புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை

மாக்ஸிம் கார்க்கி


சாம்பல் நிறத்தில் இருந்த புகையை வெளியே விட்டவாறு, ஒரு பாம்பைப்போல வளைந்து வளைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியை, மஞ்சள் நிறத் தைக் கொண்ட கோதுமை வயல்கள் நிறைந்த அந்தச் சமவெளிப் பகுதி விழுங்கியது. புகைவண்டி துப்பிய புகை அந்த வெப்பம் நிறைந்த வெளியில் கலந்தது. அதேபோன்று அந்த பரந்து விரிந்து கிடந்த சமவெளியில் நிறைந்தி ருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு புகைவண்டியின் கர்ண கொடூரமான சத்தமும் அந்தக் காற்றில் கரைந்து போனது. சமவெளிக்கு மத்தியில் அமைதியைக் கெடுப்பதைப் போல ஒரு சிறிய புகைவண்டி நிலையம் கண்களில் தெரிந்தது.

புகைவண்டியின் கர்ணகொடூரமான சத்தம் இல்லாமல் போனவுடன், அமைதி மீண்டும் அந்த சிறிய புகைவண்டி நிலையத் தைச் சூழ்ந்தது.

பொன்னொளியைப் பரப்பிக்கொண்டு மஞ்சள் நிறத்தில் இருந்த அந்தச் சமவெளியில், வானத்திற்கு இந்திர நீலத்தின் நிறம் இருந்தது. அவை இரண்டும் எல்லையற்று நீண்டு கிடந்தன. கற்பனை வறண்டு போன ஒரு ஓவியன் வரைந்த, குழப்பங்கள் நிறைந்த அந்த ஓவியத் தில் சிறிதும் எதிர்பாராமல் நடந்துவிட்ட, தவிட்டு நிறத்தில் உள்ள கோடும் புள்ளியும் போல அந்தப் புகைவண்டி நிலையம் இருந்தது.

தினமும் மதியம் பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் நான்கு மணிக்கும் அந்த பரந்து கிடக்கும் சமவெளிக்கு மத்தியில் புகைவண்டி நிலையத்திற்கு ஒவ்வொரு புகைவண்டிகளும் வந்து கொண்டிருந்தன. சரியாக இரண்டு நிமிடங்கள் அவை அங்கு நின்றன. அந்த நான்கு நிமிடங்கள் மட்டுமே அந்த புகைவண்டி நிலையம் சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நான்கு நிமிடங்கள் மட்டும்தான் அங்கு வேலை பார்க்கும் மனிதர்களுக்கு மாறுபட்ட ஒரு குணத்தையும் தன்மையையும் அளித்தன.

எல்லா புகைவண்டிகளிலும் பலவகைப்பட்ட ஆடைகள் அணிந்த, பலதரப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்களும் பயணிகளாக இருந்தார்கள். ஆனால் மிகவும் குறைந்த நேரத்திற்கு மட்டும்தான் அதைப் பார்க்க முடியும். நகர்ந்து கொண்டிருக்கும், களைத்துப்போன, அமைதியாக வெறுமனே உட்கார்ந்திருக்கும் ஆட்களின் முகங்கள் புகைவண்டியின் ஜன்னல்கள் வழியாகத் தெரியும். ஒரு மணியோசையோ விஸில் சத்தமோ அந்தக் காட்சியை சத்தங்கள் நிறைந்த ஆரவாரத்துடன் அங்கிருந்து அபகரித்துக் கொண்டு போய்விடும். அந்த மஞ்சள் நிற சமவெளியின் வழியாக வாழ்க்கையின் போராட்டங்கள் நிறைந்த ஏதோ நகரத்தை நோக்கி அது வேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும்.

புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் அந்த முகங்களையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புகை வண்டி அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டால் அந்தக் காட்சியைப் பற்றிய தங்களின் கருத்துக்களை ஒருவரோடொருவர் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்களைச் சுற்றிலும் அந்த சமவெளியைப் பற்றிய நினைவுகள் நிறைந்து விரிந்து கிடந்தன. அதற்கு மேலே நிர்மலமான ஆகாயம் வளைந்து நின்று கொண்டிருந்தது. அந்த வெட்ட வெளியில் தங்களை மட்டும் இருக்கச் செய்துவிட்டு, வாழ்க்கையின் விரிவான இன்னொரு பக்கத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பயணிகளைப் பார்க்கும்போது அந்தப் பணியாட்களுக்கு பொறாமையாக இருந்தது.

கோதுமையின் பரப்பிற்குள் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும் புகைவண்டியை - அந்தக் கறுப்புக் கயிறைப் பார்த்தவாறு புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். மனதில் புதிய உணர்வை உண்டாக்கிய அந்த வாழ்க்கையின் காட்சியில் மனதைப் பதித்து அமைதியாக அவர்கள் நின்றிருந்தார்கள்.

பெரும்பாலும் எல்லா பணியாட்களும் அங்கு இருந்தார்கள். வெட்டி ஒதுக்கப்படாத கிருதாவைக் கொண்ட, கஸாக்குக்காரரான, வயதான ஸ்டேஷன் மாஸ்டர், ஆட்டிடம் இருப்பதைப் போன்ற தாடி, மீசையும் சிவப்பு நிறத்தில் தலை முடியும் கொண்டிருக்கும் அசிஸ்டண்ட், குள்ளமானவனும் புத்திசாலியுமான லூக்கா என்ற ஸ்டேஷன் கார்டு, ஸ்விட்ச்மேன்களில் ஒருவனான சிறிய தாடியும் முரட்டுத்தனமான உடம்பையும் கொண்ட கோமோஸோவ் ஆகியோர்தான் அவர்கள்.

புகை வண்டி நிலையத்திற்குள் கதவுக்கு அருகில் இடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி அமர்ந்திருந்தாள். உயரம் குறைவாகக் கொண்டு, தடித்த சரீரத்தை வைத்திருந்த அவளுக்கு வெப்பத்தைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. குழந்தை அவளுடைய மடியில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தது. தாயின் முகத்தைப் போலவே குழந்தையின் முகமும் வட்ட வடிவத்திலும் சிவப்பு நிறத்திலும் இருந்தது.

பூமி விழுங்கியதைப்போல புகைவண்டி ஒரு வளைவில் திரும்பி கீழ்நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

""சாமோவர் தயாராயிடுச்சா சோனியா?'' - ஸ்டேஷன் மாஸ்டர் தன் மனைவியின் பக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.

""ம்...''- தளர்ந்து போன மென்மையான குரலில் அவள் சொன்னாள்.

""லூக்கா, இங்கே எல்லாவற்றையும் அடுக்கி வை. ப்ளாட்ஃபாரம், தண்டவாளங்கள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தம் பண்ணு. ஆட்கள் போட்டுவிட்டுப் போன குப்பைகளையெல்லாம் வாரி சுத்தம் பண்ணணும்.''

""சரி, மாத்வெ கெகோரோவிச்.''

""நிக்கோலாய் பெட்ரோவிச், நாம தேநீர் அருந்தலாமா?''

""எப்போதும் பருகுவதுதானே? பருகுவோம்''- அந்த உதவியாளர் சொன்னான்.

மதியம் வரக்கூடிய வண்டி கடந்து போய் விட்டால், கெகோரோவிச் தன் மனைவியிடம் இப்படிக் கூறுவார்:

""சோனியா, சாப்பாடு தயாரா?''

தொடர்ந்து லூக்காவிற்கு எப்போதும் கூறக்கூடிய வேலைகளைக் கூறுவார். தன்னுடைய உதவியாளரிடம் வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்பார்:

""ம்... நாம சாப்பிடுவோமா?''

""சாப்பிடுவோம்''- உதவியாளர் தன்னுடைய வழக்கமான பதிலைக் கூறுவான்.

ப்ளாட்ஃபாரத்திலிருந்து அவள் புகைவண்டி நிலையத்தில் இருக்கும் ஒரு அறைக்குள் செல்வாள். ஏராளமான பெட்டிகளும், மிகவும் குறைவான இருப்பிடங்களும், வீட்டுச் சாமான்களும் இருக்கும் அந்த அறையில் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் வாசனையும், தரையைத் துடைக்கும் துணிகளின் வாசனையும் இருக்கும். சாப்பாட்டு மேஜைக்கு வெளியே பேச்சு, புகைவண்டி நிலையத்தைக் கடந்து சென்ற புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களைப் பற்றியதாக இருக்கும்.

""அந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் மஞ்சள் ஆடை அணிந்திருந்த பெண்ணைப் பார்த்தியா பெட்ரோவிச்? அவள் ஒரு சகிக்க முடியாத உருப்படி...''

""மோசமில்லை. ஆனால் அவளுக்கு நல்ல ஆடைகள்மீது அந்த அளவிற்கு விருப்பமில்லையோ?''- பெட்ரோவிச் சொன்னான்.

