மிக அதிகாலை
நீல இருள்

என். ஆத்மா

-----------------------------------------------------------------

என். ஆத்மா

மிக அதிகாலை
நீல இருள்

விடியல் பதிப்பகம், கோவை 641 015.

---------------------------------------------------------------------------

மிக அதிகாலை
நீல இருள்

கவிதைகள்

(C) ஆசிரியர்
முதற் பதிப்பு : டிசம்பர் 1996
வெளியீடு : விடியல் பதிப்பகம்
3, மாரியம்மன் கோவில் வீதி
உப்பிலிப்பாளையம்
கோவை - 641 015
வடிவமைப்பு : ரவி & ரஞ்சனி (சுவிஸ்)
விலை : ரூபா 25.-
அச்சு : மாணவர் மறுதோன்றி அச்சகம்
சென்னை - 600 017

MIHA ATHIKALAI
NEELA IRUL

Poems

(C) Author
First Edition : Dec. 1996
Published by : Vidiyal Pathippagam
3, Mariamman Kovil Street
Upplipalayam
Coimbatore - 641 015
Layout : Ravi & Ranjani (Swiss)
Price : Rs.25.-

-----------------------------------------------------------

என் செல்விக்கும்
வ.ஐ.ச.ஜெயபாலனுக்கும்

----------------------------------------------------------

கவிதைகள்

குஞ்சு பொரி மரமே! (பக். 15)
பட்டமேற்றுங் காற்று (பக். 16)
சூரியன் உச்சிக்கு ஒரு சாண் மேல் (பக். 18)
என் தகனக் கிரியை (பக். 20)
அவளைப் பற்றிய கோடை மழைக் கவிதை (பக். 22)
ஆணலைகள் (பக். 25)
மீள மீளக் கொல்லல் (பக். 28)
பொன்னத்தா பூவத்தா (பக். 30)
மிக அதிகாலை, நீல இருள் (பக். 32)
கவிதைகள் காணாமல் போன இரவு (பக். 34)
இனி கடவுள் எரிவார் (பக். 39)
நாய் வால் (பக். 42)
என் பிரிய காதலே, பிசாசே! (பக். 44)
உயிர் பிய்யுமோர் பாடல் (பக். 47)
செங்கோல் = சிவப்பு + கோல் (பக். 50)
ஒரு பேய்மாரி, நூறு மோகினிப் பிசாசுகள் (பக். 52)

-----------------------------------------------------------

பதிப்புரை

இன்றைய ஈழத்துத் தலைமுறை கோடிட்டுக் காட்டும் இன்னொரு கவிஞன் என்.ஆத்மா. உணர்வுகளை ஆழமாக ஊடுருவும் படைப்பாற்றலில் தெறிக்கும் அவனது முன்நகர்வு ஒரு வளமான கவிஞனை முன்னறிவுப்புச் செய்கிறது.

மனித விழுமியங்கள் சருகுறும் இன்றைய நிலைமைகளின் யதார்த்தத்துள் மனித உணர்வுகள் வாடிவிட மறுத்து தவிக்கிறது அவனது கவிதையில்.

காதல் பற்றி பேசிவிட்டாலே இடதுசாரித்தனம் முகஞ் சுழித்து மெல்லிய புன்னகையால் அழுதுகொள்ளும் காலங்கள் கரைந்துகொண்டுவிட்டது. இந்தக் கவிஞனின் உலாவல்கள் -இந்தத் தடையின்றி- இங்கும் சுதந்திரமாய்ப் பேசுகின்றன. காதல், அன்பு என்பன பற்றிய கற்பிதங்களின் அடிப்படையில் எம்மைப் புணர்ந்து கொள்ளும் உணர்வுகளை உணர்ச்சிகளை இன்றைய ஈழச் சூழல்களின் நடுவே பாதுகாப்பாய் அணைத்துச் செல்கிறார் ஆத்மா. அதில் அவர் கவித்துவ வெற்றியும் பெறுகிறார்.

காதல் பற்றிய, பாலியல் பற்றிய, ஏன் குடும்பம் பற்றிய, குடும்ப உறவுகள் பற்றிய புனைவுகள், கட்டுப்பாடுகள், ஒழுக்க மதிப்பீடுகள் எல்லாம் கேள்விகேட்கப்படும்போது, கவிஞர்களும் புதிய தளங்களில் கவிதைக்குப் பிரசவம் பார்க்கமுடியும். ஆத்மா அந்த இடங்களில் இன்னும் இல்லை. ஆனால், இது ஒரு குறைபாடே அல்ல; அது கவிஞனின் தேர்வுக்கானது.

அத்தோடு இன்று ஈழ நிலைமைகளில் முஸ்லிம்கள் மீதான தமிழ்ப் பேரினவாதத்தின் நேரடிப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களின் கொந்தளிக்கும் உணர்ச்சியை ஆத்மா பிரதி நிதித்துவப்படுத்தும் பாங்கில் 'செங்கோல் = சிவப்பு + கோல்' என்ற கவிதை பிறந்திருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வெறும் கொலைகாரத்தனத்தின் மீதான சித்தரிப்பாக அது ஆகியிருக்கிறது. மேலும் தான் வெடித்துச் சிதறப்போவது உறுதியான -ரத்தமும் சதையும் கொண்ட- ஒரு மனிதஜீவி வெறும் சடப்பொருளாக்கப்படுவது கவிஞனின் உணர்வு நிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் அவரது படைப்பாற்றல் மீதான இந்த முரண்கூட அவரது அரசியல் சமூகப் பார்வையின் குறைபாடு என்றே படுகிறது. மற்றபடி அதை அவரது ஆத்மார்த்தமான குறைபாடாகக் காணமுடியாது என்பதை அவரது மற்றைய கவிதைகளின் உரையாடல்கள் உணர்த்துகின்றன.

என். ஆத்மாவின் இத் தொகுப்பை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

- விடியல் பதிப்பகம்
01.12.96

-------------------------------------------------------------------------------

என்னுரையோ என்னவோ !

என்னுடைய உணர்வுகள் யாவும் கவித்துவமெய்தி வரும் ஒரு காலகட்டத்தில் இந்தக் கவிதைகள் தொகுப்பாகின்றன.

முன்னரெல்லாம் காதல், விரகம், சபலம், சலனம் போன்ற எல்லா சராசரி முதலான உணர்வுகளுடனும் கவிதையும் ஒரு துணையான உணர்வாகவே என்னுள் இருந்துவந்தது. முதலான உணர்வுகளிலிருந்து பெறப்பட்ட தூண்டல்களே கவிதையுணர்வை அருட்டின. ஆனால் மனநிலை இன்று முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. என்னுடைய எல்லா முதலான உணர்வுகளும் கவிதை உணர்வினால் பிரதியீடு செய்யப்பட்டுப் போய்விட்டன. எனவே எந்த உணர்வு கிளர்ந்தாலும் இப்போது அது கவிதையாகவே வெளிவருகிறது.

நேற்றிரவும் இப்படித்தான் என்னுடைய விரக உணர்வு கவிதையாகிற்று. மேற்பரப்பெங்கும் சுவாலைகள் நாக்கு நீட்ட என் நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து திடீரென ஒரு தீக்கோளம் கிளம்பியது. கரியினாலும் வெண்பஞ்சுப் புகையினாலும் சூழப்பட்டிருந்த அக் கோளம் என் மார்பு ரோமச் சுருள்களில் அனல் காற்றை எறிந்தபடி அண்ணார்ந்து பார்த்திருந்த என்தொண்டை வகிட்டில், செந்தணற் துளிகளைச் சிந்தி மேலெழுந்து போயிற்று.

அதற்கு முதல் நாளிரவு இப்படி நிகழ்ந்தது. அன்று கரண்ட் இல்லை. அறையில் மங்கலான இருள். நான் மல்லாக்கப் படுத்திருக்க எனக்கு மேல் ஒரு இறுகிய ஆறு பெருகி ஓடத் தொடங்கிற்று. ஆற்று நீர்ப் பரப்பின் மேல் அசையாமல் சில தும்பிகள். அவை புளொரொளிர்வு மிக்க நீலச் சிறகுகளைக் கொண்டிருந்தன. என்ன நினைத்ததோ அதிலொன்று ஈரம் ஊறிய சிறகுகளை ஆற்றுள்ளிருந்து இழுத்து பறக்க எழுந்தது மெல்ல. அதன் காலிடுக்குகளில் இரு நீளமான கூந்தல் மயிர்கள். அவை அவளுடையன. குளித்துவிட்டுத் தலையைக் கெழித்துப் போட்டு அவள் கோதுகிற கூந்தலிலிருந்து கழன்று பறந்தவையாக அவை இருக்கலாம். அவற்றிலிருந்து பரவிய அவளுடைய மணம் அறையை நிரப்பிற்று. பிறகென்ன! அந்தக் கொடிய அதி காதலின் நினைவுகள் படர்ந்து உயிரைச் சுடுவதும் உயிர் கிடந்து சுருள்வதுமாய் ஒரே கோரத் தாண்டவந்தான்.

இப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு கோலத்தைக் காண்பிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் எந்த உணர்விற்கும் நிரந்தரக் கோலமென்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. விரகமென்றால் இப்படித்தான், காதற் துயரமென்றால் இன்னமாதிரித்தான் என்று எந்தவிதமான சட்டகங்களும் (Frames) அவற்றிற்கு இல்லை. வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒவ்வொரு உணர்வும் கிளர்கிற அளவைப்
பொறுத்து கோலத்தை வேறுபடுத்திக் கொள்கிறது.

