வரலாற்று வாயில்
ஒளவை துரைசாமிவரலாற்று வாயில்


1. வரலாற்று வாயில்
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. முதல் மகேந்திரவன்மன்
7. உலக வரலாறு
8. வாணிக மந்திரம்
9. வெற்றிலை வாணிகர்
10.தமிழகச் செய்திகள்
11.சங்க காலச் சோழர்
12.சங்ககாலப் பாண்டியர்
13.பல்லவ வேந்தர்
14.இடைக்காலப் பாண்டியர்
15.இடைக்காலச் சோழர்
16.ஆர்க்காடு
17.தமிழ் வேந்தர்
18.சோழன் கரிகாலனைப் பாடிய ஆதனார்
19.செல்வக் கடுங்கோ
20.சிந்தனைச்செல்வர் சித்தார்த்தகௌதமர்
21.பொருளியல் வீழ்ந்தது எங்ஙனம்?
22.பாண்டியன் சடில பராந்தகன்
23.எதிரிலிசோழச் சம்புவராயன்
24.கோடைமலைத் தலைவர்கள்
25.காளிங்கராயன் தில்லைத் திருப்பணிகள்
26.சேரநாடு
27.சேரநாட்டின் தொன்மை
28.வள்ளல்கள் வரலாறு
29.கல்வெட்டுதவி
30.கல் கூறும் சான்றுகள்
31.தமிழ் நாட்டு வடவெல்லை வரலாறு
32.தகடூர் அதியமான்
33.வீரப் பிரதாப தேவராய மகாராயர்
34.ஆனை மலை மாசானியம்மை
35.பிள்ளை மாவலி வாணராயர்
36.வரலாறும் சமுதாயமும்
37.நாவுக்கரசர்

வரலாற்று வாயில்

 

ஒளவை துரைசாமி

 


நூற் குறிப்பு
  நூற்பெயர் : வரலாற்று வாயில்(கட்டுரைகள்)
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 26
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 368 = 392
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 245/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை-14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர்
வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

 “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
 அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
 புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.
ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில்இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம்.இறுதியாகப் பாடலின்கண் அமைந்தமெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.
**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.

எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற் போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின் தண்டமிழாசான்
உரைவேந்தர்

உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.

எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற் போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

முதல் மகேந்திரவன்மன்


சங்ககாலச் சோழ பாண்டியர்க்குப்பின் தமிழ்நாடு களப்பிரர் என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன் சீரும் திருவும் இழந்து சகழ்ப்புற்றது. வேற்றுமை மாசின்றி ஒருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலை நாடுகளும் கீழைநாடுகளும் போற்றிப் பரவ வீற்றிருந்த அதன் புகழ் மறைந்தது. அறவர் அறவராய், மறவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர் மாற்றவர்க்குப் பணிந்து அவருடைய அடியார்க்கு அடியராகும் அடிமை நிலை எய்தினர். தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன. அரசியல் வாணிகம் தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயின.

தமிழ்நாட்டின் திருவேங்கடப் பகுதிக்கு வடக்கில் வேற்று மொழியும், நாகரிகமும் படைத்த மக்களினங்கள் சங்க காலத்தில் வாழ்ந்தன. அவர்கள்வாழ்ந்த நாடுகளைச் சங்கத் தொகை நூல்கள் “மொழி பெயர்தே எம்” என்று குறித்தன. அந் நிலப் பகுதிகள் நீர்வளம் குன்றிக் கரிசில் மண் பரந்த கரும்பாலையா யிருந்தமையின், அப்பகுதியில் வாழ்ந்தோர் ஆறலைத்தலும், சூறையாடுதலும் தொழிலாகக் கொண்டு அவ்வப்போது தமிழ்நாட்டிற் குறும்பு செய்தொழுகினர். அவருள் களப்பிரர் என்பார் ஒரு கூட்டத்த வராவார். சங்ககால வேந்தர் வலிகுறைந்த சமயம் நோக்கி அவர்கள் தொண்டை நாட்டிற் புகுந்து, கொங்குநாட்டின் வழியாகப் பாண்டி நாடு அடைந்து முடிவில் இடைக்காலத்தில் தோன்றிய பாண்டி மன்னர்களால் வேரோடு தொலைந்து மறைந்தனர். அவர்கட்குப் பின்னே வடபுலத்தினின்று புகுந்தவர் பல்லவர். அவர்கள் தென்னாடு நோக்கியபோது ஒருபால் ஆந்திர மன்னர்களான சாதவாகனரும், ஒருபால் சளுக்கியரும் அரசு நிலையிட்டு வாழ்ந்தனர். நாளடைவில் சாதவாகனர் வீழ்ந்தனர். அக்காலத்தே பல்லவர் ஆந்திர நாட்டிற் படர்ந்து பின் தொண்டை நாட்டுப் புகுந்து அரசு நிறுவி வாழ்வாராயினர். சளுக்கியர் குறிப்புக்களிலும் பல்லவர் காலச் செப்பேடுகளிலும் தமிழ் நாட்டில் குறும்பு செய் தொழுகிய களப்பிரரைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

சங்க காலத்தில் திருவேங்கடப் பகுதியை ஆண்ட குறுநிலத் தலைவனான புல்லி என்பவன், “கள்ளர் கோமான்” என்று கூறப்படு தலால், அவன் வழி வந்தோர் களப்பிரர் என்றும், அவர்களே பின்பு களப்பாளர் எனவும், களப்பாளராயர் எனவும் வழங்கப்பெற்றன ரென்றும் சிலர் கருதுகின்றனர். அவ்வாறாயின், தமிழ் நூல்களும் கல்வெட்டு முதலிய வரலாற்றுக் குறிப்புக்களும் அவர்களைக் கள்வரென்றோ களவரென்றோ உரைக்குமேயன்றிக் களப்பிரர் எனக் கூறுதற்கு இடமில்லை. ஆனால் வடமொழி தமிழ்மொழி என்றஇரு மொழி வரலாற்று ஏடுகள் அவர்களைக் களப்பிரர் என்றே தெளிவாகக் கூறுகின்றன. ஆதலால், கள்வர் வேறு, களப்பிரர் வேறு என்பது தேற்றமாம். கள்வர் தமிழர்; களப்பிரர் தமிழ்ப் பகைவர்; தமிழ் வழங்காத வேறு நாட்டவர் என அறிதல் வேண்டும்.

இக் களப்பிரர்க்குப் பின்னே தமிழ் நாடு புகுந்து தொண்டை நாட்டில் அரசு நிலை கண்ட பல்லவரும், களப்பிரர் போன்ற வட புலத்து நாடோடிகளே எனினும், தெற்கே தமிழ் நாட்டையடுத்த ஆந்திரப் பகுதியில் தங்கியபோதுதான் ஓரிடத்தே நிலைபெறத் தங்கி வாழ்வதற்குரிய நீர்மை பெற்றனர். இந்திய நிலப்பரப்பில் எங்கும் பல்லவநாடு என்று ஒரு நாடு இருந்ததாக ஒரு குறிப்பும் பழைய நூல்களில் காணப்படாமையே இதற்குப் போதிய சான்றாகும். சீவக சிந்தாமணி யென்னும் பிற்கால நூல் குறிக்கும் பல்லவ நாடு வெறுங் கற்பனையே யன்றி உண்மையன்று; உண்மையாகக் கொள்வதாயின் அது காஞ்சிமா நகரைச் சூழ்ந்த நாடாகுமே யல்லது வேறில்லை.

பல்லவர்களின் ஆட்சி சுமார் ஐந்து நூற்றாண்டுகள் நடை பெற்றது அவர்களுடைய அரசு தமிழ்நாட்டில் தொடங்கியபோது களப்பிரர் காலத்திற் புகுந்து இடம்பெற்ற பௌத்தம், சயினம் என்ற சமயங்கள் சிறந்து விளங்கின. அவற்றின் வாயிலாக வடமொழிக் கல்வியும் வழக்காறும் தமிழ்நாட்டில் வளம்பெற்றன. ஆயினும் பல்லவராட்சியில் பௌத்தம் பையத் தன் செல்வாக்கிழந்தது. சயினம் ஓரளவு பெருஞ் சிறப்பு எய்தித் தமிழ்நாடு முழுதும் பரவிற்று. பல்லவரின் இறுதிக் காலத்தில் வைதிகம் மருவிய சைவ வைணவச் சமயங்கள் உயர்ந்து ஓங்கின; சயினம் தலைமை யிழந்து சரிந்தது.

தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிய சமயங்களான சிவவழிபாடும், திருமால் வழிபாடும் வேதியருடைய வைதிகம் கலந்து நின்றமையின், வடநூற் புராண இதிகாசக் கதைகளும், மிருதிவழித் தோன்றிய வருணாசிரமக் கொள்கைகளும் நாட்டில் நன்கு பரவின. அதனால் பழந்தமிழருடைய அகமும் புறமுமாகிய தமிழ் வாழ்வு தலைதூக்க முடியாது பழங்கதையாய் மறைந்து போயிற்று. சாதியென்ற சொல்லுக்கே இடந்தராமல் இருந்த தமிழரினம் பல்லாயிரம் சாதிகளாகப் பிரியத் தலைப்பட்டது. பல்லவரது தாய்மொழியும் வடபுலத்து மொழிகளுள் ஒன்றாய் வட மொழிச் சார்பு பெரிதும் கொண்டு இயன்றமையின், அவரது ஆட்சியில் வடமொழியே மிக்க சிறப்பும் வளர்ச்சியும் பெற்றது. இன்றும் அவ்வடமொழிச் சார்புகொண்ட வங்காளம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராட்டம் முதலிய வடநாட்டு மொழியினரும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற தென்னாட்டு மொழி யினரும் வடமொழிக்கண் ஊக்கமுடை யவரா யிருப்பது இதற்குப் போதிய சான்றாகும். அதனால் பல்லவராட்சியில் வடமொழிக் கல்வியும் வடநூற் கொள்கைகளும் சிறந்த ஆதரவு பெற்றதில் வியப்பில்லை.

வைதிகத்துக்கு மாறுபட்டு நின்ற பௌத்த சயின சமயங்களை வீழ்த்தற்கு அதனோடு மருவி நின்ற சைவ வைணவச் சமயங்கள் ஒருமுகமாகச் சமயப் பூசலிடத்தொடங்கின. அப்பூசலில் அன்பு நெறியெனப்படும் பத்திநெறி பிறந்து சைவர்க்கும் வைணவர்க்கும் மிக்க துணை செய்தது. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார் களும் தோன்றி அப்பத்தி நெறியை வளர்க்க முயன்று பல்லாயிரக் கணக்கான இசைப் பாட்டுகளைத் தமிழிற் பாடினர். நாடெங்கும் சிவன் கோயில்களும் திருமால் கோயில்களும் பெருகின. வடமொழிக் கல்விக்கு இக்கோயில்கள் இடமாயின. மக்களின் பொதுவாழ்வும் கோயில்களோடு பிணிப்புற்றது. மரத்தாலும் செங்கற்களாலும் அமைந்திருந்த கோயில்கள் கருங்கற்களால் கட்டப்பெற்றன. இக்கற் கோயில்கள் யாவும் பல்லவராட்சியில் தான் முதன்முதலாகத் தோற்றம் பெற்றன. வட நூற் புராணக்கதை களும் இதிகாசத் தொடர்புகளும் அப்போதுதான் கோயில்களில் இடம்பெற்றன. மன்னர்களின் குடி வரலாறு பிரமதேவனிலிருந்து கூறும் மரபு பல்லவர் காலத்தில்தான் தொடங்குவதாயிற்று. பல்லவர் தோற்றம் கூறும் செப்பேடுகள், பிரமதேவன்பால் தோன்றி அங்கீரசன், பிரகஸ்பதி, பரத்துவாசன் என்ற முனிவர்கட்கு இறங்கி, துரோணன், அசுவத்தாமன் முதலிய இதிகாச மக்களோடு தொடர்புற்றது என்றும், அசுவத்தாமனுடைய வழியில் பல்லவன் என்பவன் தோன்ற அவன் வழி வந்தோர் பல்லவர் எனப்பட்டனர் என்றும் இயம்புகின்றன. இதுவே பற்றுக்கோடாகப் பல்லாயிரமாகக் கிளைத்த சாதியொவ்வொன்றுக்கும் இந்திரன் முதலிய தேவர்களின் அடியாக வரலாறு கூறும் புராணங்கள் தோன்றி ஒன்றோடொன்று உறவுகொண்டு ஒன்றாத மனப்பான்மையை விளைவித்தன; சாதிக் கொரு நீதிவழங்கும் அநீதிகளும் நீதிகளாக நிலைபெறும் வழக்காறு பெற்றன. இதற்குரிய காரணம் இச்சாதிகளுள் மிக உயர்ந்தன ஒழிய ஏனைய யாவும் நல்லொழுக்கத்தினின்றும் வழுவினவர் வழியாகத் தோன்றினவே என்பதுபற்றியாகும். சாதியென்பது இன்னதென்றறி யாத தமிழரினத்து உயர்ந்தோரான திருவள்ளுவரையே ஒரு பார்ப்பனனுக்கும் ஒரு புலைச்சிக்கும் நேர்மையில்லாத வழியில் பிறந்தவரென்று கூறுவது, இவ்வாறு வரலாறு கூறும் நெறியின் கொடுமையாகும். இக்கொடுமை நாடாண்ட வேந்தர்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லவர் முதல்வனான பல்லவன் என்பவன், துரோணன் மகனான அசுவத்தாமனுக்கும் மேனகை என்னும் நாடகைக் கணிகைக்கும் பிறந்த மகனாவான் என்றும், அவன் இளந்தளிர்களின்மேல் கிடந்தமையினாலும், தளிர்களுக்குப் பல்லவம் என வட மொழி, பெயர் கூறுவதாலும் அவன் பல்லவன் எனப்பட்டான் என்றும் காசாக்குடிச் செப்பேடுகளும் பிறவும் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும்.

இப்பல்லவருள் சிம்மவிஷ்ணு, முதல் மகேந்திர வன்மன், முதல் நரசிங்க வன்மன், இரண்டாம் பரமேசுரன், நந்திவன்மன், தந்திவன்மன், இரண்டாம் நந்தி வன்மன், நிருப துங்க வன்மன் முதலிய பலர் தொண்டை நாட்டிலிருந்து ஆட்சிபுரிந்துள்ளனர். அவருட் சிறப்பு மிக்கோருள் முதல் மகேந்திர வன்மன் ஒருவனாவன்.

பல்லவ மன்னருள் சிம்மவிஷ்ணுவுக்குப் பின்னர் விளங்கியவன் மகேந்திர வன்மன், இவனுக்குப்பின் வேறு சிலர் மகேந்திரன் என்ற பெயர் தாங்கினமையால் இவனை முதல் மகேந்திரன் என்று வரலாற்று ஆராய்ச்சியறிஞர் குறிப்பாராயினர். கி.பி. 600 முதல் 630 வரை இவனது ஆட்சி நிலவிற்றென்பது வரலாற்றுக் கொள்கை.

மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டின் வடக்கில் சளுக்கி மன்னர் அரசு செலுத்தி வாழ்ந்தனர். அவர்கட்கும் பல்லவர்கட்கும் தீராப்பகைமை இருந்துவந்தது. அந்நாளில் அருஷவர்த்தனன் என்னும் வடபுலவேந்தன் தனது அரசியலாட்சி தென்புலத்திலும் பரவி விளங்கவேண்டுமென விழைந்து படையெடுத்துப் போந்தான். தென்புலத்துச் சளுக்கி வேந்தர் தலைவனாக அக்காலத்தே சிறப்பு மிக்கிருந்த இரண்டாம் புலிகேசியென்பான் அந்த அருஷனை வென்று வடபுலத்துக்கே திரும்பிப்போகச் செய்தான். வெற்றி வீறு கொண்ட புலிகேசி தன் நாட்டினைச் சூழ இருந்த குறுநில மன்னரை அடக்கி பல்லவர் கைப்பட்டிருந்த வேங்கி நகரைத் தன்கைப்படுத்தித் தலை சிறந்து நின்றான். வேங்கி நகர் சளுக்கியர்க்கே உரியது; அதனைப் பல்லவர் வென்று கைக்கொண்டிருந்தனர். அதனால் புலிகேசி பல்லவரோடு போர்தொடுக்க வேண்டியவனானான். வேங்கி நகர்க்கண் அப்போது நிறுவப்பெற்ற வெற்றித் தூணில் புலிகேசி, தான் பல்லவரை வென்று மேம்பட்ட விறல் மிகுதியைப் பொறித்துள்ளான். பின்பு அவன், தன் தம்பியான குப்த விஷ்ணு என்பவனை வேங்கி நகர்க்கண் இருந்து நாடு காவல்புரியுமாறு பணித்து, மேலும் தன் வெற்றி நலத்தை மிகுவிக்கக் கருதிப் பெரும் படையுடன் தொண்டை நாட்டிற்குட் புகுந்தான்.

தொண்டை நாட்டுக்குக் காஞ்சிமா நகரே தலைநகர் என்பது உலகறிந்த செய்தியாகும். அதன்கண் இருந்து அந்நாளில் அரசு செலுத்தினவன் மகேந்திரவன்ம பல்லவன். அந்நாளில் பல்லவராட்சி தொண்டை நாட்டை யடுத்திருந்த வடபுலத்தும் பரந்திருந்தது. புலிகேசியின் செயல் திறத்தை அறிந்திருந்தும் மகேந்திரனை யுள்ளிட்ட பல்லவர்கள் அவனை எதிர்த்துப் பொருது வெல்லும் அளவுக்கு வன்மையுடையராக இல்லை. அதனால் புலிகேசியின் அடற்றகைக்கும் ஆற்றலுக்கும் ஆற்றானாய் அஞ்சிப் பின்னிட்ட மகேந்திரன் தொண்டை நாட்டைக் கைவிட்டுச் சோழ நாட்டுக்கு ஓடினான். ஓடினவனை மேலும் துரத்திச்செல்ல விழையாமல் புதிது கைப்பற்றிய தொண்டை நாட்டுக் காஞ்சி நகர்க் கண்ணே தங்கினான், புலிகேசி.

சோழ நாடு புகுந்த மகேந்திரனுக்கு ஆங்கு வாழ்ந்த தமிழர் பெரும்படை உதவினர். வடவிமயத்தில் புலிப்பொறி பொறித்த வான்புகழ் பெற்ற தொன்மையும் வன்மையும் படைத்த தமிழ்ப் படையின் துணைகொண்டு மகேந்திரன் புலிகேசியோடு போர் தொடுத்தான். இருவர் படைகளும் தொண்டை நாட்டிற் புல்லூர் என்னுமிடத்தே நேரெதிர்ந்து போர் செய்தன. அப்போது அருஷனை வென்ற ஆண்மையுடையேமெனத் தருக்கிய புலிகேசியின் தறுகண் ஆண்மை தமிழ்ப் படையின் தகைப்பரும் ஆற்றலால் சரிந்தொழிந்தது. மொய்யமரில் முடிதப்பியது தன் முன்னோர் செய்த நல்வினையென எண்ணிக்கொண்டு புலிகேசி தொண்டை நாட்டின் நீங்கித் தன் வேங்கி நாட்டுக்கே மீண்டு சென்றான். இவ்வாறு புறந்தந்து ஓடிய புலிகேசி, மகேந்திரன் உயிரோடு இருக்கும் வரையில் தமிழ்த் தொண்டை நாட்டில் தலை காட்டவே இல்லை. மகேந்திரன் முன்புபோல் காஞ்சி நகர்க்கண் இருந்து ஆட்சி புரிந்து வரலானான்.

களப்பிரர் காலத்திற் புகுந்த பௌத்தம் முதலிய வேற்றுச் சமயங்களின் கருத்துக்கள் நாட்டில் பரவி நிலைகொண்டன. எனினும் சயினம் போலப் பௌத்தம் அத்துணை வளம் பெறவில்லை. காஞ்சி நகர்க்கண் பௌத்த சங்கம் இருந்து செல்வத்தால் சிறந்து விளங்கிற்று; ஆனால் அதன் பணி நன்கு நடை பெறவில்லை. சயின சமயம் ஓரளவு முயன்று பல்லவ மன்னர் உள்ளத்தைக் கவர்ந்தது. மகேந்திரன் சயின சமயக் கருத்துக்களை மேற்கொண்டு அதன்பால் மிக்க பற்றுக் கொண்டிருந்தான். அக்காலத்தே பொருட் பெருக்கம், வாணிகம், தொழில் முதலியவற்றினும் சமயச் செல்வாக்கிற்கே அரசும் மக்கள் மனமும் இடம் தந்து ஒழுகின. சைவ சமயத்தின் சார்பில் பாசுபதம், பைரவம், காபாலம் முதலிய சில உட்சமயங்கள் தோன்றியுலவின. இச்சமயங்கள் யாவும் வடமொழியிலேயே இயன்றன; பல்லவனான மகேந்திரவன்மனும் பிறரும் வடமொழி நன்கு பயின்று புலமை பெற்றிருந்தனர். ஆங்கிலராட்சியில் ஆங்கிலம் சிறப்பிடம் பெற்றும் பொதுமக்கள் பால் சென்று பரவாதொழிந்தது போலப் பல்லவராட்சியில் வடமொழி, கல்வி பெறும் வாய்ப்புப் பெற்றவர்களிடையே பயிற்சிபெற்று விளங்கிற்று. எங்கும் எவர் பாலும் சமயக் கருத்துப் பற்றிய மொழிகளும் செயல்களுமே மிக்கிருந்தன. இதனால் பழமையும் புதுமையுமாகிய சமயங்கள் ஒன்றோடொன்று மோதின; ஒன்றனை யொன்று பழித்துப் பூசலிடவும் தொடங்கின. அதுகண்ட மகேந்திரன் தானும் சயின சமயத்தின் வழி நின்று ஏனைப் பௌத்தம், பாசுபதம், காபாலம் ஆகிய சமயங்களைப் பழித்து ஒழுகும் பண்புடையவனானான். அவனே மத்த விலாசம் என்ற ஓரங்க நாடகத்தை எழுதினான்.

இம் மகேந்திரன் காலத்தில் சோழ நாட்டில் சோழ வேந்தர் சிறப்புக் குன்றி ஒடுங்கிக் கிடந்தனர். அதனால் பல்லவராட்சி சோழ நாட்டையும் பாண்டி நாட்டின் வடவெல்லைப் பகுதியையும் தன்பால் கொண்டிருந்தது. பாண்டி நாட்டில் மாத்திரம் பாண்டியர் மதுரைக்கண் இருந்து அரசுபுரிந் தொழுகினர். எனினும் அவருள் மகேந்திரனோடு ஒப்ப இருந்த பாண்டியனான நெடுமாறன் சோழர் குடிப் பெண்ணான மானி என்ற பெயர் கொண்ட மங்கையர்க் கரசியை மணந்து வாழ்ந்தான். அவனது நாட்டில் புகுந்த சயின சமயம் பைய அவன் மனத்தைப் பற்றியது. கொள்கையால் அவனும் சயினனானான். சயினத் துறவிகளான சமணர் மதுரையைச் சூழ்ந்த பகுதிகளில் பெருகி வாழ்ந்தனர்.

மகேந்திரனுடைய ஆட்சியில் சமய வாழ்வு முதலிடம் பெற்றிருந்தமை காரணமாகச் செல்வர் பலர் சமய நூலாராய்ச்சியில் தலைப்பட்டனர். திருவதிகைக்கு மேற்கிலுள்ள திருவாரூரில் புகழனார் என்ற வேளாண்குடிச் செல்வர் ஒருவருடைய மகன் தோன்றிப் பல்வேறு சமயங்களையும் படித்துச் சிறப்படைய விரும்பினான். முடிவில் அவன் சயின சமய நூல்களை நன்கு பயின்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றுத் திருப்பாதிரிப் புலியூரில் அந்நாளில் விளங்கிய சமணர் சங்கத்தில் இடம் பெற்று இலங்கினான். தருமசேனராகியபோது அவருடைய குடும்பம், தலைவர்களான புகழனாரையும் அவர் மனைவியாரையும் ஒருங்கே இழந்தது. தரும சேனருடைய தமக்கை திலகவதி என்பவர் கொழு கொம்பில்லாக் கொடியாகித் திருவதிகை போந்து அங்குள்ள சிவன் கோயிலில் சிவத்தொண்டு புரிந்துவந்தார். தருமசேனர்க்கு ஒருகால் சூலைநோய் உண்டாயிற்று. அதனைத் தீர்ப்பதற்குச் சமணர் செய்த மருந்தும் மந்திரமும் பயன்படவில்லை; நோய் பெருகப் பெருக அவர்க்குச் சமண சமயப் பற்றும் ஒழுக்கமும் நம்பிக்கை தாராது ஒழிந்தன. அவர் திருவதிகை போந்து தமக்கையாரைக் கண்டு தமது நோயின் திறத்தைக் கூறவும், அவர் சிவனது திருவைந் தெழுத்தை அறிவுறுத்து திருநீறு நல்கித் திருவதிகையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெரு மானைப் பாடிப் பரவுமாறு பணித்தார். அவர் அதனையேற்றுப் பாடலுற்றார். அவரை வருத்திய சூலை நோயும் அகன்றது. அவர் பழைய படியே சைவராகித் தமிழ் நாட்டில் சிவன் உறையும் கோயில் கட்குச் சென்று பல்வகை இசைப் பாட்டுக்களைப் பாடுவராயினர்.

பாதிரி என்பது வடமொழியில் பாடலம் என வழங்கும்; அதனால் பாதிரிப்புலியூரை வடமொழி வாணர் பாடலிபுரம் என மொழி பெயர்த்துக்கொண்டனர். மக்கட் பெயர் ஊர்ப் பெயர் முதலியவற்றை வடமொழியில் மொழிபெயர்த்துத் தனக்கே உரியது போல வழங்கும் கீழ்மக்கள் செயல் வடமொழியொன்றுக்குத்தான் உண்டு. அதன் இனமாகக் கருதப்படும் ஐரோப்பிய மொழிகள் பால் இல்லாத இத்தீச் செயல் வடமொழிக்கு எங்ஙனம் உண்டாயிற் றென்பது பெரும் புதிராகவே உள்ளது.

பாடலியில் வாழ்ந்த சமணர்களுக்குத் தருமசேனர் சைவ ராகியது பெருவருத்தத்தைச் செய்தது; அவர் அப்பெயரை மாற்றறித் திருநாவுக்கரசர் என்ற பெயருடன் திரியத் தலைப்பட்டது தமது சமயத்தின் வளர்ச்சிக்கு இடையூறாகுமென எண்ணி வேந்தன் உள்ளத்தைக் கலைத்தனர். அவர்கள் தாமே கூடி அவரைக் கொல்லவும் முயன்றனர்; முடிவில் அவரைக் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளினர்.இறைவன் திருவருளால் அவர் உயிர் தப்பிக் கரையேறினார். அச் செய்தி காட்டுத் தீப்போல நாட்டில் பரவிற்று. அது கேட்ட மகேந்திரன் சமயப்பற்றும் உணர்வுமுடையனாகலின் வியப்பு மிகுந்து சிவபெருமான் திருவருளில் நம்பிக்கைகொண்டு சைவனானான். நிகழ்ந்து ஆராய்ந்து காணவும் அவன் உள்ளத்தில் சிவப்பணிக்கண் ஊக்கம் மிகுந்தது. பொதுமக்களும் தம் தாய்மொழி யாகிய தமிழில் இனிய இசைப் பாட்டுக்கள் தோன்றிச் சைவக் கருத்துக்களை எடுத்துரைப்பது கண்டு திருநாவுக்கரசர் வழங்கிய திருப்பாட்டுக்களை வரவேற்று மகிழ்ந்தனர். சின்னாட்களில் சீர்காழியில் திருஞானசம்பந்தர் என்பவர் தோன்றித் திருநாவுக்கரசரைப் போலவே செந்தமிழ் இசைப் பாட்டுக்களைப் பாடிவருவா ராயினர். பெரும்பாலரான தமிழர் இவ்விருவர் திருப்பணிக்கும் மிக்க ஆதரவு நல்கினர். ‘எவ்வது உறைவது உலகு’ என்று அறிந்து ‘அவ்வது உறைவது’ அறிவு என்றும், குடி தழீஇக் கோலோச்சுவது அரசியல் என்றும் அறிந்தவனாகலின் மகேந்திரன், சமணர்கள் திருநாவுக்கரசர்க்குச் செய்த தீமைகட்காக மனம் வருந்தி, அச்சமணர் வாழ்ந்த பாழி என்னும் இடங்களைத் தகர்த்து அவற்றால் திருவதிகையில் குணபரேச்சுரம் என்றொரு சிவன் கோயிலைக் கட்டினான்; சிரா என்னும் சமண முனிவன் இருந்த பள்ளியைக் கைப்பற்றி அச் சிராப்பள்ளிக் குன்றின்மேல் சிவனுக் கொரு கோயில் கட்டி, அதன்கண் தான் வேற்றுச் சமயத்திலிருந்து மாறிச் சைவனான குறிப்பையும் பொறித்து வைத்தான்.

சிவநெறி யென்பது ஏனைச் சமயம் பலவற்றையும் படி முறையாகக் கொண்டு தழுவி யொழுகும் பெருநெறி யென்பது உணர்ந்த மகேந்திரன் சமயக் காழ்ப்பு நீங்கிய மனத்தனாய் எல்லாச் சமயங்களுக்கும் ஏற்ற காவலும் உதவியும்செய்து ஓங்குவனாயினன். மகேந்திரனுக்கு லலிதாங்குரன், குணபரன், சைத்தியகாரி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அதனால் திருவதிகைச் சிவன் கோயிலுக்குக் குணபரேச்சுரம் என்றும், சிராப்பள்ளிக் கோயிலுக்கு லலிதாங்குரபல்லவேச்சுரம் என்றும் கல்வெட்டுக்களில் மகேந்திரன் பெயர் பொறித்திருக்கிறான். பின்பு இவன் மகேந்திரவாடி என்னும் ஊரில் மகேந்திர விஷ்ணுக்கிரகம் என்ற திருமால் கோயிலையும், மண்டகப்பட்டில் திருமால், பிரமன், சிவன் என்ற மூவர்க்கும் கோயிலும் கட்டினான். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வல்லத்திலுள்ள கோயிலுக்கு, மகேந்திரவன்மன் வாசல் என்பது பெயர்.

மகnதிரன் நாடகக்கலையில் விருப்புற்றிருந்ததுபோல ஓவியத்துறையிலும் ஒப்பற்ற ஈடுபாடு கொண்டிருந்தான். சிற்றண்ணல் வாயில் முதலிய இடங்களில் சிறந்த ஓவியங்கள் எழுதுவித்த. இவன் மாமண்டூரில் “தட்சிண சித்திரம்” குறிப்பித்தான். அந்நாளில் வடபுலத்திலிருந்துஇசை கற்கும் பொருட்டுப் பலர் வேதாரண்யம், குடுமியான் மலை முதலிய இடங்கட்கு வந்த வண்ணமிருந்தனர் எனத் திருஞானசம்பந்தர் குறிக்கின்றார். அதுகண்ட மகேந்திரனும் அவ்விசைக் கலையில் ஈடுபட்டான். அவனது ஆட்சியில் குடுமியான் மலையில் தோன்றிய இசைக் கல்வெட்டே போதிய சான்றாகும். அதனை ஆராய்ந்த பேராசிரியர் விபுலானந்த அடிகள் “கல்வெட்டினைப் பொறித்த ஆசிரியர் முற்றிலும் பழந்தமிழ் மரபினைக் கைக்கொள்கின்றார் என்பது தெளிவாகிறது” (யாழ்நூல் பக்: 338) என்று கூறுகின்றார்.
கி.ஆ.பெ.வி. மணிவிழாமலர்

1958

உலக வரலாறு


“நம் கட்புலனாம் இவ்வுலகின் தோற்றம், வடிவு முதலியவற்றை ஆராய்ந்தறிந்த பேரறிவாளர்கள் மிகப்பலர் எனினும், அவருட்சிறந்துநின்றார் கொண்டது உலகு ஒரு உருண்டை வடிவாயபொருள் என்பது. அது, வடிவில் உருண்டையெனினும், எண்ணரியபருமனும், ஒளிதெறிக்கும், இயல்பும் பொருந்தி, அளப்பரிய ஆகாயமென்னு மளக்கரில் மிதக்கும் பல்வேறு வகைப்பட்ட பொருள்கள் செறிந்த ஒரு திப்பியப் பொருளாகும். இன்னும் அதனைக் கூர்ந்து நோக்கின், அது, ஒரு நாரத்தம் பழத்தையொத்து, மேலுங்கீழுந்தட்டையாய், இருமருங்கினும் அச்சுக்கள் நிறுத்த அவை உட்சென்று நடுவில் கூடுமென நினைத்தற்கு ஏதுவாய், அவ்வச்சின் வழியாகவே சுற்றுகிறது எனக் கருதுவதற்கும் இடனாயிருக்கிறது.

இவ்வாறு, இது சுற்றுவதனால், இதன் எப்பாகம் ஞாயிற்றின் முன் வருகிறதோ, அப்பாகம், அஞ்ஞாயிற்றின் ஒளி பெற்றுப் பகற் காலத்தைப் பெறுகிறது அக்காலை, மற்றைப் பாகத்திலிருள் பரவ இராக்காலம் நிகழும். நிற்க, இது பெறும் ஒளிக்குக் காரணமாயது ஞாயிறு என்பதென்னை யெனின், அது ஒரு ஒளிநிறைந்த அழற்
பிழம்பு என்பர். அதனிடத்திலிருந்தே இவ்வுலகு தோன்றிற்றெனவும் கூறுவர். வேர்க்கடலை, மொச்சை முதலியவற்றைத் தீயிலிடுங்கால், அவை வெப்பத்தால் வெடிப்ப, அவற்றினின்றும் விதைகள் மிகுந்த விரைவுடன். வெளிக்கிளம்பலொப்ப, அஞ்ஞாயி றென்னும் அழற்பிழம்பின் கண் வெடித்து விரைந்தெழுந்த பொருள்களுள் ஒன்று இது எனவும் கூறுவர். இன்னணம் ஞாயிற்றினின்றும் வெளிப் போந்த பொருளாம் இப்பூமிக்கும் இஞ்ஞாயிற்றுக்கும் ஒரு கட்புலனாகாத் தொடர்புண்டு. அத்தொடர்பு ஒன்றையொன்று பற்றியே நிற்கும். விளங்கக்கூறின், ஞாயிறு பூமியைத் தன் மாட்டிழுத்தலும், அப்பூமி அதனை யிழுத்தலுமாய தொடர்பு. இதனை வடமொழியாளர் ‘ஆகர்ஷண’ சக்தியென்பர். மேனாட்டார். (Attraction of Gravitation) அட்ராக்ஷ னாவ் கிராவிடேஷன் என்பர். அன்றியும், ஓர் யாண்டில் நிகழும் கார், கூதிர், முன்பனி, பின்பனி முதலாய பருவங்கள் தோன்றுதற்கும் அச்சுற்றே காரணமெனவும் கூறுவர்.

இக்கூறிய கொள்கையே பெரும்பாலார் கொண்ட தெனினும், இதற்கு முரணாயினாருமுளர். இதிற் சிறிது வழுவியாருமுளர் எனவுங் கொள்க. இவர்களுட் பண்டைய முனிவர்களும் ஒரு சாராராவர். இவர்க்குள், சிலர் இப்பூவுலகு ஒரு சமனானவெளி யென்றும, இதனைத் தாங்கும பலதிண்ணிய தூண்கள் பல இதன்கீழே யுளவென்றுங் கூறுவர். சிலர் இதுவொரு பேரரவின் முடியிலிருக்கிற தென்றும், வேறுசிலர், ஒரு அடல்மிக்கயாமையாலிது சுமக்கப் பெறுகின்ற தெனவுங் கூறுவர். இவர்கள் கூறிய தூண், அரா, யாமை முதலியன நின்று தாங்கற்கு உரிய இடம் என்னெனக் கடாயினார்க்கு விடையிறுத்தலாகாமையின், அவை கொள்ளற் பாலனவல்ல வென்க.

பிராமணர்கள், விண்ணுலகு மண்ணுலகைச் சார்ந்து மேனிற்கிறதெனவும், இவற்றினிடையில் நீரிடைத்தவழும் மீனினம் போல், ஞாயிறும் திங்களும் வானிடை மிதந்து கிழக்கு மேற்காகச் சென்று. தத்தமக்குரிய காலத்திறுதியில் உலகு விளிம்பை (Horizon) யடைந்து, முடிவில் தத்தம் முறைப்படித் தோன்றுமிடத்தையடையு
மெனவும் கூறுவர்.

நிற்க, புராணிகர்கள், இப்பூமியொரு தட்டைச் சமவெளி யென்றும், இதனைச் சுற்றிப் பாற்கடலைத்தலைக் கொண்ட எழுவகைக் கடல்களும், அவற்றினிடையில், மேருமுதலாக எழுவகை மலைகளுமிருக்கின்றன வென்றுங் கூறலோடமை யாது, சூரிய சந்திர கிரகணங்களாவன இராகுவென்னும் பேரரவு சிலகாலங்களிற்றோன்றி அவற்றுளொன்றை விழுங்குங் காலமே எனவுங் கூறுப.

அபுல்காசன்அலி யென்னும் பேரறிவாளரொருவர் தம் நாட்டு வல்லார் உரைகளைக் கற்றுத் தம் நுண்ணறிவிற்குத் தோன்றிய சிலவற்றைத் தாம் எழுதியுள்ள “பொன்னிலமும் மணிச்சுரங்கமும்” (Mourondge-ed-dharab, or The golden meadows, and the mines of precious stones) என்னும் உலக வரலாற்றுட் கூறுமாறு:-

“இப்பூவுலகு ஒரு தனிப்பெரும் பறவையாகும். இதன் தலையே மெக்கா, மெதினா என்னும் நகரங்கள். பாரசீகமும் இந்தியாவும் அதன் வலச்சிறகாகவும், காக் (Gog) என்ற நாடு இடச்சிறகாகவும், ஆப்பிரிக்கா அதன் வாலாகவும் அமைந்துள்ளன. இன்றையப் போது நாம் வாழும் இப்பூவுலகின் முன்பு, வேறொரு உலகிருந்தது. அதுதோன்றி ஏழாயிரம் ஆண்டுகளே இருந்தது. அதனை இப்பூப்பறவையின் குஞ்செனினும் பொருந்தும். தோன்றியிருந்த அது, இடையில் நிகழ்ந்த வெள்ளம், நிலநடுக்கம் முதலாய இடையூறுகளால் இன்னல்வாய்ப் பட்டிறந்தொழிய இது தோன்றிற்று. இங்ஙனம், பூவுலகம் தோன்றியழிதல் இயற்கையே. அவற்றிற்குரிய காலம் எழுபதினாயிரம் ஹஸரோவம் ஆகும். ஒரு ஹஸரோவமென்பது பன்னீராயிர மாண்டுகளாம்…”

இக்காலக் குறிப்பும், வரையறையும் இவர் தம்மோடிருநத் பிராமண நண்பர்களொடு கலந்து செய்ததாதல் இந்நூலாற் றெரிகிறது.

இந்நூலாசிரியரைப் பற்றிய குறிப்புக்கள்:- இவரது தந்தை ஆல்கான்; அவர் தந்தை அலியென்பார்; அவர் தந்தை அப்துர் ரஹிமான்; அவர் தந்தை அப்துல்லா; அவர் தந்தை மசௌடல் அதெலி. இவரை யாவரும் மசௌடி யெனவே யழைப்பர். பிறகு இவரது அறிவைகுறித்து, இவர்க்குக் “குத்புதீன்” என்னும் பட்டமும் அக்காலத்தார் அளித்தனர். எனினும், இவர் அப்பட்டப் பெருமையையும் கருதாது லாஹேப் அர்ரசௌ (பரம்பொருளின் தூதனுடைய தோழன்) என்னு மொருதாழ்வான (அக்காலத்தார் கருத்து) பட்டத்தையே யேற்றனர்.

நூற்குறிப்பு :-
இது உலகின் தோற்ற முதல் இந்நூல் எழுதியகாலம் வரையிற் கூறும் வரலாறாகும். இவரது காலம் மோதிபில்லாவின் கிலாபத் காலம். அதாவது ஹிஜிரா 336.

இதுகாறும் கூறிய கொள்கைகளும் இன்னோரன்ன பிறவும் பூவுலகைப் பொருத்தமட்டில் மிகப்பல உண்டு. ஒவ்வொரு கொள்கைக்கும் அதனையாய்ந்தறிந்த பெரியோர்கள், அவ்வக்காலத்துக்கேற்பப் பலசில காரணங்களும், கரிகளும் காடடியே நின்றனர்.
இனி, ஞாயிறு முதலிய வானுலகப் பொருள்களைப் பற்றி அவர்கள் நினைத்தவற்றைப் பார்ப்போம்.

ஞாயிற்றின் பிறப்பு முதலியவற்றைக் கூறவந்த பேரறிஞர்களும் பலரே. அவர்கள் ஒவ்வொருவரும் காட்டிய சான்றுகள், அவரொத்த அறிஞர்களை மயக்குந் தன்மையவாய் நிற்ப, அவரவர் தத்தம்மாலியன்றவளவு பிறப்புக் கூறினர். அங்ஙனங் கூறினார் தொகையைத் தூக்கி நோக்குங்கால், அவர்கள் மூன்று வகையுளடங்குவர். ஒருவகையார் மிகப் பண்டைக்காலத்து அறிஞர்களாவார். அவர்கள், ஞாயிறு ஒரு அளத்தற்கரிய அழலாழி (Wheel of fire) யென்பர்; ஒரு சாரார், ஒரு பளிங்கொத்த வொளிதெறிக்கும் (Transparent) கண்ணாடி அல்லது உருண்டை வடிவிற்றாய பளிங்கு என்றனர்; மூன்றாம் பிரிவினர், கல்லும் இரும்பும் கலந்து, பேரழல்
வாய்ப் பட்டுருகி, ஒளிகாலும் தன்மைவாய்ந்த ஓர் அரும்பெரும் பொருள் என்பர். இவருட் டலையாயவர், அனக்ஸாகொரஸ் (ஹயேஒயபடிசரள) என்பார். அன்றியும், இவர் விண்மீன், திங்க்ள் முதலிய வானப்பொருள்களனைத்தும் மண்ணினின்றும் தெறித்தெழுந்த கற்களெனவும், அவை ஒவ்வொன்றிற்குமுள்ள வானிடைத் தொடர்பு அல்லது தன்வயங்கோடல் (Attraction of gravity) வயப்பட்டு, விரைந்து சுற்றிச் செல்லும் இயல்புடைமையின் பயனாகத் தீக்கொண்டு ஒளியிடுகின்றவென்றுங் கூறுவர்.

இவர் இத்தகைய ஆராய்ச்சி முடிவை உரோம (Rome) தேயத்துமக்களுக்கு வெளியிட்டகாலை, அவர்கள் இதனையேற்றற்கு மறுத்ததோடமையாது, இவரையும் தம் நாட்டினின்றுந் துரத்திவிட்டாராதலின் இதனை நாம் நன்கு ஆய்தல் வேண்டிற்றில்லை. அன்றியும், பண்டைக் காலத்து உரோம தேய்த்து மக்கள் தமக்கு ஏற்காதகொள்கை, எண்ணம் முதலியவற்றை ஒருவர் வெளியிடுவரேல் அதனை மறுக்கும் வகையால் அவரை வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுதல் மரபெனவும் கொள்க.

நிற்க, வேறுசிலர், மண்ணினின்றும் அழற் பொருள்கள் பல மேலே கிளர்ந்து சென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற்றிரிந்து நிற்பத் தற்செயலாக அவை ஒன்று கூடி ஒரு பேரழற்பிழம்பாயின; அப்பிழம்பே இஞ்ஞாயிறு; அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிறந்தனவே) ஒன்று கூடாது, தனித்தோ, தம்போன்ற சில கூடித் திரண்ட சிறு பிழம்புகளாகவோ விண்மீன்களெனத் திகழ்கின்றன; இவைகள், காலம் நீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழை வந்துசேர, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.

சிலர், நம்கட்புலனாம் ஞாயிற்றின்முன் வேறோர் ஞாயிறு இருந்ததெனவும், அது ஒரு காலத்துத் தன் ஒளிமுழுதும் ஒழிந்துமறைய, ஒரு திங்கள்காறும் உலகம் ஒளியின்றியிருந்தது; அப்போழ்தே, இஞ்ஞாயிறு தோன்றிற்று எனவுங் கூறுவர். வேறுசிலர், ஞாயிறு என்பது ஓர்பெறலரும் சீருஞ்சிறப்புமமைந்து, பேரழகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்தலுங்கூடு மென்றும் கூறி, அப்பேரகத்தின் மீது ஒரு வகைத்தான ஒளி, வெப்பம், நீர் முதலியவும் வேறு பிறவும் கலந்த மேகபடம் சூழவுளதென்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுலகுபெறும் ஞாயிற்றொளி யெனவும் கூறுப. இவருட்டலையாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.

இம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகாணுமாதலால், இதனை யிம்மட்டினிறுத்தி, இனி, இந்நிலம், ஞாயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தம் நிலையிற்றிரியாது கொட்புறும் தன்மையையும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில் நம் நாட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.

ஞாயிற்றின் இயற்கையைப் பற்றிப் பல வேறு வகைப்பட்ட ஆசிரியர்கள் கூறியவற்றையும், அவற்றோரன்ன பிறவற்றையும் நாம் ஆராய்ந்து கொண்டே செல்லின், இத்தலைப் பொருள் முற்றுப் பெறல் அரிதாமாகலின், அவ்வாராய்ச்சியை இம் மட்டினிறுத்தி, இக்கட்டுரைத் தொடக்கத்திற்கூறிய பூமியின் சுழற்சியைப் பற்றிச் சிறிது நோக்கிப்பின் அதன் வரலாற்றை யாராய்வோம்.

மேல் நாட்டில் பழங்காலத்தில் லெய்டென் (Leyden) என்னும் பல்கலைக் கழகமொன்றில், பேராசிரியராய் வான்புடிங்காப்ட் (Vonpuddingcoft) என்பாரொருவரிருந்தார். அவர் ஒரு பேராசிரியனுக் குள்ள அமைதிமுற்றும் நிரம்பப் பெற்றவரெனினும் தேர்தல் (Examination) காலங்கள் அறிந்து சோர்துயில் கொள்வார். அதனால், அவர் மாணவர்கள், கற்றற்றிறம் சிறிதும் களியாட்டயர்தல் பெரிதும் பயின்றுவிளங்கினர்.

ஒருநாள், இவர் மாணவர்க்கு நிலவுலகைப் பற்றிய ஓர் விரிவுரை நிகழ்த்துமமையத்து, வாலி (Tub or bucket) யொன்றிற்றண்ணீர் கொண்டு, ஏந்தியகையராய் அதனை நீட்டிய வண்ணம் நேரே பிடித்துச்சுற்றினர். சுற்றுங்கால் வாளியிலிருந்த நீர் கீழே வீழாது, அதனிடத்தேயே நின்றது. இதனை ஓர் காட்டாகக் கொண்டு, அவர் பின்வருமாறுதன் மாணவர்கட்குக் கூறுவாராயினர்.

“இவ்வாளியே பூமியாகவும், அதன் நீரே கடலாகவும் நீட்டிப் பிடித்த கையே பூமிக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பாகவும், என் சென்னியே ஞாயிறாகவும் கொள்க. யான் வாளியைச் சுற்றுங் காலெழுந்த விரைவின் பயனாக, எங்ஙனம் அதன் கணிருந்த தண்ணீர் கீழே விழாது நின்றதோ அங்ஙனமே இப்பூவுலகு சுற்றும் நேர்மையால் அதன்கணுள்ள கடனீரும் இருந்த வண்ணமே நிற்கின்றது, என அறிக. யான் சுற்றும் நெறியினின்றும் உடனே நிறுத்தினாலும் அவ்வாளியே யாதானுமொன்றால் தடை பெற்றாலும் அதனீர் கைவழியே என் தலைமிசைவிழும். இது உண்மை. இங்ஙனமே, பூமியும் தன் விரைந்த சுழற்சியினின்றும் யாதானுமொன்றாற்றகையப் பெறின், கடனீரும், அதன் பயனாக ஞாயிற்றின் மீது விழும், வீழினும் ஞாயிற்றின் வெம்மையும், ஒளியின் மிகுதியும் எவ்வாற்றானுங் குறைபடா வென்பதைச் சிறிதும் மறவற்க. என்னை: ஞாயிற்றின் வெம்மைக்கு இம்மன் சூழ்ந்த கடனீர் ஆற்றாதாகலின் என்க.”

இதனைக் கேட்ட மாணவர்களுளொருவன், தன் ஆசிரிய ருரைத்த பொருள் எத்துனையுறுதியுடைத்து, எனக்காண்டல் வேட்கை மீதூர்ந்து, வாளியைச் சுற்றி நின்ற. ஆசிரியரது கையை இடைநின்று தடுத்தான். தடுக்கவே அவ்வாளி நீர் அவர் உடல் முழுதும் வீழ்ந்து நனைத்தது, வாளியும் கீழ்வீழ்ந்தழிவுற்றது. ஆசிரியர்க்கும் அடக்கலாகா வெகுளிபிறந்தது. முகங்குருதி பாய்ந்து செக்கர்ச்செவேரெனச் சிவந்தது. உடனே கண்கறுப்ப வீசை துடிப்ப, அவரது மடித்த வாயினின்றும், வெடித்த சொற்கள் பல வெளிவந்தன. கண்டார் மாணவர்கள். கண்டாரது கருத்தில் பேரச்சந் தோன்றி ஒரு புடைவருத்தினும், மறுபுடை, வாளி நீர் பாய்ந்தும், தங்கள் ஆசிரியர் முகம் தன்னொளி கெடாதிருந்தமை கண்டு, இன்னணமே கடனீர் வீழினும், ஞாயிற்றின்றன்மை திரியா தென்பது முண்மையே எனமனந் தேறிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாணவரது அறியாமைக் குறும்பு ஒரு புடைத் தோற்றமாயினும், நாம் நுணுகிநோக்கி அறியக்கிடப்பன பலவுள. அவை உயர்ந்தோர் தம் உண்மையறிவானாராய்ந்து காணும் அரியபொருள்களை, இயற்கை நங்கையும் உடன் கொள்ளாது. அவை தாமே முதிர்ந்து வருந்துணையும் வேறாய் நிற்பளென்பதும்: இன்னோரன்ன அரிய பொருள்கள் அறிவுடையோர் மனக் கண்ணிற்றோன்றி, அவரான் வெளியிடப் பெறுங்கால், அவற்றை யேற்கும் ஆற்றலில்லாப் பிறமக்கள் - இயற்கை நங்கையின் இளஞ்சிறாராய இம்மக்கள் - ஏற்காதொழிவதன்றி, அவற்றையும், வெளியிடுவோரையும் மிகப்பல இடையூற்றுக் குள்ளாக்கித் துன்புறுத்துவரென்பதும்; இதனாலெய்தும் குறை அவ் அறிஞர் களதோ, மற்று, அவர்கள் கண்ட பொருள்களதோவென்பார்க்கு அது அவ்விரண்டிடத்து மன்றாய் இயற்கையின் பாற்றாமெனக் கோடல் வேண்டுமென்பதும்; இவ்வியற்கை நங்கைதான், அவை வெளி வருங்கால், மக்கள் அவற்றை யெளிதிலறிந்து ஏற்காவண்ணம் மயக்குவதோடு அமையாது, அவ்அறிஞர்களுக்கு இன்னலிழைக்குமாறு அவர்களைத் தூண்டுதலும் செய்வாளென்பதும், இங்குக்கூறிய இரண்டு குணங்களின் வயப்பட்ட இவடன் மாயையே மேலே நிகழ்ந்த நிகழ்ச்சிக்கும் காரணமாமென்பதும்; தம் உடற்கும் வாளிக்கும் இடை நின்ற கையே ஞாயிறு பூமி முதலியவற்றின் இடை நிற்கும் தொடர்பென்றும், இத்தொடர்பே உலகம்நின்று நிலவு வதற்கு இன்றியமையாப் பொருளென்று மவர் கூறியது உண்மையேயாம் என்பதும்; இதனை அவ்வாசிரியர் வெளியிடுதலுமியல்பே யென்பதும்; இடைநின்ற தொடர்பு தடைப்பழியுங்காலத்துத் தன் மாட்டிழுக்கும் தன்மைத்தாய ஞாயிறு தன் தன்மை திரியாது நிற்குமென்பதும் இன்னோரன்ன பிறவுமாம்.

இக்கருத்து மெய்க்கருத்தேயென மேனாட்டுப் பெரும் புலவர்கள் அனைவரும் உடன்பட்டனர்; இன்றும் உடன்படு கின்றனர். அவர்கள் “நிலத்துக்கும் ஞாயிற்றினுக்கு முள்ள தொடர்பு ஓர் காலத்து அழியும்; அவ்வழிவால் நிலம் தன்நிலை பெயர்ந்து ஞாயிற்றின் கட் பட்டழியும்.” என்பதையே இன்னும் எதிர்நோக்கி நிற்கின்றனர். மற்று, அவர்தம் நோக்கத்திற்கு மாறாக, இம்மண்ணுலகு தன் தொடர்பை இழத்தலின்றித்தன் நிலைமை மாறாமையும் பெற்று விளங்குகிறது. இவ்வியற்கைப் புலவர்களுடைய கொள்கைகள் முற்றுப் பெறுநாள் எந்நாளோ! இது காரணமாக எழுந்த கொள்கைகளும் புலவர்களும் விண் மீன் தொகையினும் பலரே. என் செய்வர் தாம் ஆய்ந்தறிந்த உண்மைப்படி உலகம் தன் தொடர்பு கெட்டாலன்றோ அவர்கள் மனம் அமைதிபெறும்! இன்றேல், இப்புலவர் களையும் இயற்கையையும் ஒன்றுவிக்கும் சந்தாம் தன்மையுடைய புலவர்களேனும் வரல் வேண்டும்; அவர்களும் வந்தாரிலர்!!

ஆகவே, தாம் கொண்ட உண்மைப்படி உலகம் நடைபெறாமை கண்ட அவர்கள் உலகநடைப்படித் தம் முண்மைகளைச் செலுத்தி நோக்கினர். அது கொண்டே மேற்போந்த பேராசிரியரும் “பூமிக்கும சூரியனுக்கும் உள்ள தொடர்பு கெடின், அவை அக்கேட்டிற்குக் காரணமாய வற்றைத் தொடராது, ஒன்றானொன்று அழிந்தொழியு மெனினும், இவ்வுலகம் ஞாயிற்றைச் சுற்றி வருதலென்பதுண்மை” யென ஆண்டுக்கூறாது கூறிப்பின்ன ரோரமயத்தி னன்கு விளக்கினர். அது முதற் கொண்டு, உலகம் பகலவனைச் சுற்றி வருகிறதென்பதும், அச்சுற்றுக்கும் ஞாயிற்றினுக்குமுள்ள தொடர்பும் நெறியும் சுற்றும் பொருளைச்சார்ந்தனவென்பது முடிந்த முடிவுகளாயின.

உலகின் தோற்றம்
மேற்கூறியவாற்றான் மண், ஞாயிறு முதலிய உலகங்களின் பொதுவியல்புகண்ட அன்பர்கள் அவற்றின் தோற்றத்தைக்காண அவாவுவரன்றே! அவ்வவாவும் அறிவின்பாலதேயாம். ஆயினும், உலகின்றோற்றத்தைக் காண்டல் செல்லும் நாம் முதற்கண் நம் தோற்றத்தை யறிவோமாவென்பது வினா. அவ்வினாவிற்குப் போதிய விடையளிக்கவல்ல முடிபுகள் இதுகாறும் கிடைத்தில கிடைப்பதுமரிதே. அற்றேல், நம் நாட்டுப்பண்டைய முனிவர்களும், பெரியோர்களும் கண்டாய்ந்தவை என்னாயவோ வெனின், அவை அவரவர்கள் கொண்டுசென்ற அறிவின்றிண்மைக்கேற்ப அமைந் துள்ளனவேயன்றி, எல்லாமக்களானும் கொள்ளப் பெறவில்லை. இன்னணமே பிறநாட்டார் கூறிய முடிபுகளும் அமைந்துள்ளன என்க. எனவே, இருதலையும் தூக்கி நோக்குங்கால் ஒரு வகை முடிவும் பெறுதல் அரிதாகின்றது. இத்தனையும் நோக்கியோ நம் நாவரையரும் “வந்தவாறெங்ஙனே? போமாறேதோ? மாயமாம் பெருவாழ்வு” எனத் திருவாய்மலர்ந்தது!

இங்ஙனம் நம் தோற்றமே மாயமெனின், நாம் நின்று நிலவும் உலகின் தோற்றமும் மாயமேயாம். ஆயினும், நம் நாட்டுப் பெரியோரது கொள்கையோடு பிறநாட்டுப் பெரியோர்களது கூற்றுக்களை நோக்கி மனத்தான் ஆராய்வோம்.

வாணிக மந்திரம்


வாணிகம் என்பது நமது நாட்டில் பொதுவாக யாவரும் செய்யக்கூடிய தொழில் என்று பலரும் கருதுகின்றனர். உடம்பை வருத்திச் செய்யக்கூடிய உழவு முதலிய தொழில்கள் இழிந்தவை என்றும், அரசியலில் அரைப்பணச் சம்பளத்துக்காயினும் வேலை பார்ப்பதுதான் உயர்ந்தது என்றும், வாணிகம் செய்வது நடுத்தர மானது என்றும் இடைக்காலத்தில் மக்கள் மனத்தில் ஒரு கருத்துத் தோன்றி நிலவுவதாயிற்று இதன் விளைவாகக் கற்றவர் அரசியல் வேலையாட்களாகவும், பணிபுரிபவர்களாகவும் அலுவலாளர் களாகவும் புகுந்து வாழ்க்கை நடத்துவாராயினர். கல்லாதவர் பலரும் உழவு முதலிய தொழில்களை மேற்கொண்டனர். சிறிது கற்று இடைநிலையில் நின்றவர் வாணிகம் செய்பவராயினர். வேலைகிடைக்காதவன் வெற்றிலை பாக்குக் கடையேனும் வைத்து வாணிகம் செய்து வாழலாம் என்று கருதும் அளவுக்கு வாணிகம் நடக்கத் தலைப்பட்டது.

சிறந்த கல்வியறிவும் வலிய உடலுழைப்பும் இல்லாதவர் பலரும் வாணிகத்தில் நுழைந்தமையால் வாணிகத் தொழில் ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கருதப்படுவதாயிற்று. ஒரு சிலர்க்குப் பொழுது போக்காகவும் பயன்பட்டது. இத்தகைய வாணிகத்தில் வளர்ச்சியும் வளமையும் உண்டாதற்கு வழி இல்லாமையால் நட்டம் வருவதும், நிலைதவறிவீழ்வதும், எழுவதும் இயற்கை யென்று மக்கள் கருதுகின்றார்கள். “முப்பதாண்டு வாணிகம் செய்து வாழ்ந்தவரும் இல்லை கெட்டவரும் இல்லை” என்றொரு பழமொழியும் உலகில் நிலவுகின்றது. மேனாட்டு வணிகர்கள் தங்கள் வாணிகத்திற்கு வெள்ளிவிழா (25ஆம் ஆண்டு விழா) பொன்விழா (50ஆம் ஆண்டு விழா) மணி விழா (60ஆம் ஆண்டு விழா) நூற்றாண்டு விழா என விழாக் கொண்டாடுகிறார்களே; அதுபோல் நம்மவர் ஏன் செய்யமுடிவதில்லை? அவர்கட்கு மாத்திரம் நிலையாக நின்று இப்படி விழாக்கள் நடத்த இயலு கின்றது ஏன்? என்று நினைப்பது இல்லை. செய்யும் வாணிகத்தில் உயர்ச்சி யுண்டானால் “நல்ல காலம்” என்றும், “நல்ல யோகம்” என்றும், வீழ்ச்சியுண்டானால் “திசை கெட்டுப் போயிற்று,” “கிரகம் சரியாயில்லை” என்றும் சொல்லிப் பழி பாவங்களைக் காலத்தின் மேலும் கிரகங்களின் மேலும் தள்ளிவிட்டுத் தாம் குற்றமற்றவர் களாகக் கருதிக்கொள்வது இயல்பாக இருக்கிறது. விதியென்றும், வினை யென்றும், கருமம் என்றும் சொல்லிக் கொள்வது பெரு வழக்கு, விதிவினைகளின்மேல் பழிபோட்டுக் கெடுகின்றவருக்கு நமது பெரியோக்ள் நல்ல அறிவுரையும் சொல்லியுள்ளார்கள்; செய்யும் தொழிலில் விதி வினைகள் குறுக்கிட்டாலும் நாம் நமது உழைப்பாலும் அறிவு வன்மையாலும் வென்று விடலாம் என்று நம் முன்னோர் நன்றாக அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்கள். அப்படியிருந்தும் மிகப்பலர் தெளிவில்லாமல் “ஐயோ; வினையே” என்று அழுவதும், அதற்காக நவக்கிரகங்களுக்கு வழிபாடு செய்வதும் மேற்கொண்டு அவதிப்படுகின்றார்கள். அவர்களுக்குத் திருஞான சம்பந்தர் முதலியோர் அறிவுறுத்த உரை செவியில் ஏறுவதில்லை; தெளிவில்லாத சோதிடரும் திறமையில்லாத கோயில் பூசாரியும் சொல்லுவதுதான் நல்ல அறிவுரையாக விளங்குகிறது. வணிகர் சமுதாயத்தில் இந்த இழிவானநிலை எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று? என்பன போன்ற ஐயங்கள் இப்பொழுது எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்தால் அது பாரதமாய் விரியும்.

வாணிகத்தின் கீழ்நிலைக்குக் காரணமாக ஒன்றை மாத்திரம் இப்போது தெளிவாகக் கூறலாம். வாணிகம் என்பது மக்கட் சமுதாயத்துக்குச் செய்யும் சிறந்த தொண்டு என்பது மேனாட்டவர் கொள்கை. நம் நாட்டவர் அதனை ஒரு சூதாட்டமென்று கருதுகின்றார்கள், பெருத்த நிலையில் வாணிகம் செய்து ஒருவர் கெட்டுவிடுவாரானால் `சூதாட்டத்தில் எப்படி வெற்றிதோல்விகள் நிலையில்லையோ அப்படியே வாணிபத்திலும் இலாப நட்டங்கள் நிலையில்லை” என்று சொல்வது வழக்கமாக இருப்பது யாவருக்கும் தெரிந்த செய்தி, வாணிபம் ஒரு சூதாட்டம் என்று எவன் எக்காலத்தில் சொன்னானோ தெரியவில்லை. அந்தப் படுபாவியின் சொல்லால் நமது நாடு வாணிகவுலகில் மதிப்பிழந்து போயிற்று. வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்துவிட்டன.

நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒரு முறை நமது நாட்டு வாணிகத்தைப் பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங் குறையை எடுத்துக் கூறினார். நம்நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனiம் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மேசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா?

மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதைகளையும், மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்து விடுகிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும், கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு கசம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரை கசத்துக்கு மிகுவதில்லை; எழு கசச் சீலையென்பான்! அளந்தால் அது ஆறரை கசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனத்தில் வாணிகம் என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவில்லாதவர் களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய் விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் இவர்களில் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டு வதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வரவில்லை. உள்நாட்டில் இப்படிச்செய்து பழகிய மோசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் பெருவாரியாகப் புகுந்து வெளி நாட்டவர் இகழ்ந்து வெறுத்துத் தள்ளுதற்குரிய அவகேட்டை விளைவித் திருக்கிறது. பொருள் துறையில் படிப்படியாக முன்னேற முயன்றுகொண்டிருக்கும் நமது நாட்டுக்கு இந்த இழிசெயல் பெருத்த தீங்கை உண்டுபண்ணி வருவதை நமது நாட்டு வணிகர்கள் நினைப்பதாகவும் தெரியவில்லை; சமுதாயத்துக்கு இதனால் எவ்வளவு பெரிய துரோகம் செய்யப்படுகிறது என்பதும் அவர்கள் அறிவுக்கு எட்டியதாகத் தோன்றவில்லை. இன்றும் இந்த வஞ்சனையும் மோசமும் துரோகமும் நமது நாட்டு வணிகர் சூழலில் வளமாக நிலைபெற்றிருப்பதே இதற்குத் தக்க சான்று பகருகின்றது.

இந்த நிலை நமது நாட்டு வாணிகத் துறையில் நிலவுவதால் ஒருவர் பல ஆயிரக்கணக்கில் வைத்து வாணிகம் செய்தாலும் அவர் சொல்லும் விலையில், சொல்லில், ஏழைமக்களும் நம்பிக்கை வைப்பதில்லை, ஒரு பொருளின் விலை அவர் ஒரு ரூபா என்பாரானால், வாங்குபவர் அiதச் சிறிதும் நம்பாமல் முக்கால் ரூபா, அல்லவா? என்று கேட்பார். பின்பு சிறிது போது சொல்லாடல் நிகழும்; முடிவில் அவர் அந்தப் பொருளை முக்கால் ரூபாய்க்கோ பதினான் கணாவுக்கோ வாங்கிக் கொண்டு போவார்; பல்லாயிரம் ரூபாய் முதல்வைத்து வாணிகம் செய்யும் முதலாளியின் சொல் மதிப்பிழந்து பொய்பட்டே போகும். தமது சொல் பொய் படுவதையோ அதனால் தமது நாணயம் பொதுமக்கள் முன்பு கெட்டு நிற்பதையோ அவர் நினைப்பதும் இல்லை; உணருவதும் இல்லை, வேறு சிலர் தமது சொல்லுக்கு மதிப்போ நாணயமோ பொதுமக்கள் வையாமைகண்டு “ஒரே விலை” என்று வாணிகம் செய்யத் தலைப்பட்டனர்; ஆயினும் ஒரே விலைக்கேற்ற உயர்ந்த பொருளை அளவு குறையாமல் விற்பதை நெகிழவிட்டார்; ஒரே விலை என்பாரிடத்தும் பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்கள் சமுதாயத்தில் நம்பிக்கையும் நாணயமும் உண்டு பண்ணாத வாணிகமோ தொழிலோ எதுவும் பலநாள் நீடிக்க இயலாதாகையால், நிறுவிய ஒரு சில ஆண்டுகளில் மிகப்பல வணிகர் வீழ்ச்சியுற்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினர்.

நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில் நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமை யாலும், வாங்கும் பொதுமக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவது கண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்து விடவேண்டும்; பேரம் பேசக்கூடாது” என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒரு கடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சென்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்டை முதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத் தொடுத்த” செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது.” இப்படியே மிளகுப் பொடியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மணணைக் கலந்தும் நமது நாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டுவந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றொரு பெரிய நகரம் உள்ளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்து வந்தது. பல செல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டுகட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை’ என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹெர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில் அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார்.

டெயிலர் (H. Teylor) முதல்வராய சிறிது காலம் அதன் நடைமுறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும நாணயத்துக்கும் மாசு உண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அதைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணு தற்கென்று ஒருசில “மந்திரங்களைக்” கண்டுபிடித்தார். அதைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் “உபதேசித்து” அதை மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனத்தில் வேரூன்றிய “மந்திரம்”, விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று; ஊதியம் மிகுந்தது; விழும் நிலையி லிருந்த நிலையம் 200000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிக மாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன் பால் மிக் நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது.

அப்படியானால் அந்த “மந்திரம்” யாது என அறிய வேண்டு மன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்படுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    1. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்குமானால், அதை ஆராய்ந்து, “இது உண்மையான பொருள் தானா?” என்று முதலில் பார்க்கவேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது. உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்க வேண்டும்.  

    2. ஒரு பொருளின் விலையைச் சொல்லி வாங்கும்போது நாம் வாங்கும் விலை நேர்மையானதா? என்று காணவேடும் இஃது இரண்டாவது மந்திரம். நேர்மையில்லாத வழியில் விலை குறிப்பதும் விற்பதும் மக்கள் மனத்தில் அருவருப்பை உண்டாக்கும்; அதனால் வாணிகம் தடைப்பட்டுச் சீரழியும்.  
      

3.  நாம் இப்படிச் சொல்லுவதாலும் செய்வதாலும் நம்மிடத்தில் பொதுமக்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டாகுமா? பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே உயர்ந்த நட்பு உண்டாகுமா? என்று ஆய்ந்தறிய வேண்டுவது மூன்றாவது மந்திரம். நம்பிக்கையால் வாணிகம் பெருகும். நட்பினால் அதுசெழிக்கும். நாட்டில் நமது தொழிலுக்கு மதிப்பும் புகழும் தோன்றிச் சிறக்கும்.

    4.  நமது இந்தச் செய்கையால் எல்லோருக்கும் நன்மை விளையுமா? என்று நோக்குவது நான்காவது மந்திரம். பிறர்க்கு நன்மை செய்வது குறித்தே வாணிகத் தொழில் உண்டாகியிருக்கிறது. அவரவர்க்குத் தேவைப்படும் பொருள்களை அவரவரும் தாமே தேடிக்கொள்வது எளிதில் நடக்கக்கூடியதன்று. ஒருவர் உண்டு பண்ண, உண்டு பண்ணி பொருள்களை ஒருவர் ஓரிடத்தே கொண்டு சேர்த்துத் தொகுக்க, ஒருவர் அவற்றைப் பலருக்கும் வகுக்க, ஒருவர் எடுத்து விற்க, இப்படிப் பலரும் பலவகையில் உழைக்க வேண்டும். நமது செயலால் வாங்குபவரும் விளைவிப்பவரும் இடையில் பல நிலைகளில் வேலை செய்பவரும் யாவரும் நன்மை பெறவேண்டும். மேலும், தேவைப்பட்டு வாங்கு வோருள்ளும் ஏழை எளியவர், சிறியவர் முதியவர், தெரிந்தவர் தெரியாதவர் யாவரும் இதனால் நன்மையடைய வேண்டும். தேவைப்பட்ட பொருள் செம்மையான நிலையில் கிடைக்கப் பெற்றால் பெறுகினற் மக்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் உண்டாகும். இவ்வாறு மக்கட் சமுதாயம் தேவையானவைகளைச் சிறந்த நிலையில் பெற்று அமைதியாகவும் இன்பமாகவும் மனநிறைவோடும் வாழுமாறு தன் செயலை நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான் உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என அறிஞர் கூறுகின்றார்.

இந்த “நான்கு மந்திரமும்” உரிமைகொண்டு வாழும் உலக நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பதால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதைகளல்லர்; அதனால் அவர்கள் இந்த “நால்வகை மந்திரங்களையும்” கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார்களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும் என்பதற்கு ஐயமேது?

வெற்றிலை வாணிகர்


புதுக்கோட்டைப் பகுதியில் வெள்ளாறு ஓடுகிறது. அதன் இரு கரையிலும் உள்ள நாட்டுக்குக் கோனாடு என்று சங்க காலத்தில் பெயர் வழங்கிற்று. இடைக் காலத்தில் விசயாலயன் இராசரான் முதலிய சோழ வேந்தர் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் காலத்தில் முதல் இராசராசனது 18-ஆம் ஆண்டுக்குப் பின் இக் கோனாட்டுக்கு இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்று பெயர் உண்டாயிற்று. ஆனாலும் பழம் பெயரை மறவாதபடி, கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு என்றே அது கூறப்பட்டு வந்தது.

இந்த நாட்டில் அந்தக் காலத்தில் விளங்கிய பேரூர்களில் திருநலக் குன்றம் என்பது ஒன்று. இப்போது அது குடுமியான் மலை என்ற பெயருடன் நிலவுகிறது. இதனருகே காப்புக்குடி யென்பது ஓர் ஊர். அந்த நாளில் வாழ்ந்த வேந்தர்கள், நான்கு வேதங்களிலும் வல்ல பிராமணர்களுக்கு நீர் வளம் பொருந்திய ஊர்களைக் கொடுப்பது வழக்கம். அதற்குப் பிரமதாயம் என்று பெயர்; அது பிரமதேயம் என்றும் மருவி வழங்கும்.

தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கட்டிய இராசராச சோழனுக்குப் பின் அவன் வழியில் முதற்குலோத்துங்கன் என்னும் வேந்தன் ஆட்சி புரிந்தான். அவன் சுமார் 880 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1070 முதல் 1120 வரையில் ஆட்சி செய்தான். இந்தக் கோனாடான இரட்டபாடி கொண்ட சோழ வளநாடு அவனுடைய ஆட்சியில் இருந்தது. மேலும், அக் காலத்தில் நாட்டின் பரப்பைக் கணக்கெடுத்தவர், கோனாடு இருபத்து நான்கு வட்டகைப் பரப்புடைய தெனக் கணக்கிட்டனர்; இதை அப் பகுதியில் காணப்படும் கல் வெட்டுக்கள் உரைக்கின்றன.

இந்தக் கோனாட்டில் திருச்சிராப்பள்ளி வழியாகவும், தஞ்சை வழியாகவும் வெற்றிலை வாணிகர் வந்து வியாபாரம் செய்வர். மலைநாட்டிலிருந்து குதிரை வாணிகரும் வந்து குதிரை வியாபாரம் செய்தனர். தஞ்சை மாநாட்டு மன்னார்குடிக் கல்வெட்டால் மிளகு வாணிகரும் பிறரும் மலைநாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் வந்து போன செய்தி தெரிகிறது. இவர்களிற் பலர் விற்றற்குரிய பொருள்களைப் பெருந்தொகையாகக் கொணர்ந்து ஓரிடத்தே பண்டகசாலை நிறுவி அதன் கண் தொகுத்துச் சிறிது சிறிதாக ஊர்களுக்கு அனுப்பினர். இவர்களைப் போலவே இந் நாட்டு வணிகர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து வாணிகப் பொருள்களை வருவிப்பதும், இந்நாட்டுப் பொருள்களை வெளிநாடுகட்குக் கொண்டு செல்வதும் உண்டு.

இவ்வாறு, வணிகரது போக்கு வரவில். இடைச் சுரங்களில் ஆறலைகள்வரது குறும்பும் இருந்து வந்தது. அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலை இவ்வணிகர்க்கு நேரிட்டது. அவர்களைக் காக்க வேண்டிய கடமை அந் நாளை அரசர்க்குண்டென்பதைச் சங்க நூல்களே கூறுகின்றன. ‘அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப் பொருள் வௌவும் கள வேர் வாழ்க்கைக், கொடியோர் இன்றவன் கடி யுடை வியன் புலம்’ என்பதனால், வழிப் போக்கர்க்கு ஊறுண்டாகா வண்ணம் பழைய நாளைத் தமிழ் வேந்தர் காவல் புரிந்தமை விளங்குகிறது. என்றாலும், வணிகர் செல்லும்போ தெல்லாம் அரசனது படையைக் கொண்டேகுவது வணிகர்க்குப் பல சமயங்களில் இடுக்கண் விளைத்தது. சில சமயங்களில் அரசியற் படையின் உதவி கிடைப்பது அரிதாகும். அனால் வணிகர் தாமே படைகளை வைத்தாளும் உரிமை பெற்றுப் படையும் கொண்டிருந்தனர். இம் முறை அந் நாளில் மேனாடுகளிலும் இருந்தது. ஐரோப்பியர் நம் நாட்டில் வாணிகம் செய்ய வந்தபோது தமது செலவிலேயே படைகளை வைத்தாண்ட செய்தியை நம் நாட்டுச் சரித்திரமே கூறுகிறதல்லவா? பகை பெரிதானபோதே அரசர் முன் வந்து தாங்கள் பெரும் படை கொண்டு பகைவர் குறும்புகளை அடக்கினர்.

