கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்
1.  கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  நுழைவுரை
    4.  அணிந்துரை
    5.  பதிப்புரை
2.  தமிழ்க் கல்வெட்டுக்கள்
3.  கல்வெட்டுக்களிலே காணப்படும் சில குழுவின் பெயர்கள்
4.  கல்வெட்டுக்களில் நாட்டோடு இணைந்து வழங்கப்பெறும் எண்கள்
5.  தமிழ் எழுத்துக்கள்
6.  மிழலை நாடும் மிழலைக் கூற்றமும்
7.  பழையாறை நகர்
8.  நந்தனாரது ஆதனூர்
9.  மாற்பிடுகு பெருங்கிணறு
10. இராசராசன் கிணறு
11. கொல்லம் ஆண்டு
12. திருக்கைக் கோட்டி
13. தஞ்சாவூர்
14. திருச்சிராப்பள்ளி
15. சோழர்களும் இராஷ்டிரகூடர்களும்
16. தூங்கானை மாடம்
17. சொல் வரலாறு
18. சம்புவராய மன்னன்
 


கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்

 

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்

 


மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள்

  தொகுப்பு : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7

  ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதற்பதிப்பு : 2007

  தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 12 புள்ளி

  பக்கம் : 24 + 224 = 248

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உருபா. 230 /-

  படிகள் : 1000

  நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.

  அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை, பெரியார் குடில், பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு
தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960

தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு
உலக அரங்கில் உயர்வும் பெருமையும்
ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு…
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து
உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு…
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி
பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு…
பத்தாம் வகுப்பு வரை
தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய
முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு….
தலைமைச் செயலக ஆணைகள்
தமிழில் மட்டுமே வரவேண்டும்
என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு…
தமிழ்மண் அறக்கட்டளை
நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவிக்கிறது.


நுழைவுரை

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)

கும்பகோணம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார்.

பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபி நாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார்.

இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார்.

இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர்.

அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.

குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும்.

இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அது போன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ்விரண்டு நூல் களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையி லிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார்.

அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது.

தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும்.

அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கையெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார்.

பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பல வற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார்.

அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங்களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது.

இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக் கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள்வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதிகளாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக்கட்டளை வழங்கியுள்ளனர்.

தொகுதி 1

1.  முதற் குலோத்துங்க சோழன் 1930

2.  திருப்புறம்பயத் தல வரலாறு 1946

3.  காவிரிப் பூம்பட்டினம் 1959

4.  செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959

தொகுதி 2

5.  பாண்டியர் வரலாறு 1940

தொகுதி 3

6.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949

தொகுதி 4

7.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951

தொகுதி 5

8.  பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961

தொகுதி 6

9.  தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955

10. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955

தொகுதி 7

11. இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961

12. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961

தொகுதி 8

13. தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923

14. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998

தொகுதி 9

15. தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007

தொகுதி 10

16. சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007

அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக்கட்டளையின் இந்த அரிய வெளியீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.


அணிந்துரை

க.குழந்தைவேலன்

21.12.2007

தமிழ்க்கல்வி, தமிழ் அறிவு, தமிழ்ப்புலமை என்பனவெல்லாம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிப்பது, பாப்புனையும் ஆற்றல் கைவரப்பெறுவது, எதுகை மோனைகளோடு எடுத்து மொழிவது, அடுக்குமொழிகளை அள்ளிவீசி அரங்கம் அதிர முழங்குவது என்பது பொருளன்று. அது தமிழ் மொழியை, அம் மொழி பேசும் மக்களின் வாழ்வியலை, வரலாற்றியலை, பண்பாட்டியலை, ஆழ அகலக் கற்றல், நாளும் வளர்ந்துவரும் அறிவியலை அறிதல், கற்றவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்து உலகியலோடு ஒட்ட ஒழுகி வாழ்ந்து காட்டல், தம் வாழ்க்கையையே பாடமாக்கித் தம் மக்களுக்குக் கற்பித்தல் என்பது பொருளாகும். அங்ஙனம் வாழ்வோரே தமிழ் கற்றோர் - தமிழ்ப்புலமையர் - தமிழாசிரியர் ஆவர். அதுவன்றித் தமிழ் கற்றோம், தமிழ்ப் புலமையோம் என்பனவெல்லாம் வெற்று ஆரவாரமேயன்றி வேறன்று.

அத்தகைய தமிழ் கற்றுவல்ல நல்ல தமிழாசிரியர்க்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த பேராசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆவர்.

அண்ணாமலையார்தமிழ்க்கெனஅமைத்த
பண்ணார் பல்கலைக் கழகம்

எனப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் ஒருகாலத்தில் பாராட்டப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி அப் பல்கலைக் கழகத்திற்கே பெருமை சேர்த்த பெருமையர். தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த தகைமையாளர்.

கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் இணைந்த காலப்பகுதி வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழும் தமிழனும், தமிழ்க் கல்வியும் எழுச்சி பெற்ற காலம். அக்காலக் கட்டத்தில் தோன்றிய இப் பெருமகனார் வெறும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக மட்டும் நில்லாது தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் பெரும் பணியில் தம்மைத் தலைப்படுத்தி வெற்றி வாகை சூடியவர். பாவேந்தர் சொன்னது போல அவர் ஒரு,

  செந்தமிழ்ப் பேராசிரியர்,

  வரலாற்று ஆய்வாளர்,

  புலவர்

  முந்து பேரிலக்கியத்து முழங்குகடல்

  ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு

  புலவர் குழு மணி விளக்கு…
  எனப் பல்வேறு சிறப்புக்குரியவர்.

இவர் இலக்கிய இலக்கண உரை கூறுவதோடு நின்றுவிட வில்லை. ஓர் இன மக்களின் வாழ்க்கை நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அம் மக்களின் வரலாறே உயிர்ச்சாரம்; ஆதலால் அம்மக்கள் தங்கள் வரலாற்றை அறிந்த தெளிதல் இன்றியமையாதது; அத் தெளிவே அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். தமிழ்நாட்டின் பழைய வரலாற்றை எழுதுவதற்குத் தக்க சான்றுகள் (சாதனங்கள்) இல்லை எனவும் அதனால்தான் வரலாற்று (சரித்திர) நூல்கள் மிகுதியாக எழுதப்பெற வில்லை எனவும் சிலர் குறைகூறுகின்றனர். அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் உண்மையான தாய்நாட்டுப் பற்றும் ஊக்கமும் உழைப்பும் இல்லாமையேயாம். ஒரு நாட்டினர் தம் பழைய வரலாறுகளை இவ்வாறு புறக்கணித்து விட்டால் அன்னோர் தம் பண்டைய பெருமையை இழந்தவராகக் கருதப்படுவர்" எனக் கூறியதோடமையாது தாமே வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் தொகுத்துப் பிற்காலச்சோழர் வரலாற்றையும், பாண்டியர் வரலாற்றையும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தார்.

அக்காலக் கட்டத்தில் தமிழக வரலாற்றை எழுதப் புகுந்த சிலர் வரலாற்றை ஆங்கிலத்திலேயே எழுதினர். அவை ஆங்கில மொழி கற்றுவல்ல ஒரு சில்லோர்க்கே பயன்படுவதன்றி தமிழ் மக்கட்குப் பயன்படாது என்பதை தமது வாணாளில் கண்கூடாகக் கண்டவர். வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு நம் மொழியில் எத்தனை வரலாற்று நூல்கள் எழுதப் பெற்றுள்ளன என்று பார்ப்போமானால் அவை விரல்விட்டெண்ணக் கூடிய நிலையில்தான் இருக்கின்றன. எனினும் நம் முன்னோர் வரலாறுகளையும் நம் தாய் மொழியில் படித்தறிந்துக் கொள்வதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கத் தக்கது வேறொன்றுமில்லை. ஆனால், ஆராய்ச்சி முறையில் எழுதப்பெற்ற அத்தகைய நூல்கள் நம் தமிழ்மொழியில் மிகுதியாக வெளிவரவில்லை" எனக் கூறியதோடு நில்லாது நல்ல தமிழ்மொழியில் ஆராய்ச்சி முறைகளோடு வரலாற்று நூல்களைத் தாமே எழுதி வழிகாட்டியவர். ஆனால் அவ் வழியைப் பின்பற்றிச் சிறந்த வரலாற்று நூல்களை எழுதாது அப்பெருமையை அவருக்கே சேரட்டும் என நம் தமிழ், வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரும் விட்டுக் கொடுத்து விட்டனர் போலும்?

இலக்கிய வரலாறுகளை எழுதிய அவர் இலக்கியங்களின் காலமும், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் காலமும் தெரியாவிடில் அவ்விலக்கியங்களின் பொருளும் சரியாக உணரப்படாது. வரலாற்று உண்மை கண்முன் இல்லாவிட்டால் ஆராய்ச்சி உண்மை காண முடியாது என்பதை நன்குணர்ந்தவர் எனவே இலக்கண இலக்கியங் களின் காலமும் அவற்றின் ஆசிரியர் காலமும் நமது வரலாற்றை, வாழ்வியலை ஆராய இன்றியமையாததாகிறது. இதனை உளங் கொண்ட பேராசிரியர் அவர்களது காலங்களை இலக்கியத் துணை யோடு அக்காலத்து வெளிப்படுத்தப்பட்ட கல்வெட்டுகளையும் துணை கொண்டு ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய ஆராய்ச்சியைப் பரவலாகச் செய்தார் இவர்போலும் பேராசிரியர் அரியர்.

இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்ற பல ஊர்களின் இருப்பிடங்களையும் அவற்றின் பெயர்ப்பொருளையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை யான பழைய வரலாறுகளைப் பற்றிய சான்றுகள் கிடைக்க கிடைக்க அவற்றை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். தெளிவான வரலாறு கிடைக்காதனவற்றுக்கும் வகையான சான்று கிடைக்குங்கால் எழுத மனங்கொண்டிருந் ததைத் தூங்கானைமாடத்தைப் பற்றிய பிற செய்திகளும் கரக்கோயில் மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப்படும் என்பன போல வரும் வரிகளால் அறியலாம்.

இவர் தம் காலத்தில் கிடைத்த அனைத்துவகைச் சான்றுகளையும் உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப்பொழில் போன்ற அக்காலச் சிறந்த தமிழ் ஆய்விதழ்களில் வெளிவந்தன. அன்றைய தமிழ் மக்களும் அவற்றைப் படித்துப் பயன்படுத்தினர். அவற்றைப் பயன்படுத்திக் கல்விக் கழகப் பாடநூல்களில் ஏற்றி தமிழுலகம் அறியச் செய்தனர். அவ்வழக்கம் இன்று முற்றிலும் கைவிடப்பட்டதால் பண்டாரத்தார் காலத்திற்குப் பின் வெளிவந்த ஆயிரக்கணக்கானக் கல்வெட்டுகளையும் அவற்றின் வழி நமது நாடு மொழி இனம் பற்றிய கிடைத்தற்கரிய செய்திகளையும் கற்று மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்வார் எவரும் இன்மையால் நம்மை நாம் அறியாமல் அறியாப்புதைகுழியில் ஆழப் புதைந்து கொண்டுள்ளோம். பண்டாரத்தார் அக்காலத்தில் வெளிவந்த, வந்து கொண்டிருந்த கல்வெட்டுகளைக் கற்றுணர்ந்து இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்ந்து தமிழுலகுக்கு அளித்த அளவுக்கு அக்கால, இக்காலக் கல்வெட்டாய்வாளர்கள் ஆய்ந்தளித்திருப்பார்களா என்பது ஐயமே. அவர்களும் பண்டாரத்தார் ஆய்ந்த அளவுக்கேனும் நமது இலக்கியங் களையும் கல்வெட்டுகளையும் கண்டுணர்ந்து நமது கலை பண்பாட்டு வரலாறுகளை ஆய்ந்தளித்திருப்பாரேல் நமது நாடும் மொழியும் இனமும் நன்னிலை எய்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பண்டாரத்தாரது ஆராய்ச்சியைப் போற்றும் அதே வேளையில் அகத்தியர் போன்ற தொல்கதை மாந்தரையும் ஆராய்ந்து உண்மைபோல வெளிப்படுத்தியுள்ள அவரது ஆய்வுப் போக்கு நம்மால் ஏற்றுக் கொள்ளதக்கதாகத் தோன்றவில்லை. அகத்தியர், வெள்ளையர் காலத்தில் கிறித்தவ மதம் பரப்ப வந்த வீரமாமுனிவரான பெசுக்கிப் பாதிரியார் போல வைதீக மதம் பரப்ப வந்த ஒரு வைதீகர். வடநாடு தாழ்ந்தது, தென்னாடு உயர்ந்தது என்ற கட்டுக் கதைகள் வடக்கில் சமண பவுத்த செல்வாக்கால் வைதீகம் தாழ்ந்ததையும் தெற்கில் அதற்கு வாழ்வு கிடைத்து உயர்ந்ததையும் காட்டுவதாகும். அகத்தியர் பற்றிக் கூறப்பட்டன யாவும் வைதீகத்திற்கு வாழ்வளிப்பதற்காக கட்டிவிடப் பட்ட கதைகளேயன்றி வேறன்று என்பதைத் தெள்ளிதின் ஆய்வார் உணர்வர். அதே போன்று அவரது ஆய்வு முடிவுகளில் சிற்சில இன்று மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வேண்டியனவாக உள்ளன. வரலாற்றில் இத்தகைய திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே. அன்றைய அவரது ஆய்வில் ஏற்பட்டுள்ள குறைகள் அப்பெரியாரது பிழையன்று. அன்று அவருக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் சரியானவையே. இன்று கிடைக்கும் சான்றுகளின் வழி அவை திருத்தம் பெற வேண்டியனவாக உள்ளன.