உணர்வுகள் யாவும் முழுமையாகக் கவிதை மயப்பட்ட இத்தகைய நிலையிலிருந்து நான் எழுதிய கவிதைகள் எதுவும் இத் தொகுப்பில் இடம்பெறவில்லை. கவிதையும் உணர்வுகளுள் ஒன்றாக என்னுள்ளிருந்த ஆரம்ப நாட்களில் எழுதப்பட்ட கவிதைகளே இவை. எனினும், இத் தொகுப்பில் காணப்படும் எனது அண்மைக் காலக் கவிதைகளைக் கூர்ந்து கவனித்தால் இன்று என்னுள் நிகழ்ந்திருக்கும் உணர்வுப் பிரதியீட்டாக்கத்தின் அரும்பு நிலைகளை இனங்கண்டு கொள்ள முடியும். 'ஆணலைகள்' கவிதையில் கோபாவேசப் பட்ட மனம் கொந்தளிக்குமொரு கடலாகி இருக்கிறது. 'அவளைப் பற்றிய கோடைமழைக் கவிதை' யில் காதல்வயப் பட்ட மனம், மழைதூறி இலைகள் கொட்டுமொரு மலர்ச்சியான பொழுதாகியிருக்கிறது. இப்படிக் கனக்க. ஆனால் எந்தவொரு கவிதையினதும் முழுப் பகுதியிலும் இந்தத் தன்மை தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது உண்மை. அது இடையிடை வேறுவேறு தளங்களுக்குத் தாவிச் செல்வதும் மீள வருவதுமான ஒரு தளம்பல் நிலையைப் பேணியிருக்கிறது. இத்தகைய நிறைவற்ற தன்மைக்குக் காரணம் கவிதைகள் தமது குவியத்தைத் தீர்மானியாதிருந்தமையேயாகும். எனவே உணர்வுப் பிரதியீட்டாக்கம் என்னுள் நிகழ்ந்துகொண்டிருந்த ஆரம்ப நாட்களிலேயே தான் இத் தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று நான் கருத வேண்டியிருக்கிறது.

எனது கவிதையாக்கச் செயற்பாடுகள் பற்றி என்னுடைய அறிவெல்லைக்குட்பட்ட மட்டில் தெளிவாகச் சொல்ல முடிந்திருப்பவை இவ்வளவுதான். என்னுடைய இந்த உள் மாற்றம் தன்னுடைய முதிர்வெல்லையை அண்மித்து வருகிறது. அது முற்றுப்பெறும் நிலையை அடையும்போது தமிழுக்கு மிக அதிநவீன கவிதைகள் பலவற்றை என்னால் தரக்கூடியதாக இருக்கும். அத்தகைய உச்ச நிலை சாத்தியப் படாமல் போனால் கூட தமிழுக்கு ஒன்றும் பெரிய இழப்புகள் வந்துவிடப் போவதில்லை.

என்னுடைய கவிதைகளைத் தொகுப்பாக்குவதில் ரவீந்திரன் (சுவிஸ்) காட்டிய அக்கறைகளுக்கு முன்னால் என்னுடைய மனிதப் பண்புகள் ஏழெட்டாய் மடிந்துபோய் நிற்கின்றன. என்னுடைய பிறவிக் குணமான சோம்பேறித்தனம் காரணமாக இத் தொகுப்பிற்கான கவிதைகள், முன்னுரை, என்னுரை போன்றவற்றை அவருக்கு அனுப்பிவைப்பதில் நான் காட்டிய அலட்சியம், பொறுப்பின்மை என்பன சராசரிக் குணங்கள் கொண்ட எவராலும் சகிக்க முடியாதவை. இத்தனைக்கும் சேர்த்து மிகச் சாதாரணமாக எல்லோரையும் போல் ஒரு 'நன்றி' யை அவருக்குக் கூறுவோமென்று நினைத்தாலும் துரதிஷ்டவசமாக, பாழாய்ப்போன இந்த மனம் புதியதொரு கோணத்தில் பரிமாணித்துக் கொண்டு நிற்கிறது. பெருக்கெடுத்துத் ததும்பி வழிகிற அவ்வுணர்வை எப்படி விபரிப்பதென்று புரியவில்லை.

என்ன செய்ய நான்?

- என்.ஆத்மா
2.11.1996
இல 136/10
நஸார் லேன்
காத்தான்குடி-06
ஸ்ரீலங்கா

---------------------------------------------------------------------------

சூடேறிக் கொண்டிருக்கும் ஆத்மாவின் மனம்

ஆத்மா திருமணமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்றிருந்த வேளையில், அவரது கவிதைத் தொகுதி 'மிக அதிகாலை, நீல இருள்' வெளிவருகின்றது.

ஆத்மாவை கணிச காலமாக எனக்குத் தெரியும். மனதில் பட்டதை முழுமையாக வெளியில் சொல்லிவிடும் பழக்கம் உள்ளவர். இது ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய சிறந்த குணம். நமது கவிஞர்களில் பலர் சீரழிந்து போவது இந்த வெளிப்படையான பழக்கம் இல்லாமல்தான். தவளையை விழுங்குவதைப்போல தமது கருத்துக்களையும் விழுங்கும் பாம்புக் குணம் எந்தக் கவிஞனுக்கும் உதவாது.

கவிஞன் என்பவன் யார்? ஆடுகளை மேய்ப்பதைப் போல கவிதைகளையும் மேய்ப்பவனா கவிஞன்! இல்லை. கவிதைகள்தான் கவிஞனை மேய்க்க வேண்டும். கவிதைகளை எழுதுபவன் கவிஞன் என்பதை விடுத்து, கவிஞனை எழுதுவதே கவிதைகள்தான் என்பது இங்கு மனங் கொள்ளத்தக்கது.

யாரும் கவிதைகளை தீன்போட்டு வளர்க்க முடியாது, புறாக்களைப் பிடித்து கூட்டுக்குள் போட்டு வளர்ப்பதைப்போல. அவை சுதந்திரமாகப் பறக்கக்கூடியன. சுதந்திரமாக இரைதேடிப் பிடித்து, தமது கவிஞனுக்கும் அவை உணவூட்ட வேண்டும்.

கவிதைகளால் உணவூட்டப்படாத எவனும் நல்ல கவிஞனாக வந்த வரலாறு இல்லை. வரலாற்றுக்காக எவனும் நல்ல கவிஞனாக வாழவும் முடியாது. நல்ல கவிஞனை காலம் உருவாக்குகிறது என்பதிலும் பார்க்க, அவனது கவிதைகளும் சேர்ந்தே உருவாக்குகின்றன என்பதுதான் மெய்.

இங்கு ஆத்மாவுடைய கவிதைகள் ஆத்மாவுக்கு உணவூட்டியிருக்கின்றனவா, அவரை அவை உருவாக்க முயற்சிக்கின்றனவா என்று பார்த்தால், அவை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் பல தெரிகின்றன. அவரை அவை நன்கு போஷிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆத்மாவின் தலையில் கொம்பு எழுவதற்கான சிறிய முளை சிறு பிள்ளைக்கு பல் முளைப்பதைப் போல எழும்பியிருக்கிறது.

ஆத்மாவின் வாசலில் புறாக்கூடு ஒன்று இருப்பதாக இக் கவிதைகளைப் பார்த்தால் தோன்றவில்லை. அவரது கவிதைகள் நன்கு சுதந்திரமானவை. நன்கு பறக்காவிட்டாலும், பறக்கின்றன. குருவிக்குக்கூட வயது தேவையில்லையா பறப்பதற்கு! அந்த நிலையில் தான் ஆத்மாவின் கவிதைகளும் இருக்கின்றன.

சிலர் நினைக்கிறார்கள் கவிதைக்கு கண் இருப்பதில்லை என்று. காதும் மூக்கும் மனமும் இல்லாதவையே கவிதைகள் என்று ஏமாந்த பேர்வழிகள் இந்தக் கவிஞர் உலகத்தில் ஏராளம். கவிதைக்கு நகமும் சதையும் இருப்பதைப் போல, இரத்தமும் சீழும் இருப்பதைப்போல, சிறுநீரும் மலமும் இருக்கிறது. மொத்தமாகச் சொன்னால், கவிதை ஓர் உயிருள்ள ஆத்மா. அவை வாயால் பேசி காலத்தை உணர்த்தும்; கண்ணால் அழுதும் உலகத்தை விளக்கும்.

உயிரில்லாத கவிதை செய்பவன் பாண் சுடுபவனைப் போன்றவன். அவனைக் கவிஞனென்று சொல்ல முடியாது. பாணை பருப்புக் கறியுடன் சேர்த்தாவது புசித்துவிடலாம். கவிதைப் பிணத்தை என்ன செய்வது! காகம் கூடக் கொத்திப் பறப்பதற்கு லாயக்கு அற்றது.

ஆத்மாவுடைய கவிதைகளில் ஆங்காங்கே உயிர்கூடத் தொடங்கியிருக்கிறது. வரண்ட தரையில் மழைக்கு முளைத்தெழும் பசிய புற்களைப் போல -பசுமையாக, குளுமையாக. அதைவிடப் பெரிய விடயம், கவிதைக்கு உயிர் முக்கியம் என்பது இந்த ஆத்மாவுக்கு விளங்கியிருப்பது. அது போதும். முழுமையான உயிர் தானாகப் பின் வந்துவிடும். பெரிய பெரிய கவிஞர்கள் என்று தங்களை அடையாளம் காட்டி, கவிதையை அல்ல; தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு விளங்காத விடயம் இது. கவிதையை ஏமாற்ற முடியாது! அது ஏமாந்திருந்தால், கம்பன் தொடங்கி நுஃமான் வரைக்கும், தாகூர் தொடங்கி பாரதி மட்டும் கவிஞர்கள் உருவாகியிருக்க முடியாது.

மற்றப்படிக்கு ஆத்மா, கற்பனையை எங்கோ நோண்டிவந்து தனது சில கவிதைகளில் ஆங்காங்கே செருகியிருக்கிறார், பூக்காத மரத்தை காகிதப் பூ கட்டிச் சோடித்ததைப் போல. கற்பனை கவிதைகளில் நோண்டிச் செருகுவது அல்ல. தானாக பொருத்தமான பொருத்துகளில் பூக்க வேண்டியது. உணர்ச்சி பெருகி வழிய வழிய இந்தப் பூத்தல் வேலை நடக்கும். கவிஞனின் மனது ஒரு பாற்பானையைப் போன்றது என்று சொல்லலாம். அது பொங்கி வழிய வழிய கவிதைகள் சிறப்பாக வார்க்கப்படும்.

