பல்லவர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்


 

பல்லவர் வரலாறு

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

திருநெல்வேலி, தென்னிந்திய

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்.,

522, டி.டி.கே. சாலை, சென்னை-18.

அணிந்துரை

இராவ்பகதூர் C.M. இராமசந்திரஞ் செட்டியார், பி.ஏ., பி.எல்.

ஆணையாளர், இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகம்.

பல்லவர் வரலாறு என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. நாளிதுவரை வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து நாட்டின்கண் மறைந்து கிடக்கும் பல சான்றுகளைக் கண்டுபிடித்துப் பல இலக்கியங்களிற் கண்ட குறிப்புகளைத் தெரிந்தெடுத்து அவற்றை ஒழுங்குபடத் தொகுத்துத் தமிழ்நாட்டிற்கு ஒர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவார்போல் அல்லாது, உண்மைச் சான்றுகளை அறியவேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குப்படுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும். இதனைப் போலவே மற்றத் தமிழ் அரசர் பரம்பரைகளுக்கும் தமிழ் நாடுகளுக்கும் வரலாற்று நூல்கள் வெளிவருவது ஒரு சிறந்த முறையாகும். அந்தப் பணியை ஏற்றுக்கொண்டிருக்கும் கழகத்தார் அருஞ்செயலும் போற்றத் தக்கதே.

பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள்வரை தமிழ்நாட்டில் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும், அவர்களுடைய பண்டைக்குலம் இன்னவென்று உறுதியாகக் கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த அயலவர்கள் என்றும், ஈழநாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பலவழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலைநின்று கொண்டிருந்தது. அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில், எந்தக்குலம் அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டு போகப் பட்டது. அவ்வரசர்கள் வடமொழியில் அக்கரை எடுத்துக் கொண்டிருந்ததனால் இக்கூற்று வலியுறுத்தலும் செய்யப் பட்டது. ஆனால், ‘அம் மன்னர்கள் ஏன் தமிழ் மன்னர்களாக இருக்கக்கூடாது?’ என்பதுதான் இப்போது கேட்கப்படுகிற கேள்வி. அக் கேள்வியை மறுப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் என்று அறிய வேண்டும். இங்கிலாந்தில் ஜார்ஜ் I ஜெர்மானியனாக இருந்த போதிலும் அவனது மரபு ஆங்கிலத்தில் கலந்து ஆங்கிலமாகி விடவில்லையா! அதுபோலவே பல்லவரும், ஒருவேளை, வெளி நாட்டிலிருந்து புகுந்திருந்த போதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன அல்லவா? உண்மையில் அம் மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமே என்பதற்கு எதிரிடை வாதம் யாதுமில்லை என்னலாம். ‘பல்லவர்’ என்ற சொல் தமிழ் அல்லவா? இப்போது பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லன்’, ‘பல்லவன்’ என்று கேலி செய்வதில்லையா அம் மன்னவரில் மூல புருடனுக்குப் பல் நீண்டு இருக்கலாம். அச்சொல் அம் மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக் காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல் கொண்ட ஒரு மன்னனுக்கு அப்பெயர் நிலையத்திருக்கிறது. முடப் பாண்டியன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன. மேலும், பல்லவர்கள் காடவர் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள் (காடு வெட்டி நகரத்தின் பெயர் காண்க. இஃது இப்போது ‘கார்வெட்டி நகரம்’ எனப்படுகிறது) அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே. அவை பிற்காலப் பெயர்களாக இருக்கலாம். இருந்தாலும் அவற்றையே தமிழ் நூல்கள் ஆதரிக்கின்றன. ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயர். ‘போது’ என்பது மலருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். மலையாளத்தில் கொங்கு அரசன் ‘போது’ என்ற சொல் எருமைக் கடாவில் வந்து போர் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. (கொங்குப் படை வரலாறு காண்க.)

இப்போதும் தொண்டை நாட்டிலும் அதனைச் சுற்றிலும் போத்தராச கோவில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக் கோவில்களை அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் தமிழ் நாட்டினரே என்று கொள்வதே தகுதி என்னலாம்.

பல்லவப் பெருமக்கள் வடமொழிக்குப் பல உதவிகள் புரிந்துள்ளார்கள். அதற்குக் காரணம் அக்காலத்தில் வடநாட்டு நாகரிகம் தெற்கே பரவத் தொடங்கியதே. எந்த இயக்கமும் முதலில் அதிகமாகப் பாராட்டப் படுவது இயற்கை; பின்னர், அதன் வேகம் குறைந்து விடுவது வழக்கம். பல்லவ அரசு தொடங்கிய காலத்தில் வடக்கே இருந்த பெளத்தமும் சமணமும் வந்தன. அவற்றின் குரவர்கள் தம்மோடு வட மொழியைக் கொண்டுவந்தார்கள். காஞ்சி அச் சமயங்கட்கு நடுநாயகமாக விளங்கியது. பல்லவ மன்னர்களும் அவற்றை ஆதரித்தனர். ஆகவே, வடமொழிக்கு ஏற்றம் தரப்பட்டது. ஆனால், நாள் ஆக ஆக அவ்வேற்றம் குறைந்தது. தமிழின் மேம்பாடு தொடங்கியது. அம் மேம்பாட்டிற்கு ஆதரவு தந்தவர்கள் சைவ வைணவ சமய ஆசிரியர்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் 5, 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தோன்றித் தமிழை ஆதரித்தனர். சமணமும் பெளத்தமும் நிலை குலைந்தன. சைவ வைணவங்கள் மேலிட்டுத் தமிழை ஆதரித்தன. இவ்வியக்கங்களுக்குப் பல்லவர்களே காரணர்களாக இருந்தனர். அவர்களால் ஆயிரக் கணக்கான சமய நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்மக்கள் பெருமையும் விரிந்தது.

பல்லவர்கள் சமயத்திற்குச் செய்த தொண்டுகளுள் சிறந்தவை கோயில்களே. அதுவரை மண்தளி (கோவில்)களாக இருந்தவை கற்றளிகளாக மாற்றப்பட்டன. தொடக்கத்தில் பாறைகளைக் குடைந்து குடை கோவில்களைக் கண்டனர். (இப்போது குகைக் கோவில்கள் என்கிறார்கள்.) குடை கோவில்கள் சமணர்களுடைய பழக்கத்தின்மேல் ஏற்பட்டவை என்று கூறவேண்டும். பண்டைக் குடை கோவில்கள் சமணர்கள் தவத்திற்காகக் குடைந்தவையே. அதனைப் பின்பற்றிப் பல்லவர்கள் குடை கோவில்களை ஆக்கினார்கள். (மகேந்திரவர்மன் சமணனாக இருந்து சைவனாகிக் குடை கோவில்களை முதலில் குடைந்தவன்.) பிறகு தனிப் பாறைகளைக் கோவில்களாகச் செதுக்கினார்கள். (மாமல்லைச் சிற்பத் தேர்களைக் காண்க.) பிறகு கற்களைப் படிமானம் செய்து கட்டடமாகக் கட்டினார்கள். (மல்லைச் சலசயனப் பெருமாள் கோவில்,திருத்தணிகை வீரட்டானேசர்கோவில்) இம்மூன்றுவகைக் கோவில்களும் பல்லவர்கள் சமைத்தவையே. இவற்றைப் பின்பற்றியே சோழர்கள் பெருங் கோவில்களை எழுப்பினார்கள். ஆகவே, பல்லவர்களே கோவில் அமைப்பிற்கு மூல புருடர் என்று கூறல்வேண்டும். அவர்கள் காலச் சிற்பங்களை வெகு எளிதில் கண்டுகொள்ளலாம். தூண்கள் கன சதுரங்களும் இடையில் 8 பட்டைகளும் கொண்டுள்ளன. துவார பாலகர்கள் இரு கைகள் கொண்டுள்ளார்கள். திருமால் எறியும் படை தரித்தவர். இலிங்கத்திற்குப் பின் சோமஸ்கந்தமூர்த்தி உண்டு. இச்சின்னங்கள் இருப்பின் பல்லவர் கோவில் என்றறிக. இவர்கள் காலத்தில்தான் யானை முதுகு அல்லது ‘தூங்கானை மாடம்’ என்ற விமானம் தோன்றியது. (திருத்தணிகை வீரட்டானேசர் கோவில் விமானம் காண்க.) மேலும், கல்வெட்டுச் சாசனங்களுக்கும் பல்லவர் முதன்மை தந்தார்கள். இவர்கட்கு முன் கல்வெட்டுகள் வெகு குறைவு. அவை பிராமி எழுத்தில் இருந்தன. பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தம் என்று கூறும் அழகிய எழுத்துக்கள் ஆளப்பட்டன. அவ்வெழுத்துக்களின் அழகு பார்த்தால்தான் தெரியும். (கயிலாசநாதர் கோவிலிற் காண்க.) பிறகு தமிழை அதிகமாகப் போற்றத் தொடங்கியவுடன் பல்லவர்கள் தமிழிலேயே எழுதினார்கள். அன்றுமுதல் இப் புது இயக்கம் வெற்றியடைந்தது. ஆகவே, பல்லவர்களாலே சமயமும் தமிழும் போற்றப்பட்டதை நாம் அறியவேண்டும்.

இத்தன்மையான ஒரு பெரிய மன்னர் குடும்பத்தைப் பற்றி நாம் நன்றாக அறிய வேண்டாவோ! அதனை அறிவிப்பதற்காகவே திரு.வித்துவான் மா.இராசமாணிக்கம் பிள்ளை. பி.ஓ.எல். அவர்கள் இவ்வரிய நூலை வெளியீட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் இதனை நன்றாகப் படித்துத் தம் பண்டைப் பெருமையை அறிவார்களாக அறிவது மாத்திரம் அன்றிப் பல்லவர் நாகரிகம் தோன்றிநின்ற நிலையங்கள், ஊர்கள், சான்றுகள் முதலியவற்றை முற்றும் தெரிந்துகொண்டு, அங்கங்கே சென்று அவற்றைப் பெருமிதத்துடன் நோக்குவார்களாக

நம் மக்கள் இந்த முயற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட்டுத் தமிழர் நாகரிகம் முழுவதையும், பலவிதங்களிலும் வெளியிட்டும் அறிந்தும் போற்றுவார்களாக.

சென்னை. கோவைகிழார்,

25-2-44.

முகவுரை

பல்லவர் வரலாறு என்னும் இவ்வாராய்ச்சி நூல் தமிழகத்திற்குப் புதியமுறையில் தரப்படும் தமிழ் விருந்தாகும், பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும், கட்டுரைகள் பலவும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ் வரலாற்று நூற்குப் பிறகு வெளிப்போந்த ஆராய்ச்சி நூல்கள் பல: சிறந்த கட்டுரைகள் பல; கிடைத்தகல்வெட்டுச்செய்திகள் பல. மேலும், அவ்வரலாற்று நூல் இன்று கிடைக்கு மாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப் பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்ப்படுகின்றனர். இக் குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.

பல்லவர் காலத்து இலக்கியங்களும், ஏறத்தாழப் பல்லவர் காலத்தை நன்முறையிற் படம் பிடித்துக் காட்டும் பெரிய புராணமும் தமிழ்க்கருவி நூற்களாகக் கொள்ளப்பெற்றன. இந்நூலின்கண் புதிய வரலாற்று முடிபுகள் பல குறிக்கப் பெற்றுள. அவை ஆராய்ச்சியாளர் நடுவுநிலைமை வழாத ஆராய்ச்சிக்கு உரியவாகும். அவற்றுள், இடைக்காலப் பல்லவர் போர்கள், நெடுமாறன் முதல் விக்கிரமாதித்தன் போர் (நெல்வேலிப் போர்), கந்தசிஷ்யன் மீட்ட ‘கடிகை’, இராசசிம்மன் காலத்துப் போர்கள் என்பன குறிக்கத்தக்கன.

வடமொழிக் கல்வெட்டுகளையும் வடமொழியில் உள்ள மத்த விலாசத்தையும் எனக்குப் படித்துக்காட்டி என்னுடன் இருந்து ஆராய்ந்தவர் - சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சி மாணவராக இருந்தவரும், இன்று பெல்காம்-லிங்காரசுக் கல்லூரி வரலாற்று விரிவுரையாளராக இருக்கின்ற வருமாகிய திருவாளர் வேதம் - வேங்கடராய சாத்திரியார், M.A., ஆவர். இவரது உதவி என்றும் மறக்கற்பாலதன்று. என்னைப் பாகூருக்கு அழைத்துச் சென்றவரும், பாகூரைப்பற்றி விளக்கமான படம் வரைந்து உதவியவருமாகிய திருவாளர் புதுவை ரா. தேசிகப்பிள்ளை, B.A.,B.L., அவர்கள் உதவி பாராட்டற் பாலது. எனக்குக் காஞ்சியில் பல வசதிகள் அளித்து எல்லாக் கோவில்களையும் என் விருப்பம்போற் காண வசதி செய்துதந்த ‘குமரன்’ அச்சக உரிமையாளர் திருவாளர் குப்புசாமி முதலியார் அவர்கட்கும் எனது நன்றி உரித்தாகுக. இங்ஙனமே மகாபலிபுரம், வல்லம், மண்டபப்பட்டு, திரிசிரபுரம் முதலிய இடங்களில் எனக்கு வேண்டிய வசதிகள் செய்து பல்லவர் குகைக் கோவில்களைக் காணச்செய்த பெருமக்கட்கு எனது அன்பு உரியதாகும்.

பல்லவர் வரலாற்றை அறிய அரும்பாடுபட்ட பெரியோர் அனைவர்க்கும் பல்லவர் வரலாறு திறம்படஎழுதிய பேரறிஞர்கட்கும் என் வணக்கமும் நன்றியும் உரிய ஆகுக. அப் பெருமக்கள் உழைப்பின் பயனே இந்நூல் வெளிவரச் செய்தது என்றால் மிகையாகாது.

இரண்டு ஆண்டுகளாக என்னை இப்பணியில் ஈடுபடுத்தி இதனை நன்முறையில் வெளிக்கொணர்ந்த சென்னை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினருக்கும், இதற்கு அணிந்துரை எழுதிய திருவாளர் கோவைகிழார் அவர்கட்கும் எனது உளமார்ந்த நன்றி உரித்து.

சேக்கிழார் அகம்

சென்னை மா.இராசமாணிக்கம்

பொருளடக்கம்

1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 1-14

தமிழகம்- பாண்டியநாடு - சோழநாடு சேர நாடு - தொண்டை மண்டலம்-செங்கட்டுவன்காலம் - கரிகாலன் காலம்-புதிய சான்று - வடநாட்டு நிலைமை - கோச்செங்கட் சோழன் - காஞ்சியின் பழைமை - மாமல்லபுரம் - வலியற்ற வடஎல்லை.

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 14–24

இலக்கியச் சான்றுகள் - ஊர்களின் பெயர்கள் - குகைக் கோவில்களும் கற்கோவில்களும் - பட்டயங்களும் கல்வெட்டுகளும் -பிறநாட்டார்குறிப்புகள்-ஆராய்ச்சியாளர் உழைப்பு - நூலாசிரியர் பலர்.

3. பல்லவர் யாவர்? 24-35

பல திறப்பட்ட கூற்றுகள் - பல்லவர் தமிழர் அல்லர் - தொண்டை நாடும் சங்க நூல்களும் - எல்லைப்போர்கள் - சாதவாகனப்பெருநாடு - விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - இக்குவாகர் - பிருகத்பலாயனர் - ஆனந்தர்-சூட்டுநாகர்-பல்லவர்-பல்லவரும் தொண்டைநாடும் - பல்லவர் அரசம்ரபினரே - காடவர் முதலிய பெயர்கள்.

4. களப்பிரர் யாவர்? 36-42

களப்பிரர் - களப்பிரர் பல்லவர்போர்கள் - சோணாட்டில் களப்பிரர் - பாண்டி நாட்டில் களப்பிரர்.

5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 43–49

மூவகைப் பட்டயங்கள் - பிராக்ருதப் பட்டயங்கள் - மயித வோலுப் பட்டயம் - ஹிரஹதகல்லிப் பட்டயம் - குணபதேயப் பட்டயம் - இவற்றால் அறியத் தக்கவை - வடநாட்டு வென்றி - சிவஸ்கர்ந்தவர்மன் காலம்- பிறர் கூற்று-முடிபு - இக்காலப் பல்லவர்.

6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575) 50–73

சுற்றுப்புற நாடுகள் -விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - ஆனந்தர் - சூட்டுநாகர் - கதம்பர் - கங்கர் - தமிழகத்தரசர் - அகச்சான்றுகள் . புறச்சான்றுகள் காலவரையறை - குழப்பமான காலம் - பலவகைப் போர்கள் வாகாடகர் போர் - வாகாடகர் படையெடுப்பு - கடிகா என்பது காஞ்சியன்று கடிகா என்பது யாது? - முடிவு - திருக்கழுக் குன்றம் கல்வெட்டு - பல்லவர் கதம்பர் போர்கள் - முடிவு - பல்லவர் சோழர் போர் - சாளுக்கியர் தோற்றம் - பல்லவர் சாளுக்கியர் போர்கள் - போர்களின் பட்டியல்.

7. பிற்காலப் பல்லவர் - (கி.பி. 575-900) 74–77

இக்காலச் சிறப்பு - இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்.

8. சிம்ம விஷ்ணு - (கி.பி. 575-615) 78-86

சிம்மவிஷ்ணு காலம் - சிம்மவிஷ்ணு சிறப்பு - போர்ச் செயல்கள் - ஆதிவராகர் கோவில் - சிம்மவிஷ்ணு கலை வல்லவன் - புலவர் புரவலன் - இவன் காலத்து அரசர்.

9. மகேந்திரவர்மன் - (கி.பி. 615-630) 87-108

முன்னுரை - இரண்டாம் புலிகேசி - படையெடுப்பு - பல்லவர் கங்கர் போர்- சமணமும் சைவமும் - இவன் காலத்தரசர்- மகேந்திரன் அமைத்த கோவில்கள் - கோவில் அமைப்பு - பல்லாவரம் குகைக் கோவில் - பல்லவபுரம் - வல்லம் - மாமண்டுர் - மகேந்திரவாடி - தளவானுர் - சீய மங்கலம் - மண்டபப்பட்டு - திருச்சி மலைக்கோவில் - நாமக்கல் மலைக்கோவில் - மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும் - இக்கோவில்கட்கு மூலம் - மகேந்திரன் கல்வெட்டுகள் - மகேந்திரன் பட்டப் பெயர்கள் - மகேந்திரன் வளர்த்த கலைகள் - மகேந்திரன் நூலாசிரியன் - இதனால் அறியப்படுவன. நூல் எழுதப்பெற்ற காலம் - சிறந்த குணங்கள். .

10. நரசிம்மவர்மன் - (கி.பி. 630-668) 108-129

பல்லவர் சாளுக்கியர் போர் - பல போர்கள்-சாளுக்கியன் ஓட்டம் - வாதாபி கொண்டது - சேனைத் தலைவர் பரஞ் சோதியார் - சாளுக்கியர் பட்டச்சான்று - வாதாபி கொண்டவன் பல்லவர் பாண்டியர் போர் - பட்டயங்கள் - போர் நடந்த காலம் - முடிவு - பல்லவர் கங்கர் போர் - உண்மை என்ன? - இலங்கைப் போர் 1 - இலங்கைப் போர் 2 - சீனவழிப்போக்கன் - குகைக் கோவில்கள் - மகாபலிபுரமும் நசிரம்மவர்மனும் - குகைக் கோவில்கள் - ஒற்றைக் கல் கோவில்கள் - கற்சிற்பங்கள்- கோட்டைகள் கட்டிய கொற்றவன் - பட்டப் பெயர்கள் - அக்கால அரசர் - பாண்டியர் பட்டியல்.

11. பரமேசுவரமன் - (கி.பி. 610-685) 130–142

இரண்டாம் மகேந்திரவர்மன் - பல்லவர் சாளுக்கியர் போர் - சாளுக்கியர் பட்டயங்கள்-பல்லவர் பட்டயங்கள்- ஆராய்ச்சி - போர் நடந்த முறை - போர் வருணனை - சாளுக்கியர் பாண்டியர் போர் - நெல்வேலிப் போர் - பல்லவர் கங்கர் போர் - கூரம் கோவில் - மகாபலிபுரம் - சிறந்த சிவபத்தன் - இவன் காலத்து அரசர்.

12. இராசசிம்மன் - (கி.பி. 685-705) 142–163

போர்கள் முன்னுரை - சாளுக்கியர் பட்டயங்கள் - பல்லவர் கல்வெட்டுகள் - போரிட்டவன் விநயாதித்தனே - இது தனிப்பட்ட போர்-பல்லவர் சாளுக்கியர் போர்-போரின் பயன்-பல்லவர்கங்கர் போர் - கொடிய பஞ்சம் - சிவபத்தன் ரணசயன் - வான் ஒலிகேட்ட வரலாறு - கோவில்கள் - கோவில் இலக்கணம் - கயிலாசநாதர் கோவில் - கோவில் இடமும் அமைப்பும் - இன்றுள்ள கோவிற் பகுதிகள் - முன்கோவில் - சுற்றுச் சுவர்கள். இறை இடம் - முன் மண்டபம் - உள்ளறை மண்டபப் புறச்சுவர் - சிறு கோவில்கள் 58 - கும்பம் - கல்வெட்டுகள் - சிறப்பு - வடமொழிப் புலவன் - நாடக அறிஞன். இவன் காலத்து அரசர் - இரண்டாம் பரமேசுவரவர்மன்.

13. புதிய பல்லவர் மரபு 164-168

சில செய்திகள் - வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் - இரண்யவர்மன் - புதிய மரபு என் வந்தது? - புதிய மரபரசர்.

14. இரண்டாம் நந்திவர்மன் - (கி.பி. 710-775) 169-183

வரலாற்று மூலங்கள் - பல்லவர் பாண்டியர் போர் - போருக்குக் காரணம் - உதயசந்திரன் - பல்லவர் சாளுக்கியர் போர் 1 - போருக்குக் காரணங்கள் - பட்டயங்கள் - உண்மை என்ன? - போர் நடந்த காலம் - போர் நடந்ததா? - நடந்த முறை - முடிவு படையெடுப்பின் பயன் - பல்லவர் சாளுக்கியர் போர் 2 - இரட்டர் பல்லவர் நட்பு - முதலாம் கிருஷ்ணன் - பல்லவர் கங்கள் போர் - பட்டயக் குறிப்புகள் - சமயப் பணி - கல்வி நிலை - பல்லவப் பேரரசு இவன் காலத்து அரசர்.

15. நந்திவர்மன் - (கி.பி. 775-825) 183-190

பிறப்பும் ஆட்சிக்காலமும் - சிறப்பும் மணமும் - இரட்ட அரசர் கிருஷ்ணன் 1 - துருவன் கோவிந்தன் போரட்டம் போர் - பல்லவர் இரட்டர்போர் 1 - பல்லவர் இரட்டர்போர் 11 - பல்லவர் இரட்டர்போர் 111 - பல்லவர் பாண்டியர் போர் - நந்திவர்மன் அரசியல் - சில பட்டயங்கள் - கோவில்கள் இவன் காலத்தரசர்.

16. மூன்றாம் நந்திவர்மன் - (கி.பி. 825-850) 190-203

மரபு - பட்டயங்கள் - தெள்ளாறு எறிந்த காலம் - நந்திக்கலம்பகம் - இவன் கழற்சிங்கனா? - பல்லவர் இரட்டர் போர் பல்லவர் பாண்டியர் போர் - பல்லவர் தமிழரசர் - இப்போருக்குக் காரணம் என்ன? - பல்லவன் - காவிரிநாடன் - பேரரசன் - நல்லியல்புகள் - மனைவியர் - அரசியல் - திருப்பணிகள் - சிவனடியான் - இவன் காலத்து அரசர்.

17. பிற்பட்ட பல்லவர் - (கி.பி. 850-882) 203-212

நிருபதுங்கவர்மன் - பல்லவர் பாண்டியர் போர் 1 - குடமூக்குப் போர் - பல்லவர் பாண்டியர் போர் 11 - ஈழநாட்டுப் படையெடுப்பு திருப்புறம்பியப் போர் - பழிக்குப்பழி - கோவில் திருப்பணிகள் - பிருதிவீ மாணிக்கம் - மாதேவி அடிகள் - நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்-திருத்தணிகைக்கோவில்-அபராசிதன் காலத்துத் திருப்பணிகள் - இக்காலத்தரசர் - பல்லவ மரபினர் - பிற்காலப் பல்லவர். .

18. பல்லவர் ஆட்சி 213–246

நாட்டுப்பிரிவு - அரசமுறை - அரசர் - பட்டப்பெயர்கள் - அரசரும் சமயநிலைமையும் - பல்லவர் இலச்சினை - பல்லவரது கத்வாங்கம் - அமைச்சியல் - உள்படு கருமத் தலைவர் - அறங்கூர் அவையம் - அரண்மனை அலுவலாளர் - பல்லவர் படைகள் - பண்பட்ட படைகள்- கடற்படை - நாடும் ஊரும் - ஊர் ஆட்சி - ஊர் அவைப் பிரிவுகள் - இராட்டிர ஆட்சி - சிற்றுள்கள் - பிரம்மதேயச் சிற்றுார்கள் - தேவதானச்சிற்றுர்கள் - சிற்றுார்க்கோவில்கள் - பள்ளிச்சந்தம் -ஏரிப் பட்டி - நிலவகை - பலவகை வரிகள் - தென்னை பனை முதலியன மருந்துச் செடிகள் - மருக்கொழுந்து முதலியன - பிற வரிகள் - பல்லவர் அரசாங்கப்பண்டாரம்-நில அளவை-நீர்ப்பாசன வசதிகள் - எரி வாரியம் - நீட்டல் அளவை - முகத்தல் அளவை - நிறுத்தல் அளவை பல்லவர் காசுகள் - பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்- பஞ்சம் ஒழிப்பு வேலை - அறப்பணிகள் உருவச் சிலைகள் - வீரக் கற்கள் - நீத்தார் நினைவுக் குறிகள்.

19. கலைக் கழகங்கள் 246-262

முன்னுரை - ஓவியசிற்பக்கலைக்கூடங்கள் - காஞ்சிக்கல்லூரிஎத்தகைய கல்வி? - கடிகாசலம் - பாகூர் வட மொழிக் கல்லூரி - மூன்று சிற்றுர்கள்-பாகூர்ப்பழம்பதி-அக்கிரகாரங்கள்-ஊராண்மை - படைக்கலப் பயிற்சி - வேலைகள் - பிரம்மபுரிகள் -பட்டவிருத்திகோவில்கள் - மடங்கள் - சைவமடங்கள் - காளாமுகர் - பாடத்திட்டம் - மடத்து ஆட்சிக் குழுவினர் - மடத்து ஆட்சி - பெளத்தர் கலை இடங்கள் - சமணர் கலை இடங்கள் பாதிரிப் புலியூர் மடம் - திருப்பருத்திக் குன்றம் தமிழ்க்கல்வி.

20. சமயநிலை 262-273

சமண வீழ்ச்சிக்குக் காரணம் - உடனே இம் மாறுபாடு எப்படி உண்டானது? - சைவசமயம் - பாசுபதர் - காபாலிகர் - காளாமுகர் - வைணவம் - வைணவ வேந்தர் - சமயக் கொடுமை - சமணர் சைவர் கொடுமை - இவை நடந்தனவா? - வைணவர் கொடுமை - பட்டயச் சான்று - சிற்பச் சான்று - உயிர்ப்பலி இடுதல் - முன்னுரை - சிற்பங்கள் - சான்றுகள்.

21. இசையும் நடனமும் 273–284

இசை- மகேந்திரவர்மனும் இசையும் - இராசசிம்மனும் இசையும் - நாயன்மார் இசை - தேவார காலத்து இசைக் கருவிகள் - ஆழ்வார் அருட்பாடல்கள் - மகேந்திரன் கால நடனம் - வைகுந்தப் பெருமாள் கோவில் - அடிகள்மார் - சிவபெருமான் திருக்கூத்து - கயிலாசநாதர் கோவில் - நாதாந்த நடனம் - ‘தூக்கிய திருவடி’ நடனம்.

22. ஒவியமும் சிற்பமும் 284-291

சித்தன்னவாசல் - இடமும் காணத்தக்கனவும் - உருவச்சிலைகள் - நடனமாதர் ஓவியங்கள் - அரசன் அரசி ஓவியங்கள் - கூரையில் உள்ள ஓவியம் - இஃது எதனைக் குறிக்கிறது? உள்ளறை மேற்கூரை - இவற்றை எழுதிய முறை - பல்லவர் சிற்பம்.

23. பல்லவர் காலத்துக் கோவில்கள் 291-305

கோவிலும் கல்வெட்டும் - சங்ககாலத்துக் கோவில்கள்- தேவார காலத்துக்கோவில்கள் - பழைய கோவில்கள் - முதல் இடைக்காலக் கோவில்கள் - பிற்காலத்துக் கோவில்கள்- பழங்கோவில்-அமைப்பு திராவிடக் கலை - முடிவு.

24. இலக்கியம் 305-324

முன்னுரை - வடமொழிப் பட்டயங்கள் - வடமொழி நூல்கள் - அச்சுத விக்கிரந்தன்-அச்சுதன் மதுரை கொண்டது - முத்தரையரும் தமிழும் - இவற்றால் அறியப்படுவன - பல்லவரும் தமிழும் சிவத்தளி வெண்பா - பல்லவரைப் பற்றிய தனிப் பாடல்கள் - யாப்புநூல் பெருக்கம் - மூன்றாம் நந்திவர்மன் - அபராசிதவர்மன் - சத்தி பல்லவன் - இராச பவித்திரப்பல்லவதரையன்-பொதுப்பாடல் - வேறு பல நூல்கள் - சைவத் திருமுறைகள் - நந்திக் கலம்பகம் - பாரத வெண்பா - சேரமான் பாடிய நூல்கள்-முன்னுரை-அந்தாதிமும்மணிக் கோவை - ஞான வுலா - நாலாயிரப் பிரபந்தம் - பல்லவர் அவைப்புலவர்.

25. பல்லவர் கோநகரம் 324–331

நகர அமைப்பு - கெட்டிஸ்துரை கூற்று - பெளத்தர் தெருக்கள் - பிற தெருக்கள்-பல்லவமேடு முடிவுரை.

26. அரசர் பட்டியல் 332–335

(1) பல்லவர் காலத்துக்கங்க அரசர்

(2) பல்லவர் காலத்துக்கதம்ப அரசர்

(3) பல்லவர் காலத்துப் பாண்டிய மன்னர்

(4) பல்லவர் காலத்துப் மேலைச் சாளுக்கியர்

(5) பல்லவர் காலத்துப் இராட்டிரகூட மன்னர்

மேற்கோள் நூல்கள்

பல்லவர் வரலாறு

1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

தமிழகம்

தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் ‘தமிழை வளர்த்தவர்’, எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது ‘கடைச் சங்கம்’ எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக் காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங்களும், கீழ்க்கோடிக் கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் கோநகரம் மதுரை, காயல், கொற்கை என்பன இதன் துறைமுகங்கள். கொற்கை முத்து எடுப்பதற்குப் பெயர் பெற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் அமைச்சனாக இருந்த சாணக்கியன் தனது பொருள் நூலில் கொற்கையைக் குறிப்பிட்டுள்ளான். கடைச் சங்க காலப் பாண்டியருள் சிறந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவரே ஆவர்.

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் (கி.மு. 60 - கி.பி.200)

சோழ நாடு

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும், கீழ்க் கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இந்த நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தார். இவர் தலைநகரம் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. இந் நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. கரிகாற் சோழன் காலத்தில் இத் துறைமுகம் உயர்ந்த நிலையில் இருந்தது. அயல்நாட்டு வாணிபர் புகார் நகரிற் குடியேறி இருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் இயற்றப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இப் பெருநகரம் சிறந்த வாணிபத்தலமாக விளக்கம் பெற்று இருந்தது. கடைச்சங்ககாலச் சோழ மன்னருள் பீடுமிக்கவன் கரிகாலனே ஆவன். சோழவனநாடு உணவு வகையிற் சிறப்புற்று இருந்தமையின், சோழ வளநாடு சோறுடைத்து, என்று புகழப்பட்டது.

சேர நாடு

சேர நாடு என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மேல் கடற்கரை வெளியும் மலையாளக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சிமாநகரம் என்பது முசிறி. தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டிலிருந்து மிளகு, யானைமருப்பு, தேக்கு, அகில், சந்தனம் முதலிய மரங்கள் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். அவருட் சிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் மகனான செங்குட்டுவனே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெயர் பெற்றபேரரசனாகத் தமிழகத்தில் இருந்தவன்.

தொண்டை மண்டலம்

ஆதொண்ட சக்கரவர்த்தி: இனி, நம் பல்லவர் தொடர்பான தொண்டை நாட்டைப் பற்றிய செய்திகளைக் காண்போம். “நெடுங்காலத்திற்கு முன்தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’, என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்குக் காலம் கழித்தனர்; அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர்; காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக் குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனன்”, என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.[1]

கரிகாலன்: ஆனால், தமிழ்நூல்கள், கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர்த் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் ‘தொண்டை மண்டலம்,’ எனப் பெயர்பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார் பெருமான், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அஃதாவது: ‘கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக்காஞ்சிநகரத்தின் வளமையைக் கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பிப் பலரைக்குடியிருத்தினன்,’ என்பது[2] முதற்குலோத்துங்கன் காலத்து நூலாகிய சமயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும் ஏறக்குறைய இங்ஙனமே கூறுகின்றது. இங்ஙனம் வரும்செய்திகளில் ஒரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னருள் கரிகாலன் ஒருவனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியமும் பட்டயங்களும் கண்ட உண்மை, பிற்காலத்தெலுங்க நாட்டுச்சோழரும் தம்மைக் ‘கரிகாலன் மரபினர்’, என்று கூறிக்கொண்டனர்[3] என்பதிலிருந்து, கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் ‘எங்கள் முன்னவனான கரிகாலன், தான் வென்ற அரசரைக்கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன்,'[4] என்று பட்டயத்திற் கூறி மகிழ்வராயின், கரிகாலன் போர் வன்மையை என்னென்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன்,’ என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

எனவே, இதுகாறும் கூறிய செய்திகளால், கரிகாற் சோழன் காலத்திற்குள் தொண்டைமண்டலம் சோழர்ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுத்ல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்த தென்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்காலமுதல் எத்துணை நூற்றாண்டுகள் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது, என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும்.

வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் கரிகாலன்; ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச் சங்கத்தையும், தொண்டைமண்டலத்தையும் பொதுவாககத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்திய நாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன ஆதலின், முதற்கண் செங்குட்டுவன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்.

செங்குட்டுவன்காலம்

கரிகாலன் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார் தமது நூலில், “தமிழ் வேந்தர் வடநாடு நோக்கிப் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிறபட்ட மோரியர் (கி.மு.232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு. 148 - கி.மு. 27) காலமாகவோ, (3) ஆந்திரர் ஆட்சி குன்றிய கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினார்.

இவர் கூறிய மூன்று காலங்களில் முதல் இரண்டு காலங்களும் பொருத்தமானவையே ஆகும். ஆயின், மூன்றாம் காலம் கி.பி. 163-300[5] வரை அஃதாவது, குப்தர் பேரரசு ஏற்படும் வரை எனக் கொள்ளலே முறை. என்ன? கி.பி. 163இல் இறந்த (கவுதமிபுத்திர சதகர்ணியின் மகனான) புலுமாயிகுப் பின்வந்த ஆந்திர அரசர் வலியற்றவர்[6] எனப்படுதலின் என்க. எனவே,தமிழரசர் வடஇந்தியாமீது படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன:- (1)கி.மு. 232-கி.மு.184, (2) கி.மு.148-கி.மு.27. (3) கி.பி.163-300. இனி இவற்றுள் செங்குட்டுவன் காலம் யாதென ஆராய்வோம்.

செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசருள் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு ஒருவன்’ எனச்சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்போது பிரிட்டிஷ் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கொரு கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என இலங்கைப் பட்டயம் இயம்புகின்றது.[7] (இரண்டாம் கயவாகுவின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பதை ஈண்டு நினைவு கொள்ளல் நலமாகும்). இதுவே செங்குட்டுவன் வாழ்ந்த காலமாகும். இக்காலம் மேற்கூறிய மூன்று காலங்களில் இறுதிக் காலத்துடன் ஒன்றுபடுகிறது. இக்காலத்தே, கி.பி.166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞஸ்ரீ[8] என்பவன். இச் ‘சதகர்ணி’ என்பதன் மொழிபெயர்ப்பே ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு நண்பர்; கங்கையாற்றைக்கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ளுழநீயின் காலமும் ஒன்றுபடுதலால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞரு சதகர்ணியையே (அவன் ஆணைபெற்ற உயர்அலுவலாளரையே) என்பதும் நன்குபுலனாகும். இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர்.[9]

கயவாகுவின் காலம் - கி.பி. 171-193

யக்ஸ்ரீயின் காலம் கி.பி. 166-196

எனவே, கி.பி. 166-193க்கு உட்பட்ட காலத்தேதான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். இக்காலம் முற்கூறிய படையெடுப்புக்கு உகந்த மூன்றாம் காலத்தோடு (கி.பி.163-300) ஒத்துவருதலும் காண்க.

கரிகாலன் காலம்

வடநாட்டுப் படையெடுப்புக்குரிய மூன்று காலங்களில் ஈற்றுக்காலத்தைச் செங்குட்டுவதற்கு உரிமை ஆக்கினமையின், பிற இரண்டு காலங்களில் ஒன்றே கரிகாலனுடையதாகும். கரிகாலன் இலங்கைத் தீவை வென்று ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொணர்ந்தான் என்பது கவனித்தற்குரியது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் “(1) கி.மு. 170 கி.மு.100 வரை இலங்கையைத்தமிழரசர் ஆண்டனர்; (2) கி.மு. 44-கி.மு.17க்கு இடைப்பட்ட காலத்தில் 15 ஆண்டுகள் தமிழர் இலங்கையை ஆண்டனர்; (3) கி.பி. 660-1065க்கு உட்பட்ட இடைக்காலத்தில் தமிழர் இலங்கைமீது படைஎடுத்தனர்.” என்று கூறுகின்றது. இவற்றுள் முதல் இரண்டு காலங்களில் ஒன்று கரிகாலன் தொடர்பு பெற்றதாகல் வேண்டும். இவ்விரண்டும் வடநாட்டுப்படையெடுப்புக்கு ஏற்ற காலங்களோடு பொருந்துகின்றனவா என்பதைக் காண்போம்.

(1) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற முதற்காலம் கி.மு.232 - கி.மு. 184.

இலங்கையைத் தமிழர் ஆண்ட முதற்காலம் கி.மு. 170-கி.மு.10[10]

(2) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற இரண்டாம் காலம் கி.மு.148-கி.மு.27

இலங்கையைத் தமிழர் ஆண்ட காலம் கி.மு.44 கி.மு.17க்கு உட்பட்ட 15 ஆண்டுகள்.

இவற்றுள் முன்னதைவிட இரண்டாம் காலமே மிகவும் பொருந்துவதாகும். இக்காலமே கரிகாலன் காலம் என்பதை இலக்கியம் கொண்டும் நிறுவலாம். இக்காலத்தில் கடல் வாணிபம் உயர்நிலையில் இருந்தது. கி.மு.39 முதல் கி.மு.14 வரை ரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானிடம் பாண்டிய மன்னன் தூதுக் குழு ஒன்றை அனுப்பினான் என்பதும் நோக்கத்தக்கது. கரிகாலன் காலத்தில் புகார் சிறந்த துறைமுகப்பட்டினம் என்பதைப் பட்டினப்பாலையால் உணரலாம். இச்சிறப்புடைக் கடல் வாணிபம் கி.பி.215 வரை, அஃதாவது அலெக்சாண்ட்ரியப் படுகொலை வரை சிறப்புற நடந்து வந்தது.[11]

புதிய சான்று

சோழ மன்னருள் இமயம்வரை சென்று மீண்டவன் கரிகாலன் ஒருவனே என்பது வெளிப்படை அவன் சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதியசான்று ஒன்று கிடைத்துள்ளது. “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையே வரையறுத்து நிற்கும் மலைத் தொடர்புக்குச் சோழ(ர்) மலைத்தொடர் (Sola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங் கணவாய்க்குச் சோழ(ர்) கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ (ழ) என்பதுசிக்கிம்,திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை”[12] என இராவ்சாகிப் மு. இராசுவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ள செய்திக்குத் தமிழகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், கரிகாற் சோழன் வடநாடு சென்று. சிலப்பதிகாரம் கூறுவதுபோல,

“பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென

இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்

கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

பெயர்ந்தமை உண்மை என்பதும், அக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமே ஆதல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும் செய்திகளாம்.

வடநாட்டு நிலைமை

கரிகாலன் ஆட்சிக் காலம் எனக்கொண்ட கி.மு.60 கி.மு.20க்கு உட்பட்ட காலத்தில் மகதப் பேரரசு சுங்கர் கையினின்றும் கண்வ மரபினர் கைக்குமாறிவிட்டது. கி.பி.73இல் ‘வாசுதேவ கண்வா’, மகத நாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.மு.28 வரை ஆண்டனர். அவருக்குப் பிறகு மகதநாடு ஆந்திரா வசப்பட்டது. எனவே கரிகாலன் படையெடுத்த காலத்தில் கண்வ மரபினரே மகத நாட்டை ஆண்டவராவர். அவர்கள் வலியற்ற அரசர்களே[13] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைக் கோ நகரமாகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், அவந்தி வேந்தன் தோரண வாயிலும் கொடுத்தனர் எனச்சிலப்பதிகாரம் செப்புவதில் பொருள் இராதன்றோ? இந்நாட்டரசர் சந்திரகுப்த மெளரியன் காலத்திலிருந்து சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[14]

கோச்செங்கட் சோழன்

இதுகாறும் கூறிவந்த சான்றுகளால் (1) கரிகாற் சோழன் காலம் ஏறக்குறைய கி.மு.60 கி.மு.20 எனவும், (2) செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் ஏறக்குறைய கி.பி. 166-193 எனவும் கூறலாம். செங்குட்டுவன் 50 ஆண்டுகள் அரசாண்டவன் எனச்சிலப்பதிகாரம் கூறலால், அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 150-200 எனக் கோடலே பொருத்தமுடையதாகும். இச் சேரன் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்ட சோழன் ஒன்பதின்மருள் ஒருவனான சுபதேவன் சிதம்பரத்தில் தலைமறைவாக வாழ்த்து வந்தான். அவனுக்குச் சிவபிரான் அருளாற் பிறந்தவனே சிறந்த சிவபக்தனான கோச்செங்கட் சோழன் என்பவன்.[15] இவன் சோணாட்டைப் பேரரசனாக இருந்து ஆண்டான் சேரனைப் புறங்காட்டச் செய்து கனவழி பாடப் பெற்றான். எனவே, இவன் காலம் ஏறக்குறைய கி.பி. 200-225 எனக் கூறலாம். இவனைப் பாடிய பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை ஆழ்வார்.[16] இக்கோச் செங்கட்சோழன் மணிமேகலையில் கூறப்பட்ட பெருங்கிள்ளிக்குப் பின் சோழ மன்னனாக இருந்திருத்தல் வேண்டும். இவன் சிவபிரான் அருளால் தோன்றியவன் ஆதலின், தான் பிறந்த சிதம்பரத்தைச் சிறந்த சிவப்பதியாக்கினான்; தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டான். அன்று முதல் சோழர்க்கு முடிசூட்டும் பொறுப்புத் தில்லைவாழ் அந்தணரிடம் விடப்பட்டது. இவன் பொய்கை ஆழ்வாரால் பாடப்பட்டமையின், சைவ-வைணவ சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[17] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[18] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[19]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல தூபிகளை நாட்டிப் பெளத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சுங் காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத்தெரிகிறது. [20]

கி.மு. 150 இல் இருந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.மு.2ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்ததெனலாம். [21]

கி.மு. முதல் நூற்றாண்டில் சோணாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டை மண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக்கரிகாலன் அழகு செய்தான்; மதில்கள் எழுப்பினான். வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான்: வேளாண் குடிகளைக் கொணர்ந்து நாட்டைச் செழிப்பாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது.”[22]

மாமல்லபுரம்

இது சிறந்த கடற்கரைப் பட்டினமாக விளக்கமுற்று இருந்தது. வடக்கேயிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த நாவாய்கள் சூழந்திருந்தன. பரதர் மலிந்த தெருக்களும் காவலர் காத்த பண்டசாலைகளும் இருந்தன. அங்கிருந்த மாடங்களில் பெண்கள் பந்தை அடித்து விளையாடி மணற் பரப்பில் கறங்காடினார்கள். கடற்கரையில் வானளாவிய மாடங்களில் வைத்தவிளக்குகள் கடலிற் சென்ற நாவாய்களில் இருந்தவர்க்குத் துறையை அறிவித்தன.[23] தொண்டைமான் காலத்தில், ஏன்? சங்ககாலத்திலேயே காஞ்சிபுரம் கச்சி என்ற பெயர் பெற்று இருந்தது. அந்நகரம் சிறந்த உலக நகரங்களுள் ஒன்று தேரோடும் தெருக்களையும் பழங்குடிகளையும் மதிலையும் உடையது. இளந்திரையன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்: தொண்டையர்குடியிற் பிறந்தவன்: பகைவர் அரண்களை அழித்தவன்: யானைகள் கொணர்ந்த விறகால் வேள்வி செய்தமுனிவர்கள் வாழ்ந்த மலைகட்கு உரியவன்; நான்கு குதிரைகள் பூட்டியதேரை உடையவன்.[24]

ஆனால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் கடைப் பகுதியிலும் அஃதாவது, சிலப்பதிகார மணிமேகலைக் காலத்தில் காஞ்சிபுரம் இளங்கிள்ளி என்பவன் ஆட்சியில் இருந்ததாகத்தெரிகிறது. அவன் புத்தர் கோயில் ஒன்றைக் கட்டியிருந்தான். அங்குச் சென்ற மணிமேகலை புத்த பீடிகையை அமைத்தாள்: தீவதிலகையையும் மணிமேகலா தெயவத்தையும் வழிபடக்கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர் அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டாள்; ‘பவத்திறம் அறுக, என்று அங்குத்தானே தவம் கிடந்தாள்.[25]

வலியற்ற வட எல்லை

இளங்கிள்ளிகாலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க் கோட்டத்தில் உள்ள பாவித்திரி (ரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் ‘கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப் பகுதி தொண்டை மண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில், வடக்கே இருந்த சாதவாகனர் (ஆந்திரர்) க்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் நடந்து வந்தன. எனவே, இப் பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு (காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[26] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.

மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டதென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்தபொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.

* * *

↑ R.Gopalan’s Pallava of Kanchi, pp.26.27

↑ திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செ.85

↑ K.A.N.Sastry’s Cholas Vol.pp.121, 122.

↑ bid.p.44

↑ Vide his ‘Sangam Agé’, pp.56,57

↑ C.S. Srinivasacnhari “History of India’ P49

↑ Archaeological Survey of Cylon, xiil 1896, pp.47,48.

↑ W.A.Smith’s “Early Histoy of India’, p.22, 34th ed.

↑ K.G. Sesha Iyer in the “Christian College Magazine’, Sep. Oct. 1917. Dr. S.K. Aiyankar’s “Manimekalai in its Historical Setting’ pp. 105,106

↑ A short History ofceylon’ pp. 722-725 by Dr. W.Gelgerin “Buddhistic Studies’ edited by Dr. B.C.Law.

↑ V.A. Smith’s “Early History of India,” p.471

↑ கலைமகள் (1932) தொகுதி 1, பக். 62, 63

↑ V.A. Smith’s “Early History of India,’ pp.215,216.

↑ V.A. Smith’s Early History of India’, p.369

↑ Dr. S.K.Alyangar’s Ancient India, pp.95-6

↑ Dr. S.K. Aiyangar’s “Early History of Vaihaavism in S.India’ pp.72-75

↑ திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.

↑ R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.

↑ C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183

↑ Beal Rec. II. p.230

↑ D.Sircar’s “Seccessors of the Satavahanas,p. 140

↑ உலகநாதபிள்ளை, ‘கரிகாற் சோழன், பக். 40

↑ பெரும்பாணாற்றுப்படை, அடி 320-325

↑ Ibid II. 410-500

↑ Ibid II. 28-30

↑ Dr. S.K. Aiyangar’s “Manimekali-in Historical Setting,’ pp.49-50

2. பல்லவரைப் பற்றிய சான்றுகள்

இலக்கியச் சான்றுகள்

சங்க நூல்களில் பல்லவர் என்பரைப் பற்றிய குறிப்பே காணல் இயலாது. ஆனால், சங்க நூல்களின் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூல்களில் பல்லவர் குறிக்கப் பட்டுள்ளனர்; காஞ்சிமாநகரம் பல்லவர் ஆட்சியில் சிறந்த கோநகரமாக விளக்கம்பெற்றிருந்தது என்பது குறிக்கப்பெற்றுள்ளது. அப்பிற்பட்ட நூல்களைக் காலமுறைப்படி ஈண்டுமுறைப்படுத்திக் கூறுவோம்.

(1) லோக விபாகம்: இது திகம்பர சமண நூலாகும். இதில் (1) பாணராட்டிரத்தில் உள்ள ‘பாடலி’[1] என்னும் சிற்றுரில் சர்வநந்தி என்பவர் லோகவிபாகம் என்னும் நூலைத் திருத்தியமைத்தார்; (2) அங்ஙனம் இந்நூல் ஒழுங்காகச் செய்யப்பெற்ற காலம் காஞ்சி அரசன் சிம்மவர்மன் பட்டம் பெற்ற இருபத்திரண்டாம் ஆண்டாகும். அஃதாவது, சாக ஆண்டு 380; கிறித்துவ ஆண்டு கி.பி.458. எனவே, சிம்மவர்மன் என்ற பல்லவன் பட்டம் பெற்றயாண்டு 458-22 கி.பி.436 ஆகும்.[2]

(2) அவந்தி சுந்தரிகதை: இதுவும் வடமொழிநூல். முகவுரையில் பாரவி என்னும் வடமொழிப் புலவர் விஷ்ணு வர்த்தனன், துர்விநீதன், சிம்ம விஷ்ணு பல்லவன் எனக் கண்டு பரிசு பெற்றமை கூறப்பட்டுள்ளது. பாரவி பார்த்த மூவேந்தரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர் என்பதில் ஐயமில்லை துர்வந்தன் கி.பி.604 இல் அரசன் ஆனவன். கி.பி. 614இல் அரசன் ஆனான். ஆதலின், அவனது பல்லவன் காலமும் அதுவேயாகும்.[3]

(3) மத்தவிலாசப் பிரகசனம்: இஃது அப்பர் காலத்வானாகிய மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் வரையப்பெற்ற சிறிய நாடகம். இதனில், அக்காலத்திய புத்தர், கபாலிகர், சமணர் முதலிய பல சமய மக்கள் பழக்க வழக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவன்காலம் கி.பி. 615-630[4] என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

(4) சைவத் திருமுறைகள்:- அப்பர் பாடியருளிய 4,5,6 ஆம் திருமுறைகளில் பல்லவர் சமணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சம்பந்தர் பாடிய பதிகங்களில் சமணரைப் பற்றிய குறிப்புகள், பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இவ்விருவரும் கி.பி.7ஆம் நூற்றாண்டினர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. இவர்கட்குப் பிற்பட்ட கி.பி.9ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்த சுந்தரர் பாடிய தேவாரத்தில்,

“....மண்ணுலகம் காவல் பூண்ட -

உரிமையால் பல்லவற்கு திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்

பெருமையாற் புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமான்”[5]

என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. இக் குறிப்பால், பல்லவர் பேரரசர் என்பதும். அவரது ஆட்சிக்குள் சிற்றரசர் பலர் இருந்தனர் என்பதும், அவர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்பதும் நன்கு புலனாகின்றன அல்லவா?

(5) நாலாயிரப் பிரபந்தம் :-திருமங்கை ஆழ்வார் கும்பகோணத்தை அடுத்த நந்திபுரம் (நாதன்கோவில் - இன்றைய பெயர்) என்னும் வைணவப் பதியைப்பற்றிச் சில குறிப்புகள் பாடியுள்ளார். அது கோட்டை மதில்களை உடையது. காவல் மிகுந்தது. நந்திவர்ம பல்லவ மல்லன் பெயரால் நடத்தப் பெற்ற போர்களில் ‘நென்மலி’ என்னும் இடத்துப்போர் ஒன்றாகும். அதனைத்திருமங்கை ஆழ்வார்,

“நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப்

பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்”

என்று பாடியுள்ளார்; வயிரமேகன் என்னும் இராட்டிர கூட அரசன் (கி.பி.725-758) காஞ்சியில் பல்லவ மல்லவனோடு இருந்தான் என்று வேறொரு பாட்டில் பாடியுள்ளார்.[6] பல்லவர் சாளுக்கியரோடு செய்த போரில் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக்கருவிகள் முதலியவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டள்ளார். எனவே, இவர் நந்திவர்ம பல்லவ மல்லன் (கி.பி. 710-775) காலத்தவர். இவர் பாடல்களும் பல்லவர் வரலாற்றுக்கு உதவி செய்வன ஆகும்.

(6) நந்திக்கலம்பகம்:- இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) காலத்தது; இவனைப் பற்றியது; இவன் போர்ச் செயல்களையும் நகரங்களையும் பிறவற்றையும் விளக்கமாகக் குறிப்பது. இவ்வரசன் ‘பல்லவர் கோன்’, மல்லை வேந்தன். மயிலை காவலன், காவிரிவளநாடன், எனப் பலபடப் பாராட்டப் பெற்றுள்ளான். இவன்தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவன் என்று செ. 104, 107 கூறுகின்றன.

(7) பாரதவெண்பா:- இந்நூலின் சிறிதளவே இன்று கிடைத்துள்ளது. அதுவே ‘உத்தியோக பருவம்’ என்பது. அதன் முதற் பகுதியில் மூன்றாம் நந்திவர்மன் ‘தெள்ளாறு’ என்னும் இடத்தில் பகைவர்களை முறியடித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

(8) பெரிய புராணம்:- இந்நூல் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்னும் பெரும் புலவராற் பாடப்பட்ட தாயினும், இதன்கண் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாயன்மார் காலம் பல்லவர் காலமே ஆகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கச் சோழனது உயர் அலுவலாளர் ஆதலால், பல்லவர் பரம்பரை, ஆட்சிமுறை முதலிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் கூடும்; மேலும் அவர் பல்லவர் நிலைபெற்று ஆண்ட தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்; பல்லவ புரத்தை (பல்லாவரம்) அடுத்த குன்றத்தூரிற் பிறந்து வளர்ந்தவர்; பல்லவர் கோவில் பணிகளையும், கல்வெட்டுச் செய்திகளையும் செவிமரபுச் செய்திகளையும் நன்கு அறிந்தவர். இவ்வசதிகளைப் பெற்ற அப்பெரியார் பாடியுள்ள பெரிய புராணத்தில் பல்லவர் காலத்திய தமிழகம் ஓவியமாக விளக்கப்பட்டுள்ளதை நூலறிவும் நுண்ணறிவும் உடையார் நன்கறிவர். நாயன்மார் அறுபான் மூவருள் காடவர் கோன் கழற்சிங்கர் ஒருவர்; இவர் “கூடலர்முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”, அரசாண்டவர் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவரைத் ‘தொல்லைப்பல்லவர்’ என்றுங் கூறுகிறது. இதனால், சேக்கிழார் பல்லவருடைய பரம்பரைகளை (முன்னைப் பின்னை நடைபெற்ற பல்லவர் பரம்பரைகளை) நன்கறிந்தவர் என்பது தேற்றமன்றோ? சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்பவர் வரலாற்றையும் பாடியுள்ளார். இந்த நாயனாரும் பல்லவ மன்னர்:

“மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம்

பன்னுகலை பணிசெய்ய”

ஆண்ட பேரரசர்; சைவப்பதிகளை வணங்கி வெண்பாக்கள் பாடிப் பேறு பெற்றவர்.

அப்பர் காலத்தில் வாழ்ந்த குணபரன் (கி.பி.615-630) (குணதரன் - முதலாம் மகேந்திரவர்மன்) அப்பர்க்கு இழைத்த இன்னல்களும், அவன் சமணத்தைவிட்டுச் சைவனாக மாறினதும் பெரிய புராணத்துட் காணலாம். அவன் மகனான நரசிம்மவர்மன் (கி.பி.630-668) சேனைத் தலைவரான பரஞ்சசோதியார் (சிறுத்தொண்டர்) சாளுக்கியர் மீது படையெடுத்து வாதாபி வென்றதும், அவர் சம்பந்தர் நண்பரானதும் பெரிய புராணத்தில் காணலாம்.

பூசலார் நாயனார் காலத்துக் காடவர்கோனான இராசசிம்மன் (கி.பி.880-710) எடுத்த கற்றளி (கைலாசநாதர் கோவில்) சிவபெருமான் அரசன் கனவிற் சென்று கூறினமை முதலிய செய்திகளைச் சேக்கிழார் பூசலால் புராணத்தில் விளக்கியுள்ளார். இறைவன் கனவிற் சென்று கூறியதாகக் கூறும் பெரியபுராணச் செய்தியே இராசசிம்மன் அசரீரி கேட்டதாகக் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, சேக்கிழார் பெருமான் கல்வெட்டுகளையும் கருத்திற்கொண்டே புராணம் பாடியுள்ளார் என்பது இங்கு அறியத்தக்கதாகும்.

பல்லவர் காலத்தில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டினரான நரசிங்கமுனை அரையர், மெய்ப்பொருள் நாயனார் (திருக்கோவலூர் அரசர்) முதலியவர் வரலாறுகளும்: சோழநாடு பல்லவர்க்கு உட்பட்டுச் சோழர் தலைமறைத்து முடியிழந்த குறுநில மன்னராகி வாழ்ந்தமையும், அத்தாழ் நிலையிலும் அவர்க்குப்படை வீரரும் படைத்தலைவர் பலரும் இருந்தமையும், பாண்டியர் சிறிதுசிறிதாகக்களப்பிரரையும்பின்னர்ப் பல்லவரையும் வென்று பேரரசை நிலைநிறுத்தின விவரங்களும், பல்லவர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த நல்லனவும் தீயனவும் இன்னபிறவும், பெரிய புராணத்தில் மிகத் தெளிவாக அறியலாம். இந்த விவரங்கள் ஆங்காங்கு இந்நூலில் விளக்கம் பெறும்.

இதுகாறும் கூறப்பெற்ற வடமொழி - தென்மொழி நூல்களை நன்கு படிப்பவர், சங்ககாலத்திற்குப் பிறகு, வேங்கடத்திற்குத் தெற்கே பல்லவர் என்னும் புதிய மரபினர் ஏறக்குறைய 500 ஆண்டுகள் நிலைபெற்றுத் தமிழகத்தை ஆண்டிருந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.

ஊர்களின் பெயர்கள்

சங்க நூற்களில் காணப்பெறாத ஊர்ப் பெயர்கள் பிற்காலத்தில் காணப்படுகின்றன. அவற்றுள், பல்லாவரம் (பல்லவபுரம்), பல்லவ நத்தம், நந்திபுரம், பரமேசுவர மங்கலம், கேந்திர மங்கலம், மகேந்திரவாடி, மாமல்லபுரம், குமாரமார்த்தாண்ட புரம் என்பன சில. இவற்றால் பல்லவர் அரசர் என்பதும், நந்தி பரமேசுவரன், மகேந்திரன், மகாமல்லன், குமார மார்த்தாண்டன் என்பன பல்லவ அரசர் பெயர்கள் என்பதுவும் அறியக் கிடக்கின்றன.

குகைக்கோவில்களும் கற்கோவில்களும்

சங்க நூல்களில் கற்கோவில்களோ, குகைக்கோவில்களோ குறிக்கப்பெற்றில, ஆனால் பெரிய புராணத்தில் கற்றளிகள் (கற்கோவில்கள்) குறிக்கப்பட்டுள்ளன. அவை பல்லவரலால் கட்டப்பட்டன என்பதும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலறிவுடன், நாமும் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பல்லவபுரம், மகேந்திரவாடி, தாளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சிங்கவரம், கீழ்மாவிலங்கை, திருக்கழுக்குன்றம், மாமண்டூர், வல்லம், மண்டப்பட்டு, மேலைச்சேரி, சித்தனவாசல் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்களையும் கற்கோவில்களையும் காண்கின்றோம்; ‘பெரியபுராணம் முதலிய நூல்களில் காணப்படும் பல்லவர் அமைத்தவை இவை,’ என்பதை ஒருவாறு உணர்கின்றோம்.

எனவே, இதுகாறும் கூறியவற்றால், (1) சங்காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்லவர் என்னும் மரபினர் பேரரசர்களாக இருந்தனர் என்பதும், (2)அவர்கள் பல குகைக்கோவில்களையும் கற்கோவில்களையும் அமைத்தனர் என்பதும், (3) சில ஊர்கட்குத் தங்கள் பெயர்களை இட்டு வழங்கினர் என்பதும், (4)அவருள் பலர் சைவாக இருந்தனர் என்பதும் ஒருவாறு உணர்தல் கூடுமே அன்றி, அப்பல்லவர் வரலாறுகளை அறிதல் கூடவில்லை.

பட்டயங்களும் கல்வெட்டுகளும்

பழைய அரசர்கள் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்கள் தந்த விவரங்களைச் செப்புப்பட்டயங்களில் எழுதி வந்தனர். அவற்றில் ‘இன்ன அரசன் பட்டமேற்ற இன்ன ஆண்டில்’ என்பது சிறப்பாகக்குறிக்கப்பெற்றது. அத்துடன், சில பட்டயங்களில் அவ்வேந்தன் முன்னோர் பெயர்களும் அவர்தம் விருதுப்பெயர்களும் அவர்கள் செய்த போர்களும் அறச்செயல்களும் குறிக்கப்படலும் உண்டு. இத்தகைய பட்டயங்கள் அரசர் மரபுக்கேற்றபடியும் நாட்டு முறைமைக்கு ஏற்றபடியும் பலமொழிகளில் எழுதப்பெறும். பல்லவர் தமிழகத்திற்கே புதியவர் ஆதலின், அவர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் முதலில் பிராக்ருத மொழியிலும், வடமொழியிலுமே வரையப் பெற்றன. பிற்காலப் பல்லவரே தமிழ் மொழியில் வரையத்தலைப்பட்டனர். இங்ஙனம் மூன்று மொழிகளில் அமைந்த பட்டயங்கள் சில கிடைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஆண்ட பல்லவர் கற்களில் பல செய்திகளைப் பொறித்துள்ளனர். அவற்றை அவர்கள் அமைத்துள்ள குகைக் கோயில்களிலும் கற்கோவில்களிலும் கண்டு மகிழலாம். பல்லவர்கள் அமைத்த பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் போல அவர்கள் காலத்துப் பிறநாட்டு மன்னர்தம் பட்டயங்களைக் கொண்டும், ஓரளவு பல்லவர் வரலாற்றை அறியலாம். அம்முறையில் கதம்பர், இரட்டர், சாளுக்கியர், நாகர், கங்கர், பாண்டியர், முத்தரையர் முதலிய அரச மரபினர் பட்டயங்களும் கல்வெட்டுகளும் உதவி புரிகின்றன. இவை அமையம் வாய்ப்புழி ஆங்காங்குக் குறிக்கப்பெறும்.

பிற நாட்டார் குறிப்புகள்

(1) இயூன் - சங் என்னும் சீன வழிப்போக்கினர் (யாத்திகர்) ஹர்ஷனையும் இரண்டாம் புலிகேசியையும் பார்த்துவிட்டு இறுதியில் காஞ்சிபுரத்தை அடைந்தார். அங்குச் சில மாதங்கள் தங்கியிருந்தார்; காஞ்சியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் காஞ்சியில் இருந்த சமயங்கள், கோவில்கள் இவற்றைப் பற்றியும் தமது வழிப்போக்கு (பிராயணம்) நூலில் குறித்துள்ளார். அவர் காஞ்சியில் இருந்தகாலம் ஏறக்குறைய கி.பி.640 ஆகும்.

(2) ஏறக்குறைய அதேகாலத்தில் இலங்கையை நோக்கிப் பல்லவர் படையெடுப்பு நடந்தது என்பதை இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகின்றது. ஆதலின், இக் குறிப்பிட்ட இரண்டு நூல்களும் பல்லவர் வரலாற்றை அறிய உதவி புரிவனவே ஆகும்.

ஆராய்ச்சியாளர் உழைப்பு

கி.பி. 19ஆம் நூற்றாண்டில் நமது நாட்டில் மேனாட்டு ஆராய்ச்சியாளர் பலர் இருந்தனர். அவருள் சிறந்தவரான சர் வால்டர் எலியட் என்பவரே முதல் முதல் பல்லவரைப் பற்றி எழுதினர். அவர் ‘மகாபலிபுரத்தில் உள்ள குகைக் கோவில்களை அமைத்தவர் பல்லவரே’, என்பதைக் கண்டுபிடித்தார். அதே நேரத்தில் டாக்டர் பர்னெல் என்பவர் அங்கு இருந்த கல்வெட்டுகளை முயன்று படித்துணர்ந்து, ‘அவை பல்லவர் தம் கல்வெட்டுகளே’ என்பதை மெய்ப்பித்தார். பின்னர் ஜேம்ஸ்பெர்கூசன் என்பவர் மகாபலிபுரத்தைப் பார்வையிட்டு, ‘அங்குள்ள வேலைப்பாடுகள் கி.பி. 6,7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை’ என்று முடிவு கட்டினார். பிறகு, சென்ற நூற்றாண்டின் இறுதியிற்றான் பல்லவரைப் பற்றிய மேற்சொன்ன செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வெளிப்போந்தன. அவற்றைக்கண்ட ஆராய்ச்சியாளர் திகைப்பும் வியப்பும் கொண்டனர்; பல ஆண்டுகள் அவற்றை ஆய்ந்து வெளியிட்டனர்; இம் முயற்சியில் முதல் இடம் பெற்றவர் டாக்டர் ப்ளீட் (Dr. Fleet) என்பவரே. இவரது முயற்சிக்குப் பின்னர்ப் பல கல்வெட்டுகளும் மகாபலிபுரம் ஒழிந்த பிற (பல்லவர் கோயில்கள் கொண்ட) இடங்களும் ஆராய்ந்து அறியப்பட்டன. பட்டயங்களும் கல்வெட்டுகளும் பேரறிஞர் பலரால்[7] பார்வையிடப்பெற்று விளக்கக் குறிப்புகளுடன் அச்சேறி வெளிப்போந்தன. இவற்றின் பின் கிடைத்த புதிய பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆண்டுதோறும் ஆராய்ச்சியாளர் வெளியிடும் தென் இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் வெளியாகி உள்ளன. இவையன்றி, இன்னும் எண்ணத் தொலையாத பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் இருத்தல் கூடும். அவை நாளடைவில் வெளிவரும். அவை வரவரப் பல்லவர் வரலாறு மேலும் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை.

நூலாசிரியர் பலர்

டாக்டர் ப்ளீட் துரை[8]க்குப்பின்னர் வெங்கையா என்பவர் 1907இல் பல்லவர் வரலாற்றை ஓரளவு தமிழ் நூல் உணர்ச்சியுடன் திறம்பட ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.[9] 1917இல் பிரெஞ்சுப் பேரறிஞரான துப்ராய் துறைமகனார் ‘பல்லவர்’ என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். இவர், அதுகாறும் எவரும கண்டறியாத பல புதிய கல்வெட்டுகளையும் பல்லவர் சின்னங்களையும் கண்டு ஆராய்ந்து அரும்பாடு பட்டனர். இவர் ‘பல்லவர் சின்னங்கள்’, ‘பல்லவர் ஓவியம்’ என்னும் பெயர்கொண்ட வெளியீடுகளையும், ‘டெக்கானது பண்டை வரலாறு’ என்றும் ஆராய்ச்சி மிக்க நூலினையும், ‘தென் இந்தியப் படிமக்கலை’[10] என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இப்பெரியார் சிறப்பாகப் பல்லவர் வரலாற்றிற்குப் பெருந்துணை புரிந்தவர். இங்ஙனம் பல்லவர் வரலாற்றை வரைய முனைத்தவர் பலர் உளர். அவருள் நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த டாக்டர் கிருட்டினசாமி ஐயங்கார் சிறந்தவர். இவர் 1923இல் ‘இந்திய வரலாற்று வெளியீடு’ என்னும் வெளியீட்டில் ‘பல்லவர் தோற்றமும் முற்பட்ட வரலாறும்’ என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.’ கோபிநாத ராவ், கே.வி. சுப்பிரமணிய ஐயர், அரங்கசாமி சரசுவதி முதலியோர்[11][12][13] வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில. பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் தமிழில் ‘பல்லவர் சரித்திரம்’ வெளியிட்டுளார். 1928 இல் சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த திரு. ஆர். கோபாலன் என்பவர் பண்பட்ட ஆராய்ச்சி முறையில் பல்லவர் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவருக்குப் பின் பிரெஞ்சுப் பேரறிஞராகவுள்ள ஹீராஸ் பாதிரியார் பல்லவரைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை வரைந்துள்ளார்.[14]

கல்கத்தாப் பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளராகவுள்ள தினேஷ் சந்திர சர்க்கார் ‘சாதவாகனர்க்குப் பின் வந்த அரசர்’ என்னும் அரிய நூல் ஒன்றில் பல்லவரைப் பற்றி இயன்ற அளவு ஆய்ந்துள்ளார்.[15] டாக்டர் மீனாட்சி அம்மையார் பல இடங்கட்கும் நேரே சென்று ஆராய்ந்து, ‘பல்லவர் கால ஆட்சியும் வாழ்க்கையும்’ என்னும் அரிய ஆராய்ச்சி நூலை 1938இல் வெளியிட்டுளார். இவ்வம்மையார் பட்டுள்ள பாடுகூறுந்தரத்ததன்று. இவரது நூல் பல்லவர் வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெறத்தக்கது.

இவற்றுடன் ஆராய்ச்சி நின்றுவிடவில்லை. ஆராய்ச்சி முடிவுற்றது. எந்த நேரத்திலும் எந்தப் பழைய இடத்தும் புதிய பொருள் கிடைத்தல் கூடும்; புதிய பட்டயமோ, கல்வெட்டோ, வேறு புதை பொருளோ அகப்படல் கூடும். இந்த முறையில் ஆராய்ச்சியாளர் கண்ணும் கருத்துமாக இருந்து, கிடைக்கும் புதியவற்றைத் தம் ஆண்டறிக்கைகளில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் ஆராய்ந்து இயன்றவரை ஒருவாறு பல்லவர் வரலாறு கூறலே நமது நோக்கமாகும்.

* * *

↑ பாடலிக-பாடலிகபுரம், திருப்பாதிரிப்புலியூர்.

↑ Dr. S.K. Aiyangar’s “Some Contributions of South India to Indian Culture’ pp. 193-194.

↑ Dr. M. Venkataramanayya’s article on “Durvinita and Simha Vishnu’ in J.O.R.

↑ Ibid

↑ சுந்தரர் தேவாரம், ப.90, செய்.

