சேரர் பேரூர்
சோமசுந்தர பாரதியார்சேரர் பேரூர்


1.  சேரர் பேரூர்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  பதிப்புரை
    4.  நுழைவாயில்
    5.  சேரர் பேரூர்
    6.  பகுதி 1 : முன்னுரை
    7.  பகுதி : 2 வஞ்சி வஞ்சுளாரணியமா?
    8.  பகுதி 3 : “கோதைதிருமாவியனகர்க்கருவூர்” பேரியாற்றின் மேல் “வஞ்சியக நகர்” ஆவதன்றி, ஆனிலைக்கருவூரன்றாம்
    9.  பகுதி : 4 ஆனிலையருகாம்பிராவதி வஞ்சிசூழ்பொருநைதானா?
    10. பகுதி 5 : கொங்குநாடு மலைநாடாமா?
    11. பகுதி 6 : பூவிரிபுனலொருமூன்றுடன் கூடிய கூடல் கருவூர்ப் புராணத் திருமுக்கூடலன்று : முக்கடன்மணந்த குமரிக்கூடலேயாம்!
    12. பகுதி : 7 வஞ்சிமூதூர் பட்டினமா? உண்ணாட்டூரா?
    13. பகுதி 8 : சேரரைப்புகழும் பழங்கவிகளில் மலைநாட்டாறுமலைகள் பாடப் பெற்றுளவா?
    14. பகுதி : 9 ஒரு நூற்றுநாற்பது யோசனை விரிந்த தெது?
    15. பகுதி10 : ‘ஆடகமாடம் - அரசவனமா?
    16. பகுதி 11 : சேரர்நாடு மலைநாடே!
    17. பகுதி 12 : வஞ்சி, மகோதை வஞ்சைக்களமே!
    18. நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு
    19. கணியம் அறக்கட்டளை

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : சேரர் பேரூர்

  தொகுப்பு : நாவலர் பாரதியார் - நற்றமிழ் ஆய்வுகள் -1

  தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி

  பதிப்பாளர் : ஆ. ஆதவன்

  பதிப்பு : 2009

  தாள் : 16 கி வெள்ளைத்தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 304

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உரூபா. 190/-

  படிகள் : 1000

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : ஆதி பதிப்பகம்4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.


பதிப்புரை

20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம்; வணங்குவோம்.

பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முது முனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை தமிழின் பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெரு நிலத்தின் விடுதலை யின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச. சாம்ப சிவனார் எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள நூலில் காண்க.

எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.

குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது.

அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.

தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.

தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம்.

இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.

இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி. விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் (Binder) வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.

இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர்.

- பதிப்பாளர்


நுழைவாயில்

முன்னுரை:

பெருமக்களின் வாழ்க்கைகளே வையகத்தின் சிறந்த ஆசிரியர்கள்”1 என்பர் அறிஞர்.

“பாரதிர்ந் தெழுந்து யார்யாரெனக் கேட்குமா(று)
ஊரெழுந் தோடி, எம் உயிரெனக் கூறுமா(று)
ஏரெழுந் தன்ன, எம் பாரதி எழுந்துசொல்
மாரி பெய்வான், புனல்மாரி பெய்வான்என,
மாத மும்மாரி இம்மண்ணிடைப் பொய்ப்பினும்
நாத மும்மாரி நடாத்துவான் பாரதி!”

என்பது கவிஞர் கண்ணதாசன் கூற்று. 1879ஆம் ஆண்டில் பிறந்து, 1959 ஆம் ஆண்டில் மறைந்த நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மேற்காட்டிய அறிஞர்களின் கூற்றுக்கிணங்க, இவ் வையகத்தின் சிறந்த ஓர் அறிஞராகப் பிறங்கியவர். அன்னைத் தமிழுக்குத் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட இவ் வித்தகச் செல்வர் எழுதிய நூல்களில் “திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாய முறை, சேரர் பேரூர் எனும் இந்நான்கும் அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுபவை. இவ் ஆராய்ச்சி நூல்களைப் பற்றிய ஒருசிறு அறிமுகம் இவண் தரப்படுகின்றது.

நாவலர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

நாவலர் ச.சோ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சுவையுடையது; பிறரால் பின்பற்றத்தக்கது. இவரது வரலாற்றையும், இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் முன்னர்யான் எழுதிய நூல்களில்1 பரக்கக் காணலாம். எனினும் சுருக்கமாக ஒருசில சுட்டுதல் சாலும்:

1.  இவர் , எட்டையபுரத்தில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து, கல்வி கற்று, வழக்கர் தொழில் மேற்கொண்டு, பல்கலைக் கழகப் பேராசிரியர் பணிபூண்டு, இரு பெண்களை மணம் புரிந்து, மக்கட்செல்வம் பெற்று, எண்பதாண்டுகள் வாழ்ந்த பெரியர்;

2.  எட்டையபுர அரண்மனைச் சூழல், சி.சு. பாரதியாரின் நட்பு, நெல்லைத் தமிழ்ப் புலவர் தொடர்பு, சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்கள் புகட்டிய அறிவு, வ.உ. சிதம்பரனாரின் தொடர்பு முதலாயின இவரின் தமிழ்த் தொண்டிற்கு அடிப்படையாய் அமைந்தன.

3.  செம்மல் சிதம்பரனார் தொடங்கிய கப்பல் கம்பெனியின் செயலராக இருந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்ட சிறப்பும் இவருக்கு உண்டு;

4.  இவரது தமிழ்த் தொண்டிற்குச் செல்வம், தொழில், ஆங்கிலப் புலமை பெரிதும் துணைபுரிந்தன;

5.  இவர், ஆடவரிற் சிறந்த அண்ணல் எனும்படி தோற்றப் பொலிவும், அஞ்சாமைப் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தார்;

6.  புதிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்தல் முதலாய பல்வேறு தமிழ்ப்பணிகளையும் ஒருங்கே ஆற்றிய பெருந்தகையாளர்.

தலையாய தமிழ்த்தொண்டு!

நாவலர் பாரதியார் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் பலப்பல; அவற்றுள் சிலமட்டும் இவண் குறிப்பிடல் பொருந்தும் :

1.  தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கணத்திற்கும், பிற இலக்கியத்திற்கும் புத்துரை காண்டல்;

2.  அரிய ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக இதுகாறும் எவரும் கூறாதவாறு புதுமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டல்;

3.  மாநாடுகள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள் முதலானவற்றிற் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழுணர்ச்சி ஊட்டுதல்:

4.  அரசியல் மேடைகளையும் தமிழ் மேடையாக்குதல்;

5.  இந்தி கட்டாய மொழி என ஆக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்துத் தமிழ் காக்கும் போரில் முன்னிற்றல்;

6.  வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த பெரு வருவாயினையும் வெறுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்றல்;

7.  முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற தமிழ் காக்கும் பேரறிஞர்களை உருவாக்கல்;

8.  தமிழ்ப் புலவர்களைப் போற்றுதல்;

9.  வறுமையால் வாடிய தமிழ்ப் புலவர்கட்குப் பொருளுதவி செய்தல்;

10. பேச்சாலும், எழுத்தாலுமன்றிச் செயலாலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்;

11. பதவியைப் பெரிதெனக் கருதாது, தமிழுக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் அஞ்சாது தடுத்து நிறுத்தல்;

12. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலக்கட்டுரைகள் வாயிலாகவும் தமிழ்ப் பெருமையை உலகோரும் அறியச் செய்தல்;

13. தமிழில் நல்ல நடையை (ளுவலடந)க் கையாண்டு, பிறர்க்கும் வழி காட்டுதல்;

14. ‘ஆய்வு நெறிமுறைகள் இவை’ எனக் காட்டி, மாணவரிடையே ஆய்வுமனப்பான்மையை உண்டாக்கித் திறனாய்வுத் துறையை வளர்த்தல்;

15. யார் எது கூறினும், மெய்ப் பொருள் காண்பதே நோக்கமாகக் கொண்டு அதனை வெளிக் கொணர்தல்;

16. தமிழ் மரபு - ஆரிய மரபு இவ்விரண்டிற்குமிடையே காணலாகும் வேறுபாடுகளை அஞ்சாது எடுத்துரைத்துப் பண்டைத் தமிழ் மரபினைக் காக்க வற்புறுத்தல்.

இவ்வாறு பல்வகையானும் தமிழ்ப் பணிசெய்த பான்மையினால், நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே, ‘நாவலர்’, ‘கணக்காயர்’, டாக்டர் எனும் பட்டங்கள் பெற்றுப் பெரும் புகழுக்குரியரானார்.

‘திருவள்ளுவர்’

தமிழகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரைப்பற்றி எழுந்த கட்டுக்கதைகள் பல! அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்த பெருமைக்கு உரியவருள் நாவலர் பாரதியாரும் ஒருவர். திருவள்ளுவரைப்பற்றிய மெய்யான வரலாற்றைப் பல்வேறு சான்றுகள் காட்டித் திருவள்ளுவர் எனும் அரிய ஆராய்ச்சிநூல் (தமிழ், ஆங்கிலம்) வாயிலாக உலகுக்கு உணர்த்தியவர் இவர். இந்நூல் வாயிலாக இவர் - கூறும் முடிவு

களாவன :

1.  திருவள்ளுவர், புலைமகளின் பழிமகவல்லர்;

2.  மயிலையில் வாழ்ந்தவரல்லர்;

3.  ஏலேலசிங்கரின் உதவி பெற்றவரல்லர்;

4.  மூன்றாம் சங்கத்தின் முற்காலத்தே வாழ்ந்தவர்;

5.  மதுரையில் வாழ்ந்தவர்;

6.  மாதானுபங்கியை மணந்தவர்;

7.  குறளடியால் அறம்பாடி உலகுக்களித்தவர்;

8.  பண்டைப் பாண்டியரின் உள்படுகருமத் தலைவராயிருந்தவர்;

9.  அருந்தமிழ் வேளிர்குடியில் தோன்றிய பெரியர்.

நீதி நூல்களின் தோற்றத்திற்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும்; வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் என்ற நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு.

இதனை நாவலர் பாரதியார் பின்வருமாறு இந்நூலில் வன்மையாக மறுத்துரைக்கின்றார்:

ஆரிய தரும சாத்திர முறை வேறு; தமிழற நூன் மரபு வேறாகும்; இரு முறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள் தமிழ் மரபு வழுவாது பொருளின் பகுதி களான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கா மாறு? ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல்.

தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகு மென்பது வெள்ளிடை மலையாம்!

இவ்வாறே நூலின் பல்வேறிடங்களிலும், அறிவுக்குப் பொருந்தாக் கருத்துக்களை மறுத்துரைக்கும் நாவலர் பாரதியாரது நுண்மாண் நுழைபுலம் கண்டு மகிழமுடிகின்றது.

இத் திருவள்ளுவர் ஆராய்ச்சியை அறிஞர் பலரும் ஒருமுகமாகப் பாராட்டியுள்ளனர். அவர்களுள் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் கூறுவது இவண் எண்ணத்தகும்:

“வள்ளுவர் வரலாற்று மலர்வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்தி களாகிய வனப்புமிக்க நறுமணங் கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ் செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித் தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு-மயிலை வாழ்வு-ஏலேலசிங்கர் தொடர்பு-கூடற்சங்க வென்றி - கால அணிமை - ஆரிய முதனூல் பற்றி அறம் பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படு செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றியடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ்வடர் பெரு மரங்களை வெட்டி வேரறக் களைந்து காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப்பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாக்கிய தெண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டனர்.”

இதனால் நாவலர் பாரதியாரின் திருவள்ளுவர் ஆராய்ச்சி மேன்மை ஒருவாறு புலனாகும்!

‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’

“தசரதன் நேர்மையாளன்” என்றும் “அவனது உயிருக்கே உலைவைத்த மாபாதகி கைகேயி” என்றும் பொதுவாகக் கூறுவதுண்டு. இதன் உண்மையை ஆராய்வான்வேண்டி, நாவலர் பாரதியார், தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் நூலினை வெளியிட்டார். நிறை என்பது, ஈண்டுக், குறை என்பதற்கு மாறான ஒரு சொல்லாகவும் கற்பு என்று பொருள்படும் சொல்லாகவும் அமைந்துள்ள நயம் உன்னத் தக்கது.

தசரதனின் குறைகளாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு :

1.  தசரதன், கைகேயியை மணமுடித்தகாலத்து, அவளுக்குக் கன்யாசுல்கமாக அயோத்தி நாட்டினை அளித்தவன்; அதனால் நாடு, பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்;

2.  சம்பராசுரப் போரின்போது, தான் கொடுத்த வாக்குறுதியை மீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்;

3.  மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்;

4.  பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்;

5.  பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவு செய்தான்;

6.  பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்;

7.  பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்துமட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்;

8.  ஏதுமறியாப் பரதனைத் தன்மகன் அல்லன் என்றான்.

இவ்வாறு தசரதன்பாலமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை எனப் பட்டியலிட்டும் காட்டுகின்றார்.

1.  கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்;

2.  தன் மகன் பரதனைவிட இராமனிடத்து அளவற்ற அன்புடையள்;

3.  கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்;

4.  போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்;

5.  தசரதனிடத்து அன்பு பூண்டவள். ஆனால் அவனுக்குப் பழி வந்திடல காது என்பதற்காக வரம் கேட்டவள்;

6.  தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்;

7.  தெய்வக் கற்பினள் எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.

இவ்வாறு கூறுதற்கு அடித்தளமாய் இவர் எடுத்துக் கொண்ட கம்பன் பாட்டொன்று :

“கெடுத்தொ ழிந்தனை யுனக்கரும் புதல்வனை; கிளர்நீ
ருடுத்த பாரக முடையவ னொருமகற் கெனவே
கொடுத்த பேரர(சு) அவன்குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கு மாம்;பிறர்க் காகுமோ என்றாள்!”

(கம்ப : அயோத்தி; மந்தரை : 76)

இப்பாடலில் வரும் ஒருமகற்கு என்பதற்கு இராமனுக்கு என்பதே இதுகாறும் பலரும் கூறிவரும் உரையாகும். ஆனால் நாவலர் பாரதியாரோ, ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு முன்பே கொடுக்கப்பட்ட பேரரசு எனும் புதுப் பொருள் காண்கின்றார். ஆங்ஙனமெனில், பரதனுக்கு இவ்வரசு எப்போது, எதற்காகக் கொடுக்கப்பட்டது? என்ற வினா எழுதல் இயல்பு. தசரதன் கைகேயியைத் திருமணம் செய்தபோழ்து, தான் அயோத்தி அரசாட்சியைக் கன்யா சுல்கமாகக் கொடுத்திருந்தான். இதன் முழுவிவரம், வான்மீகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“கம்பரும், இக்கருத்தைப் பின்னால், இராமனது கூற்றில் வைத்து வெளிப் படுத்துகின்றார் என்று கூறும் நாவலர் பாரதியார், பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டுவர்:

“கம்பரும் உந்தைசொல் மரபி னால்உடைத்
தரணி நின்னதென் றியைந்த தன்மையால்
உரனில் நீபிறந் துரிமை யாதலால்
அரசு நின்னதே ஆள்க என்றனன்”

(கம்ப. : திருவடி : 112)

இங்ஙனம் இது, தசரதன் குறைகள் கைகேயி நிறைகள் பற்றிய அரியதோர் ஆராய்ச்சிநூலாக மிளிர்கின்றது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி உலகில் இதுகாறும் எவருமே எண்ணிப் பார்க்காத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக்கண் கொண்டு நோக்கிய பெருமை நாவலர் பாரதியாருக்கு உண்டு!

“அவரது வாதத் திறமைக்கு (தசரதன் குறையும்
கைகேயி நிறையும்) சிறந்த எடுத்துக்காட்டாகும்”

என முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறுவது சாலப் பொருந்தும்!

அன்றியும், நாவலர் பாரதியார், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாசு கற்பித்தலாகாது என்ற கொள்கையும் கொண்டவர்; தம் கெழுதகை நண்பர் சி.சு. பாரதியார், பாஞ்சாலிக்காகப் பாஞ்சாலி சபதம் பாடியது போல, இவரும் கைகேயிக்காகத் தசரதன் குறையும் கைகேயி நிறையும் கூறினார் என்று கூறுவதும் பொருந்தும்!

இவ்வகையில் தமிழ் இலக்கிய உலகுக்கு இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.

‘சேரர் தாயமுறை’

“மக்கட்டாயமுறை, மருமக்கட்டாயமுறை, இவ் விரண்டும் கலந்த தாயமுறை எனத் தாயமுறையில் முப்பிரிவுகள் உண்டு. இவற்றுள் மருமக்கட்டாயமுறை, கேரளத்தில் கடந்த ஐந்து நூற்றாண்டுகட்கு மேலாக இருந்து வருவது . ஆனால் சோழ பாண்டிய நாடுகளில் இருப்பது மக்கட்டாயமே! எனவே, பண்டைச் சேரநாட்டிலும் மக்கட்டாயமே இருந்தது; பின்னர் தான் மருமக்கட்டாயமாக மாறியது என்பர் அறிஞர். இதுபற்றி ஆராய எழுந்ததே சேரர் தாயமுறை என்னும் நூல்!

‘சேரர் தாயமுறை’ என்னும் இவ் ஆராய்ச்சி நூலை முதன்முதலில் நாவலர் பாரதியார், 1929ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் (SystemofSuccession in the Chera Kingdom) எழுதி வெளியிட்டார்; பின்னர்த் தமிழிலும் அது வெளிவந்தது.

கேரளத்தில் வழங்கும் மருமக்கட்டாயமுறைக்கு அடிப்படையாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு:

1.  பெண் வழியிலேயே உறவு முறை - தாய்மாரே குடிபேணும் அடிமரம்;

2.  ஆடவர்கள், தம் மாமன்மார்க்கு உரிய வழித்தோன்றல்கள்;

3.  குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்று மில்லை;

4.  குடியின் தலைமை, உரிமை - மருகர்களில் வயது முறைப்படி வரும்;

5.  அரசர் குடும்பங்களிலும் நாடாளும் உரிமை, மருகர் வழியே வரிசை முறையில் வருவது;

6.  தந்தைமார்க்கு அவர்களின் ஆண்மக்கள் வாரிசு ஆகார்; அத்தந்தையருடன் பிறந்த பெண்வயிற்று மருகரே வழித்தோன்றல்!

இந்நூலின் ஆய்வுக்கு இவர் சான்றாகக் காட்டும் முதன்மை நூல் பதிற்றுப்பத்து ஆகும்.

நாவலர் பாரதியார் கூறும் பல்வேறு கருத்துக்களில் ஒன்றுமட்டும் இவண் குறிக்கத்தகும்.

“சங்க நூல்களில் சேரரைக் குறிக்க வருமிடத்து, ஒரு சேரனையாவது
அவன் தந்தைக்கு ‘மகன்’ என்ற குறிப்புக் கிடையாது அம்
முன்னோனின் ‘மருமகன்’ என்ற குறிப்பே வந்துள்ளது;
‘இளஞ்சேரலிரும்பொறை. பெருஞ்சேரலிரும் பொறையின் மருகன்’
என்ற பொருளில் விறல் மாந்தரன்றன் மருகன் (மருகன்.
வழித்தோன்றல்) என்று பெருங்குன்றூர் கிழார் பாடுகின்றார்!”

இந்நூல் வாயிலாக நாவலர் பாரதியார் காட்டும் ஆய்வு முடிவுகளிற் சில வருமாறு:

1.  தமிழ்நாட்டில் குடகுமலைத் தொடருக்கு மேற்கே, குடபுலத்தில் மட்டுமே இம் மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றது. நாயர் என்ற திராவிட சமுதாயத்தார். நம்பூரி என்ற ஆரியப் பிரிவினர், பிறநாட்டி லிருந்து குடியேறிய மாப்பிள்ளைமார் இவர்கள் மருமக்கட்டாயிகளாவர்;

2.  இம் ‘மருமக்கட்டாயமுறை’, சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சி பெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாகத் தெரிகிறது;

3.  அம் மலைத் தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்க காலந்தொட்டே மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது.

இவ்வாறு கூறுபவர்,

1.  மக்கட்டாய மரபும், மருமக்கட்டாய மரபும் ஆகிய இவ்விரண்டும் பண்டைத் தமிழ் மரபா?

2.  அவ்வாறாயின், தமிழகத்தில், மருமக்கட்டாயமுறைவழக்கிழந்தது எதனால்?

3.  தமிழ் மரபின்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொண்டனர்?

4.  மிகப்பழங்காலத்தில் தாய்வழிமரபே இருந்து, பின்பு தந்தைவழித் தாயம் வந்ததாகக் கருதலாமா?

5.  மாப்பிள்ளைமார்-அராபி நாட்டினர். மகமதியர், குடநாடு வந்த போது தங்கள் பூர்வீக அராபியப் பழக்கத்தைப் புகுத்தினரா?

6.  இத் தாயவழி ஆதிக்கத்தால், நாஞ்சில்நாட்டுத் தமிழர்களும் இம்முறையைப் பின்பற்றினார்களா?

எனும் வினாக்களை எழுப்பி, மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றார்.

ஆனால் இவரது ஆராய்ச்சியைப் பேரறிஞர்களான மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் ஆகியோர் மறுத்து நூல்களும் எழுதியுள்ளனர். எல். கிருட்டிணசாமி பாரதியார், நாவலர் பாரதியாரின் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் நூல் ஒன்றும் எழுதியுள்ளமை இவண் குறிக்கத்தகும்.

எனினும் “இவ் ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளது; புலவருக்கு நல்விருந்து” என்றும் அறிஞர் போற்றுவர்.

சேரர் பேரூர்

பண்டைச் சேரமன்னர்களின் தலைநகரம் வஞ்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ‘இக்காலத்தில் அஃது எங்கு உள்ளது? என்பதுகுறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.

“கடலோரம்** பேராற்றின் மேலது வஞ்சி” என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் மற்றும் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையர் போன்றவர்களும் கூறுவர். தமிழறிஞர் வி. கனகசபைப்பிள்ளை. “குடமலைத் தொடரின்** அடிவாரத்தில் பேரியாற்றங் கரையில் ஒரு பாழூராகிய திருக்கரூரே வஞ்சி என்பர். அறிஞர் மு. இராகவையங்காரோ. திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கரூவூரானிலையே வஞ்சி” என்பர்.

இம் மூன்று கருத்துக்களுள் பொருந்துவது யாது என ஆராய எழுந்ததே சேரர் பேரூர் எனும் ஆய்வு நூல்! இது. பெரும் பாலும் மு. இராகவையங்கார் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூற்கருத்தை அடியோடு மறுப்பதாக அமைந்துள்ளது. போகிறபோக்கில் வி. கனகசபைப்பிள்ளையின் கருத்தையும் மறத்துத் தங்கோள் நிறுவுகின்றார் நாவலர் பாரதியார்.

இவ் ஆய்வு நூல்வாயிலாக இவர் கூறும் முடிந்த முடிபு வருமாறு :

1.  பட்டினப்பாக்கமும், அரசன் குடிப்பாக்கமும் கூடியது வஞ்சி மூதூர். பிற்காலத்தில் ‘பட்டினப்பாக்கம்’, மகோதை என்றும்; அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சி முற்றம் என்றும் அழைக்கப்பெற்றன. இவ் வஞ்சிமுற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. வஞ்சி - வஞ்சை முற்றம் - களம். பிற்காலத்து இது தலங்களுள் வைத்தெண்ணப் படுங்கால் திரு அடைபெற்றுத் திருவஞ்சைக் களமா’க ஆகியிருக்க வேண்டும்.

2.  எனவே சேரர் சங்ககாலப் பேரூர், பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் ஏறத்தாழ 30 மைலுக்கு அப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரி ஆம்பிராவதி கூட்டத்திற்கு மேற்கே புனல்நாட்டில் உள்ள சோழர் பழவூரான திருவானிலையுமன்று;

3.  சேரர் பேரூரான வஞ்சி மூதூர் மலைநாட்டில், மேலைக்கடற்கரையில் பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டூர் எதுவுமாகாது!

சேரர் தலைநகராம் இவ் வஞ்சிமாநகரம் குறித்து அறிஞர் களிடையே கருத்துவேறுபாடுகள் உள. எனினும் வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை கூறுவதனை இங்குக் குறிப்பது பொருந்தும்.

….ஆயினும் அது (வஞ்சி) மேலைக் கடற்கரையில் இருந்தது என்பதற்கே சிறந்த சான்றுகள் உள்ளனவாகக் கருதலாம். ஒருகால் சேர மன்னர் வஞ்சியையே யன்றிக்கரூவூரையும்மற்றொருதலைநகராகக்கொண்டிருப்பார்!”

உண்மை எதுவாயினும், இந்நூல் ஆராய்ச்சிக்கு நாவலர் பாரதியார் மேற்கொண்ட கடுமையான உழைப்பை எவரும் மறந்துவிட இயலாது. இவரது ஆராய்ச்சித் திறனை விளக்க வல்ல ஓர் அரியநூல் இது எனலாம்!

முடிவுரை

நாவலர் பாரதியார் எழுதிய இந் நான்கு ஆராய்ச்சி நூல்களும் தமிழகத்திற்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் எனலாம். இந் நான்கினையும்குறித்தவிரிவhன ஆராய்ச்சியை, யான் எழுதிய ‘நவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’ என்னும் முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பக்20முதல் 91 முடிய)காணலாம்.
வாழ்க நாவலர் பாரதியார்!
அன்பன்

முனைவர் ச. சாம்பசிவனார்


சேரர் பேரூர்


பகுதி 1 : முன்னுரை

குடதிசைச்சேரர் கோநகர்வஞ்சி யாண்டையது என்பது வினா. இதற்கு முத்திறக்கொள்கையோர் மூவேறு விடை தருவாராயினார்.

சிலப்பதிகாரத்திற்குரைவகுத்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரும், பெரியபுராண நூலுடையாரும் மகாமகோ பாத்தியாயர் ஸ்ரீசாமிநாதையரவர்களும், அடிப்பட்ட தமிழ் வழக்குடை யாரும் மலைநாட்டுத் தலைநகராம் வஞ்சியைக் கடலோரம் பேராற்றின் மேலதெனக்கொள்ப.

காலஞ்சென்ற ஸ்ரீ கனகசபைப்பிள்ளையவர்கள், பின் வழக்கில் வஞ்சிக் கருவூரெனவு மொருபெயருண்மை கொண்டும், குடமலைத் தொடரினடி வாரத்திற்கு பேரியாற்றங் கரையில் ஒரு பாழூருக்குத் திருக்கரூர் என்னும் பெயருண்மை கொண்டும், அப்பாழூரையே சேரர் பேரூராக் கருதினர்.

சமீபத்தில் வெளிவந்த சேரன் செங்குட்டுவன் என்னுஞ் சரித நூலாரோ, இவையிருகூற்றும் கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமும் இல்லை”. எனவும். வஞ்சி யென்பது திருச்சிராப் பள்ளிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கருவூரா னிலையாமெனவும், வற்புறுத்துவர்.

இம் முத்திறக் கொள்கையுள்ளு மொன்றே முந்துநூன் முடிபுக் கொத்த தாகும் என்பதொருதலை. எனவே அஃதாமாறென்னை? வஞ்சி நக ரொன்றோ? பலவோ? ஒன்றெனின், அது மலைநாட்டதோ? அன்றிப் புனனாட்டூரேயோ? என்ற வாராய்ச்சி நிகழ்வதியல்பாம்.

முதற்கண், இவ்வூர்சுட்டிய சில பெரும்பழநூலருந் தொடர்களை யுய்த்து நோக்கலேற்புடைத்து.

(1)" தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சி"

(புறம். 11)

(2)" . . . . . . நெடிதே
வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினும்"

(புறம். 387)

3.  “தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்”

(சிலம்பு. காதை 29)

4.  “கலிகெழு வஞ்சியு மொலிபுனற் புகாரும்”

(சிலம்பு. காதை 8)

5.  “குட்டுவன், வருபுனல்வாயில் வஞ்சியும்”

(பத்து)

6.  “புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉந்
    திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்”

(மணிமேகலை காதை 28 வரி 101, 102)

7.  “செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்
    பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
    போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய”

(மேற்படி காதை 26 வரி 77, 78, 79)

(8)“… … சேரன்
விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப்
பொற்கொடைப் பெயர்ப்படூஉம் பொன்னகர் பொலிந்தனள்”

(மேற்படி காதை 26 வரி 29)

9.  இன்னும்,

“வானவன் வஞ்சி” “பொற்கொடி வஞ்சியில்”

“பூவா வஞ்சி” “வஞ்சியிலிருந்து வஞ்சிசூடி”

“வாடா வஞ்சி” “பூங்கொடி வஞ்சிமாநகர்”

எனவும் வருவன பண்டை நூல்களிற் பலவிடத்தும் பரக்கக் காணலாம். பின்னும்,

“வஞ்சி யகநகர்வாய்”

“மதிதங்கிய மஞ்சணி யிஞ்சிவஞ்சி”

எனப் பெரியபுராணத்தும் வந்துள.