ஆத்மாவின் மனமும் மெல்ல மெல்ல சூடேறிக் கொண்டிருக்கிறது.
அவருக்கு எனது திருமண வாழ்த்துக்கள்.

20.7.96

-சோலைக்கிளி
374, செயிலான் வீதி,
கல்முனை - 04
இலங்கை

------------------------------------------------------------------

நன்றி : -

படி
ஓசை
பூவரசு
சரிநிகர்
எனவே இனி

---------------------------------------------------------------------

குஞ்சு பொரி மரமே !

வருத்தம் தான்.
மலர்க் கன்றொன்றை நட்டிருந்தாலேனும்
வாசல் மணத்திருக்கும்.

மலடு.
விறைத்துப் போய் நிற்கிறது.
இலிங்கச் சுரப்பிகள் வற்றிட்ட கிழடாக
அல்லது ஆண் பெண் தன்மையற்றதாக.

அக்கம் பக்கங்களில்
காய்களும் பிஞ்சுகளுமாய்த் தூங்குகின்றன
பால்குடி மறக்காதவைகளின் கைகளுக்கு
எட்டுகிற உயரங்களில்.

விரயமாகிட்ட காலம்
முயற்சியும்.

சூரியக் கதிர்கள் கப்பிக் கிடப்பதால்
கிளைகளின் இலைகளில் மிகவும் பச்சை.
ஈன்று தள்ளுவதெல்லாம் தளிர்களை மட்டுமே.
வித்தாக மீண்டும் சிறுத்திடு மரமே.

கறுப்புக் கரைகிறது மண்ணில்.
வெயிலின் விரல்கள் புகா இருட்டுக்கும்
கொடுக வைக்கின்ற கூதலுக்கும்
ஒரு மாமரம் தேவையில்லை.

-1989

---------------------------------------------------------------------

பட்டமேற்றுங் காற்று

சா! என்ன மாதிரி வீசுது.
காற்றென்றால் காற்று இது காற்று.
ஆடைக்குள் புகுந்து தன்
மெல்லிய கைகளால் வருடுகையில் வரும்
கூச்சமும் சுகமும் ஆஹா.

தலை முடி வெட்டியிருந்தால் இன்று
செவி இடுக்குகளால் காற்றுப் பாளங்கள்
வழுக்கி இருக்கும்.

இக்காற்று வந்திட்டால் அரச மரங்களின்
சல சல இலைகள் கிளைகளிலிருந்து
காம்புகள் கழற்றிடும்.
மலர்கள் தம் உதடுகளை
மடித்துப் பின் விரித்துப் பார்க்கும்.
தென்னையின் பழுத்த ஓலைகள் சலாரென
விழுந்திடும் கீழே.

பட்டம் ஏற்றுகின்ற காற்றிது.
அயர்ந்தால் ஆளையும் தூக்கிப் போயிடும்.
ஆகாயப் பரப்பெங்கும் பட்டங்கள்
பறக்கின்றன பார்.

பாம்பு போலவும் பெட்டி போலவும்
மற்றும் பெயர் தெரிந்திடா உருவங்களிலும்
சிவப்பாகவும் நீலமாகவும் பட்டங்கள்.
காற்று வெளியில் ஊர்ந்து ஏறிடும்.
சுற்றிச் சுழன்று சில தரைக்கும் வரும்.

மொச்சை நன்கு கட்டியிருந்தாலும்
இறக்கைகளிலா இத் தாள்ப் பறவைகளின்
வாலைப் பிடித்து உன்னி விட்டால்
மேலெழுந்திடும் இலேசாய்.
இரு விரல் இடுக்கில் சொட்டுகளாய் ஒழுகும்
நூல் நழுவிப் போய்
எதிலும் பட்டம் சிக்கிப் பின்னலிட்டாலோ
பற்றி எரிந்திடும் நெஞ்சுக் கூடு.

வயசு சிறிதென்றால் நானும்
பட்டத்தால் வானத்தை சோடனை செய்திடலாம்
வீட்டில் சினுங்கி
அல்லது கால்களைப் பூமியில் உதறியழுது.

பட்டமென்றால் உச்சி குளிர்ந்ததெலாம்
மூக்கினால் ஓடிட்ட சளியைத்
துடைத்திடத் தெரியாதிருந்த காலத்தில் தான்.
உணர்வுகளைத் தின்று புத்தி
ஊதிப் பருத்ததுவே!

வருசந்தோறும்
ஞாபகத்தில் உட்கார்ந்திரா மாதமொன்றில்
குப்பைகள் கூட்டி வருகிறதிப்
பட்ட மேற்றுங் காற்று
என் ஆணுடம்பு வெட்கமறியாதிருந்த
நாட்களின் மணத்தை அப்பி.

--------------------------------------------------------------------


சூரியன்
உச்சிக்கு ஒரு சாண் மேல்

ஆணியும் கயிறும் இல்லாமல்
சும்மா தொங்கிற நிலாப் பந்தும்
நானும்.

ஒரு தாளில் சிறிது
உயிர் வைத்தனுப்பியிருக்கலாம் நீ.

எதிரில் அசைகிற வாகைக் கந்துகள்
முட்பற்றைச் சவநிலம்
வானக் கறுப்பு ஒன்றும் தெரியுதில்லை.

கண்களை உதிர்த்துப் போட்டிருக்கிறேன் உன்
தபால் வரும் திசையில்.

ஆனாலும் நெஞ்சழுத்தந்தான் உனக்கு.

காகம் சிறகடிக்கிற இமைகளும்
செவியைச் சிலிர்த்தும் குரலொலியும்
விடாமல் அரிக்குது உள்ளே.

புதைந்திட்ட கால்கள்
பால் தெறிக்கும் இக் குருத்து மணலில்
கடுக்காத சுட்டு விரல்
அலுத்திடாமல் உன்
பெயரெழுதித் தொடரும் என் அன்பே!

வாசற் படிக்கட்டருகில்
சோர்ந்திட்ட வெட்கங் கெட்ட ரோசாப் பூ
என் முகம்.

சுவரில் சாய்கிறேன்.
பிறவற்றில் லயித்திடா மனம்
மையப் புள்ளியாய் நீயிருக்கும்
ஆரையற்ற பரிதியில் சுழன்று சுழன்று.

இனியாகிலும் நாலுவரி
அல்லது உன் பெயரை மட்டும்
எழுதிப் போடு.
காய்ந்திட்ட என் தொண்டைக்குள் குளிர் நீர்
அது ஊற்றும்.

------------------------------------------------------------

என் தகனக் கிரியை

கொத்திச்
சிராய்களாகப் பிளக்கப் படுகிறதென் மனம்.
நாக்குக் குலையின் பிரதியீடாய்
கோடரிகள் அமைந்திட்ட வாய்க்குழிகள்
இவருடையன.

வருவர்.
நகர்ந்திடும் கடுகு போன்றதொரு பொழுதில்
வார்த்தைகள் நாலைந்தைத் துப்பிடுவர் இவர்.
பின் செல்வர்.
அறுத்துப் போட்ட கோழியாய்க் கிடந்து
புரண்டு உழத்திடும் எனதுயிர்.

என் சந்துகளின் சதைகளை நாய்கள்
கவ்விச் சப்புகிற வலி.

எரிந்திடும் என்னிடம் அன்றைய
இரவு வெறுங் கைகள் வீசி வரும்.
மரங்களைப் பிடித்து அசைத்திடாமல் காற்றும்
சும்மா படுத்திருக்கும்.
வெள்ளி மூக்குத்திகள் எதுவும்
போட்டிடாமல் உயர இருக்கும் ஆகாயம்.
நீளும் இவ்விரவின் அலுப்பில் என்
கண்ணயரும் எப்போதோ.

ஈரச் சவசவப்பும்
உலர்ந்திட்ட கருவாட்டிதயம் இவரினது.
சப்பாத்துக்கள்ளி போலவும்.
பிய்த்தெறிந்தனரே கார்த்திகைப்
பூச்சியின் சிறகெனை.

அகன்று
இவ்வடுச் சென்றிட மீளவும்
பிளேடுகளினாலும் குண்டூசிகளினாலும்
செரிக்கட்டிய வார்த்தைகளோடு
வந்திடுகிறார் யாரேனும் இடைவிடாதெனை
அரிந்திடவும் குத்திடவும்.

------------------------------------------------------

அவளைப் பற்றிய
கோடை மழைக் கவிதை

மூன்று நாளாய் வானம்
சாடையான மூசாப்பு பின்னேரங்களில்.

புழுதி அடங்கவும்
வெக்கை குறையவும்
பெய்யாதோ மாரியென அவாவ நான்
தொடங்கிற்றே மத்தியானம் சராலெனத்
தலையினிலோர் நீர்க் குண்டை
விழுத்தி.

எதிற் கொழுவிப் பீய்த்தலாகினவோ இம்
முகிற் பைகள்.
கொட்டுகின்றன தான் விடாமல் இரவு
எட்டு மணியான பிறகும்.

நிலா முளைத்திருக்கவில்லை.
வெள்ளிகளாச்சும் பூத்தனவோ என்னவோ!
வெளியில் கும்மிருட்டு இப்போ.
குப்பி விளக்கும் குருடு பற்றும் அறையின்
உட்சுவரில் சாய்ந்திருக்கு மெனை
ஜன்னல் கம்பிகளைக் குளிர்த்தி வரும் ஈரக்காற்று
உசுப்புது.