↑ பெரிய திருமொழி. வி.10:2, 9, 8: 3.9

↑ Dr. Fleet Hutzsch, Venkayya, Keilhorn, Krishna Sastry and others. They can be found in the Indian Antiquary, Soultes Indian Inscriptions and the Epigraphia Indica.

↑ Vide his “Dynastiesofthe Kanarese Districts'in the Bombay Gazetteer

↑ Archaeological Annual Survey Report for 1906-7, pp. 217-243.

↑ “South India Iconography'

↑ Dr. Venkataramanayy’s articles on “The Date of Pallava Malla, “Durvinita and Vikramaditya I, “The place of Virakurcha in the Pallava Genealogy,” “Mahendravarman I & Pulikesin II etc.

↑ Mr. M.S. Sarma’s papers on “Nirupatunga’, The Chronology of the Later Pallavas’ etc

↑ T.N. Ramachandra’s paper on “The last days of Nirupatunga’ etc.

↑ Studies in Pallava History, (1934)

↑ D. Sircar’s “Successors of the “Satavahanas’ (1939)

3. பல்லவர் யாவர்?

பல்லவர் ஏறத்தாழ 700 ஆண்டுகள் தென் இந்தியாவில் நிலைத்து ஆட்சி புரிந்திருந்தும் - அவர்களைப் பற்றிய பல பட்டயங்களும் கல்வெட்டுகளும் கிடைத்திருந்து - ‘அவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்?’ என்பன போன்ற கேள்விகட்கு ஏற்ற விடையளித்தல் எளிதன்று. அவர்களைப் பற்றிக்கிடைத்துள்ள மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.

பலதிறப்பட்ட கூற்றுகள்:- இந்திய வரலாறு நூலாசிரியரான வின்ஸென்ட் ஸ்மித் என்பார், தமது ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்பதிப்பில், ‘பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர் என்றும், இரண்டாம் பதிப்பில், ‘பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர். அவர் கோதவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம் என்றும், மூன்றாம் பதிப்பில், பஹ்லவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ் வொப்புமை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீகர் எனக் கூறல் தவறு. ‘பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர் என்றும் முடிபு கூறியுள்ளார்.”[1]

சாதவாஹனப் பேரரசும் தமிழகமும்

(கி.மு. 200-முதல் கி.பி.250)

ஆயின், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், ‘பஹ்லவர், மரபினரே பல்லவர்’ என்று முடிபு செய்தனர்.[2] பேராசிரியர் துப்ராய் என்பவர், ‘கி.பி. 150 இல் ருத்ர தாமன் என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான சுவிராகன் என்பவன் பஹ்லவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியைத் தமதாக்கி ஆண்டவராவர். பட்டயங்களில் காணப்படும் முதற் பல்லவர் அரசர் அல்லர், ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம்பெற்றவனே முதற்பல்லவன். அவனே வீரகூர்ச்சவர்மன் என்று பல்லவர் பட்டயங்களில் கூறப்படுமவன்’ என்று வரைந்துள்ளார்.[3]

இங்ஙனம் பல்லவர் என்பார் பஹ்லவர் மரபினரே என்று முடிபு கொண்டவர் பலர் உளர். இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர், ‘இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக்கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு இருந்தமையின் தொண்டைமான் என்றும், திரைகளால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகப் பெயரைத்தாங்கிப் (மணி பல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழப்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்’ என விளக்கியுள்ளார்.[4]

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்’ எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்’ என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் ‘போத்தர்’ என்றும் ‘பல்லவர்’ என்றும் பல்லவ அரசர் கூறிக் கொண்டனர். ‘மணிபல்லவம்’ என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று தம்மைமக் கூறிக் கொண்டமை. இயல்பே அன்றோ?’[5] ‘வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்’ என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டைமண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றிலர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர் என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால் - அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.[6]

‘மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கித் தன் பெயர் இட்டுத் தொண்ட மண்டலம் என வழங்கினான்’ என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது.

பல்லவர் தமிழர் அல்லர்

வின்ஸென்ட்ஸ்மித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்த முடையதாகத் தெரிகின்றது. ஏனையோர் கருத்துகட்குக் கடுகளவும் சான்றில்லை. என்னை? பிராத்ருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவ பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ ‘பல்லவர் பஹ்லவர் மரபினர்’ என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, ‘திரையர் மரபினர் என்றோ, ‘மணி பல்லவத் தீவினர்’ என்றோ குறிக்கவில்லை சங்க காலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி. இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ் கந்தவர்மன், ‘புத்தவர்மன்’ வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது என்பதைச் சிறிதளவு அறிவுடையாரும் தெளிவுறத்தெறிதல் கூடும் அன்றோ? மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலான வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் சோழர் மரபினர் ஆயின் - இளந்திரையன் வழிவந்தவர் ஆயின் தமிழில் எழுதாது, தமிழ் மக்கட்கே புரியாத வடநாட்டு மொழிகளில் எழுதத் துணிந்திருப்பரோ?[7] கி.பி 9ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்ட சோழரோ, பாண்டியரோ வளர்க்காத முறையில் தமிழைப் புறக்கணித்து, வடமொழியைத் தமது ஆட்சியில் வளர்த்திருப்பரோ? பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது என்பது மிகையாகாது. பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் கி.பி எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார் என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; குடிவழி அறிந்தவர்கள்; தமிழர்க்கு இருடிகள் கோத்திரம் எது?[8] இன்ன பிற காரணங்களால். பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். ஆயின், பல்லவர் யாவர்?

தொண்டை நாடும் சங்க நூல்களும்

வடபெண்ணை யாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வட எல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு கி.மு. 184 முதல் கி.பி. 260 வரை செறிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணைவரை இருந்தநிலப்பரப்பே அக்காலத்தொண்டை மண்டலம் எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவா வடதலை நாடு என இரண்டு பிரிவுகளாக இருந்தது- முன்னதில் காஞ்சி நகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும்; காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் ‘தொண்டைமான் மாகணி’ (மாகாணம்) எனப்படும். இரண்டு வெள்ளாறுகட்கு இடையில் உள்ள நிலமே சோழநாடு. தென்வெள்ளாற்றுக்குத் தென்பால் உள்ள இடமே பாண்டியநாடு. கொச்சி, திருவாங்கூர் நாடுகள் அடங்கிய இடமே பழைய சேர நாடாகும். குடகு முதலிய மலை நாட்டு இடங்களும் அவற்றைச் சார்ந்த கடற்கரையும் கொங்காணம் எனப்படும். அதனைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டு வந்தான்.

வடக்கே இருந்த அருவா வடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் பாவித்திரி என்பது. அஃது இப்பொழுதையை கூடுர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம், என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்தி நாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். சோழர் இப் பகுதியைக் கைக்கொண்டமையின், இதற்குக் காகந்தி நாடு (புகாருக்கு உரிமையான நாடு) என்று பெயரிட்டனர் போலும் ‘கரிகாற் சோழன்’ காடு கெடுத்து நாடாக்கினான். விளை நிலங்கள் ஆக்கினான். ஏரி குளங்களை வெட்டுவித்தான்: தொண்டை மண்டலத்தை நாடாக்கினான்: நாகரிகத்தைத் தோற்றுவித்தான்.' என்று பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. இங்ஙனம் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடக்கின்றது. திரையன் அருவா வடதலை நாட்டை ஆண்டபோது, ‘இளந்திரையன்’ அருவா நாட்டை ஆண்டனள் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.

தொண்டைமான் இளந்திரையான் காலத்தில் காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் களவர் என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்குத் தலைவனாக இருந்தவன் புல்லி என்பவன். இவன் திரையனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பதை அறியக் கூடவில்லை. இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் நாம் அறியக்கிடக்கும் உண்மை ஆகும்.

எல்லைப் போர்கள்

வடபெண்ணையாற்றுக்கு வடக்கே ஆதோணியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பு சாதவாகனர் (ஆந்திரர்) ஆட்சியின் தென்மேற்குப் பகுதியாக இருந்தது. அந்த இடம் ‘சாதவாகனி இராட்டிரம்’ என்று வழங்கப்பட்டது. சாதவாகனருடைய பெரும் இந்தப் பகுதிக்குத் தலைவனாக இருந்தான். அதே காலத்தில் சாதவாகனரது தென்பகுதியை மேற்பார்த்து வந்த தலைவர்களே பல்லவர் ஆவர். ஆதலின். இந்தப் பகுதி தமிழகத்தின் அருவாவடதலை நாட்டிற்கும் வடக்கின் கண்ணது ஆதலின், எல்லைப் போர்கள் பல நடத்தவண்ணம் இருந்தன. இப் போர்களைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாவிடினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் அரசர்க்கும் ‘ஆரியர்’ என்று கருதப்பட்ட சாதவாகனர்க்கும் எல்லைப்புறச் சண்டைகள் நடைபெற்றன என்பதைச் சங்க நூல்களால் நன்கறியலாம். ஆரியப் படை கடந்த நெடுஞ்சொழியன் என்னும் பெயரும், திருக்கோவலூரை ஆண்ட மலையமான் ஆரியரை வென்றான் என வருவதும் ‘சோழர் ஆரியரை வென்றனர்'[9] என்னும் குறிப்புகள் தமிழ் நூல்களில் பல இடங்களில் வருதலும் இவ்வெல்லைப் போர்களையே குறித்தனவாதல் வேண்டும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் (சிலப்பதிகார காலத்தில்) தோன்றி வளர்ந்து வந்த இந்த எல்லைப்புறப் போராட்டங்கள், ஆதோணியைச் சேர்ந்த நிலப்பகுதிக்குத் தலைவராக இருந்த சாதவாகன அதிகாரிகட்கும் தென்பகுதித் தலைவர்கட்கும் நாளடைவில் வெற்றியை அளித்தனவாதல் வேண்டும். இன்றேல், அக்கால வழக்கில் இருந்த சாதவாகனர் கையாண்ட ‘கப்பல் நாணயங்கள் வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை காணக் கிடத்தற்குக் தக்க காரணம் வேண்டுமென்றோ?

சாதவாகனப் பெருநாடு

சாதவாகனப் பெருநாடு பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றைச் சாதவாகன மரபினரும் உயர்ந்த தானைத் தலைவரும் மண்டலத் தலைவராக இருந்து ஆண்டு வந்தனர்.

விஷ்ணு குண்டர்

கோதாவரிக்கு வடபாற்பட்ட பகுதியை, வாகாடகர் பெண்ணை மணந்த தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மரபினர் விஷ்ணு குண்டர் எனப்பட்டனர். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 450-550 என்னலாம்.[10]

சாலங்காயனர்

கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டைச் சாலங்காயனர் என்பவர் கி.பி. 320 முதல் 500[11] வரை ஆண்டனர். அவர் தலைநகரம் வேங்கி (பெத்த வேங்கி) என்பது. அவர்கள் நந்தி வழிபாட்டினர். (சாலங்காயன நந்தி). அவருள் இரண்டாம் அரசனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திரகுப்தனை எதிர்த்த அரசர் பலருள் ஒருவன் ஆவன். இறுதியில் இந்நாடு சாளுக்கியர் கைப்பட்டது.

இக்குவாகர்-பிருகத்பலாயனர்

கிருஷ்ணை, குண்டுர்க்கோட்டங்களை இக்குவாகர் (இக்ஷவாகர்) என்பவர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டனர். இவருள் ஒருவனான சாந்தமூலன் என்பவன் கி.பி. 225இல் தன்ஆட்சி நிறுவி அந்நாட்டைஆண்டான். இவன் மரபினர் சில ஆண்டுகளே அதனை ஆண்டனர். பிறகு அதனைப் பிருகத் பலாயனர் ஆண்டினர்; இறுதியில் அப் பகுதி ஏறத்தாழக் கி.பி. 275இல் பல்லவர் கைப்பட்டதாகலாம். அதன் தலைநகரம் ‘தான்யகடகம்’ என்பது.[12] இந்நகரம் பல்லவர் வடபகுதிக்குத்தலைநகரமாகச் சிவஸ்கந்தவர்மன் பட்டயத்தில் காணப்படுகிறது.[13]

ஆனந்தர்

குண்டுர், கிருஷ்ணைக் கோட்டங்களை இக்குவாகரிடமிருந்து ஆனந்தர் என்பவர் கைப்பற்றிக் கி.பி. 350 முதல் 450 வரை ஆண்டுவந்தனர். அப் பகுதி இறுதியிற் சாலங்காயனர் கைப்பட்டது.[14]

சூட்டு நாகர்

சாதவாகனப் பெருநாட்டின் தென்மேற்குப் பகுதி சூட்டு நாகர் என்பவர் ஆட்சியில் இருந்தது. அதனை ஆண்ட மாகாணத் தலைவருட் சிறந்தவனே கந்தநாதன் என்பவன். இம் மரபினர் சாதவாகனருடன் உறவு கொண்டிருந்தனர். இவர் தலைநகரம் வனவாசி என்பது. இவர் ஆட்சி கி.பி.340 இல் கதம்பரால் பறிக்கப்பட்டு விட்டது.

பல்லவர்

சாதவாகனப் பேரரசில் கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற் பட்ட நிலப்பகுதியே பல்லவர் ஆட்சியில் இருந்தது. பல்லவா மரபினர் சாதவாகனர் மாகாணத் தலைவராக இருந்து ஆண்டு வந்தவர்; தம் பேரரசு வலி குன்றத் தொடங்கிய 225 இல் தாம் ஆண்ட நாட்டைத் தமக்கே உரிமை செய்துகொண்டு விட்டனர்; பின்னர் வலுப் பெற்றதும், தொண்டைநாட்டைக் கைப்பற்ற முனைந்தனர்.

இங்ஙனம் சாதவாகனர் பேரரசில் மாகாணத் தலைவராக இருந்த சாலங்காயனர். விஷ்ணுகுண்டர், இக்குவாகர், பிருகத் பலாயனர், சூட்டுநாகர், பல்லவர் என்பவர். அப்பேரரசு வலிகுன்றத் தொடங்கியதும், தாம்தாம் ஆண்டுவந்த மாகாணத்திற்குத்தாமே அரசராகிவிட்டனர்.[15]

இதனாற்றான், (சாதவாகனப் பேரரசு சத்ரபர், வாகாடகர் என்ற புதிய மரபினர் படையெடுப்பால்நிலைதளர்ந்தபோது தம் ஆட்சியை உண்டாக்கிக் கொண்ட) இந்த அரசருள் பலர், கி.பி.340 இல் தெற்கு நோக்கிப் படையெடுத்த சமுத்திர குப்தனை எதிர்த்தனர் என்பதை அல்லகாபாத்துண்கல்வெட்டு உணர்த்துகிறது. சாதவாகனப் பேரரசு உடைபட்டுச் சிறிய பல நாடுகள் தோன்றியிராவிடின், சமுத்திர குப்தனை இத்துணை அரசர் (இவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன்) கோதாவரி, கிருஷ்ணை ஆறுகளண்டை எதிர்த்திருத்தல் இயலாதன்றோ?

பல்லவரும் தொண்டை நாடும்

இந்நிலைமை உண்டாதற்கு முன்னரே, இந்தப் பல்லவ மரபினர் (மாகாணத்தலைவர்) தங்கள் தென் எல்லைப்புறம்போர்களிற் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வந்தனர். இறுதியில் சோழர் பிடித்தாண்ட தொண்டை மண்டலத்தில் வலிமையுள்ள அரசன் இல்லாத அக்காலத்தில் பெரும் படையை அனுப்பிப் பகைவரை விரட்டியடிக்க வலியற் சோழன் சோழ மண்டலத்தை ஆண்ட அக்காலத்தில்-(வட எல்லையில் இருந்த) சாதவாகனப் பேரரசின் தென்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் பையப் பைய அருவா வடதலை நாட்டையும், பிறகு அருவா நாட்டையும் கைப்பற்றினர்.

‘தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும்போர் நடந்தது’ என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுராசனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச் செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.

இங்ஙனம் கைப்பற்றிய நாட்டில், மக்களை இன்புறச் செய்யவும் நாட்டில் அமைதியை உண்டாக்கவும் பப்பதேவன்[16] என்னும் அரசன் ஓர் இலக்கம் (லட்சம்) கலப்பைகளையும் பிறவற்றையும் தந்தான் என்று செப்பேடு கூறுகின்றது. பின் வந்த அரசரும் புதிய நாட்டில் இருந்த கோவில்களுக்கு மானியங்கள் விட்டனர் என்னும் செய்தி செப்பேடுகளில் காணப்படுகிறது. இச் செப்பேடுகளில் பிராக்ருத மொழியே காணப்படுகிறது. சாதவாகனப்பேரரசர் ஆட்சியின் தொடக்கத்தில் காணப்பட்ட செப்பேடுகளில் உள்ள பிராக்ருத மொழியிலேயே இப் பட்டயங்களும் காணப்படுகின்றன.[17] எனவே, இதுகாறும் கூறியவற்றால், சாதவாகனர் பேரரசில் தென்மாகாணத் தலைவராக இருந்தவரும் அவர் மரபினரும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருவாவடதலை நாட்டைமுதற்கண் கைப்பற்றி, உழவு, நாகரிகம் முதலியவற்றை நுழைந்தனர்; பிறகு சோழவேந்தர் வலியற்ற நிலையைக் கண்டதும், அருவாநாட்டையும் கைப்பற்றினர்; சோழர் காலத்துத் தலைநகரமாக இருந்த -கல்விக்கும் பல சமயங்கட்கும் நிலைக்களமாக இருந்த-காஞ்சியைத் தங்கள் கோநகரமாக ஆக்கிக் கொண்டனர் என்பன நன்கு விளங்குதல் கூடும் அன்றோ? இவர்களே தங்களைப் பல்லவர் என்று கூறிக்கொண்டனர்.

பல்லவர் அரச மரபினரே

இவர்கள் தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்’ எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் ‘பல்லவ சத்திரியா’ என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டுக் கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ் வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி-தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர்.[18]

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப் பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாதல் வேண்டும்.பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது.[19]

* * *

↑ 40. Vide his “Early History of India’ (1st ed,) p. 348. (2nd ed.) p.423, (3rd ed.) p.469

↑ 41. Vide his “Mysore and Coorg form Inscriptions’. p.53;

↑ Vide his Ancient “History of the Dekkhan’, pp.47-60

↑ “Indian Antiquary’, Vol. III. pp.75-80

↑ Mysore Gazetteer Vol - II part II p. 510-517

↑ Rea’s “Pallava Architecture’ p.2

↑ இப் பல்லவரைப் பார்த்தே கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் பாண்யரும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழரும் சில வடமொழிப் பட்டயங்களை வெளியிட்டனர்; பெரும்பாலான தமிழ்ப் பட்டயங்களே ஆகும். சங்ககாலத்தமிழ் அரசர் வடமொழியிலோ பிராக்ருத மொழியிலோ பட்டயங்களை விடுத்தமைக்குச் சான்றில்லை.

↑ சங்க காலத் தமிழரசர் ‘இன்னவர் மருமானே’ மருமகனே எனப் புலவரால் விளிக்கப்பட்டனரே அன்றிப் ‘பாரத்வாசர்’ போன்ற முனிவர் மரபினராக யாண்டும் குறிக்கப் பெற்றிலர்.

↑ Vide Dr. S.K. Aiyangar’s Int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan.

↑ D. Sircar’s Successors of the Satavahanas’ pp.97-140

↑ Ibid. pp. 73,82,83

↑ Ibid, pp.163-165

↑ Dr. K. Gopalacharl’s “Early History of the Andhra country,’ pp.151-159

↑ D. Sircar’s Successors of the Satavahans,’ pp.56, 52

↑ Ibid.Iap pp.3-4

↑ ‘பப்ப’ என்பது ‘அப்பன்’ என்னும் பொருளது. இச் சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன்தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide D.Sirear’s Successors of 1he Satavahanas, p. 183-184 and Dr. G.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.6-10.

↑ Vide Dr. S.K. Aiyangars Valuable Introduction to the “Pallavas of the Kanchi,’ by R.Gopalan.

↑ Dr. C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ pp. 12-13.

↑ Ibid pp. 17-1

4. களப்பிரர் யாவர்?

களப்பிரர்

சென்ற பகுதியில் பல்லவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் களவர் என்பவர் என்பது குறிப்பிடப்பட்டதன்றோ? இப் பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும்; வடமொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவராகப் பாண்டியர்-பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடப்படாமையின், இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி - சின்னமனூர்ப் பட்டயங்களில் கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்பது காணப்படுகிறது. பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே, வேள்விக்குடிப் பட்டயம் குறிப்பிடும் கலியரசனே பெரிய புராணம் கூறும் வடுகக் கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும்; அஃதாவது அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும் என்பது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும், கடுங்கோன் களப்பிரரை விரட்டிப்பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575[1] எனக் கொள்ளினும், களப்பிரர் பாண்டியநாட்டைஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பதை உறுதியாக உரைக்கலாம். எனவே, இக் களப்பிரர் ஏறக்குறைய கி.பி. 250 இல் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர் என்னலாம்.[2] களப்பிரர் இடையீடு (கி.பி 200–300)

புகாரைத் தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்ரந்தன் என்னும் களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்பதைப் புத்தத்தர் குறிப்பிடுதல் கொண்டு உணரலாம்.[3] அவர் பாலி மொழியில் ‘அபிதம்மாவதாரம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். அவர் தமது நூலில் மேற்சொன்ன செய்தியைக் குறிப்பிட்டுள்ளனர். அப்பொரியார் காலம் புத்த கோஷரது காலமான கி. பி. 350 ஆகும்.[4] ‘அச்சுதக் களப்பாளன்’[5] என்னும் பெயர் கொண்ட வேந்தன் ஒருவன் முடியுடை மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. கி.பி.11ஆம் நூற்றாண்டினதான யாப்பருங்காலக்காரிகையில் ஒரு பாடல் அவன் சிறப்பைக் கூறுகிறது. அஃது,

“அடுதிறல் ஒருவ/நிற் பரவுதும்: ‘எங்கோன்

தொடுகழற் கொடும்பூண் பகட்டொழில் மார்பில்

கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்

புயலுறழ் தடக்கைப்போர்வேல் அச்சுதன்

தொன்றுமுதிர்கடலுலகம் முழுதுடன்

ஒன்றுபு திகிரி உருட்டுவோன்’ எனவே”

என்பது.

இது விளக்கத்தனார் என்னும் பண்டைப் பாவலர் பாடியதாகும். யாப்பருங்கல விருத்தியில் மற்றொரு செய்யுள் காணப்படுகிறது. அது,

“பொருகுடை வளாகம் ஒருகுடை நிழற்றி

இருபிறப்பாளர்க்(கு) ஈந்து மனமகிழ்ந்து

அருள்புரி பெரும்புகழ் அச்சுதக் கோவே/

நந்தி மாமலைச் சிலம்பு

நந்தி நிற் பரவுதல் நாவலர்க்கரிதே”

இச் செய்யுட்கள் பழையன என்பது இவற்றின் நடை கொண்டு கூறலாம். மேலும் முதற்பாட்டின் ஈற்றடி “ஒரு தனி யாழி உருட்டுவோன்” எனவே என வரும் சிலப்பதிகார அடியை ஒற்றிவருதல் இதனை நன்கு வலியுறுத்தும். எனவே, தமிழ் நூல்களில் கூறப்படும்.அச்சுதன் புத்ததத்தர்க்கறிய அச்சுதனே என்பது தெளிவாதல் காண்க. அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவராகிய கூற்றுவ நாயனார் களப்பிரரே ஆவர். இவரைப்பற்றி நம்பியாண்டார் நம்பி,

"ஒதம் தழுவிய ஞாலமெல்லா மொரு கோலில்வைத்தான்

கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"

என்று கூறுதல்காண்க. ‘இவர் பல அரசர்களைவென்றவர் முடிபுனைய விரும்பித் தில்லைவாழ் அந்தணரை வேண்டினர். அவர்கள், இவர் சோழர் அன்மையின் மறுத்துவிட்டனர். அதனால் இவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டி அருளினார் என்பதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது.[6] இவரும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை மற்றொரு நாயனாரான இடங்கழி நாயனார் என்பவரும் இம் மரபினரே. இருவரும் கொடும்பாளுரை ஆண்ட குறுநில மன்னராவர்.[7]

களப்பிரர்-பல்லவர் போர்கள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முனைகையில், அவர்களால் தாக்குண்ட இக் களப்பிரர் அருவா வடதலை நாட்டை விட்டுத் தொண்டை மண்டலத்திற்குள் நுழைந்தனர். இவர்கள் நுழைவால் சோழர் சிற்றரசு தொண்டை மண்டலத்தில் வீழ்ச்சியுற்றது. பல்லவர் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முனைந்த பொழுது, அவரிடம் போரிட்டுத் தோற்ற களப்பிரர் காஞ்சியை விட்டுப் பாலாற்றுக்குத் தெற்கே சென்று விட்டனர். அதனாற்றான் பப்பதேவன் காலத்தில் பாலாறு பல்லவர் நாட்டின் தென் எல்லையாக இருந்திருந்தால் வேண்டும். பிறகு சிவஸ்கந்தவர்மன் இக் களப்பிரரோடு போரிட்டுத் தென் பெண்ணையாறு வரை பல்லவ நாட்டை விரிவாக்கி இருத்தல் வேண்டும்.[8]

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடைக்காலப் பல்லவருள் ஒருவனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் (களப்பிரர்)[9] சேனையை நடுங்க வைத்தான் என்று ஒரு பட்டயம் கூறலால், தொண்டை-சோழநாடுகளில் இருந்த களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் போர் நடந்த செய்தி அறியலாம்.

இக் களப்பிரர் அடிக்கடி பல்லவரோடு போரிட்டு வந்திருக்க வேண்டும் இவர்களைக் காஞ்சியினின்றும் துரத்தித் தொண்டை மண்டலம் முழுவதையும் கைப்பற்ற இடைக்காலப் பல்லவரும் இடருற்றவராதல் வேண்டும்.[10]

கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் பல்லவப் பேரரசனாக இருந்த சிம்ம விஷ்ணு கி.பி. 575-615) களப்பிரரை முறியடித்த பெருவீரன் என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறுகின்றது. சிம்மவிஷ்ணுவின் பெயரனான முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-660) இக் களப்பிரரோடு போரிட்டான். கி.பி.7ஆம் நூற்றாண்டின் கடையிலும் எட்டாம் நூற்றாண்டின் இடையிலும் சாளுக்கியர் இக் களப்பிரரைக் கண்டுள்ளனர். வடக்கே பல்லவராலும் தெற்கே பாண்டியராலும் அடிக்கடி தாக்குதல் பெற்று வலிகுன்றிய இக் களப்பிரர், கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சைக்கு அருகிலும் கொடும்பாளுரிலும் முத்தரையர் என்னும் பெயருடன் சிற்றரசர்கள் ஆகிப் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கி வாழ்ந்து வந்தனர்.[11]

சோணாட்டில் களப்பிரர்

தஞ்சைக்கடுத்த செந்தலை (சந்திரலேகா) என்னும் ஊர் முத்தரையர் காலத்தில் சிறந்த நகரமாக இருந்திருத்தல் வேண்டும். அங்குள்ள கோவில் மண்டபத் தூண்களில் இருக்கும் கல்வெட்டு களில் முத்தரையர் பரம்பரையைக் காணலாம்:

பெரும் பிடுகு முத்தரையன் I

அல்லது

குவாவன் மாறன்

|

இளங்கோவதி அரையன்

அல்லது

மாறன் பரமேசுவரன்

|

பெரும் பிடுகு முத்தரையன் II

அல்லது

சுவரன் மாறன்

இந்த மூன்றாம் அரசன், ‘ஸ்ரீமாறன், ஸ்ரீகள்வர் காவலன், ஸ்ரீசத்ரு, கேசரி, ஸ்ரீகளப்ர காவலன்’ எனப் பலவாறு வழங்கப் பட்டான்.[12] இம் மரபினர் பாண்டியரை வென்றவுடன் மாறன் என்று பெயரிட்டுக் கொண்டனர்; ‘முத்து அரையர்’ - முத்துக்கள் கிடைக்கும் பகுதிக்கு (பாண்டிய நாட்டுக்கு) அரசர் என்று தம்மை அழைத்துக் கொண்டனர். இன்றேல், சேர, சோழ, பாண்டியரை வென்றனராகலின் முத்தரையர் (மு+தரையர்) எனப் பெயர் கொண்டனர் எனினும் பொருந்தும்.[13]

பாண்டி நாட்டில் களப்பிரர்

பாண்டி நாட்டில் முத்தரையர் அரசு செலுத்திய பொழுது தான் கி.பி. 470 இல் சமண சங்கம் மதுரையிற் கூட்டப் பட்டது. ‘திகம்பர தரிசனம்’ என்னும் சமண நூல் இதனைக் குறிக்கிறது. நாலடியாரும் பழமொழியும் அப்பொழுது பாடப் பட்டவையாக இருக்கலாம். நாலடியாரில் முத்தரையர் புகழப்பட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தி உரையால், தமிழ் முத்தரையர் கோவை ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இம் முத்தரையர் (களப்பிரர்) சமணத்தை ஊட்டி வளர்த்தனர் என்பது நாலடியார் போன்ற (செ. 200, 243, 296) நூல்களால் நன்குணரலாம்.[14]

கி.பி. 8 ஆம் நூற்றாண்டினரான திருமங்கை யாழ்வார் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட சிற்றரசர். அவர் கள்ளர் மரபினர் என்று திவ்யசூரி சரிதம் செப்புகிறது. கள்ளர் சரப மரபினர் என்று வடமொழியில் கூறப்படுவர்.[15] இன்றும் திருச்சிக் கோட்டத்தில் முத்தரையர் சமீந்தார்களாக இருக்கின்றனர். தெலுங்க நாட்டில் முத்துராசாக்கள் என்னும் சமீந்தார் இருக்கின்றனர். மதுரைக் கோட்டத்தில் உள்ள மேலுரில் முத்தரையர் ‘அம்பலகாரர்’ எனப்படுவர். இவர்கள் எல்லோரும் இக்காலத்துக் கள்ளர் வகுப்பினர் ஆவர் என்பர் ஆராய்ச்சியாளர்.[16]

பல்லவராலும் பாண்டியராலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுவரை களப்பிரர் வலிகுன்றிச் சிற்றராசராக இருந்தனர். தஞ்சையையாண்ட களப்பிரர் பல்லவர்க்கு அடங்கியவர்: கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் பாண்டியார்க்கு அடங்கியவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சோழப் பேரரசை நிலைநாட்டிய விசயாலய சோழன் தஞ்சையைக் களப்பிர அரசனிடமிருந்தே மீட்டான்.[17]

* * *

↑ T.V.S Pandaranar’s “Pandyas,’ pp; 103.

↑ C.V.N. Iyer’s Saivism. In S. India, pp.411-412.

↑ K.A.N. Sastry’s Cholas, Vol I p. 121.

↑ K.C.Law’s Life and Works of Buddagosha,’ p.43.

↑ கம்மர்-கம்மாளர், அந்தணாளர் என்ப்து போலக் களப்பர் என்பது களப்பாளர் என வருதல் இயல்பு.

↑ கூற்றுவ நாயனார் புரணாம்.

↑ K.A.N.Sastry’s Cholas, Vol.I. p.150 foot-note.

↑ R.Gopalan’s “Pallavas of Kanchi’, pp.36-37

↑ சோழர் இக் காலத்தில் தனித்துப் படையெடுத்தனர் எனல் பொருந்தாது. என்னை? கொண்டை நாடும் சோணாட்டின் வடபகுதியும் களப்பிரர்கையில் இருந்தது என்பதைப் புத்ததத்தர் கூற்றால் உய்த்துணரலாம். அங்ஙனம் இருப்ப, களப்பிரரும் சோழரும் சேர்ந்து பல்லவரை எதிர்த்தனர் எனக்கோடலே பொருத்தமாகும்.

↑ D.S.K. Aiyaaga’s Int, to the “Pallavas to Kanchi’ 22.

↑ Ibid p.23.

↑ R.Gopinatha Rao’s article in “Sen Tamil’ Vol.6

↑ M.S.R.Iyengar’s “Studies in S.I. Jainism,’ pp.53–55,

↑ Ibid.

↑ M.R.Aiyangar’s Alwargal Kalanilai,’ pp. 118-119

↑ “Studies in S.I.Jainism'pp.56,57 - 75

↑ K.A.N. Sastry’s “Pandyan Kingdom’ p.84-85

5. முதற்காலப் பல்லவர்

(கி.பி. 250-340)

முவகைப் பட்டயங்கள்

பல்லவர் பட்டயங்கள் பிராக்ருதம், வடமொழி, கிரந்த தமிழ் என மூவகை மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, மொழிவல்லுநர் இவற்றை நன்கு ஆய்ந்து, முதலில் வெளிப் பட்டவை பிராக்ருதப் பட்டயங்கள்; பின்னர் வெளிப்பட்டவை வடமொழிப் பட்டயங்கள்; இறுதியில் வெளிப்பட்டவையே கிரந்த-தமிழ்ப பட்டயங்கள் என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். அவர்களே, பிராக்ருத மொழியில் தீட்டப்பட்டுள்ள பட்டயங்கள் கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை; வடமொழிப் பட்டயங்கள் கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடத்தக்கவை. என்றும் முடிவு கூறியுள்ளனர். இம் முறைப்படி ஆராயின், பல்லவர் பட்டயங்கள் மூவகைப்படும். அவற்றுள் முதலன பிராக்ருத மொழியின. அவற்றின் காலம் கி.பி. 3,4ஆம் நூற்றாண்டுகள் ஆகும். மற்றவை மேற்சொன்ன இரண்டு காலங்களைச் சார்ந்தவை ஆகும். ஆகவே, நாம் (1) பிராக்ருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை முற்காலப் பல்லவர் (கி.பி. 250-340) என்றும், (2) வடமொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை இடைக்காலப் பல்லவர். (கி.பி. 340-575) என்றும், (3) கிரந்த தமிழ் மொழியில் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் வெளியிட்ட பல்லவரைப் பிற்காலப் பல்லவர் (கி.பி. 575-900) என்றும் இந்நூலுள் அழைப்போம்.

பிராக்ருத பட்டயங்கள்

முற்காலப் பல்லவர் பட்டயங்களில் சிறந்தவை முன்றே ஆகும். அவை: (1) மயிதவோலு-பட்டயங்கள், (2) ஹிரஹத கல்லிப் பட்டயங்கள், (3) குணபதேயப் பட்டயங்கள் என்பன. இவை மேனாட்டு அறிஞரால் நன்கு ஆராயப்பட்டுத்தக்க விளக்கவுரைகள் பெற்றவையாகும். இப் பட்டயங்கள் தம்மை விடுத்தவர் பெயர்களைக் குறிப்பிட்டு, தாம் எழுந்த காரணத்தையும் குறிப்பவை ஆகும். ஆதலின், இவற்றைக்கொண்டு முற்காலப் பல்லவர் பரம்பரை, போர், நாகரிகம், அரசியல் முதலிய வரலாற்றுக்குரிய செய்திகளை நன்கு அறியக்கூடவில்லை.

முதற்காலப் பல்லவர் நாடு (கி.பி. 250-340)

ஆந்திர பதமும் தொண்டை நாட்டின் வடபகுதியும் இக்காலப் பல்லவர் நாடாக இருந்தன.

(1) மயிதவோலு-பட்டயம்.

இது பல்லவர் மரபினனும் பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்தவனும் ஆன இளம் பேரரசன் (யுவமகாராசன்) சிவஸ்கந்த வெளியிட்டது. ஆந்திர பதத்தில் (பல்லாரிக் கோட்டத்தில் உள்ள ‘விரிபரம்’ என்னும் சிற்றுரை இரண்டு பிராமணர்க்கு உரிமையாக் கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வுரிமை, இளவரசன் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவனது ஆட்சி 10 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. இது காஞ்சியிலிருந்து விடப் பட்டதாகும். இது தான்ய கடகத்தில் இருந்த (பல்லவர்க்குரிய தெலுங்கு நாட்டைத் தலைவனாக இருந்து ஆண்ட) தலைவனுக்கு அனுப்பப் பட்டது.

(2) ஹிரஹதகல்லிப் பட்டயம்

‘ஹிரஹதகல்லி’ என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றுர், இப் பட்டயம் பல்லவ - தர்ம - மகாராசாதிராசன் சிவஸ்கந்தவர்மன் விடுத்ததாகும். இஃது இவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்டது. பப்பமகாராசன்[1] விடுத்த தானத்தை உறுதிப் படுத்தவும் விரிவு படுத்தவும் இது விடப்பட்டது. தானம் பெற்ற தோட்டம் உள்ள ஊர் ‘சில்லரேக கொடுங்கா’ என்பது. அது சாதவாகனராட்டிரத்தில் உள்ளது. இதில் அரசியல் அலுவலாளர் பெயர்களும் பிறவும் குறிக்கப்பட்டுள்ளன. சிவஸ்கந்தவர்மன் அக்நிஷ்டோமம், வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெரு வேள்விகளைச் செய்தவன் என இப் பட்டயம் குறிக்கிறது.

(3) குணபதேயப் பட்டயம்

இது விசய-ஸ்கந்தவர்ம மகாராசன் ஆட்சிக்காலத்தில், இளவரசன் புத்தவர்மன் மனைவியும் புத்தியங்குரன் தாயுமான சாருதேவி என்பவள் விடுத்தது. தாலூராவில் உள்ள பெருமாள் (நாராயணன்) கோவிலுக்கு அவ்விளவரசி நிலத்தைத் தானமாக விட்ட செய்தி இதில் காணப்படுகிறது. விசய ஸ்கந்தவர்மனுக்கும் இளவரசன் புத்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது இதில் குறிக்கப்படவில்லை.

இவற்றால் அறியத்தக்கவை

சிவஸ்கந்தவர்மன் இளவரசனாக இருந்தபொழுது தன்னை ‘இளம்பேரரசன்’ (யுவ மகாராசன்) என்று கூறுவதால், அவன் தந்தை பேரரசனாகத்தான் இருந்தான் என்பது பெறப்படுகிறது.

பேரரசன் (மகாராசன்) என்னும் பட்டம் சாதாரண சிற்றரசரும் சாதாரண தணி அரசரும் வைத்துக்கொள்ளல் வழக்கமாக இருந்தது. ஆகலின், சிவஸ்கந்தவர்மனின் தந்தை ஒரு சாதாரண அரசனாகவே இருந்தான் என்பது வெளிப்படை. இது, சிவஸ்கந்தவர்மன் பட்டம் பெற்றபின், தன்னை ‘மகா ராசாதிராசன்’ என்று கூறிக்கொள்வதாலும் வலியுறும் சிவஸ்கந்தவர்மன் இங்ஙனம் தன்னைத்தான் பட்டம்பெற்ற 8ஆம் ஆண்டிலே கூறிக்கொள்வதாலும், அவன் இளம் பேரரசனாக இருந்தபொழுதே காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்தததாலும், அவன் தந்தை காஞ்சியிலிருந்து பட்டயம் விடுத்ததற்குச் சான்று இன்மையாலும். சிவஸ்கந்தவர்மன் பேரரசன் செய்யத் தக்க அக்நிஷ்டோமம், வாஜபேயம், அஸ்வமேதம்[2] என்னும் பெரு வேள்விகள் செய்துள்ளமையாலும்-பல்லவப் பேரரசை ஏற்படுத்திய வனும் அதற்குத் தலைநகரமாகக் காஞ்சியைக் கண்டவனும் இச் சிவஸ்கந்தவர்மனே ஆதல் வேண்டு என்று கூறல் தவறாகாது.[3]

வடநாட்டு வென்றி

சாதவாகனர் வீழ்ச்சிக் காலத்தில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) கிருஷ்ணை-குண்டூர்க் கோட்டங்கள் கொண்ட நிலப்பகுதி இக்குவாகர் ஆட்சியில் இருந்தது அப் பகுதிக்குத் தலைநகரம் தான்யகடகம் அல்லது அமராவதி என்னலாம். அவர் மரபில் மூவர் ஆண்டமைக்குப் பட்டயங்கள் உள்ளன. அவர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் மறைந்தனர்; பிறகு பிருகத் பலாயனர் தோன்றினர். அவர்கள் ஆண்ட பகுதிக்குத் தெற்கே சாதவாகனர் மாகாணத் தலைவர்களாக இருந்த பல்லவர், இருதிறத்தாரையும் வென்று ஆந்திர பதத்தைக் கைக்கொண்டனர். இங்ஙனம் செய்த பல்லவ அரசன் சிவஸ்கந்தவர் மகனாகவே இருத்தல் வேண்டும் என்னை? ஆந்திரபதத்தில் உள்ள தன் பிரதிநிதிக்கு ஆணை விடுத்த முதல் அரசன் இவனே ஆதலின் என்க.[4] மேலும் இவன் தன்னை முதலில் இளம்பேரரசன் என்றும், பிறகு மகா இராசாதிராசன் என்றும் கூறிக் கொண்டதாலும், பேரரசன் செய்ய வேண்டிய பெரு வேள்விகள் செய்தமையாலும், இக்குவாகரும் சாதவாகனரும் வெளியிட்ட பட்டயங்களில் உள்ள பிராக்ருத எழுத்துகட்கு இவனது பட்டய எழுத்துகள் சிறிதே பிற்பட்டவை என்பது நன்கு தெரிதலின், இக்குவாகர்க்குப் பின் ஆந்திர பதத்தை ஆண்ட முதற் பல்லவன் - அங்ஙனமே காஞ்சியைக் கைப்பற்றி ஆண்ட முதற் பல்லவன் இவனே ஆவன் எனத் துணிந்து கூறலாம்.

சிவஸ்கந்த வர்மன் காலம்

இவன் விடுத்த பட்டயங்களின் உள்ளுரை பிராக்ருதத்தில் இருப்பினும், பட்டயம் கொடுக்கப்பட்டசெய்தி வடமொழியிலேயே இருத்தலாலும், குஷானரைப் பின்பற்றிக் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர் தம்மை ‘மகா ராசாதிராசர்’ என்று கூறிக் கொண்டவாறே இவனும் தன்னை மகாராசாதி ராசன் என்று கூறிக் கொள்வதாலும், இவனும் இவனுக்குப் பிற்பட்டவரும் கி.பி350இல் சமுத்திர குப்தனை எதிர்த்த விஷ்ணுகோப பல்லவனுக்கு முற்பட்டவர் என்பது அறிஞர் முடியாதலாலும் இன்ன பிற காரணங்களாலும்,-இவன் காலம் கி.மு. 300-325 எனத் துணிதலில் தவறில்லை.[5]

பிறர் கூற்று

(1) மயிதவோலு, ஹிதஹதவல்லி - பட்டயங்கள் காஞ்சியிலிருந்து விடப்பட்டவை. முதல் பட்டயம் இளவரசனான சிவஸ்கந்தவர்மன் விடுத்தது; இரண்டாம் பட்டயம் சிவஸ்கந்தவர்மன் ‘தர்ம மகா ராசாதிராசன்’ ஆன பிறகு விடுத்தது. இந்த மயிதவோலுப் பட்டயமே பல்லவர் பட்டயங்களில் பழைமை வாய்ந்தது; சயவர்மனது (பிருகத்பலாயன அரசன்) கொண்ட முடிப்ப பட்டயங்கள், கெளதமீ புத்திர சதகர்ணி விடுத்த கார்லே-கல்வெட்டு, வசிஷ்டீபுத்திர புலுமாயி விடுத்த நாசிக் கல்வெட்டு ஆகிய இவற்றை ஏறக்குறைய ஒத்துள்ளது. எனவே, சிவஸ்கந்தவர்மன் மேற்சொன்ன அரசர் காலத்திற்கு மிகுந்த பிற்காலத்தில் இருந்திருத்தல் முடியாது. (2) மேலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணு கோபன் ஆண்டதாகச் சமுத்திர குப்தன் கல்வெட்டுக் கூறுகிறது. குப்தனை எதிர்க்கத்தக்க அளவில் வன்மை பெற்ற பல்லவர், அதற்கு முன்னர்ச் சில தலைமுறையேனும் காஞ்சியில் ஆண்டனர் என்று கொள்ளலே ஏற்புடையதாகும். (3) காஞ்சியைப் ‘பல்லவேந்திரபுரி’ என்று கதம்ப-காகுத்தவர்மன் பட்டயம் கூறலாலும், அது மயூரசன்மனது வாக்கு எனக் கொள்ளின், மயூரசன்மன் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று சந்திரவல்லிக் கல்வெட்டுக் கூறலால், பல்லவர் காஞ்சியில் ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழக் கி.பி.250 எனக்கோடல் தவறாகாது. (4) கி.பி. 200 அல்லது 250 உடன் முடிவுற்ற சங்ககால நூல்களிலும் பல்லவர் குறிக்கப்பட்டாமையும், ஒரு சான்றாகும். இன்ன பிற காரணங்களால், பல்லவரது ஆட்சித்தொடக்கம் ஏறக்குறைய கி.பி. 250 எனக்கோடலே பொருத்தமுடையது....... சிவஸ்கந்தவர்மனின் தந்தையே (பெயர் தெரியவில்லை) காஞ்சியைப் பிடித்தாண்ட முதல் அரசனாகக் கூறலாம்.[6]

முடிபு

அறிஞர் கருத்துகள் பலவாக இருத்தலை நோக்க, கீழ் வருமாறு முடிபுகொள்ளல் பொருந்துவதாகும். (1) சிவஸ் கந்தவர்மனே தன் தந்தை ஆந்திர பதத்தை ஆண்டுவந்த போது, தொண்டை நாட்டைக் கைப்பற்றி இருக்கலாம். (2) தான் கஞ்சியிற்றானே தங்கித் தந்தை இறக்குமளவும் இளவரசனாகவே இருந்திருக்கலாம். (தந்தை இருப்ப, மகன் தனி மாகாணத்தை ஆளுதல் பல்லவர் பழக்கம் என்பதைப் பட்டயங்களே காட்டுகின்றன.) (3) தந்தை இறந்த பிறகு பல்லவப் பேரரசுக்குக் காஞ்சியைத் தலைநகரமாக்கிப் பலநாடுகளை வென்று, தர்ம மகா ராசாதிராசனாகி இருக்கலாம். இப் பேரரசன் காலம் ஏறத்தாழக் கி.பி. 250-275 எனக் கொள்ளலாம்.

இக்காலப் பல்லவர்

இவனுக்குப்பின் விசய ஸ்கந்தவர்மன் பல்லவ நாட்டை ஆண்டான். ஆயின், அவனுக்கும் சிவஸ்கந்தவர்மனுக்கும் என்ன உறவு என்பது விளங்கவில்லை. அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனான புத்தவர்மன் மனைவி சாருதேவி என்பவள் விட்ட பட்டயம் காணின், புத்தவர்மன் விசயஸ்கந்தவர்மனின் மகன் எனக் கோடலில் தவறில்லை. எனினும், உறுதியாகக் கூறுதற்கில்லை. புத்தவர்மனுக்கு புத்யங்குரன் என்றொரு மைந்தன் இருந்தான் என்பதும் குண்பதேயப் பட்டயத்தால் தெரிகிறது. இம் மூன்று பட்டயங்களைக் காண்கையில், இம் முதற்காலப் பல்லவர் பெயர்களைக் கீழே வருமாறு முறைப் படுத்தலாம்.

பப்புதேவன்[7]

|

சிவஸ்கந்தவர்மன்

|

விசயஸ்கந்தவர்மன்

|

இளவரசன் புத்தவர்மன்

|

புத்பங்குரன்

* * *

↑ பப்ப அப்பன் என்பது பொருள். எனவே ‘பப்பமகாராசன்” என்பது சிவஸ்கந்தவர்மன் தந்தையாதல் வேண்டும். ஆனால், அவனது இயற்பெயர் இன்னதென்று விளங்கவில்லை. Vide D. Sircar’s Successors of the Satvahanas’ p. 183.

↑ அக்திசுடோமம்:- வசந்தகாலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப் படும் வேள்வி. வரஜபேயம்:- உயர்ந்த அரச நிலையின் பொருட்டுச் செய்யப்படும் வேள்வி. அஸ்வமேதம்:- பேரரசன் என்பதை அரசர் பலரும் ஒப்புக் கொண்டமைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வி.

↑ Vide Hera’s “Studies in Pallava History”, p.11

↑ Dr. K.G.Palacharl’s “Early History of the Andhra country’, pp.157,158.

↑ D. Sircar’s “Successors of the Satavahanas’ pp. 164-166,247–248.

↑ Dr.c. Minakshi’s Administration and Social Life under the pallavas pp.12 & 10.

↑ S.I.I. Vol p506 foot-note by H. Krishna Sastry. இடைக்காலப் பல்லவருள் ஒருவனான ‘வீரகூர்ச்சவர்மனே இந்தப் பப்பதேவன்’ என்பது ஒர் ஆராய்ச்சியாளர் கருத்து.

6. இடைக்காலப் பல்லவர்

(கி.பி. 340-575)

சுற்றுப்புற நாடுகள்

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களைக் கொண்டு அவர் வரலாறு அறிய முற்படு முன், அவர் காலத்தில் இருந்த சுற்றுப்புற நாடுகளைப் பற்றிய தெளிவு இருத்தல் இன்றியமையாதது ஆதலின், முதற்கண் அந்நாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்துகோடல்நலமாகும்.

விஷ்ணுகுண்டர் (கி.பி. 450-700)

கோதாவரிக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர் விஷ்ணுகுண்டர் ஆவர். இவர்கள் வாகாடகருடன் பெண்வழித் தொடர்புடையவராக இருந்தனர். இவர்கள் நிலப்பகுதி பையப் பையச் சாளுக்கியர் கைப்பட்டது.[1]

சாலங்காயனர் (கி.பி. 320-620)

கோதாவரி, கிருஷ்னை யாறுகளுக்கு இடையில் இருந்து ஆண்டவர் சாலங்காயனர் எனப்பட்டனர். இவர்கள் தலை நகரம் வேங்கி என்பது. இவர்கள் நந்தி வழிபாட்டினர் (சாலங்காயன-நந்தி). இம் மரபரசருள் இரண்டாம் மன்னனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திர குப்தனை எதிர்த்த அரசருள் ஒருவன். இந்நாடு கிருஷ்ணைக்குத் தெற்கே பரவியிருந்தது. அந்தப் பகுதி பல்லவர் கைப்பட்டது. மற்றப் பகுதி சாளுக்கியர் கைப்பட்டு அழிவுற்றது.[2]

ஆனந்தர் (கி.பி. 500-600)

இக்குவாகர் ஆட்சியில் இருந்த குண்டூர்-கிஷ்ணைக் கோட்டங்களைச் சேர்ந்த நிலப்பகுதி பல்லவர் கைக்குமாறியது. பின் அப்பகுதி இடைக்காலப் பல்லவர் 5] கி.பி. 350-450 வரை ஆனந்தம் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்னர் அப் பகுதி பல்லவர் ஆட்சிக்கே திரும்பி விட்டது.[3]

இக்காலப் பல்லவர் வடக்கிலும் வடமேற்கிலும் தெற்கிலும் ஓயாத போர்கள் செய்தன்ர் ஆதலின், முற்காலப் பல்லவர் நாடே இவர் காலத்தும் இருந்ததென்னலாம்

சூட்டு நாகர் (கி.மு. 250-350)

இவர் ஆந்திர சாதவாகனர்க்கு உறவினர்; இக்குவாகர்க்குப் பெண் கொடுத்தவர் கி.பி. 220இல் தனியாட்சி உண்டாக்கி ஆண்டவர். இவர் நாடு பம்பாய் மாகாணத்தின் தென்கோடிக் கோட்டங்களும் மைசூரின் வடபகுதியும் கடப்பை-அனந்தப்பூர்க் கோட்டங்களும் கொண்ட நிலப்பரப்பாகும். இது கிழக்கே திருப்பருப்பதத்தை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய கி.பி. 350 இல் சமுத்திர குப்தன் படையெடுத்துச் சென்றபின், வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவன் இவர்தம் பெண்ணை மணந்து குந்தள நாட்டையும் பெற்றான் என்று பொருள்படும் முறையில் பல்லவர் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் வைசயந்தி எனப்படும் வனவாசி ஆகும்.

கதம்பர் (கி.பி. 350-600)

ஏறத்தாழக் கி.பி. 350 இல் மயூரசன்மன் என்னும் வீரமறையவன் திருப்பருப்பதத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றிப் பின் சித்தூர், வடஆர்க்காட்டுக் கோட்டங்களை ஆண்ட பாண அரசரை அடிமைப்படுத்திப் பல்லவர் நாட்டு எல்லைப் புறத்தில் குழப்பம் உண்டாக்கிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அரசனாக இருந்த பல்லவன் மயூரசன்மனுடன் சந்து செய்து கொண்டு, அவனைத் தன் படைத் தலைவனாகவும் சிற்றரசனாகவும் ஏற்றுக் கொண்டான்; பின் மயூரசன்மன் நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனி அரசன் ஆனான். இவன் தன் நாட்டைப் பல வழிகளிலும் விரிவாக்கினான். இவன் மரபினர் கீழ்க்கண்டவராவர்.

மயூரசன்மன் (கி.பி. 350-375)

கங்க வர்மன் (கி.பி. 375-400)

பகீரதன் (கி.பி. 400-425)

இரகு காகுத்த வர்மன் (கி.பி. 425-450)

சாந்தி வர்மன் (கி.பி. 450-475)

மிருகேச வர்மன்(கி.பி. 475-500)

(கி.பி.500-525) இரவிவர்மன் சிவரதன் பானுவர்மன்

அரிவர்மன்.86 (கி. பி. 535-570)

அரிவர்மன்[4] (கி.பி. 535-570)

இக்கதம்பருள் உட்பிரிவுகள் சில உண்டு. மேற்பட்டியலிற் கண்ட காகுத்த வர்மனுக்கு மகனும் சாந்தி வர்மனுக்கு இளவலுமான கிருஷ்ணவர்மன் என்பவன் வழியினர் ஒரு பிரிவினர் ஆவர். இக் கிருஷ்ணவர்மன் பல்லவரோடு நடத்திய போரில் இறந்துவிட்டான். இவன் மகனான விஷ்ணுவர்மன் தன் பெரியப்பனான சாந்திவர்மன் அரசாட்சியில் தன்னைத் தர்ம மகாராசன் என்று ஒரு கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். எனவே, கிருஷ்ண வர்மன் மரபினர் குந்தள நாட்டின் ஒரு பகுதியைத் தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்தவராவர். காகுத்தவர்மன் மூன்று நாடுகட்கு அரசன் என்று தன்னைக் கூறிக் கொள்வதால் அவன் காலத்திலேயே குந்தள நாடு மூவகைக் கதம்பர் ஆட்சியில் இருந்ததென்பதை அறியலாம்.[5] ஆயினும் பிற்காலத்தில் இம் மரபினருக்குள் போர் மூண்டது. ‘இரவீவர்மன், கிருஷ்ணவர்மன் மரபைச்சேர்ந்த விஷ்ணுவர்மனைக் கொன்று, பல்லவனை முறியடித்தான்; பலாசிகாவைத் தனதாக்கிக் கொண்டான்’ என்று வரும் பட்டயச் செய்தியால் கிருஷ்ண வர்மன் மரபினர் பலாசிகாவைக் (இப்போதைய ஹல்சி) கோ நகரமாகக் கொண்டு குந்தள நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தவர் என்பது விளங்கும். மகாராசன் குமாரவர்மன், அவன் மகன் மாந்தாத்ரி வர்மன், மாது வர்மன், தாமோதர வர்மன் முதலிய கதம்பர் மரபு ஒன்றும் குந்தள நாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. இவருள் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாந்தி வர்மன் மரபினர்க்கும் இடைக்காலப் பல்லவர்க்குமே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. கதம்பர் மரபினருக்குள் போர்களும் கலகங்களும் நடந்தபோதும்,[6] கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்கரை வெல்ல முயன்றபோதும், இவ் விருதிறத்தாரும் பல்லவர் உதவியை நாடினர். அப்பொழுது பல்லவர் தலையிட்டனர்.[7] மேலும், கதம்பப் பேரரசைத் தமது நாட்டிற்கு மேற்கே வளர விடுதல் பல்லவர் நன்மைக்கு ஏற்றதன்று. ஆதலின், பல்லவர் அடிக்கடி கதம்பருடன் இந்த இடைக்காலத்தில் தொடர்ந்து போரிட வேண்டியவர் ஆயினர்.

கதம்பர் சிங்க இலச்சினை, குரங்குக் கொடி, ‘பெர்மத்தி’ என்னும் வாச்சியம் முதலியவற்றை உடையவர். அவர் அனைவரும் தம்மைத் ‘தர்ம மகாராசாதிராசர்’ என்றே கூறிக்கொண்டனர். அவர் குல தெய்வம் வனவாசியில் உள்ள ‘மதுகேசா’ ஆவர். கதம்ப அரசர் பெரும்பாலும் சமணர்க்கே மிகுதியாகத் தானம் அளித்துள்ளனர்.[8]

கங்கர்

காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டவர் கங்கர் என்பவர். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்கள் சேர நாட்டிற்கு வடக்கே இருந்தனர். பல்லவர் பேரரசின் போது அதற்கு அடங்கி இருந்தனர்; கதம்பர் படை யெடுத்த போதெல்லாம் பல்லவர் துணையைப் பெற்று வாழ்ந்தனர். இவர்களில் முதல்வனான மாதவன் காலம் கி.பி. 350 என்னலாம்.[9]

கங்க அரசர் நாக மரபினர்; நாகமரபைச் சேர்ந்த பெண்களை மணந்தனர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றவர்.[10]

தமிழகத்தரசர்

இந்த இடைக்காலத்தில் பல்லவ நாட்டிற்குத் தெற்கே வன்மை மிகுந்து இருந்தவர் களப்பிரர் ஆவர். அம் மரபினரே சோணாட்டின் பெரும் பகுதியையும் பாண்டிய நாட்டையும் ஏறக்குறையக் கி.பி. 250-550 வரை ஆண்டு வந்தனர். இக் காலத்தில் சோழரும் பாண்டியரும் சிற்றரசராக இருந்து காலம் கழித்தனர்; எனினும், பல்லவரை எதிர்த்த பொழுதெல்லாம் களப்பிரரோடு சேர்ந்தே போரிட்டனர். எனவே, இத் தமிழ் வேந்தர்கள் இடைக்காலப் பல்லவர்க்கு ஓயாத துன்பத்தை விளைத்தே வந்தனர். இவரைப் பற்றிய விரிவு முன்னரே தரப்பட்டுள்ள தன்றோ?

அகச்சான்றுகள்

இடைக்காலப் பல்லவரைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவன வடமொழியில் வரையப்பட்ட செப்பேடுகளும் இரண்டொரு கல்வெட்டுகளுமே ஆகும். வடமொழி வளர்ச்சியில் நுண்ணறிவுடையார் இவற்றை ஆராய்ந்து இவற்றின் காலம் ஏறக்குறைய கி.பி. 340-575 எனக் கூறியுள்ளனர். செப்பேடுகள் பல இடங்களிலிருந்து பல்லவ அரசர்களால் விடப்பட்டுள்ளன. அவற்றில் பல முதற்காலப் பல்லவரைப் போலக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. அவையாவும் தெலுங்க நாட்டில் உள்ள ‘தாம்ராப, பலககட, மேன்மாதுர, தசனபுரம், பிகீரா, ஒங்கோடு, தர்சி. இராய கோட்டம், சந்தலூர், உதயேந்திரம் உருவப்பள்ளி,’ என்னும் இடங்களிலிருந்து வெளியிடப்பட்டவை ஆகும். கல்வெட்டுகள் வாயலூர், அமராவதி என்னும் இடங்களிலிருந்து வெளியிடப் பட்டவை ஆகும். இப்பட்டயங்களும் கல்வெட்டுகளும் பிராக்ருதப் பட்டயங்களைப் போலவே அரசன் பட்டமேற்ற ஆண்டையே குறிக்கின்றன. ஆயின் பல்லவ அரசர் பலர் பெயர்களைக் குறிக்கும் இப் பட்டயங்கள் அவர்கள் முறையைக் கூறுவதில்லை. இதனால், அரசர் முறை வைப்பு உள்ளவாறு அறிதல் கூடவில்லை. இன்ன அரசன் இன்ன காலத்தவன் என்றும் உறுதியாக உரைக்க இயலவில்லை.

புறச்சான்றுகள்

(1) கங்கர் கல்வெட்டு ஆயின், இஃதே இடைக்காலத்தில் பல்லவ நாட்டை அடுத்த வேற்று நாட்டரசர் பட்டயங்கள் சிலவற்றால், இவ்விடைக்காலப் பல்லவர் சிலர் ஆண்ட காலங்களைச் சற்றேறக்குறைய ஒருவாறு அறிய முடிகின்றது. மேலைக்கங்க அரசனான இரண்டாம் மாதவன் வெளியிட்ட பெனுகொண்டா-பட்டயங்களில் ‘கங்க அரசனான தன் தந்தை அரிவர்மனையும் தன்னையும் கங்க நாட்டுப் பட்டயத்தில் ஏற்றிய பெருமை முறையே பல்லவ அரசரான சிம்மவர்மன் கந்தவர்மன் என்பவரையே சாரும்’ என்று குறித்துள்ளான். இதனால் மேற் கூறப்பட்ட கங்க அரசர் காலத்தவர் சிம்மவர்மன், கந்தவர்மன், என்னும் பல்லவ அரசர் என்பது எளிதிற் புலனாகின்றது. இக் கங்கர் பட்டயங்களை நன்கு சோதித்த டாக்டர் ப்ளிட் (Fleet) என்பார், ‘பல்லவர் தயவால் பட்டம் பெற்ற கங்க அரசர் காலம் ஏறக்குறையக் கி.பி. 475 என்னலாம்’ என்று முடிவு கூறியுள்ளார்.[11]

(2) லோகவிபாகம், (3) அவந்தி சுந்தரி சுதா. இவற்றைப் பற்றி இரண்டாம் பிரிவிற் கூறப்பட்டுள்ளது, ஆண்டுக் காண்க.

(4) அல்லகாபாத் கல்வெட்டு: வட இந்தியாவில் பெரும் புகழுடன் வாழ்ந்த சமுத்திர குப்தன் என்னும் பேரரசன் ஏறக் குறையக் கி.பி. 350இல் டெக்கானை நோக்கிப் படையெடுத்து வந்தான். அவனைக் கிருஷ்ணை, கோதாவரி என்னும் யாறுகளைச் சார்ந்த நாடுகளில் இருந்த அரசர் பலர் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். அவன் அவர்களை வென்று முடிவில் காஞ்சி அரசனாக இருந்த விஷ்ணுகோபன் என்பவனையும் வென்றதாக அவனது (அல்லகாபாத்தில் உள்ள) கல்வெட்டுக் கூறுகின்றது.

இதுகாறும் கண்ட வெளி அரசர் பட்டயங்களாலும் வடமொழி நூல்களாலும் கீழ்வரும் செய்திகளை ஒருவாறு அறியலாம்:

(1) விஷ்ணு கோபன் காலம் ஏறக்குறையக் கி.பி. 350

(2) சிம்மவர்மனும் கந்தவர்மனும் கங்கரை அரசராக்கிய காலம், கி.பி 436-475

(3) பிற்காலப் பல்லவருள் முதல்வனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. (575-615)

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களை நன்கு ஆராய்ந்த அறிஞர் கீழ்வருமாறு அரசமுறை வகுத்துளர்.

குமார விஷ்ணு I

கந்தவர்மன் I

வீரகூர்ச்சவர்மன்

கந்தவர்மன் II

(இவன் பிள்ளைகள் மூவர்)

சிம்மவர்மன் இளவரசன்

விஷ்ணுகோபன் குமாரவிஷ்ணு III

கந்தவர்மன் II

நந்திவர்மன் சிம்மவர்மன் II

விஷ்ணுகோபவர்மன் புத்தவர்மன்

குமாரவிஷ்ணு III

சிம்மவிஷ்ணு

(1) களடர்த்திரி என்பவனைக் ‘குடும்பத் தலைமணி’ என்றும், ‘இலக்குமி கணவன்’ என்றும் பட்டயங்கள் குறித்தலால், கிருஷ்ண சாஸ்திரியார் கருத்துப்படி இவனுக்குக் ‘குமாரவிஷ்ணு’ என்னும் பெயர் இருந்தது என்று கோடலில் தவறில்லை. மேலும் இவனே சமுத்திரகுப்தனை எதிர்த்த விஷ்ணுகோபனாக இருக்கலாம்; ‘இருத்தல் இயலாது’ என்று மறுக்கக் காரணம் ஒன்றும் இல்லை. முற்காலப் பல்லவருள் கடைசி அரசன் புத்தியங்குரன். இடைக்காலப் பல்லவருள் தலைமணி போன்றவன் களபர்த்திரி அல்லது குமார விஷ்ணு. இவ்விருவருக்கும் இடையில் வேறு அரசர் ஆள இடமில்லை.[12] இந்தக் குமார விஷ்ணுவின் ஆட்சிக்காலமும் சமுத்திர குப்தன் படையெடுப்பின் காலமும் ஒத்திருத்தலின், குமார விஷ்ணுவும் அல்லகாபாத் கல்வெட்டில் குறிக்கப்பட்ட விஷ்ணுகோபனும் ஒருவனே எனத் துணியலாம். எனவே, முதலாம் குமாரவிஷ்ணு (விஷ்ணுகோபன்) சமுத்திரகுப்தன்காலத்தில் காஞ்சி யரசனாக இருந்தான் என்பது தெளிவு. ஆகவே, அவனது காலம் ஏறக்குறையக் கி.பி. 340-350 எனக் கூறலாம்.

(2) லோகவிபாக நூலின் கணக்குப்படி சிம்மவர்மன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436 ஆகின்றது. அவனையும் (அவன் மகனான) கந்தவர்மன் என்னும் மற்றொரு பல்லவனையும் அரிவர்மனும் இரண்டாம் மாதவனும் பட்டமேறஉதவி புரிந்தவர் எனக் கி.பி. 475இல் போந்த இரண்டாம் மாதவனது பட்டயம் கூறலால், அங்ஙனம் அவர்களைப் பட்டத்தில் ஏற்றியவர் நமது பல்லவர் பட்டியலில் உள்ளபடி முதலாம் சிம்மவர்மனும் அவன் மகனான மூன்றாம் கந்தவர்மனுமே ஆவர். எனவே, கங்கர் பட்டயம் கண்ட அரசனும் அரிவர்மனும் சிம்மவர்மன் பட்டம் பெற்ற கி.பி. 435 முதல் பட்டயத் தோற்றம் வரை (கி.பி. 475 வரை) ஆண்டிருக்கலாம். அஃதாவது, சிம்மவர்மன், அவன் மகன் கந்தவர்மன் ஆகிய இருவரும் கி.பி. 436 முதல் 475 வரை ஆட்சிபுரிந்திருக்கலாம் எனக்கோடலில் தவறில்லை.[13]

கங்கர் வரலாற்றை ஒருவாறு ஆராய்ச்சி செய்த ஆசிரியர் ஒருவர் கங்கர் பட்டயங்களைச் சோதித்து, (1) அரிவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 436-460 என்றும், (2) இரண்டாம் மாதவன் காலம் கி.பி. 460-500 என்றும் குறித்துள்ளார்.[14] இதுபொருந்துவதாயின், பல்லவ வேந்தருள் (1) முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-460 எனவும், (2) மூன்றாம் கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 460-475 எனவும் கொள்ளலாம்.

(3) சிம்மவர்மன் பட்டம் பெற்றது கி.பி. 436 எனின், அவன் தந்தையான கந்தவர்மன் 2 ஆட்சி அதே ஆண்டில் முடிவுற்றதாகும். அவனது 33ஆம் ஆட்சி ஆண்டுப் பட்டயம் இருத்தலை நோக்க[15] அவன் ஏறக்குறைய 36 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். அங்ஙனமாயின், அவனது ஆட்சிக்காலம் கி.பி.400-435 என்றாகிறது.

(4) முதலாம் குமார விஷ்ணுவின் காலம் ஏறக்குறையக் கி.பி. 341-350 எனக் கொண்டதாலும், இரண்டாம் கந்தவர்மன் காலம் கி.பி. 400-436 எனக் கொண்டதாலும், இவ்விருவர்க்கும் இடைப்பட்ட முதலாம் கந்தவர்மன், வீரவர்மன் என்பவர் ஆட்சிக்காலம் 50 ஆண்டுகள் ஆகின்றது. எனவே, வரலாற்றாசிரியர் மதிப்பிடும் 25 வருட ஆட்சி ஒவ்வொருவர்க்கும் கணக்காகிறது. அஃதாவது, முதலாம் கந்தவர்மன் காலம் கி.பி. 350-375 வீரவர்மன் காலம் கி.பி. 375-400

(5) “விஷ்ணுகோபன் ஈறாக அரசர் பலர் காலமான பின்னர்ப் பல்லவர் குடும்பத்தில் நந்திவர்மன் பிறந்தான். அவன் சிவனருளால் நாக அரசனை அடக்கினான்,’ என்று வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் கூறலால், விஷ்ணுகோபன் உள்ளிட்ட அரசர் பலருக்குப் பிற்பட்டவன் நந்திவர்மன் 1 என்பது மட்டுமே தெரிகிறது; காலம் உறுதியாகக் கூறக்கூடவில்லை. நமது பட்டியலில் விஷ்ணுகோபன் மகன் மூன்றாம் சிம்மவர்மன் குறிக்கப்பட்டுள்ளான். அவன் மகனே பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு என்பவன். இவன் காலம் கி.பி. 575-615 என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, நந்திவர்மனும் அவனுக்குப் பிற்பட்ட மூன்றாம் சிம்மவர்மனும் ஏறக்குறையக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்டவர் (கி.பி. 525-575) ஆவர். ஏனையோர் அனைவரும் ஏறத்தாழக் கி.பி. 475க்கும் 525க்கும் இடைப்பட்டவர் ஆகலாம்.

பல்லவர் வரலாற்றில் துன்பம் தரத்தக்க பகுதி இஃதொன்றே ஆகும். இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர்-அவரவர் வழிவந்தவர் பலர்-இவருள் இவருக்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்-அக்காலம் இன்னது என வரையறுத்துக் கூற இயலவில்லை. இதனாற்றான், ஆராய்ச்சியாளர் பல குழப்பமான முடிவுகளை வெளியிட்டுத் தம்மைக் குழப்பிக் கொண்டதோடு படிப்பவரையும் குழம்பி விட்டனர். பல்லவர் பட்டியலை வகுத்தவர் பலர். அவற்றிற்குக் காரணங் கூறியவர் பலர். அவற்றுள் ஒன்றேனும் முற்றத் தெளிவு தாராமையின், ஈண்டு இடம் பெற்றிலது. அவர்கள் ஒருமுறை பற்றி அரசர் முறைவைப்பே முயன்று முடிக்கின்றனர்; பின்னர்ச் சில உண்மைகளைத் தக்க காரணம் கூறி வற்புறுத்த முயல்கையில் அம் முறைவைப்புத்தவறாகின்றது. அத்தவற்றை மறைக்கப்பட்டயத்தில் இந்தத் தொடர் முன்னதாக இருக்க வேண்டும், இவன் அவன் பாட்டனாக இருக்க வேண்டும்..... இவன் 40 ஆண்டுகட்கு மேலும் அரசாண்டிருக்கலாம் அன்றோ? என்றெல்லாம் கூறி இடர்ப்படுகின்றனர். இவ்வளவு குழப்பத்திற்கும் இவ்விடைக்காலப் பல்லவர் பரம்பரை இடம் தருகின்றது.

இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர் பரம்பரையினரும் ஒரே பட்டத்தை அடுத்தடுத்துப் பெற முடியுமா? அங்ஙனம் பெற்றனரா? என்பது தெளிவாகவில்லை. ஆயின், ‘விஷ்ணு கோபனுக்குப் பின் அவன் மகன் பட்டம் பெறாமல் நந்திவர்மன் பட்டம் பெற்றான் என்பதால் பரம்பரை மாறி பங்காளிகள் மாறிமாறித் தேவைக் கேற்றபடி அரசு கட்டில் ஏறினர் எனக்கோடலே பொருந்துவதாகும். நந்தி வர்மனுக்குப் பிறகு சிம்ம விஷ்ணுவின் (கி.பி. 575-615) தந்தையான மூன்றாம் சிம்ம வர்மன் பட்டம் பெற்றான் என்பது தெரிகிறது.

(6) இளவரசன் - விஷ்ணுகோப வர்மன் பல்லவர் மாகாணம் ஒன்றைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டிருக்கலாம். அதன் தலைநகரம் பலக்கடவாக இருக்கலாம். அதிலிருந்து தான் உருவப்பள்ளி - பட்டயம் வெளியிடப்பட்டது.[16]

இதுகாறும் கூறி வந்த காலவரையை (நாம் பார்த்த அளவு) அரசர் பெயருடன் இங்குக் குறித்து மேற்சொல்வோம்:

குமார விஷ்ணு I (கி. பி. 340-350)

கந்த வர்மன் I (கி. பி. 350-375)

வீரகூர்ச்ச வர்மன் கி. பி. 375-400)

கந்தர் வர்மன் I (கி.பி. 400-436)

(இவன் மக்கள் மூவர்)

சிம்ம வர்மன் I

(கி.பி. 436-450) இளவரசன் விஷ்ணுகோபன் குமார விஷ்ணு II

கந்த வர்மன் III

(கி.பி. 450-475) சிம்ம வர்மன் II புத்த வர்மன்

நந்தி வர்மன் I

(கி.பி. 525-530) விஷ்ணுகோபன் குமார விஷ்ணு III

சிம்மவர்மன் III

(கி.பி. 550-575)

சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)

குழப்பமான காலம்

இத்தகைய குழப்பங்கட்கெல்லாம் என்ன காரணம்? “இந்தக்காலம் பல்லவர் வரலாற்றில் குழப்பமான காலமாகும். பல்லவர் வடக்கிலும் தெற்கிலும் போரிட வேண்டியவர் ஆயினர். உள் நாட்டிலும் குழப்பம் இருந்திருத்தல் வேண்டும். இந்தக் காலத்திலேதான் கதம்பர் ஆட்சி தோன்றியது. கங்கர் ஒருபுறம் தலையெடுக்கலாயினர். தமிழகத்தில் நிலையாக இருந்த முடியுடைச் சோழ பாண்டியரை விரட்டி நாட்டைக் கைப்பற்றிக் பல்லவரையும் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்த களப்பிரர் குழப்பத்தால் இடைக்காலப் பல்லவர் தென்பகுதியில் அல்லலுற்றனர். மேலும், சமுத்திர குப்தன் படையெடுப்பால் பல்லவர் நாடும் அரசும் குழப்பமுற்றன.[17] அந்த இழிநிலையில் கதம்பர் பல்லவரைத்தாக்கிப்போர் விளைக்கலாயினர்.[18]

பலவகைப் போர்கள்

இந்தக் குழப்பமான இடைக்காலத்தில் (கி.பி. 340-575) நடந்த போர்கள் பல போரிட்ட அரசுகள் பல. இவை ஏறத்தாழக் காலமுறைப் படுத்தி விளகமாக இங்கு (முதன் முறையாக)த் தரப்படுகின்றன.

சமுத்திர குப்தன் படையெடுப்புக்கு ஆளானவருள், காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன். அவன் குப்தனிடம் போரிட்டுத் தோற்றான் என்பதில் ஐயமில்லை. அந்த அமயத்திற்றான் பல்லவனுடன் போரிட்டு மயூரசன்மன் குந்தன அரசை ஏற்படுத்தினான்.[19]

வரகாடகர் போர்

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) வெளியிட்ட வேலூர் பாளையப் பட்டயத்தில், கந்த சிஷ்யன் இருபிறப்பாளர் தம் கடிகாவை (கல்லூரியைச்) சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான்’ என்னும் செய்தி காணப்படுகிறது. அதே பட்டயத்தில் மேற்சொன்னதை அடுத்தே, ‘அவனுக்குப்பின் வந்த குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத்தில் பல்லவரோடு மாறுபட்ட சுற்றுப்புற அரசருள் ‘சத்தியசேனன்’ என்ற பெயருடன் எவனும் இருந்ததில்லை. இதைச் சொன்ன வேலூர் பாளையப் பட்டயமே பின்னர்ச் சோழர் படைகளைப் பெயரிட்டுக் குறிக்கிறது அங்ஙனம் சோழரை அறிந்திருந்த பிற்காலப் பல்லவர் (பட்டயம் வெளியிட்டவர்) சத்தியசேனன் இன்னவன் எனக் கூறாததையும், குமாரவிஷ்ணு காஞ்சியை இன்னவர் கையிலிருந்து மீட்டான். என்பதைத் தெளிவாகக் கூறாமையையும் நோக்க, இச் சத்தியசேனன் என்பவன் ‘முற்றும் புதியவன்-வெளிநாட்டான்’ எனக் கோடலில் தவறில்லை. அங்ஙனமாயின், இவன் யாவன்?

வரகாடகர் படையெடுப்பு(?)

சமுத்திரகுப்தன் படையெடுப்பால் வலியிழந்த ஆந்திர நாட்டு அரசரை வென்று, வாகாடர் என்ற அரசு மரபினர் ஆந்திரப் பெருநாட்டின் வடபகுதியைக் கவர்ந்தனர். அவருள் ஒருவனான முதலாம் பிருதிவிசேனன் (கி.பி. 350-390) என்பவன் தெற்கு நோக்கிப் படையெடுத்தான் கதம்ப அரசனை (கங்கவர்மனை)ப் போரில் முறியடித்தான்.[20] இப் படையெடுப்பு ஏறத்தாழக் கி.பி. 350-360 இல் நடந்திருக்கலாம்.[21] இந்தப் பிருதிவிசேனனே கதம்பரை வென்ற பிறகு, அணித்திருந்த பல்லவரையும் தாக்கிக் காஞ்சியைக் கைப்பற்றி இருக்கலாம்; தன் இளவரசன் அல்லது தானைத்தலைவனான ‘சத்தியசேனன்’ என்பவனைக் காஞ்சிக்கு அரசனாக்கி மீண்டிருக்கலாம்; காஞ்சியும் அதற்கு வடபாற்பட்ட நிலப்பகுதியும் சிறிது காலம் சத்தியசேனன் ஆட்சியில் இருந்திருக்கலாம். அக்காலத்தில் நமது பழைய ஆந்திர பதத்திற்கு ஓடிவிட்ட பல்லவர் வழிவந்த கந்தவர்மன் தக்க படையுடன் வந்து, முதலில் இருபிறப்பாளர் கடிகையை (கல்லூரியை)க்கைப்பற்றி இருக்கலாம்.

‘கடிகா’ என்பது காஞ்சி அன்று

‘கடிகா’ என்பது கல்லூரியையும் அஃது ஊரையுமே குறிக்கும். அது, (காஞ்சியில் கல்லூரி இருப்பினும்) காஞ்சியைக் குறிக்காது. காஞ்சி ‘பல்லவனாம்புரி’ என்று தெளிவாகக் கதம்பரது தாள குண்டாக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ‘மயூரசர்மன் பல்லவனாமபுரீ (காஞ்சி) அடைந்து கடிகாவில் சேர்ந்தனன்’ என்று தெளிவுற அதே கல்வெட்டுக் குறித்துள்ளது. ஆதலின், ‘கடிகா’ என்று வேலூர் பாளையக் கல்வெட்டில் காணப்படுவதும், இரண்டாம் கந்தவர்மனால் கைப்பற்றப் பட்டதும் காஞ்சி அன்று; மேலும், அவனுக்குப் பின்வந்த அவன் மகனான ‘குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ எனவரும் கல்வெட்டுத் தொடரும் இம்முடிபிற்கு அரண் செய்தல் காண்க.

‘கடிகா’ என்பது யாது?

வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ எனத் தனித்து வந்திருத் தலால், இது வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் பாணபுரத்திற்கு ஏழு கல் தொலைவில் உள்ள கடிகசாலம் எனப்படும் சோழசிங்கபுரமே ஆகும். இதனைக் ‘கடிகை’ என்றே திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். வடமொழிச் சொல்லான ‘சீதா’ என்பது தமிழில் ‘சீதை’ என வருதல் போலக் ‘கடிகா’ என்னும் வடசொல் தமிழில் ‘கடிகை’ எனப்பட்டது. வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள திருவல்லம் கல்வெட்டு ஒன்று (இரண்டாம் நந்திவர்மன் காலத்தது) இந்த இடத்தில் (கடிகாசலத்தில்) இருந்த கடிகையையே குறித்தலைக் காணலாம். இங்குச் சிறந்த பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு வைணவர்கென்று ஒரு கல்லூரி (கடிகா) இருந்திருத்தல் இயல்பே. இக் கடிகாவை இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்தான் என்பது தெரிகிறது.[22] இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ‘கடிகா’ என்றது கடிகாசலத்தைக் குறித்ததெனின், இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் காலத்து வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ என்ற சொல் கடிகாசலத்தையே குறித்ததாதல் வேண்டுமென்றோ?

முடிவு

கி.மு. 350 முதல் 400க்குள் உண்டான இச் செயல்கள் (இரண்டாம் கந்தவர்மன் கடிகாவைக் கைப்பற்றியதும் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பறியதும்) கதம்பர் கல்வெட்டு களிற் காணப்படா மையாலும், வேறு எந்தக் கல்வெட்டுகளிலும் நூல்களிலும் காணப் படாமையாலும், இக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் வாகாடரை விரட்டநடந்தனவாகக் கோடலே பொருத்தமாகும்.

வாகாடகர்பால் நாட்டை இழந்த பல்லவன் (வீரகூர்ச்சவர்மன்?) சூட்டு நாகருடன் உறவு கொண்டான். ‘பெண்ணையும் அரச நிலையையும் அடைந்தான் அவனால் வளர்க்கப்பெற்ற இரண்டாம் கந்தவர்மன் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விழைந்தான்; கடிகாசலம் வரை இருந்த தொண்டைநாட்டுப் பகுதியையே கைப்பற்ற முடிந்தது. அவற்றிற்குப்பின் அவன் மக்கள் மூவருள் ஒருவானன குமாரவிஷ்ணு மேலும் முயன்று காஞ்சியைக் கைப்பற்றி வெற்றிகொண்டான். இங்ஙனம் காஞ்சியில் மீட்டும் பல்லவர் அரசு நிலைபெற்ற பின்னரே, இக் குமார விஷ்ணு மகனான புத்தவர்மன் சோழரையும் வென்றான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது.

வேலூர் பாளையப் பட்டயம் சோழர் என்றும் கதம்பர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, சத்தியசேனன் இன்னவன் என்று குறியாது விடுத்தமையும், குமாரவிஷ்ணு இன்னவரிடமிருந்து காஞ்சியை மீட்டான் என்பதைக் குறியாமையும் நோக்கிச் சிந்திப்பார்க்கு, நாம் மேலே விளக்கிக் கூறிய அனைத்தும் பொருத்தமாகக் காணப்படும்.[23]

திருக்கழுக்குன்றம்-கல்வெட்டு

‘கந்தசிஷ்யன் என்ற இரண்டாம் கந்தவர்மன் திருக்கழுக் குன்றத்துச்சிவன் கோவிலுக்கு நிபந்தம் விட்டிருந்தான்; அது மீட்டும் முதல் நரசிம்மவர்மன்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்று இராசராச சோழன் கல்வெட்டுக் குறித்தலால்,[24] திருக்கழுக்குன்றம் முதல் கடிகாசலம் வரை இருந்த நிலப்பகுதி இவன் கையில் இருந்தது என்பதை அறியலாம். இவன் இங்ஙனம் காஞ்சிக்கு அண்மை (ஏறத்தாழ 56 கி.மீ தொலைவு) வரையுள்ள நாட்டைப் பிடித்தமை யாற்றான், குமார விஷ்ணு எளிதிற் காஞ்சியைக் கைப்பற்ற முடிந்தது போலும்!

இதுகாறும் கூறியவை பொருந்துமாயின், பல்லவர் காஞ்சியை மீட்க வாகாடகருடன் இருமுறை போர் செய்தனர் என்பது கோடல் தகும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டினான நரசிம்மவர்மன் மேலைச் சாளுக்கியரை வென்று, அவர்தம் தலைநகரை அழித்துப் பதின்மூன்று ஆண்டுகள் வசப்படுத்தி இருந்தான்[25] என்பதை நோக்க-அவனுக்குப் பின் வந்தவருள் ஒருவனான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், சாளுக்கிய-இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்தான்[26] என்பதை நோக்க-இரண்டாம் கந்தவர்மனுக்கு முன்னும் இரண்டாம் குமார விஷ்ணுவுக்கு முன்னும் (சில ஆண்டுகளேனும்) காஞ்சிமாநகரம் பல்லவர் வசமின்றிப் பகைவர் ஆட்சியில் இருந்திருநத்தல் வேண்டும் என்பது நன்கு தெளிவாதல் கூடும்.

“ஏறக்குறைய கி.பி. 350 இல் வடக்கே சமுத்திரகுப்தன் படையெடுப்பால் அல்லது கதம்பர் துன்பத்தால் காஞ்சியைச் சுற்றியுள்ள தம் நாட்டைவிட்டுப் பல்லவர் ஆந்திர நாட்டிற்கு விரட்டப்பட்டருக்கலாம். குமார விஷ்ணு என்னும் பல்லவ அரசன் (காஞ்சியை மீட்டவன்) வரை ஒன்பதின்மர் ‘பல்லவப் பேரரசர்’ என்றும் அறப் பேரரசர் என்றும் கூறப்பட்டுள்ளார்.” என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞரான கிருஷ்ன சாத்திரியார் கூறுதல் காண்க.[27]

சாதவாகனப் பேரரசின் தென்மேற்குப் பகுதியை ஆண்டிருந்த ‘சூட்டு நாகர் மகளை முதலாம் கந்தர்வர்மன் மகனான வீரவர்மன் மணந்தான் அம்மணவன்மையால் நாட்டைப் பெற்றான்’[28] என்று பல்லவர் பட்டயம் ஒன்று கூறலாலும், அவன் மகனான இரண்டாம் கந்தர்வர் மனது ஓங்கோட்டுப் பட்டயம், ‘வீரவர்மன் பல போர்களில் வெற்றி கண்டான்’ என்று கூறலாலும், அக் காலத்தில் (கி.பி. 375-400) காஞ்சியும் அதனைச் சார்ந்த நாடும் வாகாடகர் மேற்பார்வையில் இருந்ததாலும் (?) சூட்டுநாகர் துணையைக் கொண்டு வாகாடகரை எதிர்த்து ஓரளவு நிலப்பகுதியைக் கைக்கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. இந்த வீரர்கள் சூட்டுநாகர் மகளை மணந்ததால் அவர் தம் நாட்டைப் (அவர்க்கு ஆண் மகவு இன்மையால்) பெற்றான் எனக் கோடலிலும் தவறில்லை. ஏனெனின், ஏறத்தாழக் கி.பி.350இல் கதம்ப அரசை வனவாசியில் தோற்றுவித்த மயூரசன்மன் பல்லவரிடமிருந்தே சூட்டுநாகர் ஆண்ட நாட்டைப் பெற்றான் என்று கதம்பர் பட்டயம் கூறுதலால் என்க. சிவஸ்கந்தர்வர்மன் (கி.பி. 300-325) வெளியிட்ட மயிதவோலு, ஹிரஹதகல்லிப் பட்டயமொழிக்கும் கதம்பர் முதலில் வெளியிட்ட மாலவல்லிப் பட்டய மொழிக்கும் சிறிதளவே வேறுபாடு. கதம்பரது பட்டயம் பிற்காலத்தது என்பது, உணரக்கிடத் தலால், சிவஸ்கந்தர்வர்மனுக்குப் பிறகு அண்மையிலேயே கதம்பர் அரசு தோன்றியிருத்தல் வேண்டும். வீரவர்மனுக்குப் பின்வந்த இரண்டாம் கந்தவர்மன் வாகாடரிடமிருந்து முன்சொன்ன கடிகாசலமும் அதனைச்சுற்றி இருந்த நிலப்பகுதியையும் கைப் பற்றினான் என்பது பொருத்தமாகக் காணப்படுகிறது.[29]

பல்லவர் - கதம்பர் போர்கள்

(1) ஏறக்குறையக் கி.பி. 350 இல் மயூர சர்மன் பல்லவரைத் துன்புறுத்திச் சமாதானத்திற்கு வரச்செய்து, அவரிடம் குந்தளநாட்டை மேற்பார்க்கும் உரிமை பெற்றான். அவனுக்குப்பின் வந்த கங்க வர்மன், பாகீரத வர்மன், காகுத்த வர்மன் ஆகிய இவர்கட்கு அரசர்க்குரிய பட்டயங்கள் இல்லா திருத்தலை நோக்க - இவர்க்குப் பின் வந்த சாந்தி வர்மன், மிருகேச வர்மன் முதலியோர்க்குத் தரும மகாராசர் முதலிய பட்டங்கள் இருத்தலைக் காண, முன் சொல்லப்பட்டவர் பல்லவர்க்கு அடங்கிய சாமந்தராக இருந்து குந்தள நாட்டைப் பாதுகாத்து வந்தனர் எனக் கொள்ளலாம்.[30] அஃதாவது காகுத்தவர்மன் (கி.பி.425-450) கால முதல் கதம்பர் தம் மாட்சி ஏற்படுத்த முயன்று பல்லவரோடு போரிட்டிருத்தல் வேண்டும்; அத்துடன் கதம்பர் தெற்கே இருந்த கங்க நாட்டையும் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும். என்னை? கங்கரை அடிக்கடி வென்றதாகக் கதம்பர் பட்டயங்கள் குறிக்கின்றமையின் என்க. கங்கர் பல்லவர் துணையை நாடினர். கதம்பரை அடக்கிவைக்கக்கங்கர்க்குப் பல்லவர் உதவ வேண்டியவர் ஆயினர்.

(2) அரிவர்மன் கி.பி. 436 முதல் 460 வரை கங்கநாட்டை ஆண்டான். இவன்காலப் பல்லவ அரசன் முதல் சிம்மவர்மன். அவன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436. அக்காலத்தில் கதம்ப அரசனாக (கி.பி. 425-450) இருந்தவன் காகுந்த வர்மன். அவன் குப்தர்க்கும் வாகாடர்க்கும் பெண் கொடுத்த பெருமையுடையவன்.[31] அவனது தாளகுண்டாப் பட்டயமே மயூர சன்மன் பல்லவர் மீது கொண்ட பகைமையையும் கதம்ப அரசு உண்டான வரலாற்றையும் குறிப்பது. எனவே காகுத்த வர்மன் பல்லவர்மீது வெறுப்புற்றவன் என்பது கல்வெட்டால் நன்கறியலாம். அவன் இளவரசனாக இருந்தபோதே பல போர்கள் செய்தவன்.[32] அவன் அரிவர்மன் பட்டம் பெறத் தடை செய்தனனோ, அல்லது அரசனாக இருந்த அவனைப் போரிட்டு வென்றனனோ தெரியவில்லை. இதனிற் சிம்மவர்மன் தலையிட வேண்டியதாயிற்று. அவன்தன்தலையீட்டில் வெற்றியும் பெற்றான்; அரிவர்மன் கங்க அரசன் ஆனான்.

(3) கங்க அரசனான இரண்டாம் மாதவன்.கி.பி. 450 முதல் 500 வரை அரசாண்டான். அப்பொழுது இருந்த பல்லவன் சிம்மவர்மன் மகனான மூன்றாம் கந்தர்வர்மன் அப்பொழுது ஏறத்தாழப் பட்டம் பெற்ற கதம்ப அரசன் மிருகேசவர்மன் என்பவன். இவன் தன் பாட்டனைப்போலவே கங்க அரசன் மீது படையெடுத்தான் போலும் ‘இவன் கங்கரை வென்று பல்லவரை நடுங்க வைத்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது. ‘பல்லவ அரசனான கந்தர்வர்மனால் நான் அரசு கட்டில் ஏறினேன்’ என்று கங்க அரசனான இரண்டாம் மாதவன் குறித்துள்ளான். இவற்றை நோக்க, உண்மை வெளியா கின்றது. அஃதாவது, அரசனாக இருந்த கங்க அரசனை மிருகேச வர்மன் வென்றான். இதனை அறிந்த பல்லவனான கந்தவர்மன் விரைந்து சென்று போரிட்டுக்கதம்பனை வென்று, தன் நண்பனான இரண்டாம் மாதவனை மீட்டும் அரசன் ஆக்கினான்’ என்பது.

இவன் பங்காளியான விஷ்ணுவர்மன் இவனுக்கு மாறாகக் காஞ்சிப் பல்லவனைச் சரண் அடைந்தான். அதனாற் போர் மூண்டது. இரவிவர்மன்தன் பங்காளியுடனும் பல்லவனுடனும் போரிட்டான்.[33]

(4) திருப்பர்வதத்தை ஆண்ட கதம்ப மரபினருள் முதல்வன் முதலாம் கிருஷ்ணவர்மன். அவன் காகுந்த வர்மன் மகனாவன். அவன் காலம் கி.பி. 475-480 ஆகும். அவன் அக்காலப் பல்லவ அரசனிடம் படுதோல்வி அடைந்தான் என்று கல்வெட்டே கூறுகிறது. அக்காலப் பல்லவன் இரண்டாம் சிம்மவர்மனாக இருக்கலாம்.[34]

(5) கி.பி. 500 முதல் 535 வரை கதம்ப அரசனாக இருந்தவன் மிருகேச வர்மனின் மகனான இரவி வர்மன் என்பவன். இவன், ‘காஞ்சி அரசனான சண்ட தண்டனை அழித்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது.[35] இவன் காலத்தில் ஏறத்தாழக் காஞ்சி அரசனாக இருந்தவன் (முதலாம் நந்தி வர்மனுக்கு முற்பட்ட) விஷ்ணு கோபவர்மன் ஆவன்.

முடிவு

இந்த இரவி வர்மனுக்குப் பிறகு கதம்ப அரசர் எவரும் தாம் பல்லவரை வென்றதாகக் குறிக்கவில்லை. இதற்குக் காரணம், பின் வந்த கதம்பர், தமக்கு வடக்கே சாளுக்கிய அரசை உண்டாக்கி அதனை வலுப்படுத்த முயன்ற சாளுக்கியருடன் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர் என்பதேயாகும்.[36]

பல்லவர் - சோழர் போர்

காஞ்சியைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவின் மகனான புத்த வர்மன் சோழருடைய கடல் போன்ற சேனைகட்கு வடவைத் தீப்போன்றவன் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இதனால், நாம் முன்னர்க் கூறியாங்கு, குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றிய பின், தெற்கே இருந்து தமக்கு இடையறாத துன்பத்தை உண்டாக்கி வந்த களப்பிரரை வெல்லவோ, அல்லது எஞ்சிய தொண்டை நாட்டையும் சோணாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலோ புத்தவர்மன் தன் படையுடன் சென்றான். பல்லவரை எதிர்க்கச்சோழரும்களப்பிரருடன் சேர்ந்திருப்பர். போரின் விளைவு தெரிந்திலது. எனினும் இப் போரில் புத்தவர்மன் வெற்றி பெற்றதாகக் கூறற் கிடமில்லை. ஏன்? கி.பி. 575 இல் அரசனாக வந்த சிம்மவிஷ்ணுவே காவிரி வரையுள்ள நாட்டை வென்றவனாதலின் என்க. எனவே, காஞ்சிமீது படையெடுத்து வந்த களப்பிரரையும் சோழரையும் புத்தவர்மன் விரட்டி இருக்கலாம்; மேற்கொண்டு தெற்கு நோக்கிப் போகவில்லை எனக் கோடலே பொருத்தமாகும்.

சாளுக்கியர் தோற்றம்

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து உயர்நிலைக்கு வந்தவர் சாளுக்கியர். அவருள் முதல்வள் விசயாதித்தன். வாதாபியைத் தலைநகராகக் கொண்டசாளுக்கிய அரசை ஏற்படுத்தினான்.

பல்லவர் சாளுக்கியர் போர்கள்

விசயாதித்தனுக்கும் திரிநயனப் பல்லவற்கும் போர்கள் நடந்தன என்று கதை கூறப்படுகிறது. அது மெய்யென்பார் சிலர்; பொய் என்பார் சிலர். சாளுக்கியர் பேரரசை ஏற்படுத்த முனைகையில், பேரரசராக இருந்த பல்லவர்க்குப்பகைமைதோன்றல் இயல்பன்றோ? ஆதலின், இன்று நாம் அறிய முடியாத வகையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்சொன்ன போர்கள் நிகழ்ந்திருக்கலாம். மேலும், இடைக்காலப் பல்லவர் ஆந்திர பதத்திலும் (சாளுக்கிய நாட்டிற்கு அண்மையில்) இருந்து அரசாண்டனர் என்பதை நினைவிற் கொண்டால், இக்கதை உண்மையாக இருக்கும் என்று நம்பலாம். இது நிற்க.

(1) விசயாதித்தன் மகனான ஜயசிம்மன் சாளுக்கிய அரசனான பொழுது அவனுடன் பல்லவரும் இராட்டிர கூடரும் ஓயாது போரிட்டனர். எனினும், ஜயசிம்மன் தன் அரசை நிலைநிறுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்வந்த அவன் மகனான இரணதீரனும் பல்லவருடன் போரிட்டான்.[37]

இவர்கள் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன்பெரும்பாலும் முதலாம் நந்தி வர்மன் (கி.பி. 525-550) ஆவன். இவன் விஷ்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்; சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இந்த ‘நாக அரசன்’ யாவன்? ‘சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர்’ ஆகிய மூவரும் தம்மை ‘மானவ்ய கோத்திரத்தார்’ என்றும், ‘நாக மரபினர்’ என்றும் கூறிக் கொண்டனர்.[38] இவருள் சூட்டு நாகர் நந்திவர்மன் காலத்தில் வரலாற்றிலிருந்தே மறைந்து விட்டனர்; கதம்பரும் சாளுக்கியரும் போர்களில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், இரவி வர்மனுக்குப்பின்வந்த கதம்பர் பல்லவருடன் போர் செய்த குறிப்புக் கல்வெட்டுகளில் இல்லை. அவர்கள் ஓய்வின்றி வடக்கே சாளுக்கியரிடம் போராடின காலம் அது. ஆதலின் நந்திவர்மன் நடுங்கச் செய்த நாக அரசன் சாளுக்கியனாகத் தான் இருத்தல் வேண்டும்; அவன் ஜயசிம்மன் அல்லது இரணதீரன் ஆதல் வேண்டும். இங்ஙனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சாளுக்கியர்-பல்லவர் போர்கள் சாளுக்கியர் பேரரசு ஒழிந்த கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து நடந்தன என்பது இங்கு அறியத்தகும்.

(2) இரணதீரன் மகன் முதலாம் புலிகேசி கி.பி. 550 முதல் 566 வரை அரசனாக இருந்தான். இவன் பல சிற்றரசரை வென்று அடிப்படுத்திக் கி.பி.560இல் ‘பரிவேள்வி’ செய்தவன். இவன் மகன் முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி. 566-598). இவனே கதம்பர் அரசைக் குலைத்துக் கதம்ப நாட்டைச் சாளுக்கியப் பெருநாட்டில் சேர்த்துக் கொண்டவன். இவ்விருவர் காலங்களிலும் சாளுக்கியர் - பல்லவர் போர்கள் நடந்தன.[39] இந்தக் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன் மூன்றாம் சிம்மவர்மன் ஆவன். இக் குறிப்புகளுடன், ‘மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான்’ என வரும் வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை ஒப்பிட்டு உணர்க.

போர்களின் பட்டியல்

இதுகாறும் கூறப்பெற்ற பல போர்களையும் கீழ்வருமாறு முறைப்படுத்திக் கூறலாம்.

போர்

எண் ஏறத்தாழப்

போர் நடந்த காலம்

கி. பி. போரிட்ட பல்லவர் போரிட்ட

இருதிறந்தார்

1 340-350 குமார விஷ்ணு 1 பல்லவர் - குப்தர் போர் 1

2 345-360 குமார விஷ்ணு 1 (அ)

கந்தவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர்

3 350-375 வீரகூர்ச்சவர்மன் பல்லவர் - வாகாடகர் போர் 1

4 400-436 கந்தவர்மன் 2 பல்லவர் - வாகாடகர் போர் 2

5 436-460 சிம்மவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர் 2

போர்

எண் ஏறத்தாழப்

போர் நடந்த காலம்

கி.பி. போரிட்ட பல்லவர் போரிட்ட

இருதிறந்தார்

6 436-460 குமார விஷ்ணு 2 பல்லவர் - வாகாடகர் போர் 3

7 460-475 கந்தவர்மன் 3 பல்லவர் - கதம்பர் போர் 3

8 460-475 புத்தவர்மன் பல்லவர் - சோழர் போர்

9 475-480 சிம்மவர்மன் 2 பல்லவர் - கதம்பர் போர் 4

10 500-525 விஷ்ணுகோபவர்மன் பல்லவர் - கதம்பர் போர் 5

11 525-550 நந்திவர்மன் 1 பல்லவர் - சாளுக்கியர் போர் 1

12 550-575 சிம்மவர்மன் 3 பல்லவர் - சாளுக்கியர் போர் 2

இங்ஙனம், வடமொழிப் பட்டயங்களை வெளியிட்ட இடைக்காலப் பல்லவருட்பலர், ஏறத்தாழத்தமதுகாலம் முழுவதுமே (கி.பி. 340-575) குப்தர், வாகாடகர், கதம்பர், சாளுக்கியர், சோழர் என்பவரோடு ஓய்வின்றிப் போர் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாலும், அடிக்கடி தமது பேரரசின் சில பகுதிகள் பகைவர் கைப்பட்டமையாலும், தமது தலைநகரமே கைமாறியதாலும், தம் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் காஞ்சியிலிருந்து விடுத்திலர் என்பது நன்கு அறியத்தக்கது. “நெல்லூர், குண்டுர்களை ஆண்ட இடைக்காலப் பல்லவர் (1) வீரகூர்ச்சவர்மன் (2) இரண்டாம் குமாரவிஷ்ணு (3) இரண்டாம் கந்தவர்மன் (4) வீரவர்மன் (5) மூன்றாம் கந்தவர்மன் (6) இரண்டாம் சிம்மவர்மன் (7) அவன் மகன் விஷ்ணுகோபவர்மன் ஆவர்” என்று அறிஞர் அறைதலும் நோக்கத்தக்கது.[40]

* * *

↑ Vide “The place of Virakurcha in the pallava Genealogy, “Madras Christian College Magazine’ April, 1928.

D. Sircar’s “Successors of the Satavahanas’, pp.97.140.

↑ Ibid. pp. 73,82,83.

↑ Ibid, pp.55, 62, Dr.K. Gopalachari’s “Early History of the Andhra Country’ pp. 186-195.

↑ D. Sircar’s “Successors of the Satavahanas’ pp.232, 238-240.

↑ D. Sircar’s Successors of “Satavahanas’ pp.258-259

↑ Ibid pp.281, 283.

↑ R. Gopalan’s “Pallavas of Kanchi,” pp.66,67.

↑ Mysore Gazetter. Vol II, Part II, P.505.

↑ M.V.Krishna Rao’s “Gangasof Talakad” pp.13, 14.

↑ Ibid p. 180.

↑ Ep. Carnataka Vol. III, No.142, MER. 1914, p.52

↑ Prof. Durbrueil’s “Ancient History of the Dekkhan’ p.54.

↑ M.V. Krishna Rao’s “Ganges of Talakad,’ pp.11,12,29,32.

↑ Ibid,pp.29, 31

↑ Omgodu plates of Skandavarman II.

↑ D. Sircar’s “Successors of the Satavahanas’ p.205.

↑ Dr. S.K. Aiyangar’s int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan. pp. 19-21.

↑ Morae’s “The Kadambakula,’ p.26.

↑ Ibid, pp.16,17

↑ Prof. Dubruell’s “Ancient History of Dekkhan,’ pp.98-100.

↑ R.Gopalan’s “Pallavas of Kanchi’, P71.

↑ D.C. Minakshi’s “Ad, and S. Life under the Pallavas pp. 197-199.

↑ எனினும் இது முடிந்த முடிபன்று. மேலும் ஆராய்ச்சிக்குரியது.

↑ K.A.N. Sastry’s “Cholas,’ Vol.II, Part I, p.486.

↑ Dr. S.K. Aiyangar’s Int, to the “Pallavas of Kanchi’, p.27.

↑ R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.124.

↑ Ep. indica, Vol. 15, No.11, p.249. C.V.N. Iyer’s Saivism in S. India, pp. 295, 296.

↑ D. Sircar’s Successors of the Satavahanas, p.223.

↑ இது மேலும் ஆராய்ச்சிக்கு உரிய பகுதியாகும். ‘சமுத்திர குப்தன் படையெடுப்புக்குப்பின் காஞ்சி நகரம் சோழர் கையிலிருந்தது. அவரிடமிருந்தே குமார விஷ்ணு மீட்டான்’ என எழுதிய ஆராய்ச்சியாளர் பலர். அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பலர். & Vide R. Gopalan’s “Pallavas of Kanchi.’ pp.63, 65.

↑ M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.27: ‘கங்கவர்மன் அஞ்சத்தக்க போர்கள் புரிந்தவன். பாகீரத வர்மன் பேரரசனாக இருந்தான் சந்திரகுப்தன் காளிதாசனைத் தூது அனுப்பி இவனிடம் பெண் கொள்ள முயன்றான் எனின், இவன் சிறப்பை என்னென்பது & Morae’s Kadamba Kula pp.18-23.

↑ Ibid pp.21-22, 26.

↑ Ibid. p.23.

↑ Moraes’s “Kadamba kula,’ pp.39-40.

↑ Ibid.p.33

↑ Ind Ant vol VI p.24: முதலாம் பரமேசுவர வர்மன் தன்னை ‘உக்கிரதண்டன்” எனக் கூறிக்கொள்ளல் இங்கு நினைவு கூர்தற்குரியது.

↑ M.V.K. Rao’s “Ganges of Talakad,’ pp.37-38.

↑ S.II. vol II p.510.

↑ Bombay gazatteer - pp.180, 277-280, 286.

↑ M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.38.

↑ D. Sircar’s “Sucessors of the Satavahanas’ p.391.

7. பிற்காலப் பல்லவர்

(கி.பி. 575-900)

இக்காலச் சிறப்பு

(1) இக்காலத்தில் பெரும்பாலான நாயன்மாரும் ஆழ்வாரும் தமிழகத்தில் வாழ்ந்தனர்; சமணரோடு போரிட்டுச் சைவ வைணவ சமயங்களைப் பரப்பினர்: பேரரசர்களையும் சமயம் மாறும்படி செய்தனர். தமிழ்மக்கள் இக்காலத்தில் சிறந்த முறையில் சமயப்பற்றுடையர் ஆயினர். மக்கள் மனப் போக்கை உணர்ந்த பொறுப்பு வாய்ந்த அரசர், மக்கள் உள்ளம் உவப்பப் பல கோவில்களைக் கட்டினர்; தாமும் மெய்யான பக்தியில் ஈடுபட்டனர். இச் சமயப் போராட்டத்தில் இருந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களும் தேவாரப் பாடல்களும் இக்கால அரசர்நிலை, நாட்டுநிலை, சமயங்கள் நிலை, மக்கள் நிலை முதலியவற்றை நன்கு விளக்குகின்றன. (2) இக் காலத்திலே தான் புகழ்பெற்ற பெருவீரரான பல்லவர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் தெற்கே காவிரியாறு வரையும் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் மேற்கே.சாளுக்கியநாடு வரையும் தங்கள் பேரரசை விரிவாக்கி ஆண்டனர். இக்காலத்தேதான் வரலாற்றுப் புகழ்பெற்ற சாளுக்கியர்-பல்லவர் போர்களும், பாண்டியர்-பல்லவர் போர்களும், கங்கர்-பல்லவர் போர்களும், இராட்டிரகூடர் - பல்லவர் போர்களும் பிறவும் நிகழ்ந்தன. (3) இக்காலப் பல்லவர்தாம் குகைக்கோவில்களையும் மலைக்கோவில்களையும் கற்கோவில் களையும் அமைத்து அழியாப் புகழ் பெற்றவர் ஆவர். இவர்க்கு முற்பட்ட காலங்களில் தமிழகத்துக் கோவில்கள் மரத்தாலும் மண்ணாலும் செங்கற்காலுமே கட்டப்பட்டவை. அவை நாளடைவில் அழிந்துவிட்டன. (4) இக்காலத்திற்றான் பல்லவ நாட்டில் வடமொழி சிறப்பாகப் போற்றி வளர்க்கப்பட்டது. வடமொழி வல்ல மறையவர் பல ஊர்களைத்தானமாகப் பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் தோற்றமெடுத்தன. புகழ்பெற்ற கிராதார்ச்சுனீயம் இயற்றிய பாரவி (தாமோதரர்)யும் காவ்யாதர்சம் செய்த தண்டி என்னும் வடமொழிப் புலவரும் பல்லவரால் பாராட்டப்பெற்றனர். (5) இக்காலத்தே தமிழ்மொழியும் ஓரளவு வளர்ந்ததென்றே கூறலாம். தேவாரத் திருமுறைகள், நாலாயிரப் பாடல்கள், நந்திக் கலம்பகம், பாரத வெண்பா முதலியன இக்காலத்த்ேதான் எழுந்தவை. இவற்றை அருளிச்செய்த அடியாரும் ஆழ்வாரும் புலவர்களும் பல்லவர் மதிப்பைப் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை.

இக்கால வரலாற்றுக்குரிய மூலங்கள்

(1) இக்காலப் பல்லவர் செப்புப் பட்டயங்களையும் பெருவாரியான கல்வெட்களையும் வெளியிட்டனர். அவை தமிழ் நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவே இன்று காறும் வெளியாகி இருப்பவை: பல படித்து முடியாமலும் அச்சாகி வெளிவராமலும் இருக்கின்றன. அவை வெளிப்படுமாயின், இக்காலப் பல்லவர் வரலாறு பெரிய மாறுதலைப் பெறலாம்: இதுகாறும் உணரமுடியாத பல உண்மைகளை உணரலாம். கல்வெட்டுகள் பலவும் அரசர் அல்லது பெரு மக்கள் கோவில்களுக்கும் மறையவர்க்கும் சமயக் கல்விக்கும் நிலம் விட்டதை அல்லது பிறவகை அறச்செயல்களைக் குறிப்பிடுவாகும். இவற்றில் சிம்மவிஷ்ணு முதலாக வந்த அரசர் பரம்பரை கூறப்பட்டிருக்கும். செப்புப் பட்டயங்களிலும் அரசர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அது வெளிப்பட்டபோது இருந்த அரசன் பெயரையும் அவனது ஆட்சி ஆண்டையும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளும் பட்ட்யங்களும் அரசர் மரபையும் அவர்தம் பிற செயல்களையும் குறிப்பிடுதல் இல்லை. கல்வெட்டுகளில் பழமையானவை முதல் மகேந்திரவர்மன் வெட்டுவித்தவையே ஆகும்; அவை தென்ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, செங்கற்பட்டுக் கோட்டங்களில் உள்ள குகைக் கோவில்களில் உள்ளன. மற்றவை மாமல்லபுரத்தில் உள்ள மலைக்கோவில்களிலும் பிறகோவில்களிலும், காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலிலும் பிற இடங்களிலும் இருக்கின்றன. எனினும், இப் பலவகைப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தொகுத்து அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்யின், இக்காலப் பல்லவர் பரம்பரை, அவர் தம் வரலாறு, அவர்கால நாட்டுநிலை முதலியவற்றைப் பேரளவு அறியலாம்.

(2) இவற்றோடு, இக்காலப் பல்லவர் வரலாற்றை அறியப் பெருந்துணை புரியும் புறக்கருவிகளில் முதலிடம் பெறத்தக்கவை. இக்காலத்தே பல்லவர் நாட்டைச் சுற்றிலும் இருந்து அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், கதம்பர், கங்கர், பாண்டியர், முத்தரையர், (களப்பிரர்) பாணர் - இவர் தம் பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆகும்.

(3) சைவசமய குரவர் பாடியருளிய தேவாரத் திருமுறைகளும் வைணவப் பெரியார்கள் பாடியருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாக்களும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் தரத்தக்க இலக்கியங்கள் ஆகும்.

(4) கி.பி. 615-630 இல் மகேந்திரர்வமன் வெளியிட்ட மத்தவிலாசப் பிரகசனம், அவந்திசுந்தரீகதா, பாரதவெண்பா, நந்திக் கலம்பகம், பெரிய புராணம் என்பன சிறந்த வரலாற்றுக் குறிப்புகள் கொண்டவையாகும்.

(5) மகாவம்சம்- இஃது இலங்கை வரலாறு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நரசிம்மர்வர்மன் காலத்தில் இலங்கை நோக்கிப் பல்லவர் படைசென்றமை-இலங்கை அரசனை நீக்கிப்பட்டத்திற்கு உரியவனை அரசனாக்கினமை முதலிய செய்திகள் இதனிற் காணலாம்.

இத்துணைச் சான்றுகளையும் துணையாகக் கொண்டு பிற்காலப் பல்லவர் வரலாற்றை ஒருவாறு காண்போம்.

காசக்குடி, கூரம், வேலூர் பாளையப் பட்டயங்களை ஆராயின், இப் பிற்காலப் பல்லவர் பட்டியல் அடுத்த பக்கத்தில் உள்ளவாறு அமையும். இப் பட்டியல், இடைக்காலப் பல்லவர் பட்டிலைப் போல் குழப்பம் திருவதன்று; இன்னவருக்குப்பின் இன்னவர் பட்டம் பெற்றனர் என்பதை ஏறக்குறையத் தெளிவாகத் தெரிவிக்கிறது. பட்டியலைப் பார்ப்பின் சிம்மவிஷ்ணு காலுமுதல் ஏறக்குறைய 150 ஆண்டுகள் ஒரே பரம்பரை அரசர் ஆண்டு வந்தமை தெளிவாகும். அந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பீமவர்மன் முதல் இரண்ய வர்மன் ஈறான ஐவரும் எந்நிலையில் இருந்தனர் என்பதை அறியக்கூடவில்லை. அவர்கள் மாகாணத் தலைவர்களாக அல்லது சேனைத் தலைவர்களாக இருந்திருக்கலாம். சிம்மவிஷ்ணுவுக்குத் தம்பியான பீமவர்மன் வழியில் வந்த இரண்டாம் நந்திவர்மன் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பேரரசன் ஆனான். பின்னர் அவன் வழியினரே கி.பி. 900 வரை பல்லவ மன்னவராக இருந்து மறைந்தனர்.

மூன்றாம் சிம்மவர்மன்

சிம்ம விஷ்ணு பீமவர்மன்

மகேந்திரன் 1 புத்தவர்மன்

நரசிம்மர்வமன் 1 ஆதித்தவர்மன்

மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்

பரமேசுவர்மன் 1 இரண்யவர்மன்

நரசிம்மவர்மன் 2 நந்திவர்மன் 2

பரமேசுவர மகேந்திர

வர்மன்2 வர்மன் 3 தந்திவர்மன்

நந்திவர்மன் 3

நிருபதுங்கவர்மன்

அபராசிவர்மன்

8. சிம்ம விஷ்ணு

சிம்மவிஷ்ணு காலம்

இவனே புகழ்பெற்ற பிற்கால அரசருள் முதல்வன் ஆவன். இவன் இடைக்காலப் பல்லவர் பட்டியலில் உள்ள மூன்றாம் சிம்மவர்மன் மகன்; முதல் நந்திவர்மனுடைய (ஒன்று விட்ட) உடன் பிறந்தான் மகன். (காசக்குடி, வேலூர் பாளையம் ஒப்பு நோக்கிக் காணின், இப் பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு நந்திவர்மனுக்குப் பின்பட்டம் பெற்றவள் ஆவன்.) இவனுக்குப் பீமவர்மன் என்றொரு தம்பி இருந்தான். அவன் இவனது ஆட்சியில் வட பகுதியை ஆண்டுவந்தான் போலும் சிம்மவிஷ்ணு காலத்துப் பட்டயம் எதுவும் கிடைத்திலது. முற்கூறிய அவந்தி சுந்தரி கதையினால் இவன் கால்ம் அறிதல் முடிகிறது. ‘சிம்ம விஷ்ணு கங்க அரசானான துர்விநீதன், சாளுக்கிய விஷ்ணு வர்த்தனன் இவர் தம் காலத்தவன்’ என்று அந்நூல் கூறுகிறது. துர்விநீதன் கி.பி. 605இல் பட்டம் பெற்றவன்.[1] விஷ்ணுவர்த்தனன் கி.பி. 614இல் பட்டம் பெற்றவன்.[2] இவர்கள் அரசராக இருந்தபொழுது சிம்மவிஷ்ணுவும் அரசனாக இருந்தான் என்று மேற்சொன்ன நூல் கூறலால் சிம்மவிஷ்ணு குறைந்தது கி.பி. 615 வரையேனும் அரசானக இருந்திருத்தல் வேண்டும்.

சிம்மவிஷ்ணு சிறப்பு

இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய மத்தவிலாசத்தில் தன் தந்தையைச் சிறப்பித்துள்ளமை காண்க; “சிம்மவிஷ்ணு பல்லவகுலம் என்ற உலகைத் தாங்கும் குலமலை போன்றவன். அவன் நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையும் உடையவன்; பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன்:செல்வத்தில் குபேரனைஒத்தவன்.அவன்அரசர் ஏறு.”[3]

போர்ச்செயல்கள்

மூன்றாம் நந்திவர்மன் காலத்திய வேலூர்ப் பாளையப் பட்டயத்தில் சிம்மவிஷ்ணுவைப் பற்றிச் சில குறிப்புகள் காணப்படுகின்றன; “இவனது புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரி பாயப்பெற்ற செழிப்பான சோழ நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான்.”[4] இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசக்குடிப் பட்டயத்தில், “...பிறகு இப் பூவுலகில் சிங்கம்போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் ஈடுபட்டிருந்தான், களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றிகொண்டான்”[5] என்பது காணப்படுகின்றது.

சிம்மவிஷ்ணு வேறு அரசருடன் போர் செய்தமைக்கு உரிய சான்றுகள் கிடைத்தில. ஆதலின், இவன் தென்னாட்டு அரசருடன்றான் பெரும்போர் செய்து வென்று, காவிரியாறு வரையுள்ள தமிழ்நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இவனுக்கு முற்பட்ட நந்திவர்மன் முன்னோரும் இவருடைய முன்னோரும் காஞ்சியில் இருந்தமைக்குரிய சான்று இன்மையாலும், அவர்கள் அனைவரும் ஆந்திர நாட்டிலிருந்தே பட்டயங்களை வெளியிட்டிருத்தலாலும், இரண்டாம் குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினன் எனக் கூறலாலும், அவன் ஒருவனே காஞ்சியி லிருந்து பட்டயம் விடுத்ததாகத் தெரிவதாலும் இடைக்காலப் பல்லவர் ஆட்சியில் காஞ்சிபுரம் வாகாடகரிடமிருந்து மீட்கப்பெற்ற பின்னரும் கைமாறியதோ என்று எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இந்தச் சிம்ம விஷ்ணுவுக்கு முற்பட்டவர் காஞ்சியில் இருந்திலர் என்பதாலும், சிம்ம விஷ்ணு ஒருவனே சோழர் களப்பிரர் முதலிய தென்னாட்டரசரை வென்று காவிரியாறு வரை பல்லவப் பேரரசை நிறுத்தினான் என்பதனாலும், இவனது ஆட்சித் தொடக்கத்தில் சாளுக்கியப்போர் இன்மையாலும், இவன் காலத்தில் காஞ்சி களப்பிரரிடமிருந்து[6] கைப்பற்றப்பட்டது என்று நினைக்கலாம். காஞ்சியைக் கைப்பற்றாமல் இவன் காவிரிவரையுள்ள நாட்டைப் பிடித்துக் காஞ்சியைத் தலை நகராகக்கொண்டு அரசாளுதல் இயலாதன்றோ? இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்பதை இலக்கியச் சான்றும் உறுதிப்படுத்துகின்றது.[7]

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்” (அவந்தி சுந்தரி கதா சாரம்). இக் குறிப்புக் காசக்குடிப் பட்டயச் செய்தியைப் போன்று இருத்தல் காணத்தக்கது. ‘கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை என்பது கவனிக்கற்பாலது. ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடத்தினின்று (காஞ்சிபுரத்தினின்று) இறுதியாகப் பகைவரை நீக்கினான்’ என்பதே இதன் பொருள். சத்தியசேனன் என்னும் அரசரிடமிருந்து இருபிறப்பாளரது கடிகாவை இரண்டாம் கந்தவர்மன் மீட்டான் என்றபோதும், இருபிறப்பாளரது கடிகா (கல்லூரி) இருந்த காஞ்சீபுரத்தை என்றே பொருள் கொள்ளப்பட்டது.[8] எனவே, இங்குக் ‘கற்றவர் கூட்டம்’ என்பது காஞ்சிமா நகரைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. ‘காஞ்சியைக் கைப்பற்றியதால் சிம்மவிஷ்ணு கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான்’ என்று மேற்கூறிய வடமொழி நூல் கூறுகின்றது.[9]

கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர்ப் பட்டயத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’[10] என்பது காணப்படுகிறது. மேலும், சிம்மவிஷ்ணுவின் மகனான முதலாம் மகேந்திரவர்மன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ள சித்தன்ன வாசலில் குகைக் கோயில் அமைத்துள்ளான். அவன் தமிழ்நாட்டின் எப்பகுதியை யாயவது பிடித்தான் என்பதற்குச் சான்றில்லை. அவன் காலத்தில் தென்னாட்டில் போரே இல்லை. ஆதலின் புதுக்கோட்டை வரையுள்ள சோழநாட்டைச் சிம்ம விஷ்ணுவே வென்று அடிப் படுத்தினவன் ஆவான்.[11]

தமிழ் வேந்தருள் மலவர் (மலையர்) என்பவர் மலாடு என்னும் நாட்டினர். மலாடு தென் ஆர்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கோவலூர் முதலிய இடங்களைக் கொண்ட நடுநாடாகும். இந்நடு நாட்டினர் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலும் சிற்றரசராக இருந்தமை தெளிவு. சிம்ம விஷ்ணுவோடு போர் செய்த தமிழ் வேந்தருள் மலாடரும் சேர்ந்தனர் என்பதில் வியப்பில்லை.

‘சிம்ம விஷ்ணு’ என்னும் பெயரைக் கொண்டே இவன் வைணவன் என்பதை நன்குணரலாம். இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரப் பட்டயம் இவனைப் ‘பக்தி ஆராதித்தவிஷ்ணு-சிம்ம விஷ்ணு’[12] என்று குறிப்பிடுதலை நோக்க, இவன் பரம பாகவதனாக இருந்தவன் என்பது தெளிவு. இவன் சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்திருக்கலாம். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.[13]

ஆதிவராகர் கோவில்

மகாபலிபுரத்தில் ஆதிவராகர் கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் இரண்டு உருவச்சிலைகள் உள்ளன. இவற்றைக் கர்னல் மக்கன்ஸி, பெர்கூசன், பர்கஸ் முதலிய அறிஞர் கண்டு தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இவை இன்னாரைக் குறிப்பன என்பதை அவர்கள் கண்டறியக் கூடவில்லை. இச் சிலைகள் 1913இல் கண்ட இராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரிகளும் முதலில் இவையாரைக் குறிப்பன என்பதை உணரவில்லை. பின்னர் 1922இல் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இச் சிலைகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக்கண்டு பிடித்தனர். பின்னரே, இவை சிம்ம விஷ்ணுவையும் அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் குறிப்பன என்பது வெளிப்பட்டது.[14] பின்னர்க் கிருஷ்ண சாஸ்திரிகள் அக் கல்வெட்டுகளை நன்கு பார்வையிட்டுத் தம் கருத்துக்களை வெளியிட்டனர். கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் கொண்டவை. ஆதிவராகர் குகைக் கோவிலுள்ள வடபுறப் பாறையில் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அதன் அடியில் ஓர் ஆண் உருவம் உட்கார்ந்த நிலையிலுள்ளது. அதன் நிலைமீது உயர்ந்த முடி (கீரீடம்)உள்ளது. மார்பிலும் கழுத்திலும் அணிகள் காணப்படுகின்றன. அவ்வுரு வத்திற்கு இருபுறங்களிலும் முடியணிந்த பெண்மணிகளின் உருவங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. அவை சிம்ம விஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிரே தென்புறப் பாறைமீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதிராஜன்’ என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், முடியும் அணிகளும் அணிந்த மகேந்திரன்நின்றிருப்பதாக உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலக்கை உட்கோவிலைச் சுட்டியபடி உள்ளது. இடக்கை முதல் இராணியின் வலக்கையைப் பற்றியபடிஉள்ளது; அவனுடைய இராணிமார் ஒருவர் உருவங்களும் நின்ற கோலத்தில் காணப் படுகின்றன.

அக் குகைக் கோவிலில் சிம்ம விஷ்ணுவின் உருவம் காணப் படலால், அஃது அவனால் கட்டப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிம்மவிஷ்ணு சிறந்த வைணவர்பக்தன் ஆதலாலும், காஞ்சியையும் சோழநாட்டையும் கைப்பற்றிய பெருவீரன் ஆதலாலும் தன்னைப் பற்றிய நினைப்பும் பக்தியின் சிறப்பும் நிலைத்திருக்க இக் குகைக்கோவிலை அமைத்தான் எனக்கூறுவதில் தவறில்லை; மேலும், அவன் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவன்; ஆதலால் தமிழ் நாட்டிற்கே புதிய குகைக் கோவிலை மாதிரியாக அமைத்து மகிழ்ந்தான் என்பது நம்பத் தக்கதே. இதனைக் கண்ட பின்னரே மகேந்திரவர்மன் பல குகைக் கோவில்களை அமைக்கத் தொடங்கினான் என்று கொள்ளுதலும் சாலப் பொருத்தமுடையதே. மேலும், மகேந்திரன் அமைத்த குகைக்கோவில் தூண்களைப் போல இக் குகைக்கோவில் தூண்கள் செம்மையுற்றன அல்ல.[15]

வாகாடகர் அசந்தாக்குகைகளில் வியத்தகு வேலைப்பாடுகளைச் செய்தனர். அவற்றைக் கண்டு அவருடன் கொள்வனைகொடுப்பனை வைத்திருந்த விஷ்ணு குண்டர் என்னும் மரபினர் கிருஷ்ணையாற்றங்கரையில் பல குகைக் கோவில்களை அமைத்தனர். அவற்றை எல்லாம் சிம்ம விஷ்ணுவும் அவன் மகன் மகேந்திரவர்மனும் பார்வையிட்டிருத்தல் கூடியதே. அந்நினைவு கொண்டே அவர் மாமல்லபுரத்திலும் பிற இடங்களிலும் குகைக் கோவில்களை அமைத்திருநத்தல் வேண்டும்.[16]

சிம்மவிஷ்ணு வைணவன் ஆதலால் இவன் உருவச்சிலை ஆதிவராகர் கோவிலில் இருத்தல் வியப்பன்று. ஆனால், முதலில் சமணனாகவும் பிறகு வைவனாகவும் மாறிய மகேந்திரவர்மன் சிலை அங்கு இருத்தலே எண்ணத்தக்கதாகும். அவன் இளவரசானக இருந்தபொழுதுதன்தந்தையுடன் வைணவக்கோவிலுக்குப்போதல் மரபாக இருந்திருக்கலாம். அவன் பட்டம் பெற்ற பிறகே சமணனாக மாறி இருக்கலாம். எனவே, இக்கோவில் சிம்மவிஷ்ணு காலத்திற்றான் அமைக்கப்பட்டது எனக் கோடல் பொருத்தமானதே.[17]

சிம்மவிஷ்ணு கலைவல்லவன்

சிம்மவிஷ்ணு அவையிற் சிறந்த புலவராக இருந்தவர் வடமொழி வல்லுநரான தாமோதரர் எனப் பெயர் கொண்ட பாரவி என்பவர். இவர் எங்ஙனம்பல்லவன் அவையை அடைந்தார் என்பதை இவர் மரபில் வந்த தண்டி என்னும் வடமொழிப் புலவர் தமது அவந்தி சுந்தரி கதையில் வரைந்துள்ளார். அது கீழ் வருமாறு:

“தென் நாட்டில் பல்லவப் பேரரசனான சிம்மவிஷ்ணு ஆண்டு கொண்டிருந்தான். அவன் புலவர்க்குப் புரவலனாக இருந்தான். ஒருநாள் புதியவன் ஒருவன் அவன் அவைக் களத்திற்கு வந்து, நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்ற்ை வடமொழியிற் பாடினான். அச் செய்யுளில் இருந்த சொல்லழகும் பொருள் அழகும் அரசனை ஈர்த்தன. உடனே அவன் பாடகனை நோக்கி, ‘இதனைச் செய்தவர் யாவர்?’ என்று ஆவலோடு கேட்டான். பாடகன், ஐயனே, வடமேற்கே ஆரியநாடு என வரும் ஒரு நாடு உண்டு. அதில் அனந்தபுரம் என்பது ஒர் ஊர். அஃது ஆரிய நாட்டின் தலைமணி ஆகும். அப்பதியில் கெளசிக மரபிற் பிறந்த பிராமணர் சிலர் இருந்தனர். அவர்கள் அதனை விட்டு அசலபுரத்திற்[18] குடியேறினர். அப் பிராமணருள் ஒருவர் நாராயணசாமி என்பவர். அவர் மைந்தர் தாமோதரன் என்பவர். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப்பட்டார். அப் புலவர் (கீழைச் சாளுக்கிய) விஷ்ணுவர்த்தனுக்கு நண்பர் ஆனார். ஒருநாள் அவர் அவ்வரசனைத் தொடர்ந்து காட்டிற்குச் சென்றார். அரசன் வேட்டையாடி விலங்கிறைஞ்சி தின்றான். புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். அப்பாவத்தைத் தொலைக்க அப் புலவர் புறப்பட்டுப் பல இடங்கட்கும் சென்றார். இறுதியில் (கங்க அரசனான) துர்விநீதன் அவையைஅடைந்தார். இப்பொழுது அங்கு இருந்தவருகிறார். நான் பாடிய பாடல் அப் பெரும் புலவர் பாடியதே ஆகும்’ என்றான்.”

புலவர் புரவலன்

உடனே சிம்மவிஷ்ணு ஆட்களைப் போக்கிப் பாரவியைத் தன் அவைக்கு வருமாறு பலமுறை தூண்டினான். பாரவி காஞ்சி நகரம் வந்து சேர்ந்தார். அரசன் அவருக்கு நல்ல விடுதி ஒன்றை அளித்துப் பிற வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தான். பாரவி தம் புலமையால் அரசனை மகிழ்வித்து, ஓய்வு நேரங்களில் பாக்கள் இயற்றிக்கொண்டிருந்தார்.[19]

இவன் காலத்து அரசர்

சாளுக்கியநாட்டில் கி.பி.509இல் அரியணையேறிய இரண்டாம் புலிகேசி அரசனாக இருந்தான்; அவன் கி.பி. 642 வரை ஆண்டான். கங்க நாட்டைத் துர்விநீதன் (கி.பி. 605-650) என்பவன் ஆண்டு வந்தான். தெற்கே மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டியன் (கி.பி. 600-625) பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். நாசிக்கிலும் வேங்கி நாட்டிலும் விஷ்ணுவர்த்தனன் என்பவன் (கி.பி.614-635) ஆண்டு வந்தான்.

* * *

↑ Dr.V. Venkataramanayya’s article on “Durvinita and Vikaramadiytal’ (Triveni).

↑ Same Scholar’s article on “Mahendravarman and pullikects II, Miscellany of Paper’s published byGVR Pantulu’s 70th Birthday Celebration Committee.

↑ Mattavilasam (Sanskrit), P3.

↑ S.I.I. Vol.II p.510.

↑ Ibid.p.346.

↑ களப்பிரர் இவரைப்பற்றி முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் தொண்டைநாட்டில் ஒரு பகுதியையும் சோழ நாட்டின் பெரும்பகுதியையும் ஆண்டு வந்தனர்.

சோழர் - களப்பிரர் ஆட்சிக்குப்பட்டும் படாமலும் சிறிதளவு நிலப் பாகத்தை ஆண்டவர். இவர்நிலைமை கி.பி.880 வரை இங்ஙனமே இருந்தது. இவர் தலைநகரம் உறையூர்.

மழவர் இவர்கள் மழ (மலை) நாட்டினர்; ‘மலாடர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருக்கோவலூர் முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர். மெய்ப்பொருள் நாயனார் மலாடர் (மழவர்) அரசர் ஆவர்.

பாண்டியருள் கி.பி. 250-550 வரை களப்பிரர்க்கு உட்பட்டுக் கிடந்த பாண்டிய நாட்டை மீட்ட கடுங்கோன் அல்லது அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி சிம்ம விஷ்ணுவை எதிர்த்திருக்கலாம்.

↑ 1. ‘கொங்குதேச ராசாக்கள் வரலாற்றைக் கானின், துர்விநீதன் காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான் என்பது காணப்படுகிறது” என (Swell’s List of the antiquarian Remains in the Madras Presidency’ p,177) கூறல், காண்க.

2. “சாளுக்கிய இரணராகன், முதல் புலிகேசி இவர்கள் காலத்திற் சாளுக்கிய பல்லவர் போர்கள் நடந்தன. முதற் புலிகேசி எல்லோரையும் தான் அடக்கியதாகக் கூறிக்கொண்ட கி.பி. 560இல் பரிவேள்வி செய்தான்” என அறிஞர் (Mr. V.K. Rao’s “Ganges of Talakad’, p.38) கூறல் காண்க.

எனவே, குமார விஷ்ணுவுக்குப் பிறகு காஞ்சிகளப்பிரர் கைப்பட்டதோ, கங்கர் கைப்பட்டதோ, சாளுக்கியர் கைப்பட்டதோ தெரியவில்லை. கி.பி. 475 முதல் 515 வரை அரசாண்டகதம்ப அரசனான இரவிவர்மன், தான்காஞ்சி அரசனை (சண்டதண்டனை) அழித்தான் என்று ஹல்சி பட்டயம் கூறலால், காஞ்சி கதம்பர் கைக்கு மாறியதோ என்பது ஐயமாக இருக்கிறது. இது நன்கு ஆராயவேண்டும் செய்தியாகும். பிற சான்றுகள்கிடைத்தாற்றான்.இஃது ஒரு முடிவுக்கு வருதல் கூடும்.

↑ R. Gopalan’s Pallavas of Kanchi, p. 13.

↑ Heras’s Studies in Pallava History, p.20.

↑ திருவொற்றியூரை அடுத்த மணல் என்னும் கிராமம் அக் காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்றே பெயர் பெற்றிருந்தது. 211 ணிஞூ 1912.

↑ Ibid.p.21.

↑ S.I.I. Vol., p.74.

↑ Prof. Dubrell’s “Pallava Antiquities’, vol.Ip.40

↑ Archaeological Report 1922 - 3, p.94.

↑ Heras’s “Studies in Pallava History p.75.

↑ Prof Dubreil’s “The Pallavas’, P35.

↑ Dr. S.K. Aiyangar’s “The Antiquities of Mahabalipuram, p.31

↑ அசலபுரம் நாசிக் என்பதற்கருகில் உள்ளது. கி.பி. 614இல் விஷ்ணுவர்த்தனன் அப்பகுதியை இளவரசனாக இருந்து ஆண்டான்.

↑ Dr. N. Venkataramanaayya’s article on “Mahendravarman I and pulikesin II’ M.E R. 1921, p.48.

9. மகேந்திரவர்மன்

(கி.பி. 615 - 630)[1]

முன்னுரை

சிம்மவிஷ்ணு மகனான மகேந்திரவர்மன் கிட்டத்தட்டக் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறினான். (1) இவனது அரசியலின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது; பிற்பகுதியில் சைவம் உயர்நிலைக்கு வந்தது. இவனே, சமணத்தினின்று சைவத்திற்கு மாறினான். (2) குகைகளைக் கோவில்களாகக்குடைந்தவன் இவனே: பாறைகளைக் கோவில்களாக மாற்றியவனும் இவனே. (3) இவன் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது.அப்போராட்டம் இவனுக்குப்பின் 150 ஆண்டுகள் வரை ஓய்ந்திலது. (4) சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் இவனது ஆட்சியில் வளர்ச்சியுற்றன. இவன் காலத்தவரே அப்பர் சுவாமிகள்.

இரண்டாம் புலிகேசி

இவன் சாளுக்கியப் பேரரசன்: கி.பி. 610 இல் சாளுக்கிய அரியணை ஏறினான். இவன் கதம்பர். கங்கர், ஆளுயர். மயூரர் முதலிய சிற்றரசரை அடக்கிப் பேரரசை நிலைநாட்டச் சில ஆண்டுகள் ஆயின. இவன் தம்பி விஷ்ணுவர்த்தனன் ‘நாசிக்’ (அசலபுரம்)கைத் தலைநகராக் கொண்டு சாளுக்கிய நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தான்; அப்பொழுது ‘இளவரசன்’ என்ற பெயருடனே இருந்தான். அவன் அங்குக் கி.பி.614 முதல் ஆளத்தொடங்கினான் என்னலாம். புலிகேசி வெளியிட்ட ‘ஆய்ஹொளே’ கல்வெட்டுக் கி.பி. 634-635க்குரியது. அதனில், தான் வேங்கியை வென்று, (பிறகு) பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் குறித்துள்ளான். படையெடுப்பு

புலிகேசி படையெடுப்பைப் பற்றி, மேற்சொன்ன அய்ஹொளே கல்வெட்டு, “அழுக்கற்றவெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக் கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின துளியானது எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரும் படைக் கடலைக் கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்”[2] என்று கூறுகிறது. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக்குடிப் பட்டயம், ‘மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான்’ என்று குறிக்கிறது.[3]

காசக்குடிப் பட்டயம் சாளுக்கியர் பெயரைக் குறிப்பிடாவிடினும், வரலாற்று ஆசிரியர் அனைவரும் ‘பகைவர்’ என்றது சாளுக்கியரை என்றே கொண்டுள்ளனர். எனவே, காசகுடிப்பட்டயத்தில் கூறியுள்ள செய்தி மகேந்திரன்-புலிகேசி போரேயாகும் என்பதில் ஐயமில்லை.

இப்பட்டயங்களில் ஒவ்வொன்றும் தன் அரசன் வென்றதாகவே கூறுகிறது. ‘இஃது எங்ஙனம் பொருந்துவது’ என்பதே ஆராயத்தக்கது: புலிகேசியினது பட்டயத்தில், ‘பல்லவ அரசன் ஒளிந்துகொண்டான்’ என்பது கூறப்பட்டுள்ளதே அன்றி, அவன் தோற்றது அல்லது காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றியது குறிக்கப்படவில்லை. மேலும், புலிகேசியினது ஆட்சியில் பல்லவநாடு அவன் கைப்பட்டதாகவும் தெரியவில்லை. மேற்கூறிய சாளுக்கியன் கல்வெட்டு, “துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்” என்று கூறுகிறது. இதனால் மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர்புரிய முடியாமல் ஒளிந்து கொண்ட செய்தி அவன் பகைவராகிய தமிழ் வேந்தரை மகிழச் செய்தது என்பது தெரிகிறதே அன்றி, சாளுக்கியன் பல்லவனைத் தோற்கடித்தான் என்பது தெரியவில்லை. காவிரிவரை சென்ற சாளுக்கியன் திரும்பிக் காஞ்சிபுரம் வழியே வருகையில், புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரன் அவனைத் திடீரெனத் தாக்கினானாதல் வேண்டும்.போர்நடந்த புள்ளலூர் காஞ்சிபுரத்திற்கு 10 கல் தொலைவில் உள்ளது. அது வரை பகைவர் படையை வரவிட்டமையே தனக்கொரு வெற்றியாகப் பல்லவன் நினைத்தான் போலும் தன்நாட்டிற்குள் வந்து புகுந்த பகைவனை வெளிச்செல்ல முடியாத நிலையில் சுற்றி வளைத்துக் கொண்டான் போலும்! பல்லவன், தனக்கு வசதியான இடத்தில் வந்து பகைவன் சேரும்வரை சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலக் காஞ்சிபுரக் கோட்டைக்குள் இருத்தான்; பகைவன் தன்னை எதிர்ப்பவர் இல்லை என்று இறுமாந்து சுற்றித்திரிந்து காஞ்சிக்கருகில் வந்ததும். திடீரென அவனை வளைத்துக்கொண்டு போரிட்டுப் பகைவரை அழித்தான். இதுவே நடந்த செய்தி என்பதை இரண்டு பட்டயங்களையும் கூர்ந்து கவனிப்பவர் நன்குணரலாம். மேலும் மகேந்திரன் மகனான நரசிம்மவர்மனது ஆட்சியில் இப் புலிகேசியே இரண்டாம் முறைபடையெடுத்து வந்தான் என்பது காணப்படுகிறது. மகேந்திரன் காலத்தில் அவன் வெற்றிபெற்றது உண்மையாயின், நரசிம்மவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்தான் என்பதோ அவன்மீது புலிகேசி படையெடுத்தான் என்பதோ பொருத்தமற்றது அல்லவா?[4]

‘புள்ளலூர்’ என்பது பல்லவர் பட்டயத்தில் வருதல்போலச் சாளுக்கியர் கல்வெட்டில் வருதல் இல்லை. ஆனால், கங்க அரசனான துர்விநீதன்[5] கல்வெட்டில், அவ்ன அந்தரி, ஆலத்தூர், போலுளரே (புள்ளலூர்), பேர்நகர (பெருநகரம்) இவற்றில் நடந்த போர்களில் வென்றான் என்பது கூறப்படுகிறது. எனவே, துர்விநீதனும் புலிகேசியுடன் சேர்ந்து (பகைவர் என்று பல்லவர் பட்டயம் கூறுமாறு) மகேந்திரனுடன் போரிட்டனன் என்பது புலனாகிறது. கங்கன் போரிடக் காரணம் என்ன? இதற்கு விடை கங்கர் கல்வெட்டே கூறுகிறது. ‘துர்விநீதன் காடு வெட்டியை (பல்லவனை)ப் போரில் வென்று தன் மகன் வயிற்றுப் பேரனைச் சாளுக்கிய அரசுகட்டிலில் அமர்த்தினான்’ என்று ஹும்சா'வில் கிடைத்த கல்வெட்டுக் கூறுகிறது. மற்றொரு கன்னடக் கல்வெட்டு, “மகேந்திரனது சேனைத் தலைவனான வேடராசனுடன் போர் செய்த சீலாதித்தனது சேனைத் தலைவனான பெத்தணி சத்யாங்கன், மகேந்திரன் சேனையைக் கலக்கிவிட்டு வீரசுவர்க்கம் அடைந்தான்”[6] என்று கூறுகிறது. கீழைச் சாளுக்கிய நாட்டில் விஷ்ணுகுண்டர் நண்பனான மகேந்திரவர்மன் அவர்கட்கு உதவி செய்து, குப்ஜ விஷ்ணுவர்த்தனன் (துர்விநீதன் மருமகன்) இறந்தபின் நாட்டை விஷ்ணு குண்டர் பெற முயன்றிருக்கலாம். விஷ்ணுவர்த்தனன் மகன் இரண்டாம் புலிகேசிக்குத்தம்பிமகன்; கங்க -துர்விநிதனுக்குமகள்வயிற்றுப்பேரன். ஆதலின்.அவனுக்குப் பரிந்து அவ்விருவரும் பல்லவனை ஒழிக்க முயன்று படையெடுத்தனர் போலும் அப்பொழுது நடந்தபோர்களில் மகேந்திரவர்மன் புள்ளலூரில் கங்கனையும் சாளுக்கியனையும் முறியடித்திருத்தல் வேண்டும்; பெருநகரத்திலும் போரிட்டிருத்தல் வேண்டும். இப்போர்கள் ஒன்றில் துர்விநீதன் படைத்தலைவனை மடித்திருத்தல் வேண்டும். இத் தோல்விக்குப்பிறகே கங்கரும் சாளுக்கியரும் தம் முயற்சியைக் கைவிட்டு ஓடினராதல் வேண்டும்.

