ஆணுக்கும் உண்டு இங்கே அக்கினிப் பரீட்சை

சுசி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 1

வர வர ஞாயிற்றுகிழமை என்றாலே ஒரு பயம் வந்து விடுகிறது ஜானகிக்கு. அன்று சுபாவின் அழைப்பு வரும் நாள் . இன்றைக்கு எந்த குண்டை தூக்கி போடப்போகிறாளே என்ற நினைப்புடன் தான் இந்த ஞாயிறும் பிறந்தது.


அவள் நினைத்ததை விடப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள் சுபா. எடுத்தவுடனேயே “அம்மா ! ஷாக் ஆகாதே – நான் மோகனை டைவோர்ஸ் பண்ணுவதாக நிச்சயம் பண்ணி விட்டேன்.

நவீனா என் கஸ்டடியில் தான் இருக்க வேண்டும் என்றுதான் கோர்ட்டில் டாக்குமென்ட் ஃபைல் பண்ணுவதாக இருக்கிறேன். என் அட்வோகேட் டாக்குமென்ட் தயார் செய்து கொண்டிருக்கிறாள். இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் முடிந்து விடும்.” என்றதும் ஜானகிக்கு மயக்கமே வந்து விட்டது.

சைகை காட்டி ராகவைக் கூப்பிட்டு ஃபோனைக் கொடுத்தவள், அப்படியே சோஃபாவில் சாய்ந்து விட்டாள். ராகவ் சுபாவிடம் பேசியது அவள் காதில் விழுந்தது.

“சுபா! இது பத்தி அப்புறம் பேசலாம். நீங்கள் எல்லாம் முதலில் ஒரு விஸிட் இந்தியா வாங்க – இப்போ நாங்க வரக் கூடிய நிலையில் இல்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தவரிடமிருந்து ஃபோனை வாங்கி சுபாவிடம் பேசினாள்.

“சுபா! நாம கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. அதனால் அப்பா சொல்றபடி நீங்க மூணு பேரும் இந்தியா வாங்க – எல்லோருமாக சேர்ந்துப் பேசி முடிவு பண்ணலாம்” என்றாள்.

அப்படியாவது சுபாவைக் இந்த நேரம் கொஞ்சம் சமாதானப் படுத்தி, பிறகு இந்த விஷயத்துக்கு ஒரு விடிவு காணலாம் என்பது அவள் எண்ணம். சுபா ஒரு நிமிடம் யோஜிப்பது போல் தோன்றியது.

அதன் பிறகு சுபா பேசியது அவளுக்கு கொஞ்சம் சமாதானம் கொடுத்தது என்றே சொல்லலாம். “அம்மா! நீயும் அப்பாவும் இங்கே வாங்களேன் – நவீனாக்கும் இப்போ லீவுதான். நீங்க கூட இருந்தால் அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும்” என்றாள்.

ஜானகிக்கு சுபா கொஞ்சம் நிதானமாக தன் வார்த்தைகளைக் கேட்டு பதில் சொன்னதே மனதிற்கு சமாதானமாக இருந்தது. ஆனால் இப்போதிருக்கும் நிலையில் அமேரிக்கா செல்வது என்பது முடியாத காரியம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் சுபாவிடம் பேசிப் பார்த்து அவள் மனசை மாத்த வேண்டியது முக்கியம் என்பதால் ஜானகி பேசினாள்.

“சுபா ! இப்போ எங்க விசாவும் முடிந்துவிட்டது. அதுவும் தவிர எனக்கு இருக்கிற முதுகுவலியில் விமானத்தில் அவ்வளவு நேரம் உட்கார்ந்து வருவது முடியாத காரியம். அதனால் நவீனாவிற்கும் லீவு இருப்பதால், நீங்க மூணு பேரும் இந்தியா வாங்க.

அதுவும் தவிர உன்னோட பாட்டிக்கும் உடம்பு சரியில்லாமல் ஊரிலே படுத்துண்டு இருக்கா. இங்கே வந்து இருங்கோன்னா கேக்க மாட்டேங்கிறா. உங்க எல்லோரையும் பாக்கணும்னு சொல்லிண்டே இருக்கா. உன்னை வளர்த்தவ. அவ ஆசைக்காவது இந்தியா வாங்கோ” என்றாள்.

ஒரு நிமிடம் யோஜித்த சுபா “சரி! அம்மா ! நானும் நவீனாவும் இன்னும் 10 நாளிலே இந்தியா வரோம். மோகனைப் பத்தி என்னாலே ஒண்ணும் சொல்ல முடியாது. சரி! நான் வச்சுடறேன். நவீனா கீ போர்ட் கிளாஸுக்கு போயிருக்கா.

அவளுக்கு எந்த விஷயமும் தெரியாது. நீங்களும் அவ கிட்டே இதைப் பத்தி ஒண்ணும் சொல்ல வேண்டாம். நேரம் வரும்போது நானே சொல்லிப் புரிய வைக்கிறேன்” என்று சொல்லி விட்டு ஃபோனைக் கட் பண்ணினாள்.

ஜானகி ராகவைப் பார்த்தாள். அவள் கணவர் ராகவ் இந்த விஷயத்தைப் பற்றியெல்லாம் சீரியஸாக யோஜிக்கிறாரா இல்லையா என்பதை அவளால் அனுமானிக்கவே முடியவில்லை.

சுபா எல்லா விஷயங்களையும் ஜானகியிடம் தான் பேசுவதால், ராகவுக்கு இந்த விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்ததா என்றுத் தெரியவில்லை. இந்த விஷயம் சுபா மோகனை மாத்திரம் இல்லை முக்கியமாக சின்னப் பெண் நவீனாவை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் பற்றி ராகவ் எப்போழுதாவது சிந்தித்திருப்பாரா என்பது ஜானகிக்குத் தெரியவில்லை.

இத்தனைக்கும் தந்தையின் செல்லப் பெண் சுபா. ஆனால் இப்பொழுதெல்லாம் ராகவே ஃபோன் எடுத்தால் கூட அவரிடம் அதிகம் பேசுவதில்லை. ஏனென்று ஜானகிக்குத் தெரியவில்லை. ராகவும் அதைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

ஜானகி சமைத்து வைத்ததை தானே எடுத்துப் போட்டுக் கொண்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சாப்பிட்டு விட்டு தன் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து விடுவார்.

தான் தன் மகளைப் பற்றிப் படும் கவலை ஏன் தன் கணவருக்கு இல்லை என்று கூட பலமுறை ஜானகி யோஜித்தது உண்டு. ஆனால் பதில் தான் அவளுக்குத் தெரியவில்லை.

சுபா ஜானகி ராகவின் ஒரே மகள் – அழகான ஒரே மகள். அழகு மாத்திரமில்லை – அறிவிலும் நம்பர் ஒன் தான். அது சுபாவிற்கே தெரியுமென்பதால் யார் அவளை புகழுகிறார்களொ இல்லையோ அவளுக்கு தன்னைப் பற்றியும் தன் அழகைப் பற்றியும் ரொம்பப் பெருமை. அதனாலேயே யாராவது வந்தால் முதலில் அவள் அழகைப் பற்றி ‘ஹாஹா - ஹோஹோ” என்று புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

அவளை அறிந்தவர்கள், முதலில் அவள் உடையை பற்றியும் அந்த உடையில் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று சொல்ல ஆரம்பித்து, எப்படி அவள் அழகுக்கு அவள் அறிவு இன்னும் அழகு சேர்க்கிறது என்றெல்லாம் சொல்லி தன் வேலையை முடித்துக் கொள்வார்கள். அப்படி பண்ணாதவர்களை அவள் தன் முதல் எதிரி லிஸ்டில் சேர்த்துவிடுவாள்.

சுபா இப்பொழுது அமேரிக்காவில் ஒரு பெரிய பதவி வகிக்கும் பிஸியான மங்கை. தன்னுடைய மகள் நவீனாவுடன் உட்கார்ந்து பேசக்கூட நேரம் இல்லாமல் அந்த கான்ஃப்ரன்ஸ், இந்த மீட்டிங்க் என்று நாள் பூரா ஓடும் ஒரு மென்பொருள் கம்பெனியின் தலைமை அதிகாரி.

சுபா மற்ற நாட்களில் பயங்கர பிஸி என்பதால் ஞாயிறன்றுதான் தன் தாயாரிடம் பேச நேரம் கிடைக்கும். அன்று ஆசை தீர பேசிவிடுவாள். முன்பெல்லாம் தன் மகளிடமும் பேத்தியிடமும் எப்போ பேசுவோம் என்று காத்திருப்பாள் ஜானகி.

இப்போழுதெல்லாம் என்ன காரணமோ பேத்தி நவீனா அவ்வளவு சுரத்தாக பேசுவதில்லையோ என்ற நினைப்பில் இன்னும் கவலை அதிகமாகியது ஜானகிக்கு. அவள் சுரத்தாக இல்லாத காரணமும் ஓரளவுக்கு புரிந்துதான் இருந்தது ஜானகிக்கு.

தந்தையும் தாயும் மகிழ்ச்சியாக இல்லை என்னும்போது எந்தக் குழந்தையால் சந்தோஷமாக இருக்கமுடியும் – ஆனால் சென்னையில் இருக்கும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதுதான் ஜானகிக்குத் தெரியவில்லை.

மனதில் கவலையுடன் கையில் இருந்த காப்பிக்கோப்பையைப் பக்கத்தில் இருந்த சைட் டேபிளில் வைக்கப் போனபொழுது அவள் பார்வை சுபாவும் அவள் கணவர் மோகனும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு இருக்கும் ஃபோட்டொ ஃப்ரேம் கண்ணில் பட்டது.

திருமணம் நிகழ்ந்து அதன்பிறகு அவர்கள் ஹனிமூனுக்கு கொடைக்கானல் சென்றபோது எடுத்த படம். இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்குள் உறவு எப்படி முறிந்துபோனது என்று நினைத்து அவளுக்கு ஆச்சரியம் மட்டுமல்ல மனம் பூரா துக்கமாகவும் வந்தது ஜானகிக்கு.

இத்தனைக்கும் சுபாக்கும் மோகனுக்கும் காதல் திருமணம் அதுவும் பெற்றோர்களை சம்மதிக்க வைக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் போல் காத்திருந்து பெரும் முயர்சியுடன் செய்து கொண்ட திருமணம். காதல் திருமணம் என்றாலே ஏன் இந்த மாதிரி நிறைய மனக் கசப்புக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்பது அவளுக்கு புரியவே இல்லை.

மனக் கசப்புக்குக் காரணம் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணங்களை விட காதல் திருமணங்களில் எதிர்பார்ப்பு அதிகம் என்பதாலோ என்னவோ என்று கூட அவளுக்குத் தோன்றியது. இதையெல்லாம் யோஜித்துக் கொண்டிருக்கும் பொழுது ஜானகியின் மனம் அந்த நாட்களை நோக்கி சென்றது. ஏனென்றால் ஜானகி ராகவ் திருமணமே காதல் திருமணம் என்பதால்தான்.

ஜானகி பெரிய அழகி இல்லையென்றாலும், பார்ப்பவரை இன்னோரு முறை நிச்சயம் திரும்பிப் பார்க்க வைக்கும் தோற்றம் அவளுக்கு இருந்தது. சராசரி உயரம், கிள்ளிப் பார்த்தால் ரத்தச் சிகப்பு இல்லையென்றாலும் மாநிறத்திற்கும் சற்று மேலான நிறம். அவளுடைய நீண்ட கூந்தல் தான் அவளுடைய பிளஸ் பாயின்ட் என்றே சொல்லலாம்.

நடுத்தர குடும்பத்தில் 6 குழந்தைகளுக்கு நடுவில் பிறந்த ஜானகியின் பெற்றோர்கள் மிகவும் அன்பானவர்கள். பணம் இருக்கோ இல்லையோ பாசத்தால் குழந்தைகளை கட்டிப் போட்டவர்கள் என்றே சொல்லலாம்.

கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் ஜானகியின் தந்தை தன் குழந்தைகளின் எந்த நியாயமான விருப்பத்திற்கும் தடை போட்டவர் இல்லை.பெரிய அண்ணன் எஞ்சினியரிங்க் படிக்க ஆசைப் பட்டதால், தன்னுடைய பிராவிடன்ட் ஃபண்டிலிருந்து கடன் வாங்கி சேர்த்து விட்டார் அவள் தந்தை.

ஓரோரு முறை ஃபீஸ் கட்டும் பொழுதும் தன் தந்தை படும் கஷ்டத்தைக் கண் கூடாகப் பார்த்த ஜானகி, தனக்கும் எஞ்சினியரிங்க் படிக்க வேண்டும் இருந்த ஆசையை முதலில் மனதிலிருந்து நீக்கினாள்.

கஷ்டப்பட்டுப் படித்து மேல்படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் வாங்கி நகரத்திலேயே பிரபலமான கல்லூரியில் வணிகப் படிப்பு சேர்ந்தாள். படிக்கும் பொழுதே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸி (Chartered Accountancy), மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று திட்டமிட்டாள்.

கல்லூரியில் படிக்கும் பொழுதே அதற்கு வேண்டிய தகுதித் தேர்வு எல்லாம் எழுதி தன்னைத் தயாராக்கிக் கொண்டு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை எழுதவும் ரெஜிஸ்டர் செய்துவிட்டாள்.

கல்லூரியிலேயே முதலாவதாக வந்த ஜானகிக்கு அந்த நகரத்திலேயே பிரபலமான பெரிய சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் கம்பெனியான அகர்வால் ஏஜென்ஸியில் ஆர்டிக்கிள்ட் கிளார்க்காக உடனே வேலை கிடைத்து விட்டது.

கையில் ஸ்டைபன்டாக வந்த பணம் அவளுக்கு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சைக்கு வேண்டிய புத்தகங்கள் வாங்க மட்டுமில்லை வீட்டிற்கும் ஒரு சிறு தொகை கொடுக்கவும் உதவியாக இருந்தது.

அவள் தந்தைக்கு அவளைப் பற்றி மிகவும் பெருமை. தன் பெண் தனக்கு ஒரு செலவும் வைக்காமல் மேல் படிப்பு படிப்பது மட்டுமல்ல, படித்துக் கொண்டே வேலையும் பார்த்துக் கொண்டு, வீட்டுச் செலவிற்கும் பணம் கொடுப்பது பற்றி வெளியில் சொல்லாவிட்டாலும் மனதிற்குள் மிகவும் மகிழ்ச்சிதான்.

அகர்வால் ஏஜென்ஸியில் சேருவது என்பதே பாதி சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை பாஸ் பண்ணிய மாதிரி என்றாலும், அங்கே பிழிய பிழிய வேலை வாங்கி விடுவார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான், கம்பெனி கம்பெனியாக குழுவாகச் சென்று அந்தக் கம்பெனி கணக்கைத் தணிக்கை செய்து முதல் அறிக்கை கொடுக்க வேண்டியது அவர்கள் வேலை .

அதன் பிறகு அகர்வால் ஏஜென்ஸியிலிருந்து மெயின் ஆடிட்டர்கள் சென்று அவர்கள் அறிக்கையின் அடிப்படையில் மேல் தணிக்கை செய்து ஒப்புதல் செய்வார்கள். ஆர்டிக்ள்ட் கிளார்க் செய்யும் சிறு தவறுகள் கூட கம்பெனி தணிக்கை அறிக்கையைப் பாதிக்கும் என்பதால் முதலிலேயே அவர்களுக்கு சரியான பயிற்சி தரப்படும்.

மிகவும் தரமான பயிற்சி என்றாலும், பயிற்சி பெற மிகவும் பொறுமை தேவைப்படும் என்பதால் சில கிளார்க்குகள் பாதிப் பயிற்சியிலேயே விலகிக் கொள்வதும் நடப்பது தான்.

அகர்வால் ஏஜென்ஸியில் ‘முழு பயிற்சி முடிப்பது பாதி சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை பாஸ் செய்வது போல’ என்று மாணவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது உண்டு.

அகர்வால் ஏஜென்ஸி என்பது, தந்தை முகேஷ் அகர்வால் ஆரம்பித்து, பிறகு தற்பொழுது மகன் ரமேஷ் அகர்வாலும், மகள் மோனா அகர்வாலும் சேர்ந்து நடத்துவது.

பெரிய அகர்வால் அதாவது முகேஷ் அகர்வால் பயிற்சி நடத்தும் பொழுது எல்லோருக்கும் பொறுமையாக சந்தேகத்தைத் தெளிவு செய்வார். அதனால் கிளார்க்குகள் அவர் பயிற்சி நடத்தும் நாட்களை மிகவும் விரும்புவார்கள்.

ஆனால் அவருக்குப் பிறந்த பிள்ளையா இந்த ரமேஷ் அகர்வால் என்பதுபோல் தான் பயிற்சி வகு[ப்பை நடத்துவார் அவர் மகன் ரமேஷ் அகர்வால். ஏதாவது கேட்டு அதற்கு சரியான பதில் தரவில்லை என்றால் அந்த கிளார்க்கின் நிலை அவ்வளவுதான். வாயில் வந்த வார்த்தைகளால் அந்த கிளார்க்கைத் திட்டி, ஏன் இந்த பயிற்சிக்கு வந்தோம் என்று அந்த கிளார்க் அழுது விடும் நிலைக்குக் கொண்டு வந்து விடுவார் அவர்.

ரமேஷ் அகர்வால்க்கு நிறைய அனுபவமும் அறிவும் இருந்தாலும் அதைப் பற்றிய தற்பெருமையும் அதிகமாக இருந்தது. தங்கள் ஏஜென்ஸியில் தேர்ந்தெடுக்கபடுவதற்கு அந்த கிளார்க்குகள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். அதை அவர்களிடம் சொல்லுவதற்கு அவர் தயங்கியதும் கிடையாது,.

ரமேஷ் அகர்வாலுக்கு எதிர்மாறு மோனா அகர்வால் அவள் எப்படித்தான் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை பாஸ் செய்தாளோ என்று நினைக்கும்படித்தான் இருக்கும் அவள் பாடம் நடத்துவது.

அந்த ஏஜென்ஸியில் அவளும் ஒரு பங்குதாரர் என்பதாலேயே அவள் பாடம் நடத்துகிறாள் என்பது முகேஷ் மற்றும் ரமேஷ் அகர்வாலுக்கும் மட்டுமில்லை அங்கு பயிற்சி எடுக்கும் கிளார்க்குகளுக்கும் தெரியும்.

மோனா அகர்வால் பயிற்சி வகுப்பு எடுக்க வகுப்பில் நுழையும் முன்பே, வகுப்பில் அவள் உபயோகப் படுத்தும் பெர்ஃப்யூம் நுழைந்து விடும். அகர்வால் குடும்பத்தில் அனைவருக்குமே கொஞ்சம் பருமனான உடல்வாகு,.

நிறைய இனிப்பு சாப்பிடுவதாலோ என்னவோ இந்தப் பருமன் என்று நினைக்கத் தோன்றும் உடல்வாகு அவர்கள் அனைவருக்கும். அதிலும் மோனா கொஞ்சம் இல்லை மிக மிக அதிகம் பருமன்.

அந்த நேரத்தில் பிரபலமான சினிமா கதநாயகி உடுத்தும் உடைகளை தேடிப் பார்த்து வாங்குவது தான் அவளுடைய பிரதான பொழுதுபோக்கு. வாங்குவது மட்டுமல்ல அது தனக்குப் பொருந்துமா இல்லையா என்று கூட யோஜிக்காமல் பயிற்சி வகுப்புக்கும் போட்டுக் கொண்டு வந்து விடுவாள்.

பயிற்சி வகுப்பின் போது அந்த உடையில் நூல் எங்கேயாவது விட்டுப் போயிருக்கிறதோ என்பது போல அந்த உடையை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டு, விதியே என்று பாடம் நடத்தும் மோனாவை எந்த கிளார்க்குமே சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை.

நல்ல வேளையாக வாரத்தில் ஒரு நாள் தான் அவள் வகுப்பு என்பதால் பெரிதாக தொந்திரவு இல்லை அவளால். பயிற்சி வகுப்பில் அவளால் பெரிய தொந்திரவு இல்லை யென்றாலும் அகர்வால் வீட்டில் அவளால் தினமும் தகராறுதான் என்று தான் சொல்ல வேண்டும்..

சின்ன வயதிலிருந்தே சாப்பாடு, இனிப்பு எதையும் கட்டுப் படுத்தாமல் சாப்பிட்டதால் உடல் பருமன் அதிகமான மோனாவிற்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. மோனாவிற்கு திருமணம் நடக்குமா –கிளார்க்குளுக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைக்குமா? காத்திருந்துதான் பார்ப்போமே


அத்தியாயம் 2

மோனாவிற்கு திருமணம் நடத்தாமல் ரமேஷிற்கு திருமணம் நடத்த பெரிய அகர்வால் விரும்பாததால். பணத்தைக் காட்டி எப்படியோ அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர். அவளுக்கு வாய்த்த மாப்பிள்ளை மகா மகா சாது – படிப்பு அதிகமில்லை என்றாலும் மூக்கும் முழியுமாக ரொம்ப அழகான மாப்பிள்ளை.

ஒரு பக்கம் தூரத்து உறவு – இன்னோரு பக்கம் பணம் – இந்த இரண்டையும் காட்டி , மாப்பிள்ளையின் பெற்றோரை முதலில் வளைத்த அகர்வால் குடும்பம், பிறகுதான் மோனாவையே மாப்பிள்ளைக்கும் அவர் குடும்பத்தினருக்கும் காட்டினார்கள்.

அதற்கு முன்பே மாப்பிள்ளை பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து அதற்கு அவரை MD ஆக்கி விழா எல்லாம் நடத்தி அவரைப் பிடித்துப் போட்டு விட்டார்கள். அதனால் மோனாவை காண்பித்தவுடன் வேண்டாம் என்று சொல்ல முடியாதபடி இடுக்கிப்பிடி போட்டு விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

திருமணம் மிக விமரிசையாக நடந்தது. அகர்வால் ஏஜென்ஸியில் வேலை பார்த்த அனைவருக்கும் இரண்டு மாத சம்பளம் போனஸ், அதுவும் தவிர ஆண்கள் என்றால் கோட் ஸ்யூட், பெண்கள் என்றால் அழகான ஸில்க் புடவை, ஸ்வீட் பாக்ஸ் என்றுக் கொடுத்து தடபுடல் செய்து விட்டனர்.

மோனா திருமணத்தில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, அந்த 2 மாதம் சம்பள போனஸ் வந்ததில் ஜானகி குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம்.

அவர்கள் அனைவரும் ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சினிமா பார்த்து ஹோட்டலுக்குக் போய் விருந்து சாப்பிட்டு மிக விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

ஆனால் இது எல்லாவற்றையும் விட ஜானகி உட்பட எல்லா கிளார்க்களுக்கும் மகிழ்ச்சி தந்த விஷயம் திருமணம் ஆனவுடன் மோனா பயிற்சி வகுப்பு நடத்த இனி வர மாட்டாள் என்று அவர்கள் நினைப்புதான். ஆனால் அவர்கள் நினைப்பில் மண்ணைப் போட்டாள் மோனா.

திருமணம் ஆனவுடன் தனி பங்களா வாங்கிக் கொடுத்து அவர்களை தனிக் குடித்தனம் வைத்தார் அகர்வால். அதுவும் தவிர அவர்கள் தேன் நிலவுக்காக ஸ்விட்ஜர்லேண்ட் அனுப்பி வைத்தார் பெரிய அகர்வால். ஆனால் 15 நாட்கள் தேன் நிலவுக்கான ஏற்பாடுகள் செய்திருக்க, கிளம்பிய ஒரே வாரத்தில் திரும்பி வந்து விட்டனர் தேன் நிலவு தம்பதியர்.

காரணம் கேட்டதில் மோனாவிற்கு அங்கத்திய குளிர் ஒத்துக் கொள்ளவில்லை என்ற காரணம் சொல்லப் பட்டாலும், தம்பதியருக்கிடையே ஏற்பட்ட சின்ன வாக்குவாதம் பெரிதாகி, மோனா தன் தந்தைக்கு ஃபோன் பண்ணி உடனே தாங்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யும்படி பிடிவாதம் பிடித்து திரும்பி வந்ததாகத்தான் செய்தி,.

