பாம்பு வணக்கம்
ந.சி. கந்தையா 


1. பாம்பு வணக்கம்
2.  தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3.  அகம் நுதலுதல்
4.  நூலறிமுகவுரை
5.  கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6.  பதிப்புரை
7. பாம்பு வணக்கம்

 


பாம்பு வணக்கம்

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : பாம்பு வணக்கம்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

பாம்பு வணக்கம்


முன்னுரை
இவ்வுலகில் மக்கள், தமக்கு மேலான வல்லமை யாதோ உண்டு என்று அறியத் தொடங்கிய காலம் முதல், அது யாது, அது எவ்வகையினது என்று அறிந்துகொள்ள முடியாதவர்களாய் இன்று நமக்குப் பைத்தியகாரத்தனம் எனத் தோன்றும்படியான பல செயல்களைச் சமயம் என்னும் பெயரால் செய்து வந்திருக்கின்றனர். 1இச் செயல்கள் உலகம் முழுமையிலும் காணப் பட்டன. இவ்வகைச் செயலைக் குறித்து வரலாற்று முறையில் நாம் ஆராய்ந்து பார்ப்பதனால் காரணம் விளங்காமல் பயனுடையனவென்று நாம் புரிந்துவரும் பயனற்ற செயல்களின் இயல்புகளை அறிந்து அவை களை எளிதில் கைவிடுதற்கு இயலுவதாகும். முற்கால மனிதன் தான் வாழ வேண்டுமாயின், தம்மைச் சூழ்ந்துள்ளவைகளைக் கொன்றே வாழ வேண்டி யிருந்தது.

மனிதன் தூங்கிவிட்டால் கொடிய விலங்குகள் அவனைக் கொன்று விடும். விலங்குகள் தூங்கிவிட்டால் மனிதன் அவைகளைக் கொன்றுவிடு வான். இவ்வகையான காலத்தே மக்கள் தொடங்கிய வழிபாட்டு முறைகள் கொலை மலிந்ததாகவே உள்ளது. அவ் வழிபாடுகளின் நிழல்கள் இன்றும் காணப்படுகின்றன. இவைபோன்ற உண்மைகளை அறிதல், அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனக் கருதிப் பாம்பு வணக்கம் என்னும் இச் சிறிய நூலை எழுதலானேன்.

சென்னை

10.4.1947

ந.சி. கந்தையா

பாம்பு வணக்கம்
தோற்றுவாய்
நாம் வாழும் பூமி மிக அகன்ற இடம். அதில் இந்தியா ஒரு சிறு பகுதி. இங்கு பற்பல மொழிகளை வழங்கும் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் குடிகளும் குலங்களுமாக (Castes and tribes) பிரிந்து வாழ்கின்ற னர். இக் கூட்டத்தினர், குலத்தினர்களிடையே பல பழக்க வழக்கங்களும் ஒழுக்கங்களும் காணப் படுகின்றன. அவைகளுட் பல எல்லாக் கூட்டத் தினருக்கும் பொதுவாக உள்ளன; சில மாறுபட் டன. இந்திய மக்கள் எல்லோருக்கும் பொது வாகிய சில பழக்கங் களும் ஒழுக்கங்களும் காணப்படுதல் போலவே, உலக மக்களுக்குப் பொது வான சில கொள்கை களும் பழக்க வழக்கங் களும் காணப்படுகின்றன. இவ் வடிப்படையைக் கொண்டு உலக மக்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் ஒரே மையத்தினின்றும் தொடங்கின என்று மனித வரலாற்று நூலார் முடிவு செய்திருக்கின்றார்கள். இந்திய நாட்டில் காணப்படும் சமயக் கொள்கைகளும் பிறவும், இவ் விந்திய நாட்டுக்கே உரியன என்று நம்மவர் பலர் நம்பி வருகின்றார்கள். உலக மக்களின் வரலாற்றை ஆராயுமிடத்து அவை மற்றைய நாட்டு மக்களுக்கும் உரியனவாகக் காணப்படுகின்றன.

மேல்நாட்டறிஞர் இவ்வுலக மக்களுக்கே பொதுவாயுள்ள பல கருத்துகளையும் பழக்க வழக்கங்களையும் நாட்டுக் கதைகளையும் திரட்டி அவைகளின் ஒற்றுமையை ஒப்பிட்டுக் காட்டி நூல்கள் பல செய்துள் ளார்கள். அவை கற்பனைக் கதைகளிலும் பார்க்கச் சுவை அளிப்பதோடு, மக்கள் தமது வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் உதவிபுரிகின்றன. வரலாறு, மக்களிடையே தலைமுறை தலைமுறையாகப் பழங்கதைகள் மூலம் தொடர்ந்து வரும் மூடக் கொள்கைகளுக்குத் தொடக்கத்தை அறிந்து கொள்ளவும், பகுத்தறிவுக்கு ஏலாதவைகளை ஒழிக்கவும் உதவி புரிகின்றது. மேல்நாட்டவர்கள் வரலாற்றின் இன்றியமையாமையை உணர்ந்து, அதனை ஓர் கலையாக வளர்த்து வருகின்றனர். அக் கலையில் தேறுவோருக்குப் பட்டங்களும் வழங்குகின்றனர், நமது நாட்டிலோ, நாகரிகம் ஊர்ந்து செல்கின்றது; மற்றைய நாடுகளில் பறந்து செல்கின்றது. இதற்குக் காரணம் நம்மவர்கள் பழங்கதைகள் மூலம் தொடர்ந்துவரும் மூடக் கொள்கைகளை ஒழிக்க விரும்பாது, பழைய போக்கிலேயே செல்ல முயல்வதாகும். மேல்நாட்டு ஆசிரியர்கள், சீனா இந்தியா என்னும் நாடுகளில் நாகரிகம் விரைவில் மேலோங்காததற்குக் காரணம், அவர்கள் பழம் பிடிகளைக் கைவிட மனமில்லாது அப் பாழுங் கொள்கைகளை வைத்துக் கட்டி யழுவது போன்றவைகளாகும் எனக் கூறியுள்ளார்கள்.

