அஞ்சிறை அணங்கே

ருதி வெங்கட்
அத்தியாயம்-1:

"எனக்கு இந்த பொண்ணைதான் பிடிச்சிருக்கு" அதுவரை மாப்பிள்ளையை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் முகங்கள் அதிர்ச்சியாக,
"சூர்யா என்ன பேசுற?" அவர்களுக்கு குறையாத அதிர்ச்சியில் அவனது சித்தி திலோத்தமா பார்க்க, அவன் சுட்டிய ஆள்காட்டி விரலெதிரே நின்றிருந்தவள் முகமோ கோபத்தில் செந்தணலாக கொதிக்க ஆரம்பித்தது. பின்னே பார்க்க வந்த பெண்ணை விட்டு தன்னை பிடித்திருக்கிறதென்று சொல்லுபவனை என்ன செய்ய?
"ஹலோ மிஸ்டர் என்ன பேசறிங்கன்னு தெரிஞ்சுதான் பேசறிங்களா?" விடவில்லை அவளும்.
"நீரு சும்மா இரும்மா.. " கோகிலாவின் ஒற்றை அதட்டலில் அவள் பேச்சு நின்றுவிட அவனை பார்க்காது முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"இதுக்குதான் ஆயிரம் முறை சொன்னேன் இந்த கோகிலாட்ட கேட்டாளா? நாடகக்காரி மகளை வீட்டுக்குள்ள சேர்த்ததற்கு கண்ணாலேயே மயக்கிட்டா பாரு?" பெண்பார்க்கும் வைபவத்தில் கலந்து கொள்ள வந்த எதிர்வீட்டு கனகா வாய்க்கு வந்ததை பேச,
"அட! நீங்க வேற ஆன்ட்டி? இவன் மட்டும் யோக்கியமான ஆளுன்னு நினைச்சிங்களா? இவன் முதல் பொண்டாட்டியை கொலை பண்ண கேசுல ஒருவருஷம் கழிச்சு ஜாமீன்ல வெளிய வந்துருக்கான். பார்ட்டி வசதியான ஆளு, கூடப்பிறந்தவங்க மாமனார், மாமியார் யாரும் கிடையாது. அவங்க அம்மா கூட பிறந்த தங்கச்சி தான் அம்மா .. " பேச்சை நிறுத்திய அந்த காலனியின் கூகுளான அடுத்த வீட்டு சங்கரி, மாப்பிள்ளையின் அருகே பெண் பார்க்க வந்திருந்த நடுவயது பெண்மணியை சுட்டியவள்,
"ஸ்தானத்துல இருந்து வளர்த்துட்டு வர சித்தி மட்டுந்தான்" என,
"சித்திங்கற?? அவனுக்கு பெரியக்கா மாதிரில்ல இருக்கு,நல்ல களையான முகம். இந்தம்மாக்கு புருஷன் பிள்ளைங்க ஏதும் இல்லையா?" கனகாவிற்கு புரணியை முழுதாக கேட்கா விட்டால் தலை வெடித்து விடும்.
"அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. இவங்க நம்ம கோகிம்மாவோட பள்ளிக்கூடத்துல ஒண்ணா படிச்சவங்க.அவங்க வீட்டுக்காரரு பட்டாளத்துல வேலை பார்த்து சின்னவயசுலயே இறந்து போயிட்டாராம். அவர் இறந்து ஒருமாசத்துல அவங்க அக்காவுக்கு இந்த பையன் பிறந்தானாம்.
அதுல இருந்து இந்த பையன் மேல கொள்ளை பிரியமாம். அவங்க அப்பாவும் மாமா,அக்காவும் கூட எவ்வளவோ கெஞ்சி பார்த்தாங்களாம், இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லி! அவரைத் தவிர வேற யாரையும் என் புருஷனா நினைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சின்ன வயசுலயே அம்மா இறந்து அக்கா கூடவே வளர்ந்ததால, "எனக்கு மகனா இவன் இருக்கான், அம்மாவா எங்க அக்கா இருக்கான்னு" சொல்லிட்டு அவங்க அக்கா கூடவே, அப்பாவையும் அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாம்" தொண்டை தண்ணீர் வற்றியது போல இருக்க, விபரத்தை சொல்லிவிட்டு கையிலிருந்த ஜூஸை தொண்டையில் சரித்தாள் சங்கரி.
"ஓ.. இவ்வளவு விஷயம் இருக்கா?" கனகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கோகிலாவின் அழுகுரல் இவர்களை இடையிட்டது.
"இது என்ன அநியாயமா இருக்கு திலோ? உன் பையன் பேசுறதை பார்த்துட்டு குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கியே? கொலைகாரன்னு கூட பார்க்காம நம்ம நட்புக்காக எம்பொண்ணை கட்டிக்கொடுக்க நினைச்சதுக்கு நல்லா வேணும்? என் வீட்டுக்காரர் பேச்சகூட நான் கேட்கலியே? இந்த அவமானம் எனக்கு தேவையா?" கோகிலா அழுது கொண்டே ஆத்திரத்துடன் பேச, பதில் சொல்ல வேண்டியவனோ அழுத்தமாய் நீரஜாவை மட்டும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
"சொல்லுங்கம்மா உங்களைத்தானே கேட்கிறோம்?" மனைவியை சமாதானப்படுத்தி கொண்டே, தனது மகளின் வாடிய முகத்தை கண்டு, கொதித்தார் அவளது கணவர் பத்மநாபனும்.
இத்தனை கலவரத்திற்கு நடுவிலும் நீரஜாவை மட்டுமே வைத்தகண் வாங்காது பார்த்து கொண்டிருப்பவனை கண்டு கோகிலாவின் மகள் ஸ்வாதி நீரஜாவை முறைக்க, ஒரே நாளில் உற்ற தோழி எதிரியாகிவிட்ட நிலையை எண்ணி நொந்து போன பார்வையை பார்த்தவளாய் ஸ்வாதியின் அறைக்கு சென்றுவிட்டாள் அவள்.
பின்னோடு வந்த ஸ்வாதியும் மேஜையில் கைவைத்து தலைக்கு முட்டு கொடுத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். வெளியே ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருப்பது, அவர்களது சத்தத்தை வைத்தே தெரிந்தது.
சரியாக அந்நேரம் உள்ளே நுழைந்தார் ஷர்மிளா, நீரஜாவின் அன்னை.
"வந்துட்டா அலப்பிகிட்டு?!" கனகா கழுத்தை நொடிக்க,
"இவ்வளவு எளிமையான உடையும் அவங்களுக்கு எவ்வளவு அழகா இருக்குல்ல ஆன்ட்டி" மனதிலிருப்பதை சொல்லிவிட்டு கனகாவின் பலத்த கண்டன பார்வைக்கு ஆளானாள் சங்கரி.
உண்மையில் சொல்லப்போனால் ஷர்மிளா இவர்கள் சொல்வது போல் திரையில் நடிப்பவரோ, அல்லது நாடகங்களில் நடிப்பவரோ அல்ல. பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.
சென்னையின் வடபழனியில் வசித்து வந்த முருகன்-மஞ்சு தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் கோகிலா, இளையவள் ஷர்மிளா. கோகிலா தந்தையை கொண்டவளாக மாநிறத்தில் பிறந்திருக்க, இரண்டு வருட இடைவெளியில் பிறந்த ஷர்மிளாவோ அன்னையின் பால்வண்ணத்தை கொண்டு அழகியாக பிறந்திருந்தாள். அதனால் சிறுவயதிலிருந்தே ஷர்மிளாவை கண்டால் ஆகாது கோகிலாவிற்கு, ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள்.
பருவத்தை எய்திய மங்கையருக்கு வீட்டில் திருமணம் பேச, அண்ணன்-தம்பி இருவருக்கு அக்கா-தங்கையை பேசி முடிக்க முடிவெடுத்து நிச்சயம் செய்யப்போகும் நேரத்தில்,தான் காதலிக்கும் ஆகாஷுடன் ஓடிப்போக போவதாக எழுதி வைத்து சென்று விட்டார் ஷர்மிளா. இதனால் கோகிலாவின் கல்யாணமும் நின்றுவிட,
"அந்த ஓடிப்போன கழுதைக்கு இனி எக்காலமும் இந்த வீட்டுல இடமில்லை" உணர்ச்சிவசப்பட்டு கத்திய முருகன் நெஞ்சுவலியில் இறைவனடி சேர்ந்து விட, தந்தை பார்த்து வைத்த நல்ல சம்பந்தம் கை நழுவி, தனது அன்னையின் தம்பியும்,சொந்த தாய்மாமனுமான அரசாங்கத்தில் ஓரளவிற்கு பெயர் சொல்லும்படியான உத்தியோகத்தில் இருந்த பத்மநாபனை மணம் முடித்து இங்கு ஊட்டிக்கு வந்து விட்டார் கோகிலா.கணவரின் மறைவிற்கு பிறகு கோகிலாவின் அன்னையும் வெகுநாட்களுக்கு இருக்கவில்லை. அதன்பின்பு ஷர்மிளாவைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
கோகிலாவுக்கு ஒற்றை மகவாக பிறந்திருந்தாள் ஸ்வாதி. அவள் ஆசைப்பட்டது போல் பணக்கார வாழ்வு அமையாவிட்டாலும் நிம்மதியான வாழ்வு அமைந்திருக்க அதை ஏற்றுக்கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாள் அவள்.
இந்நிலையில் தான் ஊட்டிக்கு ஷூட்டிங் எடுக்க வந்திருந்த படக்குழுவுடன் தனது தங்கை ஷர்மிளாவையும், அவளது மகள் நீரஜாவையும் சந்தித்தாள் கோகிலா.
அன்று காலை," ஹே.. கோகி.. சீக்கிரம் கிளம்பி வாடி. அப்படியே மார்க்கெட் போயிட்டு அந்த நடிகையையும் பார்த்துட்டு வந்துடலாம்" வெளிவாயிலில் நின்று கனகா அழைக்க, பத்மநாபனும் வர நேரமாகும் என்பதால், நன்கு அலங்கரித்துக்கொண்டு ஷூட்டிங் பார்க்க சென்றனர் அந்த இல்லத்தரசிகள்.
அவர்கள் விருப்ப நடிகையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருகிலிருந்த வேறோரு பெண்மணி," ஹுரோயினை விட அந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கா இல்லை?" தனது தோழியிடம் சொல்லிக்கொண்டிருக்க,அங்கு தனது தங்கையை பார்த்து அதிர்ந்து போனாள் கோகிலா‌.
சுற்றியுள்ளவர்களின் பார்வை தன்னை மொய்ப்பதை கண்டு கொள்ளாது, நலுங்கிய உடையில், திருமணமான பெண்ணிற்கான எவ்வித லட்சணமும் இல்லாது, தனது மூன்று வயது மகளுக்கு உணவூட்டி கொண்டிருந்தாள் அவள்.
சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருந்ததால், " ஷர்மி..‌ஷர்மி.. " கத்தினாள் கோகிலா.
வெகுநாட்களுக்கு பிறகு கேட்ட பரிட்சயமான குரலில், " அக்கா.. " ஓடிவந்து கட்டிக்கொண்டாள் ஷர்மிளா.
யாரிடமும் எதுவும் பேசாது, தானுண்டு தனது வேலையுண்டு என்றிருக்கும் ஷர்மிக்கு உறவினர் என்றதும் அந்த பிரபல நடிகை அவர்களை அழைத்து வைத்து பேசியவள்," ஷர்மி டச்சப் பண்ண அரைமணிநேரத்துல வந்திடு" என்று சொல்லிவிட்டு சென்றாள்.
வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்த சகோதரிகளுக்கு இடம் கொடுத்து, கனகாவும் நகர்ந்து நின்று கொள்ள," அக்கா எம்மேல இருக்க கோபமெல்லாம் போயிடுச்சா? நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்கா.. ஒரு பொறுக்கிய நம்பி வந்து மாட்டிகிட்டேன். சீக்கிரம் டைரக்டர் ஆகிடுவேன்னு சொல்லி சொல்லியே ஒரு வேலையும் பார்க்காம,என்னை மேக்கப் போட வச்சு,நான் சம்பாரிச்ச பணத்துல உட்கார்ந்து சாப்பிட்டுட்டுருந்தவன், இதோ இவளை கொடுத்துட்டு, என்னை விட வசதியா இன்னொரு பொண்ணு கிடைக்கவும், அந்த பொண்ணோட என் கண்ணுமுன்னாடியே குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டான்கா. அவனை விட்டு விலகி வந்து இன்னும் சில பொறுக்கிங்க கிட்ட மாட்டிக்க இருந்தப்போ இந்த நடிகை மேடம் தான் என்னை காப்பாத்துனாங்க. நம்ம அப்பா என்னை படிக்க வைச்ச பியூட்டிஷியன் கோர்ஸ் தான் எனக்கு இப்ப வரைக்கும் சோறு போடுதுக்கா.. அப்பா-அம்மாவை பார்க்கனும்கா. என் பொண்ணை அவங்ககிட்ட கொடுத்து வளர்க்க சொல்லனும். எனக்கு எப்படியாவது உதவி பண்ணுக்கா. எவ்வளவு பணம் வேணுன்னாலும் நான் கொடுக்கறேன்கா. அவங்க வசதியா வாழட்டும்‌. மேடம் எனக்கு ஒரு சிட்டிங் மேக்கப்புக்கு அம்பதாயிரம் கொடுக்கறாங்கக்கா. எனக்கு உறவுகள் இல்லாம தவிக்கிறேன்கா. உங்க எல்லாரோடையும் இருக்கனும் போல இருக்குக்கா " கிடைத்த சிலமணித்துளிகளில் அனைத்தையும் சொல்லி கதறி அழ, கோகியின் பார்வையோ ஷர்மியை உரித்து வைத்து பிறந்திருந்த நீரஜாவின் மேல் தான் இருந்தது.
"நீரும்மா.. பெரியம்மாடா.. " கோகிலாவை அவளுக்கு அறிமுகப்படுத்த, நொடிகளுக்குள் சில கணக்குகளை போட்டவள்,
"வாடா நீரு செல்லம்.நானும் இனி உனக்கு அம்மாதான்" தூக்கி கொஞ்சியவள், தனது ஆறுதல் வார்த்தையில் மொத்தமாக தமக்கையை சாய்த்திருந்தாள்.
"நம்ம அப்பாம்மா.. இப்ப உயிரோட இல்லை ஷர்மி. நீ ஓடிப்போன அதிர்ச்சில அப்பா இறந்துட்டாரு. நமக்கு பேசி வச்ச நிச்சயமும் நின்னு போயி, அம்மா நம்ம பத்து மாமாவுக்கு என்னை கட்டி வச்சிட்டு, என் மகள் ஸ்வாதி பிறந்ததும் கடமை முடிஞ்சதுன்னு அவங்களும் அப்பாகிட்டவே போயிட்டாங்க" கையில் வைத்திருந்த நீருவின் தலையை தடவியவள்,
"ம்ம்.. இவளை விட எம்பொண்ணு ஒருவயசு மூத்தவளா இருப்பா. இனி இவளை வளர்க்கறது என் பொறுப்பு" என, பெற்றோரை நினைந்து உடைந்து அழுதாள் ஷர்மி.
பின்பு சற்று தேறியவளாக அக்கா சொன்னதை யோசித்தவள், "இல்லைக்கா..பத்து மாமா எதுவும் சொல்ல மாட்டாரா? என் தலையெழுத்து இருக்கட்டும் விடு.. எப்படியாவது எம்பொண்ண நான் காப்பாத்திக்குவேன். சீக்கிரமே இந்த தொழில்ல இருந்து விலகி சொந்தமா பார்லர் வச்சு உட்கார்ந்துட்டேன்னா.. எங்க மானத்தை எங்களால காப்பாத்திக்க முடியும்" நித்தம் நிந்தனைகளை சந்திக்கும் அவளது வேதனையை பகிர்ந்து கொள்ள, அவளது அக்காவிற்கோ தங்கையின் மூலம் வரும் வருமானம் மட்டுமே கண்களுக்கு தெரிந்தது.
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.‌உனக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. என் பொண்ணு என்கிட்ட தான் வளருவா" என்றவள்,
"நீரு செல்லம்.. உன்கூட விளையாட ஸ்வாதி இருக்கா. அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பப்ப வந்துட்டு போவா. பெரியம்மா உன்னை பார்த்துக்கறேன் என்ன?" அந்த இளம்சிட்டோ புரியாமல் அன்னையை பார்த்தது.
"அக்கா‌.. நிஜமாத்தான் சொல்றியா?" தழுதழுத்தவள் அவளது கைகளை பிடிக்கும் பொழுதே அவளுக்கு அழைப்பு வந்துவிட்டது.
"எல்லாம் பேசிக்கலாம் ஷர்மி. நீ போ.. இப்ப உன்னை கூப்பிடறாங்க. நான் இங்கதான் இருப்பேன். ஷூட்டிங் முடிஞ்சு நாம ஒண்ணா போகலாம்" அவளை அனுப்பி வைத்தவள் மனமோ,
'பொன்முட்டை போடற வாத்தை நான் விட்டுடுவேனா? உன்னால தான் எனக்கு வந்த வசதியான சம்பந்தம் போச்சு. அதை நீதான்டி சரிகட்டனும்' வன்மத்தை வளர்த்து கொண்டிருப்பது தெரியாமல், சோறூட்டி கொண்டிருந்த பெரியன்னையை பார்த்து கள்ளமில்லாமல் சிரித்து கொண்டிருந்தாள் நீரஜா.
சொன்னதைப்போல் கையோடு தங்கையை அழைத்துக்கொண்டு சென்றவள்,பத்மநாபனை சரிகட்ட முயன்று தோற்று போனாள்.‌ ஏனென்றால் பத்மநாபன் மிகவும் நியாயவாதி, தனது அக்காவின் குடும்பம் சிதைந்து போவதற்கு காரணமான ஷர்மிளாவை மன்னிக்க அவர் தயாராக இல்லை.
"எந்தங்கைக்கு என்னைவிட்டா யாரிருக்கா மாமா? இப்ப அம்மா இருந்திருந்தா நிச்சயம் அவளை தனியா விடமாட்டாங்க? நல்லா வாழ்ந்துட்டா கூட பரவாயில்லை? " கதறி அழ,
"அப்பா..‌எனக்கு நீருவை பிதிச்சிருக்குப்பா.. " இன்னும் மழலை மாறாத நான்கு வயது மகள் ஸ்வாதியின் வேண்டலில் சாய்ந்து விட்டது தந்தையின் மனம்.
"சரி.‌.சரி.. இருந்துட்டு போகட்டும்" என,
"மன்னிச்சுடுங்க மாமா"மன்னிப்பு வேண்டிய ஷர்மிக்கு பதில் கொடுக்காது, தலையை மட்டும் ஆட்டிவிட்டு சென்றுவிட்டார் அவர்.
அன்றுமுதல் இன்றுவரை நீரஜாவும், ஸ்வாதியும் உற்ற தோழிகளாக வளர, ஷர்மியின் வருமானத்தில் இன்னும் தனக்கான வசதிகளை பெருக்கியிருந்தாள் கோகிலா.
இதோ மகளை எப்படியாவது பணக்கார சம்பந்தத்தில் தள்ளி விட வேண்டுமென முடிவெடுத்தவள், எப்படி பிரச்சனை இருந்தாலும், வசதி மட்டுமே பிரதானமாய் கருதி, தற்செயலாக கோவிலில் சந்தித்த தனது பள்ளித்தோழி திலோத்தமாவின் மகனை பேசி முடிக்க முடிவெடுத்து விட்டாள். அவளது வாழ்க்கை வசதியைப்பற்றி கோகிலாவிற்கு நன்கு தெரியும். அமெரிக்காவில் சம்பாதித்து செட்டிலாகி ஒருவர் பின் ஒருவராக மரித்து போயிருந்த அவளது அக்காவின் சொத்துக்களுக்கும், இப்பொழுது அவர்களது ஒரே மகன் சூர்யபிரதாப் தான் வாரிசு என்பதும் நன்கு தெரியும்.
அவள் மகனது வாழ்வில் நடந்த கதையெல்லாம் சொன்னதை புறம்தள்ளியவள், அவர்களது சொத்து மதிப்பையும், அமெரிக்காவை விடுத்து அனைத்து சொத்துக்களுடன் இங்கு ஊட்டியிலேயே நிரந்தரமாக தங்க எஸ்டேட் வாங்கி போட்டதை அறிந்தவளாய், துல்லியமாக கணக்கிட்டு இந்த சம்பந்தத்தை முடிக்க முடிவெடுத்து செய்ய, இந்த திருப்பம் எதிர்பாராதது‌.
முதன்முதலில் தன்னை பெண்பார்க்க வருபவனை நினைத்து பல கனவுகளுடன் மாப்பிள்ளையான" சூர்யபிரதாப்பை" பார்த்த ஸ்வாதியின் மனம் அவனது செயலில் உடைந்து போயிருக்க,
"ஸுவி அவன் கிடக்கிறான் விடு" நீரஜா அவளின் தோளை தொட்டு எழுப்பும் போதே,
"அக்கா என்னாச்சு?" ஷர்மி கோகிலாவிடம் கேட்டு கொண்டிருக்க, அன்னையின் குரலில் வேகமாக ஹாலுக்கு வந்த நீரஜாவைப்பார்த்து சூர்யா புன்னகைக்க, கண்ணை குத்தி விடுவேனென்று நீரு சைகை செய்ய, தன்னை மறந்து இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அவள் பின்னோடு வந்த ஸ்வாதி.


அத்தியாயம்-2:


"முடிந்தது!!முடிந்தே விட்டது!" மனது அழுகுரலில் கூச்சலிட, புதுமஞ்சள் கயிற்றின் ஈரம் கழுத்தில் எரிவதைப்போல் உணர்ந்தாள் நீரஜா.
"நீரு நீரு.. " வெளியே அன்னை அழைக்கும் சத்தம் கேட்க, கொடுக்கப்பட்ட அறைக்கதவை திறந்தாலும் பதில் பேசாமல் நின்றிருந்தாள் அவள்.


"அம்மாகிட்ட பேசுடா நீரு.. எனக்கு உன்னைவிட்டா யாரிருக்கா? என்னை நம்பு.. அம்மா உனக்கு கெடுதல் செய்வேனா?" மகளின் கைகளை பிடித்து கெஞ்சிய அன்னையின் மேல் இரக்கம் வரவில்லை மகளரசிக்கு.


ஆனால் அவள் பார்த்த பார்வையின் அழுத்தம் மட்டும் நிச்சயத்தை நிர்ணியத்த அத்தருணத்தலிருந்து தான் என்பதை உணர்ந்தவளுக்கோ மகளை சமாதானப்படுத்தும் மார்க்கம் மட்டும் பிடிபடவில்லை.


கூச்சல், குழப்பம், அழுகை மாறி மாறி நடந்து கொண்டிருந்த அவ்வேளையில்," என்ன இருந்தாலும் நீங்க சொல்றது சரியில்லைங்க தம்பி? அக்காவ பொண்ணு பார்க்க வந்துட்டு தங்கையை பிடிச்சிருக்குன்னு சொல்றது நியாயமா? நீங்க முதல்ல வெளிய கிளம்புங்க" ஷர்மி உடைத்து பேச, மகள்களின் முகத்தில் மகிழ்ச்சியும் கோகிலாவின் முகத்தில் அதிர்ச்சியும்.

பத்மநாபன் கூட அவளது பேச்சை ஆதரிப்பது போல் அமைதியாக அவர்களை முறைத்து கொண்டிருந்தார்.


"ஷர்மி என்ன பேசுற நீ?" கோகி அவளிடம் வாதம் செய்ய ஆரம்பிக்கும் போதே,


"அவங்க சரியாத்தான் சொல்றாங்க கோகி. எங்களை மன்னிச்சுடும்மா.. நீ கிளம்பு சூர்யா" திலோத்தமா அவனது கையை பிடித்து எழுப்பிவிட,


"நான் கொஞ்சம் உங்ககிட்ட தனியா பேசனும் ஆன்ட்டி. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுப்பிங்களா?" சூர்யா எழுந்து கேட்டது கோகியிடமல்ல ஷர்மியிடம்.


"முடியாது. நீங்க கிளம்பலாம் " பதில் பத்மநாபனிடம் இருந்து வர, ஷர்மி அவனை கண்டு கொள்ளவில்லை.


"இங்க என்ன வேடிக்கை? உள்ள போங்க ரெண்டு பேரும்" ஷர்மியின் சத்தத்தில் சூர்யாவை பார்வையால் எரித்துக்கொண்டிருந்த நீரஜாவை தன்னுடன் இழுத்துச்சென்று விட்டாள் ஸ்வாதி.


"விடு ஸூவா! அவன் என்ன பேசறது?அவனை நாலு வார்த்தை நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு வந்தாதான் என் ஆத்திரம் அடங்கும்" கைகளில் துள்ளி கொண்டிருந்தவளை அடக்க முயன்று கொண்டிருந்த ஸ்வாதி,


"ஏன் மறுபடியும் அவனை பார்க்கனுமா உனக்கு?" என்று கேட்க, திகைத்து விழித்தாள் நீரஜா.


"கண்டிப்பா நான் பேசியே ஆகனும் அங்கிள். இதுல உங்க பொண்ணு வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு" சூர்யாவின் பேச்சை அனைவரும் வேடிக்கை பார்க்க,


"சங்கடத்திற்கு மன்னிக்கனும்‌. இந்த நிச்சயம் நடக்காது. எல்லாரும் கிளம்புங்க" வைபவத்திற்கு அழைத்திருந்த அக்கம்பக்கத்தினரை கும்பிட்டு முதலில் வெளியே அனுப்பினார் பத்மநாபன்.
அனைவரும் வெளியேற," நான் பண்ணது தப்புதான். என்னை மன்னிச்சுடுங்க அங்கிள். இதுவே உங்க பெண்ணை எங்க சித்திக்காக ஒத்துட்டுருந்தா அது நல்லாருக்குமா? அதனால்தான் என் மனசுல பட்டதை ஓப்பனா சொல்லிட்டேன்" சூர்யாவின் அலட்டலில்லாத பேச்சில்,
"நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயந்தான் தம்பி" நியாயவதியான பத்மநாபனின் திடீர் நடுநிலையில் கோகியின் வயிறெரிய ஆரம்பித்து விட்டது.


"என்ன பேசறிங்க நீங்க? இந்த தம்பி பண்ணது நம்ம பொண்ண அசிங்கப்படுத்துற மாதிரி இல்லையா? திலோ போதும், உன் மகனை கூட்டிட்டு கிளம்பு. இனி இந்த பேச்சை எடுக்க வேண்டாம்" தனக்கு கிடைக்காத பாலை யாருக்கும் கிடைக்காமல் கொட்டிவிட முடிவெடுத்து விட்டாள் அவள்.


"சூர்யா கிளம்பு கண்ணா.வா போகலாம்" திலோவும் மகனை கூப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு புரிந்தது தோழி என்பதால் மட்டுமே கோகி தன் பெண்ணை கொடுக்க முன் வந்தாள். ஆனால் ஷர்மி தன் பெண்ணை எப்படி இரண்டாம் தாரமாக கொடுக்க முன் வருவாள்?
இவர்கள் பேசட்டுமென்று ஷர்மி நகரப்போக," ஆன்ட்டி ப்ளீஸ் கொஞ்சம் நில்லுங்க" அவள்முன்னே வழிமறிக்க, தான் நினைத்ததை நடத்த திண்ணமாக போராடுபவனை கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டாள் அவள்.


அவனது செயலில் சங்கடமுற்றவளாக,"சூர்யா என்ன பண்றப்பா நீ? முதல்ல வீட்டுக்கு போகலாம். அப்பறம் எல்லாம் பேசிக்கலாம்" என்றவளாக மகனை இழுக்க,
"திலோம்மா..ப்ளீஸ்மா.." என்ற மகன் புதிதாக தெரிந்தான் அவருக்கு.


"நீங்க என்ன பேசினாலும் என் பொண்ணை இரண்டாம்தாரமா கட்டிக்கொடுக்கறதை பற்றி நான் யோசிக்கவே மாட்டேன். அதனால நீங்க என்கிட்ட பேசி நேர விரயம் பண்ணாதிங்க" ஷர்மியின் நேரடி பதில் முகத்தில் அறைந்தார் போலிருந்தது கோகிக்கும், பத்மநாபனிற்கும். அதில் அவர் மனைவியை முறைக்க, தங்கையின் பதிலால் அவள் மேலுள்ள மொத்த வன்மத்தையும் அன்று தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அவளை பஸ்பமாக்கி விடும் ஆத்திரத்தை உள்ளடக்கியவளாய்,
"என்ன சொல்லனுமோ சொல்லுங்க சூர்யா" கோகியின் உந்துதலில் திலோ சற்று நிம்மதியாய் பார்க்க, ஷர்மியோ திகைத்து பார்த்தாள்.


"ஆன்ட்டி உங்க எல்லாருக்கும் பொதுவாவே இந்த விஷயத்தை சொல்ல விரும்பறேன். என் முதல் மனைவி ரேஷ்மாவை நான் கொல்லலை.அது ஒரு விபத்து.அவளுக்கு அதிகமா செல்ஃபி எடுக்கற பழக்கமுண்டு, ம்ஹூம் பழக்கங்கறதை விட, பைத்தியமென்றே சொல்லலாம். அப்படி நாங்க தொட்டபெட்டா சுத்தி பார்த்துட்டுருக்கும் போது அவ உச்சி முனைல நின்னு எடுக்கனுன்னு ஆசைப்பட, நான் அவளை வேண்டான்னு இழுக்க, நான் தடுத்து இழுக்கும் போதே, அவ கை நழுவி விழுந்துட்டா. இதை தூரத்திலிருந்து பார்த்த அங்கிருந்த பெரியவர் ஒருத்தர் நான்தான் தள்ளிட்டேன்னு நினைச்சு போலிஸ் கேட்கும்போது சொல்லிட்டாரு. நிச்சயம் இதுல இருந்து நான் வெளிய வந்துடுவேன்.இதுதான் நடந்தது. என்னை நம்புங்க" இத்தனையும் ஷர்மியின் முகத்தை பார்த்தே சொல்ல,


'நடந்த விபத்துக்கு பரிதாபப்படலாம்?! மகளின் வாழ்க்கையை பறிகொடுக்க முடியமா?'என்ற பார்வையை கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.


"என் எஸ்டேட்டுக்கு பக்கத்து எஸ்டேட்ல இருக்குற என் நண்பனுக்கும் என் ஜாதகத்தை போலவே பாவ ஜாதகம் தான். அதுக்கு உங்க பொண்ணு ஸ்வாதி ஜாதகம் ரொம்பவே ஒத்து வரும்.
இதை ஏன் நான் இப்ப சொல்றேன்னா? அவங்க ஜாதகத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்ததுல, அவனுக்கும் இன்னும் கல்யாணமே ஆகலை ஆன்ட்டி. நாங்க சொல்லிட்டா அவங்க அப்பாம்மாவே வந்து ஸ்வாதியை நிச்சயம் பண்ணிடுவாங்க. இதுதான் அவன் கார்டு" என்றவன் கோகிலாவிடம் நீட்ட,அதை கணவனிடம் கொடுத்தாள் அவள். அதைப்பார்த்தவரின் கண்கள் வியப்பில் விரிந்தன, ஏனென்றால் அவர்கள் பெரிய இடத்து ஆட்கள், இவர்களுக்கு உறவென்றால்? சூர்யாவை நினைத்து விந்தையாக இருந்தது அவருக்கு.