அவனுடைய கருத்துகள் எப்போதும் சாதாரணமாகவும் உறுதியானதாகவும் இருக்கும். தான் கல்வி கற்றவன் என்பதைப் பற்றியும், பல அனுபவங்களையும் கொண்டவன் என்பதைப் பற்றியும் நினைத்து அவன் தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்வான். அவன் உடற்பயிற்சி நிலையத்திற்குப் போய் வந்திருப்பவன். தன் கையில் கிடைக்கும் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இருக்கும் பெரிய புள்ளிகளின் பொன்மொழிகள் குறித்து வைக்கப்பட்ட ஒரு புத்தகம் அவனிடம் இருக்கிறது. தொழிலுக்கு வெளியே இருக்கும் எந்த விஷயங்களைப் பற்றியும் அவனுக்கு இருக்கும் ஆச்சரியப்படத்தக்க அறிவினைப் பற்றி ஸ்டேஷன் மாஸ்டர் பெருமையாகப் பாராட்டுவார். அவன் கூறுவது எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் மாஸ்டர் அவற்றை மிகவும் கவனம் செலுத்திக் கேட்பார். பெட்ரோவிச்சின் நோட்டுப் புத்தகத்தில் அறிவின் முத்துக்கள் இருப்பதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார். புகைவண்டியில் பார்த்த பெண்ணின் ஆடையைப் பற்றி தன்னுடைய உதவியாளர் கொண்டிருக்கும் கருத்து ஸ்டேஷன் மாஸ்டரின் மனதிற்குள் பலவித சந்தேகங்களையும் உண்டாக்கியது.

""அது ஏன் அப்படிச் சொல்றே?''- அவர் கேட்டார்: ""அழகிகள் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணியக் கூடாதா என்ன?''

""நான் நிறத்தைப் பற்றிப் பேசவில்லை. அந்த ஆடை வெட்டி தைக்கப்பட்ட முறையைப் பற்றிச் சொன்னேன்''- கண்ணாடிப் பாத்திரத்திலிருந்து சற்று ஜாமை மிகுந்த கவனத்துடன் தன்னுடைய பாத்திரத்தில் பரிமாறியவாறு அந்த உதவியாளன் சொன்னான்.

""துணி வெட்டப்பட்ட முறையா? அது வேறு விஷயம்...''- ஸ்டேஷன் மாஸ்டர் ஒப்புக் கொண்டார்.

ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி அந்த உரையாடலில் பங்கு சேர்ந்தாள். இந்த விஷயம் அவளுடைய இதயத்துடனும் மனதோடும் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் ஒன்றே. ஆனால் அறிவுரீதியாக அந்த மனிதர்களிடம் பெரிய அளவில் வளர்ச்சி எதுவும் உண்டாகாததால், அந்த உரையாடல்கள் நீண்டு போய்க் கொண்டிருக்குமே தவிர, உணர்வு ரீதியாக அது அவளைச் சற்றும் ஈர்க்காது.

ஜன்னல் வழியாக அமைதிக்குக் கீழே ஆழ்ந்து கிடக்கும் அந்த சமவெளியின் பரப்பும், விரிந்து கிடந்த ஆகாயத்தின் சாந்தத் தன்மையும் தெரிந்தன.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்ததும், ஒரு சரக்கு வண்டி புகைவண்டி நிலையத்தைத் தாண்டிச் சென்றது. அந்த வண்டியில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே நன்கு பழக்கமானவர்கள்தான். கார்டுகள் எல்லாரும் தூங்குவதே வழக்கம் என்றிருப்பவர்கள். அந்த சமவெளி வழியாக உள்ள, முடிவே இல்லாத பயணங்கள் அவர்களுடைய உணர்வுகளையும் மனதையும் சோர்வடையச் செய்தன. பல நேரங்களில் பழைய விபத்துக்களைப் பற்றி அவர்கள் கூறுவது உண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மனிதன் கொல்லப்பட்ட கதையைக் கூறுவார்கள். இல்லாவிட்டால் தங்களுடைய வேலை விஷயங்களைப் பற்றி அவர்கள் வெறுப்புடன் பேசுவார்கள். "அந்த ஆளுக்கு தவறுக்கான தண்டனை கிடைத்தது. இன்னொரு ஆளை இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள்' என்பது போன்ற விஷயங்கள் அங்கு அந்த அளவிற்கு அதிகமாகப் பேசப்படாது. சாப்பாடுமீது மோகம் கொண்டவன் சுவையான உணவை அள்ளி விழுங்குவதைப்போல, அவர்கள் அந்த உரையாடல்களை விழுங்கிக் கொண்டிருப்பதுதான் எப்போதும் நடக்கும்.

சூரியன் மெதுவாக அந்தச் சமவெளியின் விளிம்பில் இறங்கிக் கொண்டிருந்தது. விளிம்பின் வழியாகக் கீழே இறங்கி பூமியை நெருங்கும்போது சூரியன் இரத்த நிறத்தில் இருக்கும். பூமியில் இருக்கும் எல்லா பொருட்களின் மீதும் சிவப்பு நிறம் படர்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தன்மைக்கு வழி உண்டாக்குகிறது. வெட்டவெளிக்கு அப்பால் பரவிக் கொண்டிருக்கும் ஒரு வசீகரத் தோற்றம்... இறுதியில் விளிம்பைத் தொட்டவாறு சூரியன் கீழே இறங்குகிறது. சிறிது நேரத்திற்கு அந்த சூரிய அஸ்தமனம் ஆகாயத்தில் வண்ணமயமான, இனிய, இசை கலந்த மாலைப் பொழுதைப் படைக்கிறது. ஆனால் அஸ்தமனம் முழுமையானதும், புத்துணர்ச்சி நிறைந்த அமைதியான மாலைப் பொழுது முடிவுக்கு வருகிறது. அந்தக் காட்சியின் பேரமைதியைப் பார்த்து பயந்து விட்டதைப்போல கண்களைச் சிமிட்டிக் கொண்டு நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன.

மாலை நேரத்திற்குக் கீழே அந்தச் சமவெளி மயங்குவதைப் போல தோன்றியது. நான்கு பக்கங்களிலிருந்தும் இரவின் நிழல்கள் புகை வண்டி நிலையத்தைச் சூழ ஆரம்பித்தன. தொடர்ந்து இருண்ட, கவலைகள் நிறைந்த இரவு அந்தக் கட்டிடத்தைச் சுற்றி ஆக்கிரமித்தது.

புகை வண்டி நிலையத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக் கின்றன. எல்லாவற்றையும்விட உயரத்திலும் உச்சத்திலும் இருப்பது பச்சை நிறத்தைக் கொண்ட சிக்னலின் பிரகாசம்தான். அதைச் சுற்றி அமைதியும் இருட்டும் ஒரே அளவில் பரவி விட்டிருந்தன.

ஏதோ ஒரு புகைவண்டி அடுத்து வரப்போகிறது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிற மாதிரி அவ்வப்போது மணிச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த நடுங்கச் செய்யும் சத்தம் சமவெளிக்குள் கடந்து சென்றது. அந்தச் சமவெளியின் அமைதி, சத்தத்தை விழுங்கியது.

மணி முழக்கத்திற்குப் பிறகு, இருட்டின் எச்சத்திற்குள் ஒரு சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சமவெளியின் அமைதியை ஊதிப் பறக்கச் செய்து கொண்டு, இருட்டில் மூழ்கிக் கிடக்கும் புகைவண்டி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியின் சத்தம் காதில் விழும்.

புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது அடித்தட்டு வர்க்கத்தினரின் வாழ்க்கை. புகைவண்டி நிலையத்தின் கார்டு லூக்கா ஏழு மைல்கள் தாண்டி வசிக்கும் தன்னுடைய மனைவி, சகோதரன் ஆகியோரிடம் போய்ச் சேர மிகவும் படாதபாடு பட்டான். தனக்கு பதிலாக வேலையைச் செய்யும்படி ஸ்விட்ச்மேன் கோமோஸோவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது, லூக்கா தனக்கு கிராமத்தில் விவசாய நிலம் இருக்கும் விஷயத்தைக் கூறுவதுண்டு.

"விவசாய நிலம்' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கோமோஸோவ் நீண்ட பெருமூச்சை விடுவது காதில் விழும்.

""நல்லது... நீங்கள் விவசாயத்தில் முன்னேறணும்''- அவன் கூறுவதுண்டு: ""விவசாய நிலத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.''

ஆனால் இன்னொரு ஸ்விட்ச்மேன்- அஃபனானி யோகோத்கா ஒரு பழைய பட்டாளக்காரன். அவனுடைய வட்டமான சிவந்த முகத்தில் நிறைய சிறு சிறு உரோமங்கள் இருந்தன. எதையும் தமாஷாகப் பார்க்கும் ஆள் அவன். லூக்கா சொன்னதை அவன் நம்பவில்லை.

""ஒரு விவசாய நிலம்கூட இருக்காது'' - வெறுப்பு நிறைந்த கிண்டலுடன் அவன் கூற ஆரம்பிப்பான்: ""பொண்டாட்டியை எடுத்துக்கொண்டால் மேலும் சில பிரச்சினைகள் இருக்கு. சரி... உன் பொண்டாட்டி எப்படி? அவள் ஒரு விதவையா? இல்லாவிட்டால் அவளுடைய கணவன் ஒரு பட்டாளக்காரனா?''

""டேய்... பறவைக் கூட்டம்... நீ கொஞ்சம் பேசாம இருக்கியாடா?''- லூக்கா கோபத்துடன் கூறுவான்.

