செந்தமிழ் வளம் - 1
ஒளவை துரைசாமி
செந்தமிழ் வளம் - 1


1. செந்தமிழ் வளம் - 1
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. பண்டைத் தமிழகம் - I
7. பண்டைத் தமிழகம் - II
8. எழுதா இலக்கியம்
9. குணமாலை
10.இளங்கோ கண்ட இயற்கை
11.நந்தா விளக்கு
12.தமிழரசில் புலவர் பணி
13.முல்லை
14.புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம்
15.முதனூலா? மொழி பெயர்ப்பா ?
16.சங்ககாலப் பரணர்கள்
17.தமிழகத்தில் தமிழ்நிலை
18.முல்லை-ஒரு சொற்பொழிவு
19.முடத்தாமக் கண்ணியார்
20.காதல் வாழ்வு
21.மறுப்பு முறை
22.நற்றிணைக் கடவுள் வாழ்த்து
23.கல்லாடனார்
24.சொகினனார், சொகிரனார்
25.கிழான்
26.தமிழரசு நீதி வழங்கிய திறம்
27.தொல்காப்பியச் சொல்லதிகாரக்குறிப்பு ஆராய்ச்சி
28.மதுரைக்காஞ்சியாராய்ச்சி
29.நன்னனும் பரணரும்
30.சிந்தாமணியின் செந்தமிழ் நலம்
31.மனைகெழு மடந்தை
32.ஒளவையாரும் பாரிமகளிரும்
33.நாடக வழக்கு
34.அருள் இயக்கம்
35.சங்க இலக்கியத் தனிச்சிறப்பு
36.மணிமேகலையில் அழகுணர்ச்சி
37.அறுவடையில் நிலவும் அருள்
38.சிலப்பதிகாரமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளும்
39.இன்ப நிலை
40.ஓர் திருமுகம்
41.தேம்பாவணி
42.தமிழுக்கு ஆக்கமாகும் பணிகள்
43.அகநானூற்று உரை
44.இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்
45.தமிழ் இலக்கியத்தில்
46.தமிழிசைப்பாடல்
47.கவிதைகளின் அணியமைப்பு
48.சங்ககாலத் தமிழ்மகன்


செந்தமிழ் வளம் - 1

 

ஒளவை துரைசாமி

நூற் குறிப்பு
  நூற்பெயர் : செந்தமிழ் வளம் - 1 (கட்டுரைகள்)
  தொகுப்பு : உரைவேந்தர்தமிழ்த்தொகை - 24
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 496 = 520
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 325/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

பண்டைத் தமிழகம் - I


தமிழகத்து எல்லைகள்
பண்டைத் தமிழறிஞர் தம்முடைய பாக்களில் தமிழ் நாட்டைத் ‘தமிழகம்’ என்று குறித்தனர். தொல்காப்பியத்துக்குப் பாயிரம் உரைத்த பனம் பாரனார், இதனைத் ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று சிறப்பித்தார். இடைக்காலத்தே நிலவிய திருமூலர் ‘தமிழ் மண்டலம்’ என்று குறித்தாா. பிறநாட்டினருள் கங்கை பாயும் வங்க நாட்டினர் ‘தமிழகம்’ என்று குறிக்கவும், ஆரிய நாட்டினர் ‘திராவிடம்’ என்று செப்பினர். வங்க நாட்டில் பழங்காலத்தில் தமிழுக்கிருந்த தொடர்பால், ‘தமிளிக்’ என்று பெயருடைய மாவட்டம் ஒன்று இருந்து வருவது யாவரும் நன்கறிந்தது.

மேலே கண்ட பனம்பாரனார், பண்டைத் தமிழகத்துக்கு எல்லையும் குறித்தார். “அது வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்பது. பின் வந்த நூல்கள் பலவும் இந்த எல்லைகளையே வற்புறுத்தின. இதனால், பண்டைத் தமிழகத்துக்கு வடக்கெல்லை வேங்கடம் என்பதும், தெற்கெல்லை குமரி என்பதும் தெளிவாயின. கிழக்கிலும் மேற்கிலும் கடலாதலால், அவ்விரண் டெல்லைகளும் கூறப்படவில்லை.

வடவெல்லை
தமிழகத்தின் வடவெல்லையானதால் வேங்கடம், ‘வட வேங்கடம்’ எனப்பட்டது. வேங்கடம் இப்போதுள்ள சித்தூர் மாவட்டத்துக்கு வடக்கெல்லையாகவும் நெல்லூர் மாவட்டத்துக்கு மேல் எல்லையாகவும் நிற்கும் நெடிய மலைத்தொடராகும்; இது சித்தூர் மாவட்டத்தில் மேற்கிலிருந்து கிழக்காக ஓடிப் பின் வடக்கு நோக்கி நெல்லூர் மாவட்டத்தின் மேலெல்லையாய் வடபெண்ணைக் கரைக்கு அப்பாலும் சிறிது தொடர்ந்து சென்றுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் இப்போது அதற்கு வேறு பெயர்* கூறப்படினும், பழம்பெயர் வேங்கடம் என்பதை அவ்வட்டத்தில் சிறந்து விளங்கும் ‘வேங்கடகிரி நகரம்’ இருந்து காட்டிக்கொண்டு உளது. நெல்லூர் மாவட்டத்து வடபெண்ணைக் கரைக்கும் செங்கற்பட்டு மாவட்டத்துத் திருவொற்றி யூர்க்கும் இடையில் உள்ள பகுதிகளில் நிற்கும் பெருங்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் நூற்றுக்குத் தொண்ணூா று தமிழில் இருப்பதை ‘நெல்லூர்க் கல்வெட்டுக்கள்’ என்ற நூற்றொகுதிகள் ** காட்டுகின்றன. இவற்றால் வடவேங்கடம் எனப்படும் வடவெல்லை நெல்லூர் மாவட்டத்துத் தென்பகுதி முழுவதையும் தன்கண் அடக்கிக் கொண்டிருப்பது தெரியவரும்.

** தென் எல்லை**
‘தென் குமரி’ என்ற தென்னெல்லையைப் பற்றி அறிஞர் பலர் ஆராய்ச்சி செய்தனர். இன்று குமரிப் பகுதி கடலைத் தனக்குத் தென்னெல்லையாகக் கொண்டிருப்பது தெரிந்த செய்தியாகும். கடலை எல்லையாகக்கொண்ட ஏனைக் கிழக்கு மேற்குகளைப் போலக் குமரியும் கடலை எல்லையாகக்கொண்டு இருந்திருக்குமாயின், பனம்பாரனார், தென்குமரி என்று பெயர் குறியாமல், ‘வடவேங்கடம் தென்கடல் ஆயிடை’ என்று குறித்திருப்பர். அவ்வாறு கூறாமையால், அவர் காலத்தே குமரிக்குத் தெற்கில் நிலப்பகுதி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதினர். அதன் மேல் சிலப்பதிகார உரை, இறையனார் களவியலுரை என்ற பழைய உரை நூல்களை ஆராய்ந்த போது, குமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பகுதியிருந்தும், அஃது ஒரு காலத்தே கடல் கொள்ளப்பட்டதும் தெரியவந்தன. தஞ்சை மாவட்டத்துப் பகுதியில காவிரிப்
பூம்பட்டினம் கடலுக்கு இரையானதும், நெல்லூர் மாவட்டத்தில் பவத்திரி நகரம் பௌவத்திற் படிந்ததும் பழைய நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் வெளிவந்து, குமரிக்குத் தென் பகுதி கடல் கொள்ளப்பட்டதென்ற உரை முடிவை வற்புறுத்துவனவாயின. இந்நிலையில், மேலை நாட்டு அறிஞர் சிலர் கடல்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து, குமரிக்குத் தெற்கிலுள்ள கடலில் ஒரு பெரிய நிலப்பகுதி மறைந்துவிட்ட தென்றும், அதனிடையே நின்ற உயர்ந்த பகுதிகளே இன்று இலங்கையும் பிறவுமாகிய தீவுகளாகக் காட்சியளிக்கின்றன என்றும் துணிந்துரைத்தனர்.

கடல்கொண்ட நாட்டைப்பற்றிய குறிப்புக்களை நோக்கிய
போது, வேங்கடம்போலக் குமரியும் ஒரு மலை என்பதும், அதற்குத்தெற்கில் பரந்துகிடந்த நாட்டின் தென்பால் பஃறுளி என்னும் ஆறு ஓடிற்றென்பதும், குமரிக்கும் பஃறுளிக்கும் இடையில் நாற்பத்தொன்பது நாடுகள் ஏழ்பனைநாடு, ஏழ்காரை நாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்முன் பாலைநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்தெங்கநாடு என ஏழெழாக வகுப்புண்டிருந்தன என்பதும் புலனாயின. அந்த ஏழெழுநாடும் கடல் வயிறு புகுந்தன வாயினும், அவற்றின் உயர்நிலைப்பகுதி மாத்திரம் இன்று ஒரு தீவு வடிவில் இருந்துவருகிறது. ‘ஏழெழு நாடு’ என்ற அப்பழைய தொகைப்பெயர் திரிந்து ‘ஈழ நாடு’ என்ற பெயராய் மருவி நிலவுகிறது என்றுகூறுதல் பொருத்தமாகும். ஏழெழு நாட்டின் ஒருபகுதியான ‘ஏழ்பனைநாடு’ நாளடைவில் மருவி ‘யாழ்ப்பாண நாடு’ என்று ஆகி, இன்றும் நின்று விளங்குகிறது. ஏழெழுநாட்டின் வட வெல்லையாய் நின்ற குமரிமலை, கடல்கோட்குப்பின் தமிழகத்தின் தென்னெல்லையாயிற்று. பல்லாண்டு கட்குப் பின்னர்க் குமரிமலையும் கடலுள் ஆழவே, இன்றுள்ள குமரிமுனை தமிழகத்தின் தென் எல்லை ஆயிற்று, ஆகவே, பின் வந்தோர், “வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்று, இந்நான்கெல்லை தமிழது வழக்கே” என்று தமிழகத்துக்கு எல்லை வகுத்து உரைப்பாராயினர். ஆகவே, தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட பண்டைத் தமிழகம் ன்பது வடக்கே வேங்கடத்தையும் ஏனை மூன்று பக்கங்களிலும் கடலையும் எல்லையாகக் கொண்ட நிலப்பகுதி எனத் தெளிகின்றோம். இதனைச் ‘செந்தமிழ் நிலம்’ என்றும், ‘செந்தமிழ் நாடு’ என்றும் சான்றோர்கள் பாராட்டிக் கூறுவது மரபாயிற்று.

** தமிழகத்து மலைகள்**
இதுகாறும் கண்டுதெளிந்த பண்டைத் தமிழகத்தில் சிறப்புடைய மலைகள் சிலவும் ஆறுகள் சிலவும் பண்டைத் தமிழ் நூல்களாகிய புறநானூறு முதலிய தொகை நூல்களால் அறிகின்றோம். மலைகள் வடவெல்லையாக நிற்கும் வேங்கடம் ஒழிய, மேலைக் கடற் கரைப் பகுதியில் ஒரு நெடிய மலைத்தொடர் உளது. அதற்கு இருபத்தைந்து கல் இடையகலமுள்ள பிளவு ஒன்று உண்டு. அதன் கிழக்கு வாயிலாகப் ‘பாலைக்காடு’ என்ற பேரூர் இருக்கிறது. அதனால் அப்பிளவு பாலைக்காட்டுக் கண்வாய் எனப்படுவது வழக்கம். இரண்டு - மூன்று நூற்றாண்டுக்கு முன் தோன்றிய கல்வெட்டுக்கள் பாலைக்காட்டைக் “பாலைக்கோடு” என வழங்கியிருக்கின்றன. பாலைக் காட்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மலைத் தொடர் ‘வானமலை’யெனவும், தெற்குநோக்கிக் குமரிவரை செல்வது ‘தென்பொருப்பு,’ ‘தென்னம் பொருப்பு’ எனவும் வழங்கின. வானமலையின் வடபகுதியில உள்ள ஒருமலை ‘குதிரைமலை’ என்பது. கடற்கரையோரத்தில் நிற்கும் ஒருகுன்று ‘ஏழில் மலை’ என வழங்கியது. குதிரை மலை குதிரை மூக்கு (Gudramukh) என்றும், ஏழில்மலை எலிமலை (Mount Eli) என்றும் இப்போது பெயர் கூறப்படுகின்றன. தென்பொருப்பில் நேரிமலை, அயிரைமலை, பொதியில்மலை, நாஞ்சில்மலை முதலியன உண்டு. நாஞ்சில்மலை இடையில் ‘நஞ்சில்மலை’யாகி, ‘மருத்துமாமலை’ யென்ற பெயருடன் இருக்கிறது. ‘கவிரம்’ என்று பண்டைத் தொகைநூல் குறிக்கும்மலை, பொதியில்மலைப் பகுதியில் பாவநாச மேலணை மருங்கில் ஒன்றாக வுளது. காவிரியின் வடகரையில் கொல்லி மலையும், அதற்குக் கிழக்கில் திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் விச்சிமலையும் உள்ளன. ‘விச்சிமலை’ இப்போது ‘பச்சைமலை’ யென்ற பெயர் தாங்கிக் கொண்டு நிற்கின்றது. ‘பவளமலை’ என்பது வடவார்க்காட்டு மாவட்டத்தில் அதற்கு மேலெல்லையாய்ச் ‘சவ்வாதுமலை’ என்ற பெயருடன் இருந்து வருகிறது.

** தமிழகத்து ஆறுகள்**
இம்மலைகளிலிருந்து தோன்றும் ஆறுகள் சில பண்டைத் தமிழகத்துக் குறிப்புக்களில் உள்ளன. அவற்றுள், பெண்ணை, காவிரி, வையை, பேரியாறு, வானியாறு என்பவை சிறந்தனவாகும். பெண்ணையாறு மைசூர் நாட்டில் தோன்றிச் சேலம், வடவார்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் ஓடிக் கடலோடு கலந்து விடுகிறது. காவிரி, வானமாமலையில் தோன்றி, மைசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்ந்து கடலோடு கலக்கின்றது. வையை தென்பொருப்பில் தோன்றி மதுரை, இராமநாதபுர மாவட்டங்களின் வழியாகக் கடலை அடைகிறது. பேரியாறு வையை போலவே தென்பெருப் பிடத்தே தோன்றிக் திருவிதாங்கூர், கொச்சி என்ற நாடுகளின் வழியாக ஓடி, மேலைக்கடலை மேவுகின்றது. வானியாறு வானமா மலையின் வடபகுதியில் தோன்றி தென்கன்னட மாவட்டத்துக்கு வடவெல்லையாய் மேற்கே சென்று மேற்குக் கடலில் விழுகின்றது. ‘இந்த வானியாற்றின் நீர் மிக்க தெளிவுடையது; நீர் மிகப் பெருகி வரும்போதும், நீராடும் மகளிர் காதணியாகிய பொற்குழை அதன் கண் வீழ்ந்தால் அது கிடக்கும்மிடத்தை அந்த நீரின் தெளிவு காட்டிவிடும்’ என்னும் கருத்துப்பட,

“கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்துவரு வானி”

என்று சான்றோர் தமிழ்நலம் தோன்றப் பாடியுள்ளனர்.

இனி, இவற்றின் வேறாகக் கீழ்க்கடலில் வெள்ளாறு, தண்ணான் பொருநை என்ற ஆறுகளும் மேலைக்கடலில் பொன்வாணி. பொருநை என்பனவும் சென்று சேர்கின்றன. பூவானி, ஆன்பொருநை என்ற ஆறுகள் காவிரியோடு கலந்து கொள்கின்றன.

பண்டைத் தமிழகம் இந்தச் சிற்றாறுகட்குப் பெயரிட்டிருக்கும் திறத்தைச் சிறிது அறிதல் வேண்டும். தமிழகத்தில் ஓடும் சிறப்புடைய ஆறுகள் பலவும் மேலைமலைத் தொடரில் தோன்றுவன. அதன் வடபகுதியான வானமாமலையில் தோன்று வனவற்றுக்கு வானி என்பது பெயர். வானமா மலையின் வடகோடியில் தோன்றி மேலைக்கடலை அடையும் ஆற்றை ‘வானி’ என்றாற் போல, அதன் தென்கோடியில் தோன்றிப் பாலைக்காட்டுப் பிளவு வழியாகச் சென்று மேலைக் கடலோடு கூடும் ஆற்றுக்குப் ‘பொன்வானி’ என்பது பெயர். இப்போது வானியாறு ‘சிராவதி’ என்ற பெயரும் பொன்வானி ‘பொன்னானி’ என்ற பெயரும் கொண்டுள்ளன. இடையில் தோன்றுவன கிழக்கே ஓடிக்காவிரியில் கலந்து கொள்கின்றன. அவற்றுள் வடக்கில் மைசூர் நாட்டில் ஓடி வருவது ‘கீழ்ப்பூவானி’ எனப்படும்; ஆயினும், அதனை இன்று கெப்பானி என்பர். மற்றொன்று ‘பூவானி’ என்பது; அஃது இப்போது ‘பவானி’ என மருவிக் கோயம்புத்தூர் வட்டத்தில் காவிரியோடு கலந்துவிடு கிறது. கோயம்புத்தூர் நகர்க்கு அண்மையிலோடும் ‘நொய்யல்’ என்னும் ஆறு பண்டைத் தமிழ் நூல்களில் ‘காஞ்சி’யென்ற பெயர் பூண்டிருந்தது.

இனி, மேலைமலையின் தென்பகுதியான பொருப்பிடைத் தோன்றும் சிறப்புடைய ஆறுகள் பொருநை என்ற பெயர் கொண்டு நிலவின. மேலைமலையில் தோன்றி மேற்கே சென்று கடலகம் புகுந்த ஆற்றுக்குப் ‘பொருநை’ என்பது பெயர். அது முடியும் இடம் பொருநைத்துறை என வழங்கிற்றாயினும், இன்று அது ‘திருப்புனித் துறா’ என உருத்திரிந் துள்ளது. கிழக்கே ஓடிய சிற்றாறு ‘ஆன்பொருநை’ என்ற பெயருடன் சென்று காவிரியில் கலந்து கொள்வதாயிற்று. ஆன்பொருநை இப்போது ஆம்பிராவதி, அமராவதி என்ற பெயர் பெற்றுள்ளது. இவ்வாறே தண்ணான் பொருநை என்னும் ஆறு ‘தாம்பிரபரணி’ என மருவித் திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்து கீழ்க்கடலைச் சேர்ந்து விடுகிறது.

மேலே கூறிய மலைகளையும் ஆறுகளையும் எல்லையாகக் கொண்டே பண்டைத் தமிழ் மக்கள் நாடுகளை வகுத்துக்கொண்டனர். தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் கிடந்த பகுதி பாண்டிநாடாகும். வெள்ளாறு இப்போது புதுக்கோட்டைக்கு அண்மையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் கலந்து விடுகிறது. வெள்ளாற்றுக்கும் தென்பெண்ணையாற்றுக்கும் இடை யிலுள்ளது சோழநாடு. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடு. தொண்டை நாட்டுக்கு மேலெல்லையாக வேங்கடமும் பவளமலையும் நின்றாற் போலச் சோழநாட்டுக்கு மேலெல்லையாக விச்சிமலையும் கொல்லிமலையும் ஆன்பொருநையாறும் விளங்கின. தெற்கில் வெள்ளாற்றுடன் சிறுமலையும் எல்லையாயிற்று.

மேலைக்கடற்கரையில் தெற்கில் கோட்டாற்றுக்கும் வடக்கில் வானியாற்றுக்கும் இடையே கிழக்கே மேலைமலைத்தொடரை எல்லையாகக் கொண்டு சேரநாடு விளங்கிற்று. வானியாற்றுக்கும் பொன்வானியாற்றுக்கும் இடையிலுள்ளது குட நாடு என்றும், பொன்வானிக்கும் கோட்டாற்றுக்கும் இடைப்பட்ட நாடு குட்டநாடு என்றும் பண்டைநாளில் பெயர் பூண்டிருந்தன. கோட்டாறு இப்போது கொல்லத்தாறு என வழங்குமாயினும், அதன் கரையிலுள்ள கொட்டாரக்கரா எனப்படும் கோட்டாறு பழம் பெயரை நினைப்பித்துக் கொண்டு நிற்கிறது. சேரநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ள நாட்டைக் கொங்கு நாடு என்றும், சேர நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையிலுள்ள நாட்டைத் தகடூர் நாடு என்றும் பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டை நாட்டுக்கு வடமேற்கிலும் தகடூர் நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது புலி நாடு என்றும், அதன் மேலைப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின. ‘புல்லிநாடு’ என்ற பழம் பெயர் ‘புலிநாடு’ என்றும் ‘புன்னாடு’ என்றும் மருவின.

பண்டைத் தமிழகம் - II


** சேரநாடு**
இதுகாறும் கண்ட சேரபாண்டிய சோழ நாடுகளை ஆண்ட தமிழ் வேந்தர்கள் முறையே சேரர், பாண்டியர், சோழர் என்ற பெயருடன் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். அம்மூவரையும் இந்த முறையிலேயே பண்டைச் சான்றோர்களும் நிறுத்திக் கூறியுள்ளனர். சேரருக்குப் பனந்தோடும், பாண்டியருக்கு வேம்பும், சோழருக்கு ஆத்தியும் அடையாள மாலைகளாகும். அவற்றைக் கூற வந்த தொல்காப்பியம், “போந்தை வேம்பே ஆர்என வரூஉம், மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என முறைசெய்து காட்டுகின்றது. இவ்வேந்தர்களின் குணஞ் செயல்களை குறிக்கும் புறநானூறு என்ற பண்டைத் தமிழ் நூலும் இவர்கட்குரிய பாட்டுக்களை இம்முறை யிலேயே தொகுத்துள்ளது. தகடூர் நாட்டைச் சேரர் குடியிற் பிரிந்து போந்த அதியமான்கள் என்ற வேந்தர் பண்டை நாள் முதல் நெடுங்காலம் ஆட்சி செய்தனர். கொங்கு நாடுமட்டில் சேரர் முதலிய மூவருள் வலியுடையோர் ஆட்சியில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. சேரர் ஆட்சியில்தான் அது நெடுநாள் இருந்திருக்கிறது.

சேரநாட்டுச் சேரர்க்கு வஞ்சி தலைநகரமும், முசிறி கடற்கரை நகரமுமாம். வஞ்சிமாநகர் இடைக்காலத்தே அஞ்சைக்களமாகி, இப்போது கொடுங்கோளூர் என்ற பெயருடன் இருந்துவருகிறது. முசிறி மறைந்துபோயிற்று. சேரர்க்குரிய குடநாட்டுக்கு மாந்தை உண்ணாட்டுத் தலைநகரமாகவும், தொண்டி கடற்கரை நகரமாகவும், இருந்தன. மாந்தை இடைக்காலத்தே மாதையாகி மறைந்து போயிற்று; அதன் சின்னமாகப் பழையங்காடி என்ற ஊர்மட்டும் புகைவண்டி நிலையமாய் உளது. தொண்டி சிறுத்து ஒரு சிற்றூராகி விட்டது.

சேரநாட்டு அரசர் தொல்குடியினர் அதியர் உதியர் என இருவகையினராவர். அவருள் அதியர் வடபகுதியிலுள்ள குதிரை மலைநாட்டிலும், உதியர் குட்டநாட்டிலும் அரசுநிலையிட்டுப் பெருகினர். அதியர் கிழக்கே சென்று தகடூர் நாட்டில் இடம் பெற்றாராக, உதியர் குட்டநாட்டில் நின்று பெருவேந்தராய்ப் பிறங்குநிலை எய்தினர். குட்டநாட்டில் தோன்றிச் சேரநாடு முழுதும் ஆண்டவர் குட்டுவர் எனவும், குடநாட்டில் தோன்றிச் சேரவரசுக்கு உரியராயினோர் குடக்கோ, குடவர்கோ எனவும் குறிக்கப்படுவர். கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் என்றும், குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்றும் சேரவேந்தர் கூறப்படுவதைப் பழந்தமிழ் நூல்களில் காணலாம். பின்னர், குடநாட்டின் தென்பகுதி பொறைநாடு என்ற பெயருடன் பிரிந்தது. அதன்கண் தோன்றி முடிவேந்தரானோர் ‘இரும்பொறை’ எனப் பெயர் பூண்டனர். குடக்கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, சேரமான் கணைக்கால் இரும்பொறை என வரும் பெயர்கள் இதற்குச் சான்றாகும். பின்னர், செல்வக்கடுங்கோ, பொறையன் கடுங்கோ என்பவரும், குட்டுவன் கோதை, மாக்கோதை என்பவரும் தோன்றிச்சேரநாட்டை ஆண்டனர். அவர்கட்குப்பின் சேரலர் ‘கேரளரா’க, சேரலர்நாடு ‘கேரளநாடா’க மாறித் தமிழகத் தோடு தமிழ்த் தொடர்பு அற்றொழிந்தது.

குட்டுவரும் குடவரும் பொறையரும் கடுங்கோக்களும் வீறுபெற்று விளங்கிய காலத்தில் சேரவரசு கொங்குநாடு முழுதும் பரந்திருந்தது. அக்காலத்தில் கொங்குநாட்டின் இடையில் ஆன்பொருநைக் கரையில ஒரு வஞ்சி நகரம் தோன்றிற்று; அதன்பின் ஆன்பொருநை காவிரியோடு கலக்குமிடத்தே ஒரு வஞ்சிநகர முண்டாயிற்று. இரண்டையும் வேறுபடுத்தற்கு இரண்டாவதாகத் தோன்றிய வஞ்சி, கருவூராக மாறிற்று. மேலைக்கடற்கரையில் முசிறிக்கு வடக்கிலுள்ள கருவூரின் நினைவுக்குறியாக, ஆன்பொரு நையின் கரையில் இக்கருவூரும், காவிரியின் வடகரையின் முசிறியும் உண்டாயின. பிற்காலச் சோழ வேந்தர் காலத்தில் கொங்குவஞ்சி இராசராசபுரம் என்ற பெயர்பெற்று, முடிவில் அதுவும் தேய்ந்து ‘தாராபுரம்’ என்ற பெயருடன் இன்று நிலவுவதாயிற்று. கடற்கரை வஞ்சிமாக் கோதையர் காலத்தில் மாக்கோதைப் பட்டினமாகிப் பின்னர் ‘மகோதை’யாய்க் குறுகி, மகோத்தியா பட்டினம், மகாதேவர் பட்டினம் என மருவி, முடிவில் அதுவும் மாய்ந்து அறவே மறைந்தது.

இச்சேரமன்னரைப் பண்டையோர் வானவர் என்றும், வானவரம்பர் என்றும் கூறுவது வழக்கம். வானமலைக்கு உரியவரா தலால் ‘வானவர்’ என்றும், வானமாமலையைத் தமது நாட்டுக்கு வரம்பாகக் கொண்டதுடன், தங்கள்நாட்டின் வடக்கில், மேலைக் கடலொடு கலக்கும் வானியாற்றை வரம்பறுத்துக் கொண்டமையின் ‘வானவரம்பர்’ என்றும் சான்றோரால் சிறப்பிக்கப்பெற்றனர். “வசையில் வெம்போர் வானவன்” என்றும், “வானவரம்பனை நீயோ பெரும” என்றும் பழந்தமிழ் நூல்கள் உரைப்பது காணலாம். சேரநாட்டின் வடக்கில் இருந்த ஆரியர் நாடாகிய ஆரியகம், ‘ஆரியகே’ (Ariake) என்று தாலமி முதலிய யவனர்களால் குறித்துக் காட்டப்படுகிறது. வானமலைக்குக் கிழக்கிலுள்ளது என்று பொருள் படும் வானவாசிநாடு வேளகத்து வேளிரது ஆட்சிக்குரியது. வேளிரும் ஆரியரும் மிக்கு வாராதவாறு வானியாற்றை வரம்பாகக் கொண்டமை பற்றிச் சேரர் ‘வானவரம்பர்’ எனப்படுவாராயினர் என்று கொள்வது பொருத்தமாகும்.

சேரரது குடநாடு ஏறைநடு, பாயல்நாடு, பொறைநாடு, கொண்கானநாடு எனச் சில உண்ணாடுகளைக் கொண்டிருந்தது. ஏறைநாடு ஏர்நாடு எனவும், பாயல்நாடு வயனாடு எனவும், பொறைநாடு குறும்பர்நாடு (குறும்பொறைநாடு) எனவும், கொண்கானம் கொங்கணநாடு எனவும் இப்போது மாறி விட்டன. பண்டைய கற்காநாடு இன்று குடகு நாடாக விளங்குகிறது.

** பாண்டிய நாடு**
பாண்டியர் ஆண்ட பாண்டிநாட்டுக்கு மதுரை தலைநகரமும், கொற்கை கடற்கரை நகரமுமாகும். பழங்கால யவனர்களும் இந்நகரங்களைத் தங்கள் குறிப்பில் பொறித்துள்ளனர். மதுரைக்குக் ‘கூடல்’ என்றும் ஒரு பெயருண்டு. இதனால் “தமிழ் கெழு கூடல்” என்று முன்னைய சான்றோர் மொழிந்து சென்றனர். தமிழ்ச் சான்றோர் கூடித் தமிழ் ஆராயும் இடமாக இருந்ததுபற்றி மதுரை ‘கூடல்’ என்று பெயர் பெற்றது என்று அறிஞர் கூறுவதுண்டு. ‘ஆலவாய்’ என்ற பெயர் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்பட வில்லை. மதுரையைச் சூழவுள்ள நாட்டைக் ‘கடம்ப வனம்’ என்பதும் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படவில்லை. மதுரையைச் சூழவுள்ள நாட்டைக் ‘கடம்ப வனம்’ என்பதும் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப்படாத தொன்று. கொற்கை நகரம் இப்போது தண்ணான் பொருநையாகிய தாமிரபரணி கடலொடு கூடுமிடத்தே உள்ளது. முன்னாளில் கொற்கைப் பெருந்துறை முத்துக் குளிப்பதில் புகழ்பெற்று விளங்கிற்று. பொதியமலைச் சந்தனமும் கொற்கைத் துறை முத்தும் மேலைநாடுகளில் மேன்மைபெற்று விளங்கின.

பாண்டியர் என்ற பெயரை ஆராய்ந்தோர் ‘பண்டையோர்’ என்ற சொல்லின் திரிபே பாண்டியர் என்பது என்று கண்டனர். பாண்டியர்களை மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றும் கூறுவர். சேரன் வானவன் என்றாற்போலப் பாண்டியர் பொருப்பு மலையைத் தமக்கு உரியதாகக் கொண்டதனால், ‘தென்னம் பொருப்பன்’ என்றும், ‘பொருப்பன்’ என்றும், பொருப்பின் ஒரு பகுதியான கவிரமலையைச் சிறப்பாக உரிமைகொண்டது பற்றிக் ‘கவுரியா’ என்றும் (கவிரியர் என்பது கவுரியர் என மாறியதாகலாம்) சான்றோர் குறிப்பாராயினர். மீன்கொடி உடையரென்பதுகொண்டு ‘மீனவர்’ என்றும், பாண்டியர்க்குரிய ஐந்து முதுகுடிகளில் தோன்ற அரசமுடிபெற்ற காரணத்தால் ‘பஞ்சவர்’ என்றும் இவர்கட்குப் பெயர் குறித்தனர். பிற்காலத்தார், பாரத வீரருள் ஒருவனான அருச்சுனன் பாண்டியன் மகளொருத்தியை மணந்துகொண்டதனால் பாண்டியர் பஞ்சவராயினர் என உரைப்பாராயினர்.

பாண்டியரது பாண்டிநாடு மேலைக் கடற்கரையில் குமரி முதல் கோட்டாற்றுக் கரை (கொட்டாரக்கரா) வரையில் பரந்திருந்தது. கோட்டாற்றுக்கும் அதங்கோட்டுக்கும் இடைப்பகுதி வேணாடு என்றும், அதங்கோட்டுக்கும் தென் கோட்டாற்றுக்கும் இடையிலுள்ள நாடு நாஞ்சில் நாடு என்றும் பண்டை நாளில் நிலவின. நாஞ்சில் நாட்டை வள்ளியூரிலிருந்து வள்ளுவனும் அவன் வழிவந்தோரும், வேணாட்டை ஆய்குடியிலிருந்து ஆய் அண்டிரனும் அவன் வழி வந்தோரும் ஆண்டு வந்தனர். வள்ளியூர் திருநெல்வேலியிலிருந்து நாகர் கோயிலுக்குச் செல்லும் பெருவழியில் ஆரலைவாய் முழைக்கு அண்மையில் உளது. ஆய்குடி செங்கோட்டை வட்டத்திற் சிதைந்துள்ள ஊர்களில் ஒன்றாய் இன்றும் இலங்குகிறது.

** சோழ நாடு**
சோழ நாட்டை ஆண்ட சோழர்கள் பண்டைக் காலத்தில் உறையூரைத் தலைநகராகவும் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடற்கரை நகரமாகவும் கொண்டிருந்தனர். உறையூர் இப்போது காவிரியின் தென்கரையில் திருச்சிரப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. காவிரிப்பூம்பட்டினம் காவிரியாறு கடலோடு கலக்கு மிடத்தே இருந்து கடல்கோளால் அழிந்து போயிற்று. அஃது இருந்த இடத்தே இப்போதொரு சிற்றூர் அதே பெயருடன் அமைந்துள்ளது. சோழர் கொடியில் ‘புலி’ பொறித்திருப்பர். அவர்களை, வளவன், செம்பியன், சென்னி என்றெல்லாம் பண்டைய சான்றோர் குறித்துள்ளனர். சோழரது ஆட்சி வடவேங்கடம் வரையும் பரவிய பெருமையுடையது.

சோழ நாட்டின் வடக்கிலுள்ள தொண்டை நாட்டுக்குச் காஞ்சி மாநகர் தலைநகரமும் பவத்திரி கடற்கரை நகரமுமாகும். இந்த நாட்டை ஆண்டவர் ‘தொண்டையர்’ எனவும், ‘திரையர்’ எனவும் பெயர் பெற்றனர்.

பிற்காலத்தே தென்பெண்ணைக்கும் காவிரிக்கும் இடையில் ஓடும் வெள்ளாற்றைச் சோழ நாட்டின் வடவெல்லையாக்கித் தென்பெண்ணைக்கும் வெள்ளாற்றுக்கும் நடுவிருந்த நாட்டை ‘நடுநாடு’ எனச் சான்றோர் குறிப்பாராயினர். சோழநாட்டுக்கு வடக்கில் வடவெள்ளாறும் தெற்கில் தென்வெள்ளாறும் எல்லையாயின.

** குறுநில மன்னர்**
சேரநாட்டைக் கண்டபோது, அதன் வடகிழக்கில் வேளகம் (Belgam) என்ற பெயரால் ஒரு வேள் நாடும், தெற்கில் அதற்கும் பாண்டி நாட்டுக்கும் இடையே ஆய்அண்டிரன் முதலியோர் விளங்கிய வேணாடும் கண்டாற்போல, பாண்டி நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே பாண்டி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வேள்பாரி, வேள் எவ்வி என்ற வேளிர்க்குரிய வேணாடு ஒன்றும், சோழ நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையே தொண்டை நாட்டின் தென் பகுதியில் ஒரு வேணாடும், சோழ நாட்டிற்கும் தகடூர் நாட்டுக்கும் இடையே நடுநாட்டின் மேலைப்பகுதியில் ஒரு வேணாடும், சோழ நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்குமிடையே ஆன்பொருநையின் கீழ்ப்பகுதியில் ஒரு வேணாடும், கொல்லிமலை விச்சிமலைப் பகுதியில் ஒரு வேணாடும் இருந்துள்ளன. இந்த வேணாடுகளை ஆண்ட வேளிர்களைக் குறுநில மன்னர் என்பர்; ஏனைச் சேர பாண்டிய சோழர்களை முடிவேந்தர் என வழங்குவர். இவ்விருதிறத்தார்க்கும் இடையே மகட்கொடை முறை நிலவியிருந்தது.

தொண்டை நாட்டின் தென்பகுதியான வேணாட்டில் ஓவியர் என்பவர் வாழ்ந்தனர்; அதனால் அந்த நாடு ஓய்மானாடு என்றும், அதனை ஆண்ட வேளிர் தலைவன் ஓய்மான் நல்லியக்கோடன் என்றும் கூறப்படுவன். அவற்குத் தலைநகரம் தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனத்தைச் சேர்ந்த கிடங்கிலும் மாவிலங்கையு மாகும். திருவேங்கடத்தில் புல்லி என்னும் களவர் தலைவன் இருந்து தமிழகத்து வடதிசைக் காவலனாய் வயங்கினான். தென்பெண்ணை யாற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட வேணாடு நடுநாட்டின் மேலைப்பகுதியில் மலையமானாடு, மலாடு என்ற பெயர் தாங்கி விளங்கிற்று. அதனை மலையமான் திருமுடிக்காரியும் அவன் வழி வந்தோரும் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தே மலையமான்கள் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு ‘கிளியூர் மலையமான்கள்’ என வாழ்ந்தனர். அவர் நாடு ‘சேதிநாடு’ எனவும் ‘மகதை நாடு’ எனவும் பெயர்பூண்டன. ஆன்பொரு நையின் கிழக்கே சோழநாட்டைச் சேர இருந்த வேணாட்டில் ஆவியர் என்பார் வேள் ஆவி வழி வந்த வையாவிக் கோப்பெரும் பேகனாலும் அவன் வழியினராலும் ஆளப்பட்டு வந்தனர். கொல்லி மலையைச் சேர்ந்த வேணாட்டுக்கு மழநாடு என்றும், அங்கே வாழ்ந்த வரை மழவர் என்றும் பண்டையோர் குறித்தனர். விச்சி
மலைப் பகுதியில் விச்சிக்கோவும் கண்டீரக்கோப் பெரு நள்ளியும் இருந்து நாடுகாவல் புரிந்தனர். விச்சிக்கோவுக்குரிய விச்சியூர் இப்போது ‘விச்சூர்’ என்றும், கண்டீரம் இளங்கண்டீரமென நின்று இன்று உருத்தெரியாவாறு மருவி ‘வாலிகண்டபுரம்’ என்றும் திருமுது குன்றத்துக்குத் தென்மேற்கில் உள்ளன. இவற்றின் வேறாக, திருக்கானப்பேரில் வேங்கை மார்பனும், கோடைமலையில் பொருநனும், திண்டுக்கல் பகுதியில உள்ள தோன்றிக்குடியில் தோன்றிக் கோமானும் திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமாவில் வேள் நன்னனும் வாழ்ந்திருந்தனர்.

** தமிழர் நாகரிகம்**
முடிவேந்தரும் குறுநில மன்னருமாகிய தலை மக்களின் குடை நிழலில் இருந்த தமிழகத்து மக்களிடையே சிறந்த கருத்துக்கள் பல பொதுவாக நிலவியிருந்தன. நாடு, நாட்டில் வாழும் மக்கட்குரியது. நாட்டுமக்கள் நாடாளும் வேந்தர்க்கு உடம்பு போல்வர்; வேந்தன் அவ்வுடம்பில் உறையும் உயிராவன். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதும் அரசியலின் அடிப்படை. அதனால் நாட்டுமக்களின் நற்பண்பும் நன்னடையும் பாதுகாப்பது வேந்தன் கடன். “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” என்பர் பண்டைச் சான்றோர். “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி” நாடும் நற்புகழ் எய்துகிறது. நன்மக்கள் அரசியலுக்கு “வேண்டுமிடத்து அறிவும்” படை வேண்டு வழி ஆளும் உதவுகின்றனர். நாட்டின் நலம் கருதி வேண்டுவன எடுத்தோதும் பேச்சுரிமையும், வேண்டுவோர் வேண்டிய தெய்வங்களை வழிபடும் வழிபாட்டுரிமையும், வணிகர்க்கு வாணிக உரிமையும் இயல்பாகவே அமைந்துள்ளன. மகளிர் கல்விப்பேற்றிலும் அரசியற் பணியிலும் ஆடவரை ஒப்ப உரிமை பெற்றுள்ளனர். “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்” என்பது வாழ்க்கையின் குறிக்கோள்.

வாழ்வு யாவர்க்கும் பொதுவுரிமை; சிலர் வாழவும், சிலர் வாழ வகையின்றி வருந்தவும் காண்பது தமிழ்மரபன்று. பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறுத்தி, அவரையும் பெற்று வாழச் செய்வது பொருள் நெறி. அதனால் விருந்தோம்பல் பண்டைத் தமிழகத்தின் மேதக்க பண் பாடாக விளங்கிற்று. “செல்வத்துப் பயனே ஈதல்” என்பது செல்வர் கொள்கை. இவற்றின் உள்ளீடாக, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கொள்கை இயங்கிற்று. இவ்வியக்கம், “தமக்கென முயலா நோன்றாள், பிறர்க்கென முயலும்” பெருமிதத்தை விளைவித்தது.

நாரும் போழும் பருத்தியும் பட்டும் தழையும் பிறவும் கொண்டு தூசும் துகிலும் உடையும் ஆடையும் கச்சும் பிறவும் நெய்தலாகிய தொழிலும், நெற்சோறும் வேறுபல பண்ணியங்களும் விரவிய உணவுவகையும், தொழிற்குரிய கருவிகளும் நாடு முழுதும் காணப்பெறுகின்றன. “இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப”வும், “மைந்து பொருளாக”வும் நாட்டில் போர்கள் உண்டாகின்றன. போரின்கண், ஆவும் ஆனியற் பார்ப்பனமாக்களும் பெண்டிரும் பிணியுடையோரும் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றனர். அறம் பிறழாது நெறி வழுவாது போர்செய்து புண்ணுற்று வீழ்வோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் பகைவர் நண்பர் என்ற வேறு பாடின்றிப் புகழ்பெறுவதோடு, “பெயரும் பீடும் எழுதிய” பிறங்குநிலை நடுகல் நாட்டப்பெறுகின்றனர்.

தமிழ்மொழி இயல் இசை நாடகம் என முக்கூறுபட்டு அறிவுப்பணி ஆற்றுகின்றது. இயலைப் புலவர்களும், இசையைப் பாணர்களும், நாடகத்தைக் கூத்தர்களும் நயந்துபயின்று நல்வளம் பெறுவிக்கின்றனர். கரும்பு தின்றதிற்குக் கூலிபெற்றாற்போலப் புலவர் முதலாயினார் தாம் பெற்று நுகரும் தமிழ் இன்பத்திற்கு வேந்தரும் செல்வரும் பெரும்பொருள் நல்கப்பெற்று, அச்செல்வர்களின் புகழ் கொடை வெற்றி முதலிய நலங்களைப் பாடி, அவர்களை என்றும் பொன்றாத இசைவாழ்வு எய்து விக்கின்றனர். “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப” என்றும், இவ்வுலக வாழ்வில் “இசையுடையோர்க்கு அல்லது உயர்நிலையுலகத்து உறையுள் இல்லை” என்றும் நாட்டில் கொள்கைகள் சில தோன்றிப் புகழ் வேட்கையைப் பொலிவித்தன. “புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகு முழுதும் பெறுவதாயினும் வேண்டலர்,” என மக்கள் உரைக்கப்படுகின்றனர். “வயிற்றுத் தீத்தணிய” வேண்டுவதொன்றையே கருதி மானமின்றி இரந்துண்டலைப் பண்டைத் தமிழகம் வெறுத்தொழுகிற்று.

அறத் துறை, பொருள் துறை, இன்பத் துறை போர்த் துறை முதலியவற்றில் புகழ் தருவனவற்றைப் பாராட்டியுரைப்பதும், மானக்கேடும் பழியும் விளைவிப்பவைகளைக் கடிந்து கழறுவதும் புலவர்களின் செயல்களாயின. பொதுவாக, வினையுணர்வும் மறுபிறப்பும். ஆண் பெண் அனைவருடைய உள்ளத்திலும் வேரூன்றி யிருக்கின்றன. உயிர்வாழ்க்கை எடுத்த உடம்பளவாய் நின்று மறைந்தொழியாது, முன்னும் பின்னும் தொடர்ந்து வினைக்கேற்ப மாறிவரும் என்றும், “நீர்வழிப்படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படும்” என்றும் “வாழச்செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை” என்றும், இவ்வுலகு உயிர்கட்காகவே படைக்கப்பட்டதென்றும், உயிர்கள் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுடைய மக்களுயிர் ஈறாக அறுவகைப்படும் என்றும், இவ்வுயிர்கள் வினைக் கேற்பப் பிறந்து ஒடுங்குவதற்கென்றே இவ்வுலகு படைக்கப் பட்டதென்றும் தமிழர் கருதியிருந்தனர். வானத்தில் நிலவும் ஞாயிறு, திங்கள், விண்மீன், கோள்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவை ஒவ்வொன்றிற்கும் இடையே “பரிப்பு” (ஈர்த்து நிற்கும் ஆற்றல்) உண்டென்றும், நிலத்தைச் சூழ்ந்து வானத்தில் இருக்கும் காற்று மண்டிலத்துக்கு அப்பால் காற்று வகையும் பிற எவையும் இல்லாத “வளியிடை வழங்கா வழக்கரு (Ethereal Region) நீத்தம்” உளதென்றும் கண்டிருந்தனர்.
பருவந்தோறும் பிழையாமல் வீசும் காற்றின் வரவு அறிந்து கடலில் கலம் செலுத்திப் பிறநாடுகட்குச் சென்று வாணிகம் புரிதற்குச் சிறந்த வழி கண்டவர் கரிகாலனுடைய முன்னோராகிய சோழர். அக்காற்றின் இயல்பைப்பற்றி எழுதிய யவனர் குறிப்பைக் கண்டவர், இத் தமிழ்க் குறிப்பு அறியாத காரணத்தால், ‘காற்றியல்பு தேர்ந்து கலஞ் செலுத்தியவர் யவனர்’ என்று கரைவாராயினர் பாண்டியர் தலைநகரத்தைத் “தமிழ்கெழு கூடல்” என்றாற் போலச் சோழரது உறையூர், “அறம் துஞ்சும் உறந்தை” என்று புகழப் பெறுகிறது. எனவே, அறம் தவறாதபெருமை சோழரது ஆட்சியின் சிறப்பியல்பு என்று முன்னாளைய தமிழகம் கண்டிருந்தமை தெளிவாகும்.

** வேளிர் செய்த நற்பணிகள்**
சேர பாண்டிய சோழ நாடுகளின் எல்லைப் புறங்களிலிருந்து நாடு காவல் புரிந்த வேளிர்களின் செயல் நலங்கள் பல தமிழகத்தின் மாண்புக்குச் சிறப்பளித்துள்ளன. சேரநாட்டு வேளிர்களான அதியமான்கள் முதல் முதலாகக் கரும்பு பயிரிடும் திறத்தைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்தனர். செந்தமிழ் மூதாட்டியான ஒளவையார்க்கு அரிய நெல்லிக்கனி தந்து நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்ப் பணி செய்யுமாறு அறிவுப்பணி புரிந்தவர்களும் இந்த அதியமான்களே. ஒரு காலத்தில் இவர்களது ஆட்சி தொண்டை நாட்டுத் தென்பகுதி முற்றும் பரவியிருந்தது; தென் கெடில ஆற்றின் கரையில் உள்ள திருவதிகை அவர்கள் சிறப்புணர்த்தும் பேரூராக நிலவுகின்றது. சேர நாட்டின் தென்னெல்லையில் விளங்கிய வேணாட்டில் ஆய் முதலிய வேள்குடித் தலைவர் ஆட்சியில் வடதிசை இமயம் போலப் பொதியில்மலை புகழ்மிக்கு விளங்கிற்று. நாஞ்சில் மலைப்பகுதியில் வாழ்ந்த வேளிர்கள் முடிவேந்தர் அரசியலில் உள்படு கருமத் தலைவர்களாகவும் பணி செய்துள்ளனர். அவர்கள் வள்ளுவர் எனப்படுவர். அவர்தம் குடியைச் சேர்ந்த முன்னோர்களுள் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் சிறந்தோராவர். அவரைத் ‘தெய்வப் புலவன் திருவள்ளுவன்’ எனப் பண்டைச் சான்றோர் பாராட்டியுள்ளனர். அவருடைய திருக்குறள் இன்று உலக மெல்லாம் பரவும் உயர்தனிச் சிறபபுடைய நூலாக ஓங்கி நிற்கிறது.

பாண்டி நாட்டுப் பகுதியில் பறம்புநாட்டுக்கு உரியனாய் வேள் பாரி விளக்க முற்றிருந்தான். இன்றும் கொடைக்கு எல்லையாக அவன் பெயரே குறிக்கப்படுகிறது. “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை” என்று நம்பி ஆரூரர் கூறியுள்ளார். வையாவிக் கோப்பெரும் பேகன் இப்போது ‘பழனி’யென வழங்கும் பண்டைப் ‘பொதினி’ நகர்க்கண் இருந்து அரசு புரிந்த ஆவியர்குடித் தோன்றலாவன். முல்லைக்குத் தேர் ஈந்து மூவாப் புகழ்பெற்ற பாரிபோல வையாவிக்கோ மயிலுக்குப் போர்வை ஈந்து புலவர் பாடும் புகழ்பெற்று விளங்கினான்.

சோழநாட்டுக் குறுநிலக் தலைவர்களில் ஆதனுங்கன், கண்டீரக் கோப் பெருநள்ளி, கரும்பனூர் கிழான், சிறுகுடி கிழான் பண்ணன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன், தாமான் தோன்றிக்கோன், நல்லியக் கோடன், நல்லேர் முதியன், பொறையாற்று கிழான், மலையமான் திருமுடிக்காரி, வல்வில் ஓரி, விண்ணந்தாயன், வில்லிஆதன் முதலியோர் சிறந்து தோன்றுகின்றனர். மழநாட்டுக் கொல்லி மலைக்குரியவன் வல்வில் ஓரி; இவனை, “கொல்லி யாண்டவல்வில் ஓரி” என்று கூறுவர் வன்பரணர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டிருந்த மலையமான் திருமுடிக் காரியை,

“துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி” என்றும்,
“கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்தடி காரிநின் நாடு,” என்றும்

கபிலர் பாடுகின்றார். ஓய்மா நாட்டு நல்லியக் கோடனை, “பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்” எனப் புறத்திணை நன்னாகனார் புகழ்ந்து போற்றுகின்றார். இவ்வாறே ஏனையோரும் இனிய பாட்டுக்களால் சான்றோர் படைத்த இறவாப் புகழுடம்பு பெற்றுப் பொலிகின்றனர்.

** முடிவுரை**
இதுகாறும் கண்ட முடிவேந்தரும் குறுநிலத் தலைவராகிய வேளிரும் இருந்து, கொடிது கடிந்து கோலோச்சி, இயலும் இசையும் கூத்துமாகிய முத்தமிழும் முறையே வளரக் காத்து ஓம்பிய பண்டைத் தமிழகம், இலக்கிய நெறியில் சான்றோர் பலரால் இன்பமும் பொருளும் அறமும் சிறந்து ஏற்றம் பெற்று இலங்கிற்று., சான்றோர் குழுவில் வேந்தரும் வணிகரும் வேளாளரும் அந்தணரு மெனப் பலர் இருந்தமை ஒருபுறம் நிற்க, பெண்பாலருள், அள்ளூர் நன்முல்லையார், இளவெயினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார் முதல் வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கணி நப்பசலையார் ஈறாகப் பலர் இருந்துள்ளனர். அவர்கட்குப் பண்டைத் தமிழ் வேந்தர் அரசியலில் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துளது. ஒளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதும். நப்பசலையார், சேரமன்னர் கடல் பிறக்கோட்டிய சிறப்பை நாட்டிற் பரப்பியதும், வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாலனது வெற்றி மேன்மையையும் சேரமன்னன் திருவுடை மானத்தையும் சிறப்பித்துப் பாடியதும் பிறவும் இன்றைய இளைஞர் உலகம் உள்ளங்கொள்ளற்குரிய உண்மைச் செய்திகளாகும். இவ்வண்ணம் அறிவால் ஆண்மையால் அறம் பொருள் இன்பங் களால் பண்புமேம்பட்டு விளங்கிய பண்டைநாளைப்போல் இன்றைய தமிழகமும் விளங்குதற்குரிய காலம் இளைஞர் முன்னே எதிர்நோக்கி வருகிறது. அவர்கள் அதனை அன்புடன் வரவேற்று இன்புறுவார்களாக!

எழுதா இலக்கியம்


** முகவுரை**
நம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கிய மொழிகள் நிலவுகின்றன. பொருள் பொதிந்த சிறுசிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளே அம்மொழிகள். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் கற்றவர் களால் பாராட்டப்பட்டும், இலக்கிய உரை வகையாகக் கருதப் பட்டும், தமிழ்ப் பெருமக்களால் போற்றப்பட்டும் வருகின்றன. அவைகளை, எழுதா இலக்கியம் என்பதோடு முதுமொழி யென்றும், பழங்காலமுதலே வழங்கி வருவதுபற்றிப் பழமொழி என்றும் சான்றோர் வழங்குவர்.

** பழைமையும் சிறப்பும்**
“அப்பனைப் போலப் பிள்ளை” என்பது நாட்டில் வழங்கும் முதுமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியனார் தமது தொல்காப்பிய நூலில், “தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்” என்று கற்பியல் சூத்திரம் ஒன்றினுட் குறித்துள்ளார். “கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா?” என்பது ஒரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர், “வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு, அழியும் நோய் கைம்மிக அணங்காகியது போல” என்று கலித்தொகையில் கூறியிருக்கின்றார். “இறைக்கிற ஊற்றுத்தான் சுரக்கும்” என்றொரு முதுமொழி நாட்டுப்புறங்களில் நிலவுகின்றது; இதை நம் திருவள்ளுவர், “மறைப்n மன்யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு, ஊற்றுநீர் போல மிகும்,” என்று தமது திருக்குறளில் அமைத்து எழுதியிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள்.

இப்பழமொழிகள் நுண்ணிய கருத்தும், சுருங்கிய சொல்லும், சொல்லுதற்கு எளிமையுமாகிய இனிய நலங்களை உடையன. இவற்றைக் கண்ட தொல்காப்பியர், இவற்றின் இலக்கிய மாண்பை வியந்து, “நுண்மையம் சுருக்கமும் ஒளியுடைமையும், என்ற இவை விளங்கத் தோன்றிக் குறித்த மொழி என்ப” என இலக்கணம் கண்டார். மேலும், அவர், “முதுமொழி என்ப” என்றதனால், அவர் காலத்துக்கு முன்பிருந்தே, சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறிகின்றோம்.

இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை; இவற்றில் பொய்யோ புனைந்துரையோ இல்லை. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொருவரிடத்து ஒரு தொகையைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சி யாகவும், அதையே கொடுத்தவர் திரும்பக்கேட்டு வாங்கும் போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பது உண்மை நிகழ்ச்சியாம். இதுவே, “கேட்கிற போது பசப்பு, கொடுக்கிற போது கசப்போ?” என்னும் பழமொழியாக வழங்குகிறது. இதனை இப்போதும் காண்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புவாழ்ந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற சான்றோர்,

“உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்
பண்டும் இவ்வுலகத்து இயற்கை அஃது இன்றும்
புதுவ தன்றே புலனுடை மாந்தீர்”

என்று பாடியுள்ளார்.

** பழமொழி நானூறு**
எழுதா இலக்கியமாய் உண்மையும் இனிமையும் எளிமையும் கொண்டு இவை இருப்பது கண்டார் முன்றுறை அரையனார் என்ற சான்றோர். அவர் சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர். அவர் தமது காலத்தில் நிலவியவற்றில் நானூறு பழமொழிகளைத் தொகுத்து, ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயரிட்டு ஒரு நூல் பாடியிருக் கின்றார். அது பதினென் கீழ்க்கணக்கு என்ற நூல் வகையில் ஒன்றாய் இருக்கிறது. இப்பழமொழிகளில் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகட்குரிய கருத்துக்கள் பொதிந்துள்ளன.

** பழமொழிகள்**
சமுதாய வாழ்வில் திருமணம் என்பது ஒரு சிறப்புடைய நிகழ்ச்சி. திருமண நிகழ்ச்சியில் திருமணத்துக்குரிய ஆடவனுக்கு ஒரு பெண்ணை மணம் பேசும் முறை முன்னணியாக நடைபெறுவது. அப்போது மணமக்களுக்காகச் சான்றோர் ஒன்று கூடி இருவருடைய குல நலம் குணநலம் ஆகியவற்றைப் பெரிதும் எடுத்துப் பேசுவர். அவ்வகையில், “குலம் கெட்டவரோடு சம்பந்தம் செய்தாலும் குணங் கெட்டவரோடு சம்பந்தம் செய்யக்கூடாது” என்றொரு முதுமொழி அடிக்கடி கூறப்படும். இந்த நிகழ்ச்சி திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார்க்கும் கலிப்பகையார்க்கும் திருமணம் பேசியபோது சிறந்த இடம்பெற்றது. இதனைச் சேக்கிழார் “மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்… பைந்தொடியை மணம் நேர்ந்தார்,” என்று இப்பழமொழிக் கருத்தை எடுத்துரைப்பதைக் காணலாம்.

மக்களில் ஒருவர் இறந்துபோவாரயின், அவரது உடலை நீராட்டி ஆடை அணிகலன்களால் சீர் செய்து இடுகாட்டிற்கோ சுடுகாட்டிற்கோ எடுத்துச் செல்வது சமுதாய வழக்கம். இறந்தார் பொருட்டு அங்கே கூடும் உறவினரும் பிறரும் கண்ணீர் விட்டுப் புலம்புவர். புலம்பி அழுமிடத்தும் இறந்தார் உடலுக்குரிய சீரைச் செய்தபின்பே அழுவர். இதனைச் “செத்த பிணத்தைச் சீரிட்டழு” என்ற மூதுரை இனிது காட்டுகிறது.

இவவண்ணமே, “பணமில்லாதவன் பிணம்,” “பணம் பத்தும் செய்யும்” முதலியன பொருள் பற்றி வழங்கும் எழுதாமொழிகள். “கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?” “கருவாடு விற்ற காசு நாறாது” என வருவன வாணிகத்தில் வழங்கும் பழ மொழிகள். “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்”, “உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறு போடவேண்டா” என்பன தொழில் பற்றிச் சொல்லாடும் தொல்லுரைகள். “விதைப்பழுது முதற்பழுது”, “பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்” முதலியன உழவுத் துறைக்குரிய உலகுரை. சமயத்துறையில், “அவனே அவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது மேல்,” “இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் சீதைக்கு இராமன் சிற்றப்பன்,” படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா?" என்பன முதலிய பழமொழிகள் பரந்து உலவுகின்றன. “தோட்டிமுதல் தொண்டைமான் வரை” என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும், “டில்லிக்குப் பாச்சாவானாலும் தல்லிக்குப் பிள்ளை” என்பது விசயநகர வேந்தர் காலத்து அரசியல் பற்றியும், “நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது,” “பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்” என்பவை முதலியன மேனாட்டவர் காலத்து அரசியல் பற்றியும் தோன்றி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்தபின் தேர்தலுக்கு நின்று ஓட்டுப்பெறுபவர்களைப் பற்றி, “ஓட்டுக்குப் போனாயோ, ஓடு வாங்கப் போனாயோ” என்பது முதலிய பழமொழிகள் புதியவாய் முளைத்துள்ளன.

** பழமொழிகளும் வரலாறும்**
இந்தப் பொருள் மொழிகளை நோக்குவோமாயின், பழங்கால வரலாற்றுக் குறிப்புக்கள் சில காணப்படுகின்றன. கி.பி.பன்னிரண்டு, பதின் மூன்றாம் நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்பு செய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற்பணி செய்யும் சிவப்பிரா மணர்களும் வயிராகிகளும் உறுப்பினராக இருப்பது வழக்கம். அந்நாளில் திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் பணிசெய்துவந்தான். கோயிலிற் சூறையாடவந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயிலைப் பாதுகாக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர் செய்து வாணாதிராயரைத் தோற்றோடச் செய்து, தானும் புண்பட்டு வெற்றிபெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணை ஆற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டொன்று கூறுகிறது.* இந்த வயிராகிகளுக்கு ‘வீரமுஷ்டி’ என்று பெயர் வழங்கும். இவர்கள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று கோயில்களைக் காத்த செய்திகள் பல கோயில் வரலாறுகளில் உள்ளன. இவ்வரலாற்றை, “உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி” என்ற பழமொழி குறித்து நிற்கிறது.

பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து படுவராயின், அவருடைய பெரையும் அவர்பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதனை நீராட்டிப் பலபேர் செல்லக்கூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்துவது வழக்கம். அந்தக் கல்லை, அவ்வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். “ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை, நடுகல் தொழுது பரவும்” எனப் புறநானூறு முதலிய சங்கத்தொகை நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே “கல்லென்றாலும் கணவன்” என்ற பழமொழி உண்டாயிற்று.

இனி, கொல்லைகளிலும் வயல்களிலும் கதிர் முற்றிவரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆடவன்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்தும் மரபு இன்றும் இருப்பதொன்று. அதனைப் ‘புல்லாள்’ என்பர். அதனிடத்தே வீரச்செயல் ஒன்றும் இல்லையாயினும், தொலையில் வருபவர்க்கும் இரவில் இயங்குபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஓரளவு காவலா வதுபற்றி அதனை நிறுத்தி வைப்பதை நாட்டவர் மேற்கொண்டிருக் கின்றனர். போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரைப் ‘புல்லாள்’ என்பதொரு முறையும் நாட்டில் உளது. இது பண்டும் இருந்ததென்பதைப் பதிற்றுப்பத்து என்னும் சங்கநூல், “புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பின் புலம்” என்று குறிக்கின்றது. தன்னைக் கொண்ட கணவன் சீரிய வீரமில்லாத புல்லாளாயினும், அவனையும் கணவனாகக்கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு அறம் என்று அறிஞர் கூறலாயினர். இவ்விரு கருத்துக்களையும் உள்ளடக்கி, “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்” என்ற உலகுரை தோன்றி நிலவுவதாயிற்று.

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்பது நாட்டில் இன்றும் வழங்கும் இலக்கியக் கருத்துரை. மதுரை நகரில் தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்கச்சென்ற கோவலனைக் கள்வன் என்று கருதிக் கொலைத் தண்டனை கொடுத்தான் பாண்டியன். அதனை அறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று, தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் கள்வனல்லன் என்பதை வழக்குரைத்து நிலைநாட்டினாள். அதனால் கோவலனுக்கு உண்டான குற்றம் நீங்கிற்று. தான் செய்தது குற்றம் என்பதை உணர்ந்த பாண்டியன் உடனே கீழே வீழ்ந்து உயர்விட்டான். அவனது மதுரைநகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் பாழ்பட்டது. இதனை அறிந்த சேரவேந்தனான செங்குட்டுவன் வடநாடுசென்று, அங்கே தமிழ்வேந்தரை இகழ்ந்துபேசிய வடபுல வேந்தரை வென்று, தமிழர் மாண்பினை நிலைபெறுவித்து, இமயத்தி லிருந்து கல்கொண்டுவந்து கண்ணகிக்கு வடிவம் செய்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே, “ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே,” என்ற பழமொழி தோன்றி வழங்கி வருகின்றது. இதனை வற்புறுத்துதற்கு வேறொரு வரலாறுமுண்டு.

கொங்குநாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில் நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய ஊர் நன்னனூர் என்பது; இப்போது அஃது ஆனைமலை யென்ற பெயருடன் பொள்ளாச்சி வட்டத்தில் உளது. அவ்வூரில் ஆற்றங் கரையில் அவன் ஒரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான்; அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்நாளில் அப்பகுதியில் கோசர் என்னும் மரபினர் வாழ்ந்து வந்தனர். அவருள் செல்வன் ஒருவனுடை மகள் ஆற்றிற்குக் குளிக்கச் சென்றாள். அவள் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருக் கையில், நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அப்பெண் எடுத்துத் தின்றாள். அதைக்கண்ட காவலன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கவே, கொடியவனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அதையறிந்த அப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் எண்பத்தோர் யானைகளும் தந்து வணங்கி, அவளைக் கொலை செய்யாது விட்டுவிடுமாறு வேண்டினான். நன்னன் சிறிதும் மனம் இரங்காது அவளைக் கொன்று விட்டான். உடனே, அப்பகுதியில் வாழ்ந்த கோசர் பலரும் திரண்டெழுந்து அவன் மாமரத்தை வெட்டி வீழ்த்தி அவனையும் வெருட்டி ஓட்டிவிட்டனர். அரசுநிலை இழந்து வெருண்டோடிய நன்னன், ஈரோட்டுக்கண்மையிலுள்ள பெருந்துறைக்கருகில் ‘வாகை’ என்னும் ஊரில் இருந்து வந்தான்; சின்னாட்குப்பின் நார்முடிச்சேரல் என்ற சேரமன்னனுக்குத் தோற்று இறந்துபோனான். அவன் வழி வந்தோர், “பெண்கொலை புரிந்த நன்னன்” மரபினர் என்று மக்களால் புறம் பழிக்கப்பட்டனர். வாகையென்னும் ஊரும் அழிந்துபோயிற்று. அது முதலே, “ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே” என்ற பழமொழி நிலைபெறுவதாயிற்று.

“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்” என்பது இவ்வெழுதா இலக்கியங்களுள் ஒன்று. முத்தமிழின் கூறுகளான இயல், இசை, நாடகம் என்ற மூன்றனுள் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து என இருவகைப்படும். “ஆரியம் தமிழ் எனும் சீர்நடம் இரண்டினும்” என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடுவோர் ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர் போல் கயிற்றின்மேல் நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் என்று குறுந்தொகையில் பெரும் பதுமனார் பாடிய பாட்டால் அறிகின்றோம். ஆரிய நாடு சேர நாட்டின் வடக்கில் இருந்த நாடு எனத்தாலமி (Ptolemy) குறிக்கின்றார். அவர்கட்குத் தமிழ் வேந்தர்களும் பிற செல்வர்களும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர். அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தமது நாட்டுக்கே சென்றொழிவர். தமிழ்க் கூத்தர்க்கு நிலம் விடுவது மரபு. அந்நிலங்கட்குக் ‘கூத்தாட்டுக் காணி’ என்பது பெயர். இம்மரபு. இடைக்கால சோழ பாண்டியர் காலத்தும் இருந்து வந்திருக்கிறது. நாளடைவில் தமிழ்க் கூத்தர் ஆரியக் கூத்தைப் பயின்று அதனையும் ஆடத் தலைப்பட்டனர். அதற்குரிய பரிசில் பொன்னும் பொருளுமேயாயினும், தமிழ்க் கூத்தர் தாம் வழிவழியாகப் பெற்றுவந்த நிலப்பரிசிலையே விரும்பினர்; அதுவே பெற்றுக் கொண்டு வந்தனர். இதனைக் கும்பகோணத்து நாகநாதசாமி கோயில் கல்வெட்டும் திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் நன்கு கூறுகின்றன. ஆகவே, தமிழ்க் கூத்தர் ஆரியக் கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணி பெறுவதையே நாட்டமாகக் கொண்டமை துணியப்படும். அது பற்றியே, “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்” என்ற பழமொழி வழங்கி வருவதாயிற்று.

திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று அழுது சிவஞானப்பால் உண்டது முதல், “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில், சேக்கிழார் எழுதியுள்ள பெரிய புராணத்திலும் திருநாவுக்கரசர் புராணத்திலும் கலந்து பாதியளவுக்கு மேல் இருப்பதால் “பிள்ளை பாதி, பெரியவர் பாதி” என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு வாழ்நாள் முழுதும் பயன்பட்டு வரும் சிறப்புப்பற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக்கொண்டு “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன.

** முடிவுரை**
இவ்வாறு இலக்கியம், இசை, நாடகம் முதலியன பற்றியும், “விருத்த வைத்தியம், பாலிய சோதிடம்” என மருத்துவம் பற்றியும் எழுதா இலக்கியங்கள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நாவிலும் நயம் பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக் கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளருள் ஒருவரான சார்லஸ். இ.கோவர் (Charles. E.Gover) என்பவர், “உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும், சிறப்பாகத் தமிழில் மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவற்றை வெளியிட்டுப் பொது மக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்து கொள்ளவும் செய்வது பழுத்த புலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக்கும் தகுதியாம்” என்ற கருத்தமையக் கூறியிருப்பது அறிஞர் நினைவு கூரற்பாலதாகும்.

குணமாலை


** சீவகசிந்தாமணி**

நம் தமிழ்நாட்டில் நிலவும் சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், கந்தபுராணம் முதலிய தமிழ்நூல்களை நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றில் உள்ள பாட்டுக்களை விருத்தப்பாக்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இவை கி.பி.7-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ச்சிபெற்றவை. இச்செய்யுள்நெறியில் முதன்முதலாக ஒரு புதுக்காப்பியம் செய்து தந்தவர் திருத்தக்கதேவர். பழந்தேனைப் புதுவள்ளத்திற் பெய்து தருவதுபோலப் பழந்தமிழ்க் கருத்துக்கள் பலவற்றை இப்புதுக்காப்பியத்தில் புதுநெறிச் செய்யுளில் புனைந்து தந்த தேவரது புதுமைப் புலமை நலத்தை இங்கே சிறிது காண்பாம்:

** சீவகன் - குணமாலை**
சீவகசிந்தாமணி என்பது, சீவகன் என்னும் அரசகுமரன் பிறந்து வளர்ந்து கல்விகற்று வெற்றி சிறந்து மகளிர் பலரை மணந்து அரசாண்டு மக்கட் பேறுபெற்று முடிவில் ஞானம்மிகுந்து துறவு பூண்டு வீடுபெற்ற நிகழ்ச்சியை ஆற்றொழுக்காகக் கூறிச் செல்லும் அரிய கற்பனைக் காப்பியம். குணமாலை என்பது சீவகன் மனைவியருள் ஒருத்தியின் பெயர். சீவகன் ஏமாங்கதநாட்டுக்கு அரசனான சச்சந்தனுக்கு மகன். இராசமாபுரம் அதன் தலைநகரம். சச்சந்தன் தன் முதலமைச்சன் கட்டியங்காரனால் கொலையுண்டு இறந்துபோக, சீவகனைக் கருக்கொண்டிருந்த அவன் மனைவி சுடுகாடொன்றில் சீவகனைப் பெற்றுவிட்டு வேறுநாட்டுக்குச் சென்று விடுகின்றாள். சீவகனான பச்சிளங்குழவியை, இறந்த தன் மகனை இடுதற்கு வந்த கந்துக்கடன் என்னும் வணிகன் கண்டு தன் மனைக்குக் கொண்டு செல்கின்றான். அவன் மனைவி இறந்த மகன் உயிர்பெற்று வந்ததாக எண்ணிச் சீவகனைத் தன் மகனாகவே வளர்த்துவருகின்றாள். சீவகன் பரந்த கலைப்புலமையும் சிறந்த போர்வன்மையும் கொண்டு நாடாளும் வேந்தனும் கண்டு அழுக்காறுகொள்ளத்தக்க வகையில் வீறுபெற்று விளங்குகின்றான். அவனுக்குக் காந்தருவதத்தை என்ற மனைவியொருத்தி இருக்கின்றாள்.

அந்த இராசமாபுரத்தில் ஒருகால் வேனில் விழா நடைபெறுகிறது. பொழிலில் தங்கி நீர்நிலையில் விளையாடி இன்புறும் பொருட்டு நகரமக்கள் பலரும் வேனிற்பொழிலுக்குச் செல்கின்றனர். அவருள் குணமாலை சுரமஞ்சரி என்ற செல்வ இளமகளிர் இருவர் வருகின்றனர். மணமாகாத இளையோராகிய இருவரும் நீராடுதற்கெனச் சுண்ணப் பொடி கொண்டு வந்துள்ளனர். இருவரும் தாம்தாம் கொணர்ந்த சுண்ணப்பொடி ஒருவர் ஒருவர்க்குக் காட்ட, சுரமஞ்சரி, குண மாலையின் சுண்ணத்திற்குக் குற்றம் கூறித் தனதே சிறந்ததென்று சொல்லுகின்றாள். கருத்துவேறுபாடு மிகுகிறது. இருவர் சுண்ணங்களைத் தக்கார் ஒருவர்க்குக் காட்டித் தோற்றவர் நீராடாது வீடு திரும்புவது என்ற முடிபுக்கு வருகின்றனர். சுண்ணங்கள் சீவகன் பார்வைக்குச் செல்கின்றன. அவன் தக்க காரணம் காட்டிக் குணமாலை சுண்ணமே உயர்ந்தது என்று தீர்ப்புக் கூறுகின்றான். சுரமஞ்சரி நீராடாது போய்விடுகின்றாள். குணமாலை நீராடித் திரும்புங்கால் மதயானை யொன்று குறுக்கிட்டு அவளை அச்சுறுத்தவே, சீவகன் அந்த யானையை அடக்கி அவளை உய்விக்கின்றான். அதுவே வாயிலாகக் குணமாலை தன்னைச் சீவகனுக்கு உரிமை செய்து விடுகின்றாள். பின்னர்ப் பெற்றோர் அவள் கருத்தறிந்து, சீவகனுக்கே அவளை மணஞ்செய்து கொடுத்துவிடுகின்றனர்.

சீவகனுக்கும் குணமாலைக்கும் திருமணம் செய்விக்கக் கருதிய திருத்தக்கதேவர், குணமாலையை நமக்குக் காட்டி அவளும் சுரமஞ்சரியும் சுண்ணம் காரணமாக மாறுபடுவதும், அது வழியாகச் சீவகனுக்கும் குணமாலைக்கும் மனம்ஈடுபடுதற்குத் தோற்றுவாய் செய்வதும், குணமாலை அறியாமல் அவள் உள்ளத்தே சீவகன்பால் காதல் முளைத்து யானையை அவன் அடக்கி அவளை உய்வித்த செயலால் முறுகிப் பெருகி அவனை இன்றியமையாத நிலையை விளைவிப்பதும் தமது புலமைப் பணியாக மேற்கொள்ளுகின்றார். இந்நிகழ்ச்சிக்கு முதலிடமாக வேனிற்காலத்தையும் பொழிலகத்தையும் நம் மனக்கண்ணில நிறுத்துகின்றார்.

** பொழில் வளம்**
வேனிற்காலம் வருகிறது. பொழில்கள் பூவகையாலும் கனிவகை யாலும் காண்போர் மனத்தைக் கவர்கின்றன. வண்டினம் பூக்களில் ஊறும் தேனை உண்டு சிறக்கின்றன. குரங்கினம் கனிகளை யுண்டு களிப்பு மிகுந்து கொம்புதோறும் தாவிக்குதித்து மகிழ்கின்றன. தென்றற்காற்று, புதுப்பூக்களின் புதுமணம் விரவிப் பொழிலெங்கும் பரவி மக்கள் மனத்தில் இன்பம் மலர்விக்கின்றது. இராசமா புரத்து மக்கள் அனைவரும் பொழிலகம் நோக்கிச் செல்கின்றனர்.

இப்பொழில் நகர்க்குப் புறத்தே ஓர் யாற்றயல் உளதெனத் தேவர் குறிக்கின்றார். மரவகையும் செடிவகையும் கொடிவகையும் கலந்து வண்டினத்தாலும், மயில் குயில் முதலிய புள்ளினத்தாலும் இசைமிக்கு இருக்கின்ற பூமரக்கா, தெளிந்த நீர் அறாத யாறு ஒன்றின் அயலே உளதாயின், தன் அழகை விழைந்து காண்பார்க்கு விழைவு அறாதவாறு அது புதுப்புதுக் காட்சிகளைத் தந்து ஊக்கும் இயல்பினதாம். மேலும், நகரருகே உளதாயின், மக்களின் பெருகிய வரவு செலவுகளாலும் மாவும் மாக்களும் ஊர்தியும் பிறவும் பயில வழங்குதலாலும் தூய்மையும் புதுமையும் இழந்து பொழில் எழில் சிறவாது என்பதை உட்கொண்டு வேனிற்பொழிலை நகர்க்குப் புறத்தே தேவர் நிறுத்துவது மிகவும் பொருத்தமாகவுளது.