தனி பங்களா கொடுத்திருந்தாலும் பாதி நாட்களும் மோனா தன் தந்தை வீட்டிற்கு வந்து விடுவது வழக்கமாகி விட்டது. அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ‘ஸ்டேட்டஸ் ஸிம்பல்’ என்பது போல் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டது என்று அவள் தன் எந்தப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

தனி பங்களா, வீடு நிறைய வேலைக்காரர்கள் என்று இருந்தாலும், மோனாவிற்கு என்னவோ அங்கு மனம் பொருந்தவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அவளுக்கு வாய்த்த கணவரும் தன் கம்பெனியை கவனிப்பதில் முழு மூச்சுடன் ஈடுபட்டதாலும் அவள் என்ன செய்தாலும் ஒத்துக் கொள்ளும் வாயில்லாப் பூச்சியாகவும் இருந்ததில், அவள் பாதி நேரமும் தன் பிறந்தகத்திலேயே நேரத்தைச் செலவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிறந்தகத்தில் இருப்பதால், தான் தன் தந்தைக்கும் தமையனுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி வகுப்பு நடத்தவும் முன் வந்ததில் தான் கிளார்க்குகளுக்கு பயங்கர கடுப்பு. மோனா கிளாசிலிருந்து விடுதலை என்று நினைத்து இருந்த நேரத்தில் திரும்ப மோனா வந்தது மட்டுமல்ல, வாரம் ஒரு வகுப்பிற்கு பதில் இரண்டு வகுப்புகள் எடுக்க முன் வந்தது இன்னுமே எரிச்சலைக் கொடுத்தது.

இந்த நேரத்தில்தான் அகர்வால் கம்பெனிக்கு ஒரு பெரிய அரசாங்க பொதுத்துறை நிறுவனத்தில் தணிக்கை நடத்தும் ஆர்டர் கிடைத்தது. பொதுத்துறை நிறுவனத்தின் தணிக்கை என்பது மூன்று வருடம் ஒரே நிறுவனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்க நியதி.

ஒரு தணிக்கை நிறுவனத்திற்கு அரசாங்க ஆர்டர் கிடைப்பது என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். ஏனென்றால் அது மூன்று வருடம் தணிக்கை செயவதற்கான ஆர்டர் என்பது மட்டுமில்லை அந்த ஆர்டர் கிடைப்பதால் அந்த தணிக்கை நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு கூடி விடும் என்பதும் முக்கியமான விஷயம். பணமும் அதிகம் கிடைக்கும் என்பதால் அரசாங்க ஆர்டர் கிடைக்க எல்ல தணிக்கை நிறுவனங்களும் மும்முரமாகப் போட்டியிடும்.

அகர்வால் நிறுவனத்திற்கும் அந்த ஆர்டர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சிதான். பொதுத்துறை நிறுவனத்தின் தணிக்கை கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடக்கும். முதலில் பயிற்சி கிளார்க்குகள் தணிக்கை செய்து முதல் அறிக்கை கொடுத்த பின் கடைசி ஒரு மாதத்தில் பெரிய தணிக்கையாளர்கள் வந்து எல்லாவற்றையும் சரி பார்த்து ஒப்புதல் தருவார்கள்.

அந்த பொதுத்துறை நிறுவனத்தில் தணிக்கை செய்ய பெரிய அகர்வால் தேர்ந்தெடுத்த பயிற்சி கிளார்க்குகளில் ஜானகியும் ஒருத்தி. அந்த பொதுத்துறை நிறுவனத்தின் அலுவலகம் நகரத்தின் மறு கோடியில் இருந்ததால், அவளையும் அவள் கூடத் தேர்ந்தெடுக்கப் பட்ட மற்ற இரு கிளார்க்களையும் தினமும் நேரே அந்த நிறுவனத்திற்கே சென்று தணிக்கை செய்யும்படி கூறி விட்டார்கள்.

சனிக்கிழமை அந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு ஓய்வு நாள் என்பதால், அன்று அகர்வால் ஏஜென்சி அலுவலகத்தில் வந்து வேலை விபரங்களை ஒப்புவிக்கும்படியும் கூறி அனுப்பி வைக்கப் பட்டார்கள்.

பொதுத்துறை நிறுவன தணிக்கைக்கு தான் தேர்ந்தெடுக்கப் பட்டதில் ஜானகிக்கு பெரும் மகிழ்ச்சியும் கூடவே பெருமையும் கூட. ஆனால் அதுவே அவள் வாழ்க்கையை மாற்றி அமைக்கப் போகிறது என்று அப்பொழுது அவளுக்குக் தெரியாது.

அன்றுதான் முதல்முதலாக அவள் அந்தப் பொதுத்துறை நிறுவனத்திற்கு தணிக்கைக்கு செல்ல வேண்டிய நாள். எப்பொழுதும் காட்டன் புடவை உடுத்தும் ஜானகி அன்று என்ன தோன்றியதோ, மோனா திருமணத்திற்காக அகர்வால் குடும்பத்தினர் கொடுத்த கரும் பச்சை நிற சில்க் புடவை, அதற்கு மேட்சிங்கான பூப்போட்ட கரும் பச்சை நிற ப்ளவுஸ் அணிந்து நீண்ட ஒத்தை பின்னல் இங்கும் அங்கும் ஆடி எல்லோர் கவனத்தையும் ஈர்க்க, பஸ் ஸ்டாண்டிற்கு சென்றாள்.

அங்கு சென்றபின் தான் தெரிந்தது ஏதொ தகறாரில் பஸ் ஓடவில்லை என்பது. தெரிந்திருந்தால் தன் தந்தையை அவருடைய ஸ்கூட்டரில் கொண்டு விடச் சொல்லியிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டு, ஆட்டோ ஏதாவது கிடைக்கிறதா என்று அங்கும் இங்கும் பார்த்தாள்.

எப்பொழுதுமே பஸ் ஓடவில்லை என்றால் ஆட்டோ ஓட்டுனர்களுக்குக் கொண்டாட்டம் தான் என்பதால், ஒரு ஆட்டோ கூட கண்ணில் படவில்லை. முதல் நாளே தாமதமாகப் போனால் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

அவளைத் தவிர அந்த பஸ் ஸ்டாண்டில் ஒரு வாலிபனும் வயதான ஒரு தாத்தாவும் தான் இருந்தார்கள். அந்த வாலிபன் அவளைப் பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் உள்மனது உணர்த்தியது.

அந்த தாத்தாவோ அவளைப் பார்ப்பது தன் உரிமை என்பது போல் வைத்தக் கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். வயதானவர் என்றாலே தங்களுக்கு சில உரிமைகளை தாங்களே அமைத்துக் கொள்கிறார்களோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

அதற்குள் அங்கே ஒரு ஆட்டோ வர, ஜானகி ஓடிப்போய் அதை நிறுத்த முயல, அதற்குள் அந்த வாலிபன் ஆட்டோவை நிறுத்தி அதனுள் ஏறி உட்கார்ந்து விட்டான். ஜானகி உடனே அந்த ஆட்டோக்காரரிடம் போய்

“நான் தானே முதலில் கூப்பிட்டேன். அவரை எப்படி ஏற்றிக் கொள்வீர்கள்?” என்று கேட்க, அந்த ஆட்டோக்காரரும் தலையை சொறிந்துக் கொண்டே

“நான் என்ன செய்வது, அம்மா? அவர் முதலில் ஏறி உட்கார்ந்து விட்டார். நீங்கள் இரண்டு பேருமே பேசி செட்டில் பண்ணிக்குங்க. இல்லை ரெண்டு பேருமே ஏறுங்க. ரெண்டு பேரையுமே நான் அவங்கவங்க போக வேண்டிய இடத்திற்கு கொண்டு விடறேன்” என்று சொல்ல, ஜானகிக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை.

ஒரு அன்னிய வாலிபனுடன் எப்படி ஆட்டோவில் செல்வது என்று ஒரு மனசு தடுத்தாலும், முதல் நாளே அந்த பொதுத்துறை நிறுவனத்துக்கு லேட்டாக போனால் விளைவு என்னாகும் என்ற பயத்தையும் இன்னோரு மனசு காட்ட, என்ன செய்வது என்று தெரியாமல் யோஜித்தாள்.

அப்பொழுது அந்த வாலிபன், அந்த வயதான தாத்தாவைப் பார்த்து “நீங்க எங்கே போகணும்னு சொன்னா, உங்களை அங்கே கொண்டு விட்டுட்டு போயிடுவேன். இனிமே இங்கே பஸ் எதுவும் வராது. ஆட்டோ கூட வருமான்னு சந்தேகம் தான்” என்று சொல்ல தாத்தா குடுகுடு வென்று ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து விட்டார்.

வாலிபன் அவள் முகத்தைப் பார்க்க, அவள் எங்கேயாவது ஆட்டோ அவளை விட்டு விட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில், உடனே அவனைப் பார்த்து “எனக்கு எஸ்பிளனேட் போகணும்” என்று சொல்லி விட்டு ஆட்டோவில் ஏற முயன்றாள்.

அந்த வாலிபன் ஒரு புன்னகையுடன் “எனக்கும் எஸ்பிளனேட் தான் போகணும். ஸார் எங்கே போகணும்? என்று வயதானவரைப் பார்த்துக் கேட்க, அவர்

“நான் தேனாம்பேட்டை போகணும் – என்னை வழியில் மெயின் ரோட்டில் எறக்கி விட்டா போதும். நான் வீட்டுக்குப் போயிடுவேன்” என்றார்.

வாலிபன் ஜானகியைப் பார்த்து “நீங்க முதல்லே ஓர சீட்டிலே உட்காருங்க. அதுக்கப்புறம் அவர் உட்காரட்டும். ஏன்னா அவர் நடுவில் இறங்கணும் இல்லையா? நான் டிரைவர் கூட உட்கார்ந்துக்கறேன்” என்றான்.

மூணு பேரும் எப்படி ஒரு சீட்டில் உட்காருவது என்றக் கவலையில் இருந்த ஜானகிக்கு அவன் பேசியதைக் கேட்டவுடன் அவன் மேல் ஒரு மதிப்பே வந்துவிட்டது.

அவள் ஏறிக்கொள்ள பின் அந்த தாத்தாவும் ஏறிக் கொண்டார். டிரைவர் பக்கத்தில் அந்த வாலிபனும் ஒண்டிக் கொள்ள ஆட்டொவும் கிளம்பியது, ஆட்டோ கிளம்பிய பொழுது ஓரத்தில் இருந்த தாத்தா, மெதுவாக நகர்ந்து நகர்ந்து அவள் பக்கத்தில் வந்து விட, அந்த வாலிபன் திரும்பி,

“ஸார் ! கார்னருக்கு வந்துடுங்கோ. இல்லை, பேலன்ஸ் தவறிவிடும்” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ஆட்டோ டிரைவரும் சிரித்துவிட்டார். தாத்தாவும் அசடு வழிய சிரித்துக் கொண்டே, “இந்த சீட் வழுக்கிண்டே இருக்கு, அதுதான்” என்று சொல்ல, வாலிபனும்

“ஸார் ! பிடிச்சுக்கத்தான் கம்பி இருக்கே” ன்னு சொல்லி சிரித்தான். ஜானகியும் நன்றியுடன் அவனைப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்து, ஒரு நிமிடம் தயங்கிப் பின்பு பிரிந்தன.


அத்தியாயம் 3

10 நிமிடத்தில் தேனாம்பேட்டை வர, அந்த தாத்தா இறங்கிக் கொண்டார். ஆட்டோ டிரைவர் அந்த வாலிபரைப் பார்த்து

“சாரே! இப்ப பின்னாடி உட்காருங்க – அண்ணா சாலையில் போலீஸ் நிறைய இருக்கும். பாத்தா ஃபைன் விழும்” என்று சொல்ல, அந்த வாலிபனும் தயங்கிக் கொண்டே, பின்னாடி வந்து சீட்டின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டான்.

அந்தப் பிரயாணம் முழுவதும் ஒடுங்கிக் கொண்டே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வந்த அந்த வாலிபனின் மேல் மதிப்பு உயர்ந்துக் கொண்டே வந்தது ஜானகிக்கு. அதற்குள் எஸ்பிளனேட் வர ஆட்டோ டிரைவர், ஜானகியைப் பார்த்து,

“அம்மா ! எஸ்பிளனேட் வந்தாச்சு. எங்கே போகணும்னு சொல்லுங்க” என்று சொல்ல, அவளும் தான் போகவேண்டிய பொதுத்துறை நிறுவனத்தின் பெயரை சொன்னாள். அந்தப் பெயரைக் கேட்டவுடன், வாலிபன் திடுக்கிட்டு அவளைப் பார்த்து,

“எனக்கும் அங்கே தான் போகணும். அண்ணே ! அந்தச் சிகப்புக் கலர் கட்டிடத்து முன்னாலே நிறுத்துங்க” என்று சொன்னான்.

ஆட்டோ அந்த சிகப்பு கட்டிடத்தின் முன் நிற்க, இருவரும் இறங்கினார்கள். ஆட்டோ டிரைவர், அவர்களைப் பார்த்து,

“₹.200/- கொடுங்க “ என்று சொல்ல ஜானகி திடுக்கிட்டுப் போய் விட்டாள். அவள் பர்ஸில் இருந்ததே, ஒரு நூறு ரூபாய் தாளும், பஸ்ஸுக்கு கொஞ்சம் சில்லறையும் தான். நல்ல வேளையாக அந்த வாலிபன், தன் பர்ஸை எடுத்து,

“அங்கிருந்து வர நூறு ரூபாய் தான் ஆகும். இன்னிக்கு உனக்கு பஸ் இல்லாததால் பணம் சம்பாதிக்க வேண்டிய நாள் இல்லையா? அதனால்

₹150/- வாங்கிக்க. அடாவடியாக “₹.200/- கேக்கறது உன் உடம்புக்கு நல்லது இல்லை” என்று சொல்லி, ₹150/- கொடுக்க, டிரைவர் முணுமுணுத்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டு ஆட்டோவைக் கிளப்பினான்.

ஜானகி, தன் கைப்பையைத் திறந்து பணம் எடுத்துக் கொடுக்க முற்பட்ட பொழுது, அந்த வாலிபன் கையைக் காட்டி நிறுத்தி,

“மேடம் ! நீங்க நம்ம ஆஃபிஸுக்குத் தான் வறீங்க. கணக்கெல்லாம் அப்புறம் செட்டில் பண்ணிக்கலாம். இப்ப நீங்க எங்க கெஸ்ட். வாங்க போகலாம். லிஃப்ட் காலியாக இருக்கு.” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தாள் ஜானகி.

லிஃப்ட் ஐந்தாம் மாடியில் நிற்க, அந்த வாலிபன் வெளியே வந்து, ஜானகி வெளியில் வருவதற்காகக் காத்திருந்தான். ஜானகி வெளியில் வந்ததும்,

“இப்படி வாங்க – இதுதான் நம் ஆஃபிஸ்” என்றவன் அவளையும் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழையும்பொழுதே வெளியில் இருந்த செக்யூரிட்டி எழுந்து வணக்கம் செலுத்தினார்.

அதை புன்னகையோடு ஏற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தவுடன் ரிசப்ஷனிஸ்ட் “குட் மார்னிங்க், ராகவ்” என் சொல்ல தலையை ஆட்டி அதை ஏற்றுக் கொண்ட ராகவ் என்ற அந்த வாலிபன், ரிசப்ஷனிஸ்டைப் பார்த்து

“காவ்யா, இந்த மேடம் நம் ஆஃபிஸுக்கு வந்திருக்காங்க – இவங்க இங்கே வெயிட் பண்ணட்டும். அட்மின் லே விசாரிச்சு எந்த டிவிஷன் பார்த்து அனுப்பி வைங்க” என்று சொல்லி விட்டு, ஜானகியைப் பார்த்து,

“மேடம் ! என் பெயர் ராகவ். நான் அக்கௌன்ட்ஸ் டிவிஷன்லே மேனேஜர். ஏதாவது உதவி தேவை என்றால், காவ்யா கிட்டே சொன்னால், அவங்க என்னிடம் இன்ஃபார்ம் பண்ணுவாங்க. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி விட்டு விரைவாக உள்ளே சென்று விட்டான்.

தன்னுடைய பெயர் கூட கேட்கவில்லையே என்று ஒரு சின்ன ஏமாற்றம் மனதில் தோன்றினாலும், ராகவைப் பற்றிய மதிப்பு அவள் மனதில் இன்னும் அதிகமானது என்பதே உண்மை.

அதற்குள் காவ்யா அவளை அழைப்பது கேட்டு அவளிடம் சென்று, அகர்வால் ஏஜென்ஸி கொடுத்திருந்த கான்ட்ராக்ட் டாக்குமென்டை அவளிடம் காண்பித்தாள். அதைப் பார்த்தவுடன்,

“அட! நீங்க ரிபோர்ட் பண்ண வேண்டியதே ராகவிடம் தானே?’ என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு, ப்யூனை அழைத்து, ஜானகியை ராகவ் கேபினுக்கு அழைத்துச் செல்லும்படிக் கூறினாள்.

ராகவ் பெயரைக் கேட்டவுடன் தன் மனம் ஏன் இப்படி குதிக்கிறது என்று தன்னையேக் கேட்டுக் கொண்டு, ப்யூனைப் பின் தொடர்ந்தாள் ஜானகி. கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த ப்யூன், ஜானகியையும் தன்னுடன் உள்ளே வரும்படி சைகை காட்டினான்.

கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த ராகவ், தலையைத் தூக்கினான். திரும்பவும் ஜானகியைப் பார்த்தவுடன் அவன் கண்களில் ஒரு நிமிடம் ஆச்சரியம் தோன்றியது. உடனே அதை மறைத்துக் கொண்டு,

“யெஸ் – கம் இன் – பீ சீடட்” என்று சொல்லி மேஜைக்கு எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினான். ப்யூன், உடனே சென்று விட, ஜானகி, தன் கையில் இருந்த அகர்வால் ஏஜென்ஸி கொடுத்த டாக்குமென்டை அவனிடம் கொடுத்தாள்.

“ஓ ! நீங்கதானா மிஸ், ஜானகி, அகர்வால்ஜி உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இங்கு நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும் – அதாவது உங்களுக்குக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே – ஆனால் காலையில் நீங்கள் பஸ் இல்லாத போதும் கஷ்டப்பட்டு இங்கு நேரத்தில் வந்தது உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது” என்று சொல்லி அவன் எதிரில் இருந்த பெல்லை அழுத்தினான்.

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த கேன்டின் பையனிடம் “ரெண்டு காஃபி” என்று சொல்லி அனுப்பி விட்டு, ஜானகியைப் பார்த்து “நீங்கள் காஃபி குடிப்பீர்கள் தானே? இங்கு டீ அவ்வளவாக நன்னா இருக்காது” என்று சொல்லி விட்டு தன் வேலையில் மூழ்கினான்.

ஜானகி அவன் அறையை நோட்டமிட்டாள். அவன் டேபிளின் மேல் இருந்த இரண்டு டிரேயிலும் காகிதங்கள் அழகாக அடுக்கப் பட்டிருந்தன. இரண்டு ஃபோன்கள் அவன் டேபிளில் – ஒரு பக்கம் ஒரு சின்ன ஸ்டீல் பீரோ. அதன் பக்கத்தில் ஒரு சின்ன முக்காலியில் தண்ணீர் ஜக் – டம்ப்ளர். எல்லாமே அப்பொழுது துடைத்தது போல் மிக மிக சுத்தமாக இருந்தது.

ரூமை நோட்டமிடும் போதே அவனையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் ஜானகி. கண்ணாடி போட்டிருந்தாலும் களையான முகம். மீசை இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருப்பான் என்ற ஒரு நினைப்பு அவளுள் வந்து அதை ஒரு புன்னகையால் மறைத்தாள்.

உடை உடுத்தும் விஷயத்திலும் அவன் பெரிதாகக் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. சுத்தமான, அயர்ன் செய்த முழுக்கைச் சட்டை, அதற்கு அவ்வளவு பொருத்தமில்லாத கலரில் கால்சட்டை. ஆனாலும் அவனிடமிருந்த ஏதோ ஒன்று அவளை ஈர்த்தது என்பது அவளுக்குத் தெரிந்தது.

அதுதான் அவன் மற்றவர்களை நடத்தும் விதம். அவன் அந்த தாத்தாவை பஸ் ஸ்டான்டிலேயே விட்டு விட்டு வந்திருக்கலாம். அவனே தான் அவரை கூட அழைத்துக் கொண்டான்.

ஆனால் அவர் நடவடிக்கை கொஞ்சம் வேறுமாதிரி ஆனவுடன், அதை அவன் கையாண்ட விதம், அவளை நடத்திய விதம் – எல்லாமே அவன் மதிக்கப் பட வேண்டிய ஆண் மகன் என்று அவளுக்கு உணர்த்தியது.


அவள் யோஜித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவளே அறியாமல் அவளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ராகவ் என்பது மட்டும் ஜானகிக்குத் தெரிந்தால்?

இந்த நாடகம் எல்லாம் நடந்து கொண்டிருக்க, அதை கலைக்கவே வந்தது போல், அங்கு வந்தது காஃபி. அதைக் குடித்த பின், ராகவ் ஜானகியை அவள் வேலை செய்ய வேண்டிய செக்‌ஷனுக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான்.


அவள் வேலை செய்யவென்று தனியாக ஒரு பூட்டக் கூடிய ட்ராயருடன் கூடிய டேபிளும் சௌகர்யமாக வேலை செய்ய நல்ல குஷன் நாற்காலியும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அவளுடன் கூட வேலை செய்யப் போகும் அகர்வால் டீமிற்கும் அதே மாதிரி ஏற்பாடு பக்கத்திலேயே செய்யப் பட்டிருந்தது. அவர்களுக்கு ஃபைல் கொடுக்க எடுத்துச் செல்ல தனியாக ஒரு ப்யூனும் கூப்பிட்டக் குரலுக்கு பக்கத்திலேய இருந்தார்.

அவர்கள் தங்கள் அறிக்கைகள், ஃபைல்கள் வைத்துக் கொள்ள என்று ஒரு தனி பூட்டக்கூடிய ஸ்டீல் பீரோவும் வைக்கப் பட்டிருந்தது. மற்றபடி அவர்களுக்காக குடிப்பதற்காக குடிநீர் ஒரு புது ஜக்கில் வைக்கப் பட்டிருந்தது.

அதுவும் தவிர அவர்களுக்காக தனியாக ஒரு லேப்டாப், பிரின்டர் மற்றும் கலர் கலராக ஸ்கெட்ச் பேனாக்களும், மற்றும் பென்சில்கள், இரேசர்கள், குண்டூசி, பேப்பர் கிளிப் என்று வேண்டிய எல்லா உபகரணங்களும் தயாராக வைக்கப் பட்டிருந்தன.

இதியெல்லாம் பார்த்த ஜானகிக்கு பிரமிப்பாக ஆகி விட்டது. அதற்குள் அவளுடன் வேலை செய்ய வேண்டிய மற்ற டீம் மெம்பர்கள் அனிலும், ரத்னாவும் வர அவர்களையும் அந்த அக்கௌன்ட்ஸ் செக்‌ஷனில் வேலை செய்பவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தான் ராகவ்.

அதற்குள் லன்ச் டைம் வந்துவிட கேன்டீனிலிருந்து அவர்களுக்கு ஸ்பெஷல் மதிய உணவு வந்தது. உணவு முடித்த பின் அவர்களை அவர்கள் இடத்தில் அமரும்படி செய்துவிட்டு ராகவ் தன் கேபினுக்குள் சென்று விட்டான்.

அவன் சென்றபின், ஏனோ அந்த இடமே வெறிச்சென்று ஆகிவிட்டது போல் தோன்றியது ஜானகிக்கு. அரை மணி சென்றபின் அவர்கள் எல்லொரையும் தன் கேபினுக்கு அழைத்தான் ராகவ்.

அவர்கள் தணிக்கை செய்ய வேண்டிய ஆவணங்கள் எங்கு இருக்கும், யாரை எதற்கு அணுக வேண்டும் என்ற எல்லா விவரங்களையும் விவரமாகக் கூறியது மட்டுமல்லாமல், அந்த விவரங்களை எல்லாம் டைப் செய்து ஒரு ஃபைலாக செய்து மூவருக்கும் தனித்தனியாக கொடுத்தான். அதை எல்லாம் பார்த்த பொழுதே அவர்களுக்கு அவன் வேலையில் மகா கெட்டிக் காரன் என்ற எண்ணம் உறுதியாகி விட்டது.

அதற்குள் மாலை நான்கு மணியாகி விட அவர்களுக்கு காஃபி ஆர்டர் செய்து கொடுத்தான். அதன் பிறகு வெளியில் பஸ் நிலவரம் சரியாகி விட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அவர்களை மறுநாள் வேலை ஆரம்பிக்கலாம் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்,.

