட்கள் சென்றபின் இங்ஙனம் குறிப்பாகக் கூறிய செய்தி வெளிப்படையாக ஆணையுருவில் தரப்பட்டது.

"வியூபெர்ட்! என் மனத்தில் இருக்கும் எண்ணத்தை நீ அறிவாய்; பல தடவை நீ அதனை அறிந்து நடப்பதாயும் குறிப்பாய் ஏற்றுக் கொண்டிருக்கிறாய். அதனை நிறைவேற்றும காலம் வந்தது.

"நீ பல கொலைகளைக் கூசாது செய்தவனாயினும் இன்று இவ்வொன்றிற்குத் தயங்குகிறாய். சரி, இப்போது நான் சொல்லுகிறபடி செய். கொலை வேண்டா. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் அவன் இரு கண்களையும் அவித்துவிடு.

“இதனைச் செய்யத் தவறின் நீ என் நண்பனில்லை; என் மாறாப் பகைவன்”.

7.பணஞ் செய்யும் படுமோசம்

இவ்வாணையை மீற வகையில்லாது ஹியூபெர்ட் விழித்தான்.

"இதுவரையில் எத்தனையோ கொலைகளும் துணிகரச் செய்லகளும் செய்து அரசன் அன்பையும் அதன் பயனாகிய உயர் நிலையையும் பெற்றோம். இனி ஒவ்வொரு செயலால் அவற்றை விட்டு விடுவதா? இவ்வொன்றைச் செய்துவிட்டால் -இதுவே அவனுக்கு எல்லாவற்றினும் உயர்நிலையான செய்தி-இவ்வொன்றைச் செய்துவிட்டால், பின் இதை வைத்துக் கொண்டு அவனை எப்படி வைத்தாட்டப்படாது? அப்போது அவன் என்ன கேட்டால் தரமாட்டான்?

"ஆனால், ஆனால்-ஈசனே அப்பிள்ளை முகம் ஞாயிற்றின் ஒளியும், திங்களின் குளிர்ச்சியும், விண்மீன்களின் தனிமையும், மின்மினியின் நெய்மையும் கொண்ட அவன் முகம்-அன்றலர்ந்த செந்தாமரையினை நாணச் செய்யும் அவன் புன்முறுவல் பூத்த முகம்-என்னை என் அம்மாவிடம் என் சிற்றப்பா எப்பாது அனுப்புவார். என்னை எல்லாரும் எடுத்து முத்தி மோந்து மகிழ்கிறார்களே. என் சிற்றப்பா மட்டும் என்ன என்னைக் கண்டு முகத்தைக் கோண வைத்துக்கொண்டே நிற்கிறார்; நான் அப்பா என்றால் சட்டென்று சீறிவிழுகிறார்; ‘ஏன் மாமா, நீ என்னை எடுத்தணைக்கும்படி அவரிடம் சொல்லப்படாதா! நான் நல்ல பிள்ளையாய் இருப்பேனே!" என்று அவன் பிதற்றும் வஞ்சமற்ற குதலைமொழிகள், “அம்மா அம்மா” என்று அவன், அழும்போது, ’அம்மா’ என்றால் ‘அடிப்பேன்’ என்று உறுதி அடிக்க, ‘இல்லை, இல்லை! அம்மாவைக் கூப்பிடமாட்டேன், இனி ஒரு போதும் அம்மா என்று சொல்லக்கூடமாட்டேன்!’ என்று வாயிலடித்துக் கொண்டு மனதில் மட்டும் நினைத்த நினைப்புடன் உறங்குகையில், ‘அம்மா அம்மா’ என்று தன்னையறியால் சொல்லிக் கண்ணீர் வடித்தும் இடையிடையே தான் அம்மா என்று தவறிச் சொல்லி யாரேனும் கேட்டு விட்டார்களோ என்று அஞ்சிச் சட்டென்றெழுந்து நாற்புறமும் இளமிளாப்போல் மருண்ட பார்வையுடன் பார்த்துவிட்டு ஒருவாறு மனஅமைதி பெற்று மீண்டும் போர்த்துக் கொண்டு தணிந்த குரலில், ‘பிள்ளையாய் வந்து பிறந்த எம்பெருமானே! என் நாவில் அம்மா என்ற சொல் வராதபடி என்னைக் காப்பாற்றும்’ என்று அவன் கூறும் கல் மனத்தையும் உருக்கு காட்சி ஆ, ஆ, இவற்றையெல்லாம் நினைத்தால் என் அங்கம் நடுங்குகிறது. என் கை என்னைப் பழிக்கின்றது?

"ஆனால் பணம் - படி - உயர்நிலை -ஆ, இவ்வுலகல் இச்சிறு தெய்வங்களை வேண்டின - இச்சிறு திருவருட்பேறுகளை - இச்சிறு கயிலாயங்களை உயர்வாக மதித்திடின் வஞ்சத்திற்கும் கொலைக்கும் பொய்மைக்கும் அஞ்சக்கூடாது. ஆனால் கொலை! அதைமட்டும் செய்யா திருக்க வேண்டும். ஆயின் இதுவோ! கொலையன்றுதான். ஆயின் கொலையினும் கொடியது! மும்மடங்கு கொடிது! ஆ, கொலைஞராகிய என் போன்றோர் மனமும் இரங்கும் செயலைச் செய்யத் தூண்டுகின்றானே இவன்! இவன் எத்தகையன்! எத்தனை கொலைப்பழி-கொலைப்பழியினும் எத்தனை மடங்கு கொண்ட பழி இவனைச் சார்ந்தது! ஆயினும் அவனைக் குற்றஞ் சொல்ல எனக்கு உரிமை ஏது? என் போன்றோர்-அடிமைகள்-பாலத்தின் அடிமைகள்-கொலைச் செயலின் அடிமைகள் இன்றேல் அவர்கள் பழிசூழ் நெஞ்சம் உலகிற்கு இத்தனை பழி சூழாதன்றோ?

"இவை எல்லாம் பேசிப் பயனென்? நான் துணிந்தேயாக வேண்டும். உரலில் தலையிட்ட பின் உலகைக்குத் தப்புவது ஏது? கழுத்தைப் பாதியறுத்த பின் பாபத்துக்கஞ்சியோ கொலைக்குப் பரிந்தோ பயனென்ன?’ என்றிவ்வாறு பலபடி மனமுளைந்து இறுதியில் தேறிச் சிறைக்கூடம் சென்றான்.

"பெண்ணென்றால் பேயும் இரங்கும்; பிள்ளையென்றால் பித்தும் இரங்கும்’ என்பது பழமொழி; ஹியூபெர்ட், தன் கல்நெஞ்சையும் ஆர்தரது களங்கமற்ற மதிமுகம் கவர்ந்து, தனது மன உறுதியையும் துணிவையும் கலைத்துவிடுமோ, என்றஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்டு சிறையினுட் சென்றான். அவன் பின் இரும்புக் கம்பியைக் காய்ச்ச உதவவேண்டி மூன்று காவலாளிகள் காலன் கையாட்கள்போல் உடன் புகுந்தனர்.

8.சிறுவன் அடைந்த வெந்துயர்

என்றும், வரும்போதே தன்னை நோக்கி வரும் ஹியூபெர்ட் மாமா இன்று முகந்திருப்பிக் கொண்டு வருவதையும் அவருடன் கூடப் புதியவராக அச்சந்தரும் உருவும் நடையும் கைக்கருவிகளும் உடைய மூவர் வருவதையும் கண்டு ஆர்தர் சற்றே அஞ்சினான். அஞ்சி, “மாமா, மாமா, என்னை ஏன் பார்க்காமல் போகிறீர்? நான் இன்று குறும்பு ஒன்று செய்யவில்லையே நல்ல பிள்ளையாய் என் வேலையைச் சரியாய் முடித்து விட்டு உங்களுக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு உங்கள் முத்தம் தரப்படா? மாமா!” என்றான்.

எதிர்பார்த்த இன்குரல், இன்று அவனுக்குப் பெருந்தடங் கலாய் அவன் துணிவுக் கோட்டைகளுக்குப் பேரிடியாயிற்று; கோட்டையின் வெளிச்சுவர் துளைக்கப்பட்டது; உட்சுவர் நகர்ந்தது; கடுமனைகூட அதிர்ந்தது. ஆனால் வெளிக்கு மாறுதல் எதனையும் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

கையாட்களுள் ஒருவன், விழுங்கும் பார்வையாக முறைத்துப் பார்த்து, “டேய், பேசாதிரு; அல்லது உன் வாயை மூடிவிடுவேன்” என்று கூறிவிட்டு சென்றான். உள்ளே சென்ற நால்வரும் அரைமணி நேரம் காணவில்லை.

ஆர்தருக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று ஏதோ புதிய செய்தி நடக்க இருக்கிறது என்றமட்டில் அவன் சிறிய மூளைக்கு எட்டியது. அல்லாவிடில் ஹியூபெர்ட் மாமா இப்படிப் பேசாமல் போகமாட்டார்.

‘அவர் சீற்றமடையும்படி நான் என்ன தப்புச் செய்தேன்’ என்று அவன் தான் செய்த யாவற்றையும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தான். ‘இது தான் தவறோ, அதுதான் தவறோ’ என்று பலவும் நினைத்தான்.

பின் அம்மா இல்லாத நேரம் மாமாவும் மனத்தாங்கலடைய லாயிற்றே என்று நினைத்தான். தான் இங்கே அடைப்பட்டிருப்பது போல் தன் அம்மாவும் அடைப்பட்டிருப்பாளோ என்று நினைத்தான்.

அம்மாவை நினைத்தவுடன் இச்சிறு நெஞ்சில் அடைப்பட் டிருந்த துயரெல்லாம் மேலெழுந்து அவன் விம்மி விம்மி அழுதான். ஹியூபெர்ட் வருமுன் காய்ந்த கண்ணீருடன் அவன் உறங்கிவிட்டான்.

அந்தோ பஞ்சணை மெத்தை அழுத்தும் எனப் பதைத்தழும் இயல்புடைய அப்பாலன்; கடுமுகம் காணப்பெறாத அப்பாலன்; மைதீட்டப் பெறாத கண்களை உடைய அப்பாலன்; இன்று தன் உயிர்க்கு உலை வைத்தாகிறது என்று எப்படி அறிவான்? அறிந்தால் உறங்குவானா? ஒரு நொடியில் தமக்கு வர இருக்கும் முடிவு அறிந்தால் அக்கண்கள் தாம் துயிலில் மூடுமா?

பாலுக்கழுது தாய் மார்பில் கிடந்துறங்குவது போல் உறங்கும் அப்பாலன் முன் காவலர் மூவரும் உருக்கிய இருப்புப் பாளங்களுடன் வந்தனர். அவன் உறங்குவது கண்டு உறங்குப வரைக் கொல்லவோ ஊறு செய்யவோ படாதென்னும் பழஞ்சொல்லை உன்னி அவக்ள் ஹியூபெர்ட்டிடம் அவனை எழுப்பக் கோரினார்.

9.கொலைஞன் கூட மனிதனே

ஹியூபெர்ட் எங்கே தான் கண்கொண்டு கண்டால் தாங்க முடியா தென்றாகி விடுமோ என்று அஞ்சி வேண்டுமென்றே பின்தங்கி நின்றான். கூப்பிட்ட பின்னும் முகமூடியணிந்து உடைமாற்றி உள் வந்து மாறிய குரலில், “ஆர்தர், ஆர்தர்” என எழுப்பினான்.

உருமாறினும் குரல் மாறினுங்கூட இயற்கை உணர்ச்சி வயப்பட்டு அச்சிறுவன் எழுந்தவுடன் ஹியூபெர்ட் காலைக் கட்டிக்கொண்டு, “மாமா மாமா இன்று ஏன் இப்படி என்னுடன் பேசாமற் போனீர்? ஏன் இன்னு என்னிடம் முகத்தையும் மாற்றிக் கொள்கிறீர்? எண்ணி எண்ணிப் பார்த்தும் ஒரு பிழையும் நான் செய்ததாக நினைவில்லையே! அப்படியிருந்தால் கூட அதற்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வேன். முகத்தை மட்டும் மாற வைக்காதீர் மாமா!” என்றான்.

வடியும் கண்ணீரைத் துடைக்க வகையின்றிக் கம்மிய குரலில், “சிறுவ என் மனத்தைக் கலைக்காதே, உன் கண்களை இன்று நான் பழுக்கக் காய்ச்சிய இரும்புகளால் தோய்த்து அழிக்கவேண்டும். இது மன்னன் கட்டளை” என்றான்.

பையன் திகைத்தான். பின் துடிதுடித்து அவன் முழந்தாள்களுக் கிடையில் முகத்தை மறைத்துக் கொண்டு, ’மாமா, மாமா! என்ன சொற்கள் சொன்னீர்கள்? என் காதில் என்ன சொற்கள் விழுந்தன? அல்லது இதுவெல்லாம் என் கனவா?" என்று கேட்டு நடுங்கினான்.

மிகுந்த முயற்சியுடன் தன்னை அடக்கிக் கொண்டு ஹியூபெர்ட் மீண்டும், “கனவில்லை நனவுதான். ஆனால், அதனை நான் செய்யவும் மாட்டேன். கூட இருந்து பார்க்கவும் மாட்டேன். என்னை அழைக்காதே” என்று கூறிவிட்டுக் காவலாளிகளைப் பார்த்து, “விரைவில் உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்; நான் அப்பால் செல்கிறேன்” என்றான்.

பையன் அம்மனிதர்களைக் கண்டஞ்சி ஹியூபெர்ட்டின் காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ’மாமா, நான் இறப்பதாயினும் இறக்கிறேன்; அழாமல் இறக்கிறேன்; உன் கையாலாவது இறக்கட்டுமே. இந்த மனிதர்களைப் பார்க்க அச்சமாயிருக்கிறது. இவர்களைச் சற்றே போகச் சொல்" என்றான்.

ஹியூபெர்ட் வேறு வகையின்றி அம்மூவரையும் சற்று அப்பால் போகச் சொன்னான்.

ஆர்தர் அழுதுகொண்டே, “ஹியூபெர்ட், இந்தத் துன்பத்திலும் கடவுள் உங்களை அனுப்பினாரே, அதற்கு நான் நன்றி செலுத்தவேண்டும். நீங்கள் என்மீது ஒரு துரும்பு கூட விழப்பொறுக்கமாட்டீர்கள்; நீங்கள் எனக்குத் தீங்கு செய்யும்படி யாரோ உங்களைத் தூணடியிருக்க வேண்டும். அந்தச் சிற்றப்பா தானே! அவருக்குத்தான் நான் என்ன தீங்கு செய்தேன்! நான் அந்த ஜொஃப்ரேயின் மகனானால் என்ன? ஐயோ, ஈசனே! என்னை வேறு யார் மகனாகவாவது பிறக்கச் செய்யப்படாதா? ஏன், என் மாமா, உங்கள் மகனாகப் பிறக்கச் செய்தால்கூட நன்றாயிருந்திருக்குமே; அப்போது அந்தச் சிற்றப்பா என்னைக் கொல்ல வந்தால்கூட நீங்கள் தடுத்து என்னைத் தப்ப வைப்பீர் களன்றோ?” என்று பலவாறு பிதற்றித் தன் கண்ணீரால் ஹியூபெர்ட்டின் முழந்தாளையும் காலடிகளையும் கழுவினான்.

முதலில் அவன் அழுவதைக் கவனிக்காமல் மீண்டும் ஓடிப்போய்க் காவலாளிகளை அனுப்பலாம் என்றெண்ணினான் ஹியூபெர்ட். பின் அரசனையும் அவனால் வாழ்வையும் விட்டு இப்பையனுடன் அயல்நாட்டுக்கு ஓடிவடலாமா என்று நினைத்தான். இறுதியில் இரண்டுக்கும் பொதுவாக அவனை அங்கேயே மறைத்து வைத்து, கூறியபடி கண்ணவித்ததால் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, அமைதி ஏற்பட்டபின் அவனை வேறிடம் அகற்றலாம் என்று தீர்மானித்தான்.

இத்தீர்மானத்தால் ஆர்தர் கழுத்தைச் சுற்றியிட்ட காலன் பாசக்கயிறு ஒரு சில நாட்களுக்குத் தளர்த்தப்பட்டது.

10.நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்

ஆர்தர் இறந்துவிட்டான் என்று கேட்டதே ஜான் தன் பகையின் முக்காற்பங்கும் அழிந்துவிட்டதாகக் கொண்டு மகிழ்ச்சியடைந்தான். அவன் துன்பங்கள் ஓய்ந்துவிட்டன என்று கொள்வதற்கில்லை. பொது மக்கள் கிளர்ச்சியும் பெருமக்கள் எதிர்ப்பும் இன்னும் ஓயவில்லை. திருப்பெருந் தந்தையின் எதிர்ப்பும், அதனால் ஏற்பட்ட ஃபிலிப்பின் படை எடுப்பும் இன்னும் இங்கிலாந்தரசன் நிலைக்குக் குந்தகமாகவேயிருந்தன. உண்மையில் இவையனைத்தும் தற்போது ஒரே எதிர்ப்பாகக்கூட ஒன்று சேரத்தொடங்கின. மக்கள் பலர் ஜான் மீதுள்ள வெறுப்பால் ஃபிலிப்பின் கொடியின் கீழ்ச்சென்று சேர்ந்தனர். இவருள் அன் ஆட்சியை எதிர்க்கும் குடிகளும், திருப்பெருந்தந்தையின் தூண்டுதலுக்காளான சமயத் தலைவரும், சமயப் பற்றுடையாரும் ஜானின் தன்னாண்மைக் கண்டு மனம் புழுங்கிய பெருமக்களும் இருந்தனர். ஆனால், இத்தனை பகைவர்கள் பகைமைக்கும் அச்சாணியாயுள்ளது ஆர்தரின் உயிரே என்று அவன் நினைத்ததனால் அவன் இனி மற்றப் பகைகளுக்கு அஞ்ச வேண்டுவதில்லை என்று நினைத்தான்.

ஆனால், தான் நினைத்தது தவறு என்றும், ஆர்தரின் உயிர் இருப்பதைவிடப் போவதுதான் தனக்கு எமன் என்றும் அவன் விரைவில் உணரலானான்.

ஆர்தர் இறந்த செய்தி கேட்குமுன்னமே அவன் பாவி ஜான் கையில் பட்டதனால் வாழான் என்றறிந்து கான்ஸ்டன்ஸ் மனநைந்துருகி வாடி வந்தாள். இப்போது அவன் இறந்தான் என்பதையும் இன்ன வகையில் இறந்தான் என்பதையும் கேள்விப்பட்டு அனலிற்பட்ட சருகெனப் பொசுங்கி மாய்ந்தாள்.

ஆர்தர் இறந்தான் என்ற செய்தி காட்டுத்தீப்போல் பரவியது. ஜான் எவ்வளவு தனக்கும் அதற்கும் யாதொரு ஓட்டும் கிடையாது என்று கூறினும் அதனை யாரும் நம்பவில்லை. அவனே கொன்றிருக்க வேண்டும் என்றும், ஹியூபெர்ட் மூலமே கொல்வித்திருக்க வேண்டும் என்றும் முடிவு கட்டினர். கட்டி அவ்விருவரையும் எதிர்த்தழிப்பதென எழுந்து நாற்புறமும் கிளர்ச்சி செய்து ஃபிலிப்புக்கு உதவ முன்வந்தனர்.

திருப்பெருந்தந்தையும் ஃபிலிப்பும் ஜானுக்கும் எதிராக நின்றபோதும் பொதுமக்களுள் ஒரு பெரும் பகுதியினர் ஃபால்கன் பிரிட்ஜ் தலைமையில் அயல் நாட்டினான திருப்பெருந்தந்தையுடன் சேராமல் ஜானுக்கே துணையாக நின்றனர். இப்போது ஆர்தர் இறந்ததனால் அரசனுக்கு நன்மை வருவதற்கு மாறாக அவர்கள் எதிர்க்கட்சியில் சேரும்படி யாயிற்று. போதாக்குறைக்குப் பெருமக்கள் சிலர் ஹியூபெர்ட்டைப் பிடித்து, “நீ தானேடா ஆர்தரைக் கொன்றவன்?” “நீதான்டா இத்தீய மன்னன் காசை வாங்கிக் கொண்டு இத்தகை எண்ணற்ற சொலைகளைச் செய்தவன்” என்று கூறி நையப் புடைத்தனர்.

அடி பொறுக்காமலும், ஆர்தரின் உயிரின் நிலையைக் கண்டும் ஹியூபெர்ட் எல்லோரிடமும், “ஐயன்மீர், வீணில் சினங்கொண்டு என்மீது பாயாதீர்கள்; நான் ஆர்தரைக் கொல்லவில்லை என்பது மட்டுமன்று; அவன் சாவவேயில்லை என்பதற்குக் கூடத் தெளிவு கட்டிவிடுகிறேன். அவன் இன்னும் சிறையில் உயிருடன்தான் இருக்கின்றான். வாருங்கள் காட்டுகிறேன்” என்றான்.

மக்கள் அச்சொல்லில் நம்பிக்கை கொள்ளவில்லை யாயினும் சிறை சென்று பார்ப்போமே என்று பின்சென்றனர். ஜான் தன்னிடம் ஹியூபெர்ட் ஆர்தரைக் கொன்றுவிட்டதாகக் கூறியது பொய் என்றும், அவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்றும், கண்டான் ஆயினும் அதனால் முனிவதற்கு மாறாக மகிழ வேண்டும் நிலை வந்திருக்கிறது. என்னே இறைவன் திருவுளத்தின் போக்கு! மனிதன் ஒன்று நினைக்க அது பிறிதொன்று நினைத்து விடுகிறது.

11.வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன்

சிறையில் கண்ட அலங்கோலக் காட்சி அவர்கள் அனைவரையுமே திகைக்கச் செய்தது. மனிதர் கையால் சாவாது பிழைத்த ஆர்தர் நேரிடையாகவே எமன் கையில் சென்று சேர்ந்தான். அவன் மனத்தில், ’என்னவோ ஒருநாள் ஹியூபெர்ட்டின் கனிந்த உள்ளத்தால் பிழைத்தோம்! எப்படியும் இன்னும் வேறு யாரேனும் வந்து என்னைக் கொலை செய்யக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. மேலும் இரவெல்லாம் அன்று கண்ட காவலாளிகளின் மயிர் சிலிர்க்க வைக்கும் உருவங்களும் விழிகளும் அவன் விழிகளின் முன் வந்துநின்று அவன் துயிலை ஒழித்து அவனைக் கொல்லாமல் கொன்றன. அவற்றைப் பொறாமல் அவன் தப்பியோட எண்ணினான். அதற்கேற்ப, அவன் இறந்துபோனான் என்ற நினைவில் காவலர் அசட்டையாய்க் காவல் காத்தனர். ஆகவே, ஆர்தர் எளிதில் பலகணி வழியாகக் குதித்தன். எதிர்பார்த்ததை விட வெளியிடம் மிகவும் பள்ளமாயிருந்ததனால் அவன் விழுந்து நொறுங்கி விட்டான். அச்சமயமே ஹியூபெர்ட்டும் மக்களும் அவனைக் காண வந்த நேரம்.

மக்கள் இக்காட்சியால் மனம் பதைத்த அளவு ஹியூபெர்ட்டும் ஜானம் கூடப் பதைத்தனர்.அதோடு நான் கொலை செய்யாதுவிட்ட ஆர்தர் எப்படி இறந்தான் என்றும் வியப்படைந்தான் ஹியூபெர்ட். ஆனால், அவன் கதையெல்லாம் மக்கள் எப்படி நம்புவர்? அவர்கள், “ஹியூபெர்ட்டே இப்பாலனைக் கொன்றவன். அவனைப்பிடி, அடி, வெட்டு, கொல்லு, சிதை” எனச் சூழ்ந்து ஆரவாரித்தனர்.

இதற்கிடையில் ஃபிலிப் இங்கிலாந்தில் இறங்கிப் படையுடன் முன்னேறினான். அவன் படை வரவர வளர்ந்தது. ஃபால்கன் பிரிட்ஜ் அவனை எவ்வளவோ தடுக்கமுயன்றும் தடுக்க முடியவில்லை. ஆனால், ஆர்தரின் முடிவு அவனுக்கு எதிராயிருந்தது. அவனுக்கு இப்போது தீயவனான ஜானை எதிர்க்கவும் முடியவில்லை; ஏனெனில் அவனை எதிர்ப்ப தாயின் இங்கிலாந்தை எதிர்க்க வேண்டும். இங்கிலாந்தைக் காக்கவும் முடியவில்லை. ஏனெனில் அதைக் காக்க வேண்டு மானால் ஜானுக்கே துணை செய்யவேண்டும். இக்குழப்பத்தி லிருந்து தவிர்வது எப்படி என்று அவன் தெரியாது விழித்தான்.

ஹியூபெர்ட், ஃபாலகன் பிரிட்ஜ், ஜான் இவர்கள் அனைவருக்கும் தத்தம் முயற்சியில் சோர்வும், தயக்கமும், குழப்பமும் ஏற்பட்டு இனி இங்கிலாந்தின் எதிர்காலம் என்ன வாகுமோ ன்ற கவலைக்கிடமான நிலையில் அத்தனையையும் இறைவன் எதிர்பாரா வகையில் தெளிவுப் படுத்தினான்.

அவ்வனைவரும், “ஜான் திடீரென்று குளிர் காய்ச்சல் கண்டு இறந்தான்” என்று கேட்டனர்.

ஜான் தனது வாழ்வினால் இங்கிலாந்திற்குச் செய்யாத நன்மையைத் தன் இறப்பால் செய்தான். அவன் இறந்ததே திருப்பெருந் தந்தையின் சினம் தீர்ந்தது; மக்கள் சினம் தீர்ந்தது. ஃபிலிப்பை விட்டு மக்கள் விலகவும், அவன் இறக்கைகள் அற்ற பறவைபோல் தன் நாடு சேர்ந்தான். இங்கிலாந்துச் செல்வி ஜானின் மகனாகிய மூன்றாம் ஹென்றியை அரசனாகப் பெற்று மீண்டும் திருவும் நல்வாழ்வும் பெற்று ஓங்கலானாள்.

அதேன்ஸ் நகர்ச் செல்வன் தைமன்

** (Timon of Athens)**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  தைமன்: அதேன்ஸ் நகரின் ஒப்பற்ற செல்வ வள்ளல். நன்றி கொன்ற மனிதரை வெறுத்துக் காட்டில் விலங்குடன் வாழ்ந்தவ்ன்.

2.  லூஸியஸ்: தைமன் பொய் நண்பர்கள். அவன் கொடையால் வளர்ந்து அவனிடம் நன்றிகெட்ட பதர்களுள் தலைமையானவர்கள்.

3.  லூகிலஸ்:

4.  ஃபிளேவியஸ்: தைமனின் உண்மை மிக்க மேலாள்.

5.  அல்கிபியாதிஸ்: அதேன்ஸ் நகரின் படைத்தலைவன். நகர மக்களால் நகர் கடத்தப்பட்டுப் பகைவனாய், தைமன் பொருளுதவி பெற்று நகரை அழித்தவன்.

** கதைச் சுருக்கம்**
அதேன்ஸ் நகரின் ஒப்பற்ற செல்வனும் வள்ளலுமான தைமன் தன் உண்மையுள்ள மேலாளான ஃபிளேவியஸின் சொல்லைத் தட்டி லூஸியஸ், லூகிலஸ் முதலிய நண்பர்களுக்குச் செல்வமனைத்தும் கொட்டி இறைத்து அவர்கள் நன்றியின்மை கண்டபின் மனித வகுப்பையே வெறுத்து, பொய் விருந்தொன்றில் அவர்களுக்கு ஈரமண்ணும உப்பும் தந்து அடித்து அவமதித்துத் துரத்தியபின் காட்டிற்குச் சென்ற விலங்குடன் விலங்காய் வாழ்ந்து மனிதரைப் பேய்போல் எதிர்த்து வந்தான்.

அங்கே அவனைப் பார்க்கச் சென்ற ஃபிளேவியஸைக்கூட ஏற்காது அனுப்பிவிட்டான். ஆனால் அதேன்ஸின் படைத் தலைவனாயிருந்து நகர் கடத்தப்பட்ட அல்கிபியாதிஸ்தான் அதேன்ஸை அழிக்க விரும்பியதாகச் சொல்லியதால், தைமன் காட்டில் தான் கண்ட பொருட்குவையைக் காட்டி அதன்மூலம் அதேன்ஸை அழிக்க அவனுக்கு உதவினான். அல்கி பியாதிஸுக்காற்றாது சென்ற லூஸியஸ், லூகிலஸ் முதலிய செல்வரை அவன் கல்லாலடித்துத் துரத்திவிட்டான்.

1.வள்ளல் பெருந்தகை

பண்டைய உலகில் கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒப்பற்ற நகரம் அதேன்ஸ்.

அந்நகரில் கனைகடல் கடந்து வாணிபம் செய்யும் நாவாய்ச் செல்வரும், நானிலம் ஆண்டு திறைகொணரும் அரசுரிமைச் செல்வரும், கல்விச் செல்வரும், கலைச் செல்வரும் நிறைந்திருந்தனர்.

ஆனால், அச்செல்வரது செல்வமனைத்தும் திரண்டு தவஞ் செய்யினும் அண்ட முடியாத அரும்பெருஞ்ச செல்வத் தொகுதியுடையான் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தைமன் என்பது. அவனது கொடையும் வள்ளன்மையும் அச்செல்வத்தினும் பெரிது என்னலாம்.

நூறாயிரம் படைத்தவரும், கோடி படைத்தவரும் அவன் வாயிலில் இரவரலாக வந்து நின்றனர். மன்னர், பேரரசர் முதலியோருள் போர் மறத்திற்கஞ்சி தலை வணங்காதவரும் அவனது பேரறத்திற்கும் கொடைக்கும் அஞ்சித் தலைவணங்கினர்.

அவன் கொடை, முகிலின் கொடை போன்றது. மலைமீதும் கடல் மீதும் நாட்டின் மீதும் காட்டின் மீதும் முள் மீதும் மலர் மீதும் வேற்றுமையின்றிப் பெய்யும் மழைபோல அது, அரசனையும் ஆண்டியையும் தக்காரையும் தகாதாரையும் ஒன்றுபோல மகிழ்வித்தது.

கேட்டவர் கேட்டதெல்லாம் கேட்டபடியே கொடுக்கும் முதல் ஏழு வள்ளல்களை ஒப்பான் அவன். கேட்பவர் நிலையையோ, கேட்கும் பொருளின் விலையையோ, கேட்போர் உள்ளத்தின் நேர்மையையோ அவன் உசாவுவது மில்லை. உசாவ விரும்புவதுமில்லை.

வற்றாத கடல்போல் எடுக்க எடுக்கக் குறையாத அவன் செல்வக் குவையின்றி வேறெதுவும் அவன் கொடையின் அளவுக்கு ஒரு நொடிகூட ஆற்றியிராது. ஏனெனில், இல்லார் இரப்பினும் உள்ளவர் இரப்பதே அவனிடம் மிகுதியாயிருந்தது.

அவன் கொடையின் தன்மை அறிந்து கொடாத தீய செல்வர் பலர் அக்கொடையைப் பெறுவதே தம் செல்வத்தைப் பெருக்க மிகவும் எளிதான வழியென்று நினைத்துப் பிற தொழிலையெல்லாம் விட்டு அவனிடம் போய் இரந்து கொள்ளையடிப்பதே தம் தொழிலாகக் கொண்டுவிட்டனர்.

அவன் பிறர் குறிப்பறிந்தீபவன். ஒருவர் ஒரு பொருளை வேண்டும் என்று கூறவோ தருக என்று கூறவோ அவன் காத்திருப்பதில்லை. அது தனக்கு விருப்பம் என்றோ அல்லது அக்குறிப்புத் தோன்ற அதனைப் புகழ்ந்தோ அது நன்றென்றோ கூறிவிட்டாற் போதும்; அப்பொருள் அதனை விரும்பிய வனறியாமல் நன்கொடையாகவோ பரிசிலாகவோ அவன் வீட்டையடைந்து அவனை மகிழ்வித்து நிற்கும்.

இதனை அறிந்த பலர் அவனிடம் பொய் நட்புப்பூண்டு சமயமறிந்து அவன் அரிய பொருள்களுள் எதையும் சற்றே புகழ்ந்து அதைக் கைக் கொள்ளலாயினர். இன்னும் சில சூழ்ச்சிக்காரர் அவனுக்குத் தாம் நன்கொடை தருதாக நடித்து அவன் அதற்கு மாறாகத் தரும் ஆயிர மடங்கு விலைபெறும் நன்கொடைகளை நகைமுகத்துடன் பெற்று மகிழ்ந்தனர்.

2.செல்வ நிலையாமை

இங்ஙனம் ஆண்டுகள் பல கழிந்தன. மலைபோன்ற பொருட் குவைக்கும் ஒரு முடிவுண்டன்றோ? அவன் உடைமைகளின் மேற்பார்வை- யாளனாகிய ¹ஃபிளேவியஸ் எத்தனையோ தடவை அவன் பொருட்குவை குறைந்து வருவதைக் குறிப்பாயும், வெளிப்படையாயும் கூறிப் பார்த்தான். தைமன் அவற்றை இம்மியும் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை.

நில உடைமைகளும் ஒவ்வொன்றாக ஈடு வைக்கப்பட்டன. பின் அவை விற்கப்பட்டன. அப்படியும் தைமன் கொடையின் அளவு மிகுந்ததே தவிரக் குறையவில்லை. வீட்டுப் பொருள்களும், பொன் வெள்ளித் தட்டக்களும் நகை நட்டுக்களும் விற்கப்பட்டன. “இனி ஒன்றுமில்லை, ஐயேன!” என்ற ஃபிளேவியஸ் சொல் ஒருநாள் திடீரென அவன் உணர்வில் சென்றெட்டியது.

தைமன்: என்ன என்முன் என்ன சொல்கிறாய்? ஒன்றுமில்லையா? அதுவுந்தான் வந்து சொல்வானேன்? எதேனும் நிலத்தை அடகு வைத்தாவது இந்தத் தவணை காரியம் முடிக்கப்பட்டதா?

ஃபிளேவியஸ்: அப்படித்தான் இப்போது பல நாளாய் நடந்து வருகிறது ஐயனே! ஆனால், தற்போது யாவும் அடகு வைத்துத் தீர்ந்து விட்டன. ஒன்றும் மீதி இல்லை. தம்மிடம் அடிக்கடி தம் பொருளை வீணாக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் தாங்கள் செவியேற்கவில்லை. அதன் பயனை இனி நாம்தாம் துய்க்கவேண்டும்.

தைமன்: என்ன ஃபிளேவியஸ்! அப்படி ஒன்றும் நான் வீணில் செலவு செய்யவில்லையே! கொடையிலும், குணக் குன்றுகளான நண்பாகளுக்- குதவியும்தானே மிகுதியான பொருள்களையும் செலவழித்திருக்கிறேன். என் பணம் என்னிடத்திலிருந்தாலென்ன, என் நண்பர்களிடத்திலிருந்தா- லென்ன?

ஃபிளேவியஸ்: அப்படியன்று, ஐயனே தங்கள் பொருள் உலக முழுமைக்கு உரியதாயிருக்கலாம். ஆயினும் உலகின் பணம் தம் பணமாய் விடும் என்று நீர் கனவிலும் கருதவேண்டா!

தைமன்: உன்னைப் பேசவிட்டால் நீ இப்படி என் நண்பாகளையும் என்னையும் தூற்றுவாய் போலிருக்கிறதே! ஏன், ¹லூஸியஸுக்கு இடுக்கண் வந்த காலை உதவிய ஒரு மூன்று நூறாயிரமும், ²லூக்கிலஸுக்கு உதவிய முப்பது நூறாயிரமும் நற்பயனளித்து அவர்கள் செல்வ நிலையைச் சீர்படுத்தி விடவில்லையா? அவர்களுக்குக் காலத்தினாற் செய்த உதவிக்கு அவர்கள் இரட்டியோ பத்திரட்டியோ மகிழ்வுடன் கொடுப்பார்களன்றோ? அப்படியிருக்க இன்று வேண்டிய இச்சிறு தொகைக்கா நீ கவலைப்பட வேண்டும்.

ஃபிளேவியஸ்: ஐயனே! தாம் கடவுள் தன்மையுடையவர், கடவுளை அறிந்தவர். ஆனால், மனிதரையும் மனித உலகையும் நாம் அறியவில்லை. அறிவீர் விரைவில்.

(என்று கூறி, ஃபிளேவியஸ் விலகிச் சென்றான்.)

3.போலி நண்பர்

தைமன் அதன்பின் லூஸியஸ் வீட்டை நாடிச் சென்றான்.

தொலைவில் நின்றே தைமன் வருவது கண்ட லூஸியஸ் ஏதோ தனக்கு அன்று பெரும்பேறு வரப்போகிறது என்றெண்ணி மகிழ்ந்து ஓடோடியும் வந்தெதிர் கொண்டு சிவிகையேற்றிச் சென்றான். சென்று தன் பொற்கட்டிலில் இருக்கச்செய்து, ’ஐயனே! இச்சிறு குடில் தம் வரவுக்கு எத்தனை புண்ணியம் செய்ததோ; தம் வரவு நல்வரவாகுக! தம் விருப்பம் எதுவாயினும ஈடேறுக!" என்றான்.

தைமன் தன் நண்பர் நன்றியறிதலுக்கு மகிழ்ந்து, "அன்பனே, வேறொன்றுமில்லை. இன்று ஃபிளேவியஸினிடம் ஒரு காரியமாகப் பணம் கேட்டதற்குப் ‘பொருட்குவை முற்றிலும் செலவாயிற்று’ என்று சொன்னான். சொல்லிப் பெருமூச்சு விட்டு அழத் தொடங்கினான். நான், ‘போடா முகடி, இதற்குக் கவலையா படுவது?’ என்று கூறிவிட்டு உன்னிடம் வந்தேன் என்றான்.

லூஸியஸ் அன்பு கனிந்த குரலில், “அதற்கென்ன ஐயனே! இந்த அதேன்ஸ் முழுமையும் தங்களதே. நானும் தங்கள் உடைமையே. வேண்டிய பொருளை எடுத்துச் செலவு செய்துகொள்ளுங்கள். தங்களைப் போன்ற வள்ளல்களுக்குக் கொடுப்பதென்றால், அது கொடை கூடவன்று; தாம் தாம் ஒரு நொடிக்குள் அதன் பத்திரட்டி கொடுப்பவர்களாயிற்றே!” என்றான்.

லூஸியஸ் மொழிகள் கேட்டுத் தைமன் இறும்பூது எய்தியவனாய் மனத்திற்குள் இத்தகைய நண்பர்கள் தம்மை அறியாது பேசிய ஃபிளேவியஸை நன்கு ஏளனம் செய்ய வேண்டுமென்று எண்ணங் கொண்டான்.

பின் அவன் லூஸியஸை நோக்கி, “உனது பெருமிதக் குணத்தையும் என்பால் உனக்குள்ள அன்பையும் நான் அறிவேன். லூஸியஸ்! நான் இழந்த உடைமைகளுக்கெல்லாம் இவ்வன்பு எனக்குப் போதிய கைம்மாறும் ஆறுதலும் ஆகும் என்பது உறுதி” என்றான்.

லூஸியஸ் மனத்தில் இப்போது ஒரு சிறு ஐயம் ஏற்பட்டது. “என்ன, உடைமை எல்லாமா? அப்போது நில உடைமைகளுமா போயின?” என்றான் அவன்.

"ஆம் அன்பே! என்றான் தைமன்.

லூஸியஸ் முகம் சடக்கென மாறிற்று. அவன் கண்கள் சிறுத்துக் கூர்ந்தன; அவன் உதடுகள் துடித்தன. அவன் அமைந்த குரலில், “அப்படியாயின் அன்பனே! உமக்குக் கட்டாயம் உதவ வேண்டும்” என்று கூறி உட்சென்று பெட்டியைத் திறந்து திறந்து அடைப்பதுபோல் நடித்துப பின் வெளியே வந்து, “ஆ என் தீவினை இருந்தவாறு! நேற்று ஒரு நண்பனுக்குக் குறைந்த விலையில் ஒரு பெரு நிலக்கிழமை விற்பனைக்கு வந்ததால் அதனை வாங்கிக் கொடுத்தேன். அதற்காக, ஒவ்வொரு செப்புக்காசும் திரட்டப்பட்டுச் செலவாயிற்றே. தம்போன்ற வள்ளல்களுக்கு உதவும் பெரும்பேற்றிலிருந்து இறைவன் என்னை விலக்கி வைத்து விட்டான் என்று வருந்துகிறேன். எப்படியும் தாங்கள் லூக்கிலஸ் வீடு செல்லுங்கள். அவன் கட்டாயம் உங்களுக்கு உதவி செய்யக்கூடும்” என்றான்.

“நான் தங்கள் உடைமை” என்ற பழைய வாக்கையும், “லூக்கிலஸ் வீடு செல்லுங்கள்; அவன் கட்டாயம் உங்களுக்கு உதவக்கூடும்” என்ற தற்போதைய வாக்கையும் ஒப்பிட்டு நோக்கினான் தைமன்.

உண்மையில் தைமன் லூக்கிலஸைப் பார்க்குமுன் லூஸியஸின் ஆள் ஒருவன் லூக்கிலஸினிடம் விரைந்து சென்று தைமன் இன்னதென அவனுக்குக் கூறிவிட்டான்.

லூக்கிலஸ் முதலில் இதனை நம்பக்கூடவில்லை. “நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் விளையாட்டுக்களுள் ஒன்றா இது” என்று நினைத்தான் அவன்.

தூதன் மீண்டும் வற்புறுத்திக் கூறியபின், அவன் லூஸியஸினும் கடுமையாகத் தைமனைத் தொலைவிலேயே விலக்க எண்ணினான். ஆகவே, அவன் தன்னிடம் வந்தபோது அவனை எதிர்கொள்ளவோ வரவேற்கவோ செய்யாமல் கடுகடுத்து, “என் அறிவுரைகளுக்கு மாறாகப் பணத்தை வீண்செலவு செய்து ஓட்டாண்டியானதன் பின் என் தலைமீது உட்காரலாம் என்று வந்தீரோ? நாங்களும் உம்மைப்போல் சோம்பேறிக் கூட்டங்களை வைத்து நடத்தும் சோம் பேறியல்லேம்” என்று கூறி அவனைத் துரத்தினான்.

அதேன்ஸின் தைமன் வீட்டில் நாய்போல் கிடந்த பெருமக்களும் செல்வரும் ஒருவரேனும் நன்றியோ பரிவோ காட்டாது இதேபோன்று கடுமொழிகளே கூறினர்.

4.தைமன் பழி

பிள்ளைகள் மனம்போல் சூதோ களங்கமோ இன்றித் தூய்மையாய் இருந்த தைமன் உள்ளம் சட்டெனத் துடித்து நடுங்கிற்று. தான் இதுகாறும் சாந்தடைத்தவை எனக் கொண்ட செப்புக்கள் பாம்பகங் கொண்டவை என்று கண்டு பதறினான் அவன்.

பெண்ணென நம்பிப் பேயையடைந்தவன் போலவும், துணையென நம்பித் திருடனை உடன்கொண்டு பயணம் செய்த வழிப்போக்கனைப் போலவும், நறிய அமுதென நம்பி நஞ்சினை உட்கொண்டவன் போலவும் பதைபதைத்தான் தைமன்.

அவன் மனம் உலகை வெறுத்தது. மனித வகுப்பையே வெறுத்தது. அவன் கால்கள் மக்கள் உறைவிடத்தை விட்டு அப்பால் செல்ல விருவிருத்தன. கைகள் மனித உருக் கொண்டதன் உடலையே கீறிக் கிழித்துவிடுமோ என்று படபடத்தன.

அவன் இனி மனிதர் வாழாத காடுகளில் சென்று மனிதனை அழிக்கும் வகைகளிலேயே மனஞ் செலுத்த வேண்டும் என எண்ணினான்.

ஆனால், அதற்கிடையில், கூட இருந்து குரல்வளை அறுத்த தன் படுமோச நண்பர்களுக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் எண்ணினான்.

ஆகவே, அவன் ஃபிளேவியஸ் மூலம் வீட்டை ஒருவனுக்கு அடகு வைத்து ஒரு பெருவிருந்துக்கான வெளிப் பகட்டுக்களில் அதனைச் செலவு செய்தான். பின் தன் பழைய போலி நண்பர்கள் அனைவர்க்கும் வழக்கத்திற்கு மேம்பட்ட உயர்வான முறையில் ஒரு விருந்தழைப்பு விடுத்தான். அவ்வழைப்பை நோக்கிய லூஸியஸ், லூக்கிலஸ் முதலிய எல்லா நண்பர்களுக்கும் வயிறு பகீர் என்றது. “ஐயையோ! அந்தத் தைமன் கபடமற்றவன் என்ற நினைத்து, அன்று அவன் சொற்களை நம்பி ஏமாந்து போய் அவன் தேர்வுப் பொறியில் அகப்பட்டுக் கொண்டோமே. இனி என் சொல்லித் தப்புவோம்!” என்று ஒவ்வொருவரும் தம்மாலியன்றவரை ஆராய்ந்து பொருத்தமான புளுகுகளும் எண்ணி வைத்துக் கொண்டு என்றையினும்விட நல்ல ஆடையணிகளுடன் தைமன் வீட்டுக்கு வந்தனர்.

தைமன் அவர்களை வரவேற்றான். வீட்டில் பழைய பணியாட்- களெல்லாம் விலக்கப்பட்டிருப்பினும். ஒரு நாளைக்கென அவர்களும் வேறு சிலரும் தருவிக்கப்பட்டிருந் தமையால் அவன் உண்மையில் வறுமைப் பட்டதாக அன்று யாரும் நம்பமுடியவில்லை.

ஆனால், உணவு பரிமாறும் இடத்தில் மட்டும் ஒரு பெருமாறுதல் இருந்தது. வழக்கம்போல் பொற்கலங்களும் வெள்ளிக்கலங்களும் பரப்பப் பட்டிருந்தனவாயினும் அவற்றுள் இன்னுணவுப் பொருள்களும் தின்பண்டங்களும் வைக்கப்பட வில்லை. ஈரமண்ணும் உப்புமே கலந்து வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்ட பெருமக்கள் வியப்புடன் தைமனை நோக்கி, “வள்ளலாகிய தாம் ஏன் உணவுக்கு மாறாக இவற்றை எங்கள் முன் வைத்தீர்” என்று கேட்டனர்.

கேட்டதுதான் தாமதம்! எப்போதும்போல் நகைமுகங் காட்டி நின்ற தைமன் உருவம் சடக்கென மாறியது. அவன்முகம் மீண்டும் கடுகடுத்தது. nய் சிரித்தாலென்ன அவன் அவர்கள் செவிகள் செவிடுபடச் சிரித்து, “நன்றி கெட்டவர்களே! இதுவரை நீங்கள் தின்றதெல்லாம், துய்த்ததெல்லாம் ஈரமண்ணுக்கொப்பம் என்று காட்ட ஈரமண்ணும், உங்களுக்க நன்றியில்லாததால் இனியேனும் நல்லுப்பைத் தின்று வாழ்வீர் என்று காட்ட உப்பும் தந்தேன்” என்றான்.

அத்துடன் அவன் சீற்றம் தணியவில்லை. பின்னும் அவன், “உங்கள் உருவம் மனித உருவம். ஆனால், உங்கள் மனம் காட்டு விலங்குகளினும் கீழ்ப்பட்டது. உங்கள் ஊரில் வாழ்வதினும் புலி சிங்கங்கள் வாழும் காட்டிலோ, பேய்களும் பிணங்களும் உறையும் சுடுகாட்டிலோ, வாழ்தல் மேலாம்” என்று கூறிக் கைக்கெட்டிய பொன் வெள்ளிக் கலங்களையும் கண்ணாடிக் கலங்களையும் அவற்றிலுள்ள ஈரமண்ணையும் அவர்கள்மீது அடித்து உடைத்தான். அதனைத் தடுக்க முயன்றவர்கள் மீதும் நாற்காலிகளையும் ¹மேடைப் பலகைகளையும் வீசி எறிந்தான்.

இங்ஙனம் அவமதித்துத் துரத்துகையில் காயம் பட்டோர் பலர். உறுப்புக்கள் ஊறுப்பட்டோர் பலர். ஈக்கும் இரங்கும் அவ்வள்ளல் பெருந் தகைக்கு அன்று இரக்க ஊற்றே வற்றிவிட்டது என்னல்வேண்டும். அவன் ஓடுபவர்களையும், தெருக்கோடி வரைப் பின்பற்றி, “நாய்களே, பேய்களே, வெள்ளிப்பூச்சுப் பூசிய சோற்றுத் துருத்திகளே, பிணங்களே!” என்று பலவாறாக வைது துரத்தினான்.

அதன்பின் அவன் தன் ஆடை அணிகளையெல்லாம் எரியிட்டு அழித்துவிட்டுக் காடு சென்றான்.

5.மனிதப் பேய்களை வெறுத்த பேய்மனிதன்

அதேன்ஸினின்று மிகவும் தொலைவிலுள்ளதொரு நாட்டில் மனிதரே புகமுடியாத இருட் குகைகளில் சென்று தைமன் தங்கினான். மனிதன் உண்ணும் உணவையும் ஒழித்து அவன் இலைகளையும் கிழங்குகளையும் உண்டான். சில நாட்களில் அவன் உடலெங்கும் மயிரடர்ந்த கரடி போலானான். மனித உரு அகன்று விட்டதென்று தெளிந்த சுனைநீரில் பார்த்தபின் களிப்படைந்து கொக்கரித்துச் சிரித்தான்.

அந்தச் சமயம் மனிதர் யாரேனும் அவனிடம் அகப்பட்டால் போதும். கரடி புலியிடம் அகப்பட்டால் கூடத் தப்பியிருக்கக் கூடும். அவனிடம் தப்ப முடியாது; அப்படியே சதை சதையாய்ப் பிய்த்திருப்பான்.

ஒருநாள் அவன் கிழங்குகளை ஒரு கம்பியால் கல்லிக் கொண்டிருந் -தான். அப்போது கம்பியில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. ஓசையால், ‘அது கல்லன்று, செப்புச் சருவமே!’ எனக் கண்டு, அதனை எடுத்துப் பார்க்க, அது பொற்காசுகள் நிறைந்த ஒரு புதையலாயிருந்தது.

அவனுக்குத் திரும்பவும் மனித உலகில் வாழ விருப்பம் இருந்தால் - திரும்பவும் வள்ளலாய்த் திகழ எண்ணமிருந்தால்.

அந்தப் புதையல் அவனுக்கும், அவன் ஏழு தலைமுறை யினர்க்கும் போதியதாயிருந்தது. ஆனால், அவனிடம் மனித அவாக்கள், மனித எண்ணங்கள் எல்லாம் வறண்டு மனம் வற்றற் பாலையாய் விட்டது. அன்பு எனும் பயிரைக் கீழ்ப்பட அழுத்தி மாய்த்து, வெறுப்பு சீற்றமென்னும் களைகள் காடாய் வளர்ந்தன.

அந்நிலையில் அவன் அப்புதையலைக் கண்டதே அச்சங் கொண்டவன் போல், பாம்பைக் கண்டு பதறி அறிவிழந்தவன் போல் உறுத்து விழித்தான். அதனைத் தொட்ட கையைச் சடாரென்று அகல எடுத்துப் பின்னிட எட்டி நின்றான். அவன் உடல் உறுப்புக்கள் எல்லாம் பதைத்துத் துடித்து விம்மின.

“ஐயோ, மனித உலகைக் கெடுக்கும் பேயன்றோ இது! இதை நாட்டில் விட்டுவிட்டு வந்தேன் என்று நினைத்தேனே; இன்னுமா அந்தச் சனி விட்டப்பாடில்லை” என்று கூறிக்கொண்டு அவன் அப்புதையலினின்றும் ஓடினான்.

அன்று முதல் அவன் காடெங்கம், வெறி பிடித்தவன் போல், பேய்போல், பித்தன்போல் அலைந்து திரிந்தான். அவனை ஏனென்று கேட்பாரோ யார் என்று கேட்பாரோ இல்லை. அக்காடு அதேன்ஸ் வாடையென்று மட்டுமல்ல. மனித வாடையேயற்றது என்று கூடச் சொல்லலாம். ஆகவே, பல திங்களாக அவன் மனிதர் முகத்தில் விழிக்கவில்லை. மனிதரும் அவன் முகத்தில் விழிக்கவில்லை. மனிதர் அவன் மறந்தனர்; அவனும் மனிதனை மறந்தான். தான் மனிதருள் ஒருவன் என்பதைக்கூட அவன் மறந்தான். மனிதர் மீதுள்ள வெறுப்பு ஒன்றே அவனுக்கு உயிராருந்தது.

சில சமயம் அக்காட்டினை அடுத்த முல்லை நிலப்பகுதிகளில் அவன் திரியும்போது மாடு மேய்ப்பவரோ வழிப்போக்கரோ நேர்வழி தப்பி அவனைக் காண நேரும். அப்போதும் அவர்கள் அவனை மனிதன் என்று ஐயுற்றதில்லை. விலங்கோடு விலங்காய்த் திரிந்த அவனைப் புதுவகை யானதொரு விலங்கென்றே கருதி என் செய்யுமோ என்று ஓடி ஒளிந்தனர். அதற்கேற்ப அவனும் அவர்களைக் கண்டுவிட்டால் போதும்; நடந்தும் தவழ்ந்தும், தாவியும், குதித்தும் சென்று அவர்கள் யாரேனும் பொறிவாய்ப் பட்டுக் கையிலகப்பட்டால் எமன் கையிலகப்பட்டது போல்தான். வற்றாத ஈகைக்கு ஆட்பட்ட அக் கைகள் அவர்களை இரக்கமின்றிச் சித்திரவதை செய்துவிடும்.

அவன் செல்வனாயிருந்த காலை அவனுக்கு நல்லுரை தந்து புறக்கணிக்கப்பட்ட ஃபிளேவியஸ், காட்டில் நெடுநாள் தேடி அலைந்து இறுதியில் எங்ஙனமோ அவனைப் பார்த்து அடையாளமும் கண்டு கொண்டான். அந்நாளில் அறிவுரை தந்து இந்நாளிலும் மாறாதிருந்த அம்மெய்யன்பனைக்கூடத் தைமன் முற்றிலும் அறிந்து கொள்ள முடியவில்லை. "நீ மனிதனானாலும் உன்னை என்னவோ கொல்ல மனம் வரவில்லை. உண்மையில் நீயும் என்னைப்போல் அரை விலங்குதான் போலிருக்கிறது. போ, பிழைத்துப் போ; ஆனால், திரும்பி மட்டும் வராமற் பார்த்துக்கொள்’ என்ற எச்சரிக்கை ஒன்றுதான் ஃபிளேவியஸின் உறுதியான மெய்யன்புக்கு அவன் கொடுத்த மதிப்பும் கைமாறும்.

6.இருவகைப் பகைவர்

ஒருநாள் அதேன்ஸின் படைத்தலைவனான ¹அல்சிபியாதிஸ் அவ்வழியே வந்தான்.

அல்சிபியாதிஸ் அதேன்ஸின் படைத்தலைவன்! அதேன்ஸின் போர்கள் பலவற்றில் வெற்றியடைந்தவன். ஆனால், நகர்ப் பெருமக்கள் பலர் அவன்மீது பொறாமை கொண்டு அவனை நகர்ப் பகைவனெனக் குற்றஞ் சாட்டினர். அதேனிய அரசியல் அவர்கள் செல்வாக்குக்கு உட்பட்டதாதலின் அதனை ஏற்று அவனை நாடு கடத்திற்று.

அச்சமயம் அல்சிபியாதிஸ் வெற்றி வீரருடன் போர்க்களத்தினின்று திரும்பி வந்துகொண்டிருந்தான்; நகரத்தின் நன்றியற்ற தீர்ப்பைக் கேட்டதுமே அவன் தன் படைவீரரை நகருக்கு அனுப்பாமல் தன்னிடமே வைத்துக் கொண்டு அவர்கள் உதவியால் அந்நகரின் கொட்டத்தை அடக்க எண்ணினான்.

அவனது எண்ணத்திற்கு ஒரே ஒரு பெருந்தடை இருந்தது. அதுவே பொருள்முடை. அவன் கைப்பொருளெல்லாம் செலவானபின் தனக்கும் வீரருக்கும் உணவு முதலிய வாழ்க்கைப் பொருள்கள் தேட வகையின்றித் தவித்தான். வீரருக்குத் திங்கட் கணக்கில் ஊதியமும் கொடுக்கப் படவில்லை. இந்நிலையில் தான் தைமனைக் கண்டான்.

அவனது எண்ணத்திற்கு ஒரே ஒரு பெருந்தடை இருந்தது. அதுவே பொருள்முடை. அவன் கைப்பொருளெல்லாம் செலவானபின் தனக்கும் வீரருக்கும் உணவு முதலிய வாழ்க்கைப் பொருள்கள் தேட வகையின்றித் தவித்தான். வீரருக்குத் திங்கட் கணக்கில் ஊதியமும் கொடுக்கப் படவில்லை. இந்நிலையில் தான் தைமனைக் கண்டான்.

அச்சமயம் தைமன் கீழே குனிந்து ஏதோ நினைத்துக் கொண்டிருந்தான். அதே சமயம் அல்சிபியாதிஸும் ‘அதேன்ஸை எப்படி அழிப்பது? எங்கிருந்து பொருள் பெறுவது?’ என்ற நினைவிலேயே ஈடுபட்டிருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததே அல்சிபியாதிஸ் “இதென்ன, மனிதனாகவும் தோற்றவில்லை; விலங்காகவும் தோற்றவில்லை; அரை விலங்கு உருவமுடைய பேயோ?” என்று நடுங்கி ஓடப்போனான். அதற்குள் தைமன் அவனைக் கண்டு விட்டான். அவன் மனிதன் என்றும் அதேனிய உடையணிந்தவன் என்றும் கண்டு சீறி எழுந்து, ’அதேனிய நாயே, அகப்பட்டாயா; உன்னை என்ன பாடுபடுத்துகிறேன் பார். அதேன்ஸ் மீதுள்ள பழி அனைத்தையும் உன் பேரிலேயே தீர்க்கிறேன் பார்" என்று கற்களை வாரி எறியத் தொடங்கினான்.

அல்சிபியாதிஸ் வீரனாயினும் முன் கண்டறியா இப்பேயுருவம் என்ன செய்யுமோ என்று தயங்கி நின்ற நேரம். அவ்வுருவம் பேசுவதையும் அதுவும் அதேனிய மொழியில் பேசுவதையும் கேட்டுத் திடுக்கிட்டான். பின் அவ்வுருதான் அதேன்ஸின் பகைவன் என்று கூறக் கேட்டதும் அது பேயாயிருந்தாலும் தனக்குதவி செய்ய வல்லதாகக் கூடும் என நினைத்து அச்சந்தவிர்த்து அதனை நோக்கி, “அரைவிலங்கு உருவமுடைய புதுமையான அரைமனிதனே! பொறு; நீ பேயாயினுமாகுக. மனிதனாயினும், அன்றி விலங்காயினு மாகுக. ஒரு செய்தியில் நீயும் நானும் ஒன்று. நானும் அதேன்ஸின் பகைவன்; நீயும் அதேன்ஸின் பகைவன். நீ அதேன்ஸினை அழிக்க விரும்பிக்கொண்டு இங்கு வாளா காட்டில் கிடக்கிறாய். நான் அதேன்ஸை அழிக்கச் சூள் உரைத்து அதற்கான முன்னேற்பாடுகளுடன் இதே காட்டில் காத்திருக்கிறேன்; எனக்கு நீ உதவக்கூடுமா?” என்றான்.

தைமன் அவனைக் கண்டும் காணாதவன்போல் பரக்க நோக்கி, “ஆ, என்ன அடம்! உதவியா உனக்கா? மனித உருவுடைய, அதேனிய உருவுடைய உனக்கா? ஒருகாலும் இல்லை. வேண்டுமானால் நீ அதேனியன் பகைவன் என்று கூறுவதனால் நீ மனிதனாயினும் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். அது ஒன்றுதான் உனக்கு நான் செய்யக் கூடும் உதவி” என்று கூறினான்.

