அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்


மூன்றாம் நம்பர் வார்ட்டில் நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது, ‘நர்ஸ்’ ஒருத்தி என்னிடம் வந்து “ஸேர் யாரோ ஒருவர் வந்திருக்கிறார், உங்களைப் பார்க்கவேண்டுமாம். உங்களது நண்பர் என்று கூறுகிறார்” என்றாள் தயக்கத்துடன்.

‘வார்ட் ரவுண்ட்’ செய்யும்போது என்னை யாரும் குழப்புவதை நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். சினத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஹலோ மச்சான், ஹெள ஆர் யூ? ” வாசலில் நின்றிருந்த சில்வா கலகலப்போடு கைகளை நீட்டியபடி வந்து என் தோள்களைப் பற்றிக் கொண்டான்.“ஆ, வட் ஏ பிளஸன்ற் சேர்ப்பிறைஸ்!” என்றேன். என்னால் நம்பவே முடியவில்லை. லண்டனில் இருப்பவன் இப்படித் திடுதிப்பென என் முன்னால் வந்து நின்றால் ... ஆச்சரியத்தில் ஒரு கணம் தடுமாறினேன்.“யூ பகர், யூ நெவர் றைற் ரு மீ” - நீ எனக்குக் கடிதம் எழுதுவதில்லை எனச் செல்லமாகக் கோபித்து என் தோள்களில் இடித்தான்.பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்த அதே தோற்றம், அதே கலகலப்பு. அநாயாசமான பேச்சு, நெஞ்சைத்தொடும் இறுக்கம்... அவன் கொஞ்சங்கூட மாறவில்லை.

“எப்போது லண்டனில் இருந்து வந்தாய்?”“சென்ற கிழமைதான்... இப்போது என் குடும்பத்துடன் நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ இங்கு ‘டீ.எம்.ஓ.’வாக இருப்பதாய் கொழும்பு நண்பர்கள் சொன்னார்கள். டெலிபோன் செய்தேன்... முடியவில்லை. எப்போதும் உனது லைன் அவுட் ஒஃப் ஓடர்தான்” என்று சொல்லிச் சிரித்தான்.அந்த வார்ட்டில் உள்ள நோயாளிகள் எங்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருப்பது எனக்குச் சங்கடமாக இருந்தது.“கொஞ்சம் இருந்துகொள், இன்னும் மூன்றேமூன்று பேஷன்ட்ஸ்தான். பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். குவார்ட்டர்ஸில் போய்ப் பேசலாம்” என்றேன்.அவனுக்கு எனது நிலைமை புரிந்தது.“ஓ.கே., கம் சூன்... நான் காரில் வெயிட் பண்ணுகிறேன்.”கொழும்பு மருத்துவக் கல்லூரியில் நானும் அவனும் ஒன்றாகச் சேர்ந்து படித்தபோதுதான் நண்பர்களானோம். படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் கடமையாற்றிவிட்டு மேற்படிப்புக்காக லண்டன் சென்றவன் அங்கேயே ‘செற்றில்’ ஆகிவிட்டான். நான் இலங்கையின் பல பகுதிகளிலும் கடமையாற்றி விட்டு இப்போது மலைநாட்டில் உள்ள ஆஸ்பத்திரி யொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். லண்டனில் இருந்து அவன் ஆரம்பத்தில் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். எண்பத்துமூன்றில் நடந்த இனக்கலவரத்தில் நான் பாதிக்கப்பட்டபின் அவனுக்குக் கடிதம் எழுதவில்லை. அவன் எழுதிய கடிதங்களுக்கும் பதிலெழுதாமல் இருந்து விட்டேன்.வார்ட் ரவுண்ட் முடிந்து நான் சென்றபோது ஆஸ்பத்திரியின் வெளிநோயாளர் பகுதிக்கு முன்னால் சில்வா காரில் அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் காரிலிருந்து இறங்கினான். அவனைத் தொடர்ந்து அவனது மனைவியும் இறங்கினாள்.“எனது மனைவியை நீ பார்த்ததில்லை.... இவளது பெற்றோர் வெகு காலத்திற்கு முன்பே லண்டனில் குடியேறி விட்டனர். இவள் படித்ததெல்லாம் லண்டனிலேதான். சிறு வயதில் ஒருமுறை இலங்கைக்கு வந்தாளாம். இப்போது மீண்டும் வந்திருக்கிறாள்; பெயர் மாலினி ” என்றான் .நான் அவளது கையைப்பற்றிக் குலுக்கினேன். அவள் லண்டன்வாசியாக இருந்தாலும் முழுக்க முழுக்க சிங்களப் பெண்ணாகவே காட்சியளித்தாள்.“சில்வா உங்களைப்பற்றி என்னிடம் அடிக்கடி கதைப்பார்” எனக்கூறிப் புன்னகைத்தாள்.காரின் பின்சீட்டில் அவர்களது மகள் அமர்ந்திருந்தாள். அவளுக்கு ஏழெட்டு வயதுவரை மதிக்கலாம். அவளருகே ஒரு பெரிய அல்சேஷன் நாய் அமர்ந்திருந்தது. அவள் நாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அதனிடம் ஏதேதோ பேசி செல்லங் கொட்டிக் கொண்டிருந்தாள்.“வாருங்கள், வீட்டுக்குப் போவோம். எனது மனைவி அங்கிருக்கிறாள் . இன்று எங்கள் வீட்டிலேதான் உங்களுக்குப் பகல் சாப்பாடு ” என்றேன்.“என்ன, இன்று உன்வீட்டில் சைவர் சாப்பாடுதானே ........ வெள்ளிக் கிழமையல்லவா? எனக்கூறிப் புன்னகைத்தான். சைவச் சாப்பாட்டை அவன் ‘சைவர்’ சாப்பாடு என்றுதான் கூறுவான்.மாணவப் பருவத்தில் நானும் அவனும் ஒட்டியுறவாடிய நாட்கள் இனிமையானவை. மருதானையில் உள்ள சைவஹோட்டல் ஒன்றில் நாங்கள் சேர்ந்து உணவு அருந்துவோம். தோசை, வடை என்றால் அவனுக்கு உயிர். வெள்ளிக் கிழமைகளில் அவன் பகல் உணவையும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுவான்; சாம்பார், ரசம், பாயசம் இவற்றை யெல்லாம் ரசித்துச் சாப்பிடுவான்.“நோ... நோ..., அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது அந்த வழக்கத்தை விட்டுவிட்டேன்” என்றேன்.“என்ன, வீட்டில் பெற்றிக்கோற் கவர்மென்றா? உன் மனைவி உன்னை மாற்றிவிட்டாள் போலிருக்கிறது.”நான் புன்னகைத்தபடி வீட்டின் முன்புறக் கதவு மணியை அழுத்தியபோது, மனைவி வந்து கதவைத் திறந்தாள்.

“இவன்தான் சில்வா, எனது மருத்துவக் கல்லூரி நண்பன்; குடும்பத்தோடு நுவரெலியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இன்று இவர்களுக்கு எங்களது வீட்டிலேதான் லஞ்ச்” என்றேன்.அவன் என் மனைவிக்கு வணக்கம் சொல்லிக் கைகூப்பினான்.எல்லோரும் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்டோம். பின்னால் வந்த அல்சேஷன் வீட்டின் உள்ளே நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சுற்றத்தொடங்கியது.என் மனைவிக்கு நாய் வீட்டுக்குள் நுழைவது பிடிக்காது. என் முகத்தைப் பார்த்தாள். நான் அதனை கவனிக்காதவன் போல நண்பனின் பக்கம் திரும்பி, “என்ன சில்வா, இது உயர்சாதி நாய்போல் இருக்கிறதே....... இதனையும் லண்டனில் இருந்து கொண்டு வந்தாயா?” என வினவினேன்.“இல்லையில்லை, இது கொழும்பில் எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறது. நாங்கள் இங்கு வந்த நாள்முதல் எனது மகளோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. எனது மகளுக்கும் இதனை விட்டுப் பிரிய மனமில்லை” என்றான்.சிறிது நேரத்தில் என் மனைவி எல்லோருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் பரிமாறினாள். அவளது முகத்தில் இருந்த பரபரப்பைக் கவனித்த சில்வா, “¨மிஸிஸ் சந்திரன், பதட்டப்படாதீர்கள், சமைப்பதில் எனது மனைவியும் கெட்டிக்காரி. அவள் உங்களுக்கு உதவி செய்வாள்.... எங்களுக்காக எதுவுமே பிரமாதப்படுத்த வேண்டாம்; நாங்கள் ஹோம்லியாகவே இருப்போம்” என்றான்.என் மனைவி வெட்கத்துடன் புன்னகைத்தாள். எங்கோ இருந்த எங்கள் வீட்டுப் பூனைக்குட்டி இப்போது என் மனைவியின் கால்களைச் சுற்றிவந்து ‘மியாவ் மியாவ்’ எனத் தனக்கும் தேநீர் கேட்டது.லீசா - அதுதான் அவர்களது மகளின் பெயர், ஓடிச் சென்று அந்தச் சிறிய பூனைக்குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைத்து அதனைத் தடவிக்கொடுத்தாள். “வெரி நைஸ் கற்” என்றாள்.அல்சேஷன் உறுமியது. லீசா பூனையிடம் கொஞ்சுவது அதற்குப் பிடிக்கவில்லை. முன்னங்கால்களை நீட்டியபடி நிலத்திலே படுத்து சோகமாக முகத்தை வைத்துக் கொண்டது. இடையிடையே தலையை நிமிர்த்தி உறுமியது.

“றூத் ஸ்ரொப் இற்” எனச் சில்வா அதட்டியதும் அல்சேஷன் மௌனமாகிவிட்டது.சிறிது நேரத்தில் எனது மனைவியும் மாலினியும் ஐக்கியமாகி விட்டார்கள் என்பதை சமையல் அறையில் இருந்து வந்த சிரிப்பொலியும் கலகலப்பும் புரிய வைத்தன. சிங்கள ஊர்கள் பலவற்றில் நான் வேலை செய்ததால் எனது மனைவி ஓரளவு சிங்களம் பேசக் கற்றிருந்தாள். மாலினியும் அவளும் சிங்களத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.சில்வா தனது பையைத் திறந்து உள்ளேயிருந்த உயர்ரக மதுப்போத்தல் ஒன்றை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, “இது எனது சிறிய அன்பளிப்பு” என்றான்.“வீ போத் வில் ஹாவ் இற்” என்றேன்.எனது மனைவி இரண்டு கிளாஸ்களைக் கழுவிவந்து மேசையில் வைத்தாள். மாலினி ஒரு தட்டில் முட்டைப் பொரியல் எடுத்து வந்தாள்; “அதிகமாகக் குடிக்க வேண்டாம். பின்னர் கார் ஓட்ட முடியாது” என அவனை எச்சரித்தாள்.மீண்டும் அடுப்படியில் கலகலப்பு.சிறிது நேரத்தில் போத்தலில் அரைவாசி காலியாகியது.“சந்திரன், யூ ஆர் வெரி லக்கி; அழகான மனைவி உனக்கு வாய்த்திருக்கிறாள்.”“ஏன் உனது மனைவியும் அழகாகத்தானே இருக்கிறாள்” என்றேன்.“நோ..... நோ..... அவள் ஒரு சிடுமூஞ்சி. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னோடு சண்டை பிடிப்பாள். அரைவாசி நாள் சண்டையிலேயே கழிந்துவிடுகிறது.”“பெண்களுடைய பலமே அதுதான்; கோபத்தைக் காட்டியே கணவன்மார்களை மடக்கி விடுவார்கள். மாலினியின் கோபம் உன் மனதைக் கஷ்டப்படுத்துகிறதென்றால் அவளின் மேல் நீ அளவில்லாத அன்பு வைத்திருக்கிறாய் என்றுதானே அர்த்தம்” என்றேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “கவிதா இப்போது எங்கே இருக்கிறாள்?” எனக் கேட்டான்.சில்வா இன்னும் கவிதாவை மறக்கவில்லை என்பது தெரிந்தது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது அவன் கவிதாவின்மேல் பித்தாக இருந்தான். அவளது அன்பைப் பெறத் துடித்தான். ஆனால் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. காதற்கடிதம் எழுதிக் கொடுத்தான். அவள் பதிலெழுதாமல் இருந்தாள். ஆனாலும் சில்வா அவளை மறந்துவிடவில்லை. அவள் கண்டி வைத்தியசாலைக்கு வேலையேற்றுச் சென்றபோது தன்னைத் திருமணஞ் செய்யச் சம்மதமா என அவளிடம் கேட்டான். அவள் முடியாது என ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.“கவிதா இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. எங்கோ யாழ்ப்பாணத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டேன்” என்றேன்.“அவள் ஏன் என்னை விரும்பவில்லைத் தெரியுமா?”“தெரியாது”“எனக்குத் தெரியும். நான் ஒரு தமிழனாக இருந்திருந்தால் அவள் என்னை விரும்பி ஏற்றிருப்பாள்.”“டோன்ற் பீ ஸில்லி.”“சந்திரன், எதனையுமே மூடிமறைக்க எனக்குத் தெரியாது. தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலைமை இந்த நாட்டில் வளர்ந்துகொண்டே வருகிறது. இரு இனங்களுக்கும் இடையே இடைவெளி கூடிக்கொண்டே இருக்கிறது.”லீசா அணைத்து வைத்திருந்த பூனைக்குட்டி அவளது கைகளிலிருந்து பாய்ந்து இறங்கி, சில்வாவின் அருகே சென்றது. அவனது கால்களைச் சுரண்டி ‘மியாவ் மியாவ்’ என்றது.சில்வாவின் கண்கள் சிவந்திருந்தன. முட்டைப் பொரியலில் ஒரு துண்டை பூனையை நோக்கி வீசியெறிந்து விட்டு உரத்த குரலில் என்னிடம் கேட்டான். “இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அமைதியாக இருந்த இந்த நாட்டை அநியாயப்படுத்தியது யார் தெரியுமா?”

நானும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதலாகக் குடித்து விட்டேன் போலத் தெரிகிறது ; தலை சுற்றியது.“இதற்கெல்லாம் காரணம் பெரும்பான்மையின அரசியல் வாதிகள்தான். ஆட்சியைக் கைப்பற்ற பேரினவாதக் குரல் எழுப்பினார்கள். தமிழர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். மொழியுரிமை பறிக்கப்பட்டது, தொழில்வளம் பாதிக்கப்பட்டது, கல்வி பாதிக்கப்பட்டது, தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோயின. சாத்வீக வழியில் தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியபோது அவர்கள்மேல் வன்செயல்கள் கட்டவிழ்க்கப்பட்டன. 58இல் அடி, 72இல் அடி, 83இல் அடி, தமிழர்களும் அடிக்க அடிக்க ஓடிக்கொண்டே இருந்தார்கள்.” நான் இப்படிக் கூறிக் கொண்டிருந்தபோது சில்வா பூனைக்கு முட்டைப் பொரியலை சிறுசிறு துண்டுகளாக வீசிக்கொண்டிருந்தான்.சில்வா பூனையிடம் அன்புகாட்டுவது அல்சேஷனுக்குப் பிடிக்கவில்லை. முதலில் உறுமியது. பின்னர் பாய்ந்துவந்து பூனையைக் கௌவ முயன்றது. பூனைக்கு மரணபயம்; ஓடத் தொடங்கியது. வீட்டினுள்ளே ஓடிய பூனை இப்போது முற்றத்தில் அங்குமிங்கும் ஓடியது. அல்சேஷனும் விடுவதாயில்லை. துரத்திக் கொண்டே இருந்தது. லீசா அலறியபடியே அல்சேஷனின் பின்னால் ஓடினாள். பூனை மீண்டும் ஓடிவந்து சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்புப் புகட்டில் ஏறிக்கொண்டது. அப்போதுதான் அல்சேஷன் பூனையைத் துரத்துவதை நிறுத்தியது.லீசா அல்சேஷனின் கன்னத்தில் தட்டி, “யூ நோட்டி..... நோட்டி..... டோக் ; சும்மா இருக்கத் தெரியாதா?” எனச் செல்லமாகக் கடிந்தாள்.சில்வா மௌனமாக இருந்தான். நான் கூறியவை அவன் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ நான் அறியேன்.சமையல் முடிந்திருந்தது. எல்லோரும் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தோம். எனது மனைவி உணவு பரிமாறினாள்.சாப்பாட்டு மேசை கலகலப்பாக இருந்தது. என் மனைவியின் சமையலை விதந்து பாராட்டினான் சில்வா. ரசமும் சாம்பாரும் பிரமாதமாக இருக்கிறது என்றான்.

“மாலினி, எனது அப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் அங்குதான் கல்வி கற்றார். நான் ஒருமுறை சந்திரனுடன் யாழ்ப்பாணம் சென்றபோது, அப்பா தனது நண்பர்களையும் பார்த்துவரும்படி கூறினார். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் தந்து அனுப்பினார்” என மனைவியிடம் கூறினான்.யாழ்ப்பாணத்தில் எனது வீட்டுக்கு சில்வா வந்தபோது பிரமாதமான உபசரிப்பு இருந்தது. எனது தாய் தந்தையர் அவனை அன்பு மழையில் நனைத்தனர். அவனுடன் பேசுவதற்கு அவர்களுக்கு மொழி தடையாக இருந்தபோதிலும் உபசரிப்பால் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நானும் சில்வாவும் கூவில் கள்ளுக் குடித்து, கீரிமலையில் குளித்து, வீடு திரும்பியபோது அம்மா நண்டுக்கறி சமைத்து உணவு பரிமாற நானும் அவனும் பனையோலைப் பாயில் பக்கத்தில் அமர்ந்து பகிடிகள் பேசிப் பரவசமாய் உணவருந்தியதை சில்வா அடிக்கடி கூறுவான்.தோசை, இடியப்பம், சொதி, ஒடியல்மாப்பிட்டு, இப்படி விதம் விதமான உணவுகளால் அவனை அம்மா மகிழ்வித்தாள். அப்பு அவனுக்கு நுங்கு வெட்டிக் கொடுத்தார். எங்கெல்லாமோ திரிந்து அவனுக்காக கறுத்தக் கொழும்பான் மாம்பழம், புழுக்கொடியல், பனாட்டு முதலியவற்றைத் தேடிக் கொண்டுவந்து கொடுத்தார்.“மாலினி, யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள மக்களுடன் பழகுவது எவ்வளவு இனிமையான அநுபவம் தெரியுமா? இப்போது அங்கு நிலைமை சரியில்லை. சரியாக இருந்தால் நான் உன்னை அங்கு அழைத்துச் சென்றிருப்பேன். சந்திரனது தாய் தந்தையரது அன்பும் அவர்களது எளிமையும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன” என்றான்.“சில்வா, அப்படியொரு சந்தர்ப்பம் இனி ஒருபோதும் ஏற்படாது” என்றேன்.“ஏன் அப்படிக் கூறுகிறாய்? இனிமேல் அங்கு இருப்பவர்கள் எங்களை ஏற்கமாட்டார்களா? இனி இந்த நாட்டில் இனங்களுக்கிடையே சௌஜன்யம் ஏற்படாதா?” எனக் கேட்டான் சில்வா.அவனைத் தொடர்ந்து மாலினி கேட்டாள், “ஏன் ‘திரஸ்தவாதிகள்’எங்களைக் கொன்று விடுவார்களா?”

“இல்லை இல்லை, நீங்கள் இருவரும் சொல்வது தவறு. உங்கள் இருவரையும் வரவேற்க இப்போது எனது தாய் தந்தையர்கள் அங்கு இல்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள்கூட அங்கு இருப்பார்களோ சொல்ல முடியாது” என்றேன்.“உனது தாய் தந்தையர் இப்போது எங்கே இருக்கிறார்கள் ?” என ஆவலோடு கேட்டான் சில்வா.நான் எதனை அவனுக்குச் சொல்லக்கூடாதென நினைத்தேனோ அதனைச் சொல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. “அவர்கள் இறந்து விட்டார்கள்” என்றேன்,சில்வாவின் முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன. “ஏன் என்ன நடந்தது?” எனக் கேட்டான்.“அவர்கள் நவாலித் தேவாலயத்தில் சமாதியாகி விட்டார்கள்..... ஷெல் தாக்குதலுக்குத் தப்ப எண்ணி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டுக்குப் பலியாகிவிட்டார்கள்.”சில்வாவின் கண்கள் கலங்கின. தொண்டை கரகரத்தது பேச முடியாமல் தடுமாறினான். “என்ன கொடுமை இது” என முனகினான்.“போரின் கொடுமை தமிழர் பிரதேசத்தை, அதன் மக்களை, அவர்தம் பண்பாட்டினை, பாரம்பரியங்களை அணு அணுவாக அழித்துக் கொண்டிருக்கிறது” என்றேன்.சில்வாவினால் பேசமுடியவில்லை ; மாலினிதான் பேசினாள். “இந்தப் போரைத் தொடங்கியவர்கள் யார்? 83இல் தமிழ் இளைஞர்கள்தானே முதன்முதலில் இதனைத் தொடக்கி வைத்தார்கள்” எனக் கூறிக்கொண்டே என் முகத்தைப் பார்த்தாள்.பூனைக்குட்டி மெதுவாக வெளியே வந்து ‘மியாவ் மியாவ்’ எனச் சில்வாவைச் சுரண்டத் தொடங்கியது. அவன் ஒரு பிடி சோற்றை அதற்கு வைத்தான். பூனை சாப்பிடத் தொடங்கியது. அப்போது அல்சேஷன் உறுமிக்கொண்டே அதன் அருகில் பாய்ந்து வந்தது. பூனை ஓட்டம் பிடித்தது. அல்சேஷன் துரத்தத் தொடங்கியது. பூனை தனது இருப்பிடத்தை நோக்கிக் குசினிக்குள் ஓடியது. லீசாவும் பின்னால் ஓடினாள்.“மிஸிஸ் சில்வா. முன்பெல்லாம் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் தமது சொந்த மண்ணை நோக்கி ஓடினார்கள். ஆனால் அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்கள் தாக்கப்பட்டபோது அவர்களுக்கு ஓடுவதற்கு இடமில்லாமல் போயிற்று, தம்மைக் காப்பாற்றத் திருப்பித் தாக்குவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை” என்றேன்,பூனை அடுப்படி மூலைக்குள் அகப்பட்டுக் கொண்டது. துரத்திச் சென்ற அல்சேஷன் அதனைக் கௌவிக் குதறத் தாவியது. பூனைக்கு மரணபயம் ; ஓடுவதற்கு இடமிருக்கவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ‘சுர்’ரெனச் சீறி முன்னங்கால்களை உயர்த்திப் பாய்ந்து அல்சேஷனின் முகத்தில் விறாண்டியது.நீண்டிருந்த அதன் கூரிய நகங்கள் நாயின் கண்களிலும் தாடையிலும் காயங்களை ஏற்படுத்தின. அல்சேஷன் பின் வாங்கியது. வலியால் முனகியது. பூனை மீண்டும் மீண்டும் சீறி நாயைத் தாக்கத் தொடங்கியது. இப்போது பூனையின் அருகே நெருங்குவதற்கு அல்சேஷன் தயங்கியது. சில்வாவின் காலடியில் முன்னங்கால்களை நீட்டிப் படுத்துக்கொண்டது.இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாலினி, நான் கூறிய விளக்கத்தைப் புரிந்துகொண்டு ஆமோதிப்பது போலத் தலையாட்டினாள்.லீசா அல்சேஷனுக்குக் காயம் பட்டிருப்பதைக் கவனித்து விட்டு அழத் தொடங்கினாள். எனது தாய்தந்தையரின் மரணச் செய்தியைக் கேட்டதிலிருந்து சோகமாக இருந்த சில்வாவின் கண்களில் குளமாகத் தேங்கியிருந்த கண்ணீர் இப்போது கன்னங்களில் வழிந்தோடியது.- வீரகேசரி 1996

++++++++++++++++++++

‘ராக்கிங்’

பிரபல்யம் வாய்ந்த அந்த ஆண்கள் கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் திகழ்ந்தது. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். தேசியரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களையும் அந்தக் கல்லூரி உருவாக்கியிருந்தது. மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேணுவதிலும் அக்கல்லூரி பெயர் பெற்றிருந்தது. ஆனாலும் கடந்த இருவருடங்களில் நடந்த ‘ராக்கிங்’ சம்பவங்கள் அக்கல்லூரியின் பெயரைக் களங்கப்படுத்தியிருந்தன.மகேந்திரன் ஜீ.சி.ஈ உயர்தர வகுப்பில் சேர்ந்து ஒரு வாரந்தான் ஆகிறது. இந்தச் சில நாட்களில் அவனும் ‘ராக்கிங்’ என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது.“டேய், உனக்கு நீந்தத் தெரியுமா?”ஹொஸ்ரலின் வலதுபுறமாகச் சற்றுத் தொலைவில் நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன் மகேந்திரனிடம் கேட்டான்.அன்று பாடசாலை முடிந்தநேரம் அவனது புத்தகங்களைப் பறித்தெடுத்த மாணவர் இருவர் அவற்றைக் ஹொஸ்ரலில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறியதனால் அவன் அங்கு செல்லும்படி நேரிட்டுவிட்டது.

மகேந்திரன் தயக்கத்துடன் தரித்து நின்றான். நீந்தத் தெரியாது என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினான். மனதைப் பயம் கௌவிக்கொண்டது.“ஐயோ பாவம், இவனுக்கு நீந்தத் தெரியாதாம்....... வா மச்சான், நீந்தக் கற்றுக் கொடுப்போம்” என்றான் வேறொருவன்.“நம்ம ஸ்கூல் டிஸிப்பிளின் மாஸ்டர் புண்ணியமூர்த்தியின் மகனுக்கு நீச்சல் தெரியாதென்னா இது நம்ம ஸ்கூலுக்கே அவமானம்.”“அடடே, இவன் நம்ம புண்ணியமூர்த்தி ஸேரோட மகனா? எனக்குத் தெரியாதே.... அப்புடீன்னா கற்றுக்குடுக்கத்தான் வேணும். இல்லேன்னா ஸேர் கோவிச்சுக்குவாரு.”அவர்கள் எழுந்து மகேந்திரனை நோக்கி வந்தார்கள். அந்த இடத்தைவிட்டு ஓடிவிடலாமா என ஒருகணம் அவன் யோசித்தான். ஆனாலும் உடனேயே தனது முடிவை மாற்றிக் கொண்டான். இப்போது ஓடினால் அவர்கள் அவனை இலேசில் விட்டுவிட மாட்டார்கள். பகிடி வதைக்கு இடங்கொடுக்கா விட்டால் வதைகளின் உக்கிரம் கூடிவிடும்.ஒருவன் அருகேவந்து அவனது கைகளைப் பற்றினான். மகேந்திரனது கைகள் நடுங்கின. அவன் அவர்களை முன்னொரு போதும் பார்த்ததில்லை. அவர்கள் இறுதியாண்டு மாணவர்களாக இருக்கவேண்டும்.“வா....... கொஞ்சநேரம் எங்களோட நீச்சல் அடிக்கலாம்” கைகளைப் பற்றியிருந்தவன் அவனை இழுத்தான்.மகேந்திரனின் கண்களுக்குள் நீர் முட்டியது. கால்கள் தடுமாறின.“என்ன பயமா இருக்கா? அப்புடீன்னா நீ நீச்சல் அடிக்கவேணாம். நாங்க நீந்திறத வெளியே நின்னு பார்த்துக்க; பயம் தெளிஞ்சிடும்.”மகேந்திரன் மறுப்புக் கூறமுடியாமல் அவர்களுடன் சென்றான். நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளை அடைந்தபோது அவனை அவர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர்.

“ஐயோ, பிளீஸ் என்னை ஒண்டும் செய்யாதீங்க.......” மகேந்திரன் மன்றாடியபோது பின்புறத்தில் நின்ற ஒருவன் திடீரென அவனைக் குளத்தில் தள்ளிவிட்டான். சற்றும் எதிர்பாராதவகையில் அவன் ஒரு கணம் தடுமாறி, தடாரெனத் தண்ணீரில் விழுந்து தத்தளித்தான். வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தண்ணீர் புகுந்ததால் அவனுக்கு மூச்சுத் திணறியது. கைகளையும் கால்களையும் அடித்துத் தரையில் உதைத்து மேலே எழுந்தபோது படிக்கட்டில் நின்றிருந்த இருவர் தண்ணீரில் குதித்து அவனை மீண்டும் உள்ளே அமுக்கினர்.மகேந்திரன் திணறித் திணறி மேலே எழும்பும் போதெல்லாம் அவர்கள் அவனை உள்ளே தள்ளி அமுக்கிக் கொண்டிருந்தனர். அவன் திணறுவதும் கைகளை மேலே உயர்த்தி ஆட்டுவதும் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.“மச்சானை நல்லாக் குளிப்பாட்டுங்கடா” என வெளியே நின்ற இருவர் ஆரவாரஞ்செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.மகேந்திரனின் துடிப்பு அடங்குவதை அவர்கள் கவனிக்க வேயில்லை. அவன் திணறி மேலே எழும்பாதபோதுதான் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அவனைத் தண்ணீரின் மேலே இழுத்தெடுத்தார்கள்.விளையாட்டாகச் செய்த ராக்கிங் வினையாக முடிந்திருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக வேறும் சில மாணவர்களை அவர்கள் இவ்வாறு தண்ணீரில் அமுக்கி ராக்கிங் செய்தார்கள். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டது.மகேந்திரனின் தலை தொங்கியிருந்தது.******ஆசிரியர் புண்ணியமூர்த்தியின் பெயரைச் சொன்னாலே மாணவர்களுக்கு நடுக்கம் ஏற்படும். மாணவர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டுமென்பதில் அவர் கண்டிப்பானவர். பல இன மாணவர்கள் கல்விகற்கும் அந்தக் கல்லூரியில் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அவரது கண்டிப்பு அவசியமானதுதான்.

