சங்க காலப் புலவர்கள்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : சங்க காலப் புலவர்கள் (அப்பாத்துரையம் - 5)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 16+304 = 320

  விலை : 400/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

கல்பனா சேக்கிழார்

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

சங்க காலப் புலவர்கள்

முதற் பதிப்பு - 1945

இந்நூல் 2003 இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது

சங்க காலத் தமிழகம்

தமிழகம்

தென்இந்தியாவில் வேங்கட மலைக்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதி முழுவதும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் மொழி பேசப்பெற்றதாதலின், ‘தமிழகம்’ எனப் பெயர் பெற்றது. இத்தமிழகம் அக்காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைவிடச் சிறந்த நாகரிக நிலையில் இருந்தது என்பது, இந்நாட்டுடன் வாணிகம் செய்து அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்பு களாலும் இந்திய வரலாற்றாலும் தமிழ் நூல்களாலும் அறியக் கிடக்கிறது. இதற்குச் சிறந்த காரணம், இத்தமிழகம் இந்தியாவின் தென் கோடியில் இருப்பதேயாகும். வட இந்தியாவில் அலெக்ஸாண்டர் காலமுதல் ஓயாத படையெடுப்புகள் நடந்த வண்ணம் இருந்தன. அவற்றால் அங்குப் பற்பல புதிய மக்கள் வந்து குடியேறி நாடாண்டனர்; அவர்களிடையே பல திறப்பட்ட நாகரிகங்கள் பரவின; ஆதலால், ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட நாகரிக நிலை வட இந்தியா முழுவதிலும் பரவி இருக்கக் கூடவில்லை. இப்படையெடுப்புகளால் வட இந்திய மொழிகளும் பற்பல மாறுதல்களை அடைந்தன. இத்தகைய படையெடுப்புகளும், புதிய பற்பல நாட்டவர் கூட்டுறவும், கலந்துரை வாழ்க்கையும் தமிழகத்தில் ஏற்படவில்லை. அதனால் தமிழகம் ஒரு தனிப்பட்ட நாகரிகப் போக்கிலேயே பல நூற்றாண்டுகளைக் கழித்தது.

தமிழகப் பிரிவுகள்

தமிழகம் தொண்டை நாடு, நடு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேரநாடு, கொங்குநாடு என ஆறு பிரிவுகளாக இருந்தது. எனினும், சேர, சோழ பாண்டிய நாடுகளே சிறப்புப் பெற்று வந்தன. ஏனைய மூன்றையும் ஆண்டவர் பலராவர். அவர் சேரர், சோழர், பாண்டியர் என்பவருள் ஒருவர்க்குக் கட்டுப்பட்டும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தனர்.

தொண்டை நாடு

இஃது இக்காலத்துச் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு ஜில்லாக்களையும், தென்ஆர்க்காடு - சித்தூர் ஜில்லாக்களின் சில பகுதிகளையும் கொண்டதாகும். இந்நாடு மலைகளும் காடுகளும் நிறைந்த நிலப்பரப்புடையது; பாலாறு முதலிய சில யாறுகளே பாயப் பெற்றது. இதன் வடபகுதியைத் திரையன் என்பவன் ஆண்டு வந்தான். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இளந்திரையன் என்பவன் அரசாண்டான். தொண்டை நாடு காடுகள் செறிந்திருந்ததால், அங்குக் குறும்பர் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இங்குக் காஞ்சியைப் போன்ற பெரிய நகரங்கள் பல இல்லை. இந்நாட்டிற்குக் கடன்மல்லை, சோபட்டினம் (மரக்காணம்), பொதுசா1 என்பன துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. மல்லை சிறந்த துறைமுக நகரமாக இருந்தது.அங்கு மாட மாளிகைகள் இருந்தன; கப்பல்கள் வந்து தங்குவதற்கேற்ற துறைமுகம் செவ்வையாக அமைந்திருந்தது. மேற்கு நாடுகளிலிருந்து குதிரைகள் வந்து இறங்கின. இத்தொண்டை நாடு சங்க கால முதலே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது.

இருபத்து நான்கு கோட்டங்கள்

1.  புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம்

2.  எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம்.

சோழர் ஆட்சி

கி.பி. முதல் நூற்றாண்டில் தொண்டை நாட்டைக் கரிகாற் சோழன் கைப்பற்றினான் என்று நூல்கள் கூறுகின்றன. மேலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மணிமேகலை என்னும் நூலால் அறிகிறோம். அப்பொழுது அரசனாக இருந்தவன் சோழன் நெடுமுடிக்கிள்ளி என்பவன். அவன் தம்பியான இளங்கிள்ளி என்பவன் தொண்டை நாட்டைச் சோழர் பிரதிநிதியாக இருந்து அரசாண்டான். தொண்டை நாடு முதலில் தனித்திருந்தது; பின்னர்ச் சோழர் ஆட்சிக்கு உட் பட்டது என்பது தெரிகிறது.

நடுநாடு

இது பாலாற்றுக்கும் சிதம்பரத்திற்கும் வடக்கே பாயும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நாடாகும். இதனில் கெடிலம், தென்பெண்ணையாறுகள் பாய்கின்றன. இதனைச் சிறப்புற ஆண்டவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலையமான்கள் ஆவர்.

சோழ நாடு

சோழ நாடு என்பது சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள வெள்ளாறு முதல் பாண்டிய நாட்டிற்கு வடக்கேயுள்ள வெள்ளாறு வரை உள்ள நிலப்பரப்பாகும். இந்நாடு ஏறத்தாழச் சமவெளியாக அமைந் திருப்பதாகும். இரண்டொரு குன்றுகளைத் தவிர இந்நாட்டில் மலைகள் இல்லை; காடுகள் இல்லை. இதன்கண் “பொய்யாதளிக்கும் பொன்னி” என்று புலவரால் ஏத்தெடுக்கப் பெற்ற காவிரியாறு தன் துணையாறுகளுடனும் கிளையாறுகளுடனும் வற்றாது பாய்ந்து வருகின்றது. இந்தப் பல ஆறுகளால் சோழ நாடு மிக்க வளம் பெற்று, ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்று புகழ் பெறுவதாயிற்று.

நகரங்கள்

சோணாட்டின் தலைநகரங்களுள் பழமையானது உறையூர். இது திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த சிறுபகுதியாக இன்று இருக்கின்றது.இத்துடன் காவிரிப்பூம்பட்டினம் என்பதும் தலைநகரமாக இருந்தது. பின்னது சோணாட்டின் சிறந்த துறைமுக நகரமாகவும் விளங்கியதாகும். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இத் துறைமுக நகரம் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதைச் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை என்னும் பழைய நூல்களால் அறியலாம். இதற்கு அடுத்துத் துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினம் ஆகும்.

சோழ மன்னர்

இந்த வளநாட்டைத் தொன்று தொட்டு ஆண்டு வந்தவர் சோழர் எனப்பட்டனர். அவர்கள் வளமிக்க நாட்டை ஆண்டதால் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர்; நிலத்தைக் கிள்ளி (உழுது) பயிரிட்டமையால், ‘கிள்ளி’ எனப்பட்டனர் போலும்! இவர்களுட் பலருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காண்கின்றன. அவருள் பலர் கவிபாடும் ஆற்றல் பெற்ற பெரும்புலவராக இருந்தனர்; வீரம் செறிந்த வேந்தர் பலராவர். அவருட் சிறந்தவன் கரிகால் வளவன். இவன், சேர - பாண்டி யரையும் சிற்றரசர் பலரையும் வென்று சிறந்தவன்; முன் சொன்னவாறு தொண்டை நாட்டை வென்று சோழப் பெருநாட்டை விரிவாக்கியவன்; இவனது காலத்திற் சோழப் பேரரசு வடபெண்ணையாறுவரை பரவி இருந்தது என்னலாம்.

இச்சோழ வேந்தர்க்குப் ‘புலிக்கொடி’ உரியதாக இருந்தது. இவர்கள் ஆத்தி மாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர். இவர்களிடம் சிறந்த யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை, கப்பற்படை என்பன இருந்தன. சோழ வேந்தர் வளவர் ஆதலின், கொடையிற் சிறந்து விளங்கினர்; புலவர்களைப் புரந்து வாழ்ந்தனர்.

பாண்டிய நாடு

இது சோணாட்டின் தென் எல்லையான வெள்ளாற்றுக்கும் கன்னியாகுமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். இதன்கண் இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் அடங்கும். இந்நாடு குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலப்பண்புகளையும் தன் அகத்தே பெற்றது. இதனில், ‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்று புலவர் பாராட்டுதற்கு உரிய வையை யாறும், தாமிரபரணி என்னும் தண்புனல் கொண்டுள்ள பெரியாறும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகின்றன. இந்நாட்டில் மலை நாட்டுப் பண்டங்களும் காட்டு நிலப் பண்டங்களும் மருதநிலப் பண்டங்களும் கிடைக்கின்றன.

நகரங்கள்

இந்நாட்டின் தலைநகரம் மதுரை. இதன் பழைய பெயர் ஆலவாய் என்பது. மதுரையிற்றான் அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் இருந்தது. கொற்கை, காயல், தொண்டி என்பன அக்காலத்துத் துறைமுக நகரங்கள் ஆகும். கொற்கை பெரிய துறைமுகத்தை உடைய நகரமாகும். அது முத்துக்குப் பெயர் பெற்றது. முத்துகள் ரோம ராஜ்யத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பாண்டிய மன்னர்

பாண்டிய நாட்டைப் பண்டு தொட்டே அரசாண்டு வந்தவர் பாண்டியர் எனப்பட்டனர். அவர் செந்தமிழில் ஈடும் எடுப்பும் இல்லாத பற்றுடையவராக இருந்தனர்; பெரும் புலவராகவும் விளங்கினர். பாண்டி மாதேவியர் சிலரும் கவிபாடும் ஆற்றல் பெற்று வாழ்ந்தனர். பாண்டியர் தங்கள் கோநகரத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை வைத்து ஆதரித்து வந்தனர்; நாட்டில் இருந்த புலவர்கள் செய்த பாக்களையும் நூல்களையும் பாராட்டிப் பரிசில் ஈந்து களித்தனர். பாண்டியருள் மிகச் சிறந்தார் இருவர். ஒருவன் இளைஞனாக இருந்தபொழுதே தன்னை எதிர்த்த சோழனையும் சேரரையும் சிற்றரசர் ஐவரையும் ‘தலையாலங்கானம்’ என்ற இடத்தில் வென்று, ‘தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்’ என்று பெயர் பெற்றவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன். மற்றவன் ஆரியப் படையை வென்று, ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ எனப்பட்டவன். இவனும் கவிபாடுதலில் வல்லவன். கோவலனைக் கொல்வித்தவன் இவனே ஆவான்.

சங்க காலம்

பாண்டிய மன்னரால் பாதுகாத்து வளர்க்கப்பெற்ற தமிழ்ச் சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி.பி. 400 என்னலாம் என்பது ஆராய்ச்சியாளர் கொள்கை.இதுவே சங்கத்தின் இறுதிக் காலமாகும். அதன் தோற்றம் நாம் கூறக்கூடும் நிலையில் இல்லை. அச்சங்கத்தில் செய்யப்பட்ட நூல்கள் ‘சங்க நூல்கள்’ எனப் பெயர் பெறும்.

சங்க நூல்கள்

இவை - தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலியன. இவற்றுள் தொல்காப்பியம் சிறந்த பண்டைய இலக்கண நூல். ஏனைய ஒன்பதும் புலவர் பலர் - பல்வேறு காலங்களில் - பல்வேறு அரசரையும் சிற்றரசரையும் வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களின் தொகுதிகளாகும். சிலப்பதிகாரம் என்பது கோவலன் வரலாறு கூறும் காவியம். அதனைச் செய்தவர் சேர இளவரசரான இளங்கோவடிகள் என்பவர். மணிமேகலை என்பது கோவலன் மகளான மணிமேகலையைப் பற்றிய காவியம். அதனைப் பாடியவர் சீத்தலைச் சாத்தனார். திருக்குறள் ஒப்புயர்வற்ற நீதிநூல். அதனைச் செய்த பெரும்புலவர் திருவள்ளுவர் என்பவர்.

சேர நாடு

இன்றைய திருவாங்கூர்2 கொச்சி நாடுகளும் மலையாளம் ஜில்லாவும் சேர்ந்த நிலப்பகுதியே பழைய சேர நாடு என்பது. இது முழுவதும் மலைநாடு; அதனால் ‘மலையாளம்’ எனப் பெயர் பெறும். இங்கு வானளாவிய மலைகளும் அம்மலைகளில் உள்ள பெருங்காடுகளும் காணத்தக்க காட்சிப் பொருள்கள் ஆகும். இங்குச் சந்தனம், அகில்,தேக்கு முதலிய உயரிய மரவகைகள் ஏராளமாகப் பயிராகின்றன. இவையும் யானைத் தந்தம், மிளகு முதலியனவும் மிகுதியாக அயல்நாடுகட்கு ஏற்றுமதியாயின.

நகரங்கள்

சேரநாட்டுத் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. அஃது இப்பொழுது கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் பாழ்பட்ட சிற்றூராகக் காண்கிறது. அது சங்க காலத்தில் பெருஞ் சிறப்புற்ற நகரமாக விளங்கியது. முசிறி, தொண்டி என்பன சேரநாட்டுத்துறைமுக நகரங்கள் ஆகும். சேரநாடு கி.மு. 1000 முதலே கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது.

சேர வேந்தர்

மலைநாட்டைப் பன்னெடுங் காலமாக ஆண்டு வந்தவர் சேரர் எனப்பட்டனர். அவர் உயர்ந்த வானளாவிய மலைகளைப் பெற்றிருந்த காரணத்தால் ‘வானவர்’ எனப் பெயர் பெற்றனர். அவருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் என்போர் புகழ்மிக்க பேரரசர் ஆவர். செங்குட்டுவன் தம்பியாரே, சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் என்பவர். செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலைநாட்டுக் கோவில் எடுக்க வடநாடு சென்ற இமயமலையிலிருந்து கல் கொணர்ந்தவன்; கோசல நாட்டில் தன்னை எதிர்த்தாரை வென்று மீண்ட வீரன். இவன் வரலாற்றைச் சிலப்பதிகாரத்திற் காணலாம். சேர மன்னர் புலவர் பலரைப் போற்றி ஆதரித்து வந்தனர். ‘பதிற்றுப்பத்து’ என்பது சேர அரசர் பதின்மரைப் பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பட்டதாகும். அந்நூலிலிருந்து அவர்தம் தமிழ்ப் பற்று, வீரம், கொடைத்திறம், அரசியல் நேர்மை முதலியவற்றை நன்கறியலாம்.

கொங்கு நாடு

இது சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்ட பகுதியாகும். இது பெரும்பாலும் மலை நாடாகும். “இந்நாட்டின் மலைகளில் கொங்கு (தேன்) அடைகள் மிக்கிருந்தது பற்றி இந்நாடு ‘கொங்குநாடு’ (தேன் நாடு) எனப் பெயர் பெற்றது” என்று அறிஞர் கூறுவர். சங்க நூல்களில் புகழ்ந்து பாராட்டப்பெற்ற தகடூர் நாடு, கொல்லிமலை நாடு முதலியன இந்நாட்டிற்றான் இருக்கின்றன. பழைய ‘தகடூர்’ என்பது இக்காலத்தில் ‘தர்மபுரி’ எனப்படுகிறது. அதற்கு ஏறத்தாழ ஐந்து கல் தொலைவில் அதியமான் கோட்டை இருந்து அழிந்தமைக்கு உரிய அடையாளங்கள் இன்றும் காணலாம். வல்வில் ஒரி கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தவன். அவனது உருவச்சிலை கொல்லிமலைக்கு எட்டுக்கல் தொலைவில் உள்ள இராசிபுரம் விஸ்வநாதர் கோவிலில் காணலாம். கொங்கு நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகட்கு அண்மையில் இருப்பதால், இதனைக் கைப்பற்ற ஒவ்வொருவரும் முனைந்து வந்தனர்.இந்த முனைப்பினால் அதியமானுக்கும் அயல்நாட்டு வேந்தர்க்கும் ஓயாத போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. இப்போராட்டம் சங்க கால முதல் இராஜராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர் - பாண்டியர் காலம்வரை நடைபெற்று வந்தது.

குறுநில மன்னர்

இங்குக் கூறப்பெற்ற சேர, சோழ, பாண்டியர் என்பவர் முடியுடை மூவேந்தர் என்றும், ‘நெடுநில மன்னர்’ என்றும் கூறப் பெறுவர். மற்றையோர், ‘குறுநில மன்னர்’ (சிற்றரசர்) எனப்படுவர். ஒவ்வொரு பேரரசன் நாட்டிலும் சுயாட்சி பெற்ற குறுநில மன்னர் இருந்து வந்தனர். ஒரு சிலர் தம் பேரரசன் வேறொரு பேரரசனைத் தாக்குகையில்,தம் பேரரசன் சார்பில் நின்று போர்புரிவர். தனிப்பட்ட சிற்றரசர் இருவர், ஒருவருக் கொருவர் போரிடலும் உண்டு. இக்குறுநில மன்னர் கொடையிற் சிறந்த வள்ளல்களாக விளங்கினமை கவனிக்கத்தக்கது. இவர்கள் கொடுத்தலில் வெறி கொண்டவர்; அளவறிந்து கொடுத்திலர். இவ்வாறு இவர், தம்மை நாடிவந்த பாணர், விறலியர், பொருநர், புலவர் முதலியோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப அளித்து இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழையும் முழுமனத்துடன் வளர்த்து வந்தனர்.

சங்க கால வள்ளல்கள்

நெடுநில மன்னரும் குறுநில மன்னரும் தம் தாய்மொழியைப் பேணும் முயற்சியில் தளர்ந்தவர் இல்லை. எனினும், வரையாது அளித்தலில் முடிமன்னரைவிடச் சிற்றரசரே சிறந்து விளங்கினர். அச்சிற்றரசர் மேற்கூறப்பெற்ற சங்க காலத்தில் பலராக விளங்கினர். அவருள் பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், ஆய், நள்ளி, குமணன் என்பவர் சிறந்தோர் ஆவர். பாரி என்பவன் பாண்டிய நாட்டில் பறம்புமலை3யைத் தலைநகராகக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவன். அவன் நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அவனது அவைப் புலவர் கபிலர் என்பவர் காரி என்பவன் தென் ஆர்க்காடு ஜில்லாவில் உள்ள திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்ட மலை நாட்டை ஆண்டு வந்தவன். அதனால் அவன் ‘மலையமான்’ எனப்பட்டான் அவன் சிறந்த போர் வீரன்; கொடை வள்ளல். ஓரி என்பவன் சேலம் ஜில்லாவில் கொல்லிமலைப் பகுதியை ஆண்டவன். அவன் சிறந்த வள்ளல் சிறந்த வில்லாளி; அதனால் ‘வல்-வில்-ஓரி’ எனப் பெயர் பெற்றான். அதிகன் என்பவன் முற் சொன்ன சேலம் ஜில்லாவில் தகடூர் நாட்டை ஆண்டு வந்தவன்; அஞ்சாத பெருவீரன்; வரையாது வழங்குவதிலும் சிறந்தவன். அவன் ‘அதியமான்’ என்றும் கூறப்பட்டான். அவன் வரலாற்றை ஒளவையார் பாடல்களால் அறியலாம். பேகன் என்பவன் மதுரை ஜில்லாவில் பழநிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். பழநியில் இன்றும் ஆய்க்குடி (ஆவிக்குடி) என்னும் சிற்றூர் இருக்கின்றது. அவனைப் பற்றிய பல பாடல்கள் சங்க நுல்களிற் காணலாம். அவனது சிறந்த நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்து அவனை மகிழ்வித்தவர் பரணர் என்னலாம். ஆய் என்பவன் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள பொதிகை மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். அவன் மிகச் சிறந்த கொடைவள்ளல். அவனைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியவர் உறையூர் - ஏணிச்சேரி முடமோசியார் என்பவர். நள்ளி என்பவன் தோட்டிமலை நாட்டை ஆண்ட சிற்றரசன். அந்நாடு பாண்டிய நாட்டை சேர்ந்தது. அவன் தன் பெயர் வெளிப்படுவதை விரும்பாது அறம் செய்யும் உளப் பான்மை உடையவன். அப்பெருமகனைப் பற்றி வன்பரணர் முதலிய புலவர் பலர் பாராட்டிப் பாடியுள்ளனர். குமணன் என்பவன் கோயமுத்தூர் ஜில்லா, உடுமலைப் பேட்டைத் தாலுகாவில் உள்ள ‘முதிரமலை’ நாட்டை ஆண்டு வந்தவன். அவன் தன் கொடைத் தன்மைக்காகத் தம்பியால் வெறுக்கப்பட்டுக் காடு சென்றவன் எனின், அவனது கொடைச் சிறப்பை என்னென்பது!