இச் சிறிய நூல், பாம்பு வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றது. உலக மக்களுக்குப் பொதுவாகிய பல கொள்கைகள் உண்டு எனக் கூறினோம். அவைகளுள் பாம்பு வணக்கம் ஒன்றாகும். பாம்பு வணக்கம் இந்திய மக்களுக்கே உரியது எனப் பலர் கருதுகின்றார்கள். அது இப் பூமியில் கிழக்கிலும் மேற்கிலும் வடதுருவம் தென் துருவங்களுக்கு உட்பட்ட நாடுகளிலெல்லாம் காணப்பட்டது. அந் நாடுகளில் மக்கள் பாம்பை வழிபட்ட முறை பெரும்பாலும் இன்றைய இந்திய மக்களின் நாக வழிபாட்டு முறையை ஒத்திருக்கின்றது. இதனால் பாம்பு வழிபாடு மக்களுக்கு வேண்டியதெனக் கூறுவது எமது கருத்தன்று.

பாம்பு வழிபாட்டின் பழமை
கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு, படைப்பு வரலாறு, பெரிய வெள்ளப்பெருக்கு முதலியவைகளைப்பற்றிக் கூறுகின்றது. இவ் வரலாறுகள் சால்திய மக்கள் மூலம் கிடைத்தன என்று வரலாற்று அறிஞர் கூறியுள் ளார்கள். சால்தியாவில் மிகப் பண்டு தொட்டே பாம்பு வணக்கம் இருந்து வந்தது. அவ் வணக்கத்தின் எதிரொலியே பழைய ஏற்பாட்டில் காணப்படும் பாம்பு வரலாறு என்று கருதப்படுகின்றது. கிறித்துவ மறையில் பாம்பு, ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படி தூண்டியதெனக் கூறப்பட்டபோதும், பாம்பு இஸ்ரவேலரால் நீண்டகாலம் வணங்கப்பட்டது. மோசே என்பவர் யேகோவாக் கடவுளின் அடையாள மாக வெண்கலத்தினால் பாம்பு செய்து வழிபட்டார். அப் பாம்பு எசாக்கி யேல் காலம்வரை (700 ஆண்டுகள் வரை) இஸ்ரவேலரால் வழிபடப் பட்டது.1 மொகஞ்சதரோ நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அங்குக் காணப்பட்ட பட்டையங்களில் பாம்பு வழிபாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.1 ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் பல இடப் பெயர்கள் பாம்பு தொடர்புடையன. சூடிய நாகபுரி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பழைய இடப் பெயர்கள் இன்றும் இந்திய நாட்டிற் காணப்படுகின்றன. இலங்கையில் வாழ்ந்த பழங் குடிகளில் ஒரு பகுதியினர் நாகர் எனப்பட்டார்கள். நாக அரசர் இருவரிடையே ஒரு மணி ஆசனத்தின் பொருட்டு நேர்ந்த போரை விலக்கப் புத்தர் இலங்கைக்குச் சென்றிருந்தாரென்று மகாவமிசம் என்னும் நூல் கூறுகின்றது.

சாஞ்சி, அமராபதி, இலங்கை முதலிய விடங் களிலுள்ள பண்டைய சிற்பங்களில் நாக வழிபாட்டைப் பற்றிய அடையாளங்கள் காணப்படுகின்றன. பின்னால் ஆராய்ந்து கூறப் படுவன கொண்டு பாம்பு வணக்கம் சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பழமையுடையது எனத் தோன்றும்.

பாம்பு வணக்கத்தின் தொடக்கம்
பாம்பு நஞ்சுள்ள உயிர். அது கடித்தால் மனிதர் மாண்டு விடுவார்கள். பாம்பின் தோற்றம் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது. “பாம்பென் றால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. இவ் வியல்புகளுடைய பாம்பை மக்கள் வணங்கி வந்தார்கள். பாம்பு வணங்கப்படுகின்றதென்றால், அது வியப்பைத் தருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் அதன் தொடக் கத்தைப்பற்றி அறியப் பெரிதும் முயன்று வந்தார்கள். சிலர் சில காரணங்கள் காட்டுவாராயினர். அவர்கள் கூறியவைகளில் ஒன்று மிக ஏற்புடைத்தாகக் காணப்படுகின்றது. இவ்வுலகில் இறந்தவர்கள் வழிபாடு மிகப் பழமை யுடையது. இறந்தவர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தென்புலத்தார் வழிபாடு என்னும் பெயர் பெற்றுள்ளது. திவசம், திதி, குருபூசை என்பன தென்புலத்தார் வழிபாடுகளே. தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆவிகளையே வணங்கினார்கள். இவ் வடிப்படையிலிருந்தே உலகில் சமயம் தோன்றி வளர்ச்சியடைந்தது. இதனைப் பிறிதோரிடத்தில் விரித்து விளக்கியுள்ளோம்.2 அக்கால மக்கள் இறந்தவரை அடக்கம் செய்த சமாதி யின்மேல் ஊர்ந்து செல்லும் பாம்பை, இறந்தவர்களாகவே (இறந்தவர்களின் பிறப்பு) கருதினார்கள். ஆகவே, அவர்கள் பாம்புகளைத் தமது இறந்த முன்னோராகக் கருதி வழிபட்டனர். தென்புலத்தார் வழிபாடு, பாம்பு வழிபாடு என்பன ஒரே தொடக்கமுடையன. இன்று இந்திய மக்களுட் பலர் தமது வீட்டுக்கு வரும் பாம்புகளைத் தம் முன்னோர் எவரோ எனவே கருது கின்றார்கள். ஆப்பிரிக்காவில் சூலு மக்கள், தமது வீட்டை நோக்கி வரும் தீங்கற்ற பாம்புகளைத் தம் முன்னோராகக் கருதுகின்றார்கள். அவைகளின் உடலில் காணப்படும் ஏதேனும் ஒரு அடையாளத்தைக் கொண்டு, அவை இறந்தவர்களுள் யார் எனவும் நிச்சயம் செய்கிறார்கள்.1

