பெண்நிலைவாதம் பொருத்தமானதே

முன்னுரை

இச் சிறுநூல் கொழும்பு, பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தினரால் (Feminist Study Circle) வெளியிடப்பட்ட Feminism is Relevant என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பாகும். பெண்நிலைவாதத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இது மிகச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

இன்று எம் மத்தியில் பெண்விடுதலை, பெண்நிலைவாதம் என்பன குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. பலரும் பல்வேறு தேவைகளுக்காகவும், பல்வேறு அர்த்தங்களிலும் இதனை நோக்குகின்றனர். இச் சந்தர்பத்தில் பெண்நிலைவாதத்தின் அடிப்படைநோக்கத்தையும் உண்மையான கருத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமானதாகும்.

இன்று காணப்படும், பெண்கள் மீதான சகல சமூக, பொருளாதார, கலாசார ஒடுக்குமுறைகளைக் களைவதற்கு பெண் என்பதால் வேறுபாடு காட்டப்படாமல் மனித ஜீவி என்ற வகையில் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெறுவதற்குமான போராட்டமும் அப்போராட்டத்திற்கான வழிமுறைகளும் பெண்நிலைவாதத்தின் முக்கிய நோக்கங்களாகும். இவ்வகையில் பெண்நிலைவாதம் பற்றிய அத்தியாவசியமான அடிப்படை விளக்கங்களை இந்நூல் சுருக்காகவும், தெளிவாகவும் எளிமையான வடிவில் தருகின்றது எனக் கருதியதால் இதனை நாம் மொழிபெயர்த்து வெளியிடுகின்றோம்.

இன்று பெண்விடுதலை குறித்து பேசப்பட்;ட போதிலும் அது அறிவுபூர்வமான ஒரு தத்துவமாக எம்மிடையே வளர்ச்சி பெறவில்லை. ஒடுக்குமுறை வடிவங்;களின் இயல்பையும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும்; அறிவுhPதியாக நோக்கி இனங்காணுவது இதனை ஒரு தத்துவமாக்க உதவும். இவ்வகையில் ஆராய்ச்சிகளையும் அவற்றின் அடிப்படையான கருத்துக்களையும் எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம். இவ்வகையில் தொடர்ந்து நாம் பிரசுரங்களை வெளியிடவும் உள்ளோம்.

இங்கு நாம் பலருக்கும் தெரிந்த பெண் விடுதலை என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் பெண்நிலைவாதம் (Feminism) என்ற தொடரைப் பயன்படுத்தியமைக்குக் குறிப்பான காரணங்கள் உண்டு. சகல ஒடுக்குமுறை வடிவங்களிலிருந்தும் பெண் விடுதலை பெறுதல் என்ற கருத்தினை மட்டும் அல்லாது பெண் என்ற நோக்கிலிருந்து பிரச்சனைகளை அணுகுதல். தீர்வுகளை முன்வைத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் ஆகிய யாவற்றையுமே ஒருங்கு குறிப்பதாக இத் தொடர் அமைகின்றது. இவ் வகையில் இது பரந்த, ஆழமான அர்த்தங்களை உடையது

இந் நூலினை தமிழில் வெளியிட அனுமதி அளித்த பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தினருக்கு எமது நன்றி.

பெண்கள் ஆய்வு வட்டம் - யாழ்ப்பாணம்.

-------------------------------------------------

1. பெண்நிலைவாதம் (Feminism) என்றால் என்ன? இதனை ஓர் அண்மைக்காலக் கிறுக்குத்தனம் எனக் குறிப்பிடலாமா?

பெண்நிலைவாதம் என்ற சொல் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முதன்முதலாக உபயோகிக்கப்பட்டது. அப்போது பெண்களின் ஜனநாயக் உரிமைகளுக்கான போராட்டத்தையே அது குறித்தது.

அவை,

* கல்வி, வேலைவாய்ப்பு, உரிமைகள்

* சொத்துடமைக்கான உரிமை

* வாக்களிக்கும் உரிமை

* பாராளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை

* பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை

* விவாகரத்து செய்யும் உரிமை போன்ற ஏனைய உரிமைகள் ஆகும்.

2. மேற்குறிப்பிட்ட உரிமைகள் யாவும் இப்போது எமக்குக் கிடைத்துள்ளன, எனவே இன்று பெண் விடுதலை எனக் கருதப்படுவது யாது?

இன்று பெண்நிலைவாதம் பாரபட்சமான தன்மைகளுக்கெதிரான சட்டாPதியான சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகிய எல்லைகளைக் கடந்து விட்டது.

* பெண்கள் வீட்டில் ஆண்களுக்குக் கீழ்படிதல்

* குடும்ப அமைப்பினால் பெண்கள் சுரண்டப்படுதல்

* தொழிலிலும், சமூகத்திலும், நாட்டின் கலாசாரத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்து உடையவராய் இருத்தல்

* பெண்கள் உற்பத்தியிலும் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடுவதால் ஏற்படும் இரட்டைச்சுமை

ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களையும் உள்ளடக்கியதாக இன்று பெண்நிலைவாதம் அமைந்துள்ளது. இதனால் பெண்கள் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதற்காக மட்டுமன்றி, அரசினாலும், சமூகத்தினாலும் ஆண்களாலும் விதிக்கப்படுகின்ற சகல அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடி விடுதலை பெற வேண்டியவர்களாக உள்ளனர்.

பெண்கள்,

சுரண்டல் (உ+ம் சமனற்ற சம்பளம், குறைந்த சம்பளம்)

கீழ்ப்படிதல் (உ+ம் ஆண் ஆதிக்கத்திற்கு உட்படுதல்)

அடக்குமுறை (உ+ம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்)

ஆகியவற்றிற்கு இரையாவதுடன் அவர்கள் இவ்வாறான பிரச்சனைகளை ஏனைய பெண்களும் எதிர்நோக்குகின்றார்கள் என்பதனை உணர்ந்துள்ளனர். அத்துடன் தமது இந்த நிலைமை மாறுவதற்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கும் தாமே ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனையும் உணர்ந்துள்ளனர்.

3. ஆனால் அனேகமானோர் பெண்நிலைவாதமானது ஒரு மேற்கத்தைய கோட்பாடு எனவும், அது எந்தவிதமான விமர்சனநோக்குமின்றி ஆசியப் பெண்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனவும் கூறுகின்றனர். இது உண்மையா?