பத்து வருடங்களாகத் தொடர்ந்து ‘டிஸிப்பிளின்’ மாஸ்டராகக் கடமையாற்றிவரும் புண்ணியமூர்த்திக்குச் சென்ற வருடத்தில் கல்லூரியில் நடந்த சம்பவமொன்று அவரது கடமைக்கு மட்டுமல்லாது சொந்த வாழ்க்கைக்குமே ஒரு சோதனையாக அமைந்துவிட்டது.கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, பழைய மாணவர்கள் சிலர் ராக்கிங் செய்தனர். அவர்களது செயல்கள் அத்துமீறிப்போயிருந்தன. புதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி பாடசாலைக்கு வந்து தங்களது பிள்ளைகளுக்கு நடந்த கொடுமையான வதைகளை எடுத்துக் கூறினர்.ஒருநாள் புதிய மாணவனொருவன் கடுமையான ராக்கிங்கிற்கு உள்ளாக நேரிட்டது. வெளியே சாக்கடையில் கிடந்த பழைய தகரப்பேணியில் தண்ணீர் அருந்தும்படி பழைய மாணவர்கள் சிலர் அவனை நிர்ப்பந்தித்தனர். அவன் மறுத்தபோது பலவந்தமாக அவனுக்குத் தண்ணீர் பருக்கினர். ஒருவன் பேணியை வாயில் வைத்து அமுக்க, வேறொருவன் அவனைப் பிடரியில் பிடித்துத் தள்ள, கடைவாயால் தண்ணீர் வழிவதைப் பார்த்த மற்றொருவன் பேணியின் அடிப்புறத்தைப் பலமாக இடித்தான்.புதிய மாணவனின் உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயம் ஏற்பட்டதால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க நேரிட்டது.கல்லூரியில் நடந்த அந்த ராக்கிங் அத்துமீறல் பற்றிய முறைப்பாடு கல்வித் திணைக்களம்வரை சென்றது.புண்ணியமூர்த்திதான் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சியான செய்தி தெரியவந்தது.அவருடைய மூத்தமகன் சிவனேசனும் வேறு மூன்று மாணவர் களும் சேர்ந்தே அந்தப் புதிய மாணவனுக்குப் பலவந்தமாகச் சாக்கடைத் தண்ணீரைப் புகட்டி, தகரப்பேணியை வாயினுள் புகுத்திக் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள்.மாணவர்களின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணு வதற்காக எத்தனை எத்தனையோ மாணவர்களுக்குத் தண்டனைகள் கொடுத்த புண்ணியமூர்த்தி, அன்று தன் மகனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டியேற்பட்டது.

மாணவர்கள் நால்வரையும் உடனே கல்லூரியைவிட்டு நீக்கிவிட வேண்டுமெனவும் வேறுபாடசாலையில் அவர்கள் சேரமுடியாதவாறு சிவப்பு மையினால் குறிப்பெழுதி ‘லீவிங் சேட்டிவிக்கற்’ கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பெழுதினார் புண்ணியமூர்த்தி.மாணவர்களின் எதிர்காலமே வீணாகிவிட்டது. அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கக்கூடாதென அதிபரும் ஆசிரியர்களும் புண்ணியமூர்த்திக்கு எடுத்துக்கூறினர். மாணவர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணப்பட வேண்டுமானால் அத்தகைய தண்டனை அவர்களுக்குக் கொடுக்கப்படவே வேண்டுமென அவர் திடமாகக் கூறிவிட்டார். விசாரணையின் போது வெளிவந்த, வெளியே சொல்லமுடியாத வேறுதகவல்களும் அவரது திடமான முடிவுக்குக் காரணமாயிருந்தன.தண்டனை பெற்ற மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் புண்ணியமூர்த்தியிடம் வந்து, தமது பிள்ளைகளின் தண்டனையைக் குறைத்து வேறுபாடசாலையிலாவது சேர்ந்து படிக்க வழி செய்யும்படி மன்றாடினர்.அவர்களுக்கெல்லாம் புண்ணியமூர்த்தி கூறிய பதில், “என்னுடைய மகனுக்கே நான் இந்தத் தண்டனையை வழங்கியிருக்கிறேன். இதுதான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான தண்டனை; மனச்சாட்சிக்கு மாறாக நான் எதையுமே செய்யமுடியாது.”ஆனாலும் மனச்சாட்சியின் மறுபக்கம் அவரை வாட்டிக் கொண்டே இருந்தது. அவரது மகன் சிவனேசன் படிப்பிலே சிறந்த மாணவன். அந்தவருடப் பல்கலைக்கழகத் தேர்வில் அவன் கட்டாயம் வைத்தியபீடத்திற்குத் தெரிவுசெய்யப்படுவானென அவனது ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அவர் வழங்கிய தண்டனை அவனது எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது.அன்று வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி கூறிய வார்த்தைகள் அவரின் நெஞ்சைப் பிழந்தன. “பிள்ளையினுடைய வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே.... நீங்களும் ஒரு மனுசனா?”

அவர் மௌனம் சாதித்தார். அன்றிலிருந்து அவரது மனைவி அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டாள்.அவரது இளையமகன் மகேந்திரன் கூறினான், “நீங்கள் ஒரு மனுநீதிகண்ட சோழனப்பா.”அவன் எப்போதுமே இப்படித்தான், எதையாவது திடீரெனப் பெரிய வார்த்தைகளில் கூறுவான். அவன் ஒரு கவிதைப்பித்து ; எதிர்காலத்தில் தான் ஒரு பெருங்கவிஞனாக வரவேண்டுமென்ற எண்ணம். அதற்காகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருப்பான். அவற்றிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவான்.மகேந்திரன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினான் என்பது அவருக்கு விளங்கவே இல்லை. மனுநீதிச்சோழன் தனது மகனின் தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக மகனையே தேர்ச்சில்லில் வைத்து நெரிக்கும்படி கட்டளையிட்டு நீதியை நிலைநாட்டியதைக் கூறுகின்றானா அல்லது ஆறறிவற்ற ஒரு மிருகம் தானாகவே தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்ததற்காக பாசமற்ற தந்தையொருவன் தனது மகனைத் தேர்ச்சில்லிலே நெரித்துக் கொன்றதைப்போல நானும் எனது மகனின் எதிர்காலத்தைச் சாகடித்துவிட்டதாகக் கூறுகிறானா?அவருக்கு எதுவுமே விளங்கவில்லை.மகேந்திரனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். ராக்கிங் செய்வதாகக் கூறி அவனைத் தண்ணீரில் மூர்ச்சிக்கச் செய்தவர்கள் யார்? எவருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. மகேந்திரனுக்கு மூர்ச்சை தெளிந்தால் ஒருவேளை தெரியவரலாம். உயிராபத்தை விளை விக்கக்கூடிய இந்தச் செயலைச் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்புண்ணியமூர்த்தி சோர்ந்துபோயிருந்தார். மாணவர்கள் ராக்கிங் செய்வதை மட்டும் நிறுத்தத் தயாராயில்லை. அவர் மாணவனாக இருந்த காலத்தில் ராக்கிங் என்பது பல்கலைக் கழகத்தில் சேரும் புதிய மாணவர்களைப் பல்கலைக்கழக வாழ்க்கைக்குத் தயாராக்கும் ஒரு சிறு விளையாட்டாகவே இருந்தது. ஆனால் இப்போது ராக்கிங் கொடூர வதையாக மாறிவருகிறது. ‘றூம் ராக்கிங்’, ‘கன்டில் ராக்கிங்’, ‘கம்பஸ் கள்ளு’ என்றெல்லாம் புதிய புதிய பெயர்கள்; புதுப்புது வதைகள் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ராக்கிங் பாடசாலைகளுக்கும் வந்து விட்டது. ராக்கிங் என்ற பெயரில் எவ்வளவு கேவலமான செயல்கள்..... உயிராபத்தான நடவடிக்கைகள்..... புதிய மாணவர்கள் யாவரும் ‘ஸஸ்பென்ரர்’ அணியாமல் பாடசாலைக்கு வரவேண்டுமாம். ராக்கிங் செய்பவர்களின் விசித்திரமான கட்டளை இது.முதல்நாள் காலை அவர் வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்தபோது நடந்த சம்பவமொன்று அவரது நினைவில் வந்தது.கரும்பலகையில் ஓர் ‘ஐஸ்கிறீம் கோண்’ வரையப்பட்டிருந்தது. புதிய மாணவர்கள் இருவர் பின்புறமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு கரும்பலகையில் வரையப்பட்டிருந்த அந்தச் சித்திரத்தை நாக்கினால் நக்கிக்கொண்டிருந்தனர். புதிய மாணவர்களுக்கு ராக்கிங் செய்பவர்கள் ஐஸ்கிறீம் வழங்கி உபசரிக்கிறார்களாம். வகுப்பறை எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்... கைதட்டல்கள்...வேறொரு புதிய மாணவன் வலதுகைப் பெருவிரலை நெற்றியிலும் இடதுகைப் பெருவிரலைக் கன்னத்திலும் வைத்துக் கொண்டு சுழன்றுகொண்டிருந்தான். நீண்டநேரமாக அவன் அவ்வாறு சுழன்றதால் தலைசுற்றித் தடுமாறினான். அவனைச் சுற்றிநின்ற ஒருகூட்டம் அவன் சுழல்வதை நிறுத்தும்போதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. ‘கமோன்... கமோன்...’ சுழற்சியின் வேகத்தை அதிகரிக்கும்படி காட்டுக்கத்தல்.புண்ணியமூர்த்தி வருவதைக் கண்டதும் அவர்கள் கப்சிப்பென அடங்கிப்போனார்கள்.கவலை தோய்ந்த முகத்துடன் மகேந்திரனின் கட்டிலருகே புண்ணியமூர்த்தி அமர்ந்திருந்தார். அவரிடம் படித்த மாணவன் ஒருவன் இப்போது அந்த ஆஸ்பத்திரியில் தலைமை டொக்டராகக் கடமைபுரிகின்றான். கல்லூரி மாணவனாக இருந்தபோது அவன் செய்த சுட்டித்தனங்கள் கணக்கிலடங்காதவை. புதிய மாணவன் ஒருவனை ராக்கிங் செய்வதாகக்கூறி அவனது தலையில் அரைவாசிப் பகுதியை மொட்டையாக வழித்ததற்காக அவர் அவனை இரண்டு வாரங்கள் பாடசாலைக்கு வரவேண்டாமென ‘ஸஸ்பென்ட்’ செய்தது இப்போதும் புண்ணியமூர்த்திக்கு நினைவில் இருக்கிறது. அவன்தான் இப்போது மகேந்திரனுக்கு விசேஷ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறான்.

மகேந்திரனுக்கு நினைவு திரும்பியபோது மெதுவாகக் கண்விழித்தான். அருகே தந்தை கவலையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது கண்கள் கலங்கின. புண்ணியமூர்த்தி அவனது நெற்றியை ஆதரவாகத் தடவிக்கொடுத்தார். பின்னர் மகனிடம் கேட்டார்.“யார் உன்னை ராக்கிங் செய்தது ; தண்ணீரில் தள்ளியது யார்?”மகேந்திரன் யோசித்துப் பார்த்தான். அவனால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் ! ஆம், ஒருவனை அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயத்தழும்புகொண்ட ஒருவனை அவனால் அடையாளம் காட்டமுடியும்.மகேந்திரன் முனகினான்.“அப்பா...., ஒருவரும் என்னை ராக்கிங் செய்யேல்லை, நான்தான் படியிலிருந்து தவறுதலாக வழுக்கித் தண்ணீரில் விழுந்திட்டன்.”- சுவடு 1996

++++++++++++++++++++++++++

சீட்டரிசிகொழுந்துமடுவத்தின் முன்னால் பகல் கொழுந்து நிறுப்பதற்காகப் பெண்கள் வரிசையாக நின்றனர். கனத்துக் கொண்டிருந்த கொழுந்துக் கூடையை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டுத் தலையிலே கட்டியிருந்த கொங்காணியை அவிழ்த்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள் பார்வதி. பதினைந்தாம் நம்பர் பணிய மலையிலிருந்து கொழுந்துக் கூடையுடன் மடுவத்தை நோக்கி ஏறிவந்ததால் மூச்சிரைத்தது. அவளைப்போலவே வரிசையில் நின்றிருந்த வேறுசில பெண்களும் நெற்றி வியர்வையைத் துடைத்தும் கொங்காணியால் விசிறியும் தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.
கொழுந்துமடுவத்தின் அருகேதான் தோட்டத்துப் பாடசாலை அமைந்திருக்கிறது. அங்குதான் பார்வதியின் மகன் கணேசு கல்வி கற்கிறான். பார்வதியைக் கண்டதும் ஓடிவந்து அவளது கைகளைப் பற்றிக்கொண்ட கணேசு, “ஆயா, சேரு ஒன்ன வரச் சொல்ராரு.....” எனப் பரபரத்தான்.பார்வதி நிமிர்ந்து பார்த்தாள். தூரத்தில் பாடசாலை வாசலில் நின்றிருந்த ஆசிரியர் அறிமுகச் சிரிப்பை உதிர்த்தபடி தலையசைத்தார்.வரிசையில் முன்னே நின்றிருந்தவளிடம் தனது கொழுந்துக் கூடையைக் கொடுத்து, “பூங்கோத, சேரு கூப்பிடுராரு..... என்னான்னு கேட்டிட்டு வந்துடுறேன்.... என் கொழுந்தையும் நிறுத்துப்புடு” எனக்கூறிய பார்வதி, கணேசுவையும் அழைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சென்றாள்.

“வாங்கம்மா, ஒங்க புள்ளையப்பத்திக் கதைக்கத்தான் கூப்பிட்டேன் ....... கணேசு இந்தத்தடவை ஐஞ்சாம் ஆண்டு ஸ்கொலஷிப் சோதனை எடுக்கப்போறான் தெரியுமில்ல.”“ஆமாங்க.”சிலநாட்களாகப் பாடசாலைக்குப் புறப்படும்போது பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வேண்டுமெனக் கணேசு கேட்டுக் கொண்டே இருந்தான். சென்ற தடவை சம்பளப்பணம் வீட்டுச் செலவுக்கே போதாமல் போய்விட்டதால் அவற்றை வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்போது அதைப் பற்றிக் கதைப்பதற்காகத்தான் வாத்தியார் கூப்பிட்டிருக்கிறார் என்பதை அவள் ஊகித்துக் கொண்டாள்.“நானும் எத்தனையோ தடவை சொல்லிப்பாத்திட்டேன். இவன் கொப்பி, பென்சில் இல்லாமல்தான் ஸ்கூலுக்கு வாறான். கணேசோட அப்பா கந்தையாகிட்டையும் கூப்பிட்டுச் சொன்னேன். தாய் தகப்பனுக்குப் பிள்ளமேல அக்கறை இல்லேன்னா நாங்க என்ன செய்யிறது?”ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் பார்வதிக்குப் பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்தின. அவளது கணவன் இதுவரை இந்த விடயத்தைப்பற்றி அவளிடம் கூறாமல் விட்டதை நினைத்தபோது அவளுக்குக் கணவன் மேல் எரிச்சலாகவும் இருந்தது.“ஆமாங்க, அவரும் சொன்னாருங்க...... ஆனா போனமாசம் சம்பளம் கொறைவுங்க. அவருக்கு அடிக்கடி வயித்துவலி வந்துறுது..... ஒழுங்கா வேலைக்குப் போறதில்லீங்க. எஞ்சம்பளத்திலதான் குடும்பமே ஓடுதுங்க.... அதுதான் கொஞ்சம் செரமமாய்ப் போச்சுங்க......”“அது சரியம்மா, உங்க கஷ்டம் எனக்கு விளங்குது. நீங்க கஷ்டப்படுறமாதிரி உங்க பிள்ளையும் படக்கூடாதேன்னுதான் நான் சொல்றேன். அவனை எப்படியாவது படிக்கவைக்கிற வழியைப் பாருங்க. கணேசு ரொம்பக் கெட்டிக்காரன். நீங்க கொஞ்சம் அக்கறைப்பட்டா அவனை முன்னுக்குக் கொண்டு வந்திடலாம்.”“சரிங்க, எப்புடியாவது எல்லாத்தையும் வாங்கித் தந்திடுறேன்..... அவனைப் படிக்கவைச்சு முன்னுக்குக் கொண்டாறது ஒங்க பொறுப்புங்க .......” எனக்கூறிக் கைகூப்பிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.

கணவனை நினைத்தபோது பார்வதிக்கு எரிச்சலாக இருந்தது. கொஞ்சங்கூட குடும்பத்தில் அக்கறையில்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவரும் கணவன்மேல் அவளுக்குக் கோபமும் அதிகமாகியது.இப்போது எங்கே பணத்திற்குப் போவது? டோபி லயத்துப் பெருமாயியிடம் கேட்டுப்பார்க்கலாமா எனப் பார்வதியின் சிந்தனை ஓடியது. அவசரத் தேவைகளுக்கெல்லாம் அவள்தான் பலதடவை உதவியிருக்கிறாள். ஆனாலும் முன்னர் அவளிடம் வாங்கிய கடன் அப்படியே இருக்கிறது. இப்போது மீண்டும் போய்க் கேட்பதற்குப் பார்வதியின் மனம் ஒப்பவில்லை.பார்வதிக்கு இப்போது சீட்டரிசி ஞாபகந்தான் வந்தது. பணத்திற்கு ஒருவழி தேடுவதென்றால் எப்படியாவது இந்தமாதச் சீட்டரிசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.பூங்கோதையிடம் கொழுந்துக் கூடையை வாங்கிக் கொண்டு நேராகப் பணிய லயத்தை நோக்கி நடந்தாள் பார்வதி. அங்குதான் சீட்டரிசிச் சிகப்பாயியின் வீடு இருக்கிறது. சிகப்பாயி பல வருடங்களாகச் சீட்டுப்பிடித்து வருகிறாள். தோட்டத்துப் பெண்களிடையே அவள் பிடிக்கும் சீட்டுகள் பிரபல்யம் வாய்ந்தவை. அரிசிச்சீட்டு, தூள்ச்சீட்டு, மாவுச்சீட்டு என வகை வகையாகச் சீட்டுகள் பிடித்தாலும் அவள் பிடிக்கும் அரிசிச் சீட்டுக்குதான் கிராக்கி அதிகம். அதனாலேதான் ‘சீட்டரிசிச் சிகப்பாயி’யென அடைமொழியும் அவளது பெயருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.பெண்களில் சிலர் தமது கணவன்மார்களுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சிறுதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் அரிசிச் சீட்டுத்தான் அனேகமான சந்தர்ப்பங்களில் கைகொடுத்து உதவுகிறது.பார்வதி சிகப்பாயியின் வீட்டை அடைந்தபோது வேலை முடிந்து வந்த சிகப்பாயி ‘ஊத்துப்பீலி’ யில் கால்கை கழுவிக் கொண்டிருந்தாள்.“என்ன பார்வதி, இந்த நேரத்தில வந்திருக்கே.... ஏதும் அவசரமா?”“ஆமாங்கக்கா, ஒங்கிட்டத்தான் வந்திருக்கேன்....... முக்கியமான சங்கதி........ இந்தப்பயணம் சீட்டரிசியை எனக்குத் தந்து ஒதவணும்...... கணேசுவுக்கு அவசரமாகக் கொப்பி புஸ்தகம் வாங்கவேண்டிருக்கு... .”

“என்ன பார்வதி ஒனக்குத் தெரியாதா, இந்தப்பயணம் செல்லாயிக்குத்தான் சீட்டு. நேத்துக்கூட அவ கேட்டா. சீட்டரிசியை வித்துத்தான் புள்ளைக்கு மூக்குத்தி செய்யணுமுன்னு சொல்லிக் கிட்டிருந்தா.....”சீட்டுப் போடுவதற்கு ஆட்கள் சேர்ந்ததும் துண்டெழுதிப் போட்டு குலுக்கல் முறையில் யார்யாருக்கு எத்தனையாவது சீட்டு என்பதைத் தெரிவுசெய்து முதலிலேயே சிகப்பாயி சொல்லிவிடுவாள். சீட்டுப் பிடிக்கும் சிகப்பாயிக்குத்தான் முதற்சீட்டு. சீட்டுப்போடுபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு கொத்து அரிசியைச் சிகப்பாயியிடம் அளந்து கொடுத்துவிட வேண்டும். அப்படி அளந்து கொடுக்கும்போது மேலதிகமாக ஒருபிடி அரிசியையும் சேர்த்துத்தான் கொடுப்பது வழக்கம். மாதமுடிவில் சீட்டரிசியை உரியவருக்கு அளந்து கொடுத்துவிட்டு மேலதிக அரிசியைச் சிகப்பாயி எடுத்துக் கொள்வாள்.“அக்கா நீ நெனைச்சா எதுசரி செய்யலாந்தானே..... இந்தப் பயணம் எப்புடிச்சரி சீட்டரிசியை எனக்குத் தந்திடு...... இந்த நேரத்தில சீட்டரிசி தேவைக்கு ஒதவாட்டிப்போனா அதுல என்ன பெரயோசனம்? அவசரத்துக்கு ஒதவும் என்னுதானே அந்த மனுசனுக்குத் தெரியாம சீட்டுப் போடுறேன்.” பார்வதி கெஞ்சும் குரலில் கூறினாள்.பார்வதிக்கு இரண்டாவது சீட்டுத்தான் குலுக்கலில் தெரிவானது. அந்த மாசத்தில் பூங்கோதையின் மகள் பெரியவளாகியதால் சடங்குசுத்திச் சமைச்சுப் போடுவதற்கு அந்த மாதச் சீட்டரிசியைத் தனக்குத் தரும்படி பூங்கோதை மன்றாடியதால் பார்வதி அந்தச் சீட்டை அவளுக்கு விட்டுக்கொடுத்தாள். பூங்கோதைக்கு கிடைக்கவிருந்த கடைசிச் சீட்டுத்தான் இப்போது பார்வதிக்குக் கிடைக்கும்.சிகப்பாயி யோசித்தாள். செல்லாயியிடம் பேசி எப்படியாவது இந்த மாதச் சீட்டைப் பார்வதிக்கு வாங்கிக் கொடுத்து விடவேண்டும். பார்வதி நீண்ட காலமாக அவளிடந்தான் சீட்டுப் போடுகிறாள். ஆனாலும் ஒருபோதாவது இப்படிச் சீட்டரிசியை முன்னுக்குத் தந்துதவும்படி வேண்டியதில்லை. அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. மாதக்கடைசியில் அவள் புதிதாகத் ‘தூள் சீட்டு’த் தொடங்க இருக்கிறாள். பார்வதியை அதில் சேர்த்துக்கொண்டால் முதல் சீட்டை அவளுக்குக் கொடுத்து உதவலாம்.“ஏம் பார்வதி, அடுத்த கெழம புதுசா தூள் சீட்டு தொடங்கிறேன், அதில சேந்துக்கிறியா?; எனக்குக் கெடைக்கிற மொத சீட்டை ஒனக்குத் தந்துடுறேன்..... ஒனக்குச் செலவுக்கும் கூடுதலாப் பணம் கெடைக்கும்.”

மாதத்தில் ஒருதடவை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அவர்களது பாவனைக்கென ஒரு பைக்கற் தேயிலை தோட்டத்தில் வழங்கப்படுவதால் அதற்கு ‘லேபர் டஸ்ற்’ என்று பெயர். இந்த லேபர் டஸ்ற் தேயிலையில் பிடிக்கப்படும் சீட்டுத்தான் தூள் சீட்டு.“எம் புருசனைப்பத்தி ஒனக்குத் தெரியாதாக்கா... அந்த ஆளு, தூள் கெடைச்ச ஒடனேயே அதில ஒரு பக்கற் தூளை எடுத்துக்கிட்டுப்போய் லயத்துக் கடையில குடுத்து சாராயம் குடிப்பது... மாசக்கடைசியில சாயத்தண்ணி குடிக்கவே நாலு வீட்டில ஓசி கேட்டுப் பல்லு இளிக்கவேண்டியிருக்கு..... இந்த லச்சனத்தில நான் எங்க தூள் சீட்டுப் பிடிக்கிறது....” என்றாள் பார்வதி ஆதங்கத்துடன்.முதல்நாள் நடுக்காம்பரா அருக்காணியிடம் கொஞ்சம் தேயிலைத் தூள் கேட்டபோது அவள் கூறிய வார்த்தைகள் பார்வதியின் நெஞ்சில் உறைத்தன. “தோட்டத்தில குடுக்கிற தூளை சாராயக்கடையில குடுத்து தண்ணியப் போட்டுக்கிட்டு ஓம்புருசன் லயத்தல பண்ணிற அட்டகாசம் தாங்க முடியல.... இதிலவேற ஓசித்தூள் கேட்டு எங்களுக்குக் கரச்சல்.” பார்வதிக்கு அவமானமாக இருந்தது ; திரும்பிவிட்டாள்.“சரி பார்வதி, நீ யோசிக்காமப் போ..... புதிசா போடுற தூள் சீட்டைச் செல்லாயிக்குக் குடுத்துப் புட்டு ஒனக்கு இந்த மாசச் சீட்டரிசியைத் தந்திடுறேன்..... ஓம் புள்ளையைப் படிக்க வைக்க நீ கேக்கிறப்போ மறுக்கமுடியுமா......” என்றாள் சிகப்பாயி.பார்வதிக்கு அவளது பேச்சு பால் வார்த்ததுபோல் இருந்தது. சிகப்பாயி ஒரு பேச்சுச் சொன்னால் ஒரு நாளும் மாறமாட்டாள்,அரிசி சீட்டுப் போடுவதற்குப் பார்வதி வழக்கமாக ஒரு முறையைக் கையாண்டு வருகிறாள். ஒவ்வொரு நாளும் உலையில் அரிசி போடும்போது ஒருபிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு சட்டியில போட்டு வைப்பாள். கிழமை முடிவில் ஒரு கொத்து அரிசி தேறிவிடும். அதையே அவள் சீட்டரிசியாகச் சிகப்பாயியிடம் கொடுத்துவிடுவாள். அவள் மட்டுமல்ல தோட்டத்துப் பெண்களில் அனேகமானோர் இந்த முறையிலேதான் சீட்டரிசி போடுவது வழக்கம்.சமையலுக்கு வேண்டிய சாமான்களைச் செலவுப் பெட்டியிலே தான் வைப்பார்கள். ஆனாலும் சீட்டரிசிக்காகச் சேர்த்து வைக்கும் பிடியரிசியைக் கணவனது கண்ணிலே பட்டுவிடக் கூடாதென்பதற்காகச் செலவுப் பெட்டியின் அடியிலே மறைத்து வைப்பாள் பார்வதி. கணவனுக்குப் பணம் தேவைப்படும்போது செலவுப் பெட்டியைத்தான் துழாவுவான் என்பது அவளுக்குத் தெரியும்.பிடியரிசி எடுத்துவிடுவதால் பல நாட்கள் அரைவயிறும் பட்டினியுமாகப் பார்வதி காலங் கழித்திருக்கிறாள். கணவனும் அவளது மகனும் சாப்பிட்டதுபோக மீதியைத்தான் பார்வதி சாப்பிடுவாள். சோறு மீதப்படாத வேளைகளில் வெறும் சாயத்தண்ணீரைமட்டும் குடித்து விட்டுப் படுக்கையில் முடங்கிக் கொள்வாள். சில நாட்களில் வடித்த கஞ்சியில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டுப் படுப்பதுமுண்டு.போன மாதத்தில் ஒருநாள் மட்டக்கொழுந்து மலையில் கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தபோது பார்வதிக்குத் தலை சுற்றியது. தேயிலைச் செடிகளை இருகைகளாலும் பற்றியபடி நின்றவள் சிறிதுநேரத்தில் மயங்கிச் சாய்ந்துவிட்டாள். மயக்கம் தெளிந்தபோது, கங்காணி அவளைத் தோட்டத்து ஆஸ்பத்திரிக்குக் கொழுந்து லொறியில் அனுப்பிவைத்தார். ஆனாலும் அவள் அங்கு செல்லாமல் லயத்துக்குத் திரும்பிவிட்டாள். அவளுக்கு மட்டுந்தான் தெரியும், அது பசிமயக்கம் என்று.கணேசுவின் பள்ளிக்கூட உடுப்பு சேறும் சகதியுமாய் இருந்தது. பாடசாலையில் இனாமாகக் கொடுத்த சீருடைத் துணியில் தைத்த அந்த ஒருசோடி உடுப்பையே கணேசு தினமும் பாடசாலைக்கு உடுத்திச் செல்வான். அதைத் துவைத்து இஸ்தோப்பில் அடுப்புக்கு நேராக மேலேசெருகியிருந்த மட்டக் கம்பிலே கொழுவி உலரவிட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. இப்படிக் காயவிடும்போது புகைக்காவி படிந்து வெள்ளைநிற சேட் கருமையடைந்துவிடும்.“சேட் ஒரே புகைபுடிச்சுக் கிடக்குன்னு பொடியங்கள் நக்கல் அடிக்கிறாங்க ஆயி” எனப் பலதடவை கணேசு அவளிடம் கூறியிருக்கிறான்.சீட்டரிசி கிடைத்ததும் அதனை விற்றுக்கிடைக்கும் பணத்தில் பயிற்சிப் புத்தகமும் கொப்பி பென்சிலும் வாங்கியபின் மீதிப்பணத்தில் கணேசுவுக்கு ஒரு சோடி கால்சட்டை சேட் தைத்துவிடவேண்டும்.பார்வதி இரவுச் சாப்பாட்டைச் சமைத்து முடித்த வேளையில் அவளது கணவன் கந்தையா தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான். அவன் வந்த கோலத்தைப் பார்த்தபோது பார்வதிக்கு ஆத்திரம் பொங்கியது.