பண்டாரத்தார் பல்வேறு இதழ்களில் எழுதி வெளிவந்தவற்றில் சிலவற்றைத் தொகுத்துச் சற்றேறக் குறைய 47 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனாரால் 1) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், 2)கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள் என இருநூல்களாக வெளியிடப்பட்டன. இவற்றைத் தமிழ் மக்கள் படித்துப் பயனுற வேண்டும் என்பதற்காக மீண்டும் அவை தமிழ்மண் அறக்கட்டளை வாயிலாக அவரது எல்லாப் படைப்புகளோடும் சேர்த்து ஒருசேர வெளியிடப்படுகின்றன.. இவற்றைப் படித்துணர்ந்து தமிழ் மக்கள் நம் அருமை பெருமைகளை அறிந்து உயர வழி காணவேண்டும். அறிஞர் பெருமக்கள், பண்டாரத்தார் காலத்தில் வெளிவராது இன்றுவரை வெளிவந்துள்ளனவும், வெளிவந்து கொண்டுள்ளனவுமான பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களைக் கற்றுணர்ந்து அன்று போதிய சான்று கிடைக்காமையால் இன்று குறைபாடாகக் காணப்படும் அவரது வரலாற்று முடிவுகளின் குறைகளைக் களைந்து புதுக்க வேண்டுவதும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு நம் நாட்டின் கலை பண்பாட்டு வாழ்வியல் வரலாறுகளை வெளிக்கொணர்ந்து தமிழர் வாழ்வும் வளமும் உலகறியச் செய்து நாம் உயர்வதும் நமது இன்றைய தலையாய கடனாகும். அப்பணியைத் தமிழ்மண் அறக்கட்டளையும் அதன்பால் பற்றுக் கொண்டோரும் செய்து முடிப்பர். செய்து முடித்தல் வேண்டும்.


பதிப்புரை

கோ. இளவழகன்

நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம்.

சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்.

திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்.

பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர்.

பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர்.

பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே.

தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள்.

நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன.

பண்பாட்டுத் தமிழர்க்கு
நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப்
பண்டாரத் தார்க்கும்; ஒரு
மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள்
கொண்டாடும் சோமசுந்
தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக்,
கண்டார்க்க ளிக்கும் வகை
உருவக்கல் நாட்டுவது கடமையாகும்.

எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந் தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர்

ஆராய்ச்சிப் பேரறிஞர்
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்
ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள்
பெரும்புலவர் இரா. இளங்குமரனார்
கோ. விசயவேணுகோபால்
பி. இராமநாதன்
முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி
க.குழந்தைவேலன்
ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்

  _நூல் கொடுத்து உதவியோர்_ பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

  _நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு_ செல்வி வ.மலர்

  _அச்சுக்கோப்பு_ _முனைவர்_ கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா

  _மெய்ப்பு_ க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி

  _உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு,

  _எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)

  _அச்சு மற்றும் கட்டமைப்பு_ ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்

  இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .

தமிழ்க் கல்வெட்டுக்கள்


கோயில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகளின் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதைப் பல இடங்களில் காணலாம். அவ்வாறு எழுதப்பட்டிருப்பதுதான் சிலாசாசனம் அல்லது கல்வெட்டு எனப்படும். கல்லில் எழுதியிருப்பது போலவே சாசனங்கள் சில சமயங்களில் செப்பேடுகளிலும் எழுதப்படுவதுண்டு. இப்படிப் பட்ட சாசனங்கள் நமது நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்கள் ஆகும். இந்த உண்மையை உணர்ந்து நம்மனோர்க்கு அறிவுறுத்திய இராபர்ட்சிவெல், டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் பர்னல், டாக்டர் பூலர், டாக்டர் ஹுல்ட்ஷ் ஆகியோர் குறிப்பிடத் தக்க பேரறிஞர் ஆவர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையேல் அவைகள் காலப்போக்கில் அழிந்து மறைந்து போயிருக்கும் என்பது திண்ணம்.

கல்வெட்டுக்களின் தோற்றமும் வளர்ச்சியும்

பண்டைத் தமிழ் மக்கள், பகைவர் முன் வந்து அஞ்சாமல் ஆற்றலோடு போர்புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு, அவர்கள் இறந்த இடங்களிலாதல் வேறிடங்களிலாதல் நடுகல் ஒன்றமைத்து விழா நடத்திப் பாராட்டி வந்தனர். அவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலுள்ள, ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் -சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென் - றிருமூன்று வகையிற் கல்லொடு புணர’ என்னும் வெட்சித்திணைச் சூத்திரப் பகுதியால் உணரலாம். அந் நடுகல்லின் மேல் இறந்த வீரர்களின் பெயரும் பெருமையும் பொறிக்கப்படும் வழக்கம் கடைச்சங்க நாளில் இருந்தது என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் புலப்படுகிறது. அதனை, ‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் - பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் - பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்னும் அகநானூற்றுப் பாடலாலும், (அகம். 67) ‘அணிமயிற்பீலி சூட்டிப் பெயர் பொறித்தினி நட்டனரே கல்லும்’ என்னும் புறநானூற்றுப் பாடலாலும் (புறம். 264) அறியலாம். அந்நூல்களில் காணப்படும் ஆதாரங்களைக் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்தில் பகைவரோடு அஞ்சாது போர் புரிந்து புகழுடன் இறந்த வீரர்களின் நடுகற்களின் மேல் வரையப்பெற்ற அவர்களுடைய பெயரும் பீடுமே நம் நாட்டில் முதலில் தோன்றிய தமிழ்ச் சாசனங்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சேரமான் பெருமாள் நாயனார், தாம் இயற்றிய திருவாரூர் மும்மணிக்கோவையில், ‘பட்டோர் பெயரும் ஆற்றலு மெழுதி - நட்ட கல்லும் மூதூர் நத்தமும்’ என்று கூறியிருத்தலால் அவ்வழக்கம் கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது என்பது தேற்றம். அக்காலப் பகுதியில் தமிழ் நாட்டில் சமணமுனிவர் பலர் தங்கித் தம் சமயங்களைப் பரப்பி வந்தமை சரித்திரம் வல்லார் அறிந்ததே. அவர்கள் நோன்பியற்றி உயிர்துறந்த இடங்களில் அவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுடைய மாணாக்கர்கள் பொறித்து வைத்துள்ளனர். அத்தகைய சமாதிச் சாசனங்களை மலைப் பாறைகளிலும் குன்றுகளிலும் குகைகளிலும் காணலாம். திருச்சிக்கடுத்த திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கழுகுமலையிலும் மதுரை ஜில்லாவிலுள்ள ஆனைமலை யிலும் திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் அச்சாசனங்கள் இக்காலத்தும் உள்ளன.