சமணமும் சைவமும்

மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின் சைவன் ஆனவன் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனையே அவனது திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டும் கூறுகின்றது. அது, ‘லிங்கத்தை வழிபடும் குணபரன் என்னும் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால் புறச்சமயத்திலிருந்து திரும்பிய ஞானம், உலகத்தில் நீண்டநாள் நிலைநிற்பதாக’[7] எனக் கூறுகின்றது. 146. , 147. இவன் வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோவிலையும் அமைந்துள்ளான். இவை அனைத்தும் இவன் சமனானாக இருந்து செய்திருத்தல் இயலாது. இவ்வேலை நடைபெறச் சில ஆண்டுகள் ஆகி இருக்கலாம். எனவே, இவன்சுமார், கி.பி. 620 இல் சமணத்தை விட்டுச் சைவனாகி இருக்கலாம். இவன் சமணனாக இருந்தபொழுது சமணர் சொற்கேட்டு அப்பர்க்குப் பலகொடுமைகள் இழைத்தான். இறுதியில் இவன்சைவன் ஆனதும், குடிகள் சைவராக மாறியதில் வியப்பில்லை அன்றோ? எனவே, தொண்டை நாட்டில், அதுகாறும் உயர்நிலையில் இருந்த சமணம் இழிநிலை உற்றது: சைவ சமயம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. அரசனே திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து. அக் கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி, அதற்குத்தன் பெயரால் குணபரம் ஈச்சரம்[8] என்று பெயரிட்டு வழங்கினான் எனின். மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டுச் சைவநிலையை என்னென்பது மகேந்திரன் ஆட்சிதொண்டை நாட்டோடு நின்றதில்லை அன்றோ? அது புதுக்கோட்டைவரை பரவி இருந்ததால்,பல்லவ நாடு முழுவதும் சைவ சமய வளர்ச்சி. வெளிப்படையாகத் தோன்றியது.

இவன் காலத்தரசர்

பல்லவர்க்குக்கொடிய பகைவரான மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணையாறு வரை ஆண்டு வந்தனர். சாளுக்கியர் படையெடுப்பால் நாட்டை இழந்த கதம்பர் சிற்றரசராக இருந்தனர். இவர்கட்குத் தெற்கே இற்றை மைசூர்ப் பகுதியைக் கங்கர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகரம் தழைக்காடு என்பது. வடக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணையாற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். தெற்கே பாண்டியர் வன்மையுடன் ஆண்டு வந்தனர். பாண்டிய நாடடிற்கும் பல்லவர் நாட்டிற்கும் இடையே சோழர், களப்பிரர் என்போர் சிற்றரசர்களாக இருந்து சில ஊர்களை ஆண்டு வந்தனர். களப்பிரர் ஒருகால் பல்லவரையும் மற்றொருகால் பாண்டியரையும் தழுவிக் காலத்திற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து வந்தனர். சோழருள் ஒருபிரிவினர் பல்லவர் துணையால் வடக்கே சென்று கடப்பை கர்நூல் தோட்டங்களைச் சிற்றரசராக இருந்து ஆண்டு வந்தனர். அவர்கள் தம்மை ரேநாண்டுச் சோழர்கரிகாலன் மரபினர் என்று கல்வெட்டுகளிற் கூறிக் கொண்டனர்.[9]

ஆந்திர அரசர் தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். குண்டுர்க் கோட்டத்தையும் அதற்கு வடக்கே உள்ள கடற்கரை வெளியையும் பீமவர்மன் மரபினர் ஆண்டு வந்தனர். இங்ஙனம் சிற்றரசர் பலர் மகேந்திரன் நாடடில் இருந்தனர்.

மகேந்திரன் அமைத்த கோவில்கள்

இம் மன்னன் பல்லாவரம், சீயமங்கலம், திருவல்லம், திருக்கழுக் குன்றம், மண்டபப்பட்டு, மாமண்டூர், தளவானுர், சிங்கவரம், மகேந்திரவாடி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசல் முதலிய இடங்களில் உள்ள மலைகளை வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்தான். இவற்றுள்.(1) மாமண்டுர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் குடையப்பட்டடவை பெருமாள்கோயில்கள்ஆகும்; (2) சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப் பள்ளி என்னும் இடங்களில் குடையப்பட்டவை சிவன் கோயில்கள் ஆகும்; (3) மண்டபப் பட்டில் மும்மூர்த்தி கோவிலும், (4) சித்தன்னவாசலில் சமணர் கோயிலும் குடையப்பட்டன.

கோவில் அமைப்பு

மகேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதில் இவை மகேந்திரன் கட்டியவை எனக் கூறிவிடலாம். இக்கோவில்கள்

அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து தஅமைத்தவை. இவை மலை உச்சியினும் இரா, அடியிலும் இரா, இடையிற்றான் இருக்கும். இத்தகைய இடத்தில் ஒரு கோவிலைக் குடையும்பொழுது, ஆங்குத் துண்களையும் சுவர்களையும் மூர்த்தங்களையும் செய்வதற்காக இடம்விட்டு, மிகுந்த இடமே குடையப்பட்டிருக்கும். தூண் கீழும் மேலும் சதுரமானது; நடுவில் மூலை செதுக்கப்பட்டது.தூணின் முழு உயரம் ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் இரண்டிரண்டு முழம் உயரம் இருக்கும். சதுரத்தில் தாமரை மலர் செதுக்கப்பட்டிருக்கும். தூண்களின் புறங்களில் மகேந்திரன் பட்டப்பெயர்கள் பல செதுக்கப் பட்டிருக்கும். துணின் போதிகை சதுரக் கற்பலகையால் இயன்றது. கோவிற் சுவர்களின் மீது சித்திர வேலை காணப்படும். கோவில் நடுவில் இறையகம் (கர்ப்பக் கிருகம்) இருக்கும். அதன் இரு புறங்களிலும் வாயிற் காவலர் (துவாரபாலகர்) உருவங்கள் அமைந்திருக்கும். அக்காவலர் பாகை உடையவர். அவர்தம் வலக்கை இடக்கை மீது இருக்கும். இடக்கைஒருதடியைப் பிடித்திருக்கும். அக் காவலர் தடிமீது முன்புறம் சிறிது சாய்ந்த படி பார்பவரை அடிக்க முயல்பவரைப்போலக் காணப்படுவர். கோவிற்கவர்கள் மீது புராணக் கதைகளைக் குறிக்கும் அழகிய சிலைகள் செதுக்கப் பட்டிருக்கும். கோவிற் சுவராகிய பாறையிலேயே (பெருமாள் கோவிலாயின்) விஷ்ணு வடிவம் செதுக்கப்பட்டிருக்கும். இக் கோவில்கள் பலவற்றில் மகேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இருக்கும். அவை வடமொழியிலும் தென்மொழியிலும் பொறிக்கப்பட்டு இருக்கும்.

(1) பல்லாவரம் குகைக்கோயில்

சென்னைக்கடுத்த பல்லாவரம் என்னும் புகைவண்டி நிலையத்துக்கு எதிரே பல குன்றுகள் லாடம் போன்ற அமைப்பில் இருக்கின்றன. அவற்றின் இடையே பல சிற்றுர்கள் இருக்கின்றன. அவற்றுட்பெரியது ‘ஜமீன் பல்லாவரம்’ என்பது. அந்த ஊரில் உள்ள குன்றில் இன்று முஸ்லீம் தொழுகை இடமாக அமைந்துள்ள மண்டபமே மகேந்திரவர்மன் அமைத்த குகைக்கோவில் ஆகும். இது

மலைச் சரிவில் குடையப்பட்டுள்ளது. ஏறக்குறைய 24 அடி நீளமும் 12 அடி அகலமும் உள்ளது; 5 கற்றுண்களை உடையது; முன் மண்டபத்திற்குள் 5 சிறிய உள் அறைகள் உள்ளன.அவ்வறைகளில் சிலைகள் வைக்க மேடைகள் இருக்கின்றன. அங்கு ஐந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தனவாதல் வேண்டும். இப்பொழுது நடு அறையுள் முஸ்லிம் ‘பீலி’ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இரு பக்க அறைகள் வெறுமையாக இருக்கின்றன. கடைசிப் பக்க அறைகள் இரண்டும் கதவு அமைந்து பூட்டப்பட்டுள்ளன. குகைக்கோயில் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டுள்ளது. மேல் விட்டம் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆயின், இன்று அவை படிக்க இயலாத நிலையில் சுண்ணாம்பு படிந்துள்ளன. கற்றுண்கள் மேலே குறிக்கப்பட்ட அளவுள்ளன. இக் குகைக் கோயிலில் உள்ள ஐந்து உள் அறைகளை மகேந்திரன் காலத்துச் சிலைகள் அங்கு இல்லாத பிற்காலத்திற் கண்ட பல்லவபுர மக்கள், உண்மை அறியாது இக் கோவிற்குப் ‘பஞ்ச பாண்டவர் கோவில்’ என்று பெயரிட்டனர். அப்பெயரே இன்றளவும் வழங்கி வருகின்றது. கல்வெட்டுகளில் மகேந்திரன் விருதுப் பெயர்கள் வடமொழயிலும் தெலுங்கிலும் உள்ளன.

(2) பல்லவபுரம்

இக் குகைக் கோவிலுக்கு எதிரே சுற்றிலும் காணப்படும் மலைகளுக்கு இடையில் பழைய பல்லவபுரம் இருந்திருக்க வேண்டும். தெருக்களின் பழையபெயர்களும், சிதைந்த பல கோவில்களின் காட்சியும், பல தெருக்கள் ஆங்காங்கே சிதைந்து இருந்தாலும், தோண்டும் இடங்களில் எல்லாம் உறை கிணறுகளும் மட்டாண்டச் சிதைவுகளும் பழங்காலத் தாழிகளும் இன்ன பிறவும் கிடைத்ததும், மலைகட்கு இடையே அமைந்த இப் பெருவெளி மகேந்திரன் காலத்தில் இயற்கை அரண் கொண்டமுதல்தர நகரமாக இருந்திருத்தல் வேண்டும் - பல்லவனால் அமைந்தமையின் பல்லவபுரம் எனப் பெயர் பெற்றதாதல் வேண்டும் என்னும் செய்திகளைநன்கு உணர்த்தும்.'பல்லவபுரம் என்னும் பெயர் இன்று

‘பல்லாவரம்’ எனவும் லால்குடி தாலுகவில் உள்ள பல்லவபுரம் ‘பல்லவரம்’ எனவும் வழங்குகின்றன.

(3) வல்லம்

வல்லம் என்பது செங்கற்பட்டிற்குக் கிழக்கே திருக்கழுக் குன்றத்திற்குப் போகும் சாலையில் இரண்டு கல் தொலைவில் உள்ளது. அங்கு ஒரு சிறிய குன்று இருக்கிறது. அக் குன்றில் மூன்று குகைகள் இருக்கின்றன. நடுக்குகை பெரியது. அதன் வாயில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுத் தமிழில் உள்ளது. இது.

“பகாப்பிடுகு லளிதாங்குரன்

சத்துரு மல்லன் குணபரன்

மயேந்திரப் போத்தரசன் அடியான்

வயந்தப்பிரிஅரசர் மகன் கந்தசேனன்

செய்வித்த தேவ குலம்”

என்பது.

அஃதாவது, ‘மகேந்திரனதுசிற்றரசனான வசந்தப்பிரியன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில்’ என்பது பொருள். அதனால், இக் கோவில் ‘வசந்தேசுவரம்’ எனப் பட்டது. இது சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்பக்கத்தில் பிள்ளையார் சிலையும் இருக்கின்றன. உள்ளறையில் லிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கம் வட்ட வடிவினது. உள்ளறையின் இருபக்கங்களிலும் வாயிற் காவலர் நிற்கின்றனர். அவர்கள் நேரே பார்க்கின்றனர். கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன. அவர் தலையில் இரண்டு கொம்புகள் இருக்கின்றன. அவர் கைகள் தடிமீது பொருந்தி இருக்கின்றன.

(4) மாமண்டூர்

இது கச்சிக்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஒரே சிறிய குன்றில் நான்கு கோவில்கள் உள்ளன.

அவற்றில் மாமண்டூர்ச்சிற்றுரை நோக்கியுள்ள இரண்டு குகைகளில் ஒன்று மகேந்திரன் கல்வெட்டைப் பெற்றுள்ளது. அஃது இவன் புகழைப் பலவாக விரித்துக் கூறுகின்றது. அக்கோவில் தூண்களும், அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மகேந்திரவாடியில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்துள்ளன. உள்ளறையில் சிலை இருந்திருத்தல் வேண்டும். இங்கும் ஓர் ஏரி மகேந்திரனால் வெட்டப்பட்டது.

(5) மகேந்திரவாடி

இவ்வூர் அரக்கோணத்திற்கு அணிந்தாயுள்ள சோழ சிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்றுகல் தொலைவில் உள்ளது. ஊருக்குக் கிழக்கே உள்ள வெளியில் ஒரு குன்று இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு சிறிய குகைக்கோவில் இருக்கின்றது. இக் கோவில் வல்லத்துக் கோவிலைப் போன்றே காணப்படுகின்றது. தூண் நடுவில் பட்டயங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களால் அழகு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டில் அரசன் குணபரன் எனப்பட்டுள்ளான். கல்வெட்டுப் பகுதி ‘கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பின் கீழ்க் காண்க. இது பெருமாள் கோவில்: ‘மகேந்திர விஷ்ணு கிரஹம்’ என்னும் பெயருடையது. இங்கிருந்த ஏரி மகேந்திரன் வெட்டியதாகும்.

(6) தளவானூர்

இது தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ளது; ‘பேரணி’ என்னும் புகைவண்டி நிலையத்துக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே, ‘பஞ்ச பாண்டவர் மலை’ இருக்கின்றது. அதன் தென் பக்கத்தில் மகேந்திரன் குடைவித்த கோவில் இருக்கிறது. அது “சத்துரு மல்லேஸ்வராலயம்’ என்னும் பெயர் கொண்டது. அக்கோவிலின் உள்ளறை குகைவாயிலை நோக்காது இடப்புறமாக இருக்கின்றது. அஃதாவது குகை தெற்கு முகமாக இருக்கிறது; உள்ளறை கிழக்கு நோக்கி

இருக்கிறது. இடப்புறமுள்ள வாயில் காவலர் வணக்கம் தெரிவிப்பவர் போல ஒரு கையைத் தலைக்குச் சரியாகத் தூக்கி நிற்கின்றனர். வலப்புறக் காவலர் தடிமீது கைவைத்து நிற்கின்றனர். உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது.

துரண்கள் மகேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. தூண்கள்மீது ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அது ‘திருவாசி’ எனப்படும். அஃது இருபக்கங்களிலும் உள்ள மகர மீன்களின் வாய்களிலிருந்து கிளம்பி நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம் மேடைமீது சிறிய இசைவாணர் (கந்தவர்வர்) இருக்கின்றனர்; மகரமீன்கள் கழுத்துமீதும் இசைவாணர் இருக்கின்றனர். திருவாசியில் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. அவற்றால் அஃது ‘இரட்டைத் திருவாசி’ எனப்படும். இங்குள்ள கல்வெட்டில் ஒரு பகுதி தமிழ்ப் பாட்டு; மற்றது வடமொழிப் பாட்டு. கோவில் உள்ள இடம் அக் காலத்தில் ‘வெண்பட்டு’ எனப்பட்டது போலும்!

(7) சீயமங்கலம்

இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் வந்தவாசிக் கூற்றத்தில் தேசூருக்கு ஒரு கல்தெற்கே இருக்கின்றது. இது சிம்ம மங்கலம், அஃதாவது சிம்மவிஷ்ணு ‘சதுர்வேதி மங்கலம்’ என்னும் பெயர் பெற்றிருந்திருக்க வேண்டும். அது மருவிச் ‘சீயமங்கலம்’ ஆயிற்றென்னலாம். இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் இருக்கிறது. இங்குள்ள தூணில், “அவனிபாஜனப் பல்லவேஸ்வரம் என்னும் இக் கோவில், லளிதாங்குரன் என்னும் காவலனால் குடையப்பட்டது,” என்னும் கல்வெட்டுக் காணப்படுகிறது. உள்ளறைலிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் இருப்பனபோன்றே அமைந்துள்ளன. இக் குகையின் இரு பக்கங்களிலும் சில சிலைகள் காணப்படுகின்றன. அவை இருக்கும் மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

(8) மண்டபப்பட்டு

இது புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. கல்வெட்டு குகைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவே, ‘கல், மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல் பல்லவன் கோவில் அமைத்தான் என்பதை உணர்த்தும் கல்வெட்டாகும். எனவே, இக் கோவிலே மகேந்திரன் அமைத்த முதல் கோவிலாக இருக்கலாம்.

இக் கோவிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. அவை பிரமன், திருமால், சிவன் என்னும் மூவர்க்கும் உரியன. காவலர் தடிகளில் பாம்புகள் சுற்றிக் கொண்டிருப்பதாகச் செய்துள்ளது கவனித்தற்குரியது.

(9) திருச்சி மலைக்கோவில்

திருச்சிராப்பள்ளிக் குன்றின் நடுவில் குடைந்து அமைத்த சிவன் கோவில் சிறந்த வேலைப்பாடு கொண்டதாகும். இதன் மேல்புறச் சுவரில் ஏழடிச் சதுரமுள்ள இடத்தில் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பதுமைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நடுவணது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிற்கும் நிலையும் காணத்தக்கவை. கங்கை அணிந்த சிவபெருமானே எதிரில் நிற்பது போன்ற காட்சியை அச் சிலை அளித்து நிற்றல் வியப்பினும் வியப்பே! அச் சிலை, சிவபிரானது சடையிலிருந்து விழும் கங்கையை வலக்கையில் தாங்கியும் பூணுலாகப் போட்டுள்ள பாம்பின் தலையைப் பிறிதொரு வலக் கையால் பிடித்தும், கண்மணிமாலையை இடக்கை ஒன்றில் பிடித்தும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் நிற்கின்ற காட்சி கண்டுகளிக்கத் தக்கதாகும். இச்சிலையின்வலக்காலின்கீழ் முயலகனைக்குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று இருக்கிறது. சிவனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குதல் போலவும், மேலே யாழோர் (கந்தர்வர்) இருவரும் சிறிய மனிதன் ஒருவனும் மிதத்தல் போலவும் சிலைகள்

செதுக்கப்பட்டுள்ளன. இச் சிற்றுளி வேலைப்பாட்டைக் கண்டு வியவாத ஆராய்ச்சி அறிஞர் இல்லை. “இக் கோவிலை ‘சத்யசந்தன், சத்ருமல்லன், குணபரன்’ என்னும் விருதுகள் பூண்ட அரசன் அமைத்தான்.” என்று இங்குள்ள கல்வெட்டுக் குறிக்கிறது.

(10) நாமக்கல் மலைக்கோவில்

இங்குள்ள அரங்கநாதன் மலைக்கோவில் மகேந்திரன் அமைத்தாகும். இங்குள்ள பள்ளிகொண்டபெருமான் உருவம் சிறந்த செதுக்கு வேலை வாய்ந்தது. இதுபோன்ற வேலைப் பாடு உலகில் எங்குமே இல்லை என்னலாம். கோவிலும் அற்புத அமைப்புப் பெற்றது. முன் மண்டபத்துக்கு வெளியிடம் மூங்கிலால் செய்த தாழ்வாரத்தைப் போல மலையைக்குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகையும் வேலைத்திறத்தையும் நேரிற் காண்பவரே உணர்வர் எழுத்தால் உணர்தலோ - உணர்த்தலோ இயலாது! இயலாது!! கோவிற் சுவர்களில் திருமால் அவதாரக் கதைகள் அழகொழுகும் சிலைகள் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன.[10]

இதுகாறும் கூறிவந்த செய்திகளால் கீழ் வருவனவற்றைச் சுருக்கமாக உணரலாம்:

1. உள்ளறையில் லிங்கம் வைத்த கோவில்கள் பல. அந்த லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டை வடிவின அல்ல.

2. வாயிற்காவலர் நேர்ப்பார்வை உடையவர். அவர் கையை உயர்த்தி வணக்கம் தெரிவிப்பவராக அல்லது தடிமீது கைவைத்தவராக இருப்பர்.

3. தூண்கள் எல்லா இடங்களிலும் சதுரத் தூண்களாகவே இருக்கின்றன. கீழும் மேலும் நான்கு முகங்களையும் இடையில் எட்டு முகங்களையும் உடையன. சதுரப் பகுதிகள் தாமரை மலர்களைக் கொண்டிருக்கும்.

4. மாடங்களில் மேல் உள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி'யே ஆகும்.

5. பெரும்பாலும் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படும்; அரசன் பட்டப் பெயர்களும் பிற செய்திகளும் பொறிக்கப் பட்டிருக்கும்.

மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும்

மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் பழைமையான அமைப்பு உடையவை ஆதிவராகர் கோவில் ஆகும். அதனைச் சிம்மவிஷ்ணு அமைத்தான் என்று பலர் கூறுவர். அதனை அமைத்தவன் மகேந்திரவர்மனே என்பர் சிலர் அதற்கேற்ற காரணமுங் கூறுவர்.[11] மகாபலிபுரத்தில் உள்ள கோவில்கள் நரசிம்மன் அமைத்தவையே என்பர் பலர். ஆயினும், அவற்றை நன்கு சோதித்துப் பார்ப்பின், தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை நன்குணரலாம். “தருமராசர் மண்டபம் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் மண்டபப் பட்டில் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த கோவிலைப் போன்ற வேலைமுறை கொண்டதாகக் காண்கிறது. முன்னதில், பின்சுவரில் வெட்டப்பட்டுள்ள (பிரமன், விஷ்ணு, சிவன் இவர்க்காக) மூன்று உள்ளிடங்கள் இருத்தல் போலவே, தருமராசர் மண்டபத்திலும் இருத்தல் கவனித்தற்குரியது. கொடிக்கால் மண்டபம் மகேந்திரவாடியில் உள்ள பெருமாள் கோவிலின் அளவு, வேலைப்பாடு முதலியவற்றைக் கொண்டதாகும். வாயிற்காவலர் நிலையிற்றான் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மகேந்திரவாடியில் உள்ள வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; நின்ற நிலையினர்; முன்புறம் நோக்கியவர். கொடிக்கால் மண்டபத்தில் உள்ள வாயிற் காவலர் பெண்கள்; என்னை? அக் கோவில் துர்க்கையின் கோவிலாதலால் என்க. எனினும், அப் பெண்களின் பிற அமைப்புகள் (ஆண்) வாயிற்காவலர் அமைப்புகளையே ஒத்துள்ளன. ஒருவர் கையில் தடியும், மற்றவர் கையில் வில்லும் இருக்கின்றன. ஆனால் இருவரும் முன்புறம் நோக்கியே இருத்தல் கவனித்தற்குரியது. பிற்காலப் பல்லவர் அமைத்த வாயிற்காவலர் உருவங்கள் பக்கங்களில் பார்வையைச் செலுத்தியபடி இருத்தலைக் காணலாம். கொடிக்கால் மண்டபக் கூரையைத் தாங்கியுள்ள கற்றுண்கள் இரண்டும் மகேந்திரவர்மன் காலத்து வேலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இறை உறை உட்கோவிலின் தரை, மண்டபத்தரையை விட இரண்டடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளை உடையது. முதற் படிக்கட்டு மகேந்திரவாடியில் உள்ள கோவிற் படிக்கட்டைப்போல அரைமதி அளவினதாக இருக்கின்றது. இவ்விரண்டு கோவில்களின் எல்லாக் குறிப்புக்களையும் ஒத்திட்டுப் பார்ப்பின், இவை இரண்டும் ஒரே அரசன் காலத்தில் குறிப்பிட்ட கல் தச்சரைக் கொண்டே அமைக்கப் பட்டவை என்பது தெளிவாகும்.[12]

“மகாபலிபுரத்தில் மகேந்திரன் காலத்துக் கோவில்களே இல்லை. எல்லாம் அவன் மகனான நரசிம்மவர்மன் என்னும் மகாமல்லன் அமைத்தவையே என்று ஆராய்ச்சியாளர் பலர் நன்கு ஆராயாது கூறிவிட்டனர். பல்லாவரத்திலிருந்து புதுக்கோட்டை வரை பல இடங்களில் குகைக் கோவில்களை அமைத்த மகேந்திரவர்மன், காஞ்சிக்கு அண்மையில் உள்ள மகாபலிபுரத்தைக் கவனியாது இருந்திருத்தல் முடியுமா என்பதை அவர்கள் எண்ணிப்பார்த்திலர். இதுகாறும் கூறிய ஒப்புமைச் செய்திகளால், தருமராசர் மண்டபமும் கொடிக்கால் மண்டபமும் மகேந்திரன் காலத்தன என்பதை நன்குணரலாம் அன்றோ?[13]

இக் கோவில்கட்கு மூலம்

கிருஷ்ணையாற்றங் கரையில் விதுகொண்டாவைத் தலை நகரமாகக் கொண்டு கி.பி. 450-620 வரை ஆண்டவிஷ்ணு குண்டர் என்னும் மரபினர் பெசவாடா, மொகல்ராசபுரம், உண்டவல்லி, சித்தநகரம் முதலிய இடங்களில் குகைக்கோவில்களை அமைத்தனர். அவர்கள் நாடு கி.பி. 610க்குப் பிறகு சாளுக்கியர் ஆட்சிக்குட்பட்டதால், அவர் தம் கோவில்கள் சிலவே ஆயின. அக் கோவில்களை மகேந்திரவர்மன் பார்த்து மகிழ்ந்தவன் ஆதலின், அவற்றைப் போலவே தன் நாட்டிலும் பல குகைக் கோவில்களை அமைத்தான்.[14] திருச்சிராப்பள்ளி, வல்லம், மாமண்டூர் முதலிய இடங்களில் உள்ள குகைக் கோவில்கள் உண்டவல்லியில் உள்ள குகைக் கோவில்களைப் போலவே அமைக்கப்பட்டவையாகும்.[15] கிருஷ்ணையாற்றங்கரையில் உள்ள குகைக்கோவில்களைப் பார்த்த பிறகு மகேந்திரன் அமைத்த முதல் குகைக்கோவில்- சுண்ணாம்பு, செங்கல் முதலியன இல்லாமல் அமைத்ததமிழ் நாட்டு முதற் குகைக் கோவில் - மண்டபப் பட்டில் உள்ள கோவிலே ஆகும். இவனுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தில் கற்கோவில்கள் இல்லை என்பது இவனது மண்டபப்பட்டுக் கல்வெட்டால் நன்கறியலாம். சாருதேவி காலத்துப் பெருமாள் கோவிலும், இரண்டாம் கந்தவர்மன் காலத்துத் திருக்கழுக்குன்றக் கோவிலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை. ஆதலால், அவை அழிந்துபோயின. என்றும் அழியாமல் இருக்கத்தக்க நிலையில் கோவில்களைக் கற்களைக் கொண்டு- பாறைகளைக் கொண்டு-மலைகளைக் குடைந்து அமைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கே உரியதாகும். தமிழ்நாட்டு ஒவிய சிற்பக் கலைகட்குக் கற்கள் வாயிலாகப் புத்துயிர் தந்து நிலைக்கச் செய்தவன் இப்பெருந்தகையே ஆவன்.[16]

மகேந்திரன் கல்வெட்டுகள்

இப்பேரரசன் கல்வெட்டுகளுள் பெரும்பாலன இவன் அமைத்த கோவில்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டே இவன் வரலாறு, சமயம், திருப்பணி முதலியவைபற்றி அறிய இடம் உண்டாகிறது. ஆதலின் அவற்றுட் சில காட்டாக ஈண்டுத்தருதும்:

(1) திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டுகள்:

(1) யாற்றை விரும்பும் இறைவன்-தோட்டங்களையும் விரும்பத்தக்க குணங்களையும் உடைய காவிரி யாற்றைக் கண்டு, அவள்மீது காதல் கொள்வான் என்று மலையரையன் மகள் ஐயமுற்றுத் தான் பிறந்தகத்தை விட்டு, இம் மலைமீது நின்று கொண்டு. ‘இவயாறு பல்லவனது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

(2) குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன் ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு (இக் கோவிலில் அவன் வைத்துப் பூசித்த) லிங்கத்தால் உலகெலாம் பரவட்டும்.

(2) சீயமங்கலக் கல்வெட்டு: அவனிபாஜன பல்லவேசுரம் என்னும் இக் கோவிலை லளிதாங்குர மன்னன் தன் உள்ளத்தைப் பேழையாகவும் நன்மையை அதனுள் வைக்கும் அணியாகவும் கொண்டு அமைத்தான்.

(3) மகேந்திரவாடிக் கல்வெட்டு: நல்லவர் அனைவரும் மிகப் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதும் ஆகிய அழகிய ‘மகேந்திர விஷ்ணுக்ருகம்’ என்னும் முராரியின் பெருங்கற்கோவிலை மகேந்திரனது பேரூரில் மகேந்திர தடாகத்தின் கரையில் பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்.[17]

மகேந்திரன் பட்டப் பெயர்கள்

இப் பெருந்தகைக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. அவற்றுள் சில வருமாறு: குணபரன், அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்திய சந்தன், விசித்திர சித்தன்,[18] நரேந்திரன், சேத்தகாரி,[19] போத்தரையன், சத்துரு மல்லன், மகாப்பிடுகு[20] நயபரன், விக்ரமன், கலகப் (போர்) பிரியன், மத்தவிலாசன், அநித்தியராகன்[21] சங்கீரண சாதி, நரவாகனன். உதாரசித்தன், பிரகிருதிப் பிரியன், அலுப்தகாமன்.[22] நிரபேக்ஷன் (ஆசையற்றவன்) முதலியன. பல தெலுங்குப் பட்டங்கள் இருத்தலையும் குண்டுர்க் கோட்டத்தில் ‘சேஜர்லா’ என்னும் இடத்தில் இவன் கல்வெட்டுக் காணப்படலையும் நோக்க, இவன் கிருஷ்ணையாறுவரை ஆண்ட பேரரசன் என்பது நன்கு விளங்குகிறது.

மகேந்திரன் வளர்த்த கலைகள்

மகேந்திரவர்மன் நாகரிகக் கலைகளான இசை, நடனம், சிற்பம், ஒவியம், நாடகம் இவற்றை நலமுற வளர்த்தவன், புதுக்கோட்டைச் சீமையில் உள்ள இவன்கல்வெட்டுகளே இவற்றை விளக்கவல்லன. சித்தன்னவாசல் குகைக் கோவில் இவன் காலத்தது. அதில் உள்ள காரைச் சுவர்க்கோலங்கள் (Farcoes) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டு ஓவியக் கலையை உலகிற்கு உணர்த்தும் ஆற்றல் பெற்றுள்ளன. அவற்றைக்கண்டு வியவாத ஆராய்ச்சியாளர் இல்லை; ஒவியத்திறவோர் (நிபுணர்) இல்லை. அங்கு ஓவியக் கலையில் நடனக்கலையை உணர்த்தலே பின்னும் சிறந்ததாகும். யாழோர் (கந்தருவ) நடனமாதர் இருவர் நடிப்பைக் குறிக்கும் ஓவியங்களே கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பனவாகும். அக் கோவில் சமணர் கோவிலாதலின் தீர்த்தங்கரர் உருவச் சிலைகள் காண்கின்றன. அவற்றால் அக் காலச் சிற்பக்கலை உணர்வை நன்குணரலாம். இங்ஙனம் சித்தன்னவாசல் குகைக்கோவில் ஓவியம், சிற்பம், நடனம் என்னும் மூன்று சிறந்த கலைகளைத் தெளிவாக உணர்த்தும்

கலைக்கூடமாக விளங்குகிறது. இதன் விளக்கம் “இசையும் நடனமும்,” “ஒவியமும் சிற்பமும்” என்னும் பகுதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக் காண்க.

நடனத்தில் விருப்புடையவர் இசையில் விருப்புடையராகவே இருப்பர் என்பது உறுதி. ஆதலின், மகேந்திரவர்மன் இசைநுட்பம் உணர்ந்தவனாதல் வேண்டும். இதற்குத் தக்க சான்று புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்த குடுமியா மலையில் உள்ள கல்வெட்டே ஆகும். ‘இந்தக் கல்வெட்டு இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியார் என்பவர் மாணவனான அரசன் கட்டளைப்படி வெட்டப்பட்டது.’ என்பதே அக் கல்வெட்டின், சாரம், மாமண்டூரில் உள்ள ஒரு கல்வெட்டில் உள்ள புகழ்ச்சி மொழிகளையும் அதில் சுரம் (ஸ்வரம்) வர்ணம் இவற்றை வகுத்த வான்மீகியாரைப் பற்றிக் காணப்படும் குறிப்பையும், மத்தவிலாசப் பிரகசனம் பற்றிய குறிப்பையும், குடுமியாமலைக் கல்வெட்டிற்கும் திருச்சிராப்பள்ளியில் உள்ள குகைக் கோவில் கல்வெட்டிற்கும் உள்ள ஒருமைப்பாட்டையும் கண்டு வியந்த ஆராய்ச்சியாளர், ‘குடுமியாமலைக் கல்வெட்டு மகேந்திரன் கட்டளையாற்றான் வெட்டப்பட்டது. அவன் இசையில் வல்லவனாக இருத்தல் வேண்டும்’ என்று அழுத்தமாகக்[23] கருதுகின்றனர்.

மகேந்திரன்-நாலாசிரியன்

மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்பட்ட மத்தவிலாசப் பிரகசனம்[24] என்னும் நூல் சில ஆண்டுகட்கு முன்னரே திருவிதாங்கோட்டில்[25] வெளிடப்பட்டது. இந்நூல் வடமொழியில் வரையப்பட்டது. மகேந்திரவர்மன் வடமொழிப் புலவன் என்பதை இந்நூல் மெய்ப்பிக்கிறது. இது, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. காபாலிக சமயத்தவன் ஒருவன் ஒழுக்கம் கெட்ட காபாலினி[26] ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையில் இருந்த காபாலத்தை (பிச்சைப் பாத்திரம்) ஒரு நாய் கவர்ந்து செல்லல், அதனை அறியாத காபாலிகள் அவ்வழியே சென்ற பெளத்த துறவியை மறித்துப் பூசல் இடல், இப் பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபத சமயத்தான் ஒருவனைக் காபாலிகள் அழைத்தல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து காபாலத்தைப் பெறுதல் ஆகிய செய்திகளை விளங்கக் கூறும் சிறுநூலே மத்தவிலாசப் பிரகசனம் என்பது. இந்நூலில் மகேந்திரன் சிறப்பும்-சத்ரு மல்லன், அவநிபாஜனன், குணபரன், மத்த விலாசன் என்னும் விருதுப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் அறியப்படுவன

மகேந்திரவர்மன் காலத்தில் பெளத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்த நிலையை இச் சிறு நூல் நன்கு விளக்குகிறது. (1) பிராமணனுக்குப் பூணுல் எத்துணைச் சிறந்ததோ அத்துணைச் சிறந்தது காபாலிகனுக்குக் காபாலாம். அவன் அதனை இழந்தால் குறித்த காலத்திற்குள் அதனை அடைந்து தீரவேண்டும் என்பது விதி. அவன் தன் உடம்பெங்கும் சாம்பல் பூசிப் பார்வைக்கு அருவருப்பாக இருப்பான், மண்டை ஒட்டில் மதுவை அருந்துவான். அவன் மாட்டுக் கொம்பொன்றையும் ஏந்தித் திரிவான்; வழிபாட்டின் போது அதனை ஊதுவான். அதனில் நீர் அருந்துவான். காபாலிக ஆடவர் காபாலிகப் பெண்டிருடன் கள்ளங் கவடில்லாமல் பழகி வந்தனர். (2) பெளத்த துறவிகள் ஊன் உண்டுவந்தார்கள்; பல பெளத்தப் பள்ளிகளை (விகாரங்களை) நடத்திக் கொண்டு இன்பமாகக் காலங்கழித்து வந்தனர்; தங்கள் சமயக் கட்டளைகளை மீறி வந்தனர்; தங்கள் குறைகளை மறைக்கவே உடலை மூடித் திரிந்தனர். அவர்கள் தலைவரான புத்தர், வேதங்கள், மகாபாரதம் இவற்றிலிருந்தே தம் சமயக் கொள்கைகளைத் திருடினார் என்பது காபாலிகள் பெளத்தர் மீது கூறும் குறைபாடு ஆகும். இச் செய்தியிலிருந்து மகேந்திரன் காலத்தில் காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன என்பது தெளிவாகிறது. இவனுக்குப் பிறப்பட்ட நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிக்கு வந்த இயூன்-சங்[27] காஞ்சியில் பல பள்ளிகள் இருந்தமைபற்றி எழுதியுள்ள குறிப்பு இத்துடன் ஒன்றுபடுதல் கவனிக்கத்தக்கது.

நால் எழுதப்பெற்ற காலம்

இந்நூலுட் சமணரைப்பற்றியும் ஓரளவு இழித்துக் கூறலால் இது, மகேந்திரன் சைவனாக மாறிய பிறகே செய்யப் பட்டதாக இருக்கலாம். திருச்சிராப்பள்ளியில் லிங்க வழிபாட்டை உயர்த்திக் கூறிய இவன்-சமணத்தை விட்டுச் சைவனாக இவன்-சைவனான பிற்காலத்தில் இதனை எழுதினான் என்பது இதனை ஒருமுறை வாசிப்பின் நன்கு விளங்கும். இவன் சமணத்தை விட்டபொழுதே பல்லவ நாட்டில் சமணம் வீழ்ச்சியுற்றது: சைவம் ஓங்கலாயிற்று. சமண பெளத்தர் பழக்க வழக்கங்கள் இழிந்த நிலைக்கு வரலாயின. அவற்றைக் கண்ட தமிழ்மக்கள் அச் சமயத் துறவிகளை வெறுக்கலாயினர். இவ்வுண்மையை அப்பர், சம்பந்தர் ஆழ்வார்கள் இவர்தம் அருட்பாடல்களில் நன்கு காணலாம். சங்ககாலத்திற் சிறப்புற்று நல்ல உரிமையோடு இருந்த சமண பெளத்த சமயங்கள், பிற்காலத்தில் அவற்றைச் சேர்ந்தவருடைய தீய பழக்க வழக்கங்களால் இழிநிலையை அடையலாயின என்பதே இதன் கருத்தாகும்.

சிறந்த குணங்கள்

மகேந்திரவர்மனைப் பற்றிய கல்வெட்டுகளிலிருந்து, ‘இவன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவன், இசைக் கலையை வல்லாரிடம் முறைப்படி பாடம் கேட்டவன் சிற்ப ஒவிய நடனக் கலைகளில் பேரார்வம் கொண்டவன். போரிற் சிறந்தவன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் செய்த மத்த விலாசத்திலிருந்து, ‘இவன் தந்தை பால் மிக்க மதிப்புடையவன்; தன் நாட்டுப் பல சமயங்களை ஆராய்ந்து அறிந்தவன். கலாவிநோதன்’ என்பவற்றை நன்கறியலாம். இவன் எச்சமயத்தில் இருப்பினும், அதனைப் பழுதற உணர்ந்தவன் என்பதற்குச் சித்தன்னவாசல் (சமணத்தைப் பற்றிய) சித்திரங்களும் திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் (சைவத்தைப் பற்றிய) கல்வெட்டும் தக்க சான்றாகும்.

* * *

↑ Vide Dr. N. Venkataramamayya’s article on “Mahendravarmanan Pulikesin II’.

↑ Epigraphia Indica, VI, p. 11 143.

↑ S.I.I. II, p.356.

↑ Heras’s “Studies in Pallava History’, pp.32-33

↑ Epigraphia Carnataca, Vol.VIII, No.35.

↑ Mysore Archaeological Report, 1923, p.83.

↑ S.I.I. Vol. I, p.29.

↑ குணபரன் - மகேந்திரவர்மன் - திருநாவுக்கரசர் புராணம், செ.146.

↑ K.A.N. Sastry’s Cholas, Vol.I p. 122.

↑ P.T. Srinivasa Iyengar’s “Pallavas’ PII,pp.9,10.

↑ Heras’s “Studies in Pallava History’, pp.71-75.

↑ Longhurst, “Archaeological Survey of India, Memoir No.33, pp.10-13.

↑ Heras’s “Studies in Pallava History’,pp.77,78.

↑ Durbruell’s “The pallavas’, p.35.

↑ R. Gopalan’s “Pallavas of Kanchi’ p.161.

↑ Heras’s “Studies in Pallava History’, p:81,82.

↑ S.I.I. vol.I, pp.29,30,40.

↑ சிற்ப ஓவியக் கலைஞன்.

↑ கோவில்கள் அமைத்தவன்.

↑ பகைவர் மேல் இடிபோலப் பாய்பவன்.

↑ நடன இசைக் கலைகளின் அறிஞன்.

↑ 'கலப்புப் பிறவியுடையவன்-தந்தை பல்லவன், தாய்தமிழ்ப் பெண் ஆக இருக்கலாம்’ என்பவர் திரு. பி.டி. சீனிவாசா ஐயங்கார் Vide his"pallavas’ part II, p.13. இது தவறு. ‘சங்கீரணம்’ என்னும் தாளவகைகளைப் புதியனவாகக் கண்டுபிடித்தவன் என்பதே இதன் பொருள்.

↑ Prof. J. “Durbrueils, “Pallavas.’ p.23, இசையைப் பற்றிப் பிற்பகுதியிற் காண்க

↑ இதன்தமிழ் மொழிபெயர்ப்பைச் ‘செந்தமிழ்ச்செல்வி'யிற் காண்க.

↑ திருவிதாங்கோடு என்பதே பழைய பெயர்.

↑ சாதவாகனர் காலத்திலும், காபாலினியர் தெலுங்க நாட்டில் இருந்தனர் & Dr. K.Gopalachari’s “Early History of the Andhra Country,’ p.123.

↑ Beal’s Records, Vol.II p.229

10. நரசிம்மவர்மன்

(கி.பி. 630 - 668)[1]

மகேந்திரவர்மனைப் போன்ற பெருவீரனாகவே அவன் மகனான நரசிம்மவர்மன் விளங்கினான். இவனது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெற்றதாகும். இவன் காலத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை: (1) வாதாபியைக் கைப்பற்றினமை, (2) இலங்கைப் படையெடுப்பு (3) கோவில்களும் கோட்டைகளும் அமைத்தமை. (4) சீனச்செலவினன் காஞ்சிக்கு வந்தமை, (5) தமிழ் நாட்டுச் சைவநிலை முதலியன.

பல்லவர்-சாளுக்கியர் போர்

(1) பட்டயக் கூற்று:- மகேந்திரவர்மனிடம் படுதோல்வியுற்ற இரண்டாம் புலிகேசி, நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். முன் போலவே புலிகேசி காஞ்சியை அண்மினான். காஞ்சிக்கு அருகில் உள்ள மணிமங்கலம் முதலிய இடங்களில் கடும்போர் நடந்தது. இப் போரைப் பற்றியும் இதன் பின்விளைவுகளைப் பற்றியும் பல்லவர் பட்டயங்களையே விரிவாகக் கூறுகின்றன. சாளுக்கியர் பட்டயங்களில் இவை ஒருவாறு குறிப்பிடப் பட்டுள்ளனவே அன்றித் தெளிவாக இல்லை.

(2) கூரம் பட்டயங்கள் கூறுவது-கீழ் மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற்போல இப் பல்லவர் மரபில் வந்தவனும் - வணங்காமுடி மன்னர்தம் முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவனும் - தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்ற வனும்-நரசிங்கப்பெருமாளே தோன்றினாற்போல வந்தவனும்-சேர. சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவனும்-பல நூறு போர்கள் புரிந்தவனும்-பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களிற் புலிகேசி தோற்று ஓடியபொழுது ‘வெற்றி’ என்னும் மொழியை அவனது முதுகாகிய பட்டயத்தின்மீது எழுதினவனும் ஆகிய நரசிம்மவர்மன்.......”[2] என்பது.

(3) உதயசந்திரமங்கலப்பட்டயங்கள் கூறுவது:'நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; அடிக்கடி வல்லப அரசனை (சாளுக்கியனை)ப் புரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடத்துப் போர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[3] என்பது.

(4) வேலூர் பாளையப் பட்டயங்கள் கூறுவது: “விஷ்ணுவைப் போன்ற புகழுடைய நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டினான்”[4] என்பது.

பல போர்கள்

முதல் இரண்டு பட்டயங்களிலும் போர் நடந்த இடங்கள் முறைப்படி குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கப்பால் வேறு இடங்களிலும் போர் நடந்துள்ளது. எனினும், முதல் மூன்றே குறிப்பிடத்தக்கவை. இம்மூன்று இடங்களில் மணிமங்கலம் ஒன்றே இன்னும் அப் பெயருடன் இருக்கிறது.அது காஞ்சிக்கு இருபது கல் தொலைவில் உள்ளது. பிற இடங்கள் இன்னவை எனக்குறிக்கக்கூட வில்லை. வைப்புமுறையை நோக்கின், காஞ்சியிலிருந்து செல்லும் ஒருவன் பரியலம். மணிமங்கலம் சூரமாரம் என்னும் ஊர்களை முறையே கடக்க வேண்டியவன் என்பது புலனாகிறது. புலிகேசி முதல் படையெடுப்பிலும்காஞ்சிவரை எதிர்ப்பின்றி வந்துவிட்டான் என்பதையும் இம் முறையும் எதிர்ப்பின்றிக் காஞ்சிவரை வந்தனன் என்பதையும் நோக்க-எதிரியைத் தம் நாட்டிற்குள் நன்கு இழுத்துப் பிறர் உதவியை அவன் பெறாதுவாறு செய்து, அவனை வளைத்து முறியடித்தலையே மகேந்திரவர்மனும் அவன் மகனான நரசிம்மவர்மனும் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது நன்கு விளங்குகிறது. சாளுக்கியசேனை நெடுந்துரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே.அந்நிலையில் புதிய பல்லவர்சேனை அவர்களை எதிர்த்து வளைத்து அழித்தலும் தோற்றோடச் செய்தலும் எளிதான செயலே ஆகும். இந் நோக்கம் கொண்டே பல்லவர் இச் சூழ்ச்சி முறையைக் கையாண்டனர் போலும் மேலும், பல்லவர் தம் நாட்டு இடங்களை நன்கறிவர். எந்த இடுக்கான இடத்தில் பகைவரை மடக்கி அடிக்கலாம் என்பதைத்தம் நாட்டிற்றான்.அவர்கள் நன்கறிதல் கூடும்.

முதலாம் விக்கிரமாதித்தன் (சாளுக்கியன்) விடுத்த கல்நூல் பட்டயங்களில், ‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப் பட்டான்’ என்பது காணப்படுகிறது. இச் செய்திக்குச் சான்று என்னை? மூவருள் ஒருவன் நரசிம்மவர்மன், மற்ற இருவரும் யாவர்? வேண்டுமாயின் அவருள் ஒருவனாகச் சிம்மவிஷ்ணு இளவலான இரண்யவர்மன் மரபினருள் ஒருவனைக் கொள்ளலாம்; அவர்கள் தெலுங்கு நாட்டில் பல்லவர் மாகாணத் தலைவராக இருந்தனராதலின்[5] என்க. மூன்றாம்.அரசன் யாவன்? இதற்கு விடை இலங்கை வரலாறு இயம்புதல் காண்க; ‘மானவன்மன்’ என்னும் இலங்கை அரசன் பகைவனால் பட்டம் இழந்து நரசிம்மனிடம் அடைக்கலம் புகுந்தான். இருவரும் மனம் ஒத்த நண்பர் ஆயினர். மானவன்மன் காஞ்சியில் இருக்கையில், புலிகேசி காஞ்சிமீது படையெடுத்தான். உடனே நரசிம்மவர்மன் மானவன்மனைக் காஞ்சியில் விட்டுப் போர்க்களம் சென்றான் ஆயினும், தன்னைக் காத்துவரும் பேரரசன் தனியே போர்க்களம் சென்று போர்புரிதலைக் காணப்பெறாத மானவன்மன். பெரும்படையுட்ன் சென்று நரசிம்மனோடு சேர்ந்து புலிகேசியைத் தாக்கினாள்; அவனைத் தோற்கடிப்பதில் பல்லவனுக்குப் பேருதவி புரிந்தான்.”[6]சாளுக்கியன் ஒட்டம்

“புலிகேசியின் முதுகாகிய தகட்டில் நரசிம்மவர்மன் வெற்றி என்பதைப் பொறித்தான்.’ என்று கூரம் பட்டயங்கள் கூறுதல் கவனிக்கத்தக்கது. “பல்லவர் படைக்கு முன் நிற்க முடியாமல் புலிகேசி முதுகு காட்டி ஓடினான்” என்பதே இதன் பொருள். முதற்போர் பரியலம் என்னும் இடத்தில் நடந்தது. புலிகேசி பின்வாங்கினான்; பிறகு இரண்டாம் போர் மணிமங்கலம் என்னும் இடத்தில் நடந்தது; புலிகேசி மேலும் பின்வாங்கினான் இறுதிப் போர் சூரமாரத்தில் நடந்தது; பின் சாளுக்கியன் ஆற்றானாய் ஒடலானான். பல்லவன் அவனை விடாது துரத்திச் சென்றான். அப்போது வழியில் பல இடங்களில் சிறு போர்கள் நடந்தன: பின்னர்ச் சாளுக்கியன் திரும்பிப்பாராது ஓடியதால் பல்லவர்சேனை அவன் படையைத்துரத்திச்சென்றே, சாளுக்கியவன் தலைநகரமான வாதாபியுள் நுழைந்து விட்டது.

வாதாபி கொண்டது

வாதாபி நகரம் நரசிம்மவர்மன் கைப்பட்டது. வாதாபி என்னும் நகரத்தை அழித்த காரணம் பற்றியே நரசிம்மவர்மன் ‘வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர் போன்றவன்’ என்று கூறப்பட்டான். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன். எனவே, சாளுக்கியன் மீதிருந்த சினத்தை நரசிம்மவர்மன் அவனது தலைநகரை அழித்துத் தீர்த்துக் கொண்டான் என்பது தெரிகிறது. நகரத்தின் பல இடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் வருவாய் இன்றித் தத்தளித்தன; பல அழகிய பழைய கட்டடங்கள் இன்று இருத்தலால், நகரம் முழுவதும் ,ாழாக்கப்படவில்லை என்பது தெளிவு. பல்லவன் வாதாபி கொண்ட காலம் கி.பி. 642 என்பர் ஆராய்ச்சியாளர். அந் நகரம் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பல்லவர்கையில் இருந்ததென்னலாம் (கி.பி. 642-655).[7] வாதாபியில் தக்கிண-ஈரப்பன் கோவிலுக்கருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அது சிதைந்து இருத்தலால், வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்னும் சொல்லுமே படிக்கக் கூடியனவாக உள்ளன. நரசிம்மவர்மன்தன் வெற்றியை அத்துண்மீது பொறித்தனன் போலும்![8]

சேனைத் தலைவர் - பரஞ்சோதியார்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனது உயர் அலுவலாளராக இருந்த சேக்கிழார் பெருமான். இவ்வாதாபி கொண்ட செய்தியைத் தாம் கேட்டு அறிந்தவரை கூறியுள்ளது காண்க:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்

தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்

பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்

இன்னனஎண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”[9]

இதனால், (1) நரசிம்மவர்மனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான, சிறுத்தொண்டர் என்ற பரஞ்சோதியார் என்பதும், (2) அவரே வாதாபியுள் நுழைந்து சாளுக்கியருடைய நகரைச் சூறை ஆடி யானைகளைச் செலுத்தி நகரைப் பாழாக்கி, சாளுக்கியருடைய கரிகளையும் பரிகளையும் செல்வத்தையும் கவர்ந்து சென்று நரசிம்மவர்மன் முன் வைத்தார் என்பதும் தெளிவாதல் காண்க. இச் செய்தியால், நரசிம்மவர்மன் மணிமங்கலம் முதலிய இடங்களில் சாளுக்கியனை வென்ற பிறகு காஞ்சிக்குத் திரும்பிவிட்டான் என்பது தெளிவாகிறது.அவன் சென்ற பிறகு, பரஞ்சோதியார் பல்லவ சேனையுடன் புலிகேசியின் படையைத் தொடர்ந்துசென்று, ஆங்காங்கு நடந்த சிறியபோர்களில் தோற்கடித்து, இறுதியில் வாதாபியுள் நுழைந்தார்; பல்லவன் ஆணைப்படி, கற்கம்பத்தில் அவனது பெருவெற்றியைக் குறித்து மீண்டார் என்பனவற்றை நன்குணரலாம்.

சாளுக்கியர் பட்டயச்சான்று

இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனது கர்நூல் பட்டயம், “இரண்டாம் புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான். வாதாபியில் இருந்த கோவில்கள் வருவாயின்றித் தவித்தன.....” என்று கூறுகின்றது. இந்த விக்கிரமாதித்தன் மகனான விநயாதித்தனது சோரப்-பட்டயம், “சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்,”[10] என்று முறையிடு கின்றது. இவ்விரண்டு பட்டயங்களாலும், வாதாபி கொண்ட செயல் பிற்பட்ட சாளுக்கியரை எந்த அளவு வருந்தச்செய்துள்ளது என்பதை நன்குணரலாம். -

வாதாபி கொண்டவன்

புலிகேசி, வாதாபி படையெடுப்புக்குப்பின் என்ன ஆயினன் என்பது தெரியவில்லை. அவனைப்பற்றிய பிற்செய்தி ஒன்றுமே தெரிய வழி இல்லை ஆதலின், அவன் போரில் இறந்தனனோ என்பது நினைக்கவேண்டுவதாக இருக்கிறது. இங்ஙனம் சாளுக்கியர் தலைநகரம் நாசமுற-சாளுக்கியர் பிற்காலத்திலும் தன் செயலை எண்ணி எண்ணி வருந்தச்செய்த தனது வீரச் செயலை நினைத்து, நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டவன்’[11] என்று அழைத்துக் கொண்டான்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ்நாட்டில் தம்மாட்சியோடு இருந்தவர் பாண்டியரே ஆவர்; அவருள் நான்காம் அரசனான அரிகேசரி பரங்குசன் என்ற நெடுமாறன் கி.பி. 640 முதல் 680 வரை ஆண்டுவந்தான். இவன் சோரையும் பிற தென்னாட்டுக் குறுநில மன்னரையும் அடக்கித் தெற்கே பேரரசனாக இருந்தவன். இவன் சோழனிடம் பெண்கொண்டிருந்தான்; கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் இவனுக்கு உட்பட்டிருந்தனர். சுருங்கக் கூறின், இவன் தெற்கே சேர,சோழ, பாண்டியர், களப்பிரர் தலைவன் எனக் கூறலாம்.

பட்டயங்கள்

இவன் ‘சங்கரமங்கை’ என்ற இடத்தில் பல்லவனைப் புறங்கண்டான்’ என்று சின்னமனூர்ப் பட்டயம் கூறுகின்றது. ‘நரசிம்மவர்மன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான்’ என்று கூரம் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டு கூற்றுக்களையும் நோக்க நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர் - பாண்டியர் போர் நடந்ததென்றே கருதுதல் வேண்டும்.

போர் நடத்த காலம்

ஆயின், இப்போர் எப்பொழுது நடைபெற்றது? பல்லவன் இரண்டாம் புலிகேசியைப் போரிட்டுத் துரத்திச் சென்ற காலத்திற் நான் இது நடைபெற்றதாகல் வேண்டும். என்னை? புலிகேசி தனது முதற் படையெடுப்பில், ‘காவிரிக்கரையை அடைந்து தமிழரசர் மன மகிழப் பல்லவனைப் புறங்கண்டான்’ எனச்சாளுக்கியர் பட்டயம் கூறலால் என்க. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டில் நுழைந்த வுடன், அவனை எதிர்த்துத் துரத்தலே பல்லவனது பெருவேலை ஆயிற்று. அவன் தனது முழுவன்மையும் சேர்த்துப் புலிகேசியைத் தாக்கிப் பல இடங்களிற் புறங்கண்டு இறுதியில் வாதாபியையும் அழித்தான் அன்றோ? அந்தச் சமயமே, சேர, சோழ, களப்பிரரைச் சேர்த்துக்கொண்டு பாண்டியன் தெற்கே இருந்து பல்லவநாட்டைத் தாக்க வசதியானது.

முடிவு

இதனை உணர்ந்துதான் போலும், நரசிம்மவர்மன் வாதாபிப் படையெடுப்பைத் தன் தானைத் தலைவரான பரஞ் சோதியாரிடம் ஒப்படைத்துத்தான் தெற்கே நோக்கிச் சென்று,தமிழரசரை வென்று துரத்தினான். முதலில் நரசிம்மவர்மனது எல்லைப்புறப் படை சங்கரமங்கையில்தோல்வியுற்றிருத்தல்வேண்டும்;பிறகுநரசிம்மன் பெரும்படை வந்தவுடன் போர் பல்லவர்க்குச் சாதகமாக மாறியிருத்தல் வேண்டும். இங்ஙனம் விளக்கமாகக் கொள்ளின் பல்லவர்-பாண்டியர் பட்டயக்கூற்றுகள் பொருத்தமாதல் உணரலாம்.

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம் புலிகேசிக்குப்பிறகுகி.பி. 642 முதல் கி.பி. 654 வரை சாளுக்கிய நாடு குழப்பத்தில் இருந்தது. இரண்டாம் புலிகேசியின் மக்கள் மூவர். அவர் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன் என்பவர். சந்திராதித்தன் இறந்தபிறகு, பின் இருவர்க்கும் அரியணை பற்றிய பூசல் உண்டாயிற்று. ஆதித்தவர்மன் நரசிம்மவர்மன் துணையை வேண்டினான். விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப் பாட்டனான துர்விநித கங்கன் துணையை நாடினான். துர்வி நீதற்கு நரசிம்மன்மேல் தீராப் பகைமை உண்டு. என்னை? நரசிம்மன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் துர்விநீதனுடைய ஒன்றுவிட்ட தம்பியை அதற்கு அரசனாக்கி வைத்திருந்தமையால் என்க. துர்விநீதன் தன் படையுடன் விக்கிரமாதித்தற்கு உதவி செய்தான். நரசிம்மன் ஆதித்தவர்மற்குப் படை உதவினன்போலும்! ‘துர்விநீதன், இராவணன் என்று அனைவரும் அஞ்சத்தக்க காஞ்சிநகரக் காடுவெட்டியை வென்ற பிறகு, தன் மகள் மகனைச் சயசிம்ம வல்லபனது நாட்டிற்கு அரசன்

ஆக்கினான் என்று ‘நகர்’ - கல்வெட்டுக் கூறுகிறது. இதனால், துர்விநீதன் நரசிம்மவர்மனை வென்று, தன் பெயரனான விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய அரசனாக்கினான் என்பது தெரிகிறது.

உண்மை என்ன?

விக்கிரமாதித்தன் தன் பாட்டன் உதவியை நாடினான். அதை அறிந்த ஆதித்தவர்மன் வேறு வழியின்றி நரசிம்மவர்மனது துணையை நாடி இருக்கலாம். நரசிம்மன் சாளுக்கியர் அரசியலில் விசேடக் கவனம் செலுத்தாமல், வந்தவனுக்கு உதவியாக ஒரு படையை அனுப்பி இருக்கலாம். அப்படையைத் துர்விநீதன் முறியடித்து வெற்றிபெற்றிருக்கலாம், நரசிம்மனால் அனுப்பப்பட்ட படையை வென்றமையால், பாவம்! துர்விநீதன் பேரரசனான நரசிம்மவர்மனையே நேரில் வென்றதாகக் கருதி மகிழ்ந்து, தன் மகிழ்ச்சியைக் கல்வெட்டிலும் காட்டிவிட்டான் என்று கோடலே ஈண்டைக்குப் பொருத்தமாகும். ஏனென்றால், நரசிம்மனையே பெரும் போரில் வென்றவனாயின், துர்விநீதன் அதன் பயனாகக் கொங்கு நாட்டைக் கைப்பற்றி இருத்தல் வேண்டும்; அவன் தான் அங்ஙனம் செய்ததாகக் குறிக்கவில்லை. துர்விநீதன் வெற்றியால் பல்லவர்க்கு எந்தவிதமான குறைவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; பல்லவர் பட்டயங்களில் இவனைப் பற்றிய பேச்சே இல்லை.

இலங்கைப் போர் 1

நரசிம்மவர்மன் காலத்தில் இலங்கைப் பட்டத்திற்கு உரிய மானவன்மன் என்னும் இளவரசன் காஞ்சிக்கு வந்தான். அவன் அட்டதத்தன் என்பவனால் துரத்தியடிக்கப்பட்டவன். அட்டதத்தன் மானவன்மனது அரசைக் கவர்ந்தவன். செயலற்ற மாணவன்மன் நரசிம்மனை அடைக்கலம் அடைந்தான்; அவனுடன் இருந்து பணிவுடன் எல்லா வேலைகளையும் செய்து பல்லவன் நன்மதிப்பைப் பெற்றான். அதனாற்றான் மாணவன்மனைக் காஞ்சியில் விட்டு நரசிம்மவர்மன் புலிகேசியை எதிர்க்கச் சென்றான். அப் பேரரசனுக்கு இடர்வராமற் காக்க மாணவன்மன், பிறகு பெருஞ் சேனையுடன் சென்று போரிற் கலந்துகொண்டு பல்லவன் வெற்றிக்குத் துணைசெய்தான். இச்செயலால் மட்டற்ற மகிழ்ச்சிகொண்ட நரசிம்மவர்மன் மானவன்மனுக்கு மாப்படை, மக்கட்படை, மரக்கலப்படை இவற்றை உதவி இலங்கைக்கு அனுப்பினான். படை உதவி பெற்ற மாணவன்மன், இலங்கையில் இறங்கி முதலில் நடந்தபோரில் வெற்றிபெற்றான்.ஆயினும் அடுத்த போரில் தோல்வியுற்றான். அவன் உடன்சென்ற சேனை அவனைக் கைவிட்டது. அதனால் மானவன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.

இலங்கைப் போர்-2

அவனது துயரைக்கண்டு மனம் பொறாத பல்லவப்பேரரசன், தன் படைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மானவன்மனிடம் ஒப்புவித்துத் தானும் மாமல்லபுரம் என்ற துறைமுகத்திற்குச் சென்றான். பல்லவன்தானும் கப்பலில் ஏறுவதாகத்தன் படைவீரரை நம்புமாறு செய்தான்; அதனால் மகிழ்ந்த வீரர் இலங்கை நோக்கிச் சென்றனர். கடும்போர் செய்தனர். மானவன்மன் வெற்றி பெற்று இலங்கை அரியணை ஏறினான்.[12] இங்ஙனம் இலங்கை இளவலுக்குப் பல்லவப் பேரரசன் செய்ததுணிச்சலான உதவியைப் பாராட்டிப் பேசிய காசக்குடிப் பட்டயம், ‘நரசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி இராமன் இலங்கையில் பெற்ற வெற்றி போன்றது’ என்பதைக் குறிப்பிட்டுள்ளது.[13]

சீன வழிப்போக்கன்

ஹர்ஷனது பேரரசையும் இரண்டாம் புலிகேசியினதுசாளுக்கியப் பேரரசையும் பார்வையிட்டுப் பெளத்த இடங்களைக் கண்டு போகவந்த சீன வழிப்போக்கனான இயூன்சங் என்பவன் காஞ்சிக்கு வந்தான். அவன் ஏறக்குறையை கி.பி. 642இல் வந்தான். அவன்

காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டைத் திராவிடம் என்று குறிப்பிட் டுள்ளான். “நிலம் செழிப்புள்ளது. நல்ல விளைவு தருவது; நாடு வெப்பமானது. மக்கள் அஞ்சா நெஞ்சினர்; உண்மைக்கு உறைவிட மானவர் கற்றவரையும் உயர்ந்த கொள்கைகளையும் மதிப்பவர். இந்நாட்டில் 100 சங்கிராமங்கள்[14] இருக்கின்றன; பதினாயிரம் பெளத்தத் துறவிகள் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணக் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் திராவிட நாட்டில் இருக்கின்றனர். புத்தர் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கியதாக இந்நாட்டில் கூறப்படுகிறது.அசோகன்திராவிட நாட்டில் பல தூபிகளை அமைத்தான். அவற்றுள் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுற்ற நிலையில் இருக்கின்றன. நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிப்பதியினர் என்னும் செய்தி இங்குக் கூறப்படுகிறது. “நான் பாண்டிய நாட்டையும் சென்று கண்டேன்.[15] அங்குச் சிலரே உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடு பட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பெளத்தம் அழிநிலையில் உள்ளது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக் குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.” என்று அந்த வழிப்போக்கன் தன் குறிப்புப் புத்தகத்தில் வரைந்துள்ளான். மேலும் அவ்வறிஞன், “காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரைநோக்கி இருபது கல் விரிந்துள்ள நகரம் ஆகும். இங்கிருந்து பல கப்பல்கள் இலங்கைக்குப் போகின்றன.” என்று கடல் வாணிபச் சிறப்பையும் விளக்கி யுள்ளான்.[16]

குகைக் கோவில்கள்

நரசிம்மவர்மன் தன் தாதையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். இவன் முதலில் மகேந்திரவர்மனைப் பின்பற்றிக் குகைக் கோவில்களையே அமைத்தான். இவன் அமைத்த கோவில்களைக் கண்டறிதல் எங்ஙனம்? இவன் அமைத்த குகைக் கோவில்களில் இவனுடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஓவிய வேலை மிகுதியாக இருக்கும். குகைக்கோவிலின் முன்மண்டபச் சுவர்களில் மிக்க அழகிய சிலைகளும் அணி அணியாய் அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் வெட்டுவித்திருக்கும். மகேந்திரன் அமைத்த கோவில் தூண்கள் சதுரமாயும் கனமாயும் இருக்கும். ஆனால், நரசிம்மவர்மன் எடுத்த கோவில் தூண்களின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ்த்துணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடியில் ஏறக்குறைய இரண்டு முழ அகலமும் இரண்டு முழு உயரமும் கொண்டு திறந்த வாயுடன் இருக்கும். சிங்கங்கள் தூண்களைத் தம் தலைமீது தாங்கி இருத்தல் போன்ற வேலைப்பாடு காணப்படும். இவற்றைநோக்க, இம் மன்னர் மன்னன் தன் பெயரைக் குறிக்கவே இச் சிங்கத்தூண்களை அமைத்தனனோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது.[17]

நாமக்கல் மலையடியில் இருக்கின்ற நரசிங்கப் பெருமான் குகைக்கோவில் இம் மன்னன் காலத்தது. அதன் சுவர்களில் புராணக் கதைகள் சிற்ப வேலையில் விளக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளி மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள குகைக் கோவில் இவன் காலத்தது. இதன் கிழக்குப் பக்கத்தில் சிவன் கோவிலும் மேற்குப் பக்கத்தில் பெருமாள் கோவிலும் குடையப்பட்டுள்ளன. இவ்விரண்டு கோவில்களுக்கும் இடையில் உள்ள பெரிய மண்டபச் சுவர் மீது, சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி ஆகியவர் உருவங்கள் செவ்வையாய்ச் செதுக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மரவிட்டங்கள் போலக்கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு இன்புறத்தக்கது. இக் கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட குபேரன் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே உள்ள திருவெள்ளறையில் மலை மீது பழைய பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. அம் மலையினடியில் பெரிய குகைக் கோவில் குடையத் தொடங்கி வேலை முடியாமல் நிறுத்தப்பட்டது. குடைந்த அளவு காணப்படும் வேலைப்பாடு நரசிம்மன் காலத்ததென்று கூறலாம். புதுக்கோட்டை யைச்சார்ந்த குடுமியா மலையில் மகேந்திரனது இசையைக் குறிக்கும் கல்வெட்டிற்கு அண்மையில் உள்ள குகைக்கோவில் நரசிம்மவர்மன் காலத்தது. அதன் அமைப்பு மேற்சொன்ன திருச்சிராப்பள்ளிக்குகைக் கோவில் அமைப்புப் போன்றே இருக்கின்றது. புதுக்கோட்டையைச் சேர்ந்ததிருமய்யத்தில் மகேந்திரவன் அமைத்த சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வைணவக் குகைக் கோவிலும் நரசிம்மன் அமைத்ததே ஆகும்.[18]

மகாபலிபுரமும் நரசிம்மவர்மனும்

மகாபலிபுரத்தில் மகேந்திரவர்மன் தொடங்கிவிட்ட வேலையை சிற்ப ஓவியக் கலைகளை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்திப் பெருவெற்றி பெற்றான். இவனது வெற்றிக்கு, இவன் கி.பி. 642இல் பெற்ற வாதாபி வெற்றியே சிறந்த காரணம் ஆகும். வாதாபியில் இரண்டர்ம் புலிகேசியின் சிற்றப்பன் ஆன மங்களேசன் அழகுற அமைத்த குகைக் கோவில்கள் பல உண்டு. அவை வேலைப்பாடு கொண்டவை. அவ் வேலைப்பாடு கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. அவற்றைக் கூர்ந்து பார்வையிட்ட நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் அவைபோல அமைத்துள்ளான் என்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நன்கு விளங்குகிறது. இப் பேரரசன் சாளுக்கியர் வளர்த்தகலைகளை நன்குஅறிந்து சிலவற்றை மாதிரிக்கு எடுத்துச் சென்றேனும் அல்லது அவற்றை அமைத்த வல்லுநரை அழைத்துச் சென்றேனும் கோவில்களை அமைத்தான் போலும் என்று எண்ணத்தக்க விதமாக ஒருமைப்பாடு காணப்படுகிறது.

நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் மூவகை வேலைப்பாடுகளைக் காட்டியுள்ளான். அவை (1) குகைக் கோவில்கள், (2) தேவர்கள் (3) கற்சிலைகள் என்பன.