“தெனமும் இப்புடி மூக்குமுட்டக் குடிச்சு அநியாயம் பண்ணுறியே ஒனக்கு அறிவிருக்கா ?”“என்னடி வந்ததும் வராததுமா தொணதொணங்கிறே....” கந்தையா அவளைப் பார்த்து முறைத்தான்.“நான் ஏதாவது சொல்ல வந்தேன்ன, தொணதொணக்கிறேன்னு என் வாய அடக்கிப்புடுவே...... இன்னிக்கு வாத்தியாரு என்ன சொன்னாரு தெரியுமா...... நம்ம கணேசுவுக்குக் கொப்பி பொஸ்தகம் வாங்கிக் குடுக்கச் சொல்லி போனகெழமையே ஒன்னைக் கூப்பிட்டுச் சொன்னாராம் ; கவனிச்சியா? ”“ஆமாடி, வாத்தியாரு நம்மளைக் கண்டா ஏதாவது சொல்லத்தான் செய்வாரு. அவர் சொன்னபடியெல்லாம் வாங்கிக் கொடுக்க எந்த நேரமும் நம்ம கையில மடியில காசிருக்கா? ”“நாளு தவறாமக் குடிக்கிறதுக்கு மட்டும் காசிருக்காக்கும்.”“என்னடி சொன்னே....?” என ஆத்திரத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்த கந்தையா, எட்டி அவளது வயிற்றில் உதைத்தான். “குட்டி போட்ட நாயி மாதிரி...... எந்த நாளும் ஒங்கிட்டக் கரச்சலா இருக்கு... சும்மா வளவளன்னு கத்திக்கிட்டு.....” அவனது கோபம் தணியவில்லை.“ஐயோ” என அலறியபடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு நிலத்திலே குந்தினாள் பார்வதி.இன்று சாராயக் கடையில் அவனுக்கு நேர்ந்த அவமானம் அவனை இப்போது நிதானமிழக்க வைத்துவிட்டது. அவன் எப்போதும் ஸ்டோர் லயத்து வெள்ளையன் கடையிலேதான் சாராயம் குடிப்பான். வெள்ளையனின் பலசரக்குக்கடை ஸ்டோர் லயத்தில் இருக்கிறது. பல சரக்குக் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட இரகசியமாகச் செய்யும் சாராய வியாபாரத்திலேதான் அவனுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. தினமும் மாலை வேளைகளில் பலர் அவனது கடையில் சாராயம் குடிப்பார்கள். தெரிந்தவர்களுக்குக் கடனுக்கும் சாராயம் கொடுத்துவிட்டுச் சம்பள நாட்களில் அந்தப் பணத்தை வசூலித்து விடுவான் வெள்ளையன். அன்று கந்தையா சாராயம் குடிக்கச் சென்ற போது, வெள்ளையன் சற்றுக் காரசாரமாகவே பேசினான்.“கந்தையா கடன் கூடிப்போச்சுன்னு நேத்தே சொன்னேன். எந்த நாளும் கடன் குடுக்கேலாது..... நான் இன்னிக்குக் கெடைக்கிற சல்லிய வச்சுத்தான் நாளைக்குச் சாமான் வாங்கிக்கிட்டு வரணும். அதனால கோவிச்சுக்காம சல்லியைக் கொணந்து கட்டிட்டு அப்புறமா வா...”“என்னங்கண்ணே, ஒங்க சல்லிய நான் எப்பவாவது கொடுக்காம வுட்டிருக்கேனா.... சம்பளத்துக்கு முந்தியே கொணந்து தந்திறேன். இன்னிக்கு மட்டும் ஒரு காப்போத்தல் தாங்க.... ”“அதெல்லாம் முடியாதப்பா.... நேத்தே சொன்னேன்தானே இன்னிக்கு சல்லியில்லாம வரவேணாமுன்னு ; சும்மா கரச்சல் பண்ணாதப்பா.”“என்ன முடியாதுங்கிறே, எப்பசரி நான் கடன் கொடுக்காம வுட்டிருக்கேனா... போனமாசங்கூட சல்லிகட்டேலாம வீட்டில இருந்த லெச்சுமி விளக்கைக் கொண்டாந்து குடுத்து என் கடனைத் தீர்க்கலியா... அநியாயமாத்தானே அந்த விளக்கைக் கொறஞ்ச வெலைக்கு வாங்கினே....”“இந்தா தேவையில்லாத பேச்சுப்பேசாத... எனக்கு கோவம் வந்துச்சுன்னா நடக்கிறதே வேற” என்றான் வெள்ளையன் சினத்துடன்.“என்ன செஞ்சுபுடுவே.... நீ கள்ளத்தனமா லயத்தில சாராயம் விக்கிறதப் பொலிசுக்குச் சொன்னேன்னா அப்புறம் நீ றிமாண்டிலதான் கெடக்கணும்.”“இந்தா கந்தையா வீண் பேச்செல்லாம் வேணாம்.... இன்னிக்கு மட்டும் தாறேன். நாளைக்குச் சல்லியில்லாம வராத” எனக்கூறி கால்போத்தல் சாராயத்தை ஊற்றிவந்து கந்தையாவிடம் கொடுத்தான் வெள்ளையன்.மூலையில் குடித்துக் கொண்டிருந்த கங்காணி ஒருவர் “என்ன கந்தையா நம்மவூட்டுக் கௌரவத்தைக் காப்பாத்தணுமில்லியா. இந்த மாதிரி சொல்லுக்கு இடம் வைக்கக்கூடாது..... நாளைக்கே கொண்டாந்து அந்தச் சல்லியை வீசிப்புடு.... அப்பதான் நமக்கும் கௌரவம்” எனத் தடுமாற்றத்துடன் கூறினார்.“கங்காணியாரே, நான் வழுவட்டைத்தனமா நடந்துக்கவே மாட்டேன். கையில சல்லியிருந்தா ஒடனேயே வீசிப்புட மாட்டேனா?”“யாவாரம் கெட்டுப்போகும் கந்தையா ; சும்மா சும்மா சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காத, நேரத்தோட வீட்டுக்குப்போ.... வெளிச்சம் இருக்குத்தானே......”

வெள்ளையன் இப்படிக் கூறியபோது, அவன் தன்னை வெளியே விரட்டுவது போன்ற உணர்வுதான் கந்தையாவுக்கு ஏற்பட்டது. தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தான்.வெள்ளையன் மேல் ஏற்பட்ட கோபத்தை இப்போது பார்வதியின் மேல்தான் தீர்க்க முடிந்தது கந்தையாவுக்கு.அடிவயிற்றைப் பிடித்தபடி சிறிது நேரம் குந்தியிருந்த பார்வதி ஆவேசமாக எழுந்தாள்.மூலையில் நித்திரையில் ஆழ்ந்திருந்த கணேசுவை உசுப்பி, “அடே கணேசு எந்திரடா..... வா இப்பவே ஒன் தாத்தா வீட்டுக்குப் போவோம்.... இந்தப்பாவி மனுசனோட வாழ ஏலாது... எந்த நாளும் குடிச்சுப்புட்டு வந்து அடியும் ஒதையுந்தான்....” பார்வதியின் குரலில் உறுதி தொனித்தது.“என்னடி சொன்னே... என்னைவுட்டுப் போயிடுவியா நீ?”“ஆமா, நான் இப்பவே போறேன். என் ஆயி அப்பன் குடுத்த நகைநட்டு சாமானத்தையெல்லாம் அழிச்சிட்டே.... வீடே மொட்டையாப் போச்சு.... இனி நான் மட்டுந்தான் கொறையாயிருக்கு.... ஒன்கூட இருந்தேன்னா என் புள்ளையோட படிப்பும் நாசமாப்போம்.”பார்வதியின் குரலில் இருந்த உறுதி கந்தையாவைத் திகைக்க வைத்தது. அவள் இப்படி ஒருபோதும் அவனைப் பிரிந்துசெல்ல முடிவு செய்ததில்லை.கந்தையா பார்வதியின் அருகே சென்று அவளது கைகளைப் பற்றினான்.“பார்வதி, என்ன வுட்டுட்டுப் போயிடாதெடி” அவனது குரல் நடுங்கியது.“வுடுய்யா கையை... நான் சொன்னாச் சொன்னதுதான்...” பார்வதி அவனது பிடியிலிருந்து கைகளை விடுவிக்கத் திமிறினாள்.“பார்வதி ஒம்மேல சத்தியமாச் சொல்றேன். இனிமே நான் குடிக்கவேமாட்டேன். நீ மட்டும் என்னை வுட்டுப் போயிடாத” அவன் அவளது தலையில் கையைவைத்துச் சத்தியஞ் செய்தான். அவனது குரல் கரகரத்தது; கண்கள் கலங்கின.

“கையை வுடுங்கன்னா வுடுங்க... எத்தன தரம் இப்புடிச் சத்தியம் பண்ணியிருக்கீங்க.... ஒங்க சத்தியத்தை நான் நம்பவே மாட்டேன்.”“பார்வதி, கடைசியாச் சொல்றேன்.. இனிமே நான் குடிச்சிட்டு வந்தேன்னா நீ என்னை வுட்டுப்போயிடு. இப்ப போவேணாம்.” அவன் கெஞ்சினான்.படுக்கையில் இருந்து எழுந்த கணேசு கண்ணைக் கசக்கிக் கொண்டு திகைப்புடன் தாயையும் தந்தையையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தான்.“சரி சரி கையை வுடுங்க, சாப்பாடு போடுறேன்... சாப்பிட்டுப் படுங்க.”பார்வதி அவனுக்கும் கணேசுவுக்கும் சாப்பாட்டுக் கோப்பையில் சோற்றைப் போட்டுக் கொடுத்தாள்.கந்தையாவினால் சாப்பிட முடியவில்லை. சிறிது உணவை அருந்திவிட்டுக் கையைக் கழுவினான். காதில் செருகியிருந்த பீடியை எடுத்து அடுப்பில் கிடந்த கொள்ளிக்கட்டையில் பற்றவைத்துக் கொண்டே சாக்கை விரித்து மூலையில் சாய்ந்து கொண்டான்.பார்வதி எதுவுமே பேசவில்லை. அவளது மௌனம் அவனை வருத்தியது.“என்ன பார்வதி மூஞ்சியை உம்முன்னு வைச்சுக்கிட்டு இருக்கே.. ஏதோ குடிமயக்கத்தில் காலை நீட்டிப்புட்டேன். அத மனசுல வச்சுக்காத.. இனிமே சத்தியமா ஒம்மேல கையை வைக்க மாட்டேன்.”இதுவரை நேரமும் அடுப்பின் முன்னால் குந்தியிருந்த பார்வதி இப்போது விம்மிவிம்மி அழுதாள்.அவன் எழுந்து சென்று ஆதரவாக அவளது தலையைத் தடவிவிட்டான்.அவள் விம்மலிடையே கூறினாள். “ஏன் இந்தக் குடியை வுடமாட்டேங்கிறீங்க? இங்கபாருங்க, தொங்கல் காம்பராவில இருக்கிற கருப்பாயி கம்முனாட்டியா இருந்துக்கிட்டே புள்ளையைப் படிக்கவைச்சு இன்னிக்கு மாஸ்டர் ஆக்கலியா... நீங்க இந்தக் குடிய மட்டும் வுட்டுப்புட்டீங்கன்னா நமக்கு ஒரு கஸ்டமும் இருக்காது.... நமக்கு இருக்கிறதே ஒரு புள்ளதான். அவனையும் நல்லாப் படிக்க வைக்கலாம்.”“சரி பார்வதி, நான்தான் குடிக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டேனே... இன்னும் நம்பிக்கையில்லையா..... சரி சரி எந்திரு, சாப்பிட்டுப் படுத்துக்க....”கந்தையா படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். என்றுமில்லாதவாறு அவனது உள்ளம் பதகளித்துக் கொண்டிருந்தது. பார்வதியுடன் இதுவரை காலமும் வாழ்ந்த வாழ்க்கையை அவன் எண்ணிப்பார்த்தான். புதுமணப்பெண்ணாக அவள் அவனிடம் வந்தபோது எவ்வளவு சீரும் சிறப்புடனும் வந்தாள். நகை நட்டும் பொருள்பண்டமுமாக அவள் கொண்டுவந்த எல்லாவற்றையும் அவன் குடித்துக் குடித்து அழித்துவிட்டான். அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் வறுமையும் துன்பமும்தான். இதுவரை காலத்தில் அவள் தனக்காக எதையுமே அவனிடம் வேண்டியதில்லை. பிள்ளையின் முன்னேற்றத்துக்காக அவனைப் படிக்க வைப்பதற்காக இந்தப் பாழாய்ப்போன குடிப்பழக்கத்தைத்தான் விட்டுவிடும்படி தினந்தினம் வேண்டுகிறாள்.அவன் எழுந்து சென்று மீண்டும் பீடி ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான். பார்வதியும் நித்திரையின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.* * * * *சீட்டரிசியை வந்து பெற்றுக்கொள்ளும்படி சிகப்பாயி சொல்லியனுப்பியிருந்தாள்.கொழுந்துக் காலமாதலால் ஞாயிற்றுக்கிழமையும் தோட்டத்தில் வேலை கொடுத்தார்கள். பகல்கொழுந்து நிறுத்து முடிந்ததும் பார்வதி சிகப்பாயியிடம் சென்றபோது அவள் சீட்டரிசியை அளந்து கொடுத்தாள். நாற்பது கொத்து அரிசியைச் சாக்குடன் தூக்கி முதுகிலே வைத்தபோது கொழுந்து நிறைந்த கூடையைப்போல் அது பெருஞ்சுமையாய்க் கனத்தது.“ பார்வதி, சீட்டரிசியை லயத்துக்கடையில வித்தியென்னா அநியாய விலைக்குத்தான் எடுப்பாங்க.... டவுனில கொண்டு போய்க்கொடுத்தா நூறுரூபா சரி கூடக்கிடைக்கும்” எனப் புத்திமதி கூறினாள் சிகப்பாயி.

சீட்டரிசியை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் அதனை இஸ்தோப்பில் கோழி அடைக்கும் மூலையில் வைத்து கோழிக் கூடையால் மூடிவைத்தாள் பார்வதி. புருஷனுக்குத் தெரியாமல் அதனை விற்பதானால் அந்திக்கு வேலைவிட்டு வந்ததும் லயத்துக் கடையிலேதான் விற்கவேண்டும். அரிசியோடு டவுனுக்குப் புறப்பட்டுச் சென்றால் அது புருஷனுக்குத் தெரியவந்துவிடும்.பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டுவந்ததும் அவள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டபோதுதான் கந்தையா கவ்வாத்து முடிந்து வீட்டுக்குத் திரும்பினான். நான்கைந்து நாட்களாக அவன் வெள்ளையனின் சாராயக் கடைப்பக்கம் போகாமல் இருப்பது பார்வதிக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. ஆனாலும் மாலை வேளைகளில் அவன் எங்கோ வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குப் பிந்தி வருவதுதான் அவளுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது.பார்வதிக்கு மலையில் வேலையோடவில்லை. அந்திக்கு அவள் புருஷன் வீட்டுக்குத் திரும்புமுன் சீட்டரிசியை எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கிவிடவேண்டும்.அன்று பிந்தித்தான் அந்திக் கொழுந்து நிறுத்தார்கள். அவள் வீட்டுக்குத் திரும்பியபோது கணேசு லயத்தின் முன்னால் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.கொழுந்துக் கூடையை விறாந்தையில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு சீட்டரிசியை எடுப்பதற்காக உள்ளே சென்றாள் பார்வதி.அங்கே அவள் கண்ட காட்சி.....கோழிக் கூடை திறந்தபடி மூலையில் கிடந்தது. அவள் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த சீட்டரிசி மூடையோடு காணாமல் போய்விட்டது. பார்வதிக்கு அடிவயிற்றைக் கலக்கியது. தலை சுற்றியது. “ஐயோ” என அலறியபடி நிலத்திலே குந்தினாள்.பார்வதியின் மனதில் வைராக்கியம் புகுந்துகொண்டது. அவள் தனது வாழ்க்கைப் பாதையைச் சீராக்க வேண்டிய காலம் வந்துவிட்டதெனத் திடமாக எண்ணினாள். அவளது உடைமையாக இருந்த இரண்டொரு துணிமணிகளையும் கணேசுவின் பாடசாலை உடுப்பையும் எடுத்துக் கொழுந்துக்கூடையில் போட்டுக் கொண்டாள்.

“வாடா கணேசு..... பொறப்படு....., இனி இந்த வீட்டில நாம இருக்கக்கூடாதடா..... ஒங்கப்பன் திருந்தவே மாட்டான். நீ இங்க இருந்தியென்னா ஒன் படிப்பும் நாசமாப்போம்.....” அவள் கணேசுவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.அப்போது அவசர அவசரமாக அங்கே வந்து சேர்ந்தான் கந்தையா.“எங்க பொறப்பட்டுட்டே பார்வதி? குடிகாறன் திருந்தவே மாட்டான்னு நெனைச்சுத்தானே சீட்டரிசியைக் கோழிக் கூடையால மறைச்சுவச்சே.... என்மேல ஒனக்கு இன்னமும் நம்பிக்கை வரல்லியா? சீட்டரிசியை எடுத்து செலவுப் பெட்டிக் குள்ள வச்சிருக்கேன்.... நான் திருந்தியிட்டேன் பார்வதி..... போய்ப்பாரு.”பார்வதியின் உள்ளம் சந்தோஷத்தால் விம்மியது. அவள் தனது செயலுக்காக இப்போது பெரிதும் வெட்கப்பட்டாள்.“இல்லீங்க... இப்ப ஒங்கமேல எனக்கு நம்பிக்கை வந்துருச்சுங்க...” எனக்கூறிய பார்வதி “நீங்களே அந்தச் சீட்டரிசியைக் கொண்டுபோய் செலவுக் கடையில வித்து சல்லிய வாங்கிக்கிட்டு வாங்க... நாளைக்கு கணேசுவுக்கு வேண்டிய கொப்பி புஸ்தகம் வாங்கிக்குவோம்” என்றாள்.“அதெல்லாம் வேணாம் பார்வதி; நான் அந்தி அந்திக்கு நாட்டில போயி கைக்காசுக்கு வேலசெஞ்சு நாலுநாள் சம்பளம் வாங்கியிருக்கேன்... அதில கணேசுவுக்கு புஸ்தகம் வாங்கலாம்....” என்றவன் மடியில் இருந்த பணநோட்டுகளை எடுத்து அவளது கைகளில் திணித்தான்.பார்வதி மெய்மறந்தவளாய் “என்வூட்டு ராசால்ல....” எனக்கூறி அவனைக் கட்டிக்கொண்டு நெஞ்சில் முகம் புதைத்தாள்.அவர்களது செலவுப் பெட்டியை சீட்டரிசி நிறைத்திருந்தது.- வீரகேசரி 1997

உழைக்கப் பிறந்தவர்கள் - சிறுகதைத் தொகுதி

+++++++++++++++++++++++++

கருவறை எழுதிய தீர்ப்பு !

நடுச்சாம வேளை.டெலிபோன் மணி அலறியது. தூக்கக்கலக்கத்துடன் ரிசீவரை எடுத்து ‘ஹலோ’ என்றேன்.“கோல் ஃபுறம் ஸ்ரீலங்கா, புரபெஸர் சுந்தரலிங்கத்துடன் பேசவேண்டும்.”“ஸ்பீக்கிங்.”“மிஸ்டர் பெரேராவின் நண்பன் பேசுகிறேன். அவரது மகன் சுனில் இறந்துவிட்டான். பெரேரா இத்தகவலை உங்களுக்குத் தெரிவிக்கும்படி கூறினார்.”“வட்.. வட் ஹப்பின்ட்?”“விடுதலைப் போராளிகள் சுனில் ஓட்டிச்சென்ற போர் விமானத்தைச் சுட்டு விழுத்திவிட்டார்கள். சுனிலின் உடல் கருகிய நிலையிலேதான் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகக் கிடைத்தது. மரணச் சடங்குகள் நாளை மறுதினம் இராணுவ மரியாதையுடன் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.”“ஓ மை காட்” எனக்குத் தலை சுற்றுவதைப்போல இருந்தது. ரிசீவரை வைத்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்தபோது மனைவி விபரம் கேட்டாள்; கூறினேன்.“சுனில் இராணுவத்தில் பைலட்டாகச் சேர்வதை அநுமதிக்க வேண்டாமென்று ஆரம்பத்திலேயே நீங்கள் பலமுறை பெரேராவிடம் சொன்னீர்கள்; அவர்கள் கேட்கவில்லை. பெரேராவின் மனைவி ஸ்ரீமணிதான் பாவம், ஒரே மகனை இழந்ததில் பெரிதும் துடித்துப்போவாள்.”எனது மனைவியின் குரலில் வேதனை தொனித்தது. கவலையுடன் இருந்தவள் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்.என்னால் தூங்க முடியவில்லை. படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன்.முப்பது வருடங்களுக்கு முன்பு நான் கொழும்பு மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது எங்களது வீட்டிற்கு அயலிலேதான் பெரேராவின் வீடும் இருந்தது. அவர் அப்போது இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.அப்போதுதான் அந்தப் பயங்கரமான இனக்கலவரம் வெடித்தது. சிங்கள இனவெறியர்கள் தமிழர்களைத் தேடிக் கொன்று குவித்தார்கள். தமிழர்களது உடைமைகளைக் கொள்ளையடித்துத் தீவைத்துக் கொழுத்தினார்கள். என்னையும் என் மனைவியையும் தெருவுக்கு இழுத்துவந்து உடலிலே பெற்றோல் ஊற்றித் தீவைப்பதற்கு ஆயத்தமானபோது அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.‘டுமீல் டுமீல்’ என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் பறந்து வந்தன. ‘ஐயோ அம்மே’ என அலறியபடி சிலர் துடித்து விழுந்தனர். பலர் ஓடித் தப்பினர். பெரேரா துப்பாக்கியுடன் வந்து எங்களைக் காப்பாற்றித் தனது வீட்டில் அடைக்கலந் தந்தார்.அதன்பின் நான் வெகுகாலம் இலங்கையில் இருக்கவில்லை. மனைவியுடன் புலம்பெயர்ந்து லண்டனுக்கு வந்து விட்டேன்.மருத்துவக் கல்லூரி ஒன்றில் எனக்கு விரிவுரையாளராக வேலை கிடைத்தது. சில வருடங்களிலேயே மகப்பேற்றுத்துறைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றேன்.சிலவருட இடைவெளிக்குப்பின் பெரேரா மூன்றுமாத லீவில் தனது மனைவியுடன் லண்டனுக்கு வந்தார். திருமணமாகி வெகுகாலமாகியும் குழந்தைகள் இல்லாததால் என்னிடம் வைத்திய உதவியை நாடினார்.நான் அவரையும் மனைவியையும் பரிசோதித்தேன். பெரேராவின் ‘ஸ்பேர்ம் கவுன்ற்’ றிப்போர்ட்டைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெரேராவினால் ஒரு குழந்தைக்குத் தந்தையாக முடியாது. அவரது ஸ்கலிதத்தில் உயிருள்ள விந்துகள் இருக்கவில்லை. ஆனாலும் அவரது மனைவி ஸ்ரீமணியின் உடலமைப்பில் எவ்விதக் குறைபாடும் இல்லை.அவளால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்.நான் இதனைக் கூறியபோது பெரேரா பெரிதும் மனக்குழப்பம் அடைந்தார். குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாமா? என என்னிடம் அபிப்பிராயம் கேட்டார்.நான் நவீன மருத்துவ முறைகளை அவருக்கு விளக்கினேன். வேறொரு ஆணின் விந்தினைப் பெற்று குழாய் மூலம் ஸ்ரீமணியின் கருப்பைக்குள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். இந்த முறையில் கருத்தரிக்கும் போது தாயினது ‘ஜீன்ஸ்’ குழந்தைக்கு வருவதால் பெற்றோரது ஐம்பது வீதப் பரம்பரை அலகுகள் குழந்தைக்கு வந்துவிடுகின்றன. தத்தெடுக்கப்படும் குழந்தையை வேறொருவரது குழந்தையாகவே சமூகம் கணிக்கிறது. ஆனால் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை பெற்றோரது குழந்தையாகவே சமூகத்தின் கணிப்பைப் பெறுகிறது” என்றேன்.பெரேரா செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்கு விருப்பம் தெரிவித்தபோதும் ஸ்ரீமணி தயக்கம் காட்டினாள்.“டொக்டர், அப்படியானால் நீங்கள் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள்? உங்கள் மனைவியையும் நீங்கள் கூறிய செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்திருக்கலாமே” என என்னை மடக்கினாள்.நான் வேதனையுடன் கூறினேன், “அதுதான் விதி.... எனது மனைவிக்கு ‘ஃபைபுறோயிட்’ எனப்படும் கருப்பைக் கட்டிகள் வளர்ந்து தொல்லை கொடுத்ததால், அவளது கருப்பையையே சத்திரசிகிச்சை மூலம் நீக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. அவள் கருத்தரிப்பதற்குச் சந்தர்ப்பமேயில்லை.”அதன் பின்புதான் ஸ்ரீமணி ஒருவாறு செயற்கைமுறைக் கருத்தரித்தலுக்குச் சம்மதம் தெரிவித்தாள்.மறுவாரத்தில் ஒருநாள் பெரேராவும் மனைவியும் ஒரு புதிய பிரச்சினையுடன் என்னைச் சந்தித்தார்கள். “ஸ்ரீமணி மனோரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள். நேற்றிரவு என்னை நடுச்சாமத்தில் எழுப்பி, தனக்கு வெள்ளைத்தோலும் பூனைக் கண்ணும் செம்படைத் தலைமயிருமாக ஒரு குழந்தை பிறக்கக் கனவு கண்டதாகக் கூறினாள்” எனப் பெரேரா சொன்னார்.அவரைத் தொடர்ந்து ஸ்ரீமணி, இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதேபோன்று நீக்குரோ இனக் குழந்தையொன்று தனக்குப் பிறக்கக் கண்டதாகக் கூறினாள்.“உங்களது மருத்துவ முறைப்படி ஸ்ரீமணிக்கு பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடன் இருக்குமா?” எனக் கவலையுடன் கேட்டார் பெரேரா.ஸ்ரீமணியின் மனக்குழப்பம் எனக்குப் புரிந்தது. என்னிடம் பயிற்சிபெறும் பலதேசத்து மாணவர்களை அவள் எனது

‘கிளினிக்’ கில் பார்த்திருக்கிறாள். அவர்கள் யாரிடமாவது விந்தினைப் பெற்று தனது கருக்கட்டலுக்குப் பாவித்து விடுவேனோ என அவளது உள்மனம் பயப்படுகிறது.நான் சிரித்துவிட்டு, “பயப்படாதீர்கள் இங்கு ‘விந்து வங்கி’ ஒன்று இருக்கிறது. அதில் விந்து வழங்கத் தகுதியானவர்கள் பலரது விந்துகள் சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்களும் எம்மிடம் உள்ளன. பெரேராவின் உயரம், தோற்றம், நிறம் முதலியன பொருந்தக்கூடிய ஒருவரது விந்திணை உங்களது கருக்கட்டலுக்குப் பாவிப்பேன். பிறக்கும் குழந்தை ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே பிறக்கும்” என அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்.‘ஆர்ட்டிபிஷல் இன்ஸெமினேஷன்’ முறையில் ஸ்ரீமணியைக் கருத்தரிக்கவைத்தேன். மூன்றாம் மாதமே அவர்கள் ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.ஸ்ரீமணிக்கு ஆண் குழந்தை பிறந்தபோது பெரேரா அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. எனக்கு உடனே டெலிபோன் செய்து ஆயிரம் நன்றிகள் கூறினார். குழந்தை அச்சொட்டாக ஒரு ஸ்ரீலங்கனின் தோற்றத்துடனேயே இருக்கிறது என்றார். ‘சுனில்’ என்ற தனது பாட்டனாரின் பெயரையே குழந்தைக்கு வைக்கப்போவதாகச் சொல்லிக் குதூகலித்தார். அதன்பின் சுனிலின் வளர்ச்சிக்கட்டம் ஒவ்வொன்றின் போதும் என்னிடம் டெலிபோன் செய்து உரையாடி மகிழ்வார். அபிப்பிராயங்களைப் பரிமாறுவார், ஆலோசனைகள் கேட்பார்.சுனில் வளர்ந்து இளைஞனாகி இராணுவ விமானம் ஓட்டும் பைலட்டாகப் பயிற்சிக்குத் தெரிவானபோது அந்தத் தொழில் ஆபத்தானது, வேண்டாம் என நான் தடுத்தேன். ஆனால் சுனில் பைலட் ஆவதில் பிடிவாதமாக இருப்பதாகப் பெரேரா கூறினார்.சுனிலின் வீரதீரச் செயல்களைப் பெரேரா அடிக்கடி என்னிடம் கூறுவார். போராளிகளின்மேல் குண்டுமழை பொழிந்து எவ்வாறு அவர்களைத் துவம்சம் பண்ணினான் என விபரிப்பார். அப்போ தெல்லாம் இனம்புரியாத வேதனை என்னை வாட்டும்.‘ரிவிரஸ’ இராணுவ நடவடிக்கையின்போது குண்டுமழை பொழிந்து யாழ்ப்பாண மக்களை அநாதைகளாக்கி விரட்டியடிக்க உதவியவன் சுனில்தானா? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உயிருடன் சமாதி கட்டியவன் அவன்தானா? இரவில் படுக்கையில் சாயும் போதெல்லாம் இத்தகைய எண்ணங்களினால் என்மனம் தத்தளிக்கும், ஆனாலும் விடுதலைப் போராளிகளினால் அடிக்கடி விமானங்கள் சுட்டுவிழுத்தப் படும்போது என்மனம் துணுக்குறும். சுட்டுவிழுத்தப்பட்ட விமானம் சுனில் ஓட்டிச்சென்றதாக இருக்கக் கூடாதேயென மனசு பிரார்த்திக்கும் ; இருதலைக் கொள்ளி எறும்பாய்த் துடிக்கும்.மறுநாள் நான் சுனிலின் மரணச்சடங்குகளில் பங்குபற்றுவதற்காக ஸ்ரீலங்காவிற்குப் புறப்பட்டேன். அப்போது என்மனைவி என்னை ஆச்சரியத்துடன் நோக்கினாள். ஆனாலும் தடையேதும் கூறவில்லை. பெரேரா இனக்கலவரத்தின்போது எங்களைக் காப்பாற்றியது அவள் நினைவில் வந்திருக்கலாம்.பெரேரா என்னைக் கண்டதும் விரைந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார். ஸ்ரீமணி என் காலடியில் விழுந்து மயக்கமடைந்தாள்.சுனிலின் கருகிய உடலை நான் பார்த்ததும் என்னுள் அடக்கிவைத்திருந்த சோகம் அத்தனையும் திரண்டு பிரவாகித்தது. எனது உடல் குலுங்க விம்மிவிம்மி அழுதேன்.சுனில் எனது விந்து! என் மகன்! என்ற உண்மையை நான் யாரிடந்தான் சொல்ல முடியும் ?- தினக்குரல் 1997.