அவ்வாறில்லை பெண்நிலைவாதமானது ‘அன்னியக் கருத்தமைவின்’ ஒரு பகுதியென்றோ, செயற்கையான முறையில் ஆசியப் பெண்களில் திணிக்கப்பட்டது என்றோ கூற முடியாது. ஆசியாவில் ஜனநாயக உரிமைகள் பற்றியும், அரைவாசி மக்கட் தொகையினருக்கு அடிப்படை உரிமைகளே வழங்கப்படவில்லை என்ற நியாயமற்ற நிலை பற்றியும் ஒரு விழிப்புணர்வு தோன்றி வளர்ந்து போதே பெண்நிலைவாதமும், பெண்நிலைவாதப் போராட்டங்களும் எழுச்சியடைந்தன. ஆசியாவில் அரசியல் விழிப்புணர்வு உச்சக்கட்டத்தை அடைந்த குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் பெண்;நிலைவாத விழிப்புணர்வும் ஏற்பட்டது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், உள்ளூர் சர்வாதிகார, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக்கு எதிராகவும் போராட்டங்கள் ஏற்பட்ட போதே பெண்நிலைவாத உணர்வும் ஏற்பட்டது.

4. காலனித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஆசியாவில் பெண்களின் சமூக அந்தஸ்து பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றனவா?

ஆம், பெண்கள் பற்றிய தர்க்கம் மிகவும் பழமையானது. உதாரணமாகப் பெண்கள் பௌத்த சங்கத்தில் சேர்ந்து துறவிகளாகலாமா என்பது பற்றி கி.மு 6ஆம் நூற்றாண்டிலேயே புத்தர் பெருமானும் அவரது சீடர்களும் விவாதித்தனர். ‘பெண்கள் கல்வி’ பற்றி ஆசியாவிலும் ஜரோப்பாவிலும் தொடர்ச்சியான கருத்து மோதல்கள் இடம் பெற்றன. 18ஆம் நூற்றாண்டில் சென் - ஹி;ங் மௌ (Chen - Huno Mou - 1696-1711) என்;ற சீன மேதை, மேரி வேர்ல்ஸ்ரென்கிராவ்ட் (Mary Wollstonecraft) க்கு முன்பாகவே பெண்கல்வி பற்றி ஒரே விதமான கருத்துக்களைக் கூறினார்.

இந்த உலகில் கல்வி கற்றுக்கொள்ள முடியாதவர் என்று யாருமில்லை; அத்துடன் எங்களால் கற்பிக்க முடியாதவர்கள் என்றும் யாருமில்லை. இவ்வாறிருக்க நாம் ஏன் பெண்பிள்ளைகளுக்கு கல்வி போதிப்பதில் மட்டும் கவனமின்றி இருக்கின்றோம்? குழந்தைப்பருவத்தைக்; கடந்தும் பெண்களின் வாசஸ்தலங்களிலேயே அவர்கள் வளர்க்கப்பட்டதோடு கவனமாகப் பாதுகாக்கவும்பட்டனர். அவர்கள் ஆண்பிள்ளைகள் போன்று வெளியே சென்று ஆசிரியரிடம் கல்விகற்பதனால் பெறும் நன்மைகளைப் பெற முடியாதுள்ளனர். ஆசிரியர், நண்பர் ஆகியோருடன் பழகுவதால் ஏற்படும் தூண்டுதல்கள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை…. பெண் பிள்ளைகள் வளர்ச்சி அடைகின்ற போது, அவர்களுக்குக் கற்பிக்கபடுவதெல்லாம் எவ்வாறு தமக்குத் தேவையான சீதனங்களைச் சேர்த்துக் கொள்வது, எவ்வாறு பூவேலைப்பாடு செய்வது என்பது மட்டுமேயாகும்.

5. இவையெல்லாம் ஆண்களின் உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ளன. ஆண்களே பெண்நிலை வாதிகளாக இருக்க முடியுமா?

ஆம், கிழக்கு நாடுகளில் ஆண் சீர்திருத்தவாதிகளே ஆரம்பகாலங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். சீனாவில் உதாரணமாக காங் யு-வெய் (Kanq Yu - We 1859 - 1927) என்பவர் பெண்களின் பாதக்கட்டுகளை எதிர்த்ததோடு, ஆண்களுக்கு கீழ்ப்படிந்து பெண்கள் நடக்க வேண்டும் என்ற நடைமுறையையும் எதிர்த்தார்.

‘எனக்கு இப்போது ஒரு கடமை உள்ளது. அதாவது கடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கணக்கிடப்படாததுன்பங்களுக்காக் குரல் கொடுப்பது. எனக்கு இப்போது ஒரு பேரார்வம் உள்ளது; அதாவது என்னுடைய காலத்தில் துன்பக்கடலில் மூழ்கி இருக்கும் 800 கோடி பெண்களையும் காப்பாற்றிக் கொள்வது எனக்கு எதிர்காலம் பற்றியும் ஓர் கனவுள்ளது; அதாவது எண்ணிடலங்காத பெண்களுக்கு எதிர்காலத்தில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையினை ஏற்படுத்திக் கொடுப்பது.

எகிப்தில் அகமட்ஃபெயார் எல் சிட்யாக் (Ahmed Fares El Shid vak) என்பவர் பெண்கள் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து ‘ஒருகால் மற்றக் காலுக்கு மேலாக உள்ளது” (One Leq Crossed Over the Other) என்ற நூலின் 1885 ஆம் ஆண்டில் எழுதினார். காசிம் அமின் (Kasim Amin 1865 - 1908) என்பவர், புதுமைப்பெண் (The New Woman) என்ற நூலினை எழுதியதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஈரானில் பெண்களை ஒதுக்கி வைத்தல், பல மனைவியர் மணம் ஆகியவற்றை, பல ஆண் புத்திஜீவிகள் 1880 களிலும் 1890 களிலும்; எதிர்த்ததோடு, பெண்கள் உரிமைக்காகப் போராடினர்.

இந்தியாவில் ராஜாராம் மோகன் ராயின் காலத்தில் (1772 - 1883) இருந்து, சமூக, அரசியல் சீர்திருத்தவாதிகள் பலர் சதி, பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியதைக் காணலாம். வித்தியாசாகர், ராமகிருஷ்ணர், ரவீந்திர நாத தாகூர், காந்தி, நேரு போன்றோர் இவர்களில சிலராவார்.

6. இந்தக் கால கட்டங்களில் ஆசியாவில் பெண்கள் உரிமைக்காகப போராடிய பெண்கள் எவருமே இருக்கவில்லையா?

