பிற்காலச் சோழர் சரித்திரம் -2
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 


1.  பிற்காலச் சோழர் சரித்திரம் - 2
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  முதற்பதிப்பின் முகவுரை
    4.  இரண்டாம் பதிப்பின் முகவுரை
2.  முதற் குலோத்துங்க சோழன் (கி. பி. 1070 - 1120)
3.  விக்கிரம சோழன் (கி. பி. 1118 - 1136)
4.  இரண்டாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1133 - 1150)
5.  இரண்டாம் இராசராச சோழன் கி. பி. (1146-1163)
6.  இரண்டாம் இராசாதிராச சோழன் (கி. பி. 1163 - 1178)
7.  மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1178 - 1218)
8.  மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256)
9.  மூன்றாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1246 - 1279)
10. முடிவுரை
    1.  சேர்க்கை 1
    2.  சேர்க்கை II
    3.  சேர்க்கை III
    4.  சேர்க்கை IV
 


பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

 

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்

 

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : பிற்காலச் சோழர் சரித்திரம் - 3

  தொகுப்பு : தமிழக வரலாற்று வரிசை - 3

  பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

  ஆசிரியர் : தி.வை சதாசிவப் பண்டாரத்தார்

  பதிப்பாளர் : இ. வளர்மதி

  முதற்பதிப்பு : 2008

  தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 12 புள்ளி

  பக்கம் : 8+ 432 = 440

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 275 /-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்”, பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017

##பதிப்புரை

‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப்பாகக் காட்டுவது.

‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (Gary Bachman: JAOS - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவு நிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது.

ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர்.

இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையிலிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது.

தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார்.

பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு எனும் நூல்களைத் தேடி எடுத்து தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும் பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (classic) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத் துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன்கொள்வாராக.

தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப்
பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர்செல்வம், மயிலை சீனி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன் போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம்.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதியுள்ள இந் நூல்கள் ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன்படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்ட மிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ் வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்ளுங்கள்.

தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

செயல்செய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
சீறி வந்தே.

ஊழியஞ்செய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே.

பணிசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
பழநாட் டானே.

இதுதான்நீ செயத்தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே.

எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள்.

மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெரும க்களுள் தலைசிறந்தோர் தந்தை பெரியாரும், மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றி யுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம்.

தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழநினையுங்கள். இனத்தின் மீளாத்துயரை மீட்டெடுக்க முனையுங்கள்.

- பதிப்பாளர்.

நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் ஒளவை. நடராசன், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி, பி. இராமநாதன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்

  _அச்சுக்கோப்பு_ முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா,

  _மெய்ப்பு_ சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி, அ. கோகிலா

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,

  எதிர்மம் _(Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் நூல்கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ்

இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


முதற்பதிப்பின் முகவுரை

பிற்காலச்சோழர் சரித்திரத்தின் இரண்டாம் பகுதியாகிய இந்நூல், கி.பி. 1070 முதல் கி.பி. 1279 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட சோழர்களின் வரலாற்றைக் கூறுவதாகும். முதற் குலோத்துங்க சோழன் முதலாக மூன்றாம் இராசேந்திரசோழன் இறுதியாக உள்ள சோழ மன்னர் எண்மர் வரலாறுகளை இந்நூலில் காணலாம்.

இவ்வேந்தர்களுடைய மெய்க்கீர்த்திகளும், இவர்களைப் பற்றியபழைய பாடல்களும், இன்னோரின் மரபு விளக்கமும், கி.பி.10, 11-ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கட்கும் கீழைச் சளுக்கியர்கட்கும் ஏற்பட்டிருந்த மணத்தொடர்பு விளக்கமும் இந்நூலின் இறுதியில் சேர்க்கைகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்நூலை எழுதி முடித்தற்கு யான் ஆதாரமாகக் கொண்டவையாவை என்பதையும், பிறசெய்திகளையும் முதற்பகுதியின் முகவுரையில் அறிவித்துள்ளேன். பிற வரலாற்றாராய்ச்சியாளர்க்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் நிகழும் இடங்களில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து என் முடிவுகளை நிறுவியுள்ளேன். சரித்திர நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டாதலும், எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் மாறுபடுதலும், காலக் குறிப்புகள் வேறுபடுதலும் இயல்பாகுமென்பது அறிஞர்கள் நன்குணர்ந்ததேயாம்.

இத்தகைய ஆராய்ச்சி நூல்கள் நம் தமிழ்மொழியில் வெளி
வருவதற்கு வேண்டுந்துணை புரிந்துவரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாளர் டாக்டர் S.G. மணவாள ராமாநுஜம், M.A., Ph.d. அவர்கட்கும், தமிழ்ப் பேராசிரியர் திருவாளர் டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார், M.A., Ph.D, அவர்கட்கும், பல்கலைக்கழக ரிஜிட்ரார் திருவாளர் S. சச்சிதானந்தம் பிள்ளை, B.A., L.T. அவர்கட்கும் என்றும் நன்றியுடையேன்.

புரூப் திருத்தி உதவிய தமிழாராய்ச்சித்துறை விரிவுரையாளர் வித்வான் திரு.க. வெள்ளைவாரணனார், சொற் குறிப்பு அகராதியினைத் தொகுத்துதவிய சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. T.S. நடராஜக் குருக்கள், B.A., L.T., வரலாற்றுப் படம் வரைந்துதவிய ஆசிரியர் திரு.கூ.ஆ. சம்பந்த நாயகர் ஆகிய மூவரையும் என்றும் மறவேன். இப்புத்தகத்துக்கு வேண்டும் நிழற்படங்கள் சிலவற்றை வெளியிட உதவிய இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவர்க்கும், புதிய நிழற் படங்களை எடுத்துத் தந்த சிதம்பரம் கெம்பு டுடியோ நிலையத்தார்க்கும், இந்நூலை வனப்புற அச்சிட்டுதவிய சிதம்பரம் பாண்டியன் அச்சகத்தார்க்கும் எனது நன்றியுரியதாகும்.

  அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
  அண்ணாமலை நகர் இங்ஙனம்
  6.1.51

  T.V. சதாசிவப் பண்டாரத்தார்


இரண்டாம் பதிப்பின் முகவுரை

இச்சரித்திர நூலின் முதற்பதிப்பு இற்றைக்கு ஆறு ஆண்டுகட்குமுன் வெளிவந்தது, முதற்பதிப்புப் புத்தகங்கள் செலவாகி விட்டமையாலும், பல்கலைக் கழகத் தேர்விற்குப் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கட்கு இந்நூல் பாடமாக இருத்தலும், இவ்விரண்டாம் பதிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. பின்னிகழ்ந்த எனது ஆராய்ச்சிகளில் அறிந்த செய்திகளும், இப்பதிப்பில் உரிய இடங்களில் சேர்க்கப் பெற்றுள்ளன. அன்றியும் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாகக் கருதப்படும் சில வரலாற்றுக் கல்வெட்டுக்களும் இறுதியில் சேர்க்கை ஆகத் தரப்பெற்றுள்ளன.

இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இஃது அச்சாகுங்கால் அன்புடன் புரூப் திருத்தி உதவிய என் அரிய நண்பர் தமிழாராய்ச்சிக்த் துறை விரிவுரையாளர் வித்வான் க.வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றி உரியதாகும்.

  அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
  அண்ணாமலை நகர் இங்ஙனம்
  6.1.51

  T.V. சதாசிவப் பண்டாரத்தார்

முதற் குலோத்துங்க சோழன் (கி. பி. 1070 - 1120)


சுங்கந்தவிர்த்திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்1, என்று கல்வெட்டில் புகழப்பெற்றுள்ள இவ்வேந்தர்பெருமான் கீழைச் சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் புதல்வன். இவன் தாய் கங்கைகொண்ட சோழன் புதல்வியாகிய அம்மங்கை தேவியாவார்2. எனவே, இவன் தந்தைவழியிற் சோழ மரபினன் அல்லன். ஆனால் தாய் வழியிற் சோழர்மரபிற்கும் இவனுக்கும் தொடர்பிருத்தல் வெளிப்படை. எல்லோரும் தம் தந்தையின் மரபையே தம்முடைய மரபாகக் கூறிக்கொள்வது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ஒரு வழக்கமாகும். அம்முறையின்படி, நம் குலோத்துங்க சோழன் மண்டலத்தில் தன் தாய்ப்பாட்டன் அரண்மனையிற் பிறந்து இளமைப் பருவத்தில் அங்கு வளர்ந்து வந்தமையாலும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் கொண்டு பயின்று தமிழ் மக்களின் வழக்க ஒழுக்கங்களை மேற்கொண்டமையாலும் இவன் தன்னைச் சோழ அரசகுமாரனாகவே கருதிவிட்டான். அவ்வெண்ணமும் இவன் உள்ளத்தில் வேரூன்றிவிட்டது. அதற்கேற்ப, சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகும் பேற்றை இவன் எதிர் காலத்தில் எய்தியமையோடு அதனை ஐம்பது ஆண்டுகள் வரையில்3 ஆட்சிபுரியும் நல்லூழும் பெற்றிருந்தமை இவனது நல்வினையின் பயனே எனலாம்.

இவன் பூசநாளில் பிறந்தவன் என்பது குண்டூர் ஜில்லா பாபட்லா விலுள்ள திருமால் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால்1 அறியப் படுகின்றது. அன்றியும், தென்னார்க்காடு ஜில்லா பெண்ணாகடத்திலுள்ள தூங்கானை மாடக் கோயிலில் திங்கள்தோறும் பூசநாளில் இவ்வேந்தன் நலத்தின் பொருட்டுத் திருவிழா நடத்துவதற்கு நிவந்தம் அளிக்கப்பட்டிருப்பதும் இச்செய்தியை வலியுறுத்துகின்றது2. இவன் சிற்றீச்சம்பாக்கம் என்ற ஊரைத் தன் மனைவி திரிபுவனமாதேவி விரும்பியவாறு இறையிலியாக்கி, அதற்குக் கம்பதேவி நல்லூர் என்று பெயரிட்டுத் தானும் தன் மனைவியும் பிறந்த பூசம் சுவாதி என்னும் நாட்களில் திருவிழா நடத்துவதற்கு அதனை நிவந்தமாகக் காஞ்சிமா நகரிலுள்ள கோயிலுக்கு வழங்கியிருப்பதனாலும்3 இதனை நன்கறியலாம்.

இவனுக்கு இளமையில் இராசேந்திரன் என்னும் பெயர் இடப் பெற்றிருந்தது என்பது செல்லூர்ச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது4. அஃது இவன் தாய்ப் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனது இயற்பெயர் ஆகும். பாட்டன் பெயரையே பேரனுக்கு வைப்பது பண்டை வழக்கமாதலின் அப்பெயர் இவனுக்கு வழங்கப்பெற்றது எனலாம். இவன் பிறப்பதற்குச் சில தினங்கள் முன் கி. பி. 1044 ஆம் ஆண்டில் கங்கைகொண்ட சோழன் இறந்து விட்டமையாலும் உடல் உறுப்புக்களாலும் தோற்றத்தாலும் இவன் அவ்வேந்தனைப் போல் காணப்பட்டமையாலும்5 இவனுக்கு அவன் பெயர் இடப்பட்டது என்று தெரிகிறது.

இவன், தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் வேங்கி நாட்டில் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்ற நாளில் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி விஷ்ணுவர்த்தனன் என்னும் அபிடேகப் பெயர் அளிக்கப்பெற்றனன்6. வேங்கி நாட்டில் காணப்படும் இவன் கல்வெட்டுக்களில் அப்பெயர் தவறாமல் குறிக்கப் பட்டிருப்பது அறியத்தக்கதாகும்1. எனவே, இவனுக்கு அப்பெயர் சிறப்பாக அந்நாட்டில் வழங்கி வந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆனால், இவன் தன் தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டில் முடிசூட்டப்பெற்று ஆட்சி புரிந்தமைக்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. இவன் அக்காலத்தில் இளைஞனாக இருந்தமையாலும் இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தன் என்பவன் வேங்கி நாட்டைத் தான் ஆட்சி புரியவேண்டும் என்று பெருவிருப்புடையவனாக இருந்தமையாலும் இவன் இளவரசுப் பட்டம்பெற்றிருந்தும் அந்நாட்டின் ஆட்சியைப்பெற இயல வில்லை. இவன் மாமன் இரண்டாம் இராசேந்திரனும் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்துவதில் பெரிதும் ஈடுபட்டிருந்தமையால் வேங்கி நாட்டின் நிலைமையை யுணர்ந்து இவன் ஆட்சியுரிமை நிலை நிறுத்துவது இயலாததாயிற்று. எனவே, இவனுக்குரிய அந்நாடு இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தன் ஆட்சிக்குள்ளாயிற்று. இதுபற்றி இவ்விருவர்க்கும் பகைமை ஏற்பட்டிருந்தது என்பது விசயாதித்தன் செப்பேடுகளாலும் அவன் புதல்வன் சத்திவர்மன் செய்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றது. ஆனால் அப்பகைமை முற்றாமல் நாட்செல்லச் செல்லக் குறைந்து கொண்டே போய் இறுதியில் நீங்கியது எனலாம். விசயாதித்தன் புதல்வனாகிய சத்திவர்மன் கி. பி. 1063 ஆம் ஆண்டில் இறக்கவே, இராச்சியத்தில் அவன் வைத்திருந்த பற்றும் குன்றியது4. எனவே அவன் தன் தமையன் புதல்வனாகிய நம் இராசேந்திரனிடத்தில் சிறிது அன்பு பாராட்டவும் தொடங்கினான். இவனும் தன் சிறியதந்தை உயிர் வாழுமளவும் வேங்கிநாடு அவன் ஆட்சிக் குட்பட்டிருத்தற்கு உடன்பட்டவனாய் அமைதியுடன் இருந்துவிட்டான். ஆகவே, அவன் இறந்தபின்னர் அந்நாட்டைத் தான் பெற்று ஆட்சிபுரியலாம் என்ற எண்ணம் இவன் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது என்பது ஒருதலை.

இனி, விசயாதித்தன் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் அரசகுமாரனாகிய இராசேந்திரன் யாது செய்து கொண்டிருந்தனன் என்பது ஆராய்தற்குரிய தொன்றாகும். அந்நாட்களில் சோழ இராச்சியத்தில் சங்கர வர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்தவன் இவன் அம்மானாகிய வீரராசேந்திர சோழன் ஆவன். அவன் பேராற்றல் படைத்த பெருவீரன். அவன் மேலைச்சளுக்கியரோடும் பிறவேந்தரோடும் புரிந்த போர்கள் பலவாகும். இராசேந்திரன் அப்போர்களுள் சிலவற்றில் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவிபுரிந்து வந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியப்படுகின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்தி வெற்றி பெற்று, தன்பால் அடைக்கலம் புகுந்த விசயாதித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில், நம் இராசேந்திரனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அன்றியும், அவ்வேந்தன் கடாரத்தரசனுக்கு உதவிபுரியும் பொருட்டுச் சோழநாட்டிலிருந்து பெரும்படை யொன்றை அனுப்பிய நாளில் கடாரத்திற்குச் சென்ற தலைவர்களுள் அரசகுமாரனாகிய இராசேந்திரனும் ஒருவன் ஆவன்3. எனவே, விரராசேந்திரன் காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் இவனுக்குத் தொடர் பிருந்தமை உணரற்பாலது. ஆகவே, இவன் போரிற் சிறந்த பயிற்சி பெற்று இளமையிலேயே ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தனன் எனலாம்.

அஃது அங்ஙனமாக, சோழநாட்டில் வீரராசேந்திர சோழனுக்குப் பிறகு சில திங்கள் வரையில் அரசாண்ட அவன் புதல்வன் அதிராசேந்திரன் கி. பி 1070 ஆம் ஆண்டில் இடையில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். அவனுக்கு மகப்பேறின்மை யாலும் சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாமையாலும் சோணாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநில மன்னரது கலகம் ஒரு புறமும் உண்ணாட்டுக் குழப்பம் மற்றொரு புறமும் எழுந்தன. சோழநாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாத் துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் அக்குழப்பத்தையும் கலகத்தையும் தம் நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்2. அன்றியும், சோழநாடு அரசனின்றிக் குழப்பத்திற் குள்ளாயிருந்தது என்பது நம் இராசேந்திரன் மெய்க்கீர்த்திகளாலும் நன்கறியக் கிடக்கின்றது.

இங்ஙனம் சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த இராசேந்திரன் அறிந்து, கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்னும் உரிமை பற்றி அச்சோழநாட்டு ஆட்சியைத் தான் அடையலாம் என்றெண்ணித் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்து சென்றான். அங்கிருந்த அமைச்சர், படைத்தலைவர் முதலான அரசியல் அதிகாரிகள் எல்லோரும், இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ந்து, இவனது உரிமையையும் ஏற்றுக்கொண்டு சோழர் மரபில் எவரும் இல்லாமையால், சோணாட்டு ஆட்சியை இவனுக்கே அளிப்பது என்று உறுதி செய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடி சூட்டுவதற்குத் தக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கி. பி. 1070 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் நாளில்1 தலைநகரத்தில் இவன் முறைப்படி முடி சூட்டப்பெற்றனன்2. அந்நன்னாளில் குலோத்துங்கசோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினன்.

சோழமன்னர்கள் முடிசூட்டப்பெறும் நாளில் இராசகேசரிபரகேசரி என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தனர் என்பது முன்னர் விளக்கப்பட்டுளது. அன்னோர் ஒழுகிவந்தவாறு நம் குலோத்துங்கனும் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாளத் தொடங்கினான். இவன் அதனைப் புனைந்து கொண்டமைக்குக் காரணம், இவனுக்கு முன் ஆட்சிபுரிந்து நோய் வாய்ப்பட்டிருந்த அதிராசேந்திரசோழன் பரகேசரி என்னும் பட்டமுடைய வனாயிருந்தமையேயாம். எனவே, சோணாட்டு ஒழுகலாற்றில் ஒரு சிறிதும் தவறாதவாறு இவன் நடந்துகொண்டமை காண்க.

இவ்வாறு கீழைச்சளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் குலோத்துங்கசோழன் என்னும் பெயருடன்1. சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் பெற்றவுடன் உண்ணாட்டுக் குழப்பம் ஒழியவே, சோழமண்டலத்தில் யாண்டும் அமைதி நிலவுவதாயிற்று. குறுநில மன்னர்களும் இவனுக்கு அடங்கி ஒழுகுவாராயினர். இவன், நாட்டு மக்களுக்கு நலம் புரிவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி புரிந்தமையின் இன்றியமையாதன போக எஞ்சிய பயனற்ற போர்கள் எல்லாவற்றையும் இயன்றவரையில் நீக்கிக் கொண்டே வந்தமை அறியற்பாலதாகும். இவன் மாமன்மார் துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கேயுள்ள மேலைச் சளுக்கியரது குந்தள நாட்டைக் கைப்பற்றி அதனைச் சோழ இராச்சியத்தோடு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தம் ஆட்சிக் காலங்களில் அங்குப் படையெடுத்துச் சென்று பல இடங்களில் போர் புரிந்தமை முன்னர் விளக்கப் பெற்றுளது. அப்போர் நிகழ்ச்சிகளில் அன்னோர் எய்திய இன்னல்கள் பலவாம். பல்லாயிரக் கணக்கான சோணாட்டு வீரர்கள் குந்தளநாட்டுப் போர்க்களங்களில் உயிர் துறக்கும்படி நேர்ந்தது. அரசகுமாரர் களும் இறந்தனர். ஆனால், அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை. மேலைச் சாளுக்கியர் நகரங்கள் அழிந்தமைதான் அன்னோர் கண்ட பயன் எனலாம். இளமை முதல் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் குலோத்துங்கன், துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கே சோழ இராச்சியத்தைப் பரப்பவேண்டும் என்ற தன் மாமன்மார் எண்ணத்தைப் பின்பற்றி நடத்தற்குச் சிறிதும் விரும்பாமல் அதனை முற்றிலும் விட்டொழித்தான். ஆகவே, இராச்சியத்தை யாண்டும் பரப்புவதற்கு முயலுவதைப் பார்க்கிலும் குடிகளுக்கு நலம் புரிந்து அவர்கள் உள்ளத்தைக் கவர்வது தான் சாலச் சிறந்தது என்பது இவன் கருத்தாதல் வேண்டும். இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகி ஆட்சிபுரியத் தொடங்கியவுடன் வேங்கி நாடும் இவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பது ஒருதலை. சோழ இராச்சியத்தின் வட வெல்லையிலிருந்த அவ்வேங்கி நாடும் இவனுக் குரியதாகி இவன் பிரதி நிதிகளின் ஆட்சிக்குட்படவே, வட புலத்தில் சோழர் களுக்கு வழிவழிப் பகைஞராகவிருந்த மேலைச் சளுக்கியரும் அந்நாட்டைக் கடந்து சோழ இராச்சியத்தின்மீது படையெடுப்பது இயலாதாயிற்று. எனவே இவன் ஆட்சியில் சோழ இராச்சியம் மிக்க அமைதியான நிலையை அடைந்தது எனலாம். இவன் ஆட்சிக்கால முதல் சற்றேறக் குறைய நூறாண்டுகள் வரையில் அத்தகைய அமைதியான நிலையிலேயே சோழ இராச்சியம் இருந்து வந்தமை அறியத்தக்கது இவனுக்குப் பிறகு அரசாண்ட இவன் புதல்வன் விக்கிரம சோழன், அவன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழன் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழ மன்னர்கள் இவன் கொள்கையைப் பின்பற்றி நடந்து வந்தமை யால்தான் அன்னோர் ஆட்சிக் காலங்களில் சோழ இராச்சியம் உண்ணாட்டுக் குழப்பமும் வெளிநாட்டுப் படையெழுச்சியுமின்றி மிக்க அமைதியான நிலையில் இருந்து வந்தது என்று கூறலாம். எனவே, தனக்குப் பின்னரும் தன் இராச்சியத்தில் மக்கள் எல்லோருக்கும் அமைதியான வாழ்வு அமையுமாறு முதலில் விதையிட்டவன் பெருந்தன்மையும் பேராற்றலும் வாய்ந்த நம் குலோத்துங்கனே என்பது தெள்ளிது.

இனி, இவ்வேந்தன் ஐம்பது ஆண்டுகட்குமேல் ஆட்சி புரிந்துள்ளமை யால் நம் தமிழ்நாட்டில் இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படு கின்றன; அன்றியும், மைசூர் இராச்சியத்திலும் தெலுங்கு நாட்டிலும் இவன் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. இவனது நீண்ட ஆட்சியில் வரையப்பெற்ற அக்கல்வெட்டுக்களில் பல மெய்க்கீர்த்திகள் உள்ளன. அவற்றுள், திருமன்னி விளங்கும்1 என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் முதல் நான்கு ஆண்டுக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இஃது இவனை இராசேந்திர னென்றே குறிப்பிடுகிறது. இம்மெய்க்கீர்த்தி, இவன் இளங்கோப் பருவத்தில் புரிந்த போர்களை அறிவிப்பதோடு இவன் சோழ நாட்டின் ஆட்சியை எவ்வாறு எய்தினான் என்பதையும் உணர்த்துகின்றது. புகழ் சூழ்ந்த புணரி யகழ் சூழ்ந்த புவியில்2 என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி மிகப் பெரியது; இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளையும் பிற செய்திகளையும் நன்கு விளக்குவது; வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது; ஆட்சியாண்டுகள் ஏற ஏற வளர்ந்து செல்லும் இயல்புடையது. இஃது இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல்தான் கல்வெட்டுக்களில் காணப்படு கின்றது. இம்மெய்க் கீர்த்தியில் இவன்பெயர் குலோத்துங்கசோழன் என்று வரையப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாம். புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப3 என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் பல கல்வெட்டுக்களில் உளது. இது மிகச் சிறியது; எனவே வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுவதன்று. பூமேலரிவையும் பொற்செயப் பாவையும், என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி, திருக்கோவலூரி லுள்ள இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில்தான் காணப்படுகின்றது. இது, திருமன்னி விளங்கும் என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியைப்போல் இவனது இளங்கோப்பருவத்துப் போர் நிகழ்ச்சிகளையே கூறுகின்றது4 பூமியுந் திருவுந்தாமே புணர1 எனவும், பூமருவிய திருமடந்தையும், எனவும், திருமகள்செயமகள் திருப்புயத் திருப்ப3 எனவும் தொடங்கும் மெய்க்கீர்த்திகள் எல்லாம் இவனுக்குரியனவேயாம்; ஆனால் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுவன அல்ல. சில கல்வெட்டுக்களில் வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் இரண்டடிகளும் புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப என்று தொடங்கும் இவ்வேந்தன் மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப் பெற்றுள்ளன4. அவ்வாறு கலந்தெழுதப்பட்டுள்ளமைக்குக் காரணம் வீரராசேந்திரனுக்கு பிறகு உரிமைப்படி சோழ இராச்சியத்திற்கு அரசனாக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கே யாம் என்பது சிலர் கருத்து5. வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவர்கள். எனவே, இவ்விருவர்க்கும் நடுவில் பரகேசரி என்னும் பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆகவே, குலோத்துங்கன் புனைந்துகொண்ட இராசகேசரி என்னும் பட்டமே, இவனுக்கு முன்னரும் இராசகேசரி வீரராசேந்திரனுக்குப் பின்னரும் பரகேசரி என்னும் பட்டம் புனைந்த ஓர் அரசன் சோழ நாட்டில் ஆட்சிபுரிந்துள்ளனன் என்பதையும் அவன் உரிமையையும் இவன் ஒப்புக்கொண்டுள்ளனன் என்பதையும் நன்கு புலப்படுத்துகின்றது. எனவே, வீரராசேந்திரனுக்குப் பிறகு தானே உரிமைப்படி பட்டம் பெற்றதாகக் கல்வெட்டுக்களின் மூலம் உணர்த்தவேண்டும் என்ற எண்ணம் குலோத்துங்கன்பால் இல்லை என்பது வெளியாதல் காண்க.

இனி, இவன் மெய்க்கீர்த்திகளின் துணைக்கொண்டு இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளை ஆராய்தல் வேண்டும். இவன் தன் இளங்கோப் பருவத்தில் சக்கரக் கோட்ட மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த தாராவர்ஷன் என்னும் வேந்தன் ஒருவனைப் போரில் வென்று வாகை சூடினான் என்றும் அந்நாட்டிலிருந்த வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றினான் என்றும் இவன் மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்சஇராச்சியத்திலுள்ளது2. அங்கு இவன் நிகழ்த்திய போர் கலிங்கத்துப் பரணியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது இவன் எரியூட்டினான் என்றும் அந்நூல் கூறுகின்றது. இவன் இளவரசனாகவிருந்த காலத்தில் அப்போர் களை நிகழ்த்தியமைக்குக் காரணம் புலப்படவில்லை. கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர், இவன் இளமையில் திக்கு விசயம் செய்து கொண்டிருந்தபோது சக்கரக் கோட்டத்திலும் வயிராகரத்திலும் போர்கள் நிகழ்ந்தன என்று உணர்த்துகின்றனர்1. இவனது மெய்க்கீர்த்தியிலும் அத்தகைய குறிப்பொன்று உளது2. ஆகவே, இவன் இளங்கோப் பருவத்தில் செய்த திக்கு விசயத்தில் அப்போர்கள் நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களில் வாகை சூடிய இவ்வேந்தன், தோல்வி யெய்திய தாராவர்ஷன்பால் திறைபெற்று மீண்டமையே அவற்றின் பயனாகும். இவன் அப்பக்கத்தில் ஒரு சிறு இராச்சியம் அமைத்து அதனை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்பதற்குச்3 சான்றுகள் காணப்படவில்லை. எனவே, அக்கூற்றுப் பொருந்தாதென்க.

இவன் மெய்க்கீர்த்தியிலுள்ள கொந்தளவரசர் தந்தளம் இரிய - வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் - போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி4, என்னும் பகுதியை நோக்குங்கால், இவன் சோணாட்டில் ஆட்சி பெறுவதற்கு முன்னர் வடபுலத்தில் மேலைச்சளுக்கியரோடு போர் புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது இனிது புலனாகின்றது. அப்போரைப் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை. இவன் மாமன் வீரராசேந்திரன். வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் கி. பி. 1067 இல் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்தி அன்னோரை வென்று, தன்பால் அடைக்கலம் புகுந்த கீழைச் சளுக்கிய மன்னனாகிய விசயாதித்தனுக்கு அந்நாட்டை வழங்கினான் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. விசயவாடையில் நடைபெற்ற அப்போரில் வீரராசேந்திரனுக்கு உதவியாக நம் குலோத்துங்கனும் போர் புரிந்திருத்தல் வேண்டும். அப்போரில் வெற்றியெய்திய பிறகு அந்நாட்டை இவன் விரும்பியவாறு இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தனுக்கு வீரராசேந்திரன் அளித்திருத்தல் வேண்டும் என்பதும் இயல்பேயாம். இவன் சிறிய, தந்தைக்கு வேங்கி நாட்டை வழங்கியதாகச் செல்லூர்ச் செப்பேடுகளில் குறித்திருப்பதும் அதுபற்றியே போலும். இவன் திக்கு விசயம் செய்து சக்கரக்கோட்டத்தில் தாராவர்ஷனோடு போர்புரிந்த காலத்தில் அவனுக்கு உதவும் பொருட்டுச் சளுக்கிய விக்கிரமாதித்தன் பெரும் படையொன்றை அனுப்பியிருத்தல்கூடும். அதனை இவன் வென்று புறங்காட்டியோடும்படி செய்திருக்கலாம். இவ்விரண்டினுள் எதனை அம்மெய்க்கீர்த்தி குறிப்பிடுகின்றது என்பது இப்போது புலப்படவில்லை.

இனி, இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள போர்களை ஆராயுங்கால், அவற்றுள் ஒன்றிரண்டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன எனலாம். அப்போர் நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுக்களின் துணை கொண்டு ஆராய்ந்தறிதல் வேண்டும்.

மேலைச்சளுக்கியரோடு நிகழ்த்திய போர்

இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனோடு கி. பி. 1076 - ஆம் ஆண்டில் நடத்திய போராகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திர சோழன் இறந்த பின்னர். கீழைச் சளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் என்பவன் குலோத்துங்கசோழன் என்னும் பெயருடன் சோழநாட்டில் முடிசூட்டப் பெற்றதை யுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன், வேங்கிநாடும் சோணாடும் தெற்கேயுள்ள பிற நாடுகளும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட்பட்டிருப்பது, தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனுடைய படை வலிமையையும் வீரத்தையும் குலைப்பதற்குப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தான். அவன், அம்முயற்சியில் வெற்றிபெறும் பொருட்டு ஐந்து ஆண்டுகளாகப் படை சேர்த்தும் வந்தான். நம் குலோத்துங்கனும் அவன் எண்ணத்தை நன்கறிந்தவனாதலின் வடபுலத்திலிருந்து ஒரு படையெழுச்சி நிகழும் என்பதை எதிர்பார்த்துத் தன் படை வலிமையையும் பெருக்கிக்கொண்டே வந்தனன். அந்நாட்களில் குந்தள நாட்டின் ஒரு பகுதியைச் சளுக்கிய விக்கிரமாதித்தனும் மற்றொரு பகுதியை அவன் தமையனாகிய இரண்டாம் சோமேசுவரனும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். அவ்விருவர்க்கும் ஒற்றுமை குலைந்து சோமேசுவரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். விக்கிரமாதித்தன், தன் தம்பியாகிய சயசிங்கனைத் தனக்குதவுமாறு தன்பால் வைத்துக்கொண்டான். பிறகு அவ்வேந்தன், தான் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த படைகளைத் திரட்டிக்கொண்டு சோழ இராச்சியத்தை நோக்கிப் புறப்பட்டு வந்தான். அதன் வடபகுதியாகிய மைசூர் நாட்டில் இருதரத்தினருக்கும் கடும்போர் நடைபெற்றது. ஹொய்சள அரசன் எரியங்கனும் கடம்பகுல மன்னனாகிய சயகேசியும் திரிபுவனமல்ல பாண்டியனும்2 தேவகிரி யதுகுலவேந்தன் சேவுணனும் அப்போரில் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு உதவிபுரிந்தனர். சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவுவதாக உறுதியளித்தவாறே இவன் பக்கத்திலிருந்து போர்புந்தான். ஆனால், அவன் தோல்வி யெய்தி, தான் ஆட்சி புரிந்துகொண்டிருந்த பகுதியையும் இழக்கும் நிலையை அடைந்தான். எனினும் போர் தொடர்ந்து நடந்தது. கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலியென்னுமிடத்தில் நடைபெற்ற போரில் நம் குலோத்துங்கன் வெற்றி பெற்றதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற் கப்பால் துரத்தியும் சென்றான். அங்ஙனம் துரத்திச் சென்றவன், இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங் கண்டான். அளத்தியில் நிகழ்ந்த போரில்6 இவன் மேலைச்சளுக்கியருடைய களிறுகளைக் கைப்பற்றிக்கொண்டான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அன்றியும், மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்டநாயகரால் காக்கப்பெற்ற ஆயிரம் யானைகளைக் கவர்ந்து கொண்டான் என்று கலிங்கத்துப் பரணி உணர்த்துகின்றது. இறுதியில் துங்கபத்திரைக் கரையில் நடைபெற்ற போரில்2. சளுக்கிய விக்கிரமாதித்தனும் அவன் தம்பி சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்க மண்டலமும் கொண்கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகைசூடிய இவ்வேந்தன் எண்ணிறந்த யானைகளையும் பொருட் குவியலையும் பெண்டிர்களையும் கைப்பற்றிக்கொண்டு தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தான். குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்குச் சளுக்கிய விக்கிரமாதித்தன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வந்த பெரும்படை, தன் தமையன் சோமேசுவரனைத் தோற்றோடச் செய்து, குந்தள நாட்டில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியைக் கவர்ந்துகொள்வதற்குப் பயன்பட்டது எனலாம். ஆனால், அவன் குலோத்துங்கன்பால் தோல்வியெய்தித் தன் இராச்சியத்தின் ஒரு பகுதியை இழக்கும்படி நேர்ந்தமை குறிப்பிடத் தக்கதாம்.

இனி, அப்போர் நிகழ்ச்சிகள் குலோத்துங்கன் சோணாட்டில் பட்டம் பெற்றவுடன் நிகழ்ந்தன என்றும் அவற்றில் இவன் தோல்வியுற்றான் என்றும் பில்ஹணர் தம் விக்கிரமாங்கதேவ சரித்திரத்தில் கூறியிருப்பன உண்மைச் செய்திகள் ஆகா. குலோத்துங்கன் ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுக் களில்4. இவன் விக்கிரமாதித்தனையும் சயசிங்கனையும் போரில் வென்ற செய்தி முதலில் குறிப்பிடப்பட்டிருத்தலால் அஃது இவன் ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 1076 - இல் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அன்றியும், மேலைச்சளுக்கியர் கல்வெட்டுக்களிலும்1 அந்நிகழ்ச்சி கி. பி. 1076 - க்கு நேரான சகம் 998 -ல் நிகழ்ந்தது என்று கூறப்பட்டிருத்தல் அறியத் தக்கது. எனவே, குலோத்துங்கன் சோணாட்டில் பட்டம் பெற்றவுடன் அப்போர் நடைபெற்றதென்று பில்ஹணர் கூறியிருப்பது பொருந்தாதென்க. அப்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், நம் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் மைசூர் இராச்சியத்தில் பல இடங்களில் காணப்படுதலால், இவனே வெற்றி பெற்று அந்நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டான் என்பது இனிது புலனாகின்றது. ஆகவே குலோத்துங்கன் போரில் தோல்வியுற்று ஓடிவிட்டான் என்னும் பில்ஹணர் கூற்று கொள்ளத்தக்க தன்று2 என்றுணர்க.

பாண்டியருடன் நடத்திய போர்

குலோத்துங்கன் வடபுலத்தில் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய போர் வெற்றியுடன் முடிவெய்திய பின்னர் இவன் தென்புலத்தைத் தன்னடிப்படுத்தற்குக் கருதினான். ஆகவே, அக்காலத்தில் பாண்டிநாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நோக்கற்பாலதாம்.

முதற் பராந்தக சோழன், முதல் இராசராச சோழன் ஆகிய இருவேந்தர் ஆட்சிக் காலங்களில் பாண்டியர் தம் நிலை குலைந்து சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்து வந்தனர். ஆயினும், அவர்கள் சிறிது படைவலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர் களோடு முரண்பட்டுத் தாம் முடி மன்னராய், சுயேச்சையுடன் வாழ்வதற்கு முயன்றுவந்தனர். அவர்கள் அவ்வாறு முரண்பட நேர்ந்தபோதெல்லாம் சோழ மன்னர்கள் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவேண்டியது இன்றியமையாததாயிற்று. அதனால் நேரும் இன்னல்களை யுணர்ந்த கங்கைகொண்ட சோழன் என்று வழங்கப் பெறும் முதல் இராசேந்திர சோழன் தான் போரில் வென்ற பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் புதல்வருள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் அளித்து அவன் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியில் அரசப் பிரதிநிதியாயிருந்துகொண்டு அந்நாட்டை ஆட்சிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன்மாரும் சோழபாண்டியர் என்னும் பட்டத்துடன் அம்மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்தனர். வீரராசேந்திர சோழனுக்குப் பிறகு அவன் புதல்வன் அதிராசேந்திர சோழன் கி. பி. 1070 - ஆம் ஆண்டில் சில திங்கள் வரையில் அரசாண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தனன். அவ்வேந்தனுக்குப் புதல்வன் இல்லாமையால் சோணாடு, அரசனின்றி அல்லற்பட்டுப் பெருங்குழப்பத்திற் குள்ளாகும்படி நேர்ந்தது. அந்நாட்களில் பாண்டி நாட்டில் சோழ பாண்டியர் ஆட்சியும் ஒழிந்தது. சுயேச்சை பெற்றுத் தாமே முடி மன்னராதற்குக் காலங் கருதிக்கொண்டிருந்த பாண்டியரும், அதுவே தக்க சமய மென்றெண்ணி இழந்த நாட்டைக் கைப்பற்றி அதனை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஐந்து அரசர்களாக இருந்து அவற்றை ஆட்சி புரியத் தொடங்கினர். அன்னோர் ஆட்சியும் கி. பி. 1081 வரை அமைதியாகவே நடைபெற்று வந்தது எனலாம்.

நம் குலோத்துங்கன் கி. பி. 1076 - ல் மேலைச் சளுக்கியரைப் போரில் வென்ற பின்னர் ஐந்தாண்டுகள் வரை படைதிரட்டி, கி. பி. 1081 - ஆம் ஆண்டில் தெற்கேயுள்ள பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துச் சென்றான். அதனையுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும் படையுடன் வந்து இவனை எதிர்த்துப் போர்புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடியொளிந்தனர்2. இங்ஙனம் இவ்வேந்தன்பால் தோல்வியுற்ற பாண்டியர் ஐவரும் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எல்லாத் திசைகளிலும் வெற்றித் தூண்கள் நிறுவியதோடு முத்துச் சலாபத்திற்குரிய பகுதிகளையும் பொதியிற் கூற்றத்தையும் சைய மலையையும் கன்னியாகுமரிப் பகுதியையும் கைப்பற்றினான்3. எனினும், தன் தாய்ப் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனைப் போல் வென்ற நாடுகளைத் தன் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி புரிவதற்கு இவன் முயலவில்லை. எனவே, அவற்றையெல்லாம் உரிய வேந்தர்க்கே அளித்து ஆண்டுதோறும் தனக்குத் திறைப் பொருள் அனுப்பிவருமாறு இவன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்க தாகும். இவன் கல்வெட்டுக்களும் இவன் வழியினர் கல்வெட்டுக்களும் பாண்டி நாட்டில் மிகுதியாகக் காணப் படாமைக்குக் காரணம் இதுவேயாம்.

சேரருடன் நடத்திய போர்

இதுவும் நம் குலோத்துங்கனது ஆட்சியின் 11 - ஆம் ஆண்டாகிய கி. பி. 1081 - இல், பாண்டி நாட்டுப் போருக்குப் பின்னர் நடைபெற்றதாகும். பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்துவந்த சோழ மன்னர்களின் பிரதிநிதிகளே சேர நாட்டையும் அக்காலத்தில் ஆண்டு வந்தனர். நாட்டில் அதிராசேந்திரன் இறந்ததும் அரசனின்றிக் குழப்ப முண்டாகவே, அதுவே தக்க சமயமென்று கருதிப் பாண்டியரைப் போல் சேரரும் சுயேச்சை யெய்தித் தனியரசு புரியத் தொடங்கினர். அன்னோர் ஆட்சியும் கி. பி. 1081 வரையில் அங்கு நடைபெற்றது. பாண்டியர்களை வென்று கப்பஞ் செலுத்தி வருமாறு செய்த குலோத்துங்கன், உடனே சேரரையும் வென்று அத்தகைய நிலைக்குக் கொண்டுவர எண்ணி, அவர்கள் நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்து மைலில் மேலைக் கடற் கோடியிலுள்ள விழிஞத்திலும்1 திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளூர்ச் சாலையிலும் குமரி முனைக்கு வடக்கே பத்து மைலிலுள்ள கோட்டாறு2 என்ற ஊரிலும் பெரும் போர்கள் நடைபெற்றன. சிறிதும் அஞ்சாமல் எதிர்த்துப் போர்புரிந்த மலைநாட்டு வீரருள் பலர் போர்க்களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னனது கப்பற்படை யினை இருமுறையிழித்துப் பெருமை எய்தினான். கோட்டாறும் எரி கொளுத்தப்பெற்று அழிக்கப்பட்டது. சேரமன்னன் தோல்வியுற்றுக் குலோத்துங்கனுக்குக் கீழ் ஒரு சிற்றரசனாகி ஆண்டுதோறும் திறை செலுத்தி வர ஒப்புக்கொண்டான். சேரரும் பாண்டியரும் தம் படைவலியைப் பெருக்கிக் கொண்டு தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக்காதவாறு குலோதுங்கன் அன்னோர் நாடுகளில் கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின் கீழ் நிலைப்படைகள் நிறுவினான். அங்ஙனம் கோட்டாற்றில் அமைக்கப் பெற்ற சோழநாட்டுப் படைக்குக் கோட்டாற்று நிலைப்படை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இனி, குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியைக் கூர்ந்து நோக்குங்கால், இவன் பாண்டியரோடும், சேரரோடும் நிகழ்த்திய போர்கள் ஓராண்டிலேயே தொடர்ந்து நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.

தென்கலிங்கப் போர்

குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்திகள் இவன் இரண்டு கலிங்கப் போர்களில் வெற்றி பெற்றான் என்று கூறுகின்றன. அவற்றுள், ஒன்று இவனது ஆட்சியின் 26 - ஆம் ஆண்டுக் கல்வெட்டில் மிகச் சுருக்கமாகக் காணப்படுகின்றது1. மற்றொன்று 42 - ஆம் ஆண்டு கல்வெட்டில் விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது2. எனவே, முதற் கலிங்கப்போர் கி. பி. 1096 - இல் நடைபெற்றதாதல் வேண்டும். முதற்கலிங்கப்போரே தென்கலிங்கப் போராகும்.

தென்கலிங்கம் என்பது கோதாவரி யாற்றிற்கும் மகேந்திரகிரிக்கும் நடுவில் வங்காளக்கடலைச் சார்ந்திருந்த ஒரு நாடாகும்3. அது வேங்கி நாட்டரசர்க்குட்பட்ட குறுநில மன்னர்களால் அக்காலத்தில் ஆட்சிபுரியப்பட்டு வந்தது. நம் குலோத்துங்கன் புதல்வனாகிய விக்கிரமசோழன் தன் தந்தையின் ஆணையின்படி வேங்கிநாட்டில் அரசப் பிரதிநிதியாய் அமர்ந்து4 ஆண்டு கொண்டிருந்த காலத்தில்5, அவன் இளைஞனாயிருத்தலை யுணர்ந்த தென் கலிங்க வேந்தன் வீமன் என்பான் தான் சுயேச்சைபெறும் பொருட்டுக் கலகஞ் செய்தான், அந் நிகழ்ச்சியை யறிந்த அரசிளங்குமரனாகிய விக்கிரமசோழன், வேங்கி நாட்டிலிருந்து பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்று தென்கலிங்க வீமனைப் போரில் வென்று, முன் போலவே தனக்குக் கப்பஞ் செலுத்தி வருமாறு செய்தான். எனவே, தென்கலிங்க வேந்தன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல், மீண்டும் வேங்கியின் அரசப் பிரதிநிதியாகிய விக்கிரம சோழனுக்கு அடங்கிய ஒரு சிற்றரசனாயினன். இச்செய்திகளை விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தியிலும் காணலாம்.

இத்தென்கலிங்ப்போர் விக்கிரமசோழனால் நிகழ்த்தப் பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாதலின் மகனது வெற்றி, தந்தைக் கேற்றியுரைக்கப் பட்டதென்றுணர்க.

இனி, விக்கிரசோழன் வென்ற அத்தென்கலிங்க வீமனைப் பாண்டி மன்னன் சடையவர்மன் பராந்தகன் என்பவனும் போரில் வென்றடக்கினான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது2. எனவே, ஒரே காலத்திலிருந்த இவ்விரு வேந்தரும் தென் கலிங்கத்தரசனைப் போரில் வென்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். நம் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக்கொண்டு பாண்டி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த பராந்தக பாண்டியன் விக்கிரமசோழனுக்கு உதவி புரியும் பொருட்டுத் தென் கலிங்கப் போருக்குச் சென்றிருத்தலும் இயல்பேயாம். அதுபற்றியே பராந்தக பாண்டியன் மெய்க்கீர்த்தியும் இப்போர் நிகழ்ச்சியைக் கூறுகின்றது எனலாம்.

கி. பி. 1099 - இல் வரையப்பெற்ற குலோத்துங்கன் கல்வெட்டொன்று, விசாகப்பட்டினம் ஜில்லாவிலுள்ள சிம்மாசலத்தில்3 காணப்படுகின்றது. அன்றியும், கோதாவரி ஜில்லாவிலுள்ள திராட்சாராமத்திலும் பிற இடங்களிலும் இவ்வேந்தன் கல்வெட்டுகள் உள்ளன. அவைகள் எல்லாம், தென்கலிங்கம் இவன் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது என்பதை நன்கு விளக்குவனவாகும்.

வடகலிங்கப்போர்

கி. பி. 1112 - ஆம் ஆண்டில்2 நடைபெற்ற இப்போர், வடக்கே வடகலிங்க வேந்தனாகிய அனந்தவர்மன் என்பவனோடு குலோத்துங்கன் நிகழ்த்திய தாகும். திருச்சிராப்பள்ளி ஜில்லா சீனிவாசநல்லூரில் இவனது ஆட்சியின் 42 - ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டொன்றும்3 தஞ்சாவூர் ஜில்லா ஆலங்குடியில் இவனது ஆட்சியின் 45 - ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மற்றொரு கல்வெட்டும்4 இப்போர் நிகழ்ச்சியைச் சிறிது விளக்கிக் கூறுகின்றன. ஆனால் குலோத்துங்கன் மீது சயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி என்ற நூல் இதனை விரிவாக உணர்த்துகின்றது. வடகலிங்கத்திற்கு நேரிற் சென்று இப்போரை நடத்திப் பெருவெற்றியுடன் திரும்பியவன், இவனுடைய படைத் தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமான் என்பவனேயாம்5. குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது எனலாம். இப்போரைப் பற்றிக் கலிங்கத்துப்பரணி கூறும் செய்திகளை அடியிற் காண்க.

ஒரு நாள் குலோத்துங்கன் காஞ்சிமாநகரிலுள்ள அரண்மனையில் சித்திரமண்டபத்தில்1 வீற்றிருந்தபோது, இவன் திருமந்திர ஓலைக்காரன் வந்து, திறைப் பொருளுடன் பல அரசர் கடைவாயிலின்கண் காத்துக் கொண்டிருத்தலை அறிவிக்கவே, இவன் அவர்களை உள்ளே விடுமாறு உத்தரவளித்தான், உடனே அவர்கள் வந்து இவனைப் பணிந்து தாம் கொண்டுவந்துள்ள பொற்கலம், மணித்திரள் முதலான திறை பொருள் அனைத்தையும் அளித்தனர். அப்போது, இவ்வேந்தன் திறை கொடாதார் இன்னும் உளரோ என்று வினவினான். அச்சமயத்தில் வடகலிங்கத்தரசன் இருமுறை திறை கொணர்கிலன் என்று அமைச்சன் கூற, அதனைக் கேட்ட குலோத்துங்கன் பெரிதும் வெகுண்டு, அவனது வலிய குன்றரணம் இடியவென்று அவனையும் அவனுடைய களிற்றினங்களையும் பற்றிக் கொணர்தல் வேண்டும் என்று கூறினான். இவன் அங்ஙனம் கூறலும், அண்மையிலிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத் தொண்டைமான் என்பவன், தான் ஏழு கலிங்கத்தையும் வென்று வருவதாகத் தெரிவித்தான். உடனே குலோத்துங்கனும் அதற்கு உடன்பட்டு, கலிங்க நாட்டின்மீது படையெடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டான். அவ்வாறு விடைபெற்ற கருணாகரன் நாற்பெரும் படையுடன் போர்க்கெழுந்தனன். படைகள் காஞ்சிமா நகரிலிருந்து புறப்பட்டன. அவை பாலாறு2, குசைத்தலை3, பொன்முகரி4, கொல்லி என்னும் நாலாறுந் தாண்டிப் பெண்ணை5 யாற்றையுங் கடந்து, சென்றன; பிறகு மண்ணாறுகுன்றி என்னும் ஆறுகளையுங் கடந்து, பேராறாகிய கிருஷ்ணையும் பிற்படுமாறு போயின; அதன் பின்னர்; கோதாவரி, பம்பா நதி, கோதமை நதி1 என்பவற்றையுங் கடந்து கலிங்க நாட்டையடைந்து சில நகரங்களில் எரி கொளுவிச் சூறையாடின. அந்நிகழ்ச்சிகளைக் கண்ட அந்நாட்டுக் குடிகள் ஓலமிட்டுக்கொண்டு, தம் அரசனாகிய அனந்தவர்மன்பால் ஓடி முறையிடவே, அவன் பெரிதும் வெகுண்டு நம்நாடு, கானரண், மலையரண், கடலரண் இவற்றால் சூழப்பெற்றுக் கிடத்தலை அறியாமல் அவ்வேந்தன் படை வருகின்றது போலும்; நல்லது சென்று காண்போம் என்று கூறினன். அதனைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சன், குலோத்துங்கனுடைய படை வலிமையை எடுத்துரைத்து அப்படைகளோடு போர் புரியத் தொடங்காமல் திறைப்பொருளைக் கொடுத்தனுப்பிவிடுவதே நலமாகும் என்றனன். கலிங்க மன்னனாகிய அனந்தவர்மன் அவன் கூறியவற்றை சிறிதும் பொருட் படுத்தாமல் போர் தொடங்குமாறு தன் நாற் பெரும் படைகட்கும் உத்தரவு அளித்தனன். உடனே கலிங்க நாட்டுப் படைகள் போர்க்குப் புறப்பட்டன. இருதிறப் படைகளும் இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போல் எதிர் நின்று போர் புரிந்தன. போர் மிகக் கடுமையாகவே நடைபெற்றது. கலிங்க வீரர்கள் தம் அரசன் கூறிய வஞ்சினத்தையும் மறந்து ஆற்றலும் வீரமும் குறைந்து, அமரில் எதிர்நின்றாற்போல் எதிர் நின்று போர் புரிந்தனர். போர் மிகக் கடுமையாகவே நடைபெற்றது. கலிங்கர் வீரமும் குறைந்து, அமரில் எதிர்த்து நிற்க முடியாமல் புறங்காட்டியோடத் தொடங்கினர். அங்ஙனம் கலிங்க வீரர்கள் ஓடவே, குலோத்துங்கன் படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான் பெருவெற்றி எய்தி, பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர் ஆகிய எல்லாவற்றையுங் கைப்பற்றிக்கொண்டான். பிறகு போர்க்களத்தைவிட்டோடி ஒளிந்துகொண்ட கலிங்க மன்னனைத் தேடி, அவன் கரந்திருந்த வெற்பினையடைந்து வேலாலும் வில்லாலும் வேலி கோலி விடியும்வரையிலும் காத்திருந்து பின்னர் அவனையுங் கைப்பற்றிக்கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பினான். குலோத்துங்கன், தன் படைத் தலைவனது ஆற்றலையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தமையோடு அவனுக்குத் தக்க வரிசைகளும் செய்தனுப்பினான்.

இனி, கலிங்க நாட்டில் நிகழ்ந்த இப்போர் நிகழ்ச்சியில் மட்டையன், மாதவன், எங்கராயன், ஏச்சணன், இராசணன், தாமயன், போத்தயன், கேத்தணன் என்ற தலைவர்கள் உயிர் துறந்தனர் என்று குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி உணர்த்து கின்றது1. இவர்களுள் எங்கராயன் என்பான்2 கலிங்க வேந்தனுடைய அமைச்சன் என்பது கலிங்கத்துப்பரணியால் அறியக்கிடக் கின்றது. தாமயன் என்பான் அவனுடைய தலைமைச் சேனாதிபதியாவன். இப்போர் நிகழ்ந்த காலத்தில் கலிங்க நாட்டில் அரசாண்டவன் அனந்தவர்மன் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது3. அதன் கூற்றிற்கேற்ப, அனந்தவர்ம சோழகங்கன் என்னும் வேந்தனொருவன் கி. பி. 1078 முதல் 1150 வரையில்அந்நாட்டில் ஆட்சிபுரிந்துள்ளனன் என்பது அங்குக் கிடைத்த செப்பேடுகளால் அறியப்படுகின்றது. எனவே கலிங்கத்துப்பரணியில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் காணப்படும் செய்திகளோடு ஒத்திருந்தல் அறியற்பாலதாகும்.

இனி, கலிங்கப் போரில் தோல்வியுற்ற அனந்தவர்மன் என்பவன் நம் குலோத்துங்கனுடைய மகள் இராசசுந்தரியின் மகன் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்5. அவ்வாறாயின், குலோத்துங்கன் தன் மகள் வயிற்றுப் பேரனைப் போரில் வென்றதை ஒரு பெருவெற்றியாகக் கருதி, இவ்வேற்தன் மீது கலிங்கத்துப்பரணி என்னும் இணையற்ற நூலைப் புலவர் பெருமானாகிய சயங்கொண்டார் இயற்றுவதற்கு முன்வந்திருப் பாரா என்ற ஐயம் உண்டாகின்றது. ஆகவே, அச்செய்தி மீண்டும் நன்கு ஆராய்தற்குரியதொன்றா யிருத்தலின் அதனை இந்நிலையில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

கருணாகரத் தொண்டைமானது கலிங்க வெற்றியின் பயனாக அனந்தவர்மனது ஆட்சிக்காலம்1 முழுவதும் கலிங்கநாடு சோழர்க்கு உட்பட்டிராவிட்டாலும், முற்பகுதியில் சில ஆண்டுகளாவது இன்னோர் ஆட்சிக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. குண்டூர் ஜில்லாவிலுள்ள வேட்பூரில் காணப்படும் கல்வெட்டொன்று, கோடர்குல மன்னன் வீமன் என்பவன் கி. பி. 1108 - இல் கலிங்க வேந்தனைப் போரில் வென்று அவன் நாட்டை சோழர் ஆட்சிக்கு உட்படுத்தினானென்று கூறுகின்றது2. எனவே, குலோத்துங்கன் காலத்தில் நடைபெற்ற கலிங்கப் போர்களுள் ஏதேனும் ஒன்றில் அவன் சோழர்க்கு உதவியுரிந்திருத்தல் வேண்டும். கலிங்க நாட்டு அரசியல் அதிகாரிகளுக்குத் தமிழ்நாட்டுப் பட்டங்கள் வழங்கப் பட்டிருப்பதும்3, அந்நாட்டுக் கல்வெட்டுகளில் சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் போல் எதிராம் ஆண்டும் சௌர மாதமும்4 குறிக்கப்பெற்றிருப்பதும் அந்நாடு சில ஆண்டுகளாவது சோழர் ஆட்சியின் கீழ் இருந்திருத்தல் வேண்டும் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துவனவாகும்.

குலோத்துங்கனும் ஈழநாடும்

குலோத்துங்கன் ஆட்சியில் சோழ இராச்சியம் பண்டைப் பெருமையில் சிறிதும் குறையாமல் உயர் நிலையில் இருந்து வந்ததெனினும் இலங்கை யாகிய ஈழநாட்டை மாத்திரம் இவன் ஆட்சியின் தொடக்கத்திலேயே இழக்கும்படி நேர்ந்தது. இவனுக்கு முன் அரசாண்ட அதிராசேந்திரனே ஈழநாட்டை ஆட்சி புரிந்த இறுதிச் சோழ மன்னன் ஆவன். கி. பி. 1070 -இல் வரையப்பெற்ற அவன் கல்வெட்டொன்று அந்நாட்டில் பொலன்னருவா என்னுமிடத்தில் உளது1. அதுவே, சோழ மன்னனின் இறுதிக் கல்வெட்டென்றுங் கூறலாம். அவன் சோழநாட்டில் இறந்த பின்னர். அந்நாடு அரசனின்றிக் குழப்பத்திலிருந்த நிலை முன்னர் விளக்கப் பட்டுள்ளது. சுயேச்சை எய்தித் தம்நாட்டைத் தாமே ஆட்சிபுரிய வேண்டுமென்று பல ஆண்டுகளாக முயன்று வந்த சிங்களவர்கள் அதுவே தக்க காலமென்று கருதி, ரோகணத்திலிருந்த தங்கள் அரசகுமாரனாகிய முதல் விசயபாகு என்பவனைக் கொணர்ந்து அனுராதபுரத்தில் கி. பி. 1073 - இல் முடிசூட்டி ஈழநாடு முழுமைக்கும் அரசனாக்கினார்கள். அங்கிருந்த சோழரின் படைக்கும் சிங்களவேந்தனுக்கும் பெரும்போர் நிகழவே, அதில் அவ்வேந்தனே வெற்றி பெற்றனன். பிறகு சோழ நாட்டிலிருந்து சென்ற பெரும் படையொன்று அனுராதபுரத்தில் அவ்விசயபாகுவைத் தோற்றோடச் செய்தது. அந்நகரைச் சோணாட்டுப் படை கைப்பற்றிக்கொள்ளவே, விசயபாகு தக்க அரண் வாய்ந்த வேறோர் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சோழரை எதிர்த்துப் படை கைப்பற்றிக்கொள்ளவே, விசயபாகு தக்க அரண் வாய்ந்த வேறோர் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சோழரை எதிர்த்துப் போர் புரிதற்கு முயன்று கொண்டிருந்தான், அங்ஙனமே பொலன்னருவா, அனுராதபுரம் ஆகிய இரு நகரங்களிலும் சோழரைத் தாக்கிப் பொருதற்கு இருபெரும் படைகளை அனுப்பியமையோடு தானும் அவ்விடங்கட்கு வேறொரு வழியாகச் சென்றான். பொலன்னருவாவில் பெரும் போர் நிகழ்ந்த பின்னர், அந்நகரம்சிங்கள மன்னனால் கைப்பற்றப்பட்டது. மற்றொரு சிங்களப்படை கடும் போர் புரிந்து அனுராதபுரத்தையும் கவர்ந்துகொண்டது. சோழர் படை தோல்வி யெய்தி திரும்பிவிடவே, விசயபாகு பெருமகிழ்வுற்று ஈழநாடு முழுமைக்கும் வேந்தனாயினன், பிறகு அந்நாட்டை அவ்வேந்தனே முடிமன்னனாக வீற்றிருந்து ஆட்சி புரிந்து வருவானாயினான். எனவே, குலோத்துங்கன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஈழநாட்டை இழந்துவிட்டானென்று தெரிகிறது. ஈழநாட்டு நிகழ்ச்சிகள் குலோத்துங்கன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. இவையனைத்தும் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தால் அறியக் கிடப்பனவாகும். அன்றியும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் ஈழநாட்டில் காணப்படாமை யொன்றே, அந்நாடு இவன் ஆட்சிக்கு உட்படாமல் சுயேச்சை பெற்ற ஒரு தனியரசன் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது என்பதை நன்கு புலப்படுத்துவதாகும்.

குலோத்துங்கனும் கங்கபாடி நாடும்

இனி, குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் கங்கபாடி நாட்டையும் இழந்துவிட்டனன் என்பது இவன் கல்வெட்டுக்கள் கி. பி. 1115 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டில் காணப்படாமையால் நன்கறியக் கிடக்கின்றது. போசள வேந்தனாகிய பிட்டிகவிஷ்ணு வர்த்தனன் என்பான் கி. பி. 1116 - இல் தலைக்காடு கொண்ட அரசன் என்று தன்னைக் கூறிக் கொள்வது1 கங்கபாடி நாட்டின் தலைநகராகிய தலைக்காட்டை அவன் சோழர்களிடத்திலிருந்து கைப்பற்றிவிட்டான் என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அன்றியும், அதே ஆண்டில் அவன் தலைக்காடு, குவளாலபுரம் என்னும் நகரங்களிலிருந்து கங்கபாடி நாடு முழுவதையும் அரசாண்டான் என்பது அவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது2. கொங்கு நாட்டில் தகடூரிலிருந்து அரசாண்ட அதிகமான் மரபினரே சோழரின் பிரதிநிதிகளாகக் கங்கபாடி நாட்டையும் ஆண்டு வந்தனர். போசள மன்னனின் தண்டநாயகனாகிய கங்கராசன் என்பவன் கி. பி. 1116 - இல் அவ்வதிகமானைப் போரில் வென்று கங்கபாடி நாட்டைக் கைப்பற்றித் தன் அரசனுக்கு அளித்தான் என்றும், தாமோதரன், நரசிம்மவர்மன் என்போர் அதிகமானுக்குப் போரில் உதவி புரிந்தனர் என்றும் அப்போரில் அன்னோர் தோல்வியுற்றமையால் தமிழர் கங்கபாடி நாட்டினின்று துரத்தப்பட்டனர் என்றுஞ் சொல்லப்படுகின்றன.3 அவற்றையெல்லாம் கூர்ந்து ஆராயுமிடத்து, நம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் 46 - ஆம் ஆண்டாகிய கி. பி. 1116 - இல் முதல் இராசராசன் கால முதல் சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்த கங்கபாடி நாட்டை இழந்து விட்டான் என்பது நன்கு வெளியாகின்றது.

குலோத்துங்கனும் வேங்கி நாடும்

இனி, குலோத்துங்கன் தந்தையின் நாடாகிய வேங்கிநாடு இவன் ஆட்சிக் காலத்தில் எத்தகைய நிலையில் இருந்தது என்பது ஆராயற்பாலதாகும். இவன் சிறிய தந்தையாகிய ஏழாம் விசயாதித்தன் என்பவன் கி. பி. 1007 வரையில் 15 ஆண்டுகள் வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து இறந்தான்1. கி. பி. 1070 - இல் நம் குலோத்துங்கன் சோழ நாட்டிற்கு அரசனாகி அதனை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தமையால் தன் சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டிற்குத் தானே நேரிற் சென்று அதன் ஆட்சியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. எனினும், தன் தந்தை அரசாண்ட அந்நாடு பிறர் ஆட்சிக்குட்படாதவாறும் தான் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் சோழ இராச்சியத்திற்கு வடதிசையில் அஃது ஓர் அரணாக அமைந்திருக்குமாறும் தன் புதல்வர்களுள் ஒருவனாகிய இராசராச மும்முடிச் சோழன் என்பவனைத் தன் பிரதி நிதியாக அந்நாட்டிற்கனுப்பி அதனை அரசாண்டு வரும்படி தக்க ஏற்பாடு புரிந்தான். அவன் கி. பி. 1077 முதல் 1078 வரை ஓர் ஆண்டு அங்கு ஆட்சிபுரிந்து2 தன் தந்தைக்கு அணுக்கத்தொண்டு புரியவேண்டிச் சோழ நாட்டிற்குத் திரும்பி விட்டான்.

பிறகு, அவன் தம்பியாகிய வீரசோழன் என்பான் தன் தந்தை விரும்பியவாறு வேங்கிநாட்டிற்கு அரசப் பிரதிநிதியாகச் சென்று கி. பி. 1078 முதல் 1084 வரை அதனை ஆட்சி புரிந்தான்3. ஆறு ஆண்டுகட்குப் பின்னர். கி. பி. 1084 - இல் குலோத்துங்கன் அவனைச் சோணாட்டிற்கழைத்துத் தன்பால் வைத்துக் கொண்டு தன் முதற் புதல்வனாகிய இராசராச சோழகங்கன் என்பவனை வேங்கிநாட்டின் அரசப் பிரதிநிதியாக்கி1 , அந்நாட்டிற்கனுப்பினான். அவன் கி. பி. 1084 முதல் 1089 வரையில் ஐந்தாண்டுகள் அந்நாட்டில் தன் தந்தையின் பிரதிநிதியாகவிருந்து அரசாண்டான். மீண்டும் கி. பி. 1089 - வீரசோழன் வேங்கிந ட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அனுப்பப் பெற்று2, கி. பி. 1093 வரையில் அந்நாட்டிலிருந்து அதனை ஆட்சிபுரிந்தான். அக்காலத்தில் அவன் ஒரு பாண்டியனோடு வடபுலத்தில் போர்புரியும் படி நேர்ந்தது. அப்போர் நிகழ்ச்சியில் தனக்கு உதவிபுரிந்த வெலநாண்டி அரசகுமாரனாகிய இரண்டாம் வெதுரா என்பவனுக்குக் கிருஷ்ணை, கோதாவரி ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையிலுள்ள சிந்துயுக் மாந்தரதேசத்தை வழங்கினான் என்று தெரிகிறது3. வீரசோழனோடு வடபுலத்தில் போர்புரிந்து தோல்யுவிற்ற அப்பாண்டியன் நுளம்பபாடிப் பாண்டியருள் ஒருவனாயிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை.

