பஞ்ச தந்திரக் கதைகள்
பாவலர் நாரா. நாச்சியப்பன்


பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை


                    கௌதம சன்னா

பண்டிதரின் கொடை விகிதாச்சார உரிமையென்னும்

சமூகநீதிக் கொள்கை

கௌதம சன்னா

சங்கம்

வெளியீடு

நூல் : பண்டிதரின் கொடை :

விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை

ஆசிரியர் : கௌதம சன்னா முதற்பதிப்பு : சூலை 2007

வெளியீடு : சங்கம் வெளியீடு

7a, மூன்றாவது தளம் சுங்குராமன் தெரு, சென்னை - 10 நிவேதிதா டிஜிடல் ஸ்டுடியோ ராமு காம்ப்ளக்ஸ் மார்கெட் சாலை, ஆரணி, வடஆற்காடு மாவட்டம்

அட்டை : யாக்கன் அச்சிட்டோர் : முல்லை அச்சகம், சென்னை -2 விலை : ரூ.25/-

விகிதாச்சார உரிமையெனும் சமூகநீதிக்

கொள்கையை முன்வைத்து அதைத்

துல்லியப்படுத்திய காலம்வரை

அயோத்திதாசப் பண்டிதரோடு

சமூகப் பணியாற்றிய

அனைத்து தோழர்களுக்கு . . .

நன்றி

[இலச்சினை]

அகில இந்திய பொதுக்காப்பீட்டுக் கழக

எஸ்.சி.& எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கம்,

ஓரியண்டல் இன்சூரன்ஸ்,

4, எஸ்பிளனேட், சென்னை 108

த.ராமலிங்கம் ⁠ ரெ.சாந்தக்குமார் ⁠ வை. பாஸ்கரன்

செயல் தலைவர் ⁠ அமைப்புச் செயலர் ⁠ மண்டலச் செயலர்

⁠ முன்னீடு

1. சாதி இந்துவின் நன்றி!

2. இடஒதுக்கீட்டின் தொடக்கம்

3. தொடங்கியகதிப்போக்கில்…

4. முன் முயற்சிகளும் முதற்கட்ட முன்வைப்புகளும்

5. இந்து முஸ்லீம் ஒற்றுமை எனும்…

6. இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக்கொள்கை முகிழ்ந்தது

7. இடைவெளி

8. அனைத்து சமூக நீதியின் முகங்கள்

9. மீளும் மணிமுடி

 

முன்னீடு

இந்திய துணைகண்ட வரலாற்றில் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைச் சம்பவங்கள் ஒரு சிறு நூலாய் உங்கள் கைகளில் இப்போது வரலாற்று நேர்மையுள்ளவர்ளுக்கு நானமும் ஆச்சர்யமும், மோசடி பேர்வழிகளுக்கு கோபமும் வெறுப்பும் கிளப்பக் கூடிய அந்த கடந்தகால பக்கங்கள் நிகழ்கால கவனத்தை கோரி நிற்கின்றன. பண்டிதர் - தமிழனின் முகமாக, அடையாளமாக மட்டுமின்றி துணை கண்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் முன்னோடியாக செயல்பட்டவரை, வாழ்ந்தவரை ஏதோ அகழ்வாராய்ச்சி செய்து மீட்டுருவாக்கம் செய்யும் அவலநிலையை இந்த சமூகம் வரித்துக் கொண்டதென்றால் இந்த சாதி இந்து சமூகத்தின் யோக்கியதையை மெச்சுவதற்கு என்ன இருக்கிறது.

இந்த சாதி இந்து சமூகம் முற்போக்காய் இருந்தாலும், சனாதனமாய் இருந்தாலும் தலித் மக்கள் வரலாற்று விசயத்தில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்திய துணைகண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும் இடஒதுக்கீடு கொள்கை என்றும் சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படை யையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில் அதை கொடை என சொல்லாமல் எப்படி சொல்வது.

ஆனால் அப்படி ஒரு வரலாற்றுக் கட்டமே நடக்கவில்லை என்பதுபோல இந்திய இடஒதுக்கீடு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக பண்டிதரின் கொடை இருக்கும்.

1890க்கும் - 1914க்கு இடைபட்ட காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களுடேயும், பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தங்களின் பின்னணியோடும், எல்லாவற்றிற்கும் அன்றைய சாதி இந்து சமூகம் கொடுத்த கடும் சமூக, சாதிய, அரசியல் நெருக்கடிகளின் தாக்கத்தாலும், சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினாலும் பண்டிதரின் சமூகநீதி அடிப்படைகள் உருவாயின. பண்டிதரின் சமூகநீதி தலித்துக்கோ அல்லது தலித்தல்லாதாருக்குமான சமூக நீதியல்ல. அது சகல இன மக்களுக்குமான சமூக நீதி. அதனால்தான் அவர் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கிறார்.

அதனால், பண்டிதரின் சிந்தகைள் அவருக்கு தானே உதித்த சுய சிந்தனைகள் என்று சொல்லவில்லை. தனியறையில் அடைபட்டு வாழ்பவனுக்கு நான்கு சுவர்களைப் பற்றின சுயசிந்தனை மட்டும் தான் இருக்கும். அவனது சுயசிந்தனை உலகு தழுவியதாக என்றைக்கும் இருக்காது என்பது போலவே, மக்களிடம் பணிபுரிபவனின் உலகு தழுவியதாக மக்கள் பிரச்சினைகளால் தாக்கம் பெற்று உருவான சுயசிந்தனைகளாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் சுயம்புகளாக முன்னிறுத்திக் கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் சாதி ஆனந்தம்

பிரெஞ்சு தத்துவஞானி டேன்

'நாகரீகத்தின் பரிணாமத்தில் ஒரு புதிய அடிவைப்பு ஒரு புதிய கலைவடிவத்தை தோற்றுவிக்கும்போது சமுதாய சிந்தனையை அரைகுறையாக வெளியிடுகின்ற பலப்பல ஆற்றல்கள் அதைமுழுமையாக வெளியிடுகின்ற ஓரிரு மகா மேதைகளைச் சூழ்ந்து தோன்றுகின்றன.'

என்று சரியாகவே சொன்னார். இப்படி உருவானவர் தான் பண்டிதரும் அவரது இடஒதுக்கீடு கொள்கைகளும் அதற்காக இந்த சாதி இந்து சமூகத்திற்கு நன்றி சொல்ல முடியாது. ஏனெனில் அது இன்னும் நாகரீக சமுதாயத்திற்குள் நுழையவில்லை, அப்படி நாகரிக சமூகத்திற்கு நூல் தலைகாட்ட வேண்டுமானால் அவர்களது விடுதலைக்கு தலித் முன்னோடிகள் உழைத்திருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்ளவேண்டும் அந்த பணிக்கு இந்நூல் பயன்படுமென நம்புகிறேன்

அதின்றி. இந்நூலை மறுக்க எத்தனிப்பவர்களுக்கு டேன் அவர்களின் வாசகங்களையும், இந்நூலின் ஆதாரங்களையும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

இனி இந்நூல் எழுத காரணமானவர்களுக்கு நன்றி சொல்ல விழைகிறேன் முதலில் இந்த சமூக சூழல் இடஒதுக்கீடு குறித்து அண்மைகாலமாக பரப்பப்பட்டு வரும் மோசடியான சாதி இந்து பிரச்சாரங்கள், பொய்கள், இந்த நெருக்கடிகள்தான் முதற்காரணம். எனவே இதை குறித்து உழைப்பவர் ஆயுதம் மாத இதழில் பண்டிதர் பற்றின சிறப்பிதழுக்கு அதன் ஆசிரியர் தா.ம. பிரகாஷ் கட்டுரை கேட்டபோது பிரப்வரி 2007ல் கட்டுரை எழுதி அனுப்பினேன். அது மே மாதம் வெளியானது கட்டுரையை படித்த பல நண்பர்கள் அதை ஒரு சிறு நூலாக வெளியிடும் ஆர்வத்தை வெளியிட்டார்கள் அதனால் அச்சிறு கட்டுரையை விரிவாக்கி இப்போது நூலாக உங்கள் கையில் எனவே சூழலுக்கும், பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகள், மேலும் சாக்ய ஜெ. மோகன். பாரிச்செழியன், நூலை வெளியிட முயற்சி எடுத்துக்கொண்ட கண்ணியப்பன சிவப்பிரகாசம், இராஜாங்கம் பிரவீன், ராஜவேல், மெய்ப்பு திருத்துவதில் உதவி புரிந்த சந்திரசேகர் ஆகியோருக்கும் நூலையும் அட்டையையும் வடிவமைத்த ஒவியர் யாக்கன். ஒளியச் செய்து அச்சிட்ட முல்லை அச்சகத்தாருக்கும் இந்நூலை வெளியிட்ட சங்கம் - அதன் பதிப்பக பொறுப்பாளர் புருஷோத்தமன் நண்பர்கள் குடியரசு, அமைதியரசு ஆகியோருக்கும், நூலை வெளியிட முழு உதவியையும் செய்த அகில இந்திய காப்பீட்டுக் கழக எஸ்/எடி ஊழியர் சங்கத்திற்கும், எனக்கு எழுதும் சூழலை உருவாக்கித் தரும் என் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல.

17.06.2007

கௌதம சன்னா

பெருந்தலைவர்

g_sannahsiyahoo.com

எம்.சி. ராஜா பிறந்தநாள்

1

சாதி இந்துவின் நன்றி !

தத்துவஞானிகள் அரசர்களாகும் வரையிலும் அல்லது இவ்வுலக அரசர்களும் அரசிளங்குமரர்களும் தத்துவ ஞானத்தின் சக்தியையும் மனப்பான்மையையும் கொள்ளும் வரையிலும். அரசியல் மேதைமையும் ஞானமும் ஒருவரில் சேர்ந்து காணப்படும் வரையிலும், பொதுமக்கள் இரண்டில் ஒன்றை மட்டும் தொடர்ந்து கொண்டு, மற்றதை விட்டு விட்டு இருக்கும்போது. ஒதுங்கி இருக்கக் கட்டாயப்படுத்தும் வரையிலும் நகரங்கள் அவற்றின் கேடுகளிலிருந்து ஒய்வு பெறாது. இல்லை. மனித இனமே ஒய்வு பெறாது என நம்புகிறேன் பிறகே இந்த நமது நாடு உயிர்பெறக் கூடும் வெளிச்சத்தைக் காணக்கூடும்.

இந்த கருத்தை சாக்ரடீஸ் கூறியவுடன் அவருடன் விவாதம் புரியும் கிளாக்கன் பதட்டமடைந்து...

'என்ன கூறிவிட்டாய் சாக்ரடீஸ், கண்ணியமானவர்கள் கூட தங்கள் உடைகளை கழற்றிவிட்டு இதற்காக உன்னைத் தாக்க முழு பலத்தோடு வருவார்கள்...'

என்று பதில் சொல்கிறான். பிளேட்டோவின் குடியரசு நூலில் காணப்படும் இந்த விவாதம் இன்று வரையிலும் செயல்படுத்த சாத்தியமற்றதாகவே கருதப்பட்டு வந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

எனினும் பிளேட்டோவின் யோசனை நடைமுறை படுத்தப்படாமலில்லை, பல்வேறு காலகட்டங்களில் அவரின் தீர்க்க தரிசனம் நிறைவேறியுள்ளது. லெனின், மாவோ இதற்கு தகுந்த உதாரணங்கள். நம் நாட்டில் அரசியல் மேதமையும், ஞானமும் வாய்ந்தவர்களில் அம்பேத்கர் முதன்மையானவர். இவரும் அரசு பரிபாலனத்தில் பங்கேற்று நாட்டை வழி நடத்தியுள்ளார். ஆனால் பிளேட்டோ சொன்னதைப் போல ஒரு அரசனாகும் வாய்ப்பில்லாதவராகவே போய்விட்டார் என்றால் யார் குற்றம்? ஒருவேளை வெறும் தத்துவ ஞானியாகவே தன்னை அவர் வெளிப்படுத்தியிருந்தால் பிளேட்டோவின் கனவை நிறைவேற்றியிருக் கலாம். யாரும் அவரை முழு பலத்தோடு எதிர்க்க வந்திருக்க மாட்டார் கள். ஆனால் தீண்டத்தகாதவனாக பிறந்து பிளேட்டோ வரையறுத்த தகுதியோடு இருந்ததால் கிளாக்கனின் கருத்துபடியே எல்லாம் நடந்து விட்டது. சாதி இந்துக்கள் அவரை தத்துவ ஞானியாக அரசியல் மேதையாகப் பார்க்காமல் தீண்டத்தகாதவராகவேப் பார்த்தார்கள்.

⁠இதைப் போன்ற பின்னணியில்தான் பண்டிதரைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. தத்துவ ஞானியாகவும், அரசியல் மேதையாகவும் வாழ்ந்த அயோத்திதாச பண்டிதர் சமூக - அரசியல் களத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். அதனால் இந்த சமூகம் அவருக்கு ஒரு அரசனுக்குரிய இருக்கையைத் தர வேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் நன்றியுடனாவது நடந்து கொண்டிருந்திருக்கலாம். இந்த நன்றிகெட்ட சாதி இந்து சமூகம் செய்தது என்ன என்பது இப்போதும் வெட்ட வெளிச்சமானதுதான்.

⁠இருந்தபோதிலும் பல்வேறு வகையில் புதைக்கப்பட்ட பண்டி தரின் கொடைகளைப் புறந்தள்ளாமல் அதை பயன்படுத்திக் கொண்டு வரும் சூட்சுமம் மட்டும் இன்றும் நின்றபாடில்லை. ஆனால் ஒரு மூர்க்கத் தனத்தோடும், கள்ள மெளனத்தோடும் அவரை எதிர்த்தே வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன்?

2

இடஒதுக்கீட்டின்

தொடக்கம்

எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் விகிதாச்சார அரசியல் இருந்து வருகிறது. நம் காலத்தில் சமூக நீதி என்று பேசப்படுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்லது இடஒதுக்கீடு எனும் அரசியலின் வேறு சொற்களாகவும், தோற்ற மயக்கமாகவும் இருக்கிறது. அதனால் அதன் தோற்றுவாயையும், அடிப்படையையும் அறிந்து கொள்வதில் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இந்த சிக்கலை உருவாக்கியவர்கள் எப்படி பார்த்தாலும் தலித்துகள் அல்ல. காரணம் அந்த சிக்கலான இடத்தில்கூட அவர்கள் மறைக்கப்பட்டும். மறுக்கப்பட்டும் வந்துள்ளனர் என்பதால் நிலைமையை வேறுவிதமாக அணுக வேண்டியுள்ளது. அதாவது இடஒதுக்கீடு அல்லது விகிதாச்சாரம் எனும் சமூக நீதி கொள்கையின் தோற்றத்திற்கு மூல கர்த்தா யார்?

இது ஒரு சிக்கலான கேள்வி? விடை அளிப்பதற்கு காலச் செலவு பிடிக்கும் கேள்வியும் கூட.

விகிதாச்சார, ஒதுக்கீட்டு அரசியல் என்பது உடைமை சமூகம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற ஒன்று. இதற்கான ஆதாரங்களை பண்டைய இலக்கியங்களில் ஏராளமாகப் பார்க்க முடியும், சொல்லப் போனால் பண்டைய சமூக வரலாற்றை தெரிந்து கொள்பவர் யாரும் இதிலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். இந்தோ - ஆர்ய இலக்கியங்களில் ரிக் வேதம் தொடங்கி கெளடில்யம் மனுஸ் மிருதி என வளர்ந்து. கோயில்களில் காணப்படும் தற்கால கல்வெட்டுகள்வரை சான்றுகளைக் காணமுடியும் அதேவேளை, இன்றைக்கு நாம் காணும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவைகளில் காண முடியாது ஏனெனில், அதில் பார்ப்பனருக்கு முதலிடமும், தொடர்ந்து பிற சாதிகளுக்கான ஒதுக்கீடுகளும் இருக்கும். கூடுதலாக, பார்ப்பனர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் ஏராளமாக காணமுடியும் எல்லோரும் உணர்ந்த இந்த சலுகையை திரும்பவும் விளக்குவது என்பது சலிப்பூட்டக்கூடிய அளவிற்கு அது நிந்தனைக்குள்ளாகியிருக்கிறது. எனினும் அந்த வகையான இடஒதுக்கீடு தொடரத்தான் செய்தது.

⁠இந்த ஜம்புதீவக் கண்டத்தில் சின்னஞ்சிறு குறுநில அரசு தொடங்கி, பேரரசுகளாய் விளங்கிய அரசுகள் வரையில் இதில் விதிவிலக் கில்லை, வாளைக்கொண்டு கொடிநாட்டிய மொகலாயர், சுல்தான்கள் முதல் நவீன கருத்துகளோடும், நவீன கருவிகளோடும் வந்த ஐரோப்பியர் ஆட்சிவரை தொடரத்தான் செய்தது.

⁠ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கம் இக்கொள்கையில் முதலில் கலப்புகளை துழைத்தது. தம் படைப் பிரிவில் பறையர் ரெஜிமெண்ட் (விக்டோரியா ரெஜிமென்ட்) மகர் ரெஜிமென்ட், கூர்க்கா ரெஜிமென்ட். என பல ராணுவப் பிரிவுகளை அது வைத்திருந்தது இந்த பிரிவுகள் அப் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப் பட்டதல்ல, மாறாக அவர்களது வீரத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தொடங்கப்பட்டவை. இந்த பிரிவுகளும் 1857 சாதி இந்து ராணுவ வீரர்களின் கலகத்திற்கு பிறகு கலைக்கப்பட்டது. ரெஜிமெண்ட் ராணுவ வீரர்களுடன் கலந்துறவாட சாதி இந்து ராணுவ வீரர்கள் மறுத்ததால் தொடங்கிய கலகம் 1858ல் தீண்டத்தகாதவர்களை ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை எனும் விக்டோரியா பேராணையோடு முடிவுக்கு வந்தது. இந்த பின்னடைவை டாக்டர். அம்பேத்கர் மற்றும் பண்டிதர் அவர்களைத் தவிர வேறு யாரும் வெளிப்படுத்தாதது ஒன்றும் யதேச்சையானதல்ல. எனினும் இழப்பு தொடரத்தான் செய்தது. தீண்டத்தகாதவரை ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தவர்களில் அம்பேத்கரின் தந்தையும் ஒருவர் என பின்னாளில் அவர் நினைவுகூர்ந்தது இதனது தாக்கத்தை உணர்த்துகிறது. தமிழகத்தின் இந்த கோரிக்கையை முன் வைத்தவர் பண்டிதர்

⁠அந்த புறக்கணிப்பை குறித்து மிகுந்த ஆதங்கத்தை பண்டிதர் வெளிப்படுத்தி. அந்த படைப்பிரிவுகளின் முக்கியத்துவத்தையும் எழுதினார்.

⁠⁠செகன்றாபாத்திலிருந்து ஓர் ஜெனரல் சாதிபேதமற்ற திராவிடர்களில் தக்க சுகதேகிகளாயிருப்பவர்களை பொறுக்கி எடுத்து ஆர்டில்லேரி உண்டு செய்யும்படி செய்தார், அவ்வகை ஆரம்பித்தவர் குதிரைகளையேறி சவாரி செய்யும் விஷயத்திலும பீரங்கிகளைத் திருப்பி மாற்றுவதற்கும், நிறுத்துவதற்கும், மருந்துகளை கெட்டித்து சுடுவதற்கும் உள்ள வல்லபத்தையும், தைரியத்தையும், யுக்தியையும், இராஜ விசுவாசத்தையும் ஆராய்ச்சி செய்தே ஆரம்பித்தார். ⁠⁠வங்காளத்தில் இராணுவ கலகம் நடந்த காலத்தில் ஒவ்வோர் துறை மக்களுக்கும் அரண்மனை உத்யோகஸ்தர்களாய் சென்ற வர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களே.

⁠⁠அம் மியுட்டினியிலிருந்த துறை மக்கள் யாவருக்கும் இது தெரிந்த விஷயமாதலின் இராஜ விசுவாசமும், நன்றியும் உள்ளவர் களென்றறிந்த அந்த ஜெனரல் இவர்களையே ஒன்று கூட்டி இராயல் ஆர்ஸ் ஆர்டில்லேரி (Royal HorseArtillery- ராயல் குதிரை பீரங்கிப் படை ) சேர்க்கும்படி ஆரம்பித்தார்.

⁠⁠அக்காலத்திலிருந்து படைத் தலைவராகும் லார்ட் ராபர்ட் துறையவர்களாலோ மற்றவர்களாலோ அப்பட்டாளம் சேர்க்கப் படாமல் தவிர்க்கப்பட்டது." (1:161-2)

⁠எனவே மீண்டும் அந்த படை உருவாக்க வேண்டும், இராணுவ வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று 1909 ஜூலை 21ம் நாள் தமிழனில் வேண்டுகோள் விடுத்தார்.

⁠எனினும், பின்வந்த காலங்களில் பிரிட்டிஷ் அரசானது அரசு நடத்த தேவைப்பட்ட அளவிலான சமூக மாற்றத்திற்காக சீர்திருத்தங் களை தொடங்கி இருந்தது கல்வி சமூகம், பராமரிப்பு நிர்வாகத் துறைகள் ஆகியவற்றில் சிறிய மாற்றங்களை அனுமதித்தது. அது அனுமதித்ததற் கான வரலாற்றுப் பின்னணியை ஆய்வது இங்கு முக்கியமல்ல, அது அனு மதித்த மாற்றங்கள் மட்டுமே இங்கு கணக்கிலெடுக்கப்படுகிறது.