இருந்தனர், 19ஆம் நூற்றாண்டில் கூடப் பலர் இருந்தனர். இந்தியாவில் 1880 களிலேயே பண்டித ராமாபாய் (1885-1922) என்ற பெண் பெண்களின் சுதந்திரம் பற்றிப் பேசியவராவார். இவரைப்பற்றி உலகம் அதிகம் அறியவில்லை. பெண்கள் சுதந்திரம் பற்றிக் குரல் கொடுத்ததோடு இந்து சமய பழமை வாதத்தை எதிர்த்து சுதந்திரமான வாழ்க்;கையும் நடத்தினார். கார்த்தினி (Karthini 1879 - 1904) என்பவர் இந்தோனேஷியாவில் பெண்கள் கல்விக்காகவும் பெண் ‘தளைகளை நீக்குவதற்காகவும் போராடினார். அவர் பெண்களுக்குத் தனியான கல்விக்கூடங்களை அமைப்பதற்கு எதிராகத தீவிரமாகப் போராடினார் ஈரான் நாட்டு பாபி (Babi) இனத்தைச் சேர்ந்த குவாரத் உல் அயின் (Qurrat Ul Ayin 1815 - 51) என்ற பெண்துறவி குடும்பத்தை விட்டு வெளியேறியதோடு தாமே முகத்திரையிடலைக் கைவிட்டதோடு, முகத்திரையின்றிப் பகிரங்கமாகப் பிரசாரம் செய்தார்.

இவர் போர்க்களத்திலேயே இறந்தார். ஜியு - ஜின் (Jiu jin 1875 - 1907) என்ற சீனப்பெண் வீட்டை விட்டு வெளியேறி ரோக்கியோ சென்று கல்விகற்றார். அங்கு அவர் புரட்சிகர அரசியல் விடயங்களில் ஈடுபட்டதுடன், பெண்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனால் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை பெற்றார். பெண்களுக்கான சமத்துவ உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் புரட்சியானது எங்கள் வீடுகளிலேயே ஆரம்பமாதல் வேண்டும் என இவர் கூறினார்.

7. இவை யாவும் இலங்கையரல்லாதவர் பற்றிய விடயங்கள். இலங்கையின் நிலை எவ்வாறிருந்தது?

சுகலா, கஜமன் நோனா ஆகிய இரு பெண்களும் பெண்களின் தனித்துவங்களுக்காகப் போராடினர். சுகலா (மகாவம்சத்தில் குறிப்பிடப்படும்) தன் நாட்;டைப் காப்பதற்காக முதலாம் பராக்கிரமபாகுவுடன் போராடினாள். கஜமன் நோனா பெண்கள் வாசிப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாக கவிதைகள் என ஆண்களால் கருதப்பட்ட பல கவிதைகளை எழுதினாள்.

8. ஆனால் இந்தப் போராட்டம் இன்று பொருத்தமானதா? ஏனெனில் பெண்களுக்குப் பல ஜனநாயக உரிமைகள்-கல்வி, தொழில் வாய்ப்பு, வாக்குரிமை போன்றவற்றுடன் உடல் ரீதியான தரமான வாழ்க்;கை என்பன ஆசியாவிலேயே உடல் ரீதியான தரமான வாழ்க்கை என்பன ஆசியாவிலேயே உயர்ந்த அளவில் இலங்கையில் காணப்படுகின்றன.

• பெண்களின் ஆயுட்காலம் : 67 வருடங்கள் (ஆண்கள்: 65)

• பெண்களில் எழுதவாசிக்கத் தெரிந்தோர் : 83மூ

• பிரசவத்தின்போது இறப்பு வீதம்: 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 1.2

• சிசு இறப்பு வீதம் 1000ற்கு 40

இத்;துடன்

• முதல் பெண் பிரதமரை நாங்கள் கொண்டிருந்தமை

• 1893 இல் முதலாவது மாணவி மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி பெற்றமை

• நாங்கள் பல தொழிற்துறைகளில் பெண்களைக் கொண்டுள்ளமை

• மற்றும் பெண் ராஜதந்திரிகள், மருத்துவர், பொறியியலாளர், வழக்கறிஞர், போராசிரியர்கள் என்போரைக் கொண்டுள்ளமை உண்மை இல்;லையா?

அப்படியானால் பிரச்சனை என்ன?

பெண் நிலைவாதம் எமக்குத் தேவையா?

பெண்கள் தரமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த போதும் ஆண் தலைமை நடைமுறையில் இருக்கும் நாட்டிற்கு இலங்கை ஒரு உதாரணமாகும். சில விடயங்களைத் தனித்தனியாக எடுப்போம். முதலில் அரசியல், அரசியலில் பெண்கள் பங்குபற்றியமை தொடர்பான புள்ளி விபரங்கள் வியப்பூட்டுபவையாக உள்ளன. இந்த உண்மையை வைத்துப் பார்க்கும்போது உலக நாடுகள்யாவும் பெருமைப்படக்கூடிய அளவு பெண்கள் ஆண்களுடன் வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்திலும் பங்கு கொண்டவர்கள் என நாம் பெருமை பேசலாம். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து (1948) இன்று வரை பாராளுமன்றத்தில் 20 பெண் உறுப்பினர்களே இருந்துள்ளனர்.

9. ஆனால் பெண்கள் எமது உழைப்பாளர்களிடையே செயலூக்கம் வாய்ந்த பங்கு வகிப்பதுடன் பொருளாதார ரீதியிலும் வலுவடைந்துள்ளனர். அதே நேரம் தொடர்ச்சியாகப் பெரிய எண்ணிக்கையில் உழைப்பாளர்களாகவும் மாறிவருகின்றனர். ஆனால்; உண்மையில் அவர்கள் என்ன வகையான செல்வாக்கைக் கொண்டுள்ளனர்?

தொழில் செய்வோர் விபரம் (1982 குடிசன மதிப்பீடு)

பெண்களின் வீதம்

உயர் தொழில் நுட்பம் 14.1

நிர்வாக முகாமைத்துவம் 0.4

எழுதுவினை 6.0

விற்பனைப் பணியாளர் 3.0

சேவைத்துறைப் பணியாளர் 4.3

விவசாயம், மிருகவளர்ப்பு, காட்டுத்தொழில், மீன்பிடி 52.1

உற்பத்தி. உற்பத்திசார் தொழிலாளர், போக்குவரத்து

எந்திர இயக்குனரும் தொழிலாளரும் 16.8

தொழில் குறிப்பிடப்படாதோர் 2.0

தொழில் செய்வோரின் மொத்த விகிதாசாரம் 24.9

இத்தோடு 13.2மூ ஆண்கள் வேலையில்லாது இருக்கின்றனர். 31.8மூ பெண்களும் வேலையற்று இருக்கின்றனர்.

10. நிச்சயமாகப் சமீபகாலக் கொள்கைகள் பெண்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன. சுதந்திர வர்த்தக வலயம், மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு, உல்லாசப் பிரயாணத்துறை ஆகியன பெண்களை வீடுகளில் இருந்து விடுபடச் செய்து உழைப்பாளர் ஆக்கியதுடன் அவர்களுக்குப் பொருளாதார ரீதியான சுதந்திரத்தையும் அளித்துள்ளன.