இங்ஙனம் தன்மை அண்டி ‘இல்லை’ என்றோர்க்கு ‘இல்லை’ என்று உரையா இதயம்படைத்த இப்பெரு மக்கள் பலராற்றான் சங்க காலத் தமிழ் செழிப்புற்று வளர்ந்தது. இவர் புலவரது வறுமைப் பிணியைப் போக்கினர், அதனால் செழுமையுற்ற புலவர் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி இவர்களை மகிழ்வித்தனர். ஆதலால் நமது தாய்மொழி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சிபெற்று வந்தது.

புலவர்கள்

இப்பொழுது கிடைத்துள்ள சங்க நூற்களைக் கொண்டு ஆராயின், சங்ககாலப் புலவர் ஏறத்தாழ நானூற்றுவர் என்னலாம். இப்பெரு மக்கள் பாடிய எல்லாப் பாக்களும் கிடைத்தில. அவை கிடைத்திருப்பின், நமது நாட்டு வரலாறும் தமிழ் மொழியின் மேம்பாடும் மிக நன்றாக உணர வழியுண்டாகி இருக்கும். இப்புலவர் பெருமக்கள் தமிழகம் முழுவதிலும் பரந்துபட்டுள்ள பல ஊர்களைச் சேர்ந்தவர்கள்; பல மரபினர்; பல தொழிலினர்; பல சமயத்தைச் சேர்ந்தவர்; பல்வேறு காலத்தவர். இவருள் பேரரசரைப் பாடினோர் சிலர்; சிற்றரசரைப் பாடினோர் பலர்; இருவகை அரசரையும் பிறரையும் பாடினவர் பலர். இப்புலவருள் ஆண்பாற் புலவரும் உளர்; பெண்பாற் புலவரும் உளர். தமிழ்நாட்டு எல்லா வகை மரபுகளையும் சேர்ந்தவர் புலவராக இருந்திருக்கின்றனர். வெண்ணிக் குயத்தியார், ஒளவையார் (பாணர் மரபு), பேய் மகள் இளஎயினி5, காவற்பெண்டு6 என்பவரும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினர் எனின், சங்க காலத் தமிழகக் கல்வி நிலையைத் தெளிவாக உணரலாம். அஃதாவது, அக்காலத்தில் எல்லா வகுப்பினரும் நன்றாகத் தமிழ்க் கல்வி பயின்றிருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இங்ஙனம் சிறந்து விளங்கிய புலவர் பெருமக்கள் சிலருடைய வரலாறுகளை அடுத்து வரும் பகுதிகளிற் காணலாம்.

அடிக்குறிப்புகள்

1.  இன்றைய புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேட்டில் புதையுண்டிருக்கும் நகரம் பழைய ’பொதுசா’வாக இருத்தல் கூடும். அங்கு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
2.  இதன் பழைய பெயர் ‘திருவாழும் கோடு’ என்பது. அது திருவாங்கூர் என மருவி வழங்குகிறது.
3.  இஃது இப்பொழுது பிரான்மலை எனப் பெயர் பெறும்.

பிசிர் ஆந்தையார்

** 1. கல்வியும் மண வாழ்க்கையும்**
‘பிசிர்’ என்னும் ஊர்

பாண்டிய நாட்டுக் கடற்கரையை அடுத்த ஊர்களில் ஒன்று பிசிரூர் என்பது. ‘பிசிர்’ என்பது அலைத் துளிக்குப் பெயராகும். ‘பிசிரூர்’ என்பது ‘அலைத்துளிகள் தாக்கப்பெற்ற ஊர்’, அஃதாவது, ‘கடற்கரைக்கண் உள்ள ஊர்’ எனப் பொருள்படும். இப் ‘பிசிர் ஊர்’ என்ற பெயர், ’பிசிர்’1 எனப் பிற்காலத்தில் குறைந்து வழங்கலாயிற்று. இம்மூதூர், இன்றுள்ள இராமநாதபுரம் ஜமீனில் கடற்கரைக்கு அண்மையில் உள்ள பிசுக்குடி என்னும் ஊராக இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர்.

ஆந்தையார்

இது புலவர் பெயராகும். பழைய நாட்களில் இத்தகைய பெயர்களே வழக்கில் இருந்தன. ‘ஆந்தை’ என்பது இயற்பெயர். ‘ஆர்’ என்பது உயர்வைக் குறிக்கும் விகுதியாகும். சங்க காலத்தில் இப்பெயருடைய புலவர் பலர் இருந்தனர் என்பதை - சிறைக்குடி ஆந்தையார், ஓதல் ஆந்தையார், அஞ்சில் ஆந்தையார் முதலிய பெயர்களைக் கொண்டு அறியலாம். ஆந்தையார் பலராகவே, அவர்களுக்குள் வேறுபாடு காட்ட, அவர்தம் ஊர்ப் பெயரை முன்னர்ச் சேர்த்து இங்ஙனம் வழங்கலாயினர். இம்முறைப்படி அமைந்ததே ‘பிசிர் ஆந்தையார்’ என்னும் பெயரும் ஆகும். அஃதாவது, “பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார்” என்பது பொருளாகும்.

இளமையும் கல்வியும்

பிசிராந்தையார் இன்ன மரபினர் என்பது தெரியவில்லை. சங்கத்துச் சான்றோருள் பலர் மரபு அறியக்கூடாத நிலையில் இருந்திருக்கின்றனர். அவர் இளமையில், அக்காலத்திற்கு ஏற்ற முறையில், தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தக்க ஆசிரியரிடம் கற்றார். அவர்,

“கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”

என்ற திருக்குறளின்படி, கல்வியறிவுடன் சிறந்த தெய்வ பக்தியும் உடையவராக விளங்கினார். ஆந்தையார் சிறந்த ஒழுக்கம் உடையவராகவும் திகழ்ந்தனர். ஆதலின், அறிவு - ஒழுக்கங்களிற் சிறந்த சான்றோர் அவரை மதித்து நடந்து வந்தனர்.

இல்லற வாழ்க்கை

பிசிராந்தையாருடைய நல்ல இயல்புகட்கு ஏற்றவாறு அவரது இல்லத்து உறுப்பினர் காணப்பட்டனர். அவரது மனைவியார் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவர்; ஆந்தையாரது நற்பேறே பிறப்பெடுத்து வந்தாற் போன்றவர்; கணவர் சொற்படி நடப்பவர்; தாம் ஈன்ற மக்கட்குக் கல்வியறிவு தாமே புகட்டி வந்தவர்; அவர்களை இளமைதொட்டே நல்வழியில் நடக்குமாறு செய்து வந்தவர். பிள்ளைகளும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற மறை மொழியை எண்ணிப் பெற்றோரைக் கண்கண்ட கடவுளராகக் கருதி வழிபட்டு வந்தனர். இங்ஙனம் இல்லத்து அரசியாகிய மனைவியும் மக்களும் சிறந்த ஒழுக்க முடையவராய்ப் புலவர் பெருமான் விருப்பம் போல் நடந்துவந்த காரணத்தால், புலவரது இல்லறம் நல்லறமாக நடந்து வந்தது.

** 2. பழகா நட்பு**
கோப்பெருஞ் சோழன்

ஆந்தையார் பாண்டிய நாட்டில் பண்புடன் வாழ்ந்த காலத்தில், சோழ நன்னாட்டைக் கோப்பெருஞ் சோழன் என்ற அரசர் பெருமகன் ஆண்டு வந்தான். அவனது தலைநகரம் உறையூர். சோழவேந்தன் சிறந்த கல்விமான்; நல்ல ஒழுக்கம் உடையவன்; பல நற்பண்புகட்கு இருப்பிடமானவன். அவன்,

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால்,
‘யான்உயிர்’ என்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”

என்ற அறவுரையை நன்கறிந்தவன்; ஆதலின், மன்னுயிரைத் தன் உயிர்போல மதித்து நடந்து வந்தான். சோணாட்டுக் குடிகள் தம் அரசனுடைய நற்பண்புகளைப் பாராட்டி, அவனது செங்கோன்மையைப் புகழ்ந்து அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அரசன் நல்ல தமிழ்ப் புலவன் ஆதலின், பொத்தியார், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பலரை ஆதரித்து வந்தான். புலவர்கள் அவன்பால் பரிசில் பெறுதலை விட அவனது நட்பைப் பெறவே பெரிதும் விழைந்தனர்.

பழகாத நட்பு

இத்தகைய செங்கோற் சோழனைப்பற்றி நமது புலவர் பெருமானான பிசிராந்தையார் கேள்வியுற்றார். நல்லாரை நல்லாரே நாடுவர். அல்லவா? பிசிராந்தையார் சோழர் பெருமானைப் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதல் அவனை நேரிற் காண வேண்டும் என்று விரும்பினார்; அஃது உடனே கைகூடவில்லை. எனினும், அவர் நாள்தோறும் அவனை நினைந்து நினைந்து மகிழ்வார்; ‘அப்பெருமானை என்று காண்போம்!’ என்று ஏங்குவார். புலவர், சோழனைப் பற்றிக் கேள்விப்பட்டவாறே, சோழ மன்னவனும் புலவர் பலர் வாயிலாகப் பிசிராந்தையாரைப் பற்றிக் கேள்வியுற்றான்; அவரைக் காண வேண்டும், கண்டு அளவளாவ வேண்டும் என்று அவாவினான். அதன் காரணமாக அரசனும் அரும்புலவரை நாள்தோறும் எண்ணி வருவானாயினன். ‘இஃது என்ன வியப்பு! ஒருவரை ஒருவர் பாராமல், ஒருவரோடு ஒருவர் பழகாமல் உள்ளத்து உணர்ச்சியால் நட்புக் கொண்டுவிட்டனரே!’ எனின், இதற்கு விடையாகப்

“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.”

என்று திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளியதைக் காண்க.

அன்னத்தைத் தூது போக்குதல்

ஒருநாள் மாலை, பிசிராந்தையார் கடற்கரை அருகில் உலவிக் கொண்டிருந்தார்; அப்பொழுது, தெற்கே சென்று மீண்டு வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் அன்னச்சேவல் ஒன்றைக் கண்டார். அதனைக் காணும்வரை அவர் கோப்பெருஞ் சோழனையே நினைந்து கொண்டிருந்தார். ஆதலால், அதனைக் கண்டதும், அதனை அவன்பால் தூதுவிட விழைந்தார். விழைந்து, அதனை நோக்கி,

“அன்னச் சேவலே, அன்னச் சேவலே, இம்மாலைக் காலத்தில் முழு நிலாத் தோன்றியுள்ளது. அது தன்னாட்டைச் செங்கோல் வழுவாது காத்து வரும் சீரிய மன்னவன், மலர் முகத்தைப் போலக் காண்கின்றது. இம்மாலைப் பொழுது தனித்து நிற்பவரை வருத்துவ தாகும். நீ இத்தகைய மாலை நேரத்தில் குமரித் துறையில் அயிரை மீன்களைத் தின்று, வட திசையில் உள்ள மலைக்குப் போகின்றனை; ஆதலின், ஒன்று சொல்வேன்; அன்புகூர்ந்து அதனைச் செய்வாயாக. குமரித்துறைக்கும் நீ செல்லும் வடமலைக்கும் இடையில் சோழ நாடு இருக்கின்றது. அங்கு நீ தங்க நேருமாயின், அதன் தலைநகராக வுள்ள உறையூரில் தங்குக; தங்கி, சோழர் பெருமானது அரண்மனை மேல் மாடத்தில் பறந்து இறங்குக. நீ உனது வருகையை அரண்மனைக் காவலர்க்கு அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. யாதொரு தடையும் இன்றி அரண்மனையுள் புகலாம்; புகுந்து எனது உள்ளத்தைத் தன் நற்குணங்களால் கொள்ளை கொண்ட கிள்ளி (கோப் பெருஞ் சோழன்) யைக் காண்க; அவன் கேட்கும்படியாக, ‘யான் பெரிய பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையுடைய அடியின்கீழ் வாழ்வேன்’ என்று சொல்லுக. அப்பேரரசன் அது கேட்டவுடன் அகமகிழ்ந்து உனது பெடை அன்னம் அணிந்து கொள்ளத்தக்க சிறந்த நகை ஒன்றைத் தருவன்; பெற்று மகிழ்வாயாக” என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்றைப் பாடினார். அப்பாடல் புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ளது. நீங்கள்அதனைப் படித்து மகிழலாம். இங்ஙனம் புலவர் எப்பொழுதும் கோப்பெருஞ் சோழனைப் பற்றிய நினைவு உடையவராகவே விளங்கினார்.

புலவருக்கு அறிவித்தல்

ஒருநாள் பிசிராந்தையார் பிறிதொரு புலவருடன் அளவளாவிக் கொண்டிருந்தார். வந்த புலவர் ஆந்தையாரிடம் வள்ளல்கள் பலரைப் பற்றிக் கூறிவிட்டு, “உங்களுடைய உள்ளத்தைக் கவர்ந்த தலைவன் யாவன்?” என்று கேட்டார். உடனே ஆந்தையார், அவரை நோக்கி,

“என்னுடைய இறைவன் யார் என்றா கேட்கின்றீர்? எனது கருத்தைக் கவர்ந்த காவலன் கோப்பெருஞ் சோழன். அவன் பாணரது பசிப்பிணியைப் போக்குபவன்; புலவரது வறுமை நோயை நீக்குபவன்.அப்பெருமகன் வளமிக்க சோழ நாட்டில் உறையூர் என்னும் பாடி வீட்டில் தங்கி இருக்கின்றான்; எப்பொழுதும் குற்றமற்ற பொத்தியார் என்னும் பைந்தமிழ்ப் புலவருடன் பழகி வருபவன்,” என்று கூறிச் சோழ வேந்தனுடைய தமிழ்ப் பற்றையும் இசைத் தமிழைப் புரக்கும் உள்ள நிலையையும் உள்ளவாறு உரைத்து மகிழ்ந்தார். அச்சோழனிடமிருந்து ஒரு நன்மையையும் பெறாது, அவனுடன் ஒரு சிறிதும் பழகாது, அவனை நேரிற் காணாது பாண்டிய நாட்டில் வாழ்ந்துவந்த ஆந்தையார், இங்ஙனம் அவனைப் பற்றிப் பாராட்டினர் எனின், அவரது உள்ளப் புணர்ச்சியை என்னெனப் பாராட்டுவது!

** 3. புலவரும் பாண்டியனும்**
பாண்டியன் அறிவுடைநம்பி

பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டைக் காத்துவந்த பாண்டியன் சிறந்த ஒழுக்கம் உடையவன்; கல்வி, கேள்விகளில் வல்லவன்; அறிவு ஆற்றல்களில் மிக்கவன். அதனால் குடிமக்கள் அவனை ‘அறிவுடை நம்பி’ என்று அழைக்கலாயினர். அப்பெயரே வழக்குப் பெறலாயிற்று. பரந்த சிந்தையும் விரிந்த நோக்கமும் கொண்ட அப்பேரரசனிடம் ஆந்தையார் போன்ற சான்றோர் நெருங்கிப் பழகுதல் இயல்புதானே! பாண்டியன் அறிவுடை நம்பியும் செந்தமிழ்ப் புலமை மிக்காரை உபசரித்து அளவளாவலில் தம் பெரும் பொழுதைப் போக்கி வந்தான்.

புலவர் அறிவுறுத்தல்

ஒரு நாள் பிசிராந்தையார் பாண்டியன் அரண்மனைக்குச் சென்றார்.அரசன் எதிர்சென்று ஏற்றுப் புலவர்க்கு உண்டி வழங்கி உரையாடிக் கொண்டிருந்தான். பல பொருள்களைப் பற்றிப்பேசி வருங்கால்,’ அரசன் குடிகளிடம் எவ்வாறு இறை கொள்ள வேண்டும்?’ என்பது பற்றிய கேள்வி எழுந்தது. அப்பொழுது ஆந்தையார் அரசர் பெருமானை நோக்கி,

“அரசர் பெருமானே, ஒரு ‘மா’ என்னும் அளவினும் குறைந்த நிலமாயினும், அதனில் விளைந்த நெல்லைக் கொணர்ந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்து வந்தால், பல நாட்களுக்குக் கொடுக்கலாம். நூறு ‘செய்’ அளவுடைய பெரிய நிலமாயினும், அதன்கண் விளைந்துள்ள நெல்லை உண்ணும்படி யானையை ஏவி விடின், அஃது உண்ணும் நெல்லைவிடக் காலால் மிதித்துப் பாழாக்கும் நெல்லே அதிகமாகும். அதுபோலவே, அறிவுடைய அரசன் திறை வாங்கும் முறையை அறிந்து வாங்குவானாயின், அவனுடைய குடிகள் அவனுக்கு நிரம்பப் பொருளை ஈட்டிக் கொடுத்துத் தாங்களும் தழைத்து வாழ்வார்கள். உணராதவரும் அரசற்கு உறுதி கூறாதவரும் அரசன் மனம்கோண ஒன்று உரைத்தல் ஆகாது என்று எண்ணுபவரு மாகிய அமைச்சரோ, பிறரோ கூறும் யோசனை கேட்டுக் குடிகள் தன்னிடம் கொண்டுள்ள அன்பு கெடும்படி வரி வாங்குதலை விரும்புவானாயின், முன் சொன்ன யானை புகுந்த களம்போலத் தானும் உண்ணப் பெறான்; குடிகளும் கெடுவர்,” என்று உவமை வாயிலாக விளங்க உரைத்தார்.

பாண்டியன், ‘அறிவுடை நம்பி’ ஆதலால், புலவரது பொன்னுரையைக் கேட்டு மகிழ்ந்தான்; அவருக்கு வேண்டியவாறு பரிசில் ஈந்து அவரை மகிழ்வித்தான். புலவர் அவனிடம் விடை பெற்றுத் தம்மூர் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

** 4. சோழன் வடக்கிருத்தல்**
பாற்கடலில் தோன்றிய விஷம்

‘கடலோ பாற்கடல்; ஆனால், அதைக் கடைந்த பொழுது விஷம் வெளிப்பட்டது’ என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அதுபோல, ‘நற்குண நற்செயல்கட்கு இருப்பிடமானவன்’ என்று யாவரும் ஒருங்கே பாராட்டுதற்கு உரியவனாகி, அறவழியில் ஆட்சி புரிந்துவந்த கோப்பெருஞ் சோழனுக்கு, மறவழி மதி செல்லும் மைந்தர் இருவர் தோன்றி வளர்ந்து வந்தனர். அவர்கள் தந்தைக்கு நேர்மாறான மனநிலை உடையவர்கள். அரசன், புலவர் பெருமக்களுடன் பெரும் பொழுது போக்கிக்கொண்டு சிறந்த கொடை வள்ளலாய் விளங்குதலைக் கண்ட அவர்கள் மனம் புழுங்கினார்கள். புலவர்க்கும் பாணர்க்கும் அளிப்பது தாய் மொழியை வளர்ப்பதாகும் என்பது அம்மூட மக்கள் மூளையிற் படவில்லை; அதனை வீண் செலவெனக் கருதினர்; மேலும், வயது முதிர்ந்த தம் தந்தை, வயது வந்த தங்கட்குப் பட்டம் கட்டாமல் தான் அரசனாக இருந்து வருதலை வெறுத்தனர். இத்தகைய பல காரணங்களால் அவர்கள் தந்தையிடம் மாறுபட்டனர்; அவசியம் நேரின் தந்தையை எதிர்க்கப் படை ஒன்றையும் தயாரித்து வந்தனர்.

தந்தை - தனயர் பூசல்அரசன் துறவு

எல்லாப் போக பாக்கியங்களையும் குறைவற அனுபவித்து வந்த கோப்பெருஞ் சோழன் வெளியில் மகிழ்ச்சியுடையவன் போலக் காணப்படினும், உள்ளத்தில் மகிழ்ச்சி அற்றவனாகக் காணப்பட்டான். பிள்ளைகள் ஒழுக்கக்கேடே அவனது உள்ளத்தை உறுத்தி வந்தது. அவன் இறுதியில் பிள்ளைகளது தீய எண்ணத்தை அறிந்து கொண்டான். ‘இத்தகைய ஒழுக்கம் கெட்ட மக்களிடம் நாட்டை ஒப்புவித்தலை விட அவர்களைப் போரில் ஒழித்து விடலே தக்கது’ என்று எண்ணினான்; எண்ணிப் போர்க்கோலம் கொண்டான். படையும் தயாராகி விட்டது. மக்களும் போரிடத் தயாராயினர். என்ன கொடுமை!