"என்ன விளையாடறிங்களா சூர்யா? சங்கரலிங்கம் இந்த ஏரியாவுல பெரிய ஆளு. அவருக்கு இரண்டு பையனுங்க..இரண்டாவது பையனுக்கு திருமணம் ஆகலைன்னு தெரியும். அவங்க எப்படி எங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சுக்க முடியும்?" பத்மநாபனின் கேள்வியில், யாரென்ற விபரமறிந்த கோகிலாவிற்கு விட்ட கனவு கைக்கெட்டியதை போன்ற உணர்வு.


"நான் சொன்னா நிச்சயம் அவர் கேட்பார் அங்கிள். எங்க அப்பாவோட நெருங்கிய நண்பர் அவரு. அவரை வைத்துதான் நான் இங்க எஸ்டேட்டே வாங்கி போட்டேன். அவங்களை பத்தி உங்களுக்கே தெரிஞ்சுருக்கே? பின்ன என்ன அங்கிள்?" தேர்ந்த தொழிலதிபனாய், கோகியின் பணத்தாசையை கண்டு கொண்டவனாய் இந்த பேச்சை எடுத்திருந்தான் அவன்.


"அதான் பிள்ளை இவ்வளவு தூரம் சொல்லுதில்ல. அப்பறம் என்ன?" கோகியின் இடையீட்டில் வந்த ஆத்திரத்தை அடக்கிய பத்மநாபன்,


"அவங்க எதிர்பார்க்கிற அளவுக்கு என்னால சீர் செய்ய முடியாது தம்பி. இத்தோட இந்த பேச்சை முடிச்சுக்கலாம்" என்றுவிட்டார் அவர்.


"அங்கிள் நான் சொன்னாலே போதும். அவங்க வேற எதுவும் எதிர்பார்க்க மாட்டாங்க?" என, ஷர்மியின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.


"திலோ உன் பையன் சொல்றது உண்மையா?" கோகியின் கேள்விக்கு,

"ம்ம்.. ஆமா கோகி. பையனும் நல்ல பையன்தான். சங்கர் மாமாவும் நாங்க சொன்னா ஒத்துப்பாரு" மகனின் ஆசையை ஆராய்ந்தவராக பதிலளித்தார் அவர்.


"அப்பறமென்ன அந்த நிச்சயத்தை பேசி முடிச்சிக்கலாம்" கோகியின் அவசரத்தை,

"கோகி"

"அக்கா" ஆட்சேபித்தனர் இருவரும்.


"எம்பொண்ணையும் என்னை மாதிரி மாச சம்பளக்காரனை கட்டிகிட்டு கஷ்டப்பட சொல்றிங்களா?" இத்தனை வருட அந்நியோயன்மான இல்லறவாழ்வை நொடியில் எடுத்தெறிந்து பேசிய மனைவியை மனமுடைந்து பார்த்தார் பத்மநாபன்.கோகிலாவிற்கு பணத்தாசை அதிகம் என்பது அவருக்கு தெரியும், ஆனால் இந்தளவிற்கு வெறியே இருக்கும் என்பது அவரது இதயத்தை உடைந்து போகச்செய்தது.


"அக்கா.. மாமாவ பார்த்து என்ன பேச்சு பேசுற?" ஷர்மி கண்டிக்க,

"நீ சும்மா இரு ஷர்மி"கோகி அவளை அலட்சியப்படுத்த, அக்காவின் ஆசை ஏற்கனவே தெரிந்த விஷயமென்றாலும் இப்பொழுது மிகவும் சிரமத்தை கொடுக்க, தலையைப் பிடித்து கொண்டார் அவர்.


"நீ எனக்காக பேசி முடி திலோ. என் பொண்ணு பெரிய இடத்துல வாழனும். எனக்கு அதுதான் வேணும்" கோகி உற்சாகமாக,


"அப்ப ஒரு நிபந்தனைக்கு நீங்க ஒத்துக்கனும் ஆன்ட்டி" சூர்யாவின் அழுத்தமான தொனியில், பத்மநாபனின் கண்கள் யோசனையில் இடுங்கியது.


"என்ன நிபந்தனை? எதுன்னாலும் செய்றேன் சூர்யா" கோகி வாக்கு கொடுக்க, திலோத்தமாக்கு மகன் காரியத்தை சாதிக்க ஆரம்பித்து விட்டது,புரிந்து விட்டது.


"உங்க பொண்ணுக்கு என் நண்பனோட கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி, எனக்கும் நீரஜாவுக்கும் கல்யாணம் நடக்கனும்" என,
"முடியாது"உடனடியாக பதில் வந்தது ஷர்மியிடமிருந்து.
"இப்ப உங்க பையனை வெளிய கூட்டிட்டு போறிங்களா? இல்லை நானே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளட்டுமா?" பத்மநாபன் அதை செய்துவிடும் முடிவுடன் அவனை நெருங்க,


"செய்யுங்க,ஆனால் அதுக்கு முன்னாடி என் பிணத்துக்கு கொல்லி வச்சுட்டு செய்யுங்க" ஊடே வந்த மனைவியை கண்டு வெதும்பிய உள்ளத்தை அடக்க முடியாது மடிந்து அமர்ந்தார் பத்மநாபன்.


"அக்கா உனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு? அவன் உன் ஆசையை உபயோகப்படுத்திக்க பார்க்கிறான்" ஷர்மி அவளுக்கு புரிய வைக்க முயல,


"நீ கூடத்தான் என்னை உபயோகப்படுத்திகிட்ட ஷர்மி? உனக்கு உன்‌ பாதுகாப்புக்கு? நீ பண்ண காரியத்தால் தான் எனக்கு கிடைக்க இருந்த நல்ல வாழ்க்கை பறிபோச்சு. இன்னைக்கு அதை நீ உன் மகளை வச்சுதான் சரி பண்ணனும்!? நன்றியுள்ளவளா இருந்தா இதை எனக்காக நீ செஞ்சு தான் ஆகனும்" என்றதில்,


"அக்கா..ஆஆ.."

வெடிக்கத்துடித்த அழுகையில் ஷர்மியின் தொண்டை கமற, பத்மநாபனின் மனதிலோ மனைவியின் மீதான மதிப்பு மரித்து போயிருந்தது. ஒற்றை நாளில் சூறாவளியாய் குடும்பத்தை சிதைத்தவன் சூரபதுமனாய் அவளுக்கு தெரிய, வேண்டிய வரமருளிய வேலனாய் தெரிந்தான் கோகிலாவின் கண்களுக்கு.
பின்பு அங்கு அழுகுரல் சத்தமும் வாக்குவாதமும் காதை நிறைக்க, சூர்யாவின் கண்களோ பெண்களின் அறைவாயிலையே பார்த்துக்கொண்டிருந்தது.


"சூர்யா என்னடா இது? இனி ஒரு பெண்ணுக்கு என் வாழ்க்கையில இடமே கிடையாதுன்னு என்கூட சண்டை போட்டுகிட்டு இங்க பெண்பார்க்க வந்த? இப்போ நீரஜா வேணுன்னு ஒத்த கால்ல நிற்கிற?என்னடா ஆச்சு ராஜா உனக்கு?" கோகி உச்சக்குரலில் கணவனுடனும், தங்கையுடனும் சண்டையிட்டு கொண்டிருக்க, பதற்றத்துடன் மகனிடம் மெதுவாக விசாரித்தார் திலோத்தமா.


"எனக்கு அவதான் வேணும் திலோம்மா" அன்னையின் முகம் பார்த்த மகனின் முகம் அன்று கையிலேந்திய பாலகனின் முகமாக தெரிய,மனம் பரிதவிக்க தொடங்கி விட்டது.அவன் முதன்முதலாக ஆசைப்படும் விஷயமாயிற்றே?


"அது.. சூர்.. " திலோ பேச ஆரம்பிக்கும் போதே,


"அக்கா நீ மட்டுந்தான் செத்துபோவியா? எங்களுக்கு சாகத்தெரியாதா?" ஷர்மி மகளுக்காக போராட,


"ஓ.. அப்போ உங்க விஷயமுன்னு வந்தா நீங்க விட்டே கொடுக்க மாட்டிங்க அப்படித்தானே? பரவாயில்லைம்மா,நீங்க நல்லா வாழுங்க" என்றவள் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு கொள்ள முயற்சிக்க,


"அக்கா கதவை திற"

"கோகி முட்டாள்தனம் பண்ணாத கதவை திற" பெற்றோரின் கூச்சலில் பெண்களிருவரும் அங்கு ஓடிவந்தனர்.


சற்றும் யோசிக்காது"கதவை திறக்கா!எம்பொண்ண உங்க பையனுக்கு கட்டிக்கொடுக்க சம்மதம் மேடம்" ஷர்மி கோகியின் காதுபட கத்த,


"ஷர்மி அவசரப்படாதம்மா? நிதானமா பேசலாம்"திலோத்தமா அவளை சாந்தப்படுத்த முயன்றாள்.


அன்னையின் வார்த்தையில் ஸ்வாதியுடன் சேர்ந்து கதவை தட்டிக்கொண்டிருந்த நீரஜா அதிர்ந்து பார்க்க, கதவை திறந்த கோகி," என் தங்கமே" நீரஜாவை கட்டிக்கொண்டாள்.

ஸ்வாதி புரியாது அன்னையை பார்க்க,
"இவ வாழ்க்கை மூலமா உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க போகுது ஸ்வாதி" கோகி பூரிப்புடன் தனது மகளை அணைத்துக்கொண்டவள் விவரத்தை சொல்ல,

"அம்மா" ஷர்மியின் கை பிடித்தவளை,

"உனக்கும் சம்மதமென்று சொல்லு நீரு" அன்னையின் கட்டளையாக வர, திலோவின் கைகளை பிடித்துக்கொண்டு நீரஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அவன்‌.


"ம்மா.. " அதிர்ச்சியுடன் விளிக்க,
"சம்மதமென்று சொல்லு நீரு" எதற்கும் அழாத அன்னை தன் கண்முன்னே உடைந்து அழ,

"ம்மா..அழாதிங்கம்மா.. எனக்கும் சம்மதம்மா" அவளின் சம்மதத்தில் உற்சாகமாக அன்னையை கட்டிக்கொண்டான் சூர்யா.

மகனின் இந்த திடீர் மனமாற்றத்தை விளங்காது திலோ நீரஜாவை பார்க்க, நீர் நிறைந்த நயனங்களில் நிறைந்த வெறுப்பை கண்ணீராய் கொட்டி கொண்டிருந்தாள் அவள்.
அதன்பின்பு ஷர்மி அங்கே நில்லாது சென்றுவிட, கோகியை வைத்தே அனைத்து விஷயங்களையும் பேசி முடித்து விட்டான் சூர்யா.


அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் பக்கத்து நெருங்கிய சொந்தங்களுடனும், அக்கம்பக்கதினருடனும் அருகிருந்த முருகன் கோவிலில் வைத்து, மங்கலநாண் பூட்டி நீரஜாவை தனது மனைவி ஆக்கியவன், அன்றே தனது நண்பன் சுரேஷுக்கும்- ஸ்வாதிக்கும் நிச்சயத்தையும் நடத்தி விட்டான்.


இதோ மணமக்களை அழைத்து வந்து பாலும் பழமும் கொடுத்து விட்டு, சூர்யாவின் பங்களாவிற்கு அழைத்து வந்திருக்க, சாந்தி முகூர்த்தத்திற்காக ஏற்பாடு செய்ய வந்த அன்னையை‌ உணர்வில்லாத பார்வையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் நீரஜா.


அத்தியாயம்-3:

"அலங்காரம் முடிஞ்சதா ஷர்மிம்மா?" சாந்தம் தவழும் முகத்துடன் உள்ளே நுழைந்தவளை கண்டால் எதிரிக்கும் மனமிறங்கும், ஆனால் நீரஜாவோ அவரை பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மகளின் செயலில் ஷர்மி சங்கடமுற, தான் பார்த்துக்கொள்வதாய் கண்களை மூடி திறந்து சைகை செய்தார் திலோத்தமா.
கல்யாண ஏற்பாடுகள் செய்யும் போது,தான் பெறாத மகனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும், அவன்பட்ட துயரங்களையும் முழுக்க ஷர்மியிடம் சொல்லி விட்டார் திலோத்தமா.
தாய் மனம் படும்பாடு அவருக்கு நன்றாக புரிந்ததால், அவர் விளக்கிய பின்புதான் ஷர்மியால் இயல்பாக இருக்க முடிந்தது. மகளின் வாழ்க்கையை பற்றிய கவலையும் சற்று குறைந்தது.
"இந்த விஷயங்களை எல்லாம் நானே மருமகள்கிட்ட சொல்லிடறேன் ஷர்மி. அவளும் கொஞ்சம் நிம்மதியா இருப்பா.. இல்லை அவ எப்படி ஏத்துக்கிட்டாலும் சரி" என்ற திலோத்தமாவை,
"இப்ப எதையும் புரிஞ்சுக்கற மனநிலையில் அவள் இல்லை சம்பந்தியம்மா. கொஞ்சநாள் போனதும் அவளே விஷயத்தை தெரிஞ்சுக்க முயற்சி செய்வா.. அப்ப நீங்களோ, மாப்பிள்ளையோ சொல்லி கொஞ்சம் புரிய வையுங்க. அதுக்குள்ள என்மேல இருக்க கோபம் குறைஞ்சுட்டதுன்னா நானே அவளுக்கு எடுத்து சொல்லிடறேன். இப்போ வேண்டாம்" என்று தடுத்து விட்டார் ஷர்மி. அவர் சொல்வதும் நியாயமாகத்தான் பட்டது திலோவிற்கு. பின்னே குறுகிய நாட்களில் ஒரு பெண்ணால் எத்தனை அதிர்ச்சிகளை தான் தாங்கிக்கொள்ள இயலும்?
"நீரு எழுந்து என்கூட வாம்மா.நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க ஷர்மிம்மா" என்றவர், "சாரு" என அழைக்க நடுத்தர வயதில் வேலைக்கார பெண்மணி ஒருவர் ஓடிவந்தார்.
"சாரு.. சம்பந்தியை கூட்டிட்டு போய், கோகி ரூம்ல விட்டுட்டு வா" என, தலையாட்டிவிட்டு அவரும் அழைத்துச்சென்று விட்டார். கோகிலாவின் அருகே இருப்பதே நீருவிற்கு பிடிக்கவில்லை என்பதால்,அவளை உபச்சாரத்தின் பேரில் பிடித்து வைத்து அந்த பங்களாவை சுற்றி பார்க்க அனுப்பி வைத்து விட்டார் திலோ. இருந்தும் ஒத்த வயது பெண்ணான ஸ்வாதி துணையை நீரு விரும்புவாள் என அவளை அழைக்க, நீருவின் முகத்திலும் சிறு எதிர்பார்ப்பு. ஆனால் ஸ்வாதி அன்னையுடனே இருக்க போவதாக அவளை தவிர்த்து விட, அப்பொழுது அவளது அறைக்கு சென்று அடைந்தவள்தான், இப்பொழுதுதான் அவளை பார்க்க முடிந்தது.
சிலையைப்போல் உடன் நடந்து வருபவளை கண்டு மனம் கனத்தாலும், " இது தான் உன்னோட மாமனார் மாமியார் நீரும்மா வணங்கிக்கோ" ஹாலில் பெரிதாக ப்ளோ அப் செய்து மாட்டப்பட்டிருந்ததை கண்டு கண்களை அகற்ற முடியவில்லை அவளால். ஒருவருக்கொருவர் பொருத்தமாக ஆதர்ஷ தம்பதியர்களாக தெரிந்தனர் இருவரும். சூர்யா அவனது தந்தையின் ஜாடை என்பது புரிந்தது. அந்த அளவிற்கு " இது வேண்டுமா? அது வேண்டுமா?" என அவளை அக்கறையால் நச்சரித்து அவனது முகத்தை பதிய வைத்திருந்தான் அவன்.
"ம்ம்.." சிலைக்கு சற்றே உயிர் வந்திருந்தது. அவளது ஊம் கொட்டலிலேயே மகிழ்ந்தவராக,
"அக்காவையும் மாமாவையும் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நீரும்மா. விஷ்வம்-மகேஷ்வரி பெயர் பொருத்தம் கூட அவ்வளவு பொருத்தமா இருக்கும்.நாங்க எல்லாம் ஒரே ஊருதான்.எங்களுக்கு சின்ன வயசிலேயே அம்மா இறந்துட்டாங்க.மாமாவோட அம்மா அப்பா அவ்வளவு நல்லா பார்த்துக்குவாங்க.அதுவரைக்கும் அம்மா இல்லாத குறைகூட தீர்ந்து போச்சு. சொந்த அத்தை மாமா கூட இப்படி பார்த்துக்கலை. ஊரிலேயே செல்வாக்கான குடும்பம் மாமாவோட குடும்பம்.எல்லாம் நல்லாதான் போயிட்டுருந்தது. மாமாவுக்கு அமெரிக்கால வேலை கிடைக்கற வரைக்கும்" என்றவர் பெருமூச்சு விட,
"என்னாச்சு?" என்றாள் நீரு.
"நான் உனக்கு அத்தைடா நீரும்மா. அத்தைன்னு கூப்பிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன்" எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்க்க, அதற்குமேல் அவரிடம் கடுமை காட்ட இயலவில்லை அவளால்.
"சரி அத்தை" என்றுவிட,
"இப்போ புரியுது. என் பையன் ஏன் ஒத்தைகால்ல நின்னு உன்னை கல்யாணம் பண்ணான்னு?" பூரிப்பில் அவர் மகனை இழுக்க, நீருவின் முகமோ கூம்பி விட்டது.
அவளது உணர்வை புரிந்தவராக," மாமா அப்பவே ஐஐடி டாப்பர் நீரும்மா. அதுக்கு தகுந்த வேலை பிரபல அமெரிக்க நிறுவனத்திலிருந்து வந்திருந்தது. எனக்கும் அப்போதான் கல்யாணம் ஆகியிருந்த புதிது. நான் அப்போ என் வீட்டுக்காரரோட காஷ்மீர்ல இருந்தேன்.
மாமா அமெரிக்காவுக்கு போக வேண்டாமுன்னு மாமாவும் அத்தையும் எவ்வளவோ பேசி பார்த்தாங்க. ஒத்தை மகனை பிரிஞ்சு அவங்களால இருக்க முடியாது, அதே சமயம், எதோ நிலத்தை தோண்டி வாயு எடுக்கப்போறோன்னு அரசாங்கம் எங்க விவசாய நிலங்களை கைப்பற்ற நினைக்க, ஊர்தலைவரா இருந்து மாமாவோட அப்பா தான், அரசாங்கத்திற்கு எதிரா முன்ன நின்னு போராட்டம் நடத்தினாரு. அதுல தன்னுடைய மகனையும் கலந்துக்க சொல்ல,
"இந்த வயசான காலத்துல இதெல்லாம் உங்களுக்கு தேவையாப்பா?நீங்களும் எங்க கூட ஒழுங்கா அமெரிக்கா கிளம்புங்க" தந்தையிடம் கோபப்பட்டார் விஷ்வம்.
"இந்த கட்டை வேகுறவரைக்கும் இந்த ஊர்மக்களுக்கா பாடுபட்டு தான் வேகும். அவன் அந்த வாயுவை மட்டும் எடுத்துட்டான்னா நிலமெல்லாம் தரிசு நிலமா போகும்டா விஷ்வம். உயிரில்லாத உடம்பா, வெதும்பி போகும். உன்னை இப்படி பேசறதுக்கா ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிக்க வச்சேன்? இந்த ஊருக்கு உதவனுன்னு தானே உன்னை படிக்க வச்சேன். நாம கொடுக்கலாம் ஆயிரம் பேருக்கு வேலை? நீ எதுக்குடா அந்நியன் கிட்ட கையேந்தி நிக்கனும்?" விஷ்வத்தின் தந்தை பதிலுக்கு வாதிட,
"போதும்பா ஊருக்கு உழைச்சது. அமெரிக்காவில் வாழனுங்கறது என் வாழ்நாள் கனவு.நீங்க என்ன தடுத்தாலும் நான் அங்கதான் இருக்க போறேன். கொஞ்சநாள்ள ஒரு தொழிலும் ஆரம்பிக்க போறேன். திரும்ப வந்து உங்களையும் கூட்டிகிட்டு போயிடுவேன்" என்றவர் விடாப்பிடியாக கிளம்பிவிட்டார்.
"ஈஸ்வரி நீயாச்சும் சொல்லேன்மா?" விஷ்வத்தின் தாய் கண்ணீர் விட,
"எனக்கும் அங்க போக இஷ்டமில்லை அத்தை. எனக்கு அங்க யாரை தெரியும்? இவர் கேட்க மாட்டேங்கிறாரே?" இருவரின் அழுகுரலும் விஷ்வத்தை இளக்கவில்லை.
"சொன்னபடி மாமா அமெரிக்காவுக்கு கிளம்பி போயிட்டாரு. அத்தையும் மாமாவும் கலந்துகிட்ட போராட்டத்துல போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தினதுல அவங்க நாட்டுக்காக உயிரை விட்டுட்டாங்க" நாட்டின் நலனுக்காக போராடியவர்களை நினைத்து ஒருபுறம் பெருமையாகவும், சூர்யாவின் தந்தையை நினைத்து கோபமும் வந்தது நீரஜாவிற்கு.
'அவங்க அப்பா மாதிரியே பிடிவாதம் பிடிப்பான் போல' மனதுக்குள் நினைத்தவளுக்கு பக்கென்றது, எப்பொழுதிருந்து இவனைப் பற்றிய சிந்தனைகள் தன்னுள் மேலோங்க ஆரம்பித்தது?
"அப்பதான் மாமாக்கு அங்க இருந்து திரும்ப முடியாத நிலையும், அமெரிக்க வாழ்க்கையும் கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. வேலையே வேண்டான்னு உதறிட்டு வந்தப்போ இங்க ஊர்மக்கள் எல்லாம் செஞ்சு முடிச்சுட்டாங்க.அந்த வேதனையெல்லாம் அவர் தொழில்ல காண்பிக்க குறுகிய காலத்திலேயே மாமாவுடைய தொழில்ல அமெரிக்காவில் பெரிய முன்னேற்றம்.
ஆனால் அக்காதான் ரொம்ப உடைஞ்சு போயிட்டா.அடுத்து நடந்த கார்கில் போர்ல என் வீட்டுக்காரர் வீரமரணம் அடைய, முதல்ல ஓடிவந்தது மாமாதான். வந்து கையோட அங்கே என்னை கூட்டிட்டு போயிட்டாங்க. சூர்யா தான் என் வாழ்க்கைல வசந்தத்தை கொடுத்தவன், அக்காவும் அவனை முழுக்க என் கையிலேயே கொடுத்துட்டா. என்ன இன்னைக்கு இருந்து ஆசிர்வாதம் பண்ணிருந்தா நல்லா இருந்திருக்கும்" சற்றே தழுதழுத்த குரலில் பேசியவரின் தோளில் ஆறுதலாக கைவைத்தாள் நீரஜா.
"என் பையன் ரொம்ப நல்லவன் நீரூம்மா. வயசுக்கு மீறிய கஷ்டம் பட்டுட்டான். அவனோட சில இருண்ட பக்கங்களிலிருந்நு நீதான் அவனை காப்பாத்தனும். அவனை கைவிட்டுடாத.
பொண்ணுங்க மேல் எந்தவித ஈர்ப்பும் இல்லாம, என்னுடைய வற்புறுத்தலில் தான் அவன் முதல் கல்யாணமே பண்ணான். அதனாலேயே என்னவோ அது சரியா அமையாம போயிடுச்சு?! ஆனால் உன் விஷயத்துல தலைகீழ். அவன் உன்னைத்தான் கட்டுவேன்னு சொன்னப்போ எனக்கு ரொம்பவே ஆச்சரியம். சரி ஆண்டவன் அவனுக்கு நல்லவழி காட்டிட்டாரு, ஒரு தேவதைப்பெண்ணை அவனுக்கு கொடுத்துருக்காருன்னு சந்தோஷமா இருக்கு. இனி இந்த குடும்பத்துல சந்தோஷத்தை நீதான் மலரச்செய்யனும். செய்வியா நீரும்மா?" உணர்வுச்சங்கிலிகள் தன்னை பிணைப்பதை உணராது, சம்மதாக தலையசைத்தாள் நீரஜாவும்.
"பாரு நான் பாட்டுக்கு நிற்க வச்சுட்டு பேசிட்டுருக்கேன். இத்தனை நாள் நானும் என் பையனுமா இருந்தோமா? இன்னைக்கு நீ வரவும் இந்த வீடே நிறைஞ்சதை போலொரு உணர்வு. அதான் பேசிட்டே இருந்துட்டேன்" என்றவர் அவளை பூஜையறைக்கு அழைத்துச்சென்று விபூதியிட்டு, பால்செம்பை அவள் கையில் கொடுத்து சூர்யாவின் அறையில் விட, வெறுப்பும் பயமும் ஒருசேர்ந்த உணர்வு நீரஜாவிற்கு.
"ஹேய் ஜூஜூ.. ஏன் இப்படி முழிச்சுட்டு நிற்கிற?" அருகில் ஒலித்த சூர்யாவின் குரலில் அதிர்ந்து பின்வாங்கினாள் நீரஜா.


அத்தியாயம்-4:

ஏதோ காலங்காலமாக பழகியதைப்போன்ற சூர்யாவின் வரவேற்பிலும், கண்களால் விழுங்கி கொண்டிருந்தவனின் பார்வையிலும் எரிச்சல் மூண்டது நீரஜாவிற்கு. அதுவும் அவனது " ஜூஜூ" என்ற அழைப்பு, இவனுக்கு எப்படி தெரியும்? என யோசிக்க, அவளுக்கு நேரெதிரே இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த அவளது அலைபேசியின் உரை ஜூஜூ பொம்மையுடன் பல்லிளித்து கொண்டிருந்தது.

அதன்பின்பே தனது மடத்தனம் ஞாபகம் வர, ஸ்வாதி ஒவ்வொருமுறையும் எவ்வளவோ சண்டை போட்டும் பெரியம்மாவின் வீட்டில், தனது அறை முழுக்க தனக்கு மிகவும் பிடித்த வோடஃபோன் விளம்பரத்தில் வரும் ஜூஜூ பொம்மைகளையும் ஸ்டிக்கர்களையும் வாங்கி குமித்து மகிழ்ந்தது இப்பொழுது கசந்தது. திருமணம் முடிந்து அவர்களது அறையில் தானே இவன் ஓய்வெடுத்தான்.

அதில் ஆத்திரம் இன்னும் அதிகமாக," ஹலோ மிஸ்டர் எஸ்‌.பி யாரைப் பார்த்து ஜூஜூ சொல்ற?" அவனை சுற்றிக்கொண்டு உள்ளே நுழைய அவளது துடுக்குத்தனம் மீண்டிருந்ததில் சந்தோஷமாக கதவடைத்து விட்டு அவளை பின்தொடர்ந்தான் சூர்யா.

அறையோ அத்தனை பெரிதாக இருந்தது. 'கட்டிலுக்கு செல்வதற்கே இவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கே?' அலுப்பாக முகத்தை தூக்கியவள், திரும்ப எத்தனித்து பின்னே வந்தவனின் மீது இடித்து பால் முழுவதையும் அவன் மீதே கொட்டிவிட்டாள்.

"ஹேய் என்னடி இது?" அதிர்ச்சியில் சூர்யா அவளை டி போட்டு அழைக்க,

"ஹே மிஸ்டர்.. மரியாதை.. மரியாதை.. நல்லதுதான் எனக்கு பால் பிடிக்காது உவ்வே" என்றவளை சற்றும் எதிர்பாராத விதமா இழுத்து கட்டிக்கொண்டான் அவன்.
"நீ மட்டும் என்ன எஸ்பி சொல்ற? எஸ்.பின்னா என்ன? ஸ்வீட் பாய்ஃப்ரெண்டா?" என்றவனை விலக்கி தள்ளி கொண்டிருந்தாள் அவள்.
"அதெல்லாம் சொல்ல மாட்டேன். விடு என்னை விடு. நீ ரொம்ப கெட்டவன். உன்னால தான் ஸ்வாதி என்கூட பேசாம போயிட்டா. எங்கம்மாவை கூட எனக்கு பிடிக்காம போயிடுச்சு" என்றவளை சட்டென அவன் விடுவிக்க, பிடிமானம் இல்லாது கீழே விழுந்து விட்டாள் அவள்.
"கொலைகாரா!! கொலைகாரா!! என்னையும் கீழே தள்ளி கொல்ல பார்க்கிறியா?"மனம் கவர்ந்த தையலின் கேள்வியில் இதயத்தில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது அவனுக்கு.


முயன்று சமாளித்து எழ முயன்றவளை அவள் எதிர்பாராத விதமாய் தூக்கியவன்," யார் வேணுனாலும் என்னை கொலைகாரன்னு சொல்லட்டும்.நீ என்னை அப்படி சொல்லாதடா ஜூஜூ" என்றவனின் மெல்லொளியில், மனதை உருக்கிய துயரம் சுமந்த அக்குரலில், மற்றதெல்லாம் மறந்து அவனை ஆழ்ந்து பார்த்தாள் நீரு.