யோகோத்காவிற்கு பறவைகள்மீது மிகவும் பிரியம். அதனால் லூக்கா யோகோத்காவை "பறவைக் கூட்டம்' என்று அழைத்தான். அவனுடைய வீட்டிற்குள் நிறைய பறவைகளின் இருப்பிடங்களும் கூடுகளும் இருந்தன. நாள் முழுவதும் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பறவைகளின் ஆரவாரம் கேட்டுக் கொண்டேயிருக்கும். பட்டாளரக்காரன் அவற்றைக் கட்டிப் போட்டான். தித்திரி பறவைகள் சிறிதும் நிறுத்தாமல் "சிப்.. சிரப்..' என்று சத்தம் போட்டுக் கொண்டேயிருந்தன. மைனாக்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டி ருந்தன. நிறைய வண்ணங்களிலும் வடிவங்களிலும் இருந்த கிளிகள் வெளியே தலையை நீட்டி சுறுசுறுப்புடன் ஓசை உண்டாக்கியவாறு அந்த பட்டாளக்காரனின் வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருந்தன. தன்னுடைய ஓய்வு நேரங்கள் முழுவதையும் அவன் பறவைகளுக்காக ஒதுக்கி வைத்தான். பறவைகளுக்காகத் தன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டபோதும், புகைவண்டி நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் மனிதர்களின் விஷயத்தில் அவன் சிறிதும் கவனத்தைச் செலுத்தவில்லை. லூக்காவைப் பாம்பு என்றும்; கோமோஸோவை "காற்று' என்றும் அவன் அழைத்தான். பெண்களைப் பின்தொடரும் அவர்களுடைய கண்களைப் பார்த்து அவன் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டினான். அவனுடைய எண்ணப்படி அவர்களுக்கு சரியான அடி கொடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

ஒரு அன்றாடச் செயல் என்பதைப்போல லூக்கா அவனுடைய சுடக்கூடிய வார்த்தைகளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் பட்டாளக்காரன் எல்லையைக் கடந்து பேசினால், லூக்கா அதற்குக் கடுமையான பதில் கூறுவான்.

""டேய் பட்டாளப் பூனையே! பாதி அழுகிப்போன கிழங்கே! நீ இருந்து என்னடா பிரயோஜனம்? கர்னலின் ஆடுகளை மேய்ப்பதுதானே உன் தொழிலாக இருந்தது? மொத்தத்தில் நீ செய்த வேலை தவளைகளை விரட்டுவதும் முட்டைகோஸ் தோட்டத்திற்கு காவல் காத்ததும்தானே? மற்றவர்களைக் கேலி செய்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? நீ உன்னுடைய தித்திரிப் பறவைகளுடன் நேரத்தைச் செலவிடு. அதுதான் சரி!''

அந்த எதிர்ப்பு வெள்ளத்தை மிகவும் அமைதியாக அனுபவித்துவிட்டு, யோகோத்கா ஸ்டேஷன் மாஸ்டருக்கு முன்னால் போய் நின்று தன்னுடைய குற்றச்சாட்டைக் கூறுவான். தனக்கு அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று கூறி அவர் யோகோத்காவைப் பார்த்து சத்தம் போடுவார். வெளியே வரும் யோகோத்கா தன்னுடைய கட்டுப்பாட்டை விடாமல், அமைதியாக லூக்காவிற்கு நேராக மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு அபிஷேகம் நடத்துவான். அதைக் கேட்டவுடன் லூக்கா கோபத்துடன் காரித்துப்பியவாறு அங்கிருந்து ஓடித் தப்பிப்பான்.

தன்னுடைய சிறு பிள்ளைத்தனமான குணங்களால் அந்தப் பட்டாளக்காரன் எதிர்த்து ஏதாவது சொன்னால், கோமோஸோவ் அதற்கு எதிராக ஏதாவது கூற முயற்சிப்பதுண்டு. அவன் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு கூறுவான்:

""என்ன செய்வது? அவனால் அது இல்லாமல் இருக்க முடியவில்லை! ஒரு வகையான குறும்புத்தனம்... உங்களை நீங்களே எடை போட்டுப் பார்க்க வேண்டாம்.''

பொறுமையை இழந்த அந்தப் பட்டாளக்காரன் ஒருநாள் இப்படிச் சொன்னான்:

""எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்துதான்!''

""எடை போட்டுப் பார்க்க வேண்டாம்... எடை போட்டுப் பார்க்க வேண்டாம்.''

""எதனால் பார்க்கக்கூடாது? ஒரு மனிதனால் இன்னொரு மனிதனை எடை போட்டுப் பார்க்காமல் இருக்க முடியாதே!''

ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி தவிர, இன்னொரு பெண்ணும் அங்கே இருந்தாள். சமையல்காரியான அரீனா என்ற பெண். சுமார் நாற்பது வயதைத் தாண்டிய, மிகவும் அவலட்சண மான தோற்றத்தைக் கொண்ட, தொங்கிக் கிடக்கும் மார்பகங்க ளைக் கொண்ட, சிறிதும் சுத்தமே இல்லாத சரீரத்தைக் கொண்ட ஒரு பெண். அவள் ஆடி ஆடிக்கொண்டே நடப்பாள். அசிங்கமான அவளுடைய முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்களில் பயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய தடிமனான உதடுகள் எல்லா நேரங்களிலும் மலர்ந்து, திறந்தே இருக்கும். ஏதோ இனம் புரியாத, பயத்தின் அடையாளங்கள் அவளுடைய முகத்தில் இருந்தன. எட்டு மாதங்கள்வரை அந்தப் பெண்மீது கோமோஸோவ் குறிப்பிட்டுக் கூறும் வண்ணம் கவனம் செலுத்தியதே இல்லை. அவள் கடந்து செல்லும்போது, அவன் "ஹலோ' என்று கூறுவான். அவள் பதிலுக்கு "ஹலோ' கூறுவாள். முற்றிலும் மரியாதைக்காக மட்டுமே பேசிவிட்டு, இருவரும் அவரவர் வழிகளில் போய்விடுவார்கள். ஆனால் ஒருநாள் கோமோஸோவ் ஸ்டேஷன் மாஸ்டரின் சமையலறைக்கு வந்தான். அவன் அரீனாவிடம் தனக்கு சட்டைகளைத் தைத்துத் தர முடியுமா என்று கேட்டான். அதைச் செய்து கொடுப்பதாக அவள் சொன்னாள்.

""நன்றி''- கோமோஸோவ் சொன்னான்: ""ஒரு சட்டைக்கு பத்து கோபெக் என்ற கணக்கில் மூன்று சட்டைகள் தைக்கணும். அதற்கு நான் உனக்கு முப்பது கோபெக் தரணும் இல்லையா?''

""அப்படித்தான் என்று நினைக்கிறேன்''- அரீனா சொன்னாள்.

கோமோஸோவ் என்னவோ சிந்திக்க ஆரம்பித்தான்.

""நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்?''- தன்னுடைய தாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அவன் கேட்டான்.

""நவாஸான்''- அவள் சொன்னாள்.

""அது ரொம்பவும் தூரத்தில் இருக்குற ஊராச்சே! அங்கேயிருந்து நீ எப்படி இங்கே வந்தே?''

""எனக்குத் தெரியாது. நான் தனி... எனக்கு வேண்டியவர்கள்னு யாரும் இல்லை.''

""அப்படியென்றால் நீ அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததில் ஆச்சரியமே இல்லை''- கோமோஸோவ் நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னான்.

அடுத்த கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

""என்னை நம்பலாம். நான் நிஷ்னி நொவோகோகாத்தைச் சேர்ந்தவன். ஸெர்ஜஷேவ் யுயேஸ்த்.''

சிறிது நேரம் சென்றதும், கோமோஸோவ் சொன்னான்: ""நானும் தனிக்கட்டைதான். எனக்கும் யாரும் இல்லை. ஒருகாலத்தில் எனக்கு வீடும் மனைவியும் குழந்தைகளும் இருந்தாங்க. இரண்டு பிள்ளைகள். மனைவி காலரா வந்து இறந்துவிட்டாள். வேறு ஏதோ நோய் வந்து பிள்ளைகளும் இறந்துட்டாங்க. கவலையைக் கடிச்சு அழுத்திக்கிட்டே நான் வாழ்க்கையை ஓட்டிவிட்டேன். எல்லாவற்றையும் திரும்பவும் தொடங்கினால் என்ன என்று பின்பு ஒருமுறை எனக்குத் தோன்றியது. பிறகு யோசிச்சுப் பார்த்தப்போ அது வேண்டாம் என்று பட்டது. எல்லா விஷயங்களும் ஒரே குழப்பமாக இருந்தது. அதைச் சரிபண்ணி எடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமாக இல்லை. அதற்குப் பிறகு நான் பல திசைகளை நோக்கியும் பயணம் செய்தேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் இதோ... இங்கே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''

""நமக்குச் சொந்தமானது என்று சொல்ல ஒரு இடம் இல்லை என்றால், அந்த வாழ்க்கை எதற்குமே லாயக்கு இல்லாதது''- அரீனா சொன்னாள்.

""எதற்கும் லாயக்கு இல்லாததுதான்... நீ ஒரு விதவையா?''

""இல்லை. நான் கன்னிப்பெண்.''

தன்னுடைய நம்பிக்கையின்மையை மறைத்து வைக்க சிரமப் படாமல் அவன் சொன்னான்: ""அப்படியே இனியும் இருக்கணும்.''

""கடவுள்கிட்ட நான் என்னுடைய உண்மைத்தன்மையை எப்போதும் வெளிப்படுத்துறேன்''- அரீனா சொன்னாள்.

""நீ ஏன் திருமணம் செய்துக்கல?''

""என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? எனக்கு அதற்குத் தேவையான எதுவும் இல்லை. ஆண்கள் சில விஷயங்களை விரும்புவார்கள் இல்லையா? என் முகம் பார்ப்பதற்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு!''

""அது உண்மைதான்!''- தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே கோமோஸோவ் சொன்னான்.

அவன் அவளுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்டான்.

""இரண்டரை.''