அவர்கள் மூவரும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தார்கள். அவர்கள் மூவருக்குமே இந்த மாதிரி சௌகர்யங்களுடன் ஒரு பொதுத் துறை நிறுவனத்திக் தணிக்கை செய்வது முதல் தடவை.

அவர்கள் நிறைய பிரைவேட் கம்பேனி தணிக்கை வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் மூவரும் சேர்ந்து வேலை செய்ய ஒரு டேபிள் தரப் படும். பேனா, பென்சில் என்று கேட்டு கேட்டு வாங்க வேண்டும். அதனாலேயே அவர்கள் தங்கள் சொந்த செலவில் அதையெல்லாம் வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.

பிரைவேட் கம்பெனி என்றால் சில இடங்களில் டீ, காஃபி கூட வேண்டும் பொழுது கிடைக்காது, காலை/மாலை ரெண்டு வேளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்கும். மதிய உணவு கையில் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.

ஓரோரு ஃபைலும் இரண்டு/ மூன்று முறை கேட்டால் மட்டுமே முனகிக் கொண்டே தருவார்கள். எல்லா ஃபைலும் கிடைக்கும் என்ற உத்திரவாதமும் கிடையாது.

அதனாலேயே இந்த பொதுத்துறை நிறுவன தணிக்கையில் தாங்கள் நிறையக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நினைக்கும் பொழுது அவர்கள் அதைத் தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய அதிருஷ்டமாக எண்ணினார்கள்.

இன்னும் ஆறு மாதத்தில் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி மெயின் தேர்வு வர இருந்ததால், இந்த நிறுவன தணிக்கை, தங்களுக்கு பரீட்சை எழுத மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதால் இதை மும்முரமாக நன்றாக செய்ய வேண்டும் என்று மூவரும் பேசிக்கொண்டார்கள்.

இந்த மூன்று மாதத் தணிக்கை முடித்தவுடன் அவர்களுக்கு பரீட்சைக்குத் தயாராவதற்காக லீவு தரப்படும் என்பதால், இந்த தணிக்கை வேலை அவர்களுக்கு மிக முக்கியமாகப் பட்டது.

மறுநாளிலிருந்து அவர்கள் வேலை மும்முரமாகத் துவங்கியது. காலை 9.30 மணிக்கு வேலைக்கு வந்தால் மாலை 6.30 அல்லது 7.00 மணி வரை வேலை செய்ய வேண்டி இருந்தது.

அவர்களுக்கு உணவு நிறுவனத்திலேயே அளிக்கப் பட்டதால், அவர்களால் வேலையில் முழுக் கவனம் செலுத்த முடிந்தது. அதுவும் தவிர எந்த சந்தேகம் வந்தாலும், எந்த ஃபைல் வேண்டுமென்றாலும், ராகவை அணுகினால் போதும், அது உடனே நிவர்த்தி செய்யப் படும் என்ற நிலையில் அவர்கள் எல்லோருக்குமே அங்கு வேலை செய்வது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.

மூவருக்குமே அங்கு வேலை செய்வது பிடித்தது என்றாலும், ஜானகிக்கு அங்கு வேலை செய்வது மட்டுமல்ல ராகவை பார்ப்பதும், அவனுடன் அவ்வப்போது உட்கார்ந்து சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதும் மிக மிக சந்தோஷமான தருணங்களாக இருந்தன என்றே சொல்லலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடன் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. சந்தேகமே இல்லாத நேரத்திலும் சந்தேகங்களை உண்டாக்கிக் கொண்டு அவன் கேபினுக்கு செல்வதும் வழக்கமாகி விட்டது என்றே சொல்லலாம்.

ராகவும் ஜானகியின் வரவை வரவேற்றான் என்றே சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஜானகியின் உப்பு பெறாத சந்தேகங்களுக்கு உப்பு மிளகாய் பொடி இட்டு அவன் ஏன் பதில் சொல்ல வேண்டும்.

அதுவும் தவிர அவள் உள்ளெ நுழைந்தவுடனேயே இன்டர்காமில் கேன்டீனைக் கூப்பிட்டு காஃபி அதுவும் புதுப் பால் காஃபி ஏன் கொண்டு வரச் சொல்ல வேண்டும்? புதுப் பால் காஃபி என்றால் நேரம் அதிகம் எடுக்கும் என்றுதானே?


ஓருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலேயே அவர்கள் காதல் - ஆம் இதை காதல் என்றுதானே சொல்ல வேண்டும் – வளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


அத்தியாயம் 4

ஆயிற்று தணிக்கை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிந்து விட்ட நேரத்தில், அகர்வால் ஏஜென்ஸி முக்கிய ஆடிட்டர்கள் தங்கள் தணிக்கை ஆரம்பிக்க வந்து விட்டார்கள்.


அவர்களுக்கு ஒரு தனி கேபின் கொடுக்கப் பட்டது. ரமேஷ் அகர்வால் தினமும் சிறிது நேரமாவது வந்து அவர்களுடைய அறிக்கைகளை சரி பார்க்கும் வேலையை ஆரம்பித்தார். அவர் கூடவே ஏஜென்ஸியின் மெயின் ஆடிட்டர்களும் முக்கியமான கணக்குகளை சரி பார்க்க ஆரம்பித்ததால் கிளர்க்குகளுக்கு அவர்கள் கூடவே இருந்து பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள முடிந்தது.

ரமேஷ் அகர்வால் வரும் நாட்களில் அங்கு கெடுபிடி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு கிளர்க்கைக் கூப்பிட்டு எதிரில் உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் தயார் செய்த அறிக்கையை டிஸ்க்ஸ் செய்வது வழக்கம்.

பல அறிக்கைகளை ஜானகியே தயார் செய்ததால் அவள் முக்காவாசி நேரமும் ரமேஷ் அகர்வால் கேபினிலேயே இருக்க வேண்டி வந்தது. பல நேரங்களில் மதிய உணவும் அவள் ரமேஷ் அகர்வால் கூடவே எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை.

அதனால் நிறைய நேரம் ராகவ் ஜானகியை பார்க்கக் கூட முடியாத நிலை. அதுதான் அவன் ஜானகியைப் பற்றிய தன் மனநிலையை முழுதாக உணர்ந்த நேரம் என்றேக் கூறலாம்.

சில நாட்கள் ரமேஷ் அகர்வால் வரமுடியா விட்டால் மோனா அகர்வால் வருவதும் வழக்கமானது. அவள் வந்து விட்டால் வேலை பெரிதாக நடக்காவிட்டாலும் அவள் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.

அதுவும் ஏதோ ஒரு காரணத்தால் அவளுக்கு ஜானகியைக் கண்டாலே அவளை மட்டம் தட்டத் தோன்றும். ஜானகி அழகாக கொடி போல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பிடிக்காத காரணத்தினாலேயே ஜானகி தயார் செய்த எல்லா அறிக்கைகளிலும் ஏதாவது தவறு கண்டுபிடித்து அவளை வாய்க்கு வந்தபடி திட்டுவதும் வழக்கமாகி விட்டது.

ஜானகிக்கு அகர்வால் ஏஜென்ஸியில் வேலை செய்வது அவள் எழுதப் போகும் சார்ட்டர்ட் அக்கௌண்டன்ஸி பரீட்சைக்கு முக்கியமானதால் அவள் வாய் திறக்காமல் மோனாவைப் பொறுத்துக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்,.

ஆனாலும் ஒரு நாள் ஜானகி தயார் செய்யாத ஒரு அறிக்கையில் ஒரு தவறைக் கண்டு பிடித்து, அவளை வாயே திறக்க விடாமல் அவள் குடும்பத்தை எல்லாம் இழுத்து கத்தி தீர்த்து விட்டு கிளம்பிச் சென்று விட்டாள்.

அன்று பார்த்து மற்ற டீம் மெம்பர்கள் அனிலும் ரத்னாவும் லீவ் போட்டிருக்க, அவள் துரதிருஷ்டம் தனியாக அன்று மோனாவிடம் மாட்டிக் கொண்டாள். பொதுவாக மோனா கத்துவதையோ திட்டுவதையோ மனதில் எடுத்துக் கொள்ளாத ஜானகி, அன்று மோனா அவள் குடும்பநிலையை எல்லாம் கூறி தன்னை ஏசியதை ஜானகியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மோனா சென்ற பிறகும் கூட அந்தக் கேபினிலேயே உட்கார்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி. மோனா கோபமாகச் செல்லுவதைப் பார்த்த ராகவ், ஜானகி சிறிது நேரத்தில் வீட்டுக்குச் செல்வதற்கு முன் எப்பொழுதும் போல் தன்னிடம் சொல்லிக் கொள்ள வருவாள் என்று தன் கேபினிலேயே காத்திருந்தான்.

15 நிமிடங்களாகியும் ஜானகி வெளியில் வராததால் , ராகவே உள்ளே சென்றான். கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பெரிய கண்களால் அவனைப் பார்த்த ஜானகியை அந்த நிமிடம் அவள் கண்களைத் துடைத்து சமாதானப் படுத்த வேண்டும் என்று துடித்த தன் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு, ஜானகியிடம்.

“ஜானு ! என்ன ஆச்சு ஜானு? “ என்று அவள் பெயரைச் சொல்லிக் கேட்ட ராகவை, ஆச்சரியமாகப் பார்த்தாள், ஜானகி, ஏனேன்றால், அந்த நேரம் வரை, அவளை 'ஜானு' என்ற பெயர் சொல்லிக் கூப்பிட்டவனில்லை ராகவ்.

எப்பொழுதும் ஜானகி என்று முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் ராகவ், “ஜானு’ என்று செல்லமாக தன்னைக் கூப்பிட்டது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மறுபக்கம் அது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

கூப்பிட்டவுடன் தான், ராகவுக்கு தன் தவறு தெரிந்தது., தன் மனதில் அவளுக்கு வைத்திருந்த செல்லப் பெயரால் அவளைக் கூப்பிட்டதைத் தவறாக நினைத்து விடுவாளோ, என்று நினைத்து “ ஸாரி, ஜானகி- என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

ராகவ், அவளை ‘ஜானு’ என்று கூப்பிட்ட நேரத்தில் அவள் துக்கம் எல்லாம் தொலைந்து போய் விட,
“ஒன்றுமில்லை, ராகவ் – ஓ – ஸாரி – ஸார்” என்று நமட்டுத்தனமாகச் சிரித்துக் கொண்டே.

“இந்தப் பெண்தான் முகத்தில் எவ்வளவு பாவனை காட்டுகிறாள்? அழும்பொழுதும் ஒரு அழகு, சிரிக்கும் போதும் அழகு . இவள் மட்டும் எனக்குக் கிடைத்தால்?” என்ற யோஜனை மனதில் தோன்ற, ஜானகியிடம்,

“கொஞ்ச நேரமாக உன்னைப் பார்க்க வில்லையே என்றுத் தோன்றியது – அதனால் தான் பார்க்க வந்தேன்” என்றான். அதைச் சொல்லும் போது கூட அவனுக்கு உள்ளூர பயம்தான்.

இதுவரை ஒரு பெண்ணிடமும் இப்படி பேசி பழக்கமில்லாததால் .தன் மனதில் இருப்பதை எப்படி ஜானகியிடம் சொல்லுவது என்று அவனால் யோஜிக்க முடியவில்லை.

ஆனால், பெண்களுக்கே உரிய சமயோஜித புத்தி கொஞ்சம் அதிகமாகவே ஜானகியிடம் இருந்ததால், ராகவ் மனதில் இருப்பது ஒரு மாதிரி அவளுக்குப் புரிந்துவிட, அவன் அதைச் சொல்லத் திணறுவது அவளுக்கு உகப்பாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

“ ஸார் ! எதற்காக என்னைத் தேடினீர்கள். ஏதாவது வேலை இருக்கா?” என்று அவனை மேலும் பேச வைக்க வேண்டும் என்ற நினைப்பில் கேட்டாள் ஜானகி.

அவள் கேட்டவுடன் தான் தாங்கள் இருவர் மட்டுமே அந்தக் கேபினில் இருப்பது நினைவுக்கு வர, ராகவ், ஜானகியிடம்,
“அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு என் கேபினுக்கு வாங்க” என்று சொல்லி விட்டு விறு விறு வென்று தன் கேபினுக்குச் சென்று விட்டான் ராகவ்.

தனக்கு ஒரு கெட்ட பெயர் வந்து விடக் கூடாது என்று ஃபைலை எடுத்துக் கொண்டு தன் கேபினுக்கு வரச் சொன்ன ராகவின் செய்கை அவளுக்கு ராகவை மேலும் மேலும் பிடிக்கச் செய்தது.

ராகவ் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு அவன் கேபினுக்குச் சென்றாள் ஜானகி. அதற்குள் இரண்டு காஃபி ஆர்டர் செய்து விட்டு அவளுக்காகக் காத்திருந்தான் ராகவ்.

அவள் உள்ளே நுழைந்தவுடன் அந்த ஃபைலை வாங்கிப் பிரித்து அதைப் படிக்க ஆரம்பித்தான் ராகவ். ஜானகி அவன் எதிரே அமர அதற்குள் காஃபி வர, அவளை காஃபியை எடுத்துக் கொள்ளும்படி சைகையால் சொல்லிவிட்டு தானும் தன் காஃபி கப்பை கையில் எடுத்துக் கொண்டான்.

பிறகு ஜானகியைப் பார்த்து “எதற்கு அழுதாய்?” என்று எந்தப் பெயரும் சொல்லாமல் பொதுவாகக் கேட்க, ஜானகியும் மோனா அகர்வால் பற்றிய முக்கியமான விவரங்களைக் கூறினாள்.

ஜானகி, மோனா தன்னைக் காரணம் இல்லாமல் கடிந்துக் கொள்வது இது முதல் தடவை இல்லை என்று கூறிய போது ராகவின் முகத்தில் தெரிந்த கோபம், ஜானகிக்கு இன்பத்தைத் தந்தது.

ராகவ் அவளிடம் “நீ எதற்கு பொறுத்துப் போக வேண்டும். நான் வேண்டுமென்றால் பெரிய அகர்வாலிடம் பேசுகிறேன்” என்று சொன்னதற்கு, ஜானகி,

“இன்னும் மூன்று மாதத்தில் பரீட்சை இருக்கிறது. பரீட்சை எழுத நான் அவர்கள் ஏஜென்சியில் ஆர்ட்டிகிள்ட் கிளர்க்காக வேலை செய்தேன் என்ற சர்டிஃபிகேட் மிகவும் அவசியம். அதனால் தான் நான் பொறுத்துப் போகிறேன்.” என்றாள்.

பிறகு ராகவ் அவள் குடும்ப விவரங்கள் கேட்க, அவள் எல்லா விவரங்களும் கூறினாள். அவள் கேட்காமலேயே, அவன் தன் குடும்பத்தைப் பற்றி கூறிய விவரம்.

ராகவ் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவன், தன் தாயுடன் தன் தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தவன். அவன் தாத்தா ஒரு வக்கீல் குமாஸ்தா. கையில் அதிகம் பணம் என்று இல்லாவிட்டாலும் அவனை காலேஜ் வரைப் படிக்க வைத்தார் அவன் தாத்தா.

அதன் பிறகு அவன் இதே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே MBA படித்து, அதுவும் தவிர நிறுவனத்தின் டிபார்ட்மென்டல் பரீட்சையும் பாஸ் செய்து, இன்று உயர் அதிகாரியாக இருக்கிறான்.

தாத்தா பாட்டி இறந்துவிட, தாயுடன் இருக்கிறான். இன்னும் திருமணம் ஆகவில்லை. முக்கியமான விஷயம் என்னவேன்றால் ராகவ் ஜானகி இருவருமே ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் – இது மெள்ள மெள்ளபேச்சு வாக்கில் ஜானகி தெரிந்துக் கொண்ட விவரம்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் மனதால் மிகவும் நெருங்கி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வாய் விட்டு சொல்லிக் கொள்ள வில்லையே தவிர , இருவருக்கும் மற்றவர் மனதில் இருப்பது தெளிவாகப் புரிந்தது.

தணிக்கை முடிய ஒரு வாரமே இருக்கும் நிலையில், ராகவ் ஜானகியை பக்கத்தில் உள்ள கோவிலுக்கு வர முடியுமா என்றுக் கேட்டான். ஜானகி என்ன விவரம் என்றுக் கேட்க, தன் தாயார் மாலை அந்தக் கோவிலுக்கு வர இருப்பதால், ஜானகியை அறிமுகப் படுத்தி வைக்க நினைப்பதாகக் கூறினான்.

ஜானகி, முதலில் தயங்கினாலும், பிறகு ராகவ் முகத்தைப் பார்த்து சம்மதம் கூறி விட்டாள். சம்மதித்து விட்டாலும், அன்று பூரா அவளுக்கு வேலையில் கவனம் செல்லாமல், பல முறை ரமேஷ் அகர்வாலிடம் கடும் சொல் கேட்கவும் நேர்ந்தது.

மாலையில் பர்மிஷன் வாங்கிக் கொண்டு தன்னையும் கொஞ்சம் அழகுப் படுத்திக் கொண்டு, ஜானகி கொஞ்சம் முன்னமேயே கோவிலுக்கு சென்றுவிட்டாள். அவள் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கையில், ராகவ் தன் தாயாருடன் உள்ளே நுழைவதையும் பார்த்து விட்டு, ஒரு தூணின் பின் மறைந்துக் கொண்டாள்.

ராகவின் கண்கள் அங்கும் இங்குமாக அவளைத் தேடுவதையும் பார்த்தாள். பிறகு அவன் தன் தாயாருடன் ஸ்வாமி சன்னதிக்கு செல்வதைப் பார்த்து விட்டு அவளும் திரும்பவும் ஸ்வாமி சன்னதிக்குச் சென்று ராகவ் எதிரில் நின்றுக் கொண்டாள்.

அவளைப் பார்த்ததும் ராகவின் முகத்தில் தோன்றிய பிரகாசம் – அது அவளுக்கு அப்படியே வானில் பறப்பது போன்று இருந்தது. எல்லோருக்கும் அர்ச்சகர் பிரசாதம் கொடுத்தவுடன், சன்னதியிலிருந்து எல்லொரும் பிரகாரத்துக்கு வந்தார்கள்.

ராகவ், ஜானகியைப் பார்த்து தன் தாயாரிடம் “அம்மா ! இது ஜானகி – என்னுடைய ஆஃபிஸில் ட்ரெயினி ஆக வந்திருக்காங்க” என்று சொல்லிவிட்டு, ஜானகியிடம்,

“ஜானகி! இது என்னுடைய அம்மா – இன்னிக்கு கோவிலுக்கு வரணும்னு சொன்னாங்க – அதுதான் கூட்டிக் கொண்டு வந்தேன்” என்று சொன்னான்.

ஜானகி, அப்படியே குனிந்து ராகவின் தாயார் காலைத் தொட்டாள். ராகவின் தாயார், அப்படியே அவளை அள்ளி எடுத்து அவள் கையைப் பிடித்துக் கொண்டு,

“உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு, ஜானகி. இந்தக் காலத்தில் மரியாதை தெரிந்த பொண்ணைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது “ என்றாள்.

பிறகு எல்லொரும் பிரகாரத்தைச் சுற்றி விட்டு கோவில் வாசல் படிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். ராகவின் தாயார் தன் அர்ச்ச்னை தட்டிலிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து ஜானகியின் தலையில் சூட்டும் பொழுது, ராகவின் கண்களும் ஜானகியின் கண்களும் ஒன்றை ஒன்று பின்னிப் பிரிந்தன.

அந்த நேரம் அப்படியே முடியாமல் இருக்கக் கூடாதா என்று அவர்கள் தங்கள் மனதில் நினைத்ததையும் இருவருமே புரிந்து கொள்ளவும் செய்தார்கள். காதலர்கள் என்றாலே இப்படித்தான் ஒருவர் மனதில் இருப்பது மற்றவர் மனதுக்கு தெரியுமோ என்னவோ?

ராகவின் தாயார் அவர்கள் நினைவுகளைக் கலைத்தார். ஜானகியைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார். பிறகு, ராகவ், தன் தாயாரிடம்,

“அம்மா! நீ ஹோட்டலுக்குப் போய் ரொம்ப நாளாச்சே? ஏன் இன்னிக்கு நாம சரவணபவன்லே போய் சாப்பிட்டுட்டுப் போகக் கூடாது? நீயும் இத்தனை நேரம் கழிச்சு வீட்டிலே போய் கஷ்டப் பட்டு சமைக்க வேண்டாம், இல்லையா?” என்றான்.

ராகவின் தாயாரும், சிரித்துக் கொண்டே “சரிடா! உனக்கு அம்மா சாப்பாடு அலுத்துப் போயிடுத்துன்னு தோணறது. அதான் ஹோட்டலுக்குப் போகணும்னு சொல்றே, இல்லையா? சரி ! சரி ! சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் சரியாகி விடும். கவலைப் படாதே” என்று சொல்ல. எல்லோரும் சிரித்து விட்டார்கள்.

அதன் பிறகு, ராகவ் அம்மா, ஜானகி கையைப் பிடித்துக் கொண்டு “அம்மா ! ஜானகி ! நீயும் வாயேன்! நாம எல்லொரும் பேசிண்டே சாப்பிடலாம்” என்று சொல்ல, அந்த வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் ராகவும், ஜானகியைப் பார்த்து,

“ஆமாம் ! ஜானகி ! நீங்களும் வாங்க – அம்மாக்கு சந்தோஷமாக இருக்கும்” என்று சொல்ல, ஜானகி மனதிற்குள் “அம்மாக்கா? உங்களுக்கா?” என்று கேட்டு சிரித்துக் கொண்டாள். பிறகு, கையிலிருந்த வாட்சில் மணியைப் பார்த்துக் கொண்டே,

“சரி! வரேன்! அம்மாகிட்டே பேச எனக்கும் ஆசையாகத்தான் இருக்கு. ஆனா, எட்டு மணிக்குள் நான் வீட்டுக்கு போயிடணும் – இப்பல்லாம் கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதால் லேட் ஆகத்தான் வீட்டுக்குப் போறேன். ஆனா எட்டு மணிக்கு மேல் ஆனா கவலைப் படுவாங்க” என்றாள்.


ராகவ் அவளிடம் “எட்டு மணிக்குள் கட்டாயம் வீட்டுக்குப் போயிடலாம். நான், அம்மா கோவில் வருவதால் , இன்னிக்கு என் காரைக் கொண்டு வந்திருக்கிறேன். நாங்களே வீட்டிலே கொண்டு விட்டுடறோம். சரி ! கோவில் முன்னாடி வாங்கோ. நான் காரை அங்கேதான் பார்க் பண்ணியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க, அவர்களும் பின் தொடர்ந்தார்கள்,

***********


அத்தியாயம் 5

ஜானகி அவன் பின்னே நடக்கும் பொழுது ஏதோ வானவீதியில் தேவதைகள் பின் தொடர நடப்பது போல் தான் உணர்ந்தாள். எங்கிருந்தோ அவள் காதில் மட்டும் நாதஸ்வர இசை கேட்பது போல் அவளுக்குத் தோன்றியது.


அதே உணர்வோடு ராகவைப் பார்த்தாள். அவனும் அவள் அவனைக் கூப்பிட்டது போல் உள் உணர்வோடு அவளைத் திரும்பிப் பார்க்க, இருவர் முகத்திலும் அடக்க முடியாத மகிழ்ச்சி புன்னகை.

ராகவின் தாயாருக்கும் ஏதோ புரிந்தது போல் தான் இருந்தது. இருந்தாலும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஜானகியுடன் கூட நடந்தாள். காரில் பின்பக்கம் அவர்கள் இருவரும் ஏறிக் கொள்ள ராகவ் ரியர் வியூ கண்ணாடியில் ஜானகியை ரசித்துக் கொண்டே காரை சரவண பவனில் நிறுத்தினான்.

பிறகு எல்லாமே வேகமாகத்தான் நடந்தது, அந்த நேரத்தில் சரவணபவனில் எப்பொழுதும் இருக்கும் கூட்டம் அன்று அவர்கள் அதிருஷ்டம் கொஞ்சம் குறைவாக இருக்க, அவர்களுக்கு உடனே இடம் கிடைத்து விட்டது.

எல்லோரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு உண்டு முடித்தபின், ராகவ் அன்றைய ஸ்பெஷலான பாதாம் ஹல்வாவையும் காரவடையையும் அவர்களுக்குத் தெரியாமல் பார்சல் வாங்கிக் கொண்டான்.