இந்நிலையில் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டில் வணிகர் பலர் வாழ்ந்தனர். அவருள் வெளிநாட்டு வணிகரும் இருந்தனர். அவருள் தெலுங்கு நாட்டினர் பலர். அந் நாட்டில் வாணிகம் செய்து வந்தனர். தெலுங்கு நாட்டில் கோகழி யைஞ்ஞூறு, திரிபுர தளம் மூன்று லக்ஷம் என நாடுகள் பெயர் பெற்று விளங்கின. அந்நாடுகளிலிருந்து வந்து வாணிகம் செய்தோர் தங்களை ஐஞ்ஞூற்றுவர், ஆயிரவர் எனக் கூறிக் கொள்வர். தெலுங்கு நாட்டிலிருந்து வந்து கோனாட்டில் வாணிகம் செய்தோருட் சிலர் தங்களை ஆயிரவர் என்று கூறிக் கொண்டனர். அவருள் கிராஞ்சி மலை கிளிய னின்றான் திருமலை சகஸ்ரன் என்பவன் ஒருவன். கிராஞ்சி மலை யென்பது கிரௌஞ்ச மலை யென்பதன் திரிந்த பெயர். கிழிய நின்றான் என்பது கிளிய நின்றான் எனத் திரிந்து போயிற்று. கிளியனூர் எனத் தொண்டை நாட்டில் ஊர்கள் இருப்பதை நோக்க இக் ‘கிளியன்’ என்பது ஓர் இயற் பெயராக இருக்கலாமெனக் கருதுதற்கும் இடந் தருகிறது. கிராஞ்சி மலை இப்போது குண்டூர் மாவட்டத்தில் உள்ளது. குண்டூர் மாவட்டத்துக்குக் குண்டூரின் பழம் பெயர் குமட்டூர் என அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. வடுக நாட்டுக் கிராஞ்சி மலையில் தோன்றிக் கிளிய நின்றான் என்னும் வணிகன் மகனாய்க் கோனாட்டில் வந்து வாணிகம் செய்த திருமலை, சகஸ்ரம் என்னும் குடியைச் சேர்ந்தவனாவன். சகஸ்ரன் ஆயிரவன் என்னும் பொருள் தருவது.

தெலுங்க நாட்டு வணிகனான திருமலை சகஸ்ரன் கோனாட்டில் வாணிகம் செய்கையில், அருளாளன் சகஸ்ரன் என்ற வேறொருவனும் வந்து வாணிகம் செய்தான். அவனது ஊர் வேத கோமபுரம்; அதனால் அவன் வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரன் என்று வழங்கப்பட்டான். இவனது வேத கோமபுரமும் தெலுங்க நாட்டில் உள்ளதோர் ஊர். இவ் வூரவர் பலர் சோழ நாட்டில் ஆடுதுறைப் பகுதியில் தங்கியிருந்தனர். அதனால் அப்பகுதி விக்கிரம சோழச் சதுர் வேதி மங்கலத்து வேத கோமபுரம் என்று பெய ரெய்தியிருந்தது (A.R. 366 of 1907). முதல் இராசராசனுடைய அரசியற் சுற்றத்தாருள் ‘இராசேந்திர சிம்ம வள நாட்டுக் குறுக்கை நாட்டுக் கடலங்குடி வேத கோமபுரத்துத் தாமோதர பண்டன் என்ற ஒருவன் (Ep. Indi.XXII. g¡. 254). எனவே, கி.பி. பத்து, பதினோராம் நூற்றாண்டிலேயே வடுக நாட்டு வணிகர் பலர் தமிழ் நாட்டிற் புகுந்து வாணிகம் செய்தனரென்பதும், வேதியர்கள் கோயில் களிலும் அரசியலிலும் பணிபுரிந்தன ரென்பதும் தெரிகின்றன.

பணி மேற்கொண்ட நாட்டவரும் பிறரும் மீண்டும் ஒருங்கு கூடி கோவிராச கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு - வது (முப்பத்தாறாவது) இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு நாட்டோம். திருநலக் குன்ற முடைய மகா தேவர்க்கு இந் நாட்டுப் பிரமதேயம் காப்புக்குடி, கிராஞ்சி மலை கிழி நின்றான் திருமலை சகஸ்ரனும், வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரனும் இவ் விருவரு இந் நாட்டில் வந்திறங்கின வெற்றிலைக்குத் தரகு கொண்டு முப்பத்தாறாவது முதல் இத் தேவர் அடைக்கா யமுதுக்கு ஆட்டு (ஆண்டு) முப்பதினாயிரம் பாக்கும் வெற்றிலைக் கட்டு எழு நூற்றைம்பதும் இவ் விருவரும் இவர்கள் வர்க்கத்தாருமே சந்திராதித்தவல் (சந்திராதித்தர் உள்ள வரையில்) இடக்கடவராகவும்… இது நாட்டோமும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந்நாட்டுப் படை பழியிலி ஐஞ்ஞூற்றுவருமே இது நிலை நிறுத்தக் கடவோமாகக் கல் வெட்டுவித்தோம்’ (P.S. No. 125) என்று திருநலக் குன்றமுடை யார் கோயில் முன் மண்டபத்துக் கீழ்ப்புறச் சுவரில் கல் வெட்டுவித்தனர்.

இவ் வேற்பாட்டின்படி இரண்டாண்டுகள் கழிந்தன. சகஸ்ரர் இருவருக்கும் முன்னர் இருந்த சிறப்புப் பண்டு போல் உண்டாக வில்லை; வருவாயும் குறைந்தது. புதியராய்த் தோன்றி வணிகருள் சிறுத் தொண்ட நம்பி யென்பான், தான் முன்னர் நிகழ்ந்த உடன்படிக்கையில் கலந்து கொள்ளாதது பற்றித் தனக்குள்ளே வருத்த முற்றான். கைக் கோளர் தலைவரும் பழியிலித் தலைவரும் சொன்னதை ஏற்காது போனது பெருங் குறையாகத் தோன்றிற்று. பின்பு ஒருநாள் அவர்களைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்கள் நாட்டுத் தலைவர்களுக்குத் தக்க முறையிற் சொல்லிச் சிறுத் தொண்ட நம்பியின் வேண்டுகோளை ஏற்குமாறு செய்தனர். சோழ வேந்தன் ஆணைபெற்று, தானைத் தலைவரும் நாட்டவரும் கூடித் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் வருவித்து ஆராய்ச்சி செய்தனர். திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டு மளவிற் செம் பாகத்தைச் சிறுத் தொண்ட நம்பி ஏற்றுக் கொள்வது தக்க தெனத் துணிந்தனர். சிறுத் தொண்ட நம்பியும் அதற்கு இசைந்தான். பின்பு, ‘முன்பு கல் வெட்டின திருமலையும் அருளாளனும் இவ் விருவரும் செம் பாகமும், தாமோதரன் சீகிருஷ்ணனான சிறுத் தொண்ட நம்பி செம் பாகமும் கொண்டு திருநலக் குன்றத்திலே இருந்து பரிமாறித் திருநலக் குன்றமுடையார்க்கு இப்படியா லுள்ளது செலுத்தக் கடவார்களாக’ என முன்பு வெட்டின கல் வெட்டின் கீழ் பொறித்தனர்.

இது நிகழ்ந்த சில ஆண்டுகட்குப் பின் வெற்றிலைப் பாக்கின் விலை உயர்ந்தது. அதனால் திருமலை முதலிய தரகர்கட்கு வருவாய் மிகுந்தது. ஆகவே, நாட்டில் முன்னர் நிகழ்ந்தது போன்ற பூசல்கள் உண்டாதற் கேற்ற குறிகள் வணிகரிடத்தே உண்டாயின. நாட்டுத் தலைவர்கள் அவற்றை முன்னறிந்து ஆராய்ந்து தரகு விகிதத்தை உயர்த்தக் கருதினர். அவர் கருத் தறிந்த வேந்தன் முதற் குலோத்துங்கன், தனது ஆட்சியின் சயஅ - ஆம் ஆண்டு முதல் (நாற்பத்தெட்டாம் ஆண்டு முதல்) உயர்த்துக் கொள்க என்று ஆணை யிட்டான். மிக்குவரும் வருவாய்க்குச் செலவினமும் கண்டு, நாட்டவர் கூடி, வெற்றிலைத் தரகர் மூவரையும் கூட்டி, ‘இக் கல் வெட்டுப் படியுள்ள அடைக்கா யமுதும் இலை யமுதும் இடக் கடவார் திருமெய்ப் பூச்சுக்கு சயஅ-வது முதல் திங்கள் ஒன்றுக்கு ஐந்து திராமமாக ஆண்டுக்கு அறுபது திராமம் இறுக்கக் கடவார் களாகக் கல் வெட்டுவித்தோம்’ என்று முடிவு செய்து வேந்தற்குத் தெரிவித்தனர். வணிகர் மூவரும் அவ்வாறே செய்து வருவாராயினர். கோனாட்டில் வெற்றிலை வாணிகத்தில் குழப்பமும் கலகமும் இலவாயின.

நிற்க, மேலே கூறிய திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனும் கோனாட்டில் இருந்து வாணிகம் செய்து பெருஞ் செல்வத் தலைவர்களாய் விளங்கினர். ஏனை வணிகர் பலரும் இவ் விருவர்க்கும் அடங்கியே இருந்தனர் ஆயினும், பொன்னாசை மக்களைச் சும்மா இருக்கவிடாதன்றோ? திருமலையும் அருளாளனும் ஒருவரின் ஒருவர் மிக்க செல்வம் ஈட்ட விரும்பித் தம்மிற் போட்டியிட்டு மாறுபடுவாராயினர். ‘ஈர்பேனாகிப் பேன் பெருமாளாயிற் றென்பது போல,’ இம் மாறுபாடு முறுகிப் பெருகிப் பெரும் பகையாய் முற்றிவிட்டது. இருவரிடையேயும் போரும் பூசல்களும் மிகுந்தன. இவருடைய படைகள் அடிக்கடி போரிடத் தலைப்பட்டமையின், வாணிகப் போக்கு வரவு ஆறலைக் கள்வரால் அலைப்புண்டது. இவ்விருவரும் வெற்றிலையும் பாக்கும் கொணர்ந்து வாணிகம் செய்பவர்கள். இவர்களுடைய செயலால் கோனாட்டில் வெற்றிலை பாக்குப் பஞ்சம் பெரிதாயிற்று. இவர்கள் பால் வெற்றிலை பாக்கு வாங்கி விற்கும் சிறு வணிகர் பெருந் துன்பமுற்றனர். சில காலங்களில் வெற்றிலை பாக்குக் கிடைப்பது அரிதாகவே, கோயில் காரியங்களும் முட்டுப்பட்டன. வேறே வணிகர் சென்று வெற்றிலை பாக்குக் கொணர்தற்கு அஞ்சினர்.

சில நாட்களுக்குப் பின் வேற்று நாட்டவர் சிலர் இவர்களால் சீர் குலைந்த வெற்றிலை வாணிகத்தை நடத்தலுற்றனர். கோனாட்டு வணிகருட் சிலர் அவர்கட்குத் துணை செய்தார்கள். வணிகர் பலராகவே அவரவரும் கட்டுப்பாடின்றித் தாந்தாம் வேண்டிய வாறே விற்பனை புரிந்தனர். அதனால் கோயிலுக்குச் சேர வேண்டிய தரகு குறையலுற்றது. அது கண்ட திருநலக்குன்றத்துக் கோயிலதிகாரிகள் புதுவராய்த் தோன்றிய வெற்றிலை வாணிகரை ஊக்கி, வேண்டும் வசதிகளைச் செய்து கொண்டார்கள். சுருங்கச் சொல்வோமாயின் வெற்றிலை பாக்கு வாணிகம் பழைய வடுக வாணிகர் கைவிட்டுப் புதியராய் வந்த வணிகர் கைக்கு மாறிப் போவதாயிற்று. ஆயினும், திருநலக்குன்ற முடையார் கோயிலுக்குரிய வருவாய் செம்மை பெற வில்லை. இதனை எண்ணுவோரும் அருகினர். ‘ஊரிரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போலக் காப்புக்குடி வெற்றிலை வணிகர் இரண்டு பட்டுக் கலகம் புரிய, அயல் நாட்டு வணிகர்க்கு ஆக்கம் பெருகிற்று உண்ணாட்டவருக்குச் சலுகை குறைந்தது. திருநலக் குன்றமுடையார் கோயிற்குரிய தரகு வருவாயும் நாட்டவர் வருந்தும் அளவுக்குக் குன்றிப் போயிற்று.

இதற்கிடையே, நாட்டிலுள்ள நல்லோருட் சிலர், கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் கண்டு நிகழ்வது முற்றும் நினைவுறக் கூறினர். இருவர் உள்ளமும் உண்மையை ஓர்ந்து கண்டன. சான்றோர் சிலர் கூடி இருவரையும் சந்து செய்வித்தனர். இருவரும் ஒற்றுமை கொண்டு வெற்றிலை வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தினர். ஆயினும், புதியராய் வந்து தோன்றிய வணிகர் முன் இவ்விருவரது வாணிகமும் சிறக்கவில்லை. வணிகரிடையே பொறாமையும் பூசலும் போரும் உண்டாயின. அவரவர் பக்கலிலும் ஆட்கள் பலர் மாண்டனர்.

அந் நாளில் இக் கோனாடு, இரட்டபாடி கொண்ட சோழ வளநா டென்ற பெயரால் சோழ வேந்தர் ஆட்சியிலிருந்த தென முன்பே கூறினோம். அக் காலத்தே இந்நாடு பொற் கோயிற் படையும் பழியிலிப் படையும் என இரு படைகளின் காவலில் இருந்தது. இவ் விரண்டற்கு முரிய தலைவர் இருவரும் காவற்றலைவராய் இருந்தனர். இவ் விருவரும் தொடக்கத்தில் நடுவு திறம்பாது நின்று நாட்டு மக்கட்கு இவர்களால் ஊறுண்டாகா வண்ணம் பாதுகாத்து வந்தனர். புதியராய்த் தோன்றிய வணிகர், தானைத் தலைவர் இருவரையுங் கண்டு, ‘வடுக வாணிகர் பூசலால் நாட்டிலுண்டான வெற்றிலை பாக்குக் குறையை நாங்கள் முன்னின்று நீக்கி நற் பணி புரிந்தோ மாதலால், எங்கட்கு இனி இந் நாட்டில் இடமில்லாதவாறு செய்தல் முறையாகாது’ என வேண்டிக் கொண்டனர். அவர் செயலின் நலந் தேர்ந்து தலைவர் இருவரும் அவர்கள் வாணிகத்துக்குச் சலுகை தரத் தொடங்கினர். ஆனால், அவர்கள் திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டிய தரகினைக் குறைத்தே செலுத்தினர். கிராஞ்சி மலைத் திருமலையும் வேத கோமபுரத்து அருளாளனும் தாம் செய்த தவற்றுக்கு வருந்திக் கோனாட்டுத் தலைவரிடத்தும் கோயிலாரிடத்தும் முறை யிட்டனர். பெருஞ் செல்வர்களாதலால், சகஸ்ரர் இருவரும் வாணிகத்தால் ஊதியம் பெருகினும் சிறுகினும் திருநலக் குன்ற முடையார்க்குரிய தரகு குறையாமலே ஆண்டுதோறும் செலுத்தி வந்தனர். புது வாணிகர்க்கு அஃது இயலாதாயிற்று. இவற்றையெல்லாம் எண்ணிய தலைவர்கள் செய்வது தெரியாது திகைப்புற்றுத் தஞ்சை மாநகர்க்குச் சென்று சோழ வேந்தன் முதற் குலோத்துங்கன் திரு முன் முறையிட்டனர். வேந்தர் பெருமான் கோனாட்டுப் படைத் தலைவர் இருவர்க்கும் திருநலக் குன்ற முடையார் கோயில திகாரிகட்கும் திருமுகம் விடுத்து ‘உண்மை யாராய்ந்து தரகர் களை நிறுவி முறை வழங்குக’ என்று ஆணை பிறப்பித்தான். திருமுகம் கோனாட்டுத் தலைவர்பால் வந்து சேர்ந்தது.

திரு முகம் வரக் கண்ட கோனாட்டுத் தலைவர்கள் எதிரெழுந்து வரவேற்று வேந்தனை வாழ்த்தி, பொற் கோயில் கைக்கோளர் மூன்று படைத் தலைவரையும் பழியிலிப் படை ஐஞ்ஞூற்றுவர் தலைவரையும் ஏனைத் தவைர்களையும் திருநலக் குன்றத்து மகா தேவர் கோயிலினுள்ளால் ஒருங்கு கூட்டி ஆராயத் தொடங்கினர். அரசியலாணைப்படி முதற்கண் திருநலக் குன்ற முடையார் கோயிற்கு ஆண்டு தோறும் வேண்டியிருக்கும் வெற்றிலை பாக்குத் தரகு கணக்கிடப் பெற்றது. “ஆண்டொன்றுக்கு அடைக்காய் அமுதுக்கு முப்பதினாயிரம் பாக்கும் எழுநூற்றைம்பது கட்டு வெற்றிலையும்’ வேண்டியிருப்பது தெளிவாயிற்று. மேலும், இவற்றை முன்பெல்லாம் திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனுமே கொடுத்து வந்தார்களென்பதைக் கோயிற் கணக்குகள் தெரிவித்தன; அவ்விருவருடைய கணக்குகளும் அவ்வாறே குறித் திருந்தன. பின்னர், இந் நாட்டில் இனி வந்திறங்கும் வெற்றிலை பாக்குகட்குத் தரகு செலுத்தி வாணிகம் செய்யும் தலையுரிமை நல்குவது பற்றி ஆராய்ச்சி நடந்தது. தானைத் தலைவர் இருவரும் அவர்தம் துணைவரும் புதியராய்த் தோன்றிய வாணிகர் சார்பாகப் பேசினர். அவர்களால் மேலே கண்ட தரகினைத் தர இயலாமை விளங்கிற்று. திருமலையும் அருளாளனும் வழக்கம் போலத் தாங்கள் செலுத்தவதாக உடன்பட்டனர். அதனால், கூடியிருந்த மகா சபையார். ‘இனி, இந்த நாட்டில் வந்திறங்கும் வெற்றிலைக்குத் தரகு கொண்டு கிழிய நின்றான் திருமலையும் அருளாளன் சகஸ்ரனும் இவர்கட்குப் பின் இவர்கள் வருக்கத்தாரும் இடக்கடவர்களாக’ என்று தீர்மானித்துச் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தார்கள். வேந்தர் பெருமான், தனது ஆட்சி ஆட்சி யாண்டு முப்பத்தாறாவது முதல் இங்ஙனமே நடைபெறுக என்று கல்வெட்டித் தருமாறு பணித்தான். மேலும், இதனைக் கோனாட்டாரும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ்ஞூற்றுவரும் நிலை நிறுத்தக் கடவ ரென்றும் ஆணை பிறப்பித்தான்.

தமிழகச் செய்திகள்


மூன்று நாடுகள்
நம் தமிழகத்தின் வரலாறு கல்தோன்றி மண் தோன்றாக் காலமுதலே தோன்றிய தொன்மையுடைய தென்பது உலகறிந்த உண்மை: பழங்காலத்தில், அதாவது, கிறித்து இவ்வுலகில் பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, தமிழகம் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரது முடியாட்சியில் விளக்கம் மிகுந்து இருந்தது. கிறித்துவின் காலத்துக்கு முன்பு மேலை நாட்டுக் கிரேக்கரும் யவனரும் பிறரும் இவ்வேந்தர்களைப் பற்றித் தம் எழுத்துக்களில் குறித்துள்ளனர். அவ்வாறே நம் இந்திய நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த ஆரியரும் தம்முடைய நூல்களில் இம்மூவரைப் பற்றியும் பொறித்துள்ளனர். சுருங்கச் சொன்னால், இன்று நமக்குக் கிடைத் திருக்கும் பழமையான நூல்களுள் மிகப் பழையவை எனக் கருதப்படும் பழைய நூல்களில் எல்லாம் தமிழ் வேந்தர் மூவரைப்பற்றிய செய்திகள் உண்டு என்பது போதுமானது.

அந்நாளில், தமிழ்நாடு, வடக்கே வேங்கட மலையையும், தெற்கில் குமரி நாட்டையும், கிழக்கிலும் மேற்கிலும் கடலையும் எல்லையாகப் பெற்றிருந்தது. இன்று சிங்களவர் தமது என்று கூறும் ஈழநாடு, நம் தமிழகத்தின் ஒரு பகுதியாய் ‘ஏழெழு நாடு’ என்ற பெயர் தாங்கியிருந்தது. பின்பு தென் கடலாற் பிரிக்கப்பட்டுச் சிறு தீவாகிய பின்பே ஈழநாடு, தமிழகத் தினின்றும் நீங்கித் தனி நாடாக இலங்குவதாயிற்று, கடல்கோளுக்குப் பின்னர்த் தமிழகம் கிழக்கிலும் மேற்கிலுமேயன்றித் தெற்கிலும் கடலை எல்லையாகக் கொள்ளுவ தாயிற்று. தமிழ் வேந்தர் மூவரும் இத்தமிழகத்தை மூன்றாகப் பிரித்து ஆட்சி செய்து வந்தனர். அம் மூன்றும் சோழ பாண்டிய சேர நாடுகள் என்று பெயர் பெற்றன.

சோழ நாடு என்பது, வடக்கில் வேங்கடமலையையும் வட பெண்ணையாற்றையும், தெற்கில் புதுக்கோட்டைக்கு அண்மையில் ஓடும் வெள்ளாற்றையும் சிறுமலைத் தொடரையும் எல்லையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தே வட பெண்ணைக்கும் தென் பெண்ணைக்கும் இடையிற் கிடந்த சோழநாட்டுப் பகுதியைத் தொண்டை நாடு எனவும், தென் பெண்ணைக்கும் தில்லைக்கு அருகில் ஓடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை நடுநாடு எனவும், இரு வெள்ளாறு கட்கும் இடையிலுள்ள பகுதியைச் சோழ நாடு எனவும் பிரித்து வழங்கி வருவாராயினர். பின்னர், தொண்டை நாடு, சிறு சிறு கோட்டங்களாகப் பிரித்து வழங்கப் பட்டது. அவை திருவேங்கடக் கோட்டம் பையூர்க் கோட்டம் என்பன முதலிய இருபத்து நான்கு ஆகும். நடுநாடு, கிழக்கும் மேற்குமாக இரண்டாகித் திருமுனைப்பாடி நாடு மகதை நாடு என முறையே பெயர் பெற்று நிலவியது.

சோழ நாடு, காவிரி வடகரை நாடு தென்கரை நாடு என இரண்டாயிற்று. தென் வெள்ளாறு பாயும் சோழ நாட்டுப் பகுதி கோனாடு எனப்பட்டது. சோழ நாட்டின் மேற்கில் நிற்கும் கொல்லிமலைப் பகுதி கொல்லிக் கூற்றம் என்றும், அதன் வட கீழ்ப் பகுதி விச்சிமலைக் கூற்றம் கண்டீர நாடு என்று நிலவின. கொல்லி மலைப் பகுதிக்கும் மேற்கு மலைத் தொடருக்கும் தெற்கில் நிற்கும் ஆனைமலை கோடைமலைத் தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி கொங்கு நாடு எனப்பட்டது. கொங்கு நாட்டின் வடபகுதி தகடூர் நாடு என்ற பெயர் கொண்டு நின்றது. திருமுனைப் பாடி நாட்டின் மேலைப் பகுதியும் மகதை நாடும் மலையமான் நாடு எனவும் மலாடு எனவும் வழங்கின; அதனையே பிற்காலத்தார் சேதி நாடு என்றும் வழங்கினர். இவ்வாறே தொண்டை நாட்டின் தென்பகுதி ஓய்மானாடு எனவும் கடற்கரைப் பகுதி இடைக்கழி நாடு எனவும் நிலவின. தொண்டை நாட்டின் மேற்கில் தகடூர் நாட்டுக்கு வடக்கிலுள்ள பகுதி கங்கநாடு என நின்று சோழ நாட்டுள் அடங்காது தனித்து மேற்கு மலைத் தொடர் காறும் பரந்திருந்தது. தொண்டை நாட்டுத் திருவேங்கடக் கோட்டமும் அதன் மேற்கில் மேலை மலைத் தொடர் வரையிற் கிடந்த நாடும் புல்லிநாடு என நின்று, பிற்காலத்தே புலிநாடு என மருவிக் கீழ்ப்புலி நாடு, மேற்புலி நாடு என இரண்டாகப் பிரிந்தது.

அரசியல் தலைவர்கள்
இந்நாட்டவர் பலரும் தமிழரே எனினும், சோழ நாட்டு வேந்தரைச் சோழர் எனவும், தொண்டை நாட்டரசரைத் தொண்டை மான்கள் எனவும், மலையமான் நாட்டவரை மலையமான்கள் எனவும், தகடூர் நாட்டவரை அதியமான்கள் எனவும், கொல்லி யாண்ட வேந்தரை மழவர் எனவும், கொங்கு நாட்ட வரைக் கொங்கர் எனவும் வழங்கினர். கங்க நாட்ட வரைக் கங்கர் என்பதும் விச்சிமலைக் கூற்றம் கண்டீர நாடு இவற்றையாண்டவரை விச்சிக்கோ கண்டீரக்கோ என்பதும் வழக்கு. கங்கநாடு மேற்புலி நாடு ஆகிய இரண்டும் ஒழிந்த பலவும் சோழ நாட்டின் கூறுகளாதலால் அவை யாவும் குறுநிலமென்றும், அவற்றின் அரசர் குறுநிலத் தலைவர் என்றும் பெயர் கூறப் பட்டனர். இவ்வாறே பாண்டிநாடும் சேரநாடும் பற்பல உண்ணாடுகளைக் கொண்டு பல்வேறு குறுநிலத் தலைவர்களைப் பெற்றிருந்தன. சேர பாண்டிய சோழர் எனப்படும் மூன்று வேந்தரையும் முடியுடை வேந்தர் என்றும், அவர் நாட்டுக் குறுநிலத் தலைவர்கட்கு முடிசூடும் வழக்குக் கிடையாது என்றும் கூறுவர். சேரநாட்டில் மாத்திரம் குட்டுவர், குடவர், இரும்பொறை, கடுங்கோ என்போர் ஒரொரு காலத்துச் சேரநாட்டு முடியுடை வேந்தராம் முறைமை பெற்றிருந்தனர். பாண்டி நாட்டுக் குறுநிலத் தலைவருள் வேள் பாரியும் பொதியில் நாட்டு ஆய்வேளும் சிறந்து தோன்றுகின்றனர்.

சிறப்புடை நகரங்கள்
இனி, சோழ நாட்டுக்கு உறையூர் தலைநகராகவும் காவிரிப் பூம்பட்டினம் கடற்கரை நகரமாகவும் விளங்கின; இவ்வாறே பாண்டி நாட்டுக்கு மதுரையும் கொற்கையும், சேர நாட்டுக்கு வஞ்சியும் முசிறியும் சிறப்புடை நகரங்களாகும். தொண்டை நாடு மிகவும் பரந்து பட்ட பகுதியாகலான், அதற்குக் காஞ்சி நகர் தலைநகரமாகவும் பவத்திரி கடற்கரை நகராகவும் விளங்கின. பின்னர், காவிரிப்பூம்பட்டினம் போலப் பவத்திரியும் கடல் கோளால் மறைந்து போயிற்று. பவத்திரிக்குக் காகந்தி என்றும் பெயருண்டென நெல்லூர் மாவட்டத்துக் கல்வெட்டுக்கள் குறிக் கின்றன. ஆனால், மணிமேகலை என்ற தமிழ் நூல் காவிரிப்பூம் பட்டினத்துக்கே அது பெயர் எனவும், ககந்தன் என்பவன் ஆண்ட தனால் காகந்தி என்ற பெயர் அதற்கு வந்ததெனவும் கூறுகிறது. சோழர் உறையூரிலும் தொண்டை மான்கள் காஞ்சியிலும் இருந்து ஆட்சி புரிந்தனர்.

இலக்கியமும் கல்வெட்டும்
தமிழரது ஆட்சி நலம் காண முயலும் நமக்கு அவர்களது வரலாறு சங்கநூற் காலம் எனவும் கல்வெட்டுக்கள் காலம் எனவும் இருகூறுபடுவது நன்கு தெரிந்ததாகும். சங்க நூற்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் கொள்ளப்படுகிறது; கல்வெட்டுக் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி நடக்கின்றது. இரண்டுக்கும் இடையிலுள்ள காலத்தில் களப்பிரர் கலக்கமும் பல்லவராட்சியும் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் களப்பிரர் செய்கைகளால் அவரது மரபு ஓரிரு நூற்றாண்டுகளில் வேரற்று மறைந்தொழிந்தது. பல்லவராட்சி நாலைந்து நூற்றாண்டுகள் நிலைபெற நின்று நிகழ்ந்தது. களப்பிரர் கலக்கத்தால் ஒரு சிறிது சீர் குலைந்த தமிழ் நாகரிகம் பல்லவருடைய நிலை பெற்ற ஆட்சியால் தொல் வரவு செம்மையுற்று வழங்கிவரத் தலைப்பட்டது. பல்லவர் ஆட்சியில் தோன்றிய கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் தமிழ் நூல்களும் சங்ககால நாகரிகக் குறிப்புக்களை வற்புறுத்துகின்றன; நாட்டின் உட்பிரிவுகளையும் மக்கள் வாழ்க்கைக் கூறுகளையும் பட்டாங்கு மொழிகின்றன. இன்னோரன்ன நலங்களால் சங்ககாலச் சோழர் ஆட்சி நலங்களையும் பிற்காலச் சோழர் ஆட்சித்திறன் களையும் ஒப்பவைத்துக் காண்பது இனிது இயலுகின்றது.

உறையூர்
சங்க காலச் சோழர் காலத்தில் தலைநகரமாகிய உறையூர் மிக்க சிறப்புடன் விளங்கிற்று. இப்போது திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாக அது நிலவுகின்றது. அதனைச் சங்கச் சான்றோர்கள் ‘உறந்தை’ யென்றும், ‘கோழி’ யென்றும் கூறுவதுண்டு; தஞ்சாவூரைத் தஞ்சை யென்றும், நாகப்பட்டினத்தை நாகை யென்றும் மருவி வழங்குவது போல உறையூரை உறந்தை என உரைத்தனர். மிகமிகப் பழமையான காலத்தில் சோழ வேந்தன் ஒருவன் காவிரிக்கரையில் பரந்து கிடந்த காட்டில் வேட்டைக்குச் சென்று வருகையில் ஓரிடத்தே காட்டுக்கோழி ஒன்றுக்கும் காட்டு யானை ஒன்றுக்கும் இடையே எக்காரணத்தாலோ போர் நிகழக் கண்டான். அப்போரின் முடிவில் களிறு தோற்றோடக் கோழியே வெற்றி எய்திற்றாம். அதுகண்டு வியப்புற்ற வேந்தன் அவ்விடத்தையே தனக்கு உரிய இடமாகக் கொண்டு அங்கிருந்த காட்டையழித்து நகரமாக்கி அதன் கண்ணே உறைவானாயினான். அது முதல் அவன் உறையும் உறையூர் ‘கோழி’ யெனவும் பெயர் பெறுவதாயிற்று எனச் சோழநாட்டு முதியோர் கூறுவர். உலகத்து ஊர்களில் ஒப்பதும் மிக்கதும் இல்லாத அழகும் நலமும் அமைதியும் உடையது உறையூர் என்ற கருத்துப்பட அறிஞர், “ஊர் எனப்படுவது உறையூர்” என உரைப்பது வழக்கு. பாண்டி நாட்டு மதுரை நகர் முத்தமிழ்ப் புலமைக்கு உரிமை பெற்றது என்றும், சேரநாட்டு வஞ்சி நகர் வாணிக வளம் மிக்கது என்றும் கூறும் தமிழ்ச் சான்றோர், ‘தமிழ்கெழு மதுரை’ எனவும், கடற்கலங்கள் “பொன்னோடு வந்து கறியொடு பெயரும்” வஞ்சி எனவும் இயம்புவர். அவர்களே உறையூரைக் குறிக்குங்கால், நீதி வழங்கும் நேர்மை நலம் உடைய தென்ற பொருள் தோன்ற “அறம் துஞ்சு உறந்தை” என எடுத்துரைப்பர்.

நாட்டுப் பிரிவுகளும் ஆட்சியும்
பெரு நாடாகிய சோழநாடு, தொண்டைநாடு, மழநாடு, கொங்கு நாடு என்பன முதலிய உண்ணாடுகளைக் கொண்ட தாயினும், ஒவ்வொரு கோட்டமும் நாடும் பற்பல சிறு நாடு களாகவும் தனியூர்களாகவும் ஆட்சி இனிது இயலுவது பொரு ளாகப் பிரிந்திருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவர்கள் உண்டு. ஆட்சி நடத்தும் அவர் பலரும் பெரும்பாலும் சோழ வேந்தர் குடிக்கு உரியவராகவே இருப்பர். அப்பெற்றியோர் இல்லாத போது தலைமை நலம் பெற்ற பிற சான்றோர் நாடாள்வோர் ஆவர். நாட்டுத் தலைவர் பலர்க்கும் நாடு காத்தற்றொழிலுக்குத் துணையாக நாட்டவர் தேர்ந்துரைக்கும் சான்றோர் சிலர் கூடிய குழு ஒன்று இருந்து, வினை நேர்ந்த வழி அறிவும், படை வேண்டிய வழி ஆட்களும் தந்து உதவிற்று; இவ்வாறே ஊர்களில் நீர்ப்பாசனம், பொதுவாழ்வு, தொழில், வாணிகம் முதலிய துறைகள் நன்கு நடைபெறுவதைக் கருதிச் சிறு சிறு குழுக்களை அமைத்திருந்தனர். அக்குழுவுக்குப் பிற்காலச் சோழராட்சி ‘வாரியம்’ என்ற பெயரிட் டிருந்தது. அதனால் அவை கல்வெட்டுக்களில் ஊர்வாரியம், தோட்ட வாரியம், கோயில் வாரியம் என்ற பெயர்களைப்பெற்று விளங்கின.

அரசாங்கமும் உயர் அலுவலரும்
நாட்டாட்சியில் தலைவர்கள் ஒரு சிறிது உரிமை பெற்றிருந் தாலும் முடி வேந்தனான சோழர் பெருமானுடைய ஆணைக்கு அடங்கியே நடப்பர். சோழர் பேரரசு, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு துறைகளைக் கொண்டதாகும். படைத் தலைவர் தானைத் தலைவர் எனப்படுவர். அவர்கள் ‘ஏனாதி’யென்னும் பட்டம் பெற்று அதற்கென அமைந்த மோதிரம் நல்கப் பெறுவர். குடி என்பது நாட்டு மக்களின் நல்வாழ்வு குறித்ததாகும். நீதியும் நேர்மையொழுக்கமும் நன்னடத்தையும் மக்களிடையே நிலவப் பண்ணுவது இத்துறைக்குரிய தலைவர் கடனாகும். கூழ் என்பது பொருட்டுறை, இதன் வாயிலாக நாட்டவர்க்கு வேண்டப்படும் உணவும், பொருளும் அவற்றை நாடெங்கும் பெருக்கிப் பரப்பும் தொழிலும் வாணிகமும் இத்துறையினரால் கண்காணிக்கப்பட்டன. சூழவுள்ள நாடுகளின் துணையிருந்தாலன்றி நாட்டு வாழ்வு இன்பமாக இராதென்பது பற்றி அவற்றின் நட்பை வளர்த்தற்கும், வேறுபட்டவற்றை நட்பாக்குதற்கும் ஆவன செய்வது நட்பு என்னும் அரசியற்றுறையின் தொழில். அரண் என்பது பாதுகாப்புத் துறை; அது காட்டரண், மலையரண், நீரரண், மதிலரண் எனப் பல திறப்படும். இவற்றைச் செம்மையுறக் காப்பதும், ஊறு நேர்ந்த வழிச் செம்மை செய்வதும் அரண் காவல் துறையின் செயல் வகையாகும். இத்துறைகளின் தலைவரும் இவையாவற்றையும் ஒருங்கு நோக்கி ஆவன அறிந்து ஆராய்ந் துரைக்கும் அமைச்சரும் கூடியது அரசனது பேரவை. இத்துறைக்கட்குரிய தலைவர் பலரும் அரசர் குடியில் தோன்றிய சுற்றத்தவராதலின், இவர்களை அரசியற் சுற்றத்தார் என்பர்.

இவர்களின் வேறாக ஐம்பெருங்குழு, எண் பேராயம் என்ற இருவகைக் குழுக்கள் உண்டு. அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர்என்ற ஐவரைக் கொண்டது ஐம்பெருங்குழு. எண்பேராயம் என்றது, கணக்கர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைப்படைத் தலைவர், குதிரைப்படைத் தலைவர் ஆக எண்வகையினரைக் குறிப்பது. பிற்காலச் சோழர் ஆட்சியில் இக்குழுவும் ஆயமும் மறைந்து போயின; அரசியல் ஆட்சிக்கு இன்றியமையாத அமைச்சர்கள் திருமந்திர ஓலை நாயகர், திருவாய்க் கேள்விகள், சேனாபதிகள், பெருங்காரணிகள் முதலியோர் கூடிய குழு ஒன்று அரசரோடு உடனிருந்தது. அதனால் அவர்களை உடன் கூட்டத்து அதிகாரிகள் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

அரசு பற்றிய செய்திகள்
அரசு காவல், அகக்காவல், புறக்காவல் என இரு வகைப்படும். அகக்காவல் என்பது நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டிய பொருள் வருவாய்கள் இயற்றுவதும், பொருளை ஈட்டுவதும், காப்பதும் இவ்வாறு தொகுத்தவற்றைப் பலவாய நன்னெறிகளின் பொருட்டு வகுத்து வழங்குவதுமாகும். புறக்காவல் என்பது, பகைவர்களாலும் பிறவகையாலும் தோன்றும் இடையூறுகளைத் தடுத்துப் போக்குவதும், வேற்று நாட்டவரோடு வாணிகம் தொழில் முதலிய செயல் முறைகளை ஆக்கிக் கொள்வதும் நட்புறவு அமைப்பதும் பிறவுமாகும். அகக்காவல் பொருளாக நாட்டவர் வழங்கும் இறையும், வரியும் புரவு வரி எனப்படும். புரவு என்பது நாடு காத்தலைக் குறிப்பது. புரவுவரி பெற்று நாடு புரப்பது பற்றி வேந்தன் புரவலன் எனப்படுகின்றான். இப்புரவுபற்றிச் செயற்படும் அரசியற் பணியகம் புரவுவரித் திணைக்களம் எனப் பிற்காலத்தே விளங்கிற்று. புறக்காவல் பொருளாக மக்கள் வழங்கும் பொருள் காவற்புறம், பாடி காவல், சாத்து வரி, சுங்கம் எனப் பலதிறப்படும். வேற்று வேந்தர் நல்கும் திறையும் இதன்கண் அடங்கும்.

நாட்டில் வாழும் மக்களிடையே கடன் கோடல் முதலாகவுள்ள அறவழக்குகளும்1 கொலை களவு முதலிய மற வழக்குகளும்1 தோன்றின. அவற்றை நடுநின்று ஆராய்ந்து அறமும் முறையும் வழங்குவது ஆட்சியின் சிறந்த பணியாகும். இவற்றை ஊர் மன்றங்களும் நாட்டவர் கூடிய பெருமன்றங்களும் செய்வது மரபாகும்.

ஊர் தோறும் மக்களின் பொருள் வாழ்வுக்கு இன்றியமையாத வருவாய்களான நீர்நிலை, தோட்டம் முதலியவற்றின் வாரி பெருக்கி வளம் செய்தற்குரிய செயல்களை ஆராய்தற்கெனக் குழுக்கள் பல இருந்தன. அவற்றைப் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்கள் ‘வாரியம்’ என்று வழங்குகின்றன. அவை ஏரிவாரியம், தோட்ட வாரியம், ஊர் வாரியம் எனப் பல வகைப்படும். இவ்வாரியப் பெருமக்கள் இருந்து தொழிலாராயும் இடமும் ஊர் மன்றங்களே யாகும். பிற்காலத்தே கோயில்கள் பெருகியபோது அவையே இடமாயின மையின், இம்மன்றங்கள் பல மறைந்து போயின. எனினும், இக்காலத்தில் சில பழமையான ஊர்களில் ஊர் நடுவிலோ நீர்நிலைகளின் கரையிலோ காணப்படுகின்றன. மன்றங்களின் வேறாகப் பொது இடங்களும் உண்டு. அவற்றைப் பொதியில் என்பது சங்க நூல் வழக்கு. மன்றங்களின் நடுவில் ஒரு மரம் நின்று நிழல் செய்யும். அதன்கீழ் அகலமான மேடை கட்டியிருப்பர். மரத்தடியில் வேலை நட்டு முருகவேளை வழிபடுவதும், கம்பத்தறி களை நட்டுக் கடவுள் வழிபாடு செய்வதும் உண்டு. தறிகளுக்குக்கந்து என்பது பெயராதலால், கந்து நட்ட மன்றங்களைக் கந்துடை மன்றம் என்றும் கந்துடை நிலை என்றும் கூறுப. கந்துடைநிலைகள் பிற்காலத்தே சிவலிங்கமாக மாறின. மேலே கூறிய மன்றங்களும், பொதியிலும், கந்துடை நிலையும் ஊரவர் இருந்து அறம் கூறும் நீதி மன்றமாகவும் பணிபுரிந்தன.

சங்க கால மன்னர்கள் போர்க்குச் செல்லுங்கால் பகைவர் நாட்டில் வாழும் ஆவும் பார்ப்பனரும் பெண்டிரும் முதியோரும் பிறரும் தாக்கப்படாத சால்புடையவரெனக் கருதி அவர்கட்குப் பாதுகாப்பு அளிப்பது வழக்கம்; அது பிற்காலச் சோழபாண்டிய ராட்சியில் ‘பிடிபாடு’ என்ற பெயரால் சிறிது வேறுபட்டு, “இரண்டு மலைநாட்டு அரையர்களோம் எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது; நாங்கள் பகை கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவலான ஊர்கள் வழிநடைக் குடிமக்கள் இடைக்குடி மக்கள் இவர்களை அழிவு செய்யக் கடவோமல்லமாகவும்; ஒருவனை அழிவு செய்யில் நூறு பணம் தெண்டம் வைக்கவும்; ஒரு ஊராக அழிவு செய்யில் ஐஞ்ஞூறு பணம் வைக்கவும் கடவதாகும்; இப்படிச் செய்யுமிடத்து வெட்டியும் குத்தியும் செத்தும் நோக்கக் கடவர்களாகவும்”1 என இயன்றுள்ளது. வேந்தர்க்கு மகன் பிறந்தானாயின் அவனை முதன் முதலாக வேந்தன் சென்று காண்பது ஒரு சிறப்பாகக் கொண்டாடுவது சங்ககால மன்னர் மரபு: பிற்காலத்தில் அது புத்திரமுக தரிசனம் என்ற பெயருடன் கொண்டாடப் பெற்றுள்ளது. 2 இவ்வாறே வேந்தர் பிறந்த நாளை ‘நாண் மங்கலம்’ எனச் சிறப்பித்து விழாச் செய்வது பழந்தமிழ்க் கொள்கை. பிற்காலச் சோழ பாண்டியர் ஆட்சியிலும் இது நன்றாக நடந்திருக்கிறது.3

இவ்வயைால் நோக்கின், சங்ககால நூல் வழக்கு உலக வழக்கு என்ற இரண்டிலும் பெரும்பாலானவை பிற்காலச் சோழபாண்டிய ராட்சியிலும் காணப்படுவதால், பிற்காலக் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் ஆகியவற்றைக் கொண்டு சங்ககால வழக்காறுகளையும் சங்ககாலக் குறிப்புக்களையும் கொண்டு பிற்கால வழக்காறுகளையும் இன்றைய சூழ்நிலையில் நாம் அறிந்துகொள்வது எளிதாகின்றது.

சங்க காலச் சோழர்


1. கரிகாலன்
சங்கப் பாடல்கள்
சங்க காலம் என்பது எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்கள் காட்டும் காலமாகும். அக்காலத்தே தமிழ் வேந்தர் பலர் சேர பாண்டிய சோழ நாடுகளுள் இருந்து ஆட்சி செலுத்தி யுள்ளனர். அவை பலவும் தொகை நூல்களாதலால் தொடர்ச்சியான வரலாறு காண்டற்கு ஓரளவே துணைபுரிகின்றன. தமிழ் வேந்தர் களையும் குறுநிலத் தலைவர்களையும் சங்கச் சான்றோர் சிலர் அவ்வப்போது பாடியுள்ளனர். அப்பாட்டுக்களைக் கண்ட பண்டைய வேந்தர் சான்றோர்களின் துணை கொண்டு அவற்றைப் புறத் துறைக்கும் அகத்துறைக்கும் பொருந்திய முறையில் தொகுத்துள்ளனர். பொருளிலக்கண அமைதியொன்றே குறிக்கொண்டு நிற்பதால், அக்கால வேந்தர் தலைவர் இவர்களின் வரலாற்றை முறையே காண்பது அவற்றால் எளிதில் இயலாததாயிற்று. ஆயினும் அத்தொகை நூற்பாட்டுக்களுள் அப்பெருமக்களின் வரலாற்றுக் குறிப்புகளும் மக்களின் வாழ்க்கை இயல்புகளும் பல்கியிருப்பதை அறிவுடையோர் எவரும் மறுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. அதனால், சங்ககால வரலாறு காண்டற்கண் அவற்றைத் துணைக் கோடல் வேண்டப்படுகிறது.

சங்ககாலச் சோழர்கள்
சங்கத் தொகை நூல்களுள் புறநானூறு என்பது மேலே குறித்த வரலாற்று நிகழ்ச்சிகள் நிரம்பவுடையதாகும். அதன்கண் தமிழ் வேந்தர் பலர் காணப்படுகின்றனர். புறநானூற்றுப் பாட்டுக்கள் புறப்பொருள் நெறியில் தொகுக்கப்பட்டுள்ளன வாயினும், சேர
பாண்டிய சோழர் என்ற முறையில் அமைந்து முன்னோர் பின்னோர் என்ற நிரலில் கோக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் சோழருள் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, கரிகாற்பெரு
வளத்தான், நெய்தலங் கானல் இளஞ்சேட்சென்னி, முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நலங்கிள்ளி தம்பி மாவளத்தான், நெடுங் கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, குராப் பள்ளித் துஞ்சிய திருமாவளவன், நலங்கிள்ளி சேட் சென்னி, கோப்பெருஞ்சோழன் ஆகியோர் சிறப்புறத் தோன்றுகின்றனர்.

கரிகாலன்
இவர்களில் மிகுபுகழ் பெற்று மேம்பட்டவன் கரிகாற் பெருவளத்தான். இவனைக் கரிகாலன் எனவும் கரிகால் வளவன் எனவும் சான்றோர் குறிப்பர். இவன் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியாவன். இக்கரிகாலன் காலத்தில்தான் காவிரி யாற்றின் இருமருங்கும் ஒழுங்கான கரை அமைக்கப்பட்டதென்றும், காவிரி கடலொடு கலக்குமிடத்துக் காவிரிப்பூம்பட்டினம் தோற்று விக்கப்பட்டதென்றும் கூறுவர்.

கரிகாலன் இளையனாக இருந்தபோது சோழ நாட்டு அரசர் களிடையே போரும் பூசலும் பெருகியிருந்தன. பகைவரது கொடுமை மிகுவது உணர்ந்த உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி சிறியதோர் ஊரிடத்தே தங்கி இருந்தானாக, அதனை எவ்வாறோ அறிந்த பகைவர் அவ்வூரைத் தீக்கிரையாக்கினர். உடனே, தக்க துணைவருடன் சேட் சென்னி, இளங்குழவியான கரிகாலனைத் தூக்கிக்கொண்டு தீயின் ஊடே நுழைந்து ஓடினான். அப்போது கரிகாலன் கால் தீப்பட்டுக் கரிந்து போயினமையின், அவனுக்குக் கரிகாலன் என்ற பெயருண்டாயிற்று. இதனை,

“முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே அளந்ததால்-செய்ச்செய்
அரிகால்மேல் தேன்தொடுக்கும் ஆய்புனல் நீர் நாடன்
கரிகாலன் கால்நெருப் புற்று.”

என்று பழைய வெண்பா வொன்று கூறுகிறது.

அரசனாதல்
சின்னாட்களில் கரிகாலன் தந்தையான இளஞ்சேட் சென்னி இறந்தான். கரிகாலன் கொங்கு நாட்டுக் கருவூரில் ஒரு மனையில் வளர்ந்து வந்தான். அக்காலத்தே அப்பகுதியில் இருந்த கழுமலம் என்ற பேரூரைத் தலைமையிடமாகக் கொண்டு சோழவேந்தர் குடியொன்று ஆட்சி புரிந்து வந்தது. அக்குடி காலற்றுப் போகவே, அங்கிருந்த அரசியற் சான்றோர் அக்கால வழக்குப்பற்றி அரச யானை ஒன்றின் கையில் மலர் மாலை ஒன்றைத் தந்து வேந்தனைத் தேர்ந்தெடுக்குமாறு விட்டனர். அவ்யானை கருவூர்க்கு வந்தது. அதனைக் கண்டாற்கு அவ்வூர் இளையவர் பலர் கூடியிருந்தனர். மாலையேந்தி வந்த களிறு அதனைக் கரிகாலன் கழுத்தில் அணிந்து சிறப்பித்தது. அவனைச் சான்றோர் பலரும் தமக்குரிய சோழ வேந்தனாக மேற்கொண்டனர். இதனை,

“கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால்- விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால்
தீண்டா விடுதல் அரிது”.

என்ற பழமொழிப் பாட்டு உரைக்கின்றது.

இவ்வாற்றால் சோழ வேந்தனாகிய கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்பது நாடு முழுவதும் பரவிற்று. அதனால் வெறுப்புற்ற அவன் பகைவர் அவனது இளமை கண்டு முளையிலேயே கிள்ளி யெறிய முயல்வாராயினர். ஒரு கால் அவர்கள் கரிகாலனைக் கைப்பற்றிச் சென்று ஒரு கடிய காவல் அமைந்த சிறையில் வைத்தனர். அவனும் அதன்கண் அரிமாவின் குருளை ஒரு கூட்டுள் வளர்வது போலச் சூழ்ச்சியிலும் வன்மையிலும் வளர்ந்து சிறந்தான். அவனைத் தேடி அலைந்த அவனுடைய அரசியற் சுற்றத்தாரும் துணைவரும் அவன் சிறையில் இருப்பதை எவ்வகையாலோ உணர்ந்து, தமது துணைமையை அவற்குத் தெரிவித்தனர். கரிகாலன் காலங்கருதிச் செயலற்ற ஒரு சிறுவன் போல் சிறைக் காவலரிடம் ஒழுகி அச்சிறைக் கோட்டத்தைத் தகர்த்துக்கொண்டு வெளியே சேறற்கு வேண்டும் சூழ்ச்சிகளைச் செய்து வந்தான். கருதியிருந்த காலம் வாய்ப்பத் தோன்றியது. உடனே, படுகுழியொன்றில் பிணிப்புண்டிருந்த களிற்றுயானை குழியின் கரையை அழித்துத் தூர்த்து வெளிப்போந்து தன் இனத்தோடு கூடியது போலக் கரிகாலனும் சிறையைச் சிதைத்து வெளியில் வந்து தன் துணைவரைக்கூடிப் பண்டுபோல் சோழ வேந்தனாய்த் துலங்குவானாயினன்.

அவன் வேந்தனானதைக் கண்ட அவன் பகைவர் திகைப்புற்று ஒடுங்கினர். நண்பரும் துணைவரும் பெருகினர்; நால்வகைப் படைவலியும் துணைவலியும் கரிகாலன் பக்கம் சிறந்து நின்றன. ஆங்காங்குத் தோன்றி அரம்பு செய்த பகைவர் அவன் முன் நிற்க ஆற்றாது அஞ்சியடங்கினர். அடங்காத அருவாளரும் ஒடுங்காத ஒளியரும் வாடாத வடவரும் கூம்பாத குடவரும் முறையே அடங்கி யொடுங்கினர். புன்மை செய்த பொதுவரும் இன்னல் விளைத்த இருங்கோ வேளும் மீண்டும் தலையெழாவாறு சமழ்த்து அழிந்தனர். இவ்வாறு பகையிருள் கடிந்து புகழொளி பரப்பிய கரிகாலனை, முடத்தாமக் கண்ணியார் என்ற முழுதுணர் சான்றோர், நேரிற்கண்ட வியப்பால்,

“உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்”

                                                                             என்றும்  

“எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படந்தாங்குப்
பிறந்துதவழ் கற்றதன் தொட்டுச் சிறந்ததன்
நாடு செகில்கொண்டு நாடொறும்”

வளர்க்கலுற்றான் எனப் பாடுகின்றார்.

வெண்ணிப்போர்
கரிகாலன் புகழ் நாடொறும் மிகுவதும், காவிரி பாயும் அவனது நாடு பொன்னும் பொருளும் மிகுந்து தொழிலும் வணிகமும் சிறந்து நிலவுலகு முற்றும் பாராட்ட விளங்குவதும் கண்ட அயல் வேந்தரான பாண்டியரும் சேரரும் தம்மிற்கூடி வேளிர் பதினொரு வரைத் துணையாகக் கொண்டு, சோழ நாட்டுட் புகுந்தனர். அதனை அறிந்த கரிகாலன் கடல் போலும் தனது தானை இருமருங்கும் கைகலந்துவர, அவர்களை வெண்ணி யென்னுமிடத்தே எதிர் கொண்டு மண்டிப் போர் தொடுத்தான். போரும் மிகக் கடுமையாக நடந்தது. சோழர் படைமுன் மாற்றார் படை வலியிழந்து கெட்டது. பாண்டியர் பறந்தோடினர்; வேளிர் வெந்நிட்டனர். கரிகாலன் தெவ்வர் மேல் செலுத்திய வேல் சென்று, எதிர்ப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் தன் மார்பிற் பட்டு முது கிடத்தே புண் செய்தது. மானமாண்புடைய மறவேந்தாதலால் முகத்தோடும் மார்போடும் நின்றொழியாது முதுகிற் புண்பட்டதற்கு நாணி அவன் அப்போர்க் களத்தேயே வாள் வடக்கிருந்து உயிர்விட்டான்.

இப்போர் நிகழ்ந்த இடமாகிய வெண்ணி என்னும் ஊரில் வேட்கோவர் குலத்திற் பிறந்த சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பெண்பாற்புலவர். அவர் வெண்ணிக் குயத்தியார் எனப்பட்டார். புலமைக்கும் கல்விக்கும் ஆடவர் பெண்டிர் என்ற வேறுபாடு நோக்காது இருபாலார்க்கும் அறிவு வழங்குவதில் சங்ககாலத் தமிழ்நாடு சால்பு மிகுந்திருந்தது.

வெண்ணிப் போரில் வேளிர் வெருண்டு ஓடியதும் பாண்டியர் படையரிந்து நீங்கியதும் போலாது சேரமான் பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் நீத்தது கண்டு அவர் மனம் கலங்கினார். சேரமன்னன் செயல், புலவர் பாடும் புகழமைந்து தோன்றிற்று. அவர் குறிப்பறிந்த கரிகாலன் அவரைப் பாடுமாறு வேண்டினான். ஒருவர் செயலும் புகழும் பாடுதற்குரிய பொற்பு அமையப்பெறின், அவர் பகைவரென்றோ நண்பரென்றோ நோக்குதலின்றிப் புகழ்வதொன்றையே புலமை விரும்பும். கரிகாலன் வெற்றி விரும்பும் வேந்தனாதலின் முதற்கண் அவனைப் புகழத் தொடங்கி, “கரிகாலனே, கடலில் வெறிதே அடிக்கும் காற்றின் வன்மை கண்டு, தான் செலுத்தும் மரக் கலங்களைத் தள்ளிச் செல்லுமாறு அதனைப் பணி கொண்டு மேம்பட்ட சோழவேந்தர் குடியில் தோன்றியவன் நீ; கடற்கலம் போல நிலத்திற் கொடியேந்தி அசைந்து செல்லும் யானைப்படையும் பிறவும் நீ ஒருங்குடையவன்; நினது பேராற்றல் பெரிதும் விளங்குமாறு, இங்கே நின்னை எதிர்த்த பகைவரை வஞ்சியாது பொருது நீ வென்றி எய்தினாய்” என்று கூறிப் பாராட்டினார்.

ஈண்டுக்கூறிய கரிகாலன் முன்னோனைப் போலவே யவன நாட்டில் இப்பலாஸ் என்பவன் ‘வளி தொழில்’ ஆளும் திறத்தைக் கண்டு உரைத்துப்பயன் கொண்டான். வரலாறு இவ்வாறு இருப்பவும், இக்கால ஆராய்ச்சியாளர் இப்பலாஸ் என்பவன் செயலை மிகுத்து ஓதுகின்றனரேயன்றி, சோழர் செய்கையை எடுத்தோதுவது கிடையாது; இவர்கட்கு இச்செய்தி தெரியாது போலும் எனத் தமிழறிஞர் இதனை எடுத்துக் காட்டினும் ஏற்பது கிடையாது. இதுபோலும் நேர்மையில்லாத குறைகள் பல இக்காலத்து வரலாற்று ஆசிரியர் சிலர்பால் கிடப்பதை அறிஞர்கள் மனங்கொள்ளல் வேண்டும்.

குயத்தியார் கூறிய இதனைக் கேட்ட கரிகாலன் மகிழ்ச்சியால் முகம் மலர்ந்தான். அவர் மேலும் பாடத்தொடங்கி, “வேந்தே, நின்னினும் சேரமான் மிகவும் நல்லன் அன்றோ?” என்றார். வேந்தனுக்கு வியப்பு உண்டாயிற்று. அக்குறிப்பறிந்த புலவர் பெருமாட்டியார், “நீ நின் ஆற்றல் முழுதும் தோன்றச் செலுத்திய படை சென்று சேரமான் மார்பில் தைத்து முதுகில் புண்செய்து விட்டது; அப் புண்ணுக்கு நாணி அவன் வடக்கிருந்து உயிர் துறந்தான்; அதனால் அவனுக்கு மிக்க புகழ் உண்டாகிவிட்டது; எதிர்ந்தவன் முதுகிற் புண்செய்த குற்றம் நின்படை பெற்றுக் கொண்டது; ஆதலால், அவன் நின்னினும் நல்லனாயினான்” என்ற கருத்துப் பட,

“வென்றோய்; நின்னினும் நல்லன் அன்றே! கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே”

என்று பாடினார். “வெண்ணிப்போரில் நின் ஆற்றல் தோன்றப் பொருதுபெற்ற வெற்றியால் இம்மையில் இறவாத புகழ் பெற்றாய்; அதனையே கொண்டு சேரமான் வடக்கிருந்து இம்மைப் புகழையும் மறுமையின்பத்தையும் ஒருங்கு எய்தினான்” எனக் குயத்தியார் குறித்த நயத்தையுணர்ந்து அவருக்குக் கரிகாலன் பெருஞ்சிறப்புச் செய்தான்; வடக்கிருந்து உயிர் நீத்த சேரமானுக்கும் உயரிய சிறப்புச் செய்தான். அவனை அடக்கம் செய்தபோது பெருவேந்தர்க்குரிய முறையில் தன் நகரம் எங்கும் முழவு முழங்குதல் கூடாது; எவரும் யாழ் இசைத்தலும் கள்ளுண்டு களித்தலும் கூடா; வெற்றி வேந்தன் சுற்றத்தார் தாமும் இனிய தேறல் அருந்துதல் வேண்டா; உழவர் உழுதலைத் தவிர்தல் வேண்டும்; ஊரவர் வெற்றி விழா எடுத்தல் கூடாது எனப் பணித்தான். அக்காலை அங்கிருந்த சான்றோருள் கழாத் தலையார் என்பவர் ஒருவர்; இந்நிகழ்ச்சியைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்தார். கீழ்க்கடற்கரையில் கரிகாலனும் மேல்கடற்கரையில் பெருஞ்சேரலாதனும் முறையே ஞாயிறும் திங்களும் போல விளங்கினர். ஒன்று தோன்றிய வழி ஒன்று மறைவது போல,

“இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்கு
தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன்”

என்று சொல்லி புலம்பினார்.

பின்னர் இச்செய்தி சேரநாட்டிற்கு எட்டிற்று. சேரர் படை உடைந்து கெட்டது என்ற செய்தி அங்கிருந்த சான்றோர்களாகிய தானைத் தலைவர்க்கு வருத்தத்தை விளைத்தது. தேயாப்புகழ் பெற்ற சேரர்குடி கரிகாலன் பெற்ற வெற்றியால் ஒளி குன்றியதற்கு நொந்தனர். எனினும், சேரமான் மான மாண்பு சிதையாவாறு வாள்வடக்கிருந்து உயிர்நீத்த செய்தி அவர்கட்கு அளவிலா இன்பம் அளித்தது. ஆயினும், சேரலாதன்பால் தீராத அன்பு மிகுதியால் பிணித்த உள்ளத்தவராயிருந்தமையின், அவன் பிரிவை ஆற்றாமல் அவர் தாமும் உயிர்நீத்தனர்.

இமயத்தில் புலிப்பொறி
இவ்வண்ணம் புகழ்மிக்கு விளங்கிய கரிகாலன் வடக்கில் கங்கை பாயும் நாட்டுக்கும் அதன் வடக்கில் நிற்கும் இமயத்துக்கும் செல்லுதற்கு விருப்பமுற்றான். அவன் கருத்தை ஏனை அரசியல் தலைவர் பலரும் உடன்பட்டனர். சின்னாட்களில் பெரும்படை திரண்டு வடநாடு நோக்கிச் செல்லலுற்றது. கங்கைபாயும் வங்க நாட்டுக்கும் தென் தமிழ் நாட்டுக்கும் இடையிற் கிடந்த நாட்டவர் கரிகாலனை வரவேற்றுச் சிறப்பித்தனர். வங்கநாட்டில் வாழ்ந்த மன்னர் துணை செய்ய, அவன் அங்கிருந்து இமயத்துக்குப் புறப்பட்டான். அதன் அடியை அடைந்தபோது அது பனிமுடி சூடி விண்ணவர் உலகை ஊடுருவிச் செல்லும் உயர்ச்சியும் தோற்றமும் கொண்டு நின்றது. அதனைக் கடந்து அப்பால் சேறல் அரிதெனப் புலப்பட்ட மையின், அம்மலைப் பகுதியில் தன் புலிப்பொறியைப் பொறித்து மீண்டான் என்பர். இதனை இளங்கோவடிகள்,

“இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு உழையதா-எப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே”

என்று குறிக்கின்றார்.

பின்பு அவன் மீண்டுவருங்கால் வச்சிர நாட்டு மன்னனும், மகதநாடு அவந்திநாடு முதலிய நாடுகளின் அரசர்களும் அவனுக்குத் தக்க சிறப்புக்களைச் செய்தனராம்; அதனை இளங்கோவடிகள் வேறு முறையிற் கூறலுற்று, உறுபகை ஒடுக்கித் தமிழ் உலகு ஓம்பிய கரிகாலனுக்குப் போர் வேட்கை மிக்கெழ ஏனை வடபுலத்து மன்னர் பலரொடு செருச் செய்தற்குச் சென்றான் என்றும், அக்காலத்தே இமயமலை அவனை மேற்செல்லாவாறு தடுக்கவே, அவன் அதன் தலையிற் புலிக்குறி பொறித்து மீண்டான் என்று கூறுவாராய்,

“ செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார் பெறுகஇம்
மண்ணக மருங்கில்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதுஇப் பயங்கெழு மலைஎன
இமயவர் உறையும் இமயப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோன்.”

என்றும், மீளுங்கால் வச்சிர நாட்டு வேந்தன் கொற்றப் பந்த ரொன்றை இறையாக அளித்தான். மகதவேந்தன் பகைத்துக் கெட்டுப் பட்டிமண்டபமொன்றைக் கொடுத்தான். அவந்தி வேந்தன் நட்புற்று உவந்து தோரணவாயில் தந்தான் என்றும் உரைக்கின்றார். அடிகட்குப் பின் பன்னூறு ஆண்டுகள் கழியத் தோன்றிய சயங்கொண்டார் பின்னும் சிறிது மிகைப்படுத்தி,

“செண்டு கொண்டுகரி காலன்ஒரு காலில் இமயச்
 சிமய மால்வரைதி ரித்தருளி மீள அதனைப்
 பண்டு நின்றபடி நிற்கஇது என்று முதுகில்
 பாய்பு லிப்பொறிகு றித்ததும றித்த பொழுதே”

என்று பாடுகின்றார்.

பொருநர் ஆற்றுப்படை
இனி, இக்கரிகாலன் ஆட்சி புரிந்த காலத்தில் முடத்தாமக் கண்ணியார் என்ற சான்றோர் பொருநராற்றுப் படை என்னும் நெடும்பாட்டு ஒன்றைப் பாடி அவனால் சிறப்பிக்கப் பெற்றார். அதன்கண், கரிகாலன் பொருநர்க்கு ஊனும் சோறும் மிதப்ப நல்கி உண்பித்தான் என்பதைப் பொருநன் கூறுவது போலக் கூறலுற்றுக்

‘கொல்லை யுழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊன்முனிந்து’

மகிழ்வோடு பன்னாள் அவன்பால் இருந்தேன்; பின்னர் ஒரு நாள்

‘செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய
செல்வ, சேறும்எம் தொல்பதி’

என்று மெல்ல மொழிந்தேன்; எம்மைப் பிரிய மனமில்லாதவனாய்ச் சின்னாள் இருக்க வைத்து முடிவில், யானைகள் பல வழங்கி,

‘தன் அறி அளவையின் தரத்தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மைதீர வந்தனென்.’

என்று உரைத்துள்ளனர்.

பட்டினப்பாலை
கடியலூர் என்பது அக்காலத்தே சோழ நாட்டில் இருந்த சிறந்த ஊர்களில் ஒன்று. அவ்வூரில் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோர் ஒருவர் வாழ்ந்தார். அவர் பட்டினப்பாலை என்னும் நெடும் பாட்டு ஒன்றைப் பாடி அதன்கண் காவிரிப்பூம் பட்டினத்தின் நலத்தை அழகிய சொற்களால் எடுத்துரைத்துக் கரிகாலன் வெற்றிச் சிறப்பை அதன் வீறு விளங்கப்பாடி, அவன் பேரவையில் அரங்கேற்றினார். அப்பாட்டின் நலம் கண்டு வியந்த கரிகாலன் அதன் அரங்கேற்றத்துக்கென்றே ஓர் அழகிய மண்டபம் கட்டினான். அங்கே அவனும் அரசியற் சுற்றத்தாரும் ஏனைப் புலமைச் செல்வரும் அவையோராய் இருந்து கேட்டு இன்புற்றனர். கரிகாலன் அவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் வழங்கினான். அதனைப் பரணி பாடிய சயங்கொண்டார்,
“தழுபு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும்”

என்று பாடியிருக்கின்றார். பிற்காலப் பாண்டியர் காலம் வரையில் அப்பட்டினப்பாலை மண்டபம் இருந்தது. பின்னர் அப்பாண்டியருள் ஒருவன் அப்பாட்டு அரங்கேறிய பதினாறு கால் கொண்ட மண்டபப் பகுதி நீங்கலாக ஏனையவற்றை இடித் தொழித்தான். இதனைத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்துத் திருவெள்ளறை என்னும் ஊரிலுள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் நாழி கேட்டான் வாசலுக்கு வலப் பக்கத்துச் சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்று1

“வெறியார் துளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில் அரமியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறு மேஅங்கு நின்றனவே”

என்று எடுத்துரைக்கின்றது, அம்மண்டபம் இருந்த இடம் செம்பியன் அரண்மனை என அக்கல்வெட்டால் தெரிகிறது.

முறை வழங்கிய திறன்
கரிகாலன் அரசியற் கடம் பூண்டு மக்கட்கு முறை வழங்கிய நிகழ்ச்சி யொன்று நூல்களில் காணப்படுகிறது. சோழ நாட்டு ஊர் ஒன்றில் வாழ்ந்த மக்கள் சிலரிடையே அறவழக்கு ஒன்று தோன்றிற்று. ஊரவர் கூடி அதனை ஆராய்ந்தனர்; அவரது ஆராய்ச்சி ஒரு முடிவெய்தாமையின் நாட்டவரது கூட்டம் அதன் உண்மை காணமுயன்றது. அம்முயற்சியும் பயன்தராது போகவே, முடிவேந்தன் பேரவைக்கண் அதனை விடுவாராயினர். வழக்கினைத் தொடுப் போரும் தடுப்போருமாகிய இருதிறத்துச் சான்றோர்களும் வேந்தன் பால் முறையிட்டனர். அவன் அவ்வழக்கை நன்கு கேட்டானாயினும், அவனது கேள்விமுறை அவனுடைய இளமை நலத்தை மிகுத்துக் காட்டிற்று. அது கண்ட சான்றோர் உள்ளத்தில் அயர்ச்சி தோன்றிற்று. “முகத்தின் முதுக்குறைந்ததுண்டோ உவப்பினும் காயினும் தான் முந்துறும்” என்ற திருக்குறட் படி, அவர் முகத்தின்கண் அஃது இனிது தோன்றிற்று. உள்ளக் குறிப்பைக் கரிகாலன் உணர்ந்து கொண்டான். மறுநாள் அவ்வழக்குக்கு முதுக்குறை முதுமொழிச் சான்றோரைக் கொண்டு ஆராய்வதாக அறிவித்தான். அங்ஙனமே ஆகுக என்று அவர்களும் சென்றனர்.

வேந்தன் குறித்த வண்ணமே மறுநாள் அறவோர் பேரவை கூடிற்று. முதுமைத் தோற்றத்துச் சான்றோர் ஒருவர் நடுவராக அரசியற் சான்றோர்களும் பிறரும் அவைக்கண் இருக்க, வழக்காடும் இருதிறத்தாரும் தம்தம் பக்கலுள்ள பொருள்களை ஏது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுரைத்தனர். நடு நின்று கேட்ட முதியோன் நன்கு எண்ணி இறுதியில் தன் முடிவைக் கூறினான். இரு திறத்தாரும் உவகையுற்றுப் பராட்டினர். எல்லாம் முடிந்த பிறகு, முறை வழங்கிய முதியோன் தன் நரை முடியையும் அதற்குரிய கோலத்தையும் களைந்தான். அதற்குள் மறைந்திருந்த கரிகாலன் பலரும் காணநின்றான். யாவரும் வியந்து நோக்கினார். அவனது இளமை கண்டு இகழ்ந்து அயர்ந்த சான்றோர்க்கு நாணம் தலைக்கொண்டது. மாண்புடைய நன்மொழிகளால் மன்னன் அவர் அனைவரையும் மகிழ்வித்தான். சோழர் குலத்தின் அறங்கூறும் தொல்சிறப்பை எடுத்துச் சொல்லிச் சான்றோர் இன்புற்றனர்.

இவ்வரலாற்றுக் குறிப்பை, மணிமேகலை யென்னும் நூல், சோழர் மதி நுட்பத்தைக் குறிக்க நேர்ந்தபோது, கரிகாலனை, “இளமை நாணி முதுமை எய்தி, உரை முடிவு காட்டிய உரவோன்” என இயம்புகின்றது. முன்றுறையரையர்,

“உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்”

என்று காட்டுகின்றார். இப்பாட்டில் கரிகாலன் பெயர் காணப் படாதாயினும், அதன் பழையவுரைகாரர் சோழன் கரிகாற் பெருவளத்தான் என்று உரைக்கின்றார்.

கரிகாற் சோழ நல்லூர்
கரிகாலன் வாழ்ந்த காலத்தில் அவனைப் பாண்டி வேந்தர் பகைத்துப் போர் தொடுத்துக் கெட்டனர் என முன்பே கூறினோம். எதிர்த்த பகைவரை இல்லாது ஒழிப்பதன்றி எஞ்சவிடும் இயல்பு அவனுக்குக் கிடையாது. அதனால் கரிகாலன் பெரும் படையுடன் பாண்டி நாட்டுள் புகுந்தான். அவன் படை ஊர்களைச் சூறையாடியும் தீக்கிரையாக்கியும் பாழ்படுத்தலுற்றது.

தென்பாண்டிநாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்துக் கோட்டைக் கருங்குளம் என்னும் ஊரில் ஆதனார் என்ற நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். சோழர் படை செய்யும் தீச்செயலால் நாட்டில் நல்ல ஊர்கள் எவையும் இல்லையென்னு மாறு அழிவுற்றன. அது கண்ட ஆதனார்க்கு மனம் வருந்திற்று. தன் படையினர் செய்யும் மறச் செய்கைகளைக் கரிகாலன் தடுக்காமையால் அவன் அவற்றை விரும்புகிறான் எனச் சான்றோர் கருதினார்; அவன் பெற்ற கொற்றத்தைப் பாடுமுகத்தால் அவன் உள்ளத்து மறவுணர்ச்சியை மாற்றி அறம் நிலவப் பண்ணுதல் வேண்டி, அழகியதொரு பாட்டைப்பாடித் தமிழ் விரும்பும் அவன் செவிகுளிரப் பாடிக்காட்டினார். அதன் கண், “வேந்தே”
“எல்லையும் இரவும் எண்ணாய்; பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின் நல்ல
இல்ல ஆகுப வால்”

என்று நாடழிந்த திறத்தை நவின்றார். நல்லவூர்கள் இல்லை ஆகுப என்றது கேட்டதும், பகைவர் நாடுகள் நல்லன போலும் என்ற கருத்தொடு கரிகாலன் அவரை நோக்கினான், உடனே ஆதனார்,

“இயல்தேர் வளவ,
தண்புனல் பரந்த பூசல் மயக்கத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின்பிறர் அகன்றலை நாடே”

என்று பாடித் தம் பாட்டை முடித்தார். மகிழ்ச்சி கொண்ட மன்னன், அவர் நினைந்தவாறே அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகும் நோக்கமும் உடையனாய், அவரது கருங்குளத்துக்குக் கரிகாற் சோழ நல்லூர் என்று பெயர் சூட்டி அவர்க்கு அளித்தான். அவரும் அவன்பால் அயரா அன்பினரானார். அழிவு செய்த சோழப்படை அச்செயலைக் கை விட்டுச் சோணாடு சென்று சேர்ந்தது. இன்றும் அக்கோட்டைக் கருங்குளத்துச் சிவன் கோயில் கல்வெட்டுக் ‘கரிகாற் சோழ நல்லூர்’ என்ற பெயரை, கருங்குள நாட்டுக் கரிகால சோழ நல்லூரான கருங்குளம்1 என்று கூறிக்கொண்டிருக்கிறது. கருங்குளவாதனார் பெயரை, ஏடெழுதினோர் ளகரத்தை ழகரமாக்கி, வகரத்தை லகரமாக மாற்றிக் கருங் குழலாதனார் என மாற்றிவிட்டனர்.

2. கோப்பெருஞ் சோழன்
சங்ககாலத்தில் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்திய சோழ வேந்தருள் கோப்பெருஞ் சோழன் என்பவன் ஒருவன். அவன் ஆன்ற அறிவும் சான்றோர் துணையும் ஒருங்கு பெற்றவன். மன்னர் மதிக்கும் மாநிதிச் செல்வமும் ஒக்கல் விரும்பும் மக்கட் செல்வமும் அவன்பால் குறைவற இருந்தன. பொத்தியார் புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலமைச் செல்வர் அவனுடைய அரசியலுக்கு உறுதிச் சுற்றமாய் உடனுறைந்தனர். காவிரியும் அவனுடைய நாடும் அவன் கருத்துவழி இயங்கிக் காவற்பணிக்குக்கவின் செய்து விளங்கின.