ஆண்மையின் மிடுக்குடனும் அழகுடனும், மாநிறம் தான் இருந்தாலும் முக லட்சணத்தில் அவனை விட அவள் குறைவு தான். அன்னையை கொண்ட பால் வண்ணமென்றாலும் இத்தனை கம்பீரமானவன் முன்பு, தான் சற்று குறைந்து தெரிவதை அவள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, பூவைப் போல் மெதுவாக குளியலறையில் இறக்கி விட்டான் அவன்.
அவள் உள்ளே நுழைந்து தாளிட்டுக்கொண்ட மறுகணமே அவன் கதவை தட்ட,பயத்தில் கதவை திறக்கவில்லை அவள். மீண்டும் மீண்டும் அவன் கதவை தட்ட தட்ட,பயபூதம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது அவளுள்.
'இவன் நடந்துக்கறதை பார்த்தா இவன் தான் கொலை பண்ணானான்னு வேற சந்தேகமா இருக்கே?பேசாம கேட்டுருவோமா? எதுக்குடா கொலை பண்ணன்னு?'அவளது ஒரு மனசாட்சி கேட்க,
'கோபத்துல உன்னை போட்டுத்தள்ளிட்டான்னா?' மற்றொரு மனசாட்சியின் குரலில் எச்சில் விழுங்கினாள் அவள்.‌
"நீரு கதவை திற? உன்னோட துணி பெட்டியை கொடுக்க தான் கதவை தட்டுறேன்" சூர்யாவின் உரத்த குரலில் வேகமாக கதவை திறந்தாள் நீரஜா. பின்னே அவனது குரல்தான் அறையெங்கும் எதிரொலித்ததே.
"அதுக்கு ஏன் இப்படி கத்துறிங்க?" அவனது கையில் இருந்த பெட்டியை பிடுங்க, அவளால் முடியவில்லை.
நிமிர்ந்து பார்க்க,குறும்பாக சிரித்துக்கொண்டிருந்தான் சூர்யா.
"பெரிய காதல் மன்னன்?!" எரிச்சலுடன் அவள் முணுமுணுக்க,
"பாய்ஃப்ரெண்டிலிருந்து லவ்வர்க்கு ப்ரமோஷன் கொடுத்துட்டியே ஜூஜூ" என்றவனின் பேச்சில் கோபமடைந்தவள், கதவை பட்டென்று சாத்தி விட்டாள்.
தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அவள் வெளியில் வர, தானும் குளித்து முடித்து சுத்தமாகி, டீஷர்ட் ஷார்ட்ஸுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான் அவன். எப்படி?! கேள்வியை கண்களில் அபிநயம் பிடித்தவளை கண்டு ரசித்தவன், அறையின் மற்றொரு மூலையை சுட்டிக்காட்டி," அது என்னோட ட்ரெஸிங் ரூம் அட்டாச்சுடு பாத்ரூமோட இருக்கு. இந்த பக்கம் உன்னுடையது" என்றவனின் விளக்கத்தை ஏனோ தானோவென்று அவள் கேட்டுக்கொண்டிருக்க, சூர்யா எழுந்து, கட்டிலில் இருந்த தலையணைகளை எடுத்து அங்கிருந்த ஒற்றை நீள சோஃபாவில் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனது செயலில் நீரஜாவின் புருவங்கள் மெச்சுதலாக உயர்ந்தது.
'பரவாயில்லை தனியா படுத்துப்பான் போல. நிம்மதியா தூங்கி எந்திரிக்கலாம்' என்றவள் கைகளை நீட்டி அலுப்பை விரட்ட முயற்சிக்க, அவனது அடுத்த செயலில் வந்த கொட்டாவி வாய்க்குள்ளேயே அடங்கி விட்டது.
"வா ஜூஜூ படுத்துக்கோ. ரொம்ப டையர்டா இருப்ப. எனக்கு இந்த எக்ஸ்ட்ரா தலையணைலாம் இருந்தா இடைஞ்சலாக இருக்கும். அதான் எடுத்து அங்க போட்டேன்" என்றவன் நன்றாக கால் நீட்டி படுத்துக்கொள்ள,
"என்னால உங்ககூட படுக்க முடியாது" என்றவள் சோஃபாவில் இருந்த தலையணைகளை எடுத்து கீழே போட,
"ஏன்?!" அதிகாரம் சுமந்து வந்ததோ? ஆம்.. சூர்யாவின் முகமும் இப்பொழுது பழைய கம்பீரத்தை மீட்டிருந்தது.
"ஒரு கொலைகாரன் கூட, பெண்களை மதிக்காதவன் கூட என் வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது?" நேருக்கு நேராக அவன் முகத்தை பார்த்து பேசியவளின் தைரியத்தை மெச்சியவன்,
"குற்றம் செய்தவனால இவ்வளவு இலகுவா இருக்க முடியுன்னு நீ நினைக்கிறியா நீரஜா? வந்ததிலிருந்து உனக்கு மரியாதை கொடுக்காத மாதிரி, என் நடவடிக்கைகள் உனக்கு அப்படித்தான் தெரியுதா? " இறுகிய குரலில் கேட்டுக்கொண்டே அவள்புறம் எழுந்து வந்தவனை கண்டு பின்வாங்கியவள் சோஃபாவின் கால் இடித்து அதிலேயே விழுந்தாள்.
நிதானத்துடனும், ஏற்ற இறக்கங்களுடனும், வார்த்தைகளில் அழுத்தத்துடனும் பேசியவன் கணவனாக அல்லாமல் தேர்ந்த தொழிலதிபதினாய் தெரிய, மிரண்ட அவள் விழிகளை கண்டு, தலையில் கை வைத்து அமர்ந்தான் சூர்யா.
அவன் அருகமர்ந்ததும் வேகமாக அவள் தள்ளி அமர, ஒருகை மட்டும் சூர்யாவின் கையில் சிக்கியிருந்தது.
'இதை எப்ப புடிச்சான்?' அவள் மிடறு விழுங்க,
"நான் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் வேணும் நீரஜா?" என்றவனின் கேள்வியில் உதடுகள் நடுங்கத்தொடங்கின அவளுக்கு. வேகமாக எழுந்து சென்றவன், ரூம் ஹீட்டரை தட்டிவிட, சற்று ஆசுவாசமானாள்‌ நீரு. ஊட்டியின் குளுமையுடன் அவனைப்பற்றிய பயமும் சேர்ந்து கொள்ள, பற்களும் உதடுகளும் தானாக நடுங்க ஆரம்பித்திருந்தது.
"சொ..சொல்ல எ..எனக்கென்ன பயமா? ஒரு பெண்ணை பெண் பார்க்க வந்துட்டு இன்னொரு பெண்ணை பிடிச்சுருக்குன்னு சொல்லி அவள் மனசை உடைச்சவன், என்னைப்பொறுத்த வரைக்கும் அயோக்கியன் தான். இன்னொரு பெண்ணும் உங்க கையால சாகடிக்கப்பட்டு இருக்கான்னு வேற கேள்வி?" என்று பேசிவிட, ரத்தநாளங்கள் முகத்தில் பெருக்கெடுக்க, கன்றி சிவந்திருந்தது சூர்யாவின் முகம்.
மெழுகுவர்த்தியில் உருகி ஒட்டிய முதல் துளி போல் அவன் கண்ணின் ஓரம் கண்ணீரும் துளிர்த்திருக்க குழப்பமாய் அவனைப்பார்த்தாள்.
"என் பக்கம் ஒருசதவீத நியாயம் கூட இருக்காதுன்னு தான் நீயும் நினைக்கிறியா? அன்னைக்கு உங்க அம்மாகிட்ட கூட!" என்றவனை இடைமறித்தாள் அவள்.
"போதும்.. இதுக்கு மேல நீங்க என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன். உங்களை நான் வெறுக்கிறேன். சின்ன வயசுல இருந்து ஸ்வாதி எனக்கு உயிர்தோழியா இருந்தா, இப்ப அவ என்னை பார்த்தாலே ஒதுங்கி போயிட்டா" கைகளில் முகத்தை புதைத்து கதறி அழுதவள்,"உங்களால அவ மனசுடைஞ்சு போய், நம்ம கல்யாணத்தில அவள் என் பக்கத்தில் கூட வந்து நிற்கலை. அம்மாவுக்கும் இந்த கல்யாணத்தில் நிம்மதி இல்லை.
அக்கம்பக்கத்தில் என்ன பேசிகிட்டாங்க தெரியுமா? பணத்துக்காக நான் எதையும் செய்வேனாம்.இந்த அவமானம் எனக்கு தேவையா?

எனக்கு என் குடும்பமே இல்லாம பண்ணிட்டு உங்களுக்கு மட்டும் குடும்பம் அமைச்சுக்க பார்க்கறிங்களே இது நியாயமா?" கேவி அழுதவளை சமாதானம் செய்ய சூர்யா அருகிழுக்க, அவன் நெஞ்சில் மாறி மாறி அடித்தாள் அவள். அந்த அடிகள் ஏதோ ஓர் இதத்தை கொடுக்க, மரித்த இதயக்கூட்டில் ஒளி ஒளிர்வதை உணர்ந்தான் அவன்.
அடித்து ஓய்ந்தவள்,அவன் முகத்தை பார்க்க விரும்பாதவளாக," எனக்கு கொஞ்சம் டைம் வேணும். எல்லாத்தையும் புரிஞ்சுக்க. என் மனசை சரி பண்ணிக்க.. அதுவரைக்கும் நீங்க" அவனுக்கு கட்டிலை நோக்கி கை நீட்ட, இது!!இந்த நியாய குணத்தில் தானே தனது தேவதையை சிறையெடுத்து வந்திருக்கிறான்?!.. அமைதியாக எழுந்து சென்று படுத்துகொள்ள, வீங்கி வலித்த இமைகளை மீறியும் இத்தனை நாள் மன உளைச்சலில் கண்ணயர்ந்திருந்தாள் நீரஜா.
இரவில் தண்ணீர் தாகம் எடுக்க, எழுந்தவள், காலை கீழே வைக்க தன் காலில் மிதிபட்டதை நினைத்து பயந்து, மீண்டும் சோஃபாவிலேயே காலை தூக்கி வைத்து அமர்ந்தவள் ஒளிக்காக தன்னருகே இருந்த அலைபேசியை தேட, தேடிப் பாய்ச்சிய ஒளியில் பார்த்த போதோ?!


அத்தியாயம்-5:

அவள் அணிந்திருந்த சுரிதாரின் துப்பட்டாவை பிடித்துக்கொண்டு, அவள் கால் வைத்து இறங்கும் இடத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சூர்யா. அவள் மிதித்ததை கூட உணரவில்லை அவன். அவளுக்கு எங்கே தெரிய போகிறது? அவனது இந்த நிம்மதியான தூக்கம் எத்தனையோ வருடங்களுக்கு பிறகென்பது?!
ஆனால் பெண்ணவளின் மனமோ,' என்ன இப்படி எல்லாம் பண்றான்? ஒருவேளை இவன் சைக்கோவா இருப்பானோ? அதனால்தான் இவன் முதல் மனைவியை கொன்னுட்டானோ? இரண்டு நாள்கூட வாழாம செத்து போயிட்டதா கோவில்ல பேசிகிட்டாங்களே?' அவனருகே அமர்ந்து துப்பட்டாவை மெதுவாக இழுக்க,அப்பொழுதுதான் அவனது உருவத்தை நன்றாக கவனித்தாள். ஆறடி உயரத்தை இந்த குளிரில் அவன் குறுக்கி ஆதரவற்ற பிள்ளை போல படுத்திருந்தது வேறு மனதை என்னவோ செய்தது?
'இந்த மஞ்சள் கயிறு ஏதோ மேஜிக் பண்ணுது?' நினைத்தவளாய் அவன் கையில் இருந்து பிரிக்க முடியாமல், எழுந்து கொள்ள போக, வேகமாக எழுந்ததில் துப்பட்டா இழுபட்டு அவன் மேலேயே விழுந்தாள் நீரஜா.
"அய்யோ!" தன்னை மீறி அவள் கத்திவிட, சத்தத்தில் விழித்திருந்தான் சூர்யா. தன்மீது கவிழ்ந்திருக்கும் பொன்மானின் மிரண்ட விழிகளை கண்டவன்,
"ரிலாக்ஸ் ஜூஜூ.. ஒண்ணுமில்லை" தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்த முயல,
"ஒண்ணும் வேணாம். முதல்ல என் துப்பட்டாவை விடு" கையில் சுத்தியிருந்த துப்பட்டாவை கண்டு அசடு வழிந்தான் அவன்.அவனது பார்வை வேறு' அவசியம் கொடுக்கனுமா?' சங்கேதம் பேச, வேகமாக தான் குத்தியிருந்த பின்னை விடுவித்தாள் நீரஜா.
துப்பட்டாவை அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டு சோஃபாவில் கைகட்டி அமர்ந்து கொள்ள, சூர்யாவின் முகமெங்கும் அவளது உடலின் கதகதப்பும் வாசமும் நிறைந்து ஒருவித கிறக்கத்தை கொடுத்தது. இருந்தும் சில நொடிகளில் தனது மோனநிலையிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டவன், எழுந்து முதலில் மின்விளக்குகளை ஒளிரவிட,
"நீ என்ன லூசா எஸ்.பி? எதுக்கு இங்க வந்து படுத்த? நல்லா பனைமரம் மாதிரி வளர்ந்துருக்கல்ல அறிவில்ல உனக்கு? உன்னை மிதிச்சுட்டு நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்?" சரவெடியாக வெடிக்க,
"அடிப்பாவி புருஷனை மிதிச்சியா?" கோபத்துடன் அவளருகே வர,
"ஏ..ஏய்.. கி..கிட்ட வராத.. எனக்கென்ன ஜோசியமா தெரியும் நீ இங்க படுத்துருப்பன்னு? தப்பு பண்ணது நீதான்?" அவனது கூர்ந்து கவனிக்கும் முகம் கனிவை இழந்து அவளை பயமுறுத்த,
'பார்றா ஜூஜூ பயப்படறதும் நல்லாதான் இருக்கு' அவளின் பயம் அவனுக்கு வேடிக்கையாக இருக்க,
"அதெல்லாம் முடியாது. என்ன இருந்தாலும் புருஷனை மிதிச்சது பெரிய தப்பு? என்ன தண்டனை கொடுக்கலாம்? ம்ம்" புருவம் உயர்த்தியவனை கண்டு கொதித்தவள்,
"அதெப்படி சரியாகும்?முதல்ல நீ எதுக்கு இங்க வந்து படுத்த சொல்லு?" வலக்கரத்தில் இடக்கரத்தை குத்தி நியாயம் கேட்டவளை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அவன்.
"அது..எனக்கு தனியா படுக்க ஒருமாதிரியா இருந்தது?"ஏதோ ஒன்று சொல்லி சமாளித்தான். பின்னே,அவன் எப்படி சொல்லுவான்? அவளருகே அமர்ந்து அவளது நித்திரையை ரசித்ததும், கன்னம்,நெற்றி, இரட்டை நாடி கொண்ட நாசியை வருடி ரசித்ததையும்? அவளது துப்பட்டாவை முகர்ந்து அவளது வாசத்தை மூச்சுக்காற்றாக நுரையீரலில் நிரப்பி கொண்டதையும்? பின்பு அப்படியே தன்னை மறந்து அவள் துப்பட்டாவை பிடித்துக்கொண்டு உறங்கியதையும்? ஏனோ இந்த தேவதையை பார்த்த கணம் முதல் ஜென்ம ஜென்ம பந்தமாய் உணர்ந்து, அவள் நிழலைப்போல் அனுதினமும் அவளுடனே கழிக்க மனம் ஏங்குவதை எப்படி சொல்ல? அவன்மீது தான் பொல்லாத முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே? இதில் அவனது காதல் அங்கீகரிக்கப்படுமா? அங்கீகரிக்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் கேலிப்பொருளாகி விட்டால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது.
"ஓ சென்டிமென்டா?இதுக்கெல்லாம் நாங்க மயங்கிடுவோமாக்கும்?ஏன் எஸ்.பி இத்தனை நாள் இங்க தனியாதான படுத்த?" ஒருவழியாக அங்கிருந்த தண்ணீர் குவளையை கண்டுபிடித்து தண்ணீர் அருந்தினாள் நீரஜா.
"இல்லை.. என் முதல் மனைவி ரேஷ்மா ஆவி என்கூட படுத்திருக்கும்?! நீ வந்ததும் காணாம போயிட்டா?!" வெடித்த சிரிப்பை உதட்டில் அதக்கிக்கொண்டு சிரிக்காமல் பேசியவனின் பேச்சில் கிலியில் புரை ஏறியது அவளுக்கு.
அவளது தலையில் அவன் தட்ட, சற்று தேறியவளாய்"எ.. என்ன மேன் சொல்ற?" வேகமாக அவனருகே ஒண்டி நின்று, அவன் கைகளுக்குள் கையை கோர்த்திருந்தாள் அவள். கண்களோ பயத்தில் அறை முழுவதும் சுற்றி வந்தது.
"ஹேய் ஜூஜூ.. சும்மா விளையாடுனேன்டா. அதெல்லாம் ஒன்னும் இல்லை. உன்கூட இருக்கனும் போல இருந்தது அதான் உன்கூட படுத்துகிட்டேன். இதுதான் உண்மை" என்றவனை விட்டு வேகமாக தள்ளி நின்றாள் அவள்.
"அதெப்படிடா முதல் பொண்டாட்டி இறந்த சுவடு‌ கூட ஆறலை? இன்னொரு பொண்ணை பார்த்ததும் உங்களுக்கெல்லாம் ஆசை வந்துடுது?" கூர்வாளாய் பாய்ந்த சொற்களில் குன்றிப்போனவனாய், அவன் கட்டிலில் தளர்ந்து அமர, அவனது இந்த எதிர்வினையில் நீரஜாவிற்கு கூட ஒருமாதிரியாகி விட்டது.
"ப.. ப்ரதாப்..‌" என்றவள் அருகே வர,
"போதும்" ஒற்றை வார்த்தையில் தள்ளி நிறுத்தினான் அவன்.
"இது எனக்கு தேவைதான் ஜூஜூ. நான் செஞ்ச தப்பிற்கு நான்தான் அனுபவிக்கனும். நீ குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டிய அவசியமே இல்லை" என்றவன், கட்டிலில் கவிழ்ந்து படுத்து விளக்குகளையும் அணைத்துவிட, தளர்ந்த நடையுடன் சோஃபாவில் வந்து படுத்தாள் நீரஜா.
"இவன் பக்கம் நியாயம் ஏதும் இருக்குமோ? என்னன்னு கேட்காமலேயே அதிகமா பேசிட்டோமோ?" அவனை கண்ட நாளிலிருந்து இந்த நாள் வரை நடந்த அனைத்தையும் யோசித்து கொண்டே தூங்கிப்போனாள்.
பறவைகளின் சத்தமும் சூரிய வெளிச்சமும் நன்றாக முகத்தில் அடிக்க, விடியல் பொழுது ரம்யமாக தான் தெரிந்தது நீரஜாவிற்கு. எதிரில் பார்க்க, ப்ரதாப் அங்கு இல்லை.‌
'இனி அவசரப்பட்டு பேசாம நம்மை சுற்றி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்' நேற்றைய நிகழ்வுகளின் தாக்கத்தில் முயன்று வரவழைத்த புன்னகையுடன் காலைகடன்களை முடித்து, குளித்து தயாராகி கீழே சென்றாள் அவள்.
படிகளில் இறங்கும் போதே," எங்க ஸ்வாதி பிறக்கும் போதே வடபழனி ஜோசியர் சொன்னாரு. அவ அழகுக்கும் குணத்திற்கும் ராணி மாதிரி வாழ்வான்னு" பெரியம்மாவின் குரல் உரத்து ஒலிக்க, சகித்துக்கொண்டு கீழே இறங்கினாள் நீரஜா.
"அடடே வாடா நீரு கண்ணு. மாப்பிள்ளைக்கு முன்னாடி நீ எழுந்து வந்து அவரை கவனிச்சுருக்க வேணாமோ? இன்னும் பொறுப்பில்லாத பிள்ளையாவே இருக்க?" என்றவரின் பேச்சை காதில் வாங்காதவளாய் சமையலறை நோக்கி நகர போக,
"நீரு காஃபி சாப்பிடுறா?" இழுத்து வைத்து அமர வைத்தாள் அவளது அன்னை ஷர்மி.
"ஏன் கோகி என் மருமகள குறை சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்? காலைலயே என் பையன் என்கிட்ட சொல்லிட்டு போயிட்டான். திலோம்மா நீரு அசந்து தூங்கறா.. அவளை தொந்தரவு பண்ணிடாதிங்கன்னு. அப்படின்னா உன் மாப்பிள்ளைய தான் குறை சொல்லுனும். நீ காபி எடுத்துக்கோடா நீரு" மருமகளின் புறம் நீட்டிய திலோ, விளையாட்டுப்பேச்சை போல் மறைமுகமாக தோழியின் பேச்சுக்கு பதில் கொடுத்து விட்ட, மாமியாரின் செயலில் நீருவின் உதட்டில் புன்னகை மலர, அதை வன்மமாக பார்த்து கொண்டிருந்தது ஸ்வாதியின் கண்கள்.
"சூர்யா கிளம்பி எஸ்டேட்டுக்கு போயிட்டான்மா.ஏதோ மெஷின் ப்ராப்ளமாம்.வர நேரமாகும்னு சொல்ல சொன்னான்" அத்தையின் பேச்சிற்கு நீரு தலையாட்ட, அவளை தாங்கும் திலோவின் செயலில் வயிறெறிந்தது கோகிக்கு.

"அச்சோ அப்ப மறுவீட்டு விருந்துக்கு இவளை தனியாதான் அழைச்சுகிட்டு போகனுமா?" அன்னையின் பேச்சை கண்டனமாக பார்த்த ஸ்வாதியை, நீரஜா ஆதுரமாக பார்க்க, இமைகளை தாழ்த்தி கொண்டாள் அவள்.

"உனக்கு எல்லாத்துலயும் அவசரம்தான் கோகி? சூர்யா வருவான். ஒரு மீட்டிங் இருக்கு. அதை முடிச்சுட்டு ஒரு இரண்டு மணிநேரத்துல வந்துடுவான். நீ அதுக்கு முன்ன வீட்டுக்கு போய் ஏதும் பண்றதுன்னா பண்ணி வை. பத்து அண்ணாவும் கல்யாணம் முடிஞ்சுதுமே வீட்டுக்கு போயிட்டாரு? ஹோட்டல் சாப்பாடு அவருக்கு சேருதோ என்னமோ? நீ முதல்ல கிளம்பி ஆகவேண்டிய ஏற்பாடுகளை பண்ணு. பொண்ணு மாப்பிள்ளைய நான் ஒண்ணா அனுப்பி வைக்கிறேன்" திலோவின் பதிலில் காதில் புகை வராத குறை கோகிலாவிற்கு.
"அம்மா வாங்கம்மா போகலாம்.அப்பா வேற தனியா இருப்பாங்க" ஸ்வாதி நாசுக்காக அவ்விடத்தை காலி செய்ய முயல, திலோவின் பார்வை மெச்சுதலாய் உயர்ந்தது.
"அப்ப நானும் கிளம்புறேன் சம்பந்தி. மாப்பிள்ளைய வரவேற்கிறதுக்கான ஏற்பாடுகளை போய் பண்றேன்" ஷர்மியும் கிளம்ப,
"நீங்க எங்ககூடவே வாங்கம்மா. அத்தை நீங்களும் எங்ககூட வரனும்" நீரஜாவின் பாசத்தில் கோகிக்கு ஆத்திரமாக வர,
"அதானே நீ முன்னாடி வந்து உன் மகளுக்கு ஆரத்தியா எடுக்க போற? திலோவாலயும் முடியாது. அதனால நீங்க அவகூடவே சேர்ந்து வாங்க" என்று பேசிய கோகிலாவை,
"கோ.." கண்டித்து பேசப்போன அத்தையை கையை பிடித்து தடுத்தாள் நீரஜா.
"நான் நல்லாருக்கனுன்னு நினைக்கப்போறது இவங்க ரெண்டு பேரையும் தவிர வேற யாருமில்லை பெரியம்மா. அதனால இவங்களே எனக்கு ஆரத்தி எடுக்கட்டும். அத்தை இது எனது வேண்டுகோள்" பதில் கொடுத்தவள்,
"அம்மா நீ பெரியம்மா கூடவே கிளம்பு. நாங்க வந்து இறங்கறப்போ வாசல்ல நீதான் நிற்கனும்" மகளின் பேச்சில் அவளை உச்சி மோந்த ஷர்மி புன்னகையுடன் முன்னே நடக்க,
"ரொம்பத்தான்டியம்மா" சடைத்தவளாக சகோதரியுடன் வெளியேறினாள் கோகிலா.
சற்றுநேரத்திற்கெல்லாம் சூர்யாவும் கிளம்பி வந்து அவளை அழைத்துக்கொண்டு செல்ல, உடல் முழுவதும் சேறும் சகதியுமாக வந்திறங்கிய மகளையும் மருமகனையும் கண்டு விழித்து நின்றாள் ஷர்மி.


அத்தியாயம்-6:

"அச்சோ மாப்பிள்ளை.. நீரும்மா என்ன கோலமிது?" முதலில் திகைத்த ஷர்மி, அவர்களது கோலத்தை கண்டு சிரித்து விட,
"என்ன மாமா? உங்க வீட்டு வழக்கப்படி சேறுல குளிச்சுட்டு மறுவீட்டுக்கு வரனுமா?" ஸ்வாதியும் கிண்டலடிக்க, சிரித்தான் சூர்யா.
சூர்யாவின் மீது கோபமிருந்தாலும், நிச்சயத்தின் பிறகு சுரேஷிற்கு அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை உணர்ந்த கணம் முதல், அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருந்தாள் அவள்.
"அவன் எனக்கு உயிர் நண்பன் சுவி. அதுமட்டுமில்லாம கிட்டதட்ட நஷ்டத்துல மூழ்கப்போன என் தொழிலை அவன் தான் இப்ப முதலீடு கொடுத்து மீட்டு கொடுத்திருக்கான்.
உன்னை அவன் பெண் பார்க்க வந்ததை மறந்துடு பேபி. எனக்கு உன்னோட உணர்வுகள் புரியுது. ஆனால் எனக்கு அவனும் முக்கியம். அவனாலதான் நீ எனக்கு கிடைச்சுருக்க" நிச்சயம் நடந்த அன்று,அவர்களது பந்தத்தையும் சூர்யாவின் பரிசைப்போல் பேசியவனின் பேச்சில் ஒருபுறம் கோபம் வந்தாலும்,உரிமை உள்ளவனாய் தொடர்ந்த சுரேஷின் உரிமை பார்வைகளும்,கொஞ்சல்களும் ஓரளவு அவளது கோபத்தை மட்டுப்படுத்தி இருந்தது.ஆனால் உள்ளிருந்த புகைச்சல் மட்டும் ஸ்வாதியுனுள் புகைந்து கொண்டே இருந்தது.
"நல்லா கேளு சுவா!?எல்லாரும் வண்டியை ரோட்டுல தான் ஓட்டுவாங்க.இந்த எஸ்.பி மட்டும் பள்ளத்துக்குள்ள ஓட்டுது" ஸ்வாதியுடன் பேச முயற்சி செய்த நீரஜாவிற்கு பதிலளிக்கவில்லை அவள்.
"ஏய் என்னடி மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசற?" ஷர்மி மகளின் காதை பிடிக்க,
"சித்தி நான் உள்ள போய் வெளி பாத்ரூம் சாவி எடுத்துட்டு வர்றேன்" ஸ்வாதி உள்ளே சென்றுவிட, பின்னால் அவரது காரில் வந்து இறங்கிய திலோவிற்கும் அதிர்ச்சியே. இருவரும் ஜோடியாக முதலில் ஜுப்பில் செல்லட்டுமென்று, பின்னே தனியே அவரது காரில் வந்திருந்தார் அவர்.
"ஜூப் ஓட்டிட்டு வரும்போது, நாய்க்குட்டி ஒன்னு குறுக்க வந்துடுச்சு திலோம்மா. எப்பவும் நடக்குறதுதான் இன்னைக்கு கொஞ்சம் கவனம் சிதறிடுச்சு" கவனச்சிதறலுக்கு காரணம் காற்றில் பறந்த தனது சேலை முந்தானை தான் என்பதை உணர்ந்தவள், அமைதியாக வேறுபக்கம் பார்த்தவள்,
'பெரிய இவன் என்கிட்ட பேசாம, அம்மாக்கு மட்டும் பதில் சொல்வானாம்' ஆம்! வீட்டிற்கு வந்து உண்டு விட்டு, அவனது திலோம்மாவிடம் மட்டும் பேசியவன், அவள் தயாராகி வந்ததும் நிமிர்ந்து கூட பார்க்காது அழைத்துக்கொண்டு வந்தான்.
ஜீப் அவனது வேகத்தில் பறக்க, நீரஜா கட்டியிருந்த ஜார்ஜெட் புடவை காற்றில் பறக்க ஆரம்பித்தது.இத்தனை வேகம் அவளை மிரளவும் வைத்தது. இரவு பேசிய பேச்சினால் தான் பேசாமல் இருக்கிறான் என்பதை உணர்ந்தவளாய்,
"கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க எஸ்.பி" கடைசி நிமிடத்தில் சால்வையை வீட்டில் வைத்துவிட்டு வந்த மடத்தனத்தை நொந்து கொண்டாள் அவள். வேகமான எதிர்காற்றில் குளிர் அதிகரித்து தெரிந்தது.
அவள் பேச்சின் எதிரொலியாக ஜீப்பின் வேகம் குறைந்திருக்க, இத்தனை நாட்கள் தான் இருந்த ஊட்டி தான்,ஏனோ இன்று வண்டியில் மெதுவாக பார்த்து ரசித்து கொண்டு வர, சாலையின் ஓரங்கள் பச்சை பசேலென்று கண்களை கவர்ந்தது.
ஜீப் மெதுவாக சென்றும், ஒரு கட்டத்தில் காற்று வேகமாக அடிக்க, மீண்டும் சேலை முந்தானை பறக்க ஆரம்பித்தது.
'அம்மா பட்டு கட்டிக்கோன்னு அத்தனை தடவை சொன்னாங்க, கேட்டேனா?' தனக்கு தானே ஏசிக்கொண்டு தலையில் அடித்துக்கொள்ள, அவளது செயல்களை ரசித்து கொண்டிருந்தான் சூர்யா.
பெண்களின் உணர்வு மனம் தான் மிகவும் துல்லியமானதாயிற்றே? சட்டென அவள் திரும்பி பார்க்க, வேகமாக முகத்தை திருப்பிக்கொண்டான். அதில் கையில் இழுத்து பிடித்த முந்தானை மீண்டும் பறந்து, சூர்யாவின் முகத்தை மூடியது. மீண்டும் அவளது வாசம்,அவனோ கண்களை மூடி ரசிக்க, வேகமாக அதை இழுத்து இடுப்பில் சொருகினாள் அவள்.இன்னும் அவன் கண்களை திறவாமல் இருக்க, ஊடே நாய் ஒன்று சாலையில் புகுந்தது.
"அய்யோ எஸ்.பி பகல்லயே தூங்குறியா? கண்ணை திற" அவனை பிடித்து உலுக்க, கண்களை திறந்தவன் நாய் மீது மோதாமல் வண்டியை திருப்ப வண்டி பள்ளத்துக்குள் இறங்கி நின்று விட்டது.
பள்ளத்தில் முட்டிய வேகத்தில், சூர்யாவும், அவனை உலுக்கி கொண்டிருந்ததால், நீரஜாவும் சேர்ந்தே,முதல் நாள் பெய்த மழையில் உருவாகியிருந்த சேற்று குட்டையில் விழுந்தனர்.
"ஹா..அம்மா" விழுந்ததில் நீரஜாவின் கால் பிசகியிருக்க,
"அச்சோ ஜூஜூ.. சாரிடா.. தெரியாம இப்படி நடந்துடுச்சு?" சமாளித்து எழுந்தவன் அவளுக்கு கைகொடுக்க,
"நீ வேணுன்னே தான்டா பண்ணியிருக்க, கொலைகாரா!" அவள் தன்னை காயப்படுத்த சொல்லவில்லை ஆத்திரத்தில் கத்துகிறாள் என்பதை உணர்ந்தவனாக,
"நீதான்டி என்னை அணுவா அணுவா கொன்னுட்டுருக்க" சூர்யாவின் பேச்சில்,அவன் கண்களில் வழிந்த பாவங்கள், காதலா? தாபமா? இனம் பிரிக்க இயலவில்லை அவளால்‌.
கன்னங்களில் அப்பிய சேறும், சேற்று நீரில் ஒட்டிய சேலையுமாக, பேந்த விழித்தவள், அந்த நடுக்காட்டில் வனமோகினியாக தான் தெரிந்தாள் சூர்யாவின் கண்களுக்கு.
கால்களை அவள் நகற்ற சிரமப்படுவதை உணர்ந்தவன், குனிந்து அவள் காலை தூக்க,
"ஆஆ.. ப்ரதாப் வலிக்குது" வலி தாளாது கத்தினாள் அவள்.
"சின்ன பிசகல் மாதிரி இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கயேன் ஜூஜூ. சரி பண்ணிடுவேன். என்னை நம்புடா. என் கண்ணை மட்டும் பாரு" இதமான பார்வையிலும், பேச்சிலும் சிக்குண்டாள் பெண்ணவள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடலாம்டா. அங்க தெரியுது பாரு, தேக்கு மரம், அதுக்கு பின்னாடி தான் நாம புதுசா வாங்குன எஸ்டேட் இருக்கு" பேசிக்கொண்டே அவளது காலை பிடித்து திருப்ப, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், சரக்கென்று கேட்ட சத்தத்தில் அதிர்ந்து பார்க்க, வலி சரியாகி போயிருந்தது. கால்களை அசைக்க முடிந்தது.
"அட..காலை அசைக்க முடியுதே.." தானே எழுந்து மகிழ்ந்தவள்,
"பரவாயில்லை நீ நல்ல கொலைகாரன் தான்" பேசிவிட்டு நாக்கை கடித்தாள் அவள். அவளின் விளிப்பில் சென்ற கோபம் திரும்பியிருந்தது அவனுக்கு.
அவளிடம் காட்ட விரும்பாது அவன் அமைதியாக வண்டியில் ஏற, தானும் அமைதியாக ஏறினாள் அவள். இதோ இங்கு வந்து இறங்கி தங்களை சுத்தப்படுத்திக் கொண்ட பிறகும் யாரிடமும் அதிகம் பேசவில்லை சூர்யா. அமைதியாகவே அமர்ந்திருந்தான். பத்மநாபன் பேருக்கு அழைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார்.
"என்ன மாப்பிள்ளை எங்க பொண்ணை கட்டுறதுக்கு முன்னாடி பாயின்ட் பாயின்டா பேசி பட்டாசா சிதறவிட்டிங்க? இப்போ இவ்வளவு அமைதி ஆகிட்டிங்களே? எங்க பொண்ணு உங்களை மிரட்டுறாளா?" கேலி பேசியதாக நினைத்து கோகி பேசி எரிச்சலூட்ட,
"அக்கா.. என்ன பேசுற?" ஷர்மி ஆட்சேபனையாக பேசியவர்,
"நீரும்மா மாப்பிள்ளையை நீ என் ரூமுக்கு அழைச்சுகிட்டு போய் கொஞ்சநேரம் ஓய்வெடும்மா" எனும் போதே,
"இப்பவும் பாயின்ட் பாயின்டா பேசுவேன் அத்தை‌.ஆனால் இப்போ சுரேஷ் கிட்ட தான் அப்படி பேச பிடிச்சுருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவனும் வர்றேன்னு சொல்லிருக்கான்" சூர்யா கோகிக்கு பதிலளிக்க, அதன்பின்பு பேச கோகிலாவிற்கு தைரியம் வருமா?மகளின் வாழ்க்கையாயிற்றே?! ஆனால் சூர்யாவின் பேச்சால் ஸ்வாதி எரிச்சலாக தனது அறைக்கு சென்று கதவை சாற்றிக்கொண்டாள்.
அந்த அறையை பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது நீரஜாவிற்கு. சேற்றை சுத்தப்படுத்தி விட்டு தயாராகி வருவதற்கே தனது அறைக்கு தான் அழைத்துச்சென்றார் ஷர்மி.
"ம்மா.. என் பொருள் எல்லாம் அங்க இருக்கு. இங்க ஏன் கூட்டிட்டு வர்றிங்க? சுவாவையும் எப்படியாவது சமாதானப்படுத்தனும் என்னை அங்க போக விடுங்க" கள்ளமில்லா மகளின் குணத்தை நினைத்து வருத்தத்துடன் பார்த்தார் ஷர்மி.
"நீரும்மா.. நீ உன் வீட்டுக்கு போனதுமே ஸ்வாதி உன் பொருளெள்ளாம் இங்க கொண்டு வந்து போட்டுட்டாம்மா. இனி அவ பொருளெல்லாம் உங்க அறையிலேயே இருக்கட்டும் சித்தின்னு, உன் கல்யாணம் முடிஞ்சு நீ கிளம்பியதுமே வந்து போட்டுட்டு அழுதுகிட்டே போயிட்டா" என,
"எல்லாத்துக்கும் அவன்தான்மா காரணம்" கோபமாக திரும்பிய மகளை பிடித்து இழுத்தார் ஷர்மி.
"சில விஷயங்களை உன்கிட்ட நான் இதுவரைக்கும் சொன்னதில்லை. அக்காவோட குணம் தெரிஞ்சும் நான் ஏன் இந்த வீட்டுக்கு வந்தேன் தெரியுமா? உன்னோட பாதுகாப்புக்காக தான். உனக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையனுன்னு தான். எனக்கு தெரியும் இவங்களோட ஆதரவு ரொம்ப நாள் நிலைக்காதுன்னு‌. அதனால்தான் நான் சம்பாரிச்ச பணத்தையெல்லாம் அவகிட்டயே கொடுத்து உன்னை பாதுகாப்பா வச்சுகிட்டேன்.
நான் நினைச்சுருந்தா பார்லர் ஆரம்பிச்சு தனிவீடு எடுத்து உன்னை என்கூடவே வச்சு வளர்த்துருக்க முடியும். ஆனால் இந்த சமூகம் தனியா இருக்கற பெண்களை சும்மா விடாது. ஏற்கனவே பல இம்சைகளை சமாளிச்ச நான் மீதி காலத்தையும் இந்த சமூகத்தை சமாளிக்கறதுலயும், போராடுறதுலயுமே கழிக்க விரும்பலை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கறது தான் என் குறிக்கோளா இருந்தது. அதனால் இப்ப கிடைச்சுருக்க இந்த வாழ்க்கையை காப்பாத்திக்கிட்டு நல்லபடியா இவங்க முன்னாடி மாப்பிள்ளையோட வாழ்ந்து காட்டுடா நீரும்மா" தழுதழுத்த முயன்று அடக்கி பேசிய அன்னையை விந்தையாக பார்த்தாள் அவள்.
"நீ நினைக்கலாம் அதுக்காக கொலைகாரனுக்கு இரண்டாம் தாரமா வாழ்க்கைப்படறது நல்ல வாழ்க்கையான்னு? " தான் மனதில் எண்ணியதை அன்னை அப்படியே கேட்க,
"ம்மா.." கட்டிக்கொண்டாள் அவள்.
"சூர்யா நல்லவன். இப்போதைக்கு இதைமட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்டா நீரு. நீ இங்க இருந்திருந்தா உன் பெரியம்மா உனக்கு நல்ல வாழ்க்கை அமைய விட்டிருக்க மாட்டா? நான் இருக்கற வரைக்கும் உனக்கு எதுவும் நடக்க விட்டுருக்க மாட்டேன். ஆனாலும் இவங்களை நம்ப முடியாதுடா.
நமக்கு தெரியாமலேயே உன்னை சினிமால கதாநாயகியாக்க, உன் பெரியம்மா முடிவு பண்ணி பேசி முடிச்ச விஷயத்தை கேள்விபட்ட போதே என் பாதி உயிர் போயிடுச்சு. அதனால நானே உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பனுங்கற முடிவுலதான் இருந்தேன். ஸ்வாதியை வேண்டான்னு சொல்லிட்டு உன்னை மாப்பிள்ளை கேட்டது புது விஷயமில்லை. இதுக்கு முன்னாடியும் உன்னை பார்த்துட்டு பொண்ணு கேட்டு நிறைய பேர் வந்தாங்க, ஸ்வாதியை வேண்டான்னும் சொல்லியிருக்காங்க. இந்த விஷயத்தை ஸ்வாதி உனக்கு சொல்லியிருக்காளா? அவ அவளுடைய அம்மாவுடைய கைப்பாவையா மாறி ரொம்ப நாளாச்சு. முதன்முதலா உன்னை அன்போட வரவேற்ற ஸ்வாதி இல்லை இப்போ" அன்னையின் பேச்சில் குழம்பி தவித்தது பேதையின் மனம்.
மகளை மடியில் போட்டு கொண்டவர்," ஆரம்பத்துல போராட்டமா இருந்தாலும் நீ நல்ல வாழ்க்கை தான் வாழுவ நீரும்மா. மாப்பிள்ளையை அனுசரிச்சு போக பழகு. சில விஷயங்களை அவர்கிட்ட நீயே கேட்டு தெரிஞ்சுகிட்டா உங்களுடைய அந்நியோன்யம் இன்னும் பலமாகும். என்மேல எவ்வளவு கோபம் இருந்தாலும், எல்லாத்தையும் நீ புரிஞ்கிட்டு என் முடிவுக்காக நீ சந்தோஷப்படுவங்கற நம்பிக்கையோட இருக்கேன்டா" மகளின் தலைகோத, அப்படியே கண்ணயர்ந்தவள் எழுந்து வந்து அமர்ந்த போதுதான் வேண்டுமென்றே சூர்யாவிடம் கோகி பேச, போன தலைவலி திரும்பியது அவளுக்கு.
அவளது முகத்தை பார்த்தே புரிந்து கொண்டவனாக," நீரு நீ போய் ரெஸ்ட் எடு. நான் மாமா கிட்ட கொஞ்சநேரம் பேசிட்டு வர்றேன்" என்றவன் பத்மநாபனை தேடிச் செல்ல, அவரின் வேலையைப்பற்றிய விபரங்களை பேசிக்கொண்டிருந்தனர் திலோவும், பத்மநாபனும்.
"இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ். அதுக்கப்பறம் ஏதாவது சின்னதா தொழில் வச்சு வீட்டோட இருக்கனுன்னு நினைக்கிறேன் மேடம்" பத்மநாபன் பேச,
"ஏன் சார்? எல்.எல்.பி முடிச்சுருக்கிங்க? இத்தனை வருஷம் அரசாங்க சர்வீஸ் போட்டுருக்கிங்க? உங்களுடைய அனுபவத்தை நல்ல பெரிய கம்பெனிங்களுக்கு,லீகல் அட்வைஸ் குடுக்கலாமே?"
"ம்ம்.. ஆமா மாமா,திலோம்மா நல்ல அட்வைஸ் குடுத்துருக்கிங்க" அன்னையின் பேச்சை சூர்யா ஆமோதிக்க,
"உள்ள கொஞ்சம் வேலையிருக்கு மாப்பிள்ளை நான் வர்றேன். வர்றேன் மேடம்" பத்மநாபன் இருவரிடமும் விடைபெற்று எழுந்து கொள்ள போக, வழிமறித்தான் சூர்யா.
"சம்பந்தியம்மான்னு கூப்பிடுங்க மாமா. அம்மாவை போய் மேடம்னு கூப்பிடறிங்க? என்மேல உங்களுக்கு இன்னும் கோபம் போகலையா மாமா?" சூர்யா நேரடியாகவே கேட்க,
"இல்லை கண்ணா. இதெல்லாம் நடக்கறதுக்கு முன்னாடியே கோகி வீட்டுக்காரரா எனக்கு அறிமுகம் ஆகும் போதே சார் என்னை மேடம்னு தான் கூப்பிடுவாரு. அந்த பழக்கம் அப்படியே வருது" திலோ பத்மநாபனுக்கு ஆதரவாக பேச,
"ம்ம்.. ஆமா தம்பி. அதோட உங்க மேல கோபமெல்லாம் இல்லை‌. நடந்து முடிந்த விஷயங்களோட தாக்கத்தில் இருந்து என்னால இன்னும் வெளிவர முடியலை.ஷர்மி மேல எனக்கு கோபமிருந்தாலும் நீரஜாவையும் என் பொண்ணு மாதிரி தான் வளர்த்தேன்.
ஆனால் என் மனைவி இப்படி நடந்துகொண்டது எனக்கு குற்ற உணர்வா இருக்கு" அவரின் நல்ல குணத்தை நினைத்து சூர்யா அவர் கைபிடித்து ஆறுதல் சொன்னான்.
"நீரு வாழ்க்கைக்கு எந்த குறையும் வராது அங்கிள். உங்ககிட்ட சில விஷயங்கள் நான் பேசனும்" என்றவன் திலோம்மாவை பார்க்க,
"நான் போய் கோகி கூட பேசிகிட்டுருக்கேன்" அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றார் அவர்.
நடந்த உண்மைகளை அவரிடம் அவன் விளக்க," அப்ப நீங்க?" , " ஆமாம் மாமா" மூடித்திறந்த இமைகள் உண்மையை உணர்த்த,
"இதை இப்பவே நீருகிட்ட சொல்லிடலாமே தம்பி? நீங்க சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கலாமே?" பத்மநாபன் சரிப்படுத்தும் மார்க்கத்தில் அவசரப்பட,
"ஒருத்தி கிட்ட அந்த தப்பை நான் செஞ்சது போதும் மாமா. நீருவே என்கிட்ட கேட்பா? எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்றவனின் பேச்சில் இருக்கும் நியாயமும் அவருக்கு புரிந்தது.
"நீங்க சரியாத்தான் தேர்வு செஞ்சுருக்கிங்க தம்பி. நீரு அந்த அளவுக்கு பக்குவமான எதையும் புரிந்து கொள்ளக்கூடிய பெண். என் பொண்ணு கிட்ட கொஞ்சம் பொறுமை கம்மிதான்" எந்த நிலையிலும் உண்மையை பேசும் அவரின் குணம் கண்டு வியப்பாக இருந்தது அவனுக்கு. கோகிலாவின் குணத்திற்கு இப்படி ஒரு கணவனா என்று?!


அத்தியாயம்-7:

சிறிதுநேரம் பேசிவிட்டு இருவரும் கைகோர்த்து பேசிக்கொண்டு வர, மாலை பலகாரங்களை டேபிளில் வைத்துக் கொண்டிருந்த கோகிலாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
'என்னடா இது கிழக்கும் மேற்கும் ஒண்ணு சேர்ந்துருக்கு?' அதிசயமாக அவர்களை பார்க்க,
"இந்த காஃபி ஆறிடுச்சு‌. மாப்பிள்ளைக்கு கொஞ்சம் சூடா காபி கொண்டு வாடா நீரு" கல்யாணத்துக்கு பிறகு இன்றுதான் தன்னுடன் பேசும், பெரியப்பாவின் பேச்சில் மகிழ்ந்து வேகமாக உள்ளே ஓடினாள் அவள்.
"அப்பா.. என்ன பண்றிங்க? அவகிட்ட ஏன் பேசறிங்க?" ஸ்வாதி மென்குரலில் தந்தையின் கையை பிடித்து சண்டையிட,
"அவளும் இந்த வீட்டு பொண்ணு தான்டா குட்டிமா. நீதான் அவளை சேர்த்துக்க சொல்லி கேட்ட மறந்துட்டியா?" தந்தையின் திடீர் இணக்கத்தில், ஸ்வாதி கோபமாக தரையில் காலை உதைத்து விட்டு வெளியில் செல்ல,
"ஸ்வாதி நில்லு" கோகியின் கத்தலை கண்டு கொள்ளாது வெளியில் சென்று விட்டாள் அவள்.
சூர்யாவின் அருகே பத்மநாபன் காஃபி அருந்த அமர, ஸ்வாதி போவதையே பார்த்து கொண்டிருந்த நீரஜாவை பார்த்தவர்," கொஞ்ச நேரத்துல அவளே சரியாகிடுவாம்மா. நம்ம பக்க சொந்தக்காரங்க கொஞ்ச பேர் இன்னைக்கு உங்களை பார்க்க வர்றதா சொன்னாங்க. அவங்கள்ளாம் கல்யாணத்துக்கு வர முடியலை.
நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தயாராகுங்க மாப்பிள்ளை. கோகி நீருக்கு நாம எடுத்த புது சேலையை கொடு" என்றுவிட, அவர் சொன்ன சற்று நேரத்திற்கெல்லாம் உறவுக்காரர்களும் வந்து விட்டனர்.
நீருவின் அலங்காரத்திலிருந்து கண்களை பிரிக்க முடியவில்லை சூர்யாவால்.
'சூர்யா உண்மை எல்லாத்தையும் அவ தெரிஞ்சுகிட்டு, உன்னை அவளா ஏத்துக்கற வரைக்கும் கட்டுப்பாடோட இருடா" மனசாட்சி குரல் கொடுக்க,
'அதெல்லாம் முடியாது. என் டார்லிங் லட்டு குட்டி மாதிரி இருக்கா. அவளை ரசிக்க விடாம இப்படி தொந்தரவு பண்ணிட்டுருக்க? ச்சீ.. ப்பே.. அந்த பக்கம்' துரத்தி விட்டுவிட்டு கருமமே கண்ணாக நீரஜாவை பார்வையால் வட்டமிட, சிரித்து கொண்டே திலோ நீருவின் அருகில் வந்தவர்,
"இந்த சூர்யா பையன் கண்ணே உனக்கு பட்டுடும் போல நீருமா. பெயர்படி பார்த்தா தாமரைன்னு அர்த்தம் இருக்கற நீதான் அவனை பார்த்துட்டு இருக்கனும்.ஆனால் இங்க சூர்யன் உன்னையேல்ல சுத்திட்டு இருக்கு" நெட்டிமுறித்து திருஷ்டி கழிக்க, அசடு போல் உணர்ந்தவன் வேகமாக எழுந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டான்.
"டேய்...டேய்.. நில்லுடா பையா" திலோவின் கேலி தொடர்ந்தாலும் கண்டுகொள்ளவில்லை அவன்.
மதியம் அன்னை பேசிய பேச்சிலிருந்து, நீரஜாவின் மனதிலும் சில மாற்றங்கள். அதிலிருந்து சூர்யா அவளை பார்க்கும் போது அவளும் பார்த்து புன்னகைக்க, சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தான். இரவு உணவையும் அவனருகே நின்று கவனித்து பரிமாற, இப்படியே செத்துவிட மாட்டோமா என்று கூட தோணியது அவனுக்கு?! அந்த அளவிற்கு நீரஜாவின் சிறிய கவனிப்பு கூட அவனை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியிருந்தது.
நீரஜாவும் இன்று அவனது கடந்த கால வாழ்க்கையின் சுவடுகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்திருந்ததால் அவனுடன் இணக்கமாகவே நடந்து கொண்டிருந்தாள். இவர்கள் இங்கு தங்கியிருப்பது பிடிக்காத காரணத்தால் ஸ்வாதி வேகமாக சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று அடைத்து கொண்டாள்.
திலோவும்,ஷர்மியும் கோகியின் அறையில் தங்கிக் கொள்ள, பத்மநாபன் ஹாலில் படுத்துக் கொண்டார்.
தொடர்ந்த நீருவின் பார்வைகளால் தூக்கம் வராது சூர்யா ஏதோ ஒரு நாளிதழை புரட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருக்க, ஃப்ளாஸ்க்கில் வெந்நீருடன் உள்ளே நுழைந்தாள் நீரஜா.
"என்னங்க அம்மாகிட்ட வெந்நீர் கேட்டிங்களாமே?" சூர்யாவை அவள் அழைக்க அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.
"என்னையா?" தன் நெஞ்சில் கைவைத்து சுட்டி காட்டியவன், " திடீர்னு மரியாதைல்லாம் கொடுக்கற ஜூஜூ" என்றவன் வெந்நீரை வாங்க எழுந்து அவளருகே வர,
"சும்மா புருஸ்க்கு மரியாதை குடுத்தா எப்படி இருக்குன்னு ட்ரையல் பார்த்தேன். ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படுறிங்களே எஸ்.பி" என்றவளின் கையில் ஃப்ளாஸ்க் ஆட,
"நீ என்னை எப்படி வேணுனாலும் கூப்பிடும்மா. ஆனால் அந்த ஃப்ளாஸ்க்கை அந்த ஓரத்தில் வச்சுட்டு கூப்பிடு. நேற்றாவது பால் ஆறிப்போயிருந்தது. இந்த கொதிக்கற வெந்நீருக்கு என் உடம்பு தாங்காது ஜூஜூ" என்றவனின் பேச்சில் சிரிப்பு வர, அடக்காமாட்டாது சிரித்தாள் அவள். அவளது புன்னகையை அவன் ஆர்வமாக பார்க்க, சிரித்து முடித்தவள்,
"ஓவரா சைட் அடிச்சா உடம்பு புண்ணாயிடும் எஸ்.பி சார். போய் தூங்குங்க குட்நைட்" என்றவள் கம்பளியை கீழே விரித்து தலையணையை அதில் போட,
"நான் வேணுனா கீழே படுத்துக்கறேன்.நீ இங்க படுத்துக்கோடா" சூர்யா அவளுக்கு கட்டிலை காட்ட,
"சும்மா படுங்க எஸ்பி சார். நான் போய் துணி மாத்திட்டு வந்து இங்க படுத்துக்கறேன்" என்றவள் மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அதிக துக்கத்திலும் தூக்கம் வராது!! அதீத சந்தோஷத்திலும் தூக்கம் வராது!! இதில் இரண்டாவது நிலை சூர்யாவிற்கு. இன்று நீரஜாவின் மெல்லிய இணக்கத்திலும் அவளின் கவனிப்பிலும் மனம் குத்தாட்டம் போட, தூக்கம் ஏனோ வரவில்லை அவனுக்கு.
அவள் சென்ற குளியலறையையே பார்த்து கொண்டிருக்க,
"ம்மாஆஆஆ.. " என்ற நீரஜாவின் அலறலில் சூர்யாவின் உயிர் துடிக்க, வேகமாக குளியலறை நோக்கி எழுந்து ஓடினான் அவன்.
"நீரஜா.. நீரஜா.. என்னாச்சு கதவை திற.. " அவன் கத்திய கத்தலில் வீட்டிலுள்ளோரே எழுந்து வந்து விடுவர், என்பதை உணர்ந்தவளாய் முயன்று வேகமாக கதவை திறந்தாள் அவள்.
"பளீஸ் கத்தாதிங்க எனக்கு ஒண்ணுமில்லை" அவள் சோர்வாக பதில் கூற,
அவளை தள்ளி கொண்டு உள்ளே வந்தவன்," எ.. என்னாச்சு நீரு?" பதற்றத்துடன் அவளை ஆராய,
"ஒண்ணுமில்லை ப்ரதாப். இந்த ஹூட்டர் கொஞ்சம் ஷாக் அடிக்கும். என் ரூம் ஞாபகத்துல ஸ்விட்ச் போட்டுட்டேன்.. ஷாக் அடிச்சுடுச்சு. உடனே நான் விலகிட்டேன். அடி ஒன்றும் இல்லை" என்றவளின் கையோ லோசாக கன்னி சிவந்திருந்தது.
"ஒண்ணுமில்லை சொல்ற..பாரு கை சிவந்திருக்குது. நீ முதல்ல வெளியே வா" அவளின் மற்றொரு கையை பிடித்து அவனிழுக்க போக, அதையோ மார்புக்கு குறுக்காக வைத்திருந்தாள் அவள். அதுவரை அவளிருந்த நிலையை அவன் கவனிக்கவில்லை. கோகிலா கொடுத்த புடவையில் இருந்த வேலைப்பாட்டு ஜிகினாக்கள் உடம்பெல்லாம் ஒட்டியிருந்ததால், காந்தலில் முதலில் அந்த புடவையை தான் கழற்றி வீசியிருந்தாள் அவள்.
"நீ..நீங்க முதல்ல வெளிய போங்க ப்ரதாப்" நாணம் மீதூற கையை வெளியே நோக்கி காட்ட,
"சா.. சாரி நீரு" அவளை ரசித்து கொண்டு பின்னோக்கியே அடி எடுத்து வைத்தவன், ஷவர் குழாயில் இடித்துக்கொள்ள, அது திறந்து அவன்மீது குளிர்நீரை இறைத்தது.
பதற்றத்தில் அவன் நீரை தடுக்க முயற்சிக்க, குழாய் சரியாக மூடவில்லை.
"இருங்க ப்ரதாப் நான் பண்றேன்" அவள் உதவிக்கு வர, அவளாலும் முடியாது, நீருவும் சேர்ந்து நனைந்து விட, குளிர் தாங்காது அவளை கட்டிக் கொண்டான் சூர்யா.
"ப.. ப்ரதாப்.. வி..விடுங்க என்னை" நீரு அவனை விலக்க முயற்சிக்க,
"என்னால முடியலை நீரு" குழாயை அணைத்திருந்தவன் அவளை தூக்கிக்கொள்ள, நீருவின் கைகள் தானாக அவன் கழுத்தில் கோர்த்திருந்தது.
அதில் மகிழ்ந்தவனாக, அவளை தூக்கிக்கொண்டு மஞ்சத்தில் சேர்க்க, சூரியனின் வெப்பத்தில் தாமரையை மலரச்செய்து கொண்டிருந்தான் அவன்.
ஈருயிர் ஓருயிராய் இணைந்த அச்சங்கம வேளையில்," நீ..நீ..நீங்க..‌கொ..கொ..கொலை பண்ணிருக்கிங்க ப்ரதாப்?" உணர்வுகூட்டத்தில் அடிமன உணர்வுகளும் வெளிவர, அவள் கண்ணோடு கண் கலந்தவன்,
"நீதான்டி கொலைகாரி. என்னை உன்னைவிட்டு தள்ளிவைச்சு அணு அணுவா கொன்னுட்டுருக்கே. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ லாட் ஜூஜூ" உணர்வுசங்கிலியில் பிணைக்கப்பட்டவன் அவளது கேள்வியை முழுதாய் உணராது, தனது காதலை வெளியிட்டவன், அதன்பிறகு அவளை பேசவிடவில்லை.
மறுநாளைய விடியல், சூர்யனின் சரிபாதியாக அவளுக்கு விடிய, உதட்டில் உறைந்த புன்னகையுடன் எழுந்து, குளித்து தயாராகி வெளியே சென்றாள் நீரு.
மகளின் முகத்தை பார்த்த ஷர்மிக்கு ஏதோ புரிவதை போல் இருக்க, காஃபி கலக்க வந்தவளை நிறுத்தியவர்,
"நீ உட்காருடா நீரும்மா. நான் கொண்டு வர்றேன்" காதல் மிச்சங்களை நினைந்த வண்ணம், ஏகாந்த நிலையில் டைனிங்டேபிளில் வந்தமர்ந்தவளை பொறாமையாக அளவெடுத்தது ஸ்வாதியின் கண்கள்.
சிவந்த கண்களும், கன்றிய உதடுகளும், ஜொலித்த முகமும் நடந்திருக்கும் விஷயத்தை கட்டியம் கூற, காஃபி அருந்தி கொண்டிருந்தவள் டம்ளரை பாத்திரம் கழுவும் இடத்தில் விசிறி அடித்து விட்டு செல்ல, அது எழுப்பிய சத்தத்தில், நீருவின் மோனநிலையும் கலைந்தது.
தமக்கைக்கும் திலோவிற்கும் காஃபி கொடுத்துவிட்டு, மகளுக்கு எடுத்து வந்த ஷர்மியின் கண்களிலும் ஸ்வாதியின் செயல் பட, சீக்கிரம் இங்கிருந்து மகளை வெளியேற்ற வேண்டுமென்று மனதிற்குள் முடிவெடுத்து கொண்டார்.
"விடும்மா நீரு. அவ கோபம் எத்தனை நாளுக்கு?" ஷர்மி அவளருகே அமர, அமைதியாக காஃபியை அருந்தினாள் அவள்.
"இவளையே நீ கவனிச்சுட்டுருந்தன்னா மாப்பிள்ளையை யார் கவனிக்கிறது ஷர்மி? கைகால் எல்லாம் குடையுது. அதான் நீ மேக்கப் போட போகலியே? இன்னைக்கு மதிய சமையலும் நீயே செஞ்சுடு" என்றவாறே கோகி வந்து அவர்களூடே அமர,
"அச்சோ இன்னைக்கு உன் கையால நீ வைக்கிற கிழங்கு பிரட்டல் சாப்பிடனுன்னு ஆசையா இருந்தேனே கோகி. சுரேஷீக்கும் அது ரொம்ப பிடிக்கும். நேற்று மாலை தான் அவன் வரலை. இன்னைக்கு மதியத்துக்கு கண்டிப்பா வர்றதா சொல்லிருக்கான்" திலோவின் பேச்சில்,
"என்ன எங்க மாப்பிள்ளை வர்றாரா? ஷர்மி நீ காரத்தை அதிகம் போட்டுடுவ, அதனால நானே சமைக்கிறேன்" வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள் கோகிலா.
அவளின் வேகத்தை ஷர்மி வேடிக்கையாக பார்க்க, " நேத்துலர்ந்து நீதான் வேலை பார்த்துட்டுருக்க ஷர்மி. இன்னைக்கு ஒருநாள் ஓய்வெடு" திலோ ஷர்மியின் காதை கடிக்க,
"அதுக்காக ஏன் பொய் சொன்னிங்க சம்பந்தி?" சங்கடப்பட்டார் ஷர்மி.
"பொய்யில்லை நிஜந்தான் ஷர்மி.சுரேஷ் வர்றான். எனக்கு கால் பண்ணியிருந்தான்" என்றவர் அப்பொழுது தான் நீருவை கவனிக்க, அவளது முகத்தின் ஜொலிப்பை கவனித்தவர், எழுந்து சென்று பூஜையறையிலிருந்து திருநீறு எடுத்து வந்து அவளுக்கு இட்டு விட்டவர்,
"இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்கனும் நீருமா" என்று வாழ்த்த,
"அத்தை" அவளும் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
"ரொம்ப நேரமாச்சு. சூர்யாக்கு காஃபி கொடு நீரும்மா" திலோவே கலந்து வந்து அவள் கையில் கொடுக்க, உள்ளே நுழைந்தவளின் தரிசனம், மீண்டும் அவர்களுக்கு மதியம் தான் கிடைத்தது.
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைத்துளி போல, தனது காதல் விளையாட்டுக்களால் தனது ரேகைகளுக்குள் அவளை ஒளிரச்செய்து கொண்டிருந்தான் சூர்யா.
"எல்லாரும் வெளிய என்ன நினைப்பாங்க ப்ரதாப்" கூடல் முடிந்து அவன் நெஞ்சில் மஞ்சம் கொண்டிருந்தவள், செல்லமாய் சிணுங்க,
"அப்ப வா இப்பவே உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன் ஜூஜூ" என்றெழுந்தவனை அடக்கி வைத்தாள் அவள்.
"போதும். எல்லாத்துலயும் உங்களுக்கு அவசரம் தான்" அவனது தலையை கலைத்து விளையாடியவளின் வார்த்தைகள், அவனது நிதர்சன நிலையை மூளையில் மணியடிக்க செய்ய,
"ம்ம்.‌. நான் கொஞ்சம் அவசரந்தான் பட்டுட்டேன்" அதுவரை நடந்த லீலைகளின் சுவடொழித்தவனாய் எழுந்து சென்று விட்டவனை குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.
குளித்து வந்தவன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்க, மதியம் கொஞ்சிக் கொண்டும், ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டும் உணவுண்டு முடித்தவர்களின் சந்தோஷம் தாளாது, கோகியின் கண்கள் அவர்களை சுட்டெரிக்க, ஸ்வாதியோ நேரடியாகவே அவளின் சந்தோஷத்தை ஒழிக்க முடிவு செய்தவளாய், அடுக்களைக்குள் விருந்து உணவுகளை பாத்திரத்தில் மாற்றி கொண்டிருந்தவளிடம் வந்தவள்,
"என்ன நீரு ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே?" குடிப்பதற்கு தண்ணீர் பிடித்து கொண்டே பேச்சுக்கொடுக்க,
"ம்ம்..இப்பவாச்சும் உனக்கு என்கூட பேசனுன்னு தோணுச்சே சுவா" அன்னை என்னதான் சொல்லியிருந்தாலும், அவள் பேசிய சந்தோஷத்தில் சந்தோஷமாகவே பதிலளித்தாள் அவள்.
"அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?பாவம் சொன்னா நீ தாங்கமாட்ட?!" கொக்கி போட்டு அவள் நிறுத்த,
"என்னாச்சு சுவா? என்ன விஷயம் சொல்லு?" பதற்றத்துடன் கேட்டு, சிறுநரியின் தந்திரம் புரியாது தானாக சிக்கியது முயல்.
"விடுப்பா. அதான் நீயே அவன்கூட சந்தோஷமா இருக்கேன்னு சொல்லிட்டியே. அப்பறம் என்ன? மீதி வாழ்க்கையை நல்லபடியா வாழு" என்றுவிட்டு வெளியே செல்ல போக, அவளின் கையை பிடித்து இழுத்தாள் நீரஜா.
"தயவு செஞ்சு சொல்லு சுவா. தெரிஞ்சுக்கலைன்னா என் தலையே வெடிச்சுடும்" அவள் கெஞ்சுவதை உள்ளூர ரசித்தவள்,
"உன் சூர்யாக்கு இன்னொரு பொண்டாட்டி மூலமா, ஐந்து வயதில் பெண்பிள்ளை இருக்கறதா கேள்விபட்டேன்" விஷம் தோய்த்த கண்ணாடி துண்டாய், அவள் மீது செருக,
"இ..இல்லை நீ பொய் சொல்ற!!" அவள் சொல்வதை நம்ப முடியாது நீரு மறுக்க,
"நிஜந்தான் நீரு இந்த விஷயத்தை எனக்கு சொன்னது சுரேஷ் தான். அவர் யாருகிட்டயும் இதை பற்றி பேச வேணான்னு சொல்லிட்டாரு. இருந்தாலும் எனக்கு தான் மனசு கேட்கலை. பணத்துக்காக ஆசைப்பட்டு இப்படி ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டியேன்னு பரிதாபமா இருந்துச்சு" ஸ்வாதி பேசிய பேச்சின் தாக்கத்தில் மயங்கி கீழே சரிந்தாள் நீரஜா.
அதில் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்த அனைவரும் உள்ளே ஓடிவர," நீரு.. நீரு.." தட்டி எழுப்பி கொண்டிருந்த ஸ்வாதியை பிடித்து தள்ளிய சூர்யா, அவளை தனது மடியில் சாய்த்தவன்,
"நீரு.. நீரு" கன்னத்தில் தட்ட, எழவில்லை அவள்.
"ஏய்.. நீதானே நீருகிட்ட பேசிட்டிருந்த என்ன சொன்ன அவகிட்ட?" எழுந்து வந்தவன் அவளது கழுத்தை பிடிக்க,
"சூர்யா.. " அப்பொழுது தான் உள்ளே நுழைந்த சுரேஷின் குரலில் வேகமாக அவனது பிடியிலிருந்து தப்பி, ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள் ஸ்வாதி.


