பெருங்கற்கால யாழ்ப்பாணம்

பொ. இரகுபதி M. A.
வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை - 5
மாகாஜனாக் கல்லூரி,
தெல்லிப்பழை,
1983 - 06 - 24

-------------------------------------------

Ponnampalam Ragupathy, M. A.
dept. of History, University of Jaffna.

Megalithic Jaffna.

Pavalar Thuraiappaapillai Memorial Lecture -5
Mahajana College, Tellippalai, Sri Lanka.

THIRUMAKAL PRESS, CHUNNAKAM.
24-6-1983

---------------------------------------------------------------------

வட இலங்கை வரலாறு
வளம் பெற்றுத் தெளிவுறுகிறது

த. சண்முகசுந்தரம், B. A., Dip.-in-ed.
அதிபர்,
மகாஜனாக் கல்லூரி.

வட இலங்கைக்குப் பழம்பெரும் தனிவரலாறு ஒன்று உண்டு. இக்கோட்பாட்டை மகாஜனாக் கல்லுரியை நிறுவிய பாவலர் துரையப்பாபிள்ளை 1907ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தினார் என்பது இங்கு நினைவு கூரப்படவேண்டியது.

வட இலங்கை வரலாற்றாய்வு நடத்திய முன்னோடிக் கல்விமான்களிடம் கவலை ஒன்று நிலவியது. இலக்கியம் தரும் சான்றுகளாக மகாவமிசம், சூளவமிசம், வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள் அமைந்திருந்தன. இலக்கியம் தரும் சான்றுகளை மேலும் வலியுறுத்தி ஐயமின்றி நிலைநாட்ட அகழ்வாராய்ச்சி, பொறிப்பு, பண்டைய மட்பாண்டம், பழைய காசு போன்றவை கிடைக்கவில்லையே என ஆய்வாளர் கவலையுற்றனர். தொல்லியலாய்வில் ஈடுபடும் கல்விமான்கள் யாழ்ப்பாணத்தில் 'தடைதாண்டி' பலவற்றைக் கடந்தே ஆகவேண்டும். இத் 'தடைதாண்டிகள்' யாவற்றையும் கடந்து தொல்லியலாய்வினை நடத்தியவர் சிலரே. அவரில் ஒருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பொன்னம்பலம் இரகுபதி. இவரின் முயற்சியின் பயனாக யாழ்ப்பாணத்தில் வியத்தகு ஆதிக்குடியிருப்புப் பண்பாடு ஒன்று வெளிக்கொணரப்பட்டது. "சான்றில்லை, ஆதாரம் இல்லை, துணைச்சான்றில்லை, பக்கச்சான்றில்லை"? எனக் கவலையுற்றிருந்த ஆய்வாளர்களுக்கு ஆனைக்கோட்டையிலும் பிற இடங்களிலும் பெற்ற புதிய சான்றுகள் பெருவிருந்தாக அமையும் என்பது உறுதி.

பேராசிரியர் கலையருவி க. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாண வரலாற்றை நுணுகி ஆராய்ந்தவர். தொடர்ச்சியான யாழ்ப்பாண வரலாற்றை, பல்கலக்கழக மட்டத்தில் முதன் முதல் எழுதிய பெருமை இவரைச் சாரும். பின்வந்த யாழ்ப்பாண வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக இந்த ஆய்வு அமைந்தது. யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் குறித்து திட்டவட்டமான சில கருத்துக்களை பேராசிரியர் கணபதிப்பிள்ளை கொண்டிருந்தார். இவற்றை நிறுவுவதற்கு மேலும் சான்று தேடி அன்று தனித்து நின்று அவர் உழைத்தார். ஆனால் இன்று, யாழ்ப்பாணத்துத் தொல்லியல் ஆய்வுகள் பேராசிரியரின் கருத்துக்கள் சரியென்பதை நிலைநாட்டியுள்ளன.

பாவலர் துரையப்பாபிள்ளையின் கனவுகள் பல. அவர் கல்விமான்; சிந்தனையாளர்; சீர்திருத்தவாதி; வரலாற்று ஆய்வு முன்னோடி. அவரின் பெயரால் மணிமண்டபம். இந்த துரையப்பாபிள்ளை மணிமண்டபத்தில் பாவலரின் விழுமிய வழிவந்த எமது பழைய மாணவன் பொன்னம்பலம் இரகுபதி துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரையை நிகழ்த்துவது பொருத்தம். பெறுதற்கரிய தொல்லியற் சான்றுகள் மூலம் யாழ்ப்பாண வரலாற்றை எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் இவர் முன்வந்துள்ளார். இத்தகைய ஆய்வுகளால் வட இலங்கை வரலாறு வளம்பெற்றுத் தெளிவுறும் என்பது திண்ணம்.