++++++++++++++++++++++++++++++++

திருப்புமுனைத் தரிப்புகள்காலையிலிருந்து பெருமாள் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அந்தியானதும் பங்களாவுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கண்டக்டர் பிரட்டுக்களத்தில் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறினால் ஏதோ முக்கியமான சங்கதியாகத்தான் இருக்க வேண்டும்.லயத்தின் முன்னால் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தங்கராசுவிடம் “ஆயா வந்தா நான் கண்டக்டரையா பங்களாவுக்குப் போயிருக்கேன்னு சொல்லுடா” எனக்கூறிவிட்டுக் குறுக்குப் பாதையில் ஏறிக் கண்டக்டரின் பங்களாவை வந்தடைந்தான் பெருமாள்.முன்விறாந்தையில் செக்றோல் செய்து கொண்டிருந்த கண்டக்டர் பெருமாளைக் கண்டதும், “வா பெருமாளு ஒன்ன எதிர்பாத்துக்கிட்டுத் தான் இருக்கேன்” எனக் கூறியபடி செக்றோலை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தார்.“என்னங்கையா ஏதும் அவசரங்களா?”“கொழும்பில நம்ம மச்சினன் ஒருத்தர் கடை வச்சிருக்காரு... அங்க வேலை செய்ய நம்பிக்கையான பொடியன் ஒருத்தன் வேணுமாம். சாப்பாடு, படுக்கை வசதி, தங்கிறதுக்குத் தனியான றூம் எல்லாம் இருக்கு; நல்ல சம்பளமும் கொடுப்பாங்க... அதுதான் ஒன் மகனை அனுப்பிவைக்கிறியான்னு கேட்கத்தான் கூப்பிட்டேன்.” கண்டக்டர் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

பெருமாள் ஒரு கணம் யோசித்தான். வீட்டில் கையுதவிக்குத் தங்கராசு மட்டுந்தான் இருக்கிறான். விறகுக்குச்சி பொறுக்குவதற்கும் கடைகண்ணிக்குப் போவதற்கும் சிறுசுகளைக் கவனித்துக் கொள்வதற்கும் அவனை விட்டால் வேறு ஆளில்லை. அவனைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டு என்ன செய்வது? அவனை விட்டுப்பிரிய தாயும் சம்மதிக்கமாட்டாள்.“என்ன பெருமாளு, யோசனை பண்ணிக்கிட்டிருக்க....?”“இல்லீங்க, அவன் எனக்கு ஒரே ஆம்பளப்புள்ள..... ஸ்கூலுக்கும் போய்க்கிட்டிருக்கான்.... ஆறாம் ஆண்டு படிக்கிறான்... அத எப்படிங்க கெடுக்கிறது?” கண்டக்டரின் மனங்கோணாமல் பொருத்தமான பதிலைக் கூறிவிட்ட திருப்தி பெருமாளுக்கு.“இந்தாப்பா, தோட்டக்காட்டில பயலுக படிக்கிறேன்னு சொல்லி அப்பன் ஆயிக்கு செலவுதான் வைப்பானுக, அப்புறமா கொஞ்சம் வளந்தோடன கொழும்புக்கும் கண்டிக்கும் கோப்பை கழுவப் போயிறுவானுக.... ஒன் மகன் படிச்சது போதும்; நான் சொல்றமாதிரி நம்ம மச்சினன்கிட்ட அனுப்பிவை... தொழிலும் பழகுவான்... நல்ல பழக்க வழக்கமும் வரும்.”கண்டக்டரது இளைய மகன் அப்போது அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். “டடி, நாளைக்கு ஸ்கூல்பீஸ் கட்டணும்.... அப்புறம் பொக்கற் மனியும் வேணும்....” எனச் செல்லமாகத் தந்தையின் கையைப் பற்றினான்.“சரி கண்ணா, நீ இப்ப உள்ள போ.... கதைச்சுக்கிட்டிருக்கேன்... அப்புறமா வந்து தாறேன்” எனக்கூறிய கண்டக்டர் மகனை உள்ளே அனுப்பிவைத்தார்.பெருமாள் கண்டக்டரின் மகனை உற்றுப் பார்த்தான். தங்கராசுவின் வயசுதான் அவனுக்கும் இருக்கும்.... தினமும் டவுனில் உள்ள பாடசாலைக்குப் போவதற்காகக் காலை வேளைகளில் அவன் பஸ்ஸிற்குக் காத்திருப்பதை பெருமாள் பலதடவை பிரட்டுக் களத்திற்குப் போகும் வழியில் பார்த்திருக்கிறான்.“ஐயா, கோவிச்சுக்காதீங்க... ஒங்க மகனூட்டு வயசுதான் என் மகனுக்கும் இருக்கும்.... அவனும் கொஞ்சம் படிக்கட்டுங்கையா... அப்புறமாப் பாப்பங்க....”

பெருமாளின் வார்த்தைகள் கண்டக்டரின் நெஞ்சில் சுரீரெனத் தைத்தன. அவரது மகனோடு தனது மகனையும் ஒப்பிட்டுப் பேசிய பெருமாளின் ராங்கித்தனம் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.“என்ன பெருமாளு பேச்சுப் பேசுறே... லயத்தில இருந்துக் கிட்டு ஒன் புள்ளயைப் படிக்கவைக்க ஏலுமா...? வாழையடி வாழையா ஒங்க அப்பன் பாட்டன் காலத்தில இருந்து அந்தப் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமாத்தானே வாழுறீங்க.... இப்ப மட்டும் ஒன்மகன் பெரிசா படிச்சுக்கிழிச்சுடப் போறானோ...?”“அப்புடிச் சொல்லாதீங்க.... எங்கவூட்டு காலந்தான் போச்சு... இனிமேசரி புள்ளைங்க படிக்கட்டுமே...”கண்டக்டர் ஏளனமாகச் சிரித்தார். “இப்படிச் சொன்னவங்க ரொம்பப்பேரு.... நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.... ஒம்புள்ள தங்கராசுவும் தோட்டத்தில பேரு பதிஞ்சு எங்கிட்ட ஒரு நாள் வேலைக்கு வரத்தான் போறான்... அப்ப பாத்துக்கிறேன்.”பெருமாள் விருட்டென எழுந்தான். “தெருத்தெருவாப் பிச்சை எடுத்தாலும்சரி எம்புள்ளயப் படிக்க வைப்பேனே தவிர ஒங்க காலடிக்கு வரவுடமாட்டேன்.”கண்டக்டரும் நாற்காலியைப் பின்புறமாகத் தள்ளியபடி வேகமாக எழுந்தார். ஆத்திரத்தில் அவரது உடல் நடுங்கியது. கதவின் பக்கம் கையைக் காட்டி “போ வெளியே” என உரத்த குரலில் கத்தினார்.பெருமாள் விருட்டென வெளியே வந்தான். கண்டக்டர் படீரெனக் கதவை அடித்துச் சாத்தியது அவனுக்குப் பிடரியில் அறைவதைப் போலிருந்தது.முற்றத்தில் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த தோட்டக்காரன் “என்னண்ணே, என்ன நடந்துச்சு...? ரொம்பக் கோபமாப் போறாப்புல இருக்கே...” எனக் கேட்டான்.“இந்தக் கண்டக்டர் சொல்றான் .... இவரு வூட்டுப் புள்ளைங்க மட்டுந்தான் படிக்குமாம்.... படிக்கணுமாம்... நம்ம வூட்டுப்புள்ளைங்க படிக்காதாம்... படிக்கக் கூடாதாம்.”தோட்டக்காரன், கண்டக்டர் கவனிக்கிறாரா எனப் பங்களாப் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தாழ்ந்த குரலில் “சரி சரி, போங்கண்ணே.... அப்புறமாப் பேசிக்குவோம்” என்றான்.“ஒங்கமாதிரி தலையச் சொறிஞ்சிக்கிட்டுப் போறவனில்ல நானு; நெனச்சத செஞ்சுகாட்டுவேன். நீ இருந்துபாரு எம்புள்ளயப் படிக்க வைக்கிறேனா இல்லையான்னு...” பெருமாளின் குரலில் உறுதி தொனித்தது.* * * * *நடுக்காம்பராவில் சுவரோரமாகச் சாக்கை விரித்து அதனருகே பலகைக் கட்டைமீது குப்பி விளக்கை வைத்துப் படிப்பதற்கு ஆயத்தமானான் தங்கராசு. சாக்கின்மேல் சம்மணம் கொட்டியிருந்து முன்னால் கொப்பியை விரித்துவைத்துக் கொண்டு குனிந்து எழுதத்தொடங்கினான். தமிழ்ப்பாடத்தில் வாத்தியார் கொடுத்த வீட்டுவேலையைச் செய்துகொண்டு போகாவிட்டால் மறுநாள் பாடம்முடியும்வரை முழங்காலிலேதான் நிற்கவேண்டி வரும்.இஸ்தோப்பின் பக்கமிருந்து கிளம்பிய புகை நடுக்காம்பராவை நோக்கி வரத்தொடங்கியது.“என்ன ஆயா, எந்தநாளுந்தான் சொல்லிக்கிட்டிருக்கேன்.... நான் படிக்க ஒக்காந்தேன்னா நீயும் அடுப்பில பொகையப் போடுற... எனக்குக் கண்ணு எரியுது ; படிக்க முடியல்ல” என்றவாறு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்தான் தங்கராசு.“மெலாரு பச்சயா இருந்தா நான் என்ன செய்யட்டும்?; பொகைதான் வரும். காஞ்ச மெலாரு பாத்துப் பொறுக்கிட்டுவான்னு சொன்னா நீ எந்த நாளும் பச்சை மெலாருதான் கொண்டாறே...” எனக் கூறிக்கொண்டே அவனது தாய் அலமேலு ஊதாந்தட்டையை எடுத்து அடுப்பை ஊதத்தொடங்கினாள். அடுப்பிலிருந்து வரும் புகை குறைந்தது. ஆனாலும் இஸ்தோப்பின் சுவருக்கும் கூரைக்கும் இடையே உள்ள நீக்கல் வழியாக இப்போது பக்கத்து வீட்டுப்புகை வரத்தொடங்கியது.தங்கராசுவிற்கு மூக்கு அரித்தது. பலமாக இரண்டு தடவை தும்மிவிட்டு மூக்கிலிருந்து வடிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடி நிமிர்ந்தான். முன்புறமாகக் குனிந்திருந்து எழுதியதால் முதுகு வலிக்கத் தொடங்கியது. சம்மணங்கொட்டிய கால்களை விரித்து நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்தான்.குப்பி விளக்கிலிருந்து கிளம்பிய புகையும் அடுப்புப் புகையுடன் சேர்ந்துகொண்டது. கண்களில் எரிச்சல் அதிகமாகியது. அவனுக்குத் தெரியும் கண்கள் எரியத் தொடங்கிவிட்டால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும்.காம்பராவில் எதிர்மூலையில் அவனது தங்கை நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவன் தும்மிய சத்தத்தினாலோ என்னவோ தொட்டில் சீலைக்குள் இருந்த குழந்தை நெளிவது தெரிந்தது.தங்கராசு எழுந்து வெளியேவந்து வாசலில் மூக்கைச் சிந்திவிட்டு மூலையிலிருந்த அலுமினியக் குடத்திலிருந்து கோப்பையில் தண்ணீரை ஊற்றிக் கண்களையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.வெளியே பந்தத்துடன் யாரோ சோலைமலை வீட்டுப் பக்கம் போவது தெரிந்தது. லயத்து நாய்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குரைக்கத் தொடங்கின. அந்திபட்டாலே இப்படித்தான், பந்தத்தோடு யாராவது அடிக்கடி சோலைமலை வீட்டுப்பக்கம் போவார்கள்; அப்போதெல்லாம் இந்த நாய்கள் பெருங்குரல் எழுப்பத் தொடங்கிவிடும் சோலைமலை மாட்டுத் தொழுவத்தில் வைத்து நாட்டுக்கள்ளு விற்பதாகப் பேசிக்கொண்டார்கள். அவனது தந்தை பெருமாளும் இப்போது அங்குதான் போயிருக்கிறாரென்பது தங்கராசுவிற்குத் தெரியும். இந்த லயத்து நாய்கள் பலமாகக் குரைக்கும் சத்தம் லயத்தில் உள்ளவர்களுக்குப் பழகிப்போய் விட்டது. யாருமே அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.தொட்டில் சீலைக்குள் நெளிந்து கொண்டிருந்த தங்கச்சிப் பாப்பாகூட இப்போது அமைதியாகத் தூங்குவது தெரிந்தது. ஆனால் தங்கராசுவிற்குமட்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால் அமைதியாகப் படிக்கமுடிவதில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சத்தம் ஓயும்வரை சுவருடன் சாய்ந்து கொள்வான்.தங்கராசு மீண்டும் படிக்கத் தொடங்கியபோது தங்கச்சிப் பாப்பா அழுகையோடு நெளியத் தொடங்கினாள்.“அடே தங்கராசு, அம்மாபுள்ளய கொஞ்சம் ஆட்டிவிடு.... சோறு வடிச்சுக்கிட்டு இருக்கேன்.”“என்ன ஆயா, கொஞ்சங்கூட படிக்க வுடமாட்டேங்கிற..... வேலை வச்சுக்கிட்டே இருக்கே....” எனச் சினத்துடன் கூறிக் கொண்டே எழுந்த தங்கராசு தொட்டிலை ஆட்டத் தொடங்கினான்.குழந்தையின் அழுகை குறையவில்லை. ‘சுர்’ரென்ற சத்தத்துடன் நிலம் நனைவது தெரிந்தது. தொட்டிலை அங்கும் இங்கும் அசைத்து நிலத்திலே கோலம் வரைந்தான் தங்கராசு; அவனுக்கு எப்பவுமே இது ஒரு விளையாட்டு.“ஏய் மாடு, காது கேக்கலியா.... புள்ள கத்திறது....?” எனக் கூறிக்கொண்டே வந்த அலமேலு அவனது காதைப்பிடித்துத் திருகிவிட்டு பிள்ளையைத் தூக்கினாள்.தங்கராசு மீண்டும்போய் ஒருதடவை கண்களைக் கழுவிக் கொண்டான்.“என்னடா தங்கராசு, என்ன பண்ணிக்கிட்டு இருக்கே... படிக்கலியா?” எனக் கேட்டுக்கொண்டே தள்ளாடியபடி உள்ளே நுழைந்தான் பெருமாள்.“ஒரே பொகைப்பா.... அதுதான் கண்ணைக் கழுவிட்டு வந்தேன்...”“ஏன்டி அலமேலு, அவன் படிக்கிற நேரத்திலதான் பொகையைப் போடணுமா..... அந்திக்கு வந்த ஒடனேயே ஆக்கியிருக்கலாந்தானே....”அலமேலு பதிலேதும் பேசாமல் பிள்ளைக்குப் பாலூட்டத் தொடங்கினாள். அடுத்த வீட்டிலிருந்துதான் புகைவருகிறது என்று சொன்னால் கணவன் அங்கு சண்டைக்குப் போய்விடுவான் என்பது அவளுக்குத் தெரியும். சிறிது நாட்களாக கணவனிடத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறாள். தங்கராசுவின் படிப்புக் காரணமாக அவனுக்கும் லயத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுவதுண்டு.போன வாரத்தில் ஒருநாள் லெச்சுமன் பூசாரி மூன்றாவது காம்பரா மூக்காயிக்குப் பிடித்திருந்த பேயை விரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். மூன்று மாதங்களுக்கு முன்னர் நஞ்சுகுடித்து இறந்துபோன முனியாண்டிதான் பேயாகி ‘மூணு ரோட்டு’ முச்சந்தியில் வைத்து அவளைத் தொடருகிறான் என லயத்தில் பேசிக்கொண்டார்கள். பூசாரியின் உடுக்குச் சத்தத்துடன் பேய்விரட்டும் ஓசையும் மூக்காயியின் அலறலும் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்தன.சோலைமலை வீட்டுக்குப் போய்விட்டுத்திரும்பிய பெருமாளுக்கு உடுக்குச்சத்தம் ஆத்திரத்தைக் கிளப்பியது. “இதென்னடா மசிரு பூசாரி, எந்தநாளும் உடுக்கு அடிச்சு ஆளுங்கள ஏமாத்திக்கிட்டிருக்கான்... லயத்தில ஒரே சத்தம்; புள்ளைங்க படிக்கேலாது. இப்பவேபோயி செவிட்டில ரெண்டு குடுத்து உடுக்கைப் புடுங்கிக்கிட்டு வாரேன்” எனக் கூறிக் கிளம்பினான்.“சும்மா இருங்க, ஏன் ஊர்வம்புக்குப் போறீங்க.... அப்புறம் பூசாரி ஒங்கமேல எதையாவது ஏவிவிடுவான்” என்றபடி அலமேலு இஸ்தோப்புக் கதவை மூடி உள்ளே கொண்டியைப் போட்டாள். அவளுக்குத் தெரியும் பேய் விரட்டும் இடத்துக்குச் சென்றால், அங்குள்ளவர்களும் மதுவெறியிலேதான் இருப்பார்கள்; கணவனை அடித்து நொருக்கிவிடுவார்கள் என்று.பெருமாள் சிறிது அமைதியானான்.அன்றொருநாள் தங்கராசு படிக்கும் தோட்டப் பாடசாலையில் நடந்த கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவன் சென்றிருந்தபோது நடந்த நிகழ்வுகள் அவன் நினைவில் வந்தன.... அப்போது அவனுக்கு எவ்வளவு உற்சாகம் ஏற்பட்டது. அவன் படித்த காலத்தில் சிறிது மடுவமாக இருந்த அந்தப் பாடசாலை மூன்று புதிய மாடிக் கட்டிடங்களுடன் கம்பீரமாகக் காட்சியளித்தது.விழாவிலே பேசிய கல்விப் பணிப்பாளர் மலையகக் கல்வி முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள்பற்றி விரிவாக எடுத்துரைத்தார். முக்கியமாகக் கட்டிட வசதிகள், தளபாடங்கள், பாடசாலைச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், விளையாட்டு மைதானம் முதலியன வழங்கப்படுவதோடு மலையகத்திலே பிறந்தவர்களை ஆசிரியர்களாகவும் உயர் அதிகாரிகளாவும் நியமித்து மலையகக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட வகைசெய்வதாகக் குறிப்பிட்டார். அத்தோடு அந்தப் பாடசாலையைத் தரம் உயர்த்தி உயர்வகுப்புவரை கல்விகற்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.பெருமாளுக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை; கைகளைத் தட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான். கண்டக்டரிடம் அவன் விடுத்த சவாலை அவனால் நிறைவேற்றிவிட முடியும். தங்கராசுவை அந்தப் பாடசாலையிலேயே உயர்வகுப்புவரை படிக்கவைக்க முடியும்.“என்னங்க யோசனை.... சாப்புட வாங்க” என அலமேலு அழைத்தாள். அப்போதுதான் பெருமாளின் சிந்தனை கலைந்தது.தங்கராசு மறுநாள் நடக்கவிருக்கும் தமிழ்த்தினப் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழ்ப்பாடல் ஒன்றை மனனம் செய்துகொண்டிருந்தான்.“தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப்போவென்று சொன்னாள் உன் அன்னை.....கடிகாரம் ஓடுமுன் ஓடு .... என் கண்ணல்ல......மலைவாழை யல்லவோ கல்வி.....”தங்கராசுவின் குரல் லயத்துச் சத்தங்களிலும் பூசாரியின் உடுக்கு ஒலியிலும் கலந்து நலிந்தும் தேய்ந்தும் ஒடுங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது.அரிசிச்சாப்புலயத்து மோகனகுமார் பள்ளிக்கூடம் போகும் வழியில் தங்கராசுவைச் சந்தித்தான். இரண்டு நாட்களாக அவன் பாடசாலைக்கு வரலில்லை. கல்லுமலையில் கவ்வாத்துத் தொடங்கியதால் ‘வெறகு கழிக்கப்’ போவதாகக் கூறினான்.“அடே தங்கராசு, நம்ம லயத்து மருதைக் கங்காணி வீட்டில டீ.வி. வாங்கியிருக்காங்க.... அந்திப்பட்டா நான் அங்கதான் போவேன்.... நேத்து ராவு கிரிக்கட் மெட்ச் போட்டாங்க, லயத்துப் பயலுக எல்லாம் அங்கதான்... ஒரே ‘சொலி’ தான்டா.”“எங்கப்பா அதெல்லாம் பாக்க வுடாதடா...” தங்கராசு ஆதங்கத்துடன் கூறினான்.

மோகனகுமார் கவ்வாத்து மலைப்பக்கம் திரும்பியபோது மேட்டுலயத்துக் கணேசு எதிரே வந்தான்.“ஏன்டா, ஸ்கூலுக்கு வரல்லியா?”“இல்லடா தங்கராசு, நம்ம வீட்ல ஆயாவுக்கு ‘அம்மா’ போட்டிருக்கு... அப்பா வேலைக்குப் போயிறும்.... நான்தான் சமைக்கணும், மாட்டுக்குப் பில்லு அறுக்கணும், எல்லா வேலையும் செய்யணும்டா.”தங்கராசுவின் வீட்டிலும் முன்பொருமுறை அம்மை வருத்தம் வந்திருந்தது. ஆயாவுக்கும் தங்கச்சிக்கும் ஒரே நேரத்தில் வருத்தம் வந்தபோது நடுக்காம்பரா மூலையில் வெள்ளை வேட்டி ஒன்றினால் மறைவுகட்டி, வாசலில் வேப்பிலை செருகி உள்ளே ஆயாவும் தங்கச்சியும் படுத்துக்கொண்டார்கள். அடுத்த வீட்டு அம்மாயி தினமும் வந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடித்தான் அந்த வருத்தத்தை மாற்றினாள்.அந்த நாட்களில் இஸ்தோப்பின் ஒருமூலையில் இருந்துதான் தங்கராசு படிக்கவேண்டி ஏற்பட்டது. அம்மாயி கரகரத்த குரலில் நடுக்கத்தோடு பாடிய மாரியம்மன் தாலாட்டுத்தான் அவனுக்கு மனதில் பதிந்ததேதவிர பாடங்கள் மனதில் பதியவில்லை.தங்கராசுவுக்கு நண்பர்கள் கூறும் கதைகளைக் கேட்கும் போது தானும் அவர்களைப்போன்று சந்தோஷமாக இருக்கமுடியவில்லையே என ஏக்கம் உண்டாகும்.“போன கெழமை மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கொழும்புல இருந்து ராஜபாட்டு அண்ணன் வந்திருந்தாரு. அவரும் மயிலு மாமாவும் டோலாக்கு அடிச்சி பாட்டுப்பாடத் தொடங்கினாங்கன்னா லயத்துப் பயலுக எல்லாம் அந்த எடத்திலதான் இருப்பாங்க.... ‘பஜா’ முடிய ராவு பதினொரு மணியாகிடும். கைதட்டி பைலா போட்டுக்கிட்டே இருப்போம்... ஆயா சாப்பிடக் கூப்பிட்டாலும் அந்த எடத்தவுட்டு வரமாட்டோம்... ராஜபாட்டு அண்ணே கொழும்புக்குப் போறவரைக்கும் ஒரே பஜாதான்டா.”பக்கத்து வாங்கிலிருக்கும் பரமதேவன் இதைக்கூறிய போது தன்னைக் கட்டுப்படுத்தி எந்நேரமும் படி படியென நச்சரித்துக் கொண்டிருக்கும் தனது தந்தைமேல் தங்கராசுவுக்கு வெறுப்புத்தான் ஏற்பட்டது,

தொங்கல் காம்பரா சுப்பன் கங்காணி வீட்டில் அவரது மகளுக்குச் சடங்கு நடந்துகொண்டிருந்தது. பெருமாள் தங்கராசுவையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தான். கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் கங்காணியின் மூத்தமகன் சடங்கிற்காக வந்திருந்தான். வேலைக்குச் சென்ற ஆறுமாதத்தில் ஆளே உருமாறியிருந்தான். நன்றாகக் கொழுத்து சதைப்பிடிப்போடு நிறம்பெயர்ந்திருந்தான். ‘டிஸ்கோ’ பாணியில் தலையை மேவிவாரி டெனிம்சேட் காற்சட்டையுடன் வெகு ஸ்டைலாகக் காட்சியளித்த அவன், சிறிய ரேடியோவுடன் கூடிய ‘இயர்போன்’ கருவியைக் காதில் மாட்டி பொப்பிசைப் பாடலொன்றை ரசித்து, நிலத்திலே காலால் தாளம் போட்டுக் கொண்டிருந்தான். அவனது நடையுடை பாவனை யாவும் தங்கராசுவைப் பெரிதும் கவர்ந்தன. கொழும்புக்குச் சென்றால் கங்காணியின் மகனைப் போன்று தானும் ஸ்டைலாக வரலாமென அவனது மனம் எண்ணியது.கங்காணி வாயோயாமல் தனது மகனைப் பற்றியே புகழ்ந்துகொண்டிருந்தார். “இந்தா பெருமாளு, இந்தச் சடங்கே எம்புள்ள ஒழைச்ச காசிலதான் நடக்குது... அவன் வேலைசெய்யிற ஓட்டல் மொதலாளி ரொம்ப நல்லவரு.... ரொம்பப் பணம் குடுத்து ஒதவி செஞ்சிருக்காரு... ஓம் புள்ளயையும் கண்டக்டரையா கொழும்புக்கு அனுப்பச்சொல்லி கேட்டாருதானே..... அந்தநேரம் அனுப்பியிருந்தி யென்னா அவனும் இப்ப ஒரு நெலமைக்கு வந்திருப்பான்..... அநியாயமாக் கெடுத்திட்டே.....”பெருமாளின் சிந்தனையில் ஒரு மின்னல்கீற்று.... தான் தவறு செய்துவிட்டேனா என்ற தடுமாற்றம்... மறுகணமே அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். தொடர்ந்தும் சடங்கு வீட்டில் தங்கியிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. தங்கராசுவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.மறுவாரத்தில் ஒரு நாள்....பக்கத்துக் காம்பரா கந்தையா புதிதாக ரேடியோ வாங்கி யிருந்தான். அதில் இந்திச் சினிமாப் பாட்டுகள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. படித்துக்கொண்டிருந்த தங்கராசு தனது இரு காதுகளுக்குள்ளும் சுட்டு விரல்களைச் செலுத்திக் காதுகளைப் பொத்திக்கொண்டு அன்றைய பாடத்தை உரத்துப் படிக்கத் தொடங்கினான்.

சில நாட்களில் கந்தையாவின் வயோதிபத் தந்தை இரவிரவாகப் பலமாக இருமிக்கொண்டிருப்பார். அவருக்கு நெஞ்சுச்சளி அடைத்து மூச்சுமுட்டி கதைக்க முடியாமல் திணறும்போது, தாத்தா சாகப் போகிறாரோ எனத் தங்கராசு எண்ணுவான் . அப்போதும் இப்படித்தான் அவன் காதுகளுக்குள் விரல்களைச் செலுத்திக்கொண்டு உரத்த சத்தமாகப் படிப்பான்.“ஏய் கந்தையா, வீட்டில ரேடியோ வாங்கியிருக்கேன்னு எங்களுக்குப் போட்டுக் காட்டிறியா..... சத்தத்தைக் கொஞ்சம் கொறைச்சுவை.... என் வீட்டில புள்ள படிக்கிறான்....” பெருமாள் பலமாக் கத்தினான்.“என்ன இவரு பெரிய ஆள் மாதிரி ‘ரூல்ஸ்’ பேசுறாரு... லயத்தில நம்ம வீட்டிலயுந்தான் புள்ள படிக்குது.... அதுக்காக பாட்டுக் கேக்காம இருக்க முடியுமா?” அடுத்த வீட்டில் இருந்து கந்தையா குரல் கொடுத்தான்.“ஏய் பாட்டுக் கேக்கவேணாமுன்னு சொன்னேனா...? நல்லாக் கேளு... கொஞ்சம் ரேடியோவைக் கொறைச்சு வையேன்... தேத்தண்ணிக் கடைமாதிரி இருக்கு வீடு....”கந்தையா ஆக்குரோசத்துடன் வெளியே வந்தான். “இந்தா பெருமாளு தேவையில்லாத பேச்சு பேசாத. போன கெழம சுப்பன் கங்காணிவீட்டில சடங்குக்கு நாலுநாளா ஸ்பீக்கர் போட்டாங்க... அப்பமட்டும் சத்தம் இல்லியா... அந்த நேரம் ஒம்புள்ள படிப்பு எங்க போச்சு...?”லயத்தின் முன்னால் பலர் கூடிவிட்டனர்.“அப்புடிக் கேளு கந்தையா, இந்த ஆளு எந்த நாளும் லயத்தில ஆளுங்கள சண்டைக்கு இழுத்துக்கிட்டே இருப்பது... இவரோட புள்ளதான் பெரிசாப்படிக்கிற மாதிரி...” என்றான் லெச்சுமன்.அப்போது கந்தையாவின் மனைவி இஸ்தோப்பு வாசலில் நின்றபடி பலமாகக் கூறினாள். “அந்தாளோட ஒங்களுக்கு என்ன பேச்சு.... வாங்க உள்ளுக்கு, அந்த மனுசனுக்கு நாம ரேடியோ வாங்கினதுல பொறாமை.... அதுதான் அதுஇதுன்னு சொல்லிக் கிட்டிருக்காரு.”