இவையன்ன அச்சிட்டு வெளியான பழநூல்கள் பலவற்றுள்ளும், சேரர் பேரூருக்கு வஞ்சியென்பதன்றி, கருவூர் என்னும் பெயர்வர யாண்டுங்கண்டிலம். ஸ்ரீ இராகவையங்காரவர்கள் தங்களாராய்ச்சியி லெடுத்தாண்டுள

“… … கோதை
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீ ருயர்கரை குவையிய
தண்ணான் பொருநை மணலினும் பலவே”

(அகம். 93)

என்னுஞ் செய்யுளையறிவேம். அதுபற்றிக் கீழே விரித்து ரைப்பேம். தற்போது, வெளியிட்ட பழநூலொன்றேனும் வஞ்சியுங் கருவூருமொன்றென விதந்துகூறக் காண்கின்றிலம். இதுவரை, அடிப்பட்ட பழைய நூல்களிற் கண்ட மேற்கோள்களாற் கிடைக்கப் பெறுவன:

1.  சேரர் கோநகர்வஞ்சி

2.  அது பொருநைக்கரைமேலது.

என்னுமிரண்டே. இவை நிற்க,

இனி : “வஞ்சுளாரணியம், வஞ்சி கருவூ” ரெனவும் “பொற்புமலி யாம்பிரவதி யான்பொருனையெனவும் புகலுவரால்” எனவும், “செய்தவன் பெயர்முதலிய” வரலா றொன்றுமே யறியப்படாத தற்காலக் கருவூர்த் தலபுராணப் பிரமாணத் தையும், சோணாட்டுக் கருவூர்ப் பெருமாள் கோயிற் கற்சாசனத் தொன்றில் வஞ்சி … ஸ்ரீவைஷ்ணவரோம்”. என்னுந் தொடர் கண்டதையுங் கொண்டிக்கருவூரே வஞ்சியெனவும், அதனரு கோடு மாம்பிராவதியே பொருநையெனவும் துணிந்த ஸ்ரீ இராகவையங்காரவர்கள், பின் தங்கருத்தை வலியுறுத்தச் சில பல தடை விடைகளு மெடுத்தாண்டுளார்கள். அவையிற்றின் வலியும், தகவுடைமையு மொருதலையாத் துணியக் கிடப்பின், அவர்கள் கொள்கையே முடிந்த துணிபாகக்கொள்ளுவதிற் சிறிது மாட்சேபமில்லை. எனில் முறையே அவற்றையுற்றுநோக்க அடிப்பட்டபழ வழக்கே வலிபெற்று ஐயங்காரவர்கள் கருத்து நலிவதாக் காணப்படுகின்றது. அரிய ஆராய்ச்சித்திறம் பலவிடத்தும் காட்டிச்செல்லும் ‘சேரன்செங்குட்டுவன்’, என்னு மினிய புத்தகத்தில், வஞ்சிமாநகரம் என்னுந் தலைப்பெயர் கொண்ட பகுதியில், கருவூரானிலையே வஞ்சியெனத் துணிவதற்குக் காட்டிய காரணங்கள் முறையே சிறிதாராய்வாம்.


பகுதி : 2 வஞ்சி வஞ்சுளாரணியமா?

முதலில், வஞ்சுளாரணியம் வஞ்சி கருவூர் என்னு மிக்காலக் கருவூர்ப் புராணச் செய்யுளும், கருவூரானிலையருகே வஞ்சி யம்மன்’, ‘வஞ்சுளேச்சுர லிங்கம்’, என்னுந் தெய்வப் பெயர்கள் வழங்குவதுங்காட்டி, இதனால் இக்கருவூரே வஞ்சியெனத் தமிழிலும், வஞ்சுளாரணியமென வடமொழி யிலும் வழங்கப்படுவதாம்”,1 என்றார்கள். சேரர் பேரூராம் வஞ்சிக்குக் கருவூர் எனுமறுபெயர் பண்டை வழக்கிலுண்டோவென்னு மாராய்ச்சி நிற்க, எனைத்து வகையானும் வடமொழி வஞ்சுளாரணியம் தமிழ்வஞ்சியாகா தென்பது வெளிப்படை வஞ்சுளம் என்னும் வடசொல்லுக்கு, அசோகமரம் (ருஎயசயை) என்று பொருள். செங்குட்டுவன் சரித நூலார், வஞ்சுளாரணியம் வஞ்சுளாடவி என்னுங் கருவூரானிலை வஞ்சி (அசோக)மரம் நிறைந்த காடாதலின் இப்பெயர் பெற்றதென்பர்”. வஞ்சி என்னுந் தமிழ்மொழியோ கொடிப்பெயரேயன்றி யாண்டும் மரப் பெயராகாமை உய்த்துணரத்தக்கது. அன்றியும், சேரர் கோநகரை, பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்தியநன்னகர் என்றும் பொற் கொடிவஞ்சி என்றும், பூங்கொடி வஞ்சி மாநகர், பொற் கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர் என்றும் பொற்கொடி மூதூர் என்றும் கடைச்சங்கப் புலவரும், செங்குட்டுவன் காலத்தவருமான சாத்தனார் தம் மணிமேகலையில் விதந்து கூறியுள்ளார். இவ்வாறு குட்டுவர்கோநகர் வஞ்சியெனும் வல்லியின் தனித் தமிழ்ப்பெயர் கொண்டதெனப் பண்டைநூல் கூறுவதுணர்ந்துவைத்தும், அதற்கெட்டுணையும் பொருத்த மின்றி, தமிழறிந்த ஐயங்காரவர்கள் நேற்றெழுந்தவோரநாம தேயியின் பாட்டை யாதாரமாக் கொண்டு, வஞ்சுளாரணியமே தமிழில் வஞ்சியென மருவிற்றெனக் கூறியது மிக வியப்பைத் தருமன்றோ?

ஆரியர்வந்து கருவூரானிலையை வஞ்சுளாரணியச் சேத்திரமாகப் பிரதிட்டித்துக்கொள்ளுமுன்னர்ச் சேரருக்குத் தலைநகரில்லைபோலும். உண்டேல், அக்காலத் தமிழ்ப் பேர்தான் யாதோ? மிகப்பழந்தமிழ் நூலெல்லாம் மலை நாட்டுக்கோநகரை வஞ்சியென்றேகூறக் காண்கின்றோம். ஆனால், பாண்டவருக்குப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னரே வான்மீகரறிந்த கபாடபுரத்திருந்து செங்கோலோச்சி, பாணினிக்குமுன் தொல்காப்பியமியற்று வித்துப் பழையன் என்னுங் காரணவியற் பெயருமுடைய பாண்டியன் கோமுதுகுடியையே, ஓசை ஒற்றுமை ஒன்று கண்டு, பின்னூழியிறுதியிற் பொருத பாண்டவரிலொருவன் மணலியூர்க்கிளைப்பாண்டியன் மகளை மணந்த கதைகொண்டு பாண்டவர் வமிசத்துப் பிறந்ததால் பாண்டியர் குலமாயிற்றென வாய்கூசாது கூறியவர்களுக்கு, கொடிப் பெயரை மரப் பெயராக்கி வடமொழிக்கு வாகைசூடுவதருமையாமா? பாண்டவரென்பதே தந்திதாந்த நாமம்: பாண்டு புத்திரர் என்பது பொருள். இனி யிதினின்று பிறிதொரு தத்திதாந்த நாமம் பிறக்குமென்பது வடமொழி வழக்காமோவில்லையோ தெரிகிலேம். மனுவழிப் பிறந்தாரெல்லாம் மானவராவ தன்றி, ஒரு மானவன் பின்னோருக்கு அப்புனைவுப் பெயரைத் திரித்து அதனடியாக வொரு புதுப்பெயர் தரும் வழக்கறியேம். மானவரெல்லாம், மனுவமிசத்தாராவது போல, பாண்டியரென்பது வடமொழித்தத்திதாந்தப் பெயராமாகில், பாண்டியரெல்லாம் பாண்டுபுத்திரரேயாக வேண்டும். பாண்டவன் என்று பற்குனனுக்கு இயற்பெயருமில்லை. அன்றியும், பாண்டவரிலிருந்து பாண்டியர் என்பது பிறக்கும் வடமொழி விதிதானென்னையோ? இஃதிடைப்பிறவரல்: எனினும், ஐயங்காரவர்கள் ஆராய்ச்சி முறையிவ்வாறோசை யாசையானிடையிடையே யிழுக்கப்பட்டிடர்ப்படுவதை யினிதுணர்த்துதல் பற்றி ஈண்டுக்குறிக்கப்பட்டதன்றி வேறில்லை.

இவ்வாறே வஞ்சுளேச்சுரலிங்கம் என்று கருவூரருகே விளங்கும் தெய்வப் பெயரும் அசோகடி முளைத்த இலிங்க
மெனக் காரணப் பெயராய் வடமொழியடியாகப் பிறந்ததாதலா லதற்கும் வஞ்சிக்குமெனைத்தேனுந் தொடர்பில்லையென்பதும் தெளிவாகும். இப்பெயர் ஆண்டு வழங்குதல்பற்றி வஞ்சிமூதூரிக் கருவூரானிலை யென்று கொள்ளுவது ஆராய்ச்சி முறையாகாது. இனி இக்கருவூருக்குத் தெற்கே நதிக்கரைத்துர்க்காதேவி வஞ்சியம்மன் என்றழைக்கப்படுவதால், கருவூர் வஞ்சியாகுமென்பர். வஞ்சியென்னுந் தமிழ்ச்சொல், ஒரு பூங்கொடிக்கு மதன்சார்பாகச் சேரரூருக்கும் பெயராவதன்றி, தமிழகத்தே பெண்ணுக்கும், தரும தேவதைக்கும் பெயராய் வழங்குவதுமுண்டு. எனவே, கருவூர்க்கருகுளார் தம்மூர்த் துர்க்கையை அறத் தெய்வமாக வழிபட விசேடக் குறிப்பொன்றும் வேண்டார். அன்றி ஒருகால் இப்பெயர் செங்குட்டுவனால் முதலில் வஞ்சியிற் கோயிலமைத்து விழவெடுக்கப்பட்ட பத்தினிக் கடவுளுக்கேவுரியதெனினும் இதனாற் கருவூரானிலை வஞ்சி நகராகக் கருதப்படவேண்டிய அவசியம் புலப்படவில்லை. இவ்வஞ்சித் தெய்வத்திற்கு இலங்கை முதலிய பிறநாட்டரசரும், சோழபாண்டியரும் தத்தம் நாட்டிற்கோயினாட்டி விழவெடுத்து வழிபட்டா ரெனச் சிலப்பதிகார வாயிலாகத் தெரிவதோடு தற்காலத்தும் கண்ணகி வழிபாடு பலவிடத்திருப்பதையுங் காண்கின்றோம். ஆகையால் மலை நாட்டுத் தலைநகருக் கணித்தில்லாக் கருவூரருகூராரும் வரதையான வஞ்சித் தெய்வத்தை வணங்குவதியல்பாகலாமே? இது கொண்டொரு பெருஞ்சரிதவாராய்ச்சி நிகழ்த்தி கோவலன் மனைவி கோயிலுள்ளாங்கெல்லாம் மூதூர் முழுமணமோந்திடலாமோ?


பகுதி 3 : “கோதைதிருமாவியனகர்க்கருவூர்” பேரியாற்றின் மேல் “வஞ்சியக நகர்” ஆவதன்றி, ஆனிலைக்கருவூரன்றாம்

இன்னுமிதுவேபோல், “தண்பொருநைப்புனற்பாயும் விண்பொருபுகழ்விறல்வஞ்சி” என்ற பேய்மகள் இளவெயினி பாட்டொடும், “தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார்கோமான்” என்னுமடிகள் தொடரொடும், “பொற்புமலியாம்பிரவதி யான் பொருனையெனவும் புகலுவரால்” என்னுங் கருவூர்ப்புராணச் செய்யுள் வரியையிணைத்து, ஆம்பிராவதியே தண்பொருநை யெனவும், கருவூரேவஞ்சியெனவும் சாதிக்கலாயினர். முதலில் மூதூர்வஞ்சிக்குக் கருவூர் எனவுமோரியற்பெயர் பண்டை வழக்கி லுண்டென்ப தொருதலையாத் துணியப்படாததாகும். ஐயங்காரவர்கள் காட்டிய வெளிப்படா அகப்பாட்டொன் றொழிய விதுகாறு மச்சேறிவெளிப்போந்த முன்னூல் மூலங்களில், சேரர்பேரூரை வஞ்சியெனக் காண்பதல்லால் யாண்டுங் கருவூரென்றழைக்கக் காணோம். புறநானூறு, பத்துப்பாட்டு, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு முதலிய பழநூல்களில் இவ்வஞ்சிகுறித்த பலவிடங்களையு மேலே காட்டியுள்ளேம். அகப்பாட்டு அடிகளையுஞ் சிறிதாழ நோக்கில், கருவூரென்பதியற்பெயராகாமல், புலவன் புனைந்துரை யாகலாமெனவுந்தோற்றுகிறது. அற்றேல், அது பெரியவூர் (கருமை - பெருமை) எனப் பொருள்பட நிற்கும். அன்றியுமிக்கவியல் கருவூர் முன்றுறை மணலே விசேடிக்கப்படுவதால், வஞ்சியகநகரொழித் தாற்று வாய்த்துறையையே நுதலிற்றெனல் பொருத்தமாகும். கடற்கரைப் பேரூரெல்லாம், அலைவாய்ப் பாக்கம், அகவூர்ப்பாக்கமெனப் பிரிபடுவதியல்பு. சிலப்பதிகாரத்தும் புகாரை மருவூர்ப்பாக்கமும், பட்டினப்பாக்கமுமெனப் பிரித்துக் கூறப்பட்டிருத்தல் நோக்கற்பாற்று.1 இதுவேபோல், வஞ்சியும் பேராறு கடலொடு கலக்குமிடத்ததாகவே, அவ்வாற்றின் வாய்த்துறைவேறு, உண்ணகர் வேறாக வேண்டும். ஆகவே, வஞ்சியகநகர், கருவூரும், முன்றுறைப்பட்டினம் முசுறி அல்லது மகோதையுமாம்போலும். இது கொண்டே மணிமேகலை சிலப்பதிகார நூலுடையாரும், இவ் வானவன்வஞ்சியைக் குணவாயிற் புறக்குடியும் அரசன் புரிசை யமைந்த அகவூர்ப் பாக்கமாம் வஞ்சிமுற்ற மென்னும் இடை நிலவரைப்பும் இப்பேரிசைவஞ்சிப்புறத்துக் கொடி மதின் மூதூர்க்குடக்கண் கடற்கரைத் துறைமுகமாம் முழங்கு நீர்வேலி மூதூரும், என்றித்திறத்தவாய்ப் பிரித்தே வருணித்துள்ளார்.1 இன்னும் பெரியபுராண முடையாருமிவ்வூரை வஞ்சியகநகர் வேறு, வேலைமிசை மகோதைத்துறை வேறாகப் பிரித்துக் காட்டியுமுள்ளார்.2 பேரியாற்றின் முகம் மிகவிரிந்து அலையொடு சமனிலையாகத் தணிந்து, ஆற்றுவாயெனத் தோற்றாது கலந்து கடலேயாதல் கொண்டதற்கலிமுகமென்றே பெயருண்டு. இதை அக்காலத்து யவன வணிகர் குறித்திதற்கு (ஞளயனடிளவடிஅடிள)ப் பொய்முகமென்றே தங்கள் கிரேக்க மொழியிலும் பெயர்வைத்திருத்தல் கவனிக்கத்தக்கது. இத்தகைய வாணிபத்துறைமுகமே முன்றுறையாகும். அத்துறை மணலைக் குறிக்கும் புலவன், மேடான அகநகர்க்கு முன்றுறையில் அலிமுகமாகப் பெருகும் பொருநைக்கரை மணலெனத் தோற்றுவாய்செய்து, கோதைத் திருமாவிய நகர்க்கருவூர் முன்றுறைத் தெண்ணீருயர் கரைக்குவையிய தண்ணான் பொருநைமணல் என்று பாடினர்போலும். ஈண்டுக், கருவூர் என்பது மேட்டூர் அல்லது நடுவூர் என்று பொருள்படுவதாகும். ஆகவே அலைவாய்ப்பாக்கத்தினும், மேடான நடுவூராம் அரசன்கொடிமதி மூதூராகிய இவ்வஞ்சிமுற்றம் அல்லது வஞ்சைக்களத்திற்கே கருவூரெனவு மொருகாரணப் பெயரமைந்திருக்க வேண்டுமென்பது மிகப்பொருத்த முடையதாகும். மணிமேகலையிலிப் பொற்கொடி மூதூர்ப்புரிசையை 3 இடைநிலைவரைப் பெனச் சுட்டியிருப்பதும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது. இவ்வகப்பாட்டுக் கருவூர் முன்றுறைமணல், வஞ்சியகவூராம் கருவூர் என்னும் வஞ்சைக் களத்தின் முன்றுறைமகோதைப்பட்டினக் குண்டு நீரடைகரைவேலை வாலுகமே”5 யென்பதைச் சுட்டும் சில மணிமேகலை சிலப்பதிகாரச் சான்றுகளுமீண்டுக் கவனிக்கத்தக்கன.

சோணாட்டுக்கீழ் கடலில், காவிரிப்பட்டினத்திற்குத் தெற்குள்ள மணிபல்லவத்திலிருந்து வடமேற்கே வஞ்சிக்குச் சென்ற மணிமேகலை, கண்ணகி கோயில் கொண்டிருந்த செங்குன்று மலையை வழியிற்கண்டு, அக்கோயிற் பத்தினிக் கடவுளை வந்திப்பான் சிந்தித்திறங்கி, அன்னையை வலம்வந்து வழிபட்டு அவள் பால்வரம்பெற்று, மீண்டம்மலையினின்று மேற்கே வஞ்சிக்கு வழிக்கொண்டவள், முதலில் வஞ்சிப் பேரூரின் குணவாயிற்புறத்துள்ள சிறு புறஞ்சேரியிற்புகுந்து ஆங்கற வொழுக்கத் தமைந்துநின்ற பல சமயவாதிகளின் வேறுபட்ட கொள்கைகளையுமவர்கள் கூறக்கேட்டுப் பின் தன் தாயரொடு அறவணவடிகளைக்காண விரும்பி அப்புறஞ் சிறையைக் கடந்து, இடைநிலைவரைப்பாம் கருவூரென்னுங் கொடிமதின், வஞ்சி முற்றத்துள் நுழைந்தவ்வரசர் குடிப்பாக்கத்தழகு பலவுங்கண்டு மகிழ்ந்து, கடைசியாகப் பௌத்த தருமங்களைச் சொல்லு முனிவர்களின் தவச்சாலை கணிறைந்த அவ்வஞ்சியின் குடவாயில் முன்று றைப் பட்டினத்திற்சென்று, அங்கே தவஞ்செய்திருந்த மாசாத்துவானைப் பணிய, அவன் மாதவி அறவணவடிகள் முதலாயினோர் காஞ்சி நகரத்திருப்பதாகவும், அவ்வூர் சென்றறஞ் செய்யெனவும் சொல்ல, மணிமேகலை யவனைவணங்கி, தானின்ற அவ் வஞ்சிநகரத்தின் மேற்றிசை யினின்று மேலேயெழுந்து வடதிசைக்கட்சென்று, காஞ்சிநகரினடுவே யிறங்கினள் என்பது மணிமேகலையிற் கூறிய1 சரித்திரம். மணிபல்லவத்திருந்து, கண்ணகி கோயில் காணப் போவதாகப் புறப்பட்டு, மணிபல்லவத்திற்கு வடமேற்கே அவள் கோயில் கொண்டுள்ள செங்குன்றத்திற்குச் சென்று, மீண்டுங் கிழக்கே வஞ்சிநோக்கி வந்ததாகக்கூறாமல் புறப்படும் பொழுதே வஞ்சியுட் செல்குவனென்றந்தரத் தெழுந்த”2 மணிமேகலை, வஞ்சிக்குப் போகும் வழியிற் செங்குன்றிலிறங்கித் தாய்கோயிலிற் பணிந்து பிறது வஞ்சிப்புறஞ்சேரி புகுந்ததாகத் தெரிவதாலும், இவ்வாறு செங்குன்றத்திற்கு மேற்கே இவ்வஞ்சிப் புறவூரும், கருவூராமக வூரும், மகோதைப்பட்டினமும், ஒன்றற்கு மேற்கொன்றாயடுத்து நின்ற வரிசைப்படி மணிமேகலை யவ்வோரூர் மூன்று பாக்கங்களையு1 முறையே சென்று கண்டதாகக் கூறப்படு தலானும், சேரர்வஞ்சி யிக்கடலருகே மகோதை வஞ்சைக்களமே யன்றிப் புனனாட்டிற் செங்குன்ற மலைக்கு 300 மைலுக்குக் கிழக்கிலுள்ள சோழர் தொல்குடிக் கருவூரானிலையாகாதென்பது வலிபெறுகின்றது. இதனாலரசர் புரிசையமைந்த நடுவூர்ப்பாக்கமாம் வஞ்சிமுற்றத்திற்குக் கிழக்கே புறஞ்சேரி நோக்கி யொருவாயிலமைந்திருந்தாலு மது புறக்கடைவாயிலே யென்பதும் அம்மூதூரின் முக்கியவாயில் முன்றுறை நோக்கிய குடவாயிலே யென்பதும் போதருகின்றது. போதரவே சுபதினத்தில் வடதிசைநோக்கிப்புறப்பட்ட செங்குட்டுவன் தானை வஞ்சி முற்றத்தின் முன்றுறைக்கடல் நோக்கிய பிரதான மேற்குவாயில் வழியே தான் சென்றிருக்க வேண்டு மென்பதுந் தெளிவாகின்றது. இதனாற்றான் அடிகள், தம் தமையன் வடயாத்திரையிலவனுடனடந்த சேனையின் தலைத்தார் சேரநாட்டின் கீழெல்லையான மலைமுதுகு நெளியவேற, கூழைப்படை வஞ்சிமுற்றத்தின் முன்றுறைக் கடலினலை விளிம்பு சூழ்போத, நடுவணிகள் இக்கடல் மலைகளுக்கிடை நிலமதர்பட நடந்தன வென்றெழில்பட வருணித்துள்ளார். இப்பெரும்புலவர் தருஞ்சான்றிரண்டானும், மலைநாட்டுத் தலைநகரான வஞ்சிமூதூர், குணவாயிற் புறஞ்சிறை, இடைநிலை வரைப்பென்ற கருவூர் அல்லது ‘வஞ்சிமுற்றம்’, குடவாயில் முன்றுறை வெண்மணலடை கரைப் பட்டினமாம் மகோதை எனுமிம் முக்குடிப் பாக்கங்களாற் கூடிய பேரூரேயா மென்பதும் வற்புறுத்தப்படுகின்றது.

இஃதெவ்வாறாயினும், இவ்வகப் பாட்டுச்செய்யுளொன்றே கொண்டு வஞ்சியே கருவூரானிலையெனச் சாதித்தல் கூடாதாம். பிற்பட்ட சேரராசதானியாகத் தெரிகின்ற இவ்வூரை (கொடுங்கோளுரை)ப் பழைய வஞ்சி யல்லது கருவூரென்று கொள்வதற்குச் சங்கநூற் பிரமாண மொன்றுமே கிடையாது … கொடுங்கோளூர் என்றபெயரே பழைய நூல்களுக்குச் சிறிதுந்தெரியாத தொன்றாகும்… சேரராசதானி யாகிய வஞ்சியென்பது ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனு மாகாவென்பதும் … பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகக் … கொள்வதற்குப் பொருத்தமும் பிரமாணமு மில்லையென்பதும் நன்கு விளங்கத் தக்கன என்று வரையறுத்து வாதிக்கும் ஐயங்காரவர்கள், கருவூரானிலையே வஞ்சியெனவும், ஆம்பிராவதியே பொருநைப் பேராறெனவுங் கொண்டதற்குக் கண்ட சங்க நூற்பிரமாணங்கள் தாம் யாவோ? கொடுங் கோளூரே வஞ்சியென வற்புறுத்திய பலநூற்றாண்டுகளுக்கு முன்னுள்ள சேக்கிழார்வாக்கையும் அடியார்க்கு நல்லாருரையையு மடிப்பட்ட வதிகாரமாகாவென நிராகரித் தவர்கள், நேற்றெழுந்த வோரநாம தேயியின் கருவூர்க்கதைப் பாட்டை மேற்கோளாகக் கொள்வ தென்ன வியப்போ? இப்புராணம் எச்சங்கநூலோ? இப்பாட்டு எவ்வளவு பழையநூற் பிரமாணமாகுமோ? இனி, திரு வஞ்சைக் களமே வஞ்சியென் பாரிருவரும் தமிழகம் போற்றும் நல்லாசிரியரும் பெரும்புலவருமாகவும், ஐயங்காரவர்கள் இவரை ஒலி ஒற்றுமை யொன்றே கொண்டிவ்வாறு தடுமாறினரன்றி வேறு பிரமாணங்காட்டாமையா லிவருரை மறுக்கற் பாற்றென் பார்களேல், இவர்கள்கூற் றிருவகையானு மிடர்ப்பட்டழியும், இக்கருவூரின் தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராச தானியாகப் பின்னூல்கள் கூறப்படுதல் காணலா மெனவும், கருவூர் சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாசனங்களாலும் நூல்களாலுந் தெரிகின்றதெனவு மிவர்களே தம் புத்தகத்திலொத்துக் கொள்கின்றார்கள்.1 எனவே, ஆசிரியர் அடியார்க்கு நல்லார் மகாமகோ பாத்தியாய ரிவர்கள் கொள்கைக்குப் பிரமாணமுண்மை கண்டவராகின் றார்கள்; தம் துணிபுக்கோ கருவூர்ப் புராணப்பாட்டொன்றன்றி, திருவானி லைக்கோயிலைப் பற்றிய தேவாரப்பதிகங்களிலேனும், அக்கோயிலிற்கண்ட சாசனங்களிலேனும் வஞ்சியின் பழஞ் செய்தி சிறிதும் குறிக்கப் பட்டிருக்கவில்லை என்று பரிபவப் படுத்துவதல்லால், யாண்டும் யாதும் பிரமாணங்கண்டிலர்கள். ஸ்ரீ கனக சபைப்பிள்ளை அவர்களின் கொள்கைக்கு ஆதாரமா யிருப்பதெல்லாம், கருவூரென்ற பெயரொற்றுமை யொன்றைத் தவிர வேறு சாதனமில்லை. இங்ஙனம் பெயரொப்பொன்றையே கொண்டு நாம் ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனங் கூடும்? என்றதனை யதக்கியொதுக்கு மையங்காரவர்கள் தம் துணிவுக்குக் கண்டதெல்லாம், பொருநை சூழ் வஞ்சி ஆம்பிராவதிமேல் வஞ்சுளாடவி, அகப்பாட்டுக் கருவூர், தேவாரக்கருவூரானிலை, புறப்பாட்டு ஆந்பொருநை கருவூர்ப்புராண ஆன்பொருந்தம் என்னும் பெயர்களுக்குள்ள வேக தேசவோசை யொப்பேயாகக் காண்கின்றோம். ஏகதேசவோசையொற்றுமை யென்றேம் : கனக சபைப்பிள்ளை யவர்கள் கண்ட கருவூர் பேராறு என்னு முழுப்பெய ரொற்றுமையும் ஐயங்காரவர் களுக்குக் கிடைத்தி லாமையானும், இவர்கள் கொண்ட வஞ்சுளாரணியம், கருவூரானிலை, ஆம்பிராவதி என்பன முறையே பழைய வஞ்சி, கருவூர், ஆந்பொருந்தம் என்பவற்றிற்குச் சிறிது பிறிதிசைக்கும் வேற்றுமை யுடைமையானும்!