எயிற்றியனார் இடையீடு

தந்தையும் தனயரும் போரிட நின்றதைச் சோழனைக் காண வந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் கண்டார்; வியப்பும் திகைப்புமை கொண்டார். அவர்தம் நாடிவந்த கோப்பெருஞ் சோழனைக் குறுகி,

“வெற்றி வேந்தே, இப்பொழுது நின்னுடன் போர் செய்ய வந்திருப்பவர் வேற்று நாட்டரசராகவுள்ள சேர, பாண்டியர் அல்லர். நீ அவர்கட்குப் பகை அரசனும் அல்லை. நீ இந்நிலவுலகில் புகழை நிறுத்தி இறப்பாயாயின், இவ்வரசாட்சி அவர்கட்கே உரியதாகும். நீயே இதனை நன்கு அறிவாய். நின்னுடன் போர் செய்ய வந்த நின் அறிவிலாத மக்கள் தோற்பதாக வைத்துக் கொள்வோம்; பிறகு இவ்வரசாட்சியை நீ யாருக்குக் கொடுப்பாய்? ‘தந்தை - தனயருடன் போரிட்டு வென்றான்’ என்னும் வசை நிற்குமே தவிர வேறில்லை. நீ அவர்க்குத் தோற்பாயாயின், நின் பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகும்; நினக்கு வசையே உண்டாகும். இங்ஙனம், எம்முறையிற் பார்ப்பினும், இப்போர் நிறுத்தப்படல் வேண்டும்; நினது பகைமைக்குணம் மாற வேண்டும். நீ தேவர் நன்னாட்டு விருந்தாகச் செல்லற்குரிய நல்வினையைச் செய்வாயாக.” என்று அரசன் உளங்கனிய இனிய முறையில் எடுத்தியம்பினர்.

அரசன் துறவு

கோப்பெருஞ் சோழன் இயல்பாகவே பற்றற்றவன். அவனுக்குப் புலவர் பொன்னுரையும் சீற்றம் மிகுந்த சமயத்தில் வேண்டியதாக இருந்தது. அவன் உள்ளம், புலவர் போதனைக்குப் பிறகு தெளிந்தது. அவன் அரசாட்சியைத் தன்மக்களிடம் ஒப்புவித்தான்; துறவுக் கோலம் பூண்டான்; உண்ணா நோன்பு பூண்டு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். ஆற்று இடைக் குறையில் உள்ள ஒரு மரநிழலில் சென்று தங்கி, உண்ணா நோன்பைத் தொடங்கினான்.

** 5.அரசனும் ஆந்தையாரும்**
வடக்கிருத்தல்

இங்ஙனம் அரசன் வடக்கிருத்தலை அறிந்த சான்றோரும் பிறரும் அரசன்பால் வந்து குழுமி, அவனைப் பிரிய மனம்இல்லாது அவனை சூழ அமர்ந்திருந்தனர். அப்பொழுது அரசன் அவர்களை நோக்கி, “என் ஆருயிர் நண்பரான பிசிராந்தையார் இப்பொழுது வருவர்; அவர்க்காக இடம் விட்ட ஒதுங்கி இருங்கள்” என்றான். அது கேட்ட சான்றோர், “அரசே, பிசிராந்தையார் உனது பெயரைக் கேட்டவரே அன்றி நேரில் பார்த்தவர் அல்லர்; பழகியவர் அல்லர். நீயும் அவரை நேரில் அறியாய் மேலும் அவர் மிக்க தூரத்தில் உள்ள பாண்டிய நாட்டினர்; நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவர்; அறிந்து, எவ்வாறு இங்கு வருதல் கூடும்?” என்றனர்.அரசர் பெருமான அச்சான்றோரை அகமலர நோக்கி, “அறிஞர்களே, நீங்கள் அங்ஙனம் ஐயுற வேண்டா.அவர் என்னைப் பாராவிடினும் என் உயிர் நண்பர் ஆயினார்; நானும் அங்ஙனமே அவரது உயிர்த்துணைவன் ஆயினேன். நான் நன்னிலையில் இருந்த காலத்தில் அவர் வராவிடினும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்துள்ள இந்தக் காலத்தில் தவறாது இங்கு வருவார்.அவர் தமது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது ‘என் பெயர் சோழன்’ என்று அறிவிலியாகிய என் பெயரையே தமது பெயராகச் சொல்லும் வேறுபாடு அற்ற அன்புரிமை உடையவர், அவர் நெடுந்தூரத்தில் உள்ள பாண்டி நாட்டுப் ‘பிசிர்’ என்னும் ஊரினர்; ஆயினும், யான் வடக்கிருத்தலைக் கேள்வியுற்று வந்துகொண்டிருக்கிறார்; சிறிது நேரத்தில் இங்கு வருவார். அவர்க்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒழித்து வையுங்கள்’ என்றான். காவலனது கனிந்த வுரையைக் கேட்ட சான்றோர்,”ஈதென்ன புதுமை!" என வியந்து, அரசன் அறிவித்தவாறே இடம் ஒழித்து வைத்தனர்.

ஒத்த உணர்ச்சி

சோழர் பெருமான் சொன்னது உண்மையே ஆகும். அவன் அரசு துறந்ததையும் துறவுபூண்டு வடக்கிருக்கத் துணிந்ததையும் அங்ஙனம் துணிந்து ஆற்றிடைக் குறையில் தங்கி இருத்தலையும் ஒத்த மன வுணர்ச்சியால் பிசிர்ஆந்தையார் உணர்ந்தார்; உடனே தம் பதியை விட்டுப் புறப்பட்டு வந்தார்; வழியில் பல காடு களையும் மலைகளையும் கடந்து நடந்து வந்தார். அவர் நெடுந் தூரத்தைச் சில நாட்களில் கடந்தார்; கோப்பெருஞ் சோழன் குறித்த நேரத்தில், அருகில் இருந்த சான்றோர் வியக்க அரசன்முன் தோன்றினார். கனிந்த அன்பினால் புரவலனும் புலவரும் ஒருவரை ஒருவர் அன்புக் கண்ணீர் வரத் தழுவிக் கொண்டனர்.

பொத்தியார் பாராட்டு

எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் என்ற புலவர் வியந்தார்.அவர் கோப்பெருஞ் சோழற்கு நெருங்கிய நண்பர்; எப்பொழுதும் உடன் உறைந்து வந்தவர். அவர் அரசனுடனே சான்றோர் குழுவில் இருந்தவர். அரசன் சொன்னதும், ஆந்தையார் அவன் சொற்படி வந்ததும் அவருக்கு வியப்பை ஊட்டின. அதனால் அவர், “எங்கள் கோப்பெருஞ் சோழன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்தது, நினைக்க நினைக்க வியப்பைத் தருவதாகும்! ஆனால், வேற்று வேந்தன் (பாண்டியன்) நாட்டில் உள்ள ஊரைச் சேர்ந்த புலவர் பெருமான், நட்பையே சிறந்த பற்றுக் கோடாகக் கொண்டு, இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது, முன் சொன்னதினும் வியப்பைத் தருவதாகும்! ‘பிசிராந்தையார் இப்பொழுது இங்கு வருவார்’ என்று துணிந்து சொல்லிய வேந்தர் பெருமானது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுதுபடாமல் வந்த சான்றோரது மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கின்றது. ஆதலால், தன் நாட்டில் வாழும் இந்தச் சான்றோர் உள்ளத்தையே அன்றி வேற்றரசன் நாட்டில் வாழும் புலவர் பெருமானது உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு, இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத்தக்கதாகும்!” என்று தம் மனவுணர்ச்சியை ஒரு செய்யுள் மூலமாக வெளிப்படுத்தினார்.

அரசனும் ஆந்தையாரும்

ஆந்தையாரைத் தழுவிய அரசன் விரிநீர் வர அவரைக் குழைந்த அன்போடு நோக்கி, “புலவர் பெருமானே, உம்மை நேரிற் காணப்பேறு பெற்றிலேன்; எனினும், உமது நற்குண நற்செயல் களைப் புலவர் பலர் வாயிலாகக் கேட்டு உம்மைக் கண்டு அளவளாவ அவாக் கொண்டதுண்டு. நான் நன்னிலையில் அரியாசனத்தில் அமர்ந்திருந்தபொழுது நீவிர் வந்திலீர்; வடக்கிருக்கும் இவ்வரிய காலத்தில் வந்தீர். இஃதொன்றே உமது நட்பின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்கின்றது,” என்று தன் உள்ளத்து உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தினான்.

ஆந்தையார் பல நாட்களாகத் தம் உள்ளத்தே குடி கொண் டிருந்த அரசனது உருவத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்; அவனது மூதறிவின் நுட்பத்தை நுகர்ந்தார்; அப்பெருமகன் பேசிய அன்புரைகளை கேட்டு உள்ளம் பூரித்தார்; அச்சோழ வேந்தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட தமது பேற்றை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.

** 6. உயரிய வாழ்க்கையும் நட்பும்**
மாறா இளமைக்குக் காரணம் என்ன?

சோழனைச் சூழ இருந்த சான்றோருட் சிலர் ஆந்தையாரை அன்புடன் நோக்கி, "பெரியீர், நாங்கள் சிறுவராக இருந்தபொழுதே உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பொழுது இளைஞராக இருந்த நாங்கள் இப்பொழுது முதியவராக ஆகிவிட்டோமே! நீங்கள் நியாயமாக மிக்க முதுமை அடைந்திருத்தல் வேண்டும் அல்லவா? நீங்களோ மாறா இளமையுடன் காண்கிறீர்கள். இங்ஙனம் இருத்தல் எங்ஙனம் இயலும்? இஃது எங்கட்கு வியப்பாக இருக்கின்றது. அன்பு கூர்ந்து உங்களது மாறா இளமைக்குரிய காரணங்களைத் தெளிய வைப்பீர்களாக,’ என்று வேண்டினர்.

புலவர் கூறிய காரணங்கள்

பிசிராந்தையார் புன்னகை பூத்த முகத்தினராய்த் தம்மைக் கேள்வி கேட்ட சான்றோரை அன்புடன் நோக்கி, “உமக்கு ஆண்டுகள் பலவாகியும் நரை இல்லாமல் இருத்தற்குக் காரணம் என்ன?’ என்று கேட்கின்றீர்கள். காரணம் கூறுவேன். கேளுங்கள்: 1. என்னுடைய மனைவி சிறந்த குணங்களையுடையவள்; என் சொற்படி நடப்பவள்; என்னைப் போல அறிவு நிரம்பியவள். என் பிள்ளைகளும் அங்ஙனமே. 2. என் ஏவலர்யான் கருதுவதையே செய்பவர். 3. எனது அரசனான பாண்டியன் செங்கோல் வழி நிற்பவன்; அறத்திற்கு மாறான எதனையும் செய்யான். 4. யான் இருக்கின்ற ஊரில் நற்குணங்களால் நிரம்பிப் பணிய வேண்டும் பெரியோரிடத்துப் பணிந்து, ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையையுடைய சான்றோர் பலர் இருக்கின்றனர். நான் அப்பெரியோருடன் இடைவிடாது பழகுகின்றேன். இக்காரணங்களால் எனக்கு இல்லறத்திலும் துன்பம் இல்லை; வெளிஉலகிலும் துன்பம் இல்லை. துன்பம் இல்லாததால் மனக்கவலை இல்லை; என்றும் மகிழ்ச்சி யோடு இருக்கின்றேன். அதனால், நரைப்பிணி என்னை நாட வில்லை” என்ற பொருள்கொண்ட பைந்தமிழ்ப் பாவினைப் பாடினர். சான்றோர் அதுகேட்டு வியப்புற்றனர்.

வடக்கிருந்து உயிர் நீத்தல்

கோப்பெருஞ் சோழன் தருப்பைப் புல்லை ஆசனமாகப் பரப்பி,வடக்கு முகமாக இருந்து உண்ணா நோன்பு பூண்டு, இந்திரியங்களை ஒடுக்கினான். ஆந்தையாரும் அரசனைப் பின்பற்றி வடக்கிருந்து உண்ணாநோன்பு பூண்டனர். என்ன வியப்பு! சான்றோர் அனைவரும் பிசிராந்தையாரது தியாகத்தைப் பார்த்து பெரு வியப்புக் கொண்டனர். சில நாட்களில் அரசர் பெருமானும் புலவர் பெருமானும் மண்ணுலக வாழ்வை நீத்தனர்.

கண்ணகனார் பாராட்டு

இவ்வற்புதச் செயலைக் கண்ணகனார். என்ற செந்தமிழ்ப் புலவர் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் பிசிராந்தை யார் செயலில் பெரிதும் ஈடுபட்டது. அவர் விழிநீர்வார," பொன், பவளம், முத்து, மணி என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இடங்களில் தோன்றுவன வாகும். அவ்வாறு இருந்தும் ஒரு நகையைச் செய்யுங்காலத்தில் இவை அனைத்தும் கோவையாய் ஓர் இடத்தில் தோன்றும். அவை போலத் தொடர்பற்ற தூரமான இடங்களில் இருந்தபோதிலும் தேவை ஏற்படும் காலத்தில் சான்றோர் சான்றோருடன் வந்து கலந்துகொள்வர். இதற்குச் சிறந்த சான்று, பிசிராந்தையார் இங்கு வந்து கலந்துகொண்டதேயாகும்," என்னும் கருத்தமைந்த செந்தமிழ்ச் செய்யுள் ஒன்றினைப் பாடினார்.

கல் நாட்டு விழா

வடக்கிருந்து உயிர்நீத்த பெருமக்களாகிய அரசனுக்கும் ஆந்தையார்க்கும், அவர்கள் உயிர்விட்ட இடங்களில், அக்கால வழக்கப்படி கல் நட முயற்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு கல்லிலும் அவரவர் உருவம், பெயர், சிறப்பியல்புகள் இவை பொறிக்கப் பட்டன; பின்னர் அவை நன்னீரில் தூய்மை செய்யப்பட்டு நடப்பட்டன. இச் செயல் ’கல் நாட்டு விழா’1 எனப் பெயர் பெறும்.

** 7.பொத்தியார் நட்பு**
பொத்தியார் வடக்கிருத்தல்

பொத்தியார் என்ற அருந்தமிழ்ப் புலவர் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பர் அல்லவா?’ அவர் ஏன் வடக்கிருக்கவில்லை?’ என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா? அவர் வடக்கிருக்க விழைந்தபொழுது கோப்பெருஞ் சோழன் அவரைத் தடுத்து, “பிள்ளைப் பேறு இல்லாதவர் துறக்கம் புகுதல் அருமை’ என்று நூல்கள் கூறுகின்றன. ஆதலால், பிள்ளைப்பேறு உண்டான பிறகு நீங்கள் வடக்கிருக்கலாம்; இப்பொழுது அவ்வாறு செய்யவேண்டா” என்றான். புலவர் அரசன் கூற்றுப்படி, தம் ஊரை அடைந்தார்; மனைவி கருவுயிர்த்து ஆண் மகவு ஒன்றினை ஈன்றாள். புலவர் மனம் மகிழ்ச்சியுற்று. அவர் ஓடோடியும் உறையூர் வந்தனர். அரசனும் ஆந்தையாரும் கல்லானதைக் கண்டனர்; அகம் கரைந்தனர்; கரைந்து, கண்ணீரை ஆறாக வடித்து, அரசனது நடு கல்லின் எதிரில் நின்று,

“பிள்ளைப்பேறு, உண்டான பின் வருக’ என்று சொல்லி, யான் அங்ஙனம் வருவதற்குள் உயிர் விட்டுக் கல்லான உத்தமனே, எனக்கு இடங் கொடுப்பாயாக,” என்று கூறி, அங்கு வடக்கிருந்து, உண்ணா நோன்பு அநுசரித்து உயிர் விட்டனர். ஆ! உத்தம நட்பினர் தியாகத்தை என்னென்பது!

அடிக்குறிப்பு

1.  இந்தப் பழைய வழக்கம், இன்றும் தமிழர் வீடுகளில் கருமாதி சமயத்தில் ‘கல் நடப்பு’ அல்லது ‘கல் எடுப்பு’ என்று கூறப்படுகிறது.

கோவூர் கிழார்

** 1.இளமையும் கல்வியும்**
கோவூர் கிழார்

கோவூர் சோழ நாட்டில் உள்ள ஊர். இதனில் வாழ்ந்த வேளாளர் மரபினர் ஒருவர்க்குப் பிறந்தவரே நமது செந்தமிழ்ப் புலவரான கோவூர் கிழார். இவரது இயற்பெயர் இன்னதென்பது தெரியவில்லை. ஊர்ப் பெயரும் மரபுப் பெயரும் சேர்ந்தே இவர் ‘கோவூர் கிழார்’ எனப்பட்டார். இவ்வாறும் பெயர்கள் அமைதல் பண்டை மரபாகும்.

இளமையும் கல்விப் பயிற்சியும்

கோவூர் கிழார் இளமைப் பருவத்தில் ஒரு நல்லாசிரியரை அடுத்துச் செவ்வையாகச் கல்வி கற்று வந்தார்; குறித்த நேரத்தில் ஆசிரியர் இல்லத்தை அடைதல், ஆசிரியர் ‘இரு’ எனச் சொன்ன பிறகு இருத்தல் (உட்காருதல்), பாடம் சொல்லுங்கால் அறிவை நிலைப்படுத்திக் கேட்டல், ‘போ’ என்றவுடன் விடைபெற்று வீடு திரும்புதல், அவ்வப் போது தோன்றும் ஐயங்களைப் பணிவோடு கேட்டுத் தெளிதல் என்னும் (பண்டை) மாணவர்க்குரிய இலக்கணங்களில் வழுவின்றி நடந்தமையால், விரைவில் தமிழ்ப் புலமை எய்தினார் ஒழுக்க மேம்பாடு இன்றிப் புலமை மட்டும் இருந்து பயன் என்ன? ஒரு பயனும் உண்டாகாதன்றோ? நமது கோவூர் கிழார் கல்வியுடன் ஒழுக்கத்தில் சிறந்த விளங்கினார். இளமைதொட்டே அவரிடம் அன்பு, அருள், ஈகை முதலிய நற்பண்புகள் வேரூன்றி வளர்ந்து வந்தன. அவர், பிறர் துன்பப்படுதலைக் காணச் சகியார்; அதனைத் தமக்கு வந்ததாக எண்ணி விரைந்து களைவார் இத்தகைய நற்செயலால் அவரைப் பிற புலவரும் உச்சி மேற்கொண்டு போற்றலாயினர். அவரைச் சோணாட்டு அறிஞர், சான்றோருள் ஒருவராகக் கருதி மரியாதை செலுத்தி வந்தனர்.

** 2.புலவரும் நலங்கிள்ளியும்**
நலங்கிள்ளி

கோவூர் கிழார் காலத்தில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன் நலங்கிள்ளி என்பவன். அவன் சிறந்த ஒழுக்கம் உடையவன்; கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன்; செங்கோல் அரசன். அவன் புலமையும் ஒழுக்கமும் உடைய பெருமக்களைத் தன் அவையில் சேர்த்து மதிப்பித்து வந்தான்; அவர்களோடு அளவளாவி மகிழ்ந்து வந்தான்.

நலங்கிள்ளியும் கோவூர் கிழாரும்

இங்ஙனம் பல்லாற்றானும் சிறந்து புலவர் புரவலனாய்த் திகழ்ந்த நலங்கிள்ளி, நமது கோவூர் கிழாரது நிறைந்த புலமையையும் சிறந்த ஒழுக்கத்தையும் தக்கார் வாயிலாகக் கேள்வியுற்றான்; அவரைத் தன் அவைக்களம் வருமாறு செய்து, அவருடன் அளவளாவி மகிழ்ந்தான்; அவருடைய பலவகைப் பட்ட உரையாடலைக் கவனித்து, அவருடைய நுண்ணறிவை வியந்தான். அவன் அன்று முதல் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு நடந்து வந்தான்.

நெடுங்கிள்ளி

நெடுங்கிள்ளி என்பவன் சோழர் மரபைச் சேர்ந்தவன்; நலங்கிள்ளிக்கும் அவனுக்கும் தீராப் பகைமை வளர்ந்து வந்தது; அவன் நலங்கிள்ளியின் அரசைக் கவர விழைந்தான். விழைந்து தருணம் பார்த்திருந்தான். இதனை உணர்ந்த நலங்கிள்ளியும் தக்க படையுடன் தயாராகக் காத்திருந்தான்.