இவ் வணக்கம் எங்குத் தொடங்கிற்று என ஆராய்வோம். அதனை ஒருவாறு ஆராய்ந்து அறியலாம். பாம்பு வழிபாடு சாலடியாவில் மிகவும் பழமை பெற்றுள்ளது. சாலடிய நாட்டினின்றுமே இவ் வழிபாடு மற்றைய நாடுகளுக்குச் சென்றதென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். வேத கால இந்தியா (Vedic India) என்னும் நூல் எழுதிய ரெகோசின் (Regozin) என்பார் சாலடிய மக்களுக்கும் திராவிட மக்களுக்கும் பொதுவாயுள்ள பல கொள்கைகளை எடுத்து விளக்கிச் சாலடியரும் திராவிடரும் ஒரே கொடி வழியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். பல காரணங்களால் இந்திய மக்களே மேற்கு ஆசியாவில் குடியேறிச் சாலடியர் எனப் பெயர் பெற் றார்கள் என்றும் அவர் கருதினார். இருக்கு வேத இந்தியா என்னும் நூல் எழுதிய அபினஸ் சந்திரதாஸ் என்பவர், சோழ தேசத்தினின்றும் மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்களே சாலடியர் எனக் கூறிய அளவில் அமை யாது, சோழ தேசம் என்னும் பெயரே மருவிச் சால்தியா ஆயிற்று என்றும் கூறியுள்ளார். பர்லாங் (Forlong) என்னும் ஆசிரியர், சால்தியரின் முன்னோர் திராவிட இனத்தினர் என ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். எகிப்தியர் வழி பட்ட பாம்புகள் இந்திய நாட்டினின்றும் கொண்டு வரப்பட்டன என்றும், அவர்களுடைய இசிஸ் என்னும் தெய்வம் ஈசுவரனின் தேவியாகிய ஈசுவரியே யாகும் என்றும் 2டீன் என்பவர் தமது பாம்பு வணக்கம் என்னும் நூலிற் கூறியுள்ளார். மேற்கு ஆசிய நாடுகளில் துர்க்கை, சிவன் வடிவங்கள் இந்திய நாட்டில் இன்று காணப்படுவன போலவே, இருந்தனவாதலாலும், அவை இந்திய நாட்டினின்றுமே அந் நாடுகளுக்குச் சென்றன என்று அறியப்படுதலினாலும், பாம்பு வணக்கம் இந்திய நாட்டினின்றும் சென்ற தெனத் துணிதல் பிழையாகாது.

பாம்பு வழிபாட்டின் வியாபகம்
ஒபியலாட்றியா (Ophiolatreia) என்னும் நூலில் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது. ‘பாம்பு வணக்கம் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. பண்டைக் காலத்தில் இவ் வழிபாடு காணப்படாத ஒரு நாடும் இருக்க வில்லை. இவ் வழிபாடு நிலவியதற்கு அறிகுறி யாகப் பல செய்குன்றுகளும் கோயில்களும், மண் மேடுகளும் பிற சின்னங்களும் புதிய, பழைய உலகங்களிற் காணப்படுகினறன. பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், பர்மா, ஜாவா, அராபியா, சிரியா, சின்ன ஆசியா, எகிப்து, எதியோப்பியா, கிரீசு, இத்தாலி, வடமேற்கு ஐரோப்பா, மெக்சிக்கோ, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப் படுகின்றன. இவ் வழிபாடு ஒரு நடு இடத்தில் தோன்றிப் பரவியிருத்தல் கூடும். சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாக வும், சில நாடுகளில் தீய தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.

உயிர்ப் பாம்புகளை வழிபடுதல்
பெரும்பாலும் இந்திய நாட்டில் மக்கள் பாம்புச் சிலைகளையே வழிபடுகின்றார்கள். ஆகவே இந்திய மக்கள் பாம்பு வழிபாடு என்றால், பாம்புச் சிலை வழிபாடு எனக் கருதியிருக்கின்றார்கள்.

இன்னும் பாம்புகளை உணவு கொடுத்து வளர்த்து அவைகளை வழிபடும் மக்கள் காணப்படுகின்றார்கள். லப்பக் என்பவர் கூறுவது வருமாறு:

“பழைய எகிப்து, இந்தியா, பினீசிய, பாபிலோன், கிரீஸ், இத்தாலி, அபிசீனிய நாடுகளில் பாம்பு வணக்கம் முதன்மை அடைந்திருந்தது. லிதுவேனியர் உயிர்ப் பாம்புகளையே தெய்வமாக வழிபட்டனர். தென்னாபிரிக்கக் கபீர் மக்கள் இறந்த முன்னோர் பாம்பாகப் பிறக்கிறார்கள் என நம்பினார்கள். பெரு(Peru) நாட்டில் கடவுட் சிலைகளுக்குப் பதில் பாம்புகளே கோயில்களில் இருந்தன. ஆப்பிரிக்காவில் மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபட்டனர். இவ்வாறு உரோமரும் ஒரு காலத்தில் செய்தனர். நீக்ரோ, ஒருவனாவது பாம்புக்கு வேண்டுமென்று தீங்கு இழைக்கமாட்டான். தற்செயலாக ஒருவன் பாம்பு ஒன்றைக் காயப்படுத்தினானாயினும் அவன் கொல்லப்படுவான். ஒருமுறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர், தாங்கள் தங்கிய வீட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அதன் பொருட்டு அவர்கள் அங்குள்ள மக்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள், நாடு எங்கும் காணப் படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக் கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வகைப் பாம்புகளையும், கவனிப்பதற்கு வெவ்வேறு வேலை யாட்கள் இருக்கின்றார்கள்.”

“நியுகினியில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக்கின் றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக் கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன.

சிலாவோனிய (Slavonic) ஆலயங்களில் பாம்புக்குப் பால் கொடுத்து, மக்கள் அதனை வழிபட்டார்கள்.

பாம்பும் ஞாயிறும்
ஆல்ட் ஹாம் என்பார் எழுதியுள்ள “சூரியனும் பாம்பும்” என்னும் நூலில், பாம்பு வணக்கத்தைப் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன. அதன் சுருக்கத்தை இங்குத் தருகின்றோம்.

மோசேயாற் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பு யெகோவாக் கடவுளின் அடையாளமாக நீண்ட காலம் வழிபடப்பட்டது. இந்திய நாட்டில் படமுள்ள பாம்பு ஞாயிற்று வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருக்கின்றது. அது பெரும்பாலும் ஞாயிற்றினின்றும் தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்ளும் மக்களின் குலக்குறியாகும். நாக குலத் தினர் மரணத்துக்குப்பின் பகற் கடவுளாகவோ, பிற கடவுளாகவோ வணங்கப்படுகின்றனர். அவர் களின் உருவச் சிலைகளைப் பாம்புகளின் விரிந்த படங்கள் கவிந்து தாங்குகின்றன. எங்கெங்கு ஞாயிறு வணங்கப்பட்டதோ, அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப் பட்டது. இந்திய நாட்டிற் போலவே, ஞாயிற்றை வழிபடும் நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபடப் பட்டது. சீனா, பெரு, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று அதிக தொலைவில் உள்ளன. அந் நாட்டு வழிபாடுகள் மற்றைய நாடுகளின் தொடர்பின்றித் தனித்துத் தோன்றின என்று கூறுதல் முடியாது. இவ் வணக்க முறை ஒரு நாட்டில் காணப்படுதல் போலவே மற்றைத் தேசங்களிலும், காணப்படுகின்றது. ஆகவே சூரிய குலத்தவர் என்று சொல்லிக்கொண்ட ஒரு குலத்தவர்களுடைய மத்தியிலிருந்தே இவ் வழிபாடு பரந்து நாலா திசைகளிலும் சென்றிருத்தல் வேண்டும். உலகம் முழுமையிலும் நாகம் புனிதமுடையதாகக் காணப்பட்டது.