""அது சரி... அப்படியென்றால் நான் உனக்கு முப்பது கோபெக் தரணும். இல்லையா? இங்கே பாரு... இன்னைக்கு இரவே அதை வந்து வாங்கிட்டுப் போயிடு. பத்து மணிக்கு வந்தால் போதும். என்ன, வந்திர்றேல்ல? நான் உனக்குப் பணம் தர்றேன். வேறு எதுவும் செய்வதற்கு இல்லாததால் நாம் தேநீர் அருந்துவோம். நாம இரண்டுபேர் மட்டுமே அங்கே இருப்போம். நீ வரணும்.''

""நான் வர்றேன்''- மிகவும் சாதாரணமாகக் கூறிவிட்டு அவள் வெளியேறினாள்.

சரியாகப் பத்து மணிக்கு அவள் அங்கு வந்துவிட்டாள். இரவு விடிவதற்கு முன்பே அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவன் அவளிடம் திரும்பவும் வரவேண்டும் என்று கூறவோ அவளுக்குத் தருவதாகக் கூறிய முப்பது கோபெக்குகளைக் கொடுக்கவோ செய்யவில்லை. தன்னுடைய சொந்த விருப்பத்தால் தான் அவள் வந்தாள். மிகவும் பணிவுடன் எதுவும் பேசாமல் அவள் அவனுக்கு முன்னால் நின்றாள். படுத்துக்கொண்டே அவன் தன்னுடைய கண்களால் அவளைக் கால்களில் இருந்து தலைவரை ஆராய்ச்சி செய்தான்.

சிறிது நேரம் அப்படிப் பார்த்துவிட்டு, சற்று நகர்ந்து படுத்துக் கொண்டு அவன் ""உட்காரு'' என்று சொன்னான். அவள் உட்கார்ந்தவுடன் அவன் சொன்னான்:

""நீ இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். ஒரு உயிருக்குக்கூட இது தெரியக்கூடாது. அப்படிச் செய்தால் நான்தான் மாட்டிக்கொள்வேன். நான் சின்ன வயசு இல்ல. நீயும் சின்ன வயசு இல்ல. புரியுதா?''

அவள் தலையை ஆட்டினாள்.

அவள் புறப்பட்டபோது தைப்பதற்காக ஒரு கை நிறைய உடைகளை அவன் அவளிடம் தந்தான்.

""இந்த விஷயத்தைப் பற்றி ஒரு குழந்தைக்குக்கூட தெரியக்கூடாது'' - அவன் அவளை எச்சரித்தான்.

இப்படி மற்றவர்களின் கண்களில் படாமல் தங்களுடைய உறவை மறைத்து வைத்துக்கொண்டே அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அரீனா அவனுடைய அறைக்கு வந்தாள். ஒரு பிரபுவின், எஜமானின் கம்பீரத்துடன் அவன் அவளை வரவேற்றான்.

""உன் முகம் எதற்கு லாயக்கு?''- அவன் சில நேரங்களில் கிண்டல் செய்தான்.

வருத்தத்துடன் அவள் புன்னகைத்துக்கொண்டே போகும் நேரத்தில், தைப்பதற்காக ஒரு குவியல் ஆடைகளைக் கொண்டுவந்து அவன் அவளிடம் தந்தான்.

வெளியே மிகவும் அரிதாக மட்டுமே அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். எப்போதாவது அந்தப் புகை வண்டி நிலையத்தைச் சேர்ந்த ஏதாவதொரு இடத்தில் சந்திக்க நேர்ந்தால் அவன் அவளிடம் மெதுவான குரலில் கூறுவான்:

""இன்று இரவு வரணும்.''

அவன் கேட்டுக்கொண்டபடி நடப்பதைப்போல அவள் அங்கு செல்வாள். அசிங்கமான அவளுடைய முகத்தில் தெரிந்த அந்த மிடுக்கைப் பார்க்கும்போது, ஏதோ முக்கியமான ஒரு கடமையை நிறைவேற்றுவதைப்போல இருக்கும்.

ஆனால் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது குற்ற உணர்வும் கவலையும் அவளுடைய மனதிற்குள் திரும்பவும் வரும்.

பல நேரங்களில் புகை வண்டி நிலையத்தின் ஏதாவதொரு ஆள் அரவமற்ற மூலையில் உட்கார்ந்துகொண்டோ ஏதாவது மரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டோ அவள் சமவெளியின் பரப்பை நோக்கிக் கொண்டிருப்பாள். இரவு அங்கே வந்து ஆக்கிரமித்த வுடன், கவலை நிறைந்த அதன் அமைதித்தன்மை அவளுடைய இதயத்திற்குள் பயத்தை நிறைத்தது.

ஒருநாள் சாயங்கால நேரப் புகைவண்டி கடந்துபோன பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டின் சாளரத்திற்கு வெளியே வளர்ந்து நின்றிருந்த பாப்லார் மரங்களின் நிழலில் அந்தப் பணியாட்கள் தேநீர் குடிப்பதற்காக உட்கார்ந்திருந்தார்கள். அங்கே உட்கார்ந்து கொண்டுதான் அவர்கள் கோடைகாலத்தில் தேநீர் குடிப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் விரக்தித் தன்மையை விரட்டி விடுவதற்கான மற்றொரு சந்தர்ப்பமாக அது இருந்தது.

அப்போது கடந்து சென்ற புகைவண்டியைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் அன்றும் அவர்கள் தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள்.

""இன்று நேற்றைவிட வெப்பம் அதிகம்''- ஒரு கையால் அந்த காலியான தேநீர்க் குவளையைத் தன்னுடைய மனைவியிடம் நீட்டியவாறு, இன்னொரு கையால் தன்னுடைய நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு அந்த ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்.

""உங்களுக்கு மிகவும் போர் அடிப்பதால்தான் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது''- காலியான தேநீர்க் குவளையை வாங்கிக்கொண்டே அவருடைய மனைவி சொன்னாள்.

""ம்... நீ சொன்னது உண்மையாக இருக்கலாம். நாம சீட்டு விளையாடுவோம். ஆனால் நாம் மூன்று பேர்தானே இருக்கோம்?''

உதவியாளர் தோளை வெட்டியவாறு, கண்களை உருட்டினான்.

""ஷோப்பான் ஹவரின் கருத்துப்படி, சீட்டு விளையாட்டு அதை விளையாடும் மனிதரின் மனரீதியான வறுமையை வெளிப்படுத்துகிறது''- மிகுந்த மிடுக்குடன் அவன் சொன்னான்.

""அருமை!'' - ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்: ""நீ என்ன சொன்னே? மனதின் வறுமை... அடடா... அதைச் சொன்னவர் யார் என்று சொன்னே...''

""ஷோப்பான் ஹவர்... ஜெர்மன் தத்துவச் சிந்தனையாளர்.''

""ஒரு தத்துவச் சிந்தனையாளரா? சரிதான்...''

""இந்த தத்துவச் சிந்தனையாளர்களுக்கு என்ன வேலை? பல்கலைக் கழகத்திலா அவர்கள் வேலை பார்க்கிறார்கள்?''- சோனியா கேட்டாள்.

""நான் எப்படி அதை விளக்கிச் சொல்வேன்? தத்துவச் சிந்தனையாளராக ஆவது என்பது ஒரு வாழ்க்கையின் நோக்கம் அல்ல. அது இயற்கையாகவே நடக்கக்கூடிய ஒன்று என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். யாரும் ஒரு தத்துவச் சிந்தனை யாளராக ஆகலாம். விஷயங்களைப் பற்றி அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவும் அதன் காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஆர்வமாக இருக்கும் மனிதன் ஒரு தத்துவச் சிந்தனையாளனே. மேலும் விளக்கிக் கூறுவதாக இருந்தால், பல்கலைக் கழகங்களிலும் தத்துவச் சிந்தனையாளர்களைப் பார்க்கலாம். வேறு எங்கும்கூட தத்துவச் சிந்தனையாளர்களைப் பார்க்கலாம். ஏன்? ரெயில்வே பணியாட்களுக்கு மத்தியில்கூட...''

""அவர்களுக்கு தாராளமாகப் பணம் கிடைக்குமா? பல்கலைக் கழகங்களில் இருப்பவர்களைப் பற்றி நான் கேட்கிறேன்...''

""அது ஒவ்வொருவருடைய திறமையைப் பொறுத்தது...''

""ஒரு நாலாவது ஆள் கிடைத்தால் நாம் இரண்டு மணிநேரம் சுகமாக நேரத்தைப் போக்கலாம்''- ஸ்டேஷன் மாஸ்டர் நீண்ட பெருமூச்சை விட்டார்.

பேச்சு மீண்டும் வேறு வழிக்குத் திரும்பியது.

நீல வானத்தில் வானம்பாடி நீளமாகப் பாடிக் கொண்டிருந் தது. பாப்லார் மரங்களின் கிளைகளில் குருவிகள் தத்தித் தத்தி விளையாடியவாறு பாடிக் கொண்டிருந்தன. வீட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.

""அரீனா உள்ளேதானே இருக்கிறாள்?''- ஸ்டேஷன் மாஸ்டர் உரத்த குரலில் கேட்டார்.

""ஆமா...''- ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி சொன்னாள்.

""மன ரீதியாக அந்தப் பெண்ணுக்கு என்னவோ தனிப்பட்ட முறையில் இருக்கு. நீ அதை கவனிச்சிருக்கியா நிக்கோலாய் பெட்ரோவிச்?''

""மன பாதிப்பு விரக்தியின் தாய்''- ஒரு முனிவரைப்போல கம்பீரமாக இருப்பதைபோல் காட்டிக்கொண்டு நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.

""அது என்ன?''- ஸ்டேஷன் மாஸ்டர் ஆர்வத்துடன் கேட்டார்.