'பெருங்கற்கால யாழ்ப்பாணம்' என்ற இச்சிறுநூல் பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுச் சொற்பொழிவு வரிசையில் ஐந்தாவதாகும். இதை வெளியிட்டு வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

---------------------------------------------------------------

பெருங்கற்கால யாழ்ப்பாணம்

தனித்துவம் வாய்ந்ததாகக் கணிக்கப்படக்கூடிய வரலாற்றுப் பாரம்பரியம் எல்லாப் பிரதேசங்கட்கும் அமைவதில்லை. இவ்வகையில், யாழ்ப்பாணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாற்று இலக்கியங்களில் தனியாக இனங்காணப்பட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இலங்கையில் முதல் வரலாற்று இலக்கியங்களான தீபவம்சம், மகாவம்சம் என்பன இப்பிரதேசத்தை நாகதீப (நாகத்தீவு) என அழைத்துள்ளன.(1) இதன் தனித்துவம் காலப்போக்கில் யாழ்ப்பாண இராச்சியமாகப் பரிணமித்த பொழுது, இதற்கெனத் தனியான வரலாற்று நூல்களும் வரலாற்றாசிரியர்களும் வரலாற்றியலும் (Historiography) தோன்றியமையைக் காண்கிறோம். கைலாய மாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகியன இத்தகைய, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வரலாற்றியல் இலக்கியங்களாகும்.(2)

யாழ்ப்பாணத்தில் மையங்கொண்ட பண்பாட்டுப் போக்கொன்றின் தொடர்ச்சியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமய, மொழி, கல்வி, பண்பாட்டு மறுமலர்ச்சியானது யாழ்ப்பாண வரலாற்றை எழுதுவதிலும் புதியதொரு உத்வேகத்தைத் தந்தது. நூல் முகவுரைகளிலும் சிறுகட்டுரைகளிலும் முதலில் இவ்வரலாறு எழுதப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலியார் செ. இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேல்லுப்பிள்ளை ஆகியோரது யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் இதன் வளர்ச்சியாகவே தோன்றின எனலாம்.(3)

இதேகாலத்தில் போல் பீரிஸ் கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாராய்வுகள், ஆதிகால யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைத் தொல்லியற் சான்றுகளுடன் வெளிப்படுத்தின.(4) கதிரைமலை என்ற கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு, யாழ்ப்பாண இராச்சிய காலத்திற்கு முந்திய புராதன அரசு ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்ததென்ற கருத்தினை முதலியார் இராசநாயகம் முதன் முறையாக அழுத்தமாக முன்வைத்தார்.(5)

இவர்களோடு சம காலத்தவராய், யாழ்ப்பாணத்தில் முன்னோடியாக விளங்கிய கல்விமானும் சிந்தனையாளரும் பண்பாட்டு மறுமலர்ச்சியாளருமாகிய பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தினையும் பண்பாட்டுப் போக்கினையும் தமது சிந்தனைக் கருவாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, 'இலங்கைத் தேசிய நோக்கு' (Ceylon National Review) பத்திரிகையில், 'யாழ்ப்பாணம் - அன்றும் இன்றும்' என அவர் எழுதிய கட்டுரை இதற்குச் சான்று.(6) யாழ்ப்பாணம், தனக்கெனத் தனித்துவம் வாய்ந்த வரலாறு, பண்பாட்டுப் பாரம்பரியங்கள் அமைந்தவொரு தமிழ்த் தேசம் என்ற கருத்தினை அவர் இதில் முன்வைத்துள்ளார். அவர் இயற்றிய 'யாழ்ப்பாண சுவதேசக் கும்மி' என்ற கவிதை நூலின் தலையங்கமே இக்கருத்தினைச் சுட்டி நிற்பதைக் காணலாம்.

இவர்களது காலகட்டத்திற்குப் பின்னர், இலங்கை முழுவதிற்குமான 'தேசியவாதத்தினைக்' கட்டியெழுப்பும் வகையில் வரலாறு படைப்பதே காலத்தின் போக்காக இருந்தது. இலங்கைத் தேசிய வரலாற்றில் ஓர் அங்கமாக யாழ்ப்பாண வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் நோக்கும் நூல்கள் வெளிவந்தன. நீண்டதொரு இடைவெளிக்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கான தனியான வரலாற்று நூல்களெதுவும் உருவாகவில்லை. இருந்தும், இவ்விடைவெளிக்குப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண வரலாற்றை எழுதினார்கள். பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை (சங்கிலி நாடக முகவுரை), கா. இந்திரபாலா (யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்), சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna) ஆகியோரது ஆய்வு நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.

1980ஆம் ஆண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கா. இந்திரபாலா அவர்களின் ஆதரவில், இப்பிரதேசத்தில் ஆய்வுகளைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் யார்? எப்பொழுது அவர்கள் இங்கு வாழ்ந்தார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? இப்பிரதேசத்தின் தனித்துவமான பண்பாட்டிற்குக் காரணமான வரலாற்றுப் போக்கு என்ன? - இத்தகைய வினாக்களே யாழ்ப்பாணத்தின் ஆதிவரலாறு குறித்த இந்த ஆய்வுகளிற்கு அடிப்படையாக அமைந்தன.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இவ்வினாக்களிற்கு விடையளிக்கக்கூடிய இலக்கியம், சாசனம் போன்ற எழுத்தாதாரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில், மனிதன் விட்டுச் சென்ற பொருளெச்சங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலத்தை அறிய உதவும் தொல்லியல் உத்திகளே நம்பிக்கை தருவதாக அமைந்தன. இத்தொல்லியல் ஆய்வு முயற்சியின் பயனாகக் கடந்த மூன்றாண்டு காலத்தில், சில அடிப்படைத் தகவல்களை ஒளிக்கீற்றாகவேனும் காணக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவற்றுள் முக்கியமானவை யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகளான பெருங்கற்பண்பாட்டு (Megalithic Culture) மக்கள் பற்றிய தரவுகளாகும். இவற்றைக் கூறுவதற்கு முன்னர், இலங்கையின் ஆதிக்குடிகள் குறித்த அண்மைக் காலத்துக் கருத்துக்களைச் சுருக்கமாக நோக்குவது இங்கு அவசியமாகின்றது.