அவன் பேச்சிலிருந்தும் அவன் கூறிய குறிப்புக்களி லிருந்தும் அல்சிபியாதிஸ் அவன் தைமனே என்று அறிந்து கொண்டான். உடனே அவன் தைமன் காலடியில் வீழ்ந்து, “அறிந்தேன், அறிந்தேன், எம் வள்ளற் பெருந்தகையே! எம் வீரப் பெருந்தகையே, அறிந்தேன். வாள்வலியால் அதேன்ஸின் பகைவர்களை அழித்த பெருமை போதாதென்று, அதேனியரையும் பிறரையும் கொடையாலும் வள்ளன்மையாலும் வெட்கித் தலைகுனியச் செய்த மன்னனே! தம்மை இந்நிலையில் காணப்பெற்றனே! தம் உருமாறி எம்முடன் எழுந்தருள்க! இவ் அதேனியப் பதர்களை அழித்துப் புதியதோர் அதேன்ஸை நிறுவி அதில் உம்மை முடிசூடா மன்னாக்குவேன், வருக!” என்று கண்ணீர் கால்களைக் கழுவ விழுந்து கிடந்து புலம்பினான்.

7.பழியிலும் பகைமை

மனிதர் என்ற பெயரையே கேட்கத் தரிக்காத நிலையிலுள்ள தைமன் எப்படியோ அல்சிபியாதிஸின் இச்சொல்மாரியைக் கேட்டுக் கொண்டு அசையாது நின்றான். வெறுப்பே நிறைந்து உணர்ச்சியற்றுத் தோன்றிய அவன் கண்களில் இடையிடையே சில உணர்ச்சிப் பொறிகள் தோன்றித் தோன்றி மறைந்தன. கண்களில் நீர் கலங்கிக் கண்ணீர் விடுவானோ என்ற தோற்றத்தை அவன் அடைந்தான்.

ஆனால் அல்சிபியாதிஸ் பேசி முடிப்பதற்குள் இம்மெல்லிய உணர்ச்சி அலைகள் மறைந்தன. அவன் மீண்டும் பித்தம் பிடித்தவன் போல நின்று நோக்கி, “எனக்கொன்றும் புரியவில்லை. உன்னைக் கொல்லவே மனம் வரவில்லை; போ, நீ மட்டு பிழைத்துப் போ” என்றான்.

அல்சிபியாதிஸ், “நான் போகிறேன். வணக்கம்! ஆனால் அதேனியரை அழிக்கவேணும் உதவப் படாதா?” என்று கேட்டான்.

தைமன்: அதேனியரை அழிப்பதா! ஆம். அழிக்க வேண்டும் எப்படி அழிப்பது! அதுதான் கேள்வி.

அல்சிபியாதிஸ்: தாங்கள் நினைத்தால் எளிது. அதேன்ஸின் போர்வீரர்கள் - வெற்றபெற்று மீளும் போர் வீரர்கள் - என்னுடன் இருக்கின்றனர். தாமோ முன் அதேன்ஸின் பகைவர் நெஞ்சுட்கப் பொருத பெருந் தலைவர். அப்படையின் தலைமை தாங்கி என்னுடன் வரின் அந்நகரை அழிப்போம்.

தைமன் வெளிப்பட யாதென்றும் கூறாமலே, “மாட்டேன்” என்ற குறிப்புத் தோன்றத் தலையை ஆட்டிக் கொண்டு நின்றான்.

பின் ஏதோ நினைத்தவன்போல் நெட்டி எழுந்து அல்சிபியாதிஸைப் பின்வரும்படி சைகை செய்து கொண்டு காட்டின் ஒரு புறமாகச் சென்றான். அல்சிபியாதிஸ் வியப்புடன் அவனைப் பின் தொடர்ந்தான்.

இறுதியில் தைமன் அவனுக்குப் புதையிலிருக்குமிடம் காட்டி, “இஃது அதேனியரை அழிக்க உதவும்” என்று கூறிவிட்டு ஓடினான்.

அதேன்ஸின் செல்வமனைத்தையும் நாணவைக்கும் அத்திரண்ட பொருட்குவையைக் கண்டு எல்லையிலா மகிழ்ச்சி அடைந்தான் அல்சிபியாதிஸ் அதன் உதவியால் உணர்ச்சியும், தன்னிடம் உண்மைப் பற்றும் உடைய அவ்வீரருக்கு எல்லையிலா ஊக்கம் தந்து அவர்களுடன் அதேன்ஸை முற்றுகையிட்டுச் சூறையாடினான்.

அல்சிபிதியாஸின் வீரர்களுடைய வாள்களுக்கு அதேனிய வணிகர் இரையாயினர். அவர்கள் கால்நடைச் செல்வ மனைத்துங்கூட அல்சிபியாதிஸ் கைப்பட்டன. அவன் வில்லாளிகளின் அம்புமாரியால் அந்நகர் அல்லோல கல்லோலப்பட்டது.

8.காலங்கடந்த கழிவிரக்கம்

நாட்கள் வாரங்கள் திங்கள் பல சென்றன. முற்றுகையும் சூறையாட்டும் நின்றபாடில்லை. நகர மக்கள் வெலவெலத்து இனிய யாது செய்வது எனக் கலவரப்பட்டனர். பணிந்தும் அல்சிபியாதிஸ் விட்டபாடில்லை. கெஞ்சியும் விட்ட பாடில்லை. அவனை எதிர்த்து நிற்கத்தக்க வீரரோ அந்நகரில் எவரும் இல்லை.

அச்சமயம் நகர மக்கள், “அந்தோ இச்சமயம் தைமன் இருந்திருந்தால் இன்று பகைவர் அஞ்சுவார்களே. அயல் நாட்டினர் அனைவரும் அவன் பெயரால் அதேன்ஸை மெச்சி இடுக்கண் நேரத்திலும் வந்துதவுவார்களே! அவன் இல்லாததால் அன்றோ, உலகமொப்பிய பெரியானாகிய அவனைப் பகைத்ததனாலன்றோ அவர்கள் இன்று நம்மை வெறுத்து இழிவும் படுத்தி, நம் அழிவையும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கின்றனர்” என்று புலம்பலாயினர்.

மக்கள் மனநிலை கண்டு அஞ்சிப் பெருமக்கள் திரண்டு எப்படியேனும் தைமனிடம் தூதனுப்பி அவனை நகருக்கு அழைப்பதெனத் தீர்மானித்தனர். தைமன் துன்புற்றார்க்கிரங்கும் வள்ளல்; குற்றம் செய்தாரைப் பொறுக்கும் பெருந்தகை. ஆதலின் தமது திக்கற்ற நிலைக்கும் கழிவிரக்கத்திற்கும் செவிசாய்த்துத் தம்மைக் காத்தருள இணங்குவான் என்று அவர்கள் நினைத்தனர்.

தைமன் கொடையின் பெரும் பகுதியையும் பெற்று, அவனுக்கு மிக்க தீங்கையும் இழைத்தவரான லூஸியஸும் லூக்கிலஸும் இன்று அவனை அழைக்கச் செல்லும் தூதுக் குழாத்திற்குத் தலைமை தாங்கியவராயினர்.

ஆயின் அந்தோ, காட்டில் தைமனைக் கண்டதும் அவர்கள் அவன் நிலைகண்டு இரங்குவதா அஞ்சுவதா என்றறியாது துணுக்குற்றனர். அவனும் அவர்களை அண்டவொட்டாமல் அவர்கள் மீது தொலைவில் நின்று கல்லெறிந்து கொண்டே ஓடினான். அவற்றைப் பொறுத்துப் பின்பற்றியவரையும் கண்டஞ்சி அவன், “ஐயையோ மனிதர், அதேனியர்! ஐயையோ மனிதர் அதேனியர்!” என்று அரற்றிக்கொண்டு ஓடி ஒளிந்தான்.

ஒரே ஒரு சமயம் லூஸியஸும் லூக்கிலஸும் இன்னும் சிலரும் எப்படியோ தைமனை அறியாது அவன் பக்கம் வந்து, விடாது அவன் காலைப் பிடித்துக்கொண்டு “தைமன், தைமன் உனக்கு இரக்கமில்லையா, அந்தப் படுபாவி அல்சிபியாதிஸும் அவன் வீரர்களும் எங்களை இளைஞரென்றும் பாராமல், முதியோரென்றும் பாராமல், பெண்ணென்றும் பாராமல், பிள்ளை என்றும் பாராமல் கூறிய வாளால் எங்கள் கழுத்துக்களை அறுத்தறுத்தெறிகிறார்களே! எங்கள் மீதும் எங்கள் பெண்டு பிள்ளைகள் மீதும் சற்று இரக்கம் கொள்ளலாகாதா?” என்று கேட்டனர். அப்போதும் அவன் திமிறிக்கொண்டு, “இரக்கமா? அஃது இங்கேது; எனக்கு இரக்கம் வந்தாலும் உங்கள் கழுத்தை அறுக்கும் வாளின் மேல் வரும். உங்கள் நெஞ்சத்தைப்போல் கழுத்தும் கல்லாய்த்தானே இருக்கும்? அதனை அரிந்தரிந்து அதன் முனை மழுங்குமே என்றுதான் இரங்குவேன். உங்கள் கழுத்தைக் கண்டு இரங்கமாட்டேன். உண்மையில் அல்சிபியாதிஸ் வாழ்வதும், கத்திகள் வாங்குவதும் என் இறுதிக் கொடையால்தான். என் நாவின் இறுதியில் அருள்மொழியும் ‘அல்சிபியாதிஸ் வாழ்க’ என்பதுவே” என்று கூறி அகன்றான்.

இனி அவனிடம் மன்றாடிப் பயனில்லை என்று கண்டு மக்கள் மீண்டேகினர்.

தாம் செய்த தீவினை தம்மையும் கெடுத்துத் தம் நகர் விளக்கமாயிருந்த வள்ளலையும் பேயுருவாக்கிற்று என்று மீளாத் துயருற்று மாழ்கினர் அதேனியர். அல்சிபியாதிஸே இறுதியில் அவர்கள் நிலை கண்டிரங்கி நகரைக் கொள்ளை யடித்தலை நிறுத்தும்வரை அவர்களின் பதைபதைப்பு நீங்கவில்லை. நன்றி கொன்றார்க்கு இம்மையிலும் மறுமையிலும் மீட்பு அரிதன்றோ?

“எந்நன்றி கொன்றார்க்கும உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”.

காதற் சீரழிவு

** (Love’s Labours Lost)**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  ஃபிரான்சு அரசன்.

2.  நாவார் அரசன்: ஃபிரான்சு இளவரசியின் காதலன்.

3.  பைரன்: நாவார் அரசன் நண்பர்கள். இளவரசி தோழிகளின் காதலர்கள்.

4.  லாங்கவில்: "

5.  துமெயின்: "

6.  காஸ்டர்டு: அரண்மனைக் கோமாளி, ஜாக்குவெனெட்டாவைக் காதலிப்பதாக நடித்தவன்.

7.  தான் அர்மெதோ: கல்வி செருக்கும், வீரனென்ற வீம்பும் கொண்ட கோமாளி.

8.  ஹாலோபபர்ளிஸ்: திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர், புரியாப் பேச்சுப் பேசுபவர்.

9.  பாயெட்: நாவார் அரசனுக்கு உளவாளி.

பெண்டிர்:

1.  ஃபிரான்சு இளவரசி: நாவார் அரசன் காதலி.

2.  ரோஸாலின்: இளவரசி, தோழியர், நாவார் அரசன் நண்பரது காதலியார்.

3.  மேரியா: "

4.  காதரைன்: "

5.  ஜாக் குவனெட்டா: குறும்புக்காரப் பணிப்பெண், காஸ்டர்டைக் காதலிப்பதாக நடித்துப் பின் தான் அர்மெதோவையும் காதலிப்பதாக நடித்து அவனைக் கேலி செய்தவள்.

** கதைச் சுருக்கம்**
ஃபிரான்சு அரசன் தன் ஒரே மகளாகிய இளவரசியைத் தன் நண்பன் மகன் நாவார் அரசனுக்கு மணஞ் செய்விக்க எண்ணினான். ஆனால் நாவார் அரசன் தன் நண்பராகிய பைரன், லாங்கவில், துமெயின் ஆகியவருடன் பெண்களைத் துறந்து நோன்பிருப்பது கேட்டு, அவர்களிடம் அக்குவிதேன் என்ற தனக்குரிய நாட்டுப் பகுதிக்கு வழக்காடும் மெய்ப்புடன் இளவரசியை அவள் தோழியரான ரோஸாலின், மேரியா, காதரைன் ஆகியவர்களுடன் அனுப்ப, அவர்களை அரண்மனைக்கு வெளியில் கூடாரத்தில் கண்ட இளைஞர் தனித்தனி அவர்களைக் காதலித்து, மாலையில் பூஞ்சோலையில் ஒருவர் நிலை ஒருவர் அறிந்து நேரடியாக இளவரசி முதலிய நங்கையரின் காதலைப் பெறமுயல, மாற்றுருவில் அவர்கள் ஆள்மாறி வந்து அவர்கள் கணையாழியையும் காதலுறு தியையும் பெற்று அவர்களை நகையாடினர். பின் அரசனால் அவர்கள் ஒரு நாடகத்துக்கு அழைக்கப்பட்டனர். நாடக நடுவில் ஃபிரான்சு அரசன் இறந்த செய்திகேட்டு அவர்கள் இளைஞர்களை இன்னும் ஓர் ஆண்டு காதலுக்காக நோன்பிருக்க விட்டுச் சென்றனர்.

காதற்கோட்டையினுள் அரண்மனைக் கோமாளி காஸ்டர்டும் ஜாக்குவனெட்டாவும் காதல் நாடகமாடி தான் அர்மெதோவைக் கோமாளியாக்கினர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் காதலியர்க்கு நாடகம் எழுதினார்.

1.புதுவகை நோன்பு

¹ நாவார் என்னும் நாட்டில் இளமை, வீரம், கல்வி, ஒழுக்கம் முதலிய எல்லா நலன்களும் வாய்க்கப்பெற்ற அரசன் ஒருவன் இருந்தான்.

அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை போரில் மிகவும் விருப்பமுடையவன். அதற்கேற்ப அவன் தன் நண்பனான ஃபிரான்சு அரசன் போர்களில் சென்று அவனுக்கு உதவிசெய்து அதற்காக அவ்வரசனிடமிருந்து நூறாயிரம் வெள்ளியையும் அக்குவிதேன் என்ற செழித்த மாவட்டத்தையும் பரிசாகப் பெற்றிருந்தான்.

நாவாரின் புதிய அரசன் இத்தந்தையைப் பின்பற்றிப் போரிலீடுபடாமல் கல்வி கேள்விகளிலும் துறவோரிடத்திலும் பற்றுடையவனாய் அறிவு முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிகள் நடத்தலானான்.

அரசனுக்கு இக்கலையாராய்ச்சித் துறையில் அவனது நண்பர்களான ²பைரன், ³லாங்கவில், ⁴துமெயின் ஆகியவர்கள் உதவ முன்வந்தனர். அனைவருமாகச் சேர்ந்த இவ்வாராய்ச்சி களை வெற்றி பெற முடிக்கும்வரை பெண்களுடன் உறவாடவோ அவர்களை அரண்மனைப்புறம் வரவிடவோ செய்வதில்லை என்றும், ஆடல் பாடல் முதலிய கேளிக்கைகளில் கலப்பதில்லை என்றும் நோன்பு கொண்டனர். அரண்மனைக்குள்ளே பிறர் எவரும் இத்திட்டத்தை மீறக் கூடாதெனக் குடிகளும் எச்சரிக்கப்பட்டனர்.

கொஞ்ச நாளைக்குள் நண்பர்களின் இப்புதுவகையான நோன்பிற்குப் பல இடையூறுகள் நேர்ந்தன.

அவற்றுள் முதன்மையான இடையூறு அரசனுக்கே ஏற்பட்டது.

அக்குவிதேனை நாவாருக்களித்த ஃபிரான்சு அரசன் இறந்தபின் அவன் மகனான அடுத்த ஃபிரான்சு அரசன் அதனைத் திரும்பவும் பெறும் எண்ணத்துடன் பல தூதர்களை அனுப்பிப் பார்த்தான். நாவார் அரசனோ போர்செலவுக் கீடாகவே அது தன் நாட்டுக்குக் கொடுக்கப் பட்டது என்றும் அதனுடன் கொடுக்கப்பட்ட தொகையாகிய நூறாயிரம் வெள்ளிகளும் செலவின் ஒரு பகுதியேயாகும் என்றும் கூறினான்.

ஃபிரான்சு அரசன் எப்படியாவது அக்குவிதேனை அடைய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். ஆகவே, தன் அரசுக்குரிய இளவரசியையும் நாவார் அரசனையும் இணைத்துவிட்டால் அக்குவிதேனேயன்றி நாவார் முழுவதுமே ஃபிரான்சுடன் சேர ஏதுவாகும் என்று அவன் எண்ண மிடலானான்.

நாவார் அரசனுக்கும் மணவினைக்கும் தொலைமிகுதி என்பதையும், அவன் புதுமை வாய்ந்ததொரு நோன்பு கொண்டுள்ளான் என்பதையும் அவன் கேள்விப்பட்டிருந்தான். அதனால் நேரடியாக மணவினைப் பேச்சுப் பேசுவதில் பயனில்லை என்று அவனுக்குப் புலப்பட்டது. ஆகவே, அக்குவிதேனுக்காகத் தூது அனுப்பும் மாதிரியாகவே இளவரசியைத் தோழியருடனும் குழாத்தினருடனும் அனுப்பினால் அவர்கள் வாய்த்திறனாலும் கவர்ச்சியினாலும் தன் கருத்து நிறைவேறப் பெறலாகாதா என்று அவன் மனக்கோட்டை கட்டினான்.

இளவரசி நாவார் வந்து சேர்ந்தவுடன் தொடக்கத்தில் நிகழ்ந்த செய்திகள் இக்கருத்துக்குச் சற்றும் இணக்கமுடையவை யாகத் தோன்ற வில்லை. தன் நோன்பின்படி அரண்மனையினுள் பெண்களை வரவேற்க முடியாததனால் அரசன் தன் நோன்பை முறிப்பதா அல்லது அவர்களை வரவேற்காதிருப்பதா என்ற இருதலைப் பொறியிற் பட்டுழன்றான். முடிவில் நோன்பைக் காப்பதே தலைமையான கடனெனக் கொண்டு இளவரசியை நகர்ப்புறத்திலுள்ள வெளியிடத்தில் கூடாரமடித்து அதில் வரவேற்பதெனத் தீர்மானித்தான்.

2.நோன்புக்கோட்டை தகர்தல்

இதனைக் கேட்டதே இளவரசி “இஃது என்ன என்றும் கேட்டிராத புதுமையாயிருக்கிறதே! ஃபிரான்சின் பட்டத்துக் குரிய இளவரசியாகிய என்னையா நகர்ப்புறத்தில் வரவேற்பது? அவர் நோன்பு அத்தனைக்கு நம்மினும் மிக்கதா! சரி, அப்படியாயின் தோழியரே, நாம் இவரைப் பார்க்க வேண்டா; ஃபிரான்சு செல்வோம்” என்றாள்.

இளவரசியின் தோழியருள் குறும்புமிக்க ¹ரோஸாலின் என்பவள் அவள் சினந்தீர்த்து, "இளவரசி! தாங்கள் வெளுத்த தெல்லாம் பாலென்று எண்ணிவிட வேண்டா துறவிபோல நடிக்கும் இவ்வரசனும் அவன் தோழர்களும் முற்றுந்துறந்த முனிவருமல்லர்; முதியோருமல்லர்; இளைஞர்களே; நாங்கள் அவர்களை அறிவோம். ஆதலால் அவர்களை விட்டு நாம் திரும்பிச் செல்வதால் அவர்கள் நோன்பிற்கும் அவர்கள் ஆண்மைக்கும் அஞ்சிப் போனவர்கள் ஆய்விடுவோம். இவ்வகையில் ஆடவர்க்குப் பெண்டிர் இளைத்தவர்களல்லர் என்று காட்டி அவர்கள் நோன்பை அழித்து அவர்களை அவமதித்தே செல்லவேண்டும் என்று கூறினாள். ¹காதரைன், ²மேரியா என்ற மற்ற இரு தோழியரும் இக்கருத்தை ஆர்வத்துடன் வரவேற்றனர்.

நால்வரும் தம் கருத்தை நிறைவேற்றத் திட்டம் வகுத்தனர். அரசனும் அவன் தோழர் மூவரும் தம்மை வரவேற்கையில் தாம் ஒவ்வொருவரும் அவர்களுள் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மனஉறுதியைக் கலைப்பதென அவர்கள் தீர்மானித்தனர். அதன்படி இளவரசி அரசனையும் காத்ரைன் லாங்கவிலையும், மேரியா துமெயினையும் தனித்தனி கவனித்துத் தம் வயப்படுத்துவதாக வாக்களித்தனர்.

அவர்கள் சூழ்ச்சி மிக எளிதில் நிறைவேறியது. அந்நால்வரும் தாம் குறித்த ஆடவரைத் தம் கடைக்கணிப்பாலும் முறுவலாலும் ஈர்த்தும், சுடு சொற்களால் வாட்டியும் பொய்ச் சீற்றத்தால் பணிய வைத்தும் தம் பக்கம் வளைத்தனர். நூலறிவில் திளைத்து முதிர்ச்சியுறினும் உடலளவில் இளைஞரான அந்நால்வரும் திறம்பட நடித்த அக்காதல் நடிப்பில் ஈடுபட்டு மயங்கினரேனும் அதனை ஒருவருக்கொருவர் காட்டாது மறைத்து வைத்துக் கொண்டனர்.

அரசன் நண்பருடைய நோன்புக்கோட்டையினுள் ஆழமாகச் சுரங்கம் வைத்தாயிற்று. அது வெடிக்குமுன் இன்னொருபுறம் கோட்டையின் தாழ் திறக்கலாயிற்று.

3.காதல் விளையாட்டு

அரண்மனையருகில் அரசனாணைப்படி பெண்டிர் எவரும் வர வில்லையாயினும் அரண்மனைப் பணிப்பெண்கள் மட்டும் பணி செய்வதை யாரும் தடை செய்யவில்லை. அப்பணிப்பெண்களுள் தன்னாண்மையும் பேச்சுத் துடுக்கும் கவர்ச்சியும் மிக்கவன் ஒருத்தி இருந்தாள். அவள்பெயர் ¹ஜாக்கு வனெட்டா என்பது அவள் அரசன் முதலியோர் நோன்பைப் பற்றிக் கேட்டதும் அதனை வெறுத்து அரசனுடைய மெய்க்காப்பானாகிய ² தான் அர்மெதோவிடம் அதைப்பற்றி ஏளனமாகப் பேசி நகையாடினாள்.

இந்தத் தான் அர்மெதோ மனிதருள் ஒரு புதுவகைப் பிறவி அவன் தன்னைப் பெரிய போர் வீரனென வீம்படித்துக் கொள்வதோடு, அதற்குரிய உடையும் அணிந்து திரிந்தான். ஆனால், உண்மையில் அவன் போர்வீரன் அல்லன்; பெருங் கோழையே. மேலும் அவன்தான் கல்வியிற் சிறந்தவன் எனவும் இலக்கிய வளமுடையவன் எனவும் கருதி, அரைகுறையாகப் பழ நூல்களைப் புரட்டிப் பெருஞ்சொற்களை ஏற்பும் வாய்ப்பு மின்றித் தாறுமாறாக அடுக்கிக் கொட்டுவான். சுருங்கச் சொல்லின் தான் கோமாளி என்றறியாத கோமாளி அவன்.

அவனை மிகவும் வெறுத்தவர்கள் ஜாக்குவெனட்டாவும் அரண்மனைக் கோமாளியான ¹காஸ்டர்டும் ஆவர்.

ஜாக்குவனெட்டா அரசனையும் அரசன் நோன்பையும் ஏளனம் செய்வதைக் கண்ட அவன் அரசனிடத்தில் தனக்கே சிறப்பாகப் பற்று உள்ளதுபோல் பாசாங்கு செய்து அவளைக் “குரக்கினத்தரக்கி”என்றும் “இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகைப் பிடாரி” என்றும், “கஞ்சன் முதலிய நூறு பேரையும் பெற்ற குந்தமா தேவி” எனவும் பொருத்தமற்ற அடைப் பெயர்கள் கொடுத்து வந்தான்.

ஓயாது கடகடவென்று பொரியும் அவனை ஒறுத்து நகைக்காளாக்க வேண்டுமென்று காஸ்டர்டும் ஜாக்குவ னெட்டாவும் திட்டமிட்டனர். அதன் படி அவர்கள் இருவரும் ஒளிவு மறைவின்றிக் காதல் கொள்வதாக நடித்தனர். அதனை உண்மையென்று நம்பிய அவன் வெகுளியுடன் ஓடோடியும் சென்று அதனைப் பல்லுடைக்கும் சொற்களால் விரித்துரைத்து வம்பளந்தான். அதைக்கண்டு காஸ்டர்டு ஜாக்குவனெட்டாவும் தம்மீது சாட்டும் குற்றத்தை இன்னும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு நகைத்தனர். அரசன் உடனே சினங்கொண்டு இருவரையும் சிறைப்படுத்தி அவர்கள் குற்றங் கண்டு பிடித்த தான் அர்மெதோவே அவர்களைக் காக்கும்படி செய்து அவர்களை அவன் வீட்டிலடைத்தான்.

ஆனால், அவன் நடைமுறையில் அவர்களைச் சிறைகாப்ப தென்பது தனக்கே சிறை என்று கண்டான். இதனைப் பயன்படுத்தி அவர்கள் அவனை மிகவும் எள்ளிக் கொக்கரித்தனர். பின்னும் ஜாக்குவனெட்டாதான் காஸ்டர்டின் காதலைக் கைவிட்டதாகவும், அவனையே காதலிப்பதாகவும் நடித்து, அந்தக் காஸ்டர்டு வெறும் வாயாடிக் கோமாளி என்றும், தான் அர்மெதோ என் உள்ளத்தில் நுழைந்தபின் காஸ்டர்டு போன்ற மின் மினிகளுக்கும் விண்மீன்களுக்கும் இடமேது என்றும் அவன் உச்சி குளிரப் பேசி அவனைத் தான் எண்ணிய கூத்துப்படியெல்லாம் ஆட்டினான்.

காஸ்டர்டும் இதற்கியைய ஜாக்குவனெட்டா தன்னைக் கவனியாததால் அவளை மறந்துவிட்டதாகவும், அவளைப் போன்ற காரழகிற்குத் தான் இசைந்தவனல்லன் என்றும், தான் அர்மெதோவே இசைந்தவன் என்றும் கூறியதுடன் அவர்களுடைய காதல் தூதனாயிருக்கவும் ஒப்புக் கொண்டான்.

அரசன் நோன்புக்கு நிலைக்களாகிய அத்துறவறக் கோட்டையில் இங்ஙனம் ஒருபோல் மாரன் விளையாட்டாக எய்த கணை சுவரைத் தொளைத்து வழி செய்துவிட்டது. ஆனால், விரைவில் அகன்ற நிலைக்கதவங்களே அவன் வர இடந்தந்து திறக்கக் காத்திருந்தன.

4.கலைத்தொண்டரே மேகலைத் தொண்டராதல்

அரசனும் தோழரும் தனித்தனியாக அவரவர் காதலியாரின் மையலிற் பட்டுப் பிறர் அறியாமல் தனியே திரிந்து மனம் புழுங்கி வாடினர். நோன்புறுதியின் போதே பைரன் தன் இன்ப வாழ்க்கையை விட வேண்டுமே என்று தயங்கினான். நோன்பெல்லாம் ஒரு பித்து எனக் கூறிக்கொண்டே அவன் வேண்டாவெறுப்பாக வற்புறுத்தலின்பேரில் அதனை ஏற்றான். தானாகத் தளர்வுற்ற அவன் மன உறுதி இன்று ரோஸாலினின் கட்டழகுக்கும் புன்முறுவலுக்கும் ஆற்றாது சூறைக்காற்றிற் பட்ட தேமாங் கொம்பெனத் துடிதுடித்தது.

முதலில் பைரனது மனத்தளர்ச்சியைக் குறித்து ஏளனம் செய்து நகையாடிய மற்ற மூவர் நிலையும் இன்னும் வெட்கக்கேடானதாகவே இருந்தது என்னல் வேண்டும். அரசன், “ஆ என் மனத்தைக் கொள்கைக் கொண்ட மாதரசி, உன் தந்தை அக்குவிதேனைக் கேட்டபோது நான் உன்னைக் கண்டிருந்தால் அதனையும் சரி, அதனினுஞ் சிறந்த இன்னும் பத்து மாவட்டங்களையும் சரி, அட்டியின்றித் தந்து உன்னைக் காதலியாகப் பெற, முயன்றிருப்பேனே! ஆ! ஃபிரான்சின் மலர்களுள் இத்தகையதொரு காணரிய செந்தாமரை மலரும் இருக்கும் என்று கண்டதார்? ஃபிரான்சின் நறிய தேனைக் கண்டறிந்த யாம் அதனைப் பழிக்கும் வெறிதரும் இத்தகைய கண்பார்வை ஒன்று அங்கே கரந்திருந்ததை அறியாமற் போனோமே! ஆ, தென்றலைப் பழித்த மென்மையும், கன்னலைப் பழித்த மொழியும், அன்னத்தைப் பழித்த நடையுமுடைய என் ஆரணங்கே உன்னை அடையும் நாள் எந்நாளோ?” என்றேங்கினான்.

அதேபோன்று லாங்காவிலும் துமெயினும் காதரைனையும் மேரியாவையும் எண்ணி எண்ணி மனம் புண்பட்டு வெம்பி வெதும்பினர்.

ஆனால், இத்தனையிலும் நகைப்புத் தரும் செய்தியா தெனில் அவர்கள் ஒவ்வொருவரும் தாம் இத்தீயில் பொசுங்கிய தோடு தமது நிலையைப் பிறர் எங்கே கண்டு கொள்ளப் போகிறாரோ என்று வேறு அஞ்சினர். முன்னம் ஆராய்ச்சி என்னும் ஒரே நோக்கத்திற்பட்டு நால்வரும் ஒருவரான அவ்வறிஞர், இன்று காதல் என்னும் நோக்கிற் பட்டதும் நால்வரும் நால்வேறு வழியாக ஒருவரை ஒருவர் வருந்தி விலகிச் சென்று பிறருடன் உரையாடுவதை ஒழித்துத் தம் மனத்தகத்தே குடிகொண்டிருந்த மங்கையருடன் உள்ளூற உரையாடு வாராயினர்.

5.ஓக்கவிழுந்தால் வெட்கம் இல்லை

இளவரசியும் அவள் குழாமும் தங்கியிருந்த கூடாரத்தினை அண்டியிருந்த அரண்மனைத் தோட்டத்தில் பூஞ்செடி கொடிகளிடையே சென்ற நடைவழியில் பைரன் தன் காதலிக்கு வரைந்ததோர் இன்கவிதையைத் தனக்குள்ளேயே படித்தவனாய் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான். தென்றலும் மாலையும் இளவெளியிலம் மென்மலர் மணங்களும் எங்கணும் இனிமையைக் கொழித்த அந்த வேளையில், அவனது நெடிய உயிர்ப்பு மட்டும் வெம்மையைக் கான்று நின்றது. அவன் தன் உளமாகிய நிலப்பரப்பில் தன் எழிலாரணங்கிற்கு மனக் கோட்டையாகிய மதில்களை எழுப்பிக் கோயில் கட்டிக் கொண்டே தன்னை மறந்து நடந்து கொண்டிருந்தான். அத்தறுவாயில் தொலைவில் யாரோ பூஞ்செடிகளை விலக்கிக் கொண்டு வரும் அரவங் கேட்டு மலர்ப்படுக்கை ஒன்றில் ஒதுங்கி ஒளிந்து கொண்டான்.

ஆங்கே அவன் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தின் வழியாகவே வந்து கொண்டிருந்தான் அரசன். மண்மிசை விழுந்துகிடந்த நீலவானத்தின் துண்டமென்ன மாசு மறுவற்ற அவன் முகம் அன்று துன்பமும் அயர்ச்சியும் தூங்க மாசடைந்து கிடந்தது அவன் கண்கள், கையில் இருந்த ஒரு கடிதத்திலேயே ஊறிநின்று அதன் எழுத்துக்கள் சென்ற திக்கிலேயே வழுக்கிச் சென்றதாகத் தோன்றின. அவ்வெழுத்துக்களை அவன் தலையை யசைத்தும் கழுத்தை உயர்த்தியும் உரக்கப் பாடினான்.

“மென்பனி தீரிள ஞாயிறும்
கண்பனி தீருனை ஒக்குமோ?
வண்பனி நீரிலு லாவுறும்
தண்பனி மாமதி தானெங்கே?
என்பனி நீரும்நின் இந்நினை
வன்பினிற் கொண்டுசெல் ஊர்தியே!
வெண்பனித் தாள்சுமந் தேகுமென்
துன்பினைத் தூமொழி, காண்பையோ?”

இதைப் பாடியபின் பெருமூச்சு விட்டு இளவரசியின் உருவெளித் தோற்றத்தில் ஈடுபட்டவனாய், “வா, வா, ஃபிரான்சின் தவப்பயனாய் வந்த என் பெண்ணணங்கே, உனக்காக உலந்து கிடக்கும் இவ்வுள்ளத் தடத்தில் உன் அன்பு மழையினைப் பொழிவாய்” என்றான்.

அவ்வமயம் பின்னால் நிழலாடக் கண்டு அவன் சட்டெனத் தேமா ஒன்றின்பின் மறைந்து நின்றான்.

வந்தவன் வேறு யாருமில்லை; லாங்காவிலே, என்ன வியப்பு! “இவனுமா இந்நேரத்தில் இந்த இடத்தில் இருக்கிறான்?” என்று மூக்கில் கையை வைத்தனர். ஒருவரை ஒருவர் அறியாது மறைந்து நின்ற அரசனும் பைரனும்.

அவன் வரும் மாதிரியில் அரசனும் பைரனும் மறைவாயிராமல் கண்ணெதிரில் நின்றிருந்தால்கூட அவன் காணமாட்டான் போலும். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு நிலத்தில் பதித்த கண்களுடன் நடந்தான். இடையிடையே அண்மையிலுள்ள உலகைக் கடந்து அடிவானத்தற்கப்பால் வேறோர் உலகைப் பார்ப்பதுபோல வெறுத்து நோக்குவான் அவன், அடிக்கடி அவன், “என் நோன்பு! என் நோன்பு!” என்பான். பின் “நான் நோன்பை முறித்து விடவில்லை. அந்நோன்பு, மண்மாதர்களை மட்டுமன்றோ குறித்தது? என் மேரியா மண்மாதல்லளே! விண்மாதாயிற்றே! அவளிடம் கொண்ட பற்று பெண் பற்றன்று; பெண்ணிறைப் பற்றேயாம்; அதில் பழி எதுவும் இருக்க முடியாது?” என்பான். “ஆ, நான் கூறிய உறுதி என்ன, அஃது ஒரு வாய்மொழி; வாய்மொழி ஆவது ஒரு சொல்; அஃதாவது ஓசை வகை. ஓசை என்பதோ காற்று; காற்று வெறும் ஆவி; ஆவிப் பொருள்களை அகற்றுபவன் கதிரவன். அத்தகைய கதிரவனாகிய என் மேரியா முன்னுமா அவ் ஆவி, ஆவியாகிய காற்று, காற்றாகிய சொல், சொல்லாகிய வாய்மொழி, வாய்மொழியாகிய வாக்குறுதி நிற்கும். நிற்கவே நிற்காது!” என்று பிதற்றுவான்; சாவப் போகிறவன் உயிரை விரும்பித் துரும்பைப் பற்றுவதுபோல் உண்மையை மீறுகையிலும் இப்போலியா ராய்ச்சியால் தான் விழைந்ததே உண்மை என நிலைநாட்ட எண்ணும் இப்பேதைமை கண்டு பைரன் வெகுண்டான். அரசனும் பரிவுற்றான்.

துமெயின் ஒருவனே இன்னும் மாரன் அம்பிற்குப் பிழைத்தவன் என்றான் பைரன் தன் மனத்திற்குள். அதற்குள் துமெயின் சீழ்க்கை அடித்துக்கொண்டு அப்பக்கம் வந்து விட்டான். லாங்கவில் உடனே மறைந்துகொண்டான்.

துமெயினும் இப்போது பாட்டு மேளத்தில்தான் வந்தான். அவன்

“தென்றலும் மாலையும் திங்களும் கூடின;
வென்றிகொள் மாரன்தன் வெங்கணை எய்தனன்;
மன்றல் மதர்விழி மாதர்? உன் பொன் அருள்
இன்றெனக் கீந்திட வாராய்-இணையிலின்
பின்றெனக் கீந்திட வாராய்”

என்று பாடினான்.

தன்னைப்போல் துமெயினும் காதலுக்காட்பட்டது கண்டு லாங்காவில் திடீரெனத் தாவி வெளிவந்து “துமெயின், துமெயின், இதோ அகப்பட்டாய்; நீ நோன்பை முறித்து விட்டாய். அதற்கான ஒறுப்பை நீ ஏற்கவேண்டும்” என்றான். துமெயினும், “ஐயோ, தனிமையிலிருக்கிறோம் என்றன்றோ வாய்விட்டுப் பாடினோம்! இனி என் செய்வது? நண்பர்கள் ஏளனத்திற்கு ஆளானோமே” என்று வருந்தினான்.

ஆனால் அதற்குள் அரசனும் அவனையடுத்துப் பைரனும் வெளிப் பட்டனர். அரசன் மற்ற இருவரையும் குறை கூற, பைரன் அரசனையும் உள்ளிட்டு மூவரையும் பழித்துத் தான் மட்டும் நல்லவனாக நடித்தான். அவன் குட்டும் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதாகலின் அவன் நடிப்பும் பகல் வெளிச்சத்தில் பாவைக் கூத்தாட்டுபவன் ஆட்டம்போல் பயனற்றதாயிற்று.

பைரன் தோட்டத்திற்கு வருமுன்னரே ரோஸாலினுக்கு எழுதிய கடிதத்தை கர்ஸ்டர்டிடம் கொடுத்து அவளிடம் கொடுக்கும்படி கூறியிருந்தான். அதற்குச் சற்று முன்னாகத்தான் அர்மெதோவும் ஜாக்குவனெட்டாவிடம் கொடுக்கும்படி அவனிடம் வேறு ஒரு காதற் கடிதம் கொடுத்தருந்தான். கோமாளி என்ற முறையில் தெரிந்தோ, அல்லது தெரியாமல் தானோ அவன் கடிதங்களை மாற்றிவிட்டான். ஆகவே ரோஸாலினிடம் கொடுபடவேண்டும் கடிதம் ஜாக்குவனெட்டாவிடம் சென்றது. அவள் அதனை வாசிக்க அறியாது அருகிலுள்ள திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரான ¹ஹாலொஃபர்னஸிடம் காட்டினாள். அவர் பழைய நூல்களின் துரட்டுச் சொற்களுடன் வழக்கிறந்த புரியா மொழிகளினின்று (லத்தீன், கிரேக்கம் முதலிவற்றிலிருந்து) அரைகுறையாகத் தான் படித்த சொற்களையும் இடைச் செருகலாகச் சேர்த்துப் பேசினாரேனும், அக்கடிதம் ஜாக்குவனெட்டாவிற்கன்று; இளவரசியின் குழாத்தைச் சேர்ந்த ரோஸாலின் என்ற மாதரசிக் குரியது; அரசன் நண்பனான பைரன் எழுதியது என்பதை ஒருவாறு விளங்கக் கூறினார்.

ஒழுங்குப்படி அக்கடிதத்தை ரோஸாலினுக்கே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அரசன் நோன்பை நகர் சிரிக்க வைக்கவேண்டு மென்னும் கருத்துடன் ஜாக்குவனெட்டா அதனை அரசனிடம் எவ்விடத்திலும் காணாமல் பின்தொடர்ந்து மேற்கூறியபடி தோட்டத்தில் அவனைக் கண்டு அவனிடம் அவள் அதனைக் கொடுத்தாள்.

தான் எல்லோரையும் பித்தாக்க எண்ணிய சமயம் பார்த்துத் தன் செய்தி வெட்ட வெளிச்சமானது கண்டு பைரன் முதலில் மிகவும் வெட்க முற்றானாயினும் ‘ஒக்க விழுந்தால் வெட்கமில்லை’ என்றபடி தானும் பிறருடன் சேர்ந்து காதலின் சிறப்பைப் புகழலானான். தத்தம் கோழைமையை மறைக்க அத்தகையதொரு விரிவுரை உதவுமாதலின் அனைவரும் தலையசைத்து “அப்படிச் சொல்லு; அதுதான் சரி” என்று கூறினர். ‘காதல், தெய்வங்களுக்கும் உரியது; அதனைப் பின்பற்றுவதால் உண்மையை மீறியதனால் ஏற்படும் குற்றம் தம்மைச்சாராது’ என்று அவன் கூறுவதற்கு அவர்களும் ஒத்துப் பக்கப்பாட்டுப் பாடினர்.

நோன்பில் மனமொத்த நண்பர் நால்வரும் இடையில் பிரியினும், இணைப்பொத்த காதலால் மீண்டும் ஒன்றுபட்டு நின்றனர். நோன்பின் பெயர் மறக்கப்பட்டது. இளவரசியின் திட்டத்தில் வெற்றிக்காண கொடி ஏற்ப்பட்டது.

6.காதலர் ஏமாற்றம்

நால்வர் கவனமும் இப்போது புதுவழியில் திரும்பிற்று. இனித் தத்தம் காதலியரைப் பெறுவது எப்படி என்ற அவர்கள் ஆராய்ச்சி செய்யலாயினர்.

பைரன் நல்லுரையைப் பின்பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் தம் காதற்கடிதங்களுடன் காதல் நன்கொடைகளும் அனுப்பினர். அதன்பின் மாற்றுருவுடன் சென்று அவர்கள் அம்மாதரைத் தம்முடன் நடனமிடும்படி கேட்டனர். ஒருவேளை அவர்களும் மாற்றுருவில் வரக்கூடுமாதலின் அவர்களிடமுள்ள தம் நன்கொடைகளால் அவர்களை அடையாளங் கண்டு கொள்ளக் கூடுமென்று அவர்கள் எண்ணினர்.

ஆனால், அவர்கள் இட்ட திட்டங்களைப் பாயெட் என்ற அப்பெண்டிரின் நண்பன் ஒளிந்திருந்து கேட்டு வந்து பெண்டிர்க்கு உரைத்தான். அதனால் அவர்கள் திறமையாகத் தங்கள் நன்கொடைகளை ஒருவர்க்கொருவர் மாற்றி வைத்துக்கொண்டு முகமூடியாலும் அங்கியாலும் தம் உருவை முற்றிலும் கரந்துகொண்டனர். இப்போது இளவரசியின் நன்கொடையும் ரோஸாலினின் நன்கொடையும் ஒருபுறம் மாறி மாறியும், மேரியாவின் நன்கொடையும் காதரைன் நன்கொடையும் இன்னொருபுறம் மாறி மாறியும் இருந்தன.

உருசியர் உருவில் வந்த நால்வரும் நடந்த சூதை அறியாமல் ஒருவர் காதலியை மற்றொருவராக மாறப் பெற்றுத் தம் காதலிக்குக் கொடுக்க வேண்டும் உறுதியையும் அதன் அடையாளமாகிய தம் கணையாழியையும் இன்னொருத்திக்கே கொடுத்துவிட்டனர். இறுதியில் அவர்கள் பெண்டிரை நடனத்தற்கழைத்தனர். அப்போது முன்னேற்பாட்டின்படி இளவரசி ஒரு சைகை காட்ட அனைவரும் நடனமிட மறுத்து அவர்களை விட்டகன்றனர்.

ஆடவர் வெளியே சென்றபின் தத்தம் உருவேற்று மீண்டும் சென்று தாம் செய்த காதல் உறுதியை மண உறுதியாக்கிவிட எண்ணினர். பெண்டிர், விளையாட்டுக் காதலால் தொடங்கியது வெற்றிக் காதலாவது கண்டு தம் ஒறுப்புக்கு இது நல்லகாலம் என நினைத்து, “உங்கள் காதலால் எங்களை ஏய்க்க முடியாது; நீங்கள் உறுதியும் உண்மையும் அற்றவர்கள்” என்றனர்.

காதலர்: நாங்கள் உறுதியற்றவர்களல்லேம், வீண் பழி கூறவேண்டா. உலக நடுநிலை திரியினும், கடல் சுவறினும் திங்களும் ஞாயிறும் நெறி வழுவினும் நாங்கள் வழுவோம்.

காதலியர்: ஓஹோ! உங்கள் உறுதியையும் உண்மையையும் யாரிடம் அளக்கிறீர்கள். பெண்கள் பக்கம் போகாத நோன்புக்குச் செய்த உறுதி எங்கே? இப்போது தங்கள் காதல் எங்கே?

காதலர்: அது காதல் அருமை அறியாமல் செய்தது. இவ்வளவு உண்மையான பற்று ஏற்படுமுன் அறியாமல் மேற்கொண்ட நோன்பு அது.

காதலியர்: அது சரிதான் நேற்றைய உண்மை இன்றைய பற்றில் போம். இன்றைய உண்மை நாளைய பற்றில் போம். போங்களையா, உங்கள் உண்மையும் வேண்டா, பற்றும் வேண்டா.

காதலர்: இல்லை, அப்படி எண்ணவேண்டா; தங்களைக் காதலித்த பின்னர் இனி வேறு யாரையும் ஏறெடுத்துப் பாரோம்.

காதலியர்: அதுவும் முழுப்பொய்; நேற்று முன் நாள் எங்களுக்குக் காதற்கடிதம் வரைந்த நீவிர் நேற்று வேறு யாருக்கோ காதலுறுதியும் கணையாழியும் தந்துவிட்டு, இன்று மீட்டும் எம்மிடம் ஒன்றும் அறியாதவர் போல் வந்து பிதற்றும் நாடகத்தை யாரிடமையா காட்டுகிறீர்?

காதலர்: நீவிர் கூறுவது விளங்கவில்லையே!

காதலியர்: விளங்கவில்லையா? இதோ பாருங்கள்.

என்று அவர்கள் தலைமாறிக் கொடுத்த கணையாழியைக் காட்டினர்.

அப்போதுதான் காதலர் தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டனர். நன்கொடை மாற்றி வைக்கப்பட்டிருந்த சூதை அறிந்து வெட்கினர். ஆயினும் வெளிப்பட, “நாங்கள் வெளித்தோற்றத்தால் தவறினும் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்லர்; உருமாறி வந்த பெண்டிரே பொறுப்பாளிகள். நாங்கள் உண்மை தவறிய குற்றம் ஏற்பட இதனால் இடமில்லை” என்று வாதாடினர்.

காதலியர் அதனை ஏற்காமல் மேலும் ஊடிநிற்கும் நேரம் ஹாலோஃபர்னஸ் ஜாக்குவனெட்டா முதலியோர் வந்து அரசனது ஏற்பாட்டின்படி இளவரசி முதலியோரின் பொழுது போக்கிற்காக “ஒன்பது பெருங்குரவர்” என்னும் நாடகத்தைத் தாம் நடத்தப் போவதாகக் கூறினர்.

காதலர் காதலியர் அனைவரும் தம் பூசலை விடுத்து நாடகங் காணச் சென்றனர்.

7.காதலைத் தவிர்த்த நோன்பே காதலை நாடிய நோன்பாயிற்று

ஹாலோஃபர்னஸும் ஜாக்குவனெட்டா முதலியோரும் நாடகம் நடத்த முடியும் என்று வீம்படித்தனரேயன்றி உண்மையில் நடிக்கத் திறமுடையகளல்லர். அவர்கள் நாடகம் தெருக்கூத்திலும் மோசமாயிருப்பினும், காதல் சிதைவால் அயர்ச்சியுற்றிருந்த நண்பர்கட்கும் பெண்டிர்க்கும் அஃது ஒரு நல்ல கேலிக்கூத்தாய் அமைந்தது.

நாடகத்தினிடையில் இளவரசிக்கு அவர் தந்தை இறந்து விட்டதாகத் தூதன் ஒருவன் வந்து சொன்னான். உடனே கேளிக்கைகளை எல்லாம் விட்டு அவர்கள் புறப்படலாயினர். அரசனும் நண்பரும் தாம் காதலுக்காகப் பட்ட பாடுகள் அனைத்தும் வீணாகின்றனவே என்று நினைத்து அவர்களைத் தடுத்துத் தமக்கு மணஉறுதி தந்தேனும் செல்லவேண்டும் என்று மன்றாடினர்.

பெண்டிர், “உங்கள் மனம் நிலையற்றது. ஆதலின் உங்கள் காதலை இப்போது நம்பமாட்டோம். மண உறுதிக்கு எம் தந்தை இறந்த இந்நேரம் நல்லநேரமும் அன்று. ஆகவே முன் காதலைத் துறந்து நோன்பு எற்று அதனைக் கைவிட்ட நீர் அங்ஙனம் கைவிடாமல் விடாப்பிடியாக எங்கள் பேரால் ஓராண்டு நோன்பு நோற்பீரேல் அதனிறுதியில் எங்கள் காதலை உங்களுக்கு உவந்தளிப்போம்” என்றனர்.

காதலர்கள் வேறு வழியற்று அவ்வேற்பாட்டை ஏற்றனர்.

அவ்வேற்பாட்டின்படி ஒராண்டளவும் அந்நால்வரும் இன்பவாழ்வு, நல் உடை, உணவு முதலிய யாவற்றையும் துறந்து முறையே அறநிலையங்கள், மருத்துவ விடுதிகள், துணையற்ற சிறுமியர் பாதுகாப்பிடங்கள், சீர்த்திருத்தப் பள்ளிகள் ஆகியவற்றிற்குச் சென்று அரும்பணியாற்றினர்.

அதன் இறுதியில் அவர்கள் காதல் உறுதிப்பாடுடையதே எனக் கண்டு பெண்டிர் இறந்த அரசனுக்கான பரிவையும் நீத்து அவர்களை மணந்து கொண்டனர்.

காதலரின் காதற் சீரழிவு ஒரு முடிவுக்கு வந்து அவர்கள் நல்வாழ் வெய்தினர்.

ஐந்தாம் ஹென்ரி

** (Henry V)**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  ஐந்தாம் ஹென்ரி அரசன்: இளமையில் ஹென்ரி இளவரசன். நான்காம் ஹென்ரியின் மகன்; மூன்றாம் எட்வர்டுப் பேரரசன் இவன் முன்னோன்.

2.  சார்லஸ்: பிரான்சு நாட்டு அரசன்.

3.  டாஃபின்: பிரெஞ்சு இளவரசன்.

4.  ரிச்சர்டு: கேம்பிரிட்ஜ் கோமகன் - அரசனின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தான் - சூழ்ச்சிக்காரன்.

5.  ஸ்க்ருப் பெருமகன்: அரசன் பள்ளித்தோழன். சூழ்ச்சிக்காரன்.

6.  தாமஸ் கிரேப் பெருந்தகை: சூழ்ச்சிக்காரன்.

7.  கிளஸ்டர் கோமகன்: அரசன் உடன்பிறந்தான்; படைத் தலைவன்.

8.  பெட்போர்டுக் கோமகன்: படைத்தலைவன்.

9.  எக்ஸ்டர் பெருமகன்: ஹென்ரி அரசன் தூதன்.

10. தாமஸ் எர்ப்பிங்ஹாம் பெருந்தகை: முதியோன்; படைத்தலைவன்.

11. ஃபால்ஸ்டாஃப்ஃ: அரசன் பழந்தோழருள் தலைவன்; புறக்கணிப்பால் இறந்தவன்; அரசன் பழந்தோழன்.

12. பார்டல்ஃப்: ஹார்ஃப்ளூர் முற்றுகையில் சமய நிலையத்தைக் கொள்ளையிட்டதற்காகக் கொலைத் தீர்ப்பளிக்கப்பட்டவன். அரசன் பழந்தோழன்.

13. பிஸ்டல்: ஃப்ளூவெல்லினை எதிர்த்து அவமதிக்கப் பெற்றவன்; அரசன் பழந்தோழன்.

14. நிம்:

15. ஃபுளூவெல்லின்: வேல்ஸ் தலைவன்; படைத் தலைவன்; வாயாடி; லத்தீன் போரியல் நூல் அறிவைக் காட்டிமிரட்டும் பகட்டன்; எனினும் சிறந்த போர்வீரன்.

16. மாக்மோரிஸ்: அயர்லாந்து நாட்டான்; சிறந்த படைத் தலைவன்.

17. வேறு ஆங்கிலத் தூதர்.

18. ஃபிரெஞ்சுத் தூதர்.

19. வீரர்.

20. ஃபிரெஞ்சு வீரர், படைத்தலைவர்.

-cபெண்டிர்:

1.  காதரைன்: ஃபிரெஞ்சு அரசன் மகள்- டாஃபின் தங்கை - ஹென்ரி அரசனை மணந்தவள்.

** கதைச் சுருக்கம்**
இறக்குந் தறுவாயில் தன் தந்தை நான்காம் ஹென்ரி தந்த அறிவுரைக் கிணங்க ஐந்தாம் ஹென்ரி அரசன், பெருமக்கள் போர்க்குணத்தை அடக்கியாளும் வண்ணம், ஃபிரெஞ்சு நாட்டின்மீது போர் தொடுத்தான். மக்களிடைப் பரவும் பகுத்தறிவியக்கங் கண்டஞ்சிய தலைமக்களும் இதனை ஆதரித்து, ஃபிரெஞ்சு அரசுரிமை இங்கிலாந்து அரசனுக்குச் செல்லும் படியானதே, எனச் சாக்குத் தந்து ஊக்கினர். பல்வகைப்பட்ட மக்களுடன் ஹென்ரியின் பழந்தோழருள் ஃபால்ஸ்டாஃப் இறந்துவிட்டமையின், அவன் நீங்கலாக அவன் குழுவினரும் சேர்ந்து சென்றனர்.

ஹார்ஃப்ளூர் நகரை முற்றுகையில் பிடித்தபின் பிணியாலும் பஞ்சத்தாலும் வாடிய சில வீரருடன் இறுமாப்பு மிக்க பெரிய ஃபிரெஞ்சுப் படையை, அரசன் அஜின் கோர்ட்டுச் சண்டையில் வென்று வாகைசூடிப் பின்னும் பல நகர்களைப் பிடித்து ஃபிரெஞ்சு அரசனைப் பணிய வைத்து, உடன்படிக்கை செய்துகெண்டான். அதன் வழியாக ஃபிரெஞ்சு அரசன் தன் மகள் காதரைனை அவனுக்குத் தந்து தனக்குப்பின் அவனே அரசனாகும்படி இணங்கினான்.

ஃபிரெஞ்சு நாட்டில் ஹார்ப்ளூர் முற்றுகையின் பின் சமயநிலைய மொன்றைக் கொள்ளையிட்ட குற்றத்திற்காக, பார்டல்ஃப் கொலைத் தீர்ப்பளிக்கப்பட்டான். பிஸ்டல் வாயாடியும் பெருவீரனும் ஆன வேல்ஸ் நாட்டுப் படைத்தலைவன் ஃபுளூவெல்லினை இகழ்ந்துரைத்து அவனால் நன்றாகப் புடைத் தொறுக்கப்பட்டான்.

1.போரோ போர்

நான்காம் ஹென்ரி அரசன் காலத்தில் அவன் மூத்த மகனாகிய ஹென்ரி இளவரசன், சிறுபிள்ளைத் தனமாகக் கீழ்மக்களுடன் உண்டாட்டயர்ந்து கீழ்மகன் போலவே நடந்துவந்தான். ஆனால் தந்தையின் இறுதி நாட்களுக்குள் அவனுடைய குணங்களெல்லாம் மாறி அவன் ஒரு புதிய மனிதனாய்விட்டான். பேரரசனுக்கும் பெரு வீரனுக்கும் இருக்க வேண்டும் உயர் பண்புகள் யாவும் ஒரு கணப்போதில் அவனிடம் வந்தமைந்து விட்டன. இம் மாறுதல்களை கண்டு நான்காம் ஹென்ரியும் தன் கவலை நீங்கி மகிழ்ச்சிடைந்தான்.

நான்காம் ஹென்ரி அரசன் தன் வாழ்நாள் முற்றிலும் பெருமக்களால் மிகவும் அல்லலுற்றவன். தன் மகனும் அதே தொந்தரவுக்காளாகக் கூடாதே என்று அவன் கவலை கொண்டான். ஆகவே இறக்கும் தறுவாயில் அவன் ஹென்ரி இளவரசனை அழைத்து, “பிற நாட்டுப் போர்களின் வாயிலாகப் பெருமக்கள் தோள்வலிக்கும் போர்த்திறத்திற்கும் ஒரு போக்கிடம் செய்வதே தக்க அரசியல் சூழ்ச்சியாகும்,” என்று அறிவுரை கூறினான். ஹென்ரியும் அதனைப் பசுமரத்தாணி போல் மனத்துள் பதிய வைத்துக் கொண்டான்.

தந்தை இறந்தபின் ஹென்ரி அரசிருக்கை ஏறி ¹ஐந்தாம் ஹென்ரி அரசனானன். தந்தை அறிவுரையாலும், தன் இயற்கைப் பேரார்வத்தாலும் தூண்டப்பெற்று, அவன் தன் முன்னோர்களைப் போலவே வெற்றியுடன் போர்புரிந்து, பூமாதினையும் புகழ் மாதினையும் ஒருங்கே மணம்புரிய எண்ணினான். இவ்வகையில் ஆங்கிலநாட்டுப் பொதுமக்கள், பெருமக்கள், தலைமக்கள் ஆகிய முத்திறத்தினர் இணக்கத்தையும் பெற அவன் முயன்றான்.

பெருமக்களின் ஓயாத சச்சரவால் அலைக்கழிக்கப்பட்ட பொதுமக்கள் எப்படியாவது அமைதி கிட்டாதா என ஏங்கியிருந்தனர். ஃபிரெஞ்சுப் போரினால் தம்மீது அழுத்தும் சுமை, தம் பழம் பகைவராகிய ஃபிரெஞ்சு மக்களின்மீது செல்வத்துடன், தம்மில் பலருக்குக் கொள்ளையிடும் வாய்ப்பும் தம் நாட்டிற்குப் புகழும் கிட்டும் என உணர்ந்து, அவர்கள் அதனைப் பேரார்வத்துடன் வரவேற்றனர். பெருமக்களும் உள்நாட்டைவிட வெளி நாட்டிலேயே தங்கு தடையின்றிப் போராடவும் கொள்ளையிடவும் இடமுண்டு என்று எண்ணங்கொண்டு அதில் ஊக்கங் காட்டினான்.

இவ்விருவகையினரும் போலத் தலைமக்களும் இதற்கு வணக்கம் தருவரோ என முதலில் அரசன் ஐயுற்றுத் தயங்கினான். அவன் அவர்கள் உயர்நெறியாளர் என எண்ணியிருந்தபடியால் போர் வாழ்வையும் கொள்ளையையும் அவர்கள் கண்டிக்கக்கூடும் எனக் கருதினான். மேலும் அவர்கள் இயேசு பெருமானின் அடியார்கள் ஆதலால், குறுகிய நாட்டுப் பற்றுக்கு இடந்தராமல் பரந்த மனப்பான்மைகொண்டு தன் கோரிக்கையை உள்ளூர ஆராய்ந்து பார்த்து, அது நேர்மையற்றது என ஒறுப்பர் என்றும் அவன் அஞ்சினான்.

ஆனால், நடைமுறையில் அவர்கள் செயல் இதற்கு நேர்மாறாயிருந்தது. அவனை ஒறுக்கவோ தடுக்கவோ செய்வதற்கு மாறாக, அவர்கள் மற்ற இருதிறத்து மக்களையும் விட அதில் உணர்ச்சியும் ஆர்வமும் காட்டி அரசனை வற்புறுத்தியதோடன்றி, அவ்வகையில் ஏற்படும் செலவில், ஒரு பெரும் பகுதியைத் தாமே கொடுத்து உதவுவதாகவும் கூறினர்.