அலமேலு பெருமாளை உள்ளே இழுத்து வந்தாள். பெருமாளுக்குச் சார்பாகப் பேச அங்கு எவருமே இருக்கவில்லை.கந்தையாவின் தந்தை இப்போது வெளியே வந்து, “லயமுன்னு சொன்னா பத்துக்குடும்பம் இருக்கும்..... பத்துப்பேச்சு வரும்.... ஒம்புள்ள படிக்குதுன்னு மத்தவங்க வாயமூடிக்கிட்டு இருப்பாங்களா.... நீ வேணுமுன்னா ஒம்புள்ளயக் கூட்டிக்கிட்டு போயி எங்காவது தனியா வீடுகட்டி இரு.... அப்ப சத்தம் வராது, புள்ளயும் படிக்கும்” எனக் கரகரத்த குரலில் கூறினார்.பெருமாள் இஸ்தோப்பின் சுவரோரமாகச் சாய்ந்து கொண்டான். அவனது மனக்கண்ணிலே தோட்டப்பாடசாலை தெரிந்தது.... உயர்ந்த கட்டிடங்கள், தளபாடங்கள், சீருடைகள், இலவசப் புத்தகங்கள், ஆசிரியர்கள், உயர் அதிகாரிகள்... இருந்துமென்ன?கற்றலுக்கு வேண்டிய சூழல் இல்லையே.. ..* * * * *தங்கராசு இப்போது வளர்ந்துவிட்டான். பிரட்டுக் களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசுவும் ஒரு தொழிலாளியாகக் கடைசி வரிசையில் நிற்கிறான்.கண்டக்டர் பிரட்டுக் கலைக்கிறார். தொழிலாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்காகக் கலைந்து செல்கின்றனர்.“ஏன்டா தங்கராசு, நீயும் பேர் பதிஞ்சு வேலைக்கு வந்துட்டியா... ஒங்கப்பன் பெரிசா ஒன்னப் படிக்க வைக்கிறேன்னு சம்புராயம் புடிச்சானே... முடிஞ்சுதா...? வாழையடி வாழையா நீங்கெல்லாம் பத்தடிக் காம்பராவில கத்தியும் சுரண்டியுமா வாழவேண்டியவங்கன்னு அன்னிக்கே சொன்னேனே..... ஒங்கப்பன் கேக்கலியே... அடேய், நீயும் ஒங்கப்பன்கூட கவ்வாத்து வெட்டப் போடா.... அப்பதான் தோள்பட்டை கழண்டு வரும், ஒங்களுக்கெல்லாம் புத்தி வரும்...” கண்டக்டரின் குரலில் ஏளனம்; தான் ஜெயித்துவிட்டதில் ஏற்பட்ட மமதை.“அடே தங்கராசு”! எனப் பலமாகக் கத்தினான் பெருமாள். அவனது உடல் படபடத்தது; வியர்வையிலே தெப்பமாக நனைந்தான். மறுகணம் அவன் விம்மத் தொடங்கினான்.

தங்கராசு ஓடிவந்து தந்தையின் தோள்களைப் பிடித்து உசுப்பினான். “என்னப்பா என்ன..., எந்திருங்கப்பா...”“ஏதோ கெட்ட கனவடா, கண்டாக்டர் சொன்ன மாதிரியே நீ தோட்டத்தில பேரு பதிஞ்சு கவ்வாத்து வெட்டப் போறதா கனவு கண்டேன்.... அதான்டா....”தங்கராசுவுக்குத் தந்தையின் நிலைமையைப் பார்த்த போது அழுகை வந்தது. கண்களுக்குள் நீர் முட்டியது. அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கொழுந்துக் கூடைக்குள் கிடந்த தாயின் தலைவேட்டியை எடுத்து வியர்வையில் நனைந்திருந்த தந்தையின் முகத்தையும் உடலையும் துடைத்து விட்டான்.அவனது மனதிலே வைராக்கியம் புகுந்து கொண்டது.செலவுப் பெட்டியை மேசையாகப் பாவித்து அதன்மேல் புதிதாக வாங்கிய லாந்தரை ஏற்றிவைத்து, பலத்த குரலில் மீண்டும் அவன் படிக்கத் தொடங்கியபோது, சூழலில் இருந்த கவனச்சிதறல்கள் யாவும் அவனது வைராக்கியத்தில் கரைந்து போயின.- வீரகேசரி ‘1998.

++++++++++++++++++++++++++

சோதனைபொலிஸ் நிலையத்தில் இருக்கும் அந்தச் சிறிய அறைக்குள் என்னைத்தள்ளி இரும்புக் கதவைக் கிறீச்சிட இழுத்துச் சாத்தியபோது நான் கதவின் கம்பிகளைப் பிடித்தவாறு கெஞ்சினேன்.“ நாளை எனக்குச் சோதனை.... என்னைச் சோதனை எழுத அநுமதியுங்கள்.... நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.”இந்த இரண்டு வருடப் பல்கலைக் கழக வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அரைகுறைச் சிங்களத்தில் கெஞ்சியது அந்தப் பொலிஸ்காரனுக்கு விளங்காமலிருக்க நியாயமில்லை.“காகன்ட எப்பா; நிக்கங் இன்ட” அவன் அலட்சியமாகக் கூறியபடி வெளியே பூட்டைப்போட்டுப் பூட்டினான்.எனது கண்கள் கலங்கின. மயக்கம் வருவதுபோல இருந்தது. அடிவயிற்றைக் குமட்டியது. விழுந்துவிடாமல் இருக்கவேண்டுமே என்ற உணர்வில் மெதுவாகத் தரையில் அமர்ந்தேன். அறையின் ஒரு மூலையிலிருந்து குப்பென்று சிறுநீரின் நெடி வீசியது.எதிரே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறையிலிருந்து வந்த ‘மெர்க்குரி பல்ப்’பின் வெளிச்சம் நானிருந்த அறையின் கதவினூடாக உள்ளேயும் வந்து விழுந்தது. கதவின் இரும்புக் கம்பிகள் ஏற்படுத்திய கருநிழல்கள் ஆரம்பத்தில் ஒடுங்கியும் பின்னர் சற்று விரிந்தும் ஓர் அரக்கனின் கைவிரல்கள் போல என்மேல் படர்ந்தன.நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை. அங்கிருந்த நான்கைந்து பொலிஸ்காரர்களும் அசட்டையாக ஏதேதோ தமக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் காதுகளில் ஒரு கருவியைப் பொருத்திக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வரும் ‘ரேடியோ மெசேஜ்’களைப் பெறுவதும் இடையிடையே ஏதோ குறிப்பெடுப்பதுமாக இருந்தார்.நான் இருந்த அறையின் வலதுபுறத்தில் இதுபோன்ற வேறும்சில அறைகள் இருக்கவேண்டும். அங்கு பலர் பலமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒரு குடிகாரன் கத்துவதும் கேட்டுக் கொண்டிருந்தது.கடந்த சிலநாட்களாக வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சந்திக்குச் சந்தி ‘செக் பொயின்ற்’ சோதனைகள், ஆள் அறிமுக அட்டைப் பரிசீலனைகள், சுற்றிவளைப்புத் தேடுதல்கள், பரவலான கைதுகள், விரோதப் பேச்சுகள்..... ஏச்சுகள்......நான் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எனது அறைக்குவந்து படுப்பதற்கு ஆயத்தமானேன். நாளை நடக்கவிருக்கும் தவணைப் பரிட்சைக்கு வேண்டிய ஆயத்தங்களைத் திருப்தியாகச் செய்ததில் மனது லேசாக இருந்தது. அறை நண்பன் குமரேசன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குப் போவதாகக் கூறிச்சென்றவன் இன்னும் திரும்பவில்லை.அறைக் கதவைத் தள்ளிக்கொண்டு வீட்டின் சொந்தக்காரி சுதுமெனிக்கா உள்ளே எட்டிப்பார்த்தாள். என்றுமில்லாதவாறு அவளது முகத்தில் பதட்டம் தெரிந்தது.“புத்தே, ஹம்முதாவ அவில்ல இன்னவா.” இராணுவத்தினர் வந்திருக்கிறார்கள் என அவள் கூறியதைக் கேட்டதும் என்மனம் திக்திக்கென அடித்துக்கொண்டது. பல்கலைக் கழகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று தேடுதல் நடக்கலாமென மூன்று நாட்களுக்கு முன்னரே குமரேசன் கூறியது என் நினைவில் வந்தது.வீட்டின் முன்விறாந்தையில் சுதுமெனிக்காவுடன் இராணு வத்தினர் உரையாடுவது கேட்டது.

“இங்கு எத்தனைபேர் இருக்கிறார்கள்?”“இரண்டு பேர்”“ஏன் இவர்களுக்கு அறையை வாடகைக்குக் கொடுத்தீர்கள்?”கிழவி மௌனம் சாதித்தாள்.“நாங்கள் அவர்களை விசாரிக்கவேண்டும்.”சுதுமெனிக்காவும் இராணுவத்தினரும் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் இரண்டு பொலிசாரும் இருந்தனர்.“கோ..... பென்னன்ட, ஐடென்ரிற்றி.”எனது அறிமுக அட்டையை ஒருவன் வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ஏதோ தனக்குள் முணுமுணுத்தான். வேறு இருவர் அறையில் இருந்த உடுப்புகள், புத்தகங்கள், மூலையிலிருந்த கட்டிலின் கீழ்ப்புறம், குப்பைக் கூடை, எல்லாவற்றையுமே புரட்டி எடுத்தனர்.மேசையிலிருந்த எனது ‘என்ஜினியரிங்’ நோட்ஸ் கொப்பியை ஒருவன் எடுத்து விரித்தபோது அதற்குள் இருந்த புகைப்படங்கள் சில வெளியே விழுந்தன.“இதென்ன போட்டோக்கள்?”“சென்ற மாதம் என்ஜினியரிங் மாணவர்கள் ‘ஸ்ரடி ரூர்’ போனோம்; அப்போது எடுத்த போட்டோக்கள்தான் இவை.”“மின் உற்பத்தி நீர்நிலையத்தின் அமைப்பு வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும். இந்தப் போட்டோக்களை யார் எடுத்தது?”“எனது சகமாணவர்கள்... ரஞ்சித் சில்வா.... புஞ்சிஹேவா... இன்னும் பலர் புகைப்படங்கள் எடுத்தார்கள். அவற்றில் சில பிரதிகளை நான் பெற்றேன்.”உண்மையில் எனது அறை நண்பன் குமரேசனும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் அமைப்பினைப் பல்வேறு கோணங்களில் படம் எடுத்திருந்தான். அவன் எடுத்த படங்களில் சிலவும் அவற்றுடன் இருந்தன. இப்போது குமரேசனின் பெயரைக் கூறினால் சிக்கலாகிவிடும்.“கோ அனித்தெக்கனா?”மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றவன் இன்னும் திரும்பவில்லை என்ற விபரத்தைக் கூறினேன்.“சரி, காற்சட்டையை அணிந்துகொண்டு எங்களுடன் வா; புறப்படு.”எனது மனதைப் பயங் கௌவிக்கொண்டது. நண்பர்கள் கூறிய சித்திரவதைச் செய்திகள், வாவியில் மிதந்த பிணங்கள், எனது எதிர்காலம் தமது வாழ்வின் விடிவெள்ளியாக அமையுமென்ற கற்பனைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எனது ஏழைத் தாய்தந்தையர், இயக்கம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொண்டு திடீரெனக் காணாமல் போய்விட்ட எனது ஒரே அன்புத் தங்கை.... இப்படிப் பலவாறான எண்ணங்கள் எனது மனதில் தத்தளித்தன.“விசாரிக்க வேண்டியதை இங்கேயே விசாரியுங்கள்..... தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். நாளைக்கு எனக்குச் சோதனை இருக்கிறது.” நான் மன்றாடினேன்.அவர்கள் விடுவதாயில்லை. “பயப்பட வேண்டாம், விசாரணை முடிந்ததும் உடனே அனுப்பிவிடுவோம்” என்றனர்.சுதுமெனிக்காவும் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினாள். இரண்டு வருடங்களாக இவர்கள் இந்த அறையிலே தான் இருக்கிறார்கள். எந்தவிதத் தொந்தரவுக்கும் போக மாட்டார்கள் என்றெல்லாம் சொன்னாள்.“நாங்கள் எங்களது கடமையைச் செய்யவேண்டியிருக்கிறது; கூடியவரை விரைவாகத் திருப்பியனுப்புவோம்.”என்னை அழைத்துவந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் அவர்கள் தங்களது தேடுதல் நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் அறைக்கு வந்தநேரத்தில் குமரேசன் அங்கு இல்லாதது நல்லதாய்ப் போய்விட்டது. நாளைக்குச் சோதனை இருப்பதால் எப்படியும் குமரேசன் இதுவரையில் அறைக்கு வந்துசேர்ந்திருப்பான். சுதுமெனிக்கா எல்லா விபரங்களையும் அவனிடம் கூறியிருப்பாள்.குமரேசனுக்குக் கொழும்பில் பலரைத் தெரியும். தேடுதலின்போது கைதானவர்களை விடுவிப்பதற்கு வேண்டிய வழிவகைகள் தெரியும். முன்பொருமுறை அவனை வெள்ளவத்தையில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் அவனது அறிமுக அட்டையைப் பறித்துக் கிழித்து வீசிவிட்டார்கள். ஆனாலும் அவனுக்கு வேண்டியவர்கள் மேலிடத்துடன் தொடர்புகொண்டு ஒருசில மணித்தியாலங் களுக்குள்ளேயே அவனை விடுவித்துவிட்டார்கள். அதற்காகப் பெருந்தொகைப் பணம் செலவழிக்க வேண்டியிருந்ததாக அவன் கூறினான். சிலநாட்களுக்குள் யார்யாரையோ பிடித்துக் கொழும்பு விலாசத்துடன்கூடிய அறிமுக அட்டையையும் பெற்றுக்கொண்டான்.குமரேசனுக்கு எதிலுமே ஓர் அலட்சியப்போக்கு; பணத்தினால் எதையும் சாதித்துவிடலாம் என்ற நினைப்பு அதற்கேற்ப அவனது கையிலே நிறையப் பணம் புரண்டு கொண்டிருக்கும். உறவினர் யாரோ கனடாவிலிருந்து செலவுக்குப் பணம் அனுப்புவதாகச் சொன்னான்.சிலவேளைகளில் அவனது போக்கு எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விரிவுரைகளுக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கியிருந்து ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருப்பான். ஏனென்று கேட்டால் சிரித்து மழுப்பிவிடுவான். சில நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென எங்கோ புறப்பட்டுச் செல்வான். இரண்டு மூன்று நாட்கள் கழித்தே அறைக்குத் திரும்புவான். அவனை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.வேறொரு பொலிஸ்காரன் இப்போது அறையின் கதவைத் திறந்தான். இரண்டு நடுத்தரவயதான முரட்டு ஆசாமிகளை உள்ளே தள்ளிப் பூட்டினான்.இருவரும் நன்றாகக் குடித்திருந்தனர். ஒருவன் அந்தப் பொலிஸ்காரனிடம் தனக்குப் பசிக்கிறதெனவும் சாப்பாடு தரும்படியும் அலட்சியமான தொனியில் கூறினான். பொலிஸ்காரன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

மற்ற ஆசாமி என்னை முறைத்துப் பார்த்தான். அவனை மாலைவேளைகளில் பல்கலைக் கழகத்திற்குச் சமீபமாகவுள்ள கடற்கரையோரத்தில் பார்த்திருக்கிறேன். அந்தப் பகுதியில் யாரோ போதைப் பொருட்கள் விற்பதாகவும் ‘குடு’ அடிப்பவர்கள் அங்கு கூடுவதாகவும் முன்பொருமுறை குமரேசன் சொன்னான்.என்னைப் பயங் கௌவிக்கொண்டது. இரவு முழுவதும் இவர்களுடன்தான் இருக்கவேண்டுமா? இவர்கள் என்னை என்ன செய்வார்களோ?.மனதிலே பலவாறான சிந்தனைகள். மெதுவாக எனது விரலிலிருந்த மோதிரத்தை அவர்களுக்குத் தெரியாமல் கழற்றி காற்சட்டை மடிப்புக்குள் செருகிக்கொண்டேன்.தனக்குப் பசிக்கிறதெனக் கூறிய ஆசாமி சிறிது நேரம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தான். பொலிஸ்காரன் தன்னைச் சரியாக உபசரிக்கவில்லை என்றான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படு பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாக இருப்பதில்லை எனவும், அதனால் அவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்தவேண்டும் எனவும் மற்றவனிடம் கூறினான். இடையிடையே என்னிடமும் அவற்றைக் கூறி எனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்தான். அவன் கூறியவற்றை ஆமோதிப்பதுபோல நான் பரிதாபமாகத் தலையாட்டிக் கொண்டி ருந்தேன்.சிறிது நேரத்தில் அவன் ஓய்ந்துபோய் குறட்டை விடத்தொடங்கினான்.இப்போது மற்றவன் எழுந்து என்னருகே வந்தான். எனது கைகளை முரட்டுத்தனமாகப் பற்றினான். “மல்லி, சல்லி தியனுவத?”என்னால் பேசமுடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. உமிழ்நீரை விழுங்கியபடி இல்லை என்னும் பாவனையில் தலையைமட்டும் ஆட்டினேன்.“பொறு கியன்டெப்பா.....”அவன் எனது சம்மதம் எதையும் எதிர்பார்க்காமல் எனது சேட் பொக்கற்றுக்குள் கையைவிட்டான். பின்னர் காற்சட்டைப் பொக்கற்றுகளை ஒவ்வொன்றாகத் துழாவினான். ஏமாற்றத்துடன் என்னைத் தகாத வார்த்தைகளில் ஏசினான்.

“ஒயா திறஸ்தவாதிநே..... ஒயாவ மறன்டோன .” எனது கழுத்தைப் பிடித்து நெரித்துப் பின்புறமாகத் தள்ளினான். எனது தலை பின்புறச் சுவரில் மோதிக் கண்கள் கலங்கின.முதலில் ‘மல்லி’ என அழைத்தவன் இப்போது ‘திறஸ்தவாதி’ என்கிறான். எனது பொக்கற்றில் சிறிது பணம் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.அவனது பலத்த சத்தத்தைக் கேட்டு வெளியே நின்ற பொலிஸ்காரன் கதவின் அருகேவந்து அவனை எச்சரித்தான். அதன்பின் அவன் அடங்கிப்போனான். ஆனாலும் என்னைப் பார்த்து இடையிடையே முறைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை.என்னை விடுவிப்பதற்கு சுதுமெனிக்கா ஏதாவது முயற்சி எடுப்பாளா என எனது மனம் எண்ணியது. அது ஒரு முட்டாள்தனமான எண்ணம் ; ஏன் அவள் முயற்சிக்க வேண்டும் ? ஆனாலும் குமரேசன் அறைக்குத் திரும்பியிருந்தால் அவள் அவனிடம் எல்லா விபரங்களையும் கூறியிருப்பாள்.குமரேசனுக்குச் சரளமாகச் சிங்களம் பேசத்தெரியும். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதியவுடனேயே அவன் எப்படியோ கொழும்புக்கு வந்துவிட்டான். என்னைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியே வருவதற்கு ‘பாஸ்’ எடுப்பதில் சிரமம் இருந்தது. பல்கலைக் கழக அநுமதி கிட்டும்வரை இரண்டு வருடகாலம் காத்திருந்துதான் நான் கொழும்புக்கு வரமுடிந்தது. இந்தக் காலகட்டத்தில் அவன் நன்றாகச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். அதனால் அவன் சுதுமெனிக்காவுடன் சரளமாகக் கதைக்கமுடிகிறது.யாழ்ப்பாணத்தில் நானும் குமரேசனும் அயலூரவர்கள். நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளிலேதான் கல்வி கற்றோம். பல்கலைக் கழகத்திற்கு வந்தபின்தான் அவனுடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.ஒருநாள் குமரேசன் என்னைச் சந்தித்தபோது, “உம்முடைய தங்கச்சியைப்பற்றி ஒரு விஷயம் அறிஞ்சனான்; உண்மையே?” எனக்கேட்டான்.நான் திடுக்குற்றுவிட்டேன். எந்த விஷயம் ஒருவருக்கும் தெரியவரக்கூடாதென நான் விரும்பினேனோ அதையே குமரேசன் என்னிடம் கேட்டான். இவனுக்கு இது எப்படித் தெரியவந்தது!நான் பதில் சொல்லவில்லை. கண்களுக்குள் நீர் முட்டி நின்றது.“சரி சரி பயப்பிடாதையும்.... நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்” என்றான். அன்றிலிருந்து அவன் என்னிடம் அன்பாக நடந்துகொண்டான். எங்களுடைய நட்பு இறுக்கம் பெற்று அறை நண்பர்களானோம்.இப்போது நான் அடைக்கப்பட்டிருந்த அறையில் மற்ற இருவரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். எனது கண்கள் கனத்தன. சோர்வு பெரிதும் வாட்டியது. ஆனாலும் நித்திரை மட்டும் வரவில்லை. மறுநாள் விடியும்வரை நான் விழித்திருந்தேன்.காலையில் ஒருபொலிஸ்காரன் வந்து என்னை நிலையப் பொறுப்பதிகாரியிடம் அழைத்துச் சென்றான்.“இன்று எனக்குத் தவணைச் சோதனை ; நான் போகவேண்டும். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். வேண்டுமானால் சோதனை முடிந்ததும் இங்கு வருகிறேன்.”இதனை நான் கூறியபோது அந்த அதிகாரி எனக்கு ஆறுதல் கூறினார்.“உம்மைப் பற்றிய விபரங்களை எடுப்பதற்கு உடனே நான் ஒழுங்கு செய்கிறேன் ; இன்னும் சிறிது நேரத்தில் நீர் போகலாம்” எனக்கூறி மேசையில் இருந்த மணியை அழுத்தி வேறொரு பொலிஸ்காரனை வரவழைத்து, “இவரது விபரங்களை எடுத்துவிட்டு சந்தேகத்திற்கு இடமில்லையெனில் அனுப்பி விடுங்கள்” எனக்கூறினார்.அந்தப் பொலிஸ்காரன் என்னைப் பக்கத்திலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு வேறும் பலர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களில் முதலாம் வருட மாணவர்கள் சிலரும் இறுதிவருட மாணவர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் எவருமே என்னைப் பார்த்து அறிமுகச் சிரிப்பைக்கூட உதிர்க்கவில்லை.என்னை முதலில் விசாரணை செய்தார்கள்.“நம மொக்கத?”

“பாலேந்திரன்.”“சிங்கள தன்னுவத?”“எச்சற தன்னனே..........”இப்போது வேறொருவன் ஆங்கிலத்தில் விசாரணையைத் தொடர்ந்தான்.“எவ்வளவு காலமாகக் கொழும்பில் வசிக்கிறீர்? இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா? சகோதரர்கள் யாராவது இயக்கத்தில் இருக்கிறார்களா? நண்பர்கள் யாருக்காவது இயக்கத் தொடர்பு இருக்கிறதா? என மாறிமாறிக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான்.எல்லாவற்றிற்குமே இல்லையெனப் பதிலளிப்பதைவிட நான் வேறென்ன சொல்லமுடியும்.பின்பு வேறொருவன் எனது சேட்டைக் கழற்றச் சொல்லி உடம்பு முழுவதையும் சோதனை செய்தான். எனது நெற்றியில் இருந்த தழும்பு ஒன்றினைக் காட்டி இது எப்படி ஏற்பட்டது ? எனக் கேட்டான்.சிறுவயதில் நான் கால்பந்து விளையாடியபோது ஏற்பட்ட காயத்தின் தழும்பு விசாரணை செய்பவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அந்தத் தழும்பைக் காட்டித் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.பின்னர் என்னைப் பலவித கோணங்களில் புகைப் படமெடுத்தார்கள் ; வீடியோ படம் எடுத்தார்கள் ; கைரேகைகளைப் பதிவுசெய்தார்கள்.என்னைக் கைதுசெய்து அழைத்துவந்த பொலிஸ்காரர் அப்போது அங்கு வந்தார். இரவு எனது அறையிலே கண்டெடுத்த புகைப்படங்களைக் காட்டி, “இது சம்பந்தமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது” எனக் கூறினார்.அந்தப் படங்களை ரஞ்சித் சில்வாவும் புஞ்சிஹேவாவும் எடுத்ததாகக் கூறியிருந்தேன். அவர்களிடம் விசாரித்தால் என்ன கூறுவார்களோ ? குமரேசன் எடுத்த படங்கள் சிலவும் அவற்றுடன் இருந்தன.

விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையை என். ஐ. பி. க்கு அனுப்பி அங்கிருந்து பதில் வந்த பின்னர்தான் என்னை விடுதலை செய்யமுடியுமென இப்போது புதிதாகக் கூறினார்கள்.எனக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய் விட்டது. நான் சரியாக இரண்டு மணிக்குப் பரீட்சை மண்டபத்தில் இருக்க வேண்டும் அதற்குமுன் குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து பதில் வந்துசேருமா?நான் சோர்ந்துபோய் வாங்கொன்றில் அமர்ந்தேன். சாப்பிடும்படி பாணும் பருப்பும் தந்தார்கள். வயிற்றுக்குள் ஒரே குமட்டல். அவர்கள் கொடுத்த வெறும் தேநீரைமட்டும் குடித்தேன்.சிறிது நேரத்தில் நிலையப் பொறுப்பதிகாரி என்னை அழைத்து, “உம்மைப்பற்றிய விசாரணைகள் இன்னும் முடியவில்லை. ஆனாலும் சோதனை எழுதும் மாணவர்களுக்கு உதவும்படி பல்கலைக்கழக மேலிடத்திலிருந்து என்னைக் கேட்டிருக்கிறார்கள். அதனால் இப்போது உம்மை அனுப்பி வைக்கிறேன். சோதனை முடிந்ததும் மீண்டும் இங்கு வந்துவிட வேண்டும்” எனக்கூறினார்.நான் வெளியே வந்தபோது என்னைக் கண்காணிப்பதற்காக ஒரு பொலிஸ்காரன் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.இந்நிலையில் என்னால் எப்படி நிம்மதியாகச் சோதனை எழுதமுடியும். ? ஆனாலும் வேறுவழி ஏதுமில்லை.முதலில் நான் அறைக்குச் சென்றேன். சுதுமெனிக்காவைச் சந்தித்த போது, இரவு குமரேசன் வந்ததாகக் கூறினாள். அவனிடம் நடந்த விஷயங்கள் யாவற்றையும் தான் தெரிவித்ததாகவும் அவன் உடனேயே எங்கோ புறப்பட்டுச் சென்றதாகவும் சொன்னாள்.சோதனைக்கு நேரமாகிவிட்டது.குமரேசன் எப்படியும் பரிட்சை மண்டபத்திற்கு வந்து விடுவான். நான் பரிட்சை மண்டபத்தை அடைந்தபோது பரிட்சை ஆரம்பமாகியிருந்தது.என் கண்கள் குமரேசனைத் தேடின. அவனை அங்கு காணவில்லை....... எங்கே போயிருப்பான்?அவன் என்றுமே ஒரு புரியாத புதிர்தான் !

- 1996.