இனி, கோயில்களில் சாசனங்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பார்ப்போம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தமிழ் நாட்டில் அரசாண்ட பல்லவ அரசர்கள் முதலில் கருங்கற் கோயில்கள் அமைத்தார்கள். அவர்கட்குப் பிறகு சற்றேறக்குறைய நானூற்று முப்பது ஆண்டுகட்குமேல் ஆட்சி புரிந்த சோழர்களும் பல்லவர்களைப் போல் யாண்டும் கருங்கற்கோயில்கள் எடுப்பித் தார்கள். அங்ஙனமே பாண்டியர்களும் செய்தார்கள். அவ்வேந்தர்கள் தாம் எடுப்பித்த கோயில்களில் நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் நடைபெறும் பொருட்டு அவற்றிற்கு நிபந்தமாகப் பொன்னும் நிலமும் வழங்கினர். அவர்களைப் போல் பிற அன்பர்களும் பல நிபந்தங்கள் அளித்தனர். அவர்கள் எல்லோரும் தாம் அவ்வாறு அளித்தவற்றைச் செப்பேடுகளில் வரைந்து அவ்வக் கோயிலுக்குக் கொடுத்தனர்; அன்றியும், அவற்றையே அந்த கோயில் சுவர்களில் பொறித்தும் வைத்தனர். அவர்கள் அவ்வாறு செய்தமைக்கு அவ்வறங்கள் இடையில் நின்று போகாமல் எக்காலத்தும் நன்கு நடைபெற்று வருதல் வேண்டும் என்ற பேரார்வமும் அவை கோயில்களுக்குரிய ஆதாரமாக அமைதல் வேண்டும் என்ற எண்ணமுமே காரணங்கள் ஆகும். கோயில்களுக்கு விடப்பெற்ற நிபந்தங்களைப் பலரும் உணர்ந்து அங்கு நடைபெற வேண்டியவை எல்லாம் தவறாமல் நாள்தோறும் நிறைவேறி வருகின்றனவா என்று ஆராய்வதற்குப் பயன்படுமாறு எல்லோரும் பார்க்கக்கூடிய புறச்சுவர்களின் மேல் சாசனங்கள் வரையப்பட்டுள்ளன.

சாசனங்களில் குறிக்கப் பெற்றுள்ள செய்திகள்

கோயில்களில் நாள்தோறும் நிகழும் வழிபாடுகளும். விழாக் காலங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும், பகலும் இரவும் இடையீடின்றி எரிக்கப்படும் நந்தா விளக்குகளும், வழிபாட்டு நேரங்களில் ஏற்றப்பெறும் சந்தி விளக்குகளும், அங்குப் பணிபுரியும் தேவகன்மிகளின் கடமைகளும், அங்குள்ள அணிகலன்கள், வெள்ளிக்கலங்கள், செப்புக்கலங்கள் முதலியவைகளும்; கோயில், கோபுரம், மண்டபம், திருச்சுற்று மாளிகை, படிமம் முதலியவற்றின் பெயர்களும், அவற்றைஅமைத்தோர் பெயர்களும் சாசனங்களில் விளக்கமாகக் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இவ்வாறு கோயில்களுக்குத் தொடர்புடைய செய்தி களைக் கூறும் சாசனங்களும் கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றில் அரசர்களின் திருமுகங்களும் அரசாங்க அறிக்கை களும் குறுநில மன்னர்களின் உடன்படிக்கைகளும் விதிமுறை களும் முடிபுகளும் அரசியல் தலைவர்களைப் பற்றிய பாடல் களும் அவர்களுக்கும் புலவர், மருத்துவர் முதலானோர்கள், கல்லூரி, புத்தகசாலை முதலியவற்றிற்கும் அரசர்கள் வழங்கிய இறையிலி நிலங்களும் வரையப்பட்டிருக்கின்றன.