மிடுக்கான குரலில் அந்த வார்த்தைகள் மீண்டும் உச்சரிக்கப் பட, ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய கண்களைப் பாதியாக மூடிக்கொண்டு அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய மனைவி களைத்துப்போன குரலில் கேட்டாள்:

""நீங்க வாசிக்கிற விஷயங்களையெல்லாம் ஞாபகத்தில் வச்சிருக்கீங்கன்றது அதிசயம் என்று கூறுவதைத் தவிர வேறொன் றும் இல்லை. என்னை எடுத்துக்கொண்டால் நான் இன்று வாசிக் கிற விஷயத்தை நாளைக்கு ஞாபகத்தில் வச்சிருக்க மாட்டேன். நிவாயில் தோன்றிய, பயத்தை ஏற்படுத்துகிற சுவாரசியமான ஒரு விஷயத்தை நான் வாசித்தேன். ஆனால் இப்போது எனக்கு அது ஞாபகத்தில் இல்லை.''

""எல்லாம் ஒரு பழக்கம். அவ்வளவுதான்''- நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.

""இது அந்த ஆள் சொன்னதைவிட நல்ல வாக்கியம். அவருடைய பெயர் என்னன்னு சொன்னே? ம்... ஷோப்பான் ஹவர்''- ஸ்டேஷன் மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார்: ""இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் புதியவை அனைத்தும் பழையவையாக மாறுகின்றன.''

""இல்லாவிட்டால் அதற்கு எதிர்மறையாகக்கூட ஆகலாம். ஏதோ ஒரு கவிஞர் சொன்னதைப்போல, வாழ்க்கை கஞ்சத்தன மானது. எல்லா நேரங்களிலும் பழையதில் இருந்துதான் வாழ்க்கை புதியதைப் படைக்கிறது.''

""சரி... உனக்கு இவை எல்லாம் எங்கேயிருந்து கிடைக்கிறது? சல்லடையில் இருந்து உதிர்வதைப்போல அவை உன்னுடைய நாக்கில் இருந்து வெளியே குதிக்குது.''

ஸ்டேஷன் மாஸ்டர் சத்தம் உண்டாக்காமல் சிரித்தார். அவருடைய மனைவியும் அழகாகச் சிரித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை மறைத்து வைக்க நிக்கோலாய் பெட்ரோவிச் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்தான்.

""விரக்தியைப் பற்றிச் சொன்னது யார்?''

""பராற்றின்ஸ்கி... ஒரு கவிஞர்!''

""இன்னொரு வாக்கியத்தைச் சொன்னது?''

""ஃபொஃபானோவ்... அவரும் ஒரு கவிஞர்தான்.''

""அவர்கள் திறமை படைத்தவர்கள்'' - அந்தக் கவிஞர்களின் திறமையை ஒப்புக் கொண்டதைப்போல ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். தன்னை மறந்த சிரிப்புடன் அந்த வார்த்தைகளை ஒரு பாட்டைப்போல அவர் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

சோர்வு என்ற விஷயம் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது. ஒரு நிமிடம் அவர்கள் அந்தச் சோர்விலிருந்து விடுதலை ஆகி, அடுத்த நிமிடம் இன்னொரு சோர்வின் பிடியில் அவர்கள் போய் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து அங்கு அமைதி வளர, வெப்பக் காற்றிலிருந்து தப்பிப்பதற்காக தங்களுடைய நெஞ்சின்மீது ஊதுவதும், தேநீர் குடிப்பதுமாக- அந்தச் செயல்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்தன.

சமவெளியில் அன்று சூரியனின் இருப்பு மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. ""நான் ஏற்கெனவே அரீனாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா?''- ஸ்டேஷன் மாஸ்டர் தொடர்ந்து சொன்னார்: ""அவள் ஒரு அசாதாரணமான பெண். அவளைப் பார்த்து ஆச்சரியப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஏதோ பேய் பிடித்தவளைப்போல அவள் இருக்கிறாள். சிரிப்பு இல்லை. பாட்டு இல்லை. மிகவும் குறைவாகவே பேசுகிறாள். தரையில் நடப்பட்ட ஒரு செடியைப்போல இருக்கிறாள். ஆனால் அவள் நன்றாக வேலை செய்வாள். லோலியாவைப் பத்திரமா பார்த்துக்குற விஷயத்தில் எதுவும் சொல்வதற்கு இல்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் அவள் திறமைசாலிதான்.''

அரீனா எங்காவது ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருப் பாளோ என்று பயந்து மிகவும் மெதுவான குரலில்தான் அவர் அவை எல்லாவற்றையும் சொன்னார். வேலைக்காரர்களை எந்தச் சமயத்திலும் பாராட்டக்கூடாது என்பதை அவர் புரிந்து கொண்டி ருந்தார். அது அவர்களை அழித்து விடும். உண்மையான விஷயத்தை மறைத்து வைத்திருக்கும் வார்த்தைகளுடன் சோனியா அவளுடைய உரையாடலில் இடையில் புகுந்தாள்.

""இந்த மாதிரியான பேச்சை நிறுத்துங்க. அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கு.''

நிக்கோலாய் பெட்ரோவிச் மெதுவாகப் பாட ஆரம்பித்தான். மேஜைமீது தன் கையில் இருந்த கரண்டியால் அவன் அவ்வப்போது தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

"ஆசீர்வதிக்கப்பட்ட பிசாசே

உன்னுடன் போராடக்கூடிய சக்தி

காதலுக்கு அடிமையான எனக்கு இல்லை.'

""என்ன...? என்ன?'' - ஸ்டேஷன் மாஸ்டர் உணர்ச்சிவசப் பட்டார். ""அவளுடைய விஷயத்தையா சொல்றே?''

""ச்சே... நீங்கள் இரண்டுபேரும் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க.''

அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். அவனுடைய கீழ்தாடை நடுங்கியது. நெற்றியில் இருந்த வியர்வை முன்னால் தெறித்து விழுந்தது.

""வெறும் ஒரு தமாஷான விஷயம் இல்லை அது''- சோனியா சொன்னாள்: ""குழந்தையின் விஷயத்தில் அவளுக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால் இந்த ரொட்டியைப் பாருங்க. கருகிப்போய் புகைந்து... இது இப்படி ஆவதற்கு என்ன காரணம்?''

""சந்தேகமே இல்லை. ரொட்டி இப்படி இருக்க வேண்டியது இல்லை. இதற்காக நீ அவளைத் திட்ட வேண்டும். ஆனால் கடவுள் சத்தியமா நான் இதையெல்லாம் எதிர்பார்க்கலை. அவள் ஒரு மந்த புத்தி கொண்ட பெண் என்றுதான் நினைத்தேன்.''

""சரி... அதற்குக் காரணமாக இருப்பவன் யார்? லூக்கா...? அந்த ராஸ்கலை நான் இன்னைக்கு ஒரு வழி பண்றேன். இல்லாவிட்டால் அந்த யகோத்காவா? அந்தக் கிழட்டு மூஞ்சி!''

""கோமோஸோவ்''- நிக்கோலாய் பெட்ரோவிச் அமைதியான குரலில் சொன்னான்.

""அவனா? அவன் ஒரு பேசாத பூனை ஆயிற்றே! நீ அதை கண்டுபிடிச்சு சொல்லு.''

ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்ததில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு சந்தோஷம் உண்டானது. அவர் அதை நினைத்து நினைத்து சிரித்தார். காதலர்களுக்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அவர்களுக்கிடையே கை மாறக்கூடிய காதல் வசனங்களை நினைத்து அவருடைய சிரிப்பு தொடர்ந்தது.

இறுதியில் அவர் அந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் பெட்ரோவிச் அந்த விஷயத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை முகத்தில் காட்டினான். சோனியா இடையில் புகுந்து என்னவோ சொன்னாள்.

""தாடிக் குரங்குப் பயல்! கொஞ்சம் காத்திருங்க. நான் இப்போது ஒரு தமாஷைக் காட்டுகிறேன். மிகவும் சுவாரசியமான தமாஷ்''- தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்.

அந்த நேரத்தில் லூக்கா அங்கே வந்தான். ""டெலிகிராஃப் ஓசை உண்டாக்குகிறது'' - அவன் சொன்னான்.

""நான் இதோ வர்றேன். நீ போய் 42-ஆம் எண் சிக்னல் கொடு.''

லூக்கா புகை வண்டிக்கான சிக்னலுக்காக மணியை அடித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டரும் அவருடைய உதவியாளரும் அங்கு வந்தார்கள். 42-ஆம் எண் புகைவண்டியை விடலாம் என்ற சம்மதத்திற்காக நிக்கோலாய் பெட்ரோவிச் அடுத்த புகைவண்டி நிலையத்திற்கு டெலிகிராஃப் செய்தி அனுப்பும்போது, ஸ்டேஷன் மாஸ்டர் மென்மையான புன்சிரிப்புடன் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

""நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடப் போகிறோம். என்ன? நமக்கு சிரிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாவது கிடைத்தது மாதிரி இருக்குமே!''

""அது எனக்கு சம்மதம்தான்''- டெலிகிராஃபின் பொத்தானை அழுத்தியவாறு நிக்கோலாய் பெட்ரோவிச் பதில் சொன்னான்.

தத்துவஞானி எப்போதும் அதிகமாகப் பேசக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

அதிகம் தாமதிக்காமலே அவர் எதிர்பார்த்தது மாதிரியே சிரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது.