(1) குகைக் கோவில்கள்

மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய இம் மூன்றும் நரசிம்மன் அமைத்த குகைக் கோவில்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இம் மண்டபத் தூண்களில் காணப்படும்வேலைப்பாடும் சிறப்பாகவராக மண்டபத்தூண்களில் காணப்படும் சிறந்த வேலைப்பாடும், வாதாபியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாட்டையே ஒத்துள்ளன. இவ் வேலைப்பாடு கி.பி. 642இல் வாதாபியில் இருந்து மகாபலிபுரம் வந்து, பிறகு தென் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. தூண்களின் மேலிருந்து கூரை வரையுள்ள வேலைப்பாடு, பிற்காலச் சோழர் கோவில்களில் காணப்படுதல் காண்க.

(1) குகைக்கோவிற் சிற்பங்கள்:- வாதாபி-குகைக்கோவிற் சுவர்களில் சிற்ப வேலை மிகுதியாக உண்டு. அவ்வேலை நரசிம்மன் அமைத்த குகைக்கோவிற் சுவர்களிலும் காணலாம். இவ் வேலைப்பாடு, சுவர்களை அணி செய்வதோடு. அவையுள்ள இடம் சுவர் என்னும் எண்ணத்தையே மறக்கச் செய்வது கவனிக்கத்தக்கது. வாதாபி-குகைக்கோவில் சுவர்களில் உள்ள புராணச் செய்திகளைக் குறிக்கும் ஓவியங்கள் பல மகாபலிபுரத்திலும் காணப்படல் கவனித்தற்குரியது. வராக அவதாரம, வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்துக் குகைக் கோவில்களிலும் இருத்தல் காண்க. கஜலக்குமி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் ஈரிடத்துக் குகைக்கோவில்களிலும் இருக்கின்றன. மகிடாசுர மண்டபச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பாம்பனைப்பள்ளி (அநந்த சயனம்) உண்டவல்லி குகைக் கோவில் சுவரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. மற்ற உருவங்களும் இரண்டிடத்தும் ஒத்திருக்கின்றன. ஆயின், மகிடாசூரனை வெல்லுதலைக் குறிக்கும் சிற்பவேலை பல்லவர்க்கே உரியது என்னலாம். அஃது எங்கும் அக் காலத்தில் காணப்படாததாகும். துர்க்கை தன் ஊர்தியான சிங்கத்தின் மீது இவர்ந்து எருமைத் தலைகொண்ட அசுருன் மீது அம்புகளைப் பொழிகின்றான். அவளைச்சுற்றிலும் அவள் படைகள் இருக்கின்றன. அசுரனைக் சுற்றிலும் அவன் படைகள் இருக்கின்றன. இப் படைகளைப் பொறித்ததால், இக் காட்சி சிறப்படைந்துள்ளது. இக் காட்சியை அமைத்த சிற்பிகள் சிறந்த அறிஞர் ஆவர். இத்தகைய சிறந்த காட்சிகாணல் அருமையே ஆகும். இது பல்லவர்க்குரிய தனிச் சிறப்பு என்றே கூறலாம்.[19]

(2) மண்டபங்கள் - கோவில்களே:- மகாபலிபுரத்தில் ‘மண்டபங்கள்’ என்று கூறப்படுபவை மண்டபங்கள் அல்ல. அவை கோவில்களே ஆகும். ஒவ்வொன்றிலும் இறை உள்ளிடம் (மூலத்தானம்) இருக்கின்றது. அந்த இடங்களில் சிவலிங்கம் இருந்ததாம். இப்பொழுது வேலைப்பாடு கொண்டு காணப்படும் மண்டபம், உள்ளிடத்திற்கு ‘வெளி மண்டபம்’ ஆகும். எனவே, மண்டபங்கள் எனப்படுபவை அனைத்தும் கோவில்களே என்பதில் ஐயமில்லை. இதனை அறியாத பாமர மக்கள் ‘மண்டபம்’ என்றும், அங்குள்ள சிற்பங்கள் நோக்கி, இது ‘மகிடாசுர மண்டபம்’, ‘இதுவராக மண்டபம்’, ‘இது திரிமூர்த்தி மண்டபம்’ என்றும் பெயர் இட்டனர். இவற்றையே ஆராய்ச்சியாளரும் குறித்தனர். ஆதலின், இப்பெயர்கள் இன்றளவும் தவறாகவே வழங்குகின்றன.

(2) ஒற்றைக்கல் கோவில்கள்

மகேந்திரன் குகைக் கோவில்களை அமைத்தான். அவனைப் பின்பற்றிய நரசிம்மவர்மன் தன் பெயரை நிலைநாட்ட, ஒரு கல்லையே கோவிலாக அமைக்கும் புதிய வேலையில் இறங்கிப் பெருவெற்றி பெற்றான். இவை கோவில்கள் என்பதை அறியாத பாமர மக்கள், தேர்கள் என்றும். ஐந்து கோவில்கள் ஒரே வரிசையில் இருத்தல் கண்டு. பாண்டவர் தேர்கள் என்றும் பெயரிட்டனர். அவர்கள் இட்ட பெயர்களையே இன்றளவும் அறிஞர் எழுதி வருகின்றனர். எனவே, அம்முறைப்படியே நாமும் குறிப்போம். இந்த ஐந்து தேர்களும் வேறு வேறு அமைப்புடையவை. இவை தமிழகத்தில் மண், செங்கல், மாம் இவற்றில் ஆகி அந்நாள் இருந்த பழைய கோவில்களை நமக்கு நினைப்பூட்ட அமைத்தவை ஆகும். இந்த ஐந்தும் இராவிடில், பழங்காலக் கோவில்களைப் பற்றிய எண்ணமே நமக்கு இராது போயிருக்கும்.[20] மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட கோவில்களில் பல் வேலைப்பாடுகள் இருந்தன. அவை இக் கற்கோவில்களில் அப்படியே காணப்படுகின்றன. மரவேலைகள் எல்லாம் கல்லிற் செதுக்கிக் காணப்பட்டன. திருச்சிராப்பள்ளியில் மகேந்திரவர்மன் குகைக்கோவில்கள், மரத்தால் எளிதிற் கட்டும் வேலி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது காண்க. நாமக்கல் கோவிலில் வளைந்த மூங்கில்களை வைத்து இறக்கப்பெற்ற தாழ்வாரம் போன்ற அமைப்பை மலையில் குடைந்துள்ளமை காண்க. திருச்சிராப்பள்ளியில் உள்ள கீழ்க் குகைக்கோவிலில் மரவிட்டம் போலக் கல் நீட்டிக்கொண்டிருத்தல் காணத்தக்கது.[21]

(1) தருமராசன் தேர்:- இது சிவன்கோவில், இது மூன்று தட்டுக்களைக் கொண்ட மேற்பாகத்தை (விமானத்தை) உடையது இரண்டாம் தட்டின் நடுவில் உள்ளிடம் வெட்டப் பட்டுள்ளது. அது மாடப்புரைபோலச் சிறியது. அதன் அடியில் சோமாஸ் கந்தச் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் கும்ப (விமான) வளர்ச்சியே காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோவில் கும்பம் ஆகும். அதன் வளர்ச்சியே தஞ்சைப் பெரியகோவில் கும்பமாகும். இம் மூன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர் இவ்வுண்மையை நன்கு உணரலாம்.

(2) பீமசேனன்தேர்:- இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் காஞ்சியில் உள்ள அமைப்பைப் பெரிதும் ஒத்துள்ளன. எனவே, இக் கோவில் அக்காலத்தில் பெளத்த சமயக் கலைவளர்ச்சி தென்னாட்டில் பரவி இருந்ததை மெய்ப்பிக்கிறது என்னலாம். விமானத்தைச்சுற்றிலும் வழிவிடப் பட்டுள்ளது. மேலிடம் 45 அடி நீளம், 25 அடி அகலம், 26 அடி உயரம் உள்ளது. அஃது அறச்சாலை அல்லது பொது இடம் போல இருக்கிறது. அதன் தூண்கள் அடியிற் சிங்கங்களை உடையன. இக் கோவில் அமைப்பை, மிகப் பிற்பட்ட காலத்ததான சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்தின் அமைப்பிற் காணலாம்.

(3) அர்ச்சுனன் தேர்:- இது தருமராசர் தேரைப் போன்றதே இதுவும் சிவன் கோவில் ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பை உடையது. இது 11 சதுர அடி அமைப்புடையது. விமானம் நான்கு நிலைகளை உடையது.

(4) திரெளபதி தேர்:- இது போன்ற கோவில் காணக் கிடைத்தல் அருமை. இது தமிழ்நாட்டில் ஊர்த் தேவதைகட்கு இருக்கும் சிறு கோவில்போல அமைந்துள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி; உயரம் 18 அடி இதில் உள்ள துர்க்கையின் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு பல்லவர் சிற்ப அறிவை நன்கு விளக்குவதாகும். இங்குள்ள கல்யானை, கற்சிங்கம், நந்தி என்பன காணத் தக்கவை. இக்கோவில் தமிழகத்தின் பண்டைச் சிறு கோவிலை நினைப்பூட்டுவதாகும்.[22]

(5) சகாதேவன் தேர்:- இது பண்டைப் பெளத்தர் தைத்தீயத்தை ஒத்துக் காணப்படுகிறது. இதுபோன்ற பெரியதுர்க்கையின் கோவில் ஒன்று சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹோனே’ என்னும் இடத்தில் இருக்கின்றது. அதனைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்கிரமாதித்தன் கட்டினான். இங்ஙனம் பல்லவர். சாளுக்கிய வேலையைப் பாராட்டிக் கொண்டாற்போலவே, சாளுக்கியரும் பல்லவர் வேலையைப் பாராட்டிக்கொண்டர் என்பதற்கு இதுபோன்ற பல சான்றுகள் காட்டலாம். சகாதேவன் தேர் போன்ற அமைப்புடைய விமானங்கள் பல தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்டன. அவற்றுள் ஒன்று திருத்தணிகையில் உள்ளது.[23]

இந்தக் கோவில்களின் முன்புறம், இவற்றில் உறைந்த தெய்வங்கட்குரிய ஊர்திகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன.அவை நந்தி, சிங்கம், யானை என்பன. அவை முறையே சிவபெருமான், துர்க்கை, இந்திரன்[24] இவர்தம் ஊர்திகள் ஆகும்.

(3) கற்சிற்பங்கள்

பாறைகள் மீது புராணக் கதைகளைப் பாடல்கள் வாயிலாக விளங்கும் முறையில் நரசிம்மவர்மன் பெயர் பெற்றவன். இதற்கு மகிடாசுர மண்டபச் சுவரில் உள்ள சிற்பங்களே போதியவை. எனினும், அவற்றை விடப் பெரிய பாறைகள் மீது செதுக்கியுள்ள கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்றல், கங்கைக் காட்சி ஆகிய இரண்டுமே கண்கொண்டு பார்க்கத்தக்கவை.

(1) கோவர்த்தன மலையைப் பிடித்துள்ள கண்ணனும் அவன் அருகில் உள்ள பலராமனும் பெரியவராகத் தெய்வத் தன்மையுடன் காணப்படுகின்றனர். ஏனையோர் சிறியவர்களாகக் காண்கின்றனர். அம்-மக்களது கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவடைந்த மன நிலையும் சிலைகளில் நன்கு உணர்த்தப்ப்ட்டுள்ளன. இவர்கட்கு இடையே இடையர் வாழ்க்கையைக் குறிக்கும் சில காட்சிகளைச் சிற்பிகள் மலையடியில்காட்டியிருத்தல் போற்றத்தக்கது. அக் காலச் சிற்பிகளது கூர்த்த அறிவு வியத்தற்குரியதே ஆகும்.அக்காட்சிகளில் வியக்கத்தக்கது. கறவையின் காட்சி. ஒருவன் பால் கறக்கிறான். பசு தன் கன்றை நக்குகிறது. இந்த வேலைப்பாடு தெளிவானதும் அழகானதுமாகும்.

(2) கங்கைக்கரைக் காட்சி-இதனை ‘அர்ச்சுனன் தவம் எனப் பலர் கூறுவர்.[25] ஆனால், இங்குள்ள காட்சிகள் அதற்கு மாறாகவே இருக் கின்றன. ஆறு - (மலைமீதிருந்த தண்ணி விழுந்து கொண்டிருக்கப் பழைய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இன்னும் காணப்படுகின்றன. அதன் நடுவில் நாகர் மகிழ்ச்சியோடு நீராடல் -பிராமணன் ஒருவன் தண்ணிக் குடத்தைத் தோள் மீது சுமந்துபோதல் - நீர் அருந்த ஆற்றண்டை மான் ஒன்று வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு அன்னப் பறவைகள் ஆற்றில் வீழ்ந்து நீராட் நிற்றல் - கீழ்ப்புறம் ஒரு சிறிய பெருமாள் கோவிலைச் சுற்றிலும் முனிவர்பலர் இருந்து தவம் செய்தல் - இவர்களைப் பார்த்துப் பூனை ஒன்று பின்னங் கால்கள் மீது நின்று முன்னங் கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் இருத்தல்-அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி அன்பு கொண்டு அதனைப் பணிதல்-ஆகிய இக்காட்சிகள் அனைத்தும் இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரைக் காட்சிகளையே ஒத்துள்ளன. இச் செய்திகள் அனைத்தும் மகாபாரதம்உத்தியோக பருவத்துள் கூறப்பட்டுள்ளவையே ஆகும்.[26] இவற்றைச் செலுத்திய சிற்பிகளின் திறனை என்னென்பது பூனை தவம் செய்வதையும் காட்டி நகைச்சுவை ஊட்டும் அப் பேரறிஞர் கலை உணர்வே உணர்வு![27]

(3) மகா மல்லபுரம்: நரசிம்மவர்மன் கொண்ட பல பெயர்களுள் மகா மல்லன் என்பது சிறந்தது. அவன் மகாபலிபுரத்தைச் சிறந்த கடற்கரைப்பட்டினமாக்க முயன்றான்; மலைமீது கோட்டை ஒன்றை அமைக்க முயன்ற அடையாளம் காணப்படுகிறது. அவன் காலத்தில் மகாபலிபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. எனவே, பல கட்டிடங்கள் அங்கு இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அந்நகரத்தைப் பெரிதாக்கிய இப் பேரரசன் அதற்குத் தன் பெயரை இட்டு ‘மகாமல்லபுரம்’ என்று வழங்கினான். ஆனால், நாளடைவில் அப் பெயர் மாறி ‘மகாபலிபுரம்’ என்று வழங்கலாயிற்று. இம் மகாமல்லபுரம், கரிகாற் சோழன், தொண்டைமான் இளந்திரையன் முதலிய சோழ மன்னர் காலத்தில் சிறந்த கடற்றுரைப் பட்டினமாக இருந்தது என்பதைப் பத்துப் பாட்டால் அறியலாம்.

கோட்டைகள் கட்டிய கொற்றவன்

நரசிம்மவர்மன் காஞ்சிபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான் என்பர் சிலர். ஆனால், அக்கோட்டை இவன் தந்தை காலத்திலே இருந்தது என்பது சாளுக்கியர் பட்டயத்தால் வெளியாவதால், இவன் அப்பழைய கோட்டையைப் புதுப்பித்தான் என்று கோடலே பொருத்தமுடையது. திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பல்லவரம் (பல்லவபுரம்) என்னும் சிற்றுர் உள்ளது. அதனில் நரசிம்மவர்மன் காலத்துக் கோட்டை ஒன்று பாறைமீது அமைந்து இருந்தது. அக் கோட்டை முழுவதும் அழிந்துவிட்டது. ஆயினும் அதன் அடிப்படையை இன்றும் காணலாம். அங்குப் பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்னும் கிடைக்கின்றன. அவ்வூருக்கு அருகில் பல்லவர்க்கும் சாளுக்கியவர்க்கும், பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர்கள் நடந்துள்ளன. ஆதலின், அப் பல்லவபுரம் பழைய காலத்தில் பல்லவர் ஆண்ட சோழ நாட்டின் தலைநகரமாக இருந்தது போலும்! அப் பல்லவபுரப் பாறைமீது ஒரு கல்வெட்டு அழிந்து கிடக்கிறது.[28]

பட்டப் பெயர்கள்

நரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில ‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,’ என்பன.

அக்கால அரசர்

(1) சாளுக்கியர்: விந்தமலைக்குத் தென்பாற்பட்ட இடத்தில் இரண்டு பேரரசுகளே நிலைபெற்று இருந்தன. ஒன்று சாளுக்கியர் பேரரசு மற்றொன்று பல்லவர் பேரரசு, சாளுக்கியர் வடக்குத் தெற்காக விந்தமலை முதல் துங்கபத்திரை வரை, கிழக்கே கிருஷ்ணை கோதாவரி யாறுகட்கிடைக்கப்பட்ட நிலம் வரை தங்கள் பேரரசை நிலைப்படுத்தி இருந்தனர். இச்சாளுக்கியப் பேரரசை நிலை நாட்டியவன் இரண்டாம் புலிகேசியை ஆவன். அவன் முதலில் மகேந்திரவர்மனாலும் பின்னர் நரசிம்மவர்மனாலும் தோற்கடிக்கப் பட்டுத் தலைநகரையும் இழந்த செய்தி முன்னரே விளக்கமாகக் கூறப்பட்டதன்றோ? அவனுக்குப் பின் அவன் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆண்டான் எனினும், வாதாபி வெற்றிக்குப் பின் பல்லவ அரசன், பகைவர் பயமின்றி நாட்டை அமைதியாக ஆண்டு வந்தான்; தந்தை விட்டுச்சென்ற கோவிற் பணிகளைக் குறைவறச் செய்தான்.

(2) கங்கர் கிருஷ்ணையாறு முதல் காவிரியாறு வரை பல்லவப் பேரரசு நிலைத்திருத்தது. அதற்குமேற்கே முற்சொன்ன பூவிக்கிரமன் கங்க நாட்டை (கி.பி.608-670) ஆண்டு வந்தான்.

(3) சேரர்: கங்க நாட்டுக்குத் தெற்கே சேரர் சிறப்பின்றிப் பாண்டியர்க்கு அடங்கிப் பெயரளவில் அரசராக இருந்து ஆண்டு வந்தனர்.

(4) களப்பிரர் சோழநாட்டின் பெரும் பகுதி (காவிரியாறு வரை) பல்லவப் பேரரசில் கலந்து விட்டமையால், சிம்மவிஷ்ணு காலத்திருந்தே களப்பிரர் வலிகுன்றிச் சிற்றரசர் ஆகிவிட்டனர். அவர்கள் தஞ்சாவூர், கொடும்பாளுர் முதலிய இடங்களில் முறையே பல்லவர்க்கு அடங்கிய சிற்றரசராகவும் பாண்டியர்க்கு அடங்கிய சிற்றராசராகவும் இருந்து வந்தனர்.

(5) சோழர்: சோழர் சிற்றரசராக இருந்து திருவாரூர், உறையூர் உள்ளிட்ட பகுதியை ஆண்டு வந்தனர்; பாண்டியர்க்குப் பெண் கொடுத்தும் அவரிடமிருந்து பெண் பெற்றும் உறவு கொண்டாடி வந்தனர்.

ஏறத்தாழக் கி.பி. 575இல் கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டுப் பாண்டிய ஆட்சியை நிலைநிறுத்தினான். அப் பாண்டியர் பட்டியலைக் கானின், நரசிம்மவர்மன் காலத்துப் பாண்டியன், நாம் முன்சொன்ன நெடுமாறன் என்பது விளங்கும்.

பாண்டியர் பட்டியல்

1. கடுங்கோன் (கி.பி. 575-500)

2. மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625)

3. சேந்தன் - சயந்தவர்மன் (கி.பி.625-640)

4. அரிகேசரி மாறவர்மன் - பராங்குசன் (நின்ற சீர் நெடுமாற நாயனார்) (கி.பி. 640-680)

நெடுமாறன் தென்பாண்டி நாட்டில் தனக்கு அடங்காதிருந்த பரவரை வென்று அடக்கினான்: செழித்த குறுநாட்டை அழித்தான்; பிறகு பலமுறை சேரனை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் அவனைக் கைப்பிடியாகப் பிடித்தான். அவன் உற்றார் உறவினரையும் படைகளையும் சிறைப்பிடித்தான்; இங்ஙனம் தனது நாட்டை முதலில் பலப்படுத்திப் பிறகு மேற்கில் இருந்த சேரனை வென்று, பேரரசை நிலைநிறுத்தினான். இவன் காலத்திற்றான் பல்லவர் - பாண்டியர் போர் தொடக்கமானது.[29]

* * *

↑ Dr N.Venkataramanyya’s article on “Durvinita and Vikramaditya’ (triveni) p. 116

↑ S.II. Vol. I p. 152.

↑ Indian Antiquary, Vol. VIII, p.227.

↑ S.I.I. Vol.II p.508.

↑ Indian Antiquary, Vol. X, p.134.

↑ Mahavamsa, Part II, p.35 (Colombo, 1909)

↑ Dr. S.K. Aiyangar’s int. to the “Pallavas of Kanchi, p.27.

↑ Indian Antiquary,Vol IX. p. 100

↑ சிறுத்தொண்டர் புராணம், செ.6.

↑ Indian Antiquary, Vol.XIX, pp.151, 152.

↑ Ibdi. Vol. X, P.100.

↑ Mahavamsa (Toumour’s translation) Ch.7

↑ S.I.I. Vol. ii p.343.

↑ சங்கிராமம் - பெளத்த மடங்கள்.

↑ இவன் பாண்டியநாடு சென்றபோது நெடுமாறன் அரசு கட்டில் ஏறினான் & Vide TVS Pandarathar’s Pandyas p.14.

↑ Beal, Records Vol.II p.118.

↑ Archaeological Report for 1918-1919, pp. 16-30. இத்தகைய தூண்கள் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலுக்குள் இருக்கின்றன.

↑ P.T.S Iyengar’s “Pallavas’, Part II, pp. 38-40.

↑ Heras’s “Studies in Pallava History’ pp.86-87.

↑ Heras’s “Studies in Pallava History,” p.89 188.

↑ P.T.S. Iyengar’s “pallavas’ part II, pp.41-43.

↑ A.V.T. lyer’s “Indian Architecture’. Bk.II p.225.

↑ Hears’s “Studies in Pallava History’ pp.89-90.

↑ இந்திரன் கோவிலா, ஐராவதேசுவரர் (சிவனார்) கோவிலா என்பது புரியவில்லை. சிலப்பதிகார காலத்தில் ஐராவதத்திற்குக் கோவில் இருந்தமை தெளிவு. இஃது ஆய்வுக்குரியது.

↑ A.W.T. Iyer’s S. Indian Architecture Vol.Il-B.p.227.

↑ Heras’s “Studies in Pallavas History,’ pp.91, 92.

↑ இஃது அர்ச்சுனன் தவத்தையோ, கங்கைக் கரைக் காட்சியையோ குறிப்பதன்று; இது ‘சமணர் தொடர்புடைய ஒரு காட்சி’ என்பர். திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.

↑ P.T.S. Iyengar’s Pallavas, Part II pp.43-44.

↑ K.A.N. Sastry’s “Pandyan Kingdom’, pp.51-53

11. பரமேசுவரவர்மன்

(கி.பி. 670-685)[1]

இரண்டாம் மகேந்திரவர்மன் (668-670)

இவன் நரசிம்மவர்மன் மகன். இவன் வரலாறு கூறும் பட்டயம் ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ‘இவன் அவ்வவ் வகுப்பார் நடக்க வேண்டும் முறைகளைக் கூறும் அறநூல்வழி ஆண்டான்’ என்று மட்டுமே வேலூர் பாளையப் பட்டயம் கூறுகிறது. இவன் நெடுங்காலம் ஆண்டனன் என்பது தெரியவில்லை. இவனுக்குப் பின் வந்த பரமேசுவரவர்மன் காலம் கி.பி. 670-685 என்னலாம்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

பரமேசுவரன் காலத்தில் சாளுக்கிய அரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 655-680) ஆவான். அவன் சிறந்த போர்வீரன். அவன் தன் தந்தை அடைந்த இழிவையும் தலைநகரம் அடைந்த அழிவையும் போக்கிக்கொள்ள அவாவிப் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். இப் படையெடுப்பைப் பற்றிச் சாளுக்கியர் பட்டயங்களும் பல்லவர் பட்டயங்களும் குறிப்புகள் தருகின்றன. அவ் விரண்டையும் ஆராய்ந்து முடிவு காணலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) முதலாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட ‘கர்நூல்’ பட்டயம் கூறுவது: “விக்கிரமாதித்தன் தன் தந்தையின் பட்டத்தைத் தன் வலிமையால் அடைந்தான்; மூன்று கூட்டரசரை வென்று தன் உரிமையை நிலைநாட்டினான்; தன் பகைவரைப் பல நாடுகளில் வென்று தன் உரிமையைப் பெற்றான்,” என்பது.

(2) இவனே வெளியிட்ட ‘கத்வல்’ பட்டயம் கூறுவது: “ஸ்ரீ வல்லபனாகிய விக்கிரமாதித்தன் நரசிம்மவர்மனது பெருமையை அழித்தான், மகேந்திரன் செல்வாக்கை அழித்தான், ஈசுவர போத்தரசனை (பரமேசுவரவர்மனை) வென்றான். இவன் மகாமல்லன் மரபை அழித்தமையால், இராச மல்லன் என்னும் விருதுப் பெயரைப்பூண்டான். இவன் (பரம) ஈசுவர போத்தரசனைத் தோற்கடித்தான்; தென் நாட்டின் ஒட்டியாணமாக விளங்கும் காஞ்சியைக் கைப் பற்றினான். அதன் பெரிய மதிற்கூவர் ஏற முடியாததும் உடைக்கக் கடினமானதும் ஆகும். அம்மதிலைச்சுற்றித் தாண்ட முடியாத ஆழமான அகழி இருந்தது,” என்பது.

(3) விநாயதித்தன் வெளியிட்ட ‘சோரப்’ பட்டயம் கூறுவது; “பல்லவர் கோவைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான்."[2] என்பது. ‘கேந்தூர்ப்’ பட்டயம். “தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்,” என்று கூறுகிறது.[3]

பல்லவர் பட்டயங்கள்

(1) பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயம் கூறுவது: “பரமேசுவரவர்மன் பிறர் உதவி இன்றி, பல இலக்கம் வீரரைக் கொண்ட விக்கிரமாதித்தனை, கந்தையைச் சுற்றிக் கொண்டு ஓடும்படி செய்தான்,”[4] என்பது.

(2) இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘உதயேந்திரப்’ பட்டயம் உரைப்பது; “பரமேசுவரவர்மன்பெருவளநல்லூரில் நடந்த பெரும் போரில் வல்லபன் (விக்கிரமாதித்தன்) படையை முறியடித்தான்,”[5] என்பது.

(3) மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட ‘வேலூர் பாளையப்’ பட்டயம் பகர்வது; பரமேசுவரவர்மன் தன் பகைவர் அகந்தையை அடக்கியவன். அவன் சாளுக்கிய அரசனது பகைமையாகிய இருளை அழிக்கும் பகைவனாக இருந்தான்,”[6] என்பது.

ஆராய்ச்சி

இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி ஒன்றையே குறித்தல் காண முடிவு கூறல் கடினமாக இருக்கின்றது. ஆயினும், இரண்டு சிறப்பு மொழிகளை இங்குக் காணல் வேண்டும்: (1) சாளுக்கியர் காஞ்சியைக் கைப்பற்றியது:

(2) பல்லவர் பெருவள நல்லூரில் சாளுக்கியரைத் தோற்கடித்தது. இரண்டும் உண்மையாகவே இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவை இரண்டும் ஒரே படையெடுப்பில் வெவ்வேறு காலத்தில் உண்டானவை எனக் கொள்ளின் உண்மை புலனாகும்.

விக்கிரமாதித்தன் முதலில் பல்லவனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். பிறகு நேரே (‘கத்வல்’ பட்டயம் கூறுமாறு) சோழ நாட்டில் உள்ள உரகபுரத்தை (உறையூரை)[7] அடைந்து தங்கினான், பல்லவர் பட்டயம் கூறும் பெருவள நல்லூர் திருச்சிராப்பள்ளிக்கு 12கல்தொலைவில் உள்ளது. எனவே,அஃது உறையூருக்கும் அண்மையதே ஆகும். விக்கிரமாதித்தன் தோல்வியூற்ற இடம் பெருவள நல்லூர் ஆகும். எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறான் அல்லவா? ஆதலின், காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை. பெருவள நல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர் பட்டயங்கள் கூறவில்லை. இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.

போர் நடந்த முறை

இப் போரைப்பற்றிச் சிறந்த அறிஞரான ஈராஸ் பாதிரியார் பின்வருமாறு கூறுகிறார்: “பல்லவர் படை வழக்கம் போலக் காஞ்சிக்கு அண்மையிலேயே இருந்திருக்கலாம்; சாளுக்கியர் படை முன்னதைத் தோற்கடித்திருக்கலாம். தோற்ற படை கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது. உடனே சாளுக்கியர் படை அரிதின் முயன்று அகழியைக் கடந்தது ஏறமுடியாத மதில் மீது முயன்று வருந்தி ஏறியது; மதிலைத் துளைத்தது; இறுதியிற் காஞ்சியைக் கைப்பற்றியது... பரமேசுவரவர்மன் தப்பி ஒடிவிட்டான். அதனால் எதிர்ப்பவர் இன்றிச் சாளுக்கியன் தன் பெரும்படையுடன் பல்லவநாடு முழுவதும் கற்றுப்போக்குச்செய்து, இறுதியில் காவிரிக் கரையில் உறையூரில் வந்து தங்கினான். அவன் அப்பொழுதுதான் தான் அடைந்த வெற்றிக்கறிகுறியாகக் ‘கத்வல்’ பட்டயம் (25-4-674 இல்) வெளியிட்டான்.

“இதற்கு இடையில் பரமேவரவர்மன் ஆந்திர நாடு சென்று, பெரும்படை திரட்டித் தெற்கே வந்து, தன் வெற்றியில் வெறி கொண்டிருந்த சாளுக்கியனைத் திடீரென எதிர்த்தான்; போர் பெருவள நல்லூரில் கடுமையாக நடந்தது. (இப்போரின் கடுமையைக் கூரம் - பட்டயம் தெளிவாக விளக்குகிறது) போர் பல நாட்கள் நடந்தன. இறுதியில் பல்லவப்பேரரசன்வெற்றிபெற்றான். இருதிறத்தார்க்கும் கடுமையான இழப்பு (நட்டம்) உண்டானது. சாளுக்கிய மன்னன் புறங்காட்டிஓடி ஒளிந்தான்.”[8]

கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று “பரமேச்சுரன் வாதாபியை அழித்தான்’ எனக் கூறலால், ‘இவன் விக்கிரமாதித் தனைத் துரத்திச் சென்று, நரசிம்மனைப் போலவே சாளுக்கியர் தலைநகரையும் அழித்து மீண்டான்’ என்பதை அறியலாம்.[9]

போர் வருணனை

இப் போரைப்பற்றிக் கூரம்-பட்டயம் வருணித்தல் காண்க: “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல அச்சமூட்டியது. உறையில் இருந்து வெளிப்பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள்போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தைக் காட்டியது. போரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள் போலத் தோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற் போலச் சேனைக் கடலில் இருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலியன பறந்தன. பகைவர் போரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தபோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேரோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோடொன்று பொருதபொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர், வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் மயிர் பிடித்து இழுத்துச் சண்டையிட்டனர். ‘கதைகள்’ ஒன்றோடு ஒன்று மோதின. செந்நீரும் கரிகளின் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சள் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய, கரி-பரிகளுடையதலைகளும் கைகளும் கால்களும் தொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இருதிறத்தாரும் முன்னும்பின்னும் அலைந்து, ஒடிச்சண்டையிட்டனர். யாறாக ஓடின் இரத்தத்தின் மேல் பாலமாக அமைந்த யானை உடலங்கள் மீது வாள்வீரர் நின்று போரிட்டனர். அப்பொழுது நெற்றி அணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள்முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர் கண்கள் சிவந்திருந்தன. பெருவீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் பொடியாகிக் கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர் குடித்துமதி மயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத்தலை அற்ற முண்டங்கள் கூத்தாடின. பல நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன், தனியனாய்க் கந்தையைப் போர்த்துக் கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட ரமேசுவரவர்மனது போர்ப்பரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம்.’[10]

சாளுக்கியர் - பாண்டியர் போர் (கி.பி. 674-675)

‘விக்கிரமாதித்தன் உறையூரில் தங்கிய பிறகு பாண்டிய நாட்டைத் தாக்கினான். பாண்டியன் நெடுமாறன் மகனான கோச்சடையன் அவனை எதிர்த்து மங்கலாபுரத்தில் முறியடித்தான் என்று வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்.[11] இது தவறு. என்னை? கோச்சடையன் மங்கலாபுரத்தில் மகாரதரை[12] வென்றான் என்று பட்டயங்கள் பகர்கின்றனவே அன்றி வேறில்லை ஆதலின் என்க.

விக்கிரமாதித்தனை நெல்வேலியில் வென்றவன் நெடுமாறனே ஆவன் என்பதை, “வில்வேலிக் கடல்தானையை நெல்வேலிச் செருவென்றும்” எனவரும் வேள்விக்குடிச் செப்பேட்டு அடி, குறிப்பாக உணர்த்துகிறது. ‘வில்வேலி என்பவன் சாளுக்கியன் படைத்தலைவனாக இருக்கலாம். “வில்லவனை நெல்வேலியிற் புறங்கண்ட பராங்குசன் என்பது சின்னமனூர்ச் செப்பேட்டு அடி ‘வில்வேலி, வில்லவன்’ என்பன ‘வல்லபன், வல்லவன்’ என்பவற்றின் திரிபாகலாம். வல்லபன் என்பது சாளுக்கியர்க்கு இருந்த பொதுப் பெயர் ஆகும். தென்னாட்டில் அக்காலத்தில் ‘கடல் போன்ற தானை உடைய பேரரசர் வேறு இல்லை. பல்லவர் படை எனின், பட்டயங்கள் வெளிப்படையாகக் குறித்திருக்கும். விந்த மலைக்குத்தென்பால் அந்நாளில் இருந்த பேரரசுகள்-கடல் போன்ற தானை உடையவை இரண்டே யாகும். ஒன்று பல்லவ அரசு; மற்றொன்று சாளுக்கிய அரசு. அத்தகைய பெரும் படையையுடைய பேரரசனை வென்றமையாற்றான். நெடுமாறனுக்கு இரண்டு நூற்றாண்டுகட்குப்பின் இருந்தவரான சுந்தரர்,

‘நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”209[13]

என்று தமது திருத்தொண்டத் தொகையுட் கூறியுள்ளார். இதனால், நெடுமாறன் பெற்ற வெற்றிகள் அனைத்திலும் நெல்வேலியில் பொருது பெற்ற வெற்றியே பெருஞ் சிறப்புடையது என்ற கருத்துக் கி.பி.9ஆம் நூற்றாண்டு மக்களின்டப் பரவி இருந்தது என்பது நன்கு தெரிகிறது. ஆதலின், நெல்வேலிப் போர் எளிதானதன்று. அங்குப் பாண்டியனை எதிர்த்தவன் பெரு வேந்தனாக இருத்தல் வேண்டும்: போர்கடுமையாக நடந்திருத்தல் வேண்டும்; இறுதியில் நெடுமாறன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல், பிற போர்களை விட்டு நெல்வேலிப் போரைச் சுந்தரர் போன்றார் குறித்திரார்.

இக் கருத்துகளுடன், வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் போன்றோர் கூறும் சாளுக்கியர் பாண்டியர் போர், அவர்கள் கூறும் கோச்சடையன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளாமல் நெடுமாறன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளின், நெல்வேலிப் போர் நெடுமாறன் - விக்கிரமாதித்தன் போராகவே முடிதலைக் காணலாம். சிறிது பொறுமையும்நடுவுநிலைமையும்கொண்டுகேந்தூர்க்கல்வெட்டுக்’ 210[14]கூற்றையும் நோக்கி ஆராயின், இஃது உண்மை என்பது தோற்றும்.

ஈராஸ் பாதிரியார் கூறுமாறு, எதிர்ப்பவர் இன்றி உறையூர்வரை (பல்லவநாட்டின் தென் எல்லை முடிய) வந்த சாளுக்கிய மன்னன் வீணாக அங்குப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்தான் என எண்ணுதலோ-தன்னைத் திடீரெனப் பல்லவன் பெருஞ்சேனை யுடன் தாக்க வரும்வரை உறையூரில் இன்பமாகப் பொழுது போக்கினன் என எண்ணுதலோ தவறாகும் அன்றோ? ஆராய்ச்சி உணர்வுடையார் இங்ஙனம் எண்ணார். மேலும், பரமேசுவரவர்மன் ஆந்திர நாடு சென்று பெருஞ்சேனை திரட்டிக்கொண்டு திடீரென வந்து தாக்கச் சிறிதுகாலம் ஆகி இருத்தல் வேண்டும். பேரரசனான பல்லவனை எதிர்த்து முறியடித்த பெருவேந்தன், அவனுக்கு அடுத்தபடி இருந்த பாண்டியனை எதிர்த்தல் இயல்பேயாம். இவற்றைஎல்லாம் நன்கு எண்ணின், இப்பொழுதுகுறித்துக் காட்டக் கடினமாகவுள்ள - பட்டயங்களில் கூறப்பெற்ற ‘நெல்வேலி’[15] என்னும் இடத்தில், வெற்றியில் ஆழ்ந்து கிடந்த விக்கிரமாதித் தனுக்கும் சிவபத்தியில் ஆழ்ந்து கிடந்த நெடுமாறனுக்கும் போர் நடந்தது; முடிவில் நெடுமாறன் வெற்றி பெற்றான் என்பவற்றை ஒருவாறு ஊகிக்கலாம்.

பெரியபுராணம் பாடியசேக்கிழார்பிற்காலச்சோழருள் ஒருவனான இரண்டாம் குலோத்துங்கன் அரசியல் உயர் அலுவலாளராவர். அவர் பல்லவர் பட்டயங்களை நன்றாகப் படித்து நூல் செய்தவர் என்பது-பூசலார் (இராசசிம்மன் காலத்து நாயனார்) புராணத்தாலும் கழற்சிங்க நாயனார் புராணத்தாலும் சிறுத்தொண்டர் புராணத்தாலும்[16] பிறவாற்றாலும்[17] சிறப்புறஉணரலாம். ஆகலின் சேக்கிழார் கி.பி. 12ஆம் நூற்றாண்டினர் ஆயினும், அவர் வரைந்துள்ள நூலில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அந்தந்த அரசர் முதலியோர் காலத்தனவாகவே இருத்தல் காணத்தக்கது. சேக்கிழார் பிறரைப்போல வாயில் வந்ததைப் பாடிச்செல்பவர் அல்லர். இதனை நன்கு உணரின் நெடுமாறன் நெல்வேலியில் யாருடன் சண்டையிட்டான்? - எப்படிச் சண்டையிட்டான்? - எப்பொழுது சண்டையிட்டான்? என்பன நன்கு விளங்கும்; ‘புரியவில்லை புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று வரலாற்று ஆசிரியரால் கைவிடப்பட்ட நெல்வேலிப்போரின் விவரங்கள் அத்துணையும் தம் காலத்துக் கிடைத்த தக்க சான்றுகளைக் கொண்டு சேக்கிழார் பெருமான் விளக்கி இருத்தல் தெளிவுற விளங்கும்.

நெல்வேலிப் போர்

“நெடுமாறன் சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட பிறகு, சேயபுலத் தெவ்வர் (நெடுந் தூரத்திலிருந்து வந்த பகைவர்) தம் கடல்போன்ற கரிகளுடனும் பரிகளுடனும் வீரருடனும் அமர் வேண்டிப் (தாமாகவே) பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் அவர்களை நெல்வேலியில் எதிர்த்தான்,” என்று தொடங்கிய சேக்கிழார், 5 பாக்களில் இருதிறத்தாரும் போரிட்டத்தை அழகாக விளக்கியுள்ளார். அப்போர் இருபெருவேந்தர் போராகவே காண்கின்றது. மேலும் அந்த வருணனையைப் பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயத்தில் காணப்படும் பெருவன நல்லூரில் நடந்த போர் வருணனையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பெருஞ்சுவை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இங்ஙனம் போர் வருணனை செய்த பெரும்புலவர் இறுதியில், “பாண்டியன் படைக்கு ஆற்றாமல், வடபுலத்து முதல் மன்னர் (First rate King of the north) படை சரிந்தது; நெடுமாறன் வாகை புனைந்தான் என்று கூறி முடித்துள்ளார்.[18]

இப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகனான கோச்சடையன் சென்றிருக்கலாம்; அல்லது அவனே தலைமை பூண்டு போரை நடத்தியிருக்கலாம்; ‘ரண ரசிகன்’ எனப்பட்ட விக்கிரமாதித்தனை வென்றமையால் தன்னை ‘ரண தீரன்’ என அழைத்துக் கொண்டிருக்கலாம். இங்ஙனமே விக்கிரமாதித்தனை வென்ற பரமேசுவரவர்மன் தன்னை ரணசயன் என்றும், (அவனுக்கு உதவியாகச் சென்ற) அவன் மகனான இராசசிம்மன் தன்னை ‘ரணசயன்’ என்றும் கூறிக்கொண்டனர் என்பது இங்கு அறியற்பாலது. இங்ஙனம் ஒரே காலத்தில் போரில் சம்பந்தப்பட்ட (பிற்காலச்) சத்யாசிரயனும் அவன் சிற்றரசனான குந்தமரசனும் தம்மைத் ‘திரிவுளமாரி’ (தமிழர்க்குக் கொள்ளைநோய் போன்றவர்) எனக் கூறிக்கொண்டனர் என்பது மேலைச் சாளுக்கியர் கல்வெட்டுகளால் அறியலாகும்.

இங்ஙனம் நெடுமாறனோடு போரிட்டுத்தோற்ற சாளுக்கியனைப் பின்னர்ப் பரமேசுவர்மன் பெருவள நல்லூரில் வன்மையுற எதிர்த்துத் தோல்வியுறச் செய்தானாதல் வேண்டும். ‘தமிழரசர் அனைவரும்கூடி விக்கிரமாத்தித்தனை எதிர்த்தனர்’ என்னும் கேந்தூர்ப்பட்டய மொழியும் இங்குக் கருதற்பாலது. இதுகாறும் கூறிய நெல்வேலிப் போரைப் பற்றிய செய்திகளை நடுவுநிலைவழாத வரலாற்று ஆசிரியம்மார் நன்கு ஆராய வேண்டுகிறோம்.

பல்லவர்-கங்கர் போர்

பரமேசுவரன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் பூவிக்கிரமன் (கி.பி.650-670); அவன்பின் முதலாம் சிவமாறன் (கி.பி.679-726) அரசன் ஆனான். இவருள் பூவிக்கிரமன் ‘விழிந்தம்’ முதலிய பல இடங்களில் பல போர்கள் பல்லவனோடு செய்ததாகக் கூறப் படுகிறது;[19] ஆயின், பல்லவர் பட்டயங்களில் இவை குறிக்கப்

கூரம்-கோவில் (முதற் கற்கோவில்)

பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[20]

இப்பொழுது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவன் காலத்திலும் நடந்து வந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். கோவிலில் பாரதம் சொல்லச் செய்த அரசன் இவன், கூரம் பட்டய முதல் இரண்டு சுலோகங்கள் பரமேச்சுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன.

மகாபலிபுரம்

இவன் மகாமல்லபுரத்தில் கணேசர் கோவில் ஒன்றை ஒரு கல்லால் அமைத்தான்; இராமநுசர் மண்டபம் என்பதையும் அமைத்தான்; தர்மராசர் தேரின் மூன்றாம் அடுக்கை முடித்தான்; அந்த அடுக்கில், ‘ரணசயன் (ரண ரசிகனானா விக்கிரமாதித்தனை வென்றவன்), ‘அத்யந்தகாமப் பல்லவேசுவர க்ருகம் என்பவற்றை வெட்டுவித்தான். இவற்றால், இவன் ‘ரணசயன்’ ‘அத்யந்தகாமன்’ என்னும் பெயர்களைத் தரித்தவன் என்பது புலனாகிறது. இவன் கணேசர் கோவிலில் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் படித்து இன்புறத்தக்கவை. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும்படி சிலேடையாக அமைந்தவை. அவற்றுட்சில கீழே காண்க:

சிறந்த சிவபத்தன்

(1) காமனை அழித்த சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் காரணன்; இவன், அகாரணனான அத்யந்தகாமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக.

(2) கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம்வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீநிதி (தலைமேல்) வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்.)[21]

(3) பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும் கைம்மீது அழகிய நகைபோல நீலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக.

(4) பகைவர் நாட்டை வென்று ரனஜயன் என்றுபெயர் பெற்ற அத்யந்தகாமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக்[22] கட்டுவித்தான்.

(5)-(6) அத்யந்தகாமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீநிதி, காமராகன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான்.[23]

(7) அரசன் சங்கரனை அடைய விரும்பி, இந்தப் பெரிய சிவ மந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப் பெறக் கட்டுவித்தான்.[24]

(8) தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேஸ்வரக்ருஹம்.[25]

இவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச்சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ?) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது!

இவன் காலத்து அரசர்

கங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.

* * *

↑ அடுத்த பகுதியில் கூறப்படும் சீனச் செய்தியைக் கொண்டு பரமேசுவரன் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 685உடன் முடிந்ததாகக் கொள்ளப் பட்டது.

↑ Heara’s “Studies in Pallava History’ pp.40-41.

↑ Ep.Ind Vol. IX, p.205 200.

↑ S.L.I.Vol. I. p.154

↑ Ibid II p.370

↑ Ibid II. p.511

↑ Dubreull’s ‘The Pallavas’ p.43.

↑ Vide his “Studies in “Pallava History pp.44-47.

↑ C.S.Srinivasacharl’s “History and Institution of the Pallavas’ p.15.

↑ S.I.I. Vol.1, pp.153-154.

↑ PTS. Iyengars “Pallavas part II, pp.57-58.

↑ K.A.N. Sastry’s “Pandyan Kindom,’ p.55-56.

↑ 209. இவன் சிறந்த சிவனடியான் என்பதை, .....(1) ‘நறையாற்றகத்து வென்றான் முடிமேல் நின்றான் மணி கண்டம்போல்” (செ.256). (2) ‘விழிளுத்து வென்ற வல்லியல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையன் (செ279) எனப் பாண்டியக் கோவைப் பாக்களாலும் அறியலாம்.

↑ 210. Ep. Ind. Vol.Dx.p.205.

↑ ‘நெல்வேலி’ என்பது புதுக்கோட்டைச் சீமையில் உள்ள நெல்வேலி என்னும் ஊராகம். ஆழ்வார்கள் காலநிலை. பக்.101. இவ்வூர் பாண்டிய நாட்டிற்கு வடக்கே பல்லவ நாட்டுத் தென் எல்லையில் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் சிறப்புப்பெற்ற இந்த இடத்தில் பாண்டியர் பலர் போரிட்டனர் என்பதைப் பாண்டியர் பட்டயங்கள் உணர்த்துகின்றன. ‘சோழ மண்டலத்தில் தென்கரைப்பனையூர் நாட்டைச் சேர்ந்த நெல்வேலி நாட்டு நெல்வேலி’ எனவரும் பட்டயத்தொடர் காண்க. 276 ணிஞூ 1916.

↑ சேக்கிழார் கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் நன்றாகப் படித்தறிந்தே வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறு களைக் குறித்துள்ளார் என்பதை மெய்ப்பிக்க விரிவான நூல் ஒன்று பெரிய புராண ஆராய்ச்சி என்னும் பெயருடன் விரைவில் எம்மால் வெளியிடப் பெறும்.

↑ Dr. S.K.Aiyangars “Manimekalai in its Historical setting p.46. 214.

↑ நெடுமாறர் புராணம் செ:3-7

↑ M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.48.

↑ C.Srinivasachari’s History & Institutions of the Pallavas p.15.

↑ கண்மணியாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்திருந்தான் என்பது பொருள், P.T.S.Aiyangar’s “Pallavas’ Part.II. P.68.

↑ இப்பொழுதுள்ள கணேசர்கோவில் என்பது சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது.

↑ இதன் பொருள் சென்ற பக்கத்து அடிக்குறிப்பிற் காண்க.

↑ இதனால் குடிகட்கிருந்த சைவப்பற்றை நன்குணரலாம் அன்றோ? மந்திரம் - கோவில்.

↑ P.T.S. Aiyangai’s “Pallavas’ Part II.pp.66-68.

12. இராசசிம்மன்

(கி.பி. 666 - 705)

போர்கள்: முன்னுரை

இராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி ஆராயின் - இக்காலத்திற் பல்லவர் - சாளுக்கியர் போர் நடந்தது என்பதை உறுதியாக நம்பலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) சோரப் பட்டயம் : ‘சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்.[1]

(2) வக்கலேப் பட்டயம்: விநயாதித்தன் திரையரச பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்; கவேர அரசர் (சோழர்?) பாரசீக (பாண்டியர்?), சிம்மளர் முதுலியோரிடம் கப்பம் வாங்கினான் (?)[2]

இவற்றை நன்கு ஆராய்ந்தால் விநயாதித்தன், தன் தந்தை கட்டளை (விருப்பப)ப்படி, தெற்கே இருந்த பல்லவ, சோழ, பாண்டிய, சேரநாடுகளை அடக்கிக் களப்பிரர், ஹெய்ஹயர், மாளவர் என்பவர் வன்மையைக் குறைத்து, எங்கும் அமைதியுண்டாகப் படையெடுத்தான் என்பது புலனாகிறது.[3]

பல்லவர் கல்வெட்டுகள்

இராசசிம்மன் கல்வெட்டுகளில் இவன், சிறந்த மற்போர் வீரன், யானை நூல் அறிவில் வத்சராசனையும் பகதத்தனையும் ஒத்தவன்; போரில் விசயனுக்கும் இராமனுக்கும் ஒப்பானவன் உடல் வலியாலும் புகழாலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன்; நாடு பிடிப்பதில் பேரவாவுடையவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; இவனது செல்வாக்கு உயர்கின்றது: அஞ்சத்தக்க பேராண்மை உடையவன்; அடக்கத்தினாலே வெல்லத்தக்கவன், போரிற் சிங்கம் போன்றவன்; வில்லையே துணையாகக் கொண்டவன்; பகைவர்க்குஇடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; போர்வீரரை அழிப்பவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் செல்வத்தை வெல்லுபவன் (பகைவருடைய பொருளைப்போரில் கைப்பற்றுபவன்); வீரத்தில் மகேந்திரனை ஒத்தவன் திடீரென இடிக்கும் இடிபோன்றவன் பல இடங்களை வென்றவன் போரில் களைப்படையாதவன்; செருக்கரை அடக்குபவன்...”[4] என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளன. இவனது வீரம், போர்த்திறம் பற்றி மேலும் பல கூறப்பட்டுள்ளன.

போரே செய்யாத ஒருவனைப்பற்றி இத்துணைத் தொடர்கள் வர இடமில்லை அன்றோ? இத் தொடர்களை நோக்க, இவன் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களில் ஈடுபட்டுத் தன் வீரத்தையும் பொறுமையையும் காட்டி வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதுதானே போதரும். ஆகவே, இராசசிம்ம பல்லவன். யாருடன் போரிட்டான் என்பதைக் கவனிப்போம்.

போரிட்டவன் விநாயதித்தனே

முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி.674-5இல் பரமேச்சுரவர்மனால் பெருவளநல்லூரில் முற்றிலும் முறியடிக்கப்பட்டான். அவன்தன் காலத்தில் மறுமுறை பல்லவனைத் தாக்கவில்லை. அவன் தான் நடத்திய போரில் தன் மகனை உடன் கொண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின் அவன் தன் இறுதிக் காலத்தில், தனக்குப் பின் பட்டம் பெற இருந்த தன் செல்வ மைந்தனை, தான் பெற்ற பெருந் தோல்விக்குப் பல்லவரைப் பழிவாங்குமாறு கட்டளை யிட்டிருக்கலாம். சிறந்த வீரர் பிறந்த மரபில் வந்த விநயாதித்தன், தந்தை கட்டளையை நிறைவேற்றச் சமயம் பார்த்திருந்தான்; தன் தந்தையைப் படுதோல்வி உறச்செய்த பரமேச்சுவரன் இறக்குந்தனையும் பொறுத்திருந்தான். என்னை? பரமேச்சுரன் காலத்தில் சாளுக்கியரது இரண்டாம் போர் இன்மையின் என்க. பரமேச்சுரன் இறந்து, இராசசிம்மன் கி.பி.690 இல் அரசன் ஆனதும், தன் தந்தை கட்டளைப்படி விநயாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான் என்று கோடலே பொருத்தமாகும்.

இது தனிப்பட்ட போர்

விக்கிரமாதித்தன் முதலில் தன் மகனைப் படையுடன் அனுப்பினான். அவனுக்குப்பின் தானும் ஒரு படையுடன் வந்தான். காஞ்சியை முற்றுகையிட்டு வென்றான் என்று இருவர் செயல்களும், கி.பி. 674 இல் நடந்ததாகக் கோடலே நன்று. ஏனெனின், இராசசிம்மன் காலத்தில் சாளுக்கிய பல்லவர் போர்நடந்ததாகத் தெரியவில்லை ஆதலால் என்க என்று குறித்தனர் ஓர் ஆசிரியர்.[5] இருவர் செயல்களும் ஒரே காலத்தில் நடந்திருக்குமாயின், அவை சாளுக்கியர் பட்டயங்களில் விளக்கமாக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்ஙனம் பெறாமை நன்கு ஆராயத்தக்கது. மேலும், தோற்ற அரசன் தன் மைந்தற்குக் கட்டளையிட்டுத் தம் மரபின் சிரவிழிற்கு ஈடுசெய்யத் தூண்டினான் எனக்கோடலே பொருத்தமானது. மேலும் தன் தந்தையும் பெருவீரனுமான இரண்டாம் புலிகேசியைப் பல இடங்களில் தோற்கடித்த பல்லவர் படையை எதிர்க்க, போர் அனுபவமே இல்லாத தன் மகனை விக்கிரமாதித்தன் முதல் முதல் அனுப்பினான் என்பதே பொருந்துவதாக இல்லை. அவனே பெரும்படைதிரட்டிக் கொண்டு தக்கவாறு வந்தான் என்றெண்ணுதலே நேர்மையானது. இங்ஙனம் தந்தை வந்த பிறகு, தந்தையின் கட்டளைப்படி பல்லவர் முதலியோரை அடக்கி அமைதியை நிலைநாட்ட விநயாதித்தன் வந்தான் என்னல், அவனை முதலில் அனுப்பினான் என்று கூறியதைவிட பொருத்த மற்றதாகும். தன் தந்தையான புலிகேசி பல்லவரால் அவமானம் அடைந்து இறந்தான் நாடு பாழாயிற்று: தானும் முயன்று இறுதியில் அவமதிப்பே பெற்றான். இந்த மனப்புண்ணினால் மடிந்த விக்கிரமாதித்தன் வீர உணர்ச்சித்தும்பப் ‘பல்லவரைப் பழிக்குப்பழிவாங்குவது உனது கடமை எனக் கட்டளையிட்டு இறந்தான் எனக் கொள்வதே பல்லாற்றானும் சிறப்புடையதாகும். இதனாற்றான், விநயாதித்தன், ‘தந் தந்தை கட்டளைப்படி’ பல்லவன் மீது படையெடுத்தான்.

பல்லவர்-சாளுக்கியர் போர்

விநயாதித்தன் கங்கபாடியைத் தாக்கினான். அப்பொழுது கங்கபாடியை ஆண்டவன் முதலாம் சிவமாறன் (கி.பி. 679-726) என்பவன்.[6] விநயாதித்தன் கங்கபாடியைத் தனதாக்கிக் கொண்டு. சிவமாறனைத்தனக்கு அடங்கி இருக்குமாறு செய்தான். அங்கிருந்து நேரே பல்லவ நாட்டைத் தாக்கினனோ. அல்லது முதலில் வடக்கிலிருந்து தாக்கினனோ தெரியவில்லை. போர் எங்கு எப்பொழுது நடந்தது என்பதும் தெரியவில்லை. விநயாதித்தன் ‘தந்தை கட்டளைப்படி’ படையெடுத்திருத்தல் வேண்டும்; இராசசிம்மன் அவன் கல்வெட்டுகள் கூறுமாறு போரில் அஞ்சாது பொறுமையுடன்நின்று போரிட்டு, இறுதியில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும், வேறு சான்றுகள் இன்மையால், இந்த அளவே இப்பொழுது கூறுதல் கூடும். ஆயினும், ஒன்று மட்டும் வற்புறுத்திக் கூறலாம். அஃதாவது இப் போர்மிகவும் கடுமையாக நடந்திருத்தல் வேண்டும் என்பது. என்னை? இராசசிம்மன் கல்வெட்டுகள் அவனைப் போரில் மனவுறுதி உடையவன்; போரில் களைப்படையாதவன் எனப் பலபடக் கூறலானும் (போருக்குப் பின்) கடுமையான பஞ்சம் - இவன் காஞ்சிநகரத்தையே துறக்கும் படியான கொடிய வற்கடம் - மூன்று ஆண்டுகள் இருந்தமையாலும் என்க. வற்கடம் இவனது ஆட்சித்துவக்கத்திலேயே வந்துவிட்டதால், இப் போரும் இவன் பட்டம்பெற்ற ஆண்டிலேயே நடந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

போரின் பயன்

இப் போரினால் சாளுக்கியனுக்கும் நன்மை இல்லை. என்னை? விநயாதித்தன் எந்த நன்மையும்பெற்றதாகச்சாளுக்கியர் பட்டயங்கள் குறிக்காமையின் என்க. பல்லவனும் பெற்ற நன்மை ஒன்றுமில்லை. இவனுக்குமுன் இருந்த அரசர்கள் ஆற்றிய ஒயாப் போர்களால் துன்புற்ற பல்லவநாடு, இவனது ஆட்சியின் தொடக்கத்திலும் துன்புற நேர்ந்தது. பல துளி பெருவெள்ளமாதல் போல எல்லாப் போர்களின் விளைவும் திரண்டு கொடிய வற்கடமாக மாறியது.

பல்லவர் - கங்கர் போர்

மேற்சொன்ன போருக்கு முன்னோ பின்னோ இராசசிம்மன் கங்கநாட்டின்மீது படையெடுத்தான். இப் படையெடுப்பு பூவிக்கிரம கங்கன் (கி.பி. 650-670) பல்லவர்க்கு இழைத்த இன்னலுக்கேற்ற பரிசாகும் என்று கூறப்படுகிறது. முதலாம் சிவமாறன் பல்லவனை வென்றதாகக் கங்கர் பட்டயம் கூறுகின்றது.[7] உண்மை உணரக்கூட வில்லை.

இங்ஙனம் வடக்கிலும் மேற்கிலும் பகைவர் இருந்து இடர் விளைத்துவந்தமையாற் போலும், இராசசிம்மன் கல்வெட்டுகள் எல்லாம் இராசசிம்மன் போர்ச் சிறப்பையும் வீரத்தையும் நாட்டைப் பகைவரிடமிருந்து காத்தமையையும் தன் பெருமை குன்றாது பேரரசனாகவே இருந்து வந்ததையும் பலபடப் பாராட்டிக் கூறலாயின.[8]

கொடிய பஞ்சம்

இப் பேரரசன் காலத்திற்குமுன் பல்லவர்க்கும் சாளுக்கியர்க்கும் ஓயாத போர்கள் நடைபெற்றன அல்லவா?

மகேந்திரன்-புலிகேசிப்போர், நரசிம்மவர்மன்-புலிகேசிப்போர் - விக்கிரமாதித்தன் போர் ஆகியவற்றால் பல்லவநாடு என்னபாடு பட்டிருக்கும் போதாக்குறைக்கு இவன் காலத்தில் பல்லவர் சாளுக்கியர் போர், பல்லவர்-கங்கர் போர் நடந்தன. இவற்றால் பல்லவர் மூலபண்டராம் வற்றியது; பொருள்நிலை முட்டுப்பாடு எய்தியது. அதன் பயனாக நாட்டில் பெரிய வற்கடம் தோன்றியது. அது தோன்றியகாலம் இராசசிம்மன் காலமாகும். ‘அரசனே காஞ்சியைத் துறக்க வேண்டியவன் ஆயினான். அவன் அவைப் புலவரான தண்டி எனப்பாரும் கற்றோர் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பம் உழன்றனர் சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன; குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று,’ என்று தண்டி தாம் எழுதியுள்ள ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலிற் கூறியுள்ளார்.

இக்கொடிய பஞ்சம் கி.பி. 686 முதல் 689 வரை (3 வருடகாலம்) இருந்ததாகச் சீன நூல் ஒன்று கூறுகிறது. இந்தக்காலம் இராசசிம்மன் காலமே ஆகும் அன்றோ? அப்பொழுது வச்சிரபோதி என்னும் பெளத்தப் பெரியார் ஒருவர் காஞ்சிக்கு வந்தனர். அவரை இரண்டாம் நரசிம்மவர்மன் (இராசசிம்மன்) வற்கடம் தீர இறைவனை வேண்டுமாறு வேண்டியதாக முற்சொன்ன சீனநூல் கூறுகிறது. அப் பெரியார் வேண்ட மழை வந்ததென்று அந்நூல் கூறுகிறது.[9] (இராசசிம்மன்) வற்கடம் தீர்ந்த பிறகு காஞ்சியில் இருந்த ‘கடிகையைச் செவ்வைப் படுத்தினான்’ என்று வேலூர் பாளையப் பட்டயம் கூறலைக் கொண்டும் பஞ்சக் கொடுமையை நன்குணரலாம்.

சிவபத்தன்

இராசசிம்மன் பஞ்சத்திற்குப் பிறகு, தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் கயிலாசநாதர் கோவிலைக் காஞ்சியிற்கட்டினான்; பிறகு காஞ்சியில் ஐராவதேச்சுரர் கோவிலையும் கட்டினான்; மகாமல்லபுரத்தில் கடற்கரை ஒரமாக உள்ள கோவிலை அமைத்தான் பனமலைக்கோவிலையும் அமைத்தான்; ஒவ்வொரு கோவிலிலும் தன் விருதுப் பெயர்களை வெட்டு வித்தான். கைலாசநாதர் கோவிலில் மட்டும் ஏறத்தாழ 250 விருதுப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் ‘ரிஷப லாஞ்சனன், ஸ்ரீசங்கர பக்தன், ஸ்ரீ ஆகமப் பிரியன்,[10] சிவசூடாமணி’[11] என்பன போன்றவை இவனது சைவ சமயப் பீற்றைக் குன்றின் மீதிட்ட விளக்குப் போல ஒளிரச் செய்கின்றன. இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்னும் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[12] இவன் விருதுகளில் ரீவாத்ய வித்யாதரன் என்பது ஒன்று. இதனால், இவன், ‘இசைக் கருவிகள் இசைப்பதில் விஞ்சையனை (வித்யாதரனை) ஒத்தனவன்’ (பெரிய இசைப் புலவன்) என்பதும் நன்கு புலனாகிறது.

“இவன், பரமேசுவரன் உறுப்புகள் யாவும் ஒன்றுகூடிமனிதனாகப் பிறந்தாற் போன்றவன், உடல் வலியிலும் பெரும் புகழிலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன். இந்த கூடித்திரிய சூடாமணி தோவர்க்கும் பிராமணர்க்கும் செல்வம் தந்தவன்; தன் கீழ் உள்ள நிலமகளை நான்மறையாளர் நுகருமாறு செய்தவன்”[13] என்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. மற்றொன்று, ‘பரம மகேசுவரனும் மகேந்திரனை ஒத்தவனுமான இராசசிம்மன் பிராமணர் கல்லூரியைத் திரும்பவும் அமைத்தான் கயிலாயத்தை ஒத்த கயிலாசநாதர் கோவில் என்னும் சந்திரசேகரர் கோவிலைக்கட்டினான்.” என்று கூறுகின்றது. பிறிதொரு கல்வெட்டில் பின்வரும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. “சிவபெருமானுக்குக்குகன் பிறந்தாற்போலப் பல்லவப் பேரரசனான உக்கிரண்டனுக்குச் சுப்பிரமணியன் போன்ற ‘அத்யந்தகாமன்’ என்னும் பல்லவ அரசன் பிறந்தான். இவன் சைவ நெறியில்[14] நடந்து மலத்தை எல்லாம் ஒழித்தவன்; இந்தக் காலத்தில் தேவரைக் கண்டவன் துஷ்யந்தன் முதலானோர் வான் ஒலி கேட்டதில் வியப்பில்லை. நற்குணம் பறந்தோடிப் போன இக்காலத்தில் அவ் வான் ஒலியை ஸ்ரீபரன் (இராசசிம்மன்) கேட்டது வியப்பே. இவன், ‘கலி’ என்னும் மகரம் குடிகளை விழுங்கியபோது அவர்களைக் காத்தவன். இவன் பரந்து கிடக்கும் இச் சிவன் மந்திரத்தை (கோவிலை)க் கட்டினான். இஃது இவன் புகழைப் போலவும் நகையைப் போலவும் இருக்கின்றது. பாம்பரசனை அணியாகக் கொண்டவனும் தேவ அசுர கணங்கள் போற்றுபவனும் ஆகிய சங்கரன், இந்த இராசசிம்ம, பல்லவேச்சுரத்தில் நெடுங்காலம் குடிகொண்டு இருக்கட்டும். இடபத்தை அடையாளமாக உள்ளவன் இந்தக் கோவிலில் காட்சி கொடுப்பானாக. ரணசயனும், ஸ்ரீபரனும், சித்ரகார்முகனும், சிவ சூடாமணியுமாகிய பேரரசன் நெடுங்காலம் உலகத்தைக் காப்பானாக. இவன் சைவசித்தாந்தப்படி நடப்பவன்; மகாதேவனுக்கு அடியவன்.”[15]

ரணசயன்

இவனுக்கு இப்பெயர் எப்படி வந்தது? இவன் சிற்றரசனாக இருந்தபொழுது நடந்த விக்கிரமாதித்தன் படையெடுப்புப் போரில், தந்தைக்கு உதவியாக இருந்து சில இடங்களில் நடந்த போரில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அந்த உரிமை கொண்டே ரணரசிகனான விக்கிரமாதித்தனை வெற்றி கொண்டதால், தன்னை ‘ரண சயன்’ என்று கூறிக்கொண்டான் போலும்? இங்ஙனமே, நெல்வேலிப் போரில் தன் தந்தையான நெடுமாறனுக்குத் துணையாகச் சென்ற கோச்சடையன் (சடிலவர்மன்), தான் விக்கிரமாதித்தனை வெற்றிகொண்ட சிறப்பு நோக்கித் தன்னை ‘ரணதீரன்’ என்று கூறிக்கொண்டிருக்கலாம். இங்ஙனம் பொருள் கொள்ளின் வரலாற்று முறையில் இடர்ப்பாடின்மை அறிக.

வான் ஒலி கேட்ட வரலாறு

சென்னைக்கும் திருவள்ளூருக்கும்[16] இடையில் உள்ள ‘தின்னூர்’ என்பது இராசசிம்மன் காலத்தில் திருநின்றவூர் எனப்பெயர் பெற்று இருந்தது. அப்பதியில் நான்மறையாளர் மிக்கிருந்தனர். அவருட் பூசலார் என்பவர் ஒருவர். அவர் சிறந்த சிவபக்தி மிகுந்தவர்; தமது பத்தி மேலிட்டால் சிவன் கோவில் ஒன்றைக் கட்ட முற்பட்டார். பொருளுக்குப் பல இடங்களில் அலைந்தார். முன்சொன்ன (கி.பி. 686-689) பஞ்சக் கொடுமையால் பணம் கொடுப்பார் இல்லை. ஆயினும், அவர் அவா மிகுதியினால் இன்னின்னவாறு கோவில் அமைக்கவேண்டும் என்பதை மனத்தில் எண்ணினார்; இறுதியில் தம் உள்ள நினைவில் உருத்தெரியாத கோவிலை அமைத்தார்; சிவனாரை அக்கோவிலில் எழுந்தருளப் பண்ண ஒரு நாளைக் குறித்தார். அந்த நாளே கயிலாசநாதர் கோவிலைக் கட்டி முடித்த இராசசிம்மன் கும்பாபிடேகம் செய்ய எண்ணிய நன்னாள் ஆகும். அதற்கு முன்னாள் இரவில் இறைவன் அரசன் கனவில் தோன்றி, தாம் பூசலார் கட்டிய கோவிலில் அடுத்த நாள் எழுந்தருளப் போவதால், வேறு நாள் குறித்துக்கொள்ளும்படி கூறினார். அது கேட்டு வியந்த அரசன் திருநின்றவூர் சென்று பூசலாரைக்கண்டு, அவர்கட்டிய கோவிலைக் காட்டும்படி வேண்டினான். பூசலார் திடுக்கிட்டுத் தம் வரலாற்றை விளங்க உரைத்தார். அரசன் பெருவியப்பெய்தி அகக் கோவில் கட்டிய அன்பர்க்கு வணக்கம் செலுத்தி மீண்டான். இதுவே பெரிய புராணம் கூறும் பூசலார் புராணச் செய்தி ஆகும். இதில் ‘சிவனார் கனவிற் சென்று கூறினார்’ என்பது, கல்வெட்டில், ‘அரசன் வான் ஒலி கேட்டான்’ என்று கூறப்படுகிறது.[17]

கோவில்கள்

இராசசிம்மன் கட்டிய கயிலாசநாதர் கோவிலைப்பற்றி இப்பகுதியின் இறுதியில் விளக்கமாகக் கூறுவோம். இங்கு இவன் கட்டிய பிற கோவில்களைப் பற்றிக் கவனிப்போம்: மாமல்லபுரத்தில் இப்பொழுதுள்ள கடலோரத்துக்கோவில் இவன் கட்டியதே யாகும். அங்கு இராசராசசோழன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், “கரையோரம் மூன்று கோவில்கள் இருக்கின்றன. அவை முறையே “கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரம், இராசசிம்ம பல்லவேச்சுரம், பள்ளிகொண்டருளிய தேவர் கோவில் என்பன” என்பது காணப்படுகிறது. முதல் இரண்டும் கடலுள் ஆழ்ந்து கெட்டன போலும் இவற்றைக்குறிக்க இரண்டு, பலிபீடங்களும் ஒரு கற் கொடிமரமும் இன்றும் இருக்கின்றன. கடலை நோக்கியபடி சிவலிங்கம் ஒன்று இருக்கின்றது. அது கூடித்திரிய சிகாமணிப் பல்லவேச்சுரத்தில் இருந்ததாம். இரண்டாம் கோவிலும் சிவன் கோவிலாம். இப்பொழுது பலி பீடந்தான் இருக்கிறது. அதைச்சுற்றிலும் இராசசிம்மன் விருதுகள் காணப்படுகின்றன.[18] மூன்றாம் கோவிலே இப்பொழுது இருப்பது. அதுவே திருமங்கையாழ்வாரது பாடல் பெற்ற சலசயனம் ஆகும். சலசயனப் பெருமாள் என்பதற்கு நீர் அருகில் பள்ளிகொண்டுள்ள பெருமான் என்பதுபொருள் ஆகும். இங்ஙனமே தரையில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் தல சயனம் எனப்படும். இக்கோவிலையும் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.[19] இக்கோயில் பிற்காலத்தில் விசயநகர மன்னரால் புதுப்பிக்கப்பட்டது.