⁠பிறகு 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் முறையை வெள்ளை அரசு அறிமுகப்படுத்தி, அதில் இந்தியர்களை குறிப்பிட்ட சதவிகிதம்வரை அனுமதித்ததின் மூலம் முதன் முறையாக இந்தியர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று வியாபாரத்தையும், செல்வத்தையும் காத்துக் கொள்ளவும், அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் 1884ல் சென்னை மகாசபை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பார்ப்பனர்கள், வியாபாரிகள், முதலாளிகள். பண்ணையார்கள் உள்ளிட்ட மேல்தட்டு வர்க்கத்தினரே இடம் பெற்றிருந்தார்கள். இச்சங்கத்தின் நோக்கமும் அவர்களது நலனை காத்துக் கொள்வதுதான், இந்த சங்கம்தான் பின்பு காங்கிரஸ் என்ற அகில இந்திய அளவிலான பேரமைப்பைத் தொடங் கியது. இந்த அமைப்பிலிருந்தவர்களே காங்கிரஸின் முதன்மைத் தலைவர்களாய் இருந்தார்கள். 1885ல் தொடங்கப்பட்ட காங்கிரஸின் ⁠முதல் கோரிக்கையே - விக்டோரியா பேரரசை போற்றிப் புகழ்ந்து அது நிலை பெற வேண்டும் என பிராத்தித்தது. இப்படி அவர்கள் பிராத்திக்கு மளவிற்கு சென்றதற்கு சுதேசி நலன் ஒன்றும் காரணமில்லை, அவர்களது சுயநலன் தவிர வேறில்லை.

⁠⁠எனவே, காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒன்று தெளி வாகிவிட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவது எளிதல்ல என்றும், அதனை அண்டி அனுகூலங்களை பெற் றுக் கொள்வதே நல்லது என்பதை உணர்ந்து கொண்டன. அதற்கு ஏற்றாற் போல் பிரிட்டிஷ் அரசும் இந்தியர்களுக்குச் சலுகைகளை அளித்து வந்தது. அந்த சலுகைகளையும், பதவிகளையும் பெறுவதற்கு கல்வி கற்ற பார்ப்பன, வியாபார, வேளாண் உயர்குடிகளிடையே கடுமையான போட்டி நிலவி யதில், ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்பாரற்று இருந்தனர். ஆனாலும் அதன் தலைவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்தார்கள்.

⁠⁠இந்த நிலையில் கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்யராகவும் இருந்த டஃப்ரின் பிரபு நாட்டில் சீர்திருத்தங்களை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தியர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவம் கொடுப்பதைப் பற்றி ஆய்வு செய்ய 1888ல் அட்சிசன் பிரபு தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். இக்குழுயார் யாருடைய நலனை (interest) கவனத் தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்குழுவிற்கு குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அவை;-

⁠⁠அ) நாட்டில் நிலையான தாக்கத்தை கொண்டுள்ள பாரம்பரிய பேர்பெற்ற குடியமர்ந்த வகுப்பினர் நலன்.

⁠⁠ஆ) வியாபாரம், தொழில் முனைவோர், மற்றும் வேளாண் வகுப்பினர் நலன்.

⁠⁠இ) வணிகம் ஐரோப்பிய மற்றும் தோட்டத் தொழில் சார்ந்த நலன்.

⁠⁠ ஈ) நிலையான மற்றும் சிறப்பான நிர்வாகிகள்.

⁠⁠ஆகியோரின் நலன்களை பாதுகாப்பது, அவர்களுக்கான அரசியல் முக்கியத்துவத்தையும், பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. (1964:128)

⁠⁠அந்த கமிட்டியில் சர், சார்லஸ் அட்சிசன் அவர்களுடன் ஜெ. வெஸ்ட்லேண்ட் சர். அந்தோனி மெக்டோனால்ட் ஆகியோர் இருந்தனர். இந்த குழுவினர் நிலைமைகளை ஆராய்ந்து 1888ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் தம்முடைய அறிக்கையை அரசுக்கு சமர்பித்தனர். ⁠அந்த அறிக்கையை பரிசீலிக்கும் படியும், விவாதித்து அதனை சட்டமாக்கும்படியும் கேட்டு வைஸ்ராய் டஃப்ரின் 1888ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. நார்த் புரூக் பிரபு, சாலிஸ்பரி பிரபு உட்பட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது. அதுதான் 1892ம் ஆண்டு 'இந்திய கவுன்சில் சட்டம்' எனப்படுகிறது. இச்சட்டம் டஃரின் பிரபு விரும்பிய பிரிவினர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவத்தை வழங் கியது. சட்ட சபைகளிலும் அரசு கவனத்திற்கும் பிரச்சினைகளை இனி அவர்களால் கொண்டு செல்ல முடியும் இப்படி கிடைத்த பிரதிநிதித்துவத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். ஒன்று சென்னை மகா ஜன சபையினர் இப்பதவிகளில் உட்காரலாம் அல்லது காங்கிாஸ் பிரமுகர்கள் இப்பதவிகளில் உட்காரலாம். இந்த இரண்டு அமைப்புகளிலும் டஃப்ரின் பிரபு யார் நலனை பாதுகாக்க வேண்டுமென விரும்பினாரோ அவர்கள்தான் நிறைந்திருந்தார்கள். எனவே இவ்விரு அமைப்புகளும் அதிகாரத்தை கைக்கொள்ளும் அமைப் புகள் என்பது உறுதியாகிவிட்டது.

⁠இந்த பின்னணியில்தான் பண்டிதரின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

⁠பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் எப்படி பார்த் தாலும் தாழ்த்தப்பட்டோருக்கு சாதகமானதாக இல்லை. எனவே தம்மை அமைப்பாக்கிக் கொள்ள முயன்று வந்தனர். அப்படி ஒரு சில அமைப்புகள் உருவாகி இருந்தன. இதில் வீச்சாக எழுந்தது "சாதிபேதமற்ற திரா விட மகாஜன சங்கம்" இச்சபையை 1890ல் பண்டிதர் தொடங்கினார். அதன் தலைவரும் அவரே. இச் சங்கத்தின் முதல் மாநாடு 1.12.1891 அன்று நீலகிரியில் கூட்டப்பட்டது. இம் மாநாடுதான் நவீன இந்தியா கண்ட முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக் கான விகிதாச்சார உரிமை எனும் கோரிக்கை முன்வைக்கப் பட்டது.

⁠இம் மாநாட்டில் பல்வேறு சமூக - அரசியல் நடப்புகள் விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் கோரிக்கைகளாக அரசிடம் முன்வைக்கும் நோக்கில் காங்கிரஸுக்கு அனுப்ப வேண்டும் என முடிவாகி இருந்தது. எனவே அந்த கோரிக்கை மனு பண்டிதரால் தயாரிக்கப்பட்டது. அதில் 10 கோரிக்கைகள் இருந்தன, அந்த கோரிக்கைகளில் : கோரிக்கை : 2

இக்குலத்து ஏழைகள் விருத்தி அடையும்படி கல்விச் சாலைகள் பிரத்யேகமாய் அமைத்து உபாத்யாயர்களையும் இக் குலத்தோரில் நியமித்து மாணாக்கர்களின் சம்பளங்களையும் அரை பாகமாய் குறைக்க வேண்டியது.

கோரிக்கை : 3

இக்குலத்து பிள்ளைகளுள் பிரவேச மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறிய மூன்று பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க வேண்டியது.

கோரிக்கை : 4

இங்ங்னம் கல்வியில் தேரினோர்களில் ஒவ்வொருவரையும் இத்தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கவர்ன்மென்ட் ஆபீசுகளிலும் உத்யோகமளித்து ஆதரிக்க வேண்டும்.

கோரிக்கை : 5

இவர்கள் கல்வி நல்லொழுக்கத்திற்கு தக்கவாறு எத்தகைய உத்யோகங்களையும் தடையின்றி கொடுத்து வரவேண்டியது.

கோரிக்கை : 6

முனிசிபல் சங்கங்களிலும், கிராம சங்கங்களிலும் இக்குலத்தோரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து பேசுவதோடு சகல டிஸ்ட்ரிக்குகளிலும் ஜில்லாக்களிலும் ஒருவர் பெருந்தொகையான வரி செலுத்தக்கூடாத வராயினும் கல்வி, நல்லொழுக்கங் கண்டு இக்குலத்தோர் யாரை நியமிக்கிறார்களோ அவர்களை ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு காரியாதிகளை நடத்த வேண்டும்.

கோரிக்கை 10 இக்குலத்தோர் பெருந்தொகையார் வாசஞ் செய்யும் கிராமங்களில் மணியக்காரன், முனிசிப்பு அலுவலர்களில் இவர்களில் (தலித்) பொறுப்பானவர்கள் ஒவ்வொருவரை நியமிப் பதுடன் கலெக்டர். தலைவர்கள் கிராமங்களுக்குள் வருங்கால் நேரில் இவர்களை விசாரித்து நீதி அளிக்க வேண்டும். ( 76.77) இந்த 6 கோரிக்கை அடங்கிய 10 கோரிக்கைகளை காங்கிரஸ் செயலாளரான ஸ்ரீ வீரராகவச்சாரியாருக்கு பண்டிதர் அனுப்பினார். மனுவை பெற்றுக் கொண்ட ராகவாச்சாரியார் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து பதில் சொல்வதாக பண்டிதருக்கு பதில் எழுதினார்.

எனினும், காங்கிரஸ் தாமதம் செய்தது. இந்நிலையில் சென்னை மகாஜன சபையின் மாநாடு சென்னையில் கூடுவதாகவும், அதில் கோரிக்கை உள்ளவர்கள் தம் கோரிக்கைகளை முன் வைக்கலாம் என அனைத்து மாவட்டங்களுக்கும் செய்தி அனுப்பியது. அந்த விளம்பரத்தை கண்ட பண்டிதர் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சங்கத்தை கூட்டி ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மகா ஜன சபை கூடுகைக்கு பண்டிதரை பிரதிநிதியாக அனுப்புவதென முடிவானது. அதன்படி அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

1892 ஏப்ரல் மாதம் கூடிய அந்த கூடுகை சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையிலுள்ள உயரமான கோபுரமுள்ள சிவப்பு கட்டிடம், அதன் முதல் தளத்தில் ) கூடுகை நடைபெற்றது. கூடுகைக்கு சபையின் தலைவர் பி அரங்கைய நாயுடு தலைமை தாங்கினார். கூட்டத் தில் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சினைகள் அலசப்பட்டாலும் தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகள் விவாதிக்கப்படத் தேவையில்லை என தலைவர் அறிவித்தார். எனினும் மகாஜன சபையின் முக்கிய பிரமுகரும், பண்டிதரிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றவருமான காங்கிரஸ் செயலர் வீரராகவாச்சாரியார் எழுந்து நீலகிரியிருந்து கோரிக்கையோடு பண்டிதர் வந்திருப்பதை அறிவித்தார். எனவே பிரதிநிதியாக வந்தவரை தட்டிக் கழிக்க முடியாமல் பண்டிதர் தம் கோரிக்கைகளை விளக்க அழைக்கப் பட்டார், பண்டிதர் எழுந்து

"உங்களாலே இம்மக்கள் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து கிடக் கிறார்கள், எனவே நீங்கள் தான் சீர்தூக்கி விட வேண்டும்" என்றார்.

அதற்கு சபாநாயகர் "இது உள் சீர்திருத்த சங்கமாதலின் உங்களுக்கு என்ன வேண்டும் " எனக் கேட்டார். அதற்கு பண்டிதர்.

ஐயா : உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் பொது கோயில் என்றும் பொது தெய்வமென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோயில்களுக்குள்ளும், சைவ மதத்தோரை சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடையமாட்டார்களா? மதங்களும் பிரபலமடை யாதா? என்றார்.

உடனே சபையார் எல்லோரும் ஏகமாய் எழுந்து நின்று "அப்படியே கோயிலுக்குள் சேர்க்கப்படாது என்று கூச்சலிட்டனர். இதில் வந்திருந்த தஞ்சாவூர் பிரதிநிதி பூரீ சிவராம சாஸ்த்திரியவர்கள் எழுந்து ;

உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என ஆட்சேபித்தார்.

ஆட்சேபனையை பார்த்துக் கொண்டிருந்த பண்டிதர் அவரை நோக்கி ;

ஐயா, அங்ஙணமிருக்குமாயின் உங்கள் சாமிகள் எமக்கு வேண்டாம், அதை விடுத்து இக்குலத்து பிள்ளைகள் படிப்பதற்கு கிராமந்தோறும் கல்வி சாலைகள் வைத்து நான்காம் வகுப்பு வரை இலவசமான கல்வி கற்பிக்க வேண்டும்.

இக்குலத்து கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும். என்று கருணை தாங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவிகூறு. (Recommandation) பத்திரமாவது கொடுக்க வேண்டும் என்று கோரினார்.

பண்டிதரின் கோரிக்கையை ஆதரித்து எல்லூரிலிருந்து வந்திருந்த பிரதிநிதி ஸ்ரீ சங்கரன் என்பவர் விரிவாக பேசினார். நாட்டின் முதுகெலும்பு போல் உள்ள இம்மக்களை கைதூக்கி விட வேண்டும் என கோரினார்.

இவரை ஆதரித்து ஸ்ரீ ராஜா சர்வலை இராமசுவாமி முதலியார் பேசி அரசுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கேட்க வேண்டும் என கூறினார். எனவே இவரும் பண்டிதரை ஆதரித்து பேசியதால் ஆதரவு கருத்துக்கள் பலமாக எழவே சபையோர் மறுப்பேதும் சொல்லவில்லை.

இதற்கு மூன்றாம் நாள், பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, மீண்டும் பண்டிதர் முன்வைத்த கல்வி - நிலம் கோரிக்கைகள் மீது சபையோர் கருத்து கேட்க அவர்கள் மூவர் கருத்தையும் ஏற்றுக் கொண்டார்கள், பின்பு அது கோரிக்கையாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதின் பேரில் தென்னிந்தியாவெங்கும் கலாசாலைகள் ஏற்படுத்தப்பட்டன, சில இடங்களில் நிலங்களும் கொடுக்கப்பட்டன. (தொகுதி : 1-80-81).

நிகழ்ச்சிகள் இப்படி இருக்க, சாதிபேதமற்ற திராவிடர் மகாஜன சபை மூலம் காங்கிரஸ்-க்கு பண்டிதர் கொடுத்த விண்ணப்பம் என்ன வானது? காங்கிரஸ் 17 ஆண்டுகளாகியும் அதற்கு பதில் சொல்லவில்லை, என்று பண்டிதர் 14, அக்டோபர் 1908 அன்று குறிப்பிட்டாலும், அவரது மறைவு வரை அம்மனுவுக்கு பதிலேதும் காங்கிரஸ் எழுதவில்லை.

எனினும் இந்த வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு நாம் என்ன முடிவுக்கு வரமுடியும்? இதில் இரண்டு கேள்விகள் எதிர்ப்படுகின்றன.

1. பண்டிதர் ஏன் அரசிடம் நேரிடையாக கோரிக்கைகளைக் கொடுக்காமல் காங்கிரஸுக்கும், சென்னை மகாஜன சபைக்கும் அனுப்பினார்?

2. அவர் கோரிக்கைகளின் முக்கியத்துவம் என்ன? முதல் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

1885ல் பம்பாயில் நடந்த காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட மொத்தப் பிரதிநிதிகள் 72 பேர் மட்டுமே. இது காங்கிரசின் பலவீனத்தைக் காட்டுவதாகத் தோன்றினாலும், படித்தவர்களும் பணமுள்ளவர்களும் 1887ல் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருந் தார்கள். இவர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்புவார்கள் என பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்ததோடு அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய நினைத்தது. எனவே அன்றைக்கு இருந்த வைஸ்ராய் டஃப்ரின் பிரபு படித்த வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிப்பதின் மூலம் நிர்வாகத்தை சீர்பட நடத்த முடியும் என நம்பினார். பம்பாயின் கவர்னராயிருந்த ரேய் பிரபு அன்பிற்குரிய "நடுநிலைவாதிகள்" என்று காங்கிரசை வர்ணித்தார். எனினும் காங்கிரஸ் மீது அரசுக்கு அதிருப்தி இல்லாமலில்லை, 1888 நவம்பர் 30ம் தேதி வைஸ்ராய் டஃப்ரின், பேசும்போது "காங்கிரஸ் ஒரு நுண் சிறுபான்மை" என வர்ணித்தார். டஃப்ரினை தொடர்ந்து வைஸ் ராயாக பொறுப்பேற்ற லான்ஸ்வோன் பிரபு (1888-1893) காங்கிரசை "விநோதமான ஒரு நல்ல நகைச்சுவை" என்று குறிப்பிட்டிருந்ததோடும் காங்கிரசை சமாளித்துவிட முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த கருத்துக்கள் விளக்குவது என்னவெனில் காங்கிரஸ் மீது அரசின் கவனம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதுதான். அதனால் காங்கிரஸ் எதாவது ஒரு கோரிக்கையை முன்வைக்குமானால் அது உடனே அரசின் கவனத்திற்கு போவதற்கான வாய்ப்பு இருந்தது. அதே வேளையில், படித்த மற்றும் சொத்துள்ள உயர்சாதி வர்க்கத்தின் நலனை இந்திய நகரங்களில் குறிப்பாக கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங் களில் காங்கிரஸ் பிரதிபலித்ததைப் போல சென்னையில் கூடுதலாக சென்னை மகாஜனசபை பிரதிபலித்தது. ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசின் புறக்க னிப்பினால் ஒரு கவனத்தை கவரக்கூடியதாக இல்லாமல் போன தாழ்த்தப் பட்டோர்கள் கல்வியில் குன்றியும், சொத்துடைமையில் பின்தங்கியும் கரண்டலுக்குள்ளாகி இருந்ததால் அரசின் கவனம் இவர்கள் மேல் திரும்பாததில் வியப்பேதுமில்லை.

இந்த சூழலை நன்கு புரிந்திருந்த பண்டிதர் காங்கிரசுக்கும். சென்னை மகாஜனசபைக்கும் தம் கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தம் கோரிக்கைகளுக்கு உடனே அரசு செவிசாய்க்கும் என நம்பி னார். ஏனெனில் தமது கோரிக்கைகளை படித்த பணம் பெருத்த சாதி களின் கோரிக்கைகளாக மாற்றுவதின் மூலம் அக்கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்ள முடியுமென எதிர்பார்த்தார். இதில் அவர் ஒரளவு வெற்றியும் பெற்றார், எனவே பண்டிதரின் அரசியல் கணக்கு தெளிவா கவே இருந்தது.

இனி, இரண்டாவது கேள்விக்கு வருவோம். காங்கிரசுக்கு அனுப் பிய கோரிக்கை மனுவை திரும்ப படித்துப் பார்த்தால் கீழ்கண்ட விஷ யங்கள் தெளிவாகிறது.

கோரிக்கை 2ன்படி : "பிரத்யேகமான கல்விச் சாலைகளை இக் குலத்தாருக்கு அளிக்க வேண்டும். இதை இன்றைய நிலையோடு ஒப்பிட் டால் தமிழகச் சூழலில் ஆதி திராவிட நலப்பள்ளிகள் என்பதும், மற்ற இடங்களில் பட்டியல் சாதியினர் பள்ளிகள் என்பதும் விளங்கும். எனவே பண்டிதரின் கோரிக்கையின் தொடர்ச்சிதான் இன்றைய பள்ளிகள்.

கோரிக்கை 3ன் படி : இக்குலத்து பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் தொகை

கோரிக்கை 4ன் படி : அரசு அலுவலகங்களில் இக்குலத்தோருக்கு பணி நியமனம் - அதாவது தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

கோரிக்கை 5ன் படி : தாழ்த்தப்பட்டோரின் கல்விக்குத் தக்க உத்யோகம், அதாவது பரம்பரை சாதித் தொழிலை விடுத்து தகுதி அடிப் படையில் பணி நியமனம் - கோரிக்கை 6ன் படி : முனிசிபல், கிராம சங்கங்களில் இக்குலத்தார் யாரை நியமிக்கிறார்களோ அவர்களை அங்கமாக ஏற்றுக் கொள்வது. இது தனிப்பிரதிநிதித்துவம் என்பதாகும். 1909ல் முஸ்லீம்களுக்கு அளிக்கப் பட்ட தனி பிரதிநிதித்துவம் (Separate Representation) என்பதைப் போன்றது. இந்த தனி பிரதிநிதித்துவம்தான் பின்பு தனித்தொகுதியாக இரட்டை வாக்குரிமையாக மலர்ந்தது.

கோரிக்கை 10ன் படி : கிராம நிர்வாகப் பணிகளில் இக்குலத்தா ருக்கு அதிகாரம்.

... . இந்த விளக்கங்கள் போதுமானவை. தலித் இயக்கங்கள் பின்னாளில் எவையெல்லாம் முன்வைத்தனவோ அவையெல்லாம் பண்டிதரால் முன் வைக்கப்பட்டவை என்பது ஒப்பிட்டுப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

மேலும் டஃரின் பிரபு அட்சிசன் குழுவுக்கு ஆலோசனை வழங் கியதில் படித்த பணம் படைத்த உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடும் முன் னுரிமையையும் வழங்க வேண்டும் என்று 1888ல் சொன்னதோடு, பண்டி தரின் மேற்கண்ட முன்வைப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இட ஒதுக்கீடு எனும் கருத்தில் தலைகீழ் மாற்றத்தை முன்வைக்கிறார். மேலி ருந்து கீழாக அல்லாமல் கீழிருந்து மேலாக என்ற நிலையை முதன் முதலாக முன்வைத்தவராக பண்டிதர் இருக்கிறார்.

இருப்பினும் ஒர் அம்சம் மீதமுள்ளது. சென்னை மகாஜன சபைக்கு முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டினைப் பார்க்க வேண்டும்.

சிவன், விஷ்ணு கோயில்களில் நுழைய உரிமை என்ற கோரிக்கை.

இந்த சாதி இந்து கோயில்களில் நுழைய பண்டிதர் அனுமதி கேட்டதும் அது எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டது. இக்காலத்தில் பண்டிதர் பெளத்தத்தை முழுவதும் உள்வாங்கி இருந்தாலும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கான கோரிக்கையாக இந்து கோயில்களில் நுழைவதற்கான உரிமை கேட்டு அது மறுக்கப்பட்ட உடன் அதை விவாதப் பொரு ளாக்காமல் பொருளாதாரக் கோரிக்கையில் கவனத்தை குவித்தார். உண்மையில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் பின் னாளில் கூட அக்கறை காட்டாதது எதேச்சையானதல்ல.

அடுத்ததாக, பயன்படுத்தாத நிலங்களை இக்குல மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனக் கோரியது. இந்த கோரிக்கை இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு கோரிக்கையாக இருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், பஞ்சமி நிலம், தரிசு நிலம், மூன்று சென்ட் நிலம், ஐந்து ஏக்கர் நிலம் என இன்றைக்கு கேட்கப்படுவதெல்லாம் பண்டிதரின் கோரிக்கையின் வெளிப்பாடுதான்.

எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படையான கோரிக்கைகளை பண்டிதர் வடிவமைத்துள்ளதை அறிந்து கொள்ளும் அதேவேளை, இதை மேலும் துல்லியப்படுத்தினாரா என்பதை இனி பார்ப்போம்.

3 தொடங்கிய

கதிப்போக்கில்...

இதுவரை பார்த்தவை அன்றைக்கு நிலவிய அரசியல் சூழலை முன்வைத்து இடஒதுக்கீடு கோரிக்கையில் பண்டிதரின் முயற்சிகளையும், அதன் தொடக்க கால வரையறுப்புகளையும் பார்த்தோம். இந்த முயற்சிகளுக்குப் பிறகு 1892 முதல் 1907 வரை நமக்கு போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. மேலும் பிரிட்டிஷ் அரசு 1892ல் ஏற்படுத்திய அரசு பிரதிநிதித்துவ சீர்திருத்தத்திற்குப் பிறகு 1909ல்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தை கொண்டு வந்தது. எனவே இந்த சூழலில் பண்டிதரின் கோரிக்கைகள், முயற்சிகள் எப்படி இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருந்தன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் 1905 முதல் 1909 வரையில் நடந்த அரசியல் மாற்றங்கள் இந்திய துணை கண்டத்தின் தலையெழுத்தையே நிர்ணயித்தன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பண்டிதரின் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் அக்கால சமூக அரசியல் சூழலைப் புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, வரலாற்றுப் பக்கங்களை கொஞ்சம் பின்னோக்கி புரட்டிப் பார்ப்போம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்த வைஸ்ராய். கர்சன் பிரபு (1899 - 1905) 1905 ஆம் ஆண்டு, நிலப்பரப்பில் பெரியதாகவும், 78 கோடி மக்கள் தொகையோடு நிர்வகிப்பதற்கு சிரமம் தரக்கூடியதாக இருந்த வங்காளத்தை இரண்டு மாகாணமாகப் பிரித்தார். இது வங்காளிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதாக வங்காளிகளின் படித்த நடுத்தர, உயர் வகுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதில் சட்டம் படித்த மற்றும் உயர்சாதி வர்க்கத்தினர் வெற்றி பெற்றார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வரலாற்றில் வங்கப் பிரிவினை என்று இது அழைக்கப்படுகிறது. பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தை கர்சன் பிரபு ஏற்றுக் கொள்ளவில்லை, அவர் நிர்வாக வசதிக்கான காரணங்களை தேவையின்றி இந்த நடுத்தர வர்க்கப் போராட்டக்காரர்கள் அரசியல் படுத்துவதாக கருதி மீண்டும் வங்கத்தை இணைக்க மறுத்ததோடு, அதில் உறுதியாகவும் இருந்தார். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அரசுக்கும் கர்சனுக்கும் நடந்த பரிமாற்றங்களில், கர்சன் தன் எதிர்ப்பை உறுதியாக காட்டும் நோக்கில் தன்னுடைய வைஸ்ராய் பதவியை ராஜினாமா செய்து விட்டார். எனவே பிரிட்டிஷ் அரசு அவ ருக்கு பதிலாக மிண்டோ பிரபுவை (1905-1910) புதிய வைஸ்ராயாக இந்தி யாவுக்கு அனுப்பியது.

1905 நவம்பரில், மிண்டோ இந்திய துணைக்கண்டத்திற்கு வந்த போது நிலைமை கொந்தளிப்பாகவே இருந்தது. அந்தவேளையில் காங்கிரஸ் முஸ்லீம்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துமிருந்தது. காங்கிரசில் உயர்சாதியினர் ஆதிக்கம் எங்கும் பரவியிருந்தது. முக்கியமான ஒரு காரணமாய் இருந்தது. அதுவுமின்றி காங்கிரஸ் இரண்டு குழுக்களாக பிரியும் கட்டத்திலும் இருந்தது. வழக்கம் போல தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதற்கு நடைமுறைவாதிகளாக தங்களைக் கருதிக் கொண்டே கோகலே உள்ளிட்ட குழுவினரும், இவர்களின் மீது தீராப் பகையோடு அதிகாரத்தை அடைய வேண்டிய ஆசையோடு மோதிய திலக் உள்ளிட்ட குழுவினராக இரு போக்குகள் உருவாகி இருந்தது. இந்த நடைமுறை வாதிகள் அல்லது மிதவாதிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அல்லது தீவிர வாதிகள் என்பதற்கு எப்படி பொருள் கொள்வது? இதை முழுக்க தேசிய உணர்வு சார்ந்ததாகவே நமது வரலாற்றாளர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் மிதவாதிகளுக்கும் - அமிதவாதிகளுக்கும் உள்ள பொருள் விளக்கம் முற்றிலும் வேறானது. இதனைப் புரிந்து கொண்டால் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பண்டிதரின் நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாய் இருக்கும்.

பாலகங்காதர் திலக் எந்த அளவிற்கு தீவிரமானவர் ? காங்கிரஸ் தொடங்கிய காலத்திலிருந்து அது பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தும் போது, கூட்டத்தின் பின் இணைப்பாக சமூக கூட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் சமூகப் பிரச்சினைகள், நலிந்த மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 1892ல் நடந்த கூட்டத்தில் இந்த சமூகக் கூட்டங்கள் நடக்க கூடாது என்று பார்ப்பனிய அடிப்படைவாதி பாலகங்காதர் திலக் கடுமையான எதிர்ப்பை காட்டி னார், அவரது குழுவினரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத காங்கிரஸ் தனது கொள்கைக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த சமூக மாநாடு நடத்தும் வழக்கத்தையே கைவிட்டு விட்டது. எனவே திலக் போன்ற நபர்கள் கோரும் அதிகாரம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, தான் நடத்திய கேசரி பத்திரிக்கையில் தீண்டத் தகாதவர்களின் செய்தி வந்தால்கூட இதழ் தீட்டாகிவிடும் என்பதில் கவன மாக இருந்தவர்தான் திலக்.

ஆனால், மிதவாதிகள் என்பவர்கள் இன்னும் நுட்பமானவர்கள் பிரிட்டிஷ் அரசிடம் எவ்வளவு சலுகைகளைப் பெற முடியுமே அவ்வள வையும் நாசுக்காகப் பெறுவது தான் அவர்களது கொள்கை, சொல்லப் போனால் காங்கிரசின் பிரதானக் கொள்கையே அதுதான். அதனால்தான் அதன் கொள்கை "பிச்சைக்காரன் கொள்கை" (Mendicant polices) என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்படி பிச்சையெடுத்து பதவிகளில் அமர்ந்த பார்ப்பன - உயர்சாதி வர்க்கத்தின் மீது திலக் குழுவிற்கு கோப மில்லை, அவர்களை ஒழிக்க அது முனைந்ததுமில்லை.

மிண்டோ இந்தியாவிற்கு வந்தபோது இந்த குழுக்களிடையே இருந்த பிரிவினைகளை, வங்கப்பிரிவினையால் உண்டான கொந்தளிப்பு களையெல்லாம் கவனத்தில் கொண்டு தன்னுடைய பணிகளைத் தொடங் கினார். அவர் காங்கிரசை ஒரு சக்தியுள்ள அமைப்பாக கண்டு கொண்டு அதன் ஆதரவு அரசினை நடத்த தேவை என்றும், அதே போல முஸ்லீம் களின் ஆதரவும் தேவை என்பதையும் வலியுறுத்தினார். இங்கிலாந்தில் இந்தியாவுக்கான செயலராய் இருந்த ஜான் மார்லி பிரபுவுக்கு இது குறித்து கடிதங்களை எழுதினார். ஏற்கெனவே வைஸ்ராயாக இருந்த கர்சன்பிரபு காங்கிரசுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, எனவே முக்கியத்துவம் கொடுத்த மிண்டோ பிரபுவை இந்தியர்களின் நண்பராக காங்கிரஸ் கண்டு கொண்டது. காங்கிரஸ் அப்படி கண்டு கொண்டாலும் காங்கிரஸ்க்குள் நடந்த மோதல்களை ஆர்வத்துடன் மிண்டோ கவனித்து வந்ததுடன் அதில் மிதவாதிகள் வெற்றி பெற வேண்டுமெனவும் அவர் விரும்பினார். இதை மார்லிக்கு எழுதிய கடிதத்திலும் தெரியப்படுத்தினார். எனவே மிண்டோவின் நடவடிக்கைகள் தெளிவாகப் புலப்பட்டுவிட்டது. அவர் மிதவாதிகள் வெல்ல வேண்டும் என்று விரும்புவதன் மூலம் அந்த குழுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அதை வலுவுள்ளதாக மாற்ற விரும்பினார். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழும் புதிய சக்திகளை பலவீனப் படுத்த முடியும் என்று கணக்குப்போட்டார். ஏனெனில் அவரது பிரதான நோக்கம் பிரிட்டிஷ் அரசை நிலைநிறுத்துவதுதானே. இவரது கருத்துக்கு இசைவது போலவே லண்டனிலிருந்து இந்திய செயலர் மிண்டோ பிரபு மிதவாதிகள் மீது அன்பு கொண்டிருந்தார். ஆனால் இருவருமே "இந்தியர் கள் நாட்டை சுதந்திரமாக ஆளக்கூடிய அளவிற்கு தகுதியுடையவர்கள் அல்ல என்றும், அவர்களில் விடுதலைக் கனவு காணும் ஒரு பிரிவினரின் எண்ணம் அடையக்கூடிய தூரத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கிறது" என்றும் கருதினார்கள், அதை வெளிப்படையாகவும் சொல்லவும் செய்தார்கள்.

காங்கிரஸ் சண்டையும், அரசின் பரிவும் இப்படிப்பட்ட போக்காய் இருந்த நேரத்தில் முஸ்லீம்களின் நடவடிக்கை எப்படி இருந்தது?

1885ல் பம்பாயில் கூடிய காங்கிரசில் மொத்தம் 72 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லீம்கள், தொடர்ந்து முஸ்லீம்களின் எண்ணிக்கை மந்த மாகவே வளர்ந்தது. அதிகப்பட்சமாக 1899ல் பம்பாயில் கூடிய காங்கி ரசில் மொத்தம் 789 பேரில் 313 பேர் முஸ்லீம் பிரதிநிதிகள், ஆனால் இந்த எண்ணிக்கை கிடுகிடுவென வீழ்ந்தது. 1904ல் பம்பாய் காங்கிரசில் மொத்தம் 1,010 பேரில் முஸ்லீம்கள் 35 பேர். 1905ல் பெனாரஸ் காங்கிரசில் 756 பேரில் முஸ்லிம்கள் 20 பேர் 1906ல் கூடிய கல்கத்தா காங்கிரசில் 1663 பேரில் 45 பேர் மட்டுமே முஸ்லீம்கள், இதற்கு பிறகு முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் ஏறவே இல்லை.

நிலைமை தெளிவாகிவிட்டது. முஸ்லீம்கள் காங்கிரசை நம்பவில்லை. காங்கிரசுக்குள் நடந்த போட்டிகளினால் அவர்கள் ஒதுக்கப் பட்டனர். எனவே தங்கள் அரசியல் நலனைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் முனைந்தார்கள். 1906ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் நாள் வைஸ்ராய் மிண்டோ பிரபுவை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் தங்கள் நிலையை தெளிவு படுத்தினார்கள்.

"இந்த ஆண்டில் தொடங்கப்படும் முஸ்லீம் லீக்கை இந்திய வரலாற் றில் மாபெரும் முக்கியத்துவமுள்ளதாகவும், வரலாற்றுப் பூர்வமாக இந்திய மக்கள் தொகையில் முக்கியமான பாத்திரம் வகிக்கும் முஸ்லிம்தனியொரு வகையினமாக நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.” (2006 : 187)

முஸ்லீம்கள் தங்களை தனியொரு வகையாக அங்கீகரிக்க கோருவதின் பின்னணியை புரிந்து கொண்டே மிண்டோ அதன் மீது கரிசனம் காட்டத் தொடங்கினார். அதை விரும்பினார்.

இந்த காலகட்டத்தில் தலித் மக்களியக்கம் எப்படி இருந்தது. உண்மையில் களப்பிரர் காலத்து வரலாற்று சுவடுகளில் அழிக்கப்பட்டது போலத்தான், இந்திய சமூக அரசியல் கொந்தளிப்பில் தாழ்த்தப்பட்டோரின் அரசியல் மூழ்கடிக்கப்பட்டது. வரலாற்றில் மறைக்கப்பட்டது. எனி னும் நம்பிக்கை அளிக்கக் கூடிய அளவில் சான்றுகள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. இக்கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் இயங்கிய தலித் அமைப்புகள் சாதிபேதமற்ற திராவிடர் மகாசபை, ஆதி திராவிட மகாஜன சபை, பறையர் மகாஜன சபை, தென்னிந்திய சாக்கிய சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள். இதில் முதல் மூன்று அமைப்புகளே அரசியல் நீரோட்டத்தில் இணைந்திருந்தன. இதில் ஆதி திராவிட மகா ஜன சபை அதன் பழைய தலைவர்களின் வழி நடத்துதலில் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன என்றாலும் அதைப்பற்றின தகவல்கள் அதிகம் இல்லை, பறையர் மகாஜன சபை அதன் வசீகரமிக்க தலைவரின்றி மந்தமாக இயங்கியது. இச்சபையின் நிறுவனர் ரெட்டை மலை சீனிவாசன் 1900ல் ஏற்பட்ட ஒரு மனக்கசப்பினாலும், இங்கிலாந்து சென்று தம் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்ற நோக்கத்தினாலும் கப்பல் பயணம் மேற்கொண்டவர் பயண இடையில் ஏற்பட்ட உடல் நல கோளாறினால் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். எனவே, இக் கொந்தளிப்பான காலத்தில் ரெட்டைமலை சீனிவாசன் இங்கில்லை. எனினும் பறையர் மகாஜன சபை அரசிடம் கோரிக்கை விடுக்கும் அளவிலான இயக்கமாக இயங்கி வந்தது.

இதே காலத்தில்தான் பண்டிதர் முன்பே 1891ல் தொடங்கிய சாதி பேதமற்ற திராவிட மகாஜனசபையும் இயங்கி வந்தது. இச்சபை அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொண்டதென்றால், தென்னிந்திய சாக்கிய சங்கம் பண்பாட்டு தளங்களில் பணியாற்றியது. இந்த இரண்டு அமைப்பு களுக்கும் நிறுவனர், தலைவர் பண்டிதர். இந்த இரண்டு அமைப்புகளிலும் பண்டிதரைப் பின்பற்றிய தலித் மக்கள் இருந்தார்கள். இந்த அமைப்பும் தேவையான கோரிக்கைகளை அரசிடமும் - பிற அமைப்புகளிடமும் வைத்துக் கொண்டிருப்பதை 1891 முதல் காண்கிறோம். திராவிட மகாஜன சபையின் பிரநிதியாக - ஆல்காட் அவர்களை சந்தித்த பண்டிதர் பின்பு பெளத்தராகி தென்னிந்திய சாக்கிய சங்கத்தை தொடங்கினார்.

இப்படி வீச்சான பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், மிண்டே பிரபு இங்கு வந்த தொடக்க காலத்தில் இருந்த கொந்தளிப்புகளில் இவ்வமைப்புகளைப் பற்றின செய்திகளை இந்திய சாதி வரலாறு முற்றிலும் புறக்கணித்தது மட்டுமின்றி மறைத்தே விட்டது. இந்த மோசமான இருள் சூழ்ந்த பின்னணியில் 1907ம் ஆண்டு ஜூன் மாதம் - பண்டிதர் ஒரு பைசா தமிழன் இதழைத் தொடங்கினார், பிறகு பண்டிதர் இட ஒதுக்கீட்டு கோட்பாடுகளை தம் துல்லியபடுத்தல்களை எப்படி மேற்கொண்டார், நிலை நிறுத்தினார்....

4 முன் முயற்சிகளும்..

முதற்கட்ட முன்வைப்புகளும்...

நாட்டில் எழுந்த கொந்தளிப்புகளை சமாளிக்கும் விதமாக படித்த நடுத்தர வர்க்கத்தினர், மற்றும் படித்த உயர்சாதியினரின் பார்வையை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் நோக்கில் இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள லண்டனிலிருந்த இந்திய செயலர் ஜான் மார்லி விரும்பினார். 1892ம் ஆண்டு சட்டத்தினால் மாகாண சட்ட சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி, ஸ்தல ஆட்சியில் அவ்வர்க்கங்களை பயன்படுத்த அவர் எண்ணினார். இந்த யோசனை வைஸ்ராய் மிண்டோவிற்கு ஏற்றதாக இருக்க இருவருமே அதற்கான வேலைகளில் இறங்கினர். மிண்டோவிற்கும் மார்லிக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. 1906 ஆம் ஆண்டு 15ம் நாள் மார்லி, மிண்டோவிற்கு எழுதிய கடிதத்தில்

'லண்டன் கவுன்சிலைப்போல உம்முடைய சட்டசபையில் உள்ளூர் புள்ளிகளை ஏன் அதிகரிக்கக் கூடாது. திருத்தங்களை கொண்டு வரவும், தேவைக்கும் குறைவாக நான்கு அல்லது ஐந்து மணி நேரம் விவாதம் நடத்தாமல் வரவு-செலவு விவாதத்தை முழு நேரமாக நடத்தினால் என்ன?... இத்தருணத்தில் சீர்திருத்தத்தை தொடங்கினால் என்ன?...'

என்று தம் ஆலோசனையை சொல்லி அதற்கான பதிலை எதிர் பார்த்தார். இப்படி சில கடிதப் பரிமாற்றங்களுக்குப் பிறகு 1906 ஆகஸ்டில் மிண்டோ பிரபு ஏடி அருண்டேல் தலைமையில் இ என் பேக்கர், ஏர்ல் ரிச்சர்ட்ஸ், மற்றும் மென்சில் இப்பெட்சன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்து நான்கு நோக்கங்களை அதன் முன் வைத்தார். அதில் மார்லி சொன்ன ஆலோசனைகளே இருந்தன, இந்த குழு ஆய்வு செய்து, 1906 அக்டோபர் 12ல் தனது அறிக்கையை சமர்பித்தது.

மிண்டோ - மார்லி சொன்ன ஆலோசனைகளையும் சேர்த்து நிலச்சுவான்தாரர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத் திருந்தது. இந்த அறிக்கையை 1907 மார்ச் மாதத்தில் வைஸ்ராய் செயற்குழு பரிசீலித்த பிறகு லண்டனிலுள்ள இந்திய செயலர் மார்லி பிரபுவுக்கு அனுப்பியது. அறிக்கையைப் பெற்ற மார்லி பிரபு நில உடைமையாளர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்.

சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியவுடன் அனைத்து சமூக மக்களிடையே ஆர்வம் அதிகமாகியது. குறிப்பாக படித்த உயர்சாதியினரிடம் வேகம் அதிகரித்தது. காங்கிரஸ் தொடர்ச்சியாக இந்தியர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியது. அதன் நடைமுறைவாதிகளின் தலைவரான கோகலே தொடர்ந்து கடிதங்களை மார்லிக்கும் - மிண்டோவிற்கும் எழுதினார். மார்லி கோகலேவுக்கு கொடுத்த உறுதியின் அடிப்படையில் மார்லியை கோகலே புகழ்ந்து எழுதியதோடு, அவர்களுக்கு எதிரான அபிப்ராயங்கள் பத்திரிக்கைகளில் வருவதைக் கூட எதிர்த்தார். அதை தடுக்கவும் முனைந்தார். முஸ்லீம்களும் தம்பங்கிற்கு பிரிட்டிஷ் அரசின்மீது தீவிரமான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த விசுவாச போட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பேசுவதற்கு காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரண்டுமே தயாராய் இல்லை.

இப்படியான, நெருக்கடியான தருணத்தில் தான் 1907, ஜூன் மாதம் 17ம் நாள் " ஒரு பைசா தமிழன் " என்ற இதழை சென்னை சின்னதறிப் பேட்டை எனும் சிந்தாதிரிப்பேட்டை ஆதி மூலம் அச்சியந்திர சாலையில் அச்சிட்டு தொடங்கினார் பண்டிதர். முதல் இதழிலேயே அரச வந்தனம் இடம் பெற்றது. அரசியல் என்ற தலைப்பில் அரசு கோலாட்சிக்குரிய இலங்கணங்களை விளக்கியதோடு பிரிட்டிஷ் ஆட்சி நீடுழி வாழ வாழ்த்தினார். அதுவுமின்றி ஜூன் 26, 1907 இரண்டாம் இதழில் "சுதேச சீர்திருத்தம் என்ற தொடர் கட்டுரையை பண்டிதர் எழுதத் தொடங்கினார். சுதேசி என்று பேசும் உயர்சாதியினரின் வேஷம் என கடுமையாக சாடி, அந்த இயக்கத்தை அம்பலப்படுத்த தொடங்கினார். சுதேச சீர்திருத்தம் என்பது பணமும், படிப்பும் உள்ள உயர்சாதியினர் பதவிகளில் அமர்ந்து கொள்வதல்ல அதேசமயம், ஒடுக்கப்பட்ட மக்களை சீர்துக்கி, கை தூக்கி விடுவதே சுதேச சீர்திருத்தம் என்று எழுதியதோடு

"ஆடுகள் கசாயிகாரனை நம்பி பின் செல்வது போல் தங்கள் சுயப்பிரயோஜனங்களுக்காய் நம்மையும், நமது தேசத்தையும் கெடுத்துவரும் சத்ருக்களைப் பின்பற்றுவோமானால், தற்காலம் நாமடைந்திருக்கும் கிஞ்சுத்துவ சுகமும் கெட்டு சீரழிவது திண்ணம்." - என எழுதினார்.

இப்படி சுதேசி போராட்டக்காரர்களை, குறிப்பாக காங்கிரசாரை எதிர்த்து எழுதப்பட்ட இக்கட்டுரை 1908 அக்டோபர் 28 வரை தொடர்ந்து தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு வாரமும் நடந்த சுதேசியர்களின் முக்கிய நடவடிக்கைகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதினார்.