இனி, ஆசிரியர் நம்மை வேனிற்பொழிலுக்கு அழைத்துச் செல்லுகின்றார். குணமாலையும் சுரமஞ்சரியும் இங்கேதான் நாம் காண வரப்போகின்றனர். அதற்கு முன்னணியாக அவர்கள் வீற்றிருக்கும் பொழிலை ஒரு சொல்லோவியம் செய்கின்றார். இராசமாபுரத்துச் செல்வப் பெருமக்கள் தத்தம் ஊர்திகளில் வந்து அன்னங்கள் அமர்ந்து விளையாட்டயரும் பொழிற்பகுதியில் தங்குகின்றனர். தண்கயமும், விரிந்த நீரோடையும் ஒருபால் காட்சி தருகின்றன. செவ்வாழையும் மாவும் பலாவும் ஆகிய பலவகைப் பயன்மரங்கள் கனி தாங்கி நின்று கவின் செய்கின்றன. இடையிடையே பூ நிறைந்த புதர்களும் செடிகளும் பொலிந்து மக்கள் தங்கி இன்பம் நுகர்தற்கேற்றவாறு குளிர்ந்த நிழல் செய்கின்றன. வேனில் வெம்மையால் வெய்துற்று வருவோர்க்குத் தண்ணிய நீழலிடம் அன்றோ தளரா இன்பம் தருவது! அவர்கள் தங்கிய இடங்கள் கொம்புத்தேன் ஊறித் துளிப்பதனாலும், பூந்தேன் ஒழுகுதலாலும், பன்னிறப் பூக்கள் உதிர்ந்து கிடத்தலாலும், யாற்றயலாகலின் வெண்மணல் பரந்து குளிர்ச்சியும் நறுமணமும் பெற்றுத் தூய்மையுடன் துலங்குகின்றன. அங்கே தங்கினோர் தாம் பூம் பொழிலகத்தே இருப்பதை மறந்து தண்ணிய நீர் நிலையில் இருப்பதாகவே நெஞ்சில் நினையலுறுகின்றனர்.

** குணமாலையும் சுரமஞ்சரியும்**
இப்பொழிலகத்தே ஒருபால் குணமாலையும் சுரமஞ்சரியும் தங்குகின்றனர். ஒருவரையொருவர் முன்பே கண்டு பயின்று நட்பு எய்தியிருந்தமையின், ஓரிடத்தே இருவரும் கூடியிருப்பாராயினர். உருவும் திருவும் பருவமும் கல்வியும் இருவரும் ஒப்பவுடையரே எனினும், குணஞ்செயல்களில் சில வேறுபாடுகள் உள்ளன. குணமாலை தன் பெயருக்கேற்ப நற்குணமே நிறைந்த நங்கையாகத் திகழ்கின்றாள். அறம் பிழையாத அறிவும் பழியஞ்சும் பண்பும் அவட்குப் பாங்காய் உள்ளன. இவற்றால் அவள் மனத்தூய்மையும் அதற்கேற்ற செய்வினைத் தூய்மையும் சிறந்து மிளிர்கின்றாள். சுரமஞ்சரி உருவும் திருவும் ஒத்தலால் குணமாலையினும் குறைந்த வளல்லள்; ஆயினும், பின் விளைவு கருதிச்செய்வன முன்னெண்ணிச் செய்தலும் செப்புதலுமாகிய திறங்களில் சிறந்திலள். கணிகமாய் நிகழும் துன்பத்தின் பொருட்டுப் பிறப்புத்தோறும் தொடரும் சிறப்புடைய நட்பினையும் சிதைத்துத் துறக்கும் சிறுமையுடையள்; தன் செயலே சிறந்ததெனக் கருதும் தருக்கும் அவள்பால் உண்டு.

** சுண்ணப்பூசல்**
இருவரும் ஒருங்கிருந்து உரையாடியிருக்கையில், குண மாலையின் தோழி, அவள் குறிப்பின் வண்ணம், அவள் செய்த சுண்ணப்பொடியைக் கொணர்ந்து சுரமஞ்சரிக்குக் காட்டுகின்றாள். அது காணும் சுரமஞ்சரி தனதே சிறப்புடையதென்ற தருக்கினால் உலகியலையும் மறந்து,

“சுண்ணம் என்பதோர் பேர்கொடு சோர்குழல்
வண்ணம் மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறுஇவை யோஎன
நண்ணி மாலையை நக்கனள்.”

இதன்கண், குணமாலை சுண்ணத்தின் நன்மையை எடுத்தோதுவதை விடுத்துக் கண்ணிற்கண்ட மாத்திரையே வாய்திறந்து, “இவை நின் இடையை வருத்துவற்காகச் சுண்ணம் என்பதொரு பெயர் கொண்டு வந்தனவேயன்றி, உண்மைச் சுண்ணமாதல் இல்லை” என்பாளாய், நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன, என இசைக்கின்றாள். அவள் உரையில் நிற்கும் முன்னிலையும் கூற்றும் இகழ்வுமாகிய மூன்றும் குணமாலைக்கு அவலத்தைத் தருகின்றன. சோர்குழல் வண்ணமாலை என்ற முன்னிலையில், சோர்குழல் எனக் குழலை வேறு பிரித்துச் சிறப்பித்தமையால், வண்ணம் என்றது மாலையைப் பிறிது பொருள்பட அமைப்பதாயிற்று. சோர்தல் குழலுக்கு இயல்பேயாயினும் இதுபோது இனிது ஒப்பனை செய்யப்பட்டுக் கவின் கொண்டு விளங்குகிறது. அதனை விதந்து முன்னிலைப்படுத்துவது நட்பாயின சுரமஞ்சரிக்கு நேர்மையாகும். குணமாலை மனத்தில ஒருவகைக் கோட்டமும் இல்லை; இருவரும் ஒருவரொருவரைக் கண்டு கூடியிருந்ததைக் கூறுமிடத்து, “மௌவலங்குழலாள் சுரமஞ்சரி கொவ்வையங் கனிவாய்க் குணமாலையொடு, எவ்வம் தீர்ந்திருந்தாள்” என்றும், இருவரையும் சேரக்கூறுவாராய், “மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழல் கொல்லியல் வேல்நெடுங்கண்ணியர்” என்றும் ஆசிரியர் குறிக்கின்றார். இவ்வாறு ஒரு வேறுபாடும் இன்றி வீற்றிருந்தவள், சுண்ணம் கண்டதும் வேறுபாடுற்றுக் குணமாலை சுண்ணம் குற்றமாகிய சோர்வுடையதென்பது தோன்றச் சோர்குழல் என்றும், பயனில்லாத செயலை மேற்கொண்டு மெய்வருந்தி வாடி இளைத்தாய் என இகழ்ந்த குறிப்புத் தோன்ற, வண்ணமாலை என்றும், நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன என்றும் உரைக்கின்றாள்.

அவள் உரைத்தது கேட்டிருந்த குணமாலை, புன்முறுவல் பூத்து, “செம்பொன் பாவை அன்னாய், தேவருலகிலன்றி இவ்வுலகில் இவ்விடத்து என் சுண்ணத்துக்கு ஒப்பாக வேறும் சில உள என்று அறிஞர் கூறுவராயின், நின்சுண்ணமும் என்சுண்ணத்தோடு நிகர்க்கும் என்று நீ கூறிக்கொள்ளலாம்” என்று செப்பினாள். சுரமஞ்சரியை முன்னிலைப்படுத்தியவிடத்து, அவளுடைய உள்ளக் கிளாச்சியும் மேனியொளியும் வாட்டமுறாதவாறு, செம்பொன் பாவை அன்னாய் என்பதும், கூற்றின் கண், “என்சுண்ணம் ஒப்பும் உயர்வும் இல்லாதது; நின் சுண்ணம் அதனை நிகர்க்கும்; யான் அதுபற்றி ஒன்றும் கூறேன்” என்று சொல்லக்கருதி, “இப்பார்மிசை இங்கே என் சுண்ணம் நிகர்ப்பன இல்லை; உள்ளன எல்லாம் தாழ்ந்தனவே; நிகர்ப்பன உள என அறிஞர் கூறார்; ஒருகால் கூறுவராயின் பாவையன்னாய், உனது சுன்னம் எனது சுன்னத் தோடு நிகர்க்கும் எனச் செப்புக” என்று வணங்கிய மொழிகளால் சுரமஞ்சரி இணங்குமாறு உரைக்கின்றாள்.

தருக்கினால் தம் குறையினைத் தாமே காணமாட்டாதார்க்கு அதனைக் காண்பார் கண்டு கூறினும், அத்தருக்கு அவர் உள்ளத்தில் வெகுளியைக் கிளப்பி வேதனையுறுவிப்பது நாம் நாளும் காணும் காட்சியாகும். அதற்கொப்பவே குணமாலையின் கூற்றுச் சுரமஞ்சரி உள்ளத்தைக் கலக்கிவிடவும், அவள் வெய்துயிர்த்து முகஞ்சிவந்து, “இவற்றை அறிஞர்பால் காட்டி நல்லது தெளிவோம்; தோல்வியுறு பவர் நீர் விளையாடலைச் செய்தல் கூடாது; வெல்பவர்க்கு அவர் கோடியளவான பொன்னைக் கொடுக்கவேண்டும்” என்று நெடுமொழி நிகழ்த்துகின்றாள். விளைவு எண்ணி மெத்தெனப் பேசும் மேதகவு சுரமஞ்சரிபால் இல்லாமை இந்த நெடுமொழியால் விளங்கித் தோன்றுகிறதன்றோ? இதுவே, பின்பு சீவகன் ஒரு முதிய வேதியன் உருவில் சுரமஞ்சரியிடம் வந்து கவர்பொருள் படப் பேசியபோது உண்மையுணரமாட்டாது அவளை அவனுடைய சொல்வலையில் வீழ்த்தி அவனை மணக்கச் செய்தது.

இருவரும் தத்தம் தோழியர்பால் தங்கள் சுண்ணங்களைத் தந்து அறிஞரிடத்தே காட்டி வருமாறு விடுக்கின்றனர். சுண்ணங்களைக் கண்டோர் சீவகன்பால் காட்டுமாறு பணிக்கவே, அவனிடம் சுண்ணங்கள் சென்று சேர்கின்றன. இரண்டையும் ஒப்புநோக்கும் சீவகன், குணமாலை சுண்ணம் உயர்ந்தது என்றும், அது கோடைக் காலத்தில் சமைந்தது என்றும், மற்றது குளிர் காலத்தில் அமைந்தது என்றும் முடிவு கூறுகின்றான்.

சீவகன் நேர்மையின்றி ஓரம் பேசினான் என்ற பொருள்படச் சுரமஞ்சரியின் தோழியர் உரைக்கவும், அவன், அவர்கள் உள்ளம் தெளியும்படியாக வண்டினத்தை வருவித்து, இருவர் சுண்ணங் களிலும் சில எடுத்து எறிந்தான். குணமாலை சுண்ணத்தை வண்டினம் உண்டுநீங்கின; சுரமஞ்சரி சுண்ணம் நிலத்திலே வீழ்ந்தது. வண்டு விரும்பும் சுண்ணமே மாண்புடைய தென்னும் வழக்கினால், குணமாலை சுண்ணம் உயர்ந்த தென்பது விளக்கப் பட்டது.

இதனைத் தோழியர் போந்து கூறவும், சுரமஞ்சரி திடுக்கிட்டுச் செயலற்று வருந்துகின்றாள். அவள் வாயிலிருந்து ஒரு சொல்லும் வெளிவரவில்லை. குணமாலை தானும் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாது, மஞ்சரியின் மனமென்மை கண்டு இரக்கமுற்று, “பாவாய், நங்காய், என்னோடு பேசுகின்றாய் இல்லையே, ஏன்?” என்று வருந்தி அவள் சுரமஞ்சரி அடிவீழ்ந்து இரந்தாள்.

“குணமாலையின் பால் சீவகன் மனங்குழைந்து சுண்ணத்துக்கு ஏற்றம் கூறினன்; அவளைப் பாராட்டி அவள் நலத்தைப் பெறக் கருதும் அச்சீவகன், என்னை அடைந்து என் அடியில் வீழ்ந்து வணங்கினாலன்றி எனக்குத் தெளிவு பிறவாது” என்று சுரமஞ்சரி என்ணமிட்டுக் கொண்டிருக்கின்றாள். அதனால் குணமாலை கூறிய சொற்கள் அவள் உள்ளத்திற் சென்று சேரவேயில்லை. அவள் வீழ்ந்து வணங்கக் கண்ட போதுதான் சிறிது நினைவு தோன்றிற்று. குணமாலையின் வணக்கம் அவள் உள்ளத்தில் சீவகன் போந்து தன்னை வணங்கவேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அதன் வயப்படும் சுரமஞ்சரி, நா கூசாமல்,

“மழை வள்ளல், என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்துஎன் சிலம்படி கைதொழ
நோற்பன்; நோற்றனை நீ”

என்று நொடிக்கின்றாள். இவ்வுரையில் சீவகனை மழை வள்ளல் என்று அவள் குறிப்பதனால், தன் கண்ணத்தினை நுண்ணிதின் ஆராய்ந்து கூறிய அவனது மதிநுட்பத்தை மனத்தால் வியந்து அங்கே அவனது அழகிய உருவம் தோன்றக் கண்டு, அதன்கண் அவள் தன் உள்ளத்தை இழந்து அவன் காதலைப் பெற விழைந்ததும், தக்கவாறு முயன்றால் பெறலாம் என்பதும் எண்ணித் துணிந்த குறிப்பு வெளிப்படுகிறது. “என் சுண்ணமே ஏற்ற முடையது; ஆயினும், அஃது ஏற்றமுடைய தன்று என்று சீவகனால் சொல்லப் படுதற்குக் காரணம் சுண்ணத்தின் இயல்பன்று; அதனைச் செய்த நினது நோன்பேயன்றி வேறில்லை” என்பாளாய், நீ நோற்றனை என்றும், “யான் அதனைச் செய்து, அச்சீவகன், தோற்று வந்து என் சிலம்படி கை தொழ நோற்பன்” என்றும் இயம்புகின்றாள். பின்னர் மனையடைந்த சுரமஞ்சரி தான் நீர் விளையாடாது வந்ததன் காரணத்தைத் தன் தாய்க்கு உரைத்தலும், அவள் பிறர்க்கு, “கட்டவிழ்கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்” என்று மஞ்சரியின் செயலுக்கு மாற்றம் உரைக்கின்றாள்.

சுரமஞ்சரி தான் கூறிய நெடுமொழிப்படி நீராடாது நீங்கியது குணமாலைக்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. சுரமஞ்சரி, நீ நோற்றனை என்றது, அவள் உள்ளத்தில் வினையைப் பற்றி நினையத் தூண்டிற்று. இன்பமுண்டாக நீர் விளையாட வந்த இடத்தே நட்பைத் துறக்கும் இத்துன்ப நிகழ்ச்சிக்குக் காரணம் முன்னைவினை என்று நினைக் கின்றாள். வினைக்கொடுமைக்கு மனம் வெதும்பிக் கண்ணீர் சொரிகின்றாள்.

சுரமஞ்சரி மறைந்தபின் மகிழ்ச்சியுடன் நீராட வேண்டிய வளான குணமாலை, சினமுற்றுப் பிரிந்தேகிய சுரமஞ்சரிபால் வெறுப்புற்றாளா? அவள் நட்பினை மறந்தாளா? அதற்குக் காரண
மாகிய சுண்ணத்தை முனிந்தாளா? அவையெல்லாம் ஒழிய, தன் சுண்ணத்தைப் பாராட்டி ஏற்றம் கூறிய சீவகனையாவது நினைந்து மகிழ்ந்தாளா? ஒன்றும் இல்லை. இந்நிகழ்ச்சியால் இன்பம் எய்துதற்
குரிய தான் அதனை எய்தாது துன்பம் எய்துதற்குக் காரணம் தன் தீவினை எனத் தெரிந்து, அது தீரும் பொருட்டு அருகன்கோயிலை அடைந்து அவன் அடி பணிந்து அறம்செய்கின்றாள்.

முன்னைவினை எவ்வழியும் நுகர்ந்தே கழிக்கத் தக்கது. அருகனைப் பணிந்துசெய்த அறமாகிய நல்வினையால் தீவினையின் தீமை குறைகின்றது; சீவகனை மணந்துகொள்ளும் நல்வாய்ப்பு உண்டாகிறது. “நீ நோற்றனை” என்று சுரமஞ்சரி சொன்ன சொல் உண்மையுரையாய்ச் சீவகனைக் குணமாலை மணந்துகொள்வதற்கு முன்னறிவிப்பாய் முடிகிறது.

** சீவகன்மேற் காதல்**
குணமாலை நீராடிவிட்டு வருங்கால், அசனி வேகம் என்ற அரசயானை மதங்கொண்டு அவளைக் கொல்ல நெருங்குகிறது. அந்நிலையில் சீவகன் தோன்றி அந்த யானையை அடக்கிக் குணமாலையைக் காத்து ஓம்புகின்றான். அவன் கையகப்பட்டு மார்பிடைப் படிந்து அரிதில் உயிர்காக்கப்பட்ட குணமாலை தன் உயிரை அவனுக்கே உரிமை செய்கின்றாள். அயராக்காதல் அவள் உள்ளத்தில் தோன்றி அவனை இன்றி அமையாத நிலையைப் பயந்துவிடுகிறது.

பின்னர், குணமாலை தான் வளர்த்த கிளியைச் சீவகன் மனைக்குச் சென்றுவரப் பயிற்றி அதன் வாயிலாகத் தன் காதலைச் சீவகனுக்குத் தெரிவிக்கின்றாள். சீவகனும் யானை முன் அகப்பட்டு வருந்தியது கண்டு, “பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்வில் சாதல் எண்ணி” அவளை உய்வித்து விடுவித்த அப்பொழுது முதல் குணமாலை பால் தீராக் காதல் கொண்டு தெளிவு பெறாது வருந்தியிருக்கின்றான். குணமாலை விடுத்த கிளி சீவகன் மனைப்புறம் அடையும் போது காந்தருவதத்தை சீவகன் இருந்த இடத்துக்கு வருகிறாள்; அழகிய பெண்ணொருத்தியின் உருவம் எழுதப்பெற்ற கிழியொன்று அவன் கையில் உளது; அது காணும் தத்தைக்குப் புலவியும் சினமும் பொங்கி வழிகின்றன. சீவகன் தெருட்டும் உரைகள் தத்தைக்குத் தெளிவு நல்காமையால் அவள் அவனின் நீங்கிப் போய் விடுகின்றாள். அந்நிலையில் கிளி சீவகனை அடைந்து குணமாலையின் காதற்குறிப்பை அவனுக்குத் தெளிய உரைக்கின்றது. அவனும் தன் காதற் பெருக்கத்தைக் கட்டுரைத்துத் தான் விரைவில் குணமாலையை மணந்து கொள்ள இருக்கும் கருத்தை ஓர் ஓலையில் எழுதிக் கிள்ளை வழியாக அவட்கு விடுகின்றான். கிளி சீவகன் தந்த ஓலையைக் கொணர்ந்து கொடுக்கிறது. அவன் தன் மீது உண்மைக்காதல் கொண்டிருப்பதைக் குணமாலை அறிந்து அவளும் பெருமகிழ்வு கொள்கின்றாள்.

** உண்மைக் காதல்**
சிறிது போதில் குணமாலையின் செவிலித்தாய் போந்து. “நின் தந்தை நின் மாமன் மகனுக்கு நின்னை வரைவுடன் படுகின்றான். நின் மாமன் மகனும் நின் உருவைக் கிழிமிசைத் தீட்டி நாடோறும் அதனை வழிபட்டு வருகின்றான்; நின் திருப்பெயரல்லது வேறு எதனையும் அவன் உரைப்பதிலன்” என்று உரைக்கின்றாள். உடனே குணமாலை தன் இரு காதுகளையும் கையாற் புதைத்து,

“மணிமதக் களிறு வென்றான் வருத்தச்சொற் கூலி யாக
அணிமதக் களிறன் னானுக்கு அடிப்பணி செய்வ தல்லால்
துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்”

என்று சொல்லி வருந்துகின்றாள். இச்சொற்களில் ஒளிரும் அறிவும் அறமும் செவிலியின் உள்ளத்தில் சிந்தனையை எழுப்பு கின்றன. “துகள்மனத்து இன்றி நோற்ற தொல்வினைப் பயன்” என்று அவள் சொல்லுகின்றாள்.

“என்னைக் காத்தற் பொருட்டுத் தன்னுயிரை யானைமுன் வைத்து வென்ற சீவகன் மேற்கொண்ட வருத்தத்துக்குக் கூலியாக அவனுக்கு யான் அடித் தொண்டு செய்து வழிபடல் வேண்டுமே யல்லாது பிறனொருவனால் வழிபடப்படுவது அறமாகா; அதனை நினைந்து அச்சீவகற்கே என்னை அடிப்படுப்பது என் பெற்றோர்க்கு நன்றியறிதலாய பேரறமாம்; அதனை நினையாது பிறனொரு வனுக்கு என்னைக் கொடுக்கத் துணிவதால் உளதாகும் தீமையை அவர்கள் நினையாதது என்னோ,” என்றும், “சீவகனது நன்றியை அவர்மறப்பினும், அந்நன்றியை நேர் நின்று பெற்றயான் மறந்து பிறிது நினைத்தல் எனக்கும் அறமாகாது” என்றும் கூறுவாளாய், “மணிமதக்களிறு வென்றான் வருத்தச் சொற் கூலியாக அணி மதக்களிறு அன்னானுக்கு அடிப்பணி செய்வதல்லால், துணிவது என்” எனவுரைத்தது செவிலிக்கு மிக்க இன்பத்தைத் தருகிறது. குணமாலையது மனம் அறநெறியிற் செல்வது கண்டு வியந்து, “துகள்மனத்து இன்றி நோற்ற தொல்விமைனப் பயன்” எனப் பெற் றோர்க்கு உரைக்கக் கருதுகின்றாள். அதற்கிடையே செவிலியின் அமைதி குணமாலையின் கருத்தை நிலைகுலையச் செய்கிறது. உடனே, “என்னைச் சீவகற்குக் கொடுக்க எந்தையும் யாயும் நேராராயின், சிந்தனை பிறிதொன்றாகிச் செய்தவம் முயறல் வேண்டும்” எனத் தெளிய உரைக்கின்றாள். கற்புடை நன் மகளாகிய குணமாலை இவ்வாறு உரைப்பது பெரிதன்று; அது நன்மகளிர்க்கு இயல்பு. குணமாலையின் குணமாண்பு கண்டு பெற்றோர், சீவகனுக்கே அவளை மணம் செய்து வைக்கின்றனர். இதனால், அறம் திரியாத நற்குடியில் பிறக்கும் மகளிரும், அவர் பெற்றோரும், அறம் வழுவாத வகையில் தம் செயல் முறைகளைச் செய்தொழுகும் திறம் திருத்தக்க தேவரால் சிறப்பித்துக் காட்டப்படுவது நாம் அறியத் தகுவதொன்றாம்.

இளங்கோ கண்ட இயற்கை


** முன்னுரை**
இயற்கையன்னை கோயில் கொள்ளும் இடம் மலை நாடான குறிஞ்சி; அவள் தனது அருளழகை விளக்குமிடம் முல்லை; கொலு வீற்றிருக்கும் திருவோலக்கம் மருதம்; அவள் மகிழ்ந்து விளையாடி மாண்புறும் இடம் நெய்தல். இவ்விடங்களில் இயற்கையின் எழில் நலம் கண்டு இன்புறுவது புலமை நலம் படைத்த சான்றோர்க்கு இயல்பு. இச்சான்றோர் கூட்டத்துத் தலைமை நலம் பெற்ற இளங்கோவடிகள் மலைநாட்டுச் சேரவேந்தர் குடியிற் பிறந்து, அறிவு நூல் துறையில் தலைசிறந்து, இயற்கையன்னையின் மடியின் கண் இருந்து அவளதுஇன்ப அழகு முற்றும் நன்கு நுகர்ந்த நல்லிசைத் துறவியாவர்.

தனது நலமாகிய பாலை அருந்த விழையும் புலவர் பெரு மக்களாகிய குழவிகட்கு இயற்கையன்னை காலந்தோறும் அதனை நல்கி வளர்த்தலில் நல்ல தாயாக விளங்குபவள். இயற்கைக் காட்சி யாகிய இனிய பாலை அவ்வப்போது ஆர்வந்தீர உண்டு தேக் கெறியும் சேரர் இளங்கோவும், அப்பாலின் பயனைக் கண்ணகியார் வரலாறாகிய சிலப்பதிகார நாடகத்தில் ஆங்காங்கு நமக்குக் காட்டி நுகர்வித்து இன்புறுத்துகின்றார்.

கண்ணகியார் வரலாறு சோழ நாட்டில் தோன்றிப் பாண்டி நாட்டில் சிறப்பெய்திச் சேர நாட்டில் முடிவு பெறுகிறது. சோழ நாடு நெய்தல் நலம் சிறிதும் மருதநலம் பெரிதும் உடையது. பாண்டி நாடு முல்லைவளம் பெரிதும் குறிஞ்சி நலம் சிறிதும் பெற்றது. சேரநாடு குறிஞ்சி வளம் பெரிதும் சிறந்தது. இம்மூன்று நாடு களோடும் தொடர்புடைய சிலப்பதிகாரம் முற்றும், இயற்கை யன்னையின் இன்ப அழகு காண்டதற்கு ஏற்புடைய தென்பது இதனால் தெற்றென விளங்கும். ஒரு கோயிற்குச் சென்று அங்குள்ள கடவுளை வழிபடுவோர் முதற்கண் அதன் அரணைக் கடந்து, பின் இடையிலுள்ள அகலிடம் கடந்து, அதற்குப் பிறகு உட்சென்று கண்டு பரவி மகிழ்வது போல, இயற்கையன்னையின் கோயிற்குட் செல்லும் நாமும் அரணிடமாகிய நெய்தலையும், அகலிடமாகிய மருதமுல்லைகளையும் அவற்றின் பின் குறிஞ்சியையும் காணும் முறைமையினை உடையவர்களாகின்றோம்.

** நெய்தல் நிலம்**
சிலப்பதிகாரத்துக் காவிரிப் பூம்பட்டினம் சோழ நாட்டு நெய்தல் நிலத்துச் செல்வ நெடுநகரமாகும். அது கடற்கரையில் உளது. அதன் அருகே காவிரியாறு இடையறா நீர்ப் பெருக்குடன் போந்து கடலோடு கலக்கிறது. கடற்கரை நுண்ணிய மணல் பரந்துள்ளது. மணலும் நன்கு இடித்துக் கலந்து மாவைப் போல நுண்மையும் நொய்மையும் உடையதாய், தன்பால் வீழ்ந்த ஐயவி (ஒருவகைக் கடுகு) யை எளிதில் கண்டெடுக்கக் கூடிய தூய்மையும் உடையதாய்த் திகழ்கிறது. கரையருகே இனிய நீர்நிலை காணப் படுகிறது. அதன்கண் தாமரைகள் மலர்ந்து விளங்குகின்றன. இதனை, “மருத வேலியின் மாண்புறத் தோன்றும், கைதை வேலி நெய்தலங் கானல்” என அடிகள் கட்டுரைக்கின்றார்.

இந்த நெய்தலங்கானலில் புன்னை மரங்கள் நிறைந்த பூம்பொழில் உளது. அதன்கண் கடற் காற்றால் புதுமணல் பரந்து தரை மெத்தன அமைந்திருக்கிறது. அப்பொழிலைச் சுற்றியோடும் கழிக்கரையில் தாழைகள் மலர்ந்து இன்மணம் கமழ்கின்றன. அம்மணத்தால் கடற்காற்றின் புலவுமணம் கெடுகின்றது. ஒருபால், கடல் திரையானது, தான் புலால் நாற்றம் கொண்டு உலவுவதற்கு வருந்தி ஓலமிட்ட வண்ணம் வந்து, தாழம்பூவும் புன்னைப்பூவும் உதிர்ந்து நன்மணம் பொருந்திய இடத்தை அடைந்து, தன் புலால் நாற்றம் நீங்கிப் பூவின் நறுமணம் பெற்று நீங்குகிறது. இக்காட்சியைக் காணும் இளங்கோ,

“புலவுற் றிரங்கி யதுநீங்கப்
 பொழில்தண் டலையில் புகுந்துதிர்ந்த
 கலவைச் செம்மல் மணம்கமழத்
 திரையு லாவு கடற்சேர்ப்ப”

என்று பாடுகின்றார்.

ஒருபால் கரையை மோதி அலைக்கும் அலைகள் வலம்புரிச் சங்குகளைக் கரையில் ஒதுக்குகின்றன; அச்சங்குகள் மெல்ல ஊர்ந்து செல்லுகையில், அவற்றின் சுவடு மணல்மேல் எழுதியது போலத் தோன்றுகிறது. ஆங்கே நிற்கும் புன்னைகள் பூக்களை உதிர்ந்துச் சங்குகளின் சுவட்டை மறைத்து இனிய காட்சி வழங்குகின்றன. நீர்த்துறைக்கு வந்து மீண்டு செல்லும் கடல் அலைகள் வரும்போது முத்துக்களைக் கொணர்ந்து கரையில் தொகுத்து விட்டுக் கரையில் இருக்கும் பூக்களை அலைத்துக் கொண்டு செல்லுகின்றன. அது மேலைநாட்டுக் கடல் வணிகர் பொன்னும் மணியும் கொண்டு வந்து கொடுத்து விரைப் பொருள்களை (வாசனைப் பொருள்) வாங்கிச் செல்வது போல் இருக்கிறதென அக்கால வழக்கத்தை உட்கொள்ளவைத்து,

“வீங்கோதம் தந்து விளங்கொளிய
 வெண்முத்தம் விரைசூழ் கானல்
 பூங்கோதை கொண்டு விலைஞர் போல்
 மீளும் புகாரே எம்மூர்”

என்று பாடுகின்றார்.

துறைமுத்துக்கருகே காவிரி கடலோடு கலக்கின்றது. அக் காவிரியில் நீர் பெருகி வருகிறது. கடலொடு கலந்து ஒன்றாகும் இடமாதலால் தண்ணீரும் பையவே செல்கிறது. நீர்மேல் நீல மணியும் மாணிக்க மணியும் போல நிறமுடைய பூக்கள் பல மிதக்கின்றன. புதுப்பூ வாதலால் அவற்றின் தேனை விரும்பும் வண்டினம் கூடி ஆரவாரிக்கின்றன. இடையிடையே கயல்மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இளங்கோவின் உள்ளமும் இன்பத்தால் துள்ளுகின்றது;

“மருங்குவண்டு சிறந்தார்ப்ப
 மணிப்பூ வாடை யதுபோர்த்துக்
 கருங்கயற்கண் விழித்தொல்கி
 நடந்தாய் வழி காவேரி”

என்று பாடுகின்றார். அக்காவிரியின் இருகரையிலும் பூக்கள் நிறைந்த சோலைகள் நிற்கின்றன. சோலைகளிலே மயில்கள் ஆலக் குயில்கள் பாடுகின்றன. கரையோரங்களில் பூக்கள் ஒதுங்கி மாலை போலத் தொடர்புற்றுச் செல்கின்றன. இக்காட்சி, ஆடுவோர் ஆட, பாடுவோர் பாட, அரசமகள் ஒருத்தி, தான் அணிந்த மாலை தன் மார்பின் இருமருங்கும் அசையக் கைவீசி நடந்து வரும் காட்சி போல இருத்தல் கண்டு,

“பூவர் சோலை மயிலாலப்
 புரிந்து குயில்கள் இசைபாடக்
 காமர் மாலை அருகசைய
 நடந்தாய் வாழி காவேரி”

என்று பாடுகின்றார்.

இவ்வாறே, அடிகள் பாண்டி நாட்டு வையையாற்றையும் காண்கின்றார். அதன் கரைக்கண் குரவம் வகுளம் கோங்கம் வேங்கை முதலிய மரங்களும், குருக்கத்தி, தளவம், முசுண்டை முதலிய கொடிகளும் நிறைந்து செறிந்திருக்கின்றன. கரையினையும் மணல் மேடுகளையும் ஆற்றிடைக் குறைகளான துருத்திகளையும் முல்லையரும்பிய வளைந்த கரையையும் நீரிடைப் பிறழும் கயல் கெண்டை முதலிய மீன்களையும் கருமணலையும் காண்கின்ற நம் இளங்கோ, வையையாற்றை ஒரு பெண்ணுருவிற் காட்டி நம்மை மகிழ்விக்கின்றார். வையையாகிய பெண்ணுக்குக் கரை மேகலை; மணல்மேடு மார்பு; முல்லையரும்பு பல்; முருக்கம் பூ வாய் இதழ்; கயல் மீன் கண்; கருமணல் கூந்தல். அவளுடைய உயர்வும் ஒழுக்கமும் புலவர் பாடும் புகழ் பெற்றவை.

“உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி”

என்று வையையின் பெருமையை வாயார வாழ்த்துகின்றார்.

இந்நிலையில் அடிகள், சேரநாட்டிலோடும் பேரியாற்றையும் எடுத்தோத மறக்கின்றாரில்லை. சேரநாடு மலை நாடாதலால், அங்குள்ள மலைகள் மிக்க உயரமாய்க் காடு பரந்து அழகிய காட்சி வழங்குவன. சேய்மையில் தோன்றும் அவற்றின் நிறம் நீலமாய் நெடிய திருமாலை நினைப்பிக்கின்றது. அம்மலைகளும் ஒன்றின்மேல் ஒன்றாய் உயர்ந்து நிற்பதால், அவற்றின் மேலிடத்தே தோன்றிக் குறுக்கிட்டு ஓடி வரும் பேரியாறு திருமால் மார்பில் குறுக்கே வீழ்ந்து கிடக்கும் முத்துமாலை போலத் தோன்றுகிறது. இரு கரையிலும் கோங்கமும் வேங்கையும் கொன்றையும் நாகமும் திலகமும் சந்தனமும் ஆகிய மரங்கள் வானளாவி நின்று பூக்கள் நிரம்பப் பூத்து விளங்குகின்றன. அவற்றின் பூக்கள் ஆற்றின் நீர்மேல் உதிர்ந்து, அதனைப் புறத்தே தோன்றாதபடி மறைத்து விடுகின்றன. இதனை இளங்கோவடிகள்,

“உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பின் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாறு”

என்று எடுத்துரைக்கின்றார்.

** மருத நிலம்**
இதுகாறும், காவிரியின் காட்சியில் ஈடுபட்ட நாம், தொடர்பு பற்றி வையையின் வனப்பையும் பேரியாற்றின் பெருமையையும் ஓரளவு கண்டு இன்புற்றோம். இனி, அக்காவிரி பாயும் நாடாகிய சோழ நாட்டு மருத நிலத்தைக் காண்பது முறையாகும். இம்மருதப் பகுதி வழங்கும் இயற்கைக் காட்சியை, அடிகளார், கண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம் பட்டினத்தைவிட்டு மதுரை நோக்கிச் சென்ற வழி நடைக் காட்சியில் வைத்துக் காட்டுகின்றார். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் துணைசெய்யக் காவிரியின் வடகரை வழியே செல்கின்றனர். வழி முழுதும் வயலும் சோலையுமாகவே உளது. “வயலும் சோலையும் அல்லது, யாங்கணும், அயல் படக்கிடந்த நெறி ஆங்கு இல்லை” என்று அடிகள் குறிப்பதைக் காணலாம். வயலும் சோலையும் பொருந்தியது மருதமன்றோ? வயற் பகுதியை முதலிற் காண்பாம்:

மருத வயல்கள் நீர் வளஞ் சிறந்து விளங்குவதால் நெல்லும் கரும்பும் தமது அழகிய தோற்றத் தால் இன்பக் காட்சி நல்குகின்றன. முற்றி விளைவுற்று நிற்கும் கரும்புகளில் தேனினம் கூடு கட்டி யிருக்கின்றன. தேன்கூடு கிழிந்து அருகில் இருக்கும் பொய்கையிற் பாய்ந்து அதன் நீரோடு கலந்து கொள்கிறது. அதனைக் காண்போர்க்குத் தேன் கலந்த நீரையுண்டற்கு ஆர்வமுண்டாகிறது. ஆயினும், அதனை உண்டல் நன்றன்று; அவ்வழியே செல்வோர் ஆசையை அடக்கும் திறமுடையராதல் வேண்டும்.

வயலுழவர்களில் சிலர் களை எடுக்கின்றனர்; சிலர் பூக் கொய்கின்றனர். பூவைப் பறிப்போர் வயல்களில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைப் பறித்து வயல் வரம்புகளின்மேல் எறிகின்றார்கள். பூக்களில் தேனுண்ணும் வண்டினம் படிந்து கிடக்கின்றன. வரம்பு வழியே செல்வோர் அப்பூக்களை மிதித்தேகும் போது அவற்றோடு கிடக்கும் தேனீக்கள் மிதிப்புண்டு வருந்துவது இயல்பாகவுளது. அவ்வுயிர்கட்கு ஊறுண்டாகாதவாறு நடந்துசெல்வது மக்கட்குக் கடன் என்று அடிகள் அறிவுறுத்துகின்றார்.

நீர் நின்ற வயல்களில் பற்பல மீன் வகைகளும் நண்டும் நத்தையும் வேறுபல உயிர்களும் வாழ்கின்றன. அவற்றை உண்டு வாழும் நீர்ப் பறவை களான கம்புட்கோழி, நாரை, அன்னம், கொக்கு, கானக்கோழி, நீர்க்காக்கை, உள்ளல், ஊரல், புள், புதா முதலியன செறிந்து பந்தி பந்தியாய் வரம் பணையில் இருப்பது காண்போர்க்கு அவ்வயல், “வெல்போர் வேந்தர் முனையிடம்போல”க் காணப்படுகிறது.

வயல்களில் உழுத எருமைகள் சேறுபட்ட மேனியுடன் சென்று அருகிலுள்ள நெற்போரில் உராய்கின்றன. அக்காலை, அப்போரில் உள்ள நெற்கதிர் மணிகள் உதிர்கின்றன. அவை தம் தலையிலும் தோளிலும் உதிர, செல்லும் உழவர் ஆரவாரித்து அவ்வெருமைகளை ஓட்டுகின்றனர்; ஒருபால் வயலின்கண் முளைத்து மலர்ந்து நெற்பயிர்க்கு ஊறுசெய்யும் களைகளை எடுத்து நெல்லின் நாற்று முடியை அவிழ்த்து அவற்றைத் தனித்தனியாக நடுகின்றனர்; அப்பொழுது நடுவோர் தோளிலும் மார்பிலும் சேறுபட்டு உலர்ந்து விடுகிறது; அச் சேற்றைக் கழுவாமலே நெற்சோற்றில் இறக்கப்படும் அரியல் என்னும் கள்ளைத் தம் விருந்தினர்க்கு அளித்துத் தாமும் உண்டு மகிழ்கின்றனர்.

ஒருபக்கம் வயலை உழும் உழவர் அறுகைக் கொடியும் குவளைப் பூவும் பிற கதிர்களும் சேர்த்து ஏரின் மேழியிற்கட்டி, அதற்கு வழிபாடு ஆற்றி, உழவினைத் தொடங்குகின்றனர். அவ்வழி பாட்டில் தொடங்கி உழுது வரம்பணை ஏறும்வரை, உழவன், ‘ஏர் மங்கலம்’ என்னும் உழவுப் பாட்டைக் கேட்போரும் ஏரையீர்த்துச் செல்லும் எருமையும் எருதும் இன்புறப் பாடுகின்றான்.

இவ்வாறு வித்தவிளைந்த நெல்லை அறுப்போர் காட்சியும், அறுத்த நெற்றாளைக் கட்டிப் போரிடுவோர் காட்சியும், போரைச் சிதைத்து அடித்துக் கடாவிட்டு நெல்லெடுப்போர் காட்சியும், அவற்றைப் பண்டியில் ஏற்றிச் செல்லும் காட்சியும், ஏனைக் கரும்பறுத்து ஆலையில் இடும் காட்சியும், கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி அடும் காட்சியும் பிறவும் வயலிடத்தே நிகழ்கின்றன.

இவ்வயல்களுக்கு இடையிடையே சிறுசிறு நீர் நிலைகள் உள்ளன. அவற்றின் கரையில் நண்டும் நத்தையும் மேய்கின்றன. அவ்வழியே செல்வோர் தம்மைப் போற்றாது செல்குவராயின், அவருடைய காற்கீழ் அகப்பட்டு அவை இறந்துபடும். இதனை முன்னுற உணர்ந்திருந்த கவுந்தியடிகள், கண்ணகிக்குக் கூறுவதாக, படிப்போர்க்கு அடிகள் அறிவுறுத்துகின்றார்.

மதுரை மூதூரைச் சார்ந்துள்ள நிலப்பகுதி மருதப் பகுதியாகும். அப்பகுதி தரும் இயற்கைக் காட்சியை,

“புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரட் பந்தரும் விளங்கியஇருக்கை”

என்று சுருக்கமாகக் காட்டி மகிழ்விக்கின்றார்.

இவ்வயல்களின் புறத்தே நிற்கும் சோலைகளும் பொழில் களும் இன்ப நிலையங்களாகும். அவற்றுள் மரவகை பலவும் இருள் படத் தழைத்து அழகுறப் பூத்து இனிய காட்சி தருகின்றன. அவற்றின் அடியில் பல்வகைக் கிழங்குகள் உண்டு. அவற்றை அகழ்ந்தெடுக்கும் குழிகளில் சோலைகளிலுள்ள சண்பகம் முதலிய வற்றின் பூக்கள் உதிர்ந்து அவற்றை மறைத்து விடும். அவ்வழியே செல்வோர் அங்கே குழிகள் இருப்பது அறியாது காலை வைத்து விடின், கீழே வீழ்ந்து வருந்துவர்.

மருத நிலத்து வாழ்வோர்க்குப் பொழில்களில் தங்கிப் பல்வகைப் பூக்களை அணிந்து இன்புறுதலும், ஆறுகளில் நாவாய் இயக்கியும், புணைபற்றி நீந்தியும் நீர்விளையாடுவது செல்வ வாழ்வின் சீர்மையாகத் தெரிகின்றது. பொழில் விளையாட்டுப் புரியும் செல்வர், முல்லையும் குவலையும் நெய்தலுமாகியவற்றைக் கூந்தலிலும், வேறே, மல்லிகையும் செங்கழு நீரும் பிறவும் தொடுத்த மாலையை முத்துமாலையோடு மார்பிலும் அணிந்து கொள்ளு கின்றனர். மேனியில் சந்தனம் பூசப்பெற்றிருத்தலால் அதன் மணம் இனிது கமழ்கிறது. இதனைக் கூர்ந்து நோக்கிய இளங்கோவின் எழிற் புலமை,

“தண்ணறும் முல்லையும் தாழ்நீர்க் குவளையும்
கண்ணவிழ் நெய்தலும் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப்
பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டு”

என்று மதுரை மூதூரிடத்து மருத நிலச் செல்வரது பொழில் விளையாட்டைப் பொறித்துக் காட்டுகின்றது.

அருவியாடுதலும் சுனைகுடைதலும் ஆகிய நீர் விளையாட்டு ஏனைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலத்தவர்க்கு உரியது. ஆயினும், மருதம் நெய்தல் என்ற இருநிலத்து மக்களே நீர் விளையாட்டினை மிக்க சிறப்பாகப் போற்றித் திருவிழாக் கொண்டாடுகின்றனர். இவ்விருநிலத்திலும் ஓடும் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வேகமின்றி மெல்லவே செல்லும். ஆறுகளும் அகலமாய் ஆழமின்றி நுண்மணல் நிறைந்து நீராடற்கேற்ற நீர்மைபெற்று விளங்கும். குறிஞ்சியிலும் முல்லையிலும் ஓடிவரும் ஆறுகள் கடுவரவும் ஆழமும் கொண்டு அகலமின்றி இடையே பெரிய பெரிய கற்கள் கிடக்கப் பெற்றுள்ளன. அதனால் அவை புனல் விளையாட்டுக்குப் பொற் புடையவாக அமைவதில்லை. இதனால் தான் காவிரியிலும் வையையிலுமே நீராட்டுப் பெருவழக்காகவுளது. சேரநாட்டு ஆறாட்டும் கடலாட்டாகவே காட்சியளிக்கிறது.

வையையாற்றுப் புனலாட்டொன்றினை இளங்கோவடிகள் வகுத்துரைக்கின்றார்: மேலைக்காற்று வீசுங்கால் வையையில் நீர் பெருகுகிறது. செல்வர்கள், தம் மகளிரும் மக்களும் உடன் வரச் சென்று மருத மரங்கள் நிற்கும் நீர்த்துறையை அடைகின்றார்கள். ஆற்றின் இடையே துருத்திகள் (தீவுகள்) உள்ளன. அவற்றில அழகிய பொழில்களும் மணல் பரந்த இடங்களும் உண்டு. அவ் விடங்கட்கு நாவாய் வழியாகச் செல்கின்றனர். நாவாய்களில் பல வேறு அடுக்குகளைக் கொண்டு மாடமாளிகை போல் உள்ளவை நீரணிமாடம் எனப்படுகின்றன. துருத்தியின் கரையில் நீரில் இறங்கி நீந்தி விளையாடுவர் சிலர்; புணைபற்றி விளையாடுவர் வேறு சிலர். ஒரு சிலர் நாவாய்களிலும் நீரணிமாடங்களிலும் ஏறி ஆற்றில் உலா வருவர். இதனை,

“குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகில்
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை
ஓங்குநீர் மாடமாடு நாவாய் இயங்கிப்
பூம்புணைத் தழீஇப் புனலாட் டமர்ந்து”

என்று அடிகள் புகழ்ந்து பாடுகின்றார்.

** பாலை நிலம்**
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் காவிரி யைக் கடந்து தென்திசை நோக்கிச் சென்ற நெறியே நம்மையும் செலுத்தி, முல்லையும் குறிஞ்சியுமாகிய நிலங்கள் வழங்கும் இயற்கைக் காட்சியில் ஈடுபடச் செய்கின்றார் நமது இளங்கோ சிராப்பள்ளிக்கும் சிறுமலைத் தொடருக்கும் இடையிலுள்ள முல்லைப் பகுதியை முதற்கண் காட்டுகின்றார். முல்லைக் காட்டைச் சென்று சேருமுன், நீர் வளமில்லாத பாலைப் பகுதியொன்று காட்சியளிக்கிறது. அது,
“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான்நலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம்”

கொண்டு கிடக்கின்றது. அதன்கண் அறையும் பொறையும் சிறுசிறு வழிகளும் பொருந்தியுள்ளன. பாலை நிலம் என்றவுடனே, தார் பாலைவனமும் சகாரா பாலைவனமும் நமது நினைவுக்கு வரும். அவை போல்வன அல்ல நம் தமிழகத்தில் காணப்படும் பாலைப்பகுதிகள். சீரழிந்த காடும், வளங்குறைந்த குன்றுகளும், நீர்வளமின்றி முரம்பும் பருக்கைக் கற்களும் நிறைந்து கிடக்கும் இடமே பாலையாகும். இவற்றிடையே மான்களும் குறுநரி முதலிய விலங்குகளும் உண்டு. எயினர் மறவர் என்பார் இப்பகுதிகளில் இடம் அமைத்து வாழ்கின்றனர். காரை, கள்ளி, மரல், மூங்கில் முதலிய முட்புதர்களும், வேல், மரவம், ஓமை, உழிஞ்சில் முதலிய மரங்களும் உள்ளன. சில இடங்களில் குன்றவரும் கொடுவில் மறவரும் வழிபாடு செய்யும் கொற்றவைக்குரிய கோயில்கள் இருக்கின்றன. அக்கோயில் முற்றத்தில் நாகம், நரந்தம், ஆச்சா, சந்தனம், சேமரம், மா, வேங்கை, இலவு, புன்கு, பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் முதலிய மரங்கள் நிற்கின்றன. அடிகள் இக் காட்சியை அழகுறத் தமது நூலிற் காட்டியுள்ளார்.

** குறிஞ்சி நிலம் **
இப்பாலை நிலத்துக்குத் தெற்கில் வளம்பொருந்திய காடும், காடுசெறிந்த சிறுமலைத் தொடரும் காணப்படுகின்றன. காடுகளில் பல்வகை மரங்களும் செடிகொடி வகைகளும் புதர்களும் செறிந்துள்ளன. மலையின்கண் ஐவனநெல், கரும்பு, தினை, வரகு, வெங்காயம், மஞ்சள், கவலைக் கிழங்கு, வாழை, கமுகு, தென்னை முதலியன சிறந்து விளங்குவது காட்டி,

“மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்”

என்று குறித்துரைக்கின்றார்.

இந்நிலையில், அடிகளாகிய சேரர் இளங்கோ, மலை
நாட்டிலே பிறந்து வளர்ந்து அது வழங்கும் காட்சியைக் கண்டு பயின்றவராாலால், அதுபற்றி அவர் கூறுவனவற்றைக் காண்பதற்கு நமது உள்ளம் அவாவுகின்றது. அதற்கேற்பவே, அவரும், குறிஞ்சிக் குறவர் குரவையாடி மகிழ்தலையும், வேலன் அயரும் வெறியாட்டையும், தினை குற்றுவோரது வள்ளைப் பாடலையும் புனங்காப்போர் புள் ஓப்புவதையும், அருவி வீழ்ச்சியையும், புலியும் யானையும் போரிடு பூசலையும், பொய்க்குழி அமைத்து யானை
வேட்டம் புரிதலையும் ஆங்காங்கு எடுத்துரைக்கின்றார். அம்மலை
நாட்டிற் பெறக்கூடிய பொருள் வகைகளை, யானைக்கோடு, அகிற்கட்டை, கவரிமயிர், தேன், சந்தனம், சிந்துரம், அஞ்சனம், அரிதாரம், ஏலம், இலவங்கம், மிளகு என நிரல்படக் கோத் துரைப்பதில் நிகரற்று விளங்குகின்றார். தேமா, பலா முதலிய கனிவகைகளுடன், அரிக்குருளை, புலிப்பறழ், மதகரிக்கன்று, குரங்கின்குட்டி, மான்மறி முதலியவற்றையும் பீலிமயிலையும் கானக் கோழியையும் கிள்ளைகளையும் குன்றவர் வேந்தர்க்கு வரிசையாக வழங்குகின்றனர்.

குறிஞ்சி நிலத்தவர் தேன் ஈட்டுவதையும் தொழிலாகக் கொண்டவர். மா, பலா, வாழை முதலிய பழங்களையும் வேறு பழவகைகளின் சாறுகளையும் தேனொடு கலந்து தேறல் அமைக் கின்றனர். அதன் தெளிவை மூங்கிற் குழாய்களில் பெய்து புளிப் பேறவைத்து உண்டலும் அவர்கட்கு இயல்பு. அதனை, “நீடமை விளைந்த தேங்கள் தேறல்” என்பர். கையில் கவண்கொண்டு தினைப்புனத்தை மேய வரும் யானைகளை உயர்ந்த பரண்மீதிருந்து வெருட்டி ஓட்டித் தினையைக் காவல் புரிவர்; யானைகளை வேட்டையாடுவதும் செய்வர். குறமகளிர் பரண் மேல் இருந்து தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும் பறவைகளை ஓப்புவர்.

ஒருபக்கத்தில் மூங்கிற் குழாயில் வைத்திருந்த தேறலையுண்டு கையில் கவண் ஏந்தி நின்ற ஒரு கானவன், தினைப்புனத்தை மேயவரும் யானையைப் பார்க்கின்றான். அதனைத் தன் கவணால் எறிந்து ஓட்டவேண்டுமென்று கருதி அதற்குரிய இடம் நாடிச் சென்று நிற்கின்றான். அதனை அறியாமல் பரண்மேல் இருந்த குறமகள் குறிஞ்சிப் பண்ணில் திறத்திறம் என்ற இசைவகையைத் தொடுத்து இனிமையாகப் பாடுகின்றாள். அவ்யானை அவள் பாட்டிசையில் ஈடுபட்டுத் தினைமேய்வதையும் விடுத்து அயர்ந்து உறங்கிவிடுகிறது; கானவனும் இசைச் சுவையில் மூழ்கிக் கையிலிருந்த கவண் கீழ்வீழ மெய்மறந்தொழிகின்றான். இக்காட்சியை வியந்து காணும் அடிகளார்,

“அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடுபு உடையூஉக் காவல் கைவிட,
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த
ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த
வாகைத் தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங்கு இதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி”

என்று குறிக்கின்றார்.

இவ்வண்ணம் சோழநாட்டிலும் பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் ஆங்காங்கே காணப்படும் இயற்கைக் காட்சிகளை இளங்கோவடிகள் கண்டு இன்புற்றிருக்கின்றார். கீழ்க்கடற் கரை யிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் முதல் மேலைக்கடற்கரை நாடாகிய சேரநாடு வரையில் அடிகளார் உலாவியிருப்பதைக் கண்ணகியார் வரலாற்று நெறிகளே நன்கு வற்புறுத்துகின்றன. தமிழகத்தின் வட வெல்லையாகிய வேங்கடத்துக்கும் சென்றுள்ளாரென்பதை, அது பற்றி அவர் கூறும் பகுதி நமக்கு அறிவிக்கின்றது. பாக்காலாவி லிருந்து இரேணுகுண்டாவரையில் கிழக்கு நோக்கிச் சென்று பின், வடக்கு நோக்கிச் செல்லும் வேங்கட மலைத் தொடரைக் கார் காலத்தில் காணின், மிகப் பல அருவிகளுடன் அது காட்சி வழங்குவது யாவரும் அறிந்த தொன்று. வேங்கடத்தில் திருமால் எழுந்தருளும் திருமலைக்குச் செல்லும் நெறியில் வீழும் வீங்குநீர் அருவியை வியந்து அடிகள் “வீங்குநீர் அருவி வேங்கடம்” என்பதும், அங்கே திருமால் நின்ற கோலத்தில் காட்சி தரும் திறத்தையும் எடுத்துரைப்பதும் அடிகள் திருவேங்கடத்தை நேரிற் கண்டவ ரென்பதை வற்புறுத்துகின்றன. இதனால் இளங்கோவடிகள், அரசர் குடியிற்பிறந்த செல்வத் தோன்றலாயினும், தமிழகம் முழுதும் சுற்றித் திரிந்து, இயற்கையன்னை வழங்கும் இன்பக் காட்சியில் திளைத்துச் சிறந்த புலமையுடையராகையால், தாம் பாடியருளிய சிலப்பதிகாரத்தை இயற்கையழகிற்குரிய சொற்கோயிலாக்கி யுள்ளார் என்பது தெளிவாகிற தன்றோ? வாழ்க இளங்கோ!

நந்தா விளக்கு


** சம்புவராயர்**

சோழ வேந்தன் இரண்டாங் குலோத்துங்கன் சோழநாட்டை ஆண்டு வருகையில் தொண்டை நாடு அவனது ஆட்சியில் இருந்தது. இன்றுள்ள சித்தூர், செங்கற்பட்டு, வடஆர்க்காடு, தென்னார்க் காட்டின் வடபகுதி ஆகிய இந்த மாவட்டங்கள் சேர்ந்தது பண்டைத் தொண்டை நாடு. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் பிருந்தே இந்நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிந்து வழங்கி வந்துள்ளது. விசயநகர வேந்தர் ஆட்சியில் தான் இக் கோட்டங்களின் பெயர்கள் மறையத் தலைப்பட்டன; முகமதிய மேனாட்டவராட்சியில் முற்றிலும் ஒழிந்தன. இன்று அவை கல் வெட்டுக்களில் மாத்திரம் காட்சி வழங்குகின்றன.

சோழவேந்தர் ஆட்சிக்காலத்தில் தொண்டை நாட்டுக் கோட்டங்களுள் ஒன்றான பல் குன்றக்கோட்டத்தில் சம்புவராயர் என்ற குறுநில மன்னர் நாடுகாவல் புரிந்து வந்தனர். பல்குன்றக் கோட்டம் பாலாற்றுக்கும் தென்பெண்ணை யாற்றுக்கும் இடையில் பவளமலையை மேல் எல்லையாகக் கொண்டிருந்தது. பவளமலை இப்போது சவ்வாது மலை யென்ற பெயருடன் வடவார்க்காடு வட்டத்தில் உள்ளது. பல்குன்றக் கோட்டத்துச் சம்புவராயருக்குப் படைவீடு தலைநகராக விளங்கிற்று. அவரது ஆட்சி கிழக்கே திருக்கழுக்குன்றத்தையும் விழுப்புரத்துக்கு வடகிழக்கிலுள்ள திருவரசிலியையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

** படைவீடு**
வடவார்க்காட்டில் போளூரிலிருந்து வேலூர்க்குச் செல்லும் பெருவழியில் சந்தைவாசல் என்னும் அழகிய ஊர் உளது. அதற்கு மேற்கில் கிழக்கொழிய ஏனை மூன்று பக்கங்களிலும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட இடைநிலத்தில், படைவீடு காட்டாறு ஒன்றின் கரையில் இருக்கிறது. அந்த ஆற்றை ஆரணியாறு என்றும் படைவீட்டாறு என்றும் வழங்குகின்றனர் சிறுகாடு படர்ந்து பசுந்தழை போர்த்து நிற்கும் குன்றுகளின் அடியில் மணல் பரந்த ஆற்றங்கரையில் நின்று திகழும் இவ்வூர் படைவீடு என்ற பெயர் தாங்கியிருப்பது மிகவும் பொருத்தமே என்பதை நேரிற் சென்று காண்பவர் நினையா தொழியார், ஒரு காலத்தில் இது செல்வம் சிறந்த திருநகரமாய் விளங்கிற்றென்பதைக் காட்டும் சின்னங்கள் பல இன்னும் இருந்து வருகின்றன.

** சம்புவராயர் ஆட்சி**
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிவரை சம்புவராயர்களின் ஆட்சி மிக்க புகழ் படைத்து விளங்கிற்று. “கலம்பகத்துக்கு இரட்டையர்கள்” எனச் சிறப்பித்துப் புகழப்பெற்ற இரட்டைப் புலவர்களை ஆதரித்துப் புறந்தந்த பெருமை படைவீட்டரசர்க்குத் தனித்த உரிமையாகும். கச்சி ஏகாம்பரநாதருலா என்ற நூல் சம்புவராயர்களின் செயல் மாண்பு, கொடை மாண்புகளைச் செவ்வையாக உரைக்கின்றது.

** படைவீட்டுக் கல்வெட்டு**
படைவீட்டு நகரத்தைச் சூழ்ந்த நிலப்பகுதி மிக்க நீர் நிலவளம் படைத்தது. இன்றும் முன்னே சொன்ன பெருவழியாகச் செல்வோர், அப்பகுதி இனிய மருதவளஞ் சிறந்து விளங்குதலைக் காண்பர். அதன்கண் இன்றுபோல் அன்றும் வேதியர் பலர் வாழ்ந்தனர். அவர்களில் கன்னடரும் தமிழரும் தெலுங்கரும் இலாளரும் எனப் பல திறத்தர் இருந்தனர். ஒரு காலத்தில் அவரிடையே திருமணம் பொருளாகத் தீய கொள்கை ஒன்று உண்டாயிற்று. மணப் பெண்ணுக்காக மணமகன் மிக்க பொன் தரவேண்டும் என்றும், மணமகனுக்காக மணப் பெண்ணின் தந்தை பொருள் தருதல் வேண்டுமென்றும் ஒரு வழக்காறு அவ்வேதியரிடையே நிலவிற்று. இத்தீநெறியின் பயனாகப் பொன்கொடுத்து மணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர், தவறான நெறிகளில் மணஞ் செய்து கொள்ளலாயினர். அதனால் அவர் மரபுக்கு மாசு தோன்றக் கூடிய சூழ்நிலையும் தோன்றுவதாயிற்று; சமுதாயத்தின் பண்பாடும் வலியிழக்கத் தொடங்கியது. அதனை உணர்ந்த அறிஞர் பலர், வேந்தனான சம்புவராயனது ஆணைபெற்று, விரிஞ்சைபுரத்து வழித்துணைநாதர் கோயிலில் கூடியிருந்து நல்ல தோர் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டனர். “இற்றை நாள் முதலாக இந்தப் படைவீட்டு ராஜ்யத்துப் பிராமணரில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர் இலாளர் முதலான அசேஷ கோத்ரத்து அசேஷ சூத்திரத்தில் அசேஷ சாகையிலவர்களும் விவாகம் பண்ணுமிடத்துக் கன்னியா தானமாக விவாகம் பண்ணக் கடவராகவும்; கன்னியாதானம் பண்ணாமல் பொன் வாங்கிப் பெண்கொடுத்தால், பொன் கொடுத்து விவாகம் பண்ணினால் இராஜதூஷணத்துக்கு உட்பட்டுப் பிரா மணியத்துக்கும் புறம் பாகக்கடவர் என்று பண்ணின தர்மஸ்தாபன சமய பத்திரம்;இப்படிக்கு அசேஷ வித்வ மகாஜனங்கள் எழுத்து”* என்பது அந்த ஏற்பாடு. இவ்வாறே மற்றைச் சமுதாயத்தாரும் தத்தம் இனம் செம்மை எய்தும் பொருட்டுப் பலப்பல சீர்திருத்தங்களைச் செய்து கொண்டனர். இவற்றையெல்லாம் அப்பகுதிகளிலுள்ள கல்வெட்டால் அறிகின்றோம்.

நாட்டின் அரசியல் நன்கு அமைந்திருந்தாலன்றி மக்களுக்குத் தத்தம் சமுதாய வளர்ச்சி பற்றிய வழி வகைகளில் கருத்துச் செல்லாது. படைவீட்டரசின் கீழ் வாழ்ந்த மக்கள் இவ்வாறு பல செவ்விய திருத்தங்களை ஏற்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கொண்டு, வாழ்க்கை வகை செய்து கொண்ட தொன்றே சம்புவராயர்களின் அரசியலின் செம்மைக்குச் சிறந்த சான்று பகருகின்றது. மக்கள் வகுத்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் வழுவுவோர் “இராஜ தூஷணத்துக்கு” உட்பட்டுத் தண்டனை பெற்ற செய்திகளை நவிரமலையடியின் வடபகுதியில் உள்ள கங்கன் மாதேவி, கட்டகரம் பாளையம் முதலிய ஊர்களில் வழங்கும் பழஞ்செய்திகளால் இனிது அறிகின்றோம். இதனால், படை வீட்டிலிருந்து அரசு புரிந்த சம்புவராய மன்னர்கள் நாடுகாத்து நல்கும் அரசியற் பாதுகாப்புடன் நாட்டு மக்கட்கு நன்னெறிப்பட்ட உரிமையும் நன்கு தந்திருந்தனர் என்பது விளங்குகிறது.

** சம்புவராயர் நீதிமுறை**
சம்புவராயர்களின் படைவீட்டரசு தொண்டை நாட்டின் தென்பகுதி முற்றும் பரந்து விளங்கியதாயினும், அவர்கள் முடிவேந்த ரான சோழர்களுக்கு அடங்கி அவர்தம் வழிநின்று ஒழுகிவந்தனர். சோழவரசு வேண்டும்போது சம்புவராயர் படைத்துணை செய்தனர்; வினைவேண்டிய வழி அறிவு உதவினர். இவருடைய அருஞ்செயலைப் பாராட்டிச் சோழமன்னர் உயரிய சிறப்புக் களைச் செய்தனர். சம்புவராயரிற் பலர் குலோத்துங்க சோழச் சம்புவராயன், வீர நாராயணச் சம்புவராயன் எனப் பெயர் தாங்கி யிருப்பதே தக்க சான்று.

இச்சம்புவராயர் வழியில் எதிரிலி சோழச் சம்புவராயன் என ஒருவன் தோன்றி மிக்க புகழ்பெற்று விளங்கினான். அவனுடைய நீதிமுறை பற்றிப் பல வரலாறுகள் படைவீட்டுக்கருகிலுள்ள கண்ண மங்கலம், குளத்தூர் முதலிய ஊர்களிலுள்ள பெரியோர் கூறுவது வழக்கம்.

** உற்ற நண்பர்கள்**
எதிரிலி சோழச் சம்புவராயன் படைவீட்டில் இருந்து அரசு புரிந்து வருகையில், அவனுக்குப் படைத் துணைவர் சிலர் பக்கத்தே இருந்தனர். அவருள் விக்கிரம சோழப் பேரரையன், அம்பலக் கூத்த னான தென்னாட்டரையன் என்பவர் ஏற்றம் பெற்று இலங்கினர். விக்கிரம சோழப் பேரரையன் தொண்டை நாட்டுக் களத்தூர்க் கோட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகத்துக்கு அண்மையில் இருக்கும் குன்றத்தூரில் வாழ்ந்து வந்தான். அம்பலக் கூத்தன் தென் பெண்ணையாற்றின் வடகரைப் பகுதியில் உள்ள மலையனூர் என்னும் ஊரில் இருந்தான். தென்பெண்ணை வடகரைப் பகுதி மலாடு என்றும் வழங்கும். அதன் உள்நாடுகளில் இருங் கோளப் பாடிப் பனையூர் நாடு ஒன்று. பனையூர் நாட்டில் அடங்கிய தாகலின், மலையனூர், மலாடான இருங்கோளப் பாடி நாட்டுப் பனையூர் நாட்டு மலையனூர் என்று இடைக்கால வரலாற்றுக் குறிப்புக்கள் எடுத்து மொழிகின்றன. மலையனூர் அம்பலக் கூத்தன், எதிரிலி சோழச் சம்புவராயனுடன் இளமையில் போர்ப் பயிற்சி பெற்றுச் சோழ வேந்தர் படையில் உடனிருந்து பழகிய உயரிய நண்பனாவன். அக்காலத்தே அவனுடைய போர் வன்மையும் மன நன்மையும் நேரிற் கண்டமையின், எதிரிலி சோழன் அவன் பால் எஞ்சாத அன்பு கொண்டான். படைவீட்டுக்கு எதிரிலி சோழச் சம்புவராயன் வேந்தனானதும், மலையனூர் அம்பலக் கூத்தனை வருவித்து ஒரு படைத் தலைவனாக்கிச் செம்மூர்க் கோட்டத்து முக்காட்டுப் பட்டு என்னும் ஊரில் இருந்து பாடிகாவல் புரிந்து வருமாறு பணித்திருந்தான்.

விக்கிரம சோழப் பேரரையனும், அம்பலக் கூத்தனான தென்னாட்டரையனும் சம்புவராயனுக்கு இரு கண் போல் திகழ்ந்தனர். கண்ணிரண்டும் ஒன்றையே காணும் என்பர். அது போல் இருவரும் எதிரிலியின் ஆட்சி இனிது இயங்குதற் கண் ஒன்றிய கருந்துடையவராய்க் கலந்து ஒழுகினர்.

** காதல் போட்டி**
அந்நாளில் அப்பகுதியில் வம்பு என்ற பெயருடைய செல்வ மகள் ஒருத்தி வாழ்ந்தாள். அவள் திருமணத்துக்குரிய செவ்வியில் இருந்ததனால், அரசியலில் சிறப்புற்றிருந்த தலைவர்களான பேரரை யனும் தென்னாட்டரையனும் அவளை மணந்து கொள்ள விரும்பினர். அவளுடைய பெற்றோரும் உடன் பிறந்தோரும் இருவரிடத்தும் ஒத்த பண்பும் ஒத்த செயலும் இருப்பது கண்டு செய்வது தெரியாது திகைப்புற்றனர். ஒருவாறு அவர்கள் தமக்குள்ளே ஆராய்ந்து, இருவரில் ஒருவரைத் தேர்ந்து கொள்ளும் உரிமையை வம்புவுக்கே விட்டொழித்தனர். நெல்லிகிழான் விண்ணனான அவள் தந்தை, சம்புவராயன் ஆணைப்படி இருவருடைய குணஞ் செயல்களையும் நேரிற் கண்டறியும் வாய்ப்பையும் வம்புவுக்கு வழங்கினான். வம்புவும் இருவரையும் கண்டு தனக்குரிய அறத்தில் வழுவாமல் நின்று அறிவன அறிந்துகொண்டாள்.

சின்னாட்குப் பின், கற்புடைய நங்கையான வம்பு தன் கருத்தை விண்ணனுக்கு விளம்பினாள். அவளுடைய உள்ளத்தைத் தென்னாட்டரையன தன் குணஞ்செய்கைகளால் கவர்ந்து கொண்டான் என்பது புலனாயிற்று. பெற்றோரும் உற் றோரும் உடனிருப்ப, நன்னாளில் வம்புவுக்கும் தென்னாட்டரை யனுக்கும் சீரிய முறையில் திருமணம் நடைபெற்றது. தென்னாட் டரையன் வாழ்க்கைத் துணைவியாய் வம்புவும் அவனது திருமனை சென்று வாழ்ந்துவரலானாள்.

** காதற் பகைமை**
இம்முயற்சியில் வெற்றி பெறாத விக்கிரம சோழப் பேரரையன் தென்னாட்டரையன் பால் அழுக்காறு கொள்ளலானான். வம்புவை மணத்தற்குச் செய்த முயற்சியில் தன்னைப்பற்றி வடுவான உரைகள் சில அவன் அவட்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்றும், அவ்வாறு வடுக் காணத்தக்க குற்ற மொன்றும் தன்பால் இல்லை யென்றும் பேரரையன் கருதினான். அக்கருத்தினூடே அழுக்காற்றுத் தீயும் கனிந்து எழுவதாயிற்று. நாள் கழியக் கழியத் தென்னாட்டரையன் பால் பேரரையற் குண்டான கடுப்பும் மிகுவதாயிற்று. இடை யிடையே நிகழ்ந்த அரசியல் நிகழ்ச்சிகளில் தென்னாட்டரையன் மேன்மையுற்றுச் சம்புவராயன் பால் சிறப்புக்கள் பல பெற்றான். இவ்வாற்றால் பேரரையன் உள்ளத்திற் கனிந்து பெருகி வந்த கடுப்புப் பகையாய் மூண்டது. முடிவில் தென்னாட்டரையனை ஒழித் தாலன்றித் தனக்கு மனவமைதி எய்தாது என்று கருதும் அளவிற்கு அவன் உள்ளத்தில் உறுபகை வளர்ந்து ஓங்கி நின்றது.

பேரரையன் எதனையும் எளிதில் தொடங்கிச் செய்யும் பெற்றியனல்லன்; செய்வது எதுவாயினும் காலமும் இடமும் கருது மளவுக்கு வலியும் அமைந்தால் தான் செய்வன். செய்தல் வேண்டு மென ஒன்றைத் துணிந்தானாயின், துணிந்ததனைத் துணிந்தவாறே செய்து முடிக்கும் திறலும் திட்பமும் உடையன். “கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை” என்ற திருக்குறளைக் கடைப்பிடித்து ஒழுகுபவனாதலால், பேரரையன் கருத்தை முக்காட்டுப்பட்டில் வாழும் தென்னாட்டரையன் சிறிதும் அறியும் திறம் இல்லாத வனானான். பெண்விழைவால் பெருந்தீமைகளைச் செய்தோர் வரலாறுகள் பலவற்றைப் பேரரையன் அறிந்திருந்தானாயினும், இப்போது தன் அறிவு பேதுறுவது நன்றன்று என்பதை எண்ணினான் இல்லை; தன் கருத்துக்கு இசைந்த கொலைமறவர் சிலரைக் கலந்துதென்னாட்டரையன் உயிரைத் தீர்த்து விடுவதற்கு ஏற்பாடு செய்தான். ஒருநாள் இரவு முக்காட்டுப் பட்டில் தென்னாட் டரையன் தனித்திருக்கும் நிலைமை நோக்கிப் பேரரையன் விடுத்த பெருஞ் செய்வீரர் தென்னாட்டரையனைச் சூழ்ந்து கொண்டனர்; அவர் பலராகவும் தென்னாட்டரையன் தனியாகவும் நின்று கடும் போர் உடற்றினான். தன் வீரர் பின்னிடக்கூடிய நிலை எய்துவதைக் கண்ட பேரரையன் தானே சரேலெனப் பாய்ந்து தென்னாட் டரையனைத் தன் கைவாளாற் கொன்று விட்டு ஓடிப்போனான்.

** தீப்பாய்ந்த செல்வி**
தன் ஆருயிர்க் கணவன் போர் புரிவதையும், வீரர் பிறக்கிடு வதையும் பார்த்து நின்ற வம்பு, பேரரையன் பாய்ந்து தென்னாட் டரையனைக் கொன்ற செயலைக் கண்டதும் ஓவெனக் கதறிப் புலம்பினாள். அருகிருந்த தானை வீரர்கள் வந்து கூடுமுன் பேரரை யனுடைய கொலை மறவர்கள் ஓடி மறைந்தனர். வம்புவுக்குக் கையறவு பெரியதாயிற்று; கணவன் உடல்மேல் வீழ்ந்து கதறினாள். செய்தி யறிந்ததும் விண்ணனும் பிறரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் எத்துணையோ ஆறுதல் கூறித் தேற்றியும் தேறாளாயின வம்பு, கணவனை எரித்த ஈமத் தீயிலேயே தானும் வீழ்ந்து உயிர் கொடுத் தாள்.

** பழிக்குப் பழி**
ஈமத்தீயை வலம் வருகையில் விக்கிரம சோழப் பேரரையன் செய்த தீமையை விரிவாகச் சொல்லி வாயில் அறைந்து கொண்டு வம்பு தீவாய் புகுந்தாள். அப்போது அதனைக் கேட்டிருந்த மக்கள் அனைவரும் மனங்கலங்கி வருந்தினர். கண்டிருந்த விண்ணனும் கருத்துடைந்து கண்ணீர் சொரிந்தான். அவன் அருகே நின்றவருள் தென்னாட்டரையன் தமையனும் ஒருவன். ஈமத்தீ எழ எழ, அவன் உள்ளத்தில் வெகுளித்தீ வீறிட்டெழுவதாயிற்று. அவனைக் கல்வெட்டுக்கள் இராம நம்பியான இருங்கோளப்பாடி நாடாள் வான் என்று குறிக்கின்றன. தென்னாட்டரையன் போல் அவன் பிறி தோரிடத்தில் பாடி காவல் தலைமை பூண்டவனாவன். தன் தம்பியைக் கொன்ற விக்கிரம சோழப் பேரரையனை கொன்று பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உருத்தெழுந்தது.

இராமநம்பி பேரரையனைவிட வினைத்திட்பமும் அதற் கேற்ற மனத்திட்பமும் ஒருங்கு உடையவன்; பகையாயினாரை வேரோடு தொலைத்தன்றித் துயில் கொள்ளாத துணிவு மிக்கவன்; வம்புவின் உடம்பு வெந்து சாம்பரானது காணுமுன் பேரரையன் தொலையவேண்டுமென நினைத்தான். முகம் கறுத்தது; உடல் வியர்த்தது; ஊதுகுழல்போல் மூச்சு எழுந்தது; வீசை துடித்தது; கண்கள் சிவந்தன; பற்கள் கடியுண்டன; மடித்த வாயினின்றும் வெடித்த சொற்கள் வெளிவந்தன; தன்னொடு நின்ற தானை மறவரை நோக்கினான்; “பேரரையனும் அவன் இனத்தவரும் இனி நிலவுலகில் இருத்தல் கூடாது” என்று கட்டளையிட்டான். அவர்கள் பேரரையனைத் தேடலுற்றனர். பேரரையன் தான் செய்த தவற்றை யுணர்ந்து மறைந்து கொண்டான். அவன் செயலால், ஒரு குற்றமும் செய்யாத பேரரையன் துணைவர் பலர் உயிர் துறந்தனர்; உறவினர் துன்புற்றனர்; அவர் வீடுகள் தீக்கிரையாயின. பேரரையனுடைய களத்தூர்க்கோட்டம் முழுதும் நாடாள்வான் விடுத்த மலாட ருடைய பகைப்புயல் வளைந்து உயிர்ச் சூறையாடிற்று. இதனை மறைந்திருந்து கண்ட பேரரையன் இனித் தனக்கு உய்யுந் திற மில்லை யென்பதை ஓர்ந்தான்; நேரே படை வீடுடி சென்று தனக்கும் நாடாள்வானுக்கும் தலைவனான சம்புவராயன் பால் முற்றும் தெரிவித்து உய்திபெறுவதெனத் துணிந்தான்; இரவோடிரவாய்ப் படைவீட்டை அடைந்து, எதிரிலி சோழச் சம்புவராயனிடம் உண்மையை உள்ளவாறு உரைத்து உய்தி வேண்டினான்.