பிறகு, கி. பி. 1093 - ஆம் ஆண்டில் குலோத்துங்கன் தன் மக்களுள் ஒருவனாகிய விக்கிரமசோழன் என்பவனை வேங்கி நாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அனுப்பினான். அவன் கி. பி. 1118 வரையில் அந்நாட்டில் தன் தந்தையின் பிரதிநிதியாக விருந்து அரசாண்டான்4. இவ்வாறு குலோதுங்கன் தன் புதல்வர் பலரையும் வேங்கிநாட்டிற்குத் தன் பிரதிநிதிகளாக அனுப்பியமைக்குக் காரணம் அவர்கள் எல்லோரும் அச்சிறப்பினைச் சமமாகப் பெறுதல் வேண்டும் என்னுங் கருத்துப்பற்றியே போலும். குலோத்துங்கன் சோணாட்டில் ஆட்சியை ஏற்ற பின்னர் மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் என்பான் கீழைச் சளுக்கிய நாடாகிய வேங்கிநாட்டைக் கைப்பற்றித் தன் ஆளுகைக்குட்படுத்த வேண்டுமென்ற எண்ணமுடையவனாக இருந்தனன். விக்கிரம சோழன் அந்நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்தபோது அவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த தென் கலிங்க வேந்தனாகிய தெலுங்க வீமன் அவனோடு முரண்பட்டமையும், வடகலிங்க மன்னனாகிய அனந்தவர்மன் நம் குலோத்துங்கனுக்கு வழக்கம்போல் கப்பஞ் செலுத்தாமல் மாறுபட்டமையும், சளுக்கிய விக்கிர மாதித்தன் செய்த சூழ்ச்சிகளின் பயனாகவும் இருத்தல் கூடும். எனினும், அவன் சூழ்ச்சிகள் விக்கிரமசோழன் வேங்கிநாட்டில் அரசப் பிரதிநிதியாக இருக்கும் வரையில் சிறிதும் பயன்படவில்லை என்று கூறலாம். குலோத்துங்கன் தான் முதுமை எய்தியமை கருதித் தன் புதல்வனாகிய விக்கிரம சோழனை வேங்கி நாட்டிலிருந்து கி. பி. 1118ஆம் ஆண்டில் தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருவித்து இளவரசுப் பட்டங் கட்டினான்.

இனி, கோதாவரி ஜில்லாவில் பித்தாபுரத்திலுள்ள மல்லப்ப தேவன் கல்வெட்டொன்று1 விக்கிரம சோழன் சோழ நாட்டுக்குத் திரும்பிய பின்னர் வேங்கி நாடு அரசனின்றிக் குழப்பத்துக்கு உள்ளாகி யிருந்தது என்று கூறு கின்றது. அவ்வூரிலுள்ள மற்றொரு கல்வெட்டு, வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங் கொண்கனுடைய புதல்வன் சோடன் என்பவனுக்குக் குலோத்துங்கன் வேங்கி நாட்டை அளித்தான் என்று உணர்த்துகின்றது.2 எனவே சோழ நாட்டிலிருந்து ஒரு பிரதிநிதியையும் அனுப்பாமல் தெலுங்கச் சோழர்களுள் ஒருவனுக்கு அந்நாட்டைக் கொடுத்து அரசாண்டு வருமாறு ஏற்பாடு செய்தனன் என்பது நன்கு புலனாகின்றது. வேங்கி நாட்டைத் தன் ஆட்சிக்குட்படுத்த வேண்டுமென்று கருதித் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் என்பான் அந்நாட்டில் விக்கிரம சோழன் இல்லாமையை அறிந்து அதனைக் கைப்பற்றி வெலநாண்டுத் தலைவர்களைத் தனக்குட்பட்ட குறுநில மன்னராக்கி விட்டான். குலோத்துங்கன் ஆட்சியின் 49, 50 -ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் வேங்கி நாட்டில் காணப்படாமை யொன்றே இவ்வேந்தன் அதனைக் கி. பி. 1113இல் இழந்துவிட்டான் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்துகின்றது. அன்றியும் சளுக்கிய விக்கிரமாதித்தனுடைய தண்டநாயகனாகிய அநந்த பாலையா என்பவன். கி. பி. 1118ஆம் ஆண்டில் வேங்கி நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்பது குண்டூர் ஜில்லாவிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.1 வேங்கி நாட்டில் திராட்சாராமம் என்னும் ஊரில் கி. பி. 1120, 1121ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் சாளுக்கிய விக்கிரம ஆண்டு குறிக்கப்பட்டிருப்பதும்2 அந்நாடு சாளுக்கிய விக்கிரமாதித்தன் இராச்சியத்திற்குள் ளடங்கியதாய் அவன் பிரதிநிதி யொருவனால் அரசாளப்பட்டு வந்தது என்பதை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே குலோத்துங்கன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்னர், வேங்கி நாடும் இவன் ஆட்சி யினின்று நீங்கிவிட்டது எனலாம்.

இவன் ஆளுகையின் தொடக்கத்தில் ஈழநாடும் இறுதிக் காலத்தில் கங்கபாடி நாடும் வேங்கி நாடும் சோழ இராச்சியத்திலிருந்து விலகி விட்டனவாயினும், ஈழ நாடொன்றைத் தவிர மற்றவை எல்லாம் இவன் ஆளுகையின் கீழ் நாற்பத்தைந்து ஆண்டுகள் அமைதியுடன் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவனது ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரை பரவியிருந்தது. அக்காலத்தில் சோழ இராச்சியத்திற்கு வடவெல்லையாகவும், மேலைச் சளுக்கிய இராச்சியத்திற்குத் தென்னெல்லையாகவும் அமைந்திருந்தது. இடையிலுள்ளது துங்கபத்திரை என்னும் ஆறேயாம். சிற்சில காலங்களில் இவ்விரு இராச்சியங்களும் அவ்வெல்லையைத் தாண்டி அவ்வாற்றின் வடக்குந் தெற்கும் சிறிது பரவியிருந்தமை யுமுண்டு. அச்செய்தியை அந்நிலப் பரப்பில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறிந்து கொள்ளலாம்.

குலோத்துங்கனது வெளிநாட்டுத் தொடர்பு

சோழர்கட்கும் சீன தேயத்தினர்க்கும் தொடர்பு இருந்து வந்தது என்பது சீன தேய சரிதங்களால் வெளியாகின்றது. கி. பி. 1077ஆம் ஆண்டில் எழுபத்திரண்டு பேரடங்கிய ஒரு குழுவினர் சோணாட்டிலிருந்து சீன தேயத்திற்குத் தூது சென்ற செய்தி அத் தேயச் சரித்திரத்தில் காணப் படுகின்றது.1 அவ்வாண்டை நோக்குங் கால் அக்குழு நம் குலோத்துங்கனால் அந்நாட்டிற்கு அனுப்பப் பெற்றதாதல் வேண்டும்.2 சோழ இராச்சியத்திற்கும் சீன இராச்சியத்திற்கும் ஓர் உறுதியான வாணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு இவ்வேந்தன் அத்தூதினை அனுப்பியிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை. அம் முயற்சியில் இவன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் திண்ணம். இச் செய்திகளை வலியுறுத்தக் கூடிய கல்வெட்டுக்களாதல் பழைய செய்யுட்களாதல் நம் நாட்டில் இதுகாறும் கிடைக்கவில்லை யென்பது ஈண்டு அறியத்தக்கது.

கடார நாட்டுத் தொடர்பு

பரக்கு மோதக் கடாரமழித்த நாள்3 என்று தொடங்கும் கலிங்கத்துப் பரணித் தாழிசை யொன்றால், குலோத்துங்கன் கடல் சூழ்ந்த கடார தேசத் திற்குச் சென்று போர் புரிந்து வெற்றியெய்திய செய்தி நன்கு புலனாகின்றது. ஆனால் இவன் கல்வெட்டுக்களில் அச்செய்தி காணப்படவில்லை. இவன் மாமன் வீரராசேந்திர சோழன் சோணாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் அவன் தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசனுக்கு இராச்சியத்தைப் பகைஞரிடமிருந்து மீட்டுக்கொடுக்கும் பொருட்டுப் பெரும் படையொன்றை அந்நாட்டிற்கு அனுப்பினான். அந் நாட்களில் கடாரத்திற்குப் படையுடன் சென்ற தலைவர்களுள் நம் குலோத்துங்கனும் ஒருவனாக இருத்தல் வேண்டும்.1 இவன் அரசகுமாரனாக விருந்த காலத்தில் கி. பி. 1068இல் கடாரத்தில் பெற்ற அவ் வெற்றியையே ஆசிரியர் சயங்கொண்டார் தாம் பாடிய பரணியில் பாராட்டி யிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை. கி. பி. 1090ஆம் ஆண்டில் கடாரத்தரசன் இராசவித்தியாதா சாமந்தன் அபிமானதுங்க சாமந்தன் என்னும் இரு தூதர்கள் மூலம் வேண்டிக் கொண்டவாறு நாகப்பட்டினத்திலிருந்த இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் இரண்டு புத்த விகாரங்கட்கும் நம் குலோத்துங்கன் தன் முன்னோருந் தானும் இறையிலியாக அளித்த ஊர்களைச் செப்பேடுகளில் வரைந்து வழங்கியிருப்பது இவ்விரு வேந்தரும் அக்காலத்தில் உற்ற நண்பர்களாயிருந்தனர் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். வீர ராசேந்திர சோழன் ஆணையின்படி குலோத்துங்கன் கடாரத்தை வென்று தனக்கு வழங்கிய காரணம் பற்றி அக்கடாரத்தரசன் சோழ மன்னர்க்குச் சில ஆண்டுகள் வரையில் கப்பஞ் செலுத்திக் கொண்டிருத்தலும் இயல்பேயாம். அன்றியும், குலோத்துங்கன் தனக்குச் செய்த பேருதவியை நினைவுகூர்தற்கறிகுறியாக இவன் பேரால் இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புத்த விகாரத்தைச் சோழகுல வல்லிப் பட்டினமாகிய நாகப் பட்டினத்தில் கடாரத் தரசன் புதிகாக அமைத்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியமும், கடார இராச்சியமும் நட்புரிமை பூண்டு வாணிகத் தொடர்புடையன வாய்ச் சிறப்புற்றிருந்தன என்று கூறலாம். இவ்வுண்மையைச் சுமத்ரா தீவில் கி. பி. 1088ஆம் ஆண்டு வரையப் பெற்றுள்ள திசையாயிரத்து ஐந்நூற்றுவர்1 என்னுந் தமிழ் வணிகக் குழுவையுணர்த்துங் கல்வெட்டொன்று உறுதிப்படுத்தல் ஈண்டு அறியற்பாலதாகும்.

காம்போச நாட்டுத் தொடர்பு

குலோத்துங்கன் காம்போச நாட்டு வேந்தன் தனக்குக் காட்சிப் பொருளாகக் காட்டிய கல்லொன்றைப் பெற்று வந்து, தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் வைத்தனன் என்று சிதம்பரத்திலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.2 சயாம் தேசத்திற்குக் கிழக்கேயுள்ளதும் இக் காலத்தில் கம்போடியா என்று வழங்கப்பெற்று வருவதுமாகிய நாடே. முற்காலத்தில் காம்போசம் என்னும் பெயருடையதா யிருந்தது. அந்நாட்டு வேந்தன் காட்சிப் பொருளாகத் தனக்குக் காட்டிய அவ்வரிய கல்லை நம் குலோத்துங்கன் எவ்விடத்தில் பார்க்கும்படி நேர்ந்தது என்பது இப்போது புலப்படவில்லை. தன் அம்மான் வீர ராசேந்திர சோழன் விரும்பியவாறு கடார மன்னனுக்கு உதவி புரியவேண்டி, கி. பி. 1068-இல் இவன் பெரும் படையுடன் அந்நாட்டிற்குச் சென்றிருத்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சென்றவன், தான் மேற்கொண்ட கருமம் முடிந்த பிறகு அந்நாட்டிற்கு அண்மையிலுள்ள காம்போசத்திற்கும் போயிருக்கலாம். அந்நாளில் அந்நாட்டரசன் காட்சிப்பொருளாகத் தனக்குக் காட்டிய கல்லை இவன் பெற்றிருத்தலும் இயல்பேயாம். இவன் அங்குச் சென்றபோது இவனை வரவேற்று உபசரித்து அவ்வரிய கல்லைக் காட்டிய காம்போச மன்னன் யாவன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அக்காலப் பகுதியில் காம்போசத்தின் தென் பகுதியை மூன்றாம் ஹர்ஷ வர்மனும், வட பகுதியை ஆறாம் ஜயவர்மனும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர் என்பது காம்போச தேச வரலாற்றால் அறியப்படுகின்றது. அவர்களுள் தென் பகுதியையாண்ட ஹர்ஷவர்மனே நம் குலோத்துங்கனுக்கு நண்பனாயிருத்தல் வேண்டு மென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. எனவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் கடார தேசத்தைப் போல் காம்போச நாடும் சோழ இராச்சியத்தோடு நட்புரிமை கொண்டு வாணிகத் தொடர்புடையதாக இருந்திருத்தல் வேண்டுமென்பது திண்ணம்.

கன்னோசி நாட்டுத் தொடர்பு

குலோத்துங்கனது ஆட்சியின் 41ஆம் ஆண்டாகிய கி. பி. 1111-ல் வரையப்பட்ட கன்னோசி மன்னனது வடமொழிக் கல்வெட்டொன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் உளது.2 அது முற்றுப் பெறாமலிருத்தலால் அஃது அங்கு எழுதப் பெற்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கன்னோசி என்பது கன்னியா குப்ஜம் எனவும் கானோஜ் எனவும் வழங்கும் நாடாகும். அது காசிமாநகர்க்கு வடமேற்கே ஐக்கிய மாகாணத்திலுள்ள தொரு நாடு.3 குலோத்துங்கன் காலத்தில் அதனை ஆட்சி புரிந்தோர் மதனபால தேவனும், அவன் புதல்வன் கோவிந்த சந்திர தேவனுமாவர்.4 அவ்விருவரில் ஒருவன், சோழர்களின் தலைநகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஏதோ காரணம் பற்றி வர நேர்ந்தபோது அங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு நிவந்தம் அளித்து, அவ்வறச் செயலைக் கோயிலில் வரையும்படி செய்திருத்தல் வேண்டும். எக்காரணம் பற்றியோ அக்கல்வெட்டு முற்றிலும் வரையப்படாமல் நின்று விட்டது. அதில் கோயிலுக்களிக்கப் பெற்ற நிவந்தமும் அதனையளித்த அரசன் பெயரும் காணப்படவில்லை. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இலக்குமணபுரி பொருட்காட்சியிலுள்ள கன்னோசி மன்னன் கோவிந்த சந்திர தேவன் செப்பேடுகளில் முதலிலுள்ள சில வடமொழிச் சுலோகங்களே கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிற் சுவரிலும் காணப்படுகின்றன. எனவே, முற்றுப் பெறாத நிலையிலுள்ள அக் கல்வெட்டு கன்னோசி மன்னனுடையது என்பது நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, குலோத்துங்கனும் கன்னோசி அரசனும் நண்பர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. கன்னோசி வேந்தர்கள் சூரியனுக்குத் தனிக்கோயில் எடுப்பித்து வழிபாடு புரியும் வழக்கமுடையவர்கள். அவர்களைப் போல் குலோத்துங்கனும் சோழ நாட்டில் ஓர் ஊரில் சூரியனுக்குக் கோயில் எடுப்பித்து அதற்குக் குலோத்துங்க சோழமார்த் தாண்டாலயம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் வழங்கியுள்ளான். சூரியனுக்கு ஒரு தனிக்கோயில் அமைக்கப் பெற்றுள்ள காரணம் பற்றி அவ்வூர் இக்காலத்தும் சூரியனார் கோயில் என்று வழங்கப்பெற்று வருகின்றது. அக்கோயிலின் ஒருபுறத்தில் காசி விசுவநாதரும் விசாலாட்சியம்மையும் வைக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து, நம் குலோத்துங்கனுக்கும் கன்னோசி வேந்தனுக்கும் ஒருவகைத் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியமும் கன்னோசி நாடும் நட்புரிமை பூண்டு விளங்கின என்பது தேற்றம்.

இனி, இந்நாளில் பர்மா என்று வழங்கும் தேசத்திலுள்ள புக்கம் என்னும் மாநகரிலிருந்து கி. பி. 1084 முதல் 1112 வரையில் அரசாண்ட திரிபுவனாதித்திய தம்மராசன் என்னும் வேந்தனொருவன், சோழ அரசகுமாரன் ஒருவனைப் புத்த சமயத்தினனாக மாற்றியதோடு அவன் மகளை மணந்து கொண்டான் என்றும் அந்நாட்டிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.1 அக்காலப் பகுதியில் சோழ இராச்சியத்தை ஆட்சி புரிந்தவன் முதற் குலோத்துங்க சோழனேயாவன். இவ்வேந்தர்க்கும் அந்நிகழ்ச்சிகட்கும் ஒரு சிறிதும் தொடர்பில்லை என்பது திண்ணம். அச் செய்திகள் நம் நாட்டிலுள்ள கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் காணப்படாமையால் பௌத்தனாக மாறித் தன் மகளையும் பர்மாவிலிருந்த பொளத்த அரசனுக்கு மணஞ் செய்து கொடுத்த சோழ அரசகுமாரன் யாவன் என்பதும் அஃது எத்துணை உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதும் புலப்படவில்லை.

குலோத்துங்கன் தன் நாட்டில் சுங்கந் தவிர்த்தமை

இனி, குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய அரிய செயல்களுள் முதலில் வைத்துப் பாராட்டுதற் குரியது. இவன் தன் நாட்டில் சுங்க வரியை நீக்கியமையேயாம். நாட்டு மக்கட்கு நலம்புரியக் கருதி இவன் ஆற்றிய இவ்வருஞ் செயல் அக்காலத்தில் மக்கள் எல்லோரையும் மகிழ்வித்தமையால் அன்னோர் இவனை வாயார வாழ்த்திச் சுங்கந் தவிர்த்த சோழன் என்று வழங்குவாராயினர். கல்வெட்டிலும் சுங்கந் தவிர்த் திருள் நீக்கி உலகாண்ட ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்2 என்று இவ் வேந்தன் குறிப்பிடப்பட்டுள்ளனன். கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர்,

புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்தவிராத சுங்கந் தவிர்த்தோன்3

என்று இரண்டாங் குலோத்துங்க சோழன் உலாவில் கூறியிருத்தலால் அச் சுங்க வரி1 நெடுங்காலமாக நிலை பெற்றிருந்த தொன்மையுடையது என்பதும், அதனை எவ் வேந்தரும் நீக்கத் துணியவில்லை யென்பதும் அத்தகைய பழைய வரியை இவன் நீக்கிப் புகழெய்தினான் என்பதும் நன்கறியக் கிடத்தல் காண்க. குலோத்துங்கன் தன் நாட்டில் சுங்கந் தவிர்த்து அரசாண்டமை அக்காலத்தில் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தமையால் இவன் வழித்தோன்றல்கள் மூவரின் மீது உலாக்கள் பாடிய புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வருஞ் செயலை அந்நூல்களில்2 மறவாமல் கூறிப் புகழ்ந்திருப்பதோடு தம் தக்கயாகப் பரணியிலும்3 குறிப்பிட்டுள்ளனர். இவ்வேந்தனது இவ்வரிய செயல் பற்றிச் சில ஊர்கள் சுங்கந் தவிர்த்த சோழநல்லூர்4 எனவும் ஓர் ஆறு சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு5எனவும் இவன் ஆட்சிக் காலத்தில் பெயர்கள் எய்தின என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. கி. பி. 1194 - ல் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் திருவிடைமருதூரில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று1 சுங்கமில்லாச் சோழநாடு என்று கூறுவதால் நம் குலோத்துங்கன் சோழ நாட்டில் மாத்திரம் சுங்கத்தை நீக்கியிருந் தானென்பதும் இவனுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களின் காலத்தும் அந்நாட்டில் சுங்கம் வாங்கப்படவில்லை என்பதும் நன்கு புலனாகின்றன.

சுங்கமில்லா நாட்டில் புறநாட்டுப் பொருள்களெல்லாம் வாணிகத்தின் பொருட்டு மிகுதியாக வந்து குவியுமாதலின், அவையனைத்தும் சொற்ப விலைக்கு அந்நாட்டில் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் என்பது ஒருதலை.

குலோத்துங்கன் ஆட்சியில் நிலம் அளக்கப் பெற்றமை

இனி, குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி, இவன் சோழ நாடு முழுவதையும் அளக்கும்படி செய்து விளை நிலங்களின் பரப்பை உள்ளவாறு உணர்ந்து நிலவரியை ஒழுங்கு படுத்தியமையே யாகும், அவ்வேலையும் கி. பி. 1086 - ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்று இரண்டாண்டுகளில் முடிவெய்தியது2 இவ்வேந்தன் ஆணையின் படி அதனைச் செய்து முடித்த அரசியல் அதிகாரிகள் திருவேகம்ப முடையானான உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தானான திருவரங்க தேவன் என்போர்3. அவர்கள் சோழ மண்டலத்திலுள்ள நிலம் முழுமையும் அளந்தமை பற்றி அன்னோர்க்கு உலகளந்த சோழப் பல்ல வரையன் உலகளந்தான் என்னும் பட்டங்கள் அரசனால் அளிக்கப்பெற்றிருப்பது அறியற்பாலதாம். குலோத்துங்கனுடைய தாய்ப் பாட்டன் கங்கை கொண்ட சோழனின் தந்தையாகிய முதல் இராசராச சோழன் ஆட்சிக் காலத்தும் சோழமண்டலம் ஒரு முறை அளக்கப் பெற்றது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் நாடு முழுமையும் அளக்கப்பட்ட பிறகு வரி விதிக்கப் பெறாமல் நீக்கப்பெற்ற இடங்களை ஆராயுங்கால் அந்நாளில் விளை நிலங்களுக்கு மாத்திரம் அரசாங்கத்தினர் நிலவரி வாங்கி வந்தனரேயன்றி மற்ற நிலங்களுக்கு வரி வாங்கவில்லை என்பது நன்கு வெளியாகின்றது. அவ்வாறு அன்னோர் குடிகளிடமிருந்து வாங்கிய நிலவரியும் ஆறிலொரு கடமையே யாகும்.

குலோத்துங்கனது சமயநிலை

இவன் தன் முன்னோரைப் போலவே சைவ நெறியைச் சிறப்பாகக் கைக்கொண்டொழுகியவன்; சிவபெருமானிடத்தில் எல்லையற்ற பேரன் புடையவனாய்த் திகழ்ந்தவன். அக்காரணம் பற்றியே இவன் திருநீற்றுச் சோழன்1 என வழங்கப் பெற்றனன் என்று தெரிகிறது. எனினும், தம் சமயமல்லாத மற்றைச் சமயங்களைச் சார்ந்த மக்களைத் துன்புறுத்தும் சில அரசர்கள் போல இவன் புறச்சமயத்தினர் பால் வெறுப்புக் காட்டியவன் அல்லன். சோழ நாட்டிலுள்ள புறச் சமயத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள் தோறும் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த மன்னார்குடியிலுள்ளதும் இப்போது இராசகோபாலசாமி என்று வழங்கப் பெறுவதுமாகிய திருமால் கோட்டம் இவன் ஆட்சிக் காலத்தில் எடுப்பிக்கப் பெற்று இவன் பெயரிடப்பட்ட தொன்றாம். குலோதுங்க சோழ விண்ணகரம்2 என்பது அக்கோயிலின் பழைய பெயராகும். அன்றியும், வேங்கி நாட்டில் இவன் இளவரசுப் பட்டம் பெற்ற நாளில் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி இவன் எய்திய அபிடேகப் பெயர் சப்தம விஷ்ணு வர்த்தனன் என்பது சில கல்வெட்டுக்களால்3 அறியப் படுகிறது. கி. பி. 1090 - ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தின் கண் கடாரத்தரசனால் எடுப்பிக்கப்பெற்ற இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்னும் புத்த விகாரத்திற்குச் சிறந்த விளை நிலங்களைத் தம்பாற் கொண்ட சில ஊர்களை நம் குலோத்துங்கன் இறையிலியாக அளித்து அச்சமயத்தினரையும் ஆதரித்துள்ளனன். இவ்வேந்தன் அப்புத்த கோயிலுக்கு விட்ட நிவந்தங்களை உணர்த்துஞ் செப்பேடுகள் ஹாலண்டு தேயத்திலுள்ள லெய்டன் நகரப் பொருட்காட்சிச்சாலையில் இப்போது இருத்தல் அறியத்தக்கது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, இம்மன்னன் தன் காலத்தில் வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இனிது பெறப்படுகின்றது. பேரரசர் களாயிருப்பவர் கட்கு இருத்தற்குரிய இன்றியமையாத பெருங் குணங்களுள் சமயப் பொறையும் ஒன்றன்றோ? ஆகவே, பெருவேந்தனாகிய நம் குலோத்துங்கனும் அத்தகைய அரிய குணம் படைத்தவனாக விளங்கியதில் வியத்தற்குரிய தொன்றுமில்லை என்க.

குலோத்துங்கனது கல்விச் சிறப்பு

இவ்வரசர் பெருமானைப் பல்கலைத்துறை நாவிலுறைந்தவன்2 என்றும் அறிஞர் தம்பிரான் அபயன்3 என்றும் ஆசிரியர் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில் குறிப்பிட்டிருத்தலால் இவன் தமிழ் மொழியிலும் ஆரியம் தெலுங்கு முதலான பிற மொழிகளிலும் புலமை யெய்திச் சிறப்புற்றிருந்தனன் என்பது நன்கறியக் கிடக்கின்றது4 அன்றியும், இவன் இசைத் தமிழ் நூலொன்று இயற்றியுள்ளனன் என்பது சோழ குலசேகரன் வகுத்த இசை5 எனவும் தாளமுஞ் செலவும் பிழையாவகை தான் வகுத்தன தன்னெதிர் பாடியே - காளமுங்களிறும் பெறும் பாணர்தம் கல்வியிற் பிழை கண்டனன் கேட்கவே1 எனவும் ஆசிரியர் சயங்கொண்டார் கூறியிருத்தலால் இனிது புலனாகின்றது. அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ் வேந்தனது இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனர் என்பதும் மேலே குறித்துள்ள பாடலால் நன்குணரப்படும். அன்றியும், இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசை வல்லபி என்பாள், தன் கணவன் இயற்றிய இசை நூலைப் பயின்று அம்முறையைப் பின்பற்றி இனிமையாகப் பாடி ஏழிசையையும் வளர்த்து வந்தனள் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.2 இவற்றையெல்லாம் நோக்குங்கால், நம் குலோத்துங்கன், கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையினொடும்3 பொழுது போக்கினான் என்று ஆசிரியர் சயங்கொண்டார் கூறியிருப்பது உண்மைச் செய்தியே எனலாம். ஆகவே, இவன் புலவர்களிடத்தில் பெரு மதிப்பும் அன்பும் வைத்து அன்னோரை ஆதரித்து வந்தனன் என்பது தொள்ளிது. இவன் வடகலிங்கத்தில் பெற்ற பெரு வெற்றியைப் பாராட்டி, கவிச் சக்கரவர்த்தி யாகிய சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் ஓர் அரிய நூல் இயற்றியிருப்பதும்4 கவி குமுத சந்திரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற திருநாராயண பட்டர் என்பவர் குலோத்துங்க சோழ சரிதை என்ற காப்பியம் ஒன்று பாடியிருப்பதும்5 ஈண்டு குறிப்பிடத் தக்கனவாம்.

குலோத்துங்கன் சிறப்புப் பெயர்கள்

இவன் இளமையில் இராசேந்திரன் என்ற பெயரும், வேங்கி நாட்டில் சப்தம விஷ்ணுவர்த்தனன் என்ற பெயரும், சோணாட்டில் அபிடேக நாளில் குலோத்துங்கன் என்ற பெயரும், பெற்று விளங்கியமை முன்னர்க் கூறப் பட்டுள்ளது.அப் பெயர்களைத் தவிர வேறு சில சிறப்புப்பெயர்களும் அந்நாளில் இவனுக்கு வழங்கியுள்ளன. அவை, அபயன்,1 சயதரன்,2 சயதுங்கன்,3 விருதராசபயங்கரன்,4 கரிகாலன்,5 ராசநாரயணன்,6 உலகுய்யவந்தான்,7 திருநீற்றுச்சோழன்,8 மனுகுலதீபன்,9 உபயகுலோத்தமன்,10 என்பனவாம். இவற்றுள் சிலவற்றைக் கலிங்கத்துப் பரணியிலும் சிலவற்றைக் கல்வெட்டுக்களிலுங் காணலாம். திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டம் புனைந்துகொண்டு அரசாண்ட சோழமன்னர்களுள் இவனே முதல்வன் ஆவான். இச்சிறந்த பட்டமும் இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 1075 முதல் தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இவனுக்குப் பிறகு ஆட்சிபுரிந்த இவன் வழித்தோன்றல்கள் எல்லோரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டு வந்தனர் என்பது அன்னோர் கல்வெட்டுக்களால் நன்குணரக் கிடக்கின்றது.

தலைநகர்

நம் குலோத்துங்கன் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைமை நகரம் கங்கைகொண்ட சோழபுரமாகும். இந்நகர் இவன் தாய்ப் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனால் அமைக்கப்பெற்றது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சயங்கொண்டார், இவ்வேந்தன் மீது தாம் பாடிய கலிங்கத்துப் பரணியில் இப்பெரு நகரைக் கங்காபுரி1 என்று குறிப் பிட்டிருப்பது அறியற்பாலது. முடிகொண்ட சோழபுரம்2 என்னும் பழையாறை நகரும் காஞ்சிமாநகரும்3 சோழ இராச்சியத்தின் தென்பகுதியிலும் வடபகுதியிலும் முறையே இரண்டாவது தலைநகரங்களாக விளங்கின. ஒவ்வோர் ஆண்டிலும் சில திங்கள்களில் இவ்வேந்தன் அந்நகர்களில் தங்கியிருத்தலும் உண்டு. விக்கிரம சோழபுரம் திருமழபாடி முதலான இடங்களிலும் இவன் அரண்மனைகள் இருந்தன என்று சில கல்வெட்டுக்களால் தெரிகிறது.

குலோத்துங்கன் மனைவியரும் மக்களும்

இவனுடைய பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவ்வரசி, இவனுடைய அம்மானாகிய இரண்டாம் இராசேந்திர சோழன் மகள். இவளுக்கு தீனசிந்தாமணி என்ற பிறிதொரு பெயரும் உண்டு. இவள், சிவனிடத் துமை யெனத் தீனசிந்தாமணி புவன முழுதுடையாள் என்று கல்வெட்டுக்களில் மிகச் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனள். குலோத்துங் கனது ஆட்சியின் இருப்பத்தாறாம் ஆண்டிற்குப் பிறகு இவளைப்பற்றிய குறிப்பொன்றும் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. எனவே, அதற்குப் பிறகு இவள் இறந்திருத்தல் வேண்டும். ஆகவே, இவ்வேந்தனது ஆட்சியின் முற்பகுதியில் இவள் பட்டத்தரசியாகத் திகழ்ந்தனள் எனலாம். இவளுக்குப் பிறகு, இவனுடைய மற்றொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளைத் திருமாலாகத்துப் பிரியாதென்றும் - திருமகள் திகழ்ந்தெனத் தியாகவல்லி என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறுகின்றன. அன்றியும், ஆசிரியர் சயங்கொண்டார், சென்னி ஆணையுடன் ஆணையை நடத்துமுரிமைத் தியாகவல்லி நிறைச்செல்வி1 என்று இவ்வரசியின் பெருமையையும் அரசன் இவள்பால் வைத்திருந்த மதிப்பினையும் நன்கு விளக்கியுள்ளனர். இவ்வேந்தன் ஆட்சியின் பிற்பகுதி முழுவதும் இவளே பட்டத்தரசியாக இருந்தனள் என்று தெரிகிறது. இவனது மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள வேறொரு மனைவி ஏழிசை வல்லபி என்பாள். இவளைக் கங்கை வீற்றிருந்தென மங்கையர் திலகம் - ஏழிசை வல்லபி ஏழுலகுமுடையாள் என்று கல்வெட்டுக்கள் பெரிதும் பாராட்டு கின்றன. ஆசிரியர் சயங்கொண்டாரும்இவளை, ஏழுபாருலகொ டேழிசையும் வளர்க்க உரியாள் என்று புகழ்ந்துள்ளனர். இவ்வரசி தன் நாயகனாகிய குலோத்துங்கன் எழுதிய இசைநூலில் பெரும் புலமையுடையவளாய் ஏழிசையையும் வளர்த்து வந்தமையால் ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப்பெயர் பெற்றனள். திருவிடைமருதூரிலுள்ள கல்வெட்டொன்றில்4 காணப்படும் நம் பிராட்டியார் சீராமன் அருமொழி நங்கையாகிய ஏழுலக முடையார் என்னுங் குறிப்பினால் ஏழிசை வல்லபி என்று சிறப்புப் பெயருடன் நிலவிய இவ்வரசி அருமொழி நங்கை என்னும் இயற் பெயருடையவளா யிருந்திருத்தல் வேண்டு மென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இம்மூவரே யன்றி வேறு நான்கு மனைவியரும் நம் குலோத்துங்கனுக்கு இருந்தனர் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அன்னோர், கம்பமாதேவி, காடவன்மாதேவி, சோழகுலவல்லி, திரைலோக்கிய மாதேவி என்போர். இவர்களுள் காடவன் மாதேவி என்பாள் பல்லவர் குலத்தில் தோன்றியவள் ஆவாள்.5 கம்பமாதேவி கேட்டுக்கொண்டவாறு இவ்வேந்தன் தாம் இருவரும் பிறந்த பூசம் சுவாதி ஆகிய நாட்களில் விழா நடத்தும் பொருட்டுத் தொண்டைநாட்டிலுள்ள சிற்றீச்சம் பாக்கம் என்னும் ஊரின் வருவாயைக் காஞ்சி மாநகரிலுள்ள ஒரு கோயிலுக்கு அளித்துள்ளமையோடு அவ்வூர்க்கு கம்பதேவி நல்லூர் என்ற பெயரும் வழங்கியுள்ளனன். அன்றியும், தஞ்சாவூர் ஜில்லாவில்லுள்ள நாகப்பட்டினம்2 தன் மனைவியின் பெயரால் சோழகுலவல்லிப்பட்டினம் என்று வழங்கிவருமாறு அதற்கு அப்பெயர் வைத்துள்ளனன். இவனுடைய லெய்டன் செப்பேடுகளில் அப்பெயர் குறிக்கப்பட்டிருப்பது அறியத்தக்கதாகும்.

குலோத்துங்கன் மனைவியருள் பட்டத்தரசியாயிருந் தவளைப் புவனமுழுதுடையாள் எனவும், அவனி முழுதுடையாள் எனவும் மற்றையோரை ஏழுலகமுடையாள், திரிபுவனமுடையாள், உலகுடையாள் எனவும் அக்காலத்தில் வழங்கியுள்ளனர். இச் சிறப்புப் பெயர்களை அன்னோரின் இயற் பெயர்களோடு இணைத்தே அந்நாளில் வழங்கி வந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலனாகிறது.

நம் குலோத்துங்கனுக்கு ஆண்மக்கள் எழுவர் இருந்தனர். அவர்கள் எல்லோரும் இவன் முதல் மனைவியும் பட்டத்தரசியு மாகிய மதுராந்தகியின் புதல்வர் ஆவர்.4 அவர்களுள் முதல் நால்வர், இராசராச சோழகங்கன், இராசராசமும்முடிச் சோழன், வீர சோழன், விக்கிரம சோழன் என்போர்; மற்ற மூவரின் பெயர் தெரியவில்லை. இந்நால்வரும் கி.பி. 1077 முதல் கி.பி. 1118 வரையில் வேங்கி நாட்டில் தம் தந்தையின் பிரதி நிதிகளாயிருந்து அரசாண்டவர் என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. இவ் வேந்தனுக்கு சுத்தமல்லியாழ்வார், அம் மங்கையாழ்வார் என்னும் பெண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்களுள் சுத்தமல்லியாழ்வார் இலங்கை வேந்தனாகிய வீர பாகுதேவனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றமை1 ஈழ நாட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் வெளியாகின்றது. இவனுடைய மற்றொரு மகளான அம்மங்கையாழ்வார் கி.பி.1184-ஆம் ஆண்டு வரையில் உயிர் வாழ்ந்திருந்தமை, சிதம்பரத்திலுள்ள மூன்றாங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டொன்றால்2 நன்கு புலனாகின்றது. எனவே, அவ்வம்மையார் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தவர் என்பதும் அதுபற்றிப் பெரியநாச்சியார் என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றனர் என்பதும் அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது.

இனி, கீழைக் கங்க மன்னனாகிய இராசராச தேவேந்திர வர்மனுக்குப் பட்டத்தரசியாயிருந்த இராசசுந்தரி என்பாள் நம் குலோத்துங்க சோழனுடைய மகள் என்றும் கலிங்கப் போரில் கருணாகரத் தொண்டைமான்பால் தோல்வியுற் றோடியொளிந்த அனந்தவர்ம சோகங்கன் என்பான் அவன் புதல்வனே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்3 அஃதுண்மையெனக் கொள்ளின் குலோத்துங்கன் தன் மகள் வயிற்றுப் பேரனையே கலிங்கப் போரில் வென்று வாகை சூடினான் என்று கருதற்கு இடம் உண்டாகின்றது. குலோத்துங்கனே தன் தாயைப் பெற்ற பாட்டனுக்குரிய சோழ இராச்சியத்திற்கு உரிமை பற்றி முடிசூடிச் சக்கரவர்த்தியானவன் என்பது வரலாற்றாராய்ச்சியால் அறிந்த உண்மையன்றோ? இந்நிலையில் இவன் தன் மகள் வயிற்றுப் பேரனோடு போர் தொடங்குவதற்கு இவனது உள்ளந்தான் இடங்கொடுக்குமா? அத்தகைய போரைத்தான் சிறப்புடையதாகக் கருதி அதில் பெற்ற வெற்றியைப் பாராட்டிக் கவிச் சக்கரவர்த்தியாகிய சயங் கொண்டார் கலிங்கத்துப்பரணி என்னும் அரிய பரணிநூல் இயற்றுவரா? எனவே, அன்னோர் கொள்கை சிறிதும் ஏற்புடையதன்று. கலிங்க வேந்தனாகிய அனந்தவர்ம சோழகங்கன் என்பான் தான் அளித்த செப்பேடுகளில் தான் இராசேந்திரசோழன் மகளாகிய இராசசுந்தரியின் மகன் என்று கி.பி. 1081, 1135-ஆம் ஆண்டுகளில் குறித்திருப்பதே அவர்கள் கண்ட முடிவிற்கு ஏதுவாகும். குலோத்துங்கனுக்கு இளமையில் இராசேந்திரன் என்னும் பெயர் வழங்கியதுண்மையே யெனினும் அக் கங்க மன்னன் கூறியுள்ள இராசேந்திர சோழன் இவன் அல்லன் என்பது இவ்விருவரது ஆட்சி ஆண்டுகள் வயது முதலானவற்றைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால் தெள்ளிதின் விளங்கும். கி. பி. 1112-ல் நடைபெற்ற கலிங்கப் போரில் குலோத்துங்கன்பால் தோல்வி யெய்திப் பேரிடுக்கணுக்கு உள்ளாகிய அனந்தவர்மன் கி. பி. 1135-ல் தான் இவனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ள மாட்டான் என்பது ஒருதலை. ஆகவே, அனந்தவர்மனுடைய தாய் இராசசுந்தரி என்பாள் நம் குலோத்துங்கன் மகள் அல்லள் என்பதும் செப்பேடுகள்1 உணர்த்துவது போல் இராசேந்திர சோழன் என்னும் பெயருடைய வேறொரு சோழ மன்னன் மகள் ஆவள் என்பதும் ஈண்டு அறியத்தக்கனவாம். செப்பேடுகளில் குறிப்பிடப்பெற்ற அனந்தவர்மன் பாட்டனாகிய இராசேந்திர சோழன் என்பான் கங்கைகொண்ட சோழன் புதல்வனாகிய வீரராசேந்திரனாக இருத்தல் வேண்டுமென்று துணிதற்கு இடமுளது.

இனி, நம் குலோத்துங்கனுக்குச் சோதரிகள் இருவர் இருந்தனர் என்பது சிதம்பரத்திலுள்ள இரு கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அன்னோர் குந்தவை, மதுராந்தகி என்போர். அவர்கள் இருவரும் தில்லையம் பலவாணர்பால் பேரன்பு பூண்டு தொண்டு புரிந்தவர்கள் என்பது அக் கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவர்களுள், குந்தவை என்பாள் தில்லையம் பலவாணர் தண்ணீர் அமுது செய்தருள ஐம்பது கழஞ்சு நிறையுள்ள பொற்கலம் ஒன்று அளித்திருப்பதோடு கி.பி.1114ஆம் ஆண்டில் அப்பெருமானது திருக்கோயில் முழுதும் பொன் வேய்ந்துமுள்ளனள். மற்றொரு தங்கையாகிய மதுராந்தகி என்பாள் கி. பி. 1116-ல் திருச்சிற்றம்பலமுடையார் நந்தவனத்திற்கும் சிவனடியார் உண்ணும் மடத்திற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளனள். அவர்களைப் பற்றிய பிற செய்திகள் இப்போது தெரியவில்லை.

இனி, நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகவும், படைத் தலைவர்களாகவும், பிற அரசியல் அதிகாரிகளாகவும் அமர்ந்து அரசாங்கத்தை நன்கு நடத்தி வந்தவர்கள் பலராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1081-ல் திருப்பனந்தாளில் வரையப் பெற்ற கல்வெட்டொன்றில் இவனுடைய உடன் கூட்டத்ததிகாரிகளுள் சற்றேறக்குறைய ஐம்பதின்மர் பெயர்கள் காணப்படு கின்றன. அன்றியும், இம்மன்னனது மற்றைக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ள அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் என்று கூறலாம். அன்னோருள் சிலர் வரலாற்றை ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பது பொருத்த முடையதேயாம்.

(1) கருணாகரத் தொண்டைமான்

இவனது வரலாற்றைக் கலிங்கத்துப் பரணி யொன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் இலதேல், தமிழகத்தில் அக் காலத்தே பெருவீரனாய்ப் பெரும் புகழுடன் நிலவிய இத்தலைவனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்து கொள்ளாதவாறு மறைந்தொழிந்திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றியவன். இவனுடைய தந்தை சீரிளங்கோ என்பான். இவனது இயற்பெயர் திருவரங்கன் என்பது. இவன் திருமாலிடம் பெரிதும் ஈடுபாடுடையவன். இவன் அறிவாற்றல்களில் சிறந்து விளங்கியமையால் முதலில் நம் குலோத்துங்கனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிப் பிறகு படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் இவ்வேந்தற்கு அமைச்சர் தலைவனாகவும் படைத் தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினன். இவனே வடகலிங்கப் போருக்குத் தலைமை படைத் தலைவனாகச் சென்று போர் நடத்தி, அந்நாட்டு வேந்தனாகிய அனந்தவர்ம சோகங்கனை வென்று, குலோத்துங்க சோழர்க்கு வாகைமாலை சூட்டியவன். கவிச் சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரும் இவனை வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி - உலகு புகழ் கருணாகரன்3 எனவும், கலிங்கப் பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்1 எனவும் புகழ்ந்துள்ளனர். இவனது அரசியல் தொண்டைப் பாராட்டி வேள், தொண்டைமான் என்னும் பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப் பெற்றமை அறியத்தக்க தொன்றாம். இவன் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் இருந்துள்ளனன் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியக்கிடக் கின்றது.2 இவனை, வண்டைமன்3 எனவும், வண்டைநகரரசன்4 எனவும், வண்டையர்க்கரசு5 எனவும், வண்டையர்கோன்6 எனவும் ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் கூறியுள்ளமையால் இவனது ஊர் வண்டை நகர் என்பது நன்கு தெளியப்படும். வண்டை என்னும் பெயருடைய ஊர் இக்காலத்தில் நம் தமிழ்நாட்டில் யாண்டுங் காணப்படவில்லை. எனவே, அது வேறொரு பெயரின் மரூஉவாக இருத்தல் வேண்டு மென்பது ஒருதலை. இந்நிலையில் காஞ்சி மாநகரிலுள்ள கல்வெட்டொன்று,7 அவ்வூர், சோழ மண்டலத்தில் குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ் சேரியேயாம் என்று உணர்த்துகின்றது. ஆகவே, வண்டாழஞ் சேரியைத்தான் கலிங்கத்துப் பரணி ஆசிரியர் வண்டை என்று கூறியுள்ளனர் என்பது தெள்ளிது. அஃது இந்நாளில் வண்டுவாஞ்சேரி என்னும் பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலுகாவிலுள்ள நாச்சியார் கோவிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெருவழியிலுள்ளது. வண்டாழஞ்சேரி என்பது பிற்காலத்தில் வாண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கி வருதல் அறியற்பாலதாகும்.

(2) அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன்

இவன், சோழ மண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரி லிருந்தவன்; குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தனால் கொடுக்கப்பெற்ற குலோத்துங்க சோழ கேரளராசன் என்னும் பட்டம் எய்தியவன்; குலோத்துங்கன் சேரர்களோடு நிகழ்த்திய போர்க்குப் படைக்குத் தலைமை வகித்துச் சென்ற வீரர்களுள் ஒப்பற்றவனாய் விளங்கியவன்; இவ்வரசனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப் பெற்ற நிலைப்படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கியிருந்த நாட்களில் அங்கு இராசேந்திர சோழேச்சுரம் என்னும் கோயிலொன்று எடுப்பித்துள்ளனன். ஆந்தாயக்குடி என்னும் ஊர் இராசேந்திர சோழநல்லூர்1 என்று பெயர் மாற்றப்பெற்றுத் தேவதான இறையிலியாக குலோத்துங்க சோழனால் அக் கோயிலுக்களிக்கப்பட்டுள்ளது. இப்படைத் தலைவன் சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன் என்பது இவன் வென்ற நாட்டில் சிவாலயம் எடுப்பித்தமையால் நன்கறியக் கிடக்கின்றது.

(3) அரும்பாக் கிழான் மணவிற் கூத்தனான காலிங்கராயன்

இவன் தொண்டைமண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்னும் ஊரினன். அருளாகரன், அருப்பாக்கிழான், பொன்னம்பலக் கூத்தன், நரலோக வீரன் முதலான பெயர்களையுடையவன். குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் படைத் தலைவனாக யமர்ந்து பெரும் புகழெய்தியவன். குலோத்துங்கன் வேணாநாடு, மலைநாடு, பாண்டிநாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத் தலைமை வகித்து, வெற்றி பெற்று, அதனால் தன் வேந்தனுக்கு என்றும் அழியாத புகழை உண்டு பண்ணியவன். இவனது பேராற்றலை நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்கராயன் என்னும் பட்டமளித்துப் பாராட்டினான். இவன் தில்லை யம்பலத்தில் நடம்புரியும் இறைவன்பால் பேரன்புடையவனாய் ஆண்டு இயற்றிய திருப்பணிகள் பலவாகும். அவற்றில், தில்லையில் பேரம்பலத்திற்குச் செப்புத் தகடு வேய்ந்தமை, நூற்றுக்கால் மண்டபமும் பெரிய திருச்சுற்று மாளிகையும் தேவாரம் ஓதுதற்குரிய மண்டபமும் சிவகாம கோட்டமும் கட்டுவித்தமை, திருஞானசம்பந்தரது கோயிலுக்குப் பொன் வேய்ந்தமை, திருநந்தவனம் அமைத்தமை, சுடலையமர்ந்தார் கோயிலைக் கற்றளியாக்கியமை, தில்லைப் பேரேரிக்கு மதகு அமைத்தமை ஆகிய செயல்கள் குறிப்பிடத்தக்கனவாம். அன்றியும், திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் பொன் வேய்ந்தும் காமகோட்டம் எடுப்பித்தும் நூற்றுக்கால் மண்டபம் கட்டுவித்தும் திருநாவுக்கரசு அடிகளுக்குத் தனிக் கோயிலும் நடராசப் பெருமானுக்கு ஆடரங்கும் வேள்விச் சாலையும் அமைத்தும் தேவதான இறையிலி நிலங்கள் வழங்கியும் இவன் புரிந்துள்ள தொண்டுகள் பல எனலாம். இவற்றால் இவனது சிவபத்தியின் மாண்பு இனிது புலப்படுதல் காண்க. இவன் சைவ சமயத்திற்கு ஆற்றியுள்ள அரும் பணிகளுள் மிகச் சிறந்தது, சமய குரவர் மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியில் சேமித்து வைத்தமையே யாம். இவ்வாறு இவன் புரிந்த தொண்டுகளை யெல்லாம் விளக்கக் கூடிய முப்பத்தாறு வெண்பாக்கள்1 தில்லையம்பதியிலும் இருபத்தைந்து வெண்பாக்கள்2 திருவதிகை வீரட்டானத்திலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன. இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர் நிலையில் இருந்தனன்3 என்பது விக்கிரம சோழனுலாவினால் நன்கு புலனாகின்றது. அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூல் இவன்மேற் பாடப்பெற்றதாதல் வேண்டும்.

(4) வாணகோ வரையன் சுத்தமல்லன் உத்தம சோழனாகிய இலங்கேசுவரன்

இவன் குலோத்துங்க சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன். வாணர் குடியில் தோன்றியவன்; அரசனால் வழங்கப் பெற்ற வாணகோ வரையன் என்னும் பட்டம் எய்தியவன், கருணாகரத் தொண்டைமானோடு கலிங்கப் போர்க்குச் சென்ற படைத்தலைவர்களுள் ஒருவன். அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் புகழப் பெற்ற பெருமையுடையவன்.1 இவன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள மேலப்பழுவூரிலிருந்த செங்கற் கோயிலைக் கற்றளியாக அமைத்து, அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் என்று பெயரிட்டு, நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் இறையிலி நிலங்கள் வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்2 எனவே, இவன் சிவபத்தியும் அரசன்பால் பேரன்பும் உடையவன் என்பது தெள்ளிது.

(5) கஞ்சாறன் பஞ்சந்தி முடிகொண்டானான வத்தராயன்

இவன் சோழமண்டலத்தில் திருவிந்தளூர் நாட்டிலுள்ள கஞ்சாறு3 என்னும் ஊரினன்; பஞ்சநதிவாணன் என்பவனுடைய புதல்வன், முடி கொண்டான் என்னும் இயற்பெயர் உடையவன் குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; இவ் வேந்தனால் அளிக்கப்பெற்ற வத்தராயன் என்ற பட்டமுடையவன். இது வத்ஸ ராஜன் எனவும் வச்சராயன் எனவும் வழங்கப் பெறுவதுண்டு. வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூல் இத்தலைவன் மீது பாடப்பெற்ற ஒரு பிரபந்தமாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. இவன் பங்களூர் ஜில்லா நிலமங்கலந் தாலுகாவிலுள்ள மண்ணையில் குலோத்துங்க னுடைய பகைவர்களாகிய மேலைச் சளுக்கியர்களைப் போரில் வென்று வாகை சூடியவன்.1 கோதாவரி ஜில்லா இராமச்சந்திரபுரம் தாலுகாவைச் சேர்ந்த திராட்சாராமம் என்ற ஊரிலுள்ள பீமேசுரமுடைய மகாதேவர்க்குக் குலோத்துங்கனது ஆட்சியின் 25ஆம் ஆண்டில் இவன் ஒரு நுந்தாவிளக்கு வைத்தனனென்று அங்குச் செய்யுள் வடிவத்திலுள்ள ஒரு கல்வெட்டு2 உணர்த்துகின்றது. தன் பெற்றோர்கள் நற்கதி பெறுமாறு இவன் அக்கோயிலில் நுந்தா விளக்கு வைத்துள்ளமை மற்றொரு கல்வெட்டால்3 அறியப்படுகின்றது. இவ்வாறு சோணாட்டுத் தலைவர்கள் கங்கம், வேங்கி, கலிங்கம் முதலான நாடுகளில் அரசியல் அதிகாரிகளாக நிலவிய நாட்களில் புரிந்துள்ள அறங்கள், அந்நாடுகளிலுள்ள கல்வெட்டுக்களில் காணப்படுதல் அறியத்தக்க தொன்றாகும்.

(6) வேளான் மாதவனாகிய இராசவல்லபப் பல்லவரையன்

இவன், சோழமண்டலத்து விருதராச பயங்கரவளநாட்டு மண்ணி நாட்டிலுள்ள கடம்பங்குடி என்னும் ஊரினன். குலோத்துங்க சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன். இவ்வேந்தனால் அளிக்கப்பெற்ற வேள், இராசவல்லபப் பல்லவராயன் என்னும் பட்டங்கள் பெற்றவன். குலோத்துங்க னது லெய்டன் சிறு செப்பேடுகளில்4 கி. பி. 1090-ல் இவன் பெயர் காணப்படுதலாலும் கோதாவரி ஜில்லா பீமாவரத்திலுள்ள திருமால் கோயிலுக்கு5 இவன் ஒரு நுந்தாவிளக்கு வைத்து அதற்கு கி. பி. 1115-ல் நிவந்தம் அளித்திருத்தலாலும் இவ் வமைச்சன் குலோத்துங்கன் ஆட்சிக்கால முழுவதும் உயர்நிலையிலிருந்து அரசாங்கத்தை இனிது நடத்திய தலைவனாயிருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

(7) சேனாதிபதி ஞானமூர்த்திப் பண்டிதன் ஆகிய மதுராந்தக பிரமாதி ராஜன்

இவன் சோழ நாட்டிலுள்ள நாலூர் என்னும் ஊரினன்; மதுராந்தகன் என்னும் இயற்பெயருடையவன்; குலோத்துங்க சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; இவ்வேந்தனால் அளிக்கப்பெற்ற பிரமாதிராஜன் என்னும் பட்டம் பெற்றவன்; எனவே, இவன் அந்தணன் என்பது தெள்ளிது. இவன் திருவொற்றியூரிலுள்ள கோயிலில் ஒரு நுந்தாவிளக்கு வைப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளமை1 அறியத்தக்கது.

(8) அதிகாரி வீரசிகாமணி மூவேந்த வேளான்

இவன் குலேத்துங்க சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; தொண்டைமண்டலத்திலுள்ள பாண்டியம்பாக்கம் என்னும் ஊரினன்; இவ்வரசனால் அளிக்கப் பெற்ற மூவேந்தவேளான் என்னும் பட்ட முடையவன். இவன் மைசூர் இராச்சியத்தில் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்திலுள்ள துர்க்கையின் கோயிலில் நாள்வழிபாடு நன்கு நடைபெறுவதற்கு ஒரு குழு அமைத்து நிவந்தங்களை ஒழுங்குபடுத்துமாறு செய்தானென்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.

இனி, நம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குறுநில மன்னர்களுள், கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலரைப் பற்றிய செய்திகளையும் ஈண்டுக் குறிப்பிடுவோம்.

(1) கிளியூர் மலையமான்கள்

இவர்கள் தென்னார்க்காடு ஜில்லாவில் அதன் வடமேற்குப் பகுதியாய் அமைந்திருந்த சேதி நாட்டை ஆட்சி புரிந்துகொண்டிருந்த குறுநில மன்னர்கள் மலையமான் மரபினர். இவர்கள் வழிவழி ஆண்டுவந்தமைபற்றி அந்நாடு மலையமான் நாடு எனவும், மலாடு3 எனவும் வழங்கப்பட்டு வந்தது என்பது உணரற்பாலது. இவர்கள் சேதிராயர் என்னும் பட்டமுடையவர்கள். கிளியூரைத் தம் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்கள். குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் சேதி நாட்டிலிருந்து அரசாண்ட சிற்றரசர்கள், கிளியூர் மலையமான் பெரிய உடையவனான இராசராச சேதிராயன், சதிரன் மலையானான இராசேந்திர சோழ மலையமான்,2 சூரியன் சாவன சகாயனான மலையகுல ராசன்,3 சூரியன் மறவனான மலையகுல ராசன், சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்5 என்போர். இவர்களுள், இறுதியில் குறிப்பிடப் பெற்ற மூவரும் உடன்பிறந்தாராகவும் இராசேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய தொடர்புடையவராகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் எல்லோரும் குலோத்துங்க சோழனது ஆட்சியின் முற்பகுதியில் இருந்தவராவர். இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியி லிருந்த சேதி நாட்டுச் சிற்றரசன், கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான இராசேந்திர சோழச் சேதிராயன்6 என்போன். இவன் திருக் கோவலூரிலுள்ள திருமால் கோயிலுக்கும் சித்தலிங்க மடத்திலுள்ள சிவன் கோயிலுக்கும் நிவந்தங்கள் அளித்துள்ளனன்.

(2) தகடூர் அதிகமான்

இவன் கொங்கு நாட்டின் வடபகுதியையும் கங்க நாட்டின் தென் பகுதியையும் அரசாண்ட ஒரு குறுநில மன்னன். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் ஔவையாரால் பாடப் பெற்றவனுமாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றியவன்; சேலம் ஜில்லாவில் இக்காலத்தில் தர்மபுரி என்று வழங்கும் தகடூரைத் தலைநகராகக் கொண்டவன். இவன் தர்மபுரியிலுள்ள இரு கோயில்களில் பூசிப்பதற்கு ஒரு குருக்கள் நியமனஞ் செய்தனன் என்று கி.பி.1080-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று1 கூறுகின்றது.

(3) சீய கங்கன்

இவன் கங்கபாடி நாட்டின் ஒரு பகுதியையும் சித்தூர் ஜில்லாவின் ஒரு பகுதியையும் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்திலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; கங்கர் குலத்தில் தோன்றியவன். சித்தூர் ஜில்லாவில் இக்காலத்தில் வாவிலித்தோட்டமென்று வழங்கப் பெறும் வாழைத்தோட்டம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலுக்கு இவன் கி. பி. 1101-ல் இறையிலி நிலம் அளித்துள்ளமை அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்றால்2 அறியப்படுகின்றது. மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் அவனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த சிற்றரசனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் என்னும் இலக்கண நூலை இயற்றுவித்தவனுமாகிய அமராபரண சீய கங்கன் என்பான் இவனுடைய வழியில் தோன்றியவன் ஆவன்.

(4) பாண்டியன் ஸ்ரீ வல்லபன்

இவன் முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1106ல் பாண்டி நாட்டில் இருந்தனன் என்பது திருநெல்வேலி ஜில்லா ஆற்றூரிலுள்ள ஒரு கல்வெட்டினால்3 அறியக் கிடக்கின்றது. குலோத்துங்கன் நிகழ்த்திய பாண்டி நாட்டுப் போரில் தோல்வி யெய்திய பாண்டியர் ஐவருள் இவனும் ஒருவனாதல் வேண்டும். பிறகு, இவன் குலோத்துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டு, பாண்டி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்துவந்தான் என்று தெரிகிறது.

(5) கேரள கேசரி அதிராசாதிராச தேவன்

இவன் கொங்கு மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; சேரர் மரபினன்; வீரகேரளன், கேரள கேசரி என்னும் பட்டங்கள் உடையவன். இவன் தஞ்சாவூர் ஜில்லாவில் திருக்கண்ணபுரத்தி லுள்ள திருமால் கோயிலுக்கு கி.பி. 1104, 1106-ஆம் ஆண்டுகளில் சந்தி விளக்குகட்கு நிவந்தம் அளித்த செய்தி அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களில்1 காணப்படுகின்றது. இவன் குலோத்துங்க சோழனுக்குக் கீழிருந்த ஒரு சிற்றரசன் ஆவன்.

(6) வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங் கொங்கன்

இவன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு ஆந்திர தேயத்தில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த தெலுங்கர் தலைவனாவன்; கீழைச் சளுக்கிய வேந்தனாகிய இராசராச நரேந்திரனுடைய படைத் தலைவன் நன்னன் என்பவனுடைய புதல்வன். எனவே, இவன் தந்தை குலோத்துங்கனுடைய தந்தையின் கீழிருந்த ஒரு தலைவ னென்பது உணரத்தக்கது. இக் கொங்கனுடைய மகன் சோடன் என்பவனை நம் குலோத்துங்கன் தன் புதல்வர்களுள் ஒருவனாகக் கொண்டு பல்வகைச் சிறப்புக்களும் அளித்துப் பாராட்டினன் என்று பித்தாபுரத்திலுள்ள ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.2 அன்றியும், இச் சோடன் வேங்கி மண்டலத்தையும் ஆண்டு வருமாறு குலோத்துங்கன் அதனை அளித் திருந்தமை அக்கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இங்ஙனம் வெல நாண்டுத் தலைவர்கள் தம் சக்கரவர்த்தியாகிய குலோத்துங்க சோழன்பால் பெருநலங்கள் எய்தியும், இவனது ஆட்சியின் இறுதியிலும் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் மேலைச் சளுக்கியரோடு சேர்ந்து கொண்டு அவர்கட்குக் கீழ் வாழ்ந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(7) பொத்தப்பிக் காமதேவ சோட மகாராஜன்

இவன் பொத்தப்பி நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; பொத்தப்பி என்பது கடப்பை ஜில்லாவிலுள்ள ஓர் ஊர். அதனைச் சூழ்ந்த நாடே பொத்தப்பி நாடாகும். அந்நாட்டை யாண்டவர் பொத்தப்பிச் சோடர் எனப்படுவர். அவர்களுள் ஒருவனே காமதேவ சோட மகாராசன் என்பான். இவன் குலோத்துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பது கர்னூல் ஜில்லாவில் திரிபுராந்தகத்திலுள்ள இரு கல்வெட்டுக்களால் புலனாகின்றது.

(8) மகா மண்டலேசுவரன் சூரப்ப ராஜன்

இவன் ஆந்திர நாட்டில் வீரகொட்டாவிலிருந்த ஒரு சிற்றரசன். இவன் தன்னைப் பாரத்துவாச கோத்திரத்தினன் என்றும் கட்டுவாங்க கேகதனன் என்றும் ரிஷப லாஞ்சனன் என்றும் காஞ்சீபுரேசுவரன் என்றும் கூறிக் கொள்வதால்,2 பல்லவர் மரபினனான யிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாகின்றது. எனவே, இவன் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டு தெலுங்கு நாட்டின் ஒரு பகுதியில் அரசாண்ட பல்லவர் குலத் தலைவனாதல் வேண்டும். கோதாவரி ஜில்லாவில் திராட்சாராமத்திலுள்ள கல்வெட்டொன்று இவன் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு குறுநில மன்னன் என்று உணர்த்துகின்றது.

இனி, தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவயீந்திரபுரத் திருமால் கோயிலுக்குப் பிள்ளையார் விஷ்ணுவர்த்தன தேவன் வேண்டிக்கொண்ட வாறு குலோத்துங்க சோழன் இறையிலி நிலங்கள் வழங்கிய செய்தி, அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால்3 புலப்படுகின்றது. இவ்விஷ்ணு வர்த்தனன் யாவன் என்பது தெரியவில்லை. விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயருடைய அரசர்கள் கீழைச் சளுக்கிய நாடாகிய வேங்கி நாட்டில் ஆட்சி புரிந்துள்ளனர். நம் குலோத்துங்க சோழனோ வேங்கி நாட்டில் சப்தம விஷ்ணுவர்த்தனன் என்று வழங்கப் பெற்றனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாகவிருந்து ஆட்சி புரிந்த குலோத்துங்கன் புதல்வர்களுள் ஒருவனே திருவயீந்திர புரக்கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற விஷ்ணுவர்த்தனதேவன் ஆதல் வேண்டும். அக் கல்வெட்டு, இவனைப் பிள்ளையார் என்று கூறுவதும் இவ்வுண்மையை வலியுறுத்துவதாகும்.