கோப்பெருஞ் சோழனுடைய மக்கள் நல்லறிவு இல்லாதவர்கள்; தந்தையின் கருத்துக்கு மாறானவற்றைச் செய்து அரசினைக் கைப்பற்றப் படைதிரட்டினர். சோழனும் சினந்து போருக்கெழுந்தான்.

புலவர் அறிவுரை
காவிரியின் வடகரைப் பகுதியில் உள்ள மழநாட்டு ஊர்களுள் புல்லாற்றூர் என்பது ஒன்று. அவ்வூர்க்கண் எயிற்றியனார் என்ற சான்றோர் ஒருவர் வாழ்ந்தார். அவர்க்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் நெருங்கிய நட்புறவு உண்டு. அவருக்குச் சோழன் தன் மக்களொடு போர்க்கெழுந்த செய்தி தெரிந்தது. அதனால் அவர் ஒரு நாள் உறையூரில் கோப்பெருஞ் சோழனைச் சென்று கண்டார். எஞ்ஞான்றும் சான்றோர் சூழ இருப்பதையே பெரிதும் விரும்பும் இயல்பினனாதலால், அவர் வரவு கண்டதும் அவன் மனத்து நின்ற சினத்தீ சிறிது தணிந்தது.

நகரமெங்கும் போர் மறவர் ஆரவாரம் மிக்கிருத்தலை முன்னுரையாக மொழிந்து, “வேந்தே, நின்னுடன் போர்க் கெழுந் துள்ளவரை நோக்கின், அவர் நினக்குப் பகைவரல்லர்; அவர்க்கு நீதானும் பகைவனோ எனின், அதுதானும் இல்லை. பகைவர்க்கிடையே நடத்தற்குரிய போர் வெற்றிடத்தே நிகழ்வது வருந்தத்தக்கது. மேலும் போர் என்பது மன்னுயிர் பல இறத்தற்குரிய செயலாகும். மண்ணுலகத்து மணிமுடி சூடும் மன்னராயினும் இறத்தல் ஒரு தலை. மன்னர் இறப்பின், அவரோடு அவரது நாடும் அவரோடு மேலுலகு செல்வது கிடையாது. அவர் வழி வந்தோரே பின்பு அந்நாட்டைப் பெறும் உரிமையுடையராவர். அம்முறையில் நினக்குப் பின் நின்மக்கள் இச்சோழ நாட்டுக்கு வேந்தராகும் வீறு பெற்றவர். இது நீ அறியாததன்று. நாளை நடக்க இருக்கும் போரில் நின்மக்கள் தோற்று இறந்துபடுவாராயின், இந்நாட்டை எவர் ஆட்சிபுரிய விடுவாய்? நீ ஒருகால் தோற்பாயாயின், நின் பகைவர் மகிழ்வர்; பழி மிகுந்து நின்னைச் சூழ்ந்து கொள்ளும் ஆகவே எவ்வகையால் நோக்கினும், நீ கருதிய போர், அறமோ புகழோ பயப்பதன்று; எனவே அதனைக் கைவிடுதலே செயற்பாலது; நேரிதுமாம்” என்றார்.

அது கேட்ட கோப்பெருஞ் சோழன் மனம் தடுமாறலுற்றது. அவன் மக்களுடைய மாண்பில் செயலை நினைக்குந்தோறும் அவனது நெஞ்சும் நீராய் உருகிற்று. அதன் மேல் மானவுணர்வு தோன்றி, அவன் மனநோயை மிகுதிப் படுத்துவதாயிற்று, ஆகவே அவனது இயற்கை அறிவு மேலே செய்வது தெரியாது திகைப் புற்றது. அந்நிலையில் எயிற்றியனார் பலபட எண்ணி, “உயர்ந்தோர் உலகத்து உரவோர் விரைந்து வரவேற்ப தாகிய நல்வினை யொன்றே மேற்கொள்ளத் தக்கது; வேறு செயல்வகை இல்லை” என்றார். அவர் கூறியது கோப்பெருஞ் சோழனுக்கு மனவமைதி தந்தது. அறிவு தெளிவுற்று வடக் கிருத்தலே மான நோய்க்கு மருந்தாம் எனத் துணிந்து அதற்கு வேண்டுவன செய்யத் தலைப்பட்டான்.

சோழன் வடக்கிருத்தல்
வடக்கிருத்தல் என்பது உண்ணா நோன்பிருந்து உயிர் விடும் செயலாகும். இதனைச் செய்பவர் ஆற்றிடைக் குறைகளிலோ (தீவுகளிலோ) தண்ணிய பொழில்களிலோ பெரிய வழிக் கரைகளிலோ ஓர் இடங்கண்டு புல்லைப் பரப்பி அதன் மேல் இருப்பர். போர்ப் புண்பட்டவரே போர்க்களத்தில் வாட்படையைப் பரப்பி அதன் மேல் இருந்து உண்ணாதிருந்து உயிர் விடுவர். அதனை ‘வாள் வடக் கிருத்தல்’ என்பர். சேரமான் பெருஞ்சேரலாதன் வெண்ணிப் பறந்தலையில் வாள் வடக்கிருந்தது இச்செயல் வகையாகும். அம்முறைப்படியே கோப்பெருஞ் சோழன் காவிரியின் ஆற்றிடைக் குறையில் இப்போது திருவரங்கம் என வழங்கும் துருத்தியில் ஓரிடத்தே வடக்கிருத்தலை மேற்கொண்டான். சான்றோர் பலர் அவனோடு உடன் இருந்தனர். அஃது அக்காலமரபு.

துறவு மேற்கொள்ளினும் வடக்கிருக்கத் துணியினும் அவற்றைச் செய்வோரை எத்தகையோரும் தடுத்தல் கூடாது என்பது அந்நாளைய அறம். எனினும், அறிஞர் சிலர் போந்து, வடக்கிருந்து உயிர் துறப்பது தற்கொலை போலும் சால் பற்றதாய் உயர்ந்தோருலகத்து இன்ப வாழ்வு எய்துவிக்கும் எனற்கு ஏதுவாகாததாய் இருத்தலின், அது நன்றன்று என்ற கருத்துப்பட மொழிந்தனர். சோழன் அதனை உடன் படாமல்,

“செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கில் எய்தல் உண்டுஎனில்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்எனில்
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே”

என்று இயம்பினான். அவனது மனத்திண்மையைக் கண்ட சான்றோர் பெரிதும் வியந்தனர். உண்ணா நோன்பு இனிது நடைபெறுவதாயிற்று. உற்றார் நண்பர் சான்றோர் முதலிய பலர் அவனைச் சூழ இருந்து வரலாயினர். அவனுக்கு அமைச்சராய் இருந்த பொத்தியார் என்னும் சான்றோர், அவன் பிரிவாற்றாது தாமும் பொத்தியாரின் மனைவி கருவுற்றிருந் தனள். அதனை அறிந்த உடன் இருக்க விரும்பினார். அப்போது சோழன், ‘மனைவி கருவுயிர்த்தபின் வருக’ எனப்பணித்தான். அவரும் ‘அங்ஙனமே செய்வேன்’ எனச் சொல்லி உறையூர் சென்றடைந்தார்.

உணர்வொத்த நட்பு
கோப்பெருஞ் சோழன் மக்கள், சேரமான் இளஞ்சேரல் இரும்பொறையோடு போர் தொடுக்க விழைந்து சோழனை ஆதரிக்குமாறு வேண்டியதும், அவர்கட்கு அவன் அறிவுரை வழங்கியதும், அதனைக் கேளாது அவர்கள் போர் தொடுத் துப் பீடு அழிந்ததும், ஏனைப் பாண்டியரை உள்ளிட்டோர் அவர்களைத் தூண்டியதும், பாண்டிய நாட்டுப் பிசிர் ஆந்தையார் என்ற பைந்தமிழ்ப் புலவருக்குத் தெரிந்தன. சோழனது மன மாண்பையும் குணஞ் செயல்களையும் கேள்வியுற்ற பிசிராந்தையார் அவன்பால் பேரன் புடையரானார். அவ்வாறே சோழனும் ஆந்தையாரின் சான்றாண் மையை யறிந்து அவர்பால் தன் உள்ளத்து உண்மை நட்பை உணர்ச்சி வாயிலாக உரிமை செய்தான். இருவரும் ஒருவரை யொருவர் ஒருகாலும் கண்டிலர். தம்மை அறியாமலே இருவரும் ஒன்றிய உள்ளத்து ஓங்கிய நட்புணர்ச்சி கொண்டனர். அது நாளடைவில் வளர்ந்து சிறந்து வந்தது. பாண்டியன் அறிவுடை நம்பியின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தாராயினும், அவருடைய எண்ண மெல்லாம் கோப் பெருஞ் சோழனிடமே ஒன்றியிருந்தன. சோழனை நினைந்த வண்ணம் ஒரு நாள் ஆந்தையார் தன் மனைக்கண் இருந்தபோது அன்னமொன்று தெற்கிலிருந்து வடதிசை நோக்கிப் பறந்து சென்றது. அதற்குக் கோப்பெருஞ் சோழன் இருக்கும் உறை யூர்க்குச் சென்று அவனைக் காணுமாறு கூறுவாராய், “அன்னச் சேவலே, நீ சோழநாட்டு உறையூர்க்குச் சென்று சோழர் பெருமானுடைய பெருமனையில் தங்கி”

“பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத் தன்
நன்புறு நன்கலன் நல்குவன் நினக்கே”

என்று பாடினது அவரது அன்பு மிகுதியை இனிது புலப்படுத்து கின்றது. அன்றியும் அவரை யாவரேனும் கண்டு ‘நும் பெயர் யாது?’ எனக்கேட்பின், ‘என் பெயர் கோப்பெருஞ் சோழன்’ என்று கூறும் அளவுக்கு ஆந்தையாரின் அன்பு விஞ்சி நின்றது.

நட்பு நலன்
இவ்வாறு இருக்கையில், கோப்பெருஞ்சோழனுக்குப் பிசிராந்தையாரைக் காண்டல் வேண்டுமென்ற விருப்ப முண்டாயிற்று. நாடோறும் அந்த விருப்பம் மிகுந்து பெரு வேட்கையாக மாறிற்று. அவனுடைய எண்ணத்தின் திண்ணிய அலைகள் சென்று ஆந்தையாரைச் சார்ந்தன. அவரும் சோழனைக் கண்டு மகிழக் கருதினார். சிறந்த குடும்பத்தினராதலால், அவர் நினைவு தோன்றியவுடனே புறப்பட வில்லை. கோப் பெருஞ்சோழனுக்கு மாத்திரம் வடக்கிருக்கும் தன் உயிர் நீங்கு முன் அவரைக் காண வேண்டு மென்ற அவா மேலும் பெருகி முறுகுவதாயிற்று. ஒரு நாள் அவன் உடனிருந்த சான்றோரை நோக்கி, “என் நண்பரான ஆந்தையார் இங்கே வருவார்; அவர் இருத்தற்கு ஓர் இடம் அமைப்பீராக,” என்றான். அது கேட்ட சான்றோர், “சேய் மையில் இருப்பவர் அரசன் நிலையறிந்து “இங்கு எப்படி வருவர்” என்று ஐயுற்றனர், அவர் குறிப்பறிந்த கோப்பெருஞ் சோழன், தன் மனத்தின் தெளிவு புலப்பட,

“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்பஎன் உயிரோம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லன் மன்னே”

என ஓர் அழகிய பாட்டால் பரிந்துரைத்தான். அதனைக் கேட்டும் சிலர் ஐயம் நீங்காராக, சோழன் அவர்களை நோக்கி, “அறிவுடையீர், ஐயம் கொள்ளன்மின்” என் நண்பனான ஆந்தை, இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்; புகழ்கெட வரூஉம் பொய் வேண்டலன்; சிறந்த காதற் கிழமையுடையன்; இன்னதோர் காலை நில்லான்; இன்னே வருகுவன்; அவற்கு இடம் ஒதுக்கி வைம்மின்” என்றான். சின்னாட்களில் அவன் உயிர் நீங்கிற்று. சான்றோர் ஒரு நடுகல் அமைத்து அதன்கண் அவனுடைய பெயரும் பீடும் எழுதி, அதன் முடியில் மயிற்பீலி சூட்டி வழிபாடு செய்தனர்.

சோழன் நடுகல்லாகிய சின்னாட்களில் பிசிராந்தையார் பாண்டிநாடு கடந்து சோழநாட்டு உறையூர் போந்து, சோழன் வடக்கிருந்து நடுகல்லாயினமை அறிந்து வருந்தினார். பின்னர்த் தமது பிசிர்க்குடிக்குச் செல்லாது தாமும் அவனோடே வடக்கிருந்து உயிர் துறத்தற்குத் துணிந்து, காவிரியைக் கடந்து அவனது நடுகல் நிற்கும் இடத்துக்குவந்து சேர்ந்தார். அவர் வரவறிந்ததும் சான்றோர் பலர் போந்து அவரைச் சிறப்புடன் வரவேற்றுப் பாராட்டி, நடந்தது முற்றும் நன்கு நவின்றனர். அதனால் அந்தையார்க்கு உண்டான துயர்க்கு அளவில்லை.

நரையின்மை: காரணங்கள்
அவரை நேரிற் கண்ட சான்றோர், முதுமை தோற்றும் முகமும் அதற்கேற்ப அமைதற்குரிய நரைதிரைகளின்றி மொழு மொழுவென விளங்கும் அவர் மேனியும் நோக்கி, வியப்புமிக்கு, சான்றீர், உங்களைப் பற்றிப் பல காலமாகக் கேள்வியுற்றிருக்கிறோம்; அற்றாக, நரைதிரைகள் சிறிதும் உங்கள் மேனிக்கண் தோன்றமைக்குக் காரணம் என்னை யோ?” என்று வினவினர்.

அவர்கள் கேட்ட வினாவுக்கு மனம் மகிழ்ந்த ஆந்தை யார் முறுவலித்து, “யாண்டுபல ஆக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர்” என்று தொடங்கி, “ என் மனையில் உறையும் மனைவி மனைத்தக்க மாண்புடையள்; என் மக்களும் அறிவன அறிந்தொழுகும் அமைதியுடையர்; ஏவலரும் என் குறிப்பறிந்து ஏவின செய்யும் இயல்புடையர்; எங்கள் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை கொண்ட சான்றோர் பலர் உளர்; எங்கள் வேந்தனும் அல்லவை செய்யாது நாடு காவல் புரிகின்றான்; இவ்வாற்றால் மனை வாழ்வும் ஊர் வாழ்வும் நாட்டுவாழ்வும் நன்கு இயலுவதால், என் மனம் கவலை நோய்க்கு இடனாகாமையால், யான் நரை இல்லேனாயினேன்” என்ற கருத்துப்பட,

“மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான்வாழும் ஊரே”

என்றார்; எல்லோரும் வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கெய்தி இன்புற்றனர்.

பொத்தியார் பாராட்டு
அக்காலை அவரைக் காணப்போந்த சான்றோருள் பொத்தி யாரும் ஒருவர். ஆந்தையார் அவரோடு அன்புடன் அளவளாவி இன்புற்றனர்; எனினும் அவர் வருதற்குள் சோழன் நடுகல் ஆனது ஆறாத்துயரை விளைவித்தது. அவன் உரைத்த வண்ணமே ஆந்தையார் வந்தது, அவர்க்கு மிக்க வியப்பைத் தந்து, சோழனது அறிவின் ஒட்பத்தை உள்ளத்தே நினைப்பித்தது; அதனால் அவர் கண் கலுழ்ந்து கையற்று வருந்தினார்; அவ்வருத்தம் ஒரு பாட்டாய் வெளிவந்தது. அதன் கண் ஆந்தையார் வருகையை வியந்து,

“நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோடு ஈங்குஇது துணிதல்;
அதனினும் மருட்கை யுடைத்தே பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை ஈங்கு வருதல்”

என்று வாய்விட்டுக் கூறினார். அப்போது சோழனுடைய பெருமையும் ஆந்தையாரது அறிவு நலமும் அவர் மனத்தில் எழுந்தன. அதனால்,

“வருவன் என்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே”

என்றார். அந்நிலையில் கோப்பெருஞ் சோழனுடைய நடுகல் கண்ணிற் பட்டது. உடனே அவர் நெஞ்சில் கவலையும் கை யறவும் பெருகித் தோன்றின. அதனால்,

“தன்கோல் இயங்காத் தேயத் துறையும்
சான்றோன் நெஞ்சறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல் அளியது தானே”

என்று புலம்பினர்.

ஆந்தையார் வடக்கிருத்தல்
இந்நிகழ்ச்சியைக் கண்ட பிசிராந்தையார் தாம் கோப் பெருஞ் சோழனோடு மனமகிழ உரையாடி இன்புறுதற்கு வாய்ப் பில்லாமையை நினைந்தார். உயிரொன்றிய நண்பரைப் பிரிந்தபின் அவர்க்கு இவ்வுலகம் வெறிதாகத் தோன்றிற்று. மனைவியும் மக்களும் ஊரும் நாடும் அவர் உள்ளத்தில் இடம் பெறவில்லை. தம் உயிரைக்கொண்டு அச்சோழன் உயிரைக் காணும் வேட்கையால் வடக்கிருக்கலுற்றார். சின்னாட்களில் அவரும் உயிர் துறந்து நடுகல் ஆனார்.

பொத்தியார் வடக்கிருத்தல்
இதற்கு இடையில் பொத்தியார் மனைவி கருவுயிர்த்தாள். அது பற்றிப் பொத்தியார் தமது மனைவிக்குச் சென்று மகன் பிறந்தானைக் கண்டு, அவனது எதிர்கால வாழ்வுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து உறையூர் வந்து சேர்ந்தார். பொத்தியார்க்கு உறையூர் தந்த காட்சி அவர் உள்ளத்தை வருத்திற்று. தன் உயிர்போற் பேணி வளர்த்த பெருங்களிறு இறந்துபடின், அது நின்ற வெளில் பாழ்பட்டது கண்ட பாகனைப்போல அவர் நெஞ்சம் கையற்றும் பெரும்புலம் புற்றது.

பின்பு, அவர் காவிரியைக் கடந்து சோழன் வடக்கிருந்து நடுகல்லாகிய இடம் அடைந்தார். அதனைக் காணுந்தோறும் அவரது மனம் கரைந்து கண்ணீராய் வழிந்தது. அவனுடைய இன்னுயிரைக் கவர்ந்த கூற்றுவன்மேல் மாறாச் சினம் எழுந்தது. அவர் அங்கு வந்திருந்த சான்றோரை நோக்கினார். அவர் அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாய் நின்றனர். “சான்றோர்களே, கோப்பெருஞ்சோழன்” பாடுநர்க்கு ஈத்த பல்புகழாளன்; ஆடுநர்க்கு அளித்த பேரன்பாளன்; அறவோர் புகழ்ந்த அரிய செங்கோலன்; திறவோர் புகழ்ந்த திண்ணன் பினன்; மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; உயர்ந்தோர் புக்கில்; இத்தகைய தக்கோனைக் கொன்ற கூற்றுவன் கொடியன்; அவனை,

“வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே”

என்று கதறினார், முடிவில் சோழனை நினைந்து, “நின்னோடு வடக்கிருக்க விரும்பிய என்னை விலக்கி,” ‘மகன் பிறந்தபின் வருக’ எனப் பணித்தாய்; அவ்வண்ணமே வந்துளேன்; எனக்கு இடம் யாது? என்று புலம்பித் தாமும் வடக்கிருந்து உயிர் நீக்கத் துணிந்தார். அவர்க்குக் கொடுக்கப் பட்ட இடத்தை ஆங்கு இருந்தோர் காட்டக் கண்டு பெருவியப்புற்ற பொத்தியார்,

“நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடம் கொடுத் தளிப்ப மன்ற உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே”

என்று பாடி வடக்கிருந்து உயிர் நீத்தார்.

புலவர் பாராட்டு
இச்செய்தி நாடு முழுதும் பரவிற்று. சோழன் தொடர்பு மிகவுடைய சான்றோருள் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்ற சான்றோர் போந்து கண்டு, பெருந்துயர் கொண்டு வருந்தினார். சோழனையும் பாண்டி நாட்டு ஆந்தையாரையும் பிறரையும் கண்டு கழிபெருந் துயர்கொண்ட கண்ணகனார் என்னும் சான்றோர்,

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பால ராப;
சாலார் சாலர் பாலரா குபவே”

என்று பாடினர்.

சங்ககாலப் பாண்டியர்


1. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பாண்டியர் பழைமை
சங்ககாலப் பாண்டிநாடு மேற்குமலைத் தொடரின் கிளையாய்க் கிழக்கு நோக்கி வரும் பழனிமலை சிறு மலைத் தொடர்களையும், அச் சிறுமலையில் தோன்றிக் கிழக்கே சென்று கடலொடு கலக்கும் வெள்ளாற்றையும் வடவெல்லையாகக் கொண்டிருந்தது.

பாண்டியர் என்பது ‘பண்டையோர்’ என்ற சொல்லின் மரூஉ முடிபு என்பதை முன்பே கூறினோம். பண்டையோர் என்ற பொருள்பட வழங்கும் பழையர் முதியர் என்ற பெயரையுடை மக்களினம் மேலைமலைத் தொடரில் வாழ்பவரிடையே இன்றும் இருந்து வருவது இதற்குப் போதிய சான்றாகும். இது பற்றியே தமிழினத்தைக் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு, முன்தோன்றி மூத்தகுடி” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுவதாயிற்று. பொதியின் மலைத் தொகுதியில் உள்ள முடிகளில் பாவநாசப் பகுதிக்கண் ‘கவிரம்’ என்றொரு மலைமுடியுண்டு. அதனை “தெனா அது, ஆய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பின், கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்” எனச் சங்க நூல்கள் குறிக்கும். அப் பகுதிக்கண் இருந்து அரசு புரிந்த பாண்டியர் குடியினர்க்கு, ‘கவிரியர்’ என்று ஒரு பெயர் தொடக்கத்தில் தோன்றி, நாளடை வில் மருவிக் ‘கவுரியர்’ என்று வந்தது; அதனால் பாண்டியர் ‘கவுரியர்’ என்ற பெயரும் பெறுவாராயினர்; “வென்வேற் கவுரியர் தொன்முது கோடி” “தெனா அது வெல்போர்க் கவுரியர் நன்னாடு” எனச் சான்றோரும் வழங்கினர். பாண்டியர் என்ற பெயரை வடபுலத்துப் பாண்டு வேந்தன் மக்களான பாண்டவரோடு இணைத்து நோக்கிய சிலர், தமிழ்அறிஞர் உடன்படார் என்று போலும் துரியோதனன் முதலியோரைக் குறிக்கும் ‘கவுரவர்’ என்ற பெயரோடு ஒட்டி யுரையாது போயினர். ஆனால் பௌராணிகர் அதனை விடவில்லை; ‘மதுரையில் ஒருகால் கௌரி தேவியார் இருந்து ஆட்சி செலுத்தினாள்; அவள் வழி வந்தமையின் பாண்டியர் கவுரியராயினர்’ என்று உரைத்துவிட்டனர்.

தென் குமரிக்குத் தெற்கில் இருந்து மறைந்து போன ஏழெழு நாட்டைத் தமக்கு உரிய நிலமாகக் கொண்டவர் பாண்டியர்; அந்நாளில் கடலில் மீன் வேட்டம் புரிந்து மேம்பட்டது பற்றி அவர்கள் மீன் எழுதிய கொடியும் மீன் பொறியும் உடையராயினர். முதலில் அதன் தென்பகுதி கடல் கொள்ளப்பட்ட போது ஒரு பகுதியினர் சோழநாட்டிற் குடியேறினர். சிலர் பாண்டி நாட்டிலும் சிலர் மேலைக் கடற்கரையிலும் புகுந்து தங்கினர். எனினும், கடலின் கொடுமை எஞ்சியிருந்த நிலப் பகுதியிலும் நிகழ்வதாயிற்று. அதனால் அம்மக்கள் இடமில்லாக் குறையினால் பாண்டி நாட்டில் படரத் தலைப்பட்டமையின், பாண்டியர் அவர்கட்கு இடம் தேடி நல்குவது கடனாயிற்று. வடக்கில் சோழரும் மேற்கில் சேரரும் பாண்டியரது முயற்சிக்கு இடையூறு விளைத்தனர். அவர்களுடைய தடையை உடைத்தெறிந்து இடம் கண்டு உதவுவதைப் பாண்டியர் மேற்கொண்டிருந்ததை,

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினால் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்”

என்று கலித்தொகை உரைப்பதால் அறிகின்றோம்.

பண்டை நாளில் பாண்டியர் தென்னவர், கவிரியர், வழுதியர், செழியர், மாறர் என ஐம்பெருங் குழுவினராக வாழ்ந்தனர். அவருள் குமரியையடுத்த தென் பகுதியில் தென்னவரும், கவிர மலைப்பகுதியில் கவிரியரும், மதுரை நாட்டின் கீழ்ப்பகுதியில் மாறர் குடியினரும் மதுரைக்கும் குமரிக்கும் இடை நிலத்தில் வழுதியரும் செழியரும் இருந்தனர். கடல் கோளால் இடுக்கண் உற்றபோது இவ்வைவரும் ஒன்று பட்டிருத்தல் வேண்டும். அதனால் பாண்டியர்க்குப் ‘பஞ்சவர்’ என்ற பெயரும் தோன்றிற்று. நாடு இழந்து போந்த மக்கட்கு நிலம் தந்து உதவிய சிறப்பினால் பாண்டியன் ஒருவன் ‘நிலம் தருதிருவின் பாண்டியன்’ எனப்பட்டான். அவனது அரசவையில் தான் தொல்காப்பியனார் செய்த தொல்காப்பியம் என்ற நூல் அரங்கேறிற்று எனப் பனம்பாரனார் என்ற சான்றோர்
கூறுகின்றார்.

வடவர் செல்வாக்கு
இப்பாண்டியன் காலத்துக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த பாண்டியர் காலத்தில் அவரது புகழ் இமயம் வரையில் பரவியிருந்தது. வடவர்க்கும் தமிழர்க்கும் போக்குவரவுத் தொடர்பு உண்டாகி யிருந்தது. வடநூன் மறைகளும் வேள்விகளும் தமிழகத்தில் ஓரளவு இடம் பெற்றன. மறைவல்ல வேதியர்கள் தமிழகத்திற் புகுந்து வேள்வி செய்தலும், அரசர்களையும் பிற செல்வர்களையும் கொண்டு அதனைச் செய்வித்தலும் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் உலகியல் வாழ்க்கைக்கு உரிய உழவு வாணிகம் முதலிய தொழில்களைச் செய்யாமல், மேலுலக இன்பவாழ்வுக்குரிய முறையில் மறையோதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், மறைவேள்விகட்கு வேண்டுவன ஈதல், ஏற்றல் என்ற ஆறு தொழில் களையே உடையர். அதனால் தமிழர் அவர்களை ‘அறுதொழிலோர்’, ‘ஆற்றி அந்தணர்’ என்றெல்லாம் பெயர் குறித்தனர்.

அந்நாளில் பார்ப்பார் செய்யும் வேள்விகளால் நாட்டில் மழை பொழியும் என்ற கொள்கை பரவியிருந்தது. ஏனைச் சோழ சேர நாடுகளைக் காட்டிலும் பாண்டிய நாட்டில் மழை மிகப் பெய்யாமைக்கு ஏற்ப இயற்கைச் சூழ்நிலை அமைந்துள்ளது. அதனால் அடிக்கடி மழை பெய்யாமல் பொய்த்து விடுவது இயல்பு. இத்தகைய காலங்களில் வேள்வி வேட்டற்கு வாய்ப்புக்கள் பல்கினமையின், தமிழ் வேந்தருள் பாண்டியர் அவற்றின்கண் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தனர். வையையும் தண்ணான் பொருநையும் ஒழியப் பிற ஆறுகள் மழை நாளிற் பெருகி வேனிற்காலத்து வறிதாகும் இயல்பின ஆயினமையின், பார்ப்பாருடைய வேள்வி களைப் பாண்டியர் பெரிதும் வேண்டினர். இவ்வாற்றால் பாண்டி நாட்டில் வேதியர் வேள்வி வழக்கும் வடவருடைய ஏனை வழக்காறும் பெருகப் பரவியிருந்தன.

புலவர்-பாணர்-கூத்தர்
பண்டைத் தமிழ் நாட்டில் தமிழ் மொழியே பொது மொழியாக இருந்து வந்துளது. இதனைப் பழந்தமிழர் இயல், இசை, கூத்து என மூன்றாகப் பகுத்து வளர்த்து வந்தனர். இயற்றமிழைப் புலவரும், இசையைப் பாணரும், கூத்தினைக் கூத்தரும் பயின்று வளர்த்தனர். அதனால் அவர்களும் பார்ப்பாரைப் போல அரசர் செல்வர் முதலிய வளமுடை யோரைச் சூழ்ந்து வாழ்ந்தனர். அவர்களும் உழவு வாணிகம் முதலிய தொழில் செய்யராகலின், அவர்களைப் புரப்பதும் பொது மக்கள் கடனாயிற்று. அவர்கட்குச் செய்யும் உதவி ‘புலவர் கடன்’ ‘பாணர்கடன்’ என வழங்கிற்று; அவர்களைப் ‘பரிசிலர்’ எனவும், ‘இரவலர்’ எனவும் குறித்தனர். புலவர் முதலாயினாராற் பாடப்படும் சிறப்புடையோர் வானவூர்தியில் மேலுலகம் சென்று இன்ப வாழ்வு பெறுவர் என்பது அந்நாளையோர் நம்பிக்கை. அதனால் அவர்கட்கு எவரும் தடை விதிப்பது கிடையாது. எத்தகைய வேந்தரையும் எந்தக் காலத்திலும் எவ்விடத் தும் சென்று காண்டற்குப் புலவர் முதலாயினார் உரிமை பெற்றிருந்தனர். அவர்கட்குப் போர்க்களமும் ஒன்றே; ஏர்க்களமும் ஒன்றே. செல்வக் காலமும் அல்லற் காலமும் எல்லாக் காலமும் ஒன்றுதான். அவர்கள் பனியென முனியார்; வெயிலென வெம்பார்; காடு எனக் கலங்கார்; மலையென மருளார்; சுரம் எனச் சுருங்கார்; வயலென மகிழார். எங்கும் எக்காலத்தும் அவர்கள் இனிதின் இயங்கினர். வேந்தரும் பிறரும் அவர்களை மகிழ்வித்தலில் மாண்புற்று நின்றனர்.

சங்ககாலப் பாண்டியர்
இக்கொள்கைகள் நிலவிய சங்க காலத்தில் பாண்டியர் குடியில் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர்வழுதி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, அறிவுடை நம்பி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் எனப் பலர் இருந்துள்ளனர்.

முதுகுடுமிப் பெருவழுதி
இவருள் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யென்பான் கவிரியர் வழித் தோன்றலாகிய கருங்கையொள் வாள் பெரும் பெயர் வழுதிக்குப் பின்னர்த் தோன்றிப் பிறங்கு கின்றான். அவன் காலத்தில் குமரி மலையும் அதனை அடுத்திருந்த நாடும் கடலுக்கு இரையாக வில்லை. அந்நாட்டின்கண் பஃறுளி என்னும் ஓர் யாறு ஓடிக் கொண்டிருந்தது. முதுகுடுமிக்கு முன்னேனாகிய ஒரு பாண்டியன் அது கடலோடு கலக்கு மிடத்தே கடல் தெய்வத்துக்கு விழாக் கொண்டாடி “முந்நீர் விழவின் நெடியோன்” என்ற சிறப்புப் பெற்றான். இதனால் அந்நாளைய மக்கள் தமது நாட்டின் தென்பகுதியை விழுங்கிய கடல் தாம் வாழும் பகுதியைக் கொள்ளலாகாது எனக் கடல் தெய்வத்தை வேண்டி விழா எடுத்த முயற்சி தெரிகிறது.

முதுகுடுமியின் ஆட்சியில் கடலால் அரிப்புண்டு நாடிழந்து வரும் மக்கட் கூட்டம் பெருகிய வண்ணம் இருந்தது; அவர்க்கும் போதிய இடம் கண்டு உதவுவதே அவனுக்குப் பெருஞ் செயலா யிருந்தது. அதனால் மண்ணிடம் வேண்டிப் பிற வேந்தருடன் வஞ்சிப் போர் செய்வதில் அவன் கருத்து முற்றும் தோய்ந்து நின்றது. அவன் கருத்தறியா எதிர்த்த வேந்தர் பால் அவனுக்குக் கடுஞ்சினம் உண்டாயிற்று. செய்த போரின் கடுமையால் தோற்ற வேந்தருடைய நாடுகள் மிகுதியும் பாழ் பட்டன. வயல்கள் தேரும் மாவும் சென்று உழக்கியதால் சேறுபட்டுப் புழுதியாகிப் புன்செய்க் கொல்லைகளாக மாறின. மக்கள் உண்ணுநீர் பொருட்டு அமைத்திருந்த கயங்கள் பலவும் யானைகள் படிந்து கலக்குவதால் சேறாகிச் சீரழிந்தன. இவ்வகையால் முதுகுடுமியின் மனத்தில் போர் வெறி மிகுந்திருப்பது கண்ட சான்றோர். அவன்பால் தோன்றிய மறவுணர்வை மாற்றி அறம் நிரம்புதற்கான அருளுரைகளை உரைக்கலுற்றனர்.

முதுகுடுமியின் பக்கல் நெருங்கிய தொடர்பு கொண்டு உற்றவிடத்து உயரிய கருத்துக்களை வழங்கிய சான்றோர்கள் பலர்; அவருள் நெட்டிமையார், காரிகிழார், நெடும்பல்லியத்தனார் என்போர் சிறந்தவராவர். அவர் ஒருகால் முதுகுடுமியின் போர்க்களம் காணச் சென்றார். அங்கே அவன் பகைவரை வென்று பெற்ற யானைகளைத் தன்னைப் பாடி மகிழ்விக்கும் புலவர்கட்கு வழங்கினன்; பாணர்க்குப் பொன்னும் பொருளும் ஈத்துப் பேருவகை பூத்தான். அவனைக் கண்டதும் நெட்டிமையார்க்கு நெஞ்சில் வியப்பு நிறைந்தது. “வேந்தே, இவையாவும் நீ பகைப் புலத்துக் கொண்டவை; பகைவர் இவற்றை இழந்த போது எத்துணை இன்னாமையுற்றிருப்பர், அறிவாயோ? பிறர்க்கு இன்னாவாக அவர் நாட்டையும் நாட்டிற் பொருளையும் கொண்டு நின் நண்பர்கட்கு இன்பமுண்டாக நல்குகின்றாய்; இதுதான் நினக்கு அறமோ?” என விருப்பத்தோடு கூறிப் பராட்டினார்.

பிறிதொருகால் முதுகுடுமி பகைப்புலம் சென்று போர் தொடுத்த திறத்தை நேரிற் காணும் வாய்ப்பினை நெட்டிமையார் பெற்றார். போரில் யானைகள் பலவற்றை வென்று மேம்பட்ட பெருங்களிற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டு அதன் மேல் தன் கொற்றக்குடை நிழற்ற இருந்து, தான் போர் தொடங்கக் கருதி யிருப்பதைப் பகைவர் நாட்டில் வாழும் மக்களுக்கு முரசறைந்து தெரிவித்தான்.

“ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என”

முரசு அறையப்பட்டது. அது கேட்டதும் நெட்டிமையார் நெடிது இமையாராய் இறும்பூது கொண்டு, “இவ்வாறு அறத்தாறு நுவலும் பூட்கை இம் முதுகுடுமிப் பெருவழுதியின் பெருந்தகைமையாகும்” என மொழிந்து, வேந்தனை நோக்கி,

“கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி”

என்று வாழ்த்தலுற்றார். அந்நிலையில் முதுகுடுமியின் முன்னோன் ஒருவன், பஃறுளியாற்றுக் கடற் கூடல் துறையில் கடற்றெய்வத்துக்கு எடுத்த முந்நீர் விழாவும் அக்காலத்தே அம்முன்னோனாகிய நெடியோன் பாணர்க்குச் செம்பொன் வழங்கிய சிறப்பும் நினைவில் எழுந்தன. விழா நிகழ்ந்த இடமாகிய பஃறுளியாற்றின் மணற் பரப்பும் அவர் மனக் கண்ணில் தோன்றிற்று. அக் காட்சியைத் தமது பாட்டில் வைத்து,

“………… குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

என்று பாடிக் குடுமியையும் உடனிருந்த பிறரையும் இன்புறுத் தினார். வேந்தன் மிக்க பொன்னும் பொருளும் அளித்தான். இம்முது குடுமியின் காலத்துக்குப்பின் குமரிக்கோடும் பஃறுளி யாறும் தென்கடலின் தீய வாய்க்கு இரையாயின. பிற்காலத்தார், குமரிக்கு வடக்கில் மேலைக் கடலில் கலக்கும் சிற்றாற்றுக்குப் பழைய பஃறுளியாற்றின் பெயரை வைத்தனர். அது நாளடைவில் ‘பறளியாறு’ என மருவி விட்டது.

நெடும்பல்லியத்தனார் என்றொரு நல்லிசைப் புலவர் முதுகுடுமியைக் காணப் போந்தார். அப்போது அவன் பகைப் புலத்தில் பாசறையிட்டிருந்தான். அவர்க்கோ பொருள் வேண்டி யிருந்தது. என் செய்வார்? பாணன் ஒருவன் தன் விறலியை நோக்கி, “நம் வறுமை நீங்க வேண்டின்,”

“பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே”

செல்வேமோ, கூறுகுக” என்ற பொருள்படும் பாட்டொன்றைப் பாடினர். அவனும் அவரது புலமையை நயந்து, வேண்டுவன நல்கி, விடையளித்தான்.

புலவர்கள் பாராட்டு
இவ்வண்ணம் போர்ப் புகழும் பொருட்கொடைப் புகழும் ஒருங்கு பெற்று உயர்ந்த முதுகுடுமிப் பெருவழுதியின் ஆட்சி நல்ல முறையில் நடைபெற்றுவந்தது. அறுதொழிலாளரான பார்ப்பனர் கூட்டம் பாண்டி நாட்டில் நீர்வள முடைய நிலப்பகுதிகளில் நிறையலுற்றது. அவர்களுடைய அறுவகைத் தொழில்களும் முறையே அமைதியாக நடந்து வந்தன. நாட்டில் பல்வேறு வகையான வேள்விகள் நடை பெற்றன. பல இடங்களில் வேள்விக்கென நட்ட கம்பங்கள் நிலைபெற்றிருந்தன. அவற்றை ‘யூபம்’ என உரைப்பர். அவற்றைக் கண்ட நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமியை நோக்கி, “வேந்தே, நின்னை வெல்லுதல் வேண்டுமென்ற நசை கொண்டு போரிட வந்து, மாட்டாமையால் மானமிழந்து கெட்ட வேந்தரோ மிகப் பலர்,” என்று சொல்லி, “ஒன்று கேட்கின்றேன்; நாட்டின்கண் ஆங்காங்கு உறையும் பகை வேந்தர் தொகையும் பெரிது; பார்ப்பனர் வேள்வி குறித்து நட்டயூபங்களும் மிகப் பல. இவ்விரண்டனுள் மிக்கது காண்பதாயின், தோற்றோடிய பகை வேந்தர் பலரோ, பார்ப்பனர் நட்ட யூபங்கள் பலவோ; மிக்கன யாவை?” எனப் பாடினார்.

பின்பு ஒருகால் காரி கிழார் என்னும் சான்றோர் முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டார். அவரை அன்புடன் வரவேற்று வேண்டிய சிறப்புக்களைத் தன் வண்மை விளங்குமாறு நல்கினான். அதனால் பெரு மகிழ்வுகொண்ட அவர், அவனை மனமார வாழ்த்தினார். நண்பர்கட்கு அவன் செய்யும் தண்ணளியும் பகைவர் பால் அவன்காட்டும் வெம்மையும் மிக்கத் தோன்றின. அரசியற் செல்வம் பெருகுதற்கும் கேடுறாமல் பாதுகாத்தற்கும் இவை இரண்டும் வேண்டியிருத்தலை உணர்ந்தவராதலின், அவற்றை மேலும் சிறப்புறச் செய்தற் கெனச் சில அறங்களைக் கூறலுற்றார். “பகையும் நட்பும் பகுத்தறிந்து, உருவும் புகழும் கொண்டு ஒழுகுதல் வேத்தியல்; ஆயினும், முறை வழங்குமிடத்து அது கூடாது; சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால் பற்றுதலின்மை வேண்டும். பகைவர் முன் நிமிர்ந்து ஓங்கி நிழற்றும் நின்குடை முக்கட் செல்வனாகிய இறைவன் திருக்கோயிலை வலம் செய்யு மிடத்துத் தாழ்தல் வேண்டும்; நான்மறைவல்ல முனிவர்களாகிய துறவோர் முன் நின் சென்னி வணங்குதல் வேண்டும். ஆனால், பகைகொண்டு எதிர்த்தோர் முன் சிறிதும் பின்னிடாது பொருது அவர் நாட்டின்கண் புகுந்து”

“கடற்படை குளிப்ப மண்டி அடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
பாசவற் படப்பை ஆரெயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு”

வரிசையறிந்து நல்குதல் வேண்டும். அந்நாடுகளைத் தீயிட்டு எரிக்குமிடத்து அதன் வெம்மையால் நீ அணிந்த மாலைகள் வாட வேண்டும். ஆயினும், காதல் மிகுதியால் நின் மகளிர் ஊடுமிடத்துச் சினந்து நின்னை நோக்குவாராயின், நின் நெஞ்சத்து வெகுளி சிறிதும் உண்டாதல் கூடாது,” என்று சொல்லி, முடிவில்,

“வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே”

என்று வாழ்த்தினார்.

வேள்வியும் ஊர் வழங்கலும்
முதுகுடுமிப் பெருவழுதி மதுரைக்கண் இருந்து ஆட்சி புரிந்து வருகையில், வேள்வி வேதியர் வேண்டுகோளின் பேரில் பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்தில் வையைக் கரையில் வளவிய பொழில்கள் நிறைந்த ஓரிடத்தே அரியதொரு வேள்வியைச் செய்வித்தான். இப்போதுள்ள சோழவந்தான் பகுதி பாகனூர்க் கூற்றத்தைச் சேர்ந்தது. அதனை “நாகமா மலர்ச் சோலை நளிர் சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றம்” எனவும், “மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றம்” எனவும் வேள்விக்
குடிச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன.1

அந்நாளில் கொற்கையின்கண் நற்கொற்றன் என்னும் வேதியர் தலைவன் வேத வேள்வியில் வீறுபெற்று விளங்கினான். அதனால் பாண்டி வேந்தர் அவனுக்குக் கொற்கை கிழான் என்ற சிறப்பை நல்கி மிகுவித்தனர். அதனால் முதுகுடுமிப் பெருவழுதி அவனை வருவித்துப் பாகனூர்க் கூற்றத்து ஓர் இடம் கண்டு வேள்வியைச் செய்வித்தான். அவனும், “சொற்கணாளர் சொலப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாது” அவ்வேள்வியை முற்றுவித்தான். அது கண்டு பேரின்பம் கொண்டான் பெருவழுதி. வேள்வி வேதியரும் பிறரும் நற்கொற்றனது வைதிக நூற் புலமையைப் பாராட்டினர். பாண்டி மன்னனும், அவ்வேள்வி நிகழ்ந்த இடத்துக்கு ‘வேள்விக்குடி’ எனப் பெயரிட்டுக் கொற்கை கிழான் நற் கொற்றனுக்குச் “சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன், அப்பொழுதே நீரோடு அட்டிக் கொடுத்தான்.”

2. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பின்னே தோன்றிய பாண்டிவேந்தருள் நெடுஞ்செழியன் மிக்க சிறப்புற்று விளங்குபவன். அவன் மிக்க இளையனாயிருந்தபோதே அவன் தந்தை இறந்தான். அதனால் அவன் இளமை வளம் பெறுதற்குள்ளேயே பாண்டி நாட்டு அரசு கட்டில் ஏற வேண்டியவனானான். ஆயினும், இளமைக் களியாட்டுக்கு இரையாகிக் கெடும் புல்லியோர் போலாது, “இளையராயினம் பகையரசு கடியும் செருமாண் தென்னர்” குலத்தின் பெருமைக்குத் தக்கவாறு தூய மெய்வன்மையும் வினை யாண்மையும் கொண்டு பாண்டிப் பேரரசைப் பெருமிதமாக நடத்தினான். அவனது அரசவையில் பெருமை மிக்க அரசியலறிஞரும் நல்லிசைச் சான்றோரும் இருந்து அறத்துணை புரிந்தனர்.

நாட்டு வளம்
மருதம், முல்லை, பாலை, குறிஞ்சி, நெய்தல் என்ற ஐவகைத் திணைவளமும் பாங்குற அமைந்தது பாண்டிவள நாடு. மருதப் பகுதியில் நிலவளம் சிறந்திருந் தமையின், வயல்களில் களிறு மறைக்கும் அளவில் நெல் வளர்ந்து விளைந்தது. அவற்றின் இடையிடையேயுள்ள நீர்நிலைகளில் தாமரை நெய்தல் நீலம் முதலிய பூக்கள் மலர்ந்து இனிய காட்சி நல்கின. பொய்கைகள் மீன்வளம் மிகுந்து நீர்க்கோழிகள் நெடிதிருந்து வாழும் நீர்மை கொண்டு நிலவின. மீன்களைப் பிடிக்கும் வலைஞர் ஆரவாரம் மிக்க பொய்கைக் கரையில் கரும்பாட்டும் எந்திரவோசையும் வயலிடைக் களையெடுக்கும் கடைசியர் ஒலியும், நெல்லரிவோர் தண்ணுமை முழக்கும், அந்நெல்லை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் களமர் ஆரவாரமும் நிறைந்திருந்தன. அண்மையில் நிற்கும் பரங்குன்றத்துப் பெருமுழக்கமும் செல்வமக்கள் விளையாடி மகிழும் இன்ப ஓசையும் இடையறாது முழங்கின. பாண்சேரிகளில் மீனுணக்குவோர் புள் கடியும் ஓசையும் அவற்றைக் கவர்தற்கு வரும் புள்ளினத்தின் ஒலியும் பரந்திருந்தன.

முல்லை நிலத்தில் தினையும் வரகும் செழுமையாக விளைந்தன. நிலத்திலுள்ள குழிகளுள் மணிவகைகளும் கடறுகளில் பொன் தூள்களும் காணப்பட்டன. புன்செய்க் காடுகளில் மானினம் கூட்டம் கூட்டமாய் மேய்ந்து திரிந்தன. மேட்டுப் பகுதியில் கொன்றையும் கோங்கும் நின்று விளங்கப் பள்ளப் பாங்கில் பசுமையான பயறும் எள்ளும் விளைந்தன. ஆங்காங்கு முசுண்டையும் முல்லையும் பசும்புற்றரையில் படர்ந்துள்ளன. ஆழமில்லாத நீர்நிலைகளில் நெய்தலும் தொய்யிலும் நிறைந்து கிடந்தன.

குறிஞ்சிப் பாங்கரில் தோரை, ஐயவி, ஐவனம் முதலியன விளையும் செய்களும், இஞ்சி, மஞ்சள், மிளகு முதலியனவும் மல்கி யிருக்கின்றன. தினைப்புனங்களில் கிளிகடியோசையும் அவரைக் கொல்லையில் ஆமா வெருட்டும் கானவர் பூசலும் பன்றி வேட்டை முழக்கமும் வேங்கைகள் பொருது முழங்கும் முழக்கமும் அருவி வீழும் ஆராவாரமும் மலையிடமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

வேனிலின் வெம்மையும் கோடைக் காற்றின் கொடுமையும் நிலவும் பாலைப் பகுதியில் மூங்கில்கள் தம்மில் இழைதலால் தீப்பிறந்து எங்கும் வெதுப்புகிறது. அதனால் வெப்புற்ற யானையினம் மேய்புலம் படர்ந்து அணி அணியாகச் செல்லும். குன்றங்களில் முளிந்து கிடக்கும் புல்லைக் கோடைக் காற்று முகந்து சென்று மலைவிடர்களைத் தூர்க்கும்போது ஆங்கு எழுகின்ற முழக்கம் கடலின் ஒலிபோல் இசைக்கின்றது. புல்லிலை வேய்ந்த குச்சி வீடுகளில் மான் தோலை விரித்து உறங்கும் மறவர் சிறார் கையில் வில்லேந்திச் சென்று வழிச் சந்திகளைக் காவல் புரிந்தொழுகுவர்.

பாண்டி நாட்டின் கடற்கரைப் பகுதியான நெய்தல் நிலத்தில் கடல் தந்த முத்தும் அரத்தால் அறுத்தற்கமைந்த சங்கும், உள்நாடு களிலிருந்து பரதவர் கொணர்ந்த பலவேறு கூலங்களும், கழிக்கரையில் விளைந்த வெள்ளுப்பும் மிக்கிருக்கின்றன. கடல்வாணிகர் வேற்று நாடுகளிலிருந்து கொண்டு வரும் குதிரைகள் நாளும் பெருகிய வண்ணமிருக்கின்றன. திமில் வாணரெனப்படும் மீன்வேட்டுவர் பெருமீன்களைக் கொணர்ந்து சிறு சிறு துண்டங்களாக வெட்டி வைக்கின்றனர்.

இவ்வாறு ஐந்திணைச் செல்வமும் ஆரப்பெற்று விளங்கும். இப்பாண்டி நாட்டின்கண் ஓடும் யாறுகளுள் சிறந்து விளங்குவது வையையாறு. அதன் கரையில் வளம் மலிந்து நிற்கும் குன்றுகளில் மானினங்கள் மலிந்துள்ளன; சோலைகளில் பல்வேறு வகைப் பூக்கள் பூத்து உதிர்தலால், ஆற்றின் நீர் தெரியாத படி மறைந்து விடுகிறது. அதுகண்டே, இளங்கோவடிகள், “புனல்யாறு அன்று, இது பூம் புனல்யாறு” எனப்புகழ்ந்து பாடினர். பூம்பொழில்களில் மயிலினம் மகிழ்ந்து அகவா நிற்கும். பெருமரக்காவில் மந்திகள் வாழும்; ஆற்றின் இருமருங்கும் நீர் கொணரும் மணல் பரந்து மாண்பு செய்கிறது. கரைகளிலும் பிறஇடங்களிலும் கோங்க மரங்கள் மலர்ந்து விளங்குகின்றன. சோலையிடங்களில் பெரும் பாணர் பெருகி வாழ்கின்றனர். ஊர்களில் செல்வமனை தோறும் முழவு முழங்குகிறது; வீதி தோறும் விழாக்கள் நடைபெறுகின்றன; சேரிகளில் மகளிர் துணங்கை ஆடுகின்றனர். எவ்விடமும் பாடல் சான்ற பண்பு மேம்பட்டுள்ளது.

பீடுமிக்க மாடமதுரை
நெடுஞ்செழியன் ஆட்சியில் மதுரை நகர் மாண்புமிக்கு விளங்கிற்று, நகரைச் சுற்றி ஆழ்ந்த அகழியும் அதையடுத்து மிகவுயர்ந்த மதிற் சுவர்களும் இருந்தன. மதிலின் தலையில் போர்க் குரிய படைப்பொறிகளும் படைவீரர் இருந்து காக்கும் ஞாயில்களும் அமைக்கப்பெற்றிருந்தன; பாண்டி வேந்தர் பெற்ற வெற்றிக் கொடிகள் பல ஆங்காங்கே வானளாவ உயர்த்தப்பட்டிருக்கும். நகர வாயிலின் மேனின்ற மாடம் மலைபோல் உயர்ந்து தோன்றிற்று; வையையாறு போல மாவும் மாக்களும் இனிது செல்லுமாறு அகலமும் உயரமும் கொண்டு வாயில் இலங்கிற்று. அதனைக் கடந்து உள்ளே சென்றால் அகலமான தெருக்கள் காட்சியளிக்கும். அவற்றின் இருமருங்கும் நின்ற பெருமனைகளும் மாளிகைகளும் சில்காற்றும் வெயிலொளியும் புகுந்து உலவும் பல கணி பெற்றுக் காண்பார் கண்கட்கு விருந்து செய்தன. மனைகளில் ஏற்போர் ஏற்க ஈவோர் ஈய இன்பமும் பொருளும் அறநெறியில் இயங்கின. கூத்தும் இசையும் விழவும் வேள்வியும் மிக்கு விளங்கின.

கடைத் தெருக்களில் கடைதோறும் பெயரும் பொருளும் எழுதிய கொடிகள் கட்டப்பெற்றுள்ளன. வானுற நிமிர்ந்த மாடத்தின் உச்சியினின்று அசைந்து வீழும் கொடிகள் மலைமிசை வீழும் அருவி போல அழகிய தோற்றம் அளித்தன. நாட்டவரும் நகரவரும் பல்வகைத் தொழிலினரும் விற்போரும் வாங்குவோருமாய்த் தெரு முழுதும் நிறைந்திருந்தனர். நெடுஞ் சுழிப்பட்ட நாவாய் போலக் கந்து நீத்தும் போதரும் கடா யானையும் கொய்யுளை சிறந்த குதிரை பூட்டிய வண்டிகளும் தேரும்1 இயங்கின. தெருக்களின் இருவிளிம்பிலும் பீடிகைகள்2 அமைந்து நடந்து செல்வோர்க்கு வழி செய்தன. அப்பீடிகைகளில் இன்று போலவே அன்றும் பூவும் மாலையும் வண்ணமும் சுண்ணமும் காய்கனி வகையும் பண்ணியம் பலவும் விற்கப் பட்டன. வளங்கெழு செல்வரும் அணங்கு நிகர் மகளிரும் அணிந்த நறுமணம் தெருவெங்கும் கமழ்ந்தது.

நகர் மருங்கில் ஒருபால் அறவோர் சாலையும்,துறவோர் உறைவிடமும், புத்தர் சைனர் வைதிக வேதியர் முதலியோர் தவப்பள்ளிகளும், ஒருபால் பலவேறு தெய்வங்கட்கு எடுத்த கோயில்களும் இருந்தன. தெய்வக் கோயில்கட்குப் பேரிளம் பெண்டிர் புதல்வர் உடன்வரச் சென்று பூப்பலியிட்டுப் புகை யெழுப்பி வழிபாடாற்றினர். விழுமிய ஒழுக்கம் பூண்டு வேத மோதி உயர்நிலையுலகம் இவணின்று எய்தும் அறநெறி பிழையாத அந்தணர் தம்முடைய பள்ளியில் அன்பு செய்து வாழ்ந்தனர். கால நிலையும் மக்கள் கருத்து வகையும் அறிந்து உறுநர்க்கு உரைக்கும் துறவோர் தமக்குரிய தவப்பள்ளிகளில் இருந்து அறம் புரிந்தனர். புத்தப்பள்ளிகளிலும் சமணப் பள்ளிகளிலும் சமய அறங்கள் வழங்கப்பெற்றன. ஒருசார் அறங்கூறும் அவையம் இருந்தது.

“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையம்.”

என்று அதனைச் சான்றோர் சிறப்பித்துரைப்பர். அவ்வவையின்கண் இருந்து அறம் ஆராயும் பணிபுரிந்த பெருமக்களைக் காவிதி மாக்கள் என அந்நாளைத் தமிழகம் அன்புடன் பாராட்டியது. அவர்களை.

“நன்றும் தீதும் கண்டுஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்”

எனச் சிறப்பிப்பர்.

நெடுஞ்செழியன் காலத்து மதுரைமாநகர் பல்வகைத் தொழிலுக்கும் பெரும்புகழ் பெற்று விளங்கிற்று. மணிகுயிலுநர், இழைபுனைநர், கலிங்கம் பகர்நர், செம்பு நிறை கொண்மார், பொன்செய் கொல்லர், மரங்கொல் தச்சர், கண்ணுள் வினைஞர், கைவினை வல்லுநர் எனப் பலர் வாழ்ந்தனர்.

இனி இம்மதுரை நகர மாண்புடை வாழ்வு இரவும் பகலும் யாமந்தோறும் இயன்ற திறத்தை மாங்குடி மருதன் என்ற சான்றோர் மதுரைக் காஞ்சி யென்ற நெடும்பாட்டில் நிரல்படத் தொகுத்துப் பாடுகின்றார். அதனை விரித்துரைத்தற்கு இடமின்மையின், விடியற்காலக் காட்சியை மாத்திரம் காட்டி அமைக்கின்றாம். விடியற்காலையில் ஓதல் அந்தணர் வேதம் பாட, யாழோர் மருதம் பாடுவர்; பாகர் யானை கட்குக் கவளம் நல்குவர்; குதிரை வாதுவர் புல்லுணாத் தவிர்ப்பர்; பண்ணியக் கடைகாரர் கடையை மெழுகுவர்; கள்விளை யாட்டியர் பதநீர் விற்பர்; சூதர் வாழ்த்த, மாகதர் நுவல, வேதாளிகர் நாழிகை இசைக்கின்றனர்; ஒரு பால் முரசு முழங்குகிறது; ஏற்றினம் ஒரு மருங்கு சிலைக்கின்றது.

“பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணிமயில் அகவ”ப்

பெருங்களிறு பிளிற, கூட்டுறை வயப்புலி ஒருபால் குழுமும்; புதுமணல் பரப்பிய மனைமுன்றிலில் முன்னாள் மாலையில் அணிந்த பூக்களின் வாடல் விடியலில் ஏறியப்படுகின்றன; அவற்றை மொய்த்து வண்டினம் ஆரவாரிக்கின்றது.

தாமரைப் பூவின் வடிவில் அமைந்தது மதுரை நகர்; அதன் இதழ்களை நகரத்து மாடமாளிகைகளாகவும், இதழ்களின் இடை வெளியைத் தெருக்களாகவும் கொண்டால், அப்பூவின் நடுவேயிருக்கும் பொகுட்டை வேந்தனான் நெடுஞ்செழியன் உறையும் விறற்கவின் அரண்மனை என்னலாம்.

நெடுஞ்செழியன்
அவன் முருகவேளைப் போன்ற மேனியும் வலிமையும் அழகும் உடையவன். காலையில் எழுந்து நீராடி அரசர்க்குரிய ஆடையணி பூண்டு திருவோலக்கம் எய்துவான். அக்காலத்தே, வில் வீரரும், பகைவர் அரண் அழித்து உயர்ந்த செல்வரும், தீயெழ நிகழும் போரில் யானைகளை வென்று மேம்பட்ட விழுமிய குரிசிலரும், உயர்ந்த உதவி செய்து ஊக்கும் துணை வரும் பெருஞ் செய் ஆடவரும் பிறரும் வந்து காண்குவர். பின்னர், பாணர் புலவர் வயிரியர் போந்து பாட்டும் இசையும் கூத்தும் நிகழ்த்துவர். அரசன் அவரவர் வரிசையறிந்து அமைவன நல்கி இயல் இசை கூத்து என்ற முத்தமிழ்ப் பைங்கூழ் வளர்க்கும் முதுபணி புரிவன்.

அவர்கட்குப்பின் அரசியற்குரிய சுற்றத்தார் வந்து சேர்வர்; அவர்கள் முதுகுடுமிப் பெருவழுதி, நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற முன்னோன் அரசவையில் இருந்த ஆன்றோர் போலும் சான்றாண்மை சிறந்தவராவார். பாண்டியர் குடிவேந்தருள் ஒன்றாய் மேலைக் கடற்பகுதியில் இறங்கிக் கொங்குநாடு புகுந்து மலையடியில் இடம் கண்டு, குடி வேந்தர்க்கும் குறு நிலத்தலைவர்க்கும் படை வீரராய்ப் பணி செய்து வாழ்ந்த கோசர்களை அடக்கி அவர்கட்குத் தலைமை மேற்கொண்ட மாறன் தலைவனாக, ஏனைக் குடியினரும் குறுநில மன்னரும் வந்து அரசவையை அணி செய்வர். அவர்கள் சூழ்ந்திருக்க நடுவே நெடுஞ்செழியன், தனது அரிமா சுமந்த அரசு கட்டிலில்,

“முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி”

வீற்றிருப்பன். பாண்டியர் குடிக்குரிய மாறனை “பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும் பெயர் மாறன்” என்று மாங்குடி கிழார் மனம் மகிழ்ந்து புகழ்கின்றார்.

எழுவர் படையெடுப்பு
இவ்வண்ணம் சிறப்புற்று வாழும் நெடுஞ்செழியன் நாளும் வெற்றியும் புகழும் மிக்கு விளங்கினமை சிலருடைய உள்ளத்தில் அழுக்காறாய்த் தோன்றிப் பெரும்பகையாய் மலர்ந்தது. அவருள் முடிவேந்தர் குடியைச் சேர்ந்த சோழ னொருவனும் சேரனொரு வனும் முன்னணியில் நிற்ப, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்ற குறுநிலத்தரசர் ஐவரும் உடன் எழுந்தனர். ஆக, இவ்வெழுவர் படையும் கடல் போற் பெருகிப் பாண்டி நாட்டுள் படர முற்பட்டது. திதியன் சோழ நாட்டினன்; எழினி தகடூர் நாட்டு அதியமான்களுள் ஒருவன்; எருமையூரன், இன்றைய மைசூர் நாட்டு மைசூர்ப் பகுதியைச் சேர்ந்தவன்; மைசூரின் பழம் பெயர் எருமையூர்; எருமையூர், மகிஷவூராகி ‘மைசூர்’ என மருவி விட்டது. இருங்கோவேள் இக்காலத்து மணப்பாறைப் பகுதிக்கு உரியவன்; ஒருகாலத்தே இவ்விருங்கோ வேள்கட்குக் கொடும்பாளூர் தலைமையிடமாய் இருந்தது பொருநன், மதுரைமாவட்டத்துப் பெரியகுளம் பகுதியைச் சார்ந்திருந்த கோடை மலைத் தலைவன்; அவனுடைய பொருநன் மாமலை, ‘பெருமாமலை’ யென மருவியிருக்கிறது. எழுவருள் முற்பட்ட சோழனும், சேரனும், முடிவேந்தர் குடியில் தோன்றி நாடுகாவல் புரிந்தொழுகியவராயினும் பாண்டியன் நெடுங்செழியற்குத் தோற்றுப் பரிசழிந்தமையின் சான்றோர்களால் பெயர்குறிக்கப்படாராயினர் போலும்!

நெடுஞ்செழியனுடைய புகழ் மிகுதியும் இளமை வளமும் சோழனுக்கும் சேரனுக்கும் அழுக்காறு விளைவிக்கவே, அவர்கள் இருவரும் தமக்குத் துணையாக இக்குறுநிலத் தலைவரை விழைந்து கொண்டனர். சோழன் காவிரி நாட்டின் தென்கிழக்குப் பகுதியான பட்டுக்கோட்டை அறந்தாங்கிப் பகுதியில் இருந்தான்; அவனுக்குக் காவிரிநாட்டுத் திதியனும், கொடும்பாளூர் இருங்கோவேளும், சோழ நாட்டை அடுத்துள்ள தகடூர் அதியமானான எழினியும் அவனோடு தொடர்புடைய எருமையூரனும், சேரநாட்டை அடுத்திருக்கும் கோடைமலை நாட்டுப் பொருநன் சேரனைச் சார்ந்தும் போக்குடன் பட்டனர்.

பாண்டிநாட்டின் வடவெல்லையாகிய வடவெள்ளாறு கடலொடு கலக்கும் நாட்டுக்கு அந்நாளில் கோனாடு என்பது பெயர். அவ்யாற்றின் வடகரைப் பகுதி ‘வடகோனாடு’ எனவும், தென் கரைப்பகுதி ‘தென்கோனாடு’ எனவும் வழங்கியதுண்டு. பின்னர் இவை பிற்காலச் சோழர் காலத்தில் ஒன்று பட்டு ‘இரட்டை பாடி கொண்ட சோழவளநாடு’ என்றும் ‘கடலடை யாது இலங்கை கொண்ட சோழவளநாடு’ என்றும் பெயர் கொண்டு நிலவின. வடகோனாட்டில் வடபகுதியில் இருந்து காவல் புரிந்தான் சோழன். அதன் தென்பகுதியான கோனாட்டில் வேளிர் இருந்து நாடு காவல் செய்தொழுகினர். பாண்டியன் நெடுஞ்செழியனை இப்பகுதிக்கு ஈர்த்துப் போர் தொடுப்பின் அவன் படை நெடிது போதர ஆற்றாது வலிகுன்றுமென எண்ணினர். அதனால் அப்பகுதியில் போர் தொடங்கிற்று.

பாண்டியன் சூளுரை
அவர்கள் பாண்டி நாட்டின் அப்பகுதியில் வாழ்ந்த வேளிர் ஊர்க்குள் நுழைந்து வெட்சிப் போர் தொடுத்தனர். அவர்களை எதிர்த்துக் கரந்தைப்போர் உடற்றி வேளிர் வலியிழந்து நெடுஞ்செழியன்பால் முறையிடலும், அவன் போர்க்கு எழுந்தான். அவனை ‘இளையன்’ என இகழ்ந்து சினம் கொள்ளுமாறு சிறுசொல் சொல்லிப் பகைவர் எழுவரும் தூற்றினர். செழியன், அவர் கூற்றின் மெய்ம்மையை ஒற்றராலும், சான்றோராலும் உணர்ந்து, ‘படை பண்ணுக’ எனத் தன் தானைத் தலைவரைப் பணித்தான்; பகைவரது ஒற்றர் அறியுமாறு, “இளையன் இவன்” என என் நெஞ்சு வருத்தக்கூறி, “நெடுநல் யானையும் தேரும் மாவும், படையமை மறவரும் உடையம் யாம்” என்று தம்முள் செருக்கிச் “சிறு சொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை, அருஞ்சமம் சிதையத் தாக்கி” ஒருங்கே அகப்படுப்பேன்; அவ்வாறு அகப்படுக்கேனாயின்,

“என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
கொடியன்எம் இறைஎனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே”

என்று வஞ்சினம் உரைத்து, வாளும், வேலும் வில்லும் ஏந்திப் போர்க்களம் புகுந்தான். தொடக்கத்தில் பகைவர் வெட்சிப் போர் நிகழ்த்திய பகுதியில் இருந்து காவல் புரிந்த வேளிர் வேள் எவ்வியின் வழியினர்; அவர்கள் ஆண்ட அப்பகுதி மிழலைக் கூற்றம் எனப்படும்; அதன் தலைநகரமாகிய மிழலை பிற்காலத்தே பெருமிழலை என வழங்கிற்று. நெடுஞ்செழியன் அப்பகுதிக்குத் தான் தலைமை பூண்டு போர் செய்யத் தலைப்பட்டான்.

பெரும்போர்
நாட் காலையில் குளிர்ந்த நீராடிப் போர்க் கோலம் கொண்டு நெடுஞ்செழியன் தொடங்கிய போர், பகற்போது கழிவதற்குள் சிதையத் தொடங்கிற்று. பகைவர்படை பாண்டிப்படை முன் நிற்கமாட்டாது நிலையழிந்தது. போர்க் களத்தில், காலிற் கழலும், முடியில் உழிஞையும் அணிந்து, கையில் வில்லேந்திக் தேர்த் தட்டின்மேல் அவன் நிற்பது கண்ட இடைக்குன்றூர் கிழார் என்னும் சான்றோர், மனம் மகிழ்ந்து உவகைமீ தூர்ந்து அவனது இளமையை வியந்து,

“நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றேன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி; தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே.”

என்று பாடுவாராயினர். அக்காலை அவனைச் சூழ்ந்து பகை மறவர் மேன்மேலும் வந்து உடன்றனர்; அவர் வருந்தோறும் நெடுஞ்செழியன் வியப்போ இகழ்ச்சியோ கொள்ளாமலும், அவர்களை அழுந்தப் பற்றிச் சுழற்றி வானத்தில் எறிந்த போது கண்டோர் கை கொட்டி ஆரவாரித்தாராக, அதற்காக மகிழ்ச்சியோ பெருமிதமோ கொள்ளாமலும் அச்செயல்களை மிக இலேசாக நிகழ்த்தியது இடைக்குன்றூர் கிழார்க்கு எல்லையற்ற இன்பத்தை நல்கிற்று; அதனால் அவர்,

“உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழித்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்த்தெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே”

என்று பாடி மகிழ்ந்தார்.

இந்நிலையில் பகற்பொழுது கழிந்துகொண்டிருந்தது; பகைவர் கூட்டம் மாய்ந்த வண்ணமிருந்தது. பகற்போது சுருங்கவும் நெடுஞ் செழியனது போர் கடுமை மிகுந்தது; “வீரரோ பலர்; பகற்போது சிறிதே உளது; கொல்லப்படாது ஒரு சிலர் எஞ்சுவரோ என இடைக்குன்றூர் கிழார் எண்ணிப் பாடினாராக, பகைவர் திரள் பஞ்சுத்துய்போல் பறந்து போயிற்று; வேளிர் வீற்று வீற்று ஓடினர்; பாண்டியன், பகைவர் நின்ற களத்தையும், விட்டொழித்த முரசத்தையும் கொண்டு வெற்றி பெற்றான். பின்னர் வேந்தரும் வேளிருமாகிய பகைவர் எழுவரும் கெட்டழிந்த திறம் அவரவர் நாடுகட்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால் வியப்புற்ற கிழார்,”

“விழுமியம் பெரியம் யாமே; நம்மின்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிதுஎன
எள்ள வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புலத்திற் பெயர
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே”

என்று பாடி நாடு முழுதும் நன்கு அறியச் செய்தார். இதனாலும் அமையாமல், “ஒருவனோடு ஒருவன் நின்று பொருதலும் தொலைதலும் இயற்கை; எழுவர் நல்வலம் அடங்க ஒருவன் ஒருதானாகிப் பொருது ஒழித்தல் இன்றுதான் புதுமையாகக் கண்டோம்” எனப் பாடிப்பாடி மகிழ்ந்தார்.

வாகை சூடிய நெடுஞ்செழியன் மாங்குடி கிழார் முதலிய சான்றோர் துணையாக ஆலங்கானப் போர்க்களத்தில் வீழ்ந்தோர் பொருட்டும், தான் பெற்ற வெற்றி குறித்தும் மறக்கள வேள்வி செய்தான். அவ்வேள்வியில் ஒரு பால் மறவர் கூடி, போரில் வீழ்ந்த வீரர் தலைகளை அடுப்பாகக் கூட்டி, அவர் உடற்குருதியை உலைநீராகப் பெய்து, வெட்டுண்டு விழ்ந்த கைகளைத் துடுப்பாகப் பற்றிச் சமைத்த நிணக்கூழைக் கொற்ற வைக்குப் பலியூட்டினர்; மற்றொரு பால்,

“ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய”

அறவேள்வி நிகழ்ந்தது அக்காலை மாங்குடிகிழார் செழியனைப் பாராட்டி, “வேந்தே, நின்பகைவர் நினக்கு மாற்றார் என்னும் பெயர் பெற்றும் நினக்கு ஆற்றாது இறந்துபட்டாராயினும், மேலுலகம் எய்தி ஆங்கு வாழ்கின்றாராகலின், அவர் பெரிதும் நோற்றவரே யாவர்” என்ற கருத்துப்படப் பாடினர். கேட்டோர் பலரும் மகிழ்ச்சியால் உவகைக் கிளர்ச்சி கொண்டு இன்புற்றனர். அன்று முதல் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனச் சான்றோர் பாராட்டும் பேரும் பீடும் கொண்டு பிறங்குவானாயினன். பகைவர் எழுவரை ஒரு பகலில் வென்ற திறத்தை வியந்து, “கொய் சுவற்புரவிக் கொடித் தேர்ச் செழியன், ஆலங்கானத்து அகன்றலை சிவப்ப… எழுவர் நல்வலம் அடங்க ஒரு பகல், முரைசொடு அவர்குடை யகப்படுத்து உரை செலக் கொன்றான்” என்று நக்கீரரும், “பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான், எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன், நேரார் எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத் தார்ப்பு” எனக் கல்லாடனாரும் பிறரும் எடுத்தெடுத்துக் கூறியுள்ளனர். அவன் போர்ப் புகழ் புலவர் பாடும் புகழ்கொண்டு பொலிந்தது.

முத்தூற்றுக் கூற்றம்
நெடுஞ்செழியன் ஆட்சியிற் கிடந்த தென்பாண்டி நாட்டின் கீழ்க்கடற் பகுதியில் முத்தூற்றுக்கூற்றம் என்பது ஒருபகுதி; அதன் தலைநகர் முத்தூறு என்பது. அதற்கும் திருநெல்வேலிக்கும் ஒருபெருவழி இருந்ததெனத் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கல்வெட்டொன்று1 குறிக்கின்றது. பாண்டிநாட்டுக் கப்பலூர், சோழராட்சியில், உலகளந்த சோழநல்லூர் என்ற பெயர் தாங்கியிருந்தபோது தோன்றிய கல்வெட்டு, அதனை “முத்தூற்றுக் கூற்றத்து உலகளந்த சோழ நல்லூரான கப்பலூர்”2 என்று கூறுகிறது. வேறொரு கல்வெட்டுப் பாண்டி நாட்டு வல்லநாட்டில் ஒரு முத்தூறு உண்டென3 உரைக்கின்றது. இவ்வாறு இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தும் இசைகொண்டு விளங்கிய முத்தூற்றுக் கூற்றம், சங்க காலத்தில் வேளிர்களின் ஆட்சியில் இருந்து, “பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர், குப்பை நெல்லின் முத்தூறு”4 எனப் புகழ்மிக்கு நின்றது. இவ்வேளிரும் தலையாலங்கானத்துப் போரில் நெடுஞ் செழியனுக்கு மாறாக எழுந்ததனாலோ, வேறு எதனாலோ, அவர் காவலிலிருந்த முத்தூற்றுக் கூற்றத்தை நம் நெடுஞ்செழியன் பற்றித் தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான்.

குடபுலவியனார்
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் புகழ் தமிழகம் முழுதும் நன்கு பரவிப் பண்பு மேம்பட்டது. பகைதெறுவது ஒன்றே நாட்டரசின் செயலன்று; நாட்டு மக்களின் வாழ்வை, உண்டி, உடை, உறையுள் முதலியவற்றால் நலம்பெறச் செய்வது மிகச்சிறந்த ஒன்றாகும். உணவுக்கும் உடைக்கும் பிறநாடுகளை எதிர்நோக்குவது நாட்டுக்கு அழகாகாது. திருவள்ளுவனாரும், “நாடு என்ப நாடாவளித்தன; நாடல்ல நாட வளந்தரும் நாடு” என்று வற்புறுத்தியுள்ளார். பாண்டி நாட்டின் இயற்கை அமைப்பு ஏனை நாடுகளைப்போல மழைவளம் பெறுதற்கு ஏற்றதாக இல்லை. மேற்கிலும் வடக்கிலும் நெடிய மலைத்தொடர்கள் நின்று தென் மேற்கிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் வரும் மழைமுகில்களைத் தடுத்துவிடுவதால், மழை நலம் போதிய அளவு கிடைப்பது இல்லை. பாண்டி நாட்டின் மேலைப் பகுதி உயர்ந்தும் கீழைப்பகுதி தாழ்ந்தும் இருப்பதால் மேற்குமலையாய பொருப்பினின்று இழியும் ஆறுகளும் விரைந்தோடிக் கீழ்க்கடல் அடைந்தன. நிலம் சமநிலை பெறாமையால் ஆறுகள் பரந்து கிளை பல பிரிந்து பாயும் திறம் இழந்தன. இதனால் பாண்டி நாடு நெல்வளம் குன்றியிருந்தது.