ஐயங்காரவர்கள் புத்தகத்தில், தம்முடிபுக்காதரவாக வஞ்சியிற் செங்குட்டுவன் வழிபட்ட சிவபெருமானாலயம் கருவூரில் இப்போதுள்ள பசுபதீசுவரர் கோயிலே யாதல் வேண்டும் எனுந் தம்மனுமானத்தையும், காமதேனுவாகிய பசுவினாற் செய்யப்பட்ட ஆலயமாதலின் இதற்கு ஆனிலை எனப்பெயர் வழங்கிய தென்பர். இதுபற்றியே, இக்கோயிற் சிவபிரான் பசுபதீசுவரர் எனப்பட்டார் என்னும் பிற்காலப் புராணக்கதையையுங் காட்டி, அமையாது பின்னும் இவ்வாலயம் கருவூர்த்திருவானிலை எனத் தேவாரப்பாடல் பெற்றிருத்தலோடு சோழர் சாசனங்கள் பல கொண்டதாகவுமுளதென்றும் இங்ஙனம் கருவூர்க்கு ஆனிலை யெனப் பெயரிருத்தல்போலவே, அவ்வூரையடுத்துச்செல்லு மாம்பிராவதிக்கு ஆன்பொருந்தம் எனப்பெயர் வழங்குதல் ஈண்டுச் சிந்திக்கத் தக்கதெனவும் வற்புறுத்துவாரானார்கள். வஞ்சியிற் சேரன் வழிபட்ட சிவாலயம் கருவூரானிலையென்பதை ஐயங்காரவர்களனுமானமே யென்றேம். மூவேந்தர் மூதூர்களிலுமுள்ள பல கோட்டங்களையுமவையிற்றின் வரலாறுகளையும் விரித்துரைக்கு மிளங்கோவடிகள் காமதேனுக்கதை கூறி னாரில்லை. சிலப்பதிகாரமுழுவதிலும் ஆனிலை, கருவூர், ஆம்பிராவதிப் பெயர்களேனும் வரக்காணேம். கதைபல விளக்கிக் காதைகள் பெருக்கி, சிவபிரானை ஆனேறு யர்த்தோன்”. தெண்ணீர்க்கரந்த செஞ்சடைக் கடவுள், நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ்சென்னியுலகு பொதியுருவத் துயர்ந்தோன், பிறவாயாக்கைப் பெரியோன்கோயிலும், நுதல் விழிநாட்டத் திறையோன் கோயிலும் எனப் பலபடப் புனைந்து பாடிய அடிகள், பசுபதீசுரப் பான்மையை யறவே மறந்தனர் போலும். ஆனிலை சுட்டிய தேவாரப் பாசுரங்களும், சோழர் சாசனங்களும் மூதூர் வஞ்சியை முழுவது மறந்தன. இதற்கு மாறாகச் சேக்கிழாரோ, ‘சேவிற்றிருந்தார்’1 திருவஞ்சைக்களமே சேரர் குலக்கோமூதூ”ரென்பர்,2 சுந்தரருமிவ்வஞ்சைக்களத்தையு மதன் துறையான மகோதையையுமே பாடியுள்ளார்.3 இவ்வாறிளங்கோவும், பிள்ளையாரும், சுந்தரரும், அடியார்க்கு நல்லாரும், சேக்கிழாரும், சாசனச்சோழருமறந்த விவ்வருங்கதையெலா மொருங்குவந்து செங்குட்டுவன் சரிதநூலாரை நினைப்பூட்டி யவர்வாயுருவெடுக்கநேர்ந்த விந்தைதா னென்னே? ஐயங்காரவர்கள் கொண்டபடி ஆனிலையே குட்டுவர் குலமுதற்கோயிலா மாயின், அக்கோயிற் சாசனமெலாஞ் சோழரேதரவு மென்றேனுஞ் சேரரைச் சேராததென்னோ? இவை பல விரிப்பிற் பெருகுமென விடுப்பேம். பண்டை நூலறியாப்பட்டியெலாந்தலமாகி, தத்தமக்குப் புராணங்களமைத்துக் கொண்ட இடைக்கால முதல், பாவலர் பலர் ஆரியப் பழங்கதைகளை வாரியிறைத்து, விரித்தும் திரித்தும், குறைத்தும் கூட்டியும் தத்தமாற்றலுக் கேற்றபடி கற்பனைக் காவியமலிவித்த தன்மைதெரிவாரெவரே யித்தல புராணக் கதைகொண்டொரு பழஞ்சரித முடிவு செய்வார்?


பகுதி : 4 ஆனிலையருகாம்பிராவதி வஞ்சிசூழ்பொருநைதானா?

இவ்வஞ்சிசூழ்பொருநை, சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் புகழும் பேராறோ? அன்றி ஐயங்காரவர்கள் கூறியாங் காம்பிராவதியேயாமோ? ஆலத்தூர் கிழார் புறப்பாட்டும்4 நக்கீரர் அகப்பாட்டு5 மன்றி, சங்க நூல்களிற் பலவிடங்களிலுமிவ் யாறு தண்பொருநை, ‘தண்ணம்பொருநை’, தண்ணென் பொருநை, தண்ணார் பொருநை’1 யெனவே வருவதன்றி, ஆன்பொருநை யென வரக்காணாமை யீண்டுச் சிறிது கவனிக்கற்பாலது. ஐயங்கா ரவர்கள் கூறியாங்கு, இவ்வாம்பிராவதிக்குத் தெய்வப்பசு சம்பந்தமாக ஆன்பொருநை யென்றே காரணப் பெயரேற் படவும், இதனையக்காலப்புலவர் பலரும் இவ் விசேடணக் குறிப்பொழித்துப் பாண்டியனாறோ வென்றையுற வாளா பொருநை யென்றேகூறக் காரணமுண்டோ? ஆன்பொருநை எனவந்த மேற்குறித்த விரண்டிடங் களிலுங்கூட, தண்ணாந் பொருநை’2 யென்றிருக்கக் காண்கின்றோம். இவை தண்ணார் பொருநை … … தண்ணென் பொருநை … … தண்ணம் பொருநை என்பவற்றொன்றின்பாடபேதமாகலாமோ வெனு மையம் நிற்க. ஆந்பொருநை என்றபாடமே கொள்ளினும், அஃதாம்பிராவதி நதியாகா தென்பதெந்துணிபு. மேற்குறித்த காமதேனுக்கதை குறித்து, பதி கருவூரானிலையானதேபோல், நதியும் ஆன் பொருந்தமாயிற்றென ஐயங்காரவர்களே விளக்கியதை மேற்காட்டியுள்ளேம். ஆகவே, ஆம்பிராவதியின் மறு பெயரான ஆன்பொருந்தமென்பது, காமதேனு காரணமான புராணப் புனை பெயரேயாகுமென்பதொருதலை. இனி முன்னூல் கூறுஞ் சேரர் பேராறோ ஆந் பொருநை எனத் தந்நகர மெய்கொண்ட பெயரேயாகும். இதன் காரணமும் வெளிப்படை. செழியனை வையைத்துறைவனென்றும், சென்னியைப் பொன்னித் துறைவனென்று மழைப்பதேபோற் சேரனைப் பொருநைத்துறைவனென்பது பண்டைவழக்காம். எனவே, பொருநை, பொறையருக் கேற்புடைப்பேராறாகும். ஆகவே, கொற்கையிற் சங்கமிக்கும் பாண்டியன் பொருநையினின்று மிம்மலை நாட்டுப் பொருநையைப் பிரித்துக்காட்ட லவசியமேயன்றோ? இச்சேரர் பொருநை மலைநாட்டாறாகையால் மலைநாட்டில் “இடவப்பாதி”3 சாரல் மழை கொண்டு ஆநிமாதத்திற்பெருக் கெடுக்குங் காரணம்பற்றி, ஐயங்காரவர்களே காட்டியுள்ளபடி, ஆநி என்னுமொரு மறுபெயருங் கொண்டுளது.1 ஆகவே, ஆன்றசான்றோரிதனை. ஆநியாகிய பொருநை என்பது குறித்து, ஆந்பொருநை என்றார் போலும்.

எனைத்தேயாயினும், பசு சம்பந்தமாகப் பிற்காலத் தெழுந்த ஆன் பொருந்தப் பெயரும், தந்நகர மெய்கொண்ட ஆந் பொருநை என்னும் பழையநூற் பெயரும் ஒன்றெனலாமோ? சமீபத்தில், தமிழ் வளர்க்க முளைத்த சென்னைச் சர்வகலாசாலைச் சிறுகழத் தொருவர், ஒலிநுணுக்க விலக் கணங்களோராதே, தமிழில் வீணே வழங்கும் ற-ர ழ-ள ந-ன எனு மோரொலியிரட்டையெழுத்துக்கள், தம்போற் றமிழபிமானப்புலவரை யிடர்ப் படுத்துவதாயும், அவற்றினொவ்வொன்றே கொண்டு மற்றையதை, அடர்தளிரரிந்து செடிவளர்ப்பார்போல், காதலாற் களைந்தெறிவதே சௌகரியமுமொற்றுமை நயமு முதவுமெனவும் கூறிய அருமை யுபதேசத்தை மேற்கொண்டுய்ய முன்வருமபிமானிகளைத் தவிரப் பிறிதெவரே, பொருளானு முருவானும் வரலாற்றானு மாறுபட்ட விவ்விருவேறுபெயர் கொண்ட நதிகளிரண்டு மொன்றேயென்பார்?

இன்னுமிவ்வாம்பிராவதி, வஞ்சிப்புறமதிலலைக்கும் பொருநை யாகாதென்றறிவிக்குஞ்சான்றுபல பிறவுங் காண்பாம். புனல்படுதுறைகளின் வளங்கமழ்கவிதருஞ் சம்பந்தர், கருவூரானிலைப்பதிக முழுதிலுமே, இவ்வூரை நதிமேற்பதியாகச் சுட்டினாரில்லை; ஆறிலாவூரேபோற் பாடியுள்ளார். காவிரியும் ஆம்பிராவதியுங் கருவூரை யொட்டாதெட்டியோடுமியல் பின்னாளதன்று. ஆளுடைப்பிள்ளையார் தந்நாள்தொட்டேயுள்ள தென்பதுமிதனாற் போதரும், புறப்பாட்டில், புறமதிலலைக்குந் தண்பொருநைப் புனற்பாயும் வஞ்சி”1 யென இளவெயினி, குண்டுகட் பாலியாதன், எனுமிரு பெரும்புலவர் தகவுரை காண்பேமாதலால், பொருநையாறு (கருவூர்க்காம்பிராவதி போற் சேய்மைத்தன்றி) வஞ்சியூர் தழுவியூட்டும் வேறு நதியேயாக வேண்டும். அன்றியும் ஐயங்காரவர்கள், வராகமலையிலுற்பத்தியாகி மாமரச்சோலை வழியே செல்லுதலால், ஆம்பிராவதிக்குச் சூதநதி எனு மறுபெயருண்டெனவும், இவையிரு பெயருங் காரணக்குறியெனவுங் காட்டினார்கள்.2 இந்நதியே பொருநையாமாகில், இயற்கைநல நயந்து பன்மரச் சோலைவளமினிதுவிரிக்கு மிளங்கோவடிக ளிவ் விசேடணங்குறியாமை வியப்பாமன்றோ?

புனனாட்டாம்பிராவதியாறு வஞ்சிசூழ் பொருநை யன்றெனக் காட்டுங் குறிப்பின்னுமொன்றுளது. ஆநி ஆந்பொருந்தம்’, தண்பொருநை எனப் பலவாறழைக்கப்படும் வஞ்சிப்புற மதிலலைக்கும் கல்லென் பொருநை”3 க்கே வானி எனவுமொரு பெயருண்டென ஐயங்காரவர்களே எழுதியிருக்கின்றார்கள்.4 இந்நதியையே, இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்கிழார், சாந்துவரு வானிநீர்”5 எனவும், தெண்கடன்முன்னியவெண்டலைச் செம்புன லொய்யுநீர்”6 எனவும், மாற்றருந் தெய்வத்துக் கூட்டமுன்னிய புனன்மலி பேரியாறு 7 எனவுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவ்விளஞ் சேர லிரும்பொறையை, மேற்குக் கடற்கரைத் தொண்டிப்பட்டினத்தி லிருந்து மலைநாட்டையாண்ட சேரனெனவும், ஆனிலைக் கருவூருடையானன் றெனவும், ஐயங்காரவர்கள் விதந்து கூறியுள்ளார்கள்.8 இவ்வாறிம் மலைநாட்டு மேற்கடற்பட்டினத்தாண்ட சேரனைப் புகழுங்கால், அவனாட்டாறாகப் புகழ்ந்து பாடும் புலவர் புனனாட்டாறைப் பாடவியலா தன்றோ? இவரிச்சேரலிரும்பொறையைப் புகழுங்கவிமூன்றினு மிவ்வாறு சுட்டியபகுதிகளை மேலே காட்டினேம். இவைகளால், இப்புலவர் இவ்விளஞ்சேரலிரும்பொறையின் மலைநாட்டாறொன்றையே, பேராறு எனவும், வானிநீர் எனவும், வெண்டலைச் செம்புனலொய்யுநீர் எனவும், பலபடப் புகழ்ந்தனரென்பது தெளியப்படுகின்றது. இப்பேராறு ஆம்பிராவதி யல்லாத வொருமலைநாட்டாறென்பதோ குட்டுவன் சரித நூலிலு மங்கீகரிக்கப்பட்டதொன்றாம்.1 இவ்வாறு, அயிரைமலைத் தொடரினின் றெழுந்து, மேற்குமுகமாயோடி, கொடுங்கோளுர்த் துறையில் மேலைக் கடலொடு சங்கமிக்குமிப்பேராறே வானியென்று செங்குன்றூர்கிழார் பாடியிருப்பதாலும், இப்பேராறே இளங்கோவடிகளால் தந்தமையன் செங்குட்டுவனாறாகப் புகழப்பட்டிருப்ப தாலும், இப்பேராறாம் வானியே வஞ்சிசூழ் பொருநையாக ஸ்ரீஐயங்காரவர் களுமொப்புக் கொள்வதாலும், இப்பொருநை ‘ஆனிலை’க்கருகோடுவதும், தெண்கடன் முன்னாதுகாவிரியொடு கலக்குஞ்சிறு துணையாறாவதுமான ஆம்பிராவதி நதியாகாதென்பதை யிதனினும் விசதமாக்கவல்லதொரு பிறசான்றெவுமினி வேண்டப்படா தாகுமன்றோ? ஆகவே, வானி எனவும், பேராறெனவுமழைக்கப்படும் பொருநைநீர் புறமதிலலைக்கும் வஞ்சி மூதூரும், இவ்வானியாம் பேராற்றின் மேலதாகிய திருவஞ்சைக்களமாவ தல்லால் - புனனாட்டில் ஆம்பிராவதிக்கருகே, யாறெதுவுமே தீண்டாத வுண்ணாட்டூராகிய ஆனிலைக் கருவூராகாது என்பதையுமிஃ தொன்றே ஐயமறவலியுறுத்துவதாகும்.

மேலும், ஆம்பிராவதி, காவிரியின் துணைநதியாய், புனனாட்டதா கின்றது. பொருநைத் துறைவரெனும் புனைவு பெயர்ப் பெருமிதங்கொள்ளு முடியுடைச்சேரருக்குத் தம் மலைநாட்டிற் பெரிதும், கடல்வாய் யவனர் கப்பலேறும் பெருமைத்தும், பேராறென வோரியற் பெயரே பூண்டதுமான ஆநிப்பொருநையும் தன்மலைப்பிறந்து தன்கடன் மண்டு மலிபுனல் நிகிழ்தருந்தீநீர்”2 நதம்3 பலவுமுளவாகவும், அவை யிழித்து, மாற்றரசருக் குரிய காவிரியினொரு சிறுதுணையாறு பாடுவது வீறுதருமோ? பத்தினிக் கடவுளைப் பரசல்வேண்டுமென… மன்னவன் விரும்பி நூலறி புலவரை நோக்க, ஆங்கவர், ஒற்காமரபிற் பொதியிலன்றியும் விற்றலைக் கொண்ட வியன்பேரிமயத்துக் கற்கால்கொள்ளினுங் கடவுளாகும். கங்கைப் பேரியாற்றினுங் காவிரிப் புனலினுந்தங்கிய நீர்ப்படைதகவோவுடைத்தென்”றாரை, பொதியிற்குன்றத்துக் கற்கால்கொண்டு முதுநீர்க் காவிரி முன்றுறைப்படுத்தல், மறத்தகை நெடுவா ளெங்குடிப்பிறந்தோர்க்குச் சிறப்பொடுவரூஉஞ் செய்கையோ? அன்று”1 என்றுவெகுண்ட செங்குட்டுவன் குலச் செருக்கின் பெருமிதத்தை யடிகளினிது விளக்கியிருக்கக் கண்டு வைத்தும், தன்குடிப்பிறந்தார்க்கு மொவ்வாதெனவெறுக்குங் காவிரி யின் துணைச் சிற்றாற்றின் றுறைவனென்றழைப்பதவன் தருக்கும் புகழும் பெருக்கும் பெற்றித்தெனல் தகவுடைத்தோ? கருவூரானிலையே வஞ்சியாகில் அடுத்ததனரு கோடுங்காவிரியிலெனைத்துப் பகுதியும் சேரர்க்குரியதோ? உரிய சோழரை வென்றதகவன்றி, இயலுரிமை தனக்குண்டேற் செங்குட்டுவன், மேல்அடிகள் குறித்தபடி, காவிரியை வெறுப்பதியல்பாமா? உரிமையின்றேல், காவிரிக்கு இரண்டரைமைல் தூரத்தே கடல் மலை பேறாறென்னு மிவையொன்றேனுஞ் சாராப் புனனாட்டொரூரைத் தந்தலைநகராச் சேரர் கொண்டமை தலியல்போ? பேரரசரூரெல்லாம், கடன் மேலாதல், மலைமிசையாதல், அலைதவழ்விரிபுனலாற்றின் வாயாதலமையக் காண்பாம். இம் முத்திறவியற்கை யரணமுமிவைதருஞ் செவ்வியும் வளனும் பெறாவொரு கோநகர் காண்பதருமை.


பகுதி 5 : கொங்குநாடு மலைநாடாமா?

ஐயங்காரவர்களிக்கருவூரைக் கொங்குநாட்டுத் தலங்களொன்றெனக் கூறியதறிவோம்.2 ஆயினும் கருவூரைக் கொங்குநாட்டூராகக் கொண்டதற்கிவர்கள் கண்டபிரமாண மினைத்தெனக் காட்டிலர்கள். யாமறிந்தவரை, தேவாரப் பாசுரங்களை, பண்முறைப் பாகுபாட்டினுஞ் சிறிது பயனுறப் பண்ணநினைத்து, தலமுறையாத் தொகுத்துப் பதித்தோரதற்கென வகுத்துக்கொண்ட முன்னட்டவணையில், கொங்கு நாட்டுத்தலங்கள் எனும் தலைப்பின்கீழ் இக்கருவூரானிலைப் பதிகத்தைப் பெய்து வைத்த தொன்றேயிக் கொள்கைக் கடித்தளமாய் நிற்பது. அட்டவணை தொகுத்த அநாமதேயியி னதிகாரமொன்றே வைத்து, கருவூரைப்புனனாட்டதாக ஆன்ற புலவரு மடிப்பட்ட பழவழக்குங்கொண்ட கொள்கையை மாற்றலாமோ? சேக்கிழார் பெரியபுராணத்தே ஆனிலைக் கருவூரை அநபாய சோழன் சீர்மரபின் மாநகரமாகுந் தொன்னெடுங் கருவூரெனும் … … மூதூர் எனவும், சோழர் தங்கள் குல மரபின் முதற்றனி நகராங்கருவூரின் … … மருங்கணைவார் … …2மகிழ் திருவானிலைக் கோயில் எனவும், விதந்துகூறியுள்ளார். இவ்வாறு பெரிய புராணம் தந்துணிபொடு முரணுவதுகண்ட ஐயங்காரவர்கள் சரித நூற் சார்புடைய விமேற்ற்கோள். .

சங்க நூல்களோ? சாசனங்களோ? தெரிகிலேம். அரும்பழநூல் பல இடையிருட் காலத்திழந்துழலும் நம்மினு மிக்கருவூர்ச் சரித்திரவுண்மையை யிற்றைக்குச் சற்றேறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்காலத்தவர் நன்கறியலாமென்பதிழுக்கா தன்றோ? அக் காலத்தெழுந்த பெரியபுராணமுடையா ரிக் கருவூரைச் சோழரூரென்ற தோடுமமையாமல், மேற்காட்டியபடியிரு வேறு சோழர் வரலாற்றிடங் களிலவர்மரபின் வந்தார்க் கடிப்பட்ட தொன்னெடுந் தலைநகராகுமென்றிதிற் சோழராதிக்கப் பழமையை வலியுறுத்தியு முள்ளார். முறையே, இச்சோழர் சேக்கிழாருக்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன் இக்கரு வூரிலாண்டவராவர். இப்புகழ்ச்சோழருக்கேயிக்கருவூர் தங்கள் தொன்னெடுங்குலமரபின் வந்த முதற்றனிநகராமேல், இதிற் சோழராதிக்கந் தொடங்கியகாலம் செங்குட்டுவன் காலத்தொடு மிக நெருங்கினதும், சம்பந்தர்காலத்திற்கு முன்னதுமாயிருத்தல் வேண்டும். இச் சோழராதிக்கப் பழமையொன்றே, சேக்கிழாரிதனைத் தன்பாட்டுடைத் தலைவருக்கவர்குலமரபின் வந்ததொன்னெடுந் தனியூர் என்ற துடனேற்புடைத்தாகும். இவ்வாறன்றி, இக்கருவூர் சேரர் பேரூராயிருந்ததனைச் சோழரிடைக்காலத்து வென்று கொண்டிருப்பரேல். அவ் வெற்றிதோன்றப் பாடுமுறைவிடுத்து, அதை மறைத்து, தொன்று தொட்டிதனை வளவர்குலப் பரம்பரையில் நின்றவூரென்றவர் புகழ்குறைத் துண்மையுந் திறம்பியிடர்ப்பட்டுச் சேக்கிழாரிழுக்கிவழுக்குவரோ? புறப்பாட்டிற் கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார்பாடிய பாட்டறிவேம். 1அது கொண்டிக் கருவூரானிலையைச் சோழர் முற்றியெடுத்து வெற்றி கொண்ட கதை நிறுவலாகாதாம். என்னை? முதலில் கருவூர் என்னும் பெயரிவ்வாலத்தூர் கிழார் பாட்டிலில்லை. தொகுத்த பிற்காலத்தவர் பெய்துவைத்த குறிப்பேயாகும். இரண்டாவது, பொருநை மிசைக்கருவூர் (வஞ்சி) இக் கருவூரானிலைதானென்பது பிறசான்றானுறுதி பெறு முனிதனைத் தீர்ந்த முடிபாக்கொள்ளல் ஐயமறுக்கும் விடையிறந்து வினாவிரக்கும் வெற்றுரையே யாமன்றோ?

இவ்வாறிக்கருவூரைப் புனனாட்டுச்சோழர் மூதூராக் கண்ட சேக்கிழாரே, தொன்மை மலைநாட்டு”2 மஞ்சணியிஞ்சி வஞ்சி”ப்3 பழம்பதியில் “சேவீற்றிருந்தார்4 திருவஞ்சைக்களமு நிலவிச்5 சேரர்கலக் கோவான சேரமான்பெருமாள் வீற்றிருந்து முறைபுரியுங் குலக்கோமூதுர் கொடுங்கோளூரே யாமெனவும் விளக்கியுள்ளார். இத் திருவஞ்சைக் களத்தையு மதன் அலைவாய்த்துறையான மகோதையையுமே சமயகுரவரி லொருவரான சுந்தரமூர்த்திகளும் பாடியிருப்பதை மேலே காட்டினேம். இவ்வூர் பழைய வஞ்சியன்றாமாகில் தமிழகவரைப்பிற் சிவத்தலங்கடோறுந்தேடிச் சென்று வழிபட்டு மனங்கசிந்து பாடுவதையே மேற்கொண்டொழுகிய சுந்தரர், செங்குட்டுவன் வழிபட்ட பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலைமறந்து, சேரர்வள நாட்டிற் பிற்காலத்தூரிவ் வொன்றனையே பாடி யமைவரோ என்பதுஞ் சிறிது சிந்திக்கத்தக்கதே. சுந்தரர் பாடிய விம்மலைநாட்டுக் கடலங்கரை மேன் மகோதை”6 யைச் சுட்டுங்கால், சேக்கிழார் மலைநாட்டுப் பழம்பதி யாந் திருவஞ்சைக் களத்துறையே கோதையரசர் மகோதை யெனக்குலவு பெயருமுடைத்துலகில் என விசதப்படுத்தியுமிருக்கின்றார்.

அன்றியும், பெரியபுராணத்தில் கருவூர்சோழர் புனனாட்டுக்கும், வஞ்சிச்சேரர் வளநாட்டுக்குமிடையே பிற மன்னர் முறை செய்யுங் கொங்குநாடொன்றுளதாகப் பன்முறை வற்புறுத்தப்பட்டுமுளது. இவ்விடைக் கொங்கு நாடுண்மையுமது பிற நாடாவதும் மலைநாட்டிளவரசர்பாடிய சிலப்பதிகாரத் தானுஞ் சேரர் வரலாறே கூறும் பதிற்றுப்பத்தானு மினிது விளங்கு1 இக் கொங்கரிடை யிடையே சேரவீரர் சிலர்க்கிடைந்தாரை யவர்வென்று திறை கொண்டிருப்பினும், இக்கொங்கு நாடு மலைநாட்டோடொன்றித் தன்னிலை யிழந்திறவாத் தனிநாடாய் என்றும் நின்றதென்பதற்கு, தமிழகமும் வடநாடு மொருங்கு வென்ற தனிவீரன் குடக்கோச் செங்குட்டுவன் கோல்வளர்ந்த நாளும், வேற்செழியன் கண்ணகிக்கு விழாவெடுத்து நாடுமலிய நோயுந் துன்பமும் நீங்கியபோது, அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழாவொடு சாந்திசெய்ய மழைத் தொழிலென்று மாறாதாயிற்று என்னுமிளங்கோவடிகள் வாக்கும்2 மாகெழு கொங்கர் நாடகப் படுத்தவேல் கெழுதானை”3ப் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடிய பாட்டும், சோணாடுவிட்டு, கொங்குபுறம் படமலை நாட்டிற் சென்று குடபுலத்துள்ள சேரர் கருவூரெறிந்து, வெற்றிபெற்ற கொற்றவேந்தான கிள்ளிவளவனைக் கோவூர்கிழார் பாடிய புறப்பாட்டுமே4 போதிய சான்றாமன்றோ? இவ்வாறே சேக்கிழாரும், வஞ்சிக்குக்சென்ற சுந்தரர்வழியும், வஞ்சிவிட்டுச் சோணாட்டிற்கு வந்த சேரமான்வழியும், குறிக்குங்கால், இடையே இக் கொங்கர் பிறநாடுண்மையை மிக விசதப் படுத்தியுள்ளார்.

இன்னும் முன்னூல்களில் யாதோராதாரமுமின்றி, இக் கருவூர் சோணாடு பாண்டிநாடுகளினெல்லையிலமைந்த தென்று கூறப்போந்த ஐயங்காரவர்களே, தன்னூலிற் கீழ்க்குறிப்பாகக் “கருவூர்க்குக்கீழ்பால், 8 மைலில் காவிரிக் கரை யிலுள்ள மதுக்கரையைச் சேர சோழ பாண்டிய நாடுகளின் எல்லையாக இக்காலத்தாருங்கூறுவர் எனவோர் பொறுப் பில்லார் பிரத்தாபவுரை குறித்தமைந்ததன்றி, தன் மதமாக நூலுடலி லிவ்வூரைச் சேரநாட்டகத்தேனு மருகேனுமுளதாகயாங்கணும் கூறத் துணியாமையும் பொருளுடைத் தன்றோ? இதுவேயுமன்றி இவர்களே, சோணாட்டின் மேற்கெல்லை கருவூ ரென்பர், யாப்பருங்கலக் காரிகை உரைகாரர் எனவொரு மேற்கொளுந்தந்து வைத்துள்ளார்கள். இவ்வாறிக் கரூவூரானிலை, சோழர் பழவூரும் சோணாட்டு மேற்கெல்லையுமாக அதன் மேற்கே கொங்கர்நாடுளதாக, மலையரசர் தலைநகரைத் தன்னாடு முழுதும் விட்டு, நெடும்பிற நாடகன்று வந்து சோணாட்டே சமைத்தமைதலியல் பாமோ? சால்புடைத்தோ? மேலும் பாண்டியனைக் 1கூடற்கோமான் தென்னவனெனவும்,2 சோழனைக் கோழி வேந்தன் புனனாடனெனவும், புனைந்துரைப்பதேபோல், சேரனை வஞ்சி வேந்தன் குடக்கோ வென்றே கூறுவது வழக்காறாகும்.3 எனவே கொங்கரன்ன குறுநில மன்னர் பலரிருப்பினும், பொதுவாகக் குமரிவேங்கடங்குணகுடகடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்”4 பெலாம், குடமலைநாடு, குணபுன்னாடு, தென்றமிழ் நாடென மும்முடியரசர் குடைக் கீழடங்கும். இவ்வுண்மை வேனிற் றெய்வமாகிய வசந்தனுலவி யின்பஞ்செய்யும், வடவேங்கடந் தென்குமரிக்கிடையே கிடக்கும், தமிழ்நாடு முழுவதையும் வரம்பறுக்க வந்த இளங்கோவடிகள், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம் பறுத்த தண்புனனாட்டு, மாட மதுரையும் பீடாருறந்தையும் கலிகெழு வஞ்சியு”5 மென முடிவேந்தர் மூவரூரை மட்டுஞ் சொல்லி, அதனால் தமிழகவரைப்பு முற்றுமமைத்துக்கொண்டதனாலும் விசதமாகும். இத்தகைப் பெருமை முத்தமிழ்நாட்டு முடிவேந்தருள், குடதிசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர் குலத்துதித்தோர்.6 புனனாட்டொரு சிற்றூர்பேணி, மயங்கி, விடுதலறியாவிருப்பினராகி, வடுநீங்கு சிறப்பிற்றம்’1 வரைப்பெலா மறப்பரோ? இக் குடக்கோப் பெயரால் சேரன்மேற்றிசைக் காவல் வீற்றிருப்பவ னென்றறிவதேபோல் பின்னுமிவனுக்குள்ள பொறையன், மலையமான், ‘பொருப்பன்’, வெற்பன், ‘குடகன்’,2 குறிஞ்சிக்கோமான் எனும் பலபிற பிரபலகாரணவியற்பெயர்களானுமிவன் மேற்கடலடுத்த வளமலைநாடுடையானென்பது வெள்ளிடை மலையாமன்றோ? சேரர்இத்தண் கடற்படப்பை நாடெலாந் துறந்து, செம்பியன்காவிரிச் சிறுதுணையாற்றினருகு ஆனிலையூரிருந்து வந்திடுவரோ? என்பதுஞ் சிந்திக்கத்தக்கதே யாகும். இவை பலவானும், கருவூரானிலை புன்னாட்டூ ரென்பதும், வஞ்சி மலைநாட்டுப்பட்டின3 மென்பதும், இவையிருநாடுகளுக்கு மிடையே மலைநாட்டுப் பட்டின மென்பதும் இவையிரு நாடுகளுக்கு மிடையே கொங்கர் பிறநாடு கிடக்கின்ற தென்பதும் தெளிவாம். இது பற்றியன்றோ, இக் குடதிசையாளுஞ் சேரர் குலத்துதித்தர்க்குரிய வஞ்சிமூதூரில் அரசன் புரிசையமைந்த அகவூர்ப்பாக்கமாங் கருவூரை முற்றியெடுத்த சோழன் கிள்ளி வளவன் வெற்றிபாடிய கோவூர்கிழார் புறப்பாட்டிலும் இக்கருவூர் குடபுலத்துவஞ்சி முற்றம்”4 என்றே சுட்டப்பட்டுள்ளது.