இதற்குக் காரணம் அவர்கள் மக்களிடையில் அந்நாள் பரவிவந்த சீர்த்திருத்த இயக்கத்தின் குறிகளைக் கண்டு வெருட்சியடைந்ததேயாகும். ஐரோப்பாவில் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்படவிருந்த சீர்த்திருத்தப் புயலின் முன் அறிகுறிகள் தோன்றிய காலம் அது. மடத் தலைவர், துறவிகள், அந்தணர் ஆகிய நிலைகளில் பொதுமக்களும் பெருமக்களும் அளித்த பொருட்குவையின் வாயிலாக அந்நாளைய தலைமக்கள் அரசவாழ்வு வாழ்ந்து வந்தனர். பிறர் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்ட பொருளை முயற்சியின்றிப் பட்டு மெத்தையிலும் பலவகை இன்பக் கலைகளிலும் செலவழித்து அவர்கள் பழகிப் போய் விட்டனர். புதிய சீர்த்திருத்தக்காரர் மக்கள் கண்களைத் திறந்து, அப்பொருளையெல்லாம் பொதுமக்கள் வாழ்வை உயர்த்தும் நெறிகளில் செலவிடும்படி தூண்டலாயினர். அத்தகைய தலைவர்களில் சிலர் பெரு மக்கள் பேரவையிலும் இடம் பெற்று, அரசன் செவிசாய்க்கும் அளவு கவர்ச்சியடைந்து விட்டனர் என்று கண்டனர் தலைமக்கள். போரார்வம், நாட்டுப்பற்று முதலிய இயற்கை வெறிகளாலன்றி இவ்வியக்கத்தை வேறு வழியில் திருப்ப முடியாது என்று அவர்கள் அறிந்தனர். அதனாலேதான் அரசனது போர்த் திட்டத்திற்கு அவர்கள் இத்தனை ஆதரவு கொடுக்க நேர்ந்தது.

ஹென்ரியின் முன்னோர்களாகிய மூன்றாம் எட்வர்டுப் பேரரசன் ஃபிரான்சுடன் போர் புரிவதற்காகத், தன் தாய் வழியில் அந்நாட்டின் அரசுரிமையைக் கோரினான். ஆனால் சலீக் சட்டம் என்ற ஓர் அரசியல் சட்டத்தின்படி ஃபிரெஞ்சு அரசுரிமை பெண்களுக்குச் செல்லாது. ஆகவே எட்வர்டின் அவ்வுரிமை வல்லடி வழக்காயிருந்ததேயன்றி வேறன்று. எட்வர்டின் உரிமையே இத்தகையது என்றால், ஹென்ரியின் உரிமையைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை. ஏனெனில், ¹எட்வர்டின் நேர்வழியினனாகிய மார்ச்சுகோப் பெருமானை விலக்கியே ஹென்ரியின் குடியினர் இங்கிலாந்தின் அரசியலைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் இவ்வையங்- களுக்கெல்லாம் தெய்வத்தின் ஆட்பெயர்களாகவும் மக்கள் மனச்சான்றின் வெளியுருக்களாகவும் கருதப்பட்ட தலைமக்கள், மறைமொழி மேற்கோள் களுடனும் சட்ட விவரங்களுடனும் தக்க விடையிறுத்தனர். மக்கள் மனத்தில் எழுந்த மயக்கங்களும் தயக்கங்களளும் இங்ஙனம் தலைமக்கள் உறுதியனாலும் துணிவினாலும் அகன்றன. கரும்பு தின்னக் கைக்கூலியும் பெற்றவன்போல, அரசன் மன எழுச்சியுடன் போரெழுச்சியில் முனைந்தான், ஃபிரான்சின் அரசுரிமை கோரி ஃபிரெஞ்சு அரசனாகிய சார்லஸுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.

இங்கிலாந்தில் கொழுந்துவிட்டெரியும் உணர்ச்சிகளையோ, இங்கிலாந்தின் புதிய அரசனிடத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின் தன்மையையோ ஃபிரெஞ்சு மக்கள் உணரவில்லை. இங்கிலாந்து மக்களிடை இதுவரை ஏற்பட்டிருந்த சச்சரவுகளையும், ஹென்ரியின் இளமைக்கால விளையாட்டுக்களையுமே அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ²டாஃபீன் என்றழைக்கப்பட்ட ஃபிரான்சு நாட்டு இளவரசன் ஹென்ரியை மிகவும் ஏளனமாக எண்ணிதுடன், தன் இளமை முறுக்கினால் அதனை வெளிப் படையாகவும் காட்டினான். இங்கிலாந்துக்குச் செல்லும் தூதர் வாயிலாக அவன் பூம்பந்துகள் அடங்கிய பேழை ஒன்றை அனுப்பி, “ஃபிரான்சின் அரசுரிமைக்கும் உனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே; அரசுரிமைக்குரிய செங்கோலிலும் நின் மென்கைக்கு உகந்த அணியினை இதோ அனுப்பியுள்ளேன்; பெற்று மன நிறைவடைக!” என்று சொல்லும்படி ஏவினான். இச்சொற்கள் எரியும் தீக்கு எண்ணெயாக உதவின. ஃபிரெஞ்சுத் தூதரிடம் ஹென்ரி, “உம் விளையாட்டுக் கண்டு மகிழ்ந்தோம். பூம்பந்திற்கு மாறாக ஃபிரெஞ்சு மக்கள் காதுகளில் பூம், பூம் என இரைந்து கொண்டு வந்து அவர்களது இறுமாப்புக் கோட்டையைத் தகர்க்கும் தழற்பந்துகளை ஏவி, உம் முடியினையும் செங்கோலினையும் கேளிக்கைப் பரிசாகப் பெற இருக்கிறோம் எனக் கூறுக!” என்று சொல்லி அனுப்பினான்.

2.சூழ்ச்சியும் துணிவும்

வெளிநாட்டுக்குப் போகுமுன் உள்நாட்டிலேயே ஹென்ரிக்குத் தன் ஆண்மையையும் திறத்தையும் காட்ட ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதுவே அவனை அண்டி நின்று அவனை மறைவாக ஒழிக்க முயன்ற உட்பகையை அவன் வென்ற வகை ஆகும். ஹென்ரியை விளையாட்டுப் பிள்ளையாக எண்ணிய டாஃபீன் பிரெஞ்சு நாட்டுத் தங்கத்தை வாரியிறைத்து இங்கிலாந்தில் சூழ்ச்சியாளரை வளர்த்தான். அவர்களுள் ஹென்ரியின் ஒன்றுவிட்ட உடன் பிறந்தானம் கேம்பிரிட்ஜ் கோமானுமான ¹ரிச்சர்டு அவன் பள்ளித் தோழனும் துணைவனுமான ²ஸ்க்ரூப் பெருமகனும், ³தாமஸ் கிரேப் பெருந்தகையும் முதற்கொண்டு சேர்ந்திருந்தனர். தம் சூழ்ச்சியின் மறைவில் உறுதிக் கொண்டு, போர்க் கெழுமுன் கூடிய போர்முறைப் பேரவையில் அவர்கள் அச்சமின்றி அமர்ந்திருந்தனர். ஆனால், அவர்கள் திட்டமனைத்தும் ஒற்றர் மூலம் அறிந்து வைத்திருந்த ஹென்ரி.

“மிகச்செய்து தம்மெள்ளு வாரை, நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று”

என்று வள்ளுவனார் கூறிய அரசியல் அமைதி குன்றாது, அவர்கள் வாயாலேயே அவர்கள் குற்றத்திற்கான ஒறுப்பின் அளவும் ஏற்படுமாறு செய்தான். எப்படியெனில், அவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நோக்கிப், போர்த் திட்டங்களின் பல பகுதிகளையும் ஆராயும் முறையில், “நம் படைஞர் அனைவரும் நம்மிடம் முற்றிலும் நம்பிக்கையும் பற்றும் உடையவர்கள்தாமே? அவர்களுள் அரசுக் கெதிரான உட்பகைவர் யாருமிலர் அன்றோ?” என்று வினவினான்.

“அங்ஙனம் யாரும் இலர்,” என்று ஒரே குரலாக அனைவரும் விடையிறுத்தனர்.

“படைத்தலைவரிடம்?”

“இல்லை; படைத்தலைவரிடமும் இல்லை”.

“நன்று, நன்று, மிகநன்று, அப்படியாயின் உட்பகையற்ற இந்நற்றறுவாயில், அரசனுக்குப் பகைமை செய்யாது அவன் ஆட்சி, ஒழுங்குக்கு தீங்கு செய்த சில தீயர் சிறையிலிருக்கின்றனர் அன்றோ! அவரை விடுவிப்பது நல்லதன்றோ?”

பலர் இது கேட்டு வாளா இருந்தனர். சிலர் விடுவிக்கலாம் என்று கூற இருந்தனர். கிளர்ச்சிக்காரர் வினைவயப்பட்டு, “அரசே, போர்க்கெழும் போது சிறுபகைக்குக்கூட இடம் இருத்தல் கூடாது. அவர்களை மற்றக் காலத்தில் ஒறுப்பதினும் கடுமையாக ஒறுத்து, நாம் முன்னணியில் போர்க் கெழும்போது பின்னணியை வலியுறுத்திக் கொள்ளுதல் வேண்டும்” என்றனர்.

அரசன் மறுமாற்றம் பேசாமல் அவர்களிடம் அவர்கள் குற்றச் சாட்டுகளின் விவரத்தோடு அதற்கான தூக்குத் தீர்ப்பு ஆணையும் அடங்கிய உறையைத் தந்தான். அது நட்பினுக்கோ, வேறு உயர் பணி வகைக்கோ அறிகுறியான பரிசாயிருக்க வேண்டும் என அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கினர். வாங்கிப் பிரித்து வாசித்ததுமே அவர்கள் வாயெழவில்லை. தம் சொல்லே தம்மைப் பிணித்துவிட்டன என்று அவர்கள் உணர்ந்தனர். செயல் வீரனாகிவிட்ட ஹென்ரியும் உணர்ச்சிக்கு இடம் தந்து காலந் தாழ்த்தாமல் அவர்களைத் தூக்கி விடுமாறு பணித்துவிட்டுப் போர் எழுச்சிக்கு ஒருக்கமானான்.

ஹென்ரியின் இளமைக்காலத் தோழர்களுள் ஃபிரெஞ்சுப் படையெழுச்சிக்கு முன்னதாகவே நகையரசன் ஃபால்ஸ்டாஃப் இறந்து போனான். அவன் வயிற்றுவலி. தலைநோய் ஆகிய பலவற்றைத் தன் நலிவுக்குக் காரணமாகக் கூறினபோதிலும், உண்மையில் அரசன் புறக் கணிப்பினால் அவன் நெஞ்சு முறிவுற்ற தென்பதை அவன் தோழர்கள் அறிந்தனர். அவனுக்குப்பின் மீந்த ¹பார்டல்ஃப், ²பிஸ்டல், ³நிம் முதலியவர்களும், அவர்களைப் போலவே வேறு தொழிலற்றுத் திரிந்த பிறரும், இப்போரி னிடையேயாவது தமது பழஞ்சில்லரைக்கொள்ளை முறைகளைத் துணிகரமாகத் தொடர்ந்து நடத்தலாம் என்றெண்ணி, அரசன் படையில் ஏராளமாக வந்து சேர்ந்தனர். செல்வர்களும் நாட்டுப்பற்று மிக்க குடிமக்களும் மற்றொரு புறம் வந்து குவிந்தனர். பழம் போர்வீரரும், ஸ்காட்லாந்து வேல்ஸ் முதலிய அயல்நாட்டு வீரரும்கூட ஹென்ரியின் புகழிலும் கொள்ளையிலும் பங்கு கிட்டுமென எண்ணி வந்து சேர்ந்திருந்தனர். இக்கடைசி வகுப்பார் பெரும்பாலும் நல்ல மறவேரயாயினும் தத்தம் நாட்டு மொழிகளையே பேசியதுடன், நாகரிக நயமிக்க ஆங்கில மக்களுடன் முரணி ஆரவாரமிட்டும் வந்தனர். இத்தகையோருள் சிறந்தவர் ஃபுரூவெல்லின் என்ற வேல்ஸ்நாடடுத் தலைவரும், மாக் மோரிஸ் என்ற அயர்லாந்துப் படைத்தலைவரும் ஆவர். இவர்களுள் ஃபுரூவெல்லின் பல போர்களில் அடிப்பட்டவன்; வாயாடி, அதோடு ‘கடுகு வறுக்கும்’ அளவு இலத்தீன் மொழிப்பயிற்சியும், படைத்துறை யியல் நூல்களிலும், சிறிது பழக்கமுடையவனுமாதலால், அவற்றிலிருந்து மேற்கோள்களும் பல்லுடை படும் தொடர்களும் எடுத்துக்காட்டிப் பிறரை அடக்கிவிட முயன்றான். இத்தகைய பல்வேறு வகைப்பட்ட படைஞரையும் ஹென்ரி தன் ஒப்பற்ற தலைமைத் திறத்தினால் ஒன்று படுத்தினான்.

ஹென்ரி இயற்கையில் ஈரநெஞ்சுடையவனே. இளமையில் அவன் இரக்கம் நகைச்சுவை என்னும் போர்வையுட் பட்டிருந்தது. ஆயினும் ஃபால்ஸ்டாஃப் குழுவினர்க்கு அவன் இளகிய உள்ளம் தெரிந்தே இருந்தது. அரசனானபின் தனது இரக்க மனப்பான்மையும் இளமைக் காலக் கூட்டுறவுகளும் உலகியல் வெற்றிக்குத் தடையாயிருக்கும் என்று அவன் கண்டான். ஆகவே, அவன் அவற்றை வெளிக்குக் காட்டாமல் உள்ளடக்கியும், கூடியமட்டும் உள்ளுணர்ச்சிகளைக் கொன்றும் ஃபால்ஸ்டாஃபைப் புறக்கணித்துத் தள்ளினான். அதே கடுமையினைத் தான் போர்க்கெழுமுன் தன்னைச் சூழ்ந்த உட்பகைவிரிடமும் போர்த் தலைவன் என்ற முறையில் தன் பணியாளரிடமும் பெருமக்களிடமும் அவன் காட்டினான். இதனாலும், பொது மக்களிடமும் நாட்டினிடமும் கொண்ட பற்றினாலும், அவன் ஆங்கிலநாட்டு வரலாற்றில் ‘ஒப்பற்ற போர்த்தலைவன்’, ‘ஒப்பற்ற நல் அரசன்’ என்ற இரண்டு பெயர்களையும் ஒருங்கே அடையப்பபெற்றான்.

சூழ்ச்சியின் முடிவு துணிவு எய்தல் என்பதையும், துணிவு எய்தியபின் தாழ்ச்சி செய்தல் ஆகாது என்பதையும் அறிந்த ஹென்ரி, ஃபிரான்சுக்கு அனுப்பிய தன் தூதனை விரைவில் பின்பற்றினான். பின்பற்றித் தன் படைகளுடன் ஸ்தாம்ப்டனில் கப்பலேறி, ஃபிரெஞ்சுக் கரையில் கோ என்னுமிடத்தில் வந்திறங்கினான். அதன்பின் ஃபிரெஞ்சு அரசனிடம், அவன் அரசுரிமையை உடனே விட்டுக் கொடுக்கும்படி இறுதியறிக்கை விடுத்தான். அதன் இறுமாந்த எடுப்பைக் கண்டு, சற்று உள்ளூர அச்சமுற்ற ஃபிரெஞ்சு அரசன், தன் கோட்டை கொத்தளங்களைச் சீர்ப்படுத்தவேணும் கொஞ்ச உதவட்டுமென்ற எண்ணத்துடன் தன் முடிவு தெரிவிக்க ஒருநாள் தவணை கேட்டான். ஆனால் ஹென்ரியின் தூதனாகிய எக்ஸ்டர், “அரசே! நான் பொறுத் தாலும் என் தலைவர் பொறார். குறித்த நேரம் நான் மீண்டு செல்லாவிடில் அவர் முன்னணிப் படையின் அம்புகள் தாமே இங்கே என்னைத் தேடும்” என்றனன். வேறு வகையின்றி டாஃபீன் போர் அறிக்கை தந்து தம் படைகளை விரைவில் திரட்ட முயன்றான்.

3.முதல் முதல் வெற்றி

ஹென்ரி அரசன் தன் படைகளைக் ’கோ’விலிருந்து ¹ஹார்ஃப்ளூர் என்ற நகரத்தை நோக்கி நடத்திச் சென்று அதை முற்றுகையிட்டான். ஐந்து வாரம் தொடர்ச்சியான போரால் நகரம் வலிவுற்றது. போரின் அழிவை வென்றது பிணி; பிணியையும் வென்றது, உண்ண உணவும் பருக நீரும் இன்றி மக்கள் பட்ட துயர். அவர்கள் நிலையறிந்து ஹென்ரி உள்ளூர இரக்கங் கொண்டான். ஆனால், அதைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் கடுமையும் வன்கண்மையும் புறத்தே காட்டி நகர்வாயிலை உடனே திறந்து விடுமாறும், விடாவிடில் முற்றிலும் அழிவுகாண எழுவதாகவும் இறுதித்தாள் அனுப்பினான். "இதுவரை நீங்கள் கண்ட கடுமையெல்லாம் கடுகென நினைக்கும்படி இனிச்செய்யும்.

பாரிய துயர்ப்பொறிகள் உங்கள் மீது பாயக் காத்திருக்கின்றன, "என்ற அவனுடைய துணிகரச் சொற்களைக் கேட்டு அவர்கள் மனமுடைந்து வாயிலைத் திறந்துவிட்டனர் ஹென்ரியின் வீரரும் நகர மக்களைவிட நல்ல நிலையில் இல்லை. நகரமக்களைப் பிடித்த பிணியும் பஞ்சமும் அவர்களையும் தாக்கவே செய்தன. ஆதலின் ஒரு வகையில் அரசன் வன்கண்மையினால் இருதிறந்தினரும், தம் பொதுப் பகையாகிய பிணியையும் பஞ்சத்தையும் ஓரளவு வென்றனர் என்றே சொல்ல வேண்டும்.

ஹார்ஃப்ளூர் வெற்றிக்குப்பின் நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியினால் “கருவின்றிக் குருதியின்றி” ஹென்ரி ஃபிரெஞ்சு மக்கள் உள்ளத்தின் மீது ஒரு வெற்றியை நிறுவினான். கொள்ளையிடும் நோக்கம் ஒன்றுடனேயே ஃபிரான்சுப் போரில் கலந்த பல ஆங்கிலேயரை, அந்நாட்டில் தொடக்கத்திலேயே ஏற்பட்ட பிணிகளும் பஞ்ச நிலைகளும் பின்னும் விலங்கியற் படுத்திவிட்டன. எளிதில் கிட்டிய வெற்றியால் வந்த வெறியும், வழி வழி வந்த ஃபிரெஞ்சு நாட்டுப் பகைமையுணர்ச்சியும், இன்னொரும் புறம் அவர்களை உந்தின. ஆகவே, அவர்கள் வரம்பிழந்து ஃபிரெஞ்சு மக்களைக் கொள்ளையிடவும் இழிவு படுத்தவும் தொடங்கினர். ஹென்ரி இவற்றை வன்மையாகக் கண்டித்தும் அவை தடைபடாமற் போகவே, அவன் தன் படைஞர்மீதே கடுநடவடிக்கை எடுக்க நேர்ந்தது. அதிலும் பார்டால்ஃப் இரு நாட்டினரிடையிலும் பொது மதிப்புடைய சமய நிலையமொன்றைக் கொள்ளையிடவே, அதனால் பின்னும் வெகுண்டு அரசன் பார்டால்ஃபைக் கொலைத் தீர்ப்புக் காளாக்கிவிட்டான். இச்செய்தி கேட்ட ஆங்கில வீரரது கொள்ளையார்வமும் ஆரவாரமும் பெட்டிப் பாம்பென அடங்கின. இதனால் ஃபிரெஞ்சு மக்கள் உள்ளத்தில் ‘தம்மீது போராடவந்த அரசன் தம் எதிரியாக வரவில்லை; அரசுரிமை கோரிய அரசனாகவே வந்தனன்’, என்ற எண்ணத்தையும் அஃது உண்டு பண்ணிற்று.

ஹென்ரியுடன் சேர்ந்து ஃபிரெஞ்சு நாட்டில் கொள்ளை யிடலாம் என்று வந்த இவர்களுட் பலர் பார்டால்ஃபின் முடிவால் ஊக்கமிழந்தனர். பிணியாலும் பசியாலும் நலிவுற்றவரும் மடிந்தவரும் வேறு முறிந்தும் சிதைந்தும் போன கருவிகளைச் சீர்த்திருத்தக்கூட அந்த அயல் நாட்டில் ஆங்கிலேயருக்கு உதவி கிட்டவில்லை. ஃபிரெஞ்சுப் போர் என்றால் கிள்ளுக்கீரை எண்றெண்ணி வந்த அவர்களுள் பலர் வாடி வதங்கி அழுக்கடைந்த ஆடையுடனும் மாசூர்ந்து சோர்ந்து பொலிவற்ற தோற்றத்துடனும் நடந்தனர். அவர்களைப் பார்த்து ஃபிரெஞ்சு மக்களுட் பலர் நகையாடவும் இரங்கவும் தொடங்கினர். எனவே, ஹார்ஃபுளூர் முற்றுகையால் பொதுவாக பிரெஞ்சு மக்களிடையே பேரதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் ஆங்கிலேயருடைய வெற்றி ஏதோ ஃபிரெஞ்சுப் படைத் தலைவர் அசட்டையாயிருக்கும் நேரத்தில் கிட்டிய விளையாட்டு வெற்றியே என்றும், டாஃபீன் திரட்டிய பெரும்படை அவர்கள் பக்கமாகத் திரும்பிவிட்டால் வெற்றி யெல்லாம் காற்றில் பறக்கும் என்றும் எண்ணினர்.

டாஃபீனும் ஹென்ரியின் வெற்றியைக் கண்டு அஞ்சவில்லை. ஆங்கிலப் படையை வெல்வதை அவன் ஒரு பொருட்டாக எண்ணினவன் அல்லன். உண்மையில் அவர்கள் சில வெற்றிகளையேனும் அடையுமுன் அவர்களைப் போய் எதிர்ப்பதுகூடத் தனக்குப் பெருமை தராது என அவன் எண்ணியிருந்தான். எனவே, அவன் ஹென்ரிக்கு முன்னிலும் செருக்கான எடுப்புடன் ஒரு தூதனை அனுப்பி “ஆங்கில மக்கள் மதிப்புக்கு ஒன்றிரண்டு வெற்றிகள் இருக்கட்டுமே என இதுகாறும் உம்மை எதிர்க்காது விட்டு வைத்தோம். எம் பேரரசின் படைகளை நேராகக் காணுமுன் தன் மதிப்புடன் உடன்படிக்கை செய்துகொள்க!” என்று கூறுவித்தான்.

போருக்கஞ்சா ஹென்ரியின் உள்ளம் தம் போர்வீரர் நலிவுகண்டு கனிவுற்றது. அக்கனிவின் நயம் பிரெஞ்சுத் தூதனுக்கு அளித்த மறுமொழியிலும் காணப்பட்டது. “எங்கள் நிலையை நீங்கள் நன்றாய் அறிந்துள்ளீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களை உடனடியாக எதிர்க்காமல் முன்னேற விடுவதுகூட எங்களுக்கு ஆறுதல்தான். அந்தமட்டும் எனது நன்றி. ஆனால், உடல் நலியினும் ஆங்கிலேயர் உளம் நலியார் என்பதை அறிவீராக! நீங்கள் எதிர்ப்பதாயின் இந்த நெருக்கடியான நிலைமையிலும் துணிவுடனே போராடாமல் விடோம். எனவே, எம்மை எதிர்க்காது செல்லவிடுவதாயின் விடுக; அன்றி எதிர்ப்பதாயின் ஃபிரெஞ்சுக் குருதிக்களரி ஈந்து முன்னேற்றத்தின் ஒவ்வோரடியையும் விலைக்கு வாங்குவோம்,” என்று ஆங்கிலத் தூதன் டாஃபீனிடம் கூறினான்.

தோள் நடுங்கமிடத்து வாலும் பிற உறுப்பும் நடுங்குவதில் வியப்பு என்ன! தூதன் சென்றவுடன், அரசன் உடன்பிறந்தானும் அரசனுக்கடுத்த படி படைத்தலைவனுமான ¹கிளஸ்டர் கோமகன், “அரசே! நம் நிலையை இவ்வளவு தெளிவாக எதிரிக்குக் காட்டிவிடுகிறோமோ! அவர்கள் உடனே வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டான்.

அரசன், “வந்தால் என்ன, தம்பி! நம் வெற்றி தோல்வி இறைவன் கையிலிருக்கிறதேயன்றி அவர்கள் கையில் அல்லவே” என்றான்.

இல்லாத இடத்தில்தான் இறைவன் என்ற சொல்லுக்கு இடமுண்டு. எல்லாம் நிறைந்த ஃபிரெஞ்சுப் படைஞர் தம் வெற்றித் தம் கையில் என்ற இறுமாப்புடன் உண்டாடினர். அவர்கள் ஏன் வெற்றியில் ஐயப்பட வேண்டும்? வெற்றியைத் தரும் போர்க்கருவிகளுக்கும் படைகளுக்கும் அவர்களிடம் குறைவில்லை. படைவீரரும் ஆங்கிலேயரைப் போல் நின்ற நிலையில் திரண்டு வந்தவர் அல்லர். பண்டுதொட்டே நல்ல பயிற்சி பெற்றவர். எண்ணிக்கையில் ஒன்றுக்கு ஐந்தானவர். எனவே, இறைவனைப் புகழ்வதற்கு மாறாக அவர்கள் தம் வீரத்iயும் வல்லமையையும் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டனர்.

ஆற்றைக் கடந்து அவர்கள் அருகிலே தங்கியிருந்த ஆங்கிலேயே வீரச் செவியில் இப்பேச்சுக்களும் ஆரவாரமும் எட்டவே, அவர்கள் புற அமைதியையேயன்றி உள்ள அமைதியையும் கலக்கிவிட்டன.

4.கார்முகிலின் சூலில் தோற்றும் வெண்மின்

வெற்றியின் அளவு அதனைப் பெறுவோர் அடையும் இடையூற்றின் அளவுக்கு ஒப்ப ஆயின் ஹென்ரி அன்று அஜின்கோர்ட்டுச் சண்டையில் அடைந்த வெற்றியினும் பெரிய வெற்றி வரலாற்றில் இல்லை என்னலாம். ஆனால், அவ் இடையூறனைத்தையும் கடக்க உதவிய பொருள் ஒன்று உண்டானால், அஃது அரசன் ஐந்தாம் ஹென்ரியின் வீரத்தோடு கூடிய அருளேயாகும். தன் வீரர் துன்பத்துள் தோய்ந்துகிடந்த அன்று, அவன் இன்பமோ ஓய்வோ நாடவில்லை. அது மட்டுமன்று; பொதுப்படையான வீரன் அறியாத அளவு இடையூற்றின் அளவை அவன் அறிந்திருந்ததற் கிணங்க, அவ்வீரர் துயில் பெறினும் அவன் துயில் பெறாது, பிணியுற்ற சேய்களைக் காக்கும் தாய்ப் புலிபோன்று அவர்களைக் காவல் செய்து வந்தான்.

விடிய ஒரு யாமத்தில் அரசன் தன் உடன் பிறந்தான் கிளஸ்டருடன் இறுதியாக ஒருமுறை படைவீட்டைச் சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அதற்குள் எழுந்து அரசனை வணங்கியவர்களுக் கெல்லாம் அவன் ஊக்க மொழிகள் தந்தான். ¹பெட்ஃ போர்டிடம் “கார்முகிலின் சூலிலுத் வெண்மின் தோன்றுவது உண்மையே! பகைவர் அண்மையில் இருப்பதனாலேயே யன்றோ நாம் எல்லாம் இவ்வளவு புலர்காலை எழுந்திருக்க நேர்ந்தது?” என்றான். ஆண்டிலும் படைப் பயிற்சியிலும் முதிர்ந்த ²தாமஸ் எர்ப்பிங்ஹாம் பெருந்தகையைக் கண்டதும், பெரிய! தமது பஞ்சுப் பொதிபோன்ற வெண்தலைக்கு ஃபிரெஞ்சு நாட்டுப் பரல்மேடா ஏற்புடையது? மெல்லிய பஞ்சணையன்றோ ஏற்புடையது," என்றான். எர்ப்பிங்ஹாம், “அரசருடன் ஒத்த தலையணை எமக்கு இன்றன்றோ கிட்டியது! மெல்லணை இதற்க ஒப்பாகுமோ?” என விடையிறுத்தனன். இதற்குள் கிழக்கு வெளுக்கத் தொடங்கிவிடவே இனி மாற்றுருவில் மீந்த பகுதியைப் பார்வையிடுவது நான் என எண்ணி அரசன் எர்ப்பிங் ஹாமின் மேலாடையை வாங்கி அதனால் தன்னைப் போர்த்திக் கொண்டு சென்றான்.

பழைய ஃபால்ஸ்டாஃபின் தோழர்களுள் மீநதிருந்த பிஸ்டல் தன் குற்றங்கண்டு அரசனுக்குரைத்த ³ஃபுளூவெல்லின் மீது புழுக்கத்துடன் இருந்தான். அரசனைக் கண்டவுடன் அவன் மாற்றுடையில் அவனை இன்னானென்றுணராமல், “உன் பெயரென்ன?” என்று அதட்டினான். அரசன், “ஹென்ரி அண்ணல்,” என்றான். பிஸ்டல், “அண்ணல்! அஃதென்ன? கார்ன்வால் நாட்டுப் பெயர் போன்றிருக்கிறதே,” என்றான்.

அரசன்: இல்லை, நான் வேல்ஸ் நாட்டிற் பிறந்தவன். (இஃது ஓரளவு உண்மையே! அரசன் வேல்ஸ் நாட்டில் மான்மத் என்ற இடத்தில் பிறந்தனன் ஆகலின்.)

பிஸ்டல்: அப்படியாயின் ஃபுளூவெல்லினை அறிவாயோ?

அரசன்: அறிவேன்.

பிஸ்டர்: சரி, அவனை முன்னெச்சரிக்கையாய் இருக்கச் சொல். வருகிற ஆயன் திருநாளுக்குள் நான் அவன் தலையை உடைக்கக் காத்திருக்கிறேன்.

அரசன்: நீ உடைப்பதிருக்கட்டும். உன் கைத்தடியால் அவன் உன் தலையை உடைக்காமல் பார்த்துக்கொள்.

என்று கூறிவிட்டுப் பின்னும் அப்பாற் சென்றான். கும்பலாய் நின்ற படைவீரர் சிலர் அரசனிடம், “நீ எந்தத் தொகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டனர்.

அரசன்: தாமஸ் எர்ப்பிங்ஹாம் பெருந்தகையின் தொகுதி.

வீரருள் ஒருவன்: ஓகோ! அவர் நல்ல பழம்பெருச்சாளி. போர் நிலைமையயைப் பற்றி அவர் என்ன கருதுகிறாராம்?

அரசன்: கடல் நடுவில் மணல் திட்டில் ஓரலையால் கொண்டு சேர்க்கப்பட்டு அடுத்த அலையை எண்ணிக் கவலையுடன் இருக்கிற உடைந்த மரக்கலத்து மக்கள் நிலைமையே நம் போர்நிலைமை என்று அவர் எண்ணுகிறார்.

வீரர்: அவர் அறிந்த இவ்வுண்மையை அரசனுக்கு அறிவிக்க அவர் துணிவாரா?

அரசன்: துணியவும் மாட்டார்; துணிதலும் கூடாது. ஏனெனில், அரசன் எவ்வளவு உயர் கருத்துடையவனாயினும் மனிதனே யாதலால் ஒரு வேளை கலங்கக்கூடும். அங்ஙனம் அரசன் கலங்கினால் படையே கலங்குமாதலால், அது நாட்டுக்கிழைத்த தீங்காய்விடும்.

இன்னொரு வீரன்: யார் சொல்லி என்ன! சொல்லாமல் என்ன? அரசன் மனத்திற்குள் கலக்கமில்லாமலா இருக்கும்? இன்று இப்படையின் தலவனாய் இங்கிருப்பதைவிட அடிவயிற்றில் கல்லைக்கட்டிக்கொண்டு ஆழ் கடலினடியில் கிடக்கப்படாதா என்று அவன் எண்ணுவான். இதை நான உறுதியாகக் கூறுவேன்.

அரசன்: நான் அறிந்தவரை அரசன் இன்று வேறு எங்கு இருக்க விரும்பான்; இப்படையின் தலைவனாகவே இருக்க விரும்புவான் என்றெண்ணுகிறேன்.

வேறொரு படைஞன்: ஒருவகையில் நீ கூறுவது சரியே. அரசன் எங்கிருந்தால் என்ன? படையில் சண்டை செய்து சாவதும், சாவாது பிழைத்தால் சிறைப்பட்டு நலிவதும் நாம் தாமே! அரசன் நேரடியாகச் சண்டை செய்வதுமில்லை. தோற்றுச் சிறைப்படினும் அவன் உயிர்க்கு உறுதிப்பணம் கொடுத்து அவனை நாட்டுமக்கள் மீட்பாரன்றோ!

அரசன் மனத்தில் இது சுருக்கெனத் தைத்தது. அதனைக் காட்டாது அவன் அரசனிடம் பற்றுடைய வீரன்போல், “நம் அரசன் அப்படிப்பட்டவன் அல்லன் என்று உறுதி கூறுகிறேன். படைஞருடன் படைஞனாய்ப் போரிட்டு மடிவதன்றி வேறு அறியான். உறுதிப்பணம் கொடுத்து மீள ஒருப்படான்,” என்றான். பின் சற்றுத் தயக்கத்துடன், “ஒருவேளை இஃதெல்லாந் தெரிந்து நீங்கள் வேண்டுமென்று இவ்வளவும் கூறியிருக்கலாம். அரசன் போர் நற்போர் ஆதலின் அவனுடன் மாள்வதே சால்புடையது என்பதே என் எண்ணம்,” என்றான்.

அதற்குள் ஒருவன், “அது நற்போர் என்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? போரில் இறப்பவர், கால் கை முதலிய உறுப்பிழந்து நலிபவர் என்போர் தீவினை யனைத்தும் அவர்கள் யாருக்காகப் போர் செய்கின்றனரோ அந்த அரசனுக்கன்றோ உரியன,”என்றான்.

அரசன், " அவரவர் தீவினை அவரவருக்கே! அரசன் கடமைப்போர் புரிவதன்றி அவர்கள் நல்வினை தீவினைகளை ஏற்றுக் கணக்கிடுவதன்று," என்று கூறிவிட்டகன்றான்.

வெளிக்கு வீரருக்கு ஓரளவு மறுமொழி தந்தாலும் இச்சொற்கள் அரசன் மனத்தில் எண்ணற்ற கருத்தலைகளை எழுப்பின. “அந்தோ! அரசர் வாழ்விருந்தவாறு! அரசன் உண்பதும் உடுப்பதும் எல்லாரையும்போல் ஒரு நாழியம் ஒரு நாலு முழமும் தானே! எல்லாரையும்போல ஒரு வயிறும் ஓரிரு கையும் காலும் உடைய இந்த ஒரு மனிதன் எல்லார் தீவினைகளுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டுமாமே! அந்தோ! அரசர் முடி ஏற்றால் மனித வாழ்வின் இன்பமும் உரிமையும் அற்றுப்போகவேண்டுமா? வலம் இடம் அறியாதவர்கூடக் குறைகூறும் இவ் அரசரின் நிலையை ஒருவன் ஏற்க விரும்பும்படி அதில் என்ன அருமை இருக்கிறது? ஆரவாரமும் பகட்டும் அவனிழக்கும் அமைதிக்கும் உறக்கத்திற்கும் ஈடாகுமோ? என்றிவ்வாறு துயர்தரும் எண்ணங்களுள் ஆழ்ந்து நின்று அரசன் சில நொடிப்போது தன்னிலையிழந்தான். ஆனால், எர்ப்பிங்ஹாம் வந்து,”போர்த் தலைவர் போரவை கூ ஒருங்கினர். தம் வரவை எதிர் நோக்குகின்றனர்" என்றதுமே அவ்வெண்ணங் களை நெடுந்தொலை உதறி எழுந்தான். “இதோ வந்தேன்,” என எர்ப்பிங்ஹாம் வயிலாகக் கூறியனுப்பிவிட்டு அவன் மண்டியிட்டு இறைவனை வணங்கி, “ஆண்டகையே! அவரவர் ஊழ்ப்பயனை அவரவர்க்கு ஊட்டுவிக்கும் அறிவுப்பொருளே! ரிச்சர்டின் பழி இன்னும் மீந்துள்ளதறிவேன். ஆங்கில மக்களுக்காக இன்றுமட்டும்; இவ்வொரு நாள் மட்டும் அஃது என்மீது விழாது காத்து எம் படைக்கு வலி தந்தருளுவீர்,” என வேண்டினான்.

போரவையுள் அரசன் படைத்தலைவரிடம், “வெற்றியின் சுமையை இறைவன்மீது போட்டுவிடக் கடனாற்றுக,” என்று ஊக்கினான். வெஸ்டு மோர்லந்து, “ஆம் அரசே, இறைவனே நமக்கு வன்மையருளல் வேண்டும்! ஆனால், இப்போது இங்கிலாந்திலிருக்கும் எண்ணற்ற வீரரில் ஒரு சில ஆயிரவர் இங்கு உடனிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்!” என்றான்.

அரசன் அதுகேட்டுத் தலையசைத்து, “இல்லை, இல்லை. ஒருபோதும் அங்ஙனம் விரும்பற்க, இறப்பதாயின் சிலர் இறப்பது மேம்பாடுதானே! ஆயின், வெற்றி வருவதாயின் அப்புகழைப் பங்கிட ஆள் எத்தனை குறைவோ அத்தனையும் பங்கு மிகுதியன்றோ? இன்று போரில் நின்று இறப்பவரையும், வென்று மீள்பவரையும் பலகாலம் இங்கிலாந்து போற்றுமன்றோ? அவ்வழியாப் புகழில் பங்கு கொண்டு நம்புகழைக் குறைக்க ஆயிரமல்ல; ஒருவர் கூடக் கூடுதலாக வந்து சேரவேண்டுமென்று நான் விரும்பேன்,” என்றான்.

நகைச்சுவை பொதிந்து வீரமும் அருளும் கனிந்த அரசன் சொற்கள் ஆங்கில மக்கள் உள்ளத்தில் கரந்துகிடந்த விலங்கியல் மாசகற்றி, மாந்தருள்ளும் மேம்பட்ட உயர் வீரநிலை தந்தன.

போருக்குரிய இருப்புடைகூட இல்லாத நிலையிலிருந்து ஆங்கிலவீரர் துணிகரமாக ஃபிரெஞ்சுப்படை மீது மோதலாயினர். அவர்களின் அவலநிலை கண்டு இவர்களுடன் சண்டையிடப் போரணிகூட வேண்டுமா என்று ஏளன எண்ணத்தால் படைத்தலைவன் ஆணை கடந்து ஃபிரெஞ்சுப் படைஞர் சிதறி நின்றனர். சிலர் ஆங்கிலேயர் தாக்குவதுவரைக் காத்திராது தாமாகச் சென்று தாக்கினர். இந்நிலை கண்டு ஹென்ரி ஆங்கிலவீரரைத் தம் ஈட்டிகளை முன்னிறுத்திக் கோட்டை செய்து அதன் பாதுகாப்பலிருந்து கொண்டு அம்புகளைப் பகைவர்மீது ஏவுமாறு தூண்டினான். அதனால் பட்டவர் பலர்; அதிலிருந்து பிழைக்க ஓடுபவரால் தள்ளுண்டு நெக்குண்டழிந்தவர் பலர்; அப்படியும் பெருந் தொகையினரான ஃபிரெஞ்சுப் படைஞர் கலங்காமல் ஆங்கில வீரர்களைச் சிதறடிக்க முயன்றனர். ஹென்ரி தன் படைஞர்களை இருபுறமும் பிரித்துப் பக்கத்திலுள்ள காடுகளுக்குள்ளிருந்து அம்புமாரி வீச ஏவினான். இத்தகைய போர்த்திறத்தினால் ஹென்ரி கடல்போலிரைந்து வந்த ஃபிரெஞ்சுப் படைகளை எளிதில் கலைத்து வெற்றி வீரனாய்த் திகழ்ந்தான். பிற போர்களில் போர்வீரர் தலைவனாய் மட்டும் இதுவரை விளங்கிய அவன், இன்று அதோடு நாட்டுக்கவிஞர் பாடல்களின் தலைவனாகவும் விளங்கினான்.

போர் நடந்த இடம் அஜின்கோர்ட்டு என்ற ஊரின் பக்கத்தில் இருந்ததனால் அது வரலாற்றில் அஜின் கோர்ட்டுச் சண்டை எனப் பெயர் பெற்றது. அதில் இறந்த ஃபிரெஞ்சுவீரர் பதினாராயிரத்தினும் மிக்கவர். இறந்த கோமக்களும் பெருமக்களும் நூற்றிருபதினும் மிக்கவர். ஒப்பற்ற படைத்தலைவர் பலர் ஆங்கில மக்கள் கையில் சிறைப்பட்டிருந்தனர். ஆனால், ஆங்கிலேயர் பக்கத்தில் படைவீரருள் இறந்தவர் இருபத்தைந்து பேரே. தலைவருள் யார்க்குக் கோமகனும், சஃபோக்குக் கோமகனும் இறந்துவிட்டனர். இத்தனை சிறிய இழப்புடன் சிறுபடை நின்று பெரும் படையை வென்றது கண்டு வியாதவர் இல்லை. அரசன் இன்மையுட் காட்டிய இறை எண்ணம் சிறிதேனும் மறவாது, “ஆண்டவனே, இஃது உன் கைவரிசையே யன்றி வேறன்று,” என்றான். ஆங்கிலவீரர் அனைவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தம்மையோ தம் வேலையையோ அரசனையோ புகழாது இறைவனையே புகழ்தல் வேண்டும் என்று ஆணையும் தந்தான். ஆனால், இவ்வொரு வகையில் அரசாணையை மதிப்பவரில்லை. ஆங்கில நாடெங்கும் முன் பின் கேட்டறியா இவ்வெற்றியால் வெறிகொண்டு அரசனை வாயாரப் புகழ்ந்து நெஞ்சார வாழ்த்திற்று.

வெறும் லத்தீன்மொழி வீரனாயிராது போரிலும் பெருவீரனாய்ச் செயலாற்றிய ஃபுளூவெல்லின் ஆண்டில் முதிராத ஹென்ரி அரசன் போரில் காட்டிய ஒப்பற்ற திறங்கண்டு வியந்து அதனைத் தன் இயற்கைக் கேற்பப் பழ வீரருடன் இணைத்துக் கூறிக் கொக்கரித்தான். “எம் அரசர் ஜூலியஸ் ஸீஸரினும் மிக்கவர்; தற்கால அலெக்ஸாந்தர் என்றும் கூறலாம். மேலும், அலெக்ஸாந்தர் பிறந்த மாசிதோனும் எம் அரசர் பிறந்த மான்மத்தும் மகரத்திலேயே தொடங்குகின்றன அன்றோ? அம்மகரம் வெற்றிக் கறிகுறியான மகர மீனையன்றோ குறிக்கும்? அன்றி மாசிதோனிலும் ஒரு மலையுண்டு; மான்மத்திலும் ஒரு மலை இருக்கிறது. மாசிதோனில் ஓர் ஆறு; மான்மத்திலும் ஓர் ஆறு. என்ன நெருங்கிய ஒப்புமை!” என்பான்.

ஹென்ரியின் பழந்தோழருள் இப்போருக்குப் பின்னும் மீந்தவன் பிஸ்டல் ஒருவனே. அவன் ஃபுளூவெல்லினைப் பலர் முன்னிலையிலும், “பச்சைப் பன்றித்தோல் தின்னும் வேல்ஸ் நாட்டினன்,” என எள்ளியதுடன், “வெறும் தோல் தின்ன வேண்டா, இந்த உப்பைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்,” என உப்பை நீட்டினான். இவ் அவமதிப்பைப் பொறாத ஃபுளூவெல்லின், பன்றித் தோலை மடியில் வைத்திருந்து, தனிமையில் அவனைக் கண்டவுடன் அவனை நையப் புடைத்து, “என்னைப் பச்சைப் பன்றித் தோலைத் தின்னச் சொன்னதனால் நீ காய்ந்த பன்றித் தோலையேனும் தின்னுக,” என்று வற்புறுத்தித் தின்ன வைத்தான். இத்துடன் பிஸ்டல் தன் ஊக்கங்குன்றி உள்ளழிந்தான்.

அஜின்கோர்ட் வெற்றியின்பின் ஹென்ரி பல நகர்களைப் பிடித்து ஃபிரான்சு நாட்டினுள் முன்னேறினான். இறுதியில் தம் இறுமாப்பு முற்றும் விட்டு ஃபிரெஞ்சு அரசனும் டாஃபீனும், ஃபிரெஞ்சுப் பெருமக்களும் ஹென்ரியின் காலடியில் வீழ்ந்து அமைதி வேண்டி மன்றாடினர். ஃபிரெஞ்சு அரசன் தன் மகள் காதரைனை ஹென்றிக்குத் தந்தான். அதோடு சார்லஸுக்குப் பின் ஹென்ரியையே அரசனாக்க வேண்டும் என்ற வரையறையுடன் உடன்படிக்கை ஏற்பட்டது. சிறைப்பட்ட ஃபிரெஞ்சுப் பெருமக்களும் அவ்வுடன்படிக்கையின் பயனாக விடுதலை பெற்றனர்.

காதரைனுக்கு ஆங்கிலம் நன்கு தெரியாது. ஹென்ரி அரசனுக்கு ஃபிரெஞ்சும் அப்படியே. அதோடு போரில் மட்டுமே இடுபட்ட ஹென்ரிக்குக் காதற்போரின் முறைகள் புத்தம் புதியவையாகத் தோன்றின. போர் உடன் படிக்கையால் வலியுறுத்திப் பெண் பெறும் முறையும் காதலுக்கு உகந்ததாகத் தோன்றவில்லை. எனினும் உய்த்துணர்வும் நகைச் சுவையுணர்வும் மிக்க காதரைன் ஹென்ரி அரசனை வரவேற்று அவன் உள்ளத்தன் நிமிர்ந்த வெற்றி இறுமாப்பைத் தன் பக்கமாக வளைத்துக் கொண்டாள். அவளுடன் ஹென்ரி இனிது அரசு வாழ்வு நடத்தினான்.

ஆறாம் ஹென்ரி

** Henry VI**
** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  ஆறாம் ஹென்ரி அரசன்: ஐந்தாம் ஹென்ரி அரசன் மகன் 9 திங்கள் அளவில் அரசிருக்கை ஏறியவன்.

2.  சார்லஸ்: ஃபிரெஞ்சு அரசன்.

3.  சார்லஸ் டாஃபின்: ஃபிரெஞ்சு அரசன் மகன் ஜோனால் முடிசூட்டப்பட்டவன்.

4.  பர்கண்டிப் பெருமகன்: ஆங்கிலர் சார்பான ஃபிரெஞ்சுக் கட்சித் தலைவன்.

5.  அர்மன் னாக் தலைமகன்: பர்கண்டிக் கெதிரான கட்சித் தலைவன்.

6.  டால்பட்: அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.

7.  சாலிஸ்பரி: யார்க்குக் கட்சியினன். அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.

8.  பெட்ஃபோர்டுப் பெருமகன்: ஹென்ரியின் ஃபிரான்சு ஆட்பெயரா யிருந்தவன். அஜீன் கோர்ட்டில் பொருத வீரன்.

9.  கிளஸ்டர் கோமகன்: இங்கிலாந்தின் ஆட்பேரும் ஹென்ரியின் பாதுகாப்பாளனும் பெட் ஃபோர்டால் கொலையுண்டவனு மாவன்.

10. ஸஃபோக்கு: பெட்ஃ போர்ட்டுக்குப் பின் ஃபிரெஞ்சு ஆட்பெயராய்த் தன்னை விரும்பிய மார்கரட்டை அரசனுக்கு மணம் புரிவித்து நாட்டைக் காட்டிக் கொடுத்தவன்; பொது மக்களால் கொலையுண்டவன்.

11. சாமர்ஸெட்: சஃபோக் கட்சியினன்.

12. ஜோன்: ஆங்கிலேயரை எதிர்த்த ஃபிரெஞ்சு வீரப்பெண்மணி.

13. பொஃபோர்டு முதற்றலை மகன்: ஸஃபோக்குக் கட்சியினன்.

14. வார்விக்: யார்க்கின் கட்சியின் மாபெரும் தலைவன்.

15. யார்க் கோமகன் ரிச்சர்டு: நான்காம் ஹென்ரியால் சிறைப்பட்ட ஆங்கில அரசுரிமையாளன். மார்ட்டிமரின் தங்கை மகன்; ஸஃபோக்கையும் அரசனையும் எதிர்த்துப் போராடியவன்.

16. எட்வர்டு: (நான்காம் எட்வர்டு அரசன்) யார்க்கின் பிள்ளை.

17. ஜார்ஜ்: (கிளாரன்ஸ் மோகன்.) யாhக்கின் பிள்ளை.

18. ரிச்சர்டு: (மூன்றாம் ரிச்சர்டு அரசன்) யார்க்கின் பிள்ளை.

19. எட்மன்டு: யார்க்குடன் போரில் இறந்தவன். யார்க்கின் பிள்ளை.

20. கிளிக்போர்டுப் பெருமகன்: ஸஃபோக் கட்சியினன்.

21. ஜாக்கெட்: கென்ட்தொழிலாளர் கிளர்ச்சித் தலைவன்.

** பெண்டிர்:**
1.  மார்கரட்: நேப்பிளஸ் அரசன் புதல்வி ஸஃபோக்கிடம் பற்றுக் கொண்டவள்; ஹென்ரி அரசனை மணந்து ஆங்கில அரசியானவள்.

2.  கிளஸ்டர் கோமாட்டி: அரசியை வெறுத்து அரசனை வீழ்த்த முயன்று சிறைப்பட்டவள்.

** கதைச்சுருக்கம்**
ஐந்தாம் ஹென்ரி ஃபிரான்சில் அரசுரிமை கோரி அஜீன் கோர்ட்டு வெற்றியால் அடைந்த நாடுகளை எல்லாம் ஜோன் என்ற வீரப்பெண்ணின் எதிர்ப்பினாலும் ஃபிரான்சில் அவன் மகன் ஆறாம் ஹென்ரியின் ஆட்பெயராய் அமைவு பெற்ற ஸஃபோக்கின் தன்னலத்தாலும் ஆங்கிலேயர் இழந்தனர். மேலும் அரசரின் பாதுகாப்பாளரான கிளஸ்டர் கோமகனையும் அவன் கொலை செய்வித்தான். எனவே, ஆங்கிலப் பொது மக்கள் அவன் எதிரிகளான ஸாலிஸ்பரி, வார்விக் ஆகியவர்களின் தலைமையில் கிளர்ச்சி செய்து ஸஃபோக்கைத் துரத்தினர். ஆங்கில அரசரினும் அரசுரிமைக்கு மிகுதியும் தகுதியுடையவ னான யார்க் கோமகன் ரிச்சர்டு இந்நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு அரசன் கட்சியை எதிர்த்தான்.

முதற் சண்டையிலே யார்க் இறக்க, அவன் மூத்த மகன் எட்வர்டு, அரசி மார்கரட்டையும் அரசனையும் வென்று ஸ்காட்லந்துக்குத் துரத்திவிட்டு நான்காம் எட்வர்டு என்ற பெயருடன் அரசனானான். பின் அவன் தன்னை எதிர்த்த தன் தம்பி ஜார்ஜையும் தன் நண்பன் வார்விக்கையும் போரில் வீழ்த்தினான். அவன் தம்பியருள் இணையவனான ரிச்சர்டு சிறையிலிருந்த ஆறாம் ஹென்ரியைக் கொன்று, எட்வர்டுக்குப் பின் உறவினர் அனைவரையும் அழித்து மூன்றாம் ரிச்சர்டு அரசனானான்.

1.தெய்வீக மாது

ஆண்மைக் குணத்தின் பயனாய் ஆங்கில மக்கள் நெஞ்சில் அரசிருக்கை கொண்ட அரசருள் முதன்மையானவன் ஐந்தாம் ஹென்ரி; ஆனால், அவன் மகன் ஆறாம் ஹென்ரி இதற்கு நேர்மாறானவன். அரசராய்ப் பிறந்தவருள் அவனிலும் பேடி எவரும் இல்லை என்னலாம். அரச வாழ்வின் பொறுப்புக்களைத் தாங்கும் உரமுமின்றி, அவற்றைத் துறக்கும் துணிவுமின்றி, அவன், ஆங்கில அரசியல் வாழ்வின் கொந்தளிப்பினிடைய அலைகடலில் ஒரு துரும்பெனும்படி அலைக்கழிக்கப்பட்டான்.

ஐந்தாம் ஹென்ரி தம் வெற்றிகளின் பயனாகவும் ஃபிரெஞ்சு அரசயில் கட்களில் ஒன்றின் தலைவனான ¹பர்கண்டிக் கோமகனின் நேசத்தாலும் ஃபிரான்சிலும் தனது வன்மையைப் பெருக்கினான். மேலும் ஃபிரெஞ்சு அரசனுடன் உடன்படிக்கை செய்து தான் அவ்வரசன் காலத்தில் ஃபிரான்சில் அவனுடைய ஆட்பேறாகவும், அவனுக்குப்பின் ஃபிரான்சு நாட்டின் அரசனாகவும் ஒப்புக்கொள்ளப் பெற்றான். எனவே, ²சார்லஸ் இறந்த உடன் இரண்டு நாடுகளின் அரசுரிமைகளும் அவனிடம் வந்து சேர்ந்தன. ஆயினும் அவற்றைத் துய்க்கக் கொடுத்து வைக்காது அவனும் அதே ஆண்டில் இறக்கவே, பிறந்து ஒன்பது திங்களேயான பிள்ளையாகிய அவன் புதல்வன் ஆறாம் ஹென்ரி அவ்விரு பெரும் பொறுப்புக்களுக்கும் உரிமையாளனானான். அவன் சிறு குழந்தையாதலால் இங்கிலாந்திலும் ஃபிரான்சிலும் முறையே அவனுடைய சிற்றப்பன் மாரான ³கிளஸ்டர்க் கோமகனும் ⁴பெட்ஃபோர்டுக் கோமகனும் அன்னவன் ஆட்பேராயிருந்து அரசாட்சி செய்தனர்.

ஆங்கிலேயருக்கு உடந்தையாயிருந்த பர்கண்டிக் கட்சிக்கெதிரான ⁵அர்மக்னாக்குக் கட்சியினர் சார்லஸ் அரசனின் பிள்ளையான ⁶சார்லஸ் டாஃபினையே அரசனாகக் கொண்டனர். இரு திறத்தினரிடையும் நெடுநாள் போர் நடந்தது. ஐந்தாம் ஹென்ரியின் ⁷அஜின் கோர்ட்டுச் சண்டையில் வெற்றியுடன் பொருத வீரரான பெட்போர்டு, ⁸ஸாலிஸ்பரி, ⁹டால்பட்டு முதலியவர்கள் ஆங்கிலேயர் பக்கமிருந்ததன் பயனாக அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வெற்றி கிடைத்து வந்தது. அதோ டாஃபினும் பெருங்கோழை; அவனைச் சுற்றி இன்பவேட்கை மிக்க சோம்பேறிக் குழாங்களிருந்து கொண்டு அவனைக் கெடுத்து வந்தன. தலைமக்களும் பெருமக்களும் வேறு தங்கள் தந்நலத்தாலும் னூபசலாலும் அவன் வலிமையைக் குறைத்தனர். அவர்கள் படைகள் ஆங்கிலேயருக்குத் தோற்று ஒவ்வொன்றாக ஃபிரான்சின் பெரும்பகுதியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தன. இத்தோல்வி கண்டு டாஃபின் தவறி என்றேனும் மனம் கொதித்தால், தலைமக்கள் அவனிடம், “வெற்றி தோல்விகள் இறைவன் செயலேயன்றி முயற்சியின் பயனாக வருவனவல்ல,” என்று கூறி அவனை மேன்மேலும் செயலற்றவனாக்குவர். அவர்கள் நயமொழிகளே அவனுக்கு நோயும் நோயை மறக்கவைக்கும் பூச்சிமருந்துமாய் அமைந்தன. நாட்டின் அரசனாகவும் தலைவராகவும் அமைந்து இவர்கள் நிலையால் பிரெஞ்சுப் பொதுமக்கள் தம்நாட்டின் ஊழ்வினையை எண்ணி மனமுடைந்து வருந்தினர்.

இந்நிலையில் ஃபிரெஞ்சு நாட்டு இன்ப வாழ்விலிருந்தும் அரசியல் புயல்களிலிருந்தும் நெடுந்தொலைவில் ¹டாம்ரெமி என்ற ஊரில் ²ஜோன் என்ற ஓர் ஏழைப்பெண்ணின் உள்ளத்தில் ஃபிரெஞ்சு மக்களின் நாட்டார்வம் தெய்வ உருக்கொண்டு ஒளிகான்றது. இறையருள் நேராக அவளிடம் தோன்றி, “நலிந்த நின் நாட்டிற்கு நின்னால் நன்மை ஏற்படும்; நின்நாட்டு வீரரைப் போரில் வெற்றியுடன் நடத்திச் சென்று நின் அரசனாகிய டாஃபினுக்கு ³ரெயிம்ஸ் நகரில் முடிசூட்டுவாயாக!” என்று கூறியதாக அவள் உணர்ந்தாள். அவ்வாணையைப் பின்பற்றி அவள் தன் தாய் தந்தையர் அன்புத் தளையையும் பிறர் ஏளனங்களையும் புறக்கணித்து டாஃபினிடம் வந்தாள்.

வீழ்ச்சியின் பிடி அணுக அணுகப் போலி நண்பர்களின் பொய் ஆறுதல் மொழிகளுக்குக்கூட வழியின்றித் தத்தளித்த டாஃபின் சொல்லளவிலேனும் நம்பிக்கை தருகின்றனவே என ஜோன் மொழிகளுக்குச் செவி சாய்த்ததோடு, வேறு செயலற்ற நிலையில் தன் சிதைவுற்ற படையின் ஒரு பகுதியையும் அவளிடம் ஒப்படைக்க ஒருப்பட்டான்.

நாட்டுப்பற்று மிக்க ஃபிரெஞ்சு வீரர்களின் உள்ளங்கள் நாட்டின் நலிவுகண்டு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அதே பற்றுத் தலைவர்களிடம் இல்லாத குறையினால் அவர்கள் வீரமெல்லாம் இதுவரை விழலுக்கு இறைத்த நீராய்ப் பயனற்றதாயிற்று. இன்று ஜோன அவர்களுக்கு வீர உணர்வும் ஊக்கமும் ஊட்டமும் ஒப்பற்ற தலைவியானாள். அவளுடைய பெண்மை அவ்வீரத்துக்கும் நாட்டுப் பற்றுக்கும் உயரிய மதிப்பளித்தது. எனவே, பெருமக்களையும் தலை மக்களையும்போல் அவர்கள் அவள் கண்ட தெய்வ ஒளியில் அவநம்பிக்கை கொள்ளவில்லை. அவள் தெய்வ ஆணை பெற்று வந்த தெய்வப் பிறப்பினள் என்றே அவர்கள் நம்பினர்.

ஜோனின் தலைமையில் ஃபிரெஞ்சு மக்கள் தம் பழைய தோல்விகளை யெல்லாம் மறக்கும் வண்ணம் வியத்தகு முறையில் வெற்றிமேல் வெற்றியடைந்தனர். ¹ஆர்லியன்ஸ் என்ற நகரில் டாஃபினின் படை ஒன்று நெடுநாள் முற்றுகையால் நலிந்து எதிரிகளிடம் சரணடையும் நிலையில் இருந்தது. ஜோனின் வீரர் துணிந்து முற்றுகைக் கோட்டையைப் பிளந்து சென்று பகைவரை வென்று, நகரமக்களுக்குப் புத்துயிரும் புத்துணர்ச்சியும் தந்தனர். சிலநாட்களுக்குள் இதே முறையில் ஃபிரான்சின் பல பகுதிகளையும் மீட்டபின் தெய்வ ஆணையின் படியே ரெயிம்ஸ் நகரில் வைத்து டாஃபினுக்கு முடிசூட்டினாள்.