சாசனப் பகுதிகள்

பொதுவாக சாசனங்களை நோக்கின், ஒவ்வொன்றையும் ஐந்து பகுதிகளாகப் பிரித்துவிடலாம் . அவை, மங்கலவாசகம், சாசனம் தோன்றிய காலம், சாசனச் செய்திகள், கையெழுத்துக்கள், ஓம்படைக்கிளவி என்பனவாம். இவற்றுள் சில குறைந்துள்ள சாசனங்களும் உண்டு.

இனி, மங்கலவாசகம் என்பது கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சாசனங்களின் தொடக்கத்தில் காணப்படும் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்னுந் தொடரேயாம். அதனையடுத்துச் சாசனம் தோன்றிய காலம் குறிக்கப் பெற்றிருக்கும். அப்பகுதியில் அப்போது நாட்டில் அரசாண்ட முடிவேந்தனது ஆட்சியா ண்டும் நாளுமே காணப்படும். அவ்வாறு ஆட்சியாண்டு குறிப்பது தான் பழைய வழக்கம். சிற்சில சாசனங்களில் அரசனது ஆட்சியாண்டோடு கலியப்தமும் சகாப்தமும் கொல்லம் ஆண்டும் வரையப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கு மிக அருகியே காணப்படுகிறது. அரசனது ஆட்சியாண்டிற்கு முன் அவனது வீரச் செயலை யுணர்த்தும் அடைமொழிகளும், சிறப்புப் பெயரும் இயற்பெயரும் பொறிக்கப்பெற்றிருக்கும். இதனை, ‘மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு நாற்பது ஆவது’ எனவும், ஸ்ரீகோமாறவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிக்கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்குயாண்டு பதினேழாவது எனவும் போதரும் சாசனப் பகுதிகளால் நன்கறியலாம். அதனோடு நில்லாமல், மெய்க்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரையும்முறை முதலாம் இராசராசசோழனால் கி.பி. 993 -ஆம் ஆண்டில் முதலில் தொடங்கப் பெற்றது. அவனைப் பின்பற்றித் தமிழ் நாட்டிலிருந்த மற்ற அரசர்களும் மெய்க்கீர்த்தி அமைத்துச் சாசனங்களில் எழுதத் தொடங்கினர். அம்மெய்க்கீர்த்திகளில் அவ்வவ்வேந்தர்களுடைய வீரச் செயல்களும் புகழுக்குரிய பிற செயல்களும் ஆட்சியின் சிறப்பும் பட்டத்தரசிகளின் பெருமைகளும் கூறப்பட்டுள்ளன.

அரசனுடைய ஆட்சியாண்டு ஏற ஏற மெய்க்கீர்த்தியும் புதிய புதிய செய்திகளோடு வளர்ந்துகொண்டே போகும். அதன் துணை கொண்டு ஒவ்வொரு வேந்தனுடைய ஆட்சியிலும் எவ்வெவ் வாண்டில் எந்த எந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்பதை ஆராய்ந்துணர்ந்து கொள்ளலாம் .ஆகவே, மெய்க்கீர்த்திகள் எல்லாம் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் சிறந்த ஆதாரங்கள் ஆகும்.

சாசனம் தோன்றிய காலக் குறிப்பிற்குப் பின்னர்ச் சாசனச் செய்திகள் வரையப்பட்டிருக்கும். இன்ன நாட்டில் இன்ன ஊரிலுள்ள இன்னார்,இன்ன அறம் என்றும் நடைபெற்று வருமாறு. இவ்வளவு நிலமும் பொன்னும் பிற பொருள்களும். இன்னாரிடத்தில் அளித்தனர் என்பதையும் அதனைப்பற்றிய மற்றைச் செய்திகளையும் அப்பகுதியில் விளக்கமாகக் காணலாம்.

சாசனச் செய்திகளுக்குக் கீழ் அவ்வறச் செயல்களுக்குத் தொடர்புடையவர்களின் கையெழுத்துக்களும் அவற்றிற்குச் சான்றாக அமைந்தோர் கையெழுத்துக்களும் அதனை எழுதிய ஊர்க்கரணத்தான் அல்லது மத்தியஸ்தன் கையெழுத்தும் அதனைக் கல்லில் வரைந்தவன் கையெழுத்தும் பொறிக்கப் பெற்றிருக்கும். இவர்களுள் சிலருடைய கையெழுத்துக்களின்றிப் பொறிக்கப்பட்ட சாசனங்களும் உண்டு.