இக் கூதலில்
இழுத்துப் போர்த்திப் படுத்தல் போல் சுகம்
வேறெதுவும் அல்லவே!
எனினும் அவ்விதம் இயலாதின்று.
ஆமை ஊர்வதாற் கடகடக்கும்
தார்ப் பீப்பாத் தகட்டுப்
பின் வேலிப் பக்கம்
நேற்று அவள் வந்ததும்
கை, கால்கள் உதற உதற நான்
ஒன்றுக்குமாகாத ஓரிரு
வார்த்தைகளை உதிர்த்தியதும் வேண்டுமென்றே
பொய்யாய்க் கோபித்துக்
குழற வைத்துப்
பின் சிரித்து விடைபெற்று வந்ததும் அதுவரை
படு வேகமாய் இதயம்
துடித்துக் கொண்டதால் இளைத்து
மூச்சிரைக்கப் போய் வீட்டுக்
கதவில் சரிந்ததும்.

கொச்சிப் பழச் சிவப்பு அவள்
தடித்த இதழ்ச் சதைக் கட்டிகள்.
பொன்னி வண்டுகள் மினுங்குகிற
அவ்விரு விழிகள்.
இருப்புக் கொள்ளாமல்
குட்டி போட்ட பூனையாய் நான்
அப்பொழுதின் பின்.

முன் கதவிடுக்கினூடாக
தெம்பிலி மரத்தின் ஊசியிலைகள்
மழைத்துளி பட்டு அசைவது தெரியுது.
வாசலில் நிற்கிற
கறுத்தக் கொழும்பான் மாமரத்தில்
கொள்ளை இலைகள்.
இலைக்கொரு பூவும் பிஞ்சுகளும்
எல்லாம் உதிர்ந்து கிடக்கும் காலையில்.

சற்றே இம் மழை ஓயுமெனின்
சில்லூறுச் சத்தம்
அல்லது தவளை கத்துவது கேட்கும்.
நீர் ஓடிப்போன சுழிகளில்
மணல் தூர்ந்திருக்கும்.
சோவெனவும் உர்ரெனவும் இம்மழை.

நூர்ந்திற்று விளக்கு.
இடிக்குது முழங்குது வானம்.
உடைந்து துண்டு துண்டாய் விழுமோ?
இரு மின்னல் கீற்றுகள்
வெட்டி மறைந்தன தொடராய்.
அக் கண நேர வெளிச்சத்தில் விறாந்தையின்
சதுரக் கம்பிகளுக்கு அப்பால்
எதிர் வீட்டுப் பீலியால் நீர் வழிவது தெரிந்திற்று.

அச் சிறு துளி
ஒளியின் பின் எனைச் சூழவும் முற்றாய்
நிரம்பியிருக்கிற கறுப்பு வெளியினிலே
புலப்படுமொரு புள்ளி வட்டமாய்
அவள் முகம் மட்டும்.

--------------------------------------------------

ஆணலைகள்


கண்ணுக் கெட்டிய தொலைவு வரை
நுரைகள் பொங்கித் ததும்ப
எழுந்தெழுந்து ஆர்ப்பரித்தது கடல்.
ஒன்று உருண்டு கரையில் அழிய முன்
அடுத்தடுத்தென பாயாய்ச் சுருள
மடியும் அலைகள்.

இன்றனைத்து அலைகளும் பேரலைகளே!
ஏழாவதாய் எழும் ஆணலைகள் தவிர
வேறு சிறு அலைகள்
ஏதுமில்லை கடலில்.

இரைந்திரைந்து அலைகளெறிந்து
பிளிறிற்று கடல்.
அதனிலும் பெரிதாய்த் திமிறி எழுந்தன
ஆயிரம் இராட்சத அலைகள் மனதில்
பாறாங் கற்களை மோதி அடித்தன.

போர்ப்பறை அறைந்து
முழங்கிற் றென்னுள்
பிறிதோர் கடல்.

கால்கள் அலைகளில் நனைந்திட
பின்புறத்தே ஈரம்
பிசுபிசுக்கும் கடலோரம்
முழங்கால்கள் பற்றி வெறித்திருந்தேன் கடலை.
சேர்ச்சின் முன்னிருந்த செக் பொயின்ற்றில்
என் சேட்கொலர் பிடித்து முறைத்து
உறுக்கிய மூவரதும் கோர முகங்கள்
தோன்றித் தோன்றிக் கிளறின எனை.
நெஞ்சுலர
வெளியேறும் மூச்செல்லாம் சுடுகாற்றாய்.
என்னிரு கண் வழியும்
தீ வரல் கூடும் இனி.
உச்ச சினத்தில் துடித்தன என்
சதைத் துண்டுகள் தனித்தனியே.

மிகவும் கொந்தளித்திருந்தேன் நான்.

பாலிறைக்கும் சந்திரன்
மங்கலான மென்னீல ஆகாயப் பரப்பினிடை
ஊரும் வெண் மேகப் பஞ்சுக் குவியல்கள்.
பூமிக்கு ஒளிக் கூர்கள்
நீட்டும் வெள்ளிகள்
கடலின் நடுவினிலே
வலையிழுக்கும் மீனவர் தம்
தோணிகளில்
வில்லமைவில் ஒளிரும் மின் குமிழ்கள்
ஆடைகளின் உள் புகுந்தென்
ஆண்குறியின் ஈரமும் உலர்த்திப் போகிற
மலர் விரல்கள் பொருந்திய இக்
கடற்கரையின் காற்று
என் முதுகின் பின் கரையொதுங்கியுள

படகுகள் எல்லாம் தம்
சோபையை எவ்விடம் தொலைத்தன இன்றிரவில்?
குஞ்சுக் கோழியின் இறகிலும்
மென்மையினதான என் இதயம்
காற்றின் வெளிகளிலே
கால் தாவ மாட்டாமல்
உயர உயர அலாதியாய் மிதந்துலாவ
இவை தந்த ரம்யமெலாம்
எங்கு போய்த் தொலைந்தனவோ?

வெடித்துச் சிதறி இம்மனம்
தணித்திடாதோ கோபம்?

அடங்காமல் மென்மேலும்
பெருக்கெடுக்கும் மனதினிலே
பேரலைகள் குமுறி
எழுந்து விழ
சாறனில் ஒட்டிய குருத்து மணல்கள் தட்டி
என் பிரிய கடற்கரையில்
கால்கள் புதைய
தாழம்பற்றை இருளில்
சாத்தி வைத்த சைக்கிள் நோக்கி
நகரும் என் கால்கள்.

எனினும் நான்
புழுதி அப்பிப் புரண்டளைந்த தாய் மண்ணிலே
அந்நிய
காக்கிச் சட்டைச் சிங்கள நாய்களிடம்
தோற்றுத் தான் போனேன் காண் இன்று.

------------------------------------------------------------

மீள மீளக் கொல்லல்

எவ்வளவு நேரம் வெளியில் நிற்பது?
மஞ்சள் குரோட்டன் இலைகளில்
பட்டுத் தெறிக்கிற வெயிலையும்
இன்று தான் குருத்துவிட்ட ஆற்று வாழையையும்
திரும்பத் திரும்ப எத்தனை தரம் பார்ப்பது?
சுவருக்கு மேலால் தெரிகிற பிரதான சாலையில்
எத்தனை வாகனங்கள்!
இரைச்சல், புகை
நீ வருவதாகச் சொன்ன ஆட்டோ தான் எங்கே?

மிக அலுத்துப் போயிற்று என் அன்பே இன்று.
எரிச்சலில்
படாரெனக் கதவை இழுத்தடைத்து
அறைக்குள் சென்று வீழ்கிறேன் கட்டிலில்
எதிரே நிற்கிற நிலைக் கண்ணாடியில்
பழமாய்ச் சிவந்த எனதிரு விழிகளும்.

நேற்றிரவென் துயில்
சிதைந்து தான் போயிற்று.
அன்று காலை வருவதாய்
நீயே வந்து சொல்லிப் போன பின்
எவ்விதம் நான் துயில்தல் இயலும்?
இரவு முழுக்க என்னென்ன அதிசயங்கள்?
அறைச் சுவர்கள் பூப்பூத்ததும்
பளிங்கு அருவிகள் சலசலத்ததும்
ஜன்னலின் வெண் திரைகள் விலத்தி
உட்புகுந்த மென் பனிக் காற்று
ஈர்ப்பறுந்த வெளிகளிடை எனைக்
காவிச் சென்றதும் மற்றும்
எதை எழுதுவது? எதை விடுவது?

இன்னும் எங்கு போய்த் தொலைந்தாய் நீ?
கால்கள் தாவாமல்
இருப்புக் கொள்ளாமல்
விடிய விடியவும் விடிந்த பிறகும்
என்ன ஒரு அவஸ்தையிது ஊhநட?
கடிகார முட்களோடு நகர்ந்து நகர்ந்து
என் கண்களின் கூர்மை மங்குது பார்.
எங்கோ ஊர்கிற நூறு ஆட்டோ இரைச்சலில்
நீ வருவது எதுவென நான்
எப்படித் தெரிவது?

மிகத் தொலைவான
அண்மித்த ஒலிகளையெலாம் நான்
இன்று தான் செவிமடுக்கிறேன்.
வாசலில் நிற்கிற விலாட்டு மாவிலும்
அயல் வீட்டு மரங்களிலும்
பெயர் தெரியாத இத்தனை குருவிகள்
கிச்சு கிச்சென எழுப்புகிற ஒலிகள்
ஏன் எனக்குக் கேளாதிருந்தன?
நீ வருவதெனில் மட்டுமா என்
புலன்களில் துளிர்க்கிறது உயிர்?

நீ வருவதாய்ச் சொன்ன நேரமுங் கடந்து
அதிகமாய்ப் போனது இரு மணி நேரம்.
என் புல்லின் நுனியில் தேங்கி மினுங்கிய
கடைசித் துளி நம்பிக்கையும்
உலர்ந்திற்று மெல்ல.
இன்னமும் நீ வரவில்லை தான்.
வரவேயில்லை தான்.
எங்கே என் அறைக்குள் பூத்த பூக்கள்?
எங்கே என் அறைக்குள் அசைந்த அருவி?
எங்கே எனை மிதக்க விட்ட காற்று?