அத்தியாயம்-8:
"முதல்ல அவ என்ன சொன்னான்னு கேட்டு சொல்லு சுரேஷ். நான் ஹால்ல இருந்து பேசிக்கிட்டு இருக்கும் போது, இவதான் நீரஜா கிட்ட பேசிகிட்டிருந்தா" சூர்யா சுரேஷூடன் நேரடியாக மோத, அவனது கோபத்தின் விளைவை ஏற்கனவே பலமுறை கண்ட அனுபவத்தில்,
"அப்படி என்னதான் பேசின ஸ்வாதி?" எங்கே தனது தொழிலுக்கு இடையூறு வந்து விடுமோவென்று கேட்டும் விட்டான் சுரேஷ்.
"மாப்பிள்ளை நீங்க பேசறது நியாயமா? எம்பொண்ணை இப்படியா கேட்பிங்க? இவளுக்கு என்ன வியாதியோ மயக்கம் போட்டு விழுந்துட்டா" கோகிலாவின் எரிச்சலூட்டும் பேச்சில்,
"கோகிலா உன் வாயை கொஞ்சம் மூடு" திருமண நிச்சயம் செய்ததிலிருந்து, பேசாமல் இருந்த பத்மநாபன் மனைவியின் பேச்சை தாளாது வெடிக்க, கோகிலாவின் வாய் மூடிக்கொண்டு விட்டது.

"மாப்பிள்ளை நீரு கண்முழிச்சுட்டா" ஷர்மியின் குரலில், சுரேஷை விட்டவனாய் சூர்யா மனைவியிடம் ஓட, கண்விழித்தவளின் கண்களில் நீர் ஆறாய் பெருக்கெடுக்க,
"ஜூஜூ..எதுக்குடா அழற?" அவனின் அழைப்பில், அதுவரை இருந்த பதற்ற சூழல் மாறி, சிரித்து விட்டார் திலோ.
"டேய் என்னடா பேரு இது? அவதான் கண் விழிச்சுட்டால்ல. அவளை முதல்ல ஹாலுக்கு கூட்டிட்டு வா. நீரும்மா மெதுவா எழுந்து வாடா. அதுக்கு முதல்ல இந்த தண்ணிர் கொஞ்சம் குடிடா" என, தண்ணீர் அருந்தியவள், எழப்போக, அவளது கைகளை தனது தோளில் சுற்றி போட்டவன்,
"என்னாச்சு நீரு? ஏன் மயக்கம் போட்டுட்டு இப்ப அழுகுற?" மற்றவர்கள் முன்னே சென்றிருக்க, சூர்யாவின் அழுத்தம் சுமந்த குரலை அதிர்வுடன் பார்த்தாள் நீரஜா. அவனது முகமும் கல்லை போல் இறுகியிருக்க,
"இரவு தூங்காதது தான் ப்ரதாப். மயக்கமும் வந்துடுச்சு, கண்ணும் பொங்குது" என,
"இல்லை என்னால நம்ப முடியலை" நம்ப மறுத்தவனின் பிடிவாதக்குரலில் வியர்த்தது அவளுக்கு.
"டேய்..போதுன்டா நாலு ஸ்டெப் சிஸ்டரை கூட்டிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? உங்க ரொமான்ஸ அப்பறம் வச்சுக்கங்க, இங்க இன்னும் கல்யாணம் ஆகாத இன்னொரு ஜோடியும் இருக்கோம்" சுரேஷ் கலாய்க்க, அவனருகே அமர்ந்திருந்த ஸ்வாதியை முறைத்தான் சூர்யா. அவனது ரௌத்திர பார்வையில், ஸ்வாதிக்கு குளிரெடுக்க, ஆதுரமாக நீரஜாவை பார்த்தாள் அவள்.
அவளது பார்வையை கண்டு கொண்டவனாக," அந்த ஸ்வாதி உன்கிட்ட என்ன சொன்னா நீரஜா?!" ஊசியாய் ஊடுருவிய சூர்யாவின் குரலில்,
"இல்லை.. அவ ஒன்னுமே சொல்லலை" உடனடியாக அவள் பதில் கூற, அதன்பின்பு அவளிடம் எதுவும் கேட்கவில்லை அவன்.
"திலோம்மா.. நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்‌" அவளை அமர வைத்து விட்டு சூர்யா வெளியே கிளம்ப,
"டேய் நானிருக்கும் போது எங்கடா கிளம்புற சூர்யா? ஸ்வாதி ஏதாச்சும் பண்ணியிருந்தா கூட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். இல்லன்னா நானும் கூட வர்றேன்" சுரேஷும் எழ,
"இல்லை சுரேஷ் எஸ்டேட் வரைக்கும் தான் போயிட்டு வர்றேன். ஒரு முக்கியமான வேலை இப்பதான் ஞாபகம் வந்தது" என்றவனின் பார்வை கிளம்பும் முன் தன்னவளை தொட்டு மீழ, அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாது தலைகுனிந்து கொண்டாள் நீரு.
அதற்கு மேல் அங்கு நிற்காது சூர்யா கிளம்பி சென்றுவிட, சற்றுநேரம் முன்பு வரை சந்தோஷமாக இருந்தவர்களின் பிணக்கை கண்டு மனது கஷ்டமுற்றனர் ஷர்மியும், திலோவும்.
"ஏண்டி வயிறு முட்ட கொட்டிகிட்ட தானே? அதுக்கு அப்பறமும் எதுக்கு மயக்கம் போட்டு விழுந்த?" பத்மநாபனிடம் திட்டு வாங்கிய எரிச்சலை, சுரேஷ் அங்கிருப்பதையும் மறந்து கோகி நீருவிடம் காய,
"ஆன்ட்டி என்ன பேசறிங்க?" கடிந்து கொண்டான் சுரேஷ்.
"ஸ்வாதி என்ன பேசியிருந்தாலும் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் சிஸ்டர்" என்றவன்,
"ஓ மறந்துட்டேன். இந்தாங்க" வாங்கி வந்த ஸ்வீட்ஸை அவள் கைகளில் கொடுக்க, வரவழைத்த புன்னகையுடன் பெற்றுக்கொண்டாள் அவள்.
"நீரும்மா என்னடா செய்யுது? நான் வேணுன்னா பத்மநாபன் சார்கிட்ட சொல்லி டாக்டரை வரவழைக்கட்டுமா?" நீரு எழுந்ததும்,மகள் தைக்க கொடுத்த துணிகளை வாங்க வெளியில் சென்றிருந்தார் அவர்.
"இல்லை வேண்டாம் அத்தை. கொஞ்சம் அசதியா இருக்கு. நான் கொஞ்சநேரம் ஓய்வெடுக்கிறேன்" எழுந்து கொண்டவளின் வாடிய தோற்றத்தை கண்டு மனதிற்குள் மகிழ்ந்தாள் ஸ்வாதி.
"ஆமா சிஸ்டர் களைச்சு தெரியறிங்க. கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வாங்க. ஈவினிங் நாம எல்லாரும் சேர்ந்து ஒண்ணா வெளில போகலாம்" சுரேஷின் நட்பு கலந்த பேச்சில் சற்று நிம்மதியாக இருந்தது அவளுக்கு.
"நானும் வரேன்" ஷர்மி மகளுடன் அறைக்கு சென்று, அவளை தூங்க வைத்துவிட்டு வர, மனதிற்குள் வட்டமிட்டு கொண்டிருந்த பல யோசனைகளையும் மீறி இரவு நாயகன் நடத்திய ஆக்கிரமிப்பின் அசதியில் கண்ணயர்ந்து விட்டாள் நீரஜா.
இடையில் சூர்யா வந்து அவளை பார்த்து விட்டு மீண்டும் எஸ்டேட்டுக்கு கிளம்பி சென்ற போதும், ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருந்தாள். நண்பர்கள் இருவரும் சிறிதுநேரம் வெளியே சென்று விட்டு வர சுரேஷை கலவரமாக பார்த்தாள் ஸ்வாதி. எங்கே தனது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று?! ஆனால் அது எதுவும் இல்லாமல் இருவரும் இயல்பாக வர, நிம்மதி பெருமூச்சு விட்டாள் அவள்.
சிற்றுண்டிகள் உண்டுவிட்டு இருவரும் பேசிக்கொண்டு அமர்ந்திருக்க, சூர்யாவிற்கு அலைபேசியில் அழைப்பு வர, அவன் பேச, எழுந்து வெளியே சென்று விட்டான்.
அப்பொழுதுதான் எழுந்து வந்த நீரஜா, அன்னையை தேடிக்கொண்டு வந்தவள்," அவர் வந்துட்டாராமா?" என கேட்க, ஷர்மியின் முகத்தில் புன்னகை திரும்பியது.
"மாப்பிள்ளை வந்தாச்சும்மா. சம்பந்தியம்மா அக்காவோடவும், ஸ்வாதியோடவும் கீழே வாக்கிங் போயிருக்காங்க. சுரேஷ் மாப்பிள்ளை கூட நம்ம மாப்பிள்ளை பால்கனில உட்கார்ந்து பேசிட்டுருந்தார்" தகவல் சொல்ல, முகம் கழுவி விட்டு அவனை தேடிச் சென்றாள். தூங்கி எழுந்தது மனதிற்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருந்தது.
கணவனை தேடி பால்கனிக்கு செல்ல,அங்கு சுரேஷ் மட்டும் அமர்ந்திருந்தான்.
"வாங்க சிஸ்டர். சூர்யா கால் பேச கீழே போயிருக்கான். இங்க டவர் கிடைக்கலை" என்றவன் தன்னருகே இருந்த எதிர்பக்க இருக்கையை காட்ட, அமர்ந்தாள் நீரஜா.
"நானும் சூர்யாவும் ஒண்ணா யு.எஸ்ல எம்.பி.ஏ படிச்சோம் சிஸ்டர். எங்கப்பா அவங்கப்பாவோட பள்ளித் தோழர். அதுவே நாங்க தோழர்களானப்பறம் தான் தெரிஞ்சது.ஆனால் அப்போ சூர்யா அப்பா இறந்து போயிருந்தார். ஆனால் அப்படியே அவங்கப்பா சாயல்ல இருக்க சூர்யாவை எங்கப்பாக்கு ரொம்பவே பிடிக்கும்.
திடீர்னு அமெரிக்கால எல்லா சொத்தையும் வித்துட்டு இந்தியாலேயே செட்டில் ஆகனுன்னு அவன் சொன்னப்போ, ஒருபக்கம் அதிர்ச்சியாகவும், இன்னொரு பக்கம் ரொம்பவே சந்தோஷமாகவும் இருந்தது.
அவனுக்கு பிடிச்சவங்களுக்கு அவனை மாதிரி நல்லவன் கிடையாது. ஆனால் பிடிக்கலையோ? அசுரனா வாட்டி எடுத்துடுவான். இன்னைக்கு உங்களுக்காக அவன் துடிச்ச துடிப்ப அவன் முதல் மனைவி இறந்தப்போ கூட நான் பார்க்கலை" என,
"அவங்க முதல் மனைவி எப்படி இறந்தாங்க?" நீரஜா கேட்க,
"உங்ககிட்ட அவன் சொல்லலையா சிஸ்டர்?" ஆச்சரியமாக பார்த்தான் சுரேஷ்.
"இ..இல்லை சொன்னாங்க. ம..மலை" நீரஜா இழுக்க,
"ம்ம்..ஆமா சிஸ்டர் மலைல இருந்து தான் விழுந்துட்டாங்க. அதும் கல்யாணம் ஆன மறுநாளே" என்றான் சுரேஷ்.
"அது திலோ அத்தை பார்த்து செஞ்சு வச்ச கல்யாணமா இல்லை கா..காதல்?" நீரஜாவின் கேள்வியில் சிரித்தான் சுரேஷ்.
"யு.எஸ்ல இருக்கும்போதே உங்க வீட்டுக்காரன் சரியான சாமியார் சிஸ். அதுக்காக பெண்களை வெறுக்கறவன்னு நினைக்காதிங்க. எந்த விதத்திலும் பெண்களை துன்புறுத்தக்கூடாதுன்னு நினைக்கிறவன், கல்யாணம் செய்துகிட்டு கூட அதை செய்யக்கூடாதுன்னு நினைச்சவன்.
ரேஷ்மா சிஸ்டரை கல்யாணம் செய்தது கூட இந்தியா வந்ததுக்கப்பறம் திலோம்மா வற்புறுத்தல்ல தான் கல்யாணம் செய்துகிட்டான். அவங்க திலோம்மா வீட்டுக்காரோரட ஒன்னுவிட்ட தங்கச்சி பொண்ணு‌. சீர்காழி பக்கம் ஏதோ குக்கிராமத்துல இருந்து வந்தாலும் ரொம்ப மாடர்னா இருந்தாங்க. அவங்க ஃபோட்டோவை கூட இவன் பார்க்கலை. திலோம்மாவோட வற்புறுத்தல்ல ஒருவழியா கல்யாணம் பண்ணி ஆரம்பிக்க முன்னாடியே அந்த வாழ்க்கை முடிஞ்சு போச்சு.
எனக்கு நல்லா தெரியும் சூர்யா அந்த மாதிரி கொலை பண்ற ஆளில்லைன்னு. ஏன்னா அந்த அளவுக்கு பொண்ணுங்களை பத்திரமா பாதுகாக்கனுங்கற உணர்வு அவன்கிட்ட அதிகமாவே இருக்கும்.
சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதிங்க? ரேஷ்மா சிஸ்டர்கிட்ட அலட்டல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவங்களோட அம்மா, அப்பா அவங்களுக்கும் ஒருபடி மேல, அவ்வளவு அலட்டல் பேர்வழியா இருந்தாங்க. திலோம்மாக்கு கூட சங்கடமா போச்சு. பொண்ணு பார்த்தப்போ இப்படி இல்லையேன்னு. எப்படியும் போக போக சரியாகிடுன்னு தான் நினைச்சாங்க. ஆனால் எல்லாம் தலைகீழ் ஆயிடுச்சு.இதுக்கெல்லாம் ஒருபடி மேல போய், அந்த ரேஷ்மா அம்மா, சூர்யாவுக்கு கல்யாணமாகி ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கிறதால தான், அவங்க பொண்ணை கொன்னுட்டான்னு அது இஷ்டத்துக்கு கதை சுத்தி விட்டுடுச்சு.எல்லாம் விதி. பழியை கூட அவன் ஒண்ணும் சொல்லாமலேயே ஏத்துக்கிட்டான் சிஸ். அவனுடைய நன்னடத்தைக்காக தண்டனை காலத்தை மூணு வருடமா குறைச்சு, இதோ இப்போ ஜாமீன்லயும் விட்டுருக்காங்க. அப்ப கூட நம்ம வம்சம் அழிஞ்சு போகக்கூடாது என்று திலோம்மா ரொம்பவே சண்டை போடவும்தான் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிச்சான்" சுரேஷ் சொல்லி கவலைப்பட,
"அப்போ அதெல்லாம் உண்மையில்லையா?" நீரஜாவின் முகம் பிரகாசமாக மாற,
"இது உங்களுக்கு முன்னமே யார் சொன்னா சிஸ்டர்? ஸ்வாதியா?" சுரேஷின் குரல் இறுகி வந்தது.
"இ..இல்லை" நீரஜா சமாளிக்க,
"உங்க மயக்கத்துக்கு காரணமும் இதுதான் இல்லையா? என்னை உங்க கூட பிறந்த சகோதரனா நினைச்சுகிட்டு,அவ என்ன சொன்னான்னு என்கிட்ட சொல்லுங்க சிஸ். ஏன்னா எனக்கு சூர்யாவோட நலன் ரொம்பவே முக்கியம்" என்றவனின் பேச்சில் தயங்கி ஒருவாறு ஸ்வாதி பேசியதை சொல்லிவிட்டாள் அவள்.
"என் வருங்கால பொண்டாட்டின்னு அவகிட்ட என் மனக்கஷ்டங்களை சொன்னேன் சிஸ்டர். அதை அவ இப்படி சொல்லி உங்களை பயமுறுத்தி?! ச்ச.. !! " ஓங்கி மேஜையில் கையை குத்தியவன்,
"இதேதான் அன்னைக்கு அந்த ரேஷ்மாவோட அம்மா பொம்பளையும் சூர்யாவோட ஜாமின் ரத்தாகனுன்னு பேசுச்சு"
"இவன் இவனோட ஜாடையில் இருக்கற அஞ்சு வயசு பெண்ணோட விளையாடறதை நான் பார்த்தேன்னு.அந்த பொம்பளையை அடிக்க விடாம சூர்யா தான் தடுத்துட்டான்" வேதனையில் சிவந்த முகத்துடன் பேசியவன்,
"ஸ்வாதி கிட்ட இதை நான் எதிர்பார்க்கவில்லை. மன்னிச்சுடுங்க சிஸ்டர். நான் கிளம்புறேன்" என்றவன் எழ,
"அண்ணா ப்ளீஸ் ஸ்வாதியை மன்னிச்சுடுங்க.நீங்க கிடைக்கஅவ ரொம்பவே குடுத்து வச்சுருக்கனும்" நீரஜாவின் வேண்டுகோளில் சிரித்தவன்,
"இப்பகூட அவளுடைய நல்லதுக்காக நீங்க பேசறிங்க. ஆனால் அவகிட்ட அந்த குணம் இல்லையே சிஸ்டர். கவலைப்படாதிங்க எங்க கல்யாணம் நடக்கும். கொடுத்த வாக்கை நான் மீறமாட்டேன். ஆனால் அவள் குணத்தை மாற்ற நிச்சயம் முயற்சி செய்வேன்" என்றவன் சிரித்துக்கொண்டே விடைபெற, சரியாக சூர்யாவும் அப்பொழுதுதான் வீட்டிற்குள் உள்ளே நுழைந்தவன், இவர்களை பார்த்துவிட்டு பால்கனிக்கு வந்தான்.
"நீரு இப்ப பரவாயில்லையாடா?" சூர்யா அவளது நெற்றியில் கை வைத்து பார்க்க,
"என்னங்க சாதாரண மயக்கம் தான். ஜூரமெல்லாம் இல்லை" என்று பேசியவளின் பேச்சில் மயங்கித்தான் போனான் சூர்யா. சுரேஷின் மூலம் தெளிந்த சில விஷயங்களால், அவளது கண்களும் இப்பொழுது காதல் பேச, மனைவியின் தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டான் சூர்யா.
"ம்க்கும்.. நானும் இங்கதான் இருக்கேன்" சுரேஷ் தொண்டையை கனைக்க,
"கண்ணு வைக்காதடா" நண்பனின் கண்களை பொத்தினான் சூர்யா.
"டேய் நண்பா நீதானான்னு நம்பவே முடியலை? அந்த வெள்ளைத்தலை காஜல் அகர்வால் மாதிரி இருந்த ஸ்டெல்லா உன்னை விடாம துரத்தியும் கண்டுக்காம விட்ட, என் நண்பன் சூர்யாவா இப்படி ரொமான்ஸ்ல பின்னுறான்னு ஆச்சரியமா இருக்குடா" என்று மேலும் வார, அவனின் கேலியில் உள்ளே ஓடிவிட்டாள் நீரஜா.
இவர்கள் பேசி சிரிப்பதை பார்த்து முறைத்துக் கொண்டு ஸ்வாதி அங்கே வர, அவளிடம் சொல்லிக்கொண்டு கூட விடைபெறாது சென்று விட்டான் சுரேஷ். அவனது செயலில் ஸ்வாதி அதிர்ந்து நிற்க, அவள் கண்முன்பே நீருவை சீண்டி கொஞ்சி அவளுடன் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான் சூர்யா.
ஸ்வாதியின் கெட்ட செயலை புரிந்து கொண்ட பிறகு அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை நீரஜா.அன்று மாலையே தனது பங்களாவிற்கு நீரஜாவின் தாயையும் சிலநாட்கள் தங்களுடன் வந்து தங்குமாறு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர் திலோவும், சூர்யாவும். அதில் கோகிலாவின் வயிறெரிய, சந்தோஷமாக அவர்களை வழியனுப்பி வைத்தார் பத்மநாபன்.
இரவின் தனிமையில், " இப்பவாவது சொல்றா ஜூஜூ? ஏன் மயக்கம் போட்டு விழுந்த?" சூர்யா உண்மையை அறிந்து கொள்ள முற்பட,
"நைட்டெல்லாம் நீங்க எங்க தூங்க விட்டிங்க?" கட்டிலில் அவனருகே படுத்திருந்தவள் அவனது கன்னத்தில் நிமிண்ட,
"இப்பவும் உன்னை தூங்க விடப்போவதில்லை ஜூஜூ குட்டி" காதலோடு கூடிய கலவிப் பெருமழையில் அடித்துச்சென்றவனின் ஆக்கிரமிப்பில் விரும்பியே தொலைந்தாள் அப்பேதையும்.
அடுத்து வந்த நாட்கள் இனிமையாக கழிய அப்பொல்லாத நாளும் வந்தது.
ஆம்!! ஸ்வாதி கூறியதைப்போல் சூர்யாவை உறித்து வைத்த ஜாடையில், கவுன் அணிந்திருந்த ஐந்து வயது பெண்ணுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த, கணவனைக்கண்டு அதிர்ந்தது நீரஜாவின் நெஞ்சம்.


அத்தியாயம்-9:

"எஸ்.பி இவ்வளவு நேரம் ஆச்சு.. இன்னும் சாப்பிடாம இருந்தா எப்படி?"கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் நீரஜா.
"அதை பக்கத்துல வந்தும் சொல்லலாம் ஜூஜூ" திரும்பாமல் பதில் சொல்பவனின் பிடிவாதம் கண்டு மலைப்பாக இருந்தது அவளுக்கு.
மறுவீடு விருந்து முடித்து வீட்டிற்கு வந்தபோது அவளுடன் இருந்தவன் தான்,இரண்டு நாட்களுக்கு பிறகுதான் வீடு திரும்பியிருக்கிறான். தொழிற்சாலை நிர்வாகத்தில் அத்தனை குளறுபடிகள்.ஜாமினில் வெளியே வந்து சூர்யா கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பிக்க அங்கு முளைத்தது பிரச்சனைகள். முடிந்த வரை களை எடுத்துவிட்டான்‌‌. இருந்தும் இப்பொழுது பிரச்சனை செய்பவர்களில் ஒருவன் அரசியல்வாதி ஒருவரின் செல்வாக்கை பெற்றிருந்ததால், அவரை காத்திருந்து சந்தித்து விட்டு இன்று காலையில் தான் திரும்பியவனை கோபத்துடன் வரவேற்றாள் ஆசை மனைவி, காரணம் அவள் அத்தனை முறை அவனை அலைபேசியில் அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காததே. ஆனால் திலோவிற்கும், ஷர்மிக்கும் போகும் வேலை விஷயத்தை தெரிவித்திருந்தான்.
"ஜூஜூ.. " ஆசையாக தழுவ வந்தவனை தள்ளிவிட்டு கோபமாக அடுக்களைக்கு சென்றுவிட்டாள் அவள். அவளது செல்ல கோபத்தை ரசித்து கொண்டே தனது அறைக்கு சென்றவன், இரண்டு மூன்று முறை "நீரு" வென குரல் கொடுக்க கண்டு கொள்ளவில்லை அவள்.
"நீரும்மா, மாப்பிள்ளை கூப்பிடறது உன் காதுல விழுகலையா?" ஷர்மி மகளை கண்டிக்க,
"ஷர்மி இது அநியாயம். என் மருமகளை அவன் கண்டுக்கவே இல்லை. அதனால அவளும் கண்டுக்க மாட்டா" திலோ மருமகளுக்கு ஆதரவாக பேச, ஷர்மியோ தலையில் கைவைக்க, திலோவும், நீருவும் கைகொடுத்து கொண்டனர்.
அதன்பின்பு சூர்யா அழைக்கவும் இல்லை,உணவுண்ண கீழே இறங்கி வரவும் இல்லை.
"என்ன அத்தை அவர் இன்னும் சாப்பிட வரலையே?" நீரு கைகளை பிசைய, நமுட்டுச் சிரிப்புடன், தோசையை பிட்டு வாயில் போட்டுக் கொண்டிருந்தார் ஷர்மி.
அவரின் சிரிப்பை கண்டு விட்ட நீரு அன்னையை முறைக்க," நீரு இன்னும் கொஞ்சம் சாம்பார் விடேன்" கேட்ட திலோவும் முறைப்பை பரிசாக வாங்கிக்கொண்டவர்,
"என் மகன் கெட்டிக்காரன் மருமகளே.அவன் நினைச்சதை சாதிக்காம விடமாட்டான். போய் காதை பிடிச்சு சாப்பிட இழுத்துட்டு வா. நீ போனாதான் அவன் கீழ வருவான்" என்றுவிட, கால்களை தரையில் உதைத்தவள்,
"இந்த கொலைகாரன் என்னை மாடி ஏறி இறங்க வச்சே கொல்றான்" முணுமுணுத்துக் கொண்டே மாடி ஏறியவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது.
'எஸ்.பி முதல் மனைவியை பற்றி கேக்கனும் நினைச்சோமே? நிபந்தனை ஜாமீன் வேற இன்னும் மூணு மாசத்துல முடிஞ்சுடும். இவன் மூஞ்ச பார்த்தாலே எல்லாம் மறந்து போயிடுது' அறைக்கதவை திறக்க, அதுவரை ஏதோ புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தவன், இவளை பார்த்ததும் கண்டு கொள்ளாத மாதிரி கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.இதோ இப்பொழுது வரை அவளின் குரலுக்கு கட்டுப்பட்டு எழவில்லை.
வேறுவழியில்லாது அவனருகே நெருங்க, நொடிக்குள் அவனது கைச்சிறைக்குள் இருந்தாள் அவள்.
"என் ஜூஜூக்கு எம்மேல என்ன கோபம்?" அவனது பிடிக்குள் இருந்தும் பேசாது முகம் திருப்பியவளின் முகம் கோபத்தில் மேலும் பன்மடங்கு அழகாக தெரிய, அவனது அதரங்கள் அவளது இரு கன்னங்களையும் வலம் வந்தது.
"ப்ச்.. நா கோபமா இருக்கேன் எஸ்.பி. என்ன பண்றிங்க?" என்றவள் அவனை தள்ள முயற்சிக்க,
"தொழிற்சாலைல பிரச்சனைடா ஜூஜூ. பழைய தொழிலாளிங்க இரண்டு பேர் ரொம்ப குடைச்சல் குடுத்துட்டே இருக்காங்க. யூனியன் ஆதரவு அவங்களுக்கு அதிகமா இருக்கு. அதனால அவங்களுக்கு ஆதரவு கொடுக்கற அரசியல்வாதிய இரண்டு நாள் காத்திருந்து சந்திச்சு பேசிட்டு வந்தேன். இடையில எனக்கு போலிஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போட்டுட்டு வரமட்டும் தான் நேரம் இருந்ததுடா ஜூஜூ" என்றவன் அவள் மடியில் படுத்துக்கொள்ள, யோசனையுடன் அவனது சிகையில் அலைபாய்ந்தது அவளது விரல்கள்.
"எவ்வளவு சோர்வா இருந்தேன் தெரியுமா? பாரு நீ தொட்டதும் அத்தனை சோர்வும் பறந்து போச்சு. நீ கிட்ட வராம இருந்தாதான் மாமனுக்கு சார்ஜ் குறைஞ்சுடுது" சூர்யா பேசிக்கொண்டே போக, நீருவோ தனது சிந்தனையிலேயே இருந்தாள்.
மடியிலிருந்து அண்ணாந்து பார்த்தவனுக்கு அவளது சிந்தனை முகம் கவலையைக் கொடுக்க," ஹேய்.. ஜூஜூ என்னடி ஆச்சு?" எழுந்தமர்ந்து அவள் முகம் பார்த்தான் சூர்யா.
"ப்ச்.. முதல்ல ஜூஜுன்னு என்னை கேலி பண்றதை நிறுத்துங்க எஸ்பி" சிந்தனை கலைந்தவள் வெடிக்க,
"என்னது கேலியா? எவ்வளவு லவ்வா கூப்பிடறேன் உனக்கு கேலியா தெரியுதாடி?" பதிலுக்கு அவனும் எகிற,
"என்னது லவ்வா? சும்மா காதுல பூ சுத்தாதிங்க எஸ்பி. நான் ஜூஜூ ஸ்டிக்கர்ஸ் பொம்மைங்கன்னு சேர்த்து வைச்சிருந்ததை என் அறைல பார்த்துட்டு தானே என்னை இப்படி கிண்டலடிக்கிறிங்க?" கூம்பிய முகத்துடன் பேசியவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, சுகமாக சாய்ந்து கொண்டாள் அவளும்.
"உன்னை முதன்முதலா பார்த்த நொடியிலிருந்து நீ ஜூஜூவாவே நெஞ்சுல பதிஞ்சுட்டடா நீரு" கணவனின் ஆழ்ந்த குரல் உண்மையாக ஒலிக்க,
"என்ன? என்னை முதல்லயே பார்த்திங்களா? எங்கே?எப்போ?" வேகமாக நிமிர்ந்து அவன் முகம் பார்க்க,
"சிறகில்லா என் நியாய தேவதையை முதன்முதலா சூப்பர்மார்க்கெட்ல தான் பார்த்தேன்டா" என்றவனின் நினைவுகளும் அந்த நாளுக்கு சென்றிருந்தது.‌
சூர்யா குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும், அவனது நன்னடைத்தையாலும் அச்சரகத்தின் காவல் அதிகாரியின் உதவியுடனும் போராடி நிபந்தனை ஜாமீன் பெற்று விட்டார் திலோத்தமா.
"ஏன் திலோம்மா இவ்வளவு மெனக்கெடறிங்க? நான் வெளிய வந்து என்ன பண்ண போறேன்?" விரக்தியுடன் பேசிய மகனை கண்டு, அழுது விட்டார் திலோ.
"வாயை மூடுடா.இனி இப்படி பேசினா நான் பொறுத்துக்க மாட்டேன்.உனக்கு எதுவும் நான் வர விடமாட்டேன்"திலோவின் அதட்டலில் அடுத்து அவன் பேச முடியுமா?!
அத்தனை செல்வங்கள் இருந்தும், வீட்டின் உயிர்ப்பு தன்மை குறைவதை உணர்ந்தவராய், அவனுடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்திருந்தவர்," சூர்யா உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்டா? ஏதோ தெரியாம முதல்தடவை அப்படி நடந்து போச்சு. இந்த தடவை அம்மா கவனமா இருக்கேன்" காலையிலிருந்து தயங்கி தயங்கி ஒருவாறு மகனிடம் மீண்டும் திருமண பேச்சை எடுத்து விட்டார் திலோ.
"எனக்கு என்ன தகுதியிருக்குன்னு இப்ப மறுபடியும் கல்யாணம் பேசறிங்க திலோம்மா? ஆயிரம் தடவை சொல்லிட்டேன் வேண்டான்னு. நான் கொலைகாரன் திலோம்மா" சூர்யா ஆத்திரத்துடன் அழுத்தமாக பேச,
"போடா ஊர் சொன்னா அது உண்மை ஆகிடுமா? உண்மைதான்.." பொது இடம் என்றும் பாராது திலோ ஏதோ பேசவர,
"திலோம்மா.." சூர்யாவின் அதட்டலில் அவனை முறைத்துவிட்டு முன்னே நடந்து சென்றார்.
மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவனை கொலைகாரன் என்று அடையாளம் காட்ட,அப்பட்டத்தை கேட்கும் போதெல்லாம் தவியாய் தவித்து தான் போனான். 'தனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?' நொந்த மனதின் சிந்தனையை கலைக்கும் விதமாக,
"அண்ணா ஜூஜூ வந்தாச்சா?" கொஞ்சும் குமரியின் குரல் கேட்க, திரும்பி‌ பார்த்தவனுக்கு அவளை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. வளர்ந்த குமரி வாயில் லாலிபாப் சுவைத்துக் கொண்டு, ஜூஜூ ஸ்டிக்கர் கேட்டு சண்டை போட்டு கொண்டிருந்தாள்.‌ அவள் கேட்டதற்கு கடைக்காரர் இல்லையென சொல்லியிருப்பார் போலும்.
"இதுக்கு தான் இந்த மாதிரி பெரிய கடைக்கே வரக்கூடாது? நானும் ஒரு வாரமா கேட்கறேன் பொண்ணு ஜூஜூ தலைல ரெட் ரிப்பன் வச்சுருக்குற ஸ்டிக்கர் வேணுன்னு? நீங்க வாங்கியே வைக்க மாட்டறிங்க?"நீரஜாவின் வாக்குவாதத்தை சுவாரசியமாக அவன் வேடிக்கை பார்க்க, அவளருகே இருந்த சிறுவனை அவனது தாய் போல் இருந்தவள், முதுகில் அடிக்க, பிள்ளை கத்தி அழுக ஆரம்பித்தான்‌.
"ஏன்மா என்னதான் உங்க பிள்ளையா இருந்தாலும், இப்படியா அடிப்பிங்க?" அழுது கொண்டிருந்த சிறுவனை அவள் சமாதானப்படுத்த,
"இவன் என் குழந்தை இல்லைம்மா. பக்கத்து வீட்டு பையன். அவங்கம்மா அடுத்த கடை வரைக்கும் போயிருக்காங்க. இவன் என் பையனுக்கு நான் வாங்கின புது பொம்மையை உடைச்சுட்டு வந்து இங்க நிற்கிறான். அதான் முதுகுல ஒண்ணு போட்டேன்" தனது நியாயத்தை பேச,
"டேய் தம்பி பையா. அவனுக்கு வாங்குன புது பொம்மையை நீ ஏன்டா உடைச்ச?சாரி கேளு" நீரஜா அச்சிறுவனுக்கு அறிவுரை கூற,
"இல்லைக்கா இவன் நேத்து எங்கக்கா பொம்மையை உடைச்சுட்டான். அம்மா அக்காவை அடிச்சாங்க, அவளை காப்பாத்த நான் அடி வாங்கிட்டேன். இவனை கூப்பிட்டேன்,வராம ஓடிப்போயிட்டான். அதான் இவன் பொம்மையை உடைச்சேன்கா. நான் செஞ்சது தப்பாக்கா?"என, நீரஜாவும் எதிர்வீட்டு பையனின் அன்னையும் அசந்துதான் போயினர்.
"அதுக்காக இப்படி செய்வியா நீ?"அந்த பெண்மணி அவனை மீண்டும் அடிக்க வர, குறுக்கே புகுந்து தடுத்து விட்டாள் நீரஜா.
"சும்மா நிறுத்துங்கம்மா. அந்த பையன் செஞ்சது தான் சரி. உங்ககிட்ட சொன்னா அவங்க அக்கா வாங்கின அடி இல்லாம போயிடுமா? இன்னொரு தடவை பிள்ளை மேல கைய வச்சிங்க?" ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவள்,
"உங்க வீடு எங்க சொல்லுடா கண்ணா. நான் உங்க வீட்ல கொண்டு போய் விடறேன்"என, அவனது நண்பனும் அவனது அன்னையும் அவளை முறைத்து விட்டு சென்றுவிட்டனர்.
"பொறுப்பா அக்காவை பார்த்துக்கணும். ஆனால் இனிமேல் இப்படி பொருளை உடைக்கல்லாம் கூடாது சரியா?" என்றவள், அவன் கையில் ஒரு சாக்லேட் பாரை கொடுக்க, அவனது தலையும் சந்தோஷமாக ஆடியது.
நியாய தேவதையாய் இருபுற நியாயத்தையையும் பொறுமையாக கேட்டு, சிறுவனின் தவறையும் அவன்போக்கில் திருத்திய தேவைதைப்பெண்ணை கண்டு, சிறகு முளைத்த மனம் அவளை தொடர்ந்தாலும், அவளது அழகால் கவர்ந்திழுக்கப்பட்டாலும், ஆசை கொண்ட மனதை அறிவு நிதர்சனத்திற்கு இழுத்து வர, தன் தகுதிக்கு அவள் எட்டாக்கனி என்று முடிவு செய்துவிட்டு, தானும் அந்த இடத்தை விட்டு அன்னையுடன் கிளம்பி விட்டான் சூர்யா.
அன்றைய இரவில் எண்ண அலைகளில் திண்ணமாக நின்று கொண்டு காதல்தடம் புரிந்தவளை நினைந்து ," ஜூஜூ" கனவிலும் அவன் அதரங்கள் முணுமுணுத்தது.
அடுத்து வந்த தினங்களும் அவள் நினைவு தந்த சுகத்திலேயே சுற்றி கொண்டிருந்தவனை, புரட்டி போட்டது திலோவின் வற்புறுத்தலில் பெண்பார்க்க சென்ற நிகழ்வு.
வேண்டா வெறுப்பாக பெண்ணை பார்க்கச் சென்றவன், திலோம்மாவிற்காக சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லி விட வேண்டுமென்று முடிவு செய்தவனுக்கு அவன் தேவதையை அங்கு காணவும்,
"அந்த நிமிஷம் எப்படி இருந்துச்சு தெரியுமாடி ஜூஜூ?" அதுவரை நடந்ததை சொல்லிக்கொண்டிருந்தவன் நிறுத்திவிட,
"ப்ச்.. எஸ்பி என்னதிது முக்கியமான நேரத்துல நிப்பாட்டிட்டிங்களே?" நீரு முறைக்க, அவளை இழுத்து அணைத்து கொண்டான் சூர்யா.
"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படற மாதிரி தான் எந்நிலைமையும் அப்போ இருந்ததுடா நீரு.கோகி ஆன்ட்டி தெரிஞ்சே பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க? ஆனால் உன்னை எப்படி கேட்க முடியும்? நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும், ஆண்டவன் என் வாழ்க்கைல கொடுத்த இரண்டாவது வாய்ப்பா, விடிவெள்ளியா வந்த உன்னை விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி உன்னை தூக்கினேன். என் வேண்டுதல் வீண் போகலைடி ஜூஜூ" என்றவன் அவளை கிள்ளி கொஞ்ச,
"அதுக்கப்பறம் நடந்ததெல்லாம் தான் எனக்கு தெரியுமே. சரி, கொஞ்சறதெல்லாம் இருக்கட்டும்" அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள்,
"உங்களை நீங்களே தாழ்த்திக்கற அளவுக்கு அப்படி என்னதான் உங்க முதல் மனைவி விஷயத்துல நடந்தது ப்ரதாப்?" என்று கேட்க,ப்ரதாப்பின் முகம் ரௌத்திரமாக மாறியதை கண்டவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட,தானாக இன்னும் பின்னால் நகர்ந்தாள் அவள்.
நொடியில் தனது பாவத்தை மாற்றி கொண்டவன்,"என்னை அப்படி பார்க்காதடா ஜூஜூ" கட்டிலின் கீழிறங்கி அவள் முன் மண்டியிட்டு அமர, சற்றே தெளிந்தது நீரஜாவின் முகமும்.
"ஒரு முக்கியமான உண்மையை நான் உன்கிட்ட சொல்லியே ஆகனும்" சூர்யா பீடிகையுடன் ஆரம்பிக்க, விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவன் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தாள் நீரு.
"ரேஷ்மாவோட கல்யாணம் முடிந்த அன்றைக்கு.." அவன் ஆரம்பிக்கும் போதே படபடவென்று கதவுகள் தட்டப்பட்டது.
"சூர்யா..‌சூர்யா.. சீக்கிரம் கதவை திறப்பா.. மாப்பிள்ளை.." ஷர்மி, திலோவின் குரல் அலறலாக வர, வேகமாக அவன் எழுந்து கதவை திறக்க, பின்னோடு ஓடினாள் அவளும்.
"சூர்யா தொழிற்சாலைல தீ விபத்தாம் கண்ணா. மேனேஜர் ரொம்ப நேரமா உனக்கு கால் பண்ணிகிட்டே இருக்காராம். நீ எடுக்கலைன்னு இப்ப வீட்டு லேன்ட்லைனுக்கு அடிச்சிட்டாரு. அந்த அரசியல்வாதி உனக்கு சப்போரட்டா பேசப்போறாருன்னு தெரிஞ்சதும், தொழிற்சாலைல பிரச்சனை பண்ணிட்டிருந்த ரெண்டு பேருதான் இதை பண்ணிட்டு ஓடுனதா வாட்ச்மேன் சொன்னாராம். சீக்கிரம் கிளம்பு. நானும் கூட வரேன்"அவர் தயாராக இருக்க,
"நீங்க வேணாம் அத்தை. நான் இவர் கூட போறேன்" முன்வந்தாள் நீரஜாவும். இவர்களின் வாக்குவாதத்தில் சூர்யா தனது அலைபேசியை தேடி எடுத்திருந்தவன்,
"நீங்க யாரும் வரவேண்டாம்.நான் சுரேஷூக்கு கால் பண்ணி வர சொல்லிக்கிறேன்.அத்தை நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க. திலோம்மா நீருவ பார்த்துக்கோங்க" கிளம்பியவன்,
"ஜூஜூ நான் வந்து பேசறேன்டா. அதுவரைக்கும் பத்திரமா இரு. என்ன?" என்ற கணவனுக்கு தன்னை சுற்றி நடப்பதை அறியாது விடைகொடுத்தாள் அவளும்‌.


அத்தியாயம்-10:

சொன்னா கேளுடி. இப்ப நான் கிளம்பி வர மூடுல இல்லை" பழரசத்தை வாயருகே கொண்டு செல்வதும் குடிக்காமல் அலைபேசியில் வாயடித்து கொண்டும் இருந்த மகளின் தலையில் ஒரு கொட்டு கொட்டினார் ஷர்மி.
"சாப்பிடற பொருளை கைல வச்சு விளையாட கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல" அன்னையின் திட்டில் அலைபேசியை அவரிடமே கொடுத்தாள்.
"அப்ப பிடிங்க அந்த பிசாசி கிட்ட நீங்களே பேசுங்க.அந்த அறுந்த வாலு மாதுரி என் உயிர் நண்பி பெங்களூருக்கு அவங்க அக்கா வீட்டுக்கு போனவ நேத்து திரும்பி வந்துட்டாளாம். சுவா என் கல்யாணத்தை பத்தி சொன்னதும் என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு பேசுறா. நீங்களே எப்படியாவது சமாளிங்க" என்றவள் நிதானமாக ஜூஸை குடிக்க உணவு மேஜைக்கு வந்தமர்ந்தார் திலோவும்.
"மதும்மா" ஷர்மி ஆரம்பித்தது தான் தாமதம்,
"ஆன்ட்டி நீங்களும் என்னை மறந்துட்டிங்கள்ள? அந்த எருமைக்கு தான் எங்க இருபது வருஷ நட்பு மறந்து போச்சு.உங்களுக்குமா?எங்க கல்யாணத்துக்கு எத்தனை ப்ளான் போட்டுருந்தோம். எல்லாத்தையும் மறந்துட்டு கல்யாண சாப்பாடு நல்லா போடுவாங்கன்னு அந்த சாப்பாட்டுராமி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளா?" தேம்பி தேம்பி அழுதவள்,
"மெனு என்ன போட்டிங்க ஆன்ட்டி?" என்று முடிக்க, அடக்க மாட்டாது சிரித்தார் ஷர்மி.
"மதும்மா உனக்கு நிகர் நீயே தான்" என்றவர் அவள் திருமணம் நடந்த விபரங்களை கூற,
"ஆன்ட்டி முதல்ல அவகிட்ட ஃபோனை குடுங்க. இதெல்லாம் ஸ்வாதி என்கிட்ட சொல்லவே இல்லையே. இப்பவும் பிரச்சனைல தான் இருக்காளா? நான் இப்பவே கிளம்பி வர்றேன்" அவர் முழு விபரத்தையும் கூறும் முன்பே இடையிட,
"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா மது. இப்ப மேடமுக்கு மூட் அவுட்டுக்கு காரணமே அவங்க வீட்டுக்காரர் பக்கத்துல இல்லாதது தான். அதெல்லாம் சந்தோஷமா இருக்கா" ஷர்மி கூறியதெல்லாம் கேட்காது, கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள் மாதுரி, ஊட்டிக்கு வந்து பள்ளியில் சேர்ந்ததிலிருந்தே நீரஜாவின் உற்ற தோழியாக இருப்பவள் மாதுரி. ஊட்டியின் பிரபல தேயிலை எஸ்டேட்டின் முதலாளியாக அவளது தந்தை இருந்தாலும், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் எளிமையுடனும், இனிமையுடனும் பழகுபவர்கள். சகதோழிகள் கூட இவர்களை இரட்டையர் என்று கூட கேலி செய்வர்.
சமீபத்தில் மணமுடித்து கொடுத்திருந்த மாதுரியின் அக்காவிற்கு குழந்தை பிறந்திருக்க, மழலையின் அழகில் மயங்கியவள் குழந்தையுடன் ஒரு மாதத்தை பெங்களூரில் கழித்து விட்டு, நேற்று தான் வீட்டிற்கு திரும்பியிருந்தாள். வந்தவுடன் நீருவை தேடி வர, அவளுக்கு மணமுடிந்த விஷயத்தை கேள்விபட்டு அதிர்ச்சியில் அவளை பிடித்து கேள்வி மேல் கேட்டுக் கொண்டிருக்க, அவளது கோபத்திலும் மனம் இலகுவாக தான் உணர்ந்தாள் நீரஜா.
"ஃபோனை கொடுங்கம்மா" நீரு அலைபேசியை வாங்க,
"நீ பேசாதடி. எத்தனை தடவை கால் பேசினேன். ஒருதடவையாவது கல்யாணம் ஆனதை சொன்னியா குரங்கே?" மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க,
"மதுக்குட்டி!! முதல்ல ப்ரேக்கில்லாத ப்ளேன் ஆடுற மாதிரி டபடபன்னு ஆடுகிட்டே குதிக்கறதை முதல்ல நிறுத்திறியா? எனக்கே கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சுடி. அதனால்தான் உன்கிட்ட எதையும் காமிச்சுக்கலை. இன்னும் அரைமணிநேரத்துல மதுக்குட்டிய பார்க்க நான் வந்துடுவேனாம். சரியா?" என,
"நீ ஒண்ணும் வரவேணாம் போடி" கத்திய மது,காலை கட் செய்யாமல் அமைதியாக இருக்க,
"அப்ப நீ கிளம்பி வாடி செல்லம்" நீருவின் கொஞ்சலில், சற்று மலையிறங்கியவள்,
"முடியாது முடியாது. நீ முதல்ல வா. அண்ணா அங்க திரும்ப வந்ததும், அவங்களை பார்க்க, நானும் அம்மாவும் உன்கூட சேர்ந்து திரும்பி வர்றோம்" என்றுவிட,
"ஷப்பா.. ஃபோனை வைம்மா பரதேவதை. நான் இப்போ கிளம்புனாதான் உன்கூட திரும்பி வர சரியா இருக்கும்" அலையடித்து ஓய்ந்தது போலிருக்க, சிரித்து கொண்டே அலைபேசியை வைத்தாள் நீரு.
"அத்தை நான் என் ஃப்ரெண்ட பார்க்க போயிட்டு வரட்டுமா?" திலோவிடம் சம்மதம் கேட்க,
"இதுக்கு கேட்கனுமாடா நீரும்மா. தாராளமா போயிட்டு வா. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு தனியா போக வேண்டாம். கார்ல போடா, நம்ம டிரைவர் மாதவனை ஓட்டச் சொல்றேன்" திலோ பச்சைக்கொடி காட்டி விட,
"சம்பந்தியம்மா இவளுங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா நேரம் தெரியாது" ஷர்மி‌ மகளை பற்றி எச்சரிக்க, திலோவும் யோசிப்பது போல் பாவனை செய்தார்.
"ம்மா..ஆஆ..ஏன்மா?" நீரு ஆட்சேபிக்க,
"மாப்பிள்ளை வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துடனும்" ஷர்மி கண்டிக்க,
"விடுங்க ஷர்மி. அதெல்லாம் நீரு வந்துடுவா" திலோ அவளுக்கு பரிந்து பேச, உதட்டை பிதுக்கினார் ஷர்மி.
"ம்மா..காலைல கூட அவர் என்கிட்ட பேசினாரும்மா. அவரும் சுரேஷ் அண்ணாவும் அந்த ரெண்டு பேரை போலிஸ்ல பிடிச்சு கொடுத்துட்டாங்களாம். தொழிற்சாலைல தீ அதிகமா பரவலையாம். கொஞ்சம் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு சுரேஷ் அண்ணா வீட்டுல கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு சாயங்காலம் தான் வருவேன்னு சொல்லிட்டாரு. அதுக்குள்ள நான் திரும்பிடுவேன் மம்மி" ஷர்மியின் தாடை பிடித்து கெஞ்ச,
"போக்கிரி. சரி‌.. பார்த்து போயிட்டு வா. இரு மதுக்குட்டிக்கு நான் செஞ்ச லட்டு ரொம்ப பிடிக்கும்,எடுத்துட்டு போ" ஒருவழியாக இரு பெண்மணிகளையும் சமாளித்து கிளம்பி விட்டாள் அவள்.
தேடி வந்த தோழியை வாசலுக்கே வந்து வரவேற்றாள் மது.
"நீரு.. " ஓடிவந்து அவளை கட்டிக்கொள்ள, காரை விட்டு அவளை இறங்கக்கூட விடாது பிடித்துக்கொண்டவளை பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்து விட்டார் மாதவன்.
"என்னை இறங்கவாவது விடுடி? இப்படி கங்காரு குட்டி மாதிரி தவ்வாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்" அவளை ஒருவழியாக விலக்கி நீரு கீழே இறங்க, அவளை இழுக்காத குறையாக மது வீட்டிற்குள் இழுத்துச் செல்ல, வீட்டில் யாருமே இல்லை.
"என்னடி யாரையுமே காணோம்? நீ மட்டுந்தான் இருக்கியா?" அவள் இழுத்த இழுப்பிற்கு நடந்தவள் அவளுடனே சோஃபாவில் அமர,
"அப்பா வழக்கம்போல வெளிநாட்டுக்கு பிஸினஸ் ட்ரிப் போயிருக்காரு.அம்மா உனக்கு பரிசு வாங்க போயிருக்காங்க.நீ இப்ப வர்றதை நான் சொல்லலை‌. நம்மள தனியா பேசவிடமாட்டாங்க.அவங்க உன்கூட பேச உட்கார்ந்துருவாங்க? அதான் நான் சொல்லலை. இப்பதான் கிளம்புனாங்க. எப்பூ...டி??!" என்று கண்ணடித்தவளை பார்த்து தலையிலடித்து கொண்டாள் நீரு.
"நீ திருந்தவே மாட்டடி" நீரு அவள் கையில் கிள்ள,
"அதுவேற எதுக்கு அசிங்கமா திருந்திகிட்டு? அப்புறம் சொல்லுங்க மேடம் நான் கொஞ்சம் எஸ்கேப் ஆன கேப்புல கல்யாணத்த முடிச்சிருக்க? இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா ஜூனியர் நீருவோட வந்து நின்னுருப்பியா?" கேலி போல் கேட்டாலும் அவள் குரலில் இன்னும் கோபம் தெரிய,
"நானே எதிர்பார்க்காத கல்யாணம்டி இது" என்னதான் சூர்யாவை இப்பொழுது பிடித்திருந்தாலும், திருமணம் நடந்த சூழல் நீருவின் மனதில் ஆறாத வடுவாகவே பதிந்து விட்டது.
"சரி விடுடி. அம்மாதான் சொன்னாங்களே? ஆனாலும் அந்த பொம்பளை மிரட்டுனதுக்கெல்லாம் நல்லா நீ பதிலடி கொடுத்துருக்கனும்‌" அவள் கோகிலாவை தான் பேசுகிறாளென்பதை புரிந்தவளாய்,
"விடுடி பெரியம்மா எப்பவும் அப்படிதானே?" முதலிலிருந்தே மாதுரிக்கு கோகிலாவை மட்டும் பிடிக்காது. ஏனோ அவர்களிடம் கயமை அதிகம் தெரிகிறது என்பதை சொல்லிக்கொண்டே இருப்பாள்.
"பெரியம்மாவா அது? பெரிய ஆமைன்னு வேணும்னா சொல்லு ஒத்துக்கறேன்"என்றவள் மூக்கால் மோப்பம் பிடித்து" லட்டு வாடை வருதே" என்றவளது மூக்கில் தட்டினாள் நீரு.
"இந்தா பிடி. அம்மா கொடுத்தாங்க" அவள் கையில் திணித்தவள்,
"போன ஜென்மத்துல நாயாதான்டி பிறந்துருப்ப" என,
"இந்த ஜென்மத்துக்கும் நீ என்னை நாயுன்னு சொன்னாலும் பரவாயில்லைடி" என்றவள் லட்டுகளை வாயில் திணித்தாள்.
"சரி சொல்லு. எப்படி போகுது திருமண வாழ்க்கை? அண்ணா விஷயத்துல என்ன நடந்தது? பார்க்க எப்படி இருப்பாரு?" மீண்டும் வரிசையாக கேள்வி கேட்க, அவள் கேட்ட பின்பு தான் தாங்கள் இருவரும் இதுவரை இணைந்து எந்த புகைப்படமும் எடுக்காதது நினைவு வர,
"ம்ம்..இதுவரைக்கும் நாங்க எடுக்கலைடி.அதான் இன்னைக்கு நேர்லயே பார்க்க போறியே" என்றவள்,இதுவரை நடந்த விஷயங்களை தோழியுடன் பகிர்ந்து கொண்டாள்.
"நீ சொல்றதெல்லாம் பார்த்தா கொஞ்சம் டெரர் பீஸா இருப்பாரோ?" லட்டு தின்ற நெய் வழிந்த கையுடன் அவளது கன்னத்தில் தட்ட,
"முதல்ல கையை கழுவுடி. எனக்கும் அப்படித்தான் முதல்ல தோணுச்சு. அப்பறம் தான் ரொம்ப மென்மையானவர்னு புரிஞ்சுகிட்டேன்" என,
"எனக்கென்னமோ உன்கிட்ட மட்டுந்தான் அண்ணா சாஃப்டுனு தோணுது" மதுவின் பேச்சில் குழம்பினாள் நீரு.
"போடி.. எதையாவது சொல்லி குழப்பி விட்டுகிட்டே இரு" நீரு சலித்துக்கொள்ள,
"சரி விடு. ரொம்ப யோசிச்சு மூளை சூடாயிருப்ப, பக்கத்துல இருக்குற குட்டி பங்களாவை செம ஹேன்ட்ஸமா இருக்க ஒருத்தன் வாங்கியிருக்கான்.இப்ப கொஞ்சநேரம் முன்னாடி தான் பார்த்தேன். யாரோ சின்ன பொண்ணோட பேசிட்டு போயிட்டிருந்தான்.அந்த பொண்ணு முகம் தெரியலை.மங்கி குல்லா போட்டிருந்தது. வா போய் சைட்டடிப்போம். மொட்டை மாடில இருந்து பார்த்தா நல்லா தெரியும்" மது கூப்பிட, முறைத்தாள் நீரு‌.
"அறிவிருக்காடி உனக்கு? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் சைட்லாம் அடிக்க மாட்டேன்" நீரு அவளது முதுகில் மொத்த,
"அதுக்கு ஏன்டி அடிக்கிற? விடுடி. சைட் தான அடிக்கக்கூடாது. என்னோட ஜிம்பாடிக்கு அவன் செட் ஆவானுன்னு பார்த்து சொல்லுடி" தனது பூசிய உடல்வாகை பார்த்து கொண்டே மது சொல்ல, தலையிலடித்துக்கொண்டாள் நீரு.
"சரி வந்து தொலையறேன் வா போவோம்" என்றழைக்க, மேகம் மூட ஆரம்பித்திருந்தது.
"என்னடி அதுக்குள்ள இருட்ட ஆரம்பிக்குது?" முன்னால் ஏறிய நீரு திரும்பி பார்க்க, கடைசி படியில் நின்று மூச்சு வாங்கி கொண்டிருந்தாள் மது.
"கிழிஞ்சது" நீரு இடுப்பில் கைவைத்து முறைக்க,
"நீ முன்னாடி போ செல்லம். நான் எல்லா லைட்டையும் போட்டு விட்டு வர்றேன்" என, மொட்டை மாடியில் நுழைந்ததும் மேகம் நகர்ந்து பளீரென்று வெயிலடிக்க சிரித்து கொண்டாள் நீரு.
சிறிது நேரம் காற்று வாங்க நடந்தவள் கைப்பிடிச்சுவரை பிடித்து மலைமுகடுகளை ரசித்து விட்டு, கீழே எட்டிப்பார்க்க, கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான் சூர்யா. தூரத்தில் ஒரு சிறு பெண்ணும் ஏதோ பாட்டிலில் நீர் அருந்தி விட்டு வர, இருவரும் கால்பந்தை விளையாடத்துவங்கினர். கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அவளது கணவன் சூர்யாவே தான்.ஏனோ ஸ்வேதா சொன்னது அபஸ்வரமாய் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த, நெஞ்சை பிசைந்த உணர்வை புறந்தள்ளியவளாய் கீழே இறங்கி வேகமாய் வெளியே ஓடினாள் நீரு.
பேயடித்தவளை போல் தன்னை கடந்து சென்ற தோழியை கண்டு மிரண்டு பார்த்தாள் மது. விளக்குகளை ஒளிர்விக்க வந்த சமயத்தில் அக்காவின் அழைப்பு வர, அதில் அவளுடன் பேசி கொண்டிருந்தவள், வேகமாக இணைப்பை துண்டித்து விட்டு தோழியின் பின்னால் அவளும் ஓடினாள்.
"இன்னைக்குன்னு பார்த்து பகல்லயே இருட்டுதே சம்பந்தியம்மா.‌ மாப்பிள்ளை வர நேரமாச்சு. இந்த பொண்ணு பொறுப்பில்லாம வெளியே போயிருக்காளே. அவளுக்கு காலும் போகலை. மது வீட்டு நம்பருக்கு அடிச்சாலும் எடுக்கலை" ஷர்மி மகளுக்கு அலைபேசியில் முயற்சித்து கொண்டே வாயிலுக்கும் வீட்டிற்குமாக நடைபயில,
"ஷர்மிம்மா நம்ம வீட்டு டிரைவர் பத்திரமா கூட்டிட்டு வந்துடுவார்.அவளும் வந்ததுல இருந்து இங்கயே இருக்கா, சூர்யாவும் பிஸியாவே இருக்கான். கொஞ்சநேரம் தோழியோட தான் இருந்துட்டு வரட்டுமே" சமாதானப்படுத்தினார் திலோ.
"இல்லை சம்பந்தியம்மா, மேட்டுத்தெரு ரோடு மலை முகட்டை ஒட்டி இருக்குறதால, சீக்கிரமே இருட்ட ஆரம்பிச்சுடும்" அலைபேசியில் சிக்னலை பார்க்க,
"எ..எந்த இடம் சொன்னிங்க ஷர்மி?" திடீரென தன்னை பிடித்து உலுக்கிய திலோவை ஷர்மி அதிர்ந்து பார்த்தவர்,
"மே..மேட்டுத்தெரு" என,‌மறுபுறம் அவரது அலைபேசி ஏற்கப்பட்டு,
"ப்ரதாப்..ப்ரதாப்" என்ற நீருவின் குரல் கேட்க,மகளின் கத்தலில்
"நீரு நீரு என்னாச்சும்மா?" ஷர்மியின் பதற்ற குரலுக்கு எதிர்ப்புறம் பதிலில்லை அணைந்து போயிருந்தது. திலோ நடந்ததை ஓரளவிற்கு அனுமானித்தவராக,
"முத்து.. முத்து" அங்கிருந்த இன்னொரு டிரைவரை திலோ கத்தி அழைக்க,
"என்ன..என்னாச்சு சம்பந்தி?! நீரு கத்துறா?மாப்பிள்ளைக்கு முதல்ல தகவல் சொல்லுங்க" ஷர்மிக்கு அவரது நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்த,
"சூர்யா அங்கதான் இருக்கான். ப்ளீஸ் கேள்வி கேட்காம என்கூட கிளம்புங்க ஷர்மி" மகனை காண கிட்டதட்ட அவரை இழுத்துக்கொண்டு கிளம்பினார் திலோ.