** நேர்மையுடைய நீதி**
எதிரிலி சோழச் சம்புவராயனுக்குத் தென்னாட்டரையன் இறந்தது பற்றி மிக்க வருத்தமுண்டாயிற்று. அந்நிலையில் விக்கிரம சோழப் பேரரையன் உண்மையை ஒளியாமல் உரைத்தது பற்றி ஒரு வகையில் உவகை கொண்டான். பேரரையன் செய்த தீமைபற்றி இராமநம்பி மேற்கொண்ட செயல் சம்புவராயன் உள்ளத்தை அலைக்கத் தொடங்கிற்று. தன் தம்பியைக் கொன்றவன் சிறப் புடைய தானைத் தலைவனாக இருப்பதால், அவன் செயலை வேறு வகையில் ஆராய்ந்து முறை செய்வது உள்ளத்தெழுந்து உருத்து நிற்கும் சினத்தீக்குப் போதிய இரையாகாது என எண்ணியே இருங் கோளப்பாடி நாடாள் வானான இராமநம்பி, பேரரையனைப் பெருந்தொல்லைக்கு உள்ளாக்கினான் என்பதையும் நன்கு எண்ணி னான்; அதனால் அவனைத்தான் வெறுப்பதிலும் பயனில்லை எனச் சம்புவராயன் தனக்குள்ளே தெளிந்தான். நாட்டில் சிறந்த சான்றோர் களை வருவித்துச் செய்வகையாது எனத் தேர்வானாயினன்.

சான்றோரும் தானுமாய் இருந்து இராம நம்பியைப் படை வீட்டுக்கு வருவித்தான். பேரரையனையும் அவனையும் நிறுத்தி, இருவர் கருத்துக்களையும் சான்றோர் கேட்டறிந்தனர். இருவர் உரையினையும் ஒருசேரக் கண்டு சான்றோரொடு கலந்து எதிரிலி சோழச் சம்புவராயன், எல்லோரும் தெளியப் பேசலுற்றான்; “பேரரையனும் நாடாள்வானும் நம் அரசியலுக்குப் பெருந் துணைவர்கள், இவர்களிடையே பூசலும் போரும் உண்டாயின், நம் பகைவர்க்கு நகையும் எளிமையும் காட்டிவிடும். விரும்பிய வண்ணம் பேரரையனைக் கொல்வதால், இராமநம்பி தன் தம்பி தென்னாட்டரையனை மீளப் பெறப் போவதில்லை; அதனால் அவனது உயிர் ஒருவகை ஆக்கமும் அடையப் போவதில்லை; மறத்திற்கும் அறமே துணை. பேரரையன் செய்த மறவினைக்குக் கழுவாய் அறம் செய்வதே. அஃதாவது, நாடாள்வான் பேரரையன் பால் கொண்ட சினத்தைத் தணிக்க வேண்டி, அவனைப் பகைப் பதைக் கைவிடவேண்டும் என்பது தெளிவாக விளங்குகிறது. பேரரையனால் உண்டான கொலைவினை ஒன்றென்றால், நாடாள் வானால் பல உண்டாகியிருக்கின்றன. ஆகவே, இருவரும் தங்கள் தங்கள் செயல் குறித்துக் கழுவாய் செய்யவேண்டும்.”

இதனைக் கேட்டதும், அவையில் கூடியிருந்த சான்றோரும் நாட்டவரும் மகிழ்ச்சி கொண்டனர். அதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட சம்புவராயன், விக்கிரம சோழப் பேரரையனை முதலில் நோக்கி, “உன்னாற் கொலையுண்ட தென்னாட்டரையன் பொருட்டும் அவன் மனைவி வம்பு என்பவள் பொருட்டும் இரண்டு நந்தா விளக்குகள் வைத்தல் வேண்டும்” என்று பணித்தான். பின்பு இருங் கோளப்பாடி நாடாள்வானைப் பார்த்து, “நீயும் இவ்வாறே நந்தா விளக்குகளை இரண்டு வைப்பாயாக” என்று ஆணையிட்டான்.

இது கேட்ட அறங்கூறவையத்தார், “எங்கள் வேந்தனான சம்புகுலப் பெருமாள் பெயராலும் எதிரிலி; போர்க்குரிய மறத் துறையிலும் எதிரிலி; ஆட்சிக்குரிய அறத்துறையிலும் எதிரிலி” எனப் பாராட்டினர். தானைத் தலைவர் இருவரும் முக மலர்ச்சி யோடு அத்தண்டத்தை ஏற்றனர்.

முடிவில், சம்புவராயன் இருவரையும் ஒருங்கு நிறுத்தி, “இவ்விளக்கீடு மாத்திரம் அமையாது; மற்றொரு தண்டம் உளது, அதனையே நீங்கள் மனங்கலந்து மேற் கொள்ளவேண்டும்” என மொழிந்தான். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் அவன் குறிப்பு விளங்காமையால் வியப்பும் அமைதியும் எங்கும் நிலவின. சம்புவராயன் தன் மலர்ந்த முகத்தில் சிறிது விருவிருப்புத் தோன்ற இருவரையும் உருத்து நோக்கி, “நீங்கள் இருவம் இனி ஒருவர் மேல் ஒருவர் பகை தொடர்வதில்லை என உடன் பட்டு உறுதி தரல் வேண்டும். நீங்கள் செய்யும் விளக்கீடு, தென்னாட்டரையன் அவன் மனைவி வம்பு ஆகிய இருவர் உயிரும் நலம் எய்துதற்கு ஆயிற்று. அத்தென்னாட்டரையன் நமது படை வீட்டரசியலுக்குச் செய்த ஆக்கத்தை நீங்கள் இருவரும் செய்யத் தக்கவராகின்றீர்கள். அந்த ஆக்கம் உங்கள் இருவருடைய மனவொருமையால் தான் உண்டாகும். ஆதலால், நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் பகைத் தொழுகுவ தில்லை என உறுதி தருக” எனக் கட்டுரைத்தான். எல்லோரும் தமது உடன்பாட்டைத் தெரிவித்தார்கள். இருவரும் பலரும் காண உறுதி மொழிந்தனர்.

நந்தா விளக்கு
தென்னாட்டரையனும் வம்புவும் திருக்கழுக்குன்றம் உடைய இறைவனை நோக்கி வழிபாடாற்றக் கருதியிருந்த கருத்தொன்றை விண்ணன் வெளிப்படுத்தவும், சம்புவராயன் சான்றோர்களைக் கலந்து அவ்வாறே செய்க என இடம் குறித்தான்.

திருக்கழுக்குன்றமுடையார் திருக்கோயிலில் இவ்விளக்கீடு பற்றிய முடிபைக் கல்லிற் பொறிப்பது என்றதன் பின், கல்லில் வெட்டும் திறம்பற்றி ஒரு சிற்றாராய்ச்சி செய்தனர். இக்கொலை வழக்கில் பேரரையனே முதற்கண் குற்றம் செய்து பின்னர் நாடாள் வானால் அலைப்புண்டு சம்புவராயன் பால் புகல் நாடினானாத லால், அவன் உடன்பாடு, தம்பியான தென்னாட்டரையன் வம்பு என்ற இருவர்க்கும் நன்று உண்டாக விளக்கெரிப்பதற்கு நாடாள் வான் நல்கிய உடன்பாட்டினும் சிறந்தது எனக்கொண்டு, அதனையே முதலில் வெட்ட வேண்டுமென ஆணை தந்தான். அது, “இருங் கோளப்பாடி நாடாள் வான் இரண்டு விளக்குக்கும் சம்மதித்து இருவரும் தங்கள் உபயம் வந்து உடையார் திருக்கழுக்குன்ற முடையார் திருக்கோயிலிலே வைப்பது என்று இருங் கோளப்பாடி நாடாள்வான் சொல்லி, நானும் என் வமிசத்தாரும் இப்பகை தொடரவும் சொல்லவும் பெறாதோமாகச் சம்மதித்துத் தென்னாட் டரையனுக்கும் அவன் அகமுடையாளுக்குமாக வைத்த திரு நந்தா விளக்கு இரண்டுக்கும் விட்ட சாவா மூவாப் பேராடு தொண்Qறும் பசு முப்பத்தொன்றும் இத்தேவர் கோயிலிலே விட்டுச் சிலாலேகை பண்ணிக் கொடுத்தேன்; இத்தன்மம் அழியாமற் காப்பான் அடி என் தலைமேலன” என்று கூறுகிறது*

தமிழரசில் புலவர் பணி


** முன்னுரை**
நம் தமிழகத்தில் தமிழ் வேந்தர் தமிழ் மொழியால் அரசு புரிந்த போது தமிழரசு நடைபெற்றது. தமிழகத்து வரலாற்றில் சங்க காலத்திலும், இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்திலும் தமிழரசு நடந்தது. ஏனைப் பல்லவர், விசயநகர வேந்தர், முகமதியர், மேனாட்டவர் அரசு நடத்திய காலமும் உண்டு. மேனாட்டவர் காலத்தில் தான் அரசியல் மொழி ஆங்கிலமாயிற்று. அவர் கட்கு முன், வேற்றவரான பல்லவர் முதலியோர் அரசு நடத்திய போதும் தமிழே அரசியல் மொழியாக இருந்து வந்தது. சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடையில் உள்ள காலத்தில் களப்பிரர் என்பவர் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர்; ஆயினும் அவர்கள் நிலையாக இருந்து அரசு நடத்தியதற்கு ஒரு சான்றும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இடைக்காலச் சோழ பாண்டியர் நடத்திய அரசியல் தமிழரசே எனினும், அதன்கண் புலவர் பணி மிக்க ஈடுபட்டதாகச் சிறந்த குறிப்புக்கள் காணப்படவில்லை. சேக்கிழார், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார் முதலிய சிறந்த புலவர்கள் அரசரொடு நெருங்கிப் பயின்றுள்ளார்கள் எனினும், அரசியல் நெறியில் அவர்களது ஈடுபாடு விளங்கித் தோன்றவில்லை. அரச வாழ்வும் புலமை வாழ்வும் பின்னிப் பிணைந்து நிற்கும் தமிழரசு சங்க காலத்தில் தான் இருந்திருக்கிறது. புலவரது புலமைப் பயன் அரசியலின் செம்மை யொன்றே நாடி நின்றது; அரசியலும் புலமைக்குச் சீரிய இடம் தந்து சிறப்பித்துளது. அதுகண்டே திருவள்ளுவர் முதலிய அரசியலறி ஞர்கள், அரசியலுக்குப் புலமைமிக்க பெரியோரது துணை இன்றி யமையாது என்பதை வற்புறத்தியுள்ளனர். சங்க காலத் தமிழரசில் பெரியோர்களான புலவர்கள் செய்த பணிகள் சிலவற்றை இங்கே காண்பாம்:

** கிள்ளிவளவன்**
சங்க காலச் சோழ வேந்தருள் கிள்ளிவளவன் என்பவன் பழமையான வேந்தன். அவனது ஆட்சியில் ஒருகால் பருவ மழை பொய்த்தமையின் நாட்டில் விளைவு வளம்படாதாயிற்று. “வான் பொய்ப்பினும் தான் பொய்யா, மலைத் தலைய கடற் காவிரி” என்ற புகழ்பெற்ற காவிரியும் அப்போது கை விரித்து விட்டது. நாட்டில் வறுமை மிகுந்தது. இன்றுபோல் அன்று போக்குவரவுக்குரிய நெறியும் வாயிலும் நன்கு நிலவாமையால் பொருள் இன்மை நாடு முழுதும் நடம் புரிந்தது. நாடு காவல் பொருட்டு நாட்டு மக்கள் வேந்தர்க்குச் செலுத்த வேண்டிய கடமையும் கலக்கமுற்றது.

ஆண்டுகள் சில கழிந்தன. செய்க்கடனும் (Land Revenue) பெருகிற்று. பின்பு நாடு நன்மழை பெற்றுப் பொருள் வளம் பெறு வதாயிற்று.

அது கண்ட வேந்தன், அரசுக்கு மக்கள் இறுக்க வேண்டிய கடமையுடன் கழிந்த ஆண்டுகளில் செலுத்தப்படாது நின்ற பழங் கடனையும் பெறக் கருதினான். விளைந்த விளைவு அக்கடன் முழுதும் கழிக்கும் அளவுக்கு இல்லை. விளையாத காலத்து விளைவையெல்லாம் விளையுங் காலத்தில் நிலம் ஒருங்கே விளைத்துக் கொடுக்குமாயின், குடிகள் அரசன் விரும்புமாறு செலுத்துவது நேர்மையும் அறமுமாகும். விளை நிலம் அது செய்வதில்லை; தனது வளமைக் கேற்பவே விளைத்துக் கொடுத்தது. அதனால் குடிகள் பழங்கடமையில் ஓரளவே செலுத்தினர்.

அரசுக்குரிய அறிவு, ஆளுந்தன்மை, பொருள், படை என்ற நான்கு நெறியிலும் விரிந்த பயிற்சியும் பண்பாடும் இல்லாத மக்கள் வேந்தனுக்குத் துணையாயினர்; பொருள் பெறுதல் ஒன்றையே குறிக் கொண்டு குடிகளை நெருக்குவதிலேயே அவர்கள் முன்னின்றனர். அமைதி நெறி மேற்கொண்டு குடிகள் தம் குறையை வேந்தர்க்கு அறிவிக்கவரின், வேந்தனைச் செவ்வி வழங்காவாறு செய்து அவர்கள் வாளா திரும்பச் செய்தனர். பழங்கடன் பெறுவதே அரசியல் அறம் என்பது எவரும் அறியச் செய்வதில் அரசியற் பணியாளர் அல்லும் பகலும் உழைத்து வந்தனர்; பகையினின்று பாதுகாப்பதற்கென்று அமைந்த படையை இத்துறையில் பயன் படுத்த முற்பட்டனர். இதனால், குடிகட்கு அரசன் பால் இருந்த அன்பு குறையத் தலைப்பட்டது. அரசுக்கு அதனால் உளதாகும் கேடு ஆங்காங்கு வாழ்ந்த சான்றோர்க்கு இனிது விளங்கிற்று.

** நாகனார் நல்லுரை**
வளவன் உளங்கொண்ட சான்றோர் சிலர் அவனுக்குக் குடிகளின் நிலையை எடுத்துக் கூறினார். அவனைச் சூழ இருந்த அரசியற் சுற்றத்தார் குடிகளிடத்து அவனுக்கு அருள் பிறவாத வாறு பொய்யும் புனைந்துரையும் சொல்லி அவன் மனத்தைத் திரித்து விட்டனர். பொருள் இன்றேல் படைவலி குன்றும்; அவ்வலி இல்லையாயின் நாடுகாவல் என்பது பகற்கனவாம் என வாதிக்கத் தொடங்கினர். இச்செயலால் குடிகளில் குறை கூறுவோர் பெரு கினர்; மாரி பொய்ப்பின் அதற்கு மன்னவன் காரணம் என்றனர்; பொருள் வருவாய் குன்றினும், இயற்கையில் ஏதேனும் புதுமை தோன்றினும் எல்லாவற்றிற்கும் குற்றம் அரசின் மேல் ஏற்றினர். சுருங்கச் சொல்லின், சோறுமிக்க சோழநாட்டில் உழுவோரும் உழுவிப் போரும் உள்ளம் உடைந்து உருக்குலைந்து வாடினர்.

சோழநாட்டு ஊர்களுள் வெள்ளைக் குடி என்பது ஓர் ஊர். அவ்வூரில் நாகனார் என்ற சான்றோர் வாழ்ந்தார்; அரசியலின் செயற்கொடுமையையும் குடி மக்களின் குழம்பிய நிலையையும் நேரிற்கண்டார்; உழுவிப் போர்க்கு ஆதரவும் உழுவோர்க்குப் பழங்கடன் விடுதலையும் உடனடியாக வேண்டியிருப்பதையும் ஓர்ந்தார். பார்மன்னர் பால் பரிசுபெற்று வாழும் பாவாணராயினும், நாட்டவர் நலம் பேணும் நாவாணராகிய நாகனார் வளவன் திரு முன் சென்று உண்மை நிலையை எடுத்துரைப்பதற்குத் துணிந்தார்; உரையூரை அடைந்தார்.

கிள்ளிவளவன் புலவர்பாடும் புகழ்படைத்தவன். ஆலத்தூர், கிழார், ஆவூர் மூலங்கிழார், கோவூர் கிழார் முதலிய சான்றோர் பலருடைய புலமை நலத்தில் ஈடுபட்டுத் தக்க சிறப்புச் செய்பவன்; தானும் தக்கோர் பரவத்தக்க சால்புடைய புலமை பெற்றவன். தன் நண்பனான சிறுகுடி கிழான் பண்ணன் என்பவன், நாடு வளஞ் சுருங்கி வறனுற்று வருந்தியபோது மக்கட்கு உணவளித்து உதவிய அவனது அருஞ்செயலை வியந்து, “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” என்றும், “பசிப் பிணி மருத்துவன்” என்றும் பாடி இன் புற்றவன். நாகனார் வரவு கேட்டதும் வளவன் அவரை அன்போடு வரவேற்று மகிழ்வித்தான்.

நாகனார் மன்னன் பண்பாடு கண்டு இன்புற்றுத் தன் வேண்டு கோளை அவன் செவியேற்குமாறு, இனிய எளிய சொற்களால் ஆழ்ந்த கருத்தமைத்து, “வேந்தே, எந்த நாடு தன் கண் வாழ்வார்க்கு இன்றியமையாத பொருள் குறித்து வேறு நாடுகளின் உதவியை நோக்குகிறதோ அந்த நாடு நாடெனச் சிறப்பிக்கப்படாது. ‘நாடென்ப நாடா வளத்தன’ என்பர் சான்றோர். எனைப் பாண்டி நாடு நீர் வளம் நிரம்பவுடைய தன்று; சேர நாட்டுக்கு நிலப்பரப்பில்லை; ஆதலால் அவை நாடா வளமுடையவல்ல; ஆகவே நாடு எனப்படுவது நினதே. இந்த நாட்டுப் பேரரசு நாடு சுரக்கும் செல்வத்தால் சிறந்த புகழ் பெற்று விளங்குவது; அதனால், அரசு எனப்படுவதும் நினதே. ஆதலால் ‘நாடு கெழு செல்வத்துப்பீடு கெழு வேந்தே’ என்று நின்னைப் பெருமிதம் தோன்ற அழைக்கின்றேன்” என்று கூறித் தம் பேச்சை நிறுத்தினார்.

கேட்ட கிள்ளிவளவன் உள்ளத்தில் இன்பம் கிளர்ந்தெழுந்தது; அவர் மேலும் கூற இருப்பதைக் கேட்க ஆவல் கொண்டான். “வேந்தே, நீ பெற்று மகிழும் பீடு நாடு நல்கும் செல்வத்தால் பிறங்குவது; அச்செல்வம் உழுதொழில் புரியும் குடிகளால் வருவது; அதனை நோக்காது, அவர்கள் வருந்த நீ வருத்துவது நினக்குப் பீடு அன்று” என்ற குறிப்பு, ‘நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே’ என்ற தொடரில் அமைந்து கிடந்தது. ஆயினும், அரசன் அவர் கருத்தை உணரவில்லை. அவர் கூற இருப்பதையே அவன் எதிர் நோக்கினான். அப்போது, “நினவ கூறுவல் எனவ கேண்மதி” என்றார் நாகனார். வேந்தன் உள்ளத்தில் விருவிருப்புண்டாயிற்று. முகக் குறிப்பில் சிறு மாறுதல் தோன்றிற்று. உரையாடல் தொடர்ந்தது.

“குடிகள் மன்னவன்பால் முறை வேண்டி வருவாராயின், அவர்கள் தன்னை எளிதில் காணவும் முறையிட்டுக் கொள்ளவும் அவன் காட்சி எளியனாக வேண்டும். அஃது, உழவனொருவன் தான் விளைத்த பயிர்க்கு மழை வேண்டியிருப்பதறிந்து வானத்தை நோக்க, உடனே வானம் மழையைப் பெய்தாற் போல அத்தனை இன்பம் பயப்பதாகும். குடிகள் செவ்வி பெறாது திரும்புவது மழை பெய்யாமையால் விளைபுலம் கெடுவது போலாம். அதனால் அரசு வளம் சுருங்கும்” என்றார்.

காவலன் காட்சிக்கு எளியனாதல் நாட்டில் செல்வம் பெருகு தற்கு ஏதுவாம் என்ற குறிப்பு அவர் உரையில் இருப்பதைச் சோழன் அறிந்தான்; ஆயினும் அவன் உள்ளத்தில் தெளிவு பிறக்கவில்லை. புலவர் பெருமான். அவனது அரசு கட்டிலின் மேல் நின்று நிழற்றும் வெண்குடையைக் காட்டி,

“கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே; வருந்திய
குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ”

என்று இசைத்தார்.

நாகனார் நவின்றது கண்ட வேந்தன், “குடி புறந்தருவது பகை கடிந்து ஒதுக்குதலன்றோ? அதற்குப் படையே பெரிதும் வேண்டுவது. அதன் வலியும் பெருமையும் வெற்றியும் நோக்கியே அரசு நிலை பெறுகிறது,” என்றானாக, அவனுக்கு விடை கூறுவாராய்,

“வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப்
பொருபடை தரூஉம் கொற்றமும், உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”

என்றார். வேந்தர் பெருமகனுக்கு விளக்கம் உண்டாயிற்று. உழுவோர் உழுது விளைக்கும் பொருளே, படையின் வலிக்கும் வெற்றிக்கும் உயிர்நாடி என்பது உணராது, பொருளும் படையுமே நினைந் தொழுகிய தன் செயல்வகையை எண்ணினான்; குடிகள் தன்பால் அன்பு குறைவரோ என வெருவினான். எதற்கும் குடிகள் அரசினைக் குறை கூறுவதை ஒற்றரால் அறிந்திருந்தமையின் அதுவும் அவன் மனத்தில் தோன்றி அலைக்கத் தொடங்கியது. அவனைத் தேற்றுவது வெள்ளைக் குடியார்க்கு மேலும் கடமை யாயிற்று. ஆகவே, அவனைத் தேற்றுதற் பொருட்டு நாட்டு மக்களின் பொதுவியல்பு இது என்று விளக்குவாராய்,

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் கண்ணகல் ஞாலம்”

என்று தெரிவித்தார். “இனிச் செய்யத் தகுவது யாது?” என்பான் போல அவன் நாகனாரை நோக்கவும், “ஆளும் அரசர்க்கும் ஆளப்படும் குடிகட்கும் இடையேயிருந்து இச்சை பேசி வயிறு வளர்க்கும் நொதுமலர் சிலர் உண்டு; அவர் உரைக்கும் பொது மொழி, நாடுகாக்கும் கோமகனது அருள்நலம் குடிகள் பால் செல்லாமலும் குடிகளின் அன்புநலம் அரசன் பால் சேராமலும் தடுத்துச் சீரழிக்கும்; அதனை நீ நன்கறிந்து, அவர் மொழியைக் கொள்ளாது, உழுவிப் போராகிய பகடு புறந்தருநர் கடமையையும், உழுவோராகிய குடிகள் நிலையையும் சீர் தூக்கிப் புரப்பாயாயின், நாடு பொருள் வளம் மிகும்; படைவலி சிறக்கும் அடங்கா தொழுகும் பகைவரும் நின் அடியின் கீழ் அடங்கி நடப்பர்” என்று கூறிமுடித்தார். வேந்தனுக்கு உவகை மிகுந்தது. அவர் உரைத்த வண்ணம் குடிகளிடம் வற்புறுத்தப்பட்ட பழங்கடன் தள்ளிவிடப்
பட்டது. மக்கள் மனம் குளிர்ந்து அரசன் பால் அயரா அன்பு கொண்டனர். உழைப்பின் உயர்வால் விளைபொருள் பெருகச் சோழ நாடு துறக்க நாடு போல் துலங்கு வதாயிற்று.

** பாண்டியன் நெடுஞ்செழியன்**
இனி, பாண்டி நாட்டை நோக்குவோம்; பாண்டி நாடு சோழ நாடு போலச் சமநிலநாடு அன்று. காவிரி போல நீளமும் அகலமும் நீர்வளமும் உடையதன்று வையை. தாமிரபரணி என வழங்கும் தண்ணான் பொருநையும் அத்தன்மையதே. நாடு முழுதும் காடும் குன்றும் மேடும் பள்ளமும் நிறைந்தது. மேலைப் பொருப்பில் தோன்றிவரும் வையையும் பொருநையும் கடுகிச் செல்லும் நீர்ப் பெருக்குடையவை; அதனால் அவற்றின்கண் ஆழம் போல் அகலம் இல்லை. இருகரையிலும் நீர்படர்ந்து பரத்தற்கு இயலாதபடி மேட்டு நிலமே மிக்குளது. மேலைக் கடலிலிருந்து வரும் மழை முகிலை மேலைமலைத் தொடர் பெரிதும் தடுத்து விடுகிறது. கீழைக் கடலிலிருந்து வரும் மழையைத் தடுத்து நிறுத்துதற்குரிய பெருமலைகள் இடையில் இல்லாமையால் மழைவளம் மிகுதியாக இல்லை. காடுபடர்ந்த சிறுமலையும் குன்றும் ஆங்காங்குப் பெய் விக்கும் மழை நீர், விரைந்து ஓடி ஆழ்ந்த காட்டாறுகளில் வீழ்ந்து விளைபயன் நல்காது வெறிது சென்றது. இவ்வகையில் பாண்டி நாடு நாடா வளமுடைய சிறப்பின்றி மெலிந்திருந்தது.

நீர்வளம் குறைந்திருப்பினும் நாட்டில் வாழ்ந்த நன்மக்கள், தூய தமிழ்ப் பண்பும், அறிவு, ஆண்மை முதலிய செயற் பண்பும் சிறந்து விளங்கினர். பாண்டி வேந்தரது படைப் பெருமையும் வெற்றி மிகுதியும் ஏனைநாடுகளினும் ஏற்றம் பெற்று விளங்கின. நெடுஞ்செழியன் என்னும் பாண்டி மன்னன் பாண்டி நாட்டை ஆண்டு வருகையில் முடிவேந்தர் இருவரும் வேளிர் ஐவருமாக எழுவர் பெரும்படை கொண்டு அவனோடு போர் தொடுத்தனர். சோழ நாட்டின் தென்கிழக்கிலுள்ள தலையாலங்கானம் என்ற ஊர்ப்புறத்தே அப்போர் நடந்தது. எழுவர் படைத்திரளும் எலிக் கூட்டம் போலவும், பாண்டிப் படை படநாகம் போலவும் போர்க் களத்தில் எதிர்ந்தன. “நாகம் உயிர்ப்ப எலிப்பகை கெடும்” என்பதற் கிணங்கப் பகைக் கூட்டம் தோற்றோடியது. பாண்டியன் செரு வென்று சிறப்பு மேம்பட்டான்; அன்று முதல் அவனைச் சான்றோர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பாராட்டிக் கூறுவாராயினர். அவன் புகழைக் குறுங்கோழியூர் கிழார், கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலியோர் பொன்றாத் தமிழால் இன்றும் நாம் படித்து இன் புறுமாறு பாடியிருக்கின்றனர்.

பரந்து பட்ட நில முழுதும் பாண்டியர் புகழ் பரவியிருந்ததைப் புலவர் பலரும் போற்றிப் பரவினர். அவருள் குடபுலவியனார் என்பவர் ஒருவராவர்; அவரும் பாண்டி நாட்டவரே.பாண்டியர் புகழ் பரவும் பண்பு மிக்கவர்; ஆயினும் பாண்டி மன்னன் புகழ்ப் பரப்பில் அவர்க்கு மனவமைதி உண்டாகவில்லை. பாண்டி மக்கள் தமிழ் நலமும் தாளாண்மையும் செருவென்றியும் செம்மை நோக்கமும் சிறக்கப் பெற்றும், நாட்டவர்க்கு வேண்டப்படும் உணவுப் பொருட்டுப் பிறநாடுகளை நாடி நிற்கும் அவர்களது நிலை புலவர்க்குப் பெருவருத்தம் உண்டு பண்ணிற்று. பிறநாடுகளை நாடி வளம் பெறும் நாடு நாடாகாது என்ற கொள்கை அவர் உள்ளத்தை அலைத்தது. இதற்கொரு வழிகண்டாலன்றித் தமது புலமை நாட்டுக்கோ நாடாளும் அரசுக்கோ தமக்கோ பயனில்லை எனத் துணிந்தார்.

** புலவர் அறிவுரை**
மேடும் பள்ளமும் மிக்கதாயினும் மழை தரும் நீர் பள்ளங் களில் நில்லாது பரந்து விரைந்து வீணே கழிந்தோடுவதை ஆங்காங்கே அவரது புலமைக் கண் நெடிது நோக்கிற்று. இந்நீரை இப்பள்ளப் பகுதியில் ஒருபால் தேக்கிச் சிறு சிறு கண்வாய் வழியே நிலத்திற் பாய்ச்சிப் பரப்பினால் நெல்லும் பிறவுமாகிய உணவுப் பொருளை விளைத்துக் கொள்ளலாம் என்பது நன்கு புலனாயிற்று. அவர் பாண்டி நாடுமுற்றும் உலாவிப் பள்ளப்பாங்கும் பரந்த வயற் பகுதியும் நேரிற் கண்டு நெஞ்சிற் கொண்டார்; முடிவில் தலையாலங் கானத்துச் செருவென்று சிறக்கும் நெடுஞ்செழியன் திருமுன் சென்றார். செழியனும் அவரை வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் அவனதுபெரும் புகழைப் பாராட்டி, “வேந்தே, நீ இப்போது பெற்று மகிழும் வெற்றி புதிதன்று; நின்முன்னோர் காலத்திருந்தே இச்சிறப்புத் தொன்று தொட்டு வருவதொன்று. நீ அவர் வழித் தோன்றல்; நினக்கு இஃதோர் அரிய செயல் அன்று; நீ பல்லாண்டு வாழ்க” என்று பாடினர்.

இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே தான் பெற்ற சிறப்பைத் தன் முன்னோர் மேலேற்றித் தன்னை வாழ்த்து முகத்தால் தன் மனம் அமைதி பெறாத குறிப்பைப் புலப்படுத்தும் அவர் உரையை வேந்தன் பரிவுடன் கேட்கலானான். “சிறந்த முறையில் நாடாளும் வேந்தர், மறுமையில் துறக்க வின்பமும் இம்மையில் ஏனை வேந்தர் எல்லாரினும் ஒப்புயர்வற்ற பெருமையும் கொண்டு தாமே தனித் தோங்க வேண்டும்; தாம் மறையினும் தமது புகழ் மறையாது நிலைபெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டு அவற்றையே நாளும் வேண்டியொழுகுவர். நீயும் அவ்வாறே அமைத்திருக் கின்றாய்; ஆயினும், அவையனைத்தும் குன்றாத நிலையில் விளங்கச் செய்தல் வேண்டும்; செய்தற்குத் தகுதிகள் சில உண்டு” என்றார்.

நெடுஞ்செழியன் நெடிது நோக்கினான். தகுதிகளை அறிதற்கு அவன் நெஞ்சம் அவாவிற்று. அதே நிலையில் தனது மிகுதியையும் எண்ணினான்.அவர் கருதுவது அவனுக்குப் புலனாகவில்லை. அவரையே தொடர்ந்து சொல்லுமாறு பணித்தான். குடபுலவியனார் அவன் மனக்குறிப்பை அறிந்து கொண்டார். “மறுமைச் செல்வமும் இம்மைப் புகழும் இவ்வுலகத்து நல்லுயிராகிய மக்களிடத்தே இடம்பெறுவன. புகழ்கண்டு பரவுவதும் மறுமை நிலை ஓர்ந்து மாண்புடைய செயல் செய்வதும் உயிர்களேயாகும். உயிரும் உடம்பும் ஒன்றி நின்றலன்றி, இவை உணரவும் உணர்ந்து உருப் படச் செய்யவும்படா; ஒன்றி நிற்பதற்கு உணவுதான் இன்றியமை யாதது. உணவால் ஆகுவது உடம்பு உடம்பு நீரை இன்றி அமையாது என்பர்” ஆயினும்,

“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்”

என்றார். வேந்தனுக்கு வியப்பு மிகுந்த. புலவர் பெருமான் புன்முறுவலுடன், “உணவு, நீரும் நிலமும் சேர விளைவது; உணவால் உயிரும் உடம்பும் ஒன்றுபட்டு நிற்கும். உடம்பின்றி உயிர் ஒன்றும் செய்ய மாட்டாது; உயிரில்லாத உடம்பு சிறிது போதில் கெட்டழியும், ஆதலால்,”

“உணவுஎனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”

என்றார்.

உயிர்கள் உடலொடு கூடி வாழ்தற்கு வேண்டுவதாகிய உணவு நிலப்பகுதி நீர்வளம் பெறுவதால் உளதாகும்; நாடு நீர் வளமுடையதாகச் செய்வது உணவு பெருக்கி உயிர்கள் நெடிது இனிது வாழச் செய்யும் நல்வினையாய், செல்லும் துறக்கவுலகத் துக்குச் செல்வமாம் என்பது நெடுஞ்செழியனுக்கு விளங்கிற்று. யாதோ புதுமைக் கருத்தை வெளியிடுடிவார் என எதிர்நோக்கிய அவனுக்கு நாட்டில் நீர் வளம் பெருகச் செய்ய வேண்டும் என்ற கருத்து அவனது வியப்புணர்வை மாற்றியது. பாண்டி நாட்டின் பரந்த பண்பையும் அதுநல்கும் பொருள் நலத்தையும் அவர்முன் காட்டினான். புலவியனார், “பாண்டிநாடு புன்செய்ப் புலம் மிக்கது; எப்போதும் வானம் பார்த்து நிற்கும் புன் செய்க காடுகள் எத்துணைப் பரப்புடையவாயினும் வேண்டுங் காலத்து உதவா தொழியும்” என்றார். அவர் சொல் செழியன் செவியிற் புகவில்லை. காவிரி நாட்டையோ கங்கை நாட்டையோ போலப் பாண்டி நாட்டை நீர் வளம் பெருகச் செய்வது இயலாத ஒன்று என்ற கருத்து வேந்தன் உள்ளத்தில் வீறு கொண்டு நின்றது. அதனை அவன் முகக் குறிப்பால் உணர்ந்த அரசியற்சுற்றத்தாரும் அதுவே கருதினர். அது கண்ட புலவர், மிக்க பணிவுடன்,

“அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர், அம்ம, இவண் தட்டோரே
தள்ளா தோர் இவண் தள்ளா தோரே”

என்று தான் கூறக் கருதியதனை முடித்துக் கூறி விட்டார். “வேந்தே, யான் கூறும் இது போர் வினையன்று, அது போல்வதும் அன்று; போர் வினையில் நீ மேதக்க பொருநன்; யான் கூறுவது பொருளியல்; புன்புல நாட்டை நன்புலமாக்குவது நான் கூறுவது. இதனை இகழாது கேட்டல் வேண்டும்,” என்பாராய், “அடுபோர்ச் செழிய” என்றும், “இகழாது” என்றும் எடுத்துரைத்தார். “நாட்டில் நிலன்நெளி மருங்கான பள்ளப் பாங்குகள் பலவுள்ளன. அவை தாம் பெறும் நீரையும் மேடு கழித்து நல்கும் நீரையும் வீணே சென்று கழியவிடாது அவற்றின் கண் நீர்நிலைகள் பெருக அமைக்க வேண்டும். நெடிய கரையாகிய அணையால் கழிந்தோடும் நீரைத் தடுத்துநிறுத்திக் கொண்டால் அதன் கீழுள்ள பகுதி நெல் விளையும் மருதவயல்களாய் மாண்புமிகும். இவ்வாறு நீர்நிலை பெருகத் தடுத்து நிறுத்தி வறிதே கழியும் நீரைப் பிணித்துக் கொண்ட வேந்தர் மறுமையுலகத்துச் செல்வமும் இம்மையுலகத்து இறவாப் புகழும் தம்மைவிட்டு நீங்காதவாறு பிணித்துக் கொண்டோராவர். அவ்வாறு செய்யாதோர் மேலே எண்ணிய நலங்களை எய்தாதொழிவர்,” என்ற கருத்து வேந்தனுக்கு இனிது விளங்கிற்று.

** பாட்டின் பயன்**
குடபுலவியனார் நாடு நலம் குறித்துப் பாடிய பாட்டின் பொருளை நன்கு ஆராய்ந்து நெடுஞ் செழியன் ஆங்காங்கு நீர் நிலைகள் வகுக்கத் தொடங்கினான். பாண்டி நாட்டின் பரப் பெங்கும். பள்ளப் பகுதிகளில் பல நீர்நிலைகள் பெருகின. இன்றும் பாண்டிநாட்டில் இருக்கும் அளவு கம்மாய் என மருவி வழங்கும் கண்வாய் (நீர்நிலை, ஏரி) கள் ஏனைத்தமிழ் நாடுகளில் காணப்படா மைக்குக் காரணம், அன்று நெடுஞ்செழியன் திருமுன் குடபுல வியனார் நிகழ்த்திய புலமைப்பணியென்பதை நினைவு கூர்தல் வேண்டும்.

** ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்**
சேரன் செங்குட்டுவன் குட்ட நாட்டு வஞ்சி நகர்க்கண் இருந்து முடிமன்னனாய் அரசுபுரிந்து வருகையில், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்பவன் தொண்டி நகர்க்கண் இருந்து நாடுகாவல் செய்துவந்தான். குடநாட்டின் வட பகுதியான கொண் கான நாட்டவர் அத்துறையில் அக்காலத்தே சிறப்புற்று விளங்கினர். கொண்கானம் பிற்காலத்தே கொங்கணம் என்று மருவிற்று; அந்நாட்டவர் கொங்காணி, கொங்கணர் என்று கூறப்படு வாராயினர். கொங்கணக் கூத்தரின் கூத்தும் இசையும் கி.பி. பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளிலும் சிறந்து விளங்கின. மேனாட்டவர் முதல் முதலாகக் கோவா முதலிய பகுதிகளில் வந்து தங்கிய போது, இக்கூத்தர் தம் ஆடல்பாடல்களால் அவர்களை மகிழ்வித்து, அவர்களுடைய நெளிவு மெலிவுகளைக் கண்டு வந்து தங்கள் அரசியல் தலைவர்களுக்கு அறிவித்தனர்; அதனால் மேனாட்டவர் தொடக்கத்தில் மிக்க அல்லலுற்றனர் என்று அவர் களுடைய குறிப்புக்களால் அறிகின்றோம். இவ்வாறே பண்டை நாளிலும் அவர்களின் சிலர் பகைவர்க்குக் கையாட்களாகவும் இருந்துள்ளனர்.

ஒருகால் குடநாட்டின் வடக்கில் வாழ்ந்த கடம்பர்களும் வடகிழக்கில் வாழ்ந்த வேளகத்து (Belgaum) வேளிர்களும் குடநாட்டுள் புகுந்து எல்லை பற்றித் தொல்லை கொடுத்தனர். அதனால் சேரலாதன் பெரும்படையுடன் வடபுலம் நோக்கி மேலைக் கடற்கரையில் சென்று கொண்டிருந்தான். ஒரு நாள் கடற்கரையில் பனைமரங்கள் நின்ற கானற் சோலையொன்றைச் சேரலாதன் கண்டான். நுண்ணிய தூய மணல் பரந்து அடும்பங் கொடிகள் படர்ந்து அழகுறப் பூத்து விளங்க, மேலைக்கடற் காற்று மேனியிற்பட்டு இன்பம் செய்தது. அவ்விடத்தே தங்கி இளைப்பாற வேந்தன் விரும்பினான். பனைமரச் சோலையில் அகன்ற பந்தர் அமைத்து அங்கே தன் அரசியற் சுற்றமும் துணைவரும் தானைத் தலைவரும் உடன் இருப்ப இருந்து இன்புறு வானாயினன்.

அப்பொழுது அவ்விடத்தே ஆடலும் பாடலும் வல்ல மகளிருடன் இசைவாணர் சிலர் அரசன் முன் போந்து தமது புலமைத் திறத்தைக் காட்ட விரும்பினர். இளமை மாறாத சேர மன்னனும் அவர் வேண்டுகோட்கு இசைந்தான். விறலியர் தம்முடைய இசைநலமும் ஆடல் வன்மையும் வேந்தன் கண்டு விரும்புமாறு பாடியும் ஆடியும் மகிழ்வித்தனர்.

தமிழ்வேந்தர் செல்லும் போது அவருடன் புலமை மிக்க சான்றோரும் உடன் செல்வது வழக்கம். ஆங்காங்கு அரசர் செய்யும் அழகிய செயல்களையும் உரைக்கும் உரைகளையும் இனிய பாட்டிடைத் தொடுத்துப் பாடி அவரது புகழை நிறுத்துவது அச்சான்றோரது இயல்பு. புலமைக்கு அந்நாளில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையாது. சேரனுடைய அரசியற் சுற்றத்தாருள் காக்கை பாடினியார் என்ற புலவர் பெருமாட்டி யாரும் ஒருவர். அவரும் அங்கே வந்திருந்தார். அவருடைய இயற்பெயர் நச்செள்ளை யார் என்பதாகும். ஒருவர் வீட்டுக்கு விருந்து வருமாயின், முற்படக் காக்கை வந்து கரைந்து தெரிவிக்கும் என்பது தமிழரது பழமையான கருத்து. அக்கருத்தை இனிய பாட்டிடையே வைத்துப் பாடியது. பற்றி நச்செள்ளையாரைச் சான்றோர், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கமாயிற்று.

** நச்செள்ளையின் நன்மொழி**
வேந்தன் முன்னே நின்று ஆடல் பாடல் அழகு என்ற இவற்றால் அவனை மகிழ்விக்கும் இசைவானரின் பார்வையும் செயலும் ஒற்றர் செயல் போல் இருந்ததைக் காக்கை பாடினியார் எப்படியோ அறிந்து கொண்டார். அவரை வேந்தன் முன் நெடிது இருக்கவிடின், அவர்கள் சேரருடைய படையின் குறைவு நெகிழ்வு முதலியவற்றை உணர்ந்து சென்று பகைவர்க்குரைத்துக் கேடு செய்வர் என்ற குறிப்பு அவர்க்கு நன்கு புலனாயிற்று. அதனால் அவர் எழுந்து நின்று,

“பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனையுறு நறவின் நாகுடன் கமழ”

என்றார். வேந்தனும் பிறரும் அவர் கூறுவதைக் கேட்க லுற்றனர். “பாதுகாப்புச் செறிந்த அரணாகாத புல்லிய ஒரு பந்தரை அந்தரத்தே அமைத்து அதன்கீழ் இருக்கின்றாய்; நெய்தற் பூவும் நறவம் பூவம் புன்னை மலரும் ஆங்காங்கு மணம் கமழ அணி செய்யப்பட்டிருக்கின்றன. நெய்தலின் மலர்ந்த பூ கண் போல் இருப்பதைக் காண்பாயாயின், நின்னைப் பகைவர் பார்த்த வண்ணம் இருக்கும் குறிப்புப் புலனாகும் என்பதை வெளிப்படச் சொல்லாமல், கண்போல் நெய்தல்… நாகுடன் கமழ” எனக் குறிப்பாய் உரைத்தார். வேந்தன் கண்கள் ஆடல் மகளிர்மேல் பாய்ந்தன. நச்செள்ளை யாரும் அதனை நயம்பட எடுத்து,

“சுடர்நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்கெயிற்று
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்”

என்று ஆடல்மகளிரின் நெற்றி, கண்பார்வை, முறுவல், ஒளிதிகழும் பற்கள், அமிழ்து போன்று இனிமைதரும் சொற்கள், சிவந்த வாய்,அசைந்த நடை ஆகியவற்றைச் சிறப்பித்துச் சொல்லி, “இவர்கள் அனைவரும் நின்பால் பரிசுவேண்டி வந்த மகளிர்; இவர்களை இவ்விடத்தே நெடிது தங்கவிடுவது நேர்மையன்று; விரைந்து பரிசில் தந்துவிடுக்க;”

“பாடல் சான்று நீடினை உரைதலின்,
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே”

என்றார். “நின் இயல்பை இவர்கள் உணரார்; ஆதலால் ‘இவன் பாடல்கேட்டு நெடிது மகிழ்ந்திருக்கின்றான்; இவ்வேந்தன் அறிவு ஆண்மைகளில் மெல்லியன் போலும்’ என இவர்கள் கருதுவர்; அதனால் நீ பகைவர்க்கு இடியேறு போல் வாய்; நின் படை மறவர் ஒரு வீச்சில் பெருங்களிற்றின் கையை அதன் கொம்புடன் எறியும் பெருவலி படைத்தவர்;”

“கூற்றம் வலைவிரித் தன்ன நோக்கலை,
கடியையால் நெடுந்தகை செருவின் கண்ணே”

என்பதை அறியாது கெடுவர் என்று மொழிந்தார்.

இவற்றைக் கேட்டதும், சேரலாதனுக்குத் தெளிவு பிறந்தது. விறலியர் முகம் வெளுத்து வெய்துயிர்த்துப் பரிசில் பெற்று நீங்கினர். வேந்தன் படையுடன் சென்று கடம்பரை வெருட்டி வேளிரை வெற்றிகொண்டு வானவரம்பன் எனப்படும் தன் பெயரை நிலைநாட்டினான். “வானவரம் பன் எனப்பேர் இனிது விளக்கி” எனப் பதிற்றுப் பத்துப் பாராட்டுகின்றது.

காக்கை பாடினியார், உரைத்த குறிப்பு மொழியால், தான் பகைவர் வலைப்பட்டு வருந்த இருந்த தீங்கினின்றும் உய்ந்தது நினைந்தும், அவர் அவ்வப் போது பாடித் தன்னைச் சிறப்பித்தது குறித்தும் சேரலாதன் அவர்க்கு மிக்க பொன்னும் பொருளும் கொடுத்துத் தன்பக்கத்து அரசியற் சுற்றத்தாருள் ஒருவராகக் கொண்டான். அவர் பெயரால் ஓர் ஊரும் உண்டாயிற்று. அது பாலைக்காட்டுப் பகுதியில் காக்கையூர் என்று இன்றும் நின்று அவரை நினைப்பித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்துக் கொண்டான் என்ற தொடரின் பொருள் தெரியாமையால் சிலர், சேரமான் காக்கை பாடினியாரை மணந்து கொண்டான் என்று பிழை செய்திருக்கின்றனர்.

முல்லை


ஒரு நாட்டுமக்களின் மனமாண்பையும், அவரது மனவுணர்வின் வளர்ச்சியையும் ஒருவன் அறிய வேண்டின், அம் மக்கள் வழங்கும் மொழியின் இலக்கணத்தை ஆராய்தல் வேண்டும் என அறிவுடை யோர் கூறுவர். மொழியின் சொற்களும், சொற்கள் தொடர்களாக இயைந்து பேசுவோர் கருத்தை வெளிப்படுக்கும் திறங்களும் அவ்வாராய்ச்சியால் உணரப்படும். படவே, அவர் மனத்தெழுந்த எண்ணங்களும், அவற்றிடையே சிறந்து விளங்கும் நாகரிகமும் அவ்வாாய்ச்சியின் பயனாக வெளியாகும். இம்முறையினை மேற்கொண்டு நம் செம்மொழியாய செந்தமிழ் மொழியின் சீரிய இலக்கணங்களை யாராய்ந்த அறிஞர், “தமிழர் மிகச் சிறந்த மனப்பண்பும், தனிச் சிறப்பமைந்த நாகரிகமும் கொண்டு வாழ்ந்து வரும் நன்மக்கள்” என்பதை இனிதறிந்து உலகறிய உரைத்துள்ளனர். ஒரு சில கயவர், இப்பொருள் மொழியை மறைத்தற்கு முயன்றனர்; ஆயினும், “புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே” என்றாற் போல, அது மறைந்து மழுங்காது பரந்து வெளிப்படுவதாயிற்று. ஆகவே, தமிழ் நலம் தேரும் தகவும், தமிழ்க்கு ஆக்கம் தேடும் சால்பும் தமிழ் நன்மக்கள்பால் மிகுவவாயின. இன்று எம் மருங்கும் தமிழர் குழாம்; எச்சொல்லும் தமிழின் சொல்; எந்நினைவும் தமிழ்நினைவு; எவ்வெவரும் தமிழன்பராக மேவுகின்றனர். தமிழ் நூல்கள் ஆராயப்படுகின்றன; தமிழ் இலக்கணம் சால்பு பெறுகின்றது.

’தமிழ் நூல்களின் ஆராய்ச்சியில் தமிழ் இலக்கணம் சால்பு பெறுமாறு என்னை? தமிழ் பயிலும் சிறார்க்குத் தமிழிலக்கணமன்றோ பேரிடர் விளைத்துவந்தது? என்பாரும் உண்டு. தமிழாராய்ச்சிக்கண் இப்பொழுது எழுந்து நிலவும் ஊக்கம், பிறர் எழுப்ப எழாது, தானே எழுந்து தகைமை எய்தியுளது; தமிழன், தன் தமிழை நன்கு கற்றல் வேண்டும்; தமிழுணர்வு சாலப் பெறுதல் வேண்டும் என்ற ஆர்வம் தலைசிறந்து நிற்கின்றான்; சுருங்கச் சொன்னால், தமிழன் தமிழனாக வாழ விரும்புகின்றான். அதனால் அவனது உள்ளம், தமிழறிவு பெறும் வழியில் எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும் மிடுக்குடன் தான் கொண்ட கருத்தை வென்று வீறு கொண்டு நிற்கின்றான். நிற்குமிடத்து, அவன் மனக்கிழியில், தமிழிலக்கணம் பிறமொழி யிலக்கணங்களுட் காணப்படாத பண்டை மக்களின் மனப்பண்பும் ஒழுகலாறும் விளங்கக் காட்டுகிறது. அக்காட்சியில் பேரின்பம் ஊறுகின்றது. அதனை நுகருந் தோறும், அவன் அதனை ஆரப்பெற்று உண்டு ஆர்வமுறுகின்றான். அத்தகைய இன்பவூற்றாக உள்ளது தமிழிலக்கணத்துக் கூறப்படும் பொருளிலக்கணப்பகுதி என்றால், அது மிகையாகாது.

பொருளிலக்கணத்தின் பொற்பு, தொல்காப்பியத்தே சிறப்புடன் ஓதப்பெற்றிருக்கிறது. பண்டைத் தமிழ்நன் மக்களின் மனமாண்பும் உணர்ச்சியொட்பமும் பொருளிலக் கணத்தால் யாவரும் இனிதறிய விளங்குகின்றன. மக்களின் வாழ்க்கைக் குறிக்கோளும், அவர்கள் வாழ்வு நடத்தும் நெறிகளும் பொருளிலக் கணத்தின் இலக்கியமாகும். மக்கள் இயற்கையிற் பிரிந்து வாழ்வது எக்காலத்தும் இயலாது. இயற்கையில் தோன்றி, இயற்கையில் வளர்ந்து இயற்கையில் வாழ்ந்து, இயற்கையில் ஒன்றி இன்புறுவதே இயற்கையிற் பிரியாது இயலும் வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையின் செம்மை குறித்து, இயற்கை வழியாக அறிவுரம் பெற்ற ஆன்றோர், பல ஒழுக்க நெறிகளைக் கண்டு, மக்கள் அறிந்து ஒழுகி நலம் பெறுமாறு தெரிவித்திருக் கின்றனர். அவ்வொழுக்க நெறிகளைப் பொருளிலக்கணம் இயற்கைப் பொருள்களின் வாயிலாக அறிவுறுத் திவருகின்றது.
இயற்கை வழியாக உணர வந்த ஒழுக்க நெறியே பொருளிலக் கணம் என்பது அதன் பாகுபாட்டால் இனிது விளங்கும். நம் பொறி புலன்களின் காட்சிக்கு அகப்பட்டு நிற்கும் இயற்கை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என ஐவகையாகப் பிரித்துக் காட்டப்பெறுகின்றது: பசுந்தழை பரந்து, பன்னிற மலர் செறிந்து, நறுமணம் கமழும் கானமும், கானத்து வாழும் உயிர்களும் முல்லைப் பகுதியால் மொழியப் பெறுகின்றன. இவ்வண்ணமே குறிஞ்சியால் மலை நிலமும், பாலையால் கடுஞ் சுரமும், மருதத்தால் வளவயற் பகுதியும், நெய்தலால் கடற்கரைப் பகுதியும், ஆங்காங்கு நிகழும் வாழ்க்கைத் திறமும் நெறியே கூறப்படுகின்றன. ஈண்டு, மாவும், புள்ளும், மக்களுயிரும் பிறவும் தம்மிற் கூடியிருந்து வாழ்வு நடத்தும் வனப்பு, அறிஞர் அறிவுக்குப் பேரின்பம் தருகின்றது. இவ்வுயிருள்ளும், மக்களுயிர் ஆணும் பெண்ணுமாய்க் கூடி இன்புற்று வாழும் ஒழுக்கம் இன்ப ஒழுக்கம் என எடுத்துக் கூறப்பெறுகிறது.

இன்ப ஒழுக்கத்தை அறிஞர் ஆராய்ந்து முறை செய்த நாளையில், இஃது அகவொழுக்கமென்றும், இன்பப் பேற்றுக்கு வாயிலாய் நின்ற பொருள், வினை, கல்வி என்ற இவற்றையும், இவைபோன்ற பிறவற்றையும் குறித்துச் செய்வன செய்தொழுகும் ஒழுக்கம் புறவொழுக்கமென்றும் வகுக்கப் பெற்றன. இவற்றைச் சுருங்கிய வாய்பாட்டாற் கூறுவோர் அகம் என்றும், புறமென்றும் கூறுவர். அகத்தின் கண் வகுத்தும் விரித்தும் கூறப்படுவது மேலே கூறிய இன்ப வொழுக்கமாகும். இது, மேலே முல்லை முதலாகச் சொல்லிய ஐவகையாகப் பகுத்து ஓதப் பெறுகிறது. புறம் என்பது வெட்சி முதலாக வகுத்தும் விரித்தும் ஓதப் பெறும். அகவொழுக் கத்தின் பகுதியாகிய முல்லையே ஈண்டைக்குப் பொருளாவது. அகவொழுக்கத்தின் கூறுபாடுகளை இயற்கையிற் கண்ட நல்லிசைச் சான்றோர் நவிறற்கு இனிய நற்றமிழ்ப் பாட்டுக்களால் நவில்தோறும் நயந்தோன்றக் கூறியுள்ளனர். அதனால், இப்பாட்டுக்கள் அகப்
பாட்டுக்கள் என அறிவு மிக்க சான்றோரால் வரைந்து ஓதப்படுகின்றன.

முல்லை முதலாகச் சொல்லிய ஐந்தனுள்ளும், மக்களது இன்ப வொழுக்கமும்— தலைமைப் பண்புடைய ஒருவனும் ஒருத்தியும், கொடுப்பாரும் அடுப்பாருமின்றி, பால்வழியே தலைப்பெய்தித் தம்மிற் கூடிச் செய்யும் இன்பவொழுக்கமும்—ஐவேறு வகையில் வகுத்துப் பேசப்படுகின்றது. குறிஞ்சிக்கண் அத்தலைமக்கள் புணர்தலும், அதற்குரிய வாயில்களும் நிகழ்கின்றன; பாலைக்கண் அவர்களிடையே பிரிவும், அதற்குரிய வாயில்களும் நடைபெறு கின்றன இவ்வண்ணமே, ஊடலும் இரங்கலும் முறையே மருதத்தும் நெய்தலிடத்தும் நிகழ்கின்றன. புணர்ந்து ஒன்று படும் தலைமக்கள் பிரிந்தவழி ஒருவர் ஒருவரை நினைந்து அன்பு வயப்பட்டுப் பிரிவாற்றி இருத்தலும் அதற்கு வாயிலாகும் பிறவும் முல்லைக்கண் சீரிய ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப்பெறுகின்றன.

முல்லை முதலாகப் பிரித்து நிற்கும் இவ்வொழுக்கம் தமிழிலக்கணங்களுள் திணை எனப் பெயர் கூறப் பெறுகிறது. பெறவே முல்லை, முல்லைத் திணையென்றும், குறிஞ்சி, குறிஞ்சித் திணை என்றும் இவைபோலப் பிறவும் வழங்கப்பெறுவவாயின. ஆகவே, இவ்வொழுக்க நிகழ்ச்சிக்கு இடமும் காலமும் பொருளும் இம் முல்லை முதலிய நிலப்பகுதிகளுட் காணப்படுவனவே என்பது தெளிவாகும்.

முல்லைத் திணை பொருளாக வரும் அகப்பாட்டில், முல்லைத் திணைக்குரிய இடமும், காலமும், பொருளும் காணப்படும் என்பதை இதுகாறும் கூறியவற்றால் அறியலாம். முல்லைக்குரிய இடம், காடும் காடு சார்ந்த நிலமுமாகும்; காலம், காரும் மாலைக் காலமுமாம். பொருள் காட்டிடத்தே காணப்படும் மாவும், புள்ளும், மரங்களுமாகும். இப்பொருள்களுள் இயங்கக்கூடியவை, முல்லையேயன்றிப் பிறவிடங்கட்கும் செல்லும் பான்மை யுடையவை. ஆதலால் இவை சிற்சில காலங்களில் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற ஏனை நிலங்கிளிலும் காணப்படும். மக்களும், இவைபோலவே, தமக்குரிய இன்பவொழுக்கத்தை இவ்வைந்து திணைகளிலும் நிகழ்த்துவதுண்டு. பெரும்பான்மைபற்றி, ஒவ்வோரொழுக்கம் ஒவ்வொரு திணைக்கென உரிமை செய்யப்பெற்று உரிப்பொருள் என உரைக்கப்பெறுகிறது.

அகப்பொருள்களை நுதலிவரும் அகப்பாட்டுக்களுள் அவ்வத்திணைக்குரிய பொருள்களும் ஒழுகலாறுகளும் கூறப்படு மெனினும், சிறுபான்மை வேறு திணைகளில் விரவிக் கூறப்படுவது முண்டு. இதனால், இப் பாட்டுக்களைக் காண்போர், இவற்றுட் காணப்படும் பொருட்கூறும் ஒழுக்கக் கூறும் நோக்கித் திணைவகுத்தல் முறைமையாயிற்று. அதனால், பண்டைச் சான்றோர், இடமும் காலமும் முதற் பொருள் என்றும், மாவும் புள்ளும் பிறவும் கருப்பொருள் என்றும், புணர்தல் முதலிய ஒழுக்க நெறிகள் உரிப்பொருள் என்றும் வகை செய்தனர். இவ்வகையுள், அகப்பாட்டொன்றில் முதல், கரு, உரி என்ற மூன்றும் வந்திருப்பின், முதலைக் கொண்டும், முதலின்றி, கரு, உரி என்ற இரண்டுமே வரின், கருவைக் கொண்டும், உரியொன்றே வந்திருப்பின் அதனைக் கொண்டும் முல்லை முதலாகச் சொல்லிய திணைகளை வகுக்க வேண்டும் என்றனர். இதனையே ஆசிரியர் தொல்காப்பியனார், “முதல் கரு உரி என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்தனவே பாடலுட் பயின்றவை நாடுங்காலை” என்று கூறுவாராயினர். இதனை விளக்கவந்த இளம்பூரண ரென்பார், “முறை சிறத்தலாவது, யாதானுமோர் செய்யுட்கண், முதற்பொருளும், கருப்பொருளும், உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகு மென்பதூஉம், முதற்பொருளொழிய ஏனைய இரண்டும் வரின், கருப்பொருளால் திணையாகு மென்பதூஉம், உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகு மென்பதூஉமாம்……………….” என்று உரைத்துள்ளார். இம் முறைமையாலேதான், தொகைநூல்களுள், சில பாட்டுக்கள், திணையும், அதன்கண் கூறப்படும் உரிப்பொருளும் வேறுவேறாகக் கொண்டிருக்கின்றன.

தொகைநூல்கள், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் என வகையால் இரண்டு பட்டு, விரியால் எட்டும் பத்துமாகும். எட்டனுள், இன்று நாம் மாநாடு கூடி ஆராய்ந்து இன்புறும் குறுந்தொகை இரண்டாவது தொகை நூலாகும். பல புலவர்கள் பாடிய அகப்பாட்டுக்களின் தொகையாதலால், இவை தொகை நூல் எனப்படுவதாயிற்று; இக்குறுந்தொகையும் தொகை நூல் எனப்படு வதாயிற்று. இதனை “நல்ல குறுந்தொகை” என்று பழைய பாட்டொன்று சிறப்பித்துக் கூறுகின்றது. இதனை ஆராய்வோர் இதனிடத்துள்ள நன்மை கண்டு இன்புறும் கடப்பாடுடையராவார்.

இந்நூல் மூன்று புலவர் பெருமக்களால் ஆராய்ந்து வெளியிடப் பெற்றிருக்கின்றது. நான் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றிற்குரிய ஆராய்ச்சி செய்து வருகையில், காலஞ் சென்ற தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர் உயர்திரு. கா. நமச்சிவாய முதலியாரவர் களிடத்து முதலும் ஈறுமில்லாத குறுந்தொகையில் அச்சாகிய பகுதிகள் சில கண்டேன். அவற்றிற்கும் ஏனை மூன்றுக்கும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் உரையுடன் கூடியவை இரண்டே. இவ்விரண்டினுள்ளும் செவ்விய உரை காணப்பெற்றுத் திருந்திய முறையில் அமைந்திருப்பது டாக்டர். திரு.உ.வே. சாமிநாதையரவர்கள் வெளியிட்டிருக்கும் குறுந்தொகை. இதன்கண், பாட்டுக்கள் திணை வகுக்கப்பெறவில்லை. நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்ற மூன்று தொகைநூல்களுள், நெடுந்தொகை என்ற அகநானூறு ஒழிந்த இரண்டிலும் மூலப்பிரதி களில் திணைப்பாகுபாடு காணப்பட்டிலது. நெடுந்தொகையிலும் பாட்டுத்தோறும் திணை காணப்படாவிடினும், இறுதியிற் காணப்படும் பழைய பாட்டுக்களால் திணைப்பாகுபாடு நன்கு உணர நிற்கிறது. நற்றிணை, குறுந்தொகைகட்கு வெளியிட்டோரால் திணை காட்டப்பெற்றிருக்கின்றது. அப்பாகுபாடுதானும், டாக்டர் அய்யரவர்கள் வெளியீட்டில் காணப்படு கின்றிலது. அதனாற் குறையொன்றுமில்லை யெனினும், திணைப் பாகுபாடு காண்பார் அது குறித்து ஒவ்வொரு பாட்டையும் நன்று ஆராய வேண்டிய வராகின்றனர். அத்தகைய சிறு முயற்சியுமின்றி, அவரவர் வேண்டி யாங்கு நூல்களை அமைத்துப் பதிப்பிக்கும்: ஆற்றல் வாய்ந்த திரு.அய்யரவர்கள் யாது காரணத்தால் அதனை விட்டனரோ, தெரிந்திலது.

இனி, ஐயரவர்கள் பதிப்பை விடுத்து, ஏனைப் பதிப்புக்களை வைத்து நோக்கின், முல்லைத் திணைக்கண், குறுந்தொகையில், நாற்பத்து மூன்று பாட்டுக்கள் காணப்படுகின்றன. இவை, பெரும் பாலும், மேலே காட்டிய முறையில், திணைவகை செய்யப் பட்டிருக்கின்றன. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்கள், வேற்றுத் திணைச் செய்யுட்களில் காணப்பட்டமையின், அவற்றையும் ஒருங்கு சேர்த்து எண்ணுமிடத்து, இக் குறுந்தொகையில் முல்லைக் குரிய இன்ப வொழுக்கம் நுவலும் அகப்பாட்டுக்கள் எழுபத் தைந்திற்குமேல் உள்ளன. திணை வகுப்பிற்கு முதலும் கருவும் சிறந்தனவாயினும், சிறப்புடைய ஒழுக்க நெறியினைக் காண்பதற்கு உரிப்பொருள் மிகச் சிறந்து நிற்கின்றது. அதனால், இம்முல்லை யாராய்ச்சி, இவ்வெழுபத்தைந்திற்கு மேற்பட்ட பாட்டுக்களை மேற்கொள்வதாயிற்று.

முல்லைக் குரிய உரிப்பொருள் இருத்தலும் அதன் நிமித்தமும் என்பர். இருத்தலாவது, தலைமகனும் சான்றோரும் கற்பிக்கும் நெறிக்கண்ணே நின்று, தலைமகள் தனக்குரிய நல்லறமாய இல்லறம் புரிந்து இல்லின்கண் வாழ்ந்திருத்தலாகும். தலைமகன் என்றும், தலைமகள் என்றும் வரும் வழக்காறுகளை நோக்கின், இவர் இருவர்பாலும் தலைமைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன வென்பது பெறப்படும். படவே, இத்தலைமக்கள், பான்மை வழியோடித் தம்மில் தாம் தலைப்பட்டுக் கூடி அன்பாற் பிணிப்புண்டு, இன்புற்று, சிலநாள் களவின்வழி ஒழுகி, பின்னர்க் காரண வகையால் வரைவு செய்துகொண்டு, இல்லறம் புரியும் ஏற்றம் பெறுவர். இல்வாழ்க்கை செம்மை எய்துவது குறித்துத் தலைமகன், பொருள் கருதியும், வேறே செயற்குரிய வினை குறித்தும், கல்வி குறித்தும் பிரிந்தேகுவது உண்டு. தலைமகளது நட்புக்கிழமை பூண்டு ஒழுகுமிடத்துத், தலைமகன் அவளை வரைந்துகொள்வது குறித்து, வரைவிடை வைத்துப் பொருள் நாடிப் பிரிதலும் செய்வன். பிரிவுக் காலங்களில், தலைமகன் கார்ப் பருவத்திலோ, முன்பனிப் பருவத்திலோ, வேறே தான் மேற்கொண்ட வினைமுடிதற்குரிய காலத்தை நாடி அறிந்துரைக்கும் அக்காலத்திலோ “வருவேன்” எனக் கூறிப் பிரிவன். அவன் சொல்லிய பருவத்தை எதிர் நோக்கி, தலைமகளும், அவன் பிரிவால் உளதாகும் வருத்தத்தைத் தாங்கிக் கற்புக்கடன் பூண்டு இனிதிருப்பள். ஒரோ சமயத்துத் தலைவி, தலைவனை நினைந்து ஆற்றாது வருந்துமிடத்துத் தோழியர் முதலாயினார், அவள் ஆற்றத் தகுவன கூறி ஆற்றியிருக்குமாறு செய்வர். பிரிந்து சென்ற தலைமகனும், தலைமகளின் பிரிவாற்றாது, தான் பிரிந்தே கியவிடத்தே, அவளை நினைந்து வருந்துதலு முண்டு. ஆயினும், தொடங்கியவினை முடியாமுன் மீளுதல் தலைமகற்குத் தலைமைப் பண்பு அன்றாம். அதனால் அவர் அது முடியுங்காறும் பிரிவுத் துயரை ஆற்றியிருப்பன். இவ்வண்ணம், ஆற்றியிருத்தலே பொருளாகத் தலைமக்கள்பால் நிகழும் ஒழுக்க நிகழ்ச்சிகள் முல்லைத் திணைக்கு உரியவாய்ப் புலவர் பாடும் புகழ்பெறுகின்றன.

தலைமக்கள் என்றவழி, அவர்பால் பொருளும், ஆள்வினையும், கல்வி யறிவும், பிறவும் உயர்வற வுயர்ந்து நிகரற நிறைந்தே யிருக்குமன்றோ? தலைமகன் இவை குறித்துப் பிரிவது என்னை? என்ற ஐயம் நிகழ்தற்கு இடனுண்டு. இவற்றை, பிரிவு பொருளாக நிகழும் நிகழ்ச்சிகளை ஆராய்வோர் ஆராய்ந்து கூறுதற்கு உரியர். இயைபுபட்டமையால், ஒரு சிறிது சுருங்கக் கூறல், முல்லையாராய்ச்சி யுடையார்க்கும் முறைமையாகும். ஆதலால் இவற்றைக் குறித்துப் பண்டையாசிரியன்மார் கூறியவற்றைக் கூறியமைகின்றாம். “ஓதற்குப் பிரியுமென்பது, கற்பான் பிரியும் என்பதன்று; பண்டே குரவர்களால் கற்பிக்கப்பட்டுக் கற்றான், அறம் பொருள் இன்பம் வீடுபேறுகள் நுதலிய நூல்களெல்லாம் இனிப் பரதேசங்களினும், அவை வல்லார் உளரெனில், காண்பல் என்றும், வல்லார்கள் உள்வழிச் சென்று, தன் ஞானம் மேற்படுத்து, அவர்கள் ஞானம் கீழ்ப்படுத்தற்குப் பிரியும் எனக் கொள்க. இனி, காத்தற்குப் பிரியும் என்பது, நலிவார் உளராக, நலிவு காத்தற்குப் பிரியும் என்பதன்று; நாட்டகத்தும், நகரகத்தும், தமக்கு உற்றது உரைக்கலாத மூத்தார் களும், பெண்டிர்களும், இருக்கை முடவரும், கூனரும், குருடரும், பிணியுடையாரும் என இத் தொடக்கத்தார் தம் முறைக்கருமம் கேட்டுத் திருத்துதற் பொருட்டாகவும், காட்டகத்து வாழும் உயிர்ச்சாதிகள் ஒன்றனையொன்று நலிவன உளவாயினவிடத்து, தீது என்று அவற்றை முறை செய்தற்கும், கொடி வலைப்பட்டுக் கிடந்தனவற்றைத் துறை நீக்குதற்பொருட்டாகவும், வளன் இல்வழி, வளன் தோற்று வித்தற் பொருட்டாகவும், தேவ குலமே, சாலையே, அம்பலமே என்று இத் தொடக்கத்தனவற்றை ஆராய்வதற்கும், அழிகுடி யோம்புதற்கும் பிரியுமென்பது. அல்லதூஉம், பிறந்த வுயிர், தாயைக் கண்டு இன்புறுவதுபோல, தன்னாற் காக்கப்படும் உயிர் வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின், தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தவிடத்து, அவர் முன்னர்த் தனது ஊக்கம் காட்டுதற் பொருட்டாகவும் பிரியும்; அதனானே, மாற்றரசரும், திறை கொடுப்பரென்பது. இனி, பகை தணி வினையென்பது, தூதுவர்போலச் சந்து செய்வித்தற்குப் பிரியும் என்பதன்று; இருவர் அரசர், ‘நாளைப்பொருதும், இன்று, பொருதும்’ என்று முரண் கொண்டு இருந்த நிலைமைக்கண் தான் அருளரசனாகலின், ‘இம்மக்களும், இவ்விலங்குகளும் எல்லாம் பட, இவ்விரண்டு குலத்திற்கும் ஏதம் நிகழும்; அதனால் இப் போர் ஒழிப்பன்’ என்று இருவரையும் இரந்து சந்து செய்வித்தலும் ஒன்று; அல்லதூஉம் தேவரும் அசுரரும் பொருத காலத்துத் தேவரையும் அசுரரையும், ‘ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யான்’‘எனப்பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்ததுபோல், ’இருவரின் மிகை செய்தீரை ஒறுப்பல்’ என்று சந்து செய்வித்தலும் ஒன்று; இருவரையும் ஒறுக்கும் துணை ஆற்றலுடைய னாகலான் என்பது. அஃதே எனின், தன்னகத்து இருந்து விட அமையாதோ? அன்ன ஆற்றலனாகலான், தான் செல்ல வேண்டுமோ? எனின், செல்ல வேண்டும் என்பது; என்னை, காதலர்ப் பிரிந்து ஒரு கருமம் முடிப்பதனின் மிக்க ஆள்வினை இல்லை யென்பது; ஆதலாற் பிரிந்தெ சந்து செய்விக்கும் என்பது. இனி, வேந்தர்க் குற்றுழியென் பதற்குச் சேவகனாய்ப் பிரியும் என்பதன்று; தனக்கு நட்டானோர் அரசன் சென்றவிடத்து, அவற்காய மறுதலையை வென்று நீக்குவதற்குப் பிரியுமென்று கொள்க. இனி, பொருட் பிணியென்பது, பொருள் இலனாய்ப் பிரியுமென்பது அன்று; தன் முதுகுரவரால் படைக்கப் பட்ட பல வேறு வகைப்பட்ட பொருளெல்லாம் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்று எனத் தனது தாளாற்றலால் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியுமென்பது. அல்லதூஉம், தேவர் காரியமும், பிதிரர் காரியமும் தனது தாளாற்றலால் படைத்த பொருளாற் செய்தன தனக்குப் பயன்படுவன; என்னை, தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார், ஆதலான், அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியும் என்பது…” என வரும் ஆசிரியர் நக்கீரனார் உரையால் மேலே காட்டிய ஐயங்கள் நீக்கப்படும்.

இனி, தலைமகன், பொருள் வினை முதலியவற்றைக் குறித்துப் பிரியும் பான்மையுடையவனாயினும், தலைவியைப் பிரிந்தேகும் அவனது செயல், மிக்க நயமுடையதாகும். தலைவியோடு இல்லின்கண் இருந்து வருகையில், தான் கருதியிருக்கும் பிரிவைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் தெரிவிப்பன்; பொருளின் இன்றியமையாமையைப் புகழ்ந்து பேசுவன்; ஆள்வினையின் மாண்பை அழகாக எடுத்தோதுவன். ஒருநாளையில் தான் பிரிந்தேக வேண்டியிருக்கு மென்பதைச் சட்டென உரைக்கலாற்றாது, அவன் சிறிது தயங்குவன்; பிரிவேன் என்று மெல்ல மொழிவன்; அது கேட்டுத் தலைவி அஞ்சுவள். அவ்வச்சம் தீர அன்புடைய மொழிகள் பல சொல்லித் தான் கருதிய பிரிவைக் கைவிட்டவன்போல் இருந்துவிடுவன். இவ்வாறு ஒரு முறைக்குப் பன் முறையும் பிரிவேன் என்று மொழிவதும், பிரியாதே நின்றொழிவது மாகச் சிலநாட்கள் கழியும். பின்பொருநாள் உண்மையாகவே தலைவியிடம் கூறிவிட்டுப் பிரிந்துவிடுவன். சில காலங்களில் தலைவிக்கு அறிவியாது, தோழிவாயிலாக அறிவித்து நீங்கு வதும் செய்வன்.