இந்நிலையில் அருண்டேல் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப் படாததால் பல்வேறு விவாதங்கள் பத்திரிக்கைகளில் நடந்து வந்தன. அதுவுமின்றி ஒவ்வொரு வகுப்பும் கோரிக்கை மனுக்களை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தன. எனவே பண்டிதர் தலைமையிலான திராவிட மகாஜன சபை 1908ம் ஆண்டு தொடக்கத்தில் கூடி நடந்து கொண்டிருக்கும் போக்கை விவாதித்து தம்முடைய கோரிக்கைகளை மனுவாக கவர்னருக்கு அளிக்க முடிவு செய்தது. மனுவை பண்டிதர் தயார் செய்தார். அதில்,

மாகாண சட்ட சபைகளில் இக்குலத்தாரைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு யுரேஷியரையோ அல்லது ஐரோப்பியரையோ நியமனம் செய்ய வேண்டும்.

அரசுப் பணிகளில் இக்குலத்தோரை நியமனம் செய்து இடுக் கண்களைக் களைய வேண்டும். (1:222)

என்ற முக்கிய கோரிக்கைகளோடு இன்னும் சில கோரிக்கைகளையும் அதில் கேட்டிருந்தார். மாகாண சட்ட சபைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு பேச யுரேஷியரை அல்லது ஐரோப்பியரை கேட்டதற்கு காரணம் அப்போது பேசப்பட்டு வந்த தேர்தல் முறைதான். ஏனெனில் அறிமுகப் படுத்தப் படவிருக்கும் தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு வாக்குரிமை கிடைக்காது என்பது பேச்சாயிருந்த படியாலும், அது சொத்துள் ளவர்களுக்கே உள்ள உரிமை என்றும் பேச்சாயிருந்தது. அப்படியின்றி நியமனம் மூலமாக நியமிப்பதானால் இக்குலத்தை சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்" என்றும் பண்டிதர் மனுவில் கேட்டுக் கொண்டார்.

இப்படி தயாரிக்கப்பட்ட மனுவில், அரசு அலுவலக ஊழியர்கள், கம்பெனியின் ரயில்வே இல்லம், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட இன ஊழியர்கள், மற்றும் இவ்வினத்தில் உள்ள கனதன வியாபாரிகள், காண்ட்ராக்டர்கள், பட்டதாரர்கள், அரண் மனை அலுவலர்கள், என பணிபுரிந்த 2173 தலித்துகளிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபையின் மூலம் சென்னை மாகாண கவர்னரிடம் கொடுத்தார்கள். (1:114)

மனுவைப் பெற்றுக் கொண்ட கவர்னர் அதை இங்கிலாந்திலுள்ள பேரரசருக்கும், இந்திய வைஸ்ராய் மிண்டோவிற்கும், இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கும் அனுப்பினார்.

இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றது. அதற்கு சாதகமான பதில் கிடைப்பதாகத் தோன்றியது. இந்திய அரசுக்கும் - இங்கிலாந்து அரசுக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகளில் இது தெரிந்தது. இந்த நல்ல செய்தி குறித்து 1908 மே மாதம் 13ம் தேதி தமிழனில் சுதேசி போலிகளை எதிர்த்து எழுதி, அவர்களது சுயராஜ்ஜிய கோரிக்கைகள் ஏற்கப்படாது என்றும், தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பதை விளக்கி

"அவர்கள் சீர்மையிலிருந்து விட்டிருக்கும் கவுன்சில் மெம்பர்கள் என்னும் (நீராஸ்திரமானது) யூரேஷியர்கள், மகமதியர்கள், நேட்டிவ் கிறிஸ்தவர்கள், சாதிபேதமில்லா திராவிடர்கள் இந்நான்கு கூட்டத்தாரை மனதையுங் குளிரவைத்து மறுபடியும் சீர்மைக்கு போயிருக்கிறது. அத்தகைய விவேகமிகுந்த நீராஸ்த்திரத்தால் குளிர்ந்துள்ள யூரேஷியர், மகமதியர், நேட்டிவ் கிறித்தவர், சாதி பேதமில்லா திராவிடர்களாகியப் பெருங் கூட்டத்தார் முன்பு உங்கள் அக்கினியாஸ்திரம் வீசுமோ, உங்கள் சுதேசியம் எனும் வார்த்தை நிலைக்குமோ ஒரு காலுமில்லை." (1:50)

பண்டிதரின் இந்த கருத்தின்படி, அன்றைக்கு சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணைகள் நம்பிக்கை யூட்டக் கூடியதாகவே இருந்தது.

இந்த சூழலில் சீர்த்திருத்த கருத்துக்களில் தாக்கம் பெற்று பரோடா அரசர் கெய்க்வாட் தம்முடைய சமஸ்தானத்தில் தீண்டத்தகாத மக்களில் படித்த மாணவர்களுக்கு உபகார சம்பளம், பணிகளில் சில ஒதுக்கீடு என்ற நடைமுறையை கொண்டு வந்தார். இந்த முயற்சியை பாராட்டி பண்டிதர் 1908, ஜூலை மாதம் 6ம் நாள் இதழில் கவிதையையும் ஒரு குறிப்பும் எழுதினார்.

எனவே பண்டிதர் தம்முடைய இடஒதுக்கீடு குறித்த கருத்தில் தெளிவாகவும், அதே நேரம் அக்கருத்துக்கு ஆதரவான சூழல் எங்கு நில வினாலும் அதை ஆதரிக்கவும் செய்தார். இக்காலகட்டத்தில் சமூக அரசியல் நிலைமை தீவிரம் அடைந்து கொண்டிருந்தது. மார்லியவர் களின் திட்டத்தை வெளிப்படையாக அறிந்து கொள்ள எல்லோரும் ஆவ லாய் இருந்தார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் நிறைந்த சூழலில், தேசிய தொழில் நிதிய கூட்டமைப்பு (National Industrial fund Assn) அமைப்பிடமிருந்து 1908, செப்டம்பர் 24ம் தேதி மூன்று கடிதங்கள் பண்டிதருக்கு வந்தது. அக்கடிதத்தில்

"வருகிற தீபாவளியன்று சகலரிடத்திலும் பணம் வசூல் செய்து மேற்கண்டபடி பண்டில் சேர்த்து கைத்தொழில்களை விருத்தி செய்ய வேண்டுமென்றும் அதில் இராயப்பேட்டை கிளையோராக நின்று பணம் சேகரிப்பதற்கு

ம - அ - அ -ஸ்ரீ

ஜி. நாராயண செட்டிகாரு

எஸ். கஸ்துரி ரங்க ஐயங்காரவர்கள், பி.ஏ.பி.எல்,,

ஏ. அரங்கசாமி ஐயங்கார். பி.ஏ.

க. அயோத்திதாசர் அவர்கள்

வி. திருவேங்கடாச்சாரியவர்கள் . பி.ஏ, பிஎல் (1:78)

ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவிற்கு உள்ள கடமைகளும் விளக்கப்பட்டிருந்தன. கடிதத்தின் கோரிக்கைகளைப் பற்றி விரிவாக அலச சாதி பேதமற்ற திராவிட மகாஜன சபையின் முக்கிய அங்கத்தினர்கள் கூட்டப்பட்டு கடிதம் அவர்கள் முன் வைக்கப்பட்டு தீர ஆலோசனை செய்தார் பண்டிதர்.

அந்த ஆலோசனையில் உறுதி செய்யப்பட்ட விவரங்களை பண்டிதர் குறிப்பிட்டார். அதில்

அந்த இஸ்டஸ்ட்ரியல் பண்டு நிறுவனத்தில் - அச்சங்க உத்யோகத்தில்

பிராமணர்கள் 14 பேர்

செட்டியார் 1 நபர்

முதலியார் 1 நபர்

மகமதியர் 1 நபர்

நாயுடு 3 பேர்

என பலர் சமூகத்தவர்களின் பிரதிநிதித்துவம் இருந்தது. இதில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் விலகி விட்டால் அந்த சங்கம் பிராமணர்கள் சங்கமாகவே எஞ்சிவிடும். எனவே தன்னுடைய இட ஒதுக் கீட்டு திட்டத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அதில்,

ஐயா,

தங்களுடைய கூட்டத்தார் விஷயமாக அந்தரங்கத்தில் பெருந்தொகையார் ஆலோசனையும், பகிரங்கத்தில் சிறுந் தொகையார் ஆட்சேபனையும் இருக்கிறது.

1. ஆட்சேபணை;

இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் பெருந்தொகை பிராமணர் களாய் இருப்பதினாலேயாம்.

இக்கூட்டம் எப்போது நாஷனாலாக ஏற்பட்டதோ அதன் அங்கங்களும் அப்படியாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது, பிரசிடெண்டுகளில்

பிராமணர் 1 நபர்

யுரேஷியர் 1 நபர்

மகமதியர் 1 நபர்

இருந்து காரியங்களை சமயம்போல் நடத்தி வரவேண்டியது. செக்ரட்டரிகளிலும், டிரஷரர்களிலும் (Secretary, Treasures)

பிராமணர் 1 நபர்

நான் பிராமின் 1 நபர்

மகமதியர் 1 நபர்

ஆக மூன்றுபேர் பொக்கிஷம் வைக்கவும், வாங்கவும் இருத்தல் வேண்டியது. டைரக்டர்களில் :

பிராமணர் 4 பேர்

யுரேஷியர் 4 பேர்

நான் பிராமின் 4 பேர்

மகமதியர்கள் 4 பேர்

சாதிபேதமற்ற திராவிடர் 4 பேர்

என இருத்தல் வேண்டும். மேலும்,

- அந்தந்த வகுப்பாருள் நான்கு பிள்ளைகளை அவரவர்கள் கற்கக்கூடிய வித்தைகளை கற்பிக்க பண உதவி செய்ய வேண்டியது.

- கற்றுக் கொள்ளும் பிள்ளைகளில் யாதொரு பேதமில்லாமல் தொழில் அளித்து வேலைகள் கொடுத்து சீவிக்க செய்ய வேண்டியது.

- தீபாவளிக்கு முன்பே இத்தகையக் கூட்டத்தாரை பயிரங்கத்தில் நியமித்து நோட்டீசுகள் அச்சிட்டு வெளியிடுவீர்களானால் எங்களால் கூடிய முயற்சிகளை நாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடும். (I-79)

என பண்டிதர் முன்வைத்த இந்த விகித்தாச்சார திட்டத்திற்கு அந்த நிறுவனத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனினும் இந்த திட்டத்தில் மூன்று விஷயங்களை பண்டிதர் தெளிவாக்கியுள்ளார். அவை

விகிதாச்சார இடஒதுக்கீடு

உபகார சம்பளம் (Scholarships)

படிப்பிற்கேற்ற வேலை

எனவே விகிதாச்சார உரிமை எனும் இடஒதுக்கீட்டின் முழுவடிவம் பண்டிதரால் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. மேலும், அரசியல் தளத்தில் இதை பொருத்தி பார்ப்பதற்கான சந்தர்ப்பம் விரைவிலேயே வாய்த்தது. அதற்கு முன்பு கவர்னர் அவர்களிடம் அளித்த மனுமீது நடைபெற்ற விசாரணையின் விளைவாக நல்ல செய்தியொன்று கிடைத்தது. அது என்ன செய்தி?

கௌதம சன்னா / 34

5 இந்து - முஸ்லீம்

ஒற்றுமை எனும்...

மிண்டோ - மார்லி சீர்த்திருத்த நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது பிரிட்டிஷ் சக்ரவர்த்தி ஏழாவது எட்வர்ட் அவர்கள் இந்திய மன்னர்களுக்கும், பிரிட்டிஷ் இந்திய குடிகளுக்கும் வைஸ்ராய் மூலம் கடிதம் அனுப்பினார். கடிதத்தின் செய்திகள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டதில், அக்கடிதத்தின் எட்டாவது, ஒன்பதாவது வசனங்கள் 1: 114) தாழ்த்தப்பட்டோரிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது.

பண்டிதர் சாதிபேதமற்ற திராவிட மகாஜனசபை மூலம் கோரிக்கை அனுப்பியதின் விளைவுகள் அவை என்று விளக்கினார். அம்மனுவை அளித்ததினால் இரண்டு நன்மைகள் கிடைக்கும் என்று உறுதியளிக்கப் பட்டிருந்தது.

1. உத்யோக பீட சாதிபேத இடுக்கங்கள் மெல்ல நீங்கும்.

2.இவ்வெழிய குலத்தோருக்காகும் மைனர் நியமனம் ஆறு பேரிருக்கும் ( 1 ; 14) (Members will appointed to the Assembly)

என்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக (ஆக்கியாபித்து) பண்டிதர் அறிவித்தார். (இதன்படி அரசு கொள்கையளவில் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் இதே அளவுப் பிரதிநிதித்துவம் தான் 1916-21 சீர்திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டது.)

எனினும் அனைத்து சமூகங்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டபோதும், அருண்டேல் கமிட்டியின் பரிந்துரைகளில் தாக்கம் பெற்று மார்லி பிரபு தன்னுடைய முதற்கட்ட ஆலோசனையை முன் வைத்தார். வைஸ்ராய் மிண்டோவிற்கு 1908ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளிட்ட கடிதத்தில் அவரின் ஆலோசனைகள் இருந்தன அதில்.

ஒரு மாகாணத்தின் மக்கள் தொகை 2 கோடி எனில் அதில் இந்துக்கள் மற்றும் முகமதியர்கள் முறையே 15 மற்றும் 0.5 கோடி என இருப்பின், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகக்கொள்ளப்படுகிறது. இதில் இந்துக்களும் முகமதியர்களும் 3 : 1 என்ற விகிதத்தில் இருப்பதால் 9 இந்துக்களும் 3 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடைய மாகாணத்தை 3 தேர்தல் பகுதிகளாக, அதில் இந்துக்கள் 3 பேர் முகமதியர் 1 நபர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேர்தல் தொகுதி (Electoral college) அமைக்கப்பட்டு உத்தேசமாக 100 உறுப்பினர்கள் எனக் கொள்வோம். இதன்படி 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இதில் வாக்களிக்கும் வாக்காளர்கள்

அ) நிலச்சுவான்தாரர்கள், குறிப்பிட்டத்தொகையை அரசுக்கு நிலவரியாக செலுத்த வேண்டும்

ஆ) கிராம அல்லது துணை நிலை அமைப்புகள் (Rural or Sub divisional board)

இ)மாவட்ட சமை உறுப்பினர்கள் (District Board members)

ஈ) முனிசிபல் கார்ப்ரேஷன் ஆகியோராவர்.

இதில் இவர்கள் மூலமாகவே 75 இந்துக்களும் 25 முகமதியர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருவேளை 25க்கும் கீழான முகமதியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மீதமுள்ளவர்கள் நியமனத்தின் மூலம் நிரப்பப்படுவார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 75, 25 இந்து மற்றும் முசல்மான்கள் 3 இந்து மற்றும் 1 முகமதியரை உறுப்பினர்களாக தெரிவு செய்வார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் 1 வாக்கு வீதமும், அதில் அவர்கள் ஒரே ஒருவரை மட்டும் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும். இதன் மூலமாக ஒவ்வொரு பிரிவினரும் மக்கள் தொகை அடிப்படையில் தேவையான பிரதிநிதித்துவம் அளிப்பது உறுதி செய்டப்படுகிறது". (2005;181)

மார்லியின் இந்த திட்டம் வெளிப்படுத்தும் சங்கதி ஐரோப்பிய பாணியிலான புரிதலைச் சார்ந்தது. ஏனெனில் மதரீதியான இனப் பிரச்சினையே ஐரோப்பியரின் பல நூற்றாண்டு பிரச்சினையாக இருந்தது எனவே மார்லியின் திட்டம் இந்து முஸ்லீம் பிரதிநிதித்துவம் என்பதாக வெளிப்பட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல எனினும் அவரது திட்டத்தில் உள்ள அரசியல் முக்கியத்துவம் என்னவெனில் தேர்தல் முறையானது கூட்டுவாக்காளர் முறை (loint electorate) படிதான். எனவே முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்துக்களின் தயவு தேவைப்பட்டது. இந்த சந்தேகம் மார்லிக்கே இருந்ததால் முஸ்லீம்களுக்கு நியமன முறையையும் சேர்த்தே பரிந்துரை செய்தார்.

எனவே, மார்லியின் கருத்துக்கள் வெளியானவுடன் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் களைகட்டிவிட்டன. மார்லியின் ஆலோசனைகளை முழு வதுமாக மிண்டோவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்றாலும், அதைப் பற்றின கருத்துப் பரிமற்றங்கள் நடந்தன. தன்னுடைய இந்த புது முயற்சியானது உள்ளூர் சுய அரசுக்கான திசையை நோக்கிய தாக்கமுள்ள முன்முயற்சியாக இருக்கும் என ஆலோசனை சொன்னார் மார்லி. இப்படி வாதப் - பிரதிவாதங்கள் நடந்த போதுதான் 17.12.1908 அன்று லண்டனி லுள்ள பிரபுக்கள் அவையில் அதை மசோதாவாக முன்வைத்தார். அவை யில் முன்வைத்தவுடன் பலத்த எதிர்ப்பு எழுந்தது. சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் ஏற்பாடு உச்சகட்ட அரசியல் வெப்பத்தை கிளப்பி விட்டது. பிரிட்டிஷ் அரசு, இந்திய வைஸ்ராய் மற்றும் முகமதியர் களுக்கு மார்லியின் திட்டம் ஒரு புதினத்தை போலவும், குழப்பமான தாகவும் தோன்றியது. 1906ல் முஸ்லிம்கள் கேட்டது போல தனிப் பிரதி நிதித்துவம் கொடுக்கப் படுவதைவிட மார்லியின் திட்டம் தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகவும் கருதப்பட்டது. மேலும் மார்லி முன் வைத்த தேர்தல்முறையானது நடைமுறை சாத்தியமற்றது என்று வைஸ்ராய் மிண்டோ கருதினார்.

மார்லியினை கண்டித்தும் அவரது நிலைபாடு குறித்தும் விமர்ச்சித்து பலவாறாக பத்திரிக்கைகள் எழுதின. சாதி இந்து பத்திரிக்கைகளின் நிலைபாட்டையும், அது தொடர்புடையவர்களின் விமர்சனத்தையும் பண்டிதர் கண்டித்தார். 30.12.1908 தமிழன் இதழில்

"சொந்த மக்களிடையே சீர்திருத்தம் பற்றி பேச முடியாதவர்கள், ஆட்சியாளர்கள் செய்யும் சீர்திருத்தத்தை பற்றி பேசுவது வீணானது" என பதிலடி தந்தார்.

"ஆங்கிலேயர்களே இத்தேசத்திலிருந்து இராட்சிய பாரஞ் செய்வார்களாயின் சகல குடிகளும் சுகம் பெற வாழலாம் என்பார் பல வகுப்பார். இவற்றுள் ஒருவர் வாக்கு செல்லுமா, பலர் வாக்கு செல்லுமா என்பதை பகுத்தறிய வேண்டியதே பதமன்றி ஒருவெரண்ணத்தில் மற்றவரைக் கிணங்கச் செய்தல் இழிவேயாகும்"(1:93) என்று எழுதினார். மார்லியின் யோசனைகள் மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும், முஸ்லீம்களும், தலித்துகளும் நம்பிக்கையோடி ருந்தனர். ஆனால் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது உறுதியாகி விட்டதுபோல் தெரிந்தது.

1908 ஆண்டு தேசிய காங்கிரஸ் மார்லியின் திட்டங்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தாலும், திலக் தலைமையிலான குழுவினர் இதை கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பிற்கு ஆதரவாகவே பார்ப்பன - பனியா இதழ்கள் எழுதிக் கொண்டிருந்தன. எனினும் நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முஸ்லிம் மற்றும் லீக் கடுமையாக முயற்சி செய்தனர்.

ஜனவரியில், முஸ்லீம் பிரதிநிதிகள் நேரடியாக மார்லியை லண்டனில் சந்தித்து தங்களுக்கு கூட்டு வாக்காளர் முறை வேண்டாமென்றும் தனி வாக்காளர் முறை மட்டுமே தேவையென்று வலியுறுத்தினர்.

முஸ்லீம் லீக் - காங்கிரஸ் இரண்டும் தத்தமது கோரிக்கைகளில் உறுதியாக இருந்து அதை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முடுக்கிக் கொண்டு வந்த அதே நேரத்தில் அவை தலித் மக்களைப் பற்றியோ பிற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியோ வழக்கம் போல எந்த கவலையும் படவில்லை, அந்த இரு இயக்கங்களின் நடுத்தர வர்க்கத்து தலைவர்கள் எல்லா வழிகளையும் கையாண்டார்கள், காங்கிரஸ் மாநாடு கூட்டி தமது ஆதரவை தெரிவித்ததென்றால், பதிலுக்கு முஸ்லீம்களும் அரசை ஆதரித்தார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பத்வாவை (புனிதப்போர்) அறிவித்தார்கள்.

ஹக்கிம் ரஸி-உத்-தின் மற்றும் மெளல்வி அப்துல் ஹக் (டெல்லி) ஆகியோர் பிரிட்டிஷ் அரசை ஆதரித்து பத்வாவை தயாரித்து அனைத்து மெளல்விகளுக்கும் அனுப்ப ஏறக்குறைய எல்லா மெளல்விக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பத்வாவில்.

- அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்டித்தும், இஸ்லாமியர்கள் அந்த போராட்டங்களிலிருந்து விலகியும் இருக்கிறார்கள்.

இஸ்லாம் இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல, கிறித்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் உள்ள ஒட்டுறவை கோருகிறது.

உலமாவாகிய நாங்கள், நம்முடைய மதத்தின் கோட்பாடுகளைபோலக் கருதி இந்த அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அரசுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப் போம் என எங்கள் முத்திரையை இட்டு கையொப்பம் இடுகிறோம்” (P. Sing - 27)

இந்த பத்வாவின் அறிக்கை பஞ்சாப் அரசு மூலம் வைஸ்ராய் மிண்டோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே இந்து காங்கிரஸ் - முஸ்லீம் லீக் ஆகியோரின் கோரிக்கைகளை அரசும் மார்லியும் கவனமுடன் பரிசீலித்தனர்.