குலோத்துங்கன் காலத்துப் புலவர்கள்

இவ் வேந்தன் காலத்தில் நிலவிய புலவர்கள் ஆசிரியர் சயங் கொண்டார், கவி குமுத சந்திர பண்டிதராகிய திருநாராயணப் பட்டர், நெற் குன்றங் கிழார் களப்பாள ராயர், வீரைப் பரசமய கோளரி மாமுனிவர் என்போர். இவர்களுள் ஆசிரியர் சயங்கொண்டார் கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர்; குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவர்; தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள தீபங்குடியிற் பிறந்தவர். இவ்வேந்தனது கலிங்க வெற்றியைப் பாராட்டி இவன் மீது கலிங்கத்துப் பரணி என்னும் அரிய நூலொன்று இயற்றி அரசவையில் அரங்கேற்றியவர்; பரணியிலுள்ள ஒவ்வொரு தாழிசைக்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் இவருக்குப் பரிசிலாக அரசனால் வழங்கப்பெற்றது என்பது செவி வழிச் செய்தியால் அறியப்படுகின்றது. கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இரண்டாங் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத் தமிழில் இப்புலவர் பெருமானையும் இவரது பரணியையும் உள்ளமுருகிப் பேரன்புடன் பாராட்டியிருத்தல் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

கவி குமுத சந்திர பண்டிதராகிய திருநாராயணப் பட்டர் என்பார் கி. பி. 1097-ல் குலோத்துங்க சோழசரிதை என்ற நூலொன்று இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனி என்னும் ஊரில் இறையிலி நிலம் பரிசிலாகப் பெற்றவர்.1 கவி குமுத சந்திர பண்டிதர் என்பது பட்டர் என்னும் பட்டத்தால் அறியக் கிடக்கின்றது. இவரது நூல் இக்காலத்தில் கிடைத்திலது. அது கிடைப்பின் குலோத்துங்கனது நீண்ட வாழ்க்கையில் நிகழ்ந்த எத்துணையோ உண்மை வரலாறுகள் தெள்ளிதிற் புலப்படு மென்பது திண்ணம்.

நெற்குன்றங் கிழார் களப்பாள ராயர் என்பார் தொண்டை மண்டலத்தில் புலியூர் கோட்டத்துப் பேரூர் நாட்டிலுள்ள நெற்குன்றம் என்னும் ஊரில் வாழ்ந்த ஓர் அரசியல் தலைவர்; கருவுணாயகர் என்னும் இயற்பெயரும் அரையர், களப்பாள ராயர் என்ற பட்டங்களும் உடையவர். நெற்குன்றம் என்னும் ஊரைத் தமக்குரிய காணியாகக் கொண்டமை பற்றி நெற்குன்றங் கிழார் என்று வழங்கப்பெற்றவர். சிறந்த தமிழ்ப் புலமையும் சிவபத்தியும் வாய்க்கப் பெற்றவர். சோழ நாட்டில் திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்பால் பெரிதும் ஈடுபட்டு திருப்புகலூரந்தாதி பாடிய கவிஞர் கோமான் இவரே யாவர். இவர் நம்பி காளியார் முதலான புலவர் பெருமக்களை ஆதரித்த பெருங் கொடை வள்ளல் என்பது அறியத்தக்கது. இவர் கல்வெட்டொன்று1 திருப்புகலூரிலுள்ளது.

வீரைப்பரசமய கோளரி மாமுனிவர் என்பார் கி.பி.1111, 1119-ஆம் ஆண்டுகளில் விளங்கியவர்; வீரை என்னும் ஊரினர்; பரசமய கோளரி என்ற பட்டமுடையவர். இவர் சைவ மடத்தின் தலைவராக நிலவிய ஒரு துறவியாவர். இவர் இயற்றிய நூல்கள் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்பனவாம்.2 இவற்றுள் கன்னிவன புராணம் என்பது திருப்பாதிரிப்புலியூர் புராண மாகும். தமிழிலுள்ள தலப் புராணங்களுள் இதுவே பழைமை வாய்ந்தது. இஃது இந்நாளில் கிடைக்கவில்லை.

விக்கிரம சோழன் (கி. பி. 1118 - 1136)


இவ்வரசர் பெருமான் முதற் குலோத்துங்க சோழனுடைய புதல்வன்; இளமைப் பருவத்தில் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்து அதனை ஆட்சி புரிந்தவன்; கி. பி. 1118-ல் சோழ நாட்டில் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றுத் தன் தந்தைக்கு உதவி புரிந்து வந்தவன். கி. பி. 1120ஆம் ஆண்டில் முதற் குலோத்துங்க சோழன் இறக்கவே, இளவரசனாகவிருந்த இவ்விக்கிரம சோழன் அரியணையேறினான். இவன், குலோத் துங்கனுடைய நான்காம் புதல்வனாயிருந்தும் இளவரசு பட்ட மெய்தி இறுதியில் முடி சூட்டப்பெற்றமைக்குக் காரணம் இவன் தமையான்மார்களாகிய இராசராச சோழகங்கன் இராசராச மும்முடிச் சோழன், வீர சோழன் என்போர் தம் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இறந்தமை எனலாம்.

சோழ மன்னர்கள் தம் ஆட்சிக் காலங்களில் மாறி மாறிப் புனைந்து கொண்ட இராசகேசரி, பரகேசரி என்னும் பட்டங்களுள் பரகேசரி என்ற பட்டத்தையே இவன் புனைந்து கொண்டு அரசாண்டான் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.

செங்கற்பட்டு ஜில்லாவில் சிவன்கூடல் என்னும் ஊரிலுள்ள கோயிலில் இவன் பிறந்த ஆனித் திங்கள் உத்திரட்டாதி நாள்முதல் ஏழு நாட்கள் திருவிழா நடத்துவதற்கு கி. பி. 1128-ல் நிலம் அளிக்கப்பெற்ற செய்தி1 அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப்படுகின்றது. எனவே, இவன் ஆனித் திங்களில் உத்திரட்டாதி2 நன்னாளில் பிறந்தவன் என்பது தெள்ளிது. தில்லை மாநகரில் இவன் ஆட்சிக் காலத்தில் ஆண்டு தோறும் உத்திரட்டாதி நாளில் பெருவிழா நிகழ்ந்ததென்று இவன் மெய்க்கீர்த்தி1 உணர்த்துவதும் இதனை நன்கு வலியுறுத்துதல் காண்க.

இவ்வேந்தர்க்கு இரண்டு மெய்க்கீர்த்திகள் கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது, பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்2 என்று தொடங்குகின்றது; சிறியது, பூமாது புணரப் புவிமாது வளர3 என்று தொடங்குகின்றது. இவையிரண்டும் இவன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு முதல் இவன் ஆட்சிக் காலம் முழுமையும் கல்வெட்டுக்களில் காணப் படுதல் குறிப்பிடத்தக்கது. இவன் இளமைப் பருவத்தில் வேங்கி நாட்டிலிருந்த காலத்தில் கலிங்க நாட்டில் நிகழ்த்திய போரொன்றைத் தவிர, மற்ற வரலாற்றுச் செய்தி யொன்றும் இம்மெய்க்கீர்த்திகளில் இல்லை. எனினும், இவன் தன் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் தில்லைச் சிற்றம்பலத் தெம்பெருமானுக்குப் புரிந்த அருந் தொண்டுகள் பூமாலை மிடைந்து என்று தொடங்கும் பெரிய மெய்க்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளன. எனவே, குறிப்பிடத்தக்க பெரிய சரித நிகழ்ச்சியொன்றும் இவன் ஆட்சிக் காலத்தில் நிகழவில்லை யென்று கூறலாம்.

விக்கிரமனும் வேங்கி நாடும்

கி. பி. 1118-ஆம் ஆண்டில் இவன் வேங்கியிலிருந்து சோழ நாட்டிற்குத் திரும்பி இளவரசுப் பட்டம் பெற்றவுடன், அந்நாடு வெலநாண்டுத் தலைவனாகிய முதலாங் கொங்கனுடைய மகன் சோடன் என்பவனுக்குக் குலோத்துங்க சோழனால் அளிக்கப்பட்டது.4 உடனே மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன், வெலநாண்டுத் தலைவனை வென்று அந்நாட்டைத் தன் ஆட்சிக்குட்படுத்திவிட்டான். அந்நாடும் கி. பி. 1126-ல் அவ்வேந்தன் இறக்கும் வரையில் அவன் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பது அங்குக் காணப்படும் அவன் கல்வெட்டுக்களால்1 நன்கறியக் கிடக்கின்றது. எனினும் கி. பி. 1127-ல் மகா மண்டலேசுவரன் நம்பயன் என்பான், விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாய் வேங்கி நாட்டிலிருந்து அரசாண்டனன் என்று குண்டூர் ஜில்லாவிலுள்ள கல்வெட்டொன்று2 உணர்த்துகின்றது. கி. பி. 1135-ல் வெலநாண்டுத் தலைவர்கள் நம் விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராயிருந்தனர் என்பது கிருஷ்ணா ஜில்லாவிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது.3 எனவே, கி. பி. 1126-ல் சளுக்கிய விக்கிரமாதித்தன் இறந்தபிறகு வேங்கி நாட்டை மீண்டும் தன் ஆட்சிக்குட்படுத்தவேண்டு மென்று விக்கிரம சோழன் முயன்று, அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டனன் என்று ஐயமின்றிக் கூறலாம். ஆகவே, வேங்கி நாட்டின் பெரும்பகுதி, கி. பி. 1126-க்குப் பிறகு இவன் ஆளுகைக்குள் இருந்தது என்பது ஒருதலை.

விக்கிரமனும் கங்கபாடி நாடும்

மைசூர் இராச்சியத்தில் உள்ள கோலார் ஜில்லாவில் சுகட்டூர் என்னுமிடத்தில் விக்கிரம சோழனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய உதயமார்த்தாண்ட பிரமமாராயன என்பான் கி. பி. 1126-ல் ஒரு சிவன் கோயில் எடுப்பித்து அதற்கு நிவந்தமாக இறையிலி நிலம் அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று4 கூறுகின்றது. அன்றியும், அந்த ஜில்லாவிலுள்ள மற்றொரு கல்வெட்டு5 இவ்வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டில் குரநெல்லி உலோகீசுவரமுடைய மகாதேவர்க்கு விக்கிரம சோழ வீர நுளம்பன் ஒரு விமானம் அமைத்த செய்தியை அறிவிக்கின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதியில் இழந்துவிட்ட கங்கபாடி நாட்டின் ஒரு பகுதியையாவது விக்கிரமசோழன் கைப்பற்றி யிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.

அன்றியும், வேங்கி நாட்டிலும் கங்கபாடி நாட்டிலும் காணப்படும் இவன் கல்வெட்டுக்கள், அவ்விரு நாடுகளும் இவன் ஆட்சிக்காலத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்டுச் சோழர் ஆளுகைக்கு உள்ளாயின என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்து வனவாகும்.

பெருவெள்ளத்தால் நிகழ்ந்த பஞ்சம்

விக்கிரம சோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 1125-ல் தொண்டை நாட்டிலும் நடு நாட்டிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு1 அதனால் அந்நாடுகளில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று என்பது வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவதிகையிலும் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக் களால் அறியப்படுகின்றது.2 அன்றியும், இவனது ஆட்சியின் பதினோராம் ஆண்டில் இத்தகைய பஞ்சம் ஒன்று சோழ நாட்டிலும் ஏற்பட்டது என்பது தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கோவிலடி3யில் காணப்படும் கல்வெட் டொன்றால் புலப்படுகின்றது. ஆனால், இதற்குக் காரணம் தெரியவில்லை. பஞ்சம் நிகழ்ந்த காலங்களில் அரசனும் செல்வமிக்கவர்களும் தம்பெருங் கொடையால் மக்களை இயன்றவரையில் காப்பாற்றியமையோடு கோயிலதிகாரிகள் அன்னோர்க்குக் கடன் கொடுத்து உதவி புரிந்திருத்தலும் குறிப்பிடத்தக்கது.

விக்கிரம சோழனது தில்லைத் திருப்பணி

இவ் வேந்தன் தன் ஆளுகையின் பத்தாம் ஆண்டில் பிற அரசர்கள் அளித்த திறைப்பொருளைக் கொண்டு தில்லையம்பதியில் அம்பலவாணரது கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் புரிந்தனன் என்று இவன் மெய்க்கீர்த்தி1 கூறுகின்றது. அத்திருப்பணிகள் எல்லாம் கி. பி. 1128 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளில் நிறைவேறின என்பது அம்மெய்க்கீர்த்தியிலுள்ள காலக் குறிப்பினால்2 நன்கறியக் கிடக்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகை, கோபுரவாயில், கூடசாலை, பலிபீடம் என்பவற்றிற்குப் பொன்வேய்ந்தமையும் தான் பிறந்த உத்திரட்டாதி நாளில் நடை பெறும் பெருவிழாவில் இறைவன் எழுந்தருளும் திருத்தேரைப் பொன்வேய்ந்து அதற்கு முத்து வடங்கள் அணிவித்து அழகுறுத்தியமையும் இவன் ஆற்றிய அரிய திருப்பணிகளாகும். அன்றியும், இறைவன் திருவமுது புரிவதற்குப் பொற்கலங்கள் அளித்தமையோடு கோயிலில் பொன்னாலாகிய கற்பகத்தருக் களும் இவன் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாம். தில்லைச் சிற்றம்பலத்தைச் சூழ்ந்துள்ள முதல் திருச்சுற்று மாளிகை விக்கிரம சோழன் திருமாளிகை என்று அந்நாளில் வழங்கியது என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றது. அஃது இவன் திருப்பணி புரிந்ததாக மெய்க்கீர்த்தி கூறும் திருச்சுற்று மாளிகை போலும். இவன் தன் பெயரால் விக்கிரம சோழன் திருவீதி என்ற பெருவீதி, தில்லைமா நகரில் அமைத்தனன் என்று இவனது மெய்க்கீர்த்தி யுணர்த்துகின்றது. முற்காலத்தில் அது விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி என்று வழங்கி யுள்ளது. கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், இவன் அவ்வீதியமைத்த செய்தியைத் தாம் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழில் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். தில்லைத் திருக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம்2 என்ற பெயர் பொறிக்கப் பெற்றுளது. எனவே, அம்மண்டபமும் இவ்வேந்தனால் அமைக்கப்பெற்றதாதல் வேண்டும். அதனை, இவன் ஆணையின்படி கட்டியவன் இவனுடைய படைத்தலைவனாகிய அரும்பாக் கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பான்.3 பொன்னம்பலவாணர் மாசித் திங்கள் மக நாளில் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் தில்லையம் பதியிலிருந்து அங்கு எழுந்தருளுவதற்குப் பெருவழியும் இவன் ஆட்சியில் தான் அமைக்கப்பெற்றன. அத்திருப்பணியை அரசன் வேண்டுகோளின்படி நிறைவேற்றி யவன் இக்காலிங்கராயனே யாவன்.4 இம்மண்டபம் அந்நாளில் சிதம்பரத்தைச் சார்ந்த கிள்ளை என்னும் ஊரில் இருப்பது அறியத்தக்கது.

தலைநகர்

இவ்வரசர் பெருமானுக்குத் தலைநகராயிருந்தது கங்கைகொண்ட சோழபுரமேயாம். பழையாறை என்று இந்நாளில் வழங்கும் முடிகொண்ட சோழபுரமும் இவனுக்கு இரண்டாந் தலைநகராக இருந்தது எனலாம்.1 தில்லைமாநகர்,2 காட்டுமன்னார்கோயில்3 முதலான பேரூர்களில் அரண்மனைகளும் இருந்தன என்று தெரிகிறது. சோழ இராச்சியத்தில் பல ஊர்களில் கொட்டகாரம்4 என்று வழங்கப்பெற்ற மண்டபங்களும் இருந்துள்ளன.

ஆட்சியின் சிறப்பு

இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் பெரும்போர்களின்மை யின், இவன் தன் ஆளுகைக் குட்பட்ட நாடுகளை எல்லாம் நேரிற் பார்த்து மக்கட்கு நலம் புரிந்துவந்தனன் என்பது இவன் பல ஊர்களிலிருந்து அனுப்பியுள்ள உத்தரவுகளால் நன்கறியக் கிடக்கின்றது. தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து அரசியல் காரியங்களைக் கவனிப்பது அரசர்கட்குரிய இன்றியமையாக் கடமையாகும். அக்கடமையில் நம் விக்கிரமன் சிறிதும் தவறிய வனல்லன் என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, மெய்க்கீர்த்தி கூறுகின்றவாறு, இவன்,மன்னுயிர்க்கெல்லாம் இன்னுயிர்த் தாய்போல் - தண்ணளி பரப்பித் தனித் தனிப் பார்த்து - மண்முழுதுங் களிப்பவும் தன் கோயிற்கொற்ற வாயிற்புறத்தி - மணிநா வொடுங்கவும் ஆட்சி புரிந்து வந்த பெருவேந்தன் ஆவன். ஆகவே, இவன் ஆளுகையில் மக்கள் எல்லோரும் இன்னலின்றி வாழ்ந்து வந்தனர். என்பது தெள்ளிது.

அவைக்களப் புலவர்

விக்கிரம சோழன், கவிஞர் பெருமானாகிய ஒட்டக் கூத்தரைத் தன் அவைக்களப் புலவராகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் இவ்வேந்தன் மீது விக்கிரமசோழனுலா என்னும் நூலொன்று இயற்றியுள்ளனர். அன்றியும், இவன் இளமையில் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த காலத்தில் தென் கலிங்க வேந்தனாகிய தெலுங்க வீமனைப் போரில் வென்று வாகை சூடிய வீரச்செயலைப் பாராட்டி, அப்புலவர் கலிங்கப்பரணி பாடியுள்ளனர் என்பது அவரது தக்கயாகப் பரணியாலும்1 அதன் உரைக் குறிப்பினாலும் நன்கறியக்கிடக்கின்றது. அந்நூல் இக்காலத்தில் கிடைக்க வில்லை. தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் உணர்த்தா மலிருந்திருப்பின் ஒட்டக்கூத்தர் நம் விக்கிரம சோழன் மீது கலிங்கப்பரணி பாடிய செய்தியே மறைந்தொழிந்திருக்கும் என்பது ஒருதலை. ஒட்டக்கூத்தர், இரண்டாங் குலோத்துங்க சோழன் இரண்டாம் இராசராச சோழன் ஆகிய இருவர் மீதும் பாடியுள்ள இரண்டுலாக்களிலும் விக்கிரமன் கலிங்கம் வென்று பரணி கொண்டதைப் பாராட்டியிருத்தல் அறியற் பாலதாம். அன்றியும், அவ்வாசிரியர் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும்4 இவன் கலிங்கப் பரணி கொண்டமையைப் புகழ்ந்து கூறியிருப்பது உணரற்பாலது.

விக்கிரமனது சிறப்புப் பெயர்கள்

இவ்வேந்தற்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்களுள் பெரும்பாலன1 இவன் முன்னோர்க்கு வழங்கியனவேயாம். எனினும், இவனுக்கே உரியனவாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுக் களிலும் விக்கிரம சோழனுலாவிலும் காணப்படுகின்றன. அவை, தியாகசமுத்திரம், அகளங்கன் என்பனவாம். இம்மன்னன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டில் திருவிடை மருதூர்க்குச் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த வண்ணக்குடி என்ற ஊரினைத் தியாகசமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடைமருதூர்க் கோயிலுக்கு இறையிலி தேவதானமாக அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட் டொன்று கூறுகின்றது. திருக்கோடிகா சிவாலயத்திலுள்ள சண்டேசுவர நாயனாரது கோயில் அந்நாளில் தியாகசமுத்திரம் என்னும் பெயருடையதாயிருந்தது என்று தெரிகிறது. அகளங்கன் எனவும், அகளங்கபுரம் எனவும் சில ஊர்கள் இவன் பெயரால் வழங்கப்பெற்று வருதல் அறியத்தக்கது.

விக்கிரம சோழனுடைய மனைவியரும் மக்களும்

இவ்வரசர்க்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்பது கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது.5 அன்னோர், முக்கோக்கிழானடிகள், தியாகபதாகை, நேரியன் மாதேவி6 என்போர். இவர்களுள், முக்கோக் கிழானடியே பட்டத்தரசியாக விளங்கியவள். அவ்வரசி கி. பி. 1127ல் இறந்த பின்னர், தியாகபதாகை என்பாள் பட்டத்தரசியாயினள். விக்கிரம சோழனுக்குப் பிறகு பட்டம் பெற்ற இரண்டாங் குலோத்துங்க சோழன் இவனுடைய தவப் புதல்வன் ஆவன். அவ்வரச குமாரன், விக்கிரம சோழனுடைய மனைவிமாருள் யாருடைய மகனென்பது புலப்படவில்லை.

இனி, இவ்வரசனது ஆட்சியின் 17ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்2 சில ஊர்களில் காணப்படுவதாலும் 18ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றும் யாண்டும் காணப்படாமையாலும் இவன் கி. பி. 1135ஆம் ஆண்டின் இறுதியில் இறைவன் திருவடியை எய்தியிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன் கி. பி. 1133-ல் இவன் தன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி3 அரசியலில் கலந்துகொள்ளுமாறு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விக்கிரம சோழன் காலத்து அரசியல் தலைவர்களும் சிற்றரசரும்

இவ் வேந்தனது ஆட்சிக் காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகள் பலர் ஆவர். அவர்களுள் சிலருடைய பெயர்கள் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அன்றியும், கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், இம்மன்னன் அரசியல் அதிகாரிகளும் சிற்றரசர்களும் மண்டலிகரும் இருமருங்குஞ் சூழ்ந்துவர உலாவப் போந்தானென்று தம் விக்கிரம சோழ னுலாவில்4 கூறுமிடத்து, இவன் காலத்துத் தலைவர்களுள் சிலர் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரின் வீரச் செயல்களையும் பெருமைகளையும் மிகப் பாராட்டிச் செல்கின்றனர். அவ்வாறு சிறப்பிக்கப்பெற்றோர், முன்னம் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன், கண்ணன், வாணன், கலிங்கர் கோன், செஞ்சியர் கோன் காடவன், வேணாடர் வேந்து, அனந்தபாலன், வத்தவன், சேதித் திருநாடர் சேவகன், காரானை காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்தனன் என்போர். விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுக்களின் துணைக்கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை ஆராய்தல் அமைவுடையதேயாம்.

(1) கருணாகரத் தொண்டைமான்

இவனைப் பற்றிய செய்திகள் முன் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளன. விக்கிரம சோழன் ஆட்சியிலும் இவன் உயிர் வாழ்ந்தானென்பது விக்கிரம சோழனுலாவினால் நன்கறியக் கிடக்கின்றது. ஆனால் இவ்வேந்தன் ஆட்சியில் இவன் அரசாங்க அலுவல்களினின்றும் நீங்கி ஓய்வு பெற்ற நிலையில் இருந்திருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப்படுகின்றது.

(2) முனையர்கோன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன் என்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படுகிறது. ஆனால் இதுகாறும் வெளிவந்துள்ள கல்வெட்டுக்களில் இவனைப் பற்றிய செய்தி காணப்பட வில்லை. இவன், முனையதரையன், முனையரையன் என்ற பட்டங்களுள் ஒன்றை அரசன்பாற் பெற்றவன் என்று தெரிகிறது.

(3) சோழ கோன்

இவன் விக்கிரம சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; அரசனால் அளிக்கப்பெற்ற சோழ கோன் என்னும் பட்டம் பெற்றவன். இவன், கங்கர், மகாராட்டியர், கலிங்கர், கொங்கர், குடகர் ஆகியோரைப் போரில் வென்று வாகை சூடியவ னென்பது விக்கிரம சோழனுலாவினால் அறியப்படு கின்றது. இவன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக நிலவியவன் என்பது திருமழபாடி யிலுள்ள ஒரு கல்வெட்டால்1 தெரிகின்றது. அக் கல்வெட்டால், இவன் பூபால சுந்தரன் என்னும் பெயரினன் என்பதும் இவனுடைய மனைவி இராசேந்திர சோழியார் என்னும் பெயருடையவள் என்பதும் புலப்படுகின்றன.

(4) மறையோன் கண்ணன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன். மறையவர் குலத்தினன், கண்ணன் என்னும் பெயரினன்; பெரும்புரிசை சூழ்ந்த கஞ்சை என்னும் ஊரினன். கஞ்சை என்பது கஞ்சனூர், கஞ்சாறு என்ற பெயர்களின் மரூஉவாதல் வேண்டும். இவ்விரண்டு ஊர்களிலும் சோழ மன்னர்களுடைய அரசியல் அதிகாரிகளுள் சிலர் முற்காலத்தில் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவற்றுள், இவ்வமைச்சன் எவ்வூரினன் என்பது தெரியவில்லை. வெளிவந்துள்ள கல்வெட்டுக்களும் இவனைப் பற்றி ஒன்றும் உணர்த்தவில்லை.

(5) வாணன்

இவன் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியில் விளங்கிய ஒரு படைத் தலைவன்; முடிகொண்டானென்ற பெயருடையவன்; வாணர் மரபினன்; வாணகப்பாடி நாட்டினன்; சண்பை என்னும் ஊரினன்; விருத்தராச பயங்கர வாணகோ வரையன் என்னும் பட்டம் எய்தியவன்; கி. பி. 1124ஆம் ஆண்டில் இவ்வாணகோ வரையன், கண்டராதித்த சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாணவிச்சாதர நல்லூர் முடிகொண்ட சோழேச்சுர முடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக மூன்றேகால் வேலி இறையிலி நிலம் அளித்துள்ளனன் என்று கீழைப் பழுவூரிலுள்ள கல்வெட்
டொன்று2 கூறுகின்றது.

(6) காலிங்கர் கோன்

இவன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் நிலவிய படைத் தலைவன்; அரும்பாக்கிழான் எனவும், மணவிற் கூத்தன் எனவும் வழங்கப்பெற்றவன். காலிங்கராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் வரலாறு முன் அதிகாரத்தில் எழுதப் பெற்றுள்ளமையின் எஞ்சியவற்றை ஆண்டுக் காண்க.

(7) செஞ்சியர்கோன் காடவன்

இவன் செஞ்சியின்கண் வாழ்ந்த குறுநில மன்னன்; பல்லவர் குலத்தினன்; விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் தஞ்சை ஜில்லா ஆலங்குடியில்1 வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில் சில தலைவர்கள் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள், செஞ்சி நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பன் என்பான் ஒருவனுளன். அவனே, ஒட்டக்கூத்தரால் உலாவில் குறிப்பிடப்பெற்ற செஞ்சியர்கோன் ஆதல் வேண்டு மென்பது ஒருதலை.

(8) வேணாடர் வேந்து

இவன் சேர மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டி லிருந்த ஒரு சிற்றரசன்; சேரர் மரபினன். முதற் குலோத்துங்க சோழனுக்குச் சேர மன்னர்கள் திறை செலுத்தி வந்தமை முன்னர் விளக்கப்பட்டது. அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந்நிலையிலேயே இருந்தனர். அவர்களுள், கூத்தரால் உலாவில் கூறப்பட்ட வேணாடர் வேந்தும் ஒருவனாவன். வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென் பகுதியாகும். கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் அப் பகுதியிலிருந்து ஆட்சி புரிந்த சேரர் அரசர் சிலர் வேணாட்டடிகள் என்று வழங்கப்பெற்றனர் என்பது கல்வெட்டுக்களால்2 அறியக்கிடக்கின்றது. எனவே, அவ்வேணாட்டடிகளுள் ஒருவனே விக்கிரம சோழனுலாவில் குறிக்கப்பெற்ற வேணாடர் வேந்தாதல் வேண்டும் விக்கிரம சோழனது ஆட்சியின் நான்காம் ஆண்டில் திருவலஞ்சுழி சிவாலயத்திற்கு நிவந்தம் அளித்துள்ள சேரமான் இராமவர்மன்3 என்பவன் இவ்வேணாடர் வேந்தாகவும் இருத்தல் கூடும்.

(9) அனந்த பாலன்

இவன் விக்கிரம சோழன் காலத்திலிருந்த தலைவர்களுள் ஒருவன்; அனந்தபாலன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் கி. பி. 1121-ல் திருவாவடுதுறையில் சங்கர தேவன் அறச்சாலை, அனந்தபாலர்ப் பெருந்திருவாட்டி என்ற அறச்சாலைகள் அமைத்து, தவசியர்க்கும் அந்தணர்க்கும் அனாதைகட்கும் உணவளித்தற் பொருட்டு நிலம் வழங்கி யுள்ளனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள்1 கூறுகின்றன. மருத்துவம் இலக்கணம் முதலியவற்றைக் கற்போர்க்கும் அதில் இலவசமாக உணவளிக்குமாறு இவன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்
தக்கது.2 இவனது அறச்செயல் விக்கிரம சோழனுலாவில்3 ஒட்டக்கூத்தரால் நன்கு பாராட்டப் பெற்றுள்ளது. இவன், சோழ மண்டலத்தில் பேராவூர் நாட்டிலுள்ள இளங்காரிக்குடியிற் பிறந்தவ னென்பதும் சங்கரன் என்பவனுடைய புதல்வன் என்பதும் அம்பலங் கோயில் கொண்டான் என்னும் பெயருடையவன் என்பதும் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த சேனாபதிகளுள் ஒருவன்4 என்பதும் திருவாவடுதுரைக் கல்வெட்டுக்களால் வெளியாகின்றன.

(10) வத்தவன்

இவன், முதற் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் ஆகிய இருவர் ஆட்சிக்காலங்களிலும் நிலவிய ஒரு படைத் தலைவன். இவனைப் பற்றிய செய்திகள் முன் அதிகாரத்தில் எழுதப் பெற்றுள்ளமையின் அவற்றை விரிவாக அங்கே காணலாம்.

(11) சேதித் திருநாடர் சேவகன்

இவன் சேதி நாடு எனவும் மலையமானாடு எனவும் வழங்கப்பெற்ற நிலப்பரப்பைத் திருக்கோவலூர், கிளியூர் ஆகிய நகரங்களைத் தலைநகர் களாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநில மன்னன்; சேதிராயன், மலையகுல ராசன் என்னும் பட்டங்கள் உடையவன். இவன் கருநாடரோடு போர்புரிந்து வெற்றி எய்தியவ னென்று விக்கிரம சோழனுலா உணர்த்துகின்றது. விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழ மலையகுலராசன் விக்கிரம சோழ சேதிராயன் என்ற இரு குறுநில மன்னர் அந்நாட்டில் இருந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவில் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.

(12) அதிகன்

இவன், தகடூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு மண்டலத்தை ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன்; கடைச்சங்க நாளில் வாழ்ந்த அதிகமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றியவன். இவனது தகடூர் இக்காலத்தில் தர்மபுரி என்னும் பெயருடன் சேலம் ஜில்லாவில் உளது. இவ்வதிகமான் வடகலிங்க வேந்தனை வென்றடக்கியவ னென்பது விக்கிரம சோழனுலாவினால் புலனாகின்றது. முதற் குலோத்துங்க சோழன் வடகலிங்கத் தரசனோடு நிகழ்த்திய போரில் கருணாகரத் தொண்டை மானோடு இவனும் அங்குப் போயிருத்தல் கூடும். இவனைப் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ள கல்வெட்டுக்களில் காணப்படவில்லை.

விக்கிரம சோழனுலாவில் கூத்தரால் குறிப்பிடப்பெற்ற தலைவர் களுள், காரானை காவலன், வல்லவன், திகத்தன் என்போர் யாவர் என்பது இப்போது தெரியவில்லை.

இனி, விக்கிரம சோழன் கல்வெட்டுக்களால் அறியப்படும் தமிழ்நாட்டிலிருந்த அரசியல் அதிகாரிகளை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருந்தும் எனலாம்.

(1) தேவூருடையான் மனதுக்கினியான் ஆகிய விராடராசன்

இவன் நாகப்பட்டினந் தாலுகாவிலுள்ள தேவூரில் வாழ்ந்தவன்; வேள், விராடராசன் ஆகிய பட்டங்களை அரசன்பாற் பெற்றவன். மனத்துக்கினியான் என்னும் பெயரினன். இவன் திருப்புகலூரில் முடிகொண்ட சோழப் பேராற்றின் வடகரையில் கி. பி. 1128-ல் ஒரு வைத்தியசாலையும் மடமும் நிறுவி ஆதுரரையும் அநாதரரையும் காப்பாற்றுவதற்கு நிலம் வழங்கி யுள்ளனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.

(2) திருச்சிற்றம்பலவன் மானசேகரன்

இவன் விக்கிரம சோழனுடைய அமைச்சர்களுள் ஒருவன்; இவன், சோழர்களின் பண்டைத் தலைநகராகிய பூம்புகார் நகரில் ஒரு மடம் அமைத்து, அந்தணர் ஐம்பதின்மர் நாள்தோறும் அதில் உண்பதற்கு நிலம் அளித்தனன் என்று சாயாவனத்திலுள்ள ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.

(3) சூரை நாயகன் மாதவ ராயன்

இவன் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனாகிய காலிங்க ராயனுடைய புதல்வன். இவன் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருப்பாசூர்க் கோயிலுக்கு அணிகலங்கள் அளித்தும் நந்தவனம் வைத்தும் தொண்டு புரிந்தா னென்று அவ்வூர்க் கல்வெட்டொன்றால் தெரிகிறது. எனவே, இவன், தன் தந்தையைப் போல் சிவபத்தி வாய்ந்தவனா யிருத்தல் அறியத்தக்கது.

(4) கருணாகரன் சுந்தரத் தோளுடையான் ஆகிய வளவன் பல்லவரையன்

இவன் கருணாகரன் சுந்தரத்தோளுடையான் என்னும் பெயருடையவன்; அரசனால் அளிக்கப்பெற்ற வளவன் பல்லவரையன் என்ற பட்டம் பெற்றவன்; பாண்டி நாட்டினன். இவன் நடு நாட்டில் பெண்ணாகடத்தி லிருந்த ஓர் அரசியல் அதிகாரியாவன். இவன் அவ்வூர்க் கோயிலில் யாத்திரிகர்க்கு உணவளிக்கும் பொருட்டுப் பொருள் அளித்துள்ளான் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால்1 புலனாகின்றது.

(5) அம்மையப்பன் இராசேந்திர சோழ சம்புவராயன்

இவன் வடஆர்க்காடு ஜில்லாவிலிருந்த ஒரு தலைவன்; பல்லவர் மரபில் செங்கேணிக்குடியில் தோன்றியவன்; அம்மையப்பன் என்ற பெயருடையவன்; இராசேந்திர சோழ சம்புவராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சீயமங்கலத் திறைவற்கு அர்த்தயாம வழிபாட்டிற்குச் சில வரிகளால் கிடைக்கும் பொருளை நிவந்தமாக அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று2 உணர்த்துகின்றது. இவன் உடன் பிறந்தவன் புக்கத்துறை வல்லவனாகிய அகளங்க சம்புவராயன் என்பான் மதுராந்தகத்திலுள்ள சிவன் கோயிலில் ஒரு நுந்தாவிளக்கு எரித்தற்கு 96 ஆடுகள் அளித்துள்ளனன்.3 இச் சம்புவராயர் களின் வழித் தோன்றல்களே சோழர்கட்குப் பின்னர், தொண்டை மண்டலத்தில் படைவீட்டு இராச்சியம் அமைத்து அரசாண்டவர் என்பது அறியற்பாலது.

(6) சுந்தன் கங்கைகொண்டானாகிய துவராபதிவேளான்

இவன் பாண்டி நாட்டினன்; இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள சிவபுரியில் காணப்படும் கல்வெட்டொன்றால்4 இவன் ஒருவாட்படையின் தலைவ னென்று தெரிகிறது. இவன் துவராபதி வேள் என்னும் பட்டம் பெற்ற வனாயிருத்தல் உணரற்பாலதாம்.

இனி, விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ஆந்திர நாட்டுத் தலைவர்களையும் ஆராய்தல் ஏற்புடையதேயாம்.

(1) மகா மண்டலேசுவரன் பெத்தராசன்

இவன் கி. பி. 1121-ல் பொத்தப்பி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது கடப்பை ஜில்லா நந்தலூரிலுள்ள ஒரு கல்வெட்டால்1 புலப்படுகின்றது. பொத்தப்பி நாடு யாண்டுடையது என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

(2) மகா மண்டலேசுவரன் விமலாதித்தன் ஆகிய மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன்

இவன், பெத்தராசனுக்குப் பிறகு பொத்தப்பி நாட்டில் அரசாண்ட ஒரு குறுநில மன்னன்; விமலாதித்தன் என்னும் பெயருடையவன்; அரசனால் வழங்கப் பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழன் என்னும் பட்டமுடையவன். இவன் கல்வெட்டுக்கள்2 நந்தலூர், திருக்காளத்தி ஆகிய ஊர்களில் உள்ளன. அவற்றால், இவன் விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்திக்கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது வெளியாகின்றது.

(3) கன்னர தேவனாகிய இராசேந்திர சோழப் பொத்தப்பிச் சோழன்

இவன், விக்கிரம சோழன் காலத்திலிருந்த பொத்தப்பிச் சோழருள் ஒருவன் என்பது திருக்காளத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால்3 புலனாகின்றது. இவன் கன்னர தேவன் என்னும் பெயரினன்; காமராசன் என்பவனுடைய புதல்வன்; இராசேந்திர சோழப் பொத்தப்பிச் சோழன் என்ற பட்டம் உடையவன்.

(4) மகா மண்டலேசுவரன் நம்பயன்

இவன் விக்கிரம சோழனுக்குக் கப்பஞ் செலுத்திக்கொண்டு வேங்கி நாட்டில் அரசாண்ட ஒரு குறுநில மன்னனாவன். இவனைப் பற்றிய செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

(5) மகா மண்டலேசுவரன் கட்டிதேவ மகாராசனாகிய விக்கிரம சோழ கருப்பாறுடையான்

இவன் புடோலியரையன் என்றும் வழங்கப்பெற்றுள்ள னன். புடோலி என்பது கடப்பை ஜில்லாவிலுள்ள ஓர் ஊராகும். இவன் கல்வெட்டுக்கள், திருக்காளத்தி, குடிமல்லம் என்னும் ஊர்களில் காணப்படுகின்றன.1 அவற்றால் இவன் விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ஒரு சிற்றரசன் என்று தெரிகிறது. இவன் பெற்றுள்ள விக்கிரம சோழ கருப்பாறுடையான் என்னும் பட்டமும் இவ்வுண்மையை வலியுறுத்துதல் காண்க.

(6) இராசேந்திர சோழ காங்கேயராயன்

இவன் வெலநாண்டுச் சோழன் ஆவன்; இவனும் இவன் புதல்வன் இரண்டாங் கொங்கனும் விக்கிரம சோழனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர்கள் என்பது திருக்காளத்திக் கல்வெட்டுக்களால்2 அறியப்படுகின்றது.

இரண்டாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1133 - 1150)


விக்கிரம சோழன் கி. பி. 1135-ஆம் ஆண்டில் இறந்த பிறகு,முன்னர் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்த அவன் புதல்வன் இரண்டாங் குலோத்துங்க சோழன் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றனன்.1 இவன் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டான். இவன் மெய்க்கீர்த்திகள், பூமன்னு பாவை2 எனவும், பூமன்னுபதுமம்3 எனவும், பூமன்னுயாணர்4 எனவும், பூமருவிய புவியேழும்5 எனவும், பூமேவிவளர்6 எனவும், பூமேவு திருமகள்7 எனவும் தொடங்கித் தமிழ் மணங் கமழும் சிறப்புடையனவாய் உள்ளன. அவையெல்லாம் இவ் வேந்தனது ஆட்சியைப் புகழ்ந்து கூறுகின்றனவேயன்றி வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவனவாயில்லை. எனவே, இவன் ஆட்சிக்காலத்தில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சிகள் எவையும் நிகழவில்லை என்பது தேற்றம்.

இனி, திருமாணிகுழியில் காணப்படும் கல்வெட்டொன்று8 தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடிசூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் என்று கூறுகின்றது. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், தில்லைநகர் நம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில்தான் எல்லா வளங்களும் நிறைந்த பெருநகராக அமைக்கப்பெற்றதாதல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. அன்றியும் அம் மாநகரில் இவ்வரசர் பெருமான் முடி சூடிக்கொண்டமைக்குரிய குறிப்பும் இக் கல்வெட்டுத் தொடரில் இருத்தல் அறியத்தக்கது. எனவே, இவன் காலத்தில் தான் தில்லையம்பதியிலும் அங்குள்ள அம்பலவாணரது திருக்கோயிலிலும் பல பல திருப்பணிகள் நிகழ்த்தப் பெற்றன என்பது ஒருதலை. அத் திருப்பணிகளெல்லாம் ஒட்டக்கூத்தர் பாடியுள்ள குலோத்துங்க சோழனுலா இராசராசசோழனுலா தக்கயாகப் பரணி3ஆகிய மூன்று நூல்களிலும் அவ்வாசிரியரால் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. ஆகவே அவற்றின் துணைகொண்டு குலோத்துங்க சோழனது தில்லைத் திருப்பணிகளை ஆராய்தல் அமைவுடையதேயாம்.

தில்லைத் திருப்பணி

இவன் தில்லையம்பதியில், தேவர்கோன் மூதூரிலுள்ள பெரு வீதிகள் கண்டு நாணுமாறு நாற்பெருந்தெருக்கள் அமைத்தும் பற்பல மண்டபங்கள் கட்டுவித்தும் அந்நகரைச் சிறப்பித்தான்; சிற்றம்பலத்தைப் பொன்னாலும் பல்வகை மணிகளாலும் அலங்கரித்துப் பணிபுரிந்தான்; பேரம்பலத்தையும் உட் கோபுரத்தையும் திருச்சுற்று மாளிகையையும் மாமேரு போலப் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்கள் எடுப்பித்தான்; உமாதேவியார் தாம் பிறந்த இமய வெற்பை மறக்கும்படி சிவகாம கோட்டம் மிகப் பெரிதாக அமைத்தான்; அவ்வம்மையார் விழாநாளில் உலாவருதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுறுத்தப் பெற்ற தேரொன்று செய்தளித்தான்; திருக்கோயிலில் பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான்;4 நாற்புறமும் கூடங்களோடு திகழும் திருக்குளம் ஒன்று கட்டினான்; இவ்வாறு இவ்வேந்தன் தில்லைத் திருக்கோயிலில் நிகழ்த்திய திருப்பணிகள் அளவற்றன எனலாம். இவன் இத் திருப்பணிகளை எல்லாம் மிக விரிவாகச் செய்யத் தொடங்கியபோது, தில்லைச் சிற்றம்பலத்திற்கு இடம் போதாதவாறு திருமுற்றத்தின்கண் இருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்தெடுத்து அலைகடலில் கிடத்தும்படி செய்து1 அதனால் இடத்தைப் பெருக்கிக் கொண்டு, திருப்பணிகளை நிறைவேற்றினான் என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் தம் நூல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.

கி. பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவ மல்லனால் தில்லையம்பல முன்றிலில் நிறுவப்பெற்று அந்நாள் முதல் நிலை பெற்றிருந்த திருமால் மூர்த்தத்தைக் கடலில் எறிந்த இவன் செயல் வைணவர் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்திவிட்டது. அதுபற்றி வைணவ சமயத்தினர் எல்லோரும் இவனுக்குப் பகைஞர் ஆயினர் எனலாம். அன்னோர் கருதியவாறு இவன் வைணவ சமயத்தில் பெரிதும் வெறுப்புடையவன் என்று கூறுவதற்கு இடமில்லை. () தொன்று தொட்டுச் சமயப் பொறையுடையவர்களாய் வழி வழி ஒழுகி வந்தவர்கள் என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இவ்வேந்தர்கள் தம் குடிகள் கைக்கொண்டொழுகிய எல்லாச் சமயங்களையும் விரிந்த மனப்பான்மையோடு பொது நோக்குடன் புரந்துவந்த பெருந்தகையினர் என்பது தெள்ளிது. இவனுடைய பாட்டனாகிய முதற் குலோத்துங்க சோழன் விஷ்ணு வர்த்தனன் என்னும் பெயருடையவன் என்பதும் அவன் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள இராசமன்னார் கோயிலில் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்னும் திருமால் கோட்டம் எடுப்பித்து அதற்கு வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துப் புரந்து வந்தவன் என்பதும் முன் விளக்கப்பெற்ற செய்திகள் ஆகும். இவன் தந்தை விக்கிரமசோழனும் திருமாலிடத்தும் அன்புபூண்டொழுகியவன் ஆவன். ஆகவே, இத்தகைய தந்தையிடத்தும் பாட்டனிடத்தும் பழகி வளர்ந்துவந்த நம் குலோத்துங்கன் திருமாலிடத்து வெறுப்புக்கொண்டு வைணவர்களுக்குத் தீங்கிழைத்தான் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. இவன் உண்மையில் திருமால் சமயத்தில் வெறுப்புடையவனா யிருந்திருப்பின் இவன் தன் ஆட்சிக்குட்பட்ட சோழ இராச்சியத்தில் உள்ள எல்லாத் திருமால் கோயில்கட்கும் இடையூறு புரிந்திருத்தல் வேண்டுமன்றோ? ஆனால், தில்லையிலன்றி வேறு எவ்விடத்தும் இவன் அங்ஙனம் செய்ததாகத் தெரியவில்லை. எனவே இவன் தில்லைச் சிற்றம்பலவாணரிடத்து ஈடுபாடுடையவனாய் அப்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலை மிகப் பெரிதாக அமைக்கக் கருதித் திருப்பணி தொடங்கியபோது, தில்லைக் கோவிந்தராசரை வழிபட்டுவந்த வைணவர்கள் அத் திருப்பணிக்கு முரண்பட்டு நின்றமையோடு தம்மாலியன்ற சில இடையூறுகளைச் செய்தும் இருக்கலாம். அது பற்றிச் சினங்கொண்ட இவ் வேந்தன் அத் திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்துக் கடலில் போடச் செய்து பிறகு தான்மேற்கொண்ட திருப்பணியை நிறைவேற்றியிருத்தல் வேண்டும். இவன் தில்லைத் திருப்பணி நிகழ்த்தியபோது அதற்குத் திருமால் சமயத்தினர் செய்த இடையூறுகளை ஒரு பொருட்படுத்திக் கூறவிரும்பாத ஆசிரியர் ஒட்டக்கூத்தர், இவன் மன்றிற்கு இடங்காண வேண்டித் திருமாலை அவருக்குரிய பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியுள்ளனர். பிற்காலத்தெழுந்த திவ்யசூரி சரிதம், கோயிலொழுகு முதலான சில வைணவ நூல்கள் இவன் புரிந்த இச்செயலை மிகைப்படக் கூறி இவன்மீது அடாத பழிகளைச் சுமத்தியும் இவனைக் கிருமிகண்ட சோழன் என்று இழித்துரைத்தும் உள்ளன. அவை யெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளேயன்றி வேறல்ல என்பது நுணுகியாராய் வார்க்குப் புலப்படாமற் போகாது. இவன் செயல்பற்றிச் சோழ இராச்சியத்தில் அமைதியின்மையும் கலகமும் யாண்டும் ஏற்படவில்லை; பொதுமக்கள் எல்லோரும் அமைதியாகவே இனிது வாழ்ந்து வந்தனர்; எனவே, அவர்கள் இதனை நாட்டிற்குத் தீங்கு பயக்குங் கொடுஞ்செயலாகக் கருதவில்லை என்று தெரிகிறது. எனினும், பெருவேந்தனாகிய குலோத்துங்கன் இங்ஙனம் செய்தமைக்குத் தக்க காரணங்களிருப்பினும் இச் செயல் இவனது பெரும் புகழுக்குச் சிறிது இழுக்குண்டு பண்ணிவிட்டது என்பதில் ஐயமில்லை.

இனி, திருமாலைக் கடலில் எறிந்த செயலை வீரராசேந்திரன் புதல்வனாகிய அதிராசேந்திர சோழன்மேலேற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியிருப்பது எவ்வாறானும் பொருத்த முடையதன்று என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.1 குலோத்துங்கன் காலத்திலிருந்த ஒட்டக்கூத்தர் தம் காலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைத் தாம் நேரிற் கண்டவாறு உலாக்களிலும் பரணியிலுங் குறித்திருக்கும்போது இதனை எளிதாக வேறோர் அரசன் மேல் ஏற்றிக்கூறுவது எங்ஙனம் பொருந்தும்? தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இச்செயல் நிகழ்த்தியவன் இராசராச சோழன் தந்தையாகிய குலோத்துங்க சோழன் என்று மிகத் தெளிவாகக் கூறியிருப்பதும் உணரற்பாலதாம்.

தில்லையம்பதியில் விக்கிரம சோழன் தன் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் நிகழ்த்தியனவாக அவன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் திருப்பணிகளும் அவன் புதல்வனாகிய இக் குலோத்துங்கன் அங்கு நிகழ்த்தியனவாக உலாக்களிலும் தக்கயாகப் பரணியிலும் ஒட்டக்கூத்தரால் கூறப்படும் திருப்பணிகளும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்ற வெவ்வேறு திருப்பணிகளேயாம். எனவே, அவையெல்லாம் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பெற்று நிறைவேற்றப்படாமல் அவன் புதல்வன் குலோத்துங்க சோழன் ஆட்சியில் முடிக்கப்பெற்றன என்று கருதுவதற்குச்3 சிறிதும் இடமில்லை என்க.

ஆட்சியின் சிறப்பு

இவ்வேந்தன் ஆளுகையில் சோழநாடு போரின்றி மிகச் சீரிய நிலையில் இருந்தது. அதனால் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களுமின்றி இனிது வாழ்ந்துகொண்டிருந்தனர். இவன் தந்தை விக்கிரம சோழனது ஆட்சியின் இறுதியில் சோழ இராச்சியம் எத்துணைப் பரப்புடையதாக இருந்ததோ அத்துணைப் பரப்புடையதாகவே இவன் ஆட்சியிலும் நிலைபெற்றிருந்தது எனலாம். ஆந்திர தேயத்தில் இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படுவதால் மேலைச் சளுக்கியரிட மிருந்து விக்கிரம சோழன் கைப்பற்றிய வேங்கிநாடு இவன் ஆளுகையின் கீழும் அமைதியாகவே இருந்து வந்தது என்பது ஒருதலை. எனவே, தன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடெங்கும் அமைதி நிலவச் செங்கோல் செலுத்திய பெருவேந்தன் இவன் என்பது நன்கு துணியப்படும்.

குலோத்துங்கனது பல்கலைப் புலமை

இவன் தன் பாட்டனாகிய முதற் குலோத்துங்க சோழனைப் போல் பல்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன் என்று தெரிகிறது. இவன் சிறப்பாகத் தமிழ்ப்புலமை மிக்கவன்; பல்வகைச் செய்யுட்களும் இயற்றும் ஆற்றல் வாய்ந்தவன்; இத்தகைய புலமையும் ஆற்றலும் தன் தந்தையின் அவைக் களப் புலவராக இருந்தவரும் கவிச் சக்கரவர்த்தியுமாகிய ஒட்டக்கூத்தர்பால் தமிழ் இலக்கண இலக்கியங்களை எல்லாம் நன்கு பயின்று இவன் பெற்றனவேயாம். இவன் தன் ஆசிரியராகிய ஒட்டக்கூத்தரிடத்தில் வைத்திருந்த அன்பும் மதிப்பும் அளவிட்டுரைக்குந் தரத்தன அல்ல. இவனைத் துரக வித்தியா விநோதன் எனவும், விநோதன் எனவும் நித்திய கீதப்பிரமோகன் எனவும், ஞான கெம்பீரன்2 எனவும் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் கூறியிருத்தலால் இவன் அசுவசாத்திரம், தனுர் சாத்திரம், இசை நூல் முதலான கலைகளிலும் வல்லவனா யிருந்தனன் என்பது நன்கு வெளியாகின்றது. வெளிநாட்டோடு போரின்மையும் உள்நாட்டில் நிலைபெற்றிருந்த அமைதியுமே இவன் பல கலைகளிலும் தேர்ச்சி பெறுதற்கு ஏதுக்களாக இருந்தன எனலாம்.

குலோத்துங்கனது சமயப்பற்று

இவன் தில்லை சிற்றம்பல வாணரிடத்து எல்லையற்ற பேரன் புடையவன் என்பது தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குங் சிந்தையபயன்` எனவும் நவநிதி தூய் - ஏத்தற் கருங் கடவுள் எல்லையிலானந்தக் கூத்தைக் களிகூரக் கும்பிட்2 டான் எனவும் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் கூறியுள்ளமையால் இனிது புலனாகின்றது. திருவாரூர்க் கல்வெட்டொன்று,3 இவன் தில்லைக் கூத்தபிரான் திருவடித்தாமரை யிலுள்ள அருளாகிய தேனைப் பருகும் வண்டு போன்றவன் என்று கூறுவதும் இவ்வுண்மையை வலியுறுத்துதல் காண்க. இவன் தன் வழிபடு கடவுளாகிய தில்லையம்பலவாணரது திருக்கோயிலில் பற்பல திருப்பணிகள் புரிந்து அதனைச் சிறப்பித்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவன், சைவ சமய குரவர் மூவரிடத்தும் அளவற்ற அன்புடையவன் என்பது அவர்கள் படிமங்களைத் திருவாரூர்க்கோயிலில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கும் விழாவிற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் மிகுதியாக வழங்கி யுள்ளமையால் நன்கு வெளியாகின்றது.4 எனவே, சிவபாதசேகரன் என்று பாராட்டப்படும் முதல் இராசராச சோழனைப்போல் இவனும் ஒப்பற்ற சிவபத்திச் செல்வம் வாய்ந்தவன் என்பது தெள்ளிதில் புலனாதல் காண்க.

அவைக்களப்புலவர்

இவன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தர் இவனுக்குத் தமிழாசிரியராயமர்ந்து இவனைச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த அரசனாகச் செய்தனர். அக்கவிஞர் பெருமான் இவன் அவைக்களப் புலவராகவும் இருந்தனர். இவனது இளமைப் பருவம் முதல் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற அப்புலவர்பிரான் இவன் மீது பிள்ளைத்தமிழ் ஒன்றும் உலா ஒன்றும் பாடி இவனைச் சிறப்பித் துள்ளமை இவன் ஆட்சியில் நிகழ்ந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். அவ்விரு நூல்களும் முறையே குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் எனவும், குலோத்துங்க சோழனுலா எனவும் வழங்கி வருகின்றன. அந்நூல்களில் இவன் முன்னோர்களான சோழ மன்னர்களின் வரலாறுகளும், இவனுடைய செங்கோலின் மாட்சியும் சிவபத்தியும் இவன் புரிந்த தில்லைத் திருப்பணிகளும் இவனுடைய வன்மை வீரம் முதலான பண்புகளும் பிற சிறப்பியல்புகளும் கூத்தரால் கூறப்பட்டுள்ளன.

பிறபுலவர்கள்

இவ்வேந்தன் காலத்திலிருந்த மற்றொரு புலவர் தண்டியாசிரியர் ஆவர். அவர், இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னனுடைய அவைக்களப் புலவராகிய தண்டி என்னும் வடமொழிப் புலவர்1 இயற்றிய காவியா தர்சம் என்ற வடமொழி அலங்கார நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர். அவ்வணி நூலில் உதாரணச் செய்யுட்களும் அவரே பாடி அமைத்துள்ளனர். அப்பாடல்களுள் சிலவற்றில் நம் குலோத்துங்கனுடைய ஆற்றல் கொடை முதலான சிறந்த குணங்கள் அவ்வாசிரியரால் பாராட்டப்பட்டுள்ளன. அன்றியும், இவ்வரசனுடைய கங்கைகொண்ட சோழபுரத் தரண்மனையையும் கவிச்சக்கரவர்த்தியாகிய கூத்தரது வாக்கு நயத்தையும் இரண்டு உதாரணப் பாடல்களில் அவர் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, தண்டியாசிரியர் ஒட்டக் கூத்தருடைய மாணவராயிருத்தல் வேண்டும் என்று கருதுவதற்கு இடம் உளது. இவ்விரு புலவர்களும் மலரி என்னும் ஊரினராயிருத்தல் இக் கருத்தினை ஓரளவு வலியுறுத்துதல் உணரற்பாலதாம். இஃது எவ்வாறா யினும், நம் குலோத்துங்கனால் ஆதரிக்கப்பெற்ற தமிழ்ப் புலவர்களுள் தண்டியாசிரியரும் ஒருவர் என்பது ஒருதலை.

மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையார் என்பார், தொண்டை மண்டலத்தில் களத்தூர்க் கோட்டத்திலுள்ள மருதத்தூரினர். இவர் சோணாட்டு உறத்தூர்க் கூற்றத்துப் பையூருடையான் வேதவன முடையான் மேல் ஒரு நூல் பாடி இரும்பூதி என்ற ஊரைப் புலவர் முற்றூட்டாகப் பெற்று அதனைப் பையூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு வழங்கியுள்ளனர் என்பது புதுக்கோட்டை நாட்டிற் காணப்
படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.1 இந்நிகழ்ச்சி கி. பி. 1145-ல் நிகழ்ந்ததாகும்.

குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் பல புலவர்களை ஆதரித்துப் பாதுகாத்து வந்தான் என்பதைக் கற்றவர் குடிபுடைசூழ் கற்பக இளவனமே2 என்னுங் கூத்தர் வாக்கினால் நன்கறியலாம். இச்செய்தி, பெரும் புலவரும் அருங் கவிஞரும் - நரம்புறு நல்லிசைப் பாணருங் - கோடியருங் குயிலுவரும் நாடு நாடுசென் - றிரவலரா யிடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ்படைப்ப என்னும் இவன் மெய்க்கீர்த்தியால்3 உறுதியாதல் காண்க. இவ்வாறு புலவர் கவிஞர், பாணர் முதலானோர்க்கு இவன் புரவலனாக விளங்கியதை,

கோடியர் புலவர் விரலியர் பாணர்
குலகிரி களும்குறை நிறையத்
தேடிய நிதியங் குலோத்துங்க சோழன்
உருட்டுக சிறுதேரே

என்னும் பிள்ளைத்தமிழ் இறுதிப் பாடலில் ஆசிரியர் ஒட்டக்கூத்தருங் கூறியிருத்தல் அறியத்தக்கது. இஃது இங்ஙனமாக, தமிழ்ப் புலவர் வரலாறு எழுதியோர், குலோத்துங்கன் கூத்தர் ஆகிய இருவர் மீதும் வரலாற் றுண்மைக்கு முரண்பட்ட கற்பனைக் கதைகளை எழுதிப் பொய்ச் செய்திகளைப் பரவச் செய்துள்ளமை பெரிதும் வருந்தற் குரியதாகும்.

இனி, நம் குலோத்துங்கன் காலத்தில்தான் புகழேந்திப் புலவர், சேக்கிழாரடிகள், கம்பர் ஆகிய புலவர் பெருமக்கள் இருந்தனர் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் எழுதியுள்ளனர். அன்னோர் கருத்து உறுதிபெறுதற்குத் தக்க சான்றுகள் இன்மையின் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலமாகிய கி. பி. 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், சேக்கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும், கம்பர் உத்தம சோழன் ஆட்சிக் காலத்திலும் இருந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாற் புலப்படுகின்றது. ஆகவே அப்புலவர் பெருமான்கள் மூவரும் வெவ்வேறு காலங்களில் நம் தமிழகத்தில் வாழ்ந்தோர் ஆவர்.

தலைநகர்

நம் குலோத்துங்கன் ஆட்சியில் தலைநகராக விளங்கிய நகரம் கங்கைகொண்ட சோழபுரமேயாம். இம் மாநகர் கங்காபுரி2 என்று குலோத்துங்க சோழன் உலாவிலும் கங்காபுரம்3 என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் கூறப்பெற்றிருத்தல் அறியற்பாலது. அன்றியும், தில்லை யம்பதியும் இவன் உவந்து வீற்றிருக்கும் ஒப்பற்ற நகராக இருந்தது எனலாம். அப் பெரும்பதி, குலநாயகராகிய கூத்தப்பிரான் தாண்டவம் பயிலும் தலமாதல்பற்றியே அத்தகைய சிறப்பினை எய்தியது என்க. விக்கிரம சோழபுரத் தரண்மனையிலிருந்து இவ் வேந்தன் அனுப்பிய உத்தரவுகள்4 கீழைப் பழுவூர், பிரமதேயம், ஏமப்பேரூர் ஆகிய ஊர்களில் வரையப் பட்டிருத்தலால் இவன் அந்நகரத்திலும் ஆண்டுதோறும் இரண்டொரு திங்களாதல் தங்கியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.

சிறப்புப் பெயர்கள்

இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்கள், அபயன், அனபாயன், எதிரிலாப் பெருமாள், கலிகடிந்த சோழன் திருநீற்றுச் சோழன்3 பெரிய பெருமாள்4 என்பனவாம். இவற்றுள், அபயன், திருநீற்றுச் சோழன் என்னும் இரு பெயர்களும் இவன் பாட்டன் முதற் குலோத்துங்க சோழனுக்கு முதலில் வழங்கிப் பிறகு இவனுக்கும் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள சிறப்புப் பெயர்களுள் அனபாயன் என்பது இவன் பிள்ளைத்தமிழில் காணப்படாமல் உலாவில் மாத்திரம் காணப்படுவதால் இப்பெயர் இவன் ஆட்சியின் முற்பகுதியில் வழங்கவில்லைபோலும்.

குலோத்துங்கனுடைய மனைவியாரும் புதல்வனும்

இவ் வேந்தனுக்குத் தியாகவல்லி, முக்கோக் கிழானடி என்ற இருமனைவியர் இருந்தனர் என்பது திருமழபாடியிலுள்ள கல்வெட்டொன்றால்5 அறியப்படுகின்றது. அவர்களுள், தியாகவல்லியே பட்டத்தரசியா யிருந்தனள். அவ்வரசிக்குப் புவன முழுதுடையாள் என்ற சிறப்புப் பெயர் ஒன்றும் உண்டு. முக்கோக் கிழானடி இரண்டாம் மனைவியாவள். அவ்வரசியை மலாடர் குலமணிவிளக்கு6 என்று இவனது மெய்க்கீர்த்தி கூறுவதால், அவள் மலையமா னாடாகிய சேதி நாட்டை அந்நாளில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் மகளா யிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. இவனுக்கு இராசராசன்1 என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். அவ்வரசகுமாரன் இவனுடைய இருமனைவியருள் யார் வயிற்றுப் புதல்வன் என்பது இப்போது புலப்படவில்லை.

இனி, இவனது ஆட்சியின் 16, 17-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்2 சில ஊர்களில் காணப்படுவதால் இவன் கி. பி. 1150 வரையில் அரசாண்டு அவ்வாண்டிலே இறைவன் திருவடியை அடைந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் உணரப்படும். இவன் தான் இறப்பதற்கு நான்கு ஆண்டுகட்கு முன் கி. பி. 1146-ல்3 தன் புதல்வனாகிய இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசியல் அலுவல்களில் பயிற்சி பெற்றுவரும்படி செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

நம் குலோத்துங்கன் காலத்தில் இவனுக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர் களாகவும் அரசியல் அதிகாரிகளாகவும் இருந்து ஆட்சி நன்கு நடைபெறுமாறு செய்தோர் பலர் ஆவர். அவர்களுள் கல்வெட்டுக்களால் அறியப்படும் சில செய்திகளை மாத்திரம் ஈண்டுக் குறிப்பிடுவோம்.

1. அம்மையப்பன் கண்ணுடைப் பெருமாளான விக்கிரம சோழ சம்புவராயன்

இவன் பல்லவர் மரபினன்; செங்கேணி என்னுங் குடிப் பெயருடையவன்; தொண்டை மண்டலத்தில் வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாப் பகுதியில் அரசாண்டு கொண்டிருந்த ஒரு சிற்றரசன்; சம்பவராயன் என்னும் பட்டமுடையவன்; இவன் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தி லிருந்த செங்கேணி அம்மையப்பன் நாலாயிரவன் என்பவனுடைய புதல்வன் ஆவன். இவன் நம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் வட ஆர்க்காடு ஜில்லாவில் திருவல்லம், சோழபுரம் என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்கட்குச் சில வரிகளால் வரும் பொருள்களை அளித்துள்ளனன் என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால்1 புலனாகின்றது.

2. ஏழிசை மோகன் ஆட்கொள்ளியான குலோத்துங்க சோழ காடவராயன்

இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு தலைவன்; கி. பி. 1136-ல் தென்னார்க்காடு ஜில்லாவில் திருமாணிகுழியைச் சார்ந்த நிலப்பரப்பில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியாய் நிலவியவன்; அரசனால் அளிக்கப்பெற்ற குலோத்துங்க சோழ காடவராயன், கச்சிராயன் என்னும் பட்டங்கள் பெற்றவன். இவன் திருநாவலூர், திருவதிகை, விருத்தாசலம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்கட்கு2நிவந்தங்கள் அளித்தும் அணிகலன்கள் வழங்கியும், திருப்பணி புரிந்தும் தொண்டுகள் செய்திருத்தலால், இவன் ஒப்பற்ற சிவபக்தியுடையவன் என்று தெரிகிறது. இவன், தன் அறிவாற்றல்களால் அரசியலில் படிப் படியாக உயர்ந்து, சிறந்த பட்டம் பதவிகள் பெற்றுத் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருமுனைப் பாடி நாட்டில் ஒரு சிற்றரசனா யிருந்தான் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.3இவன், ஆளப்பிறந்தான் எனவும் அரச நாராயணன் எனவும் தன்னைக் கூறிக்கொண்டிருத்தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே அழிந்தொழிந்த பல்லவர் பேரரசை மீண்டும் நிறுவுதற்குக் காலங் கருதிக் கொண்டிருந்த பல்லவ அரச குமாரர்களுள் இவன் முதல்வனாதல் வேண்டும். இவன் தொடங்கிய அம்முயற்சி மூன்றாம் இராசராச சோழன் ஆட்சியில் கி. பி. 1232-ல் இப்பல்லவன் வழியினனாகிய கோப்பெருஞ்சிங்கனால் நிறைவேற்றப்பட்டமை அறியத்தக்கது.