இலங்கையில் மிகத் தொன்மை வாய்ந்ததாக இதுவரையில் அறியப்பட்டுள்ள பண்பாடு குறுணிக்கற் பண்பாடாகும். (Microlithic or Mesolithic Culture). இது தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்துக் குறுணிக்கற் பண்பாட்டுடன் தொடர்புடையதென்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.(7) ஏறத்தாழப் பத்தாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பண்பாடு இலங்கையில் நிலவியதாகத் தெரிகின்றது. சமீப காலத்தில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்த திரு. சிறான் தெரணியகல அவர்களது ஆய்வுகளால் இப் பண்பாடு பற்றிய அறிவு விரிவடைந்துள்ளது.(8) யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தவிர, இலங்கைத் தீவடங்கிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கள் உட்பட, இப்பண்பாட்டெச்சங்கள் காணப்படுகின்றன. தொல்லியல் திணைக்களத்துடன் கூட்டாகக் கடந்த ஆண்டு நாம் மேற்கொண்ட ஆய்வொன்றில், யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் சமீபமாக, பூநகரிப் பகுதியிலும் (யாழ். மாவட்டம்) இப் பண்பாடு நிலவியமை அறியப்பட்டுள்ளது.(9)

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திற்குரியதாகிய (Prehistoric Period) இக் குறுணிக்கற் பண்பாட்டையடுத்து இலங்கையில் வரலாறு தொடங்கும் காலத்தில். (Protohistoric Period) அதற்கும் காரணமாய் அமைந்தது தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டின் வருகை என்பதே இப்பொழுது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். இது இலங்கைக்கு ஆரியர் வந்தமை குறித்து இதுவரையும் தெரிவிக்கப்பட்டு வந்த பாரம்பரியக் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இலங்கைக்கு ஆரியர் வந்தமைக்கு எவ்விதத் தொல்லியல் ஆதாரங்களும் காணப்படவில்லை என்றும் மாறாகத் தென்னிந்திய வரலாற்றுத் தொடக்ககாலப் பெருங்கற்பண்பாடே இலங்கையிலும் வரலாற்றுத் தொடக்கத்தைக் கொணர்ந்தது என்ற கருத்து அண்மைக் காலங்களில் பலமடைந்து வருகின்றது.(10)

பெருங்கற்பண்பாடு எனப்படுவது தென்னாசியாவைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரியதாகும். கி. மு. ஆயிரம் ஆண்டளவிலிருந்து கிறிஸ்தாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகள் வரை இப்பண்பாடு நிலவியது. முதுமக்கள்தாழி, குரங்குப்பட்டடை, கற்கிடை எனப் பல்வேறு வகைப்பட்ட ஈமச்சின்னங்களை இறந்தோருக்கு நிறுவும் பண்பாட்டையுடைய மக்களையே இப்பெயர் சுட்டி நிற்கின்றது. பெருங்கற்களால் இந்த ஈமச்சின்னங்கள் நிறுவப்பட்டமையால் இது பெருங்கற்பண்பாடு எனப் பெயர் பெற்றது. ஈமச்சின்னங்களை மாத்திரம் கருத்திற்கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் அதனிலும் முக்கியம் வாய்ந்த பல அம்சங்களையும் இப் பண்பாடு குறித்து நிற்கின்றதெனலாம்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன் கூடிய பயிர்ச்செய்கை, விருத்தியடைந்த நிரந்தரக் குடியிருப்புகள் போன்றவை பெருங்கற் பண்பாட்டுடனேயே ஆரம்பமாகின்றன. தமது பண்பாட்டிற்கே சிறப்பாக உரிய, உட்புறம் க்ச்றுப்பாகவும் வெளிப்புறம் சிவப்பாகவும் இருக்கும் மட்பாண்ட மொன்றை இவர்கள் உபயோகித்தார்கள். தென்னிந்தியாவில் நகரங்கள் தோன்றியமையும் அரசுகள் தோன்றியமையும் பெருங்கற் பண்பாட்டின் வளர்ச்சியாகவே நிகழ்ந்தன. தமிழ்நாட்டின் முடியுடை மூவரசுகள் பெருங்கற்பண்பாட்டின் விளைவே. ஆதித்திராவிட அடிப்படையிலிருந்து, தமிழ்மொழி செம்மைப்படுத்தப்பட்டு, சங்க இலக்கியங்கள் படைக்கும் அளவிற்கு உயர்ந்தமையும் பெருங்கற்பண்பாட்டின் முதிர்ச்சியாகவே நிகழ்ந்தது. பெருங்கற்காலத்தின் முடிவிலெழுந்த இச்சங்க இலக்கியங்களில் இப்பண்பாட்டம்சங்களைப் பரக்கக் காணலாம்.(11)

இத்தகையதொரு பண்பாடே கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இலங்கையிலும் பரவி, இலங்கையில் நகரங்கள் தோன்றுவதற்கும் குளநீர்ப்பாசன அடிப்படையில் எழுந்த அநுராதபுர நாகரிகத்திற்கும் தோற்றுவாயாக அமைந்ததென்பதை நிறுவும் தொல்லியற் சான்றுகள் இலங்கையின் பலபாகங்களிலும் பெறப்பட்டுள்ளன. இலங்கையில் பெருங்கற்பண்பாடு பற்றிய விரிவான ஆய்வொன்றைக் கலாநிதி சி. க. சிற்றம்பலம் செய்துள்ளார். இது பூணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கலாநிதிப் பட்ட ஆய்வு. பொதுவானதொரு பெருங்கற்பண்பாடு தென்னிந்தியாவில் எவ்வாறு தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவித்ததோ அதுபோலவே இலங்கையின் சிங்களப் பண்பாடும் இப்பெருங் கற்பண்பாட்டிலிருந்தே முகிழ்த்தது என்ற கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.(12)