இராசசிம்மன் காலத்துப் புலவரான தண்டி என்பார், கடற்கரைக் கோவிலைப் பற்றிக் கூறியிருத்தல் படிக்கத்தக்கது - அது, “மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலிற் பள்ளி கொண்டுள்ள திருமால் படிம (மூர்த்த)த்தின் மணிக்கட்டு ஒன்று பின்னமுற்றது. அதைச் செப்பனிட்டவன் ஒரு சிற்பி. நாண் அவன் விருப்பப்படி அங்குச் சென்று பார்த்தேன். அப் பெருமான் திருவடிகளைக் கடல் அலைகள் மோதி அலம்பிக் கொண்டிருந்த காட்சி அழகியது. திடீரென அலைகளால் திருவடியண்டைத் தள்ளப்பட்ட செந்தாமரை மலர் ஒன்று கண் இமைப்பதற்குள் விஞ்சையை (வித்யாதர) உருப்பெற்றுப் பெருமானை வணங்கி விண்புக்க காட்சியை நான் நேரே கண்டு களித்தேன்”[20] என்பது.

இத் திருமால் கோவிலுக்கு முன்புறமாகச் சிவன்கோவில் ஒன்று இராசசிம்மனால் கட்டப்பட்டது. அதனால் திருமால் பாதங்களில் அலை மோதிய நிலை பிற்காலத்தில் மாறிவிட்டது. அப் பெருமான் படிமத்தின் மணிக்கட்டைச் சிற்பி செப்பனிட்டான் என்று தண்டி கூறுதலாலும், அப் படிமம் பல்லவரால் பிரதிட்டை செய்யப்பட்டது என்று தண்டி கூறாமையாலும், அப் பெருமான் படிமம் மிகப் பழைமையானதே என்று கொள்ளத் தடையில்லை.[21]

கடற்கரையில் இப்பொழுதுள்ள கோவில் ஆறு அடுக்குக் கும்ப (விமான) த்தை உடையது; உள்ளறை ஒன்றையே கொண்டது. அவ்வுள்ளறையைச் சுற்றித் திருச்சுற்று இருக்கிறது. அதில் ஒன்பது சிறிய கோவில்கள் இருக்கின்றன.

கடற்கரை ஓரமாக ஒரு கல் தொலைவில் உள்ள முகுந்த நாயனார் கோவிலும் இராசசிம்மன் கட்டியதே ஆகும். இஃது அருச்சுனன் தேரைப்போலச் சிறியதாக அமைக்கப்பட்டது. இதன் தூண்கள் உருண்டு எவ்வித வேலைப்பாடும் இன்றி இருக்கின்றன. தென் இந்தியக் கோவில்களில் இங்ஙனம் காணப்படல் இதுவே முதன் முறையாகும், வராக மண்டபக்குன்றின் மீதுள்ள ஒலக்கண்ணேசுவரர் கோவிலும் இராசசிம்மன் காலத்ததேயாகும். மாமல்லபுரத்திற்கு வடக்கே மூன்று கல் தொலைவில் சாளுவன் குப்பத்தில் உள்ள (1) புலிகக்குகை[22] (2) அதிரண சண்டன மண்டபம் என்பன இக்காலத்தனவே ஆகும். மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த காலத்தில் இக் குப்பம் அதனைச் சேர்ந்த பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். புலிக்குகையில் ஒன்பது புலிகள் (சிங்கங்கள்?). வாயைத் திறந்தவண்ணம் குகையின் முகப்பில் செதுக்கப்பட்டுள்ளன. இதில் எந்தத்தெய்வத்தின் சிலை (துர்க்கை?) வைக்கப்பட்டதென்பது தெரியவில்லை. இதன் தோற்றம் விநோதமாக இருக்கின்றது. இரண்டாம் மண்டபம் சிவனுக்கு அமைந்த குகைக்கோயில் ஆகும். அது பேரளவில் மகேந்திரன் காலத்து அமைப்பைக் கொண்டதாகும். இவை இரண்டும் அண்மையில் இருப்பதால், ஒரே அரசன் காலத்தனவாகக் கொண்டனர் அறிஞர். புலிக் குகையில் கல்வெட்டு இல்லை. மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அதிரண சண்டன் என்னும் அரசன் பெயரைக் குறிக்கின்றன. இப்பெயர் இராசசிம்மன் கொண்டதாதலால். இக் கல்வெட்டுகள் அவன் காலத்தனவே எனக் கொள்ளல் பொருத்தமாகும்.[23]

விழுப்புரத்திற்கு 16 கல் தொலைவில் உள்ள பனமலையில் இராசசிம்மன் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதுதவிரக் காஞ்சிபுரத்தில் முன்னர்க் கூறப்பட்ட ஐராவதேச்சுரர்கோவில் இவனாற் கட்டப்பட்டதே ஆகும். இவன் மனைவியான ரங்கபதாகை என்பவள் கயிலாசநாதர் கோவிலுக்கு முன்பு வலப்பக்கமாக உள்ள ஆறுசிறிய கோவில்களில் மூன்றாவதைக் கட்டியுள்ளார்.

கோவில் இலக்கணம்

இராசசிம்மன் கட்டிய கோவில்கள் தொலைவில் இருந்து நோக்கின், தருமராசர் தேரைப்போலவே தோன்றும் வரவரச் சிறுத்து உயரும் தட்டுகளைக் கொண்டவை. உள் அறை வேறு, கோபுரம் வேறு என்று இராது. நான்கு பக்கங்களிலும் உள்ள-புரைகளில் சிவலிங்கம் இருக்கும். கோவிலுக்குள் எழுந்தருளுவித்த லிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை; சில பக்கங்களில் காடி வெட்டியவை. சிவலிங்கத்திற்குப் பின் சுவர்மீது சோமாஸ்கந்தர் சிலை இருக்கும்.திருவாசிகள் ஒற்றைவளைவு கொண்டவை. இவை அனைத்தையும் விடச் சிறந்த அடையாளம் ஒன்றுண்டு. அஃதாவது, தூண்களுக்கு அடியில் பின் கால்கள்மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் வெட்டப்பட்டு இருப்பதே ஆகும். சில சிங்கங்கள் சுண்ணாம்பினால் அமைக்கப்பட்டிருக்கும்.

கயிலாசநாதர் கோவில்[24]

கோவில் இடமும் அமைப்பும்

இராசசிம்மன் கட்டிய உலகம் போற்றும் கயிலாச நாதர் கோவில் நகரத்தனி மேற்றிசையில் கழனிகளுக்கு இடையில் இருக்கிறது. இதற்குப் பின்புறம் சிறிது தொலைவில் இன்றைய கச்சி நகரின் மேற்கு எல்லை முடிவு பெறுகிறது. ஆயின் இது கட்டப்பட்ட காலத்தில், இந்தக் கோவில், நகரத் தெருக்களுக்கு இடையிற்றான் இருந்தது என்பது பல கல்வெட்டுகளால் தெரிகின்றது. இக் கோவிலுக்குப் புறமதில் திருமடைவளாகம் முதலியன இருந்தன. ஏராளமான நிலங்கள் இருந்தன. கோவிலைச் சுற்றிலும் மாடவீதிகள் இருந்தன.[25] இராசசிம்மன், மாடெல்லாம் சிவனுக்காகப் பெருஞ்

செல்வம் வகுத்தல் செய்தான்’ என்று சேக்கிழார் பெருமான் கூறியது முற்றும் உண்மையே ஆகும்.

இதற்கு எதிரில் ஓர்அழகிய குளமும் நந்தியும் இருக்கின்றன. அவை இரண்டும் இன்றுள்ள கோவில் வாயிலுக்கு ஏறத்தாழ 100 அடித்தொலைவில் உள்ளன. நந்தி பெரியது; கல்லால் ஆயது. அஃது உள்ள மேடை மீது இராசசிம்மனுக்குரிய சிங்கத் தூண்கள் குறைந்து நின்ற வண்ணம் இருக்கின்றன. இவற்றை நோக்க, நந்திக்கு மேல் கற்கூரை இருந்திருத்தல் வேண்டும்என்பது புலனாகிறது. இன்றுள்ள வாசலுக்கு எதிரில் கோவிற் கிணறு ஒன்றும் இருக்கின்றது. கோவிலுக்குப் பின்புறத்திலும் ஒரு கிணறு உள்ளது. இவை இரண்டும் பண்டைக் கிணறுகளே. மேலும் வாயிலை அடுத்து. இன்றுள்ள மதிற் சுவருக்கு வெளியே வலப்பக்கம் இரண்டும் இடப்பக்கம் ஆறுமாக எட்டுச் சிறிய கற்கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் லிங்கங்கள் இருக்கின்றன. இவற்றையும் முன் சொன்னவற்றையும் நோக்க, கோவிலின் வெளிச்சுற்று ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பதும், கோவில் மிகப்பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலனாகும்.

இன்றுள்ள கோவிற் பகுதிகள்

கோவில் வாயில் சிறியது. கோவில் நீள் சதுரமாக இருக்கிறது. வாயிலைத் தாண்டியவுடன் எதிரேதனித்துள்ள சிறியகோவில் ஒன்று இருக்கிறது. அதற்கு இருபுறங்களிலும் உட்செல்ல வழிகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக உட்செல்லின், நீள நாற்கோண (சதுர)க்கோவில் இருக்கின்றது. அதனைச்சுற்றிலும் ஏறத்தாழ ஆறடி அகலுமுள்ள திருச்சுற்று அமைந்துள்ளது. திருச்சுற்றில் உள்ள உட்புறச் சுவர்கள் பல சிறு கோவில்களாகவே காட்சியளிக்கின்றன. இறையிடம், முன்மண்டபம் ஆகிய இரண்டும் சுவர்களை உடையவை. முன்மண்டபத்தைச் சேர்ந்த முற்பகுதி பொதுமுறையான (சாதாரண) மண்டபமாகவே இருக்கிறது. இறையிடத்து உட்சுவர்களிலும் புறச்சுவர்களிலும் சிற்பங்கள் பலவாக இருக்கின்றன. இறையிடத்தைச் சுற்றியுள்ள வெளிச்சுவரில் சிறு கோவில்கள் பல காணப்படுகின்றன. இறையிடத்துக்கு மேல் கண்ணைக் கவரும் அழகிய கும்பம் இராசசிம்மன் நினைவையும் பல்லவர்காலக் கட்டடக் கலையையும் உணர்த்தி நிற்கின்றது.

முன்கோயில்

வாயிலுக்கு எதிரே உள்ள சிறிய கற்கோவில் பல படிக்கட்டுகளை உடையது.உயர்ந்த இடத்தில் பெரிய லிங்கம் நான்கரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது பதினாறு பட்டைகளைக் கொண்ட லிங்கம். லிங்கம் உள்ள இடத்திற்குப் பின்னுள்ள சுவரில் அம்மையப்பர் அரியணையில் அமைந்துள்ள கோலம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உள்ளறையை அடுத்த வெளி மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று சடையை விரித்த சிவனார் உருவம்; மற்றொன்று சிவனார் எட்டுக் கைகளுடன் ‘லதாவ்ரிசிக’ நடனம் செய்தலைக் குறிப்பது அஃதாவது, இடக்கால் முன்புறம் மடித்து ஊன்றி, வலக்கால் பின்புறம் மடித்துத்துக்கி, இடக்கைகளில் ஒன்றுதலை முடிக்குமேல் தூக்கியவண்ணம் நடிக்கும்பொழுது இடக்கைகள் இரண்டு பந்தை எறிந்து பிடித்தல். இது விந்தையான நடனவகை ஆகும். இந்த நடனவகையையே இக் கோவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. இவ் விந்தையான நடனவகையே இராசசிம்மனைக் களிப்பித்தது போலும் இக் கோவிலின் புறச்சுவரில் அழகிய லிங்கங்கள், யாழ் (வீனை) வாசிக்கும் விஞ்சையர்கள், தக்கிணாமூர்த்தி, எட்டுக் கைகளை உடைய அகோர வீரபத்திரர் முதலியவரின் பல உருவங்கள் பொலிகின்றன. லிங்கத்திற்குப் பின்னுள்ள புறச்சுவரில் அழகிய அம்மை அப்பர் அரியணைமீது அமர்ந்துள்ள கோலம் சால அழகியது; இருவருக்கும் இரண்டு குடைகள் கவிக்கப்பட்டுள்ள இச் சுவருக்கு மேலுள்ள கும்பத்தில் சிவனாரது யானைக்கை நடனம் நேர்த்தியாக ஒவியஞ் செய்யப்பட்டுள்ளது. கும்பத்தின் ஏனைய பக்கங்களிலும் பிறநடன வகைகள் காட்டப்பட்டுள்ளன.

சுற்றுச் சுவர்கள்

முற்கோவிலுக்கு இடப்புறமுள்ள சுற்றுச் சுவரில் பதினொருவர் ஒருபொதுப் பீடத்தில் அமர்ந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள சிற்பம் பல்லவ அரசரைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. அதற்கு நேர் எதிரில் வலப்புறச் சுவரில் இங்ஙனமே பன்னிருவர் உருவங்கள் தோன்றுகின்றன. இவை அன்றி நந்தி, அம்மையப்பர் கோலம், முதலியவற்றைக் குறிக்கும் சிற்பங்கள் பலவாகும்.

இறை இடம்

கயிலாசநாதரைக் குறிக்கும் பெரிய லிங்கம் பதினாறு பட்டைகளை உடையது; எட்டடி உயரம் உள்ளது. இதன் பின்சுவரில் சோமாஸ்கந்தப் படிமம் இருக்கின்றது. இறை யிடத்தைச் சுற்றிவரும் திருச்சுற்று ஏறத்தாழ இரண்டடி அகலம் உடையது. இடப்பக்கம் உள்ள புழையில் படுத்து நுழைந்து ஊர்ந்து வலப்பக்கம் தரையை ஒட்டினாற் போல் உள்ள சிறிய வழியே வெளிவருதல் வேண்டும். இறையிடத்தை அடுத்துள்ள வலப்பக்க அறையில் பழுதற்ற மிக்க அழகொழுகும் நடனச் சிற்பம் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. வேறு அம்மை அப்பர் சிற்பங்கள் உள. இடப்புற அறையிலும் நடனச் சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றுட் சில பழுது பட்டிருக்கின்றன. இந்த இரண்டு அறைகளும் பூட்டப்பட்டுள்ளன.

முன்மண்டபம்

இறையிடத்திற்கு எதிரில் உள்ள ഥങ്ങപ് அழகர்னது. தூண்கள் வேலைப்பாடு கொண்டவை; பிற்காலச் சோழரின் தூண்கட்கு மூலமாக அமைந்தவை மண்டபத் தரையிலும் கூரைமீதும் கல்வெட்டுகள் இருக்கின்றன.இம்மண்டபப் பகுதியைச் சேர்ந்ததே வெளி மண்டபம் ஆகும். அவ்விடத்தில் பதினாறு தூண்கள் இருக்கின்றன. அவற்றில் பல கெட்டு விட்டன; கல்வெட்டுள்ள தூண்கள் ஐந்து அவற்றில் பழுதுற்றிருப்பவை மூன்று.

உள்ளறை மண்டபப் புறச்சுவர்

இறையிடத்துச் சுற்றிலும் சுவரில் சிறு கோவில் அமைப்பு பல இடங்களில் உள்ளது. ஒருபுறம் சிவனார் நடனம் அல்லது அமர்ந்த கோலம் அல்லது வேறொரு கோலம் காணப்படுகிறது. அதன் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பிரமன் - நாமகள், திருமால் - திருமகள் இவர்கள் சிவனாரை வணங்குதல் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. ஊர்த்துவத் தாண்டவத்தைக் குறிக்கும் சிற்பங்கள் சில உள. நந்தி நடனம், கணங்களின் நடனம், விஞ்சையர் யாழ் வாசித்தல் முதலியன காணலாம்.[26] மண்டபச் சுவரில் நீண்ட வடிகாதுடைய ஆண் உருவம் தலைமீது முடிதாங்கிஉள்ளது. அதற்கு இருபுறத்தும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. கீழே ஓர் ஆண் உருவம் (மகன்?) இருக்கிறது. இச் சிற்பம் இராசசிம்மன் குடும்பத்தைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. இதனை அடுத்துப் பதினாறு கைகளையுடைய காளி சிங்கத்தின்மீதுள்ள கோலம் அழகாகச் செய்யப்பட்டுள்ளது.

சிறு கோவில்கள் 58

திருச்சுற்றுப் பாதையை அடுத்த கோவில் மதிற் சுவர் உட்பக்க முழுவதும் சிறு கோவில்கள் 58 உள்ளன. இரண்டு கோவில்கட்கு இடையில் சுவரில் அம்மனைக்குறிக்கும் பல திறப்பட்ட சிற்பங்களே பலவாகக் காண்கின்றன. சில அம்மை அப்பரைக் குறிப்பன. அம்மன் இடக்கையில் கிளியேந்தி அமர்ந்துள்ள நிலை கீழே இரண்டு யானைகளின் தோற்றம்-தோழிப்பெண் தோற்றம் இவைகண்ணைக் கவர்வனவாக உள்ளன. சிறு கோவில்கள் எனப்படும் மாடங்களில் பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக யமனை உதைத்தவரலாறு, பரமன் - பார்த்திபன் போர், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, நால்வர்க்கும் அறம் உரைத்த காட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழிபெற்ற

வரலாறு, இராவணன் வழிபட்ட ஆன்ம லிங்கத்தை அனுமார் வழிபட்டுக் கவர்ந்து செல்லல் முதலிய வரலாறுகளைக் குறிக்கும் சிற்பங்கள் அழகாக அமைந்துள்ளன. அம்மை அப்பர் திருமணம், பிரமன் நாமகள் திருமணம், திருமால் - திருமகள் திருமணம் இவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பராசக்தியின் எழுவகை உருவங்கள் ஓரிடத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்விடத்திற்கு எதிர்புறச் சுவரில் உருத்திரர் பதினொருவர் உருவங்கள் இருக்கின்றன. அம்மை யாழ் வாசிப்பது சில சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளது. சிவனார் சடை முடி மிகத் தெளிவாகப் பல சிற்பங்களில் விளக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் எல்லாவற்றிலும் பின் வருபவை பலவாகக் காணப்படுகின்றன. அவை (1) யாழ் வாசித்தல், (2) கையை முடிக்குமேல் உயர்த்திவைத்துச் சிவனார் நடித்தல் (3) பிள்ளையார், (4) கற்றைவார் சடை என்பன.

எல்லாச் சுவர்களிலும் சிங்கத்தூண்கள் இருக்கின்றன. சிங்கங்கள் மீது வீரர்கள் அமர்ந்துள்ளனர். கோவிலின் புறச்சுவர்ப் பக்கத்தும் இக் காட்சியைக் காணலாம். சிங்கங்கள் பின் கால்கள் மீது நிற்பன. சிற்பங்கள் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1250 ஆண்டுகட்கு முன் செய்யப்பட்டனவாக இருந்தும், இன்றும் அவை தம்மைப் பார்ப்பவரைப் புன்முறுவலோடு வரவேற்பன போல இருக்கின்றன நிலை உள்ளத்தை இன்புறுத்துகிறது. சிறப் அழகில் ஈடுபட்டகண்கள், இக்காட்சி இன்பத்தை நன்கு நுகரலாம். இங்குள்ள வாயிற்காவலர் அனைவரும் இரண்டு கைகளை உடையவரே ஆவர்.

கும்பம்

இக் கும்பம் இராசசிம்மன் கட்டிய மாமல்லபுரத்துக் கரையோரக் கோவில் கும்பத்தை ஒத்தது. ஆனால், அளவிற் பெரியது. இதன் வளர்ச்சியே இராசராச சோழன் தஞ்சையிற் கட்டிய பெரிய கோவில் கும்பம். இந்தக்கும்பத்தில் சிங்கத்தலைகளே காணப்படுகின்றன.

கல்வெட்டுகள்

கைலாசநாதர் கோவில் நிறையக் கல்வெட்டுகள் இருகின்றன.[27] அவை கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட பல்லவர், சோழர் கல்வெட்டுகளாக இருக்கின்றன. அவற்றுள் கோவில் கட்டிய இராசசிம்மன் கல்வெட்டுகளும், அவன் மகனான மூன்றாம் மகேந்திரன், அவன் மனைவி ரங்கபதாகை முதலியோர் கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவரைவென்று தொண்டைநாட்டைஆண்டமுதற் பராந்தகன், இராசராசன். இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் இவர் தம் கல்வெட்டுகள் பலவாகக் காண்கின்றன. சோழர் காலத்தில் இக் கோவில், மாடவீதிகள், வெளிச்சுற்று, மடவளாகம், மாடவீதி, மடங்கள் முதலியவற்றையும் அளவிடற்கரிய செல்வத்தையும் பெற்றிருந்தது என்பது இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இரண்டாம் நந்திவர்மன் காலத்திற் காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக்கல்வெட்டும் இருக்கின்றது.அதனில், இராசசிம்மன் கட்டிய கோவிலில் உள் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்த வல்லபன்.அதனைக் கவராது, அப் பெருமானுக்கே விட்டு விட்டான். என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையைச் சாளுக்கியருடைய வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களும் பகர்கின்றன.[28]

சிறப்பு

‘கயிலாசநாதர் கோயில் திருக்கயிலையின் அளவைக் கொண்டே கட்டப்பட்டதாகும்’ என்று விபுலானந்த அடிகள் போன்றார் கூறுகின்றனர். கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு இதற்கு மறைமுகமாகச் சான்று பகர்கின்றது. இராசசிம்மன் தன்னை ‘வாத்ய வித்யாதரன்’ என்பதற்கேற்ப இக் கோவிலில் யாழ் வாசிக்கும் உருவங்கள் பல செதுக்கப்பட்டுள்ளன. இவன் இசை, நடனம், சிற்பம், ஓவியம் இவற்றிற் பேரறிவு படைத்த பெருவேந்தன் என்பதற்குக் கயிலாசநாதர்கோவில் ஒன்றே போதிய சான்றாக அமைந்துள்ளது. இக் கோவில் ஏறத்தாழ வைகுந்தப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருத்தல் வியத்தற்குரியது. இங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் சுவர்களில் இருத்தல் போலவே அக் கோவிற் சுவர்களிலும் இருத்தல் இங்கு நினைக்கத்தகும். சுருங்கக் கூறின் கயிலாசநாதர் கோவில் பல்லவரது சிற்பக்கலையை உலகத்திற்கு அறிவிக்க எழுந்த சிற்பக்கலைக்கூடம் என்னலாம்.

வடமொழிப் புலவன்

இராசசிம்மன் பேரவையில் தண்டி என்னும் வடமொழிப் புலவர் இருந்தமை முன்னரே கூறப்பட்டதன்றோ? பல்லவர் வடமொழி வாணரை நன்கு போற்றியவர் ஆவர். சிம்மவிஷ்ணு பாரவியைப் போற்றினான்; பாரவியிடம் மகேந்திரவர்மன் படித்துச் சிறந்த வடமொழிப் புலவன் ஆயினான் (?) அவருடைய பெரிய பெயரர் தண்டி என்பதால், பாரவிக்குப் பின் அவர் மகனும், பெயரனும் முறையே பல்லவர் அவைப்புலவராகவும் வடமொழி ஆசிரியராகவும் இருந்திருக்கலாம். தண்டி எழுதிய ‘காவ்யா தர்ஸம்’ என்னம் அணி இலக்கணத்தில் ‘இராசவர்மன்’ என்னும் சைவ அரசனைக் குறிப்பிட்டுள்ளார்: காஞ்சியைப் பற்றியும் பல்லவரைப் பற்றியும் ஆங்காங்குக் குறித்துள்ளார்.[29] இவற்றறோடு அவர் செய்த அவந்தி சுந்தரி கதா என்னும் நூலில் பல்லவன் காலத்து வறுமையை விளக்கியுள்ளார். இவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து

நோக்கின், அவரால் குறிக்கப்பெற்ற ‘இராசவர்மன்’ இராசசிம்மனே என்பதும், அவர் பல்லவனது அவைப்புலவர் என்பதும் பிறவும் நன்குணரலாம். ‘காவ்யாதர்ஸ்த்தின் ஐந்தாம் பகுதி, காஞ்சியில் உள்ள அரச மாணவனுக்குக் கற்பிக்கவே செய்யப்பட்டது’ என்னும் செவிவழிச் செய்தியையும், ‘அப் பகுதியை நன்கு ஆராயின், தண்டியிடம் படித்த அரசமாணவன் இராசசிம்மனே என்பது தெளிவாகிறது’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறுதலையும், இவற்றுடன் கைலாசநாதர்கோவில் கல்வெட்டுகளில் சிலேடைப் பொருள் கொண்ட கல்வெட்டு ஒன்று இராசசிம்மனைப் பற்றியது என்பதையும் நோக்க - இராசசிம்மன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதை நன்குணரலாம். அத்துடன், இவன் நாகரிகக் கலைகளான இசை நடனம், ஓவியம், சிற்பம் இவற்றிலும் வல்லவனாக இருந்தான் என்பதும் நன்கு புலனாகிறது.

நாடக அறிஞன்

வடமொழியில் ‘பாஷர்’ என்பவர் பல நாடகங்களை விரிவாக வரைந்துள்ளார். பிறகு அவை நடிப்பதற்கேற்ற முறையிற் சுருக்கி வரையப்பட்டன. அவற்றின் இறுதியில், ‘பல்லவன் அவையில் நடித்துகாட்ட இங்ஙனம் தாயாரிக்கப் பெற்றவை’ என்பது கண்டுள்ளது. இப் பல்லவன் இராசசிம்மனாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், இராசசிம்மன் நாடகக் கலையிலும் பண்பட்ட அறிவுடையவன் என்பது புலனாகும்.

இரண்டாம் பரமேசுவரவர்மன்

(கி.பி. 705–710)

இவன் இராசசிம்மன் மகன். இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, வீரட்டானேச்சுரர் கோவிலில் காணப்படுகிறது. அதற்குப் பிற்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்காமையால், இவன் சிறிது காலமே அரசாண்டான் என்று கொள்ளவேண்டும். காசக்குடிப் பட்டயம் இவன் கலியை வென்றான்; அமைதியான வாழ்க்கையை நடத்தினான்; பிரகஸ்பதி விதித்த வழியில் குடிகளை நடத்தினான்; உலகத்தைக் காத்தான்[30] என்று கூறுகிறது. வேலூர் பாளையப் பட்டயம், இவன் கலியை வென்றவன் மது கூறிய விதிகளின்படி நாட்டை ஆண்டவன் என்று கூறுகிறது.[31] இவன் காஞ்சியில் உள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலைக் கட்டியவன் என்று அறிஞர் அறைகின்றனர்.[32] திருவதிகையில் உள்ள சிவன் கோவிலையும் கற்களால் அமைத்தவன் இவனே என்றும் கருதுகின்றனர்.[33]

* * *

↑ Int.Ant, Vol.XIX. pp.151-152

↑ Ep.Ind. Vol. IX.p.200.

↑ Ind Ant. Vol. VI pp.87-88.

↑ SII vo Nos 24.25, etc.

↑ Heras’s “Studies in Pallavas History’ pp.48–50.

↑ M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.49.

↑ MVK Rao’s “Gangas of Talaked,’ pp49-50.

↑ இதுகாறும் கூறியவற்றை ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து முடிவு காண்பாராக.

↑ Dr.C.Minakshi’s “Administration and SocialLife underthe Pallavas’ pp.114-118.

↑ இவனுக்கு முற்பட்ட அப்பர் காலத்திலே ஆகமங்கள் எனப்படும் தந்திர நூல்கள் இருந்தன என்பது அப்பர் பதிகத்தால் அறியக்கிடக் கிறது.தக்கன்தந்திரம்'ஆகமநூல் அறியாது மந்திரநூற்படி(வேதவிதிப்படி) வேள்வி செய்து சிவபிரானை அவமதித்ததால் அழிந்தான், என்று அப்பர் கூறல் காணத்தக்கது. “இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு

மந்திரம் மறைய தோதி வானவர்வணங்கி வாழ்த்தத்

தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று

சந்திரற் கருள்செய்தாரும் சாய்க்காடு மேவி னாரே”

↑ இவனும் தன் தந்தையைப்போலவே கண்மணியால் செய்யப்பட்ட லிங்கத்தை மகுடமாகத் தாங்கி இருந்தான் போலும்!

↑ I.S.I.S. Vol.I pp.14-18.

↑ தந்திரம் & Tantra (Agama)

↑ Ibid.p.12

↑ SII vol I p. 20.

↑ இதன் சரியான பெயர் திரு.எவ்வுள்.

↑ இந்த நுட்பமான செய்தி கி.பி. 12 ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் பெருமானுக்கு எங்கனம் தெரிந்தது? அவர் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டைப் படித்தே இந் நுட்பமான செய்தியை எழுதியிருத்தல் வேண்டும் என்னல் மிகையாகாது. அவர் அரசரிடம் உயர் அலுவலாளராக இருந்தவர் ஆதலின் கல்வெட்டில் நிரம்பிய புலமையுடைராய் இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே அவர், கல்வெட்டுகளிற் காணப்படும் பல குறிப்புகளைத் தம் நூலுட் பல இடங்களிற் குறித்துச் சொல்லலைக் காணலாம்.

↑ R .Gopalan’s “Pallavas of Kanchi,” p.110 and Eq-Report No.961 of 1913, pp.88-89.

↑ ‘சலசயனம், தலசயனம்’ என்பவற்றின் பொருள் தெரியாமல் ஈராஸ் பாதிரியார், ‘மல்லைத்தலசயனம் என்பது மகாபலிபுரத்தின் பழைய பெயர்’ என்று தமது ஆராய்ச்சி மிக்க நூலில் (பக். 70) தவறாக எழுதிவிட்டனர். இதனை மறுத்துத் தமிழ்நாட்டிற் சிறந்த கல்வெட்டறிஞராகவுள்ள திரு. இ.௵.இராமச்சந்திஞ் செட்டியார், ஆ.அ.ஆ.ஃ.அவர்கள் விளக்கமாக எழுதியுள்ளார் & Q.J.M.S. Vol.27.Nos. land 2.

↑ A.Rangaswami Saraswathi’s article on “The Age of Baravi and Dandin” in Q.J.M.S.Vol.XIII, pp.674-679.

↑ M.Raghava “Iyengar’s “Alvargal Kala nilai.’ p. 143.

↑ இவை சிங்கங்களே ‘சிங்கக் குகை’ என்பதே பொருத்தமுடையது - “Indian Architecture’ by A.V.T.Iyer. Vol.II-B, p.192.

↑ Rev. Heras’s “Studies in Pallava History,’ pp.97-99.

↑ நான் இக்கோவிலை (10-1-43) விளக்கமாகக் காண உதவி புரிந்த பெரியார் இக் கோவில் கண்காணிப்பாளராகவுள்ள காஞ்சிபுரம் சி.குமரகாளத்தி முதலியார் ஆவர்.

↑ S.I.I.Vol. Nos.-86-88: 140 - 150.

↑ இவை பற்றிய விளக்கத்தை, ‘இசையும் நடனமும்’ என்ற தலைப்பிற் காண்க.

↑ Vides II. Vol.INos, 24-30, 82-88, 144-150.

↑ Ep. Ind. Vol.V p.200. Vol.IX p.200

↑ இம் முறையைப் பின்பற்றியே இராசசிம்மன் சிறப்புகள் வரும் இடங்களில் எல்லாம் இந்நூலைத் தமிழ்ப்படுத்திய புலவர்தம் காலத்தரசனான அனபாய சோழன் சிறப்பைக் குறிக்கும் பாடல்களைத் தாமே கட்டி மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பது அறியத்தகும். சான்றாக ஒன்று காண்க: ‘என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ

பொன்னே அநபாயன்பொன்னெடுந்தோள்! - முன்னே

தனவேயென்றாளும் சயமடந்தை தோளாம்

புளவேய் மிடைந்த பொருப்பு.’

↑ S.I.I. Vol.II p.357.

↑ S.II. Vol. II p.510.

↑ R. Gopinatha Rao’s “History of Sri. Vaishnavas’ p.17.

↑ C.S. Srinivasachari’s “History and Institutions of the Pallavas’ p.15.

13. புதிய பல்லவர் மரபு

சில செய்திகள்

இரண்டாம் பரமேசுர வர்மனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்து விடுகிறது. இரண்டாம் பரமேசுவர வர்மனுக்குப் பின் புதிய மரபைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மன் என்பவன் பட்டம் பெற்றதாகச் சில பட்டயங்கள் பகர்கின்றன. உதயேந்திரப் பட்டயம், இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச்சித்திரமாயன் என்னும் மைந்தன் இருந்தான்; அவனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டுமென்று தமிழ் அரசர் முயன்றனர் என்று கூறுகிறது. கொற்றங்குடிப் பட்டயம், இரண்டாம் நந்திவர்மனுக்கு முன் இரண்யவர்மன் என்பவன் ஆண்டதாகக் கூறுகிறது. ஆனால், தண்டந் தோட்டப் பட்டயம் இதனைக் கூறாமல், இரண்யவர்மன் உலக நன்மைக்காகப் பிறந்தான் தன் பகைவரைக் காட்டிற்கு விரட்டினான்; குடிகளைச் செம்மையுறப் பாதுகாத்தான் எனக் கூறுகிறது. இந்த இரண்யவர்மன் யாவன்? கீழே உள்ள அரச மரபைக் காண்க:

சிம்மவர்மன்

சிம்மவிஷ்ணு பீமவர்மன்

மகேந்திரவர்மன் 1 புத்தவர்மன்

நரசிம்மவர்மன் 1 ஆதித்தவர்மன்

மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்

பரமேசுவரவர்மன் 1 இரண்யவர்மன்

நரசிம்மவர்மன் 2

பரமேசுவரவர்மன் 2

(சித்திரமாயன் - சிறுவன்?) நந்திவர்மன் 2

வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள்

காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள வரிசை வரிசையான சிற்பங்கள் இக்கால நிலையைப் பெரிதும் விளக்குகின்றன. அவற்றின் கீழ்ச் சில செய்திகள் செதுக்கப் பட்டுள்ளன. முதற் சிற்பம் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்பைக் குறிக்கிறது. அங்கு அமைச்சர், கடிகையார், மூலப்பிரகிருதி, இரண்யவர்மன் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.நான்காம் சிற்பத்தில் ஸ்ரீமல்லன், இரண்மல்லன், சங்கிராம மல்லன், பல்லவ மல்லன் இந்நால்வரும் இரண்ய வர்மன் பிள்ளைகளாகக்

குறிக்கப்பட்டுள்ளனர். அங்குப் ‘பரமேசுவரன் நான் போவேன் என்று தொழுது நின்ற இடம்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது. பிறகு இரண்யவர்ம ராசனும் தரணி கொண்ட போசரும் நகரத்தாரும் காடக முத்தராயரும் குறிக்கப்பட்டுள்ளர்; பின்னர் இளம் பல்லவ மல்லன் ‘நந்திவர்மன்’ என்னும் பெயரால் அபிடேகம் செய்யப்பெற்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.[1]

இச் சிற்பங்களை ஒன்று முதல் இறுதிவரை நன்கு கவனிப்போமாயின், பல்லவர் மரபை முதலிலிருந்து நன்கு விளக்கிச் செல்லலைக் காணலாம். இவற்றைப் பதிப்பித்த ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளதைக் கீழே காண்க:- “இரண்டாம் பரமேசுவர வர்மன் இறந்த பிறகு கடிகை யாரும் மூலப்பிரகிருதியாரும் அமைச்சரும் இரண்ய வர்ம மகாராசனைக் கண்டனர்; தமக்கோர் அரசனைத் தர வேண்டினர். உடனே இரண்யவர்மன் தன் மைந்தர் நால்வரையும் அழைத்து, ‘யார் அரசராக விரும்புகிறீர்?’ என்று கேட்டான். முதல் மூவரும் மறுத்தனர். பன்னிரண்டு வயதுடைய பல்லவமல்லன்தான் அரசனாக விழைவதை வணக்கத்தோடு கூறினான். தரணிகொண்ட போசர்[2] தனது இசைவைத் தருமாறு இரண்யவர்மனை வற்புறுத்தினார். பிறகு தந்தையும் தரணிகொண்ட போசரும் தந்த கைப்படைகளையும் தாண்டிக் காஞ்சிக்குவந்தான். அவன் வருதலை அறிந்த பல்லவடி அரையன் பெருஞ்சேனையுடன் எதிர்கொண்டு அவனை யானைமீது அமர்த்திஅழைத்து வந்தான். பல்லவ மல்லனை நகரச் செல்வரும் ‘காடக முத்தரையர்’ முதலிய சிற்றரசரும் பிறரும் வரவேற்று அபிடேகம் செய்தனர்; நந்திவர்மன் என்னும் பெயரை அபிடேகப் பெயராகச் சூட்டினர். விடேல் விடுகு, கத்வாங்கதான், ரிஷபலாஞ்சினன் என்னும் பட்டத்திற்குரிய விருதுப் பெயர்களை வழங்கினர். நந்திவர்மன் அரசன் ஆனான்.[3]

இரண்யவர்மன்

கொற்றங்குடிப்பட்டயம், இரண்யவர்மன் அரசனாக இருந்தான் என்று கூறலும், தண்டன் தோட்டப் பட்டயம் இரண்யவர்மன் பெருவீரன் - பகைவரை விரட்டியவன் என்று பலபடக் கூறி, அவன் அரசன் எனப் பொருள்படுமாறு கூறலும் ஆராயற்பாலன. ஆனால், பல்லவர் வழிமுறை கூறும் பல பட்டயங்கள் அவன் பெயரை (அரசனாக)க் குறிக்கவில்லை. எனவே, இவ் விருவகைப் பட்டயங்கட்கும் மதிப்பைத் தந்து நோக்குழி, ‘இரண்யவர்மன்’ தன் மகனான (பன்னிரண்டு வயதுடைய) பல்லவ மல்லன் பட்டம் பெற்ற கால முதல் வயது வரும் வரை அவன் சார்பாக நின்று, பல்லவ நாட்டைப் பாதுகாத்தான் எனக் கோடலே பொருத்தமுடையதாகும்.

புதிய மரபு ஏன் வந்தது?

சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மன். பீமவர்மன் மரபில் வந்தவன் இரண்யவர்மன். இரண்யவர்மன் மகன் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன். இம் மரபினரே 8, 9ஆம் நூற்றாண்டுகள் முடியப் பல்லவ நாட்டை ஆண்டனர். சிம்மவிஷ்ணு மரபினர் ஆட்சி இரண்டாம் பரமேசுவர வர்மனோடு முடிவுற்றுவிட்டது. அவனுக்குச் ‘சித்திரமாயன்’ என்னும் மைந்தன் இருந்தான். ஆயின் அவன் அரசனாகப் பொதுமக்கள் விடவில்லை. ஏன்? பல்லவ நாட்டிற்கு வடமேற்கே பிறவிப்பகைவராக இருந்த சாளுக்கியர் எந்த நிமிடத்திலும் படையெடுக்கலாம் என்னும்பெருங் கவலை இருந்தது. அத்துடன், தெற்கே பெருவீரராக இருந்து நாடு கவரும் வேட்கையில் பாண்டியர் முனைந்திருந்தனர். இங்ஙனம் வடக்கே சாளுக்கியர் அச்சமும் தெற்கே பாண்டியர் அச்சமுமே அமைச்சர் முதலிய பொறுப்புள்ளவர் மனத்தைக் கலக்கிக்கொண்டிருந்தது. இரண்டாம் பரமேசுவர வர்மனே போரில் இறந்தான் என்பது எண்ணவேண்டு வதாக இருக்கிறது.[4] காலஞ் சென்ற அரசனின் மகனான ‘சித்திரமாயன்’ குழந்தையாக அல்லது சிறுவனாக, அல்லது பொறுப்பற்ற வாலிபனாக இருந்திருக்கலாம். மிகப்பெரிய பேரரசிற்கு அவன் தகுதியற்றவன் என்று அரசியல் தலைவர்கள் கருதினர் போலும் மேற்சொன்ன இரு பேரரசரான சாளுக்கியரையும். பாண்டியரையும் எதிர்த்து நிற்கும் மன ஆற்றல் பெற்ற அரசனே தமக்கு வேண்டும் என்று எண்ணிய அத்தலைவர்கள், அரசியல் அறிவும் ஆண்மையும் படைத்த இரண்யவர்மனை அரசனாகுமாறு தூண்டினர். அவன் மறுத்துத் தன் வீரமகனை அரசு கட்டிலில் அமர்த்தினான் போலும்!

பன்னிரண்டு வயதுடைய இளைஞனான பல்லவ மல்லன் நான் அரசனாவேன் என்று தந்தையிடம் கூறினது நோக்கற்பாலது. தனக்கு முன்னோர் மூவரும் மறுத்ததை அருள் நோக்கங் கொண்ட அவன் தன் இளமையும் கருதாமல் ஏற்றது. அவனது பெருந்தன்மையையும் அரசியல் பொறுப்புணர்ச்சியையும் உணர்த்துகிறது. அவன் பிறர்க்கு உரிய பட்டத்தை வலிதிற் கவரவில்லை; தானாக வந்ததைச் சிறுவயதில் ஏற்றுங்கொண்டான். அவன் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாலும் கடமை உணர்ந்த குடிமக்களாலும் பல்கலை விற்பன்னரான கடிகையாராலும் பேரரசைப் பண்பட நடத்திய அமைச்சராலுமே தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இப்புதிய பல்லவ மரபரசர் இவராவர்:

இரண்டாம் நந்திவர்மன்[5]

(கி.பி. 710-775)

|

தந்திவர்மன்

(கி.பி.775-825)

|

மூன்றாம் நந்திவர்மன்

(கி.பி.825-850)

|

பிற்பட்ட பல்லவர்

(கி.பி. 850-893)

* * *

↑ S.I.I. Vol. IV pp. 10-12

↑ மாகாணத்தலைவர்(Governor) Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country. pp.75-77.

↑ Ep. Indica, Vol. XVIII, p.177

↑ Dr. N. Venkataramanayya’s article on the Date of Pallava Malla in J.O.R. Madras.

↑ இவன் கி.பி. 726இல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் எனவும் கூறுவர். Vide. Dr. N.R. Ramanayya’s article on “The Date of Pallava Malla’.

14. இரண்டாம் நந்திவர்மன்

(கி.பி. 710-775)

வரலாற்று மூலங்கள்

இவனது ஆட்சிக் காலத்தின் 65ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதனால், இவன் ஆட்சிக் காலம் ஏறக்குறையை 65 ஆண்டுகள் என அறிஞர் கொண்டுள்ளனர். இவ்வளவு நீண்டகாலம் ஆண்ட வேறு பல்லவ அரசன் இல்லை. இவன் 12 வயதில் பட்டம் பெற்றது. ஆட்சிக் காலம் நீண்டமைக்கொரு காரணமாகும். இவன் கால வரலாற்றை அறியத்துணைபுரிவன: (1) பல்லவர் பட்டயங்கள், (2) பாண்டியர் பட்டயங்கள், (3) சாளுக்கியர் பட்டயங்கள், (4) வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள - சிற்பங்களும் கல்வெட்டுகளும், (5) கங்கர் கல்வெட்டுகள், (6) இராட்டிர கூடர் பட்டயங்கள், (7) திருமங்கையாழ்வார் பாடல்கள் ஆகும். பல்லவர் பட்யங்களுள் இவன் காலத்தன ஐந்து. அவை (1) இவனது 21ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த உதயேந்திரப் பட்டயம். (2) இவனது 22ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த காசக்குடிப் பட்டயம். இவனது 58ம் ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்ததண்டன்தோட்டப்பட்டயம், (4) இவனது 61ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள கொற்றங்குடிப் பட்டயம், (5) இவனது 65ஆம் ஆட்சி ஆண்டில் வந்துள்ள மகாபலிபுரத்துக் கல்வெட்டு என்பன. சாளுக்கியச் சான்றுகள் ஆவன:-(1) கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்கிரமாதித்தனது கல்வெட்டு, (2) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரிப் பட்டயம், (3) இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட கேந்தூர்ப் பட்டயம் என்பன. பாண்டியர் பட்டயங்கள்:(1) வேள்விக்குபடி பட்டயம், (2) சின்னமனூர்ப் பட்டயம் என்பன. இங்ஙனமே கங்கர், இராட்டிரகூடர் பட்டயங்களும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஆய்ந்து இப் பல்லவப் பேரரசர்கள் வரலாறு காண்போம்.

பல்லவர்-பாண்டியர் போர்

போருக்குக் காரணம்

(1) பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற் கெல்லாம் சிறந்த காரணம் கொங்குநாட்டு உரிமையாகும். கொங்குநாடு ஒருகாலத்திற் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்திற் பல்லவரிடமும் கைமாறிவந்தன. நந்திவர்மன்கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான். அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான். (2) அடுத்த காரணம் சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணமடைந்திருந்தது. இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியர் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.[1]

போர்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம் பழைய காலத்தில் பகைவர் தென்புறக் கோட்டையாக இருந்தது. அதற்கு நந்திபுரம் என்பது பெயர். அங்குப் பெருமாள் கோவில் உண்டு. அதனைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அந் நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்த சமயம் பார்த்துப் பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் சென்று நந்திபுரத்தை முற்றுகை இட்டான். பாவம்! பாண்டியன் படையெடுப்பை எதிர்பாராத நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

நல்ல காலம்! வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதய சந்திரன் என்னும் படைத்தலைவன், பெருஞ்சேனையுடன் நந்திபுரத்திற்கு விரைந்தான். அவன் ‘வில்வலம்’ என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவன். அவன் விரைந்து சென்று, அல்லிமலர் இதழ் போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் பிறரையும் கொன்றான்;

பாண்டியருடைய படையை நிம்பவனம், சூதவனம், சங்கர கிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்துர்முதலிய இடங்களில் வென்றான்.[2] பாண்டியர் பட்டயங்கள், ‘நெடுவயல், குறுமடை மன்னிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் என்னும் இடங்களில் பாண்டியன் வெற்றிபெற்றான். குழும்பூரில் நடந்த போரில் பாண்டியன் பல்லவனுடைய கரிகளையும் பரிகளையும் கைக்கொண்டான்’[3] என்று கூறிகின்றன. இவற்றுள் மன்னிக்குறிச்சி என்பது அறந்தாங்கித் தாலுக்காவில் உள்ள மணக்குடி ஆகலாம்; நிம்பவனம்-வேப்பங்காடு, சூதவனம்-கோவிலூர் (தேவாரகாலத்துத் திருவுசாத்தானம்) சங்கரகிராமம் - சங்கரனார் குடிக்காடு ஆகலாம். இவை யாவும் தஞ்சைக் கோட்டத்திலேயே பெரும்பாலும் இருப்பவை; சில புதுக்கோட்டைச் சீமையில் இருப்பவை.

இந்த இடங்களில் இருதிறத்தாரும் வெற்றி பெற்றதாகக் கூறல் எங்ஙனம் பொருந்தும் எனின், பொருந்தும் என்றே கூறலாம். பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்; இறுதியில் உதயசந்திரன் சில இடங்களில் வெற்றி பெற்றான் எனக் கோடலே நேரிது, உதயசந்திரன் வருவதற்குமுன் சில இடங்களில் போர் நடந்திருக்கும்; முற்றுகைக்குப் பின் பல இடங்களில் சேனை சிதறிப் போர் செய்திருத்தல் இயல்பே. ஆங்காங்கு நடந்த போர்களில் ஆயினும், இறுதியில் பல்லவன் வெற்றிபெற்றான் என்பதில் ஐயமில்லை.[4]

உதய சந்திரன்

இரண்டாம் நந்திவர்மன் பரிவேள்வி செய்ய விழைந்து, குதிரையை வடக்கே அனுப்பினான். அதுவேங்கி நாடு சென்றது. அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன்

பல்லவன் பெருமையை ஒப்புக் கொண்டான். ஆயின், அவனுக்குக் கீழ்ப்பட்ட பிருதிவி-வியாக்கிரன் என்பவன் அக் குதிரையைக் கட்டிவிட்டான். உடனே உதயசந்திரன் அங்குச் சென்று, அச் சிற்றரசனைப் போரில் முறியடித்து நாட்டைவிட்டுத் துரத்தி மீண்டான். தோற்றவனுடைய விலை உயர்ந்த அணிகலன்களைப் பல்லவனுக்குப் பரிசளித்தான்.[5] இச்சந்தர்ப்பத்திற்றான். உதயணன் என்ற சபர அரசனை உதயசந்திரன் ‘நென்மலி’ (நெமிலி) என்ற இடத்தில் போரிட்டு வென்றான். [6]இங்ஙனம் பல்லவ மல்லனது நீண்ட ஆட்சிக்கும் பெற்ற வெற்றிகட்கும் உதயசந்திரன் சிறந்த காரணமானவன் என்பதில் ஐயமில்லை.

பல்லவர்-சாளுக்கியர் போர்கள்

1

போருக்குக் காரணங்கள்

(1) இரண்டாம் புலிகேசி காலமுதல் பட்டத்திற்கு வந்த சாளுக்கியர் அனைவரும் பல்லவர்க்கு ஆற்றார் ஆயினமை ஒரு காரணமாகும். (2) இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746) சிறந்த போர்வீரன். அவன் தன் நாட்டை முதலிற் கொங்குநாடு-கங்கநாடுவரை விரிவாக்கினான். பல்லவ மல்லன் கொங்குநாட்டு உரிமையைப் பாண்டியனை வென்று கைக்கொள்ள முயன்றான். தனது குடிப் பகைவனான பல்லவன் தன் பேரரசின் தென்பகுதி எல்லைவரை செல்வாக்குப் பெறுதல் தனக்குக் கேடு

பயக்கும் என்பதை விக்கிரமாதித்தன் உணர்ந்தான். இவ்விரு காரணங்களாலும் அவன் பல்லவநாட்டின்மீது படையெடுத்தான்.[7]

பட்டயங்கள்

இப் போரைப் பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்றேனும் கூறுகின்றிலது. இதற்குக் காரணம் இம் முறை வெற்றி பெற்றவர் சாளுக்கியர் ஆதலே ஆகும். இரண்டாம் கீர்த்தி வர்மன் (கி.பி. 746-757) வெளியிட்ட (முன் சொன்ன) வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்களே இப் போர் நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன. சாளுக்கியர் மரபில் வந்த அரசரது பெருமையைக்குலைத்த பல்லவர் மரபைப் பழி வாங்க இரண்டாம் விக்கிரமாதித்தன் துணிந்தான்; உடனே பெரும் படையுடன் காஞ்சியை நோக்கி விரைந்தான்; போரில் பல்லவமல்லனைத் தோற்கடித்தான்; பல்லவன் ஓடிவிட்டான். எங்கே? ஒருகோட்டைக்குள் ஓடிவிட்டான். இதனால், காஞ்சி சாளுக்கியன் வசப்பட்டது. சாளுக்கியன். பல்லவனுடைய கடுமுகவாத்தியம், சமுத்திர கோஷம், கத்வாங்கக் கொடி, போர் யானைகள், சிறந்த விலையுயர்ந்த மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றினான். பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சி நகரத்தை அழிக்காமல் உள்நுழைந்தான். இதே சமயத்தில் அவன் மகனான கீர்த்திவர்மன் தந்தை இசைவுபெற்று ஓடிய பல்லவனைத் துரத்திச் சென்று, பல இடங்களில் முறியடித்தான். இதற்கிடையில் விக்கிரமாதித்தன் கயிலாசநாதர் கோவில் செல்வத்தைப் பார்வையிட்டு வியந்து, அதனை (தான் எடுத்துக்கொள்ளாமல் அக் கோவிலுக்கேவிட்டுவிட்டான்.) இதனைக்கயிலாசநாதர்கோவிலில் உள்ள அவனது (பழையகன்னடத்தில் எழுதப்பட்ட) கல்வெட்டே கூறுகின்றது.[8] அவன் ஏழைகட்கும் மறையவர்க்கும் பொன்னை வழங்கினான்.[9]

காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன், ‘எப்பொழுது அதனைவிட்டுச் சென்றான்? ஏன் சென்றான்?’ என்பன நல்ல கேள்விகள் அல்லவா? அவற்றுக்கு விடை காணல் வேண்டும். நந்திவர்மன் சாளுக்கியவனை விரட்டினான் என்பது உண்மையாயின், பல்லவர் பட்டயம் அதனைச் சிறப்பாகக் கூறியிருக்கும். அங்ஙனம் கூறாமையின், நந்திவர்மன் விக்கிரமாதித்தனை விரட்டவில்லை என்பது தெரிகிறது. இருவருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டது எனக் கொள்ளின், இருவருமே பட்டயங்களில் இதனைக் கூறியிருப்பர். அங்ஙனம் கூறவில்லை. எனவே, சாளுக்கியன் தனக்கு உட்பட்டு இருக்கத்தக்க பல்லவ மரபின்ன ஒருவனைத்தேடி முடிசூட்ட முனைந்திருக்கலாம்; சித்திரமாயன் இறந்தான் ஆதலின், வேறு ஆள் அகப்படவில்லை. அவனே பல்லவநாட்டைப் பிடித்துச் சேய்மையிலிருந்து ஆள்வதும் இயலாததன்றோ? பதுமை போல ஒருவனை அரியணையில் ஏற்றிவிட்டு அவன் வாதாபி சென்றிருந்தால், மறு நிமிடமே பெருவீரனான பல்லவமல்லன் அவனைக் கொன்றிருப்பான். நெடுந் தொலைவில் உள்ள அவன், தொண்டை நாட்டைப் பிடித்து அடக்கி ஆள்வது என்பது எளிதானதன்று. இவை அனைத்தையும் நன்கு எண்ணிப் பார்த்தே அப் பேரறிஞன், காஞ்சியைக் கைப்பற்றிப் பல்லவனை முறியடித்தலிலே மகிழ்ச்சி அடைந்தான்; காஞ்சி நகரத்தாரை மகிழ்வித்தான்; கோவில்கட்கு மதிப்பளித்தான்; உலகம் உள்ளளவும் தன் பெருந்தன்மையை நிலைபெறச் செய்தான். இச் செயல்களில் மகிழ்ச்சியுற்ற அவன், தன் நாடு மீண்டான் எனக் கோடலே பொருத்தமான முடியாகும்.[10]

உண்மை என்ன?

நந்திவர்மன் சேர சோழ பாண்டியருடன் கடுமையான போரில் ஈடுபட்டிருந்த காலத்திற்றான் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான்;[11] அங்கும் பெயரளவில் இருந்த பல்லவப்

படையை வென்று, அமைதியாகக் காஞ்சிக்குள் நுழைந்தான், சிறிது காலம் கடிகையார், கோவிலார் மனமகிழப் பரிசுகள் தந்து தங்கி இருந்தான். இந்த அளவே சாளுக்கியர் பட்டயங்கள் கூறுகின்றன.

நந்திபுரக்கோட்டை முற்றுகை தீர்ந்ததும், உதயசந்திரன் தமிழரசரைக் குழும்பூர், நெடுவயல் முதலிய பல ஊர்களில் போரிட்டுத் துரத்திச் சென்றான். அப்பொழுது நந்திவர்மன் எங்கு இருந்தான்? என்ன செய்தான்? என்பன இது காறும் விளக்கப்பெறவில்லை. இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 723இல் பட்டம் பெற்றவன்: நந்திவர்மன் கி.பி.717இல் பட்டம் பெற்றவன். அவன் பட்டம் பெற்ற போது வயது பன்னிரண்டு ஆதலின், கி.பி 733இல் ஏறத்தாழ 28 வயதுடையவனாக இருந்தான் ஆவன். இப் படையெடுப்பின்போது ஏறத்தாழ 30 வயதெனக் கொண்டாலும் அவன் வீர வயதுடன் விளங்கினான் என்பதில் ஐயமில்லை அவன் தனது 61ஆம் ஆட்சி ஆண்டில் (தனது 72ஆம் வயதில்) வெளியிட்ட கொற்றங்குடி பட்டயத்தில் தான் சிறுவனாக இருந்தபொழுதே சேர. சோழ, பாண்டிய, களப்பிர, வல்லபரை வென்றனன் என்பது பொன்போலக் காணப்படுகிறது.[12] உதயசந்திரன் தென்னாட்டுப் போர் முடிந்தபிறகு வடநாடு சென்று கோதாவரி அருகில் சபர அரசனையும் பிருதுவி-வியாக்கிரன் என்பவனையும் வென்றான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகிறது. அஃது அரசனது 21ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 738இல்) பொறிக்கப்பட்டது. 738இல் வடநாடு செல்லத்தக்கவன்மை பல்லவர் படைத்தலைவர்க்கு எப்படி வந்தது? அங்கு அவன் சாளுக்கியனை வென்றதாகவும் இல்லை.

போர் நடந்த காலம்

இவற்றை எல்லாம் நடுவுநிலையாய் ஆராயின், பல்லவர் பாண்டியர் சாளுக்கியர் போர் விக்கிரமாதித்தன் பட்டம் பெற்ற கி.பி. 733க்கும் உதயேந்திரப் பட்டயம் வெளிவந்த கி.பி. 738க்கும் இடையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது விளங்கும். இக்காலத்தில் (தனது 28-33 வயதுக்குள்) நடந்த போர்களையே நந்திவர்மன் கொற்றங்குடிப் பட்டயத்திற் குறிப்பிட்டான். இப் போர் கி.பி. 733ஐ அடுத்து நடந்த தென்றே வக்கலேரிப் பட்டயமும் குறிக்கிறது. ஆதலின், இப் போர் நடந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 733-735 என்னலாம்.

போர் நடந்ததா?

இரண்டாம் விக்கிரமாதித்தன் மகனான இரண்டாம் கீர்த்திவர்மன் வெளியிட்ட வக்கலேரி, கேந்தூர்ப்பட்டயங்கள், விக்கிரமாதித்தன் நந்திவர்மனை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான்; தானங்கள் செய்தான் ஒன்றையும் கைக்கொள்ளவில்லை என்றே குறிக்கின்றன. நந்திவர்மன் பட்டயம் ‘அவன் வல்லபனை வென்றான்’ எனக் கூறுகிறது.

இவற்றை நன்கு ஆய்தல் வேண்டும். எதிர்ப்பவர் இன்றிக் காஞ்சியைக் கைப்பற்றிய - அல்லது சாளுக்கியர் பட்டயம் கூறுவதுபோலப் பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றிய சாளுக்கியன் தானாகப் போனபிறகு பல்லவமல்லன் காஞ்சிக்கு வந்தான் என்பது பல்லவனது வீரத்தை அவமதித்துக் கூறும் கூற்றாகும். வந்து நாட்டைப் பிடித்தவன் அதனை நுகராது போய்விட்டான் என்பதும் பொருத்தமற்ற கூற்றாகும்.

நடந்த முறை

ஆதலின், பல்லவன் நந்திபுரத்திலிருந்து வந்து விக்கிரமாதித்தனைப் போரிட்டுத் துரத்தியிருத்தல் வேண்டும். விக்கிரமாதித்தனுக்குப் பின் புதிய படையுடன் வந்த அவன் மகனான கீர்த்திவர்மன், களைப்புற்ற பல்லவனைத் துரத்திக் காஞ்சிக்குள் நுழைந்திருக்கலாம்; பல்லவன் ஒரு கோட்டைக்குள் ஒளிந்திருக்கலாம்; இந்நிலையில் உதய சந்திரன் துணைக்குப் போந்து, கீர்த்திவர்மனையும் விக்கிரமாதித்தனையும் துரத்திச்சென்று பல்லவ நாட்டுக்கப்பால் விட்டிருத்தல் வேண்டும்; விட்டு, முன்

சொன்னவாறு வேங்கிப் பகுதியில் இருந்த அரசரை வென்று மீண்டனனாதல் வேண்டும்.

முடிவு

இங்ஙனம் கொள்ளின், (1) பல்லவன் பாண்டியரோடு போர் செய்தபொழுது விக்கிரமாதித்தன் காஞ்சியை எளிதிற் பற்றி அங்கு இன்பமாகக் காலம் கழித்தான்; (2) உதய சந்திரன் தமிழரசரைத் துரத்திக்கொண்டு தெற்கே போன பொழுது, பல்லவன் தன்னிடம் இருந்த படையுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்துத் துரத்தினான்: (3) அவ்வமயம் விக்கிரமன் மகனான இளவரசன் கீர்த்திவர்மன் பெரும் படையுடன் வந்து பல்லவனைக் காஞ்சியினின்றும் விரட்டிப் பல பொருள்களைக் கைப்பற்றினான். (4) அந் நெருக்கடியான நிலையில் உதயசந்திரன் போந்து கீர்த்திவர்மனைத் துரத்திச் சென்று பல்லவ நாட்டிற்கப்பால் விட்டனன்: (5) உதயசந்திரன் அப்படியே வடக்கே சென்று வேங்கிப் பகுதியில் வெற்றி கண்டு மீண்டனன் என்னும் செய்திகளை முறைப்படி உணரலாம். இதற்கு உதயேந்திரன் கொற்றங்குடி, வக்கலேரிப் பட்டயக் குறிப்புகள் அனைத்தும் செவ்வையாகப் பொருந்தி வருதலையும் காணலாம். அறிஞர் நன்கு ஆராய்வாராக.

படையெடுப்பின் பயன்

விக்கிரமாதித்தன் சிறந்த கலையுணர்வு உடையவன்; அவன் கயிலாசநாதர் கோவிலைக் கண்டு வியந்தான்; அதன் கும்ப அமைப்பை உளங்கொண்டான். காஞ்சியிலிருந்து சிற்பிகளைக் கொண்டு சென்றான் போலும் தன் நாட்டில் கயிலாசநாதர் கோவில் கும்பம் போன்ற கும்பங்களைக் கொண்ட கோவில்களைப் பல்லவர் முறையில் அமைத்தான். அவனுக்குப்பின் அந்நாட்டிற் கட்டப்பட்ட கோவில்களிலும் இப் பல்லவர் முறையைக் கண்டு களிக்கலாம்.[13]

2

இரண்டாம் கீர்த்திவர்மன் கி.பி. 748இல் சாளுக்கிய அரசனானான். அவன் பட்டயத்தில், அவன் இளவரசனாக இருந்தபொழுது நடந்த போரே குறிக்கப்பட்டுள்ளது. அவனது ஆட்சியில் கி.பி.757இல் பல்லவர் - சாளுக்கியர் போர் பலமாக நடந்தது. இம்முறை நந்திவர்மன் கங்கரையும் பாண்டியரையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். இப்போர் வெம்பை என்ற இடத்தில் முற்றுப்பெற்றது. கீர்த்திவர்மன் போரில் இறந்தான்; அவனுடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது.[14]

[15]இரட்டர் - பல்லவர் நட்பு

இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியில் இரட்ட மரபினன் ஒருவன் சிற்றரசனாக இருந்தான். அவன் பெயர் தந்திதுர்க்கன் என்பது.அவன் நந்திவர்ம பல்லவன் அன்பைப் பெற்றுச் சாளுக்கிய நாட்டைக் கைப்பற்றினான்; அவன் கி.பி.725முதல் 758வரை இருந்த இரட்ட மரபின் முதல் மன்னன் ஆவன்.

தந்தி துர்க்கன் என்பவன் வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன்.[16] அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[17] அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.[18] எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்பது கொள்ளவேண்டுவதாக உள்ளது. ‘நந்திவர்மன் மனைவி ரேவா, அவள் மகன் தந்திவர்மன்’ என்று வேலூர் பாளையப்பட்டயம் பகர்கின்றது. இவற்றை நன்கு ஆராய்ந்த அறிஞர், ‘இரட்ட அரசனான

வைரமேகன் காஞ்சியைக் கைப்பற்றியதும் பல்லவ மல்லன் அவனிடம் பெண் பெற்று மணந்திருத்தல் வேண்டும். அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டிருத்தல் வேண்டும் என்று முடிபு கொண்டனர்.[19]

முதலாம் கிருஷ்ணன்

இவன் தந்தி துர்க்கனின் சிற்றப்பன். தந்தி துர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு இறந்தான். அவற்குப் பிள்ளை இன்மையின், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் கி.பி. 758 முதல் 772 வரை அரசனாக இருந்தான் இவன் ‘கன்னர தேவன்’ என்ற பெயரையும் கொண்டிருந்தான். இவன் தனது ‘தலகோன்’ பட்டயத்தில், தன்னைக் ‘காஞ்சிக் குணாலங்கிருதன்.....’ என்று குறித்துள்ளான். இதனால், இவன் காஞ்சி அரசனை வென்றவனாக இருக்கலாம் என்று அல்டேகர் கருதுகிறார்.[20]

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம்நந்திவர்மன் காலமெல்லாம்போர்களிலேயே கழிந்தது என்னலாம். அவன் ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியைக்கங்க அரசனிடமிருந்து கைப்பற்றினான் என்று ஒரு பட்டயம் பகர்கின்றது.[21] பல்லவனுடன் போரிட்ட கங்க அரசன் ரீ புருஷன் என்பவன். அவன் கி.பி. 7.26 முதல் 776 வரை ஆண்டான்.[22] இப் போர் பல்லவனது 58ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட தண்டன் தோட்டப் பட்டயத்தில் காணப்படலால், பல்லவ மல்லனது முதுமைப் பருவத்தில் இது நடந்ததாகல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது.

இப் பேரைப்பற்றிக் கங்கர் கல்வெட்டுகள் கீழ்வருமாறு கூறுகின்றன; “ஸ்ரீ புருஷன் மகன் பல்லவனை ‘விளர்த்தி’ என்ற இடத்தில் வென்றான். ஸ்ரீ புருஷன் ‘காடுவெட்டி’ என்பானைக் கொன்று அவனது பட்டத்தைத் தான் பெற்றுப் ‘பெருமான் அடி’ எனப்பட்டான்; ‘பீமகோபன்’ என்றும் பெயர் கொண்டான். இவன் செய்த போரில் வெற்றி மகள், இவன் வாளால் துணிக்கப்பட்ட யானைகளின் குருதியில் நீராடினான்.[23]

பட்டயக் குறிப்புகள்

முதலாம் பரமேச்சுரவர்மன். இராசசிம்மன் இவர் தம் கல்வெட்டுகளிற் போலவே பல்லவ மல்லனது காசக்குடிப் பட்டயத்திலும் சிலேடைப் பொருள் கொண்ட அடிகள் பல வருகின்றன.அவற்றிலிருந்துநாம் சிறப்பாக அறியத்தக்கது-பல்லவர் ஆகமங்கள் படித்தவர் என்பதே ஆகும். பிற்காலப் புலவர் பலர் நாட்டு வர்ணனையில் கூறும் சிறப்புகள் எல்லாம் காசக்குடிப் பட்டயத்தில் காணலாம். உதயேந்திரப் பட்டயத்தால் நாம் அறியத்தக்க புதிய செய்தி ஒன்றுண்டு.அஃதாவது பல்லவ மல்லன்தான் மறையவர்க்கு நிலம் கொடுத்தபோது இரண்டு நீர்யந்திரங்கள் அளித்தான் என்பது. தொண்டை மண்டலம் ஆற்றுப் பாய்ச்சல் குறைந்த நாடாதலின். இயந்திரங்களை நிறுத்தி நீரை இறைத்துப் பயிர்வேலை செய்யப்பட்டது என்பது இதனால் தெரிகிறது. மேலும், காசக்குடிப் பட்டயத்தால் நாம் அறியத்தக்கது மற்றொன்று உண்டு. அஃதாவது பட்டயம் முதலில் வடமொழியில் எழுதப்பட்டது; அம் மொழி மக்களுக்குத் தெரியாது ஆதலின், தமிழில் எழுதப்பட்டது என்பதே. இதனால் பல்லவர் காலத்தில் மக்கள் எல்லோரும் அறிந்திருந்த மொழி தமிழ் ஒன்றே என்பது தேற்றமன்றோ? தண்டன் தோட்டப் பட்டயத்தில், பாரதம் படித்துச் சிற்றுாரார்க்குப் பொருள் விளக்கினவனுக்கு நிலம் விடப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இதற்குமுன் இங்ஙனம் பரமேச்சுரவர்மன் செய்தான் என்பதைப் படித்தோம் அல்லவா? இங்கு இதனைப் பல்லவமல்லன் செய்ததாக அறிகிறோம். இப் பாரதக் கதை சொல்வோர் பல்லவரால் வழிவழி ஆதரிக்கப்பெற்றனர் என்று கோடலில் தவறில்லை. இவற்றால் நம்

நாட்டில் பாரதக்கதையைக் கூறும் பழக்கம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் (அப்பர், சம்பந்தர் காலத்திலே) உண்டானது என்பதை அறியலாம். அவன் ‘கலியை ஒழித்தவன் (கலிபல மர்த்தனன்)’ என்று உதயேந்திரப்பட்டயம் கூறியுள்ளதாலும் இவன் ஆட்சியில் போர்களே நிரம்பி இருந்தன ஆதலாலும் நாட்டில் வறுமை தோன்றியிருத்தல் இயல்பே. அதனை இவன் அரும்பாடுபட்டு ஒழித்தான் எனக் கொள்ளலாம்.

சமயப் பணி

இரண்டாம் நந்திவர்மனான பல்லவ மல்லன் சிறந்த வைணவன். இவனைக் காசக்குடிப் பட்டயம் ‘அரி சரணபரன்’ என்றும், தண்டன் தோட்டப் பட்டயம் ‘முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை’ என்றும் கூறுகின்றன. இக் குறிப்புகளோடு, திருமங்கையாழ்வார் பாடியருளிய நந்திபுர விண்ணகரப் பதிகத்தையும் பரமேச்சுர விண்ணகரப் (வைகுந்தப் பெருமாள் கோவில்) பதிகத்தையும் கொற்றங்குடிப் பட்டயத்தில் பெருமாள் வணக்கமாகவுள்ள முதல் இரண்டு பாக்களையும் ஒப்புநோக்கின், பல்லவ மல்லன் சிறந்த வைணவன் என்பது நன்கு விளங்கும். இவனே வைகுந்தப் பெருமாள் கோவிலை நலமுற அமைத்தவன்; அதற்கு வேண்டும் நலங்கள் பலவாகச் செய்தான். இவன் ஆட்சியிற் பல கோவில்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவற்றுள் (1) கூரத்தில் உள்ள கேசவப் பெருமாள் கோவிலும், (2) திருவதிகை வீரட்டானேச்சுரர் கோவிலும், (3) புதுக்கோட்டையில் உள்ள குன்றாண்டார் கோவிலும் சிறந்தன. இவன் பல்வேறு கோவில்கட்குத் தானங்கள் பல செய்துள்ளான். காஞ்சியில் உள்ள முத்தீச்சுரர் கோவில் இவன் காலத்தில் பெருஞ் சிறப்புற்றது.

இவன் காலத்தில் ஆர்க்காடு நகர்க்கு அருகிலுள்ள பஞ்ச பாண்டவர் மலையில் ஒரு குகை சமணர்க்காக அமைக்கப்பட்டது. அங்குள்ள கல்வெட்டில், நந்தி போத்தரையர்க்கு ஐம்பதாம் யாண்டு நாகநந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியார்க்குப் படிமம் எடுக்கப்பட்டடது’ என்பது காணப்படுகின்றது. இதனால் இப் பேரரசன் காலத்தில் பல்லவ நாட்டில் சமணர் சிலரும் இருந்தமை தெளிவாம். புத்தரும் அக்காலத்தில் இருந்தனர் என்பதைத் திருமங்கை ஆழ்வார் பதிகங்கள் வலியுறுத்துகின்றன.[24]

கல்வி நிலை

பல்லவ மல்லனிடம் கொடை பெற்ற மறையவர் அனைவரும் சிறந்த கலை விற்பன்னராவர்; நான்கு வேதங்கள். ஆறு அங்கங்கள் முதலியவற்றில் துறை போனவர் செய்யுள், கூத்து, இதிகாசம், கதைகள் இவற்றில் வல்லவர்; எல்லாவகைச் சடங்குகளிலும் தேர்ச்சியுற்றவர் நல்ல ஒழுக்கம் உடையவர். இவரை, ‘இருள் அகற்றும் ஒளி அனையர்’ என்று காசக்குடிப் பட்டயம் முதலியன கூறுகின்றன. ‘பல்லவ மல்லனே சிறந்த கல்விமான் படைக்கலப் புலவன்: இசை விருப்பன்: செய்யுட்கள் செய்வதில் வால்மீகி போன்றவன்; வில்வித்தையில் இராமன். அரசியலில் பிரகஸ்பதி’ எனப் பலபடப் பட்டயங்கள் பகர்கின்றன.