ஆனால் தாழ்த்தப்பட்டோர்களைப் பொறுத்தவரையில் இவ்வளவு வீச்சாக தம்முடைய எதிர்வினைகளை காட்டும் நிலையிலில்லை. ஏனெனில் காங்கிரஸ் மற்றும் லீக் கை வழி நடத்தியவர்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர். அதனால் அவர்களது குரல் எளிதில் அம்பலமேறியது. ஆனால் தலித்துகளைப் பொறுத்தவரையில் இப்பயொரு வளமான பொருளாதாரப் பின்னணி இல்லை. எனவே எல்லாவற்றிற்கும் அவர்கள் தம்மையே சார்ந்திருக்க வேண்டும். எனினும் அவர்களும் கடுமையாகவே உழைத்திருந்தார்கள், அது மட்டுமின்றி அரசர் ஏழாவது எட்வர்ட் எழுதிய கடிதம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கையளித்தது. அரசரின் கடிதத்தின் மீதான நம்பிக்கையை பண்டிதர் வெளிப்படுத்தி யிருந்தார்.

சூழல் நெருக்கடியாக இருந்ததை தலித்துகள் உணர்ந்தனர். மார்லியின் முடிவு 17.12.1908 அன்று பிரபுக்கள் அவையில் வைத்த அறிக்கையிலேயே அநேகமாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்படியான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்.

எனவே இதில் தலித்துகள் தனித்து விடப்பட்டனர். பண்டிதர் முனைப்பு காட்டி மார்லியின் திட்டம் குறித்து தமது கருத்தை முன் வைத்தார். அக்கருத்து இந்திய சூழலுக்குப் புதிது மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்கால கருத்தாகவும் அது நிலைத்து விட்டது. மார்லியின் கருத்துப்படி இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் உண்டு, இதை சாதி இந்துக்கள் எதிர்கொண்ட விதமோ விபரீதமாயிருந்தது. அவர்கள் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் அல்ல என்று மறுப்பு கூறி, இந்தியர்களுக்கும் இசுலாமியருக்கும் மனஸ்தாபம் உண்டாகுமென எழுதினார்கள்: இந்த கருத்தை மறுத்தும், தன் திட்டத்தை முன்வைத்தும் 1909ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் தமிழன் இதழில் பண்டிதர் எழுதினார்.

"அதாவது இந்தியர்களென்றும், மகமதியர்கள் என்றும் பிரிவினையாக கூறுவதால் பேதமுண்டாயதேயன்றி அவர்களையும் இந்தியர்கள் என்றே கூறுவோமாயின் பேதந் தோன்றவாம்.

ஏனெனில் இத்தேசத்தில் வந்து குடியேறிய வேஷ பிராமணர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளும்போது இத்தேசத்தை சிற்சில இடங்களில் அரசாண்ட மகமதியர்களை ஏன் இந்தியரென சொல்லக்கூடாது. எனவே அவர்களும் ஒர் வகையாய் இந்தியர்களே, மகமதியர்களை இந்தியர்கள் என்று கூற கூடாது என்றால் வைணவர், சைவர், வேதாந்திகள் என்னும் மூவருக்கும் இந்தியரென்னும் பெயர் பொருந்தாது. பெளத்த மார்க்கத்தார் ஒருவருக்கே இந்திய ரென்னும் பெயர் பொருந்தும்.

ஐந்திரியங்களை வென்ற புத்த பிரான் இந்திரன் என அழைக்கப்பட்டதையொட்டி, அவரை பின்பற்றியவர்கள் இந்தியர் என்றும், அவர்கள் வாழும் தேசம் இந்திய தேசமென்றும் அழைக்கப்பட்டது. இந்த இந்தியர் எனும் பெயரை சகல மதத்தவரும் ஏற்றுக்கொள்ளும்போது மகமதியர் ஏன் இந்தியர் என சொல்லக் கூடாது

- என்று தன்னுடைய எடுப்பான வல்லிய மறுப்பினை கூறிய பண்டிதர் தன்னுடைய விகிதாச்சார திட்டத்தை தொடர்ந்து முன் வைத்தார். அது எப்படிப்பட்ட திட்டம்...

6

இடஒதுக்கீடு எனும்

சமூகநீதிக் கொள்கை முகிழ்த்தது

மார்லியவர்கள் பிரதிநிதித்துவ ஏற்பாட்டை ஏற்றுக் கொள் வதால் கனம் கவர்னர் அவர்கள் அந்த ஏற்பாட்டை கீழ் வரும் இடங்களிலும் நிறைவேற்ற வேண்டும்: அவை -

ராஜாங்க ஆலோசனை சங்கங்கள், (Legislatives)

முனிசிபல் சங்கங்கள், (Municipalities)

இராஜாங்க உத்யோக சாலைகள், (Govtoffices)

இராணுவ வகுப்பு (Defence departments)

வைத்திய இலாக்காக்கள் (Health departments)

போலிஸ் இலாக்காக்கள்(Police departments)

இரயில்வே இலாக்காக்கள் (Railway departments)

கல்வி இலாக்காக்கள் (Educational Departments)

அந்தந்த இலாக்காவின் மொத்த தொகைபடிக்கு இவ்வகுப்பார் பிரிவினைபடி சேர்த்து விடுவார்களானால் சகல சாதியாரும் சீரும் சிறப்பும் அடைவார்கள்.

இந்த விகிதாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் பின்வரும் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் 100 பேரை நியமிப்பதானால்

சாதி பேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் 25 பேர் 25%

சாதிபேதமுள்ள இந்தியர்கள் 25 பேர் 25%

மகமதியர்கள் 25 பேர் 25%

யூரேஷியர் 13 பேர் 13%

இந்திய கிறித்தவர் (Native christian) 12 பேர் 12%

மொத்தம் 100 100%

இந்த ஆலோசனைகள் நிறைவேற்றுவதானால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள் என்று பண்டிதர் குறிப்பிட்டதுடன்

இராஜாங்க உத்தியோக சாலைகளிலும் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று அரசு அலுவல்களில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார், மேலும், முக்கியமாக:

இராஜங்க எக்ஸிகூட்டிவ் மெம்பர் (Executive council member) ஒருவரை தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டுமாயின்

ஆண்டுக்கு ஒருவரைத்தான் நியமிக்க வேண்டும்.

அந்த நியமனமும்

திபேதமற்ற திராவிடர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

சாதி பேதமுள்ள இந்தியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

மகமதியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

யுரேஷியர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

இந்திய கிறித்தவர் ஒருவரை ஓர் ஆண்டுக்கும்

என முறையாக நியமித்து காரியங்களை நடத்த வேண்டும். இந்த நியமனம் சுழற்சி முறையானது என்பது சொல்லாமலே விளங்கும்.

பண்டிதர் தன் திட்டத்தை வெளியிட்டவுடன் கடும் எதிர்ப்பு சாதி இந்துக்களிடமும், பிறரிடமும் உருவானது. தன்னுடைய திட்டத்தை பண்டிதர் மாற்றியமைக்கும்படி அந்த எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. அதுவும் ஒரு வாரத்திலேயே தன் ஆலோசனைகளை மாற்றியமைக்கும்படி அது இருந்தது. அதைப் பற்றி பண்டிதர் கூறும்போது

"நமது பத்திரிக்கையில் சென்றவாரம் எழுதியுள்ள ஆலோசனை சங்கத்தோர் தொகை நியமனத்தைப் பற்றி சில இந்துக்கள் விரோத சிந்தையால் துரற்றியதாகக் கேள்வியுற்று மிக்க விசனிக்கிறோம்."

சாதி வித்தியாசப் பிரிவினைகளும், சமய வித்தியாசப் பிரி வினைகளும் நிறைந்த இத்தேசத்தில் எடுத்த காரியத்தை ஒற்றுமையில் நடத்துவது மிக்க கஷ்டமேயாகும்." (1:06)

என்று தன் வருத்தத்தை கூறி பின் தன்னுடைய மாற்று ஆலோசனையை முன்வைத்தார்:

ஆலோசனை சங்கத்திற்கு 100 பேரை நியமிப்பதானால்

சாதிபேதமுள்ள இந்தியர் 20 பேர் 20%

சாதிபேதமில்லா பூர்வபெளத்தர் எனும் சாதிபேதமில்லா திராவிடர்

20 பேர் 20%

மகமதியர் 20 பேர் 20%

யூரேஷியர் 20 பேர் 20%

இந்திய கிறித்தவர் 20 பேர் 20%

மொத்தம் 100 பேர் 100%

இப்படி நியமிப்பதானால் சகல குடிகளும் சுகம் பெறு வார்கள். மேலும் கமிஷன் நியமனத்தில் தெரிந்தெடுக்கும் கலாசாலைக்கு 500 பேரை நியமிப்பதானால் கீழ்கண்ட வகையில் நியமனம் இருக்க வேண்டும்.

சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள் (சாதி பேதமில்லா திராவிடர்கள்)

100 பேர் 20%

சாதிபேதமுள்ள இந்துக்கள் 100 பேர் 20%

மகமதியர் 100 பேர் 20%

யுரேஷியர் 100 பேர் 20%

இந்திய கிறித்தவர் 100 பேர் 20%

மொத்தம் 500 பேர் 100%

இப்படி நியமிக்கப்படுபவர்கள் எப்படி தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பண்டிதர் தெளிவுபடுத்தினார். அதன்படி,

அந்தந்த வகுப்பார் நூறு பேரு தங்களுக்குள் உள்ள விவேகிகளைத் தெரிந்தெடுத்து ஆலோசனைகளை சங்கத்திற்கும் அனுப்புவார்கள் அதனால்,

இந்துக்கள் சம்பந்த நியமனத்திற்கு மகமதியர் பிரவேசிக்க மாட்டார்கள்.

மகமதியர் சம்பந்த நியமனத்திற்கு இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள் நியமன சம்மதத்தில் சாதி பேதமுள்ள இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

எனவே காரியாதிகள் அந்தந்த வகுப்பார் பிரியசித்தம் போல் நிறைவேறிவரும் சகல ஏழை குடிகளும் இடுக்கமில்லா சுக வாழ்க்கைகளை அடைவார்கள். (1:107)

பண்டிதரின் இந்த கருத்துக்கள் வெளிவந்து அதன் மீதான கருத்துகளும் சமூகத்தில் விவாதிக்கப்பட்டது. இருந்தபோதும், மார்லி தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருந்தார். அவரது திட்டங்கள் பலத்த எதிர்ப்புக்குள்ளாகிய நிலையில் இந்திய கவுன்சில் மசோதாவை 1909 ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாள் பிரபுக்கள் அவையில் முன் வைத்தார் மார்லி. தொடர்ந்து அதன் மீதான இரண்டாம் கட்ட விவாதத்திற்காக பிப்ரவரி 23ம் நாள் வைத்தார். தொடர்ந்து அந்த மசோதா பிப்ரவரி 24ம் நாள் நாடாளுமன்ற குழு விவாதத்திற்கு அனுப்பி அங்கும் மார்ச் 4, 9 ஆகிய நாட்களில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் மார்லி பிரபுக்களை தன் கருத்துக்கு இணங்க வைக்க செய்த முயற்சிக்கு கர்சன் பிரபு கடுமையாக சாடிப் பேசி மசோதாவை கடுமையாகக் குறை கூறி பேசியதோடு சபையின் கணிசமான ஆதரவை தம் பக்கம் ஈர்த்துக் கொண்டார். எனவே மசோதா கடுமையான எதிர்ப்பில் அவையில் இருந்தது.

இப்படி மசோதாவானது மார்லியின் திட்டப்படியே முன் வைக்கப் பட்டதானது முஸ்லிம் மற்றும் பிற பிரிவுகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. மார்லியை ஆதரித்து எழுதிவந்த பண்டிதர் தனது தொனியை மாற்றி எழுதினார். 1909 மார்ச் 3ம் நாள் தமிழனில் எழுதும் போது:

ஏழாவது எட்வர்ட் அவர்கள் அனைத்து சாதியினருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனால் மார்லியவர்கள் அரசரின் ஆலோசனையை முற்றும் கவனிக்காத போக்காக இருக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் நில்லாமல்,

"சக்ரவர்த்தியார் கருணை நிறைந்த அமுதவாக்கை லார்ட் மார்லியவர்கள் கவனியாமல் இந்து தேசத்திலிருந்து கமிஷன் விஷயமாக பல வகுப்பார் அனுப்பியிருக்கும் விண்ணப்பங்களை கருணை கொண்டு ஆலோசியாமலும், தனது விசாரணைக் கெட் டிய வரையில் இந்து தேசத்தில் வாசஞ் செய்பவர்கள் யாவரையும் இந்துக்கள் என்ற எண்ணம் கொண்டு நூதன சட்டங்களை நிரு பிக்க ஆரம்பித்துக் கொண்டார். அத்தகைய எண்ணம் கொண் டவர் இந்து தேசத்தில் வாசஞ் செய்யும் மகமதியர்களையும் இந்துக் களாக பாவிக்காது மகமதியர்கள் வேறு இந்துக்கள் வேறு என்று பிரிக்க ஆரம்பித்துக் கொண்டார். ஆனால் இந்துக்களுள் இடி பட்டு நசிந்து வரும் முக்கிய வகுப்பாரை கவனித்தாரில்லை. லார்ட் மார்லியவர்கள் இந்து தேசத்துள் வந்து இந்துக்களுடன் பழகி ஒவ்வொரு வகுப்பர்களின் குணா குணங்களையும் நன்கு ஆராய்ந்தி ருப்பாராயின் சாதிபேதம், சமயபேதம் பாஷைபேதம், குண பேதம் நிறைந்துள்ள இந்துக்களை பேதமற்றவர்கள் போலெண்ணி இந்துக்களில் ஒருவரை எக்சிகூட்டிவ் மெம்பரில் சேர்க்கலாம் என்னும் அவசர வாக்களித்திருக்கமாட்டார்.

ஈதன்றி கமிஷனென்று வெளிவந்த சட்டத்தை கொண்ட - எண்ணப்படி குறிப்பிடாமல் சாதிபேதம் நிறைந்துள்ளவர்கள் வசம் எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமிக்குஞ் சட்டத்தை ஆலோசித்தபடியால் இந்தியர்களின் குணாகுணங்களை அறிந்தோர்களும் பார்லிமெண்ட் மெம்பர்களும் ஆகிய கனவான்கள் தற்கால பார்லிமெண்டில் லார்ட் மார்லியவர்களின் ஆலோசனைகளுக்கு மறுப்பு கூறும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். (1:106)

மேலும், மார்லியின் திட்டத்தை காங்கிரஸ் ஆதரித்து வந்தது. ஏனெனில் இந்துக்களின் தயவில் முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்ததை அது புரிந்து கொண்டு அது அதை ஆதரித்தது. ஆனால் காட்சி கள் வேகவேகமாக மாறத் தொடங்கின.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கீழவையிலும் (House of Common) மசோதா பலத்த எதிர்பிற்குள்ளாகி அம் மசோதாவின் அடிப்படையே திருத்தப்பட்டது. மார்லியின் திட்டம் தேர்தல் முறையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு, விவாதத்தில் இருந்தது. இந்த இடைபட்ட காலத்தில் பண்டிதர் தன்னுடைய முயற்சிகளை கைவிடவில்லை. தமிழனில் தொடர்ந்து எழுதுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியும் இந்துக்களின் அதிகார மோகத்தை தாக்கியும் வந்தார். இந்துக்களுக்கு உயர் அதிகாரப் பதவிகளைக் கொடுப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் கருதினார்.

"மார்லி கருத்துப்படி நிர்வாகக் குழுவில் இந்தியரை சேர்க்கும் திட்டம் பற்றி ஒரு முப்பது அல்லது முன்னுறு பேருக்குத் தான் தெரியும் மீதமுள்ள முப்பது கோடி பேருக்கு அதன் பொருளே விளங்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீ என்ன சாதி? அவனென்ன சாதி? நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி என்பவைகள் தான் அவர்களுக்கு தெரியும். அதுவும் கற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிராமணர்களுக்கு அந்த பதவியை கொடுக்கலாம் என இடைநிலை சாதிகள் சொல்லுவதை சாதி பேதமற்ற திராவிடர்களும், சுதேச கிறித்துவர்களும், மகமதியர்களும், யுரேஷியர்களும் சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அந்த பதவியில் அமரும் பிராமணரால் சாதி நிலைப்பதுமின்றி அவனது சாதியே அவனது ஆச்சாரமே வாழும்"

என்று தன்னுடைய கடுமையான எதிர்ப்பைபண்டிதர் கூறிவந்தார்.(1:109)

பண்டிதரின் எதிர்ப்பிற்கு இந்த அம்சம் மட்டுமே காரணமில்லை அதை விடவும் முக்கியமான மக்கள் தொகை அடிப்படையிலான அரசி யல் பிரச்சினை காரணமாய் இருந்தது. ஏனெனில் சாதி இந்துக்கள் இந்துக் கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தலித்துகளையும் சேர்த்து தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்க விழையும் மோசடியினால் கொதிப்படைந்தார்.

"இந்துக்களோ இத்தேசத்தில் முக்கால் பாகம் இருக்கிறோமென்றும் சகலரையும் பொதுவாக இந்துக்களென்றே கொள்ள வேண்டியதென்றும் சம்யுக்த வார்த்தையாடி வருகிறார்கள்" (1:111)

"சாதிபேதமுள்ள இந்துக்களென்னும் பிராமண மதஸ்தர்களுக்கும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பெளத்த மதஸ்தர்களுக்கும் யாதொரு சம்பந்தம் கிடையாது (1:111)

என்று தம்முடைய எதிர்ப்பை கூறியதுடன் தென்னகத்தில் அறுபது லட்சம் சாதிபேதமற்ற திராவிடர்களும் இந்தியா முழுக்க ஆறு கோடி பேராக இருப்பதுடன் மக்கள் தொகையில் ஐந்து பாகத்தில் ஒரு பாகமாக சாதிபேதமற்ற திராவிடர்களாம் பூர்வ பெளத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு பிரத்தியோகமான நியமனம் (Separate Representation) இருக்க வேண்டும் (1:111) என்று தன்னுடைய ஆலோசனையை சொன்னார்.

மார்லியின் சீர்திருத்த நடவடிக்கையின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் கோரும் இந்த கோரிக்கை முதன் முறையாக வெளிப்பட்டதுடன், அதை தொடர்ந்து வளப்படுத்தும் விதமாகவும் எழுதி வந்தார்.

மேலும் இந்துக்களின் ஒற்றை அடையாள மோசடியை அம்பலப் படுத்துவதோடு நில்லாமல், அதுவரை தான் முன் வைத்த சாதிபேதமற்ற திராவிடர்கள், இந்துக்கள், இந்திய கிறித்துவர், யுரேஷியர், மகமதியர், என்ற பிரிவுகளுக்கு மட்டுமின்றி பாரசீகர் (பார்சி) சீக்கியர் ஆகியோ ருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இராஜாங்க உத்யோக சாலை களில் இவ்வகுப்பாருக்கு அவர்களின் தொகைக்கு தக்கவாறு இடம் ஒதுக்குவதுடன், அரசின் அந்தஸ்தான உத்யோகங்களை சாதிபேதம், சமய பேதம் அற்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். (1:112) என்று கோரினார்.

பண்டிதரின் கருத்துபடி அனைத்து மதத்தவருக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்வைப்பு அதுவரை இருந்து வந்த முன்வைப்புகளிலிருந்து புதியதொரு அடியை எடுத்து வைத்தது. இந்த நேர்மையான முன்வைப்புகளுக்கு பிறரிடமிருந்து என்னவிதமான எதிர் வினைகள் என்பது குறித்து போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. எனி னும் பின்வந்த காலங்களில் பண்டிதரின் இந்த வரையறுப்பு படிதான் நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படி பண்டிதரின் பணிகள் வேகம் பிடித்திருந்த காலத்திலே தாழ்த்தப்பட்டோரின் பிற அமைப்புகளும் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை செய்து வந்தன. இந்நிலையில் மார்லியின் அரசியல் சீர்திருத்தத்தில் பறையர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமென ரெட்டமலை சீனிவாசன் தொடங்கியிருந்த பறையர் மகாஜன சபையின் அங்கத்தினர்கள் தம்முடைய கோரிக்கைகளை எழுதி மனுவாக கவர்னருக்கும், இங்கிலாந்திலுள்ள அரசருக்கும், மார்லிக்கும் அனுப்பியிருந்தார்கள். இந்த செய்கை பண்டிதருக்கு மிகுந்த மனகஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. ஏனெனில் திராவிட மகாஜன சபை மூலம் கொடுத்த மனு மீதான விசாரணை நிலுவையிலிருந்து அதன்மீது சாதகமான பதிலை அரசர் தெரிவித்திருப்பது நடந்துள்ள நிலையில் இந்த மனுவானது தாழ்த்தப்பட்டோருக்குள் ஒற்றுமையில்லை என்பதாக தோற்றமளிக்கும் என கருதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

"வீணே ஏழை குடிகளுக்குள் பிரிவினை உண்டு படுத்துவதுடன் இராஜாங்கத்தோடும் தங்கள் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பும் வழியைத் தேடிக் கொள்ளாதிருக்க வேண்டுகிறோம்.

சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சபையோர் அனுப்பி யுள்ள விண்ணப்பத்தால் உண்டாவதும், உண்டாகப் போவதுமாகிய சுக பலன்களை தெரிந்துக் கொள்ள வேண்டியவர்கள். 1908 நவம்பர் 4ம் நாள் அரசர் ஏழாவது எட்வர்ட் இந்திய மன்னர் களுக்கு எழுதிய கடிதத்தில் எட்டாவது, ஒன்பதாவது வசனங்களைப் பாருங்கள் (1:ll4)

இந்த வேண்டுகோளை 1909ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் தமிழனில் எழுதினார். ஆனால் இதழ் வெளிவருவதற்குள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காட்சிகள் மாறியிருந்தன. மக்களவையில் விவாதங்கள் முடிந்து மார்லி முன்வைத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு 1909 மே மாதம் 25ம் நாள் மசோதா சட்டமாக சட்டமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. சட்டத்தில் முக்கியமான அம்சங்கள் வருமாறு:

கவுன்சில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தேர்தல் முறை ஏற்றுக் கொள்ளப்படும்.

வகுப்புகளின் நலன் கருதி தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் மற்றும் தனி தொகுதி முறை (Seperate Representation and Seperate Electorate) வழங்கப்படும்.