இலங்கையில் முதன்முதலாக நகரங்கள் தோன்றியமைக்கும் பெருங்கற்பண்பாடு அடிப்படையாக இருந்ததென்பதில் ஐயமில்லை; ஆனால், இலங்கை முழுவதிலும் பரவலாகவும் செறிவாகவும் ஒரே கலத்தில் இப் பண்பாடு பரவி, அதன்காரணமாக இம் மாற்றங்கள் நிகழ்ந்தனவா என்பது ஆராயப்பட வேண்டியது. இலங்கையில் குறித்த சில மையங்களில் மாத்திரமே பெருங்கற்பண்பாட்டுத் தடயங்கள் இதுவரையில் அறியப்பட்டுள்ளன. இலங்கையின் சிலபகுதிகள் பெருங்கற்பண்பாடு என்ற படியினை அடையவே இல்லை. இவை கிறிஸ்தாப்த ஆரம்ப நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னரும் குறுணிக்கற் பண்பாடுடையனவாகவே இருந்து, பின்னர் பாய்ச்சலாக வரலாற்றுக் காலத்திற்கு வந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'மாந்தை 1982' அகழ்வாய்வினில்,(13) இந்நகரத்தின் ஆரம்பத்திற்குரியதாகப் பெருங்கற்பண்பாட்டுச் சான்றுகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக, பெருங்கற்பண்பாடு இல்லாமலே குறுணிக்கற்காலம் வரலாற்றுக்காலமாக மாறிய சான்றுகளே கிடைத்தன. இவ்வாண்டு புல்மோட்டையில் நாம் மேற்கொண்ட மேலாய்வொன்றிலும் கிறிஸ்தாப்த ஆரம்ப நூற்றாண்டுகளுக்குரிய வரலாற்றுக்காலச் சான்றுகள் குறுணிக்கற்காலத்துடன் மயங்குவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்த வரையில், குறுணிக்கற் பண்பாட்டிற்குரிய தடயங்கள் எதுவும் இதுவரையும் கிடைக்கவில்லை. எங்கள் ஆய்விற்கெட்டிய வரையில் யாழ்ப்பாணத்தில் மனிதக் குடியேற்றம் பெருங்கற் பண்பாட்டுடனேயே ஆரம்பமாகின்றது. இவ்வகையில், இப்பிரதேசத்தின் பண்பாட்டு ஆரம்பமே இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

யாழ்ப்பாணத்தில் பெருங்கற் பண்பாட்டுக்குரிய சான்றுகள் காணப்படுவதை முதன்முதல் வெளிப்படுத்தியவர்கள் பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருளக ஆய்வாளர்கள்.(14) இவர்கள் 1967ஆம் ஆண்டு கந்தரோடையில் அகழ்வாய்வினை மேற்கொண்டார்கள். இன்று பௌத்த தூபிகள் காணப்படும் இடத்திற்கு அருகே வேறொரு இடத்தில் இவர்களது அகழ்வு நடைபெற்றது. ஆய்வுக்குழியின் அடியில், அதாவது கந்த்ந்ரோடைக் குடியிருப்பின் ஆரம்ப கட்டத்தில் பெருங்கற் பண்பாட்டிற்குரிய மட்கலங்கள் பெறப்பட்டன. இதனை அடுத்து மேலுள்ள மண்படையில் பெருங்கற் பண்பாட்டு மட்கலங்களும் றோம மட்கலங்களும் கலந்து காணப்பட்டன.

கந்தரோடைக் குடியிருப்பு பெருங்கற் பண்பாட்டுடன் ஆரம்பமானதாகவும் இதன் காலம் கி. மு. 4ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அகழ்வாய்வினை நடாத்திய விமலா பேக்லி (Vimala Begley) குறிப்பிட்டுள்ளார். காபன் காலக் கணிப்புகள் (C14) பெறப்படாத நிலையில் தற்காலிகமாகவே இக்கணிப்பினை அவர் அன்று வெளியிட்டார். கந்தரோடை அகழ்விற்கான காபன் காலக் கணிப்புகள் (C14) பென்சில்வேனிய ஆய்வுக் குழுவின் மற்றொரு உறுப்பினரான பென்னெற் புறொன்சனிடம் (Bennet Bronson) இருந்து தொல்லியற் திணைக்களத்தினரால் அண்மையில் பெறப்பட்டன. இவற்றுள் இரு சான்றுப் பொருட்களுக்கான காலம் கி. மு. 1000 ஆண்டையொட்டிக் கிடைத்திருப்பது வியப்பிற்குரியது. ஏனையவை பெரும்பாலும் கி. மு. 500 - 100 இற்குரியனவாகக் காணப்படுகின்றன.(15)

கந்தரோடை அகழ்வாராய்வு பற்றிய அறிக்கை இன்னும் வெளியிடப்படாமலே இருந்து வருவது வருத்தத்திற்குரியது.

1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் மேற்கொண்ட மேலாய்வொன்றில், ஆனைக்கோட்டையில் பெருங்கற் பண்பாட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து இங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழ்வாய்வில் பெருங்கற் பண்பாட்டு ஈம அடக்கங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக வெளிக் கொணரப்பட்டன.