** 3.ஆவூர் முற்றுகை**
ஆவூர் முற்றுகை

சோழர் இருவருக்கும் போர் தொடங்கிற்று. பல இடங்களிற் போர்கள் நடைபெற்றன. நெடுங்கிள்ளி நலங்கிள்ளியின் படைகட்கு ஆற்றானாய் ஓடி, ஆவூர்க்கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் நலங்கிள்ளி அவனை விடாது துரத்திச் சென்று, ஆவூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி போரிடத் துணியவில்லை, கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே பதுங்கிக் கிடந்தான். முற்றுகை பலநாள் நீடித்தது. கோட்டைக்கு வெளியில் இருந்த நலங்கிள்ளி, தனக்கும் தன் படைகட்கும் வேண்டிய உணவுப் பொருட்களை எளிதாகப் பல இடங்களிலிருந்தும் பெற்றுக் கவலையின்றி முற்றுகையிட்டிருந் தான். ஆனால், கோட்டையின் கதவு திறக்கப்படாமையால், கோட்டைக்குள் அகப்பட்டுக் கொண்ட ஆவூர் மக்களும் நெடுங்கிள்ளியின் படைவீரரும் உணவுப் பொருட்கள் போதாமல் பெருந்துன்பம் உற்றனர்.

புலவர் இடையீடு

கோவூர் கிழார் ஆவூர் முற்றுகையைக் கேள்வியுற்றார். அவர், அரசியல் அறிவு நிரம்பப் பெற்ற பேரறிஞர் ஆதலின், ஒரு முற்றுகையால் இருதிறத்தார்க்கும் பொதுமக்கட்கும் உண்டாகும் துன்பங் களை நன்கறிந்தவர். ஆதலால் அவர் ஆவூர்க்கு விரைந்து சென்றார். தமது வருகையை நெடுங்கிள்ளிக்கு எடுத்துக்கூறி கோட்டைக் கதவினைத் திறக்கச் செய்து உட்சென்றார். நெடுங்கிள்ளி மலர் முகத்தோடு புலவரை வரவேற்றான். புலவர் அவனை அன்புடன் நோக்கி,

“அரசே, இந்த முற்றுகையினால் உண்டாகியுள்ள துன்ப நிலைகளை நீ அறிவாய் என்று நம்புகிறேன். யானைகள் குளத்திற் படிந்து குளிக்கவில்லை; போதிய நெற்கவளம் இல்லாமல் தவிக் கின்றன; கம்பங்களைச் சாய்த்து நிலத்தின் மேல் புரளும் துதிக்கை களை உடையனவாய்ப் பெருமூச்சு விட்டுச் சுழன்று இடிபோல முழங்குகின்றன. பால்இல்லாமல் குழந்தைகள் அழுகின்றன; பெண்மணிகள் மலர்களால் தங்கள் கூந்தலை அலங்கரியாமல் இருக்கின்றனர்; குடிமக்கள் வீடுகளில் தண்ணீர் கிடைப்பது அருமையாக இருக்கின்றது. அவர்கள் கோட்டைக்கு வெளியே செல்லவும் கூடவில்லை. உள்ளே இருக்கலாமெனில் குடிமக்கள் கூக்குரல் இடுகின்றனரே! இது நின் செவிகளிற் பட்டும், நீ நின் செயலுக்கு நாணாமலும் அவர் நிலையை எண்ணி இரக்காமலும் இனிதாக இருத்தல் மிகக் கொடியதாகும். வலிமை மிக்க குதிரைப் படைகளை உடையாய், நீ மெய்யாகவே அறவழியில் நிற்க விரும்புவாயாயின், உன் மரபைச் சேர்ந்தவனும் இப்பொழுது பகைவனாக இருப்பவனுமான நலங்கிள்ளியின் முன்னிலையில், ‘இக்கோட்டை நின்னது’ என்று சொல்லித் திறந்துவிடுதல் நல்லது. நீ வீரமுடையவனாயின், பகைவனுடன் போர் செய்தாவது கோட் டைக் கதவினைத் திறப்பாயாக. நீ இவை இரண்டில் ஒன்றைச் செய்யாமல் கோட்டைக்குள் பதுங்கிப் பிறரைப் பற்றிக் கவலை யின்றி உன்னளவில் இன்பமாக இருத்தல் நாணத் தகும் செயலாகும்,” என்று உள்ளதை உள்ளவாறு உளங்கனிய .உரைத்தருளினார். இவ்வுருக்கமான பேச்சு நெடுங்கிள்ளி உள்ளத்திற் பதிந்தது. அவன் உடனே கோட்டைக் கதவைத் திறந்துவிட்டு உறையூருக்குச் சென்று விட்டான்; சென்று, அங்கிருந்த கோட்டைக்குள் புகுந்துகொண்டான். ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளி கைப்பற்றிக் கொண்டான். ஆவூர் மக்கள் கோவூர் கிழாரை உளமார வாழ்த்தி மகிழ்ந்தனர்.

** 4.இளந்தத்தரும் நெடுங்கிள்ளியும்**
புலவர் இளந்தத்தர்

நலங்கிள்ளி ஆவூரில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குள் இருந்தான். இந்த நிலையில் இளந்தத்தர் என்ற பைந்தமிழ்ப் புலவர் ஒருவர் வறுமைக் கொடுமையால் நலங்கிள்ளியைச் சென்று கண்டார்; பைந்தமிழ்ப் பாக்களைப் பாடி அவன். உள்ளத்தை மகிழ்வித்தார். தமிழ்ப் பாடலுக்கு இரங்கும் பெரு வீரனான நலங்கிள்ளி, இளந்தத்தர்க்கு வேண்டிய பொருள்களை ஈந்து மகிழ்ந்தான். அவனிடம் விடை பெற்ற புலவர் நேரே உறையூரை அடைந்தார்; அடைந்து, கோட் டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு தம் வறுமையை விளக்கினார்; தாம் ஆவூரிலிருந்து வந்ததையும் அறிவித்தார். இவ்வாறு அறிவித்தது அவருக்குத் தீமையாக முடிந்தது. அச்சத்தையே அணிகலனாகக் கொண்ட நெடுங்கிள்ளி, அப்புலவர் நலங்கிள்ளியால் ஏவப்பட்டவர் என்றும், ஒற்றறிய வந்தவர் என்றும் தவறாக எண்ணிவிட்டான்; அதனால், அவரைக் கொலைசெய்யத் தீர்மானித்தான்.

கோவூர் கிழார் இடையீடு

நெடுங்கிள்ளியின் தீர்மானத்தைக் கோவூர் கிழார் கேள்வி யுற்றார். பிறர் துன்பப்படுதலை அவர் சகித்துக்கொண்டு இரார் அல்லவா? அதனால் அவர் நெடுங்கிள்ளியினிடம் விரைந்து சென்றார்; சென்று, அவனை மலர்முகத்தோடு நோக்கி,

“ஐயனே, இவரை ‘ஒற்றர்’ என்று கருதவேண்டா. இவர் புலவராவர்; மிக்க எளியவர்; தமது வறுமையைப் போக்க நலங் கிள்ளிபால் பரிசில் பெற்று மீள்கின்றார்; வழியில் உன்னைக் கண்டு ஏதேனும் பெற்றுப் போகலாம் என்ற எண்ணத்தால் இங்கு வந்தவராவர். உங்கள் இருவர்க்கும் உள்ள பகைமையை இவர் அறியாதவர்; கள்ளம் கபடு அற்ற தூய உள்ளத்தினர். பழுத்த மரங்கள் நெடுந் தூரத்தில் இருப்பினும் கிளி, வெளவால் முதலிய பறவைகள் அவற்றை நாடிச் செல்லுகின்றன அல்லவா? அவற்றைப் போலவே எம்போன்ற புலவர்கள் நின்போன்ற வள்ளல்கள் எங்கு இருப்பினும் தேடி அலைந்து பார்த்துப் பரிசில் பெறுதல் வழக்கமாகும். வறியவர், நெடுந்தூரத்தையும் வழியின் கஷ்டங்களையும் கருதார்; கொடையாளிகளைக் குறுகித் தம்மால் இயன்றவரை தம் புலமையை வெளிப்படுத்திப் பரிசில் பெற்று மீள்வர்; மீண்டு, தாமும் உண்டு தமது சுற்றத்தாரையும் உண்பிப்பர்.. அவர்கள்தாம் பரிசிலாகப் பெற்ற பொருளைத் தமக்கென்று பாதுகாவாமல், தம்மினும் எளியாரைக் கண்டவிடத்து ஈந்து மகிழும் இயல்பினராவர்; தம்மைப் பாதுகாக்கும் வள்ளல்களால் மதிக்கப்படுதல் ஒன்றையே பெரிதாகக் கருதுவார்கள். அவர்கள் பிறருக்குத் தீங்கு செய்ய ஒரு போதும் நினையார்; தம்மைக் கல்வியால் எதிர்ப்பவரை மட்டுமே வென்று வீறு கொண்டு விளங்குவர்; எனவே, இத்தகைய புலவரது கல்விப் பொருளும் நினது செல்வப் பொருளும் ஏறத்தாழச் சமமேயாகும். இவற்றையெல்லாம் ஆராயாமல் இவ்வெளிய புலவரைக் கொல்லக் கருதியது பெரும்பிழையாகும். ஆகவே, இவரை இன்னே விட்டுவிடுக,” என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் உருக்கமாகவும் எடுத்துரைத்தார். இத்தகைய விளக்கமான உருக்கமான பேச்சைக் கேட்டு எவர் மனந்தான் உருகாது! நெடுங்கிள்ளி மனம் இளகியது; தான் அறியாமற் செய்த தவற்றை எண்ணி வருந்தினான்; உடனே இளந்தத்தரை விடுதலை செய்து, அவருக்குப் பரிசில் தந்து மகிழ்வித்தான். இளந்தத்தர் அரசனுக்கும் தம்முயிரைக் காத்த புலவர் பெருமானுக்கும் மனமார நன்றிகூறி விடைபெற்றுச் சென்றார். கோவூர்கிழார் அரசனை உளமார வாழ்த்தித் தம் இருப்பிடம் ஏகினார்.

** 5.உறையூர் முற்றுகை**
உறையூர் முற்றுகை

மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு நலங்கிள்ளி பெரும் படை யுடன் சென்று உறையூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி சினம் கொண்டான்; தன்னை விடாது பின்பற்றி வரும் நலங்கிள்ளியை ஒழிக்க விரும்பிக் கடும்போர் புரிந்தான். போரில் இருதிறத்துக் கரிகளும் பரிகளும் மாண்டன; வீரர் பலர் இறந்தனர்; பலர் கை, கால் முதலிய உறுப்புகள் இழந்து தவித்தனர். உறையூர்குடிகள், இக்கோரக் காட்சியைக் கண்டு உள்ளம் நடுங்கினர்.

புலவர் இடையீடு

இச்சங்கடமான நிலையிலும் நமது கோவூர்கிழார் தோன்றினார். அன்பே உருக்கொண்ட அப்பெரியார் இக்கோரக் காட்சியைக் கண்டு நடுங்கினார். அவர் மனம் பதறியது; ஒரே மரபிற் பிறந்த கற்றுவல்ல அறிஞராகிய இருவர் தமது பகைமை காரணமாகப் பொது மக்களையும் உயிர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குதல் அறியாமை என்று எண்ணினார். அப்பெருந்தகையார் நலங்கிள்ளியை நன்முகத்துடன் நோக்கி,

“பகைவர்க்கு நமனைப் போன்ற அரசே, நான் கூறுவதைச் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். இப்பொழுது உன்னுடன் போர் செய்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேர வேந்தன் அல்லன்; வேப்பம்பூ மாலையை அணிந்த பாண்டியனும் அல்லன். நீயோ ஆத்திமாலையை அணிந்திருக்கின்றாய். நின்னை எதிர்ப்பவனும் அதே மாலையை அணிந்தவன். அஃதாவது, நீங்கள் இருவரும் ஒரு குடியைச் சேர்ந்தவர். உங்களில் ஒருவர் தோற்பினும், தோற்பது நுமது குடியே அன்றோ? நீங்கள் இருவரும் வெற்றி பெறுதலோ இயலாது. ஆதலின், உங்கள் செயல் உங்களது புகழ் பெற்ற சோழர் குடிக்கு ஏற்றதன்று. ஒரு குடியிற் பிறந்த நீங்கள் இவ்வாறு மாறுபடுதல், உங்கள் பகை வேந்தரான சேர, பாண்டியர்க்கு உவப்பை ஊட்டுவதாகும். நீங்கள் அன்பும் அருளும் கொண்டு இப்போரை இவ்வளவோடு நிறுத்துதல் நல்லது,” என்று நயமாக நவின்றருளினார்.

நலங்கிள்ளி வீரவுரை

புலவர் மொழிந்த பொன்னுரையை இருவரும் கேட்டனர். நலங்கிள்ளி கோவூர்கிழாரை நோக்கி,

“புலவர் பெருமானே, அசரர் மிக்க பணிவுடன் என்னை வணங்கிக் கேட்பாராயின்; அவர்க்கு எனது அரசாட்சியைத் தருவேன்; அவசியம் ஏற்படின், என் இன்னுயிரையும் ஈயத் தவறேன். ஆனால், என் அமைச்சர், படைத்தலைவர் முதலியவரை மதியாமல் என்னையும் இழிவாகக் கருதி உரையாடும் ஒருவன், யாவர்க்கும் விளங்கும்படி வெற்றிடத்தில் தூங்குகின்ற புலியின் மீது இடறி விழும் குருடனைப் போல அழிவுறுதல் திண்ணம். மூங்கிலைத் தின்னும் யானை,தன் காலின் கீழ் அகப்பட்ட மூங்கில் முளையை மிதித்து அழிப்பது போல நான் என்னைப் பகைத்தாரை அவர்கள் குலத்தோடு அழிக்காதுவிடேன். நான் அவ்வாறு செய்யத் தவறுவேனாயின், பொய்யன்பு கொண்டு நடிக்கும் பொது மகளிர் நட்பைப் பெற்ற கயவருள் ஒருவன் ஆவேன்,” என்று வீர முழக்கம் செய்தான். மேலும், அப்பெரு வீரன் நம் புலவரை நோக்கி,

“புலவர் ஏறே, இழிந்தவன் ஒருவனுக்கு, அவன் முன்னோர் பெற்ற வெற்றியால் அரசாட்சிச் செல்வம் கிடைப்பின், அவ் விழிந்தவன், ‘நமக்கு இத்தகைய சிறப்புக் கிடைத்ததே’ என்று பெருமிதம் கொள்வான்; தன் குடிகளை வருத்தி வரி வசூலிப்பான். மேலும், அரசாட்சி அவனுக்குச் சுமக்க முடியாத பாரமாக ஆகிவிடும். ஆனால், தன் பகைவரை எதிர்க்கும் வன்மை உடைய ஒருவன் அவ்வரசாட்சியைப் பெறின், அஃது அவனுக்குக் கோடை யில் உலர்ந்த நெட்டியைப் போல மிக்க எளிதாக இருக்கும்,” என்று கூறினான்.

பகைவர் நண்பராதல்

கோவூர் கிழாருடைய அறிவுரையையும் நலங்கிள்ளியின் ஆண்மை உரையையும் நெடுங்கிள்ளி கேட்டான்;அவன் மனம் மாறியது; கோட்டைக் கதவினைத் திறந்து நலங்கிள்ளியைத் தழுவிக் கொண்டான்; தனது அறியாமையைப் பொறுத்தருள வேண்டினான். கோவூர் கிழார் உள்ளம் குளிர நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் நண்பராயினர். குடிமக்கள் கோவூர் கிழாரை மிக வியந்து பாராட்டினர்.

** 6. புலவர் பாராட்டுரை**
அமைதிக்குப் பிறகு கோவூர் கிழார் சில நாட்கள் நலங்கிள்ளி யுட.ன் வாழ்ந்து வந்தார்; அப்பொழுது அவனுடைய தமிழ்மொழிப் பற்றையும் அவனுடைய உயரிய குணங்களையும் கண்டு புலவர் அகமகிழ்ந்தார்; தமது மகிழ்ச்சி தோன்ற அவனுடைய நல்லியல்பு களைப் பலபடப்பாராட்டினார். அவற்றுள் ஈண்டுச் சில காண்க:

“சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்று.ம். அதுபோல உனது ஒப்பற்ற வெண் கொற்றக் குடைக்குப் பின்னே, நின்னால் வெல்லப்பட்ட சேர, பாண்டியருடைய குடைகள் வருகின்றன. உனது வளப்பம் பொருந்திய குடை முழுமதி போல உயர்ந்து தூரத்திலும் விளங்குகின்றது. நீ சிறந்த போர்வீரன். ஆதலால், நகரத்தில் தங்குவதில் உனக்கு விருப்பம் இல்லை. பெரும் பொழுது போர்க்களத்தில் உள்ள பாடி வீட்டிலேயே கழிக்கின்றாய். உன் யானைப் படைகள் கோட்டின் நுனி தேயும்படி பகைவர் மதிலைக் குத்தும் வன்மையுடையவை. உன் படைவீரர் ‘போர்’ என்ற சொல்லைக் கேட்டதும் நடனமாடத் தொடங்குகின்றனர்; அஃது எவ்வளவு தூரத்தில் நடப்பதாக இருப்பினும் உற்சாகம் குன்றாது விரைந்து செல்கின்றனர். இவை அனைத்தையும் வட நாட்டரசர் நன்கறிந்திருக்கின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நாடுகட்கு நீ வருதல் கூடும் என்று அஞ்சுகின்றனர்,”…

“பரிசில் பெற விரும்பும் மக்களே, வாருங்கள், நாம் எல்லாரும் நலங்கிள்ளியின் சிறப்பினைப் பாடிக் களிப்போம். அப்பெருமகன் நமது சுற்றத்தாரது உணவிற்கு விலையாக வஞ்சி மாநகரத்தை அளிப்பினும் அளிப்பான்; அழகிய நம் விறலியர் சூடும் மலருக்கு விலையாகப் பாண்டியனது மாடமதுரையைத் தரினும் தருகுவன்; இவ்வுலகத்தின் உரிமையை ஆராய்ந்து பார்த்தால், இந்நாடு, வேட்கோவர் இளைஞர் கலம் வனைதற்குச் சக்கரத்தில் வைத்த பச்சை மண் திரள்போல - சோழர் பெருமானது கருத்தின் முடிபை உடையதாயிருக்கின்றது,” என இவ்வாறு கோவூர் கிழார், புலவனும் புரவலனுமான நலங்கிள்ளியின் வீரம், வள்ளன்மை முதலிய நற்பண்புகளைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார்.

** 7. புலவரும் கிள்ளி வளவனும் கிள்ளிவளவன்**
இவன் நலங்கிள்ளியின் தமையன் என்று கருதப்படுகிறான். இவன் காவிரிப்பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் வடபகுதியை ஆண்டு வந்தான் போலும்! இவன் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலை நாட்டை மலையமான் திருமுடிக்காரி என்றவன் ஆண்டனன். அவன் கபிலர் முதலிய புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாடப் பெற்றவன். அவனுக்கும் கிள்ளிவளவனுக்கும் பகைமை ஏற்பட்டது. அதன் காரணமாகச் சோழன், எவ்வாறோ அம்மலையமான் மக்கள் இருவரைச் சிறைப்பிடித்துக் கொணரச் செய்தான்;காரிமீது தனக்கு உண்டான பகைமையை அவன் மக்களைக் கொன்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதினான்; கருதி, அம்மக்களை யானையால் இடறும்படி செய்து கொல்லத் தீர்மானித்தான்.

கோவூர் கிழார் இடையீடு

கிள்ளி வளவனது கொடிய தீர்மானத்தைக் கேள்வியுற்ற கோவூர் கிழார்,விரைந்தோடிச் சென்று அவனைக் கண்டு,

“அரசர் பெருமானே, நீ, ஒரு புறவினுக்காகத் துலாக்கோல் புகுந்து அதன் துன்பத்தைத் தீர்த்த சிபி என்னும் அரசர் பெருந் தகையின் மரபில் வந்த பெருமையுடையவன். இச் சிறுவர்கள், அறிவால் உழுது உண்ணும் புலவரது வறுமையைக் கண்டு வருந்தி, அதனைத் தீர்ப்பதற்குத் தமது செல்வத்தைப் பகுத்துண்டு மகிழும் தண்ணளி யுடைய வள்ளல்கள் மரபில் வந்தவர்கள். இவர்கள் இந்த யானையைக் கண்டு, இது தங்களைக் கொல்ல வந்திருக்கின்றது. என்பதை அறிந்து அழாமல், இதனைப் பார்த்தவண்ணம் இருக்கின்றனர்; மேலும் இங்குக் கூடியுள்ள புதியவரைக் கண்டு அஞ்சி ஒடுங்கி நிற்கின்றனர்.நான் இங்குக் கூறியவற்றை உள்ளவாறு உணர்ந்தனை ஆயின், நீ விரும்பியதைச் செய்வாயாக,” என்று அவன் உள்ளத்தில் நன்கு பதியுமாறு உரைத்தார். கிள்ளி வளவன் புலவர் பெருமானது பொன்னுரையைக் கேட்டுத்தான் கொல்ல நினைந்த இளம் பிள்ளைகளைப் பார்த்தான்; உள்ளம் உருகினான்; தான் செய்ய எண்ணிய செயலுக்கு நாணினான்; உடனே அப்பிள்ளைகளைக் கொல்லாது விட்டான்.கோவூர் கிழார் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தார். ஆங்குக் குழுமியிருந்தோர் அனைவரும் புலவர் பெருந்தன்மையை உளமார வாழ்த்தினர்.