அவள் வெற்றிகளால் ஃபிரெஞ்சுப் பொதுமக்கள் அவள்மீது எவ்வளவுக்கெவ்வளவு ஆர்வமும் இறும்பூதும் எய்தினரோ, அவ்வளவுக் கவ்வளவு பெருமக்களக்கும் தலைமக்களுக்கும் அவள்மீது அழுக்காறும் பகைமையும் வளர்ந்தன. ஆங்கிலேயரது கைக்கூலி மற்றொரு புறம் அவர்கள் இழிதமைமையை மிகைப்படுத்திற்று. அவர்கள் சமயம் பார்த்து அவளைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர். தம் வெற்றிகளை யெல்லாம் தோல்விகளாகிய அவள்மீது ஆங்கிலேயர் தமது முழு வஞ்சமும் தீர்த்துக் கொண்டனர். மாயக்காரி என்று அவர்கள் அவள்மீது குற்றஞ்சாட்டி அவளைத் தீக்கிரையாக்கினர்.

##2.அல்லிமலர்ப் போர்

ஜோன் இறந்ததால் ஃபிரெஞ்சுக் கட்சி வலிகுறைத்து விடினும். அவள் பழியே ஆங்கிலேயர் பக்கம் நின்று அவர்களை வெற்றியடையாமல் செய்தது என்னலாம். டால்பட், ஸாலிஸ்பாரி முதலிய பல ஒப்பற்ற வீரர் இன்னும் அவர்கள் பக்கம் இருந்தும், அவர்களுடன் தலைவர்கள் ஒத்துழைக்க முடியாதபடி அவர்களுக்குள் புதியதொரு பெரும்பிளவு வளரத் தொடங்கிற்று.

ஐந்தாம் ஹென்ரியின் தந்தை இரண்டாம் ரிச்சர்டு அரசனை வீழ்த்தியே அரசனானவன். ஆனால் ரிச்சர்டை அகற்றிய போதுகூட நேரான அரசுரிமை அவனுக்கு இல்லை. ஏனெனில், ஹென்ரியின் குடியினரைவிட அதற்கு அண்மையான உரிமையுடையவர் ¹மார்ட்டிமர் குடியினர். அவர்களுள் நான்காம் ஹென்ரியை எதிர்த்த ²எட்மண்டு மார்ட்டிமர் சிறைப்பட்டு அங்கேயே உயிர் நீத்தான். அதன்பின் அவன் தங்கை பிள்ளையாகிய ³யார்க்குக் கோமகன் ரிச்சர்டு அவன் பழிக்கும் அவன் உரிமைக்கும் உரியவன் ஆனான். அப்பழியைத் தீர்த்துக்கொள்ளத் தனக்கு எப்போது சமயம் வாய்க்கும் என்று அவன் காத்திருந்தான்.

மார்ட்டிமர்களின் உரிமை புறக்கணிக்கப்பட்டு விட்டால், அரசனுக்குப் பின் அடுத்த உரிமையுடைய கிளைக் குடியினர் ⁴பொஃபோர்டுகள், இவர்களுள் ⁵ஸாமர்ஸெட் முதல் தலைமகனாயிருந்த இன்னொரு ⁶பொஃபோர்டும் தலைமை யானவர்கள். இவர்கள் ரிச்சர்டின் உரிமையை எண்ணி அவனிடம் பொறுப்புக் கொண்டனர். ஒருநாள் ரிச்சர்டுடன் அவர்கள் “கோயில் மாடம்” என்ற இடத்தில் ஒருங்கே உலவியபோது இவ்வெறுப்புப் பூசலாக மாறிற்று. ஸாமர்ஸடெ் தன்னை ரிச்சர்டு மதிப்புக் குறைவாக நடத்துவதாக எண்ணி, “நான் அரசருக்கடுத்த உரிமையாளன் என்பது நினைவிலிருக் கட்டும்”, என்றான். “அரசரினும் உரிமையுடையேம்யாம்!” என்று ரிச்சர்டு தருக்கினான். அவர்களுடன் அப்போது இங்கிலாந்தில் செல்வாக்கு மிக்க ⁷ஸஃபோக் ⁸வார்விக் ஆகிய இருபெருங் குடியின் செல்வர் வீற்றிருந்தனர். தம்மிடையே உள்ள போட்டியை இவ்வுரிமையை வெளிப்படைக் காரணமாகக் கொண்டு வலியுறுத்த எண்ணி இருவரும் இதிற் கலக்கலாயினர். ஸாமர் ஸெட் அங்கு மலர்ந்திருந்த செவ்வல்லி மலர் ஒன்றைக் கையிலெடுத்து என் உரிமை சரியாயின் இச்செவ்வல்லி மலர் வெல்க என்றான். ஸஃபோக்கும் செவ்வல்லி மலரே வெல்க என அதனைக் கைக்கொண்டான். கொள்ளவே வார்விக் சினங்கொண்டு வெள் அல்லிமலர் ஒன்றெடுத்து ரிச்சர்டின் உரிமை சரியாயின் இதுவே வெல்க என்றான். அதுமுதல் இரு கட்சியினருக்கும் அல்லி அலர்கள் குறியீடாயின. அவர்களிடை நடந்த முப்பது ஆண்டைய கொடும் போரும் அல்லி மலர்ப் போர் என வரலாற்றில் பெயர் பெறுவதாயிற்று.

3.தன்னலத்தின் தறுகண்மை

ஆங்கிலேயருக்கு உடந்தையாயிருந்த பர்கண்டிக் கோமகன் ஜோன் இறந்ததுமுதல் தன் நாட்டினர் பக்கமே சாயத் தொடங்கினான். பொஃபோர்டு இறந்தபின் ஃபிரெஞ்சு நாட்டு ஆட்பேராக வந்த ஸஃபோக் பர்கண்டியைப் பகைத்து இன்னும் ஃபிரெஞ்சுக் கட்சியை வலிமைப் படுத்தினான் இந்நிலையில் பொஃபோர்டின் எதிரியான அர்மாக்நாக்குப் பெருமகன் புதல்வியை ஹென்ரிக்கு மணம் செய்வித்து, ஃபிரெஞ்சு அரசுரிமையை அவன் பக்கமே உறுதிப்படுத்த வேண்டுமென்று அரசன் ஆட்பெயரும் பாதுகாப்பாளனுமான கிளஸ்டர் முயன்றான். தன்னலமும் தற்முற்போக்குமே குறியாகக் கொண்ட ஸஃபோக்குக்கு இது பிடிக்கவில்லை. அவன் தன்னையே விரும்பியவளான நேப்பிள்ஸ் தலைவன் புதல்வி ¹மார்க்கரட்டை ஹென்ரிக்கு மணம் செய்வித்து அவள்மூலம் அரசனைத் தன் கைப் பொம்மையாக வைத்தாட்ட வேண்டும் என்றெண்ணினான். அது மட்டுமன்று அவளைப் பெண்ணாகப் பெறுவதற்காக நார்மாண்டியில் பெரும்பகுதியை அவள் தந்தைக்கு விட்டுக்கொடுக்கவும் அவன் இணங்கினான். பொஃபோர்டுகளின் ஆதரவினால் அரசனைத் தன்வயப் படுத்தி ஸஃபோக் இம்மணத்தை நிறைவேற்றி வைத்தான். ஐந்தாம் ஹென்ரி அரசன் வீரத்தாலும் பெட்ஃபோர்டு கிளஸ்டர் முதலியவருடைய தன் மறுப்புக்களாலும் பிரான்சு நாட்டில் ஏற்பட்ட ஆங்கில அரசுக்கோட்டை, இங்ஙனமாக ஸஃபோக்கின் தன்னலமாகிய உட்பகையால் தகர்ந்தது.

4.கிளஸ்டர் படுகொலை

எடுப்பார் கைப்பிள்ளையாய் இருந்த ஹென்ரியை அரசிமூலம் ஆட்டி வைத்து ஆங்கிலநாட்டு அரசியல் போட்டியில் வெற்றிபெற ஸஃபோக், அவ்வெற்றியை நிலவரமானதாக்க வேண்டுமானால், கிளஸ்டர் கோமகனை அழித்தாக வேண்டுமென்று கண்டான். இவ்வகையில் ஸாமர்ஸெட்டும் பொஃபோர்ட்டுப் பெருந்தலைமகனும் அவனுக்கு உதவி செய்தனர். அரசன் ஆட்பெயர் நிலைக்கு அச்சமயம் பர்க்கும் ஸாமர்ஸெட்டும் போட்டியிட்டனர். கிளஸ்டர் ஸாமர்ஸெட்டின் உரிமையை எதிர்த்துப் பேசவே ஸஃபோக் அவனை வாயடக்க எண்ணி, “அஃது அரசன் விருப்பம்.” என்றான். கிளஸ்டர் உடனே, “அரசன் கைப் பிள்ளையல்லனே; அவன் கருத்தை அவனே வெளியிடலாமே,” என்றான். ஸஃபோக் அச்சொற் பொறியிலேயே அவனை மாட்டி, “அரசன் கைப்பிள்ளையல்லனாயின் அவனுக்குப் பாதுகாப் பாளன் எதற்கு?” என்று கேட்டான். கிளஸ்டர் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தன் பாதுகாப்பாளன் நிலையைத் துறந்தான்.

ஸஃபோக்கின் உள்ளம் இத்துடன் நிறைவடையவில்லை. அவன் கிளஸ்டரை முற்றிலும் அழிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தான். கிளஸ்டரைப் போல எளிய உள்ளமும் மன நிறைவும் பெறாத ¹கிளாஸ்டர்க் கோமாட்டி தன்னிலும் கீழ்நிலையிலிருந்து உயர்வுற்ற அரசியிடம் வெறுப்பும் பகைமையும் கொண்டாள். அது பெருகி அவள் பேரவாவுடன் இணைய, அவள் அரசனை அகற்றும் எண்ணங்கொண்டு பெண்ணியல்புக்கேற்ப மாயக்காரர் மூலம் யாவும் தெரிந்து கொண்டிருந்த ஸஃபோக் அவளைச் சமயம் பார்த்துக் கையும் மெய்யுமாகப் பிடித்து நாட்டுப் பகைமைக் குற்றஞ்சாட்டி, லண்டன் தெருவழியாக அவமதித்து நடத்திச் சென்று, பின் ²மான் தீவில் மீளாச் சிறையிலிட்டான். அதன்பின் அவன் செயலற்ற அரசனைப் புறக்கணித்து, அவன் பெயரால் கிளஸ்டர் மீதும் பொய்க் குற்றம் சாட்டி, அவனை பொஃபோர்ட்டு முதற்றலை மகன் மாடத்தில் சிறை வைத்தான். சின்னாட்களுக்குள் அவன் அனுப்பிய கொலைஞர் இருவர் நோய் வாய்ப்பட்டிருந்த கிளஸ்டரை மூச்சுத்திணற வைத்து வதைத்துக் கொன்றனர்.

5.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

இதுவரை அரசியின் செல்வாக்கு மூலம் ஸஃபோக்குக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வந்தது. பெருமக்களிடையே அச்செல்வாக்கு எத்தகைய ஊறும் இல்லாதது கண்டு அவன் தருக்கினான். பொது மக்களைப் பற்றியோஅவர்கள் நல்லெண்ணத்தைப் பற்றியோ அவன் எண்ணவே இல்லை. ஆனால், தம் நாட்டின் உயர் தகுதிபற்றி ஐந்தாம் ஹென்ரியின் ஆட்சிமுதல், வீறும் பெருமையும் கொள்ளத் தலைப்பட்ட அவர்கள், அவ்வரசன் வெற்றியால் கிடைத்த நாட்டை முன்பின் பாராது விட்டுக் கொடுத்த ஸஃபோக்மீது வரவரக் கொதிப்படைந்து வந்தனர். கிளஸ்டர் கொலைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே உலர்ந்த பஞ்சுப் பொதியில் தீப்பொறி பட்டது போலாயிற்று. அவர்கள் ஸாலிஸ்பரி, வார்விக் ஆகிய ஸஃபோக்கின் எதிரிகள் தலைமையில், சின்னாபின்ன முற்றும் சிதைந்து உரு மாறிவிட்ட கிளஸ்டர் உடலுடன் அரசர் முன் வந்து, “ஸஃபோக் ஒழிக. ஆங்கிலநாட்டுப் பகைவன் ஒழிக”, என்று இரைந்து ஆர்ப்பரித்தனர். மார்கரட் எவ்வளவு முயன்றும் அரசன் பொதுமக்கள் எதிர்ப்புக்கஞ்சி ஸஃபோக்கை நாடு கடத்தினான். பிரான்சு செல்லும் வழியில்கூட ஆங்கில மக்கள் பகைமை அவனை விடவில்லை. ஆங்கில வீரர் பலர் வேறொரு கப்பலில் சென்று அவன் கப்பலை இடைமறித்து அதிலேயே அவனைத் தூக்கிலிட்டனர். கிளஸ்டர் கொலைக்கு உடந்தையாயிருந்த பொஃபோர்ட்டு முதற்றலைமகனும் மனச்சான்றின் வதைப்புக்களாக்கி மாண்டான்.

பொதுமக்கள் கிளர்ச்சியின் பயனாக இன்னும் பல இடையூறுகள் அரசனுக்கு நேர்ந்தன. ¹ஜாக்கெட் என்பவன் தலைமையில், கென்ட் நாட்டுப்புறத் தொழிலாளர் கிளர்ச்சி செய்து, லண்டன் நகரையே கைப்பற்றிக் கொண்டனர். அரசன் கட்சியினராகிய ²கிளிஃபோர்டுப் பெருமகனுடைய சொல் வன்மையால் இக்கிளர்ச்சி அடக்கப்பெற்றது. ஆனால், அரசனின் கட்சித் தலைவனாயிருந்த ஸாமர்ஸெட்மீது மக்களுக்குள்ள வெறுப்பைப் பயன்படுத்தி யார்க்கோமகன் இன்னொரு புறம் கிளர்ச்சி செய்தான். கிளஸ்டர் கொலைக்கு முன்னமையே, அயர்லாந்தில் ஒரு கிளர்ச்சியை அடக்கும்படி யார்க் படையுடன் அனுப்பப்பட்டிருந்தான். அயர்லாந்து செல்லாமல் படையுடன் காத்திருந்து, அவன் அரசன் மீது இப்போது படையெடுத்து வந்தான்.

6.குட்டியிட்ட பெண் புலி

ஆங்கில அரசர்களுள் புலிபோல் வீறுமிக்க பேரரசருட் சேராது பூனைக்குட்டிபோல் அடங்கி ஒடுங்கி வாழ விரும்பியவன் ஆறாம் ஹென்ரி. ஆனால், அவன் மனைவியாகிய மார்கரட், மாற்றார் கைப்பட்ட குட்டியை மீட்கப் பாய்ந்தெழும் பெண்புலிபோல் அரசாட்சியைத் தன் கைவயப்படுத்தப் போராடினாள். அதோடு அவள் அரசியல் சூழ்ச்சிகளிலும் வல்லவளாதலால், ஸஃபோக்கை மணிக்கூண்டுச் சிறைக்கு அனுப்பிவிட்டதாக நடித்து, யார்க் கிளர்ச்சிப் படையைக் கலை யவைத்தாள். அதன்பின் அவளுக்கு ஒரு புதல்வன் பிறந்தான்.

அரசனுக்குப் பிள்ளையில்லாதிருந்ததால் யார்க்கே அரசன் என்று யாவரும் ஒப்புக்கொண்டிருந்தனர். ஆகவே, பிள்ளை பிறந்தது முதல் மார்க்ரட்டுக்குத் துணிவு மிகுந்தது. ஆயினும், அதே ஆண்டு ஹென்ரிக்குப் பித்துப் பிடித்தது. யார்க்கே கிளஸ்டரைப் போல் மீண்டும் பாதுகாப்பாளனாக அமர்த்தப்பட்டாள்.

அடுத்த ஆண்டு ஹென்ரி தெளிந்தான். இதற்கே காத்திருந்த மார்கரட், யார்க்கை நீக்கிவிட்டு முன்னைய ஒப்பந்தத்தை முற்றிலும் புறக்கணித்து, ஸாமர்ஸெட்டை மீட்டும் அழைத்துக்கொண்டாள். இப்புதிய போக்கால் அரசாட்சியை நேரடியாக எதிர்க்கும் வாய்ப்பு யார்க்குக்குக் கிடைத்தது. தன் கலைந்த படையை மீண்டும் திரட்டிப் போருக் கெழுந்தான். அல்லி மலர்போர் தொடங்கிற்று.

7.பழியும் பழிக்குப் பழிகளும்

போருக்கு யார்க்கு இப்போது வேறு எத்தகைய காரணமும் தேடாது நேரிடையாக அரசியல் மன்றில் தன் அரசுரிமையை வற்புறுத்தினான். வாய்மொழியாலும் போர்த் துணையாலும் ஸாலிஸ்பரி, வார்விக் ஆகிய இங்கிலாந்தின் இரு பெருங்குடிகளும் அவனுக்குத் துணைபுரியக் காத்துநின்றன. அவன் பிள்ளகைளாகிய ¹எட்வர்டு, ²ஜார்ஜ், ³ரிச்சர்டு, ஆகிய மூவரும் அவன் படைகளை அணிவகுத்து நின்றனர். கடைசிப் புதல்வனான ⁴எட்மண்டு கூடத் தன் வீட்டாசிரியருடன் போரைப் பார்வையிட வந்து நின்றான். எட்வர்டும் ரிச்சடும் ஒப்பற்ற வீரர் ஆதலின் போர் யார்க் பக்கமே வெற்றி தருவதாகத் தோன்றிற்று. ஆனால், ஒருபுறம் சிறியோனாகிய எட்மண்டு கிளிப்போர்டு கைப்பட்டு அவனால் இரக்கமின்றிக் கொன்று சிதைக்கப் பட்டான். இன்னொரு புறம் தன் பிள்ளை களிடமிருந்து விலகி நின்ற யார்க்கும் எதிரி கைப்பட்டான். குருதிவெறி மிக்க கொடிய அரக்கியாகிய மார்கரட் எட்மண்ட் குருதியில் தோய்த்த கைக்குட்டையால் அவன் தன் கண்ணீரைத் துடைக்கும்படி வற்புறுத்திப் பலவகையில் அவனை வருத்தி வைத்துக் கொன்றாள். இத்தீச்செய்திகள் கேட்டுப் படைகளும் தலைவரும் போர்க்களம் விட்டோடித் துயர் கொண்டாடினர்.

¹வேக்ஃபில்டு என்ற இடத்தில் கிட்டிய இவ்வெற்றியின் பின், மார்கரட் லண்டன் நோக்கி விரைந்து, வார்விக்கின் காவலில் இருந்த அரசனைக் கைப்பற்ற முயன்றாள். வார்விக் போரில் தோற்றுவிடவே அரசன் தன் கட்சியினிடமே வந்துசேர்ந்தான். ஆனால், இவ்வெற்றியைப் பின்பற்றி லண்டனுக்குச் சென்ற அரசாட்சியைக் கைப்பற்றாமல் மார்கரட், தன் குருதி வெறியால் தூண்டப்பட்டுச், சிறைப்பட்டவர்களை எல்லாம் படுகொலை செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டாள்.

ஒப்பற்ற வீரனும் படைத்தலைவனுமான எட்வர்டு இதனைப் பயன் படுத்தி, லண்டன் சென்று பொருட் குவையைத் தன் கைவசப்படுத்திக் கொண்டான். அதன்பின்²டௌட்டன் ஃபீல்டு என்னுமிடத்தில் மார்கரட்டின் படையை அவன் நைய முறியடித்தான்.

கிளிப்போர்டு யார்க்குக் கட்சியினர் கைப்படவே, அவர்கள் யார்க்கின் கொலைக்கு அவன்மீது பழி வாங்கினர். போர்ச் சமயத்திலும் ஹென்ரி அதில் அக்கறை கொள்ளாது, உள்ளத்தில், இந்த இங்கிலாந்துக்கு வேறு யாரேனும் அரசராயிருந்து, நான் இதன் இயற்கையழகைக் கண்டு இன்புற்று வாழும் ஓர் இடையனாகவேனும் பிறந்திருக்கலாகாதா, என்ற எண்ணச் சுழலில் சிக்கிக் கிடந்தான். அவனை மார்கரட் இழுத்துக் கொண்டு ஸ்காட்லாந்துக்கு ஓடினாள். நாட்டிலிருந்து அரசன் வெளியேறியதே, எட்வர்டு அரசியல் மன்றம் கூட்டி, நான்காம் எட்வர்டு என்ற பெயருடன் தானே அரசனானான்.

8.புதிய அரசன்

எட்வர்டு அரசனாக உதவிசெய்த வார்விக்கும் எட்வர்டின் தம்பி கிளாரன்ஸ் கோமகனான ஜார்ஜ்&ம் நாளடைவில் அவனை வெறுத்து எதிரிகளுடன் சேர்ந்தனர். ஆயின் அவர்கள் பல தடவை முறியடிக்கப் பட்டு மடிந்தனர். இன்னொரு தம்பியாகிய ரிச்சர்டு உண்மையில் அருவருக்கத் தக்க உளமும் பேய்க்குணமும் உடையவனாயினும், எட்வர்டு எத்தகைய வீரன் என்பதை நன்கறிந்து அவன் ஆட்சிநாள் அளவும் அவனுக்கு அடங்கியவன் போல் நடந்துவந்தான். ஆனால், யாரு மற்றுத் தனியே மணிக்கூண்டுச் சிறையில் கிடந்த ஹென்ரி அரசன் மீது மட்டும் அவன்தன் குருதி வெறியைத் தணித்துக்கொண்டான். இறக்கும் தருவாயில் ஹென்ரி, தன்பாட்டன் நான்காம் ஹென்ரி ரிச்சர்டுக்குச் செய்த பழியை எண்ணி, “ரிச்சர்டு! இதோ உன் கடன் தீர்ந்தது,” என்று கூறி உயிர் நீத்தான்.

வின்ட்ஸாரின் இன்நகை மாதர்

** கதை உறுப்பினர்**
** ஆடவர்**
1.  திரு பேஜ்: வின்ட்ஸார் நகரத்துக் குடியானவர்

2.  திருஃபோர்டு: "

3.  ஜான் ஃபால்ஃடாஃப்: பெருந்தகை

4.  வழக்குத் தலைவன் ஷாலோ: (ஷாலோ என்றால் அறிவின் ஆழ மற்றவன், அஃதாவது வெள்ளை மனத்தான் என்பது பொருள்.)

5.  ஸ்லென்டர்: (மெலிந்தவன் என்பது பொருள்)

ஷாலோவின் மைத்துனன் திரு பேஜிக் நண்பன்.

6.  மருத்துவ அறிஞர் கயஸ்: வேல்ஸ் நாட்டினன், திருவாட்டி பேஜ் விரும்பிய மருகன்.

7.  சமயத்தலைவன் ஹியூம் பெருந்தகை: அயர்லாந்து நாட்டினன்.

8.  ஃபெண்டன்: ஆனின் காதலன்.

9.  ஆனின் தம்பி பிறசிறுவர்கள்.

** பெண்டிர்:**
1.  திருவாட்டி பேஜ்: வின்ட்ஸாரின் இன்நகை மாதர்.

2.  திருவாட்டிஃபோர்டு:

3.  ஆன்: திருவாட்டி பேஜின் மகள்.

4.  திருவாட்டி விரைவுடையாள்: திருவாட்டி ஃபோர்டின் காதல்தூதி.

5.  ஆனின் பணிப்பெண்.

** கதைச் சுருக்கம்**
பெண்களைக் காதலிப்பதாக நடித்துப் பொருள் பறிக்கும் உயர்குல வீணனாகிய ஃபால்ஸ்டாஃப் பெருந்தகையை நன்றாக ஒறுக்க எண்ணினார் திருவாட்டி பேஜ், திருவாட்டி ஃபோர்டு என்ற இரு குடியானவர் மனைவியரும். அதன்படி திருவாட்டி விரைவுடையான் மூலம் அவனுக்குக் காதல் தூது அனுப்பி, அவனை அவர்கள் திருவாட்டி ஃபோர்டு வீட்டிற்கு அனுப்பித்தனர்.

அறிவிலியாகிய ஃபால்ஸ்டாஃப் தன்மீது உளவறிய மாற்றுருவில் வந்த திருஃபோர்டை நம்பி எல்லாம் அவனுக்குச் சொல்ல, அவனும் குறிப்பிட்ட நேரம் வந்து விடுகிறான். அழுக்குக் கூடையை வைத்து இன்நகை மாதர் அவனை வெளியேற்றினும், அவர்கள் தனிப்பட வேலையாட்களைத் தூண்டீ அவனை ஆற்றில் அமிழ்த்துகின்றனர். சூடு கண்டும் அடங்காது இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் ஃபால்ஃடாஃப் அவர்கள் பொறியில் விபகிறான். இரண்டாந்தடவை சூனியக்காரி உருவில் கணவனால் புடைக்கப்பெறகிறான். மூன்றாம் தடவை ஊர்வெளியில் பேய்வாழ்வதாகக் கருதப்பட்ட மரத்தடியில் பேயுருவில் வந்த அவர்களாலும் அரமங்கையர் உருவில் வந்த சிறுவராலும் அவன் குற்றுயிராக்கித் துன்புறுத்தப்பட்டு இறுதியில் உண்மையறிந்து திருந்துவதாக உறுதி கூறுகிறான்.

திருவாட்டி பேஜின் மகள் ஆன், இதே விழாவின் போது அரமங்கையருடன் அந்நாட்டாரசியாக நடித்திருந்தாள். அவள் தந்தையும் தாயும் தாம் தாம் விரும்பியவர்களை அவள் மணக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அவள் இருவரையும் ஏய்த்து தன் காதலனாகிய ஃபென்டனையே மணந்து கொள்கிறாள்.

1.ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து

தோற்றுவாய்
ஷேக்ஸ்பியர் நாடகங்களுள் நான்காம் ஹென்ரியின் கதை யுறுப்பினனான ஜான் ஃபால்ஸ்டாஃப் பெருந்தகையின் ஒப்பற்ற நகைத் திறத்தை மேடையரங்கிற்கண்டு, ஆங்கில அரசி எலிஸபெத் ஷேக்ஸ்பியரிடம், “இதே பால்ஸ்டாஃபைக் காதலுள் ஈடுபடுத்திக் காட்டுக,” என்று பணிக்க, அதன்படி எழுதப் பெற்றதே “வின்ட்ஸாரின் இன்நகைமாதர்” என்ற நாடகமாகும் என்பது வரன்முறைக்கதை.

ஆனால், நகையுலகில் ஒப்பற்ற அறிவாற்றலுடன் விளங்கிய இந்த ஃபால்ஸ்டாஃப் காதலுலகில் அறிவாற்றலும் செயலுமற்ற சொத்தையாகவே காணப்படுகிறான். “நான்காம் ஹென்ரி”யில் அவனுடைய நயமிக்க உரைகளில் நம் கவனம் செல்லும். வின்ட்ஸாரின் “இன்நகைமாத”ரின் திறத்திலோ, கதைப் போக்கிலோ தான் மிகுதியும் பற்று ஏற்படக்கூடும்.

** கதை**
¹வின்ட்ஸார் நகரில் திருவாளர் ²பேஜ் ³ஃபோர்டு என்ற இரு குடியானவர் இருந்தனர். அவர்களுள் பேஜ் என்பவனுக்கு ⁴ஆன் என்ற புதல்வியும், பள்ளியிற் பயிலும் சிறுவன் ஒருவனும் ஆக இருமக்கள் உண்டு. ஆன் அறிவிலும் அழகிலும் ஒப்பற்றவள். அதோடு அவள் தந்தை பெரும் பொருளீட்டி அவள் பங்கிற்கும் போதிய செல்வம் வைத்திருந்தான். எனவே, பலரும் அவளை மணக்க விரும்பி வந்தனர். அவர்களிடையே ⁵வழக்குத் தலைவன் ஷாலோவின் மைத்துனனான ⁶ஸ்லெண்டரே திரு. பேஜுக்குப் பிடித்தமானவன். அவன் மனைவி ⁷திருவாட்டி பேஜ் அவனுக்கு மாறாக ⁸வேல்ஸ் நாட்டினனும் மருத்துவ அறிஞனுமான ⁹கயஸையே மருகனாகக் கொள்ள விரும்பினாள். தன் முனைப்பு மிக்க ஆன் உள்ளூர இருவரிடமும் வெறுப்பே கொண்டாள். அவள் உள்ளத்தைக் கவர்ந்தவன்¹⁰ஃபென்டன் என்ற இளைஞனே, அவள் களவுமுறையில் அவனை மறைவிற்கண்டு உறவாடி வந்தாள்.

ஆனின் தாயாகிய திருவாட்டி பேஜ் தாய்மைப் பருவ மெய்தியவளாயினும் வனப்புக் குன்றாதவள். அதோடு நாட்டுப்புற மாதர்களைப் போலன்றி நாகரிகமாக உடுத்தும் பேசியும் வருபவள், அவள் அண்டை வீட்டுக்காரியும் ஆரூயிர்த் தோழியுமாகிய ¹திருவாட்டிபோர்டும் அப்படியே. நெஞ்சிற் கரவில்லாத அவ்விருவரும் தமக்கிடையேயும் பிறருடனும் மனம் விட்டுப் பேசிக்களித்தும் நாடகக்காட்சி முதலியவற்றிற்குச் சென்று களியாட்டயர்ந்தும் வந்தனர். திருவாட்டி பேஜின் கணவன் மனிதர் குணங்களையும் உலகியலையும் ஒப்ப அறிந்தவனாதலால் இவ்வெளித் தோற்றத்தைத் தீங்கற்றதாக ஏற்று மனைவியைப் பாராட்டி வந்தான். ஆனால், திரு. போர்டு தன் மனைவியின் பெருநடையான போக்குக்கண்டு, ஐயமும் வேற்றுணர்ச்சியுங் கொண்டு, தானுந் துன்புற்று அவளுக்குந் தொந்தரவு மிகுதி கொடுத்து வந்தான்.

‘வெறும் வாயை மெல்லுபவனுக்குக் கொஞ்சம் அவல் அகப்பட்டாற் போல்’ வெற்று ஐயங்கொண்ட அவனுக்குப் பற்றுக்கோடாக ஒரு செய்தி நிகழ்ந்தது. உயர் வகுப்பினரது நாகரிக நயத்துடன் இழிமக்கள் உறவும் நடையும் குறும்பும் மிக்க பகட்டாளன் ஒருவன் அந்நகரில் இருந்தான். அவன் பெயர் ²ஜான் ஃபால்ஸ்டாஃப் பெருந்தகை என்பது, அவன் பாரிய உடலுடையவன். நகைச்சுவையாலும் ஆர்வமிக்க மொழிகளாலும் அரசன் முதல் ஆண்டிவரையும், அடியார் முதல் திருடர், கொள்ளைக்காரர் ஆகியவரையும், கவர்ச்சி செய்து அவர்களை நயமாக ஏமாற்றித், தன் இன்ப வாழ்வினுக்கு உடந்தையாயிருக்கச் செய்தவன். அவன் மேலும் அவன் உயர்குடி மாதர் முதல் விடுதிப் பெண்கள் வரை அவ்வவர் நிலைக்கேற்றபடி அவர்களுக்குக் காதல் தூபமோ முகமனுரைத் தூபமோ காட்டி அவர்களிடமிருந்து பொருள் பறித்துத் தன் சோம்பல் வாழ்வை நடத்தி வந்தான். செல்வர் மனைவியராகவும் பகட்டாளராகவும் இருந்த திருவாட்டி பேஜ் திருவாட்டி ஃபோர்டு ஆகியவர் பிற குடியானவர் மாதரையும் பெண்களையும் போல் உயர் வகுப்பினனாகிய தன் காதல் வலையில் விழுவர் என்று ஃபால்ஸ்டாஃப் எண்ணி அத்தகைய தூதுகளில் ஈடுபட்டவளான 3திருவாட்டி விரைவுடையாள் மூலம் அவர்களிருவருக்கும் காதற் கடிதங்கள் வரைந்தான். அவற்றில் மாதர் மயக்கங்களுக்குப் புறம்பாகத் தான் அவர்களை மனமாரக் காதலித்து விட்டதாகவும், அக் காதலுக்காக உயிரையும் விட ஒருங்கி இருப்பதாகவும் அவர்களைப் பலவாறாகப் புனைந்து பாராட்டி எழுதியிருந்தான்.

தம்போன்ற, ஆனால் தம்மினும் உலகியல் அறிவு குறைந்த பல பெண்களை ஏமாற்றி இப்போது தங்களையும் ஏமாற்றப் பார்க்கும் இவ்வுயர்குல வீணனுக்கு அவன் இனி என்றென்றும் இத்தகைய எண்ணங்களை எண்ணாத வண்ணம் நல்ல படிப்பினை தரவேண்டும் என்று இருவரும் ஒத்துப்பேசிக் கொண்டனர். அதன்படி திருவாட்டி ஃபோர்டு ஃபால்ஸ்டாபுக்கு மறுமொழி எழுதித் தன் வீட்டுக்கு அன்றிரவு பத்துப் பதினொரு மணிக்கிடையில் வரும்படி அவனைத் தூண்டினாள்.

2.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

பிறர் நால்வர் படுக்கப் போதிய பாரிய நாற்காலி ஒன்றில் அதன் கால்கள் வளைந்து நெளியும்படி கிடந்து புரண்டு கொண்டிருந்தான் ஃபால்ஸ்டாஃப் பெருந்தகை. தன் வலையிற்பட்ட பெண்களனைவரும் தன் அழகில் மயங்கித்தான் ஏமாந்தனர் என்ற அவன் அடிக்கடி வீம்பு பேசுவதுண்டு. திருவாட்டி ஃபோர்டின் கடிதங் கண்டவுடன் தனக்கு உண்மையிலேயே அத்தகைய கவர்ச்சி உண்டோ என்று அவன் ஐயுறலானான். பல தீச்செயல்களிற் கலந்தும் ஆழ்ந்த சூழ்ச்சித் திறமற்ற அவனுள்ளம். இதனால் பூரிப்படைந்து அதனை அடக்கமாட்டாமல் தத்தளித்தது. அச்சமயம் அவன் யாரிடமாவது அதனைக் கூற வேண்டியிருந்தது. ஊழ்வயத்தால் கூறத்தகாத ஒருவனிடமே, அஃதாவது அம்மாதின் கணவனிடமே, அவன் அதைக் கூறும்படி நேர்ந்தது.

தன் வீட்டிற்கு ஆட்கள் வருவதையும் போவதையும், திருவாட்டி பேஜுடன் தன் மனைவி உரையாடி மகிழ்வதையும், இருவரும் கலந்து கடிதம் அனுப்புவதையும், உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான் திரு. ஃபோர்டு. அவன் கடிதம் கொண்டு செல்லும் மாதைத் தொடர்ந்து சென்று, அது ஃபால்ஸ்டாஃபிடம் கொடுக்கப்பட்டதைக் கண்டான். கண்டு இதனை முற்றிலும் உளவறிவோம் என்ற எண்ணத்துடன் மாற்றருக்கொண்டு அவனிடம் சென்று, “ஐயா! தம்மிடம் ஒரு காரியமாக வந்தேன். நான் பக்கத்தூரில் உள்ள செல்வன். என் பெயர் 1புரூக்” என்றான்.

ஃபால்: என்னிடம் உனக்கு என்ன காரியம்?

புரூக்: எனக்குத் திருவாட்டி ஃபோர்டுமீது, அவள் சிறு பெண்ணாயிருக்கும் போதே காதல். என் தந்தை பிடிவாதத்தினால் நான் அவளை மணந்து கொள்ள முடியாமற் போயிற்று. ஆனால், எப்படியும் அவள் நட்பைப் பெறாது என் மனம் அமைதியுற இணங்கவில்லை. அதற்காக எவ்வளவு பணச்செலவு வந்தாலும் துன்பம் நேர்ந்தாலும் பட்டுக் கொள்வேன். அது வகையில் தாங்கள் உதவக்கூடும் என்றுதான் வந்தேன்.

ஃபால்: இஃதென்ன ஐயா! பொருத்தமற்ற பேச்சு; எனக்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது?

புரூக்: தொடர்பில்லாமல் நான் தங்களிடம் வருவேன் ஐயனே! பெண்டிர் எம்போலியர் பணத்தைப் பெற்றுச் செலவு செய்யக்கூடும். ஆனால், வேறு கவர்ச்சியில்லாத விடத்து அச்செல்வம் அவர்கள் ஒழுக்க வரம்பைக் கலையாது; தாமோ தமது பலவகைக் கவர்ச்சிகளால் அவ்வரம்பினைக் கடந்து செல்லும் ஆற்றல் உடையவர். ஆகவே, தம்மூலம் இதில் நான் வெற்றி கைவரப் பெறுவேன் என்று நம்புகிறேன்.

ஃபால்: இன்னும் நீர் சொல்வது எனக்கு விளங்க வில்லையே! நீர் சொல்லுகிற படியேதான் வைத்துக் கொண்டாலுங்கூட நான் வரம்பு கடப்பதால் உமக்கென்ன நன்மை?

புரூக்: நான் ஆய்ந்தோய்ந்து பாராமல் தங்களைத் தேடி வரவில்லை. ஐயனே! அவளது கற்பியல் வரம்பு கண்டு அஞ்சிய என்போன்றவர், தாங்கள் அதனைத் தகர்த்துச் சென்ற வழியைப் பிடித்து எளிதில் செல்லலாம் அல்லவா? ஆகவே, அஞ்சாது இப்பொருளை எடுத்துச் செலவு செய்து எனக்கு அப்பக்கம் வழி ஏற்படுமாறு செய்தருள்க.

3.படாதவரும் முகமனிற் படுவர்

முகமனில் யாரும் கரையாதிருக்க முடியாது. அதிலும் தாம் விரும்பும், ஆனால் தம்மிடமில்லாத பண்புகள் தம்மிடம் இருப்பனவாக வானளாவப் புகழ்ந்தால் அதில் மகிழாதவர் யார்! ஃபால்ஸ்டாஃப் அக்குழியில் விழுந்து அவனுக்குதவுவதாக உறுதி கொடுத்ததுடன் நில்லாது, பின்னும் நெருக்கமாக அவனை அணுகி, “இவ்வளவு நேரம் நட்பானபின் உன்னுடன் ஒளிப்பானேன்; நான் இன்றே நீ கூறிய பெண்மணியிடம் போக இருக்கிறேன். அவள் என்னைத் தன் வீடு வரும்படி தானாகவே எழுதியிருக்கிறாள். பத்துப் பதினொன்று மணிக் கிடையில் நான் போவேன். நாளை என்னைத் தொடர்ந்து நீயும் வரலாம். அந்த அப்பாவி ஃபோர்டின் குடிக்கு இனி நீயே தலைவன் என்ற வைத்துக்கொள்” என்று தட்டிக்கொடுத்தான்.

புரூக் உருவில் வந்த ஃபோர்டு உள்ளூரப் பொங்கி வரும் உளக் கொதிப்பை அடக்கிக்கொண்டு, “அப்படியா? அவ்வளவு தொலை காரியம் சென்றுவிட்டதா? வரட்டும்; புள்ளியைக் கையும் மெய்யுமாகப் பிடித்தபின் என்ன பாடுபடுத்துகிறேன், பார்!” என்று, உள்ளூரக் கறுவினான்.

4.நிகை மாதர் கூத்து

அன்று திருவாட்டி ஃபோர்டு வீட்டில் ஃபால்ஸ் டாஃப் புகுந்து உட்கார்ந்துதான் தாமதம். முன்னேற்பாட்டின்படியே திருவாட்டி பேஜ் படபடப்புடன் கையை நெரித்துக்கொண்டே அங்கலாய்ப்புடன் உள்ளே வந்து, இஃது என்னடி போதாத காலம்? உன் கணவன் என் கணவனையும் ஊர் மக்களையும் திரட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டமாக இப்பக்கம் வருகிறான். அவன் உளவு கண்டிருக்கிறானாம். களவு கண்டுபிடிக்கப் போகிறானாம். இந்த வீட்டினுள்ளாக இப்போது நீ ஒருவனை ஒளித்து வைத்திருக்கிறாயாம். உன் திருட்டைக் கண்டுபிடித்து உன்னை ஊரறிய அவமதிக்கப் போகிறானாம்," என்றாள்.

திருவாட்டி ஃபோர்டு அஞ்சியவள்போல் நடுநடுங்கி “நான் இனி என்ன செய்வேன்! இனி என்ன செய்வேன்!” என்றான்.

தி-டிபேஜ்: ஏனடி நீ அஞ்சவேண்டும்? இங்கே தேடி ஆளகப் பட்டால் தானே, ஆளகப்படாவிட்டால் அவனுக்குத் தானே அவமதிப்பு?

தி-டிஃபோர்டு: (கையை நெரித்துக்கொண்டு) ஆள்தான்

இதோ இருக்கிறானே யம்மா! நான் இனி என்ன செய்வது?

தி-டி பேஜ்: அப்படியா செய்தி: சரி! இனி எப்படியாவது தப்பத்தான் வழி தேட வேண்டும். (சுற்றிப் பார்த்துப் புன்முறுவலுடன்) இதோ எனக்கொரு வழி தோன்றுகிறது. அழுக்குத் துணிகளைப் போட்டுவைக்கும் இப்பெரிய கூடைக்குள் இவனை வைத்துத் துணிகளால் மூடிவிட்டால், வேலைக்- காரர்களைக் கொண்டு வெளியே தூக்கிக் கொண்டு போகச் சொல்லலாம்.

தி-டி ஃபோர்டு: (சிரிப்பை அடக்கிய வண்ணம் ) அதற்குள் இப்பாரிய உடல் போகாதே!

உயிர் வேறாகவும் உடல் வேறாகவும் நின்ற ஃபால் ஸ்டாஃப் பரபரப்புடன், “போகும், போகும், நான் அப்படியே போய்விடுகிறேன்,” என்றான்.

இருமாதரும் அவனைச் சுருட்டி மடக்கிக் கூடைக்குள் திணித்து, அழுக்குத் துணிகளையும் பாண்டலடைந்த கந்தைகளும் அவனைச் சுற்றிலும் மேலும் திணித்து, வேலைக்காரனிடம் கூடையை வெளியே ஆற்றுப்பக்கங் கொண்டு செல்லும்படி கூறினர். வழியிலேயே ஐயப்பேயின் ஆட்டத்திற்கு உள்ளான திரு. ஃபோர்டு, அதனைக்கீழே இறக்கி வைக்கும் படி கூறியதுடன் அதனுள் துணி தவிர வேறு எதுவும் இல்லையே என்றுங் கேட்டான். இக் கேள்வியால் தனக்குப் பேரிழிவு ஏற்பட்டது கண்டு மேலும் அதனைத் துழவாமல் விட்டுவிட்டு, அவன் வீட்டிற்குச் சென்று அங்கேயும் பெட்டி தொட்டிகளெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து தேடி அலுத்தான். இறுதியில் வேறு வகையின்றித் தான் ஐயுற்றது தவறென்று எல்லாரிடமும் மனைவியிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

ஃபால்ஸ்டாஃப் அன்று பட்டபாடு சில நாளில் மறக்கக்கூடியதன்று. கூடையில் அப்பாரிய உடலை அடக்கி முடக்கி வைத்திருந்ததனால் ஏற்பட்ட உடல் துன்பம், வீட்டிலும், வெளியிலும் திரு. ஃபோர்டு ஆராய்வின் போதும் எங்கே அகப்பட்டு மானமும் கெட்டு உயிரும் இழக்க நேரிடுமோ என்ற அச்சம், ஆகியவற்றால் அடைந்த வருத்தம் போதாமல், அம்மாதர் மறைவான தூண்டுதலால் வேலையாட்கள் ஆற்றில் சேறு மிகுந்த பகுதியில் அவனைக் கூடையுடன் அமிழ்த்தி விடவே, திணறி நீந்த முடியாமல் கூடையினுள்ளிருந்து, தத்தளித்தது, இறுதியில் உடல் சோர்ந்து, உளம் சோர்ந்து, சேற்றில் தோய்ந்த ஆடைகளுடன் அவன் விடுதி வந்து சேர்ந்தான். இவ்வளவுக்கும் காரணமான அம் மாதர்கள்மீதே அவன் புழுக்கம் முற்றும் சென்றது. அவர்களை அவன் உள்ளர வையாத வசவு இல்லை.

ஆனால், அவன் அம்மாதரை அறிந்ததைவிட அவர்கள் அவனை நன்கு அறிந்து வைத்திருந்தனர். பெண்வழி மனம் போகவிட்டவனுக்கு மானமுமில்லை; சுரணையுமில்லை என்று அவர்கள் அறிந்து, அவனை இன்னும் அலைக்கழித்து ஒறுக்கத் தலைப்பட்டனர். முன் காதல் தூதுசென்ற அதே மாதினிடமாகத் தம்மிடம் யாதொரு குற்றமும் இல்லாதது போலவும் நடந்து விட்ட தீங்குகளுக்கு அவனைவிடத் தாம் வருந்துவதாகவும், அதற்காகத் தம்மைவெறுத்துத் தமக்கு ஆறுதல் இல்லாமல் செய்து விடப்படாதென்றும், மறுநாள் எட்டு ஒன்பது மணிக் கிடையில் பகலிலேயே வந்தால் இவையெல்லாவற்றையும் மறக்கும் வண்ணம் அவனைக் காதற் கடலிலாழ்த்தி விடுவதாகவும் அவர்கள் பலவகையிலும் பசப்புரைகள் கலந்து எழுதியிருந்தனர். தோல்விகளை மறக்கடிப்பது வெற்றியேயெனத் துணிந்து, ஃபால்ஸ்டாஃப் மீண்டும் அவர்கள் பொறியில் வந்துவிழ ஒருப்பட்டான். அதோடு இம்முறையும் புரூக்கிடம் நம்பகமாக அத்தனை செய்திகளையும் கூறி, ‘நாளையுடன் உன் காரியம் பழந்தான்’ என்று ஊக்கந்தந்து தட்டிக் கொடுத்தான்.

ஃபால்ஸ்டாஃபுக்கு எவ்வகையிலும் இளைக்காத முதல்தர அறிவிலியாகிய திரு ஃபோர்டு முன்னிலும் பன்மடங்கு ஐயத்துடன், மறுநாள் நண்பரைத் திரட்டி இழுத்துக்கொண்டு சென்று வீட்டின் எல்லா இடங்களையும் தேடினான். ஆனால், இம்முறை அவ் இன்நகை மாதர் அவனை எங்கும் ஒளித்து வைக்கவில்லை. அவனுக்குச் சேலையும் கச்சும் கட்டிப் பெண்ணுருவுடன் கூட்டி வந்தனர். கிட்டத்தட்ட இதே உருவும் வடிவும் உடைய சூனியக்காரி ஒருத்தி பக்கத்து ஊரில் இருந்தாள். அவளைப் பெண்டிர், வீட்டிற்கழைத்துக் குறி கேட்கவும் வினை வைக்கவும் தூண்டுவ துண்டு. திரு. ஃபோர்டுக்கு அவள்மீது மிகவும் வெறுப்பு. அவளை வீட்டிலேற்றவே கூடாது என்று அவன் திட்டப் படுத்தியிருந்தான். ஃபால் ஸ்டாஃபைச் சூனியக்காரி என்று நினைந்த அவன், தன் ஆணையைமீறி அவளை வீட்டில் அழைத்து வைத்த தன் மனைவியிடங் கொண்ட சீற்றம் முழுவதையும் தற்காலிகமாக அச்சூனியக்காரி மீது காட்டி, அவளுருவில் வந்த ஃபால்ஸ்டாஃபை நையப் புடைத்து வெளியே தள்ளினான். திருடன் கையில் தேள்கொட்டியது போல், ஃபால்ஸ்டாஃயும் தன் மெய்ம்மையை விள்ளவு மாட்டாமல் பொய்மையை விலக்கவு மாட்டாமல் தவித்தான்.

இருமுறை இங்ஙனம் அவனைக் குற்றுயிராக்கியும் அவன் மீது நகைமாதர் இருவரது கொதிப்பும் தீர்ந்த பாடில்லை; அவனை மீண்டும் ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் சற்றுந் தளரவில்லை. ஆனால், சூழ்ச்சி மட்டும் இத்தடவை எவரையும் திகைக்கச் செய்வதாகவும் சிக்கலான தாகவும் இருந்தது. அதோடு அச்சூழ்ச்சி ஃபால்ஸ்டாஃ புக்காக மாட்டிலும் அமைக்கப் பெறவில்லை. அவனோடு ஆனின் காதலரையும் அவள் தந்தையையும் அதில் மாட்ட ஏற்பாடாயிற்று. ஆனின் கைத்திறம் வேறு அச்சூழ்ச்சியில் சித்திரவேலை செய்து அவள் தாயையும் கூட அதில் சிக்கவைத்தது.

ஆனைக் காதலித்தவருள் அவள் தனக்குக் கிட்டமாட்டாள் என்றறிந்து ஆய்ந்தமைந்தவன், அயர்லாந்துக்காரனும் சமயத் தலைவனுமாகிய ¹ஹியூப் பெருந்தகையே. அவன் சமயச்சார்பான நாடகங்களில் பிள்ளைகளை அரமங்கையராகவும் அரமைந்தராக வும் நடிக்கப் பழக்கி வந்தான். அவ்வாண்டு மே விழாவன்று அவன் முன்னமேயே ஆனின் உடன் பிறந்தானையும் ஆணையும், பிற சிறுவர்களையும் பயிற்றுவித்து வைத்திருந்தான். நகை மாதர் இதே மே விழாநாளில் நள்ளிரவில் ஊர்ப்புறத்துள்ள பெரிய மரமொன்றின் கீழ்த் தம்மை வந்து காணும்படி ஃபால்ஸ்டாஃபுக்கு எழுதியிருந்தனர். இம் மரம் கொம்பேறி என்ற பேய் குடிகொண்ட தென மக்கள் நம்பி அதனை நெருங்காது விலக்கி வந்தனர். அதனால் எவரும் தம்மை அங்குவந்து தொந்தரவு செய்யமாட்டா ரெனவும், அதிலும் அவனே கொம்புகளுடனும் சங்கிலிகளுடனும் கொம்பேறி உருவில் வந்தால் இன்னும் பாதுகாப்பாயிருக்கும் எனவும் அவர்கள் ஃபால்ஸ்டாஃபைத் தூண்டினார்கள். அதே சமயம் அவர்கள் மே விழாக் குழாத்தினரும் கையில் ஊசிகளுடனும் பெட்டிகள் வைத்து மறைத்த விளக்குகளுடனும் அண்டையி லுள்ள இடுகாட்டுக் குழிகளில் ஒளிந்திருக்க ஏற்பாடு செய்தார்கள். மாதர் போலிக்காதற் காட்சியினிடையில் ஒரு குறிப்புக் காட்டியவுடன், அனைவரும், ஃபால்ஸ்டாஃப் அவர்களைக் காண அஞ்சுவான் என்றும், கண்ணை மூடிக் கொண்டிருக்கும் அவன்மீது விளக்கொளியையும் ஊசியையும் நீட்டி, “உன்னைத் தீண்டுகிறோம். நல்லெண்ணத் தவனானால் இன்புறுக! தீ எண்ணத்தவனானால் துன்புறுக!” என்று கூறிக்கொண்டே தீயால் சுடவும் ஊசியால் குத்தவும் வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று. இதுவே இம்முறை ஃபால்ஸ்டாஃபைத் துன்புறுத்த நகை மாந்தர் அமைத்த சூழ்ச்சி.

ஆனால், இதே சூழ்ச்சியால் வேறு சில காரியங்களையும் முடித்துக் கொள்ள எண்ணினார். ஆனின் தாய் தந்தையர் திரு. பேஜ் தன் நண்பனான ஸ்லெண்டரை அவள் மணக்கும்படி செய்யவேண்டும் என்று காத்திருந்தான். இஃது அதனை எளிதில் முடித்துவிட நல்ல தறுவாய் என்று அவன் எண்ணி, அவளை அரநாட்டரசியாக வெள்ளாடையுடன் நடிக்கும்படி தூண்டி, ஸ்லென்டரிடம் சென்று இச்செய்தியைக் கூறி அவ்வெள் ளாடையையே அடையாளமாகக் கொண்டு அவளை இட்டுச் சென்று மணம் புரிந்து கொள்ளுமாறு அவன் கூறியிருந்தான். ஆனால் கள்ளன் வீட்டில் குள்ளன் புகுந்ததுபோல், அவன் மனைவி தன் மகளைத் தனியாக அழைத்து, வெள்ளாடையை அவள் பணிப்பெண்ணுக்கு உடுத்திவிட்டுப் பச்சை ஆடை உடுத்தி வரும்படி கூறினாள். அதன்பின் அவள் மருத்துவ அறிஞர் கயசுக்கு ஆளனுப்பி, அப்பச்சை ஆடையையே அடையாளமாகக் கொண்டு அவளைத் தனியாக அழைத்துச்சென்று அவளை மணம் புரிந்துகொள்ளும்படி ஏவினான். உள்ளுர இருவர் திட்டத்தையும் தகர்த்து ஆன், தன் தம்பிக்கு அப்பச்சை ஆடையைத் தந்துவிட்டுத் தான் சிவப்பு ஆடை அணிந்து கொண்டாள். தன் காதலனாகிய ஃபெண்டனைக் கண்டு அச்சிவப்பு ஆடைமூலம் தன்னை அடையாளங் கண்டு இட்டுச் சென்று மணவினையிற் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள்.

கொம்பேறி உருவில் வந்த ஃபால்ஸ்டாஃபைத் திருவாட்டி ஃபோர்டு ஒருபுறம், திருவாட்டி பேஜ் ஓருபுறம் நின்று, ஒரே சமயம் இருவரும் காதலிப்பதாக நடித்து அவனை நயமாக வதைத்தனர். ஒருவர்க்கெதிராக ஒருவர் போட்டியிடுவது போல் நடத்த அவ்விருவரின் கேலிக் காதலிடையே, அவன் இருபுறமும் காதல் நாடகம் நடிக்க முடியாமல் தவித்தான். நீர் நிறைந்த இடத்தில் நீர் விடாய் தணிக்கமாட்டாது. உயிர் விடுபவர் நிலையே அவனது அப்போதைய நிலை. அதனிடையில் பேரார்வத்துடன் அரமங்கையர் குழாம் வந்து அவனைச் சூழவே, அவன் தான் தீயவனாதலால் அவர்கள் மீது விழிக்கப்படாதென்று கண்ணை மூடிக் குப்புறப்படுத்துக் கொண்டான். அரநாட்டரசி “எங்கே தீவினையின் வாடை தென்படுகிறது! எல்லாரும் விரல்கொண்டு சுற்றலும் தீண்டி நோக்குக! நல்வினையாளிரிருப்பின் இன்புறுவர்; தீவினையாளர் இருப்பின் துன்புறுவர்” என்றாள். விரல்களைக் கொண்டு தீண்டுவதாக நடித்து, அவர்கள் உண்மையில் விளக்கொளியையும் ஊசியையும் கொண்டு தாக்கினர். ஒருமணி நேரம் ஃபால்ஸ்டாஃபைப் பிள்ளைகள் விட்டிலைப் படுத்தியபாடு படுத்தியபின், திருவாட்டி பேஜும் திருவாட்டி ஃபோர்டும் அவர்கள் கணவரும் வந்து அவனை விடுவித்து உண்மையை வெளிப்படுத்தி, இனியேனும் இவ்வகைப்பட்ட இழிதகைமை யுடைய எண்ணங்களுக்கு இடந்தரா திருக்கும்படி எச்சரித்தனர். தப்பினோம் பிழைத்தோம் என்று ஃபால்ஸ்டாஃப் எச்சரித்தனர். தப்பினோம் பிழைத்தோம் என்று ஃபால்ஸ்டாஃ ஓடினான்.

ஸ்லெண்டரும் கயசும் தமக்குத் தரப்பட்ட அடையாளப்படி பணிப்பெண்ணையும் பையனையும் இட்டுச் சென்றனர். ஸ்லென்டரின் மணம் பணிப்பெண்ணுடன் உறுதிப்பட்டு அவன் பெருமை எல்லாம் குலைந்தது. கயஸ், மனைவிக்கு முன்னாகவே ஆன் என்றெண்ணிய உருவம் ஆனுமன்று. பெண்கூட அன்று என்று கண்டு சினந்து திருவாட்டி பேஜிடம் வந்தான். அவளும் அவள் கணவனும் தம்மையும் மிஞ்சி நடந்த தவறு யாது என வியந்து ஃபால்ஸ் டாஃபின் துயரினும் மிகுதியான துயருற்றனர். அச்சமயம் ஆன் மணமாலையுடன் ஃபென்டனை அழைத்து வந்து, “இவர் என் கணவர், எங்களுக்கு வாழ்த்துரை தருவீராக!” என்று கூறி, இருவரும் அவர்கள் காலில் விழுந்தனர். நடந்ததெல்லாம் நன்மைக்கே எனத்தேறித் திரு. பேஜும் அவன் மனைவியும் தம் மகளையும் மருமகனையும் ஏற்று நல்லுரை கூறினர். தம் பொறியில் தாமே வீழ்ந்தமையுணர்ந்து, இனித் தீமையை ஒறுக்கக்கூட எவருக்கும் இழிந்த சூழ்ச்சி செய்வதில்லை என அவர்கள் உறுதி கொண்டனர்.

மூன்றாம் ரிச்சர்டு

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  மூன்றாம் ரிச்சர்டு அரசன்: கிளஸ்டர் மோகன் - நான்காம் எட்வர்டின் தம்பி.

2.  நான்காம் எட்வர்டு அரசன்: மூன்றாம் ரிச்சர்டுக்கு முந்திய அரசன் - அவன் அண்ணன்.

3.  ஜார்ஜ் கிளாரென்ஸ் கோமகன்: எட்வர்டு, ரிச்சர்டு ஆகிய இருவருக்கும் தம்பி, ரிச்சர்டால் கொலையுண்டவன்.

4.  ஆறாம் ஹென்ரி அரசன்: மூன்றாம் ரிச்சர்டுக்கம் நான்காம் எட்வர்டுக்கும் முந்திய அரசன்; எட்வர்டால் சிறையுண்டு ரிச்சர்டு கைப்பட்டுக் கொலையுண்டவன்; மார்கரட் கணவன்.

5.  ஹென்ரி ரிச்மண்டு கோமகன்: ரிச்சர்டுக்குப் போட்டியான அரசுரிமையாளன் - ரிச்சர்டைக் கொன்று வென்று ஏழாம் ஹென்ரி அரசனானவன்.

6.  ஸ்டான்லிப் பெருமகன்: ரிச்சர்டின் மாற்றாந் தந்தை - ரிச்சர்டின் கட்சியிலேயே நெடுநாள் இருந்தவன்.

7.  ரிவர்ஸ் கோமகன்: எலிசபெத் அரசியின் உடன் பிறந்தான்.

8.  டார்ஸட் கோமான் தாமஸ்: எலிசபெத் அரசியின் முதல் மணத்து மகன்.

9.  ரிச்சர்டு கிரேப் பெருந்தகை: எலிசபெத் அரசியின் முதல் மணத்து மகன்.

10. ஹேஸ்டிங்ஸ் பெருமகன்: அரசுரிமைத் தோழன்; அரசி கட்சியை எதிர்த்தும் இளவரசரை எதிர்க்கத் தயங்கியதால் கொலையுண்டவன்.

11. பக்கிங்ஹாம் கோமகன்: அரசனுடன் முடி சூடும் வரை ஒத்துழைத்தும் முன் உறுதி தந்த பெருநிலக்கிழமை கேட்க, அதனால் பகைக்கப் பெற்றுக் கிளர்ச்சி செய்து தூக்கிலிடப் பெற்றவன்.

12. கேட்ஸ்பி: ஹேஸ்டிங்ஸ் வேலையாளும் ரிச்சர்டின் உளவாளியுமானவன்.