பிரிந்தேகும் தலைமகன், தலைமகளைப் பிரியமாட்டாது பெருவருத்தமுறுவன். அவள்பால் உள்ள தூய காதல் ஒரு புறம் ஈர்ப்ப, மேற்கொண்ட வினையோ, பொருளோ முற்ற முடித்தல்லது மீளலாகாது என்கிற மேற்கோள் மறுபுறம் ஈர்ப்ப, அவன் உள்ளம் ஊசலாடி அலமருவன். அவன் செல்லும் நெறியில் வாழும் மாவும் புள்ளும் நிகழ்த்தும் அன்பொழுக்கம் அவனுக்குக் காட்சி வழங்கும். அதனால், அவன் தன் துணை வியாகிய தலைமகளை நினைந்து வருந்துதலுமுண்டு. காலம் சிறிது நீட்டித்தவழி, தலைவியிடமிருந்து பாணன் முதலிய வாயில்கள் வந்து அவளது காதல் நிலையைக் கட்டுரைப்பர். அவன் குறித்த பருவம் வரும்; அப் பருவம் பெரும்பாலும் கார்ப்பருவமாகும்; சிறுபான்மை ஏனைப் பருவங்களுமாகும். கார்ப்பருவத்தே மேகங்கள் கருத்தெழுந்து மின்னி யிடித்து மழைபெய்ய முழங்கும். அதனைக் காணின் தலைமகள், தன் பிரிவையுள்ளி ஆற்றாது பெரிதும் வருந்துவள் எனத் தலைமகன் நினைத்துக் கலக்க முறுவன்; பின்னர்த் தேறித் தேளிவன்.

மேற்கொண்ட வினையை முடிக்க விரையும் தலைவன், தான் குறித்த பருவம் வரும் முன்பே அவ்வினையை முடித்து மீளுவது பெரும்பான்மையாகும். அவன் மீள்வதும் கார் முகில்கள் பெயல் தொடங்குவதும் ஒன்றாக நிகழ்வது இயல்பு. வினை முடியுமளவும் அதன்மேற் சென்ற அவனது உள்ளம், வினை முடிவில் தோன்றும் இன்பத்தால், தன்பால் காதலன்பு மிக்க தலைவியின் இன்பத்தை நினைக்கும். தலைமகளை, “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” (நற்.3) என்றும் அவன் வழங்கக் காண்கின்றோம். அவன் மீண்டு விரையச் சென்று தன் காதலியைக் காண விரும்புவன். அதனால் பாகனுடன் சில தகுவன கூறலுறுவான்.
மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு மீளும் தலைமகனொருவன் தன் பாகனை நோக்கி, “பாக, நாம் இது காறும் இவ்வினையை முடித்தற்பொருட்டு நெடுநாட்கழித் தோம்; இந்நாட்களையும், தலைமளோடு கூடியுறைந்து இன்புற்ற நாட்களையும் நோக்கின், இவை இன்பவுள்ளீடில்லாத பயனில் நாட்களாகும்” என்று சொல்லலுற்று, “எல்லாம் எவனோ பதடி வைகல்” என்றும், “அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளே இவண் வாழுநா” (குறுந். 323) ளென்றும் வருந்திக் கூறுகின்றான். பிறிதோரிடத்தும், தலைமகளைக் கூடியிருக்கம் நாட்களின் சிறப்பை நோக்கின், “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும், அரிது பெறுசிறப் பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர்சா லாவே” (குறுந். 101) என்றே சொல்லுகின்றான். ஆதலால் தான், தலைவியைப் பிரிந்துறையும் நாட்களை இங்கே “பதடி வைகல்” என்கின்றான்.

இது கேட்கும் பாகன், “எம்பெருமான், தலைவிபாற் சென்ற நெஞ்சினனாயினன்; இனி, தேரை விரையச் செலுத்துவதே பொருளாம் என்று கருதித் தேரை இனிது பண்ணிக் கடாவுகின்றான். தேர்மீது இவர்ந்து செல்லும் தலைமகன், தேரின் விரைவையும், தலைவியின் காதல் நிலையையும் எண்ணி, இடையே கடக்க வேண்டியிருக்கும் நிலப்பகுதியை நினைக்கின்றான்; பெருங்காடு செறிந்திருக்கிறது; அதன் கண் புலியினம் கடலலைபோல் முழங்கி எழுந்து திரிகின்றன; அவற்றிற்கு அவன் அஞ்சுகின்றான் என்பதில்லை; அவற்றைக் கடிந்துகொண்டு கடப்பதால் உண்டாகும் காலக்கழிவு தனக்கு முட்டுப்பாடு பயப்பது குறித்து மனம் அழிகின்றான்; வழியின் சேய்மை ஒருபால் கவலை எய்து விக்கின்றது.”எனைத்தென்று எண்ணுகோ முயக் கிடைமலைவே" (குறுந்.237) என்று சொல்லி வருந்துகின்றான்.

இவ்வாறு எண்ணமிட்டு மீளலுறும் தலைமகன், ஊரின் சேய்மை கண்டு வருந்திய நெஞ்சினனாய் வந்துகொண்டிருக் கையில், குறித்த பருவம் எய்துமுன் தலைவியைக் கூடவேண்டு மென்று விரைகின்றான். அவனது நெஞ்சம் தலைவியைக் கடிதிற் கண்டு கூடி இன்புறுதற்குத் துடிக்கின்றது. அதனால் அவன், “நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து, ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்புறுகின்றாய். பேரமர்க்கண்ணி யாகிய தலைவியிருந்த ஊர் நெடுஞ் சேண் ஆரிடையது; இதனை நீ அறிந்திலை; யான் வருந்துவேனாயினேன்” (குறுந்.131) என்று தன்னுட் கூறிக் கையறவு எய்துகின்றான். இதற்குள் கார்முகில் எழுந்து நல்ல மழையைப் பெய்துவிடுகிறது. பள்ளங்களில் நீர் நிரம்பித் தெளிந்திருக்கிறது. மானினம் துணையொடு கூடி அந்நீரைப் பருகி இன் புற்றுத் திரிகின்றன. இக்காலத்து மாலைப்பொழுது காதலரைப் பிரிந்து தனித் திருப்பார்க்கு வருத்தத்தைச் செய்யு மென்பது இனிதறிந் திருக்கின்றானாதலால், பாகனைத் தேரை விரையச் செலுத்தச் சொல்லுவான். இவை யெல்லாம் சுட்டி,

“பரலவல் படுநீர் மாந்தி, துணையோடு
இரலை நன்மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, காலியல்
கடுமாக் கடவுதி பாக, நெடுநீர்ப்
பொருகயல் முரணிய உண்கண்
தெரிதீங் கிளவி தெருமரல் உயவே” (குறுந்.250)

என்கின்றான். இதன்கண், மாலை வருமுன், தேரை மனை யகம் அடையுமாறு செலுத்துக என்று பாகனுக்குரைக்கும் தலைவன், அது கைகூடுமென்றற்கு ஏதுவாகக் குதிரை களை, “காலியல் கடுமா” என்றும், மாலை வரக் கண்டு தலைவி மதிமருண்டு வாய் வெருவி நிற்கும் நிலையினை மனத்தால் நினைந்து, “கயல் முரணிய உண்கண், தெரி தீங்கிளவி” என்றும் கூறும் திறம் எத்துணை இன்பம் தருகின்றது காண்மின்!

இவ்வாறு மாலைப்பொழுது நெருங்கவே, கானத்தே முல்லை கொடிகள் அரும்பி மலர்ந்து அழகிய காட்சி நல்குகின்றன. முல்லைமலரின் வெண்ணிறம் விளங்கித் தோன்றுவது, பகலொளி மழுங்குதலைக் காட்டுகிறது. ஞாயிறு மலைவாய் அடைகிறது. மக்கள் தத்தம் மனையகம் புகுகின்றனர். இன்ன பொழுதில், “நீ விரையச் சென்று நின் மனையகம் புகாது தனித்தல் நன்று, நன்று” என்று முல்லை தன்னை எள்ளி நகையாடுவதுபோலத் தலைவன் நினைக்கின்றான். அதனைப் பார்த்து,

“கார்புறந் தந்த நீருடைய வியன் புனத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை, வாழியோ முல்லை ! நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே” (குறுந். 162)

என்கின்றான். தனித்தார்க்கு அத் தனிமை வருத்தத்தின் மேலும், நீ நின் எள்ளல் நகையால் துன்பம் செய்தல் தகவன்று; இது குறித்த பருவத்தின் வரவெனக் கூறித் தனித் தோரைத் தேற்றுதலன்றோ தகுவதாவது என்று கூறுவான், தலைவன், இதன்கண், “முல்லை, நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டு நகுவை போலக் காட்டல் தகுமோ, தமியோர் மாட்டே” என்கின்றான்.

இனி, வினைமுற்றி மீண்ட தலைமகன், தன் கடி மனையடைந்து தலவியொடு கூடி இன்புற்றிருக்கின்றான். பிரிந்தேகிய காலத்தே, தான் கூறிச் சென்றதுபோலவே, கார்ப்பருவம் வரு முன்பே வந்தடைந்த தலைமகன் மனைவியோடு இனிதிருக்கையில் கார்முகில் மழை பெய்கிறது. அது காணும் தலைவன், “மழையே, யாம் வருமுன் பெய்வா யாயின், தலைமகள் ஆற்றாது வருந்தியிருப்பள். இதுபோது நின் பெயல் எமக்கு இன்பம் தருகிறது; ஆதலால், ‘கடிப்பிகும் முரசின் இடித்துப், பெய்து இனி வாழியோ, பெருவான்!’ (குறுந்.270) என்று சொல்லி,”யாம் செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு, இவளின் மேவினமாகி, குவளைக் குறுந்தாள் நாண்மலர் நாறும், நறுமென் கூந்தல் மெல்லணையேம்" என்று தன்னை அக்கார்ப்பெயல் வருத்தக் கூடாமை பேசி மகிழ்கின்றான்.

இவ் வண்ணம் தலை மக்களது இல்வாழ்வின்கண் நல்லறம் இனிது நடைபெறுகிறது. இடையே, ஒருநாள், தோழி, தலைமகனை நோக்கி, “நீவிர் பிரிந்த காலத்து, எம்மை நினைத்தீரோ?” என்கின்றாள். அவட்குத் தலைவன், “குறுநடையாய், யாம் சென்றவழி, கடத்தற் கரிய குன்றங்களைக் கடந்து செல்ல வேண்டியதாகும். சென்ற யாம், மடந்தையாகிய தலைவியது நட்பையே பெரிதும் நினைத்தேம்; வேறேயுள்ள பலவற்றையும் நினைத்தேமில்லை” (குறுந். 209) என்று செப்புகின்றான். பின்னர் ஒருநாள், தலைமகளது கேளிர் போந்து, தலைமகனைப் பார்த்து, “இளமையும் இன்பமும் நோக்காது பெயர்ந்து சென்று, இத் துணை நாள் நீட்டித்தீரே, காரணம் என்னை?” என்று கேட்கின்றனர். அவர்கட்குத் தலைமகன், “யாம் உங்களை உள்ளாது இருந்தோமில்லை; உள்ளி, உங்களையே பெரிதும் நினைத்தேம்; ‘காதலரைப் பிரிந்து சென்று செய்யும் கருமத்தினும் சீரியது பிறிதில்லை’ என்ற உலகப் பண்பை நினைத்து மதி மருண்டேன்; அக்காலமெல்லாம்,”கோடு தோய் மலிர் நிறை’ போல் பெருகிய வேட்கை, அஃது ‘இறைத்துண்ணச்’ சென்றது போல, சிறுகிச் சிறுகி, யான் ஈண்டுப் போந்து உம்மைக் கண்ட விடத்து முடிவடைவதா யிற்று’’ (குறுந்.99) என்று தன் காதல் மாண்பைக் கட்டுரைத்துக் களி கூர்கின்றான். தான் வருங்காறும் தலைவியை ஆற்றுவித்திருந்த தோழியைப் பாராட்டியும், தான் நினைத்தவாறு தேரை விரையச் செலுத்திப் போந்த தேர்ப்பாகனைப் பாராட்டியும் கூறுவன பலவும் உண்டு.

இனி, தலைவியாவாள், தலைமைப் பண்பு நிரம்ப வுடைய மகள் என முன்பே கூறி யுள்ளோம். தலைமைப் பண்புகளாவன, “கற்பும் காமமும் நற்பாலொழுக் கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்து புறந்தருதலும், சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்” என ஆசிரியர் தொல் காப்பியனார் கூறியதனால் அறிகின்றோம். இப் பண்புகளால் மேம்பட்டுத் திகழும் தலைமகள், தலைவனோடு கூடி அறம் புரியுங்கால், தோழியர் முதலிய கேளிர் போற்றத் ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற் காத்து’ ச் சோர்வின்றி வாழ்ந்து வருகின்றாள். வருங்கால், தலைமகளது கற்பு நலம் கண்ட தோழி, “தலைவன்பால் இத்துணை அன்புடைய நீ, அவன் நின்னை வரையுங்காறும், நன்கு ஆற்றியிருந்தாயல்லையோ? நின் கற்பின் திண்மையே திண்மை !” என்று வியக்கின்றாள். அவட்கு, “தோழி, தலைவன் வரைவை இடை வைத்துப் பிரிந்தேகியபோது நாம் ஆற்றாது வருந்தி யிருந்தோமன்றோ! அக் காலத்து ஒரு நாள், நாம் அவர் வரவு எதிர் நேக்கியிருக்கையில், நம் அயலிலாட்டி (அயல் வீட்டுக்காரி) ‘வரும், வரும்’ என்றாள். அவள் வாயச் சொற்போலவே, தலைமகனும் தவறாது போந்து நம்மை வரைந்துகொண்டனன். அதுபோது நாம் ஆற்றியிருந்தது பெரிதன்று; அயலிலாட்டி சொன்ன சொல் தப்பாது வாய்த்ததனால், அவள் நீடு வாழ்க; (மலைகெழு நாடனை வரும் என்றனள்;… (அதனால்) அமுதம் உண்க நம் அயலிலாட்டி” (குறுந்.201) என்று வாழ்த்துகின்றாள்.

இவ்வண்ணம், களவுக்காலத்தும், கடிமணக் காலத்தும் தலைமகன் செய்த தலையளியை நினைந்து மகிழ்ந்து இருக்கும் தலைமகள் வருந்த, அத்தலைவன் பொருள் குறித்தும் வினை குறித்தும் பிரிந்து போகின்றான். தலைமகள் பிரிவாற்றாது, “தோழி, அவர் செல்வேன் செல்வேன் என அடிக்கடி சொல்வர்; சொல்லி யாங்குச் செல்லார்; அவர் சொல்லும் செலவு ‘மாயச்செலவு’ என்று கருதி, யானும் ‘சென்று வருக’ என்பேன். (குறுந்.325) இவ்வாறு, ’செல்வாரல்லர் என்று யான் இகழ்ந்தனனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே” (42) என்று இரங்குகின்றாள்.

தலைவன் பிரிந்தவழி, தலைவி துயர் மிகுந்து,தோழியர் முதலாயினோர் தேற்றத் தேறி அவன் பிரியும் போது வற்புறுத்த சொல்லைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒருவாறு ஆற்றியிருக் கின்றாள். காதலரைப் பிரிந்தவர்க்கு மாலைப்போதும், மனக்கினிய இயற்கைக் காட்சியும் பெருவருத்தம் செய்வனவாகும். இதனால், அவளது நினைவு அடிக்கடி அவன்மீது செல்வதால், பிரிவுத்துன்பம் எழுந்து உள்ளத்தை அலைக்கின்றது; உடல் மெலிகின்றது; கண்ணீர் உவட்டெடுத்து ஒழுகுகின்றது. தலைமகள் தோழியைப் பார்த்து, “நம் கண்ணீர் துடைத்து நம்மோடு அமைதற்குரியராகிய நம் காதலர், இப்போது அவ்வாறு அமையாராதலால் என் நெஞ்சம் வருந்துகின்றது. (குறுந். 4) எருமையினம் தம் கழுத்திற்கட்டிய மணியொலிக்க, நடு யாமத்தில் இயங்கும்; மாலைவரற்பாலராகிய அவர், மாலை கழிந்து நடுவியாமமாகியும், வந்திலர் (குறுந். 279); அவர் நம்மை யுள்ளினராயின், வருவாரல்லரோ?” என்று வருந்து கின்றாள்.

பிறிதொருநாள், தலைவி வருந்தக் கண்ட தோழி, “கடலன்ன காமம் உழப்பினும், குலமகளிர் தம் கற்பால் அதனைச் சிறையழியாமே காத்தல் வேண்டும்; நீ ஆற்றாது வருந்துவது நன்றன்று” என்று ஆற்றுவிக்கின்றாள். அது கேட்கும் தலைவி, பொறாளாய், தோழி தன் மனநிலையையுணராது கூறுகின்றாளெனச் சிறிது சிவந்து, அவளை அயன்மைப் படுத்தி,

“காமம் தாங்குமதி யென்போர், தாம்அஃது அறியலர் கொல்லோ? அனைமது கையர்கொல்?
யாம்எம் காதலர்க் காணே மாயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே” (குறுந்.290)

என்று உரைக்கின்றாள். இவ்வுரையாட்டால் பொழுது கழிய மாலை வருகிறது. தனிமைத் துன்பம் ஒரு புடையே தோன்றித் தலைவிக்குத் துயர் விளைவிக்கின்றது. ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, “தோழி, அவர் சென்ற நாட்டில், புன்கண் மாலையும் புலம்பும் இல்லையோ? இருந்தால், அவரும் நம்போல் துயரெய்தி, நம்மை நினைந்து வந்திருப்பாரன்றோ?” (குறுந். 330) என்று வினவுகின்றாள். தோழி, தலைவியின் தலைமைப் பண்புகளை எடுத்தோதி ஆற்றுவிக் கின்றாள். இதனால் தலைவி கருத்தழிகின்றாள். தோழியை மறுபடியும் விளித்து, “தோழி, கறவையினம் தம் கன்றையுள்ளிப் போதரும் இப் புன்கண் மாலைப்போதில், பிரிந்து சென்ற காதலர் திரும்பிவரக் காண்போர் மிகவும் நோற்றோராவர்; யான் அஃதில்லேன்” (344) என்கின்றாள். இது கேட்கப் பொறாத தோழி, “நீ இவ்வாறு கூறல் நன்றன்று” என்று கழறுகின்றாள். தலைவி, அவட்கு, “தோழி, பின்னுள்ள தாகிய இரவுப்போது, வரும் என்று கருதி இம் மாலைப் போதினை ஒருவாறு கழிப்போமாயின், கங்குலும் கடல்போல் பெருகி, கண்படை எய்தாவாறு வருத்துகின்றது; ஆகவே, அதுவரினும், மாலை கழியினும், என் துயர் கழிவதின்று” (குறுந். 387) எனக் கலங்கி மொழிகின்றாள். இவையாவும், இரங்கற் பொருளவாகத் தோன்றினும், தோழியோடு சொல்லாடி ஓராற்றால் ஆற்றியிருத்தற்கு ஏதுவாதலால் முல்லைத் திணையேயாகும் என்றே ஆசிரியன்மார் கூறுவர்.

மேலே காட்டியவாறு, தலைவனது பிரிவு நினைந்து வருந்து வதும், தோழியால் தேறுவதுமாய்த் தலைவன் குறித்த பருவத்தின் வரவு நோக்கித் தலைவி இல்லிருந்து நல்லறம் செய்து வருகின்றாள். தலைவன் குறித்த பருவம் வருகின்றது; மற்று, அவன் வரவு நீட்டிக்கின்றது. தலைவிக்கு ஆற்றாமை மிகுகின்றது. அவள் தோழியைப் பார்த்து, “தோழி காதலர் குறித்த கார்ப்பருவம் வந்தது; அவர் வந்திலர்; வருவர் என ஆற்றியிருப்பேமாக. கணவனைப் பிரிந்த பின்னரும் நீவிர் உயிர் வாழ்கின்றீர் போலும் என்பது போல, இக்காரின் வரவு இருக்கின்றது, காண்” (குறுந். 65) என்றும், “இளமைச் செவ்வி நோக்காது பொருளே நச்சிப் பிரிந்த காதலர் இப்போது எங்குள்ளாரோ?” (126) என்றும் நாம் எண்ணி ஏங்கி நிற்க, “இக் கார்ப்பருவம் முல்லையின் தொகு முகைகளைத் தன் இலங்கும் எயிறாகக்கொண்டு நகுகின்றது காண்” என்றும் இயம்பு கின்றாள். இவற்றைக் கேட்கும் தோழி, “இது பருவமன்று” என்று வற்புறுத்துகின்றாள். தலைவி தோழியோடு புலந்து, “கொன்றை குருந்தோடு அலமரும் பெருந்தண் காலையும் ‘கார் அன்று’ என்றி; ஆயின், யான் காணும் இது கனவோ? நின்னையே வினவுகின்றேன், கூறுக” (குறுந். 148) என்று பேசுகின்றாள்.

கார்காலம் வந்து விடுகிறது. விசும்பு முழுதும் கார் மழை பரவிக் கறுத்து, மின்னி, இடித்து, குன்றும் காடும் குளிர்ப்புமிகப் பெய்கிறது. அவல்கள் (பள்ளங்கள்) தோறும் நீர் நின்று தெளிந்திருக் கிறது. கானத்தே கொன்றை, குருந்து, கோங்கு, பிடவம், பித்திகை, தளவம், முல்லை முதலியன முகையும் அரும்பும் மலரும் நிரம்பி இனிய காட்சி தருகின்றன. மானினம் பிணையுடன்கூடி, பள்ளங்களில் நிற்கும் தண்ணீரையுண்டு இன்புற்றுத் திரிகின்றன. இக்காலத்தே, பெரும்பாலும் மாலைப்போது தொடங்கி நள்ளிரவு முற்றும் மழை பெய்வது இயல்பு. அதனால், கன்றும் கறவையும் கொண்டு, கானத்திற்குச் சென்று மேய்க்கும் ஆயர், மாலை வரக் கண்டு அவற்றைச் செலுத்திக்கொண்டு மனையகம் திரும்புவர். ஆனேறுகளின் கழுத்தில் மணியோசை கேட்போர்க்கு மாலைப்போதின் மாண்பு காட்டி மகிழ்வுறுத்தும்: ஒருபால் கானமஞ்ஞைகள் அகவும்.

இதனைக் காணும் தலைவி, “கார்வரும் முன்பே வருவேம் என்று சொல்லியகன்ற நம் காதலர் வந்திலர், காண்; தம்மை ஒருபோதும் மறவாத நம்மை அவர் தெளிவாக மறந்தனர்; பெய்த குன்றத்திலிருந்து புனலும் பூக்களைச் சுமந்து இழி தருகின்றது; மாலைப்போதில் மழையும் இடித்து முழங்கு கின்றது (200); இதோ, முல்லையும் பூத்துளது; யாவரும் கையில் பறியோலை (பனங்குடை) யுடையராயினர்; இடை மகன் சென்னியில் உள்ள கண்ணியெல்லாம் முல்லை முகைகளே; அவர் வரவில்லையே (221); இக்காலத்தே காதலரைக் கூடிப்பெறும் துயிலே இனிய துயிலாகும். காதலரோ, ’துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்; பயில் நறுங்கதுப்பின் பாயலுமுள்ளார்; அவர் வரவு அறிந்து வந்து இசைக்கும் தூதுகளும் வாராவாயின (254); மானே றுமடப் பிணை தழீஇப் புதலிடத்தே ஒடுங்குகின்றன; களிறுகள் பிடியொடு பொருந்தி மலையகம் சேர்கின்றன; இது போதில் தலைவர் வாராமையால் நம் இன்னுயிர் நிலை என்னாகும்?” (319) என்று கலுழ்கின்றள்.

பருவவரவு கண்டு தலைவி வருந்துவது ஒருபுற மிருக்க, தோழியும், அதனைக் காணின், நம் தலைமகள் எவ்வாறு ஆற்றுவளோ எனக் கலங்கிக் கையறவு படுகின்றாள். தோழி எய்தும் கவற்சியைத் தலைவி கண்டு, அவளைத் தேற்றுவதும் தன் கடனாதலை யுணர்கின்றாள். தோழியைப் பார்த்து, “தோழி, கொன்றை, புதிய பூக்களை மலர்ந்து கானத்தில் கார்கால வரவு காட்டுகின்றது; எனினும், இதனைக் கார்ப் பருவமென்று தேறேன்; கார்ப்பருவமாயின், காதலர் தவறாமே வந்திருப்பர்; வாராமையால், அதனைக் காரென்று கொள்ளேனாயினேன்” என்று கூறுவாள்,

                   "புதுப்பூங் கொன்றைக்  

கானம் ‘கார்’ எனக் கூறினும்
யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே" (குறுந்.21)

என்கின்றாள். மறுவலும் ஒருமுறை, தோழியின் கவற்சி நீக்கும் கருத்துடையளாய தலைவி, “தோழி, நீ கவலற்க; இதுபோது நம்மை வருத்துவதுபோலத் தோன்றியுள்ள ’புன்கண் மாலையும் புலம்பும், அவர் சென்றுள்ள நாட்டினும் உண்டல்லவோ? இவை நம்போல் அவரையிம் துயரெய்து விக்கும்; அதனால் அவர் விரைய வருவர்; ஆகவே, நான் நன்கு ஆற்றியிருப்பேனென்று உணர்க” (46) என்று உரைக்கின்றாள்.

பின்பொருகால், தலைவி தோழியை யழைத்து, “தோழி, இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது; பிச்சியின் அரும்புகள் நன்கு சிவந்துள்ளன; இது கண்டு யான் மருள்வேனாயி னேன்: கராணம் ஆற்றாமையன்று; கார்மழையின் முழக்கத்தை அவர் கேட்பின், நம்மை நினைந்து செய்வினை முடியாது மீள்வரோ என்று அஞ்சும் அச்சமே தவிர வேறன்று” என்கின்றவள்,

“பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே;
யானே மருள்வேன்; தோழி, பானாள்,
இன்னும் தமியர் கேட்பின்
என்னா குவர்கொல், பிரிந்திசி னோரே;
அருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதரும் குரலே” (குறுந்.94)

எனவரும். இதனால் இக் கருத்து அழகுற்று நிற்றலைக் காணலாம். காதலர் செய்வினை முற்ற முடியாது மீள்வரோ என்று வெளிப்படக் கூறுதற்கு நாணி, தலைவி, “என்னாகுவர் கொல் பிரிந்திசினோரே” என்று கூறும் திறத்தைக் காண்மின். பிறாண்டும், தோழி, தலைவியை நோக்கி, “கார்ப்பருவம் வருகின்றது; நீ ஆற்றுவையோ?” என்று கேட்கின்றாள். அவட்குத் தலைவி தன் கற்பு நலம் தோன்ற, “குரவமும் புன்கும் தழைத்து மலர்ந்து சினை இனிதாகிய காலையும், காதலர் நம்மை நினையாது மறந்தாராயினும், செய்வினை முடியாது மீளுதல் ஆண்மையன்று எனப் பெரியோர் கண்ணினர்: இதனை முன்பு துணியாத என் நெஞ்சம், இப்போது துணிந் தமையின், யான் ஆற்றி உயிர்வாழ்வேனாயினேன்; இத்துணிபிற்கு என் மனத்து வன்கண் துணையாயிற்று” என்பாள்,

                                   "காதலர்,  

பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றுஎன
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன் தோழிஎன் வன்க ணானே" (குறுந். 341)

என்று பெருமிதம் படக் கூறுகின்றாள்.

ஒருநாள் தோழி போந்து, “குறித்த பருவம் வந்தும், காதலர் வாராராதலால், அவர் வரவறிதற்கு ஊரார் செய்வன செய்து காண்பேமோ?” என்று கேட்கின்றாள். அவட்குத் தலைமகள், “தோழி, காதலர் நம் உயிர்க்கு உயிரன்னர்; தம்மையின்றி ஓர் இமைப்பளவும் அமையாத நம்மை மறந்து, சென்றவிடத்தே அமைந்துவிடும் வன்மையுடைய ரென்பது தகாது; அவர் பொருட்டுச் சூலிக்குக் கடன் பூணலோ, கையில் காப்பு நூல் யாத்தலோ, புள் நிமித்தம் பார்த்தலோ, விரிச்சி நிற்பதோ, ஒன்றும் வேண்டா; இவற்றை நினைத்தலும் கூடாது; அவர் தாமே வருவர்” (குறுந். 218) என்று பேசுகின்றாள். மேலும், தோழி, “இத்துணை யன்புடைய நின்னைப் பிரிந்திருக்கும் தலைவர் நின்பால் அன்பிலர் போலும்” என்று சொல்லாற் சுடுகின்றாள். அச்சுடுசொல் பொறாத தலைமகள், “காதலர் உழையரல்லாமையால் யான் வருந்துகின்றேன்; மழையும் இக் காலத்தைக் கார் என்று மயங்கிப் பெய்வதாயிற்று; இது பொழியா முன்பே, அவர் திறத்து நாம் இரங்கினோம்; அற்றாக, இவ்வூர் நம்பொருட்டு மிக இரங்கி அழுகின்றது; அதுவே எனக்குப் பெரு நோய் தருகின்றது; என் வேறுபாட்டிற்குக் காரணம் வேறே, ஆற்றாமையன்று” (289) என்கின்றாள். இதன்கண் ஊர் என்றது தோழியை. இப் பேச்சினைச் “சாக்கிட்டுப் பேசுவது” என்று யாவரும் இக் காலத்து, வழங்குகின்றனர்.

இவ்வாறு சிலநாட்கள் கழிகின்றன. தலைவன் வாராமை யால் ஆற்றாத தலைவி, தன் வேறுபாட்டைத் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்றாள். அவளது மாந்தளிர்போலும் மேனி வெளுத்துத் தோன்றுகிறது. இந்த நிலையைத் தலைவனுக்குத் தெரிவிக்க வேண்டுமென விழைந்து, தோழியை நோக்கி, “தோழி, நம் படப்பையில் மாரிக் காலத்தே மலரும் பீர்க்கின் வெண்பூவைக் கொண்டு சென்று, அவற்குக் காட்டி,”இன்னள் ஆயினள் நல்நுதல் என்று, அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, நன்று மன்வாழி தோழி" (குறுந்.98) என்று சொல்லுகின்றாள். அது கேட்டுத் தூதுவிடத் துணிந்த தோழி, “அவர் யாண்டு உள்ளனரோ? அவரை எங்ஙனம் காண இயலும்?” என்று வினவ, அவட்கு, “அவர் நிலம் தொட்டுப் புகார்; வானம் ஏறார்; முந்நீருட் காலிற் செல்லார்; நாடு தோறும், ஊர் தோறும்,குடிதோறும் தேடின் அவர் அகப்படாது போகார்; காணாது கெடுநரும் இலராவர்” (130) என்று வெம்மை விரவிய நன்சொற்களால் விளம்புகின்றாள். அது,

“நிலந்தொட்டுப் புகார், வானம் ஏறார்,
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்,
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரு முளரோநம் காத லோரே” என வருவது.

இவ்வண்ணம் தூது விட்டுத் தலைவன் வரவு நோக்கி யிருக்கும் தலைமகட்கு ஒருநாள் பாணன் போந்து, தலைவனது வருகையை உணர்த்துகின்றான். அது கேட்டு எல்லையில் இன்பமுறும் தலைமகள், “பாண, ஒன்று தெளிவாக அறிய விரும்புகின்றேன்: காதலர் வருகையை நீயே கண்டனையோ? அன்றிக் கண்டார் சொல்லக் கேட்டனையோ? யார் வாய்க் கேட்டனை, கூறுக. அவர் வருகை யுணர்த்திய நீ யான் தரும் இப் பெருநிதியைப் பெற்றுச் செல்வாயாக” (75) என்று தன் காதல் மிகுதி தோன்றப் பலபடச் சொல்லாடு கின்றாள். சிறிது காலத்துள் தலைமகன் தேரிற் கட்டிய மணி யோசை கேட்கின்றது; தேர் தோன்றுகிறது; அது வந்து வாயிலில் நிற்கிறது; தலைவனைத் தழீ இய தலைவி மகிழ்ந்து பேருவகைக் கடல் மூழ்கிப் பிறங்குகின்றாள். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”

அன்றிரவு கழிகின்றது; வெள்ளிமுளைப்ப விடியல் வருகின்றது; கோழிச் சேவல் கூரைமீது ஏறி நின்று குரலெடுத்துக் கூவுகின்றது. தலைமகள் துயிலெழுந்து கோழியை நோக்குகின்றாள்; முகம் சிவந்து பொலிகின்றது; கண் கறுத்து மடித்த தன் வாய் திறந்து வெடித்த சொல் சில விளம்புகின்றாள். “ஏ, கோழிச் சேவலே, நீ இல்லெலி பார்க்கும் பிள்ளைப் பூனைக்குஇரையாகிக் கழிவாயாக” என்று சொல்லி, “நெடுநீர் யாணரூரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் (குறுந். 107) எடுத்தனை யன்றோ?” என்கின்றாள். இந்நிலையில், தோழி அவளிடம் போந்து, அவளது மகிழ்க்சி மலிவு கண்டு மனம் குளிர்ந்து, “நின் நலம் கெடாமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது; காதலர் பிரிந்து நீட்டிப்பவும், நீ நன்கு ஆற்றினா யல்லையோ?” என்று சொல்கின்றாள். அவட்குத் தலைமகள், “தோழி, அவர் நம்மைத் துறந்து நெடுஞ்சேண் நாட்டாராயினும், நெஞ்சிற் கணியர் (228); அதனால் ஆற்றுவேனாயினேன்” என்று விடையிறுத்து இற்சிறப்பு மேம்படுகின்றாள்.

இனி, இத் தோழியாவாள் யாவள்? இவள் தலைமகளை வளர்த்து நற்குண நற்செய்கைகளால் தலைமை எய்துவித்த செவிலியின் மகள் என்பர். இவளும் தலைவியொடு ஒப்ப அவள் பெற்றோரால் சீரும் சிறப்பும் செய்யப்பெறும் சீர்மை யுடையவள்; தலைமகளின் நலமே தன் வாழ்வின் குறிக்கோளாக் கருதும் சால்புடையவள். சுருங்கக் கூறின், அறிவே இவளது வடிவு; அன்பே இவளது உள்ளம்; அறமே இவளது நினைவு என்னலாம். இளமையிலிருந்தே இவள் தலைமகட்குச் சிறந்தவளாய், அவளோடு உடனிருந்து, உடன் பயின்று, உடனொழுகி வருபவளாவாள். இவ்வுரிமையால், வாய்த்த விடத்துத் தலைமகட்கு உற்றனவெல்லாம் தனக்கு உற்றனவாகக் கருதி இவள் கூற்று நிகழ்த்துவ துண்டு. அதனையுடன்பட்டே ஆசிரியரும், “ஒன்றித் தோன்றும் தோழிமேன்” என அமைத்தோது கின்றனர்.

இத்தோழி, தலைமகள் தலைமகனை மணந்து இல்லிருந்து நல்லறம் புரிவதைக் கண்ணும் மனமும் குளிரக் கண்டு களித்திருக் கின்றாள். அக்காலத்தே, தலைவன், தலைவியொடு சுடி இன்புறுதற்குப் பெருவிதுப்புக்கொள்கின்றாள்; அவனது உள்ளம் இன்ப நுகர்ச்சி குறித்துப் பெரிதும் துடிக்கின்றது. அது கழிகாமமாய் நோய் செய்யும் என்பது அறநூல் முடிவு. அதனால், அவனைத் தெருட்டி நெறிநிறுத்துகின்றாள் தோழி. அவள், அவனது மனநிலையைக் கலைக்க நினைத்து, “பெரும, களவுக் காலத்தே, தொழுது காண் பிறைபோல யாம் நினக்கு அரியமாய் இருந்தேம்; அப்போழ்து, பெரிதும் பொறை கொண்டொழுகிய நீ, இப்போழ்து இவள்”மார்பிடை" க் கிடந்தும் பெருவிதுப்புறுகின்றாய்; இது நன்னீர்க் குளத்துப் பூத்திருக்கும் ஆம்பல் மலரைப் பறிக்கச் செல்வோர், நீர்வேட்கையுற்று நின்ற விடத்தே இருக்கும் நன்னீரைப் பருகாது, நீர் வேண்டி வருந்துவதுபோல வுளதே ! இதற்கு யான் என் செய்வேன்" (குறுந்.178) என்று நயம்படக் கூறுகின்றாள்.

இவ்வண்ணம் ஒழுகுமிடத்துத் தலைவன் பிரிந்தேகிய வழி, தலைமகளை ஆற்றுவித்திருக்கும் பொறுப்புத் தோழிக்கு எய்துகின்றது. பிரிந்தோர்க்கு மாலைப்போதும், அப்போது நிகழும் நிகழ்ச்சிகளும் பெருந்துயர் செய்வன வல்லவோ? அக்காலையில், கற்புவழி யொழுகும் தலைவியை ஆற்றுவிப் போர், அக் கற்பிற்குக் கேடு தருவனவற்றைத் தம் சொல்லில் மறந்தும் சொல்லக்கூடாது. தலைவியோ கற்பே உருவாயரைமந்த பொற்புடையவள். அறக்கழி வுடைய சொல்லும் செயலும் தோன்றின் அவள் அப்போதே உயிர் விடுவள். “அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன்றென்ப” என்று ஆசிரியர் கூறியது, அறக் கழிவுடைய சொல் நிகழ்ச்சிபற்றியே யாகும்; செயலுக்கு அன்று. அச்சொல்லும் “பொருட்பயம் படவரின்” அமையும் என்பது குறிக்கொள்ள வேண்டியதாகும்.

இப்பெற்றியளாய தலைமகளை ஆற்றுவிப்போர் நுண்ணறிவும் மென்மொழியும் உடையராதல் வேண்டும். அதனால், தோழி இவ்வமைதி முற்றும் உடையளாய் விளங்கு கின்றாள். இவள், தலைமகன் பிரிந்தேகியது கண்டு, ஆற்றாளாகிய தலைமகளை, ஆற்றுவிக்கத் தொடங்கி, முதற்கண் அவனது காதன்மை கூறித் தலைமகளை வற்புறுத்துகின்றாள். அவள், தலைவியை நோக்கி, “தோழி, காதலர் நம்பால் அன்புமிக வுடையார்; அதனால் குறித்த பருவத்தே வந்து நல்கலும் நல்குவர்; அவர் சென்ற வழியும், மனத்தே அன்பு தோன்றுவிக்கும் அமைதியுடையதாகும்” (37); மேலும் “அவர் முயலும் பொருள் முற்றும் கைகூடுவதின்று; பொருள் எனப்படுவனவெல்லாம் குறைவறக் கைகூட்டிக் கொள்வ தென்பது ஒருகாலும் ஒருவர்க்கும் இயைவதன்று; அன்றியும், குவளையொடு பொதிந்து குளவிநாறும் நின் நறிய நுதலை ஒரு போதும் மறவார்; அதனால் அவர் நீட்டியாது வருவரெனக்கொண்டு வருந்துவ தொழிக” (59) எனப் பல வேறுவகையாகக் கூறி ஆற்றுவிக்கின்றாள்.

இவற்றைக் கேட்கும் தலைவி, “காதலர் நம் பொருட்டுத் தாம் மேற்கொண்ட வினை முற்றாது வருவரேல், அஃது அவர்க்கும் நமக்கும் இழுக்காமன்றோ?” என்று சொல்லுகின்றாள். அவட்குத் தோழி, “அவர் இழுக்குத் தருவனவற்றை எஞ்ஞான்றும் செய்யார்; அவர் சென்ற விடத்தே தடமருப்புடைய யானை, தழை மரங்களைக் குத்தித்தள்ளி, ஏனைய யானைகள் தழை மேய்ந்து பசி தீருமாறு செய்வதைக் காண்பர்; அது காணின், தாமும் மேற்கொண்ட வினை முற்றித் தமது கடனை ஆற்றிவருவர்” (குறுந்.255) என்று மொழிந்து தலைவியைத் தேற்றுகின்றாள்.

இவ்வாறிருக்கையில், தலைமகனது வரவு நீட்டிக்கின்றது; தலைமகளும் பிரிவாற்றாது பெரிதும் துயரடைகின்றாள். அவளைக் காணும் தோழி, அவளது உடல் மெலிவு கண்டு, உளம் கவன்று , செய்வகையறியாது திகைப்புண்டு நிற்கின்றாள்; அறிவுடைப் பெருமக்களைக் கண்டு தலைமகன் மீண்டு வருங்காலத்தை உசாவியறிய முயல்கின்றாள். அறிவர் ஒருவர் அவள் கண்ணெதிர்ப்படுகின்றார். தோழி, அவரை யண்மி, “ஐய, எம் காதலர் கார்ப்பருவத்தே வருவரென மொழிந்து பிரிந்தேகினர். வாடைக்காற்று எறியும் காலத்தை யேனும் சொல்லுக. அதன் இறுதியே கார்காலமாதலின், அதுகொண்டு அவர் வரவினை உணர்ந்து கொள்வோம். இதனை அறிந்துரைக்கின், நீ, செந்நெல் வெண்சோறும், நறு நெய்யும் எம் ஓரில்லிலேயே நிரம்பவுண்டு, அற்சிலக் காலத்துக்கு வேண்டும் வெந்நீரையும் செப்பு நிறையப் பெறுவை” (குறுந்.277) என்று வேண்டியறிகின்றாள். பின்னர், அதனைத் தலைமகட்குரைத்து அவளை யாற்றுவிக்கின்றாள்.

பின்னரும் தலைமகளது பிரிவுத்துன்பம் மிகுகின்றது. அது காணும் தோழி, கவலை மிகவுற்று எத்துணையோ நய மொழிகள் நவில்கின்றாள். இதற்குள் அறிவர் உரைத்த வாடைக்காலம் வருகிறது. தலைமகள் துயர் மிகுந்து வருந்துகிறாள். தோழி, தலைவிக்கு, “இன்னாது எறியும் வாடை வந்தும், என்னாயினள் கொல் என்று எண்ணாத காதலர், வாரா ராயினும், வரினும், அவர் நமக்கு யாராகியர்; அவரை நினையற்க” (குறுந். 110) என்கின்றாள். இச்சொல் தலைவிக்கு வருத்தம் செய்கிறது. அவள் அச் சொல்லைக் கேட்கப் பொறாது அமைந்தொழிகின்றாள். தோழி, அதன்மேல், “நீ கவலற்க; அவர் வானமேறார், நிலந்தொட்டுப் புகார்; முந்நீர் காலிற் செல்லார்; நாடுதோறும் ஊர்தோறும், குடிதோறும் தேடின் அகப்படுவர்; நீகவலற்க; தூதுவிடலாம்” (குறுந். 130) என்று தேற்றுகின்றாள்.

இவ் வகையில் சின்னாட்கள் கழிகின்றன. கார்ப்பருவமும் வந்தேவிடுகிறது. தலைமகன் வாராமையால் தலைவிக்குப் பிரிவு நோய் பெருகிப் பேதுறவு செய்கின்றது. அதனினின்றும் அவளைப் பாதுகாக்கும் கடன் தோழிக்கு மிகுகின்றது. அவள், தலைவியை நோக்கி, “தோழி, இதுபோது வரும் மழை வம்பு; இதனை மெய்யான மாரியெனப் பிறழக்கொண்டு கொன்றைகள் மலர்ந்திருக் கின்றன: கொடிகள் இணரூழ்த்துள்ளன; தலைவர் குறித்த கார்ப் பருவம் இஃது அன்று; அவர் குறித்த பருவம் வரு முன்பே இவை இது செய்கின்றன, நீ கவலற்க” (66); மேலும், “இது கார்ப் பருவமாயின், நம் காதலர் வருவாரல்லரோ? வந்திலர்காண்; அதனால் இது காரன்று; நீயும் கவல்வது ஒழிக” (382); இம் மழை வருவதற்குக் காரணம் வேறு; “கழிந்த மாரியில் பெய்யாது எஞ்சிய பழநீரைப் புது நீர் கொள்வது குறித்து, முகிற் கூட்டம் இப்போழ்து பொழிகின்றன. இதனைக் கார்மழையென்று தவறாகக் கருதியே, மயிலும் மாவினமும் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; இவை மடமையுடையன; நீ நின் படர் தீர்க” (251) என்று நய முறக் கூறுகின்றாள்.

ஒரு நாள் தலைவி, தோழியை அழைத்து, “தோழி, நம் காதலர் நம் நிலைமையினை இதுகாறும் கேள்வியுறா திருப்பரோ?” என்று கேட்கின்றாள்; அதற்குத் தோழி, தலையசைத்து, “ஆம்; கேளாராகுவர்; கேட்பின், விழுமிது கழிவதாயினும், நின் துயர் கெட நீட்டியாது வருவர்” (253) என்று சொல்லித் தலைவியின் கருத்தை வற்புறுத்து கின்றாள். தலைவன் வரவிருக்கும் காலத்தையும் நாளடைவில் தோழி உணர்ந்து கொள்கிறாள். கார்ப்பருவம் வந்துவிட்ட தனால், தலைவன் வருநாட்கு இடைக் காலத்தில் தலைவி மெலிவது கண்ட தோழி, “தோழி, இனி, நீ சுவர்களில் கோடிட்டு வருந்தும் வருத்தம் நீங்குக. இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது. மாலைப்போது வருதலால், கோவலர் வீடு நோக்கி வருகின்றனர். அவர் தலையில் சூடிய கண்ணியில் உள்ள முகைகள், ‘கார் வந்தது பிரிந்தோர் வருப’ என்பது போல இருக்கின்றன; இனிக் காதலர் தவறாமே வருவர்” (358) என்று தேற்றுகின்றாள். இருந்தாற்போல் இருந்து மணியோசை கேட்கின்றது. அது கேட்கும் தோழி, “இது தலைமகன் தேர் மணியோ?”; ஆனினத்தின் கழுத்திற் கட்டப்பெற்றிருக்கும் மணியோ? என்று ஐயுறுகின்றாள். அவள் உடனே தலைவியை நோக்கி, “தோழி, முல்லை யூர்ந்த கல்லுயர் ஏறிக், கண்டனம் வருகம் சென்மோ” (275) என்று தலைவியின் மெலிந்த உள்ளத்தே கிளர்ச்சி யூட்டி ஆற்றுவிக் கின்றாள். பின்னர்த் தலைவி, “கார்ப்பருவம் வந்தால் ஏன்? தலைவர் தம் வரவு நீட்டியாரோ?” என்று ஏங்கி வினவுகின்றாள். அவ் வேக்கத்திற்கு இடமுண்டாகாவாறு, தோழி, “காலைப் போதில் மான்கன்று வரகு மேய்ந்து தன் காலையுண வாகிய கடன் கழிக்கும் காட்டில், கார் வந்து விட்டது; அங்கே வெண் கூதாளத்தின் மலர்கள் காம்பி னின்றும் கழன்று உகுகின்றன; அவற்றைக், காதலர் காணின், நின் கைவளையும் அவ்வாறே கழன்று உகும் என்று நினைந்து நீட்டியாது விரைய வருவர்” (282) என விடுக்கின்றாள். சிறது போதில், தலைமகன் தேர் வருகின்றது. அதனைச் சேய்மையிற் காணும் தோழி, “அச்சிரக் காலம் வந்தன்று; நின் புலம்பு தீர, பெருவிறல் தேரும் வந்தன்று” (338) எனப் பெரு மகிழ்வு கொள்ளப் பேசித் தலைவியைத் தெருட்டிச் சிறப்பெய்து விக்கின்றாள்.

இனி, இத் தோழியின் தாயாகிய செவிலியின் செயல்கள் சில இம் முல்லைத் திணைக்கண் இந் நூலுட் காணப்படு கின்றன. களவுக் காலத்தே தலைவி நிகழ்த்திய ஒழுக்க நெறி களை முன்னறிந்து, நற்றாய் முதலியோர்க்குக் கூற்றுவகை யால் வெளியிட்டு, அத் தலைமக்கட்கு ஆக்கஞ் செய்தாளாதலால், இவளையே சான்றோர் “தாய்” என்று மொழிவர். ஆசிரியர் தொல்காப்பியனாரும், “ஆய் பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலியாகும்” என்று கூறினர். கற்பினும் இச் செவிலியது சொல்லே சான்றேரால் உயர்த்துப் பேசப்பெறுகின்றது.

தலைமகள் தலைமகனோடு கூடி இல்லறம் செய்து வருகையில், செவிலி, அவளது கடிமனைக்கு வந்து அவள் செய்யும் அறத்துறை களைக் காண்கின்றாள். தலைமகனது காதற் சிறப்பும், இருவரது வாழ்க்கைச் சிறப்பும் செவிலிக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகின்றன. அவள் பின்பு, தன் மனைக்குச் சென்று, ஆங்கே, தலைமகளின் நற்றாயைக் காண்கின்றாள். செவிலி நற்றாய்க்குத் தோழி என்பது முன்பே கூறப்பட்டது. நற்றாய், செவிலியை நோக்கி, “தோழி, நம் நன்மகள் வாழும் கடிமனைக்கண் நீ கண்ட சிறப்பென்னை?” என்கின்றாள். அவட்குச் செவிலி,தலைவி, தலைமகனை உண்பிக்கும் திறத்தைச் சிலவாய சொற்களால் பல வாய பொருள் பொதுள இனிது கூறுகின்றாள்; அது,

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்(து) அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவர் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.” (குறுந்.167)

என்பது. இதன்கண் தலைமகள் முறுகக் காய்ந்த தயிர் கொண்டு புளிக் குழம்பு சமைத்துத் தன் கணவற்கு இடுகின்றாள்; அவன் அதனை “வானோரமுதம் புரையுமால் எமக்கு” என உண்கின்றான். கணவன் இனிதென்று உண்பதால், அவள் உள்ளத்தே மகிழ்ச்சி தோன்றுகிறது.; நாணத்தால் அதனை மறைக்கினும், மகிழ்ச்சி முகத்தே நுண்ணி தாய்ப் புலப்படுகின்றது, இதனை இனிது கண்டு பெரிது மகிழ்ந்தாளா தாலின், செவிலி நற்றாய்க் குரைத்தாள். அது கேட்டவழி, நற்றாய்க்கும் சூழ இருந்தார்க்கும் தலைமகள் புளிக்குழம்பு அட்டவகையை அறிதற்கு அவ உண்டாகின்றது. அதனால். அதனை அட்டவகையைக் கூறலுற்ற செவிலி, “முறுகக் காய்ந்த தயிரைத் தன் காந்தள்போலும் விரலால் பிசைந்தனள்; அதுபோது மேலாடை சிறிது நெகிழ்ந்தது; பெருநாணினளாதலால் அதனை உடனே எடுத்து அணிந்தாள். தயிர் பிசைந்த கையைக் கழுவுதற்குக் காலமில்லை” என்கின்றாள். இது கேட்டு அனைவரும் மகிழ்ச்சியால் நகைக்கின்றனர். செவிலி, மேலும் சொல்லத் தொடங்கி, “தான் பிசைந்து அமைத்த புளிக்குழம் பிற்கு நறுமணம் கமழும் தாளிதம் செய்யலானாள்” என்பாள், “குவளையுண்கண் குய்ப்புகை கமழ” என்கின்றாள். எனவே, தலைவி குனிந்தவண்ணமே தாளிதம் செய்தாள் என்பதும், அதன் புகை அவளது ஒளி முகத்தில் தோய்ந்து, மையுண்ட கண்ணிற் படிந்தது என்பதும், அதனால் கண்கள் நீர் படிந்து நீரால் நனைந்த குவளை மலரை யொத்தனவென்பதும் பிறவும் பெறப்படும்.

இச்செவிலியே, பிறிதொருநாள் தலைமகளது கடிமனைக்குச் சென்று வருகின்றாள். முன்பு சென்று வந்த போது, தலைமகளது அடிசிற் றொழில் வன்மையை வியந்து கூறினாளன்றோ? இதுபோது, தலைமகனதுஅயரா அன்பினை வியந்து பேசுகின்றாள்.

“கானங் கோழிக் கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதல்நீர் வாரும் பூநாறு புறவில்
சீறூ ரோளே மடந்தை; வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.”

எனவரும். இஃது, அவள் நற்றாயிடம் சொல்லியதாகும். “தலைவன் தலைவியைப் பிரியாது உறைகின்றான்; எச்செயல் குறித்தும் பிரிந்து செல்வதில்லை; அரசனது ஏவல் கடத்தற் கரிதாகலின், அதன்பொருட்டு மாத்திரம் அரிதிற் சிலகால் வேற்றூர் போவான்; போயினும் உடனே மீள்வான்” என்பது இதன் கருத்து.

தலைமகள் முல்லை நிலத்துச் சீறூரில் உள்ளாள்; முல்லைப் புறவில் புதல்கள் பல இருக்கின்றன; அவற்றில் மழைத் துளி நிறைந்து சொட்டுகிறது; அப்புதலின்கண் வாழும் கானங் கோழியின் கழுத்திடத்தே அங்கே சொட்டும் நீர்த் துளிகள் துளிக்கின்றன என்று செவிலி கூறுவது, தலைவியது திருமனையின் செல்வச் சிறப்பையும், தலைவன் அருள் நிரம்பிய அறச் செயல் புரிவதையும் குறிக்கின்றது.

தலைமக்கள் களவொழுக்கம் பூண்டு ஒழுகும் காலத்தும் தலைமகன் பொருள் குறித்துப் பிரிவதுண்டென மேலே கூறினோ மன்றோ? அப்பிரிவை ஆற்றி யிருத்தலும் தலைமக்கட்குக் கடனாகும்; முல்லைத் திணைக்கு உரியது மாகும். அந் நிலையில் இவர்கள் நிகழ்த்தும் கூற்றுக்கள் பலவும் ஈண்டு விரிக்கலுறின் பெருகும்.

இனி, இம் முல்லை யொழுக்கத்தின்கண் நிகழும் கூற்று வகைகளுள் பலவகைக் கருப் பொருள்கள் காணப்படுகின்றன. இவ் வொழுக்கம் முல்லை நிலத்தேயன்றி, சிறு பான்மை, பிற நிலங்களிலும் நிகழும். அக்காலத்தே, ஆங்குத் தோன்றும் கருப் பொருள்களே அவர் கூற்றுக்களிற் காணப்படும். ஆயினும், முல்லைத் திணைக் கென்றே வரை யறுத்தோதும் கருப்பொருள்கள் சிலவற்றை ஈண்டுக் கூறுகின்றோம்.

முல்லைத் திணைக்குக் கார்ப்பருவமும் மாலைப் பொழுதும் முதற் பொருளாக வருமாதலின், மழையும் கானமும் முதற்கண் தோன்றுவனவாகும். இம்மழை குன்றிடையும், கானத்தும் மின்னி யிடித்துப் பெயல் மிகுவது பாட்டுத் தோறும் பெரும்பாலும் வருகிறது. இடி முழக்கம் நன்கு இசைக்கப் பெறுகிறது. இடி முழக்கம் கேட்டுப் பாம்பினம் அஞ்சிப் பனிக்கும் என்பது, “பொறி வரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவுரும் உரறும்” (குறுந்.190) என வருவது முதலிய பல பாட்டுக்களில் பாடப்பெறு கின்றது. இடி முழக்கம் சில போழ்துகளில் முரசு முழக்கத்தைக் காட்டி இசை கொள்ளும்; இது, “மாமழை இன்னிசை உருமினம் முரலும்” (200) எனவும், “ஊழின் கடிப்பிகு முரசின் முழங்கி இடித் திடித்துப் பெய்தினி வாழியோ பெரு வான்” (குறுந்.270) எனவும் கூறப்படுகிறது. நீர் நிரம்பிய முகில், குன்றங்களில் மெல்லச் சென்று படிந்து பெருமழை பெய்வதைக் கண்ட தோழி, அதனை சூல் நிரம்பிய மகளிர் செலவுக்கு ஒப்புக் கூறித் தலைமகளைத் தேற்று கின்றாள். அது, “நிறைபொறுத் தசைஇ, ஒதுங்கல் செல்லாப் பசுப்புளி வேட்கை, கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, விசும்பு இவர்கலாது தாங்குபு புணரிச், செழும்பல் குன்றம் நோக்கிப், பெருங்கலி வானம் ஏர்தரும்” (287) என வருகின்றது.

இவ்வாறு மழை பெய்யுமிடத்து, உண்டாகும் மின்னல் இரவுக் காலத்துப் படரும் காரிருளைக் கெடுக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. “தாழிருள் துமிய மின்னி” (270) என்று இக் குறுந்தொகை குறிக்கின்றது. மழை தவழும் குன்றம் “மழை விளையாடும் குன்று” (108) எனப்படுகின்றது; மழை நீரால் கானம் வளமுற்றுத் தழைப்பதாதலால், அது “கார்புறந் தந்த நீருடை வியன் புலம்” (162) என்று சிறப்பிக்கப் பெறுகிறது. கார் காலத்து மழை பெரும்பாலும் மாலையில் வருவது; அதுபோது, கார் மழை விசும்பை மூடிக்கொள்வதால் இருள் மிகுகிறதன்றோ? அதனை,

“சேயுயர் விசும்பின் நீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயல் தாழ் பிருளிய புலம்புகொள் மாலை”

314. என்று இக் குறுந்தொகை கூறுகின்றது.

மழை பெய்யுங்கால் உழவர் இனிது உழுதல் முடியாது; ஆகவே உழவு மாடுகள் ஓய்ந்திருக்கும் என்பது உலகறிந்தது. இது, “உவரி ஒருத்தல் உழாது மடிய…….. இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று” மழை என இயம்பப்பெறுகிறது. மழையில்லாமையால் புழுதி படிந்து தோன்றும் துறுகற்கள் மாறு படிந்த யானை போலத் தோன்றுமென்பது. “மழை கழூஉ மறந்த மாயிருந் துறுகல், துகள்சூழ் யானையின் பொலியத் தோன்றும்” (279) என்ற அடிகளால் காட்டப் பெறுகின்றது.

மழைபெய்த கானத்தில் மானினம் துணையொடு கூடி, பள்ளங்களில் நிற்கும் நீர் பருகி இனிது திரிகின்றன. இச்செய்தி “வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன், இன்புறு துணையொடு மறுவந்து உகள” (65) என வருகிறது. களிறுகள் பிடிபுணர்ந்து மலையகத்தே ஒடுங்கிக் கிடக்கின்றன. மாலைப்போதில், ஆனினம் தாம் மேய்ந்திருந்த கானத்தின் நீங்கி மனையகம் நோக்கி வருகின்றன. வருபவை மனையகத்தே யுள்ள கன்றுகளை யுள்ளிக் கனைத்துக் கொடுவரும்; கன்றுகளும் அவற்றின் வரவு நோக்கித் தலை நிமிர்த்திப் பார்த்தும் கதறும்; தொழுவத்திடத்தே ஏறுகள் தம் கழுத்தில் யாத்த மணியொலிக்க இயங்கும். இவை, “புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலந்தூங்கு அணல வீங்கு முலைச் செருத்தல், பால்வார் குழவி யுள்ளி நிரை யிறந்து, ஊர்வயிற் பெயரும்” (344) என வருவதுபோல் வனவற்றால் இனிது விளங்கு கின்றன.

முல்லை நிலத்தவர், காடு கெடுத்துப் பண்டே யாக்கிய கொல்லையை நன்கு உழுது வரகு முதலியவற்றை விதைப்பர். வித்தற்கு விதைகொண்டு செல்லுமவர், திரும்புகாலையில், விதை கொண்டுபோன வட்டி நிறைய முல்லைப் போதுகளையும் பிற மலர்களையும் நிரம்பக் கொண்டு வருவர். அவர் தலையிலும் முல்லையால் தொடுக்கப்பெற்ற கண்ணிகள் இருந்து நறுமணம் கமழும். ஆனினத்தை மேய்க்கும் இடையர், அவற்றை ஓரிடத்தே இருத்தி, அவ்வாணினம் கறந்த பாலைக் கொண்டுவந்து தந்து, அது நிறையக் கூழ் கொண்டு செல்வர். இவை, “முதைப்புனம் கொன்ற ஆர்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப், பொழுதோதான் வந்தன்றே” (155) எனவும், “மறியினத் தொழியப், பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச், சூடிய வெல்லாம் சிறு பசு முகையே” (221) எனவும் வருவன முதலாயவற்றால் அறியப்படுகின்றன.

இந்நிலத்தே, பலவகைப் பூவினம் காணப்படுமெனினும், இக்குறுந்தொகை சிலவற்றை எடுத்துச் சிறப்பிக்கின்றது. அவற்றுள், முல்லை, கொன்றை, பித்திகம், பீர்க்கு, கருவிளை, ஈங்கை, குறுந்து, காயா, பிடவம், அவரை என்பன சிறந்தோதப் பெறுகின்றன. முல்லை கற்புடை மகளிர்க்குச் சிறப்பாக உரியது; இதன் முகை மகளிர் பற்கு உவமை யாகக் கூறப்படுவதாதலால், முல்லை யரும்பியவழி அதனை நகைப்பதாகச் சான்றோர் புலனெறி வழக்கம் செய்துள்ளனர். “முல்லை மென்கொடி எயிறென முகைக்கும்” (186), “பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயிறாக நகுமே, தோழி, நறுந்தண் காரே” (126) “முல்லை! நீ நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை தகுமோ” (162) என வருதல் காண்க. பூத்தமுல்லை, பூனை சிரிப்பது போன்று உளது என்பர்; “வெருக்குப் பல்லுருவின் முல்லை” (240) என்றும் “பூத்த முல்லை வெருகு சிரித்தன்ன பசுவீ” (210) என்றும் சான்றோர் உரைத்தலால் அறியலாம். முல்லையரும்பு சிவந்திருக்கும் என்பர். தலைமகன் மேனியும், தலைமகள் நுதலும் முல்லையின் நறுமணம் கமழும் என்று சான்றோர் கூறுகின்றனர். இக் கருத்து, “மணந்தனன்மன் நெடுந்தோளே, இன்று முல்லை முகை நாறும்மே” (193) எனவும், “முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்” (323) எனவும் வருவன வற்றால் அறியப்படுகிறது. இம்முல்லை மாலைப்போதில் மலருவது; “பாசிலை முல்லை யாசில் வான்பூச், செவ்வான் செவ்வி கொண்டன்று” (108) என வருவது காண்க. தளவம் என்பது முல்லையினத்துள் ஒன்று. இதுவும் கார்ப்பருவத்தே மலர்வது (382).

கொன்றை ஒருவகை மரம். இதன் பூ பொன்னிறம் கொண்டு வட்டமாய் இருப்பது. இது கார் காலத்தே மலர்வது. பூத்த கொன்றைமரம், பொன்னிழை புனைந்த மகளிர் கூந்தல் போல்வது என்றும், இதன் இதழ், சிறுவர் அடியிற் புனையும் தவளைவாய்க் கிண்கிணிக் காசுபோல இருக்கும் என்றும், மகளிரது பசலையின் நிறம் இது போல இருக்கும் என்றும், கொன்றைப்பூ வுதிர்ந்து கிடக்கும் அகல்வாய்ச் சிறு குழிகள் செல்வர் பொன் பெய்த பேழை போன்று தோன்றும் என்றும் இக் குறுந்தொகை அழகுறக் கூறுகின்றது; “வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு, பொன் செய் புனையிழை கட்டிய மகளிர், கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றை” (21) எனவும், “செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளைவாய பொலன்செய் கிண்கிணிக், காசின் அன்ன போது ஈன் கொன்றை” (148) எனவும், “கொன்றையம் பசுவீ நம் (தலைமகள்) போல் பசக்கும்” (183) எனவும், “கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி, கொன்றை ஒள்வீ தாஅய்ச் செல்வர், பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன காரெதிர் புறவு” (233) எனவும் சான்றோர் கூறுப. இவ்வண்ணமே, பீர்க்கம்பூ மகளிர் மேனி வேறு பாட்டிற்கும், பிறபூக்கள் பிறவற்றிற்கும் எடுத்துக் காட்டப் பெறுகின்றன. இங்கே விரிக்கிற் பெருகும்; கருவிளைப்பூ மயிற்பீலி யொப்பதும், காயாம்பூ மயிலின் கழுத்துப் போல் வதும், தேரைகள் பறைபோல் ஒலிப்பதும் பிறவும் நேரில் கண்டு இன்புறத் தகுவனவாகும்.

பறவைகளுள் மயிலும் காக்கையும் கோழிச் சேவலும் இங்கே சிறப்பிக்கப் பெறுகின்றன. மழை கண்டு மயிலாலும்; “கானமஞ்ஞை கடிய ஏங்கும்” (194) என்பது போல்வன பல உண்டு. பிரிந்து வந்த தலைமகன் தோழியைக் கண்டு, “இவளை நன்கு ஆற்றுவித்தாய்” என்று பாராட்டினன்; அது கேட்ட தோழி, “இவள் ஆற்றியது என் செயலால் அன்று; இவள் அடைந்த பிரிவுத் துயர்க்குச் செய்வகையறியாது, நின் வரவறிய வேண்டிப் புள் நிமித்தம் பார்க்கலுற்றோம். அதுபோது காக்கை விருந்துவரக் கரைந்தது; அக்காக்கைக்கு வெண்ணெல் வெண்சோறு ஏழு கலத்தில் ஏந்தித் தரினும், அப் பலி சிறிதாகும்; அதன் உதவி பெரிது” என்ற கருத்துப்பட,

“திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு,
எழுகலத் தேந்தினும் சிறி(து) என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.210)

என்று பாடுகின்றாள். இப்பாட்டால் இதனைப் பாடிய சான்றோர்க்குக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற சிறப்புப் பெயர் வழங்குகிறது என்பர். அவரது இயற்பெயர் நச் செள்ளையார் என்பது.

இக்குறுந்தொகைக்கண் முல்லைப் பாட்டுக்களைப் பாடிய சான்றோர் மாத்திரம் சுமார் அறுபத்தைவரின்மேல் உள்ளனர். இவருள் பெண்பாற் புலவர் பதின்மராவர். அவர்கள், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கழார்க் கீரனெயிற்றியார், காக்i பாடினியார், நச்செள்ளையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், அள்ளூர் நன்முல்லையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பொன்மணியார், வெள்ளிவீதியார் என்போராவர். இவருள் முதற்கண் ஓதிய ஓக்கூர் மாசாத்தியாரும், ஒளவையாரும் முல்லையொழுக்கம் பொருளாக நான்கு பாட்டுக்கள் தனித்தனியே பாடியிருக்கின்றனர். இவருள் ஒக்கூர் மாசாத்தியார், ஆடவன் ஒருவன் தான் செய்தற்கு மேற் கொண்டவினையைச் சீர்பெறச் செய்தானாயின், அவன் உள்ளம் “செம்மல் உள்ளமாம்” (குறுந்.275) என யாப்புறுக்கின்றார். முருகனது சேவடி படர்ந்த உள்ளத்தைச் “செம்மல் உள்ளம்” என ஆசிரியர் நக்கீரனார் கூறுவர்; பாண்டியன் பன்னாடு தந்த பெருவழுதி யென்பானும் செய்வினை முடித்த உள்ளத்தையே “செம்மல் உள்ளம்” (குறுந்.270) என்கின்றான். எனவே, இவர்கள் கூற்றால், செயற்குரிய வினை, செயற்கரியவினை என்ற இருவகை வினையும் செய்வோர்க்கே உள்ளம், “செம்மல் உள்ள” மாகும் என்பது தெளியப்படுகிறது. தலைமகன் சேணிடைப் பிரிந்த வழி, அவனாற் பிரிவுற்று மனையகத் திருப்பார்மேல் அவனுக்கு வேட்கை மிக்கெழும் என்றும், அஃது அவன் மீண்டேகுங் கால் சிறிது சிறிதாகச் சிறுகி, அவன் மனையடைந்த வழி முடிவடைந்து விடும் என்றும் உள்ள ஓர் அரிய கருத்து ஒளவையார் பாட்டொன்றில் (99) காணப்பெறுகிறது.

“நீடிய மரத்துக் கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்(று) அற்றா அங்கு
அனைப்பெருங் காமம் ஈண்டுகடைக் கொளலே” (99)

என்றும், இஃது உலகத்துப் பண்பு என்றும் ஒளவையார் வற்புறுத்து கின்றார். இன்னோரன்ன கருத்துக்கள் பல இவர்கள் பாடலுட் பொதிந்து கிடக்கின்றன.

அக்கருத்துக்களுட் சிலவும் வழக்காறுகளுட் சிலவும் ஈண்டுத் தருகின்றோம். மகளிர் கொடிப்பூங் கொத்துக்களைத் தழை விரவத் தொடுத்துப் பொன்னிழையோடு கூந்தலிற் கட்டி அணிசெய்து கொள்வர் (குறுந்.21). இடையர் கன்றுகளை மனையகத்தே நிறுத்திக்கொண்டு, கறவைகளைக் கொல்லைகளுக்கு ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு மாலையில் கொணர்வர்(64). இளஞ் சிறார்க்குக் காலில் தவளைவாய்க் கிண்கிணி (சதங்கை) யணிவர். (148). கொல்லைக்கு விதை கொண்டு போகும் கானவர், வட்டி நிறைய மலர் கொண்டு வருவர் (155); இக்காலத்தே, இது “விதைக்கூடை வெறிது வரலாகாது” என்ற கருத்துட் கொண்டு வழங்குகிறது. மாடுகட்குக் கழுத்தில் மணிகட்டி விடுவது வழக்கம். கணவன் பிரிந்த வழி, மகளிர் தம்மை ஒப்பனை செய்துகொள்வது கிடையாது. புறத்துப் போய் மீண்ட தலைவனைத் தலைமகள் “எம்மைத் தீண்டாதே” என்பதும் உண்டு(191). காக்கைக்குச் சோறு போட்டு, அதன் கரைதலால் விருந்து வரும் என மகளிர் நினைந் தொழுகுவர் (210). இடையரும் பிறரும் பனையோலைத் தடுக்கும் குடையும், உட்கார்தற்கும் மழைதடுத்தற்கும் பயன்கொண்டனர் (221). உயர்ந்தோர்க்கு விருந்தயருமிடத்து, நல்ல வெண்ணெல் வெண்சோறும், தூய நெய்யும் “வெப்பத் தண்ணீரும்” தந்து ஊட்டுவர் (233;273); கோழி விடியலிற் கூவுவதால் பொழுது புலர்கின்றது (234). சூல்கொண்ட மகளிர் புளித்தின்னும் வேட்கை யுடையராவர் (281).

தலைமக்கள் பிரிந்திருக்குமிடத்து நிகழும் கூற்றுக்கள் பல வற்றுள்ளும் இளிவரலைச் சார்ந்த பெருமிதமே மெய்ப் பட்டுத் தோன்றற்பாலதாம்; ஆயினும், தலைமகன் பிரிந்த வழித் தலைவி நிகழ்த்தும் கூற்றுக்களுள், தலைமகள் குறித்த பருவம்கண்டு ஆற்றாது தலைமகள் வருந்திக்கூறுவன பெரும் பாலும் இழிப்புச் சுவையவாகவே இருக்கின்றன; சில அவலக் குறிப்பும் உணர்த்துகின்றன. தலைமகன் நிகழ்த்தும் கூற்றுக்களுட் பல இளிவரலைக் காட்டுகின்றன. தோழி கூற்றுக்களுள், தலைமகளை ஆற்றுமாறு வற்புறுத்துவன யாவும் வியப்புச் சுவையுடையவாய், சிலவற்றுள் பெருமிதமும் தோன்ற நிற்கின்றன. பிரிந்தோன் மீண்டுவந்து கூடியவழி தலைமக்களிடை நிகழும் கூற்றுக்கள் யாவும் உவகைச் சுவைய வாய் இருப்பது நன்கு புலனாகிறது. செவிலி கூற்றுக்கள் உவகையும் வியப்பும் உறுவிக் கிடன்றன.

மேலும், நகைச்சுவை பயப்ப உரையாடும்திறம் தோழி பால் நன்கு அமைந்திருக்கிறது. அச் சுவை தோன்றப் பேசுவோர், தாம் நகைச்சுவை தோன்றக் கூறுவதைத் தாம் அறியாமல் வழங்குவதே சிறப்பு என்பர். தலைவன் குறித்த பருவம் வருகிறது; மழையும் மிகுதியாகப் பெய்கிறது; தலைமகள் அதனைக் கார்வரவு என்று கொண்டு கன்கலுமுகின்றான். அவளைத் தோழி, “கார்ப்பருவம் அன்று” எனக்கூறி ஆற்றுவிக்க முயல்கின்றாள். மேகங்கள் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய நீரை ஒரே வழியாய் முகந்து கொண்டு, சிறிது சிறிதாகப் பெய்வது போலவும், அடுத்த ஆண்டுக் கார்கால வரவிற்குச் சிறிது முன்னர்ப், பெய்யாது எஞ்சியிருந்த நீரைப் பெய்துவிட்டுப் புதுநீர் முகந்து வருவது போலவும் படைத்துக் கொண்டு, “தோழி, இதுபோது பெய்யும் மழை பழைய மழைநீர்; இது புது நீரைக் கொள்வாற்காகச் சொரிகின்றது; இது காரன்று” (251) என்கின்றாள். இதன்பால் பிறக்கும் நகைச்சுவை புறத்தே சிறிதும் தோன்றாத வண்ணம் கூறும் நயம், மிக்க இன்பம் தருகின்றது. ஆங்கில நூற்புலவரும் * இவ்வாறு எழுப்பும் நகைச்சுவையே மிக்க இன்பம் தருவது என்பர். இந்நிலையில், தோழியின் நாநலமும், சிவ்ட் (swift) என்னும் புலவரது நாநலமும் ஒப்பச் சிறந்திருக்கிறது. அதனை விரிக்கிற் பெருகும்.

இன்னோரன்ன இலக்கிய நலங்களும், தமிழர் மனப்பண் புணர்த்தும் மாண்புகளும், ஒழுகலாறு காட்டும் ஒட்பங்களும், இயற்கையோடு இயைந்து நடவும் வாழ்க்கை மேம்பாடுகளும், இயற்கைப் பொருளின் உண்மைத் தோற்றங்களும் உள்ளவாறு காண்டற்குப் பெரும் பொருள் நிலையமாய் நிற்பவை இத் தொகை நூற் பாட்டுக்கள் என்பது இது காறும் ஆராய்ந்து கூறியவாற்றால் இனிது விளங்கும். இப்பாட்டுக்கள் வழங்கும் சில சொல்வழக்குகள் இன்னும் உண்மையாகவே உள்ளன. “கல்லுயரேறிக் கண்டனம் வருகம் சென்மோ” (குறுந். 275) என்பதிலுள்ள கல்லுயரேறல் என்பது, சென்ற சனிக்கிழமை (7-9-40) மாலை *செங்கைமா கணவாயின் தென்மலைச் சரிவில் உள்ள ஆலப்புத்தூர் என்னும் சீறூர்க்கு யானும் என் தோழர்களும் சென்றிருந்த போது, யாங்கள் இப்போதும் வழக்கில் இருப்பது கண்டோம். இவ்வாறு என்றும் நின்று நிலவும் பொருளும் வழக்காறும் பொருந்தவுடைய இச் சங்க இலக்கியங்கள் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அயரா இன்பவூற்றாக விளங்குவன வென்பதன்றி வேறில்லை. இன்ன சிறப்பால் ஏற்றமிகும் இந்நூல், ஆய்வார் அறிவுக்கு என்றும் இன்பம் சுரந்து நிலவுமாக.

“சொல்லென்னம் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால்– மல்லிகையின்
வண்டார் கமழ்தாம மன்றே மலையாத
தண்டாரான் கூடல் தமிழ்.”

புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம்


அன்புடைய அவைத்தலைவர் அவர்களே, அருமைத் தமிழ்ப் பெருமக்களே,
பண்டைத் தமிழ்ச் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூறு பொருளாக நடைபெறும் இம் மாநாட்டில், அப் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப் பற்றிச் சொற்பொழிவொன்றினை ஆற்றும் பேறு இன்று எனக்குக் கிடைத் திருப்பதுபற்றி யான் பேரின்பம் உறுகின்றேன். இன்ப மென்றே ஒழியாது பேரின்பம் என்கின்றேன்; காரணம், பண்டைத் தமிழ் நன்மக்களின் நாகரிகத்தை அறிவாற் காண்பதும், கண்ட தனை அந்த நன்மக்களின் வழித்தோன்றல்களாகிய உங்கள் திருமுன் எடுத்தோதுவதுமாகிய இருவகை வாய்ப்பும் உண்டாகி யிருப்பதே. இவ்வாறு இன்பப் பெருமையால் விழுங்கப்பட்டு நிற்கும் என் சொற்பொழிவில், கூறத் தகுவன முற்றும் கூறப் பெறாது எஞ்சி நிற்கவும் பெறும்; அக்குறையினைப்பொறுத்து உங்கள் ஆராய்ச்சியால் நிறைவு செய்துகொள்ள வேண்டுகின்றன்.