பில் பணம் கொடுத்தபின் ஜானகி, பஸ்ஸில் போய் விடுகிறேன் என்று சொன்னாலும் அவளைத் தடுத்து, தன் காரிலேயே அவளையும் கூட்டிக் கொண்டு அவர்கள் வீட்டு விலாசத்தை அவளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு காரை அவள் வீட்டின் முன் கொண்டு நிறுத்தினான்.

கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஜானகியின் தந்தை ஜானகி காரிலிருந்து இறங்குவதைப் பார்த்து பயந்துப் போய் விட்டார், அவளுக்கு உடம்பு முடியவில்லையோ என்ற பயம் அவருக்கு. ஜானகிக்கும் அவர் பயம் புரிந்ததால், கீழே இறங்கியவுடன், அவரிடம்

“அப்பா ! இவர் நான் இப்போ தணிக்கைக்கு போறேனே, அங்கே வேலை பார்க்கும் மானேஜர். இது அவர் அம்மா. இன்னிக்கு லேட் ஆகிவிட்டதால் வீட்டில் கொண்டு விட வந்திருக்கார்” என்று சொல்லி பயத்தை நீக்கினாள்.

ஜானகியின் தந்தையும் சுதாரித்துக் கொண்டு “வாங்க! வாங்க! வீட்டுலே எல்லோரையும் பாத்துட்டு போகலாம்” என்றார், ராகவும், அவன் தாயாரும் தயங்க, அதற்குள் வெளியே வந்த ஜானகியின் தாயார், ராகவின் தாயாரைப் பார்த்தவுடன்,

“நீ – நீங்க ராஜம் தானே?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, ராகவின் தாயார் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டார், பிறகு “கமலா ! கமலா! எவ்வளவு வருஷமாச்சு? உன்னை இங்கே பார்ப்பேன் என்று கனவு கூட கண்டதில்லை” என்று சொல்ல, எல்லோரும் உள்ளே சென்றார்கள்.

ராகவ், தான் வாங்கியிருந்த பாதாம் ஹல்வாவையும், காரவடை பார்சலையும், ஜானகியின் தாயார் கையில் கொடுத்து வணங்க, ஜானகி ‘இது எப்போ வாங்கினது?” என்பது போல் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, ராகவ் அதைக் கவனிக்காதது போல் , ஜானகியின் அண்ணன் ராஜனிடம் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் ராகவின் அம்மா ராஜமும் ஜானகியின் அம்மா கமலாவும் அவர்கள் ஒரே பள்ளியில் படித்த காலத்திலிருந்து இன்றுவரை உள்ள கதை முழுக்கப் பேசித் தீர்த்து விட்டார்கள்.

ஆம் ! அவர்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரே பள்ளியில் எட்டாம் கிளாஸ் வரை ஒன்றாகப் படித்தவர்கள். அதுவும் தவிர இருவரும் ஒரு வகையில் உறவுக்காரர்கள் கூட.

திருமணம் முடிந்தபின் கமலா சென்னை வந்து விட்டாள். ராஜமும் திருமணமான பின் மதுரை சென்றுவிட அவர்கள் பிரிய நேர்ந்து விட்டது. கணவர் இறந்தபின் ராஜம் கிராமத்துக்கு வந்து விட்டாலும் கமலா சென்னைவாசி ஆகிவிட்டாள்.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு பார்த்த அவர்களுக்கு பேச எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் இரவு வெகு நேரமாகி விட்டதால் ராகவும் ராஜமும் வீட்டிற்கு கிளம்பினார்கள்,

மறுநாள் ஆஃபிஸ் வந்தவுடன் இருவரும் ஒருவரையொருவர் தேடி ஒரே சமயத்தில் பேச ஆரம்பித்தார்கள். பிறகு ஒரே சமயத்தில் நிறுத்தினார்கள்.

இந்தக் கூத்தெல்லாம் நடந்து முடிந்தபிறகு, ராகவ் ஜானகியிடம், தன் தாயாருக்கு அவள் குடும்பத்தைப் பார்த்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதைப் பற்றி சொன்னான்.

அதுவும் ஜானகி தன் தாயாரின் காலைத் தொட்டு கும்பிட்டது அவளுக்கு மட்டுமல்ல தனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்பதையும் சொன்னான். ஏன் சந்தோஷம் என்றுக் கேட்டதற்கு, கண்களை சிமிட்டிக் கொண்டு ‘நல்ல மாட்டுப்பெண் – நல்ல மனைவி வர கொடுத்து வைத்திருக்க வேண்டுமே” என்று தன் மனதில் இருப்பதை அவளிடம் கூறினான்.

அதன் பிறகு என்ன காரியங்கள் விறு விறுவென்று நடந்தன. ராகவ் தன் மனதில் இருப்பதைத் ராஜத்திடம் கூற, ராஜத்திற்கும் தன் உற்ற தோழியின் மகளே தன் மருமகளாக வருவது மனதிற்கு ரொம்ப பிடித்திருந்தது.

ராஜமும் ராகவும் திரும்பவும் அவர்கள் வீடு போய் ஜானகியைப் பெண் கேட்க, ஜானகியின் பெற்றோர் முதலில் தயங்கினாலும், ராகவைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை தாங்கள் தேடினாலும் கிடைக்காது என்பதால் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.

சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை முடிந்த பின்பு திருமணத் தேதி குறித்தார்கள். பெரிய அகர்வாலுக்கும் நிரம்ப சந்தோஷம்தான். அகர்வால் ஏஜென்ஸி ஜானகிக்கு வேலை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை, நல்ல கணவனையும் தேடிக் கொடுத்திருக்கிறது என்று கூட கேலி பண்ணினார்.,

ரமேஷ் அகர்வால் அவளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சரி – மோனா அகர்வால் அதுகூட தெரிவிக்கவில்லை. ஆனால், ஜானகி மட்டும் மோனா அகர்வாலுக்கு மனதிற்குள் நன்றி செலுத்தினாள்.

ஏனென்றால் மோனா அவளைக் கடிந்துக் கொண்டதால் தானே ராகவ் இவ்வளவு சீக்கிரம் தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தினான் என்ற ஒரே காரணத்தால் தான்.

நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு ராகவ் ஒரு விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தான். அதாவது ஜானகி வேறு எதிலும் மனதைச் செலுத்தாமல் பரீட்சைக்கு படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று.

அதே மாதிரி ஜானகி தன் வாழ்க்கை கனவான சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் ஆவதற்கான பரீட்சைக்கு முனைந்துப் படித்து எல்லா பேப்பரும் மிகவும் அருமையாக எழுதி திருமணத்திற்கும் தயாராகி விட்டாள்.

திருமணம் மிக விமரிசையாக நடந்தது. பெரிய அகர்வால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கி, என்று வந்தாலும் தன் கம்பெனியில் ஜானகிக்கு ஒரு பெரிய வேலை காலியாக இருக்கும் என்று தன் அன்பைக் காட்டினார்.

திருமணம் முடிந்து அதன் பிறகு ராஜத்தின் விருப்பத்தின் பேரில் அவர்கள் எல்லோரும் கிராம வீட்டிற்கு வந்தார்கள். திருமண தம்பதிகளைவிட அதிகம் சந்தோஷப்பட்டது ராஜமும் கமலாவும்தான் என்பதைக் கூறவும் வேண்டுமா?

குலதெய்வம் பூஜை எல்லாம் முடிந்தது. எல்லோரும் மறுநாள் சென்னை திரும்ப வேண்டும் என்று இருந்த நேரத்தில் ராஜம் இன்னும் கொஞ்சம் நாட்கள் கிராமத்திலேயே தங்கியிருந்து வீட்டை சரிப்படுத்த விரும்புவதாக கூறினாள்.

அதுவும் தவிர அவளுக்கு இன்னோரு விருப்பம் இருந்தது, அதுதான் ராகவும் ஜானகியும் கொடைக்கானல் தேனிலவு போக வேண்டும் என்பதுதான்.

கொடைக்கானலில் அவளுடைய தம்பி அதாவது ராகவின் மாமா ஒரு பங்களா வாங்கிப் போட்டிருந்தார். அவர்கள் அமேரிக்காவில் இருப்பதால், எப்பவாவது இந்தியா வந்தால் தங்க என்று வாங்கிப் போட்டிருந்தார்.

கல்யாணத்திற்கு வந்திருந்த மாமா குடும்பத்தினர் ஒரு நான்கு நாட்கள் அங்கு தங்கி விட்டு, சாவியை ராஜத்திடம் கொடுத்து அவ்வப்பொழுது அங்கு போய் தங்கி பங்களவையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருந்தார்.

அதனால் தான் ராஜம் ராகவையும் ஜானகியையும் கொடைக்கானல் தேனிலவு போகும்படி சொல்லிக் கொண்டே இருந்தாள். கடைசியில் அவள் சொல்படி அவர்கள் கொடைக்கானல் கிளம்பிச் சென்றார்கள்.

கொடைக்கானல் சென்ற பிறகு தான் அவர்களுக்குத் தெரிந்தது தாங்கள் சுவர்க பூமிக்கு வந்திருக்கிறோம் என்று. அழகான சின்ன பங்களா – சமையல், வீட்டைக் கவனித்துக் கொள்ள என்று அங்கேயே தங்கியிருக்கும் முருகன், குமுதா தம்பதிகள்.

தாமதமாகப் படுத்து தாமதமாக எழுந்து குளிரை ரசித்து, மஞ்சு எனப்படும் மேகங்களின் இடையே கை கோர்த்து நடந்து, இந்த உலகத்திலேயே தாங்கள் இருவர் மட்டும் இருப்பது போல் உணர்ந்து தேனிலவை கொண்டாடினார்கள் ராகவும் ஜானகியும். ஆமாம் கொண்டாட்டம் என்பது தான் சரி,

ஆனால் எல்லா கொண்டாட்டத்திற்கும் ஒரு முடிவு உண்டு இல்லையா – அதேமாதிரி அவர்களும் சென்னை திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. மதுரை வரை காரில் வந்து பிறகு ரெயில் பயணம் என்று அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

மதுரை மாலை வந்து சேர்ந்து, மதுரை மீனாட்சி கோவில் பார்த்து விட்டு மதுரை ஜங்க்‌ஷன் வந்தவுடன் தான் உடம்பின் களைப்பு தெரிந்தது ஜானகிக்கு. ஹோட்டலில் சாப்பிட்டு விட்டதால், AC 2 TIER வகுப்பில் ஏறியவுடனேயே எப்போ படுப்போம் என்று ஆகி விட்டது ஜானகிக்கு.

ஆனால் ராகவ் அவளை சிறிது நேரம் சீட்டில் உட்காரும்படி சொல்லி விட்டு முதலில் பிளாட்ஃபாரத்து ஸ்டாலிலிருந்து சுடச்சுட பால் வாங்கிக் அவள் கையில் ஒரு கப் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு முதலில் குடித்தான்.

அவளிடம் “மதுரையில் பால் ரொம்ப நன்றாக் இருக்கும். நன்றாக தூக்கமும் வரும்” என்று சொல்லிவிட்டு அவள் குடித்து விட்டு கொடுத்த கப்பையும் வாங்கிக் கொண்டு குப்பை போடும் இடத்தில் போட்டு விட்டு வந்தான்.

பிறகு அங்கு வைத்திருந்த பெட்சீட்டில் ஒன்றை எடுத்து காலியாக இருந்த பெர்த்தில் விரித்து தலையணையும் வைத்தான். பிறகு அவள் கைப்பையை தலையணை அடியில் வைக்கச் சொல்லி, அவளைப் படுக்கச் சொன்னான்.

அவன் கொஞ்சம் கூட சுருக்கம் இல்லாமல் பெட்சீட்டை விரித்த அழகு ஜானகி ‘இவன் என் புருஷன்’ என்றுப் பெருமைக் கொள்ள வைத்தது. அவள் படுத்தவுடன் அவள் மேல் இன்னோரு பெட்சீட்டை அழகாகப் போர்த்தி காலின் மேல் கம்பளியைப் போர்த்தும் பொழுது அவள் கணுக்காலை வருடிக் கொடுத்தது அவளை அப்படியே இன்பத்தில் ஆழ்த்தியது,

கணுக்காலை வருடி எப்படி ஒருவனால் காதல் உணர்வைத் தூண்ட முடியும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அந்த நிமிடம் அவள் அவனைப் பார்த்த பார்வை முழுக்க முழுக்க காதல் நிறைந்திருந்தது.

எதிரே இருந்த நடுத்தர வயது தம்பதியரில், மனைவி தன் கணவனைப் பார்த்து ‘நீங்க அவர் கிட்டேயிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது “ என்று குறும்பாகச் சொல்ல, அந்தக் கணவனும்,

“ஸார், ட்ரெயினிங்க்கு எப்ப வரட்டும்? நீங்க சென்னை தானே?” என்று கேட்க அங்கு ஒரே சிரிப்பு. பிறகு ராகவ் தன் படுக்கையை அவள் பெர்த்க்கு மேலே உள்ள பெர்த்தில் அழகாக கொஞ்சம் கூட சுருக்கம் இல்லாமல் விரித்துக் கொண்டு,

“ஜானு ! குட்நைட் – ஏதாவது வேணும்னா என்னை எழுப்பு” என்று சொல்லி விட்டு படுத்து விட்டான், அந்த தம்பதிகள் எப்போ படுத்தார்கள் என்று கூட ஜானகிக்குத் தெரியாது. அவ்வளவு அசந்து தூங்கி விட்டாள்.

தாம்பரம் தாண்டியவுடன் தான் அவளுக்கு முழிப்பு வந்தது. அவள் கண் விழித்தபோது அந்த தம்பதிகளைக் காணவில்லை. தாம்பரத்தில் இறங்கி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, ராகவை எழுப்ப வேண்டுமே என்று நினைத்த பொழுது பளிச் என்று முகமெல்லாம் கழுவிக் கொண்டு எதிரே நின்றான் ராகவ்.

“என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அவனைப் பார்த்து “என்னை எழுப்பி இருக்கக் கூடாதா?” என்று சிணுங்கிக் கொண்ட கேட்ட ஜானகியின் கன்னத்தை தடவிக் கொண்டே,

“என் ஜானு தேவதை தூங்கும் பொழுது எவ்வளவு அழகு தெரியுமா? எழுப்ப எனக்கு எப்படி மனசு வரும்?’ என்று சிரித்துக் கொண்ட ராகவை அப்படியே கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது ஜானகிக்கு.

பிறகு அவள் பல் தேய்த்து விட்டு வருவதற்குள் அவள் படுத்திருந்த பெட்சீட் எல்லாவற்றையும் அழகாக மடித்து வைத்திருந்தான் ராகவ்.

மற்ற பெர்த்களில் பெட்சீட் கம்பளி எல்லாம் தாறுமாறாகத் தொங்க அவர்கள் பெர்த்தில் மட்டும் பெட்சீட் தலையணை எல்லாம் மடித்து வைக்கப் பட்டிருந்தது ராகவ் எல்லா விஷயத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்பவன் என்பதை உணர்த்தியது ஜானகிக்கு.******************


அத்தியாயம் 6

எக்மோர் வந்ததும் இருவரும் டிரெயினிலிருந்து இறங்கினார்கள். அவர்களை வரவேற்க ஜானகியின் தந்தையும் அண்ணன் ராஜனும் வந்திருந்தார்கள். ராகவன் கையில் இருந்த பெட்டியை ராஜன் வாங்கிக் கொள்ள, ஜானகியின் கையில் இருந்த சின்ன பெட்டியை ஜானகியின் தந்தை வாங்கிக் கொள்ள எல்லோரும் வெளியே நடந்தார்கள்.

முதலில் எல்லோரும் ஜானகியின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு ஆரத்தி எடுத்து அவர்களுக்கு வரவேற்பு. பிறகு முதலில் காஃபியைக் குடித்து குளியல் எல்லாம் முடித்த பிறகு ரவாகேசரி, பொங்கல், இட்டலி என்று கொஞ்சம் தடபுடலான காலை உணவு முடித்தபிறகு எல்லோருமாகக் கிளம்பி ராகவின் வீட்டிற்குச் சென்றார்கள்.

முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கோலம் எல்லாம் போட்டு ஏற்பாடு செய்து வைத்திருந்தாள் ஜானகியின் தாயார் கமலா. அவர்களை வெளியிலேயே காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று தயாராக இருந்த ஆரத்தியை அவர்களுக்கு திரும்ப ஆரத்தி எடுத்தாள்.

பிறகு எல்லோரும் உள்ளே செல்ல, முதலில் ஜானகியை ஸ்வாமிக்கு விளக்கேற்றி வைக்கச் சொன்ன கமலா அவளை பாலையும் காய்ச்ச சொன்னாள். பாலை ஸ்வாமிக்கு நைவேத்தியம் பண்ணி எல்லோருக்கும் கொடுத்தபிறகு, ஜானகியும் கமலாவும் சமையலை முடித்தார்கள்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஜானகியையும் ராகவையும் அங்கேயே விட்டு விட்டு ஜானகி வீட்டினர் எல்லோரும் கிளம்பினார்கள்/

அவர்கள் கிளம்புவதற்காகக் காத்திருந்தாற்போல் , ராகவ் கதவைச் சாத்தி தாளிட்டான். அப்படியே வந்து ஜானகியின் கையைப் பிடித்து முத்தமிட்டான். ஜானகிக்கும் தனக்கு வேண்டிய வாழ்க்கைக் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி ஆதலால் அப்படியே ராகவின் கையை அழுந்தப் பிடித்துக் கொண்டாள்.

பிறகு இருவரும் ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்துக் கொண்டு பேசினார்கள் – பேசினார்கள் – அப்படிப் பேசினார்கள். அதிகம் பேசியது ராகவ்தான்.

ராகவ் தனியாகவே வாழ்ந்தவன். அம்மா என்னதான் கூடவே இருந்தாலும் அவளிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் நிறைய விஷயங்களை மனதிலேயே வைத்துக் கொண்டு வாழ்ந்தவன்.

அவனுக்கு நண்பர்கள் என்று கூட யாரும் அதிகம் கிடையாது. பெண்களிடம் பேசவே ரொம்ப சங்கோஜம். அதனால் தன்னுடையவள் என்று ஒருத்தி அதாவது ஜானகி வந்தவுடன் மடை திறந்தது போல் தன் மனதில் உள்ளது எல்லாவற்றையும் கொட்டினான்.

அவன் சொன்ன பிறகுதான் ஜானகிக்குத் தெரிந்தது ராகவுக்கு அவளைப் பார்த்தவுடனேயே அவள்மேல் ஒரு ‘இது’ வந்து விட்டது என்று. ’இது’ என்பது ராகவ் பயன்படுத்திய பிரயோகம் ‘லவ்’ ‘காதல்’ இந்த வார்த்தைகளை உபயோகப் படுத்த அவன் இன்னும் தயங்குவது பார்த்து அவளுக்கு சிரிப்புத் தான் வந்தது.

அது மட்டுமில்லை அவள் தினம் தினம் போட்டுண்டு வரும் உடைகளை யெல்லாம் எவ்வளவு ரசித்தான் என்பதை அவன் எந்த எந்த நாளில் எந்த எந்த உடை அணிந்து வந்தாள் என்பதை விவரித்து சொன்ன போது சாமியார் போல் இருந்த ராகவ் தன் மனதில் எவ்வளவு ஆசை வைத்திருந்தான் என்பதை நினைத்து நினைத்து மனம் மகிழ்ந்தாள் ஜானகி.

அதுவும் மோனா அவளை கடுமையாகக் கடிந்துக் கொண்டு அதற்காக ஜானகி அழுது கொண்டிருந்த நாள் பற்றி ராகவ் சொன்னது அவள் மனதை அப்படியே உறுக்கி விட்டது.

ராகவ் சொன்னது இதுதான். “அழுது கொண்டிருந்த உன்னைப் பார்த்தவுடன் அப்படியே உன்னை கட்டிப் பிடித்து, கன்னத்தைத் துடைத்து, அப்படியே முதுகைத் தட்டி உன்னை சமாதானப் படுத்த வேண்டும் என்றுத் தோன்றியது.

அதுவும் தவிர உன்னை அழவைத்த அந்த மோனாவையையோ சோனாவையையோ போய் எப்படி என்னோட ஜானுவை அழவைத்தே என்று கேள்வி கேக்கணும்னு மனசிலே ஒரு கோபம் வந்தது, ஜானு”

இப்படியெல்லாம் ராகவுக்குப் பேசத் தெரியும் என்பது ஜானகிக்கு மட்டுமல்ல ராகவுக்கே ரொம்ப ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஜானகிக்கு அவன் பேசுவதையெல்லாம் கேட்ட பிறகு, அவன் மேல் உள்ள காதல் இன்னும் அதிகமாகிவிட்டது.

மாலை இருட்டுவது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருந்தவர்கள், மெல்ல வீட்டினுள் இருள் பரவிய பிறகு தான் சிரித்துக் கொண்டே பிடித்த கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்தார்கள்.

ஜானகி ஸ்வாமிக்கு விளக்கேற்றி விட்டு வருவதற்குள், ராகவ் இருவருக்கும் காஃபி போட்டுக் கொண்டு வந்து விட்டான். ஜானகி “எதற்கு நீங்க இதெல்லாம் செய்றீங்க? நான் விளக்கேற்றி விட்டு போட்டிருப்பேன் இல்லையா?” என்று கேட்டதற்கு, அவன் சிரித்துக் கொண்டே,

“இதோ பார், ஜானு ! நம்ம வீட்டிலே ஆண் பெண் பேதம் கிடையாது. யார் வேண்டுமானாலும் எல்லா வேலையும் செய்யலாம். நீயும் வேலைக்குப் போகப் போறே – நானும் வேலைக்குப் போறேன். அதனாலே நாம ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பம் மட்டுமில்லை, வீட்டு வேலையும் சேர்ந்து செய்வோம்” என்றான்.

இதைக் கேட்டதும் ஜானகிக்கு ரொம்ப ஆச்சரியமாகி விட்டது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் அவள் தந்தையோ, அண்ணனோ ஏன் தம்பிகளோ கூட வீட்டில் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டு அவள் பார்த்ததில்லை.

அவள் தந்தைக்கு அவர் அலுவலகத்திற்கு கிளம்பும் பொழுது, ஷூ, சாக்ஸ், பர்ஸ் எல்லாம் கையில் வைத்துக் கொண்டு அவள் தாயார் நின்றுக் கொண்டிருக்கும் காட்சி ஜானகிக்கு நினைவு வந்தது.

அவள் அண்ணன் கூட சமையல் அறை உள்ளே வந்து காஃபி குடித்ததை அவள் பார்த்ததில்லை. முன்னறையில் உட்கார்ந்த்துக் கொண்டு ‘அம்மா ! காஃபி” என்று கத்தினால் அம்மா கொண்டுக் கொடுப்பாள். – இல்லை ஜானகி கையிலோ இல்லை அவள் தங்கை கையிலோ கொடுத்தனுப்புவாள்.

அவர்கள் வீட்டில் பெண்கள்தான் எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்பது எழுதாத ஒரு நியதி. ஆண்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டைக் கூட கழுவி வைப்பது அவர்கள் வீட்டில் நடக்காத ஒரு விஷயம்.

அந்த மாதிரி ஒரு வீட்டில் இருந்து வந்த ஜானகிக்கு ராகவ் காஃபி போட்டுக் கொண்டு வந்தது, ஒரு குற்ற உணர்வைத் தந்தது என்பதுதான் உண்மை. தான் நேரம் போனது கூடத் தெரியாமல் பேசிக் கொண்டே இருந்ததால் தான் ராகவ் தானே காஃபி போட்டு கொண்டு வந்தான் என்று அவளுக்குத் தொன்றியது.

குற்ற உணர்வில் அவள் கண் கலங்கி விட்டது. அவள் கண் கலங்குவது பார்த்து ராகவ் பயந்தே போய் விட்டான். ஒருவேளை தான் ஏதாவது தப்பாகப் பேசி விட்டோமோ என்று எண்ணி, அவளிடம்,

“என்ன ஆச்சு ஜானு? ஏன் கண் கலங்கறது. அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டதா? நாம் வேணா இப்போ போய் அவங்களை பார்த்து விட்டு வந்து விடலாமா?” என்று கேட்க, அதைக் கேட்டு, அந்த நிலையிலும் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அவ்வளவு நேரத்திலும் ஒரு தடவை கூட தன் குடும்பத்தைப் பற்றி தான் நினைக்கவில்லை என்பதை நினைத்த பொழுது, அவளுக்கு தன் மேல் சிறிது கோபம் கூட வந்தது. இதை எப்படி ராகவிடம கூற முடியும்? கேட்டால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற நினைப்பும் அவளுக்கு வந்தது.