புலவர் பாராட்டுரை

தமது நல்லுரையைச் செவிமடுத்துத் தாம்விரும்பியவாறே காரியின் மக்களைக் கொல்லாது விட்ட கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் வாயார வாழ்த்தினார்.அவர் அவனை அருளோடு நோக்கி,

“யமன் ஓர் உயிரைக் கவர வேண்டுமாயின், அதற்குரிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்;அங்ஙனம் நீ காலம் பார்ப்பதில்லை; பகையரசர் மாளும்படி வேண்டிய இடத்தே கொல்ல வல்லவன்.எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து விழுதல், மரக்கிளைகளின் இலைகள் உதிர்ந்து வாடுதல், கதிரவன் பல இடங்களில் தோன்றுதல், அஞ்சத்தக்க பறவைகள் குரல் இசைத்தல் ஆகிய அபசகுனங்களை நீ கண்டாலும், போருக்குப் போதலை விடாய்; பல் நிலத்தில் விழுதல், எண்ணெயைத் தலையில் வார்த்தல், ஆண்பன்றியின் மேல் ஏறுதல், ஆடையைக் களைதல், படைக்கலம் இருந்த கட்டில் கவிழ்தல் போன்ற நிகழ்ச்சிகளைக் கனவிற் கண்டாலும் அவற்றை அபசகுனங் களாகக் கருதாமல் அஞ்சாது போருக்குப் போகும் இயல்புடையவன்; சென்று, பகைவரைத் தவறாது வெல்லும் ஆண்மை உடையவன். உனது படையெடுப்பைக் கேட்டுப் பகைவர் நாடுஅஞ்சும்.பகை வீரர் உனது பேராற்றலை எண்ணி நடுங்குவர்; தாம் மீண்டும் இல்லம் வருதல் அரிதென்னும் எண்ணத்தால் தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்களை முத்தம் செய்வர்; தம்மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் மறைத்துக்கொண்டு போருக்குப் புறப்படுவர். இவ்வாறு வன்மைமிக்க பகைவீரரும் அஞ்சத்தக்க பேராண்மை யுடைய நின்னை, யான் என் சொல்லி வாழ்த்துவேன்!” என்று புகழ்ந்து கூறினர்.

** 8. பாணனை ஆற்றுப்படுத்தல்1**
இவ்வாறு நமது புலவர் பெருமான் கிள்ளிவளவனைப் பலபடப் பாராட்டி வந்தபொழுது ஒருநாள் பாணன் ஒருவனைச் சந்தித்தார். அவன் இசைத்தமிழ்த் தேனை வள்ளல்களது செவியாகிய பாத்திரத்திற் பெய்து மகிழ்வித்துப் பரிசில் பெறும் வாழ்க்கையுடையவன். புலவர் அவனைப் பார்த்துத் தம் வள்ளலாகிய கிள்ளிவளவனிடம் சென்று பரிசில் பெறச் செய்ய விரும்பினார்; அதனால் அவனை அன்புடன்நோக்கி,

“தேன்போன்ற இனிய நரம்புத் தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாணனே, ‘குளத்து ஆமையை இரும்புச் சலாகையிற் கோத்தாற் போன்றது, நுண்ணிய கோலால் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய உடுக்கை.அதன் ஓசை இனிதாக இருக்கும். அதனைக் கேட்டு இங்குச்சிறிது தங்கி இளைப்பாறிச் செல்லுக,’ என்று சொல்லிப் பல செய்திகளைப் பற்றி என்னைக் கேட்கின்ற இரவலனே, யான் கூறுவதைக் கேட்பாயாக; தை மாதத்துக் குளிர்ந்த பொய்கையில் நீர்வற்றாது. அது போலக் கிள்ளிவளவன் அரண்மனையுள் சோறு கொள்ளக் கொள்ளக் குறையாது.அவனது வளநாடு சோறுடைத்தன்றோ? நீ அவனது புகழை நினைந்து செல்வாயாக; செல்லும் பொழுது நினது விறலியோடு பண்ணனது சிறுகுடி வழியாகச் செல்க. அப்பண்ணனும் சிறந்த கொடை வள்ளல். நீ கிள்ளிவளவனைக் காண்பாயாயின், பெருஞ்செல்வத்தைப் பெறுவாய். விறகு வெட்டிகள் விறகு வெட்டுதல் கடினம். ஆயின், நீ சோழனிடம் செல்வம் பெறுதல் அவ்வளவு கடினமன்று. ஆதலின், இப்பொழுதே எமது கோவேந்தனான கிள்ளிவளவனை நோக்கி நடப்பாயாக,” என்றார். பாணன் மனமகிழ்ச்சியடைந்து கோவூர் கிழார்க்கு நன்றி செலுத்தி, அவர் சொன்னவழியே சென்றான்.

முடிவுரை

இங்ஙனம் கோவூர் கிழார் கிள்ளிவளவனிடம் இருந்து அவனைச் செந்தமிழ்ப் பாக்களால் மகிழ்வித்தார்; பிறகு அவனிடம் விடை பெற்று உறையூரை அடைந்து, நலங்கிள்ளியின் அவைப் புலவராக இருந்து வருவாராயினர்.

அடிக்குறிப்பு

1.  பாடகன் ஒருவனை ‘இன்ன வள்ளல்பால் செல்க; பரிசளிப்பான்’ என்று செலுத்துதல்.

ஒளவையார்

** 1. ஒளவையார்**
ஒளவையார்

இவர் பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் இன்னது என்பது தெரியவில்லை. ‘ஒளவை’ என்னும் சொல் ‘தாய்’ என்னும் பொருளில் வழங்கி வந்ததை நோக்க, இவரது முதுமையையும் பிறர்க்கு நல்லன அறிவுறுத்தும் ஆற்றலையும் நோக்கி அக்கால மக்கள் இவரைத் ‘தாயார்’ என்னும் பொருள்பட, ஒளவையார் என்று அழைப்பாராயினர் போலும்!

ஊர்

இவர் தமது காலத்தின் பெரும்பகுதியைக் கொங்கு நாட்டில் உள்ள தகடூரில் அதியமானிடம் கழித்தவர்; அவனுடைய உயிர் நண்பராக இருந்தவர்; அவன் இறக்குமளவும் அவனைவிட்டு நீங்காதவர்.ஆதலின், பாண்டிய நாட்டுப் பாரிவள்ளலுக்குப் பாண்டிய நாட்டுக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி இவர்கட்குச் சோணாட்டுக் கோவூர் கிழார் அவைப் புலவராக அமைந்தாற் போலவும், கொங்கு நாட்டு அதியமானுக்கு அவைப்புலவராகக் கொங்குநாட்டு ஒளவையார் அமைந்தனர் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. இவர் தமது நாட்டை ‘அதியமான் நாடு’ என்றும், தமது அரசன் ‘அதியமான்’ என்றும் கூறியுள்ளதும் இதனை வலியுறுத்தும்.

மரபு

இவர் பாணர் மரபினராவர்.பாணர் என்பவர் இசைத் தமிழை இன்பமுற வளர்த்த தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களாவர். இவர்கள் யாழ் வாசித்தலில் வல்லவர்; பாடலில் பண்பட்டவர்; பண் வகைகளை நன்கறிந்தவர். பண் - இசை, பாணர் - இசைவாணர்; ஆதலால், இப்பெயர் இவர்கட்குத் தொழில் பற்றி வந்ததாகும். இவருள் ‘பாணர்’ என்பவர் பாட்டில் வல்ல ஆடவராவர். பாட்டில் வல்ல பெண்டிர்க்குப் ‘பாடினியர்’ என்பது பெயர். இம் மரபினருட் சிலர் ஆடலிலும் வல்லவராக இருந்தனர். அவர்கள் ‘விறலியர்’ எனப் பெயர் பெற்றனர். விறலியர் ஆடலும் பாடலும் செய்ய வல்லவர். பொதுவாகப் பாணன் பாட, விறலி ஆடுதல் பண்டை மரபு. சுருங்கக் கூறின், பாணர் மரபினர் தமிழ் இசையையும் கூத்தையும் வளர்த்து வந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் என்னலாம்.

கல்விப் பயிற்சி

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த எல்லா மரபுகளைச் சேர்ந்த மக்களும் நன்றாகக் கல்வி கற்றிருந்தனர்; ஆடவரைப் போலவே பெண்மணிகளும் நிரம்பக் கல்வி கற்றிருந்தனர்.அவருள் பலர் கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். கல்வி கற்பதிலோ கற்பிப்பதிலோ அக்காலத்தில் மரபு வேறுபாடுகள் கவனிக்கப் பட்டில. இதுபற்றி முதல் அத்தியாயத்திலும் விளக்கமாகக் கூறப் பட்டதன்றோ? இச் சிறந்த கொள்கை இருந்தாற்றான் அக்காலப் பெண்மணிகள் பெரும் புலவர்களாக விளங்கினர். என்ன வியப்பு! பெருங்காக்கைப் பாடினியார், சிறுகாக்கைப் பாடினியார் என்ற பெண்பாற் புலவர் இருவரும் யாப்பிலக்கண நூல் செய்தனராம்! அவர் தம்பெரும்புலமையை என்னென்பது! இங்ஙனம் புலமையும் புகழும் பெற்ற பெண்மணிகளுள் நமது ஒளவையார் ஒருவர் ஆவர்.

ஒளவையார் இளமைப் பருவத்திலேயே தக்க ஆசிரியரிடம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்; நினைத்தவுடன் தடங்கல் சிறிதுமின்றிக் கவிபாடும் ஆற்றல் பெற்றார்; அத்துடன் தம் மரபுக்கேற்ப இசைக் கருவிகளைக் கொண்டு இனிமையாகப் பாடுவதிலும் வல்லவரானார். இயற்றமிழ், இசைத் தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை பெற்று விளங்கியதால், ஒளவையார் புகழ் விரைவில் தமிழ் நாட்டிற் பரவலாயிற்று. கொங்கு மண்டலத்தில் தகடூர் நாட்டை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன் இவரைத் தம் அவைப்புலவராக்கச் சமயம் பார்த்திருந்தான்.

** 2. ஒளவையாரும் அதியமானும்**
ஒளவையாரது சீற்றவுரை

ஒளவையார் தமது நாட்டு அரசனான தகடூர் அதியமானைக் காணச் சென்றார்; அவ்வள்ளலும் அவரை இனிய முகத்துடன் வரவேற்று உபசரித்தான்; உடனே பரிசில் தரின், புலவர் தன்னை விட்டுப் போவரென்று அஞ்சிப் பரிசில் தராது காலம் தாழ்த்தினன். அவனது உட்கருத்தை அறியாத ஒளவையார் சினம் கொண்டார்; தம்மை அவன் ஒரு பொருளாக மதியாது நடப்பதாக எண்ணி மனம் புழுங்கினார்; உடனே அவனது அரண்மனையை விட்டு வெளி யேறத் துணிந்தார். அதியமானை நேரிற் காண அவர் விரும்ப வில்லை எனினும், அவன் உணரும்படி சில அறிவுரைகளைக் கூற வேண்டும் என்பது அவரது அவா. அதனால் அவர் அரண்மனை வாயிற் காவலனை நோக்கி,

“வாயில் காப்போய், வாயில் காப்போய், வள்ளல்கள் காதுகளில் பொருள் விளங்கும் சொற்கள் என்னும் விதையை விதைத்துத் தாம் நினைந்த பரிசிலாகிய தானியத்தை விளைவிக்கும் மனவலிமையுடையவரும், மேம்பாடு பெறுவதற்கே வருந்துகின்ற வருமான இப்பரிசில் வாழ்க்கையுடைய பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காப்போய், நினது அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் தகுதி இன்னதுயேனும் அறியானோ? இவ்வுலகம்,அறிவையும் ஒழுக்கத்தையும் மதிக்கும் பெருநிலம் இல்லாத பாழ்நிலம் ஆக வில்லை. ஆதலால், அத்தகைய பெருமக்களை நோக்கி யாம் இன்னே புறப்படுகின்றோம். இவ்வதியமான் இல்லாவிடில் எங்கட்கு வேறு புகலிடம் இல்லையா? யாம் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் எம்மை வரவேற்று மரியாதையாக நடத்துபவர் பலர் உளர். இதனை உனது அரசனுக்கு அறிவிப்பாயாக.” என்று கூறிப் போதற்குப் புறப்பட்டார்.

அதியமான் ஆதரவு

ஒளவையார் சீற்றத்தையும் அவரது ஆவேசப் பேச்சையும் வாயிற் காவலனால் கேள்வியுற்ற அதியமான் விரைந்தோடி வந்தான்; ஒளவையாரை அன்புடன்நோக்கி, “அம்மையே, உனக்குப் பரிசில்தரின், நீ என்னைவிட்டுப் போய்விடுவையே என்ற கவலையாற்றான் பரிசில் தராது காலம் தாழ்த்தினேன்; வேறில்லை,” என்று கூறினான்; பின்னர் அவரைத் தன்னுடன் அமரச் செய்து உண்பித்து, அவர் மனம் முற்றிலும் மகிழுமாறுவேண்டிய பரிசிலை நல்கினான். அவனது அருமைப்பாடு கண்ட ஒளவையார், “நாம் இவனது உள் எண்ணத்தை உணராது, மனம் வருந்திப் பல கூறிவிட்டோமே! இவன் மிகவும் உத்தமனாகக் காண்கிறான்,” என்று தமக்குள் கூறிக்கொண்டார். அன்று முதல் ஒளவையார் அதியமானது அவைப் புலவராகவும் அவனது ஆலோசனையாளராகவும் இருந்தார்.

ஒளவையார் பாராட்டுரை

ஒளவையார் பல நாட்கள் அதியமான் அவையில் இருந்து வந்தார்; நாடோறும் அதியமானுடன் நெருங்கிப் பழகினார். ஒவ்வொரு நாளும் பழகப் பழக அவனது நட்பு, அரைக்க அரைக்க மணமிகு சந்தனக் கட்டை போல இனிதாக வளர்ந்து வந்தது.

"பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும்"

என்ற ஆன்றோர் அனுபவமொழி பொய்யாகாதன்றோ? ஒளவையார் இதனை எண்ணிஎண்ணி மகிழ்ந்தார். அவர் மகிழ்ச்சி மீதூர, “அதியமான் ஒருநாள் செல்லினும் சரி, பலநாள் செல்லினும் சரி; பலரோடு செல்லினும்சரி - எப்பொழுதும் ஒரே வகையான அன்பைச் செலுத்தும் நல்லியல்புடையவன். இவனது பரிசில், யானை கையில் எடுத்த கவளம் வாயினுள் செல்லுதல் தவறாது போல என்றும் புலவர் கையகத்ததே ஆகும். ஆதலின்,இவன் பரிசில் தரினும் ஒன்றே; நீட்டிப்பினும் ஒன்றேயாகும்,” என்று பாராட்டி மகிழ்ந்தார்.

கருநெல்லிக் கனி

ஒருநாள் அதியமான் தன் நாட்டு மலைவளம் காணச் சென்றான்; சென்றவன், மலைப்பிளப்பில் இருந்த கருநெல்லி மரத்தைக் கண்டான். அதனில் பழுத்திருந்த கருநெல்லிக் கனி ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. அரசன் அதனை அரிதில் முயன்று பறித்தான். அவன் ஏன் அதனை அரும்பாடுபட்டுப் பறித்தான்?’ அதனை உண்பவர் உடல் வளம் பெறுவர்; நோயின்றி நீண்ட நாள் உயிரோடு இருப்பர்’ என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அதனைக் கஷ்டப்பட்டுப் பறித்தான்; பறித்தவன்,அதனைத் தானே உண்ண விரும்பவில்லை. அப்பெருமகன் தனக்குள், ’இக்கனியை யான் உண்பேனாயின் நீண்டநாள் நல்லுடல் பெற்று இருப்பேன். ஆயின், நீண்டநாள் இருப்பின், பல நாட்டரசருடனும் ஓயாத போரிட வேண்டியவனாவேன். போர்களினால் என் குடிகட்கும் வேற்று நாட்டுக் குடிகட்கும் ஓயாத இன்னல்களே ஏற்படும். இதனை நமது ஒளவையார் உண்டு நீண்டநாள் இருப்பாராயின், என்போன்ற மன்னவர் பலருடைய அவைகளைச் சிறப்பிப்பர்; பல அரிய செந்தமிழ்ப் பாடல்களைச் செய்வர்; அவற்றால் நமது தாய் மொழி வளரும். ஆதலின், இதனை உண்ணத் தக்கவர் ஒளவைப் பிராட்டியாரே ஆவர். அவரிடம் சென்று கொடுப்பேன்," என்று கூறிக்கொண்டு அரண்மனையை அடைந்தான்; அடைந்து, புலமை மிக்க மெல்லியலாரை முகமலர்ச்சியுடன் நோக்கி,

"அம்மையே, இக்கருநெல்லிக் கனியை உண்ணுக’ என்று கூறித் தந்தான்.அதன் மகத்துவத்தை உணராத ஒளவையார், அஃது அன்பினால் தரப்பட்ட சாதாரணமான கனி என்று எண்ணி, வாங்கி உண்டார்; உண்ட பின்னர், அக்கனியின் சிறப்பினை உணர்ந்தார்; அத்தகைய சிறப்புடைய கனியைத் தான் உண்ணாது, அரசன் தம்மை உண்ணச் செய்த தியாகத்தை எண்ணி அன்புக் கண்ணீர் உகுத்தார்; உகுத்து,

“வாள் ஏந்திப் பகைவரைப் போர்க்களத்தில் வெல்ல வல்ல அரசே, வீரக்கழலை அணிந்த கோமானே, பெரிய மலை உச்சியில் பெற்ற அமிழ்தம் போன்ற இக்கனியைப் பெறுதற்கு அரியது என்று எண்ணாது,அரிதின் முயன்று பறித்தனை; பறித்து அதன் பயனை நன்கு உணர்ந்த நீ அதனை உண்ணவில்லை; அதன் சிறப்பை எனக்கும் கூறவில்லை; கூறாது என்னிடம் தந்தனை; யான் அதனை உண்டு நீண்ட நாள் வாழ்தலை நீ விரும்பினாய். ஆதலின், நீலமணி மிடற்றுச் சிவபெருமான்போல நெடுங்காலம் இந்நிலவுலகில் வாழ்வாயாக” என்று மனமார வாழ்த்தி மகிழ்ந்தனர்; அவனுடைய அன்பு, அருள், வீரம், தன்னலமற்ற தன்மை, எளியவர்க்கு எளியனாம் தன்மை முதலிய நல்லியல்புகளைப் பாராட்டிப் பாக்களைப் பாடி அவனையும் அவையோரையும் அகமகிழச் செய்தனர்.

** 3. ஒளவையார் - அரசியல் தூதர்**
ஒளவையார் தூது செல்லல்

அதியமான் தகடூரை ஆண்டு வருகையில் தொண்டை நாட்டிற்குத் தலைநகரான காஞ்சியில் தொண்டைமான் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் அதியமானுடைய புகழ் யாண்டும் பரவுதலைக் கண்டான்;அவனது படைப்பலத்தை அறியாது, அவனைத் தன்னினும் எளியவன் எனத் தவறாகக் கருதினான்; அதனால் அவனுடன் போர் செய்து அவனது பரந்த புகழைக் கெடுக்க விழைந்தான். தொண்டைமான் மனநிலையை நன்குணர்ந்த அதியமான் இரங்கினான்; தன் வீரம், படை வன்மை முதலியவற்றைத் தொண்டைமானுக்குத் தூது மூலம் அறிவிக்க அவாக் கொண்டான்; கொண்டு, அதற்கு உரியவர் ஒளவையாரே எனத் துணிந்தான்; துணிந்து அவரையே காஞ்சிமா நகருக்குச் சென்று வருமாறு வேண்டினான்.

