செம்பியன் மாதேவித் தல வரலாறு
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
செம்பியன் மாதேவித் தல வரலாறு


1.  செம்பியன் மாதேவித் தல வரலாறு
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  நுழைவுரை
    4.  அணிந்துரை
    5.  பதிப்புரை
    6.  அணிந்துரை
2.  இருப்பிடம் :
3.  கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்திகள்
4.  செம்பியன்மாதேவியார் வரலாறு
    1.  கல்கியில் வந்த கடிதம்
    2.  கணியம் அறக்கட்டளை

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : செம்பியன் மாதேவித் தல வரலாறு

  தொகுப்பு : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

  ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதற்பதிப்பு : 2007

  தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 12 புள்ளி

  பக்கம் : 24 + 216 = 240

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 225/-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை, பெரியார் குடில், பி.11, குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு
தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960

தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு
உலக அரங்கில் உயர்வும் பெருமையும்
ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு…
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து
உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு…
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி
பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு…
பத்தாம் வகுப்பு வரை
தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய
முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு….
தலைமைச் செயலக ஆணைகள்
தமிழில் மட்டுமே வரவேண்டும்
என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு…
தமிழ்மண் அறக்கட்டளை
நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவிக்கிறது.


நுழைவுரை

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கும்பகோணம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப் புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார்.

பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார்.

இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர்.

அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணா துறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும்.

இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அது போன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ் விரண்டு நூல்களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையிலிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார்.

அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது.

தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டு கோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும்.

அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கை யெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார்.

பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பல வற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.

அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தி யாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங் களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது.

இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக் கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள்வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதி களாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக் கட்டளை வழங்கியுள்ளனர்.

தொகுதி 1

1.  முதற் குலோத்துங்க சோழன் 1930

2.  திருப்புறம்பயத் தல வரலாறு 1946

3.  காவிரிப் பூம்பட்டினம் 1959

4.  செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959

தொகுதி 2

5.  பாண்டியர் வரலாறு 1940

தொகுதி 3

6.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949

தொகுதி 4

7.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951

தொகுதி 5

8.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961

தொகுதி 6

9.  தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955

10. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955

தொகுதி 7

11. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961

12. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961

தொகுதி 8

13. தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923

14. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998

தொகுதி 9

15. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007

தொகுதி 10

16. சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007

அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல் களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய் திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக் கட்டளையின் இந்த அரிய வெளி யீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.


அணிந்துரை

கோ.விசயவேணுகோபால்

முதுநிலை ஆய்வாளர்

பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளி

புதுச்சேரி.

1950-60 களில் தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழில் எழுதிய தமிழ்ப் பேராசிரியர்கள் திருவாளர்கள் மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.அப்பாத்துரையார் போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். பேராசிரியர் க.அ.நீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு வெளிவந்தபின் அதில் சில கருத்துக்கள் மறுபார்வைக் குரியன என்ற நிலையில் முனைந்து ஆய்வு மேற் கொண்டு சில வரலாற்று விளக்கங்களை மாற்றிய பெருமைக்குரியவர் இவர். தமது இடைவிடா உழைப்பாலும் நுணுகிய ஆய்வினாலும் புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்த சூழ்நிலையில் சிறு நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி மற்றையோர்க்கு வழி காட்டியாய் விளங்கிய பெருமகனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலை என்னைப் போன்ற மாணவர்கட்குக் கல்வெட்டியலில் ஆர்வமூட்டியவர். எதிர்பாராத நிலையில் அவர் மரண மடைந்தபோது யான், தமிழர் தலைவர் பழ.நெடுமாறன், அ.தாமோதரன் போன்றோர் அவரது பூதவுடலைச் சுமந்து சென்றது இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும். எளிமையான தோற்றம், கூர்மையான பார்வை, ஆரவாரமற்ற தன்மை, அன்புடன் பழகுதல் அவரது சிறப்புப் பண்புகளாகும்.

திரு தி.வை.சதாசிவப்பண்டாரத்தாரால் எழுதி ஏற்கனவே வெளி வந்த நூல்கள் சில தற்போது ஒரு தொகுப்பாகத் தமிழ்மண் அறக்கட்டளை யினரால் வெளியிடப்படுகின்றன. முதற் குலோத்துங்க சோழன், திருப்புறம்பயத் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம், செம்பியன்மாதேவித் தல வரலாறு ஆகியன இதில் அடங்கும்.

முதற் குலோத்துங்க சோழன் 1930 இல் வெளியிடப்பட்டது. இது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் விளங்கியது. ஆசிரியரே கூறுவதுபோலத் தமிழகத்தையும் பிற பகுதிகளையும் முதற் குலோத்துங்கன் திறம்பட ஆண்ட ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை விளக்குவது இந்நூல். தமிழில் வரலாற்று நூல் எழுதுவதற்கான முன் மாதிரிபோல் அமைந்துள்ளது இந்நூல். அடிக்குறிப்புக்கள், பிற்சேர்க்கை கள், படங்கள் என ஆய்வு நூல்களில் காண்பன அனைத்தும் இந்நூலின் கண் உள்ளன. இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவருடைய ஆய்வு மனப்பான்மையையும், நேர்மையையும் எடுத்துக் காட்டுவன ஆகும்.

திருப்புறம்பயம் ஆசிரியரது ஊர். புகழ்பெற்ற சிவத்தலம். இதனைச் சுற்றி இன்னம்பர், ஏகரம், திருவைகாவூர், திருவிசயமங்கை, மிழலை, சேய்ஞலூர், திருப்பனந்தாள் போன்ற சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. ஆசிரியர், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முறைமையில் இத்தலத்தின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இத்தலம் தொடர்பான உலா, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் ஆகியன இத்தலம் பற்றிக் குறிப்பனவற்றை விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரும் குறைந்தது தாம் வாழும் ஊரினது வரலாற்றையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஸ்ரீ திருப்புறம்பயத்தலவரலாறு ஏற்படுத்துகிறது.

மிகத்தொன்மையானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான காவிரிப் பூம்பட்டினம் பற்றிய நூலுள் இது சோழர்தம் பழைய தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியமையைக் குறிப்பிடுவதோடு சிலப்பதிகாரம் போன்ற பழைய இலக்கியங்கள் சுட்டும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்மாநகரை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளார்.

கண்டராதித்த சோழரின் இரண்டாம் மனைவி செம்பியன் மாதேவி. வாழ்நாள் முழுவதும் இறைப்பணிகள் பல செய்த பெருமை யுடையவர். சோழமன்னர் அறுவர் காலத்திலும் வாழ்ந்த பெரு மூதாட்டி. மாதேவடிகள் எனப் போற்றப்படுபவர். பழைய செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளி களாக்கியவர். இத்தகு சிறப்புக் கொண்ட இவ்வம்மையாரின் பெயரி லமைந்த ஊரில் விளங்கும் திருக்கோவிலின் வரலாற்றை விளக்குவது செம்பியன்மாதேவித் தல வரலாறு. மறைந்த கம்பனடிப்பொடி காரைக் குடி சா.கணேசன் அவர்களின் விமர்சனப் பாங்கோடு கூடிய முன்னுரையுடன் கூடியது இச்சிறு நூல். கோயிலின் பெருமை, வருவாய், நிருவாகம், கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் எனத் திறம்பட அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பிற்சேர்க்கைகள், விளக்கக் குறிப்புக்கள் என்பவற்றோடு ஆங்காங்கே நல்ல புகைப்படங்களும் இணைக்கப்பட்டு ஆய்வுப் பொலிவோடு விளங்குகின்றது.

இத்தொகுப்பினை வெளியிடும் தமிழ்மண் அறக்கட்டளை யினர்க்கு, குறிப்பாகத் திரு கோ.இளவழகனார் அவர்கட்குத் தமிழ்கூறு நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. இவை முன்பு வெளியிடப்பட்டபோது தமிழ்மக்கள் பெருமளவில் வாங்கிப் பயன்பெற்றதுபோல இப்போதும், குறிப்பாக வரலாறு கற்கும் தமிழ் மாணவர்கள், வாங்கிப் படித்து இவை போலத் தாமும் எழுதத் தூண்டுதல் பெறுவர் என நம்பு கின்றேன். இவர்தம் தொண்டு மேலும் சிறப்பதாக, திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் ஓங்குவதாக.