அதனைக் கண்டுணர்ந்த சான்றோர்களில் குடபுலவியனார் என்ற மேலோர் பாண்டி நாட்டின் உணவுக் குறை நிறைவுபெறுதற்குரிய வழிகாண முயன்றார். பெருமழை பெய்வித்தற்குப் பாண்டி வேந்தர் வேள்வி பல செய்வது கண்டார்; அதனால் நிரம்பிய பயன் விளையா மையும் நன்கு கண்டார்; அம்முயற்சி ஒருபால் இருக்க, உருவான செயல்களையும் பாண்டி நாட்டரசு செய்தல் வேண்டுமெனக் கருதினார். நாட்டில் பெய்யும் மழை நீர் வெறிதே ஓடிக் கடலை அடைவது அவர்க்கு வியப்பைத் தந்தது; பள்ளப் பாங்கில் உயர்ந்த கரைகளைக் கட்டி வெறிதோடும் நீரைத் தேக்கிக் கண்வாய்களின் வழியாகக் கரைக் கீழ்க் கிடந்த நிலங்களில் நெல் விளைவித்துக் கொள்ளலாம் என்ற கருத்தை மேற்கொண்டார். இதனை நாடாளும் வேந்தனான நெடுஞ்செழியனுக்கு உரைக்க எண்ணி அவனை அடைந்தார்.

வேந்தன் அவரது சான்றாண்மையையும் புலமையையும் நன்கு அறிந்து அவர்க்கு உரிய சிறப்பை வழங்கினான். அவர் அவனுடைய ஆலங்கானத்துப் போரைச் சிறப்பித்துப் பாராட்டி, முடிவில், “வேந்தர்கள் மறுமையில் மேலுலக இன்பம் வேண்டி வேள்வி செய்வார்; ஏனையரசரினம் உயர்தல் வேண்டிப் பகைவரை வென்று களவேள்வி செய்வர்; பெருங் கொடை வழங்கி இம்மையில் இறவாத புகழ் நடுவர்; இம்மூன்றும் சிறந்தனவே; எனினும் நாட்டு மக்கட்கு உணவு நல்குவதினும் சீரியது வேறில்லை;”

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே”

என்று முன்மொழிந்து, “வித்தி வானம் நோக்கும் புன்புலம் மிக்க பரப்பிற்றாயினும் நாடாளும் வேந்தனுடைய முயற்சிக்குப் பயன் படாது,” என்று சொன்னார்.

நெடுஞ்செழியன் உள்ளத்தில் அவருடைய சொல் நன்கு பதியவில்லை. பல்வகை வேள்விகள் செய்வதிற் படர்ந்திருந்த அவன் கருத்தைப் பைய மாற்றி, “இனி, பள்ளப் பாங்குகளில் நீர்நிலை பெருக உயர்ந்த கரைகளைக் கட்டி மழை நீரைத் தேக்கி நிறுத்து வையாயின், நெல் வளம் பெருகும்; செல்வம் நிலைபெறும் மழை நீரை இவ்வாறு தடுத்துப் பயன்கொள்ளாதோர் செல்வத்தைப் பெற்றும் சிறப்படையமாட்டார்கள்,” என்று தெருட்டினார். அவனும் அவர் கருத்தை யுணர்ந்து நாட்டில் பல இடங்களிலும் நீர் நிலைகள் அமைத்தான். ‘கண்வாய்’ எனப்படும் நீர் நிலைகள், அன்று முதல் பெருகத் தோன்றி, நாளடைவில் பாண்டி நாடு எங்கும் உண்டாய் விட்டன. பாண்டி நாட்டில் இருப்பது போல ஏனைச் சோழ சேர நாடுகளிலும் தொண்டை நாடு கொங்கு நாடு ஆகிய வற்றிலும் அத்துணை மிகுதியாக இல்லை. கண்வாய் எனப் பெயர் கொண்டு பாண்டி நாட்டில் தோன்றிய அவை, பிற பகுதிகளில் ‘ஏரி’ எனவும், ‘குளம்’ எனவும் பெயர் பெற்றன. பாண்டி நாட்டில் இப்போது அவை ‘கம்மாய்’ என மருவி வழங்குகின்றன.

நெடுஞ்செழிய விண்ணகர்
இச்செயலால் பாண்டி நாடு நெல் வளமும் ஏனைச் செல்வச் சிறப்புப் பெற்றுப் பெருமை பெறுவதாயிற்று. நெடுஞ் செழியன் புகழ் பெருகிச் சோழ நாட்டின் வடபகுதியிலும் பரந்தது. சென்னைக்கு அண்மையில் ‘பூந்தமல்லி’ என இன்று வழங்கும் பேரூர்க்குச் சிலர் ‘பூவிருந்தவல்லி’ எனப் பெயர் குறிப்பர்; அதன் பழம் பெயர் ‘பூந்தண்மலி’ என்பது; அங்கே நெடுஞ்செழியன் பெயரால் திருமால் கோயில் ஒன்று உளது. அதனைக் கல்வெட்டுக்கள், “ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பூந்தண்மலியில் நெடுஞ்செழிய விண்ணகர் இருந்த தேவர்”1 என்று குறிக்கின்றன.

பல்லவ வேந்தர்


1. முதல் மகேந்திரவர்மன்
களப்பிரர் இடையீடு

சங்க காலச் சோழபாண்டியர்க்குப் பின் தமிழ்நாடு களப்பிரர் என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன்சீரும் திருவும் இழந்து சமழ்ப்புற்றது. வேற்றுமை மாசின்றி இருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலைநாடுகளும் கீழை நாடுகளும் போற்றிப் பரவ வீற்றிருந்த அதன் புகழ் மறைந்தது. அறவர் அறவராய் மறவர் மறவராய் மாண்பு பெற்ற தமிழர் மாற்றவர்க்குப் பணிந்து அவருடைய அடிவருடும், அடியராகும் அடிமை நிலை எய்தினர். தமிழ் இயலும் இசையும் கூத்தும் தமக்குரிய இடமிழந்து இறந்தொழிந்தன. அரசியல்-வாணிகம்-தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுகள் மறைந்து போயின.

தமிழ்நாட்டின் திருவேங்கடப் பகுதிக்கு வடக்கில் வேற்று மொழியும் நாகரிகமும் படைத்த மக்களினங்கள் சங்க காலத்தில் வாழ்ந்தன. அவர்கள் வாழ்ந்த நாடுகளைச் சங்கத் தொகை நூல்கள் “மொழி பெயர் தேஎம்” என்று குறித்தன. அந்நிலப் பகுதிகள் நீர்வளம் குன்றிக் கரிசல் மண் பரந்த கரும்பாலை யாயிருந்தமையின், அப்பகுதியில் வாழ்ந்தோர் ஆறலைத்தலும் சூறையாடுதலும் தொழிலாகக் கொண்டு, அவ்வப்போது தமிழ்நாட்டிற் புகுந்து குறும்பு செய்தொழுகினர். அவருள்களப்பிரர் என்பார் ஒரு கூட்டத் தவராவர். சங்ககால வேந்தரது வலி குறைந்த சமயம் நோக்கி அவர்கள் தொண்டை நாட்டிற் புகுந்து, கொங்கு நாட்டின் வழியாகப் பாண்டிநாடு அடைந்து, முடிவில் இடைக் காலத்தில் தோன்றிய பாண்டி மன்னர்களால் வேரோடு அழிப்புண்டு மறைந்தனர்.

அவர்கட்குப் பின்னே வடபுலத்தினின்று புகுந்தவர் பல்லவர். அவர்கள் தென்னாடு நோக்கிய போது ஒருபால் ஆந்திர மன்னர் களான சாதவாகனரும் ஒருபால் சளுக்கியரும் அரசு நிலையிட்டு வாழ்ந்தனர். நாளடைவில் சாதவாகனர் வீழ்ந்தனர். அக்காலத்தே பல்லவர் ஆந்திர நாட்டிற் படர்ந்து பின் தொண்டை நாட்டு புகுந்து அரசு நிறுவி வாழலாயினர். சளுக்கியர் குறிப்புக்களிலும் பல்லவர் காலச் செப்பேடுகளிலும் தமிழ்நாட்டில் குறும்பு செய்தொழுகிய களப்பிரைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

பல்லவர் கால நிலை
பல்லவர்களின் ஆட்சி சுமார் ஆறு நூற்றாண்டுகள் நடை பெற்றது. அவர்களுடைய அரசு தமிழ்நாட்டில் தொடங்கிய போது பௌத்தம், சயினம் என்ற சமயங்கள் சிறந்து விளங்கின. அவற்றின் வாயிலாக வடமொழிக் கல்வியும் வழக்காறும் தமிழ்நாட்டில் வளம்பெற்றன. ஆயினும், பல்லவராட்சியில் பௌத்தசமயம் தன் செல்வாக்கு இழந்தது; சயினம் ஓரளவு பெருஞ் சிறப்பு எய்தித் தமிழ்நாடு முழுதும் பரவிற்று. பல்லவரின் இடைக்காலத்தில், வைதிகம் மருவிய சைவ வைணவச் சமயங்கள் உயர்ந்து ஓங்கின; சயினம் தலைமை யிழந்து சரிந்தது.

தமிழ் நாட்டில் தொன்று தொட்டு நிலவிய சமயங்களான சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் வேதியருடைய வைதிகம் கலந்து நின்றமையின், வடநூற் புராண இதிகாசக் கொள்கைகளும், மிருதி வழித்தோன்றிய வருணாசிரமக் கொள்கைகளும் நாட்டில் நன்கு பரவின; அதனால் பழந்தமிழருடைய அகமும் புறமுமாகிய தமிழ் வாழ்வு தலை தூக்க முடியாது பழங் கதையாய் மறைந்து போயிற்று. சாதியென்ற சொல்லுக்கே இடந்தராமல் இருந்த தமிழரினம், பல்லாயிரம் சாதிகளாகப் பிரியத் தலைப்பட்டது. பல்லவரது தாய்மொழியும் வடபுலத்து மொழிகளுள் ஒன்றாய் வடமொழிச் சார்பு பெரிதும் கொண்டு இயன்றமையின், அவரது ஆட்சியில் வட மொழியே மிக்க சிறப்பும் வளர்ச்சியும் பெற்றது. இன்றும் அவ் வடமொழிச் சார்புகொண்ட வங்காளம், இந்தி, பஞ்சாபி, குசராத்தி, மராட்டம் முதலிய வடநாட்டு மொழியினரும், கன்னடம் தெலுங்கு மலையாளம் என்ற தென்னாட்டு மொழியினரும் வடமொழிக் கண் ஊக்கமுடையராயிருப்பது இதற்குப் போதிய சான்றாகும். அதனால் பல்லவராட்சியில் வடமொழிக் கல்வியும் வடநூற் கொள்கைகளும் சிறந்த ஆதரவு பெற்றதில் வியப்பில்லை.

வைதிகத்துக்கு மாறுபட்டு நின்ற பௌத்த சயின சமயங்களை வீழ்த்தற்கு அதனோடு மருவி நின்ற சைவ வைணவ சமயங்கள் ஒருமுகமாகச் சமயப் பூசலிடத் தொடங்கின. அப்பூசலில் அன்பு நெறியெனப்படும் பத்தி நெறி பிறந்து சைவர்க்கும் வைணவர்க்கும் மிக்க துணை செய்தது. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றி அப்பத்தி நெறியை வளர்க்க முயன்று, பல்லாயிரக்கணக்கான இசைப் பாட்டுக்களைத் தமிழிற் பாடினர். நாடெங்கும் சிவன் கோயில்களும் திருமால் கோயில்களும் பெருகின. வடமொழிக் கல்விக்கு இக்கோயில்கள் இடமாயின. மக்களின் பொது வாழ்வும் கோயில்களோடு பிணிப்புற்றது. மரத்தாலும் செங்கற்களாலும் அமைந்திருந்த கோயில்கள் கருங்கற்களால் கட்டப்பெற்றன. இக்கற்கோயில்கள் யாவும் பல்லவராட்சியில் தான் முதன் முதலாகத் தோற்றம் பெற்றன. வடநூற் புராணக் கதைகளும் இதிகாசத் தொடர்புகளும் அப்போது தான் கோயில்களில் இடம் பெற்றன. மன்னர்களின் தோற்றம் குடிவரலாறு ஆகிய வற்றைப் பிரமதேவனிலிருந்து கூறும் மரபு பல்லவர் காலத்தில் தான் தொடங்குவதாயிற்று. பல்லவர் தோற்றம் கூறும் செப்பேடுகள், பிரமதேவன்பால் தோன்றி ஆங்கீரசன், பிருகஸ்பதி, பரத்துவாசன் என்ற முனிவர்கட்கு இறங்கி, துரோணன் அசுவத்தாமன் முதலிய இதிகாச மக்களோடு தொடர்புற்றது என்றும், பல்லவர் முதல்வனான பல்லவன் என்பவன், துரோணன் மகனான அசுவத்தாமனுக்கும் மேனகை யென்னும் நாடகக் கணிகைக்கும் பிறந்த மகனாவான் என்றும், அவன் இளந்தளிர்களின் மேல் கிடந்தமையினாலும், தளிர்களுக்குப் ‘பல்லவம்’ என வடமொழி பெயர் கூறுவதாலும் அவன் ‘பல்லவன்’ எனப்பட்டான் என்றும் காசாக் குடிச் செப்பேடுகளும் பிறவும் கூறுகின்றன.

மகேந்திரவர்மன்
இப்பல்லவருள் சிம்மவிஷ்ணு, முதல் மகேந்திரவர்மன், முதல் நரசிங்கவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிங்கவர்மன், இரண்டாம் பரமேச்சுரன், நந்திவர்மன், தந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மன், நிருபதுங்க வர்மன் முதலிய பலர் தொண்டை நாட்டிலிருந்து ஆட்சி புரிந்துள்ளனர். அவருட் சிறப்புமிக்கோர் சிலர். அவருள் முதல் மகேந்திரவர்மன் ஒருவனாவான்.

பல்லவ மன்னருள் சிம்ம விஷ்ணுவுக்குப் பின்னர் விளங் கியவன் மகேந்திரவர்மன். இவனுக்குப் பின் வேறு சிலர் மகேந்திரன் என்ற பெயர் தாங்கினமையால் இவனை முதன் மகேந்திரன் என்று வரலாற்று ஆராய்ச்சியறிஞர் குறிப்பராயினர். கி.பி. 600 முதல் 630 வரை இவனது ஆட்சி நிலவிற்றென்பது வரலாற்றுக் கொள்கை.

சளுக்கியர்-பல்லவர் போர்
மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டின் வடக்கில் சளுக்கிய மன்னர் அரசுசெலுத்தி வாழ்ந்தனர். அவர்கட்கும் பல்லவர்கட்கும் தீராப்பகைமை இருந்துவந்தது. அந்நாளில் அருஷவர்த்தனன் என்னும் வட புல வேந்தன் தனது அரசியலாட்சி தென்புலத்திலும் பரவி விளங்க வேண்டுமென விழைந்து படை யெடுத்துப் போந்தான். தென்புலத்துச் சளுக்கி வேந்தர் தலைவனாக அக்காலத்தே சிறப்புமிக்கிருந்த இரண்டாம் புலிகேசி என்பான் அந்த அருஷனைவென்று, வட புலத்துக்கே திரும்பிப் போகச் செய்தான். வெற்றி வீறு கொண்ட புலிகேசி தன் நாட்டினைச்சூழ இருந்த குறுநில மன்னரை அடக்கிப் பல்லவர் கைப்பட்டிருந்த வேங்கி நகரைத் தன்கைப்படுத்தித் தலைசிறந்து நின்றான். வேங்கிநகர் சளுக்கியருக்கே உரியது; அதனைப் பல்லவர் வென்று கைக் கொண்டிருந்தனர். அதனால் புலிகேசி பல்லவரோடு போர் தொடுக்க வேண்டியவனானான். வேங்கிநகர்க்கண் அப்போது நிறுவப்பெற்ற வெற்றித்தூணில் புலிகேசி, தான் பல்லவரை வென்று மேம்பட்ட விறல் மிகுதியைப் பொறித்துள்ளான். பின்பு அவன், தன் தம்பியான குப்தவிஷ்ணு என்பவனை வேங்கிநகர்க்கண் இருந்து நாடு காவல் புரியுமாறு பணித்து, மேலும் தன் வெற்றி நலத்தை மிகுவிக்கக் கருதிப் பெரும்படையுடன் தொண்டை நாட்டிற்குட் புகுந்தான்.

தொண்டை நாட்டுக்குக் காஞ்சிமாநகரே தலைநகர் என்பது உலகறிந்த செய்தியாகும். அதன்கண் இருந்து அந்நாளில் அரசு செலுத்தினவன் மகேந்திரவர்ம பல்லவன். அந்நாளில் பல்லவராட்சி தொண்டை நாட்டையடுத்திருந்த வடபுலத்தும் பரந்திருந்தது. புலிகேசியின் செயல் திறத்தை அறிந்திருந்தும் மகேந்திரனை உள்ளிட்ட பல்லவர்கள் அவனை எதிர்த்துப் பொருது வெல்லும் அளவுக்கு வன்மையுடையவராய் இல்லை. அதனால், புலிகேசியின் அடற்றகைக்கும் ஆற்றலுக்கும் ஆற்றானாய் அஞ்சிப் பின்னிட்ட மகேந்திரன் தொண்டை நாட்டைக் கைவிட்டுச் சோழ நாட்டுக்கு ஓடினான். ஓடினவனை மேலும் துரத்திச் செல்ல விழையாமல் புதிது கைப்பற்றிய தொண்டை நாட்டுக் காஞ்சி நகர்க் கண்ணே தங்கினான் புலிகேசி.

சோழநாடு புகுந்த மகேந்திரனுக்கு ஆங்கு வாழ்ந்த தமிழர் பெரும்படையுதவினர். வடவிமயத்தில் புலிப்பொறி பொறித்து வான்புகழ் பெற்ற தொன்மையும் வன்மையும் படைத்த தமிழ்ப் படையின் துணைகொண்டு மகேந்திரன் புலிகேசியோடு போர் தொடுத்தான். இருவர் படைகளும் தொண்டை நாட்டிற் புல்லலூர் என்னுமிடத்தே நேரெதிர்ந்து போர் செய்தன. அப்போது அருஷனை வென்ற ஆண்மை யுடையேமெனத் தருக்கிய புலிகேசியின் தறுகண்மை தமிழ்ப் படையின் தகைப்பரும் ஆற்றலால் சரிந்தொழிந்தது. மொய்யமரில் முடி தப்பியது தன் முன்னோர் செய்த நல்வினையென எண்ணிக்கொண்டு புலிகேசி தொண்டை நாட்டின் நீங்கித் தன் வேங்கி நாட்டுக்கே விரைந்து சென்றான்; இவ்வாறு புறந்தந்து ஓடிய புலிகேசி, மகேந்திரன் உயிரோடு இருக்கும் வரையில் தமிழ்த் தொண்டை நாட்டில் தலைகாட்டவே இல்லை. மகேந்திரன் முன்பு போல் காஞ்சி நகர்க்கண் இருந்து ஆட்சி புரிந்து வரலானான்.

நாட்டு நிலை
களப்பிரர் காலத்திற் புகுந்த பௌத்தம் முதலிய வேற்றுச் சமயங்களின் கருத்துக்கள் நாட்டில் பரவி நிலைகொண்டன; எனினும் சயினம் போலப் பௌத்தம் அத்துணை வளம் பெற வில்லை. காஞ்சி நகர்க்கண் பௌத்த சங்கம் இருந்து செல்வத்தால் சிறந்து விளங்கிற்று; ஆனால் அதன்பணி நன்கு நடை பெறவில்லை. சயின சமயம் ஓரளவு முயன்று பல்லவ மன்னர் உள்ளத்தைக் கவர்ந்தது. மகேந்திரன் சயின சமயத்துக் கருத்துக்களை மேற்கொண்டு அதன்பால் மிக்க பற்றுக்கொண்டிருந்தான். அக்காலத்தே பொருட் பெருக்கம், வாணிகம், தொழில் முதலியவற்றினும் சமயச் செல்வாக்குக்கே அரசும் மக்கள் மனமும் இடம் தந்து ஒழுகின.

சைவ சமயத்தின் சார்பில் பாசுபதம், பைரவம் காபாலம் முதலிய சில உட்சமயங்கள் தோன்றி உலவின. இச்சமயங்கள் யாவும் வடமொழியிலேயே இயன்றன; பல்லவனான மகேந்திரவர்மனும் பிறரும் வடமொழி நன்கு பயின்று புலமை பெற்றிருந்தனர். ஆங்கிலராட்சியில் ஆங்கிலம் சிறப்பிடம் பெற்றும் பொது மக்களிடம் சென்று பரவாதொழிந்தது போலப் பல்லவராட்சியில் வடமொழிக் கல்வியும், வாய்ப்புப் பெற்ற சிலரிடையே பயிற்சியுற்று விளங்கிற்று. எங்கும் எவர்பாலும் சமயக் கருத்துப் பற்றிய மொழிகளும் செயல்களுமே மிக்கிருந்தன. இதனால் பழமையும் புதுமையுமாகிய சமயங்கள் ஒன்றோடொன்று மோதின; ஒன்றனையொன்று பழித்துப் பூசலிடவும் தொடங்கின. அது கண்ட மகேந்திரன் தானும் சயின சமயத்தின் வழிநின்று, ஏனைப் பௌத்தம் பாசுபதம் காபாலம் ஆகிய சமயங்களைப் பழித்து ஒழுகும் பண்புடையனானான். அப்பண்பு வெளிப்படுமாறு அவனே, மத்தவிலாசம் என்ற ஓரங்க நாடகத்தை எழுதினான்.

இம் மகேந்திரன் காலத்தில் சோழ நாட்டில் சோழ வேந்தர் சிறப்புக்குன்றி ஒடுங்கிக் கிடந்தனர். அதனால் பல்லவராட்சி சோழ நாட்டையும் பாண்டி நாட்டின் வட வெல்லைப் பகுதியையும் தன்பால் கொண்டிருந்தது. பாண்டி நாட்டில் மாத்திரம் பாண்டியர் மதுரைக்கண் இருந்து அரசு புரிந்தொழுகினர். எனினும், அவருள் மகேந்திரனோடு ஒப்ப இருந்த பாண்டியனான நெடுமாறன் சோழர் குடிப்பெண்ணான ‘மானி’ என்ற பெயர் கொண்ட மங்கையர்க் கரசியை மணந்து வாழ்ந்தான். அவனது நாட்டில் புகுந்த சயின சமயம் பைய அவன் மனத்தைப் பற்றியது. கொள்கையால் அவனும் சயினனானான். சயினத் துறவிகளான சமணர் மதுரையைச் சூழ்ந்த ஆனைமலை நாகமலைப் பகுதிகளில் பெருகி வாழ்ந்தனர்.

தருமசேனர்
மகேந்திரனுடைய ஆட்சியில் சமய வாழ்வு முதலிடம் பெற்றிருந்தமை காரணமாகச் செல்வர் பலர் சமய நூலாராய்ச்சியில் தலைப்பட்டனர். திருவதிகைக்கு மேற்கிலுள்ள திருவாரூரில் புகழனார் என்ற வேளாண்குடிச் செல்வர் ஒருவருடைய மகன் தோன்றிப் பல்வேறு சமயங்களையும் படித்துச் சிறப்படைய விரும்பினான். முடிவில் அவன் சயின சமய நூல்களை நன்கு பயின்று தருமசேனர் என்ற பட்டம் பெற்றுத் திருப்பாதிரிப் புலியூரில் அந்நாளில் விளங்கிய சமணர் சங்கத்தில் இடம் பெற்று இலங்கினான். தருமசேனராகிய போது, அவருடைய குடும்பம், தலைவர்களான புகழனாரையும் அவர் மனைவி யாரையும் ஒருங்கே இழந்தது; தருமசேனருடைய தமக்கை திலகவதி என்பவர் கொழுகொம் பில்லாக் கொடியாகித் திருவதிகை போந்து அங்குள்ள சிவன் கோயிலில் சிவத்தொண்டு புரிந்து வந்தார். தருமசேனர்க்கு ஒரு கால் சூலை நோய் உண்டாயிற்று. அதனைத் தீர்ப்பதற்குச் சமணர் செய்த மருந்தும் மந்திரமும் பயன்படவில்லை; நோய் பெருகப் பெருக அவருக்குச் சமன் சமயப் பற்றும் ஒழுக்கமும் நம்பிக்கை தாராது ஒழிந்தன. அவர் திருவதிகைபோந்து தமக்கையாரைக் கண்டு தமது நோயின் திறத்தைக் கூறவும், அவர் சிவனது திருவைந்தெழுத்தை அறிவுறுத்தித் திருநீறு நல்கித் திருவதிகையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் பாடிப் பரவுமாறு பணித்தார். அவர் அதனை ஏற்றுப் பாடலுற்றார். அவரை வருத்திய சூலை நோயும் அகன்றது. அவர் பழையபடியே சைவராகித் தமிழ் நாட்டில் சிவன் உறையும் கோயில்கட்குச் சென்று பல்வகை இசைப் பாட்டுக்களைப் பாடுவாராயினர்.

‘பாதிரி’ என்பது வடமொழியில் ‘பாடலம்’ என வழங்கும்; அதனால் ‘பாதிரிப்புலியூரை’ வடமொழி வாணர் ‘பாடலிபுரம்’ எனத் தமது வழக்கப்படி மொழி பெயர்த்துக் கொண்டனர். பாடலியில் வாழ்ந்த சமணர்களுக்குத் தருமசேனர் சைவராகியது பெருவருத்தத்தைச் செய்தது; அவர் அப்பெயரை மாற்றித் திருநாவுக்கரசர் என்ற பெயருடன் திரியத் தலைப்பட்டது, தமது சமயத்தின் வளர்ச்சிக்கு இடையூறாகுமென எண்ணி வேந்தன் உள்ளத்தைக் கலைத்தனர். அவர்கள் தாமே கூடி அவரைக் கொல்லவும் முயன்றனர்; முடிவில் அவரைக் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளினர். இறைவன் திருவருளால் அவர் உயிர் தப்பிக் கரையேறினார். அச்செய்தி காட்டுத் தீப் போல நாட்டில் பரவிற்று. அது கேட்ட மகேந்திரன் சமயப்பற்றும் உணர்வுமுடையனாகலின், வியப்பு மிகுந்து சிவபெருமான் திருவருளில் நம்பிக்கை கொண்டு சைவனானான். நிகழ்ந்ததை ஆராய்ந்து காணவும், அவன் உள்ளத்தில் சிவப்பணிக்கண் ஊக்கம் மிகுந்தது. பொதுமக்களும் தம் தாய் மொழியாகிய தமிழில் இனிய இசைப்பாட்டுக்கள் தோன்றிச் சைவக் கருத்துக்களை எடுத்துரைப்பது கண்டு, திருநாவுக்கரசர் வழங்கிய திருப்பாட்டுக்களை வரவேற்று மகிழ்ந்தனர்.

சின்னாட்களில் சீர்காழியில் திருஞான சம்பந்தர் என்பார் தோன்றித் திருநாவுக்கரசரைப் போலவே செந்தமிழ் இசைப் பாட்டுக்களைப் பாடி வருவாராயினர். பெரும்பாலரான தமிழர் இவ்விருவர் திருப்பணிக்கும் மிக்க ஆதரவு நல்கினர்.

மகேந்திரன் மாற்றம்
“எவ்வது உறைவது உலகு” என்று அறிந்து “அவ்வது உறைவது அறிவு” என்றும், குடிதழீஇக் கோல் ஓச்சுவது அரசியல் என்றும் அறிந்தவனாகலின் மகேந்திரன், சமணர் திருநாவுக்கரசர்க்குச் செய்த தீமைகட்காக மனம் வருந்தி, அச்சமணர் வாழ்ந்த பாழி என்னும் இடங்களைத் தகர்த்து அவற்றால் திருவதிகையில் குணபரேச்சுரம் என்றொரு சிவன் கோயிலைக் கட்டினான்; ‘சிரா’ என்னும் சமணமுனிவன் இருந்த ‘பள்ளி’யைக் கைப்பற்றி, அச்சிராப் பள்ளிக் குன்றின் மேல் சிவனுக்கொரு கோயில் கட்டி அதன் கண் தான் வேற்றுச் சமயத்திலிருந்து மாறிச் சைவனான குறிப்பையும் பொறித்து வைத்தான்.

சிவநெறி என்பது ஏனைச் சமயம் பலவற்றையும் படி முறையாகக் கொண்டு தழுவியொழுகும் பெருநெறி என்பது உணர்ந்த மகேந்திரன், சமயக் காழ்ப்பு நீங்கிய மனத்தனாய் எல்லாச் சமயங்களுக்கும் ஏற்ற காவலும் உதவியும் செய்து ஓங்குவானாயினன். மகேந்திரனுக்கு லலிதாங்குரன், குணபரன், சைத்தியகாரி எனப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அதனால், திருவதிகையில் அவன் கட்டுவித்த சிவன் கோயிலுக்குக் குணபரேச்சுரம் என்றும், சிராப்பள்ளிக் கோயிலுக்கு லலிதாங்கர பல்லவேச்சுரம் என்றும் கல்வெட்டுக்களில் மகேந்திரன் பெயர் பொறித்திருக்கின்றான். பின்பு அவன் மகேந்திர வாடி என்னும் ஊரில் மகேந்திர விஷ்ணுக்கிரகம் என்ற திருமால் கோயிலையும் மண்டகப் பட்டில் திருமால் பிரமன்சிவன் என்ற மூவர்க்கும் ஒரு கோயிலையும் கட்டினான். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வல்லத்திலுள்ள கோயிலுக்கு மகேந்திரவர்மன் வாசல் என்பது பெயர்.

மகேந்திரன் நாடகக் கலையில் விருப்புற்றிருந்தது போல ஓவியத் துறையிலும் ஒப்பற்ற ஈடுபாடு கொண்டிருந்தான். சிற்றண்ணல் வாயில் முதலிய இடங்களில் சிறந்த ஓவியங்கள் எழுதுவித்த இவன், மாமண்டூரில் “தட்சிண சித்திரம்” கற்பித்தான். அந்நாளில் வடபுலத் திலிருந்து இசை கற்றுணரும் பொருட்டுப் பலர் வேதாரணியம் குடுமியான்மலை முதலிய இடங்கட்கு வந்த வண்ணமிருந்தனர் எனத் திருஞான சம்பந்தர் குறிக்கின்றார். அது கண்ட மகேந்திரனும் அவ்விசைக் கலையில் ஈடுபட்டான், அவனது ஆட்சியிலும் குடுமியான் மலையில் தோன்றிய இசைக் கல்வெட்டே இதற்குச் சான்றாகும். அதனை ஆராய்ந்த பேராசிரியர் விபுலானந்த அடிகள் கல்வெட்டினைப் பொறித்த இசையாசிரியர் முற்றிலும் பழந்தமிழ் மரபினைக் கைக்கொள்கிறார் என்பது தெளிவாகிறது1 என்று கூறுகின்றார்.

2. இரண்டாம்நந்திவர்மன் (பல்லவ மன்னன்)
அரசன் தேர்வு

காஞ்சி மாநகர்க்கண் இருந்து ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தர் குடியில் சிறந்த சிம்மவிஷ்ணுவின் மக்களும் அவர் வழி வந்தோரும் தொண்டைநாட்டை ஆண்டு வருகையில், சாதவாகனர் அரசின் கீழ் இருந்த ஆந்திர நாட்டின் ஒரு பகுதியில் சிம்ம விஷ்ணுவின் தம்பியருள் ஒருவனான வீம வர்மன் என்பவன் ஆடசிபுரிந்து வந்தான். அவன் வழி வந்தோரும் பல்லவரேயாவர்.

முதற் பரமேச்சுரனுக்கு மகன் வயிற்றுப் பேரன் ஒருவன் பரமேச்சுரவர்மன் என்ற பெயர் தாங்கித் தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அக்காலத்தே வீமவர்மன் வழியினனாக இரணிய வர்மன் என்பவன் ஆந்திர நாட்டில் இருந்து நாடு காவல் புரிந்தொழு கினான். இவ்வாறு இருக்கையில் இரண்டாம் பரமேச்சுரன் மகப் பேறின்றி இறந்துபடவே, அவற்குப் பின் பல்லவ அரசையேற்று நடத்துவதற்கு உரியவர் இலராயினர்.

அந்நாளில் காஞ்சிமாநகர் வடமொழிக் கல்விக்கு மிகச் சிறந்த நிலையமாக விளங்கிற்று; வடமொழிப்பயிற்சிக்கென ஒரு பெரிய கல்லூரியும் இருந்தது; அதனைக் ‘கடிகை’ என்பது வழக்கம். அங்கே வடமொழியிற் புலமை மிகுந்த சான்றோர் பலர் இருந்து அரசவையில் பெருஞ்சிறப்பும் செல்வாக்கும் கொண்டு பிறங்கினர். அதனால், அக்கடிகையில் வேற்றுநாட்டு அரசிளங்குமரர்களும் கல்வி பயின்று மேம்பட்டனர். பல்லவர் அரசியலில் இக்கடிகையார் தனிச் சிறப்புடையராய் அதன் நிலைபேற்றில் கண்ணும் கருத்துமுடையராய் இருந்தனர்; இரண்டாம் பரமேச்சுரனுக்குப் பின் பல்லவர் அரசு தமிழ்நாட்டில் காலற்றுப் போவது அவர்கட்குப் பெருங் கவலையை அளித்தது, அவர்களுள் தரணிகொண்டபோசர் என்பவர் வேத வேதாந்தங்களிலும் ஆகமங்களிலும் பெரும்புலமை கொண்டு பல்லவ அரசுக்கு அரச குருவாகவும் சிறந்து விளங்கினார். அரசியல் வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய மாத்திரர், சேனாபதிகள், மூலப் பிரகிருதிகள் முதலிய பலரும் அத்தரணிகொண்ட போசர் உரைக்கும் உரைவழி நிற்கும் இயல்பினராயிருந்தார்கள். ஆதலால் அவர்கள் தம்மில் கூடிப் பல்லவ வேந்தரின் குடிவரலாற்றையும், அதன் கிளையினர் இருக்கும் இயலிடங்களையும் ஆராய்ந்து, வீமவர்மன் வழிவந்த இரணியவர் மன்பாற் சென்று அவன் மக்களுள் ஒருவனைக் கொணர்ந்து காஞ்சிப் பல்லவ வேந்தனாக்குவது நலம் என்று துணிந்தனர்.

இரணியவர்மனுக்கு நால்வர் மக்கள் இருந்தனர். அவர்கள், சீமல்லன், இரண மல்லன், சங்கரமல்லன், பல்லவமல்லன் என்போராவர். அப்போது பல்லவமல்லனுக்கு வயது பன்னிரண்டாகியிருந்தது. கடிகையார் இரணியனைக் கண்டு வணங்கித் தமது வேண்டுகோளைத் தெரிவிக்கவும், அவன் தன்குல முதல்வர் சிலரைக் கூட்டிக் காஞ்சிநகர்ப் பல்லவ அரசை ஏற்பது பற்றி ஆராய்ந்து நாட்டின் சூழ்நிலையை உடன்வைத்து எண்ணித் தன்னால் பல்லவ அரசையேற்று நடத்துதல் இயலாததொன்று என மறுத்தான்.

பின்பு கடிகையாரும் மூலப்பிரகிருதிகளும் இரணியவன்மன் மக்களோடு கலந்து உரையாடினர். பாண்டியரின் படைப் பெருமையும் சளுக்கியரின் தறுகண்மையும் அவர்கள் நெஞ்சில் நிலைபெற்றமையின், சீமல்லன் முதலிய மூவரும் அக்கடிகையார் கருத்தை ஏலாது அறவே மறுத்தொழிந்தனர். எல்லோர்க்கும் இளையவனும் பன்னிரண்டு வயதே நிரம்பியவனுமான பல்லவ மல்லன் தான் காஞ்சிப் பல்லவ அரசை ஏற்க விரும்புவதாக அறிவித்தான். அவன் கூறியது கடிகையர்க்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. அவர்கள் இளையோன் விருப்பத்தை இரணியவன் மனுக்கு எடுத்துரைத்தார்கள். அவனும் ஒருவாறு இசைந்தான். அவர்கள் அதனைக் காஞ்சி மாநகர்க்கண் இருக்கும் தரணிகொண்ட போசர்க்குத் தெரிவித்தனர். “வயது பன்னிரண்டு உடையனாயினும் திருமால்பால் அன்புடையனாதலின் பல்லவமல்லன் காஞ்சிநாட்டுப் பல்லவ அரசுக்கு ஊற்றவனே” என அவரும் விடை யெழுதிவிட்டார்.

சோதிடர் குறித்த நன்னாளில் பல்லவமல்லனை அழகிய தொரு சிவிகையிலேற்றித் தானை வீரர் பலரது துணையுடன் இரணியவர்மன் தன்மகன் பல்லவ மல்லனைக் காஞ்சி நகர்க்குச் செல்ல விடுத்தான். தந்தையும் தமையன்மாரும் வாழ்த்தி வழிவிடத் தகுதி சான்ற கடிகையரும் மூலப்பிர கிருதிகளும் தானைச் சான்றோரும் உடன் வரப் போந்த அவன், மிகப்பல காடுகளையும் குன்றுகளையும் ஆறுகளையும் மலைகளையும் கடந்து தொண்டை நாடு புகுந்து, காஞ்சி நகரின் எல்லைக்கண் வந்து நின்றான்.

அவன் வரவு கேட்டதும் காஞ்சிமாநகரத்து மாசாமந்தரும் நகரமாந்தரும் சான்றோரும் நகரை அணி செய்து, அழகிய யானை ஒன்றைக்கொண்டு மிக்க சிறப்புடன் வரவேற்றனர். வரவேற்ற பெருமக்கட்குப் பல்லவ அதியரையர் என்பார் தலைமை தாங்கிச் சென்று பல்லவமல்லனை யானை மேல் இருத்தி நால்வகைப் படையும் அணி அணியாக அணிந்து வர நகர வீதியில் உலாச் செய்வித்துப் பல்லவ அரசின் அரண்மனைக்குக் கொண்டுய்த்தனர். குறித்த நல்லோரையில் தரணி கொண்ட போசர் பல்லவ அதியரையர் முதலியோர் பல்லவ மல்லனைப் பல்லவ வேந்தனாக முடிசூட்டி நந்திவர்மன் என்ற பெயர் தந்து பெருமை செய்தனர். அன்று முதல் பல்லவ மல்லன் நந்திவர்மன் என்ற பெயரொடு விளங்குவானாயினன், அப்பொழுது நந்திவர் மனுக்கு விடேல் விடுகு சமுத்திரகோஷன் கட்டாங்கத் துவசன் என்ற சிறப்புக்கள் வழங்கப் பெற்றன.

பல்லவர்-பாண்டியர் போர்
தொண்டை நாட்டுத் தலைநகரில் பல்லவ அரசின் ஆக்கம் கருதி அக்குலத்து இளைஞன் ஒருவன் முடிசூடிக் கொள்ளும் சிறப்பு நிகழுங்கால், காலஞ்சென்ற பரமேச்சுரன் உறவினருள் சித்திரமாயன் என்பவன் அவ்வரசுரிமையைப் பெற விழைந்தான். அதற்கான முயற்சியில் அவன் ஈடுபட்ட போது, காஞ்சிக்கடிகை யாரும் தரணி கொண்ட போசரும் பிறரும் அவனுக்கு ஆதரவு செய்ய மறுத்தனர்; நகரத்தாரும் அவர்க்குத் துணைபுரிய இசையாராயினர். அதனால் அவன் தென் தமிழ்நாட்டை யாண்ட பாண்டிவேந்தர் துணையை நாடினான். சித்திரமாயன் என்ற பெயரை நோக்குவார்க்கு அவன் பல்லவன் வழியினனாவனோ என்று ஓர் ஐயம் தோன்றுவது இயல்பு. பல்லவர் வரலாற்றை ஆராய்ந்த இக்காலத்து அறிஞருள்ளும் சிலர் இந்த ஐயத்துக்கு இரையானதுண்டு. ஆனால், இப்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவ வேந்தர் சிலருக்குரிய சிறப்புப் பெயர்களைக் காட்டுகின்றன. அவருள் முதல் நரசிங்கவன்மன் அமேயமாயன் என்ற சிறப்புப் பெயரையும், இராசசிங்கன் மாயசாரன் என்ற சிறப்புப் பெயரையும் கொண்டிருந்தனர். அவர்களைப் போலவே இச்சித்திரமாயனும் விளங்கியிருத்தற்கு இடமுண்டு.

நந்திவன்மனது இளமையும் சித்திரமாயனுக்குப் பல்லவ அரசிலிருந்த உரிமையும், அதனைப் புறக்கணித்து எள்ளிய அரசியற் சுற்றத்தின் சூழ்ச்சியும் பாண்டி வேந்தரை அச்சித்திர மாயனுக்குத் துணை புரியுமாறு தூண்டின. அக்காலத்தே திருவேங்கடத்துக்கு வடக்கிற் பரந்து கிடக்கும் கருநாடகப் பகுதியில் வாழ்ந்த சபரருடைய மன்னனான உதயணன் என்பவன் ஏற்றம் பெற்று இலங்கினான். அவனுக்கு இரணியவர்மன் மக்கள் தொண்டைநாட்டு அரசினை ஏற்றுப் பேரரசராய்ப் பிறங்குவது மனவமைதியைத் தரவில்லை. மேலும், அவ்வரசைக் கைப்பற்றுதற்குச் சித்திரமாயன் பாண்டியர் துணைநாடி நிற்பது ஒற்றர் வாயிலாக உதயணன் செவிக்கு எட்டியது. அவர்கட்குத் தான் துணை செய்வதாகச் சபர மன்னன் செய்தி விடுத்தான்.

தெற்கிற் பாண்டியரும் வடக்கிற் சபரரும் கூடிப்பெரும் படையுடன் போந்து நந்திவன்மனோடு போர் தொடுத்தனர். நந்திபுரம் என்னுமிடத்தே அவர்களின் படை பல்லவர் படை யோடு நேர் நின்று போர் செய்தன.நந்திவன்மன் பக்கல் அப்போது உதயசந்திரன் என்பவன் ஒரு தானைத் தலைவனாய் விளங்கினான். போர்க்களத்தில் சித்திரமாயன் தலைமையில் நின்ற தென் தமிழ்ப்படை நந்திவர்மனை வளைத்துக் கொண்டது. அப்போது கூரிய வாளேந்திய மறவனான உதயசந்திரன் சித்திரமாயனைக் கொன்று அவனுக்குத் துணையாய் வந்தவரையும் வெட்டி வீழ்த்தி வெற்றி வீறு கொண்டான்.

அது காணப் பொறாத உதயணன் பல்லவரைத் தன்னோடு பொருது வெல்லுமாறு அறைகூவினன். காஞ்சிப் பல்லவர் படையும் சபரர் படையும் ஆந்திர நாட்டு நெய்வேலி என்னும் இடத்தே போரிட்டன. அதன் முடிவில் சபர மன்னன் வலியிழந்து பிறக்கிட் டோடினான். நந்திவன்மன் சபரர்களைத் துரத்திக் கொண்டே சென்று நெல்வேலி நாட்டிற்குட் புகுந்தான். அந்நாடு மக்கள் புக முடியாத காடுகளும் குன்றுகளும் செறிந்த காவல் அமைந்தது என்பர். தோற்று வீழ்ந்த உதயணன் நந்திவர்மனுக்குத் தன் மயிர்க் கண்ணாடிக் கொடியைத் திறையாகத் தந்து பணிந்தான்.

பல்லவ வேந்தன் அப்பதியினின்றும் மீளுதற்குள் வட புலத்து விஷ்ணு நாட்டு வேந்தனான பிருதிவிவியாக்கிரன் என்பவன் அவனோடு போர் தொடுத்தான். அதன் கண்ணும் பல்லவர் படையே வென்றி சிறந்தது; வியாக்கிரனும் தன் விஷ்ணு நாட்டைக் கைவிட்டு ஓடினான். இவ்வாறு வினை முற்றி மீளலுறும் நந்திவர்மன், காளி துர்க்கத்தில் தன்னை எதிர்த்த பகைவரை வென்று வாகை மிலைந்து தென்னாடு நோக்குவானாயினன். அக்காலத்தே பாண்டியர் போந்து ‘மண்ணை’ என்னுமிடத்தில் அவனை எதிர்த்துப் பொருவாராயினர். மண்ணைப் போரும் நந்திக்கே வெற்றி தந்தது.

இரண்டாம் விக்கிரமாதித்தன்
தொண்டை நாட்டின் வடமேற்கில் வாழ்ந்த சளுக்கி மன்னர்க்குப் பல்லவர்பால் பழம் பகையொன்று இருந்தது. சளுக்கியரின் தலைநகரான வாதாபி நகரை நந்திவன்ம பல்லவனுடைய முன்னோர்கள் ஒரு காலத்தே சூறையாடியது, அப்பகைமைக்குக் காரணமாகும். நந்திவர்மன் அரசு கட்டில் ஏறிய போது, இரண்டாம் விக்கிரமாதித்தன் என்பவன் சளுக்கியர் வேந்தனாய்த் தலைநிமிர்ந்து விளங்கினான். அவனுக்கு நந்திவன்மனது போர்ப்புகழ் பெருஞ் சினத்தை உண்டாக்கிற்று. அதனால் அவன் பெரும்படை கொண்டு தொண்டை நாட்டிற் புகுந்து காஞ்சி நகரைச் சூழ்ந்து நின்று கடும்போர் உடற்றினான். அப்போர் பல்லவர் வலியையழித்தது; நந்திவன்மனும் மேலும் பொருதற்காற்றாது காஞ்சி நகரைக் கைந் நெகிழ்த்துத் தமிழ்நாட்டுக் காவிரி பாயும் புனல் நாட்டிற் புகலடைந்தான். அவனுடைய கடுமுக வாத்தியம், கட்டாங்கத் துவசம், சமுத்திரகோஷம் ஆகிய அரசியற் சின்னங்கள் சளுக்கி வேந்தன் கை வசமாயின. விக்கிரமாதித்தனும் காஞ்சி மாநகர்க்கண் தங்கி அரசியலை நடாத்த முற்பட்டான். அக்காலத்தில் தான் அவன் காஞ்சி நகரத்து இராசசிம்மேச்சுரத்துக்கு மிக்க பொருள் வழங்கி மேன்மையுற்றான்.

தமிழ்நாட்டின் உள்ளகத்தே புகுந்த நந்திவன்மன், தமிழ் மறவர் பல்லாயிரவரைப் படைத் துணையாகப் பெற்றுப் போந்து விக்கிர மாதித்தனோடு விறற்போர் ஒன்றை விளைவித்தான். அப்போர்க் களத்தே தமிழ்ப் படையின் மறத்தீக்குச் சளுக்கியர் படை எதிர் நிற்கமாட்டாது இரையாகிச் சமழ்த்துச் சாய்ந்தொழிந்தது. வெற்றி பெறாத விக்கிரமாதித்தன் விறலழிந்து ஓடக்கண்ட கீர்த்திவன்மன் என்பான் போந்து இயலாப் போர் உடற்றி ஈடழிந்தான். இவ்வாற்றால் நந்திவன்மன் புகழ் நாடு முழுதும் நன்கு பரவிற்று.

பல்லவர்-இரட்டர் மணவுறவு
தமிழகத்தின் வடக்கில் சளுக்கியர் போல இரட்டர் என்ற ஓர் இனத்தவர் அரசு நிலையிட்டு ஓரோர் காலத்தில் சிறப்புக் கொண்டு விளங்கினர். நந்திவர்மன் காஞ்சியிலிருந்து ஆட்சி செய்தபோது இந்த இரட்டர் குலத்தில் நந்தி துர்க்கன் என்பவன் சிறந்துநின்றான். இரட்டர்களை ‘இராஷ்டிரர்’ என்றும் ‘இராட்டிர கூடர்’ என்று கூறுவர். இன்று பம்பாய் அரசிலுள்ள மராட்ட நாட்டு மக்களை மகாராட்டிரர் எனவும் அவரது மொழியை மராத்தி யெனவும் வழங்குவர். அவரைச் சேர்ந்தவர்களே இந்த இரட்டர்கள்.

இரட்டனான தந்தி துர்க்கனுடைய வரலாற்றுக் குறிப்புக்கள் ஒரு காலத்தே அவன் தென்னாட்டை வென்று தன் அடிப்படுத்திக் காஞ்சிநகரைக் கைப்பற்றியதாக உரைக்கின்றன. தந்தி துர்க்கனுக்கு இரேவா என்றொரு மகள் இருந்தாள். அவள் உயர்ந்த பண்பும் சிறந்த உருநலமும் உடையவள்; அரசர் குடிக்கேற்ற பரந்த உள்ளமும் எதனையும் ஆராய்ந்தறிந்து செய்யும் செயற்றிறமும் படைத்தவள். தந்தி துர்க்கனான தன் தந்தை நந்திவர்மனை வென்று விளக்க முற விழைந்தது உணர்ந்தாள். நந்திவர்மனது இளமை நலமும் குடிதழீ இக் கோலோச்சி வாழும் கொற்றமும் கேட்டு அவன் பால் தன் மனத்தைப் பறி கொடுத்தாள். தன் தந்தை காஞ்சிநகர் நோக்கிப் போர்க்கெழுந்த போது அவளும் அவனுடன் சென்றாள். போர் நிகழ்ச்சிக்கு இடையில் நந்திவன்மனை நேரிற் காணும்பேறு இரேவாவுக்குக் கிடைத்தது. அவனும் அவளைக் கண்டான்; அவளைத் தனக்கு மனைவியாக மணந்து கொள்ள விரும்பினான்; அவன் விருப்பத்தை யறிந்த மாசாமந்தர் போரை ஒருவாறு முடித்து, நந்திவன்மன் வேட்கையைத் தந்தி துர்க்கனுக்குத் தெரிவித்தனர். அவனும் பல்லவமல்லனுடைய அரசியல் மாண்பையும் ஆண்மைப் பெருமையையும் நேரிற் கண்டு வியந்தமையின் மகட் கொடை நேர்ந்தான். இத் திருமணத்தால் இரட்டர்களுக்கும் காஞ்சிப் பல்லவர்களுக்கும் நெருங்கிய தொடர் புண்டாயிற்று.

நந்திவர்மனுடைய ஆட்சி நெடுங்காலம் இனிது நடந்தது. அவனுக்கு இரேவா வயிற்றில் மகனொருவன் பிறந்தான். அம் மகனுக்குத் தாய்ப்பாட்டன் பெயரையே வைத்துத் தந்திவர்மன் எனப் பேணிணர்.

பல்லவர்-கங்கர் போர்
ஒருகால் இன்றைய மைசூர்ப் பகுதியிலிருந்து கங்கர் என்பவர் ஆட்சிபுரிந்து வந்தனர். இக்கங்கர் சங்க காலத்தேயே சிறப்புற்றவர். கங்கவேந்தனிடம் உக்கிரோதயம் என்னும் கழுத்தணி ஒன்று இருந்தது. அதனையுடைமை கங்கருக்கு ஒரு பெருமையாக மதிக்கப்பெற்றது. நந்திவன்மனுக்கும் கங்கருக்கும் ஒரு சமயம் போருண்டானபோது, நந்திவன்மன் வென்றி மேம்பட்டுக் கங்கரது உக்கிரோதயத்தைக் கவர்ந்து கொண்டான். கங்கர்கள் அதனை மீளப் பெறுதல் வேண்டி முயல்வாராயினர். கன்னாட்டுப் பெருங்கங்கர் மாமனான வாணாதிராயர் என்பவர் அம்முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார். அவர் நேர்முகமாக நந்திவன்மனைப் போர்க்கு அழைக்காமல் கற்காட்டூர் கங்கவதியரையர் என்பவரைத் தூண்டி விட்டார். அவர்க்குத் துணையாகக் கங்கர் பெரும்படை எழுந்தது. பல்லவர்க்கும் கங்கர்க்கும் பெண்குழிக்கோட்டை என்னும் இடத்தில் போர் நடந்தது; அதன்கண் கங்கவதியரையர் கொலையுண்டு இறக்கவும், நந்திவன்மன் வெற்றிமாலை சூடினான்; பெண்குழிக் கோட்டையும் பெயர் தெரியாதவாறு அழிந்துபட்டது. உக்கிரோ தயம் பல்லவர் கழுத்தணியாய் விளங்கும் பரிசே நிலை பெற்றது, கி.பி. 775 அளவில் நந்திவன்வன் மண்ணகத்தினீங்கி விண்ணுலக ஆட்சி பெறுவானாயினன்.

இடைக்காலப் பாண்டியர்


1. மாறவர்மன் அரிகேசரி

களப்பிரரும் பாண்டியரும்

பல்லவரது ஆட்சி தமிழகத்தின் வடபகுதியில் சிறந்து விளங்கிய காலத்தில், தென்பகுதியான பாண்டி நாட்டில் பாண்டி வேந்தர் இருந்து அரசு புரிந்து வந்தனர்; எனினும், பல்லவர் காலத்தொடக்கத்தில் பாண்டியரது இருப்பு அத்துணைச் சிறப்பாகத் தோற்றம் பெறவில்லை. பல்லவர் ஆட்சி சோழ நாட்டின் தென்னெல்லையளவும் பரந்திருந்த தன்றோ! பாண்டி நாட்டில் அவரது குறிப்பொன்றும் காணப் படாமையால், பல்லவராட்சி, பாண்டி நாட்டுட் படர்வதற்கேற்ற வாய்ப்பு அக்காலத்தில் அமையவில்லை யென்பது தேற்றம்.

தொடக்கத்தில் பல்லவர் தமிழ் நாட்டுள் புகுந்தபோது, நிலைத்த அரசு தோற்றுவியாது அரம்பும் அல்லலும் செய்தொழுகிய களப்பிரர் கூட்டம், தொண்டை நாட்டினின்றும் அவர்களால் வெருட்டப்பட்டது; அவர்கள் கொங்கு நாட்டின் வழியாகப் பாண்டி நாட்டிற் படர்ந்து தம்முடைய குறும்புகளைச் செய்தனர். அங்கே வாழ்ந்த பாண்டியர், பண்டைச் சங்க காலத்தில் இருந்த ஆண்மையும் பெருமையும் குன்றி அதிராசர் என்ற பெயருடன் மெலிந்திருந்தனர். அதனால் களப்பிரர்கள் அந்நாட்டை அலைக் கழித்தற்கு ஏற்ற இடம் ஏற்பட்டிருந்தது. என்றாலும், களப்பிர இருளில் மழுங்கி மறைந்த பாண்டியர் பேரொளி, இடைக்காலத்தே பையத் தோன்றத் தலைப்பட்டது. அவரது செயற் சிறப்பைக் கூறலுற்ற ஏனாதி சாத்தஞ் சாத்தனார் என்ற சான்றோர்,

“அளவரிய அதிராசரை அகலநீக்கி அகலிடத்தைக்
களப்பிரன் எனும் கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கியபின்”

என்று வேள்விக்குடிச் செப்பேடுகளில் விளங்க எடுத்து விளம்பு கிறார்.

இவ்வாறு களப்பிரரைத் தொலைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழ் வேந்தர் சிலர், அதனோடு அமையாது தமது பாண்டி நாட்டரசை நிலையிட முயன்றனர். நாளடைவில் அவர்கள் முயற்சி வெற்றி நல்கவும், அவருள் பாண்டியாதிராசன் என ஒருவன் ஆற்றல் மிகுந்து தன்னொடு மாறுபட்டொழுகிய பிறரை அவருடைய மதிலரண்களோடு முருக்கி நாடு காக்கும் நற்பணியை மேற்கொண்டான். அவனை வேள்விக் குடிச் செப்பேடுகள்.

“வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளி நகர் அழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்”

என்று இயம்புகின்றன. இக்கடுங்கோன் ஆட்சி நிலவிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர்கள் குறிக்கின்றனர். அப்போது தொடங்கிய பாண்டியராட்சி பதினேழாம் நூற்றாண்டு வரையில் இடையிடையே வளர்ந்தும் தேய்ந்தும் ஓரளவு தொடர்புற நடைபெற்றுள்ளது. அவர்கட்குத் தலைநகரமாய் விளக்க முற்ற மதுரை வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்து இன்று வரையும் “மதுரை மூதூர்” எனப்படும் சொல்வழக்குக்கு உரிய பொருளாய் ஓங்கி நிற்கிறது. இதனோடு ஓரளவு ஒப்ப நிலவுவது தொண்டை நாட்டுக் காஞ்சி மாநகர். ஏனைச் சோழநாட்டு உறையூரும் சேரநாட்டு வஞ்சிநகரும் தம் சிறப்பு மறைந்து, அறிந்தோர் காட்டக் காணப்படும் நிலையை அடைந்தொழிந்தன.

அரிகேசரி
பாண்டியன் கடுங்கோன் வழிவந்த வேந்தருள் சடைய வர்மனான செழியன் சேந்தனுக்குப் பின்னே தோன்றிப் பாண்டி நாட்டு அரசு கட்டில் ஏறியவன் மாறவன்மன் அரிகேசரி என்பவனாவான்.

செப்பேடுகள், இவனை மாறவன்மனான அரிகேசரி என்று குறிக்குமாயினும், தமிழ் நூல்கள் நெடுமாறன் என்றும், ‘கூன் பாண்டியன்’ என்றும், ‘சுந்தர பாண்டியன்’ என்றும் குறித்துரைக் கின்றன. இவன் காலத்தில் தொண்டை நாட்டில் பல்லவர் அரசு பரந்து விளங்கிற்று. சோழ நாட்டுச் சோழர்கள் தம் பெருமை யிழந்து சிறுசிறு குடிகளாகச் சிதறிக் கிடந்தனர். உறையூரின் கண் வாழ்ந்த சோழர் குடியினன் ஒருவன் அரிகேசரிக்கு மாறுபட்டு ஒழுகினான்; அது பொறாத பாண்டியன் பெரிய தொரு படையைத் திரட்டிச் சென்று ஒரு பகற் போதிலே பொருது வென்று அவனது உறையூரைக் கைப்பற்றினான். இச்செய்தியை, “பகல் நாழிகை இறவாமைக் கோழியுள் வென்று” கொண்டான் என்று செப்பேடுகள் செப்புகின்றன. இப்போரின்கண் சோழரது ஆண்மை நலமும் மானமாண்பும் வெளிப்பட்டுப் பாண்டி வேந்தன் உள்ளத்தை வியப்பில் ஆழ்த்தின; அதனால் பாண்டியன் மகிழ்ச்சி மீதூர்ந்து சோழர் மகளான மானி என்னும் மங்கையர்க்கரசியை மணந்து கொண்டான்.

பாண்டியன் போர்ச் செயல்கள்
அந்நாளில் பாண்டி நாட்டின் தென்பகுதியில் பரதவர் என்ற இனத்தவர் மிடல்கொண்டு விளங்கினர். அவர்கள் சங்ககாலத்தேயே விளக்கமுற்றுப் பாண்டி நாட்டில் குறும்பு செய்தொழுகினர். சங்ககாலப் பாண்டியர் அப்பரதவரை வென்று தமக்கு அடிப்படுத்த முயன்று அவ்வகையில் பெறப்படும் வெற்றியைத் தமது அரசியற் செயல் வகைகளில் சிறந்த ஒன்றாகக் கருதினர். அவருடைய வென்றி நலங்களைப் பாடிய நல்லிசைச் சான்றோர், “தென் பரதவர்களைப் மிடல்சாய,” “தென் பரதவர் போரேறே” என்று பாராட்டினர். பழைய தமிழ்நாடு கடற்குள் மூழ்கியது போலப் பழந்தமிழ் மன்னர் களப்பிரவிருளில் மறைந்து போயினர். அவ்விருள் நீக்கத்தில் ஓரளவு விழிப்புற்று அரசியல் மேதகவு பூண்டதில் பாண்டியர் முற்பட்டனர்; ஏனைச்சோழரோ சேரரோ முன்வரவில்லை. சோழர் சீரழிந்து பல்லவர்க்குத் தானை மறவராகவும் சிறுகுடிச் செல்வராகவும் தேய்ந்து ஒடுங்கினர்; சேரர் கேரளராயினர்; சேரநாடு கேரள நாடாயிற்று. இந்நிலையில் களப்பிரரை வேரொடு களைந்த பாண்டியரது கட்டாண்மை, பழம் பகையாய் இகலியொழுகிய பரதவர்களை அடக்க இயலவில்லை அரிகேசரி மாறவன்மன் காலத்தில் அப்பரதவர் தென்பாண்டிக் கடற்கரைப் பகுதியில் தங்கி நாட்டுட் புகுந்து குறும்பு செய்தனர்.

அப்பரதவர் நாட்டில் குடிகளாய்த் தங்கியிருந்தமையின் அவர்களுடைய தலைவருள் குறும்பு செய்தவரை ஒழித்து எஞ்சியோரை இன்சொற்களால் தன் ஆணைவழி நிற்குமாறு பாண்டியன் பணித்தான். பழக்கம் கொடிது என்பதற்கொப்பப் பலநூற்றாண்டுகளாகப் பாண்டி வேந்தரொடு மாறுபட்டு ஒழுகியவராதலின் அப்பரதவர் எளிதில் அரிசேகரியின் ஆணைக்கு அடங்குதல் இலராகவே, கடுமையான செயல் முறைகளை மேற்கொண்டான்; அவற்றால் பரதவர் அவனுக்குப் பெரிதும் அஞ்சி அடங்கி யொடுங்கினர். பின்னர் நெடுங்காலம் வரையில் அவர்கள் தலை தூக்கவேயில்லை. அதனால் வேள்விக்குடிச் செப்பேடுகள், “விரவிவந்து அடையாத பரதவரைப் பாழ்படுத்” தான் எனக் கூறுகின்றன.

இவ்வாறே மேலைக் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த கேரளர் விற்கொடியை வேலியாகக் கொண்டு இடையிடையே இருந்த சிற்றரசர் துணைபுரியப் பாண்டி நாட்டுட் புகுந்து, பாழி, நெல்வேலி, செந்நிலம் என்ற இடங்களில் போர் தொடுத்து, அரிகேசரியின் அடற்றகைமைக்கும் ஆற்றலுக்கும் முன்நிற்க மாட்டாது அடிபட்டுத் தோற்றோடினர். இச்செய்தி, “சூழி யானை செலவுந்திப் பாழிவாய் அமர்கடந்தும், வில்வேலிக் கடற்றானையே நெல்வேலிச் செரு வென்றும்” என்று வரும் செப்பேட்டுரைகளால் தெரிகின்றது. நெல்வேலியில் அரிகேசரியாகிய நெடுமாறன் பெற்ற வெற்றி, சான்றோர் உள்ளத்தில் நெடுங்காலம் நிலை பெற்றிருந்தது. திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர், “நிறைக் கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற, நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று பாடியுள்ளார்; அஃது இன்றும் சைவரிடையே நாளும் ஓதப்பட்டு வருகிறது. செந்நிலம் என்ற இடத்தில் எதிர்த்த பகைவரைப் பெரிய களிற்றுப்படை செலுத்தி வென்றான் என்பதைச் செப்பேடுகள், “கைந்நலத்தகளிறு உந்திச் செந்நிலத்துச் செருவென்றும்” என்று குறிக்கின்றன. இந்நிகழ்ச்சிகளை இறையனார் அகப்பொருளு ரைக்கண் காணப்படும் கோவைப் பாட்டுக்கள் பல தெளிவாய்க் கூறுகின்றன.

இவன் காலத்தே மேலைக் கடற்கரைக்கண் வாழ்ந்த கேரள வேந்தன் கொங்கு நாட்டின் வழியாகத் தமிழ் நாட்டுட் புகுந்து உறையூர்ச் சோழரைத் துணைகொண்டு புலியூர் என்னுமிடத்தே முதற்கண் ஒரு போரை நடத்தினான். அங்கு அவன் வெற்றி பெறானாய் உறையூரை அடைந்தான். நெடுமாறன் உறையூர்க்குச் சென்று அவனையும் அவனுக்குத் துணைபுரிந்த சோழனையும் “பகல் நாழிகை இறவாமே” வென்று களம் கொண்டான். அதனைச் செப்பேடுகள்,

“பாரளவும் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும்
உரிமைச் சுற்றமும் மாவும் யானையும்
புரிசை மாமதிற் புலியூர் அப்பகல்
நாழிகை இறவாமைக் கோழியுள் வென்று கொண்டும்”

என்று உரைக்கின்றன. இப்புலியூரைக் கோவைப் பாட்டுகள், தென்புலிப்பை என்று குறித்து, “தென் புலிப்பை வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடிமேல் நின்றான்” என்று பாடுகின்றன.

நெல்வேலியிற் பெற்ற வெற்றியை நம்பியாரூரர் திருத் தொண்டத் தொகையில் சிறப்பித்ததுபோல இக்கோவைப் பாட்டுத் தென்புலிப்பை வென்ற சிறப்பைக் கூறி அவன் முடிமேல் சிவபெருமான் திருவடி விளங்கும் திறத்தை “நெடுமாறன் வியன் முடிமேல் நின்றான்” என்று இயம்புகிறது; இக்குறிப்பு, நெடுமாறன் சிவபெருமானை வழிபடும் சிவ நெறிக்கண் நின்று இலங்கும் நீர்மையன் என்பதை வற்புறுத்துகிறது. அச்செய்தி இவன் வரலாற்றில் நன்கு குறிக்கத்தக்க இனிய நிகழ்ச்சியாகும். அதனை ஈண்டுக் காண்பாம்:

மன்னன் சமய மாற்றம்
நெடுமாறன் பாண்டி நாட்டு அரசு புரிந்து விளங்கிய காலத்தில் சயின சமயம் அங்கே சிறப்புறப் பரந்திருந்தது. மதுரை நகரைச் சூழவுள்ள ஆனைமலை நாகமலை ஆகிய பகுதிகளில் சமண் சமயச் சான்றோர் தங்கிச் சங்கங்கள் அமைத்துத் தம்முடைய சமயப் பணி செய்தொழுகினர். அவர்களது அறவுரையைக் கேட்ட வேந்தனான அரிகேசரி நெடுமாறன், தானும் அவற்றையேற்றுச் சயினனாகி, அச் சமயத்தின் வளர்ச்சிக்கு ஆவனவற்றை நன்கு செய்து வரலானான். நாட்டில் சமண்சமய ஒழுக்கம் தலைமைநிலை எய்திற்று. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற கொள்கைக் கேற்ப, நாட்டு மக்களில் மிகப்பலர் சமண் சமயத்தை மேற்கொண்டனர். இதனால் பாண்டி நாட்டில் தமிழ் தோன்றியது தொட்டு வழி வழியாய் நிலவி வந்த சைவ நெறி தளர்ச்சியுற்றது. சிவன் கோயில் வழிபாடும் விழாக்களும் மக்களிடையே செல்வாக்கு இழந்தன. அதனைச் சேக்கிழார்.

“பூழியர் தமிழ் நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவு மாகி”

இருந்தன என்றும், பாண்டிமாதேவியாகிய மானியும் அமைச்சருள் ஒருவரான குலச்சிறை என்பவருமே சிவநெறிக்கண் நின்றனர் என்பார்,

“வரிசிலைத் தென்ன வன்தான் உய்தற்கு வளவர் கோமான்
திருவுயிர்த் தருளும் செல்வப் பாண்டிமா தேவி யாரும்
குரை கழல் அமைச்ச னாராம் குலச்சிறை யாரும் என்னும்
இருவர்தம் பாங்க மன்றிச் சைவம் அங்கு எய்தா தாக”

என்றும் இசைக்கின்றார்.

தமது நாட்டில் வேற்றுச் சமயம் புகுந்து மக்களிடையே மேன்மையுறுவது பாண்டி மாதேவிக்கு மனவமைதியை நல்க வில்லை. அரசியற் சுற்றத்தாருள் குலச்சிறையார் மாத்திரம் சைவராக இருந்தது ஓரளவு அவர்க்கு மனநிறைவு அளித்த தெனினும், பண்டைச் சிவநெறி முன்புபோல் விளக்கம் பெறுதல் வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் முற்பட்டு நின்றது. குலச்சிறையாரை வருவித்து அவரோடு நாட்டின் சமய நிலையை அறிந்து சைவம் வளர்தற்குரிய செயல் முறைகளை ஆராய்ந்து கூறுமாறு பணித்தார்.

அந்நாளில், ஞானசம்பந்தர் என்பார் சீர்காழியில் தோன்றிச் சிவஞானம் பெற்றுச் சோழநாடு தொண்டை நாடுகளில் ஊர்தோறும் சென்று சிவபெருமானுடைய பெருநிலையை இனிய பாட்டுக்களாற் பாடிச் சைவத்தை வளர்த்து வந்தார்; திருவாமூரில் தோன்றித் தொடக்கத்தில் சமணராயிருந்து பின்பு சைவராகிய திருநாவுக்கரசரும் அவரோடு சைவப் பணி புரிந்தார் எனினும், மிக்க முதுமையுற்ற அவரினும் மிக்க இளையரான ஞானசம்பந்தரே பாண்டி நாட்டுச் சமயப் பணிக்கு ஏற்றவர் என்ற கருத்தால் அவரை வருவித்தல் நன்று எனக் குலச்சிறையார் குறித்துரைப்பக் கேட்ட பாண்டிமா தேவியார், அவரை விரைந்து வருவிக்குமாறு வற்புறுத்தினார். சின்னாட்களில் திருஞான சம்பந்தர் திருமறைக்காடு வந்திருப்பது அறிந்து அவர்க்குப் பாண்டிமாதேவியார் ஆணை தாங்கிய தூதுவர் சென்று உரைத்தனர். அவரும் மதுரை வந்து சேர்ந்தார். அரசியாரும் அமைச்சரும் அவரைச் சிறப்புடன் வரவேற்று ஒரு திருமடத்தில் தங்குதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஞானசம்பந்தரது வருகை சமண் சமயத்தவரிடையே பெருங் கலக்கத்தை விளைவித்தது. அவருள் செல்வாக்குடைய சிலர் வேந்தன்பால் சென்று ஞானச் சைவரை மதுரையில் தங்கவிடாது தடுத்தல் வேண்டும் என்றனர். வேந்தனான அரிகேசரி அவர்களை நோக்கி அரசியல் அறம் அதற்கு இடம் கொடாமையைக் கூறி மறுத்தான். அதன் மேல் அவர்கள் வேந்தனை வேண்டித் தங்கள் மந்திரவன்மையால் ஞானச் சிறுவனை அச்சுறுத்திப் போக்குதற்கு விடை பெறுவராய்,

“வந்த அந்தணன் தன்னை நாம் வலிசெய்து போக்கும்
சிந்தை யன்றியச் சிறுமறை யோன்உறை மடத்தில்
வெந்த ழல்பட விஞ்சைமந் திரத்தொழில் விளைத்தால்
இந்த நன்னக ரிடத்துஇரான் ஏகும்”

என்று விளம்பினர். வேந்தனுக்கு அவர் உரை அமைதி தரவில்லை. அவர்கள் உள்ளத்தில் “வலி செய்து போக்கும்” நினைவு நிலவுவது வருத்தம் தந்தது. வேறு அறிவு நெறியில் முயலுமாறு அவர்களைப் பணித்தபோது, ஞானசம்பந்தரின் இளமை கூறி அவர்கள் மறுக்கவும், “ஆவது ஒன்று இதுவே யாகில் அதனையே விரைந்து செய்யப் போவது” என்றான் வேந்தன்.

சென்ற சயினச் சான்றோர் ஓரிடத்திருந்து தம்முடைய மந்திரத் தொழிலைச் செய்தனர்; அது பயன்படாதொழிந்தது. அது கண்டும் அவர் மனத்தில் நிலவிய சமயக் காழ்ப்பு நீங்காதாக, அதனையறிந்த கீழ்மக்கள் சிலர் சம்பந்தர் இருந்த திருமடத்துக்குக் கள்வர்போற் சென்று தீ வைத்தனர். அது கண்டு ஞானசம்பந்தர் அச்சமுற்று மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவனை நினைந்து மனமுருகிப் பாடலுற்றார்; அப்போது, “வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று” என்ற முறைமை கருதி, “அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே” என்று பாடினர். அவர் உரைத்தற்கொப்ப, வேந்தனுக்கு வெப்பு நோய் தோன்றி, அவன் உடலை வெதுப்பு வதாயிற்று; அவனும் ஆற்றாமை மீதூர்ந்து வருந்தினான்.

வேதனை தாங்காமல் வருந்திய வேந்தனுக்குச் சமண் சான்றோர் தங்கள் மருந்துகளைத் தந்தும் மந்திரங்களை ஓதியும் அவ்வெப்பு நோயை மாற்ற முயன்றனர்; ஒன்றும் பயன்பட வேயில்லை. ஞான சம்பந்தரை வருவித்து அவரால் நீக்க முடிகிறதா என முயறலாம் எனப் பாண்டிமா தேவியார் பணிக்க, அமைச்சரும் ஏனை அரசியற் சுற்றத்தாரும் உடன்பட்டனர். ஞானசம்பந்தர் அங்கு வருவிக்கப் படவும், அவருக்கு உற்றது முற்றும் உரைக்கப்பட்டது. அவரும் ஆலவாய் இறைவனை நினைந்து திருநீறு கையில் ஏந்தி, “மந்திரமாவது நீறு” எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி வேந்தன் மேனியின் ஒரு பக்கத்தில் தடவினர். சமண் சான்றோரும் தங்கள் மந்திரத்தை யோதி மயிற் பீலியால் மறுபக்கத்தில் தடவினர். சம்பந்தர் தடவிய பக்கம் மாத்திரம் குளிர்ந்தது. மறுபக்கம் வெப்பு நோயின் கொடுமை மிகந்தது. மருண்டு நோக்கிய சமணர்களை அரிகேசரி தீயெழ நோக்கினன்; ஞானசம்பந்தரை வேண்ட, அவரே மறு பக்கத்தும் திருநீறு தடவ, நோய் நீங்கிற்று; மன்னன் உடம்பு குளிர்ந்தது; மனமும் மகிழ்ச்சி மலர்ந்தது. பின்பு கனல்வாதபுனல் வாதங்கள் நடந்தன. அவற்றில் தோல்வியுற்ற சமணர் மானம் பொறாது கழுவேறி மாண்டனர். அரிகேசரி நெடுமாறன் சைவனாக மாறினான். சமண் சமயமும் அன்று முதல் சரிந்து கெடுவதாயிற்று.

நெடுமாறன் முதுகில் சிறுகூன் இருந்ததென்றும், வெப்பு நீங்கியபோது அதுவும் உடன் நீங்கிற்றென்றும், அதனால் கூன் பாண்டியன் என வழங்கப்பெற்றிருந்த அவன் பின்னர்ச் சுந்தர பாண்டியன் எனப்படுவானாயினான் என்றும் உரைப்பதுண்டு.
அவனது ஆட்சியில் சைவமும் வைதிக சமயமும் வளம் பெற்றன. இரணிய கருப்பம் துலாபாரம் முதலியன செய்து புகழ் மேம்பட்ட அரிகேசரியை, “அந்தணர்க்கும் அரசர்க்கும் வந்தணைக என்று ஈத்தளித்த மகரிகையணி மணி நெடுமுடி அரிகேசரி, அசம சமன் சிரீமாறவர்மன்” என வேள்விக் குடிச் செப்பேடுகள் செப்பு கின்றன, அக்காலத்தே யுவான் சுவாங் என்ற சீன நாட்டு அறிஞர் பாண்டி நாட்டுக்கு வந்திருந்து, தாம் கண்ட சிலவற்றைத் தமது குறிப்பில் எழுதியுள்ளார். அக்குறிப்பில் பாண்டி நாட்டு முத்து வளமும் உப்பு மிகுதியும் வெப்ப நிலையும் மக்களுடைய போர் வன்மையும் வாணிகச் செல்வச் சிறப்பும் எடுத்தோதப்படுகின்றன.