சரித்திர காலத் தொடக்கத்தில் பாம்பு, பகல் வழிபாடுகள் நன்றாக வளர்ச்சி யடைந்திருந்தன. மிகப் பழங்காலத்தில் யூபிரட்டிஸ், சிந்து ஆறு களுக்கிடையில் இவ் வழிபாடுகள் ஓங்கியிருந்தன. அகிக்கும் ஆரியருக்கு மிடையில் போர்கள் நிகழ்ந்தனவென்று வேதங்களிற் சொல்லப்படும் வரலாறு, நாக சாதியினருக்கும் பாரசீகருக்குமிடையில் நேர்ந்த போர்களே. பழைய மீதியாவிலுள்ள எசிதியர் (Yezidis) இன்னும் உதயகாலச் சூரியனை வணங்குகின்றனர்; ஆலயங்கள் மீது பாம்பு வடிவங்களை அமைக்கின்றனர்.

பாபிலோனிலும் அதனை அடுத்த நாடுகளிலும் பண்டை நாட் களில், ஞாயிறு, பாம்பு வழிபாடுகளே இருந்தன. பாபிலோன் மக்களின் ஆதிக் கடவுளர்களில் ஒருவர் ஈஆ (Ea). அவர் ஏழுதலைப் பாம்பு வடிவுடையர். சாலதிய மக்கள் ஈஆவையும் அவருடைய புதல்வன் மார்துக்கையும் (Mar-duk) காத்தற் கடவுளாக வழிபட்டனர். சாலதியரின் மனுவுக்குப் பின் நிகழ விருக்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப்பற்றி எச்சரிக்கை கொடுத்தவர் ஈஆக் கடவுளே. ஈஆ பெரிய வெள்ளப்பெருக்கைப் பற்றிய செய்தியைத் தனது மந்திரிக்குக் கூற, அவன் அதைச் சூரிபாக் என்னும் சாலதிய மனுவுக்கு நவின்றான். ஈஆ என்னும் தெய்வ வணக்கம் மிகப் பரந்திருந்தது. மித்தினி (சின்ன ஆசிய) மன்னன் துஷரதன் மூன்றாம் அமனோபிசு என்னும் எகிப்திய அரசனுக்கு அனுப்பிய திருமுகத்தில் பல தெய்வங்களுக்குத் துதி கூறியுள்ளான். அத் துதியில் ஈஆக் கடவுள், எல்லா மக்களுடைய கடவுள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பாம்பு செமித்திய மக்களின் குலக்குறியாகத் தெரியவில்லை. அக்கேடிய சுமேரிய வணக்கங்களோடு அவர்கள் இதனைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. நியுக்சம்பர் என்னும் பாபிலோனிய அரசன், மர்துக் என்னும் பகற் கடவுளின் கோயில் வாயில்களில் தான், நச்சுப் பாம்பு களின் சிலைகளை வைத்தமையைப்பற்றிக் கூறியுள்ளான். காஸ்பியன் கடலுக்குத் தெற்கிலும், மேற்கிலும் உள்ள நாடுகளிலும் துரானிய மக்க ளிடையும் பாம்பு வழிபாடு காணப்பட்டது. சாலடியப் பாடல்களில் கூறப் படும் கோயில் யாத்திரைகள், சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட ஆலயங்கள். வேட்டையாடிக் கொன்ற மிருகங்களின் கொம்பினால் கோயில்களை அலங்கரித்தல் போல்வன, இமயமலைச் சாரல்களில் வாழும் பாம்பு, ஞாயிற்று வழிபாட்டினராகிய மக்களிடையே இன்றும் காணப்படு கின்றன.

ஞாயிறும் பாம்பும் பினீசியரால் வணங்கப்பட்டன; அவர்கள் அவ் வணக்கத்தைப் பாபிலோனியரிடமிருந்து பெற்று, அதனை மற்றைய இடங்களுக்குக் கொண்டு சென்று மிருக்கலாம். இவ்விரு வணக்கங்களும் சிரியாவிலும் மேற்கு ஆசியாவின் பல பாகங்களிலும் காணப்பட்டன. கிரேக்கர் ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். கிகுரோப்ஸ் (Cecrops) என்னும் அதேனிய முதல்அரசன் எகிப்திலிருந்து வந்தான் என்பதும், அவன் பாதி பாம்பும், பாதி மனிதனுமா யிருந்தான் என்பதும், அவர்களது பழங் கதைகளிற் காணப்படுகின்றன. சரித்திர காலத்தில் கிரேக்கரின் ஞாயிற்றுப் பாம்பு வழிபாடுகள், வேறு வழிபாடுகளுடன் கலந் திருந்தன. ஹெரதோதசு (Herodotus) காலத்தில் அதேன்சின் சுற்றாடல்களைக் காக்கும் கடவுள் ஒரு பெரிய பாம்பாக விருந்தது. ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும் ஞாயிறு, பாம்பு வழிபாடுகள் இருந்தமைக்கு அடை யாளங்கள் காணப்படுகின்றன.

எகிப்தில் ஆதிகாலம் முதல், பகலும் படமுள்ள பாம்பும் வணங்கப் பட்டு வந்தன. எகிப்திய அரசர் ஞாயிற்றினின்று தமது பரம்பரையைக் கூறினர். ஞாயிறே அரசனாகப் பிறக்கின்றது என மக்கள் நம்பினார்கள். அவனுக்குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் செய்யப் பட்டன. மரணத்துக்குப் பின் எல்லா அரசரும் ஞாயிற்றுக் கடவுளாக வழி படப்பட்டார்கள். அவனுடைய முடியின் முன்புறத்தில் படம் எடுக்கும் பாம்பின் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.