பெண்கள் வீடுகளில் இருந்து விடுபட்டு உழைப்பாளராவதற்கு நாம் ஆதரவளிக்கிறோம். ஆனால் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் அதாவது பெண்களுக்குத் குறைந்த கூலி வழங்கல், சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வேலை செய்தல், மேலதிக வேலை, எழுந்தமானத்தில் வேலைக்குச் சேர்த்தலும் விலக்கலும், பெண்கள் ஓர் அமைப்பாக இணையும் சுதந்திரத்தைத் தடுத்தல், பாலியல் சுரண்டல் போன்றவற்றை அனுமதிக்கும் கொள்கைக்குநாம் எதிரானவர்களாவோம்.

11. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். உதாரணமாக சுதந்திர வர்த்தக வலயங்கள் பெண்களை இரவில் வேலைசெய்ய அனுமதிக்கின்றன. அதன் விளைவாக அவர்கள் ஒழுக்கத்தில் தவற இடமுண்டுடாவதுடன் குடும்பக் கடமைகளைக் கவனிக்க முடியாமலும் போகும்.

பெண்கள், ஆண்கள்-எவராவது இரவு வேலை செய்வதை நாம் எதிர்க்கிறோம் இது கலாசார அல்லது ஒழுக்கரீதியான காரணங்களுக்காக அல்ல. ஆனால் அவர்களின் உடல்நிலை கெட்டுப்போவதுடன் வாழ்வே நாசமாகி விடும் என்பதால். அத்;துடன் அவர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து, ஓய்வு வசதிகள் போன்ற அனுகூலங்களும் வழங்கப்படவில்லை. வேலை பார்க்கும் பெண் ~ஒழுக்கத்தில் தளர்ந்தவன்| என்ற வகைமாதிரி எண்ணக்கரவானது சமூகத்தால் நிச்சயமாகக் கைவிடப்பட வேண்டியதாகும். உண்மை என்னவெனில் இரவில் பெண்கள் பார்ப்பதால் ஒழுக்கரீதியான தவறு ஏற்படுவதிலும் பாhக்க பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு அவர்கள் ஆளாவதற்கே அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.

12. ஆனால் இலங்கை தனது சமூக நலக் கொள்கைகளுக்காக உலகில் பிரசித்தி பெற்ற நாடாகும். இங்கு வேறெந்த சமூகத்திலும் பெற முடியாத சமூக நலவுரிமைகளைப் பெண்கள் அனுபவிக்கின்றனர்.

(அ) பிரசவ விடுமுறை: சர்வதேச தொழில் மரபின் 3-ம் பிரிவின்படி பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 12 வாரங்களாவது பிரசவ கால விடுமுறை வழங்கப்பட வேண்டும். எமது அயல் நாடுகள் உட்பட அநேக நாடுகள் இந்தத் தரங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் சோஷலிச நாடுகள் இதற்கு மேலாகப் பெண்களுக்கு 15 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்குகின்றன. எனினும் இலங்;கைப் பெண்கள் 6 வாரங்கள் மட்டுமே பிரசவ விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்கள். இதற்கு மேலாக தந்தைக்குரிய லீவு பற்றிய எண்ணக்கரு இது இருபாலருமே தொழில் செய்பவராக இருந்தபோதும் வளர்ப்பு பெண்ணின் கடமை என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

(ஆ) பிரசவத்தின் பின் கவனிப்பு: வேறு நாடுகளில் கொடுக்கப்படுவது போன்று எமது நாட்டில் குழந்தை பிறந்தபின்னர் உடனடியான கவனிப்புகளுக்கு ஓர் குடும்பத்திற்கு அரசு எந்த வித ஆதாரமும் வழங்கவில்லை. பிரசவநலச் சட்டத்தில் குழந்;தை பராமரிப்பு நிலையங்கள், பாலூட்டும் நேர இடைவேளை போன்றவற்றிற்கான திருத்தங்கள் சேர்க்கப்பட்டபோதும் இந்த ஏற்பாடுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

(இ) குடும்பத்தலைமை: அபிவிருத்தித் திட்டத்தின் கீழான அநேக சமூக நல நன்மைகள் (உதாரணமாக மகாவலித் திட்டம் போன்றவற்றில்) ~குடும்பத்தின் தலைவனுக்கே| கொடுக்கப்படுகின்றன. அத்;தலைவன் இலங்கைச் சட்டப்படி வழமையாக ஆணாகவே உள்ளான். கணவன் இல்லாதிருந்தால் மட்டுமே பெண்கள் இந்த உரிமைகளை அனுபவிக்கின்றனர். கணவன் குடும்பத்தில் இருந்து விலகினால் சகல சமூக நலன்புரித் திட்டங்களிலும் ஆணே குடும்;பத் தலைவனாக ஏற்றுகொள்ளப்படுகின்றான். பெண் இரண்டாம் தரநிலை மட்டுமே வகிப்பதாக இவை கருதுகின்றன. இதன்விளைவாக ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பெறாத உரிமைகளுக்கு உரித்தாகுகின்றனர். பெண், தானே குடும்பத்தின் பிரதான உழைப்பாளி என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த நன்;மைகள் பெண்களுக்கு உரித்தாகும். அநேக இலங்கைப் பெண்கள் இந்த நடைமுறை பற்றிய பிரக்;ஞை அற்று இருக்கின்றனர். பெண்களே பெருமளவில் தொழில் புரியும் சுதந்திர வர்த்தக வலயம் பெருந்தோட்டங்கள், தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்பகுதிகளில் 40மூ பெண்கள் தொழில் செய்தல் ஆகிய நிலைமைகளைக் கொண்ட எமது சமூகத்தில் குடும்பத்தில் பெண்கள் இரண்டாம்தர நிலையே வகிக்கின்றனர் என்று சமூக நலப் பகுதியினர் கருதுவது பொருத்தமற்றதாகும்.

13. ஆனால் நிச்சயமாக நாம் முன்னேற விரும்பினால் இத்தகைய சுரண்டல் வடிவங்களை சிறிது காலத்திற்குத் தானும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாம் முன்னேறிய பின்னர் இந்த எதிர்மறையான அம்சங்கள் மறைந்து விடும்

இந்தவகையான வளர்ச்சி (முன்னேற்றம்) முதலாளித்துவ உற்பத்தி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக முன்னர் ஐரோப்பாவில் வீடு உற்பத்தி மையமாக இருந்து வந்துள்ளது. (உணவு, உடை, சவர்க்காரம், மெழுகுவர்த்தி போன்றவை) இந்த உற்பத்தியில் பெண்கள் முக்கியமான ஒரு பங்கினைப் பெற்றிருந்ததுடன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் கைத்தொழிற் புரட்சியுடன் பெண்களுடைய நிலை மாற்றமடைந்தது.