3. இராசராச மகதைநா டாழ்வான்

இவன் மகத நாட்டை அரசாண்ட வாணர் மரபில் தோன்றியவன்; நம் குலோத்துங்கன் ஆட்சியில் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் அதிகாரியாய் விளங்கியவன். இவன் திட்டகுடித் தேவதான நிலங்களிலிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய பெரும்பாடி காவல் என்னும் வரியை அவ்வூர்க் கோயிலுக்கு அளித்தனனென்று அங்குள்ள கல்வெட்டொன்று1 உணர்த்துகின்றது.

4. விக்கிரம சோழ சேதிராயன்

இவன் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள மலையமானாட்டில் திருக்கோவலூரைச் சூழ்ந்த நிலப்பகுதியை அரசாண்ட ஒரு சிற்றரசன். இவன் புதல்வன் விக்கிரம சோழ கோவலராயன் என்பான்; கி. பி. 1137-ல் விக்கிரம சோழ சேதிராயன் மனைவி திருக்கோவலூரிலுள்ள வீரட்டானமுடையார் கோயிலில் ஒரு மடைப்பள்ளி கட்டினாள் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது.2 நம் குலோத்துங்கன் காலத்திலிருந்த மலையமானாட்டு சிற்றரசருள் கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழ சேதிராயனும் ஒருவன்.3 இவன் மலையமானாட்டில் கிளியூரைச் சூழ்ந்த நிலப் பரப்பை அரசாண்ட ஒரு குறுநில மன்னன் ஆவன். தென்னார்க்காடு ஜில்லாவில் சண்பை என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலுக்கு கி. பி. 1147-ல் இறையிலி நிலம் வழங்கிய கிளியூர் மலையமான் இராசகம்பீர சேதிராயன் என்பவன்,4 மேலே குறிப்பிட்ட குலோத்துங்க சோழ சேதிராயனுக்குத் தம்பியோ அன்றி புதல்வனோ ஆதல்வேண்டும்.

5. குலோத்துங்க சோழ யாதவராயன்

இவன் திருக்காளத்தியைச் சூழ்ந்த நிலப் பகுதியை அரசாண்ட ஒரு யதுகுலச் சிற்றரசன். கட்டி தேவனென்னும் பெயருடையவன். இவன் திருக்காளத்திக் கோயிலில் நாள்தோறும் தவசிகளையும் அந்தணர்களையும் பிறரையும் உண்பித்தற் பொருட்டு வீரமங்கலம் என்னும் ஊரை கி. பி. 1139-ல் அக்கோயிலுக்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.5

6. சீயகங்கன்

இவன் மைசூர் இராச்சியத்தில் கங்க நாட்டிலிருந்த ஒரு குறுநில மன்னன்; கங்கர் மரபினன்; கி. பி. 1147-ல் திருக்காளத்தி இறைவர்க்கு நாள்தோறும் திருவிளக்கு வைக்கும் பொருட்டு இவன் 32 பசுக்கள் கொடுத்துள்ளனன்.1 நன்னூ லாசிரியராகிய பவணந்தி முனிவரை ஆதரித்துப் போற்றிய அமராபரண சீயகங்கனுடைய முன்னோர்களுள் இச் சீயகங்கன் ஒருவனென்பது உணரற்பாலது.

7. அதியமான்

இவன் கொங்கு நாட்டில் தகடூரிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த ஒரு சிற்றரசன். சேரரின் ஒரு கிளையினரான அதியமான் வழியினருள் ஒருவன். இவன் நலத்தின் பொருட்டுத் தர்மபுரிக் கோயிலில் கி. பி. 1145-ல் திருப்பணி செய்யப்பெற்றது என்று ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.

8. மதுராந்தக பொத்தப்பிச் சோழ சித்தரசன்

இவன் கடப்பை ஜில்லாவிலுள்ள பொத்தப்பி என்னும் ஊரிலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டை அரசாண்ட ஒரு சிற்றரசன். கி. பி. 1141-ல் கடப்பை ஜில்லா நந்தலூரிலுள்ள குலோத்துங்க சோழ விண்ணகரத்திற்குரிய நிலங்களின் எல்லைகளைக் கோயிலில் கல்லில் வரையும்படி இவன் உத்தரவு செய்தான் என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது.

தெலுங்க நாட்டில் குலோத்துங்கனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த வேறு சிற்றரசர்கள், மகா மண்டலேசுவரன் பல்லய சோட மகாராசன்4 வெல நாண்டி குலோத்துங்க சோட கொங்கராசன்,5 திரிபுவன மல்ல சோட மகாராசன்,6 மகா மண்டலேசுவரன் வீம நாயகன்,1 பண்டராசன்,2 கந்தரவாடி வீமராசன்3 என்போர். இவர்கள், தெலுங்க நாட்டில் வேங்கி நாடு முதலான வெவ்வேறு பகுதிகளிலிருந்து அரசாண்டவர் ஆவர். இவர்கள், தம் நாடுகளில் தாம் புரிந்த அறச் செயல்களை வரைந்துள்ள கல்வெட்டுக்களில் நம் குலோத்துங்க சோழனது ஆட்சியாண்டு குறித்திருப்பதால் இவர்கள் எல்லோரும் இவனுக்குக் கீழ்ப்பட்டிருந்த குறுநில மன்னரென்பது தெள்ளிது.

இரண்டாம் இராசராச சோழன் கி. பி. (1146-1163)


இரண்டாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1150-ல் இறந்த பிறகு, அவன் புதல்வனாகிய இரண்டாம் இராசராச சோழன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டப்பெற்றான். இவன் தந்தை இராசகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமையால் இவன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாளத் தொடங்கினான். இவனுடைய மெய்க்கீர்த்திகள் பூமருவிய திருமாதும் எனவும், பூமருவிய பொழிலேழும் எனவும் தொடங்குகின்றன. இவையிரண்டும் இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.1 இவற்றுள், பூமருவிய பொழிலேழும் என்று தொடங்கும் மெய்க் கீர்த்தி மிக நீண்டதொன்றாம். இம் மெய்க்கீர்த்திகளில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், இவற்றால் இவன் ஆட்சியின் சிறப்பு, தமிழ்த்தொண்டு, மனைவிமார்களின் பெயர்கள் ஆகியவற்றை அறியலாம். கடல் சூழ்ந்த பார்மாதரும் எனவும், புயல் வாய்த்து வளம் பெருக எனவும் தொடங்கும் வேறு இரண்டு மெய்க் கீர்த்திகள் இவன் கல்வெட்டுக்களில் மிக அருகிக் காணப்படுகின்றன.2 இவற்றுள், கடல் சூழ்ந்த பார் மாதரும் என்பது இவனுக்குப் பிறகு பட்டம்பெற்ற இரண்டாம் இராசாதிராச சோழனுக்கு உரியதாயிற்று. புயல் வாய்த்து வளம் பெருக என்னும் பிறிதொரு மெய்க் கீர்த்தியின் தொடக்கம் இரண்டாம் இராசாதிராச சோழனுக்குப் பிறகு முடி சூடிய மூன்றாங் குலோத்துங்க சோழனுக் குரியதாயிற்று என்பது அவன் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. எனவே, அவ் விரு வேந்தரும் இராசராசன் மெய்க்கீர்த்திகளின் தொடக்கங் களையே தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர் போலும்.

ஆட்சியின் இயல்பு

நம் இராசராசன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள கோதாவரி,1 கிருஷ்ணா,2 குண்டூர்,3 நெல்லூர்,4 ஜில்லாக்களிலும், மேற்கேயுள்ள சேலம்,5 கோலார்6 ஜில்லாக்களிலும் காணப்படுவதால் வெங்கி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு ஆகியவை இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது திண்ணம், ஆகவே, இவன் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் சோழ இராச்சியத்திலிருந்து விலகாமல் இவன் ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்து வந்தன எனலாம். இவன் காலத்திலும் பெரும்போர்கள் நிகழாமையின் மக்கள் எல்லோரும் அல்லலின்றி இனிது வாழ்ந்து வந்தனர். இவன் தன் நாட்டில் தந்தையிலோர்க்குத் தந்தையாகியும் தாயிலோர்க்குத் தாயாகியும் - மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட் குயிராகியும் இருந்து அரசாண்டு வந்தான் என்பது இவனது மெய்க்கீர்த்தி கூறுவதால் அறியற்பாலதாகும்.

இருமொழிப் புலமை

இவ்வேந்தன், தன் தாய்மொழியாகிய தமிழிலும், வடமொழியிலும் சிறந்த பயிற்சியுடையவனா யிருந்தனன் என்று தெரிகிறது. இவனை முத்தமிழுக்குந் தலைவன்7 என்றும், இராச பண்டிதன்1 என்றும் இவனது மெய்க்கீர்த்தி கூறுவதால் இவ்வுண்மையை நன்குணரலாம். முதல் இராசேந்திர சோழனாகிய கங்கைகொண்ட சோழன் பண்டித சோழன் என்று வழங்கப் பெற்றனன் என்பது அறியற்பாலது. இவனை முத்தமிழுக்குந் தலைவன் என்று மெய்க்கீர்த்தி உணர்த்துவதால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் இவன் வல்லவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இத்தகைய தமிழ்ப் புலமையை ஆசிரியர் ஒட்டக்கூத்தர்பால் கல்வி பயின்றே இவன் பெற்றிருத்தல் வேண்டும். இவன், தன் தந்தை பாட்டன் ஆகிய இருவர் காலத்தும் அவைக்களப் புலவராக நிலவிய ஒட்டக்கூத்தர், தன் காலத்தும் இருந்து தனக்குத் தமிழாசிரியர் ஆயினமையைப் பெரும் பேறாகக் கருதி, அவர்க்கு வேண்டியன வெல்லாம் உதவி, அவர்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் உடையவனாய் ஒழுகி வந்தனன் என்று தெரிகிறது. இவன் வடமொழிப் பயிற்சி யாரிடம் பெற்றனன் என்பது பிறகு விளக்கப்பெறும்.

சமயநிலை

இவன் தன் தந்தையைப்போல் தில்லைக் கூத்தப்பிரானிடம் எல்லை யற்ற அன்புடையவன். இதனைத் தொல்லைத் திருமரபிற்கெல்லாந் தொழுகுலமாந் - தில்லைத் திருநடனஞ் சிந்தித்து2 என்னுங் கூத்தர் வாக்கினால் நன்கறியலாம். இவன், தன் தந்தை, தில்லையம்பல முன்றிலி லிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமைபற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலை யுணர்ந்து தன் ஆட்சியில் அன்னோர்க்கு ஆதரவளித்து அவர்கள் உளங்குளிரச் செய்தனன். இதுபற்றியே, விழுந்த அரி சமயத்தையும் மீளவெடுத்தனன் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறும். எனவே, இவன் சிறந்த சைவனாயினும் புறச் சமயங்களிடத்தில் வெறுப்பின்றிச் சமயப் பொறையுடை யவனாய்த் திகழ்ந்தனன் என்பது தெள்ளிது.

போர் நிகழ்ச்சி

இவன் கல்வெட்டுக்களை நோக்குங்கால், இவனது ஆட்சிக் காலத்தில் போர்களே நிகழவில்லை என்று தெரிகிறது. ஆனால், இவன் வஞ்சிமா நகரைத் தாக்கிச் சேரனை வென்று வாகை புனைந்தா னென்றும், மதுரைமேற் படையெடுத்துப் பாண்டியனை வென்றான் என்றும் தக்கயாகப் பரணி1 கூறுகின்றது. அன்றியும், சேர நாட்டிற்குப் படைத்தலைமை வகித்துச் சென்று போர் புரிந்து வெற்றி யெய்தி நம் இராசராசனுக்கு வாகை சூட்டியவன், காரிகைக் குளத்தூருடையான் திருச்சிற்றம் பலமுடையான் பெருமான் நம்பியாகிய பல்லவராயன் என்பது தக்க யாகப் பரணியாலும், அவன் உரையாலும் நன்கறியக் கிடக்கின்றது.2 இவன் சேரனோடு நிகழ்த்திய இப்போர் இராசராச சோழனுலாவிலும் சொல்லப்பட்டுள்ளது.3 இராசராசனுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவந்த சேரனும் பாண்டியனும் முரண்பட்டமை பற்றி அன்னோர்பால் திறை கொள்ள வேண்டி இப்போர்களை இவன் நிகழ்த்தியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அதுபற்றியே, இவன் இவற்றைப் பெரும்போர்களாகக் கருதித் தன் மெய்க்கீர்த்தியில் குறிப்பிடவில்லை போலும்.

காவிரிக்கு வழி கண்டது

இவ் வேந்தன் ஆட்சிக் காலத்தில் மலையமலைப் பக்கத்தில் காவிரியாறு அடைப்புண்டு கிழக்கு நோக்கித் தண்ணீர் வாராமல் தடைப் படவே, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று. அதனையறிந்த இராசராசன் அம்மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரியாற்றிற்கு வழிகண்டு, சோழ நாட்டிற்கு என்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்குமாறு செய்தனன். இச் செய்தி,

“மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே”

என்னுந் தக்க யாகப் பரணிச் செய்யுளாலும் அதன் உரையாலும்

“சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள்காண வாரீர்”

என்னும் இராசராச சோழனுலா அடிகளாலும் நன்கு வெளியாகின்றது. இவ்வரலாறு இராசராசன் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. ஆதலால், காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கத்தில் பகையரசனால் அடைக்கப் பெற்றபோது இவன் அவனைப் போரில் வென்று அதனைத் திறந்து கொணர்ந்தனனா அல்லது இயற்கை நிகழ்ச்சி யொன்றால் அடைப்புண்ட இடத்தை வெட்டுவித்து அவ்வாற்றிற்கு வழி கண்டனனா என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால், இராசராச சோழனுலாவிலுள்ள காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் என்னும் தொடரை நுணுகி யாராயுமிடத்து, இவன் பகை வேந்தனை வென்று, அவனால் அடைக்கப் பெற்றிருந்த காவிரியைத் திறந்துகொண்டு வந்திருத்தல் வேண்டுமென்பது குறிப்பாக உணரக் கிடக்கின்றது. இஃது எவ்வாறாயினும், இவன் ஆட்சிக்காலத்தில் ஓராண்டில் காவிரி நீர் சோழ மண்டலத்திற்கு வந்து சேராதவாறு நிகழ்ந்த தடையொன்றை இவன் தன் ஆற்றலால் நீக்கி முன்போல என்றும் அத்தண்ணீர் வந்துகொண்டிருக்குமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, நாட்டு நலங் கருதி இவன் ஆற்றிய அருஞ்செயல் இஃது எனலாம்.

தலைநகர்

இவ் வேந்தன் ஆட்சியின் முற்பகுதியில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. பிறகு, இவன் பழையாறை நகரைத்1 தான் தங்குதற்கு ஏற்ற நகராகக் கருதி அதனையே தலைநகராக வைத்துக்கொண்டனன் என்று தெரிகிறது. அது சுந்தரசோழன், முதல் இராசேந்திர சோழன்2ஆகிய அரசர் பெருமான்கள், சில ஆண்டுகளில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரமாகும். அங்கு அவர்களால் அமைக்கப்பெற்ற அரண்மனை களுமிருந்தன. நம் இராசராசன் அப்பெரு நகரைப் பல்வகையாலும் சிறப்பெய்தும்படி செய்து அதன் பெயரையும் இராசராசபுரம்3 என்று மாற்றித் தான் அங்கு வசித்து வந்தனன். கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், எண்டிசைத் தேவரும் புகுதும் ராசராசபுரி4 என்றும் செம்பொன் மாட நிரை இராசராசபுரி5 என்றும் தக்கயாகப் பரணியில் அதனைப் பாராட்டியிருத்தல் உணரற்பாலது. அந்நகரின் வடபகுதி, இந்நாளில் தாராசுரம் என்னும் பெயருடையதாய்க் கும்பகோணத்திற்கு மேற்புறத்தில் புகைவண்டி நிலையமுள்ள ஓர் ஊராக இருக்கின்றது. அவ்வூரிலுள்ள பெரு வீதிகள் அதன் பண்டைப் பெருமையினை இன்றும் உணர்த்திக் கொண்டிருத்தல் அறியத்தக்கது.

இராசராசேச்சுரம் எடுப்பித்தது

இவ்வேந்தன், தான் வசித்து வந்த இராசராசபுரம் என்னும் பெரு நகரின் வட கீழ் பகுதியில் இராசராசேச்சுரம்6 என்ற சிவாலயம் ஒன்று எடுப்பித்து அதில் இராசராசேச்சுர முடையாரை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தனன். ஆசிரியர் ஒட்டக்கூத்தர், தக்கன் யாகம் அழிக்கப்பட்ட பிறகு உமாதேவி யார்க்குப் போர்க்களங் காட்டி அங்கு இறந்தவர்கள் எல்லோர்க்கும் அருள் புரியும் பொருட்டு இராசராசபுரி ஈசர்1 எழுந்தருளினார் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கண்டோர் கண்களைப் பிணிக்குஞ் சிற்பத் திறம் வாய்ந்து, முற்காலத்தில் பெருமையுடன் நிலவிய அம் மாடக் கோயில், இக்காலத்தில் தன் சிறப்பனைத்தும் இழந்து அழிவுற்ற நிலையில் உளது. எனினும், அப்பெருங் கோயிலிலுள்ள கருப்ப கிரகத்தின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்துமூவருடைய வரலாறுகளை அறிவிக்கும் முறையில் அமைக்கப்பெற்றுள்ள படிமங்களும், திருச்சுற்று மாளிகையின் வட புறத்திலுள்ள சைவாசாரியர் நூற்றெண்மர் படிமங்களும் அக்கோயிலிலுள்ள இராசகம்பீரன் திருமண்டபமும் இன்றும் அதன் பழைய பெருமைகளை அறிவுறுத்திக்கொண்டு நம் இராசராசனது புகழ்போல நிலை பெற்றுள்ளன எனலாம். அக்கோயில், இந்நாளில் புகைவண்டியில் செல்வோருள் சிலருடைய கண்களையாவது கவரும் நிலையில், தாராசுரம் நிலையத்திற்கு வடபுறத்தில் இருத்தல் அறியற்பாலதாம்.

அவைக்களப் புலவர்

இவ்வரசன் காலத்தில் அக்களப்புலவராக விளங்கியவர் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரே யாவர். அவர் இவ்வேந்தன் காலத்தில் முதுமை எய்தி உடல் தளர்ச்சி யுற்றிருந்தும் அறிவில் தளர்ச்சியுறாமல் இவன் மீது இராசராச சோழனுலா என்ற நூலொன்று இயற்றியுள்ளனர். அவ் வுலாவை அப்புலவர்பிரான் அரங்கேற்றியபோது, இவன் மகிழ்ச்சி யெய்தி ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வோராயிரம் பொன் பரிசிலாக வழங்கி அந்நூலை ஏற்றுக்கொண்டான்.1 இவ்வருஞ் செயல், இவன், அந்நூலிடத்தும் அதன் ஆசிரியரிடத்தும் எத்துணை மதிப்பும் அன்பும் வைத்திருந்தனன் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். தக்கயாகப் பரணியும் இவன் ஆட்சிக்காலத்தில் கூத்தரால் பாடப் பெற்றுள்ளது என்பது அந்நூலின் இறுதியிலுள்ள வாழ்த்து என்ற பகுதியாலும் இடையிலுள்ள சில பாடல்களாலும்2 அறியக் கிடக்கின்றது. அன்றியும், அந்நூல் இராசராசன் தலைநகராகிய இராசராசபுரத்தில் இயற்றி அரங்கேற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது அதிலுள்ள கடைதிறப்புப் பாடல்களால்3 வெளியாகின்றது.

இவ்வேந்தன் காலத்தில் காவிரிக்கரையிலிருந்த இராசேந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் கேசவசுவாமி என்ற வடமொழிப் புலவர் ஒருவர் இருந்தனர். அவர் இராசராசனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவரும் ஆவர். இவன் அவரையே தன் வடமொழி ஆசிரியராகக் கொண்டு அம்மொழியைக் கற்று அதில் புலமை எய்தியிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அவர்பால் நெருங்கிப் பழகி வடமொழி பயின்று வரும் நாட்களில், இம்மன்னன் அவருடைய சிறந்த புலமையையும் ஆற்றலையும் நன்குணர் வானாயினன்; எனவே வடமொழியைக் கற்போர்க்குப் பயன்படுமாறு அம்மொழியில் ஓர் அகராதி எழுதியுதவுமாறு இவன் அவரைக் கேட்டுக் கொண்டதோடு அவ்வகராதி எம்முறையில் அமையவேண்டும் என்பதையும் அறிவித்தனன்.இவன் விரும்பியவாறு அவர் எழுதிய வடமொழி அகராதி, நானார்த்தார்ணவ சம்க்ஷேபம் என்பது.4 ஆகவே இவன் வடமொழி வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கவிச் சக்கரவர்த்தி
யாகிய ஒட்டக்கூத்தர் வடமொழியிலும் புலமை எய்தியிருந்தனர் என்பது அவர் இயற்றியுள்ள நூல்களால் இனிது விளங்கும்.

இனி இவ்வேந்தன், தன் அவைக்களத்தில் புலவர்கள் தமிழ் நூல்களிலுள்ள நயங்களை எடுத்துக்கூற, அவற்றை விரும்பிக் கேட்டு மகிழ்ந்து வீற்றிருக்கும் இயல்பினனாக இருந்தனன். ஆதலால், இவனது அரசவை ஓவாது - செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய் விளங்கியது என்று ஆசிரியர் ஒட்டக்கூத்தர் பாராட்டியுள்ளார். அக் கவிஞர் கோமான் இவன் ஆட்சிக் காலத்தில்தான் உலக வாழ்வை நீத்து இறைவன் திருவடியை யடைந்தனர் என்று தெரிகிறது.

இராசராசனது சிறப்புப் பெயர்கள்

இம் மன்னர் பெருமானுக்கு அந்நாளில் வழங்கிய சிறப்புப் பெயர்கள், சோழேந்திர சிங்கன், தெய்வப் பெருமாள், கண்டன், சொக்கப் பெருமாள், இராச கம்பீரன் என்பன. இவற்றுள், சோழந்திர சிங்கன்,1 இராச கம்பீரன்2 என்ற இரண்டு பெயர்களும் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுவதோடு முறையே இராசராச னுலாவிலும் தக்கயாகப் பரணியிலும் கூறப்பட்டும் உள்ளன. எஞ்சிய மூன்றும் உலா, பரணி ஆகிய இரு நூல்களில் மாத்திரம் காணப்படுகின்றன இவற்றுள் சொக்கப் பெருமான் என்பது தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றால்தான் அறியப்படுகின்றது. இராசகம்பீரன் என்பது இவனது ஆட்சியின் பிற்பகுதியில் வழங்கிய சிறப்புப் பெயராகும். சோழேந்திர சிங்கநல்லூர், இராசகம்பீர நல்லூர்,5 இராச கம்பீர திருமண்டபம்,1 இராச கம்பீரன் திருவீதி2 என்பன இவன் பெயரால் இவனது ஆட்சிக் காலத்தில் அமைக்கப் பெற்றவை என்று தெரிகிறது.

இராசராசனுடைய மனைவிமார்கள்

பூமருவிய பொழிலேழும் என்று தொடங்கும் இவனது மெய்க் கீர்த்தியினால் இவனுக்கு மனைவியர் நால்வர் இருந்தனர் என்பது நன்கு தெளியப்படும். அன்னோர், புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள், அவனி முழுதுடையாள், தென்னவர் கிழானடி என்போர். அவர்களுள், புவன முழுதுடையாள் என்பவள் பட்டத்தரசியா யிருந்தனள் என்பது கல்வெட்டுக்களாலும் இராசராச னுலாவினாலும் புலனாகின்றது. அவனி முழுதுடையாளுக்கு உலகுடை முக்கோக்கிழானடிகள் என்ற மற்றொரு பெயர் உண்டு என்பதும் அவ்வரசி, திருக்கோவலூரில் அந் நாட்களில் வாழ்ந்து கொண்டிருந்த மலையமானாட்டுச் சிற்றரசன் ஒருவனுடைய மகள் என்பதும் இவனது மெய்க் கீர்த்தியால் அறியப்படுகின்றன.

இனி, இராசராசன் காலத்துக் குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் யாவர் என்பதை ஆராய்ந்து காண்பாம்.

1. மலையமானாட்டுக் குறுநிலமன்னர்கள்:

இவர்களுள் நம் இராசராசன் காலத்தில் இருந்தவர்கள் மலையமான் பெரிய உடையான் நீரேற்றான் ஆன இராசராச மலையகுலராசன்.3 மலையமான் அத்திமல்லன் சொக்கப் பெருமாள் ஆன இராச கம்பீர சேதிராயன், கரியபெருமாள் பெரிய நாயனான நரசிங்க மலாடுடையான் என்போர். இவர்களுள், இராசராச மலையகுல ராசனைப் பற்றி ஒன்றுந் தெரியவில்லை. இராச கம்பீர சேதிராயன் என்பவன் மலையமானாட்டில் கிளியூரிலிருந்து அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை அரசாண்டவன்.4 கரிய பெருமாள் என்பவன் திருக்கோவலூரிலிருந்து அரசாண்டவன். கி. பி. 1058-ல் அவ்வூரிலுள்ள திருமால் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்த மலாடுடையான் நரசிங்கவர்மனுடைய பேரன்.1 இவனும் அக்கோயிலுக்குத் தொண்டு புரிந்துள்ளனன். ஈண்டுக் குறிக்கப் பெற்ற மலையமானாட்டுச் சிற்றரசர் மூவரும் ஒருவருக்கொருவர் என்ன முறையினர் என்பது இப்போது புலப்படவில்லை.

2. கூடலூர் ஆளப்பிறந்தான் மோகன் ஆகிய இராச ராச காடவராயன்:

இவன் இராசராசனுடைய தந்தையின் காலத்தில் தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியா யிருந்த குலோத்துங்க சோழ காடவ ராயனுடைய தமையன்; இவன் மலையவிச்சாதிரி நல்லூரிலிருந்து பல வரிகளால் கிடைக்கக்கூடிய பொருள் முழுதும் கி. பி. 1152-ல் எலவானாசூர்க் கோயிலுக்கு நிவந்தமாக அளித்துள்ளான்.

3. இராசேந்திர சோழ பல்லவராதித்தன்:

இவன் பல்லவர் குலத் தோன்றல். இத்தலைவன் கோலார் ஜில்லா விலுள்ள சூரூர் மலையில் ஒரு கோயில் எடுப்பித்து அதற்குத் தேவதான இறையிலி கி. பி. 1153-ல் அளித்திருத்தலால்3 இவன் நம் இராசராசன் பிரதிநிதியாகக் கங்கநாட்டிலிருந்திருத்தல் வேண்டுமென்று தெரிகிறது. இவன் காடுவெட்டி எனவும், காஞ்சிபுர பரமேசுவரன் எனவும் அக் கோயிற் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருத்தல் அறியத் தக்கது.

4. சம்புவராயர்கள்:

இவர்களுள், இராசராசன் காலத்திலி ருந்தவர்கள், நித்த விநோத சம்புவராயன், இராச நாராயண சம்புவராயன் ஆகிய இருவருமே யாவர். இன்னோருள் நித்த விநோத சம்புவராயன் மனைவி சோறுடையாள் என்பாள்4 தென்னார்க்காடு ஜில்லா பிரம்மதேசத்திலுள்ள கோயிலுக்குத் திருவிளக்கு வைத்து அதற்காக 32 பசுக்கள் அளித்துள்ளனள். இராச நாராயண சம்புவராயனுக்கு அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான் என்னும் பெயர் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. இவன், செங்கற்பட்டு ஜில்லாவில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியாயிருந்தனன். இவன், அச்சிறு பாக்கம்,1 மூந்நூர்,2 ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

5. இராசராச வங்கார முத்தரையன்:

இவன் தென்னார்க்காடு ஜில்லாவில் திட்டக்குடி, பெண்ணாகடத்தைச் சூழ்ந்த பிரதேசத்தில் நாடு காவல் புரியும் அரசாங்க அதிகாரியா யிருந்தவன்.3 சேந்தன் கூத்தாடுவான் என்பது இவனது இயற்பெயர். இராசராச வங்கார முத்தரையன் என்பது அரசனால் அளிக்கப்பெற்ற பட்டமாகும். இவன் திட்டக் குடியில் தனக்குப் பாடிகாவல் வரியாகக் கிடைத்தற்குரிய நெல்லை ஆண்டுதோறும் அவ்வூர்க் கோயிலதிகாரிகள் நிவந்தமாகப் பெற்றுக் கொண்டு, இறைவர்க்கு அர்த்தயாம வழிபாடு செய்து வருமாறு ஏற்பாடு செய்தனன் என்று அங்குள்ள கல்வெட் டொன்று4 உணர்த்துகின்றது.

6. குலோத்துங்க சோழ கடம்பராயன்:

இவன் புதுக் கோட்டையைச் சார்ந்த நிலப் பரப்பில் இராசராசன் காலத்தி லிருந்த ஓர் அதிகாரியாவன். இவன் குடுமியான் மலையிலுள்ள திருநலக் குன்றமுடையார் கோயிலில் நாள்தோறும் இரண்டு திருவிளக்கு வைப்பதற்கு நிவந்தம் அளித்துள்ளனன் என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.5

7. திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பியான பல்லவராயன்:

இவன் சயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்ற நாட்டுக் காரிகைக் குளத் தூரினன்; இராசராசன் ஆட்சியில் நிலவிய ஒரு சிறந்த படைத்தலைவன்; இவ்வரசனால் அளிக்கப்பெற்ற பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன்; இவனது அன்பிற்குரியவனாகிச் சிறந்த உசாத் துணையாய் விளங்கியவன்; சேரனைப் போரில் வென்று அவன்பால் திறைகொண்டு இவனுக்கு வெற்றிமாலை சூட்டியவன்;1 சோழ மண்டலத்து இராசாதிராச வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டுக்குளத்தூரில் தன் அரசன் பெயரால் இராசராசேச்சுரம் என்னுங் கோயில் எடுப்பித்து அதற்கு நிவந்தங்கள் வழங்கியவன்2. மாயூரத்திற்கு அண்மையிலுள்ள அவ்வூர், இப்படைத் தலைவனுடைய பெயரால் பல்லவராயன் பேட்டை என்று வழங்கி வருகின்றது. இவன் கூத்தரால் தக்கயாகப் பரணியில் புகழப் பெற்றவன் ஆவன்.

இனி, இராசராசன் ஆட்சியின்கீழ் ஆந்திர நாட்டில் சிற்றரசர்களாக இருந்தோர், மகா மண்டலேசுவரன், திரிபுவனமல்லதேவ சோட மகாராஜன்,3 ஜிக்கிதேவ சோட மகாராஜன்,4 புத்த ராஜன்,5 மகா மண்டலேசுவரன் குலோத்துங்க ராசேந்திர சோடன்,6 ராசேந்திரகோண லோகராஜன்7 மகா சாமந்தன் ஜிய்யருவாரு8 என்போர். இவர்களுள், முன்னவர் இருவரும் கரிகாலன் மரபினர் என்று தம்மைக் கூறிக்கொள்வது குறிப்பிடத் தக்கது. குலோத்துங்க ராசேந்திர சோடன் என்பான் வெலநாண்டுச் சோழன் ஆவன். இவர்கள் ஆந்திர தேயத்தில் வேங்கி நாடு முதலானவற்றிலிருந்து அரசாண்டவர் ஆவர். இன்னோர் நம் இராசராசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசர்கள் என்பது இவர்களுடைய கல்வெட்டுக்களால் அறியப்படு
கின்றது.

இராசராசன் எதிரிலிப் பெருமாளுக்கு இளவரசுப் பட்டங் கட்டியது: 1

இராசராசன் தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் பழையாறை யிலிருந்த ஆயிரத்தளி அரண்மனையில் நோய்வாய்ப் பட்டுத் துன்புற்ற நிலையில் இருந்தனன். அதுபோது தான் அந் நோயினின்று விடுபட்டுப் பிழைக்க முடியாது என்பதையும் இவன் உணர்ந்துகொண்டான். அந்நாளில் இவனுடைய மக்கள் இருவரும் ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இளங் குழந்தைகளாக இருந்தனர். ஆகவே, அவர்கள் முடிசூட்டப் பெறுவதற்குத் தக்க வயதினராக இல்லை. அதுபற்றி அரசன் பெருங்கவலை கொண்டு, அந்நிலையில் செய்யத்தக்கது யாது என்பதை ஆராய்ந்து, தன் தாயத்தினருள் ஒருவனாகிய நெறியுடைப் பெருமாளின் புதல்வன் எதிரிலிப் பெருமாளைக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருவித்து, அவ்வரச குமாரனுக்கு இளவரசுப் பட்டங் கட்டிவிட்டு, அந்நாளிலேயே இறந்துபோனான். அச் சமயத்தில் சோழ நாட்டில் ஆட்சி யுரிமை பற்றித் தாயத்தினருள் கலகம் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு உண்டாயிற்று. உடனே, அமைச்சர் தலைவனாகிய திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பி என்பான் இராச ராசனுடைய அந்தப்புர மகளிரையும் இளஞ் சிறுவர் இருவரையும் பரிவாரங்களோடு ஆயிரத்தளி அரண்மனையி லிருந்து அழைந்து வந்து, பாதுகாவல் மிக்கதாய் அதற்கண்மையிலிருந்த இராசராசபுரத் தரண்மனையில் வைத்துக் காப்பாற்றினான். அக்காலத்தில் உள் நாட்டில் குழப்பம் உண்டாகாதவாறு நாட்டையுங் காத்தனன். அன்றியும், அவ்வமைச்சன், இராசராசன் இறக்குந் தறுவாயில் இளவரசுப் பட்டங்கட்டிய எதிரிலிப் பெருமாளுக்கு அப்பட்டம் பெற்ற நான்காம் ஆண்டில் இராசாதிராசன் என்னும் பெயருடன் திரு அபிடேகஞ் செய்து நாடும் உடன் கூட்டமும் ஒன்றுபட்டுச் செல்லுமாறு செய்தான்; இராசராசன் தாயத்தினராய்ச் சோழ இராச்சியத்தி லிருந்த மற்றையோர் மிகைசெய்யாதபடியும் பார்த்துக் கொண்டான். இவ்வமைச்சன் எதிரிலிப் பெருமாளுக்கு முறைப்படி முடி சூட்டுவதற்கு நான்கு ஆண்டுகள் வரையில் காலம் தாழ்த்தினமைக்குக் காரணம் நாடும் உடன் கூட்டமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களுடன் இருந்தமை போலும்.

இராசராசனது ஆட்சியின் இறுதிக்காலம்:

இவ் வேந்தனது 28-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு ஆந்திர நாட்டில் காணப்படுவதால்1 இவனது ஆட்சியின் இறுதிக் காலம் கி. பி. 1173-ஆம் ஆண்டாதல் வேண்டு மென்று கருதப்படுகிறது.2 ஆனால், சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் இவனது 19-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள்3 தான் காணப் படுகின்றன. அவற்றால் கி. பி. 1166 வரையில் இவன் அரசாண்டவன் ஆதல் வேண்டும் என்பது புலனாகின்றது. தஞ்சாவூர் ஜில்லா பல்லவராயன் பேட்டையிலுள்ள கல்வெட் டொன்றால் இவன் கி. பி. 1163-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்திருத்தல் வேண்டுமென்பது உய்த்துணரப் படுகின்றது.4 ஆகவே கி. பி. 1173, 1166, 1163 ஆகிய மூன்றாண்டுகளுள் இராசராசன் எவ்வாண்டில் இறந்திருத்தல் வேண்டுமென்பது ஆராய்தற் குரியது. இவ்வேந்தன் தன் இறுதி நாளில் எதிரிலிப் பெருமாள் என்பவனுக்கு இளவரசுப் பட்டங் கட்டிவிட்டு அன்றே இறந்தனன் என்பது மேலே குறிப்பிட்ட பல்லவராயன் பேட்டை கல்வெட்டால் அறியப்படுகின்றது.5 எனவே, எதிரிலிப் பெருமாள் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற நாளே இராசராசன் இறந்த நாளாதல் வேண்டு மென்பது தெள்ளிது. எதிரிலிப் பெருமாள் கி. பி. 1163-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பட்டம் பெற்றனன் என்பது கணிதநூல் வல்லார் கண்ட முடிபாகும்.1 ஆகவே இராசராசனும் அவ்வாண்டில்தான் இறந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

இனி, சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் இராசராசனது 18, 19ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களும்2 ஆந்திர நாட்டில் 26, 28ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களும்3 காணப்படுவதற்குக் காரணம் யாது என்பது நோக்கற்பாலது.

எதிரிலிப் பெருமாள் இளவரசுப் பட்டம் பெற்ற நான்காம் ஆண்டாகிய கி. பி. 1166-ல் தான் இராசராசன் என்னும் பெயருடன் முறைப்படி அரசனாக அபிடேகஞ் செய்யப் பெற்றனன்4 என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டின் துணைகொண்டு உறுதி செய்யப்பெற்ற செய்தியாகும். அவ்வாண்டு வரையில் இராசராசன் ஆட்சியாண்டுகள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்று வந்தமையால்தான் இவனது 18, 19 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் காணப்படுகின்றன என்பது அறியற்பாலதாம்.

சோழ நாட்டிலேயே இராசராசனது 19-ஆம் ஆட்சி ஆண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுகள் இல்லையெனின் அதற்கு வடக்கே நெடுந்தூரத்தி லுள்ள ஆந்திர நாட்டில் இவனது 26, 28 -ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள் எங்ஙனம் இருத்தல் கூடும்? ஆகவே, இவன் இறந்த பின்னரும் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுக்களில் இவன் ஆட்சி ஆண்டுகள் வரையப் பெற்றிருப்பது அறியாமையால் நேர்ந்த பிழையே எனலாம். ஆதலால் அவ் வாண்டுகளில் இராசராசன் உயிர் வாழ்ந்திருந்தனன் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

இனி, இராசராசன் இறந்த நான்காம் ஆண்டில் எதிரிலிப் பெருமாளுக்கு இராசாதிராசன் என்னும் அபிடேகப் பெயருடன் முடி சூட்டிய அமைச்சன் திருச்சிற்றம்பலமுடையான் பெருமான்நம்பி என்பவன் கி. பி. 1171ஆம் ஆண்டில் இறந்து விட்டான் என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இந்நிலையில் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இராசராசன் கி. பி. 1173-ஆம் ஆண்டில் உயிருடன் இருந்தனன் என்று கொள்வது சிறிதும் பொருந்தாது. அன்றியும், அவ்வாண்டில் இவன் உயிருடன் இருந்திருப்பின் பாண்டி நாட்டில் குலசேகர பாண்டியன் பொருட்டுச் சோழ நாட்டுப் படைத் தலைவர்கள் நிகழ்த்திய போர்கள், இவன் ஆட்சியில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஆனால் அப்போர்கள் எல்லாம் இராசாதிராசன் ஆட்சியில் நடைபெற்றன என்பது கல்வெட்டுக் களால் வெளியாகின்றது. ஆகவே, இராசராசன் அப்போர் நிகழ்ந்த காலத்தில் இல்லை என்பது தேற்றம். எனவே, இராசராசன் கி. பி. 1163ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும்.

இரண்டாம் இராசாதிராச சோழன் (கி. பி. 1163 - 1178)


இரண்டாம் இராசராச சோழனால் கி. பி. 1163-ஆம் ஆண்டில்1 இளவரசுப் பட்டங் கட்டப் பெற்று, கி. பி. 1166-ஆம் ஆண்டில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பெற்ற இவ்வரச குமாரன், விக்கிரம சோழனுடைய பேரன், நெறியுடைப் பெருமாளின் புதல்வன். இவனது பிள்ளைத் திருப்பெயர் எதிரிலிப் பெருமாள் என்பது. இவன் முடி சூட்டப்பெற்ற நாளில் இராசாதிராசன் என்னும் அபிடேகப் பெயர் எய்தினன்.2 இவனுக்கு முன் அரசாண்ட இரண்டாம் இராசராசசோழன் பரகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமையால், அக் காலத்துச் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் இராசகேசரி என்ற பட்டத்துடன் ஆட்சி புரிவானாயினன். கல்வெட்டுக்களில் இவனுக்கு மூன்று மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று கடல் சூழ்ந்த பார் மாதரும்3 எனவும், மற்றொன்று கடல் சூழ்ந்த பாரேழும்4 எனவும், பிறிதொன்று பூமருவிய திசை முகத்தோன்5 எனவும் தொடங்குகின்றன. அம்மெய்க்கீர்த்திகள் இவன் ஆட்சியின் சிறப்பை அழகுற கூறுகின்றனவேயன்றி இவன் வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவனவாயில்லை. எனினும், இவன் கல்வெட்டுக்களுள் சில, இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாண்டி நாட்டுப் போர் நிகழ்ச்சிகளை நன்கு புலப்படுத்துகின்றன.

இனி, இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் தாயத்தினரான இரு பாண்டி வேந்தர்களுக்குள் அரசாளும் உரிமைபற்றிப் பகைமை உண்டாயிற்று. அதனால், அவ் விருவரும் சில ஆண்டுகள் வரையில் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவர்களுள், குலசேகர பாண்டியனுக்கு நம் இராசாதிராச சோழனும் பராக்கிரம பாண்டியனுக்கு சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவும் படையனுப்பி உதவி புரிந்தனர். ஆகவே, அப்போர் பாண்டியர்களுக்குள் நிகழ்ந்த தெனினும், அஃது உண்மையில் சோழ மன்னனுக்கும் சிங்கள வேந்தனுக்கும் நடைபெற்ற தென்றே கூறவேண்டும். ஆட்சிஉரிமை பற்றி நிகழ்ந்த அப்பாண்டி நாட்டுப் போரின் முதற் பகுதி இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் எஞ்சிய பகுதிகள் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலுமுள்ள நான்கு கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. அக்கல்வெட்டுக்களுள் காஞ்சிமா நகரைச் சார்ந்த ஆர்ப்பாக்கத்துக் கல்வெட்டு2 இராசாதிராசனது ஐந்தாம் ஆட்சியாண்டிலும், மாயூரத்தைச் சார்ந்த பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு3எட்டாம் ஆட்சி யாண்டிலும் அரக்கோணத்தைச் சார்ந்த வட திருவாலங்காட்டுக் கல்வெட்டும் திருக்கடவூர் மயானக் கல்வெட்டும் பன்னிரண்டாம் ஆட்சி யாண்டிலும் வரையப் பெற்றனவாகும். ஒவ்வொரு கல்வெட்டிலும் அவ்வப் போது நிகழ்ந்த சில போர் நிகழ்ச்சிகளே காணப்படுகின்றன. அவற்றின் துணைகொண்டு அப்போர் நிகழ்ச்சிகளை ஆராய்வது அமைவுடையதேயாம்.

பராக்கிரம பாண்டியன் மதுரையில் வீற்றிருந்து அர சாண்டு கொண்டிருக்குங்கால், அவனுக்கும் அவன் தாயத்தின னாகிய குலசேகர பாண்டியனுக்கும் பாண்டி நாட்டின் ஆட்சியுரிமை பற்றி வழக்குண்டாயிற்று. குலசேகர பாண்டியன் மதுரை மாநகரை முற்றுகையிட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள வேந்தனாகிய பராக்கிரமபாகுவைத் தனக்கு உதவி புரியுமாறு வேண்டிக்கொண்டான். அவனும் பாண்டியன் வேண்டுகோளுக்கு உடன்பட்டு, இலங்காபுரித்தண்ட நாயகன் தலைமையில் பெரும் படை யொன்றை அனுப்பினான். அப்படை பாண்டி நாட்டிற்கு வருவதற்குள், மதுரையை முற்றுகையிட்டிருந்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவி மக்களையும் கொன்று அத் தலைநகரைக் கைப்பற்றி அங்கிருந்து பாண்டி நாட்டை ஆட்சிபுரியத் தொடங்கினான். அதனையறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன் பெருஞ் சினங்கொண்டு, பாண்டி நாட்டைப் பிடித்துக் கொலையுண்ட பராக்கிரமப் பாண்டியனைச் சேர்ந்தோர்க்கு அளிக்க எண்ணி, அந்நாட்டில் இராமேசுவரம் முதலான ஊர்களைக் கைப்பற்றினான். சிங்களப் படைக்கும் குலசேகர பாண்டியன் படைக்கும் பாண்டி நாட்டில் பல ஊர்களில் கடும் போர்கள் நடைபெற்றன. இறுதியில், இலங்கா புரித் தண்ட நாயகனே வெற்றி எய்தினான். அதனை யுணர்ந்த குலசேரகர பாண்டியன், கொங்கு நாட்டிலிருந்த தன் மாமன் படைகளையும் சிதறிக் கிடந்த பராக்கிரம பாண்டியன் படைகளையும் தன் படைகளையும் ஒருங்குசேர்த்துக் கொண்டு, தானே இலங்காபுரித் தண்ட நாயகனை எதிர்த்துப் போர் புரிவா னாயினன். அப்போரிலும் இலங்காபுரித் தண்ட நாயகன் வெற்றி பெற்று மதுரை மாநகரைக் கைப்பற்றி, கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் புதல்வனும் மலை நாட்டில் ஒளிந்து கொண்டிருந்தவனுமாகிய வீரபாண்டியனை அழைப்பித்துப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான்; அந் நாட்டில் கீழைமங்கலம் மேலைமங்கலம் முதலான ஊர் களடங்கிய பகுதியைக் கண்ட தேவ மழவராயன் ஆண்டு வருமாறு அளித்தனன்; தொண்டி, கருந்தங்குடி முதலான ஊர்களடங்கிய பகுதியை மழவச் சக்ரவர்த்தி ஆளும்படி வழங்கினான். இவ்வாறு பாண்டி நாட்டுத் தலைவர் சிலர்க்கு ஆட்சியுரிமை நல்கி, அன்னோரை இலங்காபுரித் தண்ட நாயகன் தன் வயப்படுத்தி வைத்திருந்த காலத்தில், குலசேகர பாண்டியன் படை திரட்டிக்கொண்டு மறுபடியும் போர்க்குத் தயாராயினான். அதுபோது அத்தலைவர்கள் குலசேகர பாண்டியனோடு சேர்ந்து கொள்ளவே, எல்லோரும் சேர்ந்து வீரபாண்டியனைப் போரிற் புறங்கண்டு மதுரையை விட்டுத் துரத்திவிட்டனர். அந்நிகழ்ச்சிகளை அறிந்த இலங்காபுரித் தண்ட நாயகன், ஈழ நாட்டிலிருந்து தனக்குத் துணைப் படை அனுப்புமாறு பராக்கிரம பாகுவுக்கு ஒரு கடிதம் விடுத்தான். அவ்வேந்தன் ஜகத் விஜய தண்ட நாயகன் தலைமையில் பெரும் படையொன்றை அனுப்பவே, சிங்களப் படைத் தலைவர் இருவரும் சேர்ந்து குலசேகர பாண்டியனைப் போரில் வென்று, தம் அரசன் ஆணையின்படி வீரபாண்டியனை மீண்டும் மதுரையில் அரியாசனத் தமர்த்தி முடி சூட்டு விழாவும் நிகழ்த்தினர்.

குலசேகர பாண்டியன் இவ்வாறு பன்முறையும் தோல்வி யெய்தியமையால் கி. பி. 1167-ஆம் ஆண்டில் சோழ நாட்டிற்கு வந்து, தன் நாட்டைத் தான் பெறுமாறு தனக்குப் படையனுப்பி உதவி புரிய வேண்டு மென்று கேட்டுக்கொண்டான். அவன் வேண்டுகோளுக்கிணங்கிய இராசாதிராச சோழன், திருச் சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு பெரும் படையைப் பாண்டி நாட்டிற்கு அனுப்பினான். சோணாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி பாசிப்பட்டணம் முதலான ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. அப்போர்களில் சிங்களப் படைத் தலைவர்கள் வெற்றி எய்தினர்.1 பகைஞர்களாகிய சிங்களவரின் வெற்றி, அந்நாட்களில் சோழ நாட்டு மக்களுக்குப் பேரச்சத் தையும் கலக்கத்தையும் உண்டுபண்ணியது என்று தெரிகிறது.2 பிறகு நடைபெற்ற போர்களில், நம் இராசாதிராச சோழன் படைத்தலைவனாகிய திருச்சிற்றம்பலமுடையான் பெருமா னம்பிப் பல்லவராயன், சிங்களப் படைகளை வென்று புறங்காட்டி யோடும்படிச் செய்தமையோடு, சிங்களப் படைத் தலைவர் இருவரையுங் கொன்று அவர்கள் தலைகளை யாவருங் காணுமாறு மதுரைக் கோட்டை வாயிலிலும் வைப்பித்தான். பிறகு, அவன் குலசேகர பாண்டியனுக்கு மதுரையம்பதியை அளித்து ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான். சில ஆண்டுகள் வரையில் அவ்வேந்தன் ஆட்சியும் பாண்டி நாட்டில் நடைபெற்று வந்தது எனலாம்.

இனி, சிங்கள மன்னனாகிய பராக்கிரமபாகு என்பான், தன் எண்ணத்தை நிறைவேற்ற முடியாமற் போயினமையால் இராசாதிராச சோழனையும் இவனால் ஆதரிக்கப் பெற்று மதுரையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த குலசேகர பாண்டி யனையும் மீண்டும் தாக்கிப் போரிற் புறங் காணவேண்டும் என்ற கருத்தினனாய், ஈழ நாட்டில் ஊராத்துறை,3 புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் என்னும் ஊர்களில் தன் படைகளைத் திரட்டிப் படகுகளும் தயாரித்தான். அச்செய்தி சோழ நாட்டிற் கெட்டியது.4 அந்நாட்களில் இராசாதிராச சோழனுடைய அமைச்சர் தலைவனாக விளங்கிய வேதவனமுடையான் அம்மையப்பனான அண்ணன் பல்லவ ராயன் என்பான்1 அதனை யறிந்து ஈழ நாட்டுச் சிங்காதனம் பற்றிப் பராக்கிரம பாகுவோடு பகைமை கொண்டு சோழ நாட்டிற்கு வந்து தங்கியிருந்த அவ் வேந்தன் மருமகன் சீவல்லபனுக்கு2 ஆற்றல் வாய்ந்த பெரும் படை யுதவி ஈழத்தின் மீது படையெடுத்துச் செல்லுமாறு செய்தனன். சீவல்லபனோடு ஈழ நாட்டிற்குச் சென்ற அப் படை ஊராத்துறை, வல்லிகாமம், மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகுந்து, புலைச்சேரி ஊர்களையும் அழித்து, அவ் ஊர்களிலிருந்த யானைகளையும் மாதோட்டம் உள்ளிட்டவற்றை ஏற்றுக்கொண்டு, ஈழ மண்டலத்தில் கீழ் மேல் இருபதின் காதத்திற்கு மேற்படவும் தென்வடல் முப்பதின் காதத்திற்கு மேற்படவும் அழித்து,3 சில சிங்களத் தலைவர்களைக் கொன்று, எஞ்சியோரைச் சிறைப் பிடித்துக் கொண்டு சோழ நாட்டிற்குத் திரும்பியது. அப் படையெடுப்பில் ஈழ நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை யெல்லாம், அமைச்சர் தலைவனான அண்ணன் பல்லவராயனால் இராசாதிராச சோழனுக்கு அளிக்கப்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

சீவல்லபன், சோழ மன்னன் துணைகொண்டு நிகழ்த்திய படை யெடுப்பினால் பராக்கிரம பாகுவின் முயற்சிகள் எல்லாம் பயன்படாமற் போயின. அன்றியும், ஈழ நாட்டில் அமைதியின்மையும் பொருளழிவும் மிகுதியாக ஏற்பட்டு விட்டன. அவற்றைக் கண்ட அச் சிங்கள வேந்தன், தான் பராக்கிரம பாண்டியன் புதல்வனை ஆதரித்தமையால் அத்தகைய துன்பங்கள் உண்டாயின என்ற முடிபிற்கு வந்தான். உடனே, அவன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்துகொண்டிருந்த குலசேகரனைப் பாண்டி வேந்தனாக ஏற்றுக்கொண்டு உற்ற நண்பனாக வைத்துக் கொள்வதுதான் நலமென்று கருதி, அவனுக்குச் சில பரிசில்கள் அனுப்பினான். குலசேகர பாண்டியன், சோழ மன்னன் தனக்குச் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து, சிங்கள வேந்தன் அனுப்பிய பரிசில்களைப் பெற்றுக்கொண்டு, அவனோடு நட்பும் மணவினைத் தொடர்பும் வைத்துக்கொள்ளவும் உடன் பட்டான்.1 அன்றியும், அக் குலசேகர பாண்டியன் சோழ இராச்சியத்திற்கு விரோதமான காரியங் களைச் செய்யத் தொடங்கி, இராசாதிராச சோழன்பால் அன்புடையவர்களான இராசராசக் கற்குடி மாராயன், இராசகம்பீர அஞ்சு கோட்டை நாடாழ்வான் முதலான பாண்டி நாட்டுத் தலைவர்களை அந்நாட்டைவிட்டு வெள்ளாற்றுக்கு வட கரையிலே2 போகும்படி செய்து, சிங்களப் படைத் தலைவர்களின் தலைகளை மதுரைக் கோட்டை வாயிலிலிருந்து எடுத்து விடுமாறும் செய்தான். அந்நிலையில், குலசேகர பாண்டியனும் பராக்கிரபாகுவும் நண்பர்களாகி ஒன்றுபட்டிருத்தலை யுணர்த்தும் சில ஓலைகளும் இராசாதிராச சோழனுக்குக் கிடைத்துவிட்டன. எனவே, இவன் குலேசேகரப் பாண்டியன் செயல்கள் அனைத்தையும் பல்வகையாலும் நன்கறிந்து கொண்டான்; பின்னர் நன்றி மறந்து பகைவனோடு சேர்ந்து கொண்ட அப் பாண்டியனை அரியணையிலிருந்து நீக்கி, பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனுக்கு அதனை அளிக்குமாறு தன் அமைச்சன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணையிட்டான். உடனே, அவன் மதுரை மாநகர் மீது படையெடுத்துச் சென்று, மிகச் சுருங்கிய நாட்களில் குலசேகர பாண்டியனைப் போரிற் புறங்கண்டு வீர பாண்டியனுக்குப் பாண்டி நாட்டை அளித்துவிட்டுச் சோழ நாட்டிற்குத் திரும்பினான்.3 வீர பாண்டியனும், அப் பல்லவராயன் தனக்கு வழங்கிய பாண்டி நாட்டை மதுரையம்பதியிலிருந்து ஆட்சி புரிந்து வருவானாயினான். அக் காலமுதல் இராசாதி ராசன் ஆட்சிக் கால முழுவதும் வீரபாண்டியனே1 மதுரையிலிருந்து அரசாண்டு வந்தனன் என்பது அறியற்பாலதாகும்.

நம் இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அப் பாண்டி நாட்டுப் போர் கி. பி. 1167 முதல் கி. பி. 1175 வரையில் நடைபெற்றதாதல் வேண்டும். இவ்வேந்தன் அத்துணையாண்டுகளும் அப் போரில் ஈடுபட்டிருந்தமை உணரற் பாலதாகும். குலசேகர பாண்டியனுடைய வேண்டுகோளின் படி இவன் பாண்டி நாட்டுப் போரில் கலந்துகொண்டானெனினும், அவன் நன்றி மறந்து சோழ நாட்டிற்குத் தீங்கிழைத்தற்கு முயன்றமைபற்றி அவனையே பாண்டி நாட்டுச் சிங்காதனத் திலிருந்து நீக்குவது இன்றியமையாத தாயிற்று. அந்நிலையில் இவன் தனக்குப் பகைவனா யிருந்த பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனை ஆதரித்து மதுரையில் அரியணையில் அமர்த்துமாறு நேர்ந்தது எனலாம். இராசாதிராச சோழன் ஆட்சியின் இறுதியிலிருந்த பாண்டி நாட்டு நிலை இதுவேயாகும். எனவே, பாண்டி நாட்டுப் போரில் நம் இராசாதிராசன் எண்ணம் நன்கு நிறைவேறியது என்பது ஒருதலை. அப்போரில் சோழ நாட்டுப்படை சிற்சில காலங்களில் தோல்வி யெய்தும்படி நேர்ந்ததாயினும், சிங்களப் படைகளைப் பன்முறை வென்று பேரழிவிற் குள்ளாக்கியமையோடு சிங்களவரைப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தி யமையும் குறிப்பிடத்தக்கதாகும். அச் செயல் நம் இராசாதிராசனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்திருக்கும் என்பது திண்ணம். அவ் வெற்றி காரணமாக, இவன் மதுரையும் ஈழமும் கொண்ட2 கோ இராசகேசரிவர்மன் என்று வழங்கப் பெற்றனன். சோழ நாட்டுப் படை ஈழத்தில் போர் புரிந்து வாகை சூடியமை பற்றி இவன் ஈழமுங் கொண்டவன் என்று கூறப்பெற்றனன் போலும். ஈழ நாட்டில் ஒரு சிறு பகுதிகூட இவன் ஆட்சிக் குட்பட்டிருக்க வில்லை என்று தெரிகிறது.

இராசாதிசாசன் சிறப்புப் பெயர்

தஞ்சாவூர் ஜில்லா மாயூரந் தாலூகாவிலுள்ள ஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்றால்1 இவ்வேந்தனுக்குக் கரிகால சோழன் என்னும் சிறப்புப் பெயரும் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. அன்றியும், சிதம்பரத்தி லுள்ள இவன் கல்வெட்டொன்று2 இராசாதிராச தேவராகிய கரிகால சோழ தேவர் என்று கூறுவதால் இச்செய்தி உறுதியாகின்றது.

இவன் மனைவி மக்கள்

பூமருவிய திசை முகத்தோன் என்று தொடங்கும் இவனது ஐந்தாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில்3 இவன் பட்டத்தரசி, புவனமுழுதுடையாள் என்று குறிக்கப் பெற்றுள்ளனள். அவ்வாட்சி யாண்டிலேயே வரையப்பெற்ற கடல் சூழ்ந்த பார் மாதரும் என்று தொடங்கும் மற்றொரு கல்வெட்டு4 பட்டத்தரசியின் பெயர் உலகுடை முக்கோக் கிழானடிகள் என்று உணர்த்து கின்றது. ஒரே ஆட்சி யாண்டில் பட்டத்தரசியின் பெயராக இவ்விரு பெயரும் காணப்படுவதால், இவ் வேந்தனுடைய பட்டத்தரசி புவனமுழுதுடையாள் எனவும் உலகுடை முக்கோக்கிழானடிகள் எனவும் அந்நாளில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு துணியப்படும். இவர்கள் வெவ்வேறு அரசியராயிருந்திருப்பின் இவர்கள் இருவரும் ஒரே யாண்டில் பட்டத்தரசி என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இவ் வேந்தனுக்குப் பிறகு முடி சூட்டப்பெற்றவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் ஆவான். எனவே, இராசாதிராசனுக்கு மக்கள் உண்டா இல்லையா என்பது தெரியவில்லை.

இவனது ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தின் நிலை

இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தின் பெருமையும் பரப்பும் சிறிது குறைந்து போயின எனலாம். எனினும், இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் கடப்பை ஜில்லாவிலுள்ள நந்தலூரிலும் நெல்லூர் ஜில்லாவிலும்2 திருக் காளத்தியிலும்3 காணப்படுகின்றன. ஆகவே, அப்பகுதிகள் இவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தனவாதல் வேண்டும்.

இவனது இறுதிக் காலம்

இவனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டுக் கல்வெட் டொன்று திருவதிகை வீரட்டானத்தில் உள்ளது.4 இவ் வாண்டிற்கு மேல் இவனுடைய கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டிற் காணப்படவில்லை. ஆனால் பதினாறாம் ஆண்டிற்கு மேற்பட்ட இவனுடைய கல்வெட்டுக்கள் ஆந்திர நாட்டில் திராட்சாராமம் முதலான ஊர்களில் காணப்படுகின்றன. இவனது பதினாறாம் ஆட்சி யாண்டிற்குப் பின் கி. பி. 1178-ல் மூன்றாங் குலோத்துங்க சோழன் சோழ நாட்டில் ஆட்சியுரிமையைக் கைக்கொண்டு அரியணை யேறினான் என்பது சில கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது இராசாதிராசனுக்கும் குலோத்துங் கனுக்கும் இடையே ஆட்சி யுரிமைப் பற்றி உள்நாட்டில் சிறிது குழப்பம் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்பது தென்னார்க்காடு ஜில்லா திட்டக்குடியிலுள்ள கல்வெட்டொன்றால் குறிப்பாக உணரக் கிடக்கின்றது.6 இக்குழப்பத்தினாலேயே இம் மன்னன் தமிழ்நாட்டை விட்டு ஆந்திர நாட்டையடைந்து தன் இறுதிக் காலத்தை அங்கேயே கழித்திருத்தல் வேண்டுமென்று தோன்றுகிறது. இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுக் களின் துணைகொண்டு இதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

இவன் காலத்து குறுநில மன்னர்களும் தலைவர்களும்

இவன் ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாக இருந்தோர் பலர் ஆவர். சோழ இராச்சியத்தில் யாண்டும் அமைதி நிலவியிருந்தமைக்குக் காரணம் அன்னோரின் பேராற்றலும் பேருதவியுமே எனலாம். இவ்வேந்தனுக்குட் பட்டிருந்த குறுநில மன்னர்கள் தம் சக்கரவர்த்தியின்பால் பேரன்புடையவர்களாய் உற்றுழி யுதவி வந்தமையும் அத்தகைய நிலைக்கு ஓர் ஏதுவாயிருந்தது என்பது உணரற்பாலது. எனினும், இவன் ஆட்சிக் காலத்தில் சிற்றரசர்களும் அரசியல் தலைவர்களும் தாம் வாழ்ந்து கொண்டிருந்த இடங்களில் தம் அதிகாரங்களை நிலைபெறச் செய்து மிக சுயேச்சை யுடையவர்களாய் இருந்து வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். நம் இராசாதிராசன் இரண்டாம் இராசராசனுடைய மகனல்லன் என்பதும் புதிதாக ஆட்சி யுரிமை அளிக்கப் பெற்றவன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. எனவே, குறுநில மன்னர்களின் ஆதரவும் அரசியல் அதிகாரிகளின் அன்புடைமையும் இவனுக்கு இன்றியமை யாதனவா யிருந்தன. அது பற்றி இவ்வேந்தன் அன்னோர்பால் பற்றுடையவனாய் விரிந்த மனப் பான்மையுடன் ஒழுகி வந்தனன். அவர்கள்அதனையே தங்கட்குத் தக்க வாய்ப்பாகக் கருதித் தம் அதிகாரங்கள் ஆங்காங்கு நிலை பெற்றிருக்கும்படி செய்து கொண்டனர். இத்தகைய நிலை நாளும் வளர்ச்சி யெய்திப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்களின் வீழ்ச்சிக்கும் சோழ இராச்சியத்தின் அழிவிற்கும் காரணமாயிற்று என்பது ஒருதலை. இனி, நம் இராசாதிராசன் காலத்து அரசியல் தலைவர்களுள், கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலர் வரலாற்றை ஈண்டு ஆராய்வோம்.

1. திருச்சிற்றம்பலமுடையானான பெருமானம்பிப் பல்லவராயன்:

இவன் இரண்டாம் இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் முதல் அமைச்சனாக இருந்தவன்; அவன் இறந்தபோது அவனுடைய இளங் குழந்தைகளையும் அந்தப்புர மகளிரையும் இராசராசபுரத்திற்கு அழைத்து வந்து பாதுகாத்தவன்; அவன் விரும்பியவாறு சோழ நாட்டில் இராசாதிராச சோழனுக்கு முடி சூட்டி இவ் வேந்தனது ஆட்சி நன்கு நடைபெறுமாறு உதவி புரிநது வந்தவன்; இம் மன்னன் ஆணையின்படி பாண்டி நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, சிங்களப் படையை வென்று குலசேகர பாண்டியனுக்கு மதுரை மாநகரில் அரசு வழங்கியவன்; இவன் கி. பி. 1171-ல் இறந்தபோது இவன் மனைவியர்க்கும் மக்களுக்கும் இராசாதிராசன் குளத்தூரில் நாற்பது வேலி நிலம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பெற்ற செய்தி, பல்லவராயன் பேட்டையிலுள்ள ஒரு கல்வெட்டால்1 அறியக் கிடக்கின்றது. இவன் வரலாற்றுள் பிறவற்றை முன் அதிகாரத்தில் காணலாம்.

2. வேதவனமுடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன்: இவன் தொண்டை மண்டலத்தில் பழையனூர் திருவாலங்காட்டிற் பிறந்தவன்; திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் இறந்தபின்னர், இராசாதிராச சோழன் பால் அமைச்சர் தலைவனாக நிலவிய பெருமை யுடையவன். இவ்வரசன் ஆணையின்படி பாண்டி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று, நன்றி மறந்த குலசேகர பாண்டியனை அரியணையினின்றும் நீக்கி, அதனை வீரபாண்டியனுக்கு வழங்கிய பெருவீரன்; சிங்கள வேந்தனாகிய பராக்கிரம பாகுவின் எண்ணம் நிறை வேறாதவாறு சீவல்லபனுக்குத் துணைப்படையளித்து அவ்வேந்தனைப் போரில் வெல்லும்படி செய்த சூழ்ச்சித் திறம் வாய்ந்தவன். எனவே, இவன் சிங்களவர் படையெழுச்சியிலிருந்து சோழ நாட்டைக் காப்பாற்றியவன் என்பது உணரத் தக்கது. இவன் சோழ இராச்சியத்திற்குப் புரிந்த பெருந் தொண்டுகள் பற்றி இவனுக்கு அருமொழித்தேவ வளநாட்டு நென்மலி நாட்டு இராசராசன் பழையனூரில் பத்து வேலி நிலம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பெற்றது.2 இவன் திருவாரூரிலும் வட திருவாலங் காட்டிலும்4 உள்ள கோயில்களுக்கு முறையே இறையிலி நிலமும் மூன்று திருவிளக்குகட்கு நிவந்தமும் கொடுத்தி ருத்தலால் இவன் சிவபத்தி வாய்ந்தவன் என்று தெரிகிறது.