பதிப்புரை

கோ. இளவழகன்

நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதி களாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம்.

சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமா மகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.

பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர்.

பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக் கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்தி களெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக் கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர்.

பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே.

தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள்.

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன.

பண்பாட்டுத் தமிழர்க்கு
நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப்
பண்டாரத் தார்க்கும்; ஒரு
மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள்
கொண்டாடும் சோமசுந்
தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக்,
கண்டார்க்க ளிக்கும் வகை
உருவக்கல் நாட்டுவது கடமையாகும்.

எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந்தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
  கோ. விசயவேணுகோபால்
  பி. இராமநாதன்
  முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
  க.குழந்தைவேலன்

ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா

  _மெய்ப்பு_ க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்

இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .


அணிந்துரை

(காரைக்குடி சா. கணேசன்)
இராசகேசரி கண்டராதித்தன் என்பவன் சோழப் பேரரசரில் ஒருவன். கி.பி. 953 முதல் 957 வரை சோழ மண்டலத்தை ஆண்டவன். கண்டராதித்த தேவர் என்றும், மும்முடிச் சோழ தேவர் என்றும் மக்கள் மிகுந்த அன்புடன் இவனை அழைப்பர். செந்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் உடையவன். தில்லைக் கூத்தன்பால் எல்லையிலாப் பக்தி பூண்டவன். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில், திரு விசைப்பாவில் உள்ள கோயிற் பதிகம் இவன் பாடியதாகும். தில்லைப் பெருமானிடம் இவனுக்குள்ள ஆராத காதலையும், அம்பலத்தாடி தன் அடிமலரைக் கூட வேண்டும் என்னும் தீராத ஏக்கத்தையும் அப் பதிகத்தை மேற்போக்காகப் பார்ப்பவர்களும் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கண்டராதித்தனுக்கு இரு மனைவிமார்கள். முதல் மனைவி வீரநாரணி என்னும் பெயரினள். இளையவள் பெயர் செம்பியன் மாதேவி. கண்டர் ஆதித்தன் பட்டத்திற்கு வருமுன்னரே வீரநாரணி இறந்துவிட்டாள். எனவே செம்பியன் மாதேவி தான் பட்டத்து அரசியாக வீற்றிருந் திருக்கிறாள். கண்டர் ஆதித்தன் சுமார் நான்கு ஆண்டுகளே அரியணையில் இருந்திருக்கிறான். அவன் காலமான பின்னர் சுமார் 45 ஆண்டுகள் செம்பியன் மாதேவி உயிர் வாழ்ந்திருக்கிறாள். தன் வாழ்நாள் எல்லாம் சிவனடி மறவாச் சிந்தையளாய், தெய்வத் திருப்பணியே செய்து சோழர் வரலாற்று ஏட்டிலே ஒப்பு உரைக்க ஒண்ணாதபடி நிலை பெற்று விளங்கு கிறாள். சிவப் பணிக்கே தன்னை அற்பணித்துக் கொண்டு பெரு வாழ்வு வாழ்ந்தமையால் இவள் மாதேவடிகள் என்று பாராட்டப் பெற்றிருக்கிறாள்.

தன் மாமனார் முதற் பராந்தக சோழன் 1, அவன் பின் தன் கணவன் கண்டர் ஆதித்த சோழன் 2, அவன் பின் தன் கொழுந்தன் அரிஞ்சய சோழன் 3, அவன் பின் மேற்படி கொழுந்தன் மகன் இரண்டாம் பராந்தகன் ஆகிய சுந்தர சோழன் 4, அவன் பின் தன் அருமை மகன் மதுராந்தகன் ஆன உத்தம சோழன் 5, அவன் பின் தன் கொழுந்தன் பேரன் அருள் மொழி வர்மன் ஆன இராசராச சோழன் 6, ஆகிய ஆறு பேர் ஆட்சியையும் கண்டு களித்த பெரு மூதாட்டியார் செம்பியன் மாதேவியார். அறுபது ஆண்டுகள் சிவப்பணி செய்திருக்கிறாள். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாவது நில வுலகில் வாழ்ந்திருக்க வேண்டும். அந்தக் காலம் கி.பி. 920-1001 என்று துணியலாம்.

பண்டைச் சோழர் பணிகளான செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக எடுப்பித்தும், நித்திய நைமித்தியங் களுக்கு நிவந்தங்கள் ஏற்படுத்தியும், இறை திருவுருவங்களுக்கு அணி கலன்கள் அளித்தும், திருவுண்ணாழியில் நந்தா விளக்கு எரிய முதல் ஈய்ந்தும், நந்தவனம் ஏற்படுத்தியும் பல்லாற்றானும் சிவத்தொண்டு புரிந்திருக்கிறாள். செம்பியன் மாதேவியார் கற்றளியாக எடுப்பித்த கோயில்கள் பலவற்றுள் 1. திருநல்லம், 2. தென் குரங்காடுதுறை, 3. திருவக்கரை, 4. திருகோடிக்கா, 5. திருத்துருத்தி, 6. திருமுதுகுன்றம், 7. திருவாரூர் அரநெறி, 8. திருமணஞ் சேரி, 9. செம்பியன் மாதேவி ஆகிய ஒன்பதைப் பற்றி உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவற்றுள் திருநல்லம் என்னும் கோனேரி ராசபுரத்தில் செங்கலாற் கட்டப் பெற்றிருந்த கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து, அக்கோயிலில் கண்டர் ஆதித்தன் சிவலிங்கத்திற்குப் பூசை செய்வது போல ஒரு ஓவியம் சமைப்பித்துள்ளாள். அந்தத் திருக்கோயிலுக்குத் தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தர் என்ற பெயரையே சூட்டி மன நிறைவு கொண்டிருக் கிறாள். அச்சிற்பத்தின் அடியில் காணப்பெறும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் செம்பியன் மாதேவிக்கு உள்ள சிவ பக்தியின் ஊற்றமும், பதிபக்தியின் ஏற்றமும் தெள்ளிதிற் புலனாகும். அது வருமாறு-

வதி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார்
மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார்
தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான
ஸ்ரீ உத்தம சோழர் திருராஜ்யஞ் செய்தருளா நிற்க
தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால்
திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எ(ழுந்)(டுத்)
தருளிவித்து
இத் திருக்கற்றளிலே(ய்) திருநல்லமுடையாரைத்
திருவடி(த்)
தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த
தேவர் இவர்

- (S.I.I.III-146)

பதி பக்தியும், சிவ பக்தியும் நிறைந்த இப்பிராட்டியார் தான் செம்பியன் மாதேவி என்ற பெயருடன் இன்று விளங்கும் இவ்வூர்த் திருக்கோயிலையும் கற்றளியாக எடுப்பித்தவர். ஆனால் இக்கோயிலை புதிதாகக் கட்டிக் கடவுண் மங்கலம் செய்தார் என்று கொள்வது பொருத்த மில்லை என்பது என் கருத்து. இங்குள்ள திருக்கோயில் பழமையான தாகவே இருக்கவேண்டும். சமய குரவர்களின் பாடலும் இதற்கு இருந்திருக்கலாம். ஆகவேதான் அப் பெருமாட்டிக்கு இதைக் கற்றளியாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். அதன் பின்னர் இவ் ஊரைச் சார்ந்த நிலபுலங்களை இறையிலியாக ஆக்கி அவற்றை அந்தணர்கட்கு அளித்துக் காத்திருக்கிறாள். அதன் காரணமாக இவ்வூருக்கு செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

இப் பெருமாட்டி கற்றளியாக எடுப்பித்திருக்கும் மற்ற திருக்கோயில்கள் யாவும் பாடல் பெற்ற பழம் பெரும் திரு க்கோயில்களே, இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடை யார் கோயிலும் தஞ்சைத் தளிக்குளம் என்னும் பாடல் பெற்ற கோயிலேயாகும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால் இக் கோயிலும் பாடல் பெற்ற ஒரு பழங் கோயிலாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு. அன்றியும் செம்பியன் மாதேவி புதிதாக எடுப்பித்த கோயிலாக இருந்தால் செம்பியன் மாதேவீச் சுரம் என்று இதன் பெயர் அமைந்திருக்கக் கூடும். ஆனால், ஸ்ரீ கயிலாயம் என்று பெயர் கொண்டிலங்கு கிறது. பெருமான் பெயரும் ஸ்ரீ கயிலாச முடைய மகா தேவர், திருக்கயிலாயமுடையார் என்றே காணப்பெறுகிறது. இக்கோயிலுக்கு ஸ்ரீ கயிலாயம் என்ற பெயர் எப்பொழுது ஏற்பட்டது? காரணம் என்ன? இத்தலம் பழமையானதா? அப்படியானால் வேறு பழம் பெயர் உண்டா? அப் பெயர் என்ன? அப்பெயர் தேவாரம் முதலிய திருமுறைகளில் எங்கேனும் காணப்பெறுகிறதா? இவற்றை எல்லாம் முயன்று கண்டறிய வேண்டும். ஆண்டவன் அருளும், அறிஞர்கள் ஆராய்ச்சியும் அதற்குத் துணை புரியட்டும்.