முன்னுரை:
புறப்பொருளாராய்ச்சி, மக்களின் அறவுணர்வு, பொருளு ணர்வு,புகழ்வேட்கை, வீடுபேற்று விழைவு முதலியவற்றை நன்கு விளங்கக் காட்டும் வீறுடைய தாகும். ஆதலாற்றான், பண்டை நாளைத் தமிழ் மக்களின் வாழ்க்கைப் பண்புகளை ஆராயலுற்ற அறிஞர் அனைவரும், புறப்பொருளை யுணர்த்தும் நூல்களைப் பொது வாகவும், புறநானூற்றைச் சிறப்பாகவும் ஆராய்ந்திருக் கின்றனர். அவருட் பெரும்பாலார் நிரம்பிய தமிழறி வில்லாமையாலும், பண்டைத் தமிழ் மக்களின் தொன்மை, அறிவு வன்மை, வாணிபத் துணிவு, அரசியல் நுட்பம் முதலியவற்றைக் கண்டதனா லெழுந்த அழுக்காற்றாலும் பிறவாற்றாலும் சிலவற்றை விடுத்தும், சிலவற்றை மறைத்தும், சிலவற்றைத் திரித்தும் சிலவற்றைப் பிழைத்தும் தம் ஆராய்ச்சிகளை நடத்தினர்.

மெய்யைப் பொய் எத்துணையளவு மறைக்க முடியம்? மெய் தனது தூய வொளியினை வெளிப்படுத்திவிட்டது. இந்நாளில் இம் மெய்யை யுணர்ந்து பிறர்க்கு எடுத்துரைத்துப் பொய்யைக் களைந்து போக்கும் புலவர் பலர் தோன்றி விட்டனர்; பண்டைத் தமிழ் நன்மக்களின் மனத்திட்பம், வினைத்திட்பம், அரசியல் நுட்பம் என்றின்னோரன்ன நலங்களை எடுத்தோத முன் வந்துவிட்டனர். நாடு நகரங் களிலெல்லாம் தமிழாராய்ச்சியின் நன்மணம் கமழுகின்றது; தமிழர் தமிழ் நன்மக்களாகும் செயலில் தலைப்பட்டிருக்கின்றனர். தமிழியலும், தமிழிசையும், தமிழ் நாடகமும் தலை தூக்குகின்றன. அவை இடைக் காலத்திற்போலத் தலை மடங்குமாறு செய்யும் தீச் சுமைகளால் நெருக்குண்ணாது தூக்கிய தலை நிமிர்ந்து பீடுநடை கொண்டு பிறங்குமாறு செய்தல் தமிழ் மக்களின் உயிர்க்கடனாகும். அது குறித்து அவர்கள் செயற்பாலதுயாது? அத் தமிழியலும் தமிழிசையும் தமிழ்நாடகமும் தலை நிமிர்ந்து நிலவிய நாளில் தமிழ் நன்மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியினை, - அறச் செயல், பொருளீட்டல், புகழ் வேட்டல் முதலிய புறப் பொருட்டுறைகளை- ஆராய்ந்தறிந்து செய்வன செய்தலேயாகும். அகப் பொருட்டுறை களை யாராய்ந்தறிந்ததன் பயனாய் அத்தகைய நெறியில் இந்நாளில் மணவினை நிகழ்த்தல் வேண்டுமென விழைபவர் தொகை பெருகுகிற தன்றோ? அவர்கட்கு இப் புறப் பொருளா ராய்ச்சி, புறப் பொருட்டுறையிற் சென்று சீர்பெறும் சீரிய நெறியினைப் பயப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இப் புறப்பொருளா ராய்ச்சி இந்நாட்கு ஏற்றதோர் ஆராய்ச்சி என்பதை நாம் இனிது தெளியவேண்டும்.

புறப்பொருளாராய்ச்சி மேற்கொண்டு கூடியிருக்கும் நமக்குப் பொருளா யிருப்பது புறநானூ றன்றோ? இப் புறநூல், தன் காலத்தே இத் தமிழகத்தே வாழ்ந்த தமிழ நன்மக்களைப் பல வேறு பிரிவாகப் பிரித்துக் காட்டுகின்றது. தமிழரிடையே, குறவர், இடையர், மறவர், உழவர், பரதவர், அரசர், வணிகர், அந்தணர், புலவர், பாணர், விறலியர், கூத்தர், கொல்லர், குயவர், வண்ணார் எனப் பல பிரிவினர் காணப்படுகின்றனர். இவர் அனைவரும் தாம் வாழ்ந்த இடத்தாலும் மேற்கொண்ட தொழிலாலும் இவ்வாறு பிரிந்தவராவர். இவர்தம் வாழ்க்கையியல்பு, ஒழுகலாறு, அரசியல், வாணிபம் முதலிய பலவும் நாகரிகம் என்ற சொல்லால் இந்நாளில் ஆராய்ச்சி யாளரால் வழங்கப்படும்; இப்போதில் யான் பேசலுற்றது இந் நாகரிகத்தைப் பற்றியே யாதலின், இக்கூறிய கூறுபாடுகளில் என்னறிவால் ஆராய்ந்து கண்ட தமிழ் நாகரிகத்தைக் கூறலுறு கின்றேன்.

நாகரிகம் என்னும் தமிழ்ச் சொல் சங்ககாலத்தே கண்ணோட்டம் என்னும் பொருள் குறித்து வழங்கிவந்ததாகும். கால வேறுபாட்டால் சொற்களிற் சில வேறு படுவதுபோல, இச் சொல்லும் வேறுபட்டு மேற்கூறிய வற்றைத் தன்னகத்தே கொண்டு ரைக்கும் கோள் பெறுவதாயிற்று.
** தமிழ் மக்களின் இனம்:**
தமிழ நன்மக்க ளினம் பொதுவாக நோக்கின் இருபெரும் பிரிவுக்குள் அடங்கும். ஒன்று குறிஞ்சி முதலாகவுள்ள ஐவகைத் திணைக்கண்ணும், மற்றையது பொதுவின் கண்ணும் அமையக் காண்கின்றோம். குறிஞ்சி நிலத்தையே இடமாகக் கொண்டு, ஆண்டுச் செய்தற்குரிய செயலும் அவற்றாற் பெறும் உணவுங் கொண்டு வாழ்ந்தவர் குறவர்என்போராவர். இவ்வாறே முல்லை நிலத்தவர் இடையரும், பாலை நிலத்தவர் மறவரும், மருத நிலத்தவர் வேளாளரும், நெய்தல் நிலத்தவர் பரதவருமாவர். இவ்வைந்தும் சேர்ந்த தமிழகத்தே அவ்வந் நிலப் பகுதிக் குரிய தொழில் சிறிதும், அரசு புரிதல், ஓதுதல், வாணிபம் செய்தல், உடை நெய்தல், போர் புரிதல், போர்க் கருவி உழவுக்கருவி முதலியவற்றைச் செய்தல் முதலிய தொழில்வகை பெரிதும் மேற்கொண்டிருந்த மக்களினமும் உண்டு. அதனிடையே அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் மேம்பட்டவர் அரசராகவும், அறிவொன்றே சிறப்பாக வுடையவர் அந்தணராகவும், ஆண்மையும் பொருளும் உடையோர் வணிகராகவும், உழுதலும் உழுவித்தலும் மேற்கொண் டிருந்தோர் வேளாளராகவும் விளங்கினர். போர் நிகழுங்காலத்தில் மட்டும் அந்தணரும் மகளிரும் ஒழிய ஏனை யோர் அனைவரும் போர் மறவராகவே சிறப்பெய்தினர். “மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்…………….வன்புலச் சீறூர்க், குடியு மன்னுந் தானே கொடி யெடுத்து, நிறையழிந் தெழுதரு தானைக்குச், சிறையுந் தானே தன்னிறை விழுமுறினே” (புறம்.314) என வரும் ஐயூர் முடவனார் பாடிய புறப்பாட்டு மேலே கூறிய கருத்துக்கு ஏற்ற சான்றாகும்.

இவ்வாறு அறிவு, ஆண்மை முதலியவற்றின் சிறப்புப் பற்றி மக்களினத்தில் பிரிவு பிறந்திருந்ததே யன்றி, உணவு, உடை, உறையுள், மகட்கொடை முதலியவற்றில் வேறுபாடு கிடையாது. குறவர் முதலிய திணைநிலை மக்களும், அரசர் முதலிய பொதுநிலை மக்களும் உணவு முதலியவற்றில் வேறுபாடின்றி யொழுகிய திறத்தைப் புறநானூறு நன்கு காட்டுகின்றது.

** உறையுள்:**
குறவர் வாழும் குறிச்சிகளில் “புல்வேய் குரம்பை” களும் (புறம்.120), முல்லைப் பாடிகளில், “வண்காற் பந்த” ரிட்ட மனைகளும் (புறம்.324), மருத நிலத்தூர்களிலும் நெய்தற் பாக்கங்களிலும் முறையே வயலை படர்ந்த வளமனைகளும் மீன்வலை யுலரும் குறியிறைக் குரம்பைகளும் காணப்படு கின்றன. ஏனை அரசர் இருக்கும் அரண் மனைகள், நெடுமாடமும் வலிய அரணும்பெற்று நிலாமுற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன. அரண்களில் காவலர் காவலே யன்றிப் பல்வகை எந்திரப் பொறிகள் இருக்கின்றன. “அமரெனில் திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக் கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த குறும்பல குறும்பு” (புறம்.177) என்னும், “பொன்னுடை நெடுநகர்” (புறம்.198) என்றும் அம்மனைகள் சிறப்பித்துக் காட்டப்படுவது காண்க. அந்தணர் மனைகளில் முத்தீக்குண்டங்கள் காணப்படுகின்றன.

** உண்டி:**
இம் மக்களில் ஊனுண் பவரும் இருந்தனர். “புலவு நாற்றத்த பைந்தடி, பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்றுவை, கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது, பிறிது தொழிவறியா” (புறம்.14) என வரும் அந்தணராகிய கபிலர் கூற்றும், “மைவிடை யிரும் போத்துச் செந்தீச் சேர்த்திக் காயங்கனிந்த கண்ணகன் கொழுங்குறை, நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப, உண்டும் தின்றும் இரப்போர்க் கீந்தும், மகிழ்கம் வம்மொ மறப்போரோயே” (புறம்.364) என வரும் கூகைக் கோழியார் கூற்றும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. உணவில், கலந்த பாலும் பாகும் கொண்டு பண்ணியம் பல செய்துண்டலுமுண்டு. “ஊனும் ஊணும் முனையின் இனிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும், அளவுபு கலந்து மெல்லிது பருகி,” (புறம்.381) மகிழ்ந்திருக்கும் செய்தியை நன்னாகனார் விதந்தோதுகின்றார். புறவங்களில் வாழ்வோர் தம் நாட்டில்நெல் விளையாமையின் வரகும் தினையும் பயிர் செய்துண்பர். “புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர் நெல்விளை யாதே” (புறம். 328) என்றும், “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு, இந்நான் கல்ல துணாவு மில்லை” (புறம்.335) என்றும் வருதல் காண்க. வரகுச்சோற்றால் ஆயர், புளிச் சோறமைத்து உண்ணும் திறத்தைப் பிசிராந்தையார், “கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல், தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய, வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை” (புறம்.215) என்று பாராட்டி, இதனை “அவரை கொய்யுநர் ஆரமாந்துவர்” என்கின்றார். குறிஞ்சி நிலம் உழவர் ஏரால் உழுது பயிர்செய்தற்கு ஏனையபோல அத்துணை நயம்வாய்ந்த தன்மையின், அங்கு வாழ்பவர், மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக் கிழங்கும், தேனும் உண்பர். “உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளையும்மே, இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க்கும்மே; மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே” (புறம்.109) என்று கபிலர் எடுத்தோதுவது காண்மின். நெய்தனிலமும் இவ்வாறே நெல் முதலியன விளைத்துக் கோடற்கு ஏற்றதாகாமையால், அங்கு வாழும் பரதவர் மீன் பிடித்து ஏனை நிலத்தவர்க்கு விற்று நெல்லும் பிற வுணவுப் பொருளும் பெற்றுக்கொள்கின்றனர். முல்லை நிலம் வரகு, தினை, கொள் முதலியவற்றை விளைத்துக்கொள்ளுதற் கமைந்திருத்தல்போல, மருதநிலம் நெல்லுங், கரும்பும் விளைதற்கு ஏற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கு வாழ்நர் நெற்சோறுண்டு அரியல் என்னும் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கின்றனர்; “நெய்தலங் கழனி நெல்லரி தோழுவர், கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த ஆம்பல் அகலடை யரியல் மாந்தித் தெண்கடற், படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பு” (புறம்.209) என வருதல் காண்க.

** உடை:**
இத் தமிழ்மக்கள் நல்ல பருத்தி நூலால் இயன்ற ஆடையினை உடுத்திருக்கின்றனர். இப்பருத்தியாடை இழை தெரியா வகையில் நெருக்கமாக அமைந்து மிக்கமென்மையும் நயப்பு முடையவாய் இருக்கின்றன. மனக் கண்ணால் நோக்குமிடத்து இந்நாளில் ஆலைகளில் மிக்க வேலைப்பாடமைய நெய்யப்பெற்று வரும் மெல்லிய ஆடையினும் மேன்மை பொருந்தியவாகத் தோன்றுகின்றன. இவற்றின் சிறப்பை, “பாம்புரி யன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியின் இழையணி வாரா, ஓண்பூங் கலிங்கம்” (புறம்.383) என்றும், “நேர்கரை நுண்Qற் கலிங்கம்” (புறம்.392) என்றும், “போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்கம்” (புறம்.393) என்றும், “திருமலரன்ன புதுமடி” (புறம்.390) என்றும், “புகை விரிந்தன்ன பொங்குதுகில்” (புறம்.398) என்றும் சான்றோர் பாராட்டிக் கூறுகின்றனர்.

இவ்வாறு நுண்ணிய வேலைப்பாடும் நேர்கரையும் புகைபோலும் நொய்ம்மையும் பொருந்திய ஆடை யணிந் திருந்ததோடு, இளைய மகளிர் அவ்வாடைமேல், அரையில், அழகிய மலர்களும் தழை களும் விரவித்தொடுத்த தழையுடை யுடுத்திருக்கின்றனர். “தண்டழைக் கடைசியர்” (புறம்.61) என்றும், “அளியதாமே சிறுவெள் ளாம்பல், இளையமாகத் தழையா யினவே” (புறம்.248) என்றும், “அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக் குரலங்குன்றி கொள்ளு மிளையோள்” (புறம்.340) என்றும், “ஏந்து கோட்டம் பூந்தொடலை யணித்தழை யல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள்” (புறம்.341) என்றும் பெரிதெடுத்துப் பேசப்படுமாறு காண்க.

** அணி:**
இத் தமிழ்மக்கள் பொன் மணி முத்து பவழம் முதலிய உயரிய பொருள்களைக் கொண்டு விலையுயர்ந்த அணி களைச் செய்து அணிந்து மகிழ்கின்றனர். இளஞ்சிறார்க்கு ஐம்படைத்தாலி, புலிப்பற்றாலி, காலிற்சிலம்பு, கிண்கிணி, காதிற் குதம்பை, குழை, நெற்றிப் பட்டம், முத்துமாலை, முத்துவடம் முதலியன அணிகின்றனர். மணமான மகளிர் இடையில் அணியும் தழையும் சிலம்பும் நீக்கிக் கழுத்தில் திருமங்கலநாணும் காலில் நூபுரமும் அணிகின்றனர். இவற்றைப் பிறர்க்குக் கொடையாக வழங்க நேரின், திருமங் கலத்தை மட்டில் இவர்கள் தம் கழுத்தினின்றும் நீக்குவ தில்லை. மகளிர் தம் கையில் ஆம்பல் தண்டாற் செய்த தொடியணிந்து கொள்வர்; இதனை, “ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்” (புறம்.63) என்று பரணர் கூறிக் காட்டுகின்றார். யானைக்குப் பொன்னால் ஓடை செய்து அழகு செய்வர். போர் நிகழுமிடத்துப் பகைவர் யானையைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னால் தாமரைப் பூக்களைச் செய்து, பாடியாடும் மகளிராகிய விறலியர்க்கும் ஏனைப் பாணர்க்கும் வழங்குகின்றனர்; “ஒன்னார் யானை ஓடைப் பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத்தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர், ஓடாப் பூட்கை யுரவோன்” (புறம்.126) என்று சான்றோர் கூறுதல் காண்க. தம்மொடு பொருத அரசர் எழுவரை வென்று அவர்தம் முடிப்பொன்னால் மார்பணி செய்து சேரவேந்தர் அணிந்துகொண்டன ரெனப் பதிற்றுப்பத்து என்னும் தொகை நூல் கூறுகின்றது. “பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய, மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச்சேய வாயினும், தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்குங் காலை, ஒருவழித் தோன்றி யாங்கு” (புறம்.218) என்பதனால், பொன்னும் மணியும் முத்தும் துகிரும் பிறவும் அணி செய்தற்குப் பயன்படுத்து மாறு இனிது விளங்குகிறது. “மலை பயந்த மணியும் கடறுபயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும்” (புறம்.377) எடுத்துக்காட்டப்படுவதை நோக்கின், இத் தமிழ நன்மக்கள் மலையிடத்தே மணியும் காட்டிடத்தே பொன்னும் கடலிடத்தே முத்தும் கண்டறிந்து எடுத்துப் பயன்கொண்டு சிறக்கும் ஒட்பமுடைய ரென்பது தெரிகிறது.* சுருங்கச் சொல்லின், இத் தமிழ் மக்கள் விரற்கும் செவிக்கும் கழுத்துக்கும் அரைக்கும் தோட்கும் மார்பிற்கும் தலைக்கும் ஏற்ற அணிகலன்களை உயரிய பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்து அணிந்திருந்தன ரென்பது சாலும்.

** தொழில்:**
இனி, இத் தமிழ நன்மக்கள் உயரிய நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டும் தொழில் பலவும் நன்கு தெரிந்திருந் தனர். மக்களை அவரவர் தொழில்பற்றியே வேட்டுவர், ஆயர், உழவர், கூத்தர், கொல்லர், கம்மியர், வணிகர், தச்சர் என்பன முதலிய பெயரிட்டழைப்ப தொன்றே அவரது தொழிலறிவின் மேன்மையை இனிதெடுத்துக் காட்டுகின்றது. குறிஞ்சி முதலிய நிலப்பகுதிகளில் வாழ்பவர் முறையே தத்தமக்குச் சிறப்பாக வுரிய வேட்டையாடுதல், நிரை மேய்த்தல், நெல்விளைத்தல், மீன் பிடித்தல் முதலிய தொழில் வகைகளில் நல்ல வன்மை பெற்றிருக் கின்றனர். ஒன்று காட்டுதும். குறவர் பறவை விலங்கு முதலியவற்றை வேட்டம் செய்பவ ராயினும், யானை முதலிய பெரு விலங்குகளை வேட்டை புரிதலை “உயர்ந்த வேட்டம்” என்று கருதுகின்றனர். அவர் யானைவேட்டம் புரிந்து, அவற்றை அகப்படுத்து வது மிக்க நயப்பமைந் திருக்கிறது. யானைகள் இயங்கும் வழிகளில் ஆழ்ந்த குழிகளை யமைத்து, அவை தெரியாத படி மூடிவைத்து, உணரா மையால் குழியிடை வீழ்ந்த அவ் யானைகளை முன்பே பழகிய யானைகளைக் கொண்டு பற்றித் தம்வயம் செய்துகொள்கின்றனர். இதனை, “மாப்பயம்பின் பொறைபோற்றாது, நீடுகுழி யகப்பட்ட பீடுடைய வெறுழ் முன்பின், கோடு முற்றிய கொல்களிறு” (புறம்.17) என வரும் சான்றோர் கூற்றால் அறியலாம். யானையைக் கொண்டு யானைகளையும் மானைக் கொண்டு மான்களையும் பற்றும் குறவரது இயற்கை யறிவு மிக்க வியப்புத் தருவதாகும். இவ்வாறே இவர்கள் குறும்பூழ், பூவை முதலிய பறவைகளையும் வேட்டை புரிகின்றனர். பன்றி வேட்டையும், தேனழித்தலும் இவர்பால் சிறந்து நிற்கின்றன.

இடையர் நிரைமேய்த்துப் பாற்பயம் கோடலும், பாலைக் காய்ச்சி நெய்யும் தயிரும் மோரும் பெறுதலும், நெய் முதலியவற்றை விற்று நெல்லும் முத்தும் மணியும் பெறுதலும் அவர்பால் உரிமைத் தொழில்களாய் நிகழ்கின்றன. வேறு சிலர் வரகும் தினையும் கொள்ளும் விளைக்கின்றனர். குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழும் மக்களுட் சிலர் விலங்குகளின் தோலும் மயிரும் கொண்டு தோற் பதனிடுதலும், மயிர்க் கம்பளம் நெய்தலும் உண்டு. மருதநிலத்தவர் உழவுத் தொழில் புரிகின்றார்கள். “கார்ப் பெயற் கலித்த பெரும்பாட்டீரத்துப், பூழி மயங்கப் பல வுழுது வித்திப், பல்லியாடிய பல்கிளைச் செவ்வி” (புறம்.120) என்பது இவ்வுழவுத் தொழிற்கு ஏற்ற சான்றாகும். உழுதற்கு எருதுகளே மிகவும் பயன்படுகின்றன. “ஈரச்செவ்வி யுதவினவாயினும், பல்லெருத்துள்ளும் நல்லெருது நோக்கி, வீறுவீறாயும் உழவன்” (புறம்.289) என வருதல் காண்க. இவ்வுழவர் தமக்கு எத்துணை வறுமை யெய்துவதாயினும் விதைத்தற்கு அமைத்த வித்தினை யுண்ணுவது கிடையாது; அதனைச் செய்பவன் உழவருட் கீழ்மகனாக எள்ளி இகழப்படுகின்றான். “வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான், வீழ்குடி யுழவன் வித்துண்டாங்கு” (புறம்.230) என்று அரிசில் கிழார் என்னும் சான்றோர் இகழ்ந்து பேசுகின்றார்.

இனி, மீன் பிடித்தலும் உப்பு விளைத்தலும் இவற்றை மாற்றி உணவுப்பொருள் பெறுதலும் நெய்தற் பரதவர்க்கு இன்றியமையாத் தொழில்களாகும். இவ்வியைபால் இவர்கட்கு வாணிபமே சிறப்புடைத் தொழிலாதல் இனிது விளங்கும். இவருள் உப்பு விற்போர் உமண ரெனவும், கடலிற் கலஞ் செலுத்தி மீன் பிடிப்பதனாலும், அதுவே வாயிலாகக் கலங்களில் வேறு நாடுகட்குச் செல்லும் செலவு வாய்ப்பதனாலும். இந்நெய்தனிலத்தவரைப் பரதவர் என்றும் வழங்குகின்றனர். நம் தமிழகத்திற்கும் ஏனைத் தேயங்கட்கும் வாணிகத் தொடர்பு முன்னம் உண்டாயதற்கு இவர்களே காரணர் களாவர். வணிகருள் சிறப்புடையாரைப் பரதகுமரர் என்று வழங்கும் வழக்குண்மை சிலப்பதிகாரத்தாலும் நன்கறியலாம். மூன்று பக்கமும் கடலாற் சூழப்பட்ட தென்னாட்டவர் கடலிடத்தே தம் தொழில் புரிந்துவந்தமை தோன்ற அவர்களைத் “தென்பரதவர்” என்பர். அவர் கொடியில் மீன் பொறிக்கப்பட்டிருப்பதும் இதனை வற்புறுத்துவதாகும். சேரவேந்தர் கடலிற் கலம் செலுத்திப் பொன்வருவாய் மிகக் கொண்டன ரென்பதும், அவர்க்கே அக்காலத்திற் கடலிற் கலம் செலுத்தும் தனியுரிமையும் வன்மையும் இருந்தன வென்பதும் தோன்ற மாறோக்கத்து நப்பசலை யார், “சினமிகு தானை வானவன் குடகடற், பொலந்தாரு நாவா யோட்டிய அவ்வழிப், பிறகலம் செல்லாது” (புறம்.126) என்று பாடியிருக் கின்றார். கலம் செலுத்து மிடத்தும் வாணிகக் காற்றின் (trade winds) வரவு நெறியும் காலமும் அறிந்து செலுத்தும் மதுகை அவர்பால் இருந்ததனை இனிது காட்டுவாராய், வெண்ணிக் குயத்தியார் என்பார் சோழன் கரிகாற் பெருவளத்தானைச் சிறப்பித் துரைக்குமிடத்து, “நளியிரு முந்நீர் நாவா யோட்டி, வளிதொழி லாண்ட வுரவோன் மருக, களியியல் யானைக் கரிகால் வளவ” (புறம்.66) என்று தெரிவிக்கின்றார். இதன்கண் “வளிதொழிலாண்ட உரவோன்” கரிகாலனுக்கு முன்பிருந்தா னொரு சோழன் என்பதும், அவன் காலத்தே கடலிற் கலம் செலுத்தி வேற்று நாடு சேறற் குரிய வணிகக்காற்று தொழில் கொள்ளப்பட்டது என்பதும் விளங்கு கின்றன. இவ்வளியினை வணிகக்காற்று என்பது பிற்கால வழக்காதலின், பண்டையோர் “வளி” என்றே கூறியொழிந்தனராதல் வேண்டும். இக்காற்றின் இயல்பினை முதன்முதலாகக் கண்டவர் உரோமானியர் என்றும், அவருள் ஹிப்பலாஸ் (hippalos) என்பவனே முன்னவ னென்றும் r.h.வார்மிங்டன் (warmington) முதலிய வரலாற்றா சிரியன்மார் கூறுவர். இக்கூற்று தவறுடைத்து; இவ்வுரோமானியர்க்கு முன்பே தமிழர் அறிந்து அவ்வளியினைப் பயன் கொண்டனர். இச்செய்தி யினைத் “தமிழகத்து முந்நீர் வழக்கம்” என்னும் ஆராய்ச்சி யுரையில் விரியக்கூற விருக்கின்றேன்.

இந்நெய்தனிலத்துப் பரதவர் கடலிற் கலஞ் செலுத்தும் வன்மை மிகக் கொண்டிருந்ததோடு, நிலத்தில் வண்டிகளில் உப்பு மூடைகளை யேற்றி உள்நாடு சென்று விற்பதும் மேற்கொண்டிருந்தன ரென முன்பே கூறியுள்ளேன். இப்பரதவ ருடைய நாடு மணல் மிக்க நாடாதலாலும், முல்லை குறிஞ்சி முதலிய வன்புல நாடு கட்கும், மருதமாகிய நீர் நாட்டிற்கும் செல்லவேண்டி யிருத்தலாலும், இவருடைய வாகும். வண்டியிற் பூட்டிய பகடுகள் மிக்க நோன்மையுடைய “கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகடு” (புறம்.60) என்று பாராட்டப்படுமாறு காண்க. இவர்களும் தமது உப்பு வாணிகம் குறித்து நாட்டில் நெடிது செல்வது வேண்டி, இடையில் வண்டி அச்சு முறிந்து இடையீடுபடா வண்ணம் * சேமவச்சும் உடன் கொண்டு செல்கின்றனர். இச் செயலைக் கண்டு வியந்த ஒளவையார்,

“எருதே இளைய நுக முணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
1அவலிழியினும் மிசை யேறினும்
அவண தறியுநர் யாரென வுமணர்
கீழ்மரத் தியாத்த சேமவச்சு” (புறம்.102)

என்று எடுத்தோதுகின்றார். இனி இவர்பால் ஒரு வன்கண்மையும் காணப்படுகிறது. தாம் தமது வண்டியிற் பூட்டிக் கொணரும் பகடுகளில் யாதேனும் ஒன்று வழியிடையே வலிகுன்றி யாதல், நோயுற்றாதல் மேற் செல்லும் தகுதி யிழந்துவிடுமாயின், அதன்பால் சிறிதும் இரக்க மின்றி, நீரும் புல்லும் ஈயாது அவ்விடத்தே கைவிட்டுச் சென்றொழிகின்றனர். “நீரும் புல்லும் ஈயா துமணர், யாருமில் ஒரு சிறை முடத்தொடு துறந்த வாழா வன்பகடு” (புறம். 307) என்று சான்றோர் இவர் செயலைச் சுட்டிக் கூறுவதைக் காண்மின்.

இனி, இக் கூறியனவே யன்றி, வயல்விளைவு குறித்து நீரைச் சிறை செய்து வைப்பதும், பருத்தி கொண்டு நூல் நூற்றலும் ஆடை நெய்தலும், பொன்னாலும் மணியாலும் அணிவகை செய்தலும், மணிகடைதலும், முத்துக் குளித்தலும், கரும்பாட்டிப் பாகு செய்தலும், குயவர் மட்கலம் தாழி முதலியன வனைதலும், யாணையால் காட்டிலிருந்து விறகு கொணர்தலும், தச்சர் தேர் செய்தலும், கருமார் இருப்பு வேலை செய்வதும் பிறவும் இத் தமிழ் நன்மக்களிடத்தே காணப்படுகின்றன. வண்ணாத்தி களர் நிலத்தேயுற்ற கூவலில் ஆடையொலிக்கின்றாள் களர் நிலத்தூற்று உவர்மண் ஊறி ஆடையின் அழுக்கினை நன்கு போக்கும் நயந் தெறிந்து தன் தொழிலைச் செய்கின்றாளெனின், இத்தொழிலாளரின் தொழிலறிவுக்கு வேறு சான்று வேண்டாவாம். “களர்ப்படு கூவம் தோண்டி நாளும் புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை” (புறம்.311) என்று சான்றோர் கூறுதல் காண்க.

** வாணிகம்:**
மேலே, பண்டைத் தமிழ் நன்மக்களின் தொழில் கூறுமிடத்தே அவர் மேற்கொண்டொழுகிய வாணிகத்தையும் ஓரளவு கண்டோ மாயினும், ஈண்டும் சிறிது காணலாம். வேட்டுவர் தாம் கொணர்ந்த மான்தசையை மருத நிலத்தார்க்கு விற்கின்றனர்; முல்லை நிலத்து ஆயர் மகளிர் தயிர் கொணர்ந்து விற்கின்றார்கள். இருவர்க்கும் உழவர் தம்பால் இருக்கும் வெண்ணெல்லைத் தருகின்றார்கள். “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன், மான்றசை சொரிந்த வட்டியும், ஆய்மகள், தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர், குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல், முகந்தனர் கொடுப்ப உகந்தனர்” (புறம்.33) பெயர்வர் என்று சான்றோர் கூறுகின்றார்கள். “தென்பவ்வத்து முத்தும்” (புறம்.380) “வடகுன்றத்துச் சாந்தமும்” “எண்வகைக் கூலழும்” “வேறுபல் தாரமும்” தமிழரிடையே விற்கவும் வாங்கவும் படுகின்றன.

இக் கூறிய பொருள்களே யன்றி, பல வேறு பண்ணியம் விற்றுலும், கள், தேறல், தேன் முதலியனவும், பூமாலைகளும் பிறவும் விற்கப்படுகின்றன. வரகு நெல் முதலியன கடன் கொடுத்தலும் கடன் வாங்குதலும் உண்டு.

** அரசியல்:**
இப் புறநானூறு கூறும் பண்டை நாளில் சேர சோழ பாண்டியர் என முடி வேந்தர் மூவர்க்கும் தமிழகம் உரிய தாய் இருந்திருக்கிறது. இவர்தம் ஆட்சியின் கீழ்ச் சிறுசிறு நாடுகள் பல உள்ளன. அவற்றைக் குறுநில மன்னர் ஆட்சி புரிகின்றனர். இவர்களைச் “சீறூர் வேந்தர்” என்றும் முடி யுடைவேந்தரை வாளா “வேந்தர்” என்றும் இந் நூல் வழங்குகின்றது. இந்நூற்கண் காட்டுநாடு, காரிநாடு, கொங்குநாடு, கோனாடு, சோணாடு, பறம்புநாடு, பெண்ணைநாடு, மலைநாடு, மாறோக்கம், முக்காவல்நாடு, வேங்கடநாடு என்பன சிறப்பாகக் காணப்படுகின்றன. இவ்வேந்தர் அனைவரும் தமக்குரிய அரசு முறையினைத் தந்தை மகன் என்ற வழிவழியாகப் பெறுகின்றனர். “எழா அத்தாயம் வழுவின் றெய்தியும்” (புறம்.79) என்றும், “பால்தர வந்த பழவிற்ற றாயம்” (புறம்.75) என்றும் இந் நூல் குறித்துரைப்பது காண்க. தாயம் என்ற சொற்கு உரை கூறிய உரையாசிரியரும் நச்சினார்க்கினியாரும் தந்தைக் குரித்தாய் மக்கட்கு வந்துறும் உரிமை என்ற கருத்துப்பட உரை கூறியிருப்பது “தாயத்தினடையா” என்ற தொல்காப்பிய நூற்பாவுரையால் இனிது தெரிகிறது. இங்கே குறித்த குறு நில மன்னர் முடிவேந்தர் மூவருள் எவரேனும் ஒருவர்க்குக் கீழிருந்து ஆட்சிபுரிவர்; அதனால் அவர்கள் தம்முடைய வேந்தர்க்குரிய அடையாள மாலையினையே தாமும் அணிந்து கொள்வர். பிற்காலத்தே, இவ்வழக்கு மாறியது. முடிவேந்தர் தமக்குக் கீழிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர்க்குத் தம் பெயரைப் பட்டமாகத் தந்து “எதிரிலி சோழ சம்புவராயன்” “குலோத்துங்க சோழ காங்கையன்” என்பன போலச் சிறப்பித்திருக்கின்றனர், வேள்பாரி முதலாயினார்போல முடிவேந்தருக்குக் கீழிராது தமித்திருந்து ஆட்சி புரிவோரும் உண்டு.

குறுநில மன்னர்க்கு ஏனைச் சேர சோழ பாண்டியர் போல மணிமுடி சூடும் மாண் பொன்று இல்லையே யொழிய ஏனைச் சிறப்புக்களெல்லாம் உண்டு. முடி வேந்தரை இறை வனுடைய திருக்கண் மூன்றிற்கும் ஒப்பாகக் கருதி, அவருள் பாண்டி வேந்தரை நெற்றிக் கண்ணுக்கு நிகராக்கி, “கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப், பிறை நுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற” (புறம்.55) என்று சான்றோர் பாராட்டுவர்.

இவ்வேந்தர் அனைவரும் கல்வியின் இன்றியமை யாமையினை இனிதறிந்து, கற்றோர் கூறும் அறநெறியிலே தமது அரசு முறையினை நடாத்துகின்றனர். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனென்பான், மக்கட்குக் கல்வி கற்பது நன்று என்பான், “உற்றுழியுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்றும், கற்றோன் கூற்றே *அரசு முறையை நெறிப்படுத்துவ தென்றற்கு “ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது அவருள், அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்” (புறம்.183) என்றும் இயம்புகின்றான். இவ்வாறு கல்விநலத்தைக் கண்டு பேணிய இவ்வேந்தர், அரசிய லறிவின் சிறப்பையும் ஐயமறத் தெளிந்து, “கால்பார் கோத்து ஞாலத் தியக்கும், காவற் சாகா டுகைப்போன் மாணின், ஊறின்றாகி யாறினது படுமே, உய்த்தல் தேற்றானாயின் வைகலும், பகைக் கூழ் அள்ளற்பட்டு, மிகப் பல் தீநோய் தலைத்தலைத் தருமே” (புறம்.185) என்று தெரிவிக்கின்றனர்.

தமிழரசு புரியும் இவ்வேந்தர் கருத்தில் சில சீரிய நோக்கங்கள் இருந்து அவரைச் சிறப்பித்துள்ளன. அறநெறி யொழுகி அன்புடைக் காமத்தால் மணந்து கொண்ட மனைவியை பிரிந்தொழுகலும், தம்மைக் காதலியாத மகளிரை வலிதிற் கூடுதலும், முறை வேண்டி னார்க்கு நீதி வழங்காமையும், குடிபழி தூற்றும் கோலுடை யனாதலும் புலவர் பாடும் புகழ்பெறானாதலும், கையிகந்த இறைவாங்குதலும், போர்க் கருவியாற் பட்டி றவாது கொன்னே மூத்து நோயுற் றிறத்தலும் கனவிலும் தம்பால் நிகழ்தல் கூடாது என்பது அவர்தம் கருத்துக்களாகும். இவை யனைத்தும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, சேரமான் கணைக்காலிரும்பொறை என்ற இவர்கள் பாடியுள்ள பாட்டுக்களில் நாமெல்லாம் கண்டறியுமாறு விளங்கித் தோன்றுகின்றன. இவருள் பூதப் பாண்டியன், தான் பிறந்த பாண்டியர் குலமே மேம்பட்ட தென்றும், இறந்து மீட்டும் பிறக்குமிடத்துத் தனக்குத் தென்புலங் காக்கும் பாண்டிய வேந்தர் பிறப்பே எய்Jல் வேண்டுமென்றும், ஏனைப்புல மெல்லாம் வன்புல மென்றும் அவற்றைப் புரக்கும் அரசுரிமை யெய்தினும் அஃது ஆகாதென்றும் கருதி, “மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த, தென் புலங்காவலின் ஒரீஇப் பிறர், வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே” (புறம்.71) என்று கூறுகின்றான். இறுக்கும் இறையன்றி மிக்க இறை விதித்து வாங்கும் கொடுமையை வெறுத்து வஞ்சினம் கூறுவானாய், பாண்டியன் நெடுஞ்செழியன், “எந்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது, கொடியன் எம்மிறை யெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக” என்றுரைப்பதும், கையிகந்த இறை பெறும் வேந்தனை, “குடிபுரவிரக்கும் கூரிலாண்மைச் சிறியோன்” (புறம்.75) எனச் சோழன் நலங்கிள்ளி இகழ்வதும் குடிகட்கு இறை விதிக்கும் வகையில் இத் தமிழ்வேந்தர் கண்ணுங் கருத்துமாய் இருந்ததை வற்புறுத்துகின்றன.

இவ் வெல்லாவற்றினும் மேன்மையாக அவர்கள் கருதியது புலவர் தம்மைச் சிறப்பித்துப் பாட வரும் புகழேயாகும். தன் பகைவர் கேட்ப வஞ்சினங் கூறு மிடத்தே, பாண்டியன் நெடுஞ் செழியன், பகைவரை அறப்போர் செய்து வென்று புறங்காணேனாயின்,

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை” (72)

என்பது அவனுக்குப் புலவர் பாடும் புகழின்கண் இருந்த வேட்கையும் நன்மதிப்பும் நமக்கு நன்கு விளங்கக் காட்டுகின்றது.

இவ்வாறு நல்லிசைப் புலவர் பால் பேரன்பும் அவர் பாட வுண்டாகும் புகழின்கண் பெருவேட்கையும் இவ்வேந்தர்க்கு உண்டாதற்குக் காரணம், “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி, எய்துப என்ப தம் செய்வினை முடித்து” (புறம்.27) எனவுரைக்கும் சான்றோர் சால்புரை யென்று கோடலு முண்டு. ஆயினும், புகழ் விளைக்கும் சான்றோர், தாம் பாட விரும்பும் வேந்தரது வேத்தியல், கொடிது கடிந்து கோல் செம்மை கோடாது நடத்தலையே வற்புறுத்து மொழிவதை நாம் நெகிழ்க்க முடியாது. சோழன் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்பார்.

“வழிபடுவோரை வல்லறி தீயே1
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய்கண்ட தீமை காணின்
ஒப்பநாடி அத்தக ஒறுத்தி
வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே” (புறம்.10)

என்று உரைப்பதும், சோழன் நலங்கிள்ளியை நோக்கி, ஆசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், “அறனும் பொருளும் இன்பமும் மூன்றும், ஆற்றும் பெரும நின் செல்வம், ஆற்றாமை நின் போற்றாமையே” (புறம்.28) என்றும், “கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும், ஒடியாமுறையின் மடிவிலையாகி, நல்லதன் நலனும் தீயதன் தீமையும், இல்லையென் போர்க்கு இனனாகிலியர்” (புறம்.29) என்றும் உரைப்பதும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவற்கு வெள்ளைக் குடி நாகனார் என்பார், முறை வேண்டிவரும் குடிமக்கட்கு அரசர் செவ்வி யெளியராதல் வேண்டு மென்றற்கு, “அறம்புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து, முறை வேண்டும் பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதிற் பெயல் பெற்றோரே” என்றும், அரச ரேந்திய வெண்குடை குடிகளைப்புரத்தற் கென்றே யாயதென்பர், “கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை, வெயின் மறைக் கொண்டன்றோ வின்றே, வருந்திய, குடிமறைப்பதுவே” என்றும், நாட்டில் ஏதேனும் தீங்கு நேரின், அதற்குக் குடிகள் அரசனையே நோவர் என்ற கருத்துப்பட, “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும், இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்” என்றும், அரசர்க்கு உளவாகும் வெற்றிக் கெல்லாம், அவர் கீழ்வாழும் வேளாண் மாக்களின் உழவுப்பயனே என்பார், “வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப், பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை, ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்றும், ஆகவே குடி புறந்தருதலே நீ சிறப்பாய் எண்ணிச் செயற்பால தென்பார்,

“நொதுமலாளர் 1பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் 2பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்நின்
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறம்.35)

என்றும் உரைப்பதும், குடிகளிடத்தே இறையை “வசூலிக்கும்” திறத்தைப் பாண்டியன் அறிவுடைய நம்பிக்குப் பிசிராந்தை யார், எடுத்தோதித் தெருட்டு வாராய்,

“அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;3
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப 4எடுக்கும் பிண்டம் நச்சின்
யானைபுக்க புலம் போலத்
தானு முண்ணான் உலகமுங் கெடுமே” (புறம்.184)

என்று விளக்குவதும் மோசிகீரனார் என்னும் சான்றோர், வேந்தர்க்குக் கடன் இஃது என்பாராய், “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம், அதனால், யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகுதானை வேந்தற்குக்கடனே” (புறம்.186) என்பதும் பிறவும் வேந்தர் சான்றோர்களாகிய புலவர்கள் பாடும் புகழைப் பெரிதும் வேட்டு நிற்பதற்குச் சீரிய காரணங்களாகின்றன.

இத் தமிழ் வேந்தராட்சியில், ஆங்காங்குப் பெரு நகரங்களில் சான்றோர் இருந்து அறமுரைக்கும் நல்லவைகள் இருந்திருக் கின்றன, “சான்றோர் இருந்த அவையத்து” (புறம்.266) என்றும், “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறநின்று நிலையிற்று” (புறம்.39) என்றும் “அறம்துஞ்சு உறந்தை” (புறம்.58) என்றும் வருவன இக்கருத்தை வலியுறுக்கின்றன. இச்சான்றோர் அனைவரும் அரசன் நால்வகைப்படையும் வீறு பெறக் கொண்டிருப்பினும், அவன் கொற்றமெல்லாம் அறத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்குமென்ற வுண்மையைத் தேர்ந்து,

“கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவருமென
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறம்.55)

என்று உரைக்கின்றனர். அற முதலிய மூன்றனையும் நாட்டில் நிலவுவித்தற்கும் இச்சான்றோரே ஏதுவாதல்பற்றி, இம்மூன்றற்கும் இன்றியமையா இயல்பிற்றாகிய வயல் விளைவினைச் செம்மை செய்தற்கு உரியவற்றை அரசர்க்கு எடுத்தோதும் கடன்மை இவர்பால் அமைந்திக்கிறது. அதனால், நீர் வருவாயைச் செம்மை செய்து நிலபுலங்களில் நீர்மையைச் சிறப்பிக்கக் கருதிய குடபுல வியனார் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி. நாட்டில் தடையின்றி வறிதே கழிந்தோடும் நீரை ஏரிகளில் நிரப்பி வயல்வளம் பெருக் குவித்தல் சிறப்பாம் என்பாராய், செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், போர்த்தொழிலில் ஒரு நீ யாகல் வேண்டினும், நல்லிசை நிறுத்தல் வேண்டினும்,

“தகுதி கேள், இனி, மிகுதி யாள,
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம், கண்ணகன்
வைப்பிற் றாயினும், நண்ணி யாளும்
இறைவன் தாட்குத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய, இகழாது, வல்லே,
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
1தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்2இவண் தள்ளா தோரே” (புறம்.18)

என்று உரைக்கின்றார்.

இத்தகைய சான்றோரைத் துணையாகப் பெற்றும், அவருரைக்கும் சால்புரை களை மேற்கொண் டொழுகியும், அவராற் பெறும்புகழ் மேம்பட்டும் விளக்கமுறும் இத்தமிழ் வேந்தர் புலவர்க்கேயன்றி, ஆடல் பாடல்களால் இன்புறுத்தலும் பிறநாடு களில் தம்முடைய புகழைப் பரப்புதலும் செய்யும் பாணர், கூத்தர், விறலியர் முதலி யோர்க்குத் தம் செல்வத்தை வரையாது வழங்கு கின்றனர். அவரது வண்மையினைக் கூறவந்த கோவூர் கிழார் என்னும் சான்றோர், “கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங்கொடிப், பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ, வண்ணம் நீவிய வணங்கிறைப் பணைத்தோள், ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என, மாடமதுரையும் தருகுவன் எல்லாம், பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்” (புறம்.32) என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறு வழங்குவனவற்றுள் பகைப்புறத்துக் கொள்ளும் பொருள் பெரும் பாலனவாம்.

இவ்வாறு ஈதல் வழியாலும் பிறவற்றாலும் எய்தும் இசைமேற் சென்ற உள்ள மிகுதியால், ஏனை யரசர் தம்மை வழிபடச் செய்வதிலும், பெரும்போகம் வேண்டியும், இந்நிலவுலகு வலியுடையார்க்கே யன்றி ஏனை யெல்லார்க்கும் பொதுவன்று என்ற மேற்கோளை நிலைநாட்டும் வீறு கொண்டும் பிற வேந்தரொடு பொருதலை மேற்கொள்கின்றனர். இவ்வியல்பு பற்றியே இவர்தம் உள்ளப் பான்மை யையுணர்த்தும் குறிப்பால், கபிலர், ஞாயிற்றை நோக்கிப் பாடுவாரைப் போல, “ஏ, ஞாயிறே, சேரமான் கடுங்கோவாழி யாதனை நீ எவ்வாறு ஒப்பாவாய்; அவன்,”

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது
இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளம்” (புறம்.8)

உடையோன்; ஓம்பா ஈகையன்; வலிய தானையினையுடையன்” என்று பாடுகின்றார்.

** போர்:**
இவ்வேந்தர் போர் செய்யும் திறம் மிக்க இறும்பூது தருவதாகும். போர் செய்கிறபோதும் போர் தொடங்கு கிறபோதும் இவ்வேந்தர் பால் அறமே தலைசிறந்து நிற்கிறது. போர் குறித்து இருபாலும் மண்டி நிற்கும் வேந்தரை “அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்” (புறம்.62) என்று கழாத்தலையார் என்னும் சான்றோர் சிறப்பித்துக் கூறுகின்றார்.

போர்க்குச் செல்லும் வேந்தன் முதற்கண் தண்ணுமை முழக்கால் தன் நாட்டு வீரரை வருவித்து அவர் கட்கு அடையாளப் பூக்களை வழங்குகின்றான். அப்பூக் கோளேய தண்ணுமை கேட்டதும் வீரர் அனைவரும் உடனே திரண்டுவிடுகின்றனர். பூக்கோளேய வேந்தன் படை திரளக்கண்டு அவரவர்க்குப் பூக்களை நல்கித் தான் நீராடிப் போர்க்குரிய கோலம் கொள்கின்றான். அவ்வாறு கொலங் கொண்டு வரும் செழிய னொருவனைக் கண்ட சான்றோ ரொருவர்.

“மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி1
மன்ற வேம்பி னொண்குழை மலைந்து
தெண்கிணை2 முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்” (புறம்.79)

என்று பாடுகின்றார்.

இனி, போர் நிகழுமிடத்து, வாள் வேல் முதலிய கருவிகளும் யானை, குதிரை முதலிய படைகளும் போரில் ஈடுபடும் கூறுபாடு மிக்க சிறப்புடையதாகும். உறையினின்றும் வாங்கிய வாட்படை பகைவர் உடலுள் மூழ்கிக் குருதி படிந்து உருவிழந்து நிற்கிற தென்றற்கு, “போர்க் குரை இப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி யுருவிழந்தனவே” என்றும்,

“வேலே,
குறும்படைந்த அரண்கடந்தவர்
நறுங்கள்ளின் நாடு நைத்தலின்
சுரைதழீஇய இருங் காழொடு
மடைகலங்கி நிலை திரிந்தனவே;
களிறே,
எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர்
குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்
பழூஉப்பிணிய தொடிகழிந்தனவே” (புறம்.97)

என்றும், இவ்வாறே குதிரைகள் வீரர் திரளைச் சாய்த்துப் போர்க்கள முற்றும் உலாவிக் குளம்பு முழுதும் ஊனும் குருதியும் படிந்து மறுப்பட்டுத் தோன்றுகின்றன என்றும் கூறி, வேந்தன் போர்த்திறம் கூறுவார், அவ னேந்திய தோல் (கேடயம்) பகைவர் செலுத்திய கணைபட்டுத் துளையுற்றதனால்,

“அவன் தானும்,
நிலந்திரைக்கும் கடற்றானைப்
பொலந்தும்பைக் கழற் பாண்டில்1
கணைபொருத துளைத் தோலன்னே” (புறம். 97)

என்றும் ஒளவையார் பாடியிருக்கிறார்.

போரில் வெற்றி மிகும் வேந்தன் தன் பகை வேந்தன் ஓம்பும் காவல்மரத்தைத் தன் வெற்றிக்குறியாக வெட்டி வீழ்த்துவது போர்மரபு. ஒவ்வொரு வேந்தன் ஒவ்வொரு மரத்தைத் தன் வெற்றியைச் சிறப்பிக்கும் மரமாக மேற்கொண்டு சிறப்பா யோம்பி வருதல் பண்டைத் தமிழ்வேந்தர் மரபாகும். அம்மரம் இரவு பகலாகப் போர் மறவரால் காக்கப்படுவது குறித்து அதனைக் கடிமரம் என்ப. அது பகைவர்பால் சிக்குண்டு வெட்டப்படாவாறு பாதுகாப்பது மானமுடைய வேந்தர்க்கு மறப்பண்பாகும். அதனைப் பகைவர் கைப்பற்றித் தடிகின்றார் எனின், தடியுமவர் வெற்றி பெற்றார் என்பது துணிபாம். “வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்” (புாறம்.23) என்று சான்றோர் கூறுவது காண்க. வேங்கை, புன்னை, வேம்பு முதலியன பல வேந்தர்களால் காவன் மரமாகப் பேணி வளர்க்கப் படும் திறம் ஏனைத்தொகை நூல்களிலும் மிகுதியாகக் கூறப்படுகிறது. பரிசிலரும், வேற்றுப் புலத்துப் பெற்ற யானைகளை இக்காவன் மரத்திற் கட்டிவைப்பது வழக்காம்.

போர்க் களத்தே போருடற்றும் வேந்தருள் பொருது தோல்வி யுறுவோர் தம்மை வென்ற வேந்தன் வீரச் சிறப்பறிந்து பாராட்டு வதும், வென்றோர் தம்பால் தோல்வி பெற்றோர் செய்த போர் நலத்தைப் பாராட்டுவதும் உண்டு, “இதனை, குன்றத் தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோனும் நிற்கூறும்மே” என்றும், “கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு, விரைந்து வந்து சமந்தாங்கிய, வல்வேல் மலையனல்லனாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கெனத் தோற்றோன்றானும் நிற்கூறும்மே” (புறம்.125) என்றும் பெருஞ்சாத்தனா ரென்பார் எடுத்தோதுவது காண்க.

தம்மோடு எதிர்நின்று பொரும் வேந்தன் அஞ்சிய போது அவனொடு பொருவது வீரமன்று. பகை வேந்தர் போந்து தம் அரனை முற்றுகையிட்டுக் காவல் மரத்தைத் தடியக் கண்டும் போர் செய்தற்கு அஞ்சித் தம் அரணிடத்தே வேந்தர் மடிந்திருப்பரேல், அவரொடு பொருவது மானம் மிக்க தமிழ் வேந்தர்க்கு நாணுடைச் செயலாகத் தோன்றுகிறது. கருவூரிடத்தே மடிந்திருந்த வேந்தனை விட்டொழியாது பொருதழிக்கலுற்ற சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழா ரென்னும் சான்றோர்,

“தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசம் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே” (புறம்.36)

என்று பாடித் தெருட்டுகின்றார்.

போருடற்றுமிடத்தே இன்னாரொடு இன்னார் பொருதல் இன்னார்க்குப் பின் இன்னார் பொருதல் வேண்டு மென்ற முறையும், வேந்தன் ஏவினாலன்றித் தாமே சென்று வீரர் பொரலாகா தென்னும் முறையும், பெரும் போர் நிகழுமிடத்து வேந்தர் தாமே முன் சென்று பொரும் முறையும் போர்த்துறைக்கண் காணப்படுகின்றன. போர் முடிந்தபின், வேந்தன், போர் வீரரை ஒருங்குகூட்டிப் போர்விருந் தொன்று செய்கின்றான். அவ்விருந்தில் வீரர் வாள்பற்றி நிற்பது குற்றமாகம் (புறம்.292); ஆயினும் அவன் மிகச் சீரிய வீரமும் போர் வன்மைச் சிறப்பும் உடையனாயின், போர் நிகழ்ச்சிக்கண் நிகழ்ந்தன எவை யேனும் எடுத்தோதுதற்கு அறிகுறியாக வாள்பற்றி நிற்பன். இவ் விருந்தில் அரசனும் தானை வீரருடன் ஓருங்கிருந்து உண்பன். வீரர்க்குக் கள் வழங்கப்படும். படுங்கால், ஒரு புலவர் ஆங்கிருந்து போர் வீரரின் குடிநிலையை விருந்தவை யறிய எடுத்து விளம்புகின்றார் (புறம்.290).

போரில் புண்பட்டு வரும் வீரருடைய புண்ணை மகளிர் தக்க மருந்திட்டு ஆற்றுகின்றார்கள். வீரர் மகிழுமாறு போரிசை பாடலும்* தீக்காற்றுப் புகாதவாறு ஐயவி புகைத்தலும் வேப்பிலை மாலை கட்டி மனையைப் புனைவதும் செய்கின்றனர் (புறம்.296). மகளிர் போர்க்களம் சென்று ஆடவர் செய்யும் போர்த் தொழிலைக் காணாராயினும், போர் முடிவிற் சென்று காண்டலும், ஆடவர் போர்த்திறங் கேட்டு மகிழ்தலும் பெருவழக்காகும். ஒருத்தி தன் கணவனுடைய போர்ச் செயலைக் கேட்கும் வேட்கையுடையளாக அவர் கட்கு, “நின் கேள்வன்,

“தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து1,
இறையும் பெயரும் தோற்றி, ‘நுமருள்
நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்’ கெனப்
போர்மலைந் தொருசிறை நிற்ப, யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே” (புறம்.294)

என்று சான்றோர் கூறுகின்றனர்.

இது கேட்டுப் பெரு மகிழ் வெய்தும் மகளிரது வீரம் மிக நலம் பயப்பதாகும். தம் வயிற்றிற் பிறந்து தமது முலைப்பா லுண்ட மக்கள் மறங்குன்றா மானமும், வீரம் செறிந்த வீறாப்பு முடையராதல் வேண்டுமென்பது அவரது உட்கோள். ஒருத்தி தன் மகன் போர்புரிந்து, “இடைப்படை யழுவத்துச் சிதைந்து வேறாகிய மாண்பு கண்டு அருளி, வாடுமுலை யூறிச் சுரந்தனள்” (புறம்.295) என்றும், வேறொருத்தி, “சிதைந்து வேறாகிய, படுமகன் கிடக்கை காQஉ, ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே” (புறம்.278) என்றும் சான்றோர் கூறுதலைக் காண்மின். செருப்பறை கேட்ட ஒருத்தி, தான் ஒரு மகனல்ல தில்லா ளாயினும், வேல் கைக் கொடுத்துப் போர்க்கு விடுப்பதும், நின் மகன் போர்க்களத்தே படையழிந்து மாறினன் என்பது கேட்டு ஆறாச் சினத்தளாய்ப் போர்க்களம் நோக்கிச் செல்லலுற்று, “மண்டமர்க்குடைந் தனனாயின், உண்டவென் முலையறுத்திடுவன்” என்று கூறுதலும், நின் மகன் யாண்டுளன் என்று கேட்டார்க்கு, அவனை, புலியிருந்து போகிய அளைபோல, “ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே” என்பதும் பிறவும் இம் மகளிரது வீரத்துக்குச் சான்றுகளாகும்.

** வாழ்க்கை:**
இவ் வீர மக்கள் இல்லிருந்து அறம் புரியுந் திறம் மிக்க நயமுடையதாகும். குறிஞ்சி நிலத்தவர் விருந்தோம்பும் திறம் கூறலுற்ற ஏணிச்சேரி முடமோசியார், “சிலைப்பாற்பட்ட முளவுமான் கொழுங்குறை, விடர்முகை யடுக்கத்துச் சினை முதற் சாந்தம்; புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும், இருங்கேழ் வயப்புலி வரிய தட்குவைஇ விருந்திறை நல்கும் நாடன்” (புறம்.374) என்று தெரிவிக்கின்றார். தம்மை நாடி வருவோர்க்கு உடை முதலியன தந்து அறம் புரியும் திறத்தை, ஓளவையார், “திருமல ரன்ன புதுமடிக்கொளீஇ மகிழ்தரல் மரபின் மட்டே யன்றியும், அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டலன்றி…… அகடுநனை வேங்கை வீகண்டன்ன, பகடு தரு செந்நெல் போரொடு நல்கிக், கொண்டி பெறுகென்றோனே” (புறம்.390) என்று மொழிகின்றார். இரவிடை வந்தோர்க்கு, “அதளுண் டாயினும் பாயுண்டாயினும் யாதுண்டாயினும்” (புறம்.317) கொடுத்து உறங்குவித்துச் சிறப்பிக்கும் உயர்வும், கணவன், “பரிசில் பரிசிலர்க்கு ஈய”க் கண்டும், அவன் மனையாட்டி, “பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கை தூவா” (புறம்.334)ப் பெருமையும், “கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து………. பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்” (புறம்.151) கொடையும், கணவன் இறந்துபட்டவழி மகளிர், குழல் களைதலும், இழையணியாமையும், கைம்மை நோற்றலும், உடனுயிர் விடுதலும், தீப்பாய்தலும், பிறவும் இத் தமிழ் நன்மக்கள்பால் காணப்படுகின்ற செயல் வகைகளாகும்.

பெண்களின் உருநலனும் குணநலனும் கேள்வியுற்று வேந்தர் மகட்கொடை வேண்டலும், அவர்பால் மறப்பண்பும் அறவுணர்வும் குன்றியிருக்குமாயின் பெற்றோர் மகட் கொடை மறுத்தலும், அது வாயிலாகப் போர் நிகழ்தலும் பண்டைநாளை மரபாகும். மகட் பேசியபின் மணமகன் போர் குறித்துப் பிரியலுறின், வாள் வைத்து மணம் புரிதலும் பண்டைத் தமிழ் மரபாகும். (புறம்.332).

** கடவுட் கொள்கை:**
பண்டைத் தமிழ் மக்கள் பல்வேறு தெய்வப் பெயர்களை வழங்கியிருக்கின்றா ராயினும் புறநானூற்றில் சிறப்பாக முக்கட் செல்வற்கும் முருக்க கடவுட்கும் கோயிலுண்மை தெரிகிறது. “பணியியரத்தை நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே” (புறம்.6) என்றும் “அணங்குடை முருகன் கோட்டம்” (புறம்.299) என்றும் வருதல் காண்க. இவர்களே யன்றி, திருமால், இமையவர், பலதேவன் முதலிய கடவுளரும் கூறப்படுகின்றனர். ஞாயிற்றின் வெப்பத் தைத் தாங்கி நிலமக்கட்கு வேண்டியவளவு நல்கும் முனிவரருண்டென்றும் அவர்கள் காற்றையுணவாகக் கொண்டு சுடரொடு திரிகின்றன ரென்றும் இப் புறநானூறு கூறுகின்றது (புறம்.43). முருகன் மலையிடத்தும் நீர்த்துறை யிடத்தும் கோயில் கொள்வன். முக்கட் செல்வன் மூவெயில் முருக்கிய செய்தியும், ஆலின் கீழ் இருப்பதும், கறைமிடறும் மூன்று கண்களும் உடையனாகிய இயல்பும் பாராட்டிக் கூறப்படுகின்றன. முருகன் கோயிலில் தூய்மையில்லா மகளிர் ஒடுங்கித் தலைகவிந்து நிற்பரென்பர் (புறம்.299) குறவர் மழை வேண்டியிருப்பினும், பெய்யும் மழை மிக்க வழியும் கடவுளைப் பலிதூய்ப் பரவுகின்றார்கள் (புறம்.143).

இவ்வண்ணம் கடவுளுண்மையுணர்ந்து வழிபட்டொ ழுகிய இம் மக்கள் வினையுணர்வும், மறுபிறர்புண்மையும் மேற்கொண்டி ருக்கின்றனர். “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங் காலைப் புணை பிறிதில்லை” (புறம்.367) என்றும், “தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே” என்றும், “நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர், முறை வழிப்படூ உம் என்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம்.192) என்றும், “உணர்ந்த வேட்டத் துயர்ந்திசினோர்க்குச், செய்வினை மருங்கின் எய்துலுண்டெனில், தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்” (புறம்.214) என்றும் வருவனவும் பிறவும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. இவற்றோடு, போரிற் பட்டோர் தேவருலகத்தே இன்புறுவர் என்னும் கொள்கை வீரர் நெஞ்சில் ஊறியிருக்கிறது: “ஆரமருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலையெஃக மறுத்த வுடம் பொடு வாரா வுலகம் புகுதல்” ஒன்றெனப் படைதொட்டனனே குரிசில் (புறம்.341) என ஆசிரியர் பரணர் கூறுவது காண்க.

இக்கூறிய உணர்வுகளால் உடலோடு கூடி இவ்வுலகில் வாழும் வாழ்க்கையின் இன்பநிலை, துன்பநிலை இரண்டனையும் இனிதறிந்து வாழ்வாங்கு வாழும் நல்லுணர்வு இப் பண்டைய நன்மக்கள்பால் விளங்கித் தோன்று கிறது. ஒரு சான்றோர். “ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப், பூவும்பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து, இரவலர்க் கருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்” (புறம்.367) என்றும், வாழ்நாளும் நிலையின்றிக் கழிவ தென்றற்கு, “குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண், பொதுமை சுட்டிய மூவருலகமும், பொதுமை யின்றி யாண்டிசினோர்க்கும், மாண்டவன்றே யாண்டுகள்” (புறம்.357) என்றும், “விழவிற் கோடியர் நீர்மைபோல, முறை முறை ஆடுநர் கழியு மிவ்வுலத்துக் கூடிய, நகைப்புறனாக நின் சுற்றம், இசைப் புறனாக நீ ஓம்பிய பொருளே” (புறம்.29) என்றும் கூறுவர். இவ்வுலகத்தே உயிர்கள் கூத்தாட்டவைக் குழாம் போலக் கூடிப் பிரியும் செயலால் உண்டாகும் துன்ப நிலையினையும், “இன்னாதம்ம உலகம்” என்றோதி, இதனைத் துறந்து, “இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே” (புறம் 194) என்று எடுத் துரைத்து, இனிய காண்டற்கு வாயில் கூறுவார்போல, “நல்லது செய்தலாற்றீராயினும், அல்லது செய்த லோம்புமின் அதுதான், எல்லாரும் உவப்பதன்றியும், நல்லாற்றுப்படூஉம் நெறியுமாரதுவே” (புறம்.195) என்றுரைக்கும் சான்றோரும் இருந்திருக் கின்றனர்.

** துறவு:**
இவ்வுலகில் யாக்கை, இளமை, செல்வம் முதலியன நிலை பேறின்றிக் கழிவது கண்டு, நிலைத்த வாழ்வு பெற விரும்புவோர் இதனைத் துறந்து சேறலே தகுதியென்றற்கு, “இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோர்” என்றாற் போல, “இன்னா வைகல் வாராமுன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறம்.363) எனத் துறவு வற்புறுத்தலும் பண்டைச் சான்றோர் மேற்கொண்டிருக்கின்றனர். இத் துறவுக்கு இடையூறாகச் சுற்றம் சூழவாழும் மனை வாழ்க்கை இருத்தலை யறிந்து, “ஓடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம்.193) என்றலு முண்டு.

துறவு பூண்டோர் தமக்குண்டாகும் நலந்தீங்குகளை ஒப்பாகக் கருதி இரண்டினிடத்தும் உவப்பு வெறுப்பின்றி யொழுகு மாற்றால் “யாதுமூரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலு மவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே வாழ்தல், இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னா தென்றலும் இலமே” (192) என்று தம் உட்கோளைத் தெரிவித்து நம்மைத் தெருட்டுகின்றனர். இத்தகைய நல்லறிவும் அருந்துறவும் பூண்டோர், நீராடி, தாளியிலை முதலிய இலை, காய், கனி யுண்டு உண்மை நிலையினைத் தலைக்கூடுகின்றனர். இவர் தாம் முன்னர்த் தம் இல்லிருந்தாற்றிய நல்லறப் பயனாய்த் துய்த்த இன்பத்தையும், இப்போது துறவுபூண்டு தவம் செய்யும் திறத்தையும் கண்ட மாற்பித்தியார் என்ற சான்றோர், ஒரு துறவியைப் பார்த்து,

“கழைக்கண் நெடுவரை யருவி யாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடைப் புலர்த்துவோன்” (புறம்.251)

ஓவத்தன்ன தன் இடனுடை மனையின்கண், “பாவை யன்ன குறுந்கொடி மகளிர், இழைநிலை நெகிழ்த்த மள்ளன்” (புறம்.251) என்றும், வேறொரு துறவியைக் காட்டி, இவன், பண்டு, “இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாயினன்;” இப்போது, அருவி நீரோடுவதால், “நிறம் பெயர்ந்து, தில்லையன்ன புல்லென் சடையோடு, அள்ளிலைத் தாளி” (புறம்.252) கொய்கின்றான் என்றும் கூறுகின்றார்.

இவ்வாறு துறவுபூணும் உரவோர், அதனைப் பூணா முன் தம் நாட்டு அரசர்க்குப் “படை வேண்டுவழி வாளுதவியும், வினை வேண்டுவழி அறிவுதவியும், வேண்டுப வேண்டுப” (புறம்.179) வேந்தர்க்கு வழங்கி வீறு பெற்றவராவர். தம் அரசன் ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையனாதல் வேண்டும் (புறம்.55) என அவற்கு அறிவுறுத்துவர். எவ்விடத்து ஆடவர் நல்லவரே அவ்விடமே நிலவுலகில் சீரிய நலமுடைத் தென்று கருதும் (புறம்.187) நயமுடை யோராவர்.

இச்சான்றோர் நற்குண நிறைவால் சால்புடைய ராதலே யன்றி மறமாண்பிலும் சால்புடையராவர். மறக்குடியிற் பிறந்தார், “குழவி யிறப்பினும் ஊன்றடி பிறப்பினும், ஆளன்றென்று வாளிற்றப்பார்” (புறம்.74); மானம் படவரின் உயிர் வாழார். “தமர் தன் தப்பின் அது நோன்றலும், பிறர் கையறவு தான் நாணுதலும், படைப்பழிதாரா மைந்தினனாகலும், வேந்துடை யவையத்து ஓங்குபு நடத்தலும்” (புறம்.157) ஒவ்வொருவருக்கும் உளவாகும் உயர் பண்புகளாகும். தாம் எத்துணைவலியராயினும், அவ்வன்மை தோற்றுவிக்கும் செயல் நிகழுமிடத்து அது குறித்துத் தம்மை வியவார் (புறம்.30); சொல்பெயராத் துணி நாவுடையர் (புறம்.341). அவர் பெற்றிருந்த ஒளியினைக் கண்டு வியந்த மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் என்னும் சான்றோர்,

“நல்லரா வுறையும் புற்றம் போலவும்
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளனென வெரூஉ மோரொளி
வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே” (புறம்.309)

என்று பாராட்டுகின்றார்.

** ஈமக் கடன்:**
இத்தகைய மறச்சான்றோர் போரில் புகழுண்டாக மடிவராயின், இவருடைய பெயரும் பீடும் ஒரு நல்ல கல்லில் எழுதி அதனை ஓர் சிறப்புடைய இடத்தே நட்டு, மயிற்பீலியும் மாலையும் சூட்டி வழிபாடு புரிவது பண்டைத் தமிழ் நன்மக்கள் கொண்டிருந்த நற்கொள்கையாகும். “பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு, அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து, இனி நட்டனரே கல்லும்” (புறம்.264) என்று சான்றோர் கூறுதல் காண்க. இந் நடுகல்லையும் பட்டவிடத்தே நடாது வழிச் செல்வோர் கண்டு வழிபடுமாறு, பலரும் செல்லும் வழியருகே நடுவது இயல்பு என்பார், “நல்லமர்க் கடந்த நாணுடைமறவர், பெயரும் பீடுமெழுதி அதர்தொறும் பிறங்கு நிலை நடுகல்” என்றும், “அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்றும் சான்றோர் (அக.67,131) கூறுவதனால் அறியலாம். இக்கல்லை வழிபடுவோருள் கோவலர் வேங்கைப் பூவைப் பனை நாரால் மாலைதொடுத் தணிந்து வழிபாடு செய்கின்றனர் (புறம்.265).

ஏனையோர் இறப்பின், அவர்களைச் சுடுவது, தாழியிற் கவித்துப் புதைப்பது என்ற இருவகைச் செயல்கள் காணப்படு கின்றன. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்த போது. “நெடுமாவளவன் தேவருலக மெய்தின னாதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி” (புறம்.228) எனத் தாழியிற் கவித்த செய்தி கூறப்படுகிறது. பூதப் பாண்டியன் என்பான் சுடலையில் வைத்துக் கொளுத்தப் பெறுகின்றான், அவன் மனைவியும் தீயிற் பாய்ந்து உயிர்விடுகின்றாள் (246). இறந்தாரைப் பாடையிற் கிடத்தி வெள்ளாடையாற் போர்த்துச் செல்லும் வழக்கு (புறம்.286), பண்டை நாளிலும் காணப்படுகிறது. கணவனை இழந்த மகளிர், பழஞ் சோறுண்டு பரற் பெய் பள்ளியில் பாயின்று வதியும் கைம்மை மேற்கொள்கின்றனர். (புறம்.246) இறந்தோர்க்குப் பிண்டம் படைத்து வழிபடும் செயல் (புறம்.234,363) பண்டை நாளை வழக்கே யாகும். காதலன்புடைய மனைவி இறந்தவிடத்துக் கணவன் வருந்தும் நிலையினைத் தபு தாரநிலையென்று (புறம்.245) சான்றோர் காட்டி, வருந்தும் திறத்தை மிக உருக்கமாகப் பாடுகின்றனர். சுடுதலினும் தாழியிற் கவித்துப் புதைப்பது முதியோர்க்கும் செல்வமிக் கோர்க்கும் நிகழ்ந்திருக்குமோ என்று நினைப்பதற்குத் தாழிகவிக்கும் செயல் கூறும் பாட்டுகள் இடந்தருகின்றன.

வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்தோர் முடிவில் தவமே சீரிதென்று கருதுகின்றனர். “வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு, ஐயவி யனைத்தும் ஆற்றாது” (புறம்.358) என்று ஒரு சான்றோர் கூறுகின்றார்.

** கொள்கைகள்:**
இனி, இப் பண்டை நன்மக்களிடத்தே மிகப்பல கொள்கைகள் காணப்படுகின்றன. நாள் பார்த்தல், புள்நிமித்தம் காண்டல் (புறம்.124) வானத்தே மீன் விழுந்தால் அரசர்க்குக் கேடு வருமெனல் (புறம்.221), நடுப்பகலில் தும்பி பறப்பதும், இரவில் விளக்கு நில்லாமையும், கூகை குழறலும், பெருந்தூக்கம் வருதலும் துந்நிமித் தங்களென்றல் (புறம்.280) என்பன முதலியன நிமித்தங்களாகச் சான்றோர் உரைக்கின்றனர்! எண்டிசையும் எரிகொள்ளி வீழ்தலும் இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றலும், ஞாயிறு பலவிடத்தும் தோன்றுதலும், கெடுபுள்ளோசையும், பல்வீழ்தலும், எண்ணெயாடலும், யானை யேறுதலும், உடைகளை உடுத்தலும் பிறவும் கனவிற் காணப்படுதல் கூடாது: கண்டார்க்குத் தீங்குண்டாம் (புறம்.41). நாட்டில் மழை யில்லையாயின் அதற்கு அரசன் கோல்நிலை திரிதல் ஒருகாரணமாதலுடன், கிரகங்கள் தம் நிலை பெயரினும் மழை யின்றாம் (புறம்.117). இப்புறநானூற்றுக் காலத்தே வானுலகப் பொருள்களை ஆராய்ந்தறிந்த சான்றோர் இருந்திருக்கின்றனர்.

“செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந் தறிந்தோர் போல என்றும்
இனைத்தென் போரும் உளரே” (புறம்.30)

என வரும் சான்றோர் சால்புரையால் தெளிகின்றோம்.

அரசனுடைய போர் முரசிற்கு நீராட்டும், குருதிப் பலியிட்டுச் செய்யும் பூசனையும் நடைபெறுகின்றன; அம்முரசிருக்கும் கட்டிலின் கண் பிறர் எவரும் படுத்துறங்கல் கூடாது; உறங்குவோர் உளராயின் அவரைக் கொல்வதே தக்க தண்டமாகும்.

விற் பயிற்சி செய்வோர் சேய்மையில் ஒரு கம்பம் நிறுத்தி, அதனைக் குறியாகக் கொண்டு அம்பெய்து பயில்வர். “விளங்கு படை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம்” (புறம்.169) என்பதனால் அது தெரிகின்றது.

“முருகு மெய்ப்பட்ட புலைத்தி பொல” (புறம்.259) என வருதலால் மகளிர் மருள்கொண்டு தெருவில் ஆடித்திரியும் இயல்பும் அந்நாளில இருந்தது தெரிகிறது.

நன்மக்கள் விலை மகளிரைக் கூடுதல் குற்றமாகும். “தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே” (புறம்.73) என்று சோழன் நலங்கிள்ளி கூறும் வஞ்சினத்தால் இக்கருத்து விளக்க மெய்துகிறது. விலைமகளிர் வேறு பரத்தையர் வேறு; இவ்விருவரையும் ஒரு திறமாகக் கருதுவது வழுவாகும்.*

இந்நாளி லிருந்த சான்றோர்க்குத் தாம் வாழ்ந்த நாட்டின்பால் இருந்த அன்பு அளவிடற் பால தன்று. பாரி உயிர்நீத்த பின்னர், அவனோடு உடனிருந்து ஒருவாழ்வு வாழ்ந்த கபிலர், அவனுடைய பறம்பு நாட்டை விட்டு நீங்குங்காலத்து, அதனைப் பிரியமாட்டாது வருந்தி யுரைக்கும் உரைகள் அவரது நாட்டுப் பற்றின் நயப்பாட்டினை நன்கு நவில்கின்றன. “பெட்டாங்கீயும் பெருவளம்பழுனி, நட்டனை மன்னோ முன்னே இனியே, பாரிமாய்ந்தெனக் கலங்கிக் கையற்று, நீர்வார் கண்ணேம் தொழுது நிற்பழிச்சிச், சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே” (புறம்.113) என்பது அதற்கு நல்ல சான்று பகரும்.