பகுதி 6 : பூவிரிபுனலொருமூன்றுடன் கூடிய கூடல் கருவூர்ப் புராணத் திருமுக்கூடலன்று : முக்கடன்மணந்த குமரிக்கூடலேயாம்!

இனி, செங்குட்டுவன் சரித நூலில், செங்குணக் கொழுகுங் கழுலிமலிர் நிறைக்காவிரியன்றியும், பூவிரிபுனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை”5 என்னும் பரணர் பாட்டைக் கொண்டு, வஞ்சியூர் மூன்றுயாறுகள் கூடுமிடத்திருக்க வேண்டு மெனவும் கருவூரானிலைக்கு வடகிழக்கே முக்கூடலுளதாக் கூறும் வஞ்சுளாடவிக் குத்தர குணக்காக வாம்பிராவதி நதி மதிபோல், விஞ்சு மாமணிமுத் தாறுகாவேரி மேவுழி மேவுழி மேவுதலா லெஞ்சலிறிருமுக் கூடலென்றிசைப்ப”6 என்னுங் கருவூர்ப் புராணச் செய்யுளைக் காட்டிக் காவிரியுடன் தனித்தனி கலக்கும் ஆம்பிராவதி, மணிமுத்தாறு என்னு மூன்று நதிகளுக் கருகே கருவூரானிலை யிருப்பதுகொண்டு வஞ்சியிக்கருவூரே யாகு மெனவும் துணியப்படுகின்றது.1 வெளிவந்த பதிற்றுப் பத்துரையுடையார், இப்பரணர் பாட்டின்கீழ், மூன்றுடன் கூடிய கூடலென்றது, அக்காவிரி தானும், ஆன்பொருநையும், குடவனாறுமென இம்மூன்றும் சேரக்கூடிய கூட்டம் என்றுரை கண்டார். கருவூரனிலைக்கு வடகிழக்கே, சற்றேறக்குறைய 2 ஙூ மைல் தூரத்தில் ஆம்பிராவதி காவிரியோடு கலக்கின்றது. குடவனாறோ கருவூருக்கு 12 மைலுக்குத் தென்கிழக்கே ஆம்பிராவதியிலேயே சங்கமமாகி விடுகிறது. இவ்விடர்ப்பாடு கண்ட ஐயங்காரவர்களிவ்வுரை. பரணர் பாட்டை வஞ்சிக்குப் பொருத்தமுடையதாகக் காட்டாதெனவிடுத்துப் பொருந்துமாறு தாமோர் புத்துரை கொண்டார்கள். குடவனாற்றிடத்தில் மணிமுத்தாநதியை நிறுத்திப் பழையவுரையைச் சிறிதுதிருத்தி, ஆம்பிராவதி, மணிமுத்தாநதி, காவேரி மூன்றுங்கூடுந் திருமுக்கூடலையே பரணர்பாட்டுக் குறித்ததாகவைத்து அதனால் வஞ்சியிக் கருவூரானிலையாகு மென்றார்கள். எனில், மணிமுத்தாநதி காவிரியொடுகலக்குமிடம் மேற்கே வெகுதூரத்துள்ளதாக”2 ஆம்பிராவதியொன்றே கருவூரானிலைக்கருகே (சுமார் 2 ஙூ மைல்தூரத்தில், காவிரியுடன் கலப்பதாகும். எனவே, ஈண்டும் முக்கூடலென்பது கற்பனையேயாயிற்று. இவ்வாறு தம்முரையுமி யற்கையொடு முரணுவதைக்கண்ட ஐயங்காரவர்கள், கொண்டதை விடாமல் முற்காலத்தில் இந்நதி (மணிமுத்தாநதி) ஆன்பொருனையுடன் சேர்ந்து காவிரியிற் சங்கமித்தது போலும்”3 என்று ஏற்புழிக் கோடலோர் துணி புதந்துரைத் தமைதி கண்டார்கள். முற்காலமென்பது எனைத்தளவோ? வெகு தொல்லை வேண்டாம். ஐயங்காரவர்களே கூறுகிறபடி 290 வருடங்கட்கு முன்னியற்றப் பட்ட கருவூர்ப்புராணச்”4 செய்யுளிம் மூன்றாறுகளுமொருங்கே கலப்பதை யுள்ளவாறு கூறிற்றெனில், அப்படிக் கலந்தகாலம் சற்றேறக்குறைய 200 ஆண்டுகளுக்கு மேற்படாது. இத்துணைச் சிறுகாலத்தளவில் மணிமுத்தாறு மற்றிரு நதிகளை நெடுந்தூரங்கடந்தேறி வந்து கலந்தவழியிழந்து, தன்னளவு குறுகி, முக்கூடலெட்டாது. கிட்டியாங்கொட்டி, மேற்கே முடிந்தநாள் விடிந்ததென்றோ? அவ்வாறு, இவ்வாறு, தன்னாறு மாற்றியதாகக் கொள்ளச் சரிதசாசன வியற்கைச் சான்றெதுவுமுண்டோ? கிடைத்த சான்றுகொண்டு அவை காட்டு முடிபு துணிவதே யாராய்ச்சி முறையாகும். அஃதன்றி, துணிந்த முடிவுக்கேற்ற சான்று தேடுவது சரிதநூன்மரபாகாது.

இனி, இப்பரணர் பாட்டி னியைபுதானென்னை? புனலொரு மூன்றுடன் கூடியகடல் என்னுந்தொடர், கருவூர்ப்புராணத் திருமுக்கூடலையே குறித்ததென்று கொள்வ தின்றியமையாததன்றே. காவிரி சோழனதாகவும், அதைச் செங்குட்டுவனுக்கு வமித்தகாரணம்யாதோ? காவிரியாறு சேரனுடைமையாக் கூறும் பழநூலேனும் செய்யுளேனுமிது காறுங் கிடைத்திலது. எனினும், ஈண்டுப் பரணர் செங்குட்டுவன்பால் சோணாட்டுக் காவிரியை எடுத்தாளப் போதியகாரணமும் தகவுமுண்டு. செங்குட்டுவன் சோழரை வென்ற சரிதவுண்மைக் கேற்கத் தோற்றவர்க்கேற்ற நதியைச் சொல்லிப் பரணர், வெந்திறலாராச் செருவிற்சோழர் குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற் புறத்திறுத்த”1 குடக்கோச்சேரன் சேவகம் புகழ்வ தானார். இஃது அக்காலப்புலவர் மரபு. இதுகொண்டே, என்றும், யாண்டும் எனைத்தேனும் சேரருக்குக் காவிரியாறுடைமையேனும், காவிரி மேனாடு நகருண்மையேனும் துணிவதிழுக்காம். தெவ்வடு வெற்றியன்றி, மற்றெவ் வகையானு முரிமையில்லாப் பிறநாட்டு நதி நகர்களைக் கொண்டு அவை யுடையாரைப் போர் வென்றோரைப் புகழ்தல் பழமரபென்பது, என்றும் சேரர் ஆண்டறியாப் புகார் குறித்து இருபெருவேந்தரையு முடனிலை வென்ற … … அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேரலிரும் பொறையை மறுவில்வாய் மொழியரிசில் கிழார்”2 பாடிக், காவிரிமண்டிய சேர்விரி வனப்பிற் புகாஅர்ச்செல்வ”3 என்றழைத்தலாலும், சேர பாண்டியர் களுக்கேயுரிய வஞ்சி மதுரைகளைக் குறித்து, அவ்விருமுடிவேந்தரைச் சோழன் நலங்கிள்ளி போர்வென்ற பெருமைதோன்ற அவன் தன்னரசுக் குரிமையில்லாப் பூவா வஞ்சியுந்தருகுவனன்றோ? … … மாடமதுரையுந் தருகுவ னெல்லாம்”1 என்றவனைக் கோவூர் கிழார் பாடிய புறப்பாட்டானும், பெருஞ் சோழனையும் வென்று வஞ்சி மூதூர் தந்து பிறர்க்குதவிய … … மன்னுயிர் காத்த மறுவில் செங்கோ லின்னிசை முரசினிளஞ் சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார்2 செழும்பல விருந்த கொழும்பஃறண் பணைக் காவிரிப்படப்பை நன்னா டன்ன, வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை, யாறிய கற்பிற்றேறிய நல்லிசை வண்டார்கூந்த லொண்டொடிகணவ”3 னென்று புனைந்து பாடிய வருமைப்பாட்டானும் இன்ன மிவை யன்ன பிற பல ஆன்ற சான்றானுமினிது விளங்கும். இன்னும் பதிற்றுப்பத்தில், சோழரைப் போர்வென்ற சேரர் மாட்டே யிவ்வாறு காவிரி புனைந்துரைக்கப் படுவதும், அவ்வெற்றியில்லார்க் கிப்பெற்றி சொல் லாமையும், உற்றுநோக்கிலிப்பழ வழக்கு மிகவுறுதி பெறுவதாகும். இதனால், மேற்குறித்த பரணர் பாடலுக்கு மிம்மரபுதோன்றப் பொருள் கோடலே ஏற்புடைத்தாம்.

காவிரியன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன்கூடிய கூடலனையை என்பது மூலம் இது, சேரன் செங்குட்டுவன் மேலது. செங்குட்டுவனோ சோழர் ஒன்பதின்மரைப் புறங் கண்டவன் என்று பதிற்றுப்பத்தின் பரணர் ஐந்தாம் பத்துப் பதிகத்தாலறிவாம். இவ்வென்றி தோன்றச் செய்யுளிற் காவிரியை அவனுக்குவமித்த பரணர், அதுவேயுமன்றித் தம் பாட்டுடைத் தலைவன் பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரசை முழுமுத றுமியப்பண்ணிய4 வெற்றியையும் நினைந்து அதுபுனைந் துரைக்கக் கருதிச் சோழர்மேல் வெற்றி தோன்றக் காவிரி என்றெடுத்த புலவர், அன்றியும் புனலொரு மூன்றுடன் கூடிய கூடலனையை… … என்று முடித்தார்போலும். குடகடல் முன்னரே தன்னதாக, முறையே சோழ பாண்டியருக்குரிய குணதென்கடல்களையும் தன் வெற்றியாலுற்ற தாக்கிக்கொண்ட செங்குட்டுவன் திறம்பாடும் புலவர் தெற்கே, அம்முக்கூடல் கலக்கும் பெற்றியையும், ஆங்கம் முந்நீர்க் கூட்டத்தால் வலிமிகுந்தலைக்குங் குமரிப் பௌவத்தினேற்றத்தையுஞ் சுட்டிப் புனலொரு மூன்றுடன் கூடிய கூட்டமனையை என்று கூட்டி முடித்தார் என்பது மிகப் பொருத்தமன்றோ. இவ்வழக்கு நோக்கியே, பதிற்றுப்பத் துரைகாரரும், 3ஆம் பத்துப்பதிகத்தின் கீழ், இருகடனீரும் ஒருபகலாடி என்றதற்கு, இருகடலும் என்றது தன்னதாய மேல்கடலும், பிறநாட்டதாய்ப் பின்பு தான் பொருதுகொண்டு தன்னாடாக்கிய (சோழ) நாட்டிற் கீழ் கடலும் என்றவாறு, என்றெழுதி யுள்ளார். இதுவேபோல், 51ஆம் செய்யுளில் சேரலாதனைப்பாடும் நச்செள்ளையாரும், பெருந்தெய்வத்து வளைஞரலும் பனிப்பௌவத்துக் குணகட கடலோடாயிடை மணந்த என்று முக்கடலுங்காட்டிக் கூறி வைத்தார். இதை விடுத்துக் காவிரியுடன் வெவ்வேறிடத்துக் கலக்குந் தனிப் பெருமையேலாச் சிறுநதி யிரண்டின்கூட்டத்தைக் குறிப்பதாகக் கொண்டு இயல்பொடுமுரணிக் கவிச்சுவையுங் குறைப்பதல்லால், பெறுநயம்பிறி தொன்றுண்டோ?

இனி, இக்கவியின் முக்கூடல் காவிரிமேலதாய திருமுக்கூடலையே குறிக்குமெனக்கொள்ளினும், அஃதொன்று பற்றி வஞ்சி, யதனருகுளதாகக் கருதற்கவசியமுண்டோ? மேற்கண்டாங்குக் காவிரிப்பூம்பட்டினத்தையும், மதுரையையும் சேரர் வீரம்பாடுவார் உபசாரம் ஒன்றேபற்றி யவர்மேல் வைத்துப் பாடுவது மரபா மாகில், தன்னாடுபுகாமலும், நகரணுகாமலு மோடுஞ் சோணாட்டாறுகளைச் சோழரொன்பதின்மரைவென்ற வீரரேறாகிய செங்குட்டுவனுக் குவமிப்பதிழுக்காமோ? இழுக்காதேல், இப்பரணர்பாட்டுவமையொன்று கொண்டு சேரர் தலைநகரந் நதிகளுக்கணித்தெனச் சாதித்தலெப்படிக்கூடும்? வஞ்சியொடு கடல்சேர்த்துப்பரணரும் இளங்கோவும் விதந்து பாடாமையால் வஞ்சியுண்ணாட்டதென்று வாதிக்கும் செங்குட்டுவன் சரிதநூலார் இம்மூன்றாறுகளினணித்து வஞ்சியென விதந்தோது மேற்கோளொன்றுமின்றி யிவ்வுவமை கொண்டு தம் முடிபுநாட்டுவது சிறிது வியப்பைத் தருவதன்றோ? இவர் தம் முடிபுக்கு வேறு தக்கமேற்கோளுஞ் சான்றுகளு முளவிடத் திவ்வுவமையை ஒருபுடைத் துணையாகக் காட்டியதன்றியிதனைப் பிரமாணமாகக் கொள்ளவில்லையெனலாமெனின், தம் புத்தகத்தில், கொடுங்கோளூர் வஞ்சியென்பார் கூற்றைப் பலவாறு மறுப்பதல்லால், தாம் கருவூரானிலையே வஞ்சியென்று கொண்ட முடிபுக்கு ஏகதேசப் பெயரொற்றுமைகளைத் தவிர வேறுயாதொரு நேர்சான்றும் காட்டினதாயுமில்லை.


பகுதி : 7 வஞ்சிமூதூர் பட்டினமா? உண்ணாட்டூரா?

இனி, வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின், சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய முன்னூல்கள் அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகர மென்பதை விசதமாக்கவல்லது”, எனவும் விதந்தோதிக் குட்டுவன் சரிதநூலார் தந்துணிபு வலியுறுத்துகின்றார்கள். முதலில் ஒரு நூலிலொன்று சொல்லப்படாமைகொண்டு அதனையில்லை யெனத் துணியத் தருக்கமிடந்தராது. இரண்டாவதிப்பழநூல்கள் முறையே கண்ணகி, மணிமேகலை யிவர்களின் வரலாறு கூறவந்தனவன்றி, வஞ்சி வருணனை கருதியவுமன்றாம். எனவே இவைகளிற் பாட்டுடைத் தலைவரின்சரித நிகழ்ச்சி கூறிச் செல்லுமிடத் தவர் வரலாற்று முறைக் கேற்புடைய வருணனைகளைப் பெய்தமைப்பதன்றி, எல்லா விடங்களிலு மெல்லாவற்றையு முலப்புற வருணிப்பதழகுமில்லை. அவசியமு மாகாதன்றோ? மூன்றாவது, சிலப்பதிகாரத்திற்போல், மணிமேகலை நூலிற் காவிரிப் பட்டினத்தையும் கொற்கையையுமே கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறப்பட்டதாயில்லை.1 இதனாலிவை யிரண்டு முண்ணாட்டூ ரென்பார்களோ? சிலப்பதிகாரத்தில் விசதமாகக் கொற்கைக்குக் கடனலங்கூறப்படவுமில்லை. அது கொண்டிப் பழம்பதி பட்டின2 மன்றாமா?

இனிக்கடைசியாகத் தொன்னூல்களிற் சிறிதாழத்துருவு வார்க்குக் கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சங்காணவே படுகின்றது. சிறுபாணாற்றுப்படையில், சோழபாண்டியரின் உண்ணாட்டூர்களான உறையூர், மதுரைகளைச் செம்பிய னோடாப் பூட்கையுறந்தையும் எனவும், செழியன் தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின், மகிழ்நனை மறுகின் மதுரையும் எனவும், பாடிய நல்லூர்நத்தத்தனார், கொற்கை, வஞ்சி நகரங்களைக் குறிக்குங்கால், அவை கடற்கரைக் கழிமுகத்தூர்1களெனச் சுட்டுபு, “உமட்டியரீ2 ன்ற கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலியாடுந் தத்துநீர் வரைப்பிற் கொற்கை என்றும் அஃதேபோல் மலைநாட்டிற்குட கடலடைகரை வயல்வள நயந்து,

“கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழன்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர,
விளையா விளங்கணாற மெல்குபு பெயரா,
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுற திணிதோழ் ளியற்றேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும்”

என்றும் விதந்து கூறியுள்ளார். இஃதேபோல் நாடகக் காப்பியத்துள் இளங்கோவடிகளும் மூவேந்தர் மூதூர்களையுந் தொகுத்துரைப்பார், மாடமதுரையும் பீடாருறந்தையும், கலிகெழு வஞ்சியு மொலி புனற் புகாரு”4மென்று அவற்றினியல்பும் வளனுஞ் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். ஈண்டு உண்ணாட்டூர்களாகிய மதுரை, உறையூர்களை யொருங்குவைத்து அவற்றை மாடமலி, மதுரையெனவும், பீடுபெறுமுறந்தை யெனவு மொருபுடை யொப்ப வருணித்ததுமன்றி, அவற்றினின்றும் புகாரையும் வஞ்சியையும் பிரித்து, அவை தமக்கு முறையே யுடனொத்த அடைவேறு புணர்த்திய குறிப்பின் செவ்வி மறக்கற் பாற்றோ? காவிரிப் பட்டினக் கடல் வளம் விரித்தோர், வஞ்சித் துறை நலம் வஞ்சிப்பானேன்? என்பார், அடிகள் நாடகக் காப்பியத்தின் போக்கு மதனோக்கும், அவர் கதை நடத்து முறையுஞ் சிறிது கவனிப்பாராக. கண்ணகி பிறந்தவள் பெண்ணல முதிர்ந்த மணவினை முடித்தவண் மனையற நடத்திய கோவலன் பெருங்குடிக் கோநகர் வளனெலா மிவர்தம் வரலாறு பலபட விரித்துழி விரிவதியல்பாம். மற்றிவர் சேரர் பேரூர்ச் சென்றும் புகுந்திலர். வஞ்சியி லிவர் சரிதநிகழ்ச்சி யொன்றுமே கிடையா தன்றோ? மேலும், அடிகள் தம் ஊர் தாம் வியக்கும் விருப்பின ராகாரென்பது புகார் மதுரை நகர நலங்களை வஞ்சியினின்றும் பலபடவிரித் திவர்பெட்புறப் பேணிப் பாடிய திறத்தானு மினிது விளங்கும், இவ்வாறு வஞ்சிவளம் விரியாத சிலப்பதிகாரத்திலு மிதன் கடற்கரை யணிமை யெஞ்சிய சொல்லி னெய்தக்கூறப் பட்டுள்ளதற் கையமில்லை.

பத்தினிக் கடவுட்படிவமெழுதவோ ரிமையக்கால் கொள வமையா தெழுந்து வஞ்சிசூடி வடபுல மேகுஞ் செங்குட்டுவன் வழிச்செலவை அடிகள்,

“. . . . . . . . . . . வஞ்சிநீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்
வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ்போத,
மலைமுதுகு நெளிய, நிலைநா டதர்பட,
உலக மன்னவன் ஒருங்குட் சென்றாங்
காலும் புரவி யணித்தேர்த் தானையொடு
நீல கிரியி நெடும்புறத் திறுத்தாங்கு”

என்றெழில்பட வருணித்துள்ளார். எனவே, தூசிப்படை (van-guard) குடமலை மிதிக்கவும், பின்னணி கடற்கரை நடக்கவும், இடை நெடுநிலமெலாம் படைசெறிந்தொழுக நீண்டு வஞ்சிநின்றெழுந்த வானவன் தானைப்பெருக்கம் இமயம்நோக்கி வடக்கே சென்று நீடிய நீலகிரியடிவாரத்தே பாடியமைத்து முதலிற்றங்கியதென்பது தெளிவாகின்றது. இதனால் மேலைக் கடலிற்சங்கமிக்கும் பேராற்றினலி முகப்பெருந்துறையே வஞ்சி மூதூராக வேண்டுமென்பது மலையிலக்காமன்றோ? வஞ்சிநகர், நீலகிரிக்குத் தென்மேற்கே கடற்கரைப் பேரூராயிருந்தாலன்றி, அதிலிருந்து வடக்கே புறப்படுஞ்சேனை, கடல்தொட்டு, இடை நாடதர் படநடந்து மலைமுதுகு நெளிய ஏறிக்கடப்பதெங்ஙன மாகும்? அன்றியும் ஆனிலைக்கருவூர் கடந்து வழி நடந்து வடக்கேகுஞ் சேனை நீலகிரியருகே தங்கக் காரணமு மில்லையன்றோ? ஐயங்காரவர்கள், அடிகளினிவ் வருமை யுரையைத் தம் புத்தகத்தின் கீழ்க்குறிப்பொன்றிலெடுத்துக்காட்டி இது, காவிரியருகாங் கருவூரானிலையிலிருந்து வடக்கே சென்ற செங்குட்டுவன் வடயாத்திரையிலுடன் சென்ற அவன் சேனையின் பரப்பு மிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று, வஞ்சி கடற்கரைக் கண்ணதாயின், தானைகளின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்புவரை சென்றன வென்று அடிகள் கூறுவதில் பெருமையும், வியப்புமில்லையென்க”, என்றிதனைத் தந்துணிபுக்கியைவதாகப் பொருத்திக் காட்ட முயன்றுள்ளார்கள். பிற்காலப்புலவர்போல, அடிகள் அபூத கற்பனாலங்காரப் பிரியரன்றென்பதும், சங்கக் காப்பி மைந்தினுஞ் சிறந்த சிலப்பதிகாரம் இயற்கை நவிற்சி நலமே நயக் குமியற் புலவர் பெருநூலென்பதும், சங்க நூலறிவார் சங்கை யற்றறிவாரன்றோ? அடிகள், தானைப்பெருக்கைத் தானப்பெருக்கத் தளவாற் பெருக்கித்தருக்கு மிடைக்காலப் புராணப் புலமையறியாததோடு, இயற்கை யோடு முரணுமியல்புமறியார்; மறந்துந்திறம்பா வுண்மையுரைச் செவ்வியுடையார். இமயமலை நோக்கிச் செல்லுஞ் செங்குட்டுவன் சேனை, வடக்கே செல்ல வேண்டும். கருவூரானிலை மேற்குமலைத் தொடருக்கும் கீழ்க் கடலுக்குமிடை நிலப்பரப்பினடுவ ணொரூராங்க், காவிரிக் கருகே நிற்கும் இக்கருவூரினின்று வடக்கே புறப்பட்டதானையின் நிலைத் தார். (தூசிப்படை) வடக்கும், பின்னணி தெற்குமாகக் கையிரண்டே1 கி மேலாகச் செல்லுவதியல்பாம். அப்போழ்து, அச்சேனையின் தலைகடையணிகள் மலைகடலணுகா. இவ்வாறு, கருவூரானிலைக் கடைவாயிலே கூழைப்படைக்கும் பிறவடதிசையே தூசிப்படைக்குமிடமாகவும், அடிகள் கூடியபடி தண்ட, தலைவராதல் தலைத்தார்ச் சேனையாதல் புணரியின் விளிம்பு சூழ்போதலேனும், மலைமுதுகு நெளியச் செல்வதேனு மெப்படியமையும்? அடிகள் பக்கப் படைகளையேகுறித்துப் படையின் புடையகலத்தை விரித்து அது மலை கடலளவாய்ப் படர்ந்து நின்றதெனச் சேனைப் பெருக்கை விளக்கினரென்னில், ஈண்டுக் குறித்த கடலெது? மலையெது வாகும்? கருவூருக்கு மேல்புறமே மலையாகலாற் கீழ்கடலையே குறித்ததெனல் வேண்டும். சோணாட்டின் மேற்கெல்லையான கருவூரினின்றும் வடக்கெழுந்த சேனை, இவ்வாறு புறச்சோழர் புனனனாட்டின் கிழக் கெல்லைக் கடல்சாரக் காரணமுண்டோ? இனி, இது இயல்புரையாகாமல், படைப் பரப்பைக் காட்டவந்த கவிக் கற்பனையேயாமாகில், சேரனது குடகடலை மேற்கெல்லை யாக்காமல், அணுகிய மலைத் தொடரோடமைந்ததென்னாம்? மானத பூசையிற் கொழியலரிசியேனோ? இம்முறையில், குண குட கடலாவெல்லை கட்டிச் சேனைப் பெருக்கைக் காட்டி லிதனினுங் கவிப்பெருமை யினிதாகுமன்றோ? இனி, ஈண்டடிகள் மேலைக்கடலுக்கும் மேற்கு மலைத்தொடருக்குமிடையே படை நின்றதனையே குறிப்பதாகக் கொண்டாலோவெனில், கருவூரா னிலையருகாகாமை வெளிப்படையாகும். இன்னும் வடவரை நோக்கிச் செல்வார், கருவூரிலிருந்து வடக்கே போவதன்றி, நேர்மேற்கா வழிக்கொள்வானேன்? வஞ்சிநீங்கி வழிக்கொண்ட சேனை இளைப்பாற முதலில் நின்றவிடமாக அடிகள் கூறும் நீலகிரி, இக்கருவூருக்கு நேர்மேற்காகும். கருவூரி லிருந்து வடதிசை யேகுஞ் செங்குட்டுவன், மயங்கி, வழியிழந்து, மேற்கேகி, நீலகிரி யடிவாரத்தேவந்து தங்கினனாக வேண்டும். அல்லாக்கால் அடிகளினிவ் வருமையடிகள் பொருளிழந்த புரையுரையேயாக வேண்டும். இவ்வாறு அரசனும் தண்டத் தலைவரும் சேனையும் மயங்கி வழியிழந்து தயங்கினதாகக் கொண்டு முறையிறந்திடர்ப் பட்டேனும் குட கடல் வஞ்சியை யிடம்பெயர்ந்தெடுத்தக நகராக்குமாற்றலை வியத்தலினும், உண்மைக்கும் புலவர் பிறர் கொள்கைக்கு முரணாத அடிகள் வாக்கின் செம்பொருளே கொண்டு அது சுட்டும் நேர்வழியும் அவ்வழி காட்டுமூரும் கடைப் பிடிப்பதழகாமன்றோ?