இந்த அம்சங்களை உள்ளடக்கிய மசோதாநிறைவேறி சட்டமாக்கப்பட்ட பிறகு விதிகள் வகுக்கப்படவும், அது அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இடைப்பட்ட கால அவகாசம் இருந்தது. எனினும் இந்த தகவல் இந்தியாவிற்கு வந்து சேர்வதற்கு வழக்கமான கால அவகாசம்தான் பிடித்தது.

தகவல் முழுதும் வந்து சேர்ந்தவுடன் பழைய காட்சிகள் மறைந்து தலைகீழான காட்சிகள் தோன்றின. முதலில் மார்லியின் தொடக்க திட்டத்தை காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அமைப்புகளும் எதிர்த்தன. ஆனால் இந்த முறை முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தவிர மற்ற அனைவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் தனது முயற்சியில் வெற்றிபெற்றனர். ஆனால் காங்கிரஸ் தோற்றதாக பொருளில்லை. ஏனெனில் பொதுப் போட்டிகளில் உயர்சாதி வர்க்கம்தான் நிரம்பி இருந்தது. இந்த பொது அதிகார பிரிவினையில் முஸ்லீம்கள் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டது உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை. எனவே எதிர்ப்புகள் கடுமையாக வெளிப்பட்டன.

இந்நிலையில் தலித் மக்களின் முன்னோடித் தலைவரான பண்டிதர் நடைமுறை பொருத்தத்தோடு இப்பிரச்சினையை அணுகினார். முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதை வரவேற்றார். அத்துடன் நில்லாமல் காங்கிரசாரின் மாய்மாலங்களுக்கு மயங்காமல் தம்முடைய உரிமையை விட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லீம்களுக்கு ஆலோசனையும் சொன்னார்.

மார்லியவர்களின் நடவடிக்கைகள் யாவும் இந்தியாவிலிருந்து மிண்டோ அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைகளாலும், லண்டனில் அவரை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்களான சுரேந்திர நாத் பானர்ஜி, கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் மற்றும் இசுலாமிய தலைவர்கள் ஆகியோரினால் சித்தரிக்கப்பட்ட சித்திரத்தாலேதான் பெரும்பாலும் உருவானது. அவர் இந்தியாவிற்கு வந்து எந்த நேரடி சாட்சியமும், விசாரணையும் செய்யாமல் தனது திட்டத்தை முன்வைத்து, அது பல மாற்றங்களுக்கிடையில் சட்டமாக்கப் பட்டது. மார்லியின் இந்த நடவடிக்கையின் மூலம் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கிடைத்தது போலவே, அரசு உயர் பதவிகளில் இந்தியர் களை நியமிக்கும் முடிவை அவர் எடுத்திருந்தார். இந்த தகவல் பண்டித ருக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியதால் தனது எதிர்ப்பை காட்டி னார். 1909 ஜூன் 30ம் நாள் தமிழனில் .

இத்யாதி வித்யாசங்களையும் இந்துக்களின் குணா குணங் களையும் நன்காராய்ந்து அறியாத லார்ட் மார்லியவர்கள் இந்துக்களுக்கு பெருத்த உத்யோகங்களை அளிக்கலாமென்றாலோசிப்பது உள்ள ஏழை குடிகள் ஒருவரையுந் தலையெடுக்க விடாமல் நசித்துவிட்டு சாதித் தலைவர்களை மட்டும் சுகமடையச் செய்வதற்கேயாம். ஆதலின் நமது பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோச னையதிபர்கள் இந்திய குடிகளை இடுக்கத்திற்கு ஆளாக்காமல் காக்க வேண்டியதவர்கள் கடனாகும் (1:158)

"இத்தகைய உத்தேசம் அவர் இந்தியாவை வந்து பாராததிரையும், இந்துக்களுடன் பழகாத குறையுமேயாம்

கண்டும் பழகியும் இருப்பாராயின் அப்பா! அப்பா!! இந்துக்களுக்கும் அந்தஸ்தான உத்யோகங்களுங் கொடுக்கப்போமோ வென்று குப்புறப் படுத்துக் கொள்ளுவார். காணாதவரும், பழகா தவரும் ஆதலின் அவர் கருத்துக்கள் யாவும் விருத்தமாக விளங்குகிறது.

ஒரு ஆபிஸில் பெரிய உத்யோகஸ்தர் ஒரு ஐயங்கார் சேர்வாராயின் ஐந்து வருஷத்துள் அவ்வாபிசிலுள்ள முதலி, செட்டி, நாயுடு மற்றுமுள்ளவர்கள் எல்லாம் மறைந்து போய் எல்லாம் ஐயங்காரர்கள் மயமாகவே தோன்றுவதியல்பாம்.

அங்ஙனமிருக்க நமது கனம் தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து தேச நிலைகளையும், கிராம நிலைகளையும் கண்டவருமன்று, பெரியசாதி சின்னசாதி எனும் குடிகளுடன் பழகியவருமன்று.

மார்லியவர்கள் ஏற்பாடு எந்தவிதத்திலும் இந்துக்களைத் திருப்தி செய்யவில்லை சட்டசபைகளில் 75% இடம் கிடைக்குமென நம்பியிருந்தவர்களுக்கு அரசு பணிகள் மட்டுமே கிடைப்பது அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சுய ராஜ்ஜிய கோரிக்கையை உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே 1907ம் ஆண்டு சூரத்தில் நடந்த காங்கிரசில் மிதவாதிகளுக்கும் - அமித வாதிகளுக்கும் கலகமுண்டாகி காங்கிரஸ் இரண்டு பிரிவாக பிரிந்து விட்டதுடன் தொடர்ந்து அமிதவாதிகளின் செல்வாக்கு ஓங்கி வந்தது. இடையில் மிண்டோ - மார்லி சீர்திருத்த நடவடிக்கைகளில் எல்லோர் கவனமும் இருந்தது மட்டுமின்றி எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் லண்டனில் நிறைவேறிய மசோதாவானது இந்துக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு வழங்காததால் - எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த எதிர்ப்பு வட்டம் வளர்வது சமூகத்திற்கு ஆபத்தானது என்று பண்டிதர் கருதினார். எனவே அவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்க வேண்டுமென கோரியதுடன்

"வங்காள கவுன்சிலில் ஒர் மிலிட்டரி அதிபதியை நியமிப்பதுடன், சென்னை, பம்பாய் ராஜதானி கவுன்சில்களிலும் ஒவ்வோர் மிலிட்டரி அதிபதிகளை நியமித்து ஆலோசினை சங்கங்களை வலுச் செய்ய வேண்டும்.

ஈதன்றி ஒவ்வோர் ராஜதானியிலும் பிரிகடியர் ஜெனரல்களும் ஜெனரல்களும் அவர்களுக்குப் போதுமான இராணுவ வீரர்களும் இருக்க வேண்டும்.

நூறு குடிகளைக் கெடுத்து தாங்கள் ஒரு குடி சுகமடையக்கோறும் சாதித் தலைவர்களின் கொடியச் செயல்களை அடக்கியாளுவதற்கு அறக் கருணையாம் செங்கோலுதவாது, மறக்கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித் திருந்தே தீரல் வேண்டும்." (1.1.59)

இந்துக்களின் மீதான எதிர்ப்பில் பண்டிதர் தீவிரமாக இருந்ததற்கு காரணத்தை விளக்கத் தேவையில்லை. இந்திய தேசிய போராட்ட வரலாற்றை உள்ளபடியே அறிந்த யாவரும் பண்டிதரின் கருத்துக்களுடன் உடன் படாமலிருக்க முடியாது. பண்டிதரின் எதிர்ப்புகளுக்கு அவரின் விகிதாச்சார கொள்கையும், சமூகநீதி கொள்கையும்தான் அடிப்படையானவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே பண்டிதர் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து விசாரிணை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்ததோடு இட ஒதுக்கீடு கோரிக்கையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

லண்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய பிறகு எதிர்ப்புகளை கணக்கில் கொண்ட அரசாங்கம், இனி இந்துக்கள் எனும் ஒற்றைப் பிரிவை ஏற்றுக் கொள்வதில்லை என முடிவு செய்து சகல பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதென முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பானது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமுள்ளது என்பது குறித்த வரலாற்று குறிப்புகள் தமிழனில் மட்டுமே கிடைக்கிறது. அரசின் இந்த அறிவிப்பை பண்டிதர் வரவேற்றார். 1909 ஜூலை 28ம் நாள் தமிழன் இதழில்.

கருணைதங்கிய ராஜாங்கத்தார் இந்தியர்களென்று பொதுவாக காரியாதிகளை நடத்தவிடாமல் அவர்கள் எவ்வகையாகப் பிரித்துக் கொண்டு போகின்றார்களோ அது போலவே இராஜாங்க ஆலோசனைச் சங்கத்திலும், சாதிப் பிரிவு, மதப்பிரிவு, பாஷைப் பிரிவு முதலியவைகளில் பெருந்தொகையாய் உள்ளவர்களுக்குத் தக்கவாறு ஒவ்வொருவரை நியமித்து அவரவர்களுக்குள்ள குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சகல சாதியோடும் சகல மதஸ்தரும், சகல பாஷைக்காரர்களும் சமரச சுகம் அனுப விக்கும் படியான பேரானந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்...

ஆதலின் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் எடுத்த நோக்கத்தை சோர்வடையாமல் நடத்தி சகல சாதியோரிலும் பெருந்தொகையினராயிருந்து பலவகைக் கஷ்டங்களை அனுபவித்து வரும் ஏழைக் குடிகளை சகலரைப் போலும் சுகமடையுஞ் சட்ட திட்டங்களை முன்னுக்குக் கொண்டு வருவார் களென்று நம்புகிறோம் (1:165)

என்று சகல மதசாதியரின் பிரதிநிதித்துவத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்த்தார். அதுவுமின்றி மாகாண சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டிய முறை குறித்தும் தனது கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்தியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை கூடாது என்பது பண்டிதரின் கொள்கையாக இருந்தது. ஏனெனில் கூட்டு வாக்களிப்பு முறையானது மீண்டும் இந்துக்களுக்கே வாய்ப்பளித்து விடும் என்பது பண்டிதரின் உறுதியான கருத்து. முனிசிபாலிட்டி (Municipality) தேர்தல் களில் நடக்கும் ஊழலை சுட்டிக்காட்டி

"ஒட்டு வாங்குவதற்கு இவ்வளவு பெரிய ஐயர் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறது. இவ்வளவு பெரிய முதலியார் வந்தால் எப்படி மாட்டேனென்று சொல்லுகிறதெனப் பேசிக் கொண்டே கோச்சு வண்டியிலேறிக் கொண்டு ஒட்டு வாங்கிக் கொள்ளுகின்றவர்கள் எவ்வகை எழுதிப் பெட்டியிற் போடும்படிச் சொல்லுகின்றார்களோ அம்மேறையே நடந்து வருவது இக்குடிகளின் அநுபவமாயிருக்கிறது.

இத்தகையாய் முனிசிபல் கமிஷனர் நியமனங்களே இன்ன வையாயது, யாதென்று அறியாதப் பெருந்தொகைக் குடிகளுக்கு சட்ட நிருபண சங்க நியமனம் யாது விளங்கி அங்கங்களை நியமிக் கப்போகின்றார்கள். குடிகளே நியமிப்பார்களென்பது வீண் முயற்சியேயாகும்.

சட்ட நிரூபண சபைக்கு குடிகளே அங்கங்களை நியமிப்பதைப் பார்க்கிலும் கருணைத் தங்கிய கவர்ன்மெண்டாரே ஒவ்வோர் அங்கங்களையுந் தெரிந்தெடுத்து சங்கத்திற்கு சேர்த்து விடுவது அழகாகும். (1:179)

பண்டிதரின் இந்த யோசனைக்கு அவர் கண்ணாரக் கண்டு வந்த முனிசிபாலிட்டி தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகள் மட்டும் காரணமில்லை. பணம் படைத்த உயர்சாதியினர் அந்த பதவிகளில் உட்கார்ந்து கொள்வதில் மூலம் சகல மக்களின் குரலை ஒலிக்க விடாமல் இருப்பதுதான். எனவே அந்தந்த சமூகங்களில் உள்ள படித்த கனவான் களை நியமிப்பதனால் அச்சமூகத்தின் கஷ்டத்தை உணர்ந்த அவர்கள் மூலம் மக்கள் குரல் சபையேறும் என கருதியதால்தான் இந்த திட்டத்தை முன்வைக்கிறார். எனினும் இந்த கருத்தில் பின்னாளில் அவருக்குள் மாற்றம் நிகழ்ந்தது.

இக்காலகட்டத்தில், மிண்டோ - மார்லியின் திட்டங்களினால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இசுலாமியருக்கு தனி பிரதி நிதித்துவமும், தனி வாக்காளர் முறையும் அளிக்கப்பட்டதால் இந்துக்கள் முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டதாக இந்துககள் கூச்சல் போட்டு அத்திட்டத்தை கைவிடும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இந்திய வரலாற்றை எழுதும் பல வரலாற்றாசிரியர்கள் இத்திட்டம்தான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கி நிலைபடுத்திய பிசாசு (evil) என வர்ணிக்கிறார்கள்.

இந்த பிரிவினை கூச்சல்களை பண்டிதர் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, அதை சொல்லக்கூடிய தகுதி இந்துக்களுக்கு கிடையாது. என்றும், மாறாக இந்துக்களுக்குள் உள்ள சாதியாச்சார பிரிவினைகள் துவேஷங்களாய் வெளிபடும் அவலங்களை சுட்டிக்காட்டினார்.

"பிச்சைக் கொடுப்பதில் தங்கள் சாதியோரை மட்டிலும் பார்த்து பிச்சைக் கொடுப்போர் வசம் இராஜாங்கப் பார்வை யையுங் கிஞ்சித்து விட்டுவிடுவார்களாயின் யாருக்கு சுகமளித்து யாரைப் பாழாக்கி விடுவார்கள் என்பதற்கு சாட்சியம் வேண்டுமோ

வேண்டுவதில்லை. ஆதலின், கருணை தங்கிய இராஜாங்கத்தார் தாங்கள் ஏற்படுத்தும் ஆலோசினை சங்கத்தில் சகல சாதியோர்களையும் சேர்த்து அவரவர் குறைகளை தேற விசாரித்து தேச சீர்திருத்தம் செய்வதே சிறப்பாகும்" (1:183)

என்று 1909, செப்டம்பர் 15ம் நாள் தமிழன் இதழில் எழுதினார். பண்டிதர் தமது அடிப்படைக் கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்துக் கொண்டும், அதற்கு எதிரான கருத்துக்களை எதிர்த்துக் கொண்டும் வந்தார். இந்த நிலையில்தான் 1909ம் ஆண்டு நவம்பர் 15ம் நாள் லண்டனில் மிண்டோ - மார்லியின் அரசியல் சீர்திருத்த "இந்திய கவுன்சில் சட்டம் 1909ன் விதிகள் வெளியானது. இதில் அச்சீர் திருத்தத்தின் முழு வடிவமும் விளக்கப்பட்டது. அத்திட்டத்தின் படி :

மாகாண சட்ட சபைகள் விரிவுபடுத்தப்படும்.

கவர்னர் ஜெனரல் கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக

இருக்கும்.

இராஜாங்க சட்டசபை (imperial council)க்கு 37 அதிகாரிகள்

உறுப்பினர்களும், 23 அதிகாரிகள் அல்லாதவர்களும் நியமிக்கப்படுவார்கள். இதில் 37 அதிகாரிகளில் 28 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் முன்னாள் அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் (Ex.officio)

எனப்படுபவர்கள் இவர்களில்

கவர்னர் ஜெனரல் 1 நபர்

சாதாரண உறுப்பினர்கள் 6 பேர்

சிறப்பு உறுப்பினர்கள் 2 பேர்

என இருப்பார்கள்.

மேலும் அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில் 23 பேரில் 5 பேரை கவர்னர் ஜெனரல் நியமிப்பார். மீதமுள்ளவர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையில்

மொத்த உறுப்பினர்கள் 47 பேர்

1. அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் 21 பேர்

முன்னாள் அதிகாரிகள் மட்ட

உறுப்பினர்களில் (Ex-officio members)

கவர்னர் 1 நபர்

நிர்வாக குழு உறுப்பினர்களில் 3 பேர்

தலைமை வழக்கறிஞர் 1 நபர்

மீதமுள்ளவர்கள் 16 பேர்

இவர்களை கவர்னர் நியமிப்பார்.

2. அதிகாரிகள் அல்லாத உறுப்பினர்களில்,

கவர்னரால் நியமிக்கப்படுபவர்கள் 5 பேர்

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 21 பேர்

3. இப்படி தேர்ந்தெடுக்கப்படும் 21 உறுப்பினர்கள்

கீழ்கண்டவாறு இருப்பார்கள்.

முகமதியர்கள் 2 பேர்

ஜமீன்தார்கள் 2 பேர்

நிலப்பிரபுக்கள் 3 பேர்

தோட்ட வகுப்பினர் 1 நபர்

சென்னை மாநகராட்சியிலிருந்து 1 நபர்

மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸில் 1 நபர்

மெட்ராஸ் வணிகர்கள் முனைவோர்

கூட்டமைப்பின் மூலம் 1 நபர்

முனிசிபல், மாவட்ட மற்றும் தாலுகா

போர்டுகளின் மூலம் 19 பேர்

என்ற பிரிவுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்தல் முறையானது நிலப்பரப்பு அடிப்படையில் அல்லாமல், வகுப்புகளின் நலனை அடிப்படையாகக் கொண்டி ருக்கும். பல்வேறு வகுப்புகள், வர்க்கங்களுக்கு தனி வாக்காளர் தொகுதி (Separate electorate) அல்லது சிறப்பு வாக்களர் தொகுதி (Special electorate) அடிப்படையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப் படுவார்கள்.

மீதமுள்ளவை பொதுத் தொகுதிகள் (General Electorate) என அழைக்கப்படும். (1983:280)

இந்த திட்டம் தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் என்றும், இந்திய கவுன்சில் சட்டம் 1909 என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை முஸ்லிம் லீக் தவிர பிறர் அனைவரும் எதிர்த்தார்கள். காங்கிரஸில் கோகலே இதை வரவேற்றார். பிரதிநிதித்துவ அரசியலில் மாபெரும் முன்னேற்றம் என்று அவர் வர்ணித்தார் (2006:188)

இத்திட்டம் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பாளர்களின் அப்பட்டமான சாதி உணர்வை, அதிகார வெறியை வெளிச்சம் போட்டு காட்டியது. சாதி இந்து பத்திரிக்கைகள் தமது வெறுப்பை காட்டியதை பற்றி மிக காட்டமாக பதில்களை பண்டிதர் எழுதினார். வங்காள இதழொன்றுக்கு அப்படியான ஒரு பதிலை அளித்தார். நவம்பர் 24, 1909 தமிழன் இதழில்

"இந்தியர்களுக்கு தற்காலம் கொடுத்துள்ள கெளன்சல் மெம்பரை யாங்கள் கேட்கவில்லை. ஐரோப்பியர்கள் இந்தியர்களை சமமாக நடத்தாமல் அதிகேவலமாக நடத்துகிறார்களே அதை நீக்கும் படி கேட்டுள்ளோம்.

அவற்றை இராஜாங்கத்தோர் சீர்திருத்தாது கெளன்சல் மெம்பரை அதிகப்படுத்தினாலும் படுத்திக் கொள்ளட்டும். இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கிறீர். அவ்வகை சமரசங்கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும் பறையனென்றும் வகுத்துள்ள பொய் சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. பார்ப்பானென்பவனும் இந்து தேச மனித வகுப்பைச் சார்ந்தவன், பறையனென்பவனும் இந்துதேச மனித வகுப்பைச் சார்ந்தவன். இவ்விருவரும் ஒரு தேசக் குடிகளாக இருந்துக் கொண்டு ஒருவர் சுகமடைவதுப் போல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலுந் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும், வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ? (1:207)

பண்டிதர் தன் கருத்துக்களை முன் வைத்து வந்ததானது பெருத்த எதிர்ப்பை சம்பாதித்து கொண்டது. ஏற்கெனவே தேர்தல் முறை வேண்டாமென்றும், சகல சாதியாருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கோரியது கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகி இருந்தது. எனினும் தன் கருத்தில் பண்டிதர் உறுதியாக இருந்தார். இதற்கு பதில ளித்து 1909 டிசம்பர் 29ம் நாள் தமிழனில்

"சென்னை ராஜதானியில் ஐயர், முதலி, ராவ், செட்டி நாயுடு, பிள்ளை, நாயர், ரெட்டி எனும் வகுப்பாருள் ஒவ்வொரு வகுப்பினருள்ளும் நன்கு வாசித்தவர்களும், பட்டாதாரர்களும், பெருந்தொகையான வரி செலுத்துபவர்களும் இருக்கின்றபடியால் அந்தந்த வகுப்பாருள் விவேக மிகுந்த பெரியோர்களை கண்டெடுத்து கவுன்சில் மெம்பரிற் சேர்ப்பது சகல வகுப்பாருக்கும் சுகத்தை விளைவிப்பதுமன்றி அந்தந்த வகுப்பார்களுக்கு நேரிட்டுள்ள குறைகளையும் அகற்றி வாழ்வதற்கு ஆதாரமென்றுங் கூறியிருந்தோம்.

அவற்றை கண்ணுற்ற சுயப்பிரயோசன சோம்பேறிகள் அத்தகைய வகுப்பைப் பிரித்து ஒட்டு கொடுக்கப் படாதென்றும், சில மூடர்கள் அவ்வகையான அபிப்பிராயங் கொடுக்கின்றார்கள்.