13. எட்வர்டு இளவரசன்.

14. எட்வர்டு இளவரசன் தம்பி.

** பெண்டிர்:**
1.  மார்கரட் அரசி: ஆறாம் ஹென்ரியின் மனைவி.

2.  எலிசபெத் கிரே அரசி: நான்காம் எட்வர்டின் மனைவி உட்வில் குடியினள்.

3.  யார்க் கோமாட்டி: நான்காம் எட்வர்டு, மூன்றாம் ரிச்சர்டு, கிளாரன்ஸ் கோமகன் ஜார்ஜ் ஆகிய இம்மூவரின் தாய்.

4.  ஜேன் பெருமாட்டி: ஆறாம் ஹென்ரியின் மகனாகிய இளவரசன் மனைவி; ரிச்சர்டால் வலுக்கட்டாய மணம் செய்யப் பெற்றவள்; மீண்டும் எலிசபெத்தின் மகளை மணக்கும் எண்ணத்துடன் அவனால் மணக்கும் எண்ணத்துடன் அவனால் கொலையுண்டவள்.

5.  எலிசபெத் இளவரசி: எலிசபெத் அரசி மகள்.

** கதைச் சுருக்கம்**
மூன்றாம் ரிச்சர்டு ஆறாம் ஹென்ரி அரசனை வென்று சிறையிட்ட அரசனாகிய நான்காம் எட்வர்டின் தம்பியருள் ஒருவன், எட்வர்டின் வலிமையை உணர்ந்து அவன் மற்றத் தம்பியாகிய கிளாரென்ஸ் கோமகனான ஜார்ஜைப் போல் எதிரி பக்கம் சாயாமல் எட்வர்டின் நண்பனாகவே கடைசிவரை நடித்தான். ஆயினும் எட்வர்டு இறந்தவுடன் தானே அரசனாகும்படி அவன் எல்லாவகையான சூழ்ச்சிகளையும் வஞ்சச் செயல்களையும் செய்தான். முதலில் சிறைப்பட்டிருந்த பழைய அரசனாகிய ஆறாம் ஹென்ரியைக் கொன்றான்.

அவன் உடலை அடக்கம் செய்யச் செல்லும் வழியிலேயே அவன் இறந்துபோன மகன் மனைவியாகிய ஜேன் பெருமாட்டியை அச்சுறுத்தி வலிந்து மணஞ் செய்து தன் தீ முயற்சிகளுக்கான செலவுக்காக அவன் செல்வத்தைக் கவர்ந்தான். இம்மணத்திற்குத் தன் உடன் பிறந்தான் ஜார்ஜ் தடையாய் இருப்பானென்று கருதி, அவனுக்கும் மற்ற உடன் பிறந்தானாகிய மன்னன் எட்வர்டுக்குமிடையில் தீராப்பகையை மூட்டி ஜார்ஜைச் சிறையிடுவத்து மறைந்திருந்து தானே கொன்றான்.

பின் எட்வர்டு இறந்தபின் அரசியின் உறவினரை வெறுத்த பெருங்குடி மக்களைச் சேர்த்துக்கொண்டு முதலில் அவ்வுறவினரிடையே தலைவனான ரிவர்ஸ் கோமான் (அரசியின் அண்ணன்), டார்ஸ்ட் கோமான், ரிச்சர்டு கிரேப் பெருந்தகை (அரசியின் முதல் மணத்து மக்கள்) ஆகியவரைக் கொன்றொழித்தான். பின் அரசுரிமையை எதிர்த்த ஹேஸ்டிங்ஸ் வீழ்ச்சியடைந்தான்.

எட்வர்டின் பிள்ளைகளாகிய இளவரசர் இருவரும் சிறைப்பட்டு மணிக்கூண்டில் அவன் கூலிபெற்ற போக்கிரிகளால் கொல்லப்பட்டனர். இறுதியில் இதுகாறும் உடந்தையாயிருந்த பக்கிங்ஹாம் கோமகனுக்கு முன் உறுதியளித்த ஹெரிபோர்டு பெருநிலக்கிழமையைத் தாராது ஏமாற்றினான்.

பக்கிங்ஹாம் எளிதில் அவனிடமிருந்து தப்பித் தான் சிறைப்படுத்தி வைத்திருந்த அரசனுடைய பகைவரை விடுதலைசெய்து அரசன் குடிக்குப் போட்டியாய் அரசுரிமைக்கு வாதாடிய ஹென்ரி ரிச்மண்டு என்பவனுடன் ஃபிரான்சில் சென்று சேரும்படி அவர்களைத் தூண்டினான். இங்கிலாந்திலும் அவர்களுக்கு உதவ அவன் ஒரு கிளர்ச்சியை எழுப்பினான். ரிச்சர்டு கிளர்ச்சியை அடக்கப் பக்கிங்ஹாம் கோமகனைத் தூக்கிலிட்டான். பின் ஜேனைக் கொல்வித்து அவளை முன் வலியுறுத்தி மணந்தது போலவே தன் அண்ணன் மனiவியாகிய எலிசபெத் அரசியையும் அச்சுறுத்தி அவள் மகள் எலிசபெத் இளவரசியை மணக்க முயன்றான். ஆனால், இத்தடவை அவன் வெற்றி பெறவில்லை. நேர்மாறாக எலிசபெத் அவன்மீது எதிரி ஹென்ரி ரிச்மண்டுக்கே மணம் செய்வித்தாள். இங்ஙனம் உரம் பெற்ற ஹென்ரி இங்கிலாந்தின்மீது படையெடுத்து பாஸ்வொர்த் சண்டையில் ரிச்சர்டைக் கொன்று ஏழாம் ஹென்ரியாக இங்கிலாந்தின் அரசுரிமை பெற்றான்.

1.எட்வர்டு அரசனும் ரிச்சர்டும்

இங்கிலாந்தின் மன்னருள் வாழ்க்கை முற்றிலும் துன்பத்துக்காளான தீவினையாளன் ஆறாம் ஹென்ரி அரசனே. ஆனால், வாழ்க்கை முற்றிலும் பிறருக்குத் துன்பமே இழைத்துப் படுகொலைகளையும் தீச்செயல்களையும் அஞ்சாது செய்த அரசனும் உண்டு; அவனே மூன்றாம் ரிச்சர்டு. தன் அண்ணனாகிய நான்காம் எட்வர்டு அரசனாயிருக்கும் போது அரசுரிமைக்கு முன்னேற்பாடாக அவன் செய்த கொலைகள் பல. அதன்பின் அவன் அவ்வுரிமையைக் காக்க இயற்றிய செய்லகள் அவற்றினும் மிகுதியாகவும் அவற்றை விடக் கொடுமையான வையாகவும் இருந்தன.

ஆறாம் ஹென்ரி அரசன் மணிக்கூண்டில் சிறைப்பட்டிருந் தாலும், அவன் பெயராலும் அவன் மகன் எட்வர்டு இளவரசன் பெயராலும் அவன் மனைவியாகிய மார்கரட் பெண்புலிபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்து வந்து சண்டை செய்துவந்தாள். எட்வர்டின்மீது பொறாமை கொண்ட வார்விக் கோமகனும் எட்வர்டின் தம்பி ¹கிளாரன்ஸ் கோமகன் ஜியார்ஜும் அவள் பக்கம் சென்று சேர்ந்தனர். அவள் அவர்கள் உறவை வலியுறுத்தும் படி எட்வர்டு இளவரசனுக்கு வார்விக்கின் புதல்வியாகிய ஜேன் பெருமாட்டியையும் கிளாரென்ஸுக்கு வார்விக்கின் இன்னொரு புதல்வியையும் மணம் புரிவித்தாள். ஆனால் ட்யூக்ஸ்பரிச் சண்டையில் அவளுடைய இரு கோட்டைகளும் தகர்ந்தன. கோழையாகிய ஜியாஜ் மீண்டும் அண்ணனுடனேயே சென்று சேர்ந்து கொண்டான். போரில் இளவரசனும் சிறைப்பட்டு விடவே, அவனை எட்வர்டு அரசனும் ரிச்சர்டும் குருதியாறோட வதைத்துக் கொன்றார்கள். தன் போர்களுக்கெல்லாம் உயிர்நிலையான மகனைப் பறிகொடுத்த மார்கரட் பழி ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மறந்து அவர்களை வாயார வைது தூற்றி வந்தாள்.

நான்காம் எட்வர்டு அரசன் அஞ்சா நெஞ்சினன்; போரில் கொடும் புலிபோல நின்று எதிரிகளை அடர்த்தழிப் பவன்; அரசியல் சூழ்ச்சிகளிலும் வல்லவன். ஆகவே, அவன் பூசலும் போரும் மிக்க அந்நாளில் எளிதில் ஆட்சியைக் கைக்கொண்டதில் வியப்பில்லை. ஆனால், வெற்றியஞ் செல்வியின் புன்முறுவல் இளமையிலேயே அவன் பேராவல் களுக்கு முழுமையும் நிறைவு தந்தது. அவ்வெற்றிகளிடையே அவனுடைய வேறு சில பண்புகள் வெளியாயின. அவன் போரில் எவ்வளவு வீரனோ அவ்வளவு வாழ்வில் இன்ப விருப்பினனாயும் இருந்தான். இளமைக்காலப் போர்களில் இரும்புக் கம்பிகள் போல் இறுகிய அவன் நரம்பு நாடிகள், வெற்றியின் பின் உணவின்பம், குடியின்பம், நல்வாழ்வின்பம் ஆகிய கறைகளிற் கிடந்து தளர்ச்சியும் பூரிப்பும் அடைந்தன.

ஆனால், புலி பசியாறி இளைப்பாறினும் நகங்களின் கூர்மை குன்றுவதில்லை. அதுபோலவே அவனை எதிர்த்தவர்கள் அவன் பழைய ஆற்றலின் அளவை மீட்டும் ஒருமுறை கண்டார்கள். கிளாரென்ஸும் வார்விக்கும் இச்செய்தி அறியாது அவனை எதிர்த்து முறிவடைந்தனர். எட்வர்டு பெருந்தன்மையுடன் கிளாரென்ஸை மன்னித்தான். எட்வர்டின் மற்றத் தம்பியாகிய ரிச்சர்டு இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேராவல் எட்வர்டின் ஆவலைவிடக் குறைந்ததன்று. போரில் அவன் எட்வர்டுடன் சரிநிகராயிருந்து வெற்றி தேடியிருந்தான். தன் பேரவாவுக்குத் தடையா யிருப்பவர்களை ஒழிப்பதில் எத்தகைய தயக்கமும் இருவரிடையேயும் கிடையாது. ஆனால், எட்வர்டின் காலம் அது; தன் காலம் வரவில்லை என்று ரிச்சர்டு காத்துக் கொண்டிருந்தான்.

எட்வர்டு தன்னலமும் சூழ்ச்சியும் நிறைந்தவனே; பழிச்செயல் எதற்கும் அஞ்சாதவனே; ஆயினும் மனைவி மக்களிடம் அவன் கொண்ட பற்று அவனுக்கு மனித உணர்ச்சியை உண்டுபண்ணிற்று. நடுத்தரக் குடியிற் பிறந்த எலிசபெத் உட்விலை அவன் மணந்தபின் அவன் அவளுடைய உறவினர்க்கு உயர்வும் செல்வமும் தந்தான். மேலும் தனக்குப்பின் தன் குழந்தைகளின் அரசுரிமைக்கு எத்தகைய இடையூறும் இருக்கப்படாதென்ற கவலைக் கொண்டு அதற்கான முன் ஏற்பாடுகளில் அவன் முனைந்து வந்தான்.

ஆனால், எட்வர்டிடம் கண்ட இம்மனித உணர்ச்சிக்கும் கனிவுக்கும் ரிச்சர்டிடம் இடமில்லை. எத்தகைய விலங்கியல் கொண்ட மனிதருக்கும் பெண்கள் பிள்ளைகள் ஆகியவர்களின் காதல் கனிவு தரும் என்று கூறுவதுண்டு. அதற்கு முற்றிலும் விலக்கானவன் ரிச்சர்டு. அவன் போரில் கொல்பவன் மட்டிலுமல்லன்; பொதுவாழ்விலும் அண்ணன் தம்பியென்றும், மனiவி மக்களென்றும் பாராமல் தனக்குத் தடையாயிருப் பவர்களைப் படுகொலை செய்து, குருதி ஆறொழுக்கிய கொடியவன் அவன். பேய்க்கும் தாய் பிள்ளை தெரியும் என்பார்கள். ஆனால், ரிச்சர்டு தாய்பிள்ளைப் பற்றுக்கூட அற்றவன். பேய் மனமுடையவன்.

2.பேய்க் காதல்

பிள்ளையைக் கொன்றதுடன் அமையாமல் குருதிவெறி கொண்ட ரிச்சர்டு மணிகூண்டுக்குப் போய் ஹென்ரி அரசனையும் கொலை செய்தான். மறுநாட்காலை ஹென்ரியின் உடல் லண்டன் தெருக்கள் வழியாக அடக்கஞ் செய்யுமிடத்துக்கக் கொண்டு போகப்பட்டது. வழியில் அதனைக் காணும் அவாவுடன் ரிச்சர்டு காத்திருந்தான். இறந்தவருக்காக வருந்திப் பின் சென்றவர்களுள் ஹென்ரியின் மனைவியாகிய ஜேன் பெருமாட்டியும் ஒருத்தி. தந்தையையும் கணவனையும் மாமனையும் இழந்த அவள் துயர் கண்டு கல்லும் கரையும். ஆனால் ரிச்சர்டு அவளைக் கண்டவுடன் அவளை ஏன் தான் மணஞ்செய்து அவள் செல்வத்தைக் கவரக்கூடாது என்று எண்ணமிட்டான். தன் பேராவல்களுக்கு அது முதற்படியாயிருக்கு மாதலால் அதனை அவன் உடனேயே செய்து முடிக்க எண்ணங்கொண்டான்.

மனித வகுப்பபைச் சேர்ந்தவர் இறந்தவர் முன்னிலை யிலாவது தம் சிறுமையை அடக்கி வைத்துக்கொள்வர். ரிச்சர்டு விலங்கினும் தாழ்ந்த பேய்த்தன்மை கொண்டவனாதலால் அந்தத் துயரத்தை மதியாது அவ்வுடலைத் தடுத்து அவளிடம், “இப்பிணம் கல்லறை செல்ல வேண்டுமானால் நீ என் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும். உன் அழகில் மயங்கி உன்னை மணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் தான் நான் உன் தந்தையையும் கணவனையும் மாமனையும் கொன்றேன். இன்னும் யார் யார் தடையாயிருப் பார்களோ அவர்களும் சாவது திண்ணம். ஆகவே, என்னை மணப்பதாக உறுதி கொடு. உன்னையும் இப்பிணத்தையும் போக விடுகிறேன்” என்றான். காலன் பிடியிலிருந்து விலகினும் இக்காலகண்டன் பிடியிலிருந்து விலகுவதற்கில்லை என்று கண்ட ஜேன் உள்ளத்தில் மட்டற்ற வெறுப்புடனும் எரிச்சலுடனும் “என்ன உறுதி வேண்டுமானாலும் தருகிறேன். என் கண்முன் நில்லாது தொலைந்து போ” என்றாள்.

ஜேனின் உள்ளத்தில் தன் தந்தையையும் தன் கணவனையும் இறுதியில் தன் மாமனையும் கொன்ற கொடியோனிடம் வெறுப்பு ஒருபுறம் இருந்தாலும், அச்சுறுத்தலும் துணிவும் முகமனுரையும் கலந்த அவன் நடிப்புக்குமுன் அவள் கோழைமை நாணி ஒடுங்கிப் பணிந்து, அதுகண்ட ரிச்சர்டு பின்னும் துணிவுடன் அவள் பெண்மை உணர்ச்சிகளை ஒறுப்பினால் தூண்ட முனைந்தான். “நான் செய்த கொடுமைகள் அத்தனையும் உன்னுடைய அக்கண்களின் கொடுமையினால்தான்; இன்னும் அக்கண்களின் கவர்ச்சியுட்பட்டு நான் மேலும் கொலைகள் நடத்தக்கூடும். கொலையைத் தடுக்கக் கொலை செய்வது பழியன்று என்பர். ஆகவே, என்னை நேரிடையாகக் கொன்றழிக்க” என்று கூறிக்கொண்டு தன் வாளை உருவி அவள் காலடியில் வைத்து மண்டியிட்டு நின்று தன் மார்பை அவளுக்குக் காட்டினான். எவ்வளவு வெறுப்பிடையேயும் அம் மெல்லியலாள் தன்னைக் கொல்லும் துணிவுடையவள் அல்லள் என்ற அவன் உறுதிக்கேற்ப அவளும், “வேண்டா; எழுக” என்றாள். தன் காரியம் எளிதில் கைவடுவது கண்டு ரிச்சர்டு “எழமாட்டேன்; என்னைக் கொல்லத் தான் வேண்டும். உன் காதலின்றி நான் இருக்க விரும்பவில்லை. என் மீதிரங்கி என்னை மணப்பதாக உறுதி கூறினால் மட்டுமே நான் எழுவேன்” என்றான்.

“உன்னை மணப்பதும் நான் சாவதும் ஒன்றுதான். வாழ்வுக்கு வகையற்ற நான் இனி எது செய்தால் என்ன? உன்னையோ உன்னினும் கடைப்பட்ட விலங்கையோ வேண்டுமானாலும் மணக்கிறேன். நீ இப்போது என்னை விட்டு அகலமாட்டாயா?” என்றாள் அவள். கடைப்பட்டவரும் மதிக்கும் காதலினும் காரியமே பெரிதாகக் கொண்டு ரிச்சர்டு, தன் எளிய வெற்றியில் மனநிறைவு கொண்டு மகிழ்வுடன் தருக்கிச் சென்றான். வேடன் விரும்பிய குயில் அவன் பையில் வந்து சேர்ந்தது. அப்பாடுங் குயில் இனிப் பாடுமோ பாடாதோ என்பதைப் பற்றி அவனுக்கென்ன கவலை? குயில் எல்லாருக்கும் செவிப்புலன் வழியே இன்பந் தருவது, அவனுக்கு அவ்வின்பம் நாப்புலன் வழித்தானே!

எட்வர்டு அரசன் தன் வீரத்தாலும் படைத்தலைமைத் திறத்தாலும் அரசியல் முறைகளாலும் பெற்ற அரசாட்சிச் செல்வத்தைச் சூழ்ச்சியால பெற ரிச்சர்டு மனக்கோட்டை கட்டியிருந்தான். அதன் அடிவாரக்கல் ஜேனேயாவாள். அவள் செல்வத்தினைப் பெற்றதே தன் மனக்கோட்டையில் பாதி கிட்டிவிட்டதாக ரிச்சர்டு எண்ணினான். அடுத்தபடியாக ஜேனின் தமக்கை கணவனாகிய தன் தம்பி கிளாரன்ஸ் கோமகன் இம்மணத்திற்குத் தடையாயிருக்கக்கூடுமாதலால், அவனை ஒழித்துவிட ஏற்பாடு செய்தான். பகையைப் பகையால் அழிப்பதே சிறந்த அரசியல் சூழ்ச்சி என்ற சாணக்கிய முறையை அவன் நன்கு அறிந்தவனாதலால், கிளாரன்ஸ் மீது எட்வர்டுக்கும் அவன் மனைவிக்கும் தீராப்பகைமை உண்டு பண்ணலானான்.

எட்வர்டின் திருமணக் காலத்திலேயே பல காரணங்களால் அவன் தாயாகிய யார்க்குக் கோமாட்டி அதனை விரும்பவில்லை. ஆகவே, எட்வர்டு இளமையில் மறைவாகச் செய்துகொண்டு ஒரு திருமணத்தின் சீட்டைக் காட்டி அங்ஙனம் ஒரு மனைவி இருக்கையில் அவனுக்கு இரண்டாவது மணம் செய்ய உரிமையில்லை என்று வாதாடி வந்தாள். எட்வர்டு வாயாடி மிக்க சமயத் தலைவர்களை ஏவி அதனைப் புறக்கணித்து விட்டாலும் மக்கள் மறைவில் அரசிக்கும் அவள் பிள்ளைகளுக்கும் அரசுரிமை கிடையாது என்று கூறிக் கொள்வதை மட்டும் அவனால் தடுக்க முடியவில்லை. இருப்புச் சலாகைகள் போன்ற தன் ஆட்சியின் பிடி நீங்கியபின், இவ்வெண்ணம் மக்களிடையே வேர்க் கொள்ளுமாயின், தன் பிள்ளைகளின் உரிமைக்கும் வாழ்வுக்கும் பேரிடர் நேருமென்று அரசன் அஞ்சினான். அத்துடன் அரசியும் அவள் உறவினரும் அஞ்சினர்.

கிளாரன்ஸ் அரசன் மணத்திற்கெதிராக மக்கள் எண்ணத்தைத் தூண்டி வருகிறான் என்று ரிச்சர்டு இப்போது அரசன் காதில் ஊதிவிடவே, அரசனும் அரசியும் ஆய்ந்தோய்ந்து பாராமல் கிளரான்ஸ் மீது சினங் கொண்டு அவனைச் சிறையிட்டதுடன், ரிச்சர்டின் நயவஞ்சகமான தூண்டுதல்களுக்கு அடிமைப்பட்டு அவனைக் கொன்று விடுமாறு ஆணை தந்தார்கள். மேலும் அரசன் மனம் அமைதியுற்றுப் பகுத்தறிவின் தூண்டுதலுக்காளாகு முன்னமே, ரிச்சர்டு தன் கைவசமுள்ள கொலையாளிகள் மலமாக அவ்வாணையை நிறைவேற்றி விட்டான். விரைவில் கவலையால் படுக்கையில் வீழ்ந்து இறுதியை அணுகிய அரசனும், அவனை ஒட்டி நல்லெண்ணத்தின் சூழலுட்பட்ட அரசியும் அவ்வாணையை மறுதலிக்க எண்ணியபோது ரிச்சர்டு, “இக்கழிவிரக்கத்தால் பலனில்லை. எதிர் ஆணை செல்லுமுன் முதல் ஆணை நிறைவேற்றப்பட்டு விட்டது” என்று ஒன்றுமறியாதவன்போல் வருத்தத்துடன் கூறினான்.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்றபடி இறுதிவரையிலும் ரிச்சர்டு கிளாரன்ஸுக்கு உற்ற நண்பன் போல் நடித்து, அவன் சிறைக் கனுப்பப்பட்டது பற்றி வியப்படைந்ததாகக் காட்டிக் கொண்டான். ஆனால், இங்ஙனம் தமையனாகிய அரசன் அவன் மீது ஐயங்கொள்ளக் காரண- மாயிருந்தவள் அரசியே என்று தோன்றும் வண்ணம், அடிக்கடி அவள் முன்னிலையிலும் சிறைக்காவலன் முன்னிலையிலும் “நாம் என்செயக் கூடும். நாம் அனைவரும் அரசியின் குடிகள்; அரசி மனம் கோணின் ஆந்துணையில்லை” என்று குத்தலாகப் பேசினான்.

3.மார்கரட்டின் பழி

அரண்மனையிலும் கிளாரன்ஸுக்கெதிரான எண்ணத்தை அவனே தூண்டிவிட்ட போதிலும், அரசியும் அவள் உறவினரும் அதன் பிடியுட் பட்டாடும் காலத்தில், அவன் அவர்களிடம் சென்று பலரும் கேட்க அவர்களைக் கிளாரன்ஸைப் பற்றிப் பேசும்படி கிண்டி, அதன்பின் தான் அவன் சார்பில் பேசுவதுபோல் நடித்து அவர்களைத் தூற்றிவந்தான். அச்சமயம் அவர்கள் அனைவரிடமும் பொதுப்பகையினளாகிய மார்கரட் அப்பக்கம் வந்தாள். பேயினும் கொடிய மனிதப் பேயாகிய ரிச்சர்டு நீங்கலாக அனைவரும் அவளது வற்றி வறண்ட அலங்கோல வடிவங் கண்டு உடல் குன்றி விறைத்து நின்றனர். தன் பிள்ளை இருக்கும் வரை போர் செய்யும் பெண் புலியை ஒத்து யார்க்கரசர் குடியை எதிர்த்து வந்த மார்கரட் இப்போது யாதொரு நோக்கமுமற்றுப் பழியின்றி வேறு தனிலும் மனம் செல்லாமல் திரிந்து வந்தாள். தன் பகைவரிடையே பிளவும் சூழ்ச்சியும் படுகொலைகளும் மிகுவது கண்டு அவள் எக்களிப்புக் கொண்டாள். தன் இருக்கையில் அமர்ந்த தன் எதிராளியான எலிசபெத் அரசியைக் கண்டதும் அவள் கொதித்தெழுந்து, “சிறுமனத்துச் சிறுபிறப்பே! உன்னால், உன் பேரால் நான் அரசி நிலை இழந்தேன், தாய்மை நிலை தவிர்ந்தேன்; மனக்கிழத்தி நிலை மறந்தேன். விரைவில் நீயும் அரசி நிலையும் அற்றுத் தாய் நிலையும் மனைவி நிலையுமற்றுப் போகக் கடவை. அதுமட்டுமன்று; நீ இன்று என் எதிரியாயினும் விரைவில் என்னுடன் சேர்ந்து நான் பழிப்பவரை நீயும் சேர்ந்து பழிக்கக்கடவை” என்றாள்.

பின், மார்கரட் ஒவ்வொருவர் பக்கமும் திரும்பி நின்று அவரவர் பங்குக்குத் தனித்தனிப் பழிமொழிகள் வழங்கினாள். அவளுடைய கோர உருவத்தையும் கடுமொழிகளையும் கேட்டு அனைவரும் செயலற்று நின்றனர். ரிச்சர்டு அவள் பழி முற்றிலும் கேட்டு நின்று, “இவ்வளவு தானா?” என்றான். உடனே அவள் ரிச்சர்டை நோக்கிக், “குருதி வெறி கொண்ட பேயே! உன் தீவினை முற்றும்வரை தெய்வம் தன் தண்டப் பொறிகளைப் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் உறக்கமும் மன அமைதியுமிழக்கும் படி செய்து, உன் மனச்சான்றின் ஓயாவதைப்பிற்கு உன்னை ஆளாக்குக” என்று கூறினாள். பின் அவள் பக்கிங்ஹாமையும் ரிச்சர்டையும் நோக்கி, “உங்களுள் ஒருவனுக் கொருவன் கத்தியாயமைக; தெய்வத்தின் பழியின் உருவங்களே! ஒருவர் கழுத்தை ஒருவர் அறுப்பீர்களாக” என்றாள்.

ரிச்சர்டு ஒருவனே அவள் பழிகேட்டு மனம் சிதையாதவன், எதிர் காலத்தில் அவள் பழி கைவந்தபோது மட்டும், அவள் அன்று பேசிய பேச்சுக்களும் நின்ற நிலையும் தோற்றமும் அவனைச் சித்திரவதை செய்தன.

4.போலிநட்பும் சதியும்

என்றும் எதற்கும் அஞ்சாது, நல்வினை தீவினை இறைவன் பெயர் ஆகியவற்றையெல்லாம் தூசாக மதித்த “கள்ளுள்ளி மங்கனான” ரிச்சர்டு, எட்வர்டு ஒருவன் ஆற்றலுக்கு மட்டும் அஞ்சியடங்கிக் கிளாரன்சைப்போல் அவனை எதிர்க்க துணியாமல் அவனிடமும் அவன் மனைவியினிடமும் போலி நட்பு நடித்து வந்தான். எட்வர்டு இறந்தபின் அவன் அச்சம் நீங்கிற்று. முதலில் அரசி எலிசபெத்தினிடம் அவள் பிள்ளையாகிய இளவரசன் எட்வர்டையே தான் முடிசூட்டப் போவதாக உறுதி கூறினான். அதே சமயம் பெருமக்களிடையில் அவளுடைய இழிந்த பிறப்பு, பேராவல், அவள் உறவினரின் செல்லரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த பகைமையைத் தூண்டி அவள் ஆட்சியை ஒழிக்க முற்படுவதாகக் காட்டிக் கொண்டான். அரசியின் உறவினரை வெறுத்த ¹ஹேஸ்டிங்ஸ் பெருமகன், ²ஸ்டான்லிப் பெருமகன், ³பக்கிங்ஹாம் கோமகன் முதலிய பலரும் இவ்வெதிர்ப்பில் கலந்துகொண்டனர். அவர்களுதவியால் அவன் இளவரசன் எட்வர்டுடன் புடைசூழ்ந்து வந்த அரசியின் தம்பி ⁴ரிவர்ஸ் கோமகன், அவள் முதல் மணத்துப் பிள்ளைகளான ⁵டார்ஸெட் கோமகன் ரிச்சர்டு, ⁶கிரே பெருந்தகை ஆகிய மூவரையும் பிரித்துச் சிறையிலிட்டுப் பின் கொலை செய்ய முயன்றான். ஆனால், டார்ஸெட் மட்டிலும் தப்பிப் பிழைத்தோட, மற்ற இருவரும் கொலையுண்டனர்.

தன் உறவினருக்கு நேர்ந்த முடிவு கண்டு ரிச்சர்டின் தீயெண்ணங்களை உய்த்துணர்ந்து கொண்ட எலிசபெத் உடனே இளைய மகனுடன் ஒரு மடத்தில் அடைக்கலம் புகுந்தாள். ஆனால், ரிச்சர்டு, கான்டர்பரி முதல் தலைமகனை அச்சுறுத்தி, மடத்தினுரிமைக்கு எதிராக இருவரையும் வலிந்திழுத்து மணிக்கூண்டுக்குக் கொண்டு வருமாறு பணித்தான். அப்படியே கோழை மகனாகிய அம்முதல் தலைவன் இளைவரசனைக் கைக்கொண்டு வந்தான். எலிசபெத் மட்டும் அவன் பிடியை மீறி ஒரு சிலர் உதவியால் கடல் கடந்து ஃபிரான்சு சென்று சேர்ந்துவிட்டாள். சூதறியாப் பாலர்களாகிய இளவரசர் இருவரும் மணிக்கூண்டில் அடைப்பட்டனர்.

அரசியை எதிர்ப்பதில் அரசனுடன் ஒத்துழைக்க முன்வந்த ஹேஸ்டிங்ஸ், இளவரசரை நீக்கி ரிச்சர்டை அரசனாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதனை அவன் வேலையாளும் அரசனுக்கு உள்ளாளுமான ⁷வில்லியம் கேட்ஸ்பி மூலம் அறிந்த ரிச்சர்டு, அவனையும் எளிதில் தென்புலத்துக்கு அனுப்பினான். அதன்பின் பக்கிங்ஹாமின் ஒத்துழைப்புடுன், ரிச்சர்டு சமயப்பற்று மிக்கவனாகவும் உலகியல் வாழ்விலோ அரசியல் உயர்விலோ பற்றற்றவனாகவும் நடித்து, லண்டன் நகர்த் தலைவனையும் மக்களையும் மயக்கினான். அச்சமயம் பக்கிங்ஹாம் மக்கள் சார்பாகத் தானும் நகர்த் தலைவனும் மன்னன் எட்வர்டின் மணிமுடியை அவனுக்குத் தர எண்ணுவதாகக் கூறினர். ரிச்சர்டு மிக நேர்மையுள்ளவன்போல் அவ்வுரிமை அண்ணன் பிள்ளையாகிய இளவரசன் எட்வர்டுக்கே செல்லுபடியன்று என்று தலைமக்களும் வழக்கறிஞரும் மறுக்கின்றனர் என்ற காட்டிக், கூட்டத்தில்தான் அங்கங்கே நிறுத்தி வைத்திருந்த கூலிகள் மூலம், “ரிச்சர்டு அரசனாக வேண்டும்; ரிச்சர்டு மன்ன் வாழ்க” என்று கூவச் செய்தனன். இத்தகைய நடிப்புக்களின் பயனாக ரிச்சர்டு மூன்றாம் ரிச்சர்டு அரசனா முடிசூட்டப் பெற்றான்.

பக்கிங்ஹாமின் பகைமை

ரிச்சர்டு தான் அரசனானவுடன் பக்கிங்ஹாமினுடைய ஒத்துழைப்பிற்குப் பரிசாக அவனுக்கு ஹெரிஃபோர்டுப் பெருநிலக் கிழமையைத் தருவதாக உறுதி கூறியிருந்தான். ஆனால், தன் எண்ண முற்றும் கைக்கூடிய பின் வருவாய் மிகுதி உடைய அந்நிலக்கிழமையினை அவனுக்கேன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணலானான். தன் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாயிரந்த பக்கிங்ஹாமும் அதனை வற்புறுத்திக் கேட்கக் காத்திருந்தான். மணிக்கூண்டிலுள்ள பிள்ளைகள் இருக்குமளவும் தன் அரசுரிமை நிலையற்றது என்றெண்ணி அவர்களை ஒழிக்க அரசன் அவன் துணையை நாடியபோது, அவன் இவ்வுறுதியை நினைவூட்டினான். அரசன் “சரி பார்ப்போம்; நாளை வருக” என்று கூறிவிட்டு, அன்றிரவே வருவாயற்றுக் கூலிக்குத் தன்னை விற்கக் காத்திருந்த கயவனாகிய ¹ஜேம்ஸ்டிரல் மூலம் அக்கொடுஞ்செயலை நிறைவேற்றினான்.

அரசன் புறக்கணிப்பை அறிந்ததுடன், இதுவரை அவனிடம் கள்ளனுக்குக் குள்ளனாக இருந்து அவன் இயல்பை அறிந்தவன் பக்கிங்ஹாம். எனவே, அவன் உடன் தானே தன் ஊர்ப்புறம் சென்று, தான் சிறைப்படுத்தி வைத்திருந்த அரசன் பகைவரை விடுவித்தான். விடுவித்த பின் அவன் அவர்களிடம் ஃபிரான்சிற்குச் சென்று ஆறாம் ஹென்ரி வழியில் இங்கிலாந்தின் அரசுரிமையாளனான ²ரிச்மண்டுக் கோமான் ஹென்ரியுடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு எதிராகப் போர் தொடுக்குமாறு சொல்லி, அவர்களைத் தூண்டினான். அவனும் விரைவில் படை திரட்டி, அவர்களுக்குப் பக்கத்துணையாக இங்கிலாந்தின் மேற்குப்புலத்தில் கிளர்ச்சிக் கொடியை நாட்டினான். ஹென்ரி ரிச்மண்ட் விரைவில் ரிச்சர்டைப் போரில் கொன்று ஏழாம் ஹென்ரி அரசனானான். ரிச்சர்டின் கொடிய ஆட்சி இங்ஙனம் முடிவுற்றது.

பெரிக்ளிஸ்

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  அன்டியோக்கஸ்: அன்டியோக் நகர் அரசன்.

2.  பெரிக்ளிஸ்: டையர் அரசன், தயீஸா கணவன், மரீனா தந்தை.

3.  ஹெலிக் கானஸ்: டையர் பெருமக்களில் முதல்வர்.

4.  எஸ்கானஸ்:

5.  கிளியோன்: தார்ஸன் தலைவன்; பெரிக்ளிஸ் நண்பன்; மரீனாவை வளர்த்தவன்.

6.  ஸிலிமாக்ஸ்: மைட்டிலீன் நகரின் காவலன்; மரீனா காதலன்.

7.  தைலார்டு: அன்டியோக்கஸ் கையாள்.

8.  சைமனிடிஸ்: பென்டாப் பொலிஸின் அரசன், தயீஸா தந்தை.

9.  நாவாய்க் கிறைவன்.

10. ஸெரிமன்: எபீஸஸ் நகரின் மருத்துவ அறிஞன், தயானா கோயில் பணிமுறைத் தலைவன்.

11. அந்தோனைன்: தயோனிஸாவின் கையாள்.

** பெண்டிர்:**
1.  அன்டியோக்கஸ் புதல்வி:

2.  மரீனா: பெரிக்ளிஸின் புதல்வி.

3.  தயோனிஸா: கிளியோன் மனைவி, மரீனாவை வளர்த்துச் சூழ்ச்சியால் கொலை செய்ய முயன்றவன்.

4.  தயீஸா: ஸைமனிடிஸின் புதல்வி, பெரிக்ளிஸ் மனiவி, மரீனா தாய்.

5.  பைலாட்டென்: கிளியோன் தயோனிஸா ஆகியவர்களின் புதல்வி.

** கதைச்சுருக்கம்**
டையர் நகரின் இளைஞனான அரசன் பெரிக்ளிஸ் அன்டியோக்கஸ் என்ற பேரரசனைப் பகைத்துக் கொண்டதனால் அவனுக்கஞ்சி நாட்டின் ஆட்சியை ஹெலிக்கானஸ் என்ற பெருமகனிடம் விட்டுவிட்டுச் சிலநாள் தார்ஸஸ் நகரில் சென்று மறைந்து தங்கினான். அங்கே பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு உதவியதனால் அந்நகர்த் தலைவன் கிளியோன். அவன் மனைவி தயோனிஸா ஆகியவர்களால் பாராட்டப்பட்டிருந்து தான் அங்கிருந்தும் புறப்பட்டுக் கடலிற் புயலால் மரக்கலமுடையக். கிரீஸைச் சார்ந்த பென்டாப் பொலிஸில் மீன் படவரால் கொண்டு சென்று ஆதரிக்கப்பட்டான். பென்டாப் பொலிஸி அரசனான சைமனிடிஸ் மகள் தயீஸாவை மணக்கக் காத்திருந்த அரசிளஞ் செல்வருடன் சென்று பெரிக்ளிஸ் தயீஸாவின் காதலைப் பெற்று அவளை மணந்துகொண்டான்.

அதற்குள் அன்டியோக்கஸ் இடிவீழ்ந்து இறக்க, டையரிலுங் மக்கள் ஹெலிக்கானஸை அரசனாகும்படி வற்புறுத்த, அவன் அவர்களிடம் பெரிக்ளிஸைக் கண்டுபிடிக்க நாடுகளுக்கும் சுற்றறிக்கையாக விடுத்தான். அது கேள்விப் பட்டுப் பெரிக்ளிஸ் கருவுற்ற மனைவியுடன் கப்பலில் வருகையில் தார்ஸஸ் பக்கம் புயலிடையே தபீஸா பெண்மகவீன்று இறந்ததாக எண்ணப்பட்டுக் கடலில் பெட்டியில் வைத்து மிதக்கவிடப் பட்டாள். குழந்தை மரீனா தார்ஸஸில் கிளியோனிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அயர்ச்சியால் பிணம்போல் கிடந்தவளான தயீஸா எபீஸஸில் செரிமான் என்ற மருத்துவ அறிஞரால் அயர்ச்சி அகற்றப்பெற்று, அங்கே தயானா என்னும் தெய்வம் உறையும் கோயிலில் சார, மரீனாவை தயோனிஸா தன் புதல்வி பைலாட்டெனுக்குப் போட்டியெனப் பொறாமை கொண்டு அவளைக் கொல்விக்க முயன்றாள். ஆனால், தற்செயலாக அவள் கொள்ளைக்காரர் கைப்பட்டு மைட்டிலீனில் தீயவிடுதி ஒன்றில் சேர்ந்து அதனைத் திருத்தித் தானம் நல்வழி நின்றாள். அவளிறந்ததாகக் கேட்டுத் துயருருவில் சுற்றித் திரிந்த பெரிக்ளிஸுடன் அவள் கலந்து இணைந்தபின் அனைவரும் தயானாவின் கனாக் காட்சியால் எபீஸஸ் சென்று தயீஸாவையும் அடைந்தனர். மரீனாவை மைட்டிலீன் தலைவன் லிஸிமாக்கஸ் காதலித்து மணந்தான்.

1.தீவினையின் ஆர்ப்பாட்டம்

¹அன்டியோக்கஸ் என்ற ஒரு கொடுங்கோல் மன்னன் ²அன்டியோக் என்ற ஒரு நகரம் அமைத்து, அதில் குடிகள் மட்டுமின்றி அயல் மன்னரும் வெருவ அரசு புரிந்தான். அவன் தீச்செயல்களைத் துணிந்து செய்து உலகம் அவற்றை அறியாவண்ணம் வெளிப்பூச்சுப் பூசி ஏமாற்றி வந்தான். இதில் தான் அடைந்த வெற்றியால் தருக்க மேன்மேலும் அவன் உலக மக்களை ஏய்க்கவும் துன்புறுத்தவும் தொடங்கினான்.

பிறரறியாமல் மறைந்திருந்த அவன் தீச்செயல்களில் அவன் அழகிய புதல்வியும் அவனுக்கு உடந்தையாக இருந்தாள். ஆகவே, இயற்கைக்கு மாறாக அவளை யாருக்கும் மணம் செய்து கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்ள அவன் விரும்பினான். ஆயினும் மெய்ப்புக்கு அவளை மணக்க வேண்டுமென்று விரும்புபவர் தன் புதிர் ஒன்றுக்கு விடை தரவேண்டு மென்றும், விடை தராவிடில் தலையிழக்க இணங்கவேண்டு மென்றும் அவன் பறைசாற்று வித்தான். அப்புதிரில் யாரும் அறியாத அவன் தீச்செயலே குறிப்பாகக் காட்டப்பட்டிருந்தது. அதனையுணராது அரசிளஞ் செல்வர் பலர் அவன் பொறியில் வீழ்ந்து வீணே தம் விலைமதித்தற்குரிய உயிர்களை இழந்தனர்.

ஆயினும் ³டையர் நகரத்தின் புதிய அரசனான ⁴பெரிக்ளிஸ் என்ற இளைஞன், யாரும் அறியமுடியாது என்று அன்டியோக்கஸ் நினைத்துத் தருக்கியிருந்த மறைபொருளைப் புதிர் வாயிலாக உய்த்துணர்ந்து கொண்டான். புதிரை விடுவியாதவர்களை இரக்கமின்றிக் கொல்லும் அன்டியோக்கஸ் விடுவிப்பவர்கள் மீது பின்னும் பன்மடங்கு வெறுப்பையும் சீற்றத்தையும் காட்டுவான் என்று கண்டு கொண்ட பெரிக்ளிஸ், “அரசே! ஏன் இந்த விளையாட்டு? இப்புதிரின் பொருளை யாரும் அறியார் என்றுதானே இவ்வளவு பகட்டாக அதனை வெளியிடுகிறீர். இதனைப் பிறர் அறிந்தால் அல்லது அறிந்து சொன்னால் உமது புகழுக்கு இழுக்காகுமோ!” என்றான்.

பெரிக்ளிஸ் தன் தீச்செயலை உய்த்துணர்ந்து கொண்டான் என்றும், கொல்லுவதாக அச்சுறுத்தினால் ஒருவேளை வெளியிட்டுவிடுவான் என்றும் கண்டு அன்டியோக்கஸ் இனி அவனைப் பிறரறியாமல் மறைவாக அழித்துவிட வேண்டும் என்று துணிந்தான். ஆயினும் வெளிக்கு அவனை அச்சுறுத்து வதாகக் காட்டி, “உனக்குக் தெரியாதவற்றைத் தெரிந்தவன் போல் நடித்து என்னை ஏய்த்துவிடலாம் என்று பார்க்காதே. நீ இளைஞனாயிருப்பதனால் உனக்கு வேண்டுமானால் இன்னும் இரண்டு வாரம் தவணை தருகிறேன்! அதற்குள் எப்படியாவது மறைபொருளைக் கண்டறிந்து புதிரை விளக்க முடியாவிடில் உன் தோழர் பலர் இதுகாறும் சென்றுவிடமே நீயும் செல்வாய்” என்று கூறி அவனைக் காவலில் வைக்க ஆணை தந்தான்.

அன்டியோக்கஸ் தீ வாழ்க்கையை உய்த்துணர்ந்த பெரிக்ளிஸுக்கு அவன் இப்போது துணிபு அவன் முகத்தோற்றத்திலிருந்து நன்கு விளங்கிற்று. அத்துணிபை அவன் செயற்படுத்துவதற்கு முன்னாக அன்றிரவே பெரிக்ளிஸ் காவல் மீறித் தப்பியோடினான். ஓடித் தன் நாட்டின் பெருமக்களுள் முதல்வனான ¹ஹெலிக்கான்ஸிடம் இச்செய்தி அனைத்தும் கூறி, இனி அன்டியோக்கஸின் வெஞ்சினத்தினின்று தப்பிப் பிழைக்கும் வழி யாது என்று உசாவினான். அமைச்சனின் சூழ்ச்சித்திறமும் அன்பனின் கனிவும் ஒருங்கே கொண்ட ஹெலிக்கானஸ் பெரிக்ளிஸை நோக்கி, “அண்ணலே! நம் சிறு நாடு அன்டியோக்கஸின் படையெடுப்புவரின் தாளாது. அதோடு அன்டியோக்கஸ் போர்களத்துப் போர்முறையை மட்டுமின்றிச் சூழ்ச்சித் துறையிலும் ஒப்பற்ற சூரன் ஆவான். ஆகவே, அவன் சினமொழியுமளவும் தலைமுறைவாய் உருக்கரந்து திரிவதே தம்மையும் தம் நாட்டையும் பாதுகாக்கச் சிறந்த வழியாகும்” என்று கூறினான். பெரிக்ளிஸும் அதுவே சரியெனக்கொண்டு ஆட்சியை அவ் அன்புமிக்க தோழனிடமே விட்டு வைத்து வெளியேறினான்.

2.கேட்டில் உறுதி

முதலில் எந்நாடு செல்வதென அரசன் ஆராயும்போது ஹெலிக்கானஸ் “அரசே! ஓராண்டாய் ²தார்ஸஸ் நாட்டில் பஞ்சமேற்பட்டு நாடும் குடியும் உண்ண உணவின்றி நலிவுறுகின்றன. தாம் போதிய உணவுப் பொருள்களுடன் சென்ற அவர்களுக்கு உதவி செய்தால் பிறர் நலம் பேணித் தம் நலமும் உற்றவராவீர்” என்றான். அவ்வறிவுரையை மேற்கொண்டு பெரிக்ளிஸ் தார்ஸஸ் சென்று அந்நாட்டுத் தலைவனுக்கும் நாட்டு மக்களுக்கும் காலமறிந்துதவும் கற்பகமாய் விளங்கினான். தார்ஸஸின் அரசயில் தலைவனான ³கிளியோனும் அவன் மனைவி ⁴தயோனிஸாவும் அவன் இன்னானென அறிந்தும் அதனை வெளியிடாது அவன் பால் நன்றியும் அன்பும் பூண்டு அவளைப் போற்றி வந்தனர். அவன் இன்னானெ அறிந்தும் அதனை வெளியிடாது. அவன் பால் நன்றியும் அன்பும் பூண்டு அவனைப் போற்றி வந்தனர்.

இப்பால் அன்டியோக்கஸ் பெரிக்ளிஸை எங்ஙனம் விரைவில், ஆனால் பிறர் ஐயங்கொள்ளாத வழியில் கொல்லலாம் என்று ஆழ்ந்த ஆராய்ச்சியிலீடுப் பட்டிருக்கையில், திடீரெனக் காவலன் வந்து, “ஐய! தம்மிடம் வந்த இளைஞர், இரவே எங்கே போய்விட்டார் என்று தோற்றுகிறது. காலையில் எங்கும் காணவில்லை!” என்றான்.

அன்டியோக்கஸ் சற்றுத் திகைத்து, “ஆ! அப்படியா செய்தி!” என்று வெளியிட்டுக் கூறிப், பின் தான் அவனைப் பகைவனாக நடத்தக் கூறவில்லை என்பதை ஓர்ந்து தன்னையடக்கிக் கொண்டு காவலனை அனுப்பிவிட்டுத் ¹தைலார்டு என்ற தன் கையாளை வருவித்து அவனிடம், “நீ இதுவரை எனக்குச் செய்தது பெரியதன்று; நான் உனக்கு இதுவரை செய்திருப்பதும் பெரிதன்று; தப்பிப் பிழைத்தோடி விட்டானாம் பெரிக்ளிஸ் என்ற அச்சிறு பைதல். அவனை எப்படியும் கண்டுவிடித்துக் கொலை செய்து வருக! வந்து என் நட்பிற்கும் நன்றிக்கும் உரிய விலைபெறுக!” என்றான். தைலார்டு அவ்வாணை பெற்று டையரை அடைந்து அங்கே பெரிக்ளிஸ் காணாமற் போய்விட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஏமாற்றமடைந்தான். பின், ’எப்படியும் இந்த உலகில்தானே இருப்பான் அவன்! தேடிக் கண்டு பிடிக்காவிட்டால் நாமும் மறைந்ததொழிய வேண்டியதுதானே! ஆகவே, நாமும் நாடுசூழ் வருவோம்" எனப் புறப்பட்டான்.

தைலார்டு வந்த செய்தியையும் பிற விவரங்களையும் மெய்யன்பனாகிய ஹெலிக்கானஸ் அவ்வப்போது தார்ஸஸுக்கு ஆளனுப்பிப் பெரிக்ளிஸுக்குத் தெரிவித்து வந்தான். ஆனால், சிறிது காலத்திற்குள் பெரிக்ளிஸின் புகழ் எங்கும் பரவி அவன் தார்ஸஸிலிருக்கும் விவரம் எல்லோருக்கும் தெரியலாயிற்று. தைலார்டுக்கோ அன்டியோக்கஸின் பிற ஒற்றர்களுக்கோ இது தெரிந்துவிடுமுன் பெரிக்ளிஸ் மீண்டும் மறைந்து திரியவேண்டுமென்று அவன் பெரிக்ளிஸுக்கு விரைவில் ஓலை போக்கினான். அது பெற்ற பெரிக்ளிஸ் தன் புதிய நேசனான கிளியோனிடமும் அவன் மனைவியிடமும் பிரியா விடைபெற்று மீண்டும் உருமாறித் திரியலானான்.

3.புயலும் அமைதியும்

ஊழால் அலைக்கழிக்கப்படும் உயிரை அறிஞர் கடலில் அலைக்கழியும் துரும்புக்கு ஒப்பிடுவர். ஆனால் உவமை முகத்தாலன்றி உண்மையிலேயே பெரிக்ளிஸ் வாழ்வில் கடலலைகளின் போக்கே ஊழின் போக்காயிருந்தது. தார்ஸஸிலிருந்து பலநாள் பயணத்திற்கப்பால் நாவாய் செல்லுகையில் கடலேழும் புயலேழும் ஒரே புயலாக ஓர் உருப்பெற்றெழுந்ததென்னப் பெரும் புயலொன்று எழுந்து, நாவாயைப் பல வகையிலும் வாரியடித்து வீசி இறுதியில் அதனை ஒரு திடலில் மோதி நொறுக்கிற்று. பெரும்பாலோர் நாவாயின் பகுதிகளிடையே கிடந்து தாமும் நொறுக்குண்டு நைந்து மாண்டனர். பெரிக்ளிஸும் ஒரு சிலரும் சிறிதுநேரம் மிதக்கும் துண்டுகளைப் பற்றி மிதந்தனர். அவர்களுள் எத்துணைப் பேர் இவ்வுலகு கடந்து மேலுலகுக்கு நீந்திச் சென்றனர் என்று கூறமுடியாது. பெரிக்ளிஸும் அவர்கள் வழியே சென்றிருக்கக்கூடும். அவன் நல்லூழின் பயனாக மீன்படவர் சிலர் அவ்வழியே வந்து அவனைத் தம்முடன் தம் சிறு பாகத்திற்கு இட்டுச் சென்று, அவனுக்கு வேண்டிய உணவும் உடையும் உதவி ஆதரவு காட்டினர்.

முரட்டு வாழ்வு வாழ்ந்தவராயினும் அம் மீன்படவர் வாழ்க்கையின் அருமையறிந்தவர்கள். அவர்களுடன் அளவளாவிப் பெரிக்ளிஸ் அது ¹கிரீஸ் நாட்டின் ஒரு பகுதியாகிய ²பெண்டாப் பொலிஸ் என்றும், அதன் அரசன் நல்லோன் எனப் பெயர் வாய்ந்த ³ஸைமனிடிஸ் என்றும் அறிந்தான். மேலும் அவ்வரசன் புதல்வி மண்மேல் நடக்கும் திருவன்ன ⁴தயீசா என்பவளை விரும்பி அரசிளஞ் செல்வர் பலரும் அவ்வரசன் மாளிகையில் தங்கி அவள் கையுடன் தம் கையைப் பிணைக்கும் நாளை எதிர் பார்த்திருந்தனர் என்பதையும், தற்செயலாக அடுத்தநாளே அவர்களிடையே போட்டிக் கேளிக்கை நடக்கும் என்பதையும் அறிந்து, பெரிக்ளிஸ் தன்னடம் அங்கே செல்வதற்கான உடையில்லையே என்று கவன்றான். “கொடுக்கந் தெய்வம் கூரையைப் பொத்துக் கொண்டு கொடுக்கும்” என்பதற்கிணங்க அதே நாள் மீன்படவர் வலையில் பெரிக்ளிஸ் கடலில் இழந்த கவசம் சிக்குண்டு அவன் கைக்கு வந்தது. தன் மூதாதையர் கவசம் வந்துதவியதே தன் முன்னோர் அருளும் திருவும் எய்தியதற் கறிகுறியாம் எனக்கொண்டு, பெரிக்ளிஸ் மறுநாள் ஸைமனிடிஸ் அவையில் இளவரசர் விளையாட்டில் சென்று கலந்தான்.

பெரிக்ளிஸ் அரசிளஞ் செல்வரிடையே முந்திக் கொள்ளாமலும், அவர்களிடையே காணப்பட்ட எழுச்சியில் பங்கு கொள்ளாமலும் தனித்து நிற்பதைக் கண்ட அருளாளனாகிய அரசன் ஸைமனிடிஸ், மனங் கனிவுற்று அவனை அழைத்துத் தன்னுடன இருக்கும்படி செய்து அவளவளாவினான். அவனுடைய பணிவே அவன் உயர்வுக்கு அறிகுறி என்றும், அவன் துயர் அவனுக்கு நேர்ந்த துன்பங்களின் பயனாகவே இருக்கவேண்டும் என்றும் அரசன் உய்த்துணர்ந்து, தன் புதல்வி தயீஸா வாயிலாக அவனை ஊக்கி மகிழ்விக்க முயன்றான். மேலும் அவன் பெரிக்ளிஸுக்கு எழுச்சியுண்டாக்கும் வண்ணம் அரசிளஞ் செல்வரை ஆடல் பாடல் கேளிக்கைகளில் ஈடுபடுத்தி, அதில் பெரிக்ளிஸை வற்புறுத்திப் பங்கு கொள்ளச் செய்தான். இதன் பயனாகப் பெரிக்ளிஸின் உள்ளார்ந்த இசைத்திறன், ஆடல் திறன் ஆகியவை வெளிப்படவே, ‘அவன் பிற அரசிளஞ் செல்வருக்குள் வாத்துக்கள் கூட்டத்திடையே நீந்தி நின்ற அன்னப்புள் போன்றவன்’ என்பதைத் தயீஸாவும் அரசனும் கண்டுகொண்டனர். இதுகாறும் தந்தையின் விருப்பத்திற் கிணங்கவே அரசிளஞ் செல்வருடன் ஊடாடிய தயீஸா, இப்போது தன்னையும் மீறித் தன் மனம் அவன்பால் செல்வதைக் கண்டு, இதுவரை பிறரிடம் தடங்கலின்றி நடந்து கொண்டதுபோல் நடக்க முடியாது நாணுற்றாள். அக்குறிப் பறிந்த அரசன் மனமகிழ்வுடன் வலியுறுத்திப் பெரிக்ளிஸை மகிழ்விப்பதற்காக அனுப்புவதுபோல் அவனிடம் அவளை அடிக்கடி அனுப்பினான். சின்னாட்களில் அவர்கள் காதல் முற்றவே, தயீஸா தன் தந்தையிடம் அவனையே தான் மணக்க விரும்புவதாகத் தெரிவித்தாள். அரசன் முன்வந்து அவர்களுக்கு மனவினையாற்றி மகிழ்ந்தான். விரைவில் தயீஸா கருவுற்று மணமலரின் பயனாகிய இன்கனியெய்தும் நிலைபெற்றாள்.

4.மீட்டும் புயல்

‘அரசன் அன்று கேட்கும்; தெய்வம் நின்று கேட்கும்’ என்ற முதுமொழி பொய்யாதபடி, இதற்குள் அன்டியோக்கஸும் அவன் அடாநடைப் புதல்வியும் தேரூர்ந்து செல்கையில், வான் சீற்றம் மின்னிட்டு இடியேறாய் அவர்கள் மீது வீழ்ந்து அவர்களையும் அவர்கள் தேரையும் தேர்ப்புரவிகளையும் எரித்துச் சாம்பராக்கிற்று, இச்செய்தி கேட்டு ஹெலிக்கானஸ், இனி, பெரிக்ளிஸை அழைக்கவேண்டும் என்று எண்ணினான். ஆனால், பெரிக்ளிஸின் இருப்பிடம் தெரியவில்லையே என்று அவன் கலங்கினான். நாட்டு மக்களும் பெருமக்களும் 1எஸ்கானல் என்ற முதல்வன் தலைமையில் அவனை இறைஞ்சி பெரிக்ளிஸ் காணப் பெறாததால் தாமே அரசுரிமை ஏற்றுத் தலைவனில்லா இத்தலை நிலத்தை நடாத்துக என்றனர். ஹெலிக்கானஸ் இதனை ஒத்துக்கொள்ள விரும்பாமல், “இன்னும் ஓர் ஆண்டு அனைவரும் மனமொத்துத் தேடி நம் தலைவனாகிய பெரிக்ளிஸைக் காணமுடியாவிடில் நீங்கள் கூறியபடியே செய்ய இணங்குவேன்” என்றான். அதன்படி ஹெலிக்கானஸ் காற்றினும் கடுகிச் செல்லும் புரவிகள்மீதும் மரக்கலங்களிலும் ஒற்றரைப் போக்கி எல்லா நாடுகளிலும் சென்று அன்டியோக்கஸ் இறந்ததையும், நாட்டு மக்கள் துணிவையும், தன் விருப்பத்தையும் யாருமறியப் பறை சாற்றுவிக்கும்படி செய்தான்.

சின்னாளில் அத்தூதர்கள் கொண்டு சென்ற செய்தி பென்டாப் பொலிஸுக்கும் எட்ட, பெரிக்ளிஸ் தான் இன்னான் என மனைவியிடமும் மாமனிடமும் வெளிப்படக் கூறித் தன் நாடு செல்லும்படி விடை தரக் கோரினான். தன் மருமகன் பெரிக்ளிஸே என்றறிந்த மகிழ்ச்சியுடன் அவனைவிட்டுப் பிரியவேண்டுமே என்ற கவலை போராடும் நிலையில் இன்பக் கண்ணீரும் துன்பக் கண்ணீரும் தொடர்ந்தெழ, அரசன் மகளையும் மருமகனையும் தோழர் தோழியர் புடைசூழப் பணிமக்கள் பொன்னும் மணியும் புனைகலன்களும் ஏந்தி உடன்செல்ல, மரக்கலத்தேற்றி அனுப்பினான்.

தயீஸாவின் நாட்டுக்கு முதலில் பெரிக்ளிஸைக் கொண்டு சென்று தள்ளியது ஒரு புயலன்றோ? அவன் மீண்டும் வருகையில் தயீஸாவை உடன் கொண்டு தன் நாடு செல்வதைத் தடுத்து, அவன் இன்பக் கனவுகளை நனவெய்தா வண்ணம் தடுத்ததும் ஒரு புயல்தான். அப்புயலினிடையே மரக்கலத்தில் தயீஸா கருமுற்றிப் பிள்ளையைப் பெறும் நிலையில் வருந்தினாள். வெளிப்புயலில் கருத்தைச் செலுத்தி நின்ற பெரிக்ளிஸினிடம் பணிமக்கள் சிலர் கவலையுடன் வந்து நின்று, “அரசே! எங்களை மன்னிக்க வேண்டும். தங்கட்கு ஒரு நற்செய்தியும் ஒரு தீச்செய்தியும் ஒருங்கே கொணர்ந்தோம். இதோ இத்தட்டில் கிடக்கும் ஒன்றுமறியாச் சிறுகுழவி அரசிளஞ் செல்வி இப்போதே ஈன்ற தங்கள் செல்வம். அதனைக் கண்டு தமக்கு நேர்ந்துள்ள தீமையில் தேறுதல் அடைவீராக” என்று கூறிப் பொற்றட்டில் குழைவு மிக்க சொக்கப் பொன்னில் புனைந்த புதுமைபோன்ற ஒரு குழந்தையைத் தந்தனர். அரசன் அதனைப் பெற்று வானளாவ மகிழ்ச்சியடையுமுன், “இச்செழுஞ் செல்வமீன்ற தாய் உயிர் துறந்தாள்” என்றனர் அவர்கள். இனிய இசை கேட்ட அசுணமா இடியேறு கேட்டதெனத் திகைத்துச் செயலிழந்த அரசனைப் பணிமக்களும் தோழர் தோழியரும் குழவியை நினைவூட்டித் தேற்றினர்.