எதியோப்பியர் கிறித்துவ மதத்தைத் தழுவுமுன், ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். எதியோப்பிய அரசன், ஹெலியோ பொலிஸ் எனப்படும் சூரியக் கடவுளின் நகருக்குச் சென்று அக் கடவுளின் ஆலயத் தில் குருவாகச் சேவித்தான். எகிப்திய வேந்தரைப்போலவே, எதியோப்பிய அரசரும் கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றனர். எதியோப்பியர் சின்ன ஆசியாவிற் குடியேறி காசைட்ஸ் (Kassites) எனப்பட்டார்கள். இவர்கள் எல்லம் மக்களுக்கு இனமுடையவர்கள் எனக் கருதப்படுவர். எதியோபிய அரசனின் நகுஸ் என்னும் பட்டப் பெயர், இமயமலைப் பக்கங்களில் பாம்பு களை வணங்கும் கூட்டத்தினர் தலைவர்களுக்கு வழங்கும் நெகி (Negi) என்னும் பெயரை ஒத்திருக்கின்றது.

பண்டு (Punt) நாடு பாம்புகளுக்கு உறைவிடம் என்று எகிப்தியரால் கொள்ளப்பட்டது. பைபிரஸ் புத்தகங்களிலுள்ள சில பகுதிகளில் பண்டு நாட்டின் அரசன், பெரிய பாம்பு என்று கூறப்பட்டுள்ளான். கப்பல் உடைந்து தட்டுக்கெட்டு நின்ற ஒருவனுக்குப் பெரிய பாம்பு ஒன்று வெளிப்பட்டு நாலு திங்களுள் ஒரு நாவாய் அவ் விடத்தை அடையுமென்றும், இரண்டு திங்கள் பயணஞ் செய்தபின் அவன் தனது இடத்தைச் சேருவான் எனக் கூறிற் றென்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் மேற்கு மத்திய பாகங் களில் பாம்பு வழிபாடு இருந்தது. அந்நாட்டு மக்களின் தெய்வமேறியாடும் கூத்து முதலியன அவ் வணக்கத்துக்குரியனவே.

மெக்சிகோவில் பாம்பு வழிபாடுகளில் நரபலிகள் கொடுக்கப் பட்டன. சூரியகுல அரசரால் பாம்பும் ஆமையும் தெய்வத்தன்மை யுடையனவாக மதிக்கப்பட்டன. அவர்கள் பாம்புக்குப் பலியிட்ட பின்பே, எக் கருமத்தை யும் தொடங்குவர். அவர்கள் மந்திர வித்தை தொடர்பாகப் பயன்படுத்தும் யந்திரங்கள் இந்தியாவிலும் மற்றும் சூரிய வணக்கமுடைய நாடுகளிலும் காணப்படுவன போன்றன. இந்நாடுகளில் இவ் வணக்கங்கள் எப்படி வந்தனவென்று அறிய முடியவில்லை. அறிய முடியாத பழைய காலந் தொட்டே, சீனாவிலும் அதன் அயல் நாடுகளிலும் சூரிய, பாம்பு வணக்கங் கள் இருந்து வந்தன. இந்தியாவிலும் மற்றைய இடங்களிலும் காணப்படுதல் போலவே, அது தெய்வமாக்கப்பட்ட முன்னோர் வழிபாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான். அவன் உயிரோடு இருக்கும்போது கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றான். பாம்பும் ஆமையும் தீட்டிய கொடியால் சீன தளபதி அறியப்பட்டான். சீனரின் பழங் கதைகளில், பழைய அரசரிற் சிலர் பாதி பாம்பு வடிவும், பாதி மனித வடிவுமுடையர். சீனரின் நாகரிகம் காஸ்பியனுக்கும், பாரசீக வளை குடாவுக்கு மிடையிலிருந்து வந்திருக்கலாம் என் லெக்கோபெரி என்பவர் கருதியுள்ளார்.

மஞ்சூரிய மக்கள் சூரிய வம்சத்தினர். அவர்களுடைய பாம்புத் தெய்வங்கள் இன்றும் ஆறுகளுக்கும் மழைக்கும் அதிபதிகள். கொரியா நாட்டு அரசரும் சூரிய மரபினர். அவர்களைப் பாம்புக் கடவுள் காக்கின்றது. மக்கள் பாம்புகளைக் குலதெய்வங்களாக வணங்குகின்றனர். ஜப்பானியரின் சூரியக் கடவுள் பெண் தெய்வமாகும். ஜப்பானிய அரசர் சூரியக் கடவுளின் புதல்வர் என மக்கள் நம்பி வருகின்றனர். ஜப்பானியர் ஐதீகத்தின்படி அவர் களுடைய மலைக் கடவுளர் பாம்பு வடிவை எடுத்துள்ளனர். இந் நாடுகளின் சூரிய பாம்பு வழிபாடுகள் இந்தியாவிற் காணப்படுவதை ஒத்தன.

இந்தியாவில் சேர நாடு, பாம்பு வழிபாட்டுக்குப் பேர்போனது. சாரை என்பதே சேர என மாறிற்று. இன்றும் ஒவ்வொரு நாயர் சாதியினரின் கொல்லையிலும் நாக தெய்வங்கள் வழிபடப்படுகின்றன.

கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் சீன யாத்திரிகர்கள் இந்தியா வுக்குச் செல்லும் வழியில், பாம்புக் கடவுளர் எல்லா ஆறுகளையும் குளங் களையும் ஆள்வதைக் கண்டனர். திபேத்தில் இன்றும் ஆறுகளும் நீரூற்று களும் பாம்புத் தெய்வங்களால் ஆளப்படுகின்றன. ஸ்பானியர் அமெரிக்கா வுக்குச் சென்றபோது, எங்கும் சூரிய பாம்பு வணக்கங்களே காணப்பட்டன. அமெரிக்காவில் படமுள்ள பாம்புகள் காணப்படாமையால் சலசலக்கும் பாம்புகள் (Rattle snakes) அவைகளுக்குப் பதில் வணங்கப்பட்டன. பெருவில் கசமார்க்கா என்னும் இடத்தில் பாம்பு வடிவக் கல் இருந்தது. அமெரிக்கரால் ஆமையும் தெய்வத்தன்மை யுள்ளதாகக் கருதப்பட்டது. மனிதத் தலையுடைய பாம்பு, ஆமைச் சிலைகள் காணப்படுகின்றன.1

பாம்பு வணக்கம் சீனாவும் ஜப்பானும்
சீனரின் கொடியில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. பாம்பின் வடிவம் கோயிற் சிற்பங்களில் அமைக்கப்பட்டது. வீட்டுத் தளவாடங்களிலும் அவ் வடிவம் வெட்டப்பட்டது. அரசனின் செங்கோலிலும் பாம்பின் வடிவம் எழுதப்பட்டிருந்தது. அரண்மனையிலுள்ள எல்லாப் பாத்திரங்களிலும் அவ் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. கான்பூசியஸ் ஞானியார் பிறந்தபோது அவரின் உடலைக் கழுவும் போது, இரண்டு பாம்புகள்கூட இருந்தன என்னும் பழங்கதை உள்ளது. சீனரின் கடவுளாகிய போகி(Fohi)யின் வடிவம், மேலே மனித வடிவமும் கீழே பாம்பு வடிவமுமாக வுள்ளது.