அருமையும் பெருமையுமுள்ள இத்தலத்தின் உண்மை வரலாற்றை எழுதி வெளியிட, தேவதானத்தார் ஆர்வம் கொண்டனர். எல்லா வகை யாலும் தக்கார் ஒருவரை இசையச் செய்தனர். அவர் தான் சைவத் திருவாளர் திரு.வை.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள். வரலாற்று நூலறிவும், கல்வெட்டு ஆராய்ச்சியும், இலக்கியப் புலமையும், சரித்திரத் தேர்ச்சியும் சமய ஒழுக்கமும், சீரியபண்பாடும் நிரம்பிய நுண்மான் நுழை புலம் உடையவர். பன்னூல் எழுதிப் பழுத்தவர். இப்பணியை நிறைவேற்ற அவர்களைத் தேர்ந்தெடுத்த ஒன்றே போதும் தேவதானத்தார் கொண்ட உண்மை ஆர்வத்தைப் பலப்படுத்த.

இம்மலர் சிறிதே. சுறுக்கமாக இருப்பினும் விளக்கம் தருகிறது. இச்சிறு மலரிலும் ஆசிரியரின் அறிவு ஒளிர்கிறது. அனுபவம் மணக்கிறது. மேலும் கல்வெட்டுப்படிகள் அனைத்தை அப்படியே வெளியிடலாம். கோயிலின் வரைப் படத்தை விளக்கக் குறிப்புடன் இணைக்கலாம். இப்படி எல்லாம் சொல்வதைக் குறை கூறுவதாகக் கருதி விடப்படாது. நல்லார்வத்துடன் விடுக்கும் வேண்டுகோள் தான் இது.

இந்தப் பவித்திரமான பணியை ஏற்றுச் செவ்விய முறையில் எழுதி உபகரித்த பெரியார்க்கும், இந்த நல்ல முயற்சியில் அக்கறை காட்டிய செம்பியன் மாதேவித் திருக்கோயில் அறங்காவலர்களுக்கும், இறைபணி யாளருக்கும் அம்மையப்பன் திருவருள் பெருகுவதாக, அவர்களுக்கு நம்முடைய வணக்கமும் பராட்டுக்களும் உரிய தாகுக.

இத்தகைய முறையில் தலவரலாறு எல்லாப் பெருங்கோயில் களுக்கும் எழுதி வெளியிட மாநில அறநிலையினர் ஏற்பாடு செய்தால் அறிவும் பயனும் பெருகும். ஆண்டவன் அருள்க.

இருப்பிடம் :


செம்பியன் மாதேவி என்பது தஞ்சாவூர் ஜில்லா நாகப் பட்டினம் தாலுகாவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் இருப்புப் பாதையில் கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே இரண்டு மைல் சென்று, தேவூர் என்ற பாடல் பெற்ற சிவத்தலத்தை அடைந்து அவ்வூரிலிருந்து தென் கிழக்கே போகும் பெரு வழியில் நான்கு மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இத்தலத்திற்குத் தெற்கே ஐந்து மைலில் குண்டையூரும், ஆறு மைலில் திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலி என்ற பாடல் பெற்ற தலமும், எட்டு மைலில் திருப்புகழ் பெற்ற எட்டுக்குடி என்ற தலமும், தென்மேற்கே ஆறு மைலில் வலிவலம் என்ற பாடல் பெற்ற தலமும், மேற்கே நான்கு மைலில் திருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும், ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும், வடக்கே ஆறுமைலில் சிக்கல் என்ற பாடல் பெற்ற தலமும், வடகிழக்கே எட்டு மைலில் நாகைக்காரோணம் என்ற பாடல் பெற்ற தலமும் இருக்கின்றன.

திருக்கோயில் :

இவ்வூரிலுள்ள கோயில் ஸ்ரீ கயிலாசம் என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாசநாத சுவாமி கோயில் என்று வழங்குகின்றது. இது கிழக்கு நோக்கிய திருவாயிலையுடையது; கீழ் மேல் 298 அடி நீளமும் தென்வடல் 267 அடி அகலமும் உடையது. ஆகவே, கோயிலின் பரப்பு எறத்தாழ 79,566 சதுர அடிகள் உடையது எனலாம். கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. முதற்பிராகாரம் திருச்சுற்று மாளிகையுடன் அமைந்தது. முதற்பிராகாரத்தின் திரு வாயிலைத் திருமாளிகைத் திருவாயில் என்று பெரியோர் வழங்குவர். இதில் மூன்று நிலைக்கோபுரம் ஒன்று இருத்தல் காணலாம். இரண்டாம் பிராகாரத்தில் திருவாயிலைத் திருத்தோரணவாயில் என்று கூறுவது வழக்கம். இதில் முடிவு பெறாத இரு நிலையுடனுள்ள ஒரு கோபுரம் உளது.

இக்கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று செம்பியன் மாதேவியார் பெருமண்டபம் என்ற பெயருடையது என்பதும் அதில் கிராம சபையார் கூட்டம் நடத்திவந்தனர் என்பதும் அறியத்தக்கனவாகும்.

மூர்த்திகள் :

திருக்கோயிலில் மூலத்தானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கயிலாச நாதசுவாமி என்று இந்நாளில் கூறப்பெறுவர். கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் அப்பெருமான் ஸ்ரீ கயிலாசமுடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். முதற்பிராகாரத்தில் சோமாகந்தர், நடராசர், தட்சிணாமூர்த்தி, சண்டேசுவரர், விசுவநாதர், சூரியன், வயிரவர் ஆகிய மூர்த்திகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருக்கின்றன. இரண்டாம் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் அம்பிகையின் கோயில் உள்ளது. அதற்குத் தனிப் பிராகாரமும் இருக்கின்றது. அம்பிகையின் திருப்பெயர் பிருகத்நாயகி (பெரிய நாயகி) என்று வழங்குகின்றது. இரண்டாம் பிராகாரத்தில் சுப்பிரமணியர்க்கு ஒரு கோயிலும் நந்திதேவர்க்கு ஒரு மண்டபமும் இருக்கின்றன.

தலவிருட்சமும் தீர்த்தமும்:

இத்தலத்திற்குரிய விருட்சம் அரசமரமாகும். சதுர்வேத புஷ்கரணி (நான்மறைக்குளம்) என்ற பெயருடைய திருக்குளம் இத்தலத்திற்குரிய தீர்த்தமாக உள்ளது.

திருவிழாக்கள்:

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவமே பெரிய திருவிழா ஆகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அன்றியும், ஆனியில் திருமஞ்சனமும், ஆடியில் பூரமும், ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி யோடு விசயதசமியும், ஐப்பசியில் சூரசங்காரமும், கார்த்திகையில் கார்த்திகை தீபமும், தையில் பூசமும், மாசியில் மகமும் அவ்வம் மாதங்களில் நடந்து வரும் திருவிழாக்கள் ஆகும். இக்கோயிலுக்குரிய இரண்டு தேர்களும் பழுதுற்ற நிலையில் உள்ளன.