அதற்குள் நாவாய்க்கிறைவன் அரசனை அணுகி, “அரசே! வெளிப் புயலை நோக்கத் தாம் தம் உட்புயலைக்கூட அடக்க வேண்டும். ஐயனே! பிணம் மரக்கலத்திலிருக்குமளவும் கடலடங்காதென்பர்; இதோ பாருங்கள்! வானத்தை மறைத்து மலையைப் பகைத்தெழும் திரையரக்கர்களை! தாம் அறியாததல்லவே! தம் மனத்துயரை அடக்கி அரசிளஞ் செல்வியின் உடலத்தை அப்புறப்படுத்தி உதவுவீர்!” என்றாள்.

அரசன் உள்ளம் அனலிற்பட்ட வெண்ணெயாய் இளகியதாயினும், தன் குடிமக்கள் வேண்டுகோள் கேட்டு, வேலால் துளைக்கப்பட்ட சிங்கம் தன் பெடைக்கு ஆறுதலளிக்க எழுந்ததுபோல் எழுந்து ஒரு பெட்டியில் அவ்வுடலை வைத்து அவள் மண ஆடை, மண அணி அத்தனையையும் உடன் வைத்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். பின் ‘இப்பெட்டியைத் தற்செயலாக யாராவது காணில், இறுதியினை முற்றுவித்து அவள் உயிர்க்கு உறுதி தருவதுடன் உடன் வைத்த பொருள்களையும் கைக் கொள்க’ என்று ஓர் ஓலை எழுதிப் பெட்டியில் உடன்வைத்து அதனைக் கண்ணீருடனும் கம்பலையுடனும் கடலில் மிதக்கவிட்டான். அதன்பின் குழந்தையின் நலனை எண்ணிப்பார்த்து டையர் செல்லும்வரை அது தாளமாட்டாது என்று கண்டு, அருகிலிருப்பதாகத் தெரியவந்த தார்ஸஸுக்கே மரக்கலத்தை உய்த்து, கிளியோனிடமும் அவன் மனைவியிடமும் குழந்தையைப் பாதுகாக்கும்படி விட்டுச் சென்றான். கடலகத்துப் பிறந்த அக்குழந்தைக்குக் கடல் திரு என்ற பொருளில் மரீனா என்றே அரசன் பெயரிட்டான்.

உடலுடன் உயிராய் விட்ட மனைவியை இழந்து, உயிர்க்கு உறுதியாம் குழந்தையையும் பார்க்கக் கொடுத்து வைக்காமல், தலைவனாகிய தன்னை இழந்து தவித்த குடிகட்கு மட்டும், தானொரு தாய்போல் நாட்டையாண்டு நாட்கழித்தான் பெரிக்ளிஸ்.

5.மருத்துவன் மாண்பு

கடலில் விடப்பட்ட பெட்டி இரவெல்லாம் மிதந்து சென்று காலையில் ¹எபீஸஸ் என்னுமிடத்தில் ஒதுங்கியது. அவ்விடத்தில் மருத்துவத்துறை ஆராய்ச்சியிலேயே தன் வாழ் நாள் முற்றும் கழித்த ²ஸெரிமன் என்ற முதியோன் ஒருவன் இருந்தான். அவன் ஆட்கள் தற்செயலாகக் கடற்கரைக்குச் சென்றபோது அப்பெட்டியைக் கண்டு அவனிடம் கொண்டு வந்தனர். அவன் அதைத் திறந்து பார்த்து வியப்படைந்தான். அருகிலிருந்த பொருள்களும் கடிதமும் கண்டு அவன் என்ன நடந்திருக்க வேண்டும் என்பதை உய்த்துணர்ந்து கொண்டான். ஆனால், தயீஸாவின் முகத்தைப் பார்க்கப் பார்க்க அவள் உண்மையில் இறந்து விடவில்லை; பிள்ளைப் பேற்றின்போது ஏற்பட்ட பெருந்துன்பத்தின் பயனாக அவள் முற்றிலும் உணர்விழிந்து மூச்சுப் பேச்சற்ற நிலையில் இறந்தவளாகக் கைவிடப் பட்டவளேயாவாள் என்பதனை உணர்ந்தான். அவன் அரிய மருத்துவத் திறனால் அவள் முற்றிலும் உணர்வு பெற்றதோடன்றி, அவனும் அவன் மனையாட்டியும் காட்டிய அன்பினால் கணவன் பிரிவையும் ஓரளவு ஆற்றியிருந்து வந்தாள். திரும்பவும் கணவனைச் சென்றடைவது மிக அருமையன்று அவள் எண்ணியபடியால் ‘தயானா’ என்னும் அவ்வடத்துக் கோயில் கொண்ட தெய்வத்தின்எண்ணிய படியால் ‘தயானா’ என்னும் அவ்வடத்துக் கோயில் கொண்ட தெய்வத்தின் பணிப் பெண்களுடன் சேர்ந்து கன்னிமை நோன்பு நோற்பதென்று உறுதி கொண்டாள். இப்பணியில் ஸெரிமனின் புதல்வியும் அவளுடனிருந்து தோழியாய் உதவினாள்.

6.அழுக்காறெனவொரு பாவி!

இறந்துவிட்டவளாக எண்ணப்பட்ட தாயின் நிலை இதுவாக, அவள் மகவாகிய மரீனா அன்னை தந்தையர் கண் பார்வையில்லாத ஒரு குறையேயன்றி வேறு குறையின்றித், தார்ஸஸில் கிளியோன் அரண்மனையில் வாழ்ந்து வந்தாள். கிளியோனுக்கும் கிட்டத்தட்ட அவள் ஆண்டளவேயுடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் ¹பைலாட்டென் என்பது. கிளயோன் முதற்கொண்டு பணியாள் வரையிலும், உள்ளூரார் முதற்கொண்டு மண நாடிவரும் புத்துறவினர் வரையிலும், மரீனா புகழே பாடினரல்லாது பைலாட்டெனைப் பற்றி மறந்தும் பேசாதிருந்தது கண்ட தயோனிஸாவின் மனத்தில் படிப்படியாக அழுக்காறு எனும் புழுச் சென்றரித்தது. அதுமுதல் அவள் மரீனாவின் தந்தை தனக்கும் தன் நாட்டிற்கும் செய்த நன்றியையும் மறந்து அவளை மனமார வெறுத்தாள். ஆகவே, அவள் தீமை மிக்க வஞ்சகனாகிய ²அந்தோனைன் என்பவனை அழைத்து மரீனாவைக் கடற்கரைக்கு இட்டுச் சென்று கொல்லுமாறு கூறினாள். ஆயின் அவள் அங்ஙனம் கொல்லத் துணியும் தறுவாயில், பெண்களை அடிமைகளாக்கும் எண்ணத் துடன் கொள்ளையடித்துச் செல்லும் கடற்கொள்ளைக்காரர் சிலர் வந்து மரீனாவுடனிருந்த அந்தோனைனை அடித்துருட்டி விட்டு அவளைக் கொண்டேகினர்.

சற்றுநேரஞ் சென்று மீண்ட எழுந்த அந்தோனைன் எப்படியும் மரீனா இனி மீளாள். ஆதலால் நான் அவளைக் கொன்றுவிட்டதாகவே கூறுகிறேன் என்று துணிந்தான். தயோனிஸாவிடம் திடீரென்று சுறாமீன் அவளைக் கொண்டே கிற்று எனக் கதையளந்தான். நாட்டு மக்கள் அனைவரும் அதுகேட்டு ஆற்றொணாத் துயருழந்தனர். கிளியோனிடம் மட்டும் தயோனிஸா உண்மையைக் கூற, அவன் சீற்றமும் வெறுப்பும் கொண்டான். பின் இனிச் செய்வது யாதொன்று மில்லையென்றுணர்ந்து அவனும் அக்கொடியாள் வழி நின்றான். நாட்டு மக்களையும் பெரிக்ளிஸையும் கண்துடைக்க வேண்டி மரீனாவின் நினைவூட்டாகக் கடற்கரையில் பூஞ்சோலையும் அழகிய கல்லறையும் அமைக்கப்பட்டன.

சிலநாட் சென்று மகளையேனும் கண்டு செல்லலாம் என்று எண்ணித் தார்ஸஸ் வந்த பெரிக்ளிஸ் இறைவன் இச்சிறு ஆறுதலும் இல்லாமல் தன் வாழ்க்கையை வெறுமையாக்கியது கேட்டுப் புழுவெனத் துடித்தான். பிறர் ஆற்றத், துடிப்பு நீங்கினானெனினும் அவன் அதுமுதல் நகையுமிழ்ந்தான்; நாவுமிழந்தான்; அதோடு உணர்வு முற்றும் இழந்தவன் போலானான். மரீனா பிரிவுக்காக உடுத்த கரிய ஆடையே ஆடையாய், அவள் கல்லறையருகில் கொண்ட முகத்தோற்றமே முகத்தோற்றமாய் அவன் துயரே உருவாய்ச் சமைந்து விட்டான். உற்ற நண்பனாகிய ஹெலிக்கானஸ். எப்படியேனும் அவனுக்கு உணர்வு வருவிக்கவேண்டும் என்ற எண்ண முடையவனாய், அரசாட்சியை எஸ்கானஸ் என்ற தனக்கு அடுத்த பெருமகனிடம் ஒப்புவித்துவிட்டு, ஒரு நாவாயில் அரசனுடன் இவர்ந்து பல நாடுகளுக்குஞ் சென்று, பல காட்சிகளாலும் பலர் நல்லுரைகளாலும் பலவகைக் கலைகளாலும் அவன் மனத்தை வேறு வழியில் திருப்ப முயன்றான். ஆனால், அரசன் நாவாயில் தன் அறையினின்றும், எக்காரணம் கொண்டும் வெளி வரவோ, வாயிதழ்களசைத்து எதுவும் சொல்லவோ செய்யாது ஊணுறக்கமின்றி இருந்து வந்தான்.

7.நல்லார் இணக்கம்

அரசனை இந்நிலையில் விடுத்துவிட்டுப், புலிக்குழாத்துட் பட்ட மானிளங் கன்றுபோல் கடற்கொள்ளைக்காரரிடம் அகப்பட்ட மரீனாவின் நிலை என்ன என்று காண்போம்.

இக்கொள்ளைக்காரர் ¹மைட்டிலீன் நகரில் பெண்கள் விடுதி ஒன்று வைத்துப் பிழைத்த ²பாண்டர் என்பவனுடைய கையாட்கள். அவனில்லத்தில் மரீனா பல வகையிலும் துன்புறுத்தப்பட்டதுடன் தீ வாழ்க்கையை மேற்கொள்ளும் படியும் வற்புறுத்தப்பட்டாள். ஆனால், தீயினை அண்டிய எதுவுந் தாம் தூய்மையடைவதன்றி அதனைத் தூய்மை கெடச் செய்யுமோ? மரீனாவின் அன்புகலந்த அறவுரைகளால் பலரும் திருந்தினர். பாண்டர்கூட இறுதியில் அவள் அறவுரைக் கிணங்கினானெனினும், தன் வறுமையைத் தன் இழிதகைமைக்குக் காரணமாகக் காட்டினான். மரீனா, “இசை, நடனம் முதலிய வற்றை நகர மக்களுக்குப் பயிற்றுவித்தும், கலைப் பண்பு மிக்க சிறு தொழில்கள் செய்தும் உன் மிடிதீர்க்கின்றேன்” என்று பாண்டரிடம் கூறி, அங்ஙனம் செய்து அவள் வாழ்க்கையில் நல் ஒளியைத் தூண்டினாள். அவளுடைய இத்தகைய அருஞ்செயல்களைக் கேள்வியுற்று அந்நகர்த் தலைவனாகிய ³லிஸிமாக்கஸ் அவள் பால் மதிப்பும் பரிவும் கொண்டான்.

8.இழந்தவன் பெற்ற திரு

மரீனா இங்ஙனம் நாட்கழிக்கையில், நாவாயில் பெரிக்ளிஸுடனாகப் பல நாடுகளிலும் சுற்றித் திரிந்த ஹெலிக்கானஸ், ஒருநாள் மைட்டிலீன் பக்கம் வந்து கடற்றுறை முகத்தில் தங்கினான். அன்று கடலகத்திறைவனாகிய வருணன் விழாநாள் ஆதலால், அன்று வந்த நாவாய் வருணன் திருவருட் பேற்றின் வெளியுருவெனக் கொண்டு, லிஸிமாக்கஸ், விழாவணி தாங்கிய தன் திரு ஓடத்திலேறி நாவாயை வரவேற்று. அதன் தலைவர் தம் விருந்தினராக வேண்டுமென்று வேண்டினான். ஹெலிக்கானஸ் தம் தலைவர் துன்பத்தால் பித்தரான நிலையிலிருப்பதால் விழாவுக்கு வரமாட்டார் என்றான். லிஸிமாக்ஸ் தனக்கு இணக்கம் தந்தால் தான் எப்படியும் அவனை மகிழ்வித்து மனமாற்றி விடுவதாகக் கூறவே ஹெலிக்கானஸ் பெரிக்ளிஸை அவனுக்குக் காட்டினான். லிஸிமாக்கஸ் தான் அறிந்த எல்லாவகை முயற்சியும் செய்து பார்த்தும், சிறந்த பாடகரையும் இசையறிஞரையும் கலைஞரையும் அனுப்பிப் பார்த்தும் அவனை மகிழ்விக்க முடியாமற் போகவே, இறுதியில் மரீனாவை அழைத்துப் பெரிக்ளிஸின் நிலையைக் கூறி அவனை மகிழ்விக்க முடியுமா என்று கேட்டான். அவள் ‘தனியே அவளைக் கண்டு முயல்வேன்’ என்றாள்.

மரீனா முதலில் எல்லாரையும் போலப் பாடியும் நயந்தும் பார்த்தாள். அவன் துயரத்தையே தவமாகக் கொண்டிருந்தது கண்டு, அவள் அவனிடம் தன் துயர்களைக் கூறி, அவனிடம் ஒத்துணர்வு ஏற்படுத்த எண்ணி, “அரசே! தம் துயரம் மிகப் பெரிது என்பதற்கையமில்லை. எனினும் என் துயரில் அது பத்திலொரு பங்குகூட இருக்காதென்று துணிந்து கூறுவேன். என் துயர் கேட்டபின் பெண்ணான நான் இத்தனை துயர் தாங்கின், ஆடவரான தாம் துயரில் மூழ்கலாமா என்று பார்க்க வேண்டுகிறேன்” என்றாள்.

அவள் குரல் கேட்டதே சற்று அரசன் உள்ளத்தில் ஓர் உயிர்ப்பு எழுந்தது. தம் துயர்க்கு மேம்பட்ட துயர் என்ற சொல் அவனுக்குச் சற்று அதிர்ச்சி தந்தது. திறவாத வாய் திறந்து, ஆனால், அவள் முகம் பார்க்காமல், “அப்படி உன் துயர் என்ன?” என்றான். அவள் தன் தாய் தன்னைப் பெற்றவுடன் இறந்தது; இறந்த தாய் கடலுக்கிரையானது; கிளியோனிடம் வளர்ந்தது; கிளியோன் மனைவியின் சூழ்ச்சி; அதற்குத் தப்பிப் பிழைத்தது ஆகிய அனைத்தும் அடிமுதல் முடிவரை தழுதழுத்த குரலில் கூறினாள். அதனைக் கேட்ட அரசன் மனமெல்லாம் வெப்பமுற்று, “இஃது என்ன? என் மகள் இறந்து போனாளே? இவள் அதே கதை கூறுகிறாளோ! இஃது என் கதையறிந்து இவள் கட்டிய கதையோ!” என்றெல்லாம் எண்ணிப் பின்னும் முகத்தை உயர்த்த எண்ணாமலே, “உன் பெயர் என்ன? தாய் தந்தையர் யார்? வளர்த்து வஞ்சித்த பாவிகள் யார்?” என்றான். மரீனா, “நான் கடலில் பிறந்ததனால் என்னை மரீனா என்று தந்தையழைத்தார். என் தாய் சைமனிடிஸ் அரசன் மகள் தயீஸா. என்னை வளர்த்தவர் கிளியோனும் கொலைகாரியான அவன் மனைவி தயொனிஸாவும், என் தந்தையோ போற்ற அரசன் பெரிக்ளிஸ்” என்றாள்.

இச்சொற்கள் செவியேறா முன்னம் அரசன் தலையுயர்த்தி அவள் முகநோக்கித் தன் மனைவியின் வடிவம் பதிந்திருத்தல் நோக்கி, “ஆ! பேறற்ற அப்பெரிக்ளிஸ் நானே! என் வினை இருந்தவாறென்னே! நீயே என் புதல்வி! நீ இறந்தாய் என்று வாழ மறுத்த என் உயிருக்கு நீ வாழ்வை ஈந்தாய்! நீ பிழைத்தவாறு கூறுக!” என்று அவளை எடுத்தணைத்து மகிழ்ந்தான். ஹெலிக்கானஸ் அடைந்த மகிழ்ச்சிக்கெல்லையில்லை. லிஸிமாக்கஸோ அவர்களுக்குப் பல நாள் விருந்து செய்தான். அதற்கிடையில் மரீனாவின் உயர்குணங்களிடை அவன் கொண்ட மதிப்பு, காதலாக மாற அவன் பெரிக்ளிஸினிடம் அவளைத் தனக்கு மணம் செய்து தருமாறு வேண்டினான். பெரிக்ளிஸ் மரீனா மனமறிந்து அதற்கு இணங்கினான்.

ஒருநாள் பெரிக்ளிஸ் கனவில் தயானா என்ற தெய்வம் தோன்றி, “யாம் உறையும் எபீஸஸிலுள்ள கோயில் வந்து உன் வாழ்க்கை வரலாறு முற்றும் கூறி, உன் மகளையும் மருமகனையும் வாழ்த்துமாறு என்னிடம் கோருக. நாளையே புறப்படுக!” என்று ஆணை தந்தது. அதனைப் பெரிக்ளிஸ் யாவரிடமும் கூறி லிஸிமாக்கஸ், மரீனா ஆகிய இருவருடனும் ஹெலிக்கானஸின் நாவாயிலேயே சென்று எபீஸஸை அடைந்தான். அங்கே கோயிலுக்கு வழிவழிப் பணிபூண்ட ஸெரிமனை அண்டி அவன் தான் கனவிற் கண்ட காட்சியைக் கூறிக் கோயிலுக்கு அவனுடன் சென்றான். கோயிலில் தயானா முன் நின்று அரசன் தன் பழந்துயர்களையெல்லாம் மீண்டும் கிளறி ஆறாகப் பெருகும் கண்ணீருடன் தன் வரலாறு கூறினான். இறுதியில் “என்னை ஆண்டருளும் இறைவீ! இதோ கடலகத்து மாண்ட என் மனைவி தயீஸா தந்த செல்வம் மரீனா; இதோ அச்செல்வத்தை இதுகாறும் பேணி இனியும் பேணவிருக்கும் செப்பு எனக் கூறத்தகும் செல்வன் லிஸிமாக்கஸ்” என்றான்.

பெரிக்ளிஸ் கனவிலும் தயீஸா அதே கோயிலில் பணிமகளாயமர்ந்- திருந்தாள் என்பதறியான்; ஸெரிமனும் வந்து பேசுபவன் இன்னான் என்றறியான். ஆகவே, தயானா அடியில் மலர் சொரிந்து நின்ற தயீஸா, தன்னையும் தன் இறை பணியையும்கூட, மறந்து ஓடி வந்து, மரீனாவையும் பெரிக்ளிஸையும் மாறி மாறி அணைத்து லிஸிமாக்கஸை வாழ்த்துதல் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். முதன் முதல் நடந்தவை யாவும் உய்த்துணர்ந்த ஸெரிமன், படிப்படியாக ஒன்றுந் தோன்றாது விழித்த பெரிக்ளிஸுக்குத் தயீஸா கடலில் இறந்ததாக யாவரும் நினைத்தபடி இறக்கவில்லையென்றும், அவளுக்குத் தான் உணர்வு வருவித்துப் பேணி வளர்க்க அவள் கோயிலில் பணி செய்துவந்தாள் என்றும் கூறி யாவும் விளக்கினான்.

இரு புயல்களால் வாழ்க்கை முற்றும் புயலாகக் கொண்டு துன்புற்ற பெரிக்ளிஸ் மனiவியுடன் மகளும் மருமகனும் சேர நாடு சென்று அவர்களைத் தன் அரசிருக்கையில் அமருவித்தான். பின் அவன் ஹெலிக்கானஸுடன் அனைவருக்கும் இன்னருள் பாலித்த தயானாவினைப் பரவிச் சமயத்துறைப் பணியாற்றினான். தயீஸா முன்போல் அதனில் அவர்களுடன் கலந்து பங்கு கொண்டாள்.

எட்டாம் ஹென்ரி அரசன்

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  எட்டாம் ஹென்ரி அரசன்

2.  கார்டினல் உல்ஸி

3.  கார்டினல் கம்பீஜியோ

4.  அரண்மனைத் தலைவன்

5.  பக்கிங்ஹாம்: பிற பெருமக்கள்

6.  ஆபெர்காபெர்ளி: "

7.  ஸரே:

8.  லிங்கன்தலைமகன்

9.  கான்டர்பரி முதல்வன்

10. க்ராம்வெல்: உல்ஸி வேலையாள், உல்ஸிக்குப்பின் அவன் நிலைக்கு உயர்த்தப்பட்டவன்.

11. க்ரேன்மர்: புலவன்; கான்டர்பரி முதல்வனானவன்.

** பெண்டிர்:**
1.  காதரீன் அரசி

2.  ஆன்புல்லென்: பின்னாளின் அரசியான எலிசபெத்தின் தாய், ஹென்ரி அரசனின் இரண்டாம் துணைவி.

3.  எலிசபெத் (குழந்தை): பின் நாளில் அரசி.

** கதைச் சுருக்கம்**
எட்டாம் ஹென்ரிக்கு அக்காலச் சமய ஒழுங்குக்குப் புறம்பாக அவன் இறந்துபோன அண்ணன் மனைவியாகிய காதரீன் மணம் செய்து வைக்கப் பட்டாள். அவன் அமைச்சன் உல்ஸி தன் சூழ்ச்சியால் அவளை நீக்கி ஃபிரெஞ்சு அரசன் தங்கையை மணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். அதற்கிடையில் அரசன் ஆன்புல்லென் என்ற அழகியைக் கண்டு காதல் கொண்டான். உல்ஸி சமயத்துறையில் ஆணையாள னாயுமிருந்ததனால் அவன் உதவியால் அரசன் திருப்பெருந் தந்தையிடமிருந்து காதரீன் மணவிலக்குக்கு ஆணை பெற முயன்று அது தோல்வியடையவே அவன் வெகுண்டு க்ரேன்மர் என்ற புலவனைப் பிறநாட்டுப் புலவர் கருத்தறிந்து வரச்செய்து அதன் உதவியால் காதரீனை நீக்கினான். பின் உல்ஸியின் பேரவாவும் சூழ்ச்சியும் வெளிப்பட்டன. உல்ஸி இதற்கு முன் பக்கிங்ஹாம் கோமகனைக் கொன்ற பகைமையால் பெருமக்கள் அரசனுடன் சோந்து அவனை வீழ்த்தினர். அவன் பணியாள் மட்டும் அன்புடன் விடைகொண்டு பின் அரசனால் உயர்வு பெற்றான். அரசன் ஆன்புல்லெனை மணந்து அவளுக்கு முடிசூட்டினான். பின் அவளுக்கு பெண்மகவு பிறக்க, அதற்குக் கிரேன்மரால் எலிசபெத் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான். காதரீன் தன் துயர்களைக்கூடக் கவனியாது மறந்து அரசனை வாயாரப் புகழ்ந்து கற்பரசியாக மாண்டாள்.

1.பேரரசர்க்குகந்த பெருந்தகை

ஆங்கில அரசர்களுள் அமைச்சர் பெருமக்கள் கைப் பொம்மையாய் அல்லலுற்றவர் பலர். அவர்கள் சூழ்ச்சிக்கும் எதிர்ப்புக்கும் இரையாகி அழிவுற்றவர் பலர். ஆனால் அவர்களையே பகடையாக வைத்தாடிய அரசனும் உண்டு. அவனே எட்டாம் ஹென்ரி அரசன் ஆவன்.

ஆங்கிலப் பெருமக்கள் சச்சரவினாலும் தொல்லையாலும் நல்ல அரசர் பலரும் நலிவுற்றனர்; ஆண்மை மிக்க அரசர் பலரும் நலிவுற்றனர்; ஆண்மை மிக்க அரசர் பலரும் அழிவுற்றனர். ஆகவே, அப்பெருமக்களை அடக்கியாளும் ¹எட்டாம் ஹென்ரியின் ஆற்றல் கண்டு ஆங்கில மக்கள் அஞ்சியபோதிலும் அவனையும் அவன் ஆட்சியையும் உள்ளூர ஆதரித்தே வந்தனர்.

ஆங்கில அரசனுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் மிகவும் செல்வாக்கு உண்டுபண்ண உறுதுணையாயிருந்தவன் அவனுக்க வலக்கையாய் உதவின ²உல்ஸி என்பவன். அவன் மிகத் தாழ்ந்த குடியில் பிறந்தவனாயினும் அறிவாலும் திறத்தாலும் ஹென்ரியின் ஆதரவாலும் மிக விரைவில் மேம்பட்டு உயர்வடைந்தான். ஹென்ரி அவனை அவன் அறிவுக்காகவும் திறத்திற்காகவும் மதித்து அவனுக்கு நாள் தவறாது உயர்வும் ஊக்கமும் அளித்து வந்தான். உல்ஸியும் அவனிடம் உண்மையாய் நடந்து அவன் ஆட்சிக்கு எல்லா வகையிலும் வல்லமை தேடினான்.

ஹென்ரி அரசனாகுமுன் அவனுக்கு ³ஆர்தர் என்றொரு தமையனிருந்தான். அவன் இளமையிலேயே இறந்துவிட்டான். இதற்கு முன்னமேயே அவன் தந்தையாகிய ஏழாம் ஹென்ரி அவனுக்கு ஸ்பெயின் அரசன் தந்தையாகிய ⁴காதரீனை மணஞ் செய்வித்திருந்தான். ஸ்பெயின் அரசனே அந்நாளில் ஐரோப்பாவிலுள்ள அரசர்கள் அனைவரிலும் திறமிக்க பேரரசன் ஆனவன். அவன் உறவை நாடியே ஏழாம் ஹென்ரி காதரீனைத் தன் மருகியாக்கியிருந்தான். ஆர்தர் இறந்ததால் மகன் இறந்த தோடன்றி இத்தகைய பேரரசர் உறவையும் இழக்க நேரிட்டதேயென்று ஏழாம் ஹென்ரி வருத்தமடைந்தான். அதேசமயம் ஸ்பெயின் அரசனும் ஆங்கில அரசன் உறவை விட்டுவிட விரும்பவில்லை. ஆகவே, காதரீனை அவர்கள் திரும்பவும் அப்போது இளவரசனாயிருந்த எட்டாம் ஹென்ரிக்கு மணம் செய்வித்தனர்.

கிறித்தவர் சமய ஒழுங்குப்படி அந்நாளில் ஒருவன் அண்ணன் மனைவியாகிய மணம் புரிவது தவறாகக் கருதப்பட்டது. ஆனால், காதரீன் அப்போது சிறுமியாயிருந் தமையால் ஆர்தர் மனைவியாய் உண்மையில் அவள் வாழவில்லை என்ற சிறப்பு நிலைமையையும், பேரரசர் இருவர் செல்வாக்கையும் உன்னிக் கிறித்துவ உலகின் தலைவனான ¹திருப் பெருந்தந்தை ஹென்ரியின் மணத்திற்குச் சிறப்புரிமையாக இணக்கம் தந்தான். காதரீனும் ஆர்தரைப் பெயரளவிலேயே கேட்டறிந்தவள். எனவே, அவள் வாழ்க்கை எளிதில் எட்டாம் ஹென்ரி வாழ்க்கையுடன் பின்னி ஒன்றுபட்டது. அவள் ஒரு பெண்மகவைப் பெற்றுப் பிறந்த நாட்டிற்கும் புக்க நாட்டிற்கும் புகழ்தரும் முறையில் ஒப்பற்ற மாதரசியாய் விளங்கினாள்.

ஆங்கில அரசன் வலிமையை வளர்ப்பதற்காக ஏற்பட்ட இம்மண உறவு உண்மையில் ஆங்கில நாட்டுக்கு வலிமை தரவில்லை என்பதை உல்ஸி கண்டான். ஸ்பெயினில் அப்போது ஆண்ட ²ஐந்தாம் சார்லஸ் அரசன் காதரீன் அண்ணன் பிள்ளை. எனவே, அவன் மேற்கொண்ட போரிலெல்லாம் ஈடுபட்டு ஆங்கில அரசு தன் பொருளையும் ஆள் வலிமையையும் அவன் புகழிற்காகச் செலவிட வேண்டியிருந்தது. இதனால் ஸ்பெயின் பேரரசன் வல்லமை பின்னும் மிகுந்ததுடன் ஆங்கிலநாடு அவனுக்குப் பின் துணையாக மட்டுமே நின்றது. எப்படியாவது ஸ்பெயினின் இந்நச்சுறவை ஒத்து ஸ்பெயின் பகைவனாகிய ஃபிரெஞ்சு அரசனுடன் சேர்ந்தால் ஆங்கில நாடு வலிமை பெறும் என்ற உல்ஸி எண்ணினான். ஆகவே, உல்ஸி சமயப்பற்றும் உணர்ச்சி வேகமும் உடைய ஹென்ரி மனத்தில் காதழீன் மணம் சமயத்துக்கு மாறானது என்ற எண்ணத்தை ஊட்டி அவளை விலக்குவித்து ஃபிரெஞ்சு அரசன் தங்கையுடன் அவனை இணைத்து விட வேண்டுமென்று சூழ்ச்சி செய்தான்.

2.தன்னலமும் சூழ்ச்சியும்

நாட்டுப்பற்றுக் காரணமாகக் கொண்ட இச்சூழ்ச்சியோடு தன்னலம் காரணமாகவும் உல்ஸியிடம் வேறு சூழ்ச்சி இல்லாமலில்லை. ஆங்கில நாட்டில் அவன் மந்திரியாகவும் கருவூலத் தலைவனாகவும் இருந்தான். அஃதன்றிச் சமயத்துறை யிலும் ஆங்கிலநாட்டு முதல்வனாயிருந்தவன் அவனே. இவ்விரு பெரும் பணிகளின் மதிப்புடன் அரசன் நட்பும் பெற்ற அவனிடம் பிறநாட்டு மன்னரும், மன்னரும் அஞ்சும் நிலையுடைய திருப்பெருந் தந்தையும் பெருமதிப்புக் கொண்டி ருந்தனர். திருப்பெருந் தந்தை அதனைச் செயலிற் காட்டி அவனைத் தன் ³ஆணையாளனாக்கினான். இவ்வகையி லெல்லாம் பெருமையும் பெருஞ் செல்வமும் அடைந்த உல்ஸி அரசர் மாளிகையும் நாணுறும் பெரிய மாடங்கட்டி ஆரவாரத்துடன் வாழ்ந்து வந்தான். இவ்வளவிலும் நிறைவு கொள்ளாமல் அவன் உள்ளத்தடத்தின் ஆழத்தில் இன்னொரு பேரவாக் கரந்து கிடந்தது. ஆகவே எப்படியாவது தானே திருப்பெருந் தந்தையாய் விட வேண்டும் என்பது. அதற்காக அவன் பிறநாட்டு மன்னருக்கும் மடங்களுக்கும் பொருளை வாரி வாரி இறைத்து வந்தான்.

உல்ஸியின் இச்செலவுகளுக்கும் வெளிநாட்டுப் போர்களுக்கும் ஆன பெரும்பொருளிற்கீடாக நாட்டில் வரிப்பளுவை மிகுதிப்படுத்த வேண்டி வந்தது. அது கண்டு பொதுமக்கள் மனமுளைந்தாலும் அரசனைப் பற்றியோ அரசனிலும் வன்மை படைத்தவனாகத் தோற்றிய உல்ஸியைப் பற்றியோ அவர்கள் ஒன்றும் கூறத் துணியவில்லை. பெருமக்களுள் ஒருவர் இருவர் அவனை எதிர்க்கத் துணிந்த போதும் உல்ஸி அவர்களை எளிதில் அரசனாணையாகிய இரும்புப் பொறியை ஏவி அழித்து வந்தான். ஆனால், நாளடைவில் அவனுடைய பெரிய ஆரவார வாழ்க்கையையும் செருக்கையும் துணிவையுங் கண்டு முன் அரசரையும் ஆட்டிவைத்த வகுப்பினரின் கால்வழியினராகிய பெருமக்கள் அழுக்காறடைந்து புழுங்கினர்

பெருமக்களுள் செல்வாக்கில் மிக்கவன் ¹பக்கிங்ஹாம் கோமகன். அவன் நாட்டினிடத்தும் அரசனிடத்தும் பற்றுக் கொண்டவன். ஆனால், பெருமக்களிடையே பிறவாது பெருமக்களினும் பெருமிதமாக வாழ்ந்த உல்ஸியை மற்றப் பெருமக்களைப் போலவே அவனும் வெறுத்தான். உல்ஸியின் அடாச் செயல்களைத் துணிந்து அரசனிடங் கூற அவன் முயன்று வந்தான். இதனை அறிந்த உல்ஸி அவன் பேரில் நாட்டுப் பகைமைக் குற்றஞ்சாட்டி வழக்குமன்ற ஆராய்ச்சி இல்லாமலேயே அவனைச் சிறையிலடைத்தான். அதன்பின் அவன் பக்கிங்ஹாமின் ²நிலமேற்பார்வை யாளனையும் ³குடும்பத்துக் குருக்களையும் பக்கிங்ஹாமுக்கெதிராகச் சான்று பகரும்படி ஏற்பாடு செய்து வைத்தான்.

ஒருபுறம், உல்ஸி தனக்கெதிராகச் சூழ்ச்சி செய்வதையும் இன்னொரு புறம் வரிப்பளுவை உயர்த்திப் பெருமக்களை அவமதிப்பையும் கேள்விப்பட்டு அரசன் தலைமையில் பக்கிங்ஹாமைக் குற்றஞ்சாட்டு வதற்காகக் கூடிய பெருமக்கள் பேரவையில் அரசி காதரீன் தானே நேரில் வந்து உல்ஸியின் கொடுமைகளையும், பக்கிங்ஹாமின் மெய்ம்மையையும் எடுத்துரைத்தாள். ஆனால் அரசன் இருபுறமும் சாயாமல் நின்று அவர்கள் ஒருவரை ஒருவர் வைததைக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டான். அதோடு பக்கிங்ஹாம் குறிகாரன் ஒருவன் சொல்லைக் கேட்டுத் தானே அரசனாய்விடப் போவதாக நம்பி அதுவகை முயற்சிகளில் முனைந்திருந்தான் என்று அவன் நிலமேற் பார்வையாளனையும் குருக்களையும் பக்கிங்ஹாமுக் கெதிராகத் தான் முன்னேற்பாடு செய்து வைத்திருந்தபடி சான்று பகரச் செய்தான். ஆகவே, அரசியின் முயற்சி பயனடையாது போயிற்று. பக்கிங்ஹாமின் மீது கொலைத் தீர்ப்பு உறுதியாயிற்று.

காதரீன் மீதி எறியவிடுத்த கல்லை இனி விரைந்து வீசித்தான் ஆகவேண்டுமென்று உல்ஸி கண்டுகொண்டான். ஆகவே, அரசன் மனத்தில் காதரீனை நேரிடையாகப் புகழ்ந்து தன்னை அவள் நண்பனாகக் காட்டிக் கொண்டே அவளுக்கு ஆண்மகவில்லாமையையும் அவள் திருமணம் செல்லு படியாகாது என்று குடிமக்களும் அறிஞரும் உரைப்பதையும் அரசன் மனத்தில் பக்குவமாய் உருவேற்றினான். அதனோடு அரசன் மனத்தை இன்னும் அவள் பக்கமிருந்து பிரிப்பதற்காக அவன் ஒரு பெரிய விருந்துக் கேற்பாடு செய்து, அதில் ஆடல் பாடல்களுக்கு இடமமைத்து வைத்து அரசனை அழையாமலேயே அரசன் காதில் இது விழும்படி செய்தான்.

3.மன்னர் வாழ்வை மாற்றவந்த புதிய கோள்

அவன் எதிர்த்தபடியே அரசன் சில தோழர்களுடன் வெளிநாட்டினர் போன்ற மாற்றுருவில் அதில் வந்து கலந்து கொண்டான். அவர்களை வரவேற்பதற்கென்றே உல்ஸி இங்கிலாந்தின் ஒப்பற்ற அழகிகளையும் ஃபிரெஞ்சு நாட்டு அழகிகளையும் அழைத்திருந்தான். அவர்களுள் இடைத்தரக் குடியிற் பிறந்து அரசவையின் நச்சுக்காற்றுப் படாமல் கானாறு போன்ற கலகலப்புடைய ஒப்பற்ற அழகியாகிய ¹ஆன்புல்லென் என்ற ஓர் இளமங்கை வந்திருந்தாள். அரசன் அவள் கண்வலை யிலும் நடையுடை தோற்றங்களாகிய நுண்ணிய மாயவலை களிலும் சிக்கிக் காதரீனை முற்றிலும் மறந்துவிட ஒருப்படலானான்.

உல்ஸி இவ்வளவு தொலைவு திட்டமிடவில்லை. ஆயினும், தற்போது காதரீன் தளை அறுவது போதும்; இக்காதல் வலை விரைவில் இளமை விளையாட்டாகப் போய்விடும்; அதன்பின் தன் திட்டப்படி அரசனுக்கு மணம் செய்விக்கலாம் என்று அவன் எண்ணினான். ஆகவே, அரசன் உரைக் கிணங்கத் திருப்பெருந் தந்தைக்கெழுதிக் காதரீன் திருமணத்தை விலக்குவிக்க ஆணை கோரினான். இதற்கிடையில் அரசனும் பின்னிலை மைக்கேற்ப ஆன்புல்லெனுக்குப் பரிசுகளும் பொருளும் அனுப்பி வந்ததுடன் அவள் உள உயர்வுக்கும் உடலழகிற்கும் ஏற்பப் புறநிலையையும் உயர்த்த எண்ணி ஆண்டுக்குப் பத்தாயிரம் பொன் வருவாய் தரும் 2பெம்ப் ரோக் கோமாட்டி என்னும் உயர்ந்த பெருநிலக் கிழமைக்குரிய பட்டத்தினையும் அவளுக்கு அளித்தான்.

ஹென்ரி அரசன் தன்னாண்மையும் துணிவும் மிக்கவன். விரும்பிய பொருளையடைய யார் தடையையும் எத்தகைய நெறியையும் அவன் பொருட் படுத்துவில்லை. ஆனால், அவன் உணர்ச்சிக்கொத்த அறிவுமுடைய- வனாதலின் தன்னாண்மை யுடன் செய்யும் செயல்களுக்கும் தன் திறத்தால் ஒரு நெறியும் ஒரு நேர்மையும் தோன்ற நடந்துகொள்ள விரும்பினான். ஆகவே, காதரீனை உண்மையில் தான் விலக்க எண்ணமில்லை என்றும், அரசன் என்ற முறையில் பொதுமக்கள் குறைச் சொல்லுக் கஞ்சியே அவளை விலக்க எண்ணியதாகவும், அதிலும் அவள் பக்கமே பேச அறிஞரைத் தாமே அழைத்து வழக்குமன்றுள் வாதாடி அவளுக்கு நேர்மை வழங்க எண்ணினதாகவும் காட்டிக்கொள்ள அவன் விரும்பினான். இக்கருத்துடன் ஹென்ரி விருப்பப்படி உல்ஸிமூலம் திருப்பெருந்தந்தையிடமிருந்து உல்ஸியின் நிலைக்கொத்த நிலையுடைய ¹கம்பீஜியோ என்ற ஆணையாளன் வரவழைக்கப்பட்டான். உல்ஸியும் அவனும் ஒருங்கே வழக்குத் தலைவர்களாயிருந்து அரசி பக்கம் வேறு அறிஞரை வழக்காட வைத்துத் தீர்ப்பளிப்பதென்று ஏற்பாடாயிற்று.

உலகின் முதற் பேரரசன் மகள் ஆகி இன்னொரு வல்லரசனுக்கு வாழ்க்கைப்பட்டும், கணவன் எண்ணமின்றி வேறெண்ணமோ கணவன் சொல்லன்றி வேறு சொல்லோ அறியாத காரிகையாகிய காதரீன் தன்னிடம் குற்றமெதுவுமின்றித் தன் கணவன் தன்னிடம் பற்றுக் குறைந்து காணப் படுவதையும், வேண்டா வெறுப்பாக, ஆனால், உலக மக்கள் கண்ணை மூடும் எண்ணத்துடன் நயமாக அவன் அவளைப் படிப்படியாக நீக்க எண்ணுவதையும் கண்டு அவள் உள நைந்தாள். அவளைவிடச் சற்றுக் கற்பிற் குறைந்த எந்த மாதும் இத்தகைய நிலைமையில் உலலெகலாம் ஆட்டி வைக்கும் திறனுடைய தன் மருமகனுக்குச் செய்தி தெரிவித்திருப்பாள். ஆனால், கற்பரசியாகிய அவளுக்குக் கணவனுக்கு மேற்பட்ட கருத்து எதுவுமில்லை. அவள் காதல் நிறைந்த கடிதங்கள் எழுதினாள். கல்வியிலும் அவள் கரை போனவளாதலால் தன் திருமணம் நேர்மையானதென்று மறைமொழி முதலியவற்றை மேற்கோள் காட்டி எழுதினாள். வழக்குமன்றங் கூடுவதாக அவளுக்கு அழைப்பு வந்தபோது அவள் பிடிவாதமாகத் தன் கணவனிடத்தன்றி வேறு எந்த மன்றத்துக்கும் தான் போவதில்லை என்று மறுத்துவிட்டாள்.

அவள் நிலைமையையும் பெருமிதத்தையும் வெறுப்பிடையேயும் கூடக் கண்ட அரசன் அவளிடத்திலேயே உல்ஸி, கம்பீஜியோ ஆகிய இரு ஆணையாளரையும் கூட்டி வழக்காடப் பணித்தான். முறைப்படி அரசன் வழக்காளியாகவும் காதரீன் எதிர் வழக்காளியாகவும் வழக்குத் தொடங்கப் பெற்றது. ஆனால், அது நடைபெறுமுன் காதரீன் கல்லுங் கரையும்படி கதறியழுது அரசன் காலில் வீழ்ந்து, “அண்ணலே! எனக்கெதிராகத் தங்களுக்கென்ன வழக்கு? ஆண்டவன் சான்றாக மனைவியானபின் அங்ஙனம் மனைவியாயிருக்கும் உரிமை நீங்கலாக உயிரைக் கோரினும் வழக்கின்றி அளிக்க வேண்டிய வளாயிற்றே நான். நான் தங்களிக்கிழைத்த தீங்கென்ன? தீங்குண்டாயின் தக்க ஒறுப்புத் தாங்களே தரலாமே! தங்களின் மிக்க தீர்ப்பாளர் எனக்கு யார்? மனைவி என்ற உரிமை ஒருபுறமிருக்க, இந்நாட்டில் வாழ்பவள் என்ற முறையிலும் இந்நாட்டரசராகிய தாங்களின் மிக்க வழக்குத் தலைவர் வேறு யாருளர்? ஆதலின், என் உயிரனைய தலைவ! எனக்கெதிராக வழக்காடற்க, என்னை எது செய்யினும் என் கற்புரிமையை மறுக்கற்க. என்னிடமிருந்து எவ்வாறேனும் பிரிய வேண்டுமென்று உண்டானால் என் உயிர் கொள்க!” என்றாள்.

அவன் ஆண்மையையும் உணர்ச்சியையும் தூண்ட அவன் அவளை விட்டு விலகி, நயந்த ஆயின் அன்பற்ற குரலில், “நீ யாதொரு குற்றமும் செய்ததாக யாரும் கூறவில்லை. உன் ஒப்பற்ற குணம் என்னை மட்டுமின்றி இந்நாட்டு மக்கள் அனைவரையும் உன்பால் ஈடுபடுத்தும். நீ ஒப்பற்ற மனiவி; நாட்டு மக்கட்குத் தாய். ஆனால், நான் தெய்வத்தின் வெறுப்பிற்கு அஞ்சுகிறேன்; நாட்டு மக்கள் குறைச்சொல்லுக்க அஞ்சுகிறேன். இந்நிலையில் என் விருப்பத்தையும் மீறி நடக்கிறேன். வெளிக்கு எதிர் வழக்காளியாகிய என்னுடைய உள்ளமே உனக்காக வழக்காடுகிறது. ஆகவேதான் உன் பக்கம் பேச அறிஞரை வைத்திருக்கிறேன். உல்ஸி என்னுடன் தொடர்புடையவன் என்பதற்காகக் கம்பீஜியோவையும் தீர்ப்பில் பங்குகொள்ள அழைத்திருக்கறேன்” என்றான்.

அரசன் உள்ளக் கருத்தை மறைத்துப் பேசுகிறான் என்று கண்ட காதரீன் கொதிக்கிற் துன்ப வெப்பத்தை அடக்கியவளாய் உல்ஸி பக்கம் திரும்பி, “நயவஞ்சகமும் நெஞ்சகத்தில் இரண்டகமும் கொண்ட அறிவுடையோய்! இஃதனைத்தும் நின் சூழ்ச்ச என்றறிவேன். உன் பேரவாவிற்காக என் செய்யத் துணிந்தனை? ஒரு குடியைக் கெடுக்கின்றாய்; ஓர் அரசனைத் தீவழியில் உய்க்கின்றாய்! சமயப் போர்வையுள் இத்தனை அடாச்செயலையும் செய்யும் உன் உள்ளம் இன்று உலக வெற்றியின் மேற்பட்ட இறைவனில்லை என்று தருக்க நிற்கின்றது. விரைவில் உன் செயலின் பயனின்மையை அறிவாய்” என்றுரைத்தாள்.

உல்ஸிமீதும் தன்மீதும் பொய்ம்மைக் குற்றஞ்சாட்டிய காதரீன் உரைகளை மாற்ற அரசன் தன் ஒழுங்கைக் கூறியதுடன் தன்னை இவ்வகையில் திருத்தித் தன் கடமையைக் காட்டியவன் லிங்கன் தலைமகன் என்றும் அவன் வாயுரையாலேயே விளக்க முயன்றான். ஆனால், அவற்றை ஒன்றையும் வாங்கிக் கொள்ளாமல் காதரீன் தான் வழக்காடுவதானால் ஸ்பெயினிலிருந்து தன் உறவினரும் துணைவரும் வரும் வரை வழக்கை ஒத்திபோட்டேயாக வேண்டும் என்று கூறி வழக்கு மன்றத்தைப் புறக்கணித்து வெளியேறிவிட்டாள்.

4.கட்டுத்தறியை முறித்த மதயானை

காதரீன் எவ்வளவு நல்லவளாயினும் சரி பெருந்தன்மை யுடை வளாயினும் சரி, வழக்கு மன்றத்தில் அவள் எப்படியோ தன் தற்பெருமையைக் குலைத்துத் தன் மனக்கோட்டைகளுக்குத் தடங்கல் செய்ய முனைகிறாள் என்று அரசன் கண்டதே அவன் நடிப்பும் மேற்பேச்சும் அகன்றன. அவன் உல்ஸியிடம் நேரிடையாகக் காதரீன் இல்லாமலே வழக்கை முடித்துவிடுக என்று கூறினான். ஆனால் கம்பீஜியோ உள்ளூரத் திருப்பெருந் தந்தையைக் கலந்துகொள்ள எண்ணினான். உல்ஸியும் தான் பின்னாளில் திருப்பெருந் தந்தையாவதற்குக் காதரீன், அவன் மருமகனாகிய ஸ்பெயின் அரசன் ஆகியவர்களது நேரிடையான பகைமை நல்லதன்று என்று எண்ணினான். எனவே, இருவரும் இன்னொருமுறை காதரீனை வருந்திச் சென்று கண்டு அரசனிடமே வழக்கை ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டனர். அவள் மறுத்த உடனே அரசனைக் கலக்காமல் வழக்கை ஒத்திப்போடும்படி திருப்பெருந் தந்தைக்கு எழுதிவிட்டனர். அதன்படி கம்பீஜீயோவும் இங்கிலாந்தை விட்டகன்றான்.

தன்னை மீறித் தன் கைப்பொம்மையான உல்ஸி நடக்கறிhன் என்றெண்ணியதுமே ஹென்ரி கட்டுத்தறியை முறித்த மதயானைபோலச் செயல்துறைக்கு எழுந்தான். தானிட்டது சட்டம், தான் வைத்தது வரிசை என்பதை அவன் உலகுக்கு அப்போதுதான் காட்டலானான். க்ரேன்மர் ன்ற அறிஞனை அவன் ஐரோப்பாவின் பல கல்லூரிகளுக்கும் அனுப்பி அவற்றின் அவையோர் இம்மணம் பற்றிக் கூறும் முடிவுகளைக் கண்டு திரும்பும்படி ஏவினான். அவன் திரும்பியதும் அவனைச் சமயத் தலைவனாக்கி அவன் முன்னேற்பாட்டுடன் தருவித்த முடிவுப்படி காதரீன் மணவினை ஒரேடியாக விலக்கப்பட்டது. விரைவில் ஆல்புல்லெனுடன் மணவினையும் நடந்து முடிந்தது.

உல்ஸியிடம் அரசன் மனங்கோணி நடந்ததை அறிந்ததே பக்கிங்ஹாம் கொலைமுதல் முணுமுணுத்து வந்த ¹ஆர்பெர்காவெர்னி, ²ஸரே, ³நார்போக், ⁴ஸஃபோக் பெருமகன், ⁵அரண்மனைத் தலைவன் முதலிய பெருமக்கள் அனைவரும் ஒருங்கு திரண்டனர். பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பதற்கிணங்க, அச்சமயத்தில் உல்ஸி திருப்பெருந் தந்தைக்குத் தனிப்பட்ட முறையில் காதரீன் வழக்கை ஒத்திபோடும்படி எழுதிய கடிதம் அரசன் கைக்கு எப்படியோ தப்பி வந்தது. அதேபோது உல்ஸி தன் செலவுகளை எல்லாம் தனக்குள்ளாகக் குறித்துவைத்த குறிப்புத்தாளும். அரசனுக்கு அனுப்பும் தாள்களுடன் அகப்பட்டுவிட்டது. அதில் அவன் பெருஞ்செலவுகள் மட்டுமன்றித் திருப்பெருந் தந்தையாவதற்கு உதவி கோரி ஐரோப்பாவெங்கும் அனுப்பிய பெருந்தொகை களின் விவரமும் இருந்தது. முன் பக்கிங்ஹாமிற்கு உல்ஸி வைத்த பொறி இப்போது அவனுக்கே வைக்கப்பட்டது. அரசனிடம் எத்தகைய மறுமொழியும் கூறமுடியாது அவன் விழித்தான். அரசனை விட்டுச் சற்று அப்புறம் இப்புறம் திரும்பினாலோ பெருமக்கள் கரடியும் புலியும் நரியும் சூழ்ந்து கொத்துவது போலக் கொத்தக் காத்திருந்தனர். அரசன் அவனைக் கண் கொண்டுகூடப் பாராமல் பெருமக்கள் மூலமாகவே அவன் பணி அடையாளங்களையும் உரிமைகளையும் உடைமகளையும் பறிமுதல் செய்துவிட்டு அவனை அவன் ஊருக்கே மீட்டும் அனுப்பினான்.

பேரவாக்களிடையேயும் பெருந்தன்மை இழவாத உல்ஸிக்கு இது பெரும் படிப்பினையாயிற்று. ‘ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்’ என்பதை அவன் கண்கூடாகக் கண்டான். அதோடு ஆற்றலுள்ள போது அச்சத்தால் அடங்கியவர் அஃது அழிந்தபோது பழி மனப் பான்மை கொள்வதையும் கண்டு உலகின் உறுதியின்மையறிந்து அவன் பெருமூச்சு விட்டான். ஆயினும் தன் நன்நிலையில் அவன் தன் பணியாளரையும் அண்டினோரையும் ஆதரித்தன் பயனை அவர்கள் கண்களில் காணப்பெற்றான். அவர்களில் சிறப்பாகக் கீழ்நிலையினின்றும் தானுயருந்தோறும் உயர்ந்து மிகவும் அன்புடன் தான் நடத்திய தன் அருமைப் பணியாளனை ¹கிராம்வெலின் கவலை சோர்ந்த முகத்தைக் கண்டதுமே அவன் இறக்கும் தறுவாயில் மகன் முகங்கண்ட தந்தை போல தன் துன்பங்களை மறந்து அவனுக்குத் தன் ஒப்பற்ற நல்வாழ்வின் உறுகளனைத்தையும் திரட்டி, அரசனுடனும் நண்பருடனும் ஒழுக வேண்டும் முறை, இறைவனுக்கும் அரசனுக்கும் மனச்சான்றுக்கும் மட்டுமே பிழையாது நடக்க முயல வேண்டுவதன் இன்றியமையாமை ஆகிய நல்லுரைகள் தந்து, தன்னுடைமைகள் எல்லாவற்றையும் அவனே பெரும்படி ஏற்பாடுகள் செய்து, அவனிடம் கண்ணீருடனும் கம்பலையுடனும் விடைபெற்றுச் சென்றான்.

5.கிரேன்மரின் நன்மொழிகள்

உல்ஸியின் உரையின்படியே விரைவில் ஆன்புல்லென் ஹென்ரியுடன் அரசியாக முடிசூட்டப்படும்போது கிராம்வெல் உல்ஸியின் நிலைக்கு உயர்த்தப்பட்டான். உல்ஸிமீது பொறாமை கொண்டு அவனை ஒழித்த பெருமக்கள் அதுபோல் கிரேன்மரையும் ஒழிக்கப் பார்த்தனர். அரசன் பெருமக்கள் குற்றச்சாட்டிற்குப் போதிய இடந் தந்தானாயினும் அவர்கள் அவனை அவமதிப்பது கண்டு சீற்றங்கொண்டு அவர்களை அதட்டியதுடன் அவர்கள் கண்காண அவனுக்குப் பின்னும் உயர்வு தந்தான். விரைவில் ஆன்புல்லென் பெண்மகவு பெற்றாள். கிரேன்மரே குழந்தைக்கு ¹எலிசபெத் என்ற பெயர் சூட்டியதுடன் ’அக்குழந்தை காலத்தில் இங்கிலாந்து உலகின் ஒப்பற்ற நாடாகும் என்றும் அதன்பின் ஆளும் அரசனும் மிகுந்த புகழுடையவனாக இருப்பான் என்றும் தெய்வநிலைபெற்றுக் குறிகூறினான்.

காதரீன் வாழ்வு நாட்களைப் பார்க்கிலும் தாழ்வில் உயர் பண்புடையவளாய்ச் சுடச்சுட ஒளிரும் பெண்போல் தோழியரிடையே இறுதிவரை கணவன் புகழே கூறி இறந்தாள். இறப்பினும் அவள் தன் இறுதி அருட்செல்வம் மாறாது அரசனை வாழ்த்தினாள். தன் கடைசி வேண்டுகோளாக அவள் கேட்டுக்கொண்டது தன் தோழியையும் தன்னைச் சார்ந்தவரையும் ஆதரிக்க வேண்டும் என்பதே. காதரீன் இறுதி கேட்டு அரசன் இன்பதுன்ப வரையறையுட்படா இருமை நிலை எய்திச் சற்றுத் தன்னை மறந்திருந்தான். அரசனிடம் உண்மையுடையவளாயினும் காதரீன் மிக்க மனையநனுடையாள் என்று அவளைப் பாராட்டி வந்த ஆன்புல்லெனும், தன் இன்ப வாழ்வையும் அதன் இன்கனியாகிய எலிசபெத்தின் குழந்தை முறுவலையும் மறந்து சற்றுக் கண்கலங்கினாள்.

அடங்காப்பிடாரி

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  பப்டிஸ்டா: பாதுவா நகர்ச்செல்வன்; காதரீன்; பயாங்கா ஆகியவரின் தந்தை.

2.  பெட்ரூக்கியோ: காதரீனைக் காதலித்து மணந்தவன்.

3.  லூஸெந்தியோ: வின்ஸெந்தியோ புதல்வன்; பயாங்காவின் காதற் கணவன்.

4.  ஹார்ட்டென்ஸியோ: பயாங்காவின் தோழியை மணந்தவன்.

5.  வின்செந்தியோ: லூஸெந்தியோவின் தந்தை; முதியவர்

** பெண்டிர்:**
1.  காதரீன்: பப்டிஸ்டாவின் மூத்த புதல்வி; அடங்காப் பிடாரியாயிருந்து பின் பெட்ரூக்கியோவினால் திருத்தப்பட்டவள் - பெட்ரூக்கியோவின் மனைவி.

2.  பயங்கா: பப்டிஸ்டாவின் இளைய புதல்வி; லூஸெந்தியோவை மணந்தவள்.

3.  பயாங்காவின் தோழி:

** கதைச் சுருக்கம்**
பப்டிஸ்டாவின் புதல்வியர் இருவருள் மூத்தவளான காதரீன் அடமும் பிடிமுரண்டும் உடையவள். இளையவள் பயாங்கா நற்குணமிக்கவள். பயாங்காவை லூஸெந்தியோ என்ற இளைஞன் மணந்துகொள்ள விரும்பியும் காதரீனை மணக்க யாரும் முன்வராமையால் பயாங்காவின் மணமும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெட்ரூக்கியோ என்ற இளைஞன் காதரீனைத் திருத்தி மனைவியாக்க எண்ணி வந்தான். காதரீனின் வன்சொல்லையும் வெறுப்பையும் பாராட்டாது, அவன் அவளைப் பலர்முன் புகழ்ந்தும், தானில்லாத நேரம் அவள் தன்னை மறைவிற் காதலித்து வெளித்தோற்றத்தில் வெறுப்பாக நடிப்பதாகவும் கூறி எளிதில் அவள் மணவினைக்கு யாவரும் இணங்கும்படி செய்தான்.

ஆனால், மணவினையிலிருந்து தொடங்கி அவன் எல்லோரிடமும் அடாவடியாகவும் பித்துப் பிடித்தவன் போலவும் நடந்துகொண்டான். பணியாட்களையும் பிறரையும் உறுக்கி வாட்டிக் காதரீனுக்குக் கொண்டு வந்த ஊண், உடை, படுக்கை முதலியவைகளைக் குறை கூறி வீசியெறிந்து அன்புமிக்கவனாக நடித்துக்கொண்டே காதரீனுக்கு நல்லுணவின்றியும், நல் ஆடையின்றியும் நல் உறக்கமின்றியும் செய்து அவள் அடமுற்றும் அடக்கி அவளைப் பணிய வைத்தான். பின் தான் கூறியதை எல்லாம் மறுசொல் இன்றி ஏற்றுக் கூறியபடியே நடக்காவிட்டால் அவள் விருப்பமெதுவும் நிறைவேறாதென்பதை வலியுறுத்தினான். அவள் இப் படிப்பினைகளை ஏற்றுத் தங்கக் கம்பியாகி விட்டபின்னர் அவளைத் தந்தை வீட்டுக்கு இட்டுச் சென்றான்.