இனி, பண்டைச் சான்றோர், தம் மனம் இனிக்குமாறு நலம் செய்த நன்மக்களைத் தூய நாவால் செந்தமிழால் வாழ்த்துவது மரபாகும். பொதுவாக நீடுவாழ்க என்ற கருத்தமைய, வாழ்நாள் ஆற்று மணலினும், கடற்கரை நுண் மணலினும், விண்மீனினும் பலவாக வாழ்வாயாக என்பது பெரும்பான்மை. அதியமான் நெடுமான் அஞ்சி சாதலை நீக்கும் வன்மை பெற்ற நெல்லிக் கனியைத் தானுண்ணாது ஒளவைக்குத் தந்தானாக, அதனைப் பாராட்டி வாழ்த்த லுற்ற அவர், “போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி, பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீல மணிமிடற் றொருவன்போல, மன்னுக பெரும நீயே” (புறம்.91) என்று வாழ்த்துவதும், நாஞ்சில் வள்ளுவனது வண்மை நலங்கண்டு வியந்த ஒரு சிறைப் பெரியனார், “நீ வாழியர் நின்தந்தை தாய் வாழியர் நிற் பயந்திசினோரே” (புறம்.137) என்று வாழ்த்துவதும், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பார், பிட்டங் கொற்றனது பெருங்கொடையை வியந்து வாழ்த்தலுற்று, அவன் காலில் முள்ளும் தைத்தல் கூடாது என்பார், “அன்னனாகலின் எந்தை யுள்ளடி, முள்ளும் நோவ வுறாற்க தில்ல, ஈவோ ரரிய விவ்வுலகத்து, வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே” (புறம்.171) என்று வாழ்த்துவதும், பொறையாற்றுக் கிழானை வாழ்த்தக் கருதிய கல்லாடனார், அவனது நாட்டை, “துளிபதன் அறிந்து பொழிய, வேலியாயிரம் விளைகநின் வயலே” (புறம்.391) என்று வாழ்த்து வதும் எண்ணுந்தோறும் மிக்க இறும்பூது பயக்கின்றன.

பண்டைத் தமிழ் வேந்தர் தமக்கு ஏதேனும் பெருங்குறை நேரின் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் செயலொன் றுடையராவர். இதனை வடக்கிருத்தல் என்பர். இச் செயலை மேற்கொண்டோன், மக்கள் வழக்கம் இல்லாததோரிடத்தே புல்லைப் பரப்பி வடக்கு நோக்கி யிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறப்பன். இந்நூற்கண் இவ் வடக்கிருக்கும் செயல் பெரிதும் வேந்தராற்றான் மேற்கொள்ளப்படுகின்றது. கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்ணுற்றது காரணமாக மானம் பொறாது சேரமான் பெருஞ் சேரலாத னென்பான் வடக்கிருந்த செயலை, “உவவுத் தலை வந்த பெருநாளமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர், புன்கண்மாலை மலை மறைந்தாங்குத், தன்போல் வேந்தன் முன்பு குறித் தெறிந்த, புறப்புண் நாணி மறத்தகை மன்னன், வாள் வடக்கிருந்தனன்” (புறம்.65) என்று கழாத் தலையாரும், “மிகப் புகழுலக மெய்திப் புறப்புண் நாணி வடக்கிருந்தோனே” (புறம்.66) என்று வெண்ணிக் குயத்தியாரும் பாடுகின்றனர். இவ்வாறே கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்ததும், அவனைக் காணாதிருந்து காண்டற்கு வந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர் வடக்கிருந்ததும், அச் சோழற்கு அமைச்சுக் கடம்பூண்டொழுகிய பொத்தியார் வடக்கிருந்ததும் இவ்வழக்கின் மிகுதியை நன்கு வற்புறுத்துகின்றன.

இத் தமிழ நன்மக்கள் இசை நாடகங்களை வளர்ப்பதில் மிக்க ஊக்கமுடையராவர். கூத்தர், பாணர், பொருநர், வயிரியர், கொடியர், விறலியர், யாழோர் என்பவர் முதலிய இசைவாணர் மிகப் பலர் இருக்கின்றனர். இவரது இசைநலத்தை முடிவேந்தர் முதல் அனைவரும் பாராட்டி, இவர்கட்குப் பரிசில் நல்குவர். “ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென, மாட மதுரையும் தருகுவன்” (புறம்.32) என்று சான்றோர் கூறுதல் காண்க. யாழ் இசைப்போர் மாலையிற் செவ்வழிப் பண்ணும், காலையில் மருதப்பண்ணும் இசைத்தற்குரியர்; நின் கொடை நலத்தால் மயங்கி, தலை தடுமாறி, “மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி” இசை நெறியை “எமர் மறந்தனர். அது நீ புரவுக் கடன் பூண்ட வண்மையானே” (புறம்.149) என்று வன்பரணர் வல்விலோரிக்குக் கூறுகின்றார். மண்முழா, பண்யாழ், கண்விடு தூம்பு, களிற்றுயிர், எல்லரி, ஆகுளி, பதலை, முதலாக இசைக்கருவிகள் மிகப் பலவாகும். அவற்றை இசைக்குந் துறை இருபத்தொன் றென்பார், “மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி” (புறம்.152) என்று சான்றோர் கூறுகின்றனர். பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியம் முழுதும் இசைக் கலைக்கும் நாடகக் கலைக்கும் பேராதரவு தந்து சிறப்பித்த பெருமையே பேசப்படுமெனின், அது சிறிதும் புனைந் துரையாகாது.

இதுகாறும் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம் என்பது பொருளாக, பண்டைத் தமிழ் நன்மக்களிடையே இருந்த சமூக வகைகள், அவர்தம் உறையுள் வகை, உண்டிவகை, உடைநலம், அணிவகை, தொழின் முறைகள், வாணிபம், அரசியல், போர்முறை, வள்ளன்மை, இல்வாழ்க்கை, வீரம், சான்றாண்மை, கடவுட் கொள்கை, துறவு, ஈமக்கடன், கொள்கைகள் முதலிய கூறுபாடுகளை ஒருவகையாகக் கூறிவரக் கேட்குமாற்றால், என்னைப் பேசும்வகையில் ஊக்கி மகிழ்வித்த உங்கள் திருமுன், முடிவாக அத் தமிழ் நன்மக்கள் மேற்கொண் டின்புற்ற விழாக்கள், விளையாட்டுகள் முதலிய வற்றைப் பற்றிச் சிறிது கூறி என் சொற்பொழிவை முடித்துக்
கொள்ளக் கருதுகின்றேன்.

** விழா:**
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைச் சிறப்பிக்கப் புகுந்த நெட்டிமையார் என்னும் சான்றோர், அப் பெருவழுதியின் முன்னோன் ஒருவன் கடற்றெய் வத்துக்கு முந்நீர் விழாவொன்றாற்றி, பஃறுளியாற்றினை ஏற்படுத்தினான் என்பார், “குடுமிதங்கோ,….. முந்நீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி” (புறம்.9) என்று குறிப்பிடுகின்றார். பெரிய மாட மனைகளில் விழாக்கள் கொண்டாடப் படுகின்றன; அக்காலத்தே செம்மறிக் கிடாய்களைப் பலியிடுகின்றனர் (புறம்.33). போர் நிகழ்ந்தபின் அதன்கண் விளைந்த வெற்றிகுறித்து வெற்றி விழா வயர்தலும் இந்நன்மக்கட்கு இயல்பு (புறம். 84). விழாக் காலங்களில் களமர் அரியல் என்னும் கள்ளை ஆமையிறைச்சியுடன் உண்டு, ஆரல் மீனைச் சுட்டுக் கதுப்பி லடக்கிக் கொண்டு உறக்கமின்றி இரவு முழுதும் விளையாட்டயர்கின்றனர் (புறம்.212). திருமணங்களை வதுவை விழவென்று கூறி அக்காலத்துப் புதியராய் வந்தோரைச் சிறப்பிக்கும் செயலை, “வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம், வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க” (புறம்.372) என்று மாங்குடி கிழார் உரைக்கின்றார். இவ்வாறு சிறு சோற்றுவிழாவும், வில்விழாவும் பிறவும் காணப்படுகின்றன.

** விளையாட்டு:**
இனி, விளையாட்டு வகைகளைக் கூறலுற்றால், என்சொற் பொழிவு மிக நீளும் என்று அஞ்சுகின்றேன். குறவர் சிறார் ஊகம் புல்லின் நுனியில் உடைமுள்ளைச்* செருகி, வளாரால் செய்த வில்லில்வைத்து அம்பெனத் தொடுத்து விளையாடும் நலமும், “நெடுநீர்க் குட்டத்துத் துடும் எனப்பாய்ந்து, குளித்து மணற்கொண்ட” இளமை நலமும், மகளிர் ஓரையாடுவதும், கழங்காடுவதும், கடலிற் குதித்து விளையாடுவதும், நரை முதியோர் சூதாடுவதும் இத் தமிழ் நன்மக்கள்பால் பெருகக் காணப்படுகின்றன. மற்போர்க்குக் குறைவில்லை; அல்லிக் கூத்தும் குரவைக் கூத்தும் ஆங்காங்கு நிகழ்கின்றன.

கரும்புவிளை கழனியில் வேலைசெய்யும் உழவர், அதன் வேலிக்குப் புறத்தேயிருந்து கரும்பு கேட்போருக்கு அறங்குறித்துச் சில வெட்டி வெளியே யெறிகின்றனர்; அவ்விடம், கூத்தராடும் களம்போலத் தோன்றுகிறதென்பார், “புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர், புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப், பூப்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம்.28) என்று கூறுகின்றனர்.

** வழக்கு:**
ஏணிச்சேரி முடமோசியார் என்பார் ஆஅய் என்பானைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றுவருமாறு விறலியொருத்திக்குக் கூறுவாராய், நீ ஆய் அண்டிரனைக் கேட்டிருப்பையே யன்றிக் கண்டிராய்; காண்டல் வேண்டினையாயின், நின் கொண்டைமேல் காற்றடிக்கச் செல்க என்பார், “நின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக், கலவமஞ்ஞையிற் காண்வர இயலி…… சென்மே” (புறம்.133) என்கின்றார். சிறக்கச் செல்க என்றற்கு அக்காலைச் சான்றோர் ‘கூந்தலில் வரைவளி யுளரச் செல்க’ என்னும் வழக்கொன்றினை வழங்கி யிருத்தலைக் காண்மின்.

“இல்லார்க்குக் கிழியீடு வாய்த்தாற்போல்” என்று திருவிளை யாடற் புராணம் முதலிய பிற்கால நூல்களிற் காணப்படும் வழக்காறு போலக் “கிளியீடு வாய்த்தாற் போல” என்றொரு வழக்கு இத்தமிழ்ச் சான்றோர் வழக்கின்கட் காணப்படுகிறது. தன்னை நாடிவரும் இரவலர்க்கு நாஞ்சில் வள்ளுவன் தன் பெருவளத்தை வரையாது வழங்கும் வண்மையைச் சிறப்பிக்கப் புக்க மருதனிளநாகனார் என்னும் சான்றோர், நாஞ்சில் வள்ளுவன், “கிளிமரீஇயவியன் புனத்து, மரனணி பெருங்குரலனையன்” (புறம்.138) என்ற பாராட்டு மாற்றால், இவ்வழக்காற்றினைப் புலப்படுக்கின்றார். எறும்பு முட்டைகொண்ட திட்டையேறின் மழைபெய்யும் என்ற வழக்கு இக்காலத்து முண்டு; எறும்பு முட்டைகொண்டு செல்லக் காணின் விரைவில் மழை வரும் என்று நாமும் சொல்லுகின்றோம். இவ்வழக்கும் கருத்தும் பல நூற்றாண்டுகட்கு முன்பே நிலவிய தொன்று என்பதை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், “பொய்யா எழிலி பெய்யிடம் நோக்கி, முட்டைகொண்டு வற்புலம் சேரும், சிறுநுண் ணெறும்பு” (புறம்.173) என்று கூறுவதனால் தெளியலாம்.

சங்கு வயிற்றில் முத்துண்டாகும் திறம், இக்கால ஆராய்ச்சியாளரால் வேறுவகையாகக் கண்டுரைக்கப்படு கிறதெனினும், பண்டையோர், அது மழைத்துளியால் உண்டாயிற் றெனக் கருதியது, “மிசைப்பெய்த நீர் கடற்பரந்து முத்தாகுந்து” (புறம்.380) என வரும் சான்றோ ருரையால் துணியப்படுகின்றது.

“நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்” எனப் பாராட்டப்படும் கரும்பின் வகைகள் பல நம் நாட்டிற் காணப்படு கின்றன. இவற்றுள் சாவகக் கரும்பென்றும், பன்றிக் கரும்பென்றும் இருவகை யுண்டு. இவற்றுள் பன்றிக் கரும்பு, பன்றி நாட்ட தென்று எங்கள் ஒளவையார்குப்பத்துக்கு அருகிலுள்ள ஆலைக் கிராமத்தில் வாழ்ந்த முதியோர் கூறக் கேட்டிருக்கின்றn. அவ்வூரில் நெடுங் காலமாகக் கரும்பன்றி வேறு விளைபயன் சிறப்பாக இல்லாமை பற்றியே, அதற்கு ஆலைக்கிராமம் என்னும் பெயர் வழங்கி வருவதாயிற்றென்பது ஓய்மா நாட்டார் நன்கறிந்த செய்தி யாகும். சாவகக்கரும்பு என்பது எக்காலத்து நம் நாட்டிற்கு வந்ததென்று அவ்வூரவர்க்குத் தெரியவில்லை. புறநானூற்றுக் காலத்தே கரும்பு வகை யொன்று வேற்று நாட்டி விருந்து கொணரப்பட்டிருக்கிறது. இதனை எங்களூர்க்குரிய முதல்வியாகிய ஓளவையார், அதியமானைப் பாடுமிடத்து, அவன் முன்னோர், கரும்பினை வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த செய்தியைக் குறிப்பிட்டு, “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும் பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும், நீரக விருக்கை ஆழி சூட்டிய, தொன்னிலை மரபின் நின் முன்னோர்” (புறம்.99) என்றும், “அந்தரத்து அரும்பெற லமிழ்த மன்ன, கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே” (புறம்.392) என்றும் கூறியிருக்கின்றார்.

இனி இப்புறநானூற்றுக்கு உரை கண்டசான்றோர், “அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” என்ற தொடர்க்குப் “பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத் தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்” என்று உரை கூறுகின்றார். “விண்ணுலகத்தினின்று” என்பதை வருவித்தமைக்குக் கராணம் தெரிந்திலது; அவரும் கூறினா ரில்லை. பிறாண்டும், “அந்தரத்து அமிழ்தமன்ன கரும்பு” என்று ஒளவையார் கூறியருளினா ரேயன்றி, அந்தரத்தினின்று கொணரப்பட்டதென்றாரில்லை. இவணென்ற சொற்கு இவ்வுலகமென்று பொருள் கொண்டமையின், கரும்பிருந்த விடம் அவணென்றாகித் தேவருலகமாயிற்றுப் போலும். சீனர் தேவர் (celestials) எனப்படுதலின், அவர் நாட்டிலிருந்து ஒருகால் இக்கரும்பு கொண்டுவரப்பட்டிருக்குமோ என்று நினைத் தற்கு இடமுண்டாகிறது. இது நன்கு ஆராய் தக்க தொன்றாகும்.

வையாவிக்கோப் பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பாடிச் சென்ற கபிலர், வேண்டுங் காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழித்தற்கும் குறவர் மழையைப் பலிதூவிப் பரவுவர் என்ற கருத்தமைய, “மலைவான் கொள்கென உயர்பலி தூஉய், மாரியான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர் மாக்கள்” (143) என்று பாடுகின்றார். இப்பாட்டிற் காணும் குறவர் வழக்கு, இக்காலத்தே பர்மிய நாட்டவர்பாலும் காணப்படுகிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்கள்.

இவ்வாறு ஆராய்ச்சியாளர் செய்யும் ஆராய்ச்சிகள் பலவற்றாலும் பல்வகைப் பொருள்களைத் தெரிந்து கோடற்கு இடமாய், ஆராய் வார்க்கு ஆராயுந் தோறும் புதுக் கருத்துக்களை வழங்கியின்புறுத்தும் அறிவின்ப நிலையமாய்ப், பண்டைத் தமிழ் நன்மக்களின் நாகரித்தையறிந்து தெளிதற்குச் சீரிய சான்றார்ய் விளக்கும் இப் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகத்தை இதுகாறும் ஓரளவு என் சிற்றறிவின் சிற்றெல்லையில் நின்று கண்டு உங்கள் திருமுன் தெரிவித்தேன். இதனை அன்போடு கேட்டுச் சிறப்பித்த உங்கட்கு என் வணக்கத்தையும், இதனை ஆராய்ந்து கண்டுரைத்தற்கு வேண்டும் இடமும் காலமும் வாய்ப்பும் அமைத்தளித் துதவிய தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தினர்க்கு என் அன்பார்ந்த நன்றியறிவினையும் பணிவோடு தெரிவித்துக்கொண்டு என் சொற்பொழிவை இவ்வளவில் நிறுத்திக்கொள்கின்றேன்.
புறநானூறு மாநாடு

22.4.44

முதனூலா? மொழி பெயர்ப்பா ?


நம் நாட்டவருள் ஒரு சில மொழி யினர்க்குப் பழைமைக்கண் மிக்க விருப்பமும் நன்மதிப்பும் உண்டு. அதற்காகப் பல பொய்களைப் புனைந்துரைத்துப் பழைமை காட்டி மகிழ்வது அவர்கள்பால் இயல்பாக இருக்கிறது. ஊரை மூதூர் என்பதும், நூல் களை முதுநூல் என்பதும் அவர்பால் மிக்கு விளங்குகிறது.

காலத்தின் பழைமையொன்றே கொண்டு பெருமை நினைப்பதும் தருவதும் பெரும் பேதைமை. அதனால், “பண்டை யோர்க்குத் தான் நுண்ணறிவு உடைமை; இந்நாளையோர் அன்னர் அல்லர்” என்று நினைக்கும் இழிந்த பண்பு அம்மக்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளது. அவர்பால் பயில்பவர்க்கும் அப்பண்பே உருவாகித் தம்மையும் தம்பின் வருவாரையும் நுண்ணிய அறிவின ரல்லர் எனக் கருதும் தவறு நரம்புக்கால் தோறும் ஊடுருவி நிற்கிறது. அம் மடமக்கள் பெருகியதால் நம் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சிக்கும் அதன் ஆக்கத்துக்கும் பெரிய தடையும் ஊறும் உண்டாயின. திங்கள் மண்டிலத்தில் மனிதன் சென்று இறங்கிச் சிலபோது தங்கி மீண்டான் என்ற நிகழ்ச்சி தமது பொய்ந்நெறிக்குக் கேடுதரும் என்ற காரணத்தால் அச்செய்தி வெறுங் கற்பனை; மனிதனாவது மதி மண்டிலம் செல்வதாவது என்று கேட்பவர் மனவலியை யழிக்கும் படுபொய் பகர்ந்து மக்களை மயக்கும் போலியறிஞர் சிலர் இந்நாளில் ஊர்தொறும் இருந்துகொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. பொய்யர் கூட்டமும் அவரது பொய்யும் போய்மடியும் நாளே நாமும் நம்நாடும் அறிவு நலம் பெறும் அழகிய நன்னாளாகும்.

காலத்தால் முந்தும் நூல் பிந்தும் நூல் உண்டு. அவற்றின்கண் வேற்றுமையும் பெருமை சிறுமையும் நோக்கும் கீழ்மைப் பண்பு நம் நாட்டில் இந்த அளவில் நிற்கவில்லை. நூல்கள், தனிமுதலா வழிநூலா, சார்பு நூலா, புடை நூலா என ஆராய்வதும், அதனால் முதனூற் கருத்து எங்ஙனம் வளர்ந்து திருந்தி இந்நாளைய நிலைமை அடைந்துள்ளது என்ற உண்மை காண்பதும் இயலுகின்றன; மக்கள், காலப் போக்கில் மனம் திருந்தி அறிவு தெளிவுற்றுச் செம்மை நெறியில் சீர்மை பெறும் திறத்தை நன்கு உணரும் வகை நமக்கும் உண்டாகிறது. தொல்காப்பியர் காலத்தேயே நூல்கள் முதலும் வழியும் என வளர்ந்து விரிந்தன என்பது “உரைபடு நூல்தாம் இருவகை இயல, முதலும் வழியும் என நுதலிய நெறியின” என்ற நூற்பாவால் இனிது விளங்குகிறது. முதனூல் உயர்ந்தது, வழிநூல் தாழ்ந்தது; வழிநூல் தூயது, முதனூல் தெளிவில்ல தென்று பிணங்கி வேறுபட்டு ஒதுக்கும் நிலை முன்னாளில் மக்களிடையே தோன்ற வில்லை; தெளிவில்லாத சிலரிடையே அச் செயல் சில காரணம் பற்றித் தோன்றியதுண்டு. அதன் விளைவாக நூல்கள் பல பேணு வாரற்று இறந்தன.

காலப் போக்கில், உணர்வும் செயலும் மிகப் பெறும் வளர்ச்சி யால் மக்கள் மனப்பண்பும் வாழ்க்கைத் திறமும் பெருகி விரிகின்றன; உலகியல் வாழ்வே ஒரு பெருங்கலைக் கூடமாய் மக்கள் அறிவுக்குத் தெளிவுதந்து மாண்புறுத்துகிறது. அதனால் அறிவு விரிகிறது; கருத்து மலர்கிறது; உண்மையுணர்வு கூரிதாகிறது. மனத்திடை ஆயிரம் எண்ணங்கள் தோன்றி வாழ்வைப் பெருக்குகின்றன.

இவ்வகையில், தாம் கண்டதைப் பிறரும் கண்டு இன்புறச் செய்வது, கரும்பு தின்றற்குக் கூலி பெறுவது போல ஒருவருக்குப் பெரு மகிழ்ச்சியும் ஊக்கமும் பயக்கின்றது; அது காணும் அறிஞன் தான் அறிந்ததையும் எண்ணியதையும் கருதியதையும் நூல் வடிவில் தருகின்றான். இவ்வாற்றால் தோன்றும் நூற்பொருளும் முன்னே காணப்பட்டதொன்றை அடியாகக் கொண்டு மலர்வதும், புதிதாக ஒன்றினைக் கண்டுரைப்பதுமாக அமைகின்றது. புதிது கண்டுரைப்பது முதனூல்; அதனை அடியாகக் கொண்டு விரிந்து மலர்வது வழி நூல்.

ஒரு காலத்தே முதனூல் படைப்போர் சிலரும், வழி நூல் எழுதுவோர் பலருமாக நம்மிடையே இருந்துள்ளனர். வழி நூலார் நெறியை நுணுகிக் கண்ட தொல்காப்பியர், “வழியின் நெறியே நால்வகைத் தாகும்” “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து, அதர்ப்பட யாத்தலொடு அனைமரபினவே” என உரைக்கின்றார். இதனை நோக்குமிடத்து முதனூல் தமிழேயாக இருக்க வேண்டும் என்பதில்லை; வேற்று மொழியாகவும் இருக்கலாம்; வேற்று மொழி நூலை “மொழி பெயர்த்து அதர்ப்படயாத்தல்” வேண்டு மென்று தொல்காப்பியர் உரைப்பது நன்கு தெளிவாகும். இந்நாளில் விஞ்ஞான நூல்கள் பல தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்; விஞ்ஞான அறிவு மக்களிடையே பரவினாலன்றி, விரைந்து முன்னேறும் ஏனை நாட்டவரிடையே பொருளாற் சமநிலையும், பண்பால் நன்மதிப்பும் பெறுதல் இல்லையாம் என்று அறிஞர் பலர் ஆர்வத்தோடு உரைப்பது பொருத்தமே யாகும்.

இக் கருத்து வெளியாய போது முதனூல் உயர்ந்தது; மொழி பெயர்த் துரைக்கும் வழிநூல் தாழ்ந்தது என்று எவரும் உரைக்க வில்லை; அறிவுடையோர் நினைக்கவும் இல்லை. முதனூலைவிட மொழி பெயர்ப் புக்கள் மிகவுயர்ந்து பலர்க்குப் பயன்பட்ட துண்டு. ஈப்ரு மொழியிலிருந்த விவிலிய நூல் ஆங்கிலத்தில் பெயர்க்கப் பட்டபின், கற்றவர் அனைவரும் அதனையே விரும்புகின்றனர். முதனூலாகிய வான்மீகி இராமாயணத்தினும் மொழி பெயர்ப்பாகிய கம்பராமாயணம் மிக்க விருப்புடன் பயிலப்படுகிறது.

மொழி பெயர்ப் பென்பது இன்னது எனப் பலர்க்குத் தெரிய வில்லை. ஆங்கிலநூல் ஒன்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதென்பது, ஆங்கிலத்தை வரிவரியாகச் சொல் சொல்லாகப் பிரித்துத் தமிழ் காண்பது அன்று; ஆங்கிலத்தில் உள்ள கருத்தைத் தொகுத்தும் விரித்தும் தொகைவிரி வகையிலும் தமிழில் எழுதுவதாகும். அது விளங்குதற்காகவே “மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்” எனத் தொல்காப்பியர் சொல்லுகின்றார். இவ்வுண்மையறியாமல் சிலர் கம்பர் கருத்துகளை வால்மீகத்திலும் வான்மீகியின் உரைகள் சிலவற்றைக் கம்பரிலும் காண முயன்று கையறவு படுகின்றனர். கருத்தும் பொருளும் மொழி பெயர வேண்டுமேயன்றிப் பிறமொழி எழுத்தும் சொல்லுமன்று; எழுத்தையும் சொல்லையும் கொள்வது நல்லறிவுடைய மாந்தர் செயலன்று; அவ்வாறு செய்யின் மொழி பெயர்க்கும் நற்பணி விரைவில் வெற்றி பயவாது.

தமிழில் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் சேக்கிழார் எழுதிய தமிழ்த் தனி முதனூல். இதன் ஆக்கத்துக்குச் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையும் நம்பியாண்டார் நம்பி நல்கிய திருத்தொண்டர் திருவந்தாதியும் அவர் காலவரலாற்றுச் செய்திகளும் சேக்கிழாருக்த் துணை புரிந்தன. அரசியல் அமைச் சராய் இருந்தமையின், வேண்டிய இடங்கட்குச் செல்லுவதும் வேண்டும் செய்திகளைத் தக்கோரைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவருக்கு இயன்றன.

திருத்தொண்டர் அனைவரும் செந்தமிழ் நாட்டு நன்மக்கள்; அவர் பேசியது தமிழ்; வாழ்ந்தது தமிழகம், வாழ்வு தமிழ் வாழ்வு; அவர்களின் வரலாறு காண்போர் வடபுலத்து இமயப் பகுதிக்கோ நடு நிற்கும் விந்தமலைச் சாரலுக்கோ செல்ல வேண்டா. அங்கு வழங்கும் வடமொழி நூல்களை ஆராய்ந்து அலமருதல் முறையன்று. இந்த உண்மை யறியாமல் சிலர் திருத்தொண்டர் புராணம் வடமொழியில் உபமன்யு சிவபக்த விலாசம் என்ற நூலிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டது எனக் கூறுகின்றனர். அதனை வற்புறுத்தத் திருத்தொண்டர் புராணத் தையே சான்று காட்டுகின்றார்கள். இப்பெருமக்களின் உண்மை நோக்கம் யாது?

கயிலைத் திருமலைக் கடியில் முனிவர் சூழ உபமன்யு முனிவன் இருக்கையில், சுந்தரர் ஒளிப் பிழம்பாகக் கயிலை இறைவன் திருமுன் அணைவது கண்டு, அவர்கட்குக் காட்டிப் பின் அவர்கட்குச் சுந்தரர் வரலாற்றையும் அவர் உரைத்த திருத்தொண்டர் வரலாற்றையும் உரைத்தான் என்ற செய்தியைச் சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணத்தில் எடுத்து மொழிகின்றார். இதனை,

“என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
தொன்று சீர்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றென் ஆதர வால்இங் கியம்புகேன்”

என்று சேக்கிழார் கூறுகின்றார்.

இப் புராணக் கூற்றில், உபமன்யு முனிவர் பக்த விலாசம் என்ற நூலை வடமொழியில் உரைத்தார் என்றும், அதனை முதலாகக் கொண்டு சுந்தரரோ சேக்கிழாரோ உரைத்தார் என்று ஒரு செய்தியும் நமக்குச் சான்றாகக் கிடைக்கவில்லை. சேக்கிழார் பெரியபுராணம் எழுதத் துணை புரிந்தது வடமொழி உபமன்யு பக்த விலாசம் எனச் சிலர் உரைப்பது ஏன்? இந்தப் பக்த விலாசம் வந்த வரலாறு யாது?

விசய நகர வேந்தர் வரிசையுள் அச்சுதராயர் ஒருவர்; இவர் நரசநாயக்கவுடையார் மகன் வீரப்பிரதாப அச்சுததேவ மகாராயர் என்றும், எம்மண்டலமும் கொண்டருளிய வேந்தர் என்றும் சிறப்பிக்கப் படுகின்றார். (கல். ஆண்டறிக்கை. 27/1911; 356/1912.) இவ்வேந்தனது ஆட்சியில் காஞ்சிபுரம் பகுதியில் போகைய தேவமகாராயர் என்பவர் பிரதானியாக விளங்கினார். அந்நாளில் சீனிவாசயக்ஞன் என்ற வடமொழிப் புலவன் காவியப் பெயரால் உபமன்யு சிவபக்த விலாசம், ஏகாம்பரேசஸ்தவம் என்ற நூல்களையும் வேறு இரண்டு நூல்களையும் செய்தான். காஞ்சி நகரத்து வித்வ சபை கூடி பக்த விலாசத்தை அரங்கேற்றம் செய்தனர். அந்த நாள் சகம். 1453. கர ஆண்டு கும்ப மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. (9-2-1532); வேந்தன் அப்புலவனைப் பாராட்டிச் செய்யூரில் வீடும் நிலமும் கொடுத்துச் சிறப்பித்தான் என்று காஞ்சி புரத்து ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டொன்று (கல். ஆண்டறிக்கை. 274/1955-6) கூறுகிறது.

இங்ஙனம், கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பக்த விலாசத்தைக் கி. பி. 11-2 நூற்றாண்டில் தோன்றிய சேக்கிழாருக்கு முதனூலாய்த் துணை செய்தது என்பது உண்மையறிவுக்குப் பொருத்தமாகிறதா, அறிஞர்கள் காண்பார்களாக. இதுபோலவே, மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் என்ற நூல் ரௌரவாக மத்துப் பாச விமோசனப் படலத்து மொழி பெயர்ப் பென்று யாரோ சிலர் பொய் கூறிவிட்டனர்; அதனைச் சிவாக்கிரயோகிகள் என்பவர் மெய்யென்று நம்பிச் சங்கிரகம், விஸ்துருதம் என இருபாடி யங்களை வடமொழியில் எழுதினர்; மாதவச் சிவஞான முனிவர் தாம் தமிழ்ச் சிவஞான போதத்துக்கு எழுதிய சிற்றுரை பேருரை களில் அது, வடமொழி ரௌரவாகம மொழி பெயர்ப்பென்று எழுதினார். அந்நூல்களைப் படித்த சைவர் அனைவரும் உண்மை யென்றே எண்ணினர். அணிமையிற் சில ஆண்டுகட்கு முன் புதுச்சேரியில் பிரெஞ்சு நாட்டு அறிஞர் கூடி ரௌரவாகமத்தைக் கண்டு ஆராய்ந்து வெளியிட்டனர். அதன் கண் பாபவிமோசனமும் இல்லை; சிவஞான போதமும் இல்லை என்பது தெளிவாயிற்று. அதனோடு மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தனித் தமிழ் முதனூல் என்பது கலக்கமறத் தெளிய விளங்குவதாயிற்று.

இங்ஙனம் உண்மைகளைக் கண்டு உரைப்பதை விடுத்துப் பொய்யும் புனைந்துரையும் தொடுத்துப் பழைமையின் உண்மை நிலை தோன்றாவாறு செய்யும் புன்செயல் நாட்டில் சிறப்பாகச் சமய இலக்கியத் துறைகளில் இடம் பெற்றிருப்பது வருந்தத் தக்கது. இது போன்ற தீய செய்கைகளால் பழங்காலப் பல்லவர், சோழர், பாண்டியர், கங்கர், கடம்பர் முதலிய வேந்தர் மரபுகளின் உண்மை வரலாறு மறைந்து போயிற்று. மலைகள் குன்றுகள் ஆறுகள் நாடுகள் ஆகிய வற்றின் பழைமையியல் மாறி மறைந்திருக்கின்றன.

சங்ககாலப் பாண வேந்தர் மரபு புராணவுலகத்து மரபினோடு தொடர்புண்டு உண்மையொளி இழந்துளது; பல்லவ மல்லனால் நிறுவப் பெற்ற கடற்கரை மாமல்லபுரம், மாபலிபுரமாய்ப், பல்லவர் வரலாற்றுண்மையைப் போக்கிவிட்டது. செம்மண்பரந்த நாடு என்ற பொருளில் நிலவும் நாடு அண்ணா நாடு; அந்நாட்டு மலை அண்ணாமலை; அருணகிரி, அருணாசலம், சோணகிரி, சோணாசலம் எனப் பொய்ப் பெயர் போந்து அதனை மறைத்து விட்டன. அந்நாட்டுச் செம்மண் மலையில் தோன்றிச் செந்நிலத்தில் தவழ்ந்து செந்நீர் பெருகி வரும் சேயாறு, சண்முகநதி என்றும் புராணவிருளிற் புகுந்து கையின் பெயர் கொண்ட பாகுநதி என்றும் பொய் மாலை சூடிப் பொலிகிறது. வடார்க்காடு மாவட்டத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி யோடிவரும் பாலியாறு வெள்ளிய மண்ணும் மணலும் பரந்த நிலப் பகுதியில் ஓடி வெண்மை நீர் பெருகிவருவது பற்றிப்பாலாறு எனப் படுவது; அதனைப் புராணச் சூழலிற் புகுத்திப் புலனாகாத வகையில் க்ஷீரநதி எனக் குழறுகின்றார்கள்.

அவ்வக் காலங்களில் நாடாண்ட மன்னர்களும் அரசியல் தலைவர்களும் செல்வர்களும் தோன்றித் திருக்கோயில்களில் வழிபாடாற்றித் திருப்பணி செய்து சிறப்புற்றனர். அவர்களின் பெயரும் பணியும் மறையும் வகையில், இந்திரன் முதலிய தேவர்களும், சூரியன் முதலிய கிரகங்களும், இராமன், தருமன், அருச்சுனன், வீமன் முதலிய இதிகாசத் தலைவர்களும், யானை, குரங்கு, பருந்து, நாரை, கழுகு முதலிய உயிரினங்களும் திருப்பணி செய்து உய்ந்ததாகப் பொய் புனைந்துரைக்கும் தலபுராணங்கள் தோன்றி உண்மை வரலாற்றை மூடி மறைத்துவிட்டன.

நாட்டின் வரலாற்றுக் குறிப்புக்களாக உள்ள கல்வெட்டுக் களும், செப்பேடுகளும், பல்லாயிரக் கணக்கில் இந்தியப் பேரரசின் ஆட்சி எல்லைக்குட்பட்ட கல்வெட்டுத் துறையின்கண் புதை பட்டுள்ளன. 1903 ஆம் ஆண்டுக்குப் பின் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை அத் துறையினர் வெளியிடவே இல்லை. இதனை ஏன் என்று கேட்பவரும் இல்லை; சுமார் 70 ஆண்டுகட்கு முன் வெளியான தொகுதிகளும் இப்போது எங்கும் கிடைப்ப தில்லை. கிடைக்கச் செய்யவேண்டுமென எண்ணும் அரசியல் அறிஞர்களும் தலைவர்களும் செல்வர்களும் இந்நாளில் நம்நாட்டில் இருப்பதாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் இருந்த அடிமையிருள் நீங்கி இருபத்தைந்து ஆண்டு கழிந்தனவே; வரலாற்றறிவுக் குரிய கல்வெட்டு ஆராய்ச்சிக் கமைந்தவை, சுமார் 100 ஆண்டுகளாகப்படி எடுக்கப்பட்டவற்றை வெளியிட்டு வரலாற்று அறிவுக்கு ஆதரவு செய்யும் நல்லரசு தோன்றவில்லையே என அறிஞர்கள் வருந்து கின்றனர். கல்லூரிகளில் மேனாட்டு வரலாறுகளை உயர்நிலையில் கற்றுப் பட்டம் பெற்ற அறிஞர்கள் மிகப் பலர் கல்வித்துறையிலும் கல்வெட்டுத் துறையிலும் தலைமை தாங்குகின்றார்கள்; எனினும், வரலாற்றுணர்வு பெருகிச் சிறப்பெய்துவிக்க வல்ல கல்வெட்டுக் களை மக்கள் எளிதில் பெற்று அறிவு பெறுமாறு செய்யும் பரந்த பண்புடையோர் முன்வராதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது; இந்நிலையை மனம் கொள்ளாது “மாண்டார் நீராடி” மகிழ்வது நமது அரசுக்கு மாண்பாகாது.

சங்ககாலப் பரணர்கள்


சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் நல்லிசைச் சான்றோர் களுள் பரணரெனப் பெயருடையார் மூவர் காணப்படுகின்றனர். அவர்கள் பரணர், வன்பரணர், நெடுங்கழுத்துப்பரணர் எனப்படும். இவர்களுள் பரணருடைய பாட்டுக் கள் பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு என்ற மூன்று மொழிந்த ஏனையெல்லா வற்றிலும் உள்ளன. இலக்கண நூல் உரைகள் பலவும் இவர் பெயரைக் கபிலரோடு இணைத்துக் கபிலபரணர் என்று விதந்து கூறுகின்றன. இதுபற்றி, இவரைக் கபிலர்க்கு நண்பரென்று கூறுவதும் உண்டு. அவர் பாடியன அகத்தில் முப்பத்து நான்கும், குறுந்தொகையிற் பதினாறும், நற்றிணையிற் பன்னிரண்டும், பதிற்றுப்பத்திற் பத்தும், புறத்திற் பதின்மூன்றுமாக எண்பத்து மூன்று பாட்டுக்கள் உள்ளன. இனி, பதினோராந் திருமுறையிலும் ஒரு நூல் இவர் பெயராற் காணப்படுகிறது. ஆயினும், திரு முறைப்பரணர், பரணதேவர் எனப்படுவராதலின், சங்கச்சான்றோராகிய பரணர் வேறெனவும், பரணதேவர் வேறெனவும் அறிஞர் கருதுகின்றனர். அது தனியே ஆராய்தற்குரிய தொன்று. சங்க இலக்கியப் பரணரைப் பற்றிய வரலாறுகள் திருவிளையாடற் புராணத்திலும் பிறவற்றிலும் உள்ளன.
இவரைப்பற்றிய செய்திகளைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து வெளியீடாகிய தமிழ்ப்பொழிலும், சென்னைப் பல்கலைக் கழகத்து வெளியீடாகிய பரணரென்னும் நூலும் விரிந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியுள்ளன.

இப்பரணரால் தமிழ் வேந்தர் மூவருள் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதான், சேரமான் பெரும்பூண்பொறையன், சேரமான் மாந்தரம் பொறையன் கடுங்கோ, சோழன் கரிகாலன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, பசும் பூண்பாண்டியன் என்போரும், வேறு சிலரும் பாடப்பெறுகின்றனர். குறுநில மன்னருள் அதியமான் நெடுமான் அஞ்சி, வையாவிக் கோப்பெரும்பேகன், வேள் எவ்வி, வேள் ஆஅய், வேள் ஓரி, நள்ளி முதலாயினோரும், அறுகை, ஆட்டனத்தி, ஆஅய் எயினன், ஆரியப் பொருநன், எயினன், கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், தழும்பன், திதியன், தித்தன், 1வல்லங்கிழவோன் நல்லடி, நன்னன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், மலையன், மத்தி, மிஞிலி, விராஅன், வெளியன் வேண்மான் முதலியோரும், அகுதை, ஐயை, அன்னி மிஞிலி, மருதி, ஆதிமந்தி வேண்மகளிர் முதலிய தமிழ் மகளிரும், ஆங்காங்குக் குறிக்கப்பெறுகின்றனர். வேளிர், கொங்கர், கோசர், பூழியர், ஆரியர் முதலிய இனத்தவரையும் ஏற்ற இடங்களில் எடுத்தோதுகின்றார். மேலும், தித்தனது உறையூரும், மத்தியின் கழாரும், கழுவுள் என்பானுடைய காமூரும், நன்னனுடைய பாழியும், ஆஅய்கானத்துத் தலையானும், சோழனது புகார் நகரும், பழையனது போஒரும், திதியனது அழுந்நூரும், வெண்ணியும், நீடுரும், 2அரிமணரும், உறத்தூரும், அலைவாயும், மட்டவாயிலும், நன்னன் ஆஅயினது பிரம்பு நகரும், மரந்தையும், வஞ்சியும், தொண்டியும், அழிசியினுடைய ஆர்க்காடும், விராஅன் என்பானுடைய இருப்பை யூரும், மிஞிலியது பராமும், வேளிர்க்குரிய குன்றூரும், தழும்பனுடைய ஏஎர் என்னும் ஊரும், ஊQரும், மோகூரும், பெரும் பேகனது நல்லூரும், குட்டுவனுடைய முசிறியும் என்ற ஊர்கள் பல இவராற் குறித்துக் காட்டப்படுகின்றன.

இனி, இவர் பாட்டுக்களில் ஊர்களே யன்றி மலைகளும் ஏற்றவகையில் காட்சியளிக்கின்றன. அவை கொல்லி மலையும், ஏழின் மலையும், குதிரை மலையும், வேங்கை மலையும், கவிர மலையும், இமய மலையும் பிறவுமாகும். இவற்றிடையே காவிரியாறும், தென் குமரியும், கழா அர்ப்பெருந்துறையும், வாகை முன்றுறையும், கானற் பெருந்துறையும், காஞ்சிப் பெருந்துறையும் காணப்படு கின்றன. கூடற் பறந்தலையும், பாழிப்பறந்தலையும், வாகைப்பறந் தலையும் இவர் பாட்டிடையே நின்று பகை கடியும் போர் நிகழ்ச்சிகளை நினைப்பிக்கின்றன.

பூழியர் யானைகளை நீராட்டும் இயல்பும், ஆரியர் பிடி யானைகளைப் பார்வையாகக்கொண்டு களிறுகளைப் பிடிக்கும் திறமும், கொல்லி மலையிற் கடவுளெழுதிய பாவையின் செயலும், செறிவளையுடைப்பேமெனச் சூள்மொழியும் பரத்தையர் பண்பும், கவிர மலையில் சூர்மகள் இருப்பும் படிப்போர் மனத்துக்கண் வியப்பினை விளைவிக்கின்றன.

உப்புச்சிறை நில்லா வெள்ளம்போலக் காமம் நாணுவரை நில்லாதெனக் காதல் நோயுற்ற மகளிர் உரையாடுவதும், ஆதிமந்திக்கு அவளுடைய காதலனைக்காட்டி மருதி யென்பாள் பாடல்சால் சிறப்புப்பெற்றதும், தொன்முதுவேளிர் தமது பொன்னைப் பாழி நகர்க்கண் வைத்திருந்ததும், கோசரது ஆவொன்று பயற்றங் கொல்லையை மேய்ந்தது கண்டிருந்த பெரியோன் ஒருவன், மன்றத்தில் வாய்மை மொழிந்தானாக, அக்கோசர் அவன் கண்ணைப் பிடுங்கித் துன்புறுத்திக் கொன்று விடவே, அவன் மகளான அன்னமிஞிலி யென்பாள் கலத்தும் உண்ணாது வாலிதும் உடுக்காது, சினத்தீ யெரியச்சென்று குறும்பியன் திதியன் என்பவர்கட்குத் தெரிவிக்க, அவர்கள் அவள் வேண்டுகோட்கு இரங்கி இசைந்து அக் கோசரைக் கைப்பற்றிக் கொலைபுரியக்கண்டு பெரு மகிழ்வுற்றதும், நன்னன் பெண்கொலை புரிந்ததும் பிறவும் பரணரால் சுருக்கியும் விளக்கியும் தீவிய இனிய சொற்களால் சொல்லோவியம் செய்யப்பெற்றிருக் கின்றன. ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோவலூரை எறிந்தபோது, அவனைப் பாடலுற்ற ஒளவையார், “வேந்தே, நீ அன்றும் பாடுநர்க்கரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல்” என வியந்து கூறுவதொன்றே இவரது பாடல் சான்ற பெருமையை இனிது புலப்படுத்தும்.

இனி, இப்பரணரின் வேறாக, வன்பரணர் என்னும் சான்றோர் ஒருவர் உளர். இவர் வன்பரணரெனப்படுவதே இவர் ஆசிரியர் பரணரின் வேறாவர் என்பதை நன்கு வற்புறுத்தும். இவர் பாடியன வாக நற்றிணையில் ஒன்றும், புறத்தில் ஆறுமாக ஏழு பாட்டுக்கள் சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன.

குறுநிலத் தலைவருள் கண்டீரக் கோப்பெருநள்ளியும் வல்வி வோரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளனர். இவர் சிறந்த சொல்வன்மை படைத்தவர். இவர் கண்டீரக் கோப்பெரு நள்ளியை முதன் இலாகக் கண்ட திறம் மிக அழகாக இவராலேயே கூறப் பெற்றுள்ளது. “வறுமையுற்று வருந்திய யான் இரவலர் சுற்றத்துடனே புறப்பட்டு நள்ளியினது கண்டீர நாட்டுக்குப் போனேன்; ஒருநாள் வழிநடை வருத்த மிகுதியால் ஒரு பலாமரத்தின்கீழ் அமர்ந்திருந்தேன்; என் சுற்றத்தாரும் உடன் இருந்தனர். மான் கணத்தை வேட்டம் புரிந்து அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும், மணி விளங்கும் சென்னியும் உடைய செல்வத்தோன்றல் ஒருவன் எம்பாற் போந்து எம் வருத்தமுற்றும் எம்முகம் நோக்கித் தெரிந்து கொண்டான். அவனது கூர்த்த பார்வை கண்டு யான் எழுந்தோன்; என்னைக் கைகவித்திருக்கச்செய்து, தன்னொடு போந்து காட்டிடத்தே பரந்திருந்த வில்வீரர் திரும்பி வருமுன், தன் கையிலிருந்த தீக்கடை கோலால் தீமூட்டிக் காட்டில் தான் கொன்ற விலங்கொன்றின் ஊனைக் காய்ச்சி எம்மை உண்பித்தான். உண்டு பசிதீர்ந்த நாங்கள், மலைச்சாரலில் வீழ்ந்த அருவி நீரைப் பருகி அயர்வு தீர்ந்தோம். அப்போது, ‘எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேறில்லை; யாம் காட்டு நாட்டில் வாழ்வோம்’, என மொழிந்து, தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத் தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் தந்தான். நாங்கள் அவனது வள்ளன்மை கண்டு, ’ஐய, நீவிர் யார்? உம்முடைய நாடு யாது? என வினவினோம்; அவன் ஒரு மொழியும் கூறாது எம்பால் விடைகூறிச் சென்றான். பின்னர், நாங்கள் வழியில் பிறமக்கள் தமக்குள் பேசிக்கொண்ட சொற்களால் இவ்வாறு உண்பித்து எம்மை ஓம்பிய வள்ளல் தோட்டி மலைக்குரிய கண்டீரக் கோப்பெருநள்ளி என்று தெரிந்துகொண்டோம்” என்ற கருத்துப்பட அழகிய பாட்டொன்றை (புறம்.150) அவர் பாடியுள்ளார்.

இவ்வாறே, இவர் ஒருகால் வல்விலோறியை முதன் முதலாகக் காணச் சென்றார். அவன் கொல்லிமலையைச் சார்ந்த காட்டிடத்தே வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது, யானையொன்றைக் கொல்லக்கருதி புலியொன்று அற்றம் நோக்கியிருப்பதை ஓரி பார்த்துவிட்டான்; உடனே அவன் தன்வலிய வில்லில் அம்பு தொடுத்து அந்த யானைமேல் எய்தான்; அஃது அந்த யானையை வீழ்த்தி, அற்றம் நோக்கியிருந்த புலியின் அகன்ற வாய்க்குள் ஊடுருவிச்சென்று அதனைக் கொன்று விட்டு, வழியில் நின்ற கலைமான் ஒன்றை மடித்து அண்மையிலிருந்த காட்டுப்பன்றி யையும் வீழ்த்தி, அதன் அயலே புற்றிற் கிடந்த உடும்பொன்றின் உடலில் தைப்புண்டு வீழ்ந்தது. அது கண்டு, ஆதன் ஓரியெனப் படுதற்கமைந்த அவனை வல்வில்லோரி என்றல் அமையும் என்பார் போல் வியந்து பராட்டி, அவனை இதற்குமுன் அவர் கண்டதில்லை யாதலால், இவன் ஒரு சிறந்த செல்வத் தோன்றலாவான் என அவன் செயலைப் பாராட்டிப் பாடினார். அவன் தான் எய்த மானினது ஊனும் தேனும் தன் மலையிற் கிடைக்கும் பொன்னும் தந்து சிறப்பித்து வழிவிட்டான் எனப் புறப்பாட்டொன்றில் (புறம். 152) கூறியுள்ளார். அன்றுமுதல் ஓரியும் வல்விலோரி என்றே சான்றோரால் குறிக்கப்படுவானாயினன். அவனது வன்மையை எடுத்தோதிச் சிறப்பித்த காரணத்தால் இவரும் வன்பரணர் என்ற பெயரால் இலங்குவாராயினர். ஆதனோரியின் வில்வன்மையை விதந்துபாடிய சிறப்பால் இப்பரணர் வன்பரணர் எனப் பெயர் சிறந்தனரெனத் தெளிய வுணர்வோமாயின், இவரது இயற்பெயர் பரணர் என்பதே தேற்றமாம். இது பற்றியே இப்பரணர்க்குப் பின்வந்த கல்லாடனார், இவ்வோரி, காரி யென்பானாற் கொல்லப்பட்ட செய்தி கூறுங்கால் இவனை, “செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்ஒரி” என்று கூறியுள்ளார். வன்பரணரது பாட்டுத் தோன்று தற்கு முன்பெல்லாம் கொல்லி மலைக்குரிய ஓரி ஆதன்ஓரி யெனவே வழங்கப்பெற்றனன் என்பதும் தெளியக்கொள்ளவேண்டிய தொன்று. வன்பரணர் அவனை ஆதனோரி யெனவே வழங்குதல் (புறம். 153) காண்க.

இனி, இவ்விருவரின் வேறாக நெடுங்கழுத்துப் பரணர் என்றொரு சான்றோர் சங்கத்தொகை நூல்களுட் காணப்படு கின்றனர். “இவர்க்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்” என டாக்டர். திரு. உ. வே. சாமிநாதையரவர்கள் கூறியுள்ளார்கள். பெருந்தலைச்சாத்தனார் பெயரும், சீத்தலைச்சாத்தனார் பெயரும் உறுப்பால் வந்தனவென நெடுங்காலம் கருதப்பட்டு வந்தமையும், இன்று பெருந்தலையும் சீத்தலையும் ஊர்ப்பெயர்க ளெனவும், இவர்கள் அவ்வூரவரெனவும் தெளிவாகிவிட்டமையும் காண்கின் றோம் இவ்வகையால் நெடுங்கழுத்துப்பரணரது பெயர்க் கண் காணப்படும் நெடுங்கழுத்து என்பதன் உண்மை நிலை யறிதற்கண் ஆராய்ச்சியாளர்க்கு வேட்கை யுண்டாகு மென்பது ஒருதலை.

தஞ்சைமாவட்டத்துப் பள்ளியூரிலிருந்த ஆசிரியர் கிருஷ்ண சாமி சேனை நாட்டாரால் இராIளியாரது கைப்பிரதியெனப் பட்டதொரு பிரதி கிடைக்கப்பெற்று, அதனையும் புறநானூற்று அச்சுப் பிரதியினையும் வைத்து ஒப்புநோக்கியதில், இந்நெடுங் கழுத்துப்பரணர் பெயர், நெடுங்களத்துப்பரணரென்று காணப்பட்டது. பின்னர் யான் நெடுங்களத்துக்குச் சென்றிருந்தபோது, அவ்வூர்த் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டொன்று, இறைவனை “நெடுங்க ழுத்து மகாதேவர், திருநெடுங் கழுத்தாழ்வார்” (a. r. no. 682 of 1909) என்று குறிப்பது தெரிந்தது.

இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தப் பெருமானால் அழகிய இனிய திருப்பதிகம் ஒன்றால் சிறப்பிக்கப் பெற்றிருப்பது அன்பர்கள் நன்கு அறிந்த தொன்று. இதற்கேற்பவே, இக்கோயிலில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழநாட்டையாண்ட வேந்தனான முதலாம் ஆதித்தன் கல்வெட்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஐயரங்க சொக்கநாத நாயக்கர் கல்வெட் டீறாக முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள் உள்ளன அரசியலாரால் படி யெடுக்கப்பட்டவை முப்பத்து நான்கு. இவற்றுள், பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த உத்தமசோழன் கல்வெட்டும், அவற்குப்பின் வந்த முதல் இராசராசன் கல்வெட்டும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டுக் களும் மூன்றாம் இராசராசன் கல்வெட்டுக்களும், பதின் மூன்றாம், நூற்றாண்டினரான மூன்றாங்குலோத்துங்கன் கல்வெட்டுக்களும் சடையவன்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களும் ஹொய்சள மன்னன் வீரசோமீசுவரன் மகன் வீரராம் நாததேவன் கல்வெட்டுக் களும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வந்த நாயக்க மன்னர் கல்வெட்டுக்களும் உள்ளன.

இனி, திருஞானசம்பந்தர் திருப்பதிகமும், முதலாம் ஆதித்தன் கல்வெட்டும் இவ்வூரை நெடுங்களம் என்றே கூறுகின்றன. இடை யிற்றோன்றிய கல்வெட்டுக்களுட் சிலவே நெடுங்களத்துத் திருந்திய தேவப்பெருமானை, நெடுங்கழுத்து மகாதேவரென்றும், திருநெடுங் கழுத்தாழ்வார் என்றுங் குறிக்கின்றன. ஒருகால் களமென்னுஞ் சொல் கழுத்தையும் குறிக்குமாதலால், நெடுங்களத்து இறைவனை நெடுங்கழுத்து மகாதேவரெனக் கல்வெட்டெழுதினோர் எழுதி யிருக்கலாம்; ளகர ழகரவேறுபாடறியாது நெடுங்கழத்தென எழுதப்பட்டது, நெடுங் கழுத்தெனத் திரிக்கப்பட்டும் இருக்கலாம். எங்ஙனமோ திருந்திய தேவனான திருநெடுங்களமுடைய இறைவன் திருநெடுங்கழுத்து மகாதேவரென்றும், இப்பரணரும் அவ்வூர வராதலால், இவரும் நெடுங்கழுத்துப் பரணர் என்றும் குறிக்கப்படு வாராயினர்.

இனி, இவ்வூர்க்கும் பரணர்க்கும் உள்ள இயைபு யாது? இதனைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானார் கோயில் அருச்சகர் ஒருவர் விளக்கினார். இந்நெடுங்களத்தில் பரணிமேடென ஒன்றிருந்த தென்றும், பரணி நாளில் திருநெடுங்கள முடையார்க்குப் பூசனை செய்வது குறித்து இறையிலியாகப் பண்டைநாளை வேந்தரால் விடப்பட்டதென்றும், அஃது இப்போது நன்கு திருந்தி நிலமாய் விட்டதென்றும் கூறினார். கூறவே, இப்பரணி மேடென்பது பரணன் மேடு என இருந்திருக்க வேண்டும் என்றும், நெடுங்களத்து மகாதேவர் நெடுங்கழுத்து மகாதேவரென மாறியதுபோல இப்பரணன் மேடும் பரணிமேடாக மாறியிருக்க வேண்டும் என்றும் உணர்வது முறைதானே! ஆகவே, நெடுங்களத்துக்கும் பரணருக்கும் தொடர் புண்டென்பது தெளிவாயிற்று. இவ்வாற்றால், நெடுங்கழுத்துப் பரணரென்பது நெடுங்களத்துப் பரணரென இராIளியார் பிரதி கூறுவது பொருத்தமானதென்பது சொல்லாமலே விளங்கும். நெடுங்கழுத்தென்பது திருந்திய பாடமாகாதென்பது கருதியே டாக்டர். திரு. ஐயரவர்களும் “இவர்க்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்” என ஐயவாய்பாட்டாற் குறித்தன ரெனக் காணலாம்.

இதற்குச் சான்றாக, “மதுரையும் ஈழமும் சருவூரும் பாண்டியன் முடித்தலை யுங்கொண்ட திரிபுவன சக்கரவர்த்திகளான திரிபுவன வீரதேவர்க்கு (குலோத்துங்கன் iii) யாண்டு 32-வது வடகவிர் நாட்டுத் திருநெடுங்களருடைய மகாதேவர்க்குவளப்பக் குடியுடை யான் தில்லைத் திருநட்டப் பெருமாளான விசயாலய முத்தரை யனென்பான் விட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லை கூறுமிடத்து “பரணங் காணிற்குத் தெக்கு” (a.r. 670 of 1904) என்றொரு நிலத்தைக் குறிக்கின்றான். இப்பரணன் காணியே பின் பரணிமேடாகி, அதன்பின் திருந்தி நிலமாகி யிருத்தல் கூடும். ஆகவே, நெடுங்களத் துக்கும் பரணருக்கும் இக் கல்வெட்டாலும் இயைபுண்டென்பது தெளிவாகிறது.

இதுகாறும் கூறியவாற்றால், நெடுங்கழுத்துப் பரணரெனச் சங்கத்தொகை நூல்களுட் காணப்படும் சான்றோர் நெடுங்களத்துப் பரணரே என்பதும், “சிறாஅஅர் துடியர்” (புறம். 291) என்று தொடங்கும் புறப்பாட்டிறுதியிற் காணப்படும் நெடுங் களத்துப் பரணர் என்ற பாடமே பொருத்தமான தென்பதும் வெள்ளிடைமலை.

இவர் பாடியதாக இப் புறப்பாட்டு ஒன்றுதான் கிடைத்துள்ளது. இதன்கண், போர்மறவன் ஒருவன் போர்ப்புண்பட்டு வீழ்ந்தானாக அவன் சிறப்புக் கூறுமுகத்தால், துடிகொட்டு வோரையும் பாண் மக்களையும் நோக்கி, “தூய வெள்ளாடை யணிந்துள்ள கரிய மறவனான இவனை மொய்க்கும் புள்ளினங்களைக் கடிமின்; யான் இவன் உடலைப் பற்றவரும் நரிகளைக் கடிவேன்; வெறிதேயும் வேந்தன் பொருட்டு இறத்தர்க்கு விரும்பும் இவ்வீரன், இப்போது தன் வேந்தனைக் காத்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்டானா கலின், அவ்வேந்தன் என்போல் பெருந்துய ரெய்துவானாக; அவன் இவனுக்குத் தன் மணிமாலையைச் சூட்டித் தான் இவனுடைய ஒற்றை வடமாலையை மாற்றி யணிந்துகொள்ளும் அத்துணைப் பேரன்புடையவன் என்று இந் நெடுங்களத்துப்பரணர் பாடியுள்ளார். “கொடுத்த லெய்திய கொடைமை” என்னும் புறத்துறைக்கு (புறத். சூ 8) மேற்கோளாக நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்பெறும் சிறப்புடையது. இதன்கண் “அவ்வேந்தன் என்போல் பெருந்துய ரெய்துவானாக” என்ற கருத்தை இப்பரணர், “என்போற் பெருவிதுப் புறுக வேந்தே” என்று கூறுகின்றார். இதன்கண் வரும் “பெருவிதுப்பு” என்பது மிக்க நயமுடையதொரு சொல்லாகும். விதுப்பு, விதும்பல் எனவும் வரும்; அஃதாவது அன்பு மிகுமியால் உள்ளத்தில் தோன்றும் விரைவும், அது காரணமாக உண்டாகும் நடுக்கமும் குறிப்பதாம். வேந்தனுக்கு இவ்வீரன்பால் உண்டாகிய பெருங்காதல் காரணமாக இவனது வீழ்ச்சி வேந்தன் உள்ளத்துப் பெருநடுக்கத்தைச் செய்வதாக என்பது தோன்றப் “பெருவிதுப்புறுக” என்று குறிக்கின்றார். இந்தச் சொன்னயத்தைக் கண்ட கயமனார் என்னும் சான்றோர், புணர்ந்துடன் போகிய தலைமகன் பிரிவாற்றாத தாய், தன்னைப் போல், தலை மகனைத் தம்மிற் பிரித்துக்கொண்டு தன்னுடனே கொண்டு தலைக்கழிந்த தலைமகனை ஈன்ற தாயும் பெருவருத்த மெய்து வாளாக என்னக் கருதி “எம்போற் பெருவிதுப் புறுக மாதோ……… கொண்டுடன் போகவலித்த, வன்கட் காளையை ஈன்ற தாயே” (நற். 293) என்று எடுத்தோதி இன்புறுகின்றார்.

இவ்வாறு அன்பாற் பிணிக்கப்பெற்ற இருவருள் ஒருவர்க் குற்ற இடும்பை ஏனையோர் உள்ளத்தில் அன்பு காரணமாகப் பிறக்கும் பெருவிதுப்பினையே வியந்து, போரிற் புண்பட்டு வீழ்ந்த தன் கணவனைக் கண்டு அவன் மனைவி தனித்திருந்து புலம்பு மிடத்து “என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்றே” (புறம்.255) என்று கூறக் காண்கின்றோம். தனிமகள் புலம்பும் இப் புறப்பாட்டைப் பாடியவர் வன்பரணர் எனப் புறநானூற்றால் அறிகின்றோம். நெடுங்களத்துப்பரணர் பாட்டும் அழுகை விளைவிக்கும் பாட்டாய்க் கருத்து வகையில் ஒத்து நிற்பது காணப்படும். பெயரொற்றுமையும் கருத்தொற்றுமையும் நோக்கு மிடத்து நெடுங்களத்துப் பரணரே வன்பரணராகவும் இருக்கலாம் என்பது தோன்றுகிறது. இஃது உண்மையாயின், இவர் தொடக்கத்தில் நெடுங்களத்துப்பரணராய் வழங்கப்பெற்றுப் பின்னர், ஆதனோரியின் வில் வன்மையைச் சிறப்பித்ததுகொண்டு சான்றோரால் வன்பரண ரெனப் பாராட்டிக் கூறப்பெறுவாராயினர் என்று தெளியலாம். ஆகவே, பரணர் மூவராயினார் இருவராவர் என்றும் அறியலாம்.

இப்பரணர்கட்குப் பரணர் என்று வழங்கும் பெயர்ப் பொருள் யாது? பரணரெனவும், வன்பரணரெனவும், நெடுங்களத்துப் பரணரெனவும் வழங்கும் வழக்காறுகள், இது பயின்ற வழக்கிற் றென்பதை வற்புறுத்துகின்றன. சங்கச் சான்றோர் பலர் மூலனார், ஆத்திரையனார் முதலியோர் மூலநாளிலும், ஆதிரை நாளிலும் பிறந்தமைபற்றிப் பெயர் பெற்றாற் போல, இப்பரணர்கள் பரணி நாளில் பிறந்தமைபற்றி இப் பெயரெய்தினர் என உணர்தல் வேண்டும்.

தமிழகத்தில் தமிழ்நிலை


இன்று நமது பாரதநாட்டில் மக்களாட்சி அமைதியுடன் நிலவுகிறது. நிலவுலக முழுதிலுமுள்ள நாடுகளை நோக்கின் பெரும் பான்மை மக்களாட்சியில் இருந்துதான் மாண்புறு கின்றன. அவ்வகையில் நமதுநாடு மக்களாட்சியால் சிறப்பெய்து வதில் வியப்பு இல்லை. மேலும் நாம் மேற்கொண்டிருக்கும் மக்களாட்சி முறை உலகில் இல்லாத புதிய ஆட்சிமுறையும் அன்று.

நமதுநாடு நிலப்பரப்பாலும் மக்கள் தொகையாலும் நம்மைச் சூழவுள்ள நாடுகள் பலவற்றினும் பெரியது. முப்பது கோடிக்குமேல் நம்நாட்டில் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் கற்றவர்தொகை நூற்றுக்குப் பத்துப்பேர்க்குமேல் இல்லை யென்பது உண்மை இந்தப் பத்துப்பேரிலும் தாம் நினைத்ததைப் பிறர்க்கு எழுதிக்காட்டவோ தெளிவாகச் சொல்லவோ தெரிந்தவர் ஐந்துபேர்கூட இல்லை. மற்றைத் தொண்Qற்றைந்துபேரும் நல்ல கல்வி யில்லாதவராகும். ஆனால், அவர்கள் அனைவரும் நம் மக்களாட்சியின் உறுப்பினர். கல்வியுடைய மிகச் சிலரே மக்கள் ஆட்சியின் செயல்வகை களையும் விளையும் நன்மை களையும் பகுத்துணரக்கூடிய நிலையில் உள்ளனர்; இவர்களே ஆட்சி யிருக்கையில்இருந்து ஆட்சி செய் கின்றனர். நூற்றுக்குத் தொண்ணுற்றைந்துபேர் அச்சிலரால் ஆளப் படுகின்றனர். இது பற்றியே கல்வியுடைய ஒருசிலரால் கல்லாத பெரும்பான்மை யோரை ஆளுவது நம் நாட்டு இன்றைய மக்கள் ஆட்சியின் மான்பாக இருக்கிறது என்ற குறையும் கூறப்படுகிறது.

நாட்டுமக்கள் அனைவரும் நாட்டு ஆட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவர்கள் அனைவரும் “நல்ல” கல்வியுடையவர் களாக இருத்தல்வேண்டும். அப்பொழுதுதான் மக்களது ஆட்சி அசைக்கமுடியாத பேராற்றலும் பெருவலியும் உடையதாய்ப் பெருமைபெற முடியும். அந்தக் காலம்தான் மக்கள ஆட்சியின் பொற்காலமாகும். அந்தக்காலம் விரைவில் வரச்செய்வதே மக்களாட்சியின் குறிக்கோள். “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும், கொல்குறும்பும் இல்லது நாடு” என்று திருவள்ளுவர் கூறுவர். கல்லாத மக்கள் பெருகியிருக்கும் நாட்டில் பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும் உண்டாதற்கு வாய்ப்புக்கள் உண்டு, கல்லாத மக்களை இக்குழுக்களின் கொள்கைகள் விரைவில் தமக்குத் துணையாக்கிக் கொள்ளும். அதன் விளைவாக நாடு அமைதியிழந்து அல்லலுறும். அதனால் நாட்டுமக்கள் அனைவரையும் நல்ல கல்வியுடைய மக்களாக்குவது ஆட்சியின் குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் ஆட்சி சிறந்து விளங்குதற்கு அது பெரிய பாதுகாப்பும் வலியுமாகும்.

முப்பதுகோடி மக்களைக்கொண்ட நமது நாட்டில் முந்நூறுக்கு மேற்பட்ட மொழிகள் நிலவுகின்றன என்று மொழியறிஞர் கூறுகின்றனர். ஓராயிரம் ஈராயிரம் மக்கள் பேசும் மொழிகளை விலக்கினால் பல நூறாயிரக்கணக்கில் பேசுபவர்களைக்கொண்ட மொழிகள் மிகச் சிலவேயாகும். அவற்றைக் கொண்டே தமிழ்நாடு, ஆந்திரநாடு, கேரளநாடு, கன்னடநாடு, மராட்டியநாடு, குசராத்திநாடு எனப் பெயர்தாங்கிய உள்நாடுகள் பல நமது பாரதநாட்டில் உள்ளன. அவற்றில் வாழ்பவரும் முறையே தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், மராட்டியர், குசராத்தியர் என்று குறிக்கப்படுகின்றனர். இந்த உண்ணாடுகள் நமது பராதப் பெருநிலத்துக்கு உறுப்புக்கள். இந்த உறுப்புக் களின் அறிவுவன்மையால்தான் பாரதப் பேரரசு வன்மையுற்றுத் திகழவேண்டி. யிருக்கிறது. இவ் வுண்ணாடுகள் கல்வியால் வன்மை பெற்றாலன்றி நமது பாரதப் பேரரசுக்கு உய்தியில்லை என்பதை யாவரும் தெளிவாக வுணரவேண்டும். தமிழர், ஆந்திரர், கேரளர் எனப்படும் பலரும் தத்தம் பகுதியிலுள்ள மக்கள் நல்ல கல்வியுடையவராக வேண்டும் என்ற கருத்தும் அதனைச் செயற்படுத்துவதில் கண்ணாகவும் இருக்கும் கடமை யுடையவராகின்றார்கள்.

மக்களாட்சி நிலவும் பிற நாடுகளிலும் இப்படிக் கல்லாதவர் பலரும் கற்றவர் சிலருமாகத்தான் மக்கள் வாழ்கின்றார்களோ என்று ஓர் ஐயம் உண்டாகலாம் அதனை ஆராய்ந்தால் அவ்வாறு இல்லை என்று கூறவேண்டும். கல்லாதவர் பெருகியிருந்த நாடுகள் சில, மக்கள் ஆட்சிமுறை பெற்ற சிறிதுகாலத்தில் கற்றவர் தொகையைப் பெருவாரியாகப் பெருக்கிவிட்டன. அந்த நாடுகளிலும் அமைதியான வாழ்க்கை இல்லாமையால் அந்த நிலையும் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. நமது பராதநாட்டில் சென்ற இருநூறு ஆண்டுகட்கு மேலாக அமைதியான வாழ்க்கையே நிலவியிருந்தது. ஆயினும், மக்களிடையே கல்வியில்லாமை என்ற இருள் நன்றாகப் பரந்து மூடிக்கொண்டது. இதற்குக் காரணம் வேற்றுநாட்டவரின் ஆட்சி என்று கூறலாம். வேற்றவரான ஆங்கிலராட்சியில் அமைதி நிலவியது உண்மை; ஆனால், நல்ல கல்வியறிவு பெறுவதற்கேற்ற வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன. பெருக்கவேண்டும் என்ற எண்ணம் அரசிய லார்க்கும் இல்லை; கல்விபெற்றிருந்த சில பொதுமக்களுக்கும் தோன்ற வில்லை. “தான்வாழ ஏனோர் தனக்கடிமை யாக எனும், ஊன அறிவே” அந்நாளில் ஓங்கியிருந்தது. வாழ்ந்தாரை வாழ்விக்கவும் வீழ்ந்தாரை மீளாவறுமையில் வீழ்விக்கவுமே அக்காலச் சூழ்நிலை இடம் தந்துகொண்டிருந்தது.

ஆங்கில் ஆட்சியில்தானே கலாசாலைகள் பலவும் கல்லூரிகள் பலவும் தோன்றிக் கல்விப்பணி புரிந்தன; நாட்டுப் புறங்களிலும் நகரங்களிலும் மக்கட்குக் கல்வி தரப்படாமல் இல்லையே என்றொரு கேள்வி இங்கே எழும். கல்வி ஓரளவு தரப்பட்டதுண்டு; ஆயினும் அக்கல்வி நாட்டு மக்களிடையே பரவி அறிவு பெருகுதற்கேற்ற வகையில் நடைபெறவில்லை. நான் யார்? என்னைச் சூழவுள்ளவர் யார்? அவர்கட்கும் எனக்குமுள்ள தொடர்பு யாது? என் வாழ்வு அவர்கட்கும் இந்நாட்டுக்கும் எவ்வகைத் தொடர்பில் இயங்குகிறது? உலக மக்களிடையே என் நாட்டுமக்கள் எந்தநிலையில் உள்ளனர்? என்பனபோலும் அறிவை வளர்த்துப் பயன்பட வாழ்விக்கும் வகையில் அறிவு தோன்றவில்லை. கற்பவர் உள்ளத்தில் நல்லறிவு தோன்றி மக்கட்கு நலம்புரிதற்கேற்ற வளர்ச்சி யுண்டு பண்ணக் கூடிய மொழியில் கல்வி கற்பிக்கப்படவில்லை. ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் நாட்டில் தங்களது ஆட்சி அமைதியான முறையில் நடைபெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அரசியல், நீதி, வாணிகம், போக்குவரவு முதலிய எல்லாத் துறைகளிலும் ஆங்கிலேயரே தலைமையேற்று நின்று, எல்லாச் செயல்முறை களையும் தங்கள் ஆங்கிலமொழியிலேயே நடத்தினர். அவர்கட்குக் கீழேயிருந்து அவர்க்கு வேண்டிய வற்றைச் செய்தற்கேற்ற எழுத்தாளர்களே அவர்கட்குத் தேவைப்பட்டனர். அவர்களை உண்டுபண்ணுவதே அவர்களது கல்விப்பணியின் கருத்தும் நோக்கமுமாக இருந்தன. மக்களின் எதிர்கால நல்வாழ்வு கருதி அவர்கள் வழங்கும் மொழியிலேயே கல்வியறிவு பெறுவிக்கக் கருதாது, தங்கள் நலமொன்றையே கருதித் தங்கட்கு என்றும் அரசியலடிமைகளாய் மக்களை மாற்றி அவர்கள் உள்ளத்தில் அவர்தம் நாடு மொழி கலை பண்பாடுகளை மறந்து ஆங்கில மாக்களாக்குவதே கல்வி நோக்கமாகக் கொண்டனர். அதனால் நாட்டுமொழிகளை மூலையில் ஒதுக்கித் தங்கள் ஆங்கிலமொழிக்கே முதலிடம் தந்து கல்வி தருவாராயினர்.

ஆங்கிலர் ஆட்சியில் வேறொரு சூழ்நிலை தோன்றுவ தாயிற்று. வேறு வேறு மொழி வழங்கும் நாட்டுப் பகுதிகளைத் தங்கள் வசதிக்கேற்பச் சேர்த்து ஒருநாடாக்கி ஆட்சிபுரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. சென்னை மாநாட்டில் ஆந்திரர், கன்னடர், கேரளர், தமிழர் ஆகிய பலரும் ஒருங்கிருந்து ஆளப்பட வேண்டிய வராயினர். அவர்களிடையே மொழிப் பூசல் தோன்றி அமைதியைக் குலைக்காவண்ணம், அவர்கட்கு வேறான ஆங்கில மொழியை அவர்களிடையே புகுத்தி நிலவவிட வேண்டியது இன்றியமையாத தாயிற்று. ஆதலால், ஆங்கில மொழியால் அரசியல் நடக்கவேண்டிய நிலைமை உறுதிபெறுவதாயிற்று.

அரசியல் ஆட்சி வகையில் நம் நாட்டுமக்கள் அறியாமல் மறைமுகமாகச் சில செயல்முறைகளை ஆங்கிலமக்கள் மேற் கொண்டிருந்தனர். அவர்கள் நம்நாட்டுக்கு வந்ததே வாணிகஞ் செய்து ஊதியம் பெறுவதற்காக ஆதலால், ஆட்சி வகையிலும் ஊதியங்கண்டு, ஆளப்படும் மக்கட்குத் தெரியாமல் அதனைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசெல்லும் வழக்கமுடையரா யிருந்தனர். அதற்கேற்ற சூழ்ச்சிகளை மக்கள் தெரியாமல் தடுப்பதற்கு மக்களுக்கும் அரசியலுக்கும் இடையே ஆங்கிலமொழி ஓர் அழகிய இரும்புத் திரையாகப் பயன்பட்டது. இதனாலும் ஆங்கில மொழியை நாட்டில் புகுத்துவது வேண்டிய தொன்றாயிற்று.