இவ்வகை பிரிக்கலாகாதென்று கூறுவோர் பிரிக்கத்தக்க தொடர் மொழிகளாகும் ஐயர், முதலி செட்டி, நாயுடு, நாயர் என்னும் ஈற்றிலுள்ள சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு முத்துசாமி இராமசாமி, கோவிந்தன், கோபாலனென வழங்கி வருவாராயின் பிரிவினையாக்கும் யாதோர் வகுப்பும் இல்லையெனக் கருதி சகலரையும் இந்தியரென்றே கூறலாம்." (1:219)

இப்படி இந்துக்களை எதிர்த்ததோடு, தன் திட்டங்களுக்கு ஜனநாயகத் தன்மை வழங்கும் முயற்சியில் அணியமாக்கும் திட்டத்தில் மேலும் கூடுதலாக ஜைனர்களை சேர்த்தார். அவர்கள் அதுவரையில் அரசியல் கோரிக்கை ஏதும் முன் வைக்காமலிருந்ததை பண்டிதர் சுட்டிக் காட்டி அதே நாளிட்ட இதழில் எழுதினார்.

"இத்யாதி கவுன்சில் கூச்சலில் நமது ஜைன மத சோதிரர்கள் வெளித்தோன்றாமலிருப்பது மிக்க விசனமே. இத்தென்னிந்தியாவில் பூஸ்தியுள்ளவர்கள் அனந்தம் (நிறைய) பேரிருக்கின் றார்கள். கல்வியில் பி.ஏ. எம்.ஏ. முதலிய கெளரதா பட்டம் பெற்றுமிருக்கிறார்கள். இவர்களுக்குள் யாரையேனும் தெரிந்தெடுத்து கவுன்சில் மெம்பரில் சேர்த்து விடுவார்களாயின் அக்கூட்டத்தாருக்குள்ளக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகம் பெறச் செய்வார்கள். ஆதலின் ஜைன சோதிரர்கள் உடனே வெளி வந்து தங்களுக்குள் ஒர் பிரதிநிதியை கவுன்சிலுக்கு அனுப்புவார்களென்று நம்புகிறோம் (l:219)

பண்டிதரின் திட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மதத்தவருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை முழுமையடைந்தது. அவரது கருத்துக்களில் துல்லியத்தன்மை மிளிந்தாலும், அதை மேலும் மேலும் வளப்படுத்தினார்.

மிண்டோ - மார்லி திட்டம் வெளியாகி அதன்மீதான வாதப் பிரதி வாதங்கள் நடந்து வந்த நிலையில் 1910 ஜனவரி முதல் வாரத்தில் லாகூரில் காங்கிரசின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மீது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டது. காங்கிரசைப் பொருத்தவரையில் மிண்டோ - மார்லி திட்டத்தில் பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்ட பிரிவினரைவிட முஸ்லீம்களுக்கு கொடுக்கப் பட்டதுதான் கண்டனத்திற்குள்ளானது. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பெரிய ஒர் மதில் சுவரை பிரிட்டிஷ் அரசு எழுப்பி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் அவ்வாறு கவலைப் படுமளவிற்கு காங்கிரஸ் நேர்மையான அமைப்பா? என பண்டிதர் கருதினார்.

"கவுன்சிலர் நியமனத்தை இந்தியருக்கென்று பொதுவான உத்திரவு கொடுத்திருப்பார்களாயின் அந்தக் கவுன்சிலில் மகமதியர்களையே சேர்த்திருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

தற்காலம் சென்னை ராஜதானியில் சேர்த்திருக்கும் கவுன்சில் மெம்பர்கள் 47 பெயர்களில் மகமதியர்களை 23 பேர்களையேனும் சேர்த்துவிட்டார்களா? இல்லையே! 47 மெம்பர்களில் மகமதியர் இரண்டு பேரைத்தானே நியமித்திருக்கிறார்கள். இவ்விரண்டு பேர் நியமனத்தில் இவ்வளவு மனஞ்சகியாத காங்கிரஸ் கூட்டத்தார் இன்னும் 4 மகமதியர்களை சேர்த்துவிட்டால் என்ன கூச்சலிடு வார்களோ தெரியவில்லை. மகமதியர்க்கு மட்டும் 16 பெயருக்கு ஒருவரிருக்கிறாரென்று கணக்கெடுத்து பேசியவர் தாங்கள் எவ்வளவு பெயர் இருக்கிறோமென்று கணக்கெடுக்கவில்லை போலும்" (1:219-20) முஸ்லீம்களுக்கான ஆதரவை மட்டும் இதில் பண்டிதர் முன் வைக்கவில்லை. அதே கண்டன பத்தியில்

"காங்கிரஸ் கூடும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு கனந்தங்கிய பரோடா ராஜனவர்கள் தீண்டப்படாதென்னும் ஆறுகோடி மக்கள் படும் அவமதிப்பையும், அவர்கள் முன்னேற வழியில்லா இடுக்கங்களையும் எடுத்தோதி முன்பு இவர்களை சீர் திருத்தும் வழிகளைத் தேடுங்கோளென்று கூறியுள்ளவற்றை தங்கள் காங்கிரஸ் கூட்டத்தில் எடுத்துப் பேசி ஆறுகோடி மக்களின் அல்லலை நீக்கும் வழி தேடியிருப்பார்கள்.

அத்தகைய பொதுநலமற்று சுயநலங் கருதுவோர்களாதலின் ஆறுகோடி ஏழைகளின் அவமதிப்பைக் கருதாது தங்கள் சுகங்களை மட்டும் மேலெனக் கருதி, மகமதியருக்கு கொடுத்துள்ள இரண்டு பேர் சுதந்திரத்தையும் மனஞ்சகியாது வீணே கூச்சலிட்டிருக்கிறார்கள்" (1:220)

பண்டிதர் தன் எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் தீவிரமாக முன்னிருத்திக் கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கில் புது மாறுதல் உண்டாகி இருந்தது. ஏற்கெனவே மிண்டோ - மார்லி திட்டப்படி வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை விரிவாக்கும் நோக்கில் யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவரும் 1910 ஜனவரியில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இந்த பிரதிநிதித்துவம் நியமன அடிப்படையில் இருந்தது. இந்த நிகழ்ச்சி பண்டிதரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி போலத் தெரிந்தது. எனவே அவர் அதை வரவேற்றார். 1910 ஜனவரி 12ம் நாள் தமிழன் இதழில்,

"சென்னை ராஜதானியில் தற்காலம் ஆரம்பித்திருக்கும் ஆலோசினை சங்கத்தில் மகமதியருக்குள்ளும், இந்துக்களுக்குள்ளும் அங்கங்களை நியமித்ததுமின்றி யுரேஷியருக்குள் ஒருவரையும், சுதேச கிறித்தவருக்குள் ஒருவரையும் நியமித்துள்ளது கண்டு மிக்க ஆனந்தித்தோம் (1 :221)

யுரேஷியருக்கும், இந்திய கிறித்தவருக்கும் தம்முடைய ஆதரவை தெரிவித்ததுமில்லாமல், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தம்முடைய கோரிக்கையையும் அதில் சேர்த்து வலியுறுத்தினார். அதில்,

சில இங்கிலீஷ் துரைகளினால் சிலர் (தலித்) முன்னுக்கு வந்திருந்தார்கள். இப்போதும் சிலர் (தலித்) போதுமான கல்வி யடைந்து சில உத்யோகங்களில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை தெரிந்தெடுக்கும் எண்ணம் கவர்ன்மெண்டாருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களுடைய பெயர்களையுங் கொடுப்போம். அப்படி கொடுக்கும்படியான பெயர்கள் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வதுமின்றி, எவ்விதமாக பேச வேண்டும் என்னும் பகுத்தறிவும் இருக்குமென்பதற்கு யாதொரு ஆட்சேபணையுமில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியில் ஜாதிபேதமற்ற திராவிடர்கள் அநேகமாக இருக்கிறபடியால் அவர்களுக்குள்ளக் குறைகளை சங்கத்தில் விளக்குவதற்கு அவர்களுடைய மரபிலேயே ஒரு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மெம்பர் இருக்க வேண்டியது அவசியமென்பது நமது கருத்து.

இந்த விஷயத்தைப் பற்றி 1908ம் வருடம் கவர்னர்வர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் எலக் ஷன் சிஷ்டத்தைப் பற்றி அதிகமான விளம்பரமிருந்தபடியால் இக்குலத்தாரைப் பற்றி பேசுவதற்கு ஒரு யூரோப்பியன் அல்லது யுரோஷிய கணவானை நியமனம் செய்யும்படி கேட்டுக் கெள்ளப் பட்டது.

இப்போது கவர்னர்கள் யுரேஷியன் வகுப்பையும், இந்தியன் கிறிஸ்டியன் வகுப்பையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அக்கூட்டத்தார்களில் இருவரை நாமிநேட் செய்திருக்கிறதாகத் தெரிகிறபடியால் இக்குலத்திலிருந்தும் ஒருவரை நாமினேட் பண்ணுவதில் மற்ற இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும் யாதொரு ஆட்சேபனை செய்வதற்கு இடமில்லையென்பது நம்முடைய பூர்த்தியான அபிப்பிராயமானபடியால் நமது கவர்னர் கனந்தங்கிய ஸ்ர் ஆர்த்தர் லாலி அவர்கள் அன்பு கூர்ந்து ஏழை குடிகளிலிருந்து ஒருவரை நாமிநேட் செய்வாரென்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை" (1:222)

கவுன்சில் நியமனங்களில் கல்வி கற்றவர்களையே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை சாதி இந்துக்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இப்படி முன்வைப்பதற்கு காரணமிருந்தது. தீண்டத்தகாத மக்களில் எம்.ஏ. பி.ஏ. பட்டம் பெற்றவருள் குறைவு எனவே இக்கோரிக்கையின் மூலம் அவர்களை விலக்கி வைக்க முடியும் என அவர்கள் கருதினார். இந்த போக்கை கடுமையாக எதிர்த்து பி.ஏ. எம்.ஏ பட்டம் பெற்றவர்கள் சுயசாதி அபிமானிகளாகவும், தம் குடும்பத்தையும், தன்சாதியையும் மட்டுமே கம்பெனிக்கு சுய நலவாதிகளாக இருக்கிறார்கள் எனவே இது போன்ற தகுதிகளை முன்வைக்காமல், அந்தந்த சாதிகளில் எவர் திறமையானவர் - ஒழுக்கமுள்ளவர் என்பவரை கண்டெடுத்து ஆலோசினை சங்கத்திற்சேர்க்க வேண்டும் (1:224) என பண்டிதர் பதிலடித் தந்தார்.

அதே நேரத்தில் தலித்தல்லாதவர்களில் உள்ள நேர்மையான சக்திகள் என்று தான் கருதியவர்களுக்கு தமது ஆதரவை பண்டிதர் எப்போதும் வெளிபடுத்தி வந்தார். பரோடா ராஜா கெய்க்வாட், சர்வ சாலை இராமசாமி முதலியார், டி.எம். நாயர், பொப்பிலி அரசர் ஆகியோர் மீது உயர்ந்த அபிப்ராயத்தை பண்டிதர் வைத்திருந்தது மட்டுமின்றி, அவர்கள் சட்டசபையிலும், நிர்வாக குழுவிலும் நியமிக்கப் பட்ட போது அதைப் பெரிதும் வரவேற்று எழுதினார். இப்படி தன் கருத்துக்களை வெளிப்படுத்துயதின் மூலம் தலித்தல்லாத பிற சமூக மக்களில் முற் போக்கு சிந்தனையுள்ளவர்களில் கணிசமானவர்கள் ஆதரவு அவருக்கு இருந்ததை தமிழன் இதழைப் புரட்டும் யாவருக்கும் புலப்படும்.

பண்டிதரின் பணிகள் முன்னேற்றமான திசையில் நகர்ந்த நிலையில் அவரது கோரிக்கைகளில் சில மட்டுமே அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவ கோரிக்கை மட்டுமே நிலுவையிலிருந்தது. எனவே அவர் தம் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 1910 சூலைமாதக் கடைசியில் இந்திய கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபுவும், சென்னை மாகாண ஆளுநராயிருந்த ஆர்த்தர் லாலி பிரபுவும் தம் பதவிகாலம் முடிந்து இங்கிலாந்து போவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அவர்கள் பதவிக்கு மற்றவர் வரும்வரை அவர்கள் இருக்க வேண்டிய நிலையில் அப்போதும் தம் கோரிக்கைகளை நினைவுபடுத்த மறக்கவில்லை.

"ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக தாழ்ந்த சாதியர்களாக நசுக்கப்பட்டு வந்த பூர்வ சாதி பேதமற்ற திராவிடக் குடிகள்மீது கிருபா நோக்கம் வைத்து தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் முன்னுக்கு வந்து விவேக மிகுந்தவர்களா யிருப்பவர்களிற் சிலரைக் கண்டெடுத்து லெஜிஸ்லேட்டிவ் சங்கத்தில் சேர்த்துவிட்டு போய்விடுவார்களாயின் ஆயிர வருடகாலம் அல்லலடைந்திருந்த அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட குடிகளை அல்லலிருந்து ஆதரித்து முன்னேறச் செய்தவர்கள் கவர்னர் ஜெனரல் மின்டோ பிரபுவும், கவர்னர் ஆர்த்தர் லாலி பிரபுவுமென்றே இந்திர தேசப் பூர்வகுடிகள் கொண்டாடுவர்" (1:268)

என தம் ஆதங்கத்தை வெளியிட்டார். ஆனால் இருவருமே தமக்கு வந்த மனுவின் மீது விசாரணை செய்துவிட்டு அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மிண்டோவிற்கு பிறகு ஆர்டிஞ்ச் பிரபு இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என பண்டிதர் எதிர் பார்த்து தமது வேண்டுகோளை பத்திரிக்கை மூலம் வெளியிட்டு வந்தார் (9.11.1910)

இக்காலகட்டத்தில் பண்டிதர் இடஒதுக்கீட்டினை நிரப்ப வேண்டிய துறைகளாக அரசுப்பணி, கல்வி, மாகாண சட்டசபை, மற்றும் நிலம், இந்த நான்கு அம்சம் தான் பிரதானமானது. என வலியுறுத்தி வந்ததோடு, நிலத்தை எப்படி பங்கிட வேண்டும் என்பது குறித்து அவர் கூடுதல் கவனத்தை செலுத்த முனைந்தார்.

1890களிலிருந்து பண்டிதர் அரசியல் செயல் திட்டத்தில் நிலம் பெறுவதும் இருந்து வந்தது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். நிலம் வைத்துக் கொண்டு உழைக்காமல் வீணாக சோம்பித் திரியும் சாதி இந்துக்களுக்கு நிலத்தைக் கொடுக்காமல், உழைக்கும் ஏழைக் குடிகளுக்கு நிலத்தை கொடுப்பதின் மூலம் விவசாயத்தை பெருக்கி வளமாக்க முடியும் என்பது பண்டிதர் யோசனை. (1910 அக்டோபர் 19) இந்து கருத்துக்களை விளக்கும் முத்தாய்ப்பை இன்னொரு தருணத்தில் வரிசைப்படுத்தினார். 16-ஜனவரி 19llம் நாள் தமிழனில்;

"வாசித்து பட்டம் பெற்றவர்களுக்கே இராஜாங்க உத்யோகங் கொடுக்கப் படுமென்னும் நிபந்தனையால் தேசத்திற்கு கால்பாக சுகமும், முக்கால்பாக துக்கமுண்டாகின்றபடியால் அத்தகைய நிபந்தனைகளை அகற்றி கருணை நிறைந்த ஆளுகைக்குட்பட்ட சகல குடிகளும் சுகம்பெற வேண்டுமென்பதையே நாடியுள்ளோமாதலின் வித்யா விஷயத்திலும், விவசாய விஷயத்திலும், வியாபார விஷயத்திலும், இராஜாங்க உத்யோக விஷயத்திலும் சமரச பாதை அளிப்பதே ஆனந்தமாகும் (2:319)

என விளக்கினார். பண்டிதரின் கோரிக்கைகளும் செயல்பாடுகளும் மெச்சத் தகுந்த அளவில் நடந்து வந்த போதிலும் அரசிடமிருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு சாதகமான பதில்களைப் பெற முடியவில்லை, இந்நிலையில் 1912ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் சட்டசபையில் சில மாறுதல்கள் வரும் என பரவலான பேச்சிருந்தது. அதேவேளை சட்டசபையில் உறுப்பினர்களாயிருந்தவர்களைப் பற்றின அதிருப்தியும் உருவாகியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த ஆலோசனையை தம் கொள்கைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டிதர் முனைந்தார். சட்டசபையில் இருக்கும் உறுப்பினர்கள் பெரும்பாலோர் பேச திராணியற்று இருந்தனர் இவர்களை பண்டிதர் 'மெளன. மெம்பர்கள்" என்று வர்ணித்தார். அந்த மெளன மெம்பர்கள் ஏன் மெளனமாய் சபையில் வீற்றிருக்கிறார்கள் என்பதற்கு காரணமாக

- அவர்களுக்கு ஆங்கில மொழி சரிவர தெரியாதது.

- மக்கள் பிரச்சினை பற்றி அறிமுகம் இல்லாதது என இரண்டு காரணத்தை கட்டிக் காட்டி இதற்கு தீர்வாக மொழி பெயர்ப்பு உதவி வேண்டுமென கூறினார்.

"சாதிபேதமற்ற ஏழைக் குடிகளாய் ஆறுகோடி மக்களுக்கென்று ஓர் சட்டசபை மெம்பர் இருந்தே தீரல் வேண்டும்.

அதனுடன் சட்டசபையில் தமிழழையும், தெலுங்கையும் மொழி பெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் கன்னடத்தையும் மலையாளத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும்.

துலுக்கையும், மராஷ்டத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் இருப்பார்களாயின் சகல பாஷைக் குடிகளின் கஷ்ட நஷ்டங்கள் யாவும் இராஜாங்கத்திற்கு விளங்கிப்போம், மக்கள் சுகமடைவார்கள் (I:413)

பண்டிதரின் இடஒதுக்கீடு கோரிக்கைகள் இப்படி கூர்மைடைந்து, துல்லியமடைந்து நிலைத்தது. மட்டுமின்றி, அவரது இறுதிக்காலம் 1914 வரை இக்கருத்துக்களை அவர் பரப்பி வந்தார். அவை எல்லாவற்றையும் தொகுத்தளிப்பது என்பது இனி தேவையற்றது. ஏனெனில் 1912ம் ஆண்டு கடைசியிலேயே இடஒதுக்கீடு பற்றின அவரது கருத்துக்கள் முழுமையடைந்து விட்டன என்பதால்தான், இனி மீதமிருப்பது அவரது கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வதின் மூலம் அவரது கொள்கையின், கொடையின் முக்கியத்துவத்தை, கால கட்ட முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி நிர்ணயிப்பதில் ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையை இச் சமூகத்திற்கு வழங்கிய புரட்சிகர முன்னோடியாய் எப்படி மிளிர்கிறார் என்பதை அறிய முடியும். எனவே வாசகரை ஒப்பீட்டாய் தளத்திற்கு அழைக்கிறேன். ⁠ Ꮻ

7

இடைவெளி . . .

இனி, இந்த வரலாற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டும். வழக்கமாக வகுப்பாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தைக் குறித்து இந்திய வரலாற்றை குறிப்பாக தமிழக வரலாற்றை அறிந்தவர்கள் அக்கொள்கை பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்தினால் விளைந்தது என சொல்கிறார்கள்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் வகுப்புரிமை தோன்றிய வரலாற்றைக் குறித்து கூறும்போது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாதி பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அநேக ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லலாம்.

இன்று இந்நாட்டின் மதங்களின் பேரால் உள்ள இந்து, முஸ்லீம், சீக்கிய, கிறித்துவ ஸ்தாபனங்களும் வகுப்புகளின் பேரால் உள்ள மேல்சாதி, நடுசாதி, கீழ்சாதி என சொல்லப்படும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப் பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது (குடியரசு - தலையங்கம் - 19, 1935)

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. (குடியரசு - 23.6.1935)

"நம்முடைய நாட்டிலே 1916, 1917ல் தான் வகுப்புவாரி கோரிக்கை ஆரம்பமானது. என்றாலுங்கூட வட நாட்டில் வகுப்பு வாரி உரிமை முழக்கம் 1900லிருந்தே எழுப்பப்பட்டது. தங்களு டைய வகுப்பின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தங்களுக்கு விகிதாச்சாரப்படி எல்லாத் துறைகளிலேயும் சேர்க்கப்பட வேண்டும் என்று 1900லிருந்தே முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து வந்தார்கள். நம்மில் பலருக்கு இந்த சங்கதி தெரியாதிருந்திருக்கலாம். கொஞ்சம் வயதானவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். (விடுதலை 158.1950).

பெரியார் அவர்களின் இந்தக் கருத்துக்களை மதிப்பிடுவது நோக்கமல்ல, ஆனால் ஒரு வரலாற்று கட்டத்தை அது தோன்றிய விதத்தை அவர் கூறியதைக் கொண்டு அவருக்குப் பின் வந்தவர்கள், அல்லது திராவிட இயக்க வரலாற்றை எழுதிய யாரும் விதிவிலக்கின்றி தமிழகத்தில் வகுப்புவாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தை 1916 என்றே குறிப்பிடுகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைவரான கி. வீரமணி எழுதிய வகுப்புரிமை வரலாறு எனும் நூலில்கூட இதேதான் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைக் குறிப்பிடும் ஏராளமான நூல்கள் இருக்கிறது. அவைகளிலிருந்து ஆதாரங்களைத் தருவது சொல்வதை திரும்ப சொல்வது போலிருக்கும்.

பார்ப்பனரல்லாதார் என்ற நிலைபாடு இடைநிலை சாதிகளிடமிருந்து 1909ம் ஆண்டு இறுதியிலேயே முளைவிடத் தொடங்கியது என்பதும், தெளிவற்ற நிலையிலே பிரச்சாரம் நடந்தது என்பதும் திராவிடர் இயக்க அறிவாளிகள். அறியாத செய்தி 1909ம் ஆண்டிலே இந்த பார்ப்பனரல்லாத இயக்கத்தை நோக்கி தன் விமர்சனத்தை பண்டிதர் முன்வைத்தார். இந்த பார்ப்பனரல்லாதார் என்போர்கள் பார்ப்பனரை தவிர்த்து அவர்களது சாமிகளையும், சாதிகளையும் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கமா அல்லது இதையெல்லாம் விட்டொழித்த இயக்கமா என கேட்டிருந்தார். இதே கருத்தை பிற்காலத்தில் அம்பேத்கர் முன்வைத்து, பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீழ்ந்து போனதற்கு அது பார்ப்பனியத்தை விட்டொழிக்காதது தான் என்று அவர் கூறியது எதேச்சையானதல்ல. எனவே எது எப்படி இருந்தபோதலும் திராவிட இயக்க அறிஞர்கள் ஆய்வுபடி:

20-11-1916ல் நடைபெற்ற பிராமணரல்லாதார் மாநாட்டை தொடர்ந்து, தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற கூட்டு வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற கட்சி தோற்றுவிக்கப் பட்டது. இந்த சங்கம் பிராமணரல்லாதார் அறிக்கையை (Non Braminan Manifesto)வெளியிட்டது. அந்த அறிக்கையில் பார்ப்பனரல்லாதாருக்கான விகிதாச்சார கோரிக்கைகள் இருந்த பிரிவுகள் வருமாறு.