ஜப்பானியரும் சீனரும் பாம்பை வணங்கினார்கள். ஜப்பானியரின் பழங்கதைகளில் பாம்பைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. ஜப்பானிய அரசர் சிலரின் உடை, ஆயுதங்கள், கத்தி, வீட்டுத் தளவாடங்கள், மேலே அழகுக்காகத் தூக்கும் தோரணங்கள் முதலியவைகளில் பாம்பின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் ஜப்பானியர், கோயில்களில் பாம்பை வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது.

ஜாவா
ஜாவா நாட்டில் பழைய இடிபாடுகள் காணப்படுகின்றன. அங்கு அழிந்து கிடக்கும் கோயில்களிலுள்ள திருவுருவங்கள் பாம்பு ஆபரணம் அணிந்திருக்கின்றன. சில திருவடிவங்களின் கைவளை சுருண்டு வளைந்த பாம்பாக அமைந்துள்ளது. அவைகளின் அரைக்கச்சும் பாம்பே.

அராபியா
அராபிய மொழியில் அராபியரின் பழைய சமயத்தை விளக்கும் சொற்கள் காணப்படுகின்றன. அராபிய மொழியில் பாம்பையும் வணக்கத் தையும் குறிக்க ஒரே சொல் ஆளப்படுகின்றது. இதனால் அராபியர் பாம்பை வணங்கினார்கள் எனத் தெரிகின்றது.

சிரியா
தாதஸ் (Taautus) என்பவன் பினீசியாவில் பாம்பு வணக்கத்தைத் தொடங்கினான் என்று சொல்லப்படுகின்றது. இவன் சலப் பிரளயத்துக்கு முன் வாழ்ந்தவனாவன். கானான் தேச மக்கள் வழிபட்ட ‘ஒப்’ பாம்புக் கடவுளே யாவர்.

கிரேக்க நாட்டில் தெல்பி (Delphi) ஆலயத்தின் பெண் பூசாரி வழி பட்ட கடவுள் பாதியா எனப்பட்டது. பாதியா என்பது பிதோன் (Phython) என்பதன் திரிபு. இப் பெயர் பாம்புக் கடவுளைக் குறிக்கும். குருமாரும் அரசரும் அவர்களின் வழிபாட்டுக்குரிய அக் கடவுளின் பிள்ளைகள் எனப் பட்டனர். மோசே செய்து வைத்து வழிபட்ட வெண்கலப் பாம்பை ஹெசாக்கியேல் உடைத்தெறிந்தான். தையர் நாட்டில் பாம்பு உருவங்கள் பல காணப்பட்டன. பினீசியர் ஆலயங்களில் பாம்பின் வடிவங்களை வைத் திருந்தார்கள். பினீசியர் ஜானஸ் (Janus) என்னும் கடவுளைப் பாம்பு வடிவில் வழிபட்டார்கள். ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் வளர்க்கப்பட்டன. சிடோன் பட்டினத்துக்கு அருகிலுள்ள சோலையில் பாம்புகள் வணங்கப் பட்டன. எல்காபலுஸ் என்னும் நாட்டின் தலைமைக் குருவின் கோயில் எமாசா என்னுமிடத்திலிருந்தது. அவன் உரோமுக்கு எகிப்திய இனப் பாம்பு களை அனுப்பினான். அப் பாம்புகள் இவனால் வழிபடப்பட்டவை.

சின்ன ஆசியா
பிரிகியா (Phrygia) என்னும் இடத்தில் பெரிய உயிர்ப் பாம்பு வணங்கப் பட்டது. அக்காலத்திலேயே பிலிப்பு என்னும் அப்போஸ்தலர் அந்நாட்டு மக்களைக் கிறித்துவ மதத்துக்குத் திருப்பினார். அவர் தனது செபத்தினால் பாம்பைக் கொன்றார் என்றும், அம் மகிமையைக் கண்ட மக்கள் கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள் என்றும் பழங் கதை உள்ளது. ஹெக்டரின் கேடகத்தில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. சின்ன ஆசியாவில் அடிக்கப்பட்ட பழைய காசுகளில் பாம்பு அடையாளம் காணப்படுகின்றது. அங்குள்ள இடப் பெயர்கள் பல பாம்புக் கடவுள் தொடர்பானவை. கோயில்களின் கருவில்(மூலத்தானத்தில்) பெரும்பாலும் உயிர்ப் பாம்புகள் வைக்கப் பட்டிருந்தன. சைபிரஸ் தீவுக்கு ஒபியாசா (Ophiasa) என்பது பழைய பெயர். ஒபியூசா என்பதற்குப் பாம்பு என்பது பொருள்.