+++++++++++++++++++++

உள்ளும் புறமும்முருகானந்த பவன் என்ற அந்தப் பிரபல ஹோட்டலின் பெயர்ப் பலகையைக் கவனித்ததும் டாக்சியை நிறுத்தும்படி சாரதியிடம் கூறி, மீற்றரைக் கவனித்துக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்சீட்டில் இருந்த பார்சலை வெளியே இழுத்தெடுத்தான் திருநாவுக்கரசு. பார்சலில் வரிந்து கட்டியிருந்த கயிற்றிலே பிடித்து, அதனைத் தூக்கிக் ஹோட்டலுக்குக் கொண்டு வருவதற்குள் கயிறு அவனது உள்ளங் கையை அழுத்திச் சிவக்க வைத்துவிட்டது. சினத்துடன் பார்சலை அந்த ஹோட்டலின் வாசலிலேயே பொத்தென்று போட்டுவிட்டான்.ஊரிலிருந்து புறப்படும்போது செல்லாச்சிக் கிழவி தனது மூத்த மருமகனிடம் இந்தப் பார்சலைக் கொடுத்துவிடும்படி அவனை வேண்டியிருந்தாள்.இரவு றயிலில் வந்ததால் நித்திரை கொள்ளமுடியவில்லை. கண்கள் எரிச்சல் எடுத்தன. றயில்வேறு தாமதமாகித்தான் கொழும்பை வந்தடைந்தது. ‘பாழாய்ப்போன இந்த யாழ்ப்பாண றயில் எப்பொழுது தான் நேரத்திற்கு வருகிறது’ என மனதில் அலுத்துக்கொண்டான். பசி வயிற்றைக் கிள்ளியது.ஹோட்டலின் முன்புறத்தில் மேசையருகே நிற்பவர் திருநாவுக்கரசுவை கவனிக்கவில்லை. காலை நேரமானதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலே பிள்ளையார் படம், பக்கத்தில் முருகன் படம், அதையடுத்து லட்சுமி படம். அப்போதுதான் அந்தப் படங்களுக்கு புதிய மல்லிகைச் சரம் மாட்டியிருக்கிறார்கள். இடது பக்கத்து மூலையில் இருந்த அந்த அழகான புத்தர் படத்தில் மட்டும் மல்லிகைச் சரத்திற்குப் பதிலாகக் கடதாசி மாலையொன்று போடப்பட்டிருக்கிறது.மல்லிகைச் சரத்தின் வாசனை இதமாக இருந்தது. பணம் வைக்கும் அந்தப் பெரிய இரும்புபெட்டியின் இடுக்கில் செருகியிருந்த ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.வெளியே கண்ணாடிப் பெட்டியில் நிறைத்து வைத்திருந்த பேரீச்சம்பழங்களின்மேல் இரைச்சலோடு ஈக்கள் மொய்ப்பதுதான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.முன் மேசையருகே நிற்பவர் இப்பொழுதும் தனது வேலை யிலேதான் கவனமாக இருந்தார். உள்ளேயிருந்து வருபவர்கள் கொண்டுவரும் ‘பில்’களைப் பார்த்துப் பணத்தை வாங்குவதும் மீதிக்குச் சில்லறையை எண்ணிக் கொடுப்பதுமாக இருந்தார்.இவர்தான் செல்லாச்சிக் கிழவியின் மருமகனாக இருக்குமோ?செல்லாச்சிக் கிழவி தனது மகளை, உரும்பராயைச் சேர்ந்த சீவரத்தினம் என்பவருக்கு மணமுடித்துக்கொடுத்திருக்கிறாள் என்பதும், அந்தச் சீவரத்தினம்தான் முருகானந்தபவன் என்ற இந்தப் பிரபல ஹோட்டலின் உரிமையாளர் என்பதுந்தான் திருநாவுக்கரசுவிற்குத் தெரிந்த விஷயங்கள். திருநாவுக்கரசு கொழும்பில் ஐந்தாறு வருஷங்களாக வேலைபார்த்து வந்தபோதிலும், இந்த முருகானந்த பவனுக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதனால் சீவரத்தினத்தை அவன் இதுவரை பார்த்ததுமில்லை.மேசையருகில் வேலையில் மூழ்கியிருந்தவர் தற்செயலாகத் திரும்பியபோது திருநாவுக்கரசுவைக் கவனிக்கிறார். என்ன வேண்டும் என்பதுபோல அவரது பார்வை அவன்மேல் படருகிறது.“அண்ணை நீங்கள்தான் சீவரத்தினமோ?”“ஓம், என்ன விஷயம்?”“செல்லாச்சி ஒரு பார்சல் தந்துவிட்டவ; அதைத் தரத்தான் வந்தனான்.”“ஊரிலயிருந்து வாறியளே? நான் வேலைப் பிராக்கில உங்களைக் கவனிக்கேல்ல.... தம்பியும் மாவிட்டபுரத்திலையோ இருக்கிறது?”ஆம் என்பதற்கு அடையாளமாகச் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் அசைக்கிறான் திருநாவுக்கரசு.“நான் உங்களை முந்தி ஒருநாளும் பார்த்ததில்லை, எனக்கு மாவிட்டபுரத்து ஆட்களை அவ்வளவு தெரியாது. அங்கை வந்தாலும் மனுசி வீட்டிலை ரெண்டு மூண்டு நாள் நிண்டிட்டு வந்திடுவன். தம்பி கொழும்பிலை எங்கை இருக்கிறியள்?”“வெள்ளவத்தையிலை.”“டேய் பெடியா உந்தப் பார்சலை உள்ளுக்கு எடுத்து வை.”சாப்பாட்டு மேசையைத் துடைத்துச் சுத்தஞ்செய்து கொண்டி ருந்தவனை அழைத்து உத்தரவிடுகிறார் சீவரத்தினம்.பெடியன் பார்சலை சிரமத்துடன் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு உள்ளே போகிறான்.யார் யாரோ பில்களைக் கொடுத்து அவற்றிற்குரிய பணத்தையும் கொடுக்கிறார்கள். சீவரத்தினம் வேலையைக் கவனித்தபடியே கதைகொடுக்கிறார்.“அப்ப ஊரிலை என்ன விசேஷம் தம்பி; மழை கிழை பெய்யுதே?”திருநாவுக்கரசு பதில்கூற எத்தனித்தபோது அருச்சனைத் தட்டுடன் எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அந்த தட்டைச் சீவரத்தினத்தின் முன்பாக வைத்துவிட்டு உள்ளே போகிறான்.அவனும் இங்கு வேலை செய்பவனாகத்தான் இருக்க வேண்டும். அவனை முன்பு எங்கோ பார்த்தது போன்ற நினைவு திருநாவுக்கரசுவுக்கு எற்பட்டது. எங்கே பார்த்திருக்கக்கூடும்?“இண்டைக்கு வெள்ளிக்கிழமை தம்பி, அதோட என்ரை மூத்தவன் முருகானந்தன்ரை பிறந்தநாள். ஒருக்கால் கோயிலுக்குப் போகலாமெண்டால் அங்காலை இங்காலை விலக நேரமில்லை. அதுதான் கடையிலை நிக்கிற பெடியனை அனுப்பி அருச்சனை செய்விச்சனான். பின்னேரந்தான் நான் கோயிலுக்கு போகவேணும்.”
சீவரத்தினம் அருச்சனைத் தட்டிலிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார்.திருநாவுக்கரசுவிற்கு வந்த வேலை முடிந்துவிட்டது. புறப்பட ஆயத்தமாகிறான்.“அப்ப நான் போட்டுவாறனண்ணை.”“பார் தம்பி, நான் வேலைப் பிராக்கிலை ஏதோ கதைச்சுக் கொண்டிருக்கிறன், தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.”திருநாவுக்கரசுவின் பதிலை எதிர்பார்க்காமலே மேசையில் கிடந்த அழைப்பு மணியை அடிக்கிறார் சீவரத்தினம்.கோவிலுக்குப் போய்வந்த அதே பெடியன்தான் வருகிறான்.“ஐயாவை உள்ளுக்குக் கூட்டிக் கொண்டு போ.”திருநாவுக்கரசுவுக்கு றயிலில் பயணம் செய்த களைப்பு, தேநீர் குடித்தால் தீரும்போல இருந்தது. பெடியன் திருநாவுக்கரசுவை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு “என்ன சாப்பிடுறியள்?” என விநயத்துடன் வினவுகிறான்.“ஒரு டீ மட்டும் கொண்டு வா.”உள்ளே தேநீருக்கு ஓடர் கொடுத்துவிட்டு ஒரு தட்டில் பலகாரங்களை எடுத்துவந்து திருநாவுக்கரசுவின் முன்பாக வைத்துவிட்டுச் சிரிக்கிறான் அவன்.“தம்பி உன்னை எங்கையோ பார்த்திருக்கிறன். நினைவு வருகுதில்லை.” திருநாவுக்கரசு பெடியனிடம் கூறுகிறான்.“ஐயா என்னைச் சின்ன வயசில பாத்தனீங்கள். இப்ப மறந்திட்டியள்போல இருக்கு ; நானும் உங்கடை ஊர்தான்.”

“எங்கை மாவிட்டபுரமே?”“நாங்கள் இருக்கிற இடத்திற்கு வாசிகசாலையடி ஒழுங்கையால உள்ளுக்குப் போகவேணும்.திருநாவுக்கரசுவின் மூளைக்குள் ஒரு பலமான தாக்கம் ; இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.‘இவன் கள்ளிறக்கிற சின்னவன்ரை மோன்!’திருநாவுக்கரசுவுக்கு வடை தொண்டைக்குள் விக்கல் எடுக்கிறது.ஓடர் கொடுத்த தேநீரைப் பெடியன் கொண்டுவந்து திருநாவுக்கரசுவின் முன்னால் வைக்கிறான்.“ஐயாவை நான் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ல அடிக்கடி பாத்திருக்கிறன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கோயிலுக்கு வாறனீங்களெல்லே.” பெடியன்தான் சொல்லுகிறான்.திருநாவுக்கரசுவிற்கு இப்போது தேநீர் புரையேறுகிறது.“நான் போட்டுவாறன்.”முன்வாசலுக்குத் திருநாவுக்கரசு வந்தபோது, “என்ன தம்பி அவ்வளவு கெதியாய் வந்திட்டியள், ஏன் சாப்பிடேல்லையே?”எனச் சம்பிரதாயமாகக் கேட்கிறார் சீவரத்தினம்.இந்தப் பெடியனின் விஷயம் சீவரத்தினத்திற்குத் தெரியாதா ? அல்லது தெரிந்திருந்தும் அவனை இங்கு வேலைக்கு வைத்திருக்கிறாரா?“அண்ணை உந்தப் பெடியனை எங்க பிடிச்சனீங்கள்?”“எந்தப் பெடியனைப் பற்றித் தம்பி கேட்கிறாய்?”“கோயில்லை அருச்சனை செய்து கொண்டுவந்த பெடியனைப் பற்றித்தான் கேட்கிறன்.”

“அவன் தம்பி உங்கை பம்பலப்பிட்டியிலை ஒரு வீட்டிலை வேலைக்கு நிண்டவன். அங்கை சம்பளம் காணாதெண்டு அந்த வேலையை விட்டிட்டு இங்கைவந்து வேலை கேட்டான் ; நல்ல பெடியன் தம்பி.” பெடியனைப் பற்றிக் கூறியபோது இவர் ஏன் அவனைப் பற்றி விசாரிக்கிறார் என்ற எண்ணமும் சீவரத்தினத்தின் மனதில் எழுந்தது.“அண்ணை நான் சொல்லுறனெண்டு குறை நினையா தையுங்கோ, உங்கட கடையில நிற்கிற பெடியன் ஆர் தெரியுமே? எங்கடையூர்ச் சின்னவன்ரை மோன் எல்லே.”“அதார் தம்பி அந்தச் சின்னவன்? எனக்கு எங்கடையூர் ஆக்களை அவ்வளவுக்குத் தெரியாதெண்டெல்லே சொன்னனான்.” சீவரத்தினம் கூறுகிறார்.“சின்னவனும் அங்கை கொஞ்சப் பேரும் தங்களையும் கோயிலுக்கை விடவேணுமெண்டு கலகப்படுத்தினவையெல்லே.”சீவரத்தினம் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை யாராவது கேட்டுக் கொண்டிருக் கிறார்களா என்பதைக் கவனித்தார். நல்ல வேளையாக வேறு எவரும் அந்த இடத்தில் இல்லை.சிறிது நேரத்தின் பின்னர்தான் சீவரத்தினத்தால் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிந்தது. அவரது முகம் இப்போது சிறிது சிறிதாகத் தெளிவு பெறத்தொடங்கியது.“தம்பி பிழைக்க வந்த இடத்திலை இதையெல்லாம் பார்க்கேலாது.... நானில்லாத நேரத்திலை அந்தப் பெடியன்தான் கடையைக் கவனிச்சுக்கொள்ளிறவன். அவனைப்போல ஒரு நம்பிக்கையான ஆள்கிடைக்காது.”சீவரத்தினம் கூறிய வார்த்தைகள் திருநாவுக்கரசுவைச் சிந்திக்க வைத்தன. அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தபடியே அவன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.- கதம்பம், நவம்பர் 1971.

++++++++++++++++++++

கோணல்கள்பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் நிறைந்துவிட்டார்கள். தெருவின் மறுபுறத்தில் இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் திண்ணைகளில் ஆண்கள் வசதியாக அமர்ந்திருந்தார்கள். மாணவர்களைத் தவிர அங்கு பத்திரிகை வாசிப்பதற்காகவும் சிலர் வந்திருந்தனர். பெண்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தின் ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.இரவு முழுவதும் பெய்த மழை இப்பொழுது சற்று ஓய்ந்திருந்தாலும் எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்பதற்கு அறிகுறியாக வானம் மூடிக்கிடந்தது.வாசிகசாலையில் இருந்தபடியே ஒருசிலர் மாணவிகளின் பக்கம் தங்களது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தனர். மாணவிகள் சிலரது பார்வைகளும் அந்த ஆண்களின் பக்கந்தான் சாய்ந்திருந்தது. பார்வைகள் சந்தித்தபோது சிலர் கவனத்துடன் வேறு எங்கோ பார்ப்பதுபோலப் பாவனை செய்தனர்; சிலர் புன்னகை பரிமாறிக் கொண்டனர்.இந்த இளவட்டங்களின் திருவிளையாடல்களைப் பார்த்து ரசிக்க முடியாத சிலர் தங்களுக்குள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டார்கள்.பஸ்தரிப்பு நிலையம் இங்கு ஏற்பட்ட காலத்திலிருந்தே இந்த நிகழ்ச்சிகள் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாமலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பெண்கள் இருந்த பகுதியில் அவர்களுடன் சேராது சற்று ஒதுக்குப் புறமாக நின்றிருந்த பார்வதியும் மூன்றுமாத காலத்துக்கு முன்னர் பாடசாலை மாணவியாக இருந்தபோது இதே பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று சுந்தரத்தை அடிக்கடி கவனித்திருக்கிறாள். அவள் பாடசாலைக்குப் போகும்நேரத்தில் அவளைப் பார்ப்பதற்கென்றே சுந்தரம் அங்கு வருவான். அவன் அவளைப் பார்த்துப் புன்னகை புரியும்போதெல்லாம் அவளும் புன்னகை புரிந்திருக்கிறாள். அவன் அங்கு வராத நேரங்களில், அவனை நினைத்து அவனது வரவுக்காக ஏங்கியிருக்கிறாள். ஒருநாள் சுந்தரம் அவளைக் கூட்டிச்செல்வதற்காகக் காருடன் வந்தபோது, தனது தாயையும் சகோதரிகளையும் உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்துதான் அவனுடன் ஓடிச்சென்று தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.சுந்தரம் ஊரில் உள்ள ‘கறாச்’ ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்கிறான். தாய்தந்தையரைச் சிறுவயதிலே இழந்து தன் மாமனோடு வாழ்ந்துவந்த சுந்தரம் பார்வதியை மறந்து விடமுடியாத நிலையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய மாமனின் பேச்சையும் மீறித்தான் அவளைக் கைப்பிடித்தான்.பார்வதியும் சிறுவயதிலே தந்தையை இழந்தவள்தான். அவளது தந்தை எப்போதோ அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்ததினால் அவர் இறந்த பின்பு அவளது தாய்க்குக் கிடைக்கும் பென்ஷன் பணத்தில் அவளும் அவளது தாயும் இரு சகோதரிகளும் வாழ்ந்து வந்தார்கள்.சுந்தரமும் பார்வதியும் தங்களது சுற்றத்தவர்கள் எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டுத் தனியாக வாடகை வீடொன்றில் குடும்பம் நடத்தத் தொடங்கி இன்று மூன்று மாதங்களாகிவிட்டன.நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சுகவீனமாகப் படுக்கையில் படுத்த சுந்தரம், திடீரென நிலைமை மோசமாகி நோயினால் அவதியுற்றபோது, பார்வதி செய்வதறியாது. திகைத்துப் போனாள். ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவனைக் காரில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்தாள்.சுந்தரத்துடன் வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பின்னர் இன்றுதான் அவள் இந்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு வந்திருக்கிறாள். நோயுற்றிருக்கும் தனது கணவனுக்கு வேண்டிய பொருட்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்காக அவள் இப்போது பஸ்ஸிற்காகக் காத்திருக்கிறாள்.கறுத்திருந்த மேகத்திலிருந்து மழைத்துளிகள் சிறிது சிறிதாக விழத் தொடங்கின.பார்வதிக்கு அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நிமிடமம் யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. வாசிகசாலையிலிருந்த எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று வாழ்க்கை நடத்தத் தொடங்கிய நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வும் அவளுக்குள் ஏற்பட்டது.அவளுடன் படித்த சகமாணவிகள் இப்போதும் கல்லூரிக்குப் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவளுடைய சினேகிதிகள் சிலர் அவளைக் கண்டதும் தங்களுடைய பழைய சினேகிதத்தை உறுதிப் படுத்துவதுபோல அவளுடன் சகஜமாகக் கதைத்தார்கள். அப்போது பார்வதியின் மனதில், தான் சுந்தரத்துடன் கூடிவாழும் வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கேட்டுவிடக் கூடாதே என்ற தவிப்பு ஏற்பட்டது. அவளுடைய உயிர்த் தோழிகள் அவளது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே கேட்காது பொதுவான விஷயங்களைப்பற்றியே பேசியபோது தனக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விட்டதை எண்ணி ஒருவிதத் தனிமை உணர்ச்சியில் அவள் வேதனைப்படவும் செய்தாள்.ஒருசிலர், தன்னைக்கண்டதும் காணாததுபோல் பாவனை செய்தபோதும், தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்ற நிகழ்ச்சியைத் தவறென்று அவர்கள் கருதுவதைக் கவனித்தபோதும், தன்னுடன் கதைப்பதால் தங்களுக்கும் கெட்டபெயர் வந்துவிடுமோ என அவர்கள் பயந்து ஒதுங்கியதைப் பார்த்தபோதும் பார்வதியின் வேதனை மேலும் அதிகமாகியது.அவளுடைய தங்கை பானுமதியும் சகமாணவிகளோடு சேர்ந்து கொண்டு தன்னைப் பார்த்தும் பார்க்காதவள்போலத் தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தபோது பார்வதிக்குக் கதறியழ வேண்டும்போலத் தோன்றியது.

பஸ் வருகிறதா எனக் கவனிப்பதுபோலத் தனது தங்கை பானுமதியை அடிக்கடி கவனித்தாள் பார்வதி. ஆனால் பானுமதி அவளின் பக்கம் திரும்பவேயில்லை.கடந்த மூன்று மாதங்களிலும் அவள் எத்தனையோ தடவை தனது தாயைப் பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் நினைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவர்களைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றும். அவர்கள் தன்னை இனிமேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, பொங்கி வரும் தனது பாச உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தனிமையில் கண்ணீர் விட்டிருக்கிறாள்.தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. அருகில் வந்ததும் பார்வதியும் மற்றவர்களுடன் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினாள். உள்ளே ஏறியதுந்தான் அது மாணவர்களுக்கான பாடசாலைச்சேவை என்பதைக் கவனித்ததும் அவள் பதற்றத்துடன் கீழே இறங்கினாள். பஸ்ஸில் ஏறிவிட்ட மாணவிகள் சிலர் அப்போது அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தார்கள். பார்வதிக்குப் பெரிதும் அவமானமாக இருந்தது.பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னரே அது பாடசாலைச் சேவைக்காக ஓடும் பஸ் என்பதைக் கவனிக்காது உள்ளே ஏறிய தனது அவசர புத்திக்காக அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள். நிதானமில்லாது அவசரமாகத் தான் புரிந்துவிடும் காரியங்களுக்காக அவள் எத்தனையோ தடவை தன்னைத்தானே கடிந்திருக்கிறாள். ஆனாலும் திடீரென அவளையும் மீறிவிடும் அந்த அவசர குணத்தை அவளால் மாற்றவே முடியவில்லை.இவ்வளவு நேரமும் வாசிகசாலையில் யாருடனோ கதைத்துக்கொண்டு பார்வதியையே கவனித்துக் கொண்டிருந்த கனகரத்தினம் இப்போது அவள் அருகில் வந்தார்.கனகரத்தினத்திற்கு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதுவரைதான் மதிக்கலாம். திருமணஞ் செய்த நான்கைந்து வருடங்களுக்குள்ளாகவே அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால் அவர் இப்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஊரிலே பெரிய மனிதர் என்ற ஸ்தானத்தில் அவர் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் மரியாதை கொடுக்குமளவுக்கு சிறப்போடு வாழ்கிறார்.

பார்வதி தனது தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்த காலத்தில் கனகரத்தினம் அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்கு வருவார். கனகரத்தினத்தின் வீடு அவர்களுடைய வீட்டை அடுத்துத்தான் இருந்தது. வெகுகாலமாகவே அவர்களுடன் பழகி, குடும்ப நண்பராகிவிட்ட கனகரத்தினம் வேண்டிய நேரங்களில் அவர்களுக்கு உதவியும் செய்வார்.பார்வதிக்குக் கனகரத்தினத்திடம் எப்பொழுதுமே மதிப்பு உண்டு. அவள் அவரைக் ‘கனகரம்மான்’ என்றுதான் மரியாதையாக அழைப்பாள்.பள்ளிமாணவியாக இருந்த காலத்தில் பார்வதி சுந்தரத்தோடு தொடர்பு கொண்டிருந்தபோது, கனகரத்தினம் அவளை எத்தனையோ தடவைகள் தனிமையில் கண்டித்திருக்கிறார்; சுந்தரத்தை மறந்து விடும்படி கூறியிருக்கிறார்.கனகரத்தினம் அருகே வந்தபோது பார்வதியின் மனம் பயத்தால் அடித்துக்கொண்டது. மூன்று மாதங்களின் பின்னர் அன்றுதான் பார்வதி அவரைச் சந்திக்கிறாள். தன் புத்திமதிகளையும் மீறிச் சுந்தரத்தோடு சேர்ந்து வாழ்வதால் கனகரத்தினம் இப்போது கோபத்தோடு ஏசுவாரோ எனப் பார்வதி பயந்தாள்.“எங்கை பார்வதி போகிறாய்?” கனகரத்தினம் அவளிடம் கேட்டார்.சுந்தரம் சுகவீனமுற்றிருப்பதையும், சுந்தரத்தைப் பார்க்கப் போவதற்காகத்தான் பஸ்ஸிற்காகக் காத்துநிற்பதையும் பார்வதி தயக்கத்தோடு அவரிடம் கூறினாள்.மழை இப்போது பலக்கத் தொடங்கியது. குடையில்லாது நனைந்து கொண்டிருந்த பார்வதியிடம் தனது குடையைக் கொடுத்தார் கனகரத்தினம். தன்னை எப்படியெல்லாமோ ஏசுவார் என எதிர்பார்த்திருந்த பார்வதிக்கு அவர் குடையைக் கொடுத்துதவ முன்வந்தது பெரிதும் ஆறுதலாக இருந்தது. நன்றியறிதலுடன் அவள் குடையைப் பெற்றுக்கொண்டாள்.“சுந்தரத்துக்கு வருத்தம் கடுமையே?”“நெருப்புக்காய்ச்சல் என்று டொக்டர் சொன்னவர். இரண்டு மூண்டு கிழமைக்கு ஆஸ்பத்திரியிலை இருக்க வேணுமாம்.”

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. பின்னேரம் தான் குடையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு கனகரத்தினம் விடைபெற்றுக் கொண்டார்.பார்வதி ஆஸ்பத்திரியை அடைந்தபோது சுந்தரம் காய்ச்சலின் வேகத்தினால் நினைவற்றுப் படுத்திருந்தான். பார்வதி அங்கு வந்ததைகூட அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. சுந்தரத்தின் நிலைமையைப் பார்த்ததும் பார்வதி அழத்தொடங்கிவிட்டாள். யாருமே உதவியற்ற நிலையில் சுந்தரத்துக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதை நினைக்கும்போது பொங்கிவந்த வேதனையை அவளால் அடக்க முடியவில்லை.டொக்டர் அவளுக்கு ஆறுதல் கூறினார். முக்கியமான சிலமருந்துகள் ஆஸ்பத்திரியில் இல்லாததினால் அவற்றை வெளியில் உள்ள மருந்துக்கடைகளில் வாங்கி மறுநாள் வரும்போது கொண்டுவரும்படி சிலமருந்துகளின் பெயர்களைக் குறித்துக் கொடுத்தார்.ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது பார்வதியின் கவலை முழுவதும் எப்படியாவது டொக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கவேண்டும் என்பதிலேதான் இருந்தது. அவளிடம் அப்போது அந்த மருந்துகளை வாங்குவதற்குப் போதிய பணம் இருக்கவில்லை. யாரிடந்தான் பணத்தைக் கேட்பது?சுந்தரத்துடன் எப்படியும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற திடத்துடன் அவள் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோது ஊரவர்களும் உறவினர்களும் அதனைக் கேவலமாகப் பேசினார்கள். இன்று சுந்தரத்திற்காகவே யாரிடமாவது சென்று பணம் கடனாகக் கேட்டால் அவர்கள் தனது மனம் நோகும்படி குத்தலாக ஏதும் சொல்வார்களோ என அவள் பயந்தாள்.பார்வதி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது நன்றாக இருட்டி விட்டது. அவளுக்கு வீட்டில் தனியாக இருப்பதற்குச் சிறிது அச்சமாக இருந்தது. அயலிலும் வீடுகள் இல்லை. முன்கதவை நன்றாகப் பூட்டித் தாழ்ப்பாழ் போட்டுவிட்டுத் தனது வீட்டு வேலைகளில் முனைந்திருந்தாள்.வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. பார்வதி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். கனகரத்தினம் நின்று கொண்டிருந்தார். காலையில் அவரிடம் வாங்கிய குடை இன்னும் தன்னிடத்திலேயே இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. முன் கதவைத் திறந்து அவரை வரவேற்றாள்.“நான் இங்கை வாறதை யாரும் கண்டால் வீண்கதை பேசுவினம். அதனாலைதான் இந்த நேரத்தில ஒருவருக்கும் தெரியாம வந்தனான்.” கனகரத்தினம் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தார்.“அம்மா எப்பிடி இருக்கிறா? எப்ப எண்டாலும் என்னைப் பற்றியும் கதைக்கிறவவே?” பார்வதி ஆவலோடு தனது தாயைப் பற்றி விசாரித்தாள்.“அம்மாவுக்குச் சரியான கோவம்; அவ உன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தவ. திடீரெண்டு ஓடிப்போனவுடனை அவவுக்குக் கோவம் வரத்தானே செய்யும். அவவின்ரை கோவம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். போகப்போக எல்லாம் சரியாகிவிடும்; நான் எப்பிடியும் உங்களை ஒற்றுமையாக்கி வைப்பன். நீ ஒண்டுக்கும் யோசிக்காதை.” கனகரத்தினத்தின் வார்த்தைகள் பார்வதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவர் நினைத்தால் எப்படியும் தன்னைத் தனது தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைப்பார் என்பது பார்வதிக்கு நிச்சயமாகத் தெரியும்.“இருங்கோ கனகரம்மான், தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.” சமையல் அறைப்பக்கம் போனாள் பார்வதி.சிறிது நேரத்தின் பின்பு தன்னைத் தொடர்ந்து கனகரத்தினமும் சமையல் அறைக்குள் வந்துவிட்டதைக் கவனித்தபோது அவளது மனதில் ஏதோ குறுகுறுத்தது.“எனக்கு இப்ப தேத்தண்ணி வேண்டாம், கொஞ்ச நேரத்துக்கு முன்னந்தான் வீட்டிலை குடிச்சிட்டு வந்தனான். உன்னுடைய புருஷனுக்கு இப்ப எப்படி இருக்கு? எப்பவாம் ஆஸ்பத்திரியாலை விடுவினம்?”“வருத்தம் கொஞ்சம் கடுமைதான்; டொக்டர் எதோ மருந்துகளை எழுதித் தந்திருக்கிறார். நாளைக்குப் போகும்போது வாங்கிக்கொண்டு போகவேணும்.” பார்வதி அப்படிக் கூறியபோது கனகரத்தினத்திடம் தனது நிலைமையை விளக்கிக் கடனாகப் பணம் கேட்கலாமா எனவும் யோசித்தாள்.

“செலவுக்குக் கையிலை மடியிலை ஏதும் வச்சிருக்கிறியே? கனகரத்தினந்தான் கேட்டார்.பார்வதி பதிலொன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தாள்.“எனக்குத் தெரியும் பார்வதி, இந்த நேரத்தில உன்னட்டை செலவுக்குக் காசு இருக்காது. உனக்குத் தாறதுக்குத் தான் நான் கொஞ்சம் காசு கொண்டு வந்திருக்கிறன். நீ என்னட்டைப் பயப்பிடாமல் எதுவேணுமெண்டாலும் கேட்கலாம். இந்த நேரத்திலை உதவி செய்யாவிட்டால் பிறகு எப்ப உதவி செய்யிறது?”பார்வதியின் பார்வை தற்செயலாக முன்பக்கம் சென்றது. முன்கதவு சாத்தப்பட்டிருந்தது. கனகரத்தினந்தான் சாத்தியிருக்க வேண்டும். அவளது நெஞ்சம் துணுக்குற்றது.கனகரத்தினத்திற்குத் தேநீர் தயாரிப்பதற்காக மூட்டிய நெருப்பு அடுப்புக்குள் சுவாலைவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பார்வதி அந்தச் சுவாலைக்குள் தனது பார்வையைச் செலுத்திய வண்ணம் நின்றிருந்தாள்.கனகரத்தினம் அவள் அருகில் வந்து அவளது கையைப் பற்றித் தான் கொண்டுவந்த பணநோட்டுகளை அவளது கைக்குள் திணித்தார்.“எனக்குப் பயமாயிருக்கு, நீங்கள் போயிட்டு வாருங்கோ” பார்வதி பதட்டத்துடன் கூறினாள்.“ஏன் பார்வதி என்னைக் கலைக்கிறாய்? நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை, இப்ப இங்கை ஒருத்தரும் வரமாட்டினம்.”கனகரத்தினம் அவளது கையிலே திணித்த பணநோட்டுகள் நிலத்திலே விழுந்து சிதறின.அடுப்பிலிருந்து சுவாலை பெரிதாக வீசியது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாது பார்வதி விலகிப்போக முயன்று கொண்டிருந்தாள்.“ஐயோ, என்னை விட்டிடுங்கோ” அவள் கனகரத்தினத்திடம் கெஞ்சினாள்.கனகரத்தினத்தின் பிடி அவளை இறுக்கியது. பார்வதி ஆவேசத்தோடு அவரது பிடியிலிருந்து திமிறினாள்.