அவர்கள் மருவீட்டு விழாவை ஒட்டி, பயாங்காவின் மணமும் அவள் தோழியின் மணமும் நடைபெற்றன. காதரீனின் புதிய மாறுபாட்டை உணராமல் மணமக்கள் இருவரும் பப்டிஸ்டாவுடன் சேர்ந்து காதரீனைப் புறக்கணித்துப் பேசியது கண்ட பெட்ரூக்கியோ அவர்களுடன் தத்தம் மனைவியர் குறிப்பறியும் குணத்தைத் தேர்வுக்கு விடுவதெனச் சூளுரைத்தான். பின் ஒவ்வொருவரும் தத்தம் மனைவியரை அழைக்க, மற்ற இருவர் மனைவியரும் சாக்குப்போக்குச் சொல்லி நிற்கக் காதரீன் மட்டும் யாவரும் வியக்கும் வண்ணம் முன் வந்தாள். அவள் உயர்வு கண்டு வெட்கமுற்ற மற்ற இரு பெண்டிரும் தாமும் அவளைப் பின்பற்றித் திருந்தினர்.

¹பாதுவா நகரில் ²பப்டிஸ்டா என்றொரு செல்வன் இருந்தான். அவன் புதல்வியர் இருவருள் மூத்தவள் ஆகிய ³காதரீன் ஓர் அடங்காப் பிடாரி. அவள் பிடிமுரண்டும் குறும்பும் மிக்கவளாய்ச் சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர் ஆகிய எல்லாரிடமும் தாறுமாறாக நடந்தும் பேசியும் வந்தாள். ஆனால், அவள் தங்கை ⁴பயாங்காவோ இன்முகமும் நயத்தக்க நாகரிகமும் உடையவள். அவளை மணக்க விரும்பித் தொலைவிடங்களி- லிருந்தும் பல செல்வ இளைஞர்கள் அவள் தந்தையிடம் வந்து வந்து போயினர். ஆனால், யாரும் மூத்தவளை மணக்க முன்வரவில்லை. மூத்தாள் மணம் செய்யாமல் இளையாளை மணத்திற் கொடுப்பதில்லை என்று பப்டிஸ்டா, இளையாளை விரும்பி வந்தவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். இதன் காரணமாகப் பப்டிஸ்டாவின் இரு புதல்வியருக்குமே என்றும் மணம் நிகழாதிருந்த விடுமோ என்று பலர் கூறலாயினர்.

உளிக்கேற்ற சுத்தியலில்லாமலிருக்காது என்றபடி இத்தகைய பெண்ணையும் மணக்க விரும்பிய ஒருவன் நாளடைவில் ஏற்பட்டான் அவனே 5பெட்ரூக்கியோ என்பவன். அவன் ஆழ்ந்தகன்ற அறிவுடன் சமயத்துக்கேற்ற நடிப்பும் துணிவும், நாத்திறமும் உடையவன். முள் நிறைந்து முதிர்ந்த கள்ளியை அப்புறப்படுத்தினால் அதனடியில் அகில் அகப்படும் என்று கூறப்படுவதை அவன் அறிவான். அதுபோலவே நல்வழியில் செல்லாது தீங்குக்காளான காதரீன் புறம்போர்த்த முரண்பாட்டை நீக்கினால் அவள் ஒப்பற்ற திறம் அவள் பெண்மைக்குப் பொலிவுதரும் என அவன் கண்டு எப்படியும் அவளை அடைந்து திருத்துவது என்று முனைந்தான்.

இவ்வகையில் பெட்ரூக்கியோவின் திட்டம் மிகவும் புதுமையானது. அரம்போன்ற இயல்புடைய அவள் முரண்பாட்டை அதனினும் முரண் பாடுடைய கின்னரத்தால் அவன் தீட்டிச் செப்பனிட முயன்றான். பப்டிஸ்டாவினிடம் அவன் சென்று, “உம் புதல்வியின் ஒப்பற்ற அழகையும் அவ்வழகினும் மேம்பட்ட உயர் குணங்களையும் கேள்விப்பட்டு அவளை மணக்க வந்தேன்,” என்றான்.

அச்சொற்களைக் கேட்ட அரசன் அவ்வுரை தன் இளைய புதல்வியையே குறித்ததெனக் கொண்டு “மூத்த புதல்வியிருக்க இளையாளை மணஞ் செய்விக்க முடியாது,” என்று விடை பகர்ந்தான்.

பெட்ரூக்கியோ; ஐயனே, ஏன் இப்படி என்னிடம் உம் புதல்வியைப் பற்றிப் பொய்கூறி எனக்கு அவளை மணம் செய்துதர மறுக்கப் பார்க்கிறீர்? நான் அதில் ஏமாறுபவன் அல்லன். உம் மூத்த புதல்வியின் அருங் குணங்களைக் கேட்டே அவளை மணக்க வந்திருக்கிறேன்.

பப்டிஸ்டாவுக்கு இன்னும் ஐயம் ஒழியவில்லை. “ஐயனே, என் மூத்த புதல்வியின் பெயர் காதரீன்,” என்றான் அவன்.

பெட்ரூக்கியோ; ஆம். காதரீன் புகழில் காதல் கொண்டே உடலழகைக் காணுமுன்பே அவளை மணப்பதாக உறுதிகொண்டு வந்திருக்கறேன். அருள் கூர்ந்து என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைப்பதுடன் அவளை நான் காதல் முறையில் கோரி அடைய இணக்கந்தர வேண்டுகிறேன்.

பப்டிஸ்டாவுக்கு இஃதொன்றும் விளங்கவில்லையாயினும் எப்படியாவது தன் புதல்விக்கு மணமாகட்டும் என்றெண்ணி அவன் பெட்ரூக்கியோவைக் காதரீனிடம் இட்டச் சென்றான்.

காதரீன் வழக்கப்படி அவனை வசைமாரியுடனும் சீற்றத்துடனும் வரவேற்றாள். ஆனால், பெட்ரூக்கியோ தன் கண்ணுக்கு அவள் நடையெல்லாம் அன்னநடை. அவள் சாயமெல்லாம் மயிலின் சாயல்; அவள் சொல்லெல்லாம் குயில் மொழி என்றே தோன்றியதாக நடித்தான். அவள் சீற்றத்தையும் வெறுப்பையும் ஊடலெனவே கொள்வதாகக் காட்டிக் கொண்டான். அவள் பிறர் முன்னிலையிலோ பப்டிஸ்டா முன்னிலையிலோ தன்னடம் அவதூறாக நடந்துகொண்ட போதெல்லாம் “ஏன் கேட், நம் காதலைப் பிறர் கண்டால் என்ன கெட்டுப்போகும்? தனியாயிருக்கும்போது நீ எவ்வளவு கனிவுடன் பேசினாய் என்பதை அவர்கள் அறியாமல் ஏன் மறைக்கப் பார்க்கிறாய்?” என்பான். அவள் அவனை முறைத்துப் பார்த்தால் அவன், “ஆம்! உன் காதல் விழிக்கு இப்படி முறைக்கவும் தெரிகிறதா? என் மட்டில் அம் முறைப்பிலும் எவ்வளவோ கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது,” என்பான்.

இறுதியில் ஒருநாள் அவன் பப்டிஸ்டாவிடம் “ஐயா, காதரீன் விரைவல் எங்கள் மணத்தை முடிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறாள். ஆதலின் வருகிற ஞாயிறே அவ்வினைக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோருகிறேன்,” என்றான்.

பப்டிஸ்டா: அப்படியா? இவ்வளவு தொலைவு அவள் இணங்கி விட்டாளா?

பெட்ரூக்கியோ: வெளிக்கு அவள் இணங்கவில்லை தான். பிறர் காணத் தன்னிடம் மாறுதல் உண்டானதை ஒப்புக்கொள்ள அவள் விரும்பவில்லையாம். என் தந்தையிடம் கூட என்றும் கூறியதுபோல் மணம் வேண்டாம் என்று தான் நான் கூறுவேன். ஆனால் அதனைப் பொருட் படுத்தாது என் மணவினையை விரைவில் முடிக்கும்படி தந்தையை வற்புறுத்துங்கள்," என்று அவள் என்னிடம் பன்னிப் பன்னிக் கேட்டுக் கொள்கிறாள்.

புரை தீர்ந்த நன்மை பயப்பிக்கும் நோக்கத்துடன் கூறப்பட்ட இப்பொய்யுரையால் காதரீனின் மறுப்புப் பொருளற்றதாயிற்று. அவள் எவ்வளவுதான் எனக்கு மணம் வேண்டாம்; இவ்வளவு விரைவில் ஏன்; தாமதித்துப் பார்த்துக் கொள்ளலாமே," என்று கூறினாலும், அவளது ‘வேண்டாம்’ என்ற சொல் ‘வேண்டும்’ என்று குறிப்புப் பொருள் தருவதாகவே கொள்ளப்பட்டது.

பப்டிஸ்டாவையும் காதரீனையும் விட்டுப் பிரியும்போது பெட்ரூக்கியோ மணநாளைக்குள் ஆடையணிகள் கொணர்வ தாகக் கூறிச் சென்றான். மணநாள் மண வேளையாயிற்று. ஒருவரும் எதிர்பாராத அத்திருநாளைக் காணக் கோயிலில் பல்லாயிர மக்கள் கூடியிருந்தனர். காதரீனும் வேண்டா வெறுப்பாக இழுத்துக் கொணரப்பட்டாள். மணவேளை அணுக அணுக இன்னும் மணமகன் வரவில்லையே என்று யாவரும் பேசிக் கொண்டனர். மணநேரத்திலும் மணமகன் வரவில்லை. இதுவரை மணத்தை வெறுத்துத் தூற்றிய காதரீனுக்கு இப்புதியவகை அவமதிப்பு அவ்வெறுப்பை மணமகன் மீது மாற்றிற்று. வேளை தவறிச் சற்று நேரத்துக்குப்பின் பெட்ரூக்கியோ அவ்விடம் வந்தான். ஆனால், அவன் மணமகன் உடையில் வரவில்லை. அவன் கொணர்ந்த மணமகளுடையும் பொது நாட்களில் காதரீன் அணியும் உடையினும் தாழ்வானது. அனைவரும், ‘மணவினைக்கா இவ்வுடை?’ என்றனர். பெட்ரூக்கியோ, ‘காதரீன் என் உடையைக் காதலித்து மணக்கவில்லையே; என்னைத்தானே காதலித்து மணக்க இணங்கி வந்திருக்கிறாள்’ என்று கூறினான். காதரீனுக்கு அவமதிப்பால் உடல் எண்சாணும் ஒரு சாணாகக் குறுகிற்று. சீற்றத்தால் உடலெல்லாம் படபடத்தது. ஆனால், முதல் தடவையாக அவள் சீற்றத்தை இன்று காட்ட முடியவில்லை. அவள் தோல்வி தொடங்கிற்று.

மணவினையின் போது பெட்ரூக்கியோ தன் வேலையாட் களிடத்தும் தன்னை வாழ்த்த வந்தவர்களிடத்தும் கடுஞ்சினங் கொண்டு சீறிவிழுந்தான். சமயத்தலைவர் வழக்கப்படி மெள்ள, ‘இந் நங்கையை நீ ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆணையிடு வாயா?’ என்ற போது அவன் இடியேறென முழங்கி ஆரவாரித்துக் கொண்டு, ‘ஆம். நான் ஏற்றுக் கெள்ளுகிறேன். இதெல்லாம் என்ன கேள்வி?’ என்று அதட்டினான். எதிர்பாரா அந்நடத்தை கண்டு திகில்கொண்டு சமயத்தலைவர் கையிலிருந்த சமயநூலைத் தடாலென்று கீழே போட்டுவிட்டார். சமய வினைக்குப்பின் விடாய்தீர நறுநீர்கேட்க, மாப்பிள்ளைத் தோழன் நீர் கொணர்ந்தான். அதை உரக்கச் சிரித்துக் கொண்டே குடித்த பின் பெட்ரூக்கியோ கொணர்ந்தவன்மீதே மீந்த எச்சில் நீரைக் கொட்டினான். இதையெல்லாம் கண்டவர்கள் இதுவரைக் காதரீனைக் கட்டியதற்காகப் பெட்ரூக்கியோவிடம் இரக்கம் காட்டியது போக, பெட்ரூக்கியோவைக் கட்டியதற்காகக் காத்ரீனிடமே இரக்கங்காட்டத் தொடங்கினர்.

மணவினை முடிந்தபின் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகி யிருந்தது. ஆனால், பெட்ரூக்கியோ அது முடிந்தபின் முன் போலவே பித்துக் கொண்டவன் போல் நடித்துப் பப்டிஸ்டாவிடம் சென்று, “என் மனைவியை நான் அழைத்துக் கொண்டு போகிறேன். என்னை எவர் தடை செய்ய முடியும்?” என்றான். நயமொழிகள் கூறக்கூட அஞ்சி அனைவரும் ‘தடையில்லை; நீங்கள் போகலாம்." என்றனர்.’ அனைவரும் இங்ஙனம் அஞ்சி நடுங்கிப் பின்னிடச் செய்யும் இவ்விலங்குடன் இனி எப்படி வாழ்வது?’ என்று காத்ரீனுள்ளத்தில் சற்றுக் கவலை தோன்றிற்று.

புக்ககத்திற்குச் செல்லப் பெட்ரூக்கியோ ஏற்பாடு செய்திருந்த வண்டி கட்டை வண்டியிலும் கடைப்பட்ட தென்னல் வேண்டும். குதிரையோ திருவளத்தான் குதிரைபோல் மாதம் காதவழி போவது. வேண்டுமென்றே சதுப்பு நிலத்தினூடான வழியில் வண்டி செலுத்தப்பட்டது. அடிக்கடி பெட்ரூக்கியோ குதிரையையும், வண்டியையும், வண்டிக்காரனையும் வாயில் வந்தபடி திட்டினான். பெட்ரூக்கியோ தன்னிடம் எவ்வளவு நயமாக நடந்து கொண்டாலும் அஃதனைத்தும் வெளிநடிப்பு; அவன் பிறரிடம் நடந்து கொள்வதே இயல்பு என்ற எண்ணம் படிப்படியாகக் காதரீன் மனத்தில் ஏறிற்று.

புக்ககத்தில் மணமகளுக்கெனப் பலவகை உணவுகள் தருவிக்கப் பட்டன. ஆனால், மணமகள் அதைத்தொடுமுன் பெட்ரூக்கியோ அதை எடுத்துப் பார்த்து ஒவ்வொன்றிலும் குறை கண்டு பணியாட்கள் மீது சீறி அவ்வுணவை வீசியெறிந்தான். மணமக்களுக்கான படுக்கையைக் கொணர்ந்த போதும் இவ்வாறே தலையணைகள், மெத்தைகள், போர்வைகள் ஆகியவற்றின் மீதும் குறை கூறப்பட்டு அவை வீசியெறியப்பட்டன. காதரீன் தடங்கல் செய்யப்போன போதெல்லாம் பெட்ரூக்கியோ அவள் மீதுள்ள பெருங் காதலால்தான் இப்படிச் செய்வதாக நடித்து, “என் காதற் செல்வம் இவற்றைத் தின்பதா? என் கோலக்கிளி இவற்றிற் படுப்பதா” என்றிரைந்தான். இரண்டு மூன்று நாட்களாக மணப்பெண்ணுக்கு உணவில்லை; உறக்கமில்லை. விளையாட்டுக்கு, ‘வேண்டாம், வேண்டாம்’ என்ற திருமணம் இத்தகைய திரிமண மாகும் என்று அவள் எண்ணவேயில்லை. இடையிடையே அவன் சற்றுத் தாழ்ந்த வகை உணவைச் சித்திரமாகக் கையில் கொணர்ந்து, “இந் நாய்கள் உன்னைப் பட்டினி போடுகின்றனவே என்று என் கையால் கண் விழிப்பாகச் செய்து கொணர்ந்தேன்” என்றான். அதை அவள் வாங்க எண்ணுமளவில், “என் முயற்சி இப்படியா அருமையற்றுப் போகவேண்டும். தங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி என்று கூறாதவர்களுக்கு நான் உணவு தருவதில்லை” என்று அதனை எறிந்துவிடுவான். மேலும் மருவீடு செல்ல உடை வேண்டுமென்று தையல்காரரிடம் அவன் கூறியிருந்தான். அவர்கள் கொண்டுவந்த உடைகளக்கெல்லாம் அப்படியே குறைகூறி அவற்றைத் திருப்பி விட்டான் பெட்ரூக்கியோ, கடைசியில் உடைச் சிறப்பு இன்றியே மருவீடு செல்வதாக உறுதியாயிற்று.

நல்ல உச்சிவேளை, மணி ஒன்று இருக்கும். உச்சியுணவு நேரம் சென்றுவிட்டது. பெட்ரூக்கியோ மணிப் பொறியைக் கையிலெடுத்துப் பார்த்து, “இப்போது விடியற்காலந்தானே. இப்போது புறப்பட்டால் உச்சியுணவுக்கு வேட்டகம் சென்றுவிடலாம்” என்றான்.

“இப்போது உச்சி வேளையல்லவோ?” என்றாள் காதரீன்.

“அப்படியானால் நாளைச் செல்லலாம்” என்று பயணத்தை ஒத்தி போட்டுவிட்டான் பெட்ரூக்கியோ.

மறுநாள் மாலையில் திங்கள் எழும்நேரம். அதனைக் காட்டி அவன், “அதோ ஞாயிறு எழுந்தது. இப்போது புறப்பட்டால் உச்சிவேளை போய்ச் சேரலாமே” என்றான்.

காதரீன், “அது ஞாயிறா?” என்று கேட்டு நிறுத்திக் கொண்டாள்.

பெட்ரூக்கியோ, “சரி, சரி. அது ஞாயிறன்று போலும்! ஆகவே இன்றும் போகவேண்டாம்” என்றான். அவன் கூறுவதை அப்படியே ஏற்றால் தான் தன் விருப்பப்படி அவன் நடப்பான் என்ற குறிப்புப் படிப்படியாக அவள் மனத்திற் பட்டது. அடுத்த தடவை இரவு நேரத்தில், “இப்போது பகல் வேளை, புறப்படலாமா?” என்று அவன் கேட்டபோது அவள் “சரி அப்படியே” என்றான். மீட்டும் “இரவல்லவா” என்றவுடன், “ஆமாம் இரவுதான்” என்றாள்.

மறுநாள் வேட்டகம் செல்லும் வழியில் முன்னால் ஒரு கிழவன் சென்று கொண்டிருந்தான். புதிய பாடம் நன்றாக ஏறியிருக்கிறதா என்று பார்க்கப் பெட்ரூக்கியோ அவனைச் சுட்டிக்காட்டி, “இவ்விளநங்கை உனக்குச் சரியான தோழியாவாள். அவளை அழைப்பாயாக!” என்றான்.

காதரீன் சற்றும் முகம் கோணாமல் கிழவரை நோக்கி, “நங்கையே, நீ நகரம்தானே செல்கிறாய்? என் தோழியாக உடன் வருகிறாயா!” என்றாள்.

பெட்ரூக்கியோ உடனே, “ஏன் காதரீன், உனக்கு என்ன பித்தா! இவள் நங்கையல்லளே? முதிய கிழவரன்றோ?” என்றபோது அவளும் உடனே சொல் மாற்றி, “ஐயனே மன்னிக்க வேண்டும். வெய்யில் கொடுமையால் பார்வை தவறித் தங்கை நங்கை என்றழைத்துவிட்டேன். தாங்கள் நகரத்துக்குத் தானே செல்கிறீர்கள்?” என்றாள்.

அம்முதியவர் அவர்கள் புதுமையான பேச்சை இளமைக்குரிய நகையாடல் எனக்கொண்டு, புன்முறுவலுடன் அவர்களுடன் அளவளாவிப் பேசினார். அப்போது அவர் பயாங்காவைக் காதலித்த ¹லூஸெந்தியோவின் தந்தையான ²வின்ஸெந்தியோ எனத் தெரிந்தது. அன்றே பயாங்காவின் மணத்திற்காகக் குறிக்கப்பட்ட நாள் என்பதைப் பெட்ரூக்கியோ அவரிடம் கூறி அவரையும் இட்டுக்கொண்டு பப்படிஸ்டாவின் மாளிகையை அடைந்தான். பப்படிஸ்டா அவர்களை வரவேற்றுப் புதிய மணமக்களை வாழ்த்தும்படி கோரினான். பயாங்காவுடன் அவள் தோழியும் ³ஹார்ட் டென்ஸியோ என்பவருக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டாள்.

புதிய பெண்களிருவரும் காதரீனுடன் மாதர் பகுதியிலிருந்தனர். ஆடவர் வெளியில் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் லூஸெந்தியோவும் ஹார்ட் டென்ஸியோவும் தன்னை ஏளனம் செய்து ஒருவர்க்கொருவர் கண்டிப்பதையும் முகங்காட்டுவதையும் பெட்ரூக்கியோ கவனித்தும் கவனியாதவன் போலிருந்து வந்தான். பப்டிஸ்டா கூட இதில் ஓரளவு கலந்து கொண்டதுடன் சிறிதே கவலை தோன்றும் குரலில் பெட்ரூக்கியோவைப் பார்த்துக், ‘காதரீன் எப்படி நடந்து கொள்கிறாள்?’ என்றான்.

பெட்ரூக்கியோ: மணவினைக்குமுன் எல்லோரிடமும் நடந்து கொண்டபடியே என்னிடமும் நாகரிகமாகவும் அடக்க ஒடுக்கமாகவும் நடந்து கொள்கிறாள்.

பப்டிஸ்டா: இஃது என்ன, தாம் கூறுவது கேலிக்கூத்தா என்ன?

ஹார்ட்டென்ஸியோ: ஆம், வீட்டில் படுவதை வெளியே சொல்வானேன்.

லூஸெந்தியோ: ஏன் அவர் மனதைக் கிளறுகிறீர்கள்? எப்படியும் அவர் வந்து சிவபிரான் நஞ்சை உண்டதுபோல் காதரீனைக் கைக்கொண்டு செல்லாவிட்டால் நான் என் இன்னமுதாகிய பயாங்காவை மணப்பதெவ்வாறு? ஆகவே, பெட்ரூக்கியோ எனக்காக எடுத்துக்கொண்ட தன் மறுப்புக்கு நான் எத்தனையோ நன்றி செலுத்தவேண்டும்.

பெட்ரூக்கியோ: நீங்களெல்லாம் அன்னத்தை வாத்தாகவும் வாத்தை அன்னமாகவும் எண்ணிக் கொண்டிருக் கிறீர்கள். என் காதரீன் விண்மீன்களாகிய பிற பெண்களிடையே முழுநிலா வொப்பாள்.

லூஸெந்தியோ: அன்பரீர், தாங்கள் வாய்க்கோட்டை செயலுக்கு நில்லாது.

ஹார்ட்டென்ஸியோ: ஆம், நீர் கூறுவதில் பத்திலொரு பங்கு பணிவைக் காதரீனிடம் காண முடியாதென்று நான் இருபது வெள்ளிகள் பந்தயம் வைப்பேன்.

லூஸெந்தியோ: ஆம் நானும் இருபது வெள்ளிகள் பந்தயம் வைக்க இணங்குவேன்.

பெட்ரூக்கயோ: என் காதரீனுடைய குணப் பொலிவின் உறுதிக்கு நான் இருபதுக்கு இருபதின் மடங்கு வெள்ளிகள் தருகிறேன். எங்கே, ஒவ்வொருவரும் அவரவர் இல்லக்கிழத் தியரை வரவழையுங்கள். யார் குறிப்பறிந்து வருகின்றனர் என்று பார்ப்போம்.

லூஸெந்தியோவும் ஹார்ட்டென்ஸியோவும் அப்பொழுதே அந்நானூறு வெள்ளியும் தம்மிடம் வந்ததாக எண்ணிச் செருக்குடன் தத்தம் மனைவியரைப் பணியாளர் மூலம் அவர்களிடம் வரும்படி ஏவினர். முதலில் ஹார்ட்டென் ஸியோவின் வேலையாள் திரும்பி வந்து, “ஐயா! தலைவி வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறாளாம். பிறகு வருவதாகக் கூறியனுப்பினாள்” என்றான். ஹார்ட்டென்ஸி யோவின் முகம் சற்றுத் சுண்டிற்று. ஆனால், எப்படியும் பயாங்கா வருவாள்; பந்தயம் தோல்வியுறாமல் போகலாம், என்றெண்ணிக் கொண்டான்.

விரைவில் பயாங்காவினிடமிருந்தும் வேலையாள் தனியே மீண்டு வந்தான். பயாங்கா அவன் மூலம் “நான் இங்குத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அவர்களை இங்கேயே வரச் சொல்வது தானே” என்று கூறியனுப்பினாள். லூஸெந்தியோவும் ஹார்ட்டென்ஸியோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் பப்டிஸ்டா, “இன்னும் வராமலிருக்கும் மூன்றாவது மறுப்பு இவ்விரண்டையும் மறக்கச் செய்வதாயிருக்கும். இவை அவற்றிற்கு ஒரு பாயிரமட்டுந்தான்” என்றான்.

பப்டிஸ்டா வாய் மூடுமுன் காதரீன் புன்முறுவலுடன் முன்வந்து நின்றாள். கையில் அவள் தைத்துக் கொண்டிருந்த பூவேலையுடன் ஊசியும் நூலும் இருந்தன. தந்தைக்கு வணக்கஞ் செலுத்தியபின் ஊசி. நூல் முதலியவற்றை அங்கிருந்த படிப்பலகை ஒன்றில் வைத்துவிட்டுக் கணவனை நோக்கித் “தங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள்.

தாம் காண்பது கனவா, நனவா என மற்ற இரு காதற்கணவரும் பப்டிஸ்டாவும் விழித்தனர்.

பெட்ரூக்கியோ மீண்டும் அவள் உயர்வினைக் காட்டும் எண்ணத்துடன், “உன் தோழியர் எங்கே?” என்றான்.

காதரீன்: அவர்கள் சதுரங்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். நான் அவர்களுடன் பேசிக்கொண்டே பூவேலை செய்துகொண்டிருந்தேன்.

பெட்ரூக்கியோ: சரி, அவர்களை நாங்கள் அழைத்ததாகக் கூறாமலே இப்பக்கம் இட்டுக் கொண்டுவா.

காதரீன் ‘சரி’ என்று சென்று சில வினாடிகளுக்குள் வளையல்காரர் வந்திருப்பதாகக் கூறி மற்ற இருவரையும் அப்பக்கமாக அழைத்து வந்தாள். தங்கள் தங்கள் கணவரும் தந்தையும் இருப்பது கண்டு காதரீனை நோக்கி அவர்கள், “ஏன் எங்களை ஏய்த்து இப்புறம் கூட்டி வந்தாய். நீ கூறியது மாதிரி இங்கே வளையல்காரர் யாரும் காணோமே” என்றனர்.

“காசுக்கு வளையிலிடுபவர் இல்லைதான். காதலுக்கு வளையிலிடு பவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறிக் காதரீன் புன்முறுவல் பூத்து நகைத்தாள்.

லூஸெந்தியோவும் ஹார்ட்டென்ஸியோவும் வெட்கித் தலைகுனிந்து தம் பந்தயந்தர ஒத்துக் கொண்டனர். பப்டிஸ்டா புதிதாக இன்னொரு மகள் பிறந்து வளர்ந்து விட்டாலென்ன மகிழ்ச்சி கொண்டு அவள் பேருக்கும் அவளுக்குப் புத்துணர்வு தந்த கணவன் பேருக்கும் இன்னும் இருபதினாயிரம் வெள்ளி உடைமையாகத் தந்தான்.

விரைவில் காதரீன் தோழமையால் மற்ற இருபெண்டிரும் நயமும் நாகரிகமும் குறிப்பறியும் திறனும் பெற்று விளங்கினர்.

திராய்லஸும் கிரெஸிடாவும்

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  பிரியம்: திராய் அரசன்

2.  பாரிஸ்: ஹெலனைக் கவர்ந்து சென்றவன், பிரியமின் புதல்வன்.

3.  ஹெக்டார்: பிரியமின் புதல்வர்கள்

4.  டெய்ஃகோபஸ்: "

5.  ஹெலனஸ்: "

6.  திராய்லஸ்: திராஸிடாவின் காதலன்; பிரியமின் புதல்வன்.

7.  ஈனியாஸ்:

8.  அந்தெனர்: திராய் படைத்தலைவர்

9.  பண்டாரஸ்: கிரெஸிடாவின் மாமன்.

10. கால்கஸ்: திராயின் சமய குரு. கிரேக்கருக்கு உதவி செய்தவன்.

11. மெனிலாஸ்: ஹெலன் கணவன்.

12. அகமெம்னான்: கிரேக்கப் படையின் தனிமுதல் தலைவன், மெனிலாஸ் உடன் பிறந்தான்.

13. யுலிஸிஸ்: அறிவும் வீரமும் மிக்கவன். கிரேக்கப்படைத் தலைவன்.

14. அச்சிலிஸ்: ஒப்பற்ற வீரன், தற்புகழ்ச்சி விருப்புடையவன். கிரேக்கப் படைத்தலைவன்.

15. அஜாக்ஸ்: திராய்நகரத்துத் தாய்க்கும் கிரேக்கத் தந்தைக்கும் பிறந்த வீரன்; கிரேக்கப் படைத்தலைவன்.

16. நெஸ்டார்: கிரேக்க வீரன்.

17. தயோமிடிஸ்: கிரேஸிடா காதல் கவர்ந்தவன். கிரேக்க வீரன்.

18. பத்ரொக்ளிஸ்: கிரேக்க வீரன்.

19. தெர்ஸிடிஸ்: கிரேக்கக் கோமாளி, கிரேக்க வீரன்.

** பெண்டிர்:**
1.  ஹெலன்: ஒப்பற்ற கிரேக்க அழகி, மெனிலாஸ் மனiவி. பாரிஸால கவரப் பெற்றவள்.

2.  அந்த்ரோமக்கே: ஹெக்டார் மனைவி.

3.  கஸன்ட்ரா: பிரியம் மகள்; ஹெக்டார் தங்கை; தெய்வ வெறியால் பித்துக் கொண்டவளாகக் கருதப்பட்டவள்.

4.  பாலிக்ஸெனா: பிரியம் மகள்.

5.  கிரெஸீடா: கால்சஸ் மகள். திராய்லஸின் காதலி, தயோமிடிஸுடன் காதலுற வாடியவள்.

** கதைச் சுருக்கம்**
திராய் நகர் முற்றுகையின்போது கிரேக்கர் பக்கம் சென்று உதவிய சமயகுரு கால்சஸ் கிரேக்கர் பக்கம் சிறைப்பட்ட திராயின் படைத்தலைவன் அந்தெனருக்கு மாறாகத் தன் புதல்வியாகிய கிரெஸிடாவை திராய் நகரிலிருந்து மீட்டுக் கொண்டான். ஆனால், அதற்குள் அவர் தன் மாமன் பண்டாரஸின் உதவியால் திராய் அரசன் பிரியமின் இளைய புதல்வன் திராய்லஸ் காதலைப் பெற்றிருந்தாள்.

நகரிலிருந்து வெளியேறுகையில் அவள் அவனுடன் பிரியாவிடை பெற்றுக் கையுறை மாற்றிக்கொண்டாள்.

இருதிறத்தினிரிடையேயும் தற்காலிகமாக ஏற்பட்ட போர் நிறுத்த மொன்றைத் துணைகொண்டு திராய்லஸ் தன் உடன்பிறந்தானான ஹெக்டாருடன் கிரேக்கரின் விருந்தாளியாக வந்து மறைவிலிருந்து கிரெஸிடா தயோமிடிஸ் என்ற கிரேக்க வீரனுடன் உறவாடியதையும் தன் கையுறையை அவனுக்குக் கொடுப்பதையும் கண்டு சீற்றத்துடன் மறுநாள் போர்புரிந்தான்.

அப்படியும் அக்சிலிஸ் என்ற கிரேக்கத் தலைவன் சூதாஸ் ஹெக்டாரைக் கொன்றுவிடவே முற்றிலும் மனமுடைந்து திராய்லஸ் திராய்நகர் மீண்டான்.

¹கிரேக்க நாட்டிற் பிறந்த ²ஹெலன் என்ற இளவரசி கிரேக்கரிடையே மட்டுமன்றி அந்நாளைய உலகிலேயே ஒப்பற்ற அழகுடையவளாயிருந்தாள். அவளை ³மெனிலாஸ் என்ற கிரேக்க அரசன் மணம் செய்து கொண்டான். ஆனால், அவளை மணம்விட்டு வந்திருந்த பலருள் ⁴திராய் நகரின் அரசனாகிய ⁵பிரியமின் மூத்த புதல்வனான ⁶பாரிஸ் ஒருவன். அவன் அவளை மண வினையிற் பெறாததனால் புழுக்கமுற்று அவளை மெனிலாஸினிடமிருந்து வலிந்து கவர்ந்து கொண்டு தன் நாடு ஏகினான்.

இச்செயல் நேர்மையற்ற தென்றும் கிரேக்க மக்களுக்கு அவமதிப்பானது என்றும் எண்ணிக் கிரேக்க அரசர் அனைவரும் மெனிலாஸின் உடன் பிறந்தானான ⁷அகமெம்னான் தலைமையில் ஒன்று பட்டுப் பெரும்படையுடன் கப்பல்களிலேறி ஹெலனை மீட்கும் எண்ணத்துடன் திராய் நகரத்தை அடைந்து அதனை முற்றுகையிட்டனர். முற்றுகை பத்தாண்டளவும் நடந்தது. அதில் கிரேக்க இளைஞரும் திராய் இளைஞரும் பல்லாயிரக்கணக்கில் உயிர் துறந்தும் நெடுநாளாக இருபுறமும் தெளிவான வெற்றி ஏற்படாதிருந்தது.

கிரேக்கர் பக்கம் வெற்றி ஏற்படாதிருந்தன் காரணங்களுள் ஒன்று தலைவர்களிடையே ஒற்றுமையில்லாமை ஆகும். ஹெலனை இழந்தது பொதுவகையில் தங்கள் அவமதிப்பெனக் கிரேக்கர் பிறர் முன்னிலையில் வீம்புடன் கூறமுன்வரினும், தமக்குள்ளாக அடிக்கடி மெனிலாஸ் ஹெலனை வைத்துக்காப்பாற்ற முடியாத கோழையென்றும் மனைவியை இத்தனை பேர் மீட்கும்படி விட்ட கையாலாகாத பேர்வழி என்றும் குறைகூறி வந்தனர். அத்துடன் ⁸அச்சிலிஸ் முதலிய பெரு வீரர் எங்கும் புகழப் பெற்றதனால் உலகில் எல்லாம் தாமே என்று கருதி அவர்கள் தற்பெருமை கொண்டு செயலற்ற வராயிருந்து வந்தனர். போதாக் குறைக்கு அச்சிலிஸ் திராய் நகரத்துக்குத் தூதனாய்ச் சென்றிருக்கும்போது அங்கே பிரியமின் புதல்வியாகிய ¹பாலிக்ஸெனாவைக் கண்டு உள்ளூறக் காதல் கொண்டு அவள் அண்ணன் மாருடன் போரிட மனமின்றி ஒதுங்கி நின்றான்.

எதிர்ப்பக்கத்தில் திராய் நகரிலும் முழு ஒற்றுமை இல்லை. முதலில் பாரிஸ் ஹெலனைக் கவரச் செல்லும்போது அது வீரமிக்க துணிகரச் செயல் என்றும் கிரேக்கருக்கு எதிராகத்திராய் மக்கள் உயர்வை அது நிலைநிறுத்தும் என்றும் மனத்துட்கொண்டு பிரியமின் மற்றப் புதலவரான ²ஹெக்டார், ³டெய்ஃபோபஸ், ⁴ஹெலென்ஸ், ⁵திராய்லஸ் முதலிய எல்லாரும் அவனை ஆதரித்ததுடன் அதில் பெருமை கொள்ளவும் செய்தனர். ஆண்டுக்கு மேல் ஆண்டு முற்றுகை நீடித்து இளங்காளைகள் பலர் உயிர்நீத்து மங்கையர் பலர் நாணிழக்குந் தோறும் அவர்களிடையே ஒரு சிலர் இவ்வொரு பெண்ணிற்காக இத்தனைபேர் உயிர் இழப்பானேன்; அவளைத் திரும்பக் கிரேக்கரிடம் கொடுத்து விடுவதுதானே என்று எண்ணினர். இத்தகைய கோழை மதிகளுள் தலைமையானவன் இளவரசருள் சமய குருவாய்ச் சமைந்துநின்ற ஹெலெனஸ் என்பவள். இளவரசர்களுள் ஒப்பற்ற வீரனாகிய ஹெக்டரும் அவன்புறம் சாய்வதுண்டு. ஆனால், அவர்கள் எல்லாரிலும் இளைஞனும் அறிவிலும் ஆற்றலிலும் மிக்கவனுமான திராய்லஸ் பாரிஸ் பக்கம் நின்று ஹெலெஸைப் பழித்து ஹெக்டாரையும் பிறரையும் ஒறுத்து அத்தகைய கோழைத்தனம் வளராது பார்த்து வந்தான்.

கோழைத்தனத்தின் எல்லைக்கோடு தாண்டி நாட்டுப் பகைவனாகத் துணிந்த திராய் மகனும் ஒருவன் இருந்தான். அவனே சமயத் தலைவனாகிய ⁵கால்சஸ் பிரியம் குடியினர் தன் பேரவாவுக்கேற்ற உயர்வு தரவில்லை யென்று உள்ளூரப் புழுங்கிய அவன் எதிரியுடன் சேர்ந்து தன் நாட்டினரின் உள்ளுறை மறைவுகளையும் நொய்ம்மைப் பகுதிகளையும் எதிரிகளுக்கு எடுத்துக் கூறி அவர்களை அழிக்க எண்ணங் கொண்டான். ஆகவே, அவன் இரவோடிரவாக மதில் கடந்து கிரேக்கர் பாசறை சென்று அவர்களிடம் சரண்புகுந்தான். பேராவற்பேயால் தூண்டப்பெற்ற அவன் இங்ஙனம் ஒளிந்தோடும்போது தன் புதல்வியாகிய ⁶கிரெஸிடாவைத் திராய் நகரிலேயே விட்டு வந்ததை மறந்து விட்டான். ஆயினும் விரைவில் அவன் தன் தவற்றை உணர்ந்து அதனை எவ்வகையிலேனும் திருத்திவிட எண்ணினான்.

கால்சஸ் நாநயமும் சூழ்ச்சியும் மிக்கவன். கிரேக்கர் தலைவனாகிய அகமெம்னானோ இளகிய நெஞ்சமும் பெருமித உணர்ச்சியும் உடையவன். ஆகவே, கால்சஸிடம் அவன் பரிவுகொண்டு அவன் கோரியபடியே கிரெஸிடாவை அவள் தந்தையுடன் சேர்த்து வைக்க இணங்கினான். திராய் மக்களுள் சிறைப்பட்டவர் பலரை அவளுக்கிணையாக விடுவிப்பதாகக் கூறி அவன் திராய் நகருக்குத் தூதனுப்பியும் ஒன்றும் பயனில்லாது போயிற்று. கால்சஸிடம் கடும்பகைமை கொண்டுவிட்ட திராய் மக்களும் அவர்கள் தலைவரும் அவளை அனுப்ப மறுத்தனர். இறுதியில் திராய் அரசர் குடிக்கு நெருங்கிய உறவினனும் ஒப்பற்ற வீரனுமாகிய ¹அந்தெனர் கிரேக்கர் கைப்பட்டான். கால்சஸின் வற்புறுத்தலுக்கிணங்கி கிரேக்கர் அவனை விடுவிப்பதாகக் கூறி அவனுக்கிணையாகக் கிரெஸிடாவை அடைவதற்குத் திராய் மக்களிடமிருந்து இணக்கம் பெற்றனர்.

கால்சஸ் சென்றபின் கிரெஸிடா திராய் நகரில் தன் மாமன் ²பண்டாரஸின் பாதுகாப்பிலிருந்தாள். இளமையும் அழகும் மிக்க அவளைப் பெரிய இடத்தில் காதலால் பிணைத்து அதன்மூலம் பெருமையடைய எண்ணி அவன் அவளுக்கும் பிரியமின் இளைய புதல்வனான திராய்லஸுக்குமிடையே நட்புணர்ச்சி ஏற்படும்படி செய்து நாளடைவில் ஒருவரை ஒருவர் மாறாக் காதல் கொள்ளுவித்தான். இளைஞனான திராய்லஸ் அக்காதல் வெள்ளத்தில் தலைக்குப்புற வீழ்ந்து தத்தளித்தான். கிரெஸிடாவோ உள்ளூர அவன்மீது காதல் கொள்ளினும் அதனை வெளிக் காட்டினால் அவன் தன்னை எளிதில் பெற்றுப் பின் தன்னை அவ்வளவாக மதிக்கமாட்டான் என்றெண்ணி அவனைத் தொலைவில் விலக்க வைத்துக் காதலற்றவள் போல் நடித்தாள். திராய்லஸ் அவளையே எண்ணிப் போரில் முழு முயற்சியற்றிருந்தான். அவன் தன் நிலைமையை அண்ணனாகிய பாரிஸினிடம் கூறி அவன்மூலம் போரினின்றும் ஒருநாள் முற்றிலும் விலகிநிற்க இணக்கம் பெற்றான். பெற்று அந்நாளில் பண்டாரஸ்மூலம் பெரு முயற்சி செய்து அவள் வீட்டைந்து தோட்டத்தில் அவளைக் கண்ணுற்றான். அவனுடன் நெருங்கி ஊடாடு ம்போது கிரெஸிடாவின் பயிர்ப்பு காற்றெனப் பறந்தோடிற்று. அன்றிரவே அவர்கள் காதற்கனா நனவாயிற்று. அதுவரை காதலின் அழைப்பிற்குக் கதவடைது இராநேரங்களை ஊழிகளாகக் கழித்த கிரெஸிடா அன்று அஃது ஓர் இமைப்பொழுதெனக் கழிந்ததாக உணர்ந்தாள்.

ஆனால், பொழுது விடிவதுடன் அவர்கள் காதற் கனவுக்கும் விடியற் காலமாயிற்று. கிரேக்ர் தலைவனான அகமெம்னானின் தூதனாகிய ³தயோமிடிஸ் அந்தெனருடன் புறப்பட்டுத் திராய்நகர் வந்து கிரெஸிடாவைக் கோரினான். பாரிஸ் கிரெஸிடாவினைத் தன் தம்பி காதல்கொண்டு அன்றிரவு கூட அவளுடனேயே இருந்தான் என்பதை அறிவான். இப்பிரிவால் திராய்லஸ் மிகவும் மனநோவான் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் வேறுவகையின்றி அவன் பண்டாரஸ் வீட்டிற்கு வந்து திராய்லஸைத் தனியே அழைத்துக் கொண்டுபோய் விவரமனைத்தும் அவனிடம் கூறிப்பின் அவனைத் தேற்ற முயன்றான். அதே சமயம் பண்டாரஸும் இச்செய்தி அறிந்த கிரெஸிடாவிடம் அவள் கிரேக்கர் படைவீடு செல்லவேண்டும் என்பதைக் கூறியபின் அவளைத் தேற்றலானான்.

திராய்லஸுக்கும் கிரெஸிடாவுக்கும் ஒருவருக்கொருவர் ஆர அமர விடை பெறுவதற்குக்கூட நேரமில்லாதிருந்தது. ஆயினும், பாரிஸின் உதவியாலும் பண்டாரஸின் ஏற்பாட்டி னாலும் சற்றே அவர்கள் தனித்து நின்று ஒருவர் உள்ளத்தின் துயரை ஒருவர் உள்ளத்தில் கொட்டிக் கொள்ளலாயினர். கிரெஸிடா மீண்டும் மீண்டும், “திராய்லஸ், நான் போய்த்தான் தீர வேண்டுமா? போய் நான் என்செய்வேன்?” என்பாள். திராய்லஸ், “கண்ணே! போகாது வழி வேறு என்ன இருக்கிறது? போய்த்தான் ஆகவேண்டும்,” என்று அவள் முகத்துடன் தன் முகத்தையும் சேர்த்து இருவர் கண்ணீரையும் ஒருங்கே ஒழுக்குவான். இறுதியில் அவன், “எப்படியும் காதல் உடற்பிரிவைக் கடந்து நிற்கும். நீ மட்டும் உறுதி தவறா திருப்பின் நான் வேறெல்லாத் தடைகளையும் கடந்து உன்னை வந்து காண்பேன்,” என்றான். அச்சொல்லில் கண்ட ஐய உணர்ச்சிக்கு வருந்தி அவள் பின்னும் அழுதாள். ஆனால் திராய்லஸ், “நான் உன்னிடம் ஐயங்கொள்ளவில்லை. கிரேக்க இளைஞர் கலை நலம் நல்லவர்; நாநயமும் நடைநயமும் உடையவர். அதன் கவர்ச்சி வலையில் அறியாப் பெண்ணாகிய நீ விழுந்துவிடக் கூடாதே என்று எச்சரித்தேன்,” என்றான். அவள் தனக்குத் திராய்லஸ் அன்றி வேறு எக்கவர்ச்சியுமில்லை என்று கையடித்துக் கூறினாள். இறுதியில் மாறா உறுதியுடன் அவர்கள் ஒருவர்க்கொருவர் நினைவூட்டாகத் தம் கையுறைகளை மாற்றிக் கொண்டனர்.

தயோமிடிஸினிடம் அவளை ஒப்படைக்கையில் திராய்லஸ் அவனிடம் அவளை நன்கு நடத்துமாறு கோரினான். “அங்ஙனம் நடத்தினால் நீ எதிரியாயினும் உன்பால் நான் நல்லுணர்ச்சியுடையவனாய் உற்றிடத்து உதவுவேன்,” என்றான். தயோமிடிஸ் சட்டென, “அழகுமிக்க இந்நங்கையை அவள் அழகுக்காகக் கவனிப்பது உறுதி. உன் நல்லுணர்ச்சி எனக்கு வேண்டாம்,”என்றான். திராய்லஸ் மணம் புண்பட்டது. ஆனால், கிரெஸிடா தயோமிடிஸ் பக்கம் நோக்க அவன் உடனே தன் நடையை முற்றிலும் மாற்றித் திராய்லஸிடம் பசப்பி மன்னிப்புக் கோரினான்.

கிரெஸிடா கிரேக்கர் பக்கம் செல்வதற்கு முந்தின நாள் திராயின் ஒப்பற்ற வீரனாகிய ஹெக்டரைப் போரில் ²அஜாக்ஸ் என்ற வீரன் தாக்கினான். இதற்கு முன் யாரும் தன் முன்வரத் தயங்குவதறிந்த ஹெக்டார் சீற்றத்துடன் அவன்மேற் பாய்ந்தான். ஆனால், அஜாக்ஸ் எளிதில் விட்டுக் கொடுக் காதிருந்ததுடன் ஹெக்டரைப் பின்னடையும்படி மிகவும் திறம்படப் போர் தொடுத்தான். அதற்குள் பொழுதிருட்டி விட்டதால் ஹெக்டார் மீண்டும் செல்லவேண்டி வந்தது. பல நாள் பொருததன் பயனாய் ஏற்பட்ட தன் புகழ் ஒருநாளில் மங்குவதற்கிடமாயிற்றே என்று அவன் மறுநாள் விடிந்ததே தன் முரசு வீரனை அழைத்து “கிரேக்க வீரர் முன்சென்று ஹெக்டார் தன் தாய் நாடே ஒப்பற்றதெனப் பறை சாற்றி அதனை மறுப்பவரை அறைகூவிப் போருக்கழைக்கின்றான். ‘கிரேக்கரிடையே ஆடவர் உண்டென்றால் வந்து போரிடுக’ என்று பறைசாற்று,” என்றான்.

இப்போர்முரசங் கேட்டதே அகமெம்மனான் மிக மிக விரைவில் போரவை கூட்டினான். அதில் வீர வாழ்விலும் அறிவு நிறைவிலும் முதிர்ந்த நரை மலிந்த வீரனாகிய ³நெஸ்டாரும் ஒப்பற்ற மெய்யறிவாளனும் மற்போர் வீரனுமாகிய யுலிஸிஸும் பிற வீரரும் வந்திருந்தனர். ஆனால், கிரேக்கர் தம் புகழுக்கே உயிரெனப் போற்றிய அச்சலிஸும் அஜாக்ஸும் அங்கே வரவில்லை. நெஸ்டார் கிரேக்க தலைவனாகிய அகமெம்னானுக்கு அவர்கள் தற் பெருமையையும் குறுகிய தன்னலத்தையும் எடுத்துரைத்தான். யுலிஸிஸ் எழுந்து, “அவர்கள் தற்பெருமை மட்டிலும் அன்று; அறிவின்மையிலும் ஒப்புயர் வேண்டுமாயின் அவர்களை ஒருவர் மீதொருவர் அழுக்காறு கொள்ளும்படி செய்யவேண்டும்,” என்று கூறி அதற்கான வழிகளையும் தலைவனிடம் கூறினான்.

அதன்படி அகமெம்னான் அச்சிலிஸிற்கு அழைப்பு விடுத்தான். அவன் வராமற்போகவே அவையுடன் அகமெம்னான் அவனிடம் சென்றான். அப்போதும்கூட அவன் தன் நண்பனான 4பட்ரோக்ஸிஸினிடம் தான் நோயுற்றிருப்பதாகக் கூறியனுப்பி விட்டான். அதன்பின் யுலிஸிஸ் முன்வட்டி ஏற்பாடு செய்தபடியே அனைவரும் அஜாக்ஸினிடம் சென்று அச்சிலிஸ் அவன்மீது பொறாமை கொண்டிருப்பதாகவும், ஹெக்டார் அவன் ஒருவனையே அஞ்சுவதாய்க் கூறியதாகவும் கூறினார்கள். எதிர் பார்த்தபடியே அஜாக்ஸ் வீம்படித்துக் கொண்டு, “அச்சிலிஸ் அச்சங் கொண்டு பின்னடைகிறான் பார்! நானே சென்று ஹெக்டாரின் கொட்டம் அடக்குகிறேன்,” என்று புறப்பட்டான். எல்லாரும் அவனைச் சூழ்ந்து புகழுரைமாலையணிவித்ததுடன் அச்சிலிஸைப் புறக்கணிப்பாகப் பேசவும் நடத்தவும் தொடங்கினர். அதுகேட்டு அச்சிலிஸும் மனம் புழுங்கினான். அச்சமயம் பார்த்து யுலிஸிஸ் அவனிடம் சென்று நயமாக, “நீயும் போரிலீடுபட்டால்தான் புகழ் பெறுவாய்,” என்று கூறினான்.

மறுநாள் ஹெக்டாரும் அஜாக்ஸும் இருதரப்பு வீரர் அணிவகுப்பி னிடையே கைகலந்தனர். ஆனால், முதல் நாள் அஜாக்ஸினிடம் சீற்றங் கொண்ட ஹெக்டாருக்கு அவனுடன் போர் செய்ய இப்போது விருப்பம் இல்லை. ஏனெனில், அவன் முற்றிலும் கிரேக்க வீரனல்லனென்றும், அவன் தன் தந்தையின் உடன் பிறந்தானை மணந்த கிரேக்க வீரனின் புதல்வனாதலால் அவன் ஒருவகையில் தன் மைத்துனனும் பாதி திராய்மகனும் ஆவான் என்றும் அவன் அன்றே அறிந்தான். அதாடு தன் தோள்வலியுடன் போட்டியிடும் அவன் திறங்கண்டு இப்போது அவன் சீற்றமனைத்தும் அவன் தன் உறவினன் என்ற முறையில் பெருமையாகவும் பாராட்டாகவும் மாறின. ஆகவே, போர் நடுவில் யாவரும் வியக்கும்படி அவன் போரை நிறுத்தும்படி கட்டளையிட்டு அவனை மனமாரப் புகழ்ந்து நட்புறவாடினான். அஜாக்ஜும் அதனை ஏற்றதுடன் இப்புதிய உறவுக்கு அறிகுறியாக இருபுறத் தலைவருடனும் பேசிப் போர் நிறுத்தஞ் செய்து பின் அவனைத் தன் விருந்தினனாகத் தன் பாசறை மாளிகைக்கு வரும்படி அழைத்தான். இருபுறத் தலைவரும் அதனை ஏற்றனர்.

கிரேக்கர் பாசறைப்பக்கமே தன் உயிரை நாடவிட்டு வெற்றுடலுடன் திராய்க் கோட்டைக்குள் அடங்காது துடித்த திராய்லஸ் தன் காதற்கிளியைச் சென்று காண இந்நிகழ்ச்சியை அரியதொரு வாய்ப்பாகக் கொண்டு, ஹெக்டாருடன் கிரேக்கர் பாசறைக்கு வந்து, அவ்விருந்திற் கலந்து கொண்டான். நேற்றுவரை பகைவராயிருந்து இனிநாளையும் பகைவராகவே இருக்கப்போகும் அவர்களிடம் வீரரது பெருமிதம் தோன்ற வீரத்தினும் நற்குணத்திற்குப் பெரிதும் பேர்போன பெருந்தகையாகிய அகமெம்னானும் பிற கிரேக்க வீரரும் நன்மதிப்புடனும் பெருந்தன்மையுடனும் கலந்து விருந் தாற்றினர். அதனிடையே துயரே உருவில் வந்ததுபோல் வந்திருந்த திராய்லஸினிடம் யுலிஸிஸ் பரிவும் அன்பும் கொண்டான். திராய்லஸும் அவனிடம் தனிமையில் தன் கால்சஸ் வீட்டில் அவன் புதல்வியைக் காண விரும்புவதாகக் கூறினான்.

யுலிஸிஸுக்குத் திராய்லஸுக்கும் கிரெஸிடாவுக்கும் இடையே உள்ள உறவு தெரியவராது. சூழ்ச்சி வயப்பட்ட கீழ்மகனான கால்சஸின் புதல்விக்கும் உலகின் ஒப்பற்ற அரசமரபில் தோன்றிய அவ்விளவலுக்கும் மிகநெருங்கிய நட்பு இருக்க இடமில்லை ன்று அவன் கருதியது இயல்பே. எனவே, திராய்லஸிடம் அவன் அவள் ஓர் இளமை உணர்ச்சி மீறிய நங்கை என்றும், பெண்களுக் காரணாகிய நாற்குண வரம்பும் அற்றவள் என்றும், தான் எண்ணியதை அவனிடம் கூறினான். அதை அவன் நம்பவில்லை என்று கண்டதும் தயொமிடிஸிடம் அவள் தக்க காதல் கொண்டு நடிப்பதைக் காட்டுகிறேன் என்று கூறினான். காதல் வன்மை ஒருபுறம், காதலிமீது கூறும் பழியை நேரில் சென்று கண்டு உண்மையறியும் ஆர்வம் ஒருபுறம் அவனைப் பிடித்து வாட்டின.

அன்றிரவு நெடுநேரம்வரை விருந்தயர்ந்தபின் ஹெக்டாரும் திராய் வீரரும் விடைகொண்டு தம் நகர்க்கோட்டையை நாடிச் சென்றனர். அவர்களை வழியனுப்பச் சென்றவர்களுள் தயோமிடிஸும் ஒருவன். திராய் வீரர் அப்பால் அகன்றபின் அவன் பிறருடன் திரும்பாமல் ஒருபுறமாக ஒதுங்கிப் பதுங்கி நின்று பின் தனியாயிருப்பதாக எண்ணிச் சீழ்க்கையடித்துத் தாழ்ந்த குரலில் பாடியவனாய்க் கால்சஸ் குடிசைப் பக்கம் திரும்பனிhன். அவனைப் பின்பற்றி ஒளிந்து கொண்டே திராய்லஸும் யுலிஸிஸும் சென்றனர்.

தயோமிடிஸ் கால்சஸைக் கண்டு, “உம் புதல்வி எங்கே?” என்று உரிமையுடன் வினவியதையும், அவன், “அவள் உன்னையே எதிர்பார்த்துத் தன் அறையின் பலகணியில் காத்திருக்கிறாள்,” என்று கூறியதையும், தன்னிடம் உறுதி கூறிய கிரெஸிடா அவ்விளைஞனுடன் கூசாது நள்ளிரவில் பேசிப் பிணங்கி யதையும் கண்டு திராய்லஸ் அங்கமுற்றும் வெம்பிக் கொதித்தான். யுலிஸிஸின் பொறுப்பை உன்ன அருமுயற்சியுடன் தன்னை யடக்கிக் கொண்டு கனவிலும் காண எண்ணியிராத காட்சிகளை அவன் கண்டான். தயோமிடிஸ் ஏதோ ஒன்றை அவளிடம் வற்புறுத்திக் கேட்பதையும், அவள் அதனைக் கொடுக்க மறுத்தும் அவன் பிணங்கி வெளிச் செல்வதாகக் கூறவே, அவள் அவனை நாடியைத் தாங்கி அழைத்து வந்து தருவதாகக் கூறுவதையும் பலதடவை இவ்வண்ணம் அகச்சான்றுடன் போராடிக் காதலன் வயப்பட்டு இறுதியில் அதனை அவள் கொடுத்ததையும் திராய்லஸ் கண்டான். அங்ஙனம் உள்ளத்தி னின்று பறித்தெடுத்துக் கொடுப்பதுபோல் அவள் கொடுத்தது தன் காதல் நினைவூட்டாகிய கையுறையே யென்றறிந்ததும் அவன் பித்துக் கொண்டவன் போலானான். வேறு செய்வகையறியாமல் யுலிஸினிடம் “என் உயிரைக் கவர்ந்த இக்கயவனை நாளையே போரில் வீழ்த்துகிறேன்” என்று சூளுரைத்து அகன்றான்.

திராய்லஸின் இக்காதல் நாடகம் முடிவுற்று. அவன் திராய்க்கு மீளுமுன் போர்நிறுத்தக் காலம் முடிவுற்றது. ஹெக்டர் அஜாக்ஸினிடம் கோழைமையினால் விட்டுக் கொடுத்தான் என்ற அலர்தூற்றலுக் காளாகப் படாதென்று எண்ணி விடியுமுன்னமே அரியேறென முழங்கிக்கொண்டு போரில் முனைந்தான். முந்தின நாள்வரை கிரெஸிடாவை எண்ணிப் போரில் ஒதுங்கி நின்ற திராய்லஸும் கட்டுத்தறியை உடைத்துப் பாய்ந்து முன்வரும் மதயானைபோல் அவனுடன் நின்று போர் செய்யலானான். அவ்விருவர் முன்னும் கிரேக்கப்படைகள் வடவைத்தீமுன் கவறும் கடல் நீர்போல் கவறிக் கொதித்தெழுந்து ஒதுங்கின. அகமெம்னான் யுலிஸிஸ்; நெஸ்டார் முதலிய தலைவர்களுடன் தன்னாலான மட்டும் அவர்களைத் தடைந்து ஊக்க முயன்றும் முடியாது போகவே, அஜாக்ஸினிடமும் அச்சிலிஸினிடமும் சென்று, “நீங்கள் தாம் கிரேக்கர் பெயரைக் காக்க வேண்டும்,” என்றான். முந்தின நாள் விருந்தின்போது ஹெக்டார் அச்சிலிஸைக் கிளறிச் சினமூட்டி அவனைப் போருக்கு இழுத்திருந்தான். ஆகவே எப்படியும் அன்ற ஹெக்டாரை முடிப்பது என்று அச்சிலிஸ் துணிந்து புறப்பட்டான். அஜாக்ஸும் எப்படியும் திராய்லஸை ஒருவகை பார்த்து விடுவது என்று முனைந்தான். திராய்லஸும் தயோமிடிஸைத் தாக்கிக் கொன்று பழிதீர்க்க எண்ணினான்.

ஹெக்டார் போருக்கஞ்சாதவன்; அதோடு போரில் நேர்மையும் அருளும் உடையவன். போரில் பகைவர் கைப்படையற்றுப் போனால் அவன் அச்சமயத்தில் அவர்களை அழியாது போகவிடுவான். சூழ்ச்சிமிக்க பகைவரிடையே இத்தகைய நடைமுறை சாயானதன்று என்று திராய்லஸ் அவனுக்கு அடிக்கடி கூறுவான். தீக்கோளின் பாற்பட்ட ஹெக்டர் மனம் அதனை ஏற்காது அறவே மறுத்தது. அதோடு அறு அவன் புறப்படும்போதே அவன் மனைவி அன்ட்ரோமக்கே தீக்கனாக்கள் கண்டு அன்று போரிடப் போகவேண்டாம் என்று தடைசெய்தாள். சற்றுப் பித்தும் தெய்வ வெறியும் கொண்ட அவன் தங்கை ¹கஸன்ட்ரா, “இன்று நீ போரில் அழிவாய்; போகாதே,” என்று கூவினாள். ஆனால் நெருப்பைச் சுடாதே என்றால் அவை கேட்குமா? ஹெக்டார் அவற்றையெல்லாம் மீறி வென்று போருக்கெழுந்தான்.