ஈண்டடிகள் கூறியாங்கே, பெரியபுராணத்திலும், ஆரூரிற் சுந்தரராம் தன் னேரில்லா வன்றொண்டர்தமையுங் காண்பே னெனவிரும்பி, நன்னீர் நாட்டுச் செலநயந்த சேரர் கோமானார் நான்னாட்கொண்டு, பெரும் பயணமெழுகவென்று நலஞ்சாற்ற, அம்மலை நாட்டுள்ளார், அயில் வேற்குல மறவர் அடைய வஞ்சியக நகர் வாயணைந்து கடற்றரங்கமடுத்து நின்று மேன்மேல் விரவிப்பரந் திடை நிலமதிரச் சென்று, ‘நெடுஞ்சேனை, நேமி (குடமலை) நாட்டெல்லை கடந்து’, மறவர்பயில் கொங்கநாடு கடந்து பொன்னி நீர் (சோழ) நாட்டிடைப்போவார் என்று, சேக்கிழாரு மிவ்வழியை யிம்முறையே கூறியுள்ளதுஞ் சிறிது சிந்திக்கத் தக்கதாம். இதனால் மலைநாட்டுத் தலைநகராம் வஞ்சிநின்றெழுந்துவழிக்கொண்டோர். இவ்வாறு கடல்விட்டு, இடைநிலங் கடந்து மலையேறிச் சென்று, குடமலைத் தொடரின் குணபுறத்தடிவாரத்திறங்கிய பின்னரே சமநிலப்பரப்பினொரு நெடுவழி கூடுவது முறையென்பது தெளிவாகின்றது. இன்னு மிவ்வாறே, சேரர் பேரூரிலிருந்து வடதிசையேகும் பெரும்பாதை முன்னாளில் அடிகள் கூறியபடியே, வஞ்சிநின்று முதலிற் செங்குணக்காகச் சென்று, அந்நாட்டுக் கீழெல்லை மலைகடந்த பிறகு வடக்கே திரும்பி நீலகிரியோரமாகப் போயிற்றென்பது, கிட்கிந்தைவிட்டுச் சீதையைத் தேடித் தெற்கே சென்ற வானர வொற்றர் வழிகூறு மிராமாயணக் குறிப்பாலும் வலியுறுகின்றதாகும். இவை பலவானு மேற்குறித்த சிலப்பதிகார வரிகளால் அடிகள், வஞ்சி மேலைக் கடலோரம் பேராற்றின் மேலூராமென்பதை விசதப்படுத்திய செவ்வி தெளிவாகின்றது. இதுமட்டேயோ? வஞ்சி கடலடுத்த வூரென்பதற்குத் தொன்னூற் குறிப்புக்கள் இன்னுமுள. வடவாரியரை யடக்கிக் கண்ணகிக்குப் படிமக் கல்லுங்கொண்டு, செங்குட்டுவன் திரும்பித் தன்னூர் புகுந்தபின், வேள்விச்சாந்தியின் விழாக்கொளவேவி, அருளான் ஒருநாள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி அவ்வரசரைப் பிறமன்னர் தங்குவதற்கென்றே ஊர்ப் புறத்தமைக்கப் பெற்ற மாளிகையிலிருக்கச் செய்து அவரையு பசரிக்கத் தன் படைத் தலைவனான வில்லவன் கோதையையும், தான் மகிழுமவ்வேள்விப் பெருவிழாக்காலத்திற் றன்கருணைக் கறிகுறியாகத் தன்னூர்ச் சிறைதிறந்து குறையாளரை விடுத்துத் தனக்குரிய குடிகளின் கடமை (அரசிறை) களை நீக்கு (வஜா செய்யு) மாறு அமைச்சன் அழும்பில் வேளொடு கணக்கரையும், ஏவினானென்று கூறுமிடத்திலும் அடிகள் தருங்குறிப்புக்கள் மறக்கற்பாலனவல்ல. அவை வருமாறு :-

“வேள்விச் சாந்தியின் விழாக்கொள வேவி
யாரிய வரசரை யருஞ்சிறை நீக்கிப்
பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை காட்டி,
… … … … … … அம்
மன்னவர்க் கேற்பன செய்கநீ யென
வில்லவன் கோதையை விருப்புட னேவிச்;
‘சிறையோர் கோட்டஞ் சீமின்யாங்கணுங்
கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்’ மென
வழும்பில்வேளோடாயக்கணக்கரை
முழங்குநீர்வேவிமூதூரேவி…
வடதிசை வணக்கிய மன்னவ ரேறென”

ஈண்டு, நகர்ப்புறத்துப் பிறமன்னர் தங்கவமைந்த மாளிகையைத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளாவிக் கோ மாளிகை; யென்றதை, இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து, நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க், கமழுந்தாழை கானலம் பெருந்துறைத தன் கடற்படப்பை நன்னாட்டுப்பொருந2 என்னும் காக்கை பாடினியார் நச்செள்ளையார் வாக்கொடுமொத்து நோக்க, வஞ்சி கடற்கரையூர் என்பதினிது விளங்குவதாகும். வஞ்சி மூதூர் அகநகரும் புறத்துறைப் பட்டினமுமாகப் பிரிந்து நின்றதை முன்னமே குறித்துள்ளோம். இவ் வேளாவிக் கோமாளிகை வஞ்சி மூதூர்ப் புறத்தமைந் தெனவே, இதனைப்பட்டினப் ஆகவே வஞ்சிப்புறத்துறையில் ஆழ்ந்த கடனீரே வேலியாக்கொண்டு, வளமலிசோலை நடுவே நிற்கும் வேளாவிக்கோ மாளிகை என்றடிகள் குறித்ததன்றி, இவ்விடத்து ஐயங்காரவர்கள் சொல்லுமாறு, தாழ்நீரைப் பொய்கை என்று வலிந்து பொருள் கொண் டெப்படியுமிவ்வூர்க் கடற்கரைச் சம்பந்தத்தை மறைப்போ மென்று முயலுதல் ஈண்டு எவ்வளவு பொருந்துமென்று நடுவுநிலை வாதிகளே தீர்மானிப்பார்களாக. அன்றியும்மாந்தரால் இயற்றப்பெறாப் பெரு நீர்நிலையே பொய்கையெனப்படும். கடலணு காவுண்ணாட்டுக் கருவூரானிலையே வஞ்சியாமாகில், கடலை மறைக்க ஐயங்காரவர்கள் கொண்ட வேளாவிக் கோமாளிகை சூழ்ந்து நின்ற பொய்கைதான் யாண்டுளது? இனி யிவ்விடர் கடக்க, இடைக்காலத் திப்பொய்கையு மழிந்து நிலமாயிற்றென லின்றியமையாததாகும். ஆனால் சரிதபரம்பரையிலிவ்வாறு கருவூரருகே பெருநீர்நிலையொன்று நின்று மறைந்ததான கதையுமே காணேம். இதுவுமன்றி, அடிகள் யாண்டும் தந்நூலில் ஏரி அல்லது ஆறு கூறுமிடத்ததனை யாழ்ந்த நீரென்றழைக்கக் காணாமையோடு, கடல் குறிக்குந்தோறும், ஆழ்ந்த நீரெனும் பொருள் தருமடையேபெய்தமைக்கும் வழக்குடைய ராகவும் தெரிகின்றது. இதனை மூவேறிடங்களில் அடிகள் கடல்கூறும் வாக்கின் போக்காலுதகரிப்போம்.

“சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்துந்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து”

“வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்”

“பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்
தாழ்நீழ் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்
வேளா விக்கோ மாளிகை . . . . . . .”

இவை தம்மில், முதலிரண்டு காதைகளிலும் முறையே ‘தாழ்நீர்’, குண்டுநீர் என்பவை கடலையே விசேடித்திருக்க, இந் நடுகற்காதையில் மட்டும் தாழ்நீர்வேலி என்பது கடல்குறியா தெனல் உரைமரபாமா?

இஃதெவ்வாறாயினும், இவ்விடத்திற் சிறிதுகீழே, கைகெழு நல்லூர்க்கறைவீடு செய்ம்மென, அழும்பில்வேளோ டாயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூரேவி எனக் குறித்த மூதூர் யாதாம்? அரசன் அத்தாணி மண்டபத்தே கொலுவிருப்பான் தன் குடிகளின் வரிச்சுமையை நீக்குமின் என்று தன்னமைச் சனையுங் கணக்கரையும்பணித்து அது முடிப்பானவரை யங்கிருந்து ஊருக்குள்ளனுப்பினானாதலான், அவ்வூர் வஞ்சி மூதூரேயாகல் வேண்டுமென்ப தொருதலை யன்றோ? ஈண்டு, இம்மூதூர், முழங்கு நீர்வேலியுடைத்தென வடிகள் கூறவு மிதனை யுண்ணாட்டூ ரெனக் கொண்டு மமையாதே, சிலப்பதிகாரத்தி லிவ்வூரின் கடற்கரைச் சம்பந்தமே கூறப்படவில்லையெனவுந் துணிந்து கூறவருவார்கள் மனவலி சிறி தன்றாகும். இஃதுணர்ந்து வைத்தும், செங்குட்டுவன் சரித நூலார். இம் முழங்கு நீர்வேலிமூதூர் என்பதற்கு, நீர்வளமிக்க நகரங்களில் என்ற மட்டே பொருள் கூறிச்செல்வார். அடிகள் ஈண்டுக் கடல்குறியாது நீர்வளமொன்றே கருதினராயின், அக்குறிப்பைச் செவ்வையாய்ப் புலப்படுத்த மறந்ததுமன்றி, அதற்குமாறாக, முழங்குநீர்வேலி என்று பயனில் பலசொற் பெய்து வைப்பானேன்? ஆம்பிராவதி நதியையுமணு காதுநிற்குங் கருவூரானிலை, முழங்குநீர்வேலி மூதூராமோ? ஆகா தென்றறிந்து, இவ்வாறு நீர்வளமிக்க வூர்ப்பொதுவாகப் பொருள்காணல் ஈண்டு அடிகள் வாக்கின் போக்கோடமை தாமா? அரசன் குடிகளின் வரிகளை நீக்கப்பணித்தகாலை, நீர்வளமிக்க நகரங்களை மட்டுஞ்சுட்டிப் பிறவூர்களை மறப்பதேனோ? இதற்காகவே, குட்டுவன் சரிதநூலார் நீர்வளமிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் என்று கூட்டியுரைத்து வைத்தார்போலும். ஊரூராக வமைச்சனையுங் கணக்கரையு மேவினதாக்கொள்ளப் பாட்டிடந்தரவில்லையே? வடயாத்திரைக்குப் பறைசாற்றுவித்தது வஞ்சிமட்டிலாமாகில், வரிவஜாவுத்தரவை யூருராச் சென்று சொல்ல அமைச்சனை யனுப்புவ தின்றியமையாததெப்படியோ? கறை கெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென… … முழங்கு நீர் வேலி மூதூரேவி என்பதே மூலம். இதற்குச் சுங்க முதலிய வரி மிகுந்தவூரில், வரி நீக்கப் பணித்த தன்னாணையை மேற்கொண்டு, அதை நிறைவேற்றுமாறு அவசியமான கணக்கெடுத்தும், கீழ்த்தொழிலாளரை வேண்டியாங் கனுப்பியும் வேண்டுமேற்பாடு செய்யுமாறு அரசன் தன்னமைச் சனையுமாயக்கணக்கரையுந் தன் கொலுமண்டபமிருந்து மூதூரென்றழைப்ப தன்றி, ஒரு நாட்டில் வரிவஜாப் பண்ண நினைக்கும் பட்டி முற் பட்டின மீறாப் பல தரவூர்களையும் பொதுப்பட மூதூருக்குள்ளேவினான், என்ற மட்டே நேர் பொருளாகு மன்றோ? அன்றியுமடிகள், தந்நூலில், மணி மேகலையிற் போலவே புகார், மதுரை, வஞ்சியெனு முடிவேந்தர் மூவர் பேரூர்களையே மூதூரென்றழைக்கும் வழக்கறியேம். மேலும், ஓர் ஊரின் நீர்வளத்தை மட்டுங் குறிக்குங்கால், முழங்குநீர்வேலிமூதூர் என்று சிலப்பதிகாரத் தேனு மடிப் பட்ட பழநூல்களிலேனும் வேறு பிரயோக முண்டோ? முழங்கு நீர் என்னுமடை கடலையே குறிப்பது வெள்ளிடை மலை யன்றோ? தங் கொள்கைக்கு முரணுமிடத் தெல்லாம் வலிந்து புத்துரை கொள்ள முயல்வது பிடிவாதிகளின் வழக்கமெனினும் ஆன்றதமிழ்ப் புலமைவாய்ந்த ஐயங்காரவர்களிவ்வாறு கூறலாமா?

இவ்வஞ்சி கடற்கரையிற் பொருநைக் கழிமுகத்தூ ரென்பதைப் பிறிதோரிடத்தில் அடிகளிதனினுந் தெளிவாக விளக்கியுள்ளார். வடதிசைச் சென்று, தண்டமிழிகழ்த் தவாரிய வரச ரமர்க்களத் தழியவென்று, பத்தினிப் படிமத் திற்கிமயக்கற் கொண்டு, கங்கையில் நீர்ப்படைசெய்து, வெற்றி முரசுடன் மீளத்தன் வஞ்சி நகருக்குவந்த செங்குட்டுவன் நல்வரவையும், அப்போதவன் கோநகர்க்குடிகள் பலரு மவனை வாழ்த்தியெதிர்கொண்ட சிறப்பையும் பின்வருமாறு வருணிக்கின்றார்:

“குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்,
வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்
தென்றிசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு
நிதிதுஞ்சு வியனகர் நீடுநிலை நிவந்து
பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டுவழ்த்த,
தண்ணம் பொருநை யாடுந ரிட்ட
வண்ணமுஞ் சுண்ணமு மலரும் பரந்து
விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை
குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து,
வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்
பல்லா னிரையொடு படர்குவிர் நீர்எனக்
காவல னானிரை நீர்த்துறை படீஇக்
கோவல ரூதுங் குழலின் பாணியும்,
வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்
குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை(யில்),
வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்
கழங்காடு மகளி ரோதை யாயத்து
வழங்குதொடி முன்கை மலர வேந்தி
வானவன் வந்தான் வளரிளமுலை
தோணல முணீஇய தும்பை போந்தையொடு
வஞ்சி பாடுது மடவீர் யாம்எனு
மஞ்சொற் கிளவிய ரந்தீம் பாணியும்
ஓர்த்துட னிருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய, வலம்புரி வலனெழ,
மாலை வெண்குடைக்கீழ் வாகைச் செவ்வியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து
குஞ்சர வொழுகையிற் கோநக ரெதிர்கொள
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென”

ஈண்டுத் தடித்த வெழுத்துவரிகளைச் சிறி தாழச்சிந்திப்பார் வஞ்சி, பட்டினமென்பதற்குப் பிறசான்றெதுவுந் தேடார். கோநகரானிரையைப் பொருநை நீர்த்துறைப்படுத்தி நிற்குங்கோவலர், தங் காவலன் வரவுகேட்டு மகிழ்வார், அவன் வடநாட்டு விஜயத்திற் கவர்ந்துடன் கொடுவரும்பசுத்திரள் தங்கள் செல்வத்தைப் பெருக்குமெனத் தருக்கி மிகக்களித்துப், பொருநையாற்றின் 2கழிமுகத்தே கடற்கரைத் தாழைக் கோட்டு மிசையேறியிரந்தூதுங் குழலிசையுங் நடுவூர்க் கொடிமதிலலைக்கும் ஆற்று மணலை வெறுத்தலைவாய்க்கடல் மணலிற், புன்னையடி நிழலில் அக்கடல் கொழித்த முத்தே கழங்கா வைத்து விளை யாடும் பெண்டிர்கூட்டத்தே வானவன் வருஞ்செய்தி கேட்டோர் அவனை வாழ்த்திப் பாடுமிசையும் ஓர்த்துடனிருந்த கோப்பெருந்தேவி வால்வளை செறிய வலம்புரிச் சங்கார்ப்ப யானைமிசைப்பொலிந்து செங்குட்டுவன் வஞ்சியுட் புகுந்தனன் என்பதே மேற்குறித்த சிலப்பதிகாரச் சீரிய அடிகளின் நேரிய பொருளாகும்.

இதில், கோநகர்க் கோவலர் தாழைக்கோட்டு மிசையிருந்தூதின ரெனவும், “வேலைவாலுகத்துக் குண்டு நீரடை” கரைக்குவையிரும் புன்னையடியில் வலம்புரியீன்ற நலம்புரி முத்தைக்கழங்காடு மகளிரெனவும், அடிகள் நெய்தற் கருப்பொருள்கள் சுட்டி அதனாற் கடற்கரையணிமை விளங்க வைத்ததுவுமன்றி, நீராடுவோரிடு சுண்ணமு மலரும் பரந்து விளங்கிய பொருநைநதி சங்கமிக்கும் பெருந்துறையென்றும், “வேலை1 வாலுக2த்துக் 3குண்டுநீரடைகரைக் குவையிரும்புன்னை (யடியிற்) கழங்காடு மகளிரோதையா யத்தந்தீம்பாணி அந்தப் புறத்திருந்த கோப்பெருந் தேவியைக் களிமகிழ்வூட்டிய தென்று கூறி, அதனா லிவ்வாறு செங்குட்டுவனை வரவேற்ற வஞ்சி -இப்பொருநை யாற்றின் கழிமுகத்தே, கடலங்கரைமேற் கோநகரேயா மென்பதையு மையமறவிசதப் படுத்தியிருக் கின்றனர். பின் நடுகற் காதையி லிவ்வூரைத் தாழ்நீர்வேலி, மூதூரெனச் சுட்டுவதே போலீண்டுமிதைக் குண்டுநீரடைகரை என்றிதன் கடற் சம்பந்தத்தை விதந்து கூறியுள்ளார். இனி யெடுத்த கொள்கைக் கேற்றபடி பழைய பாட்டுக்களுக்குப் பொருள் காணவல்லார் சிலரிவ்வரிகளுக்கு, இவ்வாறு செம்பாகமாகப் பொருள் கொள்ளாது கடற்கரை மணலிற் புன்னைமரத்தடியில் வலம்புரி யீன்றமுத்தை, உண்ணாட்டூரான கருவூரானிலை மகளிர் கொண்டு கழங்காடுவார், செங்குட்டுவனை வாழ்த்தி யேத்தினர் என்று கூறக்கூடும்; அது பொருளன்மை தெளித லெளிது. எதிரேற்றுப்பாடும் வஞ்சிமார் வஞ்சியூருடையார் என்பதும், அவர் பாடியதும், பாடுமுன் கழங்காடியதுமவ்வூர்ப் பாக்கத் தென்பது மிவ்வரிகளில் மறுக்கொணா வெளிப்படை. திருவானிலையருகாம்பிராவதியே பொருநையாமாகில், அவ்வூர் மடவார் அவ்வாற்றிற் பிறக்கு மணிமுத்தைக் கழங்காடினரெனப் பாடாமல், கடன்மணலிற் பிறந்த முத்தெனக் கூறக்காரணம் வேண்டும். சேரருக்குத் தங்கோநகரணுகா முத்துப் பிறக்குங் கடலுரிமை யீண்டுவிதந்திப் பெண்டிர் வாயிலாக் கூறிவைக்க அடிகள் கண்ட சிறப்புடைமையாதோ? அன்றியும், முத்தீனுஞ் சங்கு, புன்னைமரத்தடிதேடி ஈனுவதற்கவசியமு மதிற்பெருஞ் சிறப்பு மென்னோ? இதுவுமன்றி, இக் கவியில், பெண்டிர் தத்தமனைகளிற்றனியே கழங்காடி நின்றார். செங்குட்டுவனைப் பாடினதாகக் காணவுமில்லை. கழங்காடு மகளிரோதை யாயத்துப் பாடும் பாணி யென்றதனால் அவர் பலரும் காவலன் நல்வரவு கேட்டுப் பாடு முன் அவர்கூடி விளையாடி நின்ற தோரிடமுண்மை குறிக்கப் படுகின்றது. அவ்வாறம்மகளிராயத்தார் குழுமி விளையாடிய விடத்தை யீண்டடிகள் வருணித்தாரென்ப தல்லால், கெடவரலில்1 மடவரலார்2 கழங்காகக்கொண்டு விளையாடிய முத்தை, அது பிறந்தவிடத்தழகை விரிப்பதனால் வருணித் தாரென்ப தடிகளின் செவ்விய கவிப்போக்குக் கெட்டுணையும் பொருந்தாவொன்றாம். மேலும், முத்துப் பிறக்குமிடம் பலவற்றுட் கடலொன்றேயாகவும், புனனாட்டுக் காவிரிப் படப்பைக் கருவூர் மகளிர் விளையாட்டைப் புகழவருவார். திடீரென முன்பின் யாதொரு சம்பந்தமின்றி வறிதேகிடந்த கடலை வலியவிழுத்து வருணிப்பாரோ? ஆகவே, கோதையை3 வரவேற்ற மாதரார், கோநகர்ப்புறத்தே, பெருங் கடலடைகரை யொருங் கிருந்தாடிய பெற்றியே யிவ்வடிகள் சுட்டியதாக வேண்டுமென்பது தெளியக் கிடப்பதன்றோ? தெளியவே, அக்கோநகர்ப் பெண்டிர் கூடி விளையாடுதற்கான வெண் மணலடை கரைத்துறையே வஞ்சி முன்றுறைப் பட்டின மென்பதும் வெள்ளிடை மலையே யன்றோ? ஈண்டிவ் வஞ்சிப் பட்டினம் பொருநைக் கழிமுகப் பெருந்துறையென் றடிகளினிது விளக்கியதால், சேரர்கோநகர்ப் புறமதிலலைக்கு மாந் பொருநை யீண்டடிகள் சுட்டிய அலிமுகப் பேராறேயன்றிக் கடல்தொடாக் காவிரிச்சிறுதுணையாம் பிராவதியாகாதென்பது மலையிலக்காம். இவ்வாறு கடற்கரை வஞ்சி காவிரியரு கானிலை யாகாதென விளக்குமிவ்வடிகள் வாக்கொன்றே, பேராறு நிலமிழியுமிடத்தே நிற்கும் அலைதழுவாமலை மடிமேற்றிருக்கரூரே வஞ்சியென்னும் ஸ்ரீகனகசபைப் பிள்ளையவர்கள் கருத்தையு மறுத்து நிற்கும்…

இன்னும், சேரர் சிறப்பே கூறும் பதிற்றுப்பத்தில் நெடுமலை நாட்டின் குடகடனலமும், அக்கடலின் அடைகரைப் படப்பைச் செழுநிலச்செவ்வியும், அந்நிலத்தில் வஞ்சிப் பட்டின வளமும், விரிக்கும் பாக்களும் பலவாம். அவையிற்றிற் சிலவற்றை மட்டு மீண்டு காட்டுவாம்:

“இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வாலிணர்ப் படுசினைக் குருகிறை கொள்ளு
மல்குறு கான லோங்குமண லடைகரை
தாழடும்பு மலைந்த புணரவளை ஞால
விலங்குநீர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந்
தண்கடற்படப்பை மென்பா லனவும்”

“உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி
நுண்மண லடைகரை யுடைதருந்
தண்கடற் படப்பை நாடுகிழ வோயே,”

“கடலொலி கொண்டு செழுநகர் நடுவ
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழுவிமிழ் மூதூர்”

“துளங்குநீர் வியலகங் கலங்கக்கால்பொர
விளங்கிரும் புணரி யுருமென முழங்குங்
கடல்சேர் கானற் காணற் குடபுல முன்னிக்
கூவற் றுழந்த தடந்தா ணாரை
குவியிணர் ஞாழன் மாச்சினைச் சேக்கும்
வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பி
னடும்பம் லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயி ரூதை யுஞற்றுந்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து,”

“இன்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத்
தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந”

ஈண்டிறுதியிற்காட்டிய நச்செள்ளையார் அடிகளையும், பின்வரு மடிகளின் சிலப்பதிகாரவடிகளையு மொத்துநோக்க,

“கடல்சேர் கானற் குடபுலத்தே,” வஞ்சியாம்

“முழங்குநீர் வேலி மூதூரில்”, “இரங்கும்
பௌவத்து நன்கல வெறுக்கைதுஞ்சு” மழகின்

செவ்வியினிது விளங்கும்.

“குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்
நிதி துஞ்சு வியனகர்”

“அளந்துகடை யறியா வருங்கலஞ் சுமந்து
வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து”

என்பன விவ்வஞ்சிப்பட்டின வளங்குறிக்கு மிளங்கோவடிகள் வாக்காம்.

இனி, வஞ்சிமாநகரம் கடற்கரைக்கண்ணதாயின் “… … மணிமேகலை முதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கை முதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்தன் கடல் வளச்சிறப்பால் வருணித்துக் கூறாமற் போகுமா? ஒருகாலு மில்லை”4 என்ற செங்குட்டுவனூலுடையாருக்கு, வஞ்சி வருணனையடங்கிய மணிமேகலை 28ஆவது காதைவரிகளைச் சிறிது நினைவுறுத்த விடையேற்பாம், உண்ணாட்டூராய மதுரை நலங்கூறு மூர்காண்காதை போலல்லாது, நெய்தனலம்பேணி, அந்நிலக்கருப்பொருள் பலவுஞ் சுட்டிக் காவிரிப்பூம்பட்டின வளம்பலவிரித்த நாடகக் காப்பியத்தின் இந்திரவிழவூரெடுத்தகாதை வரிகளையும், வஞ்சிவளங்கூறுஞ் சாத்தனார் நூலிற் கச்சிமாநகர் புக்ககாதை வரிகளையு முடனொத்து நோக்குவார்க்கு, வஞ்சியும் புகாரேபோற் பட்டினமாம் என்பது வெள்ளிடை மலையேயாம்.

மணிமேகலைநூலை வெளிப்படுத்தியுபகரித்த மகாமகோபாத்தியாயரவர்கள், இப்புத்தக முதற்பதிப்பில் 272ஆம் பக்கத்தில் இக்காதையின் 29ஆம் பக்கத்தில், முதல் 68 வரையுள்ள வரிகளுக்கும், சிலப்பதிகார இந்திரவிழாவூர்க்காதை 7 முதல் 58 வரையுள்ள வரிகளுக்குமுள்ள ஒற்றுமை நலத்தை விதந்தெடுத்துச் சீர்தூக்கிப் பாராட்டியு முள்ளார்கள்.

“பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநகர்
கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர்
பைந்நிண விலைஞர் பாசவர் வாசவர்
செம்புசெய் குநருங் கஞ்ச காரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும்
மரங்கொ றச்சரும்
தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும்
பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்
இலங்கு மணிவினைஞர் இரீஇய மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நர்”

“மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
பாசவர் வாசவர் பன்னிண விளைஞர்
கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும்
பொன்செய் கொல்லரு நன்கலந் தருநரும்
மரங்கொ றச்சரும்
துன்ன காரருந் தோலின் றுன்னரும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுந ரகன்பெரு வீதியும்”

நெய்தற்கருப்பொருள் சுட்டிய நாற்கவிராசநம்பி அகப்பொருள் விளக்கம் 24ஆம் செய்யுளையும், தொல்காப்பியம் பொருளதிகாரம், அகத்திணையியல் 18ஆம் சூத்திரத்தின்கீழ் நச்சினார்க்கினியர் குறிப்பும் ஒப்புநோக்கின், மேற்கண்ட வஞ்சி வருணனை அவ்வூரைப் பட்டினமாக்கி நிற்ப தினிது விளங்கும்.

அலை தாலாட்ட மலைமடிவளரும் வானவர் நாட்டில், கடலுங்கானமும் பலபய முதவ1 மலையவுங் கடலவும் பண்ணியம்2 மலிந்தவை வஞ்சியினிறைந்த வளஞ்சொலும் புலவர் மணிபல்லவத்திலிருந்து விசும்பாறாக வந்திறங்கிய மணிமேகலை, “… … வானவன் வஞ்சியின் … … பன்மீன் விலைஞர், வெள்ளுப்புப் பகருநர், … … விலங்கரம் பொரூஉம் வெள்வளைபோழ்நரோ டிலங்குமணி வினைஞரிரீஇயமறுகும். புதுக்கோள்யானையும், பொற்றார் புரவியும், கதிக் குறவடிப் போர் கவின்பெறு வீதியும், சேணோங்கருவி தாழ்ந்த செய்குன்றமும், வேணவாமிகுக்கும் விரைமரக்காவும் விண்ணவர்தங்கள் விசும்பிடமறந்து நண்ணுதற் கொத்த நன்னீரிடங்களும் கண்டு மகிழ்வுற்றதாகக் கூறியுள்ளார். இவ்வருணனை வஞ்சி கடற்கரை யூரென்பதைத் தெளிவாக்க வில்லையெனில், இவ்வரிகள் பயனில் கூற்றாக வேண்டும். சிலப்பதிகாரத்தில், மதுரை வளம் விரித்துள பகுதியிலிவ்வாறு எனைத்தும் கூறப்படாததோடு, பட்டினமாய பூம்புகார்ப் பகுதியிலிஃதேபோற் கருப் பொருணல மெடுத்தாளப்பட்டு முளதென்று மேலே கூறினாம். அடிகளோ மற்றிருமுடிவேந்தர் மூதூர்களைப்போல வஞ்சியூர் நலம் வருணித்திலர்; வருணிக்கக் காரணமுமில்லையென்பது மேலே காட்டியுள்ளேம். ஆகவே அடிகள் கூறிய புகார்ச் சிறப்பும், சாத்தனார் வஞ்சி வருணனையுமே ஒத்துநோக்கக் கிடைப்பன வாயிற்று. இவையிரண்டிடத்தும், இருநகரும் பட்டினங்களே யென்ப திவ்விருபெரும் புலவரானுந் தெளிவாக்கப் பட்டுள்ளது. இவை தம்மிலொன்று பட்டினமன்றேல், மற்றது முண்ணாட்டூரே யாகல் வேண்டும். புதுக்கோள்யானை கதிக்குறவடித்தல்3 இன்று வரை மலையாள நாட்டில் நடைபெறுந் தொழிலா மன்றோ உமணரமைக்கும் கடலுப்பும், ஆண்டறுக்குஞ் சங்கு வளையும், இலங்குநீர் முத்தமொடுவார்துகிர்1 எடுக்குந்தண் கடற் படப்பை மென்பாலனவும்2 புதிது புதிதாப் பிடித்து நடைபயிற்று மானை நிரைகளும், வேழத்துவேண்கோடு கொண்டு, பிழி நொடை கொடுக்கும்”3 பெற்றியும், குன்றுதலை மணந்ததண் கடற் படப்பை வளங்குறிப்பதல்லாற் பிறிதுண்டோ? வேணவா மிகுக்கும் விரை மரக்காவும், விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து நண்ணுதற்கொத்த நன்னீரிடங்களும், தென்னாட்டில் தெங்கொடு பலவுந் தங்கிய படப்பை மாறாவிளையுட் பேராறூட்டுங் குடகடலடை கரையையே சுட்டுமன்றோ? இன்னும் ஐயங்காரவர்களே வஞ்சிச் சேரனாகத் தஞ்சரித நூலிற் குறித்திருக்கும் செங்குட்டுவன் றந்தை நெடுஞ்சேரலாதனை,

“கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமித்துச்
சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின்
வயவர் வேந்தே. … …”

என்று குமட்டூர்க் கண்ணனார் பாடியுள்ளார். ஈண்டவன் மூதூர் வஞ்சிக்கடையான முதன் மூன்றுவரிகளும், மலை, கடல், மலை - நாட்டாறுகள் தரும் வளம் பலவு மவ்வூரகத்தே நிறைவதாக் குறித்திருப்பது மிக்கருத்துக் கொண்ட பொருத்த மானவுண்மை நவிற்சியன்றோ? அன்றியும், பதிற்றுப்பத்துரைகாரர் அறா அ விளையுள் அறாஅ யாணர்’5 என்ற வடியின் கீழ், அறா அயாணரென்பதற்கு, இடையறாத கடல் வருவாய் முதலிய செல்வங்கள் என்றெழுதியிருப்பதும் கவனிக்கத்தக்கதாம். இன்னுமிவைவிரிப்பிற் பெருகுமென்றஞ்சி நிறுத்துவாம். இவை பலவும் சிந்திப்பார் யாரே கடற்கரைச் சம்பந்தம் வஞ்சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃதுண்ணாட்டு நகரா மென்பதை விசதமாக்க வல்லது, என்னும் ஐயங்காரவர்கள் கட்டுரையை ஆமோதிப்பார்?