கோயிலின் வருவாயும் நிர்வாகமும் :

இக்கோயிலுக்கு நன்செயில் 279 ஏக்கர் 81 செண்டும், புன்செயில் 115 ஏக்கர் 10 செண்டும் நிலங்கள் உண்டு. ஆண்டுதோறும் அவற்றிலிருந்து கிடைத்து வரும் சராசரி மொத்த வருவாய் ஏறத்தாழ ரூ. 25,000 ஆகும்.

இக்கோயில் நிர்வாகம் சென்னை இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் 1947-ல் உத்தரவிட்ட ஒரு திட்டத்தின்படி (Scheme) நடந்து வருகின்றது. மூன்று பேருக்குக் குறையாத டிரடிகளும் மேற்படி இலாகாவினால் நியமனஞ் செய்யப் பெற்ற ஒரு நிர்வாக அதிகாரியும் இக்கோயிலைப் பரிபாலித்து வருகிறார்கள். நிர்வாகம், இந்து அறநிலையப் பாதுகாப்பு இலாகாவின் 1951-ஆம் ஆண்டின் சட்டங் களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு நிகழ்ந்து வருகின்றது.

சில சிறப்புக் குறிப்புகள்:

1.  சென்னை அறநிலைய இலாக்கா ஆணையர் விரும்பியபடி நிர்வாக அதிகாரியால் சோழர் பேரரசியார் செம்பியன் மாதேவி யாருக்குக் கோயிலில் ஒரு தனி மண்டபம் கட்டப்பெற்றுள்ளது. (2) ரூ. 40,000 -க்குத் திருப்பணி நடைபெற்று வருகிறது. (3) தஞ்சை ஜில்லா போர்டு மருத்துவ நிலையத்திற்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. (4) பொது மக்களுக்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டிப் படித்துறைகள் கட்டப் பெற்றுள்ளன. (5) ரூ. 6,150-க்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (6) 30 ஏழை பள்ளிச் சிறார் களுக்கு மதிய உணவு வழங்க வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இக்கோயிலார் பொதுமக்கள் நலத்தின் பொருட்டும் பல்வகைத் தொண்டுகள் புரிந்து வருவது பலரும் அறிந்து மகிழத்தக்க தொன்றாம்.

கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்திகள்


இக்கோயிலில் இருபத்து மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றை அரசாங்கக் கல்வெட்டிலாகா அறிஞர்கள் படி எடுத்து, அவற்றின் சுருக்கத்தைத் தென்னிந்திய கல்வெட்டிலாகாவின் 1925-26-ஆம் ஆண்டறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அக்கல் வெட்டுக்களின் துணைகொண்டு ஊர், கோயில் இவற்றின் பழைய வரலாற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள், ஒன்றாகிய அருமொழிதேவ வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய அளநாட்டில் உள்ளது செம்பியன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர். இவ்வூரைப் புதிதாகத் தம் பெயரால் அமைத்துச் சதுர்வேதிகளான அந்தணப் பெரு மக்களுக்குப் பிரமதேயமாக வழங்கியவர் செம்பியன் மகாதேவி என்ற அரசியார் ஆவார். இவ்வம்மையார், முதற்பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரும், சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து கி.பி.950 முதல் 957 வயில் ஆட்சி புரிந்தவரும், தில்லைச் சிற்றம்பலவாணர் மீது திருவிசைப்பாப் பதிகம் ஒன்று பாடியவரும் ஆகிய கண்டராதித்த சோழரின் மனைவியார். இவ்வூரில் ஸ்ரீ கயிலாசம் என்ற பெயருடைய திருக்கோயிலைக் கட்டியவரும் இம்மகாதேவியாரேயாவர். இச்செய்திகள் கோயிலிலுள்ள கல்வெட்டுக் களால் நன்கு புலப்படுகின்றன. இவ்வரசியார்க்கு உத்தம சோழர் என்ற புதல்வர் ஒருவர் இருந்தனர். அவ்வேந்தர் பெருமான் கி.பி.970 முதல் 985 வரையில் அரசாண்டவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் இவ்வூரும் திருக்கோயிலும் செம்பியன் மாதேவியாரால் அமைக்கப் பெற்றன என்று தெரிகிறது. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களுள் உத்தம சோழரது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டாகிய கி.பி. 981-ல் வரையப் பெற்ற கல்வெட்டே மிக்க பழமை வாய்ந்ததாகும். எனவே, இக்கோயில் கி.பி.981 ஆண்டிற்கு முன்னர்க் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இனி, உத்தம சோழர் காலமுதல் ஒவ்வோர் அரசரது ஆட்சிக் காலத்தும் நிகழ்ந்தவற்றைக் காண் போம்.

1. உத்தம சோழர் காலம் : கி.பி. (970-985)

இவ்வேந்தர் காலத்துக் கல்வெட்டுக்கள் எட்டு உள்ளன அவற்றுள் ஒன்று, இம்மன்னர் பெருமானுடைய மனைவி மாருள், பட்டன் தானதுங்கியார், மழபாடித் தென்னவன் மாதேவியார், இருங்கோளார் மகளார் வானவன்மாதேவியார், விழுப்பரையர் மகளார் கிழானடிகள், பழுவேட்டரையர் மகளார் என்ற ஐவரும், தம்மாமியார் செம்பியன் மாதேவியார் பிறந்த நாளாகிய சித்திரைத் திங்கள் கேட்டை நாளில் திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்கு ஆண்டுதோறும் சிறப்பு வழி பாடும் விழாவும் நடத்துவதற்கு முதற்பொருள் கி.பி. 981-ம் ஆண்டில் வழங்கியதை உணர்த்துகின்றது.

கி.பி 984-ல் உத்தம சோழருடைய பட்டத்தரசியார் திரிபுவன மாதேவியார் என்பார், திருக்கயிலாசமுடையார்க்கு நாள் வழிபாட்டிற்கு அளித்த இறையிலி நிலங்களையும் திங்கள் தோறும் முதல்நாளில் கோயிலில் நிகழவேண்டிய சிறப்பு வழிபாட்டிற்குரிய பொருள்களையும் அவ்வழி பாட்டிற்கு அவ்வரசியார் அளித்த நிபந்தத்தையும் இரு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

கி.பி. 984-ல் உத்தம சோழருடைய மனைவியருள் பட்டன் தான துங்கியாரும் பஞ்சவன் மாதேவியாரும் திருக்கயிலாச முடைய மகாதேவர்க்கு முறையே நெற்றிப் பொற்பட்டமும் பொன்னால் அமைந்த கைப்பிடியுடைய வெண்சாமரையும் அளித்தமையை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

கி.பி 984ல் சொன்னமாதேவியார் என்ற கண்ணப்பரசியார் என்பார், சித்திரைக் கேட்டை நாளில் கோயிலில் நடைபெறும் செம்பியன் மாதேவி யாரின் பிறந்தநாள் விழாவிற்கு 507½ கழஞ்சு பொன் அளித்ததையும், தொண்டை மண்டலத்துப் பங்கள நாட்டினர் ஒருவர் விழாவில் ஆண்டு தோறும் அடியார்களுக்கு உணவளித் தற் பொருட்டு 150 பொன் முதற் பொருளாகக் கொடுத்துள்ள தையும் இரு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.2 முதல் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற சொன்ன மாதேவியார் உத்தம சோழரின் மனைவிமாருள் ஒருவராயிருத்தல் வேண்டும்.

கி.பி. 985-ல் பட்டத்தரசியார் திரிபுவனமாதேவியார் ஆண்டு தோறும் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நிகழும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்குப் பொருள் வழங்கியதையும், அவ்வாண்டி லேயே உத்தம சோழருடைய மற்றொரு மனைவியார் ஆரூரன் அம்பலத்தடிகளார் என்பார், அவ்விழா விற்கு 590 கழஞ்சு பொன் அளித்ததையும் ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.

2. முதல் இராசராச சோழர் காலம் : (கி.பி. 985-1014)

உத்தம சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசராச சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்குள்ளன. அவற்றுள், கி.பி. 987-ல் வரையப்பெற்ற கல்வெட்டு, செம்பியன் மாதேவியார் திருக்கயிலாச முடைய மகாதேவர்க்கு வழங்கிய நெற்றிப் பட்டம், பொற்பூக்கள், பொற் கலசம் முதலானவற்றையும் அவற்றின் நிறையையும் அறிவிக்கின்றது.