கண்களைத் துடைத்துக் கொண்டு “ ஒன்றுமில்லை சார்” என்றதும் ராகவ் அவளைப் பார்த்த பார்வையில், “இல்லை இல்லை – சார் சொல்லலை – ‘ரா’ ” என்று சொல்லி கல கல வென்று சிரித்தாள்.

“இவளைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லையே – ரெண்டு நிமிஷத்துக்கு முன்பு கண் கலங்கி நின்றாள் – என்ன என்று காரணம் தெரிவதற்கு முன்பு கல கல வென்று சிரிக்கிறாள்” என்ற எண்ணம் ராகவன் மனதில் ஓடியது அவளுக்குத் தெரியவில்லை.

கல்யாணம் ஆவதற்கு முன்பு வரை ஜானகிக்கு ராகவை ‘சார்! சார்! என்றுதான் கூப்பிட்டு வழக்கம். கல்யாணம் ஆன பின் திடுமென்று அந்த வழக்கத்தை மாற்ற அவளால் முடியவில்லை. ஆனால் ராகவை எப்படி கூப்பிடுவது என்பதில் அவளுக்கு ரொம்பக் குழப்பம். ராகவானால்

“நீ என்னை ‘ராகவ்’ ன்னு என் பெயர் சொல்லிக் கூப்பிடு” என்கிறான். பெரியவர்கள் எதிரில் ‘ராகவ்’ என்று புருஷன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது, ராகவே சொன்னாலும் கூட சரியானது இல்லை என்பது அவள் எண்ணம்.

அதுவும் புருஷன் பெயரைச் சொன்னால், அவன் ஆயுசு குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பெரியவர்கள் எதிரில் ‘ராகவை’ எப்படி பெயரை சொல்லிக் கூப்பிட முடியும் ஜானகியால். ஆனால் இதை ராகவிடம் சொன்னால்

“எங்க அம்மா ஒண்ணும் நினைச்சுக்க மாட்டா- மத்தவங்க நினைக்கிறதைப் பத்தி நீ ஏன் கவலைப் படறே?” என்று சொல்லி அவள் வாயை அடைத்து விடுகிறான்.

அவள் மாமியார் ராஜம் அவள் ‘ராகவ்’ என்று அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதை ஒத்துக் கொண்டாலும் கூட, அவள் தாயாரும் தந்தையும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் தனியாக இருக்கும் பொழுது அவனை வெறும் ‘ரா’ என்றுக் கூப்பிட்டுப் பழக ஆரம்பித்தாள். ஆனால் ‘ரா’ என்று ஆரம்பிக்கும் பொழுதே அவளுக்கு வாய் ஓயாமல் சிரிப்பு வந்து விடுகிறது – அதுதான் கஷ்டம்.

பிறகு தான் கண் கலங்கியக் காரணம் – அதாவது தன் குற்ற உணர்ச்சியை ராகவிடம் கூறிய பொழுது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால் ராகவ் அவளைக் கட்டிப் பிடித்து முதுகைத் தட்டிக் கொடுத்து

“ஜானு! அழாதே ஜானு! நீ என்ன பைத்தியமா? நீ மத்திரமா பேசிக் கொண்டிருந்தே? நானும் தானே? அதுவும் தவிர காஃபியை நான் போட்டா என்ன – நீ போட்டா என்ன? இந்த மாதிரி பைத்தியக்காரத் தனமாக நினைக்கிறதே இப்பவே விட்டுடு – நம்ப வீட்டு வேலையைத் தானே நான் பண்ணரேன் – அதுவும் யாருக்காகப் பண்ணரேன் – என் செல்லப் பெண்டாட்டி கஷ்டப்படக் கூடாதுன்னு தானேப் பண்ணரேன் – இதுக்குப் போய் அழலாமா, செல்லம்?”

என்றுக் கேட்டு அவள் கண்ணைத் துடைத்து, கன்னத்தில் ஒரு ‘இச்’ சும் வைக்க, ஜானு அப்படியே சுவர்கத்தில் இருப்பது போல் உணர்ந்தாள். பிறகு இருவருமாக ஊருக்குக் கொண்டு போயிருந்த பெட்டியை எல்லாம் ஒழிச்சு, தோய்க்க வேண்டிய துணிகளை எல்லாம் எடுத்து வாஷிங்க் மெஷினில் போட வேண்டியதைப் பொட்டு, மற்றவற்றை வைக்க வேண்டியம் இடத்தில் வைத்து, காலி பெட்டியை துடைத்து வைத்தார்கள்.

இன்னும் 4 நாட்களுக்கு ராகவுக்கு லீவ் பாக்கி இருந்ததால், இரவு உணவுக்கு ஒரு ரவா உப்புமா ஜானகி பண்ண, மதியம் இருந்த சாதம் வைத்து தயிர்சாதமும் பண்ணி சாப்பிட்டு விட்டு, இருவரும் படுக்கைக்கு வந்தார்கள்.

இவ்வளவு நாளும் கொடைக்கானல் பங்களா அது இது என்று இருந்து விட்டு, தங்களுடைய சொந்த வீட்டில் தங்களுடைய சொந்தப் படுக்கையில் படுக்கும் அனுபவம் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருந்தது.

அன்றைய இரவு அவர்களுக்கு மிகவும் இன்பமான இரவாக இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? மறுநாள் காலை தாமதமாகவே கண் விழித்தாள் ஜானகி.

தாமதமாகி விட்டதே என்றக் குற்ற உணர்வில் கண் விழித்த அவள் அவசரமாக எழுந்திருக்க முயன்ற அவளை, இரு கைகள் அழுத்தித் திரும்பவும் படுக்க வைத்தன.

திரும்பாமலே அது ராகவின் கைகள் என்று உணர்ந்த ஜானகி “நேரமாகிவிட்டதே – எழுந்திருக்க வேண்டாமா” என்றுக் கேட்டுக் கொண்டே அவன் பக்கம் திரும்பினவள் அப்படியே அதிசயித்துப் போய் விட்டாள்.

ஏனென்றால் ராகவ் குளித்து முடித்து விட்டு ஒரு நல்ல டீ ஷர்ட் அணிந்துக் கொண்டு அவ்வளவு அழகாக நீட்டாகக் காட்சி அளித்ததுதான். அவன் எழுந்தது கூடத் தெரியாமல் தான் தூங்கியிருக்கிறேமே என்ற குற்ற உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் ஜானகி.

ராகவ் சிரித்துக் கொண்டே “என்ன ராணி – ராத்திரி களைப்பு போச்சா – இல்லயா?” என்று குறும்புப் பார்வையுடன் கேட்க, ஜானகி வெட்கம் கன்னங்களைச் சிவக்க வைக்க, பொய்க் கோபத்துடன் அவன் மேல் வீசி எறிய தலையணையை ஓங்கினாள்.

அவளிடமிருந்து தப்பிப்பது போல் பதுங்கி, பிறகு அவள் கையைப் பிடித்து தலையணையைப் பிடுங்கி ஓரமாக வைத்த ராகவ், தன் மனைவியை ஆசை தீரப் பார்த்தான். தூங்கி எழுந்தவுடன் சில பெண்கள் தலையும் சந்தமுமாக பார்க்க சகிக்காமல் இருப்பார்கள்.

ஆனால் ஜானகியோ தலை சற்றுக் கலைந்து சில முடிகள் அவள் கன்னத்தில் அழகாக விழுந்திருக்க, கண் மை சிறிது கலைந்து அழகாகக் காட்சி அளித்தாள். தன் மனைவி தான் எத்தனை அழகு என்று பார்த்துக் கொண்டே நின்றான் ராகவ்.


அத்தியாயம் 7

ஜானகி கிடுகிடுவென்று எழுந்து பல் தேய்க்கச் சென்றாள். அவள் திரும்பி வரும் பொழுது படுக்கையில் பெட்சீட் எல்லாம் மடிக்கப் பட்டு தலையணைகள் அதன் இடத்தில் அழகாக வைக்கப் பட்டு, படுக்கை பார்க்கவே படு நேர்த்தியாக இருந்தது.

“இவர் என்ன தன்னை ஒரு வேலையும் பண்ண விட மாட்டாரோ” என்று அவள் நினைக்கும் போதே கையில் இரண்டு டம்ளர் காஃபியுடன் வந்தான் ராகவ்.

“ஐய்யோ! இன்னிக்கு இன்னும் வாசலில் கோலம் கூடப் போடவில்லையே – இப்பொழுது போய் வாசல் தெளித்தால், யாராவது பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வர்கள் – இனி இந்த மாதிரி தூங்கித் தொலைக்கக் கூடாது’ என் மனதிற்குள் தன்னைக் கடிந்துக் கொண்டாள் ஜானகி.

காஃபியை ராகவிடமிருந்து வாங்கிக் கொண்ட ஜானகி ‘ஸாரி ! இன்னிக்குத் தூங்கிப் போய்விட்டேன். நாளையிலிருந்து சீக்கிரம் எழுந்து விடுவேன். நான் கொஞ்சம் அசந்து விட்டாலும் நீங்க என்னை சீக்கிரம் எழுப்பி விட்டு விடுங்க – பாருங்க இப்ப போய் எப்படி வாசல் தெளிக்கிறது?” என்று சொன்ன ஜானகியைப் பார்த்து, ராகவ்,

“அட ! வாசல் தெளிக்கறதைப் பத்தி நீ ஏன் கவலைப் படறீங்க – அதுக்குத்தான் பொன்னம்மா அதுதான் இங்கே மேல் வேலை செய்யறவங்க இருக்காங்களே – அவங்க காலையிலேயெ வந்து வாசல் தெளிச்சுவிட்டு போயிடுவாங்க – 8 மணிக்கு மேலெ வந்து பாத்திரம் தேச்சு வீடு பெருக்கித் துடைக்கிற வேலையெல்லாம் செய்வாங்க. அதனாலே ராணிக்கு வேலை கிடைக்கிற வரையில் கொஞ்சம் நன்னா தூங்கலாம்” என்று சொன்னவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டாள் ஜானகி மனதில் “இவன் என்னோட புருஷன்” என்கிற ஒரு பெருமிதம் அப்படியே பரவியது.

பிறகு, ராகவ் வெளியே போய் மார்க்கெட்டிலிருந்து காய்கறி, மளிகை சாமான் எல்லாம் வாங்கிவந்தான். அதற்குள், ஜானகி தலைக்குக் குளித்து விட்டு அடர்ந்த சிகப்பு நிறத்தில் ஒரு கல்கத்தா காட்டன் சாரியை உடுத்திக் கொண்டாள். தன் நீண்ட கூந்தல் காய வேண்டும் என்பதற்காக, அதை அப்படியே லூசாக விட்டு நுனியில் ஒரு கிளிப் மட்டும் போட்டுக் கொண்டு முகத்திற்கு பவுடர் கூட போடாமல், அழகான மரூன் கலர் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டாள்.

அதற்குள் பொன்னம்மா வர, அவளுக்கு ஒரு டம்ள்ரில் முதலில் காஃபி கொடுத்ததும், பொன்னம்மா முகம் பூரா மகிழ்ச்சி. ‘புதுப் பொண்ணு வந்திருக்கே – அதுக்கு காஃபி கொடுக்கணும்னு தெரியுமா – இல்ல நாமளே சொல்லணுமா” ன்னு ஒரு குழப்பத்துடன் வந்த பொன்னம்மாக்கு வந்தவுடனேயே நல்ல காஃபி கிடைச்சா சந்தோஷம் இல்லாம இருக்குமா என்ன?

பொன்னம்மா வாய் ஓயாமல் ஏதோ பேசிக் கொண்டே வேலை செய்ய, ராகவன் மார்க்கெட்டிலிருந்து கை நிறைய சாமான்களோடு திரும்பி வந்தான். வந்தவன் அவளைப் பார்த்து பிரமித்துப் போய் நின்று விட்டான்.

மேக்கப் ஒன்றும் இல்லாமல், நீண்ட முடி இடுப்பையும் தாண்டித் தொங்க ஒரு மலையாள மோகினி போல மனைவியை பார்த்தவுடன் சத்தமே இல்லாத் ஒரு ‘வாவ்’ அவன் வாயிலிருந்து வந்தது. ஆனால் பொன்னம்மாவைப் பார்த்ததும் கட்டிக் கொள்ள நீண்டக் கைகளை கட்டுப் படுத்தினான்.

அவன் வாங்கிக் கொண்டு வந்த மளிகை சாமானை யெல்லாம் உள்ளே எடுத்து வைத்தாள் ஜானகி. ராகவ் என்ன காய்கறி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்று பார்த்துக் கொண்டே இருந்த பொழுது ‘இன்னிக்கு பீன்ஸ் பொரியல் பண்ணிடலாம். தேங்காய் வாங்கிண்டு வந்திருக்கிறேன். நான் பீன்ஸ நறுக்கி வைக்கிறேன். . நீ அதற்குள் பருப்பும் அரிசியும் குக்கரில் வச்சுடு. ஒரு வேளைக்கு மட்டும் காணும்படியா வச்சா போதும் . நாம சாயங்காலம் வெளியில் போய் விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்” என்று ராகவே மெனு தயார் பண்ணிக் கொடுத்து விட்டான்.

குக்கர் ஆவதற்குள் அவன் பீன்ஸை கத்தியால் ஒரே சைசில் நறுக்கி வைத்து விட்டு தேங்காயை உடைத்து, அதைக் கத்தியால் துண்டு துண்டாக நறுக்கி, கொஞ்சம் எடுத்து மிக்ஸியில் போட்டு விட்டு, மீதி இருப்பதை ஒரு எவர்சில்வர் டப்பாவில் போட்டு, ஃப்ரீஸரில் வைத்தான்.

அவன் பண்ணுவதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிரந்த ஜானகி “நான் தேங்காய் துருவிக் கொடுத்திருப்பேனே – சரி அது போகட்டும். ஏன் மீதி தேங்காயை ஃப்ரீஸரில் வச்சீங்க” என்றுக் கேட்க, ராகவ்,

“ப்ரீஸரில் துண்டு போட்டு வச்சா எவ்வளவு நாளானாலும் கெடாது. அதுவும் தவிர தேங்காய் வேணுங்கிற போது கொஞ்சம் வெளியில் எடுத்து, தேங்காய் துண்டுகளை கொஞ்ச நேரம் தண்ணியில் போட்டு வச்சு, பிறகு சட்னி மிக்ஸியில் சுலபமாக அரைச்சுக் கொள்ளலாம். இப்படி துண்டு போட்டு வச்சுட்டா, தேங்காய் எந்த நேரமும் வீட்டில் ரெடியா இருக்கும்” என்று சொல்ல சொல்ல

“இவருக்கு தெரியாத விஷயமே கிடையாதோ”என்ற நினைப்புத்தான் ஜானகி மனதில் வந்தது. அன்று சமையலில் பாதி ராகவ்தான் பண்ணினான் என்று சொல்லும்படியாகத் தான் இருந்தது. சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு இருவரும் ஒரு சினிமா பார்த்துவிட்டு வெளியில் ‘மதுரா’ ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள்.

மதுரா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது, அவர்கள் பெரிய அகர்வாலும் மோனாவும் காரில் வந்து இறங்குவதைப் பார்த்தார்கள். பெரிய அகர்வாலும் அவர்களைப் பார்த்துவுடன் மகிழ்ச்சியுடன் கை அசைத்தார். மோனா இவர்களைப் பார்க்காதது போல் பாவனையுடன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அகர்வால் காரிலிருந்து இறங்கி வரும்வரைக் காத்துருந்தார்கள் ஜானகியும் ராகவும் .மோனா காரை பார்க் பண்ணச் செல்ல, அகர்வால் அவர்களிடம் வந்தார். அவர்களை பற்றி எல்லாம் விசாரித்துவிட்டு, அவர் ஒரு முக்கியமான விஷயம் கூறினார். அது என்னவென்றால் , மறுநாள் ஜானகி எழுதிய சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை ரிஸல்ட் வெளியாகப் போகிறது என்ற செய்திதான் அது.

அதுவும் தவிர அவர் ஜானகியிடம் சொன்னது ‘ரிஸல்ட் வந்த பிறகு என்னை வந்துப் பார். நான் இன்னும் ஒரு புது ஏஜென்ஸி ஆரம்பிக்க இருக்கிறேன். அனில் கூட நான் கொஞ்ச நாள் முன்பே பேசி விட்டேன். ஒரு புது பேங்க் கான்டிராக்ட் கிடைத்திருக்கிறது. லாங்க் டைம் கான்டிராக்ட்.. நானே உன் அப்பாவிடம் சொல்லி உன்னைக் கூப்பிட்டு அனுப்பணும்னு இருந்தேன். நீயும் அனிலும் ஏஜென்சி பார்ட்னர்ஸ். எங்களுக்கு ஒன் ஷேர்,” என்று சொல்ல, கேட்ட ஜானகிக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது.

ஆனாலும் பரீட்சை ரிசல்ட் பற்றிய பயத்தில் அவள் அன்று இரவு சரியாகத் தூங்கவே இல்லை. ராகவ் அவள் மேல் தன் கையைப் போட்டது ராத்திரி முழுக்க எடுக்கவே இல்லை. கையை எடுத்தால் அவள் எங்கேயாவது போய் விடுவாளோ என்ற எண்ணத்தில் இருப்பவன் போல் அவள் மேல் தன் கையைப் போட்டுக் கொண்டு தூங்கும் வழக்கம் அன்று இரவு மட்டுமல்ல, அதன் பிறகு வந்த எல்லா இரவுகளிலும் தொடர்ந்தது.

அவர்களுல் அவ்வப்போது சின்ன சின்ன ஊடல்கள வருவது உண்டுதான். நாள் பூரா பேசாமல் இருப்பதும் உண்டு. ஆனால் இரவில் அவன் கை அவள் மேல் விழுந்தவுடன், எல்லா ஊடல்களும் மாயமாக மறந்து விடும். அதனால் அவன் அவள் மேல் தன் கையைப் போடும் தருணத்தை இருவருமே எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் என்பது இருவருக்குமே தெரிந்த உண்மை.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஜானகி சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்ஷை முதல் ரேன்கில் பாஸ் பண்ணியிருந்தாள். ராகவுக்கு ஒரே பெருமை. ஜானகியின் தந்தைக்கு வாயெல்லாம் பல் என்றே சொல்லலாம். ராகவின் தாயார் ராஜம் ராகவுக்கு டெலிபோன் பண்ணி, தன் கணக்காக அவளுக்கு ஒரு ஜோடி தங்க வளையல் வாங்கித் தரும்படி சொன்னதில் ஜானகிக்கு தனி மகிழ்ச்சி.

கல்யாணம் ஆனவுடன் எங்கேயாவது தன்னை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லி விடுவார்களோ என்ற ஒரு சின்ன பயம் அவள் மனதில் இருந்தது. ஆனால் மாமியாரும் தான் பரீட்சை பாஸ் பண்ணியதைக் கொண்டாடியதைப் பார்த்தவுடன் அந்தப் பயம் போய்விட்டது.

பரீட்சை ரிசல்ட் வந்தவுடன் எல்லாம் மள மளவென்று நடந்தது. அனிலும் ஜானகியும் பெரிய அகர்வாலும் பார்ட்னர்களாக கையெழுத்திட அகர்வால் ஏஜென்ஸியின் இன்னோரு பிரான்ச் மவுன்ட் ரோடில் ஒரு பிரதான சாலையில் பெரிய அகர்வால் கையால் திறக்கப் பட்டது.

முகேஷ் அகர்வாலுக்கு தனியாக ஒரு பெரிய ஆஃபிஸ் அறை. அதன் இரண்டு பக்கத்திலும் ஜானகிக்கும் அனிலுக்கும் தனித்தனி ஆஃபிஸ் அறைகள். அமர்க்களமான அந்த அறையைப் பார்த்தவுடன் ஜானகியும் ராகவும் பிரமித்துப் போய்விட்டார்கள். ஜானகி மாதிரியே அனிலும் நல்ல ரேங்கில் பாஸ் பண்ணி யிருந்தான்.

அவர்களின் அந்த ஏஜென்சிக்கு ஒரு பெரிய பேங்க் காண்டிராக்ட் கிடைத்திருக்கிறது என்று பெரிய அகர்வால் ஹோட்டலில் சொன்ன பொழுது அந்த பேங்கி அவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

கிட்டத்தட்ட 80 கிளைகள் அதுவும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் கிளைகள் உள்ள பேங்க் அது. பணம் அள்ளிக் கொடுக்கத் தயாராக உள்ள பேங்க்.. ஆனால் வருடம் முழுக்க ஏதாவது ஒரு கிளையில் தணிக்கை நடந்து கொண்டே இருந்தால் தான் வருட முடிவில் பேங்கின் மெயின் ஆபிஸ் தணிக்கை நடத்த முடியும்.

ஜானகி அனிலின் கீழே நான்கு ஆர்டிக்கிள்ட் கிளார்க்குகள் வேலை செய்தாலும், ஜானகியும் அனிலும் வாரத்தில் நான்கு நாட்களாவது கிளைகளை விசிட் பண்ண வேண்டிய நிலை. முக்கால்வாசி கிளைகளும் சென்னையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கார் பயணத்தில் அடையக் கூடிய தூரத்திலேயே இருந்ததால் அனிலும் ஜானகியும் காலை கிளம்பிச் சென்று அன்றே திரும்பி விடும் வழக்கத்தைக் கடைப் பிடித்தனர்.

ராகவின் தாயார் எப்போவாவது நினைத்தால் சென்னை வருவாள். இல்லாவிட்டால் தன் கிராமத்து வீட்டில் தங்குவதையே அவள் விரும்பினாள். அவள் முன்பு சென்னை வந்ததே ராகவ் வேலை நிமித்தம் தான். அவன் சாப்பிடக் கஷ்டப் படுவானே என்று அவள் கிராமத்தை விட்டு வர மனமே இல்லாமல்தான் சென்னை வந்தாள்.

அதனால் ராகவுக்கு கல்யாணம் ஆனதுதான் தாமதம் – ராகவைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வந்தாச்சு என்ற சாக்கில் கிராமத்திற்கு வந்து விட்டாள். ராகவும் அம்மாவின் விருப்பத்திற்கு மாறு சொல்ல விரும்பாமல், அவளை அவள் விருப்பப் படியே கிராமத்தில் தங்கும்படி விட்டுவிட்டான்.

அதேமாதிரி தன் மனைவி ஜானகிக்கு அந்த பேங்க் காண்டிராக்டிற்காக வேலை செய்வது பிடித்து இருக்கிறது என்றவுடன், அவளுக்கு அவனால் எவ்வளவு உதவ முடியுமோ அவ்வளவு உதவினான்.

சில சமயம் பேங்கின் கிளை அதிக தூரத்தில் இருந்தால், ஜானகி சில சமயம் காலை 7,00 மணிக்கே கிளம்ப வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் காலையில் அவளுக்கு வேண்டிய காலை உணவை பண்ணிக் கொடுத்து கையிலும் உணவு கட்டிக் கொடுத்து அனுப்புவான்.

அதேமாதிரி மாலை அவள் வருவதற்கும் நேரமாகிவிடும் என்பதால் அவள் வந்தவுடன் முதல் காரியமாக சுடச் சுட ஸ்டிராங்க் காஃபி கொடுப்பான். ஓரோரு சமயம் அவளுக்கு மிகவும் பிடித்த பஜ்ஜி பண்ண எல்லாம் தயாராக வைத்து, அவள் வந்தவுடன் சுடச்சுடப் பண்ணிக் கொடுப்பான்.

பிறகு இருவருமாகச் சேர்ந்து அவன் தயாரித்து வைத்திருக்கும் இரவு உணவை சாப்பிட்ட பிறகு, மிகவும் சோர்வாக இருக்கும் அவளைப் படுக்கச் சொல்லி விட்டு மிச்சம் மீதி எல்லாம் சுத்தம் செய்யும் வேலையையும் அவனே செய்வான்.