(அ) ஏழைப் பெண்கள் (பாட்டாளிவர்க்கப் பெண்கள்) தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் (குறைந்த கூலியில்) வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன் அடுத்த தலைமுறை உழைப்பாளர்களையும் உற்பத்தி (சந்ததி உற்பத்தி) செய்தனர்.

(ஆ) பூர்ஷவாப் பெண்கள் குடும்பப் பெண்களாகவே வைக்கப்பட்டிருந்ததுடன் உற்பத்தியில் எதுவித பங்குமற்றிருந்தனர். ஆனால் தமக்குப் பின்னர் சொத்துக்கு வாரிசாகக் கூடிய தலைமுறையை மீள உற்பத்தி செய்து கொண்டிருந்தனர்.

(இ) மாறாக, இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்ஷ்வாப் பெண்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தண்டிக்கவும்பட்டனர்.

பாட்டாளி வர்க்கப் பெண்களைச் சுரண்டுவதும் செல்வந்தப் பெண்களை தனிமைப்படுத்தி வைத்தலும் தீவிரமாகின.

14. ஆனால் 18ம் நூற்றாண்டில்; ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கும் இலங்கைப் பெண்களுக்குமுள்ள தொடர்பு என்ன?

ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண்களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை தான் இணைக்கும் தொடர்பாக உள்ளது. உதாரணமாகக் காலனித்துவத்திற்கு முற்பட்ட சமுதாயத்தில் பெண்கள் விவசாய வேலைகளை மாத்திரமே செய்தனர். ஆனால் காலனித்துவத்துடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

• பெண்கள் கோப்பி, றப்பர், தேயிலை மற்றும் ஏனைய தோட்டங்களில் வேலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர்.

• பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

• விவசாய வேலைகளிலும் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்நிலைமைக்கு மாறாக இலங்கையின் பூர்ஷவா வர்க்கப் பெண்கள் ஐரோப்பியப் பெண்கள் போல வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த போதிலும் கல்வி புகட்டப்பட்டதுடன் சில அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டுமிருந்தனர்.

இவ்வாறு தந்தை வழிச் சமூகத்தின் எல்லா அம்சங்களும் மிக உறுதியாகக் காலனித்துவ நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டன. முற்பட்ட தாய் வழிச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களும் முற்றாக நீக்கப்பட்டன. பெண்கள் விடயத்தில் அன்னிய ஆட்சியாளரின் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.

இவ்வாறு முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஐரோப்பாவிலும், காலனித்துவ நாடுகளிலும் தந்தை வழிச் சமூக அமைப்பு முறைகள் வலுவாக்கப்பட்டன. வீட்டிற்குரிய உற்பத்திகளில் முன்பு தமக்கிருந்த உரிமைகளைப் பெண்கள் இழந்ததுடன் வீடுகளில் இவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர் அல்லது விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் சுரண்டப்பட்டனர். பூர்ஷ்வா வர்க்கப் பெண்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் வழங்கப்பட்ட அதே வேளையில் அடிப்படைச் சட்டங்கள் ஆணைக் குடும்பக் தலைவனாகக் கொள்கின்ற தந்தை வழிச் சமூகத்திற்குரியதாகவே இருந்தன.

முதலாளித்துவ கலாசாரமும் தந்தை வழிச் சமூக அமைப்பினை மீளவும் வலுப்படுத்தியதுடன் ஏகாதிபத்திய வாதிகளும், மூன்றாம் உலக முதலாளித்;துவ வர்க்க ஆண்களும் தந்தை வழிச் சமூகப் பெறுமானங்களை அடிப்படையி;ல் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

15. பெண்கள் வீட்டு வாழ்க்கையில் அதிகளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பதால்; ஆண்களை விடக் குறைந்த அளவிலேயே அவர்கள் உற்பத்தி செய்வதானது வேலைத்தலங்களிற் காணப்படும் சமத்;துவமின்மைக்கு உண்மையான காரணம் என்று கூறலாமா?

முதலாளித்துவம் இந்த வாதத்தை ஆதாரமாகப் பயன்படுத்துவதோடு, ஆண்களையே குடும்பத்தின் தலைவனாகக் கருதி ~குடும்ப வேதனம்| என்ற முறையைப் பின்பற்றுகின்றது. அதாவது ஒரு குடும்பத்தலைவனும் அவனது மனைவி மக்களும் வாழ்க்கையை நடத்;துவதற்குப் போதுமான அளவு வேதனத்தைக் கொடுப்பதாகும். இந்தக் கருத்தின்படி பெண்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது, குடும்பத்தின் மேலதிக வருமானத்திற்காகவே அவள் உழைப்பதாகக் கருதி, சமனான வேலைகளின்; போதும் குறைந்தளவு வேதனத்தையே வழங்குகின்றனர்.

ஆனால் உண்மைநிலை வேறானதாகும். பல நாடுகளில் (இலங்கை உட்பட) மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் 25மூ-40மூ வரையிலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பிலேயே தங்கியிருப்பவையாகவோ, தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்களாகவோ உள்ளன எனக் காட்டுகின்றன. இவர்களுட் பெரும்பாலான பெண்கள் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்கின்றனர் அல்லது குறைவாக கூலி தரும் தொழில்களில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் முதலாளித்துவ ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்;ட வேலைத்தலங்களில் சமனற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய பாரபட்சமான நடை முறைகட்கும் உட்படுகின்றனர்.

அது மட்டுமன்றி தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட்டம் ஆகிய எவற்றிலாவது தொழில் செய்யும் பெண்கள் கூடுதலான நேரங்களை விட்டு வேலைகளிலும் செலவிடவேண்டியதாக உள்ளது. சமையல், துப்பரவு செய்தல், துணி கழுவுதல், நீர் எடுத்தல், விறகு சேகரித்தல், குழந்தை பராமரித்தல் போன்றவை அத்;தகைய வேலைகளாகும். இதனால் பெண்கள் இரண்டு வேலைச்சுமைகளை அநுபவிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு புறத்தில் கூலி பெறும் உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணானவள் கூலியற்ற வீட்டு வேலைக்காரியாகவும் உழைக்க வேண்டியுள்ளது.

16. எனினும் கூட நவீன மயமாக்கத்தின் மூலம் பெண்கள் தமக்குரிய இடத்தைச் சமுதாயத்தில் பெறுவார்கள். வீட்டில் உள்ள அவர்களது வேலைப்பளு குறைந்து போகும். வெளியே சென்று உழைப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறுவர்.