கி.பி.990-ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் உள்ளது. அது, செம்பியன்மாதேவிச் சதுர்வேதிமங் கலத்துக் கிராம சபையார் தம் செயற்குழுவினரான ஊர்வாரியப் பெருமக்களுக்கு அனுப்பிய ஓர் உத்தரவின் படியாகத் தோன்று கிறது. அரசாங்க உத்தரவுகள், கிராமசபையாரின் முடிபுகள் ஆகிய இவற்றுள் இன்றியமை யாதனவாய் என்றும் வைத்திருத்தற் குரியவற்றைக் கோயில் கருங்கற்சுவர்களில் யாவரும் பார்க்கக் கூடிய வெளிச்ச முள்ள இடங்களில் பொறித் துவைப்பது அக்கால வழக்கமாகும். அத்தகைய கல்வெட்டுக்கள் பல கோயில் களில் இருத்தலை இக்காலத்தும் காணலாம்.

கி.பி. 990-ல் திருக்கயிலாசமுடையார் கோயில் நிலங்கள் சில வற்றிற்குக் கிராம சபையார் வரி நீக்கியதை ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.

கி.பி. 992-ல் உத்தம சோழரின் பட்டத்தரசியார் திரிபுவன மாதேவியார் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடத்தப் பெறும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்கு முதல் பொருளாக நூறு பொற்காசு அளித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.

3. முதல் இராசேந்திர சோழர் காலம் : (கி.பி. 1012-1044)

முதல் இராசராச சோழர்க்குப் பிறகு ஆட்சிபுரிந்த முதல் இராசேந்திர சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்கு உள்ளன. அவற்றுள், ஒரு கல்வெட்டு, நந்தவனத்தின் பாதுகாப்பிற்குக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குக் கிராம சபையார் வரிதள்ளியதையும், முதல் இராசேந்திர சோழர், கி.பி. 1019-ல் இடபவாகன தேவரையும்,

செம்பியன்மாதேவியாரையும், கோயிலில் எழுந்தரு ளுவித்த செய்தியையும், அவர்களின் நாள் வழிபாட்டிற்கு அளிக்கப்பெற்ற நிலங்களுக்குக் கிராம சபையார் வரி நீக்கியதையும் தெரிவிக்கின்றது.

மற்றொரு கல்வெட்டு, கிராம சபையார் கோயிலிலுள்ள செம்பியன் மாதேவியார் பெரிய மண்டபத்தில் கூட்டம் நடத்தித் தம் ஊர்க்கு மேற்பிடாகையாயுள்ள மோகனூர் ஆதித்தேசுர முடையமகாதேவர் தேவதான நிலங்களிலிருந்து கிடைத்துவரும் வெள்ளான் வெட்டி என்ற வரிப்பொருளைக் கொண்டு அக்கோயிலில் நாள் தோறும் சந்திவிளக்கு ஏற்றிவரவேண்டு மென்று செய்த ஒருமுடிபினை உணர்த்து கின்றது. இது வேறொரு கோயிலைப் பற்றிய கல்வெட்டாகும்.

கி.பி. 1035-ல் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள்2 சுவரால் மறைக்கப்பட்டு முதல் இராசேந்திர சோழரின் மெய்க்கீர்த்தியோடும் நாட்டின் பெயரோடும் நின்றுவிட்ட மையால், அவற்றில் கோயிலைப் பற்றிய செய்திகள் ஒன்று மில்லை.

4. முதல் இராசாதிராச சோழர் காலம் : (கி.பி. 1044-1054)

முதல் இராசேந்திர சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசாதி ராச சோழர் காலத்துக் கல்வெட்டொன்றால் திருவேழிருக்கை மகாதேவர் கோயில் நிலங்கள் சிலவற்றிற்கு அரசர்பெருமான் வரி தள்ளிய செய்தி அறியப்படுகின்றது.3 திருஏழிருக்கை என்பது திருச்சாட்டியக்குடியிலுள்ள திருக் கோயிலின் பெயர். கருவூர்த் தேவர் பாடிய திருச்சாட்டியக்குடி திருவிசைப்பாப் பதிகம் முழுதும் சாட்டியக்குடியார்…. …………. ஏழிருக்கையிலிருந்த ஈசனுக்கே என வருதல் காண்க.

5. மூன்றாம் இராசராச சோழர் காலம் : (கி.பி. 1216-1256)

மூன்றாம் குலோத்துங்க சோழரின் புதல்வர் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் கி.பி. 1233-ல் வரையப் பட்ட கல்வெட்டொன்று, சண்டேசுவர நாயனார் கோயிலில் உள்ளது.4 இதில் கிராம சபையார், கிராம காரியங்களைப் பார்ப்பதற்குப் பகலிலேயே தம் கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும், இரவில் நடத்தக் கூடாதென்றும், முன்னர் உறுப்பினராக இருந்தவர்களை ஐந்து ஆண்டுகள் வரையில் மீண்டும் தேர்ந் தெடுக்கக் கூடாதென்றும் செய்த முடிபுகள் காணப்படுகின்றன.

6. சடையவர்மர் வீரபாண்டியர் காலம் : (கி.பி. 1253-1268)

சடையவர்மர் சுந்தர பாண்டியர் சோழ மண்டலத்தைக் கைப்பற்றித் தம் ஆட்சிக்கு உட்படுத்திய காலத்தில் அங்குப் பிரதிநிதியாயிருந்து அரசாண்ட வீரபாண்டியர் நாளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை, பெரிய நாட்டார் உத்தமவேதப் பெருமாள் என்ற கல் தச்சனைக் கொண்டு கோயிலைப் புதுப்பித்ததையும், தம் தம் கிராமங்களில் வேலி ஒன்றுக்குக் கல நெல் வீதம் கோயிலுக்குக் கொடுத்து வர ஏற்பாடு செய்ததையும், திருப்பணியை நிறைவேற்றிய அக்கல் தச்சனுக்குக் கோயில் அதிகாரிகள் கி.பி. 1262-ல் எல்லா உரிமைகளோடும் ஒரு வீடு அளித்ததையும் கூறுகின்றன.

7. அரசரின் பெயரும் ஆண்டும் காணமுடியாத மூன்று கல்வெட்டுக்கள் :

சுவரால் மறைக்கப் பெற்ற அக் கல்வெட்டுக்களுள் ஒன்று, திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்குத் திங்கள் தோறும் முதல் நாளில் சிறப்பு அபிடேகம் நிகழ்த்துவதற்கும் நுந்தா விளக்கு வைப்பதற்கும் உத்தராயண தட்சிணாயன நாட்களில் கோயிலில் நூறு அந்தணர்களை உண்பித்தற்கும் செம்பியன்மாதேவியார் நிலம் வழங்கியதை உணர்த்து கின்றது.

மற்றொரு கல்வெட்டு, சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடைபெறும் விழாவிற்கு அருமொழி அரிஞ்சிகைப் பிராட்டியாரும் குந்தவையாரும் 220 கழஞ்சு பொன் அளித்ததை அறிவிக்கின்றது.3 குந்தவையார் முதல் இராசராச சோழரின் தமக்கையார் ஆவர்.

பிறிதொரு கல்வெட்டு, கோயிலுக்கு வழங்கப்பெற்றுள்ள அணிகலன்கள் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது.