ஆனால் நடு ராத்திரியில் அவள் எப்பொழுது கண் விழித்தாலும் அவன் கை அவள் மேல் இருப்பதை அவள் உணர்வாள். அவன் கை அவள் மேல் இருக்கும் போது அவள் ரொம்பப் பாதுகாப்பாக உணர்வாள். “என்னோடே என்னோடு புருஷன்” என்று நினைக்கும் போது வரும் புன்னகையோடு அவள் திரும்பவும் உறங்கிவிடுவாள்.ஆனால் ஒருமுறையாவது தான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே என்று அவளைக் குற்றம் சாட்டினவனில்லை ராகவ்.. ஏதோ அது தன் கடமை போல் மிகவும் மகிழ்ச்சியாகவே அதைச் செய்வது ராகவின் வழக்கம்.

ஜானகி சில சமயம் குற்ற உணர்ச்சியில் அவனை இவ்வளவு கஷ்டப்படுத்தி தான் இந்த வேலையில் இருப்பது நியாயமில்லை – அதனால், தான் வேறு ஏதாவது வேலை தேடிக்கொள்வதாகச் சொன்னால் அந்தப் பேக்சையே எடுக்க விட மாட்டான் ராகவ்.

அவன் அவளை சமாதானப் படுத்தக் கூறும் காரணம், அகர்வால் அவளை நம்பி ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அந்த வேலை அவளுக்கும் பிடித்திருக்கிறது என்கிறபோது அவள் ஏன் அந்த வேலையை விட வேண்டும் என்பது தான்.

அதற்கு மேல் அவன் சொல்லுவது என்ன வென்றால் , தனக்கு அந்த வேலை யெல்லாம் பண்ணுவதில் ஒரு கஷ்டமும் இல்லை என்பதுதான். அவளுக்கு மட்டுமில்லை, அவள் குடும்பத்தினருக்கும் அவள் செய்யும் அந்த பேங்க் கான்டிராக்டால் மாப்பிள்ளை அவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டு வேலை எல்லாம் செய்வது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை அவள் அந்த பேங்க் கான்டிராக்டை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை சென்னையிலேயே இருப்பது போல் பார்த்துக்கொள்வது நல்லது என்பதுதான். ஆனால் ராகவ் பிடிவாதமாக இருந்ததால் மட்டுமே அவளால் அந்த பேங்க் கான்டிராக்ட் வேலையை தொடர முடிந்தது.

ஆனால் பேங்க் கிளைக்குப் போக வேண்டாத நாட்களில் இது எல்லாமே மாறி விடும். ஜானகி ராகவனுக்கு பிடித்த சமையல் செய்ய இருவரும் சாப்பிட்டுவிட்டு அன்றைய தினத்தில் ஜாலியாக இருப்பார்கள். ஜானகிக்கு சினிமா பார்ப்பதில் விருப்பம் அதிகம். ராகவ்க்கு சினிமா பார்ப்பதில் அவ்வளவு விருப்பம் கிடையாது.

அதனால் இரண்டு பேரும் உட்கார்ந்து 5 ஆட்டம் ரம்மி ஆடுவார்கள். அதில் யார் அதிகம் பாயின்ட் எடுக்கிறார்களோ அவர்கள் இஷ்டப்படி மற்றவர் நடக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம்.

பெரும்பாலும் ஜானகிதான் ஜெயிப்பது வழக்கம். ஒருவேளை ராகவ் வேண்டுமென்றே அவளை ஜெயிக்க விட்டு விடுகிறானோ என்று கூட சில சமயம் ஜானகிக்குத் தோன்றும். அவன் ஜெயிக்கும் நாளில் அவன் கேட்பது ஒவ்வொரு நாளும் வேறு வேறாக இருக்கும்.

ஒருநாள் ஜானகி அவனை படுக்க வைத்து தலையில் நன்றாக மஸாஜ் செய்ய வேண்டும் என்பான். இன்னோரு நாள் அவள் சமையலறை பக்கமே வரக் கூடாது என்பான். சில சமயம் அவன் கேட்பது குழந்தைத் தனமாகக் கூடத் தோன்றும்.

இப்படி தினம் ஒரு விளையாட்டு, ஊடல், கூடல் என்று அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் தான் ஜானகி கர்ப்பமானாள்.


அத்தியாயம் 8

ராகவின் அம்மா சந்தோஷத்தில் அவளுக்கு ஒரு அழகான வேலைப்பாடுகள் செய்த தங்க கங்கணம் வாங்கிக் கொடுத்து கொண்டாடினாள். ஜானகியின் வீட்டிலோ கேட்கவே வேண்டாம். ஜானகிக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று வித விதமான பதார்த்தங்களை செய்து அவள் அம்மா தம்பிகள் மூலம் தினம் கொடுத்தனுப்புவது வழக்கமாகி விட்டது.

ராகவனைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். சாதாரணமாகவே மனைவியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவன், ஜானகி கர்ப்பம் என்று தெரிந்தால் சும்மா இருப்பானா? முதலில் ஜானகியைக் கூட்டிப் போய் நல்லியில் ஒரு அழகான பட்டுப்புடவை, பிறகு நேரே அண்ணா சாலையில் மிகவும் பிரசித்தமான ‘தாஸா’ ஹோட்டலில் அவளுக்கு மிகவும் பிடித்த மைசூர் மசாலா தோசை, பாஸந்தி என்று வாங்கிக் கொடுத்து அசத்தி விட்டான்.

கர்ப்பமான நாளிலிருந்து பேங்கின் சென்னையிலுள்ள கிளை அலுவலகங்களின் தணிக்கையை மாத்திரம் ஜானகி பார்த்தால் போதும் என்று பெரிய அகர்வால் கூறி விட்டதால், அவள் கார் பிரயாணமும் குறைந்து விட்டது. அவள் கர்ப்ப காலத்த்தில் அவளை சௌகரியமாக வைத்துக் கொள்ள ராகவ் மட்டுமல்ல, அவள் கூட இருக்கும் ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதைச் செய்தார்கள் என்றுதான் கூற வேண்டும்.

ராகவ், அவளைக் கண்ணும் கருத்துமாக கவனித்தான் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் கர்ப்பம் வளர வளர, அவன் கவனிப்பும் அதிகமாகி விட்டது. காலையில் அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் தானே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது வழக்கமாகி விட்டது.

டாக்டர் சொன்னபடி அவளை மாலையில் வாக்கிங்க் அழைத்துச் செல்வது – அவளுக்கு வேண்டிய பழங்கள் வெட்டித் தருவது என்று ஒரு தாயை விட மேலாக அவளைக் கவனித்துக் கொண்டான். அதுவும் இரவு அவன் தூங்குவதே குறைந்து விட்டதோ என்றுத் தோன்றும்படி , இரவு அவள் எப்போது திரும்பிப் படுத்தாலோ இல்லை ஒரு சின்ன முனகல் முனகினாலோ

“ஜானு ! ஜானு! என்ன ஆச்சும்மா – ஏதாவது கஷ்டமாக் இருக்கிறதா – டாக்டர் கிட்டே போகணுமா” என்று கவலையுடன் ராகவ் கேட்பதைப் பார்த்தால், ஜானகிக்கு அவனைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருக்கும். அதற்காகவே அவள் புரண்டு படுப்பதைக் கூட குறைத்துக் கொண்டு விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

8 மாதங்கள் ஆனபிறகு, ராகவின் தாயாரும் கிராமத்திலிருந்து சென்னை வந்து விட்டாள். வளைகாப்பு, சீமந்தம் என்று அசத்தி விட்டார்கள் ரெண்டு வீட்டாரும் சேர்ந்து.

இப்படியாக ஊரே கொண்டாட, ஒரு சுபநாளில் அழகான தேவதை போல் அந்த வீட்டில் வந்து பிறந்தாள் சுபா. ரொம்ப நாளைக்குப் பிறகு இரண்டு வீட்டிற்கும் முதல் பேரக் குழந்தையாகப் பிறந்த சுபா, அந்த வீட்டின் இளவரசி போல வளர்ந்தாள்.

எல்லோருக்கும் செல்லம் தான் என்றாலும், சுபா அப்பாவின் செல்லக் குட்டியாகத்தான் வளர்ந்தாள். குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை ஓய்வெடுத்த, ஜானகி, பிறகு வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். ஏனென்றால் அவர்கள் ஏஜென்ஸியில் வேலைப் பளு மிகவும் அதிகரித்து விட்டது என்று ஒருமுறை அனில் தன் மனைவியுடன் குழந்தையைப் பார்க்க வந்தபோது குறிப்பிட்டான்.

அதுவும் தவிர சார்ட்டர்ட் அக்கௌன்டன்ஸி பரீட்சை மூன்று மாதத்தில் நடைபெற இருந்ததால், பரீட்சைக்கு படிக்கை வேண்டுமென்ற காரணத்தால் ஆர்டிக்கிள்ட் கிளார்குகள் லீவ் போட்டு விட்டதால் அனிலால் தனியாக எல்லா தணிக்கையையும் கவனிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் பேச்சு வாக்கில் கூறியது ஜானகியின் மனதை உறுத்தியது.

அதிகம் வேலை செய்யாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் போல் தான் முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பது அவள் மனதில் ஒரு குற்ற உணர்வாகவே இருந்தது. சம்பளம் வேண்டாம் என்று சொன்னாலும் பெரிய அகர்வாலும், அனிலும் ஒத்துக் கொள்ள வில்லை. அதனால் மூன்று மாதம் முடிந்தபிறகு ராகவிடம் அனில் சொன்னதைப் பற்றிக் கலந்து பேசினாள். ராகவும் அவள் கூற்றை ஒத்துக் கொண்டு அவள் வேலைக்குத் திரும்பி செல்ல ஒப்புதல் அளித்து விட்டான்.

குழந்தையைப் பார்த்துக் கொள்ள் ராகவின் தாயார் ராஜத்தை சென்னை வந்து இருக்குமாறு ராகவும் ஜானகியும் கேட்ட பொழுது உடனே சென்னை வந்து விட்டாள் ராஜம். ஏற்கெனவே ராஜத்திற்கு பேத்தி சுபா பிறந்த பிறகு கிராமத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அதனால் அவர்கள் கேட்பதற்காகக் காத்திருந்தாற்போல் உடனே புறப்பட்டு வந்து விட்டாள்.

சுபா புட்டிப் பாலில் தான் வளர வேண்டிய நிலை. அந்த ஒரு விஷயம் தான் ஜானகிக்கு மனதுக்கு ஒவ்வாத விஷயமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாததால், ஜானகி அப்பா மற்றும் பாட்டிகளின் அரவணைப்பில் அழகாக வளர்ந்தாள். ஆயிற்று நல்லதாக ஒரு பள்ளியிலும் சேர்த்தாகி விட்டது.

பாட்டி இருந்தாலும் அம்மா இருந்தாலும் ராகவ் தான் சுபாக்கு எல்லாம் பண்ண வேண்டும். பாட்டியோ ஜானகியோ அவளுக்கு கொடுக்க வேண்டிய பாலையோ உணவையோ அவளுக்குக் கொடுக்க முற்பட்டால் வாயை இறுக மூடிக் கொண்டுவிடுவாள். கஷ்டப் பட்டு கடிந்து வாயைத் திறந்து ஏதாவது கொடுக்க ஆரம்பித்தால், ஒரே அழுகைதான். உடனே ராகவ் ஓடி வந்து அவளை சமாதானப் படுத்துவான்.

ராகவ் அலுவலகம் செல்லும் நேரத்தில் சமத்தாக பாட்டியிடம் எல்லாம் செய்து கொள்ளும் சுபாக்குட்டி, அப்பாவின் தலையைக் கண்டுவிட்டால் போதும். பாட்டி வேண்டாம், யாரும் வேண்டாம் என்று அவனிடம் ஓடிவிடுவாள். ராகவும் அலுக்காமல் சளைக்காமல் எல்லாம் செய்வான். அவளைக் குளிப்பாட்டுவதும் அவளை அலங்காரம் செய்வதும் ராகவ்தான்.

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின்பு பாடம் சொல்லித் தருவதும் ராகவ் தான். ராத்திரி படுக்கும் போது அவன் மேல் காலைப் போட்டுக் கொண்டு அவன் கதை சொல்லக் கேட்டுக் கொண்டு, அவள் தூங்கும் அழகே தனி. குழந்தை நடுவில் படுத்திருந்தாலும் அதையும் தாண்டி ஜானகியின் மேல் கையைப் போடுவான் ராகவ். அவன் விரல்களுடன் தன் விரல்ளைக் கோத்துக் கொண்டு அப்படியே அவன் கையின் சூட்டை அவள் அப்படியே தனக்குள் ஏற்றுக்கொள்ளும் சுகமே தனி என்று ஜானகி கடவுளுக்கு நன்றி சொல்வாள்.

சுபாக்குட்டிக்கு 11 வயது ஆகி அவள் 6 வது கிளாசுக்கு வந்துவிட்டாலும் இன்னும் எதுவும் மாறவில்லை என்பதுதான் உண்மை. படிப்பில் மகா சுட்டி சுபா . எப்பவும் வகுப்பில் முதல். விளையாட்டு, டான்ஸ் பாட்டு எதிலும் முதல் தான். ஆனால் அப்பா செல்லம் பாட்டி செல்லம் என்று சுபா மிகவும் பிடிவாதக்காரியாக வளருவதை பார்த்து ஜானகிக்கு ஒரே கவலை. ஜானகியால் எவ்வளவு முயன்றும் அவளை சரி செய்ய முடியவில்லை,.

பாட்டி ஏதாவது கடிந்துக் கொண்டால் உடனே தன் அப்பாவிடம் ஓடி பிழிய பிழிய அழுவாள். உடனே ராகவ் தன் தாயாரிடம் “குழந்தை தானெ அம்மா – தானே சரியாகி விடுவா – ஜானகி வேற பாதி நேரம் இருக்க முடிவதில்லை – அதனாலே குழந்தையை ஒண்ணும் சொல்லாதே” என்று அவள் வாயை அடைத்து விடுவான்.

இதை இரண்டோரு முறை கேட்ட ஜானகி வேலையை விட்டு விடலாமா என்று கூட நினைத்தாள் ஆனால் வேலையை விட இது சரியான நேரமில்லை என்று அவளுக்கே தோன்றியது. ஏனென்றால்– அந்த நேரம் அகர்வால் ஏஜென்ஸிக்கு அவள் வேலைக்கு வருவது மிக அத்தியாவசியம் என்று ஜானகிக்கே தெரிந்திருந்தது. நிறைய வேலைகள் பாதியில் நின்றிருந்தது.

அதுவும் அந்த நேரத்தில் அந்த பேங்கின் ஒரு கிளையில் அவர்கள் ஒரு பெரிய ஊழலைக் கண்டு பிடித்திருந்தார்கள். அது பற்றி மேலும் கண்டறிய அவர்கள் நிறைய வேலை பண்ண வேண்டியிருந்தது. மேலும் அந்த இடத்தில் புதிதாக வேலை செய்ய யாரையும் போட்டால் அந்த ஊழல் விஷயம் வெளியில் தெரிந்து ஊழல் செய்பவர்கள் அலெர்ட் ஆகி விடக் கூடிய சாத்தியம் அதிகம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

அவளை நம்பி ஏஜென்சியை ஆரம்பித்து, அதுவும் அவள் கர்ப்பமாக இருந்த நாட்களில் அவளுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்த, அகர்வால் ஏஜேன்ஸிக்கு திரும்ப செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக அவள் மட்டுமல்ல, ராகவும் நினைத்தான்.

அதனால் குழந்தையை மாமியாரும் ராகவும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிகையுடன் அவள் முழு மூச்சாக வேலையில் மூழ்கினாள். அதுவும் எந்தக் கிளையில் ஊழல் கண்டுபிடித்தார்களோ அந்தக் கிளை சென்னையிலிருந்து கொஞ்சம் தள்ளி கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு ஊர்.

அந்த ஊரின் முக்கியமான தொழிலே தோல் பதனிடுவது தான். சின்னதாகவும் பெரியதாகவும் பல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அந்த ஊரில் இருந்தன. வெளிநாட்டு பணம் மிகவும் புழங்கும் ஊர் அது, அதனால் தான் பேங்க் அங்கே ஒரு கிளையை அமைத்திருந்தது. ஊரில் முக்காவாசி பேரும் அந்த தோழிலையே செய்ததால் அந்த ஊரில் பெரிய முன்னேற்றம் என்று எதுவுமே கிடையாது.

படித்தவர்கள் அதிகம் இல்லாத ஊர் அது. பேங்க் அதிகாரி சொன்ன இடத்தில் கையெழுத்தோ இல்லை கைநாட்டோ வைப்பார்கள். பேங்க் அதிகாரிகள் படித்தவர்கள். அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும் வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த ஊர். அதனாலேயே ஊழல் நடக்கும் வாய்ப்பையே பேங்க் ஊழியர்களுக்கு அந்த ஊர்க் காரர்களே கொடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அந்தக் கிளையில் நடந்து வந்த ஊழல் மிக சாமர்த்தியமாக யாரும் கண்டு பிடிக்க முடியாமல் செய்து வந்த ஊழல். பல தொழிற்சாலை அதிபர்கள் அங்கு காசோலை என்று ஒன்று இருப்பதையே அறியாதவர்கள். எல்லாமே பண பரிவர்த்தனைதான் அங்கு.

பணம் பேங்கில் டெபாசிட் செய்வதென்றாலும் ‘நோட்டு’ தான். பேங்கில் கடன் வாங்குவது என்றாலும் ‘நோட்டு’ தான் அவர்களுக்கு. அங்கு பணத்தேவை மிகவும் அதிகம். அதுவும் சில சமயம் இன்று பணம் கடன் வாங்கி தோல் வாங்கி, மறுநாளே பதனிட்டு லாபத்துடன் அந்த பணம் அவர்களுக்கு திரும்பி வந்து விடும். அதனால் அந்த ஊரில் நாள் வட்டியில் கடன் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் அதிகம். அதுவே அந்த பேங்கில் ஊழலுக்கு விதையிட்டது என்பதுதான் உண்மை.

டெபாசிட் செய்யச் சொல்லிக் கொடுத்தப் பணத்தை வரவில் காண்பிக்காமல், அதை அப்படியே கந்து வட்டிக் காரர்களுக்குக் கொடுத்து, அவர்களுக்கு வரும் நாள் வட்டியில் ஒரு பகுதி பேங்க் ஊழியர்களுக்கு வந்து விடும். பணம் திரும்பி வந்தவுடன் மறுநாளே அது டெபாசிட்தாரர்களின் அக்கௌன்டில் வரவு வைக்கப் படும்.

படிக்காதவர்கள் ஆனதால் அவர்களுக்கு பாஸ்புக் என்னவென்றுக் கூடத் தெரியாது. இப்படி வரவு வைக்கவேண்டிய பணத்தைக் கந்து வட்டிக் காரர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து ஊழல் செய்வது, ஜானகிக்கும் அனிலுக்கும் அகஸ்மாத்தாகத்தான் தெரிந்தது.

ஒருமுறை அவர்கள் ஒரு அறையில் உட்கார்ந்து தணிக்கை செய்து கொண்டிருப்பது தெரியாமல், அடுத்த அறையில் பேங்க் காஷியர் ஒரு கந்து வட்டிக்காரரிடம் கணக்கு வழக்கு பேசுவது அவர்கள் காதில் விழுந்தது.

முதலில் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் பேச்சு முடிந்தவுடன் அந்த ஊழியர் ஏதோ காரியமாக அவர்கள் இருந்த அறைக்கு வர, அங்கு அவர்களைக் கண்டு அவர் முகம் பேயறைந்தது போல் ஆனது. அவர் முகத்தைப் பார்த்தவுடன் தான் ஏதோ தவறு நடக்கிறது என்று ஜானகிக்கு அனிலுக்கும் தோன்றியது.

திரும்பி வருகையில் இருவரும் தங்களுக்கு தோன்றிய சந்தேகத்தைப் பற்றி பேசினார்கள். இனிமேல் அந்த கிளையில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார்கள். அதனாலேயே கொஞ்சம் தள்ளி இருந்தாலும் அந்தக் கிளைக்கு வாரத்தில் இரண்டு மூன்று முறை தணிக்கைக்கு செல்வது என்று வைத்துஃப்க் கொண்டார்கள்.

அவர்கள் சந்தேகத்தை ஊர்ஜீதம் செய்வது போல், ஒரு முறை ஒரு கஸ்டமர், பேங்க் கேஷியரிடம் “என்ன ஸார், காலயில் தானே ஒரு லட்சம் டெபாசிட் செய்ய கொடுத்தேன். இப்போ ₹. 50000/- எடுக்க வேண்டுமென்றால் இன்னும் வரவில் வரவில்லை என்கிறீர்கள்” என்று கேட்க, அதற்கு அந்தக் கேஷியர்,

“பணம் எல்லாம் சென்னை மெயின் ஆபிஸில் வரவு வைத்து, பிறகுதான் உங்க அக்கௌன்டுக்கு வரும். சென்னை ஆபிஸிலிருந்து இன்னும் உங்க அக்கௌன்டுக்கு பணம் வரவு வைத்த விவரம் வரவில்லை. அது வந்தவுடன் தான் நீங்க பணம் எடுக்க முடியும்” என்று சொல்வதைக் கேட்டார்கள்.

பாவம் பணம் போட்டவரோ “இப்ப என்ன செய்யறது, சார்., பணம் அர்ஜன்டா வேணுமே” என்று சொல்ல, கேஷியர், ஒரு கந்து வட்டிக்காரர் பெயரைச் சொல்லி “அவரிடம் என் பெயரைச் சொல்லுங்க – வட்டி குறைவாகத்தா கேப்பார். நாளை உங்க பணம் வரவு வந்தவுடன் திருப்பிடலாம்” என்று ஏதோ அவருக்கு உதவி செய்பவர் போல் சொல்ல, பணம் போட்டவரும், அந்தக் கேஷியருக்கு பல முறை நன்றி சொல்லி சென்றார்.

அடுத்த அறையிலிருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜானகியும் அனிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பாவம் அந்த கஸ்டமரின் பணத்தையே அவருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து அதுக்கு நன்றியை வேறு வாங்கிக் கொண்ட கேஷியரின் சாமர்த்தியம் அவர்ளுக்கு ஒரு பக்கம் ஆச்ச்ரியம் கொடுத்தாலும் இன்னோரு பக்கம் பாவம் இந்த வெள்ளந்தி மனிதர்கள் படிப்பறிவு இல்லாமல் இப்படி ஏமாந்துப் போகிறார்களே என்று கோபமும் வந்தது.

ஆனால் அப்பொழுதே கேட்டால் அந்தக் கிளையில் ஊருடுவி இருக்கும் ஊழலை முழுக்க கண்டுப் பிடிக்க முடியாது – இதில் யாருக்கெல்லாம் கை இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றால், இந்த விஷயம் தங்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் முதலில் தீர்மானம் செய்துகொண்டார்கள்.

முழு தணிக்கை செய்து ஊழலை முழுதாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஜானகியும் அனிலும் மிகவும் உறுதியாக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த வேலையில் இருந்த ஈடுபாடே ஜானகிக்கும் ராகவுக்கும் இடையே உள்ள உறவைக் சிதைக்கப் போகிறது என்பது மட்டும் அவளுக்குத் அந்த நேரம் தெரியவில்லை.


அத்தியாயம் 9

ஜானகியும் அனிலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊழலின் உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடித்தார்கள். அதில் அந்தக் கிளையின் பிரான்ச் மானேஜரே உள்கை என்பதையும் கண்டுபிடித்த பிறகு தான் அவர்கள் இந்த விஷயத்தையே பெரிய அகர்வாலிடம் சொன்னார்கள்.

பெரிய அகர்வால் அசந்தே போய் விட்டார். ஒரு சின்ன ஊரிலுள்ள கிளையில் இவ்வளவு பெரிய மொசடியா என்று அவருக்கு ஒரே பிரமிப்பு. அதன் பிறகு இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் மூவரும் கலந்து ஆசோசித்தார்கள்.

இது அந்த பேங்கின் சேர்மேனுக்குத் தெரிய வேண்டிய விஷயம் என்பதால் முதலில் அவருடன் ஒரு அப்பாயின்ட்மென்ட் உறுதி செய்து கொண்டார்கள். பிறகு மூவரும் பேங்கின் சேர்மேனை சந்தித்துப் பேசினார்கள். பிறகு சேர்மேனின் அறிவுரைப் படி கண்டு பிடித்த உண்மைகளை எல்லாம் ஒரு டாக்குமென்டாக தயார் செய்து அவரிடம் கொடுத்தார்கள்.