ச்2. நெடுஞ்சடையன் பராந்தகன்
இடைக்காலப் பாண்டிவேந்தருள் மாறவன்மனான அரிகேசரி பராங்குசன் கங்க அரசன் மகளான பூசுந்தரியை மணந்து தனது அரசியலை இனிது நடத்திய செய்தி பாண்டி நாடு நன்கு அறிந்த தொன்று. பூசுந்தரி ஈன்ற மக்களுள் நெடுஞ்சடையன் பராந்தகன் மூத்தவனாவன்; அவன் தன் தந்தைக்குப் பின் பாண்டி நாட்டு அரசுகட்டிலேறி இருபத்தைந்து ஆண்டுகள் (கி.பி. 765 முதல் 790 வரை) ஆட்சி புரிந்தான்.

பல்லவர் - பாண்டியர் போர்
அவன் காலத்தில், பல்லவர்குடியில் நந்திவன்ம பல்லவ மல்லன் தோன்றித் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் தன் குடைக் கீழ் வைத்து அரசு புரிந்தான். தமிழகத்தில் தனியரசு நிறுவிப் புகழ் பரப்பி நின்ற பல்லவர்க்கு எதிரே தென்றமிழ் நாட்டு மதுரைக்கண் இருந்து பாண்டிமன்னர் பண்பு மேம்பட்டு விளங்கினர். பாண்டியரது தமிழரசு பல்லவ மன்னர்க்கு மனவமைதியைத் தரவில்லை. நாளும் வளம் பெருகி வரும் பாண்டியரை ஒடுக்குதல் வேண்டுமென்ற முயற்சி நந்திவன்மன் உள்ளத்தில் வீறுகொண்டு நின்றது. அதனால் அவன் பெரும் படையொன்றைத் திரட்டிக் கொண்டு தென்னாடு நோக்கி வரலானான். அதனைப் பாண்டி மன்னனான பராந்தகன் அறிந்து தானும் தமிழ்ப் படையுடன் திரண்டெழுந்து பல்லவர் படை வரவு நோக்கிச் சென்றான். இருபெரும் படைகளும் தஞ்சாவூர்ப் பகுதியில் அந்நாளில் விளங்கிய பெண்ணாகடம் என்ற ஊரருகே நேர் நின்று பொருதன. பாண்டிப் படையின் ஆற்றலுக்கு எதிர் நிற்க மாட்டாது பல்லவர் படை வலியழிந்து கெட்டது. தலை தப்பியது தவப்பயன் என்று எண்ணிப் பல்லவ மல்லன் தன் நாட்டுக்கு ஓடினான். வெற்றி வீறு பெற்ற நெடுஞ்சடையன் களம் பாடிய பரிசிலர்க்குப் பெருவளம் நல்கி மதுரை சென்று சேர்ந்தான்.

வேணாட்டுப்போர்
மேலைக் கடற்கரைப் பகுதியில் கொல்லத்துக்கும் திருவதங் கோட்டுக்கும் இடையில் கிடக்கும் நிலப் பகுதிக்குச் சங்க காலத்தில் வேணாடு என்று பெயர் வழங்கிற்று. அதனை வேள் ஆய் என்பவன் ஆண்டு வந்தான். ஆய் அண்டிரனும் அவன் வழிவந்தோரும் ஆண்டதனால் வேணாடு, ஆய்நாடு என மேலை நாட்டவர் குறிப்புக்களிற் காணப்படுகிறது. தாலமி முதலியோர் ஆய்நாட்டை ‘ஆவ் நாடு’ என்று குறித்துள்ளனர். பொதியின் மலையின் அடியில், இன்றைய செங்கோட்டைப் பகுதியில் இன்றும் பேரூராய்த் திகழும் ஆய்குடி தலைநகராக விளங்கிற்று. அந்நகர்க்கண் இருந்துதான் வேள் ஆய் வேணாட்டை ஆண்டு வந்தான். வேணாடு மலை வளமும் களிற்றியானைகளும் மிகுந்த நாடாகையால், வேள் ஆய் தன்னை நாடிவந்த இரவலர்க்குப் பெருங்களிறுகளை நல்கிப் புகழ் பெற்றுப் பொலிந்தான். வேள் குடியின் தொடர்பு கொண்டமையாலும், திருவிதாங்கூர் வேணாட்டில் இருப்பதாலும், திருவாங்கூரிலிருந்து ஆட்சி புரிந்த பிற்கால மன்னர்கள் தம்மை வேணாட்டடிகள் எனக் கூறிக்கொண்டனர்.

நெடுஞ்சடையன் பராந்தகன் மதுரையிலிருந்து ஆட்சி செய்து வருகையில், வேணாட்டரசனான ஆய் என்பவன் பாண்டியரது புகழ்ப் பெருக்கம் கண்டு மனம் பொறாது பகை கொள்வானாயினன். “இளைதாக முள்மரம் கொல்க” என்ற கருத்துக் கேற்ப, ஆய்வேளின் குறும்பை முளையிலேயே கிள்ளியெறியும் குறிப்பினை மேற் கொண்டான் பராந்தகன். அந்நாளில் வேணாட்டுக்கு ஆய்குடி அரசியல் தலைநகரமாகவும் விழிஞம் கடற்கரை நகரமாகவும் விளங்கின. அவ்விழிஞத்தின் சிறப்பை.

“ஆழிமுந்நீர் அகழாக அகல்வானத்து அகடுஉரிஞ்சும்
பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனும் அகலஓடும்
அணி இலங்கையின் அரணிதாகி
மணி யிலங்க நெடு மாடமதில் விழிஞம்”

என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகள் செப்புகின்றன.

வேணாட்டரசனான ஆய்வேள் விழிஞத்தின்கண் வீற்றிருப்பது அறிந்த பராந்தகன், பெரும் படையுடன் பொதியிலையும் பொருப்பு மலையையும் கடந்து வேணாட்டிற் படர்ந்து, வேள் ஆயின் விழிஞத்தை முற்றி நின்றான். எதிர்பாராத நிலையில் பராந்தகனது பாண்டிப்படை போந்து முற்றியது கண்ட வேள் ஆய், கடும் போர் புரிந்தான் . முடிவில் விழிஞத்தின் வீறழிய, வேள் படையினர் ஆள் அழிந்து படப் பெருந்தோல்வியுற்றனர்.

பாண்டியன் - அதியமான் போர்
இவ்வண்ணம் வடக்கிற் பல்லவரையும் தெற்கில் வேணாட்டவரையும் வென்று வாகை சூடி விளங்கும் பராந்தகன் நெடுஞ்சடையன் புகழ் தமிழகம் முற்றும் பரவியது கண்டான் மற்றொரு குறுநில மன்னன். சேலம் மாவட்டத்துத் ‘தருமபுரி’ யென வழங்குவதும், பண்டை நாளில் தகடூர் என்ற பெயரால் நிலவியது மாகிய மூதூர்க்கண் இருந்து தகடூர் நாட்டை ஆண்ட அதியமானே அக்குறுநில மன்னன். அவன், சங்க காலத்தில் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்து அழியாப் புகழ்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியின் வழித் தோன்றல். நாளடைவில் அவன் வலிமிகுந்து தகடூர் நாட்டின் தெற்கிலுள்ள கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொங்கு வேந்தனாகக் கொற்றம் பெற்றான். அதனால் அவற்குப் பராந்தகனது போர்ப்புகழ் பொறாமையை உண்டு பண்ணிற்று; தனது அரிய சூழ்ச்சியால் பாண்டியனொடு பொருது புண்பட்டிருந்த பல்லவரையும் வேணாட்டு வேளிரையும் துணையாகப் பெற்று நெடுஞ்சடையன் பராந்தகனைப் போர்க் கழைத்தான்.

வலிய வந்த போரை வாளாவிடாத மறமாண்புடைய நெடுஞ்சடையன், பெரும்படை கொண்டு சென்று வென்றி மேம்பட்டான்; பல்லவர் படையழிந்து மாறினர்; வேணாட்டார் விறலிழந்து வெருண்டோடினர்; கொங்கு மன்னனான அதியமான் புகலெங்குமின்மையின் பாண்டியன் கைப்பட்டு மதுரை நகர்க்கண் சிறையிடப் பெற்றான். வேணாட்டவர்பால் மனம் பொருந்தாமை கண்ட வெல்போர்ப் பராந்தகன், அவர் மறுபடியும் பாண்டி நாட்டிற் புகுந்து குறும்பு செய்யாமைப் பொருட்டுத் திருநெல்வேலிப் பகுதியில் இப்போது ‘உக்கிரன் கோட்டை’ என வழங்கும் பழைய கரவந்தபுரத்தில் ஆழ்ந்த அகழியும் உயர்ந்த மதிலும் அமைத்துப் பெரும்படை யொன்றை அங்கே நிறுத்தி நாடுகாவல் புரியுமாறு ஏற்பாடு செய்தான்.

சமயப் பணிகள்
இவ்வாறு மறத்துறையில் புகழ்மாலையணிந்த பராந்தகன், அறத்துறையிலும் அயரா விருப்புற்றொழுகினான். அந்நாளில் சீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணுசித்தன் என்ற இயற்பெயரை யுடைய பெரியாழ்வார் வைணவசமய குரவராக விளங்கினார். அவருடைய அருமை மகளாரான கோதைப் பிராட்டியார் திருவரங்கத்துத் திருமால்பால் தீராப் பேரன்பு கொண்டு பிரங்கினார். அவரை ஆண்டாள் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் சான்றோர் கூறுவர். பெரியாழ்வாரும் ஆண்டாளும் பாடிய திருமொழிகள் பராந்தகன் உள்ளத்தைத் திருமாலிடத்தே ஒன்றுவித்தன; அவனும் திருமால் திருவடி பரவும் சிறந்த அடியவனானான்; கொங்கு வேந்தனை வென்று அடிப்படுத்திய காலத்தில் கோயம் புத்தூர்க்கு அண்மையிலுள்ள பேரூர்க்கண் திருமாலுக்கு அழகிய தொரு கோயிலைக் கட்டினான். ‘அரசன் எவ்வழி, அவ்வழிக் குடிகள்’ என்ற மூதுரைக்கேற்ப, பராந்தகனுடைய அரசியற் சுற்றத்தார் பலர் திருமால் அடியவராய்ச் சிறப்புற்றனர். மதுரைக் கருகிலுள்ள ஆனைமலையில் மாறன் காரி யென்ற தலைவன்
கி.பி. 770-ஆம் ஆண்டில் நரசிங்கப்பெருமாள் கோயிலைக் கட்டினான். அவனுக்கு மாறன் எயினன் என்றொரு தம்பியுண்டு. அவன் தானைத் தலைவனாய் உயர்வுற்ற போது ஆனைமலை நரசிங்கப் பெருமாள் கோயிலுக்குத் திருமுகமண்டபம் ஒன்றைச் சமைத்துச் சிறந்த புகழ் கொண்டு விளங்குவானாயினன்.

வேள்விக்குடி வரலாறு
பாண்டி நாட்டுக்கு மதுரை தலைநகராக விளங்கியது போலக் கீழ்க் கடற்கரையில் தண்ணான் பொருநையாகிய தாமிரபரணி கடலொடு கலக்குமிடத்தேயுள்ள கொற்கை நகரம் கடற்றுறை நகரமாகப் பண்டை நாளில் விளங்கிற்றென்பது வரலாறு கூறும் உண்மை. அந்நகரின் கண் நான்மறை வல்ல வேதியர் பலர் வாழ்ந்தனர். சங்ககாலப் பாண்டியர் காலத்தேயே அவர்கள் பாண்டிநாட்டில் இடம்பெற்று வேந்தர்களையும் செல்வர்களையும் கொண்டு வேள்விகள் செய்தொழுகினர். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்தில் நற்கொற்றன் என்ற வேதியன் வேள்விக்குரிய முறை கூறும் வைதிக நூல்களில் சிறந்த புலமை யெய்தி விளங்கினான். அது கண்டு அவனுக்குக் கொற்கை கிழான் என்ற சிறப்பை நல்கி மகிழ்வித்தான் பெருவழுதி. வேள்வித் துறையில் நற்கொற்றன் வீறுகொண்டு நின்றதோடு வேந்தர்களும் செல்வர்களும் செய்த வேள்வி பலவற்றிற்கு முன்னணியாக நின்று அவற்றை இனிது முற்றுவித்தது குறித்து அவற்கு ஊரும் நிலமும் நல்கிக் ‘காமக் காணி’ என்ற சிறப்பும் நல்கினர். அவற்றால் அவன் கொற்கை கிழான் காமக்காணி நற்கொற்றன் என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இக்‘காமக் காணிகள்’ பலர் சங்க கால முதல் இடைக்காலச் சோழ பாண்டியர் காலம் வரை இருந்துள்ளனர். சங்கச் சான்றோர்களில் விளங்கிய காமக்காணி என்ற பெயரை ஏடு எழுதினவர்கள் காமக்கனி எனத் தவறாக எழுதிவிட்டனர். அதனைக் கண்ட இக்காலவறிஞர்கள் காமக் கண்ணி என்றும் இது காமாக்ஷி என்ற வட சொல்லின் மொழி பெயர்ப்பு என்றும் உரைக்கலாயினர். இது நிற்க.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அவனுக்கு வேள்விக்குடி என்ற ஊரை இறையிலி பிரமதாயமாக நல்கினான். அவனும் அவன் வழியினரும் அவ்வூரைத் தமக்கேயுரிமையாகக் கொண்டு ஆண்டு அனுபவித்து வந்தனர். இதன்பின் ஆண்டுகள் சில கழிந்தன. சங்ககாலத் தமிழ் வாழ்வும் சரிந்தொழிந்தது. களப்பிரர் என்னும் கூட்டத்தார் வடபுலத்தினின்றும் தென்றமிழ் நாடு புகுந்து நாட்டின் செல்வநிலையைச் சீரழித்த போது, தமிழும் தமிழ் வாழ்வும் தலை தடுமாறின. களப்பிரர் தலைவர், தமிழரது அரச நிலையைத் தகர்த்து அழித்தனர். தமிழ் வேந்தர்குடி தரை மட்டமாயிற்று. அக்காலத்தே வேள்விக்குடி இறையிலி பிரமதாயமாக இருந்த நிலையின் நீங்கி வரிசெலுத்துதற்குரிய திறைபடு பகுதியாயிற்று. நற்கொற்றன் குடியினரும் நலிந்து வலியிழந்து ஒடுங்கினர்.

சில நூற்றாண்டுகட்குப்பின் களப்பிரர் செல்வாக்கு இழந்து சிதைந்தொழிந்தனர். பாண்டியர் நாடாளத் தொடங்கினர். அவர் மரபில் வந்த நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் நற்கொற்றன் வழியில் கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன் என்பவன் தோன்றி வேற்விக்குடி வரலாற்றை நன்குணர்ந்து அதற்குரிய சான்றுகளைத் தொகுத்துக் கொண்டு பராந்தகன் அரசவை அடைந்து முறையிட்டான். அவன் முறையீடு கேட்ட வேந்தன், “என்னே நும் குறை?” என்றலும், நற்சிங்கன், அரசவையில் நின்று “ பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியால் எங்கட்கு இறையிலியாக்கப்பட்ட வேள்விக்குடி என்ற ஊர் களப்பிரரால் வரிசெலுத்த வேண்டிய பகுதியாக அமைக்கப் பட்டுள்ளது. அதனை நீக்கிப் பழைய நிலையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். அது கேட்டு வேந்தன் முகம் மலர்ந்து புன்முறுவல் செய்து, “நாட்டால் நின் பழமையாதல் காட்டி நீ கேள்” என்று பணித்தான். அவனும் நாட்டவரைக் கூட்டித் தன் உரிமையின் பழைமை நிலையைக் காட்டி நிறுவினான். அதனால் வேந்தன், “மேனாளை நம் குரவரால் பான் முறையில் உவகை மிகத் தரப்பட்டதை எம்மாலும் தரப்பட்டது” என்று செம்மாந்து கூறினான். மேலும், அவன் தன் ஆணையை வற்புறுத்தற்குப் பண்டைய முதுகுடுமி போலவே நற்சிங்கனுக்கு நீரோடு அட்டிக் கொடுத்தான். இதனை வேள்விக்குடிச் செப்பேடுகள்,

“விற்கைத் தடக்கை விறல்வேந்தன்
கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கற்குத்
தேரோடும் கடல்தானையான்
நீரோடு அட்டிக் கொடுத்தான்”

என்று கூறுகின்றன.

இவ்வண்ணம் தன் முன்னோர் பெற்ற செல்வத்தை மீளவும் பெற்ற நற்சிங்கன், அதனைத் தானே கொண்டொழியாது தன் உடன் பிறந்தார்க்கும் பிறர்க்கும் பகுத்தளித்தான். அவன் அதனை முதற்கண் மூன்று கூறு செய்து இரண்டினை ஐம்பது வேதியர்க்கு அளித்துத் தனக்கென ஒரு கூற்றை வைத்துக் கொண்டான்; தனக்கென நிறுத்த ஒரு கூற்றையும் பின்பு பத்துக் கூறு செய்து நான்கினைத் தன் தம்பிமார்க்கும், எஞ்சிய ஆறினையும் தன் சிற்றப்பன் மக்களுக்கும் அளித்தான். இறுதியில் கூறுபெற்ற முத்திறத்தாரும், ஒன்று கூடி இச் செப்பேடுகளைச் செவ்வையாய் எழுதிய ஏனாதி சாத்தஞ் சாத்தனார்க்கு நான்கு படாகாரம் நிலம் கொடுத்துச் சிறப்பித்தனர். படாகாரம் என்பது அக்கால நில அளவு.

இக்குறிப்புக்கள் அரசன் ஆணை பெற்றுச் செப்பேடுகளில் எழுதப்பட்டன. அவற்றுள் பாண்டியர் வரலாறு கூறும் வடமொழிப் பகுதியை வரோதயபட்டர் என்பவரும், தமிழ்ப் பகுதியை ஏனாதி சாத்தஞ் சாத்தனாரும் எழுதித் தந்தனர். இவை இப்போது வேள்விக்குடிச் செப்பேடுகள் என வழங்குகின்றன.

இடைக்காலச் சோழர்


1. சோழரும் பௌத்தமும்
சோழர் எழுச்சி
சங்க காலத்தில் மிக்க புகழுடன் தமிழ் நாட்டை ஆண்ட தமிழ் வேந்தர் பின்னர்க் களப்பிரர் வரவால் சீரழிந்து தேய்ந்து இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போயினரன்றோ? அதன் பின், பல்லவர் தமிழகத்தின் வட பகுதியிற் புகுந்து வெருட்டவே, அக்களப்பிரர் கூட்டம் பாண்டி நாட்டிற் படர்ந்து தன் தீத்தொழிலைச் செய்து இடைக்காலப் பாண்டியர் எழுச்சியால் ஈடழிந்து கெட்டது. பல்லவர் காலத்தில் சோழ வேந்தர் குடியினர் மெலிவுற்று அரசியல் தலைவர்கீழ்ப் பணிபுரிந்தொழுகினர். அதனை அவர்கள் காலத்தெழுந்த சைவ இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. இவ்வகையில் சுமார் அறு நூறு ஆண்டுகள் சோழர்கட்குச் சிறந்த வாழ்வளிக்காது கழிந்தன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு, அரசியல் அரங்கின்கண் சோழர்கள் மீளத் தோன்றுதற்கேற்ற சூழ்நிலையைப் பயந்தது. அக் காலத்தே சோழர் குடியொன்று காவிரித் தென்கரைப் பகுதியில் பழையாறை என்னும் பேரூரில் இருந்து நாடு காவல் புரிந்து வந்தது. அப்போது தஞ்சாவூரிலும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் விளங்கிய வல்லம், செந்தலை ஆகிய இடங்களிலும் முத்தரையர் என்பவர் தோன்றி அரசியல் தலைமை பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய கொடையும் புகழும் புலவர் பாடும் பெருமை பெற்று இருந்தன. முத்தரையர் வடக்கில் காஞ்சி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு சிறப்புடன் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்க்கு அடங்கி அவர்களது ஆணைவழி நின்று ஒழுகினர்.

ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாட்டில் பல்லவரது ஆட்சி வலி குன்றத் தலைப்பட்டது. அதனை யுணர்ந்த முத்தரையர், சூழ இருந்த குறுநிலத் தலைவர்களை ஒடுக்கித் தாம் அவரின் மேன்மைபெற முயல்வாராயினர். அக்காலத்தே பழையாறையில் இருந்த சோழர் குடியினர் முத்தரையரை எதிர்த்துப் பன்முறையும் போர் உடற்றினர். இவ்வகையில் சோழர்கட்குப் பையப் படையும் பெருகிற்று. முடிவில் தஞ்சைப் பகுதியில் இருந்து சிறந்த முத்தரையரை விசயாலயன் என்ற சோழர் குடித் தோன்றல் வெற்றி கொண்டு சோழ அரசை நிலையிட்டான். அவனது பெருக்கத்தைக் கண்ட அந்நாளைப் பல்லவ மன்னனான நிருபதுங்க வன்மன் அவனோடு நட்புறவு கொண்டு, வடபகுதியான தொண்டை நாட்டைத் தானும், தென்பகுதியான சோழ நாட்டை விசயாலயனும் ஆட்சி புரிய ஏற்பாடு செய்துகொண்டான்.

சோழ நாட்டில் சோழரது ஆட்சி தோன்றுங்கால் பாண்டி நாட்டில் இடைக்காலப் பாண்டி வேந்தர் போர்ப் புகழ் பெற்றுப் பொலிந்து விளங்கினர். எனினும் அவர்கட்குச் சோழரோடு நட்புறவு கொண்டு பண்டுபோல் இனிதிருக்க மன முண்டாக வில்லை. சோழரை யொடுக்கித் தமது வெற்றிச் சிறப்பே சோழ நாட்டிலும் விளங்க வேண்டுமென எண்ணினர். விசயாலயன் முதுமை யெய்தவும், அவன் மகன் ஆதித்த சோழன் இளையனாக இருந்தமையும், பல்லவ வேந்தனான நிருபதுங்க வன்மன் இறந்து பட அவன் மகன் அபராசிதன் இளையனாய் இருந்தமையும் கண்டான் இரண்டாம் வரகுணன் என்ற பாண்டியன்.

இந்த நிலைதான் பாண்டியர் அரசைச் சோழ நாட்டில் நிலையிடற்கு ஏற்ற செவ்வியென்று கருதி, வரகுணன் சோழ நாட்டுத் திருப்புறம்பயம் என்னுமிடத்தே சோழ பல்லவருடன் போர் எதிர்ந்தான். அந்நாளில் கங்க நாட்டையாண்ட பிருதி விபதியென்பவன் அபராசிதனுக்கு உதவியாக வந்தான். ஒருபால் பல்லவ சோழர் படையும் கங்கர் படையும், ஒருபால் பாண்டிப் படையும் நின்று பொருதன. அப்போரில் பாண்டியன் வரகுணன் தோல்வியுற்றுப் பாண்டி நாட்டுக்கே ஓடினான். வெற்றியுற்ற வர்களில் அபராசிதன் தன் கீழிருந்த சோழ நாட்டுப் பகுதியையும் ஆதித்தனையே ஆளுமாறு செய்து நீங்கினான். கங்கனான பிருதிவிபதி இப்போரில் பல்லவ சோழர் பெற்ற வெற்றிக்குத் துணை புரிந்து முடிவில் இறந்து போனான். அதுமுதல் சோழ அரசு பிறைமதி போலப் பெருகி வளர்வதாயிற்று.

சோழப் பேரரசர்
விசயாலயன் வழிவந்த இடைக்காலச் சோழப் பேரரசு, சுமார் நான்கு நூற்றாண்டுகள் இருந்து இனிய புகழ்பெற்று விளங்கிற்று. அக்காலத்தே விசயாலயன், முதல் ஆதித்தன், முதற் பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகனான சுந்தர சோழன், உத்தமசோழன், முதல் இராசராசன், முதல் இராசேந்திரன், முதல் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன், முதற் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் எனப் பலர் சோழ வேந்தர்களாய்த் தமிழரசு புரிந்தனர்.

இவ்வேந்தர் அனைவரும் சைவ வேந்தராவர். தென்னாட்டில் சிவன் கோயில்கள், மிகப்பலவாய், இன்றும் வானளாவி நிற்கும் கோபுரங்களாலும் மதில்களாலும சிறப்புற்றிருப்பது இவ்வேந்தர்களின் சமயப் பணியினாலேயாம். சைவத் திருமுறைகளை வழங்கிய ஆசிரியன்மார்களுள் ‘திருவிசைப்பா’ என்னும் திருமுறையைப் பாடிய சான்றோருள் மேலே நிரல் படுத்துக் காட்டிய சோழ வேந்தர்களில் சிவஞான கண்ட ராதித்த சோழரும் ஒருவராவர். இச்சோழ மன்னர்கள் இடைக்காலத்தே தோன்றியது, சைவ சமய குரவர்கள் நிறுவிய சைவ நெறி பொன்றாத நிலைபேறு குறித்தே என்னுமாறு அவரது அரசியல் வரலாறு அமைந்திருக்கிறது. இருப்பினும் அவர்கள் காலத்தே நம் நாட்டின் வடபகுதியான வட இந்தியாவில் மக்களது சமயவுரிமையைப் பிறிக்கும் செயல்கள் பல நிகழ்ந்தாற் போலவின்றிச் சமயவுரிமை நன்கு பேணப்பட்டு வந்தமை வரலாற்றறிஞர் கண்டு இறும்பூதுகொள்ளும் ஏற்றம் பெற்று இலங்குகிறது.

சோழரும் பௌத்தமும்
சங்க காலத்திலிருந்தே சீனநாட்டு வேந்தர்க்கும் கடார நாட்டு அரசர்க்கும் தொடர்பு இருந்ததென்பதை வரலாற்று நூல்கள் வழுத்துகின்றன. நம் பாரத நாட்டின் வட பகுதியில் புத்த தருமம் தோன்றிய பின் அது சீன நாட்டுக்குச் சென்றதும், அச்சீன நாடு புத்த சமயம் நிலவும் பெரு நாடாக மாறியதும். உலகறிந்த வரலாற் றுண்மைகளாகும். புத்த பகவான் தோன்றிய நாடாதல்பற்றிச் சீனருக்கும் நம் நாட்டின் பால் பெரு மதிப்பு உண்டாயிற்று. சீன நாட்டுப் புத்த துறவிகள் பண்டை நாளிலிருந்தே நம் நாட்டுக்கு வருவதும் சிலகாலம் இங்கே தங்கி இருப்பதும் பின்பு தம் நாட்டுக்குச் செல்வதுமாக இருந்து வந்தனர். இஃது அவர்களுடைய சமய வொழுக்கமாக மாறியதும் உண்டு.

சீனர்களில் இயூன் சுவாங் முதலியோர் நம் நாட்டிற்கு வந்து, தாம் அந்நாளில் கண்ட சிலவற்றைத் தம்முடைய குறிப்புக்களில் பொறித்துள்ளனர். இயூன்சுவாங் காலத்தில் நம் தமிழ் நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட “சங்க ஆராமங்கள்” இருந்தன என்றும், பத்தாயிரவர்க்குக் குறையாத “குருமார்கள் தேரவாதம்” (ஸ்தவிரவாதம்) பயின்றன ரென்றும், “ததாகர்” உரைத்த அறம் கேட்டு நாட்டவர் பலர் புத்தராயினரென்றும், சோழ பாண்டிய நாடுகளில் புத்தர்களும் புத்த சயித்தியங்களும் மிகுதியாக உண்டு எனினும், புத்த தருமம் அருகியிருந்த தென்றும் குறித்திருக்கின்றார்.

சோழ நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம் கடலாற்கொள்ளப்பட்டதாயினும், பட்டினம் என்ற பெயர் தாங்கிய ஊர்கள் பல கீழை நாட்டவரோடும் வாணிகம் புரிந்து வந்தன. அவற்றுள், தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினமும் ஒன்று. இடைக்காலத்தே மேலே கூறிய சோழர் ஆட்சி தோன்றிச் சிறப்பதற்கு முன்பே புத்த துறவிகள் பலர் இங்கே தங்கிச் சங்காராமம் நிறுவித் தமது புத்த தருமத்தை மக்கட்கு அறிவுறுத்தி வந்தனர். அக்காலத்து வேந்தர்களும் தம்முடைய அரசியலாதரவை வேண்டும் அளவு அவர்கட்குச் செய்து வந்தனர்.

நாகையில் புத்தர் கோவில்
தொண்டை நாட்டை நெடுங்காலம் ஆண்ட பல்லவ மன்னருள் ஒருவனான இரண்டாம் நரசிங்கவர்மன் காலத்தில் சீன நாட்டுச் சீன வேந்தன் ஒருவன் நாகப்பட்டினத்தில் புத்த பகவானுக்கு ஒரு கோயிலெடுக்க விரும்பினான். அவ்விருப்பத்தை அறிந்த வியந்த நரசிங்கவர்மனும் அவ்வாறே புத்தசயித்தியம் ஒன்றை எடுப்பித்து, அதற்கு இடத்தக்க பெயர் ஒன்றைக் தெரிவிக்குமாறு சீன வேந்தனைக் கேட்டான். தன் விருப்பத்தை நன்கு மதித்துச் சயித்தியம் ஒன்றை நிறுவிய பல்லவனது பண்பாட்டைப் பாராட்டி அச்சயித்தியத்துக்கென உயர்நிலைத் தூண் ஒன்றைத் தன் அன்புக்குறியாகச் சீன வேந்தன் தந்து விடுத்தான். புத்த சயித்தியமும் நின்று நிலவி வந்தது.

ஆண்டுகள் சில கழிந்தன. சமய வளர்ச்சியாலும் அரசியல் மாறுதல்களாலும் சீனர்களின் போக்கு வரவுகள் தேய்ந்து போயின. சீன நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் இடையிலுள்ள அருமணம் (Burma-பர்மா), மலாயம், சண்பகம், சாவகம் முதலிய நாடுகளில் வாழ்ந்த மக்களிடையேயும் மிகப் பல மாற்றங்கள் உண்டாயின.

முதல் இராசராசன் உதவி
அருமண நாட்டில் சயிலேந்திரர் என்னும் வேந்தர் தோன்றி ஆட்சிபுரிந்தனர். அவர்கள் பலரும் புத்தர்களாகவே காணப்படு கின்றனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் அருமணத்தின் வட பகுதியில் வாழ்ந்த சயிலேந்திர வேந்தன் வங்க வேந்தனான தேவபாலனை வேண்டி நாளந்தாவில் புத்தவிகாரம் ஒன்றை ஏற்படுத்தினான். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சயிலேந்திர சூளாமணிவர்மன் என்பவன் அருமண நாட்டின் தென்பகுதியில் இருந்து அரசு புரிந்து வந்தான். நாளந்தாவில் சயிலேந்திரனால் புத்த விகாரமுண்டாகிய தறிந்து நம் தென்னாட்டில், தான் ஒரு புத்தவிகாரத்தை நிறுவச் சூளாமணிவர்மன் விழைந்தான். அது குறித்து அவன் முயன்றபோது நாகப்பட்டினத்தில் சீன வேந்தன் பெயரால் தோன்றி நின்ற புத்த சயித்தியம் சீர்துலைந்திருப்பது அவற்குத் தெரிந்தது. அக்காலத்தே சோழநாட்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு முதல் இராசராசன் தனது புகழ்மிக்க பேரரசை நிறுவிச் சிறந்து விளங்கினான். சூளாமணிவன்மன் தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளும் திருமுகம் ஒன்றை முதல் இராசராசனுக்கு அரசர்க்குரிய சிறப்புடன் விடுத்தான்.

விசயாலயன் வழித்தோன்றிய இடைக்காலச் சோழ வேந்தருள் ஒப்பாருமிக்காருமில்லாத ஒண்புகழ் பெற்ற பெரு வேந்தன் இராசகேசரிவன்மனான முதல் இராசராசன் தலை நகராகிய தஞ்சையில் இருந்த தளிக்குளம் என்ற மிகப் பழைய சிவன்கோயிலைப் புதுப்பிக்குமுகமாக எடுத்துள்ள பெருவுடையார் கோயில் அவனுடைய புகழுருவாய் நின்று காண்பார் காட்சிக்கு மாட்சி தந்துகொண்டு நிற்கிறது. அவன் தன்னைச் ‘சிவபாத சேகரன்’ எனக் கூறிக்கொண்டதும், மரக்கால் நிறை கோல் முதலிய அளவை கட்கு ‘ஆடவல்லான்’ என்று பெயர் குறித்து வழங்கியதும் பிறவும் அவனுடைய சிவப்பற்றை நன்கு வற்புறுத்துகின்றன.

சிவநெறியில் நின்ற வேந்தர் குடியில் தோன்றிச் சமயவுரிமையைப் பேணி அரசியல் வாழ்வு நடாத்தும் அரசர் பெருமகனான முதல் இராசராசன், சூளாமணிவன்மன் விடுத்த வேண்டுகோளை வரவேற்று, அவன் விரும்பியவாறு செய்து கொள்ளுதற்குத் தனது இசைவுத் தீட்டினை நல்கினான். சின்னாட்களில் நாகப்பட்டினத்தில் புத்த சயித்தியம் தோன்றித் திகழ்தற்கு ஆவன செய்யப்பட்டன.

முதல் இராசராசன் பேராற்றலும் பெருந்திறலும் படைத் தவன். அவன் ஆட்சியில் சூளாமணிவன்மன் விரும்பிய புத்தவி காரம் நாகப்பட்டினத்தில் கட்டப்படுகையில் தஞ்சையில் பெருவு டையார் திருக்கோயில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தான் எடுக்க விரும்பிய சிவன் கோயில் திருப்பணிகளுக்கிடையே புத்த சமயத்தவர் முயற்சி தோன்றக் கண்ட வேந்தன், அவர்கட்குத் தன் முழு ஆதரவையும் நல்கியது, அந்த அரசர் பெருமானுடைய பரந்த மனமாண்பையே விளக்கிக் காட்டுகின்றது.

தஞ்சையில் இராசராசன் பெருவுடையார் கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கும் காலத்தே, ஒரு நாள் “புத்த சாதுக்கள்” சிலர் தஞ்சாவூர்க்கு வந்தனர். வேந்தர் பெருமான் தஞ்சாவூர்ப் புறம்படி மாளிகையிலுள்ள இராசாசிரயன் என்னும் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருந்து அவர்களை வரவேற்றான். அவர்கள் அரசனை வாழ்த்தி நாகப்பட்டினத்தில் சூளாமணி புத்தவிகாரம் உருவாகி வருவதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறிது போது அவர்களுடன் உரையாடி விடையளித்து வழிவிட்ட வேந்தர் பெருந்தகை, அமைச்சர் முதலிய அரசியற் சுற்றத்தாரை வருவித்து, நாகப்பட்டினத்தில் எழும் புத்தவிகாரத்தின் நலம் குறித்துத் தான் செயற்பாலதுயாது என அவர்களோடு ஆராய்ந்தான்.

பின்பு, தனது ஆட்சி இருபத்தோராம் ஆண்டு தொண்Qற்றி ரண்டாம் நாள் “க்ஷத்திரிய சிகாமணி வள நாட்டுப் பட்டினக் கூற்றத்து நாட்டாரும் பிரமதேயக் கிழவரும் தேவதானப் பள்ளிச்சந்தக் காணி முற்றூட்டு விட்ட பேரூர்த் தலைவர்களும் நகரங்களில் உள்ள தலைவர்களும் அறிக,” என்று தொடங்கிக், “கிடாரத்தரையன் சூளாமணிவன்மன், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து எடுப்பிக்கின்ற சூளாமணிவன்ம விகாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்காக க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பட்டினக் கூற்றத்தைச் சேர்ந்ததும், தொண்ணூா ற்றேழே இரண்டுமா முக்காணி முந்திரிகைக் கீழரையே இரண்டுமா நிலமுடையதும், எண்ணாயிரத்து நாற்பத்து முக்கலனே இருதூணிக் குறுணி ஒருநாழி நெல் வருவாயுடையதுமான ஆனை மங்கலம் என்னும் ஊரையாண்டு இருபத்தொன்றாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக் கொடுக்க,” என முதல் இராசராசன் ஆணை பிறப்பித்தான்.

சோழ வேந்தர் பெருமானான முதல் இராசராசன் இவ்வண்ணம் நாகப்பட்டினத்தில் தான் எடுத்த புத்த விகாரத்துக்கு நிவந்தமளித்துப் பள்ளிச் சந்தமாக ஆனை மங்கலம் என்னும் ஊரை இறையிலியாகக் கொடுத்த செய்தியைக் கடாரநாட்டுச் சூளாமணிவன்மன் அறிந்து பெருமகிழ்ச்சி எய்தினான். ஆயினும், அவன் அக்காலத்தே உடல்நலம் குன்றிப் படுக்கையிற் கிடந்தான். சின்னாட்களில் அவன் இறந்து போகவே, அவன் மகனான மாற விசயோத்துங்க வன்மன் அரசு கட்டிலேறினான். தன் தந்தை நாகப்பட்டினத்தில் எடுத்த புத்த சயித்தியம் முற்றுப்பெறாதபோதே இறந்ததும், அந்நிலையிலேயே சோழ வேந்தன் பள்ளிச் சந்தம் விட்டுச் சிறப்பித்ததும் அறிந்து, சோழ மன்னனுடைய நட்புப்பெற்று, அச்சயித்தியத்தை விரைவில் கட்டி முடித்தான். இது பற்றியே அவனுடைய வடமொழிச் செப்பேடுகள் நாகப்பட்டினத்துச் சூளாமணிவன்ம புத்த விகாரத்தை மாற விசயோத்துங்க வன்மன் கட்டினான் என்று இயம்புகின்றன.

முதல் இராசேந்திரன்
சில ஆண்டுகட்குப்பின் முதல் இராசராசன் விண்ணுலகு புகுந்தான். அவன் மகனான முதல் இராசேந்திர சோழன் அரசு கட்டிலேறிச் சோழநாட்டுப் பேரரசனாய் விளக்கமுற்றான். அவன் காலத்தே பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினத்துப் புத்த சயித்தியப் பகுதி சோழகுலவல்லி பட்டினம் எனப் பெயர் பெற்றது. இராசராசன் செய்த சிறப்புக்கு நன்றியறிகுறியாக மாறவிசயோத்துங்கவன்மன் சூளாமணிவன்ம விகாரத்தின் ஒரு பகுதிக்கு ‘இராசராசப் பெரும்பள்ளி’ எனவும், இராசேந்திரனைச் சிறப்பித்து ஒரு பகுதிக்கு ‘இரா சேந்திரசோழப் பெரும்பள்ளி’ எனவும் பெயர் தந்து பெருமை செய்தான். அன்று முதல் சூளாமணிவன்ம விகாரம் இப்பெயர்களே கொண்டு நிலவி வந்தது.

ஆண்டுகள் பல கழிந்தன. இடைக்காலத்தில் தமிழ் நாட்டுப் பெருங்கோயில்களில் நுழைந்து அவற்றிற்குரிய நிலங்களைக் கவர்ந்து கொண்டு பெருஞ்செல்வம் எய்திக் களிக்கும் கோயிற் பெருச்சாளிகள் அக்காலத்தும் இல்லாமல் இல்லை. புத்த சயித்தியங் கட்குரிய இடங்களில் காணியாளர் பலர் புத்த சங்கத்தாரை ஏமாற்றி அவருடைய இடங்களைக் கவர்ந்து கொள்ளலாயினர். புத்த சங்கத்தார் செய்து கொண்ட வேண்டுகோளை ஏற்று ஆவன செய்யும் அறிவும் ஆற்றலும் மாற விசயோத்துங்கனுக்குப் பின் தோன்றிய கடாரத்தரசர்கட்கு இலவாயின.

முதற் குலோத்துங்கன் உதவி
கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதற் குலோத்துங்கன் அரசு கட்டிலேறினான்; இராசேந்திரனுக்குப் பின் தோன்றிய வேந்தர்கள் காலம், புத்த சங்கத்தார் தமது சயித்தியத்தின் நிலங்களை மேலும் இழப்பதற்கு வேண்டிய வாய்ப்பை அளித்தது. கடாரத்தரசரும் சோழ வேந்தரும் போதிய துணைபுரியாமையால், புத்த விகாரத்தில் இருந்த சங்கத்தார் அரசியற் சலுகை பெறுதற்கு வழியின்றி வருந்தியிருந்தனர். முதற் குலோத்துங்கன் அரசனானதும் புத்த சங்கத்துக்கு ஒரு நற்காலம் வருவதாயிற்று.

முதற் குலோத்துங்கனது ஆட்சிக்காலம் தமிழ் நாட்டுக்கு மிக்கதோர் இன்பக்காலம். கடார நாட்டிலும் அந்நாளில் நல்லரசர் தோன்றி நாட்டில் இன்ப வாழ்வு நிலவுவித்தனர். புத்த சங்கத்தார் தங்கள் கடார வேந்தனுக்குத் தங்கள் நிலையைத் தெரிவித்துச் சோழ வேந்தனைக்கொண்டு தங்கள் குறையைப் போக்கி முறைசெய்யுமாறு வேண்டினர். அவரது வேண்டுகோட்கு இசைந்த கடாரத்தரசன் அது குறித்து, “இராஜ வித்தியாதர ஸ்ரீசாமந்தன், அபிமானதுங்க ஸ்ரீ சாமந்தன் என்ற இருவரைக் குலோத்துங்கன்பால் தூது விடுத்தான்.”

அவர்கள் இருவரும் நேரே நாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். அங்கே இருந்த புத்த சங்கத்தாரைக் கண்டு வேண்டுவனவற்றை அறிந்துகொண்டு, முதல் இராசராசன் பள்ளிச் சந்தமாகத் தந்த செப்பேட்டை நன்கு ஆராய்ந்து அதனையும் எடுத்துக் கொண்டு முதற் குலோத்துங்கனைக் காணச்சென்றனர். அப்போழ்து, ஆயிரத் தளியான ஆகவ மல்ல குலகாலபுரத்துக் கோயிலினுள்ளால் அமைந்த திருமஞ்சனசாலையாகிய காளிங்கராயன் மண்டபத்தில் குலோத்துங்கன் திருவோலக்கம் இருந்தான். கடாரத்துத் தூதுவரும் நாகப்பட்டினத்துப் புத்த சங்கத்தாரும் வேந்தனைக் கண்டது பற்றி மனமகிழ்ந்த சோழவேந்தன், அவர்கட்கு உரிய சிறப்புச் செய்து இருக்கை தந்து இன்புறுத்தினான். அரசியல் சுற்றத்தாருள் சந்திவிக்கிரக இராசவல்லப பல்லவரையரும் அதிகாரிகளான இராசேந்திர சிங்க மூவேந்த வேளாரும் உடனிருந்தனர்.

இராஜவித்தியாதரனும் அபிமானதுங்கனும் நாகப்பட்டினத்துப் புத்த விகாரத்துத் தோற்றமும் வளர்ச்சியும், முதல் இராசராசன் முதலிய வேந்தர்கள் செய்த சிறப்பும் ஆகியவற்றை விரிவாக எடுத்தோதி, “கடாரத்தரையன் பட்டினக்கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டணத்தில் எடுப்பித்த இராஜேந்திர சோழப் பெரும் பள்ளிக்கும் இராஜராஜப் பெரும் பள்ளிக்கும் பள்ளிச் சந்தமான ஊர்கள் பழம்படியே அந்தராயமும் வீர சேஷையும் பண்ணையும் அண்டை வெட்டியும் குந்தாலியும் சுங்கமேரையும் உள்ளிட்டன வெல்லாம் தவிரவும், முன்பு பள்ளிச் சந்தங்களைக் காணியுடைய காணியாளர் தவிரவும் இப்பள்ளி இச்சங்கத்தார்க்கே இவை காணியாக அமையவும் பண்ணியருள வேண்டும், என விண்ணப்பம் செய்தனர்.”

கேட்ட வேந்தன் தன் அதிகாரிகளை நோக்கி, “உண்மை ஆராய்ந்து உரியவற்றைச் செய்க” எனப் பணித்தான். அவர்கள் பட்டினக்கூற்றத்து நாகப்பட்டினத்தை அடைந்து இன்றியமையாத ஆராய்ச்சிகளைச் செய்து, “கடாரத்தரையன் ஜய மாணிக்க வளநாட்டுப் பட்டினக் கூற்றத்துச் சோழகுல வல்லி பட்டினத்து எடுப்பித்த இராசராசப் பெரும் பள்ளிக்குப் பள்ளிச் சந்தம் ஜயமாணிக்க வளநாட்டுப் பட்டினக் கூற்றத்து ஆனை மங்கலத்திலும் முஞ்ஞைக் குடியிலும் திருவாரூர்க் கூற்றத்து ஆமூரிலும் அளநாட்டு வடகுடியான நாணலூரிலும் கீழ்ச்சந்திர பாடியிலும் பாலையூரிலும் ஜயங்கொண்ட சோழ வளநாட்டுக் குறும்பூர் நாட்டுப் புத்த குடியிலும் விஜய ராஜேந்திர சோழ வளநாட்டு இடைக்கழிநாட்டு உதயமார்த்தாண்ட நல்லூரிலும் இருப்பது கண்டு ஆங்காங்குள்ள நிலங்களையும் அவ்வவற்றுக்குரிய காணிக் கடனையும் அறுதியீட்டையும் குறித்துத் தொகுப்பாக வேந்தனுக்குத் தெரிவித்தனர்.”

வேந்தர் பெருமானான முதற் குலோத்துங்கன் நாட்ட வரையும் அரசியற் சுற்றத்தாரையும் ஆராய்ந்து, ஆனை மங்கலம் முதலிய ஊர்களில் கண்ட நிலங்களை இப்பள்ளிக்கு வேண்டும் நிவந்தங் களுக்காக, “இறையிலி ஆக்கினோம்” என்றும், இப்பள்ளிச் சந்தங்களையுடைய காணியாளரைத் தவிர்த்துக் குடி நீக்கிப் பள்ளிச் சங்கத்தார்க்கே “காணியாகக் கொடுத்தோம்” என்றும் குறிப்பிட்டு “ஜயமாணிக்க வள நாட்டுப் பட்டினக் கூற்றத்துச் சோழகுலவல்லி பட்டினத்து ஸ்ரீ சயிலேந்திர சூளாமணிவன்ம விகாரமான இராஜராஜப் பெரும் பள்ளிக்குப் பள்ளிநிலையும் பள்ளி வளாகமும் இறையிலியாகக் கொடுத்தோம்; இப்படிச் செய்து கொடுக்க” என்று சோழர் பெருமான் திருவாய் மொழிந்தருளித் “திருமுகப் பிரசாதம் செய்தருளினான்.”

திருமுகம் பெற்ற சந்திவிக்கிரக இராசவல்லப பல்லவரையர், அதிகாரிகளான இராசேந்திர சிங்கமூவேந்த வேளார்க்கு அறிவிக்க, அவர் செப்பேடு எழுதுவோனுக்கு நிகழ்ந்தது தெரிவித்துச் செப்பேடு பொறிக்குமாறு கட்டளையிட்டார். அவன், “தாமிரசாசனம் பண்ணிக்கொடுக்க என்று சந்திவிக்கிரக இராசவல்லப பல்லவரையரும் அதிகாரிகள் இராஜேந்திரசிங்க மூவேந்த வேளாரும் சொல்ல, இத்தாமிர சாசனம் எழுதினேன். உட்கோடி விக்கிரமாபரணத் தெரிந்த வேலைக்காரரில் நிலையுடைய பணையன் நிகரிலி சோழ மதுராந்தகனேன்”1 எனக் கையெழுத்திட்டு வழங்கினான்.

முறைவேண்டி நின்ற புத்த சங்கத்தார் வேண்டியாங்குப் பெற்றுத் தாம் எய்திய மகிழ்ச்சியால் வேந்தனை வாழ்த்தி விடை பெற்றுக்கொண்டு நாகப்பட்டினம் சென்று சேர்ந்தனர். செய்தற்குரிய திருத்தங்களைச் சாமந்தர் இருவரும் செவ்வையாகச் செய்து சோழ வேந்தன்பால் விடையும் அவன் நல்கிய சிறப்புக்களையும் பெற்றுக் கொண்டு தமது கடார நாடு சென்றனர்.

புத்தர் கோயிலின் சீரழிவு
பெருவேந்தர்களான இரண்டாம் நரசிங்கவர்ம பல்லவனாலும் இராசகேசரிவன்மனான முதல் இராசராச சோழ வேந்தனாலும் முதற் குலோத்துங்க சோழ வேந்தனாலும் பெருஞ்சலுகை பெற்று இனி திருந்த புத்தர் கோயில், ஆண்டுகள் கழியக் கழியத்தன் செல்வநிலை குன்றிச் சீர் குலைவதாயிற்று. கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வங்காளக் கடலில் கலம் செலுத்தி உலவிய மேனாட்டவர் கேள்விக்கு, நாகப்பட்டினத்துப் புத்த சயித்தியம் “புது வேலி கோபுரம்” என்றும், “பழங்கோபுரம்” என்றும், “சீன கோபுரம்” என்றும், “சயின கோபுரம்” என்றும் பெயர் வழங்கி நின்றது. இதனை அடுத்திருந்த பள்ளிவளாகம் பாழ் நிலமாயிற்று.

நாகப்பட்டினத்துக்கு வடக்கில் கடற்கரையில் ஏறத்தாழ ஒன்றரைக்கல் தொலையில் நின்ற இந்த இராசராசப் பெரும் பள்ளி மேனாட்டவர்களின் கண்களை உருத்து வந்தது. “நான் பார்த்தபோது சதுரவடிவிற்றாய் மூன்று நிலைகளையுடைய கோபுரமாய்க் காட்சியளித்த இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வாயில் உண்டு; முற்றும் சிமண்டு கலவாது சிறுசிறு செங்கற்களால் இது கட்டப்பெற்றிருந்தது; கீழ் நிலையின் மூலைகள் இடிந்து மேற்றளம் ஒன்று இருந்ததுண்டு என உணர்த்தும் குறிகளுடன் இது நின்றது” எனவும், “இதன்கண் அரிய சிற்பமோ கல்வெட்டெழுத்துக்களோ காணப்படவில்லை” எனவும் டபள்யூ எலியட் என்பவர் குறித்திருக் கின்றார்.

கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் புதுச்சேரியி லிருந்த ஜெஸ்ஸுட் கிறித்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கட்கு அஞ்சிப் போந்து இப்பகுதியில் குடியேறினர். சில ஆண்டுகளில் இப்பகுதியைத் தமக்கு உரியவாக்கிக் கொண்டு கி.பி. 1859-இல் எஞ்சியிருந்த இப்புத்த சயித்தியத்தை இடித்துவிடக் கருதி அரசியலாரை இசைவு வேண்டினர். அவர்களுடைய விண்ணப்பத்தை அந்நாளைய ஆங்கில அரசியலார் அப்பகுதிக்குரிய பொறிவல்லுநரான கேப்டன் ஓக்ஸ் என்பவர்க்கு அனுப்பிப் புத்த சயித்தியக் கட்டிடத்தைப் பார்வை யிட்டுத் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு பணித்தனர்.

அவர் நாகப்பட்டினம் போந்து கோயிலை நேரிற் பார்த்து, “இதன் கண் வெட்டெழுத்தோ சிற்பமோ ஒன்றும் இல்லை; இது மிகுதியும் பாழ்பட்டுக் கிடத்தலால் இதனை இடிப்பது தக்கதே” என்று அரசினர்க்கு அறிவித்தார். ஆயினும் எலியட் அவர்களுக்கு அதனை இடித்துத் தள்ளுவதில் விருப்பமில்லை. அதனை அறிந்த சென்னைக்கவர்னர் தாம் நேரில் கண்டு தமது கருத்தை உரைப்பதாகக் கூறினார். இதற்கிடையே எலியட் தமது தாய் நாடான இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது நாகப்பட்டினத்துக்கு வருகை புரிந்த கவர்னர் புத்த சயித்தியத்தைப் பார்வையிட்டு அதனைப் பழுது பார்ப்பது வீண் முயற்சியும் பயனில் உழைப்புமாம் எனத்துணிந்து, அதனைச் சுற்றி வேலையிடுவித்துப் புகைப்படம்1 ஒன்று எடுத்து வைக்குமாறு பணித்தார்.

நாகை ஜெஸ்ஸுட் கிறித்தவர்க்கோ அச்சயித்தியத்தை இடித்துத் தள்ளுவதில் சென்ற நாட்டம் போகவே இல்லை. கி.பி. 1867-இல் அவர்கள் மறுபடியும் முயன்றனர். அந்நாளைப் பொறிநர், அவர்கள் கருத்தை மறுத்துச் சில பகுதிகளைப் பழுது பார்த்துச் செம்மைப்படுத்தி, “நாகப்பட்டினக் கடற்கரையருகே இயங்கும் கலங்கட்கு இக்கட்டிடம் கரை காட்டியாக விளங்குகிறது; இங்கே வாழும் மக்களும் இதனை இடிப்பது கூடாதென மறுக்கின்றார்கள்” என ஒரு குறிப்பும் எழுதி அரசினர்க்கு அறிவித்தார். ஆனால், அங்கே இருந்த செயின்டு ஜோசேப் கல்லூரித் தலைவர்கள், “அதனைத் தகர்த்தொழித்தாலன்றித் தங்கள் கல்லூரிக்குக்கு காப்பு இல்லை” என விடாப்பிடியாய் நின்றனர். அதன்மேல், சென்னைக் கவர்னர் அமைச்சரோடு ஆராய்ந்து, கல்லூரித் தலைவர்களே அக்கோபுரத்தைத் தகர்த்து அதன்கண் பெறலாகும் பொருள்களைத் தங்கள் கல்லூரிக்குப் பயன்படுத்திக் கொள்க” என்று தெரிவித்தார். முடிவில் கோபுரம் தகர்க்கப் பெற்று இருந்த இடம் தெரியாதபடி மறைந்தொழிந்தது.

இங்ஙனம், பல்லவர் காலத்தில் தோன்றி இடைக்காலச் சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த புத்த சயித்தியம், பின்னர் நிகழ்ந்த அரசியல் மாறுதல்களால் கலங்காது நின்று, ஆங்கிலர் காலத்தில் அந்நிலைப்பேறு இழந்து மறைந்து போயிற்று. இவ்வாறே சங்ககால ஒய்மானாட்டு நல்லியக் கோடன் என்பவனுடைய அரண்மனையின் பழஞ் சின்னமாக (கி.பி. 1918-ஆம் ஆண்டு வரையில்) திண்டிவனத்தை அடுத்துள்ள கிடங்கில் என்னும் ஊர் நடுவே இருந்த கட்டிடமும் வரலாற்றறிவு இல்லாமையால் மக்களால் பேணப்படாது அழிந்தொழிந்தது. தொல்லோர் தொன்மை நலம் கண்டு வாழ்வைச் செம்மை செய்து கொள்ளும் திறமில்லாமையால் கீழ்மை எய்திய தமிழர் செயல் வகையை இன்றைய தமிழ் இளைஞர்கள் தம் மனத்திற் கொண்டு, எதிர் காலத்திலேனும் விழிப்புணர்ச்சியுடன் வீறு பெறுவார்களாக.

2. இரண்டாம் இராசாதிராசன்
இரண்டாம் இராசராசன்
இரண்டாம் இராசாதிராசன் என்ற சோழ வேந்தன், இரண்டாம் இராசராசன் என்ற சோழ மன்னனுக்குப்பின் சோழ நாட்டு அரசு கட்டில் ஏறியவன். இவன் விக்கிரம சோழனுக்குப் பெயரனாகும். இவன் தாயின் பெயர் நெறியுடைப் பெருமாள் என்பது. இவனுக்கு இளமையில் எதிரிலிப் பெருமாள் என்ற பெயர் நிலவிற்று. இளவரசுப் பட்டம் பெற்றபோது இவனுக்கு இராசாதிராசன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பெற்றது. இளவரசனாக மூன்று ஆண்டுகள் இருந்து பின்பு கி.பி. 1166-இல் தான் இராசாதிராசன் சோழர் முடி வேந்தாய் அரியணை ஏறினான். இவனை “இராசாதிராச தேவராகிய கரிகால சோழதேவர்” என்றும் குறிப்பது வழக்கம். இவனுடைய மனைவி சோழ நாட்டரசன் முதற்றேவியாகியபோது ‘புவன முழுதுடையாள்,’ ‘உலகுடை முக்கோக்கிழன் அடிகள்’ என்ற சீரிய பட்டங்களைப் பெற்றாள்.

ஆட்சிச் சிறப்பு
இராசாதிராசன் காலத்தில் சோழவரசு, முதல் இராசராசன், முதற் குலோத்துங்கன் முதலியோர் காலத்திருந்த பரப்பும் பெருமையும் சுருங்கியிருந்தது. எனினும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்ற பழமொழிக்கேற்ப, அரசியல் தனது ஆட்சி நலம் மாட்சி பெற்றே விளங்கிற்று. அக்காலத்தே பாண்டி நாட்டு மதுரையில் பராக்கிராம பாண்டியனும் திருநெல்வேலியில் குலசேகர பாண்டியனும் இருந்து நாடு காவல் புரிந்தொழுகினர்.சோழரும் பாண்டியரும் தம்முட் பூசலின்றி இனிதிருந்தமையின் நாட்டில் இன்பவாழ்வு நிலவிற்று. கோக்கிழான் அடிகள் பெயரால் தென் பாண்டி நாட்டில் கோக்கிழான் சேரி என்றோர் ஊர் தோன்றி இன்றும் இருந்து வருவதே தக்க சான்று. அவ்வூர் இப்போது கொக்கலாஞ்சேரி எனத் திரிந்து புகை வண்டி நிலையமாய் விளங்குகிறது. இவ்வேந்தர் பெருமானுடைய ஆட்சிச் சிறப்பைப் கல்வெட்டுக்கள் இனிய முறையில் எடுத்தியம்புகின்றன.

தமிழகத்தில் இலங்கைப் படைகள்
அந்நாளில் சோழ நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்தனர். பொருளும் படையும் அவர்கள் பால் மிக்கிருந்தன. அதனால் அவர்கட்கு நல்ல புகழும் உண்டாகி யிருந்தது.

தொண்டை நாட்டின் மேலைப் பகுதிக்குப் பல்குன்றக் கோட்டம் என்பது பெயர். தொண்டை நாடு முற்றும் சோழரது ஆட்சிக்குட்பட்டிருந்ததெனினும், அப்பகுதியில் படைவீடு என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு சம்புவராயர் என்னும் குறுநிலத் தலைவர்கள் ஆட்சி செய்து கொண்டு வந்தனர். அவர்கள் சோழ வேந்தர்கட்கு அவ்வப்போது வேண்டும் படைத்துணை புரிவது வழக்கம். இராசாதிராசன் காலத்தில் படை வீட்டில் இருந்து விளங்கியவன் எதிரிலிச் சோழ சம்புவராயன் என்பவனாகும்.

பாண்டி நாட்டு மதுரையில் பராக்கிரமன் இருந்து வருகையில், திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரன் பாண்டிநாடு முழுதுக்கும் தானே தனி வேந்தாக வேண்டும் என்ற ஆசை கொண்டான்; தன் படையைப் பெருக்கினான். அவன் கருத்தும் விருப்பமும் பைய வெளிப்பட்டுப் பாண்டியரது மதுரை வரையில் பரந்து விட்டது தன்னையும் தனது ஆட்சியையும் காத்துக்கொள்வதில் பராக்கிரமன் கண்ணும் கருத்துமாய் ஈடுபட்டு, ஈழநாட்டு மன்னனான பராக்கிரமபாகுவைப் படைத்துணை புரியுமாறு வேண்டினான்,

ஈழ வேந்தன்பால் இலங்காபுரித் தண்டநாயகன் என்றொரு தானைத் தலைவன் இருந்தான். பெருவலியும் ஆழ்ந்த சூழ்ச்சியும் அத்தண்டநாயகனிடம் தக்கவாறு இருந்தன. மறப்புகழ் வேட்கையே அவனது வடிவம் பராக்கிரம பாண்டியன் விடுத்த வேண்டுகோளைக் கண்டதும், அவனுக்கு உள்ளம் பூரித்தது; அரசன் இசைவு பெற்றுப் பெருஞ்சேனையுடன் தமிழகம் நோக்கிப் புறப்பட்டான்.

பராக்கிரமன் ஈழ வேந்தனது துணை நாடுவதையும், ஈழ வேந்தன் அவற்கு உடன்பட்டிருப்பதையும் ஒற்றினால் ஒற்றி உணர்ந்து கொண்டான் குலசேகரன், ஈழப் படை வந்து சேருதற்கு முன்பே அவன் பெரும் படையொன்றைக் கொண்டுசென்று, மதுரையை முற்றிப் பராக்கிரமன் காவலை அழித்தான். மதுரை மன்னனது மறப்படை குலசேகரன் படைக்கு ஆற்றாது சிதறிக் கெட்டது. தானைத் தலைவரும் போர் மறவரும் மூலைக்கொருவராய் ஓடிவிட்டனர். பராக்கிரமன் அப்போரிற் கொலையுண்டான்; அவனுடைய மனைவி மக்களும் குலசேகரன் வாளுக்கு இரையாயினர். உரிமை மகளிருட் சிலர் உயிர் உய்ந்து மலைநாடு சென்று புகுந்து மறைந்து வாழ்ந்தனர். அவரிடையே பராக்கிரமனுடைய மக்களுள் கடையிளம் புதல்வனான வீரபாண்டியன் என்பான் மறைவாக மலைநாட்டில் வாழ்ந்து வந்தான். இப்போரின் விளைவாகக் குலசேகரன் எண்ணம் நிறைவேறியது. பாண்டிய நாடு அவன் ஆசைப்படியே ஒரு குடைக்கீழ் வந்தது. திருநெல்வேலியில் இதுகாறும் இருந்து போந்த குலசேகரன், மதுரை நகர்க்கண் பாண்டியரது அரசு கட்டிலேறிப் பாண்டியர் முடிவேந்தாய் விளங்கலுற்றான்.

இந்நிலையில் இலங்காபுரித் தண்டநாயகன் தலைமையில் புறப்பட்டு வந்த ஈழப்படை இராமேச்சுரக்கரையில் வந்து இறங்கிக் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றியது. அது கண்ட குலசேகரன், சுந்தர பாண்டியன் என்ற தலைவன் ஒருவனோடு படையொன்றை விடுத்து ஈழப் படையை ஈடழிக்க முயன்றான். பாண்டிப் படைவலியிழந்து பறந்தோடியது. சுந்தர பாண்டியன் தோல்வியுற்றான். பின்னர், பாண்டியராசன் என்பவன் தலைமை தாங்க ஒரு பெரும்படை சென்றது. அது கண்டதும் தண்ட நாயகனது தானை சீறியெழுந்து சினப்போர் உடற்றிப் பாண்டிய ராசனைப் பரிசழித்தது; அப்போரில் குலசேகரனுக்கு நெருங்கிய துணைவனாய் விளங்கிய ஆளவந்தான் என்னும் தானைத் தலைவன் போர்ப்புண்பட்டு மாய்ந்தான். குலசேகரன் உள்ளம், தொடர்ந்து தோன்றிய தோல்விகளால் நிலை குலைந்தது. இலங்காபுரித் தண்ட நாயகனுக்குப் பாண்டி நாட்டில் இடமும் வலியும் எளிதில் எய்தின; எண்ணியவாறு போர்ப் புகழும் எய்திற்று.

“பாண்டியன் பராக்கிரமனைத் தொலைக்கப்புகுந்து பராக்கிரமபாகுவின் பகைமையைத் தேடிக் கொண்டோம்; இனி இதனைத் தடா தொழியின், தமிழ் நாட்டில் பிற நாட்டினர் புகுந்து அரசு நிறுவினர் என்ற பெரும்பழி பாண்டியர் குடிக்கு உண்டாகுமே!” எனக் குலசேகரன் நினைத்தான்; நாட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடந்த பராக்கிரமனுடைய தானைமறவர்களைத் தேடித் திரட்டினான்; அந்நாளில் கொங்கு நாட்டில் குலசேகரனுக்கு மாமன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தமையின் அவனுடைய படைகளையும் வருவித்தான்; பாண்டிப்படையும் கொங்கப் படையும் சேர்ந்துவரத் தானே அப்படையை முன்னின்று நடத்தி இலங்காபுரித் தண்ட நாயகனுடன் போர் தொடுத்தான்.

குலசேகரனுடைய படை மறவர் உள்ளன்போடு போர் செய்யவில்லை. கொங்கப்படை அத்துணைப்படைப் பயிற்சி யின்றி இருந்தது. படையினது தொகை பெருகி யிருந்ததேயன்றி வலி பெருகவில்லை. ஈழப் படையின் கிளர்ச்சியும் மறமும் படைத் தொடுப்பும் கண்டஅளவிலேயே குலசேகரன் படை வலி தளர்ந்து சிதையலுற்றது. அவனுடைய படை மறவருட் சிலர் ஈழப் படையுடன் கலந்து இலங்காபுரித் தண்ட நாயகனுக்கே துணை செய்தனர். இவ்வாற்றால், குலசேகரன் தோல்வியுற்றான். மதுரை நகர் தண்டநாயகன் கைக்கு வந்தது. மறச் சான்றோர் சிலரை மலை நாட்டுக்குச் செலுத்தி, அங்கே வாழ்ந்த பராக்கிரமன் மகனான வீரபாண்டியனைத் தேடிக் கொணர்ந்து, அவனையே பாண்டி வேந்தனாக்கினான் இலங்கா புரித் தண்டநாயகன்.

இப்போரின் விளைவாகக் கீழைமங்கலம் மேலை மங்கலம் முதலிய சில ஊர்கள் தண்டநாயகன் வசமாயின; அப்போது அவற்றிற்குக் கண்டதேவமழவராயன் என்பவனைத் தலைவனாக் கினான்; தொண்டி திருவேகம்பம் முதலிய பகுதிகட்கு மழவ சக்கரவர்த்தி என்பவனைத் தலைவனாக்கினான். இவ்வாறு புறத்தே பாண்டி நாட்டவர்க்குச் சிறப்புச் செய்தானாயினும், அந்த நாட்டு மக்கட்குத் தண்ட நாயகன் மிக்க துன்பம் செய்தான்; ஊர்களைச் சூறையாடினான்; வயல்களில் தீ வைத்தான்; உயிர்க் கொலை பல கண்ணோட்டமின்றிச் செய்தான். இதனால், அத்தலைவர்கள் தண்டநாயகன் காடும் அன்பில் ஐயமுற்றனர்; அவன் செய்த சிறப்புக்களில் தீக்கருத்துண்டென நம்பிக்கை இழந்தனர்.

இது நிற்க, படையிழந்து பரிபவப்பட்டு ஓடிய குலசேகரன், தென்பாண்டி நாட்டினுள் புகுந்து பெரும்படை யொன்றைத் திரட்டிக்கொண்டு வந்தான். அவன் வரவு கண்ட மழவராயனும் மழவசக்கரவர்த்தியும் குலசேகரனோடு கூடிக் கொண்டு மதுரையை முற்றுவாராயினர். அதனால் பேரச்சம் கொண்ட வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினான். தண்டநாயகனும் கடற்கரைப் பகுதிக்கு ஓடிப் படை யொன்றைத் துணையாகச் செலுத்துமாறு ஈழ வேந்தனுக்கு வேண்டுகோள் விடுத்தான். வேண்டியவாறே ஈழ நாட்டினின்றும் பெரும்படையொன்று வந்தது. அப்படையுடன் இலங்காபுரித் தண்டநாயகன், குலசேகரனை மறுபடியும் பொருது வென்று வெருட்டி விட்டு, வீரபாண்டியனுக்கே மதுரையில் முடிசூட்டி வெற்றி விழா நடத்தினான். பின் பொருகால் குலசேகரன், சீவில்லிபுத்தூர் அருகே ஈழப் படையுடன் போர் செய்து படுதோல்வி எய்தித் திருநெல்வேலிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தான்.

சோழனது உதவி
பன்முறை முயன்றும் வெற்றி பெறாமை ஒரு புறம் வருத்த, ஒரு புறம் தன் செயல்களால் எளிதில் ஈழப் படைக்குத் தமிழ் நாட்டில் ஏற்றமும் இடமும் உண்டாயினமை குலசேகரனுக்குப் பெருந்துயரைச் செய்தது. அந்நாளில் கேரள நாட்டு அரசரினம் சோழ வேந்தரே உலகு பரவும் போர்ப் புகழ்பெற்று விளங்கினர். அவர்களால் தமிழகத்தின் தனிப் புகழ் கெடாது நிலைபெற்று வந்தது. குலசேகரன் அதனை நன்கு எண்ணினான். இராச கேசரிவன்மனான இரண்டாம் இராசாதிராசன்பாற் சென்று நிகழ்ந்தது முற்றும் நிரல்பட எடுத்துரைத்தான்.

இராசாதிராசன், குலசேகரனுக்கு வேண்டிய அறிவுதவிப் பெரும்படை ஒன்றையும் அவனுக்குத் துணைபுரியுமாறு விடுத்தான். அப்படைக்குத் தலைவனாக எதிரிலி சோழச் சம்புவராயன் மகனான திருச்சிற்றம்பலமுடையான் நம்பிப் பல்லவராயன் என்பவன் சென்றான். சோழர் படையின் தென்றிசைச் செலவு கண்ட மாத்திரையே பாண்டிப்படை உடைந்தோடிற்று. வீரபாண்டியன் முன் போலவே ஓடி ஒளிந்தான். சிங்களப் படை சிதறுண்டு போயிற்று. குலசேகரன் மதுரைக்கு உரியவனானான். இதனை ஈழ வேந்தனான பராக்கிரமபாகு அறிந்து மறுபடியும் இலங்காபுரித் தண்டநாயகனையும் அவனோடு சயதர தண்டநாயகனையும் இருபெரும் படைகளுடன் தமிழ் நாட்டினுள் செலுத்தினான். ஈழப் படையும் குலசேகரனது பாண்டிப் படையும் முதற்கண் தொண்டி, பாசிப்பட்டினம் என்ற இடங்களில் நேரெதிர்ந்து பொருதன. அவற்றுள் ஈழப் படையே வெற்றி பெற்றது. அதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த மறவர்களும் பிறரும் ஈழப்படைத் தலைவர்கட்கு அஞ்சி அவர் வழிநிற்பாராயினர். அவர்கட்குத் தலைவனான மாளவ சக்கரவர்த்தி என்னும் ஒருவனுக்குப் பொன்னும் பொருளும் தந்து தமக்குத் துணை செய்யுமாறு ஈழத்துத் தலைவர் அவன் மனத்தைத் திரித்துக் கொண்டனர். அவரது படையும் பின்பு வடக்கு நோக்கி முன்னேறத் தலைப்பட்டது. திருச்சிராப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ஆலம்பாக்கத்தில் வாழ்ந்த சிவப்பிராமணர் சிலர் ஈழப்படை வடக்கு நோக்கி வருவது கேட்டு அச்சத்தால் அவ்வூரை விட்டு ஓடத் தலைப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர்ச் சென்ற சோழர் பெரும் படையுடன் பாண்டிப் படையும் கொங்கு நாட்டுத் தலைவர் விடுத்த கொங்கப் படையும் ஒருங்கு வந்து சேர்ந்தன. மூவகையிற்கூடிய இத்தமிழ் பெரும்படை, கடல் புடை பெயர்ந்து செல்வது போல நம்பிப் பல்லவராயன் தலைமையில் செல்லலுற்றன. ஈழப் படை வடக்கே கானப்பேர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

சிவாசாரியர் மடங்கள்
அக்காலத்தே, கங்கை பாயும் நாடாகிய கௌட தேசத்தி லிருந்து சிவாசாரியார் பலர் தென்னாடு போந்து மடங்கள் நிறுவி மக்களுக்குச் சிவதருமங்களை (சிவாகம நெறிகளை) அறிவுறுத்தி வந்தனர்.

அவருள் உமாபதி தேவர் என்னும் சிவாசாரியர் ஒருவர் காஞ்சி நகர்க்குத் தெற்கில் ஏழெட்டு கல்தொலையிலிருக்கும் ‘மாகறல்’ என்னுமிடத்தில் மடம் ஒன்று நிறுவி மக்கட்குச் சிவதரு மங்களையும் சிவஞானத்தையும் அறிவுறுத்தி வந்தார். சிவஞானச் செம்பொருளை இனிது வழங்கியது பற்றி அவரை ஞானசிவதேவர் என்று மக்கள் பாராட்டிக் கூறுவர். அப்பகுதிக்குத் தலைவனாக விளங்கிய எதிரிலி சோழச் சம்புவராயன் அவர்பால் ஞான தீக்கைபெற்ற மாணவனாவான். எத்தகைய அரசியல் நிகழ்ச்சிக்கும் அவருடைய அறிவும் அறவுரையும் அவனுக்கு வேண்டியிருந்தன.

இந்நிலையில் சோழ வேந்தனான இராசாதிராசனது பணி மேற்கொண்டு தன் மகன் பல்லவராயன், பாண்டியன் குலசேகரன் பொருட்டுச் சோழர் படைத் தலைவனாய்ச் சென்றிருப்பதும், போரும் ஈழப் படையை எதிர்த்து நிகழ்வதும், தொடக்கத்திற் பாண்டிப்படை ஈழப் படைக்குத் தோற்றதும், பின்பு கொங்கு நாட்டுத் தானை வந்து துணையாய்ப் போர் தொடுத்திருப்பதும் எதிரிலி சோழனுக்குத் தெரிந்தன.

ஒரு நாள், அவன் ஞானகுருவாகிய ஞானசிவ தேவரை அடைந்து தன் மனக் கவலையை அறிவிக்கக் கருதித் தன் தலைநகராகிய படை வீட்டினின்றும் புறப்பட்டு எயிற்கோட்டத்து ஆற்பாக்கத்துக்குச் சென்றான். எயிற்கோட்டம் என்பது காஞ்சி நகரைச் சூழவுள்ள நாட்டுப் பகுதியாகும். சம்புவராயனது வரவு அறிந்த உமாபதிதேவரான ஞானசிவ தேவர் அவனை அன்பு கனிய வரவேற்று நல்வாழ்த்து வழங்கினார். அவனும் அவர் அடி வீழ்ந்து வணங்கி, அரசியலுலகில் பாண்டி நாட்டுத் தலைவர்கட்கும் ஈழ நாட்டுத் தலைவர்கட்கும் இடையே போர் நிகழும் திறங்களை எடுத்து விரிவாகவுரைத்தான்; முடிவில் தன் மனத்து நின்று வருத்தும் கவலையைத் தெரிவிக்கலுற்று, “இஃது எங்ஙனேயாமோ என்று விசாரம் தோன்றி வருத்துகிறது1” என்று முறையிட்டான்.

அது கேட்டதும், ஞானசிவ தேவர் சம்புவராயன் உள்ளத்து அலமரலைப் போக்குவது குறித்து, அவர் பயின்றுள்ள இதிகாச புராணங்களில் கண்ட நிகழ்ச்சிகள் சில எடுத்தோதி ஆறுதல் மொழிந்து, திருவருள் இயக்கத்தின் சிறப்பையும், அதனை உணர்ந்து அதன் வழி நிற்பார்க்கு இடும்பையும் இடுக்கணும் பிரிவும் துன்பமும் கடும்பகற் பட்ட பனிபோல் மறைந்தொழியும் திறத்தையும் சைவாக மங்கள் சைவத் திருமுறைகள் வாயிலாக எடுத்தோதித் தெருட்டினார். அவ்வுரைகளால் சம்புவராயன் ஒருவாறு தெளி வெய்தினான்; ஆயினும் ஞானாசிரியரை மறுபடியும் வணங்கி, “ஈழப்படையாகிறது சாலவும் பாவகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழ மண்டலத்து எல்லையிலே புகுதில் ஸ்ரீ மகாதேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டிரத் துக்கும் அடங்க விரோதமுண்டாகும்; இதற்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச்சனங்களால் எல்லாப்படியாலும் அவர்கள் அபீஷ்டம் அதம் பண்ணியருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.