1. அரசாங்க அலுவல்கள், 2 பொது நிறுவனங்கள் (நகரவை, மாவட்ட கழகம், சட்டசபை, பல்கலை செனட் மற்றும் பிற) மற்றும் 3. கல்வித்துறை ஆகிய துறைகளில் பிரதிநித்துவத்தை கோரியது. அந்த பிரநிதித்துவமானது

"அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால் உண்மையான உரிமைகள் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனத்தினருக்கும் வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும், தகுதியையும் எண்ணிக்கையையும் மனதிற் கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்க வேண்டும் (1992–25–32)

(Indian has earned the right to demand that the basis of her constitution should be broadened and deepened. That her sons representively every class, caste, and community according to their acknowledged positions in the country and their respective numerical strength." (1992–23)

நீதி கட்சி தன்னுடைய கொள்கையை முன் வைத்து அதை நடைமுறைப்படுத்த எடுத்துக் கொண்ட இடைப்பட்ட காலத்தில் அரசுக்கு கோரிக்கைகளை விட்ட வண்ணம் இருந்தது. 1920ல் நீதிகட்சி ஆட்சி பிடித்த பிறகு தனது விகிதாச்சார கொள்கையை அறிவித்தது. 1922ல் அறிவிக்கப்பட்ட வகுப்புவாரி ஆணையின் படி;

அரசு பணிகளில் மொத்தம் 12 இடங்கள் என்றால், அதில்

பார்ப்பனரல்லாதார் (இந்துக்கள்) 5 இடங்கள்

பார்ப்பனர்கள் 2 இடங்கள்

முகமதியர் 2 இடங்கள்

ஐரோப்பியர் உட்பட கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர் 2 இடங்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் 1 இடம்

இந்த 12 இடங்களையும் சுற்றுமுறைபடி கடைபிடிக்க வேண்டும்.

1. பார்ப்பனரல்லாத இந்து

2. முகமதியர்

3. பார்ப்பனரல்லாத இந்து

4. ஆங்கிலேயர் இந்தியர் அல்லது கிறிஸ்தவர் 5. பார்ப்பனர்.

6. பார்ப்பனரல்லாத இந்து

7. மற்றவர்கள் (தாழ்த்தப்பட்டவர் உட்பட)

8. பார்ப்பனரல்லாத இந்து.

9. முகமதியர்

10. பார்ப்பனரல்லாத இந்து.

11. ஆங்கிலோ இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர்.

12. பார்ப்பனர்.

இந்த விகிதாச்சார ஆணையை, அதன் செயல்படுத்தும் முறையையும் வாசகர்கள் கவனிப்புடன் படிக்க வேண்டும். நீதிகட்சி மக்கள் தொகை அடிப்படையில் கேட்டதற்கும், அது நடைமுறைப் படுத்தியதற்கும் இடையிலுள்ள இடைவெளி யாருடைய கவனத்தையும் கவரும்.

எனினும் நம்முடைய நோக்கம் வகுப்புரிமை, இடஒதுக்கீடு, விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கையின் தோற்றுவாயை அறிவதுதான். பார்ப்பனரல்லாதாரைப் பொருத்தவரையில் அது 1916ல் தோன்றி 1922ல் வடிவம் பெற்று விட்டது என்பதை மட்டும் இங்கும் போதும், பிறகு.⁠ Ꮻ

  8

அனைத்து சமூக நீதியின்

முகங்கள்

ஒரு மாபெரும் வரலாறு நடந்து வந்த காலகட்டத்தை விட்டு இப்போது வெளியே வந்துவிட்டோம். இனி அந்த காலகட்டத்தை மதிப்பிட வேண்டியதுதான் மீதியுள்ள ஒரு பணி. ஏனெனில் வரலாற்றை பயிலும் எந்த ஒரு மாணவனும் அந்த வரலாற்றை மதிப்பிடக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று மாணவனுக்கு இது ஒரு கடமையென்றால் விடுதலை இயக்கப் பணிபுரிபவர்கள் மதிப்பிட மட்டும் செய்வதில்லை, அந்த வரலாற்று காலகட்டத்திற்கு நடந்த அநீதிக்கும் சேர்த்து விடுதலையை வென்றெடுக்க வேண்டும். இல்லையெனில் விடுதலையின் உள்ளெழுச்சி முழுமை பெறாது. பண்டிதரின் வரலாற்று காலகட்டத்தை மதிப்பிடுவதற்கு அவரது மதிப்பீடுகளும், முன்வைப்புகளும் சிறந்த ஆய்வுக் கருவிகள், எனவே பண்டிதர் முன்வைத்த இட ஒதுக்கீடு என்றும், விகிதாச்சார உரிமை என்றும் சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதை தொகுத்துப் பார்க்க வேண்டும் பண்டிதரின் இடஒதுக்கீடு குறித்த கொள்கைகள் இரண்டு கட்டமாக பிரித்துக் கொள்ள வேண்டும் முதலாவது 1890க்கும் 1900க்கும் இடைப்பட்ட காலம், இரண்டாவது மிண்டோ மார்லி சீர்திருத்தம் தொடங்கிய 1905ம் ஆண்டு தொடங்கிய பண்டிதரின் மறைவு நிகழ்ந்த 1914ம் ஆண்டு வரை என பிரித்துக் கொள்ள வேண்டும். இதில்

முதலாவது கட்ட த்தில் அவர் முன் வைத்த கோரிக்கைகள்:

1 தாழ்த்தப்பட்டோருக்கு தனிப் பள்ளிகள் (Seperate schools)

2 மேற்படிப்பிற்கு கல்வி உதவித்தொகை (Scholarship)

3. அரசுப் பணிகளில் ஒதுக்கீடு. (Reservation in Govt Services)

4. கல்விக்கு தக்க அரசு வேலை - பரம்பரை தொழில் கூடாது. (Reservation on merits)

5. முனிசிபல், கிராம சபைகளில் தனி பிரதிநிதித்துவம் (Separate Representation)

6. கிராம நிர்வாகப் பணிகளில் தலித்துகளுக்கு அதிகாரம். (Decentralisation of village Administration)

7. கோவில்களை பொதுவாக அனைவருக்கும் திறந்து விடுதல்.

8 பொது இடங்களில் நுழைய உரிமை.

9. கிராமத்தில் பயன்படுத்தாத நிலங்களை பங்கிட்டு தலித் மக்களுக்கு கொடுப்பது.

10. பொது கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை

அவரின் இரண்டாம் கட்ட கோரிக்கைகள்:

1. அரசு பணிகளில் தலித்களுக்கான இடஒதுக்கீடு

2. ராணுவத்தில் மீண்டும் தலித்துகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், ஒழிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் ரெஜிமெண்டுகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

3. அரசு பணிகளில் அந்தந்த சாதியாரின் தொகைப்படிக்கு பிரதி நிதித்துவம் (Reservation by populations of castes)

4. மைய, மாகாண சட்ட சபைகளில் தலித் மக்களின் தனிப் பிரதி நிதித்துவம் (Seperate Representations in central and provincial legislation)

5. சகல சாதியருக்கும் அவரவர் தொகைக்கேற்ப சட்டசபைகளில்

நிதித்துவம் (Representation by Reserevation to all castes)

6. சாதிபேதமற்ற திராவிடர்கள், அல்லது ஆறுகோடி தீண்டாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், யுரேஷியர்கள், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள். ஐரோப்பியர் என அனை வருக்கும் அவரவர் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்

7. சாதி பேதம் ஒழிக்கப்பட்டால் இந்த ஒதுக்கீட்டு அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தேவையில்லை.

8. தலித்துகள் பொது இடங்களில், நுழைய, பொது சொத்துக்களை பயன்படுத்த உரிமை

9. கிராம பொது நிலங்கள், பயன்படுத்தாத நிலங்கள் ஆகியவற்றை தலித்துகளுக்கு வழங்க வேண்டும். 10. நிலம் வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் சோம்பேறிகளிடமிருந்து நிலத்தை எடுத்து அந்நிலத்தில் உழும் ஏழை குடிகளுக்கு கொடுக்க வேண்டும்.

11. பிஏ, எம்ஏ பட்டம் பெற்றவர்களுக்கே அந்தஸ்தான உத்யோகம், சட்டசபை உறுப்பினர் பதவிகளை வழங்காமல், அந்தந்த குலத்தில் உள்ள கற்ற ஒழுக்கமுள்ளவர்களுக்கு அப்பதவிகள் தருதல் வேண்டும்.

12. சட்டசபைகளில் அந்தந்த மொழி பேசுவோருக்கு மொழி பெயர்ப்பு செய்தல் வேண்டும்.

இவைகளை விளக்க வேண்டிய அவசியமில்லை, இவை ஒவ்வொன்றுமே அதற்கான விளக்கமாக இருக்கிறது. எனினும் வாசகரை கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த கருத்துக்களை இதற்கு பிற்பாடு வந்த வரலாற்று கட்டங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

ஏனெனில் பண்டிதர் தன் அரசியல் பணியைத் தொடங்கிய காலத்திற்கு முன்பு இந்திய வரலாற்றில் எங்கும் இதுபோன்ற கருத்துக்களை காணமுடியாது. அதேபோல பண்டிதர் வாழ்ந்த காலத்திலும் மற்றவர்களிடமிருந்து இது போன்ற கருத்துக்களை காண முடியாது. பண்டிதர் வாழ்ந்த கால கட்டத்தில் பிற சாதியினர், மதத்தினர் தமக்கான உரிமைகளை - சலுகைகளை மட்டும் கோரினார்களேத் தவிர அனைத்து பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கவில்லை. அதுவுமின்றி அனைத்து பிரிவினருக்கான விகிதாச்சாரத்தை (Ratio) பண்டிதர் மட்டுமே முதன் முதலில் முன்வைக்கிறார். இந்திய வரலாற்றில் இது புரட்சிகரமான சமூகநீதி முன்வைப்பு

இந்த கருத்துக்களின் வரலாற்று பாத்திரத்தை மதிப்பிட அது நிறைவேறிய சூழல் நிலவியதா? அதுவும் பண்டிதர் காலத்தில் என கேள்வி எழுப்பப்படலாம். இப்படி ஒரு மறுப்பான கேள்விக்கு பதில்

பண்டிதர் காலத்திலேயே அரசு பணிகளில் தலித்துகளுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதையும், அங்கு அவர்கள் பட்ட இடுக் கண்கள் களையப் பட்டதையும் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், 1892 முதல் தலித் மக்களுக்கு தனி பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதையும், கர்னல் ஆல்காட் உதவியுடன் தலித் மக்களுக்கு 3 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதும், அரசின் லேபர் துறை சார்பாக தாழ்த்தப்பட்டோருக்கென தொடங்கப்பட்ட பள்ளிகளும் பண்டிதரின் கோரிக்கையின் விளைவுகள்.

அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு வடிவம் கிடைக்க முயற்சிகள் 1912ல் அரசுப் பணிகள் குறித்து விசாரித்த ராயல் கமிஷன் முன்பு பண்டிதரின் கருத்துக்களில் தாக்கம் பெற்ற தலைவர்கள் சாட்சியம் அளித்தனர். இந்த குழுவின் முன்பு டாக்டர் நாயர் உள்ளிட்ட பிற்பட்டோர் தலைவர்கள் சாட்சியம் அளித்தும்கூட அந்த கோரிக்கை சட்டப்படி அடைய நீண்டகால மாயிற்று.

சட்டசபைகளில் அனைத்து பிரிவினருக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கேட்ட பண்டிதர். அதை நியமன முறையிலேயே வேண்டுமென வலியுறுத்தி வந்தார். ஏனெனில் தேர்தல் முறையில் சாதி இந்துக்களின் ஆளுமையில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாது என்றும், ஊழல் பேர்வழிகளான அவர்களால் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று அஞ்சியதாகும், அதனால்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்திற்குப் பிறகு மாண்டேகு - செம்ஸ் போட்டு சீர்திருத்தத்தில் நியமன முறையில் தலித் தலைவர்கள் சட்டசபைகளில் நியமிக்க ப்பட்டார்கள். பண்டிதர் காலத்தில் தலித் மக்களுக்கு 6 பேர் என்றும் பின்பு 8 பேராகவும் கோரிக்கை வைக்க, மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தில் அது 12 பேராகவும் உயர்ந்தது. நியமனமும் நடந்தது. இது தாழ்த்தப்பட் டோருக்கானது என்றால், அவர் முஸ்லீம்கள், இந்திய கிறித்தவர், ஐரோப்பியர், ஜைனர், பாரசீகர், சீக்கியர் ஆகியோருக்கும் கோரினார். இவை பின்னாளில் சட்டமாயின. இவை பண்டிதரின் கோரிக்கையினால் விளைந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் போனாலும் அக்கருத்தை முதலில் முன்வைத்தவர் பண்டிதர் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்பனரல்லாதார் தங்களுடைய கொள்கைகளை முன்வைப்பதற்கு முன்பே பண்டிதர் முன் வைத்தார் எனில் அவரது முன்வைப்புகளையும், பார்ப்பனரல்லாதாரின் முன்வைப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் நிறைய வேறுபாடுகளைக் காண முடியும், பார்ப்பனரல்லாதாரின் கோரிக்கை படித்த வர்க்கத்தின் கோரிக்கை என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிடும் அதனால்தான் அது அரசு துறைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. பண்டிதரின் முன் வைப்புகள் அடித்தட்டிலிருந்து முன்வைத்த கோரிக்கைகள், அதனால்தான் அது விரிவான தளத்தில் இயங்கியது. குறிப்பாக நிலத்தை பகிர்ந்தளிக்க அவர் வலியுறுத்தியதை எந்த பார்ப்பனரல்லாத தலைவரும் வலியுறுத்தவில்லை, ஏனெனில் அவர்களெல்லாம் பெரும் நில உடைமையாளர்களாக, வணிகர்களாக, சிற்றரசர்களாக இருந்ததுதான் காரணம்.

அதனால்தான் அவர்களின் நோக்கம் முழுதும் அதிகாரப் பகிர்வில் நிலைத்திருந்தது. அது என்றும் சமூக - ஜனநாயகத்தை நோக்கி திரும்பவே இல்லை. அம்பேத்கர் வார்த்தைகளை கொண்டு சொன்னால் சமூகத்தை ஜனநாயகப்படுத்த முனையாமல் அரசியல் ஜனநாயகத்தை நோக்கியே இயங்கினார்கள்.⁠ Ꮻ

 9

மீளும் மணிமுடி

பண்டிதர் இந்த வரலாற்று காட்சிகளிலிருந்து மறைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் நூற்றுக்கணக்கான முற்போக்கு தலைவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், மேதாவிகள் இருந்திருக்கிறார்கள், 1907-1914 வரை வெளிப்படையாக இதழ் நடத்தி பல நாடுகளில் தன்னுடைய இயக்கத்தையும் தோழர்களையும் கொண்டிருந்து பல எதிர்ப் புகளை சமாளித்து கலகம் செய்து வந்த பண்டிதர், இவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போன மாயம் புரியவில்லை என்று சொல்ல முடியாது.

பிளேட்டோ சொன்னது போல உண்மையான தத்துவ ஞானியைப் போல அரசியல் மேதைமையும், ஞானமும் ஒருங்கே வாய்த்தவர் அயோத்திதாச பண்டிதர். இந்த நாடு மாட்சிமை பெற வேண்டுமானால் தத்துவ ஞானிகளை ஒருவேளை இந்த சாதி இந்துக்கள் அறியணை ஏற்றி அழகு பார்க்கலாம். ஆனால், எல்லாம் இருந்தும், ஒரு தீண்டப் படாதவனாகப் பிறந்து விட்டதால், தென் இந்திய சமூக சீர்திருத்தத்திற்கு ஒளியேற்றி தொடங்கி வைத்த பண்டிதரை புறக்கணித்தது. அவரைப் புறக்கணித்ததே தவிர அவரது கொள்கைகளைப் புறக்கணிக்கவில்லை, அதை தனக்குள் செரித்து தன்னை வளமாக்கிக் கொண்டதன் மூலம் அக் கொள்கைக்கு நிலைத்த தன்மையை வழங்கிவிட்டது. ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள் சொத்து படைத்த வர்க்கத்தின் கோரிக்கைகளாக மாறிப் போனதுதான் வரலாற்றின் விந்தை, அதுவும் ஒரு முரண் விந்தை எனினும், எப்படி பார்த்தாலும், இட ஒதுக்கீடு, விகி தாச்சார உரிமை எனும் சமூக நீதியின் கொள்கையை வழங்கிய க. அயோத்திதாச பண்டிதர் அவர் தரித்த சமூக நீதி முடியை மற்றவர்கள் பிடுங்கிக் கொண்டிருந்தாலும் பண்டிதர் அந்த முடியை தென் இந்தியாவிற்கு மட்டும் வழங்கவில்லை, ஜம்பு தீப துணைகண்டம் முழுவதற்கான கொள்கையாக, கொடையாக வழங்கினார் என்பதே என்றென்றும் மக்களின் உண்மை என வரலாறு கூறும்.. குறிப்பு நூல்கள்

முதல் நிலைத் தரவுகள்

ஒரு பைசா தமிழன் மற்றும் தமிழன் இதழ்கள் - 1907 முதல் 1914 வரை - ரோஜா முத்தையா நூலகம் , சென்னை.

இரண்டாம் நிலைத் தரவுகள் - தமிழ் நூல்கள்

அயோத்திதாசர் சிந்தனைகள் (மூன்று தொகுதிகள்) தொகுப்பு ஞான. அலங்சியஸ் , நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், நெல்லை-1999,

கமுசலை அம்மாள் வெளியீடு. பழங்குடி தவைர்கள் வரலாறு. 1974

கி. வீரமணி, வகுப்புரிமை வரலாறு. திராவிடர் கழக வெளியீடு இரண்டாம் பதிப்பு 1996 - சென்னை.

ஏ.கே. ராஜன். எம்.எல். இட ஒதுக்கீட்டின் சட்ட வரலாறு அமைதி அறக்கட்டளை வெளியீடு - 1993

கௌதம சன்னா க அயோத்திதாசர் பண்டிதர். சாகித்ய அகாடமி - 2007

பெரியார். வெ.வெ.ரா. சிந்தனைகள் - தொகுதி 2. மார்க்ஸிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி வெளியீடு.

மா.சு. சம்பந்தன் சென்னை மாநகர் வரலாறு , இரண்டாம் பதிப்பு -1978, தமிழ்ப்பதிப்பகம், சென்னை.

கோ, தங்கவேலு.தமிழ் நில வரலாறு, தமிழ் நாடு பாடநூல் நிறுவனம்,முதல்பதிப்பு. 1976.

அன்பு பொன்னோவியம் - வரலாற்று கட்டுரைகள் தொகுப்பு - கௌதம சன்னா (அச்சில்)

அம்பேத்கர் பிரியன். பண்டிதர் அயோத்தி தாசர் வாழ்க்கை வரலாறு

திருநாவுக்கரசு.க. களத்தல் நின்ற காவலர்கள்

திருாவுக்கரசு.க. திராவிட இயக்கவேர்கள்

அம்பேத்கர் பிரியன்,திவான்பகதூர் ரெட்டமலை சீனிவாசன் - 1994, சென்னை

கோபtல்செட்டியார் டி,ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்-1916, தெ.சா. பௌ.சங்கம் திருப்பத்துர் (மறுபதிப்பு) அன்தோனவா கெ.அ.கத்தோவ்ஸ்கி.கி.கி, இந்தியாவின் வரலாறு தொகுதி 2 - 1987, 18ம் நூற்றாண்டு ஒரு பகுதி முதல் நம் காலம் வரை), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.

பிளேட்டோ, குடியரசு, தமிழில் ஆர். இராமானுஜசாரி (1965) சாகித்ய அகாடமி

நீதிக்கட்சி 75வலது ஆண்டு (பவள விழா மலர்) 1992

இதழ்கள்:

உழைப்பவர் ஆயுதம். மே, 2007

ஆங்கில நூல்கள்

ALOYSIUS.G - Religion as emancipatory laentity, New Age International Publishing - reprint - 2000

ALOYSIUS.G - Dalit Subaltern Emergence in Religio-Cultural Subjectivity, Ayothee Thasassar & Emamcipatory Buddasim, Critical Quest. New Delhi 2004

KAMALANADAN T.P - Scheduted Caste's Struggle for Emacipation inSouth India. The South India Sakya Buddist Assn. Tirupattur - 2.4.84

KAMALANATHAN T P - Mr.K.Veeramani M.A.B.L. is Refuted and The Historical Facts about the Scheduled Castes Struggle for Emacipation in South India. Published by Ambedkar Self respect Moment - 1985

MAJAHAN.V.D. Modern Indian History. S. Chand & co. new Delhi 1988

PARDAMAN SINGH, Lord Minto and Indian Nationalism - 1905-1910. Abhishek Publications, Chandigash (1976) - Reprint (2005)

SYED RAS WAST|, Lord Minto and The Indian National Movement 1905-1910. Claxendon Press - Oxford - 1964

VENKATAKRISHNAPPA.B. Legal and constitutional History - India S.M. Amritmahal. Bangalore 1968.

ᏫᏫᏫ

ஆசிரியரின் பிற நூல்கள்

1. மதமாற்றத் தடைச் சட்டம்

வரலாறும் விளைவுகளும்

மருதா வெளியீடு. விலை ரூ. 60

2. க. அயோத்திதாசப் பண்டிதர்

சாகித்ய அகாதமி வெளியீடு - விலை ரூ. 25

3. கலகத்தின் மறைபொருள்

மருதா வெளியீடு அச்சில்