பல்லவப் பேரரசு

இரண்டாம் நந்திவர்மன், தன் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் பல போர்கள் செய்தனன் ஆயினும், தன் பெருநாட்டில் ஒரு சிறு பகுதியையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவனது தமிழ் மண்டலம் வட வேங்கடம் முதல் புதுக்கோட்டைவரை பரவி இருந்தது. இவனது பேரரசு முன்னிலும் மிக்க வன்மை பெற்று விளங்கியது. நாட்டில் கல்வி நிலை, சமய நிலை முதலியன நன்றாய்ப் பரவின என்னல் மிகையாகாது.

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசன் சீபுருடன் (கி.பி. 726-788), சாளுக்கியமன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தன் (கி.பி. 733-746), இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746-757) ஆவர். இவருடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது. இச் சாளுக்கியரை வென்ற இராட்டிர கூடருள் தந்தி துர்க்கன் (கி.பி. 725-758), முதலாம் கிருட்டினன் (கி.பி. 758-772). இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 772-730) என்போர் இவன் காலத்தவராவர். பாண்டியருள் முதலாம் இராசசிம்மன் என்ற பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765), நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) என்பவர் இக்காலத்தவராவர்.

* * *

↑ Ep. Ind Vol. DK p.205, M.V.K. Rao’s “Ganges of Talakad’ p.58.

↑ S.I.I. Vol. II No.14. இச்சங்கிரகிராமம் நெடுமாறன் காலத்துச்சங்கிரமங்கை போலும்!

↑ A.K.N. Sastry’s “Pandian Kingdom’, p.57.

↑ பெரிய திருமொழி - பரமேசுவர விண்ணகரப் பதிகம்.

↑ S.II. Vol. II p.372.

↑ இப் போரில் தொடர்புகொண்ட உதயனன் வடநாட்டான். அவனை வெல்லப் பல்லவன் முனைந்தது தந்திதுர்க்கன் தூண்டுதலால் ஆகும். இருவரும் சிறந்த நண்பர். தந்திதுர்க்கனுக்குப் பல்லவன் போரில் உதவிசெய்தான் எனக் கொள்வதே பொருத்தமாகும் & Wide Altekar’s “Rashtrakutas and their Times’ p.37.

↑ M.V.K. Rao’s “Ganga’s of Talakad, p.53.

↑ Ep, Indica, Vol III, p.360.

↑ Ep. Indica, Vol. IX, pp.205, 206.

↑ Rev. Heras’s “Studies in Pallava History'p.59.

↑ M.V.R. Rao’s “Gangas of Talakad’, p.53.

↑ Ep. Ind Vol.XVIII, pp. 115-120.

↑ Heras’s studies in Pallava History p.60

↑ Ep. Ind Vol.IX p.24; Q.J.M.S. Vol.XIII, pp. 581-88, MVK Rao’s “Gangas of Talakad’.

↑ இரட்டர்-இரட்டிரகூடர்

↑ E.I. Vol.IV p334.

↑ E.I. Vol.IX, p24

↑ பெரிய திருமொழி, 9, “மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீள்முடிமாலை வயிரமேகன்”

↑ R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.127

↑ Vide his “Rashtrakutas and their Times,’ p.45.

↑ S.I.I.VII pp.519-20.

↑ Vide MVK Rao’s “Gangas ofTalakad’ p.54.

↑ Ibid, p.55.

↑ பெரிய திருமொழி - 2,6,5:2,1,7; 7,9,2; 9,7,9; 7,45 முதலியன.

15. தந்திவர்மன்

(கி.பி. 775-825)

பிறப்பும் ஆட்சிக் காலமும்

தந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் மகன். இவன் இராட்டிரகூடப் பெண்மணியான ரேவா[1]வுக்குப் பிறந்தவன். இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் (வைரமேகன்) மகள் வயிற்றுப் பெயரன் ஆதலின், இவன் தந்திவர்மன் எனப்பட்டான். இவன் அப் பாட்டனைப் போலவே, ‘வைர மேகன் என்னும் பெயரும் பெற்றிருந்தான். இவன் பட்டயங்களும் கல்வெட்டுகளும் திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலிருந்து வடக்கே திருச்சானுர் வரை பரவியுள்ளன; இறுதியிற் கிடைத்த கல்வெட்டு இவனது 51ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பதால், இவன் குறைந்தது 51ஆண்டுகள் அரசாண்டான் என்று ஆராய்ச்சியாளர் கொண்டனர்.

சிறப்பும் மணமும்

இவன் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரமானவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவை. இவன், கதம்பர் மரபுக்கே சிரோமனியாக விளங்கிய அரசனின் மகளான அக்களநிம்மதி என்பவனை மணந்து கொண்டான் என்று பட்டயங்கள் பகர்கின்றன.

இரட்ட அரசர்: கிருஷ்ணன் 1 (கி.பி. 780-794)

தந்திதுர்க்கன் இறந்தபிறகு, அவன் மாமனான கிருஷ்ணன் அரசன் ஆனான். இவன் சாளுக்கியர் மரபை அழித்தான் எலாபுரம் (எல்லோரா) கூற்றத்தில் உள்ள ஒரு மலையில் மிகவும் பாராட்டத்தக்க கயிலாசநாதர் கோவிலைக் கட்டுவித்தான். இவன் கி.பி.772இல் இறந்தான்.

துருவன்-கோவிந்தன் போராட்டம்

கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான். இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்; பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான். இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர். துருவன் சிறந்த அரசியல் நிபுணன். அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான். உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்; ஆயின், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.

போர்

உடனே துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு தமையனை வெல்ல முற்பட்டான். கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத்தனக்கு துணையாகக்கொண்டான். நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான். போர் கடுமையாக நடந்தது. துருவனே வெற்றி பெற்றான். அவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.

பல்லவர்-இரட்டர் போர் 1

துருவன் அரசனானவுடன். பெரும் படையொடு புறப்பட்டுத்தன் தமையனுக்கு உதவி புரிந்தோரை வெல்ல விழைந்தான் முதலில் கங்கபாடி அரசனான சிவமாறனை வென்று, தன் முதல் மகனான கம்பரசனைக் கங்கபாடியை ஆளுமாறு விடுத்துக் காஞ்சியை அடைந்தான் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்பொழுது நடந்த போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண்புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயங்கள் குறிக்கின்றன.

துருவன், இங்ஙனம் அடைக்கலம் புக்க தந்திவர்மனைத் தனக்கு அடங்கிக் கப்பம் கட்டுமாறு செய்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 2 (கி.பி. 803)

கோவிந்தன் 3: கங்கபாடி, வேங்கி இவற்றைத் தன் பேரரசுடன் சேர்த்த பேரரசனானதுருவன் கி.பி.794இல் இறந்தான். இவன் இறக்கு முன்பே தன் மக்களான கம்பரசன், கர்க்கா சுவர்ணவர்ஷன், கோவிந்தன். இந்திரன்முதலியோருள்கோவிந்தன் என்றதன் மூன்றாம் மகனுக்கே முடிசூட்டினான். அதனால் பெருவெளி படைத்த (மூன்றாம்) கோவிந்தன் கி.பி.794இல் பேரரசன் ஆனான்.[2]

இதனால் முதல் மகனான கம்பரசன் மனம் புழுங்கினான். அவனுடன் சிற்றரசர் பல சேர்ந்தனர். இவர்கள் சூழ்ச்சியை அறிந்த் கோவிந்தன் தன் தமையனாள கம்பரசனையும் அவனுடன் சேர்ந்திருந்த சிற்றரசர் பன்னிருவரையும் போரில் வென்றான். பிறகு குழப்பம் இல்லை.

கோவிந்தன்-தந்திவர்மன் போர்: கோவிந்தன்தன்தமையனுடன் சேர்ந்திருந்த சிற்றரசரைத் தனித்தனியே வென்று, அவர் உரிமைகளைப் பறிமுதல் செய்தான். அங்ஙனம் செய்து கொண்டு

வந்தவன். காஞ்சி அரசனான தந்திவர்மனைத் தாக்கினான். தந்திவர்மன் கோவிந்தனுக்குத் திறை கட்டாதிருந்தனனோ-அல்லது அவற்கு மாறகக் கம்பரசனுடன் சேர்ந்திருந்தனனோ - இரண்டும் இன்றி அவன் வெறுக்கத்தக்க வேறு முறைகளில் நடந்து கொண்டனனோ தெரியவில்லை. தந்திவர்மன் ஏறத்தாழக் கி.பி. 803 இல் தோல்வியுற்றான். தோற்ற தந்திவர்மன் அவனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்தான் போலும்! கோவிந்தன் இங்கு நின்றும் இராமேச்சுரம் வரை சென்று, அங்கு கி.பி. 804 இல் பட்டயம் ஒன்றை (பிரிட்டிஷ் காட்சிச்சாலை பட்டயம் EP.Ind Vol.II.P 126) விடுத்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 3 (கி.பி.808-810)

மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அந்தச் சமயத்தில் கங்கபாடி அரசன். தந்திவர்மன், சேர, சோழ, பாண்டியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவோ அல்லது அவனது நாட்டின்மீது படையெடுக்கவோ சூழ்ச்சி செய்தனர் என்று ‘சஞ்சன்’ பட்டயம் செப்புகிறது. பெருவீரனான கோவிந்தன் கடுஞ்சீற்றம் கொண்டு பெரும் படையுடன் புறப்பட்டான். தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ பாண்டியர் நாடுகளை இராட்டிரகூடவீரர் அளந்து திரிந்தனர். இதனை அறிந்த இலங்கை அரசன் அஞ்சிஅவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.290

தந்திவர்மன் இந்தப் போர் முடிவிலும் வழக்கம்போலக் கோவிந்தனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்திருக்கலாம். என்னை? இப் போருக்குப் பின்னரும் தந்திவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்து பல்லவர் நாட்டை அரசாண்டு வந்தமையால் என்க. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் சொல்லும் தகையவோ?

பல்லவர் - பாண்டியர் போர் (கி.பி. 806 - 817)

வரகுண பாண்டியன் மாறன் இராசசிம்மன் மகன். இவன் காலம் ஏறக்குறையக் கி.பி. 800 - 830 என்னலாம். இவன் கடிலன் பராந்தகன், மாறஞ்சடையன். நெடுஞ்சடையன் எனப் பல பெயர்களைக் கொண்டவன். இவன் தகடூர் அதிகனை எதிர்த்தபொழுது, தந்திவர்மன் அதிகனை ஆதரித்தான்; சேரனும் அதிகனை ஆதிரித்தான். வரகுணன் இவர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்தான். வரகுணன் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் காணப்படுகின்றன. இவன் தனது 16ஆம் ஆட்சி ஆண்டில் தொண்டை நாட்டில் பெண்ணை யாற்றங்கரையில் உள்ள அரைசூரில் இருந்தபொழுது (போர்ப் பாசறையில்) அம்பா சமுத்திரம் பட்டயம் அளித்துள்ளான். இதனால் வரகுணபாண்டியன் பல்லவர் பெருநாட்டைச் சேர்ந்த சோழ நாடு முழுவதையும் கைப்பற்றியதோடு நில்லாமல், தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள நாட்டையும் பிடித்துக் கொண்டான் என்பதை நன்குணலாம்.[3] சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மலைக் கோவில், திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்), திருவிசலூர் என்னும் இடங்களில் வரகுணன் பட்டயங்கள் காண்கின்றன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும் தெற்கே பாண்டியர் படையெடுப்பும் உண்டாகிப் பல்லவன் தத்தளித்தான். தான் இராட்டிரகூடர்க்கு அடங்கிவிட்டமையாலும் வெளி அரசர் உதவி இன்மையாலும் தந்திவர்மன் தக்க உணர்ச்சியோடு பாண்டியனை எதிர்க்க முடியவில்லை.

தந்திவர்மன் அரசியல்

தந்திவர்மன், திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் ஆலம்பாக்கம் என்னும் சிற்றூர்க்கு அண்மையில் தனது பட்டப் பெயரான ‘மாற்பிடுகு’ என்பதை வைத்து ‘மாற்பிடுகு ஏரி’ ஒன்றை வெட்டுவித்தான். இவனது 5ஆம் ஆட்சி ஆண்டில் புதுக்கோட்டைச்சீமையில் ‘வாலிஏரி’ ஒன்றை இவனுடைய சிற்றரசானன-வாலிவடுகள்-கலிமூர்க்க ‘இள அரையன்’ என்பவன் வெட்டுவித்தான். திருவெள்ளரை என்னும் சிற்றுாரில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ ஒன்றைக் கம்பன் அரையன் என்பவன் வெட்டுவித்தான்[4] திருச்சிராப்பளிக்கு அடுத்த உய்யக்கொண்டான் திருமலைக் கல்வெட்டு, அவ்வூருக்கு அண்மையில் உள்ள வாய்க்காலை ‘வைரமேகன் வாய்க்கால்’ என்கிறது. ‘வைரமேகன்’ என்பது ‘தந்திவர்மன்’ பெயர்களில் ஒன்று அன்றோ? எனவே, அவ் வாய்க்கால் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டதே என்னல் பொருந்தும். இவன் காலத்தில் திருவிப்பிரம்பேட்டு ஏரி முதலிய பல ஏரிகள் தூய்மை செய்யப்பட்டன. தந்திவர்மன் ஆட்சியில் நீர்ப்பாசன வசதிகள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டன என்பது கல்வெட்டுகளால் நன்கு புலனாகின்றது. இவனது காலத்தில் தனிப்பட்ட செல்வர் ஆங்காங்குக்கேணியும் குளமும் எடுத்துள்ளனர்; ஏரிகளைத் தூய்மை செய்துள்ளனர். இஃது உண்மையில் பாராட்டத்தக்க சிறந்த அரசியற் பண்பாகும் அன்றோ?

சில பட்டயங்கள்

இவன் காலத்துக் கல்வெட்டுகள். (1) செஞ்சிக் கோட்டைக்கு அருகில் உள்ள தொந்தூர், (2) உத்தரமல்லூர், (3) திருவல்லிக்கேணி. (4) கூரம். (5) மலையடிப்பட்டு, (6) திருவெள்ளரை, (7) ஆலம்பாக்கம் (8) குடிமல்லம் முதலிய ஊர்களில் கிடைத்துள்ளன. இவற்றுள் திருவல்லிக்கேணிக் கல்வெட்டைக் காண்க. அது ‘குலங்கிழார்’ (கோவில் அதிகாரி) கோவில் நிலத்தில் ஒரு பகுதியை ஒற்றிவைத்து, அதன் வருமானத்தில் 45 காடி நெல் குறைந்து போனதால், அதற்குப் பதிலாக 30 காடி நெல்லும் 5 கழஞ்சு பொன்னும் புகழ்த்துணை விசையரசன் தானம் செய்தான். இதற்கு நாள் ஒன்றுக்கு 5 நாழி நெல் வட்டியாகும். அதை அரிசியாக்கி நாள்தோறும் திருவமுது படைப்பாராக. என்பது. இந்த வட்டிக் கணக்கு என்ன? 45 காடி நெல்லுக்கு ஆண்டொன்றுக்கு 183/4 கலம் நெல் வட்டி ஆயிற்று.[5]

கோவில்கள்

மலையடிப்பட்டியில் உள்ள மலையைத் தனியாகக் குடைந்து அமைத்தவன் முத்தரையனான குவாவன் சாத்தன் என்பவன். இவ் வேலை தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் முற்றுப் பெற்றதாகும். பல்லவ அரசன், திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்குத் ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றைக் கட்டினான். இவன் வைணவன்[6] ஆயினும், சைவ - வைணவக் கோவில்கட்கு நிரம்பப் பொருள் அளித்தான். திருமங்கை ஆழ்வார் இவன் காலத்திலும் இருந்தனர் என்று சிலர் கூறுவர்.[7]

‘தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் குவிலஞ் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன் திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான்’ என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.[8] தந்திவர்மன் காஞ்சிப் பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ளான்.[9]

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசர் இரண்டாம் சிவமாறன் (கி.பி. 788-812) முதலாம் இராசமல்லன் (கி.பி. 817-853) என்போர் ஆவர்; இரட்ட அரசர் இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 722-780). துருவன் (கி.பி. 780-794), மூன்றாம் கோவிந்தன் (கி.பி.794-814) என்பவர்; பாண்டிய மன்னர் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி.765-790), இரண்டாம் இராசசிம்மன் (கி.பி.790-800), வரகுணமகாராசன் (கி.பி. 800-830) என்பவர்.

* * *

↑ ரேவா என்பது நறுமதை யாற்றின் பெயர்.

↑ Altekar’s Rashtrakutas and their Times, pp.50, 55

↑ K.A.N. Sastry’s “Pandian Kingdom’ pp.62-63.

↑ இவை இந்நூலின் பிற்பகுதியில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

↑ Ep. Indica, Vol.VIII.p.291 & P.T.S. Iyengar’s “pallavas part III, p.46.

↑ S.I.I. Vol. II, p.515.

↑ M. Ragava Iyangar’s “Alwargal Kala Nilai’, pp. 109-112.

↑ “Chronological list of Inscriptions of the Pudukkotta State p.2.

↑ S.I.I. Vol. VI, No.34.

16. மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850)

மரபு

இவன் தந்திவர்மன் மகன். தந்திவர்மன் கதம்ப அரசர் மகளை மணந்த செய்தியே சிறப்பாகப்பட்டயத்திற் கூறியுள்ளதால், மூன்றாம் நந்திவர்மன் அவ்வரசிக்குப் பிறந்தவனாதல் வேண்டும் என்று கொள்ளலாம். இதனை வேலூர் பாளையப் பட்டயமும் உறுதிப்படுத்துகிறது.

பட்டயங்கள்

(1) இவன் காலத்துப் பட்டயங்களில் சிறந்தது வேலூர் பாளையப் பட்டயமே ஆகும். இது பொன்னேரிக் கூற்றத்துத் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு சிற்றூரைத் தேவதானமாக விடுத்ததைக் கூறுவது. இப் பட்டயத்தில் பல்லவ அரசர் பட்டியல் முதலிய பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இது நந்திவர்மன் பட்டம் பெற்ற 6ஆம் ஆண்டில் விடப்பட்டதாகும். (2) இவனது பத்தாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு இவனது தெள்ளாற்று வெற்றியைக் குறிக்கிறது. அக் கல்வெட்டு திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) கோவிலில் உள்ளது. (3) இவனது 12ஆம் ஆட்சி ஆண்டில் செந்தலைக் கல்வெட்டொன்று வெளியிடப் பட்டது. (4) இவனது 17ஆம் ஆட்சி ஆண்டில் திருவல்லம் கோவிலில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டது. அதில், மூன்று சிற்றூர்களைச் சேர்த்து ‘விடேல் விடுகு-விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்’ என்னும் பெயரில் தீக்காலிவல்லம் சிவபெருமானுக்குக் கொடுத்ததாகக் கண்டுள்ளது. (5) உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்று. இவனது 18ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. (6) கோவிலடிக் கருகில் திருச்சன்னம்பூண்டியில் உள்ள சடையர் கோவில்கல்வெட்டு இவனது 18ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கிறது. (7)திருப்பராய்த் துறையில் உள்ள ஆதிமூலேச்சுரர் கோவிற் சுவரில் உள்ள கல்வெட்டு இவனது 22ஆம் ஆட்சி ஆண்டைக்குறிக்கிறது. (3) குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் கல்வெட்டு ஒன்று இவனது 23ஆம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. இதற்குப் பிறகு வேறு கல்வெட்டுக் கிடைக்கவில்லை. ஆதலின். இப்பேரரசன்.ஏறத்தாழ 25ஆண்டுகளேஅரசனாக இருந்தான் போலும் என்று அறிஞர்கருதுகின்றனர்.

தெள்ளாறு எறிந்த காலம்

இவனது 10ஆம் ஆட்சி ஆண்டு முதல் வெளியிடப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் இவன் “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” என்றே குறிக்கப்படுகிறான். ஆனால், இவனது 6ஆம் ஆட்சி ஆண்டில் வெளிவந்த வேலூர் பாளையப் பட்டயத்தில் இது காணவில்லை. எனவே, இவன் தனது 6ஆம் ஆண்டிற்குப் பின்னும் 10ஆம் ஆண்டிற்கு முன்னும் தெள்ளாற்றுப் போரில் வாகை சூடி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

நந்திக் கலம்பகம்

இஃது இந்த அரசன் மீது பாடப்பட்டது. இதில் பல பாக்கள் இவனது தெள்ளாற்றுப் போரையே குறிக்கின்றன. நாம் இந் நூலால் அறியத்தக்கவை பின் வருவன. அவை - “இவன் சந்திர மரபினன்; சேர சோழ பாண்டியரை வெறியலூர், பழையாறு. வெள்ளாறு, தெள்ளாறு இவற்றில் நடந்த போர்களில் முறியடித்தவன்; மூவேந்தரிடமும் வடபுலத்தரசரிடமும் திறை பெற்றவன்.” என்பன. இவன் பல இடங்களில் ‘அவனி நாரணன், அவனி நாராயணன்’ என்று குறிக்கப்பட்டடுள்ளான். இவன் காலத்தில் காவேரிப்பாக்கம் அவனிநாராயணசதுர்வேதிமங்கலம் எனப்பெயர் பெற்று இருந்தது. எனவே மூன்றாம் நந்திவர்மன் அவனி நாராயணன் எனப்பட்டான். என்பதை நன்குணரலாம். இவன் காலத்தில் தமிழ்ப் பெருவணிகன் ஒருவன் சென்று சையாமில் ஒரு குளம் தொட்டான். அதற்கு ‘அவனி நாரணன் குளம் எனப் பெயரிட்டான்’ என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. இதனால், இவனது காலத்தில் கடல்வாணிபம் சிறந்தமுறையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. இவன் சிறந்த கடற்படை வைத்திருந்ததாக நந்திக் கலம்பகமும் கூறுகின்றது.

இவன் கழற்சிங்கனா?

இவன் நந்திக் கலம்பகத்தில் (செ. 13, 28) ‘கழல் நந்தி’ எனப்படுகிறான்: செ.59இல் ‘பல்லவர்கோள் அரி என்று கூறப்படுகிறான். ‘அரி-சிங்கம்’ என்பதை நாம் அறிவோம். எனவே மூன்றாம் நந்திவர்மன் கழல்சிங்கன்றான் என்பதில் ஐயமின்மை உணர்க. ஆயின்.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சுந்தரர் தொகையிற் சுட்டப்பட்டவன் இவனா? எனின். ஆம் மேற்சொன்ன சையாம் செய்தியை நேர்க்க. இவன் காலத்தில் கடல்கடந்த நாடுகளில் இவன் பெற்றிருந்த செல்வாக்கையும் கடல்வாணிகத்தையம் நன்குணரலாம் அன்றோ? இன்னபிற சான்றுகளால்.இம்மூன்றாம்நந்திவர்மனே பெரியபுராண நாயன்மாருள் ஒருவனான கழற்சிங்கன் என்பது நன்கு விளங்குகிறது.[1] விளங்குமேல். இவனது உண்மைவரலாறு அறியகல்வெட்டுகளோடு நந்திக் கலம்பகம் சுந்தரர் தேவாரம், பெரியபுராணம் முதலியனவும் பெருந்துணைபுரியலாம் அல்லவா?

பல்லவர் - இரட்டர் போர்

பல்லவநாட்டை இருமுறை வென்ற மூன்றாம் கோவிந்தன் கி.பி. 814இல் இறந்தான். அவன்மகனான முதலாம் அமோகவர்ஷன் கி.பி. 814இல் தனது ஆறாம் வயதில் அரசன் ஆனான். அவன் கி.பி.880 வரை அரசாண்டான்.

தந்திவர்மன் காலத்தில் இரட்ட அரசனான மூன்றாம் கோவிந்தன் காஞ்சியை இருமுறை கைப்பற்றிப் பல்லவனைத் திறை கட்டுமாறு பணித்து மீண்டான் என்பதை முன்னரே கவனித்தோம் அல்லவா? அந்தக் கப்பங்கட்டும் கொடுமையை ஒழிக்க நந்திவர்மன் விரும்பினான் போலும்! அதனால், அவன், தான் பட்டம பெற்றவுடன், பெண்ணை யாற்றங்கரை வரை பாண்டியன் தன் நாட்டைப் பிடித்துக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், வடக்கு நோக்கித்தன் படைகளைத் திருப்பினான். நடந்த போரைப் பற்றிய குறிப்புகள் நந்திக்கலம்பகத்தில் கூறப்பட்டுள்ளன.

“எனதே கலைவளையும் என்னதே மன்னர்

சினஏறு செந்தனிக்கோல் நந்தி-இனவேழம்

கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்

பூமறுகிற் போகாப்பொழுது”.

“.... குருக்கோட்டை குறுகா மன்னர்

போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி....”

“கேளாதார்,

குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்

அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்.”[2]

இக் குருக்கோட்டை என்பது பெல்லாரிக் கோட்டத்தில் துங்கபத்திரையாற்றங்கரையில் உள்ள குருகோடு[3] என்பதே ஆகும். அங்குள்ள மலைமீது அழகிய கோட்டையும் சாளுக்கியர் காலத்துக் கோவில்களும் பிறவும் அழிந்த நிலையில் இருக்கக் காணலாம்.[4]

கொடும்பாளுர்க் கல்வெட்டு ஒன்றில் விக்கிரமகேசரி என்பவனுக்குப் பாட்டன், வாதாபி கொண்டவன் என்று கூறப்பட்டுள்ளான். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இப்படி ஒருவன் இருந்திருத்தல் முடியாது என்று பலர் கருதினர். அந்தச் சிற்றரசன் மூன்றாம் நந்திவர்மன் காலத்துச் சிற்றரசன்; ஆதலின், தன் பேரரசனுக்குத்துணையாக வடபுலம்சென்று ‘குருக்கோடு’ என்னும் இடத்தில் இரட்டர்க்கு அடங்கிய சாளுக்கியனை (சிற்றரசனை) வென்றிருக்கலாம்; அவ் வெற்றிக்காகத் தன்னை வாதாபி கொண்டவன் (வாதாபி-இங்குச் ‘சாளுக்கியர் தலைநகர்’ என்ற அளவில் பொருள் கொள்ள வேண்டும்) என்றும் கூறிக்கொண்டிருக்கலாம்; இன்றேல், இராட்டிரகூடர் தோற்ற பிறகு வாதாபி மீதே அவன் படையெடுத்திருக்கலாம். அவன் பரதுர்க்க மர்த்தனன் (பகைவர் கோட்டையை அழித்தவன்) எனப் பெயர் கொண்டவன். இவற்றை எல்லாம் நன்கு ஆர்ாயின் மூன்றாம் நந்திவர்மனான கழற்சிங்கன் முதலில் இராட்டிரகூடரைத் தோற்கடித்துத் தான் பேரசசன் என்பதை நிலைநிறுத்தினான் என்பது தெரியலாம். இவனது வடபுல வெற்றியை வேலூர் பாளையப் பட்டயமும் குறிப்பாக உணர்த்துதல் காண்க.

“படைக்கலப் பயிற்சியிற் பண்பட்ட நந்திவர்மன். பிறரால் பெறுதற்கரிய பல்லவப் பெருநாட்டின் செழிப்பைப் பெற்றான். அவன் அதற்காகப் போர்க்களத்தில் தன் பகைவரைக் கொன்றான். அவனது வாளால் துணிக்கப்பட்ட யானைகள் அணிந்திருந்த முத்து மாலைகள் போர்க்களத்தில் சிதறிக் கிடந்த காட்சி:போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டி நகைப்பது போல இருந்தது.[5]

இப் பட்டயம் நந்திவர்மனது தெள்ளாற்றுப் போருக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது இங்கு நினைக்கத்தக்கது. ஆகவே இங்குக் குறித்த போர்மேற்சொன்ன பல்லவர் - இரட்டர் போரே ஆகும். ‘பகைவர்’ என்று பட்டயமும் நந்திக்கலம்பகமும் பன்மையிற் பகர்ந்தமை. இராட்டிரகூட அரசன். அவனுக்கு உட்பட்டுக் குருக்கோட்டையில் ஆண்டசிற்றரசன் ஆகிய இருவரைக் குறிக்கும் எனக் கோடலில் தன்றில்லை. நாம் முன் பலமுறையும் புகழ்ந்து கூறிய சிறந்த கல்வெட்டுப் புலவரான சேக்கிழாரும் கழற்சிங்க நாயனார் (மூன்றாம் தந்திவர்மன்) புராணத்தில் இந்தப் போரைக் குறிப்பாக உணர்த்தல் கவனிக்கத்தக்கது:-

“ஆடக மேருவில்லார் அருளினால் அமரிற் சென்று

கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”[6]

இப் போர் ஏறக்குறைய கி.பி. 830இல் நடந்ததெனக் கொள்ளலாம். இப் போரில் வெற்றிபெற்றதால், பல்லவன் தனது வடமாகாணத்தைக் காத்துக் கொண்டான் இராட்டிர கூடனுக்குத் தான் அடங்கியவன் ஆகான் என்பதையும் காட்டிக்கொண்டான்: இதனால், தான் பேரரசன் என்பதையும் நிலைநாட்டினான். இதன் பிறகே கழற்சிங்கனாகிய நந்திவர்மன் தனது நாட்டின் தென்பகுதி யைப்பிடித்துக் கொண்டபாண்டியன்மீது திரும்பினான்.

அமோகவர்ஷன் கங்கனோடு சந்து செய்துகொண்டு பேரழியான ‘சந்திரபலப்பை’ என்ற தன் மகளைக் கங்க இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்தக்கங்க இளவரசன் பெயர் பூதுகன் என்பது. அவன் ஆட்சிக்காலம் கி.பி.837-870 ஆகும்.[7] அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான சங்கா என்னும் இலக்குமி போன்றவளை நந்தி வர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான்.[8] இதனால் அவன் கங்கனைப் பெண்கொடுத்து உறவு கொண்டாற் போலப் பல்லவனையும் பெண்கொடுத்து உறவுகொண்டான் என்பது உய்த்துணரப்படுகிறதன்றோ?

இத்தகைய திருமண முறையால், அரசியல் அறிஞனான அமோகவர்ஷன் பல்லவனையும் கங்கனையும் உறவினராக்கிக் கொண்டான்; விந்தமலைக்குத் தென்பால் பகைவர் இன்றி இன்பமாகத் தன் காலத்தைக் கழித்தான்.[9]

பல்லவர்-பாண்டியர் போர்

மூன்றாம் நந்திவர்மன் செய்த போர்களில் தெள்ளாற்றுப் போர் ஒன்றையே சிறப்பாக இவன் காலத்தார் கருதினர் போலும் இவனும் அங்ஙனமே கருதினான்.இஃது உண்மை என்பதை இவனுடைய 10ஆம் ஆட்சி ஆண்டுக்குப் பிற்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. தெள்ளாற்று எறிந்த நந்திவர்மன் என்றே இவன் அவற்றிற் குறிக்கப்படுகிறான். அங்ஙனம் அது சிறந்தது என்பதைக் கலம்பகமும் கூறுகின்றது. அந்நூலில் தெள்ளாற்றுப் போர் பல பாக்களில் குறிக்கப்பட்டுள்ளது.[10] அக்காலத்தில் வாழ்ந்து ‘பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் என்பவர்,

“வன்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்

உண்மையால் பாரான் உரிமையா- திண்மையால்

தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோ(டு)

யார்வேந்தர் ஏற்பார் எதிர்”

என்று பாடிப் புகழ்ந்துள்ளார். எனவே, பட்டயக் குறிப்புகளாலும் மேற்சொன்ன இலக்கியச்சான்றுகளாலும், “தெள்ளாற்றுப் போர் மிகப் பெரியதும் கொடியதும் இன்றியமையாததும் ஆனது” என்பது நன்கு விளங்குகின்றது. இனி இப் போரில் தொடர்பு கொண்டவர் யாவர் என்பதைக் காண்போம்.

பல்லவன் -தமிழரசர்

தந்திவர்மன் காலத்தில் (கி.பி.775-825) மதுரையை ஆண்ட முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.765-815) பல்லவர்க்கு உட்பட்டிருந்த சோழ நாட்டைக் கைப்பற்றித் தொண்டைநாட்டையும் பெண்ணையாறுவரை கவர்ந்தான் என்பதை முற்பகுதியில் குறித்தோம் அல்லவா? அவன்பெண்ணையாற்றங்கரையில் இருந்த காலம் ஏறத்தாழக் கி.பி. 780ஆகும். அதுமுதல் தெள்ளாற்றுப் போர்வரை சோழ நாடும் தொண்டை நாட்டின் தென்பாதியும் பாண்டியர் வசமே இருந்தது என்னலாம். வரகுணன் இறந்த பிறகு, சீமாறன் சீவல்லபன் என்னும் அவன் மகன் பட்டம்பெற்று (கி.பி. 830-862) ஆண்டான்.[11] அவன் காலத்திற்றான் நந்திவர்மன் ஆகிய கழற்சிங்கன் (கி.பி. 825-850) பல்லவ அரசனாக இருந்தான். இவன் (கி.பி.830 அல்லது 832க்குள்) முன் சொன்ன வட புலப்போரை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள், பாண்டியன் மாறன். தனக்கு அடங்கிய சேர சோழருடனும் பெருஞ் சேனையுடனும் பெண்ணையாற்றைத் தாண்டி வட ஆர்க்காட்டுக் கோட்டத்திற்குள் நுழைந்தனன். உடனே நந்திவர்மன். வடக்கே வெற்றிபெற்ற தன் பெருஞ் சேனையுடன் மீண்டு. பகைவரைத் தெள்ளாற்றில் (வந்தவாசிக் கூற்றத்தில் உள்ளது) எதிர்த்துப் பெரும்போர் நிகழ்த்தி முற்றிலும் முறியடித்தான். இப்போர் ஏறக்குறையக் கி.பி. 832இல் நடந்திருத்தல் வேண்டும். இப்போர் மிகவும் கொடுமையானது.

நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்று ஓடிய பகைவரைவிட்டிலன். இவன் அவர்களைத் துரத்திச் சென்று கட்ம்பூர் (செ.25), வெறியலூர் (27). வெள்ளாறு (19.22, 61), பழையாறு(31) என்னும் இடங்களில் தோற்றகடித்துப் பாண்டிய நாட்டு எல்லையை அடைந்தவன். பாண்டியன் முதலிய பகைவர், எல்லைப்புறத்தில் இருந்த குறும்பில் (கோட்டைக்குள்) ஒளிந்தனர். பல்லவன் அங்கும் அவரை முறியடித்து மீண்டான் என்று நந்திக்கலம்பகம் (செ. 4) நவில்கின்றது.

இப் போருக்குக் காரணம் என்ன?

(1) இராட்டிரகூடர்க்குப் பல்லவன் திறை கொடுத்த மறுத்து அவன்மீது போர்தொடுத்து வென்றாற்போலச்சோழன் மறுத்திருக்க வேண்டும். அவற்குத்துணையாகப் பாண்டியன் முதலியோர் போரிட வந்திருத்தல் வேண்டும். பல்லவ நாட்டை, நந்திவர்மன் இல்லாத காலத்திற் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும்.

(2) இவனிடம் பொறாமை கொண்டு பட்டம் பெற விழைந்த இவன் தம்பி பகைவருடன் சேர்ந்துகொண்டமை ஒரு காரணமாகும்.

இந்த இரண்டும் உண்மை என்பதைக் கீழ் வருவனவற்றால் அறியலாம்:-

(1) “உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரே மறுக்கம் செய்யும்

பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம்

பெருமானைப் பெற்றாம் அன்றே”[12]

(2) ‘தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலைமான விரதுவசன்

செம்பியர் தென்னார் சேரர் எதிர்வந்து

மாயச் செருவென்ற பாரி முடிமேல்...”[13]

பல்லவன்-காவிரி நாடன்

இங்ஙனம் தமிழ்வேந்தர் முற்றும் முறியடிக்கப்பட்டபின் காவிரி நாடான சோணாடு, பழையபடியே பல்லவர் கைப்பட்டது. இதனை நந்திக் கலம்பகத்தாலும் நந்திவர்மன் கல்வெட்டுக்களாலும் நன்கறியலாம். கலம்பகத்துப் பாக்கள் பல (செ.17,28,57,58,86)

நந்திவர்மனைக் ‘காவிரி நாடன்’ என்றே குறித்துள்ளன; அவை, ‘காவிரி வளநாடா’ (17), ‘காவிரி வளநாடன்’ (28), ‘காவிரி நன்னாடா’ (57), ‘பொன்னி நன்னாட்டு மன்னன்’ (56), ‘காவிரி வளநாடு ஆள்வோனே’ (86) என்பன. தஞ்சைக் கோட்டத்தில் உள்ள திருநெய்த்தானத்தில் இவனது கல்வெட்டு இருக்கின்றது. ஆதலின், இச் சான்றுகளைக் கொண்டு காணின், இவனது ஆட்சி தஞ்சைக் கோட்டத்தில் நிலைத்திருத்தமை நன்கு அறியலாம்.

பேரரசன்

இதுகாறும் கூறிய செய்திகளால், மூன்றாம் நந்திவர்மன் வடக்கிலும் தெற்கிலும் அச்சமின்றி நாட்டையாண்டபெருவீரனாகப் பிற்காலத்தைக் கழித்தான் என்பதை உணரலாம். இவன் பேரரசன் என்பதை நந்திக்கலம்பகம் பலபடக் குறித்துள்ளது. அவை “மூவேந்தரும் வடபுலத்தரசரும் திறைதந்தனர்; (செ.27); “புகாராகிய காவிரிப் பூம்பட்டனம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது’ (செ44):இவனிட்டவழக்கன்றோ வழக்கிந்தவையத்தார்க்கே (53): “அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்” (60): “பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன்” (61): “இவ் வையம் எல்லாம் படக்குடை ஏந்திய பல்லவன்” (65): “தண் செங்கோல் நந்திதனிக் குடையுடையவன்” (72): “தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோணாடன்” (74) என்பன.

நல்லியல்புகள்

‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (செ.60) தண் செங்கோல் நீந்தி (72) பகை இன்றிப் பார்காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய நந்திக்கலம்பகத் தொடர்களால், மூன்றாம் நந்திவர்மன் செங்கோல் அரசன்: அறம் வளர அரசாண்டபெருமகன்; குடிகளைக் காக்கும் தொழில் பூண்டவன். இவனது ஆட்சி தண்மையாக இருந்தது. என்பன நன்குணரலாம். இதனையே ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், “நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்” என்று சேக்கிழாரும்

கூறிப் பாராட்டினார். இப் பேரரசன் கல்வி கேள்விகளில் வல்லவன்; ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான் (செ.3). ‘நூற்கடற் புலவன்’ (26) என்று கலம்பகம் கூறுதல் காண்க. இவன் சிறந்த வள்ளல் என்பது, ‘நந்தி, வறியோர் சொன்ன பொருள் நல்குவன்’ (24) ‘ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி’ (43) முதலிய தொடர்களால் அறியலாம்.

ஏனைப் பல்லவ அரசர் போலன்றி. இவன் தமிழிற் பெரும் புலவனாக இருந்தான் என்பது ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி'[14] ‘....தமிழ்நந்தி'[15] என வரும் தொடர்களால் அறியலாம்.

நந்திக்கலம்பகம் கூறிய மேற்சொல்லப்பட்ட எல்லா நல்லியல்புகளும் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயத்தில் காணலாம். ‘நந்திவர்மன் ஆட்சியில் (1) வசந்த காலம் சிறப்பளித்ததுபோல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை; (2) நல்லியல்புகள் பொருந்திய பல் பெருமக்கள் பிறந்திருந்தனர்; (3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர். (4) வள்ளல்கள் பலர் இருந்தனர். (5) சான்றோர் அடக்கமாக இருந்தனர். (6) குடிகள் அரசனைச்சார்ந்து நின்றனர்.”

மனைவியர்

இப் பேரரசனுக்கு இருந்த மனைவியருள் இருவரே. பட்டயங்களிற் குறிக்கப்பட்டுளர்; நந்திவர்மனிடம் தோற்ற இராட்டிரகூட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கள் மகளான சங்கள் ஒருத்தி. ‘இவள், இலக்குமியின் அவதாரம்’ என்னலாம்; ஈன்ற தாயைப்போலக் குடிகளைப் பாதுகாத்தான். அரசனது நற்பேறே இவளாகப் பிறப்பெடுத்து வந்தது போலும்! இவள் சிறந்த நுட்ப அறிவுடையவள்; எல்லாக் கலைகளிலும் வல்லவன்,[16] என்று பாகூர்ப் பட்டயம் பகர்கின்றது.[17] மற்றொரு ഥனைவி அடிகள் கத்தன் மாறம்

பாவையார் என்பவள். இவள் தென்னாற்றில் தோற்றோடிய சீமாறன் மகள் என அறிஞர் கருதுகின்றனர். இவள் 75 ஆண்டுகட்குமேல் உயிருடன் இருந்தனள். இவ்வம்மை சிறந்த சிவபக்தி உடையவள்; பல கோவில் திருப்பணிகள் செய்துள்ளவன்.[18]

அரசியல்

நந்திவர்மன் காலத்தில் கடல் வாணிபம் சிறந்து இருந்தது. இவன் பெரிய கடற்படை வைத்திருந்தான். அக்காலத்தில் மல்லை (மாமல்லபுரம்), மயிலை (மைலாப்பூர்) ஆகிய இரண்டும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக இருந்தன என்பது. இவ்விரண்டையும் ஒருசேரப் பல இடங்களில் நந்திக் கலம்பகம் குறித்துப் போதலால் உணரலாம். காஞ்சிபுரம் தலைநகரமாக விளக்க முற்றிருந்தது.

இவன் வடக்கிலும் தெற்கிலும் பெரும்போர் இயற்றினன் ஆதலின். நாட்டில் வறுமை உண்டாயிற்றுப் போலும்/அதனை இவன் நீக்கினான் என்று கலம்பகம் (செ.11) கூறுகின்றது. அதேகாலத்தில் சோணாட்டில் பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில்[19] காண்கிறோம். ‘அவர் போருக்குப் போயிருந்த பொழுது பெரும் பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்கென வைத்திருந்த நெற் குவியலை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர்’ என வரும் செய்தி உண்மையே என்பதைக் கலம்பகத்தால் உய்த்துணலாம்.

திருப்பணிகள்

இப் பெருவேந்தன் சிற்றூர்களைத் தேவதானமாக விடுத்தான். அவற்றுள் ஒன்று திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றுர் விடப்பட்டது. இவன்திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால் ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்றழைத்துத் தானமாக விடுத்தனன்; திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான்.

இவன் திருச்சிராப்பள்ளிக் கடுத்த திருக்கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன்; திருவிடை மருதூரிற்கோவில் திருப்பணி செய்துள்ளான். இவன் காலத்தில் திண்டிவனம் கூற்றத்தில் ‘திகைத்திறலார்’ என்றவர் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டினார், நந்திவர்மன் மனைவி யான் மாறம் பாவையார் தஞ்சையை அடுத்த நியமம் என்னும் சிற்றுாரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர் 5 நாழியும், அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன் அளித்தான்.மேலும் இவ்வம்மை செய்துள்ள திருப்பணிகள் பல. இவள் கணவனான கழற்சிங்கன் காவேரிப்பாக்கத்துக்கு ‘அவனி நாராயணசதுர்வேதி மங்கலம்’ என்ற தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக அளித்தான். இங்ஙனம் மூன்றாம் நந்திவர்மன் செய்த தேவதானங்கள் பல; விடுத்த பிரமதேயங்கள் பல; செய்தகோவில் திருப்பணிகளும் பல. இவனுடைய சிற்றரரும் பிறரும் செய்த அறப்பணிகள் பல. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான்.[20] நந்திவர்மன், பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரையே தேவதானமாக விட்டான்[21] ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவில் நந்தா விளக்குக்காகப் பொன் அளித்தான்.[22] ஒருவன் செந்தலை - சுந்தரரேசுவர் கோவிலுக்கு நிலமளித்தான்[23] திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றுார்கள் தேவதானமாகவிடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஒதுவார் உள்ளிட்ட பல பணி செய்வோர்க்கு 2000 காடி நெல்லும், 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன.[24] ஒருவன் திருப்பராய்த்துரையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது.[25] ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தாவிள்க்குகட்கும் நெய்க்குமாக நிலமளித்தான்.[26]

சிவனடியான்

இவன், “சிவனை முழுதும் மறவாத சிந்தையன்” என்று கலம்பகம் போற்றுகின்றது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து. “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். மேற்சொன்ன இவனுடைய திருப்பணிகளும் இவன் சிவபக்தன் என்பதை மெய்ப்பிக்கின்றன. இவற்றை அரண் செய்வது போல வேலூர் பாளையப் பட்டய வரிகள் காண்கின்றன: அவை, சிவனது திரு அடையாளம் நெற்றியிற் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, ‘எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக’ என்று வேண்டுகின்றான் என்பன.

இவன் காலத்து அரசர் (கி.பி. 825-850)

இக்காலத்துக் கங்க அரசன் முதலாம் பிருதிவீபதி (கி.பி.853 - 880) என்பவன்: இராட்டிரகூட அரசன் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814 - 880): பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862) என்பவன் ஆவன்.

* * *

↑ Dr. C. Minakshi’s Ad. and S. “Lise under the Pallavas’ p300.

↑ கலம்பகம், செ.2, 35, 44, 84

↑ Historical Inscriptions of S. India, p.84.

↑ Bellary Gazetteer, pp.231-235.

↑ S.I.I. Vol.II. No.98: போர் இவ்வளவு கடுமையாக நடந்ததாற் போலும் அமோகவர்ஷன், தெற்கே படையெடுத்துச் சென்றதன் சிற்றரசன் பங்கயனை உடனே வருமாறு கட்டளை போக்கினான்.

↑ செ.2.

↑ இதனை முதன் முதலில் விளக்கிக் காட்டிய பெருமை டாக்டர் மீனாக்ஷி அம்மையார்க்கே உரியது.

vide her “Ad. and S. Life under the Pallavas’ pp.302-304.

இராசசிம்மனைக் கழற்சிங்கன் என்று தவறாகக் கருதிச் சுந்தரர் காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நிறுத்தினோர் பலராவர்.

↑ MVK Rao’s “Gangas of Talakad.’ p. 79.

↑ Ibid, pp.84-85.

↑ நந்திக்கலம்பகம், செய்.28, 29, 33, 38, 42, 49, 52, 53, 63, 71, 75, 77, 79, 80, 85, 86.

↑ தெள்ளாற்றுப் போர் வரகுணன் காலத்து என்று திரு துப்ராய் அவர்கள் கூறல் பொருந்துவதன்று. wide his “Pallavas’ pp.79-80. ஸ்ரீமாதன் காலத்தில் நடந்ததே எனத் திருநீலகண்ட சாத்திரியார் கூறலேஏற்புடையது. Vide his “Pandiaல Kingdom’. p.73. Foot-note.

↑ சுந்தரர் தேவாரம்.

↑ நந்திக்கலம்பலம் செ.81.

↑ நந்திக் கலம்பகம் செ25.

↑ Ibid, p.26,

↑ SII. Vol. II Part v. p.509.

↑ Ep, Indica, Vol. XVIII, p. 13.

↑ Dr. C. Minakshi’s Pallaväs, pp. 161, 162.

↑ பெரியபுராணம் வரலாற்றுக்கு (History) எந்த அளவு துணை செய்கிறது என்பதை அறிய இஃதொரு சான்றாகும்.

↑ 347 of 1914.

↑ S.I.I. Vol.1 p.567.

↑ 52 of 1895.

↑ 11 of 1899,

↑ S.I.I. Vol. III p.93

↑ 180 of 1907.

↑ Ep.Ind. Vol.II p.224.

17. பிற்பட்ட பல்லவர்

(கி.பி. 850 – 882)

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கு மகன். இவன் இரட்டிரகூட அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவளுக்கும் மூன்றாம் நந்திவர்மனுக்கு பிறந்தவன் ஆதலின். பாட்டன் பெயரைப் பெற்றவன். இவன் சற்றேறக்குறையக் கி.பி. 850 இல் பட்டம் பெற்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆண்டான்.

பல்லவர்-பாண்டியர் போர் 1

நிருபதுங்கவர்மன் காலத்தில் பாண்யராக இருவர் இருந்தனர். முதல் அரசன் சென்ற பகுதியிற் கூறப்பட்ட சீமாறன் சீவல்லபன் (கி.பி.830 - 862) அவனுக்குப் பின் அவன் மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் கி.பி. 862 முதல் 880 வரை அரசாண்டான். எனவே, நிருபதுங்கள் காலத்தின் முற்பகுதியில் சீமாறனும், பிற்பகுதியில் வரகுணனும் பாண்டி மன்னராக இருந்தனர் என்பது நினைவுகூர்தற்குரியது. சீமாறன் தெள்ளாற்றுப்போரில் தோல்வியுற்ற பிறகு பல ஆண்டுகள் கழித்துத்தான் குட மூக்கில் (கும்பகோணத்தில்) பல்லவரையும் அவருக்குத் துணையாக வந்த வரையும் வென்றதாகக் கூறியுள்ளார்கள். நிருபதுங்க பல்லவன் பாகூர்ப் பட்டயத்தில் ‘பாண்டியனிடம் முன் தோல்வியுற்ற பல்லவர் படை, அரசன் அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) அவனையும் பிறரையும் அரிசில் ஆற்றங்கரையில் முறியடித்தது’ என்பது காணப்படுகிறது. இவ் விரண்டையும் ஒப்புநோக்கி ஆராயின். (1) பாண்டியன் மூன்றாம் நந்திவர்மன் இறுதிக் காலத்தில் அல்லது நிருபதுங்கன் ஆட்சித் தொடக்கத்தில் பல்லவரைக் குடமுக்கில் வென்று இருத்தல் வேண்டும். (2) பிறகு நிருபதுங்கன் பெரும் படையுடன் சென்று அரிசில் ஆற்றங்கரையில் சீமாறனை வென்றிருத்தல் மீண்டும் என்பன நன்கு விளங்கும்.

குடமூக்குப் போர்

மூன்றாம் நந்திவர்மன் பாண்டியநாட்டு எல்லைவரை சென்றதாக முன்பகுதியிற் கூறினோம் அல்லவா? பல ஆண்டுகட்குப்பின் அந்த இழிவை நீக்க, சீமாறன் பெரும் படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்திருத்தல் வேண்டும். அப்போது நந்திவர்மன் தெள்ளாற்றில் தோற்ற பாண்டியனை எளியனாக எண்ணி, தான் போகாமல், பாண்டியனை எதிர்க்கும்படி தன் சேனைத்தலை வனையே படையுடன் அனுப்பி இருக்கலாம். அப்பொழுது நடந்த குடமூக்குப் போரில் பல்லவர் படைதோற்று மீண்டிருக்கலாம். இந்த

வெற்றியைப் பாண்டியன் பட்டயம் கூறுகிறது போலும்! இப் போரி கங்க அரசனான பூதுகனும் பல்லவன் சார்பில் நின்று தோற்றான்.[1]

பல்லவர்-பாண்டியர் போர் 2

நிருபதுங்கன் பட்டம் பெற்றபிறகு பெரும்படை திரட்டி பாண்டியனை ஒழிக்க முற்பட்டான். அப்பொழுது அரிசிலாற்றங் கரையில் கொடும் போர் நடந்தது. அம் முறை பல்லவன் வெற்றி பெற்றான். அதனாற்றான் பாகூர்ப் பட்சியம். “முன் ஒருமுறை பாண்டியர்க்குத் தோற்ற பல்லவப் படை இப்பொழுது அரசனது அருளால் (நிருபதுங்கவர்மன் செலுத்தியதால்) வெற்றி பெற்றது” என்று கூறுகின்றது.

இச் செய்திகளால், (1) பல்லவர் நாட்டின் தென்பகுதியே குழப்பமான நிலையில் இருந்தது. (2) பாண்டியன் பல்லவரிடம் இருமுஜற தோற்றதால் பாண்டியன் பேரரசு நிலை தளர்ந்தது என்பன நன்குணரலாம்.

ஈழ நாட்டுப் படையெடுப்பு

பாண்டிய நாட்டில் கலாம் விளைத்துச் சீமாறனுக்கு எதிரியாக மாய பாண்டியன் என்பவன் ஒருவன் தோன்றினான். அவனைச் சீமாறன் தோற்கடித்து விரட்டினான். ஒடிய மாய பாண்டியன் ஈழத்து அரசனிடம் சரண் புகுந்தான். ஈழத்தரசன் பெரும் படை திரட்டிப் பாண்டிய நாட்டின்மேல் படையெடுக்க சமயம் பார்த்திருந்தான். அதனை உணர்ந்த சீமாறன், தன் பகைவனாக இருந்து தன்னை அரிசிலாற்றங்கரையில் தோற்கடித்த நிருபதுங்கனிம் நட்புக் கொண்டு அவனது கடற்படைத் துணையால், ஈழத்தின்மேல் படையெடுத்து வென்றான் என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.[2]

திருப்புறம்பியப் போர்[3]

சீமாறன் சீவல்லபன் மகனான இரண்டாம் வரகுணன் (கி.பி. 862. 880) ஏறத்தாழக் கி.பி. 880இல் பல்லவர்மீது படையெடுத்தான். இவன் கி.பி. 868இல் திருவதிகையில் உள்ள கோவிலுக்குத் தானம் செய்தாக நிருபதுங்கனது 18ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.[4] இதனால், இவன் நிருபதுங்களிடம் முதலில் நண்பனாக இருந்தான் என்பதை நன்கறியலாம். இவன் படையெடுத்தபோது நிருபதுங்கன் முதியவன் ஆதலின், இளவரசனான அபராசிதனே போருக்குச் சென்றான். அவனுக்குத் துணையாக அவனின் பாட்டனும் கங்க அரசனுமான முதலாம் பிருதி வீபதி என்பவன் தன் படையுடன் சென்றான். இந்த நிலையில் விசயாலயன் (கி.பி. 850-870) மகனான ஆதித்தசோழன் (கி.பி. 870 - 907) பல்லவருடன் சேர்ந்து கொண்டான். இம் மூவரும் பாண்டியனைத் திருப்புறம்பியம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் எதிர்த்துப் பொருதனர். கடும்போர் நடைபெற்றது. அதில் பிருதிவீபதி இறந்தான்.[5] ஆயினும், பாண்டியன் தோற்று ஓடினான். அபராசிதன் வெற்றி பெற்று மீண்டான். எனினும் அவனுடன் இருந்த ஆதித்த சோழனே நன்மை அடைந்தவன் ஆனான். அவன் சோழநாடு முழுவதும் தனதாக்கிக் கொண்டான். பின்னர்க் கி.பி.882இல் நிருபதுங்கன் இறந்தவுடன்,

ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டைநாட்டைக் கவர்ந்துகொண்டான். இங்ஙனம் தொண்டைநாடு சோழர்ஆட்சிக்குத் சென்ற ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 890 என்பர் ஆராய்ச்சியாளர்.[6]

எனவே, அபராசிதவர்மன் ஆட்சி கி.பி. 890 உடன் முடிந்ததால் வேண்டும். ஆனால் அவனது 18 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு நோக்கின், அவன் கி.பி 872 முதல் கி.பி 890 வரை ஆண்டிருத்தல் வேண்டுமென்று கூறவேண்டிவரும். ஆயின் கி.பி.882 வரை நிருபதுங்கன் அரசனாக இருந்தமைக்குச் சான்று இருத்தலால் இந்த முடிவு கொள்ளல் தவறு. ஆதலின், அபராசிதன் தந்தையின் முதுமைப் பருவத்தில் தானே நாட்டை ஆண்டு வந்தான் எனக்கோடலே பொருந்துவதாகும். மேலும், அபராசிதன் காலத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் செங்கற்பட்டு, சித்துர் ஆகிய இரண்டு கோட்டங்களிற்றாம் காணப்படுகின்றன. ஆதலின், நிருபதுங்கர்வமனது ஆட்சி முடிவிலேயே பல்லவப் பேரரசின் பெரும் பகுதி சோழர் கைப்பட்டதென்னலாம்; அபராசிதன் ஆட்சியோடு பல்லவர் பேரரசு முடிவுற்றது என்னலாம்.[7]

பழிக்குப் பழி

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றிக்கி.பி. 890 வரை, அஃதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆயிற்று. என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

கோவில் திருப்பணிகள்

நிருபதுங்ன் காலத்தில் பல கோவில்களில் புதிய கல்வெட்டுகள் தோன்றின. பல திருப்பணிகள் செய்யப்பட்டன. காடவன் மகாதேவியார் 108 கழஞ்சு பொன் திரு ஆலங்காட்டுக் கோவிலுக்கு அளித்தார்.[8] நந்திநிறைமதி என்பார் ஒருவர் கூரம் கைலேசுரவரர்க்குத் திரு அமுதுக்காக 11 கழஞ்சு பொன் கொடுத்தார்.[9] ஒருவர் திருக்கோவிலுர் திருவீரட்டானேசுவரர் கோவிலில் நந்தாவிளக்கு எரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தார்.[10] பல்லவ அரசியார் ஒருவர் திருக்கடை முடி மகாதேவரது கோவிலுக்குப் பொன் அளித்ததாகத் திருச்சன்னம் பூண்டிக் கல்வெட்டுக் கூறுகிறது.[11] ஒருவர் திருக்கண்டியூர்க் கோவிலுக்கு நிலம் அளித்தார்.[12] ஒருவர் திருத்தவத்துறை (லால்குடி)யில் உள்ள சப்தரிஷிசுவரர் கோவிலில் விளக்குக்காகவும் திரு அமுதுக்காகவும் பொன் அளித்தார்.[13] அப் கண்டி பெருமானார் என்பவர் திருமுக்கூடல் வெங்கடேசரி பெருமாள் கோவிலுக்குப் பொன் தானமாக உதவினார். அதனை ஊர் அவையார் ஏற்று நடத்த ஒருப்பட்டனர்.[14] ஒருவர் ‘அவனி நாராணச் சதுர்வேதி மங்கலம்’ எனப்படட் காவேரிப்பாக்கம் வரதராசப் பெருமாள் கோவிலுக்குப் பொன் தந்துள்ளார்.[15] இங்ஙனம் நிருபதுங்கன் ஆட்சியில் நடைபெற்ற கோவில் அறப்பணிகள் பல ஆகும். பழந்தமிழர் காலத்துப் பாடல் பெற்ற கோவில்கட்கும் பல்லவ வேந்தர் புதிதாக்க கட்டிய கோவில்கட்கும் இவன் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணிகள் பலவாம்.

இக்குறிப்புகளால், நாயன்மார், ஆழ்வார் இவர்தம் பாடல் பெற்ற தலங்களுக்கு அக்காலத்திலே இருந்த மதிப்பு நன்கறியலாம்: சிறப்பாக அப்பொழுதிருந்த தமிழ் மக்களின் சமயப் பற்றும் வெள்ளிடை மலைபோல் விளக்கமுறும்.

பிருதிவீ மாணிக்கம்

இது நிருபதுங்கன் மனைவிபெயர். இப்பெயர்கொண்டஅளவை ஒன்று நிருபதுங்கன் ஆட்சியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவள் ‘பிருதிவி கங்க அரையர்’ என்றும் முதலாம் பிருதிவீபதி என்றும் கூறப்பட்ட கங்க அரசன் மகள் என்னலாம். இவள் பெற்ற மைந்தனே அபராசிதவர்மன். அதனாற்றான் திருப்புறம்பியப் போரில், பாட்டானான பிருதி வீபதி பெயரனான அபராசிதனுக்கு உதவியாகச் சென்றான் எனக் கொள்ளலாம். வேறொரு கல்வெட்டில், ‘தேவியார் வீரமகாதேவியார்’ என்பது காணப்படுகிறது. இவள் நிருபதுங்கனுக்கு மற்றொரு மனைவி போலும் ‘பிருதிவீ மகாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு சிற்றுாரின் பெயரும் கல்வெட்டில் காண்படுகிறது. இது நிருபதுங்கன், தன் மனைவி பெயரை இட்டுக் குறிப்பிட்ட சிற்றுார் ஆகும். இவள் ‘தாயார் பானுமாலி’ என்பவள். இந்தப் பிருதிவீ மாணிக்கமே உக்கலில் உள்ள பெருமாள் கோவிலைக் கட்டியவள் என்னலாம்.[16]

மாதேவி அடிகள்

இவள் அபராசிதன் மனைவி, இவன் தமிழ் நாட்டுப் பெண்மணி ஆதல் வேண்டும். இவள் திருவொற்றியூரில் உள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 31 கழஞ்சு பொன் கொடுத்தவள்.[17]

நிருபதுங்கன் காலத்துக் குகைக்கோவில்

புதுக்கோட்டைச் சீமையில் உள்ள பழியிலி ஈச்சுரம் என்ற கோவில், பல்லவ அரசனாகிய நிருபதுங்க வர்மன் காலத்தில் குடையப்பட்டது என்பது அக்கோவில் கல்வெட்டினால் அறியப்படுகிறது.

திருத்தணிகைக் கோவில்

இஃது அபராசிதவர்மன் காலத்தில் ஏறத்தாழக் கி.பி. 890இல் கட்டப்பட்டது. இதில் இவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்தமையால் இக் கணக்குத் தரப்பட்டது. இக் கோவில் இராசசிம்மன் கோவிலுக்கும் பிற்காலச் சோழர் கோவிலுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி உடையது. இதில் கோபுரம் இல்லை. கும்பம் வேறு. கோபுரம் வேறு என்பது இல்லை. கும்பத்துக்குள் உள்ளறையும் முன் மண்டபமுமே உண்டு. கும்பத் தோற்றம் யானையின் பாதியாக இருக்கும். இத்தகைய கும்பம் மாமல்லபுரத்தில் உள்ள சகாதேவன் தேரிலும் கூரம் கோவிலிலும்[18] காணலாம். தூண்கள்மீதுள்ள போதிகை உருண்டது. இந்த அடையாளம் நினைவிற்கொள்ளின், பிற்காலப் பல்லவர் கோவில்கள் இவை எனக் கூறிவிடலாம். பிற்காலச்சோழர்போதிகை கோணங்கள் உள்ளதாக இருக்கும். இந்தத் திருத்தணிகைக் கோவிற் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் தென்முகக் கடவுள், பிரமன், கொற்றவை (துர்க்கை). திருமால் இவர்தம் சிலைகள் இருக்கின்றன. இவ்வழகிய கோவிலைக் கட்டியவன் நம்பி அப்பி என்பவன்.[19] இந்தக் கோவிற் கல்வெட்டிற் காணப்படும். வெண்பா ஒன்று அபராசிதவர்மன் பாடியதாகக் கூறப்படுகிறது.[20]

அபராசிதன் காலத்துத் திருப்பணிகள்

இவன் காலத்திலும் பல திருப்பணிகள் நடைபெற்றன: கச்சிப்பேட்டைச் சேர்ந்த மாங்காட்டு ஈசர்க்கு விளக்கெரிக்கப் பொன் தரப்பட்டது.[21] ‘பெருநங்கை’ மகனான வாண கோவரையர் கூத்தியான ‘அமத்தி’ என்பவள் திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரேச்சுரர் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு ஊர்காற் செம்பொன் (உருகாச் செம்பொன்? செம்பொற் கட்டி?) தந்தனன். அதனை அமிர்த கணத்தார் ஏற்றுக் கொண்டனர்.[22] இவனுடைய வேறொரு கூத்தி ‘பத்திரதானி’ என்பவள் அதே கோவிலில் விளக்குக்காக 30 கழஞ்சு பொன் தந்தாள்.[23]

திருவொற்றியூரில் உள்ள அபராசிதனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு வெற்றிலை, இளநீர், ஆணைந்து (பஞ்ச கவ்யம்). சந்தனம், கற்பூரம் என்பனவாங்க உண்டாகும் செலவிற்காக ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது.[24] குமராண்டி குறும்பர் ஆதித்தன் என்னும் தலைவன் சத்தியவேட்டில் உள்ள மதங்ககேசுவரர் கோவிலுக்குத் துறையூர் என்னும் சிற்றுரையும் அதன் வருவாயையும் விட்டமை தெரிகிறது.[25] காடுபட்டிப் பேரரையன் மனைவியான போற்றி நங்கை என்பவள் திருவொற்றியூர் மகா தேவர்க்கு விளக்கெரிக்க 100 ஆடுகளை அளித்தாள்,[26] மேற்சொன்ன கோவிலிலே இரண்டு விளக்குகள் இட மகேசுவரர் மரபினர் பொன் தந்துள்ளனர்.[27] இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல இடங்களில் குறைவின்றி நடந்தன.

இக்காலத்து அரசர் (கி.பி. 850-890)

இக்காலத்துக் கங்க அரசர் முதலாம் பிருதிவீபதி (கி.பி. 853-880) இரண்டாம் பிருதிவீபதி (கி.பி. 880-925) என்போர்: இராட்டிரகூட அரசர் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814-880), இரண்டாம் கிருட்டினன் (கி.பி. 880-912) என்போர்; பாண்டியமன்னர் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862), வரகுண வர்மன் (கி.பி. 862-880), பராந்தக பாண்டியன்[28] (கி.பி. 880-900) என்பவர்.

பல்லவ மரபினர்

கம்பவர்மன் என்பவனைக் குறிக்கும் கல்வெட்டுகள் வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் இருபதுக்குமேல் கிடைத்துள்ளன. சிலர் இவன் நிருபதுங்கனுடன் பிறந்தவனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இவன் காலத்தில் ஒலக்கூர் என்னும் இடத்தில் போர் ஒன்று நடந்துள்ளது. அங்கு இறந்த வீரன்பொருட்டு வீரக்கல் நடப்பட்டுள்ளது. அஃது, அந்த ஊர் அழிவுற்றபோது போரிட்டு இறந்தவனது வீரக்கல் என்பது தெரிகிறது.கம்பவர்மன் அறங்கள் பல செய்துள்ளான்.

சந்திராதித்தன் விசய நரசிம்மவர்மன், விசய ஈசுவரவர்மன் என்பவர் தம் கல்வெட்டுகள் சிலவும் கிடைத்துள்ளன. இவர் அனைவரும் நிருபதுங்கள் காலத்தில் கோட்டங்கட்குத் தலைவர் களாக இருந்த பல்லவ அரச மரபினர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பிற்காலப் பல்லவர்

பிற்காலத்தில் நுளம்ப-பல்லவர் என்பவர். பல்லாரிக்கோட்டமும் மைசூரின் ஒரு பகுதியும் சேர்ந்த நுளம்ப பாடியைக் கி.பி. 13ஆம் நூற்றாண்டுவரை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆதித்த சோழன் வழிவந்த பேரரசர்களுடன் ஓயாது போர் நடத்திவந்தனர்; பலர் சிற்றரசராகியும் அரசாங்க அலுவலாளராகியும் இருந்தனர். அவர்கள் இங்ஙனமே மேலைச் சாளுக்கியரிடமும் வேலை பார்த்தனர். அவர்கள், ‘காஞ்சிப் பல்லவர் மரபினர்’ என்று தம்மைக் கூறிக்கொண்டனர். ஆதலின், காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தவுடன், பல்லவ அரச மரபினர் தமது பழைய இடத்திற்குச் சென்று, குறுகிய நிலப்பகுதியை ஆளலாயினர் என்பது தெரிகிறது.[29] வேறு பலர் சோழப் பேரரசிற் கூடலூர், சேந்த மங்கலம் முதலிய இடங்களில் சிற்றரசராகவும் தானைத் தலைவராகவும் வளநாட்டுத் தலைவர்களாகவும் இருந்து வந்தனர்.

* * *

↑ M.A.R. 1907, p.63

↑ Ep. Indica, Vol XVIII, p.13, Dr. C. Minakshi’s “Ad and S.Life under the Păllavas, pp. 162-163.

↑ இப்போர் அபராசிதன் ஆட்சியில் நடந்ததாக இதுவரை வரலாற்று ஆசிரியர் வரைந்து வந்தனர். ஆயின் அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை நோக்க, இப் போர் நிருபதுங்கள் காலத்திலேயே நடந்தது’ என்பது உறுதிப்படுகிறது. ஆதலின் இஃது இங்குக் குறிக்கப் பெற்றது. 1. “The Chronology of the Latter Pallavas” - Mr. M.S. Sarma’s article on in Ramamurthi Pantulu Commemmoration Vol. p. 142. 2. Mr. M.S. Sarma’s Note on Nirupatunka J.O. O.R. Vol.VIII part 2, p.165.

↑ No. 360 of 1931.

↑ இப்போரில் இறந்த முதலாம் பிருதிவீபதியின் கோவில் ஒன்றும் உதிரம் படிந்த தோப்பு ஒன்றும் திருப்புறம்பியத்தில் இன்றும் இருக்கின்றன. TVS Pandarathar’s “Pandyar Varalaru'p.34.

↑ K.A.N. Sastry’s “Cholar,’ Vol. I. pp.133-136.

↑ Dr. C. Minakshi’s “Ad. and S. Life under the Pallavas’ p.5.

↑ 460 of 1905.

↑ 257 of 1912.

↑ 277 of 189

↑ 300 of 1901.

↑ 17 of 1895

↑ 84 of 1902.

↑ 179 of 1915

↑ 397 of 1905.

↑ Dr. Minakshi’s Ad. and S.I. life under the Pallavas p.4. 161

↑ 162 of 1912.

↑ சென்னைக்கடுத்த கோவூரிலும் காணலாம்.

↑ P.T.S. Iyengar’s “Pallavas,’ part III, p.77; 435 of 1005 343.

↑ inscription No.433 of 1905. இவன் ‘வெண்பாப் பாடினான் என்பதை நோக்க, இவனுக்கு முற்பட்ட ஐயடிகன் காடவர்கோன் நாயனார் என்பவர் ஒருவர் க்ஷேத்திர வெண்பா என்னும் சிறுநூல் பாடினார் என்பது இங்கு நினைக்கத்தக்கது.

↑ 351 of 1908

↑ 158 of 1912

↑ 161 of 1912

↑ 159 of 1912

↑ 31 of 1912

↑ 32 of 1912

↑ 90 of 1912

↑ R. Gopalan’s “Pallavas of Kanchi, pp.143,144.

↑ L. Rice’s “Mysore and Goorg from Inscriptions’ pp.55-59.