சோனியாவின் சம்மதத்துடன், கோமோஸோவின் வற்புறுத்த லின்படி அரீனா அந்தப் பழைய சாமான்கள் போடப்பட்டிருந்த அறைக்குள் அன்று படுக்க முடிவெடுத்தாள். அதற்குள் நல்ல ஈரத்தன்மையும் குளிர்ச்சியும் இருந்தன. பழைய மரச்சாமான்களும் டின்களும் அந்த இருட்டில் பயமுறுத்தக்கூடிய வடிவங்களாக மாறின. தனியாக அந்த அறைக்குள் படுத்திருந்தபோது, அரீனா விற்கு பயமாக இருந்தது. கண்களை மலரத் திறந்து வைத்துக் கொண்டு அந்த வைக்கோலால் உண்டாக்கப்பட்ட படுக்கையில் கடவுளைப் பிரார்த்தனை செய்தவாறு அவள் மல்லாந்து படுத்திருந்தாள்.

கோமோஸோவ் வந்தான். ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அவன் அவளை ஒரு வழி பண்ணினான். தளர்வடைந்தவுடன், படுத்து உறங்கி விட்டான். ஆனால் உடனடியாக அரீனா அவனைத் தட்டி எழுப்பினாள்.

""டிமோஃபெ பெட்ரோவிச்! டிமோஃபெ பெட்ரோவிச்!''- பரபரப்புடன் அவள் அழைத்தாள்.

""என்ன?''- பாதித் தூக்கத்தில் இருந்த கோமோஸோவ் முனகினான்.

""அவர்கள் நம்மை இந்த அறைக்குள் போட்டு பூட்டியிருக்கி றார்கள்.''

""என்ன சொன்னே?''- வேகமாக எழுந்துகொண்டு அவன் கேட்டான்.

""வெளியில் இருந்துகொண்டு அவர்கள் இந்த அறையின் கதவைப் பூட்டி இருக்கிறார்கள்.

""உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு''- கோபத்துடன் அவளைத் தள்ளிவிட்டவாறு அவன் முணுமுணுத்தான்.

""அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் போய் பாருங்க''- அவள் சொன்னாள்.

அவன் எழுந்து முன்னோக்கி நடந்தான். பழைய சாமான்களில் மோதியவாறு அவன் கதவை நெருங்கினான். அவன் அந்தக் கதவைப் பிடித்துத் தள்ளிப் பார்த்தான்.

""இவை அனைத்தும் பட்டாளக்காரனின் வேலை''- சிறிது நேர அமைதிக்குப் பிறகு கவலையுடன் அவன் சொன்னான்.

அப்போது வெளியே இருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. ""என்னை வெளியே விடு''- கோமோஸோவ் ஆர்ப்பாட்டம் பண்ணினான்.

""ஏன் விடணும்?''- பட்டாளக்காரனின் குரல்.

""என்னை வெளியே விடுன்னு சொன்னேன்.''

""காலையில் விடுறேன்''- திரும்பி நடந்துகொண்டு பட்டாளக் காரன் சொன்னான்.

""டேய்... நாசமாப் போன பயலே... நான் வேலைக்குப் போகணும்...''- கோமோஸோவ் கெஞ்சினான்.

""உன் வேலையை நான் பார்க்குறேன். இன்னைக்கு இரவு நீ இங்கேயே படுத்திரு.''

பட்டாளக்காரன் அங்கிருந்து கிளம்பினான்.

""அசிங்கம் பிடிச்ச நாயே!''- அந்த ஸ்விட்ச்மேன் பரிதாபமாக அழுதான். ""அவன் என்னை இங்கு அடைத்து மூடியது ஒரு பக்கம் இருக்கட்டும். அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கிறாரே! அவரிடம் அவன் என்ன சொல்லி இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமே! கோமோஸோவ் எங்கே என்று ஸ்டேஷன் மாஸ்டர் கட்டாயம் கேட்பார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வான்?''

""ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லித்தான் அந்த ஆள் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சந்தேகம்''- அரீனா கவலையுடன் முணுமுணுத்தாள்.

""ஸ்டேஷன் மாஸ்டரா?''- கோமோஸோவ் சற்று பயம் கலந்த குரலில் கேட்டான்: ""அவர் எதற்காக இதைச் செய்ய வேண்டும்?''

சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அவன் கோபமான குரலில் சொன்னான்: ""நீ பொய் சொல்றே!''

ஒரு நீண்ட பெருமூச்சுதான் அதற்கான அவளுடைய பதிலாக இருந்தது.

""கடவுளே! என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?''- கதவுக்கு அருகில் இருந்த ஒரு பீப்பாய்மீது அமர்ந்துகொண்டு அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான்: ""நான் வெட்கம் கெட்ட மனிதனாக ஆகிவிட்டேன். அடியே பன்றியின் மகளே... உன்னால தான் இவையெல்லாம் நடக்கின்றன!''

அவளுடைய மூச்சு கேட்ட இடத்தை நோக்கி அவன் தன்னுடைய கையைச் சுருட்டி இடித்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.

சாம்பல் நிறத்தில் இருந்த நிழல்கள் அவர்களைச் சூழ்ந்தன. அந்த நிழல்கள் பலவகைப்பட்ட வாசனைகளைத் தாங்கியிருந்தன. பல பொருட்களின் தாங்க முடியாத வாசனை அவர்களின் மூக்கிற் குள் நுழைந்தது. கதவில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக நிலவின் மெல்லிய கீற்றுகள் உள்ளே புகுந்து கொண்டிருந்தன. தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சரக்கு வண்டியின் சத்தம் உள்ளே வந்து கொண்டிருந்தது.ஸ் ""அடியே... சோலைக் கொல்லை பொம்மை... நீ என்ன எதுவுமே சொல்லாம இருக்கே?''- கூச்சமும் கோபமும் கலந்த குரலில் கோமோஸோவ் சொன்னான்: ""நான் இனி என்ன செய்வது? நீ என்னை வலையில் சிக்கவைத்து விட்டாயே? இனி நீ சொல்றதுக்கு எதுவும் இல்லை. நாசமாப் போனவளே! ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடி. இந்த வெட்கம் கெட்ட செயலை நான் எப்படி சந்திப்பேன்? கடவுளே, இப்படிப்பட்ட உருப்படாத ஒருத்திகூட வந்து மாட்டிக்கொள்வதற்கு நான் என்ன தப்பு செய்தேன்?''

""எனக்கு மன்னிப்பு தரணும் என்று நான் அவர்களிடம் கூறுவேன்''- அரீனா மெதுவான குரலில் சொன்னாள்.

""அதனால்...''

""ஒருவேளை, அவங்க அதை ஏற்றுக்கொள்வாங்க.''

""அதனால் எனக்கு என்ன பிரயோஜனம்? சரி... அவங்க உன்னை மன்னிச்சிடுவாங்க. அதனால் என்ன ஆகப் போகுது? எனக்கு அவமானம் உண்டாச்சா இல்லையா? அவர்களுக்கு முன்னால் நான் ஒரு கேலிப் பொருளாக இருப்பேன். அவ்வளவுதான்.''

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் அவள்மீது கோபப்படவும் அடிக்கவும் செய்தான். நேரம் எந்தவொரு இரக்கமும் இல்லாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் நடுங்கும் குரலில் அவள் சொன்னாள்:

""என்னை மன்னிச்சிடுங்க, டிமோஃபெ பெட்ரோவிச்.''

""கோடரியை வைத்துத்தான் உன்னை மன்னிக்கணும்''- அவன் கத்தினான்.

அந்த அறைக்குள் நிலவிய கனமான வேதனை நிறைந்த பேரமைதி, அந்த இருட்டு என்ற சிறைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு ஆன்மாக்களுக்கு தாங்க முடியாத துயரத்தைத் தந்தது.

""கடவுளே... சீக்கிரம் பொழுது விடியக்கூடாதா?''- அரீனா புலம்பினாள்.

""அமைதியாக இருடீ... நான் உனக்குப் பொழுதை விடிய வைத்துக் காட்டுகிறேன்''- கோமோஸோவ் அவளை பயமுறுத்தி னான். ஒரு அசிங்கமான வார்த்தையையும் அவளைப் பார்த்து அவன் சொன்னான். மீண்டும் அமைதி தந்த வேதனை. பொழுது புலர்வதை எதிர்பார்த்து நேரம் கொடூரமாக நகர்ந்து கொண்டி ருந்தது. அந்த இரண்டு மனிதப் பிறவிகளின் நகைச்சுவைக்கு இடமான சூழ்நிலையை, அந்த ஒவ்வொரு நிமிடமும் குரூரமாக ரசித்துக் கொண்டிருப்பதைப்போல இருந்தது.

கோமோஸோவ் சற்று நேரம் படுத்து உறங்கினான். அந்த கட்டிடத்திற்கு வெளியே சேவல் கூவுவதைக் கேட்டு அவன் கண்விழித்தான்.

""அடியே பன்றியின் மகளே! நீ தூங்குறியா?''- அவன் முணுமுணுத்தான்.

""இல்ல''- அரீனா நீண்ட பெருமூச்சை விட்டாள்.

""எதனால் தூங்கல?''- கிண்டல் பண்ணுவதைப்போல அவன் கேட்டான்.

""டிமோஃபெ பெட்ரோவிச்...''- அரீனா அழுதாள்: ""என்னிடம் கோபப்படாதீர்கள். என்மீது கருணை காட்டுங்க. இயேசுவை மனசுல நினைத்தவாறு என்மேல கருணை காட்டுங்க. நான் ஒரு தனியான பெண். இந்த உலகத்தில் எனக்குன்னு யாரும் இல்லை. நீங்க... நீங்க மட்டும்தான் எனக்குன்னு இருக்குற ஒரே ஆதரவு. என்ன ஆனாலும் நாம...''