ஆய்வுக்குழியில் இரு எலும்புக்கூட்டு அடக்கங்கள் மேற்குக் கிழக்காக நீட்டிப்படுத்த வாக்கில் காணப்பட்டன. இவற்றைச் சுற்றி ஈமப்படையல்கள் பெருங்கற் காலத்திற்குரிய மட்பாண்டங்களில் இடப்பட்டிருந்தன. இரும்புக் கருவிகள், இரும்பு அகல் விளக்கு, சங்குகள், மணிவகைகள், கடல் உணவு எச்சங்கள், மாமிச உணவு எச்சங்கள், சுடுமண்ணாலான வட்டமான தாயம் போன்றதொரு விளையாட்டுக் கருவி ஆகிய பல்வேறுவகைப் பொருட்கள் ஈமப் படையல்களில் இடம் பெற்றிருந்தன.

எலும்புக் கூடொன்றின் தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கறுப்புச் - சிவப்பு வட்டில் ஒன்றில் பித்தளையாலான முத்திரையொன்று கிடைத்தது. இது முத்திரை மோதிரமொன்றின் பாகமாகலாம். இதில் இருவகையான எழுத்துக்கள் இருக்கின்றன. முதலாவது வரியில் பெருங்கற்கால மட்பாண்டங்களில் வழமையாகக் காணப்படும் குறியீட்டெழுத்துக்களும் இரண்டாவது வரியில் கி. மு. 3 - 2 ஆம் நூற்றாண்டுக்குரிய பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை எழுத்துக்களாலும் குறிக்கப்பட்டுள்ளது ஒரு பொருளேயென்று கொண்டால் பிராமி எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் படிக்க முடியாததாகிய பெருங்கற்காலக் குறியீட்டு எழுத்துக்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் பேராசிரியர் கா. இந்திரபாலா இதன் பிராமிப் பகுதியை 'கோவேதன்' அல்லது 'கோவேந்த' எனப் படித்து இதன் மூலம் குறியீட்டு எழுத்துப் பகுதிக்கு விளக்கங் கொடுத்துள்ளார். இவ்வாசகங்களின் மொழி ஆதித் தமிழ் அல்லது ஆதி மலையாளம் என்பது இவர் கருத்தாகும்.(16). இக் கட்டுரையாளர் பிராமிப்பகுதியை 'கோவேத்' அல்லது 'கோவேத' அல்லது 'கோவேதம்' எனப் படித்துக் குறியீடுகளுக்கு விளக்கங் கொடுத்துள்ளதுடன் இவ்வாசகங்களின் மொழி 'ஆதித்திராவிடம்' எனக் கருதுகின்றார்.(17) இவ் வாசகங்கள் 'கோவேந்தன்' என்பதன் மூல வடிவம் என்பது இருவரதும் பொதுவான கருத்தாகும்.

இம் முத்திரைகளின் தொல்லெழுத்தியலை அடிப்படையாகக் கொண்டே ஆனைக்கோட்டைப் பெருங்கற் பண்பாட்டின் காலம் கி. மு. 3-2 ஆம் நூற்றாண்டென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டையத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம், காரைநகரில் உள்ள சத்திரந்தையில் பெருங்கற் பண்பாட்டுத் தடயங்கள் பெறப்பட்டன. 1981 ஜனவரியிலும் பின்னர் நவம்பரிலும் இங்கு நாம் மேற்கொண்ட அகழ்வாராய்வில் ஆனைக்கோட்டையில் கிடைத்தவற்றை ஒத்த ஈம அடக்கங்களும் ஈமப் படையல்களும் காணப்பட்டன. ஈமப்படையல்களில் இரும்புக் கருவிகள் காணப்படாவிடினும், பளிங்குக் கல்லாலான (Quartz) குறுணிக்கற் கருவியொன்று கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். காலத்தைத் திட்டமாகக் கணிப்பிடக்கூடிய தடயங்களெதுவும் இங்கு கிடைக்கவில்லையெனினும் மட்பாண்டவகை ஒப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது சத்திரந்தை ஆனைக்கோட்டையிலும் பழமை வாய்ந்ததாகத் தோன்றுகின்றது.

இவற்றை விட, வேலணையிலும் யாழ்ப்பாண நகரிலிருந்து பரவைக் கடலிற்குத் தென்மேற்கே மண்ணித்தலையிலும் பெருங்கற்கால மட்கலத்துண்டங்கள் சில பெறப்பட்டன; ஆயினும் இவ்விடங்களில் இப்பண்பாடு நிலவியமை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாகும்.

முற்கூறிய ஆய்வுகளால் யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிகள் பெருங்கற் பண்பாட்டிற் குரியவர்களென்பதும், பௌத்தத்தின் வருகைக்கு முன்பே அவர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதும் ஐயமற நிறுவப்பட்டுள்ளது. ஈம அடக்கங்கள், இரும்புக் கருவிகள், பெருங்கற் பண்பாட்டுக்குரிய மட்கலங்கள், அவற்றில் காணப்படும் இப் பண்பாட்டிற்குரிய குறியீட்டு எழுத்துக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே பெருங்கற் பண்பாடு இங்கு நிலவியமை பற்றிய முடிவிற்கு நாம் வந்துள்ளோம்.

கந்தரோடைக்குரிய காபன் காலக் கணிப்புக்கள் (C14), ஆனைக்கோட்டைக்கும் சத்திரந்தைக்கும் நாம் நிர்ணயித்துள்ள ஒப்பீட்டுக் காலக் கணிப்புக்கள், இவற்றின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தின் பெருங்கற் பண்பாடு கி. மு. 500 அளவில் ஆரம்பமாகியிருக்கலாம் எனக் கூறக்கூடியதாக உள்ளது.