-------------------------------------------------

பொன்னத்தா பூவத்தா

இளம் ரோஸ் நிறம்.
என்ன மிருதுவான உடல் தான்.
விரியாத மலர்களென பொத்திய இரு சிறு கைகள்.
குட்டி குட்டிக் கால்களும் விரல்களும்
நீவினால் காற்றை
வருடுகிற இதம்.

குழந்தை அதன்பாட்டில் துயில்கிறது
விடாமல் வேட்டுகள் தீர்க்கப்பட
குண்டுகளால் நிலமும் கண்ணாடிகளும் அதிர
அடை மழைக்குப் பின்னான
புழுக்கமும் வியர்வையும் மிகுந்த இம்
மே மாத உஷ்ண இரவில்
பனிக்காலம் கூதலுக்குக் கொடுகுவது போல்
நடுக்குகிறது எனக்கு.
பள்ளிவாசலுள் சுட்டது
அம்பலாந்துறையில் கடத்தியது
கக்கத்தில் இடுக்கிய குழந்தைகள் அலற
முக்காடு போட்ட பெண்களும், ஆண்களும்
வடக்கை விட்டுப் பெயர்ந்து வந்தது.
அழிஞ்சிப் பொத்தானை,
ஏறாவூர்
மூன்றாம் ஈழப்போர் தொடங்கிய பின்
எல்லைப்புறச் சென்றிகள் தாக்கப்படுமிரவுகள்
இப்படித்தான் கழிகின்றன.
பீதியும் அச்சமும் மிகைத்து
கழன்று விடும்படி இதயம் அடிப்பதும்
பாதி உறக்கத்தில் வருகிற கனவுகள்
ஆளைத் தூக்கி எறிவதும் விழிப்பதும்.

மடியில் கிடக்கிற குழந்தை பற்றிய
கவலைகள் வளர்கின்றன என்னுள்.
இம் மண்ணில் அதனிருப்பு
கைகளை அகல விரித்துப்
பறந்த என் போன்ற சிறுபராயம்
ஒரு தமிழிச்சியைக் காதலிக்கிற
ராப்பட்ட பின் வீடு வருகிற வாலிபம்.

கன நேரத்தின் பின் வேட்டுகள் ஓய
சூழ்ந்திருந்த மெல்லிருட் காடு விலத்தி
நூர்ந்திருந்த தெருக்கம்ப மேக்குரியின்
ஒளியிழைகள் ஜன்னல் பூக்கண்ணாடிக@டே
கசிகின்றன அறைக்குள்.
தூரத் தூர இருந்திருந்து
ஒன்றிரண்டு வேட்டுகள் தீரும்.
இதழ்களால் புன்னகை நழுவ
நித்திரைக் கண்ணில் வான் நோக்கி
குழந்தையின் கைகள் நீள்கின்றன.
மலக்குகள் மலர்கள் கொணர்ந்தனரோ!
பொத்திப் பொத்திக் கைகளை
விரிக்கிறது குழந்தை.
பின் மெல்லச் சிரிக்கிறது.
'பொன்னத்தா பூவத்தா'

------------------------------------------------------------

மிக அதிகாலை, நீல இருள்


பனி தூறி
மங்கிய ஒளியில்
மினுங்குகிற தார் ரோட்டில்
செருப்பின்றி அதிகாலையில் வெறுங்காலோடு நடக்க
கால் குளிர்ந்து விறைக்கிறது கல்லாய்.
வாகையிலைக் கொத்துகளை
அசைத்து வருங் காற்று
எறும்பாய் உடலில் ஊர
கூசுவதும் சிலிர்ப்பதும் உரோமங்கள்
ஊசிகளாய்க் குத்திட்டு நட்டென நிமிர்வதும்.

கொஞ்ச நாளாய் எனதிரவுகள்
இப்படித்தான் கழிகின்றன.
வீடு முழுக்கக் குறட்டை ஒலிக்கிற பின்னிரவில்
குரைக்க ஒரு நாய் கூட இல்லாத நகர சாலையில்
நான் மட்டும்.
பிடிபடாமல் வழுக்கி வழுக்கித் தூக்கம் நழுவ
புரண்டு புரண்டு களைத்து அலுத்து தோற்று
எழுந்து வெளியே இருளில் தெருவில்.

ஒரு சொட்டு நீர் தானும் உட்கொள்ள இடமின்றி
களம் வரை அவள் நினைவுகள்
நிரம்பி விட்டன.
பசியெடுத்தும் எவ்வளவு காலந்தான்
கைக்குள் பொத்தலாம் போல் சிறு குருவி உடலமும்
மரங்கொத்தியலகுக் கூர் மூக்கும்
அவளைக் காண்கிற கணங்களில் என்னுள்
படர்கிற உணர்வுகளை
என்னவென்று எழுதுவது?

காலைத் தொழுகையின் பின்
தொப்பி மனிதர்கள்
ஒருவர் இருவராய்
வருவது தெரிகிறது.
விக்கி அடைக்கிற அடித் தொண்டையால் எங்கோ
ஓர் சேவல் உரக்கக் கொட்டாவி விடுகிறது.
ஆலமரம் சரசரத்துப் பொன்னிலைகளுதிர்க்கிறது.
ஆரையூர்க் கோயிலின் தேவாரம் கேட்கிறது.
கண் கடுக்க
நித்திரையரள நிற்குமெனை நோக்கி
நகர சுத்தி தொழிலாளரின் கரத்தைகள்
தொலைவில் உருண்டு வருமிரைச்சல்
அதிகரிக்கிறது வர வர.
மேற்றிசையிலினி
சுக்கிரனேது? வெள்ளிகளேது?

------------------------------------------------------

கவிதைகள் காணாமல் போன
இரவு


இருளும்
வெப்பக் காற்றும் நிரம்பிய
தனிமை அறை.
சுழலும் மேசை மின் விசிறியின் காற்றில்
மார்பு, தோட்பட்டை மயிர்கள் கதகதப்ப
பணிந்த அயல்வீட்டு
அஸ்பெஸ்தோஸ் கூரையினால்
முக்கால்வாசி மறைந்த ரெட்டை ஜன்னலின்
மேலிடை வெளியினூடே
தொட்டந் தொட்டமாய் இளம் பால் வெள்ளை
நிறம் பரவிய வெறும் வானத்தை
மல்லாக்கக் கிடந்தபடி பார்க்கிறேன்.

இன்று இறைச்சிக் கடைக்குப் போயிருந்தாலாவது
பூரணையா அல்லவா எனத் தெரிந்திருக்கும்.
நட்டுவக்காலி, சிலுவை என்று தேடவும்
ஒரு மண்ணுண்ணி அளவு நட்சத்திரமாகினும்
தென்படவில்லை வானில்.
இதெல்லாம் தேடுகிற
வயசா காலமா என்ன இப்ப?

மனதில் வேறெதுவும் பதியவில்லை.
அவ்வளவு கவிதை இன்று.
படிக்கிற நாட்களில்
அந்த மகா படிப்புகள் கெட்டு விடுமென
கழுத்தைப் பிடித்து அமுக்கிய கவிதைகள்
விட்டு விட்டு மழை பெய்யும்
மாரியின் தூறலிடை
தார்ப்பச்சான் கட்டி
தெருத் தண்ணீரை உதைத்த
ஆளுக்காள் எத்திய கவிதைகள்
துயில்கிற புத்தனுக்கும்
அமர்ந்துள்ள புத்தனுக்கும் தெரியாமல்
தலதா மாளிகையின் பின் தொலைவில்
சரசரக்கிற அரச மரத்திற்கு கொஞ்சம் தள்ளி
முத்தமிட்டு மூச்சிரைத்து
அவள் தோளில்
பூவாய்க் கொட்டுண்டிருந்த கவிதைகள்.

ஏனோ எழுதப்படாமல்
என் மனக் கைக்குள் பொத்த வராமல்
லெவல் காட்டும் எடுப்புப் பிடித்த அவ்
அழகிய கவிதைகளெலாமின்றும்
மலர்ந்துள்ளன என் அறையுள்.
இப்போது வருகிற
ஓகஸ்ட், செப்டம்பர்களின்
வெயிலும் மழையும் கலந்து குழப்பும்
கால நிலை போல்
ஒன்றுள் ஒன்று பிணைந்தும் பின்னியும்
பிரித்துச் சிக்கெடுக்கவியலாத
வலைக் கவிதைகள்.
எதை எழுதுவது? எதை விடுவது?
ஆளைத் திணறடிக்கும் வலைப் பின்னல் கும்பம்.

ஒரு கவிதை தானுமின்று
எழுதப்படாமலேயே போயினும் இவ்
அழகிய கவிதை இரவை நான் நேசிக்கிறேன்.
அவள் நாக்கையும் உதட்டையும்
சுருட்டி உசுப்பும் அழகைப் போல்
ஸ்பரிசிக்கிறேன்.
அவளுடைய காதல் போல்
உயிர்ப்புடைய இரவிது.

என் கைக்குள் வர கவிதைகள்
மறுத்து அடம் பிடிக்க
நான் சினுங்க
கவிதைகள் எனைக்
கிள்ளிக் கிள்ளித் தனக இவ்
அற்புத கணத்தின் உச்சத்தில்
வெடித்தது பார் குண்டு.
தலைதெறிக்க ஓடி எங்கோ
கொங்கிறீற் கூரைகள் தேடி
ஒளிந்தன என் கவிதைகள் பயந்து.
அறையின் அமைதி சிதறித் தெறித்தது.