கனகரத்தினத்திற்கு அவளது எதிர்ப்பு எரிச்சலைக் கொடுத்தது.“என்னடி, நீ சுந்தரத்தோடை ஓடிவந்தவள்தானே... என்னைக் கண்டால்தான் உனக்குக் கசக்குதோ?”அவர் அப்படிக் கூறியபோது பார்வதிக்குக் கோபம் பொங்கியது. அவள் பத்திரகாளியானாள். என்றுமில்லாத அசுரபலம் அவளுக்குள் புகுந்துகொண்டது. கனகரத்தினத்தை வெறியோடு தள்ளினாள். கனகரத்தினம் நிலைதடுமாறித் தள்ளாடினார். அதே வேகத்தோடு அவள் அவரைச் சமையலறையின் பின்கதவு வழியாக வெளியே தள்ளிக் கதவைப் படீரெனச் சாத்தி பூட்டிவிட்டாள்.பார்வதிக்கு மூச்சுவாங்கியது. அவள் விம்மி விம்மி அழுதாள்.அடுப்பிலிருந்த சுவாலை இப்போது தணிந்து அவிந்து சாம்பராகியது.பார்வதி விம்மும் சத்தம் வெளியே நின்றுகொண்டிருந்த கனகரத்தினத்தின் காதுகளிலும் விழுந்தது. அவர் ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் துடித்தார். அவரது குடை பணம் யாவும் உள்ளேயிருந்தன. தனது விருப்பம் நிறைவேறாமலே அவற்றை இழந்துவிடக் கனகரத்தினம் விரும்பலில்லை. ஆனாலும் அப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறொருநாள் தனது பொருட்களைச் சாவதானமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நினைவில் அவர் மெதுவாக எழுந்து தனது வீட்டை நோக்கி நடந்தார்.பார்வதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அவளிடத்தில் இப்போது அளவில்லாத வெறுப்புணர்ச்சி ஓங்கிநின்றது. கனகரத்தினம் இப்படி நடக்கக்கூடியவரென அவள் கனவிலும் கருதியதில்லை. அவர் முன்பு எவ்வளவோ நல்லவராக இருந்தார். திடீரென எப்படி அவருக்கு இந்த கோணற்புத்தி ஏற்பட்டது?தன்னிச்சைப்படி ஒருவனோடு ஓடிச்சென்று வாழும் பெண்களை எல்லோருமே பலவீனமானவர்கள் என்றுதான் எண்ணுகிறார்கள். ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதான் கணிக்கிறார்கள். அதனாலேதான் கனகரத்தினமும் தன்னிடத்தில் அப்படி நடந்து கொண்டாரா? எனப் பார்வதி யோசித்தாள். தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று தனியாக வாழ்க்கை நடத்துவதினாலேதான் அந்த நல்ல மனிதரின் மனதிலும் கெட்ட சிந்தனைகள் ஏற்பட்டதோவென எண்ணி அவள் மனம் குமைந்தாள்.

தனது தாயாருடனும் சகோதரிகளுடனும் தான் வாழ்ந்த காலத்தில், கனகரத்தினம் தன்னிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டார் என்பதை இப்போது பார்வதி எண்ணிப் பார்த்தாள்.பெற்றோரின் விருப்பப்படி திருமணஞ்செய்து குடும்பம் நடத்தும் தனது சினேகிதிகள் ஒவ்வொருவரையும் அவள் தனது நினைவில் நிறுத்தினாள். அவர்கள் இன்று எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் சிறிது கஷ்டம் ஏற்பட்டாலும் உதவி செய்வதற்கு தாய் தந்தையர்களும் சுற்றத்தவர்களும் முன்வருகிறார்கள். ஆனால் இன்று தனக்கு உதவி செய்ய யாருமே முன்வராதபடி தனது வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொண்டதற்காக அவள் மிகவும் வேதனைப்பட்டாள். பார்வதிக்குத் தனது தங்கை பானுமதியின் நினைவு ஏற்பட்டது. காலையில் அவள் எவ்வளவு பாராமுகமாக நடந்துகொண்டாள்! தனது குடும்ப கௌரவத்தையும் அழித்து, ஓடிப்போனவளின் தங்கைகள் என்ற பெயரையும் தனது சகோதரிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையையும் பிரச்சினைக்குள்ளாக்கிவிட்ட தனது மடைமையை எண்ணி அவள் கண்ணீர் விட்டாள்.வாழ்க்கையைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளாத பருவத்தில், அவசரமான முடிவுக்கு வந்ததனால் தனது வாழ்க்கையே கோணலாகிவிட்டதோ என எண்ணி அவள் குழப்பமடைந்தாள்.சிந்தித்துச் சிந்தித்து மூளையே வெடித்துவிடும்போல இருந்தது பார்வதிக்கு. இனி எதைப்பற்றியுமே சிந்திப்பதில் பயனில்லை என்று நினைத்து அவள் எதையுமே வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.கனகரத்தினம் அவளிடம் கொடுத்த பணநோட்டுகள் நிலத்திலே சிதறுண்டு கிடந்தன. அவற்றைப் பொறுக்கிச் சுக்கல்நூறாகக் கிழித்து அடுப்புக்குள் போட்டுவிடவேண்டும் என்ற வேகம் ஒருகணம் அவளுக்குள் துளிர்த்தெழுந்தது.ஆனாலும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கணவனின் உயிரைக் காப்பாற்ற அவளுக்கு அந்தப் பணம் அதிமுக்கியமான தேவையாகிவிட்டது.தன்னைத் தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைக்கக் கூடிய கனகரத்தினத்தைப் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக அவள் இப்போது பெரிதும் வருந்தினாள்.மறுநாள் பார்வதி ஆஸ்பத்திரிக்குச் சென்று தனது கணவனுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட்டு வந்ததில் பெரிதும் ஆறுதலடைந்தாள்.அன்றிரவு பார்வதி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த போது வெளியே கதவு தட்டப்படும் ஓசைகேட்டது. கனகரத்தினந்தான் அப்படிப் பதட்டமின்றி நிதானமாகக் கதவைத் தட்டுவார் என்பது பார்வதிக்குத் தெரியும்.கனகரத்தினம் வெளியே நின்றுகொண்டிருந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பார்வதி முறையிடுவதற்கு அவளுக்கு யாருமே இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதனாலேதான் அவர் துணிவுடன் அங்கு வந்திருந்தார்.தான் அங்கு வந்ததைப் பார்வதி அறிந்ததும் கதவைக் கூடத் திறக்கமாட்டாள் என்றுதான் கனகரத்தினம் நினைத்தார்.ஆனால் பார்வதியோ கோணலாகிவிட்ட தனது வாழ்க்கையை நினைத்து வருந்தி, அதனால் ஏற்பட்ட விரக்தியையும் வெளிக்காட்டாது கதவைத் திறந்தாள்.- வீரகேசரி 1971..

+++++++++++++++++++++

எங்கோ ஒரு பிசகுபனை கொடியேறும் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு ஒரு தனி மவுசு பிறந்துவிடும். வெளியிடங்களில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் பலர் இக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தடவையாவது விஜயம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். உள்ளூர்க் கோவில்களில் கொடியேறித் திருவிழாக்கள் நடக்கும் போதுகூட ஊர்ப்பக்கம் திரும்பியும் பார்க்காத பல பிரகிருதிகள் பனை கொடியேறிய காலத்தில் ஊருக்கு வந்து ‘திருவிழாக்கள்’ நடத்திவிட்டுத்தான் திரும்புவார்கள். சிலருக்கு இக்காலத்தில் ஞானம் பிறப்பதுமுண்டு.இத்தகைய ‘திருவிழாக்கள்’ நடக்கும் தலங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலும்!இந்தக் கொட்டில் தற்காலத்துக்கேற்ப எவ்வித புனருத்தாரண வேலைகளுக்கும் உட்படாமல் வெகுகாலமாகப் பழைய நிலையிலேயே இயங்கி வருகிறது.அந்தி சாயும் நேரம்.ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் முத்தனுடைய கள்ளுக் கொட்டிலின் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார்கள்.அவர்கள் வருவதைக் கண்ட முத்தன் தலையிலே கட்டியிருந்த துண்டை அவிழ்த்துக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு குழைந்தபடி “கமக்காரனவை வாருங்கோ” என அவர்களை வரவேற்று, முற்றத்திலே போடப்பட்டிருக்கும் வாங்கிலிருந்த தூசியைக் கைத்துண்டினால் துடைத்துவிடுகிறான்.செல்லத்துரையர் முப்பது வருடங்களுக்கு மேலாக கொழும்பிலே வாழ்ந்துவருகிறார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் ஆறுமுகத்தாரையும் அழைத்துக்கொண்டு முத்தனின் கள்ளுக் கொட்டிலுக்கு வருவதற்குத் தவறுவதில்லை.உள்ளே இருந்துவரும் கள்ளின் மணம் ஆறுமுகத்தாரின் வாயில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கிறது. முற்றத்திலே வளர்ந்திருந்த பூவரச மரத்தின் கெவர்களில் நான்கைந்து பிழாக்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அவற்றை ஒருதடவை நோட்டம் விடுகிறார் ஆறுமுகத்தார்.அவரைக் கவனித்த செல்லத்துரையர் சிரித்துவிட்டு, “முத்து, இரண்டு கொண்டுவாவன்” என ஓடர் கொடுக்கிறார்.முத்தன் உள்ளே போகிறான்.கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்த வாழ்க்கையின் பயனாகச் செல்லத்துரையர் சமூகத்திலே தனக்கென ஓர் அந்தஸ்தைத் தேடி வைத்திருக்கிறார். பெரிய வீடு, சொந்தத்திலே கார், பெரிய மனிதர்களின் சிநேகம் இவையெல்லாம் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கொழும்பிலே தனது சிநேகிதர்களுடன் சேர்ந்துகொள்ளும்போது அவர் உயர்ரக மதுவகைகளைத்தான் சுவைப்பார். ஆனாலும், அப்போது காணாத ஒரு சுவையை, மனநிறைவை, முத்தனுடைய கொட்டிலில் ஆறுமுகத்தாரோடு சேர்ந்து குடிக்கும் பனங்கள்ளிலே அவர் கண்டிருக்கிறார்.ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் சிறுபராயத்திலிருந்தே நண்பர்களாக இருக்கின்றார்கள். ஆறுமுகத்தாருக்கு ஊரிலே நிறைய நிலபுலன்கள் இருக்கின்றன. அவர் தனக்குச் சொந்தமான ஏராளமான நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு தானும் ஏதோ வேலை செய்கிறேன் என்ற பெயருக்காக ஒரு சிறிய காணியிலே கமஞ்செய்து வருகிறார். ஆறுமுகத்தாருக்கும் ஊரிலே பெரிய மனிதர் என்ற மதிப்பு உண்டு.முத்தன் உள்ளே போனதும், ஆறுமுகத்தார் செல்லத்துரையிடம் சொல்கிறார், “இந்த முத்தன் கிழவனிட்டை நாங்கள் விவரந்தெரிஞ்ச காலத்திலையிருந்து கள்ளுக்குடிக்கிறம். இவன் எவ்வளவு பணிவாயும் மரியாதையாயும் நடக்கிறான். தன்னுடைய மகன் கொழும்பில பெரிய உத்தியோகத்திலை இருக்கிறான் எண்ட செருக்குக்கூட இல்லை. மற்றவங்களெண்டால், மகன் கொழும்பிலை உத்தியோகம் பாத்தால் உடனை கள்ளுக் கொட்டிலை மூடிவிடுவாங்கள். இவன் தன்னுடைய குலத்தொழிலை விடக்கூடாது எண்டுதானே இப்பவும் கள்ளு வித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்குத் தெரியிற மரியாதை இவன்ரை பெடியனுக்குத் தெரியேல்லை. அந்தப் பொடியன் எங்களுக்குச் செய்த வேலை சரியே....? இப்ப நினைச்சாலும் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வருகுது..... கொழும்பிலை, தான் பெரிய மனிசனாகி விட்ட நினைப்பிலைதானே அவன் அந்த வேலை செய்தவன்.... எல்லாம் உம்மாலைதான் வந்தது..... நீர் கொழும்பிலை மானம் மரியாதை எல்லாத்தையும் விட்டிட்டு நடக்கிறீர் எண்டால் என்னையும் மானங்கெட வைக்கப் பாத்தனீரெல்லே.”செல்லத்துரையர் மௌனமாக இருக்கிறார். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் ஆறுமுகத்தாருக்குக் கோபம் வந்துவிடுமென்பது அவருக்குத் தெரியும்.முத்தன் இரன்டு போத்தல் கள்ளுடன் வெளியே வருகிறான். பூவரச மரத்தில் இருந்த பிழாக்களிலே இரண்டை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு, ஒன்றை ஆறுமுகத்தாரிடமும் மற்றதை செல்லத்துரையரிடமும் கொடுக்கிறான். அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டதும் கள்ளை அந்தப் பிழாக்களிலே ஊற்றுகிறான்.செல்லத்துரையர் கள்ளின் நுரையில் செத்து மிதந்து கொண்டிருந்த ஏதோ பெயர் தெரியாத பூச்சி ஒன்றைத் தனது விரலினால் வழித்து வீசிவிட்டு பிழாவில் வாயை வைத்து உறிஞ்சுகிறார். “முகத்தார், சோக்கான சாமான் ” என அந்தக் கள்ளுக்குத் தனது மதிப்புரையையும் வழங்குகிறார்.“இப்பதான் கமக்காரன் என்ரை சின்னவன் பனையிலையிருந்து இறக்கிக்கொண்டு வந்தவன்...... நல்ல புதுக்கள்ளு..... உங்களுக் கெண்டுதான் கலப்பில்லாததாய் எடுத்துக்கொண்டு வந்தனான்.” முத்தன் வழக்கமாகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கும் கூறுவதைதான் இப்பொழுதும் கூறுகிறான்.ஆறுமுகத்தார் ஒரே இழுப்பில் பிழாவைக் காலிசெய்து விட்டு அதனைப் பக்கத்திலே வைக்கிறார். அவரது உடலில் ஒரு புதுத்தென்பு உண்டாகிறது.

“முத்து, இன்னும் இரண்டு கொண்டு வா” இப்போது ஆறுமுகத்தார் ஓடர் கொடுக்கிறார்.முத்தன் பணிவோடு வெற்றுப் போத்தலை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறான்.ஆறுமுகத்தாரின் வயிற்றுக்குள் போன கள்ளு கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்குகிறது. சிலநாட்களாக அவரது மனதை அரித்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியொன்று இப்போது விசுவரூபம் எடுக்கிறது.ஆறுமுகத்தாரின் மகன் படிப்பை முடித்துக் கொண்டு நான்கு வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறான். எத்தனையோ வேலைகளுக்கு மனுப்போட்டிருந்தும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. செல்லத்துரையர் சென்றதடவை ஊருக்கு வந்திருந்தபோது, ஆறுமுகத்தார் இதைப்பற்றி அவரிடம் கூறினார். அதற்குச் செல்லத் துரையர், தான் எப்படியாவது பெரியமனிதர்களிடம் சிபார்சு செய்து அவரது மகனுக்கு வேலை தேடிக்கொடுப்பதாக உறுதியளித்துவிட்டுச் சென்றார்.செல்லத்துரையர் கொழும்புக்குச் சென்ற சில நாட்களில் ஆறுமுகத்தாருக்கு கடிதம் வந்தது. மகனையும் அழைத்துக் கொண்டு உடனே புறப்பட்டு வரும்படி செல்லத்துரையர் கடிதம் எழுதியிருந்தார்.ஆறுமுகத்தாரும் அவரது மகனும் கொழும்புக்கு வந்த தினமே, அவரைக் கொழும்பிலுள்ள பிரபல கம்பனி மனேஜரிடம் அழைத்துச் சென்றார் செல்லத்துரையர்.ஊரிலே கள்ளு விற்கும் முத்தனின் மகன்தான் படித்துப் பட்டம்பெற்று சிறிது சிறிதாக முன்னேறி இன்று கம்பனியின் மனேஜராக உயர்ந்திருக்கிறான் என்ற இரகசியத்தை ஆறுமுகத்தாரிடம் சொல்லலாமா கூடாதா என்பது செல்லத்துரையருக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது.இவ்வளவு காலமும் ஊரிலே வாழ்ந்து, அந்தச் சூழ்நிலையிலும் பழக்கவழக்கங்களிலும் ஊறிப்போன ஆறுமுகத்தார் முத்தனின் மகனிடந்தான் இப்போது வேலை கேட்கப் போகிறோம் என்றால் சம்மதிப்பாரா? செல்லத்துரையர் எந்த விபரத்தையும் ஆறுமுகத்தாரிடம் சொல்லவில்லை.

கார் ஓர் அழகிய வீட்டின் முன்னால் நிறுத்தப்படுகிறது. ஆறுமுகத்தார் மிகவும் அடக்கமாகவும் பயபக்தியுடனும் தனது மகனுக்கு உத்தியோகம் கொடுக்கப்போகும் பெரிய மனிதரின் வீட்டின் உள்ளே செல்லத்துரையருடன் நுழைகிறார். வாசலிலே மாட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் ‘எம். சண்முகம்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயரை ஒருதடவை எழுத்துக் கூட்டி வாசிக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு ஆங்கிலமும் தெரியும்.அவர்கள் உள்ளே நுழைந்ததும் “வாருங்கோ, வாருங்கோ” எனப் பணிவுடனும் மரியாதையுடனும் வரவேற்கிறார் சண்முகம்.ஆறுமுகத்தார் சண்முகத்தைக் கூர்ந்து கவனிக்கிறார். இந்தச் சண்முகத்தை அவர் எங்கோ பார்த்திருக்கிறார். ஆ....! ஞாபகம் வந்துவிட்டது!; முத்தன்ரை பெடியன் சண்முகத்தான்!செல்லத்துரையரைத் திரும்பி ஒருதடவை பார்க்கிறார் ஆறுமுகத்தார். செல்லத்துரையர் ஒன்றுமே பேசவில்லை. அந்தச் சூழ்நிலை அவருக்கு இக்கட்டான நிலைமையை உருவாக்கி விட்டது.“ஐயா, இந்தச் சோபாவிலை உட்காருங்கோ” சண்முகம் அவர்களை உபசரித்தார்.ஆறுமுகத்தாரும் செல்லத்துரையரும் அமர்ந்துகொள்கிறார்கள்.“ஐயா, என்ன குடிக்கிறியள்? தேத்தண்ணியோ அல்லது ஓவல் போட்டுக் கொண்டுவரச் சொல்லட்டுமோ?” சண்முகம் அப்படிக் கேட்டது ஆறுமுகத்தாருக்கு அதிர்ச்சியாக இருந்தது; ஆத்திரமாகவும் இருந்தது. ஊரிலே கள்ளுக்கொட்டில் வைத்திருக்கும் முத்தனுடைய மகனல்லவா அப்படிக் கேட்டுவிட்டான்.“இப்பதான் நாங்கள் வீட்டில தேத்தண்ணி குடிச்சிட்டு வந்தனாங்கள்...... எங்களுக்கு இப்ப ஒண்டும் வேண்டாம்.” ஆறுமுகத்தார்தான் சொன்னார்.“பரவாயில்லை...... கொஞ்சமாய்க் குடியுங்கோ...... வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேத்தண்ணிகூடக் கொடுக்காமல் அனுப்பிறது எனக்கு மரியாதையில்லை.” சண்முகம் இப்படிக் கூறிவிட்டுக் குசினிப்பக்கம் திரும்பி, “பியசேனா, தே தெக்கக் கெயின்ட” எனத் தனது வேலைக்காரனிடம் கூறினார்.

சிறிது நேரத்தில் பியசேனா என்னும் அந்தச் சிங்களப் பையன் தேநீர் தயாரித்துக்கொண்டு வந்தான். சண்முகம் அவனிடமிருந்து தட்டுடன் தேநீரை வாங்கி மிகவும் விநயத்துடன் ஆறுமுகத்தாரிடம் நீட்டினார்.“நான் தேத்தண்ணி குடிக்கிறதில்லை.” ஆறுமுகத்தார் சிறிது கோபத்துடன் கூறினார்.“பரவாயில்லை, கொஞ்சமாய்க் குடியுங்கோ.”ஆறுமுகத்தாருக்குக் கோபம் அதிகமாகியது. அவமானம் அடைந்துவிட்டது போன்ற உணர்வு அவருள்ளே எழுந்தது; முகம் கடுமையாக மாறியது.“என்னுடைய மகனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை....... நான் உன்னுடைய வீட்டிலை..... தேத்தண்ணி குடிக்க மாட்டேன்.”ஆறுமுகத்தார் கோபத்துடன் எழுந்துசென்று காரில் ஏறி அமர்ந்துகொண்டார். அவர் காரின் கதவை அடித்துச் சாத்திய பலமான சத்தம், எவ்வளவு கோபத்துடன் அவர் இருக்கிறாரென்பதை எடுத்துக் காட்டியது.செல்லத்துரையரின் நிலைமை தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவர் முன்பும் இப்படிச் சில பெரிய மனிதர்களை சண்முகத்திடம் அழைத்து வந்திருக்கிறார். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டதே என எண்ணிக் கவலைப்பட்டார். சண்முகம் இதைத் தவறாக எண்ணவும் கூடும்.இதனால் தனக்கும் சண்முகத்திற்கும் உள்ள நட்பு ஈடாட்டம் கண்டுவிடுமோ எனவும் அவருக்குக் கவலையாக இருந்தது. சண்முகத்திடம், ஏதேதோ தன்னால் முடிந்த சமாதானங்களைக் கூறிவிட்டுச் செல்லத்துரையரும் புறப்பட்டார்.“நீர் என்னை அவமானப்படுத்தத்தான் இங்கை கூட்டிவந்தனீரோ?” செல்லத்துரையர் வந்து காரில் ஏறும்போது ஆத்திரத்துடன் கேட்டார் ஆறுமுகத்தார்.“இல்லை..... முகத்தார், எப்படியாவது உமது மகனுக்கு வேலை தேடித்தரத்தான் நான் முயற்சி செய்தனான். உம்மை அவமானப்படுத்த நினைக்கேல்லை; நீர்தான் அவமானமாக நடந்துகொண்டீர்.”

“செல்லத்துரை, உமக்கு புத்தி மழுங்கிப் போச்சு..... அவனை நாங்கள் எங்கடை வீட்டுக்குள்ளையும் விடமாட்டம்; அப்படிப் பட்டவனுடைய வீட்டிலை நான் தேத்தண்ணி குடிப்பனே?”ஆறுமுகத்தாருக்கு ஆத்திரம் கூடியதேதவிரக் குறையவில்லை. எப்படியெப்படியெல்லாமோ செல்லத்துரையரைத் திட்டித் தீர்த்துவிட்டு மறுநாளே மகனையும் கூட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார்.“என்ன கமக்காரன், கடுமையான யோசனை? கள்ளைக் குடியுங்கோ.”முத்தனின் பணிவான குரல் கேட்டுச் சுயநினைவுக்கு வருகிறார் ஆறுமுகத்தார்.கள்ளுக் குடித்த மயக்கத்திலேதான் ஆறுமுகத்தார் கண்ணை மூடியவண்ணமிருக்கிறார் என நினைத்திருந்த செல்லத்துரையருக்கு அவர் இவ்வளவு நேரமும் ஏதோ யோசனையிலே தான் இருந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது.ஆறுமுகத்தார் முத்தனை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் இருக்கிறார். கள்ளு உள்ளே கடுமையாக வேலைசெய்கிறது.“டேய் முத்தன், உன்ரை மோன் சண்முகத்தான் இப்ப பெரிய மனிசனாகிவிட்டானே?”ஆறுமுகத்தார் திடீரென இப்படிக் கேட்டது முத்தனுக்குச் சங்கடமாக இருந்தது. ஏன் இப்படி அவர் கேட்கிறார் என்பது அவனுக்கு விளங்கவே இல்லை.அவன் ஒன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தான்.“உன்ரை மோன் செய்த வேலை தெரியுமே....? நான் கொழும்புக்குப் போயிருந்தபொழுது தன்னுடைய வீட்டிலை தேத்தண்ணி குடிக்கச் சொல்லியெல்லே கேட்டவன்”இதைக் கேட்டதும் முத்தன் பதறிப் போனான்.செல்லத்துரையருக்கு முத்தனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க எண்ணிய அவர், முத்தனை இன்னும் இரண்டு போத்தல் கள்ளுக் கொண்டுவரும்படி உள்ளே அனுப்பி வைத்தார்.முட்டியிலே கள்ளு முடிந்திருந்தது. தனது பாவனைக்கென வேறாகச் சோற்றுப் பானையில் ஊற்றிவைத்திருந்த கள்ளில் இரண்டு போத்தலை எடுத்துவருகிறான் முத்தன்.ஆறுமுகத்தாரின் கண்கள் சிவப்பேறி இருக்கின்றன. அவர் பிழாவை இரண்டு கைகளினாலும் ஏந்தியபடி இருக்கிறார். முத்தன் கள்ளை அதற்குள் ஊற்றுகிறான்.ஆறுமுகத்தார் உறிஞ்சிக் குடிக்கிறார். வாய்க்குள் .... ஏதோ தட்டுப்படுகிறது. எறும்பு என நினைத்துத் துப்புகிறார். சோற்று அவிழ் ஒன்று வெளியே வந்து விழுகிறது. வெற்றுப் போத்தல்களை எடுத்துக்கொண்டு முத்தன் மெதுவாக உள்ளே நழுவுகிறான்.செல்லத்துரையர் இந்தக் காட்சியை வெறித்துப் பார்த்த வண்ணம் இருக்கிறார். சக்கர வியூகத்தில் ஆயுதமின்றி அகப்பட்டுத் தவிக்கும் போர்வீரனுக்கு திடீரென ஆயுதமொன்று கையிலே கிடைத்துவிட்டால் ஏற்படும் ஆவேசம் அவருள் எழுகின்றது.மறுகணம் ஆறுமுகத்தாரின் தோளைப்பிடித்து உலுக்கியபடியே அவர் கேட்கிறார், “முத்தனுடைய மகன் தன்னுடைய வீட்டில் கொடுத்த தேத்தண்ணியைக் குடிக்கக் கூடாதெண்டால், முத்தன் கொடுக்கும் கள்ளை மட்டும் குடிக்கலாமோ?”ஆறுமுகத்தாரின் மூளைக்குள் பலமான ஒரு தாக்கம்.முத்தனுடைய வீட்டில் கள்ளுக் குடிப்பது பிசகா...? அல்லது முத்தனின் மகன் தனது வீட்டிலே கொடுத்த தேநீரைக் குடிக்காமல்விட்டது பிசகா...?ஆறுமுகத்தாரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆனால் எங்கோ ஒரு பிசகு இருக்கிறதென்பது மட்டும் இப்போது அவருக்கு நன்றாகத் தெரிகிறது.- மித்திரன் ‘73..

+++++++++++++++++++++++

குமிழி“றைற்”கண்டக்டர் கனகு குரல் கொடுத்துவிட்டு லாவகமாக பஸ்ஸில் தாவி ஏறிக்கொண்டான். மூச்சுக்கூட விடமுடியாமல் பிரயாணிகளை நெருக்கியடைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட பலாலி பஸ், நிறைமாதக் கர்ப்பிணியாய் அசையத் தொடங்கியபோது, உள்ளே வீசிய காற்று சனங்களுக்குச் சற்று இதமாகத்தான் இருந்தது.உரும்பராய் வரைக்குந்தான் இந்த நெருக்கடி, பின்னர் குறைந்துவிடுமென்பது கனகுவிற்கு நன்றாகத் தெரியும்.பஸ்ஸின் குலுக்கங்களையும், சரிவுகளையும் சமாளிக்க முடியாமல் கிழவி ஒருத்தி தள்ளாடிக் கொண்டிருந்தாள். கூனல் விழுந்து விட்ட அவளுக்கு மேலேயிருக்கும் கைப்பிடி எட்டாததினாலோ என்னவோ பக்கத்திலிருந்த சீற்றில் கெட்டியாகப் பற்றிக்கொண்டு விழுந்துவிடாமல் இருக்க முயற்சித்தாள்.கனகுவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.அவள் நின்ற இடத்திற்குப் பக்கத்திலிருந்த சீற்றில் அமர்ந்திருந்த வாலிபன் கிழவியின் நிலைமையைக் கண்டு கொஞ்சங்கூடக் கவலைப்படாதவனாய் அநாயாசமாகச் சிகரட்டை ஊதித்தள்ளியபடி இருந்தான். அவ்வாலிபன் எழுந்து கிழவிக்கு இடங்கொடுக்க மாட்டானா எனக் கனகுவின் உள்ளம் ஏங்கியது. ஆனாலும் அவ்வாலிபனைக் கிழவிக்கு இடம் கொடுக்கும்படி கூறுவதற்குக் கனகுவிடம் துணிவில்லை; அதிகாரமும் கிடையாது.‘நான் கொடுத்தது காசில்லையா?’ என்று அவ்வாலிபன் துள்ளியெழுந்தால் என்ன பதிலைத்தான் சொல்வது? பஸ் என்ன அவனது சொந்தமா, அதுதான் பொதுச் சொத்தாயிற்றே!கிழவியின் அவஸ்தையைக் காணச் சகிக்காமல் கனகு தனது பார்வையை வெளியே திருப்பினான்.பஸ் வின்ஸர் சந்தியில் திரும்பிய வேகத்தில் யாரோ பெண்மணி ஒரு வயோதிபர்மேல் மோதியிருக்கவேண்டும்.“இந்தப் பெண்டுகளுக்கு இப்ப போக்கு வரத்து மெத்திப்போச்சு, நாகரிகம் மெத்தி உவளவை படுகிறபாடு... பஸுவிலுமெல்லே போகேலாமைக் கிடக்கு....”வயோதிபர் கூறியதைப் பிரயாணிகள் சிலர் ஹாஸ்யமாக நினைத்துச் சிரித்தார்கள்.ஆரியகுளம் நெருங்கியபோது ஆவலோடு கனகு வெளியே எட்டிப்பார்த்தான். அவன் எதிர்பார்த்தபடியே கமலா அவள் தான் அவனது சிந்தனையில் நர்த்தனமாடும் அந்தச் சிங்காரி நின்றாள். அவளோடு யாரோ சில பிரயாணிகள்......பஸ் நின்றதும் அவளைக் கவனியாதவன் போலக் கனகு தனது வேலையில் முனைகிறான்.“பெரியவர் எவ்விடம்?”“பலாலி.”“ஆச்சி எங்கையெணை?”“புன்னாலைக்கட்டுவன் பிள்ளையார் கோயிலடி.”“அடுத்தாள்?”“................. ”அவனுடைய கேள்வி அநாதரவாய் நின்றபொழுது அவன் நிமிர்ந்தான்.கமலா அவனைப் பார்த்துக் கணீரென்று சிரித்தாள். தினமுந்தானே அதே பஸ்ஸில் அவள் பிரயாணம் செய்கிறாள். அவள் போகவேண்டிய இடமும் கனகுவிற்கு நன்றாகத் தெரியும். பின்பும் கேட்டால்..... கனகுவின் விஷமத்தனத்தைக் கண்டபோது கமலாவிற்குச் சிரிப்புத்தான் வந்தது.அவளது உள்ளத்தை நிரப்பி ஒலித்த அந்தச் சிரிப்புக்குப் பதிலாய் அவனும் சிரித்துவிட்டு ‘டிக்கற்’றைக் கிழித்துக் கொடுத்தான்.பஸ்ஸிற்குள் இருந்தபடியே கமலாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சில இளம் உள்ளங்கள் ஏமாற்றமடைந்தன. அந்த அழகி எங்கே போவதற்கு ‘டிக்கெற்’ பெறுகிறாள் என்றறியவல்லவா அவர்கள் காதைத் தீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள்.பஸ் புறப்பட்டது.கையில் இருந்த பென்சிலைக் காதில் செருகிவிட்டு, கமலா கொடுத்த ஐந்து ரூபா நோட்டுக்கு மிகுதிப்பணத்தை எடுத்தான் கனகு. விரல்களிடையே அடுக்காக மடித்து வைத்திருந்த நோட்டுகளில் நான்கைக் கொடுத்தபின், சில்லறை எண்பது சதத்தை எடுப்பதற்காகத் தானணிந்திருந்த காக்கிச் சட்டைக்குள் கையைவிட்டு லாவகமாகக் சுழற்றியபொழுது கலீரென்ற ஓசை கிளம்பியது. வேறு யாராவது அப்படி நோட்டாகக் கொடுத்திருந்தால் அவர்கள்மேல் துள்ளி விழுந்திருப்பான் கனகு. நெருக்கடியான நேரத்தில் பணத்தைச் சில்லறையாக மாற்றிக் கொடுப்பதில் இருக்கும் கஷ்டம் அவனுக்கல்லவா தெரியும்.இவ்வளவு நேரமும், தான் இருந்த இடத்தைக் கிழவிக்குக் கொடுக்காத வாலிபன் இப்போது எழுந்து கமலாவிற்கு இடத்தைக் கொடுத்துவிட்டு அவளைப் பார்த்து இளித்தான்.கமலா அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ‘ஜம்’மென்று அந்த இடத்தில் அமர்ந்துகொண்டாள். சை! ‘தாங்ஸ்’ என்று ஒரு வார்த்தையாவது கூறி அவனைப் பார்த்துப் பல்லைக் காட்ட வேண்டாமா?