இலங்கை உட்படத் தென்னாசியா முழுவதிலும், வரலாற்றுக் காலமானது (Historic Period) எழுத்தாதாரங்களின் தோற்றத்துடன் அதாவது கி. மு. 3ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாவதாகக் கொள்ளப்படுகின்றது. இதற்குச் சற்று முந்தைய நூற்றாண்டுகளை வரலாற்றுத் தொடக்க காலம் (Protohistoric Period) என்பர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெருங்கற்காலக் குடியிருப்புகளின் தோற்றத்துடன் வரலாற்றுத் தொடக்க காலம் ஆரம்பமாகின்றதெனலாம்.

பெருங்கற்கால மக்கள் யாழ்ப்பாணத்தில் ஏன் குடியேறினார்கள்? அவர்களது பண்பாட்டிற்கும் தொழில் நுட்பத்திற்கும் இக்குடாநாட்டின் இயற்கையமைப்பு வாய்ப்பாக இருந்ததே காரணமெனலாம். வரண்ட காலநிலை, ஆரம்ப காலத்து எளிமையான இரும்புக் கருவிகளால் அழிக்கப்படக் கூடிய பற்றைக்காடு, சுண்ணாம்புத் தரையில் இயற்கையாகத் தோன்றிய சிறுகுளங்கள்(18), மழைக்க்காலத்தில் பெருகிவரும் வெள்ள வாய்க்கால்கள், மந்தை மேய்க்கத் தரவை வெளிகள், கடலுணவை ஆபத்தின்றிப் பெற ஆழமற்ற பரவைக்கடல் இவை பெருங்கற் பண்பாட்டு மனிதனை ஈர்த்த யாழ்ப்பாணத்தின் கவர்ச்சிகள் ஆகும்.

அறியப்பட்டுள்ள பெருங்கற்காலக் குடியிருப்புக்கள் யாவும் இத்தகைய சூழலை அண்டியே காணப்படுகின்றன. குறைவான ஆழத்தில் வற்றாத குடிநீர் கிடைப்பதையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். இக்குடியிருப்புகள் தனித்தனி அலகுகளாக இயங்கும் கிராமங்களாக ஆரம்பத்தில் தோன்றியிருக்கலாம். முகிழ்நிலை விவசாயம், பரவைக் கடலில் மீன் பிடித்தல், மந்தைவளர்ப்பு முதலான பன்முகப்பட்ட சீவன முயற்சிகளை உடையவர்களாக இவர்கள் வாழ்ந்துள்ளனர். அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

பெருந்தொகையான கடல் உணவு எச்சங்களும் கால்நடை எலும்புகளும் ஈமப் படையல்களில் பெறப்பட்டன. சுறா, பிற மீன்களின் முள்ளந்தண்டு; நண்டு, கடலாமை போன்றவற்றின் ஓடுகள்; மட்டி, உள்ளிருக்கும் இறைச்சியை எடுப்பதற்காக உடைக்கப்பட்ட சங்குகள், கூரிய ஆயுதத்தினால் வெட்டப்பட்ட அடையாளமுள்ள கால்நடை எலும்புகள், விலங்குகளின் பற்கள், வேறும் பல உயிரின எச்சங்கள் ஆகியவை மீன்பிடித்தலும் மந்தை வளர்ப்பும் இந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கையில் வகித்திருந்த முக்கிய பங்கினை விளக்குகின்றன. தானிய வகைகள் எதுவும் இவ்வகழ்வாய்வுகளில் பெறப்படாத பொழுதும் இக்குடியிருப்புகள் இன்றைய பயிர்நிலங்களை ஒட்டி அமைந்திருப்பது, பயிர்ச்செய்கை வழக்கில் இருந்தமையைக் குறிக்கின்றதெனலாம்.

பெருங்கற்கால யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் முக்கிய இடத்தினை வகித்துள்ளது. சிலவகை மட்கலங்கள், மணி வகைகள், கல்வகைகள், உலோகம் போன்றவை வர்த்தகப் பொருட்களாகவே இங்கு வந்திருக்க வேண்டும். சோழ மண்டலக் கடற்கரைக்கும் இலங்கைக்குமிடையே இருந்திருக்கக்கூடிய கடல் வர்த்தகப் பாதைகளில் யாழ்ப்பாணம் கேந்திரத் தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண வரலாற்றில் அடுத்த முக்கிய கட்டம் பெருங்கற் பண்பாட்டின் அடிப்படையில் இங்கு நகர மயமாக்கம் நடைபெற்றமையாகும். கி. மு. 500க்கு முன் பெருங்கற்காலக் கிராமமாகத் தோன்றிய கந்தரோடை கி. மு. 100 அளவில் நகரமாக வளர்ச்சியடைந்து விட்டதெனலாம். இது அநுராதபுரத்திலும் மகாகமையிலும் நகரமயமாக்கம் நிகழ்ந்தமைக்கு ஒப்பானதாகும்.(19)

யாழ்ப்பாணத்தில் இதுவரையில் அறியப்பட்டுள்ள ஆதிக் குடியிருப்புகளுள் கந்தரோடையே பரப்பளவில் கூடியதாகும். பல நூறு ஆண்டுகள் இது தொடர்ந்து முக்கிய குடியிருப்பாக விளங்கியுள்ளது. தொல்பொருட் சான்றுகள், குறிப்பாகப் பிறநாட்டுக்குரிய தொல்பொருட்கள், புராதன காலக் கட்டிட எச்சங்கள் ஆகியவை இங்கேயே மிகச் செறிவாகக் காணப்படுகின்றன.

கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கு வெளிநாட்டுக் கடல் வர்த்தகமும் தென்னிலங்கையுடனான வர்த்தகப் பாதைகளின் வளர்ச்சியும் காரணமாகலாம். கி. மு. முதலாம் - கி. பி. முதலாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற றோம வர்த்தகம் கந்தரோடையின் நகரமயமாக்கத்திற்கு உந்தலாக இருந்திருக்கலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் கந்தரோடையில் மிகச் செறிவாக றோம மட்பாண்டங்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. பெருங்கற்கால மட்கலங்களும் றோம மட்கலங்களும் இங்கு மயங்கிக் காணப்படுகின்றன. இது தமிழ்நாட்டில் சேர் மோட்டிமர் வீலர் அகழ்வாராய்ந்த அரிக்கமேடு என்ற இந்திய - றோம துறைமுக நகரச் சான்றுகளுக்கு ஒப்பானதாகும்.(20)

இதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடியிருப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஏறத்தாழப் பத்துக்கு மேற்பட்ட இடங்கள் இக்காலப் பகுதியில் புதிய குடியிருப்புகளாகத் தோன்றியமை எமது மேலாய்வுகளில் அறியப்பட்டுள்ளது. இக் குடியிருப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தலைமைக் குடியிருப்பாகக் கந்தரோடை விளங்கியதெனலாம்.

இக்காலகட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் பெருங்கற்காலச் சமய நம்பிக்கைகளும் புதிய அலையாகத் தென்னாசியா வெங்கணும் பரவிய பௌத்தமும் மயங்கியமையாகும். பெருங்கற்காலச் சமய நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்களினூடாக அறியலாம். யாழ்ப்பாணத்தில் இச் சமய நம்பிக்கைகள் நிலவியமைக்குச் சான்றாகத் திரிசூலக் குறியீடுகள் ஆனைக்கோட்டையிலும் காரைநகரிலும் கந்தரோடையிலும் மட்பாண்டங்களில் பெறப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இச் சமய நம்பிக்கைகளை மேவியே பௌத்த மயமாக்கம் நடைபெற்ற தென்பதற்குக் கந்தரோடைச் சான்றுகளின் காலவரன்முறை சிறந்த உதாரணம்.

யாழ்ப்பாணத்திற்கும் அநுராதபுரகால இலங்கைக்கும் இருந்த தொடர்பு என்ன? இக்காலத்தில் அநுராதபுரம் இலங்கையின் பலம்வாய்ந்த மைய நகரமாக விளங்கியதென்பதில் ஐயமில்லை. ஆயினும், யாழ்ப்பாணம் முழுமையாக அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உள்ளடங்கியிருந்ததா என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட பாளி இலக்கிய ஆதாரங்கள் தொலைவில் இருக்கும் மகாகமை பற்றி அதிகம் கூறும் அதே நேரத்தில் யாழ்ப்பாணம் குறித்து மிகக் குறைந்த விபரங்களைக் கூடத் தரவில்லை யெனலாம். யாழ்ப்பாணம் இக்கால கட்டத்தில், தென்னிந்தியாவிற்கும் தென்னிலங்கைக்குமிடையில் பண்பாடுகள் சந்திக்கும் இடைக்குறுநிலமாகவும் இந்திய உபகண்டத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தோன்றிய புதிய அலைகளை முதலில் ஏற்றுக் கொள்ளும் படிக்கல்லாகவும் இருந்திருக்கலாம். இந்நாட்டிற்குப் பௌத்தத்தின் வருகை யாழ்ப்பாணத்தின் சம்புத் துறையூடாக வந்தமை போலவே பின்னர் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பிராமணீய மறுமலர்ச்சியும் இங்கு வந்திருத்தல் கூடும். எவ்வாறாயினும் யாழ்ப்பாண வரலாற்றியல் இலக்கியங்கள் யாவும் புகை படர்ந்த ஆனால் ஏகோபித்த ஒரு தகவலைத் தருகின்றன. அது ஆரியச் சக்கரவர்த்திகள் கால யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முன்னரே கதிரைமலையில் இருந்து யாழ்ப்பாணம் ஆளப்பட்ட ஒரு செய்தியாகும்.(21) சோழர் வருகையுடன் இவ்வரசு முடிவடைந்ததை இவ்விலக்கியங்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றன. கதிரைமலையில் இருந்து அரசாண்ட உக்கிரசிங்கன் சோழ இளவரசி மாருதப்புரவல்லியைத் திருமணம் செய்தபின்னர் கதிரைமலை இந் நூல்களால் மறக்கப்பட்டு விடுகின்றது.

யாழ்ப்பாண இராச்சிய காலத்திற்கு முன்னர் இருந்ததொரு யாழ்ப்பாண அரசு பற்றி இலக்கிய ஆதாரங்கள் அறியத்தரும் செய்தியையும், இவ்வரசு கதிரைமலை என்ற கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டதென முதலியார் இராசநாயகம் முன் வைத்த கருத்தினையும், இங்கு விபரித்த தொல்லியற் சான்றுகள் பலப்படுத்துவதாகவே தோன்றுகின்றன. கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டதொரு குறுநில அரசாவது இங்கு இருந்திருக்க கூடும் என்பதையே நாம் மேற்கொண்ட யாழ்ப்பாணத்து ஆதிக் குடியிருப்பமைப்பு ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இந்த அமைப்பு பெருங்கற் பண்பாட்டு அடிப்படையில் உருவானதென்பதையும் அவை உணர்த்துகின்றன.