""கூப்பாடு போடாதடீ... ஆட்களைச் சிரிக்க வச்சிடாதே''- கோமோ ஸோவ் முரட்டுத்தனமான குரலில் சொன்னான். அவன் அவளு டைய மன எண்ணங்களைக் கேட்டு அப்படி நடந்து கொண்டாலும், சிறிய அளவில் ஒரு மென்மைத்தனம் அவனுடைய மனதில் எங்கோ இருக்கத்தான் செய்தது. ""அமைதியா இருடீ அறிவு கெட்டவளே!''

அதைத் தொடர்ந்து எதுவும் பேசாமல் ஒவ்வொரு நிமிடமும் கடந்து போவதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் நிமிடங்கள் கடந்து சென்றும் எந்தவொரு செயலும் நடக்கவில்லை. இறுதியில் சூரியனின் ஒளிக்கீற்றுகள் கதவின் இடைவெளி வழியாக உள்ளே வந்து எட்டிப் பார்த்தது. வெளியே நடக்கும் காலடிச் சத்தம் கேட்டது. யாரோ கதவிற்கு அருகில் நடந்து வந்தார்கள். சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு, வெளியே நின்ற ஆள் திரும்பிப் போவது கேட்டது.

""நண்பர்களே!''- கோபத்துடன் காரித் துப்பியவாறு அவன் கத்தினான். அமைதி உண்டாக்கிய வேதனையைச் சகித்துக்கொண்டு அவர்கள் காத்திருந்தார்கள்.

""கடவுளே... கருணை காட்டுவாயா?''- அரீனா முணுமுணுத்தாள்.

காலடிச் சத்தம் மெதுவாகக் கேட்டது. பூட்டு திறக்கப்பட்டது. வெளியே நின்று கொண்டு மிடுக்கான குரலில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்:

""கோமோஸோவ்! அரீனாவின் கையைப் பிடித்துக்கொண்டு வா! உடனே... வேகமாக...''

""நீ வா...''- கோமோஸோவ் சொன்னான். குனிந்த தலையுடன் அரீனா கோமோஸோவிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.

""பரவாயில்லை... ஒரு நிமிட சந்தோஷத்திற்காக நான் இதையெல்லாம் சகித்துக்கொள்கிறேன்.''

நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.

கோமோஸோவ் ஒரு காலை முன்னோக்கி வைத்ததும், ஸ்டேஷன் மாஸ்டர் உரத்த குரலில் சொன்னார்: ""புதிய ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள்!''

அப்போது மீதமிருந்த நான்கு பேரும் "ஹீரோ' என்று உரத்த குரலில் சத்தம் போட்டார்கள்.

அரீனா கோமோஸோவின் ஒரு நிழலாகப் பின்தொடர்ந்தாள். இப்போது அவளுடைய தலை உயர்ந்திருந்தது. உதடுகள் மலர்ந்து திறந்து காணப்பட்டன. கைகள் இரண்டும் தொங்கிக் கொண்டிருந் தன. சோகமயமான தன் கண்களால் அவள் தனக்கு முன்னால் இருந்த எல்லாவற்றையும் பார்த்தாள். ஆனால் அவர்கள் அதைப் பார்த்தார்களா என்பது சந்தேகம்தான்.

""ஹ... ஹ... ஹ... அவர்களிடம் முத்தமிடச் சொல்லுங்க.''

மனைவி கணவரிடம் சொன்னாள்.

""தம்பதிகளே... சற்று முத்தமிடுங்கள்''- நிக்கோலாய் பெட்ரோவிச் சத்தம் போட்டுச் சொன்னான். அதைக் கேட்டதும் ஸ்டேஷன் மாஸ்டரால் தன் கால்களைக் கொண்டு நிற்க முடியாமல் போய்விட்டது. அவர் ஒரு மரத்தின் தடியில் சாய்ந்துகொண்டு நின்றார். பாத்திரத்தின் வெளிப்பக்கத்தைத் தட்டி சத்தம் உண்டாக்கினார். விஸில் அடித்தார். பாட்டு பாடுவதற்கு மத்தியில் லூக்கா சிறிய அளவில் நடனம் ஆடினான்.

"அரீனா சமையல் செய்த

முட்டைக்கோஸ் சூப்பிற்கு

அடர்த்தி அதிகமோ

என்றொரு சந்தேகம்'

நிக்கோலாய் பெட்ரோவிச் தன்னுடைய வீங்கிய கன்னங்களைக் கொண்டு சத்தம் உண்டாக்கினான்.

"போம்... போம்... போம்... டுட் டுட் டுட், டுட், போம், போம் டுட் டுட்...'

பாரக்கின் கதவை அடைந்தபோது கோமோஸோவ் காணாமல் போனான். அரீனா வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி நின்று கொண்டிருந்த முரட்டுத்தனம் கொண்ட ஆட்கள், அவளுக்கு எதிராக வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தை களைக் கூறினர். கேலி செய்து சிரித்தார்கள். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்கள். முகத்தைச் சற்றும் அசைக்காமல் அவள் அவர்களுக்கு மத்தியில் அமைதியாக நின்றிருந்தாள்- அவலட்சணம் பிடித்த, சுத்தமில்லாத, பரிதாபத்தை வரவழைக்கச் செய்யும் பெண் வடிவம்...

""மணமகன் அவளை விட்டுவிட்டு ஓடி விட்டான்''- அரீனா வைச் சுட்டிக்காட்டியவாறு ஸ்டேஷன் மாஸ்டர் தன் மனைவி யிடம் கூறினார்.

அரீனா அவரையே வெறித்துப் பார்த்தாள். தொடர்ந்து தண்டவாளங்களைத் தாண்டி அந்த கோதுமை வயல்களை நோக்கி அவள் நடந்து சென்றாள். கூவல், ஆரவாரம் ஆகியவற்றுடன் ஆட்கள் அவளைப் பயணிக்க வைத்தார்கள்.

""போதும்... இனி அவளை வெறுமனே விடுங்க!''- சோனியா சத்தம் போட்டுச் சொன்னாள்: ""திரும்பி வர்றதுக்கு அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. நம்முடைய உணவைத் தயார் பண்ண வேண் டியது அவள்தான் என்ற விஷயத்தை மறந்துவிட வேண்டாம்.''

அரீனா வயல்களுக்கு மத்தியில் நடந்து சென்றாள். அடர்த்தி யாக கோதுமைச் செடிகள் வளர்ந்து நிறைந்திருந்த வயல்களின் எல்லை வரப்பையும் தாண்டி அவள் முன்னோக்கி நடந்து சென்றாள். சிந்தித்துக்கொண்டே சென்றதில் அவள் தன்னையே மறந்துவிட்டதைப்போல நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

""உங்களுக்கு விருப்பம்தானா?''- ஸ்டேஷன் மாஸ்டர் தன்னு டைய உதவியாளர்களிடம் கேட்டார். அவர்கள் புதிய தம்பதிகளைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் சொல்லி விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்திற்கு மத்தியில் அவர்கள் தலையில் அடித் துக்கொண்டு சிரித்தனர். அந்த சந்தர்ப்பத்தில்கூட நிக்கோலாய் பெட்ரோவிச் தன்னுடைய மகத்துவமான வசன முத்துக்களைக் கூறுவதற்கு மறக்கவில்லை.

""சிரிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் சிரிப்பது ஒரு குற்றச் செயல் அல்ல.''

அவன் இந்த வார்த்தைகளைச் சோனியாவிடம்தான் சொன்னான். அதைத் தொடர்ந்து ஒரு முன்னறிவிப்பை வெளியிட வும் அவன் மறக்கவில்லை: ""ஆனால் அளவுக்கும் மேலே சிரிப்பது ஆபத்தானது.''

புகைவண்டி நிலையத்தில் அந்த நாளன்று எல்லாரும் கட்டுப்பாடே இல்லாமல் சிரித்தார்கள். ஆனால் அரீனா திரும்ப வராமல் இருந்ததால், உணவு மிகவும் மோசமாக இருந்தது. அந்த வேலை ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவியின் தோள்மீது விழுந்தது. நல்ல நிலையில் இல்லாத உணவால் அவருடைய ஆர்வத்தைக் கெடுக்க முடியவில்லை. வேலைக்குப் போகும் நேரம் வரை கோமோஸோவ் நின்றிருந்த பெட்டிக்கு உள்ளேயிருந்து வெளியே வரவேயில்லை. அவனிடம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு முன்னால் வந்து நிற்கும்படி தகவல் கூறி அனுப்பப்பட்டது. மாத்வெ யொகோரோவிச் என்ற ஸ்டேஷன் மாஸ்டரை சந்தோஷப்படுத்து கிற மாதிரி நிக்கோலாய் பெட்ரோவிச்சும் லூக்காவும் கோமோஸோவை விசாரணை செய்தார்கள். அவன் எப்படி அந்த "அழகி'யை வசீகரித்தான் என்பதை அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

""நான் இதுவரை கேள்விப்பட்டவைகளிலேயே மிகவும் பரிதாபமான காதலும், வீழ்ச்சியும்''- நிக்கோலாய் பெட்ரோவிச் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னான். அவனுடைய முகத்தில் ஒரு சிறிய புன்சிரிப்பு மலர்ந்தது. அரீனாவை எதிர்த்துப் பேசினால், தன்னால் இந்தக் கிண்டல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று கோமோஸோவ் நினைத்தான்.

""முதலில் அவள் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுவாள்''- அவன் சொன்னான்.