ஹெக்டார் திராய்லஸுடன் நின்றிருந்தபோது ஒரு வீரன் வந்து அஜாக்ஸ் ²ஈனியாஸைக் கைப்பற்றிச் செல்கின்றான் என்றான். தன் படைத் தலைவருட் சிறந்தவனான அவனை மீட்கும்படி திராய்லஸ் அஜாக்ஸைத் துரத்திக்கொண்டு சென்றான். இதற்குள் பகட்டான கவசமணிந்த கிரேக்க வீரனொருவன் ஹெக்டர் பக்கம் வந்து அவனைச் சற்றே எதிர்த்துவிட்டு ஒதுங்கி ஓடினான். ஹெக்டார் அவனைப் பின்பற்றிச் சென்றான். பொழுதடையும் வரை படைகளிருந்த இடத்திலிருந்து பெருந்தொலை ஓடி அவன் சட்டென நின்று எதிர்த்தான். ஹெக்டார் சிறிதுநேரம் சண்டையிட்டு அவனை நிலத்தில் வீழ்த்தினான்.

பொழுதுமாயிற்று; பகைவரும் இல்லையென்ற எண்ணத்தால் ஹெக்டார் கைப்படைகளை எறிந்து, கவசத்தையும், சுழற்றிவிட்டு இளைப்பாறினான். நேரில் அவனை வெல்ல அரிது என்றெண்ணியிருந்த அச்சிலிஸ் பல வீரரைப் படைகளுடன் முன்கூட்டி ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டு ஒளிந்தொளிந்து பின்னாலேயே வந்து கொண்டிருந் தான். படையும் கவசமும் நீத்து அவன் கிடந்தது கண்டதுமே அனைவரும் சென்று அவனை வெட்டி வீழ்த்தினர். ஒருவரும் உண்மை நிகழ்ச்சியை யாரிடமும் கூறவேண்டா என்று விலக்கிவிட்டு, ‘அச்சிலிஸ் வாழ்க! ஹெக்டாரின் வீழ்க!’ என்று கூக்குரலில்படி செய்தான். ஹெக்டாரின் வீர உடலையும் அவன் பலவகையில் ஊறுபடுத்தி அவனுடலைத் தன் குதிரை வாலில் கட்டி இழுத்துக்கொண்டு கிரேக்கர் பாசறை வந்து சேர்ந்தான்.

ஹெக்டாரின் முடிவு கேட்டுத் திராய்லஸ் கதி கலங்கினான். களப் போரில் தோற்றனர் திராய் மக்கள்; அதோடு தன் வகையில் உளப் போரிலும் வாழ்க்கைப் போரிலும் தோல்வியே கிட்டின என்பதை அவன் உணர்ந்தான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது அவனுக்கு மலைவைத் தந்தது இன்னொரு பெருங்கவலை. ஆண்டு முதிர்ந்த பிரியமிடம் போய், ‘நீயிருக்க உன் உயிர் போயிற்று; உன் உயிரனைய புதல்வன் இறந்தான்’ என யாரே கூறத்துணிவர்! அன்ட் ரோமக்கேயிடம் அவள் பெண்ணரசாட்சி ஒய்ந்தது என்று கூறி அவள் வீறிட்டலறி மடிவதைக் காண யார் அவள்முன் செல்வர்! தெய்வவெறி கொண்ட கஸன்ட்ரா இடியேறுண்டழியும் நாகம் போல் அழிவதை யாரே கண்கொண்டு காணப்பொறுப்பர் என்பதே அக்கவலை.

அவன் காதல் கனவுகளை அழித்தது காதல் முறிவாகிய புயல். அப்புயலை விழுங்கியது அவனுடைய ஒப்பற்ற அண்ணன் அழிவாகிய ஆற்றொணாத் துயரம். ஆனால் தந்தை, தாய், அண்ணியார், தங்கை ஆகியவர் துயராகிய பாலைவெஞ் சூறையில் அவன் கனவுகளும் அதைத் தொடர்ந்த புயல்களும் அதனைப் பின்பற்றி வந்த துயரமும் எல்லாம் பறந்தன. அவன் திராய்லஸின் எலும்புக் கூடாக, திராய் நகரின் அழிவுக் குறியாகச் செயலற்று உணர்வு நீத்துக் கவிழ்ந்த முகத்துடன் திராய் நகரினை நோக்கி மீண்டான்.

டைட்டஸ் அன்ட்ரானிக்கஸ்

** கதை உறுப்பினர்**
** ஆடவர்:**
1.  காலஞ்சென்ற ரோமப் பேரரசன்: சாட்டர்னினஸ், பஸ்ஸியானஸ் ஆகியவர்களின் தந்தை.

2.  சாட்டர்னினஸ்: ரோமப் பேரரசன் மூத்த புதல்வன்; பஸ்ஸியானஸ் அண்ணன்; டைட்டஸால் பேரரசனாக முடி சூட்டப்பட்டவன்; டமோராவை மணந்தவன்.

3.  பஸ்ஸியானஸ்: ரோமப் பேரரசனின் இளைய புதல்வன்; சாட்டர் புனினஸிளன் தம்பி டைட்டஸ் புதல்வி லவீனியாவின் காதற் கணவன்.

4.  மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ்: டைட்டஸ் அண்ணன்; ரோமப் பொதுமக்கள் தலைவர்களுள் ஒருவன்.

5.  டைட்டல் அன்ட்ரானிக்கஸ்: ரோமப் படைத்தலைவன் பொது மக்களின் செல்வாக்குப் பெற்ற முடிசூடா மன்னன்; 25 புதல்வரைப் பெற்று நாட்டுக்குப் பறிகொடுத்த உயர் வீரன்.

6.  மியூட்டியஸ்: லவீனியாவைக் காத்துத் தந்தையாகிய டைட்டஸ் கைவாளால் மடிந்த புதல்வன்.

7.  குவின்டஸ்: டைட்டஸ் புதல்வர் 25 பேருள் முன்பே போர்களில் இறந்த 20 பேரும் காத்தியர் போரில் இறந்த ஒருவனும் போக மியூட்டியஸ் உட்ப மீந்த 4 புதல்வர்கள்.

8.  மார்ட்டியஸ்: "

9.  லூஸியஸ்: "

10. அலார் பஸ்: டைட்டஸின் இறந்த புதல்வனுடன் காவு கொடுக்கக் கொலை செய்யப்பட்டவனான டமோராவின் மூத்த புதல்வன்.

11. சிரான்: லவீனியா விடம் தகாக் காதல் கொண்டு அவளைச் சிதைத்தவர்கள்; டமோராவின் புதல்வர்கள்.

12. டெமெட்ரியஸ்: "

13. ஏரான்: கருநிற அடிமை: டமோராவின் திருட்டுக் காதலன்.

14. இளைஞன் லூஸியஸ்: லூஸியஸ் புதல்வன்; டைட்டஸ் பேரன்.

** பெண்டிர்:**
1.  டமோரா: காத்தியர் அரசி; டைட்டஸிடம் சிறைப்பட்டவள்; சாட்டர்னிஸை மணந்தவள்; ஏரானின் திருட்டுக் காதலி; அலார்பஸ், சிரான், டெமெட்ரியஸ் ஆகியவர்களின் தாய்.

2.  லவீனியா: டைட்டஸ் புதல்வி - பஸ்ஸியானஸைக் காதலித்து மணந்தவள்.

** கதைச் சுருக்கம்**
ரோமப் பேரரசன் இறந்ததும் அரசுரிமைக்காக அவன் மைந்தரான சாட்டர்னினஸும் பஸ்ஸியானஸும் போரில் முனைவதைத் தடுத்துப் பொது மக்கள் தலைவரான மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் முதலியோர் தாய்நாட்டுப் போர்களில் 20 மக்களை இழந்து இன்னும் ஒரு மகனைக் காத்தயருடன் செய்த போரில் இழந்து, மீந்த 4 புதல்வருடன் மீண்டு வந்த வெற்றி வீரனும் மார்க்கஸின் உடன் பிறந்தவனுமாகிய டைட்டஸ் அன்ட்ரானிக்கஸை அரசனாகும்படி கூறினர். டைட்டஸ் பெருந்தன்மையுடன் அதனைச் சாட்டர்னினஸுக்குந் தந்தான்.

போரில் சிறைப்பிடித்த காத்தியர் அரசி டமோராவின் மூத்த புதல்வன் அலார்பஸ் பலியிடப்பட்டு டைட்டஸின் இறந்த புதல்வனுடன் எரிக்கப் பட்டான். சாட்டர்னினஸ் டைட்டஸ் புதல்வி லவீனியாவை மணக்க விரும்பி டைட்டஸ் இணக்கம் பெற்றும் அவள் இணங்காது தான் காதலித்த பஸ்ஸியானஸை மணந்தாள். டைட்டஸின் புதல்வர் அவளைக் காத்து நிற்க, அவர்களுள் இளையோனான மியூட்டியஸ் அச்செயலில் தந்தையால் வெட்டப் பட்டான். டைட்டஸிடம் மகன் உயிருக்குப் பழிவாங்க எண்ணிய டமோரா லவீனியாவால் புறக்கணிக்கப் பட்ட ஸாட்டர்னினஸை மணந்து தன் திருட்டுக் காதலன் பிள்ளைகளுடனும் சூழ்ச்ச செய்து பஸ்ஸியானஸைக் கொன்று லவீனியாவின் பெண்மை யழித்துக் கைகளையும் நாவையும் வெட்டிச் சிதைக்கச் செய்து, அதோடு பஸ்ஸியானஸ் கொலைக்கு டைட்டஸின் மற்றப் புதல்வர்களுள் குவின்டஸையும் மார்ட்டியஸையும் பொறுப்புடையவரென நிலைநாட்டி அவர்களைக் கொலை செய்தாள். அவர்கள் உயிரைத் தருவதாகப் பொய் நடிப்புக் காட்டி அத்தீயர்கள் டைட்டஸ் கையையும் வெட்டும்படி செய்தனர்.

டைட்டஸின் கடைசிப் புதல்வன் லூஸியஸ் உடன் பிறந்தார் பக்கம் பேசியதற்காக நாடு கடத்தப்பட்டுக் காத்தியர் துணைபெற்று ரோம்மீது படையெடுத்தான். டைட்டஸ் பித்தனாகியும் பழிமறவாது ‘காளி’ உருவில் தன்னை ஏமாற்ற வந்த டமோராவை ஏமாற்றி அவள் பிள்ளைகளையே கறியாக்கி அவளை உண்ணச் செய்து பின் சாட்டர்னினஸ் முன்னிலையில் அவளைக் கொன்றான். சாட்டர்னினஸ் வெகுண்டு டைட்டஸைக் கொல்ல, லூஸியஸ் டமோராவைக் கொன்று ரோம் மக்களுக்கு "டைட்டஸின் துயர்க் கதையின் உண்மை முற்றிலும் விளக்கி அவர்கள் அரசானான்.

¹ரோமப் பேரரசை நெடுநாள் அமைதியாக ஆண்டு வந்த பேரரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் ²சாட்டர்னினஸ், ³பஸ்ஸியானஸ் என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தனர். ரோமப் பேரரசர் வழக்கப்படியே அவ்விரு- வரும் பேரரசின் மாவட்டங்களாய் அமைந்திருந்த தொலைவு நாடுகளிரண்டில் அரசியல் தலைவர்களாய் அமர்த்தப்பட்டிருந்தனர். அவ்விருவரும் தந்தை இறந்தவுடன் தாம் அரசாட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தத்தம் கட்சியை வலுப்படுத்த முயன்றிருந்தனர். எனவே திடுமெனப் பேரரசன் இறந்ததும் இருவரும் தத்தம் படைகளுடன் அரசாட்சியைக் கைக்கொள்ளுமாறு ரோம் நகரை நோக்கி வந்தனர்.

நகரின் ஒரு வாயில் வழியாக சாட்டர்னினஸும் அவன் ஆட்களும், இன்னொரு வாயில் வழியாக பஸ்ஸியானஸும் அவன் ஆட்களும் உட்புகுந்தனர். ரோம் நகரின் வரலாற்றில் முன் பல தடவைகள் நடந்தது போலவே இப்போதும் அரசுரிமைக்காகப் பெரிய உள்நாட்டுப் போர் எழுமோ என்று மக்கள் மனங்கலங்கினர். அச்சமயம் பொதுமக்கள் அவையின் தலைவருள் ஒருவனாகிய ⁴மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் என்பவன் பெருமக்கள் தலைமையில் அவர்களை வரவேற்று அவர்கள் இருவரிடமும், “நாட்டுக்குப் பேரரசனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெருமக்களையும் பொது மக்களையுமே சேர்ந்தது; படையுடன் நகருக்குள் நுழைந்து அதனை வலிந்து கொள்ளுதல் முறையன்று. ஆதலால் இருவரும் ரோம் நாட்டின் நன்மக்கள் என்ற முறையில் படைகளைக் கலைத்துவிட்டுப் பொதுமக்கள் முடிவு கோரி அதன்படி நடப்பீராக,” என்று கூறினான்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்நேர்மையான கோரிக்கையை மறுப்பதனால் நகரின் பகைமை ஏற்பட்டுத் தம் உரிமைக்கு முற்றிலும் எதிர்ப்பு நேர்ந்து விடுமாகையால் இருவரும் அதனை ஏற்றுத் தத்தம் படைகளைக் கலைத்துவிட்டனர். அரசியல் தொலை நோக்குடைய மக்கள் தலைவராகிய மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸும் பிறரும் அதன்பின்னும் அவர்கள் இருவருள் ஒருவரை ஏற்க விரும்பவில்லை. ஏனெனில் எப்படியும் ஒருவரை ஏற்பதன் மூலம் மற்றவர் பகைமையும் அவர்கள் சார்பிலுள்ள மக்கள் மனவேறு பாட்டால் கட்சிப் பூசலும் விளைந்தே தீரும். ஆகவே, இருவரையும் ஏற்காது பொதுமக்களாக இன்னொரு வனையே தேர்ந்தெடுப்பது என அவர்கள் முடிவு செய்திருந்தனர் அதன்படி மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸின் உடன் பிறந்தானான ¹டைட்டஸ் அன்ட்ரானிக்கஸைப் பேரரசனாக்குவதென்று அவர்கள் துணிந்தனர்.

பெருமக்களேயன்றிப் பொதுமக்களும் இம் முடிவை மனமார வரவேற்றனர். ஏனெனில் டைட்டஸ் அன்ட்ரானிக்கஸ் வழிவழியாகப் பெரும்போர் வீரர் மரபில் தோன்றியவன் பல போர்களில் அவன் உயிரைப் புல்லென மதித்து இடுக்கண்களை அவாவுடன் வரவேற்று நகரின் பகைவர்களை முறியடித்து வந்திருந்தான். அவன் புகழுடலையும் பிற உடலின் முதுகுப் புறத்தையும் தவிரப், போரில் காயம்படாத வேறு இடமே கிடையாது என்னலாம். அதுமட்டுமன்று; அவனுடைய புதல்வர் இருபத்தைந்து பேருள் இருபதின்மர் ரோமர் முன்னைய போர்களில் அவனுடன் நின்று பொருது மாண்டு அவனது மாண்புகழைப் பன்மடங்காக்கியிருந்தனர். அவனது கடைசிப் போரிலும் ரோமின் பழம் பகைவராகிய ²காத்தியரை வென்று அவன் வெற்றிமாலையுடன் அப்போதே திரும்பி வந்து கொண்டிருந்தான்.

உடன்பிறப்புரிமையைக்கூடப் பாராமல் ஒருவரை ஒருவர் பேரரசுப் பெரும்பேராவலை முன்னிட்டு அழிக்கத் துணிந்த சார்ட்டர்னினஸும் பொது மக்கள் உள்ளார்வத்தைக் கொள்ளை கொண்ட இவ்வொப்பற்ற தலைவன் பெயர் கேட்டதே அவனைப் பேரரசனாக்குவதென்ற முடிவை எதிர்க்கத் துணியாமல் ஏற்பதாகக் காட்டிக்கொண்டு வெற்றி முழக்குடன் தாய் நாட்டுக்கு மீண்டுவரும் அவனை வரவேற்பவர்களுடன் தாமும் கலந்து கொண்டனர்.

டைட்டஸ் இந்தத் தடவை அடைந்த வெற்றியும் சிறு வெற்றியன்று. போர்க்களத்தில் அழிந்தவர்களும் போர் வீரர்களின் சூறையாட்டுக்காளாய் அழிந்தவர்களும் போக, ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பட்டுக் கைவிலங்குகளுடன் அவன் தேரின்பின் அணியணியாகக் கொண்டுவரப்பட்டனர். அவர்களுடனாகச் சிறைப்பட்ட அவர்கள் அரசியாகிய ³டமோராவும் அவள் பிள்ளையாகிய ⁴அலார்பஸும், ⁵சிரானும், ⁶டெமெட்ரியஸும் டைட்டஸின் தேர்க்காலில் கட்டப் பட்டுத் தலையிறக்கத்துடன் ரோம்நகர்த் தெருக்கள் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். காத்தியரிடம் கொள்ளைகொண்ட பொன்னும் மணியும் சுமந்து பல்லாயிரம் காத்தியப் பெண்கள் பின்வந்தனர். ரோமின் பொதுமக்கள் கண்ணில் இத்தனையையும்விட உயர்வான ஒரு பொருள் டைட்டஸின் முன்னாலேயே கொண்டு செல்லப்பட்டது. அஃது அவன் மைந்தருள் மீந்திருந்த ஐவருள்ளும் அப்போரில் உயிர் துறந்த இன்னொரு புதல்வன் உடலமே. அதனை விலைமதிப்பேறிய பெட்டி ஒன்றில் வைத்து அப்புதல்வனின் உடன் பிறந்தாராகிய மற்ற நான்கு புதல்வர்கள் தள்ளிக் கொண்டு வந்தனர்.

நகரெங்கும், “டைட்டஸ் வாழ்க! அன்ட்ரானிக்கஸ் அருங்குடி வாழ்க!” என்ற முழக்கங்கள் வானைப் பிளந்தன. நகரமன்றில் பொது மக்கள் நாற்புறமும் வளைந்து கல்லென்றொலி பரப்பப், பெருமக்களிடையே மக்களின் தலைவர்கள், மார்க்கஸ் அன்ரானிக்ஸுடன் நின்று, டைட்டஸையும் அவன் மாண்ட மைந்தனையும் மாண்தகுவாகைசூடிய மைந்தரையும் வரவேற்று, “எந்தாய் வருக! எம் தந்தையின் மைந்தர் வருக! எம் நாட்டன்னைக் குகந்தாய் வருக!” எனப் பாராட்டினர். டைட்டஸும் அவர்கள் முன் தன் மைந்தன் உடலையும் தன்வெற்றிக் கறிகுறியாகிய சிறைப்பட்ட பகைவர்களையும் அவர்கள் செல்வத்தையும் வைத்துச் “சிறியேன் பணியை என் தாய்நாடு ஏற்றருள்க! மைந்தர்கள் இருபதின்மரை இதுகாறும் தாய்நாட்டிற்குத் தந்து இப்போதும் ஒரு மகனை நாட்டுப் பணியில் இழந்த நான் என் நாட்டன்னையின் வாழ்த்தையும் நாட்டுப் பெரியோராகிய உங்கள் வாழ்த்தையும் இம்முதிய நிலையில் என் பரிசாகக் கொள்ள விரும்பினேன்,” என்றான்.

மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸும் பிற தலைவரும் முன்வந்து அவனை முறை முறை தழுவித், “தாய் நாட்டின் ஒப்பற்ற மைந்தனே! இந்நாட்டின் மொழி களங்கமற்ற நிலவுங்காறும் உன் பெயர் நிலவுவதாக! உன் ஒப்பற்ற தன் மறுப்புக்களை அன்னை உவப்புடன் ஏற்றாள்,” என்றனர்.

டைட்டஸ்: அன்னை மனமுவத்தல் என் அருந்தவப் பேறேயாகும். இனி என் மாண்ட மைந்தன் சார்பில் யான் செய்யவேண்டும் கோரிக்கை ஒன்று உள்ளது.

தலைவர்: டைட்டஸ் விருப்பத்திற்கு மாறுண்டோ? கூறுக.

டைட்டஸ்: பகைவர் கைப்பட்டிறந்த என் மைந்தன் உயிர் அமைதி பெறும் வண்ணம் பகைவரிற் சிறந்த ஒருவனை ரோமர் சமய வினைப்படி பலி கொடுத்து வழிபாடு செய்ய இணங்கும்படி வேண்டுகிறேன்.

தலைவர்: அப்படியே செய்யலாம். யாரைப் பலிகொடுக் விரும்புகின்றாய்?

டைட்டஸ்: ஐயன்மீர்! யான் சிறைபிடித்துக்கொண்டு வந்திருக்கும் காத்திய அரசியின் செல்வர்களுள் மூத்தவனான அலார்பஸே அதற்குத் தக்கவன். அவனை என் மைந்தர்களுடன் அனுப்ப வேண்டுகிறேன்.

தலைவர்கள் டைட்டஸ் வேண்டுகோளுக் கிணங்கினார்கள். ஆனால் அவர்களுடன் நின்றிருந்த காத்திய அரசி டமோரா டைட்டஸ் காலில் விழுந்து மன்றாடி, “ஒப்பற்ற வெற்றி வீரனே! குழந்தையிழந்த உன் உள்ளம் என் துன்பத்தைச் சற்று எண்ணிப் பார்க்கட்டும். நாடிழந்து, விடுதலையிழந்து, ரோம் மக்கள் கண்காட்சிப் பொருளாக வந்து நிற்கும் என்னுடைய தாய்மை உணர்ச்சியையாவது காப்பாற்றுங்கள்,” என்றாள்.

ரோமிற்காக எத்தகைய தன் மறுப்பையும் தயங்காது செய்யும் அப்பெருந்தகை உள்ளம் அவளைப் பற்றிய மட்டில் சற்றும் இரங்கவில்லை! “உனக்கென்ன தெரியும் ரோமர் பழக்கவழக்கங்கள்! இவ்வேற்பாடு எங்கள் சமயவினைகளைச் சார்ந்தது; விலக்க முடியாதது. மேலும் அடிமைகளாகப் பிறர் பொருளாய்ப் போனவர்களுக்குத் தாய் ஏது? பிள்ளை ஏது? அலார்பஸ் இப்போது எங்கள் கைப்பொருள்; நீ யார் கேட்பதற்கு?” என்று கூறி அவளை அகற்றிவிட்டுத் தன் மைந்தர்களை வெறியாடலுக்கு அனுப்பினான்.

சிறிது நேரத்தில் அவன் மகன், அலார்பஸின் குருதி தோய்ந்த கையுடன் வந்து, “இறைவர்க்கு மன நிறைவு ஏற்பட்டுவிட்டது. அண்ணன் உடலமும் அலார்பஸின் குருதியுடனும் குடலுடனும் குதித்தாடிக் கொந்தளிப்புடன் எரிந்தது,” என்றான்.

ஒரு குடும்பத்தின் அடிவயிறு பற்றி எரியும்படி ஒரு குடும்பம் இறை வழிபாடு நடத்திற்று.

வணங்காமுடி மன்னன் மரபில் வந்த டமோரா உள்ளூர உறுமிப் பொருமினள். அருகில் நின்றிருந்த அவள் மக்கள் பொங்கி எழலாயினர். ஆனால், அவள், “மைந்தர்களே, பொறுங்கள; ஆனைக்கொரு காலம் வரின், பூனைக்கும் ஒரு காலம்வரும். என்னைப் போரில் வென்றதையும் மக்கள் கண்காட்சியாக்கியதையும் நான் பொருட்படுத்தவில்லை. தாய் காண என் பிள்ளையைப் படுகொலை செய்த இக்கொடுமைக்குப் பழி வாங்குவேன்.”காத்தியர் பகைவருக்குப் பகைவர் கொடியவர்க்குக் கொடியவர் என்பதைக் காட்டுவேன்!" என்று அவள் வஞ்சினம் கூறினாள்.

இறந்துபோன மகன் இறுதிக்கடனாற்றி டைட்டஸும் தலைவரும் மீட்டும் மக்கட் பொதுமன்றத்திற்கு வந்தபின் தலைவர்கள் டைட்டஸ் அன்ரானிக்ஸை நோக்கி, “நாட்டு மக்களும் பெருமக்களும் உன் பணியை மெச்சித் தலைவனற்று மயங்கும் இந்நாட்டின் அரசுரிமையை உனக்கே தர முடிவு செய்தனர்; அதனைப் பெற்றருள்க,” என்றார்கள்.

டைட்டஸ்: ஐயன்மீர்! தங்கள் நன்மொழிகளும் பாராட்டுமே என் ஒப்பற்ற பேறு. அத்துடன் அமையாது. பேரரசின் பெரும் பொறுப்பை முதுமை வாய்ந்த என் தோள்களில் சுமத்தலாமா? யான் அதற்கு உரியவன் அல்லேன்.

தலைவர்கள்: உன்னையே தகுதியுடையவனென்று ரோம் கருதுகிறது. எனவே, இஃது உன் பொறுப்பே ஆகும்.

டைட்டஸ்: அப்படியாயின் நான் அதனை என் மனப்படி உரியவர் என நான் நினைப்பவர்க்குக் கொடுத்தலாகுமன்றோ?

இக்கேள்வி தலைவர்களுக்கு வியப்பையும் இறும்பூதையும் கலக்கத்தையும் தந்தது. ஸாட்டர்னிஸும் பஸ்ஸியானஸும் இதுவே தறுவாய் என முன்வந்து டைட்டஸ் முன் நின்று தனித்தனி, “எனக்கே இப்பொறுப்பு உரியது. எனக்கு அளிப்பீராக,” என்று கூறினர்.

சற்றும் தயக்கமின்றி டைட்டஸ், “பேரரசனின் முதற் புதல்வன் என்ற முறையில் ஸாட்டர்னினஸே பேரரசனாதற்கு உரிமை உடையவன் என்று நான் கருதுகிறேன். அரசுரிமையுடன் நாட்டின் பேரால் நான் அடைந்த வெற்றியையும் அவருக்கே உரிமையாக்குகிறேன்,” என்று கூறி ஸாட்டர்னினஸை அரசிருக்கைக்கிட்டுச் சென்று மணிமுடியையும் செங்கோலையும் அவனுக்குத் தந்தான். பின் காத்தியரிடமிருந்து திறைகொண்ட பொருள்களை அவன் முன்வைத்து, “ரோமப் பேரரசர்க்கு வெற்றி உண்டாவதாக! இச் செல்வத்தையும் அதற்குரியவராய் இப்போது சிறைப்பட்டிருக்கும் இக்காத்தியரையும் அவர்கள் தலைவியாகிய அரசி டமோராவையும் உங்கள் பொருளாக உங்களிடம் ஒப்புவிக்கிறேன்,” என்றான்.

உள்ளூர அரிய நடிப்புத்திறமும் சூழ்ச்சியும் உடையவளாய், டைட்டஸை அழிக்கும் வகைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த டமோரா டைட்டஸின் பெருந் தன்மையையும் அதனால் ஏற்றபடவிருக்கும் மாறுதலையும் உய்த்துணர்ந்தாள். ஆகவே, டைட்டஸ் தன்னை ஸாட்டர்னினஸுக்கு உரிமையாக்கியவுடன் அதனையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள்போல் நடித்து அவள் சட்டென விரைந்து அவன் பக்கமாகச் சென்று, வணங்கி அடிமையாக நில்லாமல் அடிமைகொள்ள வந்த ‘மோகினி’ போல் நாணிக்கோணி நின்றாள். அதோடு இதுவரை மேற்கொண்டிருந்த துயரத் தோற்றத்தையும், ஊக்கமின்மையையும் விடுவித்துத் தன் மைந்தர்களைப் பிடித்து ஸாட்டர்னினஸின் முன்விட்டு, “மகிழ்ச்சியுடன் நானும் என் சிறுவர்களும் தங்கள் ஆதரவை ஏற்கிறோம்,” என்றாள்.

ஸாட்டர்னினஸ் நான் நன்கொடையாகப் பெற்ற அரசுரிமையை டைட்டஸின் நட்பை வலியுறுத்துவதன் மூலம் முற்றிலும் தனதாக்க எண்ணினான். எண்ணி அவன் டைட்டஸை நோக்கி, “ரோம் நகரின் செல்வமனைய சீராள! உம் நாட்டுப்பற்றையும் பெருந்தன்மையையும் பாராட்டாதவரில்லை. அரசுரிமையைப் பெற்ற யான் தம்மிடம் இன்னும் சற்று உயர்ந்த உரிமை ஒன்றைக்கோர விரும்புகிறேன். தங்கள் அன்புரிமை இருந்தால் அதனையும் அடைய எண்ணுகிறேன்,” என்றான்.

டைட்டஸ்: நானும் என் பொருள்கள் யாவும் கேட்கு முன்னமோ தங்களுடையன தங்கள் விருப்பமே என் நற்பேறு எனக் கொள்வேன்.

ஸாட்டர்னினஸ்: தாம் தந்த அரசுரிமையையும் மணிமுடியையும் என்னுடன் பங்கு கொள்ளும்படி தங்கள் புதல்வி 1லவீனியாவை நான் துணைவியாகக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் கருத்து எதுவோ?

டைட்டஸ்: “எனக்கு அதனினும் பெருமை யாது? இதோ அவளை வரவழைக்கிறேன்,” என்று கூறி அவளையும் தன் மைந்தர்களையும் அழைத்து இச்செய்தியை அவர்களிடம் கூறினான். ஆனால், லவீனியா இதுகேட்டு மகிழ்வதற்கு மாறாகத் திடுக்கிட்டுத் தந்தையை வணங்கி நின்று, “தந்தையே! என்னாலியன்ற வரையில் தங்கள் ஆணையை நான் மதிக்கக் கடமைப் பட்டவளே. பேரரசரும் என் வணக்கத்திற்குரியவர். ஆனால், என் இதயம் முன்பே பஸ்ஸியானஸின் உடைமையாகப் போய்விட்டது. தங்கள் விருப்பப்படி நடக்க இயலாமைக்கு மன்னிக்கக் கோருகிறேன்,” என்றாள்.

அச்சமயம் பஸ்ஸியானஸும் முன்வந்து அவள் கையைப்பற்றி, “இது வரை என் மனமொத்த துணையாய் இருந்தாய்;த இனிமனமொத்த துணைவியாகக் கொள்வேன்,” என்று கூறி அவளை அழைத்து அப்பாற் சென்றான். காவலர் தடுக்கப்புகும் அளவில், டைட்டஸின் புதல்வர்கள் வாளையுருவி அவ்விருவரையும் காவல் செய்து அவர்கள் வெளிச்செல்ல உதவினர். மைந்தர்களுள் அனைவரிலும் இளையவனான ²மியூட்டியஸ் அவர்கள் வெளிச் செல்லும் வாயிலில் வழிமறித்து நின்றான். அவர்களை எதிர்த்துத் தன் புதிய அரசுரிமைக்கு இழுக்கு வருவிக்க வேண்டாமென எண்ணி ஸாட்டரினினஸ் டமோரா பக்கம் திரும்பி, “வா, நாம்போவோம்” என்று கூறி வேறு வாயில் வழியாக அவளை உடன் அழைத்துக் கொண்டு சென்றான்.

தோல்வி மனப்பான்மையும் ஏமாற்றமும் நிறைந்த ஸாட்டர்னினஸ் பக்கமாக டமோரா கடைக்கண்ணோக்கம் செய்து, “தம் காதலைப் பெறத் தவம் கிடக்க வேண்டும். அவளுக்கு அது கொடுத்து வைக்கவில்லை!” என்றாள்.

அவள் குறிப்பிற்கிசைய அரசன் மனம் அவள் பால் எளிதில் வளைந்தது. விரைவில் அரசன் உள்ளத்தையும் அவனைச் சார்ந்த உள்ளங்களையும் கவர்ச்சி செய்து டமோரா ரோமப் பேரரசியாயமர்ந்தாள்.

அரசன் இவ்வாறிருப்ப, டைட்டஸ் தன்னையும் தன் மன்னனையும் அவமதித்து எதிர்த்த தன் மகள் மீதும், அவள் காதலன்மீதும், தன் மைந்தர்கள் மீதும் பொங்கியெழும் சினத்துடன் அவர்களைப் பின் தொடரும் எண்ணங் கொண்டு வாளுடன் புறப்பட்டான். அவனுடைய கடைசிக் கான்முளையாகிய மியூட்டியஸ், “ஐய! தந்தையாயினும் இப்போது என் தமக்கை உரிமையைக் காத்து நிற்கும் என்னைக் கடந்து செல்ல முடியாது,” என்றான்.

குடிப்பற்றினும் நாட்டுப்பற்றே மிக்க டைட்டஸ் பிள்ளையென்றும் பாராமல் அவனை வெட்டிச் சாய்த்தான். இஃதறிந்த மற்றப் பிள்ளைகளும் லவீனியாவும் பஸ்ஸியானஸும் வந்து கண்கலங்கி அழுது பின் அவனுடலைக் குடும்ப எரிமாடத்துக்குக் கொண்டு செல்ல முயன்றனர். டைட்டஸ் பின்னும் சினமமையாது, “தெறுதலையாகிய இவன் என் மகனல்லன். என் குடிப்பிறந்த உயர் வீரருடன் இவனுடலை அடக்கம் செய்ய இடந்தரேன்,” என்று மறுத்தான். பிள்ளைகளும் மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸும் வந்து பலவகையிலும் அவன் சீற்றந்தணிந்து இறுதிக் கடனாற்றினர்.

இயற்கையிலேயே நன்றியற்றவனான ஸாட்டர்னினஸ் தன்னை அவமதித்த ஆணவமிக்க அன்ரானிக்கிஸ் குடியினரையும் பொதுமக்கள் மனங்கவர்ந்த டைட்டஸையும் ஒழித்தாலன்றித் தன் ஆட்சி பெருமையுறாது எண்றெண்ணி அவர்களை அழிக்க முற்பட்டான். டமோரா இவ்வகையில் அவனைப் பலவகையிலும் ஊக்கியே வந்தனளாயினும் ரோம் மக்கள் கண்களில் பொடி தூவுவதற்காக டைட்டஸின் பக்கமே பேசுவது போல் நடித்தும், அரசன் ஆத்திரத்தில் பகைவரை நேரடியாக எதிர்க்காதபடி தடுத்தும் வந்தாள். டைட்டஸ் அன்ட்ரானிக்கஸின் பெருந்தன்மையும் எளிமையும் அவள் சூழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்தவையாயிருந்தன. அவன் அவள் சொல்லைப் பின்பற்றி ஸாட்டர்னினஸ் உண்மையிலேயே தன் நட்பை ஏற்றுக் கொண்டானென்றெண்ணி அவன் பணியில் முன்போல் அமர்ந்தான்.

டமோரா ரோமப் பேரரசைக் கைவசப்படுத்தி ரோமிடமும் டைட்டஸ் குடியினரிடமும் பழிவாங்கும் எண்ணத்துடனேயே ஸாட்டர்னினஸைத் தான் காதலித்தாகப் பாசாங்க செய்தாள். உண்மையில் அவள் காதலித்தது ¹ஏரான் என்ற ஒரு கருநிற அடிமையையே ஆகும். தன் மைந்தர்கள் கூட இக்காதலை அறியாதபடி அவனை அவள் வெளிப்பார்வைக்குத் தன் அமைச்சனாகவும் அரண்மனை மேற்பார்வையாளனாகவும் அமர்த்தி வந்திருந்தாள். ரோமில் அவனுடன் கலந்துறவாட அவளுக்கு நேரிடவில்லை யாதலால் அரசனுடன் வேட்டையாட விரும்புபவள் போல நடித்துக் காட்டிற்குச் சென்று அங்கே ஏரான் முன் கூட்டிக்கொண்டு வைத்திருந்த குகையில் தங்கிப் பிறர் வேட்டையாடச் சென்ற நேரத்தைத் தனியே அங்கே கழித்து வருவது வழக்கம். ஸாட்டர்னினஸின் போலி நட்பில் நம்பிக்கை வைத்த டைட்டஸும் அவன் மக்களும் இவ்வேட்டைகளில் கலந்து அரசனுக்கும் அரசிக்கும் உதவி வந்தனர்.

கீழ்மகளாகிய டமோராவின் பிள்ளைகளான சிரானும் டெமெட்ரியஸும் ரோம் நகரின் நாகரிக வாழ்வுடன் தொடர்புபட்டும் தம் கீழ்மையையும் கீழ்க் குணங்களையும் விடவில்லை. பெண்ணின் பெருமை, பெண்மையின் பெருமை ஆகியவற்றில் அவர்கட்கு நம்பிக்கை இல்லை. தாம் விரும்பிய பெண்களை வலிந்து கொள்வதையும், அதற்காக உடன் பிறந்தார் உறவினர் என்று பாராமல் கொலைகள் புரிவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டவர்கள். எட்டாக் கனிக்குக் கொட்டாவி விட்ட முடவரென இருவரும் லவீனியாவை அடைய எண்ணி அதற்காக அரண்மனையிலேயே ஒருவருடன் ஒருவர் வாய்ச்சண்டை தொடங்கி, அது முற்றவே, கைச் சண்டையிலும் குத்துச் சண்டையிலும் இறங்கினர். இதனால் எங்கே டமோராவின் பொய் நடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்றஞ்சிய ஏரான் அவர்களுக்கு இன்னும் கீழ்த்தரமான சூழ்ச்சி ஒன்றைக் கற்பித்து அவர்களை விலக்கினான். அச்சூழ்ச்சியாவது டமோராவுடன் கலந்து அவள் ஒத்துழைப்புடன் பஸ்ஸியானஸைக் காட்டில் வைத்துக்கொன்று லவீனியாவை இருவருமே தம் விருப்பத்திற்கிணங்க வைத்ததன் பின் அவள் அதுபற்றிப் பிறரிடம் எதுவும் அறிவியாமலிருக்கும்படி அவள் கைகளையும் நாவையும் வெட்டிவிட வேண்டு மென்பதே. டமோராவும் இச்சூழ்ச்சிக் கிணங்கவே அனைவரும் மறுநாள் வேட்டையாடச் சென்றனர்.

டமோராவின் சூழ்ச்சியால் அரசனும் டைட்டஸும் வேடரால் நெடுந் தொலைப்பாற் கொண்டு செல்லப்பட்டனர். பஸ்ஸியானஸும் லவீனியாவையும் மலைவளம் காட்டுவதாகச் சொல்லி ஏரான் குறிப்பிட்டிருந்த இடத்துக்குச் சிரானும், டெமெட்ரியஸும் கூட்டிவந்தனர். அவர்களை அவ்வளவு விரைவில் எதிர்பாராத டமோரா அச்சமின்றி ஏரானுடன் அளவளாவிப் பேசியிருந்தாள். அவள் நடத்தை கண்டு அனைவருக்கும் வெறுப்பே ஏற்பட்டதாயினும் சிரானும் டெமெட்ரியஸும் தன் சூழ்ச்சியின் முடிவையே பெரிதாய் எண்ணி வாளா இருந்தனர். ஆனால், பஸ்ஸியானஸும், லவீனியாவும் அவளை வைது அரசனிடமே அவள் பொய் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறிவிடுவதாக அச்சுறுத்தினர். அத்துடன் அவர்களனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்ஸியானஸ் மீது பாய்ந்து அவனைக் கொலை செய்து பக்கத்திலிருந்த புலித்தூறொன்றில் தள்ளினர். அதன்பின் முன் திட்டப்படுத்தியபடியே டமோரா முன்னாலேயே அவள் மக்களிருவரும் லவீனியாவை வலிந்திழுத்துச் சென்றனர். தன்னை விடுவியா விடினும கொன்றாவது போடும்படி டமோராவை அவள் கெஞ்சிக் கூத்தாடியும் பயனில்லாது போயிற்று. அவள் அவர்களின் அரக்கப்பிடிக்கு இரையாகிய பின் அவர்கள் இரக்கமின்றி அவள் நாவை அறுத்துப் பின் பிறர்க்கு அச்செய்தியை எழுதியும் தெரியாவண்ணம் அவள் இருகைகளையும் வெட்டிவிட்டனர். அவளும் உணர்ச்சியிழந்து ஒரு பாறையில் கிடந்துருண்டாள். அந்நிலையிலேயே அவள் விலங்குகளுக்கு இரையாயிருக்கக் கூடும். அவள் விரும்பியதும் அதுவே. உயிரினும் அரிய பெண்மையிழந்தும் உயிர் வாழவோ மாந்தர் கண்களில் படவோ அவள் விரும்பவில்லை. ஆயினும், மானம் பின் தள்ளப் பழியுணர்ச்சி முன்தள்ள மெல்ல எழுந்து நடக்கலுற்ற அவளை அவ்வழி வந்த மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் கண்ணுற்ற அவள் நிலைமையைப் படிப்படியாயுணர்ந்து அழலாயுருகி அவளை டைட்டஸிடம் இட்டுச் சென்றான்.

இதற்குள் இன்னொரு புறம் டைட்டஸின் மக்களான ¹குவின்டஸையும் ²மார்ட்டியஸையும் ஏரான் வேட்டுவரை எல்லாம் ஏமாற்றிக் காயத்துடன் ஒளிந்திருக்கும் ஒரு புலியைக் காட்டுவதாகக் கூறி அழைத்து வந்து பஸ்ஸியினாஸ் விழுந்து கிடக்கும் குழியண்டை கொணர்ந்தான். அப்போது அரையிருட் டாகையால் அவ்வடர்ந்த புதர்களுக்கிடையில், ஏரான் நழுவிவிட்டான். மார்ட்டியஸ் புதர்மூடிய அக்குழியில் சறுக்கி விழுந்து அங்கே புலிக்கு மாறாகத் தன் அரிய மைத்துனனே காயமுற்று விழுந்து கிடப்பது கண்டு அங்கம் பதைத்தான். அதன்பின் வெளியேற வழியெதுவு மில்லாதிருப்பது கண்டு அவன் குவிண்டஸைக் கூவியழைத்தான். ஆனால், ஆழ்ந்த அக்குழியைக் கண்டுபிடித்தும் அவனைக் குவிண்டஸால் எடுத்து விட முடியவில்லை. வேறு வழியின்றிக் குனிந்து அவனை இழுக்க முயன்ற போது அவனும் உள்ளே விழுந்தான்.

இது முழுவதும் ஒன்றி நின்று கவனித்துக் கொண்டிருந்த ஏரான் இதுவே சமயமென்று அரசனையும் பிறரையும் அவ்விடங் கொணர்ந்தான். டமோராவின் உதவியால் இதற்கு முன்னமே அவர்கள் பெயரால் பொய்க் கையெழுத்திட்டு ஏரான் ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதில் அவர்கள் பஸ்ஸியானஸைக் கொன்று அவன் காட்டில் ஒளித்து வைத்திருக்கும் பொருளை எடுப்பதற்குச் சூழ்ச்சி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தது. ஏரான் சூழ்ச்சியால் அக்கடிதம் டைட்டஸ் கண்ணிற்படும்படி போடப்பட்டது. சூதறியாத டைட்டஸ் அதனை அரசனுக்குக் காட்ட அரசன் அதிற்கூறிய இடத்தில் சென்று ஏரான் முன்னேற்பாடாக ஒளித்து வைத்திருந்த பொன்னைக் கண்டுபிடித்து அதன் மூலம் அக்கடிதம் உண்மையானதே என்று உறுதி கொண்டான்.

பின் அரசன் ஏரானுடன் சென்று பஸ்ஸிhனஸ் காயம்பட்டு இறந்து கிடந்த உடலையும் அதனுடன் இருந்த குவின்டஸையும் மார்ட்டியஸையும் காணவே அவர்களே கொலைஞர்கள் எனக்கொண்டு நகருக்கு அவர்களைக் கொண்டுசென்று அவர்களுக்குக் கொலை தீர்ப்பளிக்க ஏற்பாடு செய்தான். தன் பிள்ளைகளுக்காக டைட்டஸ் கல்லும் கரைய அவர்கள் முன் குறையிரந்து நின்றான். அவன் பக்கம் செவிகொடாது அரசனும் அரசியும் நகரமக்களுடன் கொலை மன்றம் சென்றனர். டைட்டஸின் கடைசிப் பிள்ளையாகிய ¹லூஸியஸ் தன் உடன்பிறந்தாருக்காகப் பேச முன்வந்த குற்றத்திற்காக நாடு கடத்தப் பட்டான். அப்போதும் டைட்டஸின் பழி கண்டு ஆறாத டமோரா பின்னும் அவனைத் துன்புறுத்த எண்ணி அவன் கை ஒன்றைத் தருவதாயின் அவன் மக்களைக் கொல்லாது விடுவதாகக் கூறினாள். இதற்குள் லவீனியாவுடன் மார்க்கஸ், டைட்டஸிடம் வந்தான். லவீனியா துயரம்கூட டைட்டஸின் மனத்துள் அந்நேரம் நுழையவில்லை. அவன் பிள்ளைகளுக்காகத் தன் கையை வெட்டத் துணியுமளவில் லூஸியஸும், மார்க்கஸும் தடை செய்து தம் கையை அளிப்பதாக வாதாடினர். ஆனால், டைட்டஸ் அவர்களை ஏமாற்றிவிட்டுத் தானேதன் கை ஒன்றை வெட்டியனுப்பினான். ஆனால், கொடியவளாகிய டமோராவின் சூழ்ச்சியுட்பட்ட ஸாட்டர்னினஸ் தன் சொல்லை மீறி மைந்தரையும் கொன்று கையையும் திருப்பி அனுப்பினான்.

டைட்டஸின் துன்பக்கேணியில் பின்னம் ஒரு துளிக்குக்கூட இடமின்றித் துயர் வெள்ளம் நிறைந்து அவன் பெருந்தன்மை, வீரம், அறிவு, பொறுமை ஆகிய நாற்புறச் சுவர்களையும் தாண்டி வழிந்தோடலாயிற்று. அவன் பித்துப் பிடித்தவன் போலானான். அடிக்கடி அப்பித்தின் பயனாக அவன் மார்க்கஸினிடமும் நண்பரிடமும், “இவ்வுலகில் ஒழுங்கு அற்றுப் போயிற்று. நரகிலாவது துறக்கத்திலாவது ஒழுங்குண்டோ வென்று பார்க்கிறேன். நரகர்களுக்கும் நாகர்களுக்கும் இதுபற்றி மனுக்கள் விடுக்கின்றான். அவர்கள் என்ன கூறுகிறார்கள் பார்ப்போம்” என்று கூறிப் பலவகையான கடிதங்கள் எழுதி அவற்றை அம்புமூலம் நாகருலகுக்கும் நரகுக்கும் வானுலகுக்கும் அனுப்பும்படி லூஸியஸின் பிள்ளையும் தன் பேரனுமான ¹இளைஞன் லூஸியஸிடம் கோரினான். அங்ஙனம் செய்யாவிடின் அவன் மனம் பின்னும் கவலுமே என்றெண்ணி மார்க்கஸும் பிறரும் அவன் கூறியபடியே செய்தனர். இக்கடிதங்களில் பல ரோமின் தெருக்களிலும் ஸாட்டர்னினஸின் மாளிகையிலுமே போய் விழுந்தன. அவற்றை எடுத்துப் பெருமக்களிடம் காட்டி, அவற்றைக் காரணமாகக் கொண்டு பெருமக்கள் அன்புக்கு உரியவனான டைட்டஸைக் கொல்ல ஸாட்டர்னினஸ் முயன்று வந்தான்.

ரோமின் நிலைமை இதுவாக, நாடு கடத்தப்பட்ட லூஸியஸ் காத்தியரிடம் சென்று டைட்டஸின் வரலாறு முற்றிலும் கூறி டமோராவின் நன்றியின்மை கொடுமை ஆகியவற்றுடன் அடிமையும் கயவனுமாகிய ஏரானுடன் அவள் கொண்ட பொய் ஒழுக்கம் முதலிய எல்லாச் செய்திகளையும் வெளியிட்டான். அவற்றைக் கேட்டுச் சீற்றங்கொண்டு அவர்கள் தம் பழம் பகைவராகிய ரோமரை அவன் தலைமையில் சென்றழிக்க ஒருப்பட்டார்கள். இதனைக் கேள்விப்பட்டு ஸாட்டர்னினஸ் நடுங்கலானான். ஆனால், டமோரா அவனக்குத் தேறுதல் கூறி, “எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றாள்.

டமோராவுக்கு இன்னோர் இடுக்கணும் அதே சமயம் ஏற்பட்டது. ரோமுவுக்கு வந்தபின் அவள் சூல் கொண்டு ஒரு பிள்ளையை யீன்றாள். ஆனால், பிள்ளை ஏரானின் பிள்ளையென்று கண்டவுடன் தெரியும்படி அவனைப்போன்ற கருங்குரங்கு உருவில் இருந்தது. அதனை ரோமர் கண்ணுற்றால் தன் செய்தியாவும் வெளியாகும் என்று அஞ்சி டமோரா குழந்தையுடன் அவனை வெளியேற்றினாள். அவன் தன் தீவினை வயத்தால் காத்தியர் கைப்பட்டு லூஸியஸிடம் கொண்டு வரப்பட்டான். தன் உயிரையும், குழந்தையின் உயிரையும் காக்கும் வண்ணம் அவன் தன் கதை முற்றிலும் கூறிக் காத்தியரிடம் லூஸியஸ் கூறிய அனைத்தையும் மெய்ப்பித்தான்.

தன் தீவினைப் பொறி தன்னை முற்றிலும் சூழ்ந்து விடுமுன் டமோரா தன் சூழ்ச்சித் துருப்புகளில் கடைசியான ஒன்றை வீசித் தப்பமுயன்றாள். அஃதாவது பித்துக்கொண்ட டைட்டஸ் நரகருக்கும், நாகருக்கும் எழுதுவதால் அவன் பித்துக்கேற்ற படி தானே நாகர் உலகத்திறைவியாகிய காளியாகச் சென்று நடிக்க அவள் எண்ணினாள். இவ்வெண்ணத்துடன் அதற்கேற்ற உருவும், உடையும், நடிப்பும் கொண்டு மைந்தராகிய இருவரையும் தன் கணத்தினராக வரும்படி செய்து அவன் முன்சென்று ஊங்காரம் செய்து, ஊங்காரம் செய்து, “நானே காளி; உன் ஆத்திரமிக்க கடிதம் கண்டு வந்தேன்; எங்கே உன் பகைவர்? விரைவில் காட்டுக! இதோ அழிந்தேன்!” என்றாள்.

டைட்டஸ் ஓரளவு பித்துக் கொண்டிருந்த போதிலும் டமோரா எண்ணிய அளவு தலைமயக்கங் கொண்டிருக்க வில்லை. தன் பிறவிப் பகைவியாகிய அவனைக் கண்டதும் இந்தச் சிறு மயக்கமும் அகன்றது. ஆயினும் வஞ்சிக்க எண்ணிய அவளை வஞ்சித்துவிடத் துணிந்து பித்தன் போலவே நடித்து அவன், “உன்னை நம்பேன் காளி! நம்பேன். என் பகைவரை வருவிக்குமுன் மறையப் போகிறாய்,” என்றான். டமோரா “இதோ என் கணத்தினரைப் பிணையமாக உன்னிடமே வைத்துச் செல்கிறேன். உன் எதிரிகளை வரவழை. உன் மகன் லூஸியஸையும் அவன் நண்பரையும் வரவழை அவர்கள் முன் உன் பகைவர் குருதியைக் குடிக்கிறேன்,” என்றாள்.

டமோரா உண்மையில், “அவன் அழைத்தால் லூஸியஸ் வருவான். நம் ஆட்களால் அனைவரையும் போரின்றிச் சூழ்ச்சியாலேயே கொன்று விடலாம்,” என்றெண்ணினாள். டைட்டஸ் அவள் கூறியபடியே தன் மகனாகிய லூஸியஸை அழைத்ததுடன் ஸாட்டர்னினஸையும் டமோராவையும் கூடவந்து விருந்துண்ணும்படி அழைத்தான். ஆனால், விருந்தில் உணவுக்கு மாறாக டமோராவின் பிள்ளைகளே கறியாக சமைக்கப்பட்டிருந்தனர். உண்டியருந்திய பின் டைட்டஸ் தன் மகளை அவள் முன் நிறுத்தி அனைவரும் அறிய அவள் பழியை எடுத்துக்கூறியபின், “அவளுக்கு இவ்வகை இன்னல் செய்தவர் அழிந்தனர். அவள் பழியும் இத்துடன் ஒழியட்டும்.”என்று அவள் குறையுடலைத் தன் கையாலேயே வெட்டி வீழ்த்தி அவள் துயருக்கு ஒரு முடிவு தந்தான். பின் டமோராவை நோக்கி, “இறந்த உன் மைந்தர் நிலைமை என்ன என்று அறிய விரும்புகிறாயா? அவர்கள் வேறெங்கும் இல்லை. உன் வயிற்றிலேயே சென்று விட்டனர்! கொடியோய்! நீ தின்றது உன் குழந்தைகள் இறைச்சியையே என்றறி; இதுவே என் பழி,” என்றான். அவள் திகைத்து நிற்குமளவில் லூஸியஸ் ஏரானை முன் நிறுத்தி அவள் செயல்களை வெளிப் படுத்தினான். தன் அவமதிப்பைப் பொறாது டமோரா எழுந்தோடத் தலைப்படு மளவில் டைட்டஸ் அவளைக் குத்தக்கொன்றான். ஸாட்டர்னினஸ் வெகுண்டு டைட்டஸைக் கொன்றான். உடனே லூஸியஸ் தந்தையுயிரை வாங்கிய அதே வாளால் ஸாட்டர்னினஸின் உயிரை மாய்த்தான். ரோம் மக்கள் இக்கொலைகளையெல்லாம் கண்டு, “இஃது என்ன? இறைவன் சீற்றமோ?” என்று அஞ்சி நடுநடுங்கினர். லூஸியஸ் அவர்களிடையே வந்து வணங்கி நின்று தன் குடியினர் அடைந்த பழிகளையும் டமோராவின் தீச்செயல்களையும் எடுத்துரைத்தான். ரோம் மக்கள், “லூஸியஸ் வாழ்க! லூஸியஸே எங்கள் பேரரசராகுக!” என்று ஆர்ப்பரித்தனர். முன் டைட்டஸை முடிசூட்ட எண்ணியிருந்த மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் அவன் மீந்த ஒரே பிள்ளையாகிய லூஸியஸுக்கு முடி சூட்டினான். காத்தியரும் லூஸியஸின் வீரத்தை மதித்து அவனுக்குப் புகழ் மாலைகள் சூட்டி நட்புணர்ச்சியுடன் தம் நாடு சென்றனர். டைட்டஸின் பெருந்துயர் மிக்க பெருமித வாழ்வு ரோம் மக்களால் உருக்கமிக்க பாடல்களாகவும் ஓவியக் காட்சிகளாகவும், நாடகங்களாகவும், ஆக்கப் பட்டுப் பல வகையிலும் போற்றப்பட்டது.

** அடிக்குறிப்புகள்**
1.  Hery IV 2. Richard II 3. Edmund Mortimer 4. Bishop of Carl iste 5. Northumberland 6. Owen Glendeower, Cheiftain of Wales. 7. Douglas of Scotland 8. Henry Percy of Hotspur 9. Sir John Falstaff 10. Sheriff 11. Shrewsbury 12. Sir Walter Blunt 13. Worcester 14. Vernon 15. Archbishop of York 16.Master Shallow 17. Master silence 18. Warwick 19. Sir Henry Gascogine 20. Richard I or Richard Coeur de Lion. 21. Geoffrey 22. Arthur 23. Constance 24. Normandy 25. Phillip II 26. Elinor 27. Angiers. 28. Faulcombridge 29. Archbishop of Canterbury 30. Excommunication 31. Interdict 32. Clergy 33. Priest 34. Tower of London 35. Hubert de Burgh.36. Flavius. 37. Lucius 38. Lucilus 39. Tables 40. Alcibiades 41. Navare. 42. Biron 43. Langavill 44. Dumain 45. Rosaline 46. Katharine 47. Maria 48. Jacquenetta 49. Don Armado 50. Costard. 51. Holofornes 52. Henry the fifth. 53. Edward Earl of Marh. 54. Dauphin1. Earl of Cambridge 55. Lord Scroop 56. Sir Thomas Grey 57. Bardolpe 58. Bistol 59. Nym. 60. Farfluer 61. Bedford 62. Sir Thomas Erphingham 63. Fullen. 64. Duke of Burgandy 65. Charles 66. Duke of Gloucester 67. Dule of Bedford 68. Armagnac 69. Charles Dauphin 70. Battle of Agin court 71. Salisbury 72 . Talbot 72. Domremy 73. Joan 74. Rheims. 75. Orleans 76. Mortimer 77. Edmind Mortimer 78. Richard Duke of York 79. Beauforts 80. Duke of Somerset 81. Cardina Beaufort 82. Suffolk 83. Warwick. 84. Margaret, daughter of King of Naples 85. Duchess of Gloucester 86. Isle of Man 87. Gack caed 88. Lord clifford 89. Edward 90. George 91. Richard 92. Edmund 93. Wake field 94. Town field 95. Windsor 96. Mr. Page 97. Mr. Ford 98. Anne. 99. Justice Shallon 100. Slender 101. Mrs. Page 102. Wales 103. Dorctor Caius 104. Fenton. 105. Mrs. Ford. 106. Brook. 107. Sir High the Parson 108. Duke of Clarence 109. Lord Hastings 110. Lord Stanley 111. Duke of Buckingham 112. Earl Rivers 113. Marquis of Dorset Richard 114. Earl of Grey.115. William Catesby 116. James Tyrrel.117. Earl of Richmond 118. Antiochus 119. Antioch 120. Tyre 121. Pericles 122. Helicanus 123. Tarsus. 124. Cleon 125. Dioyza 126. Thilard. 127. Greece 128. Pentapolis 129. Simonides the good king. 130. Thaica. 131. Escanes 132. Ephesus 133. Ceriman 134. Philoten 135. Antonine 136. Mitilne 137. Pandar. 138. Lysimachus. 139. Henry VIII 140. Wolsey (Gardinal Wolsey) 141. Arthur 142. Gatherine 143. Pope 144. Charles V 145. Gardinal 146. Duke of Buchkingham 147. Steward 148. Chaplain 149. Anne Bullen 150. Duchess of Pembroche. 151. Cardinal Compeggio. 152 . Lord Abergarvermy 153. Lord Surrey 154. Lord Norfolk 155. Lord Suffolk 155. Lord Chamberlain 156 . Gromwell

2.  ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதும்போது அரசியாயிருந்தாள்.அதன்பின் ஆளும் உரிமையுடைய முதலாம் ஜேம்ஸையும் அவளையும் இதன்மூலம் அவர் புகழ்கின்றார்.

3.  Padua 158. Baptista 159. Katherine 160. Bianca 161. Petruchio. 162. Lucentio 163. Vincentio 164. Hortensio 165. Greece 166. Helen 167. Menelaus 168. Troy 169. Priam 170. Paris 171. Agamemnon 172. Achilles 173. Polyxena 174. Hector 175. Deiphobus 176. Helenus 177. Troilus 178. Calchus 179. Cressida. 180. Antenor 181. Pandarus. 182. Diomedes. 183. Ulysses 184. Ajax 185. Nestor 186. Patrocles. 187. Cassandra 188. Aeneas. 189. The Roman Empire 190. Saturninus 191. Bassaianus 192. Marcus Andronicus. 193. Titus Andronicus 194. Goths 195 . Queen Tamora 196. Alarbus 197. Cheron. 198. Demetrious. 199. Lavinia 200. Mutius 201. Aaron 202. Quintus 203. Mortius. 204. Lucius 205. Lucius Junior.