சம்புவராயனுடைய வேட்கைநிலை தெளிய விளங்கக் கண்ட ஞானசிவதேவர், தாமும் மனம் தெளிந்து, “ஈழப் படையாகிறது, சால பாபீஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிராமே சுவரத்தில் தேவர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜை முட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீ பண்டாரமெல்லாம் கைக்கொண்டு சிவத் துரோகிகளாயின ரென்பதும் அறிந்தோம்; அவர்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணுகிறோம்” என்று சொல்லி, இரண்டு நாட்குப்பின் சம்புவராயன் முன்பிலே, “அகோரசுபூஜைசெய்ய”த் தொடங்கினார். சம்புவராயனும் அதைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்தான். அங்கே போர்க் காலத்து வேந்தர் செயற்குரியவற்றைச் செய்ய வேண்டியது கடமையாதலால் அவன் உடனே படைவீட்டுக்குப் போக நேர்ந்தான். ஞானசிவ தேவரது “அகோரசுபூஜை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.

இலங்காபுரி தோல்வி
இதற்கிடையே, பாண்டி நாட்டில், சோழ பாண்டியர் படையும் ஈழப் படையும் கடும் போர் உடற்றின. ஈழப் படைத் தலைவர்கள், தொண்டி, தேவிபட்டினம், மானாமதுரை, நெட்டூர், சீவில்லி, புத்தூர், வேலங்குடி, திருப்பத்தூர், விக்கிரம மங்கலம் முதலிய இடங்களில் பாண்டிப் படையை வென்றும் வெருட்டியும் வீறுகொண்டார்கள். ஆயினும், பிறவிடங்கள் பலவற்றினும் தமிழ்ப் படையால் தாக்குண்டு தேய்வுற்றமையின், நாளடைவில் ஈழப் படை வலிகுன்றுவதாயிற்று. இடையிடையே வாழ்ந்த உண்ணாட்டுத் தலைவர்களின் ஆதரவைப் பொருள் கொடுத்துப் பெறவேண்டியிருந் தமையின், ஈழப் படைக்குப் பொருட் குறைவும் உண்டாயிற்று. ஈழப் படையினர் தமிழ் மக்கள் பால் அன்பின்றித் துன்பமே செய்தொழு கினராதலால் தமிழர்க்கு அவர்கள்பால் வெறுப்பும் பகைமையும் இயல்பாகவே உண்டாய்விட்டன.

ஒற்றர்கள் வாயிலாக ஈழப் படைக்கு நேர்ந்த குறைபாட்டினைச் சோழர் படைத் தலைவர்கள் தெரிந்துகொண்டனர். அவர்கள், வேறொரு படையினைத் தமக்குத் துணைசெய்ய விடுமாறு சோழன் இராசாதிராசனை வேண்டினர். விரும்பிய வண்ணமே சோழர் தலைநகரிலிருந்து பெரும்படை யொன் று விரைந்துவந்து சேர்ந்தது, புதுப் படையும் பழம் படையுமாகிய இருவகைப் படையும் எதிர்த்து மேல் வந்த ஈழப்படையைச் சவட்டி அதனைத் திரும்பியோடுமாறு ஈடழிக்கலுற்றது.

நாடோறும் தமிழ்ப் படையே வெற்றி சிறந்தது மிகுவது கண்ட குறுநிலத் தலைவர் பலரும் சோழர் படையின் பக்கல் நின்று துணைபுரிவாராயினர். ஈழப்படைகட்குத் தலைவர்களான இலங்கா புரித்தண்டநாயகனும் சயதரண்ட நாயகனும் அவர்கட்குத் துணை வராய்ப் போந்த தானைத் தலைமறவரும், “இனி இங்கே போர் புரிந்து வெற்றிபெறுவதென்பது இயலாதது” எனத் தெரிந்து, தமது ஈழ நாட்டிற்கே ஒடிவிட்டனர். பாண்டியன் குலசேகரனுடைய ஆட்சி நிலை பேறு கொண்டது.

சம்புவராயன் அறச் செயல்
இந்நிகழ்ச்சிகளால் சோழன் இராசாதிராசனது புகழ் எங்கும் பெருகிப் பரவிற்று. பாண்டி நாட்டு மக்கள் சோழ வேந்தன் படை மறவரைப் பாராட்டி வாழ்த்தினர். தானைத் தலைவனான திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன், சோழர் படைக்கு எய்திய வெற்றி நலத்தையும் வேந்தனது புகழ்ப் பெருக்கத்தையும் தன் தந்தை எதிரிலி சோழச் சம்புவராயனுக்குத் திருமுகமெழுதித் தெரிவித்தான். சம்புவராயன் அது கண்டு ஆரா இன்பக் கடலில் ஆழ்ந்தான். தமிழ்ப் படை பெற்ற வெற்றிக்கு உமாபதி தேவரான ஞானசிவ தேவர் செய்த அகோரசுபூஜையே காரணம் என எதிரிலி எண்ணினான்.உடனே புறப்பட்டு ஞானசிவ தேவரைக் காண்பதற்குச் சென்றான்.

சம்புவராயன் ஆற்பாக்கம் வந்து சேருமுன்பே ஞானசிவ தேவருக்குச் சோழர் படை வெற்றி எய்திய செய்தி வந்துவிட்டது. அவருக்கும் மகிழ்ச்சி மிகுந்தது. இறைவன் திருவருள் தான் இவ்வெற்றியை நல்கிற்றென அவர் எண்ணி அத்திருவருளை வழுத்தினார். சம்புவராயனுக்கு ஞானசிவ தேவர் பால் பேரன்பும் பெருமதிப்பும் உண்டாயின; அவருடைய திருவடிகளில் பன் முறையும் வீழ்ந்து வணங்கிப் பரவினான். முடிவில், அவர் திரு முன் கைதொழுது நின்று “தேவர் செய்த அதிருஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது; இதற்குத் தேவர் ஸ்ரீபாதபூஜையாக நான் தருவதை ஏற்றருள வேண்டும்,” என இறைஞ்சினான், ஞானசிவர், சம்புராயனை நோக்கி, “நீர் நமக்கு ஏதேனும் முன்பு குறைவாகச் செய்ததுண்டோ? ஒன்றும் இல்லையே! இங்குள்ள எல்லாம் உம்முடையனவாக இருக்கின்றனவே!” என்றார். “தேவர் ஸ்ரீபாதபூஜையாக இப்போது ஏதேனும் தரவேண்டும் என்று என் உள்ளம் விரும்புகின்றது,” என்று சம்புவராயன் வற்புறுத்தவும், ஞான சிவ தேவர் அவனை அன்பொழுக நோக்கி, “அவஸ்யம் ஏதேனும் தரவேண்டும் என்றிருந்தால் ஆற்பாக்கம் என்னும் இந்த ஊரைச் செம்பிலும் கல்லிலும் வெட்டித் தருக,” என்று இயம்பினார்.

அது கேட்டு மனம் குளிர்ந்த சம்புவராயன், சோழன் இராசாதிராசனது ஆணைபெற்று, அவனுடைய ஐந்தாமாண்டு நிகழ்ச்சியாக , “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து நன்செய் புன்செய் அகப்படவிளை நிலம் நூற்றறுபத்தேழு வேலியும் ஏரிகோளும் நத்தமும் குட்டமும் கிணறும் மேனோக்கின மரமும் அகப்பட நாற்பால் எல்லையுட் பட்ட நிலம் வெள்ள வாரி பண்ணைக் கூலி தறியிறை தட்டார்ப் பாட்டம் அந்தராயம் உட்பட ஆயமெல்லாம் அகப்பட ஏகபோகமாக, இறையிலியாகக் கௌட தேசத்துத் தக்ஷிணராடத்துக் கங்கோஜி சசிவர்ண கோத்திர மகாமகேஸ்வர சுருதிஸ்மிருதி சிந்தே கார்நவஸ்ய தன்மாஸ்தை உமாபதி தேவரான ஞான சிவதேவர்க்கு நீர் வார்த்துக் கொடுத்துச் சூரிய சந்திரர்கள் உள்ளதனையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழச் சம்புவராயனேன்” என்று கல்வெட்டுமாறு பணித்தான். இஃது ஆற்பாக்கத்துச் சிவன் கோயில் தென் சுவரில் இன்றும் யாவரும் காணக் காட்சியளித்துக் கொண்டுள்ளது.

ஆர்க்காடு


ஆர்க்காடு என்பது ஒரு நகரத்தின் பெயர். இது வட ஆர்க் காட்டில் சிறந்து விளங்கும் நகரங்களுள் ஒன்று. இந்நகரம் யாவ ராலும் புகழப் பெறும் சிறப்புடையதாகும். வாணிபத்துறையில் வாழ்க்கையை நடாத்துவோர், “இது ஒரு வாணிப நிலையம்” என்பர்; இயற்கை நலம் விரும்புவோர் “இது மிக்கதோர் இயற்கை வளம் சிறந்த பேரூர்” என்பர்; ஆராய்ச்சியாளர்கள் “இது கிளைவு என்னும் ஆங்கில வீரனொருவனால் பதினெட்டாம் நூற்றாண்டின் இடையில் முகம்மதியரிடமிருந்து கைக்கொள்ளப்பட்டது” என்பர்; கல்லூரி மாணவர்கள் “சாந்தா சாகேபு என்னும் முகம்மதியர் கைவிட்ட நக” ரென்று உரையாடி மகிழ்வர்; கல்வெட்டா ராய்ச்சியாளர், “படுவூர்க் கோட்டத்துக்காரைநாட்டு வன்னி வேடாகிய இரணவிக்கிரமச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த ஒரு மூதூர்” என்பர்.

இங்ஙனம் பலராலும் புகழ்ந்து கூறப்படும் இவ்வூர், பாலி யற்றின் தென்கரையில் உயர்ந்து பரந்த மரங்கள் நின்று குளிர் நிழலைத் தர, அவற்றின் ஊடெழுந்த உயரிய மாடங்கள் கண்ணடிச் சாளரங்களோடு அழகுசெய்ய, இடையிடையே நிலத்தில் நாட்டிய நெடுவெண் கம்பங்களென முகம்மதியர் கோயிற் கோபுரங்கள் நின்று விளங்க, கிழக்கிலும் தெற்கிலும் பசிய நன்செய் நிலங்கள் பசுங் கம்பளம் விரித்தாற் போல் நெற் பயிரொடு திகழ, மாணவர் கலை பயிலும் பள்ளிகளும் மாந்தரது வரவு செலவு இடையறாத கடைத்தெருவும், ஆரணி, கலவை, செய்யாறு, இராணிப் பேட்டை, காஞ்சிபுரம் முதலிய நகரங்கட்குச் செல்லும் பூணியில் வையங் களாகிய பேருந்து நிலையமும் பிறவும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது.

இங்ஙனம் சீரும் செல்வமும் செழிக்கும் இந்நகரம் புதியராய் வருவார்க்குத்தான் மிகமிகப் பழமை பெற்ற நகரம் என்பதைப் பலவகையிலும் உணர்த்துகின்றது. ஒருமருங்கு தளர்ந்து இடிந்து கிடக்கும் கட்டிடங்களும், ஒரு பக்கம் பல சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பாறைகளின் துண்டங்களும், கால வேறு பாட்டால் ஒரு காலத்து ஒரு சமயத்தார்க்கு உரியவாய் நின்றன வேறு சமயத்தார்க்கு உரிமையாக்கப் பெற்று நிற்கும் சிறு சிறு கோயில்களும். நிலை தளர்ந்து நிலம்பட்டு உருமாறிய அரண் களும், அகழ்களும் இந்நகரத்து எம்மருங்குங் காணப்படுகின்றன. சுருங்கக் கூறின், இந்நகரம் பழமையும் புதுமையும் ஒருங்கு கொண்டு “ஆற்றங்கரையூர் அழகியவூர்” என்னும் முதுமொழிக்கு ஏற்ற எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இம்மட்டோ, இது செழுந் தமிழ்ப் புலவர் பெருமக்களாகிய தேவனார், நக்கண்ணையார், பரணர் முதலிய சான்றோர்களால், முறையே, “படுமணியானைப் பசும்பூட் சோழர், கொடி நுடங்கு மறுகின் ஆர்காடு” எனவும், “வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காடு” எனவும், “அரியரி யலம்புக விளங்கோட்டு வேட்டை, நிரைய வொள்வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு” எனவும் “வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும், அரியலங் கழனி ஆர்க்காடு” எனவும் புகழ்ந்து கூறப்படுகின்றது.

நிற்க, நம் நாட்டின் பழமை நிலை யுணர்த்தும் கருவிகளாக விளங்குவன புராண இதிகாசங்களும், கல்வெட்டுக்களும் இலக்கியங் களும் வரலாறுகளும் செவிவழிச்செய்திகளும் பிறவுமாம். இவற்றுள் எளிதிற் பெறப்படுவது இறுதியிற் கூறப்படுவதே யாகும். இது பெரும் பாலும் புனைந்துரையாகவும், உண்மை சிறிதுடைய தாகவும் உளது என்பர். வரலாறு எழுதிய அறிஞர் பலரும், இச் செய்தியையே அடிப்படையாகக் கொண்டு எழுதுகின்றனர். இவ்வாறே, இந்நகர வரலாறு காணப் புகுவோர், இச்செய்தி யையும் வேண்டுதலின் அதனையும் ஈண்டுக் கூறுகின்றேன். “இது முற்காலத்துப் பெருங்காடாக இருந்தது; இதன்கண் ஆறுபிரிவுகள் இருந்தன; ஒவ்வொன்றினும் ஒவ்வொருவராக ஆறு முனிவரர்கள் தவஞ் செய்தனர்; அவர் தவம் செய்த இடங்களுள் இவ்வூருக்கு மேற்கில் ஒருமைல் தூரத்திலிருக்கும் வேப்பூர் என்பது ஒன்று, அங்கு வசிட்ட முனிவர் தவஞ் செய்தனர்; இங்ஙனம் ஆறு முனிவர்கள் தவம் செய்த ஆறுகாடுகள் கொண்டதாகலின், இதற்கு ‘ஆற்காடு’ அதாவது ‘ஷடாரண்யம்’ என்பது பெயராயிற்று” என்பது.

இதனோடு வேறொரு செய்தியும் கூறப்படுகின்றது ஆனால், பெரும்பாலார் மேற் கூறியதையே கூறுகின்றனர். அது வருமாறு “மாளவதேசத்தை ஆண்டு வந்த சுகபாலன் என்னும் வேந்தன் தன் மனைவி தேவவனிதை யென்பாளோடு மகிழ்ந்திருக்கையில், முனிவரர் அறுவர் அவனிடம் வந்தனர். அதுபோது, அவன் தன் மனைவியிசைத்த இசையில் மயங்கி யிருந்தமையின், வந்த முனி வரரை மதியானாயினான். மற்று, முனிவர்களோ ஆறா வெகுளிய ராய் அரசனை நோக்கி, “ஏ, அரசே, நீ எம்மை மதியாத காரணத் தால், நின்மக்கள் அறுவரையுமிழந்து கண்ணிலியாய் அலமரு வாயாக” எனக் கடுமொழி கூறினர். பின்னர், அரசன் தன் அறியா மைக்கு மிக வருந்தி, முனிவரடியில் பன் முறை வீழ்ந்து, அதற்குத் தீர்வு கூறுமாறு வேண்டினன். முனிவரரும், வெகுளி நீங்கி, “நீ, சில காலம் கண்ணிலியாயுழந்து, முடிவில் தொண்டை நாடடைந்து அங்குப் பாலியாற்றின் கரையில் விளங்கும் பெருங் காட்டில் எம்மைக் காணுதல்கூடும். அது போது யாம் கங்காதரனை வேண்டி நிற்போம். எம் வேண்டுகோள் நின் செவிப்படின், நீ கண்பெற்று, நின் மக்களையும் பெறுவாய்” என்றுகூறி யகன்றனர். அம் மன்னனும் அவ்வண்ணமே அம் முனிவரர் அறுவரையும் கண்டு தன் கண் ணையும், மக்களையும் பெற்றனன். அம்மகிழ்ச்சியால் அவ்விடத் துக்கு ஆறுகாடு என்ற பெயரும், அம்முனிவரர் வணங்கிய சிவனுக்குக் “கங்காதரேச்சுரர்” என்ற பெயரும் இட்டு அவரது ஆலயத்தையும் வழிபட்டுச் சென்றனன்” என்பது.

இச்செய்தி யிரண்டும் முதியோர் பலரால் கூறப்படு கின்றன வேயன்றி, புராணங்களில் கூறப்படுவனவாய்த் தோன்றவில்லை. இங்குள்ள தமிழறிஞர்கள் “இச் செய்திகளை மட்டில் கூறு கின்ற னரே யன்றி, இவற்றிற்கு ஆதாரம், பெயரைத் தவிர வேறு ஒன்று மில்லை” என்கின்றனர். வேறு, எங்கேனும் இது கூறப்பட்டிருப் பினும் இருக்கும் என்னும் அவாவினால் எனக்குக்கிடைத்த புராணங் களை நோக்கியும், ஒன்றிலேனும் கூறப்பட்டிலது, ஒருகால், என் நண்பர், தமிழறிஞர் ஒருவரோடு, இந்நகர்க்கு வடக்கில் பாலாற்றின் வடகரையிலிருக்கும் “நவ்லக்” என்னும் சீரிய உயரிய பூங்காவைக் காண்டல் வேட்கை கொண்டு, கூர்ந்து நோக்கி வருங்கால், முட்களாலும் மரவேர்களாலும் மூடப்பட்டுக் கிடந்த மிகப் பழங்கோயில் ஒன்று சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற் சுவரோடு விளங்கக்கண்டேன். அதன் கோபுரம் மட்டில் வெளியில் தெரிகின்றது. பிற்பாகம் முற்றும் மணலிற் புதையுண்டு கிடக்கின்றது. எனினும், அதன் வேலைப் பாட்டை நோக்க, அது பல்லவ மன்னரது காலத்து எடுத்த கோயில்களை யொத்து, சைனருக்கு உரியதாய் நின்ற கோயிலாகத் தோன்றுகிறது. கோபுரத்தில் செதுக்கப் பட்டிருக்கும் சிலவுருக்கள் சைனர் உருக்களே. மற்று, அதனருகில் நந்தியும், அருகில் கணபதி யுருவமொன்றும் காணப் படுகின்றன. சிதர்ந்து காணப்படும் கல்வெட்டு, இராசேந்திர தேவர் கல் வெட்டு. இக்கோயிலின் சுவரும் பிறவும் புதையுண்டு கிடத்த லால், அக் கல்வெட்டினைத் துருவிக்காண்டற்கு இயலவில்லை எனினும், அக்கோயி லுண்மையும், அருகே நிலைதளர்ந்தும், பிலம்பட்டுங் கிடக்கும் கட்டிடங்களிணுண்மையும், ஈண்டுப் பண்டைக் கண் ஒரு செழுமிய நகரம் இருந்திருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்துகின்றன.

நிற்க, இங்ஙனம், தொன்மைக் குறிகள் செறியத் தோன்றும் இந்நகரத்தின் சிறப்பு, எந்நூலிலாகிலும் அகத்தியம் காணப்படும் என்னும் எண்ணத்தனாய், ஆராய்ச்சி நூல்களுட் சில கிடைத்தன படித்துக் கொண்டு வருபவன், ஒரு நாள் ஒரு ஆங்கில நூலின் கண் இந்த ஆர்க்காட்டின் சரித்திரக் குறிப்பு எழுதியிருக்கக் கண்டேன். அந்நூலாசிரியர் ஓர் ஆங்கிலர்; சிறந்த ஆராய்ச்சியாளர். அதன் கண், அவர் “ஆறுகாடு” என்பது ஆறுகாடுகள் கொண்டது; இதனை இந்துக்கள் ஒரு பழமையான நகரமாகக் கருதுவதோடு, இங்கே ஆறு முனிவர்கள் தவஞ்செய்தார்கள்” என்றும், ‘அதனால் தான் இதற்கு ஆறுகாடு என்பது பெயராயிற்று’ என்றும், மற்று “இது புராணங்களிற் கூறப்படவில்லை” யென்றும் கூறியிருக்கின்றார். இவர் கூற்றுப்படி, இது புராணங்களிற் கூறப்படாத செய்தியாம் என்பது பெறப்படு கின்றது. படவே, இந்நகரம் முற்காலத்தில் பெருங்காடாக விருந்ததென்பதும், பிற்காலத்தேதான் தோன்றிற் றாதல் வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன.

நிற்க, வேறு வரலாற்று நூல்கள், கிறித்து பிறந்த பல நூற்றாண்டு கட்குப் பின்னும் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முற்றும் பெருங் காடு பரந்த நிலப் பரப்பாக விருப்ப, இங்குக் குறும்பர் என்னும் ஒரு வகை ஆட்டி டையர் வாழ்ந்து வந்தனரென்று கூறுகின்றன. இவற்றை யாதார மாகக் கொண்டே ஜெனரல் கன்னிங்ஹாம் “இந்நகரம் மிகமிக இடைப்பட்ட காலத்தே தோன்றியிருத்தல் வேண்டும்; இதனைத் தொன்னகரமாகக் கோடல் பொருந்தாது” என்று கூறுகின்றார். துளுவ மொழியைப்பற்றி யெழுதவந்த திரு. கால்டுவெல் என்பவர், சென்னையைச் சூழ்ந்த நிலப்பகுதியாகிய இங்கு வாழ்ந்துவந்த குறும்பர்களுட் பலர் வேறு நாடுகட்குத் துரத்தப்பட, துளுவ மொழி பேசும் வேளாளர் பலர் இங்குக் கொணரப்பெற்றுக் குடியேறினர் என்றும்; இதற்குத் துளுவவேளாளர் மிக்கிருத்தலே சான்று என்றும் “மிராசுரிமை” என்னும் நூலின்கண், எல்லிஸ் என்பவர் கூறியிருப்பதாகக் குறிகின்றார். இதனால், இந் நகரம் பிற்காலத்தேதான் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது வெளிப் படுகின்றது.

இஃதிவ்வாறாக, கர்னல் யூல் என்பவர், “இந்நகரம் இபன் படூட்டா என்பவரால் ஒரு சீரிய நகரமாகப்புகழப் படுவதனாலும், அவர் காலமும் கி.பி. 1340-க்கு மேற்படுதலாலும், சற்றேறக்குறைய எழுநூறு ஆண்டுகளாகச் சிறந்து விளங்கும் நகரமாதல் வேண்டும்” என்று கூறுகின்றார்.

நிற்க, நம் தமிழ்நாட்டுச் சரித நிகழ்ச்சிகளை யாராயப் புகுபவர்க்கு ஊக்கந் தருவனவாகவும், நிலையறியாது மயங்குங் காலத்து ஒருசில குறிப்புக்களாய விளக்கங்களைத் தருவன வாகவும் அமைந்த குறிப்புக்கள் சில, மேனாட்டறிஞர்கள் பொறித்தன கிடைக்கின்றன. அவர்களுட் பெரிப்ளஸ் என்னும் நூலாசிரியரும், தாலமி யென்பவரும் பிளினி யென்பவரும் எழுதியுள்ள குறிப்புக்கள் நம் நாட்டின் தொல்லைச் சிறப்புணர்தற்குப் பயன்படுகின்றன. இவர்களுட் பிளினியென்பவர், நம் நாட்டுக்குச் சீனதேயத்தினின்று வந்த அறிஞர்களிருவருள் ஒருவரான மெகஸ்தனிஸ் காலத்தைச் சிறிது அடுத்த காலத்தினராவர். மற்றையோர் காலமும் 1800 ஆண்டுகட்கு முற்படுகின்றன என ஆராய்ச்சி வல்லோர் கூறு கின்றனர். இப் பண்டையறிஞர்கள் நம் நாட்டுக்கு வந்திருந்த காலத்துத் தாம் கண்டனவும் கேட்டனவுமாய சில குறிப்புகளே குறித்திருக்கின்றார்கள். இவர்களுள், தாலமி யென்பவரது குறிப்புக் களுள் “ஆர்க்காடு” என்னும் இவ்வூர் காணப் பெறுகிறது. பெறு தலால், இந்நகரம், கர்னல் யூல் அவர்களின் காலவரையறையைக் கடந்து மேலும் ஆயிரம் யாண்டுகட்கு முன்னாதல் வெளிப் படுகின்றது. படவே, இந்நகரம் சற்றேறக்குறைய இரண்டாயிரம் யாண்டுகட்கு முன்னரே, உறையூர் முதலிய தலை நகரங்கள் விளங்கிய காலத்தே, சீரியநிலை யடைந்திருந்தது என்பது புலப் படுகின்றது. இதற்குச் சான்று, தென்னாட்டின் நகரங்களாக மதுரை, உறையூர், கொற்கை முதலியவற்றோடு ஒப்ப, வேங்கடத்தைச் சார்ந்த இந்நாட்டின் நகரமாக இதனைக் குறித்திருப்பதனாலும், இது சோழமன்னரது தலைநகரமெனக் குறிப்பதனாலும் விளங்குவ தாகும். மேலும், அக்குறிப்பை நோக்குமிடத்து, அவர் இந்நகரை நேரிற் காணாது பிறர் விதந்துகூறக் கேட்டுக் குறித்தவராகத் தோன்றுகிறார். அவர் குறிப்பின் பொருள் சோழர் என்னும் நகரத்தில் ஆர்க்காடு என்னும் அரசன் அரசுபுரிகின்றான் என்பது. இது கேள்வி மாத்திரையால் நேர்ந்த குறை. இதனாலும் இந்நகரம் பண்டைக் காலத்தே மிக்க புகழ் பெற்றிருந்த தென்பதும், அதனால், யவனவாசிரியர்கள் இதனையும் தம்குறிப்பிற் குறித்தார் என்பதும், இது சோழமன்னரது ஆட்சியில், அவர்தம் தலைநகரமாகவும் இருந்ததென்பதும் தோன்றுகின்றன.

இங்ஙனம், இது சோழமன்னரது சீரிய நகரமாக விளங்கிற்று என்பதை நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களும் உணர்த்துகின்றன.

“உள்ளூர் மாஅத்த முள்ளெயிற்று வாவல்
ஒங்க லஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு
நெல்லியம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர்நாட்டுப்
பனியரும் புடைந்த பெருந்தாட் புன்னை
துறைமேய் இப்பி ஈர்ம்புறத் துறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும் நினைந்தவப் பகலே.” (நற். 87.)

ஒருதலைவி, தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்து, ஆற்றாளாய், அவனது நாட்டின் நலத்தையும் கூட்டத்தையும் நினைத்துக் கனவுகண்டு விழித்து வருந்திக் கூறுவது இச்செய்யுள்.

இதனுள், தலைவி, தலைவனாட்டுச் சிறுகுடிப்பரதவர் மகிழ்ச்சி, கானல் ஆகிய இரண்டனோடு அவனது கூட்டத்தை யும் தான் நினைந்து கனவு காண்டற்கு வௌவாலொன்று கனவு கண்டதை யுவமிக்கின்றாள். அது ஊருள்ளிருக்கும் ஒரு மாமரத்தி லிருக்கும் வௌவால் உயர்ந்தவொருகிளையிற் சென்று பற்றித் தூங்கித் துயில்கின்ற காலத்துப் பெருங்காடாகிய ஆர்க்காட்டிற் சிறந்து விளங்கும் நெல்லியம் புளிச் சுவையை (நெல்லிப்பழத்தின் இனிய புளிச் சுவையை) நினைத்துக் கனவு கண்டது; அவ் வார்க் காடு வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் பிறந்த அழிசி யென்னும் சோழர் பெருமகற்கு உரியது என்பது. புன்னையந்தாது படிந்த புறத்தை யுடைய வாய இப்பிகள் செறிந்த கடற்கரை யிலுள்ள சிறுகுடிப்பரதவர் மகிழும் மகிழ்ச்சியும், பெருமையும் தட்பமும் சிறக்கும் கானற் சோலையும் தனக்கு மகிழ்ச்சியைத் தந்து அதுவே பற்றுக் கோடாக உள்ளத்தே தலைவனது முயக்க மகிழ்ச்சி யையும் நினைவு கூரச் செய்தன. இது பகற்கண் நிகழ்ந்தது. பின்னர், யான் கண்ணயர்ந்தக்கால் கனவாய் நிகழ்ந்து விழித்தவுடன் அது கழிந்தது என்பது இச் செய்யுளின் பொருள்.

இனி இதன்கண், தலைவி மலைக்கண் உறைகின்றவள் பிரிந்த தலைவன் காரணமாக நிகழ்ந்தனவற்றை நினைப்பாள், கனவின் கண், அவனுறையும் சிறுகுடியின் மகிழ்ச்சியும், அவனைத் தலைக் கூடியசோலையும், கூட்டமும் கண்டதற்கு நேராக, வௌவால் ஆர்க்காட்டு நெல்லிப் பழத்தின் புளிச்சுவையை யொப்பிடுதல் ஆர்க்காட்டின் பெருமையும், அதனையுடையானாய அழிசியின் பெருமையும் புலப் படுத்தும் நேர்மை மிக்க இன்பந் தருகிறது. மேலும், இச் செய்யுள் செய்த நக்கண்ணையார், ஆர்க்காடு அழிசிக்கு உரியது என்பதனோடு அமையாது, நெல்லிப்பழத்திற் சிறந்தது என்றல் மிக்க நயமாகவே தோன்றுகின்றது. இவர், வௌவால் முள்போலும் கூரிய எயிற்றினையுடைய தென நுணுகி நோக்கிக் கூறும் சதுரப்பாடு “வௌவாலால் விரும்பியுண்ணப் படுவது நெல்லிக் கனி” என்னும் உண்மையையுணர்த்துவதோடு இங்கு நெல்லி மரங்கள் இன்றும் மிக்கிருத்தலை வலிசெய்கின்றது.

நிற்க, இவ்வார்க்காட்டின் சிறப்பையே விதந்து கூறும் பாட்டு மற்றொன்று நற்றிணையிற் காணப் பெறுகின்றது. அதன் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. அது, இந்நகரின் வளப்பத்தையும் அழிசியின் வரலாற்றையும் உணர்த்துகின்றது. அது,

“நோவினி வாழிய நெஞ்சே! மேவார்
ஆரரண் கடந்த மாரி வண்கைத்
திதலை யெஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல்லிடைமலரும்
அரியலங் கழனி ஆர்க்கா டன்ன
காமர் பணைத்தோள் நலம்வீ றெய்திய
வலைமான் மழைக்கண் குறுமகள்
சின்மொழித் துவர்வாய் நகைக்கு மகிழ்ந்தோயே”

என்பது. இது, ஒரு தலைவன். தன் தலைவியைப் பிரிந்து வினை மேற் செல்கின்றவன், ஒரு சுரத்தின் கண் அவளை நினைந்தானாக அவன் நெஞ்சம் மீண்டு வரக்கருத, அந்நெஞ்சிற்கு, “நகைநோக்கி மகிழந்தோய்! அம் மகிழ்ச்சி பின்பு கிடைக்கப் பெறாயாய்த் துன்புறுவாய். அத்துன்பத் தோடு நெடிது வாழ்வாயாக” என்று கூறும் கருத்தமைந்தது. இதன்கண் தலைவன், தலைவியின் நலத்தை, “காமர்பணைத் தோள் நலம்” என்றும், “வீறெய்திய வலைமான் மழைக்கண்” என்றும் “குறு மகள்” என்றும் புகழ்ந்து தன் நெஞ்சம் உற்ற மகிழ்ச்சிக்குக் காரணமாய நகை தோன்றிய வாயைச் “சின்மொழித் துவர்வாய்” என்றும் கூறும் சொற் றொடர்கள் அவன் அவண் மாட்டுக் கொண்ட காதலின் திறத்தைப் புலப்படுத்து கின்றன அன்றியும், அத்தோள், கண், இளமை முதலியனவும், நகையும் அவன் நினைவுற்றகாலத்து நெஞ்சின்கட் டோன்றி விருப்பந் தந்தன வாதலால் அவைகூறற்கும் உள்ளுதற்கும் இயை புடையனவேயாம். என்னை? அறிதோறறி யாமை கண்டதுபோல் செறிதோறும் புத்தின்பம் பயந்து அவனுயிர் தளிர்ப்பச் செய்த முயக்கவின்பமே, அவன் களவினும் கற்பினும் முயன்று பெற்ற பொருளாகும். அப்பொருட்குக் காரணந் தோளா தலால் அது கூறல் இயைபுடைத் தாயிற்று, களவினுள், தான் அவளைக் கண்டவிடத்து, தனக்கு நோயும் மருந்துமாய்க் குறிப்பறி வித்துக் காதல் செய்து பிணித்த பெருமையுடைமையால் கண்ணைக் கூறி, முதற்கண், ஆயமும் தோழியுமின்றித் தனித்து நின்ற நிலைமைக் கண் தான் அவளைக் கண்டவிடத்து, அவள் நோக்கிய மருண்ட நோக்கம் மறவாது நிற்றலால், அதனை “வலைமான் மழைக்கண்” எனவும்கூறி இவை யிரண்டற்கும் நிலைக்களனாய இளமையைக் கூறி யின்புறுதலும், காதற் குறிப்பையுணர்த்திய குறுநகையை இறுதிக்கட் கூறி யின்புறுதலும் தகுவனவேயாம். இங்ஙனம், முறையிற் பிறழாது நினைப்பின் மகிழ்ச்சிதரும் சிறப்பு மிக்க தன்தலைவி நலத்துக்கு ஆர்க்காட்டினை ஒப்பிடுகின்றான். அதுவும், அங்ஙனமே தன் வளத்தாலும் இயற்கை நலத்தாலும் நினைத் தொறும் இன்பம் பயக்கும் நீர்மையுடையது என்பது கருத்து.

ஆர்க்காட்டின் நெல்வயல் வளத்தினை யான் முதற்கட் கூறியிருக்கின்றேன். இச்செய்யுளின்கண் ஆர்க்காடு அழகிய நெல் வயல் சூழ்ந்தது என்றும், அவ்வயல்களில் நெல் சிறப்புற்று விளையுங் கால், இடையில் நெய்தல் தோன்றி மலரும் எனவும், அம் மலர் களின் தேன் அவ்வயலில் வடிய வண்டுகள் சூழ் வந்து முரலும் என்றும், ஆசிரியர் கூறுகின்றார். இதனால், இவ்வூர், நெல்வளம் மிகக்தென்பது வெள்ளிடை மலையாம். இந்நகர்க்கு உரியவன் அழிசி யென்னும் சோழர் பெருமகன்; இவன் தேன்கமழ்மாலை யணிந்து தேர் பல கொண்டு சிறப்புற்று விளங்குபவன்; இவன் மகன் பெயர் சேந்தன் என்பது.

இச் சேந்தன் பகைவரது புகுதற்கரிய அரண்கடந்து வென்று கொண்ட வெற்றியும், மழைபோல் அளிக்கும் வள்ளன்மையும் திதலை (புள்ளி) பரந்த வேற்படையும் கொண்ட திறலினன் என்றதனால், இந்நகரம் வளத்தாலும் செல்வத்தாலும் வயங்க லெய்தியதோடு வண்மையும், வாண்மையும் பெருமையும் சான்ற சோழர் பெருமக்கள் ஆட்சியும் பெற்றிருந்ததென்பது விளங்கு கின்றது.

இனிக் குறுந்தொகையில், பரணர் என்னும் நல்லிசைப்புலவர் பெருமகனார் இந் நகரைச் சிறப்பித்துப் பாடுகின்றார் அது,

“வாரல் எம்சேரி, தாரல் நின்தாரே
அலர் ஆகின்றால் பெரும, காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டுயானைச் சேந்தன் உறந்தை
அரியரி யலம்புக இளங்கோட்டு வேட்டை
நிரைய வொள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழிதீர் மாண்நலம் தொழுதன கண்டே”

என்பது. இது தலைவன் புறத்தொழுக்கம் பூண்டு ஒழுகுபவன் வாயில் வேண்டியகாலை, தோழி மறுத்துக் கூறுதலைப் பொருளாக வுடையது. இதன் பொருள்: ஐயனே, உறந்தையும் ஆர்க்காடும் போன்ற இவளது மாணலம் நும்மைநோக்கி எம்மைச் சிதைத்தல் வேண்டா எனத் தொழுதன. கண்டநீர், இனி, எம்சேரிக்கண் வாரற்க. நும்தாரினையும் தாரற்க. ஊரெங்கும் அலராகின்றது என்பது. இதன்கட் கூறப்பெறும் உறந்தையே உறையூர். இது சேந்தன் என்பானுக்கு உரியது; இவன் காவிரிப் பெருந்துறைக்கண் மருதத்தோடு கட்டப் பெற்ற உயர்ந்த கோடுகளையுடைய பல யானைகளையுடை யவன். பெருந்துறை பலர் நீராடும் துறையாகும் ஆர்க்காடு அழிசிக்கு உரியது. இவன்கீழ்ப் பல வாளேந்திய இளையர் (வீரர்) இருந்தனர். அவரது வாள் வருத்துவதில் நிரயத் தையே நிகர்க்குந் தகைத்து. இவர்கள் யானை வேட்டம் செய்வதில் விருப்பமுடையவர்கள். இப்பாட்டின் கண் உறையூரையும் ஆர்க் காட்டையும் ஒப்பவைத்துக் கூறப் பெற்றி ருப்பதனால், ஆர்க் காட்டின் பெருமை இனிது விளங்கிற்றாம். உறையூரோ, சோணாட்டில் மிகப்பல காலங்களாகச் சிறந்து விளங்கும் நகரங்களுட்டலைசிறந்த காவிரிப்பூம்பட்டினம், உறையூர் என்னும் இரண்டனுள் ஒன்றாகும். காவிரிப்பூம் பட்டினத்திலும் உறையூர் பழமை மிகுந்தது. “ஊரெனப் படுவது உறையூர்” என வரும் பரவை வழக்கொன்றே அதன் பெருமை யுரைத்தற்குச் சாலுவதாம். ஆகவே, ஆர்க்காடும் அக் காலத்தே மிக்க உயர்ந்த நிலையிலிருந்தமை புலனாகும். பரணரது சொற்போக்கிலிருந்து நுனித்து நோக்கு மிடத்து, சோணாட்டின் தென்மூலைக்கு உறையூரேபோல் வட மூலைக்கு இந் நகரமைந் துளது என்பது தோன்றுகிறது.

இதுகாறுங் கூறியவாற்றால், ஆர்க்காடு என்னும் சீரிய நகரம், இன்றேபோல் பண்டும், ஆயிரத்தெண்ணூறு யாண்டுகட்கு முன்னும் சிறப்புற்றிருந்ததென்பதும், இதன் கண் அழிசியென்னும் சோழன் அரசுபுரிந்தான் என்பதும், அவன் யானை வேட்டம் வல்ல வீரர்கள் பலரையும், மிகப்பல தேர்களையும் உடையனாய்ப் புலவர்பாடும் புகழுடையனாய் விளங்கினன் என்பதும், அவனுக்குச் சேந்தன் என்னும் மகன் ஒருவன் இருந்தனன் என்பதும், அம்மகன் வீரமும், கொடையும் விளங்க உறையூரில் இருந்து வந்தனன் என்பதும், பிறவும் விளங்குகின்றன.*

இத்துணைக்கூறிப் போந்ததால், ஆர்க்காடு என்னும் இந்நகரம் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்ணூறு யாண்டுகட்கு முன்னரே விளங்கிய நகரமாதல் வேண்டும் என்பதும், பின்னர் அழிசி போலும் சிறப்புடைய மன்னரில்லாமையினால் அந்நகரம் அத்துணைச் சிறப்புடையதின்றி யிருப்ப, யவனவாசிரியர்கள் காலத்து அவரால் குறிக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், பின்னர், உறையூரே போல் சீர் குன்றிக்கொண்டே வந்த செய்தியால் பெடூட்டா முதலிய ஆசிரியர்களால் சிறிதே குறிக்கப் பெறலாயிற்றென்பதும், பின்னரே முகம்மதியர்க்குரியதாய் இற்றைநிலையடைந் திருத்தல் வேண்டும் என்பதும் பெறப்பட்டன.

இனி, இந்நகரைப்பற்றிய செவிவழிச் செய்திக்குத் தக்க சான்று கிடைக்காமையாலும், வேறு எந்த நூலிலும் இதன் சார்பாக ஒரு குறிப்பேனும் கிடைத்திலாமையினாலும் கொள்ளற்பால தாயிற்றன்று. பரணரால் இதனோடு இயைத்துக் கூறப்படும் உறையூர்க்கு இயையுபட்ட கதை யொன்று உண்டு. அது ஒரு காலத்துக் கோழியொன்று ஓர் யானையோடு பொருது வென்றது என்றும், அவ்வென்ற விடம் உறையூரேயாதலின், உறையூர்க்குக் கோழியென்பதும் பெயராம் என்றும் வழங்குவது. இச் செய்தி, “முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ் சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்” எனச் சிலப்பதிகாரத்தும் கூறப் பெற்றுளது. அப்பெற்றிப்பட்டதோர் செய்தியாயின் அறுவர் தவஞ் செய்த செய்தியையாதல், மன்னவன் கண் பெற்றதையாதல் பரணர், நக்கண்ணையார் முதலிய சான்றோர் குறியாது செல்லார். அங்ஙனம் குறிக்காது சென்றமையால் அது பின் வந்தோர் புனைந்து விட்ட தேயாம். அன்றி, ஆர்க்காடு என்ற சொல்லினைப் பிழைபடவுணர்ந் தோர் ஆறுகாடு எனக் கொண்டு, இச்செய்தியைப் புனைந்து கொண்டனராதல் வேண்டும் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
தமிழ்ப் பொழில் 1930

தமிழ் வேந்தர்


தமிழ் வேந்தராவார் சேர சோழ பாண்டியர் எனச் சிறப்பித்துக் கூறப் பெறுபவர். இம் மூவரும் நம் தமிழகத்தே பிறந்து வளர்ந்து சிறந்த பண்டைத் தமிழ்த் தொல்குடி மக்கள். இவர்களைத் தொல்குடி மக்கள் என்றது புனைந்துரை யன்று; முழுதும் உண்மையுரையே யாகும். “வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப் பிரிதலின்று.” (955) என்ற திருக்குறள் உரை விளக்கத்தே, ஆசிரியர் பரிமேலழகர், பழங்குடி என்றதற்கு “தொன்றுதொட்டு வருகின்ற குடி” என்று உரை காட்டித் தம் கருத்தை விளக்குங்கால், “தொன்று தொட்டு வருதல், சேர சோழ பாண்டியரென்றாற்போலப் படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வருதல்” என்று உரைத்துள்ளார். இவ்வண்ணமே, அழகிய காட்சியின்பம் பெறும்போதெல்லாம். பண்டைச் சான்றோர் பலவும் இம்மூவரது காட்சியின்பமே நினைந்து வியந்து பாராட்டியிருக்கின்றனர். இயற்கைச் சுவை பொதுவளப் பாடும் நற்றமிழ்ச் சான்றோராகிய ஆசிரியர் முடத்தா மக்கண்ணியார், கரிகாற் பெருவளத்தானிடம் பெருவளமுற்ற பொருநன் ஒருவன் பெறா தான் ஒருவனுக்கு அதனைக் கூறி நேர்ந்தபோது, தன் கண்ணெதிர்ப்பட்ட அவன், கொட்டும் பாட்டு பாடும் குழும இருந்த அக்காட்சியின்பத்துக்கு மூவேந்தர் ஒருமை ஆகும் காட்சியை உவமித்துக் கூறியதாக பாராட்டுகின்றார்.

இனி நம் தமிழ் மொழிக்கு இன்றியமையாத இலக்கண வரமைத்த ஆசிரியர் தொல்காப்பியர், மன்னர் போர் செய்யுமிடத் தில் அவரது தானைவீரர் சூடும் அடையாளப் பூவிற்குத் தமிழ் மன்னர் மூவரது அடையாளப் பூவையே விதந்து “வேந்திடை தெரிய வேண்டி யேந்து புகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉம் மாபெருந்தானையர் மலைந்த பூவும்” என்றும், தமிழ் யாப்புமரபு கூறுமிடத்துத் தமிழ்நாட்டைக் கூறலுற்று, தமிழ் மூவேந்தரின் நினைவர, அதனையுங் கூட்டி, “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென் மஞ்புலவர்” என்றும் விளம்புகின்றனர். தொண்டை மான் இளந்திக் யனைப் பாடப்புகுந்த கடியலூர் உருத்திரங் கண்ணனார், “அல்லது கடிந்த அறம்புரி செங்கோல், பல்வேற் றிரையனைப்” படருமா கூறுவார், “மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும், முரசுமுழங்க தானை மூவ”ரென இம்மூவேந்தரையும் சிறப்பித்துள்ளார். மதுவை மருதனிளநாகனார் என்ற புலவர் பெருமான் மூவேந்தரையும் சிவபெருமான் திரு விழிக்கு ஒப்பாக்கி, சேர சோழர்களை இரு விழிகளாகவும் பாண்டியனை நுதல் விழியாகவும் கூறிச் சிறப்பிப்பார், “பிறை நுதல்……………. ………………… ……………….

இதனால், “வண்புகழ் மூவர்” என ஆசிரியர் தொல்காப் பியனார் புகழும் சேர சோழ பாண்டியர் மூவரும் பண்டைத் தமிழ்ச் சான்றோர்களால் பாடிப்பாராட்டப்பெற்ற பெருஞ் சிறப்புடையா ரென்பது இனிது விளங்கும்.

இத்துணைச் சிறப்புவாய்ந்த இத்தமிழ் மன்னர் தம் இருப்பும் சீர்மையும், பண்டைநாளிலே, ஏனைநாடுகளிலும் பரவியிருந்தன வென்பது இப்போது வெளிவந்துள்ள ஆராய்ச்சிகளால் நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கட்கும் சுமேரிய மக்கட்கும் நெருங்கிய இயைபு காணப்படுகிறது என்றும், மிக்க அண்மையில் கண்ட மோஹெஞ்சதாரோ, அரப்பா முதலிய விடத்துக் கண்டெடுப் புக்களால், அவ்வியைபு வலுப்பெறுகிறதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பாபிலோனியா, எகிப்து முதலிய நாடுகளுடன் நம் தென்னாடு வாணிக முறையில் தொடர்பு பெற்றிருந்தது. தென்னாட்டுத் தமிழ் மக்கள் கடல் கடந்து சென்று வாணிபம் செய்யுந் துறையில் சிறப்பெய்தியிருந்தது ஏனைநாட்டு நூல்களாலும், தமிழ் நூல்களாலும் நாம் அறியக்கிடக்கின்றது. காலினும் கலத்தினும் பண்டங் கொணர்ந்து வாணிகம் செய்யும் வழக்குப்பண்டே தமிழரிடம் சிறப்ப இருந்தது. “நீரின் வந்த நிமிர் பரிப்புரவி” (185) என்பது பட்டினப்பாலை, கலத்திற் சென்று வாணிகஞ் செய்யுந் துறையினை “முந்நீர் வழக்கம்” “கலத்திற் சேறல்” என்று பண்டைத் தமிழ்ச் சான்றோர் வழங்கியிருக்கின்றனர். இக்கடல் வாணிகத் தொடர்பேயன்றி, அக்கேடியா, ஈப்ரு, அரபி முதலிய மொழிகளிற் காணப்படும் ஆரியம் தமிழ் என்ற மொழிச் சொற்களும் போதிய சான்று பகருகின்றன.

கடல் வழியாக ஏனை நாடுகட்குச் சென்று அவருடன் பயின்று சிறந்த தமிழர் நாகரிகம் வடநாட்டு ஆரிய மக்கட்கும் பண்டு தொட்டே தெரிந்திருந்தது என்றதற்கு வேண்டிய ஆதரவுகள் கிடைக்காமல் இல்லை. வி.ஏ. ஸ்மித் முதலியோர்கள் வடவாரியர்கட்கு ஆதியில் தமிழர் வாழ்வு, நாகரிகம் முதலியன தெரிதற்கு இடமில்லை, இரு நாட்டவரும் ஒருவரை யொருவர் அறிந்து கோடற்குரிய வாயில்கள் அப்போது கிடைக்கவில்லை. ஆரியர் புழக்கமே விந்திய வரையின் வடபகுதியோடே நின்றது என்பர். ஞ.கூ. சீனிவாசய்யங்கார் முதலியோர், அதனை மறுத்து ஆரிய நூல்களுள் மிகத்தொன்மை வாய்ந்த வேதத்திலேயே தென் தமிழர் கூட்டுறவு காட்டும் தமிழ் நாட்டுப் பொருள்கள் கூறப்
பட்டிருத்தலின், தமிழர் வாழ்வு பண்டே ஆரியர் அறிய விருந்தது என்று வற்புறுத்து கின்றனர். ரிக்வேதத்தில் “சரத்வாத நா தக்ஷணா” என்ற தொடரில் வரும். “தக்ஷணா” என்ற மொழிக்கு சாயணா
சாரியார், ஐத்திரேய பிரமாணத்துட் கண்ட கதை யொன்றைத் துணையாகக் கொண்டு கூறிய பொருள் பொருந்தாது; கூறியதே மிக்க பொருத்த முடைய தென்பது தக்க சான்று காட்ட
வற்புறுத்தப்பட்டிருக்கிறது.

வேதங்கள் நான்கினும் மிக்க பழமை வாய்ந்தரிக் வேதத்திலும் ஏனை வேதங்களிலும் காணப்படும் முத்து, பொன் முதலிய விலை யர்ந்த மணிகள் யாவும் தென்னாட்டவையாதலின், ஆரியவர்த்தன்ன கத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இயைபுபண்டேயிருந்தது என்பது அறியப்படும். கி.மு. நான்காம் நூற்றாண்டில் பிறந்த கௌடில்யர் எழுதிய பொருணூா லும் இவ்வணிகமுறையை விதந்து கூறுகிறது. புதியஜாதகக் கதைகளும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன.

பல கூறுவானேன்? இருக்கு வேதத்துத் தைத்திரிய ஆராயகத்தில் வரும், “ஆரிய வரம்பு கடந்த மூவர், வாயசர், வங்கவாக சேரபாதர் என்போராவர். (ரிக் VII. 101.14) இதற்குப் பொருள் உரைத்த சாயனர். ஆனந்த தீர்த்தர் முதலியோரின் வேறுபட்டு “வங்கவாகதர் என்பவர் வங்கரும், மகதரும்,” எனவும், “சேரபாத என்போர் சேரர்” எனவும் கீத் என்பவர் கூறுகின்றனர். இதனை ஆராய்ச்சியாளர் உண்மையெனக் கொள்கின்றனர்.

வடமொழியில் உள்ள வால்மீகி ராமாயணம், தென்தமிழ் நாட்டுப் பாண்டி நாட்டையும் சோழ சேரர் நாடுகளையும் கூறுகின்றது. அதனால் வால்மீகி காலத்தே, வடவர்க்குத் தமிழ்நாட்டு மூவேந்தர் இருப்பும் தெரிந்தது என்பாரும் உண்டு. ஆயினும் இப்போதை ஆராய்ச்சியாளர்கள் இக்கூற்றுக்களை நன்றாக ஆராய்ந்து, அவை கொள்ளத் தக்கவல்ல என்று துணிந்து விட்டனர். சங்கமிருந்து கவாடபுரம் என வடமொழி இராமாயணம் கூறும் கூற்றும் ஆராய்ச்சிக்கு உடைந்து போயிற்று. வடவரது ரிக்வேதத்தில் மகவான்களுள் ஒருவனாக இராமன் என்ற ஒருவன் காணப்படு கிறான். அவன் மன்னைாகக் கூறப்படுகின்றானேயன்றி, இராமாயணம் கூறுவதுபோல் அவதார புருடனாகக் கூறப்படவில்லை. அன்றியும் அவதாரம் பற்றி கருத்து ஆகம காலத்திற் பிறந்த ஒன்றே தவிர, அதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னர்த்தாகிய வேதக்காலக் கருத்தன்று. ஆகமும், வேதமும் மாறுபட்ட கருத்துடையனவாகும்; இன்றேல், கி.பி. பத்து நூற்றாண்டிலிருந்த யாமுனாசாரியன் ஆகமப் பிரமாணியம் என்ற நூற்யெழுதநேர்ந்திராது. ஆகவே, இராமனை அவதார புருடனாக்கி இதிகாச நாயகனாகக்கூறும் செய்தி ஆகமகாலத்தில் தான் பிறந்திருக்க வேண்டும், பாரதப் போரின் முடிவோடு வேதகாலம் முடிந்தமையின் அதற்குப்பின்பே, ஆகமகாலம் பிறப்பதாயிற்று. அது கி.மு.பத்து நூற்றாண்டாகலாம் என்று தமிழர் வரலாறுடையார் கூறுகின்றார்.

வால்மீகி வாழ்ந்தகாலம் வேதகாலம். இராமன் காலமும் அது ஆகவே, அவன் வாழ்நாளிலேயே அவனைப் பாடிய புலவர், அக்காலத்தில் இல்லாத (பலநூற்றாண்டுகட்குப் பின்னர் வந்தகாலக்) கருத்தை புகுத்தித் தெய்வத்தன்மையை ஏற்றிய பாடினாரென்றால் உண்மையறிவுக்கு இயையவில்லை. மேலும் வேதகாலத்து வட மொழி செய்யுணடை வேத நெறியாகிய சந்தை நடையென்றும், பிற்காலத்து இலக்கியநடை பாசநடை யென்றும் கூறுவர். வேத காலத்து இராமனை அவன் காலத்துப் புலவர் பாடுமிடத்து, அக்கால நடையாகிய சந்தையடையாற் பாடுவரேன்றி, பின் வந்த பாணினி யார் இலக்கணம் வகுத் துரைத்த பாசநடையிற் பாடுவாரல்லர். இப்போது கிடைக்கும் வால்மீகி இராமாயணம் பாசநடையிற் பாடப்பெற்றிருத்தலின் இஃது இவற்குப் பிற்போந்த வால்மீகி என்ற பெயருடையார் ஒருவரால் செய்யப்பெற்றதாகும் என்பர். P.T. சீனிவாசையங்காரவர்கள்.இப்போது வால்மீகி இராமாயணத்துட் காணப்படும் தமிழ்நாட்டுச் செய்தி மற்றும் பின்வந்த வால்மீகி காலத்தனவாம் என்று தக்கதாம். இந்த வால்மீகி பாணினியார் காலத்தவர் என்றும் கொள்வதே பாணினியார் கி.மு. ஏழாம் நூற்றாண்டினர் எனினும் கூறுபவாதலின், இற்றைக்குச் சற்றேறக் குறைய இரண்டாயிரத்தெழு நூறியாண்டுகட்கு முன்பே தமிழ் நாட்டு மூவேந்தரின் சிறப்பு வடவர் நாட்டில் அறியப்பெற்றிருந்த தென்பது துணிவாகிறது.

அன்றியும் இராமாயணத்துக் கூறப்படும் அரக்கரும், வானரரும் தென்னாட்டு மக்களையே குறிக்கும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அக்காலத்தே தென்னாட்டவர் வடக்கே கோதாவிரி நதிக்கரை வரையிற் பரவியிருந்தனர். அந்நதிக்கரைப் பகுதியைச் சகஸ்தானம் என்பர். அவர் தம் தலைவனான இராவணன் வீழ்ந்த பின்னரே, தமிழ்நாட்டில் மூவேந்தரும் தோன்றியிருத்தல் வேண்டு மெனவும், இவர் சிறப்பறிய பின், இராமாயணத்துள் குறிக்கப் பெற்றகாலம் கி.மு. முதலாயிரம் யாண்டுகட்குள்ளேயாம் எனவும் தமிழர் வரலாறு என்னும் சில கூறுகின்றது. மேலும், சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தமிழ்க்குடிகளும், “படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு “வரும்குடியினர் பரிமேலழகர் கூறியதற்குப் பொருள் கூறு முகத்தால் எழுவாய் காணமுடியாத அத்துணைத் தொன்மை வாய்ந்த குடி” என்று அந்நூல் கூறுகின்றது.

இனி, “வால்மீகியின் சமகாலத்தவர்” எனப்படும் பாணினியார் வகுத்த வடமொழியிலக்கணத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர் களைக் குறித்திலர். இது குறித்து நல்ல சொற்போர் ஒன்று தொடுக்கப்பெறுகிறது. D.R. பந்தர்க்கார் என்பவர், பாணினியார் நிலத்தில் வடஆரியர்க்குத் தமிழ்நாட்டவரைப் பற்றியாதல், அந்நாட்டு அரசுகளைப் பற்றியாதல் ஒன்றும் தெரியாது என்று கூறி அதற்குச் சான்றாகப் பின் வருமாறு கூறுகின்றார். “பாணினியார் எழுதிய அஷ்டதயாயி என்பதனைப் படித்தவர் எவரும் அவரைத் திருந்திய அறிவில்லாத நூலாசிரியர் என்று கூறமாட்டார். அவர் எழுதிய நூல் பாண்டிய சோழ கேரளர் என்ற இவரைக் குறித்திலர். தம் பெயரமைதிக்குரிய இலக்கணமும் குறித்திலர். இம்மூவேந்தர் களின் பெயரைக் கேட்ட அறிஞன் எவனும், தான் எழுதும் நூலில் அதனைக் குறியா தொழியான். இதிலிருந்து நாம் அறியக்கிடப்பது யாதெனில் இம்மூவேந்தர்களின் பெயர்தானும் பாணினியார்க்குத் தெரிந்த தில்லை என்பதாம்; ஆகவே, அவர் காலத்தில் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியர்க்குத் தமிழ்நாடு தெரியாது என்று வாறும்.

ஆராய்ந்து காணவந்த P.T. சீனிவாசையங்கார், “பாணினியார் தமிழ் மூவேந்தரைத் தெரிந்திருந்தார். ஆனால், அவர்தம் தமிழ்ப் பெயராதலின், அவற்றிற்கு அமைதியினைத் தம் வடமொழி யிலக்கணத்தே காட்டாராயினார். அவரெழுதிய அஷடயாயியைக் குறைவற வரைந்த இந்திய நிலவரை நூல் (Geography) என்று கொள்வது தகுதியன்று;மேலும் அவர் இம்மூவரையும் தெரிந்திலர் என்பதும், அதுகொண்டு ஆரியர் தமிழ்நாட்டையும் அதன் இருப்பை யும் அறியார் என்பதும் வீண்வாதமாகும்.”என்று கூறி. “ஆபத்தமபர், போதாயனர் என்ற இருவருள் ஒருவர் அவர் காலத்தவர்.அவர் தம் நூலில் தென்னாட்டு ஆரியர்க்கென வகுத்த ஒழுக்க முறைகளுள் தென்னாட்டவர் ஒழுக்கமும் தழுவிக் கூறியிருக்கின்றனர். அதனால், அக்காலத்து ஆரியர்க்குத் தென்தமிழ்நாடு தெரிந்தேயிருந்தது என்றே கொள்ளவேண்டும்; பாணினியார் குறைவற நிரம்பியது என்பது கருத்தாயின், அவர் எழுதிய “வியாகரண” த்துக்கு காத்தியாயனரும் பதஞ்சலியாரும் வார்த்திகமும் மகாபாடியமும் வகுக்க வேண்டியதில்லையாம்” என்று விடையிறுக்கின்றார்.

இது கிடக்க, இனி, பாரதகாலத்தில் ஆரியர்க்கும் தமிழர்க்கும் அரசியல் தொடர்பு உண்டாகியிருக்கிறது. திரௌபதிக்குச் சுயவரம் நடந்தகாலத்தில், வந்திருந்த வேந்தர்களுள் பாண்டிவேந்தர் ஒருவன். கிருஷ்ணன்பால் பாண்டிமன்னனொருவன் தோல்வியுற்றான் அப்போது பாண்டியர் காவல் கட்டழிந்தது. சோழவேந்தர் ஒருவனோடு கிருஷ்ணன் போருடற்றியிருக்கின்றான். யுதிஷ்டிரன் இராயசூயம் வேட்டபோது, அவன் இளையவனான சாதேவன் தென்னாடு புகுந்து திராவிட, சோழ, கேரள, பாண்டியர்களை வென்றிருகின்றான். சோழரும், திராவிடரும், ஆந்திரரும் இராயசூயத் திற்கு வந்திருந்தனர். சோழரும் பாண்டியரும் யுதிஷ்டிரனுக்குப் பல பரிசு வழங்கியிருக்கின்றனர். பாரதப் போர் தொடங்கிய காலத்தில் பாண்டியரும், சோழரும், சேரரும் பாண்டவர்க்குத் துணையாகப் போருடறினர். துரோணனுடன் போர் செய்யச் சென்ற பாண்டிய மன்னர் அசுவத்தாமனால் கொல்லப்பட்டான். அருச்சுனன் “தீர்த்த யாத்திரை செய்தபோது பாண்டியநாட்டில் மணிபுரம் (மணலூர்) என்னுமிடத்திருந்த சித்திரவாகனின் மகள் சித்திராங் கதையை மணந்தான்.

இப்பாரதத்துள் காணப்படும் “தீர்த்த” வகைகளுள் தமிழ் நாட்டின் தென்கோடி முனையாகிய குமரிதீர்த்தம் கூறப்படுகிறது இஃதொரு ‘புண்ணியதீர்த்த மென்பது ஆரியர் கொள்கையே தவிர தென்னாட்டவர் கொள்கையாகத் தெரியவில்லை. அது பற்றிய புராண வரலாறுகளும் இவ்விதிகாச காலத்திற்றான் தோன்றியிருத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவ்வாறு இராமாயண பாரதகாலத்தே ஆரியர்க்கும் தமிழர்க்கும் ஒருவரை யொருவர் அறிந்து கொள்ளும் இயைபு இருந்திருக்கிறதென்று கூறியவாறாம்.

இனி, இவ்விதிகாச காலத்துக்குப் பின் தமிழ்நாட்டிற்கும் கீழ்நாட்டுச் சீனாவிற்கும் மேலைநாட்டு எகிப்திற்கும் வணிகத் தொடர்பு இடையறவின்றிச் சிறந்து வந்தது. வருகையில் பாணினி வியாகரணதுட் காணப்படாத சேர சோழ பாண்டியர் என்ற தமிழ் சொற்களுக்குப் பின் வந்த வடநூலார் சிலர் வடநூன் மரபு கொண்டது.

அவருள் காத்தியாயனர் என்ற சிறப்புப் பெயர் பெற்ற வரருசி என்பவர், சேர சோழ பாண்டியர் என்ற பெயர்கட்கு அமைதி காட்டுவது குறித்து, பாணினியரின் அஷ்டத்யாயின் குறைபாட்டை நிறைவு செய்வார் போலத்தாம் எழுதப் புகுந்த வார்த்திக வுரையில் இலக்கண விதிகள் புதியவாக அமைக்கலாயினர். அவருக்குப் பின் வந்த பாடியகாரர் என்ற சிறப்புப் பெயருடைய பதஞ்சலியாரும், வரருசியையே பின் பற்றிச் செல்லுகின்றார். இவர்கள் எழுதியுள்ள வற்றை நோக்கின், வரசிசியும் பதஞ்சலியும் சேர சோழரென்ற பெயர்கள் அவ்வந் நாடுகளின் பெயரடியாக வந்தவை யென்றும், பாண்டிய ரென்பது, பாண்டு என்னும் நாட்டிற்கும், ஓர் அரசகுடும்பத்திற்கும் உரிய பெயரின் அடியாக வந்ததென்றும் கருதுகின்றனர் என்பது தெளிவாக விளங்குகின்றது. தென்னாட்டி லிருந்த அரசகுடும்பம் யாதும் பாண்டு என்ற பெயருடன் இருந்த தில்லை; பாண்டியர் என்ற பெயரையுடைய குடி யொன்றே பண்டைநாளில் இருந்தமையின், அவ்விலக்கண வுரையாசிரியர் கூறுவது பொருந்தாது எனத் தமிழர் வரலாறு என்ற நூல் கூறுகின்றது.

இனி, K.A. நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் பாண்டியர் என்ற சொல்லைப் பற்றிக் கூறுகையில், வடமொழியிலக்கண ஆசிரியர்கள் காட்டிய பொருளை மேற்கொண்டு மாக்ஸ் முல்லர், பந்தர்க்கார் முதலியோர் கூறியன தெளிவுரையவாகா, காத்தியாயனர் இலக்கணப்படி பாண்டியர் என்ற சொல்லின் முதனிலை பாண்டு என்பதே யாகல் வேண்டும் தமிழ்நாட்டுப் பாண்டியர் நாடு பண்டையில் பாண்டியென்பதாம்; வடமொழியாளர் காட்டும் பாண்டியர் ஒருகால் மத்தியதேசத்துப் பாண்டு எனப் பெயர்பெற்ற அரச குடும்பத்தவராதல் வேண்டுமேயன்றித் தமிழ் நாட்டுப் பாண்டியராகார் என்று எடுத்து மொழிந்து, கௌடில்யரது பொருணூா ல் கூறும் (சேர, சோழ) பாண்டியரென்பது தமிழ் நாட்டுப் பாண்டியரையே குறிக்கும் என்று கூறுகின்றார். இதனோடு, மகாவம்சம் கூறும் கதைகளும், பிறவும் ஆராய்ந்து சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன் தருவனவல்லவென விலக்கப்படுகின்றன.

இனி, கால்டுவெல் என்பார் இது குறித்துச் சில கூறுகின்றார். சிங்களவர்க்குள் பாண்டியரைப்பற்றிக் கூறும் கதையொன்று வழங்குகிறது. இலங்கை யரசன் விசய னென்பான் பாண்டிய மன்னனது மகளொருத்தியை மணந்து, அவள் வயிற்றிற் பிறந்த மகனுக்குப் பாண்டிய வம்ச தேவன் என்ற பெயரிட்டழைத்தான். கரையில் ஒரு பகுதி பாண்டிய ராட்சிக்குள் இருந்த தென்பது உண்மையே. அது பாண்டிய ராட்சியின் வன்மையையும் பரப்பையும் மெய்ப்பிக்கிறது. அகஸ்டஸ் என்னும் அயோனியா நாட்டு அரசர்க்குத் தூதனுப்பிய இந்திய மன்னன் தமிழ்நாட்டுப் பாண்டியனாகுமே யன்றிப் போரஸ் என்பவனல்லன் என்று துணி கின்றேன். இஃது ஏற்கப்படுமாயின், பாண்டியர்கட்கும் மேனாட்டு மக்கட்கும் உளதாயிருந்த தொடர்பு எத்துணைச் சீரிய நிலையில் விளங்கிற்றென்பது இனிது அறியப்படும். அலெக்சாந்தருக்கும் வடநாட்டு இந்திய மன்னருக்கும் இருந்த அரசியல் தொடர்பு அறுபட்டபிறகு, மேனாட்டவர் தொடர்பின் பயப்பாட்டினை நன்றென வுணர்ந்த இந்திய மன்னர்களுள் தமிழ் நாட்டுப் பாண்டி மன்னரே முதல்வராவர்.”

இவ்வாறு பாண்டியர்களின் பொதுவியல்பைக் கூறிச் செல்லும் இவர் பாண்டியர் என்னுஞ் சொல்லின் பிறப்பைப்பற்றி வடமொழி யாளர் கூறுவதையே மேற்கொண்டு அதற்குத் துணையாக மகா வம்சகதை, பாரதக்கதை, மகஸ்தனீஸ் என்பவர் கேள்வியுற்றெழுதிவைத்த கதை ஆகிய இவற்றை எடுத்துக்காட்டுகின்றார். பின்னர் ‘பாண்டே” “பாண்டியன்” என்று வழங்கியவற்றை எடுத்து மொழிந்து பாண்டியரின் தொன்மைக்கு ஆக்கம் தருகின்றார்.

இனி, சோழரைப்பற்றிக் கூறத்தொடங்கி, சோழ ரென்னும் இச்சொற்கு முதனிலை தெரிந்திலது; அசோக மன்னரின் கல்வெட்டுக் களின் சோடர் என்றும், தெலுங்கில் சோளர் என்றும், தமிழில் சோழர் என்றும் இச்சொல் வழங்கி வருகிறது; தாலமியின் குறிப்புக் களின் காணப்படும் சோரை யென்பதும் சோழரையேயாகும். ஹயூன்ஸ் கூறும் சோழியநாடு இஃதென விளங்கவில்லை. சோழநாடு தானே என்று கோடற்கும் கூடவில்லை என்று மொழிந்து விட்டு, சேர நாட்டின் பரப்பையும், சிறப்பையும் கூறிச் செல்கின்றார்.

பின்னர் அவர் சேரர்களைப்பற்றி எழுதத் தொடங்கித் தமிழ் நாட்டில் சேரர் எனப்படுவோர் வடநாட்டில் கேரளர் என்றே வழங்கப்பட்டனரென்றும், சேலம், கோயம்புத்தூர், மைசூரின் ஒருபகுதியாகிய இவை சேரநாடு என்ற பெயர்பெற்றன என்றும், இங்குக் கூறிய கொங்கு நாட்டு மன்னரையே சேரமன்னரெனக் கொண்ட ஆசிரியர் டவுசன் (Dowson), டாக்டர் எக்லிங்கு (Eggeling) யோர் ஆராய்ச்சி நிகழ்த்துவாராயினர் என்றும், சேர நாட்டின் பகுதியாகிய கொங்கு, குடகு என்பவற்றையும், கேரளம் என்பது முதனிலை கேரம் என்பதையும் காட்டி, கேரம் என்பதற்கு மலையாளத்து தென்னைமரம் என்று பொருள் என்றும் கூறிச் செல்கின்றார். இன்வாராய்ச்சி சேரர் என்ற சொற்பொருளையோ சேரவேந்தர் சிறப்பையோ அறிதற்குத் துணை செய்யாமையின், இதனை இம்மட்டில் நிறுத்திக் கொள்கின்றோம். தமிழ் நாட்டுச் சேரர் வடநாட்டிற் கேரளம்என்றும், கேரள புத்திரர் என்றும் வழங்கப்பட்டனர் என்பது குறித்துகொள்ளவேண்டிய தொன்றாம்.

இனி, இம்மூவேந்தரையும் பற்றியதொரு செய்தியைக் கால்டுவெல் ஆசிரியர் கூறுகின்றார். அஃதாவது, “தாமிரபரணி யாற்றங்கரையை கொற்கை யென்பதொரு நகர் உண்டு; பண்டைத் தமிழ் நாகரிகம் பிறந்து வளர்ந்து சிறந்தவிடம் அதுவே;அந்நகரில் இருந்த அரசர்க்கு மக்கள் மூவர் இருந்தனர். அவர் சேரர், சோழர், பாண்டியரென்போராவார். அவர்களுக்குப் பிரிவு உண்டாகிய போது சேரனும் சோழனும் முறையே மேற்கினும் வடக்கினும் சென்றுதம் பெயரால் இரண்டு அரசியலை நிறுவினர்; பாண்டியன் இடம் பெயரவில்லை; அன்று முதல் தமிழ்நாடு முத்தமிழ் நாடாய் முடிவேந்தரான இம் மூவரால் காக்கப்பட்டு வந்தது என்பது. இதனின் வேறாகப் பலபுராணங்கள் கூறுவதையும் அரிவமிசம் முதலிய நூல்கள் கூறுவதையும் குறித்துச் செல்கின்றார். இடையே அரிவமிசக் கதையைக்கூறி , அதன்கண் வரும் கோலர்கள் இன்னாரென்று துணிவதற்குச் சான்றுகள் இல்லை; இருந்தால் அவர்களும் திராவிடரேயாதல் வேண்டுமென்பார்.

சமணமும், பௌத்தமும் வடநாட்டிலிருந்து தமிழ்நாடு புகுந்தபோது தமிழ் வேந்தர் மூவரும் சீரிய நிலையில் இருந்து வந்தனர். சேரநாட்டிலும் சோழநாட்டிலும் இப்போதும் சமண பௌத்தப் பள்ளிகளும் கற்குகைகளும் காணப்படுகின்றன. அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களிலும் மோரியராட்சிக் குறிப்பிலும் தமிழ்நாடு பிறர் ஆட்சிக்குட்படாது தணித்திருந்து, கோலோச் சிவந்தமை புலனாகின்றது. தமிழ் வேந்தர் வடநாட்டு வேந்தர்க்குப் பெரும் பொருள் நல்கியதாகக் கூறப்படும் செய்திகள் தமிழ் வேந்தரது செல்வ பகுதியை யுணர்த்துவனவே தவிர, தோல்விக்குறி யாகச் செலுத்திய திறைகளல்லவெனத் தெளிய வுணரவேண்டும்.

இதுகாறும் வேற்று நாட்டு மக்கள் நம் தமிழ் வேந்தரைப் பற்றிக் கூறியவற்றைப் பார்த்தோம்; தமிழ் நாட்டவர் இத்தமிழ் வேந்தரைப் பற்றி எவ்வகைக் கருத்துடையவரென்பதை அறியலாம். இதைக் குறித்துத் தமிழர் வரலாறு எழுதிய ஆசிரியர் கூறுவது மிக்க பொருத்தமாக இருத்தலின் அதனை மட்டில் சுருங்க உரைக் கின்றோம். தமிழ் நாட்டு மூவேந்தரும் தமிழகத்துத் தொன்று தொட்டு வந்த பழங்கு தமிழ் பெருமக்களாவர். பிற்காலத்தில் பிராமணீயம் புகுந்து தூண்டியதன் பயனாக ஆரிய மன்னர்களைப் போல இவர்களும் குலமுறை வகுத்துக் கொள்வாராயினர். ஆதலால், சோழர் சூரிய குலமென்றும், பாண்டியர் சந்திர குலமென்றும், சேரர் அக்கினி குலமென்றும் கூறப் படலாயினர். ஆயினும் இவ்வேத்தர் தமிழ்வேந்தர் என்பது மட்டில் மாறாதே நிலவுவதா யிற்று. எனினும், இவர்கள் தமிழர்களே என்பதும், இவர்பெயர் தமிழ்ப்பெயரே என்பதும் அழியா உண்மைகளாகும்.

இவருள் சோழரென்பார் காவிரி பாயும் வளநாட்டு வேளாளர் ஆவார். அவர் தமக்கு அடையாளமாக ஆத்திமாலை சூடினார். பாண்டியர் கடற்கரை நாட்டுப் பரதராவார். அதனால் தென்பரதர் என்றும் கூறப்படுவர். இவர் நாட்டுச் சிறப்புடைய மரம் வேம்பு; அதனால் இவர் வேம்பின் பூந்தாரைத் தமக்கு அடையாளாமாக வுடையர்; மீன்பிடித்தலும் இவர்க்குத் தொழிலாதலின், மீனக் காடியுடையராயினர். காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம்பெருக்கும் தொழின்மையால் சோழர் புலிக் கொடியுடைய ராயினர்; நாளும் வில்வேலேந்தி வேட்டம் செய்தலையே தொழிலாக வுடையராதலால், சேரர் விற்கொடியுடையராயினர்.

இவ்வுண்மை காணாது, இவர்கட்குப் பிறநாட்டுத் தோற்றத் தொடர்பு கூறலும், அதற்கு ஏற்பத் தாம்தாம் நினைந்தவாறு புனைந்து கூறலும் தீய ஆராய்ச்சியின் வழுவுரையாகும் என்று தமிழர் வரலாறுடையார் தம் செவ்விய முடிபாகத் தெரிவிக்கின்றார்.

சேரர் மலைநாட்டுக் குறவர்களாவர். அஃதவது குறிஞ்சி வேந்தர் என்பது. காவிரி தோன்றும் மலையகமும், மேலைக் கடற்கரைப் பகுதியும் அவரது நிலமாகும். ஆங்கே சிறப்புற நிற்கும் மரம் பனையாகலின் அவர் தமக்கு அடையாளமாகப் பனந்தோடே கொள்வாராயினர்.