சேர்மேன் மறுநாள் அவர்களை ஒன்றுமே நடக்காதது போல் அந்தக் கிளையில் தணிக்கையை நடத்தச் சொன்னார். அதன்பிறகு அவர் எல்லாம் பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். இந்த ஊழல் விஷயம் பற்றியெல்லாம் ஜானகி ராகவ்க்கும் சொன்னபொழுது , அவன் பயந்தே போய் விட்டான். அவளுக்கு ஏதவது ஆபத்து வந்துவிடுமோ என்பதுதான் அவன் பயம்.

ஜானகி அவனுக்கு சமாதானம் சொல்லி மறுநாள் அந்த ஊழலுக்கு ஒரு முடிவு வந்து விடும் என்றும் சொன்னாள். மறுநாளும் வந்தது. காலையில் எழுந்தவுடனேயே ஒரே மழை. நல்ல வேளையாக அன்று ராகவுக்கு சுபாக்குட்டியை கவனிக்க வேண்டிய அவசியமி இல்லை என்று ஜானகி நினைத்துக் கொண்டாள்.

ஏனென்றால் ஸ்கூலுக்கு ஒரு வாரம் லீவ் என்பதால் சுபாக்குட்டியை ஜானகியின் தாயார் பேத்தி தன்கூட இருக்கட்டும் என்று தங்கள் வீட்டிற்குக் கூட்டிப் போயிருந்தார். ரெண்டு பாட்டிகளுக்கும் பேத்தியைத் தன் கூட வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரே போட்டி.

ஸ்கூல் இருக்கும் நாட்களில் சுபாக்குட்டி ராகவின் அம்மா கூட இருப்பாள் என்றும் ஸ்கூல் லீவ் விட்டதும் உடனே ஜானகியின் அம்மா அழைத்துச் சென்று தன் கூட லீவ் முடியும்வரை வைத்துக் கொள்வது என்றும் அவர்களே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் ஸ்கூல் லீவில் சுபாக்குட்டி ஜானகியின் தாயார் வீட்டில் தாத்தா, மாமா, சித்தி என்று ஜாலியாக இருப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் இதில் கஷ்டப்படுவது என்னவோ ராகவ்தான். சுபாக்குட்டி இல்லாமல் அவனுக்கு வீடே வெறிச்சென்று ஆகி விடும்.

அனிலும் ஜானகியும் காலை சீக்கிரமே கிளம்பி அந்தக் கிளைக்குச் சென்று விட்டார்கள். சேர்மேன் தனக்கு நம்பகமான ஒரு அதிகாரியை அந்தக் கிளைக்கு அனுப்பினது மட்டுமில்லை, கூடவே போலிஸுக்கும் அறிவித்து விட்டார், அந்த அதிகாரியுடன் கூடவே போலிஸும் நுழைய அந்தக் கிளையில் அன்று ஒரே களேபரம்.

பிரான்ச் மானேஜர், கேஷியர் மற்றும் சில ஊழியர்களை விஜாரித்த அந்த அதிகாரியும் போலிஸும் பிரான்ச் மானேஜர், கேஷியர் மற்றும் அந்தக் கந்து வட்டிக் காரரையும் கைது செய்தது போலிஸ். சென்னையிலிருந்து வந்த அந்த அதிகாரி தன் வேலை முடிந்தது என்று கிளம்பி விட்டார்.

போலிஸுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருந்ததால் அனிலும் ஜானகியும் அங்கேயே இருந்து அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்து விட்டுக் கிளம்பும் பொழுது மணி 6.00 ஆகிவிட்டது. கிளம்பும் பொழுதே ஜானகி அன்று தினத்தைவிட வருவதற்கு லேட் ஆகலாம் என்று சொல்லியிருந்தாள். அதனால் அவளைப் பற்றி ராகவன் கவலைப் படமாட்டான் என்று அவள் மனதில் நிம்மதி.

மழை வேறே கொட்டிக் கொண்டே இருந்தது. அனில் காரை எடுத்தான். மழையினால் மெள்ளமாகத்தான் ஓட்ட முடிந்தது. போகும் வழியெல்லாம் கிராமங்கள் ஆனதால் ஓடை போல் அங்கங்கே தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் கார் ரொம்ப மெதுவாகத்தான் சென்றது.

இன்னும் மூணு மணி நேரத்திலாவது வீடு போய் சேர முடியுமா என்று ஜானகி யோஜித்துக் கொண்டே இருக்கும் பொழுது, அனில் திடுமென்று காரை நிறுத்தினான்.

வயலின் ஓரத்தில் போய் கடகடவென்று வாந்தி எடுத்தான். ஜானகி பயந்துப் போய் விட்டாள். மத்தியானம் கையில் கொண்டு வந்த சாப்பாட்டைத்தான் அவர்கள் சாப்பிட்டார்கள். தண்ணிரும் அவர்கள் கையில் கொண்டு வருவதுதான்.

அது சின்ன ஊர் என்பதால் ஹோட்டல் சாப்பாடு எதுவும் நன்றாகக் கிடைக்காது என்பதால் எப்போழுதுமே கையில் சாப்பாடு கொண்டு வருவதுதான் வழக்கம். ஏன் வாந்தி எடுக்கிறான் என்று தெரியாமல் காரிலிருந்து இறங்கி அனிலைப் பார்த்தாள். அவன் கையில் இருந்த பாட்டில் தண்ணீரில் வாயைக் கொப்பளித்து விட்டு அவள் பயத்தைப் போக்க சிரித்துக் கொண்டே வந்தான்.

“ஜானகி – என்ன ஆச்சு என்றுத் தெரியவில்லை. ஒருவேளை நாம் பேங்கில் குடித்த டீ ஒத்துக் கொள்ள வில்லையோ என்னவோ” என்று சொல்லிக் கொண்டேக் கார் கதவைத் திறந்தான். ஜானகியும் காரில் ஏறிக்கொள்ள காரைக் கிளப்பினான்.

கார் கொஞ்ச தூரம் மெதுவாகச் செல்ல, திரும்ப காரை நிறுத்தி வாந்தி எடுத்தான், இது மாதிரி நான்கு முறை அவன் வாந்தி எடுத்ததும் ஜானகிக்கு ரொம்பக் கவலையாகி விட்டது.

ஏதாவது டாக்டரைப் பார்த்தோ இல்லை மெடிகல் ஷாப்பிலோ மருந்து வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று அவள் சொன்னதும் அவனும் ஒத்துக் கொண்டான். அவர்கள் அப்பொழுது இருந்தது ஒரு சின்ன கிராமம். மழை பெய்து கொண்டிருந்ததால் ஜன நடமாட்டமே இல்லை.

அதற்குள் அனிலுக்கு ஒருமாதிரி காய்ச்சல் போல வந்து நடக்கக் கூட முடியாமல் தள்ளாடினான். எப்படியொ ஒரு மருந்துக்கடையைத் தேடிக் கண்டு பிடித்து, பூட்டியிருந்த கடையை பின்னாலேயே குடி இருந்த கடைக்காரரை விட்டு திறக்க வைத்து வாந்திக்கும் காய்ச்சலுக்கும் மருந்து வாங்கினார்கள்.

ஆனால் அவர் சொன்ன இன்னும் ஒரு விவரம் அவர்களை இன்னும் கவலையில் ஆழ்த்திவிட்டது. அவர் சொன்னது இதுதான். அந்தக் கிராமத்தையும் அடுத்த கிராமத்தையும் இணக்கும் ஒரு பாலம் அன்று பெய்த பெரும் மழையில் இடிந்து விழுந்து விட்டது எனவும் அந்தக் கிராமத்தை விட்டு வெளியே செல்ல ஒரே வழி அந்தப் பாலம் ஒன்றுதான் என்றும் சொன்னார்.

மறுநாள் காலைதான் அந்தப் பாலம் சரியாகும் – அதுவரை அந்தக் கிராமத்தை விட்டு வெளியே போகவே முடியாது என்றும் அவர் ஆணித்திரமாகச் சொல்ல ஒரு நிமிடம் ஜானகிக்கும் அனிலுக்கும் என்ன பண்ணுவது என்றுத் தெரியவில்லை.

பிறகு ஜானகிதான் அந்தக் கிராமத்தில் தங்குவதற்கு ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா என்றுக் கேட்டாள். நல்ல வேளையாக அந்தக் கிராமத்திலும் ஒரு சின்ன ஹோட்டல் இருப்பது தெரியவந்தது. வேறு ஒரு வழியும் தெரியாததாலும்ம் அனிலுக்கு காய்ச்சல் ஏறிக் கொண்டே போனதாலும் அவர்கள் அந்த ஹோட்டல் விலாசம் கேட்டுக் கொண்டு அங்கே சென்றார்கள்.

அங்கு சென்றால் ரிஸப்ஷனில் ஒரு குடிகாரன் ரூம் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தான். ரிஸப்ஷனில் இருந்தவரோ “ஒரே ஒரு ரூம் தான் இருக்கிறது. அது ஃபேமிலிக்குத்தான் கொடுக்கணும்னு” ஓனர் சொல்லியிருக்கார் என்று அவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அதைக் கேட்டதும் அனிலும் ஜானகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த ரூமையும் விட்டு விட்டால் அனில் இருக்கும் நிலையில் படுப்பதற்குக் கூட இடம் இல்லாமல் போய் விடும் என்று அவர்களுக்கு நன்றாகப் புரிந்தது. இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ள வில்லை.

ஆனால் ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிந்ததால்., இருவரும் ரிஸப்ஷனில் இருந்தவரிடம் சென்று , Mr.and Mrs.Anil என்ற பெயரில் ரூம் புக் பண்ணினார்கள். அவர்கள் காரில் வந்தததாலும், பார்ப்பதற்கு கௌரமாக இருந்ததாலும், அவர்களுக்கு உடனே ரூம் கொடுத்து விட்டார்,

அவர்களும் பாலம் உடைந்துவிட்டதால் தாங்கள் அந்த ஹோட்டலில் தங்குவதாகக் கூறியதும் ஏற்பதாக இருந்ததால், ரூம் பாயை விட்டு அவர்களை ரூமில் கொண்டு விடும்படிக் கூறினார். அதுவும் தவிர அவர் அவர்களிடம் ரூமை நன்றாகத் தாளிட்டுக் கொண்டு தூங்கும் படியும் கூறினார்.

அந்தக் குடிகாரர் அவர்களைப் பார்த்துக் கன்னா பின்னா என்றுக் கத்தியது கேட்டு ஜானகிக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. அந்தக் குடிகாரரை நினைத்து தான் ரிஸப்ஷனில் இருந்தவரர் ரூமை நன்றாகத் தாழிட்டுக் கொண்டு தூங்கும்படிச் சொன்னார் என்று அவர்களுக்குப் புரிந்தது.

அந்த ஹோட்டல் ரூம் சுத்தமாகவே இருந்தது. மற்றபடி வேறு சௌகர்யம் ஒன்றுமில்லை. படுக்கை தவிர ஒரே ஒரு சேர் மட்டுமே இருந்தது, இரண்டொரு இடங்களில் தண்ணீர் சொட்டிக் கொண்டே இருந்தது.

ரூம்பாயிடம் 5 ரூபாய் கொடுத்து அவனை அனுப்பி விட்டு ரூமைத் தாளிட்டுக் கொண்டார்கள். அனிலால் நிற்கக் கூட முடியவில்லை என்பதால் மருந்து கொடுத்து அவனை படுக்கையில் படுக்கச் சொல்லிவிட்டு தான் அந்தச் சேரில் அமர்ந்துக் கொண்டாள்.

அனில் மருந்து வேலை செய்ய நன்றாகத் தூங்க ஆரம்பித்து விட்டான். ஜானகிக்கு தூக்கமே வரவில்லை. இந்த மாதிரி கிளை தணிக்கைக்கு போகும் போது எவ்வளவு தாமதமானாலும் இரவுக்குள் வீடு சென்று விடுவது தான் வழக்கம். இந்த மாதிரி இரவு வீடு போக முடியாமல் இது வரை ஆனதே இல்லை. ராகவ் தன்னை நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பானே என்ற கவலை தான் அவளை வாட்டியது.

வீட்டில் டெலிஃபோன் வசதி கிடையாததால் அவனுக்கு எப்படி செய்தி சொல்லுவது என்ற கவலை அவளுக்கு. அதுவும் இந்தக் குக்கிராமத்தில் டெலிஃபோன் இருக்குமா என்பதே சந்தேகம். திடுமென்று ஒரு கூக்குரல் கேட்க பயந்தேப் போய் விட்டாள். பிறகுதான் அந்தக் குடிகாரர்தான் கத்துவது என்று தானே முடிவு செய்து கொண்டாள்.

மறுநாள் காலையிலாவது எல்லாம் சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்,. அப்படியே அவள் அறியாமல் கண் அசந்து விட்டாள் போல் இருக்கிறது.

“ஜானகி ! ஜானகி!’ என்று அனிலின் குரல் கேட்டு திடுமென்று கண் விழித்தாள். ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள். பிறகு தான் தாங்கள் ஹோட்டலில் இருப்பது புரிந்து அனிலைப் பார்த்தாள்.

அனில் அவளிடம் “ஜானகி ! பாலம் ஒரு பக்கம் சரி பண்ணி விட்டார்களாம். நாம் இப்பொது கிளம்பினால் 9.00 க்குள் வீடு போய் சேர்ந்துவிடலாம். மழையும் நின்று விட்டது. காஃபி மட்டுமே வேண்டுமென்றால் இந்த ஹோட்டலில் கிடைக்கும்” என்றான்.

ஜானகி அனிலைப் பார்த்து “உங்க ஹெல்த் எப்படி இருக்கு – டிரைவ் பண்ண முடியுமா?” என்றுக் கேட்க, அனில் சிரித்துக் கொண்டே “மருந்து நல்ல மருந்து. இப்போ எனக்கு ஒண்ணும் இல்லை. என்னால் டிரைவ் பண்ணமுடியும்” என்று சொல்ல, காஃபி மட்டும் குடித்துவிட்டு, பில் ஸெட்டில் பண்ணி விட்டுக் கிளம்பினார்கள்.

அங்கே சென்னையில் ராகவ் கவலையில் இரவு பூரா தூங்கவே இல்லை. அந்த ஊழல் கேஸ் கண்டு பிடித்ததில் ஜானுவிற்கு என்னவோ ஆபத்து என்று அவனுக்கு பயம் வந்து விட்டது. சென்னையில் மழை குறைந்து விட்டதால், மழையினால் அவர்கள் வர முடியாமல் போயிருக்கும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை.

அந்த பேங்க் ஊழல் கூட்டம் ஜானுவை என்ன பண்ணியிருப்பார்களோ என்று நினைத்து நினைத்து அவனுக்குக் பைத்தியமே பிடித்து விடும் போல் ஆகி விட்டது. போலிசுக்கு தானே போய் “தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாமா என்று கூட யோஜித்தான். பிறகு காலை வரை பார்க்கலாம் என்று அவனே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

அவன் தாயார் ராஜம் வேறே தூக்கத்தின் நடுவில் அவ்வப் போது எழுந்து வந்து ‘ ஜானகி இன்னும் வரலையா?” என்றுக் கேட்டது வேறே அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. எரிச்சலும் பயமும் சேர்ந்து பெரிய கோபமாக அவனுள் உருவாகியிருந்தது. அந்தக் கோபத்தில் பைத்தியக்கார எண்ணமெல்லாம் அவன் மனதில் தோன்றி தோன்றி மறைந்தது.

காலையில் அவன் பயமும் கோபமும் கலந்த உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் பொழுது ஜானகியும் அனிலும் காரில் வந்து இறங்கினார்கள். ஜானகி அனிலை உள்ளே கூப்பிட, அனில் ‘ இல்லை வீட்டில் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள் “ என்று மறுத்துவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.

ஜானகி உள்ளே நுழைந்தது, அனிலிடம் பேசியது எல்லாம் அதுவரை ராகவின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. எப்பொழுதும் எல்லாவற்றையும் பொறுமையுடன் கையாளும் ராகவ் ராத்திரி பூரா தூங்காமல் இருந்ததில் பைத்தியக்காரன் மாதிரி மாறி இருந்தான்.

ஜானகி ‘ராத்திரி மழை” என்று ஆரம்பிக்கும் பொழுதே, ராகவ்” ஜானு! உனக்கு மூளை எதுவும் இல்லையா? ராத்திரி பூரா எங்கே இருந்தே – இங்கே எல்லோரும் கவலைப் படுவா என்று உனக்குத் தெரியாதா?” என்று உரக்கக் கேட்டான்.

ஜானகி அவன் குரலைக் கேட்டு பயந்து போய் விட்டாள். உடனே “நாங்க வரும் வழியில் பாலம் உடைந்து போய் விட்டது. அனிலுக்கு காய்ச்சல் வந்து விட்டது. கிராமத்தை விட்டு வெளியே வர பாலம் ஒண்ணுதான் வழி என்பதால் நாங்க அந்த கிராமத்து ஹோட்டலில் தங்கினோம். அந்த ரூம் கிடைச்சதே ரொம்ப அதிருஷ்டம்தான். ஒரே ஒரு ரூம்தான் இருந்தது. அதுக்கும் ஒரு குடிகாரன் வேணும்னு சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

நல்ல வேளையாக அந்த ஹோட்டல் காரர் ஃபேமிலிக்குத்தான் கொடுப்பேன் என்று சொல்லி எங்களுக்குத் தந்தார். அனில் மட்டும் நாங்க ஃபேமிலி என்று சொல்லாம இருந்தா எங்களுக்கு ரூம் கிடைச்சிருக்காது. அப்ப அனிலுக்கு இருந்த காயச்சலுக்கும், அந்த குடிகாரன் அடிச்ச கூத்துக்கும் நல்ல வேளையாக ரூம் கிடைச்சதால் நாங்க பொழைச்சோம். நீங்க எல்லாம் கவலைப் பட்டுண்டு இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும். ராத்திரி ரொம்ப நேரம் தூங்காம கவலைப் பட்டுண்டே இருந்தேன். ஆனால் எப்படி உங்களுக்கு விஷயம் தெரியப் படுத்தறதுன்னுதான் எனக்குப் புரியலை. அதைப் பத்திதான் ராத்திரி நான கவலைப் பட்டுண்டே இருந்தேன்" என்று எப்படியோ சொல்லி விட்டாள்.

திக்கி திக்கி அவள் சொன்னதைக் கேட்டதும் ராகவ் அவள் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்காளே என்று ராகவ் வருத்தப் படுவான் என்று ஜானகி நினைத்துக் கொண்டிருந்த பொழுது ராகவ் அவளிடம் கேட்ட கேள்வி “நீங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில் தங்கினீர்களா” அதைக் கேட்டதும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. தன்னோட ராகவா இந்த மாதிரி அசிங்கமான ஒரு கேள்வி கேட்பது என்று நினைத்து அவளால் தாங்கவே முடியவில்லை.

கூட இருந்த ராஜம், ராகவிடம் “ என்னடா – பேசறே நீ அவதான் சொல்றாளே – வேற வழி இருக்கலைன்னு – நீ புரிஞ்சுதான் பேசறியா?” என்றுக் கேட்க, ராகவ்,

“அம்மா! எனக்கு அவா ரெண்டு பேரைப் பத்தியும் ஒரு கவலையும் இல்லை. என் மனைவி எங்கே இருந்தாலும் தன்னைக் காப்பாத்திப்பான்னு எனக்குத் தெரியும். ஆனா ஒரே ரூமிலே ராத்திரி பூரா இவங்க ரெண்டு பேரும் புருஷன் மனைவின்னு தங்கியதைப் பத்தி ஊர் என்ன சொல்லும் – அதை நீ யோஜிச்சியா? நாம சரியாக இருக்கணும் அது மாத்திரமில்லை ஊர் கண்களுக்கும் நாம் சரியாகத் தெரியணும் இல்லையா? என் மனைவி ராத்திரி பூரா என்னைத் தவிர வேறே ஒருத்தனுடன் ஒரே ரூமில் தங்கியிருந்தான்னு ஊர் பேசறதை என்னால் தாங்கவே முடியாது .

ஜானகி இதைப் பத்தியெல்லாம் யோஜனை பண்ணியிருக்க வேண்டாமா? இவ்வளவு வருஷம் என் கூடவே பழகியும் என் குணம் அவளுக்குத் தெரியலையே? எனக்கு எந்த விஷயம் பண்ணினாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கணுனு இவளுக்குத் தெரியாதா? ஏன் முதமுதல்லே இவ கூட ஆட்டொவில் வரும்போது கூட நான் டிரைவர் சீட்டிலேதான் உட்கார்ந்து வந்தேன். ஏன்? யாரும் எங்களைப் பத்தி ஒண்ணும் பேசிடக் கூடாதே என்று தானே? என்று கேட்க,

அதையெல்லாம் கேட்ட ஜானகிக்கு தன் கணவன் ராகவ் தானா இதையெல்லாம் பேசுவது என்று மயக்கமே வந்து விட்டது. ஆனால் ராஜம் விடாமல், ராகவிடம்,

" ராகவ் ! அவர்கள் இருந்த நிலையில் அவர்களால் என்ன பண்ணியிருக்கமுடியும் என்று நினைக்கிறே?" என்று கேட்க,

ராகவ் " ஆவள் காரிலேயே உட்கார்ந்திருக்கலாம். இல்லை ஹோட்டல் ரிசப்ஷனிலேயே உட்கார்ந்து இருந்திருக்கலாம் . எது வேணா பண்ணி யிருக்கலாம் . ஆனால் அவர்கள் 'கணவன் மனைவி' என்ற பெயரில் ஹோட்டலில் ஒரே ரூமில் இருந்ததை என்னால் ஏத்துக் கொள்ளவே முடியாது. அதற்காக் ஜானகி தப்பானவ என்று நான் சொல்லலை. ஆனா அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில் தங்கினதை ஊரும் ஒத்துக் கோள்ளாது. இந்த ஊரில்தான் நாம் இருக்கிறோம் என்பதால் என் மனமும் ஒத்துக் கொள்ளாது" என்று கொடுத்த பெரிய சொற்பொழிவை கேட்ட ஜானகியின் இதயம் அப்படியே உடைந்து விட்டது.

அதன் பிறகு அவர்களிடையே ஒரு சுவர் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மற்றவர் எதிரில் எப்பொழுதும் போல் பேசினாலும் படுக்கை அறையில் அவர்கள் அன்னியர்கள் போல்தான் இருந்தார்கள். அதுவும் ஜானகிக்கு உலகமே இருண்டு விட்டது போல் ஆகிவிட்டது. "என்னோடே என்னோட புருஷன்" என்று தான் பெருமையாக நினைத்த கணவனால் இந்த மாதிரி யெல்லாம் கூட நினைக்க முடியுமா" என்று நினைத்து நினைத்து அவளுக்கு ஒரே ஆற்றாமையாக வந்தது. இனி தங்களால் பழையபடி இருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அதேமாதிரி ராகவன் அவள் மேல் கை போடுவதும் அதுவாகவே நின்று விட்டது. ஆனால் வெளியில் எல்லோருக்கும் எதிரில் அவர்கள் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. பேசாமலேயே அவர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டாற்போல் சுபாக்கு எதுவும் தெரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அதேபோல் வெளியில் மற்றவர்கள் எதிரில் ராகவ் காய் நறுக்குவதையோ இல்லை ஜானகிக்குக்
காப்பி போட்டுத் தருவதையோ நிறுத்தவில்லை. எல்லாம் எப்பவும் நடந்தது போலவே நடந்தாலும்
ஜானகிக்கு தான் ராகவ் ஒரு அன்னியன் போல் தோன்றினான். அத்தனை அன்பு காட்டிய தன் மேல் கை போட்டுத் தூங்கிய ராகவை தான் இழந்து விட்டோம் என்பது அவளுக்கு உறுதி ஆகி விட்டது. அதனால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கத் தொடங்கி விட்டாள் ஜானகி.


அத்தியாயம் 10

சுபாக் குட்டி வளர்ந்தாள் . சுபாக்குட்டி மிஸ் சுபா ஆனாள். சுபா என்றுமே பிடிவாதக்காரிதான்.. ஒரே பெண் என்பதால் அப்பா செல்லம் அதிகம். ஜானகி பெண்குழந்தை ஆயிற்றெ என்று ஏதாவது புத்தி சொல்லப் போனாலும் அவள் கணவர் ராகவ் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார். அதுவும் படிப்பு, பாட்டு, நாட்டியம் என்று சுபா பல பரிசுகள் வாங்கி வருகையில் ‘என் பெண் மாதிரி உண்டா?” என்று பெருமை பட்டுக் கொண்ட ராகவனால் , சுபா தன் கூட வேலை பார்க்கும் மோகனை காதலிப்பதையும் அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிரகடனம் செய்ததையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இத்தனைக்கும் மோகன் IIT யில் முதல் மாணவனாக வந்து அதன்பிறகு அமெரிக்காவில் MBA பட்டம் வாங்கி பெற்றோர் விருப்பத்திற்காக இந்தியாவில் வேலை ஏற்று பெரிய பதவியில் இருப்பவன்.. என்ன – அவர்கள் குலம் இல்லை. முதலியார் வகுப்பைச் சேர்ந்தவன்.