படைக்கலம் காட்டல்

அரசன் வேண்டுகோளுக் கிணங்கிய ஒளவையார் காஞ்சி மாநகரம் சென்றார். புலவரும் அரசியல் தூதருமான அப்பெரு மாட்டியாரைத் தொண்டைமான் உள்ளக் களிப்புடன் வரவேற்றுப் பெரு விருந்தளித்தான்; அவருடன் பற்பல பொருள் பற்றித் தாராளமாகப் பேசிக் கொண்டிருந்தான்; தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட விழைந்து, அவரை அங்கு அழைத்துச் சென்றான்; அக் கொட்டிலின் கதவுகளைத் திறந்து ஆயுதங்களைக் காட்டினான். அவை யாவும் புதியன; பளபளவென்று மின்னின. ‘இவற்றைக் காட்டினால் நமது படை வன்மையை ஒளவையார் நன்கறிதல் கூடும்; அறிந்து, தம் அரசனது உண்மை நிலையை உரைத்தலும் கூடும். அவ்வுரையிலிருந்து அதியமானது படைவன்மையை நாம் ஒருவாறு உணர்தல் கூடும். மேலும் இவர் நமது பேராற்றலை அவனிடம் அறிவித்தலும் கூடும்’ என்பது தொண்டைமான் எண்ணமாகும். அரசியல் தூதராக வந்த ஒளவையார் இந்த எண்ணத்தை அறிந்துகொண்டார். அப் பெண்மணியார் தொண்டைமான் படைக் கலங்களைக் காட்டக் கண்டு,

தூதரது சமத்காரப் பேச்சு

“இப்படைக் கருவிகள் எல்லாம் முற்றிலும் புதியன. அதனால், இவை நெய் பூசப்பட்டு, மயிற்பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டுக் காவலையுடைய அரண்மனையில் அழகாக வைக்கப்பட்டுள்ளன. (இவை போரில் பயன்படாமையால் இவ்வாறு வீணே வைக்கப்பட்டுள்ளன). அதியமான் தான் பெற்ற செல்வத்தைப் பலர்க்கும் பங்கிட்டுத் தரும் இயல்புடையவன். அவனுடைய போர்க் கருவிகள் பல போர்களில் ஈடுபடுகின்றன. ஆதலால் நுனி தேய்ந்து எப்பொழுதும் கொல்லன் உலைக் களத்திற் கிடக்கின்றன.” என்று நயம்பட நவின்றார். இக்கூற்றில், தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தமையும், அதியமானைப் பழித்தது போலப் புகழ்ந்தமையும் கூர்ந்து நோக்கத்தக்கது. இதிலிருந்து ஒளவையாரது பேச்சாற்றல் எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கலாம். தொண்டைமான் அம்மையாரை நோக்கி, “புலவீர், உங்கள் நாட்டில் என்னுடன் போர் புரியும் வலியார் உளரோ?” என்று வினவினான். உடனே அம்மையார், “அரசனே, நீ போர் புரியக் கருதுவையாயின், அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவம் போன்ற வீர இளைஞர் பலர் இருக்கின்றனர். பொது இடத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள மத்தளம் காற்றடித்தலால் ஓசையை எழுப்பும். அவ்வோசையைப் ‘போர் ஓசை’ என்று எண்ணி மகிழ்ந்து, உடனே படைக்கலம் தாங்கிப் போருக்குப் புறப்படும் எனது தலைவனும் இருக்கின்றான்.” என்று குறித்தார்; இக்கூற்றால் அதியமானது போர் விருப்பத்தையும் கொங்கு வீரர் சிறப்பையும் விளக்கினார். பின்னர் அவ்வரசனிடம் விடைபெற்றுத் தகடூரை அடைந்தார்; அடைந்து, காஞ்சியில் நடந்தவற்றைத்தமது வள்ளலிடம் விளக்கமாக வுரைத்தார்.

** 4. அதியமான் - காரி போர் -1**
போர் நிகழ்ச்சி

அதியமான் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமானாடு என்பதனை ஆண்டுவந்தவன் திருமுடிக்காரி என்பவன். இவனைப் பற்றிச் சென்ற பிரிவிற் கூறப்பட்ட தன்றோ? இவன் வள்ளன்மையிற் சிறந்திருந்தாற் போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான். இவனது பெரு நாடு விரிதல் அதியனது நாட்டிற்கு ஆபத்தாகும். ஆதலின், அதியமான் இவனை விரைவில் ஒடுக்கத் தீர்மானித்தான்; தன் பண்பட்ட படைகளைத் திரட்டிச் சென்று திருக்கோவலூரைத் தாக்கினான்.

பெருவீரனான காரி தன் குதிரை மீது ஏறிப் போர்க்களம் குறுகினான். இருதிறத்துப் படைகட்கும் கொடிய போர் நடை பெற்றது. அதியனும் காரியும் வீராவேசத்துடன் மலைந்தனர். அதியமான் காரியைவிடச் சிறந்த போர்வீரன் ஆதலாலும், கொங்கு வீரர் போர்ப் பயிற்சி மிக்குடையார் காரியின் படை வன்மை வரவரக் குறையத் தொடங்கிற்று. பல உயிர்கள் வீணாக மதிலைக் கண்ட ஒளவையார், காரியைப் போரை விடுமாறு தூண்ட விரும்பினார்; விரும்பி அவன் வீரரை நோக்கி,

ஒளவையார் அறிவுரை

“அதியமான் போர் செய்ய விரும்பி உரையிலிருந்து உருவிய வாட்கள், பகைவரது தசையில் மூழ்கிப் பதிந்து நுனி தேய்ந்து அழகு கெட்டன.அவனுடைய வேல்கள் குறும்பருடைய அரண்களை வென்று, அவர் தம் நாட்டை அழித்தலால் காம்பும் ஆணியும் ஆட்டங் கண்டு கெட்டன. பகைவருடைய கோட்டைக் கதவுகள் கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவுகளை உடையன. அவற்றைக் குத்தலால் அதியமானுடைய யானைகளின் பெரிய கொம்புகளிற் பூட்டிய பூண்கள் கழன்றன. அவனுடைய பரிகள், போர்க்களததில் போரிட்ட வீரருடைய மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால், இரத்தக் கறைபட்ட குளம்புகளை உடையவாயின. அதியமான் பெரிய படையை உடையவன்; கழல் வடிவாகவும் கிண்ணி வடிவமாகவும் செய்யப்பட்ட கேடயம் உடையவன். அக்கேடயத்தில் அம்புகள் துளைத்த துளைகள் பலவாகும். இத்தகைய பகை வன்மையுடைய அரசனால் கோபிக்கப்பட்டவர் பிழைத்தல் அரிது! மருதவளம் செறிந்த உங்கள் ஊர்கள் உங்களுக்கு உரியவாக வேண்டும் என்பதை விரும்புவீராயின்,அவனுக்குக் கப்பம் கட்ட வேண்டும்; அதைக் கட்ட மறுப்பீராயின் அவன் உங்களை விடக் கூடியவன் அல்லன். அவனது பேராற்றலை நான் அறிந்தவாறு சொன்னேன். அதனை நீங்கள் உணராது போர் செய்யின், கழற் கனியால் வகிர்ந்த கூந்தலையுடைய உங்கள் மனைவியரை விட்டுப் பிரிதல் உறுதியாகும். ஆதலின், ஆராய்ந்து போர் செய்க,” என்று அதியனுடைய பெருவீரத்தை விளங்க வைத்தார். இவ்வாறு அருள் மிகுந்த அம்மையார் அறிவித்தும் பகைவர் போரை விடவில்லை. போர் உச்ச நிலையை அடைந்தது. இறுதியில் அதியமான் வெற்றி பெற்றான். திருக்கோவலூர் அவன் கைப்பட்டது. இவ்வெற்றியைப் பாராட்டிப் பரணர் என்னும் பெரும் புலவர் செந்தமிழ்ச் செய்யுள் பாடி மகிழ்ந்தார்.

ஒளவையார் பாராட்டுரை

ஒளவையார் தம் அரசனது வெற்றிக்கு மகிழ்ந்து அவனைப் பார்த்து, “உன்னுடைய முன்னோர் தேவர்களைப் போற்றி வழி பட்டவர்; அவர்கள் பொருட்டு வேள்வியில் ஆகுதி செய்தவர்; பெறுதற்கு அரிய கரும்பை விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத் திற்குக் கொணர்ந்தவர்; வீரக் கழலையும் பனந் தாரினையும் தேவர் தொடர்பு கொண்ட சோலையையும் பெற்றவர்; நெடிய வேலேந்திய வீரர். நீயும் அப்பெரு வீரர்களைப் போன்றவன்; சேரன், சோழன், பாண்டியன், திதியன், எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்ற ஏழரசர்க்குரிய இலச்சினையைப் பெற்றவன்; நீங்காத அரச உரிமையை உடையவன்; நீ, மேற்சொன்ன ஏழரசரை வென்ற அந்நாளிலும் நின்னைப் புலவர் பலர் வாயார வாழ்த்தினர். திருக்கோவலூரைக் கைப்பற்றிய இன்றும் நினது வலிமிக்கதோளைப் பரணன் என்னும் பெரும்புலவன் தன் கல்விப் பெருமையாற் பாடினான்.” என்று தாம் ஒரு செய்யுள் பாடி அதியனை மகிழ்வித்தார்.

மகப்பேறு

இங்ஙனம் அதியமான் திருக்கோவலூரைக் கைப்பற்றி, வெற்றி முழக்கத்துடன் ஒளவையார் உடன்வரத் தகடூரை அடைந் தான்; அடைந்ததும், நெடுநாள் மகவு இல்லாத தனக்கு ஆண்மகவு பிறந்திருத்தலைக் கேள்வியுற்றான்; வெற்றி மகிழ்ச்சியில் மூழ்கி யிருந்த அவன், புத்திரப் பேறு பெற்றதால் உண்டான பெரு மகிழ்ச்சியுள் ஆழ்ந்தான்; தனது போர்க்கோலத்தைக் களையாமலே அந்தப்புரம் விரைந்து சென்றான்; குழந்தையின் மலர் முகத்தைக் கண்டு மகிழ்ந்தான். அப்பொழுது அவன் அருகில் இருந்த நமது மூதாட்டியார் உளம் மகிழ்ந்து,

“அரசனது கையில் வேல் இருக்கின்றது; கால்களில் வீரக் கழல்கள் இருக்கின்றன. உடம்பில் பகைவரால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருக்கின்றன. கழுத்தின் மீது ஈரம் புலராத பசிய புண் இருக்கின்றது. குடுமியில் பனந்தோடும் வெட்சி மலரும் வேங்கைப் பூவும் இருக்கின்றன. பகைவரை வெகுண்டு பார்த்த கண், தவப் புதல்வனைத் தரிசித்த பிறகும் சிவப்பு நீங்கவில்லை. ஆதலின், இவனது சினத்திற்கு ஆளான பகைவர் தப்புதல் உண்டோ!” என்று அவனது வீரப் பொலிவைப் பாராட்டி மகிழ்ந்தார்.

** 5. காரி - அதிகன் போர் - II**
காரியும் சேரனும்

அதியமான் தகடூரில் தங்கி இருக்கையில், அவனிடம் தோல்வியுற்ற மலையமான் தனது உயிர் நண்பனான சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவனைத் துணைபுரிய வேண்டினான். அச்சேரமான் பலமுறை காரியின் உதவி பெற்றவனாவன். ஆதலின், அவன் உடனே காரிக்கு உதவிபுரிய முன் வந்தான்; சேரநாட்டுச் சிறப்புடைய வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். அவன் கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரியின் வலியை அடக்கி, அவன் அதியமானுக்கு உதவி செய்யாதவாறு தடுக்க விரும்பினான்; அதனால் முதலில் கொல்லிமலை நாட்டைத் தாக்கினான்.

சேரமான் வெற்றி

இஃதறிந்த அதியமான் சேரனை நையப் புடைக்கத் தக்க சமயம் அதுவே என்றெண்ணித் தன் படைகளைத் திரட்டிச் சென்றான். கொல்லி மலை நாட்டில் ஓரியும் அதியனும் ஒருபுற மாகவும் சேரனும் காரியும் மற்றொருபுறமாகவும் நின்று மலைந்தனர். போர் மிகவும் கடுமையாக நடந்தது. அதியமானுக்கு உதவியாகச் சோழ பாண்டியரும் வந்து போரில் கலந்து கொண்டனர்.அதனால் அப்போர் பெரும்போரின் தன்மையை அடைந்தது. எனினும், பெருவீரனான சேரமான்,சோழ பாண்டியரையும் அதியமானையும் வென்று துரத்தினான்; அவர்களுடைய முரசவாத்தியத்தையும் குடையையும் கவர்ந்தான்; ஓரியைக் கொன்றான்; கொல்லிமலை நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான்.

தகடூர்க் கோட்டை

போரில் தோற்ற அதியமான் நாணமுற்றுத் தன் கோட்டைக்குள் புகுந்து கொண்டனன். சேரனும் காரியும் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டனர். அதியமான் போர்புரிய முன் வரவில்லை. இந்நிலையைக் கண்ட ஒளவையார் அதியமானுக்கு அவனது பேராற்றலை உணர்த்திப் போரில் ஊக்கம் உண்டாக்க விரும்பி, “நன்றாக மலர்ந்த வெண்காந்தள் பூவுடன் மலை மல்லிகை மணங் கமழும் மலைச்சாரலில் உள்ள புலி சீறுமாயின், அதனை எதிர்த்து நிற்கவல்ல மான் கூட்டமும் உண்டோ? சூரிய மண்டிலம் கொதித்து எழுமாயின் ஆகாயத்திலோ உலகிலோ இருள் இருத்தல் உண்டோ? பாரத்தின் மிகுதியால் நிலத்தில் பதிந்த சக்கரத்தின பள்ளத்தைப் போக்குவதற்கு மணலைப் பரக்கவும், கல் பிளக்கவும் நடக்க வல்ல மனவன்மை படைத்த கடாவிற்குப் போதற்கு அருமையான துறையும் உண்டோ? இல்லை அல்லவா? அவைபோல நீ போர்க்களம் புகுந்தால், உன்னை எதிர்க்கும் வீரர் இருப்பாரோ?” என்று இதமுறக் கூறினார்.

அதியமான் இறப்பு

ஒளவையாரது வீரவுரையைக் கேட்ட அதியமானது உள்ளம் கிளர்ச்சி அடைந்தது. அவன் உடனே போர்க்கோலம் பூண்டு, மதிற் புறத்தே தோன்றினான்; வீராவேசங்கொண்டு அமர் செய்தான். அந்த அமரில் பகைவர் விட்ட அம்புகள் அவன் உடலிற் பல இடங்களில் தைத்துப் புண்படுத்தின. அதனால் அவன் சோர்ந்து விடுவானோ என்றஞ்சிய அம்மையார் அவனைக் குறுகி,

"பெருமானே, போரில் போதுமான காயங்களை அடைந்து விட்டனை. அங்ஙனம் அடையாத நின் பகைவர் போரில் இறவாமை யால் உண்டாகும் குற்றத்திற்கு ஆளாவர்; அக்குற்றம் நீங்கும்படி, நோயால் இறந்த தமது உடம்பைத் தருப்பையிற் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படுவர். நீ, போரில் வீரர் பலரை வெட்டி வீழ்த்த, அவர் அனைவரும் நினது தொண்டினால் துறக்கம் அடைந்தனர். நீ இனி வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது ஒன்றும் இல்லை,’ என்று அன்புடன் கூறினார். அதுகேட்ட அதியன் மகிழ்ந்து பின்னும்போர் புரிந்தான்; இறுதியில் சேரமான் விட்ட வேல் ஒன்று மார்பிற் பாய்ந்து இறந்தான்.

** 6. ஒளவையார் புலம்பல்**
அந்தோ! ஒளவையார் துயரம் அளவிடற்கரியது. அவர் அவன் பிரிவை நினைந்து பலவாறு புலம்பினார்.இரவலர்க்கு எளியனாய் இலங்கிய பேரருளாளனைப் பிரிந்தால்,யார்தாம் வருந்தார்? ஒளவையார் அவனுடைய செவ்விய குணநலங்களைச் சொல்லி வருத்தமுறலானார்:

“அதியமான், சிறிய அளவில் தேன் கிடைப்பினும் அதனைத் தான் உண்ணாது எங்கட்கே விரும்பி அளிப்பான்; இனி அது கழிந்ததே! பெரிய அளவில் தேன் கிடைப்பின், முதலில் எங்கட்குப் பங்கிட்டுக் கொடுப்பான்; நாங்கள் அதனை உண்டு மகிழ்ந்து பாடுவோம்; எஞ்சிய தேனை எம்பெருமான் உண்டு மகிழ்வான்; அது கழிந்தது! சிறிய அளவினையுடைய சோறு கிடைப்பினும், பலரோடும் உண்ணும் இயல்புடையன் அதியமான்; அது கழிந்ததே! பெரிய அளவினையுடைய சோறாயின், மிகப் பலரோடு இருந்து உண்பன்; அது கழிந்ததே! உணவிருக்கும் இடம் முழுவதும் யாங்கள் உண்டு களிக்க அளிப்பான்; அது கழிந்ததே! போர்க்களம் முழுவதும் பெரு வீரனாக நடந்து திரிவான்; அது கழிந்ததே! தன் மனைவியர்க்கு மாலை சூட்டலால் கரந்தப்பூ நாறும் தூய தனது கையினால் அன்பு அதிகப்பட புலால் நாறும் எமது தலையைத் தடவி நலம் விசாரிப்பான்; அது கழிந்ததே! எம் கோவேந்தன் மார்பில் தைத்து அவனை மடியவைத்த வேல், அவன் மார்பில் மட்டும் பட்டதன்று; அது பாணரது மண்டைப் பாத்திரத்தின் துளையில் உருவியுள்ளது; இரப்போர் கையினுள்ளும் தைத்து உருவியுள்ளது; இரவலரால் புரக்கப்படும் சுற்றத்தாரது கண்மணிப் பாவையின் ஒளியை மழுங்கச் செய்துள்ளது; நுண்ணிய சொல் ஆராய்ச்சியுடைய புலவரது நாவிற் சென்று தைத்துள்ளது. எமக்கு ஆதரவாக இருந்த எமது இறைவன் எங்குச் சென்றிருக்கிறான்? அவன் இல்லாததால், இனி இத் தமிழகத்தில் பாடுவோர் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவோர் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள பகன்றைப் பூவைப் பறித்துச் சூடுவார் இல்லாததால் அது வீணாகின்றது. அதுபோலப் பிறர்க்கு வழங்கிப் பயன் நுகராது மாளும் மக்கள் பலராவர். எம்மரசன் அவர் போன்றவன் அல்லன். அப்பெருமானை விட்டு எங்ஙனம் பிரிந்திருப்போம்!”

“அதியமான் இல்லாததால் நாட்கள் கழித்தல் அருமை; ஆதலின், அவன் இல்லாத காலையும் மாலையும் இல்லையாகுக; அவன் இன்றி யான் உயிர் வாழ்தல் பயனில்லை; ஆதலின் என் வாழ்நாட்கள் விரைவில் ஒழிந்து போவனவாக; அதியமான் தாயத்தாரால் கொடுக்கப்பட்ட நாட்டை வேண்டா என்று சொன்னவன். அத்தகையவன், நடுகல்லில் மயிற் பீலியைச் சூட்டிப் படைக்கும் படையலை ஏற்பானோ, ஏற்கானோ!”

இங்ஙனம் ஒளவையார் துயரமடைந்தபொழுது அதியமான் உடல் ஈமச் சிதை மீது வைத்து எரியூட்டப்பட்டது. அது கண்ட ஒளவையார்,

“ஈமத்தீ இவ்வள்ளியோனது உடலைச் சிதைக்காமல் அவியினும்” அவிக; அன்றிச் சிதையும்படி ஓங்கி எரியினும் எரிக; ஞாயிற்றை ஒப்போனது புகழ் உடம்பு ஒரு காலத்திலும் அழியாது," என்று அவனது புகழைப் பாராட்டிக் கண்ணீர் விட்டனர்.

பொகுட்டெழினி

இவன் அதியமான் மகன். இவன் தந்தை இறந்த பிறகு அரசனாக முடிசூட்டப்பட்டான். இவன் மிக்க இளையவன் ஆதலின், அரசியல் அநுபவம் வாய்ந்த பெரியோர் உடனிருந்து நாட்டை ஆண்டுவந்தனர். ஒளவையார் அவனை நல்வழிப்படுத் தினார்; அவனுடைய கல்விச் சிறப்பு, கொடைச் சிறப்பு முதலியன தோன்றப் பாடி,அவனை நன்முறையில் நடத்தி வந்தார்.