செம்பியன்மாதேவிக் கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று.
(கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்திலுள்ளது.)
1.  வதி ஸ்ரீ கோ (2 இராஜகேசரிபந்ம (3) ற்கு யாண்டு ஆவது (4) தென்கரை அளநா (5) ட்டு பிரம தேயம் ஸ்ரீ (6) செம்பியன்மாதேவிச் (7) சதுர்வேதிமங்கலத்து (8) ஸ்ரீ கைலாசமுடையமகா (9) தேவற்கு ஸ்ரீ உத்தமசோழ (10) தேவர் தங்களாச்சி ஸ்ரீ பிராந்த (11) கன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம் (12) பியன்மா தேவியார் இவ்வாண்டு மீ (13) ன நாயிற்றுக்குடுத்தள பொன் க (14) லசம் ஒன்று இது இவ்வூர்க் கல்லால் (15) பொன்னூற்றுத் தொண்ணூற்றுக்கழ (16) ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டினால் (17) மேற்படி கல்லா(ல்) நிறை தொண்ணூற் (18) று கழஞ்சும் பொற்பூ ஒன்றுபொ (ன்) (19) (முக்) கழஞ்சே முக்காலாகப் பொற்பூமூ (20) (ன்றுக்கு) மேற்படி கல்லா(ல்) நிறைபதி (21) னொரு கழஞ்சேகாலும் பொற்பூ ஒன் (22) ……….. முக்கழஞ்சே முக்காலேமஞ் (23) சாடியாகப்பொற்பூ இருபத்தொன்றி (24) னால் மேற்படி கல்லால் நிறை எழுபத்தொ (25) ன்பதின் கழஞ்சே முக்காலே மஞ்சா (26) டியும் பொற்பூ……. (27) ழஞ்சே முக்கால் இரண்டு மஞ்சாடியாக (28) பொற் பூ இரண்டினால் மேற்படி கல் (29) லானிறை ஐங்கழஞ் சரையே நாலு (30) மஞ்சாடியும் ஆக இவை இத்த (31) னையும் பன்மாகேவர ரக்ஷை (32) 11

செம்பியன்மாதேவியார் வரலாறு


செம்பியன்மாதேவி என்ற இந்த ஊரையும் இதிலுள்ள திருக்கோயிலாகிய ஸ்ரீ கயிலாசத்தையும் அமைத்த செம்பியன் மாதேவியார், சேரமன்னர்களுள் ஒரு கிளையினரான மழவர் பெருங் குடியில் பிறந்தவர்; சோழச் சக்கரவர்த்தியாகிய முதற் பராந்தக சோழரின் (கி.பி. 907-953) இரண்டாம் புதல்வரும், சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற சிவஞானச் செல்வரும் ஆகிய முதற்கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராக விளங்கியவர்; உத்தம சோழரை (கி.பி. 970-985) த்தம் திருமகனாராகப் பெற்றவர்; தம் கணவரைப் போல எல்லையற்ற சிவபத்தியுடையவர்; அறிஞர்களால் மாதேவடிகளார் என்று பாராட்டப்பட்டவர். இவற்றை,

மழவரையர் மகளார் ஸ்ரீ கண்டராதித்த பெருமாள் தேவியார் ஸ்ரீ செம்பியன்மாதேவியார் எனவும், ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார் எனவும் காணப்படும் கல்வெட்டுத் தொடர்களாலும்,

கோராச கேசரிவர்மர்க்கு யாண்டு மூன்றாவதனிற்
பேராளர் வெண்காடர் தங்கோயில் மேலொரு
பைம்பொற்குடம்
ஓராயிரத் தொடைஞ்ஞூற்றுக் கழஞ்சினால் வைத்துகந்தாள்
சீரார் மழவர்கோன் பெற்றநம் செம்பியன் மாதேவியே

(S.I.I.Vol. XIII No. 144)

என்ற கல்வெட்டுப் பாடலாலும் நன்கு அறியலாம்.

இவ்வரசியார் முதலில் செய்த அறம், தம் மாமனார் முதற் பராந்தக சோழர் ஆட்சியில் கி.பி. 941-ஆம் ஆண்டில் திருச் சிராப்பள்ளிக்கு அண்மை யிலுள்ள உய்யக் கொண்டான் மலையில் திருக்கற்குடி மாதேவர்க்கு ஒரு நுந்தாவிளக்கு எரிப்பதற்குத் தொண்ணூறு ஆடுகள் அளித்தமையேயாகும். இவர்கள் தம் பேரனார் முதல் இராசராச சோழர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1001-ல் தென்னார்க்காடு ஜில்லா, விழுப்புரம் தாலுகாவிலுள்ள திருவக்கரைக் கோயிலைக் கருங்கற்கோயிலாக அமைத்தமையே தம் வாழ்நாளில் இறுதியில் செய்த திருப்பணி என்று தெரிகிறது. அவ்வாண்டிற்குப் பிறகு இவர்கள் புரிந்த அறங்கள் எங்கும் காணப் படவில்லை. எனவே, அவ்வாண்டில் தான் இவர்கள் சிவபெருமான் திருவடியை எய்தி யிருத்தல் வேண்டும். ஆகவே, இவர்கள் சற்றேறக் குறைய அறுபது ஆண்டுகள் திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளும் பல்வகை அறங்களும் செய்து சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்று கூறலாம். எனவே, இவர்கள் எண்பத்தைந்து ஆண்டுகள் வரையில் இருந்தவர்களாதல் வேண்டும்.

இவர்கள் காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட சோழ மன்னர்கள் அறுவர்; அவர்கள் முதற் பராந்தக சோழர், முதற்கண்ட ராதித்த சோழர், அரிஞ்சயசோழர், சுந்தர சோழர், உத்தம சோழர், முதல் இராசராச சோழர் என்போர். அப்பெரு வேந்தர்கள் இவ்வரசியார் புரிந்த அறச் செயல்களுக்கு உளம் உவந்து துணை நின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில், இவ்வரசியார் நம் தமிழகத்தில் பத்துச் செங்கற் கோயில்களைக் கருங்கற்கோயில் களாகக் கட்டியுள்ளனர் என்று தெரிகிறது. அவை, திருநல்லம், செம்பியன்மாதேவி, விருத்தாசலம், திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடு துறை (ஆடுதுறை புகைவண்டி நிலைய முள்ள ஊர்) திருக்கோடிகா, ஆநாங்கூர், திருத்துருத்தி (குற்றாலம் புகைவண்டி நிலையமுள்ள ஊர்), திருவக்கரை என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களே யாகும். அன்றியும், பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டிற்கும், திரு விழாக்களுக்கும், மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்குகளுக்கும், நந்தவனங் களுக்கும் பல பல நிவந்தங்கள் அளித்துள்ளனர்; பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பல்வகைக் கலங்களும் வழங்கி யுள்ளனர். இவ்வாறு இவர்கள் செய்துள்ள அறங்கள் மிகப் பலவாகும்.

இவ்வரசியார் புரிந்த தொண்டுகளுள் முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரி ராசபுரம் என்று இந்நாளில் வழங்கும் திருநல்லம் என்ற ஊரிலுள்ள திருக்கோயிலைக் கருங்கற்கோயிலாகக் கட்டி, அதற்குநாள் வழிபாடு, திருவிழா முதலான வற்றிற்கு நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம். அக்கோயிலைத்தம் ஒப்புயர்வற்ற கணவனார் கண்டராதித்த சோழர் பெயரால் அமைத்து, அதில் அவ்வரசர் பெருமான் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் திருவுருவம் ஒன்று வைத்திருப்பது உணரற்பாலது. இவ்வரசியாரின் ஆணையின்படி அக்கோயிலை அமைத்தவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரன் என்பவன். அவனது தொண்டினைப் பாராட்டி அரசாங்கத்தார் அவனுக்கு இராசகேசரி மூவேந்தவேளான் என்ற பட்டம் வழங்கியிருத்தல் அறியத்தக்கது.

இவ்வம்மையார் தமக்குப் பணி செய்யும் பணி மகள் இலச்சியன் மழபாடியின் நலங்கருதித் திருவெண் காட்டுச் சபையாரிடம் 125 கழஞ்சு பொன்னுக்கு நிலம். வாங்கி அவ்வூர்க் கோயிலில் அந்தணர்க்கு அமுதளித்தலாகிய அறத்தினைச் செய்திருப்பது, எளியோர்பால் இவர்கள் கொண்ட பேரன்பினைப் புலப்படுத்துவதாகும்.

முதல் இராசராச சோழருடைய புதல்வரும் பேரரசரும் ஆகிய முதல் இராசேந்திர சோழர் என்ற கங்கை கொண்ட சோழர் செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாச முடையார் கோயிலில் கி.பி. 1019-ஆம் ஆண்டில் இவ்வரசியாரின் திருவுருவத்தை எழுந்தருளுவித்து வழி பாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சி யாகும்.