யாழ்ப்பாணப் பண்பாட்டின் மூலவேராகிய பெருங்கற் பண்பாட்டின் எச்சங்களைஇன்றும் இப்பிரதேசத்தின் அன்றாட வாழ்க்கை முறையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அந்திமச் சடங்குகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். இது போன்றே யாழ்ப்பாணத்துத் தமிழ் வழக்கும் பெருங்கற் காலத்திலிருந்தே இங்கு தனித்துவமாக வளர்ந்ததொரு கிளைவழக்கு எனக் கூறலாம். வரலாற்று மொழியியல், நாட்டார் வழக்கியல் போன்ற துறைகளினூடாகப் பெறக்கூடிய அறிவினைத் தொல்லியற் சான்றுகளுடன் இணைத்து நோக்கும் பொழுது யாழ்ப்பாண வரலாற்றின் புதிய பரிமாணங்கள் பல தெளிவாகலாம்.

---------------------------------------------------------------------

அடிக்குறிப்பு

1. Dipavamsa, ed. Bimala Churn Law, The Ceylon Historical Journal. Vol. 7; Mahavamsa, ed. Wilhelm Geiger, Ceylon Government Information Department, Colombo, 1960.

2. கைலாய மாலை, (பதிப்பு) நடராசன், பி., செட்டியார் அச்சகம், 1983; வையாபாடல், (பதிப்பு) நடராசா க். செ., கொழும்புத் தமிழ்ச் சங்கம், 1980; யாழ்ப்பாண வைபவ மாலை, (பதிப்பு) சபாநாதன், குல., சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1953.

3. Ancient Jaffna, யாழ்ப்பாண வைபவ விமர்சனம், யாழ்ப்பாண வைபவ கௌமுதி.

4. Peiris, P. E., "Nagadipa and Buddhist Remains in Jaffna (Part 1)" J. R. A. S. (Ceylon Branch) 1922, PP. 11-30; "Nagadipa and Buddhist Remains in Jaffna (Part 2)" J. R. A. S. (Ceylon Branch) 1925, PP. 40-67.

5. Rasanayakam, C. Ancient Jaffna, 1926.

6. Mahajana College Golden Jubilee Number, Tellippalai, 1960, PP. 16-28.

7. Zeuner, F. G., and Allchin, B., "The Microlithic Sites of Tinnavely District, Madras State" Ancient India. No. 12, Bulletin of the Archaeological Survey of India, 1956, PP. 4-20

8. Deraniyagala, S. U., "Prehistoric Research in Srilanka 1885 - 1980", P.E.P. Deraniyagala Commemoration Volume, 1980, PP. 152-207; "Was There A Palaeolithic (Old Stone Age) in Lanka?" Ancient Ceylon No. 4, 1981, PP. 143-156.

9. Ragupathy, P., "Mantai - Punakari Exploration" A Report Submitted to the Department of Archaeology (Unpublished), 1982.

10. Susantha Goonatilake, "The Formation of Srilankan Culture", Ancient Ceylon No. 4, 1981; இந்திரபாலா, கா., "கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர்", 1981, ப. 49-51.

11. For Details see: Gururaja Rao, B. K., The Megalithic Culture in South India, University of Mysore, 1972; "The Iron Age in Karnataka", Archaeology of Karnataka, University of Mysore, 1978; Vimala Sahney, The Iron Age of South India Ph. D. Thesis (Unpublished) University of Pennsylvania, 1965; Srinivasan, K. R., "The Megalithic Burial and Urn Fields of South India in the light of Tamil Literature and Tradition" Ancient India Vol. 2, 1946, PP. 9-16; "Some Aspects of Religion as Revealed by Early Monuments and Literature of the South", Journal of Madras University, Vol. 32, No. 1, 1960, PP. 131-198.

12. Sitrampalam, S. K. The Megalithic Culture in Sri Lanka, Ph. D. Thesis, (Unpublished), University of Poona, 1980.

13. Mantai 1982 Excavations were irected by Prof. John Carswell and Martha Prickett.

14. Vimala Begley, "Prohistoric Material From Srilanka (Ceylon) and Indian Contacts", Ecological Backgrounds of South Asian Prehistory, ed. Kenneth, A. R., Kennedy and Gregory & Possehl, South Asian Occational Papers and Teses, Cornell University, 1973, PP. 190-196.

15. இக்காலக் கணிப்புகள் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆலோசகர் திரு. சிறான் தெரணியகல அவர்களின் தனிப்பட்ட முயற்சி மூலம் பெறப்பட்டது. பேராசிரியர் கா. இந்திரபாலாவின் உதவியால் எனக்குக் கிடைத்தது.

16. Indrapala, K., "Is It An Indus-Brahmi Epigraph?", The Hindu, Sunday April 26, 1981.

17. Ragupathy, P., "Indus Brahmi Seal" Letters to the Editor, The Hindu, 9th July 1981.; "இந்து நதியிலிருந்து வழுக்கியாறு வரை ஒரு எழுத்தின் பயணம்", வீரகேசரி வாரமலர்; 07-07-1981, 14-07-1981.

18. Kularatnam, K., Geology and Water in the North, 1964.

19. Deraniyakala, S. U., Introduction to the Mantai-Punakari Exploration Report, op cit.

20. Wheeler, R.E.M., "Arikamedu: an Indo-Roman Trading Station on East coast of India" Ancient India. No. 2, 1946, PP. 17-124.

21. கைலாயமாலை, கண்ணி 14-43; வையாபாடல் 17ஆம் பாடல்; யாழ்ப்பாண வைபவ மாலை, பக். 13-22

------------------------------------------------------------------