நவீனமயமாக்கத் திட்டங்களில் 'ஆண்சார்பு' இயல்பாகவே காணப்படுவதால் கருத்து ரீதியாகவும், நடைமுறை ரீதியாவும் பெண்களைப் பொறுத்து பாரபட்சமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. சில வேளைகளில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடாதவாறு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக பஞ்சாப்பில் பசுமைப்புரட்சியின் போது இடம் பெற்ற கூடுதலான இயந்திரமயமாக்கமானது, பெண்கள் பாரம்பரிய விவசாயத் தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பை இல்லாமற் செய்தது. தொழில் நுட்ப வேலைகள், பிரதானமாக ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்டதால் பெண்கள் வேலையில்லாப் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியதாயிற்று. மேலும் இத்தகைய முயற்சிகளால் செல்வச் செழிப்புப்; பெற்ற விவசாயிகள் தமது பெண்களை வெளியே உழைக்கவிடாது வீட்டில் வைத்திருத்தல் அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. இலங்கையில் மகாவலித்திட்டத்தினால் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. மிகவும் குறைந்த அளவு நிலமே சுதந்திரமான பெண்; விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கடன், தொழில் நுட்பம் என்பனவற்றைப் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன. இதனால் அவர்கள் குறைந்த அளவு கூலி கிடைக்கும் தொழில்களைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது மீண்டும் வீட்;டு உழைப்பில் ஈடுபடவேண்டி இருந்தது. இதனால் அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்கான எத்தகைய முயற்சிகளையும் செய்யாமல் தடுக்கவும் பட்டனர்.

17. பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான இப்போராட்டங்கள் எத்தகையன? பெண்ணுரிமைத் தீவிரவாதிகள் பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென வாதிடுகின்றனர். இலங்கைச் சட்டமோ பலாத்காரம் செய்யப்பட்டவரினதும், செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரினதும் நலன்களைச் சமமாகப் பேணுவதாகும்.

1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட பெண்களைப் பலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லை. அதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டமாற்றங்கள் எதையும் அது கருத்தில் கொள்ளவில்லை. இலங்கைச் சட்டத்தரணிகள் மட்டும்; இப்;பொழுதும் அந்தச்சட்டத்தை சரியென வாதிடுகின்றனர். பிரித்தானியர்கள் அந்தச் சட்டங்களைத் தம் நாட்டில் மாற்;றியிருந்த போதிலும், இலங்கைச் சட்டத்தரணிகள் 100 வருடங்களுக்கு முன்பே செய்து வைத்த சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமானவை என வாதிடுகின்றனர்.

இன்று இலங்கையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குத்தாக்கல் செய்தால் அதற்குச் சாட்சிகளைத் தருதல் வேண்டும். சட்டங்கள் இதனைத் தெளிவாகக் கூறாவிடினும் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. பலாத்காரம் தனிப்பட்ட குற்றமாகும். இது பொது இடத்தில் செய்யப்படுவதில்லை. கொலை, களவு போலன்றி இது ஒரு பெண்மீது மேற்கொள்ளப்படுவது. உடலுறவு அடையாளங்கள் மட்டுமே சான்றுகளாக உள்ளன. சாட்சிகள் கேட்பதானது ஏற்கனவே அச்சமடைந்த பெண்ணை மேலும் பலவீனப்படுத்துகிறது. இலங்கை போலன்றி ஏனைய நாடுகளில் சாட்சிகளின்மை வழக்கைத் தள்ளுபடி செய்யாது. தமக்கு முன்னுள்ள உண்மைகளை வைத்து ஜூரர்கள் அல்லது நீதிபதி தமது முடிவுகளை எடுக்கலாம்

இரண்டாவது, இலங்கைப் பெண்கள் பலாத்கார வழக்கில்; தமது சம்மதமின்;மையை நிரூபிக்கும்படி கேட்கப்படுகின்றனர். இது மேலும் பெண்களைத் துன்புறுத்துவதாகும். பொலிசாரும் வைத்தியரும் பலாத்காரத்தை எதிர்க்க வேண்டாம். அது கொலைக்கு வழி வகுக்கும் எனக் கூறுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களே ஒரு பெண் இதனை எதிர்க்காவிட்டால் அதனை அவளது சம்மதத்திற்கு அத்தாட்சியாகக் கொள்கின்றன. பலாத்காரத்திற்காக ஆண்கள் தண்டனை பெற வேண்டுமெனப் பெண்கள் விரும்பினால் இறப்புக்கும் இடமளிக்கும் நிலையை இலங்கைச் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. ஏனைய நாடுகளில் இவ்வாறில்லை.

இலங்கையில் ஒரு பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்வும்; வழக்கின் போது எடுத்து அலசப்படலாம். (அவள் திருமணமாகாத கன்னியா. அல்லது முறைதகா உறவுடையவளா? ஆகிய வினாக்கள்) அவள் ஒழுக்கரீதியாக தவறிய பெண் என்பதைக் காட்டுவதற்கு அவளது தனிப்பட்ட வாழ்க்கை எடுத்;துக்காட்டப்படுவதுடன், பலாத்காரத்தை அவளே தூண்டினாள் எனவும் நிரூபிக்கப்படலாம். ஏனைய நாடுகளில் சட்டங்கள் இத்தகைய நிலையை அனுமதிப்பதில்லை. அத்துடன் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்;ணை அவமதிப்பதையும் வன்மையாகத் தடுக்கின்றன.

சில பகுதிகளில் பலாத்காரம் அதிக அளவில் அதிகரித்து வருவதாக சமூக விஞ்ஞானிகள் கூறியபோதும் ஒரு சில பலாத்கார வழக்குகளே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் பாரம்பரியக் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், பெண்களுக்கு நீதி வழங்கப்படுவதை சட்டங்கள் தடுப்பதாலும் இந் நிலைமை ஏற்படுகிறது. மிகச் சுதந்திரமான நிலைமைகளிலும் கூட பெண், பலாத்கார வழக்குத் தாக்கல் செய்வதை இவை தடை செய்யலாம்.

18. நீங்கள் ஒரு புறத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் மறுபுறத்தில் பெண்தீவிரவாதிகள் கருச்சிதைவு செய்வதனை இந் நாட்டில் சட்டபூர்வமானதாக்க முயல்கிறார்கள். நாம் இதனைத் தடுக்க முயலவேண்டும். ஒவ்வொரு முதிர் கருவிற்கும் வாழ உரிமையுண்டு நாம் குழந்தைகளின் கொலையைச் சட்டபூர்வமானதாக்கக் கூடாது.