அமைதியாக வாழ்ந்த மக்கள் அரசியலுக்கும் தங்கட்கும் இடையே ஆங்கிலமொழி திரையாக இருப்பதை நீக்கி, தங்கள் மொழியில் ஆட்சி நடக்கவேண்டுமென்று கேட்கலாமே எனில், ஆங்கிலம் எல்லார்க்கும் பொதுவாக உளது என்ற கருத்து நாட்டவர் களில் ஒருசிலர்க்கு உண்டாயிற்று. பெரும்பாலோர் வேறுவகையில் பழகிவந்தவர்கள். ஆங்கிலர் ஆட்சி வருமுன் தமிழர், ஆந்திரர், கன்னடர் ஆகிய பலரும் வேந்தர் செய்யும் முடியாட்சியின்கீழ் வாழ்ந்து வந்தவர். வேந்தனிடத்தில் குறை வேண்டுதலும் முறை வேண்டுதலுமாகிய இரண்டுமே நாட்டுக் குடிமக்கள் செய்து கொள்வது வழக்கம். நாட்டாட்சியில் தங்கட்குப் பங்குண்டு என்பது அவர்கட்குத் தெரியாது. செய்து கொண்ட குறை நீங்குவதும், முறை பெறுவதுமே அவர்கட்கு வேண்டியன. அவை கிடைத்துவிடின், குடிமக்கள் அமைந்து விடுவது வழக்கம். கல்வியுடையவர்கள் அரசியலில் ஏதாவதொரு சேவகம் பெற்று அதன் வாயிலாகப் பொருள்பெற்றுத் தம் வயிற்றைக் கழுவுவதே வாழ்வின் குறிக்கோளாகக் கருதினர். ஆங்கிலக்கல்வி பெற்றோருள் பெரும்பாலோர் வெள்ளைத் துரைக்கு மகிழ்ச்சி யுண்டுபண்ணி அவர் விரும்பிப் பாராட்டும் சிறந்த அடிமையாக வாழ்வதே உயிர்வாழ்க்கையின் ஊதியமாகக் கருதினர்.

ஆதலால், அவர்கள் தங்கட்கொரு மொழி உண்டு என்றும், அதன் வாயிலாகத் தங்கள் நாட்டு அரசியல் நடக்குமாயின் அதனால் நாட்டில் நல்லாழ்வும் நல்லறிவும் தோன்றி விளங்கும் என்றும் நினையாராயினர்; ஆங்கில மொழி ஆளப்படும் மக்கட்கும் ஆளும் அரசுக்கும் இடையே இரும்புத்திரையாக இருக்கிறது என்பதை அறியமாட்டா தொழிந்தனர்.

ஒளியைக் கண்டு இருள் அஞ்சுவதுபோல, அறிவைக் கண்டு அறியாமை அஞ்சுவது இயற்கை. அதனால் கல்விக்குக் கல்லாமை அஞ்சியோடுவது அறமாயிற்று. ஆங்கிலக் கல்வி கற்றோர் அரசியலதி காரிகளாய் ஆங்கில மேலோரின் சிறந்த அடிமைகளாய் ஆட்சிபுரியத் தொடங்கியதும், கல்லாத பொதுமக்கட்கு அவர்கள்பால் அச்சமும் ஒடுக்கமும் உண்டாயின. ஆங்கிலம் கற்றோர் உயர்ந்தோராகவும் அது கல்லாதவர் தாழ்ந்தோராகவும் சமுதாயத்தில் வேறுபாடுகள் தோன்றலாயின. அதனால் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே மனக்கலப்பு இல்லாதொழிந்தது. ஆங்கிலமொழி வாயிலாக வந்த அறிவு, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அவர்களிடையே பரவா தொழிந்தது. அறியாமைக்கு மன்னிப்பு இல்லையாதலால், அறியாமை கொண்ட பொதுமக்கள், ஆங்கில வறிவு கொண்ட அதிகாரிகட்கு அஞ்சி நீங்கி நின்றனர். இதனால் பொதுமக்களிடையே நல்ல கல்வியும் அறிவும் வளர்வதற்கு இடமில்லை யாயிற்று.

இந்த நிலை நல்லறிவு வளர்தற்கு இடம் தராது போயினும் பொதுமக்கள் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை எழுப்பிற்று. ஆங்கிலக் கல்வி, மக்கள் சிலர்க்கு அதிகாரமும் பெரும் பொருளும் தருவதை அவர்கள் கண்டனர். அதனால் அவர்கள் தங்கள் நாட்டு மொழியினும் ஆங்கில மொழியினிடத்தில் பற்றும் நன்மதிப்பும் தர முற்பட்டனர். தங்கள் வயிற்றில் பிறக்கும் மக்களை எவ்வகைத் துன்பப்பட்டேனும் ஆங்கிலக் கல்வியுடையராக்க வேண்டு மென்று முயல்வாராயினர். இம் முயற்சியில் வீடு நிலம் முதலிய பொருள்களை யெல்லாம் விற்று ஆங்கிலம் கற்றவர் மிகப்பலராவர். இந்த வேகத்தில் தமிழ் நாட்டுத் தமிழும், ஆந்திர நாட்டுத் தெலுங்கும் பிறவும் கைவிடப்பட்டன. இத்துறையில் ஏனை ஆந்திரர், கேரளர், வங்காளியர் முதலியோரைக் காட்டிலும் கண்டோர் இகழத்தக்க நிலையில் தங்கள் மொழியைக் கைவிட்டவர் தமிழர்களே. தமிழர்களுள் பலர் தமிழ் படிப்பதையும் தமிழில் பேசுவதையும் மானக் குறைவாகவும் இழிநிலையாகவும் கருதினர்; இன்னும் சிலர் கருதிக்கோண்டிருக் கின்றனர்.

தலையில் ஒழுகிய சேறு, உடல் முழுதும் ஒழுகிப் பரவுவது போல, அன்று அரசியல் தலைமை நிலையத்தில் பாய்ந்த ஆங்கிலம், இன்று நாட்டில் தந்தி, தபால், தொழிற்சாலை, மருத்துவச்சாலை, கல்விச் சாலை, வாணிகம், கோயில், புகைவண்டி, மோட்டார் நிலையங்கள் முதலிய எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டது. நாடு நகரங்களிலும், சிற்றூர் பேரூர்களிலும், மூலை முடுக்குகளிலும். பிச்சைக்காரர் வாயிலும், பெருஞ் செல்வப் பெரு மக்கள் வாயிலும் எங்கும் ஆங்கிலம் இடம்பெற்று விட்டது. இன்று மக்கள் நினைக்கும் நெஞ்சிலும், பேசும் வாயிலும் ஆங்கிலம் முன்னணியில் நிற்கிறது என்றால் வேறு கூறுவானேன்?

தமிழ் நாட்டுத் தமிழன் உடலில் தமிழ் நினைக்கும் நெஞ்சில் தமிழ் இல்லை; தமிழ் பேசும் வாயில் தமிழ் இல்லை; தமிழனுடைய அன்றாட வாழ்வில் தொடர்புடைய தொழில், கல்வி, மருத்துவம், போக்கு வரவு முதலிய யாவும் ஆங்கிலமொழி நிலவும் இடங்களாய் விட்டன. இதனால் தமிழனது தமிழ் இருக்குமிடம் தெரியாது ஒடுங்கிவிட்டது. எப்பக்கமும் வேற்றுமொழி வந்து மோதுவதால் தமிழ்வாழ்வு தலை தடுமாறி நிற்கிறது.

இது நிற்க, இந்த ஆங்கில மொழி வரவால் தமிழன் தமிழ் ஒதுக்கப்பட்டதே யன்றித் தமிழருட் சிலரேனும் பயன்பட்ட துண்டோ எனின், பெரும்பயன் பெற்றுள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. மக்களாட்சிக்கு இன்றியமையாத அரசியல் உரிமை உணர்வில், சிலர் முன்னேறி யுள்ளனர். சமுதாய வாழ்வில் தக்க மதிப்பு பெற்றுள்ளனர். பொருள் துறை, தொழில் துறைகளில் ஓரளவு நல்லறிவு பெற்று விளங்குகிறார்கள். தாம் இந்த நாட்டுக்கு உரியவர்; இந்த நாட்டின் நல்வாழ்வில் தமக்கு நல்லதொரு பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்; விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, அரசியல் நுட்பம், நீதி முதலிய துறைகளில் சிலர் ஓரளவு உணர்வு பெற்றுப் பிறங்குகின்றார்கள். இந் நிலைக்கெல்லாம் காரணம் ஆங்கிலக் கல்வியின் பெருக்கமே என்று எவரும் நன்கு அறிவர்.

நமது நாட்டில் புகுந்து இருநூறு ஆண்டுகளாகக் கல்விப்பணி புரிந்த மிகச் சிலரே ஆங்கிலத்தால் பயன் பெற்றுள்ளார்கள் என்றால், அதனால் நாட்டுமக்களில் பெரும்பாலார் பயன் பெறாமல் போனதற்குக் காரணம் ஆராய வேண்டிய தொன்று. ஆங்கிலம் கற்றவர் அதனைக் கல்லாத மக்களோடு கலந்துகொள்ளாதவாறு அரசியல் பதவியும் ஊதியமும் தடை செய்து வந்தன. ஆங்கிலக் கல்வி காட்டிய இலக்கியக் காட்சியும் அரசியல் வரலாறு, நீதிநூல் முதலியன காட்டிய காட்சியும் ஆங்கில நாட்டுக் காட்சிகளாய்க் கற்றவருள்ளத்தை அவற்றினிடமே அடிமைப் படுத்தி விட்டன. ஆங்கிலக் கல்வி காட்டும் மக்கள் வாழ்வும் பண்பாடும் ஒழுகலாறும் நம் நாட்டுக்கு உரியவல்ல வாதலால் அவற்றை உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் வகையில் செய்த உழைப்பு, நம்மவரை நம் நாட்டு வரலாறு, வாழ்க்கை, பண்பாடு, அரசியல் முதலிய துறை களை அறவே மறக்கச் செய்தது. நம் நாட்டு மக்கட்கு உணர்த்தக் கூடிய மொழி நமது தமிழ் மொழி; அதனைச் சிறுபோதிலேயே கைவிட்டமையின் ஆங்கிலம் கற்றவர்கள் தாம் கற்றதைப் பிறர்க்கு உரைப்பதற்கு அவரிடம் சொற்கள் இல்லாமல் போய்விட்டன.

இன்று ஆங்கிலம் கற்றவர்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அறிவும் கருத்துக்கள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களாகவே யிருக்கின்றன. ஆங்கிலப் பயிற்சிக்கொப்பாக ஒன்றேனும் ஒரு சிறிது குறைவாகவேனும் தமிழ்ப் பயிற்சியிருந்திருப்பின், அவர் உள்ளத்தில் நிறைந்து கிடக்கும் கருத்துக்களுள் பெரும்பான்மை யானவற்றை ஆங்கிலம் கல்லாத நாட்டுமக்களுக்கு உணர்த்தி ஆங்கிலக் கல்வியின் பயனை நாட்டில் பரவச் செய்வர். போதிய தமிழ்ப்பயிற்சியின்றி நிறைய ஆங்கிலப் பயிற்சி பெற்றுவரும் தமிழ் மக்கள் பஞ்சியடைத்த குடுக்கைகள் போலப் பிறர்க்குப் பயன்பட வழியின்றித் திகைக்கின்றனர்.

இன்று அறிவுத்துறையில் விஞ்ஞானம், கணிதம், வானநூல், மருத்துவ நூல், மின்சார நூல், தொழில் நுட்ப நூல், அரசியல் தந்திர நூல், உள நூல், தாவர நூல், ஏனை உயிர் நூல் என எண்ணிறந்த நூல்கள் ஆங்கிலத்தில் பெருகி வந்துள்ளன. விவசாய வகையில் எத்தனையோ பல அரிய நூல்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. இவற்றின் கருத்துக்களில் ஒரு சிறிதும் நாட்டுமக்களுக்குத் தெரியமல் ஆங்கிலமொழியிலே அடைபட்டுக்கிடக்கின்றன. அவையெல்லாம் வெள்ளம்போல் நாட்டுமக்களிடையே பரந்து பாயவேண்டும். நாட்டுமொழிப் பயிற்சியில்லாமையால் நாட்டவர்க்கு அவை பயன்படாது மட்குகின்றன.

இவற்றை நாட்டுமக்களுக்கு உணர்த்தும் பணியைச் செய்ய வேண்டுமானால் ஆங்கிலம் கற்றவர்களிடம் உள்ள குறையை நோக்கவேண்டும். அவர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப் பதற்கேற்ற தமிழ்ச்சொற்கள் இல்லை; அவை இல்லாமைக்கும் காரணம் அவர்கள் தமிழ்ச்சொற்கள் மிகுதியாகப் பெறுவதற்கேற்ற பயிற்சியில்லை. சிறு வகுப்பில் கற்ற ஒருசில சொற்களைக்கொண்டு. பல்லாண்டுகளாப் பேருழைப் புச்செய்து பெற்ற சொற்பொருளை உரைக்கச்சொல்வது இரண்டடி உயரமுள்ள குள்ளனை எட்டடி உயரமுள்ள நெடியவன் தோள்மேல் கைபோட்டுச் செல்லச்செய்வது போலும் மடமைச் செயலாகும்.

ஆங்கிலமொழிச் சொற்களுக்கு ஒத்த அளவு தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஆங்கிலச்சொற்களின் தொகைக்கு முக்காற் பங்கு தமிழ்ச்சொற்கள் தமிழில் உண்டு. இவையாவும் செயலற்று மடிந்து மறைந்துள்ளன. இவை வெளிப்படவேண்டுமானால், அரசியல், வாணிகம், போக்குவரவு, நீதிமன்றம், தபால் முதலிய எல்லாத் துறைகளும் தமிழில் இயங்க வேண்டும்; இப்போது மூலை முடுக்குகளில் மறைந்துகிடக்கும் தமிழ்ச்சொற்கள் வெளிப்படும்.

அடுத்தபடியாக அரசியல் பணிகளுக்கு ஆங்கிலம் கற்றவர்களை விலக்கி, மிக்க வூதியம் தந்து நாட்டுமக்களுக்கு ஆங்கிலக் கலையறிவை உணர்த்தும் பணியில் ஈடுபடுத்தி ஊக்கவேண்டும். அரசியல் நிலையங்கள், நீதிமன்றகள், மருத்துவ நிலையங்கள், தொழில் நிலையங்கள் ஆகிய எங்கும் தமிழே வழக்குமொழியாக நிலவப் பண்ணினால் ஒருசில ஆண்டுகளில் கல்வியறிவில்லாத நாட்டு மக்கள் பலர் நல்ல அறிவுடைய மக்களாய் மக்கள் ஆட்சிக்கு மாண்புமிக்க உறுப்பினராய் விளங்குவார்கள். நாடும் நல்வாழ்வுக் குரிய செல்வம் சிறக்கும் திருநாடாகத் திகழும்.

முல்லை-ஒரு சொற்பொழிவு


தமிழ் நலம் சான்ற தலைவர் அவர்களே, சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே,
இதுகாறும் நாம் தலைவர் அவர்களின் இனிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தோம். குறுந்தொகை யென்னும் சங்க இலக்கியத்தின் நலம் பலவும் இனிமையுறக் கூறிவந்தனர். யானும், இனி, அக் குறுந்தொகையில் உள்ள முல்லைப் பாட்டுக்களைப் பொருளாகக் கொண்டு சொற்பொழிவு செய்ய இருக்கின்றேன்.
தலைமப் பேருரையில் தலைவன், தலைவி என்ற இரண்டு சொற்கள் அடிக்கடி வழங்கப்பட்டன. தலைவன், தலைவி என்ற இவர்கள் யாவர்? உயர்ந்த குணமும், உயர்ந்த ஒழுக்கமும், உயர்ந்த எண்ணமும், உயர்ந்த சொற்களும், உயர்ந்த செயல்களும் உடைய ஆண்மகன் தலைவன் ஆவான்; அவனோடு எவ்வகையிலும் ஒப்பாகக் கூடிய குணமும் செயலும் ஒழுக்கமு முடைய பெண்மகள் தலைவி ஆவாள். இவ்விருவரும் அன்போடு கூடி இன்புற்று நடத்தும் வாழ்க்கையே பொருள் இலக்கணத்தின் இலக்கியமாகும். இந்த இன்ப வாழ்க்கைக் குரிய ஒழுக்கத்தை விளக்குவதே தமிழ் நூல்களில் காணப்படும் பொருளிலக்கணத்தின் கருத்தாகும்.

உலகில் ஏனை மொழிகட்கு இல்லாத ஒரு சிறப்பு நம் தமிழ்மொழிக்கு உண்டு. ஏனைய யாவும் மக்கள் பேசும் சொற்களுக்கும், அச்சொற்கள் தம்மில் தொடர்ந்து பேசுவோர் கருத்தை வெளிப்படுக்கும் முறைக்கும் இலக்கணம் கூறுகின்றன. நம் தமிழிலக்கணமோ, அவ்வளவில் நில்லாது, மக்கள் நடத்தும் வாழ்க்கைக்கும் ஒரு சீரிய இலக்கணம் காண்பதாயிற்று. இதனையறிந்தே ஏனை நாட்டு அறிஞர் நம் தமிழ் நாட்டின்பாலும், தமிழ் மக்கள்பாலும் பண்டை நாளிலேயே பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, அவர் சிவபெருமான்பால் விடை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் “நான் ஏகும் தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லும்; அந்த நாட்டின் இடைபயில் மனிதரெல்லாம் இன் தமிழ் ஆய்ந்து கேள்வியுடையவர் என்ப; கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார் என்று பதஞ்சலி முனிவர் கூறுகின்றார். ஆகவே, அகத்தியர்க்கும் அச்சம் விளைவிக்கும் அறிவுத்திட்பம் பெற்றது நம் தமிழ் என்பதை மறக்கலாகாது.

இப் பொருளிலக்கணம் காட்டும் இன்பவொழுக்கத்தைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் அகப்பாட்டுக்கள் என்றும், அகப் பொருட்பாக்கள் என்றும் வழங்கும். இப் பாட்டுக்கள் மக்களின் மனவியலை அறிந்து, மனத்தின் உணர்வும், அவ்வுணர்வு உடலை இயக்கும் திறமும் அறிந்து செய்யப்பட்டவையாதலின் இவற்றை ஆராய்பவருக்கு வருத்தமும் மெலிவும் பிறப்பது இயல்பு. ஒரு தலைவன் ஒரு தலைவியைக் கண்டு அவள்பால் தன் நெஞ்சைப் போக்கி மெலிந்துவந்தான்; அவனைக் கண்ட அவன் நண்பன், ’தோழ, உனக்கு ஏன் இவ் வாட்டம்; நீ அன்று பரமன் கூடல் நகரில் இருந்து தமிழாராய்ந்த அகப்பாட்டாராய்ச்சியில் உன் கருத்தைச் செலுத்தினையோ? அன்றி, எழுவகைப்பட்ட இசையில் செலுத் தினையோ? யாது செய்தனை? இவை தவிர உன் அறிவை அலைக் கக்கூடியது வேறு என்ன இருக்கிறது என்பவன்,

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்மெலி வெய்தியதே”

என்றதாக நம் மணிவாசகனார் பாடுகின்றார். மேலும், அகப்பாட்டு, ஏழ் இசை என்ற இரண்டினும், ஆராய்வார் அறிவை அலைப்பதில், அகத்துறைப்பாட்டே மேம்பட்டது என்பதைக் காட்ட, “தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ” என்பதை முதலிலும், “ஏழிசைச் சூழலை” அதன் பின்னரும் வைத்துக் கூறியிருக்கின்றார். இத்துணை ஏற்றமுடைய முதலிய தொகை நூல்கள் என்பனவாகும்.

இக் குறுந்தொகையில் குறிஞ்சி முதலாக ஐவகைத் திணைச் செய்யுட்கள் இருக்கின்றன என்றும், அவற்றின் பொருள் நலம் இத்தகையது என்றும் தலைவரவர்கள் நன்கு காட்டிட, நாம் அனைவரும் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றோம்.

இனி, அக் குறுந்தொகையின் முல்லைப்பாட்டுக்களைப்பற்றி ஒரு சிறிது கூற நினைக்கின்றேன். உயர்ந்த எண்ணமும், உயர்ந்த சொல்லும், உயர்ந்த செயலும் உடைய ஆண்மகனொருவன், அத்தகைய பெண்மகளை விரும்பியொழுகுகின்றான். அவன் வினைகுறித்தோ, பொருள்குறித்தோ தலைவியைவிட்டுப் பிரிந் தேகுகின்றான். அவன் பிரிந்து சென்று தான் குறித்த கருத்து முடியுமளவும் தன் காதலியின் பிரிவைப் பொறுத் திருந்து, அது முடிந்தபின் மீள்கின்றான். இவ்வாறு அவன் பிரிவாற்றியிருப்பது முல்லை எனப்படும்; அவனைப்போல, அவளும், அவன் பிரிந்த வழி, பிரிவுத் துயரைப் பொறுத்து, அவன் வற்புறுத்திவிட்டுச் சென்ற சொற்களைத் தெரிந்து தேறி, அவள் மனைக்கண்ணே இருந்து தனக்குரிய அறங்களைச் செய்தொழுகுவது முல்லையெனப்படும். இதுவே முல்லையென் பதன் முடிந்த கருத்தாகும்.

தலைமகள் தலைவியோடு கூடியிருக்கும்போது, இருவர் மனத்தும் நிகழ்ந்த ஒத்த காதலால், இருக்கும் நாள் ஒவ்வொன்றும் இன்பநாள் என்றும் வாழ்நாள் என்றும் கருதுகின்றான். இன்ப நுகர்ச்சியுள்ள நாளே வாழ்நாள்; அஃது இல்லாத நாள் வீழ்நாள் என்று எண்ணுகின்றான்.

“விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர்சா லாவே………..
மாண்வரி யல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலொ டெமக்கே”

என்று வாய்விட்டும் கூறுகின்றான். இதனால், அவனது உள்ளம் காதல்வயப் பட்டு, அதன் வழி எய்தும் இன்பத்தில் எத்துணை மிகுதியாக ஆழ்ந்திருக்கின்ற தென்பது தெரியும். இன்ன இயல்புடை யோன் ஏதோ வினையோ பொருளோ கருதிப் பிரிகின்றான் என்றால், அப் பிரிவு எத்துணை வன்மையுடைதாக இருக்கும். அதற்கு - அப் பிரிவிற்கு, காதலின்பத்தை நீக்கி வைக்கும் பிரிவிற்கு - அவ் வன்மை எங்கிருந்து வந்தது? “வினையே ஆடவர்க்கு உயிர்” “நாளும் நாளும் ஆள்வினை மழுங்க, இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்” “அறங்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலா அச் செல்வமும் இரண்டும், பொருளினாகும்” என்ற எண்ணங்கள் எழுந்து அத் தலைமகனது ஆண்மைப் பண்பை எழுப்புகின்றன. உயர் குணமும் செய்கையும் படைத்த உரவோனா தலால் இவ்வாண்மகன் தானே தலைமகனாயினான். ஆதலால், அவனது உள்ளத்தே ஆள்வினையும் காதலும் பூசலிடுகின்றன. உண்மைத் தமிழ்த் தலைமகனுக்குக் காதலினும் ஆள்வினையே மாண்பு தருவது. அதனால், ஆள்வினை மேம்படுகிறது; காதல் தாழ்கிறது. அவனும் பிரிந்து ஏகுகின்றான். எடுத்த வினையையோ பொருளையோ முடித்துக் கொள்ளுகின்றான். அதன் முடிவில் இன்பம் தோன்றுகிறது. அவ்வின்பம் அவனது காதலியை நினைப் பிக்கின்றது. அவளை “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” என்று மன மகிழ்ந்து வியக்கின்றான். வினை செய்யுமிடத்து அவனது உள்ளம் அவளை நினையாதோ? காதல் பெருவலியுடையதாயிற்றே என்ற ஐயமெழும். கடலன்ன காதல் எழினும், அதனை அடக்கி எடுத்த வினையை முடிப்பதே தலைமைக் குணமாதலால், அவன்பால் அதன் வேகம் செல்லுவதில்லை. வினைசெய்யு மிடத்து அவளை நினைந்து கூறல் ஆண்மையன்று என்பதற்காகவே ஆசிரியர் தொல்காப்பியனார் இங்கே ஓர் அணை வகுக்கின்றார். வினைமேற் சென்ற ஆண்மக்கள் அது முடியுங்காறும் தன் காதலியின் காதலின் பத்தை நினைந்து கலுழ்தல் கூடாது; வினைமுற்றி வென்றியெய்தும் போது அது மிக்குத் தோன்று தல் சிறப்பென்கிறார். “கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்” என்கின்றார்.

வினைமுடிவில் தோன்றிய இன்பத்தால் தலைவியை நினைந்து மீண்டுவரும் தலைவன் அவளைப் பிரிந்திருந்த நாட்களையும், பிரியாது வாழ்ந்த நாட்களையும் எண்ணுகின்றன். “எல்லாம் எவனோ பதடிவைகல்” எனப் பிரிந்திருந்த நாட்களைப் பதடிவை கல் என்கின்றான். இன்பவுள்ளீடு இல்லாத நாள் என்பது கருத்து. வினைமேற் செல்லும்போது மடங்கியிருந்த அவனது காதல், அது முடிந்து மீளும்போது அளவுகடந்து எழுந்து அவனது உள்ளத்தை விதுப்புகின்றது. நெஞ்சம் துடிக்கின்றது. அது இக்குறுந்தொகைக் கண் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. உழவன் ஒருவனுக்குப் பரந்த நிலம் இருக்கிறது; ஆனால் அவன்பால் ஒரே ஏர்தான் உண்டு. நிலத்து ஈரமும் பக்குவமாக இருக்கிறது; உழுகின்றான். உழுது முடிவதற்குள் ஈரம் செவ்வி கெட்டுப் புலர்ந்துவிடும்போல் இருக்கிறது. உழவேண்டிய பகுதியோ பரந்து கிடக்கின்றது; அந்நிலையில் அவன் உள்ளம் என்ன பாடுபடும்! வினை முடித்து வரும் தலைவன் தன் மனை நோக்கி வருகின்றான்; குறித்த காலமும் வந்துவிட்டது; போகவேண்டிய வழியோ நீண்டிருக்கிறது; காலத்தில் சென்று சேர்வதற்கு அவன் உள்ளம் துடிக்கிறது; குறித்தகாலம் தவறின் தன் காதலி என்னாவாளோ என்ற எண்ணம் அவன் மனத்தைக் கலக்கு கின்றது. என்ன செய்வான் !

“ஆடமை புரையும் வனப்பின் பணைத்தோள்
பேரமர்க் கண்ணி இருந்த வூரே
நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓர்ஏர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே”

என்று பாடுகின்றான்.

இனித் தலைமகள் என்பவள் உயர்ந்த குணமும் உயர்ந்த செய்கையு முடையவள். அவளும் காதல் வயப்பட்டுக் கருத்தறியும் பான்மையளே. அவள் அவன் பிரிவாற்றாது மெலிந்து பொலிவிழந்து நிற்பதும், அவள் குறித்த காலம் நோக்கி யிருப்பதும், இதற்கு இடையே தனக்குரிய இல்லறம் நன்கு ஆற்றுவதும் அவளுடைய தலைமைப் பண்புகளாகும். அவன்பால் உண்டான காதலால் அவனைப் பிரிவது என்பது அவட்கு உயிரிழப்பது போல்வதாகும். மேன்மையே உருக்கொண்டது போல்பவள். தன் அறத்துக்கோ புகழ்க்கோ, கற்புக்கோ சிறு கேடு தோன்றக் கூடிய சொல்லோ செயலோ தோன்று மாயின் உடனே உயிர் விட்டு விடக்கூடிய அத்துணை மென்மை யுடையவள்; காதலனோடு கூடியுறையுங்கால் “பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன” புலம்புகொண்டு மெலியும் மென்மையுடையள்; அருளின் உருவே அவளது உள்ளம். இப்பண்பு குறித்தே இவளை “மெல்லியல்” என மேலோரும் கூறுகின்றனர்.

இத்துணை மென்மையுடையளாயினும், இவள் மனத்தே கற்பென்னும் கலங்கா நிலைமை, திண்மை, உண்டு. காதலன் பால் அவளுக்குற்ற நம்பிக்கையை எவராலும் எவ்வாற்றாலும் அசைக்க முடியாது. உலகமே தலைகீழாக மாறினும், தன் காதலன் சொன்னதே அவட்கு உறுதியாகும். தலைவன் பிரிகின்ற காலத்தில் குறித்துச் சென்ற பருவம் வருகிறது. அதனைத் தோழி காண்கின்றாள்; இது தலைவன் குறித்த பருவம்; அவனோ இன்னும் வந்திலன்; இம் மெல்லியல் நல்லாள் என்னா வாளோ என்று கலங்குகின்றாள். இதனைத் தலைவி அறிந்து கொள்கின்றாள்; அவள் தோழியை நோக்கி, “தொழி, நீ கவலற்க. புதுப்பூங் கொன்றைக்கானம், கார் எனக் கூறினும், யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலர்” என்று கூறித் தோழியை ஆற்றுவிக்கின்றாள்.

மேலும், தலைவி தான் தலைமகனோடு கூடிச் செய்யும் இல்லறம் வெறும் காதலின்ப நுகர்ச்சி யொன்றையே கருதியது என்னுங் கருத்து அவட்குக் கிடையாது. தலைவன்பால் அவள் எவ்வளவு காதல் மிக்கிருப்பினும், அவள், அவன் தன் ஆண்மை குன்றாதிருக்கும் நெறி எதுவோ அதனையே நினைத்த வண்ண மிருப்பள். ஆண்மைக்கு மாசும், மானத்துக்குக் கேடும் தருவனவற்றை மனத்தால் நினைத்தற்கும் அவள் கூசுவள். குறித்த பருவம் வரக் கண்ட அவள் ஒருநாள் மெலிந்து நின்றாள். அதனை அறிந்த தோழி வருத்தமுற்றாள். அப்போது, அத்தலைவி, “தொழி, யான் அவர் குறித்த பருவம் வரக்கண்டு வருந்துகின்றேனில்லை. இப் பருவம் தனித்திருப்போரை வருத்தும் இயல்புடையது; இங்கே இது என்னை வருத்துவதுபோல அங்கே அவரையும் வருத்துமன்றோ ! அதுபோது அவர் தாம் மேற்கொண்ட வினையில் சோர்வுபட்டு ஆண்மை குன்று வரோ? வினை முடியாது பழி தந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணி என் மனம் கலங்குகிறது; வெறெ ஆற்றாமை யன்று என்கின்றாள்;

“பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே,
யானே மருள்வேன் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே”’

என்று கூறுகின்றாள். வினைமுடியாது ஆண்மை மழுங்கிக் காதற்கு அடிமையாகி விடுவரோ என்று வெளிப்படக் கூறாமல், “என்னா குவர் கொல்” என்றும், “யானே மருள்வேன்” என்றும் கூறும் திறத்தைக் காண்மின்! தலைமைக்குணமும் தலைமைச் செய்கையு முடைய தலைவிக்குத் தோழமைகொண்ட நங்கை யொருத்தி உளள்; அவளைத் தோழி என்றே கூறுவர். அறிவே அவளது வடிவு; அன்பே அவளது உள்ளம்; அறமே அவளது செய்கை. “இடித்து வரைநிறுத்தல்” அறிவுடை யோரது செயல் என ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்தா ராயினும்,

“உறுகண் ஓம்பல் தன்இயல் பாகலின்,
உரிய தாகும் தோழிகண் உரனே”

எனத் தோழிக்கும் அச் செயல், பணிந்த லாய்பாட்டால் உரித்தாகு மாறு மொழிந்திருக்கின்றார். அதனால் அவள் ஒழுகும் திறம் மிக்க ஒட்பமுடையதாகவுளது.

புதுமணம் புணர்ந்த தலைமகன் தலைமகளோடு கூடியிருக் கும்போதே வேட்கை மீதூர்ந்து புணர்ச்சி விதும்புகின்றான். அதனை அந்நெறியே விடின் அது கழிகாமமாய் ஆண்மைக்கும் இற்சிறப்புக்கும் மாசு தரும் என்று அஞ்சுகின்றாள் தோழி. உடனே அவள், அவனை நெருங்கி, “ஐயனே, நல்ல இனிய நீர் நிரம்பிய குளத்தில் ஆம்பல் மலர்ந்துளது; அதனை ஒருவன் பறிக்கச் செல்கின்றான். மார்பளவு தண்ணீரில் நின்று பறிக்கின்றான். அப்போது எனக்குத் தண்ணீர் தாகமாய் இருக்கிறது; தண்ணீர் கொண்டுவாவெனக் கரைமேல் இருப்பவர்க்கு அவன் சொன்னால், அது எப்படியிருக்கும்? அது போலன்றோ இருக்கிறது தங்கள் செயல்” என அவன் வேட்கை வேகத்தைத் தணிக்கின்றாள்.

“அயிரை பரந்த அந்தண் பழனத்து
ஏந்தெழில் மலரத் தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்”

என்று கூறி, களவிக்காலத்தே எளிதிற் கூடலாகாதபடி நாங்கள் இருந்த காலத்தில் எழுந்த வேட்கையைப் பொறுத்துக் கொண்டிருந்த உமக்கு இதுபோது அவ்வன்மை கழிந்து போயிற்றோ? என் நெஞ்சு வருந்துகின்றதே என்பாள், “யாம் நமக்கு அரியமாகிய காலைப் பெரிய நோன்றனிர், நோகோயானே” என்கின்றாள். இவ்வண்ணமே இவளது அறிவின் பெருமையும், அன்பின் அகலமும், அறத்தின் சிறப்பும் இத்தொகை நூல்கள் விரியக் கூறுகின்றன. ஈண்டு விரிக்கிற் பெருகும்.

இனிச் செவிலியென்பாள் ஒருத்தியுண்டு. அவள் இத்தோழியின் தாயாவாள். தலைவியின் தாய்க்குத் தோழியுமாவாள். அவளும் தலைமக்களது வாழ்வு செம்மை பெறு வதற்குவேண்டும் செயல் பலவும் செய்பவள். அவள் ஒருகால் தலைவியின் இல்வாழ்க்கையைக் காண வருகின்றாள். அச் சமயத்தில் தலைவி தயிர்க்குழம்பு வைத்துத் தன் கணவனுக்கு இடுகின்றாள். அவன் “இனிது” என உண் கின்றான். அது கண்ட தலைவி பெருமகிழ் கொண்டு நாணத்தால் அதனை மறைக்கின்றாள். அதனைக் கண்டு உவந்த செவிலி, தலைவியைப் பயந்த தாயிடம் சென்று உரைக்கின்றாள்:

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”

என்று சொல்லி மகிழ்கின்றாள்.

இவ்வாறு பண்டை நன்மக்களின் வாழ்க்கைப் பண்புகளை ஓவியம்போற் காட்டும் இச் சங்க இலக்கியங்களை ஆராய்ந்து மாநாடு கூட்டி மகிழ்ந்து சிறக்கும் இக் கூட்டத்தில் என்னையும் கலந்துகொள்ளச்செய்து சிறப்பிக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும், இதுகாறும் யான் கூறியவற்றை அமைதியோடு கேட்டிருந்து சிறப்பித்த உங்கட்கும் என் நன்றி யினைத் தெரிவித்துக்கொண்டு என் சொற்பொழிவை இதனோடு நிறுத்திக்கொள்ளுகின்றேன்.

“வாழி பகலோன் வளரொளிசேர் ஞாலமெலாம்
ஆழி செலுத்தும் அரசர்பிரான்- வாழியரோ
நங்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாணாளும்
அங்கம் தழைக்க அமைந்து.”

முடத்தாமக் கண்ணியார்


உலகத்தில் பலதிறப்பட்டு விளங்கும் நாடுகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நுணுகி யாராயின், அது அந்நாட்டின் பெருஞ் செல்வமுடைமையைப் பற்றிநிற்றல் ஒருபுடை தேற்றமாயினும், மறுபுடை, அந்நாட்டின் சான்றோருடைமை ஒரு ஏதுவாக நிற்றல் தோன்றும். அச்சான்றோர் கல்லித்துறைபோகிய கமையுடைய ராவர். அவரை நக்கீரனார் பொருண்மொழி கொண்டு, ’யாவதும் கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையார்" என்பது மிகையாகாது. நாடும், மக்களும் நன்னிலை யடைதற்குக் காரணர் அவரே யென்பது, “ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழு மூரே” எனப் பிசிராந் தையார் தாம் நரையின்று நின்றமைக்குக் காரணங் கூறியவழிக் கூறியவாற்றானும் தெளியப்படும். படவே, சான்றோர் பலர் உளராதலே ஒரு நாட்டின் சிறப்புடைமைக்கு அடிப்படை யென்பதும் துணியப்பட்டதாம்.

இத்தகைய சான்றோர்கள் நம் நாட்டில் மல்கியிருந்த காலம் சங்க காலமென்பது யாவரானும் கொள்ளப்படுவதொன்று. அக் காலத்தின் பெருமையும், அக்காலத்து நம் நாடடைந்திருந்த பெருமையும், அக்காலத்து நூல்களைப் படிக்கும் ஒவ்வொரு வருடைய மனத்தும் தோன்றி மிளிரும். அவர் தம் சொல்வன்மையும், அச்சொல்வழித் தோன்றும் செம்பொருட்டன்மையும், அவற்றை நுனித்துணர்ந் துணர்த்தும் அவரது நுண்புலமையும் நினைத்தொறும் இன்பம் பயக்கும் நிர்மையவாம்.

நிற்க, இச்சான்றோர்கள் பாடிய கவிகளும் பலவுள. அவற்றின் உண்மையே தமிழராய நமக்கும், நம் மொழிக்கும் பெருமை யைத்தந்து நிற்கின்றது. இவ்வுண்மையை யுணர்ந்து, உழைத்த சான்றோர்கள் மிகப்பலர். நம் தமிழ்நாட்டில் சங்கம் நின்று நிலவியகாலத்து, இவர்தம் கவிகளைத் தொகுத்து வைத்த சான்றோர்கள் மிகப் பலர். அவர்களால் றொகுக்கப்பட்ட நூல்களும் பல. ஆயினும், அவற்றைக் காலமென்னும் கடல் மண்டிக்கொள்ளச் சிலவே எஞ்சி நின்றன. நின்றவையும், பேணுவாரின்மையிற் பிலம்புகுற் தருவா யடைய, நம் தமிழ்நாட்டுப் புலவர்களுக்குப் புலவராய உயர்திருவாளர். உ. வே. சாமிநாதையரவர்கள் அந்நிலையை யுணர்ந்து, விரைந்து சென்று உடலுயிர் பொருளெல்லாம் ஒருங்கே செலுத்தி முயன்று, விரும்புவோர் கைக்குக் கொணர்ந்தனர். அவர்மாட்டு என்ன கைம்மாறு ஆற்றுங்கொல்லோ இவ்வுலகு!

இப்பெருந்தகையார் முயற்சியின் பயனாய் வெளிவந்துள்ள பண்டைத் தமிழ்நூல்களின்கண், மேற்போந்த சான்றோரின் சால்புடைமையும், சான்றாந்தன்மையும் தோன்றுகின்றன. அந் நூற்களுட் பத்துப்பாட்டென்ப தொன்று. அதன் பெருமையை என் நாவினாற் கூறுதலினும், “பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ-எத்துணையும் பொருட்கிசைவில் இலக்கணமில் கற்பனையே” எனவரும் திரு. சுந்தரம்பிள்ளையவர்கள் பாவாற் கூறுதல் காலச் சிறப்புடைத்தாம். இப்பெருநூற்கண் பத்து நூல்களிருக் கின்றன; அவற்றின் தொகையே இந்நூல்; இந்நூற்களைப்பாடிய சான்றோர் எண்மராவர். இது சங்ககாலத்தே தொகுக்கப் பெற்றது. பெறினும் அகநானூறு, குறுந்தொகை முதலியவற் றின்கட்போல இந்நூற்கண் தொகுத்தார் பெயர் காணப்பட வில்லை. எனினும், இந்நூற் கண்ணுள்ள “மலைபடுகடாம்” என்னும் நூலுரையால் இது சங்ககாலத்துத் தொகுக்கப்பெற்ற தென்பது தோன்றுகிறது. அதுவருமாறு:-

தீயின் அன்ன ஒண்செங் காந்தள் - நெருப்பினை யொத்த ஒள்ளிய செங்காந்தள்.

“இதற்கு நன்னனென்னும் பெயர் தீயோ டடுத்தமையின், ஆனந்தமாய்ப், பாடினாரும், பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்தபிள்ளை யாசிரியர் குற்றங் கூறினாராலெனின், அவர் அறியாது கூறினார்! செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல் இவர் நல்லிசைப்புலவ ராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவார்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையானென்றுணர்க.”

எனவே, இப்பத்துப்பாட்டும் சங்ககாலத்தே தொகுக்கப் பெற்றதென்பதும் துணியப்பட்டதாம்.

இனி, மேற்கூறிய எண்மருள், ஈண்டு யான் கூறத்தொடங்கிய சான்றோரும் ஒருவராவர். இவர் பாடிய நூலொன்று இப் பாட்டின்கணுளது. அது பொருநராற்றுப்படை யென்பது. இவர் பாடியதாக வேறு நூல்கள் இற்றைப்போது பெறப்படும் தொகை நூல்களுள் உள்ளனவாகத் தெரிந்தில. ஆகவே, இவர்க் கமைந்த உயர்குணங்களனைத்தும் இவ் வொருநூலைக் கொண்டே நாம் உய்த்துணர்தல் வேண்டும். அன்றியும் இவரது இயற்பெயர் மட்டில் “முடத்தாமக்கண்ணி” யென்பது தொல்காப்பியச் சேனாவரை யத்தா னுணரப்பெறுகின்றது. இவருடைய பெற்றோர், மரபு, சமயம் முதலியவை நமந்குத் தெரிந்தில.

இனி, இவர் கரிகாற் பெருவளத்தானையே இப்பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமையான், இவரது காலமும் அவன் காலமே யாம் என உணர்ந்தோர் கூறுகின்றனர். அன்றியும், இவர் அவன் அவைக்கண் இருந்தாரெனவும், அவனால் புரக்கப்பெற்றா ரெனவும் “சோழன் கரிகாற்பெருவளத்தான்” என்னும் நூல் கூறுகின்றது. கூறவே, இவரது காலம் ஏறக்குறைய இரண்டாயிர மாண்டுகட்கு முன்னராதல் தோன்றுகின்றது.

இனி, இவரது நல்லிசைப் புலமை நலத்தையும், அதனைப் புலப்படுத்து மாற்றான் வெளிவரும் இவரது சீரிய குணங்களையும் ஆராய்ந்து காண்பாம். இவ்வாராய்ச்சிக்குக் கருவி பொருநராற்றுப் படையென யான் முன்னரே கூறியுள்ளேன்.

பொருநாரவார் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலராவர் என்பர் ஆசிரியர் நச்சினார்க் கினியர் ஆயினும், புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர் இவர் கிணைகொட்டுமவர் என்பர் ஆற்றுப்படை யென்பது தலைவனொருவனிடத்துச் சென்று மிக்கப் பரிசுபெற்ற ஒரு இரவலன், எதிர்ந்தோரைக் கண்டு தான் பெற்ற பெருவளத்தை அவர்க்குக் கூறி, அவரையும் தன்னைப்போற் சென்று பெறுமாறும், அவ்வாற்றிற் குரிய தலைவனது நாடுசேர் ஆற்றின் அருமை, தலைவன் பண்பு முதலியவற்றையும் கூறிவிடுத்தலாம். இத்தொழிற்குரி யோர் கூத்தர், பாணர், பொருநர், விறலியர், புலவர் முதலியோராவர். இது,

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்”

    எனவரும்  

தொல்காப்பியத்துட் பெறப்பட்டது. சிறிது விரிவாக நோக்கின்,

“புரவலன் பரிசு கொண்டு மீண்ட
இரவலன் வெயிறெறூஉ மிருங்கா னத்திடை
வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்
புரவலன் நாடூர் பெயர்கொடை பரா அய்
ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை
ஓங்கிய வதுதா னகவலின் வருமே” எனவரும்

பன்னிருபாட்டியலுட் காண்க. ஈண்டு ஆற்றிடையெதிருறும் இரவலர் பொருநராகலின், அவரை யாற்றுப்படுத்துக் கூறும் இந்நூலும் அவர் பெயராலே “பொருநாரற்றுப்படை” யென்றாயிற்று.

இனி, இந்நூலின் கருப்பொருள் வருமாறு:- பெருவளம் பரிசிலாகப்பெற்ற ஒரு பொருநன் அது பெறாதானொருவன் தன் எதிர்வரக்கண்டு, தான் அதனைப்பெற்ற வரலாற்றினை அவற்குக் கூறுகின்றான். “ஏ பொருந! இடையறாத செல்வ வருவாயினை யுடைய அகன்ற இப் பேரூர்களில் நடைபெறும் விழாக்கள் கழிந்த பின்னரும் ஆண்டுத் தரப்பெறும் சோற்றை விரும்பாது அவ்விழாக்கள் நிகழும் வேற்றுப்புலங்களைக் கருதிச்செல்லும் பொருந! நின் அறிவே அறிவு! பெடைமயில் அருகுநின்ற மயில் போலும் சாயலும், கல்விப்பெருமையும் தக்கிருப்பவளும், நின்னோடு தொடர்ந்து வருபவளுமாய இப்பெருமை மிக்க பாடினி, சாதிலிங்கத்தை யுருக்கி வார்த்தாற்போலும் சிவந்த இந்நிலத்தில் நடத்தலால், வழியிற் கிடக்கும் சிறுசிறு சுக்கான்கற்கள் அவளுடைய சீறடியிற் றைப்புண்டு அவட்குச் சால வருத்தத்தைத் தந்ததுமன்றிப் பாற்பழங்க ளொத்த கொப்புளங்களையும், அவள் தன் காலில் எழுப்பி நோய் செய்கின்றன. செய்யினும், அவள் அதனைத்தாங்கி நடந்தனளாக, நீயும், காலம் உச்சிக்காலமான சந்தியென்பதை யுணர்ந்து, மேற்செல்லுதலையுந் தவிர்த்துக் கொழுவிய நிழலில்லாத மரா அமாத்தின் கீழ்த் தங்கினை. இவ்வழியின்தன்மை யறியாய் கொல்! இது நாடோறும் பல யானைகள் நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் காட்டுவழியாகும்; இம் மரத்திடத்தும் இலைகள் இல்லாமையால், படர்ந்து நாற்றிசையும் செல்லும் இதன் கிளைகளின் நிழல், வலையொன்றை மேலே கட்டினாற்போல் மெல்லிதாக விருக்கின்றது. இந்நிலையில் நீ அவளொடும் இங்குத் தங்கினை. ஆ, நின் நிலையை என்னென்பேன்!!”

காதல் வாழ்வு


வாழ்வு என்பது உயிர் உடம்பொடு கூடி உலகில் தோன்றி நிற்கும் செய்கையாகும், உயிர் உணர்வு வடிவாகி அது அறிவாற்றல், விழைவாற்றல், தொழிலாற்றல் என்ற மூன்றினால் ஆகிய தனி ஆற்றல் என அதனை அறிஞர் கூறுவர். உயிரின் வேறாகிய உடம்பு, உலகில் விளையும் பொருள்களை உண்டு வளர்வது; அதனைப் பழந்தமிழர் உணவின் பிண்டம் என்பர். “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்று உரைத்தனர், ஆகவே அவ்வுடம்பு உலகின்கூறு எனப்படுகிறது. அதற்கு உயிர்போல உணர்வு கிடையாது. உணர்வில்லாத உடம்பும் அதனையுடைய உயிரும் வேறுபட்டவையாயினும் அவை ஒன்று பட்டு உலகில் வாழ்வு பெறுகின்றன.

இனமான பொருள்களே ஒன்று சேரும்; இனமல்லாதவை அவ்வாறு சேரா; இது யாவரும் அறிந்த உலகியல் உண்மை. வேறுபட்ட இயல்புடைய உயிரும் உடம்பும் எப்படி ஒன்றுபடு கின்றன; ஏன் ஒன்றுபடுகின்றன என்ற கேள்விகள் அறிஞர் உள்ளத்தில் எழுந்துள்ளன. “வந்தவாறு எங்ஙனே? போமாறு ஏதோ?” என்று திருநாவுக்கரசர் கேட்கின்றார். என்றாலும் நாம் ஒன்று கூறலாம்; அதாவது உலகில் வாழ்தல் வேண்டி உயிர்கள் உடம்போடு ஒன்றித்தோன்றுகின்றன என்போமாயின் அது முற்றிலும் பிழையாகாது.

உலகில் இப்படித் தோன்றி வாழும் உயிர் வகைகளுள் கண்ணுக்குத்தெரியாத நுண்பொருளைக் காட்டும் வன்மைமிகுந்த கண்ணாடியாலும் காணமுடியாது மிகமிக நுட்பமாயுள்ள உயிர்கள் (micio or ganisms) முதல் மக்களுயிர் ஈறாகப் பல உயிர்கள் உள்ளன; இத்தனையென எண்ணிக் காண முடியாத பெருந் தொகையினவாகும். ஆயினும் அவற்றுள் மக்களுயிர் அறிவு தொழில் முதலியவற்றால் ஏனை எல்லாவற்றையும்விடச் சிறந்தவை; ஆதலால் மக்கள் வாழ்வு மேன்மைகொண்டு விளங்குகிறது.

மக்களுயிர் இனம் இனமாய்க் கூடிவாழும் குணமுடையது. அவ்வினத்தைச் சமுதாயம் என்பது இக்கால வழக்கு. தமிழ் நாட்டில் வாழும் மக்களினம் தமிழ் இனம் என்றும் தமிழ்ச் சமுதாயம் என்றும் பராதநாட்டு மக்களினம் பாரதசமுதாயம் என்றும் கூறப்படுவது இதுபற்றியே யாகும். இச்சமுதாயம் பல குடும்பங்களால் ஆகிய ஒரு கூட்டம். அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று உதவியும், உதவப்பட்டும் ஒப்புரவு செய்து வாழ்கின்றன. இதனால் இவ்வொப்புரவு வாழ்வு சமுதாய வாழ்வு எனவும் குறிக்கப்படும். சமுதாய வாழ்வு தக்காங்கு அமையுமானால் மக்கள் வாழ்வு இன்பமாக இருக்கும்.

சமுதாயத்துக்கு ஒவ்வொரு குடும்பமும் அடிப்படையாகும். சமுதாயமாகிய ஆலமரத்துக்கு குடும்பங்கள் வேரும் வீழ்துமாய் நின்று விளக்கம் தருகின்றன. குடும்ப வாழ்வு அன்பும். அறிவும், அறமும் கொண்டு சிறக்குமானால் சமுதாய வாழ்வு இன்பமும், பொருளும், அறமும் பெற்றுப் பெருமையுறும்.

குடும்பம் என்பது கணவனும் மனைவியுமாகிய இருவரால் ஆகியது. அவ்விருவரும் முறையே ஆணுடம்பும் பெண்ணுடம்பும் உடையவர். இந்நாளைய உடற்கூற்றுப் புலவர்களுள் தலைசிறந்த வரான அலிக்சிஸ் காரல் (alixis carrel) என்பவர். ஆடவர், பெண்டிர் என்ற இருவரும் மக்களேயாயினும் இருவர் உடம்பும் தோல், தசை, நரம்பு முதலிய கூறுகளுள் அணுவுக்கணு வேறுபட்டுள்ளன என்று தெளிவாக அறுதியிட்டுக் காட்டியுள்ளார். வேறுபட்ட உடற்கூறு படைத்த ஆணும் பெண்ணும் ஒன்றி வாழ்வது குடும்ப வாழ்வின் நுண்ணிய அமைப்பு. “ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று பெருங்கடுங்கோ உரைக்கின்றார். ஒற்றுமை யில்லாத குடும்பம் ஒருசேரக்கெடுவது கண்கூடு. பேணப்படுதலும் பேணுதலும் உடையது பெண் என்றும் ஆளுதலும் சூளப்படுதலும் உடையது ஆண் என்றும் கருதப்படுகின்றன.

வேறுபட்ட உடலினராகிய ஆண்மகனும், பெண்மகக்ளும் ஏன் கணவனும் மனைவியுமாய் ஒன்றுபட வேண்டுமென உண்மை ஞானம் (philosophy) உசாவுகிறது, எங்ஙனம் ஒன்றுபடுகிறார்கள் என்று விஞ்ஞானம் (science) வினாவுகிறது. உடம்பொடு கூடியுறையும் உலகியல் வாழ்வால் உயிர் அறிவின்பம் பெறுகிறது என உண்மை ஞானமும், ஏனை மரஞ்செடி கொடிகளாகிய உயிர்கள் பூத்துக் காய்த்துக் கனிவாயிலாக விதை பயந்து தம் இனத்தைப் பெருக்கு வதுபோல மக்களுடம்பு வளர்ந்து அழகு மலர்ந்து மேனி பொலிந்து வேறு மக்களுடம்பை உலகில் தோற்றுவித்து இனம் பெருக்குகிறது என விஞ்ஞானமும் முறையே விடை காணுகின்றன. இவ்வாற்றால் மக்களினத்தின் உயிர், அறிவு, இன்பம் நாடியும், உடல் இனப்பெருக்கம் கருதியும் இயலுகின்றன என்பது தெளிவாம். ஆகவே குடும்ப வாழ்வின் பயன் அறிவின்பப் பேறும் இனம்பெருகும்பேறும் என்ற இரண்டு குறிக்கோள்களைக்கொண்டு நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்குகிறது. “மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே” எனப் புறநானூறு கூறுவது எத்துனைப் பொருத்தமாகிறது!

குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் அறிவின்பமும் இனப்பெருக்கமும் கருதுகின்றனராயினும், இருவரும் தனித்தனி இருந்தவழி இப்பேறுகளை அடைதல் முடியாது. தனித்தவழி ஓரளவு அறிவு விளக்கம் எய்துமாயினும், அது நிறைந்த முழு அறிவாய் இன்பம் நல்காது. ஆணும் பெண்ணுமாய்க் கூடியிருந்தே அவற்றைப் பெறுதல் வேண்டுமென்ற கருத்தை உள்ளீடாகக் கொண்டே உலகியற் படைப்புப் பெரும்பான்மையும் அமைந்திருக்கிறது. அணுவினத்து உயிர்களுள் ஒரு சில ஆண் பெண் எனப்பால்பகா உயிர்களாக (assexual) இருக்கின்றன. அவற்றின் உடல் ஆண்கூறும் பெண்கூறும் பொருந்தியதென உயிர்நூற் புலவர் கூறுவர். அது கொண்டே தமிழர் தங்கள் இறைவனுக்குக் கற்பித்துக்கொண்ட உடம்பில் ஒரு பாதி பெண் கூறு எனவும், ஒருபாதி ஆண்கூறு எனவும் உரைத்து, அவனை அம்மையப்பன் என்று குறிப்பாரயினர், நிற்க.

ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு இயலுவது குடும்பம் என்றும், அவ்விருவர் உடம்பும் வேறு வேறு இயல்பின என்றும் கண்டோம்; வேறுபட்ட இருவரும் உயிராலும் உடலாலும் ஒன்றுபடவேண்மே! அஃது எவ்வாறு அமைகிறது?

மக்கள் உடம்பு உலகியற் பொருள்களால் ஆவது என்பது முன்பே அறிந்ததொன்று. உலகியற் பொருள்கள் ஒன்றை யொன்று ஈர்த்து நிற்கும் இயல்புடையன. அதனை ஈர்ப்புச் சத்தி யென்றும் ஆகர்ஷண சக்தி என்றும் இன்றைய விஞ்ஞானம் விளம்புகிறது. பழந்தமிழ் நூல்கள் அச்சத்தியைப் பரிப்பு என்று பகர்ந்துள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள், கோள்கள் முதலியவற்றை ஈர்த்துக் கொண்டிருப்பதையும் அவ்வாறே பிறவும் ஒன்றையொன்று ஈர்த்து நிற்பதையும் புறநானூறு பரிப்பு என்று குறிக்கிறது. அதனால் ஆணுடம்பு பெண்ணுடம்பையும் பெண்ணுடம்பு ஆணுடம்பையும் ஈர்க்கின்றது. மக்களினத்தில் நிகழும் இவ்வீர்ப்பு அல்லது பரிப்பு, அன்பு எனவும் வழங்குகிறது. உடம்பளவாய் நின்று ஒன்றையொன்று ஈர்த்து நிற்கும் அன்பால் ஈருடலும் நெருங்கி முயக்கத்தால் சேருமிடத்து ஊற்றின்பம் பிறக்கும்; அவ்வூற்றுணர்வு, உடற்கூறுகளை யூடுருவிச் சென்று உயிரைத் தொடுகிறது. இவ்வாறே கண், காது முதலிய கருவி களும் ஒருவர் ஒருவரை உள்ளத்தில் முழுவுருவத்துடன் இடம் பெறச் செய்கின்றன. இங்ஙனம் காதலர் இருவரின் உயிருருவம் அவரவர் உள்ளத்தில் மாறி நின்று இன்பம் செய்கிறது. உள்ளத்தின் நினைவும் வாயின் சொல்லும் செய்யும் செயலும் அவ்வின்பப் பொருளாகவே நிற்கின்றன. இவ்வகையில் இருவர் உடம்பு வழிநிற்கும் உயிரும் ஒன்றுபட்டு ஒன்றையொன்று இன்றியமையாத நிலையை எய்துகின்றன. இது கொண்டன்றோ st. paul என்பார் “know ye not that he that is joined to a harlot is one body, for the twain, saith he, shall become one plesh” என்று கூறினார். உடம்பொடு உயிரிடையென்ன அன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு” என்றார் திருவள்ளுவர். இவ்வாற்றால் ஒன்றையொன்று அவாவி நிற்கும் அன்பு பெருகிக் காதலுணர்வாய்த் திரிகிறது. அன்பு பொது: காதல் சிறப்பு.

ஆண் பெண் இருவர்பாலும் உயிருணர்வும் உடம்பின் ஆற்றலும் தனித்தனியே நிலவுகின்றன. இளமைக்காலத்தில் உயிரது அறிவு வளர்ச்சியினும் உடம்பினது வளர்ச்சி இன்றியமையாததாம். விரைவில் வளரும் வளர்ச்சியும் பெற்று வேறு உடம்பு படைக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டியது மக்களுடம்பின் இயற்கையறம். அறிவின்பம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்ட உயிர்க்கு அது நின்ற உடம்பே கருவியாதலால், அவ்வுடம்பு வளமையும் வன்மையும் பெறும்வரை உயிரின் உணர்வாற்றல் ஒடுங்கி இருக்கிறது. உடம்பு வளர்ந்து வன்மை பெறப்பெற உயிரது அறிவாற்றல் பைய வளர்ச்சி பெறும். உயிரைக் கல்வியும் உடலை உணவும் வளர்க்கின்றன.

காளைப்பருவத்தில் உயிரது அறிவு நலத்தினும் உடலினது வளர்ச்சி நலம்மிக்கு நிற்கும்; அதனால் அவ்வுடல் வேறு உடம்பு படைக்கும் தன் தொழிலைத் தொடங்குகிறது. காய்த்துக் கனிபயக்கும் செவ்வி எய்திய செடிகொடிகள் பூத்துப் பொலிவு சிறந்து தோன்று வதுபோல ஆடவர் பெண்டிராகிய இருவர் உடம்பும் காளைப் பருவத்தில் கட்டழகும் கண்கவர் வனப்பும் பெறுகின்றன. இது பற்றியே சில அறிஞர் “love two in the epidiwin” (pitigritti) என்று கூறுகின்றனர். மகப்பயத்தற் கேற்ற வளர்ச்சி நிறைந்த அக்காலத்தைப் பழந்தமிழர் காமச் செவ்வி யென்றனர். காமம் என்பது, நிறைவு என்ற பொருள் தரும். கமம் என்ற சொல்லடியாகப் பிறந்த தூய தமிழ்ச்சொல். “கமம் நிறைந்து இயலும்” என்பது தொல்காப்பியம். இவ் வரலாறு அறியாதவர் அது காமம் என்ற வடசொல் என்பர். வடமொழிக் காமத்துக்கும் தமிழில் உள்ள காமம் என்ற சொல்லுக்கும் ஓசை யொன்றேயன்றிப் பொருள் வேறுவேறாகும். திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலையும் வடமொழியில் வாற்சாயனர் எழுதிய காமசூத்திரத்தையும் ஒப்பு நோக்குவோர் நன்கு அறிவர்.

காமச் செவ்வி கனிந்து நிற்கும் காளைப்பருவத்தில் உடம் பின் ஆற்றல் மிகுந்தும் உயிர் அறிவின் ஆற்றல் குறைந்தும் இருக்குமன்றோ? அப்போது மக்கள் உள்ளத்தில் காமக்குறிப்பு ஓங்கி நிற்க, அறிவின் வலி ஒடுங்கியிருக்கும். அறிவு நிலை ஓங்குங்கால் காதற்காமம் ஒடுங்கும். கல்வி வளத்தால் உயிர் அறிவு ஒத்த வன்மையுடையதாயின், அறிவுக்கும் காமக்காதலுக்கும் உள்ளம் போர்க்களமாகும். ஒன்று மிகுமிடத்து மற்றொன்று அடங்கி அதன் வழியே செல்லும். காளைப்பருவத்தில் பெரும் பாலும் உயிரறிவு உடம்பின் இயற்கைத் தொழிலாகிய உடம்பு படைக்கும் காதற்காமத்துக்கு அடங்கிமடி கின்றது. உடம்பு முதிர்ந்து வலிகுன்றுமிடத்து உயிர் அறிவு வன்மை மிகுந்து அதன் காமப்பணியை ஒடுக்கித் தன்வழி நிற்கப்பண்ணும். இதுவே காமக்காதல் வாழ்வின் நுண்ணிய இயல்பாகும்.

இரவுப்பொழுதில் இனிது உறங்கிய உயிர்கட்குக் காலைப் பொழுது மக்கள் செய்தற்குரிய தொழில்கட்கு வேண்டும் கிளர்ச்சியை நல்குகிறது; அவருடைய உடம்பு அத்தொழில்களில் விருவிருப் பாகப்பணிபுரிகிறது. அந்நிலையில் உடம்பின் காதற்குறிப்பு ஒடுங்குதலால் உயிரறிவு ஓங்கி நின்று அறிவுப்பேற்றின் கண் செல்லுகிறது. நண்பகலில் இரண்டும் சமநிலையை எய்துகின்றன. மாலைப்போதில் பரவும் இருளால் உலகின் ஒளி குன்றுவதால் உயிர் அறிவு ஒடுங்குகிறது: அந்நிலையில் உடலின் வழித்தாகிய காமக்காதல் எழுந்து ஓங்கி உயிரறிவைத் தன் அடிப்படுத்திக் கொள்ளும். அதனால் மக்கள் உள்ளம் காதல் நினைவுகட்கு இட மாகிறது. காலையில் ஒடுங்கியிருந்த காதல்வேட்கை நண்பகலில் சமநிலை யடைந்து மாலையில் ஓங்கி நிற்கிறது. அப்போது காதலிற் பிணிப் புண்ட காளையர் உள்ளம், காதல் துணைவர் இல்லாவிடின் வருத்தம் மிகுந்து கவலை எய்தும். “காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர்போல வரும்” என்றும் “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலரும் இந்நோய்” என்றும் திருவள்ளுவர் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும்.

இக்காதல் வாழ்வின் நலம் கூறவந்த திருவள்ளுவர், “வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கு அன்னள் நீங்குமிடத்து” என்றார். எனவே, காதலர் உள்வழி வாழ்வும் இல்வழிசாதலும் ஆதல் பெற்றாம். அதனால், காதலர் இல்வழிக்குச் சாதல் பயக்கும் கொலைக்களத்தை உவமித்தும், மாலைப்போதினைக் கொலைபுரிந்து சாதலையுறுவிக்கும் ஏதிலரோடு ஒப்பவைத்தும் கூறுகின்றார்.

மறுப்பு முறை


பொழிலன்பர்கள் சென்ற சிலமலர்களில் பின்னங்குடி, திரு. சுப்பிரமணிய சாத்திரியார் எழுதிய சொல்லதிகாரக் குறிப்புரை நூலை, தமிழ்ப்புலவர் திரு. சோமசுந்தரம் பிள்ளை யவர்கள் ஆராய்ந்தெழுதிவரும் மறுப்புரையினைக் கண்ணுறு தலேயன்றி யூன்றி நோக்குதலும் செய்து வருகின்றனர். அம்மறுப்பு, அக்குறிப்புரை நூலைத் தொடக்க முதல் முடிவுகாறும் ஆராயத் தொடங்கியுள்ள தென்பதும், அது மேற்கொண்டுள்ள முறை நடுநிலை இகவாத தென்பதும் அன்பர்கள் அறிந்தனவாம். நிற்க, சென்ற மலரில் வித்துவான் திரு. வேதாசலய்யர் அவர்கள் பிள்ளையவர்கள் எழுதிய மறுப்புக்கு மறுப்பொன்று எழுதியிருக்கின்றார். வாதப்பொருளாய குறிப்புரை நூலுடையார் நோக்கத்தையாதால், பிரதிவாதமாகிய மறுப்புரை நோக்கத்தையாதல் கொள்ளாது, காலத்துக்கேற்ற கோலம் கோடல் வேண்டும் என்னும் நோக்கத்தையுடையராய், ஐயரவர்கள் மறுப்பெழுதத் தொடங்கியுள்ளார். அது மறுப்பு முறையன்று; வாதி பிரதிவாதிகள் இருவரும் ஒரு நோக்கமுடையராய், அதனைச் சாதிக்கு முகத்தால் எழும் பொருள்பற்றி வாதிக்கின்றமையின், அவ்வாதப் பிரதிவாதங்களைத் தூக்குவோர் பிறிதொரு நோக்க முடையராதல் அமையாதாம்; இருவர் நோக்கமும் வழுவாயவழி, பிறிதொன்றமையும்.

இனி, ஒரு பொருள்பற்றி வாதம் நிகழ, அதனை மறுக்கு முகத்தால் பிரதிவாதம் எழின், இவ்வாதம் முடிவதன்முன், ஒருவர் இடைபுகுந்து தகைதலேயன்றி வெற்றுரை தொடுத்துக் காலங் கழிப்பித்தல் தருக்க நெறிக்கும் வழக்குக்கும் ஒவ்வாத செயல் என்ப. குறிப்புரை நூலை வாதப் பொருளாகக் கொண்டு திரு. பிள்ளையவர்கள் பிரதிவாதம் புரிந்து மறுக்கின்றாராகலின், அதற்கிடையிலே, ஐயரவர்கள் மறுப்பெழுதுதல் மறுப்பு முறையன்று.

இனி, பிள்ளையவர்கள் செய்யும் மறுப்புரையின் பாங்கறியாது முன்னுரையிற் கூறியன சில கொண்டு, மறுப்புரை போன்று, ஐயரவர்கள், ஆரியம் படித்தவராதலே யன்றித் தமிழும் தாம் படித்தவராவர் என்பதனைத் தமிழுலகிற் கறிவிக்கின்றனர். வனப்பும் மணமும் வாய்க்கப் பெற்ற மலர் வறிதேகானிடைத் தோன்றி மலர்ந்து கமழ்ந்து வாடுதல்போல் அறிவுடையாருட்பலர் சொல் வனப்பும் அறிவு மணமும் அறிந்து உலகு இன்புறும் வகைப் பயன்படாது கழிகின்றனர் என்ற புலவர் பொருளுரையை உணர்ந்து, ஐயரவர்கள் முற்போந் தமையால் அவர்க்குத் தமிழ்த்தாயின் தண்ணருள் பெருகுமாக.

இனி, ஐயரவர்கள் குறிப்புரை நூலின் மறுப்புரை குறித்துக் கூறுவார், “திருவாளர் சோமசுந்தரம் பிள்ளையவர்கள் வரையும் மறுப்பினைக் கண்ணுற்றேன். அதில் பெரும்பாலும் சாத்திரியார் வரையும் உரை நடையைப் பற்றிய கண்டனமே கூறுவர்” என்கின்றார். ஒரு பொருள்பற்றி எழுந்த உரைக்கு மறுப் பெழுதுவோர், அப் பொருளைக் கண்ணுற்ற துணையானே அமைந்து அதுசெய்தல் மறுப்புமுறையன்று. அப்பொருளுரைகளை நன்காராய்ந்த பின்னரே அது செய்தல் முறையாகும்.

“சாத்திரியார் வரையும் உரை நடையைப் பற்றிய கண்டனமே கூறுவர்” என்னும் இஃது உரைநடை அத்துணைச் சிறப்புடைத்தன்று என்று உணர்த்துவதோடு, “ஆதலின் உரை நடையைப்பற்றி ஆய்தல் பயனில் செயலாம்” என்று பின் கூறுவது அவ்வுணர்ச்சியினை வலியுறுவிக்கின்றது. ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாவது உரைநடைப் பொலிவே என்பதனை எல்லா மொழி வல்லாரும் கூறுகின்றனர். ஒருவன் தன் கருத்துட்கிடந்த பொருளைப் பிறர்க்கு வெளியிடுதற்குப் பெருந்துணையாகும் இவ்வுரைநடை, அப்பொருளைத்தன் அகத்தே கொண்டு, தான் அதற்குப் புறமாய் நின்று விளங்கும் நேர்மை கற்றோரேயன்றிக் கற்க முயல்வாரு மறிவர். பொருட் பொலிவு குறைவுற்றிருப்பினும், அதனை வெளிப் படுக்கும் உரைநடைப் பொழிவு அக்குறை வினைநிறைவு செய்து காட்டும் என்ப. சொல்லதிகராக் குறிப்புரையுடையார்; ஆங்கிலத் திலும் பெரும் புலமை பெற்றவராகலின், அம்மொழிக்கண் உரைநடையைப்பற்றிய கொள்கைகள், சிறந்தோர் கூறியன, பல இருத்லை அறிவர். ஆரியம், ஆங்கிலம், தமிழ் என்ற மூவகை மொழியினும் பயிற்சி மிக்க அவர், அவற்றின்கண் உரைநடையாக்கம், பொருளராய்ச்சி முதலிய நெறிகளைக் கண்டிருப்பார். ஆதலின், அவர் கருத்தறியாது ஐயரவர்கள் மறுப்பெழுதுதல் முறையன்று.

பொருளின் உயர்வு, தூய்மை முதலிய நலங்கட்கேற்ப, அப்பொருளை வெளிப்படுக்கும். உரையும் உயர்வு தூய்மை முதலிய நலம் பெற்றுத் திகழ்தல் எம்மொழியினும் காணலாம் உயர்பொருளைக் குற்றம் நிறைந்த உரையிடை வைத்துக்கூறுதல் அவ்வுயர்பொருளை யுணர்ந்தார் செயலன்று; அவ்வுணர்ச்சியின் பயனுமன்று. மணியினைப் பொன்னிடை வைத்து அழகு திகழக் காண்பரே யன்றிக் குப்பையிற் கலந்து காணார், ஒருகால் கிடப்பக் காணில், குப்பையிற் பிரித்துக் காணவே அறிவுடையார் முயல்வர். அங்ஙனமே, தமிழ்மொழிக்கண் ஒப்பும் உயர்வுமின்றித் தானே தனக்கு நிகராய்விளங்கும் தொல்காப்பிய நுண்பொருளை ஆராய்ந்து காண்பவர், அதனை, வெளியிடுங்கால், தூயசெம்மொழி நிறைந்த உரையிடைப்பெய்து உரைப்பர்; வேறே வழுநிறைந்த மொழிபயிலும் உரை அவரிடைத்தோன்று தலும் செய்யாது; ஒருகால் தோன்றின், அது, அவரது இலக்கணவறிவின்மையைக் காட்டி விடும். இலக்கண அறிவின் முதற்பயனான உரைநடையை ஆராய்தலும் வேண்டுவதே. இதனைக் காணாது “உரைநடையைப் பற்றி ஆய்தல் பயனில் செயலாம்” என்று அவர் கூறுவது மறுப்பு முறையன்று; உண்மையுரையு மன்று. தமிழறிவு சிறிது பெருகவுடை யார்க் கன்றித் தொல்காப்பியப் பொருள் இனிது விளங்காதென்ப. அது வாயாகுதல் நடைமுறையிலும் காண்கின்றோம். அதனை ஆராய்ந்து குறிக்கும் அறிவு படைத்தவர், அவ்விலக்கண வறிவின் பயனாய உரைநடை வரைதலிற் பிழையாரான்றே! அன்றியும், இலக்கண ஆராய்ச்சிக்கு எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணை அறிவன்றே அவ்வாராய்ச்சியை வெளியிடுதலினும் வேண்டப்படுவது!

இனி, “உரைநடை காலத்துக் கேற்ற நடையானே வரைதல் பயனளிக்குமே யல்லாது பலதிரிசொற்களைப் பெய்து வரைதல் சிறப்பின்று” என்று கூறிய ஐயரவர்கள், “மரபியலின் கண்ணே பேராசிரியரும் அவ்வக்காலத்துக் கேற்ற நடையானே வரைதல் வேண்டுமென்கின்றனர்” என்றார்.

உரைநடை, தமிழ்மொழிக் கண்ணதாயின், சீரிய கூரிய தீஞ்சொற்களால் வழுவின்றி எழுதப்படுதல்வேண்டும், என்னுங் கருத்தினராய் உரை நடையைப் புலவர் ஆராய்வாரக. அதனை யறியாத ஐயரவர்கள் மற்றொன்று விரித்தல் குற்றமாகும். வழுவின்றி யன்ற உரைகள் திரிசொற்கள் பெய்து வரையப் பட்டிருக்குமென்பது இவர் கருத்துப்போலும். இன்றேல், இதனை இவர் எழுதுவதன் கருத்து என்னை? இனி, பேராசிரியர் காலத்துக்கேற்ற நடைவேண்டு மென்றனரேயன்றி, வழுமலிவும் பொருளியைபின்மையும் பிறவும் ஆகிய குற்றமெல்லாம் நிறைய எழுதுதல் வேண்டுமென்றாரிலர். இங்கே, பேராசிரியர் “மரபு நிலை திரியா” என்ற மரபியற் சூத்திரவுரையில், “முற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைய வாயினன்றே பிற்காலத் துப்பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீ இக் கொள்வதென்க” என்ற பொருளுரையை ஐயரவர்கள் மனத்துட் கொள்வாராக. இவரோரன்னார் கருத்துட்கொண்டு போலும், சிலர், “ஒருவள்” “பூந்து” முதலிய சொற்களைப் பெய்து நூல்கள் எழுதுதலே யன்றி, இன்ட்டர் மீடியட், பி. ஏ. முதலிய தேர்தல்களுக்குப் பாடங்களாக விதிப்பித்தலும் செய்கின்றனர்.

இனி, “அன்றியும், ஆரியம் படித்தார் தமிழறியார் என்பர்,” என்று கூறுகின்றார். பிள்ளையவர்கள் கூறியது உண்மை யுரையே. ஆரியம் படிப்பவர் ஆரியம் அறிவரே யன்றித் தமிழறிதல் யாங்ஙனம் கூடும்? இருமொழியும் ஒருங்குணர்ந்தார் ஒருங்கறிதல் கூடும். ஆரியம் படித்தார், தமிழறிந் திருப்பாராயின், தமிழறிவாராவர்; ஆங்கிலம் அறிந்திருப்பாராயின், அஃதறிந்தாராவர். ஆரியம் படித்ததனாலே ஒருவன் தமிழையும் அறிந்தானாவன் என்பராயின், அவருரையைக்கொள்ளார் அறிவுடையோர்.