பகுதி 8 : சேரரைப்புகழும் பழங்கவிகளில் மலைநாட்டாறுமலைகள் பாடப் பெற்றுளவா?

இன்னுமிவர்கள், தம்நூலின் 129ஆம் பக்கத்தில் வஞ்சி திருவஞ்சைக்களமாயின், அம்மலை நாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்குவமிக்காமல், மேற்காட்டிய (கரிவிரி - காஞ்சி) ஆறுகளையே கூறிச்செல்வதற்குத் தக்ககாரணம் வேண்டுமன்றோ என்றெழுப்பிய வினாவையுஞ் சிறிது விசாரிப்பாம். சேரர் பெருந்தகைக்குப் பரணருவமித்திருப்பதாக இவர்கள் கண்ட புனனாட்டாறி ரண்டு: காவிரிக்கூடலும், காஞ்சி நதியுமே, முக்கூடலனையை என்பதையு மதன் குறிப்பையு மேலே விவரித்துள்ளேம். ஆங்குக்காட்டியபடி முக்கூடலென்பது காவிரி யாம்பிராவதிக் கூட்டமாகாதென்பதும், காவிரியைச் சொன்னது அஃதுடைய சோழரைச் செங்குட்டுவன் வென்ற பெருமை தோன்றப்பாடும் பண்டைமுறையென்பது மறிந்தோம். இனிக் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே என்னுமடி கொண்டு, அது கருவூர்ப் பிரதேசத்துள்ள நொய்யல் அல்லது காஞ்சிமாநதியைக் குறித்ததாகக் கொள்வது துணிந்த முடிபென்றும் தோற்றவில்லை. கருவூரே வஞ்சியெனவும் செங்குட்டுவனுக்கு மேல்கடல் தொட்டுக் கருவூர்வரை கிடந்த நிலமே நாடாயிற்றெனவுங் கட்டுரைத்த ஐயங்காரவர்களும், காவிரி சங்கமிக்குங் கீழ்க் கடலும், காவிரியும் வளவருக்கேயுரிய வென்பார்கள். சோணாட்டின் மேற்கெல்லை கரூவூர் என்னும் யாப்பருங்கலக்காரிகை உரைகாரர் மேற்கோளுங்காட்டி, அதன் வாயிலாக அக்கருவூருக்கு மேற்குச் சேரநாடேயெனத் தங்கோணாட்டினார்கள்.1 எனவே, கீழ்கடல் சேரன் கடலாகா தென்பதும், குடகடலொன்றே யவனுக்குரியதென்பது மொருதலை. மேலும் நொய்யலாறு ஆம்பிராவதிபோல் காவிரியிற் கலக்குமொரு துணைச் சிற்றாறாவதன்றிக், கடலிற் சங்கமிக்குந் தனியாறன் றென்றும், இந்நதி (நொய்யல்) ஈரோடு கருவூர்த்தாலுகாக்கள் கூடுமிடத்து நெய்க்குப்பத்தருகில் காவிரியுடன் சங்கமமாகிறது2 என்றும் தம் புத்தகத்தில் வரைந்து முள்ளார்கள். ஈண்டுக் காஞ்சிசுட்டும் பரணர் அடிகளைக் கவனிப்பாம்.

“நின்மலைப் பிறந்து நின்கடன் மண்டு
மலிபுன னிகழ்தருந் தீநீர் விழவீற்
தீம்புன லாய மாடுங்
காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே,”

இவ்வடிகளாற் பரணர்பாடிய காஞ்சி, சேரன் மலையிலெழுந்து சேரன் கடலிற் சங்கமிக்குமொரு நதம்2 என்பது தெளிவாகின்றது. ஐயங்காரவர்களின் காஞ்சியென்ற நொய்யலாறோ கிழக்கோடும் நதியாதலான் மேலைக்கட லெட்டியும் பாராதே? உபசாரார்த்தமாகச் சோழனை வென்ற செங்குட்டுவற்குக் கீழக்கடலு முரித்தெனக் கொள்ளினுங்கூட நொய்யலாறக்கடலையுமணுகாதே, கருவூருக்கு நெடுந்தூரம் மேற்கேயே காவிரியிற் கலந்து தன்னிலையிழப்பதாகும். ஆகவே பரணர் அதை நின் ( செங்குட்டுவனின்) மலைப்பிறந்து, நின்கடன் மண்டு மலிபுனற் காஞ்சி என்பரோ? இதனாற் பரணர் பாட்டுடைக் காஞ்சி, மலைநாட்டாறேயாக வேண்டுமென்பது விசதமன்றோ?

இதுவேயுமன்றிச் சேரவீரர் சில கவர்வென்றி தோன்றத் தோற்றமாற்றலர் நதிமலைகளைச் சிற்சிலவிடங்களி லுவமித் திருப்பதல்லாற், பெரும்பாலும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகார முதலிய முன்னூல்களிலெல்லாம், சேரருக்குரிய கடலையும், மலையையும், மலைநாட்டாறுகளையுமே பலபட விசேடண மாக்கிப் பழம்புலவர் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தில், சேரரை யவர் புணரிபுணர்த்திப் புகழ்ந்துளபாக்களை மேலே காட்டினேம். அவர் மலை நாட்டாறுகளில், காஞ்சிபற்றிப் பரணர் பாட்டையும் பார்த்தாம். இனி மேற்குமலைத் தொடரினின்றிழிந்து, மலைநாடு சுரக்கவூட்டி வஞ்சியிற் சங்கமிக்கும் பேராறு பற்றிய சில வரும்பழந் தொடர்களை மட்டுங்காட்டி மேற் செல்வேம். இப்பேராறு, மேற்குமலைத் தொடரினடிவாரத்துள்ள திருக்கருவூரருகே மலைவிட்டு நிலந்தொட்டு, மேற்கோடி, கடல்சேரு மலைநாட்டு நதியென்பதை ஐயங்காரவர்கள் தன் சரித நூலில் ஒப்புக் கொண்டுள்ளார்களாதலான்,1 இவ்வாறு கூறும்பாக்களிலேனும் மலை நாட்டாறுவமை யுண்மை சூட்டுவன் சரித நூலாரும் மறுக்கற் பாற்றன்றாவ தொன்றாம்.

“இனையினிது தந்து விளைவு முட்டுறாவது
புலம்பா வுறையுணி தொழிலாற் றலின்
வீடுநிலக் கரம்பை விடரளை நிரையக்
கோடை நீடக் குன்றம் புல்லென
வருவி யற்ற பெருவறற் காலையு
நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாற்றுச்
சீருடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇய
ருவலை குடீயுருத்து வருமலிர் நிறைச்
செந்நீர்ப் பூகலல்லது
வெம்மையரிது நின்ன கன்றலை நாடே”

“இரும்பணை திரங்கப் பெரும்பெய லொளிப்பக்
குன்றுவறங் கூரச் சுடர்சினந் திகழ
வருவியற்ற பெருவறற் காலையு
மருஞ்செலற் பேராற் றிருங்கரை யுடைத்துக்
கடியேர்பூட்டு நர்கடுக்கை மலைய”

“மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு
வுருநர் வரையாச் செழும்பஃ றாரங்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப”

“விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
நெடியோன் மார்பி லாரம் போன்ற
பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை
விடுமண லெக்க ரியைந்தொருங் கிருப்ப”

இனி சேரருக்கேவுரிய, ‘அயிரை’, ‘நேரி’, ‘கொல்லி’, முதலிய பல மலைகளையும், ‘வானி’, அயிரை யாறுகளையு மருக்குவமித்துள்ள பாக்களும் பலவாம்.1 இம்மலைநாட்டு அயிரையாறும் மலையும் சேரருக் குவமிக்கப்பட்டிருத்தல் கண்ட ஐயங்காரவர்கள் வழக்கம் போற் றம்புத்தகம் 139 ஆம்பக்கத்தடிக் குறிப்பொன்றில் இவை சோணாட்டுள்ளன போற்கூறி, மலை நாட்டா றுவமிக்கப்படவில்லை யென்னுந் தங்கூற்று நெகிழாது காக்கு முயற்சியின் பயனைச் சிறிதாராய்வாம்.

குழித்தலையருகேவுள்ள இரத்தினகிரியை யப்பக்கத்தவர் சிலர் தற்காலத்து ஐயர்மலை யென்றழைப்பதான நூலாதார மொன்றுமில்லாதவொரு நவீனப் பிரதாப மொன்றே கொண்டிதுவே சங்க நூல்களிற் கூறப்படும் சேரரின் அயிரை மலையென்று சாதிக்கத் துணிகின்றார்கள். அதுவேபோல், தந்துணிபை யிடர்ப்படுத்தாவாறு, மலை நாட்டாறெனப் பழநூல்கள் விதந்துகூறு மயிரையாற்றையும் காவிரியுடன் சங்கமிக்கும் ஐயாறாகத் துணிகின்றார்கள். இதற்காதாரமாவதெல்லாம் அயிரையாறு … … காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் ஐயாறு என்ற நதியாகக் கருதப்படுகிறது என்னுமொரு அடியற்ற அநுமான மொன்றொழியப் பிறிதொன்றுங் கூறிற்றிலர். யாரால், எதுபற்றி, என்றுதொட்டு, இவ்வாறு கருதப்படுகிறது? என்ற இடர்ப்படுத்தும் வினாக்களை யறவே புறக்கணித்தொதுக்கி மகிழ்வார்கள். கரூர் பேராறு என்னுமிரு முழுப்பெயரொற்றுமை கொண்டு, வஞ்சி மேற்குமலைத் தொடரடிவாரத்தூரென்ற ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்களை, ஓசை யொற்றுமையொன்றே கொண்டு வாத முறை பிறழ்ந்தவராகப் பரிகசிக்கும் ஐயங்காரவர்கள், தங்கொள்கைக் கேற்றபடி பெயரொற்றுமையு மில்லாவிடங்களிலும் ஐயர்மலையென்றழைக்கப்படும் இரத்தினகிரியை அயிரை மலையெனவும் ஐயாறு என்பதே அயிரையா றெனவும் பேசுமியல்பும் துணிவும் வியப்பதன்றி மறத்தல்வேண்டா? ஐயங்காரவர்களும் மலைநாட்டு நதமெனப்பேசும் பேராறு, அயிரைமலையைத் தலையாக்கொண்டு ஒழுகப்பட்ட யாறென்று”2 பதிற்றுப்பத்தின் பண்டையுரைகாரர் வற்புறுத்தியுள்ளதைக் குட்டுவன் சரிதநூலார் பண்டிதராகலின் மறந்தனரென்று நினைக்கவுந் துணியேம்; மறைத்ததாக் கூறுங்குறையையும் வெறுப்பேம். ஒருகால் இத்தொல்லாசிரியரையும் தம் கொள்கையொடு முரணிய அடியார்க்கு நல்லாரை யொதுக்கியதுபோற் சரிதமுறையறியாதா ரென்றுகண்டு அவர் கருத்தைக் கொண்டிலர்போலும். துணிந்த மேற்கோள் பிறிதுகாணும்வரை, எம்மனோர்க்கு இப்பழையவுரை யாசிரியர் கூற்றுபோற்றற்பாற்றாம். அயிரைமலையிவ்வாறு பேராறுற் பத்தியாகு மலையாயின், அது மலைநாட்டு மலையேயாமன்றி, குழித்தலைக் கருகாங்குன்ற மாகாதன்றோ? தொல்லைநல்லாசிரியரெல்லாரும் சேரருக் குவமை கூற எடுத்தாளு மாறுகளனைத்தும் சோழன் காவிரியின் துணைச் சிற்றாறுகளாகவே காட்டும் ஐயங்காரவர்கள் திறமிகப் பெரிதோயாம். இவர்கள் தம் நூலிலெடுத்துக்காட்டிய மேற்கோள்களொன்றேனும் மலையிற் பிறந்து கடலிற் சங்கமிக்குந் தனிப் பேராறொன்றையுங் குறித்ததாயில்லை. பழம்புலவர் சேரருக்குப் பாடிய பொருநை, அயிரை, காஞ்சியென்றனைத்துங் காவிரியிற் கலப்பதாகவே காட்டியுள்ளார்கள். சேரர் பெரு நாட்டில் மேலே காட்டியபடி செங்குட்டுவன் மிக வெறுக்குங் காவிரியிற் கலவாமல், கடலிற்புகும் யாறொன்றுமேயில்லை தானோ? அன்றேல் அக்காலப் புலவரனைவரும், சேரரவமதிக்குங் காவிரிச் சிறுதுணையாறுகளை யவருக்குவமிப்பதேயம் மலையரசர் பெருமைக்கேற்புடையதும் அவரை மகிழ்விப்பது மென்று கண்டுவைத்த மாறாக் கொள்கைதானோ?

மேலும் குட்டுவருக்குப் புனனாட்டோர் பகுதி நாடாகவும் அந்நாட்டுக் கருவூரே தலைமை நகராகவும் விளங்கியதாகக் கூறும் ஐயங்காரவர்களே, தம் நூல் 2ஆம் அதிகாரத்தில் மாந்தையென்பது நார்முடிச்சேரலுக்கும், தொண்டி இரும் பொறை மரபினர்க்கும் இராஜதானிகளாக இருந்தன வென்றும், இவ்விரண்டு தலைநகரங்களும் கடற்கரையி லமைந்தவை யென்றுங் கூறியுள்ளார்கள்.1 எனவே கருவூர்ச் சேரருக்குப் புனனனாட்டுக் காவிரித் துணையாறுகளையே பாடுவதொருவா றமைவதாகக் கொள்ளினுங்கூட, இத்தொண்டி மாந்தையூர்களி லாண்ட சேரருக்குரிய பாக்களிலேனும் அவர் நாட்டாறுகளையும் மலைகளையுமே சிறப்பித்துக்கூற எதிர்பார்ப்பது முறையாகு மன்றோ? ஐயங்காரவர்களும், அரசரை அவரவர் தேசத்திலும் நகரத்தோடும் நதிகளோடும் உவமித்துச் சிறப்பித்தல் முற்காலவழக்கு என்றெழுதியுள்ளார்கள்.1 இம்முறை வைத்து நோக்க, அயிரையாறு, அயிரை நேரிமலைகள், வஞ்சிமூதூர் இவைகளனைத்தும் இத்தொண்டிமாந்தைப் பட்டினச் சேரரையே பாடிய கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் பாக்களில்2 சிறப்பிக்கப்பட்டிருக்கக் காண்கிறோம். இஃதொன்றே இவை, தண்கடற் படப்பை நாடுகிழவோரான சேரர்மலை நாட்டே யுள்ளவை யென்பதை விசதமாக்கவல்ல தன்றோ? இவ்வாறன்றி, இவை மேற்குமலைத் தொடருக்குக் கிழக்கே புனனாட்டுளவா மாயின், இந்நாட்டுக்குரியரல்லாத கடற்கரைத் துறைமுகச் சேரரை இவை கொண்டு பாடுவதும், வேறிவர் சொந்தமலை நாட்டாறு மலையொன்றையு முவமியாமையும் விளங்காப் புதிர்களாமன்றோ! கருவூர்ச்சேரர், தொண்டிச்சேரர் எனச் சேரநாட்டில் வேறுவேறு தலைநகரங்களில் இருகுல மன்னர் ஒரு காலத்தே மலை நாட்டைப் பங்கிட்டு ஆட்சிபுரிந்தது போலக் குறிப்பிடும் ஐயங்காரவர்கள் கூற்றையாராயுமிட மிஃதன்றென விடுப்பேம். அஃதெவ்வாறாயினு மிதுவரை கூறியவாற்றால் சேரருக்குரிய மலைநாட்டாறுகள் நதிகள் நகரங்களையே பெரும்பாலும் பழம்புலவர் அவருக்குவ மித்துள்ளார்க ளென்பதும், உவமியாத தாகக் கொண்டு அதனாலவர் மலை நாட்டுரிமை மறுத்துப் புனனாட்டோர் பகுதியுடையராகவும் அவர் தலைநகராம் வஞ்சி மலைநாட்டு வஞ்சைக்களமாகாமற் புனனாட்டுக் கருவூரானிலையேயாகவுங் கருதுவதா ராய்ச்சி முறைக்கு மாறுபட்ட தென்பதும், தெளிவாகின்றன.


பகுதி : 9 ஒரு நூற்றுநாற்பது யோசனை விரிந்த தெது?

இனி, செங்குட்டுவன், மலைவளங்காண்டல்வேண்டி, பேரியாற்றங் கரை சென்றானென்று சிலப்பதிகாரம் குறிப்பது காட்டி, மேற்குமலைத் தொடரினடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூரே வஞ்சியாதல் வேண்டும் என்ற ஸ்ரீ கனகசபைப் பிள்ளையவர்கள் கொள்கையை ஐயங்காரவர்கள் மறுப்பது மிகப்பொருத்தமும், யாவருக்கு முடன்பாடுமாம். பிள்ளையவர்கள் கருதியபடி மலைச்சாரற்றிருக்கரூரே வஞ்சியாமாயின், மலைச்சோலை விளையாட்டு விரும்பிய செங்குட்டுவன் வஞ்சி நீங்கி வழிநடந்து வந்துமலை கண்டு பேராற்றங்கரையிற்றங்கினனென்று இளங்கோவடிகள் கூறுவரோ?

“மஞ்சு சூழ்சோலை மலைகாண் குவமெனப்
வஞ்சி முற்றங்கிச் செல்வோன்
விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்,
ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகந் திலக நறுங்கா ழார
முதிர்பூம் பரப்பி னொழுகுபுன லொழித்து
மதுகர ஞிமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பி லாரம் போன்று,
பெருமலை விலங்கிய பேரியாற் றங்கரை
யிடுமண லெக்க ரியைந்தொருங் கிருப்ப”

என்பது மூலம், இதனாற் கிடைப்பன, வஞ்சி, மலையருகில்லா வூரென்பதும், மலைவள மலர்ப்பொழில் விளையாட்டு விரும்பிய செங்குட்டு வன் அதுதேடி மலைவாரப் பேராற்றங்கரை வந்துற்றன னென்பதுமே. இதுவே உண்மைக்கும், பேராற்றின் கழிமுக வஞ்சியமைப்புக்கும், மலைநிலக்கிடப்புக்கும் பொருத்தமுடையதாகும். இதனால், ஐயங்கரவர்கள், வஞ்சி யென்பது ஆம்பிராவதி யல்லது ஆன்பொருநைப் பக்கத்தும் மலை வளமில்லாததுமான கருவூரேயாதல் திண்ண மென்றெவ்வாறு பெற்றனர் களோ வறியேம். கருவூரானிலை மலைவளமில்லாதது செங்குட்டுவன் வஞ்சியு மலைவாரத்தில்லாததே; இவ்வொரு புடையொற்றுமை யாலிரண்டூரு மொன்றெனல் போதருமா றென்னே? மலைவள மில்லாவூ ரெல்லாம் வஞ்சியாமோ? அன்றியும், வஞ்சி மலைச்சாரலில்லாததாயினும், அடிகள் குறித்தபடியே பேராறு மலை யினின்று விலங்குமிடத்திற்கு மிகத் தூரமில்லாத கடற்படுமலி முகத்தூரேயா மென்பர் அடியார்க்கு நல்லார். கருவூரானிலையோ, அவ்விடத்திற்கு வெகுதூரத்திற் புனனாட்டிலிருப்பதாகும். இம்முரண்பாடு கண்ட செங்குட்டுவன் சரித நூலார், சிறிதுந் தளர்கிலர்; கருவூருக்கும் பேரியாற்றங் கரைக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பதாகக் கூறியமைவார். முதலில், இக்குறிப்பிருப்பினு மதனாற் கருவூரானிலை வஞ்சியெனப் பெறுமாறில்லை. மலைவாரத் தில்லாத வஞ்சிப்பட்டினம், பேராற்றினுற்பத்தி மலைக்குச் சேய்மைத்தாகலாம். இனி இச்சேய்மைக்குறிப்புத் தானென்னே? மேற்காட்டிய சிலப்பதிகாரக்காட்சிக் காதையடிகளில், ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று என்னுந் தொடர்கொண்டு இந்திரனுக்கே யத்தொடர் விசேடிக்கப்பட்ட தாயினும், அத்தொகையினளவு தூரத்தை அடிகள் சேரன் பிரயாணத்துக்குவ மித்திருப்பது, அவன் சென்று வந்த பேரியாற்றங்கரை வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்குமென்பதில் ஐயமில்லை என்று தெளிந்து, இத்தொடர் இந்திரனது யானைப் பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும், செங்குட்டுவனது பிரயாண தூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்தமாகும் என்று தீர்மானிக் கின்றார்கள். இந்திரனுக்கே யத்தொடர் விசேடிக்கப்பட்டதென்று இவர்களே கண்ட பிறகு, இதினின் றெவ்வித விவகாரமு மெழாதெனக் காணாமை யேனோ? இது நிற்க, இந்திரனுக்கித் தொடர் விசேடணமாகா தென்பதேயெங்கருத்து. மேற்காட்டிய அடிகளையுற்று நோக்கின், ஒரு நூற்றுநாற்பது யோசனை விரிந்த என்னுந்தொடர், பேரியாறு விலங்கிய பெருமலைத் தொடரை யேனும், பேரியாற்றி னொழுக்கை யேனுமே விசேடிப்ப தென்றெளிதிற்றோன்றும், பெயர்வோன்போன்று ஆரம் போன்று, ஒரு நூற்றுநாற்பதி யோசனை விரிந்த - பெருமலை விலங்கிய பேரியாறு என்றேனும், பெயர்வோன்போன்று ஆரம் போன்று, பெருமலை விலங்கிய ஒருநூற்று நாற்பதியோசனை விரிந்தபேரியாறு என்றேனுங் கூட்டி முடிக்கப்பொருள் சிறப்பதோடு, கோங்கம் வேங்கை தூங்கிணர்க்கொன்றை யாதி இடைநிற்குந் தொடர்களின் முடிபுக்குமேற்ப முடியும். எவ்வாறாயினும், செங்குட்டுவன் பிரயாண தூரத்தைக் குறிப்பதாகாது. செங்குட்டுவனுக் கித்தொடரை விசேடணமாக்குவதானாலுங்கூட பரந்தொருங்கீண்டி (யஅவன்) பைந்தொடியாயத்தின் பரப்பே குறிப்பதல்லால், அவ்வாயமுமவனுஞ் சென்ற பிரயாண மொத்த தூரத்தைக் குறிப்பதாக் கொள்வதெப்படிக்கூடும்? இத்தொடரின் தொகையளவு மொத்தப் பிரயாண தூரத்தையே குறிக்குமெனக் கொள்ளின், போன வழியளவொன்றை மட்டுமோ, அன்றிப் போய்மீண்ட வழியினிரட்டிப்புத் தூரத்தளவையோ குறிப்பதாகும்? இத்தொடர் செங்குட்டுவன் மேலதாங்கால், அவனுடன் சென்ற ஆயத்தின் பெருக்குநின்ற பரப்பைச் சிறப்பித்த புனைந்துரையெனலா மல்லால், தொகை திட்டமான ஒரு பிரயாண தூர அளவையே குறிப்பதென லெனைத்தானும் பொருத்தமின்றாம். விளையாட்டு விரும்பிச் சென்ற சேரன் தானையொடு பெயர்ந்ததாகக் கவி கூறிற்றில்லை; பைந்தொடியாயமொடு சென்றதாகவே கூறக்காண்கின்றோம். இளங்கோவடிகளிவ் வாயப்பரப்பிற் கித்தனைய பூத கற்பனை சொல்லுமியல்புடையவருமில்லை. இதை நினைத்துப்போலும் ஐயங்காரவர்கள், இளங்கோவடிகள் தம் தமையனது வடயாத்திரையை வருணிக்குமிடத்து”1 இத்தொடர் கூறினதாக அமைத்துக் கொண்டுள்ளார்கள். வடயாத்திரையிற் செங்குட்டுவன் பெருந்தானையொடு பெயர்ந்தானாகவே, தானைப்பெருக்கைத் தானப்பெருக்காற் புனைந்துரைத் தாகவேனுங் கொள்ளக் கருதினர்கள்போலும். எனில் இத்தொடர் வட யாத்திரைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத காட்சிக் காதையிற் பெண்டிரொடு பொழில் விளையாட்டு வேட்டுச்சென்ற சேரன் போய்ப் பேராற்றங்கரையிற் றங்கியதைக் குறிக்குமிடத்துள்ளதேயாம். இன்னுமிவர்கள் தங்கருத்துப்படி இத்தொடரிலுள்ள தொகை சேரன் பிரயாண தூரத்தையே குறிப்பதாக் கொள்வதற்குப் பின்னுமோரிடை யூறுண்மையுங் காண்கின்றார்கள். கருவூரானிலைக்கும் மலைவாரப் பேராற்றங் கரைக்கும் உத்தேசம் 300 மைலாகக்கண்டுவைத்தும், கிடைத்த வொருவரியை யுபயோகியாமல் விட மனந்தாழாது, அடிகளின் ஒரு நூற்றுநாற்பதி யோசனைக்கும் இம் முந்நூறுமைற்றூரத் திற்கு மொற்றுமை சிருட்டிக்கப்பகீரத முயற்சி மேற்கொள் வாரானார்கள். சான்று சுட்டியவழி யுண்மை காணாது, கொண்டதோர் கொள்கைக்குச் சான்று தேடுந்தாளாண்மை யிடரே வளர்ப்பதன்றோ? யோசனையளவு முன்யோசியாவாறிடர்ப்படுத்தக் கண்டுவைத்துஞ் சிறிது மனஞ்சலியாமல், இளங்கோவடிகள் காலத்து ஒரு யோசனையளவு 2ஙூ மைலுக்குட்பட்டதாகவிருந்தது போலும்”1 என்றோர் சமயோசிதவூக மொன்று கொண்டமைதி கண்டவர்களின் தளராமனவலி யெம்மால் வியக்குந்தரமன்று. முதலில், கருவூரானிலையே வஞ்சியெனச் சாதிப்பதற்குச் சிலப்பதிகார வரியை யுபயோகிக்க முயன்றார்கள். பிறகு இத்தொடரிடர் தரக்கண்டு, இத் தொடரளவு கருவூருக்குப் பொருந்துமாறு, கருவூர்த் தூரத்தைவைத்து, யோசனையளவறுத்து, இதற்குரை காண முன்வந்தார்கள். இவ்வனுமான யோசனையளவுக்காதாரம் இவர்கள் சாதிக்க முயலுங் கொள்கைபடுமிடரன்றிப் பிறிதுகாணேம். புதிதொரு துணிபு நாட்டப் பல புதுத் துணிபுகாட்டுங் கற்பிதத்திறனு மதனாலாயவிடர்ப்பாடும் பிறிதெவரையுஞ் சலிப்பிக்கு மென்பதிலையமில்லை. ஐயங்காரவர்களோ, இவையனைத்துங் கண்டுவைத்தும், கருவூரையடுத்து ஆம்பிராவதியுங் காவிரியுங் கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சிமா நதியையும் பரணர் செங்குட்டுவனுக்குவமையாகக் கூறியிருத்தலும், ஆந்பொருநைக் கரையில் வஞ்சியுள்ளதாகச் சொல்லப்படுதலும், கருவூருக்கும் பேரியாற்றுக் கும் பெருந்தூர முண்டென்பதை யிளங்கோவடிகள் குறிப்பிப்பதும், சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங்களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்க சான்றாதல் காணலாம் என்று தெளிகின்றார்கள்.2 முக்கூடல் காஞ்சி, ஆந்பொருநை இவைகளைப் பற்றியுமிவை கருவூரானிலை வஞ்சியென்று நாட்டற் பாலனவன்றென்பதும் மேலே காட்டி யுள்ளேம்”. கருவூர்க்கும் பேரியாற்றங்கரைக்கும் பெந்தூர முண்டென்பதை இளங்கோவடிகள் சிறப்பிப்பதாகச் சொன்னதை யாராய்ந்தறிந்து அதுவும் இவர்கள் புதுக்கொள்கைக் குதவாமை ஈண்டுக்கண்டோம்.