3.  வேதவனமுடையான் கருணாகர தேவனான அமரகோன்:

இவன் மேலே குறிப்பிட்ட அண்ணன் பல்லவரா யனுக்குத் தமையன் அல்லது தம்பியாதல் வேண்டும். இவன் திருவலஞ்சுழியிலுள்ள கோயிலுக்கு1 இரண்டு நுந்தாவிளக்கும் பழையாறை நகரிலுள்ள திருச்சத்தி முற்றக் கோயிலுக்கு2 ஐந்து நுந்தா விளக்கும் வைத்து அவற்றிற்கு நிவந்தம் வழங்கியுள்ளான். இவன் அரசாங்கத்தில் ஓர் உயர்ந்த நிலையி லிருந்தவனாதல் வேண்டும்.

4. செங்கேணி அம்மையப்பன் எதிரிலி சோழ சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபில் செங்கேணிக் குடியில் தோன்றியவன்; செங்கற்பட்டு, வடார்க்காடு ஜில்லாக்களடங்கிய நிலப்பரப்பில் நாடு காவல் அதிகாரியாய் நிலவியவன்; இவன் வேண்டிக் கொண்டவாறு சிங்களப் படை தோல்வி யெய்திப் பாண்டி நாட்டை விட்டோடும்படி இருபத்தெட்டு நாட்கள் இரவும் பகலுந் தவங்கிடந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவர்க்கு 167 வேலியுள்ள ஆர்ப்பார்க்கம் என்ற ஊரை ஏகபோக இறையிலியாக இவன் கி. பி. 1168-ல் வழங்கினன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது.3 சில வரிகளாற் கிடைக்கும் பொருளைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருப்புலிவனத் திறைவர்க்கு வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிக்கும் கி. பி. 1167-ல் இவன் நிவந்தமாக அளித்தனன் என்று அங்குள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.4 எனவே, அரசாங்கத்தில் மிக்க அதிகாரம் வாய்ந்தவனாக இவன் இருந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

5. அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபினன்; செங்கேணிக் குடியினன்; தென்னார்க்காடு ஜில்லாவின் ஒரு பகுதியில் நாடு காவல் அதிகாரியாய் விளங்கியவன்; இவன் பாண்டி நாடு கொண்டா னென்று அக்காலத்தில் வழங்கப் பெற்றிருத்தலால் இராசாதிராச சோழன் ஆட்சியில் பாண்டி நாட்டுப் போருக்குச் சென்றிருந்த சோணாட்டுப் படைத் தலைவர்களுள் இவனும் ஒருவனாதல் வேண்டும். இவன் நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய திருவக்கரையில் சூரியன் திருக்கோபுரம் என்னுங் கோபுரமொன்று எடுப்பித்தானென்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது. அன்றியும், சிற்றாமூரிலுள்ள சமணர் கோயிலுக்கு இவன் பள்ளிச் சந்தமாக நிலம் அளித்துள்ளமை ஒரு கல்வெட்டால்2 புலனாகின்றது.

6. அம்மையப்பன் சீயன் பல்லவாண்டானான இராச நாராயண சம்புவராயன்:

பல்லவர் குலத்தில் செங்கேணிக் குடியில் தோன்றிய இத்தலைவன், தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள முந்நூர்க் கோயிலுக்குத் திருப்பணி புரிதற்பொருட்டு சில வரிகளை கி. பி. 1174-ல் நிவந்தமாகக் கொடுத் துள்ளனன்.3 இவன் இரண்டாம் இராசராச சோழன் காலத்தும் இருந்தவனாவன் செங்கேணி அம்மையப்பன் பாண்டியான இராசராச சம்புவ ராய னென்பவனும் அந் நாட்களிலிருந்த ஒரு பல்லவர் குலத் தோன்றல் என்பது மேல் சேவூரிலுள்ள ஒரு கல்வெட்டால்4 வெளியாகின்றது.

7. மலையமானாட்டுச் சிற்றரசர்கள்:

இவர்கள் திருக்கோவலூர், கிளியூர், ஆடையூர் ஆகிய ஊர்களிலிருந்து மலைய மானாட்டை ஆண்டு வந்தவர்கள்; இவர்களுள், இராசாதிராசன் காலத்திலிருந்தவர்கள், இராசராச மலையரையன் ஆகிய அருளாளப் பெருமாள்,5 இராசராச சேதிராயன்,6 இராசராச கோவலராயன்,7 கிளியூர் இராசகம்பீர சேதிராயன்,1 நீறணிந்தானாகிய சேதிராயன்2 திருவரங்க முடையான் இராசாதிராச மலையரையன்,3 ஆகார சூரமலையமான்,4 என்போர். இவர்களுள் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர், கீழூர், சித்தலிங்க மடம் என்னும் ஊர்களிலுள்ள கோயில்களுக்கு நிவந்தமளித்துள்ள இராசராச கோவலராயன், இராச கம்பீரசேதிராயன், ஆகார சூர மலையமான் என்போர் மலையமான் மரபினராவர். எஞ்சிய மூவரும் அரசனால் வழங்கப்பெற்ற மலையரையன், சேதிராயன் என்ற பட்டம் பெற்றவர் களேயன்றி மலையமான் மரபின ரல்லர் என்பது சில குறிப்புக்களால் உய்த்துணரக் கிடக்கின்றது.

8. கடந்தை சேந்தன் ஆதித்தனான இராசராச சிங்கார முத்தரையன்:

இவன் பெண்ணாகடத்தைச் சூழ்ந்த நிலப்பரப்பில் நாடு காவல் அதிகாரியாயிருந்தவன்; இவன், திட்டக்குடியிலுள்ள திருமால் கோயிலுக்கு ஐந்து வேலி நிலத்தை இறையிலியாக கி. பி. 1168-ல் அளித்துள்ளனன் என்பது இங்குள்ள ஒரு கல்வெட்டால்5 அறியக் கிடக்கின்றது.

9. அரச நாராயணன் ஏழிசை மோகனாகிய சநநாத கச்சிராயன்:

இவன் பல்லவர் மரபில் பிறந்தவன்; திருமுனைப் பாடி நாட்டில் திருவதிகை திருநாவலூர் முதலான ஊர்களைச் சார்ந்த நிலப்பகுதியில் நாடு காவல் அதிகாரியாக விளங்கியவன். கி. பி. 1171-ல் இவன் திருவதிகை வீரட்டானேச்சுவரர்க்குத் திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்துள்ளான் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.6

10. திருக்கொடுக் குன்றமுடையான் நிஷதராசன்:

பாண்டி நாட்டில் பொன்னமராவதியிலிருந்த ஒரு தலைவன், இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருக்களக்குடிக் கோயிலுக்கு இவன் இறையிலி நிலம் கொடுத்துள்ளனன் என்பது அங்குள்ளகல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது. இவன் ஓர் அரசியல் அதிகாரியாயிருந்திருத்தல் வேண்டு மென்பது திண்ணம்.

11. குணமலைப்பாடி யுடையான் ஆட்கொண்டான் கங்கை கொண்டானாகிய பொத்தப்பிச் சோழன்:

இவன் சோழ மண்டலத்தில் சுத்தமல்லி வளநாட்டில் வெண்ணிக் கூற்றத்திலிருந்த ஓர் அரசியல் அதிகாரியாவன். இவன், ஆந்திர தேயத்தில் நிகழ்த்திய வீரச் செயல் பற்றிப் பொத்தப்பிச் சோழன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனன் போலும். இவன் திருவலஞ்சுழி யிறைவர்க்கு மூன்று திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டொன்றால்2 புலனா கின்றது.

12. நெல்லூர்ச் சித்தியரையன்:

இவன் இராசாதிராசன் ஆட்சிக்காலத்தில் நெல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிற்றரசன் என்பது திருக்காளத்தியிலுள்ள ஒரு கல்வெட்டால்3 புலப்படுகின்றது.

13. புசபல வீரன் ஆகோ மல்லராசன்:

இவன் கங்க நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; சோழமாராசன் என்னும் பட்டம் பெற்றவன்; மகா மண்டலாதிபதி என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றவன். இவன் காஞ்சி மாநகரில் ஒரு நந்தவனத்திற்கு நிலம் வாங்கும் பொருட்டுப் பொருள் வழங்கியுள்ளனன் என்பது காஞ்சிக் கல்வெட்டால்4 உணரக் கிடக்கின்றது. ஆகவ மல்லராசன் என்பதே ஆகோ மல்லராசன் எனத் திரிந்தது போலும்.

மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி. பி. 1178 - 1218)


இரண்டாம் இராசாதிராச சோழனுக்குப் பிறகு மூன்றாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1178-ஆம் ஆண்டில் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றான். இவன் இரண்டாம் இராசாதிராசன் தம்பி என்று சிலர் கூறுகின்றனர்.2 அதற்குக் கல்வெட்டுக்களில் சான்றுக ளின்மையின் அஃது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.சங்கர சோழன் உலாவில் சொல்லப்படும் சங்கமன் மக்களான நல்லமன், குமார மகீதரன் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் இராசாதிராசனும் மூன்றாங் குலோத்துங்கனுமாயிருத்தல் வேண்டுமென்று கூறுவர் சிலர். அவ்வுலாவில் கூறப்பெற்ற சங்கமனும் அவன் மக்களாகிய நல்லமன், குமார மகீதரன், சங்கரன் என்போரும் கொங்கு நாட்டிலிருந்த கொங்குச் சோழராவர். சங்கமன் என்ற பெயர் அவன் வீர சைவனா யிருத்தல் வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. சங்கர சோழன் உலாவும் குலோத்துங்க சோழன் கோவையும் கொங்கு நாட்டிலிருந்து கிடைத்தவை. அவ் வேட்டுப் பிரதிகள் தஞ்சை யரண்மனைப் புத்தக சாலையிலும் சோழ நாட்டிலும் இல்லாமை குறிப்பிடத்தக்கது. எனவே, அவை சோழர்களின் வரலாற்றா ராய்ச்சிக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கவை யல்ல. இரண்டாம் இராசாதிராசன் எதிரிலிப் பெருமாள் எனவும் அவன் தந்தை நெறியுடை பெருமாள் எனவும் வழங்கப்பெற்றனர் என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டால் அறியப்படுகிறது.3 அப் பெயர்களுள் எதுவும் சங்கர சோழன் உலாவிலும் குலோத்துங்க சோழன் கோவையிலும் காணப்படவில்லை. அன்றியும் நெறியுடைப் பெருமாள் என்பான் விக்கிரம சோழன் பேரனென்று அக்கல்வெட்டு கூறுகின்றது. அச்செய்தியும் உலாவில் சொல்லப்படவில்லை. ஆகவே, சங்கர சோழன் உலாவில் கூறப் பெற்ற சங்கமம், குமார மகீதரன் என்போர் சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னர் அல்லர் என்பது தேற்றம்.

இனி, இரண்டாம் இராசராச சோழன் இறந்தபோது அவனுக்கு ஒரு வயதும் இரண்டு வயதுமுள்ள இரண்டு பிள்ளை களிருந்தனர் என்றும் அன்னாருள் ஒருவனுக்காதல் முடி சூட்டுவதற்குரிய வயதின்மையால் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த நெறியுடைப் பெருமாள் புதல்வன் எதிரிலிப் பெருமாளை அழைத்து வந்து அவனுக்கு இளவரசப் பட்டங்கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றும் பல்லவ ராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டொன்று கூறுகின்றது. அதனை நுணுகியாராயுமிடத்து, அதில் குறிப்பிடப்பெற்ற இரண்டு வயதுப் பிள்ளையே கி. பி. 1178-ல் பட்டம் பெற்ற இக் குலோத்துங்க சோழனாக விருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. அக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்ற இரண்டாம் இராச ராசனுடைய இரண்டு பிள்ளைகளும் பெண் மக்களாயிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளருள் சிலர் கூறுகின்றனர். அவர்கள் பெண்மக்களா யிருந் திருப்பின், அக் கல்வெட்டில் பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருநட் சத்திரமாகையால் என்ற செய்தி கூறப்பெறுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், அக் கல்வெட்டின் பிற்பகுதியில் ஓரிடத்தில் பெண் பிள்ளைகளைச் சொல்ல நேர்ந்தவிடத்து அவர்களைப் பெண் மக்கள் என்றே ஐயமறக் குறித்திருப்பது உணரற்பாலதாம். எனவே, அக்கல்வெட்டில் காணப்படும் பிள்ளைகள் என்னுஞ் சொல் ஆண் மக்களையே உணர்த்துதல் அறியத்தக்கது.

கும்பகோணத்திற்கு மேற்புறத்தி லுள்ளதும் இக்காலத்தில் தாராரசுரம் என்று வழங்கிவருவதுமாகிய இராசராசபுரத்தி லுள்ள இராசராசேச்சுரம் என்னும் சிவன் கோயில் இரண்டாம் இராசராச சோழனால் எடுப்பிக்க ப்பெற்றது என்பது தக்கயாகப் பரணியாலும்2 கல்வெட்டுக்களாலும் நன்கு அறியக் கிடக்கின்றது. அக்கோயில், தன் தந்தையால் கட்டப்பெற்றது என்பதைப் புதுக்கோட்டை நாட்டிலுள்ள குடுமியான் மலைக் கல்வெட்டொன்றில் நம் குலோத்துங்கன் குறித்திருப்பதால் இரண்டாம் இராசராச சோழனே இவன் தந்தையாயிருத்தல் வேண்டு மென்பது இனிது வெளியாகின்றது. ஆகவே, இவ் வேந்தன் இரண்டாம் இராசராச சோழனுடைய புதல்வன் என்பது நன்கு துணியப்படும்.

இனி, இவனுக்கு முன் அரசாண்ட இராசாதிராசசோழன், இராசகேசரி என்ற பட்டம் புனைந்து கொண்டிருந்தமையால் சோழ மன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் பரகேசரி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிவானாயினன். எனினும், சில கல்வெட்டுக்களில் இவன் இராசகேசரி என்று தவறாகக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நம் குலோத்துங்கன் நாற்பது ஆண்டுகள் அரசாண்டிருத்தலால் இவன் கல்வெட்டுக்கள் தமிழ்நாடு முழுவதும் மிகுதியாகக் காணப்படுகின்றன. அக்கல்வெட்டுக்களில் இவனுடைய வீரம் ஆற்றல் முதலானவற்றை விளக்கும் சில மெய்க்கீர்த்திகளும் உள்ளன. அவற்றுள், புயல் வாய்த்து வளம் பெறுக என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது மூன்றாம் ஆட்சி யாண்டு முதல் கல்வெட்டுக்களில் வரையப் பெற்றுள்ளது.2 இதுவே, புயல் வாய்த்து மண் வளர என்றும், புயல் பெருக வளம் பெறுக என்றும் சில கல்வெட்டுக் களில் சிறிது வேறுபட்டுக் காணப்படுகின்றது. பிறிதொன்று, மலர் மன்னு பொழிலேழும் என்னும் தொடக்கத்தை யுடையதாகும். இம் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பூமருவிய முகத்தோன் என்று தொடங்கும் வேறொரு மெய்க்கீர்த்தியும் இவனது ஐந்தாம் ஆட்சியாண்டு முதல் சில கல்வெட்டுக்களில் உளது. அன்றியும், புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்த குடுமியான் மலையிலுள்ள புயல் வாய்த்து மண்வளர என்று தொடங்கும் நீண்ட மெய்க்கீர்த்தி கொண்டு1 இவன் தன் ஆட்சியில் நிகழ்த்திய பல அரிய செயல்களைத் தெளிவாக உணர்த்துகின்றது. அந்நாளில், இவன் இயற்பெயரோடு இணைத்து வழங்கப்பெற்று வந்த சில பட்டங்களும் இவன் வீரச் செயல்களை நன்கு விளக்குவன வாயிருத்தல் அறியற்பாலதாம். இனி, அவற்றின் துணை கொண்டு இவன் காலத்தில் நிகழ்ந்துள்ள போர் நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்போம்.

இவன் பாண்டியனோடு நிகழ்த்திய முதற் போர்

இவ்வேந்தனுக்கு முன் அரசாண்ட இரண்டாம் இராசாதி ராசன் பாண்டி மன்னர்க்குள் ஆட்சியுரிமை பற்றி நடைபெற்ற போர்களில் கலந்துகொள்ள நேர்ந்தமையும், வீரபாண்டியனை வென்று குலசேகர பாண்டியனுக்குப் பாண்டி நாட்டை வழங்கியமையும், பிறகு அக்குலசேகரன் ஈழ நாட்டரசன் பராக்கிரம பாகுவோடு சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்தமை பற்றி அவனைப் போரில் வென்று அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பாண்டி நாட்டை வீரபாண்டியனுக்கு அளித்தமையும் முன்னர் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நாட்டை யிழந்த குலசேகர பாண்டியன் தன் செயலே தனக்குத் தீமை விளைத்தது என்னுங் கருத்தினனாய் ஒரு சில ஆண்டு உயிர் வாழ்ந்திருந்து பிறகு இறந்திருத்தல் வேண்டும். அவனுக்கு விக்கிரம பாண்டியன் என்ற புதல்வனொருவன் இருந்தனன். நம் குலோத்துங்கன் பட்டம் பெற்றவுடன், அவ்வரச குமாரன் இவன்பால் அடைக்கலம் புகுந்து, தன் தந்தையிழந்த பாண்டி நாட்டைத் தான் பெற்று அரசாளும்படி செய்தல் வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். இச் சமயத்தில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்துகொண்டிருந்த வீர பாண்டியனும் இராசாதிராச சோழன் தனக்குப் புரிந்த உதவியை மறந்து, மறுபடியும் இலங்கை மன்னனோடு சேர்ந்துகொண்டு சோழ நாட்டிற்குப் பகைவனாகி முரண்பட்ட நிலையிலிருந்தனன்.2 எனவே, குலோத்துங்கன் வீரபாண்டிய னோடு போர் தொடுப்பது இன்றியமையாததாயிற்று. ஆகவே, இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அப்பாண்டி வேந்தனோடு போர் புரிந்தபோது அவன் புதல்வருள் ஒருவன் இறந்தமையோடு அவனுடைய ஏழகப் படைகளும் மறவர் படைகளும் எதிர்நின்று போர்புரியும் ஆற்றலையிழந்து அழிந்தும் போயின. அவனுக்கு உதவிபுரிதற் பொருட்டுப் பராக்கிரம பாகுவால் அனுப்பப்பெற்ற சிங்களப் படைகளும் பெருந்தோல்வியெய்தி இலங்கைக்கு ஓடிவிட்டன. எனவே, குலோத்துங்கன் இப்போரில் பெருவெற்றி பெற்று, மதுரையும் அரசுங் கொண்டு வெற்றித்தூண் நிறுவி, அம் மதுரையும் அரசும் நாடும் தன்னை அடைந்த விக்கிரம பாண்டியனுக்கு அளித்தனன். இதுவே இவன் பாண்டி நாட்டில் நிகழ்த்திய முதற் போராகும்.

இவன் பாண்டியனோடு நிகழ்த்திய இரண்டாம் போர்

வீரபாண்டியன் தன் நாட்டை யிழந்த பிறகு மலை நாடு சென்று, சேர மன்னன் உதவி பெற்று அதனை மீட்க முயன்றான். அவ்வேந்தன் தனக்குத் துணையாக அனுப்பிய சேர நாட்டுப் படையுடன் சிதறிக் கிடந்த தன் படையையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு அவ்வீரபாண்டியன் மதுரை மாநகர் மீது போர்க்குப் புறப்பட்டான். அதனை யறிந்த குலோத்துங்கன் பெரும் படையோடு சென்று அவனை எதிர்ப்பானாயினன். மதுரைக்குக் கிழக்கேயுள்ள நெட்டூரில்3 இருபெரும் படைகளும் எதிர்த்துக் கொடும்போர் புரிந்தன. இப் போரிலும் பாண்டி நாட்டுப் படையும் சேர நாட்டுப் படையும் முற்றிலும் தோல்வியுற்றுச் சிதறுண்டும் அழிந்தும் போயின. இப்போர் நிகழ்ச்சியில் வெற்றியெய்தி வாகைசூடிய குலோத்துங்கன் பாண்டியர்க்கு வழிவழி யுரியதாயிருந்த முடியைக் கைப்பற்றிக் கொண்டமை யோடு வீரபாண்டியனுடைய பட்டத்தரசியையும் சிறை பிடித்து வேளம் ஏற்றினான். தன் முயற்சி பயன்படாமையோடு தனக்குப் பேரழிவையும் பெருந்துன்பத்தையும் தந்ததைக் கண்டு பெரிதும் வருந்திய வீர பாண்டியன், தன் சுற்றத்தினருடன் மலைநாடு சென்று சேர மன்னன்பால் அடைக்கலம் புகுந்தான். பாண்டியனுக்கு உதவி புரிந்தமை பற்றி குலோத்துங்கன் தனக்கு ஏதேனும் தீங்கிழைத்தல் கூடும் என்றஞ்சிய அச் சேர வேந்தன் அவனையும் அவன் மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சோணாட்டிற்கு வந்து எல்லோரும் ஒருங்கே குலோத்துங் கனிடத்தில் அடைக்கலம் புகுந்தனர். இவன் எல்லோரையும் அன்புடன் ஏற்று அவர்களுள் வீரபாண்டியனுக்குப் பாண்டி நாட்டில் ஒரு பகுதியும் முடியும் அளித்தனன். சேரனுக்குப் பிற வேந்தர் பெறாத பெருந் திருவும் வழங்கினான். வீரகேரளனுக்குப் பாரறிய வாழ்வருளித் தன் பக்கமிருந் துண்ணச் செய்தான்; பருதி குலபதி என்னும் பெயருடைய வீரபாண்டியன் புதல்வனுக்கு இருநிதியும் பரிசட்டமும் இலக்குமணிக் கலனும் நல்கினான்.3 எனவே, அடைக்கலம் புகுந்தாரை இவன் நன்கு ஆதரித்தமை அறிக. இவன் பாண்டி நாட்டில் இரண்டாம் முறை நடத்திய போர் இவ்வாறு முடிவெய்தியது எனலாம்.

இனி, இவ்வேந்தன் பாண்டி நாட்டில் பெற்ற முதல் வெற்றி, இவனது இரண்டாம் ஆட்சி யாண்டில் திருவக்கரை கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில்4 காணப் படுதலால் அப்போர் கி. பி. 1180-ஆம் ஆண்டில் நடை பெற்றதாதல் வேண்டும். இவன் நிகழ்த்திய இரண்டாம் போர் நெல்லூரிலுள்ள இவனது பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கூறப்பட்டிருத்தலால் அப்போர் கி. பி. 1188-ல் நிகழ்ந்ததாதல் வேண்டும். தன்பால் அடைக்கலம் புகுந்த வீரபாண்டியன், அவன் மக்கள், சேர மன்னன் ஆகிய எல்லோர்க்கும் நம் குலோத்துங்கன் ஆதரவளித்து அவர்கட்கு வேண்டிய வற்றை அன்புடன் வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் கி. பி. 1188 ஆம் ஆண்டிற்கும் 1193-ஆம் ஆண்டிற்குமிடையில் நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பது ஒருதலை.

இவன் நிகழ்த்திய ஈழ நாட்டுப் போர்

சிங்கள மன்னர்க்கும் சோழ மன்னர்க்கும் நெடுங் காலமாகப் பகைமை இருந்து வந்தது. இராசாதிராச சோழன் ஆட்சியில் ஈழ மன்னனாகிய பராக்கிரம பாகு என்பான் வீரபாண்டியனுக்கு உதவி புரியப் படையனுப்பித் தோல்வி யுற்றமையும், பிறகு குலசேகரப் பாண்டியனைத் தன் வயப்படுத்திக் கொண்டு சோணாட்டிற்குத் தீங்கிழைக்க முயன்றமையும், அதனால் குலசேகரபாண்டியன் தன் அரசிழக்க வீர பாண்டியன் பாண்டி நாட்டில் மறுபடியும் ஆட்சி புரியும்படி இராசாதிராசன் செய்ய நேர்ந்தமையும் முன்னர் விளக்கப்பட்டன. அவ் வீர பாண்டியன் சில ஆண்டுகளுக்குப் பிறகு குலோத்துங்கனோடு முரண்பட்டமையும் அது பற்றி இவன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அவனைப் போரிற் புறங்கண்டு, அவன் நாட்டைக் கைப்பற்றி, அதனை விக்கிரம பாண்டியனுக்கு அளித்தமையும் முன்னர்க் கூறப்பட்டுள்ளன. நம் குலோத்துங்கன் வீரபாண்டியனோடு அப்போர் நிகழ்த்தியபோது சிங்கள மன்னன் பாண்டியனுக்குப் பெரும் படையொன்றை ஈழ நாட்டி லிருந்து அனுப்பி உதவி புரிந்தனன்.2 அக் காரணம் பற்றியே இவன் ஈழ நாட்டின்மேல் படையெடுத்துச் சிங்கள வேந்தனை அடக்குவது இன்றியமையாததாயிற்று. இவன் அந்நாட்டில் புரிந்த போரில் சிறந்த வெற்றி யெய்தியிருத்தல் வேண்டுமென்பது இவன் கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது.3 இப்போர் நிகழ்ச்சி குலோத்துங்கனது பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில்1 காணப்படுவதால் இது கி. பி. 1188-ஆம் ஆண்டி லாவது அதற்குச் சிறிது முன்னராவது நடைபெற்றதாதல் வேண்டும். சிங்கள நாட்டில் இப்போர் நிகழ்ந்தபோது அங்கு ஆட்சி புரிந்துகொண்டிருந்தவன் பராக்கிரம பாகு2 என்ற அரசனா அல்லது அவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற மன்னருள் ஒருவனா என்பது இப்போது புலப்படவில்லை.

இவன் கொங்கு நாட்டில் நடத்திய போர்

குலோத்துங்கன் ஈழ நாட்டு மன்னனை வென்ற பின்னர், கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, அதன் தலைநகராகிய கருவூரைக் கைப்பற்றி, அங்குச் சோழ கேரளன் என்னும் பெயருடன் விசய மாமுடி சூடினானென்று இவன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.3 கொங்கு நாட்டு மன்னர், சேரருள் ஒரு கிளையினரே யாவர். அவர்கள் முதல் ஆதித்த சோழன் கால முதல் சோழ மன்னர்க்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராயிருந்து வந்தனர். அவர்கள் இரண்டாம் இராசாதிராசன் ஆட்சிக் காலத்தில் சுயேச்சை யெய்திச் சோழர்க்குக் கப்பஞ் செலுத்துவதை நிறுத்தியிருத்தல் வேண்டுமென்பதும், அதுபற்றியே நம் குலோத்துங்கன் தன் ஆட்சியில் கொங்கு நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று, அந்நாட்டு மன்னனைப் போரில் வென்று கருவூரைக் கைப்பற்றினன் என்பதும் அறியற்
பாலனவாம். தோல்வியுற்ற கொங்கு வேந்தன் குலோத்துங்கன்பால் அடைக்கலம் புகுதலும் இவன் அவனுக்குரிய நாட்டை வழங்கித் தனக்குட்பட்ட சிற்றரசனாயிருந்து அரசாண்டு வருமாறு செய்தமை குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் கொங்கு நாட்டரசனுக்குக் குலோத்துங்கன் அரசளித்து முடி வழங்கியமைப் பற்றிக் கருவூர் முடி வழங்கு சோழபுரம் என்னும் பெயர் எய்துவ தாயிற்று. கொங்கு நாடும் சோழர் ஆட்சிக்குட்பட்டமையால் சோழ கேரள மண்டலம் என்னும் பெயர் பெற்றது. கொங்கான சோழ கேரள மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவூரான முடி வழங்கு சோழபுரத்துத் திருவானிலை மாதேவர் என்னுங் கல்வெட்டுத் தொடர் மொழிகள் இவ் வுண்மையை நன்கு விளக்கி நிற்றல் காண்க.1 இப்போர் நிகழ்ச்சி இவனது பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காணப்படுவதால் இது கி. பி. 1194-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். இது முதல் இவன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் கருவூரிலும் கொங்கு நாட்டிலும் காணப்படுதல் அறியற்பாலதாம்.

இவன் வடநாட்டில் நிகழ்த்திய போர்

நம் குலோத்துங்கன் காலத்தில் சித்தூர், நெல்லூர், கடப்பை ஜில்லாக்களில் சில தெலுங்க மன்னர்கள் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் தெலுங்குச் சோடர் எனவும் கூறப்படுவர். அன்னோருள், நல்லசித்தரசன், தம்முசித்தி யரைசன், திருக்காளத்தி தேவன் என்போர், குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலிருந்த தெலுங்க மன்னர் ஆவர். அவர்கள் எல்லோரும் இச் சோழர் பெருமானுக்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராக வாழ்ந்து வந்தவர் என்பது அவர்கள் நாட்டில் காணப்படும் கல்வெட்டுக்களால்3 நன்கறியக் கிடக்கின்றது. எனவே, வட புலத்திலுள்ள அன்னோர் நாட்டின் மேல் இவ் வேந்தன் படையெடுப்பதற்கு ஏது சிறிதும் இல்லை யெனலாம். ஆனால், திருவரங்கத்திலுள்ள இவனது 19-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று,4 இவன் வட வேந்தரைப் போரில் வென்று கோபந்தணிந்து காஞ்சி மாநகர் புகுந்து அரசர்களிடம் திறை வாங்கினான் என்று கூறுகின்றது. சில கல்வெட்டுக்கள் இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்று உணர்த்துகின்றன.5 எனவே, இவன் பிறவேந்தன் ஒருவனைப் போரில் வென்று அவன் பாலிருந்த காஞ்சியைக் கைப்பற்றி, அம் மாநகருள் வெற்றி முரசொலிப்பப் புகுந்திருத்தல் வேண்டு மென்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. ஆகவே, இந்நிகழ்ச்சி குலோத்துங்கன் ஆட்சியில் இவனது தொண்டை நாட்டு நகர மாகிய காஞ்சி சில திங்களாதல் பிற வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருத்தல் வேண்டுமென்பதை உணர்த்துதல் அறியத் தக்கது.

இனி, வடபுலத்திலிருந்த ஆந்திர மன்னர்கள் சோழர்க்குட்பட்ட குறுநில மன்னரா யிருந்து வந்தனராயினும், அவர்கள் வாய்ப்பு நேருங்கால் தாம் சுயேச்சையாகத் தனியரசு புரியும் கருத்தினராகவே இருந்து வந்தனர் என்பது சிற்சில நிகழ்ச்சிகளால் புலப்படுகின்றது. கி. பி. 1192-ல் கடப்பை ஜில்லாவில் மகாராஜபாடி நாட்டை வல்லூரபுரத்திலிருந்து ஆண்டுகொண்டிருந்த புஜபல வீர நல்லசித்தனதேவ சோழ மகாராசன் என்னும் தெலுங்குச் சோடன் காஞ்சியிலிருந்து தான் கப்பம் வாங்கி வந்ததாகப் பெருமையுடன் கூறுவது குறிப்பிடத் தக்கதாகும். எனவே, நம் குலோத்துங்கன் பாண்டி நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் கி. பி. 1192-ல் அத்தெலுங்குச் சோழன் சுயேச்சை எய்திச் சில ஆண்டுகள் வரையில் சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தாமல் இருந்திருக்கக்கூடும். அன்றியும், அந்நாளில் அவனே காஞ்சியையும் கைப்பற்றி யிருக்கலாம். பேராற்றல் படைத்த பெரு வீரனாகிய குலோத் துங்கன் இச் செயல்களை எங்ஙனம் பொறுக்க முடியும்? ஆகவே, இவன் ஆந்திர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று அந் நல்ல சித்தன தேவனை வென்று குறுநில மன்னனாக்கி, அவன்பாற் கப்பமும் பெற்றுக் கொண்டு காஞ்சியைக் கைப்பற்றி அதனுள் வாகை மாலையுடன் புகுந் திருத்தல் வேண்டும். இந் நிகழ்ச்சியைத்தான் இவனது 19-ம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு கூறுகின்றது.2 எனவே, இப்போர் கி. பி. 1194 -க்கும் 1197-க்கும் இடையில் நிகழ்ந்ததாதல் வேண்டும். நெல்லூர் ஜில்லா நெல்லூரில் கி. பி. 1197-ல் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று3 அவ்வாண்டில் தெலுங்குச் சோடர்கள் நம் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்படிந்து சிற்றரசராக வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பதை வலியுறுத்துதல் உணரற்பாலதாம்.

இனி, குடுமியான் மலையிற் காணப்படும் இவனது முப்பத்துநான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று1 இவன் வடபுல மன்னரை வென்று, வேங்கி மண்டலத்தைக் கைப்பற்றி உறங்கை என்னும் பொன்னகர் புகுந்தனன் என்று கூறுகின்றது. இச் செய்திகளை விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக்காமையின் இவற்றை ஆராய்ந்து முடிவு காண இயலவில்லை. அன்றியும், இப்போர் நிகழ்ச்சியில் சில ஐயப்பாடுகளும் தோன்றுகின்றன. நெல்லூர் ஜில்லாவுக்கு வடக்கே குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. எனவே, வேங்கி நாடு இவன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில் இவன் வேங்கியைக் கைப்பற்றினான் என்று இவன் கல்வெட்டு உணர்த்துவது குறிப்பிடத் தக்கது. கி. பி. 1199-ல் பட்டம் பெற்ற ஓரங்கல் மன்னனாகிய காகதீய கணபதி என்பான் வடபுலத்தில் பெருவலி படைத்த வேந்தனாய் நிலவியமையோடு அப் பகுதியிலிருந்த வேங்கி, பொத்தப்பி முதலான நாடுகள் எல்லாவற்றையும் தன்னடிப் படுத்தித் தன் ஆட்சியை யாண்டும் பரப்ப முயன்றனன் என்றும் தெரிகிறது. வட புலத்தில் பேரரசு ஒன்று நிறுவக் காலங் கருதிக்கொண்டிருந்த அக் காகதீய மன்னன் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ இராச்சியத்தின் வடபகுதியின்மேல் படையெடுத்து வந்திருக்கலாம். அந்நாட்களில் நம் குலோத்துங்கன் அவனைப் போரிற் புறங்கண்டு வடக்கே ஓடுமாறு துரத்தியு மிருக்கலாம். இந் நிகழ்ச்சிகளையே இவனது குடுமியான் மலைக் கல்வெட்டுக் குறிப்பாக உணர்த்துகின்றது எனலாம். அக்கல்வெட்டுக் கூறும் உறங்கை என்னும் நகர் இப்போது எவ்விடத்தில் உளது என்பது தெரியவில்லை. வரலாற்றராய்ச்சி யாளர் சிலர், காகதீய வேந்தர்களின் தலைநகரமாகிய ஓரங்கல் என்ற ஊரே உறங்கை எனக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது என்று கூறுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிந்துரைத்தற்குத் தக்க சான்றில்லை. ஆகவே , குலோத்துங்கனது வடநாட்டுப் போர் நிகழ்ச்சிகளைத் தெளிவாக விளக்கக்கூடிய ஆதாரங்கள் கிடைத்தாலன்றி இத்தகைய ஐயங்கள் நீங்கமாட்டா என்பது திண்ணம்.

பாண்டியனோடு நிகழ்த்திய மூன்றாம் போர்

நம் குலோத்துங்கனது பேருதவியினால் பாண்டி நாட்டில் பட்டம் பெற்ற விக்கிரம பாண்டியன் இறந்தபின்னர் அவன் புதல்வன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் கி. பி. 1190-ல் மதுரையம்பதியில் அரியணை ஏறினான்.2 அவன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் சில ஆண்டுகள் வரையில் குலோத்துங்கனுக்குட்பட்டிருந்தான்; இராசாதிராச சோழன் ஆட்சியில் இரு முறையும் இவன் ஆட்சியில் இரு முறையும் பாண்டி நாட்டில் நடைபெற்ற போர்களில் சோணாட்டுப் படைத் தலைவர்கள் தம் படைகளோடு சென்று போர் புரிய நேர்ந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அந் நிகழ்ச்சிகள் எத்துணையோ பொருளழிவையும் இன்னல்களையும் சோழ இராச்சியத்திற்கு உண்டுபண்ணிவிட்டன என்பதில் ஐயமில்லை. எனினும், நம் குலோத்துங்கன் பாண்டி நாட்டில் அமைதியும் ஒழுங்கும் நின்று நிலவுமாறு தக்க ஏற்பாடு செய்தமை அறியற் பாலதாம். தன் நாடு அத்தகைய நிலையில் இருக்குங்கால், குலசேகர பாண்டியன் நன்றி மறந்து குலோத்துங்கனுக்குப் பகைவனாகிச் சில அடாச் செயல்கள் புரியத் தொடங்கவே, இவன் அந்நாட்டின்மேல் மறுபடியும் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. சோழ மன்னர்களின் பேருதவியினால் தம் நாடும் அரசும் பெற்ற பாண்டியர்கள் இவ்வாறு அடிக்கடி முரண்பட்டுச் சோழர்களின் பகைவர்களோடு சேர்ந்துகொண்டு சோணாட்டிற்குத் தீங்கிழைக்க முயல் வதைக் கண்ட குலோத்துங்கன் அவர்கள்பால் பெருஞ் சினங் கொள்வது இயல்பேயாம். எனவே, இவன் பேராற்றல் படைத்த பெரும் படைகளைத் திரட்டிக்கொண்டு பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அதனையறிந்த குலசேகர பாண்டியன், தன் மறப் படையும் ஏழகப் படையுந் திரட்டிக்கொண்டு குலோத்துங்கனோடு போர் புரியப் புறப்பட்டான். மட்டியூர்1 கழிக் கோட்டை என்ற ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. பாண்டியப் படைகள் பேரழிவிற்குள்ளாகித் தம் ஆற்றல் இழந்து புறங் காட்டி யோடிவிடவே, குலசேகர பாண்டியன் தோல்வி எய்தித் தன் தம்பியோடு மதுரை மாநகரை விட்டு ஓடிவிட்டான். குலோத்துங்கன் தன் படையுடன் அந்நகருள் புகுந்து, அரண்மனையில் சில மண்டபங்களைத் தகர்ந்தெறிந்தும் சில இடங்களை இருந்தவிடந் தெரியாமல் அழித்தும் தன் பெருஞ் சினத்தை ஒருவாறு ஆற்றிக் கொண்டான். பின்னர், இவன் தான் எய்திய பெருவெற்றி காரணமாக அந் நகரில் சோழ பாண்டியன் என்னும் பட்டம் புனைந்து வீர மாமுடி சூடிக்கொண்டான்; இங்ஙனம் செய்ததோடு அமையாமல், பாண்டி மண்டலத்திற்குச் சோழ பாண்டியன் மண்டலம் எனவும் மதுரை மாநகர்க்கு முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும் கொலு மண்டபத்துக்குச் சேர பாண்டியன் தம்பிரான் எனவும் இவன் பெயர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நம் குலோத்துங்கன் சேர நாடு பாண்டி நாடு ஆகிய இரண்டையும் வென்று தன்னடிப்படுத்தி, சோணாட்டுள்ளிட்ட முப்பெருந் தமிழ்நாடுகளிலும் ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தமை பற்றித் திரிபுவன வீர தேவன் என்னுஞ் சிறப்புப் பெயர் எய்துவானாயினன். இவ் வேந்தன் மதுரை மாநகரில் தங்கியிருந்த காலத்தில் அவ்வரிய பெயருடன் விசயாபிஷேகமும் வீரா பிஷேகமும் செய்துகொண்டான் என்பது இவன் கல்வெட்டுக்களால் நன்கறியப்படுகின்றது. அந் நாட்களில், இவன் ஆலவாய்ப் பெருமானடி களுக்குப் பல்வகை அணிகலன்கள் அளித்தும் தன் பெயரால் திருவிழாக் கண்டும் திருவீதி அமைத்தும் அப் பெருமான் திருக்கோயிலைப் பொன் வேய்ந்தும் ஆற்றிய அருந்தொண்டுகள் பலவாம்.

இனி, திருவாரூரிலுள்ள இவனது இருபத்து நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில்2 இவன் மதுரையில் புனைந்து கொண்ட திரிபுவன வீரதேவன் என்ற பட்டம் காணப்படுதலால், கி. பி. 1202-ஆம் ஆண்டிற்கு முன்னரே இவன் பாண்டியருடன் நிகழ்த்திய மூன்றாம் போர் நடைபெற்றிருத்தல் வேண்டு மென்பது திண்ணம். இவனது ஆட்சியின் 18, 21, 39-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்3 பாண்டி நாட்டிலிருத்தலால் அந்நாடு இவன் ஆட்சிக் காலம் முழுவதும் இவனுக்கு உட்பட்டிருந்தது என்று தெரிகிறது. தான் வென்று கைப்பற்றிய பாண்டி நாட்டைச் சில ஆண்டுகட்குப் பிறகு தன்பால் அடைக்கலம் புகுந்த சடைய வர்மன் குலசேகரனுக்கே இவன் வழங்கியமை உணரற்பாலது. மூன்றாம் முறை நிகழ்ந்த பாண்டி நாட்டுப் போர் இங்ஙனம் முடிவெய்தியது எனலாம்.

குலோத்துங்கன் காலத்தில் சோழ ராச்சியத்தின் பரப்பு

இவ் வேந்தர் பெருமான் கல்வெட்டுக்கள், தென் பாண்டி நாட்டில் திருநெல்வேலியிலும், மதுரை ஜில்லாவிலுள்ள தேனூரிலும் புதுக்கோட்டை நாட்டில் சில ஊர்களிலும்4 சேலம் ஜில்லாவில் தடாவூர், தகடூர், ஆறகளூர் முதலான ஊர்களிலும்5 கொங்கு நாட்டுக் கருவூரிலும்6 மைசூர் நாட்டில் ஹேமவதி ஆவனி முதலான ஊர்களிலும் வடக்கேயுள்ள நெல்லூர் ஜில்லாவில் நெல்லூர், ரெட்டிப்பாளையம், மல்லம் ஆகிய ஊர்களிலும் கடப்பை ஜில்லாவில் நந்தலூர், பொத்தப்பி என்ற ஊர்களிலும்3 இன்றும் உள்ளன. எனவே, தெற்கேயுள்ள குமரிமுனை முதல் வடக்கேயுள்ள வேங்கி நாடு வரையில் இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் பரவியிருந்தது என்பது ஒருதலை. ஆகவே, சேர நாடு, பாண்டி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு, தெலுங்க நாடு என்ற புற நாடுகள் எல்லாம் இவன் காலத்தில் சோழ இராச்சியத்திற்கு உட்பட்டிருந்தமை உணரற் பாலதாம். இவனுடைய முன்னோர்களான முதல் இராசராச சோழன், கங்கைகொண்ட சோழன், முதற் குலோத்துங்க சோழன் ஆகிய பெரு வேந்தர் காலங்களில் சோழ இராச்சியத்தில் எங்ஙனம் ஆட்சி அமைதியாக நடைபெற்று வந்ததோ அங்ஙனமே இவன் காலத்தும் நடைபெற்றுளது என்பது நம் தமிழகத்தும் அதற்கப்பாலும் காணப்படும் இவன் கல்வெட்டுக்கள் பலவற்றாலும் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இன்னும் அத்தகைய பெரு வேந்தர்களுள் ஒருவனாக வைத்துப் பாராட்டத்தக்க சிறந்த குணங்கள் படைத்த பெரு வீரன் ஆவான்.

இவன் சமயநிலையும் திருத்தொண்டும்

சோழ மன்னர் எல்லோரும் சைவ நெறியைக் கைக் கொண்டு ஒழுகியவர் எனலாம். நம் குலோத்துங்கனும் அங்ஙனமே சைவ சமயத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்று தெரிகிறது. இவனது சிவபக்தி அளவிட்டுரைக்குந் தரத்ததன்று; தஞ்சாவூர் ஜில்லா திரிபுவனத்திலுள்ள கல்வெட்டொன்று4 இவனைத் தில்லைச் சிற்றம்பல வாணருடைய ஏகபக்தன் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. திருவாரூரில் எழுந்தருளியுள்ள இறைவன் தம் கோயில் தானத்தார்க்கு அருளிய உத்தர வொன்றில், இவ்வரசர் பெருமானை நம் தோழன் எனக் கூறியுள்ளனர் என்று அவ்வூரிலுள்ள இவனது இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று1 உணர்த்துகின்றது. சைவ சமய குரவராகிய சுந்தரமூர்த்திகளைச் சிவபெருமான் தம் தோழராகக் கொண்டிருந்தனர் என்பதும் அது பற்றி அவ்வடிகள் தம்பிரான் தோழர் என்று வழங்கப்பெற்று வந்தனர் என்பதும் பெரிய புராணம் முதலான வரலாற்று நூல்களாலும் பிறவற்றாலும் அறியப்படுகின்றன. அவ் வடிகளுக்குப் பிறகு இறைவனோடு அத்தகைய தோழமை நிலையில் அமைந்திருந்தோர் யாரும் இலர். அஃது அங்ஙனமாக, நம் குலோத்துங்கன் சிவ பெருமானுக்குத் தோழன் ஆகும் பேறு பெற்றமை இவன் எத்துணைச் சிவபக்தி வாய்ந்தவனாகயிருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும்.

இவ் வேந்தன் சிவாலயங்களுக்குச் செய்துள்ள திருப் பணிகள் மிகப் பல. புதுக்கோட்டையைச் சார்ந்த குடுமியான் மலையிலும் சேரனூரிலும் காணப்படும் இரு கல்வெட்டுக்கள்2 அவற்றை விளக்கிக் கூறுகின்றன. அன்றியும், திருவிடைமருதூர்க் கண்மையிலுள்ள திரிபுவனத்தில் வரையப்பெற்ற இவனது வடமொழிக் கல்வெட்டொன்று3 இவன் புரிந்துள்ள சிவன் கோயில் திருத்தொண்டுகளை ஆராயுமிடத்து, இவன் தன் ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளைச் சிவாலயங்களுக்குத் திருப்பணி செய்வதில் செலவிட்டுள்ளமை நன்கு புலனாகும்.

இவனது 24-ஆம்ஆட்சியாண்டில் இவன் திரிபுவன வீரதேவன் என்னும் பட்டம் எய்தியமை முன்னர் விளக்கப் பெற்றது. அச் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவ வேண்டுமென்ற கருத்தினனாய்த் திருவிடைமருதூர்க்கு அண்மையில் திரிபுவன வீரேச்சுரம் என்னும் சிவன் கோயில் ஒன்று இவ் வேந்தன் எடுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.4 இப் பெருங் கோயில் சிற்பத் திறத்தில் ஈடும் எடுப்புமற்றதாகவும் கண்கவரும் வனப்பின தாகவும் பிற்காலச் சோழர் காலத்துக் கோயில்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் இன்றும் விளங்கிக்கொண்டிருப்பது அறியற்பாலது. இக்கோயிலுக்குக் கடவுண் மங்கலம் செய்தவர். இவ் வேந்தனுடைய குருவும் சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலியற்றியவரும் சீகண்ட சம்புவின் புதல்வரும் ஆகிய ஈசுவர சிவனார் ஆவார்.

இனி, இவ் வரசர் பெருமான் புரிந்த சிவன் கோயில் திருப்பணிகளுள் மதுரைத் திருப்பணிகள், முன்னர்க் கூறப்பட்டுள்ளன. பிற திருப்பணிகள் தில்லையம்பதியில் பேரம் பலம் பொன் வேய்ந்தமையும் அம்பலவாணரது திருக்கோயில் முகமண்டபம் மூன்றாம் பிரகாரம் சிவகாமி யம்மையின் கோயிற் கோபுரம் என்பவற்றை எடுப்பித்தமையும், காஞ்சி, திருவிடைம ருதூர், இராசராசபுரம் ஆகிய இடங்களில் அரும் பணிகள் ஆற்றியமையும் திருவாரூரில் சபா மண்டபமும் பெரிய கோபுரமும் கட்டுவித்தமையும் ஆகும்.

இத்துணைச் சிவபக்தி வாய்ந்த இம் மன்னவன் மற்றைச் சமயங்களிடத்தில் சிறிதும் வெறுப்புக் காட்டாமல் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தனன் என்பது இவன் கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா வேலூரிலுள்ள திருமால் கோயிலுக்குக் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்று தன் பெயர் வைத்து, அதற்கு நிவந்தமாகக் குலோத்துங்க சோழ நல்லூர் என்ற ஊரை இவன் தன் ஆட்சியின் 3-ஆம் ஆண்டாகிய கி. பி. 1181-ல் வழங்கினன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று3 கூறுகின்றது. இங்ஙனமே சைனப் பள்ளிகளுக்குப் பள்ளிச் சந்த இறையிலியாக இவன் நிலம் அளித்த செய்திகள் கல்வெட்டுக்களில்4 காணப்படுகின்றன. எனவே, பேரரசர்கட்கு இன்றியமையாது வேண்டப்படும் சமயப்பொறை இவன்பால் நன்கு அமைந்திருந்தமை காண்க.

தலைநகர்

இவ் வேந்தன் ஆட்சியில் கங்கைகொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. பழையாறையாகிய இராசராசபுரம் இரண்டாவது தலைநகராக விளங்கியது. விக்கிரம சோழபுரமும் இவன் ஆட்சியில் அரசன் தங்கியிருத்தற்குரிய சிறிய நகரமாக இருந்ததென்று தெரிகிறது.

மனைவியரும் புதல்வனும்

இவ்வரசர் பெருமானுடைய பட்டத்தரசி புவன முழுதுடையாள் என்று வழங்கப் பெற்றனள் என்பது செம்பொன் வீர சிம்மாசனத்துப் புவன முழுதுடையாளோடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் என்னுங் கல்வெட்டுப் பகுதியால்2 நன்கறியக் கிடக்கின்றது. இவ் வரசியைப் பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை. இவ் வேந்தனுக்கு வேறொரு மனைவியும் இருந்தனள். இச் செய்தியை நம்பிராட்டியாரில் இளைய நம்பிராட்டியார் என்ற கல்வெட்டுத் தொடர் ஒன்றால் உணரலாம்.3 இவனுக்குப் பிறகு அரசாண்ட மூன்றாம் இராசராச சோழன் இவனுடைய புதல்வன் ஆவன். ஆனால், இவ்வுண்மையை உணர்த்தக்கூடிய கல்வெட்டுக்களாதல் பிற ஆதாரங் களாதல் இதுகாறுங் கிடைக்க வில்லை. எனினும், நம் குலோத்துங்கனுடைய புதல்வனே மூன்றாம் இராசராச சோழன் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

புலவர் பெருமக்கள்

இவ் வேந்தன் தன் முன்னோர்களைப் போல் தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுத் தன் காலத்தில் நிலவிய புலவர் பெருமக்களை நன்கு ஆதரித்து வந்தனன். இவன் அவைக்களப் புலவராக விளங்கியவர் வீராந்த பல்லவரையர் ஆவர். இப் புலவரது வேண்டுகோளின்படி இவ் வரசர்பிரான் காலவிநோத நிருத்தப் பேரரரையனான பாரசவன் பொன்னன் என்பவனுக்குத் திருக்கடவூர்க் கோயிலில் நட்டுவ நிலை என்னும் விருத்தி அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது.1 இப் புலவர் நம் குலோத்துங்கன் மீது பிரபந்தங்களும் பல தனிப்பாடல்களும் இயற்றி யிருத்தல் கூடும். அவையெல்லாம் இந்நாளில் கிடைக்காமற் போயினமை வருந்தத்தக்கது.

நேமிநாதம், வச்சணந்தி மாலை, வெண்பாப் பாட்டியல் என்ற இலக்கண நூல்களை இயற்றியவரும் களந்தை வச்சணந்தி முனிவரின் மாணவரும் ஆகிய குணவீர பண்டிதர் என்பார் இவ்வரசன் காலத்தில் வாழ்ந்த புலவரே யாவர். வெண்பாப் பாட்டியலின் பாயிரத்தில் திரிபுவனதேவன் என்ற வேந்தன் காலத்தில் அந்நூல் இயற்றப்பெற்ற செய்தி கூறப்பட்டுள்ளது.2 அதில் கூறப்பெற்ற திரிபுவன தேவன் என்பார் திரிபுவன வீரதேவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நம் குலோத்துங்கச் சோழனே யாவான் என்பது ஐயமின்றித் துணியப்படும். எனவே, இம் மன்னனால் ஆதரிக்கப் பெற்ற புலவர் பெருமக்களுள் குணவீர பண்டிதரும் ஒருவ ரென்பது தெள்ளிது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாய் இவ்வேந்தன் காலத்தில் நிகழ்ந்ததோர் அரிய நிகழ்ச்சி மாபாரதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமையே யாம். அப் பெருஞ் செயலை ஆற்றியவர் தொண்டை மண்டலத்துக் குன்றவர்த் தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடையான் அறநிலை விசாகன் திரைலோக்ய மல்லன் வத்சராசன் என்பவர். வட திருவாலங்காட்டிலுள்ள குலோத்துங்கனது முப்பத்தி ரண்டாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று,1 இப்புலவர் பெருந்தகையைப் பாரதந் தன்னை அருந் தமிழ்ப்படுத்துச் சிவநெறி கண்டவர்என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. இவர் குலோத்துங்கனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவர் என்பதும் தொண்டை நாட்டிலுள்ள அரும்பாக்கம் என்ற ஊரினர் என்பதும் நன்கு புலனாகின்றன. இவர் இயற்றிய மகாபாரதம் இக் காலத்தில் கிடைக்காமையின் அழிந்துவிட்டது போலும்.

தமிழிலக்கணப் பயிற்சி பெற விரும்புவோர் யாவரும் முதலில் கற்கத் தொடங்கும் நன்னூல் என்ற இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர் என்பார் இவ் வேந்தன் காலத்தில் நிலவிய புலவர் ஆவர். நம் குலோத்துங்கனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு கங்க நாட்டில் அரசாண்ட அமராபரண சீயகங்கன்2 என்ற குறுநில மன்னன் ஒருவன் வேண்டிக் கொண்டவாறு இம்முனிவர் நன்னூல் இயற்றினர் என்பது அந்நூற் சிறப்புப் பாயிரத்தால் வெளியாகின்றது. இவர் மைசூர் ஜில்லாவில் திருமுக்கூடல் நரசிபுரந் தாலுகாவிலுள்ள சநநாதபுரத்திலிருந்த ஒரு சமண முனிவர் ஆவர். சோழ மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த கங்க நாட்டுச் சிற்றரசர்கள் தமிழ் வளர்ச்சியிலும் ஈடுபட்டுத் தக்க புலவர்களை ஆதரித்து அரிய நூல்கள் இயற்றுவித்தமைக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டாகும்.

இனி, சைவ சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் இவன்தன் ஆட்சியின் தொடக்கத்தில் நிகழ்த்திய அரும் பெருந்தொண்டு அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாடுவித்தமையேயாம். தொண்டை நாட்டில் புலியூர்க் கோட்டத்திலுள்ள குன்றத்தூரில் தோன்றிய இக் கவிஞர் பெருமான், குலோத்துங்கனுக்கு அமைச்ச ராயமர்ந்து உத்தம சோழப் பல்லவராயர் என்ற பட்டமும் பெற்று உயரிய நிலையிலிருந்துவரும் நாட்களில் இவரது ஒப்பற்ற சிவபத்தியையும் புலமைத் திறத்தையும் கண்ட இம்மன்னர் பிரான் இவரைத் திருத்தொண்டர் புராணம் பாடித் தருமாறு வேண்டிக் கொள்ளவே, இவர் தில்லை மாநகரில் தங்கி அம்பல வாணரது திருவருள் துணைகொண்டு அப் பெருநூலைப் பாடி முடித்து இவ்வேந்தனது அவைக்களத்தில் அதனை அரங்கேற்றிப் பெறற்கரும் புகழெய்தினர். இவரது பெருமைக்கேற்றவாறு இவருக்கு இம்மன்னன் பல வரிசைகள் வழங்கித் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் அளித்துப் பாராட்டுவானாயினன். இவ் வரசர் பெருமானைச் சேக்கிழா ரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்தில் பத்திடங்களில் புகழ்ந்து கூறியிருப்பது அறியற்பாலதாகும். இவ் வடிகள் இரண்டாங் குலோத்துங்க சோழன் விரும்பியவாறு திருத் தொண்டர் புராணம் இயற்றினார் என்பது சில ஆராய்ச்சி யாளரின் கொள்கை. அஃது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று. இரண்டாங் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவைக்களப் புலவராகவும் அவன் ஆட்சிக்காலம் முழுதும் நிலவிய ஒட்டக் கூத்தரையன்றி வேறு எப் புலவரையும் எந்நூலும் இயற்றும்படி அவன் வேண்டிக்கொள்ளமாட்டான் என்பது ஒருதலை. அன்றியும், இரண்டாங் குலோத்துங்கனுக்குப் பிறகு அவன் புதல்வன் இரண்டாம் இராசராசன் ஆட்சிக் காலத்தும் உயிர் வாழ்ந்திருந்து இராசராசன் உலாவும் தக்கயாகப் பரணியும் இயற்றியவரும் தம் நூல்களில் இறையனாரகப்பொருள், களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி ஆகிய தொன்னூல்களை மனமாரப் பாராட்டும் இயல்புடையவரும் சிவபத்திச் செல்வம் வாய்ந்தவரும் ஆகிய ஒட்டக்கூத்தர், தம் காலத்தில் திருத் தொண்டர் புராணம் பாடப்பெற்றிருப்பின் பக்திச் சுவை யொழுகும் அவ்வரிய நூலையும் அதனைப் பாடிய ஆசிரியரையும் தாம் இயற்றிய நூல்களில் புகழ்ந்திருப்பர் என்பது திண்ணம். அப்புலவர் பெருமான் தம் நூல்களில் திருத் தொண்டர் புராணத்தைக் குறிப்பிடாமையின் அந்நூல் அவர் காலத்திற்குப் பின்னரே இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். சேக்கிழாரடிகள் கூறியுள்ள பேரம்பலம் பொன்வேய்ந்த அனபாயன் மூன்றாங் குலோத்துங்கனே யாவன். இவன் எதிரம்பலம் பொன் வேய்ந்தான் என்று கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.2 எதிரம்பலமே பேரம்பலம் என்று வழங்கியது என்பது அறியற் பாலது. எனவே எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங் குலோத்துங்கனே பேரம்பலம் பொன் வேய்ந்த அனபாயன் என்பதும் இவன் காலத்தில் விளங்கியவரே சேக்கிழாரடிகள் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க.

சிறப்புப் பெயர்கள்

அந்நாளில் இவ் வேந்தருக்குப் பல சிறப்புப் பெயர்கள் வழங்கியுள்ளன. அவற்றுள், வீரராசேந்திரன்,3 முடிவழங்கு சோழன்,4 சோழ கேரள தேவன்,5 திரிபுவன வீர தேவன்,6 முடித்தலை கொண்ட பெருமாள்,7 உலகுடைய வந்த நாயனார்,8 இராசாக்கள் தம்பிரான்,9 உலகுய்யவந்த நாயனார்,10 தனி நாயகன்11 என்பன குறிப்பிடத் தக்கனவாம். இவன் கொங்கு நாட்டை வென்று தன்னடிப் படுத்தியமை பற்றிச் சோழ கேரளன் என்றும் தன்பால் அடைக்கலம் புகுந்த கொங்கு மன்னனுக்கு அரசளித்து முடி வழயங்கியமை பற்றி முடிவழங்கு சோழன் என்றும் மக்களால் வழங்கப் பெறுவானாயினன். இவன் ஆட்சியில் கொங்கு நாடு சோழ கேரள மண்டலம் எனவும் இதன் தலைநகராகிய கருவூர் முடி வழங்கு சோழபுரம் எனவும் பெயர்கள் எய்தியமை முன்னர்க் கூறப்பட்டுள்ளது. இவன் திரிபுவன வீரதேவன். முடித்தலைக் கொண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர்கள் பெற்றமைக்குக் காரணம் முன் விளக்கப்பெற்றுள்ளது. தில்லையம்பதியிலுள்ள மேற்கு இராசவீதி முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி என்றும் கோயிலுள்ள மூன்றாம் பிரகாரம் இராசாக்கள் தம்பிரான் திருவீதி என்றும் இவன் பெயரால் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பது சில கல்வெட்டுக்களால்1 அறியப் படுகின்றது. சோழ நாட்டில் காவிரி யாற்றிற்கு வடக்கரையி லுள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகிய திருக்கருப் பறியலூர் என்பது இவ்வேந்தன் பெயரால் தனிநாயக சதுர்வேதி மங்கலம்,2 என்று வழங்கப்பெற்று வந்தமை அவ்வூர்க் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

சில நிகழ்ச்சிகள்

இவனது ஆட்சியின் 12, 13ஆம் ஆண்டுகளில் தொண்டை மண்டலத்தில் பெருமழை பெய்தமையால் வெள்ளம் ஏற்பட்டு அங்குப் பெரும் பஞ்சம் உண்டாய செய்தி ஒரு கல்வெட்டால்3 அறியக்கிடக்கின்றது. அன்றியும், இவனது ஆட்சியின் 23, 24ஆம் ஆண்டுகளில் மழையின்மையால் நாடெங்கும் பெரும் பஞ்சம் தோன்றி மக்கட்கு இன்னல் இழைத்த செய்தி, திருவண்ணாமலை, திருப்பாம்புரம் என்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுக் களால்1 நன்கு புலனாகின்றது. அப் பஞ்சத்தில் காசுக்கு முந்நாழி நெல் விற்றதென்றும் வேளாளன் ஒருவன் தன் மகளிர் இருவருடன் 110 காசுக்குக் கோயில் மடத்திற்குத் தன்னை விற்றுக் கொண்டு அடிமையாயினன் என்றும் திருப்பாம்புரத்திலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. இத்தகைய பஞ்ச நிகழ்ச்சிகளில் செல்வராயுள்ளவர்கள், ஆற்றிற்குக் கரை போட்டும் ஏரி அமைத்தும் காடு வெட்டியும் கழனி திருத்தியும் அவற்றிற்குக் கூலியாகக் குடிமக்கட்குப் பொன்னும் நெல்லும் அளித்து அன்னோரைக் காப்பாற்றி வந்தமை அறியற் பாலதாம்.

இவனது ஆட்சியின் 22-ஆம் ஆண்டில் குகையிடி கலகம் ஒன்று நிகழ்ந்ததென்றும் அந்நாட்களில் சைவத் துறவிகளின் மடங்களாகிய பல குகைகள் அழிக்கப்பெற்றன என்றும் அங்ஙனம் அழிக்கப்பட்டவற்றுள், திருத்தருப்பூண்டியிலிருந்த குகை ஒன்று என்றும் மூன்றாம் இராசராசன் (ஆட்சியின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று2 கூறுகின்றது.) இக் குகையிடி கலகம், சோழ மன்னர்க்குக் குருமார்களாக நிலவியவர்களும், கோளகி மடம், பிட்சாவிருத்தி மடம் முதலான சைவாதீனங்கட்குத் தலைவர்களாயிருந்தவர்களும் ஆகிய வடநாட்டுப் பிராமணர்கள் விரதம், சீலம், ஞானம் ஆகியவற்றில் சிறந்த தென்னாட்டுச் சைவத் துறவிகளின் செல்வாக்கையும் மேம்பாட்டையும் குறைப்பதற்கு உண்டு பண்ணியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும், நம் குலோத்துங்கனுக்குப் பிறகு பட்டம் பெற்ற மூன்றாம் இராசராசன் ஆட்சியில் சைவத் துறவிகளின் குகைகள் மறுபடியும் சிறந்து விளங்கின என்பது கல்வெட்டுகளால் வெளியாகின்றது.

இனி, இவ்வேந்தன் ஆட்சியில் நிகழ்ந்த செயல்களுள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது இவனது 38ஆம் ஆட்சியாண்டில் சோழ நாடு அளக்கப்பெற்றமையே யாம். இந் நிகழ்ச்சியைத் தெளிவாக விளக்கக் கூடிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை யாயினும் மூன்றாம் இராஜேந்திர சோழனது கோயிலூர்க் கல்வெட்டொன்று2 இச்செய்தியை யுணர்த்துவது அறியத் தக்கது.