இனி வெளி இரைய ஆரம்பிக்கிறது.
இப்போதான் இவ்விடத்தில் நின்ற ஒருவன்
பன்சலைக்குப் பின்னால் வெடித்ததென்றும்
நாலு சவம் கிடக்குதென்றும்
ஏதோ கூறிப் பெயர்ந்தான்.
கண்ணும் மூக்கும் வாயும்
இலிங்க உறுப்புகளும் வைத்து அது வளர
மனிதர்களோ நாய்களோ அற்ற தெருவில்
வேலிகளை உரசியபடி அவன்
வீட்டை நோக்கி நகர்கிறேன் நான்.

என் சிற்றினத்தின் மீதான
இரு பக்கப் பேரினவாத அமுக்கம் பற்றியும்
முன்னொரு போதும் நாமறியாதுள
எமதுரிமைகள் பற்றியும்
அமைச்சனாகிப் போன ஒரு சூதாடியின் கையில்
அகப்பட்டுள்ள எங்கள்
அரசியல் இயக்கத்தின் அவலம் பற்றியும்
நானுட்பட இச் சமூகத்தின்
அலட்சிய இருப்பு பற்றியும்
கவலை பேசினோம்.
வாய் சவுக்கும் வரை குமுறிக் குமுறி
வெம்பினோம் தான்.
சொண்டுக்குள் சொண்டை நுழைத்தபடி
கலவியிருந்த குருவிகள்
அதிர்ந்து விலக
வெடிக்க ஆரம்பித்தன துவக்குகள் மீளவும்.
இரவில் காகங்கள் கரைவதை
இன்று தான் நான் கேட்கிறேன்.
வேலிக் கம்புகளில் உறங்கிய கோழிகள்
அரண்டெழுந்து சுதாகரிப்பதை.

வெளியில் நிற்றல் நல்லதல்ல
சன்னங்கள் வந்து விழலாமென
உம்மா கிடந்து பதற
அவன் உட் செல்ல
மீள வருகிறேன் நான் என் அறைக்குள்.
மெது மெதுவாய்க் குறைந்து
வேட்டொலிகள் ஓய்கின்றன.
அதே முன் சொன்ன இருள்
வெக்கை
ஜன்னலூடு தெரியும் வானம்
தனிய நான்.
எல்லாமே முன் போல் தான் அறையில்
அதே அறை தான்.
வேண்டுமென்றால்
நடந்து வியர்த்த உள்ளுறுப்புகளின் ஈரம் உலர
காற்று பட
சாறனைச் சற்று விலத்தியுள்ளேன் நான்.
அவ்வளவு தான்.
வேறொன்றுமில்லை.
எல்லாமும் இருந்த விதமே தான் உள்ளன.
தண்ணீராய்த் 'தொப்', ~தொப்| பென்ற
முத்தமாய் 'ச்', 'ச்' சென்ற
என் அதி கவிதைகளைத் தவிர.

அவைகளைத் தான் காணவில்லை.

--------------------------------------------------------------------

இனி கடவுள் எரிவார்


சில யுகங்களின் பின் இன்றுன்
நினைவுகள் அலர்ந்தன என் இறைவனே.
சிறுபராய அதீத பக்திகள் யாவும்
அணுப் புள்ளியாய்த் தேய
வாய் விட்டு உனைச் சபிக்கிறேன் இன்று.

நிலா நாட்களில் வாசற் படிக்கட்டில்
மடியிற் கிடத்தித் தலை மயிர் கோதி
மூத்தம்மா செப்பிய மதமும்
அரேபியக் கதைகளும் நபியும்
சிலையில் எழுத்தாகா தழிந்தன இறைவனே.

விஷம் கக்கும் பாம்புகளும்
வேறு கொடிய ஜந்துகளும்
சதையைப் பொசுக்கிக் கருக்கும் நெருப்பும்
பாவிகள் வீரிட
அலற
தூக்கித் தூக்கி இராட்சத அடி அடிக்கும்
ஸபானியாக்களும் நிறைந்த உன்
நரகம் பற்றிய பேய்ப் பயங்களும்
போயின தான்.

ஆதாமுக்கு நீ விலக்கிய கனியை
சுவைக்க வேண்டுமென்ற கனவும்
உன் சுவனத்தின் பாலாறுகளிலும்
தேனாறுகளிலும் எனக்கிருந்த
பிரமிப்புகளும்
விதம் விதமான பொன் பவளக் கிண்ணங்களில்
ஏற்கனவே அங்கு
ஊற்றி நிரப்பப்பட்டுள்ள
மது வகைகள் மீதிருந்த ஈர்ப்பும்
ஹுர்லின் கன்னியர் பற்றிய
மயக்கங்களும் தான் அழிந்து
சிதிலமாகின இப்போ.

இன்று நானுனைத்
தொழவும் போவதில்லை.
உன் இருப்பு பற்றி ஒரு
இலத்திரன் துளியளவு ஐயமாயினும்
எனக்கிலாதிருப்பினும்
ஒரு இனவாதியாக அல்லது
மனித நேயமற்றவனாக எனை நீ
சிருஷ்டியாத நன்றிக் கடனிருப்பினும்
இன்று நானுனைத் தொழ மாட்டேன்.

அபாபீல் குருவியினங் கொண்டு
யானைச் சேனைகள் அழித்த உன்
அதி வல்லபத்திலும்
உலகத்து அனைத்து சக்தியும் உன்
ஆற்றலெனும் பெருவெளியிலிட்ட
சிறு வளையமெனும் உவமையிலும்
நான் புல்லரிக்கிறேன்.
விதிர் விதிர்க்கிறேன்.

எனினும் என் நெற்றி இன்றுன்
சுஜுதில் விழாது.
மசூதி மினாராக்களின்
உச்சி முகடுகளிலிருந்தெழுகிற உன்
நாமம் ஓராயிரம் முறை
என் செவிகளில் மோதித் தெறிப்பினும் சரியே
என் செவிப்பறை வெடித்துச் சிதறினும் சரியே.

என் மனங் கொதித்து உலை மூடிகளைத்
தூக்கி எறிகிறது தூர.
எழுகிற ஆவியில் காற்று
உருகுகிறது.
இன்று தான் விரிந்த தளிர்களும்
மலர்களும் கருகுகின்றன.
நீ எனக்கிழைத்த அநீதி
மிகக் கொடியது.

மஃறமிகளின் பாலுறவின் போதுன்
அர்ஷ் நடுங்குவதாய் அறிவேன்.
அதனிலும் கொடிய துயரிது.
என் பெருமூச்சின் அதிர்வில் ஓர் நாள்
சேடனின் கொம்புகள் தாங்கும்
உன் ஏவலாளர்,
பற்றிய தம் கைகளைத் தவறுவர்.
பூவான என் மனத்தின்
மென்னிதழ்கள் வெடித்து
வேதனையின் குருதி சிந்துகிறது.
வெப்பத்தின் கண்ணீர் கசிகிறது.

நான் அர்த்தநாரீஸ்வரத்தின் ஆண்பாதி.
தீயின் குழம்பு உலகினிடை
எத்தனை காலங்கள் அலைந்தேன்.
ஒற்றை விழியுடனும் இமையுடனும்
என் பாதித் தொண்டையும் வறளும் வரை
நான் கூவிய ஓலம்
ஏன் உன் செவிகளில்
ஏறாமலேயே போயிற்று.
கோடி கோடி யுகங்களின் பின்
அதுவும் பொருந்தமுடியாதபடி சிதைத்தா
என் பெண் பாதியைக் காண்பிப்பது நீ?

------------------------------------------------

நாய் வால்

999வது தடவையாகவும் இன்று காலை
வெளியேறும் முனைப்பில் நகர்ந்து
பரிதி எல்லைக் கோட்டைத் தாண்ட இயலாமல்
வழக்கம் போல் தன் இடத்தில் மீளவும்
வந்தமர்ந்துளது மையம்.

என்னவென்று நோவதிம் மனதை.
துணிந்து எனக்கென எதையேனுமியற்ற
விடுகுதில்லை ஒருபோதும்.
சரி, இனிச் செய்வதே என நிமிரினும்
அனைத்தினது புற அக நிலைமைகளையும்
கொணர்ந்து காண்பிக்கிறது கண்முன்.
எண்ணற்ற பொறுப்புகள் எனக்கென உளதாய்
போதிக்கிறது நின்று.
அழிந்து நான் சிதையினும்
உருகியே எரியினும்
யார் மனதையும் நோகவிடல் தகாதென்கிறது.
மந்தைகள் யாவற்றினதும் மேய்ப்பன்
நீயன்றி வேறு யாரென
வினாவுகிறது பிசக்க.
கல்லடி சாத்திரக்காரி போல் இதுவும்
4ம் இலக்கத்தான் பிறர்க்காய்த் தேயும்
செருப்பே தான் என்கிறது பாரேன்.

கண்டி மாநகரின் விரால் மீன்கள் கொதிக்கும்
குடை விரித்த மரங்களடர்ந்த
தெப்பக் குளக் கரையோர பிளாட்போர்மில்
குளிரில் உதறும் கைகள் கோர்த்து
ஒட்டி ஒட்டி திரும்பவும் அவளோடு
திரிய,
குறிஞ்சிக் குமரன் கோயிலுக்குப் போகும்
மலை நெடுக வளைந்து நீளும் சாலையில்
சிவப்பு சல்வார் உடுத்திய அவளை
சோனக முக்காடு போட்டு அணைக்க
வானமளவு இலைபருத்த மரத்தின் கீழவள்
நோகிய வயிறைத் தடவியபடியே
யுகக் கணக்கில் போர்த்திக் கிடக்கவெலாம்
எத்தனை தவிப்புகள் விளையுது நாளும்

எவ்வாறேனும் இவ் வட்டத்தின் எல்லையை
கடந்து செல்லுதல் வேண்டும் நான்.
ஆயிரம் தடவைகளும் தோற்றேன் தான்.
ஐயா என்
சிறு மூளை புரியாதுள அவ் அதி வழியை
தயை கூர்ந்து யாராகினும் கூறிடுக.
மிக அதீத நம்பிக்கைகளுடன்
வெளியேறப் புறப்பட்டுத் தோற்றுத்
திரும்பும் ஒவ்வோர் முறையும்
எல்லைப் பரிதி அகன்ற
பரப்பின் விசாலிப்பை உணர்கிறேன் நான்.
மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க
சமூகமும் கடவுளும் எனக்கெதிராய்
கை கோர்த்துச் செயல்படுவதாயும்
விரக்தியுற்றுத் துவள்கிறேன் தான்.
எல்லைகளைத் தாண்ட விடாமல் எனை
அமுக்கும் விசைகளே விலகுக விலகுக.