மேலும், திருவானிலையே வஞ்சி நகரும், அக்கருவூர்ப் பிரதேசமு மதன் மேற்கும் சேரர் தேசமுமேயாமாகில், மஞ்சுசூழ் சோலைமலை காண்குவமெனவஞ்சி முற்றநீங்கிச் செல்லுஞ் செங்குட்டுவன், பெண்ணை பாலாறு, காவிரி (ஐயங்காரவர்கள் கொள்கைப்படி யவனுக்கேயுரிய) ஆம்பிராவதி, மணமுத்தாறு, குடவனாறு, நொய்யலாறு முதலிய பல அற்புத நதிகளுற்பத்தி யாவதும், வளனுங் கவினும் வளர்ந்து திகழ்வதுமான மேற்குமலைத் தொடரின் கிழக்கடிவார நெடும்பரப்பின் சாரலனைத்தையு மகற்றி, மலையேறி, மேற்கிறங்கிப் பேரியாற்றங்கரைவந்து தங்கக் காரணந்தா னென்னையோ? விளையாட்டு விரும்பியுடன் போந்த பைந்தொடியாயத்தார் சமநிலப்பரப்பினிடைந்த மாமரச் சோலையிடையே யொழுகு மாம்பிராவதியினழகு நிழலுமரும் பழமுங்கண்டு மகிழாரென நினைத்தோ, அவரைப் பெருமலைத் தொடரேறிக் கடந்து மலைநாட்டிறங்கிக் கோங்கும் வேங்கையுஞ் செறிந்த பேராற்றின் மணற்கரையி லிறங்கச் செய்தது? ஆற்றல் போலறிவுடைய தமிழ்க்கோமான், இவ்வாறு, தன்னூர் விட்டு, வெறும் விளையாட்டொன்றிற்காக 300 மைல் தூரம் பெண்டிரொடு வழிநடந்து, மலைகடந்து, களைத்துமீளக் கருதுவதியல்பா? அன்றி, பேராற்றின் கழிமுகத்தூருடையான், மலைவளம் வேட்டபோது, நெடுந்தூரஞ் செல்லவேண்டாத அவ்வாற்றினுற்பத்தி மலைச்சாரலுக்குச் சென்று களித்து மீண்டனன் எனக்கொள்வது முறையா? என்று சிந்திப்பார்க்கு வஞ்சி கருவூரானிலையாகாதென்பது தெற்றென விளங்கும்.


பகுதி10 : ‘ஆடகமாடம் - அரசவனமா?

இனி, “ஆடகமாடத் தறிதுயிலமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர்நின்றேத்த1 என்னுங் கால்கோட்காதை வரிகளையும் அவற்றிற்கு அரும்பதவுரையில் ஆடகமாடம் திருவனந்தபுரம்” என்றுள்ள குறிப்பையுங்காட்டி, அக்கோயில் வஞ்சியாகிய கருவூருக்குப் பக்த்திருந்த தாகுமேயல்லது 300 மைலுக்கப் பாலுள்ள திருவநந்தபுரமாகாதென்பது திண்ணம்; ஆதலால், கருவூர்க்குக் கிழக்கே அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் ஆலய மொன்றுண்டு என்று கருவூர்ப்புராணங் கூறுகின்ற அரங்கநாதப் பெருமாள் சந்நிதியே பழைய ஆடக மாடமாகக் கொள்ளுதல் பொருந்துமெனலாம்”1 என்று கூறித் தங்கொள்கைக் கிதுவுமொரு பற்றுக்கோடாகக் கொள் கின்றார்கள். இதில் எத்தனை தருக்கப் பேய்த்தேர்களமைந்து கிடக்கின்றனவென்று நிதானிப்பார்களில்லை. முதலில், கருவூரானிலைதான் வஞ்சியென்பது இனி அவர்கள் தக்கசான்று கொண்டு நிறுவக்கிடக்கு மொரு புதுக்கொள்கை யென்பதை மறந்து, அது யாவரும் துணிந்த சித்தாந்தம் போலக்கொண்ட மைந்தார்கள். அதன்மேல், தன் புதுக்கொள்கை யென்பதற் காதரவாகக்கொண்ட இச் சிலப்பதிகாரக் குறிப்புத் தனக்குதவாமை கண்டு, ஆடகமாட மொருநாள் வழிப்பயணத்திற் குட்பட்டதாக வேண்டுமாகை யாலும், கருவூரானிலையருகோர் பெருமாள் கோயிலிருப்பதாலும் இக் கருவூரே சிலப்பதிகாரத்திற் கண்ட வஞ்சியாக வேண்டுமென்று துணி வாரானார்கள். செங்குட்டுவன் வடக்கே புறப்படுவதற்கு ஒரேநாளைக்கு முன்புதான் பயணம் பிரத்தாபிக்கப்பட்டதென்று ஆதாரம் யாண்டுக்கண்டார்களோ? இவன் மலைக்குறவரிடம் கண்ணகி விண்ணாடுசென்ற விபரங்கேட்டதும், வஞ்சிக்குத் திரும்புமுன்னரே வடதிசைக்குப் படிமக்கல் கொணர்வான் புறப்படுமுறுதி செய்துவிட்டதாகவன்றோ சிலப்பதிகாரக் காட்சிக்காதை கூறுகின்றது; அத் தகவ லொட்டி யனந்தபுரக்கோயி லர்ச்சகர் தம்மரசருக்கு விஜயங் கூறிப் பிரசாதங் கொணர்ந்திருக்கலாதாகா? பதிற்றுப்பத்தினும் புகழும் மலைநாட்டநந்த புரமே2 யாடகமாட மாகாமல், ஆனிலைக்கருகோர் சிறுகோயிலே யாமாறென்னோ? பெருமாளுக்குக் கோயில் கருவூரானிலைக் கருகுமட்டுந் தானுளதோ? அரும்பதவுரைகாரரே ஆடகமாடத்தை மலைநாட்டூ ராய இரவிபுரமென்பாரு முளரென்று காட்டிய குறிப்பை யிவர்கள் கவனியாததேனோ? கடற்கரைவஞ்சிக்கருகே அரவணை கிடந்தானுக்குக் கோயிலே கிடையாதென்பது இவர்களாற் சித்தாந்தஞ் செய்யப்படவில்லை. ஆராயப்பட்ட தாயுமில்லை; இதனாற் கருவூராநிலையே; வஞ்சியென்றாய வகை இனி யிவர்கள் காட்ட வெதிர்பார்த்து, அதுவரை பொறுமை கொள்வோம்.


பகுதி 11 : சேரர்நாடு மலைநாடே!

இறுதியாக, கொடுங்கோளூர் என்றபெயரேபழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாததொன்றாகும். இதனையடுத்துள்ள திருவஞ்சைக் களத்துக் கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால் சரித்திரவறிஞர் அவ்விரண்டனையும் பொருத்தி யெழுதுவனவெல்லாம் முன்னைவழக்கோடு முரணுவதேயென்க.1 என்று கட்டுரைத்தார்கள் வஞ்சிக்கும் வஞ்சைக் களத்திற்கும் எவ்விதப் பொருத்தமுமில்லாமைக்கிவர்கள் கண்ட முன்னைய வழக்குத்தான் யாதோ? கூறினார்களில்லை. கூறுங் காலதனை யாராய்வாம். இவை தமக்குள்ள பொருத்தத்தைப் பற்றிக் கீழே விசாரிப்போம். ஈண்டு, பழைய நூல்களில் கொடுங்கோளூர் என்ற பெயர் காணாமையாலவர்கள் கொள்ளு மனுமானப் பலனைமட்டுமாராய்வோம். அத்தினபுரம் மிதிலை, பாடலிபுரமிவற்றின் பிற்காலப் பெயர்கள் வியாசர் வான் மீகரிதிகாச முதலிய பழைய நூல்களிற் காணப்படுகின்றனவா? கொடுங்கோளூரைச் சொல்லும் பெரிய புராணத்திலு மிவ்வூர்க் கிக்காலத்து வழங்கப் பெறுங் கொடுங்கலூர் என்ற பெயரேனும் ஆங்கிலப் பயிற்சியுடையார் பரவச் செய்யும் கிராங்கனூர் (ஊசயபேயnடிசந) என்ற பெயரேனும் கூறப்பட்டுள்ளதா? ஒரு நூலுக்குப் பின்னெழும்பெயரை யந்நூலாசிரியர் முன்னுணர்ந்து கூறுந்தீர்க்க தரிசனம் பெறாமை கொண்டு, அவ்வூர் அந்நூற்காலத்தில்லையென வாதிப்பது தருக்கமுறையாமா? கொடுங்கோளூர் என்ற பெயர் எக்காலத் தெப்படி யெழுந்ததென்றவாராய்ச்சி ஈண்டு நிகழாது; நிகழ்வ தின்றியமையாததுமன்றாம். ஆனால் சேக்கிழார், அடியார்க்கு நல்லார் முதலிய தொல்லாசிரியரிவ்வூரே சங்ககாலத்து வஞ்சியூர் என்று விதந்து கூறினதே போதிய சான்றும் முன்னைய வழக்கு மாமன்றோ? ஐயங்காரவர்கள்கூடத் தந்நூலில், இக் கருவூரின்தானத்தில் மலைநாட்டுக் கொடுங்கோளூர் சேரராசதானியாகப் பின்னூல்களிற் கூறப்படுதல் காணலாம்”1 என்றிதற் காதாரமுண்மையை அங்கீகரிக் கின்றார்கள். ஆனாலிது தன்னபிமானக் கொள்கையொடு முரணுவதுகண்டு, சங்க காலத்துக்குப் பின்னர்ச் சோழராற்றற் கஞ்சிய சேரர், வஞ்சியைவிட்டு நீங்கித் தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாக் கொள்ளலாயினர்”2 என்று கூறித் தாங்கண்ட நல்லாசிரியர் மேற்கோள்களினின்றுந்தப்ப வழிதேடுகின்றார்கள். இது சரித நூற்றுணை பெற்றுளதே லிவர்கள் யோசனை பலிப்பதொருவேளை சாத்தியமாகும். சோழராதிக்கம் பெருகியதெல்லாம் கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயென்ப திதுவரை சரித நூல்கண்ட துணிபு. ஆனால் சேரவீரர் சிலர் இடையிடையே சோழர் முதலியகீணாட்டு மன்னர் மேற்பெற்ற வெற்றிப் பெற்றியல்லால், சாசுவதமாகக் கொங்கு நாட்டிற்குக் கிழக்கே யாதொரு பாகத்தையுமவர் களாண்டதாக யாதொரு நூலிலும் சாசனங்களிலுங் கூறக்காணோம். கருவூரானிலைச் சாசனங்களெல்லாம் சோழரே தந்துளவாகவும், சேரராதிக்கக் குறிப்பொன்று மவை கூறிலவாகவும் ஐயங்காரவர்களே எழுதியிருப்பதை3 மேலே காட்டியுள்ளேம். இனிச் சோழர், சேரரைத் தந்நாடும் நகரமும் விட்டோடச்செய்து, அவர் பழவிறன் மூதூருங்கொண்ட மறக்கொணாப் பெரு வெற்றியை நூல்யாவும், சாசனங்களும் சரிதவுபகரண மனைத்தும் மறந்த நிந்தைக்கு, அதை இவர்கள் மீளக்கண்டுலக்குதவிய விந்தையன்றி வேறுவமையுண்டோ? சோழராதிக்கம் பெருகியபோது கருவூர், சோணாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான செய்தி சாசனங்களாலும் நூல்களாலுந் தெரிகின்றது என்றும் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் கருவூர் சோணாட்டைச் சார்ந்ததென்பர் சாசனப்பரி சோதகர்”4 என்றும் எழுதிய குட்டுவன் சரிதநூலார், இக்கருவூரானிலை என்றைக்காவது சேரரூராயிருந்ததற்கு யாதோராதாரமுங் கூறாதகன்றது, அவர்கட் கிது சான்று வேண்டாச் சரிதவுண்மையாகத் தோற்றிய துணிபேபோலும், இவர்களத்துணை நுணுகிய சரிதமதியில்லார்க்கிதனைச் சிறிது விளக்கியிருப்பின் மிகவுமுப காரமாகியிருக்கும். இவ்வூர்த் திருவானிலை கோயிலைப்பற்றிய தேவராப்பதிகங்களிலேனும் வஞ்சியின் பழஞ்செய்தி சிறிதுங் குறிக்கப்பட்டிருக்கவில்லை”1 யென்றிவர் களே பரிதபிப்பதை மேலுங்காட்டியுள்ளேம். சோழருக்குக் கருவூரானிலை சொந்தமென்றவரையே பழநூலாதரவு கிடைக்கின்ற தென்பதிவர்கட்கும் எமக்கு முடன்பாடாம்: ஆனால் முன்னொரு காலத்திலிவ்வூர் சேரருக்குரியதா யிருந்திருக்க வேண்டு மென்றிவர்களனுமிக்கு மிடத்தே தான் வேறுபடுவாம். கிடைத்த பழநூன்மேற்கோள்களெல்லா மோரூரை யொருகுலத்தரசருக் குரியதாக்கவும், அதற்கு மாறான பழங்கொள்கை யாண்டுமில தாகவுங்காணுமிடத்தே, அவ்வூர் அவ்வரசருக்கிடையிட்டுக் கிடைத்ததான மேற்கோள் கண்டாலன்றி யவருக் கஃதாதி தொட்டிருந்த தெனக் கொள்ளுவதே சரிதநூலாராயுமுறை. ஆனிலைக் கரூவூருக்குச் சோழர் சம்பந்தம் சாசனக்காரர்கண்ட 10ஆம் நூற்றாண்டிற்கும் வெகு காலத்திற்கு முன்னதென்பதை மேலே பெரியபுராணப் பாக்களாற் றெளிவாக்கியிருக்கின்றேம்.2 சாசனங்களும், நூல்களும் ஆனிலைக் கருவூரைச் சோழராதிக்கம் பெருகியபோதவர் முக்கிய நகரங்களுளொன்றாகக் கூறுவதற்கும், அதற்குமுன் அவ்வூரை யத்துணை பாராட்டாமைக்கும் தக்க காரணமுண்டு. சோழரைப்பாடும் புலவர் சோணாட்டூரெதுவுங் கொண்டு பாடுவரென்று நினைப்பதுமுறையாகாது. சோழரைப் புகழ்ந்த புலவராற் பாடப்பெறாமைகொண் டோரூர் சோணாட்ட தன்றென மறுப்பதும் மரபன்றாகும். பாடுவார் - பாடுமரசர் பீடுபெறு மூதூர்களைமட்டுஞ் சுட்டிப்பாடுதலே பெரு வழக்காம். சோழருக் காதியிற் புகாருமுறைந்தையுமே தலைநகரங் களாயிருந்தபோ தவைகளே பாடப்பெற்றுள. பிற்காலத்தேயவர் தமக் கமைத்துக்கொண்ட இராசதானி களாகிய காஞ்சி, கருவூர்களை யக்கால நூல்கள் பாராட்டுகின்றன. புகார் தலைநகராயிருந்த போதெழுந்த சங்கநூல்களிற் கருவூரானிலை பாடப்பெறாமை யென்னவிந்தை? பாடப்பெற்றிருப்பினன்றோ வியப்பைத் தரும். பழைய நூல்களெல்லாம், பாண்டியருக்கு மதுரை கொற்கைகளையும், சோழருக்கு உறந்தை புகார்களையும், சேரருக்கு வஞ்சி தொண்டி மாந்தைகளையுமே சுட்டிப் பாராட்டுகின்றன. இதனாலிம் மூவேந்தர் நாடுகளிலுமிவை தவிர்த்தூர்களேயில்லையெனச் சாதிக்கத் துணி வாருண்டோ? புலவர் பாடுங்கால், பாட்டுடைத் தலைவர் பரம்பரை மூதூராதல், அன்னவர் ஒன்னலர்வாய்க்கவர்ந்த வெற்றிப் பெற்றிய நல்லூராதல் பற்றிப் பாடுவதே அடிப்பட்ட தொல்லைமுறை. இக் கருவூரானிலை, வடதிசை யெல்லையி மயமாகத், தென்னங் குமரி யொடாயிடை யரசர், சொல்பல நாட்டைத் தொல்கவினழித்த, போரடு தானைப் பொலந்தார்க்குட்டுவ”ர்1க் குரிய தலைநகராயிருந்து, அவரைப் போர் வென்ற சோழராற் கோட்பட்டபிறகே யவர்க்குரியதா யிருப்பின், இப்பெரு வெற்றி பாராட்டிப் பாடுவதை விட்டு மேற்காட்டியுள்ளபடி அச்சோழகுலப் பரம்பரையில் என்றும் நின்ற வூராகவே சேக்கிழார்பாடிச் சரித வுண்மையுஞ் சோழர் வன்மையு மொருங்கழிக்க வொருப்படாரன்றோ?

இவை பலவும் புறக்கணித்த குட்டுவன் சரிதநூலார், அரசராவார் தத்தம் நாட்டகத்தே தலைநகரமைப்பதல்லால், மலையரசர் புனல்நாட்டிற் றலைநகரமைத்து வாழ்வதெனல் நம்பிக்கையைச் சிறிது தப்பிக்கச் செய்யு மென்றுணர்ந்து இக் கருவூரைச்சூழ்ந்த வெங்காலநாடு … … சோழராதிக்கத்துக்கு முன்பு … … கொங்குதேசராசாக்களாட்சிக் குட்பட்டிருந்த தென்றும், அவர்க்கு முற்பட்ட சங்ககாலத்தே … சேரரது சிறந்த தேசமாகி, வஞ்சியெனப்பட்ட இக்கருவூரைத் தலைமை நகரமாக்கிக் கொண்டு விளங்கியதென்று மறியத்தக்கன”2 என்றோர் சமாதான மமைத்துவைத்தார். இதில், வஞ்சியெனப்பட்ட இக் கருவூரைத் தலைமை நகரமாக்கி என்றிவர் களொருதலையாத் துணிந்துகொண்ட குறிப்பே, இவ்வாறு பலவிடத்தும் பாந்திப்பாந்தி இன்னபல அடிப்படையற்றிடர்ப் பட்டலமருவதாம் புதுத் துணிபுகளை யிவர்கள் வாரியிரைத் திருப்பதை நன்குவிளக்குகின்றது. கருவூரே வஞ்சியென்ற காட்டருங்கொள்கையை நிரூபிக்க நேர்சான்றின்மை யால், அங்கு மிங்கு மதற்கு மேற்கோள் தேடிக் கண்டதாக்காட்டும் நிகாச்சரித நிகழ்ச்சிகளால் நிரூபிக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தங் கொள்கையைச் சித்தாந்த முடிபாக்கொள்வார்கள். கருவூரை வஞ்சியெனக் கொள்வதற்கு, அதைச் சூழ்ந்தநாடு சேரர் நாடாகக் காட்டவேண்டிய தவசியமென்று நினைத்தார்கள். நினைக்கவே, கருவூரே வஞ்சியென நிரூபிக்குங் கருவியாக, அதைச் சூழ்ந்த வெங்கால நாட்டைச் சேரருக்குரியதாக் காட்டவந்தார்கள்: வந்தவர்கள், இது சேரநாடென்பதற்கு நிராக்ஷேப மேற்கோளின்மை கண்டு, அதனிடைக் கருவூரே வஞ்சியென்று காட்டினால் வஞ்சி வேந்தருக் கந்நாடு முரித்தாகுமென்ற - நியாயந்தோற்றியதை யாண்டிறுகப்பற்றி, நாட்டாராய்ச் சிக்குத் தக்க துணையாக்கி, அதனிடைப் புகுத்துவைத்தார்கள். ஈண்டுக் கருவூரை வஞ்சியென, வைப்பதால், கருவூர்ப் பிரதேசம் சேரர் நாடாயிற்றா? அன்றியந்நாட்டைச் சேரர்நாடாக வைத்துக் கொண்டதாற் கருவூர் வஞ்சியாயிற்றா? இவையிரண்டுமேனும், அன்றேலிரண்டி லொன்றேனும், தக்க பிறசான்று கொண்டுறுதி யடைய வேண்டும், உறுதிபெற்றவொன்றாற் பிறிதொன்றைப் பேணல் கூடும். அல்லாமல், இவை தம்மிலொன்றை யொன்றாற் சாதிக்க முயல்வதானால் பரபரமெலிவித் திரண்டுநலிவதன்றி வலியுறும் வகை வேறுண்டோ? இவ்வாறு, நின்றொன்றும் நிரூபியாமல், சௌகரியப்படி ஒன்றை விட்டொன்றிற் சுழன்று கழன்று வட்டத்தில் வாதிப்பதாற் கிட்டுவது வாதநட்டமேயாம். இதனை மேனாட்டுத் தருக்க நூலோர் திட்டமில்லா வட்ட வாதிப்பென்றன்றோ வெறுப்பர்.

இனி, இக்கருவூர்ப்பிரதேசம் சங்ககாலத்தே சேர நாடாயிருந்ததற் காவது, இடைக்காலத்தே கொங்கரரசாட்சிக் குட்பட்டிருந்ததற்காவது இவர்கள்கண்ட மேற்கோளொன்றையும் விளக்கிக் கூறினார்களில்லை. இக் கருவூர்ப் பிரதேசம் சிலகாலம் கொங்கரரசாட்சிக் குட்பட்டிருந்ததாகக் கொண்டதற்கதரவாக, தந்நூலினடிக் குறிப்பொன்றில், கருவூர், கொங்கு நாட்டுத்தலங்களுள் ஒன்றாகக் கூறப்படுதல்காண்க”1 என்று பொதுப் படக் கூறிவைத்தார்கள். யாரால்? எப்பழநூலில்? யாண்டுக் கூறப்பட்டது? என விரித்திலர்கள். நேற்று வெளிவந்த தேவாரத் தலமுறைப் பதிப்பில், தல அட்டவணை தொகுத்த பொறுப் பில்லா ரொருவர், அவ்வட்டணையில், கொங்கு நாட்டூர் களென்ற தலைப்பின் கீழ்த் தவறி இக்கருவூரானிலையைப் பெய்துவைத்த பேராதார மொன்றன்றிப் பிறிது காணாக்குட்டுவன் சரித நூலாரிதை மேற்கோளாகவிதந்து கூறத் துணியாமற் போலும், இவ்வாறு பெயர் ஊர் ஒன்றுமின்றியொரு மேற்கோணிலையாக் காட்டித் தங் கோணிறுவ முயல்கின்றார்கள். மறுபடியும், சங்க நாளிலே கொங்குதேசம் குடகு நாடாயிருந்தமை, குடகக்கொங்கரு1 மென்னும் அடிகள் வாக்கா லறியலாம்”2 என்கின்றார்கள். குடகன் என்பது சேரன்மறு பெயராகவே, குடகக்கொங்கர் அக்காலச் சேரருக்கட்பட்ட கொங்கு நாட்டுக் குறுநில மன்னர் பலராகலாம். கொங்குவேறு, குடகு வேறாதலால், இளங்கோவடிகள் தம் தமையன்செய்த பத்தினிக் கடவுளாராதனைக்குக் குடகரும், கொங்கரும், மாளுவ வேந்தரும் வந்தனரெனக் குறித்து மிருக்கலாம். உரைபெறு கட்டுரையில், குடகரையில்லாமலே கொங்கிளங் கோச’3 ரெனவே கூறப்படுதலும் கவனிக்கற்பாற்று. இது கொண்டு கொங்கு தேசம் சங்க நாளிற் குடகு நாடாயிருந்ததெனத் துணியக்கூடாமை வெளிப்படை. வஞ்சிச் சேரனான குட்டுவன் பிறநாட்டாரான கொங்கரைச் செல்கெழு போர்வென்றதாகக் கூறும் பாலைக்கௌதமனார் பாட்டும், செங்குட்டுவன் கொங்கர் செங்களம்வேட்ட தாய்க்கூறும் அடிகள் வாக்கும் இதை நன்கு விளக்குகின்றன.4 எனைத்தாயினும், இதனாற் கருவூர்ப் பிரதேசம் கொங்கு நாடாதல் பெறப்படாமையொருதலை. இதையும், கருவூர்ப்பிரதேசம் கொங்கு நாடாகாமல் புனல் நாடாதலையும், நாம் மேல் ஓரிடத்து விசதப்படுத்தி யிருப்பதைக்கொண்டு தெளிக.

ஈண்டு, இக்கொங்கு நாட்டிற்கு மேற்குள்ள மலைநாட்டரசர், இக்கருவூரைச் சூழ்ந்த வெங்காலநாட்டை நாடாகவும், அதனகத்துக் கருவூரானிலையைத் தமக்குரிய தலைநகராகவுங் கொண்டிருந்தனரா வென்பதைச் சிறிதுவிசாரிப்பாம்.

மேலே நாம் பலமுறை வற்புறுத்தியபடி இடையிடையே, சில சேரர்மேற் சோழர் வெற்றிகொண்டிருப்பதுபோல், சோழர் சிலரைச் சேர வீரரும் போர்வென்றதான செய்தி கிடைப்பதல்லால், புனல் நாட்டெந்தப் பகுதியையுந் தமதாக்கிச் சேரராண்டி ருப்பதாக யாண்டுங் கண்டிலேம். இதற்கு நூலாதாரங்காணாத குட்டுவன்சரித நூலாரும், கருவூர்ப் பசுபதீவரர் கோயிலிலுள்ள சாஸனங்களால், இக் கருவூரைச் சூழ்ந்த வெங்கால நாட்டிற்குக் கேரளாந்தகவளநாடு என்றும், சோழகேரள மண்டலமென்றும் பெயர்கள் வழங்கி வந்தன வென்பது வெளியாகின்ற”1 தென்று காட்டி, இப்பெயர்களால், சோழராத்திக்கத்திற்கு முன்பு, கருவூர்ப்பிரதேசம் சேரருக்குச் சிறந்த பூமியாகக் கருதப்பட்டிருந்தமை பெறப்படும் என்பார்கள். இச்சாஸனப்பெயர்களின் வரலாறொன்றும் அச்சாஸனங்களில் விளக்கப்பட்டதாயில்லை. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, தமிழரசர் ஆரியவாதிக்கத்திலீடு பட்டுத் தம் வயமிழந்து, தமிழ் மணமறந்து, யாண்டுந் தமிழ்ப்பெயரறவேகளைந்து களித்த காலத் தெழுந்த விச்சாஸனங்களில் யாதொரு தொடர்பும் வரலாறுங் குறியாதெழுதப் பட்டுள பெயர்களைக் கொண்டு சங்ககாலச் சரித நிகழ்ச்சிகளை யூகித்தறிய வொண்ணா தென்பது யாவருமறிவதொன்றாம். இனி, கேரளாந்தகவளநாடு எனும் பெயராற் பெறக்கூடியது தானென்னை? கேரளனாகிய சேரனுக்கு அந்தகனாய சோழனது வள நாடென்பதே இப் பெயருக்குச் செம்பாகமான பொருள். இச்சாஸனப் பெயர் கொண்ட சோழன் தன் காலச்சேரனை வென்ற வீரந்தோன்ற இப்பெயர் பூண்டிருக்கலாமென்பதும், அவ்வளவன் புனல் நாட்டின் ஒருபகுதியாய இக்கருவூர்ப் பிரதேசத்தை அவன் வள நாடெனக்குறிக்கப்பட்ட தென்பதுமே இ தனாற்கிடைப்பதாகும். இதுவே போல் சோழ கேரள மண்டலமென்னு மிம்மணிப் பிரவாளப் பெயர், அக் காலச் சோழன் சேரனொருவனைவென்ற புகழ்பேண, நினைந்தோ, அல்லாதொருவேளை. யவ்விரு குலத்துரிமையுந் தனக்கெய்தியதாக் கொண்ட தொரு பெருமை கருதிப் புனைந்தோ, இவ்வாறிச்சாஸனத் தெழுது வித்திருக்கலா மென்று நினைக்க விடந்தருகின்றதன்றி, இதனாற் சங்ககாலச் சேரருக் கிப்பிரதேசம் சொந்தமாயிற்றெனக் கொள்ளுமுறை புலப்பட வில்லை. இவை தமக்கு எப்பொருள் கொள்ளினும், இப்பெயர்க்கிது காரண மெனச் சாஸனக் குறிப் பில்லாதவரை எல்லாம் சமயோசிதவனுமான மாவதல்லால் இதுவேயிதன் பொருளாமென வரையறுத்துத் துணிவதற் கிடனுமில்லை: இதினின்று பெறுவதாஞ்சரிதமோ மலடிபிள்ளை.