குலோத்துங்கனது இறுதிக்காலம்

இவனது ஆட்சியின் 40ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், கைச்சினம், ஊட்டத்தூர், திருவரன்குளம் ஆகிய ஊர்களில்3 காணப்படுதலால், இவன் நாற்பது ஆண்டுகள் வரையில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது நன்குணரக்கிடக்கின்றது. எனவே, இவன் கி. பி. 1218-ஆம் ஆண்டு சிவபெருமான் திருவடி நிழலை எய்தியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்கு இரண்டாண்டுகட்கு முன்னர் கி. பி. 1216 ஆம் ஆண்டில்4 தன் புதல்வன் மூன்றாம் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்து கொள்ளுமாறு செய்தனன். இவன் கி. பி. 1218-ல் இறந்த பின்னர் இராசராசன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்ற சில திங்கள்களில், அவனது ஆற்றலின்மையை நன்குணர்ந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் சோழ நாட்டின்மீது படையெடுத்து வந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டான். இந்நிகழ்ச்சி நம் குலோத்துங்கனது ஆட்சியின் இறுதியில் நிகழ்ந்த தென்றும் அப் பாண்டி வேந்தன் பால் பொன்னமராவதியில் அடைக்கலம் புகுந்து தனக்குரிய சோழ நாட்டை மீண்டும் பெற்றுக் கொண்டவன் இவனே என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். அன்னோர் கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. அறிவு திரு ஆற்றல்களில் சிறந்து பகைவர் எல்லோரும் நடுங்குமாறு பேராண்மை படைத்துப் பெருவீரனாக நிலவிய நம் குலோத்துங்கனை மாறவர்மன் சுந்தர பாண்டியன் போரில் வென்றிருப்பானேல் இவனைத் தான் வென்ற செய்தியைத் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் தன் கல்வெட்டுக்கள் எல்லாவற்றிலும் தவறாமல் குறித்திருப்பான் என்பது ஒருதலை. அவன் அங்ஙனம் குறிக்காமையால் அச் செய்தி ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. அன்றியும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் நம் குலோத்துங்கனுக்குப் பொன்னமராவதியில் சோணாடு வழங்கியதாகச் சொல்லப்படும் செய்தி அவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் 14 ஆம் ஆண்டு முடிய கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை. அவனது 15-ம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1231 -ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்றில் மாத்திரம் அச்செய்தி காணப்படுகின்றது.2 எனவே, அதனை உண்மைச் செய்தி எனக் கோடற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், மாறவர்மன் சுந்தர பாண்டியன் இரண்டாம் முறை நிகழ்த்திய சோணாட்டுப் போரில் தோல்வி யுற்ற சோழ மன்னனே முதற் போரில் தோல்வி எய்தி அப் பாண்டியன்பால் அடைக்கலம் புகுந்து தன் நாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டவன் என்பது அச் சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தியால்3 நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, சுந்தர பாண்டியனது இரண்டாம் படையெழுச்சியில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசனே அவனது முதற்படையெழுச்சியில் அவன்பால் அடைக்கலம்புகுந்து அவன் வழங்கிய நாட்டைப்பெற்று அரசாண்டவன் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே சுந்தரபாண்டியன் படை யெழுச்சியின்போது நம் குலோத்துங்கன் உயிருடனிருந்து அவன்பால் தோல்வி எய்தினான் என்று கூறுவது சிறிதும் பொருந்தாததொன்றாம். குலோத்துங்கனது இறுதிக் காலம் வரையில் சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் காணப்படாமையொன்றே இவன் ஆட்சிக் காலத்தில் அவன் படையெடுத்து வரவில்லை என்பதை நன்கு வலியுறுத்தவதாகும். ஆகவே சிலர் கருதுவது போல் நம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சுந்தர பாண்டியன் பால் தோல்வியுற்றுப் பேரின்னலுக்கு உள்ளாக வில்லை என்பதும் தன் வாணாள் முழுமையும் பெரு வீரனாக நிலவிப் பகை வேந்தர்கள் அடிபணிந்து திரை செலுத்தப் புகழுடன் வாழ்ந்துவந்தனன் என்பதும் அறியற்பாலனவாம்.

இனி, நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் நிலவிய குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் யாவர் என்பதைக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆராய்ந்து காண்பாம்.

1. கிளியூர் மலையமான் இறையூரன் இராசராச சேதிராயன்:1

இவன் மலையமான் மரபில் தோன்றிய ஒரு குறுநில மன்னன்; கிளியூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாடு எனப்படும் மலைய மானாட்டை அரசாண்டவன். இவன் குலோத்துங்கனுக்குப் படைத்தலைவனா யிருந்தமையோடு இவ் வேந்தன் பால் பேரன்புடையவனாகவும் ஒழுகி வந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. கி. பி. 1200 ல் திரு அறையணி நல்லூர்க் கோயிலில் மூன்று நந்தா விளக்குகள் எரிக்கும் பொருட்டு இறையிலி நிலம் வழங்கியுள்ள பெரியுடையான் இராசராச கோவலராயன் என்பான் இச் சேதிராயனுடைய புதல்வன் ஆவான்; எனவே, இம் மலையமான் மரபினர் அந்நாட்களில் சேதிராயன், கோவலராயன் என்ற இரு பட்டங்களை யுடையவராயிருந்தமை அறியற்பாலது.

2. மலையன் நரசிம்மவர்மன் ஆகிய கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்:2

இவன் மலையமான் மரபில் தோன்றிய ஒரு குறுநில மன்னன்; ஆடையூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டில் ஒரு பகுதியை ஆட்சி புரிந்தவன்; இரண்டாம் இராசாதிராசன் மூன்றாங் குலோத்துங்கன் ஆகிய இரு வேந்தர் ஆட்சிக்குப் படைத் தலைவர்களாக நிலவிய வீரர்களுள் ஒருவன். இவன், இராசாதிராசன் ஆட்சியில் திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பிப் பல்லவராயனோடு பாண்டி நாடு சென்று, ஈழ நாட்டுப்படையுடன் போர் புரிந்து வாகை சூடியவன் என்பது இலங்கைச் சரிதமாகிய மகா வம்சத்தால் உய்த்துணரப்படுகின்றது.

3. அதிகமான் இராசராச தேவன்:1

இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் கடைச்சங்க காலத்திலிருந்தவனு மாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் வழித்தோன்றல்; சேரர் மரபினன்; கங்க நாட்டிலுள்ள தகடூரிலிருந்து அந்நிலப் பரப்பை அரசாண்ட ஒரு குறுநில மன்னன். இவனது தலைநகராகிய தகடூர் இந்நாளில் தர்மபுரி என்ற பெயருடன் சேலம் ஜில்லாவில் உளது. இவன், திருவண்ணாமலைக் கோயிலுக்குத் தகடூர் நாட்டிலுள்ள மலையனூர் என்ற ஊரை இறையிலியாக வழங்கியுள்ளனன் என்பது அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால்2அறியப்படுகின்றது.

4. விடுகாதழகிய பெருமாள்:

இவன் மேலே குறிப்பிட்ட அதிகமான் இராசராச தேவனுடைய புதல்வன். சேலம் ஜில்லாவிலுள்ள கம்பயனல்லூரில் காணப்படும் ஒரு கல்வெட்டால்3 இவன்நம் குலோத்துங்கனுக் குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பது நன்கு புலனாகின்றது. இவன் கல்வெட்டுகள் தென்னார்க்காடு, வடார்க்காடு ஜில்லாக்களிலும் உள்ளன. இவனும் கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வானும் செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லனான விக்கிரம சோழச் சாம்புவராயனும் தம்முள் ஒற்றுமையுடையவர்களாயிருத்தல் வேண்டும் என்று செய்து கொண்ட உடன்படிக்கை யொன்று திருவண்ணாமலைத் தாலுகாவிலுள்ள செங்கைமாக் கோயிலில் வரையப்பெற்றுள்ளது.

5. அமராபரண சீயகங்கன்:

இவன் கங்கர் மரபினன்; இந்நாளில் கோலார் என்று வழங்கும் குவளாலபுரத்தைத் தன் தலைநகராகக் கொண்டு கங்கபாடி நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு குறுநில மன்னன். இவனைக் குவளாலபுர பரமேவரன் கங்க குலோத்தமன் சூர நாயகன் திருவேகம்ப முடையானான அமரா பரண சீயகங்கன் என்று கல்வெட்டுக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. இவன் கல்வெட்டுக்கள் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி யாண்டு முதல் 34-ம் ஆண்டு முடிய நம் தமிழகத்தில் காணப் படுகின்றன.3 இவன் பட்டத்தரசி அரியபிள்ளை என்பாள் கி. பி. 1212-ல் திரு வல்லத்திலுள்ள சிவன் கோயிலில் இரண்டு சந்தி விளக்குகள் எரித்ததற்கு நிவந்தம் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டால்4 அறியப்படுகின்றது. கி. பி. 1181-ல் இவன் புதல்வன் அருங்குன்றைப் பிள்ளையான சீயகங்கன் என்பான் திருக்காளத்தி இறைவர்க்கு ஒரு நுந்தா விளக்கு எரித்தற் பொருட்டுச் சாவா மூவாப் பசுக்கள் அளித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று5 கூறுகின்றது; இவ் வமராபரண சீயங்கனும் திருக்காளத்தி, காஞ்சி ஆகிய ஊர்களிலுள்ள திருக்கோயில்களில் நுந்தா விளக்குகள் வைத்துள்ளனன். எனவே, இவனும் இவன் குடும்பத்தினரும் சிறந்த சிவபக்தியுடையவர்களா யிருந்தனர் என்று தெரிகிறது. இவன் கன்னட மொழி வழங்கும் நாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவனாயினும் இவன் தமிழ் மொழியிலும் பெரும் பற்றுடையவனாயிருந்தமை அறியத் தக்கது. இவன் தன் நாட்டிலிருந்த அரிய புலவராகிய பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் என்ற இலக்கண நூல் ஒன்று இயற்றுவித்த செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அந்நூற்பாயிரம் இவனை அருங்கலை விநோதன் அமராபரணன் என்று பாராட்டுவது குறிப்பிடத் தக்கது.

இனி, திருவண்ணாமலைக் கோயிலுக்கு நிவந்தம் வழங்கியுள்ள பங்கள நாட்டுப் பிருதிகங்கன் அழகிய சோழனும் அகதிய கொண்டாவில் திருநாவுக்கரசு அடிகளை எழுந்தருளுவித்த அரசியின் கணவனாகிய உத்தம சோழங்கனும் நம் குலோத்துங்கன் காலத்திலிருந்த கங்கர் குலச் சிற்றரசர்கள் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.

6. அம்மையப்பன் பாண்டி நாடு கொண்டானாகிய கண்டர் சூரியன் சம்புவராயன்:

இவன் பல்லவர் மரபில் செங்கேணிக் குடியில் தோன்றியவன்; இராசாதிராசன் ஆட்சியின் பிற்பகுதியிலும் குலோத்துங்கன் ஆட்சியின் முற் பகுதியிலும் நிலவிய ஒரு படைத்தலைவன். கி. பி. 1170-ல் இவன் பாண்டி நாடு கொண்டான் என்ற சிறப்புப் பெயருடன் கல்வெட்டொன்றில்3 குறிக்கப்பட்டிருத்தலால் இராசாதி ராசன் ஆட்சியில் நிகழ்ந்த பாண்டி நாட்டுப் போர்கட்குச் சென்ற படைத் தலைவர்களுள் இவனும் ஒருவனாதல் வேண்டும் என்பது திண்ணம். இவன் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரம் என்ற கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் எடுப்பித்தனன் என்று அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன.

இனி அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழச் சம்புவராயன்,5 சீயமங்கலத்திலுள்ள கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கியுள்ள குலோத்துங்க சோழச் சம்புவராயன்; திருவோத்தூர் இறைவர்க்குத் தேவ தானமாக நிலம் அளித்துள்ள செங்கேணி அம்மையப்பன் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்பவர்களும் நம் குலோத்துங்கன் காலத்தில் இருந்தவர்கள் என்பது சில கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

7. ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோவ ரையன்:

இவன் வாணர் மரபில் தோன்றியவன்; குலோத்துங்கன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் ஒருவன். இவன் கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம் ஜில்லாக்களில்4 குலோத்துங்கனது ஆட்சிக் காலம் முழுமையும் காணப்படுவதால் இவன் அக்காலத்தில் அரசாங்கத்தில் விளங்கிய ஒரு சிறந்த தலைவன் என்பது தெள்ளிது.

8. பொன் பரப்பினான் மகதைப் பெருமாளான இராச ராச வாணகோவரையன்:

இவன் வாணர் மரபில் தோன்றிய ஒருகுறு நில மன்னன்; சேலம் ஜில்லாவிலுள்ள ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை அரசாண்டவன். இவனது மகத நாடு சேலம் ஜில்லாவின் கீழ்ப்பகுதியும் தென்னார்க்காடு ஜில்லாவின் மேற் பகுதியும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய ஒரு நிலப் பரப்பாகும். இவ் வாண கோவரையன் திருவண்ணாமலைக் கோயிலைப் பொன் வேய்ந்த காரணம் பற்றிப் பொன் பரப்பினான் மகதைப் பெருமாள் என்று அந்நாளில் வழங்கப் பெற்றுள்ளான்.5 அக் கோயில் சுவர்களில் இவனுடைய அறச் செயல்களையும் வீரச் செயல்களையும் கூறும் இருபத்திரண்டு பாடல்கள் வரையப் பெற்றிருத்தலை இன்றும் காணலாம்.6 இவன் நம் குலோத்துங்கனுக்குச் சில போர் நிகழ்ச்சிகளில் படைத்தலைவனா யிருந்தனன் என்று தெரிகிறது.

9. கூடலூர் அரச நாராயணன் ஆளப்பிறந்தான் வீர சேகரக் காடவராயன்:

இவன் பல்லவர் மரபில் தோன்றிய ஒரு தலைவன்: தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள கூடலூர் என்ற நகரில் வாழ்ந்து கொண்டிருந்தவன்; குலோத்துங்கன் ஆட்சியில் திருமுனைப்பாடி நாடு எனப்படும் நடு நாட்டில் பாடிகாவல் அதிகாரியாய் விளங்கியவன். திருவதிகை, திருவெண்ணெய் நல்லூர், திருமாணிகுழி, திருவண்ணாமலை, எலவானாசூர், சித்தலிங்கமடம் ஆகிய ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றால் அவ்வூர்க் கோயில்களுக்கு இவன் அளித்துள்ள நிவந்தங்களும் அணிகலன்களும் செய்துள்ள திருப்பணிகளும் நன்கு புலனாகின்றன.

10. கூடல் ஏழிசைமோகன் மணவாளப் பெருமாள் வாணிலை கண்ட பெருமாளாகிய இராசராசக் காடவ ராயன்:

இவன், மேலே குறிப்பிட்ட பல்லவர் குலத் தலைவன் வீரசேகரக் காடவராயனுடைய புதல்வன்; தன் தந்தைக்குப் பிறகு திருமுனைப்பாடி நாட்டில் நாடு காவல் அதிகாரியாயிருந்தவன், குலோத்துங்கன் நிகழ்த்திய போர் ஒன்றில், வாள்கொண்டு பேராண்மையுடன் பொருது பகைவனை வென்று வாகை சூடிய காரணம் பற்றி அரசனால் வாணிலை கண்ட பெருமாள் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவன்.2 இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் உணர்ந்த நம் குலோத்துங்கன் அவனுக்குத் தன் மகளை மணஞ் செய்து கொடுத்துப் பற்பல சிறப்புகள் செய்தான்.3 அந்நாள் முதல் இவன் மணவாளப் பெருமாள் என்று சோழ இராச்சியத்தில் யாண்டும் வழங்கப் பெற்றனன் என்று தெரிகிறது. இவனுக்கு அழகிய சீயன், அவனி யாளப் பிறந்தான், காடவன், கோப்பெருஞ் சிங்கன் என்ற வேறு பெயர்களும் உண்டு. கோப்பெருஞ்சிங்கன் என்னும் பெயர் இவன் புதல்வனுக்கும் அக்காலத்தில் வழங்கியிருத்தலால் இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன்என்று வரலாற்றாராய்ச்சி யாளர்கள் கூறுவர். குலோத்துங்கனுடைய மகளை மணந்து இவ்வேந்தனது அன்பிற்குரியவனாய்ப் பெருமையுடன் வாழ்ந்து வந்த இப்பல்லவர் தலைவனே பிற்காலத்தில் சோழ இராச்சி யத்தின் அழிவிற்கு வழி தேடியவன் ஆவன்.1 இவன் நன்றி மறந்து, தன்னலங் கருதிச் செய்த அடாத செயல்களே, கி. பி. பதின் மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் சோழராச்சியத்தில் அமைதி யின்மையையும் ஆட்சியில் தளர்ச்சியையும் உண்டு பண்ணி விட்டமையோடு இறுதியில் பேரரசு வீழ்ச்சி எய்தி மறைந் தொழியுமாறும் செய்துவிட்டன என்பது ஒருதலை. அந்நிகழ்ச்சிகள் எல்லாம் அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்கப்படும்.

இனி, கி. பி. 1187-ல் குலோத்துங்க சோழன் நியாயபரிபாலன சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் அமைத்தவனும் சிதம்பரத்திற் கண்மையில் பரகேசரி நல்லூரில் விக்கிர சோழேச்சுரம் என்ற ஆலயம் எடுப்பித்தவனு மாகிய சேந்தமங்கலமுடையான் அரையன் எதிரிலி சோழனும்,2 செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருக்கச்சூர், கடப்பேரி, திருமழிசை என்னும் ஊர்களில் கோயில்களுக்கு நிவந்தம் வழங்கியுள்ள குலோத்துங்க சோழ கண்ணப்பன் பஞ்சந்தி வாணனாகிய இராசராச நீலகங் கரையனும்,3 கி. பி. 1183-ல் திட்டக்குடியில் திருமால் கோயிலுக்கு 5-வேலி நிலம் இறையிலியாக அளித்தவனும் அந்நிலப் பரப்பில் பாடிகாவல் அதிகாரியாக நிலவியவனு மாகிய இராசராச வங்கார முத்தரையனும்,4 புதுக்கோட்டை நாட்டில் சில கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ள திருக்கொடுங்குன்ற முடையான் கேரள ராசனாகிய நிஷத ராசனும், அந்நாட்டு ஊருடைப் பெருமாளான எதிரிலி சோழக் கடம்பராயனும்,2 நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் விளங்கிய அரசியல் தலைவர்கள் என்பது இன்னோர் கல்வெட்டுக்களால் நன்கு அறியக்கிடக்கின்றது.

நம் குலோத்துங்கனது ஆளுகையின் தொடக்கத்தில் கடப்பை, நெல்லூர், சித்தூர் ஜில்லாக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த சில தெலுங்கச் சோழர்கள் இவ்வேந்தற்குத் திறை செலுத்தாமல் முரண்பட்டிருந்தனர் என்பதும் பிறகு இவன் அவர்களைப் போரில் வென்று முன்போல் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசர்களாகச் செய்துவிட்டான் என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. பொத்தப்பி, நெல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசாண்டு கொண்டிருந்த அக் குறுநில மன்னர்கள் இவனது ஆணைவழி ஒழுகி உற்றுழியுதவி வந்தமையும் அறியற்பாலதாம். அத்தெலுங்கச் சோழருள், மதுராந்தக பொத்தப்பிச் சோழன், அவன் புதல்வன் நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்போர் ஈண்டு குறிப்பிடத் தக்கவராவர். நெல்லூர்3 கடப்பை4 ஜில்லாக்களில் காணப்படும் சில கல்வெட்டுக்களால் இவர்கள் நம் குலோத்துங்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசர்கள் என்பது நன்கு புலனாகின்றது.

சோழ இராச்சியத்திலிருந்த குறுநில மன்னர்களும் தலைவர்களும் தம் சக்கரவர்த்தியின் அரசாங்கம் இனிது நடைபெறுமாறு தாம் நடந்து கொண்டமையோடு போர் நிகழ்ச்சிகளில் படைத்தலைமை வகித்து உதவி புரிந்தும் வந்தனர். இராச்சியத்தின் நலங்கருதி இவர்கள் தங்களுக்குள் உடன் படிக்கை செய்து கொள்வதும் உண்டு. அத்தகைய உடன் படிக்கைகள் சில கோயில்களில் வரையப் பெற்றிருத்தலை5 இந் நாளிலும் பார்க்கலாம். சக்கரவர்த்தியின் உடன்பாடு பெறாமலே குறுநில மன்னர்கள் தமக்குள் ஒற்றுமை கருதி உடன்படிக்கை செய்து கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கம் சோழ இராச்சியம் நாளடைவில் பெருகிப் பேரரசர்க்கு அடங்காமல் தனியரசு புரிய வேண்டும் என்ற எண்ணத்தையும் விருப்பத்தையும் சிற்றரசர்கட்கு உண்டு பண்ணி விட்டது என்பது ஒருதலை. எனவே நம் குலோத்துங்கன் காலத்திற்குப் பிறகு சில குறுநில மன்னர்களும் தலைவர்களும் தமக்குட்பட்டிருந்த நிலப் பரப்பிற்கு தாமே யரசராகி எவருக்கும் அடங்காமல் தனியரசு நடத்தத் தொடங்கினர். இதனால்தான் கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அழிவெய்தும் நிலையை அடைந்தது என்பது உணரற்பாலது.

மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256)


மூன்றாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1218ஆம் ஆண்டில் இறந்தவுடன், அதற்கு இரண்டாண்டுகட்கு முன் கி. பி. 1216ல்1 இளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்த மூன்றாம் இராசராச சோழன் சோழ இராச்சியத் திற்குச் சக்ரவர்த்தியாக முடி சூட்டப்பெற்றான். இவன் மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய புதல்வன் என்று கூறுவதற்குத் தக்க ஆதாரங்கள் இதுகாறும் வெளிவந்துள்ள கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. எனினும், இவன் அவ் வேந்தனுடைய மகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இச்செய்தி இனி வெளிவரும் கல்வெட்டுக்
களால் உறுதியெய்துதல் கூடும்.

சோழ மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து கொண்ட இராசகேசரி பரகேசரி என்ற பட்டங்களுள் இவன் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன் ஆவான். எனினும், சில கல்வெட்டுக்கள் இராசகேசரியைப் பரகேசரி என்றும் பரகேசரியை இராசகேசரி என்றும் இவன் காலத்தும் இவன் தந்தையின் காலத்தும் குறிப்பிடுகின்றன.2 அவையனைத்தும் கல்வெட்டுக்களைப் பொறிப்போரால் நேர்ந்த பிழைகளே எனலாம்.

இவ் வேந்தன் கல்வெட்டுக்களில் இரு மெய்க்கீர்த்திகள் காணப்படு கின்றன. அவற்றுள் ஒன்று, சீர்மன்னி இருநான்கு திசை விளங்கும்3என்று தொடங்குகின்றது. இதில் வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படாமையின் இஃது ஆராய்ச்சிக்குப் பயன்படுவதன்று. சீர்மன்னு மலர்மகளும் சிறந்ததனி நிலைச் செல்வியும்1 என்னும் தொடக்கத்தையுடையது. இது நீண்ட மெய்க்கீர்த்தியாயிருத்தலால் சோணாட்டுச் சிறப்பையும் இவனது குணம் ஆட்சி இவற்றின் பெருமையையும் இவனுடைய பட்டத்தரசியின் அருங்குணங்களையும் எடுத்துரைப்பதாக உளது.

இராசராசன் ஆளுகையில் சோழ இராச்சியத்தின் நிலை

இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்தது. இவனுடைய முனனோர்கள் தம் பேராற்றலால் உயர்நிலைக்குக் கொணர்ந்த சோழர் பேரரசை அதன் நிலை குன்றாதவாறு தாங்கிப் புரத்தற்குரிய ஆண்மையும் வீரமும் இவன்பால் இல்லாமற் போயினமையே அதன் வீழ்ச்சிக்கு முதற் காரணம் ஆகும். அன்றியும் சோழ இராச்சியத்திற்கு வடமேற்கே ஹொய்சளரும், தெற்கே பாண்டியரும் வல்லரசுகளாகித் தம் பேரரசை நிறுவுதற்குப் பெரிதும் முயன்று அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று வந்தனர். நம் இராசசாசன் காலத்தில் அவ்விரு பேரரசர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றமையால்தான் நடுவிலிருந்த சோழ இராச்சியம் அவர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டு அவர்கள் இராச்சியங்களுக்குள் ஒடுங்கி மறைந்தொழியாமல் ஒருவாறு நிலைபெற்றிருந்தது எனலாம். சோழ இராச்சியத்திற்கு வடகிழக்கே நெல்லூர்ப் பக்கத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த தெலுங்கச் சோழர்கள், தமக்கு வடக்கேயிருந்த காகதீயரை உற்ற நண்பராகவும் உறவினராகவுங் கொண்டு வலிமை எய்தி வந்தனர். இந்நிலையில், மகத நாட்டு வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டு காடவராயர் முதலான குறுநில மன்னர்கள் நம் இராச ராசனோடு பகைமை கொண்டு உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டுபண்ணித் தாமே தனியரசு நடத்த முயன்றனர். எனவே, வலிகுன்றிய வேந்தன் ஒருவன் இத்துணை அல்லல்களையும் போக்கித் தன் இராச்சியத்தில் அமைதி நிலவச் செய்வது இயலாததொன்றாம். ஆகவே, இவன் ஆட்சியில் பல்வகை இன்னல்களும் உணடாயினமையில் வியப்பொன்று மில்லை. பொதுவாக நோக்குமிடத்து, இவன் ஆளுகை நல்லோரையில் தொடங்கவில்லை என்பது தெள்ளிதிற் புலனாகும்.

மாறவர்மன் சுந்தர பாண்டியனது முதற்படையெழுச்சி

இராசராசன் இளவரசுப் பட்டம் பெற்ற ஆண்டாகிய கி. பி. 1216-ல் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் பாண்டி நாட்டில் முடிசூட்டப் பெற்றனன். அவன் அறிவு ஆற்றல்களிற் சிறந்த பெருவீரன் ஆவான். பலஆண்டுகளாகத் தன் முன்னோர்களாகிய பாண்டி வேந்தர்கள் சோழர்க்கு அடங்கி அன்னோர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராக வாழ்ந்து வந்ததையும் தன் இளமைப் பருவத்தில் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்து அங்குப் பலபல அழிவு வேலைகளை நிகழ்த்திச் சென்றதையும் அவன் மறந்தவனல்லன். ஆகவே, வாய்ப்பு நேருங்கால் சோழ நாட்டில் அத்தகைய செயல்களைச் செய்து தன் வெற்றிப் புகழை யாண்டும் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவனது இளம் உள்ளத்தில் வேரூன்றிக் கிடந்தது. அதற்கேற்ப, பேராற்றல் படைத்த பெரு வேந்தனாகிய மூன்றாங் குலோத்துங்கன் கி. பி. 1218ஆம் ஆண்டில் இறந்தான். பிறகு அறிவும் வன்மையும் குன்றிய அவன் புதல்வன் இராசராசன் சோணாட்டில் அரியணை ஏறினான். சோழ நாட்டின்மேல் படையெடுப்பதற்குத் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுந்தர பாண்டியன், தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே உரிய காலம் என்று கருதினான். எனவே, குலோத்துங்கன்இறந்த பின்னர், நம் இராசாசன் முடிசூடிய சில திங்கள்களில் கி. பி. 1219 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சுந்தர பாண்டியன் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சோழ மண்டலத்தின்மீது படையெடுத்து வந்து இச் சோழ மன்னனைப் போரில் வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகரங்களாகிய தஞ்சாவூரும் உறையூரும் பாண்டி நாட்டு வீரர்களால் கொளுத்தப்பட்டன;1 பல மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் ஆடலரங்குகளும் மணி மண்டபங்களும் இடிக்கப்பெற்றன. நீர் நிலைகள் அழிக்கப்பட்டன. சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பான் தன் மீது பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்கு முற்காலத்தில் பரிசலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் சோழ நாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது என்றும் பிற எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என்றும் திருவெள்ளறையில் பாடலாகவுள்ள சுந்தர பாண்டியன் கல்வெட்டொன்று1 கூறுகின்றது. அதனால் அப் பாண்டி வேந்தன் தன் படையெடுப்பில் சோழ நாட்டில் எத்தகைய அழிவு வேலைகளைச் செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. ஆகவே பல தலைமுறைகளாகச் சோணாட்டு மக்கள் தம் வாழ்நாளில் கண்டறியாத பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகுமாறு இம்முறைதான் நேர்ந்தது எனலாம்.

இனி இப் போர் நிகழ்ச்சியில் தோல்வியுற்ற இராசராசன், தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை விட்டு நீங்கி, வேறிடஞ் சென்று கரந்துறையும் நிலையை எய்தினான். வாகை சூடிய சுந்தர பாண்டியன், அந்நாளில் சோழர்க்குத் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் எனப்படும் பழையாறை நகர்க்குச் சென்று, அங்கு ஆயிரத்தளி அரண்மனையிலிருந்த சோழனது அபிடேக மண்டபத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டான். பிறகு அவ்வேந்தன் தில்லையம்பதிக்குச் சென்று பொன்னம்பலவாணரை தரிசித்துவிட்டுப் பாண்டி நாட்டிற்குத் திரும்புவானாயினன். அங்ஙனம் சென்றவன் தன் நாட்டிலுள்ள நகரங்களுள் ஒன்றாகிய பொன்னமராவதியில் சில நாட்கள் வரையில் தங்கியிருந்த காலத்தில் நாட்டை இழந்த இராச ராசனோடு தன் தூதர்கள் மூலம் சமாதானம் பேசத் தொடங்கினான். பிறகு, அப்பாண்டி மன்னன் இவனைப் பொன்னமராவதிக்கு அழைப்பித்துத் தனக்கு ஆண்டு தோறுங் கப்பஞ் செலுத்திக்கொண்டு சோழ நாட்டைஅரசாண்டு வருமாறு ஆணையிட்டுத் தலைநகரையும் பிறவற்றையும் அளித்தனன். தன் நாட்டைப் பெற்ற ராசராசனும் முடிகொண்ட சோழபுரத்திற்குச் சென்று முன்போல ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது மூன்றாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள், அவனைச் சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்1 எனவும், சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்2 எனவும் கூறுவதால் அவன் ராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றியமையும் பிறகு அந்நாட்டை இவனுக்குத் திரும்ப அளித்தமையும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் கி. பி. 1219-ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

இனி, திருவெள்ளறையில் செய்யுள் வடிவிலுள்ள கல்வெட்டொன்று முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இராச ராசனை வென்று கைப்பற்றிய சோணாட்டைத் திரும்ப இவனுக்கு அளித்த போது அதில் ஒரு பகுதியைப் பிரித்துத் தனக்கு உதவி புரிந்த மகதையர் கோனாகிய வாணாதிராயனுக்கு வழங்கினான் என்று கூறுகின்றது. சோழ நாட்டின் தென் பகுதியில் புதுக்கோட்டை பக்கங்களில் காணப்படும் வாணர்களின் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்துதல் அறியத் தக்கது.

இச் செய்திகள் எல்லாம் இராசராசன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லையாயினும் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக் களில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.4 தோல்வி யெய்தியவன் போர் நிகழ்ச்சிகளைத் தன் கல்வெட்டுக்களில் கூறாமல் விடுதலும் வெற்றி பெற்றவன் அவற்றையெல்லாம் தன் கல்வெட்டுக்களில் குறிப்பிடுதலும் இயல்பேயாம்.

இனி, சுந்தர பாண்டியன் தான் கைப்பற்றிய சோழ நாட்டைச் சில திங்கள்களுக்குள் இராசராசனுக்கு அளித்தமைக்குக் காரணம் போசள மன்னனாகிய இரண்டாம் வல்லாள தேவனும் அவன் மகன் வீர நரசிம்மனும் இடையிற் புகுந்து இச் சோழ மன்னனுக்குப் பல்வகையாலும் உதவிபுரிய வந்தமையேயாம். அன்னோர் முயற்சி இல்லையேல் சுந்தர பாண்டியன் சோழ நாட்டைத் திரும்பக் கொடுத்திருக்க மாட்டான் என்பது திண்ணம். அவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இராச ராசனுக்கு உதவி புரிந்திருத்தல் வேண்டும் என்பது, அவர்கள் புனைந்துகொண்ட சோழ இராச்சியப் பிரதிட்டாசாரியன்1 பாண்டிய கஜகேசரி2 சோழ குல ஏகரட்சகன் என்னும் பட்டங்களால் நன்கு வெளியாகின்றது. அன்றியும், சகநாத விசயம் என்ற நூலின் ஆசிரியராகிய உருத்திரப்பட்டர் என்பார் இரண்டாம் வல்லாள தேவன் ராசராச சோழனுக்கு உதவி புரிந்து அவனை அரியணை ஏற்றினான் என்று அந்நூலில் கூறியிருப்பது4 இச் செய்தியை உறுதிப்படுத்துதல் காண்க.

போசள வேந்தனாகிய இரண்டாம் வல்லாளத்தேவன் இராசராச சோழன்பால் இத்துணை அன்புபூண்டு ஒழுகி யமைக்குக் காரணம் அவன் ஒரு சோழர்குலப் பெண்மணியை மணந்திருந்தமை5 என்பது அறியற்பாலது. அன்றியும், தென் புலத்தில் தோன்றியுள்ள புதிய வல்லரசொன்று நடுவில் அமைந்த சோழ இராச்சியத்தைக் கவர்ந்து கொள்ளும்படி விட்டுவிட்டால், அது வாய்ப்பு நேருங்கால் தன் பேரரசுக்கும் இடையூறு விளைக்க முயலும் என்று அவ் வல்லாள தேவன் கருதியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இக் காரணங்கள் பற்றியே அவன் இராசராசனுக்கு உதவி புரிந்தனன் எனலாம்.

இராசராசனது ஐந்தாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்த கலகம்

இனி, தஞ்சை ஜில்லாவிலுள்ள தலைச்செங்காடு,1 திருவேள்விக்குடி,2 உடையாளூர்3 என்ற ஊர்களில் காணப்படுங் கல்வெட்டுக்கள் இராசராசனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஒரு கலகம் நிகழ்ந்தது என்றும் அதில் ஊர்க் கணக்குப் புத்தகங்களையும் பத்திரங்களையும் பிறவற்றையுங் இழக்கும்படி நேர்ந்தது என்றும் கூறுகின்றன. இக் கலக நிகழ்ச்சிக்குரிய காரணம் தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் மகதநாட்டுக் குறுநில மன்னனாகிய வாணகோவரையன் என்பான் இராசராசனோடு முரண்பட்டு, கி. பி. 1221-ம் ஆண்டில் சோழ நாட்டின்மீது படையெடுத்து உள்நாட்டில் குழப்பத்தையும் கலக்கத்தையும் உண்டுபண்ணிப் பலவற்றை அழித்திருத்தல் வேண்டும் என்பது திருவேள்விக்குடியிலுள்ள கல்வெட்டால்4 உய்த்துணரக் கிடக்கின்றது. அவ் வாணகோவரையன் மூன்றாங் குலோத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியிலேயே சோழ மன்னனோடு பகைமை கொள்ளத் தொடங்கி விட்டான் என்பது திருவண்ணாமலையிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப் படுகின்றது. எனவே, குலோத்துங்கன் இறந்த பிறகு இராச ராசன் ஆட்சியின் முற்பகுதியில் அவன் சோழ நாட்டின்மேல் படையெடுத்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். பல்லவர் குலக் குறுநில மன்னனாகிய கோப்பெருஞ் சிங்கனும் வாண கோவரையனும் ஒருங்கு சேர்ந்து படையெடுத்து அக் கலகத்தை நிகழ்த்தியிருத்தலும் இயல்பேயாம். திருவேள்விக்குடிக்கு அண்மையிலுள்ள நீடுரில் கி. பி. 1231-ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று6 அந்நிலப்பரப்பு முன்பு கோப்பெருஞ் சிங்கன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்று உணர்த்துவது அவ் வுண்மையை வற்புறுத்தும் எனலாம். அவ்விருவர் செயலாலும் சோழநாடு அல்லற்பட்டுக் கொண்டிருந்ததை யறிந்த போசள மன்னனாகிய இரண்டாம் வீரநரசிம்மன் என்பான் கி. பி. 1222-ல் அந்நாட்டிற்குப் பெரும்படையுடன் மீண்டும் வந்து, அவர்களை யடக்கி நம் ராசராசனுக்கு உதவி புரிந்தான் என்று தெரிகிறது. எனினும் வாணகோவரையனும் கோப்பெருஞ் சிங்கனும் மாறவர்மன் சுந்தரபாண்டியனோடு சேர்ந்துகொண்டு சோழ நாட்டிற்குப் பல்வகையாலுந் தீங்குகள் இழைக்க முயன்றமையோடு ராசராசனுக்கு அடங்காமல் தனியரசு புரியவும் தொடங்கிவிட்டனர். ஆகவே, துவாரசமுத்திரத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்த போசள மன்னர்கள் சோழ நாட்டையும் இராசராசனையும் காப்பாற்றுதற் பொருட்டு அடிக்கடி வரவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுக் கொண்டிருந்தது எனலாம். தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள நெல்வாயில் அறத்துறையில் கி. பி. 1226-ல் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்று2 போசள வீரநரசிம்மன் படையெடுத்து வந்து நாட்டையும் கோயில்களையும் அழித்து விட்டுக் கடவுட் படிமங்களைக் கொண்டுபோய் விட்டான் என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். அவன் அத்தகைய அழிவு வேலைகளைச் செய்த அந்நாடு, வாணகோ வரையனுக்காதல் கோப்பெருஞ் சிங்கனுக்காதல் அக்காலத்தில் உரிய தாயிருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆகவே அந் நிலப்பரப்பு அவ் வீரநர சிம்மனுக்குப் பகைப்புலமாக இருந்தது என்பதும் அது பற்றியே அவ்வழிவு வேலைகளை அவன் அங்கு நிகழ்த்தினன் என்பதும் நன்கு துணியப்படும்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனது இரண்டாம் படையெழுச்சி

கி. பி. 1219-ல் நடைபெற்ற போரில் தோல்வியெய்திப் பாண்டியனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த இராசராசன், வளம் பொருந்திய நாட்டையுடைய தனக்கு வலி மிகுதியாய் உளது என்று எண்ணிக்கொண்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு அவனது ஏவலைப் பொருட்படுத்தாம லிருந்தமையோடு அவனுக்குத் திறை கொடுக்கவும் மறுத்தனன். அதனையுணர்ந்த சுந்தரபாண்டியன் பெருஞ்சினங் கொண்டு கி. பி. 1231-ல் சோழ நாட்டின்மேல் இரண்டாம் முறை படையெடுத்துவந்தான். இராசராசன் தன் நிலையை நன்குணராமல் நாற்படையுடன் சென்று அவனை எதிர்த்துப் போர்புரிவானாயினன். அப்போது நிகழ்ந்த கடும்போரில் இவன் யானைப்படையும் குதிரைப் படையும் பேரழிவிற் குள்ளாயின. சோணாட்டு வீரர்கள் பல்லாயிரவர் போர்க்களத்தில் உயிர் துறந்தனர். அங்குக் குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதாயிற்று. இறுதியில் இராச ராசன் பெருந்தோல்வியெய்தித் தன் நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலையை அடைந்தான். இவனுடைய உரிமை மகளிரும் சிறை பிடிக்கப் பெற்றனர். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது இரண்டாம் படை யெழுச்சியினால் சோழ நாடு எத்துணைத் துன்பங்களுக்கு உள்ளாயிற்று என்பது அளவிட்டுரைக்குந்தரத்ததன்று. இப் போரில் வாகை சூடிய சுந்தர பாண்டியன், அந்நாட்களில் சோழர்க்குத் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழ புரத்திற்குச் சென்று, எட்டுத் திசைகளிலும் வெற்றித் தூண் நிறுவி, அந்நகரத்தில் விசயாபிடேகமும் வீராபிடேகமும் செய்து கொண்டான். அவ்வாண்டிலும் அதற்குப் பின்னரும் வரையப் பெற்ற அவன் கல்வெட்டுக்களெல்லாம் சீகோ மாறவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிடேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியதேவர் 1 என்று அவனைப் பாராட்டிக் கூறுவது உணரற்பாலதாம்.

இனி சுந்தர பாண்டியனது முதற் படையெழுச்சியில் நாடிழந்த இராசராசனுக்கு அவன் சோணாடு வழங்கிய செய்தியை விளக்கிக் கூறும் அவனது மெய்க்கீர்த்தி, இரண்டாம் படையெழுச்சியில் அவன் முடிகொண்ட சோழபுரத்திற்குச் சென்று அங்கு விசயாபிடேகமும் வீராபிடேகமும் செய்து கொண்டானென்று உணர்த்துகின்றதே யன்றித் தோல்வி யெய்திய இராசராசன் அதன் பின்னர் எங்குச் சென்றனன் என்பதைக் கூறிற்றில்லை. ஆயினும் கத்திய கர்ணாமிர்தம் என்ற கன்னட நூலொன்றும்1 வடஆர்க்காடு ஜில்லா திருவயிந்தி புரத்திலுள்ள மற்றொரு கல்வெட்டும்2 இராசராசன் நாடிழந்த பிறகு நிகழ்ந்த செய்திகளை நன்கு விளக்குகின்றன. அவை கிடைத்திலவேல் அக்காலப்பகுதியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளைச் சிறிதும் அறிய இயலாதென்பது ஒருதலை. அவற்றுள் கத்திய கர்ணாமிர்தம் என்னும் நூல், சுந்தர பாண்டியன்பால் தோல்வியுற்று நாடிழந்த இராசராசன் தன் நண்பனாகிய குந்தளநாட்டரசனிடம் உதவிபெறும் பொருட்டு வடதிசை நோக்கிச் சென்றான் என்றும், அப்போது காடவர் குல மன்னன் ஒருவன் இவனை இடையில் போரில் வென்று பரிவாரத்துடன் சிறை பிடித்துத் தன் தலைநகராகிய சேந்த மங்கலத்தில் சிறையிட்டனன் என்றும், அத்துயர நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன் என்பான் பெரும் படையுடன் புறப்பட்டு வந்து காவேரியாற்றின் வடகரையில் திருவரங்கத்திற்கு அண்மையில் தங்கித் தன் தண்ட நாயகனைக் கொண்டு பகைஞரை வென்று இராசராசனைச் சிறை மீட்பித்தான் என்றும் கூறுகின்றது. அந்நூலில் சொல்லப்பட்டுள்ள காடவர் குல மன்னன் கோப்பெருஞ் சிங்கனே யாவான் என்பது திருவயிந்திரபுரக் கல்வெட்டால் நன்கு வெளியாகின்றது. அப்பல்லவர் தலைவன் இராசராசனை எவ்விடத்தில் போரில் வென்று சிறைப்பிடித்தனன் என்பதை அந்நூல் அறிவித்திலது. எனினும், கோப்பெருஞ் சிங்கனது வயலூர்க் கல்வெட்டு,3 அவன் இராசராசனை வட ஆர்க்காடு ஜில்லா வந்தவாசிக்கருகிலுள்ள தெள்ளாறு என்னும் ஊரில் போரில் வென்று சிறைபிடித்தான் என்றுணர்த்துகின்றது.

திருவயிந்திபுரக் கல்வெட்டு, இராசராசன் போசள நரசிம்மனால் சிறையினின்றும் மீட்கப்பெற்ற வரலாற்றை விரித்துரைப்பது அறியற்பாலதொன்றாம். அக்கல்வெட்டு கூறுவது கோப்பெருஞ்சிங்கன் சோழச் சக்கரவர்த்தியைச் சேந்த மங்கலத்தில் சிறையில் வைத்துவிட்டு சோழ இராச்சியத்தை அழிப்பதை யறிந்த போசள வீரநரசிம்மன், சோழ மண்டல பிரதிஷ்டாசாரியன் என்னும் சிறப்புப் பெயரை நிலைநிறுத்தாமல் எக்காளம் ஊதுவதில்லை என்று கூறித் துவார சமுத்திரத்திலிருந்து படையெடுத்து வந்து இடையிலிருந்த மகதராச்சியத்தை அழித்து அந்நாட்டு வாணர்குல வேந்தனையும் அவன் உரிமைச் சுற்றத்தினரையும் சிறைபிடித்துக்கொண்டு, திருவரங்கத்திற்கு அண்மையில் கொள்ளிடத்தின் வடகரையில் இரண்டு மைல் தூரத்திலுள்ள பாச்சூரிலே தங்கிக் கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளுவிக்கும்படி தன் படைத் தலைவர்களாகிய அப்பண்ண தண்டநாயகன் சமுத்திர கொப்பைய தண்டநாயகன் ஆகிய இருவர்க்கும் உத்தரவிட, அவர்கள் கோப்பெருஞ்சிங்கனிருந்த எள்ளேரியும்1 சல்லியூர் மூலையும்1 சோழ கோனிருந்த தொழுதகையூரும்2 அழித்து, வீரகங்க நாடாழ்வான் சீனத்தரையன், ஈழத்துப் பராக்கிரம பாகு முதலான படைத் தலைவர்களையும் கொன்று, கொள்ளிச் சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு தொண்டை மானல்லூர்3 உள்ளிட்ட ஊர்களையும் அழித்து, திருப்பாதிரிப் புலியூரிலே தங்கித் திருவதிகை, திருவக்கரை4 உள்ளிட்ட ஊர்களையும் அழித்து, கெடில ஆற்றுக்குத் தெற்கும் சேந்த மங்கலத்திற்குக் கிழக்கும் உள்ள ஊர்களில் குடிகளைத் துன்புறுத்திப் பெண்டிர்களைச் சிறைபிடித்துப் பொருள் களையுங் கொள்ளைகொண்டு, சேந்தமங்கலத்தின் மேல் படையெடுத்துச் செல்ல முயன்றபோது, கோப்பெருஞ்சிங்கன் நடுக்கமுற்றுச் சோழச் சக்கரவர்த்தியைச் சிறையினின்று விடுத்து எழுந்தருளிவிப்பதாகப் போசள வீரநரசிம்மனுக்கு விண்ணப் பிக்க, அவனும் அச்செய்தியைத் தன் படைத் தலைவர்கட்கு அறிவிக்கவே, அவர்களும் அதற்கு உடன்பட்டு அங்ஙனமே சோழச் சக்கரவர்த்தியை எதிர்கொண்டு வரவேற்றுச் சோழ இராச்சியத்திற்கு அழைத்துவந்தனர் என்பதாம்.

இனி, இராசராசன் சிறையினின்றும் மீட்கப்பெற்றுத் தன் இராச்சியத்தைப் பெற்ற வரலாற்றைக்கூறும் அக் கல்வெட்டு திருப்பாதிரிப்புலியூர்க்கு மேற்கே மூன்று மைல் தூரத்திலிலுள்ள திருவயிந்திரபுரத்தில் வரையப்பெற்றிருத்தலால் அந்நிகழ்ச்சிக ளெல்லாம் முடிவுற்ற பின்னர் அவ்வூரில்தான் போசள தண்ட நாயகர்கள் இச்சோழ மன்னன்பால் விடைபெற்றுக் கொண்டு திரும்பியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து.5 அன்றியும் அஃது இராசராசனது பதினாறாம் ஆட்சி யாண்டில் பொறிக்கப் பட்டிருத்தலால் இவ்வேந்தன் அவ்வாண்டில்தான் தனக்குரிய சோழ நாட்டை மீண்டும் பெற்று ஆட்சிபுரியத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, கி. பி. 1232ஆம் ஆண்டில் நம் இராசராசன் சோழ இராச்சியத்தை முன்போல ஆட்சிபுரியும் நிலையை எய்தினன் எனலாம். இதுகாறும் விளக்கியவாற்றால் மாறவர்மன் சுந்தர பாண்டியனது இரண்டாம் படையெழுச்சி யினால் நாடிழந்த இராசராசன் தன் நண்பனது உதவி பெறும்பொருட்டு வடபுலஞ் சென்று கொண்டிருந்தபோது பல்லவர் குலச் சிற்றரசனாகிய கோப்பெருஞ்சிங்கனால் தெள்ளாற்றுப் போரில் சிறைபிடிக்கப் பெற்றுச் சேந்த மங்கலத்தில் வைக்கப்பட்டிருந்தனன் என்பதும், பிறகு அதனை யறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் என்பவன் கி. பி. 1232-ல் படையெடுத்து வந்து கோப்பெருஞ்சிங்கனை வென்று இராசராசனைச் சிறைமீட்டு, இவனுக்குரிய சோழ இராச்சியத்தைப் பெற்று இவன் அரசாண்டு வருமாறு செய்தனன் என்பதும் நன்கு புலனாதல் காண்க. அவ்வாண்டிற்குப் பின்னர் எத்தகைய இடையூறுமின்றித் தன் வாழ்நாள் முழுதும் இராசராசன் ஆட்சி புரிந்து வந்தமை அறியற்பாலதாகும்.

இனி, வீரநரசிம்மன் படைத் தலைவர்கள் நம் இராச ராசனைச் சிறைமீட்கும் பொருட்டுக் கோப்பெருஞ்சிங்கனோடு போர்புரிந்து கொண்டிருந்த நாட்களில், அப் போசள வேந்தன் நேரில் மாறவர்மன் சுந்தர பாண்டியனோடு போர் புரிந்து அவன் ஆட்சிக் குட்பட்டிருந்த சோணாட்டின் தென் பகுதியைத் தான் கைப்பற்றி அதனை இராசராசனுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்க தொன்றாம். காவேரி யாற்றங்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் வீரநரசிம்மனுக்கும் சுந்தர பாண்டிய னுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்றும், வெற்றியெய்திய போசள மன்னனுக்குப் பாண்டியன் பணிந்து கப்பஞ் செலுத்தினான் என்றும், கத்திய கர்ணாமிர்தன் என்னும் நூல் கூறுகின்றது. அன்றியும், வீரநரசிம்மன் கல்வெட்டுக்கள்,2 அவன் பாண்டிய னோடு போர் புரிந்தமையும் உணர்த்துகின்றன. எனவே, சோழநாடு பாண்டிய ராச்சியத்திற்குள் அடங்கி அதில் ஒடுங்கி போகாதவாறு சுந்தரபாண்டியனை வென்று, அந்நாட்டைக் காப்பாற்றி அது முன்போலவே சோழ மன்னனது ஆட்சியின்கீழ் ஒரு தனி நாடாக நிலவும்படி செய்த பெருமை வீர நரசிம்ம னுக்கே உரியது எனலாம். இராசராசனுக்குப் பிறகு சோழ நாட்டில் ஆட்சி புரிந்த மூன்றாம் இராசேந்திர சோழன், வீரநரசிம்மன் புதல்வன் வீரசோமேசு வரனை மானன் என்று தன் கல்வெட்டுக்களில்1 குறித்திருத்தலால் நம் இராசராசன் அவ் வீர நரசிம்மன் புதல்வியை மணந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது2. ஆகவே, இத்தகைய தொடர்பு ஏற்பட்டிருந்தமையால்தான் இராசராசனுக்குப் போசள மன்னர்களின் பேருதவி அடிக்கடி கிடைத்துவந்தது என்பது ஒருதலை.

இராசராசன் ஆட்சியில் சோழ இராச்சியத்தின் பரப்பும் உள்நாட்டுக் குழப்பமும்

இவ்வேந்தன் கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு, வடார்க்காடு, செங்கற்பட்டு, சேலம், சித்தூர், கடப்பை, நெல்லூர் ஆகிய ஜில்லாக்களில் காணப்படுவதால், இவன் தந்தையின் ஆட்சிக்குட்பட்டுச் சோழ ராச்சியத்திலிருந்த நாடுகளுள் பாண்டி நாடு ஒன்று நீங்க, பிற நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம். எனினும், சிற்றரசர் களுள் பலர் இவனைப் பெயரளவில் தம் சக்கரவர்த்தியாகக் கொண்டு தம்மனம் போனவாறு நடந்துவந்தனர் என்று தெரிகிறது. எனவே, அன்னோர் சுயேச்சை யெய்தித் தாம் தனியரசு புரிதற்கு அடிகோலிக் கொண்டிருந்தனர் என்பது தெள்ளிது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் சோழ நாட்டின் மேல் இருமுறை நிகழ்த்திய படை யெழுச்சிகளும், சுயேச்சையாய்த் தனியரசு புரியக் காலம் கருதிக் கொண்டிருந்த பல்லவர் குலத்தலைவன் முதல் கோப்பெருஞ்சிங்கனும் மகத நாட்டுக் குறுநில மன்னன் வாணகோவரையனும் நிகழ்த்திய கலகங்களும் பொதுவாக மக்கள் வாழ்க்கையில் அச்சத்தையும் அமைதியின்மையையும் உள்நாட்டில் உண்டுபண்ணிவிட்டன. அன்றியும், அந்நிகழச்சிகளால் சோழ நாட்டில் இராசத் துரோகம், சிவத்துரோகம், நாட்டுத் துரோகம் ஆகிய குற்றங்கள் மிகுந்துவிட்டன என்பது ஆங்காங்கு காணப்படுங் கல்வெட்டுக்களால் நன்கறியக்கிடக்கின்றது. அக் குற்றங்கள் கல்வெட்டுகளில் குறிப்பாகக் கூறப்பட்டிருத்தலால் அவற்றின் இயல்பினைத் தெளிவாக அறிய இயலவில்லை. இராசராசனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 1224-ல் சீர்காழியில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்று1 சில இராசத் துரோகிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்காக நியமிக்கப்பெற்ற அரசாங்க அதிகாரிகளால் பெருவிலையில்2 விற்கப்பட்டன என்று கூறுகின்றது; வலிவலத்தில் காணப்படும் கல்வெட் டொன்று3 எட்டு அரசியல் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர், கி. பி. 1230-ல் இராசத் துரோகத்துக்குள்ளாயினார். நிலங்கள் எல்லாவற்றையும் பிடுங்கிப் பெருவிலையில் முப்பத்து மூவாயிரம் காசுகளுக்கு விற்றனர் என்று உணர்த்துகின்றது. திருவெண்காட்டிலுள்ள கல்வெட்டொன்று4 கி. பி. 1234-ல் இராசத் துரோகக் குற்றத்திற்காகப் பொருள் பறிமுதல் செய்யப்பெற்ற செய்தியை அறிவிக்கின்றது. கோயில் திரு மாகாளத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு.5 சில இராசத் துரோகிகளுக்குரிய ஐந்து வேலி நான்கு மா நிலங்களும் அரசாங்க ஆணையின்படி கி. பி. 1237-ல் பிடுங்கிப் பெருவிலையில் பதின்மூவாயிரம் காசுகளுக்கு விற்று, அதனைச் சேக்கிழான் வயிராதராயன் என்ற அதிகாரி அரசாங்கக் கருவூலத்தில் சேர்ப்பித்தனன் என்று தெரிவிக்கின்றது. கும்பகோணத்திற் கண்மையிலுள்ள சிவபுரத்தில் கி. பி. 1239-ல் எழுதப்பட்டுள்ள கல்வெட்டொன்று1அவ்வூர் கோயிலைச் சேர்ந்த இரண்டு சிவப்பிராமணர்கள் புரிந்த சிவத்துரோக இராசத் துரோகக் குற்றங்களைச் சிறிது விரித்துரைக்கின்றது. அஃது அவர்கள் இருவரும் சிவபுரத் தெழுந்தருளியுள்ள இறைவியின் அணிகலன்களைத் கவர்ந்து தம் காதற் பரத்தைக்குக் கொடுத்தும் தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த கோயிற்குரிய நிவந்தப் பொருளை வேறு வகையில் செலவிட்டும், தம் நிலத்திற்குரிய அரசாங்க வரியைக் கொடாமல் மறுத்தும், மற்றும் பல வழிகளில் தவறாக நடந்தும், அரசனது ஆணைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்க அலுவலாளரை அடித்தும், கன்னட வீரர்களோடு சேர்ந்துகொண்டு மக்களைச் சொல்லமுடியாத துன்பங்களுக்குள்ளாக்கி அவர்களிடமிருந்து ஐம்பதினாயிரம் காசுகள் வசூலித்தும், பல்வகைக் குற்றங்கள் புரிந்தனர் என்று கூறுகின்றது. அன்றியும், அக்கல்வெட்டு அவர்கள் தாம் இழைத்த அத்துணைச் சிவத் துரோக இராசத் துரோகக் குற்றங்களுக்காக மாகேச்சுரராலும் ஊர்ச் சபையாராலும் தண்டிக்கப்பட்டனர் என்று உணர்த்துகின்றது. சிவபுரக் கல்வெட்டில் காணப்படும் இச்செய்திகளால் அந்நாளில் எவ்வகைக் குற்றங்கள் சிவத் துரோக இராசத் துரோகங்களாகக் கருதப்பட்டுள்ளன என்பதை ஒருவாறு அறிந்துகொள்ளலாம். ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற சீகாழி, வலிவலம், திருவெண்காடு, கோயில் திருமாகாளம், சிவபுரம் ஆகிய ஊர்களெல்லாம் சோழ நாட்டில் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ளவை என்பது யாவரும் அறிந்ததேயாம்.

இராசராசன் ஆட்சியில் போசளர் நிலை

இவ் வரசற்கு உற்றுழி யுதவவேண்டிப் போசள மன்னனும் அவன் படைத்தலைவர்களும் ஆற்றல் வாய்ந்த பெரும் படைகளுடன் சோழ நாட்டிற்கு அடிக்கடி வர நேர்ந்தமை முன்னர் விளக்கப் பட்டுள்ளது. காஞ்சிமா நகரிலுள்ள அருளாளப் பெருமாளுக்கு வீர நரசிம்மன் படைத் தலைவர் களுள் அம்மண்ண தண்டநாயகன் என்பான் கி. பி. 1230-ல் திருவிளக்கிற்கு நிவந்தமும்1 கொப்பைய தண்டநாயகன் என்பான் கி. பி. 1231-ல் திரையாலம் என்ற ஊரும்2வழங்கிய செய்திகள் அங்குள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அங்ஙனமே வீரநர சிம்மன் புதல்வனான வீரசோமேசுரன் படைத்தலைவர்களுள் இருவர், கி. பி. 1236, 1238-ஆம் ஆண்டுகளில் காஞ்சி அருளாளப் பெருமாளுக்கு நிவந்தம் அளித்துள்ளமை சில கல்வெட்டுக்களால்3 அறியப்படுகின்றது. கி. பி. 1240-ல் கொப்பைய தண்ட நாயகன் உடன் பிறந்தோனான மல்லய தண்ட நாயகன் என்பவன் அப்பெருமாளுக்குத் திருவிளக்கிற்கு நிவந்தம் அளித்த செய்தியை அக்கோயிற் கல்வெட்டொன்று4 கூறுகின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குங்கால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் போசளத் தண்டநாயகர்களின் தலைமையில் பெரிய நிலைப்படை யொன்று காஞ்சிமாநகரில் போசள மன்னர்களால் வைக்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாதல் காண்க. இவனது ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியத்திலிருந்த சிற்றரசர்களான கோப்பெருஞ்சிங்கன், வாணகோவரையன், சேதிராயன், சம்புவராயன் என்போர் இவ் வேந்தனுக்கு அடங்காமல் முரண்பட்டுப் போயினமையால், இவனைப் பாதுகாத்தற்கு வந்த போசள மன்னர்கள் இத்தகைய நிலைப் படையொன்றைத் தம் படைத் தலைவர்களின் கீழ் அப்பெரு நகரில் அமைப்பது இன்றியமையாததாயிற்று எனலாம். போசளர்களின் கல்வெட்டுக்கள்5 திருமழபாடி, திருகோகர்ணம் முதலான ஊர்களில் காணப்படுவதால் அன்னோர் சோழ நாட்டில் மிக்க ஆதிக்கம் எய்தி வந்தனர் என்று தெரிகிறது.

இராசராசன் ஆட்சியின் சமயநிலை

இவன் தந்தையின் ஆட்சிக் காலம் போலவே இவன் காலத்திலும் சைவ சமயம் உயர் நிலையில் இருந்தது என்பது இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் எல்லாச் சிவன் கோயில் களிலும் மிகுதியாக உள்ளமையால் நன்குணரக் கிடக்கின்றது. வைணவம், சைனம் முதலான சமயங்களையும் இவன் தன் முன்னோர்களைப் போல் ஆதரித்துள்ளனன். ஆகமத் தொடர்புடைய சைவ மடங்களும், பாசுபதம், காபாலிகம் முதலான அகச்சமய மடங்களும், இவன் காலத்தில் சோழ இராச்சியத்தில் யாண்டும் பரவியிருந்தன. இவன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த ஓர் அரிய செயல், சித்தாந்த சாத்திரங்களுக் கெல்லாம் முதனூலாகவுள்ள சிவஞான போதம் என்ற ஒப்பற்ற நூல் திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவரால் எழுதப்பெற்றமையேயாம். திருவண்ணாமலையிற் காணப்படும் கல்வெட்டொன்று,1 கி. பி. 1232-ல் திருவெண்ணெய்நல்லூ ருடையார் மெய்கண்டதேவர் என்பார் செங்குன்றநாட்டு மாத்தூராகிய இராசராசநல்லூரில் மெய்கண்டீச்சுரமுடைய சிவபெருமானை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தமாக இறையிலி நிலம் அளித்தனர் என்றும் அவ்வூரிலேயே மெய்கண்ட தேவப் புத்தேரி என்ற ஏரி ஒன்று அமைத்தனர் என்றும் கூறுகின்றது. இக்கல்வெட்டு வரையப்பெற்ற காலம் இதில் சொல்லப்படும் பெரியாரின் பெயர், அவருடைய ஊர், அவர் புரிந்துள்ள அறச் செயல்கள் ஆகியவற்றை ஆராயுமிடத்து, அவரே தமிழ் மொழியில் சிவஞானபோதம் இயற்றிய அறிஞர் பெருமானாக இருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும்.

இராசராசன் மனைவியரும் புதல்வனும்

இராசராசனுடைய பட்டத்தரசி புவனமுழுதுடையாள் எனப்படுவாள். இவ்வரசியை வாணர்குல நிலைவிளக்கு எனவும், இயல்வாழவும் இசைவாழவும் இமயமலை மகளறத்தின் - செயல் வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார் எனவும் இவ்வேந்தன் மெய்க்கீர்த்தி குறிப்பிடு வதால், இவள் மகத நாட்டுச் சிற்றரசனாகிய வாணகோவரையனுடைய புதல்வியாயிருத்தல் வேண்டும் என்பதும் இயற்றமிழ் இசைத் தமிழ்களில் பயிற்சி பெற்று அவற்றை வளர்த்தலில் பெரிதும் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பதும்1 தெள்ளிதிற் புலப்படுகின்றன. போசள மன்னன் வீரநரசிம்மனுடைய மகளையும் நம் இராசராசன் மணந்திருந்தான் என்று தெரிகிறது. அவ்வரசியைப் பற்றிய செய்திகளை இப்போது அறிய இயல வில்லை. இராசராசனுக்குப் பிறகு அரசாண்ட மூன்றாம் இராசேந்திர சோழன், இவ்வரசனுடைய புதல்வன் என்பதில் ஐயமில்லை. இதுகாறும் எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இதற்குரிய ஆதாரம் கிடைத்திலது.

இராசராசனது இறுதிக்காலம்

இவனது ஆட்சியின் 41-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள்2 கிடைக்காமையால் இவன் கி. பி. 1256-ல் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்குப் பத்து ஆண்டுகட்டு முன்னரே கி. பி. 1246-ல்3 தன் புதல்வன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, அதுமுதல் அவ் விளவரசனே நாட்டை ஆண்டு வருமாறு செய்துவிட்டனன். அவன் பேராற்றல் படைத்த பெரு வீரனாதலின், பல அல்லல்களுக்குட்பட்டுத் தளர்ந்த நிலையிலிருந்த இராசராசன் சோழ இராச்சியத்தைத் தன் புதல்வனாகிய அவன்பால் ஒப்புவித்துவிட்டுத் தான் ஓய்வு பெற்றிருந்தனனாதல் வேண்டும். கி. பி. 1246-க்குப் பிறகு இராசராசன் கல்வெட்டுக்கள் மிக அருகியும் இராசேந்திரன் கல்வெட்டுக்கள் மிகுந்தும் காணப்படுவதற்குக் காரணம் இதுவே யாதல் வேண்டும்.

குறுநில மன்னர்களும் தலைவர்களும்

இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியில் பல்லவர் குலத் தலைவனாகிய முதற் கோப்பெருஞ்சிங்கனும் மகத நாட்டு வாணகோவரையனும் இவ்வேந்தற்குப் பகைஞராகி முரண் பட்டமையும் அதுபற்றி அவர்களைப் போசள வீர நரசிம்மன் வென்றடக்க நேர்ந்தமையும் முன்னர் விளக்கப் பட்டுள்ளன. எனினும், அவ்விருவரும் முரண்பட்ட நிலையில்தான் இருந்து வந்தனர். பிறகு, தொண்டை மண்டலத்திலிருந்த பல்லவர் குலத் தலைவன் சம்புவராயன் என்பவனும் தன் தாயத்தினனாகிய கோப்பெருஞ்சிங்கனோடு சேர்ந்துகொண்டு அவன் விருப்பத்திற் கேற்ப நடக்கத் தொடங்கினான். அந்நிலையில், இராச ராசன்பால் பன்னாட்களாகப் பேரன்புடன் ஒழுகி வந்த மலையமானாட்டுச் சிற்றரசன் இராசராச சேதிராயனுக்குக் கோப்பெருஞ் சிங்கன் தன் மகளை மணஞ் செய்து கொடுத்து அவனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான். எனவே, காடவராயனாகிய கோப் பெருஞ்சிங்கன், வாணகோவரையன், சம்புவராயன், சேதிராயன் என்ற குறுநில மன்னர்கள் இராச ராசன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் முரண்பட்டிருந்தமை தெள்ளிது. ஆயினும் அத்தலைவர்கள், இராசராசனுக்குக் கீழ்ப் படிந்த சிற்றரசர்களாகவே கல்வெட்டுக்கள் வரைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நெல்லூரி லிருந்து ஆட்சி புரிந்து கொண்டி ருந்த முதல் திக்கன் என்ற விசய கண்ட கோபாலனும் சித்தூர் ஜீல்லாவிலிருந்த புடொலியரசனும்4 வீர நரசிங்க தேவ திருக்காளத்தி தேவனாகிய யாதவராயனும்5 இராசராசன் ஆட்சிக்குட் பட்டிருந்த தெலுங்கச் சிற்றரசர் ஆவர். அவர்கள் இராசராசனது இறுதிக் காலம் வரையில் இவன்பால் அன்புடன் ஒழுகி வந்தமை அறியற்பாலதொன்றாம்.