இனி, “வடமொழி நூல் உணர்ச்சியுடையாரே தமிழின் உண்மைப் பொருளைத் தெள்ளிதின் விளக்குவர்” என மாதவச் சிவஞான யோகிகளும், தொல்காப்பிய உரையாசிரியர்களுட் சிலரும் விளக்கினர் என்பர். ஒரு மொழியின் இலக்கண ஆராய்ச்சிக்குப் பிற மொழிகளின் இலக்கண அறிவு ஒருவர் பெறின், அது நன்றே. ஆரிய மொழியின் இலக்கண முறையினும், ஆங்கில மொழியின் இலக்கணமே உரைநடை யாக்கத் திற்கும், சொல் முடிபுகட்கும் ஒருபுடை நெருங்கிய ஒற்றுமை யுடைத்தாய்த் தோன்றுதல்bகொண்டு, ஆங்கிலமுணர்ந்த ஒருவர், “ஆங்கில நூல் உணர்ச்சி யுடையாரே தமிழின் உண்மைப் பொருளைத் தெள்ளிதின் விளக்குவர்” என்பராயின், அஃதெவ்வாறு கோடற்பாலதாமோ அவ்வாறே இக்கருத்தும் கோடற்பாலதாம்.

ஒரு மொழியின் இலக்கணம், எள்ளின் நெய்போலும் என்ப வாகலின், அந்நெய்யின் இயல்பாராய்வார், எள்ளையாராயாது கொள்ளையாராய்தலோடு, பிற மொழியின் இயல்பற்றிப் பேசுதல் ஒக்கும் என்க. ஒருகால் ஒற்றுமைப் பகுதிகள் இருக்கலாம். அவற்றைத் காட்டுதல் அறிவுடைமையாகும். இந்நெறியை நோக்காது, ஐயரவர் கள், வடமோழி தென்மொழிகளின் உணர்ச்சியின்மை யுண்மைகளைத் தொடுத்து நெறி பிறழ்தல் மறுப்பு முறையன்று.

இனி, இவர், பிள்ளையவர்கள் மறுப்புரைகளில் பிழையெனக் கண்டு காட்டியவற்றுக்கு மறுப்புக் கூறத் தொடங்குகின்றார். ஆராய்தற்கு எடுத்துக் கொண்ட பொருள் இலக்கண மேயாக, பிறிதோர் சின்னூலையும் அதன் உரையையும் சான்று கோடல் அமையாது; அந்நூலே அமையும். உயர்ந்தோர் மனப்பான்மையை அவரிற் குறைந்தார் மனப் பாண்மை கொண்டளித்தல் பொருளா ராய்ச்சிக்கு விளக்கந் தராது. இவற்றை நோக்காது விசாகப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், வை. மு. சடகோப ராமாநுசா சாரியார் முதலிய நன்நூல் உரைகாரர்களையும் பிற சின்னூல் எழுதினோரையும் காட்டி முடிபு வகுக்கின்றார். இவர்கள் பெரும்பாலும் முன்னோர் கூறுவன வற்றைக் கூறி யாங்குக் கோடலே யன்றி, முன்னோர்போலக் கூடாவிடைகளால் தூய்மை செய்த உரைவகுத்தல் செய்வதிலர். இவருட் சிலரொழியப் பலர் தம்முடைய கருத்தே உரைத்திலர். இலக்கண ஆராய்ச்சி செய்பவர், அதனை ஒப்ப, நூலொன்றுளதாயின், அதனையாதல், இன்றேல், அவ்விலக் கணத்தைப்பற்றிப் பிறர் எழுதியவற்றை யாதல் துணைகோடல் பொருந்துவதாம். அதனிற் பிற்பட்ட நூல்களைக் கருவியாகக் கோடல் மறுப்பு முறையன்று.

ஆகலின், புலவர் பெருமக்களாவார் குறிப்புரை நூலையும், அதன் மறுப்புரையையும் முற்றும் தூக்கி நோக்கி, தகுவனவும் தவிர் வனவும் எடுத்துக் காட்டி முடிபு கூறுதலே யன்றி, இனியும், பலரும் எழுதும் உரை, பாட்டு ஆகிய இருவகை நூல்களையும் ஆராய்ந்து வழுக்களைந்து நம் தமிழ் மொழியினை வளர்த்து வளம்பெறச் செய்வார்களாக. இவ்வகையான மறுப்புக்களும், சொற் போர்களும் எழுந்தமைகாரணமாக, ஆங்கிலம், ஜர்மன், ப்ரெஞ்ச் முதலிய நாட்டின் மொழிகள் வளமுற்றுத் திகழ்கின்றன என்பதையும் நினைவு கூர்வார்களாக.

நற்றிணைக் கடவுள் வாழ்த்து


(நற்றிணைக் கடவுள் வாழ்த்து திருமாலைக் குறிப்பதாகு மென்று நற்றிணை உரைகாரரான ஆசிரியர் பின்னத்தூர். திரு. நாராயணசாமி ஐயரவர்கள் குறிப்பதே பொருத்த முடையதாவ தென்பதைச் சிறக்க விளக்கிக் காட்டுகின்றது இக்கட்டுரை.)

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே

என்பது சங்கத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் காணப் படும் கடவுள் வாழ்த்து. இதனைப் பாடிய ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தெள்ளா றெறிந்த நந்திவன்மன் காலத்தில் வாழ்ந்த சான்றோர்களில் ஒருவர்; பாரதக் கதையைத் தமிழில் எழுதிய சிறப்பால் இவர் பாரதம் பாடிய பெருந்தேவனா ரென்று சிறப்பிக்கப்பட்டார்.

‘தீதற விளங்கிய திகிரியோனை, எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேத முதல்வன் என்ப; அவனை வணங்கி வழிபடுவது நலம்’ என்பது இதன் கருத்து.

வேத முதல்வனுக்குச் சேவடி மாநிலம்; உடுக்கை (உடை) கடல்; மெய் விசும்பு; கைகள் திசை; கண்கள் ஞாயிறு, திங்கள், தீ என்பன. மாநில முதலியவற்றான் இயன்ற உலகத்து எல்லாப் பொருளினும் பயின்று ஒன்றாயும் வேறாயும் உடனாயும் உள்ள இம்முதல்வன், எல்லா வுயிர்கட்கும் குற்ற மில்லையாக விளங்கும் அறவாழி யுடையவன்; இவனே, வேதங்களுக்கும் முதல்வன் என்பது பொருள்.

இனி, நற்றிணை யுரைகாரரான ஆசிரியர் பின்னத்தூர், திரு. நாராயணசாமி ஐயரவர்கள், “மாயோனே வேத முதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோ மென்று வாழ்த்துக் கூறாநிற்பது” எனக் கருத்தும், “பசுங்கதிர் மதிய மொடு சுடர்கண்ணாக” என்று பாட வேறு பாடும், திகிரியோன் என்ப தற்குத் “திகிரியையுடைய மாயோனே” என்று பொருளும் கூறுவர்.

மேலும், உரை விளக்கத்தில், இப்பாட்டு ஏடுகளில் சிதைந்து காணப்பட்ட தென்றும், வடமொழிச் செய்யுளை நோக்கி இது செம்மை செய்துகொள்ளப்பட்ட தென்றும் விளங்குமாறு, “ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்றமையின், வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்” றென்று குறித்துள்ளார். பாரதம் பாடிய பெருந் தேவனாரது வரலாறு கூறியவிடத்தே, திரு. ஐயரவர்கள், “இந்நற்றிணைக்குக் கூறிய காப்பு விஷ்ணு சகஸ்திர நாமத்தியான சுலோகமாகிய ஹூ: வாஷௌ (பூ:பாதௌ) என்ற தின் மொழி பெயர்ப்பேயாம்” என்று உரைத்துள்ளார்கள்.

பெருந்தேவனார் வாழ்ந்த காலத்திற்குப் பின்னே எழுந்து நிலவுவது விஷ்ணு சகஸ்திர நாமத் தியான சுலோகமென்பது அதன் சொல் நடையாலே இனிது விளங்குகிறது. அதனால், அவரது பாட்டமைதியை இந்தச் சுலோகத்தின் மொழி பெயர்ப்பாக அறுதியிட்டுக் கொள்வது பொருந்தவில்லை. அந்தச் சுலோகத்தில் அடங்கிய கருத்து கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த தமிழ் நூல்களில் சான்றோர்களால் வழங்கப்பட்டுள்ளது. அன்றியும், நற்றிணை ஏடுகளில், “பசுங்கதிர் மதியமொடு” என்பது “படர்கதிர் மதியமொடு” எனப்பாட வேறுபா டெய்தியும் உளது. படர்கதிர் ஞாயிற்றையும், சுடர் தீயையும் குறிக்குமா கலின், ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றும் மூன்று கண்களாகக் குறிக்கப்படுகின்றன.

இனி, எட்டாம் நூற்றாண்டில் விளங்கிய சேரமான் பெருமாள் தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில், தோழி தலைவனை இயற்பழிக்குந் துறையில்,

பாதம் புவனி சுடர்நய னம்பவ னம் உயிர்ப்(பு) ஓங்கு
ஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு
வேதம் முகம் திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன
போதம் இவற்கோ மணிநிறம் தோற்பது பூங்கொடியே (19)

என்று பாடியுள்ளார். இதனையும், இதற்கு ஒரு நூற்றாண்டு கழித்துப் போந்த பெருந்தேவனாரது இப்பாட்டையும் ஒருங்கு வைத்து நோக்கின், நற்றிணையுரைகாரர் கருத்து ஆராயத்தக்க தொன் றென்பது இனிது விளங்கும்.

திகிரியோன் என்பது “திகிரியையுடைய மாயோனே” எனத் தேற்றமாக உரைப்பதும் அமையாது; அது சிவனையும் குறிக்கும்; அயனும் அரியும் அரனும் அருகனே என்ற கருத்துப்படப் பாடலுற்ற திருத்தக்கதேவர், அயனைக் குறித்து, “முனிமை முகடாய மூவா முதல்வன்” என்றும், அரியை, “மலரேந்து சேவடிய மால்” என்றும், அரனை, “களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த, அளிசேர் அறவாழி யண்ணல்” (சீவக.1611) என்றும் குறிப்பதால், திகிரியோ னென்பதற்கு அறவாழி யண்ணலாகிய சிவன் என்று கூறுதலும் அமைவதாம்.

இதுகாறும் கூறியவாற்றால், நற்றிணைக் கடவுள் வாழ்த்து, அதன் உரைகாரரால் செம்மை செய்யப் பெற்றபோது, வடமொழிச் செய்யுளைத் துணைக்கொண்டு செம்மை செய்தல் வேண்டா; இதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே யெழுந்து நிலவிய பொன்வண்ணத் தந்தாதிச் செய்யுள் துணைக்கொள்ளப் பெற்றிருக்கவேண்டும் என்பதும், பசுங்கதிர் மதிய மென்னும் பாடம் ஞாயிற்றைத் தழுவி நில்லாமையின், படர் சுடர் மதிய மொடு என்ற பாடம் மேற்கொள்ளப் பட்டிருக்கவேண்டும் என்பதும், திகிரியோ னென்பது மாயோனையே குறிக்கு மெனல் வேண்டா; அது சிவபெருமானையும் குறிக்கு மெனக்கோடல்வேண்டு மென்பதும் கூறியவாறாம்.

கல்லாடனார்


** கல்லாடனார் ஒருவரல்லர்**

‘கல்லாடனார்’ என்ற பெயரைக் கண்ட அளவில் அன்பர் களுக்கு இவர் சங்க காலத்துப் புலவர் பெருமக்களுள் ஒருவர் என்பது நினைவிற்கு வரும். சங்க காலத்து நூல்களில் மட்டு மன்றிச் சைவத் திருமுறைகளிலும் கல்லாடனார் ஒருவர் உளர். சைவத் திருமுறையா சிரியர்களான கபிலதேவர், பரணதேவர் போலச் சங்கத் தொகை நூல்களிலும் கபிலரும் பரணரும் உள்ளனர். ஆயினும், சங்ககாலத்துக் கபில பரணர்கள், கபில பரணதேவர்களின் வேறாவர் என்பர். எனவே, கல்லாடனாரும் சைவத் திருமுறையாசிரியரான கல்லாட தேவரின் வேறாவர் என்பர். இவ் விருவரின் வேறாகத் தொல்காப் பியத்துச் சொல்லதிகாரத்துக்கு உரைகண்ட கல்லாட ரொருவரும், கல்லாட மென நிலவும் நூலுக்கு ஆசிரியரான கல்லாட ரொருவரும், தமிழிலக்கியத் துறையில் காணப்படுகின்றனர். ஆகவே, தமிழுலகில் கல்லாடர் நால்வர் இருக்கின்றன ரென்பது தெளிவாகும். இந் நால்வரும் ஒருவரா, இருவரா, மூவரா என்பதனை இப்போது இங்கே ஆராயப்புகவில்லை. அதனைப் பின்னர்ச் செய்தற்கு முன்னர், சங்ககாலத்துக் கல்லாடனாரைப்பற்றிச் சிறிது ஆராய்ச்சி முறையிற் கூறுவோம்.

** பாண்டியன் நெடுஞ்செழியன்**
கல்லாடனார், பாண்டிநாட்டைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர். நெடுஞ்செழியன் பாண்டிநாட்டு அரசுகட்டி லேறிய சின்னாட் கெல்லாம் முடிவேந்தர் இருவர், வேளிர் ஐவராக எழுவருடன் தலையாலங்கானம் என்றவிடத்தே போர் செய்யவேண்டியவனானான். அக்காலை, அவன் மிக்க இளையனாயிருந்தான். அவனைப் போரெதிர்ந்தவர் எழுவரும் மிக்க வலியுடையரா யிருந்தனர். ஆயினும், பாண்டியனது போர் வன்மைக்கு எழுவர் படையும் எதிர்நிற்கமாட்டாது தோற்றோடின. நெடுஞ்செழியனுக்கு இவ் வெற்றியால் உண்டாகிய நெடும்புகழ் தமிழக மெங்கும் பரவிற்று. மேலும், நெடுஞ்செழியனுக்குத் தமிழ்ப் புலவர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உண்டு. புலவராற் புகழப்பாடாமை ஒருவற்கு உண்டாகக்கூடிய குறைகளுள் பெரும்குறை யென்பது அவன் கொள்கை. அவனும் இனிய பாட்டுப் பாடுவதில் வல்லவன். தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுள் ஒருவனாகிய தமிழ் வேந்தனுக்குத் தமிழிற் பாடவல்ல தகுதியுண்டென்பது ஒரு சிறப்பாகுமா என எண்ணலாம்; அக்காலத்தில் வேண்டுமானால் அவ்வாறு கூறுவது குறைவாகத் தோன்றும். நம்முடைய காலத்துக்கு அது வியப் புத்தானே!

** மாங்குடி மருதனார்**
பாண்டியன் நெடுஞ்செழியனுக்குண்டான மறம்வீங்கு பல் புகழ் அக்காலத்து வாழ்ந்த புலவர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவருட் பலரும் சென்று அவனைப் பாராட்டினர். அவன் அவைக்களத்தே அரிய பாட்டுக்களால் அவன் நாளவையைச் சிறப்பித்தவர் மாங்குடிமருதனா ரென்பவராவர். அவர் தன்னைச் சிறப்பித்துப் பெருங்காஞ்சி பாடியது கேட்டு மகிழ்ச்சி மிக்க அவன் அவர்க்கு மாங்குடியை முற்றூட்டாகத் தந்து, அவரையும் “மாங்குடி கிழார்” என்று சிறப்பித்தான். ஆகவே, அவன்பால் வளம்பெற்றுச் செல்வ வாழ்வு எய்திய புலவர் பலர் என்பது சொல்லாமலே விளங்கும். அப்புலவர் கூட்டத்தில் ஒருவராய் அவனது நன்மதிப்புப் பெற்றவர் கல்லாடனாரு மாவர்.

** சங்ககாலக் கல்லாடனார்**
கல்லாடனார் நெடுஞ்செழியனைக் கான வந்துகொண்டிருக் கையில், அவனொடு பொருது தோற்ற வேந்தர் நாட்டுவழியே வந்தார். வழியில், அந்நாட்டு நீர்த்துறைகள் பாண்டிப் படையிலிருந்த களிறுகள் படிந்து உழக்கியதனால் இடிந்து பாழ்பட்டுக் கிடந்தன; ஊரவர்களின் நுகர்பொருள்கள் சூறையாடப்பட்டும், கொண்டன போகக் கொள்ளாதன இரவலர்க்குக் கொடுக்கப் பட்டும் சிதறுண்டன. பேரூர்களில் உள்ள பூங்காக்களில் நின்ற காவன்மரங்களெல்லாம் வெட்டுண்டுகிடந்தன; பெருஞ் செல்வ மனைகள் தீவைக்கப்பட்டு வெந்து கரிந்துபோயிருந்தன. எதிர்ப் பட்டோரை இதுகுறித்துக் கல்லாடனார் வினவினார். அவர்கள்,

“நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோன்என”

மொழிந்தனர். இதுகேட்ட கல்லாடனார்க்கு உள்ளத்தே அசைவு பிறந்தது. புலமிக்கவரைப் புலமைதேரும் புலவர் பெருமக னாக விளங்கும் இப் பாண்டியன், “போரால் நாட்டிற் குண்டாகும் கேடு இத்துணைப் பெரிது என்பதை எண்ணினானில்லை போலும். போர்க்குக் காரணமானவர் பகைவரே யாயினும், இவனும் இக் கேட்டினை யுள்ளத்தாற் காண்டல் வேண்டும்,” எனக் கல்லாடனார் கருதினார். தாம் கண்ட காட்சியை ஒரு பாட்டில் அமைத்து, அவனை யடைந்து, அவற்குப் பாடிக்காட்டினார். அப் பாட்டில், “தலையாலங்கானத்துச் செரு வென்ற வேந்தே, யான் நின்னைக் காண்பது கருதி வந்தேன். வந்த வழி, நின்னால் வெல்லப்பட்ட பகைவேந்தருடைய காட்டு வழி. அக் காட்டில், தன் காதற்கினிய ஆண்மான் புலியால் தாக்குண்டு இறக்கவே, பெண்மான் தன் சிறு கன்றைத் தழுவிக் கொண்டு பசுந்தழை மேயாது கைம்மை கொண்டு வேளைப் பூவைக் கறித்துக்கொண்டிருந்தது,” என்ற கருத்தமைந் திருந்தது. அப்பகுதியை மட்டில் இங்கே தருவோம்.

** செழியனை வாழ்த்திப் பாடல்**

“ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்ப! நிற் கண்டனென் வருவல்
அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீ இய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே.” (புறம்.23)

என்பது.

இப் பாட்டைக் கேட்டதும், பாண்டியன் உள்ளத்தில் இரக்கம் உவட்டெடுத் தெழுந்தது. போரிற்பட்ட வீரர்களை ஆண்மானாகவும், தன்னைப் புலியாகவும், இளஞ் சிறார்களோடு கூடிய அவர் மகளிரை மான்பிணையாகவும் எண்ணினான். கல்லாட னார் புலமை நலத்தை வியந்தான். ஆனால், கல்லாடனார் அவன் உள்ளம் அருள் நிறைந்து நிற்பதை யுணர்ந்தார். “வேந்தே, இத்துணை மெல்லிய உள்ளம் படைத்த நீ, நின்பகைவரை வென்றுகொண்ட போது, போரிற்பட்ட வீரர்க்குரிய மகளிர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை மேற்கொண்ட காட்சியைக் கண்டிருப் பாயன்றோ? அக்காலை,

“நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைத லுய்ந்தன்றோ நின்வேல்? செழிய!”

என்றார். கல்லாடனார் புலமைச் சிறப்புக் கண்டு பெருமகிழ் வுற்ற பாண்டியன், பின்னர் அவருக்குப் பெரும் பொருள் நல்கிச் சிறப்பித் தான். அவரும் அவன்பால் விடைபெற்றுச் சென்றார். சென்றவர், தாம் பாட நேர்ந்தபோதெல்லாம், வாய்க்குமிடந் தோறும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய மறப்புகழைப் பாடுவாராயினர்."

** தாயுந் தலைவியும் தலையாலங்கானமும்**
தன் காதலன் தன்னை மணத்தற்கு முன்பே, தன்னைப் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யொன்று அவனுக்கு உண்டாயிற்று. அவனும், ஒரு கால அளவு கூறிவிட்டுச் சென்றான். அதற்குள்ளே, காதல் நோய் வருத்தக் காதலி உடம்பு வாடலானாள். அவளைப் பெற்ற தாயும் நோய்முதல் நாடியறியும் திறனின்றி மிக்க துயருற்றாள். அவளுடைய தோழிக்கு அவளைத் தேற்றித் தெளிவிக்கும் பொறுப்பு பெரிதாயிற்று. “அம்மே, என் உடம்பு மெலிந்துவிட்டது; உன் தாய்க்கும் துயர் பெரிதாயிற்று. ஊரவர் கூறிக்கொள்ளும் அலர் பெரிதாக இருக்கிறது; ஆகையால் நீ கருத்தழிவது கூடாது; காதலர் நெடுந் தொலைவு சென்றுள்ளாராயினும் உன்னை ஒருபோதும் நினையாமல் இரார்” என்று அவள் சொல்லுகின்றனாள். அவள் சொல்வதைப் பாட்டில் கூறவந்த கல்லாடனார், தலைவியின் உடம்பு வாட்டத்தையும், தாயின் வருத்த மிகுதியையும்,

“தோளும் தோல்கவின் தொலைந்தன, நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள்”

என்று சொல்லிவிட்டு, கூறும் அலர் பெரிது என்பாராய்,

“……………………………………..அலரே.
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் பெருமான்
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேரா ரெழுவர் அடிப்படக் கடந்த
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது” (அகம்.209)

என்று பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற சிறப்பை எடுத்துக் கூறி இன்புறுகின்றார்.

** நன்னனும் நார்முடிச் சேரலும்**
அக்காலத்தே, கொங்கு நாட்டில், மேற்கு மலைத் தொடரின் அடிசார்ந்த பகுதியில் நன்னன் என்பவனும், சேரநாட்டில்களங் காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். நார்முடிச் சேரல் அரசு கட்டிலேறிய சில நாட்களில் நன்னனுக்கும் அவனுக்கும் போருண்டாயிற்று. அதனால் நன்னன் சேரர்க்குரிய பகுதியான நாடொன்றைக் கவர்ந்து கொண்டான். நன்னனது செயல் அந்நாளைச் சான்றோர்க்கு வருத்தமே விளைவித்தது. இன்றைய பொள்ளாச்சி நாட்டில் உள்ள ஆனைமலை யென்பது அப்போது நன்னனூர் எனப்பட்டது. அந்த ஆனைமலை யிலுள்ள கல்வெட்டும், அதனை “வீரகேரள வளநாட்டு நன்னனூர்” (a.r.no. 214 of 1926) என்று கூறுகிறது. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் தான் இழந்த நாட்டைப் பெறவேண்டுமென்ற கருத்தால் காலம் நோக்கி யிருந்தான். உரிய காலம் வாய்த்ததும், சேரல் நன்னனுடன் வாகைப் பெருந்துறை யென்னுமிடத்தே போர் தொடுத்து, நன்னனை வென்று, தான் இழந்த நாட்டையும் மீளப் பெற்றுக்கொண்டான். அதனால் அவன் புகழும் மேம்படுவதாயிற்று. அச் செய்தியறிந்த காப்பியனா ரென்னும் சான் றோர் அவனைப் பாடிய பாட்டில், “பொன்னங் கன்னிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” (பதிற்.40) என்று பாடிப் பாராட்டினர்.

** நார்முடிச் சேரலைப் பாராட்டல்**
இச் சேரமான் செயல் தன் குடிக்குண்டான மாசு துடைத்துப் போக்கும் மாண்புறு செயலாவதைக் கண்டார் கல்லாடனார், அவனைக் கண்டு பாராட்டினார். பின்பு தாம் பாடிய பாட்டொன்றில்,

“………………………………….குடா அது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெரினும்………….” (அகம்.199)

என்று நார்முடிச் சேரலை வைத்துச் சிறப்பித்தார்.

** கொல்லி மலையும் மலையமான் காரியும்**
இனி, கொல்லிமலைப் பகுதிக்குக் கொல்லிக்கூற்ற மென்றும், கொல்லிமலையிற் பூதத்தாற் செய்யப்பட்டதொரு பெண்பாவை யுண்டென்றும், மகளிருள் உருநலம் சிறந்தவருக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக அப்பாவை விளங்குவதென்றும் சான்றோர் கூறுவர். இக் கொல்லிக் கூற்றம் ஒரு காலத்தே சேரர்களுக்குரியதா யிருந்தது. பின்பு ஓரி யென்பவன் அதனை வென்று தனக்குரியதாக்கிக் கொண்டான். அக்காலத்தே காரியென்பவன் மலையமானாட்டை முள்ளூரிலிருந்து ஆண்டு வந்தான். சேரலன் காரியைத் துணையாகக் கொண்டு கொல்லிக் கூற்றத்தைத் தான் கொள்ள விரும்பினான். அதற்கிசைந்த காரி ஓரியொடு பொருது அவனைக் கொன்று அக் கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்கு அளித்தான். இச் செய்தியையும் கல்லாடனார், தாம் பாடிய அகப்பாட் டொன்றில், “முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம்.209) என்று குறித்துப் பாடுவாராய் மலையமான் காரியைச் சிறப்பித்துள்ளார். இவ்வண்ணம் தமக்கு ஓராற்றால் இயைபுடையராகிய பாணன் என்பவனையும், அகுதை யென் பவனையும், கோசர், தொண்டையர் என்ற குடியினரையும் ஏற்ற விடங்களில் கல்லாடனார் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

** தமிழகம் முழுதும் அறிந்தவர்**
கல்லாடனார் பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலையும், மலையமான் காரியையும் பாடியிருக்கின்றமையின், இவர் தமிழகம் முழுதும் சென்றுலாவிய சிறப்புடையவர் என்பது தெளியப்படும். சோழ நாட்டுச் சோழனை இவர் பாடியதாக ஒன்றும் தெரிய வில்லையாயினும், அந்நாட்டு அம்பரில் வாழ்ந்த அம்பர்கிழான் அருவந்தையையும், பொறை யாற்றில் வாழ்ந்த பொறையாற்று கிழானையும் பாடியுள்ளார்.

இவ்வண்ணம் தமிழகம் முழுதும் சென்று, ஆங்காங்குப் புலவர் பாடும் புகழ்க்குரியராய் விளங்கிய வேந்தர்களையும் செல்வர்களையும் புகழ் வடிவில் தம் செய்யுட்கண் நிலைபெறு வித்த சான்றோராகிய கல்லாடனார் எந்நாட்டினர்? எவ்வூரினர்? என்பன இனி ஆராய வேண்டுவன.

** வேங்கட நாடும் பெரும்பாணப்பாடி நாடும்**
தமிழகத்தின் வடவெல்லையாகிய வேங்கடமும், அதனைச் சேர்ந்த பகுதியும் வேங்கடக் கோட்டம் எனப்படும். ஒரு காலத்தில், இக் கோட்டத்தின் வடவெல்லை வேங்கட மலைத் தொடரையும், தென்னெல்லை பாலியாற்றையும் கொண்டிருந்தன. இக் கோட்டங்கள் பல கொண்டது தொண்டை நாடு. தொண்டை நாட்டையாண்ட வேந்தர் சோழரேயாயினும், அவர்க் கீழிருந்து ஆட்சி நடத்திய குறுநிலத் தலைவர் தொண்டையர் எனப்படுவர். தொண்டை நாட்டின் வடவெல்லை வேங்கடவரைத் தொடரும் வடபெண்ணை யாறும், தென்னெல்லை தென்பெண்ணையுமாகும்.

கல்லாடனார் காலத்தே, வேங்கடக்கோட்டத்து வேங்கடத்தில் புல்லி யென்பவன் தலைவனாயிருந்து வந்தான். அவன் செய்த செயலொன்றையும் கல்லாடனார் குறிக்கின்றார் இல்லை. ஆயினும், அப் புல்லியையும் அவனது வேங்கடத்தையும் பலபட எடுத்தோது கின்றார். “பெருமகன் புல்லி, வியன்தலை நன்னாட்டு வேங்கடம்” (அகம்.83) எனவும், “மாஅல்யானை மறப்போர்ப் புல்லி, காம்புடை நெடுவரை வேங்கடம்” (அகம்,209) எனவும், “புல்லிய, வேங்கட விறல்வரை” (புறம்.385) எனவும் கூறுகின்றார். இவ் வேங்கடக் கோட்டத்தின் தென்மேற்குப் பகுதி பெரும்பாணப்பாடி நாடு எனப்படும். அதற்குத் தலைமை தாங்கி ஆட்சி செய்தவன் பாணன் எனப்படுவன். அவன் வழி வந்தவர் இடைக்காலத்தே வாணாதிராய ரெனவும், வாணகோவரைய ரெனவும் நிலவினவராவர். அந்தப் பாணனது நாட்டையும் நம் கல்லாடனார், “எழா அப்பாணன் நன்னாடு” (அகம்.113) என்று பாடியுள்ளார்.

இங்கே காட்டிய பாடற் பகுதிகளை நோக்குவோமாயின், கல்லாடனார்க்கும், புல்லி பாணனாகிய இருவர்க்கும் நேரிய தொடர்பு ஒன்றும் இல்லையென்று நன்கு தெளியலாம். ஆயினும், வேங்கடக் கோட்டமும் பெரும்பாணப்பாடி நாடும் அடங்கிய தொண்டை நாட்டை எடுத்தோதிச் சிறப்பிப்பதால், கல்லாடனார்க்குத் தொண்டை நாட்டோடு தொடர்புண்டென்பது தெரிகிறது.

** தொண்டை நாட்டினர்**
கல்லாடனார் சோழ நாட்டுப் பொறையாற்றுக்குச் சென்று அவ்வூர் கிழவனைக் கண்டபோது, “பெரும, வேங்கடப் பகுதியாகிய வடபுலம் வற்கடத்தால் பசிநோய் மிகுந்து வருந்துகிறது. அதனால் யான் என் சுற்றத்தாருடன் இங்கே வந்து தங்கினேன்,” என்ற கருத்துப்பட, “வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்” (புறம்.391) என்று கூறியுள்ளார். ஆகவே, கல்லாடனாருடைய நாடு தொண்டை நாட்டு வடபகுதி யென்பது தெளிவாம். அப்பகுதி வேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்த தென்பதும் தெள்ளிதாம். வேங்கடத்துக்கும் நமக்குமுள்ள இயைபால், கல்லாடனார் சோழநாட்டு அம்பர்கிழான் அருவந்தை தமக்குச் செய்த சிறப்புப்பற்றி அவனைப் பாராட்டியபோது, “காவிரி யணையுந்தாழ்நீர்ப் படப்பை, நெல்விளை கழனி அம்பர் கிழவோன், நல்லருவந்தை வாழியர்” (புறம்.385) என வாழ்த்துவாராயினர். வாழ்த்துங்கால், அவன் பல்லாண்டு வாழியர் எனச் சொல்லக் கருதியவர், அப் பன்மைக்கு மிகுதி கூறுதற்கு வேங்கட மலையிற் பெய்யும் மழைத்துளியை எடுத்துக் காட்டி, “புல்லிய, வேங்கட விறல்வரைப் பட்ட, ஒங்கல் வானத் துறையினும் பல” என்று கூறுகின்றார். இதனால்,

** உண்டினி துவக்கும் வேங்கடம்**
கல்லாடனார் வேண்டா விடத்தும் தமது வேங்கட நாட்டை யெடுத்தோதுவது பற்றி, அவர் அந் நாட்டினரென்றும், அதன் பால் அவர் பேரன்பினரென்றும் துணியலாம். பொறையாற்று கிழான்பால் தமது வேங்கட நாடு வற்கட மாயிற்றென்று கூறும் அவர், செல்வக் காலத்து அதன் சீரிய நலத்தை உரைக்கின்றார். “மழை தவறாதே பெரும் பெயலைச் செய்யும், நெற்கரிசைகள் மலைபோல் குவிக்கப் பெற்றிருக்கும்; எருதுகள் உதவியால் பெற்ற நெல்லாகிய பெரு வளத்தைப் பெறும் உழவர் அரியல் உண்டு மகிழ்வர்; அரிய லென்னும் கள்ளுக்குத் துணையாக மான் முயல் முதலியவற்றின் ஊனைத் துண்டித் துண்பர்; இவ்வாறு உணவுக் குறைபாடின்றி இனிதுண்டு மகிழும் வேங்கட வரைப் பின் வடபுலம் இப்போது பசி நோய் கொண்டு வருந்துகிறது” என்பாராய்,

“தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும்
விண்டு வனைய விண்டோய் பிறங்கல்
முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் பரந்துபடக் கெண்டி
அரியலார் கையர் உண்டினி துவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென” (புறம்.391)

என்று குறித்துள்ளார்.

** வேங்கட நாட்டு வேட்டுவர்**
பிறிதோரிடத்தில் வேங்கட நாட்டில் வாழும் வேட்டுவர் இயல்பை எடுத்துரைக்கின்றார். வேங்கடத்தில் கடம்புமரங்கள் செறிந்திருக்கும். அவற்றின் பூக்களைக் கொய்து அங்கு வாழும் வேட்டுவ இளையர் தம் தலையில் சூடிக்கொள்வர். தம் தந்தையும் தன்னையரும் யானைவேட்டம் போவது போலத் தாமும் வேட்டம் சென்று, யானைக் கன்றை, அதன் தாயாகிய பிடியானை பிரிவாற்றாமல் கதறிப் புலம்பப் பற்றி, கடம்பு மரப்பட்டையிலிருந்து நாரெடுத்துக் கயிறு திரித்து அக் கயிற்றினால் அந்த யானைக் கன்றைப் பிணித்து, அதன் உடம்பில் வடுவுண்டாகும்படி இறுகக் கட்டிக்கொண்டு தம்மூர்க்கு வந்து அங்குள்ள கள்ளுக்கடை வாயிலில் கட்டிவைத்து இன்புறுவர் என்பாராய்,

“வலஞ்சுரி மராஅத்து சுரங்கமழ் புதுவீச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக் கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம் மூதூர்
நறவுநொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
கல்லா விளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நன்னாட்டு வேங்கடம்” (அகம்.83)

என்று கூறியுள்ளார்.

** கள்ளில் ஆத்திரையனாரும், கல்லாடனாரும்**
இவ்வண்ணம் வேங்கடநாட்டு வேட்டுவர் செய்தியாக ஆசிரியர் கல்லாடனார் கூறுவது, இந்த நாட்டுப் பகுதியைச் சேர்ந்த புலவரான கள்ளில் ஆத்திரையனார் கூறும் நிகழ்ச்சி யொன்றால் வலியுறுகிறது. கள்ளில் என்பது “தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்துக் குன்றக நாட்டுக் கள்ளில்” (a. r. no. 486 of 1926) என்றும், இடைக்காலத்தில் ஒருகால் இது “சந்திரகிரி ராஜ்யத்தில்” இருந்ததென்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். ஆகவே, இவ்வூரவரான ஆத்திரையனார் கூறும் வேங்கடநாட்டு நிகழ்ச்சி வலிமிக்க தென்பது தெள்ளிது. மேலும் கல்வெட்டுக் கூறும் “குன்றக நாடு” என்பது, ஆத்திரையனார் கூறும் “குன்றக நல்லூர்” என்றும் நினைவிற்கொள்ளற்பாலதாகும். இக்கள்ளில் ஆத்திரையனார், “புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து, குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், கல்லிழி யருவி வேங்கடம்” (புறம். 389) என்று கூறுகின்றார். இதனால் கல்லாடனார் கண்ட வேங்கடக் காட்சியும், கள்ளில் ஆத்திரையனார் கூறும் வேங்கடக் காட்சியும் ஒரு காட்சியாய் ஒன்றை யொன்றை வற்புறுத்திக் கல்லாடனாரைத் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவரெனத் துணிவிப்பது காணலாம்.

** கல்லாடம் எங்கே உளது ?**
இனி, கல்லாடனார் தொண்டைநாட்டவராயின், அவரது ஊரும் தொண்டை நாட்டின்கண்ணதாம். தொண்டை நாட்டு ஊருள்ளும் வேங்கட நாட்டைச் சார்ந்த வூர்களுள் ஒன்றாதல் வேண்டும். கல்லாடனார் கல்லாடம் என்ற ஊரினர் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. அவ்வூர் எங்குள்ள தென்பது பற்றி இதுகாறும் ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முடிபும் கூறினாரல்லர். கல்லாடம் என்பது திருவாசகத்தில் “கல்லா டத்துக் கலந்தினி தருளி, நல்லா ளோடு நயப்புற் வெய்தியும்” (கீர்த்தி 11 - 2) எனத் திருவாதவூரடிகளால் குறிக்கப்படுகிறது. திருவாசகத்து இப் பகுதிக்கு உரை கண்டவர்களோ, கல்லாடம் என்னும் நூலுக்கு உரை கண்டவர்களோ, யாவரும், “கல்லாடம் என்பது ஒரு சிவ தலம்” என்று கூறி யொழிந்தனரே யன்றி, அவ்வூரிருக்கும் இடத்தைக் குறித்திலர். தமிழறிஞரிடையே இது குறித்துப் பேச்சு நிகழுங்கால், கல்லாட மென்பது மலை நாட்டகத்த தோர் ஊர் என்றும், பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்றென்றும் கூறிக்கொள்வது வழக்கம். சென்னை மாநிலத்து ஊர்ப் பட்டியலை (list of villages of the madras presidency) நோக்கினும் கல்லாடமென்ற ஊர் உருத் திரிந்தும் காணப் படவில்லை.

இனி, கல்வெட்டுத் துறையினர் இதுகாறும் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுக்களையும் ஆண்டறிக்கைக் குறிப்புக்களையும், ஆராய வேண்டியது இன்றியமையாதாகிறது. இத்துறையில் அரசியற் கல்வெட்டுத் துறையினர் சென்ற ஆண்டிலும் கல்வெட்டுக்கள் கண்டு படியெடுத்துள்ளன ரெனக்கேள்விப்படுகிறோம். 1938-ஆம் ஆண்டுக்குப்பின் ஆண்டறிக்கைகூட வெளிவருவது நின்றுபோயிற்று. 1903 ஆண்டுக்குப்பின் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவர் காலத்துக் கல்வெட்டுக்கள் மட்டில் வெளியாகி யுள்ளன. ஏனையவை இன்னும் வெளியாகவில்லை. செவ்விய அரசியற் கலைக்கு இவற்றின் வெளியீடு சிறந்த துணையாம் என்பதை அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் உணர்வார்களாக.

** கல்லாடீச்சுரம் என்னும் மீஞ்சூர்**
இனி, கிடைத்துள்ள கல்வெட்டுக்களையும் ஆண்டறிக்கை களையும் ஆராயுமிடத்துக் “கல்லாடீச்சுரம்” என்றொரு சிவன் கோயில் செங்கற்பட்டு (ஜில்லா) நாட்டிலுள்ள மீஞ்சூர் என்னும் ஊரில் உளது. திண்டீச்சுரம் உள்ள ஊர் திண்டிவனம்; சங்கமீச்சுரம் உள்ள ஊர் சங்கம்; ஆலீச்சுரம் உள்ள ஊர் ஆற்பாக்கம் என வருவது காண்கின்றோம். இதனால் கல்லாடீச்சுரம் உள்ள ஊர் கல்லாடம் என்பது பெறப்படும். படவே கல்லாடீச்சுரம் உள்ள மீஞ்சூர், பண்டை நாளில், கல்லாடம் என வழங்கிற் றென்பது துணிபாம். மீஞ்சூரிலுள்ள சிவன் கோயிற்குக் கல்லாடீச்சுர மென்று பெயரென்பதனை அவ்வூர் அக் கோயில் கல்வெட்டு (a. r. no. 133 of 1916) கூறுகிறது. “ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து ஞாயிறு நாட்டு மீஞ்சூருடையார் கல்லா டீச்சுர முடையார்” என்று அக் கல்வெட்டுக் கூறுவதால், அக் கல்வெட்டுக் காலத்தே கல்லாட மென்ற ஊர்ப் பெயர் மறைந்து கோயிலளவில் நின்றிருந்ததென அறியலாம். ஆகவே, தொண்டைநாட்டுச் சான்றோரான கல்லாடனாரது ஊராகிய கல்லாடம், தொண்டை நாட்டுப் புழற்கோட்டத்தைச் சேர்ந்த தெனவும், அஃது இப்போது சென்னைக்கு வடக்கே பொன்னேரிக் கருகில் புகை வண்டி நிலையமாக இருக்கும் மீஞ்சூ ரெனவும், கள்ளில் ஆத்திரையனாரது ஊராகிய கள்ளிலும் இப்புழற் கோட்டத்து ஊராதலின், கள்ளிலாத் திரையனாரும் கல்லாடனாரும் ஒரு நாட்டு ஒரு கோட்டத்தவ ரெனவும் அறிகின்றோம்.

சொகினனார், சொகிரனார்


சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் நல்லிசைச் சான்றோர் களில் சிலருடைய பெயர்கள் நமக்கு வியப்பாக இருக்கும். இக்கால மக்கள் கூட்டத்தில் சில சான்றோருடைய பெயர்களைச் சொன்னால் எல்லோரும் நகைப்பதும் உண்டு. சில இளைஞர்கள் இப்படியும் பெயர்கள் வழங்குவதுண்டோ என்றுகூட வினவுவ துண்டு. இதற் கெல்லாம் காரணம் அப்பெயர்கள் மக்களிடையே பயில வழங் காமையேயாகும். வடமொழிப் பெயர்களும் மேனாட்டவர் பெயர்களும் அடிக்கடி கேட்கக்கூடிய வாய்ப்புக்கள் இடைக் காலத்தே பெருகியதால் தூயதமிழ்ப் பெயர்கள் வழக்கிலிருந்து மறையலாயின.

அறுநூறு எழுநூறு ஆண்டுகட்கு முன்பெல்லாம் வழக்கிலிருந்த தமிழ்ப்பெயர்கள் நாள் செல்லச்செல்ல மறைந்து போயின. தெய்வப் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் வழக்கம் உண்டாகிய போதும், சில தூய தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இருந்தன. தெய்வத் தமிழ்ப்பெயர்கள் பின்பு வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்பு எல்லாம் வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. போதாக் குறைக்கு இக்காலத்து நாட்டாள்களும், கிழமைத்தாள்களும், திங்கட்டாள் களும் சிறு கதைகள் எழுதத் தலைப்பட்டன. இவற்றை எழுதும் ஆசிரியர் அனைவரும் வடமொழி யறியாராயினும் அறிந்தாற்போல வடமொழிப் பெயர்களை வழங்குவாராயினர். இந்தக் கதைகாரார்களின் ஆதரவை நாடியிருக்கும் “சினிமாக் காரர்” களும் இவ்வடமொழிப் பெயர்களை பரப்பத் தொடங்கி விட்டனர். இந்திப் படங்கள் சில வந்துவிட்டன. அவற்றில் வழங்கும் கொச்சைப் பெயர்கள் சில குடும்பங்களிவ் மக்கட்கிட்டு வழங்கும் பெயராய்விட்டன. இவ்வகையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் இனிய தமிழ்ப் பெயர்களும் தமிழ்ச்சான்றோர் பெயர்களும் அருமையாய்விட்டன. அதனால் அவர் களுக்கும் அவர்கள் மக்களுக்கும் நல்லிசைத் தமிழ்ச்சான்றோர் பெயர் கேட்பதற்கு வியப்புத் தருகிறது.

நல்லிசைச் சான்றோர் பெயருள்ளும் தொல்காப்பியர், வள்ளுவர், நக்கீரர், கபிலர், பரணர், சாத்தனார் முதலியோர் பெயர், ஏனைப் பலருடைய பெயர்களைக் காட்டிலும் பள்ளிச் சிறுவர் களுக்குச் சிறிது மிகுதியாகப் பயின்றவையாகும். இவற்றை ஓரொரு கால் சொல்லும்போதே சிறுவர்களுக்கு வியப்பும் நகையும் தோன்றுகின்றன. இங்கே எடுத்துக் கொண்ட ‘சொகினனார்’ என்ற பெயரைக் கூறுவோமாயின், அவர்கள்பால் உண்டாகக்கூடிய ஆரவாரத்துக்கு எல்லை யிராது. இதற்காகத் தமிழ் முன்னோர் பெயரை வெளியிடாமல் இருப்பது தவறு.

உரிமை பெற்ற இந்நாளில், தமிழராகிய நாம், உரிமை வாழ்வு வாழ்ந்த தமிழ் முன்னோர்களின் பெயர், வரலாறு முதலியவற்றை அறியவேண்டியவர்களாகின்றோம். இடையிலே நம்மை வந்து மூடிய இரவற்போர்வைகளைக் களைந்து எறிய வேண்டும். இரவற்போர்வையைக் களைய இதுவரையில் நமக்கு உரிமையுணர்வு இல்லாதிருந்தது, இப்போது தான் நமக்கு அந்த உணர்வு உண்டாகி விட்டதே ! இனி ஏன் தாழ்க்க வேண்டும்? நாம் தமிழ் வாழ்வு வாழும் உண்மைத் தமிழராக வேண்டும்.

சங்க நூல்களில், தமிழ் மக்களின் மனைவாழ்வு இன்பவாழ்வாக இருக்கவேண்டும் என்றே தமிழ்ச்சான்றோர் பல வாழ்க்கை முறைகளைக் கூறியிருக்கின்றனர். இன்ப வாழ்வு வேண்டா தவன் எவனும் இருக்கமாட்டான். இன்ப வாழ்வில் முதற்கண் இன்பமும், பிறகு பொருளும், பின்னர் அறமும் முறையாக நிற்கும். இம் மூன்றையும் அன்பு பிணித்துக்கொண்டு நிற்கும். “இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த” இன்ப வாழ்வு என்றே தொல்காப்பியரும் கூறி வைத்தார்.

அன்பால் பிணிக்கப்பட்ட இன்ப வாழ்வு ஒருவனும் ஒருத்தியும் கூடி நடத்துவதாகும். இவர்கள் மணத்தற்கு முன்னும் மணந்த பின்னும் இன்பநுகர்ச்சியிடையே நிகழும் நிகழ்ச்சிகளை இனிய பாட்டுக்களின் வாயிலாக எடுத்துக் கூறி, அறிவுறுத்தியும் இன்புறுத்தி யும் வந்தவர் சங்கச் சான்றோர். இவர் கருத்துக் களைத் தெளிய அறியும் திறமில்லாத மடவர் சிலர், இவர்களையும் இவர்கள் பாட்டுக்களையும் இந்நாளில் இகழ்தலும் செய்கின்றனர். விரைவில் நம் தமிழகம் அத் தகவிலா மடவர்களுக்கு அவர்களுடைய தகவின்மையையும் மடமையையும் தக்க வகையில் எடுத்துக் காட்டும் நிலையில் முன்னேறி வருகிறது.

சொகினனாரென்பவர், சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் சான்றோருள் ஒருவர். இவர் பெயர் தும்பி சொகினனா ரென்றும், தும்பி சேர்கீரனாரென்றும் காணப்படும். இவருடைய பாட்டுக்கள் புறநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஐந்துமாக ஏழு பாட்டுக்களாகும். இத்தொகை நூல்களுள் புறநானூற்றை வெளியிட்ட டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையரவர்கள் இவரைப் பற்றிக் கூறுமிடத்து, “தும்பி ஒருவகை வண்டு; சொகினம்-நிமித்தம்; தும்பியை நோக்கிச் செய்தி கூறிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றார் போலும்; தும்பி சேர்கீரனார் என்றும் பிரதி பேதமுண்டு; இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் காணப்படுகின்றன” என்று கூறினர்.

இனி, நற்றிணையை உரையெழுதி வெளியிட்ட பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயரவர்கள், “தும்பி சோகீரனார்” என்று கொண்டு, “இவர் பெயர் தும்பி சோகீரன்: கீரன் என்பது இயற்பெயர். சோ, அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால், இவர் பெயரைத் ‘தும்பி சேக்கீரனார்’ என்று பதிப்பிக்கலாயிற்று. தமது பாடலிலே தும்பியை நோக்கி,”கொடியை வாழி தும்பி" (நற். 277) எனவும், “அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி” (குறுந். 392) எனவும் விளித்து அதனைப் பலவாகப் பாராட்டிக் கூறலின், தும்பி சேர்கீரனா ரெனப்பட்டார்," என்று கூறினர் குறுந்தொகைக்குத் தாம் உரையெழுதி வெளியிட்ட பதிப்பில் திரு. உ. வே. சாமிநாதையர் அவர்கள் இந்தச் சான்றோர் பெயரைக் கூறுமிடத்து, “அதனைத் தும்பி சொகிநனென்று படித்தற்கும் இடமுண்டு” என்றும் “தும்பி சொகினார்” “தும்பிசேர் தீரன்” என்றும் பாட வேறுபாடு உண் டென்றும் குறித்துள்ளார். ஆயினும், பாட்டின் ஆசிரியர் பெயர் குறிக்குமிடத்து நற்றிணையுரைகாரர் குறித்தபடியே “தும்பி சேர் கீரனார்” என்று குறித்தனர்.

அண்மையில் நற்றிணையேடு ஒன்று கிடைக்கப்பெற்றது அதனை அச்சாகியிருக்கும் நூலோடு ஒப்பு நோக்கியபோது அதன்கண், இந்த ஆசிரியர் பெயர் “தும்பி சொகினனார்” என்றே காணப்பட்டது. புறநானூற்றுக் கையெழுத்துப்படி யொன்றில் இப்பெயர் தும்பைச் சொகினனாரென்று காணப்பட்டது.

இவ்வாறு பல படிகளிலும் தும்பி சொகினனாரென்ற பாடமே பெரிதும் காணக் கிடைத்தலால், இவரைத் தும்பி சொகினனாரென்று கொண்டு இவ்வாராய்ச்சியை நிகழ்த்துவோம். இஃது இவர் பெயராயின், இப்பெயரின் பொருள் யாது? எனக் காண்பது முறையாகின்றது.

‘சொகினன்’ என்பதற்குப் பொருள் கண்டோர், சொகினம் என்பது நிமித்தம் என்னும் பொருளது என்று கூறுகின்றனர். அது பொருளாயின் ‘சொகினம்’ என்பது ‘சகுனம்’ என்பதன் திரிபாதல் வேண்டும். நிமித்தம் காண்பதென்பது போர்க்குச் செல்வோரிடத்துப் பெரு வழக்கில் இருந்த தொன்று. நிமித்தம் காண்பதே போர்த் துறையில் ஒரு துறையாகக் காணப்படுகிறது. அதனைக் குறிக்கு மிடங்களில் இச்சகுனமென்ற சொல்லோ, இதன் திரிபாகிய சொகினமென்ற சொல்லோ சங்கச் சான்றோர் வழக்கிற் காணப்பட வில்லை; ஆயினும், புறப்பொருள் வெண்பா மாலை உரையில் “சொகின விகற்பத்தால்” (பு. வெ. மா. 125) என்று வரக் காண்கின் றோம். இதனல் நிமித்தமென்பது சொகினமென வழங்குவது காணப்படுவதால், நிமித்தம் கூறு வோனைச் ‘சொகினன்’ என்று வழங்குப என்பது விளங்குகிறது. கணியன் பூங்குன்றன் என்றாற்போலக் கணி கூறுவோனைக் கணியன் என்று சான்றோர் கூறுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

‘தும்பிசொகினனார்’ என்ற தொடரில் ‘சொகினன்’ என்பது ‘சகுனம் கண்டு பொருள் கூறுவோன்’ என்ற பொருள் தரும் பெயராதலால், இப்பெயர் இவர்க்கு இயற்பெயராகவோ, சொகினம் கூறும் தொழில்பற்றியதாகவோ இருக்கலாம். தொழில்பற்றி வந்ததாயின், சொகினம் கூறும் தொழிலில் இவர் சிறப்புற்றிருந்தவராம். இச்சிறப்பால் இவர்க்கு வேந்தர்கள் பல சிறப்புக்கள் நல்கினராதல் வேண்டும். “ஒள்வாள் மலைந் தார்க்கும் ஒற்றாய்ந் துரைத்தார்க்கும், புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்” (பு. வெ. மா. 1.14) வேந்தர் சிறப்புச் செய்வதைப் பழமையான நூல்கள் கூறுகின்றன. கணி கூறினார் பெற்றவூர் கணியன்பாடியென்றும், கணியனூர் என்றும் இப்போதும் தமிழகத்தில் உள்ளன. இவ்வாறே சொகினம் கூறிய இச்சான்றோர் ஊர்பல பெற்றிருத்தல் வேண்டும். அவற்றுள் ஒன்று இவர்பெயரால் விளங்கும் என்பது பெறப்படும். படுதற்கேற்பவே, தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தில் சொகினூரென்ற பெயருடைய ஊரொன்று உளது. திருப்பதிக் கண்மையில் பொன் முகலியாற்றின் வடகரையில் ‘திருச்சாகினூர்’ என்றோர் ஊர் உளது. அஃது இப்போது ‘திருச்சானூர்’ என வழங்குகிறது; ஆயினும், அதற்குப் பல்லவர்கள் காலத்தேயும் இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தேயும் ‘திருச்சொகினூர்’ என்றே பெயர் வழங்கிற்று. பல்லவ வேந்தனான தந்தி விக்கிரமனது ஐம்பத்தோராமாண்டுக் கல்வெட்டு, “திருவேங்கடக் கோட்டத்துக் குடவூர் நாட்டுத் திருச்சொகினூர்” என்றும், “திருவேங்கடத்து எம்பெருமானடிகளுக்கு எழுந்தருளு வித்த திருவிளங்கோயில் பெருமானடிகளுக்குச் சோழநாட்டுச் சோழனார் உலகபெருமானார் வைத்த திருவிளக்கு” (s. i. in. vol. xii, no. 43 and also vide a. r. 452 of 1924) என்றும் கூறுகிறது. அதனால் இவ்வூர் ‘திருச்சொகினூர்’ எனப்படுவது காண்க.

இச் சொகினூர் என்னும் பெயர் பிற்காலத்தே ‘திருச்சோகனூர்’ என்றும், ‘திருச்சுகனூர்’ என்றும் ‘திருச்சானூர்’ என்றும், ‘சிறத்தானூர்’ என்றும் வழங்குவதாயிற்று. ஆயினும், இது பண்டை நாளில், சொகினன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்ததென்பது மறக்கக் கூடியதன்று. பல்லவர் காலத்தக்கு முன்னுள்ள நூல்களுள் எவற்றினும் காணப்படாத சொகினன் என்னும் பெயர் சங்கச் சான்றோர்களுள் ஒருவர் பெயராகக் காணப்படுவதும். இப்பெயருடைய ஊர்கள் வேறெங்கும் காண்ப்படாமையும் நோக்குவோமாயின், இச்சொ கினூர், சங்கச் சான்றோராகிய தும்பிசொகினனார்க் குரியதென்றும், சொகினங் கூறிய சிறப்பால் இவர்க்குத் திருவேங்கடத்திலிருந்து அரசு புரிந்த வேந்தனொருவனால் இவ்வூர் வழங்கபட்டிருக்கவேண்டு மென்றுங் கொள்ளலாம்.

இச்சொகினனாரைத் தும்பி சொகினனாரென்று சிறப்பிப் பானேன் என்பது அடுத்துவரும் வினாவாகும். இவர் பாடிய நற்றிணைப்பாட்டும் குறுந்தொகையிலொரு பாட்டும் தும்பியைப் பற்றிக் கூறுகின்றன. காதலனைப் பிரிந்துறையும் தமிழ் மகளொருத்தி, தும்பியைப் பார்த்து, “தும்பி நீ பீர்க்கம்பூவை யூதி அதன் தேனை யுண்டு நின் பெடையை நினைந்து சென்று அதனோடு கூடி மகிழ்கின்றனை; இப்பீர்க்கம்பூப்போலப் பசந்து நிற்கும் என் நிலை கண்டு விரைந்து சென்று காதலரை யடைந்து என் துயரைக் கூறாயாயினை;

“கொடியை வாழி தும்பி இந்நோய்
படுகதில் அம்ம யானினக் குரைத்தென
மெய்யே கரியை யன்றியும் செவ்வன்
அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே” (நற். 277)

என்பதாக ஒரு பாட்டுப் பாடியுள்ளார். குறுந்தொகைப் பாட்டிலும் காதலி, தும்பியைத் தூதுவிடுங் கருத்துடையளாய், “தும்பியே, நீ என் காதலர் ஊர்க்குச் செல்வாயாயின் யான் இல்லிடத்தே செறிக்கப் பட்டேன்; என் தமரின் நீங்கி வெளியே வருதல் இனி எனக்கு இயலாது என்று தெரிவிப்பாயாக” என்பாள்,

“அம்ம வாழியோ மணிநிறத் தும்பி
நன்மொழிக் கச்ச மில்லையவர் நாட்டு
அண்ணல் நெடுவரைச் சேறியாயின்
கடவை மிடைந்த துடவையஞ் சிறுதினைத்
துளரெறி நுண்துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ” (குறுந். 392)

என்றாளெனப் பாடியுள்ளார்.

இவ்வாறு தும்பியைத் தூதுவிடுங் கருத்தால், இனிய இப் பாட்டுக்களைப் பாடியது கொண்டு, இவர் தும்பிசொகினனா ரெனப்பட்டனர் என்பது கருத்து என நற்றிணையுரைகாரர் கூறு கின்றார். காமமிக்க கையறுநிலையில் தும்பியையும் கடலையும் இன்ன பிறவற்றையும் முன்னிலைப்படுத்திப் பாடுவது சான்றோர் மரபாதலின், தும்பியை விளித்துப் பாடியதுபற்றி இவர் இப் பெயர் பெற்றாரென்பது சிறப்பாகாது. தும்பியைப் பாடிய சிறப்புப்பற்றி இப்பெயர் வந்ததாயின், இவர் ‘தும்பி பாடிய சொகிகனனார்’ எனப் பெயர் குறிக்கப்படுவரேயன்றி வெறிதே தும்பி சொகினனாரெனப் படார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார், காக்கை பாடினி நச்செள்ளையார், நோய்பாடியார் எனப் பாட்டால் வந்த சிறப்புக் களைச் சான்றோர் விதந்து கூறியிருத்தலைக் காண்க. மேலும் தும்பியென்பது இவர் குடிப்பெயராதற்கும், தந்தை பெயராதற்கும் வழியில்லை. ஆகவே அஃது இவரது ஊர்ப்பெயராதல் வேண்டும்.

திருச்சொகினூர் திருவேங்கடக் கோட்டத்தில் உள்ளதோர் ஊர் என்று முன்பே கூறினோம். இச்சொகினூர் இவர் பெயரால் சிறப்புற்ற வூராகும்; ஆயின் இவர் தொண்டைநாட்டவராவர். தும்பியென்பது இவரது ஊராயின் அப்பெயரியதோர் ஊர் தொண்டை நாட்டில் இருத்தல் வேண்டும்.

திருவேங்கடத்துக்கு நேர்கிழக்கில், செங்கற்பட்டு மாவட்டத்துப் பொன்னேரி தாலூகாவின் வடக்கில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூலூர்ப்பேட்டைப் பகுதியிருக்கிறது. இப்பகுதியில் ‘தும்மூரு’ என்றோர் ஊர் உளது. இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் இரண்டாம் இராசராச சோழனுடைய 13, 16, 23-ஆம் அண்டுக் கல்வெட்டுக்கள் மூன்று (கி. பி. 1158 9; 1161.2; 1168.9) காணப்படுகின்றன. அவை இவ்வூரை “சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பையூரிளங்கோட்டத்துப் பட்டைய நாட்டுத் தும்பையூர் (nel. ins. sulur 12, 15, 17) என்று கூறுகின்றன. புறநானூற்றுக் கையெழுத்துப் படியொன்றில் தும்பைச் சொகினனா ரென்ற பாடமுண்டென முன்பே கூறினேன். அப்பாடத்தையும் இக்கல்வெட்டையும் ஒப்பநோக்கின், சொகினனார் தும்பையூரின ரென்பது தெளிவாம். தும்பைச் சொகினனாரென்பது ஏடெழுதி னோரால் தும்பிச் சொகினனாரெனப் பிழைக்கப்பட்டதாம். சொகினனார் ஒரு பாட்டில் ஒரு முறைக் கிருமுறை தும்பியைப் பாடியது கண்டவர், தும்பைச் சொகினனாரென்பதைத் தும்பி சொகினனாரெனத் திருத்திக்கொண்டிருத்தலும் கூடும். தும்பி சொகினனாரென்பது இனிது பொருள் விளங்காமையால் ‘தும்பி சேர்கீரனார்’ எனத் திருத்தப்பட்டதையும் கண்டுள்ளோம். இவ் வளவும் சுருங்க நோக்கின், தும்பி சொகினனர், தொண்டைநாட்டுத் தும்பை யூர்க்குரியவரென்பதும், இவர் ‘சொகினன்’ என்னும் பெயரின ரென்பதும், சொகினம் கூறும் சிறப்பால் இவர் திரு வேங்கடக் கோட்டத்துச் திருச்சொகினூர்க்குரியரென்பதும், அவர் பெயர் தும்பைச் சொகினனாரென இருக்கவேண்டுமென்பதும், ஏடெழுதினோரால் தும்பி சொகினனாரெனத் திரிக்கப்பட்ட தென்பதும் கூறியவாறாம்.

சொகினனார் என்பதுபற்றிய கருத்து இதுவாயின், வினைத் தொழில் சொகிரனார், என்றொரு சான்றோர் உளரே, அவர் பெயரும் இதுபோலத் திருத்தமெய்துவதுதானோ என்றோர் ஐயம் அன்பர்கள் கருத்தில் எழும். அதனையும் சிறிது காண்பது முறையாகிறது.

ஏடுகளில் சொகிரனார் எனக் காணப்படும் இதனைப் பெயர்த் தெழுதினோர் சோகீரனாரென எழுதியது பொருள் விளங்காமையைச் செய்துவிட்டது. சொகிரனாரென்பது இயற்பெயர். இவர் போர் வினையாகிய தொழிலில் தலைசிறந்து விளங்கினார். வினையென்றது போர்வினையையே குறிக்கும் வகையில் பண்டைத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. தொழிலென்றது போர் வினைக்கும் வரும். போரைக் குறித்தற்கு “வினைத்தொழில்” என்று பாடிய சிறப்பால் இச்சொகி ரனார்க்கு இப்பெயர் வந்திருக்கலாம். “வினை நவில்யானை” (பதிற். 82) என்றும், “தொழில் புகல் யானை” (பதிற். 84) என்றும் வரும் தொடர்கள் போர்வினை யாகிய பொருள் குறித்துநின்று நலமும் அழகும் திகழ நிற்பதைக்கண்டு சான்றோர் இவற்றாலே இவை வந்த பாட்டுக்கட்குப் பெயர் வகுத்திருப்பது ஈண்டு நோக்கத்தக்கதாகும்.

சொகிரனாரென்பது அவரது இயற்பெயர். இத்தகைய பெயருடையோர் சேரநாட்டில் இருந்திருக்கின்றனர். மலையாள மாவட்டத்துப் பொன்னாணி தாலூகாவிலுள்ள சுகபுரத்துக் கல் வெட்டு (s. i. ins. vol. v. no. 773) அவ்வூரைச் ‘சொகிரம்’ என்றும், அதற்குரியவனைச் ‘சொகிரன்’ என்றும் குறிக்குமாற்றால், “சொகிரத்துத் தொரவம் (பாடிகாவல்) உரியசொகிரனேன்” என்று கூறுகிறது. ஆகவே, சொகிரனார் சேரநாட்டவரென்றும், போர்வினையை வினைத்தொழில் என்று சிறப்பித்துரைத்ததுபற்றி வினைத்தொழில் சொகிரனாரெனப் பட்டாரென்றும், எனவே தொண்டைநாட்டுச் சொகினனார் வேறு. சேரநாட்டுச் சொகிரனார் வேறு என்றும் தெரிதல் வேண்டும்.

கிழான்


சங்கத் தொகை நூல்களில் புலவர்கள் பலரும் தலைமக்கள் பலரும் கிழான், கிழார் என்ற சிறப்புடன் கூறப்படுவது அன்பர் பலரும் அறிந்ததொன்று. அரிசில்கிழார்,ஆலத்தூர்கிழார், இடைக் குன்றூர்கிழார், கோவூர்கிழார், பெருங்குன்றூர்கிழார், மாடலூர் கிழார் எனவும், புதுக்கயத்துவண்ணக்கன் கம்பூர்கிழான் எனவும், அம்பர்கிழான், அருவந்தை ஈர்ந்தூர்கிழான், ஒல்லையூர்கிழான், கரும்பனூர்கிழான், கொண்கானங்கிழான் எனவும் வருதலைப் பலரும் அறிவர். இக் கிழான் என்ற பெயர் கிழவன் எனவும் வழங்கும். நாலைகிழவன்நாகன் என வருதல் காண்க. இவ்வாறு கிழான் எனவும் கிழாரெனவும் கிழவன் எனவும் வழங்கும் சிறப்புப் பெயர்களால், இவை வேளாளர்க்குரிய சிறப்புப்பெயர்களாம் என்ற கருத்தொன்று நாட்டில் நிலவுகிறது. இக் கருத்தை அடிப்படை யாகக்கொண்டு, என் நண்பர் ஒருவர், யான் எழுதிய “மதுரைக் குமரனார்” என்ற நூலில் ஈர்ந்தூர் கிழானைப்பற்றி யுரைத்ததனைச் “சித்தாந்தத்” தில் மறுத்தெழுதியுள்ளனர். அதனால் இச்சிற்றா ராய்ச்சி செய்ய வேண்டுவதாயிற்று.

புறநானூற்றை முதற்கண் அச்சிட்டு வெளியிட்ட டாக்டர். திரு. உ. வே. சாமிநாதையரவர்கள், பாடினோர் வரலாறு என்னும் பகுதியில், அரிசில்கிழாரைப்பற்றிக் குறிக்கவந்தவிடத்து, “கிழா ரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப்பெயராக இருந்த தென்று தெரிதலின், இவர் வேளாண்மரபினராகக் கருதப்படுகிறார்; இஃது ‘ஊரும் பேரும்’ (தொல். மரபு. 74) என்னும் சூத்திரத்தின் உரையில் காட்டிய பெயர்களாலும், திருத்தொண்டர்புராண வரலாற்றின் 12-ஆம் செய்யுளில் எடுத்துக் காட்டிய பெயர்களாலும் அறியலாகும்” என்று குறித்துள்ளார். “ஊரும் பேரும்” என்னும் சூத்திரத்தின் உரையில், “ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியனன்; உறையூர்ச் சோழன், மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியன. காவிரிப் பூம்பட்டினத் துக் காரிக்கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க்குரியன; அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன,” என்பது காணப்படுகிறது. திருத்தொண்டர்புரண வரலாற்றின் 12-ஆம் செய்யுள்,

“நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும்
 நற்குடிநாற் பத்தெண்ணா யிரத்துவந்த
 கூடல்கிழான் புரிசைகிழான் குலவுசீர்வெண்
 குளப்பாக்கி ழான்வரிசைக் குளத்துழான்முன்
 தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச்
 சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப்
 பாடல்புரி அருண்மொழித்தே வரும்பினந்தம்
 பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்”

என்று காணப்படுகிறது. இவ்விரண்டிலும் காணப்படும் பெயர்கள், அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன், கூடல் கிழான், புரிசைகிழான், வெண்பாக்கிழான், குளப்பாக்கிழான், குளத்துழான், சேக்கிழார் என்பன. இப் பெயர்களைக்கொண்டு டாக்டர். திரு. அய்யரவர்கள், “கிழாரென்பது வேளாளர்க்கே உரிய சிறப்புப் பெயராக இருந்தது,” என்று தெரிந்துரைக் கின்றார். மரபியல் உரை காரராகிய பேராசிரியரும், திருத்தொண்டர் புராண வரலாறு டையாரும், இக்கிழார்களை வேளாளரென்றமையின், கிழார் என்பது வேளாளர்க்கே யுரிய சிறப்புப் பெயராகத் தெரிந்து கொண்டன ரென்பது தேற்றமாம். ஆகவே, கிழார் கிழான் எனப்படுவோரை வேளாளரெனக் கோடல் வேண்டும் என்பது அவர் கருத்தாம்.

மற்று, இறையனார் களவியலுரையில் “இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்ம னென்பான், பைங்கண்ணன் புன்மயிரான், ஐயாட்டைப்பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளையுளன்” என்று கூறுகிறது. திரு. அய்யரவர்கள் தெரிந்துரைத்தவாறே கொள்ளின், உருத்திரசன்மன் என்பான் ஒரு வேளாளனாதல் வேண்டும். சன்மன் எனவரும் சிறப்புப்பெயரெல்லாம் பார்ப்பார்க் கே உரியதாக வழங்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததொன்று. ஆதலால், கிழான் என்ற சிறப்புப் பெயர் வேளாளர்க்கே யன்றிப் பார்ப்பார்க்கும் உரியதென்பது விளங்கும்.

இனி, கிழாரென்ற சிறப்புப்பெயர்பற்றி ஒரு வரையறை கோடற்குக் காரணமாயிருந்த உரைகாரரும், திருத்தொண்டர் புராண வரலாறுடையாரும் வாழ்ந்த காலம் கல்வெட்டுக்கள் தோன்றி நிலவிய இடைக்காலமாகும். இடைக்காலக் கல்வெட்டுக்களில் கிழான், உழான் என்ற சிறப்புப்பெயர்பெற்றோர் பலர் இருந்திருக் கின்றனர். “குளத்துழான்” என்று திருத்தொண்டர் புராண வரலாறு டையார் கூறுவதுபோல, கந்த முழான் கூத்தன் திருவெண்காடு தேவன், கடம்புழான் தீர்த்தன் சுந்தரன், பாலமுழான் வேளாண் அம்மையப்பன்1 எனக் கல்வெட்டுக்கள் கூறுவது காணலாம்.

திருவிடைமருதூர்க்கோயில் கல்வெட்டொன்று, “திரு விடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்து மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கினுக்குப் புலியூர்க்கோட்டத்து மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன் வைத்த பொன் 252” என்றும், மதுராந்தகம் தாலூகாவிலுள்ள கடப்பேரிச்சிவன் கோயில் கல்வெட்டொன்று “இந் நாயனார் தேவதானம் தீன சிந்தாமணித் தெருவில் வியாபாரிகளுக்குச் சமைந்து மெய் (யூர்) கிழான் சீரிளங்கோ ஸ்ரீ கிருஷ்ணனும் தண்டலங்கிழான் ஸ்ரீ வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணனும்…………….உள்ளிட்ட இத் தெருவில் வியாபாரிகளோம்3” என்றும், உலகாபுரத்துக் கல்வெட்டொன்று, “உலோகமாதேவிபுரத்து உடையார்கோமணி யுண்டாருக்கு வியாபாரி ஆர்வலங்கிழான் வீதிவிடங்கன் சிறு நம்பாடிகள் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்று4” என்றும் கூறுகின்றன. இவ்வாறுவரும் கல்வெட்டுக்கள் பலவற்றையும் நோக்கின், வேளாளரேயன்றி வியாபாரிகளும் கிழான் என்ற சிறப்புக்குரியராவது விளக்கமாம்.

இனி, திருமழபாடியில் உள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று, “இந் நாயனார் கோயில் திருநந்தாவிளக்குக் கோயில்குடிமக்களில் ………… செம்பியதரையகோன் மகன் பிரமனும், ஏமப்பேர்க்கோன் வயிரவனும் இவ்வாட்டைக் கார்த்திகை மாசத்து ஸ்ரீ பண்டாரத்து நாங்கள் கைக்கொண்ட செவ்வாடு தொண்ணூாறு”1 என்று கூறுகிறது. இதனால், இக் கல்வெட்டுக் காலத்தே, இடையர்கள் கோன் என்ற சிறப்புப்பெயருடன் விளங்கினமை காணலாம். இங்குள்ள வேறொரு கல்வெட்டு, மல்லாண்டானான சேரகோன் என்பான் திருவிளக்குப் புறமாக நிலம்விட்ட செய்தியைக் குறிக்கிறது. இச் சேரகோன், “சுத்தமலி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டானான சேரகோன்”2 எனப்படுகின்றான். மல்லாண்டானான சேரகோண் இன்னானென இனிது விளங்குதலால், கிழான் என்பது இடையர்கட்கும் உரியதென்பது தெரியத்தோன்றுகிறது.

இனி, கிழான் என்பது வேளாளர்க்குரியதாய் வழங்குவதை, கல்வெட்டுகள், “கொங்கான வீர சோழமண்டலத்தில் வெள்ளாாரில் நீலங்கிழார் மஸ்தககுடாரி மகுட சூடாமணி மன்னர் வணங்கிலும் வணங்காத முடியான்” என்றும், “அனுக்காவூரில் இருக்கும் வெள்ளாளன் களத்தூர் கிழவன் உடையான்”3 என்று கூறுகின்றன.

இதுகாறும் கூறியவாற்றால் கிழான், கிழார் என்ற சிறப்பு, வேளாளர்க்கேயன்றிப் பார்ப்பனருக்கும், வணிகருக்கும் வேளாள ருக்கும் ஒப்பவழங்கிய சிறப்புப்பெயரென்பது துணியப் படும். மேலும் நாலைகிழவன் என்றும், ஈர்ந்தூர்கிழான் என்றும், அம்பர்கிழா னென்றும், பொறையாற்றுகிழா னென்றும் வருவன. கிழான் என்னும் சிறப்புப்பெயர் குறுநிலத்தலைவர்க்கும் உரியதெனக் காட்டுகின்றன. எனவே, கிழான் என்னும் சிறப்பு குறுநிலத் தலைவரான அரசர், வணிகர், வேளாளர், பார்ப்பனர் பலர்க்கும் உரியதாமென்பது துணியப்படும்.

இனி, இச் சிறப்புப்பெயர் எவ்வாறு ஒருவர்க்கு எய்துகிறதென்பது அறியவேண்டுவதொன்றாம். இதற்குச் சங்கத்தொகை நூல்களிலும் இடைக்கால நூல்களிலும் போதிய குறிப்பொன்றும் காணப்பட வில்லை. தொல்காப்பிய வுரைகளிலும் ஒரு குறிப்பும் இல்லை. சங்ககால வழங்கு மிகுதியும் மறையாது நிலவிய காலம் இடைக் காலமாகும். சங்ககால வழக்கு மறைதற்கும் சென்ற முந்நூறாண்டைய வழக்கின் தோற்றத்துக்கும் இடைக்காலம் நடுநின்று இரண்டு வழங்குகளின் குறிப்புக்களையும் கல்வெட்டுக்களின் வாயிலாகக் குறித்துவைத்தது தமிழகம் வரலாற்றுத் துறையில் செய்துகொண்ட நற்பணியாகும். இக் கல்வெட்டுக்களும் சென்ற நாற்பத்தைந்தாண்டு களாக அரசாங்கத் தாரால் படியெடுக்கப்பட்டும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. தமிழகத்துக் கல்வெட்டுக்களின் பயனை அறியாமை யாலோ அரசியலறிஞர் புறக்கணிப்பாலோ எதனாலோ சென்ற பத்தாண்டுகளாக ஆண்டறிக்கைகள்கூட வெளியிடப்படா தொழிந்து போயின.

எருக்கங்குடியுலுள்ள கல்வெட்டொன்று1 பாண்டியன் நெடு மாறன் ஸ்ரீவல்லபன் காலத்