** 7. நாஞ்சில் வள்ளுவன்**
நாஞ்சில் நாடு என்பது தமிழ் பேசப்படும் தென் திருவாங்கூர்ச் சீமையின் ஒரு பகுதியாகும்.அங்கு “நாஞ்சில்” மலை இருக்கின்றது. அதனை அரணாகக்கொண்டு அந்நாட்டை வள்ளுவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனை ‘நாஞ்சில் வள்ளுவன்’ என்று அக்காலத்தார் அழைத்தனர். அவன் தமிழ் மொழியினிடத்தும் புலவரிடத்தும் இசைவாணரிடத்தும் சிறந்த பற்று உடையவன்; அவர்கட்குத் தன்னால் இயன்ற அளவு உதவி புரிந்து வந்தான். அம்மையார் அப்பெருந்தகையினிடம் சென்று அரிசி வேண்டினார். அவன் ஒளவையாரது பெரும் புலமையையும் புகழையும் அறிந்தவன் ஆதலின், அவர் கேட்ட அரிசி தராது, யானையைத் தந்தான். அம்மையார் அவனது கொடைச் சிறப்பை வியந்தார்:

“நாஞ்சில் மலைத் தலைவன் மெய்யாகவே அறிவு மெல்லியனே; நாம் இலைக்கறி மேல் தூவச் சிறிது அரிசி வேண்டினோம்; அவனோ, பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன் ஆதலால், எமது வறுமையை எண்ணியதோடு தனது தகுதியையும் எண்ணி ஒரு யானையைப் பரிசிலாகத் தந்தான். ஆதலின், ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்குமுன் அவரது தகுதியறிந்த கொடுத்தல் வேண்டும். பெரியோர்கள் தாங்கள் செய்யத்தகும் முறை அறிந்து செய்யார் போலும்!” என்று, அவனது வள்ளன்மையைப் பாராட்டினார்; அப் பாராட்டலோடு அவரவர் தகுதிக்கும் தேவைக்கும் தக்கவாறு பரிசில் தரவேண்டும் என்ற பாடத்தையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்; பின்னர், அவனிடமிருந்து நீங்கிப் பல நாடுகளைப் பார்த்துக் கொண்டே சென்று, சோழ நாட்டை அடைந்தார்; சோழர் பெருமானான பெருநற்கிள்ளி என்பவன் இராஜசூயயாகம் செய்யப் போவதைக் கேள்வியுற்று உறையூரைக் குறுகினார்.

** 8. மூவேந்தரை வாழ்த்துதல்**
இராஜசூய யாகம்

சோழன் பெருநற்கிள்ளி சேர, பாண்டியர்க்கு நண்பன்; மிகவும் நல்லவன். ஆதலின் அவன் இயற்றிய இராஜசூய யாகத்திற்குச் சேரமான் மாரிவெண்கோ என்பவனும், பாண்டிய அரசனான உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். ஒருவர்க்கு ஒருவர் பகைமை கொண்டு ஓயாது போர் செய்யும் இயல்பினை யுடைய முடியுடை மூவேந்தர் மரபினர், இங்ஙனம் ஒற்றுமைப்பட்டவராய், ஓர் இடத்தில் மனமகிழ்ச்சியோடு கூடியிருத்தலைக் கண்ட நமது ஒளவையார் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்; தமது மகிழ்ச்சியை அவர்களுக்கு வெளிக்காட்ட விரும்பி,

ஒளவையார் வாழ்த்துரை

“தேவலோகத்தை ஒத்த நாடே தம்முடையதாக இருப்பினும், அஃது எப்போதும் தம்முரிமைப்பட்டே நடவாது; அந்நாட்டுக்கு உரியவர் அல்லராயினும், நற்றவம் செய்தவராயின், அஃது அவர்க்கே உரியதாகும். ஆதலால், நீங்கள் உங்களை யாசித்த பார்ப்பார் கை நிறையப் பூவையும் பொன்னையும் நீரோடு சொரிக; இரப்போர்க்குக் குறைவற வழங்குக; நல்லொழுக்கத்துடன் வாழ்க; நல்லொழுக்கம் என்ற தெப்பத்தாற்றான் பிறவிக் கடலை நீந்த முடியும். புலனடக்கம் பெற்ற அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போல ஒருங்கு கூடியுள்ள மூவேந்தர்களே, உங்கள் ஒற்றுமையால் உண்டாகும் இன்பமும் அமைதியும் பிற நலன்களும் நான் எடுத்துக் கூறும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண்மீன்களிலும் பலவாகப் பெருகுக! மழைத்துளியினும் மேம்பட்டுப் பெருகுக!” என்று கூறி மனமார வாழ்த்தினர். முடியுடை மூவேந்தரும் களிப்புற்று, அம்மையார்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தனர்.

** 9. ஒளவையாரும் பாரி மகளிரும்**
பாரி மகளிர்

பாரி என்பவன் சங்க கால வள்ளல்களில் ஒருவன். அவன் சிறந்த கொடையாளி; எல்லாப் புலவராலும் ஏத்தெடுக்கப் பெற்றவன். அவன் பறம்பு நாட்டுத் தலைவன். அவன் புகழ் பரவுதலை வெறுத்த மூவேந்தர் அவனது மலையை முற்றுகை யிட்டனர். பாரியின் உயிர் நண்பரான கபிலர் என்னும் பிராமணர் தம்மால் இயன்றவரை சந்து செய்ய முயன்றார். அவர் முயற்சி பலன் தரவில்லை. இறுதியில் பாரி வள்ளல் கொல்லப்பட்டான்; பறம்பு நாடு பகைவர் கைப்பட்டது. கபிலர் தம்மிடம் மாணவி களாக இருந்து கவிபாடும் ஆற்றல் பெற்ற பாரி மகளிர் இருவரை உடன் அழைத்துக் கொண்டு பறம்பு மலையை விட்டு வெளிப் பட்டார்; அம்மகளிரை மணந்து கொள்ளுமாறு சிற்றரசர் பலரை வேண்டினார். அவர்களை மணப்பின் பேரரசர் பகைமை ஏற்படலாம் என்று அஞ்சிய அச்சிற்றரசர் மணத்திற்கு இசையவில்லை. மனம் வெறுத்த கபிலர் திருக்கோவலூரை அடைந்து, பார்ப்பார் சிலரு பாதுகாவலில் தம் மாணவியரை விட்டு, பாரியை நினைந்து உள்ள முருகித் தீப்பாய்ந்து இறந்தார்.

ஒளவையாரும் பாரி மகளிரும்

ஒளவையார் இந்த விவரங்களை எல்லாம் நன்கு அறிந்தார்; உடனே திருக்கோவலூர் விரைந்து சென்றார்; பாரி மகளிரைக் கண்டார். அம்மகளிர் புலவரை முன்னரே நன்கு அறிந்தவர் ஆதலின், தம்மால் இயன்ற அளவு நன்றாக உபசரித்தார். அம்மையார் அவர்களது இரங்கத்தக்க நிலையைக் கண்டு மனம் வருந்தினர்; முல்லைக்குத் தேர் ஈந்த பெரு வள்ளலான பாரி மகளிர் தமது அரச போகத்தை இழந்து வறிய நிலையில் இருத்தலைக் காண எவர் மனந்தான் உருகாது! அம்மையார் அங்குப் பல நாள் தங்கி அவர்கள் மணத்தை முடித்தனர் என்பது கூறப்படுகின்றது.

** 10. முடிவுரை**
இங்ஙனம் ஒளவை மூதாட்டியார் தம் கல்விச் சிறப்பாலும் ஒழுக்க மேம்பாட்டாலும் தமிழ்நாட்டுப் பேரரசர். சிற்றரசர் - குடி மக்கள் இவர்தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்; தமது திருந்திய நாவினாற் பல பைந்தமிழ்ப் பாக்களைப் பாடினார். அப்பாடல்கள் மேற்சொன்ன சங்க நூல்களில் சிதறுண்டு கிடக்கின்றன. நீங்கள் பெரியவர்களான பிறகு அவற்றைப் படித்துப் பயன் பெறுக. இங்ஙனம் தமிழகம் மதிக்கத் தக்கவாறு பெண்பாற் புலவர் பலர் நமது தமிழ்நாட்டில் ஆயிரத்தொண்ணுhறு ஆண்டுகட்கு முன் இருந்தனர் என்பதை நினைவு கொள்ளுக. இத்தகைய புலமையுடைய தமிழ்ப் பெண்மணிகள் தோன்றினாற் றான் நமது மொழியும் சமூகமும் சிறப்புடையும்.

பெருந்தலைச் சாத்தனார்

** 1. கல்விப் பயிற்சி**
பெயர்

சங்க காலத்தில் ‘சாத்தன்’ என்ற தெய்வப் பெயர் பெரு வழக்காய் மக்கட்கு இடப்பட்டு வந்தது என்பதைக் ‘கூலவாணிகன் சாத்தன்’ சீத்தலைச் சாத்தன், பேரி சாத்தன் ‘கிரஞ்சாத்தன்’ பெருஞ்சாத்தன் என்ற பெயர்களைக் கொண்டு அறியலாம். சாத்தன் என்பது ஐயனார்க்கு வழங்கிய பெயராகும்

‘சஹஸ்தன்’ என்பது புத்த பகவானுக்கு வழங்கிய பெயர் அது தமிழில் உருமாறிச் சாத்தன் என்று வழங்கலாயிற்று என்று கூறலும் உண்டு. உண்மை எதுவாயினும் இப்பெயர் தெய்வத்தின் பெயராகும், ‘ஆர்’ விகுதி உயர்வைக் குறிப்பது. இப்புலவர் சிறிது பெரிய தலையைப் பெற்றிருந்தமையால் (திருச்சி அலமேலு நிலையம் வெளியிட்டுள்ளது, முதல் பதிப்பாண்டு குறிப்பு இல்லை) ‘பெருந்தலைச் சாத்தனார்’ எனப் பெயர் பெற்றர் போலும்! அல்லது ‘செந்தலை’ என்னும் ஊர்ப் பெயரைப் போலப் ‘பெருந்தலை’ என்பது ஊர்ப் பெயராக இருப்பினும் இருக்கலாம்! உண்மை யாதெனப் புலனாகவில்லை.

ஊர்

இவர் ஆவூர் மூலங்கிழார் என்ற பைந்தமிழ்ப் புலவர் மகனார் ஆவர். ஆதலில் இவரது ஊர் ‘ஆவூர்’ என்று கொள்ளலாம் அது சோழ நாட்டில் காவிரிக் கரைமீது உள்ள செழும்பகுதியாகும் இவர் பெரும் புலவரான பிறகு ‘பெருந்தலை’ என்ற ஊரில் குடி புகுந்து நிலைத்து விட்ட காரணத்தால் ‘ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்’ என்ற பெயர் பெற்றிருக்கலாம்.

மரபு

இவர் வேளாளர் மரபினர் என்பது ‘கிழார்’ என்ற பெயரால் விளக்கமாகும். ‘அம்பர் கிழான் நாகன்’ வல்லங்கிழான் மாறன் கொண்காணம் கிழான், என வரும் வேளாளர் பெயர்களைக் காண்க

கல்விப் பயிற்சி

ஆவூர் மூலங்கிழார் சிறந்த தமிழ்ப்புலவர்; அவர் விண்ணந் தாயன் ‘கிள்ளி வளவன்’ பாண்டியன் - நன்மாறன், பாண்டியன் கிரஞ் சாத்தன் முதலிய பேரரசரையும் வள்ளல்களையும் பாடிப் புகழ் பெற்றவர். சிறந்த ஒழுக்கம் உடையவர். அப்பெரியார்க்கு அருந்தவப் புதல்வராகப் பிறந்தவர் ‘பெருந்தலைச் சாத்தனார்’ எனின், இவர் சிறப்பினை என்னென்பது! சாத்தனார் இளமைப் பருவத்தில் தந்தையாரிடமே முறையாக இலக்கண இலக்கியங் களைப் பாடம் கேட்டு வந்தார்; தந்தையாருடன் சென்று, அரசர்கள் வள்ளல்கள் இவர்தம் அறிமுகம் பெற்று வந்தார்; இளமை முதலே நற்குணச் செல்வராய்த் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, பெரியோரிடம் மதிப்பு, தெய்வ பக்தி, குடும்பப் பொறுப்பு முதலிய நல்லியல்புகள் வாய்க்கப் பெற்றிருந்தார்.

** 2. இல்லற வாழ்க்கை**
திருமணம்

சாத்தனார் உரிய காலத்தில் ‘ஒத்த குணமும்’ ஒத்த கல்வியும் ஒத்த பண்பும் உடைய அம்மையார் ஒருவரை மணந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை இனிதாக நடத்தி வந்தார். அம்மையார் மாசற்ற கற்புடையவர்; வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக்குடையவர் கணவன் நினைப்பை அறிந்து ஒழுகும் தன்மை உடையவர். ஆதலின் அவர்கள் இல்லறம் இன்பந்தரும் நல்லறமாக நடைபெற்று வந்தது. இல்லறத்தை இன்பப்படுத்தும் மக்களும் நாளடைவில் தோன்றிப் பெற்றோரை மகிழ்வித்தனர்.

வறுமைப்பிணி

சாத்தனார் இல்லறம் இனிதாக நடந்து வந்தது அவர் சிறந்த கல்விச் செல்வம் பெற்று விளங்கினார்; ஆனால் பொருட் செல்வம் இன்றித் துன்பப்படலானார். “பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது உண்மை அன்றோ? வீட்டுக்கு வேண்டும் பொருள்கள் குறைவற இருந்தால் அல்லவா மனைவியார் மனக் கவலையின்றி இல்லத்து ஆட்சியை இனிதாக நடத்த முடியும்? தந்தையார் காலமானார்; அதுவரை வெளிச்சென்று புரவலர்பால் ஒன்றும் கேட்டறியாது நூல்களைப் படித்து இன்புறுவதிலேயே தமது பொழுதைப் போக்கி வந்த சாத்தனார், செல்வப் பொருளுக்கு என்ன செய்வது என்பது தோன்றாது விழிக்கலானார். அவர் மான வுணர்ச்சி மிக்கவர்; ஆதலால் கல்வியறிவற்ற செல்வரிடம் சென்று தமது வறுமையைச் சித்திரித்துக் கூறிப் பொருள் கொடு என்று இரப்பதை வெறுத்தார். தாம் பிறந்த சோணாட்டை ஆண்டுவந்த சோழ மன்னரிடம் சென்று குறை இரக்கலாம் என்று எண்ணினார். ஆனால், அவ்வமயம் உறையூர்ச் சோழர்க்கும் புகார்ச் சோழர்க்கும் பூசல் நடந்து கொண்டிருந்தது. அதலால் அவர் எம்மன்னர்களிடம் சென்று உதவி பெறலாம் என்பதை எண்ணிப் பார்த்து இறுதியில் கொங்கு நாட்டை நோக்கிச் செல்லலானார்.

3.கொங்கு நாட்டு யாத்திரை
பெருஞ்சித்திரனார்

சாத்தனார் கொங்கு நாட்டு எல்லைக்குள் புகுந்து சென்று கொண்டிருக்கையில், யானைமீது ஒருவர் எதிரே வந்தார். அவர் யார்?

அவர்தாம் பெருஞ்சித்திரனார் என்ற பைந்தமிழ்ப்புலவர் அவர் நமது சாத்தனாரைப் போல வறுமைப் பிணியால் பீடிக்கப் பட்டுச் சொல்ல இயலாத துன்பத்தில் ஆழ்ந்திருந்தவர்; இறுதியில் கொங்கு நாட்டுப் பெருவள்ளலான குமணன் என்ற சிற்றரசனைச் சென்று கண்டார்; தமது வறிய நிலைமையை விளக்கினார். அருளே உருவாக வந்தாற்போன்ற குமணன், அவரது வறுமைப் பிணியைப் போக்கும் அருமருந்தாக அமைந்தான்; அவருக்கு வேண்டிய பெருஞ் செல்வத்தை ஈந்தான்; அவர் இவர்ந்து செல்வதற்கு யானை ஒன்றையும் அளித்தான்; அந்த யானைமீது இவர்ந்து தான் பெருஞ் சித்திரனார் மனமகிழ்ச்சியுடன் வந்துகொண்டிருந்தார்.

புலவர் ஆற்றுப்படை

இங்ஙனம் வந்துகொண்டிருந்த சித்திரனார் சாத்தனாரை நன்கு அறிந்தவர் ஆதலின், அவரைக் கண்டதும் யானையி னின்றும் கிழிறங்கி வந்து தழுவிக்கொண்டு, விசாரித்தார்; புலவரது பரிதாப நிலையை நன்கு உணர்ந்தார்; உடனே அப்பெரியார் சாத்தனாரை அன்புடன் நோக்கி,

“நண்பரே உமது வறுமையை எண்ணி இனி வாட வேண்டா. முதிரமலைக் கிழவனான குமண வள்ளல் சிறந்த ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் உடையவன்; வறியவர்க்கு அடையாத வாயிலை உடையவன்; அருளே உருக்கொண்டு வந்தாற்போன்றவன்; புலவர்களைத் தன்னுயிர் போல மதிப்பவன்; வறிஞரைக் காணச் சகியாதவன். அவனிடம் சென்று உமது வறுமை பறந்தோடச் செய்வான். என்னை வாழ்வித்த பெருவள்ளல் அவனேயாவன்,” என்று குமண வள்ளலது ஈதற் சிறப்பை விளக்கிப் புலவரை அவன் பால் ஆற்றுப்படுத்தினார். சாத்தனார், சித்திரனார் அன்புரைக்கு வாழ்த்திக் குமண வள்ளலது நாட்டை நோக்கி நடக்கலானார்.

** 4. சாத்தனாரும் குமணனும்**
குமண வள்ளல்

குமணன் முதிரமலை நாட்டுத் தலைவன். முதிரமலை உடுமலைப் பேட்டைத்தாலுக்காவில் உள்ளது; இப்பொழுது ‘குதிரை மலை’ எனப்படுகின்றது. குமணன் சிறந்த கொடையாளி; வறியவர்க்கு வாரி வழங்கும் இயல்பினன். இவனுடைய நல்லியல்புகட்கு முற்றும் மாறான தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன் என்பது. அவன் தமையனுடைய அறச் செயலை அறவே வெறுத்தான்; அவனால் அரண்மனைச் செல்வம் காலியாய் விடும் என்று அஞ்சினான்; அதனால் அவனை ஒழித்துவிட்டுத் தானே அரசனாவதற்கும் துணிந்தான். இத் துணிவை எவ்வாறோ அறிந்து கொண்ட நற்குணக் குன்றான குமண வள்ளல், நாட்டைத் துறந்து காடு சேர்ந்து மறைந்து உறைவானாயினன். இளங்குமணன் அரசுக் கட்டில் ஏறினான். அக்கொடியவன் அத்துடன் அமையாது காட்டில் கரந்துறையும் தன் தமையனது தலையைக் கொய்து கொண்டு வருபவர்க்குத் தக்க பொருள் பரிசளிப்பதாகப் பறையறைவித்தான்.

சாத்தனாரும் குமண வள்ளலும்

இந்த நிலையில், சாத்தனார் முதிரமலை நாட்டை அடைந்தார்; குமண வள்ளல் காட்டில் வசிப்பதைக் கேள்வியுற்றார்; இளங்குமணனைக் காண மனம் வராது காடு சென்றார்; அரும்பாடுபட்டுக் குமணனைக் கண்டார். கண்டு, அவனை வாயார வாழ்த்தினார். அவன் முகமலர்ச்சியுடன் அவரை வரவேற்று உபசரித்தான். புலவர் அவனுடைய உடற்கட்டு, முக ஒளி, நயமான பேச்சு, இரக்க உள்ளம் இவற்றைக் கண்டு மனம் இளகினார்; அன்பினால் பிணிப்புண்டார். அவர் வள்ளலை நோக்கித் தாம் வந்த நோக்கத்தை அறிவிக்க விரும்பியவராய்.

“அரசே, நான் ஆவூர் மூலங்கிழார் மகன்; ஏழைத் தமிழ்ப் புலவன். வறுமை என்னை வாட்டுகின்றது. சமைத்தல் தொழில் இல்லாமையால் அடுப்பில் காளான் பூத்துக் கிடக்கின்றது. நேரத் திற்குப் போதிய உணவில்லாமல் என் மனைவி உடல் மெலிந்து வாட்டமுற்றுக் கிடக்கின்றாள்; அவள் அந்நிலையில் இருத்தலால் தாய்ப்பால் பருக வழியின்றி என் குழந்தை அலறுகின்றது. இங்ஙனம் அழும் குழந்தை தாய் முகம் நோக்க, ‘இதற்கு என்ன செய்வது?’ என்ற முறையில் என் மனையாள் என் முகம்நோக்க, யான் நின்முகம் நோக்க ஓடி வந்தேன். நீ இரவலர் வறுமையைப் போக்கும் பொருளாளன். நீ வறுமையுற்றுக் காட்டில் வாடும் இந்தக் கொடிய நிலையில் நான் வந்தது தவறு. நான் என்ன செய்வேன்? எனது கொடிய வறிய நிலை உன்னை இந்த நிலையிற் காணச் செய்தது,” என்று கேட்போரைப் பிணித்து உள்ளத்தை உருக்கும் நிலையில் தமது வறிய நிலையை விளக்கமாக உரைத்தார்.