மூன்றாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1246 - 1279)


இவன் மூன்றாம் இராசராச சோழனுடைய புதல்வன் என்பதும் கி. பி. 1246ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்று அக்காலமுதல் தானே ஆட்சியை ஏற்று நடத்தி வந்தனன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. இவனை இராசராச சோழனுடைய தம்பி என்று சிலர் கூறுவர். அங்ஙனம் கொள்வதற்கு ஒரு சிறிதும் ஆதாரமின்மை அறியற்பாலது. அன்றியும், இராசராசனுக்கும் இராசேந்திரனுக்கும் ஆட்சியுரிமை பற்றிச் சோணாட்டில் போர் நிகழ்ந்ததென்றும் இவ்விருவரும் சோழ நாட்டை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக அரசாண்டு வந்தனரென்றும் இறுதியில் இராசேந்திரன் இராசராசனைக் கொன்றுவிட்டு நாடு முழுவதையும் கைப்பற்றித் தன்னாட்சிக் குட்படுத்திக் கொண்டானென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியுள்ளனர். அன்னோர் முடிவுகளுக்குரிய சான்றுகள் யாண்டும் காணப்படாமையால் அவையனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்திகள் ஆக மாட்டா என்பது ஒருதலை.

இவன், இராசகேசரி பரகேசரி என்ற இரு பட்டங்களுள் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

இவனது மெய்க்கீர்த்தி வடமொழியில் வரையப் பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப் பெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் அவை நிகழ்ந்த கால வரிசையின்படி அமைந்துள்ளனவா என்பது தெரியவில்லை. அம் மெய்க்கீர்த்தியும், இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1253 முதல்தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள், இவனை மனுகுல மெடுத்து நெறிமுடி சூடியருளிய கோப்பரகேசரி வர்மன் எனவும் சமத ஜகதேக வீரன்3 கூறுகின்றன. கர்நூல் ஜில்லாவிலுள்ள திரிபுராந்தகம் என்ற ஊரில் பொறிக்கப்பெற்றுள்ள இவன் கல்வெட்டொன்று,4 இவனை இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசாதிராச நரபதி என்று சிறப்பித் துரைக்கின்றது. அவற்றையெல்லாம் நுணுகி யாராயுங்கால், இவ்வேந்தன் இயல்பாகவே சிறந்த வீரனாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் தன் தந்தையின் காலத்தில் வீழ்ச்சியெய்தி உயர் நிலையை இழந்த சோழ இராச்சியத்தைத் தன் ஆற்றலால் மீண்டும் ஓரளவு நன்னிலைக்குக் கொண்டு வந்திருத்தல் வேண்டும் என்பதும் அம் முயற்சியில் பாண்டியரை வென்று தன்னடிப்படுத்தியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன.

இவன் பாண்டியரோடு நிகழ்த்திய போர்

இவன் தன் இளமைப் பருவத்தில் இருமுறை முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் சோழ நாட்டின்மேல் படையெடுத்து வந்து நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் எல்லா வற்றையும் நேரில் பார்த்தவனாதலின் அத்தகைய செயல்களைத் தன் காலத்தில் பாண்டி நாட்டிலும் செய்து காட்டிச் சோழ நாட்டிற்குத் தன் காலத்தில் நேர்ந்த அவமானத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தினைத் தனது உள்ளத்தில் உறுதியாகக் கொண்டிருந்தான். அதற்கேற்ப இவன் பேராற்றல் படைத்த பெரு வீரனாகவும் விளங்கினான். அந்நிலையில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி. பி. 1238-ல் இறந்தான். அவனுக்குப்பின் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் ஆட்சிபுரிந்து இறந்தனன். அவனுக்குப் பிறகு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் பட்டம் பெற்று பாண்டி நாட்டை அரசாளு வானாயினன்.1 அவன் தன் முன்னோரைப்போல் அத்துணை ஆற்றலும் வீரமும் படைத்தவன் அல்லன். ஆகவே, நம் இராசேந்திரன் அதுவே தக்க காலமென்று கருதிப் பாண்டி நாட்டின்மீது படையெடுத்துச் சென்று இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனைப் போரில் வென்று அவனைத் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாக்கினான். இப்போர் நிகழ்ச்சியில் பாண்டி நாடு பல்வகைத் துன்பங்களுக்கு உள்ளாயிற்று எனலாம். இராசேந்திரனது ஆட்சியின் ஏழாம் ஆண்டு மெய்க்கீர்த்தி, இவன் இராசராசனுக்கு இரு முடிகளைச் சூட்டி மூன்று ஆண்டுகள் முடிய அந்நிலையிலிருந்து ஆளுமாறு செய்தனன் என்று கூறுகின்றது.2 ஆகவே இராசேந்திரன் பாண்டி நாட்டை வென்று இராசராசன் ஆளுகைக்குட்படுத்தி, அவன் சோணாடு பாண்டி நாடு ஆகிய இரண்டையும் ஆட்சி புரிவதற்கு அடையாளமாக அவனுக்கு இரு முடிகள் சூட்டியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். திரிபுராந்தகத்திலுள்ள கல்வெட்டொன்று இவனை இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகாராசாதிராச நரபதி என்று கூறுவதால், இவன் பாண்டி வேந்தர் இருவரோடு போர்புரிந்து வெற்றி யெய்தி யிருத்தல் வேண்டும் என்பது நன்கறியப் படுகின்றது. அவ்விருவருள் ஒருவன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆவன்; மற்றையோன் அவனுக்கு முன் பாண்டி நாட்டை யாண்டவனாகிய இராண்டாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியனாக இருத்தல் கூடும். நம் இராசேந்திரன் தன் இளமைப் பருவமுதல் கொண்டிருந்த எண்ணத்தை நிறைவேற்றிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

போசள மன்னன் பகைமையும் இராசேந்திரன் பாண்டி நாட்டை இழந்தமையும்

போசள வேந்தனாகிய வீரநரசிம்மனுக்குப் பிறகு பட்டம் பெற்ற அவன் மகன் வீரசோமேசுவரன் என்பவன் தன்னைப் பாண்டிய குல சம்ரக்ஷகன்1 என்றும் இராசேந்திரனைப் போரில் வென்றவன் என்றும்2 கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே, அவன் இராசேந்திரனோடு பகைமை கொண்டு இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு உதவி புரிந்தனன் என்பது நன்கு துணியப்படும். வேதாரணியத்திலுள்ள கல்வெட்டொன்று3 வீரசோமேசுவரனுடைய படைத்தலைவனாகிய சிங்கண்ண தண்ட நாயகன் என்போன் கி. பி. 1241-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்த போது இடிக்கப்பட்ட திருக்கோடிக்குழகர் கோயில் கி. பி. 1246-ல் ஐம்பதிநாயிரம் காசு கொண்டு மீண்டுங் கட்டி கும்பாபிடேகஞ் செய்யப்பெற்றது என்று கூறுகின்றது. அன்றியும் புதுக்கோட்டை நாட்டில் திருமெய்யத்திலுள்ள இரு கல்வெட்டுக்கள்4 வீரசோமேசுவரனுடைய தண்டநாயகருள் ஒருவனாகிய இரவிதேவன் என்பான் கான நாட்டைக் கைப்பற்றிய செய்தியை அறிவிக்கின்றன. ஆகவே போசள அரசன் வீரசோமேசுவரன், இராசேந்திரனோடு பல்வேறிடங்களில் போர் புரிந்து, சோழர் ஆட்சிக் குட்பட்டிருந்த பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பாண்டியரே சுயேச்சையாக அதனை ஆண்டு வருமாறு செய்து விட்டான் என்று தெரிகிறது. அப்போர் நிகழ்ச்சிகளை இப்போது விளக்கமாக அறிய இயல வில்லை. இராசேந்திரனும் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனும் வீர சோமேசுவரனைத் தம்முடைய மாமன் என்று கல்வெட்டுக்களில்5 குறித்துள்ளனர். அவன் சில ஆண்டுகளில் சோழர்க்கு உதவி புரிந்து கொண்டும் சில ஆண்டுகளில் பாண்டியர்க்கு உதவி புரிந்து கொண்டும்1 இருந்தமை குறிப்பிடத்தக்கது. பாண்டியர் பேரரசு நிறுவ முயலுங்கால் தாம் சோழர்க்கு உதவுவது போல் அவர்களை அடக்குவதும், சோழர் உயர் நிலையெய்த முயலுங்கால் தாம் பாண்டியர்க்கு உதவுவது போல இவர்களை அடக்குவதும் போசள மன்னர்கள் மிகச் சாதுரியமாகக் கையாண்டு வந்த அரசியற் கொள்கைகளாம். அவர்கள் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவ்வாறு செய்து வந்தனர் போலும்.

இராசேந்திரனும் தெலுங்கச் சோழரும்

நெல்லூர், சித்தூர், கடப்பை ஜில்லாக்களில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தெலுங்கச் சோழர்கள் மூன்றாம் இராசராச னிடத்தில் மிக்க அன்புடையவர் களாய் அவன் பேரரசுக் குட்பட்டுக் குறுநில மன்னராயிருந்து வந்தமை முன்னர்க் கூறப்பட்டுளது. அன்னோர் பெருவலி படைத்தவராதலின் இராசராசனுக்கு உற்றுழி உதவியும் வந்தனர் எனலாம். திக்க நிருபதி எனப்படும் கண்ட கோபாலனே இராசராசன் காலத்தில் நெல்லூரிலிருந்து அரசாண்ட தெலுங்கச் சோழன் ஆவான்.2 அவன் நம் இராசேந்திரனுக்கும் உற்ற நண்பனாய்த் தக்க சமயங்களில் உதவிபுரிந்து வந்தான். நிர்வசனோத்தர ராமாயணம் என்னுந் தெலுங்கு நூலின் ஆசிரியராகிய திக்கந சோமயாஜி என்பார், தம் நூலின் முன்னுரையில் திக்க நிருபதி, சம்புவராயன், சேதிராயன், காடவராயன் என்ற சிற்றரசர்களை வென்று அடக்கினான் என்று கூறியிருத்தல்3 ஈண்டு அறியற்பாலதொன்றாம். அன்றியும், அவ்வாசிரியர், அத்தெலுங்க அரசன் போசள வீரசோமேசுவரனோடு போர் புரிந்து சோழர்க்கு உதவி புரிந்தமையால் சோழ தாபனா சாரியன் என்ற பட்டம் பெற்றனன் என்பர்.4 அச் செய்திகளெல்லாம் கண்ட கோபாலன் சோழர்க்குப் பகைஞராயினார் எல்லோரையும் போரில் வென்று அன்னோர்க்கு உதவி புரிந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்துதல் காண்க.

இனி, சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த காஞ்சி மாநகரில் இராசேந்திரனது 29ஆம் ஆட்சி யாண்டாகிய கி. பி. 1245 -க்குப்1 பிறகு சோழர்கள் கல்வெட்டுக்கள் காணப்பட வில்லை. அன்றியும், நம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் ஒன்று கூட அங்குக் காணப்படவில்லை. ஆனால், கண்டகோபாலன் கல்வெட்டுக்கள் காஞ்சியிலும் அதனைச் சூழ்ந்த நிலப் பரப்பிலும் உள்ளன.2 ஆகவே, அப்பகுதியில் சம்புவராயன் கோப்பெருஞ் சிங்கன் என்போர் அல்லல் விளைத்து வந்தமையால் இராசேந்திரன் அதனைக் கண்ட கோபாலனுக்கு அளித்திருத்தல் வேண்டும். அன்றியும், சோழ இராச்சியத்தைச் சூழ்ந்து அண்மையிலிருந்த குறுநில மன்னர் பேரரசர் ஆகிய எல்லோரும் இராசேந்திரனுக்கும் பகைவர்களாகவே இருந்தனர். அதனையறிந்த இவ்வேந்தன் மிகச் சேய்மையிலுள்ளவனும் தனக்குற்ற நண்பனும் பேராற்றல் படைத்தவனும் ஆகிய கண்ட கோபாலனது தொடர்பினைத் தான் அண்மையில் அமைத்துக் கொள்வது நலமென்று கருதிக் காஞ்சிமா நகரைச் சார்ந்த நிலப் பரப்பை அவனுக்குக் கொடுத்திருத்தலுங் கூடும். அஃது எவ்வாறாயினும், அவனது ஆட்சி வடக்கே நெல்லூர் முதல் தெற்கே செங்கற்பட்டு வரையில் பரவியிருந்தது எனலாம். அவன் தொண்டை மண்டலத்தின் வட பகுதியைச் சோழர் பேரரசுக்கு உட்பட்டே ஆட்சிபுரிந்து வந்தமை குறிப்பிடத் தக்கது.

இராசேந்திரன் வட இலங்கையில் நிகழ்த்திய போர்

இவன் வீர ராட்சசர் மிகுந்த வட இலங்கையை வென்றமையால் இராமனேயாவன் என்று இவனது மெய்க் கீர்த்தி கூறுகின்றது. அதில் குறிப்பிடப்பெற்ற வட இலங்கை தெற்கேயுள்ள சிங்கள நாடன்று என்பது திண்ணம். அன்றியும், அது கோதாவரியாற்றின் கழிமுகத்திலுள்ள இலங்கையுமாகாது.1 எனவே, அது நம் தமிழ் நாட்டிலுள்ள ஊர்களுள் ஒன்றாதல் வேண்டும். கடைச் சங்க காலத்திலிருந்த சிற்றரசருள் ஒருவனாகிய ஓய் மானாட்டு நல்லியக்கோடன் என்பவன் மாஇலங்கை என்னும் நகரின் தலைவன் என்று சிறுபாணாற்றுப் படையும் புறநானூற்றிலுள்ள 176ஆம் பாடலும் உணர்த்துகின்றன.2 அம்மாவிலங்கை தொண்டை மண்டலத்திலுள்ளதோர் ஊராகும். அங்கிருந்து கொண்டு அம்மண்டலத்தின் ஒரு பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த குறுநில மன்னனாகிய சம்புவராயனை நம் இராஜேந்திரன் போரில் வென்ற செய்தியைத்தான் இவனது கல்வெட்டு அவ்வாறு புகழ்ந்துள்ளது என்க. சம்புவராயருள் சிலர் தம்மை வீரராட்சசன் என்று கூறிக் கொண்டிருத்தலும்3 அதனை வலியுறுத்தா நிற்கும். திக்க நிருபதி, காஞ்சிமா நகரின் ஆட்சி யுரிமையைப் பெறுவதற்குமுன் சம்புவராயன் சேதிராயன் முதலானோர் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றனன் என்று திக்கந சோமயாஜி என்பார் தம் தெலுங்கு இராமாயணத்தில் கூறியிருப்பதால், சம்புவராயனோடு இராசேந்திரன் நிகழ்த்திய போரில் கண்ட கோபாலனும் படையுடன் வந்து இவனுக்கு உதவி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

இனி, இராசேந்திரன் நடத்திய போர்கள் எல்லாம் எவ் வெவ்வாண்டில் நிகழ்ந்தன என்பது தெளிவாகப் புலப்பட வில்லை. எனினும், அவையனைத்தும் கி. பி. 1253ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இராசேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியத்தைத் தன் முன்னோர் காலத்திலிருந்ததுபோல உயர்நிலைக்குக் கொண்டுவர முயன்று அதில் சிறந்த வெற்றியும் பெற்றனன் என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஆகூழின்மையால் இவனது ஆட்சியின் பிற் பகுதியில் சோழ இராச்சியம் மீண்டும் தன் உயர்நிலையை யிழந்து வீழ்ச்சி எய்துவதாயிற்று.

போசள மன்னர்கள் மீண்டும் இராசேந்திரனோடு நட்புக் கொண்டமை

பாண்டி நாட்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாணடியனுக்குப் பிறகு முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் கி. பி. 1251-ல் அரியணை ஏறினான். அவன் இயல்பாகவே பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன்; பிற்காலப் பாண்டியருள் ஈடும் எடும்புமற்றவன். அவனைக் கண்டு பெரிதும் அஞ்சிய வீரசோமேசுவரன், தான் பகைமைகொண்டு முன்னே தீங்கிழைத்த இராசேந்திரனோடு நட்புக்கொள்ளத் தொடங்கினான். திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள சிவாயம்1 மகா தானபுரம்2 திருவானைக்கா3 என்ற ஊர்களிலும் திருவண்ணா மலையிலும்4 காணப்படும் சில கல்வெட்டுக்கள், கி. பி. 1251-ம் ஆண்டில் அவ்விருவரும் நண்பராயிருந்தனர் என்பதை உறுதிப்படுத்துவன ஆகும். திருச்சோற்றுத்துறையிலுள்ள இரு கல்வெட்டுக்கள்5 அந்நட்புரிமை வீரசோமேசுவரனுடைய மகன் வீரராம நாதன் காலத்தும் நிலைபெற்று இருந்தது என்பதை நன்கு புலப்படுத்து கின்றன. அன்றியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா விலுள்ள அன்பில்6 கண்டராதித்தம்7 நத்தமாங்குடி8 ஆகிய ஊர்களிலுள்ள சில கல்வெட்டுக்கள் அவ்வூர்களைத் தன்னகத்துக் கொண்ட நிலப்பரப்பு அவ்வீர ராமனாதன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்றுணர்த்துகின்றன. திருவரங்கத்திற்கு வடக்கே யுள்ள கண்ணனூரே அவனுக்குத் தலைநகராக விளங்கியது. அவனது ஆட்சியும் கி. பி. 1255 ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்றதாதல் வேண்டும். அவ்வூரில் போசளரால் எடுப்பிக்கப்பெற்ற போசளேச்சுரம் என்ற கோயிலும் இடிந்து அழிந்து கிடக்கும் அவர்களது கோட்டையும் இருத்தலை இன்றுங் காணலாம். முதலில் சோழர்க்கு உதவிபுரிய வந்த போசளர் பிறகு சோணாட்டு ஆட்சியிலும் உரிமை பெற்றமை ஈண்டு அறியத்தக்கது.

முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் படையெழுச்சியும் சோழ இராச்சியத்தின் வீழ்ச்சியும்

பெரு வீரனாகிய சுந்தர பாண்டியன், தான் கி. பி. 1251-ல் முடி சூட்டப்பெற்ற பிறகு பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி அதனை உயர் நிலைக்குக் கொணரக் கருதினான். அவ்வெண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சில ஆண்டுகள் வரையில் தன் நாட்டில் படைதிரட்டி அதனைப் பெருக்கிக் கொண்டான். தன் படையின் பெருக்கத்தையும் ஆற்றலையும் நன்கறிந்து கொண்டபின்னர், அப்பாண்டி வேந்தன் கி. பி. 1257-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்து இராசேந்திரனைப் போரில் வென்று தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாகச் செய்து விட்டான்; அன்றியும், இவனுக்கு உதவி புரியவந்த போசள வீரசோமேசுவரனை வென்று அவன் நாட்டிற்குத் துரத்தினான். மீண்டும் அச்சோமேசுவரன் சுந்தரபாண்டிய னோடு கி. பி. 1264-ல் போர் தொடங்கியபோது கண்ணனூரில் நடைபெற்ற போரில் கொல்லப் பட்டான்.1 பிறகு, அப் பாண்டி மன்னன், கோப் பெருஞ்சிங்கனது சேந்த மங்கலத்தை முற்றுகையிட்டு அவனைத் தன் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னனாக ஆக்கிவிட்டு, மகத நாட்டையும் கொங்கு நாட்டையும் கைப்பற்றி இறுதியில் தெலுங்கச் சோழனாகிய கண்ட கோபாலனைப் போரிற் கொன்று அவனது தலைநகராகிய நெல்லூரில் வீராபிடேகஞ் செய்து கொண்டனன்.2 எனவே, சுந்தர பாண்டியனது பேரரசு தெற்கே குமரிமுனை முதல் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையில் பரவியிருந்தது என்பது நன்கு துணியப்படும். சோழ இராச்சியம் தன் பெருமை இழந்து அப்பேரரசின் கீழ் அடங்கி அதற்குத் திறை செலுத்தும் சிறு நாடாயிற்று. அதனை யாண்டு கொண்டிருந்த இராசேந்திர சோழனும் சிற்றரசன் ஆயினான். இவன் ஆற்றலும் வீரமும் ஒருங்கே படைத்தவனாயினும் ஊழ்வினையால் இத்தகைய தாழ்ந்த நிலையைத் தன் ஆட்சியின் பிற்பகுதியில் எய்தும் படி நேர்ந்தது என்பது ஒருதலை.

இராசேந்திரன் ஆட்சியின் இறுதிக்காலம்

இவனது 13, 15ஆம் ஆட்சி யாண்டுகளில் வரையப்பெற்ற இரு கல்வெட்டுக்கள் முறையே கடப்பை ஜில்லா நந்தலூரிலும்1 கர்நூல் ஜில்லா திரிபுராந்தகத்திலும்2 உள்ளன; ஆனால், 15 ஆம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1261 - க்குப் பிற்பட்ட இவன் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் மாத்திரம் இருக்கின்றனவே யன்றி அதற்கு வெளியே யாண்டும் காணப்படவில்லை. ஆகவே, இவனது ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் சோணாட்டளவில் சுருங்கிப் போய்த் தன் பெருமையை இழந்து விட்டது என்பது உறுதியாதல் காண்க.

இராசேந்திரனது ஆட்சியின் 33 - ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று வேதாரணியத்தில்3 இருத்தலால் இவன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி. பி. 1279 - இல் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் பட்டத்தரசி சோழகுல மாதேவி என்று வழங்கப் பெற்றனள் என்பது திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால்4 புலப்படுகின்றது. இவனுக்குத் தலைநகராயிருந்தது கங்கைக் கொண்ட சோழபுரமேயாகும். அழகிய பெருமாளாகிய சோழகங்கன்5, பிள்ளை குறுக்கையுடையான்6, களப்பாளன்7, சோழியவரையன்8, வீரசோழப் பிரமராயன்1, விழுப்பாதராயன்2 என்போர் இவன் ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாக இருந்தனர். தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரைப் பேரன்புடன் ஆதரித்து அவர்க்கு அரிய நண்பனாக விளங்கிய கண்டியூர்ச் சீநக்கனும், புகழேந்திப் புலவரை ஆதரித்து நளவெண்பாவை இயற்றுவித்துப் புகழ்கொண்ட முரணைநகர்ச் சந்திரன் சுவர்க்கியும் இவ்விராசேந்திரன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர் களாயிருத்தல் வேண்டும் என்பது சில ஆதாரங்களால் அறியக் கிடக்கின்றது.

இராசேந்திரனுக்குப் பிறகு பட்டம் பெற்றுச் சோழ நாட்டை அரசாண்ட சோழ மன்னன் ஒருவனும் இலன். ஆதலால், இவனுக்குப் புதல்வன் இல்லை என்பது தேற்றம். எனவே, கி. பி. 1279 - இல் இவன் இறந்த பின்னர், சோழ நாடு பாண்டிய இராச்சியத்தோடு சேர்க்கப்பெற்றுப் பாண்டிய வேந்தரது ஆட்சிக் குள்ளாயிற்று. இவனோடு சோழரது தனியரசும் முடிவுற்றது.

முடிவுரை


இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் கி. பி. ஓன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து பதின் மூன்றாம் நூற்றாண்டின் கடைப்பகுதி வரையில் சற்றேறக் குறைய நானூற்றுமுப்பது ஆண்டு கட்குமேல் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றையும் அக்காலப் பகுதியில் நம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பல அரிய சரித நிகழ்ச்சிகளையும் நன்குணரலாம். அப் பெருவேந்தருள் இறுதியிலிருந்தவன் மூன்றாம் இராசேந்திரன் சோழன் என்பதும் அவனுக்குப் புதல்வன் இன்மையால் அவன் ஆட்சிக்குப் பிறகு சோழ நாடு பாண்டியர் ஆட்சிக்குள்ளாகிவிட்டது என்பதும் முன்னர் விளக்கப்பெற்றுள்ளன. ஆராய்ச்சியாளருள் சிலர், இராசேந்திர சோழனுக்குச் சேமப் பிள்ளை1 என்ற ஒரு புதல்வன் இருந்தனன் என்று எழுதியுள்ளனர். சோழ மன்னர்கள் தமக்குக் கீழ்ப் பட்ட குறுகிய மன்னரை நம் மகன்2 எனக் கூறும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது என்பது அன்னோர் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. அம்முறையில் கூறப்பெற்றுள்ள அத்தலைவனை இராசேந்திர சோழனுடைய புதல்வன் என்று கருதுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

இனி, மைசூர் நாட்டிலுள்ள பங்களூர் ஜில்லாவில் வீரசைவ வீரப் பிரதாப சோழ மகாராசன் என்பவன் ஒருவன் கி. பி. 1301-ல் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால்3 அறியப்படு கின்றது. காஞ்சி அருளாளப் பெருமாளுக்கு வீரசோழன் மகன் வீரசம்பன் என்பான் கி.பி. 1314-ல் ஒரு தேர் அளித்தனன் என்று அப்பெருமாள் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று1 உணர்த்துகின்றது. கி.பி.1482-ல் திருவானைக்காவிலுள்ள கோயிலுக்கு ஒருவேலி நிலம் நிவந்தமாக அளித்துள்ள வாலக காமயனான அக்கலராசன் என்பவன், தன்னை உறையூர் புர வராதீசுவரன் எனவும் சோழ நாராயணன் எனவும் கூறிக்கொள்வதை அங்குள்ள அவன் கல்வெட்டால்2 அறியலாம். கி.பி. 1530-ல் திருவரங்கத்தில் உறையூர் வல்லி நாச்சியாரை எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாகப் பொருள் வழங்கியுள்ள பாலயதேவ மகாராசன் என்பான் தன்னைச் சோழ பால மகிபதி என்று தன் கல்வெட்டில்3 குறித்துள்ளனன். கும்பகோணத்திலுள்ள ஆலயத்திற்கு வயலூர் ஏழாங்கட்டளை ஆகிய இரண்டு ஊர்களையும் அளித்த மகா மண்டலேசுவரன் உருத்திரதேவ சோழ மகாராசன் என்பவன் ஒருவன் கி.பி.1554-ல் இருந்தனன் என்பது அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால்4 புலப்படுகின்றது. ஈண்டுக் குறிப்பிடப் பெற்ற தலைவர்களுள் வீரசோழன் மகன் வீரசம்பன், சோழர் மரபினன் அல்லன்; சம்புவராயன் மரபினன் ஆவன்5. மற்றையோர் எல்லாம் விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாகச்6 சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் கி.பி. பதினான்கு பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆண்டுகொண்டிருந்த தெலுங்கச் சோழர் ஆவர். அவர்களுடைய பட்டங்களெல்லாம் அன்னோர் தெலுங்கச் சோழர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே; அவர்களுள் எவரும் நம் மூன்றாம் இராசேந்திர சோழன் வழித் தோன்றல்கள் அல்லர் என்பது நன்கு துணியப்படும்.

நம் தமிழகத்தின் கீழ்பகுதி சோழ மண்டலம் என்னும் பெயருடன் தம் பெயரால் எக்காலத்தும் நின்று நிலவுமாறு தொன்றுதொட்டு அங்கு ஆட்சி புரிந்துவந்த தமிழ் வேந்தர்களாகிய சோழர்களது அரசும் மறைந்தொழிந்தது. அவ்வரசொழிந்து சற்றேறக்குறைய அறு நூற்றறுபத்தைந்து ஆண்டுகள் ஆயின எனலாம். அதன் பின்னர் அவர்களது நாடு பிற மொழியாளரான அயல் நாட்டார் பலர் ஆளுகைக் குள்ளாக்கி, அதனால் அடைந்த அல்லல்களும் மாறுதல்களும் அளவற்றன என்பது வரலாற்றாராய்ச்சியாளர் பலரும் அறிந்ததேயாம். காலச் சக்கரத்தின் சுழற்சியினால் ஏற்படும் மாறுதல்களுக்கு ஒரு நாடு எங்ஙனம் உட்படாமலிருத்தல் கூடும்? எனினும், முற்காலத்தில் பல்வகையாலும் மக்கட்கு நலம் புரிந்து, சீருஞ் சிறப்புமுற அரசாண்ட சோழ மன்னர்களை நினைவு கூர்தற்குரிய சாதனங்கள் நம் தமிழ் நாட்டில் ஆங்காங்கு இருத்தலை இக் காலத்தும் காணலாம். உத்தம சோழபுரம், கண்டராதித்தம், இராசேந்திரப்புரம், அருமொழி தேவபுரம், கங்கைகொண்ட சோழபுரம், சயங்கொண்ட சோழபுரம், வீரசோழபுரம், இராசேந்திரப்பட்டணம், விக்கிரமம், மதுராந்தகம் முதலான ஊர்கள், அவ்வேந்தர்களின் பெயர்களை நம்மனோர்க்கு அறிவுறுத்திக் கொண்டு இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வெட்டிய வீரசோழ வடவாறு, மதுராந்தக வடவாறு, முடிகொண்ட சோழப் பேராறு வீரசோழனாறு, கீர்த்தி மார்த்தாண்டன், விக்கிரமசோழப் பேராறு முதலான ஆறுகளும் வீரநாராயணன் ஏரி, சோழ வாரிதி. கண்டராதித்தப் பேரேரி, சோழகங்கம், செம்பியன் மாதேவி ஏரி முதலான நீர் நிலைகளும் கட்டிய பேரணைகளும் நம் நாடு குன்றாப் பெருவளங்கொழித் திடுமாறு இப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எடுப்பித்த ஆதித்தேச்சுரம், அரிஞ்சயேச்சுரம், இராசராசேச்சுரம், கங்கைகொண்ட சோழச்சுரம், செம்பியன் மாதேவீச்சுரம், விக்கிரமசோழேச்சுரம், இராசாதிராசேச்சுரம், குலோத்துங்கசோழ விண்ணகரம் முதலான பெருங் கோயில்களும் கற்றளிகளாக அமைத்த பாடல்பெற்ற திருக்கோயில்களும், அவர்களுடைய வீரச் செயல்களையும் அறச் செயல்களையும் ஆட்சி முறைகளையும் மற்றும் பல அரிய சரித உண்மைகளையும் உணர்த்தும் எண்ணிறந்த கல்வெட்டுக்களைத் தம்பாற் கொண்டு, வான் அளாவ உயர்ந்து நிற்கும் விமானங்களுடன் காண்போர் கண்களைக் கவரும் வனப்பினவாய் இஞ்ஞான்றும் நிலைபெற்றிருத்தலை யாவரும் காணலாம். அவர்களது பேராதரவினால் இயற்றப் பெற்று வெளிவந்துள்ள திருத்தொண்டர் திருவந்தாதி, வீரசோழியம், கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி, தண்டியலங்காரம், பெரிய புராணம் என்று வழங்குந் திருத்தொண்டர் புராணம் முதலான தமிழ் நூல்கள் நம் அகவிருள் போக்கி அறிவுச்சுடர் கொளுத்தும் செஞ்ஞாயிறாக இன்றும் விளங்குகின்றன.

இதுகாறுங் கூறப்பெற்ற சில ஊர்களும் ஆறுகளும் ஏரிகளும் கோயில்களும் தமிழ் நூல்களும் சோழ மன்னர்களின் பொன்றாப் புகழுக்கு நிலைக்களங்களாகவும் அவர்களது ஈடும் எடுப்புமற்ற பெருமையினைப் பிற்காலத்தினர்க்கு உணர்த்தும் கலங்கரை விளக்கங்களாகவும் இக்காலத்தில் நின்று நிலவுதல் அறியற்பாலதாகும்.


சேர்க்கை 1

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்
முதற் குலோத்துங்க சோழன்

1.  திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன்
    தோளும் வாளுந் துணையெனக் கேளலர்
    வஞ்சனை கடந்து வயிரா கரத்துக்
    குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில்
    சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத்
    திக்கு நிகழத் திறைகொண் டருளி
    அருக்க னுதயத் தாசையி லிருக்குங்
    கமல மனைய நிலமக டன்னை
    முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக்
    கேழ லாகி யெடுத்த திருமால்
    யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
    தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தித்
    திகிரியும் புலியுந் திசைதொறு நடாத்திப்
    புகழுந் தருமமும் புவிதொறு நிறுத்தி
    வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும்
    உரிமைச் சுற்ற மாகப் பிரியாத்
    தலநிகழ் சயமுந் தானும்வீற் றிருந்து
    குலமணி மகுட முறைமையிற் சூடித்
    தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல்
    நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராசகேரி
    வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு-

II
2.  புகழ்மாது விளக்கச் செயமாது விரும்ப
    நிலமக ணிலவ மலர்கள் புணர
    உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
    மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
    ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர
    விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத்
    திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி
    விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப்
    புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
    கோவி ராசகேசரி வன்மரான சக்ரவர்த்திகள்
    ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு-

III
3.  புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற்
    பொன்னேமி யளவுந் தன்னேமி நடப்ப
    விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
    சக்கரக் கோட்டத்து விக்கிரமத் தொழிலாற்
    புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம்
    வயிரா கரத்து வாரி யயிர்முனைக்
    கொந்தள வரசர் தந்தள மிரிய
    வாளுறை கழித்துத் தோன்வலி காட்டிப்
    போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி
    வடதிசை வாகை சூடித் தென்றிசை
    தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
    பொன்னி யாடை நன்னிலப் பாவையின்
    தனிமையுந் தவிரப் புனிதத்
    திருமணி மகுட முரிமையிற் சூடித்
    தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
    தொன்னில வேந்தர் சூட முன்னை
    மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
    செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை
    இருநில வளாக மெங்கணுந் தனாது
    திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி
    மேருவிற் புலிவிளை யாட வார்கடற்
    றீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடு
    கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய
    தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன்
    பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட்
    பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ்
    சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை
    வில்லது கோடா வேள்குலத் தரசர்
    அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும்
    பட்டவெம் பரியும் விட்டதன் மானமும்
    கூறின வீரமும் கிடப்ப வேறின
    மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த
    நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த
    கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
    தந்நா ளுகந்து தானும் தானையும்
    பன்னா ளிட்ட பலபல முதுகும்
    பயந்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்
    பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும்
    வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும்
    மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்
    கங்கமண் டலமும் சிங்கண மென்னும்
    பாணி யிரண்டு மொருவிசைக் கைக்கொண்
    டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங்
    கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம்
    வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும்
    தந்திர வாரியு முடைத்தாய் வந்து
    வடகடல் தென்கடல் படர்வது போலத்
    தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
    ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
    வெரிநளித் தோடி யரணெனப் புக்க
    காடறத் துடைத்து நாடடிப் படுத்து
    மற்றவர் தம்மை வனசரர் திரியும்
    பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற
    விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி
    முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு
    மத்திவெங் கரிபடு மய்யச் சையமும்
    கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்
    டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள
    சாவே றெல்லாந் தனிவிசும் பேற
    மாவே றியதன் வரூதினித் தலைவரைக்
    குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
    நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்
    வீரசிம் மாசனந் திரியவிட் டருளி
    வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
    கலிங்க மேழுங் கனலெரி பரப்ப
    விலங்கல் போல விளங்கிய வேந்தர்
    விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப்
    பொருகோ பத்தொடு போர்முக மதிர
    வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட
    எங்க ராய னிகலவ ரேச்சணன்
    மாப்பிறளா மதகரி யிராசணன்
    தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
    மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
    போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
    என்றிவ ரனைவரும்
    வெற்றிவே ழத்தொடு பட்டு மற்றவர்
    கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு
    பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்துக்
    கருங்கட லடையத் தராதலந் திறந்து
    கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல்
    ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
    வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழச்
    சிவனிடத் துமையெனத் தியாகவல்லி
    உலக முடையா ளிருப்ப வவளுடன்
    கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலகம்
    ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள்
    வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந்
    திருமா லாகத்துப் பிரியா தென்றும்
    திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து
    வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான
    திரிபுவன சக்கர வர்த்திகள்
    ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு-

விக்கிரம சோழன்
I
பூமாலை மிடைந்து பொன்மாலை திகழப்
பாமாலை மலிந்த பருமணித் திரள்புயத்
திருநில மடந்தையொடு ஜயமக ளிருப்பக்
கனவரை மார்வந் தனதெனப் பெற்றுத்
திருமக ளொருதனி யிருப்பக் கலைமகள்
சொற்றிறம் புணர்ந்த கற்பின ளாகி
விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறுந்
திகிரியொடு செங்கோல் நடப்ப அகில
புவனமுங் கவிப்பதோர் புதுமதி போல
வெண்குடை மீமிசை நிழற்றக் கருங்கலி
யொளித்துவன் பிலத்திடைக் கிடப்பக் குளத்திடைத்
தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவுங்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கியும்
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத் தருளித் தென்றிசைத்
தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப
வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலத்
தலைத்தலை சிறப்பவந் தருளி வெலற்கரும்
போர்ப்புலி யானை பார்த்திவர் சூட
நிறைமணி மகுடம் முறைமையிற் சூடி
மன்னுயிர்க் கெல்லா மின்னுயிர்த் தாய்போல்
தண்ணளி1 பரப்பித் தனித்தனி பார்த்து
மண்முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்துத்தன்
கோயிற் கொற்ற வாசல் புறத்து
மணிநா வொடுங்க முரசுகள் முழங்க
விசையமும் புகழும் மேன்மே லோங்க
வாழி வாழிஇம் மாநிலங் காக்கத்
திருமணிப் பொற்றோட் டெழுதுபத் தாண்டு
வருதிறை1முன்னே மன்னவர் சுமந்து
திறைநிறைத்துச் சொரிந்த செம்பொற் குவையால்
தன்குல நாயகன் தாண்டவம் பயிலுஞ்
செம்பொன்னம் பலஞ்சூழ் திருமா ளிகையும்
கோபுர வாசல் கூடசா லைகளும்
உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக்
குலவரை உதைய குன்றமொடு நின்றெனப்
பசும்பொன்2 வேய்ந்த பலிவளர் பீடமும்
விசும்பொளி தழைப்ப விளங்குபொன்3 வேய்ந்து
இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப்
பெரிய திருநாள் பெரும்பெயர்4 விழாவெனும்
உயர்பூரட் டாதி உத்திரட் டாதியில்
அம்பல நிறைந்த அற்புதக் கூத்தர்
இம்பர்5 வாழ எழுந்தருளு வதற்குத்
திருத்தேர்க் கோயில் செம்பொன்6 வேய்ந்து
பருத்திரண் முத்தின் பயில்வடம் பரப்பி
நிறைமணி மாளிகை நெடுந்திரு வீதிதன்
திருவளர் பெயராற் செய்துசமைத் தருளி
பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
செம்பொற் கற்பகத் தொடுபரிச் சின்னமும்
அளவில் லாதன வொளிபெற வமைத்துப்
பத்தா மாண்டில் சித்திரைத் திங்கள்
அத்தம் பெற்ற ஆதிவா ரத்துத்
திருவளர் மதியின் திரையோதசிப் பக்கத்து
இன்ன பலவும் இனிதுசமைத் தருளி
ஒருகுடை நிழற்கீழ்த் தலமுழுதுங் களிப்பச்
செழியர்வெஞ் சுரம்புகச் சேரலர் கடல்புக
அழிதரு சிங்களர் அஞ்சிநெஞ் சலமரக்
கங்கர் திறையிடக் கன்னடர் வென்னிடக்
கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாயமற்
றெத்திசை மன்னருந் தத்தமக் கரணெனத்
திருமலர்ச் சேவடி உரிமையி லிறைஞ்ச
அங்கவன் மகிழுங் கங்கையொப் பாகிய
தெரிவையர் திலதந் தியாக பதாகை
புரிகுழல் மடப்பிடி புனிதகுண வநிதை
திரிபுவன முழுதுடையா ளெனவுட னிருப்ப
ஊழி அந்நெடு மாலா கத்துப்
பிரியா தென்றுந் திருமக ளிருந்தென
மாதர் மடமயில் பூதலத் தருந்ததி
அரணியல்1 கற்பிற் றரணிமுழு துடையா
ளிவன்திரு மார்வத் தருளொடு மிருப்பச்
செம்பொன் வீரச் சிம்மா சனத்து
திரிபுவன முழுதுடையா ளோடும்
வீற்றிருந்தருளிய கோப்பர கேசரி வர்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்குயாண்டு:-

II
பூமாது புணரப் புவிமாது வளர
நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
தன்னிரு பதமலர் மன்னவர் சூட
மன்னிய வுரிமையால் மணிமுடி சூடிச்
செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப
வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்
கலிங்க மிரியக் கடமலை நடாத்தி
வலங்கொ ளாழி வரையாழி திரிய
இருசுட ரளவு மொருகுடை நிழற்ற
விஜயாபிஷேகம்பண்ணி வீரசிம்ஹாசனத்து
முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய
கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்
ஸ்ரீவிக்கிரம சோழதேவர்க்கு யாண்டு:-

இரண்டாங் குலோத்துங்க சோழன்
பூமன்னுபதுமம் பூத்தவே ழுலகுந்
தாமுன்செய் தவத்தால் பருதிவழித் தோன்றி
நெடுமா லிவனெனச் சுடர்முடி சூடி
இருநில மகளை உரிமையிற் புணர்ந்து
திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தணைந்து
பருமணி மார்வம் பனிவரை1 நிகர்ப்பச்
சயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டால்
புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற
நாமகள் தானும்எங் கோமகன் செவ்வாய்ப்
பவளச் சேயொளி படைத்தன னியானெனத்
தவள நன்னிறந் தனித்துடை யோரெனப்
புகழ்மகள் சிந்தை மகிழு நாளிலும்
ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி
வெயிலுங் கருங்கலி இருளினைத் துரப்ப
நீடுபல் லூழி ஏழ்கடற் புறத்தினுங்
கோடாச் செந்தனிக் கோலினி துலாவ
மீனமும் சிலையுஞ் சிதைத்து வானுயர்
பொன்னெடு மேருவிற் புலிவீற் றிருப்ப
உம்ப ரியானை ஓரெட் டினுக்கும்
தம்ப மென்னத் தனித்தனி
திசைதொறும் விசைய த்தம்ப நிற்பப்
பசிபகை யானது தீங்கு நீங்க
மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளக்க
மாதவர் தவமும் மங்கையர் கற்பும்
ஆதி அந்தண ராகுதிக் கனலு
மீதெழு கொண்டல் வீசுதண் புனலு
மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும்
நீதி அறமும் பிறழாது நிகழப்
பாவும் பழனப் பரப்பும் பணைக்கை
மாவு மல்லது வன்றளைப் படுதல்
கனவிலுங் காண்டற் கரிதென வருநதிப்
புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது
சிறையெனப் படுத லின்றி நிறைபெருஞ்
செல்வமோ டவனி வாழப் பல்லவர்
தெலுங்கர் மாளுவர் கலிங்கர் கோசலர்
கன்னடர் கடாரர் தென்னர் சேரலர்
சிங்கணர் கொங்கணர் சேதிபர் திரிகர்த்தர்
வங்க ரங்கர் வத்தவர் மத்திரர்
கங்கர் சோனகர் கைகயர் சீனரென்
றறைகழல் வேந்தரும் எல்லா வரைசரும்
முறைமையில் வருந்தித் திறைகொணர்ந் திறைஞ்ச
அம்பொன் மலர்கொடிச் செம்பியன் கிழானடி
ஒருமருங் குடனமர்ந் திருப்ப அருள்புரி
சிமயப் பொற்கொடி இமயப் பாவையுஞ்
சிவனும் போலப் புவனமுழு துடையா
ளிவன்திரு மணிமார்வத்
துலகமுழு துடையா ளெனவுட னிருப்பச்
செம்பொன் வீர சிம்மா சனத்துப்
புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய
இராஜகேசரிவன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்
குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு:-

இரண்டாம் இராசரா சோழன்
I
பூமருவிய பொழிலேழும் பொருப்பேழும் புனைநித்திலத்
தாமநெடுங்கொடைபொழிந்ததவளவெண்ணிலாகுளிர்பொதியச்
சுடர்ச்சக்கரவெற்பில் தனதடற்சக்கரவெயிலெறிப்பச்
சினப்புலியுஞ்செங்கோலுமனைத்துயிர்க்குங்காவல் பூணப்
பணியணைமிசைப் பரஞ்சோதிபாற்கடல்நின்றெழுந்தருளி
மணிநெடுமுடி1கவித்துநெடுமண்மடந்தையைக்கைப்பிடித்துப்
புகழ்மடந்தைகொழுநனாகிப்போர்மடந்தையைமணம்புணர்ந்து
பருதிமுதற்குலம்விளக்கிச்சுருதிகளின்முறைவாழ்த்தெழ2
விழுந்தஅரிசமயத்தையுமீளவெடுத்து ஆதியுகங்
கொழுந்துவிட்டுத்தழைத்தோங்கக்கோடாதறங்குளிர்தூங்க
மாரிவாய்த்துவளம்சுரக்கத்3 தரணியோர்பிணிநீங்க
நல்லோர்தங் கற்புயரநான்மறையோர்தொழில்வளர4
எல்லாருந்தனித்தனியேவாழ்ந்தனமெனமனமகிழ்ந்து
ஒருவருடன் ஒருவர்க்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
வெருவருபகைமைமனத்தின்றிவிழைந்துகாத5லுடன்சேர
இந்திரன்முதற்றிசாபாலர்எண்மருமொருவடிவாகி
வந்தபடிதரநின்றுமனுவாணை தனிநாடாத்தி
மாலியானைபிணிப்புண்பனமணிச்சிலம்பேயரற்றுவன64
சேலோடையேகலக்குண்பன7 தேமா8 வேவடுப்படுவன
பொய்யுடையனவனவேயேபோர்மலைவனவெழுகனியே
மாமலரேகடியவாயினவருபுனலேசிறைப்படுவன
காவுகளே கொடியவாயினகள்ளுண்பனவண்டுகளே
பொய்யுடையனவனவேயேபோர்மலைவனவெழுகழனியே9
மையுடையனநெடுவரையேமருளுடையனஇனமான்களே
கயற்குலமேபிறழ்ந்தொழுகும்1கைத்தாயரேகடிந்தொறுப்பார்
இயற்புலவரேபொருள்வேட்பார்இசைப்பாணரேகூடஞ்செய்வார்
இவன்காக்குந்திருநாட்டில்2 இயல்விதுவெனநின்றுகாவல்
நெறிபூண்டும(னுநெ)றியல்லதுநினையாது
தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந்தாயிலோர்க்குத் தாயாகியு
மைந்தரிலோர்க்குமைந்தராகியுமன் னுயிர்கட்குயிராகியும்
விழிபெற்றபயனென்னஅமையப் பெற்றவருளெனவும்
மொழிபொரு(ளா-மிவ)னெனவும்முகம்பெற்றபனுவலெனவும்
எத்துறைக்கும்இறைவனெனவும்வரஞ்செயும்பெருந்தவமெனவும்
முத்தமிழ்க்கும்தலைவனெனவும்மூன்றுலகின்முதல்வனெனவும்
அரசியற்கைமுறைநிறுத்தியல்லவைகடிந்தாறுய்த்துப்
பொருகலியினிருளகற்றிப்புகழென்னுநிலாப்பரப்பிக்
கன்னடருங்காலிங்கருந்தென்னவருஞ்சிங்களருங்
கைகயருங்கொங்கணருங்கூபகருங்காசியருங்
காம்போசருங்கோசலருங்கொந்தளரும்கப்பளரும்3
பப்பளரும்பாஞ்சாலரும் பெப்பளரும்பூலுவரும்
மத்திரருமாராட்டரும்வத்தவரு மாகதருங்
கொடி நுடங்குகனககோபுரக்கொற்றவாசலில் வந்தீண்டி
கொட்பாவயரப்பாவலிரொராவகற்றிக்?

கருமா முகில் திருநிறத்துக் கனகளப ராஜராஜன்
திருமார்பிலுந்திருத் தோளிலுந் திருமனதிலும் பிரியாது
பற்றார் குழலியர்க் கொருசூளா மணிரத்நமன்ன சிந்தா
மணிமஹாரத்னம்திலத சோழ குலரத்னம் பூமகளும்
ஜயமகளும் புகழ் மகளும் புவிமகளு நாமகளுந்தனித்தேவி
பேரரசு தனிநடாத்திப்பெண்ணரசாய்முடிசூடி
உடனாணையுமுடனிருக்கையுமுடனரசும் உடன்சிறப்புங்
கடனாகவேபடைத் தருளி அறம்புரக்குங்கருணைவல்லி
தவனவயல்பசும்புரவிகடவுட்டேர்கடாவவருந்
தவனகுலத்துலகந்தொழவந்தருளியசந்த்ரவுதய(ம்)1
ஞானமுதற்குலநான்குநல்லொழுக்கமும்பெருங்கற்பும்
பேணுமயில்ராஜராஜன்பிரியாவேளைக்காரி2
அகலா தமாதாவென்றாரணங்களொருநான்கும்
புகலவருந்தனிநாயகி புவனமுழுதுடையாளும்,
அக்கிரமத்தொழிலால் அருள்மழைபொழிகிளர் வெண்குடைச்
சக்கரவர்த்தி3 சனநா தன் தரணிபாலன் தனிநாயகி
ஆரலங்கமலர்ச்சோலையி லுலாவுங்கிளிதன்காதற்
பேரருளா மொருபாற்கடல்விளையாடுபெடையன்னம்
சீர்படைத்தசிலை நுதல்மயில்பூலோகசுந்தரியாம்
பேர்படைத்தநான்முகத்தோன்பெரும்படைப்பைவளர்க்கும்பணை
வையமேத்துஞ்சமந் தகமணிமா தவன்புனைகவுத்துவமணி
தையலார்க் கொருசூளாமணிசதுர்வேத சிந்தாமணி
புண்ணியமொருவடிவு கொண்டுபுகழென்னு96

மணிபுனைந்து பெண்ணியல்பு தனதாகப் பிறந்ததெனச்சிறந்தபேதை
மன்னர் தந்தேவியர்நின்வழியடியோமடியோமென
முன்னின்று தொழுதேத்தமுதன்மை பெற்றமூலநாயகி
இனம்பொழியுங்கவிராஜன்யானையோடுதீ தாடத்
தனம்பொழியும்ராஜராஜன் தாய்வேனை தரித்தபொற்கொடி?
இசைமுழுதுங்குடைமுழுதுங்குணமுழுதும் ஈண்டுற்று
திசைமுழு துமண்முழுதுந்திருமுழுதுமுடையாளொரு
முந்தைமுழுதுலகுய்யமுடிசூடும் ராஜபண்டிதன்
தன்(மன)முழு ஒருசீர்த்துடையதேவி தரணிமுழு துடையாளும்,
பார்வாழவும்மண்வாழவும்பனுவல்வாழவும்(மனுவாழவும்)
சீர்வாழவும்மலாடகுலத் தவதரித்துத் திசைவிளக்கு
மேன்மையுடன்பெருங்கீர்த்தி மண்மிசைவளர்க்குங்குயில்
உலகுடைமுக்கோக்கிழானடிகளென்னுமலகில்கறபிலரவிந்தமடையுந்
திருந்தியதன்பெருங்குணத்திற்சிறந்தோங்கியறந்தழைக்கும்
அருந்ததியாமென்னவரும்பெருமையும்அவனிமுழுதுடையாளும்,
மன்னியபெரும்புகழ்படைத்ததென்னவன்கிழானடிகளும்
ஊழியூழிபலகற்பம்வாழிமணம்புணர்ந்திருப்ப
உதயகிரி உச்சியேறிம திவெண்குடைபுதுநிழற்கீழ்ச்
சந்திரமுகமண்டலத்துத்தாமரைக்குள்செம்பவளவாய்
இந்த்தரநீலகுஞ்சரமோசடிளம்பிடியுடனிசைந்ததெனச்
செம்பொன் வீரசிம்மாசனத்துப்புவனமுழுதுடையாளொடும்
வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான திரிபுவனச் சக்கர
வர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி
நாயிற்று அமரபட்சத்து நவமியும் புதன்கிழமையும் பெற்ற ஆயில்யத்துநாள்……….

II
பூமருவி திருமாதும் புவிமாதும் செயமாதும்
நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க
அருமறை விதிநெறி யனைத்துந் தழைப்ப
வருமுறை யுரிமையில் மணிமுடி சூடித்
திங்கள் வெண்குடைத் திசைக்களி றெட்டுந்
தங்கு தனிக்கூடந் தானென விளங்கக்
கருங்கலிப் பட்டியைச் செங்கோல் துரப்பப்
பொருகதி ராழி புவிவளர்த் துடன்வர
வில்லவ ரிரட்டர் மீனவர் சிங்களர்
பல்லவர் முதலிய பார்த்திவர் பணிய
எண்ணருங் கற்பம் மண்ணகம் புணர்ந்து
செம்பொன் வீர சிம்மா சனத்து
புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு:-

இரண்டாம் இராசாதிராச சோழன்
I
கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமா தருங் கலைமாதரும்
அடல் சூழ்ந்த போர் மாதரும் சீர்மாதரும் அமர்ந்து வாழ
நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ் பரப்ப
ஆதியுக மாமென்னச் சோதிமுடி புனைந்தருளி
அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில்நின்று பாரிப்பத்
தென்னவருஞ் சேரலரும் சிங்களரும் முதலாய
மன்னவர்கள் திறைசுமந் வந்தீண்டிச் சேவிப்ப
ஊழிஊழி ஒருசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்
செம்பொன் வீர சிங்காசனத்து
உலகுடை முக்கோக் கிழானடிகளோடும்
வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிவன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜாதிராஜ தேவர்க்குயாண்டு:-

II
கடல்சூழ்ந்த பாரேழுந் திசையெட்டுங் காத்து நின்று
தடமாமதி யெனவிளங்கித் தரளவெண்குடை நிலாவெறிப்ப
ஆழிவரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி
ஊழிதொறும் புகழோங்க ஓராழி வெயிற்பரப்பக்
கயல்சிலையி லாரில்(?)வரையகன்றாளயிற் கரங்குவிப்பப்
புயலாழிற் போற்றிசெயப் புலிமேருவில் வீற்றிருப்ப
திருவாணையுஞ் செங்கோலுந் திசையெட்டுங் காவல் கொள்ளப்
பெருவாழ்வு பெற் றுயிரனைத்தும் பி
சமையமாறுந் தலையெடுப்பத் தருமமுமரு மறையுமோங்கி
அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க
ஓர்ப்பினும்தம் முறுகனவிலும் ஒன்றோடொன்று பகையின்றிப்
போர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நீருண்ணப்
பொன்னிநதியும் பொய்யாது புயலும் புனலோவாது

மூன்றாம் குலோத்துங்க சோழன்
I
புயல்பெருக வளம்பெருப் பொய்யாத நான் மறையின்
செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ
வெண்மதிபோற் குடை விளங்க வேல்வந்த ரடிவணங்க
மண்மடந்தை மனமகிழ மனுவின் நெறி தழைத்தோங்கச்
சக்கிரமுஞ் செங்கோலுந் திக்கனைத் துஞ்செல்லக்
கற்பகாலம் புவிகாப்பப் பொற்பமைந்த முடிசூடி
விக்ரமபாண்டியன் வேண்டவிட்ட தண்டால்
வீரபாண்டியன் மகன்1 படஏழகம்2 படமறப்
படைபடச் சிங்களப் படைமூக் கறுப்புண்டு
அலைகடல் புகவீர பாண்டியனை முதுகிடும் படிதாக்கி
மதுரையும் அரசும்கொண்டு ஜயதம்ப நட்டு
அம்மதுரையு மரசும் நாடும் அடைந்த பாண்டியற்களித்தருளி
மெய்ம்மலர்ந்த வீரக்கொடியுடன் தியாகக் கொடி எடுத்துச்
செம்பொன் வீர சிங்கா தனத்துப்
புவனமுழு துடையாளோடும் வீற்றிருந்தருளிய
கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்
ஸ்ரீகுலோத்துங் சோழதேவர்க்கு யாண்டு:-

II
புயல்வாய்த்து மண்வளரப் புலியாணையும் சக்கரமும்
செயல்வாய்த்த மனுநூலும் செங்கோலுந் திசைநடப்பக்
கொற்றவையும் திருவும்வாழக் கொடுங்கலிகெடக்குளிர் வெண்குடைக்
கற்பகாலம் படிகவிப்பக் கதிரவன்குல முடிசூடி
எத்தரையுந் தொழுமிறைவற் கெதிரம்பலஞ் செம்பொன் வேய்ந்து 5

சித்திரைவிழா அமைத்திறைவி திருக்கோபுரஞ் செம்பொன் வேய்ந்து
அரிபிரமர் தொழுமிறைவற் ககிலமெல்லாந் தொழுது போற்றத்
திரிபுவன வீரீச்சுரஞ் செய்துதிரு வைகாசியுஞ்
சிறந்ததிரு வாவணியுந் திசைவிளக்கு… …. யூர்
நிறைந்தசெல்வத் துடன்விளங்க நிலவுந் திருநாள்கண்டு 10

மன்னுயிர்க் கருளளிக்கும் வானவர் நாயகர் வாழ
அருளமைந்த திருமலைபோல் கோயில் கண்டு
தாரணிகொள் திருத்தாதைக்கும் இராசராசீச் சுரத்தார்க்கும்
காரணச்சிறந்தகோயில் அணிதிகழ்பொன்வேய்ந்தருளித்
தனியாணைவிட்டாண்மைசெய்து வடமன்னரைத் தறைப்படுத்தி 15

முனிவாறிக் கச்சிபுக்கு முழுதரசையுந் திறைகவர்ந்து
தாங்கரும்போர் வடுகைவென்று வேங்கைமண்டலந்தன தாக்கிப்
பொன்மழைபெய் துறந்தையென்னும் பொன்னகர் புக்கருளித்
தண்டொன்றால் வழுதி மைந்தனை மூக்கரிந்துதமிழ் மதுரை
கொண்டுவிக்கிரம பாண்டியற்குக் கொடுத்து மீண்டதற் பின் பரிபவத்தா 20

லெடுத்துவந்து நெட்டூரில் எதிர்த்தவீர பாண்டியன்
முடித்தலைகொண் டமர்முடித்தவன் மடக்கொடியை வேளமேற்றித்
திருவிழந்த தென்னவனுஞ் சேரலனும் வந்திறைஞ்சி

அரியணையின் கீழிருப்ப அவன்முடிமே லடிவைத்துப் 25
படிவழங்கிமுடி வாங்கிப் பாண்டியர்க்கு விடைகொடுத்துக்
கொடிவழங்கும் வில்லவர்க்குக் கொற்றவர்பெறாத் திருவழங்கி
பாரறிய வாழ்வருளிப் பரிகலத்தி லமுதளித்துப்

பருதிகுல பதியென்று திருநாமந்தரித்த பாண்டியற்கு 30
இருநெதியும் பரிசட்டமும் இலங்குமணிக் கலனுநல்கி
ஈழமண்டல மெறிந்தருளி ஆழிமண்டலத் தரசிறைஞ்சப்
பூழியர் கெடக்கொங்கும் பாழ்படப் பொருதுபுக்குக்
கருவூரிற் சோழகேரளனென்று மன்னர் தொழ

விசையமா முடிசூடி வீரமுடி புனைவதற்கு 35
விட்டெழுந்து பன்னதான் வந்துடன் போர்மலையப்?
படைவிட்ட ……… மாயப் படையெல்லாம் படப்பொருது
கட்டரண்க ளட்டுக்கொடி மலைக்குவடு இடித்து
மட்டியூரும் கழிக்கோட்டையும் வளைந்தறுத்துக் களமாடி

நெட்டலகைக் குலமாட நெடுங்களிற்றாலமர்ந்… குடியில் 40
கடியரணப் போர்ப்படையைப் பொடியாக்கி அடியுண்ட
படைத்தகை விறைவிருதா வளையுண்டு பிடியுண்டு
புலமாட நெடுங்களிற்றாற் கட்டுண்டு பேதைகள் உடங்கேபோக
எண்ணில்கோடி படைவீரர் புண்ணீரில் புக்கழிந்

பொருவருதுயர் துணையாக வேறுவேறுசுரம்படரத் 50
தென்மதுரைப்பதிப்புக்கு வந்ததையெல்லாங்கொடுத்துப்
பொடிபடுத்தி வழுதியர் தம்கூட மண்டபம்
கழுதையேரிட உழுதுபுகழ்க் கதிர்விளையக் கவடிவித்தி

தியாகக்கொடி திசையெட்டிலு மேகக்கலிப் பகைதுரக்க 60
மாமதுரையை வலங்கொண்டு திருவால வாயுறையும்
தேமலர்க் கொன்றைவார்சடைச் செழுஞ்சுடரைத் தொழுதிறைஞ்சி
ஆங்கவர்க்குப் பூணாரம் அநேகவிதம் கொடுத்தருளி
ஓங்கிய பேர்ஒலி கழலிறைஞ்ச இந்தி…. நது.