செம்பியன்மாதேவிக் கோயிலில் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் அமைக்கப்பட்டிருத்தல் போல் செங்கற்பட்டு ஜில்லா திருமுக் கூடல் வேங்கடேசப் பெருமாள் கோயிலிலும் இவ்வரசியாரை நினைவு கூர்தல் காரணமாகச் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் என்ற மண்டபம் ஒன்று முதல் இராசராச சோழரால் கட்டப் பெற்றுள்ளது. அப்பெரு மண்டபம், ஊர்ச் சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றப் பயன்பட்டு வந்தது என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள திரு மழபாடிக் கண்மையில் செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தமை ஒரு கல்வெட்டால் தெரிகின்றது. அச்செயல்கள் முதல் இராசராச சோழர், முதல் இராசேந்திர சோழர் முதலான பேரரசர்கள் இவ்வரசி யாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பதை நன்கு புலப்படுத்துவனவாகும்.

அவ்வரசர் பெருமான்கள் சிவபத்தி, சமயப் பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றுச் சமயத் தொண்டுகள் பல புரிந்து, ஒப்புயர்வற்ற பெரு வேந்தர் களாக விளங்கியமைக்குக் காரணம் இவ்வரசியாரால் இளமையில் வளர்க்கப் பெற்றமையே என்பது உணரற்பாலது. அறப் பெருஞ் செல்வியராகிய இவ் வரசியாரது புகழ் நம் தமிழகத்தில் என்றும் நின்று நிலவுவதாக.


கல்கியில் வந்த கடிதம்

பொன்னி எனப்படும் காவிரி நதியின் புனலால் செந்நெல் வளம் கொழிக்கும் பாக்கியம் பெற்றது சோழநாடு. அவ் வளநாட்டிலே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றி மூத்தகுடியாகவும், படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வரும் பழங் குடியினராகவும் போற்றப்படும் சோழ அரசர்களால் கட்டுவிக்கப்பட்ட பெருங் கோயில்கள் பற்பல.

சிவ பக்தியிற் சிறந்த செம்பியன்மாதேவியார் தன் பக்தியின் சின்னமாக நாகையை அடுத்த ஓர் சிற்றூரை விலைக்கு வாங்கி ஸ்ரீ கைலாச நாதருக்கு ஒரு கோயில் எடுப்பித்து அவ்வூருக்கும், கோயிலுக்கும் செம்பியன் மாதேவி என்ற பெயரைச் சூட்டினர் என்பது தென் இந்திய அரசாங்கக் கல்வெட்டு ஆராய்ச்சி இலாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

இத் தலம் நாகைக்குத் தென் மேற்கில் சுமார் எட்டு கல் தொலைவில் அமைந்துள்ளது. கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்தி லிருந்து சுமார் ஆறு கல் தொலைவிலும், தேவூர் என்ற பதியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் மூன்று கல் தொலைவிலும் உள்ளது.

இத் திருக்கோயில் மிக மிகத் தொன்மையான முறையில் காட்சியளிக்கிறது. கோயிலின் இராசகோபுரம் ஓர் அடுக்கு மட்டும் கட்டப்பட்டுப் பூர்த்தி செய்யப் படாத நிலையில் விடுப்பட்டுள்ளது. முதல் பிரகாரத்தில் சுப்பிரமணியர், அம்பிகை கோயில்கள் கிழக்கு முகமாக அமைந்துள்ளன.

இரண்டாவது கோபுரம் மூன்று அடுக்குக் கொண்ட தாய்ப் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. கர்ப்பகிரகத்துக்குப் பின்புறமாக கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உருவம் அமைக்கப் பெற்றுள்ளது. இத்தலத்திற்கருகில் சோழ வித்தியாபுரம் என்ற புகழ் பெற்ற ஊர் அமைந்துள்ளது.

இந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோயிலுக்குப் பற்பல நிவந்தங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. குந்தவையும் முதலாம் இராச ராசனுடைய மனைவியும், செம்பியன்மாதேவியின் திரு நட்சத்திர மாகிய சித்திரை கேட்டையில் ஸ்ரீ கைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப் பல நிவந்தங்களை ஏற்படுத்தியுள்ளனர். உத்தம சோழர் ஆட்சியில் அன்னாரது மனைவியாராகிய திரிபுவன மாதேவியாரால் தன் மாமியார் செம்பியன் மாதேவியின் திரு நட்சத்திரத்தில் ஸ்ரீகைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப்பல நிவந்தங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

மேலும், ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பாண்டியர் காலம் வரையில் இக்கோயிலுக்கும் ஏற்படுத்தப் பட்டிருக்கிற பல நிவந்தங்கள் பற்றித் தென் இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சி இலாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் 479-501 வரை உள்ள 22 கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளார்கள். இக்கோயில் செம்பியன்மாதேவியார் காலத்தில் கட்டப்பட்ட தாகத் தெரிகிறபடியால் இது கி.பி. 985 ஆம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இராஜ ராஜன் (கி.பி. 985-1012) இராஜேந்திரன் முதலியவர்களால் தொடர்ந்து கட்டப் பட்டிருத்தல் வேண்டும். இராஜேந்திரன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் இடபவாகன தேவருக்கும் செம்பியன் மாதேவி உள்ளிட்ட வேறு சில விக்கிரங் களுக்கும் நிவேதனத்துக்கு விடப்பட்ட நிலங்களின் வரியை கிராமப் பெருமக்கள் சபை தள்ளுபடி செய்து விட்டதாகத் தெரிய வருகிறது.

இதைப் பார்க்க, செம்பியன் மாதேவியாருக்கு உருவச்சிலை இருப்பதாகக் தெரிகிறது. அது இப்பொழுது கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் பக்த முறையில் காட்சியளிக்கும் நல்லம்மை என்ற உருவமாக இருத்தல் வேண்டும்.

கோயிலுக்குச் சொந்தமாகச் சுமார் 250 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அரசர்களால் இனாமாக அளிக்கப்பட்ட இனாம் நிலங்களில் சுமார் நாற்பது ஏக்கர் இனாம் ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

  செம்பியன்மாதேவி, என்.கோவிந்தசாமி, நிர்வாக அதிகாரி.
  27-3-54.

1.  இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் - சிலப்பதிகாரம் - அரங்ககேற்றுகாதை 37.

2.  வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்- தொல் - பொருள் - செய்யுளியல் - சூத் - 79.

3.  தண்பனை தழீஇய தளரா விருக்கைக் குணபுலங் காவலர் மருமான் - சிறுபாணாற்றுப்படை - 78 , 79.

4.  நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே - புறநானூறு -45.

5.  புலிபொறித்துப் புறம்போக்கி - பட்டினப்பாலை 35.

6.  கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174.
    விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3.
    இராசராசசோழனுலா - 1, 2, 3.

7.  மணிமேகலை - சிறைசெய்காதை 25-40

8.  செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங்கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை

    a.  மணிமேகலை - பதிகம் 9-12.

9.  புறநானூறு 39

10. உயர்விசும்பில்

11. தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை

    a.  சிலப்பதிகாரம் - வாழ்த்துக்காதை.

12. கலிங்கத்துப்பரணி 181.

13. The Modern Badami in the Bijapur District.

14. Mysore Gazetter, Volume II Part II, Pages 708, 709 & 710.

15. Mysore Gazetteer Volume II, Part II Pages 707 & 708.

16. கலிங்கத்துப்பரணி - தா. 181.

17. தத்து நீர்வராற் குருமி வென்றதுந்தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும். - க. பரணி - தா. 185.

18. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

19. கலிங்கத்துப்பரணி - தா. 182.

20. The Tiruvalangadu Plates of Rajendra Chola I South Indian Inscriptions Vol. III No. 205; Kanyakumari Inscription of Vira Rajendra Deva Epigraphia Indica Vol. XVIII No. 4.

21. Ins. 331 of 1927.

22. கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும்

23. விக்கிரமசோழனுலா - கண்ணி 16.

24. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகிய இவ்வரசர் பெருமானது வரலாற்றைச் செந்தமிழில் யான் எழுதியுள்ள முதற் கண்டராதித்த சோழதேவர் என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

25. திருவாரூர் அரனெறி, செம்பியன்மாதேவி (நாகபட்டினம் தாலூகா), தென்குரங்காடுதுறை (S.I.I. Vol. III. No. 144) திருநல்லம் (கோனேரி ராஜபுரம் S.I.I. Vol. III, No. 146, 147 and 151); திருமணஞ்சேரி; விருத்தாசலம்.