1833 ஆண்டின் பீனல் சட்டக்கோர்வையின் 30 ஆம் பிரிவின்படி இன்று வரையும் கருச்சிதைவு இலங்கையில் சட்டபூர்வமற்றதாகவே உள்ளது. சனத்தொகை அளவுக்கு மீறி அதிகரிப்பது, பிறப்பு வீதத்தினைக் குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்படுவது ஆகியன காணப்படினும் கூட கருச்சிதைவானது சட்டபூர்வமற்றதாகவே அமைகிறது. ஏனெனில் கருக்கொண்ட நேரத்தில் இருந்து கருவிற்கு உயிரும், வாழ்வும் உண்டு எனவும் பெண்ணினது உடல் அதன் பிறப்பிற்கான ஒரு சாதனம் எனவும் கருதப்படுவதால் ஆகும். வேறு வகையிற் கூறுவதனால் கருக்கொள்ளும் கணத்திலிருந்து பெண்ணின் கருப்பையானது சமுதாய உற்பத்தியாக மாறுகிறது. அவள் தன்னுடைய உடலில் தனக்கிருக்கும் உரிமையை இழந்து விடுகிறாள். அரசு பெண்ணினது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெறுகிறது.

இக்கருத்தானது விஞ்ஞான நோக்கிலும் நடைமுறை நோக்கிலும் எதிர்த்துரைக்கக் கூடியதொன்றாகும். அமெரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள், உதாரணங்கள் மூலம் கருவானது மூன்றாம் மாதம் வரை உயிரற்றது என்பதனை எடுத்;துக் காட்டியுள்ளார்கள். இக் காரணத்தால் அமெரிக்க உயர்நீதிமன்றம் மூன்றாம் மாதம் வரை கருவானது பெண்ணின் கருப்பையின் ஒரு பகுதியாக அமைகிறதாகையால் பெண் தனது உடல் மீதான உரிமையைப் பேணலாம் என்று கூறி மூன்றாம் மாதம் வரை கருச்சிதைவு செய்து கொள்வதனை அனுமதிக்கிறது. நடைமுறை நோக்கில் கூட இலங்கையில் கருச்சிதைவானது அதிகரிக்கிறது என்;பதைச் சமீபகாலப் பத்திரிகைக் கட்டுரைகள் மூலமாக அறிய முடிகிறது.

பணக்காரப் பெண்கள் வைத்தியர்களின் சேவையைப் பெறுவதன் மூலமாகவோ கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதன் மூலமாகவோ கருச்சிதைவு செய்கிறார்கள். மறுபுறத்;;;தில் ஏழைப்பெண்கள் தேர்ச்சியற்ற வைத்தியரிடம் செல்கின்றனர் அல்லது தமக்கத்தாமே கருச்சிதைவு செய்ய முனைகின்றனர். இவ்வாறு செய்யும் போது பல பெண்கள் இறக்கிறார்கள். அல்லது தமது உறுப்பைச் சிதைத்துக்கொள்கிறார்கள்.

நடைமுறை ரீதியில் நோக்குகையில் சமுதாயத்தை உண்மையில் இரு தெரிவுகள் எதிர்நோக்குகின்றன. ஒன்று பெண்ணினது உயிரையும் உறுப்பையும் பாதுகாத்தல், மற்றது, பிறவாத, பெண்ணின் கருப்பையுடன் இணைக்கப்பட்ட, தேவையற்ற கருவை - சிதைவினால் அல்;லது ஆயுள்வேத முறைகளினால் அல்லது பெண்ணால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் இறக்கக்கூடிய கருவைக் காப்பாற்றுதல் ஆகும். இப்படிப்பட்ட பழமையான நடைமுறையில் இருந்து தப்பிக்கொள்ள நாம் கருச்சிதைவை சட்டபூர்வமானதாக மாற்றுவதுடன் அதனை மருத்துவ சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

19. எனினும் வன்முறை பற்றிய பிரச்சனை வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்;துவது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் உண்மையாகப் பேசுவது எதைப்பற்றி?

பெண்கள் மீதான சமூகக்கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு தந்தை வழிச் சமூக அமைப்பு வன்முறைகளை ஒரு சாதனமாக அனுமதிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பலவகைகளில் நிகழ்கிறது. மூன்றாம் உலகநாடுகளில் பாலுறுப்புச் சிதைத்தல், பெண்களை அடித்தல், பாலாத்காரம் ஆகியவை பொதுவான வன்முறை வடிவங்களாகும். இளம் பெண்பிள்ளைகளின் பாலுறுப்புக்களைச் சிதைத்தல் சில மத்தியகிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் மிகப் பொதுவான அம்சமாக உள்ளது. பெண்களது பாலியலைக் கட்டுப்படுத்துவதும், ஒடுக்குவதும் ஒரு ஆணின் சொத்துக்கு உரிமையைப் பெறக்கூடிய சந்ததி அவனுடையதே என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இவ்வாறு ஒரு ஆணின் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கு ஒரு பெண்ணின் உடல் சிதைக்கப்படுகிறது.

வடஇந்தியாவில் இன்று அதிகளவில் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சீதனச்சாவுகள்; மூலம் பெண்களது வாழ்வின் இரங்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளலாம். திருமணமான இளம் பெண்கள் தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். திருமணத்தின் போது பெண் கொண்டு வந்த சீதனம் குறைவானது அல்லது தரமற்றது என்பதற்காக அதிருப்தியடைந்த கணவன், மாமன்-மாமி ஆகியோர் அவளைக் கொலை செய்கின்றனர். ஒரு மட்டத்தில் திருமண நிறுவனத்துக்கு அவள் கொண்டு வரும் சீதனப் பொருட்களின் அந்தஸ்தை அவளும் பங்கிட்டுக்; கொள்கிறாள். இன்னோர் மட்டத்தில்; இப்பொருட்களைப் பாதுகாத்து புதிய தலைமுறைக்குக் கையளிக்கும் கருவியாகவும் பயன்படுகிறாள்.

20. ஆனால் இது உலகின் மற்;றைய பாகங்களில் அல்லவா? இலங்கையின் நிலைமை எவ்வாறானது?

இலங்கையின் முஸ்லிம் பலர் விருத்த சேதனம் செய்யப்பட்டு பாலுறுப்புச் சிதைவினால் துன்புறுகின்றனர். பெண்களை அடிப்பதும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களை அடிப்பது சமுதாயத்தில் அனுமதிக்கப்படுவதோடு அல்லாமல் ஏற்றுக் கொள்ளவும்படுகிறது. பெண்களுக்கெதிராகக் காட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் வகைகளிலே இதனைப்பற்றி எவரும் சர்ச்சை செய்யாதிருப்பதற்குக் காரணம் அது தந்தைவழிச் சமூகத்தின் அதிகார அமைப்புக்குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த குடும்ப எல்லைக்குள் நடைபெறுவதாலாகும். ஒரு ‘தவறிய’ பெண்ணை,-அவள் எவ்வித காரணங்கள் வைத்திருந்தாலும்,-அவளது கணவன் அல்லது காதலன் அல்லது பாதுகாவலன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்கு அடிக்கலாம்.