இக்கருவூர் சோணாட்டின் மேற்கெல்லை யென்றையங்காரவர்கள் மேற்கோளுடன் கூறியிருப்பதையும், அதன் மேற்கே கொங்கு நாடுண்மை யையும், அக்கொங்குநாடு செங்குட்டு வனாட்சிக்குட் படாப் பிற நாடா யிருந்தமையையும் மேலே விரித்துக்காட்டினேம். இக்கொங்கு நாட்டிற்கும் மேற்கே, மேற்குமலைத்தொடருக்கும் மேலக்கடலுக்குமிடையே நின்ற மலைநாடே சேரருக்குரிய நாடென்பதை, சேரரைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் சிறந்த சாதனமாவதாக ஐயங்காரவர்களாற் பாராட்டப்படும்1 சிலப்பதிகாரம் மணிமேகலை பதிற்றுப்பத்து முதலிய பழைய நூல்களே விசதப் படுத்துகின்றன. இத்தொன் நூல்களில் யாண்டும் காவிரி நாட்டெப்பகுதியுஞ் சேரராட்சிக் குட்பட்டதாகக் கூறப்படாததும், ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. சேரர் புகழே கூறும் பதிற்றுப்பத்திற் பலவிடத்தும், சேரருக்கு மலை நாட்டையவர்க்குரிய மனைவியாக வுருவகப்படுத்திச் சிறப்பித்துப் பாடப் பட்டிருப்பதுமன்றி, வேறு நாடு கூறப்பட்ட தாயுமில்லை.

இதுவுமின்றி, புனல்நாடு போற்றும் புலவரொருவர், இளஞ்சேரலிரும் பொறையைப் பாடிய பாட்டொன்றில், தான்காதலிக்கும் காவிரிப்படப்பை நன்னாடன்ன, வளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கை, யாறியகற் பிற்றேறிய நல்லிசை வண்டார் கூந்தலொண்டோடி கணவ என்று அச்சேரன் மலை நாட்டைப் புகழ்ந்து கூறியுமுள்ளார்.2 காவிரி நாடு சேரருக்குரிய நாடாமாகி லதையே பாடாமலதை யொத்த நாட்டிற்குரிய தலைவனே! என்று புகழ்ந்திருக்கக் காரணமுண்டோ? குடக்கோ வென்றும், கடவர்கோமான் என்றும், சேரன் -பொறையன் - மலையன்”3 வெற்பன், பறம்பன் என்றுமே பழையநூல்களிலிச் சேரர் பலவிடத்து மறைக்கப்படுகின்றன ரன்றிப் புனல் நாடுடையராகப் பேசப்படவே யில்லை. பதிற்றுப்பத்திற் பலபாக்களில், சேரர் மலையுங் கடலுந் தருந்திருவுடையரென்று விதந்தோதப் படுகின்றனர். இந்நூலில், மேலக்கடலுக்கும், மலைத்தொடருக்கும் மிடைக்கிடக்கும் வளமலை நாட்டையும், அதன் தண் கடற்படப்பை நிலத்தையுமே யிவர்க்குரியவாச் சுட்டியவும், பிறிதெந்த நாட்டிற்கும் பொருந்தாதனவுமான பல செய்யுட் பகுதிகளை முன்னே காட்டியுமிருக்கின்றேம். பதிற்றுப் பத்துப்பாக்களிலும், சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலும், சேரரை மலை நாட்டரசராகவும், குடதிசையாளுங் கொற்றங்குன்றா ஆரமார்பிற் சேரர்குலத்தவ”ராகவுமே1 பேசக் காண்பதன்றி, யாண்டும்காவிரியூட்டு நாட்டவராகக் குறிக்கக் காணோம். இதற்கு மாறாக தனக்குரிய மலை நாடொழிய, குமரிமுத லிமயம்வரை வேற்றரசர் நாடுகளே யிருந்தவென்பதும், வெற்றி வெறியாற்றிக்குவிசயஞ்செய்து புகழுற்ற செங்குட்டுவன் அப்பிற நாட்டரசர் மேற்படையெடுத்துப் பொருது வென்றதும், அவனைப் பாடிய பரணர் சாத்தனாராகிய விருபெருஞ் சங்கப்புலவர் வாக்குகளால் வெளிப்படுகின்றன.

“வடதிசையெல்லை யிமயமாகத்
தென்னங்குமரியொ டாயிடையரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த
போராடு தானைப் பொலந்தார்க் குட்டுவ2
செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன்
பூத் தவஞ்சி பூவா வஞ்சியிற்
போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய
நிலநா டெல்லை தன்மலை நாடென்ன
தேரு மாவுஞ் செறிகழன் மறவரும்
… … … … கடைஇக்
… … … … பலவேந்த
ரனைவரை வென்ற வரம்பொன் முடிமிசை
செம்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன்”

ஐயங்காரவர்கள் தந்துணிபுக்கியையச் சேரதேசமென்பது கருவூர்ப் பிரதேசமுட்பட, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி ஜில்லாக்களும், மைசூர் நாட்டின் தென்பகுதியும், மேற்குத் தொடர்ச்சிமலை நெடுகவுள்ள கடற்கரைப்பக்கங்களுமாம்” என்றெழுதியிருக்கின்றார்கள். இத்தனை விரிந்த நிலப்பரப்பைப், பலமுறை பிறமன்னரைவென்ற செங்குட்டுவன் தானவரிடமிருந்து வென்றுகொண்ட பெருநாடாகக்கூடப் பேசுகின்றார் களில்லை. இது முழுமையுமே அடிப்பட்ட சங்ககாலச் சேர நாட்டளவாகக் கூறுகின்றார்கள். இது முழுதும் செங்குட்டுவன் சொந்த நாடாமாகில், தனிமலைநா டிதிலொரு சிறுபகுதியே யாக வேண்டும்; பெரும் பகுதி காவிரி நாடாகவே, இவன், வெற்றி புகழும் சாத்தனார் நிலநாடெல்லை தன்மலை நாடாக வென்று பாடுவாரா? இத்தொடரா லிவனுக்குரிய நாடு மலை நாடேயென்பதும், அஃதொழித்துப் பிறிதிடமெல்லாம் இவன் வெற்றிப்புகழ் மண்டிக் கிடந்த பிற அரசர் நாடாமென்பதும், தெளிவாமன்றோ? இவ்வுண்மை மறக்க மாட்டாத குட்டுவன் சரித நூலுடையார்களும், தங்கள் நூலில், சேரர் வஞ்சியை விட்டு நீங்கி, தங்கட்குரிய மலைநாட்டிற் கடற்கரையிலுள்ள கொடுங்கோளூரைத் தலைமை நகரமாக் கொள்ளலாயினர்’.3 என்பார்கள். இதனால், மலைநாடே யிவர்க்குரிய தென்பதொரு தலை, அஃதிவர்களுக்கு முடன்பாடெனத் தெரிகின்றோம். இஃதொழியப் பிறதேச மிவர்க்குச் சொந்தமென்பது நிரூபிக்கப் படும் வரை கருவூர்ப் பிரதேத்தைச் சேர நாடாகக் கொள்வதா வது, அதனகத் தானிலையை வஞ்சியெனச் கொள்வதாவது பொருத்தமாகாது. இவை பல வற்றாலும், இக் கருவூர்ப் பிரதேசம் சேரநாடெனக் கிடையாமை மட்டுமில்லை; அது புனல் நாடாவதும் பெற்றாம், இதுவுமன்றிப் பழைய வஞ்சி, மலைநாட்டுப் பேராறாம் பொருநைக் கழிமுகத்தூர் என்பது மேலே குறித்த பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை மேற்கோள்களானு மினிது விளங்குகின்றது. இதுவே போல், தந்தமையன் செங்குட்டுவன் அரசிருந்த மூதூர் வஞ்சியினகவூர்ப்பாக்கமாம் கருவூர் மேலமலைத் தொடரின் மேற்கே மலைநாட்டூராவதன்றி, சோணாட்டோர் பகுதியா மிவ்வெங்கால நாட்டுக் கருவூரானிலையன்று என்பதை இளங்கோவடிகளே தம்மரிய நூலிலைய மறக்காட்டியு முள்ளார். செழித்த காவிரி நாட்டுப் பார்ப்பான் பராசரனென் போன் சேரர்கொடைத்திறங் கேட்டுச் செங்குட்டு வனைக் காண விரும்பி, இடையூறுங் காடுநாடுங் கடந்துவந்து, நீண்ட மேற்குமலைத் தொடருந்தன் பிறக்கொழிய மேற்கே நடந்துமேற்சென்று, வஞ்சியெய்திச் செங்குட்டுவன்பாற்பரிசு பெற்று மீண்டதை அடிகள் பின்வருமாறு கூறுகிறார்:

“பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையு ணன்னா டதனுள்
வலவைப் பார்ப்பான் பராசுர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
… … … … … … … … … … காடு நாடு மூரும் போகி,
நீடுநிலைமலயம்பிற்படச்சன்றாங்கு, …… … …
பார்ப்பன வாகை சூடி யேற்புற
நன்கலங் கொண்டுதன் பதிப்பெயர்வோன்”

இதில், நீடுநிலைமலயம் பிற்படச் சென்று என்னுந்தொடர், சோணாட்டுப் பார்ப்பான் மேற்குமலைத்தொடர் கடந்து, மேற்கே வந்து, மலைநாட்டுக் கருவூராம் வஞ்சி முற்றங்கண்டான்; என்பதைத் தெளிவாக்கவில்லையா? ஆனிலைக்கருவூரே வஞ்சியும், அதைச்சூழ்ந்த புனல்நாடே செங்குட்டுவனிருந்த நாடு மாயின், அவ்வள நாட்டுப் பராசரன், அந்நாட்டவ்வூர் அகல விட்டு மேற்கே நின்ற நெடுமலைத் தொடரும் பிற்படச் சென்று காணுமாறெங்ஙன்? ஈண்டு அடிகள் குறித்தபடியே, வஞ்சி மேற்கே மலைநாட்டிலுள்ள தென்பதை - சேரர்கருவூரெதிர்ந்த கிள்ளிவளவனைப் பாடிய கோவூர்கிழாரும்,

“வஞ்சி முற்றம் வயக்களனாக
கொண்டனைபெரும, குடபுலத்ததரி”

என வலியுறுத்தியுமுள்ளார். இவ் வளவன் வென்றெடுத்த சேரரது பேரூராம் வஞ்சிமுற்றம், நடுநாட்டுக்கருவூரானிலையே யாமாகில், அதனையெறிந்த2புகழ்பாடும் புலவர், குடபுலத்ததரி என்று குறிக்கக் காரணமுண்டோ?

இவ்வாறு சேரர் குடபுலத்தரசு வீற்றிருப்பவரே யன்றி, கிழக்கே காவிரிபாயும் வெங்கால நாட்டிற்றங்காதவ ரென்பதைக், குடதிசையாளுங் கொற்றவேந்தர்”3 என்னும் அடிகள் வாக்கும் விசதப்படுத்துகின்றது.


பகுதி 12 : வஞ்சி, மகோதை வஞ்சைக்களமே!

மேலும் கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக் களத்துக்கு உள்ளதாகப் பிரமாண மொன்றுங் காணப்படாமையறிக”4 என்று கட்டுகின்றார்கள். இல்லாமையாற் பெறுவதென்னை? இதனாலிக்கடற் கரையூர் பழைய வஞ்சியாகாதென்பது எப்படிக் கிடைக்கின்றது? ‘கருவூர்’, என்னும் பெயரே, இவர்கள் தம் புத்தக முதலதிகார முன்னுரையில், சேரவரசர் பெருமைகள் பற்றிய தமதாராய்ச்சிக்குச் சிறந்த சாதனங்களாகக் கொண்டுள “சிலப்பதி காரம், மணிமேகலை, பதிற்றுப்பத்து ஆகிய மூன்று நூல்களுமறியாத தாகின்றது. திருவானிலையில் வஞ்சி பற்றிய குறிப்பொன்றுமில்லை யென்றிவர்களே கூறியுமிருக்கின்றார்கள். கருவூரானிலைக்கு வஞ்சியென்ற பெயரே தற்காலம் வழங்கவில்லையன்றோ? பலபிற சான்றுகளா லிம்மகோதை வஞ்சைக்களமே வஞ்சியிட மென்பது பெறுவேமேல், கருவூர் என்னும் பெயர் வழங்காமை கொண்டிதனை மறுக்கலாமோ? கருவூரானிலைக்கு வஞ்சிப் பெயர் வழங்காதிருக்கவும், வஞ்சி நகரின் பிறபெயராகிய கருவூர் என்பதும் ஆனிலைக் கருவூரும் ஓரோசை பெற்றிருப்பது கொண்டதை வஞ்சியென வாதிக்க முன்வந்தவர்கள், வஞ்சைக் களத்தை வஞ்சியோடும் சம்பந்த முடையதாகக் கருதற்குச் சிறிது மாதாரமின்மைகாண்க”1 என்றறை கூவலென்னோ? திருவஞ்சைக் களத்தின் அலைவாய்த் துறையான மகோதையே கொடுங்கோளூரென்பதை யிவர்கள் அங்கீககரிக்கின்றார்கள்.2 ஆனால் மகோதையோடு வஞ்சித்துறை முகத்தையும், திருவஞ்சைக் களத்தோடு வஞ்சிமுற்றத்தையு மொன்றாக்கிப் பாடிய சேக்கிழார் குறிப்பை வெறுக்கின் றார்கள். கடலங்கரை மேல் மகோதையணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே என்ற சுந்தரர் தேவாரவடி கொண்டு, இவ்வூர் அஞ்சைக் களமென்றும், வஞ்சிப் பெயருக்கிது சம்பந்த முடையதாகாதென்றும் துணிகின்றார்கள். எல்லையற்ற தொல்லைப் புறநானூற்றுப் பாக்களிலும் சிலப்பதிகாரத்திலும் பழைய வஞ்சியிற் சேரவரசர் குடியிருந்த பகுதியை வஞ்சிமுற்ற மென்றே குறிக்கப் பட்டிருப்பது கவனிக்கத் தக்கது. இந் நகரத்தைப் பொதுவாகப் பேசுமிடத்தெல்லாம் வஞ்சி மூதூரென்றும், அரணுடைய அரசரக நகரை வஞ்சி முற்ற மென்றும் விதந்து கூறிய குறிப்பு மிகப்பொருளுடைத்தாம். பேராற்றின் கழிமுகம் கடற்பரப் போடொக்க மிகத்தாழ்ந்து அலி முகமாயதால், அதையடுத்த மேட்டுநிலத்தே யரணிட்ட அரசன் குடிப்பாக்கமேற்பட்டும், அதுவே பிந்திக் கருவூரென வழங்கப் பட்டும் வந்திருப்பதை மேலே காட்டினே மன்றோ? இப்பகுதி பழைய நூல்களில் வஞ்சிமுற்றமென்றே சுட்டப்பட்டுள்ளது. மலை காண்குவமென, வஞ்சிமுற்ற நீங்கிச்செல்வோன்”3 என்ற இளங்கோவடிகள் வாக்கும், வஞ்சியிலரசனரண்மனையிருந்த கருவூர்ப்பாக்கத்தை முற்றிய வளவனை வஞ்சிமுற்றம் வயக்களனாக, அஞ்சா மறவராட்போர் பழித்துக், கொண்டனை பெரும் குடபுலத்ததரி”4 என்று பாடிய கோவூர் கிழார்வாக்கு மேயிதற்குச் சிறந்த சான்றாம். பட்டினப்பாக்கமும் அரசன் குடிப்பாக்கமுங் கூடியது வஞ்சிமூதூர். பிற்காலத்தே பட்டினப்பாக்கம் மகோதையென்றும், அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சிமுற்றமென்றும் அழைக்கப்பெற்றன. இவ்வஞ்சி முற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. துவரை, மாந்தை, தஞ்சை, முகவை, நெல்லை, துறைசை, உறந்தை, கரந்தை என்றூர்ப் பெயர்கள் தமிழகத்தே குறுகி ஐகாரமேற்று நடைபெறுமியல் பறியாதாரில்லை. வஞ்சியு மிம்முறையில் வஞ்சையாகவே அதற்கேற்ப வஞ்சி முற்றம் வஞ்சைக் களமானது வெகு சுலபமன்றோ? பிற்காலத்திது தலங்களுள் வைத்தெண்ணப்படுங்கால் திரு அடைபெற்றுத், திருவஞ்சைக் களமாயிருக்க வேண்டும். இதற்குப் பிற்காலத்தார், திரு என்பது பசாரவடையாகவே, அதற்கடுத்த வகரம் உடன்படு மெய்யெனக்கருதி, அடையகற்றி அஞ்சைக்களமாக்கினர் போலும் சரகத்தைச் சாகமெனக் கொண்டு மயங்கினவர்களும் பெரும் புலவர்களே யாதலால், திருவஞ்சைக்களம் திரு அஞ்சைக் களமானதில் வியப்புத் தானென்னே? அன்றியும், திருவஞ்சைக்களப் பதிகத்தில், சந்தரமூர்த்தி சுவாமிகள் தாம்பாடும் மகோதைத்தல மூர்த்தியின் பெயரே சுட்டிப் பாடியிருப்பதல்லால், அவ்வூர்ப் பெயரைச் சுட்டவில்லை என்பதும் வெளிப்படை; யாண்டு மிவ்வூர்க்கு அஞ்சைக் களமென்னும் பெயர் எடுத் தாளப்பட்டதாயுமில்லை. இஃதெவ்வாறாயினுமாக, மேற்கூறிவந்த பலவற்றானும் வஞ்சி மலைநாட்டுத் தலைநகராய், ஆந்பொருநையாகிய பேராற்றின் கழிமுகத்தமைந்த பேரூர் என்பது ஒருதலையாகப் பெறப்பட்ட தாகலானும், அப்பேராற்றினலை வாய்ப்பட்டினமாகிய மகோதையென்ற கொடுங்கோளூரு மதையடுத்த ஐயங்காரவர்கள் அஞ்சைக்கள மென்ற திருவஞ்சைக் களமும் யவனர்கல நில நிறைக்க வளமிகமலிந்த கடற்கரை வஞ்சி நின்ற விடத்தே நிற்பவாகலானும், இவையொன்றென லியல்பேயாகும். ஆகவே சேரர் சங்க காலப் பேரூர் பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் சுமார் 30 மைலுக்கப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரியாம் பிராவதிக் கூட்டத்திற்கு மேற்கே புனல் நாட்டிலுள்ள சோழர் பழவூரான திருவானிலையுமாகாது; பண்டைத் தமிழ் வாணர் பலரும் பாராட்டிய மலைநாட்டுப் பேராற்றின் கழிமுகப்பட்டினமேயாம்; என்பது விசதமாகும்.

இறுதியில், ஆபுத்திர நாட்டிலிருந்து வஞ்சிக்கு வந்த மணிமேகலை செங்குன்றில் கண்ணகி கோயிலிலிறங்கித் தரிசித்துப் பிறகு வஞ்சி யுட்புக்கனள் என்னுங் கதைகாட்டி, அதனால் வஞ்சி அம்மலையிலிருந்து நெடுந்தூரமிருக்க வேண்டுமெனத்தனக்கு வேண்டியபடியனுமித்துக் கொண்டு, அதனால் கருவூரானிலையே வஞ்சியாகுமென்று வாதிக் கின்றார்கள். மேலே கருவூர், மகோதை என்றிருபாக்கள் சேர்ந்த பேரூரே வஞ்சியென்றும், அதை ஐயங்காரவர்கள் எடுத்தாளும் நக்கீரர் பாட்டே வலியுறுத்துமென்றுங் கூறி, அதன் சார்பாக அவ்வகப் பாட்டின் கருவூர் முன்றுறை மணல் என்னுந் தொடரை விளக்குங்காலிச் செங்குன்று சம்பந்தமாகப் பழைய நூல்களிற் காணப்படுங் குறிப்புக்களே வஞ்சி கருவூரானிலையாகாதெனச் சுட்டுவதைக் காட்டியுள்ளேம். சாத்தனார், மணிமேகலை மணிப்பல்லவத்தி லிருந்து புறப்படும் போதே வஞ்சியுட்செல்வனென்றந் தரத்தெழுந்தனள் அணியிழைதா”1 னென விதந்து கூறுகின்றார். ஆகவே, புறப்படுங்கால், மணிமேகலைக்குக் கண்ணகி கோயிலைக் காணுங்கருத்து முன்னின்றதாயில்லை. வஞ்சி நோக்கி வழிக் கொண்டணியிழையந் தரமாறாவெழுந்தவள்”.2 இடையே வழியில் கொடுங்கோளூருக்கயலதாய செங்குன்றின்3 மேல்நின்ற தாய்கண்ணகி தாதைகோவல னிவர்கள் கைவினை முற்றிய தெய்வப் படிமம்”4 அமைந்த கோட்டம் புகுந்து வணங்கி யேத்தி, பிறகு தான் நினைத்துவந்தபடி வஞ்சிக்குப் போக விடையேற்குங்கால், ஆங்குப்பத்தினிக் கடவுள் இளையள் வளையோளென்றுனக்கியாவரும், விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கெனப் பணித்திட, அதன்படி மாதவன் வடிவாய்ப் பொற்கொடிப் பெயர்படூஉம் பொன்னகர் பொலிந்தனள்என்பதே சாத்தனார் கூறியுள்ள வஞ்சிக்கு மணிமேகலைவந்த வரலாறாம். கண்ணகிவிண்ணாடு சென்றதும், பத்தினித் தேவிக்குக் கோயிலெடுத்துச் சிறப்பித்த இடமுமான இச் செங்குன்று, மலைகாண்குவமெனச் செங்குட்டுவன் சென்றிருந்த பேரியாற்றங்கரைக்குக் சமீபத்தது5 என்றையங்காரவர்களுமிம் மலை சம்பந்தமாக அடியார்க்கு நல்லார்கருத்தை மறுக்காது தழுவுகின்றார்கள். இவ்வாறு இம்மலை சேரர் பேராற்றங் கரையருகே மேற்குமலைத் தொடரையொட்டிக் கொடுங் கோளூருக்கயலதாகலானும், மணிபல்லவம் காவிரிக் கழிமுகத்துப் புகார்ப் பட்டினத்திற்குத் தெற்கேயமைந் திருந்ததாகலானும்,1 அக்கீழ் கடல் மணி பல்லவத்திலிருந்து வஞ்சிக்குவரும் மணிமேகலை, வஞ்சிகருவூ ரானிலையாமாகில் நேரே கருவூருக்குச் செல்வதல்லால், வழிபிறழ்ந்து கருவூருக்கு 300 மைலுக்கு மேற்குள்ள செங்குன்றமலை வந்திறங்கக் காரணமில்லை, மணிமேகலை மணிபல்லவத்திலிருந்து முதலில் மேற்கு வந்திம்மலை கண்டு மீட்டும் கிழக்கே வஞ்சிக்குவழி கொண்டதான கதையுமில்லை. முதலிலேயே கண்ணகியைக் கண்டு, பிறகு வஞ்சிக்குப் போவதான நினைப்பவளுக்கில்லையென்பதும், விசும்பாறாக வஞ்சி நோக்கிச் செல்பவள் கண்ணகி கோட்டமைந்த இச்செங்குன்ற மலை இடைவழியில் படலா லங்குத் தங்கிவழிப்பட்டுப் பின்றன் வழிபட்டு வஞ்சியூர் வந்து புகுந்தனள் என்பதும் மேலேகாட்டிய படி சாத்தனார் பழைய நூலாற் பெறப்படுகின்றன. இதனால் செங்குன்றமலை மணிபல்லவத்திற்கும் வஞ்சிக்கு மிடையேயிருக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. அச்செங்குன்றமலைக்கு அயலதாகச் சிறிது மேற்கே நிற்கும் கொடுங்கோளூரே யிவ்வஞ் சியாமாகில், மணிமேகலைக்குச் சாத்தனார் தந்து வைத்த வழிமுறை தெளிவாவதோடு, இக் கொடுங்கோளூரே பழைய வஞ்சியென்னும் அடிப்பட்ட பழவழக்கும் வலிபெறுகின்றது. இவை பலவும், இன்னவும் பிறவும், சேரர் பேரூரான வஞ்சிமூதூர் மலைநாட்டில், மேலக் கடற்கரையில், பேராற்றின் கழி முகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிதுண்ணாட்டூ ரெதுவுமாகாதென்பதைப் பசுமரத்தாணி போல் வலிபெறநாட்டி நிற்கும்.

முற்றும்


நாவலர் பாரதியாரின் வரலாற்றுக் குறிப்பேடு

1879 சூலை 27 - நாவலர் பாரதியார் தோற்றம்: இயற்பெயர்: சத்தியானந்த சோமசுந்தரன். (தந்தை: எட்டப்ப பிள்ளை. தாய் : முத்தம்மாள்).

1894 (ஏறத்தாழ) மீனாட்சியம்மையாரை மணமுடித்தல்.

1898 மார்ச் 30 - முதல் மகன் இராசாராம் பாரதி பிறப்பு.

1903 பிப்ரவரி 16- இரண்டாம் மகன் இலக்குமிரதன் பாரதி பிறப்பு.

1905 அக்டோபர் 13 - மகள் இலக்குமி பாரதி பிறப்பு.

1905 சட்டப்படிப்புத் தேர்வு.

1905-1920தூத்துக்குடியில் வழக்கறிஞர் தொழில்.

1905-1919நாட்டு உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக அரசினர் ஐயப்பட்டியலில் நாவலர் பெயர்.

1913 எம்.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெறல்.

1916 ஆக. 19 - கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தசரதன் குறையும் கைகேயி நிறையும் ஆராய்ச்சிச் சொற்பொழிவு.

1920 தூத்துக்குடியை விட்டு மதுரை வந்து வழக்கறிஞர் பணிபுரிதல்.

1920 மதுரையில் மாநிலக் காங்கிரசு மாநாட்டை நடத்துதல்.

1926 மதுரையில் சி.ஆர். தாசைப் பேசச் செய்தல்.

1926 சனவரி 25 மதுரைத்தமிழ்ச்சங்கம், வாலிபக்கிறித்தவர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் ஆராய்ச்சிச் சொற்பொழிவு.

1927 திசம்பர் 1- வசுமதி அம்மையாரைத் திருவெட்டாற்றில் மணம் புரிதல்.

1929 பிப்ரவரி 28 - மகள் மீனாட்சி பிறப்பு.

1929 மார்ச் 11 - சென்னைப் பல்கலைக்கழகச் சார்பில் திருவள்ளுவர் சொற்பொழிவு.

1930 சூலை 27 - மகள் லலிதா பிறப்பு.

1930 ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம்.

1932-1933 மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் பொறுப்பு.

1933 மே13 - உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கெனத் தொடக்கப் பள்ளி உண்டாக்குதல். (வீரர் வ.உ.சி.யின் தொடக்க விழா உரை).

1933-1938அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலை மைப் பணி.

1935 செப்டம்பர் 15 - எட்டயபுரத்தில் தமிழகம் புதுமனை புகுவிழா.

1936 ஈழ நாட்டுச் சுற்றுப் பயணம் (2ஆவது முறை).

1937 செப்டம்பர் 5- சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவர்.

1937 அக்டோபர் 25- இந்தி மொழி பற்றிச் சென்னை மாநில முதலமைச்சர் திரு ச. இராசகோபாலாச்சாரியாருக்கு வெளிப்படை மடல் எழுதல்.

1942 ஆக. 1-3 - மதுரை முத்தமிழ் மாநாட்டின் வரவேற்புக் குழுத் துணைத் தலைவர்.

1944 திசம்பர் 30-31 - ஈழ நாட்டுச் சுற்றுப்பயணம் (3வது முறை) ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றத்தாரின் நாவலர் பட்டம்.

1948 பிப்ரவரி 14 - சென்னையில் அகில தமிழர் மாநாட்டின் தலைவர்.

1948 சூன் 27 - இந்திமொழிபற்றிச் சென்னை மாநிலக்கல்வியமைச்சர் திரு தி.சு. அவினாசிலிங்கஞ் செட்டியாருக்கு மடல் எழுதுதல்.

1954 சனவரி 17 - மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் கணக்காயர் பட்டமும் பொன்னாடை போர்த்தலும்.

1954 சூலை 11 - அண்ணாமலை நகரில், சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர்.

1955 பிப்ரவரி 9 - அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் முனைவர் (டாக்டர்) பட்டம்.

1955 பிப்ரவரி 28 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொன்னாடை போர்த்தல்.

1956 சூன் 3 - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா 5ஆம் நாள் விழாவின் இயலரங்குத் தலைவர்.

1957 சூன் 22 - சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கல்.

1958 திசம்பர் 14 - பசுமலையில் தமிழகப் புலவர் குழு அமைப்புக் கூட்டம்: குழுவின் தலைவர்.

1959 சூலை 27 - மதுரையில் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா - பாராட்டு.

1959 அக்டோபர் 4- மதுரையில் தமிழகப் புலவர் குழுவும், மதுரை நகரவையும் பாராட்டுதல்.

1959 நவம்பர் 8 - மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில் தொடக்க உரை நாவலர் கலந்து கொண்ட இறுதிக் கூட்டம்.

1959 திசம்பர் 2 - பசுமலையில் தமது இல்லத்தில் மயக்கமுற்று விழுதல்.

1959 திசம்பர் 4 - மதுரை அரசினர் பெரு மருத்துவமனை செல்லல்.

1959 திசம்பர் 7- நினைவிழத்தல்.

1959 திசம்பர் 14- இறைவனடி சேரல் ஸஇரவு 8.40 மணி.

1959 திசம்பர் 15 - பசுமலையில் உடலுக்கு எரியூட்டல் ஸமாலை 6மணி.

1959 டிசம்பர் 15 - இறுதிக் கடனிகழ்ச்சி - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட பல அறிஞர்களின் சொற்பொழிவு, ஏழைகளுக்கு உணவளித்தல்.

1963 நாவலர் சோமசுந்தர பாரதியார் கல்வி அறப்பணிக்குழு தோற்றுவித்தல்.