26. சுந்தர சோழனது பட்டத்தாசியாகிய வானவன் மாதேவி தன் நாயகன் இறந்த போது உடன்கட்டை ஏறினாள் என்றும் அதுபோது அவ்வம்மைக்கு ஓர் இளங் குழந்தையிருந்ததென்றும் திருக்கோவிலூரிள்ள முதல் இராசராசன் கல்வெட்டு உணர்த்துகின்றது. (செந்தமிழ் - தொகுதி 4 பக். 232.)

27. South Indian Inscriptions Vol. II. No. 6.

28. Mysore Gazetteer Vol. II, Page 947.

29. S.I.I.i Vol. Vi. No. 167.

30. இந்த இராசேந்திர சோழனே நம் வரலாற்றுத் தலைவனாகிய முதலாங் குலோத்துங்கசோழன். இப் பெயர் இவனுக்கு அபிடேகப் பெயராக வழங்கத் தொடங்கிற்று.

31. க, பரணி - தா. 223, 224, 225.

32. S.I.I.Vol.I.No.39.

33. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம், பக் - 26.

34. S.I.I.Vol. VI.No. 201.

35. S.I.I.Vol. III, No 205; Kanyakumari Inscription of Virarajendra Deva - Epi.Ind. Vol. XVIII. No. 4

36. Inscription No. 271 of 1927.

37. S.I.I.Vol. III, No. 68; க.பரணி தா. 239. வயிராகரத்தில் யானைகளும் வைரச்சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று அயினி அக்பரி கூறுகின்றது. இது சக்கரக்கோட்டத்திற்கு அண்மையிலுள்ளது. (Epi. Ind. Vol. X. No. 4)

38. S.I.I. Vol. III, No. 68; க. பரணி - தா. 241.

39. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்ஸராச்சியத்தில் உள்ளது.(Baster State) இஃது இது போது இந்திராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது; சித்திரக்கூடம் (Chitrakut) என்று வழங்கப்படுகின்றது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. (Epi. Ind. Vol. IX. page 178) இதனைத் தலைநகராகக் கொண்டது சக்கரக் கோட்டமண்டலம் ஆகும். குருபால் என்ற விடத்திலுள்ள ஒரு கல்வெட்டு சக்கரக்கூடாதீவரனாம்…. தாராவர்ஷநாமோ நரேவரா என்று கூறுகின்றது. இதனால், சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆட்சி புரிந்தவன் தாராவர்ஷன் என்பது உறுதி எய்துகின்றது. (Do - pages 161 & 179).

40. க.பரணி - தா. 245, 246, 247.

41. சோழவமிச சரித்திரம் பக். 7.

42. S.I.I. Vol. III. page 131.

43. குலோத்துங்கசோழனுலா - வரி 52.

44. 3.  The Historical Sketches of Ancient Dekhan, page 358.

45. The Historical Sketches of Ancient Dekhan, pages 358 & 359.

46. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் - பக். 30.

47. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34.

48. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31.

49. a.  தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் அளத்திபட்ட தறிந்திலை யையநீ.

50. க. பரணி - தா. 372.

51. வில்லது கோடா வேள்குலத்தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும்

52. முதற்குலோத்துங்கசோழன் மெய்கீர்த்தி.

53. தண்ட நாயகர் காக்கு நவிலையிற் கொண்ட வாயிரங் குஞ்சர மல்லவோ

54. க. பரணி - தா. 373

55. க. பரணி - தா. 89.

56. வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர் ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி வெரிநளித் தோடி அரணெனப் புக்க காடறத் துடைத்து நாடடிப் படுத்து

57. முதற்குலோத்துங்கசோழன் மெய்க்கீர்த்தி.

58. விட்ட தண்டெழ மீனவர் ஐவரும் கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ

59. க. பரணி - தா. 368.

60. வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ

61. க. பரணி - தா. 370

62. விக்கிரமசோழனுலா - கண்ணி 24.

63. S.I.I.Vol.III.No. 73.

64. Do. page 144 Foot note.

65. S.I.I.Vol. IV, page 136

66. Epi. Ind. Vol. III, page 337. Indian Antiquary Vol. 18, pages 162 & 166.

67. க. பரணி - தா. 352.

68. க.பரணி - தா. 229.

69. 239

70. கடாரம் மலேயாவின் மேல்கரையில் தென்பக்கத்தில் கெடா என்னும் பேருடன் உள்ளது.

71. The Smaller Leiden Grant.

72. க. பரணி - தா. 286

73. க.பரணி - தா. 519

74. 264. 

75. க. பரணி - தா. 86

76. க. பரணி - தா. 260.

77. க. பரணி - தா. 273.

78. க. பரணி - தா. 272.

79. S.I.I. Vol. III, page 177.

80. போர்த்தொழிலால்

81. ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க் கொண்டதானைத் தியாக சமுத்திரமே

82. விக்கிரமசோழனுலா - கண்ணி - 331

83. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 59, 152, 182, 209, 216, 256, 284.

84. S.I.I. Vol. I. No. 39-A Grant of Virachoda.

85. Do. Do.

86. க.பரணி - தா. 430

87. 522. 

88. விக்கிரமசோழனுலா - கண்ணி - 69.

89. வதிஸ்ரீ கோ இராசகேசரிவன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்துஎயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு. (S.I.I. Vol. No. 862)

90. S.I.I. Vol. III, No. 73.

91. S.I.I.Vol. IV, No. 225.

92. S.I.I. Vol. VI, No. 225.

93. Ins. No. 369 of 1921; M.E.R. 1922; செந்தமிழ்த் தொகுதி 23

94. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 78, 79.

95. தமிழ்ப் பொழில் - துணர் 4-பக் - 320.

96. Ins. 198 of 1919.

97. S.I.I.Vol. II Introduction pages 24 to 27

98. அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம் - S.I.I. Vol. II,Ins, No. 4; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராசபயங்கர வளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப் பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.

99. க. பரணி - தா. 134, 243, 582.

100. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 48, 49.

101. The Historical Siketches of Ancient Dekhan, pages 371, 372 & 374.

102. S.I.I. Vol. II. Nos. 4 & 5.

103. S.I.I. Vol. III, No. 9.

104. S.I.I. Vol. II, Nos. 98 & 99.

105. The Historical Sketches of Ancient Dekhan, page 348.

106. Do. pages 357 & 358.

107. a.  S.I.I. Vol. III, No. 96.

108. b.  Do. page 229 Foot - note.

109. S.I.I. Vol. II, Ins. Nos. 36, 41, 85.

110. S.I.I. Vol. II, Ins Nos. 35, 51, 84.

111. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக். 53, 55.

112. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக். 54.

113. Annual Report on Epigraphy of the Southern Circle for the year ending 31st March 1916, pages 115 & 116.

114. திருவைகாவூரிலிருந்து எடுக்கப்பெற்றதும் அவ்வூரிலுள்ள திருக்கோயில் முதர் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பெற்ற செய்தியை யுணர்த்துவதும் ஆகிய ஒரு கல்வெட்டு இப்புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றுளது.

115. a.  S.I.I. Vol. III, INs. 139, 51-A

116. b.  Do. Vol. II, Ins. No. 65.

117. S.I.I. Vol. III, Nos. 49, 57 & 66.

118. Ins. 333, 335 & 343 of 1918 (Madras Epigraphical Report).

119. The Historical sketches of Ancient Dekhan page 336.

120. Annual Report on South Indian Epigraphy for 1918-19, part II, para 2.

121. Foreign Notices of South India, p. 59.

122. பாண்டியன் வரலாறு. பக்கம் 116

123. மணிமேகலை. 25. 176 - 200

124. சென்னிவெண்குடை நீடநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல் வளந்தர இயல்பினிலளித்துப் பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து புணரிதன்னையும் புனிதமாக்குவதோர் நன்னெடும் பெருந்தீர்த்தமுன்னுடைய நலஞ் சிறந்தது வளம் புகார் நகரம்.

125. (பெரிய - இயற்பகை - 1)

126. தமிழிலக்கிய வரலாறு. இருண்டகாலம். பக். 20.21