""கண்ணைச் சிமிட்டினாளா? ஹோ... ஹோ... ஹோ... கொஞ்சம் நினைச்சுப் பாரு நிக்கோலாய் பெட்ரோவிச்... அவள் கண்ணைச் சிமிட்டினாளாம்! பிறகு என்ன வேணும்?''

""அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தாள். அப்போ நான் சொன்னேன், "அடியே.. உனக்கு என் மகள் வயதுதான் இருக்கும்' என்று. அதற்கு அவள் இதற்கு இப்படி பதில் சொன்னாள்- "வேணும்னா உங்களுக்குத் தேவையான சட்டைகளை நான் தைத்துத் தருகிறேன்' என்று.

""ஆனால், முக்கியமான விஷயம் ஊசி இல்லை''- நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான். ஒரு விளக்கம் என்பதைப்போல ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவன் இதையும் சேர்த்துச் சொன்னான்: ""நெக்ரோஸோவின் கவிதையில் ஒரு வரி இது.''

""கோமோஸோவ் கதையைத் தொடரட்டும்...''

கோமோஸோவ் தொடர்ந்தான். அவனுடைய முயற்சிகள் முதலில் மிகவும் சிரமங்கள் நிறைந்தனவாக இருந்தன. படிப்படியாகத் தன்னுடைய பொய்களின் பாதிப்பால் அவன் மிகவும் சர்வ சாதாரணமாக அந்தக் கதையைத் தொடர்ந்தான்.

அதே நேரத்தில் அவள் அந்த வயலில் கிடந்தாள். கோதுமை என்ற கடலுக்குள் அவள் புகுந்திருந்தாள். சிறிதும் அசையாமல் அவள் அந்த வயலுக்கு மத்தியில் கிடந்தாள். வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாது என்ற சூழ்நிலை வந்ததும், திரும்பிப் படுத்தாள். கைகளால் தன்னுடைய முகத்தை எரித்துக் கொண்டிருந்த சூரியனிடமிருந்தும் பிரகாசமான ஆகாயத்திட மிருந்தும் மறைத்துக் கொண்டாள்.

அவமானத்தால் காயம்பட்ட அந்தப் பெண்ணுக்கு கோதுமைச் செடிகளின் முணுமுணுப்பு ஆறுதலாக இருந்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் காதுகள் அடைத்துப் போகிற அளவிற்கு சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்த பூச்சிகளின் சத்தமும் அவளை பாதிக்கவில்லை. அன்று மிகவும் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. அவள் பிரார்த்தனை செய்ய முயற்சித்தாள். ஆனால் அவளுக்குப் பிரார்த்தனை எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. கிண்டல் பண்ணிக் கொண்டிருந்த ஏராளமான கண்கள் அவளுடைய கண்களுக்கு முன்னால் நடனமாடிக் கொண்டிருந்தன. லூக்காவின் முரட்டுத்தனமான குரலில் உள்ள பாட்டும் விஸிலும், செம்புப் பாத்திரத்தின் வெளிப்பகுதியில் தாளம் போடும் சத்தமும், ஆட்களின் கேலிச் சிரிப்பும் அவளுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன. இந்த ஆரவாரங்களும் வெப்பமும் அவளுடைய நெஞ்சை அழுத்தி நெறித்தன. ரவிக்கையை அவிழ்த்து அவள் தன்னுடைய மார்பகத்தை சூரியனுக்கு நேராக நிர்வாணமாகக் காட்டினாள். சுவாசிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் அவள் அப்படிச் செய்தாள். வெயில் அவளுடைய மேற்தோலைச் சுட்டுப் பொசுக்கியது. தன்னுடைய மார்பகத்திற்குள் என்னவோ சுடுவதைப்போல அவளுக்குத் தோன்றியது.

"கடவுளே! என்னிடம் கருணை காட்டு...' என்று அவ்வப்போது அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், கோதுமைச் செடிகளின் முணுமுணுப்பும், புற்களின் முனகல் சத்தமும் மட்டுமே அதற்கு பதிலாக இருந்தன. கோதுமைப் பூக்களுக்கு மேலே அவள் தன்னுடைய தலையை உயர்த்தினாள். அவற்றின் பொன்னொளியும், புகைவண்டி நிலையத்தைத் தாண்டி உயர்ந்து நின்று கொண்டிருக்கும் நீர்த் தொட்டியின் கறுத்த தோற்றமும், புகைவண்டி நிலையக் கட்டிடத்தின் மேற்கூரையும் அவளுக்கு நன்கு தெரிந்தன. அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட சமவெளியை மூடிக்கொண்டிருந்த நீல வானத்தின் பரப்பைத் தவிர வேறு எதுவுமே அங்கு இல்லை. இந்த உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பதைப்போலவும், தான் அதன் நடுவில் படுத்திருப்ப தாகவும், அந்தத் தனிமையின் கனமான சுமையைப் பங்குபோட யாரும் வரப்போவது இல்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. யாரும்... எந்தச் சமயத்திலும்... இல்லை.

சாயங்கால நேரம் ஆனபோது தன்னுடைய பெயரை யாரோ உரத்த குரலில் அழைப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.

""அரீனா... அரீனா... திரும்பி வா.''

லூக்கா, பட்டாளக்காரன் ஆகியோரின் சத்தம்தான் அது என்பதை அவள் புரிந்துகொண்டாள். மூன்றாவதாக ஒரு மனிதனின் சத்தத்தைக் கேட்க அவள் விரும்பினாள் என்றாலும், அவள் அதைக் கேட்கவில்லை. அந்தச் சத்தம் கேட்காமல் போனபோது அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர் அவளுடைய அசிங்கமான கன்னங்கள் வழியாக மார்பகங்களில் இறங்கியது. வெப்பத்தைத் தாங்க முடியாததால் அவள் தன்னுடைய மார்பகங்களை பூமியுடன் சேர்த்து வைத்திருந்தாள். பிறகு திடீரென்று அவள் அழுகையை நிறுத்தினாள். அழுவதிலிருந்து யாராவது தன்னை விலக்கமாட்டார்களா என்று நினைத்துத்தான் அவள் அப்படிச் செய்தாள்.

இரவு ஆனபோது, அவள் எழுந்து மெதுவாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

புகைவண்டி நிலையக் கட்டிடத்தை நெருங்கிய அவள், அதன் சுவரில் சாய்ந்து, அந்த கோதுமை வயலையே பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு சரக்கு வண்டி புகைவண்டி நிலையத்தில் வந்து நின்றது. பட்டாளக்காரன் அந்த வண்டியில் இருந்த கார்டிடம் அவளுடைய வெட்கம் கெட்ட கதைகளை விளக்கிக் கூறிக் கொண்டிருப்பதையும், அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதையும் அவள் கேட்டாள். பரந்து கிடந்த அந்த வயலில் அவர்களுடைய சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்டது. அணில்களின் ஒரு கூட்டம் அந்த உரத்த சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு, அந்த வயலிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தன.

""கடவுளே, என்மீது கருணை காட்டு...''- என்று நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவள் தன்னுடைய சரீரத்தை அந்தச் சுவர்மீது சாய்த்தாள். ஆனால் அந்த பெருமூச்சுக்கள் அவளுடைய இதயச் சுமையைக் குறைக்கவில்லை.

பொழுது புலர்ந்தபோது, மேலே இருந்த அறைக்குச் சென்று துணிகள் தொங்க விடப்படும் உத்திரத்தில் அவள் தூக்குப் போட்டுத் தொங்கினாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, கெட்டு அழுகிப்போன பிணத்தின் தாங்க முடியாத நாற்றம் ஆட்களின் கவனத்தை அந்தப் பக்கமாகத் திருப்பி விட்டது. முதலில் அவர்கள் திகைத்துப் போனார்கள். குற்றவாளி யாராக இருக்கும் என்று பின்னர் அவர்களுக்குள் விவாதித்தார்கள். கோமோஸோவ்தான் குற்றவாளி என்று நிக்கோலாய் பெட்ரோவிச் உறுதியான குரலில் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பெட்ரோவிச்சின் முகத்தில் ஒரு அடி கொடுத்தார். வாயைத் திறந்தால் இனியும் அடி கிடைக்கும் என்று அவர் பெட்ரோவிச்சிடம் சொன்னார்.

போலீஸ்காரர்கள் வந்தார்கள். விசாரணை ஆரம்பமானது. அரீனாவிற்கு மனக்கவலை என்ற நோய் இருந்தது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். சமவெளியின் ஏதோ ஒரு மூலையில் அந்த இறந்த உடலைப் புதைக்கும்படி ரெயில்வே தொழிலாளர் களிடம் அவர்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவு செயல்படுத்தப் பட்டது. அமைதியும் வழக்கமான செயல்களும் அந்த புகைவண்டி நிலையத்திற்கு மீண்டும் வந்தன.

மீண்டும் அந்தப் புகைவண்டி நிலையத்தைச் சேர்ந்த மனிதர்கள் நான்கு நிமிட நேரத்திற்குத் தங்களுடைய சோர்வும் வெறுப்பும் தனிமையுணர்வும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அந்த வெப்பத்திலும் சோர்விலும் புகைவண்டிகள் கடந்து போவதை அவர்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

வசந்த காலத்தில் சமவெளியிலிருந்து குளிர்ந்த காற்று ஓசை எழுப்பியவாறு கடந்து வந்தது. அது அந்த சிறிய புகைவண்டி நிலையத்திற்கு மேலே பனியையும் தூசியையும் ஓசைகளையும் சிதறிவிட்டது. அங்கு வாழ்க்கை வழக்கம்போல தனிமைப்பட்டுப் போயிருந்தது.