சாசனங்களின். இறுதியில் காணப்படுவது ஓம்படைக் கிளவியாகும். அப்பகுதியில் ‘இது பன்மாகேச்வர ரiக்ஷ’ ‘இது ஸ்ரீவைஷ்ணவ ரiக்ஷ’ ‘இவ்வறங் காத்தாரடி என் தலைமேலன’ ‘அறம் மறவற்க’ ‘அறமல்லது துணையில்லை’ ஆகிய தொடர் களும் அவற்றுள் ஒன்றாவது சிலவாவது காணப்படும். சில சாசனங்களில் இத்தொடர் இல்லாமலிருத்தலும் உண்டு. சில சாசனங்களில் ஓம்படைக் கிளவியோடு அவ்வறத்தைச் சிதைத்தார் அச்செயலால் அடையும் பழி பாவங்களும் சேர்ந்து வரையப்பட்டிருக்கின்றன. அவை, ‘இது இறக்குவான் கங்கையிடை குமரியிடை எழுநூற்றுக்காதமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான்’ ‘இதற்குத் தீங்கு வேண்டுவான் வழி அறுக’ இதுவிலக்குவான் கங்கையிடை குமரியிடை குரால் பசுகொன்றான் செய்த பாவங் கொள்வான் என்பனவும் பிறவுமாம். மேலே குறிப்பிட்ட ஓம்படைக்கிளவிகளுள் முதலிரண்டும் ‘இதனைச் சிவனடியார் பலரும்காப்பாராக’ எனவும் ‘இதனைத்திருமாலடியார் பலரும் காப்பாராக’ எனவும் பொருள்படும் பிறதொடர்களின் பொருள் வெளிப்படை.

கோயில் சுவர்களில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் எல்லாம் அக்கோயில் கண்காணிப்பிற்கு இன்றியமையாத சாதனங்களாகவும் பொதுமக்களும் ஊர்ச் சபையாரும் உணர்ந்து நடத்தற்குரிய செய்தி களை உடையவனவாகவும் இருத்தலால், அக்காலத்தரசர்கள் அவற்றைச் சிதையாமல் பாதுகாத்து வந்தனர். அந்நாட்களில் கோயிலைப் புதுப்பிக்க விரும்புவோர் முதலில் அரசாங்க உத்தரவு பெற்று, சாசனங்கள் எல்லாவற்றையும் படியெடுத்து வைத்துக் கொண்டு, திருப்பணி நிறைவேறிய பின்னர் அரசியல் அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் பொறித்து வைத்தல் வேண்டும். இது பண்டைத் வேந்தர்களின் ஆணையாகும். இங்ஙனம் இரண்டாம் முறை வரையப் பெற்ற சாசனங்களைத் திருமழபாடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருவையாறு, திருப்புகலூர் முதலான ஊர்களில் இக்காலத்தில் காணலாம்.

இதுகாறும் கிடைத்துள்ள தமிழ்ச் சாசனங்களில் மிக்க பழமை வாய்ந்தது செஞ்சிக்கடுத்துள்ள திருநாதர் குன்றில் உள்ளதேயாமென்றும், மிகப் பெரியது செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலுள்ள வீரராசேந்திர சோழன் காலத்துச் சாசனமேயாமென்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். பொதுவாகத் தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் கிடைத்தற்கரிய பல வரலாற்றுண்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையன எனக் கொள்ளலாம்.

கல்வெட்டுக்களிலே காணப்படும் சில குழுவின் பெயர்கள்


அஞ்சுவண்ணம்

நம் நாட்டிலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்களிற் சில குழுவின் பெயர்கள் காணப்படுகின்றன.அவற்றுள் அஞ்சுவண்ணம், மணிக்கிராமம், பஞ்சாசாரியார், சங்கரபாடியார், வளஞ்சியர் என்பன குறிப்பிடத்தக்கனவாம். அவற்றை முறையே ஈண்டு ஆராய்வோம்.

கடற்கரை நகரங்களில் அங்சுவண்ணம் என்ற குழு ஒன்று இருந்தது என்பது கோட்டயச் செப்பேடுகளாலும் கொச்சிச் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. அன்றியும் இராமநாத புரம் ஜில்லாவைச் சேர்ந்த திருவாடானைத் தாலுகாவிற் கடற்கரை யிலுள்ள தீர்த்தாண்டதானபுரத்திற் காணப்படும் கல்வெட் டொன்றிலும் அக்குழுவின் பெயர் பயின்று வருகின்றது அவற்றை அடியிற் காண்க.

1.  ‘இவ்வாண்டு வேணாடு வாழ்கின்ற அய்யனடிகள் திருவடியும் அதிகாரமும் பிரகிருதியும் …….அஞ்சு வண்ணமும் புன்னைத் தலைப்பதியும் உள்வைத்து’ (கூசயஎயயநடி-டடிபயட ளநசநைள எடிட. 11,யீயபந67)

2.  a.  ‘அஞ்நூற்றுவரும் அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரட்சிக்கக்கடவர்’. ‘பள்ளியையும் பூமியையும் உலகும் சந்திராதித்தரும் உள்ள நாளெல்லாம் செலவு பத்திரத்தில் பட்ட வண்ணம் செய்து கொள்ளக்கடவர். அஞ்சு வண்ணமும் மணிக்கிராமமும்`(1b னை, வரிகள் 21-25)

b.  `அன்றன்றுபடும் உல்கு அஞ்சுவண்ணமும் மணிக் கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும்,’ (1b னை, வரிகள் 34-35)