எவை எவ்விதமிருப்பினும்
நாளையும்
நாளையென்ன இதற்கடுத்த கணமேயே
எதுவுமே நிகழ்ந்து விடாதது போல்
முதன்முதலாய் இப்போதான் என்பது போல்
அனைத்துத் தோல்விகளின் சலிப்பும் களைந்து
புத்தம் புதிய நம்பிக்கைகளுடனும்
அவாக்களுடனும் புறப்படும் தான்
சுரணை கெட்ட இம் மையம்.

-----------------------------------------------------------------

என் பிரிய காதலே, பிசாசே!

அப்படியே நான் குப்புறக் கிடக்க
கிடையாகவும் நிலைக்குத்தாகவும்
என் வாய் அகன்று விரிகிறது.
களமும் சம விகிதத்தில் நெடுகவும் விரிய
நாற்பது போகாத குழந்தை ஒன்று
கை தவறி உள் விழுந்தால்
நேராகக் கத்திப்பாட்டில் போய்
இரைப்பைச் சாற்றில் கிடந்து மிதக்கக் கூடியபடி
எல்லாம் இப்போது நன்கு விரிந்துள்ளன.

விஞ்ஞானம் கிறுக்குத் தனமாய் உளறுவது போல்
வெறும் ஆறு போத்தல் பச்சைத் தண்ணீரில்
அவ்வளவு இலேசாய் ஆறிவிடக் கூடியதல்லாத
கொடிய அம் மாபெருந் தாகம்
மெது மெதுவாய்த் தலையெடுக்கிறதென்னுள்.
ஒன்பது
மற்றும் வருங்காலத்தில் கண்டு பிடிக்கப்படவுள்ள
கிரகங்கள் அனைத்தினது சமுத்திரங்களையும்
குடித்து விழுங்கி முடிப்பினும்
அடங்கக் கூடியதல்லாத அதி தாகம்.

இருந்திருந்து அவ்வப்போது இவ்
வேதனை மிகும் உணர்வென்னுள் கிளர்கிறது.
நொந்து பச்சைப் புண்ணாக நோகும்
வெப்பங் கணலுமிவ் வுடலை
நீவ
இளநாவல் நிறம் பூசிய அந் நக விரல்களை
'சுவ செவன' ஹொஸ்பிட்டலில் என் தோளோடு
சாய்ந்து உரசி நின்ற மார்புகளை
கொழும்பு போகும் இன்டசிட்டி பஸ்ஸில்
என் மடியில் பரவி உலைந்திருந்த
கூந்தலையும் திசுக் கன்னங்களையும்
அவாவிப் பெருகுகிறது இத் தாகம்.

95 ஏப்ரலின்
2ம் 3ம் பத்து பதினான்கு நாட்களில்
கழிந்த அப் புகார் போர்த்திய மென் பொழுதுகளில்
ஜுவாலித்து வளர்ந்த பெருந் தீயிது.
எக் கடல்களை ஊற்றி இப்
பேய் நெருப்புக் கிடங்கினை அணைப்பேன் நான்.
உலகத்தின் அத்தனை நதிகளே
ஆறுகளே
சின்னச் சின்னக் குட்டைகளே
இன்று எங்காகினும் மழை பெய்திருந்தால்
யாராவது மோசமான கொன்ட்ரக்ட்காரன்
போட்ட சாலைகளின் பள்ளங்களில்
தேங்கியுள நீர்களே
அனைவரும் திரளாகிப் பெருகி வந்திவ்
அதி மனிதனின் தாகம் தனைத் தணிக்குக...

நானும்
குறித்தளவு வாயில்லா ஜீவன்களும் மட்டுமே
கிடந்துழலும் இவ்வறையில்
பிரியாத இருளில்
எதையாகினும் அள்ளி அள்ளி இவ் இரைப்பையுள்
ஊற்றித் தணிப்போமென முயனினும்
அள்ள அள்ள என் எல்லாக் கைகளினதும்
நக நுனி வரை அகப்படுவன வெல்லாம்
78% நைதரசன்
21% ஒட்சிசன்
0.04% காபனீரொட்சைட்
மற்றும் இதர சடத்துவ வாயுக்களுமே.

அண்ணளவாக அல்ல. மிகத்
துல்லியமாகவே இவ்வறையுள்
பசிய மஞ்சளாயும்
வெள்ளையாயும்
சிறு சிறு தட்டு வடிவ இலைகளாலும் மலர்களாலும்
பூரித்துப் பொலிந்து நின்று சிலிர்த்தும்
திருக்கொன்றைப் பூமரம் அவள்
இல்லவே இலையென்பது உறுதியாயிருந்தும்
ஏமாந்து ஏமாந்து என் கைகளும் நானும்
சிறு பிள்ளையாய் காற்றையும் வளியையும்
வெற்றிடங்களையும் அள்ளித் தழுவி
அளைந்து அலைந்து தேடித் துழாவி
பாயையும் தலையணைகளையும் எங்கோ தொலைத்து
குளிரும் தரையில் உழத்தி உழத்தி.

இடுப்பின் கீழே சாறன் வழுவி
குலைந்து நவீன சித்திரம் போல் கிடக்கும்
எனைப் பார்த்துக் காலையில்
தேநீர் கொணர்ந்து உசுப்பும் உம்மா
சொல்லிப் போவா
'மூத்த தம்பி ராவெல்லாம்
கெட்ட கெட்ட கனவுகள் கண்டு
என்ன உழத்துவ உழத்தியிருக்கான்' என்று.
என் உயிர் வெந்து உருகி
கண்களினோரம் கன்னங்களிலே
சிந்தி
உறைந்து ஒளிரும் நீர்ப் படலங்களை அவ
கூர்ந்து பார்த்தாவா என்ன?

-------------------------------------------------------------------------
.
உயிர் பிய்யுமோர் பாடல்


தனிமையின் கோரமுகம்
எனக்கான மனிதர்களற்ற
நகரத்தின் வளியிறுக்கமான அறையில்
மெது மெதுவாய்த் துலங்கி வருகிறது.
வாகையும்
பூவரசுகளும்
ரெட்டை ஆலைகளும் சரசரக்க
ஊவென்ற காற்றின் ஓசையைத் தவிர
வேறொன்று மற்றுத் தொலைவில் உறைந்துள
என் ஊரின் இரவில்
அமர்ந்தமர்ந்து
அலையெறியும் கடலின் இரைச்சலுடன்
ஒரு கோடி நூற்றாண்டுகளின் வேதனையைத்
துயரைத்
தழுவியெழுகிறதோர் பாடல்.
உயிர் பிய்ந்தொழுகுகிற கீதம்.

இழைந்திழைந்து வருகிறது தான்.
புதுக்குடியிருப்பில் தோய்ந்த ரத்தத்தை
கொழும்பு மத்திய வங்கியின்
இடிபாடுகளிடை நசுங்குண்ட
குழந்தைகளின்
கர்ப்பிணிகளின்
அவயவங்களை முகர்ந்தபடி அத்
துயரத்தின் பாடல்
இழைந்திழைந்து வருகிறது...
கட்டடக் காட்டை
சிற்றொழுங்கைகளை
இன்னும் என்னென்னவோ அத்தனையையும் தாண்டி
என் பெருமூச்சுகளால் நிரம்பிய மண்டபத்தின்
அடைத்துச் சாத்திய கதவின்
சாவி இடுக்கினூடாக நுழைந்து
துயில்கிற எனை
உலுப்பி எழுப்புகிறது.

நீளவிரிந்து பரந்துள
வணக்கவறையின் தொங்கலில்
காற்று தூர்த்த அரசிலைச் சருகுகள்
கால்களிடை நொருங்கிக் 'கறமற'க்க
அவளுடைய காதணி இடுக்கில் சிக்கிய
தலைமுடியைக் கழற்றிச் சிரித்த கணங்களையும்
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் பின்னும் என்
மூக்கு நுனியில் மீய்ந்துள
அவளின் பின் கழுத்து வாசனையையும்
மோப்பம் பிடித்துச் சிலிர்த்துக் கிடக்கிறேன் நான்.

இரவே,
நகரத்தில் எப்போதாயினும் அரளும்
இயற்கை செத்த காற்றே,
எனதூரின் மசூதியிலும்
என் இனத்தார் துயின்றிருந்த
அயற் சிறிய கிராமங்களிலும்
ஓராயிரம் மனிதர்
குருதியில் துவைந்தவை பார்த்து மரத்தேன்.
விறைத்துச்சடத்தேன்.
ஓங்கி உரத்து முகம் புதைத்தழவும்
நாச் செத்து வரண்டேன் தான்.
போ,
முடிந்தால்
குளித்து ஈரம் முழுக்க உலராமல்
தலையை ஒரு புறம் கெழித்து
விரித்துப் போட்டு அவள் கோதுகிற கூந்தலில்
இருந்தோர் மயிரேனும் கொணர்ந்து தா
மோகத்திலும் தாபத்திலும்
முற்றிப்
பாதி இமைமூடிப் பார்வை மயங்கிக்
கிறங்கிக் கிடக்கும் என் முகத்தை வருட
இக் கொடு மிரவைக் கடக்க
தனிமை தனைத் தொலைக்க.