தமிழகத்தே மேனாட்டு மக்களால் தமிழர் என்றும், தமிழகம் என்றும் வழங்குதற்குக் காரணமாயிருந்தவர் சேரநாட்டு மக்களே யாவர். பெரிபுளூஸ், தாலமி முதலிய யவன ஆசிரியர்களின் எழுத்துக்களில் டமிரைக் என்று காணப்படுவதும், அதன்கண் குறிக்கப்படும் ஊர்களும் யாறுகளும் மக்களும் சேரநாட்டவே யாதலால், சேர நாடே பிற நாட்டவர் இனிதறிதற்கு முதன்மை வாய்ந்திருந்தமை விளங்கும். அக்காலத்து, இந்நாட்டவருள் கடலிற் கலஞ் செலுத்தும் தலைமைப் பண்பு இவர்பாலே கிடந்தது. மலையமான் திருமுடிக் காரியைப் பாடிய மாறோகத்து நப்பசலை யார் என்ற புலவர் பெருமாட்டியின் புறப்பாட்டில் “சினமிகுதானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப், பிறகலம் செல்கலாதனையேம் (புறம் 126) எனக் காட்டும் உவமை யால் சேரரது கலஞ் செலுத்தும் தலைமை உரிமை நெடுங்காலத்து முன்பே வீற்றிருந்தமை மேம்பட்டுத் தோன்றுகிறது. அன்றியும் நம் நாட்டிலிருந்து மேனாடுகளுக்கு ஏற்றுமதியான உணர் பொருளும், மணியும் மயிலும், பட்டாடையும் கம்பளங்களும் இச் சேரநாட்டின் வழியாகவே செலவு பெற்றன. அதனால் பண்டையில் காலினும் கலத்தினும் வாணிபம் நடைபெறுதற்கு ஊக்கமும் ஆதரவும், உழைப்பும் இந்நாட்டில் மிக்கிருந்தனவென்பது தெரிகிறது.

இந்நாட்டின் வடக்கில் ஆரியகம் என்றொரு நிலப்பகுதி யிருந்ததாக யவனவாசிரியர் குறிப்புத் தெரிவிக்கிறது. இப்போதைய மராட்டிய நாடே அக்காலத்து அவ்வாறு வழங்கிவந்ததென்பது ஐயமறத் தெரிவதாகும். அந்நாடு அப்போது ஆரியகம் என வழங்கியதானால் அப்பகுதியில் ஆரியர் குடியேறிப் பல்கித்தம் ஆரிய நாகரிகத்தைப் பரப்பியிருந்தனராம். அவர்கட்கும் சேர நாட்டவர்க்கும் அடிக்கடியுளதாகிய கூட்டுறவால், ஆரிய நாகரிகத்தைத் தொடக்கத்தே முதலாவதாகக் கொண்டவர் சேரர்களே என்பது துணியப்படுகிறது. ஆரிய நாகரிகம் தமிழ் நாட்டிற் பரவுவதில் முதலிடந்தந்த அந்நாடே மேனாட்டவரோடு வாணிகம் செய்வதற்கும் முன்னணியில் நிற்பது மாயிற்று.

இந்நாட்டு மன்னர்கள் பலரும் பொதுவாகச் சேரமான், சேரல் சேரலன், இரும்பொறை, ஆதன், வானவன், குட்டுவன் எனப் பலரைப்பற்றிய குறிப்புகளும் மிகச் சுருக்கமாகவே கிடைக் கின்றன. ஆராய்ச்சி நாட்டம் பெருகியிருக்கும் இக்காலத்திலும், பாண்டியராட்சியும் சோழராட்சியும் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் வெளி வந்திருக்க, சேரர் ஆட்சிபற்றிய குறிப்புகள் வெளிப் படாமலிருப்பதொன்றே இவ்வாராய்ச்சியின் அருமையைக் காட்டுகின்றது.

மேலும் இச் சேரமன்னர்களின் பெயர்கள் மேலே கூறியவாறு பொதுநிலையில் வழங்கப் பெறுவதால் ஆராய்ச்சிக்காலத்து மிக்க மயக்கமுண்டாகிறது. பாடினோர்காலத்து அம்மன்னரது சிறப்புப் பெயர் இயற்பெயர் முதலியன தெரிந்திருக்குமென்பதில் ஐயமில்லை யெனினும், அவை அவரால் விளங்கக் குறிக்கப்படாமையின் இம்மயக்கத்துக் கிடமுண்டாகிறது. இச்சேர மன்னர்களின் பெயர்கள் அவரவர் இயற்பெயர் பின்வருவது நோக்கின் சேரல், சேரலாதன், இரும்பொறை முதலியன அவர்தம் குடிப்பெயராயிருக் கலாமோ என்ற எண்ணம் பிறக்கின்றது. குடிப்பிறந்தார் அனைவர்க்கும் அப்பெயரே வழங்கப்படாமை காண்கிறபொழுது அவ்வெண்ணந்தானும் வீழ்ந்துபோகிறது. இதனால் ஆராய்ச் சியாளர் பலர் ஊக்ககமிழந்து போகின்றனர். சேரரைப்பற்றிய நூல்களையும் பிற்காலவரலாறுகளையும் சேர நாட்டு ஒழுகலாறு களையும் அறிஞர் நன்கு ஆராய்ந்து வெளியிடுவரேல் தமிழ் நாட்டின் பழைய வரலாறு ஒருவாறு உணரப்படுவதற்கு நல்ல வாயிலாம். ஆதலால், இவ்வாரய்ச்சிக்கண் அறிஞரது கருத்து விரைந்து செல்லும் என்று நன்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்ப்பொழில்

சோழன் கரிகாலனைப் பாடிய ஆதனார்


சோழன் கரிகாலன், சோழன் கரிகாற் பெருவளத்தான் கரிகால் வளவன் என்றும் கூறப்படுவன். இவனைப் பாடிய சான்றோர்கள் சங்க இலக்கிய முதல் தலபுராணங்கள் வரையில் மிகப் பலர் உள்ளனர். கரிகாலன் சங்க இலக்கிய காலத்தவனாதலால், அக்காலத்துச் சான்றோர்களையே இங்கே வரைந்து கொள்வோம்.

சங்க இலக்கியங்களிற் காணப்படும் சான்றோர்களில் சோழன் கரிகாலனைப் பாடியவர் எண்மராவர். அவர்கள் மூடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணானார் வெண்ணிக் குயத்தியார், கழாத் தலையார், நக்கீரர், மாமூலனார், பரணர், கருங்குழ லாதனார் என்போராவர்.

ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற் பெருவள்ள தானைப் பொருநராற்றுப்படை பாடிச் சிறப்பித்துள்ளார். பொரு நன் ஒருவன் சோழன் கரிகாலனிடம் சென்று, அவன் தந்த பெருஞ் செல்வத்தைப் பெற்று வருபவன், வேறொரு பொருநன்தன் எதிர் வரக் காண்கின்றான்; அவன் வறுமை மிகுந்து வாடியிருக்கின்றான்; அவனுக்குத் தான் கரிகாலனைக் கண்ட திறமும், கரிகாலன் பிறப்பு வரலாறும், கொடை நலமும், பிறவும் எடுத்தோதி, அவனையும் கரிகாலனிடம் சென்று வேண்டுவன பெற்றுவறுமைப் பிணி நீங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றான்.

இதன்கண் கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்றும், இவன் பிறக்கும்போதே தந்தை இறந்த தனால் அரசுரிமையுடன் பிறந்தான் என்றும், இளமையிலே அரசு கட்டிலேறினா னென்றும் ஆசிரியர் கூறுகின்றார்.

இதனை ‘… … … வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்,
முருகற்சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமால் கலிப்ப’

ஆட்சி செய்ய லுற்றான் என்றும், நாடாளுதற்குரிய நலம் பலவும் கரிகாலனுக்குக் கருவிலேயே திருவாய் வாய்த்திருந்தன; அதனால் காலை ஞாயிறுபோல் உலகு புகழும் காட்சியுடைய னானான் என்பது தோன்ற,

‘பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடு செகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப’

விளங்கினா னென்றும் வருவனவற்றாற் காணலாம்.
மேலும், கரிகாலன் அரசுகட்டிலேறிய சின்னாட்கெல்லாம் சேர பாண்டியர் இருவரும் துணைவர் பலருடன் கூடிக்கொண்டு, கரிகாலனை வீழ்த்தக் கருதிச், சோழ நாட்டு வெண்ணி யென்னும் மிடத்தே போருடற்றினர். அப்போரில் மிக்க இளையனாயிருந்த கரிகாலன், துணை வந்தோர் படை துறந்தோட, பாண்டியன் பருவந்து பின்னிட, சேரன் மார்பில் தைத்த வேல் முதுகு புண் செய்ய, நாணி வாள்வடக்கிருந்து உயிர் துறக்கப், பெருவென்றி யெய்தினான். இது,

‘ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்.’

என வருவது காண்க.இனி, கரிகால் வளவனுடைய ஆட்சி நலத்தை முடத்தாமக் கண்ணியார் மிகச் சுருங்கிய சொற்களாற் காட்டுகின்றார்.

‘மண்மருங்கினான் மறுவின்றி
ஒருகுடையான் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்’

என்பது கரிகாலன் ஆட்சி நலம் காட்டும் குறிப்பாகும்.

கரிகாலன் தன்னைப் பாடிப் பாராட்டும் பரிசில ராகிய பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலியோர்க்கு வேண்டும் பொன்னும், பொருளும், தேரும், களிறும், ஊரும், நாடும், நல்கியூக்கினான். இதனைப் பெருவளம் பெற்றுவரும் பொரு நன்கூற்றில் வைத்து,

‘எரியகைந்த வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே

என்று விரியக் கூறியுள்ளார்.

முடிவில் கரிகாலனுடைய காவிரி நாட்டு விளை நலம் கூறி முடிக்கும் முடத்தாமக் கண்ணியார்.

‘கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடு கோடகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குண்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’

என்று இயம்புகின்றார்.

இவ்வண்ணம் பொருந ராற்றுப்படையால் கரிகால் வளவனைச் சிறப்பிக்கும் முடத்தாமக் கண்ணியார் பெண்பால ரென்று கருது வோரும் உண்டு. வெளிபாடிய காமக்கண்ணியார் போல, வளைந்து கிடக்கும் தாமத்தை முடத்தாமம் என்று பாடிய நலங்கண்டு சான்றோரால் முடத்தாமக் கண்ணியார் என வழங்கினர் போலும் என்றும் கூறுவர். ‘இவர் பெயர் உறுப்பால் வந்த தென்றும், இவர் பெண்பாலா ரென்றும் கூறுவாரும் உளர்’ என்பர், திரு.உ.வே. சாமிநாதையர்.

இனி, ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலனைப் பட்டினப்பாலை யென்னும் பாட்டைப் பாடிச் சிறப்பித்தவர். இதன்கண், கரிகாலனுடைய மறம் வீங்கு பல் புகழும் அவனுடைய காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பும் விரித்துப் பாராட்டிக் கூறப்படுகின்றன. கரிகாலனை ஒருகால் அவன் பகைவர் ஒரு சூழ்ச்சியாற் கைப்பற்றிச் சிறை செய்து திண்ணிய காப்பும், காவலும் அமைத்திருந்தனர். ஆயினும், அவன், அவர் செய்த சூழ்ச்சியினும் மிக நுண்ணிய சூழ்ச்சி செய்து சிறைக் கோட்டத்தினின்றும் தப்பிச் சென்று, தன்னகரையடைந்து அரசுரிமை யெய்தினான் என்பது வரலாறு. இதனை உருத்திரங்கண்ணனார்,

‘… …. …. … கூருகிர்க்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப், பிறர்,
பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் கரங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான்’

என்று குறித்துள்ளார். பின்னர், அவன் தன்னை இவ்வண்ணம் சூழ்ச்சியாற் சிறை செய்தி பகைவர் மேற்சென்று, அவருடைய

‘உகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப்
பேய்க்கண் ணன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கி’

அவருடைய வூர்களைப் பெரும் பாழ் செய்தும் அமையானாய்,

‘மலையகழ்க் குவனே கடல்தூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற்றுவ னெனப்’

பெருமறஞ் செருக்கி மேம்பட்டான். அது கண்ட ஒளியர் பணிந் தொடுங்கினர்; அருவாளர் தொழில் புரிந்தொழுகும் தொழும் பராயினர்; வடவர் வாடினர்; குடவர் கூம்பினர்; தென்னவர் திறலழிந்தனர்.

இந்நிலையில் சோழ நாட்டின் இடையிலும், எல்லையிலும் வாழ்ந்த பொதுவரும் இருங்கோவெளிரும் குறும்பு செய்தொழு கினராக, அவர்களையடக்கி, அவர்கள் இருந்துகொண்டு குறும்பு செய்த காடுகளை அழித்து நாடாக்கி, அந்நாடுகள் வளம் பெறக் குளந்தொட்டு, பகைவர்களால் உறையூர்க் குண்டான கேடுகளைப் போக்கித் திருத்திப், பண்டுபோல் கோயிலும் அரணும் ஏற்படுத்திப், பகைவர்க் கஞ்சிச் சென்ற பழங்குடிப் பெருமக்களைக் குடிநிறுத்திப் போர் நேரில் ‘பொருவே மல்லது, ஒருவேம்’ என்ற சிறப்புரை கிளர்ந்து திகழ்ந்தான், கரிகாலனாகிய செங்கோல் வளவன் என்று இனிது மகிழ்ந்து பாடுவாராய், நம் கண்ணனார்.

‘புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநீறீஇப்
பொருவேமெனப் பெயர் கொடுத்து
ஒருவேமெனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன்னெயில்
மின்னொளி யெறிப்ப’

வீறு பெற்று விளங்கினான் என்று பாடுகின்றார்.

இனி, கரிகாலனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் கூறுகின்ற கண்ணனார், காவிரி கடலொடு கூடும் கூடலாகிய துறைமுகத்தின்கண்.

‘வைகல்தோறு மசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
வான்முகந்த நீர்மலைப் பொழியும்,
மலைப்பொழிந்த நீர்மலைப் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி’

வேந்தனுடைய புலிப்பொறி பொறிக்கப்பட்டு மலைபோலக் குவிந்து கிடக்கும் என்கின்றார். நகர்க்குள் நுழைவோமாயின் அங்கே,

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி’

காணுங் கண்ணுக்கு இனிய காட்சி வழங்குகின்றன என்பர்.

அன்றியும், இந்நகர்க்கண்,

‘வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கல்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள். கலந்தினி துறையும்’

காட்சி மலிந்திருக்கிற தென்பர்.

இங்ஙனம் கரிகாலன் மாண்பும், அவனுடைய காவிர்ப்பூம் பட்டினத்துச் சிறப்பும் கவினுற எடுத்தோதும் கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குக் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் நல்கினான் எனக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது. கல்வெட்டொன்றும் அதனை வற்புறுத்துகிறது. கடியலூ ரென்பது இவரதூர். உருத்திரன் என்பது இவர் தந்தை பெயர். கண்ணன் என்பது இவரது இயற்பெயர்.

இனி, சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டி வேந்தன் ஒருவனும் வேளிர் பதினொருவரோடு கூடிப், பெரும் படையொடு வந்து, வெண்ணியிடத்தே, பொருது கரிகாலனுக்கு ஆற்றாராய்க் கெட்டபோது, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருது, புண்பட்டு, மானம்பொறாது, அவ்வெண்ணியிடத்தே வாள் வடக்கிருந்து உயிர் துறந்தபோது, அந்நிகழ்ச்சியை நேரிற் கண்ட சான்றோர் வெண்ணிக் குயத்தியாராவர். அக்காலத்தே கடலில் அடிக்கும் காற்றைப் பயன்கொண்டு கலஞ் செலுத்தும் விரகினை முதற்கண் கண்டவர் சோழர் என்றும், அச்சோழர் வழிவந்தவன் கரிகாலன் என்றும் புகழுண்டாகியிருந்தது. கரிகாலனொடு பொருது தோற்ற முடிவேந்தர் இருவருள் பாண்டியன், வெற்றியும் தோல்வியும் ஒருவர்க்கே யுரியவல்ல; வென்றி யெய்தினோர் தோற்றலும், தோற்றோர் வெற்றி யெய்துதலும் மாறி வருவது இயல் பென்று தெளிந்து, தன்னாட்டிற்குச் சென்றது போலாது, மார்பிற் புறைத் துருவி முதுகிற் புண்ணுண்டானதற்கு நாணிச் சேரலாதன் தான் தோல்வி பெற்ற போர்க்களத்தின் கண்ணே வாள்வடக்கிருந்து உயிர் துறந்ததும், அது கேட்ட அவனுடைய தானைச் சான்றோர் சிலர் உயிர் துறந்ததும் சிறந்த மற நெறியாகத் தோன்றாமை கண்டார். மறத்தின் நீங்கா மானமாவது தன்னை வென்றோனைக் காலங் கருதியிருந்து, வாய்த்தவுடன் அவனை வென்று விளங்கு தலாகும்; இதனையுணராது வடக்கிருந்த சேரலாதன் கரிகாலனை விடச் சிறந்தவனாதல் இல்லை யென உள்ளந் தெளியுமாறு வற்புறுத்தினார் அதனை,

‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்த நின்னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே’

என்று பாடியிருத்தல் காண்க.

வெண்ணிக் குயத்தியாருடைய இயற்பெயர் தெரிந்திலது. வெண்ணி யென்பது தஞ்சை மாநாட்டில்(ஜில்லாவில்) உள்ள தோர் ஊர்; இவ்வூர்ற்றான் கரிகாலனது வெண்ணிப் போர் நிகழ்ந்தது; இங்கேதான் பெருஞ் சேரலாதன் வாள் வடக்கிருந்தது. பண்டை நாளில் கலஞ் செய்யும் வேட்கோவருட் சிறந்தார்க்குக்குயம் என்னும் சிறப்பினை வேந்தர் நல்கி விளக்கமுறு வித்தனர். அத்தகைய சிறப்புடையவர் இவர் என்பது விளங்கக் குயத்தியார் எனப்படுவாராயினர். இச்சிறப்புப் பெயரால் இவரது இயற் பெயர் மறைந்து போயிற்று.

இனி, கழாத்தலையார் என்னும் சான்றோர் சேரமான் பெருஞ்சேரலாதன் வாள்வடக்கிருந்து உயிர் துறந்த தறிந்து பெருவருத் தத்தால் கையற்றத் தன்னை யொத்த வேந்தன் தன்மார்பு குறித்து எறிந்த வேல் புறத்தே ஊடுருவிப் புண் செய்ததற்கு நாணி மறத்தகை மன்னனான பெருஞ்சேரலாதன் வாள்வடக்கிருந்து உயிர் துறந்தான். இனி, எங்கட்கு நாட்கள் அவன் இருந்த நாளிற்போல இனிது கழியா’ என்று புலம்பியுள்ளார். அதனை,

‘மண்முழா மறப்பப் பண்யாழ்’ மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநா ளமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன் ஈங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே’

என அவர் பாடியிருப்பது காண்க.

கழாத்தலையார் சேர மன்னர்களில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும், பெருஞ்சேரலாதனையும் பாடியிருத்தலி னாலும், ஏனை வேந்தர்களைப் பாடினா ரெனற்கு வேண்டும் இவர் பாட்டுக்கள் தொகை நூல்களுட் காணப்படாமையாலும், இவர் சேர நாட்டினரெனக் கருதற்கு இடமுண்டாகிறது. கையெழுத்துப் பிரதியொன்றில் இவர் பெயர் கழார்த்தலையெனக் காணப்
படுகிறது. அதுவே உண்மைப் பாடமாயின், இவர் கழார் என்னும் ஊரினராக எண்ணலாம். அக்கழாரும் சேரநாட்டு ஊராதலும் கூடும்.

நக்கீரனார், பரணர், மாமூலனார் ஆகிய மூவரும் சோழன் கரிகாலனை நேர்முகமாக வைத்துப் பாடினாரில்லை. ஆயினும், அவர்கள் தாந்தாம் அவ்வப்போது பாடிய பாட்டுக்களில் ஒவ்வோரிடத்தில் கரிகாலனைக் குறித்துப் பாடியிருக்கின்றனர். தலைவன் தனக்குரிய வினை குறித்துப் பிரிந்து சென்றானாக, தலைவி அவன் பிரிவாற்றாது உடல் மெலிந்து வருந்துவளோ என அவள் தோழி நினைந்து கவலையுற்றாள்; அதுகண்ட தலைவி, ‘தோழி! செல்வம் கொணரச் சென்றுள்ள நம் காதலர் வினை குறித்துப் பிரிவதற்கு யான் வருந்தவில்லை; கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிச் செய்யும் விழாவுக்கு வந்துவிடுவா’ ராயின் நன்று. என்று கூறுகின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் நக்கீரர் கரிகாலனைச் சிறப்பித்து, ‘செல்குடி நிறுத்த பெரும்பெயர்க்கரிகால், வெல்போர்ச் சோழன் இடையாற்றன்ன, நல்லிசை வெறுக்கை தருமார்’ (அகம் 141) என்று பாடியுள்ளார்.

தலைவன் பரத்தையொடு கூடிப் புனலாடி வந்தானாக, அவனுக்குத் தோழி வாயில்மறுப்பவள், ‘நீ பரத்தையொடு புனலாடினாயென்று சொல்லுகின்றனர்; அதனை நீ மறைத்தாலும் ஊரில் உண்டாகிய, அலர் பெரிது.’ என்கின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் பரணர், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டியர் இருவரும் வேளிர் பதினொருவரும் தொலைந்து கெட வென்றதனால், அவனுடைய அழுந்தூரார் வெற்றி விழாக் கொண்டாடி யெடுத்த ஆரவரத்தினும் பெரிது அந்த அலர் (அகம் 246) என்று பாடியுள்ளார் மேலும், பரணர் கரிகாலனுடைய வெண்ணிப் போர் வென்றியோடு, வாகைப் பறந்தலையென்னு மிடத்தேயும் கரிகாலன் ஒன்பது வேந்தரை வென்று மேம்பட்டான் என்பாராய்,

‘விரியுனைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாதைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நண்ன்பக’ லொழித்த
பீடில் மன்னர் (அகம் 125)

என்று குறித்துள்ளார். ஆகவே, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் வாகைப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் செய்து வெற்றிபெற்றுள்ளான் என்பது பெறப்படும். இதன் கண், ‘வெருவரு தானையொடு வேண்டுபுலத்திறுத்த, பெருவளக் கரிகால்’ என்றதனால், இந்த வாகைப் பறந்தலை சோழ நாட்டதன்று என்பது விளங்கும். இது பாண்டி வேந்தனுடன் செய்த போராதல் வேண்டியிருத்தலின், வாகைப் பறந்தலை பாண்டி நாட்டின் கண்ணதாம்.

பாண்டி நாட்டில் வாகைக் குளம் என்றோர் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உளது. வாகைக் குளமே வாகைப் பறந்தலையாயின், கரிகாலன் தென்பாண்டி நாட்டின் கிழக்கிலுள்ள வாகைப் பறந் தலையில் பாண்டியனையும் அவற்குத் துணைவந்த குறுநிலமன்னர் எண்மரையும் நண்பகற்போதில் தம் குடை யொழித் தோடுமாறு செய்தான் என்பது துணிபாம். பின்பு அங்கிருந்து மேற்கு நோக்கித் தாமிரபரணிக் கரை வழியே கரிகாலன் சென்றிருத்தல் வேண்டும். மாமூலனார் கரிகாலன் வெண்ணிப் போரில் எறிந்த வேல் சேரலாதன் மார்பிற்பட்டு உருவி முதுகிற் புண்செய்ததற்கு நாணி வடக்கிருந் துயிர் துறந்த போது, சான்றோர் பலர் மேலுலகிற்கு அவனொடு செல்ல விரும்பித்தாமும் உயிர் விட்டனர் என்கின்றார். இதனை,

“…. …. …. ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண்ணாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செவீஇயந்
பெரும்பிறி தாகி யாங்கு’ (அகம் 55)

என்பது காண்க, இதனால் சேரலாதன் வெண்ணியிலேயே வடக்கிருந்தா னென்பது ‘அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென’ என்பது கொண்டு தெளியப் படுகிறது. படவே, வெண்ணிக் குயத்தியார் சேரலாதன் வடக்கிருப்பது கண்டு பாடியது நன்கு வலியுறுகிறது.

இனி, இறுதியாகக் காணப்படுவர் கருங்குழலாதனார் என்ப வராவர். இவர் கரிகாலன் பாண்டியனையும், சேரலாதனையும் குறுநிலத்தலைவரான வேளிர் பலரையும் வென்று சிறந்து விளங்கு வதைப் பாராட்டிப் பாடியுள்ளார். ஆதனார், ஆதன் என்பன தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவாகப் பயில விளங்கும் பெயராயினும், சேரவேந்தர் பலர் சிறப்பாக அவற்றை மேற் கொண்டிருத்தலால், இவர் சேரர் குடியில் தொடர்பு உடையரெனக் கருதுதற்கும் இடமுண்டு.

கரிகாலன் வாகைப் பறந்தலையில் பாண்டியனையும், வேளிரையும் வென்று தென்பாண்டி நாட்டுள் மேற்றிசை நோக்கிச் செல்லுற்றானாக, அங்கே அவனை எதிர்த்த பகைவர் ஊர்க ளெல்லாம் தீக்கிரையாயின. சென்ற விடமெல்லாம் ‘அழுவிளிக் கம்பலை’ (அழுகுரல்) மிகுவ தாயிற்று. நாட்டில் நற்பொருள் விளைதற்கும், இருத்தற்கும் இடமில்லையாமாறு அழிவு வினை நடைபெற்றது. இவற்றைக்கண்ட ஆதனார் கரிகாலனை யடைந்து அழிவு நிகழாவிடத்து இருக்கும் நாட்டு நிலையையும், நிகழ்வ தனால் உண்டாகிய கேட்டையும் அவற்கு உரைத்து அவன் உள்ளத்தில் அருள் நிலவச் செய்யவேண்டுமெனக் கருதினார். சோழன் கரிகாலன் புலவர்களை வரவேற்று, அவர் புலமை நலத்தை யோர்ந்து வேண்டும் பரிசினல்கும் பான்மை யுடையவன். அதனால் அவர் அவனை எளிதிற் காணமுடிந்தது. சோழனை கண்டு ‘வளவ, களிறு ஊர்ந்து அவற்றைச் செலுத்துதற்கு ஏற்பஇயன்ற முழந்தாளும், கழலணிந்து உரிஞப்பட்ட அழகிய திருவடியும், அம்பு தொடுக்கும் திறனும், இரவலர்க்கு அள்ளி வழங்கும் வளவிய கையும், கண்ணாற் காண்பார்க்கு விளங்கத் தோன்றும் வில்லும், திருமகள் தனக்கே யுரிமை பூண்டு விளங்கும் மார்பும், பெருங் களிற்றையும் பொருது பெயர்க்கும் பெருவன்மையும் கொண்டு விளங்குகின்றாய். நின் உள்ளத்தே சினத்தை யெழுப்பிப் போரில் ஈடுபடச் செய்யும் பகை வேந்தருடைய நாடு நல்ல நீர் வளம் பொருந்தியது. தண்புனல் பரந்து வந்து வயலிடத்து மடையை உடைக்குமாயின், அந்த உடைப்பை மண்பெய்து அடைத்தால் அடைபடாமை காணும் உழவர் நீரில் மேயும் மீன்களைப் பிடித்து, உடைப்பிலிட்டு மண்ணிட்டு அடைப்பர். இத்துணைப் பெரும் பயன் விளைக்கும் நாடு இரவென்றும் பகலென்றும் எண்ணாமல் ஊர்களைத் தீக்கிரையாக்கி ஊரவர் வாய்விட்டரற்றி யெழுப்பும் அழுவிளிக்கம்பலை மிக்கெழச் சூறையாடுதலை விரும்புகின்றாய்” என்ற கருத்தமைய்,

‘களிறுகடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ணொளிர் வரூஉங் கவின் சரபத்து
மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல்மண் மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பிற் பிறர்அகன் றலைநாடே’

என்ற பாட்டைப் பாடினார். கரிகாலன் அவர்க்கு முற்றூப் படாகச் சில ஊர்களும், பொருளும் நல்கினான் என உணர வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில், கரிகாலன் தன்னைப் பாடி வரும் புலவர், பாணர் பொருநர், முதலியோர்க்கு நல்ல பல வூர்களையும் அவ்வூர்களையுடைய நாடுகளையும் தருபவன் என்பதை முடத்தாமக்கண்ணியார் கூறியிருப்பது காண்க.

பின்னர், சோழன் கரிகாலன் பாண்டி நாட்டினின்றும் நீங்கித், தன் சோழ நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் கழிந்த பின் விண்ணுலகம் சென்றான். இதற்கிடையே ஆதனார்க்கும் கரிகால் வளவனுக்கும் நட்பு மிகுந்தது. அவன் இறந்த செய்தி கேட்ட ஆதனார் சோழநாடு சென்றார். கரிகாலன் இல்லை. அவன் மகளிரும் தம் இழை முற்றும் களைந்து கூந்தல் களைந்த தலையராய் இருந்தனர். அக்காட்சி ஆதனார்க்கு மிக்க வருத்தத்தைச் செய்தது. அக்காலை அவர் பகைவேந்தர் மதில்களைப் பொருளா எண்ணாது எளிதிற் கடந்து வெல்வதும், பாணர் முதலிய இரவலர்க்கு வேண்டுவ நல்கி ஆதரவு செய்வதும், தன் மகளிரொடு கூடி வேள்வி யந்தணர் களைக் கொண்டு வேள்வி பல செய்வதும், ஆகிய இவற்றால் விளையும் பயனை நன்கறிந்த அறிவுடையோன் சோழன் கரிகாலன்.

‘அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்
இறந்தோன் தானேஅளித்திவ் வுலகம்,
அருவி மாறியஞ் சுவரக் கடுகி
பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த வாயத்துப் பயனிரை தருமார்
பூவாட் கோவலர் பூவுட னுதிரக்
கொய்து கட்டழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந்தனரே’ (புறம்.224)

என்று பாடி வருந்தினார்

இவ்வண்ணம் சோழன் கரிகாலன் இறந்த பின்பு அவன் பிரிவாற்றாது கையற்று வருந்திய சான்றோர் வேறு யாவரும் காணப்பட வில்லை. ஆதனார் ஒருவரே காணப்படுகின்றார். இந்த ஆதனார் சங்கத் தொகை நூலிற் காணப்படும் சான்றோருள் ஒருவரான கருங்குழலாதனார் என முன்பே கண்டோம். இவர் இயற் பெயர்க்குமுன் கருங்குழல் என்றொரு தொடர்மொழி நின்று சிறப்பிக்கின்றது. அதற்கும் ஆதனார்க்கும் உள்ள இயைபு ஒன்றும் விளங்கவில்லை.

இருபத்திரண்டு யாண்டுகட்குமுன் பள்ளியூரில் இளம் பூரணர் உரையுடன் புறநானூற்றுக் கையெழுத்துப்படி யொன்றும் என் நண்பர் ஒருவர்பால் இருகக்கண்டு அதனையும் புறநானூற்று அச்சுப் பிரதியையும் ஒப்புநோக்கி வேறுபட்ட பாடங்களை யான் குறித்துக் கொண்டது நண்பர் பலரும் அறிந்தது. அக்குறிப்புகளுள் கரங்குழல தனார் என்பது கருங்குழவாதனார் என்று இருக்கிறது. எங்கேயோ மூலையில் கிடந்த இக்குறிப்பு ஒரு சில நாட்களுக்கு முன்பே கிடைத்தது. கருங்குழவாதனா ரென்பது கருங்குழலாதனார் என்ன எழுதப்படுதற்கியைபுண்டு; இதனை யாராய்தல் வேண்டு மென எண்ணி மேலும் முயலுமிடத்து, கருங்குளம் என்பதோர் ஊரென்பது தெரிந்தது. தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்றோர் ஊர் இருக்கிறது. அதனை அவ்வூர்க்கல்வெட்டுக்கள் ‘கருங்குள வளநாட்டுக் கருங் குளம்’ என்று கூறுகின்றன. ஆகவே கருங்குளம் என்ற ஊருண்மை தெள்ளிதாயிற்று.

இனிக், கருங்குளத்துக்கும், ஆதனாருக்கும் தொடர் பென்னை யென்று காண்டல் வேண்டிய தாயிற்று. அவ்வூர்க் கல்வெட்டொன்று அதனைக் ‘கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம்’ (A.R.No. 269 of 1927 -28) என்று குறிக்கிறது. கரிகால் சோழனுக்கும், ஆதனார்க்கும் தொடர்புண்டென்பது அவர் அவனைப் பாடிய பாட்டுக்களால் தெளிவாகிறது. ஆகவே, கருங்குளத்துக்கும் கரிகாற் சோழனைப் பாடிய ஆதனாருக்கும் தொடர்பு உளதாதல் எளிதாம். ஆகவே கருங்குளவாதனார் காலத்தே அக்கருங்குளம் அவன் பெயரால் கரிகாற் சோழ நல்லூராகப் பெயரிடப்பெற்று ஆதனார்க்கு அவனால் முற்றூட்டாக வழங்கப்பட்டிருக்கு மென்பது பொருந்தா தொழியாது. கருங்குளத்துக்கு உரியவராகிய ஆதனார் தென்பாண்டி நாட்டுக் கருங்குளவாதனார் எனப் படுவது இயல்பாம்.

இதனை இறுதியிற் குறிப்பது குறித்தே கரிகாலனது தென் பாண்டி நாட்டு வரவும், ஆங்கு அவனைச் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு ஊர் வழங்கியதும் இக்கட்டுரையிடையே வற்புறுத் தப்பட்டன. பாண்டி நாட்டில் கரிகாலனை பாடியவர் கருங் குளவாதனார்; அவர்க்கு அவன் அளித்தவூர் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம். இக்கருங்குளத்திலுள்ள இராச சிம்மேகச் சுரத்திற்குத் திருவாங்கூர் மன்னரும் திருப்பணிச் செய்துள்ளன ரென அவ்வூர்க் கல்வெட்டு (A. R. 287 of 1927-28) கூறுவது பற்றி அவ்வூர்க்குச் சேரர் தொடர்பும் உண்டென உணரலாம் என்பது முடிபாம்.

செல்வக் கடுங்கோ


ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் இறந்தபின் உதியஞ்சேரல் வழி காலற்றது. அதனால் பொறையர் குடியில் சிறந்து விளங்கிய அந்துவஞ்சேரல் இரும்பொறையென்பான் சேரவரசுக்குரியனானான். அக்காலத்தே ஒரு தந்தை எனும் வேளிர் தலைவன் சிறப்புற்று விளங்கினான். அவன் மகள் பொறையன் தேவி என்பாளை அந்துவன் மணந்து கொண்டு இனிதிருந்தான்.

அந்துவன் நுண்ணிய நூல் பல கேட்டுச் சான்றோர் பரவும் நல்லிசைப்புலமை சிறந்தவன். திருப்பரங்குன்றத்து முருகன் பால் தனித்த பேரன்பு அந்துவற்கு உண்டு. அவன் ஒருகால் திருப்பரங் குன்றம் போந்து முருகனைப்பரவி அவனுடைய பரங்குன்றத்தைத் தமிழ் நலம் கனியப் பாடினார். அதனால் பரங்குன்றம் சான்றோர் பாடிப்புகழும் பண்பு மேம்பட்டது. மருதன் இளநாகன் என்ற நல்லிசைச் சான்றோர் “முருகன் சூர்முதல் தடிந்த நெடுவேலேந்துவன்; பரங்குன்றம் அவனுக்குரியது; மேலும் அது சந்தன மரங்கள் செறிந்து தண்ணிதாய் விளங்குவது; அதன் கண்ணுள்ள இனிய சுனைகளில் செங்கழுநீர் பூத்துச் சிறக்கின்றன. அதனை மகளிர் கொண்டையில் வைத்து அணிசெய்து கொள்வர். சந்தன மரங்களாலும், சுனையிற்பூத்த செங்கழு நீராலும் தண்ணிதாய் விளங்கும் தண்பரங் குன்றம் அந்துவன்பாடிய அருமையுடையது”. (அகம் 59) என்று பாராட்டியுள்ளார். இவனது நல்லிசைப் புலமையை வியந்தே பதிற்றுப்பத்து ஏழாம் பதிகம் “நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சிறப்பித்துக் கூறுகின்றது.

இவ்வண்ணம் செந்தமிழ்ப் புலமையும் நல்லிசையும் பெற்றுச் சேரவரசனாகத் திகழ்ந்த அந்துவஞ்சேரல் புலவர் கூட்டத்தைப் பெரிதும் விரும்பினான். அந்நாளில் தமிழகத்தில் வாழ்ந்த சான் றோர் பலரும் அவன்பால் சென்று அவனுடைய புலமை நலத்தை நுகர்ந்தனர். அந்நாளில் சேர நாட்டின் தென் பகுதியில் பொதிய மலையடியில் ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு வேள் ஆய் என்ற வேளிர் தலைவன் ஆட்சிசெய்து வந்தான். அவன் இரவலர்க்கு வேண்டுவன ஈத்து இறவாப் புகழ்படைத்திருந்தான். அவனிடம் பெருநட்புற்று ஒழுகிய தமிழ்ச் சான்றோருள் ஏணிச் சேரி முடமோசி யார் என்பவர் சிறந்து விளங்கினார். அவர் அடிக்கடி ஆய் அண்டிரலைப் பாடிப் புலமைப்பயன்பபெற்று மகிழ்ந்தார். முடமோசி யார் ஆய்குடியில் இருந்து வருகையில் அந்துவஞ்சேரலைக் காண விரும்பி அவனுடைய சேரநாட்டு வஞ்சி நகர்க்குச் சென்றார். மோசியார் வரக்கண்ட அந்துவனும் அவரை அன்போடு வரவேற்றுச் சிறப்பித்தான். அவனது வஞ்சி நகர்க்கண் வேண்மாடம் என்பது ஒரு சிறந்த மாளிகை. வேளிர்வேந்தர்கட்கும் சேரர்கட்கும் பெண் கொடுத்துப் பெண் வாங்கும் பெருந்தொடர்பு உண்டென்பதை முன்பே கண்டிருக்கின்றோம். அவ்வேளிர்கள் வஞ்சி நகர்க்குவரின் அவர்கள் தங்குதற்கென ஒரு பெருமாளிகை இருந்தது. அதற்கு வேண் மாடம் என்று பெயர்; அதனை வேளிர்கள் கட்டிவைத்த தினாலோ வேளிர் பொருட்டுக் கட்டிவைத்ததினாலோ அதற்கு அப்பெயர் வந்திருக்கிறது. கண்ணகிக்குக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலம் செய்த போது செங்குட்டுவன் கனக விசயர் என்ற வடநாட்டு வேந்தர்களைச் சிறைமீட்டு அரசர்க்குரிய சிறப்புடன் இருக்கச் செய்தது இந்த வேண்மாடத்தேதான். இது வஞ்சி நகர்க்கு வடமேற்கில் கடற்கரையைச்சார இருந்தது. இந்த மாளிகையில் வேணாட்டிலிருந்து வந்த முடமோசியாரை அந்துவன் இருத்தி அவர்க்கு வேண்டும் சிறப்புகளைச் செய்தான்.

அக்காலத்தே சேரமானுக்கும் உறையூரிலிருந்து ஆட்சி செய்த சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் எக்காரணத் தாலோ பகைமையுண்டாயிற்று. அதனால் சோழ வேந்தன் பெரும் படைசூழ்வரக் கொங்குநாடு கடந்து சேர நாட்டு வஞ்சி நகரடைந்து முற்றுகை செய்திருந்தான். சேரர் படையும் சோழர் படையும் கைகலந்து போர்செய்து கொண்டிருந்தன. அந்துவஞ்சேரல் மோசியாருடன் வேண்மாடத்து மேலிருந்து போர் நிகழ்ச்சியை நோக்கிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் சோழன்களிறொன்றின்மேல் இவர்ந்து கருவூர் நோக்கிச் சென்றான். வேலேந்திய வீரர் பலர் அவனைச் சூழ்ந்து சென்றனர். இக்கருவூர் இப்போது கருவூர்ப்பட்டினமென்ற பெயரால் வஞ்சியாகிய கொடுங்கோளுர்க்கு வடக்கில் கண்காணும் எல்லையில் உள்ளது. இதனை யவன ஆசிரியர்கள் கரவுரா (Karoura) என்று குறிக்கின்றனர்.

சோழன் ஏறிச் சென்ற களிறு திடீரென மதம்பட்டுப் பக்கத்தே வரும் பரிக்கோற்காரர்க்கு அஞ்சாது மருண்டு செல்லத் தொடங்கிற்று. மேலிருக்கும் வேந்தன் அதனை அடக்க முயன்றும், அஃது அடங்க வில்லை. வேல்வீரர் பலர் தன்னைச் சூழ இருப்பதையும் எண்ணாது அக்களிறுமதம் செருக்கி மறலிச் சென்றது. களிற்றின் உயர்வும் வேந்தன் விருப்பும் வேல்வீரர்களை அதற்குத் தீங்கு செய்ய வொட்டாது தடுத்தன. அதனால் அக்களிறு சேரர்படை நின்று காக்கும் கருவூர் எல்லையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அதனை அந்துவந்சேரல் கண்டான். யானைமேற் செல்பவன் சோழர்தானை மறவன் என்று கண்டானேயன்றி, அவன் சோழ வேந்தன் என்பதைச் சேரமான் அறிந்திலன். அவனது போர்க் கோலத்தை நோக்கினான். அவன் உள்ளத்தே ஓர் ஐயம் பிறந்தது. மோசியாரைப்பார்த்து, “இதோ களிற்றின்மேல் கருவூரிடம் செல்லுவோன் யாவனாகும்?” என்று வினவினான். மோசியார் உறையூரினராதலால், அவர் கண்டவுடனே செல்பவன் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி; அக்களிறு “இந்நீர் வழங்கும் நாவாய் போலவும், பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்” படைக்கடல் நடுவேயுள்ளது; சுறாமீன் கூட்டம் போல வாள்வீரர் மொய்த்திருப் பதையறியாது மைந்துபட்டது; அவன் “நோயிலனாகிப் பெயர் கதில் அம்ம” (புறம் 13) என்றனர்.

மோசியார் அரசன்பாலுள்ள அன்பால் அஞ்சி அவலித் துரைத்த சொல் சேரமான் அந்துவன் செவியில் வீழ்ந்தது; உடனே அவன் யானைமேலிருப்போன் தனக்குப் பகைவன் என்பதை நினைத்திலன்; தன் நகர்க்கண் வந்து முற்றுகையிட்டிருப்பதையும் மறந்தான். காற்றினும் கடுகிச்சென்று களிற்றின்மேல் பாய்ந்து அதன் செருக்கடக்கிச் சோழனை உய்வித்து மீண்டான்.

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, சேரமானது அறந்திறம்பா மறப்பண்பை வியந்து பகைமை நீங்கி நட்பால் பிணிப்புண்டான். இச்செயலால் “மடியாவுள்ளமொடு மாற் றோர்ப்பிணி நெடுநுண்கேள்வி அந்துவன்” என்று சான்றோர் பாராட்டியுள்ளனர்.

அந்நாளில் பாண்டி நாட்டின் வட பகுதியில் பறம்பு மலையைச் சூழவுள்ள பறம்பு நாட்டில் வேளிர்குல வேந்தனான வேள்பாரி யென்பவன் ஆட்சிபுரிந்தான். அவன்பால் நெருங்கிய நட்புக் கொண்டு ஒழுகிய சான்றோர்களில் கபிலர் என்பவர் சிறந்தவராவர். அவரது நல்லிசைப் புலமையில் வேள்பாரிக்கு மிக்க அன்புண்டா யிற்று. அதனால் கபிலரும் அவனைப் பிரிய மனமின்றி அவ னோடே உயிர்த்தோழராகவும் அரசியற் சுற்றத்தாராகவும் இருந்து வந்தார். அவன் முல்லைக்குத் தேரீந்து இறவாப்புகழ்பெற்ற செய்தியைப் பாட்டிடை வைத்து நிலைபெறச் செய்தார். வேள்பாரி இறந்த பின் அவர் கையற்றுப்பாடிய பாட்டுக்கள் இன்றும் புற நானூற்றில் இருந்து படிப்போர் நெஞ்சை உருக்கி நிற்கின்றன. வேள்பாரி இறக்குங்கால் அவனுக்கு மகளிர் இருவர் இருந்தனர். அவர்களை மணஞ்செய்து தரவேண்டிய பொறுப்பைக் கபிலரே மேற் கொண்டு சில வேந்தர்களை வேண்டினார். அவர்கள் மறுக்கவே, அம்மகளிரைத் திருக்கோவலூர்க்குக் கொண்டுசென்று பார்ப்பாரிடை அடைக்கலப் படுத்திவிட்டுத் தமிழ் வேந்தர்களைக் காணச்சென்றார்.

அப்போது அவர்க்குச் சேரநாட்டு வேந்தனான செல்வக் கடுங்கோ வாழியாதன்புகழ் தெரியவந்தது. அவ்வேந்தனைக் காணவிரும்பிக் காடுமலைகளைக் கடந்து சேரநாடு வந்துசேர்ந்தார். அந்நாளில் வாழ்ந்த நல்லிசைச் சான்றோருள் கபிலர் மிக்க சிறப்புற்று விளங்கினார் “செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”, “இன்றுளனாயின் நன்றுமன்” (புறம் 53) என்று மாந்தரஞ் சேரலிரும்பொறை யென்னும் வேந்தனும், “உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய் மொழிக் கபிலன்” (அகம் 78) என்று நக்கீரரென்னும் சான்றோரும், “பொய்யா நாவிற்கபிலன்” (புறம் 174) என மாறோக்கத்து நப்பசலையா ரென்னும் புலவர் பெருமாட்டியாரும் புகழ்ந்தோதிய பெறலரும் சிறப்புடையவர்.

கபிலர் சேரநாடு வந்தபோது செல்வக்கடுங்கோ வஞ்சி நகரில் இல்லை. நாட்டில் நடந்த போர் ஒன்று குறித்துச் சென்று பாசறை இட்டிருந்தான். போர்வினை முடிந்தது. பாசறைக் கண், தோற்ற வேந்தர் பணிந்து திறைநல்கினர். போர்வினையிற் புகழ் சிறந்த தானை மறவரும் போர்க்களம் பாடும் பொருநரும் பாணரும் கூத்தரும், வேந்தன் நல்கிய சிறப்பையும் பரிசிலையும் பெற்று இனிதிருந்தனர். அத்திருவோலக்கம் நோக்கிக் கபிலர் வந்துசேர்ந்தார். அவரது வருகைகேட்ட சேரமான் வியப்பும் மகிழ்ச்சியும் மீதூர்ந்து அவரை அன்புடன் வரவேற்று இனிய சொல்லாடி இன்புற்றான்.

பின்பு, சேரமான் வேள்பாரியின் புகழையும், மறையையும் கபிலர்க் குண்டாகிய பிரிவுத் துன்பத்தையும் பிறவற்றையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, “சான்றீர், வேள்பாரி இருந்திருப் பானாயின், எங்கள் நாட்டுக்கு நும் வரவு உண்டாகா தன்றோ? என்றோரு சொல்லைத் தன் உண்மையன்பு விளங்க எடுத்துரைத் தான். வேந்தராயினும், வினையாளராயினும் யாவராயினும் சான்றோர் பரவும் சான்றாண்மையுடையராயின் அவரைச் சென்று கண்டு பாடிப் புகழ்வது நல்லிசைச் சான்றோர் நாளும் செய்யும் செயல் என்பதை நினையாது சேரமான் கூறியது கபிலர்க்கு வியப்பைத் தந்தது. ஆயினும் அதனை அவ்வாறே கூறாது, இளையனான வேந்தன் உளம் மகிழவும், தமது கருத்து விளங்கவும் உரைக்கத் தொடங்கி, “வேந்தே, எங்கள் வேந்தனான வேள்பாரி விண்ணுல கடைந்தான். என்னைக் காத்தளிக்க வேண்டுமென இரந்து குறை நிற்கயான் வந்தேனில்லை. என்னைக்கண்ட இந் நாட்டுச் சான்றோர், “ஈந்ததற்கு இரங்காமல் ஈயுந்தோறும் இன்ப மெய்துபவன், ஈகையிலும் பெருவள்ளன் மையுடையவன் எங்கள் சேரர் பெருமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்” என்று கூறுவர். அந்த நல்லிசையே என்னையீர்த்துக் கொண்டு வந்து நின்னால் வீழ்த்தப்பட்ட களிறுகளின் புலால் நாறும் இப்பாசறைத் திருவோலக்கத்திற் சேர்த்துளது. அதனால் வந்துளேன்”. (பதிற்61) என்று ஓர் இனிய பாட்டால் இசைத்தனர். அப்பாட்டின் சொன்னலமும், பொருணலமும் கடுங்கோவின் உள்ளத்தை அவர்பால் பிணித்து விட்டன. அவரைத் தன்னோடே இருக்குமாறு வேண்டி வஞ்சி நகர்க்கு அழைத்துச் சென்றான்.

கபிலர் வஞ்சிநகர்க்கண் இருந்துவரும் நாளில், செல்வக் கடுங்கோ வடவேந்தர் இருவரை ஒரு முற்றுகையில் தமிழ்ப் படை செறித்து வென்றதும், அவர்களாற் கைவிடப் பெற்றதானை மறவரை ஆட்கொண்டதும் சான்றோர் சொல்லக் கேட்டுக் கடுங்கோவின் பெருந்தன்மையை வியந்து, “வேந்தே, நீ கண்டனை யேம் என்று புகலடைந்த மறவரை, உங்கள் குடிக்குரிய முறைமை யுடன் ஆண்டாய்; அதனால், உலகத்துச் செய்த நல்லறம் நிலைபெறு மென்பது மெய்யாயின் நீ வெள்ளமாகிய வூழிகள் வாழ்வாயாக” (63) என்று வாழ்த்தினர்.

இவ்வாறு வேந்தனை வாழ்த்தி இன்புற்றிருக்கையில் ஒரு நாள் கடுங்கோ உண்பன வுண்டு கபிலரோடு சொல்லாடியிருக் கையில் அவருடைய கையை அன்போடு பற்றினான். அது பூப்போல மென்மையுற்றிருப்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது. அதனால் அவன் கபிலரை நோக்கி, “நும்முடைய கைமென்மையாக இருக்கிறதே, என் கை அவ்வாறன்றி வன்மையாக இருக்கின்றதே, என்று சொன்னான். அவன் நின்னுடைய என்னாது, “நும்முடைய கை”யெனப் பன்மையிற் கூறியதனால், தன்னையும் தன்னையொத்த பாவலரையும் குறித்ததாகக் கொண்டு. வேந்தே, நின்னைப் பாடு வோர் கைகள் நாளும் ஊன்துவையும் கறிச் சோறும் உண்டு வருந்து தொழிலல்லது, பிறிது தொழிலொன்றையும் அறியாவாகலின் “நன்றும் மெல்லிய பெரும” (புறம் 14) என்றும், களிறுகளைத் தோட்டியால் சமம் தாங்கவும், குதிரைகளைத் தாங்கவும், வில்லிடைத் தொடுத்து அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அரும்பொருள் வழங்கவும் வேண்டியிருத்தலின், “வலியவாகும் நின்தாள் தோய் தடக்கை” (புறம் 14) என்றும் அழகு திகழப்பாடினர். உவகை மிகுதியால் கடுங்கோ உள்ளம் நாணி முறுவலித்தான்.

சேரமான் அரச காரியத்தில் ஈடுபட்டிருக்குங்கால் கபிலர் சேரநாட்டைச் சுற்றிப்பார்த்து வந்தார். அந்நாட்டின் மலை வளமும், காட்டு வளமும், நிலவளமும், கடல் வளமும், அவர்க்கு மிக்க இன்பத்தைச் செய்தன. கடலிலிருந்து கொணரப்பட்ட முத்துக்களைப் பந்தர் என்னும் ஊரவர் தூய்மைசெய்து மேன்மையுறு வித்தனர். கொடுமணமென்னும் ஊரினர் அவற்றைக் கொண்டு அருங்கலங்கள் செய்யக்கண்டார். (67)

முரம்பு நிலப்பகுதியில் பிடவமும், முல்லையும் பூத்து அழகிய காட்சியளித்தன. முல்லை மலரில் தங்கித் தேனுண்டு பிடவத்தைச் சூழும் வண்டினம் சேரநாட்டு வீரர் அணியும் பனந்தோட்டுக் கன்னியில் விரவிய வாகைப் பூவின் பூய்போலத் தோன்றின. அங்கு வாழ்பவர் அந்நிலத்தையுழுங்கால் உழுத சரவின் கண்மணிகள் பல கிடைக்கப் பெற்றனர். (66) நெல் விளையும் வயற் பகுதியில் வாழ்ந்தோர் வயலில் நெல் விளைந்த போது நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நென்மணிகளைத் தொகுத்துக் காஞ்சி மரங்களின் நிழலில் குவித்துக் கள் விற்பார்க்குக் கொடுத்து அவர்பால் அதற்கு மாறாகக் கள் பெற்று உண்டனர். களிமயக் குற்ற சிலர் தாம் தலையிற் சூடிய ஆம்பற்கண்ணியில் மொய்க்கும் வண்டினையோப்பினர். (62) இந்த வளங்களைக் காணுங்கால், இப்பகுதிகளை ஆராய வேந்தர்கள் சில காலங்களில் தம் வலியும் செல்வக்கடுங்கோவின் பெருவலியும் ஆயாது போருடற்றுவதும், அவர் செயலால் நாடழிவதும் அவர் நினைவிற்கு வந்தன. அப்போது அவர் சேரமானை இரந்து நின்று. “வேந்தே, நின்பகைவர் பணிந்து திறைதருபவராயின் அதனையேற்றுப் போரை நிறுத்து வாயாக; அவர் நாடு புலவர்பாடும் புகழ்பெற்று விளங்கும் (62) என்று கூறினர்.

ஒரு கால் பொறை நாட்டினர் தாம் உறைதற்கு வேண்டும் உணவுப் பொருள்களை ஆக்கிக் கோடற்குப் போதிய இடம் இல்லை; கிழக்கிலுள்ள நாடுகளில் இடம் பெறுவது நலம் எனத்தம் கருத்தை வேந்தற்குணர்த்தினர். இடம் சிறிது என்னும் அவ்வுரை கேட்டெழுந்த வூக்கத்தால் வஞ்சிசூடி கொங்குநாட்டிற்குட் சென்றான். அங்கு வாழ்ந்த வேந்தர் நாட்டில் நல்லரசு புரியாது மக்களை அல்லற் படுத்தினர். அவரோடு அறம் திறம்பாவகையிற் போர்செய்து வெற்றி கொண்டான். அப்போது அவன் பாசறைக் கண் தங்கியிருந்தபோது கபிலர் சில சான்றோர் உடன் வரச் சென்று கடுங்கோவைக் கண்டார். அவன் அவரை இனிது வரவேற்று இன்புற்றான். அவரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு “பகைவரால் கெட்ட குடிமக்களை நல்வாழ்வு பெறுவித்த வேந்தே. தான் வாழ ஏனோர் தன்போல இனிது வாழ்க என்ற அசையாக் கொள்கையால் நின் முன்னோர் இனிய ஆட்சி செய்தனர்; அதனால் நிலம் நற்பயன் பொழிந்தது; வெயிலில் வெம்மை தணியுமாறு மழை தப்பாது பெய்தது; அதற்கேற்ப வெள்ளி மீன் உரிய கோளிலே நின்றது, நாட்டில் நாற்றிசையும் நந்தாச் செல்வம் தந்தன (69) என்று பாராட்டினர்.

அப்பாசறைக் கண் தோற்ற வேந்தர் பலர் சூழ்ந்திருந்தனர். பாணரும் கூத்தரும் போந்து குதிரை பூட்டிய தேர்கள் பல பரிசிலாகப் பெற்றுச் சென்றனர். அதனைக் கண்டு பெருமகிழ்வு கொண்டார் கபிலர். “வேந்தே, விண்ணிடத்தே ஞாயிறு தோன்றி யொளிருங்கால் அங்குள்ள மீன்கள் ஒளிகெட்டு அந்த ஞாயிற்றொளியில் ஒடுங்கு கின்றன; அதுபோலவே நின்பால் தோல்வியுற்ற வேந்தர் ஒளி குன்றி நின் ஆணை வழி நிற்கின்றனர்; அதே நிலையில் பரிசிலர் கூட்டத்திற்கு பசியில்லை; பசியுடையோரைக் காண்பது அரிதாயிற்று; ஆதலால் அடங்கா மகிழ்ச்சி மீதூர்ந்து நின்னை இப்பாசறையிடத்தே காணவந்தேன் (64) என்று பாடினர்.

சேரமான் அவரையும் தன்னோடிருத்தி வென்ற நாட்டு மக்களுக்கு வேண்டும் நலன்களைச் செய்து இடம் சிறிதெனக் கூறிய பொறை நாட்டவர் வந்து இனிது வாழ்தற்கேற்ற காப்புடைச் செயல்களைச் செய்தான். அதனைக் கண்டிருக்கையில், ஒரு நாள் வெயிலது வெம்மை மிக்குறக் கண்டார் கபிலர். அதன் வெம்மை யாற்றாது அவர் வெதும்புவது கண்ட கடுங்கோ, “சான்றீர், இவ்வெயில் என்னைப் போல் கொடிய வெம்மையைச் செய்கிற தன்றோ” என்றான். ஞாயிற்றின்பால் பல குறைகள் உண்டு; அதனால் ஞாயிறு சேரமானுக்கு ஒவ்வாது என்பாராய் “ஏ, ஞாயிறே, நீ எம் சேரலனான கடுங்கோ ஆதனை எவ்வகையில் ஒப்பாய், உலகம் பொது என்ற சொல்லைக் கேட்கப் பொறாது எமது நாட்டிடம் சிறிது பெருக வேண்டுமென எழுந்து பொரும் சேரமானை நீ எங்ஙனம் ஒப்பாவாய் என ஞாயிற்றை முன்னிலைப் படுத்தி நீ பொழுது வரையறுக்கின்றாய்; புறங்காட்டி மறைகின்றாய்; காலைப்போதிற் கிழக்கிலும், நண் பகலில் உச்சியிலும், மாலைப் போதில் மேற்கிலும் ஆண்டு தோறும் வடக்கிலும், தெற்கிலும் இவ்வாறு நாற்றிசையிலும் மாறி மாறி வருகின்றாய்; மாலைப் போதில் மலைவாயிலில் ஒளிக்கின்றாய்; எம் இறைவன் பால் பொழுது வரைதல், புறங் கொடுத்தல் முதலிய குறையொன்றும் காணப்படாது; இருந்தும் நீ நாணம் இன்றி இந்த நண் “பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்து” (புறம் 8) என்று உள்ளுதொறும் தெள்ளிய இன்பம் சுரக்கும் பாட்டினைப் பாடினர்.

சின்னாட்கள் கழிந்ததும், கபிலர் சேரமான் தானை மறவர் களைக் கண்டு அளவளாவிக் கொண்டிருக்கையில் அவர்களிற் சிலர் வினை முடிந்ததனால் தங்கள் மனைமேல் நினைப்புடையராக இருப்பது கண்டார். மேற்கொண்ட வினைமுற்றிய பின் கடுங் கோவைக் கண்டு கபிலர், வேந்தே நின் தானை மறவரைக் கண்டேன்; பகைவர் மதிலை யழித்தல்லது உணவு கொள்வதில்லையென வஞ்சினம் செய்து, அது முடியுங்காறும் உண்ணாதேயிருந்து பின்னரே உணவு கொண்டனர்; பின்பு அவர்தம் ஊரைக் கொண்டன்றி மீள்வதில்லையென உறுதி கொண்டனர், அவ்வாறே ஊரையும் கைக்கொண்டனர். இப்போதோ வேறு வினையாது உளதோ என வினைமேல் நினைவு கொண்டிருக்கின்றனரே யன்றித் தங்கள் மனை வாழ்வில் நினைவிலராக இருக்கின்றனர்; தாங்கள் வென்ற வேந்தனது களிற்றைக் கொண்டு அதன் வெண்கோட்டைக் கைக்கொண்டு மனையகம் அடைந்து பின் கள்ளுக்கடைக்குச் சென்று அதனை விற்றுக் கள்ளுண்டு மகிழ்ந்து அச்சமறியாத இன்பவாழ்வில் உத்தர குருவில் வாழும் உயர்ந்தோரைப் போல இன்பம் நுகரற் பாலரல்லரோ? பிரிவாற்றாது வருந்தி நீ வினை முற்றி மீண்டு வரும் நாளைச் சுவரில் எழுதிவிரல் சிவந்து வழிமேல் வழி வைத்திருக்கும் அணங்கெழில் அரிவையர் மனத்தைப் பிணிக்கும் மார்புடையனாகி நின்தாணிழல் வீரர் நாளும் வினையே நினைத்திருப்பது வியப்பாக இருக்கிறது (68) என்று கூறினர். அவர் கருத்தறிந்த வேந்தன் தன் நகர்க்குத் திரும்பினான். வாகைசூடி, சிறக்கும் தானை மகிழ்ச்சியுடனே மீண்டது.

வேந்தன் வஞ்சிநகர்க்கண் இருக்கையில் வேனிற் காலம் வந்தது. கடுங்கோ பேரியாற்றங்கரையில் நிற்கும் நேரி மலைக்கு அரசியற் சுற்றம் சூழச் சென்று தங்கினான். மலைவாணர் இனியவும் அரியவுமாகிய பொருள்களைக் கொணர்ந்து தந்து மகிழ்வித்தனர். இங்கே அவனது திருவோலக்கத்துக்குக் கபிலர் வந்துசேர்ந்தார்.

ஒருபால் தானைத் தலைவர் இருந்தனர்; அவர்கள் எந்தக் கணத்திலும் மக்கள் இறப்பது உண்மை; அதனால் புகழ் நிற்கப் பொருதிறப்பதே வாழ்வின் பயன் என்னும் காஞ்சியுணர்வு பெற்றுக் காட்சி நல்கினர், ஒரு புடை நண்புடை வேந்தர் இருந்தனர், கடுங் கோவின் அருகில் மலர்ந்த கண்ணும் பெருத்த தோளும் கொண்டு கடவுட் கற்பும் நறுமணம் கமழும் நெற்றியுமுடைய வேளாவிக் கோமான் பதுமன் தேவி என்ற பெயரினளான அரச மாதேவி வீற்றிருந்தாள். அவ்விடத்தே பாணரும் பிற பரிசிலரும் இசையும் பாட்டும் கூத்தும் நிகழ்த்தி மிக்க பெரும் பரிசில்களைப் பெற்று மகிழ்ச்சி கொண்டனர். இவற்றைக் கண்டு இன்புற்ற கபிலர், “பூண் அணிந்து விளங்கிய புகழ் சால்மார்ப, நின்நாண் மகிழ் இருக்கை இனிது கண்டிகும்” (65) என்று பாடி அவனை இன்புறுத்தினர்.

சின்னாட்கள் கழிந்தது; கபிலருக்கு மலையமானாடு செல்வதற்கு எண்ண முண்டாயிற்று. தன்பால் பேரன்பு செலுத்தும் கடுங்கோவுக்கு அதனை வெளிப்படக் கூறுதற் கஞ்சிக் குறிப்பாகச் சான்றோர்க்குத் தெரிவிப்பதுபோல “சான்றோர் நீவிர் வேண்டு மாயின், செல்வக் கடுங்கோவைச் சென்று காண்மின்; அவன் பகைவர் பால் பெற்ற யானைகளை மிகைபட நல்குவன்; தன் நாட்டில் விளையும் நெல்லை, மரக்காலின் வாய்விரிந்து கெடும் படி மிகப்பலமாக அளந்து தருவன் (66) என்றார். பிறிதொருகால் பாணனொருவனைக் கடுங்கோவிடத்தில் ஆற்றும் படுக்குங் கருத்தில் “பாணனே, எங்கள் சேரமான், போர்ப்புகழ் நிறைந்து விளங்கும் சான்றோர்க்குத் தலை மகன்; அவன் நேரிமலைக்குரிய வன்; அம்மலைக்கண் மலர்ந்திருக்கும் பூவில் தேனுண்ட வண்டு பறக்க வியலாது அங்கேயே சூழ்ந்து கிடக்கும். நீ அவன் பால் சென்றால் உனக்கும் உன் சுற்றத்தார்க்கும் கொடு மணம் என்ற ஊரில் செய்யப்படும் அருங்கலன்களையும் பந்தரென்னும் மூதூரிற் பெறப்படும் முத்தும் நல்கிச் சிறப்பிப்பன்” (67) என்று பாடினர். ஊதலாகாத காந்தலை வண்டு விரும்பிப் படிந்ததனால் பறக்க வியலாது கெடுவது போலப் பகைவர் கடுங்கோ விரும்பிக் காக்கும் நேரிமலையைக் கருதிப் பகைவர் போர்தொடுத்துக் கெட்டனர் என்பது பொதுவாகவும்; இதனை யோதுவதால் கபிலர், கடுங் கோவையடைந்து அவன் தந்த நன்மைகளைப் பெற்று வேறு நாடுகட்குச் சிறப்பாகவும் புலப்படுத்தினார்.

நுண்ணுணர்வினனாகிய கடுங்கோ அக்குறிப்பை உணர்ந்து சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான். அவனுடைய விரிந்த அன்பைக் கண்ட கபிலர், நாணமும் மடமும் நிறைந்து கற்பு மேம்பட்ட பெருமகட்குக் கணவனே, வானுலகம் கேட்குமாறு முழங்கும் உச்சியினின்றொழு கும் இந்த அயரை மலையைப்போல் நீ நாள் குறையாது பெருகி வாழ்க (70) என வாழ்த்தி விடை பெற்றுச் சென்றார்.

மேலைக் கடற் கரையில் கோழிக்கோட்டுப் பகுதியில் பாலிக்குன்று என்ற பெயருடன் இருக்கும் பேரூர் குடநாட்டைச் சேர்ந்திருந்ததோரூர். அதன் தமிழ்ப் பெயர் பாலிக்குன்று என வரும். இது பண்டை நாளில் குன்றின் கட்பாலியென வழங்கிற்று. அங்கே ஆதனென்றொரு சான்றோர் வாழ்ந்தார். அவரைக் குன்றின் கட்பாலியாதனார் என வழங்கினர். குன்றின் கட்பாலி என்பது ஏடெழுதுவோரால் குண்டுகட்பாலி எனத் திரிக்கப் பட்டது. அவர் அந்நாளில் விளங்கிய நல்லிசைச் சான்றோருள் ஒருவர்.

அவர் ஒருகால் செல்வக் கடுங்கோவைக் காண்டற்கு வஞ்சி நகர் வந்து சேர்ந்தார். அவரோடு கிணைப்பொருநரும் உடன் வந்தனர். அவர்கட்கு அவனது புகழ் பாடிய பாட்டொன்று தந்து பாடச் செய்தார். “பொருநனும் ஆமை வயிறு போன்ற கிணைப் பறையை இயக்கி, பகை மன்னர் பணிந்து திறையாகச் செலுத்திய செல்வத்தை நகைப் புலவாணராகிய இரவலர்க்கீத்து அவர் நல்குரவையற்றி மிகவும் விளங்குக” என்று பாடினான். அவ்விசை சென்று செவிப்புகுந்ததும் செல்வக் கடுங்கோ வாழியாதன் அவரை வருவித்துக் குன்று போலும் களிறுகளும் கொய்யுளையணிந்த குதிரைகளும் ஆனிரையும் நெல்லும் பிறவும் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். அவனது பெருந்தன்மை கண்டு மிக்க வியப்புற்ற ஆதனார் பூழியர் பெருமகனான செல்வக்கடுங்கோ வாழியாதன் வஞ்சி நகரின் புறமதிலை அலைக்கும் பொருநையாற்று மணலினும் அங்கு உள்ள ஊர்கள் பலவற்றிலும் உள்ள வயல்களில் விளையும் நெல்லினும் பல்லூழி வாழி என்று வாழ்த்திப்பாடினார்.

இங்ஙனம் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்கிய கடுங்கோதன் அற வேள்விகட்குத் துணை செய்த வேதியர்க்கு ஒகந்தூர் என்னும் ஊரை யீந்து மகிழ்வித்தான். இவன் இருபத்தைந்தாண்டு அரசு வீற்றிருந்தான்.

இவனது ஆட்சியின் இருபத்தைந்தாமாண்டில் பாண்டி வேந்தன் ஒருவன் கடுங்கோவைப் பகைத் தொழுகினான். அது தெரிந்ததும் சேரமான் பெரும் படைகொண்டு பாண்டி நாட்டிற்குச் சென்றான். தென் புறம்பு நாட்டின் கீழ்ப் பகுதியில் இருக்கும் சிக்கல் என்னுமிடத்தே இருவர் படைகளும் கை கலந்து போர் செய்தன. அக்காலைப் பகைவர் எறிந்த வேலொன்று கடுங்கோவின் மார்பிற்பட்டுப் பெரும் புண்செய்தது. அவன் அங்கேயே தன் உயிர்கொடுத்து உலவாப் புகழ் பெற்றான். அதனால் பின்வந்த சான்றோர், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் எனச் சிறப்பித்துரைப்பாராயினர். அச்சிக்கலென்னும் இடம் இப்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவுத்தரகோசமங்கைப் பகுதியில் உளது. அங்கிருந்து மறைந்த அரச குடும்பத்திற்கும் சேதுபதி மன்னர் குடும்பத்திற்கும் நெடு நாள் வரை தொடர்பு இருந்து வந்ததாகச் சொல்லுகின்றனர்.

காவிரிக் கரையின் மேலைக் கரையில் பூவானியாறும் காவிரியாறும் கூடுமிடத்திருக்கும் திருநெணாவுக்கு (பவானிக்கு) அண்மையில் தோன்றும் நன்றா என்னும் குன்றம் செல்வக் கடுங்கோ இரந்து கபிலர்க்கு நாடு வழங்கிய இடமாகும். அதற்குச் சான்றாக அந்நாட்டிலுள்ள கபிலக்குறிச்சி என்னும் ஊர் பெயர் மறையாமல் இன்றும் இருந்துவருகிறது. பண்டு குடநாட்டிற்கும் வனவாசி நாட்டிற்கும் சேர எல்லை வரையறுத்துக் கொண்ட போது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய பூவானியாறு குடநாட்டின் வடவெல்லையாக நின்றது போல கிழக்கில் கொங்கு நாட்டை வென்று சேர அரசுக்கு உட்படுத்தியபோது அதற்கு வடவெல்லை யாக காவிரியோடு கலக்கும் இந்த பூவானியாறு மேற் கொள்ளப் பட்டது. பூவானி பவானியாக இன்று வழங்குகின்றது. செல்வக் கடுங்கோ கொங்கு நாட்டை அடிப்படுத்திக் கொண்டபோது இன்று தாராபுரம் என்றும் இடைக்காலச் சோழ வேந்தர் காலத்தில் இராசராசபுரம் என்றும் நிலவும் பேரூர் இச்சேர வேந்தர் காலத்தில் கொங்கு வஞ்சி என்று பெயர் பெற்றது. அவ்வூர் கல்வெட்டுக்கள் அதனைக் கொங்கு வ்ஞ்சி என்று குறிப்பது ஈங்கு நினைவு கூறத்தக்கது. காவிரிக் கரையில் உள்ள கருவூரும் முசிரியும் பண்டைச் சேரமன்னர் காலத்தில் அவர்களது கருவூரையும் முசிரியையும் நினைப்பிக்கும் முறையில் அமைந்தனவாகும்.

சிந்தனைச்செல்வர் சித்தார்த்தகௌதமர்


இன்றைய வாழ்வில் அரசியல், பொருளா தாரம் விஞ்ஞானம் முதலிய துறைகளில் புதிய புதிய கருத்துக்களும் கொள்கைகளும் தோன்றி நலம்பல புரிந்துள்ளன. இவை யாவும் தக்கோர்களின் சிந்தனையின் விளைவாகும். இச்சிந்தனை யாளர்கள் இன்று நேற்றல்ல; பல்லாயிரம் ஆண்டுகட்குமுன்பே தோன்றி மக்களி னத்தின் நல்வாழ்வு குறித்துத் தங்கள் சிந்தனைகளைச் செலுத்திச் செயற்படுத்தியுள்ளனர்.

சிந்தனை என்பது மக்களுடைய மனத்தின் கண் நிகழும் எண்ணவகை, மனம் எப்பொழுதும் இடையறவின்றி யாதேனும் சிந்திப்பதையே தொழிலாகவுடையது; எனினும் சிற்சில இயற்கை நிகழ்ச்சிகள் அவர்கள் கண் முதலிய பொறிவழியாக மனத்தின்கண் தோய்ந்து புதிய புதிய சிந்தனைகளைத் தூண்டி விடுகின்றன. மரத்தின்கண் இருந்து பழுத்த பழம் வீழ்வதும், கொதிக்கிற தண்ணீர் ஆவியாகி வெளிப்படுவதும் இவை போன்ற பலவகை நிகழ்ச்சிகள் விஞ்ஞானிகளின் சிந்தனையைத் தூண்டிப் புதிய புதிய கண்டு பிடிப்புக்களுக்குக் காரணமாகியதை விஞ்ஞான வரலாறு காட்டு கின்றது. இவ்வாறே இயற்கைக் காட்சிகள் சில அரசகுமாரனான கௌதம புத்தரின் மனத்தை அசைவித்துச் சிந்தனையை எழுப்பின. அச்சிந்தனை ஒரு பெரிய சமயத்தையே தோற்றுவித்துக் கிழக்காசிய நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தமை வரலாறு காட்டும் உண்மை.

நமது இந்தியநாட்டு வடபகுதியில் உள்ளது கோசலநாடு. 2500 ஆண்டுகட்கு முன் அந்நாட்டையாண்ட சுத்தோதனன் என்ற வேந்தனுக்கு மகனாகத் தோன்றியவர் கௌதம புத்தர். இவர்க்குப் பெற்றோர் இட்டு வழங்கிய பெயர் சித்தார்த்தன் என்பது. சித்தார்த் தர் என்ற சொல்லுக்கே சிந்தனைச் செல்வர் என்றுதான் பொருள்.

அரசர் அரண்மனையில் செல்வச் செழிப்பினிடையே பிறந்து வளர்ந்தமையின், புத்தருடைய மனம், நாடெங்கும் மக்கள் தம்மைப் போலவே குறைவிலா நிறைவாய் இன்ப வாழ்வே பெற்றுள்ளனர் என்றே எண்ணியிருந்தது. தந்தையாகிய அரசனும் இன்பமே நிலவும் சூழ் நிலையை அவர்க்கு அமைத்தளித்தான். அவர் உரிய கலை பலவும் கற்று மணப்பருவம் எய்திய போது அரசன் யசோதரை என்னும் அழகியை அவர்க்குத் திருமணம் செய்துவைத்து இளவரசுப் பட்டமும் தந்து சிறப்பித்தான். கௌதமபுத் தரும் வளவிய இளமைக்கு ஏற்ப இன்பத்துறையில் எளியரானார்.

இங்ஙனம் இருக்கையில் அவருடைய சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சிகள் தோன்றலாயின ஒருநாள் தமது பெருமனையிலிருந்து தமது தந்தையைத் காணச் சிவிகையூர்ந்து செல்லுகையில் வழியில் பெரும் பிணியுற்று வருந்திவந்த நோயாளன் ஒருவனைக் கண்டார் கௌதமர் திடுக்கிட்டு, “இப்படியும் மக்கள் துன்புறுகின்றனரா” என்று எண்ணினார். பின்பொருநாள் மூத்து நரைத்து முகம் திரைத்துக் கோலூன்றித் தள்ளாடிவரும் முதியவன் ஒருவனை நோக்கினார் மக்கள் எய்தும் முதுமை நிலையை முற்றக் கண்டு எண்ணமிடலானார். வேறொருநாள் குதிரை யேறிச் சென்று கொண்டிருக்கையில் பிணம் ஒன்றைக் கண்டு இறப்பின் இன்னலை எண்ணியறிந்தார்.