அத்தியாயம்-11:

"ப்ரதாப்.. ப்ரதாப்" என்ற குரலில் சூர்யா திகைத்து பார்க்க, அவனை ஏமாற்றாது அவனது ஆசை மனைவி தான் நின்றிருந்தாள்.
"நீ.. நீரு..நீ எப்படி இங்க?" நெற்றியில் சிறிய ப்ளாஸ்திரியுடன் திரும்பியவனை,
"அய்யோ இதென்ன அடிபட்டிருக்கு?" அவனருகே நீரு நெருங்கவும், அவனுடன் விளையாண்டு கொண்டிருந்த பெண், வீட்டிற்குள் திரும்ப,
"ஏய் பாப்பா நில்லு" மாதுரியின் குரலை கண்டு கொள்ளாது அந்த சிறுமி செல்ல, தனது தோழியின் குரலில் கவனம் கலைந்தவளாக,
"ப்ரதாப் யாரு இந்த பாப்பா?" நீரு கேள்வி கேட்க,மது ஓடிச்சென்று அந்த சிறுமியின் கையை பிடிக்கப்போக,
"நிறுத்து நீரு. முதல்ல அந்த பொண்ணை இங்க வரச்சொல்லு. என்ன பண்றிங்க நீங்க ரெண்டு பேரும்? யாரு அந்த பொண்ணு?" சூர்யா நீரஜாவை பார்த்து கத்த, மாதுரி வேகமாக இவர்களை நோக்கி ஓடி வந்தாள்.
"அண்ணா.. ப்ளீஸ் அவளை ஒண்ணும் சொல்லாதிங்க. நான் நீருவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் மாதுரி.இந்த பங்களா எங்களோடது தான்" தனது வீட்டை சுட்டி காட்டியவள்,
"உங்க கல்யாணத்தப்போ நான் பெங்களூரு போயிருந்தேன்" என்று விளக்க, நீரஜாவோ சூர்யாவின் மற்றொரு பரிமாணத்தில் கோபமடைந்த வளாக, மாதுரியை பிடித்து எதிர்புறம் இழுத்தவளாய்,
"அவளை கேள்வி கேட்கறது இருக்கட்டும். முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க" கணவனை பார்த்து கண்ணீருடன் கத்தியவள்,
"ஏய் பொண்ணு நில்லு. நில்லு சொல்றேன்ல" வீட்டிற்குள் நுழையப்போனவளை பார்த்து கத்த,
"நீரு முதல்ல இங்கிருந்து போ" தனது கைப்பிடியிலிருந்து திமிறி அந்த பெண்ணை பிடிக்க போன மனைவியை தடுத்தவன்,
"சிஸ்டர் எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.இவளை முதலில் இங்கிருந்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க.நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்" மாதுரியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவன் பிடியிலிருந்து விலகியவள், மானாய் அந்த பெண்ணை நோக்கி பாய்ந்திருந்தாள் நீரு.
அவள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அச்சிறுமி வேகமாக நடக்க," அய்யோ சூர்யா இவளை முதல்ல இங்கிருந்து கூட்டிட்டு போ" என்ற குரலில், அவள் பின்னோடு ஓடி வந்திருந்த சூர்யா நீருவை ஓங்கி அறைந்திருக்க,தரையில் விழுந்திருந்தாள் அவள்.
"சார் என்ன பண்றிங்க? யாரு அந்த பொம்பளை உள்ள இருந்து கத்துறது" மாதுரி நீருவை மடிசாய்த்து எழுப்ப முயற்சிக்க,
"நீ முதல்ல உள்ள போ" அந்த சிறுமியை சூர்யா உள்ளே விரட்ட,
"முடியாது நான் அவளை போ விடமாட்டேன்.உங்களை எவ்வளவு நேசிச்சேன். நீங்க எனக்கு துரோகம் பண்ணிட்டிங்க எஸ்பி? ஐ ஹேட் யூ" பொங்கிய கண்ணீரை துடைத்து உணர்ச்சிக்கு வடிகாலிட்டவள்,
"ஏய் பாப்பா முதல்ல திரும்பு!!உள்ள இருந்து பேசின உங்கம்மாவை வெளிய வரச்சொல்லு.இவங்களுக்காக தான நீங்க ரேஷ்மாவை கொலை பண்ணிங்க?" இன்னும் இவர்களை பார்த்து திரும்பாது வீட்டைப்பார்த்து நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்து, வெறிகொண்டவளாய் நீரு கத்த,
"நீரு கொஞ்சம் அமைதியாகு"செவ்வரி ஓடிய கண்களுடன் அவளையே வெறித்து கொண்டிருந்த சூர்யாவை கண்டு பயந்தவளாய், மாதுரி அவளை சமாதானப்படுத்த முயல,
"முடியாதுடி.எப்படி முடியும் சொல்லு? எப்படி விட முடியும்? இவனை நான் விரும்பித் தொலைச்சுட்டேனே?" என்றவள் முகம் பொத்தி கதறி அழ, அவளருகே வந்து சூர்யா அமர்ந்தவன் அவளை தன் மீது திருப்ப முயல,
"ஜூஜூ கொஞ்சம் பொறுமையா இரேன். எல்லாத்துக்கும் நான் விளக்கம் கொடுக்கறேன்" என்றவனின் கையை தட்டி விட்டாள் நீரு.
"என்னை தொடாதே போடா. நீ என்னை ஏமாத்திட்ட.. போ..போ" என்று கத்த,
"அப்ப நான் சொன்னா கேட்பியா நீரும்மா" திலோவின் குரலில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியே.
அவரை அங்கு கண்ட மாத்திரத்தில், அப்படியென்றால் இவரும் சூர்யாவிற்கு உடந்தை தான் என்பதில் வெகுண்டவளாக,
"நீங்க மட்டும் எப்படி உண்மை சொல்விங்க அத்தை? இத்தனை நாள் உண்மையை பேசுறதுக்கு நல்லநாள் பார்த்துட்டுருந்திங்களா? அதான் எல்லாத்தையும் நான் கண்குளிர பார்த்து, காது குளிர கேட்டேனே? உங்க மருமகளையும் வெளில வரச்சொல்லுங்க? அவங்களையும் நல்லா நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு போறேன்" என்றவளை சமாதானப்படுத்த ஷர்மி அவளருகே வர, அவரை கட்டி கொண்டு பொங்கி அழுதாள் நீரு.
"ம்மா.. இந்த எஸ்பி என்னை ஏமாத்திட்டான்மா" சின்னப்பிள்ளை போல் கதறி அழுத மகளை ஆறுதல்படுத்த முயல, அப்பொழுதுதான் அன்னை அதிகம் அதிராததை உணர்ந்தவளாக,
"ம்மா.. அப்ப உனக்கும் உண்மையெல்லாம் தெரியுமா?" குழம்பியவளாய் நீரு அதிர்ந்து பார்க்க,
"தெரியும். ஆனால் நீ புரிஞ்சு கிட்ட விதத்துல இல்லை. நிஜமான சம்பவம் என்ன நடந்ததுன்னு தெரியும்?" என்றவரின் பேச்சில் தன்னையறியாது அவள் சூர்யாவை பார்க்க,
"என்னிடம் வந்துவிடு" என்ற பார்வையை பார்த்தான் அவன்.
"நீரும்மா என் மருமகள் எப்பவும் நீதான். பேசினது" திலோ முடிக்கும் முன்பே,
"நான் தான்" நீரு கேட்ட பெண்ணின் குரல் அருகே கேட்க, அவளது பார்வை துழாவலில் சிக்காமல் போக,
"குனிஞ்சு பாரு நீரு. நான் தான் பேசினேன்" இதுவரை முகம் காட்டாத சிறுமி தான் அணிந்திருந்த குல்லாவை எடுத்திருக்க, அவள் சிறுமியல்ல, முப்பது முப்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க பெண். உடல் வளர்ச்சியில்லாது முகம் மட்டும் சற்று முதிர்ந்திருக்க,பார்த்த மாத்திரத்தில் நீரு கத்த போக, அவளை தன்மீது சாய்த்து கொண்டாள் மாதுரி‌.
ஏனென்றால் அப்பெண்ணின் முகம் இடதுபுறம் ஓரம் மூன்று கோடுகளாய் தீக்காயம் போல் வடுவாக சிதிலமடைந்திருந்தது.
"பார்க்கவே முடியலைல்ல. அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கேன் நீரூம்மா.கொஞ்சம் வீட்டுக்குள்ள வந்து பேசுறியா? எனக்காக என் தம்பி ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான்" என,
"அபர்ணா" அழுகையுடன் அவளை கட்டிக் கொண்டார் திலோத்தமா.
"அழாதிங்க சித்தி. உங்களை அழக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல? கடவுள் கொடுத்த உயிரை எடுக்கறதுக்கு நமக்கு உரிமையில்லை என்று தான் இந்த ஜென்மம் இன்னும் உயிரோட இருக்கு. இப்படி நீங்க எல்லாம் என்னால கஷ்டப்படுறதை பார்க்கும்போது" மேலும் பேசப்போனவளை ,"போதும் அபி. இதுக்கு மேலே பேசாதே" வாயை பொத்தி விட்டார் திலோ.
அனைவரும் வீட்டிற்குள் செல்ல அபி, ஷாலால் தனது ஒருபக்க முகத்தை மட்டும் மறைத்து திலோவுடன் அமர்ந்திருக்க, சூர்யாவும் அவர்களருகே சென்று அமர,மற்ற மூவரும் அவர்களை பார்த்து அமர்ந்தனர்.
இப்பொழுதும் முதலில் அபியே பேசினாள்." எங்க நீயும் ரேஷ்மா மாதிரி என்னை கேலிப்பொருளாக்க தான் வந்திருக்கியோன்னு பயந்து தான் உன்னை வெளியே போகச் சொல்லி கத்தினேன் நீரு. என்னை மன்னிச்சுடு" தேனூறும் குரலுடையவளின் இத்தகைய நிலை கண்டு படைத்தவனின் மீது அத்தனை கோபம் வந்தது நீருக்கு.
"பரவாயில்லை இருக்கட்டும் அ.." நீரு சமாதானமாக பேச முயற்சிக்க,
"அண்ணி" எடுத்துக்கொடுத்தான் சூர்யா. இத்தனை கலவரம் நடந்தும் அவனது பார்வையால் அவளை மடியில் வைத்து தாலாட்டுபவனை போன்ற அவனது பார்வையில் அவனை முறைத்தாள் நீரு.
"சாரி" உதடசைத்து சூர்யா அவளை பார்த்து கண்களை சுருக்க, பதிலுக்கு அவனுக்கு வக்களம் காட்டிய நீருவின் தொடையில் கிள்ளினாள் மாதுரி.
"என்னடி நடக்குது இங்க?"
"ஷ்.. சும்மா இருடி. நான் கோபமா இருக்கேன்" நீரு முணுமுணுக்க,
"ஓ.. நடக்கட்டும் நடக்கட்டும்" என்ற மதுவை பதிலுக்கு அடித்தாள் நீரு.
"நீ ரொம்ப சுட்டியா இருக்க நீரு" அபி தொடர்ந்து பேச,
"அப்படியெல்லாம் இல்லை அண்ணி" நீருவின் வெட்கத்தில் சூர்யா அவளருகே எழுந்து வர,
"அண்ணி உங்க தம்பியை அங்கேயே உட்கார சொல்லுங்க" நீருவின் முறைப்பில் ஏமாற்றத்துடன் அபியின் அருகே அமர்ந்தான் அவன்.
"உண்மை தெரிஞ்சுக்காம அவனை ரொம்பதான் படுத்துற நீரு" அபியும் சிரிக்க,எத்தனையோ வருடங்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்த அக்காவின் மகளை கண்குளிர பார்த்தார் அவர்.
"எனக்கு ஒரு வியாதி நீரு. கோடில ஒருத்தவங்களுக்கு தான் இப்படிப்பட்ட வியாதி வருமாம். ஹைப்போபிட்யூட்டாரிசம்னு இதை சொன்னாங்க.
அதாவது மூளையின் அடியில் நம்ம உடம்புக்கு தேவையான எட்டுவிதமான ஹார்மோன்களை சுரக்கிற பிட்யூட்டரி சுரப்பியானது,உடல்சமநிலையை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
இப்படி சுரக்கின்ற ஹார்மோன்கள்ள மூன்று மேற்பட்ட ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு என்னுடைய வளர்ச்சியை பாதிச்சு தான் நான் இப்படி இருக்கேன். நான் ஒரு மனித உயிரினம். ஆனால் முழு பெண்ணா என்னை படைப்பதற்குள் ஆண்டவன் கொஞ்சம் அவசரப்பட்டுட்டான் போல" கரைகட்டிய கண்ணீரை வெளிவிடாது பேசியவளின் நெஞ்சுரம் சற்று வியப்பைதான் ஏற்படுத்தியது நீருவிற்கு.
"அப்பறம் எப்படி இந்த காயம்? ஏன் இப்படி தனியா இருக்கிங்க அண்ணி?" வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் வெளி வந்தது நீருவின் குரல்.
"இந்த காயத்திற்கு காரணம் ரேஷ்மா" விரக்தியுடன் அபி பதிலளிக்க,
"அப்போ அவளை கொன்றது?" நடுங்கிய குரலை வெளிகாட்டாது நீரு துணிந்து கேட்டு விட,
"அது ஒரு விபத்து நீரு. நாங்க ரெண்டு பேருமே அவளை கொல்லலை" அபியின் பதிலில் தலைசுற்றியது அவளுக்கு.


அத்தியாயம்-12:

"என்ன விபத்தா?" கேட்டது நீருவல்ல மாதுரி.
"ம்ம்.. ஆமாம்மா. எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு. இனியாவது என் தம்பி வாழ்க்கை நல்லா இருக்கனும்" என்றவளின் நினைவுகள் அன்னை தந்தையுடன் மகிழ்ச்சியுடன் கழித்த நாட்களுக்கு சென்றது.
தந்தையை எதிர்த்து அமெரிக்காவிற்கு வந்த விஷ்வம் முதலில் வேலைக்கு சேர்ந்திருந்தது, ரசாயன வேதியியலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்க கம்பெனியில். அங்கு சென்ற சில நாட்களிலேயே ஈஸ்வரி கருவுற்றிருந்தார்.
"மகிம்மா நான் எவ்வளவு கவனிச்சாலும் என்னைவிட உனக்கு உங்க அத்தை-மாமா மேல தான் பிரியம்டி?" தாய்மையின் சோர்விலும் கூட தனது பெற்றோரிடம் பேசினால் மட்டுமே சந்தோஷமுறும் மனைவியை,கிடைத்த ஒரு விடுமுறை நாளில் குழந்தையின் அசைவை ரசித்துக்கொண்டே, விஷ்வம் மனைவியை வம்பிழுக்க,
"ஏதாவது ஏசிடப்போறேன் மாமா. அவங்க இல்லாம நீங்க எங்கிருந்து வந்திங்கலாம்?இந்நேரம் அத்தை இருந்தா எனக்கு வாய்க்கு ருசியா சமைச்சு கொடுத்து, அவ்வளவு நல்லா பார்த்துப்பாங்க. எல்லாத்தையும் விட்டுட்டு உங்க மேல பிரியமில்லாமலா இங்க வந்து உங்ககூட இருக்கேன்?" மகேஷ்வரியின் கோபத்தை ரசித்தவராக,
"அதனாலதான் சீக்கிரமே உன்னை இந்தியாக்கே அனுப்பிடலான்னு பார்க்கிறேன். நான் மட்டும் அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்" விஷ்வத்தின் பேச்சில் வேகமாக நிமிர்ந்து அமர,
"ஹே..பார்த்துடி" விஷ்வம் கடிந்து கொள்ள,
"அதெல்லாம் இருக்கட்டும்‌. ஏன் மாமா என்னை மட்டும் அனுப்பறிங்க? நம்மகிட்ட இல்லாத சொத்தா இங்க வந்து சேர்க்கப் போறிங்க? அத்தையும் மாமாவும் அங்க தனியா நம்ம ஊருக்காக நிற்கிறாங்க. நாமளும் அங்க இருந்தா அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?"ஈஸ்வரியின் பேச்சிற்கு
"இங்க எனக்குன்னு ஒரு அடையாத்தை உருவாக்கனுங்கறது என்னுடைய வாழ்நாள் கனவு மகிம்மா.இப்பவே அதுக்கான வேலைகளை நான் ஆரம்பிச்சுட்டேன். நம்ம குழந்தை வர்ற நேரம், நாமளே சொந்தமா கம்பெனி வைக்க போறோம். நிலமெல்லாம் நான் இங்க ப்ராஜெக்ட் பண்ண இரண்டு வருஷம் தங்கியிருந்தப்பவே வாங்கிட்டேன். இப்போ வேலைக்கு போறது கூட என்னுடைய அனுபவத்திற்கு தான்" என, முகத்தை தூக்கினார் மகேஷ்வரி.
"எல்லாம் சரி.அப்பறம் ஏன் உங்க ஃப்ரெண்ட் நாதனோட மனைவி, உங்ககிட்ட நீங்க இப்போ உருவாக்கம் ஊட்டச்சத்துபானத்தை உருவாக்க வேண்டான்னு அவ்வளவு சண்டை போட்டாங்க? என்கிட்டயும் சொல்லிட்டு தான் போனாங்க மாமா.அப்படி என்னதான் மாமா பண்றிங்க?" மனைவியின் கவலையில் அவளிடம் பேச வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணர்ந்தான் விஷ்வம்.
"ஈஸ்வரி நான் ஒண்ணும் குற்றம் பண்ணலை. அதை முதல்ல புரிஞ்சுக்கோ‌. நான் இங்க அமெரிக்காவுக்கு வந்ததே அந்த ப்ரொஜெக்ட்ட முடிக்கறதா ஒத்துகிட்டு தான் வந்தேன்.நாதன் மனைவியும் என்கூட தான் வேலை பார்க்குறா.
நாங்க இப்போ உருவாக்குற ஊட்டச்சத்து பானத்தை குடிக்கிற குழந்தைங்களோட வளர்ச்சி ஒன்றுக்கு மூன்று மடங்காக இருக்கனுங்கறது கம்பெனியோட நிபந்தனை. அப்படி உருவாக்குனுன்னா அதில் சேர்க்கிற சில ரசாயனங்கள் பக்க விளைவையும் கொஞ்சம் அதிகம் கொடுக்கும். நாதனோட மனைவி அதை எதிர்க்கிறாங்க. ஆனால் கம்பெனிகாரன் அறிமுகப்படுத்த வேண்டிய தேதி வந்துட்டது, சின்ன அளவில் தான் பக்கவிளைவு இருக்கு, அதனால சொன்ன தேதிக்கு அறிமுகப்படுத்திட்டு, மார்க்கெட்ல விடறப்போ கொஞ்சம் நேரம் எடுத்து மாற்றியமைச்சு வெளியிடலான்னு சொல்றான். ஆனால் நாதன் மனைவி முடியவே முடியாதுன்னு சொல்றாங்க.
இப்ப இந்த ப்ராடக்டுக்கு பரிசோதனை சான்றிதழ் நான்தான் கொடுக்கனும். அத்தோட என் ப்ரொஜெக்டும் முடியுது.
இப்ப மட்டும் நான் இதை ஓகே பண்ணி கொடுத்தா, முதலாளி எனக்கு ஒத்துகிட்ட பணத்தை விட அஞ்சுமடங்கு அதிகமா தர்றேன்னு சொல்லிருக்கான். நானும் சரின்னு சொல்லிட்டேன். ஏன்னா இந்த பணம் என் கைக்கு வந்துட்டா, தொழில் முதலீட்டுக்கு நான் அப்பா கையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் வராது" கணவனின் விளக்கத்தில் மூச்சடைப்பது போலிருந்தது ஈஸ்வரிக்கு.
"குழந்தைங்க விஷயமா இருக்கே வேண்டாம் இதுக்கு நீங்க ஒத்துக்காதிங்க?" மனைவியின் புலம்பலில் எரிச்சலானது விஷ்வத்திற்கு.
"இது என்ன கடைல மிட்டாய் வாங்குற சமாச்சாரன்னு நினைச்சியா ஈஸ்வரி? இரண்டு வருஷ உழைப்பை இதுல போட்டுருக்கேன்" தன்னை மீறி கத்தியவர், மனைவியின் வெளிறிய முகத்தை பார்த்து விட்டு,
"அந்த அளவிற்கு தப்பா நான் போக விடமாட்டேன் மகிம்மா.முழு சோதனையும் முடிஞ்சு இறுதி சான்றிதழ் நான்தான் கொடுக்கனும். இப்போதைக்கு அறிவிக்க மட்டும் செஞ்சுட்டு, அடுத்து அதை சரி பண்ணி தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவோம். அதுக்குள்ள என்னுடைய ஒப்பந்தத்தை இன்னும் மூணுமாதத்திற்கு புதுப்பிச்சுடுவாங்க.என்னை நம்பு" அவரின் சமாதானத்திற்கு அப்போதைக்கு தலையசைத்து வைத்தார் ஈஸ்வரி.
ஆனால் நடந்ததென்னவோ நிர்வாகி என்ன நினைத்தானோ அதன்படிதான் நடந்தது. முழு பரிசோதனை முடிவு பெறாமலேயே மார்க்கெட்டிற்கு அவன் கொண்டு வந்துவிட, சரியாக அந்நேரம் பிரசவ வலி கண்ட மனைவியை சமாளிக்க இயலாது திணறிப்போனார் விஷ்வம். அவருக்கு சேர வேண்டிய தொகை அவருக்கு சேர்ப்பிக்கப்பட்டு, மறு பரிசோதனைக்கு அவருடைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் போய்விட, மனைவியின் பிரவசத்தால் விஷ்வத்தால் சரிவர கவனிக்கவில்லை அவர்.
அரைநாள் முழுக்க அன்னையை போராட வைத்து விடியலில் பிறந்தாள் விஷ்வத்தின் செல்வமகள் அபர்ணா.அவரின் உற்ற தோழனான நாதனும் அவர் மனைவியும் குழந்தையை பார்க்க வந்தவர்கள், விஷ்வத்திடம் நிர்வாகம் அவனை ஏமாற்றியதையும் தெரிவத்தனர்.
"இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் ப்ரதர். நீங்கதான் கேட்கலை? இப்போ அவன் அவனுடைய புத்திய காட்டிட்டான்" நாதனின் மனைவி கொந்தளிக்க,
"ஆமா நான் தப்பு பண்ணிட்டேன் மேடம்" விஷ்வமும் தனது தப்பை ஒத்துக்கொண்டவர்,
"அந்த பொருளுக்கு எதிரா கேஸ் போடலான்னு பார்க்குறேன்" தனது கருத்தை தெரிவிக்க,
"அதை நான் பார்த்துக்கறேன். கம்பெனி டைரக்டர்ஸ்கிட்ட நான் பேசிட்டேன்.நீங்க தேவைப்பட்ட நேரம் உங்க அறிக்கையை மட்டும் கொடுங்க. இப்ப உங்க மனைவிக்கு உங்களோட அருகாமை ரொம்பவே தேவை.உங்க தொழிற்சாலையில் நல்லபடியா ஆரம்பிங்க. இன்னும் பதினைந்து நாள் தானே இருக்கு" என்று விட்டு விடைபெற்று சென்றனர் இருவரும்‌.
அதன்பிறகு நாட்கள் இறக்கை கட்டி பறக்க, தனது தொழிற்சாலையை வெற்றிகரமாக ஆரம்பித்திருந்தார் விஷ்வம். ஆரம்பித்த சில மாதங்களிலேயே விஷ்வத்தின் பெற்றோர் போராட்டத்தில் இறந்து விட்டதாக தகவல் உடனடியாக கிளம்ப முடியாது அங்கு பாதித்த புயலால் அவர்களது பயணம் தள்ளி போனது. ஊருக்கு வந்து சேர்ந்த போதோ ஊர்மக்கள் அவர்களுக்கு மரியாதைகள் செய்துவிட்டதை உணர்ந்து விஷ்வம் மனம் வருந்தினாலும், தந்தைக்கு உதவாத மகனை மக்கள் தூற்ற, மனமுடைந்து மனைவியுடன் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பினார் விஷ்வம்.
இடையில் திலோத்தமாவின் திருமணத்திற்கு மட்டும் வந்து தலைகாட்டி விட்டு செல்ல, திருமணம் முடிந்த ஆறுமாதங்களிலேயே திலோவின் கணவர் ராணுவத்தில் உயிர்நீத்த சம்பவம் அறிந்து ஓடோடி வந்தனர் விஷ்வமும் மகேஷ்வரியும்.