என் கவலை,
ஆற்றாமை,
துயர்
அனைத்தும் இவை பற்றித்தான்
ஆஸ்பத்திரிக்குப் பின்னால் போகும் சாலையில்
நிறைந்து கிடக்கும்
புளொட் காரனும் ஆமிக்காரனும்
எப்போது அகல்வது?
அவள் பற்றிய கனவுகள்
பூரித்துப் பொலிகிற கண்களுடன்
அச்சாலையில் என்
சைக்கிளின் சக்கரங்கள் மீளவும்
எப்போது உருள்வது?

--------------------------------------------------------

செங்கோல் = சிவப்பு + கோல்

அரசன் எழுந்தான்
அப்பாவிகளின் தொடை, கணைக்காலென்புகளால்
செய்யப்பட்டு
குழந்தைகளின் கன்னத் தசைகளால் போர்த்தப்பட்ட
ஆசனத்திலிருந்து.
வலது கையில்
எழுவன் குளத்துச் சிங்கள மக்களின்
புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம்
ஒரு மிடறு குருதியருந்தியபடி
திறந்து கிடந்த அடுத்த அறையை எட்டிப் பார்த்தான்.
அறைச் சுவரில்
ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள்
காத்தான்குடிப் பள்ளிவாசலில்
சுட்டுக் குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து
கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச் சின்னங்களவை.
பக்கத்தில்
இரு கூறிடப்பட்டு வீசியெறியப்பட்ட சிறு பிள்ளையொன்றின்
குருதி பீய்ச்சியடிக்கப் பட்டுக் காய்ந்த சீமெந்துப் பேப்பர்.
பெருமிதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்ட அரசன்
திடுமென அதிர்ந்தான்.
மிக அருகில் எங்கோ பாங்கொலிக்கக் கேட்டான்.
அம்பிளாந்துறைச் சந்தியில் மரண ஓலமெழுப்பிய
அதே 157 ஹாஜிமாரினதும் குரல் அசப்பில்.
மடுவுக்குள் பாதி புதைந்தும்
பட்டை வாய் வெடித்த காட்டு மரங்களில் தொங்கியும்
இரத்தம் தோய்ந்த வெண்ணிற 'ஜுப்பா'க்கள்
அரண்மனைக்கு வெளியே
காற்றிலசைவதும் கண்டான்.
காதை இறுகப் பொத்தியபடி
கதவை இழுத்து அடைத்துச் சாத்தி
அறைக்குள் மீளவும் வந்தமர்ந்தான்
அருகில்
தப்பித் தவறியும் எதனையும்
சிந்தித்து விடக் கூடாதென்பதற்காய்
கழற்றிய மூளை ஒரு கையிலும்
சயனைட் குப்பி ஒரு கையிலுமாய்
யாரிலோ அல்லது எதிலோ
விழுந்து வெடித்துச் சிதறிட
தன் அரசனின் ஆணையைக் கோரி நிற்கும்
இயந்திரத் தனப்பட்டு இளைஞனாய்ப் போன
பன்னிரு வயதுத் தமிழ்ப் பாலகன்
மெல்லக் குனிந்து தன் அரசனைக் கேட்டான்
"முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே
கொல்வதில்லையா இனி? "
அரண்மனை அதிரப் பேயிடியாய்ச்
சிரித்த அரசன் திருவாய் மலர்ந்தான்
"கொல்வதில்லை யென்றெதுவுமில்லை@
இப்போதில்லை!"

----------------------------------------------------------

ஒரு பேய் மாரி
நூறு மோகினிப் பிசாசுகள்

தலை விரித்துப் போட்டுப் பேயாட்டம் ஆடவோ
கிளைகள் முறித்துச் சடசடக்கவோ
மரங்களற்ற கொழும்பில்
அதுவும் போபர்ஸ் ரோட்டில்
பெய்கிறது மழை.
வானம் வெடித்து
வெள்ளரிப்பழத்துண்டுகள் மாதிரி
பெரிய பெரிய சத்தத்துடன்
விழும் சத்தம் கேட்கிற மழை.

வந்து பார்! வெளியில் என்ன ஒரு மழையென்று
பக்கத்தில் படுக்கிற
எனக்குப் பிடிக்காத மனிதன் அடம்பிடிக்கிறான்.
முழங்கால் பிடித்த தண்ணி தெருவில் என்கிறான்.
மெய்தான்.
போன நூற்றாண்டில் போட்டு
புராதனச் சுவடாகிச் சிதைந்திருக்கும்
போபர்ஸ் ரோட்டின் கான்களுள்ளிருந்து
குழந்தைகளின் மலம் நிரம்பிய ஷொப்பிங் பைகள்
மேலெழுந்து இந்நேரம் வெள்ளத்தில் மிதக்குமாக்கும்.
டீன்ஸ் ரோட்டுக்குப் போக இனி
தோணி வேணும்.
டார்ளி ரோட் காமினிஹோல் எதிரிருக்கும்
மரங்களிலிருந்து நூறாயிரம் மலர்கள் கொட்டி
மஞ்சள் விளக்கில் இந்நேரம் அவ்விடம்
சும்மா குதிர்த்துமாக்கும் குதிர்வு.

எதையோ முணுமுணுத்தபடி கவட்டுள்
கைவைத்து இறுகிச்
சுருண்டிருப்பேன் நான்.
கணைக்காலிரண்டினதும் நடுவிடுக்கில்
தலையணை கிடந்து நசியும்
ஹோவென்ற விரகம்!
ஹோ!
அனுங்குவதும்
பெருமூச்செறிவதும்
நெஞ்சு விம்மித் தணிவதும்
மார்பு ரோமப் பரப்பிடை ஓர்
அணைத்தற் சுகத்தேவை எழுந்தெழுந்தழிவதுமாய்
வெறுந்தரையிற் பாயின்றி
ஊர்ந்தூர்ந்து கழியுமொரு கொடுமிரவு.

போன் பேசி ஆறுநாள்
அவள் குரலாச்சும் கேட்டால் சற்றுத்
தணியுமிது.
சீதேவிப்பெற்ற என் ஊரில் எல்லாம் கஸ்டம்
கரண்டும் இல்லயாம் இப்ப.
எந்த இருள் மூலையுள் கிடந்து கிடந்து
வேர்த்து விரகிக்கிறாளோ, அவள்
என்னவள்.

கொழும்பு நாலைந்து நாளாய் புதுமாதிரி.
அந்தி அஞ்சு மணிக்குப் பொன் வெயில்
ஊரில் பேய் நெல்லுக்காய வைக்கும் வெயிலிது.
பிறகு வானம் மங்குவதும்
துளிர்த்துத் துளிர்த்துப் பெருகிப் பெய்வதும்
மழை
கூதல்
கொடுகுதல்
நாளையந்திக்கும் வரவிருக்கும் இதே பொன் வெயிலையும்
பேய் மழையையும்
கூதலையும்
நினைக்க மனதில் நிறைகிறது பயம்.
தொடர வரும் இரவு, அது
மகா பயம்.

மோகினிகள் படுத்துறங்கும் அவ்வறையுள் நாளையிரவு
புக இயலாது நான்
இயலாது.

-----------------------------------------------------------------------

சில விளக்கக் குறிப்புகள்

குஞ்சு பொரி மரமே!
பால்குடி மறக்காதவைகள் - சிறு குழந்தைகள்

பட்டமேற்றுங் காற்று
மொச்சை - பட்டத்தில் நூலினால் போடும் முடிச்சு

என் தகனக் கிரிகை
சிராய்; - விறகுத் துண்டு

அவளைப் பற்றிய கோடை மழைக் கவிதை
மூசாப்பு - மங்கலான சூரிய ஒளி
கொள்ளை - அதிகம்

ஆணலைகள்
ஆணலை - கடலில் எழும் மிகப் பெரிய அலை

பொன்னத்தா பூவத்தா
மலக்குகள் - தேவர்கள்
பொன்னத்தா பூவத்தா - பூக்களையும் பொன்னாலாக்கப் பட்ட பொருட்களையும் கனவில் கொண்டுவரும் தேவர் களிடம் அவற்றைக் கேட்டு, குழந்தைகள் கைகளைப் பொத்திப் பொத்தி விரிப்பது

கவிதைகள் காணாமல் போன இரவு
தார்ப்பச்சான் - சாறனை மடித்து முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டுதல்
பன்சலை - விகாரை (பௌத்தர்களின் வணக்கத்தலம்)

இனி கடவுள் எரிவார்
நபி; - இறைதூதர்
ஸபானியாக்கள்; - நரகத்தில் வேதனை செய்வோர்
ஹுர்லின் - சுவர்க்கத்துக் கன்னியர்
அபாபீல் - ஒருவகை சிறு குருவியினம்
சுஜுது - நெற்றியை நிலத்தில் பதித்து கடவுளைத் தொழுதல்
மினாரா - மசூதியின் கோபுரம்
மஃறமி - திருமணம் முடிக்கக்கூடாத தாய், மகன் போன்ற உறவினர்
அர்ஷ் - கடவுள் வீற்றிருக்கும் பீடம்
சேடனின் கொம்புகள் - உலகத்தின் தூண்கள்
அர்த்தநாரீஸ்வரம் - இருபக்கச் சமச்சீரான மனித உருவ த்தில் ஒரு பாதி ஆண் வடிவாகவும் மறுபாதி பெண் வடிவாகவும் அமைந்த உருவமைப்பு.

நாய் வால்
பிசக்க - உரத்து

என் பிரிய காதலே, பிசாசே!
சுவசெவன - வைத்தியசாலையொன்றின் பெயர்

செங்கோல் ஸ்ரீ சிவப்பு 10 கோல்
பாங்கு - பள்ளிவாசலிலிருந்து விடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பொலி
ஹாஜிமார் - சவூதி அரேபியாவிலுள்ள புனிதத்தலங்களான மக்கா, மதீனா என்பவற்றுக்குச் சென்று இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையைப் பூர்த்தி செய்தவர்கள்
ஜுப்பா - இஸ்லாமிய கலாச்சார உடையொன்றின் பெயர்

---------------------------------------------------------------