ஆப்பிரிக்கா
எகிப்தில் பாம்பு உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்பட்டது. பழைய எகிப்தியரின் ஹார்ப்போகிற்றேசு என்னும் கடவுள் பாம்பு வடிவில் வழிபடப்பட்டார். இசிஸ் என்னும் கடவுளும் அவ் வடிவில் வழிபடப் பட்டது. இசிஸ் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரியின் உடைகளில் பாம்புகளின் அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. எகிப்திய அரசனின் உடையிலும் மடியிலும் பாம்பு அடையாளங்கள் இருந்தன. இசிஸ் ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் இருந்தன. எகிப்தியர் வணங்கிய பாம்பு அந்நாட்டுக் குரியதன்று. அது ஒருபோது படமுடைய இந்தியப் பாம்பா யிருக்கலாம். தீப்சு நகரிலே யூபிதர் கோயிலிலுள்ள பாம்புக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எகிப்தியரின் இசிஸ் வழிபாடு இந்தியரின் ஈசுவரி (Isi) வழிபாட்டினின்றும் வந்ததாகலாம். எகிப்திய தெய்வங்கள் பலவற்றுக்குப் பாம்பு உடலுண்டு. சில பாம்புக் கடவுளருக்கு மாட்டுத் தலை, சிங்கத் தலை யுண்டு. சமாதிக் கட்டடங்களில் பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எகிப்தியக் கோயில்களில் ஒரு வட்ட வடிவத்துக்கு இரண்டு சிறகுகள் இருப்பது போலப் பாம்புகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எகிப்தியர் நாணயங்களில் பாம்பு வடிவங்களைப் பொறித்தனர். நீரோ என்னும் உரோமன் சக்கரவர்த்தியும் அவ்வாறு செய்தான். எகிப்திய குருமார் கோயில்களின் மூலைகளில் குழிகள் தோண்டி அவைகளுள் பாம்புகளை விட்டு வளர்த்தார்கள். பக்குவஞ் செய்யப்பட்ட பிரேதங்கள் சிலவற்றின் மார்பில் பாம்பு அடையாளங்கள் பொறிக்கப்பட்டன. பெண்கள் பாம்பின் வடிவாகச் செய்த அணிகலன்களைப் பூண்டார்கள். சிறுவர்களும் அவ்வகை அணிகளை அணிந்தனர். எகிப்திய பூசாரி, மூன்று பாம்புகளுக்கு முன்னால் நின்று வணங்கும் வெட்டப்பட்ட சலவைக் கல் ஒன்று உரோமில் 1709இல் கண்டு எடுக்கப்பட்டது.

அபிசீனியாவின் முதல் அரசன் பாம்பு. அபிசீனிய மொழியில் பாம்பைக் குறிக்கும் நாகாஷ் என்னும் சொல் நாகம் என்பதன் திரிபு. அபிசீனியர் கிறித்துவ மதத்தைத் தழுவுவதன்முன் அங்கு நாக வணக்கம் இருந்தது. அபி சீனியாவில் சங்கலா என்னும் இடத்தில் வாழும் நீகிரோவர் இன்னும் பாம்பை வணங்குகின்றனர். ஆப்பிரிக்காவில் விடா (Whidah) என்னும் இடத்தில் பாம்புக் கோயில் இருக்கின்றது. அங்குப் பலவகைக் காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பாம்புக் கோயில்களுள் முதன்மையுடையது பாம்பு வீடு எனப்படும். இவ் விடத்துக்குப் பலர் யாத்திரை செய்கின்றனர். இங்கு ஆண் பூசாரிகளும், பெண் பூசாரிகளும் உண்டு. அவர்கள் உடலில் பாம்பின் அடையாளங்களை எழுதி யிருப்பர். இங்கு 1726ஆம் ஆண்டு வரையில் பாம்பு வணக்கம் இருந்தது. தகோமியர்(Dahomeys) இவர்களை வென்றபோது பாம்புகளைக் கொன்றுவிட்டனர். ஆப்பிரிக் காவில் வாழும் நீகிரோவர் பாம்புகளுக்கு நல்லுணவு கொடுத்து அவைகளை வழிபட்டார்கள்.

ஐரோப்பா
கிரீசில் பாம்பு வணக்கம் சாதாரணமாக இருந்து வந்தது. பக்கஸ் கடவுளின் விழாவில் எல்லோரும் பாம்பின் வடிவங்களைத் தலையிலும் உடையிலும் அணிந்தார்கள். அதேன்ஸ் பட்டினத்தின் அயலில் ஒரு பாம்பு இருந்ததென்றும், அது அந் நகரின் காவற்றெய்வம் என்றும் ஹெரதோதசு கூறியுள்ளார். அதற்குத், தேன்கலந்த அல்லது தேனில் பக்குவஞ் செய்யப் பட்ட ரொட்டி கொடுக்கப்பட்டது. மினர்வா என்னும் தெய்வம் சில வேளை பாம்பு வடிவில் வழிபடப்பட்டது. பிடியாஸ்(Phidias) என்னும் தெய்வத்தின் சிலை, பாம்பு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டது. அடியன்(Aordian) என்னும் அரசன் அதேன்சில் யூபிதர், ஒலிம்பியஸ் கடவுளுக்கு ஆலயம் அமைத்து அதில் இந்திய நாட்டினின்றும் கொண்டுவரப்பட்டதெனக் கருதப்பட்ட பாம்பை அங்கு வைத்தான். உரோமரின் கொடி பாம்புக் கொடியாக விருந்தது. அங்குக் கிடைத்த பட்டையங்களில் பெரிய பாம்பின் வடிவங் காணப்படுகின்றது. சமாதிற்றா என்னும் இடத்தில் பாம்பு வழிபடப் பட்டது. வீடுகளிற் பாம்புகள் வளர்க்கப்பட்டன. வட ஐரோப்பாவில் ஒவ் வொரு வீட்டிலும் குடும்பத் தெய்வமாகக் கருதிப் பாம்பு வளர்க்கப்பட்டது. வீட்டுத் தலைவன் பாம்பை வைக்கோலில் கிடக்கும்படி வைத்து அதற்கு உணவு கொடுத்துப் பலி செலுத்தினான். ஜெரோமி (Jerome) என்னும் அரசன் அவைகளைக் கொன்று அழிக்கும்படி கட்டளை யிட்டான்.

ஸ்காண்டினேவியாவில் பாம்புகளுக்குப், பசுப்பால், ஆடு, சில வேளைகளில் குழந்தைகளின் இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டன. அவைகளுக்குத் தீங்கிழைப்பது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. டேனியர்(Danes)களின் கொடி பாம்பு. டானியரிடமும் நார்மானியரிடமும் இருந்து பிரான்சியர் பாம்புக் கொடியைப்பெற்றனர். இது நார்மாண்டியின் சிற்றரசனுடையதாக நெடுநாள் இருந்து வந்தது. டென்மார்க்கில் பாம்பு வழிபாட்டைக் காட்டும் பல சின்னங்கள் கண்டு எடுக்கப்பட்டன.