இவ்வாறு மண்ணிற்பிறந்த மக்கட்குப் பிணி, மூப்பு, சாக்காடு முதலியன விளைவிக்கும் துன்பங்களையும் பொருளும் வாழ்வும் நிலையின்றித் தேய்ந்துகெடும் துன்பங்களையும் கண்ட கௌதமர் நாடு காவல்புரியும் அரசன் நாட்டு மக்களை வருத்தும் இவற்றையும் போக்கி, இன்ப வாழ்வு நிலைபெறுவதற்கு முயலவேண்டும் என்று எண்ணி, இதற்காவனவற்றைச் சிந்திக்கலானார். பார்க்குமிடம் எங்கும் துன்பமே கண்டதனால் இத் துன்பத்திற்குக் காரணம் யாது? இத்துன்பத்தைப் போக்குமாறு எங்ஙனம்? அதற்குரிய வழிகள் யாவை? என்ற இந்நான்கு வினாக்கள் அவர் மனத்தில் எழுந்தன. அவையே கௌாமரின் சிந்தனைக்குப் பொருளாயின. இவற்றை நால்வகை வாய்மை என்று குறித்து,

“துன்பம் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது”

என மணிமேகலை கூறுகிறது. இவற்றைப் புத்த நூல்கள் நால்வகைச் சத்தியங்கள் என்று குறித்து, துக்கம், துக்கோற்பத்தி துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்று கூறுகின்றன.

இந்த உண்மைகளை முறையே சிந்திக்கலுற்ற கௌதமர் பிறந்த மக்களிடமாக இத்துன்பங்கள் காணப்படுதலால், பிறப்பே துன்பம், பிறந்தார்க்குவரும் பிணிகளும் துன்பம், இவ்வாறே முதுமையும் துன்பம், இறப்பும் துன்பம். இவற்றின் வேறாக அன்பில்லாதவர் தொடர்பும், அன்புடையவர் பிரிவும் துன்பம் தருகின்றன. எனவே பிறப்பும் பிறந்து பெறும் வாழ்வும் துன்பமே என்ற முடிவுக்கு வருகின்றார்.

இங்ஙனம் எங்கும் பரந்து காணப்படும் இத்துன்பத்துக்குக் காரணம் யாதாகலாம் என்ற சிந்தனை எழுகிறது. எல்லாவுயிர்களும் இன்பத்தையே நாடுகின்றன; இன்பத்துக்கு உடம்பும், பொருளும், இடமும் ஆக்கமாவது கண்டு உடம் பின்பால் பற்றும், பொருளின் பால் வேட்கையும், இடத்தின்பால் விருப்பும் உண்டாகின்றன; இவை நிரம்ப இருந்தால்தான் இன்பம் பெருகு மென்று எண்ணி இவற்றின்பால் ஆரா இயற்கைத்தாகிய அவா உண்டாகிறது. அந்த அவா தான் பிறப்புக்கே காரணம்; துன்பத்துக்கு முதல் என்ற முடிவை எய்துகின்றார்.

இவ்வண்ணம் துன்பத்தையும், அதற்குரிய காரணத்தையும் சிந்தனையிற்கண்ட கௌதமர், இத்துன்பப்பிணிப்பிலிருந்து மக்கட்கு விடுதலை கிடையாதா? என்று எண்ண மிடலானார். விடுதலை யுண்டு; பிறப்புக்கே காரணமாகிய பற்று என்றும் ஆசையென்றும் கூறப்படும் அவாவை ஒழித்தல் வேண்டும். அது? தன்னிடத்தே இல்லாதபடி அறுத்து அதிலிருந்து தன்னை நீக்கிக் கொள்ளுவது தான் செய்யத்தக்கது; அது செய்தால் பற்றறுத்துத் துன்பமேயில்லாத பேரின்பம் பெறலாம் என்று துணிகின்றார். இதனை,

“பிறந்தோர் உறுவது பெருகிய இன்பம்;
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது”

என்று மணிமேகலை வடித்துத் தருகிறது.

துன்பத்துக்கேது வாகிய பற்றை, அவாவை, அறுத்தொழித் தால் பிறப்பறும், பேரின்பம் தலைப்படும். “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்று எல்லாரும் கூறுகின்றனர். பற்று எங்ஙனம் துன்பத்துக்குக் காரணமாம் என்ற சிந்தனை எழுகிறது.

கௌதமபுத்தருடைய சிந்தனை விரிவாகச் செல்லுகிறது. நாடு முழுதும் அலைந்தார். நல்லோர் பலரைக்கண்டு அளவளாவினார். தாமும் நன்றாகச் சிந்திக்கலானார். அடர்ந்த காடுகளிலும் ஆற்றங் கரைகளிலும் உயர்ந்த குன்றுகளையும் ஓங்கிய மரத்தடிகளிலும் தங்கிக் கௌதமர் சிந்திக்கலானார். உண்டி சுருக்கினார்; உறக்கம் வெறுத்தார்; உடம்பு வாடினார்; சுருங்கச் சொன்னால் சிந்தனை வடிவமானர் சித்தார்த்தார் என்பது பொருந்தும். சிந்தனை முடிவில் பற்றுக்கு முன் பின்னுமாகிய பேதைமை, முதலாக வினைப் பயன் ஈறாகப் பன்னிரண்டு பொருள்கள் காரண காரிய முறையில் புலனாகின்றன. இவற்றை,

“பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பு ஈராறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேற்றிகுவர்”

என்று மணிமேகலை கூறுகிறது.

இவ்வாறு துன்பம் உண்டாதற்குரிய காரணங்களைப் கண்ட புத்தர்பெருமான், இவற்றைப் போக்குதற்குரிய வழிகளைச் சிந்திக் கலானர். பேதைமை முதலாக ஒன்றிற்கொன்று காரணமாய் நிற்கும் குற்றம் நீங்குமாயின் துன்பம் நீங்கும் என்ற முடிவுக்கு வருகின்றார்.

“பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்ற மீளக் கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணி மூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்றிக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும்”

என்று மணிமேகலையும் இவற்றை விளக்கிக் கூறுகிறது. பேதைமை மீளமாயின் செய்கையொழியும், அது நீங்க உணர்ச்சியும் பின் அருவுரு முதலியனவும் நீங்கும் என்பது ஒக்கும் பேதைமை முதலியன எவ்வாறு ஒழியும் என்ற சிந்தனை எழுகிறது. இச்சிந்தனை,

“நற்காட்சி நல்லொழுக்கம் நல்வாய்மை நல்வாழ்க்கை
நற்செய்கை யோடைந்தும் நாடு,
நன்முயற்சி நன்காம் கடைப்பிடி நல்லோர் தம்பால்
செல்கையுடன் நட்டனைத்தும் தேறு”

என்ற எட்டு வழிகளைக் காட்டுகிறது.

இவ்வழிகளைப் பின்பற்றுவோரைத் தாக்கி இருள்செய்வன காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றும் என்று உணர்ந்து இவற்றைப் போக்குதற்கு ஐவகைப் பாவனைகளைக் கௌதமர் கண்டார். அவை மைத்திரி, கருணை, முத்தை அசுபம், உபேக்ஷை என ஐவகைப்படும். மைத்திரி பாவனை எல்லாவுயிரிடத்தும், அன்பும் பரிவும் கொண்டு அவை துன்பமும் நோயுமின்றி இன்ப முடைய வாகுக என்று நினைந்து ஒழுகுவது. கருணா பாவனை என்பது பிறவுயிர்கள்படும் துன்பம் கண்டு மனமுருகி அதனை நீக்கற்கு விரையும் பண்பும் செயலுமாகும். பிறர் பெற்றிருக்கும் செல்வ வாழ்வு கண்டு மனம் மகிழ்ந்து அவர் எப்போதும் இன்பமே பெற்று நிலவுக என்று எண்ணுவது முதிதா பாவனை. உடலழகு கண்டு இது அநித்தம், அநான்மா அசுசி எனக் கருதி பற்றுக் கொள்ளாத மனப்பான்மையுடையராவது அசுபவாவனை. இதனால் காமம் என்னும் குற்றம் தோன்றாது கெடுகிறது. அறவுரை கேட்டல் சிந்தித் தல், தெளிதல் தெளிந்தவாறு ஒழுகுதல் என்ற நான்கும் உபேக்ஷா பாவனை, எனப்படும். இதனால் மயக்கம் என்னும் குற்றம் நீங்கும்.

இவ்வாறு காமவெகுளி மயக்கங்களைப் பாவனைகளால் போக்கி மனம் தூயனாய்த் தூய சிந்தனை கொள்வது முதலாம் தியானம். சிந்தனை யாதும் இன்றிச் சாந்தி நிலையில் இன்புற்றி ருப்பது இரண்டாம் தியானம். சாந்தி நிலையில் உயர்ந்து புத்தபரமேட்டிகள் விரும்பும் பொறுமையும் அறிவும் கொண்டு தனக்குள்ளே இன்பம் அனுபவிப்பது மூன்றாம் தியானம். சுகமோ துக்கமோ இன்றிச் சமநிலையில் அறிவை நிறுத்தும் தூயநிலை நான்காம் தியானம். இந்தத் தியானங்களில் பக்குவப்பட்டவர் சமாதியாகிய யோக சித்தியைப் பெறுவர். சிந்தனைச் செல்வராகிய புத்தர் பெருமான் இந்த நால்வகைத் தியானத் தால் தான் முற்பிறப் பியல்பும், பிறந்த பிறப்பின் பெற்றியும் வேறு எல்லாவற்றையும் முற்றவுணர்ந்தார்.

இச்சிந்தனைகள் முடிவிலே யோகக் காட்சியும் யோகக் கேள்வியும் பரசித்த ஞானமும் பழம் பிறப்புணர்வும் காம முதலாகிய குற்றங்களின் நீக்கமும் பல்வேறு இருத்திகளும் நல்கும் என்று பௌத்த தருமம் கூறுகிறது.
(திருச்சி வானொலியில் இதன் சுருக்கம் பேசப்பட்டது.)

பொருளியல் வீழ்ந்தது எங்ஙனம்?


ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
நமது நாடு ஒரு காலத்தில் புண்ணிய நாடு என்றும் “வெள்ளி விதைப்பப் பொன்னே விளையும் வியத்தகு நாடு” என்றும் புகழப் பட்டதுண்டு. “புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே” என இந்நாளிற் கூறுவதுபோலச் “செல்வ வகைகள் பலவும் இந்திய தேசத்தில் விளையுது சென்றிடுவீரே” என மேனாட்டவர் தம்மிற் பாடிக்கொண்டனர். மேனாட்டில் ஒவ்வொரு இனத்தவரும் இந்தியாவுக்கு வந்து போக வழி கண்டனர். அம்முயற்சியின் விளைவு தான் அமெரிக்க நாட்டையும் இருவகை இந்தியத் தீவுகளையும் கண்டு மேனாட்டவர் குடியேறிச் செல்வரான செய்தியாகும்.

இங்ஙனம் மேனாட்டவர் பல்கி உலக மெல்லாம் பரந்து சென்று செல்வத்தாற் பண்பு மேம்பட்டமைக்கு அடிப்படி உந்துணர்வாக இருந்த இந்திய நாடு, வடக்கு தெற்கென இரண்டாய் இயன்று, பொருள் வளமும் மக்களினமும் பெருகியிருந்தது. இமயம் சார்ந்த வடபுலத்தில் சிந்து, சங்கை என்ற இரண்டு பேராறுகளின் நீர்ப் பெருக்கும், விந்தமலையடியில் நருமதை, தபதி என்ற ஆறுகளின் நீர் வளமும் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருட் செல்வம் மிக்குப் பொலிந்து மேம்பட உதவி புரிந்தன.

தென்னாட்டிலும், வேங்கடத்திற்கும் குமரிக்கும் இடையில் பாலாறு, பெண்ணை, காவிரி, வையை, பொருநை என்ற ஆறுகள் படர்ந்து நீர்வளம் சுரந்து நெல்லும் பொன்னும் விளைந்து மக்களை நன்னீர்மை குன்றாது வாழச் செய்தன. விளைவு மிகுதியால் தென்னாட்டவர் கடல் கடந்து சென்று வாணிகம் செய்து பொருளீட்டும் திறத்திலும் மேன்மை எய்தினர். இது தென்தமிழ் நாட்டுச் சங்க கால நிலை.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்க காலத்தை அறிதற்குப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்ற நூல்கள் உதவு கின்றன. அவற்றால் தமிழ் வாழ்வில் விளைந்து மலிந்த விளை பொருளும்தொழிலிடைத் தோன்றிய செய்பொருளும் ஓளைவு உணரப்படுகின்றன. மக்களிடையே உண்போரும் உழைப்போரும் என இரு திறத்தினர் வாழ்ந்தனர். அவருள் உழைப்போர் உழவர் வணிகர் காவலர் என்று முத்திறத்தினராய் இருந்தனர். உழுது விளைத்த மிகுபொருளை விற்றற்கு வணிகரும், உழவர்க்கும் வணிகர்க்கும் காப்பாகக் காவலரும் தோன்றிக்,

“கொள்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்”

வாணிக வாழ்வால் வளமிக்கு வாழ்ந்தனர். இவர்கட்கு வேண்டும் உடையும் கருவியும் படையும் செய்துதவும் தொழிலாளர் தொழில் வளம் மிக்குச் சிறந்து செல்வ நிலையில் திகழ்ந்தமை அறிகின்றோம். சங்க காலச் செல்வர், “முத்தினும் மணியினும் பொன்னினும் (செய்த) நேர்வரும் குரைய கலம்” எனவும். “அருவிலை நன்கலம்” எனவும், புகழப்படும் அணிகலம் செய்தணிந்து சிறப்புற வாழ்ந்தமை தெளிகின்றோம். தென்னாட்டிலிருந்து தங்கள் யவன நாடு கட்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் பொன் மதிப்புள்ள பண்டங்கள் வருவது கண்டு, பொறாது எழுதிய உரோமானிய அறிஞர் குறிப்புக்கள் இன்று நாம் அறியக் கடைக்கின்றன. நம் நாட்டைப் பிற நாட்டவர் சுரண்டியதுபோல நாம் பிற நாட்டைச் சுரண்டிக் கொணர்ந்த வரலாறும் உண்டு. அதனைக் கிழக்காசிய நாடுகளும் ஈழ நாடும் தமது நாட்டு வரலாறு வாயிலாக உரைக்கின்றன. “ஈழத் துணவும் காழகத் தாக்கமும்” என நம் நாட்டுத் தமிழ் இலக்கியங் களும் ஒளிக்காமல் உரைக்கின்றன.

சங்க காலத்தினின்றும் வருவோமாயின் அக்காலத் தமிழாட்சிக் குப்பின் வேற்றவரான பல்லவராட்சிதான் சுமார் 500 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாட்டு வடபகுதியில் நிலவிற்று. அவர்களது வரலாற்றைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தெளிவாக எழுதியுதவும் அறிஞர் தோன்றாமையாலும், இருக்கும் அறிஞரை அத்துறையில் ஊக்கும் நல்லரசு இன்றுவரை உளவாகாமையாலும் நமது நாட்டவர் இனிது தெரிந்து கொள்ளுமாறு இல்லை. பல்லவ ராட்சியை ஓரளவு உணர்த்தும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றை வெளியிட்டு விரும்பிக்கற்கும் மக்கள் கைக்கு எட்டுமாறு செய்யும் எண்ணமுடைய அரசியல் தலைவர் களும் கல்வியாளர்களும் நாட்டில் இல்லை. இந்நாளில் தன்னலமற்ற பரந்த அறிவுடைய பெருமக்கள் பேரரசின் கல்வித் துறையில் இடம் பெறவில்லை.

பல்லவர் காலத்தில் உழவினும், தொழில்துறை வளம் பெற்றது என அவருடைய கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கற்களைக் கொண்டு அழகிய கோயில், மண்டபம், குகைகள், குளங்கள் ஆகியன வகுத்தலில் அவர்கள் மேன்மையுற்றனர்; அவர்க்கு முன் மரத்தாலும், செங்கற்களாலும் அமைந்த கோயில்கள் சில பல்லவராட்சியில் கற்கோயில்களாயின. சிற்பத் தொழில் சிறந்த ஆதரவு பெற்றது. நெசவுத் தொழிலும், பொன் செம்பு முதலியன கொண்டு செய்யும் பல்வகைத் தொழிலும் மேன்மையுற்றன. வடமொழிப் பயிற்சி பேராதரவு பெற்றது; வடமொழிக் கடிகைகளும் கல்லூரிகளும் காஞ்சிபுரம் சோளிங்கபுரம் எண்ணாயிரம் முதலிய இடங்களில் சிறந்து விளங்கின. அக்கல்வி சமய தத்துவ புராணங்களுக்கு நல்லாதரவு செய்ததுவேயன்றி, மக்களுடைய பொருளியல் வாழ்வு வளம் பெறவுதவும் வழிவகைகளைச் செய்யவில்லை. வேளாண்மைத் துறைக்கு உயர்வு தந்து ஊக்கும் நல்லுணர்வு அக்காலக் கல்வியால் நல்கப்படவில்லை. “காடு கொன்று நாடாக்குதலும் குளம் தொட்டு வளம் பெருக்குதலும்” என்ற பொருளியல் செய் தொழில் சங்க காலத்திலிருந்தே தொடர்ந்து வந்தது; ஆயினும், அது பல்லவ ராட்சியில் திட்டவட்டமாகச் சிறப்புற நடைபெறவில்லை. சிற்பத் தொழில் வளர்ச்சியும் சதுர்வேதிமங்கலப் பெருக்கமும் நாட்டில் வறுமையின்மையைப் புலப்படுத்தினவேயன்றிப் பொருட் செல்வ வளர்ச்சிக்கு வழி வகுத்தன வல்ல.

இனி, பல்லவர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை ஒருவகையிற் சிறப்பும் சீர்த்தியும் பெற்றிருந்து மறைந்தது. அவரையடுத்துப் பாண்டியர் சிலர் தோன்றினர். அவர் நிறுத்திய குறிப்புக்கள் அவரது போர் வாழ்வையே விரியப் பேசுகின்றன. இந்தியப் பேரரசின் கல்வெட்டுத் துறையும், சென்ற 90 ஆண்டுகளாக எடுத்த படிகளில், 1903-ம் ஆண்டுக்குப்பின் எடுத்த அனைத்தையும் பொதுமக்கள் யாவரும் எளிதில் பெற்றுப் படித்தறியுமாறு வெளியிடுவதில் விருப்பமும் திறமையுமின்றி இருப்பதாலும், இந்தியப் பேரரசும் இச்செயலல் குருடு பட்டுப் போனதாலும் நமது பொருள் வாழ்வின் வரலாறு காண்பது இடர்ப்படுகிறது.

பாண்டியர்க்குப் பின் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் விசயாலயன் வழி வந்த சோழ வேந்தராட்சி நம் தமிழ் நாட்டில் தோன்றிச் சுமார் 300 ஆண்டுகள் நடைபெற்றது. இவர்கள் காலத்தில் சேக்கிழாரது பெரிய புராணமும், கம்பரது இராமாயணமும், சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியும், ஒட்டக்கூத்தரது பரணி உலா, பிள்ளைத் தமிழ்களும் பிறவும் தோன்றின. சோழ ராட்சியில் உண்பொருள் விளைவு வேண்டிக் காவிரிக்கு இருமருங்கும் வலிய கரைகளும், நெடிய கால்களும், வீரசோழன் போன்ற சிற்றாறுகளும் உளவாயின. கொள்ளிடத்தின் வாயிலாகக் காவிரி நீர் வீரநாராயணனேரி வழியாகப் பெருமாள் ஏரியிற் பாய்ந்து தென்னாற்காடு மாவட்டத்துத் திருத்தினை நகர், அம்மாவட்டத் தலைநகரான கடலூர் வரையிற் கொண்டு செல்லப் பட்டது. வடக்கிற் பாலாற்றின் நீர் காவிரிப் பாக்கம், கலவை, மாவண்டூர், மதுராந்தகம் முதலிய ஊர்களிடத்துப் பேரேரிகள் நீரால் நிரம்பச் செய்ததும், தென்பெண்ணை, வெண்ணெய் உருகுதற்குள் நீர் பெருகிப் பரந்து விளைபொருள் பெருகச் செய்ததும் கல்வெட்டுத் துணை கொண்டு செய்யும் ஆராய்ச்சிக்கு ஒளி தருகின்றன.

பிற்காலப் பாண்டியராட்சித் தென்பாண்டி நாட்டு ஏரி குளங்களை வெட்டுவித்து உண்பொருள் வருவாயைப் பெருக்கியது. சங்ககாலத்துக் குடபுலவியனார் என்ற சான்றோர் பாண்டி வேந்தன் முன் சென்று, நீர்நிலைகளைப் பாண்டிநாட்டில் பெருக அமைக்க வேண்டு மென்ற கருத்து வலியுற,

“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்தி வான்நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி யாளும்
இறைவன் தாட்கு உதவாதே, அதனால்
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே.”

என்பதற் கேற்ப ஏற்ற இடங்களில் நீர்நிலையமைத்து உண்பொருள் இல்லாக் குறை யுண்டாக ஆட்சி நடத்தினாரில்லை. பிறநாட்டவரை இரந்து கேட்கு மெல்லைக்கு நாட்டைச் செலுத்தவில்லை.

இச்சோழ பாண்டியர் ஆட்சியில் உடைக்குரிய பஞ்சினும் பட்டினும் இயன்ற நெசவு முதலிய தொழில் பலவும் வேறு வேறு வகையில் பெருகி நடந்தன. இவற்றைத் தெரிந்தாய்ந்து கண்ட கொங்கு நாட்டு அடியார்க்கு நல்லார், நெசவிடை நிலவியதுகில் வகையைக், கோசிகம் பீதகம், சுண்ணம், வடகம், பாடகம், தேவாங்கம், கோங்கல் சுரியல் பேடகம் என மிகப்பலவாக எடுத்தோதித் தமிழ் வேந்தராட்சியில் தொழில் பெருகி யிருந்த திறத்தை விளக்கி யுரைக்கின்றார். இத்தொழில்கள் பெயரும் பீடும் எய்தி மேம்பட்டது கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டிற்குள்ளாகும்.

இப்பாண்டியர்க்குப் பின் விசயநகர வேந்தரது ஆட்சி தமிழகத்தில் படர்ந்தது. திருமால் கோயில்கள் பேராதரவு பெற்றன. திருக்கோயில்களில் விழாக்களும் திருநாட்களும் மிகுந்தன. திரு மூர்த்திகட்குப் படைக்கப்படும் தளிகை வகைகளும் அப்பமும் பணியாரமும் இட்டளியும் தோசையும் செல்வாக்குப் பெற்றன. இசைக்கருவிகள், வழிவழியாக வந்ததுடன் புது முறையிலும் உருவாயின. உழைப்பின்றி உண்பதுதான் உயர்வு; உழவு முதலிய வற்றின் மெய்வருந்த உழைத்துண்பது தாழ்வு என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றது. இதனால் தொழில்கள் செல்வாக்கிழந்தன. தொழில் செய்வோர் கீழ்நிலை மக்களாயினர். சிற்பிகளும் கற்றச்சர் பலரும் வேறு நாட்டுக்குக் குடியேறினர். எத்துணை இழிக்கப் படினும் உழவரது உழவு உணவு தரும் ஒட்ப முடைத்தாதல் பற்றிக் கைவிடப் படாத தாயிற்று. உழவுத் தொழில், பொருளுடைமைக் கண் உயர் நிலை இடைநிலை எய்தினோரால் நெகிழ்க்கப்பட்டது. கல்விப் பேறும் உண்மை யறிவும் குறைவாகவுடைய தாழ்நிலை மக்களே நிலத்தை உழுது பயிர் செய்யும் தொழிலை மேற்கொண்டனர். வேத வேதாந்த ஞானிகளும் அரசவையை யணி செய்யும் அறிஞர்களும், அரசியல் அலுவற் பிரதானிகளும் தங்கள் அறிவை உழவுக்கும் தொழிலுக்கும் பயன்படுத்துவது கீழ்மை யெனக் கருதலாயினர். இதனால் உழவும் தொழிலும் மெலிந்து வறுமைப் பேயைக் கைகூப்பி அழைத்துக் கொண்டிருந்தன. விசயநகர வேந்தர்க்குப் பின் கன்னடரும் முகமதியரும் இவர்களிடையே ஒட்டிரரும் என்ப பல திறத்தர் தமிழகத்திற் புகுந்து ஆட்சி புரிந்து அவலம் எய்துவித்தனர். ஆட்சிக்கும், அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கும் போருக்கும் ஆட்கள் பெருகினர்; உழவுக்கும் தொழிலுக்கும் உரிய அறிவும் ஆற்றலும் உடைய நன்மக்கள் தொகை குறைவதாயிற்று.

நாளடைவில் ஐரோப்பியர் முகமதியரை வென்று தங்கள் அரசை நிறுவத் தலைப் பட்டனர். வாணிகம் குறித்து வந்த அவர் கட்கு நாடு கொண்டு அரசை நிலையிட்டு ஆட்சி செய்யும் பொறுப்பு தானாக வருவதாயிற்று. இதுகாறும் போர்க்கும் காவற்கும் ஆள் வேண்டித் தொகுத்த ஐரோப்பியர், நாட்டாட்சிக்குத் துணை செய்யத் தக்க மக்களை மிகவும் தொகுக்கலுற்றனர். உழவு முதலிய தொழில்கள் உயர்ந்த மதிப் புடையன அல்ல என்று கருத்துடை யோருக்கு இவ்வாய்ப்பு பழம் நழுவிப் பாலில் வீழ்ந்தது போல் ஊக்குவதாயிற்று; தொழிற்குரிய அறிவும் ஆற்றலுமுடைய நன் மக்கள் ஆட்சிக்கும் காவற் பணிக்கும் உரிய பணி மக்களும் அலுவலாட்களுமாக வேலையேற்றனர். ஐரோப்பியருள் ஆங்கிலேயர் முழு வெற்றி பெற்றுத் தலைமை எய்தியதால் நாடு முற்றும் அவரது அட்சிக்கு உட்பட்டது. அது மட்டுமன்றிக் கிழக்கிலுள்ள அருமணம் (பர்மா) கடாரம், மலையம், சாவகம் முதலிய நாடுகளும், தெற்கிலுள்ள ஈழமும் ஆங்கிலேயரது ஆட்சிக் குரியவை யாயின. இவ்வகையில் வெயில் பனி மழைக் கஞ்சாது புரியும் உழவு முதலிய தொழிலை விரும்பாது, மெய் வருத்தமுறாது, ஆடை அழுக்குறாது, வியர்வை சிந்துறாது செய்யும் புதுப் பணியை ஆங்கிலேயர் நல்கக் கண்ட மக்கள் அவர் தரும் புதுப்பணியை வியந்து கண்டு நயந்து போற்றி அதுவே வாழப் பிறந்தார்க்கு வாழ்வு தரும் உயர்பணி யென உள்ளி அதனைப் பெறற்கே பெரு முயற்சி செய்வாராயினர்.

அறிவும் ஆற்றலுமுடையோர் பெரிதும் திரண்டு மேற்குறித்த புதுப்பணியை மேற் கொள்ளவே, உண்பொருளையும் பிறவணிகப் பொருளையும் வித்தி விளைவிக்கும் தொழிற்கு வேண்டும் ஆட்கள் குறைந்தனர். திறமையுடன் அதனைச் செய்து விளைவிக்கும் திறலுடையோரும் அருகினர்; அவர் தொழிலைக் குறைவாக மதிக்கும் கூட்டமும் பெருகிற்று. அறிவும் ஆற்றலும் இல்லாத வரும், அவற்றாற் குறைவுடையவருமே தொழிலையும் வாணிகத்தையும் பெரிதும் போற்றினர். இதனால் நம் நாட்டில் பொருள் விளைவு சுருங்கிற்று; வாணிகம் வளமிழந்தது. ஆற்றலுடையோர் சிலர் அருமணம், கடாரம், ஈழம், முதலிய நாடுகட்குச் சென்று வாணிகம் மேற்கொண்டனர். பலர் கூலி களாகவும், கூலிப்படைகளாகவும் சென்று வயிறு வளர்ப்பதொன்றையே பொருளாகக் கொண்டனர்.

ஆங்கிலேயரது ஆட்சி, அருமணம், ஈழம் முதலிய நாடுகளில் பரந்து நிலை பெற்றிருந் தமையின் மிக விளைந்த அந்நாடுகளினின்று பொருளைக் கொணர்ந்து விளைவுக் குறைவை நிறைவு செய்தது. அதனால் நம்நாட்டு அறிஞர் பார்வைக்கு நாட்டின் பொருளா தாரம் சுருங்கிக் கெடுவது தோன்றவில்லை; மக்களறிவின் திறமும் விருப்பும் பிறர் கருத் தறிந்து ஏவின செய்யும் அடிமைப் பணியில் ஆழ்ந்து கிடக்கும் அவலமும் புலனாகவில்லை.

பரவிய அடிமை யிருள் புலராது ஒழியாதன்றோ? பகலொளியை விழுங்கி இரவிருளைக் கான்று நின்ற காலம், அங்ஙனமே இராது புலர்ந்த ஞாயிற்றின் தோற்றத்திற்கு இடம் தருவது போல, அரசியல் அடிமையுணர்வு புலரத் தொடங்கிற்று; அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்கா விலிருந்து வந்து நம்மவர்க்கு அடிமைத் தன்மையின் புன்மையை எடுத்துக் காட்டி உரிமை வாழ்வின் உயர் மாண்பை விளக்கி வற்புறுத்தி விடுதலைப் போரை நடத்த முற்பட்டனர். அவரது தலைமையில் உரிமைப் போர் “சத்தியாக் கிரகம்” என்ற படையை ஏந்திக் கொண்டு நடப்பதாயிற்று. உரிமைப் போர் வெற்றிச் சூழ்நிலையை நெருங்கிக் கொண்டிருக்கையில், பொருளியற் குறையை மக்கள் உணருமாறு இரண்டாவது உலகப் போர் தோன்றிற்று. அதன் கண் பகலொளி மறையாத பரப்புக் கொண்ட ஆங்கிலேயரது ஆட்சிப் பண்பு வலி குன்றியது; பல்வேறு நாடுகளைக் கட்டிக் காக்கும் கடமை, அவர்கட்கே பெருஞ் சுமையாய் அவர்களையே அழிக்கும் கூற்றாக மாறிற்று. அந்நிலை யில்தான் நமது நாடு மாத்திரமன்று, நமது நாட்டைப் போல் ஆங்கிலேயர் காவலில் இருந்த அருமணம், மலயம், சாவகம், ஈழம் ஆகிய நாடுகளும் விடுதலையுற்று அரசியல் உரிமை பெற்றன. திடீரென்று எய்திய அரசியல் மாற்றத்தால், உரிமைபெற்ற நாடுகள் தம்மைத் தாமே பொருளாற் செம்மை செய்துகொள்ளத் தலைப் பட்டன. நம் நாட்டுக்கு அந்நாடுகளினின்றும் வந்து கொண்டிருந்த உண்பொருளும் பிறவும் நின்று போயின. இதனால் உண்ணும் உணவுக்கே நம் நாடு பிற நாட்டைக் கையேந்தி வருந்தும் சூழ்நிலை உண்டாயிற்று.

உரிமையரசு எய்தியதும், அரசின் ஆட்சிக்குழுவில் தன்னலம் துறந்த சமுதாயப் பணிபுரிதற் கமைந்த சிறந்த அரசியல் ஞானிகளும், தனது இன நலமே பேணாது ஏனையினத்தையும் ஒப்ப எண்ணி யுறவாடும் சமுதாய ஞானிகளும் சமுதாயப் பணியே வாணிகரின் வணிகப் பணி யென எண்ணித் தொழில் புரியும் வணிகப் பெருமக் களும், தொழிலும் அத்தன்மைத்தெனக் கருதும் தொழிற்றலைவர் களும் நாட்டில் இல்லா மையால், புதிது தோன்றிய மக்களாட்சியில், தன்னலவிருளும், இனநலப் பிசாசும், பொருள் வேட்கையும், அதிகார வெறியும், வஞ்சமும், மக்களுருக் கொண்டு இடம் பெற்றன. இரக்கமற்ற அரக்கத் தன்மை வணிகத் துறையில் புகுந்து களவுச் செயல் மேற்கொண்டு பொதுமக்களைச் சூறையாடலுற்றது; பொறாமைப் புன்மையும், பிற ராக்கம் காணத் தெரியாத பேதைமையும் தொழில் துறையில் புகுந்து உழைப்பவர் உள்ளத்தின் திண்மையை அலைக்கலுற்றது. உரிமை யெய்தி இருபத்தைந்து ஆண்டுகட்கு மேலாகியும் தொழிலும் வணிகமும் உழவும் உழைப்பும், நாட்டுக்குத் துணையும் வாழ்வும் வேலியுமாகும் சூழ்நிலையைப் பெறவில்லை. சதுதாயத்தைச் சூறையாடும் களவர் கூட்டம் எல்லாத் துறையிலும் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டதால் இன்றைய வாழ்வு வீழ்ச்சி நெறியில் இயங்குகிறது. தொழிலறிவு பெறுவோர் வீழ்கின்றனர்; வணிகரினம் வருந்துகிறது; உழவர் கூட்டம் உரமின்றி மெலிகின்றது; உழைப்பவர் ஆதரவின்றி அலமருகின்றனர்.

எண்ணுமின்! இப்போதாவது நாம் வீழ்ந்தது எங்ஙனம் என்று?

பாண்டியன் சடில பராந்தகன்


சங்க இலக்கிய காலத்துக்குபின் பாண்டிநாட்டில் களப்பிரர் என்றொரு கூட்டத்தார் வடநாட்டிலிருந்து கங்கநாடு கொங்கு நாடுகளின் வழியாகப் பாண்டிநாட்டுட் புகுந்து பாண்டி நாட்டின் தமிழ்ப் பண்பாட்டைச் சீர்குலைத்தனர். பண்டு தொட்டே சிவநெறியில் சிறந்து நின்ற பாண்டிவேந்தர் குடி மரபில் வேற்று நெறிகள் புகுந்தன; தமிழ் நூல்கள் பல அழிந்தன; தமிழியலும், தமிழ் இசையும் தமிழ் நாடகமும் தலைதடுமாறின; தமிழ் வல்ல சான்றோர் மறைந்தனர்; இந்நிலையைக் கூறவந்த பாண்டியர் வரலாறு என்னும் நூலுடையார், “இக்களப்பிரரது படையெழுச்சியினால் மதுரை மாநகரில் தமிழா ராய்ச்சி செய்துகொண்டிருந்த கடைச்சங்கமும் அழிந்துபோய் விட்டமை அறியத்தக்கது; களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இதனினும் கொடியது வேறில்லையென்று கூறலாம்; எனவே, இவர்களது ஆட்சிக்காலம் ஓர் இருண்ட காலமாகும்,” (பக்.37) என்று மனங்கரைந்து கூறுவது அறிஞர்கள் அறியவேண்டிய தொன்று.

செந்தமிழ்ப் பாண்டி வானத்தில் புதிது பரவிய களப்பிர இருளைக் கிழித்துக்கொண்டு பலர் புகழ் தமிழ் ஞாயிறு தோன்றுங் காலத்தைத் தமிழகம் எதிர் நோக்கித் தவங்கிடந்தது. கி.பி.நான்காம் நூற்றாண்டில், பண்டைத் தமிழகத்தின் இருள் கடிந்து எழுதரும் ஞாயிறுபோலப் பாண்டி வேந்தர் சிலர் தோன்றிப் பாண்டியரது பண்டைப் புகழை நிலைநாட்டுவாராயினர். இறைவன் விழி மூன்றினுள் பாண்டியர் நெற்றி விழிபோலும் மேன்மையுடைய ரென்ற கருத்துப்படக், “கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார்மாற,” (புறம்:55) என்று சங்ககாலச் சான்றோர் கூறுவது காணலாம்.

களப்பிரர்க்குப் பின்பு தோன்றிய பாண்டி வேந்தருள் கடுங்கோன் என்பவன் தலைசிறந்தவனாவன். மதுரையிலிருந்து முதற்சங்கத்தைப் புரந்த பாண்டி வேந்தருள் கடுங்கோன் என்பான் ஒருவன் உண்டு. அவன் கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டு முன்பிருந்தவன். இக்கடுங்கோன் கிறித்து பிறந்தபின் நான்கு நூற்றாண்டு கழிந்து தோன்றியவன். சிலர் இருவரையும் ஒருவனாகக்கொண்டு தடுமாறுவர்; உண்மையறிவாராய்ச்சி யுடையோர் அவர் கூற்றைக் கொள்ள மாட்டார்கள்.

களப்பிரரது கலியிருள் கடிந்த கடுங்கோன் மிக்க சிறப்புடையவன்; அவனை வேள்விக்குடிச் செப்பேடுகள்,

“களப்பிர னென்னும் கலியரசன்
கைக்கொண் டதனை இறக்கியபின்
படுகடல் முளைத்த பருதி போல்
பாண்டி யாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறம்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தாரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதி னீக்கித்
தன்பா லுரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்,”

என்று சிறப்பித்துக் கூறுகின்றன.

இக்கடுங்கோவின் வழிவந்த வேந்தருள் அரிகேசரி பராங்குச வன்மன் என்பவன் ஒருவனாகும். அவன் அக்காலத்தே கங்கநாட்டை யாண்ட வேந்தன்மகள் பூசுந்தரி என்பவளை மணந்துகொண்டான். அவனுக்கு அவள் வயிற்றிற் பிறந்தவன் நம் சடில பராந்தகன். இவனுக்கு நெடுஞ்சடையன் பராந்தகன் என்றும் பெயர் வழங்கு வதுண்டு. இவன் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரையில் இருந்து ஆட்சி செய்தான்.

இப் பராந்தகனுக்கு முன்னும் பின்னும் வந்த பாண்டி வேந்தர் பலரும் சைவராக இருப்ப, இவன் மட்டும் திருமால்பால் பேரன்பு பூண்டொழுகினான். அந்நாளில் சீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைஷ்ணவப் பெரியரான பெரியாழ்வார் இப்பாண்டியனுக்கு ஞானாசிரியராக விளங்கினார். சீவரமங்கலத்துச் செப்பேடுகள் இவனை, “பரம வைஷ்ணவன்” என்று பாராட்டுகின்றன. பெரியாழ் வாரும் திருமாலிருஞ்சோலைப் பதிகத்தில் இப்பாண்டியனைப் பாராட்டிச் சிறப்பித்திருக்கின்றார்.

இவ்வாறு “பரம வைஷ்ணவ”னாக இவ்வேந்தன் விளங்கிய போதும் சைவ சமயத்தின்பால் காழ்ப்பின்றி ஒத்த மதிப்பளித் தொழுகினான். கோயன்புத்தூருக் கண்மையிலுள்ள பேரூருக்குக் காஞ்சிவாய்ப் பேரூர் என்றும் பெயருண்டு. அங்கே சிவபெரு மானுக்குக் ‘குன்றமன்னதோர்’ கோயில் கட்டினான். திருச்சிராப்பள்ளி அம்பாச முத்திரம் திருச்செந்தூர் முதலிய இடங்களிற் காணப்படும் இவனுடைய கல்வெட்டுக்கள் இவன் அவ்விடங்களில் சிவபெருமான் திருக் கோயில்கட்கு நிலங்களும் பிற நிவந்தங்களும் விட்டிருப்பதை எடுத்தோதுகின்றன.

ஏனாதி சாத்தஞ் சாத்தனார் என்பவர் இப்பாண்டியற்குத் தானைத் தலைவருள் ஒருவர். அவர் சிறந்த புலமையும் உடையவர். இந்நாளைத் தமிழ்நாட்டு அரசியற் சுற்றத்தாரைநோக்குவோர்க்கு இது புதுமையாகத் தோன்றும். இன்றைய தமிழ்நாட்டரசியல் தமிழைக் கொள்ளாது வேற்று மொழிகளை அரசியல் மொழியாகக் கொண்டுளது. இதனால் தமிழ் தெரியாதவர்கள் தமிழ் மக்களது கல்விநெறி யமைச்சராக வர இயலுகிறது; தமது பெயரைத் தமிழில் பிழையற எழுதும் பயிற்சியில்லாதவர்களும் அரசியற் பெருந்தலை வராய் விளங்க இடந்தருகிறது; தமிழ்ப் பயிற்சி மிகவுடையவர்களைத் தாழ்ந்த வாய்ப்புடையவராகவும் இந்நிலை உண்டுபண்ணியிருக்கிறது. முன்னாளைத் தமிழ்நாட்டரசியில் தமிழிலேயே நடந்தமையின் மிக்க தமிழ்ப்பயிற்சி யுடையோர் அமைச்சராகவும் அரசர்களாகவும் இருந்து தமிழ்நாட்டைச் சிறப்பித்தனர். திருவாதவூரர் பாண்டி வேந்தர்க்கு அமைச்சராயிருந்தவர்; சேக்கிழார் சோழவேந்தர்க்கு அமைச்சுக் கடம்பூண்டிருந்தவர். வேந்தர்கள் புலமை மிகவுடைய ராயிருந்த செய்தியைச் சங்க இலக்கியங்களும் பிற்கால நைடதம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன. ஆகவே நெடுஞ்சடையன் ஆட்சியில் தானைத் தலைவருள் ஒருவராயிருந்த ஏனாதி சாத்தஞ் சாத்தனார், நல்ல தமிழ்ப்புலமையும் பாவன்மையும் பெற்றிருந்தா ரென்பது வியப்புக்குரியதொன்றன்று.

ஏனாதி சாத்தாஞ் சாத்தனார் பாண்டியன் நெடுஞ்சடையன் ஆட்சி நலத்தைக் கூறவேண்டிய விடத்து,

“அறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச்
சிலையும் புலியும் கயலும் சென்று
நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாய்
மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோல்
தென்னவன்…..
கொன்றவென்றி நெடுஞ்சுடர்வேல்
கொங்கர் கோமான் கோச்சடையன்”

என்றும், இவனுடைய தனிப் பண்புகளை,

“சிரீவரன் சிரீமனோகரன் சினச் சோழியன் புனப் பூழியன்,
வீதகன்மஷன் விநயவிச்ருதன் விக்கிரமபாரகன் வீரபரோகன்
மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்திக வீரன்
கிரிஸ்திரன் கண்டக நிஷ்டூரன் கார்ய தக்ஷணன்
பராந்தகன் பண்டிதவத்சலன் பரிபூரணன் பாபபீரு
குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிராகியன் கூடநிர்ணயன்”

என்றும் வரைந்திருக்கின்றார்.

இப்பாண்டியன் ஆட்சியில் பாண்டிநாடு இப்போது மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி யென்ற ஜில்லாக்களாகவும் அவையே பின்பு தாலூகாக்களாகவும் பிாந்திருப்பதுபோல, அரசியல் ஆட்சி இனிது நடத்தற்கேற்ப, இரணிய முட்டநாடு புறப்பறளைநாடு என்பன முதல் துடக்குளநாடு கோட்டூர்நாடு என்பன ஈறாகப் பல நாடுகளாகப் பிரிந்திருந்தது. அவற்றுள் பாகனூர்க் கூற்றம் என்பது ஒன்று. இப்போது அது சோழ வந்தான் பகுதியாக இருக்கிறது. அது மிக்க நீர்வளமும் நிலவளமும் சிறந்தது; வையையாறு பாயும் வளம் படைத்தது. இன்றைக்கும் அப்பகுதி பசுங் கம்பளம் விரித்தது போலப் பச்சென்று பயிர் செறிந்து இனிய காட்சி வழங்குகிறது. அப் பகுதியில் வேள்விக்குடி யென்பது ஓர் ஊர். அங்கே வேதியர் குடிகள் நிரம்ப இருக்கும் என்பதை நேரிற் சென்று காணாமலே அறிந்துகொள்ளுமாறு அவ்வூர்ப்பெயரே காட்டிவிடுகிறது.

அவ்வூரில் காமக்காணி நற் சிங்கன் என்றொரு வேதியன் வாழ்ந்தான். காமக்காணி என்பது அவன் குடியிற் பிறந்தார்க்கு வழிவழியாகவரும் சிறப்புப் பெயராகும். இதன்மேல் கொற்கை கிழான் என்றொரு பட்டமும் இவன் குடிப்பிறந்தாருக்கு உண்டு. ஒரு நாள் நற்சிங்கன் தன்குடிக்கு வழங்கி வரும் கொற்கை கிழான் காமக்காணி என்ற சிறப்புக்கள் உண்டானதற்குக் காரணம் அறிய வேண்டுமென விரும்பித் தன் மனையிலுள்ள பழஞ் சுவடிகளை ஆராய்ந்தான். கொற்கை கிழான் என்பதும் காமக்காணி என்பதும் பண்டை நாளில் அரசர்கள் தந்த சிறப்பு என்றும், வேந்தர்க்கு வேள்விமுடித்துத் தந்தது பற்றிக் காமக்காணி யென்ற சிறப்பும் தொடக்கத்தில் தம்முன்னோர் கொற்கைப் பகுதியில் வாழ்ந்திருந்து பின்பு இப்பகுதியிற் குடியேறினர் என்றும், நாட்டு மக்களின் நலங்குறித்துச் செய்த நற்பணி கண்டு வியந்த பண்டை வேந்தர் தன் முன்னோர்க்குக் கொற்கை கிழான் என்ற சிறப்பை நல்கினரென்றும் அறிந்தான். இவ்வாறு ஒவ்வொன்றாய்ப் பார்த்து வருகையில் வேள்விக்குடி யென்ற வூர் தனக்கு உரியதென்றும், இடைக்
காலத்தே களப்பிரர்களால் அவ்வுரிமை இழக்கப்பட்டதென்றும் கண்டான். ‘பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்தவர்போல்’ பெருமகிழ்வு கொண்டான். அவ்வூரில் வாழ்ந்த முதியவரைக் கண்டு அவர்களோடு அளவளாவி உண்மையை உறுதிசெய்து கொண்டான்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா? உதவாதே; இதற்கு என் செய்வது என்று பலபட எண்ணினான். வேறு சில வேதியர்களைக் கலந்து செய்யவேண்டிய செயல்வகைகளை யாராய்ந்தான். இறுதியாக, வேந்தன்பால் இச் செய்தியை முறையிடுவதெனத் துணிந்தான்.

பின்பொரு நாள், நற்சிங்கன் கூடல்நகர்க்குச் சென்று வேந்தன் கோயில் வாயிலில் நின்று முறையிட்டான். காவலர் சென்று வேந்தனுக்குத் தெரிவித்து நற்சிங்கனையும் மன்னன் திருமுன் கொண்டுசென்று நிறுத்தினர். நெடுஞ்சடையன் நற்சிங்கனை நோக்கி ‘என்னே நின்குறை?’ எனப் பணித்தான்.

“வேந்தே, நின் முன்னோருள் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யென்றொரு பாண்டி வேந்தனார் ஆட்சி செய்தார். அவர்வெற்றி மிகுதியும் வேள்வி மிகுதியும் உடையர்; அவர் தன்னை எதிர்த்த மறவரை வென்று கழுதையேர் பூட்டிப் பாழ் செய்த பகைவர் எயில்கள் பல; விளை புலங்களில் தேரைச் செலுத்தி யழித்த பகைவர் நாடுகளும் பல; பகைப் புலத்தில் களிறுகளைப் பரப்பிப் பாழ்செய்த நீருண் கயங்கள் பல; வெற்றிவேட்கையால் விழுங்கப் பட்டப் போர் குறித்து வந்து அவர்க்குத் தோற்றுப் பழிபூண்ட பகை வேந்தரும் பலர்.

‘நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பல.’

அதனால் நெட்டிமையார் முதலிய சான்றோர் களவேள்வியும் நான்மறை வேள்வியும் பெருக நடத்துவது கண்டு ‘யாபல கொல்லோ பெரும’ என்று அவரைப் பாராட்டியுள்ளனர். வெல்போர் வேந்தர்களில் செருக்கள வேள்வி செய்வோர் பல ராயினும், முதுகுடுமிப் பெருவழுதிபோல மறைவேள்வி பல செய்தோர் இலராதலால் அவரைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியெனச் சான்றோர் சிறப்பித்து வழங்கினர். அவ் வேந்தர் பெருமானார் பாகனூர்க் கூற்றத்தில் வேள்விக்குடி யென்னும் ஊர் இருக்குமிடத்தே பெரிய வேள்வி யொன்றைச் செய்தார். அக்காலை எம் முன்னோருள் கொற்கை கிழான் நற்கொற்றன் என்பார் அவ் வேள்வியை முடித்துத் தந்தார். அதனால் பெருமகிழ்வு கொண்ட வேந்தர் பெருமான் வேள்வி நிகழ்ந்த விடத்தை வேள்விக்குடி யென்று பெயரிட்டு வழங்கியருளினார். அன்றுமுதல் அவ்வூர் எங்கள் முன்னோர்க் குரியதாகவே இருந்து வந்தது,” என்றான்.

இதனை,

“கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாம் தவிர்த்துப்
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யென்னும் பாண்டியாதி ராஜன்
நாகமாமலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமாக்கம் பிழையாத
கொற்கை கிழான் நற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்கக்
கேள்வி யந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடியென்ற பதியைச்
சீரொடு திருவளரச் செய்தார், வேந்தன் அப்பொழுதே
நீரோடட்டிக் கெடுத்தான்,”

என்று வேள்விக்குடிச் செப்பேடு கூறுகிறது.

இவ்வாறு நற்சிங்கன் கூறக் கேட்ட நெடுஞ்சடையன் அவனை நோக்கி, ‘பின்பு அது என்னாயிற்று?’ என்று வினவினான்.

“வேந்தே, நற் கொற்றனார் பெற்ற வேள்விக்குடி அவர்க் குரியதாகவே நெடுங்காலம் இருந்துவந்தது. பின்னர் இந்த நாட்டில் களப்பிரர் என்னும் கொடுங்கோன் மன்னர் புகுந்து பாண்டி நாட்டை அலைத்தனர்; பாண்டி மன்னர்களையும் நாட்டினின்றும் ஓடுமாறு துரத்தினர்; நாட்டைத் தாம் கைக்கொண்டு நாட்டு மக்கட்குப் பேரின்னலை விளைத்தனர். பேரூர்களையும் சீறூர்
களையும் தீக்கிரையாக்கினர். மற மிக்க மக்கள் பலர் மாண்டனர்; மறக்கடி மகளிர் தீப்புகுந்தனர். கடவுள் நிலையங்களும் கல்வி நிலையங்களும் சீரழிந்தன. வெளிநாட்டார் புகழும் வீறுபெற்றிருந்த தமிழ்மக்கள் ஒளியிழந்து குன்றினர். பண்டை வேந்தர்கள் பாணர் கூத்தர் புலவர் அந்தணர் என்ற இவர்கட்கு நல்கியிருந்த ஊர்களை அரசியலிற் சேர்த்துக் கொண்டு, அவ்வேந்தர் பெற்றிருந்த புகழ் விளக்கத்தை மங்கு வித்தனர். தத்தம் மனைகளிலிருந்து மானமுடன் வாழ்க்கை நடத்திய மக்கள் மானமிழந்து மனைதோறம் இரந்துண்டு வாழும் வறுமைநிலை எய்தப் பண்ணினர். அதனால் என் முன்னோனான நற்கொற்றன் பெற்ற வேள்விக்கடி அரசியலில் சேர்ந்துவிட்டது,” என்று நற்சிங்கன் எடுத்துரைத்தான். சடில பராந்தகன் உள்ளத்தில் களப்பிரர்பால் பெருவெறுப்பும் ஏனை அந்தணர் முதலியோர்பால் கழிபேரிரக்கமும் பெருகின. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து தான் காக்கும் பாண்டி நாட்டிற்குப் பகைவர் செய்த தீங்கினைக் கேட்க உள்ளம் பதறிற்று. உடனே ‘மறையோய் இனிக் கூறுவதைச் சுருங்கச் சொல்லுக,’ என்றான். நற்சிங்கன். அஞ்சி,

“ஒல்காத வேற்றானையோடு ஓதவேலியுடன் காத்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யெனும் பரமேசுரனால்
வேள்விக்குடி யெனப்பட்டது கேள்வியிற் றரப்பட்டதனைத்
துளக்கமில்லாக் கடற்றானையாய் களப்பிரரால் இழக்கப்பட்டது,”

என்று விண்ணப்பஞ் செய்தான்.

கேட்ட நெடுஞ் சடையன் முறுவலித்து, ‘நன்று நன்று’ எனத் தலையசைத்து ‘நீ சென்று பாகனூர்க் கூற்றத்து நாட்டவர் கூடிய மாநாட்டில் நினக்குரிய கிழமையைக் காட்டுக,’ என்று கட்டளை யிட்டுப் பாகனூர்க் கூற்றத்து நாட்டவரை மாநாடு கூடுமாறு பணித்தான். நற்சிங்கனும் நாடு கூடுமாறு விண்ணப்பஞ் செய்து கொண்டான்.

பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்து நாட்டவர் சின்னாட்குப் பின் கூடினர். கூடின மாநாட்டுப் பேரவையில் காமக்காணி நற்சிங்கன் பழம் பொத்தகங்களையும் சான்று கூறும் முதுவர்களையும் கொணர்ந்து காட்டினன். நாட்டவர் ஆராய்ந்து நற்சிங்கன் கூறியது உண்மை யெனத் தேர்ந்து வேந்தனுக்குத் தெரிவித்தனர். வேந்தன் ஏனாதிச் சாத்தஞ் சாத்தனார் முதலிய தானைத் தலைவர்களைக் கூட்டி ஆராய்ந்து முடிபு செய்து, ‘மேனாள் எம். குரவரால் தரப்பட்டதனை எம்மாலும் தரப் பட்டது,’ என்று செம்மாந்து எடுத்துரைத்துக் கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கற்கு நீரோட்டிக் கொடுத்தான்.

இச்செயல் பின்னர்ச் செப்பேட்டில் வரையப்பட்டது. அக்காலைப் பாண்டியருடைய மெய்க்கீர்த்தியை வடமொழியில் சருவகிருது யாஜியாகிய வரோதய பட்டரும் எஞ்சிய பகுதிகளைத் தமிழில் ஏனாதி சாத்தஞ் சாத்தனாரும் எழுதித்தந்தனர். இஃது இப்போது வேள்விக்குடிச் செப்பேடு என வழங்குகிறது.

வேள்விக்குடிச் செப்பேடு பெற்று அதன் வழியாகத்தன் முன்னோர் பெற்ற செல்வத்தை மீட்பித்த சுவரன்சிங்கன் தான் பெற்றதனைத் தானே மேற்கொள்ளாது தன் உடன் பிறந்தார்க்கும் பிறர்க்கும் பகுத்தளித்தான். பெற்றதனை முதலில் அவன் மூன்றுகூற செய்து ஒரு கூற்றைத் தனக்கு வைத்துக் கொண்டு ஏனை இரு கூறுகளை ஐம்பது வேதியர்க்கு நீரோட்டிக் கொடுத்தான். தனக்காக வைத்த ஒரு கூற்றிலும் தம்பி மார்க்கு நான்கும் தன் சிற்றப்பனார் மக்களுக்கு ஆறுமாகப் பங்கு செய்துதந்தான். இறுதியிலும் மூன்று கூற்றாரும் ஒன்றுகூடி இச் செப்பேட்டு வக்கணையைச் செவ்வையாய்ப் பாடித் தந்த ஏனாதி சாத்தாஞ் சாத்தனார்க்கு நான்கு படாகாரம் (நிலவளவு வகை) நிலம் கொடுத்துச் சிறப்பித்தனர்.இச்செய்தி முற்றும் வேள்விக்குடிச் செப்பேட்டில் நன்கு தெளியக் காணப்படு கின்றன. (Epigraphica India. Vo1. XVII. No. 16. pp. 291 -309.)

எதிரிலிசோழச் சம்புவராயன்


சோழ வேந்தனான இரண்டாங் குலோத்துங்கன் சோழ நாட்டையாண்டு வருகையில், வடக்கில் தொண்டைநாடுமுற்றும் அவனது ஆட்சியில் இருந்துது. இஃது அக்காலத்தில் இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் கோட்ம் என்பது பெயர். தொண்டை நாட்டின் மேற்குப் பகுதி பல்குன்றக் கோட்டம் எனப்படும். இதற்கு வடவெல்லை பாலாறும் தென்னெல்லை தென்பெண்ணையும் மேலெல்லை சவ்வாது மலைத்தொடரும் ஆகும். இப்பல்குன்றக் கோட்டம் அக்காலத்தே சம்புவராயர் என்ற குறுநிலத் தலைவரது ஆட்சியில் இருந்தது. அவர்கட்குப் படைவீடு என்பது தலைநகரமாக விளங்கிற்று.

வடார்க்காடு வட்டத்துப் போளூரிலிருந்து வேலூர்க்குச் செல்லும் பெருவழியில் சந்தைவாசல் என்னும் அழகிய ஊருளது. அதற்கு மேற்கில், படைவீடு, மூன்று பக்கமும் உயர்ந்த குன்றுகளால் சூழப்பட்டு அவற்றினின்று இழிந்தோடி வரும் ஆரணியாற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சிறு காடு படர்ந்து பசுந்தழை போர்த்து நிற்கும் குன்றுகளின் அடியில் மணல் பரந்த ஆற்றங் கரையில் நின்று திகழும் இவ்வூர், படை வீடு என்ற பெயர்தாங்கி யிருப்பது மிகவும் பொருத்தமேயெனக் காண்பார் கருதாதொழியார். ஒரு காலத்தில் இது செல்வம் சிறந்த திருநகரமாய் விளங்கிற்றென் பதைக் காட்டும் சின்னங்கள் பல அங்கே இப்போதும் காட்சியளிக் கின்றன. அங்கே ஒரு தேவி கோயில் உளது. ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று அத்தேவியை வழிபடுவர் அத்தேவியைப் படைவீட்டம்மன் என்று அவர்கள் பெயர் கூறுகின்றனர். சென்ற சில ஆண்டுகட்குமுன் அத்தேவி கோயிலின் திருமுன் ஆடிவெள்ளிக்கிழமைகளில் பருந்தும், கழுகும் வட்டமிட்டுத் திரியும் கொலைக்களமாய்க் காட்சியளித்தது. எண்ணிறந்த கோழிகளும் ஆடுகளும் அத் தேவிபெயரால் கொலையுண்டன. நல்லோர் சிலருடைய முயற்சியால் அக்கொடுஞ் செயல் இப்போது நின்றுபோயிற்றென்று கூறுகின்றனர்.

“இப் படைவீட்டம்மன் கோயில் அங்கு எப்படி உண்டாயிற்று?” என்று அங்குள்ள அறிஞர்களைக் கேட்டால், அதன் தலபுராணத்தைக் காணவேண்டும் என்கின்றனர். அங்கே சிதறிக் கிடக்கும் கோயிற் சுவர்களை நோக்கினால் சில கல்வெட்டெழுத்துக்கள் காணப்படு கின்றன. அவற்றைத் தொகுத்து நோக்குவோமாயின் அங்கே ‘அம்மையப்பேச்சுரம்’ என்றொரு சிவன் கோயில் இருந்ததென்பதும்,1 அக்கோயிலின் வடபுறத்தே நிறுவப்பெற்ற துர்க்கையே இத்தேவி யென்பதும் தெரிகின்றன. இத்தேவியின் காவலில்தான் பண்டைய நாளில் படைவீட்டு நகரம் விளங்கிற்று. இவ்வூர்க்கருகே வடக்குத் தெற்காகச் சுவர் வைத்ததுபோல் நிற்கும் மலை ‘இராஜ கம்பீரன் மலை’யென்று பெயர் கூறப்படுகிறது.

இராஜகம்பீரன் என்பது இந்நகரத்தேயிருந்து ஆட்சிபுரிந்த சம்புவராய மன்னருள் ஒருவன் பெயர். மாறவன்மன் சுந்தர பாண்டியன் என்பவன் ஒருகால் இப்பகுதியைக் கைப்பற்ற வேண்டிப் போர்தொடுத்தான். அவன் முயற்சி வெற்றி தாராதாயிற்று. அப்போது சம்புவராயன்பால் இனிதிருந்த இரட்டைப் புலவர்கள்,

“காற்றால் அலைப்புண்டும் கண்ணன் கடல்கடைந்தும்
ஏற்றான் எடுத்துவளைத் தெய்திளைத்தும் - ஆற்றாத
செம்பொன் மலையன்று சேலுக்கிடம் கொடுக்கச்
சம்பன் மலைகை தவா?2”

என்று பாடினர்.

இச்சம்புவராயர்கள், இடைக்காலச் சோழ வேந்தர்களின் காலத்தில் மிக்க சிறப்புற்று விளங்கினர். இவரது ஆட்சி வடக்கே சித்தூர் மாவட்டத்திலும் தெற்கில் திருவாமாத்தூர் வரையிலும் பரவியிருந்தது. கிழக்கில் திருக்கழுக்குன்றமும் அவரது ஆட்சியில் இருந்தமையின், செங்கற்பட்டு, வடவார்க்காடு, தென்னார்க்காட்டு வட்டத்தின் வடபகுதியாகிய இப்பகுதிகளைக்கொண்ட நாடு சம்புவராயர்க்கு உரியதாயிருந்தமை விளங்குகிறது.

இவர்களின் ஆட்சியும் மிகச்சிறந்து விளங்கிற்று. இதுவும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிவரை மிக்க புகழ்படைத்து நின்றது. மக்கள் பசியும் பிணியும் பகையுமின்றி இன்பவாழ்வு நடத்தினர். களஞ்சியம், கமலபாதம், மருதம், மங்கலம், அரியபாடி, கண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, ஏனாதபாடி, குடியாத்தம், வல்லம் முதலிய பேரூர்கள் சிறந்து நின்றன. இப் பகுதிக்குப் படை வீட்டரசு என்றே பெயரும் வழங்கிற்று. சில செப்பேடுகள், “ஜெயங்கொண்ட தொண்டை மண்டலத்துப் படைவீட்டு மகாராஜ்யம்”1 என்று கூறுகின்றன.

இப்படைவீட்டைக் சூழ்ந்த நிலப்பகுதி மிக்க நீர் நிலவளம் படைத்தது. இன்றும் மேலே சொன்ன பெருவரியாகச் செல்லுவோர் அப்பகுதி இனிய வளம் படைத்துத் தோற்றும் அழகிய காட்சியைக் காண்பர். அதன்கண் இன்றுபோல் அன்றும் வேதியர் பலர் வாழ்ந்தனர். அவர்களிலே கன்னடிகளும், தமிழரும், தெலுங்கரும், இலாளரும் எனப் பல திறத்தர் இருந்தனர். ஒரு காலத்தில் அவரிடையே திருமணம் பொருளாகத் தீய கொள்கை யொன்று உண்டாயிற்று. மணப்பெண்ணுக்காக மிக்க பொன்னை மணமகன் தரவேண்டும் என்றும், மணமகனுக்காக மணப்பெண்ணின் தந்தை பொன் கொடுக்க வேண்டும் என்றும் வேதியர்கள் ஒரு வழக்காறு ஏற்படுத்திக் கொண்டனர். இத் தீக் கொள்கையின் பயனாக பொன் கொடுத்து மணம் செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர் தவறான கோத்திர சூத்திர சாகைகளில் மணஞ்செய்து கொள்ளலாயினர். அதனால் அச் சமுதாயத்தின் பண்பாடு வலியிழக்கத் தொடங்கிற்று. அதனை உணர்ந்த அறிஞர் பலர் விரிஞ்சிபுரத்து வழித்துணைநாதர் கோயிலில் கூடியிருந்து, “இற்றைநாள் முதலாக இந்தப்படை வீட்டு ராஜ்யத்துப் பிராமணரில் கன்னடிகர் தமிழர் தெலுங்கர் இலாளர் முதலான அசேஷ கோத்ரத்து அசேஷ சூத்ரத்தில் அசேஷ சாகையிலவர்களும் விவாகம் பண்ணுமிடத்துக் கன்யாதானமாக விவாகம் பண்ணக் கடவராகவும், கன்யா தானம் பண்ணாமல் பொன்வாங்கிப் பெண் கொடுத்தால் பொன் கொடுத்து விவாகம் பண்ணினால் இராஜதூஷ ணத்துக்கும் உட்பட்டுப் பிராமண்யத்துக்கும் புறம்பாகக்கடவா ரென்று பண்ணின தர்மஸ் தாபன சமய பத்ரம்; இப்படிக்கு அசேஷ வித்ய மகாஜனங்கள் எழுத்து..”1 என்றோர் ஏற்பாடுசெய்து கொண்டார்கள். இவ்வாறே மற்றைச் சமுதாயத்தாரும் தத்தம் சமுதாய வளர்ச்சிக்கு ஆவனவற்றைச் செய்துகொண்ட செய்தியை அப் பகுதியிற் பிற இடங்களிலுள்ள கல்வெட்டுக்களும் மாதேவி மங்கலத்துக் கல்வெட்டுக்களும் கூறுகின்றன. நாட்டரசியல் நன்கமைந்திருந்தாலன்றி மக்கட்குத் தம் சமுதாய வளர்ச்சிக்கண் கருத்துச் செல்லாது; இப் படைவீட்டரசியலில் மக்களில் ஒவ்வொரு சமுதாயத்தாரும் தத்தம் வளர்ச்சி குறித்து ஆவன செய்வதில் கருத்தைச் செலுத்தியதொன்றால் சம்புவராயர்களின் ஆட்சியது சால்பு இனிது விளங்குகிறது.

இச் சம்புவராயர்களின் ஆட்சி தொண்டைநாடு முற்றும் பரந்து சிறந்து நிற்பினும் இவர்கள் முடிவேந்தரான சோழ வேந்தர் களுக்கு அடங்கி அவர்வழி நின்றுஒழுகினர். சோழ வேந்தர்கள் வலிகுன்ற நேர்ந்தபோது இவர்கள் படைவேண்டிய வழி வாளுதவினர்; வினை வேண்டியவழி அறிவுதவினர். இவர்களுடைய அருஞ்செயலைப் பாராட்டிச் சோழவேந்தர்களும் இவர்கட்கு இனிய சிறப்புக்களைச் செய்தருளினர். இவர்களிற் பலர் குலோத்துங்கசோழச் சம்புவராயன், வீரநாராயணச் சம்புவராயன் எனப் பெயர் தாங்கியிருப்பதே இதற்குப் போதிய சான்று பகராநிற்கும்.

முன்பு படைவீட்டம்மனைப்பற்றிக் கூறியபோது அங்குள்ள கல்வெட்டுக்கள் அம்மையப்பேச்சுரம் என்ற ஒரு சிவன் கோயிலைக் காட்டுகின்றன என்பது கண்டோம். அப்பெயர், சம்புவராயருள் ஒருவனான அம்மையப்ப சம்புவராயனைக் குறிக்கிறது. அச் சிவன்கோயிலை அத்ந அம்மையப்பசம்புவராயனோ அவன் மகனோ கட்டியிருக்கவேண்டும். அவன் வழிவந்தோருள், கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடையில் இராஜகம்பீரச் சம்புவராயன் என்பான் ஆட்சிசெய்தான். அவன் பெயரால்தான் படைவீட்டருகில் நிற்கும் மலை இராஜ கம்பீரன் மலையென்ற பெயர் பெறுவதாயிற்று. அப்பகுதியில் ஆரணியாற்றின் வடகரையில் உள்ள குன்றத்தூர்க்கும் இராஜ கம்பீரநல்லூர்1 என்பது பெயர்.

இப் படைவீட்டைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த சம்புவராயர்களுள் எதிரிசோழச் சம்புவராயன் என்பான் ஒருவன். அவன் சம்புகுலப்பெருமாளான இராஜகம்பீரன் வழிவந்தோனாவன். அவனுக்குத் துணைவராய் அவன் படைத்தலைவர்களாய் விக்கிரம சோழப் பேரரையன், அம்பலக்கூத்தனான தென்னாட்டரையன் எனப் பலர் இருந்தனர். அவருள் விக்கிரசோழப் பேரரையன் தொண்டைநாட்டுக் களத்தூர்க் கோட்டத்திலுள்ள மதுராந்தகம் என்னும் ஊர்க்கு அண்மையிலுள்ள குன்றத்தூரில் இருந்துவந்தான். அம்பலக்கூத்தன் தென்பெண்ணையாற்றின் வடகரையான மலாடு என்ற இருங்கோளப்பாடி பனையூர் நாட்டு மலையனூர் என்னும் ஊரிலிருந்தான். இவனுடைய போர்வன்மையும் மனநன்மையும் சம்புவராயனுக்குப் பேருவகைதந்தன. அதனால் சம்புவராயன் அவனை ஒரு படைத்தலைவனாக்கிச் செம்பூர்க்கோட்டத்து முக்காட்டுப்பட்டில் தங்கியிருக்குமாறு பணித்திருந்தான்.

பேரரையனும் தென்னாட்டரையனும் சம்புவராயனுக்கு இரு கண்கள்போல் திகழ்ந்தனர். கண்ணிரண்டும் ஒன்றையே காணும் என்பதற்கேற்ப, இருவர் உள்ளங்களும் ஒரு பொருளிலே ஒன்றிநின்றன. தென்னாட்டரையனும் பேரரையனும் அந்நாட்டிற் பெண்மைநலத்தால் புகழ்பெற்றிருந்த வம்பு என்பவள்பால் உள்ளம் ஒன்றிநின்றனர். இருவரும் அவளை மணந்துகோடற்க முயன்றனர். அவளைப்பெற்ற தந்தையும் உடன்பிறந்தவரும் இருவரிடத்தும் ஒத்த பண்பும் செயலும் இருப்பதுகண்டு செய்வதுதெரியாது திகைப்புற்றனர். இருவருள் ஒருவரைத் தேர்ந்துகொள்ளும் உரிமையை அவள்பாலே விட்டொழித்தனர். இருவருடைய குணஞ்செயல் களையும் கண்டறியும் வாய்ப்பும் வம்புவுக்கு வழங்கப்பெற்றது.

முடிவில் ஒருநாள் வம்பு என்பவட்குத் தன்னுட்கருத்தைத் தெரிவிக்கவேண்டிய நிலையுண்டாயிற்று. அவளுடைய உள்ளத்தைத் தென்னாட்டரையன் தன் குணஞ்செயல்களாற் கவர்ந்து கொண்டான் என்பது புலனாயிற்று. பெற்றோரும் உற்றோரும் உடனிருப்ப வம்புவுக்கும் தென்னாட்டரையனுக்கும் திருமணம் நடந்தது. தென்னாட்டரையன் வாழ்க்கைத் துணைவியாய் வம்புவும் அவனது திருமனைசென்று சேர்ந்தாள்.

தென்னாட்டரையன் வம்புவை மணத்தற்குச்செய்த முயற்சி யிடையே பேரரையனைப் பற்றிச் சில வடுவானவுரைகளை வழங்கியிருந்தான் என்றும், அவ்வாறு வடுக்காணும்வகையில் தன்பால் குற்றமொன்றும் இல்லையென்றும் பேரரையன் எண்ணினான். அவ்வெண்ணத்தினூடே அழுக்காற்றுத்தீயும் எழுவதாயிற்று. அதனால் தென்னாட்டரையனுக்கும் பேரரையனுக்கும் மனக்கடுப் புண்டாயிற்று. இடையிடையேயுண்டான அரசியல் நிகழ்ச்சிகள் சிலவற்றில் தென்னாட்டரையன் மேன்மையுற்றுச் சம்புவராயன் பால் சிறப்புக்கள் பெறுவானாயினன். இவ்வாற்றால் பேரரையன் உள்ளத்திற் பிறந்திருந்த கடுப்பு வளர்ந்து பகையாய் மூண்டது. நாள் செல்லச்செல்ல, தென்னாட்டரையனை ஒழித்தாலன்றித் தனக்கு மனவமைதி யெய்தாது என்னும் நிலையையும் அவன் எய்தினான்

பேரரையன் எண்ணியது எண்ணியவாறு முடிக்கும் மனத்திட்ப முடையவன். அதனால், தன் மனத்துக்கு இயைந்த மறவர்களைக் கலந்து தன் கருத்தை முற்றுவிக்குமாறு பணித்து அதற்கு வேண்டுவன செய்துதந்தான். தென்னாட்டரையன் முக்காட்டுப்பட்டில் தானைத் தலைவனாய்ப் பாடிகாவல் புரிந்து வந்தான். அவனுக்குப் பேரரையன் தன்பால் கறுவுகொண்டிருக்கிறான் என்ற செய்தி தெரியாது. பெண் விழைவால் பெருந்தீமைகளைச் செய்தோர் வரலாறுகள் பல அறிந்திருந்தானாயினும், பேரரையன் தான் அறிவு பேதுறுவது நன்றன்று என்பதை யுணர்ந்திலன். ஒருநாள் இரவு முக்காட்டுப் பட்டில் தென்னாட்டரையன் தனித்திருக்கும் செவ்விநோக்கிப் பேரரையன் விடுத்த கொலைமறவர் வந்து அவனை வளைத்துக் கொண்டனர். தென்னாட்டரையன் நெடுநேரம் அவரோடு கைகலந்து பொருதான். முடிவில் பேரரையனே தென்னாட்டுரையனைக் கைப்பற்றித் தன் கைவாளால் எறிந்து கொன்றுவிட்டு ஓடிப்போனான்.

தென்னாட்டரையன் கொலையுண்டு வீழக் கண்ட வம்பு ஓவெனக் கதறிப்புலம்பினாள். அருகிருந்த தானைமறவர்கள் வந்துகூடுமுன் பேரரையனுடைய கொலைமறவர்கள் ஓடிமறைந்தனர். வம்புவுக்குக் கையறவு பெரிதாயிற்று. கணவன் உடல்மேல் வீழ்ந்து புலம்பினாள். செய்தியறிந்ததும் அவளுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும் வந்துசேர்ந்தனர். அவர்கள் எத்துணையோ சொல்லித்தேற்றியும் தேறாளாயின வம்பு, அவன் உடலையெரித்த ஈமத்தீயிலேயே தானும்வீழ்ந்து உயிர்கொடுத்தாள்.

தென்னாட்டரையனை யெரித்த ஈமத்தீயை வலம் வருகையில், வம்பு, விக்கிரமசோழப் பேரரையன் மறவர் சிலருடன் போந்து தன் கணவனை வளைத்துக்கொன்ற திறத்தை விரிவாகச் சொல்லிப் புலம்பினாள். அப்போது அதனைக் கேட்டிருந்தவர்களில் தென்னாட் டரையன் தமயனும் ஒருவனாவான். அவன் தென்னாட்டரையன் போல் பிறிதோரிடத்தில் பாடிகாவற் றலைவனாய் இருந்தான். அவன் பெயர் இராமநம்பி யான இருங்கோளப்பாடி நாடாள்வான் என்பது. தன் தம்பியைக் கொன்ற பேரரையன்பால் இருங்கோளப் பாடி நாடாள்வானுக்குப் பெரிய பகைமையுண்டாயிற்று. பழிவாங்கும் மனப்பான்மை அவன் உள்ளத்தே குடிகொண்டது.

நாடாள்வான் பேரரையனைவிட வினைத்திட்பமும் அதற்கேற்ற மனத்திட்பமும் உடையன். கொலைமறவர் பலரைச் செலுத்திப் பேரரையனைப்பற்றிக் கொலைபுரியுமாறு பணித்தான். அவர்கள் பேரரையனைத் தேடலுற்றனர். பேரரையன் தான்செய்த தவற்றை யுணர்ந்து மறைந்து கொண்டான். அச்செயலால், ஒரு குற்றமும் செய்யாத அவன் துணைவர் பலர் மாண்டனர்; உறவினர் பலர் துன்புற்றனர்; அவர்தம் வீடுகள் தீக்கிரையாயின; சுருங்கச்சொன்னால், பேரரையனுடைய களத்தூர