18. பல்லவர் ஆட்சி

நாட்டுப் பிரிவு

பல்லவப் பெருநாடு பல இராட்டிரங்களாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாக (கோட்டங்களாக)ப் பகுக்கப்பட்டிருந்தது. பல்லவர் பட்டயங்களில் முண்ட ராட்டிரம் வெங்கோ ராட்டிரம்ட (வேங்கி ராட்டிரம்) முதலிய ஆந்திரப் பகுதி மண்டலங்களும் துண்டக ராட்டிரம் என்னும் தொண்டை மண்டலமும் குறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆண்ட தமிழ் நாட்டில் கோட்டம் நாடு ஊர் என்னும் பிரிவுகள் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும் தமிழ் நாட்டுப் பகுதிகளையும் நோக்கப், பல்லவர், தமக்கு முன் இருந்த தமிழ் அரசர் தொண்டை நாட்டுப் பிரிவுகட்கு வைத்திருந்த பெயர்களை அப்படியே தங்கள் ஆட்சியிலும் கையாண்டு வந்தனர் என்பதை நன்குணரலாம். தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அவையாவன:

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்துர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பலகுன்றக் கோட்டம், 14.இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19.செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக்கோட்டம், 22. வேலூர்க்கோட்டம், 23. சேத்துர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்.[1]

அரச முறை

பெரும்பாலான பட்டயங்களால், பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு உரிமையானதாகவே தெரிகிறது. அரசுக்கு ஏற்ற மைந்தன் இல்லாத காலங்களில் அரசனுடைய தம்பி மகன் பட்டத்தைப் பெறுதல் இயல்பாக இருந்தது. அரசன் திடீரெனப் பிள்ளை இன்றி இறந்தபோது, அமைச்சர் முதலிய பொறுப்புள்ள மக்கள் ஒன்று கூடி எண்ணிப் பார்த்து அரச மரபில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முடி புனைதல் வழக்கம். இச் செய்திகளை எல்லாம் முன்கண்ட பகுதிகளிலிருந்து நன்குணரலாம்.

அரசர் பட்டப் பெயர்கள்

பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சிறந்து விளங்கிய சிவஸ்கந்தவர்மன் தன்னை ‘அக்நிஷ்டோம-வாஜ பேய-அஸ்வமேத ராஜ்’ என்று பட்டயத்தில் கூறிக்கொண்டதைக் காணப் பல்லவ வேந்தர் தாம் செய்த வேள்விப் பெயர்களையும் தங்கள் பட்டப்பெயர்களாகக் கொண்டமை நன்கறியலாம். பல்லவர் வீட்டுப் பெயர் ஒன்றாகும்; பட்டம் ஏற்றவுடன் கொண்ட பெயர் வேறாகும். அதனை ‘அபிடேக நாமம்’ என்னலாம். இராசசிம்மன் என்பது இயற்பெயர்; அவனுக்கிருந்த (இரண்டாம்) நரசிம்ம வர்மன் என்பது அபிடேகப் பெயர். பரமேசுவரன் என்பது இயற்பெயர் அவனுக்கிருந்த (இரண்டாம்) நந்திவர்மன் என்பது அபிடேகப் பெயர்.[2] இவை அன்றிப் பல்லவப் பேரரசர் பெற்றிருந்த் விருதுப் பெயர்கள் மிகப் பல ஆகும். அவை ஆங்காங்கே முன்னரே காட்டப்பட்டுள்ளன. அப் பெயர்கள் அவ் வேந்தர்தம் பலவகை இயல்புகளை நமக்கு விளக்குவனவாகும்.

அரசரும் சமயநிலையும்

பல்லவ வேந்தர் நல்ல உடற்கட்டு உடையவர்கள்; உயரமானவர்கள்: மணிமுடி தரித்த மன்னர்கள் என்னும் விவரங்கள் மகாமல்லபுரத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கொண்டு நன்கறியலாம். மூன்றாம் சிம்மவர்மன்[3] சிம்ம விஷ்ணு முதலிய பல்லவ அரசர் அனைவரும் வடமொழிப் புலவராக இருந்தவர்; மூன்றாம் நந்திவர்மன் மூன்றாம் சிம்மவர்மன். அபராசிதவர்மன் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக இருந்தவர். இராசசிம்மன் சைவ சித்தாந்தத்திற் சிறந்தவன்.[4] பல்லவ அரசமாதேவியாரும் நிரம்பப் படித்தவர்கள், ஒழுக்கம் மிக்கவர்கள் என்பது சாருதேவி, ரங்கபதாகை, தர்ம மகாதேவி, சங்கா, மாறம்பாவையார், பிருதிவீ மாணிக்கம் முதலிய பெண்மணிகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளால் நன்கறியலாம்.

பல்லவர் இலச்சினை

பாண்டியர்க்கு மீனும், சோழர்க்குப் புலியும், சேரர்க்கு வில்லும், கங்கர்க்கு நாகமும், சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினை ஆனாற்போலப் பல்லவர்க்கும் நந்தி இலச்சினை ஆயிற்று. நந்தி இலச்சினை பொதுவாகப் பல்லவர் சைவ சமய உணர்ச்சி உடையவர் என்பதை நன்கு விளக்குகிறது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த விளக்குகள், இடையே நந்தி அமர்ந்துள்ள அழகிய கோலம் கொண்ட பல்லவர் இலச்சினை பார்க்கத்தக்கது. உருவப்பள்ளி, பிகாரப் பட்டயங்களில் சிங்க இலச்சினை காணப்படுகிறது. சிங்க இலச்சினை கொண்ட பட்டயங்கள் யாவும் போர் முகத்திலிருந்து விடப்பட்டவை ஆகும். வெற்றியைக் குறிக்கச் சிங்க இலச்சினையை விடச் சிறந்த இலச்சினை கிடைத்தல் அரிய தன்றோ? பிற்காலப் பல்லவர் அனைவருமே நந்தி இலச்சினையே நன்கு பயன்படுத்தினர். பல்லவர் கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காணலாம்.[5] பல்லவ அரசர் வைணவராக இருந்த காலத்திலும் சமணராக இருந்த காலத்திலும் இந்த நந்திக் கொடியும் நந்தி இலச்சனையும நந்திப் பதிவு கொண்ட நாணயங்களும் வழக்கில்

இருந்தமை அறியற்பாலது. கூரம்காசக் குடிப்பட்டயங்களில் நந்தி மீது லிங்கம் அமைந்திருத்தல் இம் முடிபை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே, தனிப்பட்ட அரசன் எச்சமயத்தவன் ஆயினும், பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது என்பது இதுகாறும் கூறிய குறிப்புகளால் நன்கு புலனாகும்.

‘விடேல் விடுகு’ என்பது பல்லவர் விருதுப் பெயர்களுள் ஒன்று எனத் தவறாகக் கருதிய ஆராய்ச்சியாளர் பலர் ஆவர். இது ‘விடை+வெல்+விடுகு’ என்றிருத்தலே சிறப்புடையது. இதன் பொருள், ‘வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடுதல் பெற்ற (விடப்பெற்ற) ஆணை’ என்பதாகும். இப் பொருள் சரியா என்பது ஆராயத்தக்கது.[6]

பல்லவரது கத்வாங்கம்

‘கத்வாங்கம்’ என்பது சிவன் கொண்ட படைகளில் ஒன்றாகும். இதனாற்றான் சிவபெருமான் ‘கத்வாங்கன், கத்வாங்கதரன்’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளான்.[7] இக் கத்வாங்கப் படையைப் பிற்காலப் பல்லவர் தம் சமய அடையாளமாகக் கொண்டிருந்தனர்.[8] முதலாம் பரமேசுவரவர்மன் கத்வாங்கத்தைக் கொடியிலே பெற்றவன் என்பது காசக்குடிப் பட்டயம் கூறுகின்றது. இரண்டாம் நந்திவர்மன் பட்டமேற்றபோது அவனுக்குக் கொடுக்கப்பட்ட பலவகைப் படைகளில் கத்வாங்கமும் ஒன்று என்று வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.[9]

அமைச்சியல்

சிவஸ்கந்தவர்மன் வெளியிட்ட ஹிரஹத கல்லிப் பட்டயத்தில் ஆமாத்யர் (அமைச்சர்) கூறப்பட்டுள்ளனர்.[10] பிற்காலப் பல்லவருள் மகேந்திவர்மனான குணபரன் திருநாவுக்கரசரை அழைத்துவரத்தன் அமைச்சரை அனுப்பினான் என்பதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

பெரிய புராணத்ததைக் கொண்டு. மகேந்திரன் காலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பதை அறிதல் போல - இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் பிற்காலத்திலும் பல்லவர் அரசியல் அமைப்பில் அமைச்சர்குழு இருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறியலாம். இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சன் ‘பிரம்மஸ்ரீ ராஜன்’ எனப்பட்டான். எனவே, அவன் பிராமணன் என்பது வெளிப்படை மூன்றாம் நந்திவர்மன் அமைச்சன் நம்பன் இறையூர் உடையான் என்பவன். அவன் முன்னோர் பல்லவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். உத்தமசீலன் - ‘தமிழ்ப் பேரரையன்’ என்று ஓர் அமைச்சன் பெயர் காணப்படுகிறது. எனவே, ‘பிரம்மராஜன்’ (பிரமராயன்), பேரரையன் என்பன அமைச்சர் பெறும் அரசியல் பட்டங்களாக இருந்தன. ‘தென்னவன் பிரமராயன்’ என்று மாணிக்கவாசகர் அழைக்கப்பட்டமை காண்க. இதனால் பண்டைத் தமிழ் அரசர், தம் அமைச்சருடைய சிறப்பியல்புகளை நோக்கிப் ‘பிரமராயன், பேரரசன்’ என்று பட்டங்களை வழங்கிய முறையைப் பின்பற்றியே பல்லவரும் நடந்து வந்தனர் என்பது நன்கு விளங்குகின்றது.[11] ‘உத்தம சீலன், நம்பன்’ என்னும் அமைச்சர் ஆணையை நடைமுறையிற் கொணர்ந்தனர் என்பது தெரிகிறது. அமைச்சர் அரசர்க்கு ஆலோசனையாளராகவும் இருந்தனர் என்பது வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.

உள்படு கருமத்தலைவர்

பல்லவ வேந்தரிடம் உள்படு கருமத்தலைவர் (Private Secretaries) இருந்தனர் என்பதை ஹிரஹத கல் முதலிய சில பட்டயங்களால் அறியலாம். வாயில் கேட்பார் (Secretaries) கீழ் வாயில் கேட்பார் (Under Secretaries) முதலியவர்.பல்லவர் ஆட்சியில் அரசியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.[12]

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை ‘அதிகரணங்கள்’ எனப் பெயர் பெற்று இருந்தன என்பது மகேந்திரன் எழுதியுள்ள மத்தவிலாசப் பிரகசனத்தால் தெரிகிறது. அறங்கூர் அவையத்துத் தலைவர் ‘அதிகரண போசகர்’ எனப்பட்டனர். அதிகரணம் என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரணம் என்பது சிற்றுரில் இருந்த அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்) அதிகாரிகள் எனப்பட்டனர். பெரிய புராணத்தைக் கொண்டு சில சுவையுள்ள செய்திகளை அறியலாம். சிற்றுர்களில் சான்றோர் அறங்கூர் அவையத்தலைவராக இருந்தனர். மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் ஊரவை இருந்தது. அது வழக்கை விசாரித்து முடிவு கூறியதைப் பெரியபுராணத்தில் விரிவாகக் காணலாம். வழக்கில் முடிவுகூற மூன்று சான்றுகள் தேவை: அவை, (1) ஆட்சி (2) ஆவணம் (3) அயலார் காட்சி என்பன. இவற்றுள் ஆட்சி என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கம் (அதுபோக பாத்தியம்). ஆவணம் என்பது வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஒலை முதலிய எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் கூறுவது. ஒப்பந்தம் ‘இசைவு’ (Will) எனப்படும். அந்தந்த ஊரார் கையெழுத்துகளையும் கை ஒப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. சிற்றுக்களில் இருந்த அறங்கூர் அவைய அலுவலாளன் காரணத்தான் எனப்பட்டான். பத்திரத்தில் சாட்சிகளாகக் கை ஒப்பமிட்டவர் ‘மேல் எழுத்திட்டவர்’ எனப்பட்டனர்[13]

இத்தகைய அறங்கூர் அவையங்களில் கைக்கூலி(லஞ்சம்) தாண்டவமாடியது என்பதை மகேந்திரவர்மனே தான் வரைந்துள்ள மத்தவிலாசத்தில் குறிப்பிட்டுளான். இக்காலத்தில் உள்ளது போல் உயர்நீதி மன்றம் (High Court) அக்காலத்திலும் இருந்தது. அது தருமாசனம் எனப்பட்டது. அது பல்லவப் பேரரசின் பொது மன்றம் ஆகும். அஃது அரசனது நேரான மேற்பார்வையில் இருந்தது. ‘அதிகரணம்’ என்பது குற்ற வழக்குகளை (Criminal) விசாரிக்கும் மன்றம் எனவும், ‘தருமாசனம்’ என்பது பிற வழக்குகளை (Civil) விசாரிக்கும் மன்றம் எனவும் கோடல் பொருத்தமாகும்.[14]

அரண்மனை அலுவலாளர்

இவருள் பொற்கொல்லர். பட்டய எழுத்தாளர், புலவர் முதலியோர் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர். (1) அரண்மனைப் பொற்கொல்லர் அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச் செய்ததோடு செப்புப்பட்டயங்களில் அரசர் ஆணைகளைப் பொறித்துவந்தவர் ஆவர். மாதேவியாகிய அரசிக்கு அணி செய்த பொற்கொல்லர். மாதேவி பெருந்தட்டார், என்று பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளர். இப்பொற்கொல்லர் தம் மைந்தரும் பெயரரும் அரண்மனைப் பொற்கொல்லராகவே இருந்துவந்தனர் என்று பட்டயம்பகர்கின்றது. அரசனுக்கு அணிகள் முதலியன செய்து வந்த பொற்கொல்லன் அரசர் விருதுப்பெயருடன் ‘பெருந்தட்டான்’ என்பது சேர்த்து வழங்கப்பட்டான். (2) பொற்கொல்லர் அல்லாமல் செப்புப் பட்டயங்களைத் தீட்டப்பட்டய எழுத்தாளர் என்பவரும் இருந்தனர். அவர் அலுவலும் வழிவழி வந்ததாகும். (3) அரசர் மெய்ப்புகழை நாளும் பாடும் புலவர்.பல்லவர் அரண்மனையில் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் கவிகளைப் பாடியுள்ளனர். உதயேந்திரப் பட்டயத்தில் அரசனது மெய்ப்புகழை வரைந்த புலவன், மேதாவிகள் மரபில் வந்தவனும் புகழ்பெற்ற சந்திரதேவன்

மகனுமான ‘பரமேசுவரன்’ எனப்பட்டவன். இத்தகைய புலவர் ‘காரணிகர்’[15] எனப்பட்டனர்.

பல்லவர் படைகள்

தேர்ப்டை பல்லவரிடம் இருந்ததென்பதை மெய்ப்பிக்கக் கல்வெட்டு - பட்டயச் சான்றுகளோ, ஓவிய - சிற்பச் சான்றுகளோ இதுகாறும் கிடைத்தில. அவர்கள் யானைகள், குதிரைகள், வீரர்கள் பெற்றிருந்தார்கள் என்பது தேற்றம். சிறந்த துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தில் பழைய காலத்திலிருந்தே மேனாட்டுக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தமை இலக்கியம் கண்ட சான்று. வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் வாயிலாகப் போர்ப்பரிகள் பல இருந்தன என்பது தெளிவாகும். சிறந்த சேனைத் தலைவர்கள் பல்லவர் காலத்தில் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன் என்னும் தானைத்தலைவன் சிறந்திருந்தான்; நரசிம்மவர்மன் காலத்தில் வாதாவி கொண்ட சிறுத்தொண்ட நாயனார் சிறந்த சேனைத் தலைவராக விளங்கினார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அப் பேரரசனைத் பகைவர் முற்றுகையி லிருந்துகாத்த பெருவீரனான உதய சந்திரன் என்பவன் படைத்தலை வனாக இருந்தான். மூன்றாம் நந்திவர்மனிடம் பூதிவிக்கிரம கேகரி என்பவன்தானைத்தலைவனாக இருந்தான். -

பண்பட்ட படைகள்

பல்லவர் படைகள் போரில் வன்மை பெற்றவை. இடைக்காலப் பல்லவர் காலத்தில் வடபகுதியில் மேன் மதுரை, தசனபுரம் முதலிய இடங்கட்குச் சென்று போர் நடத்தி வெற்றிபெற்றன; பிற்காலப் பல்லவர் காலத்தில் கடம்பரை நிலைகுலையச் செய்தன. புகழ் பெற்ற சாளுக்கியரை அடக்கின; தமிழ் வேந்தரைப் பின்னடையச் செய்தன; இரட்டரை ஒடச் செய்தன. இக் குறிப்புகளை நன்கு நோக்குழிப் பல்லவர் பண்பட்ட போர்த்திறன் பெற்ற படைகளை வைத்திருந்தனர் என்பது வெள்ளிடை மலையாகும்.

கடற்படை

பல்லவர் கடற்படையும் இளைத்ததன்று. நரசிம்மவர்மன் தன் நண்பனான மானவன்மனுக்கு உதவிபுரியத் தன் கடற்படையை ஈழத்திற்கு அனுப்பினான்-அப்படைவெற்றிகொண்டதுஎன்பவற்றை உணர்கையில் பல்லவர் கடற்படை வலிமை தெற்றெனத் தெரிகின்றதன்றோ? நிருபதுங்கவர்மன் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவன் கடற்படை பெற்று ஈழத்தின் மீது படையெடுத்த செய்தியைக் காண்க.[16] இராசசிம்மன் இலக்கத் தீவுகளை வென்றதாகக் குறிப்புக் காணப்படுகிறது.[17]

இந்த இராசசிம்மன் காலத்தில் பல்லவ நாடு சீனத்துடன் சிறந்த வாணிபம் செய்து வந்தது. அக் காலத்தில் நாகப்பட்டினம் பல்லவர் துறைமுகப் பட்டினங்களில் ஒன்று. அங்கு இவன் சீனவணிகர் பொருட்டுப் புத்தர் கோவில் ஒன்றைக் கட்டுவித்துச் சீனப்பேரரசன் நன்மதிப்பைப் பெற்றான்.[18] அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த தென்னலாம்.[19] மூன்றாம் நந்திவர்மன் காலத்திலும் பல்லவர் கப்பல்கள் சையாம் முதலிய கடல்கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தன என்பது ‘தகோபா’ கல்வெட்டு முதலியவற்றால் அறியலாம்.

நாடும் ஊரும்

நாடு என்பது சிற்றுரைவிடப் பெரியது. கோட்டத்தை விடச் சிறியது. நாட்டார் என்பவர் அப்பகுதிக்கு உரிய சான்றோர். ஊரார் என்பவர் சிற்றுரைச் சேர்ந்த அறிஞர். ‘ஆள்வார்’ என்பவர் ஊரை ஆண்ட அவையினர். ஒரு நாட்டிற்கு உட்பட்ட எந்தச் சிற்றுரைப் பற்றிய செய்தியிலும் இம்முத்திறத்தாகும் கலத்தேதங்கள் கருத்தைத் தெரிவித்து வந்தனர் என்பது தெரிகிறது. ‘ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நாட்டாரும் காண்க.’ “திருமுகம் கண்டு. நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய், பதாகை வலம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டிக் கொடுத்ததற்கு எல்லை”[20] எனவரும் பட்டயக் குறிப்புகளைக் காண்க. பல்லவ மல்லன் விடுத்த பட்டத்தாள் மங்கலப் பட்டயத்தில், ‘நாட்டார்க்கு விட்ட திருமுகம் நாட்டார் பொழுது தலைக்கு வைத்து எல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டிப் பதாகை வலம்செய்து நாட்டார் விடுத்த அறை ஒலைப்படி.... என வருதல் காண்கையில் (1) அரசன் விடுத்தது திருமுகம் என்பதும், (2) நாட்டார் அதனை நிறைவேற்றிப் பொது மக்கட்கு அறிவிப்பது அறை ஓலை என்பது தெளிவுறல் காண்க.

ஊர் ஆட்சி

ஊரார் ஆட்சிமுறை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக அறிதற்குரிய சான்றுகள் கிடைத்தில. ஆயினும் ஊரார், சிற்றுர்ச் சபையாருடன் (ஆள்வாருடன்) கலந்து வேலைகள் செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊர் அவையார் பெருமக்கள் எனப்பட்டனர். இப் பெருமக்கள் உழவு. கோவிற் பணி, அறங்கூறல் முதலிய பல வேலைகளைப் பார்த்துவந்தனர். ஊர் அவை பல உட்பிரிவுகளாகப் பிரிந்து பல துறைகளிலும் நுழைந்து சிற்றுர் ஆட்சியைத் திறம்பெறச் செய்து வந்தது.[21] அக்காலத்தில் இத்தகைய ஊர் அவைகள் ஏறக்குறைய இருபது இருந்தன என்பது பட்டயங்களாலும் கல்வெட்டுக்களாலும் தெரிகிறது. மேலும் பல ஊர் அவைகள் இருந்திருத்தல் வேண்டும். இத்தகைய ஊர் அவைகளே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் (சுந்தரர் காலத்தில்) திருவெண்ணெய் நல்லூரில் இருந்தது; திருநீலகண்ட நாயனார் காலத்தில் சிதம்பரத்திலும் இருந்தது என்பது பெரியபுராணத்தில் அறிக.

ஊர் அவைப் பிரிவுகள்

ஊர் அவைக்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் (Committee) எனப்பட்டது. ‘ஏரி வாரியப் பெருமக்கள்’ ‘தோட்ட வாரியப் பெருமக்கள்’ எனப் பல வகுப்புப் பெருமக்கள் கொண்ட முழு அவையே ஊரவை ஆகும். சிற்றுர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர் ஆளுங்கணத்தார் எனப்பட்டார். இவர் ஊரவையாரின் வேறானவர். இக்கால நகர அவையாரைப் போன்றவர் அக்கால ஊரவையார்; இக்காலக் கமிஷனர் முதலிய அரசியல் அலுவலாளர் அக்கால ஆளும் கணத்தார் ஆவர். கோவில் தொடர்புற்ற பலவகை வேலைகளையும் தவறாது கவனித்துக் கோவில் ஆட்சி புரிந்து வந்த கூட்டத்தார் அமிர்த சணத்தார்[22] எனப்பட்டார். “திருவொற்றியூர்ப்புறத்து ஆதம்பாக்கத்துச் சபையோமும் அமிர்த கணத்தோமும் இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின் வாய் மூன்று மஞ்சாடி...” எனவரும் கல்வெட்டுத் தொடரைக் காண்க. இவர்கள் கோவிலுக்கு வரும் தானங்களைப் பெறுவர்; கோவில் பண்டாரத்திலிருந்து பொருள்களைக் குறித்த வட்டிக்குக் கடன் தருவர். இவை தொடர்பான பாத்திரங்களைப் பாதுகாப்பர். கோவில் தொடர்புற்ற பிற வேலைகள் எல்லாவற்றையும் கவனிப்பர். இவர்கள் ஊர் அவையாருக்குக் கோவில் சம்பந்தமான செய்திகளில் பொறுப்புள்ளவர் ஆவர்.[23]

இராட்டிர ஆட்சி

இராட்டிரங்களாகிய மண்டலங்களை ஆண்டவர் பெரிதளவு தம்மாட்சியே செலுத்திவந்தனர். இவர் நாளடைவில் வழிவழியாக இப் பதவிகளில் நிலைத்துவிட்டனர். பல்லவர் வடவர் ஆதலாலும், அவரது பேரரசு வடக்கில் சாளுக்கியர் இரட்டர்களாளும், தெற்கில் பாண்டியராலும் அடிக்கடி துன்புற்றதாலும் பல்லவர் தமிழ்க் குறுநில மன்னர்களை மிகுதிப்படுத்த வேண்டியவர் ஆயினர். தமிழ் மக்கட்கு ஆளும் பொறுப்புத்தர வேண்டியவர் ஆயினர்.[24] இதனை நன்கு நினைந்தே சோழ அரசைப் பெயரளவில் தனியரசாக விட்டு வைத்தனர் போலும்!

சிற்றரர்கள்

இக் காலச் சிற்றுர்களே பெரும்பாலும் மாறுதல் இன்றி அக்காலத்திலும் இருந்தன. மக்கள் குடி இருப்புக்குரிய வீடுகள், நன்செய்-புன்செய் நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள், சிற்றுர்ப் பொது நிலங்கள். கடை வீதிகள், சுடுகாடு-இடுகாடுகள். கோவில்கள், கோவில் நிலங்கள் முதலியன இருந்தன. ஒவ்வொரு சிற்றுாரும் நன்கு அளக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தது. சிறிய சிற்றுார்கள் பல பெரிய சிற்றுார்கள் சில: இவை பல்வேறு குடி இருப்புகளையும் சேரிகளையும் கொண்டவை. பிராமணர் பெரும் பகுதியினராக வாழ்ந்த சிற்றுரர்களிலும் பல திறந்து மக்கள் குடியிருந்தனர். பலவகைத் தொழிலாளிகளும் வணிகரும் வாழ்ந்து வந்தனர். இக்கால வழக்கப்படியே கிணறுகள், குளங்கள். கோவில்கள், ஓடைகள் முதலியன சிற்றுர்களுக்குப் பொதுவாக இருந்தன. நெல் அடிக்கும் களத்துக்கு வரியாக நிலமுடையார் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றுர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தி வந்தனர். இத்தகைய பணிகளை ஊர் அவையார் கவனித்து வந்தனர்.

பிரம்மதேயச் சிற்றரர்கள்

இவை மறையவர் பொருட்டே புதியனவாக உண்டாக்கப் பட்டவை. அவற்றுள் உதயசந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் முதலியன சிலவாகும். இச் சிற்றுார்கள் எத்தகைய வரியும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதில்லை. அதனால் இவை நன்னிலையில் வளர்ச்சியுற்று வந்தன.

தேவதானச் சிற்றூர்கள்

சில சிற்றுர்கள் கோவில்களுக்கென்று விடப்பட்டன. அவை தேவதானச் சிற்றுார்கள் எனப் பெயர்பெற்றன. அவற்றுள் ஒன்று மூன்றாம் நந்திவர்மனால் யக்ளுேஸ்வரர்க்கு விடப்பட்ட திருக்காட்டுப்பள்ளி என்னும் (பொன்னேரிக்கு அடுத்த) சிற்றுர் ஆகும். அச் சிற்றுாரின் வருவாய் முழுதும் கோவிற் பணிகளுக்கே செலவிடப்பட்டது. பல்லவப் பேரரசர் இந் நாட்டில் பல இடங்களில் பல வகைக் கோவில்களைக் கட்டினார்கள்: பல கோவில்கட்கு நிலதானம் செய்தார்கள். இம்முறையால், பல்லவர் ஆட்சியில் கோவில், சிற்றுார்ப் பொதுவாழ்வில் பெரிய மாறுதலைச் செய்துவிட்டன என்று கூறலாம்.

சிற்றரர்க் கோவில்கள்

கோவிலால் பல ‘குடும்பங்கள்’ பிழைத்தன. ‘தனிப்பரிவாரம், கோவில் பரிவாரம் அமிர்தகணத்தார்’ என்பவர் அனைவரும் கோவில் வருவாயைக் கொண்டு பிழைத்தவர் ஆவர். கோவில்களை அடுத்து அடியார்கட்கும் ஏழைகட்கும் உணவுச் சாலைகள் நடைபெற்று வந்தன.[25] கோவில் அல்லது உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும் வணிகரிடமிருந்தும் இக் கால வழக்கம் போல ‘மகன்மை’ (மகமை அல்லது மகிமை) யாக ஒரு பகுதி நெல், அரிசி முதலியவற்றைப் பல்லவர் காலத்தில் வசூலித்து வந்தனர் என்பது தெரிகிறது. இச் செய்தியைப் பெருமான் அடிகள் என்று போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு தெளிவாக அறிவிக்கின்றது.[26] இத்தகைய சத்திரங்கள் அல்லது மடங்கள் பல இந்த நாட்டில் இருந்தன. அவற்றில் காபாலிகர் காளாமுகர் முதலிய பலவகைச் சைவர் உண்டு வந்தனர். விழாக்காலங்களில் உள் ஊரார் வெளி ஊரார்

என்னும் அனைவர்க்கும் உண்டி வழங்க வசதிகள் அளிக்கப்பட்டி ருந்தன. அப் பணிக்கு அரசனும் பிறரும் பொருள் உதவி செய்தனர். திருஆதிரை முதலிய நல்ல நாட்களில் கோவில் விழாக்கள் சிறப்புற நடந்தன. அவற்றுள் சித்திரைவிசுத்திருவிழா ஒன்று. இது நடைபெற ஒரு தனிமகன் 15), கழஞ்சுபொன் திருத்தவத்துறை (லால்குடி) கோவிலுக்குச் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இங்ஙனம் சிற்றுர்க் கோவில்கள் சிற்றுாரார்க்குப் பக்தியை மட்டும் ஊட்டுவதோடு நில்லாது. ஊர்மக்கட்குக் கடன் கொடுத்துதவும் அறச்சாலையாகவும், அடியார்களை உண்பிக்கும் உணவு நிலையங்களாகவும் இருந்தன. இவற்றோடு, தேவைப்பட்ட காலங்களில் ஊரார்க்குப் பண உதவி செய்யும் கோவில் பண்டாரமாகவும், கோவில்கள் இருந்து வந்தன.[27]

பள்ளிச் சந்தம்

தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் பள்ளிச் சந்தம் என்பது சமணப் பள்ளிக்கென விடப்பட்ட இறையிலி நிலங்கள் ஆகும். ஆனால், இப் பள்ளிச் சந்தம் பிற்காலத்ததே ஆகும். ஆயின், இதுகாறும் கிடைத்துள்ள பல்லவர் பட்டயங்களில் பெளத்தர்க்கு நிலம் விட்டதாக ஒரு சான்றும் காணக் கிடைக்கவில்லை என்பது குறிக்கத் தக்கது.[28]

ஏரிப்பட்டி

சிற்றுார்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய செலவுக்காகச் சில நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டி ருந்தன. அவை ஏரிப்பட்டி எனப்படும். ஏரிப்பட்டியை மேற்பார்வை யிட்டடவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பட்டனர்.[29] ஒரு குறிப்பிட்ட அளவையுடைய நிலத்து விளைவிலிருந்து குறிப்பிட்ட அளவுள்ள நெல்லை ஏரிவாரியாகத் தரும் பழக்கம் பல்லவர் காலத்திருந்தது.

நிலவகை

மிராசுதாரர் நிலங்களில் பெரும்பகுதி “பயல் நிலம்’ என்றும் அரசர்க்குரிய வரியைச் செலுத்த என்று விடப்பட்ட நிலப்பகுதி ‘அடை நிலம்’ என்றும் குறிக்கப்பட்டன. பயல் நில வருவாயில் பாதியை நிலத்தவர் பெற்றனர்; மற்றப் பகுதி பயிரிட்டவர் பெற்றனர். அரசாங்க நிலங்களைப் பயிரிட்ட குடியானவர் சிலர் இருந்தனர். அவர்களது ‘பயிரிடும் உரிமை’ அரசாங்கத்தாரால் தரப்பட்டு வந்தது. அந்த உரிமை அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது.[30]

பலவகை வரிகள்

தென்னை - பனை முதலியன

தென்னை மரங்கள் சிறப்பாகப் பிரம்மதேய தேவதானச் சிற்றுார்களில் அரசர் உரிமை பெற்று வரி செலுத்தாது பயிரிடப்பட்டன. இதனால் பிற ஊர்களில் அவற்றைப் பயிரிட விரும்பினோர் அவற்றின் விளைவில் ஒரு பகுதியை அரசர்க்கு வரியாகச் செலுத்தி வந்தனர் என்பது பெறப்படுகிறது. முன்சொன்ன பிரம்மதேய - தேவதானச் சிற்றுர்களில் இருந்த தென்னை - பனை மரங்களிலிருந்து கள் இறக்குதல் விலக்கப்பட்டிருந்தது. கள் இறக்கினவர் அரசாங்க வரி செலுத்தி வந்தனர்; இம் மரங்களைப் பயிரிட்டவர் அரசாங்கத்திற்கு ஒரு பகுதி வருவாயை வரியாகச் செலுத்தி வந்தனர்; வெட்டப்பட்ட மரங்களின் அடிப் பகுதியில் ஒரு பகுதியும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. தென்னை பனை மரங்கட்கு உரியவர், சாறு இறக்க வரி கட்டினர். பனம்பாகு செய்ய வரி

கட்டினர். கடைகளில் விற்கப்பட்ட பழைய பாக்கு மரங்களிலும் அரசாங்கம் பங்கு பெற்று வந்தது. ‘கல்லால மரம்’[31] பயிரிடச் சிற்றுாரார் அரசாங்கத்தினிடம் உரிமை பெற வேண்யிருந்தது. அவ்வுரிமைக்குச் சிறு தொகை செலுத்தவேண்டி இருந்தது; அது ‘கல்லால் காணம்’ எனப்பட்டது.

மருந்துச் செடிகள்

செங்கொடி (செங்கொடி வேலி அல்லது சித்திர மூலம்) என்பது மிகச் சிறந்த மருந்துக்கொடி. இது பல வகை நோய்களையும் இரணங்களையும் போக்க வல்ல ஆற்றல் பெற்றது. இதனைப் பயிரிடுவோர் உரிமை பெறவேண்டும். இதற்குச் செலுத்தப்பட்டவரி செங்கொடிக் காணம் எனப்பட்டது. ‘கருசராங் கண்ணி’ என்பதும் சிறந்த பயன்தரும் செடியாகும். அது பல நோய்களை நீக்க வல்லது. இச் செடியைப் பயிரிட அல்லது விற்க உரிமை தரப்பட்டது. அவ்வுரிமை பெறச்செலுத்தப்பட்ட தொகை கண்ணிட்டுக் காணம் எனப்பட்டது.

மருக்கொழுந்து முதலியன

பல்லவர் காலத்துக் கடல் வாணிபம் கிழக்கிந்தியத் தீவுகளிலும் சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் சீனத்திற்கு உரிய ‘மருக்கொழுந்து’ இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டதாகும். இதனைப் பயிரிடப் தேவதான - பிரம்மதேயச் சிற்றுர்கள் உரிமை பெற்றிருந்தன. பிற சிற்றுார்கள் அரசாங்க உரிமை பெற்றே (வரிசெலுத்தியே) பயிரிடவேண்டியவை ஆயின.

‘நீலோற்பலம்’ எனப்படும் குவளைச் செடிகளை நடுவதற்கும் உரிமைபெற வேண்டும்; விற்பதற்கும் அரசினரிடம் உரிமை பெற வேண்டும். இவை முறையே ‘குவளை நடு வரி’ எனவும், குவளைக் கானம்’ எனவும் பெயர் பெற்றன. இக் குவளை மலர் பூசைக்கும்

மருந்துகள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்ஙனமே செங்கழுநீர் நடுவதற்கும் உரிமை பெறவேண்டும். பிரம்மதேய - தேவதானச் சிற்றுார்கள் வரி இல்லாமலே இதை நடுவதற்கு உரிமை பெற்றிருந்தன. இதன் மலர் பூசைக்கு உரியது. வேர் மருந்துக்கு உரியது. இங்ஙனம் அரசாங்க உரிமை பெற்றுப் பயிரிடப் பட்டவை பல.[32] உப்பெடுத்தலும் சர்க்கரை செய்தலும் அரசாங்கமே கவனித்து வந்தது.[33]

பிற வரிகள்

கால்நடைகளாற் பிழைப்பவர், ‘புரோகிதர், வேட்கோவர், பலவகைக்கொல்லர், வண்ணார், ஆடைவிற்போர், ஒடக்காரர், தரகர், செக்கர், ஆடை நெய்பவர், நூல் நூற்பவர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், நெய் விற்போர், மணவீட்டார் முதலிய பல தொழிலாளரும் பிறரும் அரசாங்கத்திற்குக்குறிப்பிட்டவரி செலுத்தி வந்தனர்’ என்பது பல பட்டயங்களாலும் நன்கு புலனாகும் செய்தியாகும். சிற்றுர்த் தலைவன் சிற்றுர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று வாழ்ந்தான். அவனுக்கு அவ்வூரார் செலுத்தி வந்த வரி ‘விசக்கானம்’ அல்லது ‘வியவன் காணம்’ எனப்பட்டது. இவ் வரிகள் அன்றி நெல் விற்பவர் அரிசி முதலிய பலவகைக் கூலவகைகளை விற்போர் குறிப்பிட்ட அளவையுடைய அரிசியோ பிற கூலமோ வரியாகத் தந்துவந்தனர் என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் அரசர் தலை இடப்பட்ட திருமுகங்களை நாம் பணம் தந்து பெறுதல்போல - அக்காலத்தில், செய்திகள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குள் கொண்டு செல்ல வசதி இருந்ததோ என்னவோ தெரியவில்லை. அத்தகைய வசதிக்கென்று வரி இருந்ததை நாம் ஒருவாறு உய்த்துணரலாம். அது ‘திருமுகக் காணம்’ எனப் பெயர் பெற்றது. கத்தி முதலிய கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி ‘கத்திக்காணம்’ எனப்பட்டது. பறை யடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது ‘நெடும்பறை’ எனப் பெயர்பெற்றது. அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகட்கு ஊரார் உணவளித்தல் வழக்கம்; அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகை ஒருவகை வரியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ‘எ(ல்) சோறு’ (நாட்சோறு) என்பது. ஊர் மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்று பாடு’ எனப்பட்டது. இங்ஙனம் பல துறைகளினும் வந்த வருவாய் அரசாங்கப் பண்டாரத்தை அடைந்து வந்தது. இதுகாறும் கூறியவற்றால், பல்லவ அரசாங்கம் கணக்கற்ற துறைகளில் வருவாய் பெற்றுவந்தது என்பதை நன்குணரலாம்.[34]

பல்லவர் அரசாங்கப் பண்டாரம்

பல்லவர் வரலாற்றிற் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய-குடைவித்த உலகம் போற்றும் கோவில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை அறியலாம். அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர். தண்டன் தோட்டப் பட்டயத்தால், ‘குமாரன்’ என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி உடையவன்; அவா அற்றவன்; நடுநிலை யாளன் சிறந்த ஒழுக்கம் உடையவன். பகைவர்க்கும் உறவினர்க்கும் ஒரே படித்தானவன் என்பது தெளிவுறத் தெரிகிறது.[35] இப் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் ‘கொடுக்கப் பிள்ளை’ எனப்பட்டனர்.[36]

நில அளவை

பல்லவர் ஆட்சிக்குப்பட்ட நாட்டில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவை பெற்று இருந்தது. இன்ன பகுதி நிலங்கள் வரியற்றவை என்ற முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும் வரி அளவை முதலிய கணக்குகளையும் சிற்றுர் - பேரூர் அரசியல் அலுவலாளர் வைத்திருந்தனர். ‘பழம் பிரம்மதேயம் இருபத்து நாலு வேலியும் நீக்கி’ என வரும் பட்டயத் தொடரை நோக்குங்கால், ‘பல்லவர் ஆட்சியில் நில அளவைக்கணக்கு முதலியன உண்டு’ என்பதைத் தெளிவாக உணரலாம். ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்ததும் கள்ளியும் கல்லும் நட்டு எல்லை வகுத்தல் அக் காலப் பழக்கமாக இருந்தது.[37]

நீர்ப்பாசன வசதிகள்

பல்லவர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்ய வேண்டியவர் ஆயினர். ஏரிகள் ‘தடாகம்’ என்று கூறப்பட்டன. பல்லவர் பல ஏரிகளைத் தம் நாட்டில் உண்டாக்கினர். அவை அரசர் பெயரையோ, தோண்டப்பட்ட இடத்தைச் சேர்ந்த சிறந்த தலைவன் பெயரையோ கொண்டதாக இருக்கும். இராசதடாகம், திரளயதடாகம் (தென்னேரி), மகேந்திர தடாகம், சித்திர மேக தடாகம் (மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம் (கூரம் ஏரி) வைரமேகன் தடாகம் (உத்திரமேரூர் ஏரி), ‘வாலி வடுகன்’ என்பவன் வெட்டுவித்த வாலி ஏரி, குன்றாண்டார்கோவில்- (புதுக்கோட்டை).திருச்சிராப்பள்ளியில் ஆலம்பாக்கத்தில் ‘மாரிப்பிடுகன்’ என்பவன் வெட்டுவித்த ‘மாரிப்பிடுகு ஏரி’ வடஆர்க்காட்டுக் கோட்டம் குடிமல்லத்தில் உள்ள வெள்ளேரி தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் காவேரிப்பாக்கம் ஏரி, வந்தவாசிக் கூற்றத்தில் இருந்த மருதாடு ஏரி, வேலூர் கூற்றத்தில் உள்ள கனவல்லி தடாகம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவையன்றிக் கல்வெட்டுகளில் குறிபிடப்பெறாத ஏரிகள் பல இருந்தன. இவ்வேரிகளில் பல மழை நீரையே பெற்றவை; சில ஆற்று நீரையும் பெற்றவை. இவற்றிலிருந்து கால்வாய்கள் பல இடங்கட்கும் சென்று வயல்கட்கு நீரைப்பாய்ச்சிவந்தன. இந்த ஏரிகள் அல்லாமல் கூவல் (கிணறு)கள் பல எடுக்கப்பட்டன. இக் கிணறுகள் பெரியவை: வயல் கட்கு நீரை உதவுபவை; இப் பெருங்கிணறுகள் போன்றவற்றை இன்றும் தொண்டை நாட்டில் காணலாம். திருவெள்ளறை என்னும் வைணவத் தலத்தில் முத்தரையர் மரபைச் சேர்ந்த கம்பன் அரையன் என்பவன் ‘மாரிப் பிடுகு பெருங் கிணறு’ ஒன்றை எடுத்ததாகப் பல்லவர் பட்டயம் (நந்திவர்மன் காலத்தது) கூறுகின்றது.

பாலாறு காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் பல்லவர் நாடெங்கும் இருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் வைரமேகன் (நந்திவர்மன்) வாய்க்கால் இருந்தது. கூரத்தில் இருந்த பரமேசுவர தடாகத்திற்குப் பாலாற்று நீரைக் கொண்டுவந்தது ‘பெரும்பிடுகு வாய்க்கால்’ என்பது. இப் பெரிய கால்களிலிருந்து பிரிந்த கிளைக்கால்கள் பலவாம். அவை ‘குரங்கு, கால். கிளைக்கால், ஓடை எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தன. அவற்றுள் சில ‘கணபதி வாய்க்கால்’ ‘ஸ்ரீதர வாய்க்கால்’ என்றாற் போல வேறு பெயர்களும் பெற்றிருந்தன.[38] ஆறுகளில் நீர் இல்லாத காலங்களில் ஊற்றுக்கால்கள் எடுத்து நீர் பாய்ச்சப் பெற்றது. ஏற்றம் இறைத்து வயல்கட்கு நீரைப் பாய்ச்சும் முறையும் அக் காலத்தில் இருந்து வந்தது. கால் வசதி இல்லாத இடங்களில் வேறு என்ன செய்யமுடியும்? வாய்க் கால்களில் அங்கங்கு மதகுகள் இருந்து கிளைக்கால்களில் நீரைவிட்டு வந்தன. சிலபெரிய கால்வாய்கள்மீது பாலங்கள் இருந்தன. அங்கு மதகுகள் இருந்தன. அவை தண்ணிரை வேண்டிய அளவு சிறிய கால்வாய்களில் விட்டு வந்தன. மதகில் இருந்த சிறப்பு வாய்கள் ‘கூற்றன் வாய்” வாய்த்தலை, தலைவாய், முகவாய் எனப் பலவாறு பெயர் பெற்றன.

ஏரி வாரியம்

இதுகாறும் கூறிவந்த ஏரி, கிணறு வாய்க்கால், மதகு இவற்றை மேற்பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களை ஏரிவாரியப் பெருமக்கள் செய்து வந்தனர். பெரிய ஏரிகளில் சீர் திருத்தம் நடைபெறும்போது, ஏரிக் கரைகளைப் பண்படுத்தத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன. இத்திருத்தங்களைச்செய்ய ஊரவையாரிடம் பணம்படைத்த பெருமக்கள் அடிக்கடி பொன் முதலியவற்றை ஒப்புவித்தல் மரபு. அவர்கள் அத்தொகையை வட்டிக்கு விட்டுப் பெருக்கி அதனை நல்வழியிற் பயன்படுத்தி வந்தனர். நீர்ப்பாசன வசதிகளை ஊராரும் ஊன்றிக் கவனித்துவந்தனர். பலர் நிலங்களைத் தானம்செய்து, அவற்றின் வருவாயைக் கொண்டு நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தமுறச் செய்து வந்தனர். ஊர் வருமானத்தில் ஒரு பகுதியும் இப் பணிகட்குப் பயன்பட்டுவந்தது. போதாத இடங்களில் அரசாங்கமும் பொருள் உதவி செய்து வந்தது. இத்தகைய வியத்தகு முறைகளால் நீர்ப்பாசனம் குறைவின்றிப் பல்லவர் காலத்தில் நடைபெற்று வந்தது.[39]

நீட்டல் அளவை

‘கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம்’ என்னும் நான்கு அளவைகள் பல்லவர் ஆட்சியில் இருந்தன. (1) கலப்பை- இரண்டு எருதுகள் பூட்டப்பெற்ற ஒரு கலப்பையைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒருவன் உழும் நிலத்தின் அளவு கலப்பை எனப்பட்டது. (2) நிவர்த்தனம் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து புறப்பட்ட இடத்தை அடைந்தவுடன் அவனால் எல்லை கோலப்பட்டநில அளவே ‘நிவர்த்தனம்’[40] எனப்பட்டது. பிற்காலத்தில் 200 சதுரமுழம்

கொண்ட நிலப்பரப்பே ‘நிவர்த்தனம்’ எனப் பெயர்பெற்றது. (3) பட்டிகா (பட்டி) என்பது ஆட்டை ஓர் இடத்தில் கட்டி அதன் கயிற்றின் உதவியால் சுற்றும் அளவையுடைய நிலப்பகுதியை ஆகும். (4) பாடகம் என்பது 240 குழிகொண்ட நிலமாகும். பிற்காலப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் ‘வேலி குழி’ என்பன அளவைகளாகக் காண்கின்றன. குழி என்பது 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை நாட்டுக்கேற்ப வழங்கப்பெற்றது. நிருபதுங்கன் காலத்தில் ஒரு குழி 81 சதுர அடி அளவை உடையதாக இருந்தது.

இந்த அளவைகளோடு (1) நாலு சாண் கோல், (2) பன்னிரு சாண் கோல், (3) பதினாறு சாண் கோல் முதலிய நீட்டல் அளவைகள் இருநதன என்பதும் கல்வெட்டுகளால் அறியத்தகும் செய்தியாகும்.[41]

முகத்தல் அளவை

நாழிகள் பல பெயர்கள் பெற்றிருந்தன; அவை, (1) கரு நாழி (2) நால்வா நாழி (3) மாநாயநாழி (4) பிழையா நாழி (5) நாராய(ன) நாழி முதலியன. உறி என்பது ஒருமுகத்தல் அளவைக்கருவியாகும். ஒரு கல்வெட்டில் ‘பிருதி(வீ) மாணிக்கஉறி’ என்னும் பெயர் காணப்படுகிறது. ‘பிருதிவீ மாணிக்கம்’ என்பது நிருபதுங்கவர்மன் மனைவி பெயராகும் இங்ஙனம் பல அளவைகள் கோப்பெருந் தேவியர் பெயர்களை கொண்டனவாக இருந்திருக்கலாம். ‘விடேல் விடுகு உழக்கு என்பது பொதுவாக மூத்திரையிடப் பட்ட பல்லவர் கால முகத்தல்கருவியாகும். அஃது எல்லாப் பல்லவ அரசர்காலத்தும் இருந்து வந்ததாகலாம் எண்ணெய், நெய் பால் முதலிய அளக்கப் பயன்பட்ட சிறிய அளவை ‘பிடி’ எனப்பட்டது. இவை அன்றி, நெல்முதலியன அளக்கச் சோடு, நாழி, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன பயன்பட்டன.[42]

நிறுத்தல் அளவை

கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் முதலியன நிறுக்கும் அளவைகள், கழஞ்சி’ என்பது பல பட்டயங்களில் காணப்படும் அரசாங்க அளவை (Standard Weight) ஆகும். கழஞ்சின் பன்னிரண்டில் ஒரு பாகம் ‘மஞ்சாடி’ ஆகும். அதனாற்றான் பட்டயங்களில், கழஞ்சிற்கு வட்டி குறிப்பிட்டபோதெல்லாம் ‘மஞ்சாடி’ அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர் காசுகள்

பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவற்றின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்து கூறலாம். அவை பிற்காலப் பல்லவருடையன என்னலாம். பெரும்பாலான காசுகள் நந்தி இலச்சினை பெற்றவை. சில, இரண்டு பாய்மரக்கப்பல் இலச்சினை கொண்டவை. முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும் பின்னது கடல் வாணிபத்தையும் குறிப்பவை; காசின் மறுபுறம் சுவஸ்திகா, வேள்விக்குரிய விளக்கு, சங்கு, சக்கரம், வில், மீன், குடை, சைத்தியம் (கோவில்), குதிரை. சிங்கம் முதலியன காசுதோறும் வேறுபட்டுள்ளன. -

(1) எல்லாக்காசுகளும் சிறந்த வேலைப்பாட்டுமுறை பெற்றவை. டாக்டர் மீனாட்சி என்னும் ஆராய்ச்சித்திறன் பெற்ற அம்மையார்,தாம் சென்னைப் பொருட்காட்சிச்சாலை களிற் சோதித்த காசுகளில் பொற்காசுகளாக இருந்த ஆறும், முதலாம் மகேந்திரன் காலத்தவையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.[43] அக்காசுகளின் மீது கதாசித்ரா என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ‘கடாக-(கடாவ)- சித்ர (காரப்புலி)’ என்பவற்றைக் குறிப்பனவாகக் கொண்டு அம்மையார், அவை ‘காடவனாகிய எத்திரகாரப்புலி (மகேந்திர வர்மன்) என்பவன் காலத்தவை’ என்று கூறுதல் பொருத்தமாகவே காணப்படுகிறது. பல்லவர் வரலாற்றில் பண்பட்ட ஆராய்ச்சி உடைய அவ்வம்மையார் கூற்றுக்கோடற்பால்தேயாம்.

(2) நந்தி முத்திரை கொண்ட சில காசுகளில் ‘ஸ்ரீபரன், ஸ்ரீநிதி’ என்பன குறிக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் இராசசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனைக் குறிப்பன என்பது மகாபலிபுரம் - தருமராசர் தேரில் உள்ள தொடர்களாலும் கயிலாசநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளாலும் நன்கறியலாம். எனவே, இக்காசுகள் அவன் காலத்தன ஆகும்.

(3) நந்தி முத்திரையுடன் மீன் பொறிக்கப்பட்டுள்ள காசுகளிலும், ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன காணப்படுகின்றன. ‘மீன்’ பாண்டியர்க்கே உரியது. இராசசிம்மன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். இவன் பெரிய புராணம் கூறும் நின்றசீர் நெடுமாறனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் பிறந்தவன். இவன் மகன் இராசசிம்மன் எனப் பெயர் பெற்றான். இதைக்கொண்டும் மீன் கொடி பல்லவர் காசுகளில் இருத்தலைக் கொண்டும், கோச்சடையன் இரணதீரன் இராசசிம்ம பல்லவனின் மகனை மணந்து, பிறந்த குழந்தைக்குப் பல்லவ இராசசிம்மன் (பாட்டன்) பெயரையே இட்டிருக்கலாம் என்று அறிஞர்[44] கருதுகின்றனர். அங்ஙனமாயின், பல்லவப் பேரரசை மருமகனான கோச்சடையன் பெருமைப்படுத்தி இருக்கலாம். அதற்கு அடையாளமாகப் பல்லவ மன்னன் பாண்டியன் இலச்சினையைத் தன்காலத்துக் காசில் பொறித்தல் முறையே. இதனை வலியுறுத்த,

இராசசிம்ம பல்லவனிடம் சீன தூதனாக வந்த ஒருவன் சீனப் பேரரசனால் கொடுக்கப்பட்ட மீன் உருவம் அமைக்கப்பட்ட பை ஒன்றுடன் வந்தான் என்னும் குறிப்பினால், இராசசிம்மன் பாண்டியரும் பாராட்டத்தக்க நிலையில் பேரரசனாக இருந்தான் என்பதைச் சீனப் பேரரசனும் மதித்துவந்தான் என்று விளக்குகின்றது என்று அறிஞர் கருதுகின்றனர்.[45]

(4) நந்தி இலச்சினைக்கு மேல் ‘மானபரா’ என்பது பொறிக்கப்பட்டுள்ள காசுகள் சிலவாகும். இக்காசுகளின் பின்புறம் சங்கு ஒன்று பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதே போலப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் ‘கதிரவன்’ என்று எலியட் கூறுவர். இஃது ‘அதிமான’ என்று தன்னைக் கூறிக்கொண்ட இராசசிம்மனது காசாகாலம் என்று டாக்டர் மீனாட்சி அம்மையார் கருதுகின்றனர். ‘சங்கு’ தெளிவாகப் பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதை நன்கு நோக்க, இக்காசுகள் வைணவப் பற்றுடைய பல்லவ அரசர் காலத்தவை எனக்கோடலே பொருத்தமாகும். (பிற்காலப் பல்லவருள்) வைணவப் பற்றுடையராக இருந்தவருள் சிறப்பாக முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் என்போரைச் சொல்லலாம். ஆதலின், சங்கு பொறிக்கப்பட்ட காசுகள் இவர்கள் காலத்துக் காசுகளாக இருக்கலாம். வழிவழியாக வரும் நந்தி இலச்சினைக்குப்பின் தாம் மேற்கொண்டசமயத்தைக் குறிக்கச்சங்கு சக்கரம் இவற்றைக் காசுகளின் பின்புறத்தில் பொறிக்க இவ்வைணவ அரசர் விழைந்திருத்தல் இயல்பே அன்றோ?

(5) நண்டு, ஆமை, கப்பல் முதலியன பொறிக்கப்பட்ட காசுகள் பல்லவரது கடல் வாணிபச் சிறப்பைக் குறிப்பன ஆகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

(6) பல்லவர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது. பொன்[46] என்பது ஒரு காசின் பெயர் பழங்காசு என்பன சிறந்த வேலைப்பாடு கொண்டவை; ‘பழங்காசினோடு உறைப்ப துளைப் பொன்’ என வருதல் காண, பிற்காலக் காசுகள் அப்பழங்காசு நிலையில் இருந்தனவா என்பது சோதிக்கப்பட்டன[47] என்பது அறியத்தகும். பழங்காசு நிலையில் இல்லாத பொற்காசுகள் வாசி இன்றி (வட்டம் இல்லாமல்) செல்லாவாயின. இவ்வரிய நுட்பமான செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியக்கிடத்தல் காண்க. அம்மட்டமான காசுகளைக் ‘கறைகொள் காசு’ என்று சம்பந்தர் கூறல் காண்க.[48] துளைப்பொன் என்பது துளையிடப்பட்டபொற்காசு, ‘விடேல் விடுகு - துளையிட்ட செம்பொன்’ என்பது துளையிடப்பட்ட விடேல் விடுகு முத்திரை பெற்ற காசாகும். கழஞ்சுக் காசு என்பது ஒரு கழஞ்சு எடையுள்ள பொற்காசு.

பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்

(1) மழை பெய்யாவிடில் பயிர் விளையாது; நாட்டில் பஞ்சம் ஏற்படுதல் இயற்கை. அத்துடன் ஓயாத பெரும் போர்களாலும் அரசியல் நிலைகுலைய-மூலபண்டாரம் வற்ற-அவ்வந்நாட்டுப் பண்டாரங்கள் வற்ற-நாட்டில் பஞ்சக் கொடுமை தலைவிரித் தாடலும் இயல்பு பல்லவப்பேரரசில் தொண்டை நாடு ஆற்றுவளம் நிரம்பப்பெற்றதன்று. மழை இன்றேல் ஏரிகளில் நீர் இராது. பல்லவர் ஆட்சிக்குட்பட்ட சோணாட்டில் ‘செவிலித்தாய்’ என்ன ஒம்பும் தீம்புனற்கன்னியாறு மழை பெய்யாவிடில் என்ன செய்யும்! ஆற்றில் மழை நீர் வரினும், நாட்டின் செல்வ நிலை இழிவுற்றிருப்பின், நிறைந்த விளைச்சலை எதிர்பார்த்தல் இயலாது. அரசியல் மூலபண்டாரம், நாட்டுப் பண்டாரம், ஊர்ப்பண்டாரம் என்பவை போரால் வற்றி வயல்களில் நீர்மட்டும் குறைவற இருந்தும் பயன் என்ன? பணமும் இன்றி மழையும் இல்லையேல் நாடு சொல்லொணா வறுமைப் பிணியுள் ஆழ்ந்து விடும். இத்தகைய துன்ப நிலையே அப்பர், சம்பந்தர்காலத்தியமுதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி இறுதியில் அல்லது பரமேசுவரவர்மன் ஆட்சி இறுதியிலும் - பிற்பட்டபல்லவர் காலங்களிலும் அடிக்கடி உண்டானது. சைவசமய குரவர் திருவிழிமிழலையில் இருந்தபொழுது கொடிய வறுமை நோய் நாடெங்கும் பரவியது. அடியார்கள் உணவின்றித் துன்புற்றனர். அப்பொழுது சமய குரவர் திருவீழிமலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்று பெரிய புராணம் கூறும். இக்கூற்றால் நாம் உணரத்தக்க வரலாற்றுச் செய்திகள் இரண்டு. அவை: (1) அவர்கள் காலத்தில் பல்லவ நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது; (2) கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியது[49] என்பன. இப்பொழுது நடைபெற்ற உலகப் பெரும் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின் மூலபண்டாரம் எந்த அளவுவற்றிவிட்டது என்பதை நாம் நன்கு உணர்கின்றோம் அல்லவா? இந்த உணர்ச்சியுடன் அக்கால நிலையை நோக்கின், உண்மை புலனாகும்.

(2) நரசிம்மவர்மன் காலத்துப் பஞ்சம் கல்வெட்டுச் சான்றுகள் பெற்றிலது. முதலாம் பரமேசுவர வர்மனுக்கும் சாளுக்கிய விக்கிரமாதித்தற்கும் (கி.பி. 665-680) நடந்த கொடிய போர் முன்பே விளக்கப்பட்டதன்றோ? அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர். இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன்? நாடு வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும்? இதுகாறும் கூறப்பட்ட பெரும் போர்களின் விளைவாலும், இராசசிம்மன் காலத்தில் கொடிய வறுமை உண்டானது. இதனை அவன் காலத்து அவைப்புலவரான தண்டி என்பார் பின்வருமாறு கூறியுள்ளார் அது, “சோழ பாண்டிய நாடுகள் பகைவன் கொடுமையால் வெந்துயர் உற்றன; மங்கையர் சீரழிக்கப் பட்டனர்; வேள்விகள் குன்றின, களஞ்சியங்கள் காலியாயின. மதிப்புக் கெட்டது. தோட்டங்களும் மரங்களும் அழிக்கப்பட்டன; பலர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்; வேள்விச் சாலைகள் அழிக்கப்பட்டன... செல்வர் கொல்லப்பட்டன. சாலைகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் தண்டியின் உற்றார் உறவினர் மாண்டொழிந்தனர்; தண்டி உணவின்றி நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்; பல்லவப் பேரரசு தத்தளித்தது: காஞ்சிநகரம் கை விடப்பட்டது; அவைப் புலவரும் கற்றாரும் நாடு முழுவதும் அலைந்து திரிந்தனர்,” என்பது.[50]

(3) மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) தெள்ளாற்றில் தன் பகைவரான தமிழ் வேந்தரை முறியடித்தான். அக்காலத்தில் சோழர் சேனைத்தலைவராக இருந்தவர். கோட்புலி நாயனார்[51] ஆவர். பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் இருந்த மனக் கசப்பையும், போரில் கோட்புலியார் காட்டிய வீரத்தையும் சுந்தரர் தம் பதிகங்களில் பாடியுள்ளார்.[52] இக் கோட்புலி நாயனார் போருக்குச் சென்ற பிறகு நாட்டில் பெரும் பஞ்சம் உண்டானது. அவர் சிவனடியார்க்கு என்று வைத்திருந்த நெல்லை அவர் உறவினர் உண்டுவிட்டனர்.[53] இக்குறிப்பினால், சுந்தரர்-மூன்றாம் நந்திவர்மன் கோட் புலியார் காலத்தில் (கி.பி. 825-850) தென்னாட்டில் பஞ்சம் உண்டானது என்பதை அறியலாம். இங்ஙனம் பல்லவர் ஆட்சியில் பல காலங்களில் பஞ்சம் உண்டாயின என்பது தேற்றம்.

பஞ்சம் ஒழிப்பு வேலை

பெரும் போர்களில் ஈடுபட்டிருந்த பேரறிவும் பெரும் பக்தியும் கொண்ட பல்லவப் பேரரசர் சிற்றுர்களில் முன்னெச்சரிக்கையாக, அல்லது போர் நடந்தபிறகு (இயன்ற வரை குடிகட்குத் துன்பம் உண்டாகாமற் காக்கப்) பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தி இருந்தனர் என்பது ஊகித்து உணர்தற்பாலது. ஒவ்வொரு சிற்றுரிலும் அறுவடையானவுடன் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதனைச் சேர்த்தல், மேற்பார்வை இடல். காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்து உதவல் முதலிய

வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே ‘பஞ்சவார வாரியம்’ எனப்பட்டது. குடிகள் கொடுத்த நெல் ‘பஞ்ச வாரம்’ (வாரம்-பங்கு) எனப்பெயர் பெற்றது. இது பற்றிய செய்தி மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், “திருக்காட்டுப் பள்ளிப் பஞ்சவாரம் ஆயிரக்காடி நெல்,” என்னும் தொடரில் காணப்படுகிறது.[54]

அறப்பணிகள்

ஒருவரை அவரது செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலிற் பொன் கொடுத்து விளக்கு வைத்தலோ வேறொன்று நடைபெறச் செய்தலோ அக்காலப் பழக்கங்கள் பலவற்றுள் ஒன்றாகும். மாடு பிடிப்போரில் மாண்டவீரர் இருவர் நினைவுக்காகப் பல்லவர் சிற்றரசன் ஒருவன், குறிப்பிட்ட மதிப்புள்ள பொன்னைக் கோவிலுக்குத் தானம் செய்து, அவர் நினைவுக்கறிகுறியாக விளக்கிடச் செய்தான்.[55]

நிருபதுங்கன் ஆட்சிக்காலத்தில் இத்தகைய செயல்கள் சில நடைபெற்றன. அவற்றுள் ஒன்று திருத்தவத் துறைச் சிவன்கோவில் கல்வெட்டுக் குறிக்கும் செய்தியாகும். பூதிகந்தனிடம் பொன்னைப்பெற்ற இடையாறு நாட்டு அவையார், அப்பொன்னுக்கு வட்டியாக ஆண்டு தோறும் நெல் அளந்து கொடுத்துச் சித்திரை விசுத்திருவிழாவை நடத்த உடன்பட்டனர். அப்பொன் பூதி கந்தனின் தாயார் செய்த செயல் ஒன்றைப் பாராட்டிக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதாகும்.[56]

‘பிள்ளைப்பாக்கக் கிழார்’ என்பவன் செய்த நற்செயல் ஒன்றின் நினைவிற்காக, அவன் தம்பியான அய்யாக்குட்டி யார் என்பவன் பிள்ளைப்பாக்கத்தில் இருந்த தனது நிலத்தில் ஒரு பகுதியை அவ்வூர்ச் சிவன் கோவிலுக்கு எழுதி வைத்தான்.[57]

இம்மூன்று சான்றுகளாலும், பல்லவர் காலத்தில் தனிப்பட்டவர் நினைவிற்காகவும் அவர் தம் மதிப்பிடத்தக்க செயலுக்காகவும் குறிப்பிட்ட தொகையை அல்லது நிலத்தைக் கோவிலுக் களித்து அறப்பணி செய்தல் மரபு என்பது நன்கு புலனாகிறது.

உருவச் சிலைகள்

பல்லவர் காலத்தில் உருவச் சிலைகள் செய்யப்பட்டன என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இல்லை எனினும், ஆதிவராகர் கோவிலில் உள்ள சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் உருவச் சிலைகளையும், தந்திவர்மன் ஆட்சிமுதல் தோன்றிய வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட உருவச் சிலைகளையும் நோக்க, இவ்வேலை பல்லவர் காலத்திற் சிறப்புற்றதென்பதை நன்கு உணரலாம்.

வீரக் கற்கள்

பல்லவர் காலத்து வீரக்கற்கள் மீது தொல்காப்பியர் காலத்துப் பழக்கம் போலவே “பெயரும் பீடும் எழுதி” உருவமும் பொறித்தல் மரபு. ஆனால் இக்கற்கள் அனைத்தும் தந்திவர்மன் கால முதலே புறப்பட்டவை. என்னை? அவன் காலத்திற்றான் பல்லவப்பெருநாடு சீர்குலையத்தொடங்கியது. பல பக்கங்களிலும் எல்லையிற் சுருங்கத் தொடங்கி யது ஆதலால் என்க. யாண்டும் போர்களும் சிறு கலகங்களும் நடந்தன. இக்கற்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கற்பட்டுக் கோட்டங்களிற்றாம் கிடைக்கின்றன.

திருத்தவத்துறை (லால்குடி)யை அடுத்த சென்னி வாய்க்கால் என்ற இடத்திற்கு அருகில் வீரக் கல் ஒன்று உண்டு. அதில் ஒரு மறையவன் உருவம் அம்பைக் கழுத்திற் செருகுதல் போலப் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், “பாண அரசன் படையெடுப்பால் மடம் ஒன்று அழிந்தது. அதனைக் காக்க முயன்ற இம் மறையவனான சத்தி முற்ற தேவர் இறந்தான்,” என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூன்றாம் நந்திவர்மன் காலத்தது.[58]

கம்பவர்மன் ஆட்சி ஆண்டில் இரண்டு இடங்களில் வீரக்கற்கள் நடப்பெற்றன. ஒன்று ஒலக்கூரில் நடப்பெற்றது. ஒலக்கூரைப் பகைவர் தாக்கியபோது எதிர்த்து நின்ற வீரருள் மாந்திரிகள் ஒருவன். அவன் அப்பொழுது நடைபெற்ற போரில் இறந்தான் என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஒலக்கூரைக் கம்பவர்மனே கைப்பற்ற எதிர்த்தான் போலும்![59]

கம்பவர்மனைத் தாக்க வந்த பிருதிவி கங்கராயருடன் உண்டான பூசலில் ‘வாணராயர்’ என்னும் தலைவன் ஒருவன் மாண்டான். அவனுக்கு வட ஆர்க்காடு கோட்டத்து மேல் பட்டியில் வீரக்கல் நடப்பெற்றதென்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[60]

சில சமயங்களில் வீரக்கல் நடாமல் இறந்தவர் நினைவுக்கு அறிகுறியாகக் கோவில்களில் விளக்கேற்றல் முதலிய பணிகட்காகப் பொருள் அளித்தலும் வழக்கமாக இருந்தது. மாடுபிடிச்சண்டையில் ‘விடை போற்பட்ட’[61] இருவர் நினைவாகப் பாண அரசன் ஒருவன் பிடாரி கோவிலுக்குப் பணம் அளித்தான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[62] இது தந்திவர்மன் காலத்துச் செய்தியாகும்.

நிருபதுங்கன் காலத்து வீரக்கற்கள் இரண்டு ஆம்பூரில் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் மேலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இறந்த வீரன் தன் இடக்கையில் வில்லும் வலக்கையில் வாளும் ஏந்தியுள்ளன். அவன் அம்புகள் தைத்த நிலையில் காண்கின்றான். அவன் தலை இரண்டு கவரிகட்கிடையே காண்கின்றது. இதன் குறிப்பு, அவன் வீரசுவர்க்கம் அடைந்தான் என்பதாகும். அவனுக்குப் பின்புறம் ஒரு கூடையில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு வீரற்கு எதிரில் விளக்கும் பின்புறம் பானை ஒன்றும் விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இறந்தார்க்கு வைக்கும் வழிபாட்டுப்பொருள்கள் ஆகும். வீரர் இருவரும்அ அகளங்ககாடவராயன் பிள்ளையும் தமையன் மகனும் ஆவர்.[63]

நித்தார் நினைவுக் குறிகள்

நீத்தார்க்குக் கோவில் கட்டல் நாட்பட்ட வழக்கம் என்பதை விரக்கல் கொண்டும் கண்ணகி கோவில் கொண்டும் நன்கறியலாம். இங்ஙனம் கோவில் கட்டும் பழக்கம் பல்லவர் காலத்தும் இருந்தது. செங்கற்பட்டுக் கோட்டம் பொன்னேரிக் கூற்றத்தைச் சேர்ந்த சத்தியவேடு என்னும் சிற்றுளில் உள்ள ‘மதங்கப்பள்ளி’ இங்ஙனம் அமைந்ததே ஆகும். அஃது இன்று சிவன் கோவிலாக இருந்து வருகிறது. மதங்கன் பெரிய சிவனடியராக இருந்து இறந்தவர் போலும்.[64]

கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும்; தம் அப்பனாரைப் பள்ளிப் படுத்த இடத்து ஈசராலயமும் அதீ தகரமும் (சமாதியும்?) எடுப்பித்துக் கண்டு செய்வித்தான் என்பது கல்வெட்டு.[65]

* * *

↑ Chingleput, Manual p.438.

↑ S.I.I Vol.IV Vaikuntaperumal Koil Inscription.

↑ இவன் பெரியபுராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்று ஆராய்ச்சியர் கருதுகின்றனர். Vide Mysore Archaeological Annual Report 1925, pp-9.11

↑ S.I.I. Kailasanathar Temple Ins.

↑ Walater Elliet’s “Coins of South India’ Nos. 31 to 38; 65, 57.

↑ Dr. C.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.42, 43, 44.

↑ அப்பர் தேவாரம், ஐந்தாந்திருமுறை ()

↑ S.I.I Vol. II p.357

↑ S.I.I. Vol, IV, No.135.

↑ Ep.Indica Vol.II, p.5.

↑ Dr.C.Minakshi’s “Administration & Social Life under the Pallavas, p.52.

↑ S.I.I.Vol.II. Page 361.

↑ C.K.Subramania Mudaliar’s “Sekkilar’ pp.68-72 (Madras University Lectures, 1930)

↑ Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ pp. 53-55.

↑ இறையனார் அகப்பொருளுக்கு ‘இன்ன உரைதான் சரி’ என்பதை உணர்த்தக் ‘காரணிகள்’ ஒருவன் வேண்டும் என்று இறைவனிடம் குறை இரந்த செய்தி களவியல் உரையிற் காண்க. எனவே ‘காரணிகள்’ பட்டயம் தீட்டுவதிலும், படிப்பதிலும் தேர்ந்தவன் என்பது தேற்றமாதல் காண்க.

↑ EP, Indica, Vol. XVIII, P.13,

↑ Ibid p.152. 370.

↑ Dr.C.Minakshi’s Administration and Social Life under the Pallavas” pp.68-69

↑ சம்பந்தர் தேவாரம் பக்.14-15. (கழகப் பதிப்புப்)

↑ S.I.I. Vol. II part, pp. 109, 110.

↑ R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.154-156

↑ இந்த அமிர்த கணத்தா