பொற்படியும் இளங்களிற்றின் கற்படியும் கொடுத்தருளி 65
வண்டறைதார் வழுதியரைக் கொண்ட பாண்டி மண்டலத்தைச்
சோழபாண்டியன் மண்டலமென் றேழுபாருஞ் சொலநிறுத்தி
மல்லல்வையை மதுரையையும் மதுரையென்ற பேரொழித்துத்
தொல்லை முடித்ததலைகொண்ட சோழபுர மென்றருளித்

தார்வழுதிமண்டபத்தில் சேரபாண்டியர் தம்பிரானென்று 70
பேரெழுதிப் பாண்டியனைப் பாண்டியனென்னும் பேர்மாறிவர
நெடும்படைத் தென்னவன்கெட மதுரைகொண்ட தோள்வலிபாடிய
பாணனைப்பாண்டியனென்று பருமணிப் பட்டஞ்சூட்டி
வெஞ்சிலை வாங்கி வேட்டைநீர் படிந்தாடி

ஓடைமதக் களிறேறி யாடல்வாம் பரிநடவித் 75
தண்டளவ மலர்மாலையில் வண்டரற்றச் செண்டாடி
அரன்திரு வாலவாயில் அமைந்தவர்க்குத் தன்பேரால்
சிறந்தபெருந் திருவீதியும் திருநாளுங் கண்டருளிப்
பொருப்புநெடுஞ் சிலையான்முப் புரமெரித்த சொக்கற்குத்

திருப்பவனி கண்டருளித் திருவீதியிற் சேவித்துத் 80
தென்மதுரைத் திருவாலவாய்பொன்மலையெனப் பொன்வேய்ந்து
சிறைகொண்ட புனல்வையைச் சேரபாண்டியன்மண்டலத்து
இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியுமெயிற்புலியூர்
ஆடுமம்பல வாணர்கூடி வாய்ந்த திரு நடங்கண்டருளும்

பாடகக்காற்பைங்கிளிக்கும் பைம்பொன்மதில் திருவாரூர் 85
வானவற்குந் திரிபுவன வீரீச்சுர வருந்தவற்கும்
தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங் கொடுத்தருளி
மந்திரமறை முழுதுணர்ந்த அந்தணர்க் கறமேற்றி
எழுதுவென்றிச் செயத்தம்பம் எத்திசையிலும் நடுவித்து
வழுவில்செஞ்சொற்கவி குன்றுபீடங்களாக

மதுரையடங்கவும் பொறிப்பித்தவன் 90
அடிநிழற்கீ ழபயமினி யஞ்சலென… … …. …
வழுதிக்கும் பதிதடையும் சாமரையும்
கோசலையும் வெம்பரியும்
கொடித்தேருங் குஞ்சரமும் வைகைநாடும்
பழம்ப …. …. இவற்…. …. … தியன்

திக்கெட்டும் எல்லை தொட… … … … 95
… … … …. மசதகர் வெற்பின் புகழுலாவச்
செம்பொன்வீர சிங்கா தனத்து வீற்றிருந்தருளிய
கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்
ஸ்ரீமதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலை
யுங்கொண்டு வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணி 100
யருளிய திரிபுவன வீர சோழதேவற்கு யாண்டு:-

மூன்றாம் இராசராச சோழன்
சீர்மன்னி இருநான்கு திசைவிளங்கு திருமடந்தையும்
போர்மன்னு சயமடந்தையும் புவிமடந்தையு மணம்புணர
அருமறைகள் நெறிவாழ அருந்தமிழோர் கிளைவாழப்
பொருவில்மனு நெறிவாழப் பொன்மகுடம் கவித்தருளி
வெங்கோபக் கருங் கலிப்பகை விடநாகம்
செங்கோலுங் கொடிப்புலியுந் திகிரிவரை வரம்பளக்க
எண்டிசைமுகத் தெண்கரிக்கு மெடுத்ததனிக் கூடமென
அண்டகூட முறநிமிர்ந்து முழுமதிக்குடைநின் றழகெறிப்ப
நடுவுநின்று குடிகாத்து நன்றாற்றுந் திறம்பொறாது
கடிதிழைத்த உட்பகையும் புறப்பகையு மறக்கடிந்து
பொலந்திகிரி பதினான்கு புவனங்களு மடிப்படுத்தி
இலங்குகதிர் வடமேருவி லிருந்தவயப் புலியேறென்னச்
செம்பொன்வீர சிங்காசனத்துப் புவனமுழுதுடையாளொடும்
வீற்றிருந்தருளிய கோவிராசகேசரி வர்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு

II
சீர்மன்னு மலர்மகளும் சிறந்ததனி நிலைச்செல்வியும்
பார்மன்னு பசுந்துளவச் சயமடந்தை மனங்களிப்ப
புகழ்மடந்தை புகழ்பாடப் புலமகளும் பூசுரரு
முகமலர்ந்து கண்களிப்ப முனிவர்கணந் துதியெடுப்பத்
தனித்துலக முழுதாளத் தடங்கரைப் பாற்கடல்பிரிந்த
பனித்துளவ நறுந்தாமப் பரந்தாம னெனவந்து
கடிமுரச மொருமூன்றுங் கடனான்கு மெனமுழங்கப்
படிமுழுது மிருணீங்கப் பருதிதனிக் குலம்விளங்கக்
கொடியேந்து புலியிமையக் குலவரைமேல் வீற்றிருப்ப
முடிவேந்த ரடிசூட முறைமையினால் முடிசூடி
வடவரையின் படவரவின் மணிமுடியும் பொடியாகத்
தடவரையின் நெடுந்தோளின் படிபரிக்கும் கிரியேழும்
பாரேழும் பொழிலேழும் படிபரிக்கும் கிரியேழும்
நீரேழுந் தனிகவித்து நிறைமதிவெண் குடைநிழற்றப்
புறவாழியும் வரையாழியும் பூதலமும் பொதுநீக்கி
அறவாழியுஞ் செங்கோலு மனந்தகற்பகா லம்புரக்க
ஒப்பரிய மறைநாலும் உரைதிறம்பா மனுநூ லுஞ்
செப்பரிய வடகலையும் தென்கலையுந் தலையெடுப்ப
நீதிதரு குலநான்கும் நிலைநான்கு நிலைநிற்ப
ஆதியுகங் குடிபுகுத அறுசமையந் தழைத்தோங்கப்
பொருதுறையுஞ் சினவேங்கையு மடமானும் புகுந்துடனே
யொருதுறைநீ ரினிதுண்டு பகையின்றி யுறவாடப்
புயல்வாரி பொழிவிக்கும் பொற்றொடியவர் கற்புயர
வயல்வாரி வளம்பெருகி மறையவர்முத் தமிழ்வளர்க்கும்
நெறிமுறைமை யினிதீண்டித் தனதாணை திசைநடப்ப
நிருபர்குலம் பெலம்படா நிலங்காவற் றொழில்பூண்டு
செருவலியில் முருகனென்றுந் திருவடிவில் மதனனென்றும்
பெருகொளியில் பருதியென்றும் பெருந்தகைமையிற்றருமனென்றும்
தண்ணளியில் மதியென்றுந் தனந்தருதலிற் றாயென்றும்
மண்ணுலகத் திகல்வேந்தரு மறைவாணரும் போற்றெடுப்ப
மீனவருஞ் சிங்களரும் விக்கலரும் கற்கடரும்
வானவரும் குந்தளரும் வங்களரும் பார்மருங்கு
பல்லவரும் மாகதரும் பாஞ்சாலரும் காம்போசரும்
கொங்கணரும் திரிகத்தரும் கூபகருஞ் சாவகரும்
பண்டையரும் திருவடிக்கீழ்ப்பரிந்துதிறை சொரிந்திறைஞ்ச
எண்டிசையும்புரந்தளிக்கும் இராஜராஜதுங்கன் இராஜராஜன்
மலைபேரிலும் வான்பேரிலும் மாதிரங்கால்
நிலைபேரிலும் பேராத நெஞ்சுடைய செஞ்சேவகன்
அலகில்பெரும் புகழாகரம் மங்கையருக் கரசாகி
உலகுடைய பெருமாளுடன் ஒக்கமணி முடிகவித்தாள்
உறந்தைவள நகரம்போல உலகமொரு பதினான்கும்
பிறந்துடையாள் இராஜராஜன் பிரியா வேளைக்காரி
இயல்வாழவும் இசைவாழவும் இமையமலை மகளறத்தின்
செயல்வாழவும் ராஜராஜன் திருத்தாலி பெற்றுடையார்
அரசிறைஞ் சழக னருணிறைந்த வுலகதனில்
உரைசிறந்த தனியாணை உடனாணை பெற்றுடையாள்
தவளவயப் பரிகண்டன் காத்தளிக்குங் கற்பகாலம்
புவனியெழத் தனதாணையிற் புரக்குமந்தப் புரப்பெருமாள்
பொய்யாநெடு நிலநான்கும் பொருகுடையி னிருநான்கு
மாதிரமும் விளங்கவந்த வாணர்குல நிலைவிளக்கு
குலகரியெட்டும்பரித்த குலவட்ட மலர்கவிகைக்
சக்கரவர்த்தித னந்த புரச் சக்கரவர்த்தி காசெறிய
கோடெயில் வானவர்சசி குலதீப தராபதி
மாதேவியார் தொழுதிறைஞ்சும் மடந்தைமங்கையர் தம்பெருமாள்
அவ்வுலகத் தருந்ததியும் அதிசயிக்கும் பெரும்கற்பா
லிவ்வுலகத் தருந்ததியென விசைதந்த திசைவிளங்கத்
திருந்தியவேல் இராஜராஜன் ராஜேந்திரன் திருவருளென்னும்
பெருந்தனிப்பாற் கடல்படிந்து விளையாடும் பெடையன்னம்
ஆணையெங்குந் தனதாக்கிய ஆதிஇராஜன் மாதேவி
வளர்வங்க சூளாமணி மறையவர்தொழுஞ் சிந்தாமணி
சோணாடன் இராஜராஜன் சுரிமலப்பூந் துழாய்மார்பில்
பூணார மெனவிளங்கிய புவன முழுதுடையாளும்
அனந்தகற்ப நாள்பிரியாது மனங்களித்து மணம்புணரச்
செம்பொன் வீரஸிம்ஹாஸனத்துப் புவனமுழு துடையாளோடும்
வீற்றிருந்தருளிய கோராஜகேசரிவர்மரான

திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு நாலாவது.
மூன்றாம் இராஜேந்திர சோழன்
இதன் கருத்து:

எல்லா உலகத்திற்கும் ஒப்பற்றவீரனும், வாட்போரில் வன்மை மிக்கவனும். வீர ராக்ஷஸன் எனப் போற்றப்படுபவனும், கங்காராமன் என்னும் பெயருடையானும், மநுகுலத்தை உயர்த்தியவனும், அஞ்சத்தக்க போர்க்களத்தில் பகைவர்க்குச் சூறாவளியும். சோழர் குடிக்கு நேரும் தாழ்வினைத் தவிர்க்கும் தனி, வீரனும், மூன்று ஆண்டுகள்….. தரித்த முடிகளை யுடையவனும், அரசர்க்கரசும், வானுலக மகளிர் கூட்டுறவால் செருக்கிய பாண்டியன் சேரன் என்னு மிவர்கள் வெண்சாமரை வீசிப்போற்றப்பெற்ற பெருமையுடையானும், பாண்டிய மண்டலத்தைக் கவர்ந்த கன்னட வேந்தனை வென்றவனும், போரில் சேனைகளை யிழந்த வீரசோமேசுவரன் என்பவனால் சரணடைந்து பற்றிக்கொள்ளப்பட்ட பாதங்களையுடைய வனும், வீரர்க்கு அணிகலனாக விளங்குபவனும், ராஜ பரமேசுவரன். ராஜபரமமாகேசுவரன், ராஜ நாராயணன் என்னும் பெயர்களை யுடையவனும், எல்லாச் சமயங்களையும் ஒப்ப நிலைபெறச் செய்பவனும் யானை காலாள் முதலிய படைகளைப் புரப்பவனும், அரசியல், இசை, ஏனைக்கல்வி ஆகியவற்றில் தேர்ச்சிமிக்க தலைவனும், பகைவேந்தர் உளத்திற்குச் சல்யமென்னும் படையை ஒத்துக் கலக்கஞ் செய்பவனுமாகிய திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


சேர்க்கை II

சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள்
முதற்குலோத்துங்க சோழன்
ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது.

கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச் சென்னி - நாட்டஞ்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தீத்தெற

கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும் 3
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ் - சொரியுமால்
நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.

தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் 4
விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப- நடுங்கியதே
கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ
வாண்மே வியகலிங்கர் மண்.

வாட்டாறு கொங்கம் வடகலிங்கந் தென்மதுரை 5
கோட்டாறுங் கொண்ட குலதீபன்- ஏட்டில்
எழுத்திருபத் தெட்டிட்டா னென்றரசர் கேட்டுக்
கழுத்திருபத் தெட்டிட்டார் காண்.

மலையி னலைகடலில் வாளரவின் வெய்ய 6
தலையிற் பயின்ற தவத்தால்- தலைமைசேர்
அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர
எம்மா தவம்புரிந்தோம் யாம்.

மழையார் கொடைத்தடக்கை வாளபய னெங்கோன் 7
விழையார் விழையார்மெல் லாடை-குழையார்
தழையா முணவுங் கனியா மினமு
முழையா முழையா முறை

நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு நாற்பத்து நாலாம் ஆண்டில்
மீனநிகழ் நாயிற்று வெள்ளிபெற்றவுரோகணிநாள் இடபப்போதால்
தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தம் கோயிலெலாஞ் செம்பொன் வேய்ந்தாள்
ஏனவரும் தொழுதேத்தும் இராசராசன் குந்தவைபூ விந்தையாளே.

ஆரிய வுலக மனைத்தையுங் குடைக்கீழ் 9
ஆக்கிய குலோத்துங்க சோழற்
காண்டொரு நாற்பத் தாறிடைத் தில்லை
யம்பலத் தேவட கீழ்பால்

போரியன் மதத்துச் சொன்னவா றறிவார்
கோயிலும் புராணநூல் விரிக்கும்
நேரியற் காண்டோ ரஞ்சுடன் மூன்றில்
நிகரிலாக் கற்றளி நீடூர்

நிலாவினாற் சமைத்த நிலாவினா னமுத
சாகர னெடுந்தமிழ் தொகுத்த
காரிகைக் குளத்தூர் மன்னவன் றொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக்
கற்பக மிழலை நாட்டுவே ளாண்மை

கொண்டவன் கண்டன் மாதவனே
எண்டிசை யுலகை யொருகுடை நிழற்கீ
ழிருத்திய குலோத்துங்கற்சோழற்
கியாண்டொரு முப்பத் தெட்டினிற்

சோணாட் டிசைவள ரிந்தளூர் நாட்டுள்
உண்டை நீடியநீ டூருமை யோடு முலாவின
சிவபெரு மானுக்குவந்து வெண்கயிலை மலையெனச்
சிலையா லுத்தம விமானமிங் கமைத்தான்

தண்டமி ழமித சாகர முனியைச் சயங்கொண்ட
சோழமண் டலத்துத்தண்சிறு குன்ற நாட்டகத்
திருத்தித்சந்தநூற் காரிகை யவனாற்
கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்

காவல னிலாவினா னெவர்க்குங்
கருணையு நிதியும் காட்டிய மிழலை
நாட்டுவேள் கண்டன் மாதவனே.
ஒதுஞ் சகரர்யாண் டோரொருபத் தெட்டின்மேல்

ஆதிமூ லந்நாளி லானிதனிற் -சோதி
துளங்கில மேற்சோழன் சோழகுல வல்லி
களங்கமற வைத்தாள் கரு.

சரநிரைத் தாலன்ன தண்பணி தூங்கத் தலைமிசைச்செங் 12
கரநிரைத் தாரையுங் காண்பன்கொ லோகலிங் கத்துவெம்போர்
பொரநிரைத் தார்விட்ட வேழ மெல் லாம்பொன்னி நாட்டளவும்
வரநிரைத் தான்றொண்டைமான் வண்டைமாநகர் மன்னவனே

புயன்மேவு பொழிற்றஞ்சை முதற்பஞ்ச நதிவாணன் புதல்வன் பூண்ட 13
வயமேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல்வத்தர் வேந்தர்
இயன்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டதனி னிடர்க்க ரம்பைச்
செயன்மேவு மீசர்க்குத் திருநந்தா விளக்கொன்று திருத்தி னானே

விக்கிரம சோழன்
நடித்தது நச்சர வுச்சியி னுச்சி மதிலிலங்கை 14
இடித்தது வென்ற திருபது தோள்பதி னெண்பகலே
முடித்தது பாரதம் வீரப் புலிவைப்ப மூரிச்செண்டால்
அடித்தது பொற்கிரி விக்ரம சோழ வகளங்கனே.

கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயுஞ் 15
செய்ய கரிய திருமாலே -வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான்.

சரியும் புனைசங்குந் தண்டளிர்போன் மேனி 16
வரியுந் தன தடஞ்சூழ் வம்பும் -திருமான
ஆரந் தழுவுந் தடந்தோ ளகளங்கன்
கோரந் தொழுத கொடிக்கு.

விச்சா தரனேனு மந்தரத்து மேவானால் 17
அச்சுத னாயினுமம் மாயனலன்-நிச்ச
நிறைவான் கலையான் அகளங்க னீதி
இறையா னனகனெங் கோன்.

தண்டாமரை தருநாண்மலர் மீதோதிம மீனத் 18
தரளத்திரள்பவளத்திர ளென்றேழையர் தங்கைக்
கொண்டாடிட முன்னைக்கிது பின்னைத்தரு செம்மைக்
குணநான்மடி யுளதாகிய குடகாவிரி நாடா
பண்டாலிலை யமளித்துயில் குழவிப்பரு வத்தே
பவ்வத்தொடு முலகைச்சிறு பவளத்துவர் வாயால்
உண்டாயக ளங்காநிக ளங்காய்கரி தொழுதாள்
உய்யத்திரு வுளமோவெது செய்யத்திரு வுளமோ.

செய்யோனக ளங்கன்வள வன்சோழ குலேசன் 19
சென்னிக்குல தீபன்னுயர் பொன்னித்திரு நாடன்
பொய்யோடொரு நாளும்முறை செய்யாமனு துங்கன்
போர்வல்லவன் மல்லைப்பொழில் பொங்குங் குருகீரே
அய்யோவவ ரைப்போலொரு நிட்டூரரு முண்டோ
அஞ்சம்படு கைக்கேதுயர் நெஞ்சம்படு கைக்கே
வெய்யோன் விழு கைக்கேழுதுயர் நெஞ்சம்படு கைக்கே
விழிநீர்சொரி கைக்கேயெனை விட்டுப்பிரிந் தாரே.

வடவைக்கனலைப் பிழிந்துகொண்டு
மற்றுமொருகால் வடித்தெடுத்து 20
வாடைத்துருத்தி வைத்தூதி
மறுகக்காய்ச்சிக் குழம்புசெய்து
புடவிக்கயவர் தமைப்பாடிப்
பரிசுபெறாமற் றிரும்பிவரும்
புலவர்மனம்போற் சுடுநெருப்பைப்
புழுகென்றிறைத்தாற் பொறுப்பாளோ
அடவிக்கதலிப் பசுங்குருத்தை
நச்சுக்குழலென் றஞ்சியஞ்சி
அஞ்சொற்கிளிகள் பஞ்சரம்விட்
டகலாநிற்கு மகளங்கா
திடமுக்கடவா ரணமுகைத்த
தேவே சோழசிங்கமே
திக்குவிசயஞ் செலுத்தியொரு
செங்கோனடாத்து மெங்கோவே.

செங்கான்மாட வன்னம்படர் தீயாமென வெருவிச் சிறையிற்பெடை மறையக்கொடு திரியத்திரள் கமுகின் பைங்கான்மா கதமீது படர்ந்துதேறி நறுந்தண் பாளைக்கிடை பவளக்கொடி படர்காவிரி நாடாதங்கா தலி யருமைந்தரு முடனாக வணங்கும் தலைகாவெம துடல்காவெம துயிர்காவகளங்கா கொங்காமன துங்காவென மதுரேசர் வணங்கும் கொல்யானை யபங்காவிவள் குழலோசை பொறாளே.

இன்னங் கலிங்கத் திகல்வேந்த ருண்டென்றே
தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ -சென்னி
அகளங்கா வுன்றன் அயிரா வதத்தின்
நிகளங்கால் விட்ட நினைவு.

பழியும் புகழு மெவர்க்குமுண் டாமிந்தப் பாரிலுனக் 23
கழியுஞ் சிலையுங் கயலுமன் றோவக ளங்கதுங்க
மொழியும் பொழுதெங்கள் பெண்சக்ர வர்த்தி முகத்திரண்டு
விழியும் புருவமு மாகியிப் போதுன்னை வெல்கின்றவே.

தூபங் கமழும்பைங் கோதையன் விக்கிரம சோழன் மன்னர் 24
தீபன் புறங்கடை வந்துநின் றானின் றிருப்புருவச்
சாபங் குனிய விழிசிவப் பத்தலை சாய்த்துநின்ற
கோபந் தணியன்ன மேயெளி தோநங் குடிப்பிறப்பே.

விக்கிரம சோழன் படைத்தலைவன், மணவிற்கூத்தன் காலிங்கராயன் தில்லையில் புரிந்த திருப்பணியைப் பற்றிய பாடல்கள்.

எல்லை கடலா விகல்வேந்த ரைக்கவர்ந்த 25
செல்வமெலாந் தில்லைச் சிற் றம்பலத்துத்-தொல்லைத்
திருக்கொடுங்கை பொன்மேய்ந்தான் றிண்மைக் கலியின்
தருக்கொடுங்க வெல்கூத்தன் றான்.

தில்லையிற்பொன் னம்பலத்தைச் செம்பொனால் மேய்ந்துவா 26
னெல்லையைப்பொன்னாக்கினா னென்பரால்-ஒல்லை
வடவேந்தர் செல்வமெலாம் வாங்கவேல் வாங்கும்
குடைவேந்தன் றொண்டையார்கோ.

தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில் 27
பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்-ஒன்னார்க்குக்
குற்றம் பலகண்டோன் கொளிழைக்கும் வேற்கூத்தன்
சிற்றம் பலத்திலே சென்று.

பொன்னம் பலக்கூத்த ராடம் பலமணவிற் 28
பொன்னம் பலக்கூத்தர் பொன்மேய்ந்தார்-தென்னர்
மலைமன்ன ரேனை வடமன்னர் (மற்றக்)
குலமன்னர் செல்வமெலாங் கொண்டு

தில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலந்தன்னை 29
மல்லற் கடற்றானை வாட்கூத்தன்-வில்லவர்கோன்
அம்புசேர் வெஞ்சிலையி னாற்றல்தனை மாற்றியகோன்
செம்புமேய் வித்தான் றெரிந்து.

ஏனை வடவரச ரிட்டிடைந்த செம்பொன்னால் 30
ஏன லெனத்தில்லை நாயகருக் -கானெய்
சொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன்
பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.

தெள்ளு புனற்றில்லைச் சிற்றம் பலத்தார்க்குத் 31
தள்ளியெதி ரம்பலந்தா தன்பாதம்-புள்ளுண்ண
நற்பிக்கங் கொண்ட நரலோக வீரன்செம்
பொற்படிக்கங் கண்டான் புரிந்து.

இட்டானெழிற்றில்லை யெம்மாற் கிசைவிளங்க 32
மட்டார் பொழின்மணவில் வாழ் கூத்தன் - ஒட்டாரை
யின்பமற்ற தீத்தான மேற்றினா னீண்டொளிசேர்
செம்பொற் றனிக்காளஞ் செய்து.

பொன்னம் பலஞ்சூழப் பொன்னின் றிருவிளக்கால் 34
மன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான்-தென்னவர்தம்
பூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற
மாவேறு தொண்டையார் மன்.

சிற்றம் பலத்தானை யேத்தினான் தெவ்விடத்துக் 35
கொற்றத்தால் வந்த கொழுநெதியால் -பற்றார்
தருக்கட்ட வஞ்சினவேற் றார்மணவிற் கூத்தன்
திருக்கட்ட மஞ்சனமுஞ் செய்து.

தெளிதேனை யாயிர நாழிநெய்யால் 37
ஆடும் படிகண்டான் அன்றினர்கள்-ஓடுந்
திறங்கண்ட தாளன் சினக்களிற்றான் ஞாலம்
அறங்கண்ட தொண்டையர் கோனாங்கு

நட்டப் பெருமானார் ஞானங் குழைந்தளித்த 38
சிட்டப் பெருமான் திருப்பதிய-முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்றெவ் வேந்தவர்கெட
வாட்போக்கு தொண்டையர்கோன் மன்.

மல்லற் குலவரையா னூற்றுக்கால் மண்டபத்தைத் 39
தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் -கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்
கிழிவுகண்டான் தொண்டையர்கோ னேறு.

தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை 40
எல்லைக் குலவரைபோ லீண்டமைத்தான்-தொல்லைநீர்
மண்மகளைத் தங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி
உண்மகிழுந் தொண்டையர்கோ னுற்று.

புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய் 41
விக்கரணம் பார்ப்படத்தன் மேல்விதித்துத் -திக்களவு
மாநடத்திக் கோனடத்தும் வாட்கூத்தன் மண்ணிலறந்
தானடத்தி நீடுவித்தான் றான்.

வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும் 42
மாதுசூழ் பாக மகிழ்ந்தார்க்கு-போதுசூழ்
தில்லைக்கே செய்தான் திசைக்களிறு போய்நிற்கும்
எல்லைக்கே செல்கலிங்க ரேறு.
நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின்
இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் -கடங்கார்
பருமா ளிகைமேற் பகடுகைத்த கூத்தன்
திருமா ளிகையமைத்தான் சென்று.

எவ்வுலகு மெவ்வுயிரு மீன்று மெழிலழியாச் 44
செவ்வியாள் கோயிற் றிருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ்
எல்லைவட்டந் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன்
தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.

வாளுடைய பொற்பொதுவின் (மன்னனிடமாகும்) 45
ஆளுடைய பாவைக் கபிடேகம்-வேளுடைய
பொற்பினால் பொன்னம் பலக்கூத்தன் பொங்குகட
வெற்பினான் சாத்தினான் வேறு.

சேதாம்பல் வாய்மயிற்குத் தில்லையந் தேவிக்குப் 46
பீதாம் பரஞ்சமைத்தான் பேரொலிநீர்-மோதா
அலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக
மலைகின்ற தொண்டையார் மன்.

செல்வி(திருத்தறங்க டென்)னகரித் தில்லைக்கே 47
நல்லமகப் பாலெண்ணெய் நாடோறுஞ் -செல்லத்தான்
கண்டா னரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெலாம்
கொண்டானந் தொண்டையர் கோன்.

பொன்னு லகுதாம் புலியூர் தொழுவதற் 48
குன்னி யிழிகின்ற தொக்குமால் -தென்னர்
(குடிவி)டா மற்செகுத்த கூத்தன் பொன்னின்
கொடிபுறஞ் செய்த குழாம்.

ஆதிசெம்பொ னம்பலத்தி னம்மா னெழுந்தருளும் 49
வீதியும்பொன் மேய்ந்தனனாய் மேல்விளக்குஞ் - சோதிக்
கொடியுடைத்ய்ப் பொன்னாற் குறுகவலா னொன்றும்
படியமைத்தான் றொண்டையர்கோன் பார்த்து

நாயகர் வீதி யெழுந்தருளும் நன்னாளால் 50
தூய கருவெழு தூபத்தாற் -போயொளிர்சேர்
வான் மறைக்கக் கண்டானிம் மண்மகளை வண்புகழால்
தான்மறை கூத்தன் சமைத்து.

(பரனுமை வேட்ப(வே)சைவா சிரியர்) 51
திருவுருவ மானதிருக் கோலம் -பெருகொளியாற்
காட்டினான் தில்லைக்கே காசினிவாய் வெங்கலியை
ஒட்டினான் தொண்டையர் கோன்.

மன்றுதிகழ் தில்லைக்கே வாணிக் கரசகணந் 52
துன்றும் பொழின்மணவிற் றொண்டைமான் -என்றும்
இருந்துண்ணக் கண்டா னிகல்வேந்த ராகம்
பருந்துண்ணக் கண்டான் பரிந்து

தில்லைத் தியாகவலி (விண்சிற் பஞ்சவினி) 53
எல்லை நிலங்கொண்டிறையிழிச்சித் - தில்லை
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர்
குறைமுடிப்பான் தொண்டையர்கோ

என்றும் பெறுதலா லேராரெழிற்புலியூர் 54
மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று
கொடுத்தருளி மண்ணிற் கொடுங்கலிவா ராமே
தடுத்தனன் தொண்டையர்கோன் தான்

முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவா 55
றொத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தி
னெல்லைக் கிரிவா யிசையெழுதி னான்கூத்தன்
தில்லைச் சிற் றம்பலத்தே சென்று.

தில்லை வளருந் தெளிதே னொளிதழைப்ப 56
நல்லதிரு நந்தா வனஞ்சமைத்தான் -வல்லத்திற்கு
கோட்டங்கொள் வாள்வேந்தர் கொற்றக் களியானை
யீட்டங்கொள் காலிங்க ரேறு.

நூறா யிரங்கமுகு மாங்கமைத் தான்சினத்தின் 57
மாறாக வெல்களிற்று வாட்கூத்தன்-கூறாளும்
வல்லிச் சிறுகிடைக்கு வான்வளர மாநடஞ்செய்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் 58
பேசற் றவற்றைப் பெருவழியும்-ஈசற்குத்
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்து
மன்புலியா ணைநடக்க வைத்து.

ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரபி 59
ஆங்களித்தா னேற்றெதிர்ந்தா ராயிழையார் -தாங்கா
தொருக்கியுட லாவி யுயிர்த்துநாட் போக்கி
யிருக்கவென்ற தொண்டையா ரேறு.

தொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமார்ந் தார்கோயில் 60
கல்லா லெடுத்தமைத் தான் காசினியிற் -றொல்லை
மறைவளர்க்க வெங்கலியை மாற்றிவழு வாமல்
அறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து.

தில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர 61
எல்லையில்பே ரேரிக் கெழின்மதகு-கல்லினாற்
றானமைத் தான் றெவ்வேந்தர்க் கெல்லாந் தலந்தவிர
வானமைத்தான் தொண்டையார் மன்.

காலிங்கராயன் திருவதிகையில் செய்ததிருப்பணியைப் பற்றிய பாடல்கள்
பொன்மகர தோரணமும் பூணணியும் பட்டிகையுந் 62
தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான்-மன்னவர்கள்
தன்கடைவாய் நில்லாதார் தாள்வரைவாய் நின்றுணங்க
மின்கடைவேற் காலிங்கர் வேந்து.

மின்னிலங்கு பொற்சதுக்க மேகடம்ப மென்றிவற்றைத் 63
தென்னதிகை நாயர்க்குச் சேர்த்தினான் -தென்னவர்தந்
தோணோக்கும் வென்றி துறந்தே சுரநோக்க
வாணோக்குங் காலிங்கர் மன்.

வில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள் 64
நல்லநெயீ ரைஞ்ஞூற்று நாழியால்-வல்லி
யுடனாடக் கண்டான்றன் னொன்னலர்க்குக் கண்கள்
இடனாடச் செல்கூத்தன் ஈண்டு.

மண்டபமு மாளிகையும் வாழதிகை வீரட்டர்க் 65
கெண்டிசையுமேத்த வெடுத்தமைத்தான்-விண்டவர்கள்
நாள்வாங்கச் சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை
வாள்வாங்குங் காலிங்கர் மன்.

மன்னொளிசேர் நூற்றுக்கான் மண்டபத்தை மால்வரையால் 66
மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் -மன்னர்
இசைகொடா தோட விகல்கொண்டாங் கெட்டுத்
திசைகொடார் கூத்தன் தெரிந்து.

மன்னுதிரு வீரட்டர் கோயின் மடைப்பள்ளி 67
தன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான் -தென்னர்
குடமலை நாடெறிந்து கொண்டவேற் கூத்தன்
கடமலைமால் யானையான் கண்டு.

அதிகை யரனுக் கருவரையாற் செய்தான் 68
மதிகை நெடுங்குடைக்கீழ் மன்னர்-பதிகள்
உரியதிருச் சுற்று முடன்கவர்ந்த கூத்தன்
பெரியதிருச் சுற்றைப் பெயர்த்து.

அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந் 69
திருவதிகைக் கேயமையச் செய்து-பெருவிபவங்
கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்
கொண்டானந் தொண்டையர் கோ.

தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோர் 70
பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு
முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த
கொற்றத்தான் தொண்டையர் கோ.

வானத் தருவின் வளஞ்சிறந்த நந்தவனம் 71
ஞானத் தொளியதிகை நாயகர்க்குத் - தானமைத்தான்
மாறுபடுத் தாருடலம் வன்பேய் பகிர்ந்துண்ணக்
கூறுபடுத் தான்கலிங்கர் கோ.

எண்ணில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை 72
அண்ணல் திருவிளங்க வாங்கமைத்தான்-மண்முழுதுந்
தங்கோன் குடைநிழற்கீழ்த் தங்குவித்த வேற்கூத்தன்
எங்கோன் மணவிலா ரேறு.

ஐயொருப தாயிரமாம் பூக மதிகையிலே 73
மைவிரவு கண்டர்க்கு வந்தமைத்தான்-வெய்யகலி
போக்கினான் மண்ணைப் பொதுநீக்கித் தங்கோனுக்
காக்கினான் தொண்டையர்கோ னாங்கு.

அராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக் 74
குராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான்-பொராப்புறந்தான்
கண்டருக்குத் தான்கொடுத்த காலிங்கன் காசினிக்குத்
தண்டருப்போ னின்றளிப்பான் றான்.

வாரி வளஞ்சுரக்க வாழதிகை நாயகருக் 75
கேரியு மூரு மிசைந்தமைத்தான்-போரிற்
கொலைநாடு வெஞ்சினவேற் கூத்தன் குறுகார்
மலைநாடு கொண்டபிரான் வந்து.

அம்மா னதிகையிலே யம்பொற் றடமிரண்டும் 76
செம்மா மலரிலகச் செய்தமைத்தான் -கைம்மாவின்
ஈட்டநின்ற வெம்பாமற் கண்டருளென் றீண்டரசர்
காட்டநின்ற வேற்கூத்தன் கண்டு.

அருளா கரநல்லூ ராங்கமைந்த வேரி 77
இருளார் களத்ததிகை யீசன்-அருளாரச்
சென்றமைத்தான் தென்னாடன் சாவேற்றின் றிண்செருக்கை
யன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு.

போதியி னீழற் புனிதற் கிறையிலிசெய் 78
தாதி யதிகையின்வா யாங்கமைத்தான்-மாதர்முலை
நீடுழக்கா ணாகத்து நேரலரைத் தன்யானைக்
கோடுழக்காண் கூத்தன் குறித்து.

மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத் 79
தீசனிடமருங்கி லேந்திழைக்கு-மாசில்
முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண்
குடிமுதலான் தொண்டையர் கோன்.

ஆற்றற் படைவேந்த ராற்றா தழிந்திட்ட 80
மாற்றற்ற செம்பொன்னால் வாழதிகை-ஏற்றுக்
கொடியார்கர்க்குக் கோலப் பரிகலமாச் செய்தான்.
படியாற்குஞ் சீர்கூத்தன் பார்த்து.

அண்ண லதிகையாற் கையிரண்டு நல்விளக்கு 81
மண்ணின் வறுமை கெட வந்துதித்துக் -கண்ணகன்ற
ஞாலத் தறஞ்செய் நரலோக வீரன்பொற்
சீலத்தி னாலமைத்தான் சென்று.

நீடு மதிகையரன் நித்தல் பெருங்கூத்தை 82
யாடு மரங்கமைத்தா னன்றினார் -நாடு
பரியெடுத்த தூளி பகல்மறைப்பச் சென்றாங்
கெரியெடுத்தான் றொண்டையா ரேறு.

ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள 83
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்-பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.

நல்யாக மண்டபத்தைச் செய்தான் நரபதியர் 84
பல்யானை யோடுணங்கப் பாவலர்க-ளெல்லாம்
புகுங்குடையான் தொண்டையர்கோன் பொன்மழையோ டொக்கத்
தருங்கொடையான் தானதிகை சார்ந்து.

அண்ண லதிகையர னாகம் பிரியாத 85
பெண்ணினல்லா ளெண்ணான்கு பேரறமும் - எண்ணியவை
நாணாள செலவமைத்தா னண்ணா வயவேந்தர்
வாணாள் கவர்கூத்தன் வந்து.

ஆட லமர்ந்தபிரா னாங்கதியை வீரட்டம் 86
நீடுவதோர் கோயில் நினைந்தமைத்தான் -கோடிக்
குறித்தா ருடல்பருந்து கூட்டுண்ணக் காட்டி
மறித்தானந் தொண்டையர் மன்.

இராண்டாம் குலோத்துங்க சோழன்
இன்றும்யான் மீள்வ தறியே னிரணியனை 87
அன்றிரு கூறா வடர்த்தருளிக் -கன்றுடனே
ஆவின்பின் போன வனகன் அனபாயன்
மாவின்பின் போன மனம்.

என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ 88
பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள்-முன்னே
தனவே யென்றாளுஞ் சயமடந்தை தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு.

அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மனபாயா 89
நின்னையா ரொப்பர் நிலவேந்தர்-அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்துக் கில்லையாற்
சூரியனே போலுஞ் சுடர்.

பூதலத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க் 90
காதலித்தார் தாமே கவர்தலால்-நீதி
அடுத்துயர்ந்த சீர்த்தி யனபாயா யார்க்குங்
கொடுத்தியெனக் கொள்கின் றிலேம்.

தண்கவிகை யாலுலகந் தாங்கு மனபாயன் 91
வெண்கவிகைக் குள்ளடங்கா வேந்தில்லை -யெங்கும்
மதியத் துடனிரவி வந்துலவும் வானிற்
பொதியப் படாத பொருள்.

தம்மாற் பயன்றூக்கா தியாவரையுந் தாங்கினும் 92
கைம்மாறுங் கால முடைத்தன்றே - எம்மாவி
அன்னவனை யாழி யனபாயனை யலராள்
மன்னவனை மானுமோ வான்.

இகன்மதமால் யானை யனபாய னெங்கோன் 93
முகமதியின் மூர னிலவால்-நகமலர்வ
செங்கயற்க ணல்லார் திருமருவு வாள்வதன
பங்கயங்கள் சாலப் பல.

மூவாத் தமிழ்பயந்த முன்னூன் முனிவாழி 94
ஆவாழி வாழி யருமறையோர்-காவிரிநாட்
டண்ண லனபாயன் வாழி யவன் குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை.

வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து 95
மண்குளிரச் சாயல் வளர்க்குமாந் -தண்கவிகைக்
கொங்கா ரலங்கலன பாயன் குளிர்பொழில்சூழ்
கங்கா புரமாளிகை கை.

நானே யினிச்சொல்லி வேண்டுவ தில்லை நளினமலர்த் 96
தேனே கபாடந் திறந்து விடாய்செம்பொன் மாரிபொழி
மானே ரபய னிரவி குலோத்துங்கன் வாசல்வந்தால்
தானே திறக்குநின் கைம்மல ராகிய தாமரையே.

ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம் 97
நீடுங் குடையிற் றரித்த பிரானென்று நித்தநவம்
பாடுங் கவிப்பெரு மானொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே.

நீடிய வேண்டிசை நீழல்வாய்ப்ப 98
நேரிய தெக்கிண மேருவென்னப்
பீடிகை தில்லை வனத்தமைத்த
பெரிய பெருமாளை வாழ்த்தினவே.

இரண்டாம் இராசராசசோழன்
அன்று தொழுத வரிவை துளவணிவ 99
தென்று துயில்பெறுவ தெக்காலந் -தென்றிசையில்
நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோ தயா.

கொலையைத் தடவிய வைவே லரக்கர் குலமடியச் 100
சிலையைத் தடவிய கையே யிதுசெக தண்டத்துள்ள
மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்தவொன்னார்
தலையைத் தடவி நடக்குங்கொல் யானைச் சயதுங்களே

கரத்துஞ் சிரத்துங் களிக்குங் களிறுடைக் கண்டன்வந்தான் 101
இரத்துங் கபாட மினித்திறப் பாய்பண் டிவனணங்கே
உரத்துஞ் சிரத்துங் கபாடந் திறந்திட்ட துண்டிலங்கா
புரத்துங் கபாட புரத்துங்கல் யாண புரத்தினுமே.

தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொற்றுலாத்திடைவண் 102
டுழுகின்ற தார்க்கண்ட னேறிய ஞான்றி னுவாமதிபோய்
விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலையில்வந்
தெழுகின்ற ஞாயிறொத் தான்குல தீப னெதிர்த்தட்டிலே

இழையொன் றிரண்டு வகிர்செய்த வற்றொன்றிணையுமிடைக் 103
குழையொன் றிரண்டு கொம்பனையாய்கொண்ட கோபந்தணி
மழையொன் றிரண்டுகைம் மான பரன்கண்டன் வாசல் வந்தால்
பிழையொன் றிரண்டு பொறுப்பதன் றோகடன் பேதையர்க்கே

கண்டன் பவனிக் கவனப் பரிநெருக்கால் 104
மண்டுளக் காதே யிருந்தவா -கொண்டிருந்த
பாம்புரவி தாயல்ல பாருரவி தாயல்ல
வாம்புரவி தாய வகை.

அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே
லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம் 105
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன்கை வாளென்ன வந்தே.

தாராக வண்டந் தொடுத் தணிந்தார்
தமக்கிடம் போதத் தமனியத்தாற் 106
சீராச ராசீச் சரஞ்சமைத்த தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே

பிரட்டனை யேபட்டங் கட்டழித்துப் பேரே ழரையிலக் கம்புரக்க 107
இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட
இராசகம் பீரனை வாழ்த்தினவே.

அழிவந்த வேதத் தழிவுமாற்றி
அவனி திருமகட் காகமன்னர் 108
வழி வந்த சுங்கந் தவிர்த்தபிரான்
மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.

செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு 109
வருத்தந் தவிர்த்துல காண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே

முன்றிற் கிடந்த தடங்கடல்போய் முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை 110
மன்றிற் கிடங்கண்ட கொண்டல்மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே

இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த 111
வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.

தென்னவர் தென்மது ராபுரி சீறிய 112
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே.

பார்தரு வார்பெற மாறில் பசும்பொன் 113
தேர்தரு மாபர கேசரி வாழியே.

வாழிய மண்டல மால்வரை வாழி குடக்கோழி மாநகர் 114
வாழிய வற்றாத காவிரி வாழி வரராச ராசனே.

மூன்றாம் குலோத்துங்க சோழன்
மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம் 115
சேய வன்திருப் பேரம்ப லஞ்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீரன பாயன் அரசவை.

நற்றமிழ் வரைப்பி னோங்கு நாம்புகழ் திருநாடென்றும் 116
பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிதுகாக்குங்
கொற்றவன் அனபா யன்பொற் குடைநிழற் குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ.

கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
கதிரிளம் பிறைநறுங் கண்ணி 117
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும் அளப்பரும் பெருமையினாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும் வென்றிவெண் குடையன பாயன்
செய்யகோ லபயன் திருமனத் தோங்குந் திருக்கயி லாயநீள் சிலம்பு.

அன்ன தொன்னக ருக்கர சாயினான் 118
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீரன பாயன் வழிமுதல்
மின்னு மாமணிப் பூண்மனு வேந்தனே

சென்னி வெண்குடை நீடன பாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் 119
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினி லளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக்குவதோர்
நன்னெடும்பெருந் தீர்த்தமுன் னுடைய
நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.

பொன்மலைப் புலிநின்றோங்கப் புதுமலை யிடித்துப்
போற்றும் 120
அந்நெறி வழியேயாக அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அனபா யன்சீர் மரபின் நகரமாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதிமூதூர்.

சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லைத் திருவெல்லை 121
பொன்னின் மயமாக்கியவளவர் போரே றென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அனபாயன் வருந்தொன்மரபின் முடிசூட்டும்
தன்மை நிலவு பதியைந்தின் ஒன்றாய் நீடுந் தகைத்தவ்வூர்.

எம்பிரான் சிவனே எல்லாப் பொருளுமென் றெழுது
மேட்டில் 122
தம்பிரா னருளால் வேந்தன் தன்னைமுன் னோங்கப் பாட
அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னுஞ் சீர்த்திச்
செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூன் நிமிர்ந்த தன்றே.

அந்நகரில் பாரளிக்கு மடலரச ராகின்றார் 123
மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்குஞ்
சென்னிநீ டனபாயன் திருக்குலத்து வழிமுதலோர்
பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழ ரெனப்பொலிவார்.

மந்திரிகள் தமையேவி வள்ளல்கொடை யனபாயன் 124
முந்தைவருங் குலமுதலோ ராயமுதற் செங்கணார்
அந்தமில்சீர்ச் சோணாட்டி லகநாடு தொறுமணியார்
சந்திரசே கரனமருந் தானங்கள் பலசமைத்தார்.


சேர்க்கை III

கி. பி. 1070 முதல் கி. பி. 1279 வரையில் அரசாண்ட சோழ மன்னர்களின்
குறிப்பு :

பரகேசரி இரண்டாம் இராசராச சோழனுக்குப் பின்னும் பரகேசரி மூன்றாங் குலோத்துங்கசோழனுக்கு முன்னும் கி.பி. நீக்குக கி.பி. 1163 முதல் கி.பி.1178 வரையில் இராசசேகரி இரண்டாம் இராசாதிராச சோழன் என்ற வேந்தன் ஒருவன் ஆட்சி புரிந்துள்ளனன். அவன் விக்கிரம சோழன் பேரன் என்பதும் நெறியுடைப்பெருமாள் புதல்வன் என்பதும் பல்லவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றன. ஆயினும், அவன் தந்தையைப் பற்றிய செய்தி நன்கு புலப்படவில்லை.


சேர்க்கை IV

இரண்டாம் இராசாதிராச சோழனது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு
(1)வதி ஸ்ரீ

கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும்
அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்துவாழ

2.  நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ்பரப்ப ஆதியுகம் ஆமென்னச் சோதிமுடி புனைந்தருளி

3.  அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில் நின்று பாரிப்பத் தென்னவருஞ் சேரலருஞ் சிங்களரு முதலாய

    மன்னவர்கள் திறைசுமந்து வந்திறைஞ்சிச் சேவிப்ப
    ஊழிசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச் செம்பொன்

4.  வீரசிம்ஹாசனத்து உலகுடைமுக்கோக் கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு எட்டாவது –

5.  ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்ற நாட்டுக் காரிகைக் குளத்தூர்க் குளத்துளான் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பியார் ஆன பல்லவ

6.  ராயர் பெரிய தேவர் ராஜராஜ தேவர் பத்து கோயிற் கொத்துமானை குதிரை அகம்படி நியாய முள்ளிட்ட துறைகளுக்கும் முதலிகளுமாய் முதலிகள் ஓபாதி காரியத்து

7.  க்குங்கடவருமா யெல்லா வரிசைகளும் முன்னேவல் உள்ளிட்டு முதலிகள் பெறக் கடவ ஏற்றங்களும் பெற்று நின்று பெரியதேவர் துஞ்சியருளிப் பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருநட்சத்திரமா

8.  கையால் ஆயிரத்தளிப் படை வீடும் விட்டுப் போத வேண்டிப் போதுகிற இடத்துத் திருவந்தப் புரமும் பரிவாரங்களும் உள்ளிட்டன எல்லாம் பரிகரித்துக் கூட்டிக்கொடு போந்து ராஜ

9.  ராஜபுரத்திலே இருந்த இடத்துக்கு சூழ்ந்த இடன்……… யாறு மிகுதிப்……… ரத்து உடன் கூட்டத்தா …… ராலும் எல்லாக் கலக்க …… சோழராஜ்யத்துக்குள்ளேயே யிருப்பார் காரணவருட ……..

10. வேண்டிப்புறத்து எல்லா அடைவு கேடுகளும் வராத இடத்து இந்நல்களும் பர்கரித்து இப்…. பெரிய தேவர் எழுந்தருளிய நாளிலே திரு அபிஷேகத்துக்கு உரிய பிள்ளைகள் இன்றியே……… ருக்கிற

11. படியைப் பார்த்து முன்னாளிலே காரியம் இருந்தபடி விண்ணப்பஞ் செய்து கங்கைகொண்ட சோழ புரத்திலே எழுந்தருளி யிருக்கிற பிள்ளைகளை பிரயாணம் பண்ணுவித்து உடையார் விக்கிரமசோழ தேவர் பேரனார்

12. நெறியுடைப் பெருமாள் திருமகனார் எதிரிலிப் பெருமாளைப் பெரிய தேவர் துஞ்சியருளின நாளிலே மண்டை கவிப்பித்துப் போந்தாரானவாறே இவரைத் திரு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவராக நிச்செயித்து நாலாந் திருநக்ஷத்திரத்திலே ராஜாதி ராஜதேவர் எ

13. ன்று திரு அபிஷேகம் பண்ணுவித்து உடன் கூட்டமும் நாடு மொன்றுபட்டுச் செல்லும்படி பண்ணுவித்தருளினார் மிகை செய்யாதபடியும் பரிகரித்து இவர்கள் எல்லோரையுஞ் சேரப்பிடித்துப் பணி அழகிதா

14. கச் செய்வதொருபடியும் பண்ணி ஈழத்தான் பாண்டி நாட்டிலே படைகளும் காரணவரானாரையும் மிகுதிப் போதவிட்டு இந் நாடு கைக்கொள்ளக் கடவனானப் பண்ணின இடத்துப் பாண்டியனார் குலசேகர தேவர்

15. தம்முடைய ராஜ்யம் விட்டுச் சோழ ராஜ்யத்திலே புகுந்து என்னுடைய ராஜ்யம் நான் பெறும்படி பண்ணவேணுமென்று சொல்ல இவர் உடையார் குலசேகர தேவர் பெறும்படி பண்ணக்கட

16. வராகவும் இந்த ராஜ்யத்திலே புகுந்து வந்து கைக்கொண்ட இலங்கா புரி தண்டநாயகன் உள்ளிட்டாரைக் கொன்று பாண்டியர்கள் இ

(17 ருப்பான மதுரை வாசலிலே இவர்கள் தலை தைப்பிக்கக் கடவராகவும் சொல்லி யிப்படி யெல்லாம் விண்ணப்பஞ் செய்து திருவுள்ளமானபடியே பாண்டியனார் குலசேகர தேவர் சோழ ராச்சியத்தில் இருந்த நாளிலே இவர்க்கு வே

18. ண்டுவன வெல்லாங் குறைவறச் செய்து பரிகரித்து பலத்தாலும் அர்த்தத்தாலும் உற்சாகத்தாலும் பாண்டிநாடு கைக்கொண்டுதான் சொன்ன படியே இலாங்காபுரி தண்ட நாயகன் உள்ளிட்டாரைக் கொன்று இவர்கள் தலை

19. மதுரை வாசலிலே தைப்பித்து பாண்டியனார் குலசேகர தேவர் மதுரையிலே புகுகைக்குச் செய்ய வேண்டுவனவும் வ… ஜயத்து செய்வித்து இவரை மதுரையிலே புகவிட்டுப் பாண்டியநாடு ஈழ நாடாகாத

20. படி பரிகரித்துச் சோழ ராஜ்யம் சென்ற படிக்கு ஈடாகத் தொண்டைநாடும் பாண்டி நாடும் செல்லும்படியும் பண்ணி ராஜ காரியங்கொண்டு நிர்வகிக்கக் கடமை கொண்டு இக்கட்டளையிலே காரியஞ் செல்வதொரு படி காரியங்கொண்டு செல்வத்தால் நிற்க இவர் வியாதிபட்டு இன்றியே ஒழிந்தமையில் இவர் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் இவர்கள் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் பெண் மக்களுக்கும் தாயார்க்கும் உட

21. ன் பிறந்தாளுக்கும் இவன் மக்களுக்கும் இவர்கள் வர்கத்தாருக்கும் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு இவர் காணியான சோழேந்திர சிங்கநல்லூரில் பழம் பெயர் தவிர்ந்து யாண்டு எட்டாவது முதல் அந்தராயம் பழம் பாட்டம் உட்பட இ

22. றையிலியாய் வேறு பிரிந்த ராஜாதி ராஜன் குளத்தூர் நிலம் நாற்பதிற்று வேலி இந்நிலம் அனுபவிக்கும் படிக்கு ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவனமுடையான் அம்

23. மையப்பனாரான பல்லவராயன் நிச்சயித்தபடியே அனுபவிக்கும் விருந்தங்களில் சிற்றாலத்தூருடையான் மகளுக்கு நிலம் மூவேலியும் ஆலிநாடுடையான் மகளுக்கு நிலம் மூவேலியும் இவள் மக்கள் வாழ்க்கைப்பட்ட பெண்கள் மூவர்க்கு

24. பேரால் நிலம் இரு வேலியாக நிலம் அறு வேலியும் நெற்குன்றங்கிழார் களப்பாளராயர் மகளுக்கு நிலம் மூவேலியும் இவள் மக்களில் அழகிய தேவனுக்கு நிலம் மூவேலியும் பெண் மக்களுக்குப் பேரால் நிலம் அறுவேலி

25. யும் அம்பர் அருவந்தை காலிங்கராயர் மகளுக்கு நிலம் மூவேலியும் மக்களில் சேந்தன் திருநட்டமாடி வீரநம்பி தேவன் குடையான் மகளுக்கும் இவள் மகளுக்கும் நிலம் இருவேலியும் ராஜராஜ தேவர் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் நிலம் எண்வேலியும் தாயார் வைப்பூ

26. ருடையார் மகளார்க்கு நிலம் வேலியும் உடன் பிறந்த பெண்களில் வீழியூருடையானுக்கு புக்க பெண்ணுக்கும் இவள் மகளுக்கும் நிலம் இருவேலியும் ஆக நிலம் நாற்பதிற்று வேலியும் அந்தராயம் பாட்டம் உட்பட இறையிலி

இரண்டாம் இராசாதிராச சோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு

1.  வதிஸ்ரீ + கடல் சூழ்ந்த பார்மாதரும் (பூமாதரும் ) கலைமாதரும் -அடல் சூழ்ந்த போர்மா

2.  தருஞ்சீர் மாதரும் அமர்ந்து வாழ-நாற்கடல் சூழ் புவிஏழும் பாற்கடல் சூழ் புகழ் பர

3.  ப்ப- ஆதியுகமா மென்னச் சோதிமுடி புனைந்தருளி -அறுசமயமும் ஐம்பூதமும் நெ

4.  றியில் நின்று பாரிப்பத் -தென்னவருஞ் சேரலருஞ் சிங்களரும் முதலாய -மன்னவர்கள் திறை

5.  சுமந்து வந்தீண்டிச் சேவிப்ப -ஊழிஊழி ஒரு செங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்-செம்பொன் வீரஸி

(6)ம்ஹாஸநத்து உலகுடை முக்கோக் கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி பன்மரான

7.  திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜாதி ராஜதேவர்க்கு யாண்டு பன்னிரண்டாவது நாள் நூற்றைம்பத்

8.  தேழினால் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மேன்

9.  மலைப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையார் திருவாலங்காடுடையார் கோயிலில் தேவகன்மிக்கு

10. ம் ஸ்ரீமாஹேவரக் கண்காணிசெய்வார்களுக்கும் பழையனூருடையான்வேதவன முடையான் அம்மைய

11. ப்பனான அண்ணன் பல்லவராஜன் ஈழத்தான் பராக்கிரமபாகு ஆள்வான்போதேதுடங்கி சோழராச் சியத்துக்கு

12. விரோதமாயிருப்பன பல வடிகளாலுஞ் செய்யப் பார்த்து இதுக்கு உறுப்பாகப் பாண்டிநாட்டிலே படை

13. யுற விட்டு…… (குலசேகரனையும் மதுரையில் நின்றும் வெள்ளாற்றுக்கு வடகரையிலே போ

14. தப்பண்ணி(னபடியாலே)…. வினைக்கேடுகளும் செய்யப்பார்த்த இடத்து இதுக்குப்பரிகாரமாக குல

15. சேகரர்க்கு (வேண்டுவனவுஞ்செய்துமுத) லிகளும் படைகளும்போக விட்டு ஈழத்தான் படையையு

16. ம் இப்படைக்(குக் காரணவரான) இல(ங்கா புரத) ண்ட நாயக்கனும் ஜகத்தரயத் தண்ட நாயக்கனும் உள்ளிட்டா

(17)ரையுங் கொன்று (மதுரை வாசலிலே இவர்கள் தலைகள்) தைப்பித்து இவ்வூரிலெ குலசேகரரையும் புகவிட்டுச் செ

18. ல்லா நிற்க ….. கு விரோதமாயிருப்பதை செய்யப் பார்த்து இவன் தன் படை

19. நிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளு

20. ம் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மரு மகனாராய் ஈழ ராச்சியத்துக்குங்

21. கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனவுஞ் செய்து இவரையும் இ

(22)வருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகவிட்டுப் புலைச்சே

23. ரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும் அழித்து ஈழத்தானினாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங்கைக்கொண்

24. டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காத மேற்படவுந் தென் வடல் முப்பதின் காதமேற்படவும் அழித்து இத்

25. துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக் கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் நமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரிய

26. ம் எல்லாப் படியாலும் இவன் அழியச் செய்வித்த படிக்கும் (1) பாண்டியனார்குலசேகரர் தமக்கு முன்பு செய்த

27. நன்மைகளும் பாராதே ஈழத்தானுடனே சம்பந்தம் பண்ணவும் இவனும் இவருங்கூட நின்று சோழ ராச்சியத்துக்

28. கு விரோதமாயிருப்பன செய்யவுங் கடவதாக நிச்சயித்து இதுக்கு உறுப்பாகப் பாண்டி நாட்டு ஏழகத் தாரிலும் மற்றச்

29. சாமந்தரிலும் நமக்குச் சேர்வு பட்டு நின்றுடன் செய்கிற இராசராச கற்குடி ராயனும் இராசகம்பீர அஞ்சு கோட்

30. டை நாடாழ்வானும் உள்ளிட்டாரை அத்துறைகளில் நின்றும் வெள்ளாற்றுக்கு வடகரையிலே போதப்பண்ணி

31. இலங்காபுரித் தண்டநாயக்கனும் ஜகத்தரயத் தண்டநாயக்கனும் உள்ளிட்டார். தலைகளாய் மதுரை வாசலில் தைச்ச தலை

(32)களும் வாங்கிப்போகடுவித்து எல்லாத் தீமைகளும் செய்யக் கடவதாகக் கருதிச் செய்கிறபடியும் ஈழத்தான் குலசேகரருட

33. ன் கூடநின்றுஉதவிசெய்கைசுட்டி இவருடன் சார்வுபட்டு நின்றார்க்கு வரக் காட்டின ஓலைகளும் வ(துக்களும் வழி) யிலே இவர் எல்லாப் படியாலும் சோழ ராச்சியத்துக்கு விரோதமாயிருக்கையாலே இவனை

34. அங்கு நின்றும் போக்கி முன்பே பிடித்த மதுரைக்குக் காரணவரான பராக்ரம பாண்டியர் மகனார் வீர (பாண்டிய) தேவரை மதுரை கோயிலில் இடக் கடவதாக இவனுக்கு நாம் சொல்லி பெலங்களையும் வேண்டுவாரையும் போகவிடுவனவும் விட்டு…. இவ்வதுவாலுங் குதிரையாலும் வேண்டுவன வையிற்றில் நமக்குச் சொ

35. ல்லிச் செய்ய வேண்டுவனவுஞ் செய்வித்து அல்லாதன இவனே மிகுதிப்பட நேர்ந்தும் செய்து சுருக்கின நாளைக்குள்ளே மதுரை…. ரை ப் போக்கி வீரபாண்டிய தேவரை மதுரையில் புகவிட்டபடிக்கும் இவனுக்கு அருமொழி தேவ வளநாட்டு நென்மலி நாட்டு இராஜராஜன் பழையனூரிவே பதிற்று

36. வேலி நிலம் பன்னிரண்டாவது முதல் அந்தராயம்பாட்டம் உட்பட இறையிலியாக இட்டு இப்படி உடையார் திருவாலங்காடுடைய…… மூவேந்த வேளான் இவை நீலகங்கரையன் எழுத்து

37. இவை தீபத்திரையன் எழுத்து இவை மலையப் பிராஜன் எழுத்து இவை மழவ………..

38. து இவை வில்லவ ராஜன் எழுத்து

மூன்றாங் குலோத்துங்க சோழனது திரிபுவனக் கல்வெட்டு

வடமொழியில் உள்ள இந்தச் சாசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு: -

1.  சக்கரம் முதல் அநுராதம் வரையில் (அதாவது வடக்கேயுள்ள சக்கரக் கோட்டம் முதல் தெற்கேயுள்ள அநுராதபுரம் வரையில் ) உள்ள பூமியைப், போர்முகத்தில் ஸிம்ஹள அரசனைக் கொன்று, கேரள மன்னனை முறியடித்து, இந்திரனை ஜயித்த வீரபாண்டியனைக் கொன்று, பாண்டிய மன்னனால் பாதுகாக்கப் பெற்ற மதுரையைக் கைப்பற்றி (அழித்து), அங்கே வீராபிஷேகம் செய்து, திரைலோக்ய வீரன் என்ற பெயர் பெற்ற அரசன் ஸ்ரீகுலோத்துங்க சோழன் வெற்றி கொண்டு ஆண்டு வருகின்றான்.

2.அவனுடைய புஜங்கள் (கதவுக்குத் தாழ்ப்பாள் போல்) திக்குகளை யெல்லாங் காத்துத் தொந்தரவு ஏதும் நிகழாமல் பரிபாலனம் நடத்தி வருவதால், முன்னொரு நாள் மகாவிஷ்ணு ஆதிவராக அவதாரம் எடுத்துத் தன்னுடைய தந்தங்களால் பூமியைத் தூக்கி நிலைநிறுத்திய போது, வாள் முனையில் கிடப்பது போல் அங்கே இருந்த நிலைக்குப் பூமிதேவி இப்போது இன்பத்துடன் நினைவு கூர்கிறாள்.

3.  புஜபல பராக்ரமமாகிய நெருப்பிலிருந்து வந்த புகைக் கூட்டம் போலவும், போர்மடந்தையின் கறுத்த கேசபாசம் போலவும் (கறுத்த நிறம் வாய்ந்து). மூவுலகத்தையும் ரக்ஷிப்பதற்கென்றே பிரமாவினால் நியமிக்கப்பட்ட அவனுடைய குணப்பிரதாபங்களை யாரே விவரித்துக் கூற முடியும்!

4.  பூமி முதல் ஆகாசம் வரையில் இடைவெளியில்லாமல் பரந்து ஒளி வீசும் அவனுடைய புகழ் பிநாகபாணியான சிவபெருமானுடைய திருமேனிபோல் மூவுலகத்திலும் வியாபித்து நிற்கிறது.

(ரதாங்கபாணி என்பது பாடமானால் அந்தச் சொல் ரதத்துக்கு அங்கமான வில்லைக் கையில் தரித்திஸருப்பவர் என்று பொருள்படும். விஷ்ணுவின் நாமங்களில் அது ஒன்று. விஷ்ணு என்னும் சொல்லே எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் என்ற பொருள் வாய்ந்தது.

5.  அழகில் மன்மதன் ; கொடையில் கற்பக விருக்ஷம்; பொறுமையில் பூமி; கோபத்தில் யமன்; வீரத்தில் பரசுராமன், அர்ஜ்ஜூநன் ஆகியோர்; நீதியில் பிரகபதி, சுக்கிரன் ஆகியவர்கள் ; மூவுலகத்தையும் பாதுகாத்து ரக்ஷிப்பதில் இந்திரன் சங்கீதத்தில் பரதமுனிவர் ; இவ்விதம் விளங்கும் அரசனான இந்த வீரனுடைய புகழை வருணித்துக் கூற முடியுமா?

6.  (சிதம்பரத்திலே ) சபாபதியின் (அதாவது நடராஜாவின்) முன்னுள்ள மண்டபத்தையும். மலைமகள் (கிரீந்திரஜா அதாவது சிவகாமி அம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகார மாளிகைகளையும், அவ்வூர்ப் பெருமானிடத்தே இடை யறாத பக்திகொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும் படி நிர்மாணித்தான்.

7.  (காஞ்சீபுரத்திலே) ஏகாம்பரேசருடைய அழகு பொருந்திய கோயிலையும், மதுரையில் ஆலவாயாருடைய (அதாவது சுந்தரேசப் பெருமானுடைய ) கோயிலையும், (திரு விடை மருதூர்) மத்யார்ஜ்ஜூநத்தின் கோயிலையும், (தாரா சுரத்தில் உள்ள) ஸ்ரீராஜ ராஜேச்சுர ஆலயத்தையும், (திருவாரூரில் உள்ள) வன்மீகநாதருடைய கோயிலையும், இந்நிலவுலகில் பொன் மயமாக விளங்கும்படி அமைத்தான். இன்னும் புற்றிடங் கொண்டாரது சபையையும் பெரிய கோபுரத்தையும் கட்டினான்.

8.  பூமியின் நான்கு திசைகளையும் வெற்றிகொண்ட திரிபுவன வீரன் இவ்வூரையே இருப்பிடமாகக் கொண்டு அநேகப் பிரகார மாளிகைகள், பற்பல வீதிகள் ஆகியவற்று டனும், சூரியனுடைய கதியையே தடுக்கக் கூடியதாக வான வீதியை முட்டும் படி உயர்ந்த விமானத்துடனும் பொன்மயமாக அழகுபெறத் திரிபுவன வீரேச்சுரம் என்னும் இத்திருக் கோயிலை எடுப்பித்தான்.

9.  ஸ்ரீகண்டசம்பு என்பவருடைய குமாரரும், தன்னுடைய குருவும் ஆன ஈசுரசிவர் என்னும் சோமேசுரரைக் கொண்டு இவ்வுலகத்துக்கே அம்மையப்பராக விளங்கும் பரமசிவன் பார்வதி ஆகிய இருவரையும் மிகச் சிறந்த முறையில் பாண்டியாரி என்ற இவ்வரசன் பிரதிஷ்டை செய்வித்தான்.

10. ராஜகுருவான அந்த ஈசுரசிவர் வித்துவான்களில் சிறந்தவர், பதினெட்டு சிவ புராணங்களையும் தெளிய அறிந்தவர். பெருமானின் உயர்வைச் சொல்லும் உபநிட தங்களை விரிவாகச் சொல்பவர், சைவ தர்சநந்தை (அனுப வத்தில்) கண்டவர், சித்தாந்த ரத்நாகரம் என்னும் நூலை இயற்றியவர். யாரே அவரது குணத்தைத் தேடி அடைய முடியும்! (ஒருவராலும் முடியாது.)

மூன்றாம் ஸ்ரீ இராசராச சோழனது திருவயீந்திரபுரக் கல்வெட்டு

வதிஸ்ரீ திரிபுவனச் சர்க்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 15-வதின் எதிராமாண்டு பிரதாப சக்கரவர்த்தி ஹொய்சள ஸ்ரீ வீரநரசிம்ம தேவன் சோழச் சக்கரவர்த்தியைக் கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தே பிடித்துக் கொடு இருந்து தன் படையை யிட்டு ராஜ்யத்தை அழித்து தேவாலயங்களும் விஷ்ணு தானங்களும் அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி சோழமண்டல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி நிலைநிறுத்தியல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர சமுத்திரத்தினின்றும் (படை ) எடுத்து வந்து மகர ராஜ்ய நிர்மூலமாடி இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு பாச்சூரிலே விட்டுக் கோப்பெருஞ் சிங்கன் தேசமுமழித்துச் சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளுவித்துக் கொடுவென்று தேவன் திருவுள்ளமாய் ஏவவிடைகொண்டு எழுந்த வதிஸ்ரீ மனுமஹாபிரதானி பரமவிவாஸி தண்டினகோபன் ஜகதொப்ப கண்டன் அப்ண தண்ணாக்கனும் சமுத்திர கொப்பய தண்ணக்கனும் கோப்பெருஞ்சிங்கனிருந்த எள்ளேரியும் கல்லியூர் மூலையும் சோழ கோனிருந்த தொழுதகையூரு மழித்து வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான் சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரம பாஹூள்ளிட்ட முதலி4 பேரையும்…. கொன்று இவர்கள் குதிரையுங் கைக்கொண்டு கொள்ளிச் சோழகோன் குதிரைகளையுங் கைக் கொண்டு பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து தொண்டமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து அழி……. காடும் வெட்டிவித்து திருப்பாதிரிப்புலியூரிலே விட்டிருந்து திருவதிகை திருவக்கரை உள்ளிட்ட ஊர்களு மழித்து வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்தமங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழிவூர்களும் குடிகால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும் சேந்தமங்கலத்திலே எடுத்துவிடப் போகிற அளவிலே கோப்பெருசிங்கன் குலைந்து சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளுவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பஞ் செய்ய இவர் விட்டு நமக்கும் ஆள் வரக் காட்டுகையாலே சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளுவித்துக் கொடுபோந்து ராஜ்யத்தே புகவிட்டது.