விஷயம் தெரிந்தவுடன் ராகவன் குதி – குதியென்று குதித்தார்..” நம்ம சாதி ஜனம் என்ன சொல்லும் – மோகன் வேண்டாம் – அவனை விட நல்ல பதவியில் , இவனைவிட அழகா நம்ம சாதியில் நல்ல மாப்பிள்ளையாக நான் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்,. ஜானகிக்கு இந்த விஷயத்தில் பெரிய அபிப்பிராயம் ஒன்றும் இல்லாவிட்டாலும் கணவரின் மனம் தெரிந்தவள் ஆதலால் . சுபாவிடம் “அப்பா உனக்கு நல்லதுதான் செய்வார் – அப்பா சொன்னபடி கேளேன் “ என்று நிறைய முறை சொல்லி பார்த்தாள். ஆனால் அப்பாவைவிட பல மடங்கு பிடிவாதக்காரியான சுபா “நீங்க சம்மதிச்சா நான் மோகனை கல்யாணம் பண்ணிக்கறேன். இல்லாட்டா இப்படியே இருந்துடுவேன் “ என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு அவள் வேலையில் மூழ்கிவிட்டாள்.

மோகன் வீட்டிலோ இன்னும் மோசம். சொந்தமும் சொத்தும் கைவிட்டுப் போகக்கூடாது என்ற நினைப்பில் அவர்கள் தங்கள் சொந்தத்திலேயே தூரத்து உறவு முறைப் பெண்ணை அவனுக்கு பேசி வைத்திருந்தனர்.

இந்த விஷயத்தில் மோகனிடம் கலந்துப் பேசவேண்டும் என்ற நினைப்பு கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் குடும்பத்தில் திருமணம் செய்யப்போகும் மகனின் இல்லை மகளின் சம்மதத்தை கேட்கும் வழக்கமே கிடையாது. அதனால் மோகன் வந்து சுபாவை மணக்க அவர்கள் சம்மதத்தை கேட்டபொழுது அவர்கள் வீட்டில எரிமலையே வெடித்தது என்றே கூறலாம். ஆனால் மோகனும் சுபாவும் பிடிவாதமாக தங்கள் நிலையிலிருந்து மாறாமல் இருந்ததாலும் அதுவும் அந்தஸ்து படிப்பு விஷயத்தில் இரண்டு குடும்பமும் சரிநிலையில் இருந்ததாலும் கடைசியில் இரு குடும்பத்தினரும் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டு மிக விமரிசையாக திருமணமும் நடந்தது.

மோகன் மிக பொறுமையான அருமையான கணவனாக இருந்ததால் மட்டுமே , மோகன் சுபா திருமண வாழ்க்கை அழகாக மகிழ்ச்சியாக அமைந்தது என்று சொல்லலாம்..ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகு சுபாவின் பிடிவாதகுணம் இன்னும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.. அதுவும் திருமணத்திற்கு பிறகு சுபாவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் உயர்ந்த பதவி கிடைக்க, ஜானகி ராகவன் எவ்வளவோ கூறியும் அமெரிக்காவில் இவ்வளவு உயர்ந்த பகவி கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனம் என்று கூறி கிளம்ப ஆயத்தம் செய்து விட்டாள். எல்லோரும் மோகன் வேண்டாம் என்று சொன்னால் சுபா கேட்பாள் என்று நம்பிக்கையில் இருக்க , மோகனோ சுபாக்கு உறுதுணையாக நின்று , தானும் அமெரிக்காவில் ஒரு வேலையை தேடிக்கொண்டுவிட்டான்.

அவன் இந்தியாவில் பார்த்த பதவியை விட கொஞ்சம் குறைவான நிலைதான் என்றாலும் அதைப்பற்றி யோஜிக்காமல் கிளம்பி விட்டான். அவன் அதற்கு கூறிய காரணம் “ எனக்கு ஒரு உயர் பதவி கிடைத்தால், சுபா தன் பதவியைப் பற்றி கவலைப் படாமல் கிளம்பி வர மாட்டாளா? அதே மாதிரி அவளுக்கு ஒரு நல்ல பதவி வரும்போது நான் கூட நிற்க வேண்டாமா?” என்பதுதான்.

ஜானகிக்கு இதைக் கேட்டவுடன் சுபாவின் மேலேயே கோபம் வந்தது என்றே கூறலாம். இவ்வளவு நல்ல கணவருடன் பிடிவாதத்தை குறைத்துக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டுமே என்ற கவலை வேறு,.

ஆச்சு வருடங்கள் ஓடின – நவீனா பிறந்தபோது ஜானகியும் ராகவனும் அமெரிக்கா போய் 6 மாதங்கள் இருந்து விட்டு வந்தனர். அங்கு இருந்தபோதுதான் தெரிந்தது மோகன் அருமையான கணவன் மட்டுமல்ல. அன்பான தந்தையும் கூட என்று. சுபா , குழந்தை பெற்றவுடன் தன் கடமை முடிந்துவிட்டது என்பதுபோல், அந்த மீட்டிங்க் –இந்த கால் என்று நாள் பூரா அலுவலக வேலை-தன் கேரியர்தான் முக்கியம் என்று இருக்க, மோகன் தான் நவீனாவை வளர்த்தது என்றே கூறலாம்.

நவீனாவின் நான்காவது பிறந்தநாளை இந்தியாவில் தன் பெற்றோருடன் கொண்டாட வேண்டும் என்று மோகன் விரும்பி இல்லை பிடிவாதம் பிடித்து, எப்படியோ சுபாவின் மனதையும் மாற்றி இரண்டு பக்கத்து உறவினர்களும் கூடி நவீனாவின் பிறந்தநாளை இந்தியாவில்தான் கொண்டாட வேண்டுமென்று வந்தான்.

பிறந்த நாள் வெகு விமரிசையாக ரெண்டு பக்கத்து உறவினர்களும் கலந்து கொள்ள நடந்தது. நவீனா ரெண்டு குடும்பத்தின் இளவரசி போல் வளைய வந்தாள். ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து அவளுக்கு வேண்டியதை செய்தார்கள்.

அந்த நேரம் ராகவின் தாயார் ராஜமும் வந்திருந்தாள். மோகன் பல நேரம் ராஜத்திடம் உட்கார்ந்து பெசிக் கொண்டிருப்பான். இவர்களுக்குள் பேச என்ன இருக்கும் என்று கூட ஜானகி ஆச்சரியப்படுவாள்.

நவீனாவும் 'பாத்தி ! பாத்தி!' என்று 2 பாட்டிகளுடனும் ஒட்டிகொண்டது. நவீனாவிற்கு அமேரிக்காவில் பிறந்து வளர்ந்த எல்லா குழந்தைகளைப் போலவே தமிழ் அவ்வளவாக பேச வராது. மோகனின் தாயாருக்கு ஆங்கிலம் பேச வராத காரணத்தால் நவீனாவிற்கு அவளிடம் அவ்வளவு ஒட்டுதல் வரவில்லை. ஜானகிக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் ஜானகியிடம் ஒட்டிக் கொண்டது குழந்தை.

அதுவும் மோகனின் தாயார் ஊர் திரும்பியதும் ஜானகி பாட்டி மாத்திரமே அவள் சினேகிதி ஆனாள். "பாத்தி! வில் யூ தெல் மீ எ தோரி?' என்று கேட்டுக் கொண்டே அவள் மடியில் உட்கார்ந்து விடும். ஜானகியும் சளைக்காமல் வித விதமாக கதைகள் சொல்லுவாள்.

அவர்கள் எல்லோரும் அமேரிக்கா திரும்பியதும் வீடே வெறிச் என்று ஆகிவிட்டது என்றே சொல்லலாம். அதிகம் பேசாத ராகவைக் கூட தன் பேச்சால் கட்டிப் போட்டு விட்டது குட்டி நவீனா. அந்த சினேகிதம் பாட்டிக்கும் பேத்திக்கும் இந்த ஒரு வருடமாக வீடியோ கால், ஆடியோ கால் என்றுத் தொடருகிறது.

ஆனால் அவர்கள் அமேரிக்கா திரும்பிச் சென்ற பிறகுதான் சுபா மோகனைப் பற்றிக் குற்றம் சொல்ல ஆரம்பித்தாள். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது. "இந்தப் பொண்ணிற்கு புத்தி ஏன் இப்படி போகிறது?" என்ற நினைப்பு எப்புோதும் போல் ஜானகிக்கு வந்தது..

அவளால் தன் பெண்ணைத்தான் குற்றம் சொல்ல முடிந்தது. மோகனின் மேல் குற்றம் இருக்கும் என்று அவளால் நினைக்கக் கூட முடியவில்லை. யோஜித்துக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ராகவும் கூட எழுந்துப் படுக்கப் போய் விட்டார்.

அடுத்து வந்த நாட்களில் ஜானகிக்கும் ராகவுக்கும் சுபா நவீனா இரண்டு பேரும் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் செய்வதிலேயே நேரம் போயிற்று. சுபாக்கு அது பிடிக்கும் நவீனாக்கு இது பிடிக்கும் என்று அதிகம் பேசாத ஜானகி ராகவ்க்கு இடையே கூட பேச்சு அதிகமானது. ஆனால் இது எல்லாத்துக்கும் நடுவில் ஜானகியின் மனதில் ஒரு சின்ன உறுத்தல் இருந்துக் கொண்டே தான் இருந்தது. அதுதான் அந்த விவாகரத்து விஷயம்.. அதைஃப் அவள் நினைவிலிருந்து அவளால் அகற்றவே முடியவில்லை.

ஆயிற்று ! வருமா வருமா என்று இருந்த நாளும் வந்தது. அன்று அவர்களுக்கு ஒரு ஆச்சரியமும் காத்திருந்தது. சுபா நவீனா கூட மோகனும் வந்திருந்தது தான் அந்த ஆச்சரியம். அது மட்டுமல்ல அவர்கள் பேசுவதைப் பார்த்தால் அவர்கள் இடையெ எந்த விதமான ஒரு மனத்தாங்கலும் இருப்பது போலவே இல்லை. ஆனால் ஜானகி தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். "ராகவும் நானும் இருப்பது போலவே இவர்களும் நவீனாவிற்காக எதையும் வெளியில் காட்டாமல் இருக்கிறார்கள் போல" என்று.

ஆயிற்று அமேரிக்காவிலிருந்து வாங்கிண்டு வந்த பொருட்கள் எல்லாம் எல்லோருக்கும் கொடுத்து முடிந்த விருந்து சாப்பாடும் முடிந்தது. நவீனாவை அடுத்த ரூமில் தூங்கப் பண்ணி விட்டு சுபாவும் மொகனும் ஜானகியும் ராகவும் இருந்த டிராயிங்க் ரூமிற்கு வந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஒருவருமே பேசவில்லை. பிறகு சுபாவே பேச்சை ஆரம்பித்தாள்.

“அப்பா! நாங்க ரெண்டு பேரும் விவாக ரத்து கேட்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு முன்பு உங்க எல்லோரையும் பார்த்து எங்க பக்கத்து விளக்கத்தை உங்க கிட்டே சொல்லணும்னு தான் இப்ப வந்திருக்கோம்." இதைக் கேட்ட ராகவும் ஜானகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

விவாகரத்து பெயரைக் கேட்டவுடன் ஜானகிக்கு வயிற்றில் புளி கரைத்து விட்டது. அவள் திரும்பவும்
ராகவைப் பார்த்தாள் "ஏதாவது பேசி இந்த விஷயத்தை சரி செய்ய்ங்களேன்" என்பது போல. ராகவுக்கு என்ன பேசுவது என்றேத் தெரியவில்லை. இருந்தாலும் ஏதாவது பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் , சுபாவைப் பார்த்து

“உங்களுக்கு நல்ல காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் விவாகரத்து என்பது ரொம்ப கடுமையான முடிவாக எங்களுக்குத் தெரிகிறது. நவீனாவின் மனநிலை பற்றியும் நாம் யோஜிக்க வேண்டும் இல்லையா" என்றார்.

மோகன் ஓன்றுமே பேசாமல் ஒரு புன்னகையுடன் இருக்க , திரும்பவும் சுபாதான் பேசினாள்.

“அப்பா! உங்களுக்குத் தெரியும் - ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நாம் வசிக்கும் சொசைட்டியில் நமக்கு நல்ல பெயர் அதாவது இமேஜ் இருக்க வேண்டும் என்பது. . நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது - நாம் வசிக்கும் சொசைட்டியிலும் நாம் நல்லவர்களாகத் தெரிய வேண்டும். இதைத்தான் எனக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். சரி - முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

எட்டு மாதம் முன்பு மோகன் ஒரு செமினாருக்காக வர்ஜீனியா சென்றிருந்தார். அவர் கூட அவர் கலீக் சோஃபியாவும் சென்றிருந்தாள். அதே மாதிரி அவர்கள் கம்பெனியின் வேறு வேறு கிளையிலிருந்தும் பலரும் அந்த செமினாருக்கு வந்திருந்தார்கள். கம்பெனி இரண்டு பேருக்கு ஒரு டபிள் பெட் ரூம் என்று ஹோட்டல் ரூம் புக் செய்ததில் இவர்கள் ஒரே கிளை என்பதால் இவர்கள் இருவருக்குமாகச் சேர்த்து ஒரே டபிள் பெட் ரூம் புக் செய்யப் பட்டிருந்தது.

அங்கு போனதும்தான் அவர்களுக்கு இந்த ஒரே ரூம் விஷயம் தெரிய வந்திருக்கிறது. மோகன் வேறு சிங்கிள் ரூமுக்கு ட்ரை பண்ணியிருக்கிறார். ஆனால் பெரிய செமினார் ஆனதால் எல்லா ஹோட்டலுமே முழுக்க புக் ஆன நிலையில் அவர்களுக்கு வேறு சிங்கிள் ரூம் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு நாளும் ஒரே ரூமில் தங்கி யிருந்திருக்கிறார்கள.

இந்த விஷயம் பற்றி அந்த நிமிஷமே மோகன் எனக்கு மொபைலில் சொல்லி விட்டார். அமேரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்பதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் என்னுடைய பக்கத்து அபார்ட்மென்ட் ரத்னா கரால்கரும் அன்று அந்த ஹோட்டலில் தங்கி யிருந்த நேரத்தில் இவர்களை ஒரே ரூமில் தங்குவதைப் பார்த்து விட்டு இந்த விஷயம் எனக்கு தெரியாதது போல் அங்கிருந்தே எனக்கு கால் பண்ணி பெரிய விஷயம் போல சொன்னதைத் தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. " இதையெல்லாம் கேட்ட ராகவ் புரிந்தது போல் ஒரு புன்னகை புரிந்தார்.

அவர் புன்னகையைப் பார்த்த சுபா " அப்பா! உங்களுக்கு சிரிப்பு வருகிறதா ? ஆனால் என் நிலைமையை யோஜித்துப் பாருங்கள். நாங்கள் இருந்தது இந்தியர்கள் நிறைய பேர் வாங்கி இருக்கும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ். அதனால் இந்தியர பண்டிகை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம். இந்திய மண்ணின் மைந்தர்கள் என்று பெருமைப் பட்டுக்கொள்ளும் அபார்க்ட்மென்ட் வாசிகள் அதே போல் இந்திய மனப்பான்மையையும் விடவில்லை. அதனால் மோகனும் சோஃபியாவும் ஹோட்டலில் ஒரே டபிள் ரூமில் தங்கியதையும் ராமர் வழி வந்த அவர்கள் இந்திய மனப்பான்மை ஏற்றுக் கொள்ள வில்லை.

ரத்னா கரால்கர் என்னிடம் சொல்லியதுடன் நிறுத்தவில்லை என்பது மறுநாள் என்னுடைய மற்ற நண்பர்கள் பெண்கள் மட்டுமில்லை ஆண்கள் உட்பட கேட்டதிலிருந்து எனக்குத் தெரிந்தது. ஏற்கனவே நான் பெரிய பதவியில் இருக்கேன், பெரிய மனிதர்களைத் தெரியும் என்று காம்ப்ளெக்ஸில நிறைய பேருக்கு எங்கள் மேல் பொறாமை.

இப்போ இந்த விஷயம் தெரிந்ததும் அதை பெரிசாகப் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். நவீனாவிடமும் சிலர் சோஃபியா ஆன்ட்டி தெரியுமா என்ற சிலர் கேட்டதாகக் கேள்வி. இபபடியே விட்டு விி்ட்டால் , எங்க லைஃப் மத்திரமில்லை, நவீனா லைஃப் ம் வீணாக போய்விடும் என்று ரெண்டு பேரும் யோஜித்து தான் இந்த விவாகரத்து முடிவு எடுத்திருக்கிறோம்" என்றாள்.

ஜானகி ஏதோ சொல்ல முற்பட, ராகவ் கையைக் காட்டி அவளை நிறுத்தி விட்டு சுபாவைப் பார்த்து “அதுதான் மோகன் உன் கிட்டே முதலிலேயே சொல்லி விட்டார் என்கிறாயே – உனக்கு உன் ஹஸ்பன்ட் மேல் நம்பிக்கை இல்லையா?” என்றுக் கேட்டார்

சுபா அதற்கு “எனக்கு மோகன் மேல் பூரா நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என் நம்பிக்கை மட்டும் போதுமா. பப்ளிக் லைஃப் லே மத்தவங்க உங்களை பத்தி எப்படி நினைக்கிறாங்க என்பது முக்கியம் இல்லையா? என் சினேகிதி வந்து என் கிட்டே வந்து சொல்லும்போது எனக்கு பெரிசாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் எல்லோரும் பேசும் பொழுது அது எனக்கு ஏற்கவில்லை. அந்த நாள் வரை ராமர் ஸீதையை அக்கினி பரீட்சைக்கு உட்படுத்தினது பற்றி ராமர்
மேல் நான் ரொம்பக் கோபமாக இருந்தேன்.

ஆனால் ராவணனிடமிருந்து தன் மனைவியைக் காப்பாற்றி ராமர் ஒரு நல்ல கணவரின் தர்மத்தைக் காப்பாற்றினார். ஆனால் அயோத்திக்கு திரும்பும் ராமர் அயொத்தியின் யுவராஜா - முடி சூட்டிக்கொள்ள இருக்கும் யுவராஜா. அந்த நேரம் அவர் மட்டுமல்ல சீதாபிராட்டியும் அப்பழுக்கற்றவள் என்று அயோத்தி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ராஜாவாகப் போகும் ராமரின் உணர்வு.

காம்ப்ளேக்ஸ் சினேகிதர்கள் எப்பொழுது நவீனாவிடம் சோஃபியா பற்றிக் கேட்டார்களோ, அந்த நிமிடம் ராமர் ஏன் சீதா பிராட்டியை அக்கினிப் பரீட்சைக்கு உட்படுத்தினார் என்பது புரிந்தது. அதனால் தான் நாங்கள் நவீனாவின் உணர்வுகளை உத்தேசித்து இந்த விவாகரத்து முடிவுக்கு வந்தோம். விவாகரத்து என்பது ஊருக்காகத்தான்" என்ற விவரமாக சொல்லி முடித்தாள்.

அதுவரை பொறுமையாகக் கேட்ட ராகவ், சுபாவிடம்

“பப்ளிக் இமேஜ் முக்கியம்தான். ஆனால் அதைவிட உங்க காதல் உங்களுக்கு முக்கியம் இல்லையா?” என்று கேட்டார்.

சுபா கொஞ்ச நேரம் ராகவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் . பிறகு “அப்பா இந்தக் கேள்வி நீங்க கேக்கலாமா? இந்த விஷயம் உங்களுக்கும் பொருந்தும் தானே? உங்களுக்கு அம்மா மேல் எவ்வளவு அன்பு என்று எல்லோருக்குமேத் தெரியும். அதுவும் உங்கள் நடுவில் படுத்துக் கொண்ட எனக்கு ரொம்பவே நன்றாகத் தெரியும்தானே - அம்மாவின் மேல் உங்களுக்கு நிறைய நம்பிக்கை உண்டு என்று எல்லோருக்கும் தெரியும்தானே? ஆனால் மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற நினைப்பில் நீங்க உங்க வாழ்க்கையை கெடுத்துக் கொண்டீர்கள்.

நாங்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து இருக்கப் போகிறோம். நீங்கள் விவாகரத்து வாங்காமல் பிரிந்து இருந்தீர்கள்” – உங்களுக்கு ராகவ் என்று ராமன் பெயர் வைத்ததால் நீங்களும் அந்த ராமன் போலவே ஊர் என்ன சொல்லும் என்று அம்மாவை தள்ளி வைத்தீர்களா?” என்று கேட்க தலை குனிந்தார் ராகவன்.

பிறகு மோகனும் சுபாவும் கைகளைக் கோத்துக் கொண்டு “நாங்க உங்க மாதிரி பைத்தியம் இல்லை. ஒரு சின்ன விஷயத்திற்காக அதாவது ஊரார் என்ன நினைப்பார்களோ என்ற விஷயத்திற்காக, எங்க
வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதற்கு” என்று சொல்லி சிரித்தார்கள்.

பிறகுதான் தெரிந்தது – மோகன் எப்படியோ ஜானகி ராகவ் வாழ்க்கை சரியாக இல்லை என்றுக் கண்டு பிடித்து , ராஜத்திடம் பேசி பேசி நடந்ததைத் தெரிந்துக் கொண்டான் என்று. பிறகு சுபாவிடம் பேசி அவர்களுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கத்தான் இந்த விவாகரத்து விஷயத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று.

ராகவ் மெள்ள நடந்து வந்து ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டார். அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர் ஸ்பரிஸம் ‘என்னை மன்னித்துவிடு – என்னை மன்னித்து விடு” என்று ஆயிரம் முறை சொன்னது போல் இருந்தது ஜானகிக்கு. அவரை ஏறெடுத்துப் பார்த்த ஜானகி, ராகவின் கண்களில் பழைய காதலைத் திரும்பப் பார்த்தாள். ஆனால் அதே நேரம் ஊரார் சொற்களுக்கு மதிப்பு கொடுத்து மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுத்த ராகவும் அவள் நினைவுக்கு வந்தார்.

அவள் மனது ராகவின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இவ்வளவு ஆண்டுகளின் பிரிவால் மரத்துப் போயிருந்த மனசு ராகவின் மன்னிப்பை ஏற்க மறுத்தது. "ஒரு மனைவியின் நிலமையைப் புரிந்துக் கொள்ளாமல் ஊரார் வார்த்தைக்கு அன்று மதிப்பு கொடுத்தார். இன்று பெண் மாப்பிள்ளை சொன்னதற்காக மாறிய மனம், நாளைக்கு வேறு ஒருவர் ஏதாவது சொன்னால் மாற மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் அவர் 'வா' என்றால் வர வேண்டும். 'விலகி இருப்போம் என்றால் விலகி இருக்க வேண்டும் " என்றால் எனக்கு என்று ஒரு மனசு இல்லை என்று நினைக்கிறார் போல" இப்படியான பல நினைவுகள் அவள் மனதில் தோன்றின.

ஆனால் ராகவுக்கு ஜானகியால் இந்த மாதிரியெல்லாம் கூட நினைக்க முடியும் என்று துளிக்கூட தோன்றவில்லை. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை ராகவால் உணர முடிந்தது. ஆனால் தன் மனைவி ஜானகியாலும் தன்னை ஒதுக்க முடியும் என்பதை அவர் ஆண்மனம் கனவில் கூட நினைத்திருக்காது. மனைவி என்றால் ஒரு கணவன் திருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னித்து ஏற்றுக் கொள்வாள் என்பதுதான் அவர் அறிந்த சமூக நியதி.

அவள் மனதில் அந்த நிமிடம் தோன்றியது “ என் பெண் இல்லை இல்லை என் மாப்பிள்ளை ஒரு விஷயத்தை அழகாக சொல்லிக் கொடுத்து விட்டார்.அதுதான்,

‘ஆண்களுக்கும் உண்டு இங்கே அக்கினிப் பரீட்சை”

கதை முற்றியது - ஆனால் ஆண்களுக்கு அக்கினிப் பரீட்சை தொடரும்.