சமுதாய யதார்த்தம் அவளுக்கெதிராக இருப்பதாலும் தப்பமுடியாத ஒரு பொறியில் அகப்பட்டிருப்பதாக அவள் உணர்வதாலும் அவள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாதவளாக்கப்பட்டுள்ளாள். தான் அடி வாங்குவது அடிப்பவனின் கையாலாகாத்தனத்தாலும் அவனது பயங்களாலும் அல்;லாது தான் செய்;த குற்றத்திற்காக என்றும் நம்புகிறாள். பெண்களை அடிப்பதை, வர்க்க, சாதி, இன எல்லைகளைக் கடந்து மூன்றாவது உலக நாட்டுப் பெண்கள் குழுக்கள் எடுத்துக் கூறி வருகின்றன. சில கலாசாரங்களிலும் சமூக அமைப்புக்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒழுக்கங்களான திருமணத்திற்கு முன் பால் உறவு கொள்ளுவதும். கணவனல்லாதவனோடு உறவு கொள்ளலும் அவளைக் கொலைத்தண்டனைக்கு உட்படுத்தும்.

21. வேறு எந்தவகை வன்முறைக்குப் பெண்கள் பயப்படுகின்றனர்?

அநேகமாக வன்முறைகளின் இயல்பே பாலியல் சம்பந்தமானது. ஆண் பாதுகாவலன், அவளைத் தாக்குபவன் என்ற பரஸ்பரம், மாறக் கூடிய பாத்திரங்களை ஏற்பது பெண்களின் பாலியலுடன் நேரடித் தொடர்புள்ளது. மூத்தவர்களிடமிருந்து ஒருவன் பெறும் புகழும், கௌரவமும் அவன் தனது பெண்களை மற்றைய ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடாமல் எவ்வாறு பாதுகாக்கிறான் என்பதில் தங்கியுள்ளது.

கடந்தகாலத்தில் ஆண்கள் வரலாற்றாசிரியர்கள் சமூக வரலாற்றில் பெண்களைப் பாலாத்காரம் செய்வது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. பெருமளவில் பெண்களைப் பலாத்காரம் செய்தல் எதிர்ப்புணர்ச்சியுடைய பெண்களை மட்டுமன்றி அவர்கள் மூலம் ஆண்களையும் பயமுறுத்தப் பயன்பட்டது. பங்களாதேஷில் பாகிஸ்தானிய படையெடுப்பு, வியட்நாமில் அமெரிக்கப் படையெடுப்பு, லெபனானின் உள்;நாட்டுயுத்தம், இப்பொழுது இங்கு இடம் பெறும் இனப்பிரச்சினை என்பன உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தெளிவான உதாரணங்கள் ஆகும்;.

சாதி, வர்க்கப் பிரச்சினைகளிலும் பாலியல் வன்முறைகள் பெண்களுக்கெதிராகப் பயன்படுகின்றன. உதாரணமாக விவசாயிகள் காணியற்ற கூலியாட்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் பொழுது காணிச் சொந்தக்காரர்கள் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர்களை உபயோகித்து தீவிர எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்களையும், பார்வையாளர்களையும் பெருந்தொகையாக பாலாத்காரம் செய்வர். இச் செயல்கள் பெண்களைப் பயப்படுத்துவதுடன் ஆண்களுக்கு அவர்களது பெண்களைக் காப்பாற்ற முடியாமையையும் உணர்த்துகிறது.

தாழ்ந்த வர்க்க, சாதியைச் சேர்ந்த பெண்களுக்கெதிரான வலுவுள்ள ஆயுதமாகப் பலாத்காரம் செய்தலை அதிகாரத்தில் உள்ளோர் பயன்படுத்துகின்றனர். தந்தைவழிச் சமூகமானது ஆண்கள் மற்றவர்களில் அதிகாரம் செலுத்துவதையும், அவர்களைக் கட்டுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறது. ஆனால் ஒரு ஏழை மனிதனுக்கோ தனது பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே சமூக அங்கீகாரம் உள்ளது. அதனால் அத்தகைய ஆண்கள் தமது பெண்கள் மீது மற்றவர்கள் பாலியல் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடும் பொழுது தம்மை முற்றிலும் ஆண்மையற்றவராக உணர்கின்றனர்.

பெண்கள் ஆய்வு வட்டம்

நோக்கங்கள்

1. இன்று இலங்கையில் பெண்கள் மத்தியில் நிலவும் ஒடுக்குமுறை வடிவங்களை இனங்காண்பதும் அவற்றை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுதல்.

2. இலங்கையில் நகர-கிராம-தோட்டப்புற உழைக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை பெண்நிலைவாத நோக்கில் மேற்கொண்டு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சமூகத்திற்கு வெளிப்படுத்தல்@ அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தல்.

3. பெண்கள் தொடர்பான (திருமணம், சொத்து, பலாத்காரம், கருச்சிதைவு, பிறப்புக்கட்டுப்பாடு) சட்டங்களை மதிப்பிடல்@ அவை பற்றிய திருத்தங்களுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

4. வெகுஜன தொடர்புச் சாதனங்களில் வெளிப்படுத்தப்படும் பெண்கள் பற்றிய மதிப்பீடுகளையிட்டு எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருப்பதோடு அவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. பெண்கள் மத்தியிலேயே காணப்படுகின்ற பிற்போக்குத்தனமான கருத்துக்களை நீக்குவதற்கான முயற்சிகளைச் செய்தல்.

6. சமூகத்தில் நீதிக்கும் சமத்துவத்திற்குமாக உழைக்கின்ற ஏனைய பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகள் வைத்திருத்தல்@ அவசியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்து செயலாற்றல்.

7. பெண்கள் பற்றி முழுச் சமூகத்தினதும் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக பிரசுரங்களை வெளியிடுதல்.

பெண்கள் ஆய்வுவட்ட வெளியீடு - இல. 1

ஆகஸ்ட் 1985

விலை 3-50

அட்டை - நன்றி - சங்கார்ஷ்

ENNILAIVATHAM Poruthamanathe a Tamil Translation of Feminism is Relevant by Feminist Study circe, 6/4, Cam bridge Place, Colombo 7, Sri Lanka published by Women’s Study Circle, 51, Sankiliyan Veethy, Nallur, Jaffna, Sri Lanka, August 1985.

புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்,

360, பிரதான வீதி,

யாழ்ப்பாணம்.

பெண்கள் இயக்கம் இன்றைய உலகில் வரலாற்று முக்கியத்துவம் உடையதாகும். இது உலகெங்ஙணும் மனித உறவுகளின் குணாம்சத்தை முன்னேற்றும் சக்தி படைத்தது.