அத்தியாயம்-13:

"கொஞ்சநேரம் அபியை என்கிட்ட கொடுத்துட்டு வந்து சாப்பிடு திலோ" ஈஸ்வரியின் கெஞ்சலுக்கு செவி மடுக்காது, ஒன்றரை வயது அபியை தூங்கச்செய்த வண்ணம் சுவரை வெறித்து அமர்ந்திருந்த தங்கையை கண்டு நொந்து போனாள் அவள்.
"திலோ எழுந்து வா. எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப் போற?" விஷ்வத்தின் அதட்டலில் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
"எப்பவும் இனி இப்படித்தான் மாமா. அந்த கடவுளுக்கு நாங்க சந்தோஷமா இருந்தது பொறுக்கலை போல. அதான் அத்தை மாமாவையும் கூப்பிட்டுக்கிடடாரு. அவரையும் பறிச்சுக்கிட்டாரு" விரக்தியில் பேச,
"பாப்பா இப்படியெல்லாம் பேசற வயசாடா இது? அப்பா சொல்றதை கொஞ்சம் யோசிடா" திலோ, ஈஸ்வரியின் தந்தை அவளிடம் வற்புறுத்த,
"இன்னொரு தடவை இந்த பேச்சை எடுத்திங்கன்னா என்னை உயிரோடவே பார்க்க முடியாதுப்பா" கோபத்துடன் உள்ளே எழுந்து சென்று விட்டாள் அவள். திலோவின் கணவரின் ஒன்றுவிட்ட அண்ணன் மணமாகாமல் இருக்க, அவருக்கு மறுமணம் செய்து கொடுக்கும்படி அவளது கணவர் வீட்டார் சொல்லி சென்றிருக்க, முடியவே முடியாதென்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி அனுப்பிவிட்டாள் அவள்.
தனது காலத்திற்கு பிறகு மகளின் வாழ்க்கையை நினைத்தும், ஈஸ்வரி மீண்டும் மூன்றுமாதம் கருவுற்றிருக்க, மகள்களை எப்படி கவனிப்பதென்று நொந்து போனார் விஷ்வத்தின் மாமனார்.
இந்நிலையில் அவர்களின் அமெரிக்க பயணமும் நெருங்க," நானும் அப்பாவும் உங்ககூடவே வர்றோம் மாமா. இங்க இருக்க சொத்தெல்லாம் பண்ணையக்காரர் மேற்பார்வைல விட்டுட்டு கிளம்புவோம்.அக்கா கூட பிரசவத்திற்கு நான் இருக்கேன்" திலோ முடிவெடுத்து பேச, அப்போதைக்கு மகளது மனநிலை மாற அவளது தந்தையும் சம்மதிக்க, ஒன்றாக அனைவரும் திரும்பினர்.
சிறிது நாட்களில் மகன் சூர்யாவின் பிறப்பில், குடும்பத்தினரின் சந்தோஷம் மீண்டிருக்க, முழுக்க முழுக்க சூர்யாவை தானே வளர்த்தாள் திலோ. அபர்ணா, சூர்யாவின் மழலை விளையாட்டுக்களில் அவர்களது கஷ்டங்கள் தேய்ந்திருக்க, தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தார் விஷ்வம்.
இதற்கிடையில் விஷ்வத்தின் மாமனாரும் இறைவனடி சேர்ந்து விட, மறுமண பேச்சை திலோவிடம் எடுத்து ஓய்ந்து போனார் விஷ்வம்.திலோ குழந்தைகளை கவனிப்பதிலேயே தன்னை மூழ்கடித்து கொண்டவள், ஈஸ்வரியின் வற்புறுத்தலில் விஷ்வத்தின் தொழிலும் பங்கெடுத்து கொள்ள, தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கல்லெறிய வந்து சேர்ந்தாள் எதிர்வீட்டு தென் அமெரிக்க மருத்துவ பெண் மார்ட்டினா.
எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் பிள்ளைகள் இருவரையும் பார்க்கில் விளையாண்டு கொண்டிருக்க அவர்களை கவனித்து கொண்டு அமர்ந்திருந்தனர் திலோவும் ஈஸ்வரியும்.
"அக்கா ஒரு விஷயத்தை கவனிச்சியா? பாப்பாவை விட சூர்யா ரொம்ப வளர்ந்த மாதிரி இருக்குல்ல? இத்தனைக்கும் அவளைவிட இரண்டு வயசு சின்னவன். நம்ம அபி வயசு பொண்ணுங்க ஓரளவு சூர்யாவை விட உயரமாக இருக்காங்க பார்த்தியா?" என,
"ஆமா திலோ. நான்கூட இவ நம்ம அத்தை மாதிரி குட்டையா வளருவான்னு நினைச்சேன்.ஆனா பதிமூன்று வயசாச்சு. வளர்த்தியும் இல்லை, வயசுக்கு வர்றதுக்கான அறிகுறியும் இல்லை.தூரத்துல இருந்து பார்த்தா அஞ்சு வயசு பொண்ணு மாதிரி இருக்கா" ஈஸ்வரியும் கவலைப்பட,
"டாக்டர்கிட்ட காமிச்சுடலாம்கா. ஏன் நம்ம எதிர்த்த அப்பார்ட்மென்ட்கு இப்ப குடிவந்திருக்க பொண்ணு கூட டாக்டர் தான். நல்லா தான் பேசுனாங்க? அவங்ககிட்ட கேட்டு கூட நல்ல டாக்டரா பார்க்கலாம். மாமா ஜெர்மனில இருந்து நாளைக்கு திரும்பிடுவாரு. இன்னைக்கு கேட்போம். நாளைக்கு டாக்டரையே பார்த்துடலாம்" என, அதன் படியே வீட்டிற்கு பிள்ளைகளை அழைத்து சென்றவர்கள், எதிர்வீட்டு பெண்மணியின் உதவியை நாட, அவரும் சில பரிசோதனைகள் செய்துவிட்டு, அன்றே சில டெஸ்டுகளுக்கும் பிரபல மருத்துவரின் அப்பாயின்மென்டையும் வாங்கி கொடுக்க, திலோ தாமதிக்காமல் அபியை அழைத்து சென்றாள்.
மருத்துவர் அவளை மட்டும் உள்ளே அழைத்து செல்ல," திலோம்மா அக்கா மட்டும் போறா? நானும் உள்ள போவேன்.அபி நில்லுடி" என்று கத்த,
"கண்ணா அமைதியா இரு" ஈஸ்வரியின் குரலுக்கு கட்டுப்படாமல் துள்ளினான் அவன்.
"போம்மா. நானும் போவேன்" என்று துள்ள,
"சூர்யா நான் வர்றப்போ உனக்கும் டாக்டர் அங்கிள் கிட்ட சாக்லேட் வாங்கிட்டு வர்றேன்டா" என, அது சரியாக வேலை செய்ய, அபியின் கையை விட்டான் சூர்யா.
பரிசோதனை முடிவுகள் அவர்களது தலையில் பெரும் இடியை தூக்கி போட்டது. கோடியில் ஒருத்தருக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளால் அபி பாதிக்கப்பட்டு இருந்ததால், அவளுக்கு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதும், பூப்படைவதற்கான வாய்ப்பும் இல்லை என்றும், வயது செல்ல செல்ல அதனுடைய தாக்கங்கள் அதிகரித்து உடல்நிலை மோசமாகாமல் இருக்க, அவள் மருந்துகளின் உதவியுடனேயே வாழ்வின் மிச்ச நாட்களை கழிக்க வேண்டுமென்றும் கூறிவிட, ஈஸ்வரியின் இதயம் நிற்காத குறை.
எதிர்வீட்டு மருத்துவ பெண்ணான மார்ட்டினா தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு ஆதரவு கூற, நடப்பதெதுவும் அறியாது ஈஸ்வரியின் விடாத அழுகையில் குழந்தைகள் இருவரும் திலோவிடம் தஞ்சமடைந்திருந்தனர்.
வீடு திரும்பிய விஷ்வம விஷயத்தை அறிந்து திக்பிரம்மை பிடித்தவராக அமர்ந்து விட, திலோ தான் அவர்களை தேற்றி மேலும் சில மருத்துவர்களிடம் செல்ல பரிந்துரைக்க, அனைவரும் சொல்லி வைத்தாற் போல் ஒரே முடிவையே கூற, அபியின் மேல் அதிக அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டனர் அனைவரும்.
ஈஸ்வரி எப்பொழுதும்," அக்காவை நீதான் பத்திரமா பார்த்துக்கனும் சூர்யா" என்று அறிவுரைத்த, சிறுவயதிலேயே சூர்யாவின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து போனது அன்னையின் பேச்சு. ஓரளவு விவரம் புரியும் வயதாகையால், தன்னை சுற்றி நடப்பதை புரிந்து கொண்ட அபி, தனக்குள் தானே ஒடுங்க, மார்ட்டினா தானே முன்வந்து அவளை ஆறுதல் படுத்தும் வேலையை தான் பார்த்துக் கொள்வதாக கூற,அடுத்த இரண்டு நாட்களில் சற்று பழைய நிலைக்கு மீண்டிருந்தாள் அபி.அனைவரும் சூழ்நிலைகளை ஏற்று நடக்க பழகிக்கொண்டிருக்க, ஒரு விடுமுறை நாள் மதியம் அலுவலில் இருந்து வீடு திரும்பிய திலோ, விடாது வாந்தி எடுத்து கொண்டிருக்கும் மகளை கண்டு வேகமாக அவளருகே ஓடி வந்தார்.
"அக்கா..அக்கா" திலோ கத்த,
"அம்மா சூர்யாவை கூப்பிட்டுகிட்டு மார்க்கெட் போயிருக்காங்க சித்தி" அபி முயன்று சொல்ல,
"என்னடா செய்து அபி? சாப்பிட்டது எதும் சேரலையா?" என்று கேட்க, முழித்தாள் அவள்.
அவளது விழித்தல் வித்தியாசமாக பட,"அபிம்மா என்ன முழிக்கிற?"அவள் முகத்தை தூக்க,
"எனக்கு ரொம்ப வாந்தி வாந்தியா வருது சித்தி. அந்த மா..மார்ட்டி" தயங்கி தயங்கி அந்த பெண் அவளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதை சொல்லி விட,மகளை இழுத்து அணைத்து கொண்டாள் திலோ.
"எவ்வளவு நாளாடா இது நடக்குது? நீ ஏன் முதல்லயே சொல்லலை?" என,
"அவ எதோ பவுடர் என் மூக்குல என்னை அழுத்தி பிடிச்சு தடவி விட்டுர்றா சித்தி.அது வச்சதும் எனக்கு கண்ணெல்லாம் சுத்தி பயமாகிடுச்சு.அப்படி வைக்கக்கூடாதுன்னா, என் குறையை வெளிய சொல்லாம இருக்கனுன்னா நான் அவ சொல்றபடில்லாம் கேட்கனும் சொல்லி.." கதறி அழ, அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த ஈஸ்வரி-விஷ்வமும் இதை கேட்டு விட,நேரே சென்று மார்ட்டினாவை பிடிபிடியென்று பிடித்தவர்,அவள் மீது காவல்துறையிலும் புகாரளிக்க,அவளை கைது செய்து விட்டாலும், மிகவும் நொந்து போனாள் அபி.
"அவ அதோட நின்னிருந்தா பரவாயில்லை" அதுவரை நடந்த விபரங்களை சொல்லிக் கொண்டிருந்தவள், உடைந்து அழ,
"அந்த மார்ட்டி பெயில்ல வெளிய வந்தவ,மாமாவையும் அக்காவையும் அவ காரால இடிச்சு கொன்னு, தானும் சேர்ந்து எரிஞ்சுட்டா நீரு.அந்த நேரத்திலயும் கார்ல இருந்த அபியை தூக்கி வெளியே போட்டதால தான் காயங்களோட இவ தப்பிச்சா" திலோ சொல்ல,
"போதும் என்னால கேட்க முடியலை.எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் அண்ணி" நீரு எழுந்து அவளருகே அமர,தனது அன்னையைப்போல் இரக்க மனம் கொண்டவளை கண்டு மனம் ஆறுதலடைந்தது அபிக்கு.


அத்தியாயம்-14
"நீரு அழாதே" சூர்யாவும் அவளருகே வந்தமர,
"நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழனும்" அபி அவர்களை பார்த்து கூறியவள்,
"அப்பா அவசரப்பட்டு மார்ட்டி மேல புகார் கொடுக்கும் போது என்னை பற்றிய உண்மைகளையும் சொல்லிட்டதால அதுக்கப்பறம் அந்த சமூகத்தில் நான் நிம்மதியா வாழ முடியலை.ஏதாவது சொல்லி ஏன்டா வாழறோம்னு நினைக்க வச்சுட்டே இருப்பாங்க. அதனால தான் முதல்ல எனக்காக என் உடல்நிலைக்கும் நல்லதுன்னு சூர்யா எனக்காக இந்த வீட்டை வாங்கி இங்க ஊட்டில தங்க வைச்சு என்னை பார்த்துகிட்டான்" சூர்யாவின் முகம் தொட்டு தடவியவள்,
"உங்க மாமா அவங்கப்பாவுக்கு உதவாம, பணத்துக்காக செஞ்ச காரியத்தால தான் பிள்ளைங்களுக்கு இப்படியெல்லாம் நடக்குதுன்னு ஒருதடவை அம்மா சித்திகிட்ட புலம்பினதா சித்தி சொன்னதால, அங்க இருக்குற எல்லா சொத்துக்களையும் வித்து அங்க இருக்கற ஆசிரமத்துக்கு கொடுத்துட்டு, தாத்தா சொத்துல வாங்குனது தான் இந்த சொத்துக்கள்ளாம்" என, ஆமென்று தலையசைத்தார் திலோத்தமா.
"ஆனால் இப்ப பொறுமையா நீ கேட்டு தெரிஞ்சுக்கற உன்னோட பக்குவம் ரேஷ்மா கிட்ட இல்லைடா ஜூஜூ" சூர்யாவின் குரலில் அவன்மீது சாய்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்க்க,
"என்னை கல்யாணம் பண்ணா நான் திரும்ப அமெரிக்காவுக்கே போயிடுவேன்னு ரேஷ்மாகிட்ட பொய் சொல்லி என் சொத்து மேல இருக்குற ஆசைல, அவளோட அப்பாம்மா அவளை எனக்கு கட்டி வச்சிருக்காங்க நீரும்மா" சூர்யா வேதனையுடன் ஆரம்பிக்க,
"இல்லை வேண்டாம்" என வாய்பொத்தியவளின் கைகளை எடுத்து விட்டவனின் பார்வை சொல்லாமல் சொல்லியது இன்று தான் சொல்லியே ஆக வேண்டுமென்று.
"கல்யாணம் முடிஞ்ச முதலிரவு அன்னைக்கே இந்த விஷயம் தெரிய வர, அன்னைக்கு முழுவதும் எங்களுக்குள்ள சண்டைதான் நடந்தது" என்றவன் நினைவுகள் அன்றைய நாளை நினைத்து முகம் வாடியது. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தான்,இருந்தும் அன்னைக்கு பிறகு தன்னுடன் நெருக்கமாக போகும் இன்னொரு பெண்ணுறவை நினைத்து எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும், சந்தோஷமாகவே முதலிரவு அறையில் காத்திருந்தான் சூர்யா. ரேஷ்மா பார்ப்பதற்கு சற்று சுமாராக இருந்தாலும் திலோம்மாவின் உறவு என்பதாலேயே திருமணத்திற்கு சம்மதித்திருந்தான் அவன்.
புதுமணப்பெண்ணாய் உள்ளே நுழைந்தவளை சிரித்த முகமாய் சூர்யா எதிர்கொள்ள,"எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சொல்லுங்க. நாம திரும்ப அமெரிக்கா போக போறதில்லைன்னு உங்க சொந்தக்காரங்க பேசினாங்க?அது உண்மையா?"சிறுபிள்ளை அடத்துடன் கேட்டவளை கண்டு சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
"இதை பற்றி வாக்குவாதம் பண்ற நேரமா இது ரேஷ்மா?" மென்மையாகவே அவன் பேச,
"நீங்க அமெரிக்கா செட்டில்ங்கறதால தான் நான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துகிட்டேன் தெரியுமா?உங்களைப்பத்தின உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணி என்னை ஏமாத்திருக்கிங்க?குடும்பமே ஃப்ராடு" ரேஷ்மா எடுத்தெறிந்து பேச,
"ஏய் நிறுத்து என்ன பேசுற நீ? கல்யாணம் பேசும் போதே திலோம்மா எல்லாம் தெளிவா பேசித்தான் நடத்தினாங்க. வா இப்பவே கேட்கலாம், உன்னை பெத்தவங்க கிட்ட?" கோபமாக கதவை திறக்க போனவனை தடுத்து நிறுத்தினாள் ரேஷ்மா.அவளுக்கு ஓரளவு இப்பொழுது புரிந்தது, எதற்காக தன்னை கல்யாணத்திற்கு முன்பு சூர்யாவிடம் பேசவிடாமல் செய்தாளென்று.ரேஷ்மாவிற்கு சிறுவயதில் இருந்தே வெளிநாட்டில் மணமுடித்து வாழவேண்டுமென்ற ஆசை இருந்தது.அதற்காகவே நிறைய வரன்களை அவள் தட்டி கழிக்க, அதற்கு மேலும் தாமதிக்க முடியாது சூர்யாவின் வரன் வந்ததும் அவனுக்கு ஏமாற்றி கட்டி வைத்து விட்டனர்.
"நாம அங்க போகறதுக்கான வாய்ப்பே இல்லையா?" ஏமாற்றத்துடன் கேட்டவளை கண்டு சூர்யாவின் மனம் இளக,
"என் வாழ்க்கை இனி இந்தியால தான். உன் சொந்தக்காரங்க பேசினது உண்மைதான்.நீ ஆசைப்பட்டன்னா உன்னை அங்க கண்டிப்பா கூட்டிட்டுப் போயிட்டு வர்றேன். ஹனிமூன் கூட அங்க போயிட்டு வரலாம் ரேஷ்மா.வருத்தப்படாத" தனது தோள்மீது கைவைத்து திருப்பி அணைக்க முயன்றவனை விட்டு விலகி நின்றாள் அவள்.
"எனக்கு விவாகரத்து கொடுத்துடுங்க. என் கனவை எப்படியும் என்னால நிறைவேற்றிக்க முடியும்" என்றவளின் பேச்சில் எரிச்சல் வர,
"முட்டாள் மாறி உளறாத ரேஷ்மா" சூர்யா கத்த, பதிலுக்கு அவளும் பேசவென, வாக்குவாதங்கள் நீள, ஒருவரை ஒருவர் பிரிந்து தங்களை மறந்து சூர்யா சோஃபாவிலும், ரேஷ்மா அவளது மேஜையிலும் கண்ணயர்ந்திருக்க, சிருங்கார லீலைகளில் தூங்காது விழித்திருக்க வேண்டிய இரவின் விடியல் இப்படி விடிந்த எரிச்சலுடன், கதவை தட்டும் சத்தம் கேட்டு, குளியலறைக்குள் சென்று விட்டான் சூர்யா.
ரேஷ்மா தூக்கமில்லாதவளாய் கதவை திறக்க, அவளின் களைத்த தோற்றத்தை கண்டு திருப்தியுற்றவராய் அவளது அன்னை," குளிச்சுட்டு கீழே வாடா பாப்பா" அவளின் தலைகோத, அவரின் கையை தட்டிவிட்டாள் அவள்.
"என்னாச்சுடி?"
"என்ன ஆகனும்? அதான் என்னை ஏமாத்தி இவனுக்கு கட்டி வச்சுட்டியே?" அன்னையிடம் காய்ந்து விழ,
"அட கிறுக்கி.இவன் என்ன சாதாரண ஆளுன்னு நினைச்சியா? இவன் உன் கைக்குள்ள இருந்தா வெளிநாடென்ன உலகம் பூரா நீ சுத்தி வரலாம். அது தெரியாம மாப்பிள்ளை கூட சண்டை போட்டுட்டியா?" அவளின் அன்னை கடிந்து கொள்ள,
"முதல்ல நிறுத்தும்மா. அவன் இங்க தான் எப்பவும் இருக்க போறதா என்கிட்ட சொல்றான்" கோபத்துடன் உள்ளே செல்ல, பின்னோடு வந்தாள் அவளது அன்னையும்.
"முட்டாள் முட்டாள்.. எல்லாம் இந்த திலோ கழுதை இருக்கற வரைக்கும். அவன்கூட நல்லா பழகி பேசி அவனை உன் கைக்குள்ள போட்டுகிட்டு இவளை ஒரு ஆசிரமத்துக்கு தள்ளி விட்டுட்டன்னா, நீ எங்க இருக்கியோ அவனும் அங்கதான் இருப்பான். நல்லா யோசி ரேஷ்மா? நீ ஆசைப்பட்டது உடனே நடக்கலைன்னாலும் அதை நடக்க வைக்கிற முயற்சில இறங்கு. அவன்கிட்ட இணக்கமா இரு" அறிவுறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றுவிட, அன்னையின் பேச்சில் சாய்ந்தது ரேஷ்மாவின் மனமும்.
அதன் முதல்படியாக குளித்து வெளியே வந்தவனிடம்," என்னை மன்னிச்சுடுங்க சூர்யா.இராத்திரி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்" முன்வந்து மன்னிப்பு கேட்க, அவளை மன்னிப்பதற்கு தயங்கவில்லை அவனும்.
"பரவாயில்லை ரேஷ்மா.இப்பதானே கல்யாணம் செய்திருக்கோம்.ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க கொஞ்ச நாளாகும்"என்றவன்,
"உனக்கு விருப்பமிருந்தா இன்னைக்கு என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா?"அக்காவிடம் ஆசிர்வாதம் வாங்கி, தாங்கள் நிரந்தரமாக இந்தியாவிற்கு வந்த காரணத்தை சொன்னால் அவளுக்கு தன் நிலைமை புரிந்து தன்னை நேசிப்பாள் என்று தப்பு கணக்கு போட்டவனாக கேட்க, சரியென்று தலையசைத்தாள் அவளும்.
குளித்து முடித்து ஒன்றாக பேசிக்கொண்டு வந்தவர்களை கண்டு பெரியவர்கள் மனம் குளிர, ரேஷ்மாவை திலோ பூஜையறையில் விளக்கேற்ற சொல்ல, தாங்கள் வெளியே செல்வதை கூறினான் சூர்யா.
"இன்னைக்கே போகனுமா கண்ணா?" ரேஷ்மா எந்தளவிற்கு எடுத்து கொள்வாள் என்று சந்தேகமாக இருந்தது திலோவிற்கு.
"நான் பார்த்துக்கறேன் திலோம்மா" மகனின் சமாதானத்தில் இரட்டை மனதாக சம்மதித்தார் அவர்.


அத்தியாயம்-15:

உணவை முடித்து விட்டு, காரில் செல்லும் போது, நன்றாக பேசிக்கொண்டு வந்தாள் ரேஷ்மா. நிறைய இடங்களில் நிறுத்த சொல்லி அவள் நிறைய செல்ஃபிக்களும் எடுக்க,
"இன்னைக்கு ஒரே நாள்ள ஃபோன் மெமிரிய நிரப்பனுன்னு நினைக்கிறயா ரேஷ்மா?" சூர்யா சிரிக்க,
"எனக்கு செல்ஃபி எடுக்க, வித்தியாசமான விஷயங்களை இடங்களை புகைப்படம் எடுக்க ரொம்பவே பிடிக்கும்" என, சிறு தலையாட்டலுடன் வண்டியை எடுத்தவன், சிறு பங்களாவின் முன், வண்டியை நிறுத்தியவன்,
"நாம இப்ப பார்க்க போறது எங்க அக்காவை" சொல்லிக்கொண்டே இறங்க,
"நீங்க ஒரே பையன்னு சொன்னாங்க.அவங்க விபத்துல இறந்துட்டதா சொன்னாங்க" அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைய, குளிருக்கு கணப்பின் முன் நின்று கொண்டிருந்தவளை சூர்யா,
"அபிக்கா" என அழைக்க, திரும்பிய உருவத்தை கண்டு சிரித்தாள் ரேஷ்மா.
"வாட்? இந்த பொண்ணு அக்காவா?" அபியின் உருவத்தை கேலி செய்து அவளருகே வர, அவளின் சிரிப்பில் காயப்பட்டவளாய் அபி பின்னால் நகர, அவளை புகைப்படம் எடுத்தாள் ரேஷ்மா.
"வேண்டாம் ஃபோட்டோ எடுக்காதே" அபி முகத்தை மூடிக்கொள்ள, அவளின் படபடப்பை வரிசையாக புகைப்படம் எடுத்தாள் ரேஷ்மா.
"நிறுத்து ரேஷ்மா" சூர்யா ஊடே வந்தவன், அவளது நிலையை பற்றி சொல்ல,
"ஓ இதுதான் காரணமா? சூப்பர்" என்று குதூகலித்தவளை விந்தையாக பார்த்தனர் இருவரும்.
"என்ன சொல்ற நீ?" சூர்யா கேட்டு விட,
"ஆமா கைல இவ்வளவு பெரிய துருப்பு சீட்டு கிடைச்சுருக்கு. இதை நான் உபயோகப்படுத்திக்காம விடுவேனா? இந்த உண்மையை நான் யாருக்கும் சொல்லக்கூடாதுன்னா நீங்க என்கூட அமெரிக்கால செட்டில் ஆகனும் சூர்யா" அமெரிக்கா என்றதும் பழைய நினைவுகளில் உந்தப்பட்டு அபி முகம் பொத்தி அழ, அதையும் புகைப்படம் எடுக்க முயன்றவளை சூர்யா தடுத்து அலைபேசியை தூக்கி எறிய, அது அபியின் காலில் விழுந்தது.
அலைபேசி பறிபோனதில் வெறி கொண்டவளாய்,அபியை அவள் பிடிக்க போக, கால் தடுக்கி, கணப்பு கம்பியின் மேல் அபியின் முகம் பட்டு எரிய வலியில் துடித்தாள் அவள்.
"அக்கா ஒண்ணுமில்லை அழாத.வா டாக்டர் கிட்ட போகலாம்" சமாதானப்படுத்தி கொண்டிருந்தவனை அவளை தள்ளி விட்டு ஆத்திரத்தில் அருகில் கிடந்த கட்டையால் ஓங்கி அடிக்க வந்தாள் ரேஷ்மா.அவளைப்பார்த்த அபி, சூர்யாவை விலக்கி எழுந்து ரேஷ்மாவை தள்ளிவிட, சுவற்றில் மோதியவளின் நெற்றிப்பொட்டில் அடிபட்டு உயிர் பிரிந்தது.
அதில் இருவரும் உறைந்து போக, முதலில் சுதாரித்து சூர்யாதான். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவளை,தொட்டு பார்க்க உடல் சில்லிட்டு போயிருந்தது.
"செத்துட்டாக்கா" என்றவன் உடைந்து அழ,
"என்னாலதான்டா சூர்யா. அழாத போலிஸ்ல நான் சரண்டர் ஆகுறேன். நான் நம்ம குடும்பத்துல இருந்தாலே எப்பவும் பிரச்சனைதான்" அவளும் உடைந்தழ,
'அக்காவை நீதான் பார்த்துக்கனும் சூர்யா' அன்னையின் வார்த்தைகள் மனதில் எதிரொலிக்க,
"இதைப்பற்றி நீ மூச்சு கூட விடக்கூடாதுக்கா. நான் பார்த்துக்கறேன். என் மேல் ஆணை நீ இதைப்பற்றி மறந்துடு" என்றவன் ரேஷ்மாவின் உடலை தூக்கி கொண்டு காரில் சென்று விட்டான்.
வரும்பொழுது ஜாலியாக பேசிக்கொண்டு வந்த ரேஷ்மா பிணமாக கொண்டு செல்வதை கண்டு மனம் வெம்ப, தானும் அந்த நொடியே செத்து விடலாமா என்று கூட தோன்றியது அவனுக்கு? இருந்தும் தனது கடமை நினைவு வர, வெகு சில ஆட்கள் நடமாடி கொண்டிருந்த, தொட்டபெட்டா மலை உச்சிக்கு அவளை கொண்டு சென்றவன், வேண்டுமென்றே புகைப்படம் எடுக்கும் போது தள்ளி விடுவதை போல் பாவனை செய்து, அவள் இறந்து விட்டதை போல் காண்பித்து தண்டனையும் ஏற்று கொண்டான்.
"ப்ரதாப்" முழு உண்மையறிந்த நீரு அவனை கட்டிக்கொண்டு அழ,
"நான் எந்த தப்பும் செய்யலை நீரு. எங்க மேல எந்த தப்புமில்லை. அக்கா நிறையவே துன்ப பட்டுட்டா. அவளுடைய மிச்ச வாழ்க்கையை நல்லா வாழனும் தான் நான் பழியை ஏத்துகிட்டேன்" என்ற சூர்யாவை ஆரத்தழுவி கொண்டாள் நீரு.
சற்று நேரம் அங்கு அமைதியே நிலவ,"போதும் நிறைய பேசியாச்சு அழுதாச்சு. முதன் முதலாக நீரு இங்க வந்துருக்கா. சித்தி ஏதாவது இனிப்பு செஞ்சு கொடுக்கனும்" மனப்பாரம் குறைந்தவளாய் அபி அனைவரையும் ஓய்வெடுக்க சொல்லி விட்டு, திலோவுடன் சென்று இனிப்பு செய்து கொண்டு வர, மற்ற நால்வரும் பேசி சிரித்து கொண்டிருந்தனர்.
"ஐ லவ் யூடா ஜூஜூ" மது, ஷர்மியின் முன்பே சூர்யா அவள் கைபிடித்து முத்தமிட்டு சொல்ல,
"ஹலோ மிஸ்டர் கொலைகார்.இப்படி எல்லாம் சின்னபிள்ளைங்க முன்னாடி பொண்டாட்டிய கொஞ்சி எங்களை கொலைகாரவங்களா ஆக்காதிங்க?!" மது கிண்டலடிக்க, சிரிப்புடன் ஷர்மி எழுந்து சமையலறைக்கு சென்று விட்டார்.
"ஓய் மதும்மா.. கொலைகாரன்னு என் ஜூஜூகுட்டி மட்டுந்தான் என்னை சொல்லனும். அவ சொன்னா தான் கிக்கா இருக்கும். என்னடா ஜூஜூ" என்று கொஞ்ச,
"மீ எஸ்கேப்" வாசலுக்கு ஓடிய மது, வாயிலில் வந்து நின்ற போலீஸை பார்த்து அதிர்ந்து மீண்டும் உள்ளே ஓடிவர,
"என்னம்மா வெளிய போக வழி தெரியலையா?" சூர்யா கிண்டலடிக்க,
"அ..அண்ணா போலீஸ்" அவள் சுட்டிய இடத்தில் இரண்டு காவலர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
"சார் நீங்க இங்க?" அந்த இன்ஸ்பெக்டரை தெரியுமாகையால் சூர்யா அவரை அமரச் சொல்லி விட்டு கேட்க,
"இங்க ஒருத்தர் செஞ்ச குற்றத்துக்கு சரண்டர் ஆகுறதா எங்களை வரச்சொல்லிருக்காங்க மிஸ்டர். சூர்யா" என்றதில் அவனதிர்ந்து சமையலறையின் புறம் பார்க்க,
"நான்தான் வரச்சொன்னேன் சூர்யா" கையில் ரேஷ்மாவின் அலைபேசியுடன் வந்தாள் அபி.
"நோ!! அக்கா இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்" சூர்யாவை அவளை தடுக்க முன்வர,
"அண்ணி என்ன இதெல்லாம்" அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு நீரு அவளை தடுக்க, அவளை விலக்கி விட்டு முன்னே வந்தவள்,
"இன்ஸ்பெக்டர் சார் இது என்னொட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ். இந்த மொபைல்ல ரேஷ்மாவை நான் தள்ளி விட்டது நல்லாவே பதிவாயிருக்கு. நான் தள்ளினதுல தான் அவ இறந்து போயிட்டா" என்றவள் அன்று நடந்ததை சுருக்கமாக சொன்னவள்,
"சூர்யா நிரபராதி.நான் சரண்டர் ஆகுறேன்.இதை நான் முதல்லயே செஞ்சுருக்கனும்.ஆனால் அப்ப எனக்கு நீ டைம் குடுக்கலை.இரண்டாவதா நீ பெயில்ல வெளிய வந்து என்னை நீ வெளிய வாக்கிங் கூட்டிப்போனதை பார்த்து ரேஷ்மா அம்மா பிரச்சனை பண்ணப்பவே நான் இதை முடிவு பண்ணிட்டேன். இனி என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது" தம்பியிடம் சொல்ல, நடப்பதை வேறுவழியில்லாமல் வேடிக்கை பார்த்தார் திலோ. ஏனென்றால் திலோவின் முன்பு தானே அபி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
அவள் ஆட்சேபித்ததை," ப்ளீஸ் சித்தி. என்னுடைய கடைசி ஆசையா நினைச்சுக்குங்க.சூர்யா நீருவோட நல்லா வாழனும் சித்தி" என்று வாயடைக்க செய்துவிட்டாள் அவள்.
"நீரு என் தம்பியோட வாழ்க்கையில் வசந்தத்தை மீட்டெடுத்த தேவதைப்பெண் நீதான். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா வாழனும்" என்றவள் காவல்துறையினருடன் சென்றுவிட, உடைந்தழுத சூர்யாவை தேற்றினாள் நீரு.
சரணடைந்த ஒரு வார காலத்திற்குள், அபியின் உடல்நிலை பாதித்து இறைவனடி சேர்ந்த தகவல் வர, நீருவும்,ஷர்மியும், உண்மையறிந்த சுரேஷீம் தான் திலோவையும் சூர்யாவையும் அத்துயரத்திலிருந்து மீட்டெடுத்தனர்.
சுரேஷ்-ஸ்வாதியின் கல்யாணத்தின் போது ஆறுமாத கர்ப்பிணியாக வந்திருந்த நீரு, அனைத்து காரியத்தையும் முன்னின்று எடுத்து செய்ய, அவளது நல்ல குணத்திற்கு முன்பு வெட்கியவளாய் தலைகுனிந்தாள் ஸ்வாதி.
அதன்பிறகு சூர்யாவின் வாழ்க்கையில் அவனது அக்காவின் ஆசைப்படி, நீரு வசந்தத்தை மட்டுமே நிறைத்திருக்க, ஒரு சுபயோக நன்னாளில் சூர்யாவின் அன்னையின் சாயலில் தனது அக்காவை உரித்து பிறந்திருந்த மகளை பெற்றெடுத்த களைப்புடன் படுத்திருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன்," நீ தேவதைப்பெண்டா நீரு. என் அபிக்காவை எனக்கு திரும்ப கொடுத்துட்ட" சந்தோஷத்துடன் கொண்டவனின் மார்பில் தலை வைத்து கண்மூடி கொண்டாள் நீரஜா.