பிரித்தானியாவில் துரூயித்தியர் (Druids) பாம்பை வழிபட்டனர். துரூயித்தியரின் வணக்கத்தில் பாம்பு முதன்மையுடையது. பாபிலோனிய மக்கள் உயிர்ப் பாம்பை வணங்கினார்கள். துரூயித்தியரின் கோயில்களில் உயிர்ப் பாம்புகள் உறைந்தன. பழைய பிரித்தானியர் பாம்பின் வடிவம் வெட்டப்பட்ட கற்களைக் கழுத்தில் அணிந்தார்கள். பிரித்தனில் பாம்பை ஞாயிறும் திங்களும் சுற்றி வருவது போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பிரித்தன் மக்களின் கொடி பாம்பாக விருந்தது. பிற்காலத்தில் பாம்புக்குப் பதில் ஒரு கொம்புடைய குதிரை அமைக்கப்பட்டது.

அயர்லாந்தில் நியூகிரேஞ்ச் (New Grange) என்னுமிடத்தில் பாம்புச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பாட்ரிக் ஞானியார் (St. Patrick) செபத்தினால் அயர் லாந்தினின்றும் எல்லாப் பாம்புகளையும் ஓட்டினார் என்னும் பழங்கதை யுள்ளது. அக்கதை பாட்ரிக் ஞானியார் பாம்பு வணக்கத்தை ஒழித்த வரலாற்றை உணர்த்தலாம். கிரேக்கரின் தானியக் கடவுளின் தேரை இழுத்துச் செல்வன பாம்புகள்.

கிரீசில் பெண்கள் பாம்பு போன்ற அணிகளைச் செய்து, கையிலும் மார்பிலும் அணிந்தார்கள். குழந்தைகளுக்கும் அவ்வகை அணிகள் இடப்பட்டன.

யூரப் (Aur-ab) என்னும் ஐரோப்பாவைக் குறிக்கும் பெயருக்குச் சூரியப் பாம்பு என்பது பொருள். ஐரோப்பாவின் ஆதி மக்கள் பாம்பின் பிள்ளைகள் எனப்பட்டார்கள். எகிப்து, பினீசியா முதலிய நாடுகளிலிருந்து வந்த பாம்பு வணக்கக்காரரால் கிரீசு குடியேறப்பட்டது.

அமெரிக்கா
அமெரிக்காவில் விற்சிலி புற்சிலிக் கடவுளின் கோயில், ஒரு பாம்பின் மீது இன்னொரு பாம்பை வைத்துக் கட்டியது போல வட்டமாகக் கட்டப்பட்டுள்ளது. அக் கோயில் பாம்பு வளையம் எனப்படுகின்றது. அக் கடவுளின் கைத்தடி, பாம்பு. அக் கடவுள் நிற்கும் மேட்டின் நான்கு மூலை களிலும் நான்கு பாம்புத் தலைகள் காணப்படுகின்றன. மெக்சிக்கரின் மாதத்தில் இருபது நாட்கள் உண்டு. இரண்டு நாட்களின் பெயர்கள் பாம்பின் பெயர்களாக அமைந்துள்ளன. காற்றுக் கடவுளின் கோயிற் கதவுகள் பாம்பின் அங்காந்த வாய்போல் அமைக்கப்பட்டுள்ளன. மெக்சிகர் பாம்புச் சிலைகளை வணங்குவதோடு நிற்கவில்லை. அவர்கள் வீடுகளிலும் பாம்பு களை வளர்த்தார்கள். அவர்கள் சலசலக்கும் பாம்பைக் கடவுள் தன்மை யுடையதெனக் கொண்டார்கள். கோட்டிஸ் என்னும் ஸ்பானிய தளபதி வெற்றியாளனாக மெக்சிக்க ஆலயம் ஒன்றுக்குச் சென்றபோது அவன் கண்ட காட்சி பின்வருமாறு:

“கோயிலின் உச்சிக்கு ஏறிச் சென்றபோது விலங்குகள் பலவற்றை வெட்டிக் கொல்லும் இடமாகிய மேடை ஒன்று காணப்பட்டது. அவ் விடத்தில் பெரிய மலைப் பாம்பின் வடிவங்கள் கிடந்தன. அவைகள் மீது இரத்தக் கறை படிந்திருந்தது. அதைத் தாண்டிச் சென்றபோது ஒரு மண்டபங் காணப்பட்டது. அங்குக் கொடிய பார்வையும் கொழுத்த உடலு முடைய போர்க் கடவுளின் வடிவம் இருந்தது. அது பொன் ஆபரணங் களை அணிந்திருந்தது. அதன் உடம்பில் பொன் பாம்புகள் கிடந்தன. முன்னால் தூபச்சட்டி கிடந்தது. அதில் பலி விலங்குகளின் ஈரல் சாம்பிராணி யோடு கலந்து எரிக்கப்பட்டது. அதற்கு இடப்புறத்தில் கரடித் தலையுடைய வடிவங்கள் காணப்பட்டன. அவற்றிற்குப் பாம்பின் வால்கள் உண்டு. அந்தப் பாம்பின் தோலால் கட்டப்பட்ட பெரிய மேளமிருந்தது. அவற்றிற் குச் சிறிது தூரத்தில் பயங்கரமான வடிவங்கள் காணப்பட்டன. அவை பாம்புகள் போலவும் பேய்கள் போலவும் இருந்தன.”

மெக்சிகர் பாம்புக் கடவுளுக்கு மக்களைப் பலியிட்டுத், தலைகளை ஒரு பாத்திரத்தில் வைத்தார்கள். மெக்சிக்கரின் பழைய வரலாற்றை ஆராயு மிடத்துப் பாம்பின் தொடர்பில்லாத கடவுள் இருக்கவில்லை. பல தெய் வங்கள், பாம்பைக் கையில் வைத்திருக்கின்றன. குருமாரின் சிலைகள்மீது பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. மெக்சிக்கன் ஒருவனுக்கு நோய் வந்தால் பூசாரி அழைக்கப்படுகின்றான். அவன் நோயாளியின் தலையைச் சிரைத்துவிட்டு அவன் கழுத்தில் பாம்பின் என்புகளைத் தொங்கவிடுவான்.

பெரு(Peru) மக்கள் மெக்சிக்கரைப் போலவே பாம்புகளை வணங்கினர். தொபிரா(Topera) என்னும் இடத்தில் உலோகத்தால் செய்த பெரிய பாம்பு ஒன்று இருந்தது. அதற்கு ஆண்டுதோறும் நரபலி இடப் பட்டது. வீடுகளிலும், கோயில்களிலும் பாம்புகளின் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.