‘தலைதனைக் கொள்க’

புலவரது உருக்கமான பேச்சு குமணன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவன் விழிகளில் நீர்த்துளிகள் தோன்றின. அவன் அருந்தமிழ்ப் புலவரைப் பார்த்து, “ஐயன்மீர், உமது வறுமையைக் கேட்டு வருந்துகிறேன். நான் அரியாசனத்தில் இருந்துகொண்டு இரப்போர் மனம் உவப்பப் பொருள் கொடுத்துவந்த காலத்தில் நீவிர் வந்ததில்லை; இந்நாள் வந்து துன்புறுகின்றீர். உமது துன்பத்தை எவ்வாறு போக்குவேன்?….. சரி; நான் சொல்லுவதைக் கேளும். என் தலையைக் கொண்டு வருபவர்க்குத் தக்க பரிசு தருவதாக என் அருமைத் தம்பி அறிவித்திருக்கிறான். ஆதலால், நீவிர் என் தலையை அறுத்துச் சென்று அவனிடம் அளிப்பீராயின், பெரும் பொருள் பெறலாம். உமது வறுமைப் பிணி இன்றே ஒழிந்துவிடும். கொலையஞ்சான் ஒருவன் என்னைக் கொன்று, என் தலையைக் காட்டிப் பரிசு பெறுதலைவிட, அறிவும் கல்வியும் ஒழுக்கமும் உடைய உம்மைப் போன்ற புலவர் என்னைக் கொல்லின், யான் மன அமைதி பெறுவேன். எனது தலை உமது வறுமையைப் போக்கு மெனின், யான் பெரும்பேறு பெற்றவனானேன். ஆதலின் ஐய, அன்புகூர்ந்து, மறுமொழி கூறாது, என் தலையை இந்த வாளால் அரிந்து எடுத்துச் செல்லுக,” என்று முகமலர்ச்சியுடன் உள்ளம் உருகக் கூறித் தன் வாளை எடுத்துப் புலவர் கையில் ஈந்தான்.

புலவர் யோசனை

சாத்தனார் அரசனது வாளை வாங்கிக்கொண்டார். ஏன்? அவன் தலையை அறுப்பதற்கோ, அன்று, அன்று; அதனை வாங்க மறுப்பின்,அவன் அதனைக் கொண்டு தானே தன் தலையை அரிந்துவிடுவானோ என்ற அச்சத்தாற்றான், அருள் உள்ளம் கொண்ட அப்புலவர் மறுமொழி பேசாது வாளைப் பெற்றுக் கொண்டார்; குமணனது பேச்சு, அவரை வியப்பும் திகைப்பும் கொள்ளச் செய்தது; அவன், தலையைத் தரத்துணிந்த ஈடும் எடுப்பும் அற்ற பெருஞ் செயலால், கடையெழு வள்ளல்களினும் சிறப்புப் பெற்றனன் என்பதை உணர்ந்தார்; அவனது பேரருள் திறத்தினை எண்ணி எண்ணி வியந்தார்; வியப்பும் அன்பும் அதிகப்பட, விழிநீர் பெருக்கி நின்றார்…

இங்ஙனம் நின்ற புலவர்க்குத் திடீரென யோசனை ஒன்று தோன்றிற்று. அதன்படி அவர், “இவ்வாளுடன் சென்று இளங் குமணனைக் காண்பேன்; இங்கு நடந்ததை நடந்தவாறு நவின்று அவன் உள்ளத்தை உருக்குவித்து, உடன்பிறந்தார் இருவரையும் ஒன்றுபடுத்துவேன்; குமண வள்ளலைப் பழையபடியே அரசனாகச் செய்விப்பேன்,” என்று தமக்குள் முடிவு செய்து கொண்டார். உடனே புலவர், குமண வள்ளலிடம் விடைபெற்று ஏகினார்.

புலவரும் இளங்குமணனும்

வாளேந்திச் சென்ற சாத்தனார் இளங்குமணன் அரண்மனையை அடைந்தார். அவர் வருகையைக் காவலர் அரசற்கு அறிவித்தனர். வாளோடு வந்தனர் என்றதைக் கேட்ட இளங்குமணன், “அவரை உடனே வரவிடுக” என்றனன். புலவர் உட்சென்று அரசனைக் கண்டார். அவன் அவரை நல்வரவேற்று ஆசனம் ஒன்றில் அமரச் செய்தான்; தன் தமையனைக் கொல்லக் காடு செல்ல வந்துள்ள ஒருவராக அவரைக் கருதியதாற்றான், அவன் புலவரை இங்ஙனம் உபசரித்தான். புலவர் அவனை உள்ளத்தில் வெறுத்தனர். ஆயினும், தம் யோசனை பலிக்க வேண்டும் என்பதற்காக அவனிடம் அன்புடையவரைப் போல நடித்து,

“அரசே, நீ வாழ்க! இவ்வுலகம் நிலையற்றது.மனிதர் வாழ்வும் நிலையற்றது; ஆயின், ‘நிலையுள்ளதுதான் எது?’ எனின், புகழ் ஒன்றே என்னலாம். அது வீரத்தாலும் கொடையாலும் வருவது. இதனை நன்கறிந்தே பாரி வள்ளல் போன்ற பெருமக்கள் பிறர்க்கு வரையாது வழங்கினர்; புலவரால் ஏத்தெடுக்கப் பெற்றனர். புலவர் பாக்களில் அவர்கள் பெயர்கள் பதிவு பெற்றுவிட்டன. அப்பாடல்களை வழி வழியாகத் தமிழ் மக்கள் படித்துப் பயன்பெறுவர்; பாரி போன்ற வள்ளல்களை எண்ணி வாழ்த்துவர்.இங்னம் உடல் நிலையா விடினும் புகழை நிலைபெறச் செய்த அப்பெரியோர் போன்றவர் சிலரே ஆவர். பலர் செல்வம் பெற்றவர் ஆயினும், அதனை ஈத்துவக்கும் குணம் இன்மையால், இவ்வுலகில் பெயரும் புகழும் பெறாது மறைந்தொழிந்தனர். இவ்வுண்மையை நன்றாக உணர்ந்து தான் உன் தமையன் வரையாது வழங்கி வள்ளலானான்; தமிழகம் முழுவதும் அவனது பெயரும் புகழும் பரவி நிற்கின்றன. அப்பெருமானது சிறப்பினைக் கேள்வியுற்றே, யான் சோழநாட்டில் இருந்து கொங்கு நாடு வந்தேன். நீ இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். அவன் நாட்டைத் துறந்து காட்டை அடைந்தனன் என்பதைக் கேள்வியுற்று, யான் அங்குச் சென்று அவனைக் கண்டேன். அப்பேரருளாளன் என் வறிய நிலைக்குக் கண்ணீர் விட்டு,”புலவனாகிய நீ வறிதே திரும்பிப் போதல், நான் நாடிழந்து அடையும் துன்பத்தைவிட கொடியதாகும்" என்று கூறி, “என் அருமைத் தம்பி என் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பெரும் பொருள் பரிசளிப்பதாக வாக்களித்தான். ஆதலால், இவ்வாளினால் என் தலையை அரிந்து எடுத்துச் செல்லும்” என்று தன் வாளை என் கையில் கொடுத்தான். அப்பெருந்தகையின் அருள் உள்ளத்தை வியந்தபடி, அவனுக்கு இளையனான உன் உள்ளத்தைக் காண இவ்வாளுடன் இங்கு வந்தேன்." என்று மிகவும் உருக்கமான முறையிற் பேசினார்.

உடன்பிறந்தார் ஒன்றுபடுதல்

இங்ஙனம் பெருந்தலைச் சாத்தனார் பரிந்துரைத்த சொற்கள் இளங்குமணனது உள்ளத்தைத் தூய்மையாக்கின. அவன் ’உடன் பிறந்தார் பற்று’க் கொணடான்; அவன் முகம் பொலிவுற்றது. அகத்தூய்மை இருப்பின், முகம் தூய்மையாகக் காணப்படுதல் இயல்பன்றோ? அவன் அரியாசனத்திலிருந்து குதித்தெழுந்து புலவரைத் தழுவிக்கொண்டான்; “ஐயனே, என் ஆருயிர்த்துணைவனைக் காண என் நெஞ்சம் அவாவுகின்றது. அவன் அருங்குணச் சிறப்பை யான் உள்ளவாறு உணரவில்லை; அதனால் அவனுக்குக் கேடு சூழ எண்ணினேன். நான் அவனைக் கண்டு மன்னிப்புப் பெறுதல் வேண்டும்; அவனைப் பழையபடி அரசனாக்க வேண்டும். அவன் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்,” என்று கூறித் துடித்தான்.

புலவர் இளங்குமணனிடம் இந்த மாறுதலைத்தானே எதிர் பார்த்தார்! அதனால் அவர் மட்டற்ற மகிழ்ச்சி பொங்க, இளங்குமணனை அழைத்துக்கொண்டு காடு சென்றார்; குமணவள்ளல் இருந்த இடத்தைக் காட்டினார்; இளங்குமணன் விரைந்தோடிச் சென்று தன் தமையனைக் கட்டிக்கொண்டு கதறினான்; “ஐயனே! என் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். உன்னைத் தவறாகக் கருதியதால் தவறு இழைத்தேன். நீ இன்னே என்னுடன் வந்து நினக்கு உரித்தாகிய அரசாட்சியை ஏற்றுக் கொள்க. யான் நின் அடிக்கீழ் இருந்து, நின் மொழிவழி ஏவல் கேட்பேன்,” என்று கூறிப் பணிந்து பரிவுடன் நின்றான்.

குமணன் தன் தம்பியிடம் இம் மனமாற்றத்தைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், அவன் ஒன்றும் தோன்றாமல் திகைத்துச் சிறிது நேரம் நின்றான்; பின்னர், ‘சாத்தனார் அறிவு மொழிகளால் இவனது கல்மனம் கரைந்திருக்கிறது போலும்!’ என்று எண்ணினான், எண்ணித் தம்பியை மார்புறத் தழுவி அன்புக் கண்ணீர் சொரிந்தான். இருவரும் கண்ணீர் விட்டு ஒருவாறு தேறினர்.

சாத்தனார் சிறப்புப் பெறுதல்

பின்னர், இளங்குமணனும் நகர மாந்தரும் சாத்தனாரும் பரிவுடன் வேண்ட, குமண வள்ளல் காடு நீங்கி நாடு அடைந்தான்; முன்போல அரசனாகிக் குடிகளையும் இரவலரையும் மகிழ்விக்கத் தொடங்கினான்; தான் மீட்டும் அரியணை ஏறக் காரணமாக இருந்த சாத்தனார்க்கு அவர் உள்ளம் உவப்பப் பரிசில் நல்கி மகிழ்ந்தான்; அவரை அடிக்கடித் தன் வளநாட்டிற்கு வந்து போகுமாறு வேண்டினான். புலவரும் அதற்கிசைந்து, அவனிடம் விடைபெற்றுத் தம்மூர் மீண்டான்; வறுமைப் பிணியை வள்ளலது கொடையாகிய மருந்தாற் போக்கி, மன அமைதியோடு வாழலானார்.

கூடிய நெடுவேட்டுவன்

சாத்தனார் ஒருமுறை பாண்டிய நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்தார். அப்பொழுது அவர் பாண்டியன் படைத்தலைவனும் வேட்டுவர் வழித் தோன்றலும் கோடை மலைத் தலைவனுமான கடிய நெடுவேட்டுவன் என்பவனைக் காண விழைந்தார். அவன் புலவர் போற்றும் புரவலன்; அருள் உள்ளம் கொண்ட உத்தமன். அவன் புலவரை வரவேற்று உபசரித்தான்; ஆனால், எக்காரணத் தாலோ உடனே பரிசில் தராது காலம் தாழ்த்தினான். அதனாற் புலவர் உள்ளம் கொதித்தது. கற்றவர், பிறர் தம்மை அவமதிக் கின்றனர் என்பதைக் காணப் பொறார் அல்லவா? அதனால் சாத்தனார் கோடைமலைத் தலைவனைப் பார்த்து,

“அஞ்சுபவர்க்கு அரண் போன்றவனே, அஞ்சாது எதிர்ப் பவரை வாட்போரில் வெல்லும் வீரப் படையை உடையவனே, முல்லைக் கொடிகளை வேலியாகக் கொண்ட கோடைமலைத் தலைவனே, சினமிக்க நாய்களையும் வில்லையும் உடையாய், செல்வத்தாற் சிறந்த முடியுடை மூவேந்தரே ஆயினும், அவர் எங்களை வரவேற்று உபசரித்தால் அல்லாமல், அவர் தரும் பொருளை ஒரு பொருளாக மதித்துப் பெறுதற்கு விரும்போம். கடலை அடையும் மேகங்கள் நீரை முகவாது வறிதே மீள்வதில்லை. அவை போலவே தண்ணளியுடைய வள்ளலை அடையும் பரிசிலர் சுற்றம், தேரும் யானையும் செல்வமும் பெறாது மீள்வதில்லை. ஆனால், உன்னைப் பாடிவந்த யானோ, அவை பெறேனாய் வறிதே மீள்கின்றேன். வேட்டுவர் தலைவனே, நீ நோயின்றி வாழ்க!” என்று வெறுப்புடன் கூறி அகன்றார். அவர் ஈற்றில் உரைத்த “நோயின்றி வாழ்க!” என்பது தம்மைச் சபிப்பதற்கு அடையாளம் என்பதை அத்தலைவன் அறிந்து கொண்டான்; ஆதலால் அச்சமுற்று, அப் புலவரை அழைப்பித் தான்; தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டித் தன்னுடன் இருந்து உண்ணச் செய்தான்; அவர் விரும்பிய வற்றை விரும்பியவாறே அளித்தான். புலவர் உள்ளம் அமைதி பெற்றது. அவர் வள்ளலை வாழ்த்திச் சென்றார்.

இளங்கண்டீரக்கோ - இளவிச்சிக்கோ

புலவர், தோட்டிமலைத் தலைவனும் சிறந்த கொடையாளியு மான கண்டீரக்கோப் பெருநள்ளி என்பவனுக்குத் தம்பியான இளங்கண்டீரக் கோவை காணச் சென்றார். அங்கு நன்னன் என்ற வள்ளல் மரபில் வந்த இளவிச்சிக்கோ என்பவனும் உடன் இருந்தான். சென்ற புலவர் முன்னவனை அன்பு கனியத் தழுவினார்; பின்னவன் நாணமுற்றுப் புலவரை நோக்கி, “ஐய, நீர் என்னைத் தழுவாமைக்குக் காரணம் யாது?” என்று உசாவினன். உடனே புலவர் அவனை நோக்கி, “யான் இவனைத் தழுவினமைக்கும் உன்னைத் தழுவாமைக்கும் உரிய காரணங்களைக் கூறுவேன். கேட்பாயாக: இந்த இளங்கண்டீரக்கோ அருளே உருவெடுத்தாற் போன்ற வள்ளல்கள் மரபில் வந்தவன். இவன் மரபில் வந்த பெண்மணிகள், தம் கணவர் அரண்மனையில் இல்லையாயினும், அவர்களைத் தேடி வந்த பரிசிலர் மனமுவக்கும்படி வரிசைகள் நல்கும் சிறந்த பழக்கம் உடையவர்கள்; ஆதலால் இவனைத் தழுவினேன். நீயோ பரிசிலரைப் பரிந்து உபசரித்து வேண்டியன வேண்டியாங்கு அளித்த நன்னன் என்ற கொடையாளியின் மரபில் வந்தவன். ஆயினும், அந் நன்னன் செய்த கொடுஞ்செயல் ஒன்றைக் கூறுகின்றேன், கேள்; அவனது சோலையில் இருந்த மரத்தின் பசுங்காய் ஒன்று அருகில் பாய்ந்து கொண்டிருந்த நீரில் மிதந்து சென்றது. அப்பொழுது அந்நீரில் நீராட வந்த பார்ப்பனச் சிறுமி ஒருத்தி அதனை எடுத்து உண்டாள். அஃதறிந்த நன்னன் அவளைக் கொலை செய்ய முற்பட்டான். அஃதறிந்த அவள் தந்தை, தன் மகள் செய்த தவற்றுக்காக எண்பத்தொரு யானைகளும் அவளது நிறையளவு பொன்னாற் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கூறித் தன் மகளை விடுமாறு வேண்டினான். நன்னன் அவ்வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் அச்சிறுமியைக் கொன்றான். உன் முன்னோருள் மற்றொருவன் உலோப குணம் மிக்கவன்; புலவர் பாணர் - விறலியர் சொல்லின், வாயிற் கதவுகளை அடைத்து விடுதல் வழக்கமாகக் கொண்டிருந் தான். இத்தகையவர் தீச்செயல்கள் உன் மரபுக்கு வசையாக இருந்து வருகின்றன. ஆதலின், அந்நாள் முதலாக உங்கள் மலையைப் புலவர் பாடுதல் இல்லை. இக்காரணங்களாற்றான் உன்னை யான் தழுவாது விட்டேன்.” என்று புலவர் பெருமான் தம் மனத்தில் இருந்ததை ஒளியாமல் உரைத்தார். பின்னர், இளங்கண்டீரக்கோ புலவர்க்கு வேண்டிய பரிசில் நல்கினான். புலவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு அவனை வாழ்த்தி அகன்றார்.

மூவனை முனிதல்

பெருந்தலைச் சாத்தனார் மூவன் என்ற சிற்றரசனைக் காணச் சென்றார். அவன் கோடைமலைத் தலைவனைப் போலப் புலவரை உபசரித்தான்; ஆனால், அவனைப் போலவே பரிசில் தராது காலம் நீட்டித்தான். புலவர் சினங் கொண்டார்; அவனுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினார். அவர் அக்குறுநில மன்னனை நோக்கி,

“வள்ளலே, நினது நாடு மிக்க வளமுடையது; பொய்கைகள் மிக்குடையது. பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற்போரின்கண் உறங்கும். வயலில் நெய்தற் பூக்கள் மிக்கிருக்கின்றன. நின்நாட்டு உழவர் விளைந்த நெல்லை அறுத்துவிட்டு,ஆம்பல் இலையில் மதுவை வார்த்து உண்பர்; பிறகு அருகில் உள்ள கடல் ஒலியையே தாளமாகக் கொண்டு பாடி ஆடுவர். இங்ஙனம் நாட்டிற்கு முதுகெலும் பாகவுள்ள உழவர் மகிழ்ந்தாடுகின்ற நன்னாட்டை யுடைய அரசே, பல் பழங்களை உண்ண விரும்பி, ’வானத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலி முழங்கப் பறவைகள் குதூகலித்துச் செல்கின்றன. ஆயின், நாடிச் சென்ற மரம் பழுத்து ஓய்ந்துவிட்டதை அறிந்து வருந்திப் பழம் பெறாமல் மீள்கின்றன. அவற்றைப் போல பிறரால் விரும்புதற்குரிய உன் நற்குணங்கள் பலவும் கேள்வியுற்று உன்னைக் கண்டு பரிசில் பெறுவோம் என்னும் நம்பிக்கையுடன் பல காவதம் கடந்து வந்தேன். இப்பொழுது வெறுங்கையனாய் மீள்கிறேன். வாட்போரில் சிறந்த அரசே, நீ பரிசில் கொடாய் ஆயின், அதற்கு யான் வருந்தவில்லை; ஆனால், புலவரை அவமதித்ததால் துன்பப்படுவாயே என்பதற்குத்தான் வருந்துகிறேன். உனது இழி செயலை உன் அவையாரைத் தவிர மற்றையோர் அறியா திருப்பாராக!” என்று உரைத்துவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. மூவனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் மூவன் வெல்லப்பட்டான். அவன் பல், தொண்டி நகரத்துக் கோட்டைக் கதவில் பதிக்கப்பட்டது. இது பெரியோரை அவமதித்ததால் வந்த பரிசுபோலும்!

புலவர் பாக்கள்

பெருந்தலைச் சாத்தனார் என்ற நமது புலவர் பெருமானுடைய பாக்கள் புறநானூறு முதலிய நூல்களில் காணக் கிடக்கின்றன. அவை எளிமையும் இனிமையுமான செந்தமிழ் நடையில் இயன்றவை. இச்சாத்தனார் போன்ற புலவர் பெருமக்கள் பலர் வரலாறுகள் அந்நூல்களைக் கொண்டே தொகுத்தறிய வேண்டும். தமிழ் மாணவராகிய நீங்கள் இப்பணியில் முனைந்து, நம் தாய்மொழியாகிய தமிழை மேல் நிலைக்குக் கொண்டுவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!