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யாரோ கிழவர் கனகுவைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்; கனகுவும் சிரித்தான்.வெளியே வீசிய காற்றில் கனகுவின் உடைகள் படபடவென்று அடித்தபோது அவன் சற்று உள்ளே நுழைந்து, தனது சலவை மடிப்புக் குலையாத காக்கிச் சட்டையை இழுத்துச் சரி செய்துகொண்டான்.இப்போதெல்லாம் அவன் மடிப்புக் குலையாத சட்டைதான் போடுவான். ஒருநாள் போட்ட உடுப்பை மறுநாள் போடவே மாட்டான். சில்லறைகளின் பாரத்தில் தொய்ந்துபோன சட்டைப்பையைப் பார்க்கும்போது எவ்வளவு கேவலமாக இருக்குமென்பது அவனுக்கல்லவா தெரியும்.சனி, ஞாயிறுகளில் மட்டும் அவன் உடைகளில் அதிகம் கவனஞ் செலுத்துவது கிடையாது. அப்படியென்றால் அந்த நாட்களில் கமலா பஸ்ஸில் பிரயாணஞ் செய்வதில்லையென்று அர்த்தம் !சிறிது காலத்திற்குள் அவனுடைய தோற்றத்தில் எவ்வளவு மாற்றம்! அவனுடைய பகீரதப் பிரயத்தனத்திற்கும் அடங்காமல் பன்றிமுள்ளாய்க் குத்திட்டு நின்ற கேசங்களில்கூட அலையலையாகச் சில சுருள்கள்! குண்டூசித் தலையளவில் அவன் வைத்திருக்கும் சந்தனப்பொட்டு அவனுடைய வதனத்திற்கு எடுப்பாகத்தான் இருக்கிறது!சில நாட்களாக டிரைவர் தம்புவும் கனகுவின் மாற்றத்தைக் கண்டு அடிக்கடி அவனைக் கேலிசெய்கிறான்.பலாலி லைனில் ஒன்பது மணி பஸ் என்றால் எந்தக் கண்டக்டருக்கும் தலைவேதனைதான். அப்பப்பா ! அந்தக் ‘கிறவுட்டை’ ஏற்றி இறக்குவதென்றால் சாமானியமான காரியமா? அதே ‘ரேணில்’வேலை செய்யாமல் ‘டைம் கீப்பரி’டம் தப்பிக்கொள்வதில் கண்டக்டர்களிடையே போட்டி.அதே ஒன்பது மணி‘ரேணை’த் தனக்குத் தரவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும் கனகுவைப் பார்க்கும்போது,‘டைம்கீப்பரி’ன் கண்கள் எட்டாவது அதிசயத்தைக் காண்பது போல் விரிவதில் வியப்பில்லைத்தான்.

ஒன்பது மணி பஸ்ஸிலே தான் ஒய்யாரி கமலா வருவாள் என்பது மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது!கமலா அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் சொக்கிப்போவான். அச்சிரிப்பொலி அவனது மென்னுணர்வுகளைத் தட்டியெழுப்பி அவனைச் சிறிது சிறிதாக மேலே தூக்கிச்சென்று, அவன் என்றுமே கண்டிராத இன்ப புரிக்கல்லவா கொண்டு செல்லுகிறது.முதலில் கமலா அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனொன்றும் வித்தியாசமாக எண்ணவில்லைத்தான். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் சிரித்தபோது அச்சிரிப்பில் அவன் மயங்கத் தொடங்கினான். அவளின் சிரிப்பைக் காணாத நாட்களில் அவனிடத்திலும் சிரிப்பு மறைந்துபோகுமளவிற்கு வந்துவிட்ட பிறகு....... இதைத்தான் காதல் என்பார்களா!கமலாவோடு கதைக்கவேண்டுமென்று அவன் துடித்தான். ஆனால் எப்படிக் கதைப்பது? அதுவும் மற்றப் பிரயாணிகளின் முன்னால்.....பல வேளைகளில் அவனைக் கைவிட்டுவிடும் அவனது மூளை அன்றுமட்டும் அப்படியொன்றும் ‘மக்கர்’ பண்ணிவிடவில்லை.அவள் கொடுத்த பணத்திற்கு மிகுதியைக் கொடுக்கும் போது வேண்டுமென்றே ஐம்பது சதத்தைக் குறைத்துக் கொடுத்தான் கனகு. அப்போது கமலா அதை அவனிடம் கேட்பாளல்லவா? இப்படித்தான் கதைப்பதற்குச் சந்தர்ப்பங்களை உண்டாக்க வேண்டும்.கமலா பணத்தை எண்ணி பார்த்துவிட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். வாயைத் திறந்துதான் கேட்கட்டுமேயென்று மௌனமாக இருந்தான் கனகு.ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஒன்றுமே நடக்கவில்லை. கமலா பணத்தைக் கேட்காமலே இறங்கவேண்டிய இடத்தில் இறங்கிப் போய்விட்டாள்.கனகுவிற்குப் பெரிய ஏமாற்றமாயிருந்தது. கமலா ஏன் மிகுதிப் பணத்தைக் கேட்கவில்லை; ஒருவேளை குறைத்துக் கொடுத்ததைக் கவனிக்கவில்லையோ...... சீ! என்ன முட்டாள்தனமான எண்ணம். அவள் மிகுதிச் சில்லறையை எண்ணிய பொழுது அவன் பார்த்துக்கொண்டு தானே இருந்தான். ஒருவேளை அப்பணத்தைக் கேட்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்திருக்குமோ? அல்லது நான்தான் எடுத்துக் கொண்டேன் என்பதற்காகப் பேசாமல் இருந்திருப்பாளோ.... அப்படித்தான் இருக்கவேண்டும்.ஒருவேளை அவள் தவறாக எண்ணிவிட்டால்..... நான் பணத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டேன் என்று நினைத்துவிட்டால்..... சே! அப்படியெல்லாம் இருக்காது. கமலா அப்படி எண்ணவே மாட்டாள். அப்படியானால் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பாளா? ஒருவேளை ஏளனச் சிரிப்பாக இருந்து விட்டால்.....கனகு சிந்தனையைச் சிக்காக்கிக் கொண்டிருந்தான். அன்று முழுவதும் எந்தவேலையும் ஓடவில்லை. இரவு நித்திரையும் வரமறுத்தது.அடுத்தநாள் எப்படியும் மிகுதிச் சில்லறையைக் கொடுக்கும் போது அவளது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுத்து விடவேண்டும். அவள் அதைப் பற்றிக் கேட்கும்போது தற்செயலாகத் தவறு நடந்துவிட்டது என்று கூற வேண்டும். எப்படியோ கதைப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் சரிதான்.
அடுத்தநாள் கமலா பஸ்ஸில் ஏறியபொழுது ‘டிக்கட்டு’க்கு வேண்டிய பணத்தைச் சில்லறையாகவே கொடுத்தாள்.கனகுவின் உள்ளத்தில் ‘சுரீர்’ என்று தைத்தது. நோட்டாகக் கொடுத்தால் பணத்தை எடுத்துக்கொண்டு விடுவேன். என்பதற்காகச் சில்லறையாகவே கொடுக்கிறாளா? கனகு சமாளித்துக்கொண்டு அசடுவழியச் சிரித்தான். ‘டிக்கட்’டைக் கொடுக்கும்போது ஐம்பது சதத்தையும் சேர்த்துக் கொடுக்க அவன் தவறவில்லை.பணத்தைப் பெற்றுக்கொண்டவள், ஏன் எதற்காக? என்று ஒரு வார்த்தையாவது கேட்கவேண்டாமா? பேசாமல் போய் இடத்தில் உட்கார்ந்துவிட்டாள்.அவளின் விஷமத்தனத்தை நினைத்தபோது கனகுவிற்கு கோபந்தான் வந்தது. ஆனாலும் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தபோது அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லையே!கமலா அழகி, படித்தவள், பணக்காரி அவளின் சிரிப்பிற்காக எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும். அப்படி இருக்கும்போது அவள்மட்டும் ஏன் என்னிடம் ...... இதுதான் காதலுக்குக் கண்ணில்லை யென்பார்களோ...... கனகுவின் உள்ளத்தில் இன்ப மயமான சிந்தனைகள்.ஏன் கனகு மட்டும் குறைந்தவனா ? அழகாகத்தான் இருக்கிறான். ஏன் படித்தும் இருக்கிறான். எஸ். எஸ். சீ. பாஸ் பண்ணியவன், ஏதேதோ வேலைகளுக்கெல்லாம் அலைந்தும் கிடைக்காததால் கண்டக்டராக அமர்ந்துகொண்டால்..... இந்த வேலைதான் குறைந்ததா?அப்படியென்று யாராவது எண்ணினாலும் அவனது உணர்ச்சிகளை அணைபோட்டு விடமுடியுமா? உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன், சாதிப் பிரச்சினைகள் இவையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? அதுதான் எல்லாவற்றையும் கடந்ததொன்றாயிற்றே!கமலா பஸ்ஸிற்குள் ஏறிவிட்டால் கனகுவின் வாயில் ஆங்கிலம் விளையாடுவதுமுண்டு. அப்போதெல்லாம் கமலா கவனிக்கிறாளா என்பதையும் அவன் கடைக்கண்ணால் பார்த்துக் கொள்வான். அப்போது கமலாவின் கண்களில் தென்படும் ஆர்வத்தைக் காணும்போது கனகுவின் முகத்தில் தோன்றும் பெருமையைக் கணக்கிடமுடியாது.தனக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதை கமலா அறிந்தபோது எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பாள் எனக் கனகு கற்பனை செய்து பார்த்துக்கொள்வான்.அன்று கமலா பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவனது காலடியில் புத்தகமொன்று ‘தொப்’பென்று விழுந்தது.கமலாவின் கையிலிருந்து நழுவியதை அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவள் வைத்திருந்த புத்தகங்களில் வேறொன்றும் தவறாமல் ஒன்றுமட்டும் எப்படி அவனது காலடியில் விழும்!கமலா திரும்பிக்கூடப் பார்க்காமல் போகிறாளே! ஒரு வேளை விழுந்ததை அவள் கவனிக்கவில்லையா ? அல்லது வேண்டுமென்றே நழுவ விட்டுச் செல்கிறாளா?

அவளைக் கூப்பிட்டுப் புத்தகத்தைக் கொடுக்கலாமா? அல்லது.... முடிவிற்கு வரமுன்பே பஸ் புறப்பட்டுவிட்டதே.புத்தகத்தை அவன் கையில் எடுத்தான். ‘காதலிப்பது எப்படி?’ - புத்தகத்தின் பெயரை வாசித்தபோது புருவங்களை உயர்த்தி இதழ்களைக் கூட்டிச் சிரித்தான் கனகு.ஒரே நொடியில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் உதயமாகின. கமலா வேண்டுமென்றே புத்தகத்தை நழுவவிட்டிருக்கிறாள் என்பது கனகுவிற்குச் சொல்லியா தெரிய வேண்டும்.கமலா கெட்டிக்காரிதான்! எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்கிறாள்! என்னிடம் இருக்கும் தயக்கங்கூட அவளிடம் இல்லையே.பெண்கள் எப்பொழுதுமே காதல் விஷயங்களில் சற்று முன்னோடிகள்தான். காதலிப்பதெப்படி என்றல்லவா எனக்குக் கற்றுத்தருகிறாள் கமலா.அன்றிரவு ஒரே மூச்சில் புத்தகத்தை வாசித்துமுடித்தான் கனகு. முக்கியமான பகுதிகளில் கமலா அடையாளங்கள்கூடத் தீட்டியிருக்கிறாளே!எவ்வளவோ விஷயங்கள் அவனுக்குப் புதிதாகப் புரிந்தன.மறுநாள் கமலா பஸ்ஸில் ஏறியதும் அவளிடம் புத்தகத்தைக் கொடுத்தான் கனகு. “இதை நேற்றுத் தவறவிட்டு விட்டீர்கள்”“ஓ” இதழ்களை அவள் குவித்துவிட்டு நாணமாய் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.கனகு ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தான். அப்பப்பா! அந்தச் சிரிப்பிலேதான் எவ்வளவு கவர்ச்சி!இனிப் பொறுக்கவே முடியாது. கமலாவோடு எதையெல்லாமோ கதைக்கவேண்டுமென்று அவன் உள்ளம் துடித்தது. கமலாவின் ஒவ்வொரு புன்னகையும் அத்துடிப்பின் வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தன. இந்தப் பாழும் உள்ளத்திற்கு ஏன் இவ்வளவு துடிப்பு? ஏன் இவ்வளவு வேகம்? ஏன் இவ்வளவு உணர்ச்சி? எதையுமே கட்டுப்படுத்த முடியவில்லையே.....

கனகு பஸ் நிலையத்தில் நின்றான். அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை இன்னும் ஓய்ந்துவிடவில்லை. முன்பு புறப்பட வேண்டிய பஸ் அரைமணி நேரம் தாமதித்துப் புறப்பட்ட தாலோ அல்லது மழையின் காரணமாகவோ ஏனோ ஒன்பது மணி பஸ்ஸில் வழக்கம்போல் நெருக்கடியில்லை. ஆறோ ஏழு பிரயாணிகள் மட்டுந்தான்.கமலா வழக்கம்போல் இந்த பஸ்ஸிலேதான் வருவாள். பிரயாணிகளும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இன்றுதான் கதைப்பதற்கு சரியான சந்தர்ப்பம்.எப்படிக் கதையைத் தொடங்குவது? எப்படி உள்ளத்தின் உணர்ச்சிகளை அவளுக்கு எடுத்துக் கூறுவது? என்றெல்லாம் கனகுவின் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது.பஸ் ஆரியகுளம் சந்தியில் திரும்பி நின்றது. அங்கே..... கமலா நின்றாள். அவளுடன் யாரோ ஒரு வாலிபன்! இருவரும் தம்மை மறந்தநிலையில் ஒருவருள் ஒருவராய்க் குடைக்குள் ஒதுங்கியிருந்தனர்.‘பளீ’ரென்று வெட்டிய மின்னல் - இடி - ‘சோ’ என்ற பேய்க்காற்றின் இரைச்சல்.... மழை பலக்கிறது.கனகு கஷ்டப்பட்டுத் தன்னைச் சமாளித்துக்கொள்ள முனைந்தான்.“எவ்விடம்?”“உரும்பராய்..... இரண்டு டிக்கட்” கமலாவின் குரல் கணீரென்று ஒலிக்கிறது.அவள் கொடுத்த நோட்டுக்குச் சில்லறையைக் கொடுத்தபோது சரியாக எண்ணிக் கொடுத்தான் கனகு.கமலா வழக்கம்போல் இன்றும் அவனைப் பார்த்து அழகாகச் சிரித்தாள்.கனகுவின் கன்னத்தில் ‘பொட்’டென்று இரண்டு சூடான துளிகள் விழுந்தன.அவை மழைத்துளிகளல்ல என்பது அவனுக்கு மட்டுந்தான் தெரியும்.

வெள்ளத்தை வாரியிறைத்துக் கொண்டு பஸ் புறப்பட்ட போது நீரில் அழகாகத் தோன்றியிருந்த குமிழியொன்று ‘பட்’டென்று உடைந்து சிதைந்தது.கனகு வேதனையோடு வேறுபக்கம் பார்வையைத் திருப்பினான்.பிரயாணிகளில் யாரோ அடுத்த சந்தியில் இறங்குவதற்காக எழுந்தார்கள். கண்டக்டர் கனகு இயந்திரமாகத் தனது கடமையில் ஆழ்கிறான்.“ஹோல்டோன்.”- வீரகேசரி 1965.

+++++++++++++++++++++==

கடமை“பதினைந்தாம் நம்பர்.”எனக்கு உதவியாக இருக்கும் பணியாள் உரத்துக் கூவுகிறான்.அந்த இலக்கத்தையுடைய நோயாளி உள்ளே நுழைவதற்குள் வேறுசிலரும் முண்டியடித்துக் கொண்டு நுழைய முனைகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்திப் பதினைந்தாம் இலக்க நோயாளியை மட்டும் உள்ளே அநுமதிக்கிறான் எனது பணியாள்.என்னைத் தங்கள் குடும்ப வைத்தியனாகக் கொண்ட ஒருசிலர் எதிரே இருந்த யன்னல் ஊடாகப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்க்கின்றனர். அப்படிச் செய்வதால் எனது சலுகையுடன் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு. நான்தான் என்ன செய்யமுடியும் ? கட்டுப்பாட்டைக் குலைத்து விட்டால் பின்பு சரிப்படுத்த முடியாதே.கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்; பதினொன்று இருபதாகி விட்டது. கடந்த மூன்று மணிநேரத்தில் பதினான்கு நோயாளிகளைத்தான் என்னால் கவனிக்க முடிந்தது. வெளியில் நிற்கும் நோயாளிகளின் தொகையைப் பார்த்தால் இன்னும் நான்கு மணிநேரத்தில்கூட எல்லோரையும் என்னால் சமாளித்துவிட முடியாதுபோல் தோன்றியது.வேண்டுமானால் ஒருமணிநேரத்தில் எனது வேலையை முடித்துக் கொண்டுவிடலாம். ஆனால் அப்படி எப்பொழுதாவது நான் செய்திருந்தால் இன்று சிறந்த வைத்தியனாகி இருக்கமாட்டேன். எனக்குப் பேரும் புகழும் கிடைத்திருக்க முடியாது. எனது வைத்திய நிலையமும் பிரபல்யம் அடைந்திருக்காது.பதினைந்தாம் நம்பர் நோயாளி என் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தாள். நான் கடமையில் முனைகிறேன்.“பெயர்?”“மீனா.”“வயது?”“பதினைந்து.”“என்ன வருத்தம் ?”“.............”நான் அவளின் பக்கம் திரும்பி அதே கேள்வியை மீண்டும் கேட்டேன்.“என்ன வருத்தம்?”என்னுடைய கேள்வி இப்பொழுதும் அநாதையாக நிற்கிறது. நான் அவளைக் கூர்ந்து நோக்கினேன்.ஏதோ சொல்ல வேண்டுமென்று அவளது இதழ்கள் துடிக்க, மனம் அதனைத் தடுத்திருக்கவேண்டும். அவளது கண்களில் மருட்சி நிறைந்திருந்தது.“பயப்படாமல் சொல்லு மீனா, நான் ஒருடாக்டர். என்னிடம் எதையும் மறைத்தால் நோயைக் குணப்படுத்திவிட முடியாது.” அவளது தோற்றத்தைப் பார்த்ததும் என்னையறியாமலே அவளிடம் தோன்றிய அன்பினால் தெம்பூட்டினேன்.“நான்.... நான்... கருவுற்றிருக்கிறேன் டாக்டர்”. அவள் தயங்கியபடியே கூறினாள்.அவளைக் கூர்ந்து பார்த்தேன். இளமையின் நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திருக்கும் அவளது அழகிய தோற்றத்தில் தாய்மையும் இழையோடியிருக்கிறது. எனது மனம் ஏனோ குறுகுறுத்தது.

‘நீ எத்தனை வயதில் மணம்புரிந்து கொண்டாய்?’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஆனாலும் நான் அப்படிக் கேட்கவில்லை. “உன் கணவன் எங்கே?” என்றுதான் கேட்கிறேன்.மௌனம்.நான் திரும்பவும் அதே கேள்வியைக் கண்டிப்புடன் கேட்டேன். தேவையற்ற கேள்விக்கு எனது தகுதியைக்கொண்டு பதிலறிய முனைவதை என்னால் உணர முடிந்தது.“எனக்கு விவாகமாகவில்லை.”அவளது அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய பதில் நலிந்து ஒலித்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பேசவிடாமல் தடுக்க நான் மௌனமாக அவளையே பார்த்தபடி இருக்கிறேன். அவள் தொடர்ந்தாள்.“எனது கருவை அழித்துவிடுங்கள் டாக்டர்.”இதை அவள் கூறும்போது எனது மனம் திடுக்குற்று மௌனத்தை நீடிக்கச் செய்தது. எனது பார்வை அவளது உடலைக் கூசச் செய்திருக்க வேண்டும். கூனிக்குறுகி என்னைக் கெஞ்சும் விழிகளால் பார்த்தாள். அவளது கண்கள் சிறிது பனித்திருந்தன. இதழ்கள் படபடத்தன. அவளைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.“உன்னை இந்நிலைக்குக் கொணர்ந்தவனோடு கூடி வாழ்வது தான் சரியென்று நினைக்கிறேன்.”அவளது கண்களில் நீர்வழிந்தோடியது. விம்மலுக்கிடையே அவள் கூறினாள்.“முன்பே மணமான ஒருவன் என்னை ஏமாற்றிவிட்டான். இந்நிலையில் நான் மானமிழந்து எப்படி வாழ்வது?”எனது மனதில் பல எண்ணங்கள் ஒரே தடவையில் புகுந்து உழைச்சல் கொடுத்தன. கடமையை மீறி அவளுக்கு உதவி செய்யவும் முடியவில்லை. அவளது பரிதாபத்தைக் கண்டு உதவி செய்யாமல் இருக்கவும் முடியவில்லை.

சிந்தனை எனது சொந்த வாழ்க்கையைச் சுற்றி ஒருகணம் வட்டமிடத் தொடங்கியது.காலையில் நான் வைத்தியசாலைக்குப் புறப்படும் பொழுது மனைவி என்னிடம் கேட்டாள். “வெள்ளவத்தையில் பிரபல டாக்டர் ஒருவர் இருக்கிறாராமே, அவரிடம் சென்று ஆலோசனை கேட்கலாமா?”நான் பதிலொன்றும் கூறாமல் சரியென்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தேன். என்னால் வேறு என்னதான் செய்யமுடியும்?எங்களிருவருக்கும் விவாகம் நடந்து பத்து வருஷங்களுக்கு மேலாகி விட்டது. குழந்தைச் செல்வத்திற்காக நாங்கள் அல்லும் பகலும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனது முதிர்ந்த வைத்திய அறிவைக்கொண்டு உடலமைப்புகளைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். எங்களிடத்தில் ஒரு குறையுமில்லை. கடவுள் எம்மிடம் காட்டும் கருணையிலேதான் குறையிருக்கிறது.எத்தனையோ லட்சம் மனிதர்கள் என்னிடம் சிகிச்சை பெறுவதற்காக ஓடிவருகிறார்கள். ஆனால் என் மனைவி எனது வைத்தியத்தில் நம்பிக்கை ஏற்படாதவள்போல வேறு வைத்தியர்களிடம் போகிறாள். அவள்தான் என்ன செய்வாள், உள்ளத்தில் ஊறியிருந்த தாபம் அப்படியெல்லாம் செய்யவைக்கிறது.எனது சொல்லையும் கேளாது ஏதேதோ மருந்துகளை வாங்கியுண்பாள். அவள் நேராத கோவில்கள் இல்லை. யாத்திரை செய்யாத ஸ்தலங்கள் இல்லை. செவ்வாயும் வெள்ளியும் விரதம் பிடித்துப் பிடித்து அவளது உடம்பு இளைத்துப்போயிருந்தது.எனது மனத்தாங்கலை அடக்கிக்கொள்ள நான் புரியும் தொழில் எவ்வளவோ உதவியாக இருக்கிறது. ஆனால் என் மனைவி அல்லும் பகலும் வீட்டிலிருந்தபடியே வேதனைப்பட்டுக்கொண்டு இருப்பாள். அவளுக்கு வாழ்க்கையில் வரவரப் பற்றுக் குறைந்துகொண்டே வந்தது. சிறு விஷயங்களுக்கும் பெரிதாகச் சினந்துகொள்வாள். எனக்கும் அவளுக்கும் இடையில் இருந்த பிணைப்பில்கூட தொய்வு காணப்படுவது போலச் சிலவேளைகளில் எனக்குத் தோன்றும்.

என் சிந்தனை அறுகின்றது. குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள் ஒருத்தி; கிடைத்த செல்வத்தை அழித்துவிடத் துடிக்கிறாள் வேறொருத்தி. உலகத்திலேதான் எத்தனை விந்தைகள்!அங்குமிங்குமாக இழுபட்டுக்கொண்டிருந்த என் எண்ணங்கள் நிலைபெற்றபொழுது மனப்போராட்டத்திற்கு முடிவுகண்ட துடிப்பில் பிறிஸ்கிறிப்ஷனைக் கிறுக்குகிறேன்.அதனைப் பெற்றுக் கொண்டு நன்றிகலந்த பார்வையுடன் என்னிடம் இருந்து விலகி மருந்தைப் பெறுவதற்காக ‘டிஸ் பென்சரி’ யை நோக்கி நடக்கின்றாள் மீனா. அவள் நடந்து போவதை பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.இன்னும் சிறிது காலத்தில் மீனாவின் அடிவயிற்றில் இருக்கும் கரு நெளிந்து கொடுக்கும். நல்லதொரு போஷாக்கைப்பெற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையும். தான் உயிருடன் நல்ல முறையில் வளர்ந்து வருவதையும் அவளுக்குத் தன் அசைவுகளால் உணர்த்தும்.மீனா.......?என்மேல் ஆத்திரமடைவாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சபிப்பாள். ஆனாலும் அவளுக்குள் உருவாகிவரும் கரு எனக்கு நன்றி சொல்லும் ; மனதாரப் போற்றும். என்றும் என்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும். வைத்தியனுடைய கடமையைச் சரிவரச் செய்த உணர்வில் எனது மனம் மகிழ்கிறது.ஐந்தாறு மாதங்கள் கழிந்தன.எனது மனைவி தினசரியை வாசிக்க நான் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன்.வெகுகாலத்திற்குபின் இப்போதுதான் என்மனைவி சந்தோஷமாக இருக்கிறாள். என்றுமே இல்லாத புது அழகு அவளிடத்தில் மின்னியது. எனது மனம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.‘கடமையைச் செய் கருணை பெறுவாய்’ என்று பத்திரிகையின் பின்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் போடப்பட்டிருந்த வாசகம் என்கண்களைக் கவர்ந்தது. அந்த வாசகத்தில் லயித்துப்போய் மனம் அதனைச் சுற்றிவளைய, காலத்தின் சுழற்சியில் மலர்ந்து கொண்டிருந்த எனது வாழ்க்கையை மெஞ்ஞானக்கண்களால் அழகு பார்த்து மகிழ்ந்தேன்.ஏதேதோ புதினங்களை வாசிக்கும் பொழுது கவரப்படாத என் கவனம் திடீரென்று திரும்புகின்றது.‘இளம்பெண் தற்கொலை! பதினைந்து வயது நிரம்பிய மீனா என்றபெண் தற்கொலை புரிந்துகொண்டாள். இப்பெண் இறக்கும்போது கருவுற்றிருந்தாள்.......’ மனைவி தொடர்ந்து வாசித்தாள். என்னால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை.அன்று ஒரு உயிரைக் காப்பாற்ற முனைந்தேன், கடமையைச் சரிவரச்செய்த நினைவில் மகிழ்ந்தேன். ஆனால் இன்று.....!இரு உயிர்கள் சிதைந்துவிட்டனவே. மீனாவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால்....?மனச்சுவர்கள் பொருக்குடைந்து சரிவதைப்போன்ற ஒரு பிரமை. மன உளைச்சலைத் தாங்கமுடியாது கண்களை மூடிக்கொண்டு புரண்டேன்.என் கடமையைத்தான் செய்தேன் என்ற நினைவு எனது வேதனையைக் கரைக்க முயன்றுகொண்டிருந்தது.- கலைச்செல்வி 1965.

++++++++++++++++