(c)‘அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இவைகளுக்கு அன்னியாய முண்டாயில் உல்கு துலாக்கூலி தடுத்தும் தங்கள் அன்னியாயம் தீர்த்துக்கொள்ளக் கடவர்’ (1b னை, வரிகள் 45-46)

d.  `இந்நகரத்துக்குக் காராளராக நீரேற்றார் அஞ்சு வண்ணமும் மணிக்கிராமமும் - இவருள் இரண்டு தலையாருங் கூடிச் செய்வதே கருமமாகவும்’ (1b னை, வரிகள் 48-49)

3.  `ஈசுப்பு இராப்பனுக்கு அஞ்சுவண்ணமும்….. அஞ்சு வண்ணப்பேறும்…… கொடுத்தோம்’ (நுயீபைசயயீhயை ஐனேiஉய எடிட. யீயபந, 68.)

4.  `இவ்வூரில் இருக்கிற அஞ்சுவண்ணமும் மணிக்கிராமத் தோமும் ஆரியரில் சாமந்தபண்ட சாலையும் பட்டாரியரும் தோயாவத்திரச் செட்டிகளும் தென்னிலங்கை வளஞ்சியமும் கைக்கோளரும் தூசுவரும் வாணியரும் நீண்ட கரையாருங்கூடி…. கோயில் திருமுன்பிலே நிறைவுறக் கூடியிருந்து’ (ஐளே 598 டிக 1926. தீத்தாண்டதானபுரக் கல்வெட்டு.)

மேலே குறிப்பிடப்பெற்ற செப்பேடுகளுள், கோட்டயச் செப்பேடுகள் சேரமான் தாணுரவியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழியில் வரையப் பெற்றுள்ளன. எனவே மலையாள மொழி தோன்றுவதற்குமுன் சேர நாட்டில் தமிழே தாய் மொழியாக இருந்த காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்செப்பேடுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது தேற்றம்.

கொச்சிச் செப்பேடுகள் பாஸ்கர ரவிவர்மன் காலத்தன வாகும். அச்சேரமன்னன் முதல் இராசராசசோழன் காலத் திருந்தவனாவன். எனவே, அச்செப்பேடுகளும் தொன்மை வாய்ந்தவையென்பதில் ஐயமில்லை.

தீத்தாண்டதானபுரக் கல்வெட்டு, சடையவர்மன் வீர பாண்டியன் ஆட்சியில் கி.பி.. 1269- ல் பொறிக்கப் பெற்றதாகும் டாக்டர் குண்டர்ட். டாக்டர் பர்னல் என்ற இரு பேராசிரியரும் அது, சேர நாட்டில் யூதர்கள் வாழ்ந்து கொண் டிருந்த இடமாக இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளனர். எல்லிஸ் என்ற அறிஞர் அஃது ஐவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் என்பர். கல்வெட்டு இலாகாவின் தலைவர் ஒரு வகையில் சுயேச்சை பெற்றிருந்த வணிகர்குழு என்று எழுதியுள்ளனர். டாக்டர் ஹூல்ட்ஸ் என்றபேராசிரியர் அஃது ஓர் ஊரின் பெயர் என்று கருதியுள்ளார். வேறு சிரலர் அஃது ஐவகைச் சாதியாரைக் குறிக்கும் என்பர். (வசயஎயஉயட ளநசநைள எடிட. 11 யீயபநள 73&74) இவற்றை நோக்குமிடத்து, அதன் உண்மைப்பொருள் ஒரு தலையாகத் துணியப்பட வில்லை என்பது தெள்ளிது.

கோட்டயம் என்பது மேல் கடலோரத்திலுள்ள ஒரு சிறந்த பட்டினமாகும். தீத்தாண்டதானபுரம் என்பது கீழ்க்கடற்கரையிலுள்ளதோர் ஊர். இவை முற்காலத்தில் வாணிகத்திற் சிறந்த கடற்றுறைப்பட்டினமாக இருந்தன என்று தெரிகிறது. ஆகவே அவ்வூர்களிலிருந்து அஞ்சுவண்ணம் என்பது ஒரு வகை குழுவாக இருத்தல்கூடும் என்று கருதுவதற்கு இடம் உளது.

அன்றியும், `அஞ்சுவண்ணமுடைய ஈசப்பு இராப்பனுக்கும்’ என்ற தொடரால், அவ்வஞ்சுவண்ணம் என்பது கிருத்துவ வணிகர்குழுவின் பெயராக இருத்தல் கூடுமோ என்ற ஐயம் நிகழ்கின்றது. மேல் கடலோரத்திலுள்ள பட்டினங்களில் மேனாட்டுக் கிருத்துவ வியாபாரிகள் பண்டைக் காலத்தில் வாணிகத்தின் பொருட்டு வந்து தங்கியிருந்த செய்தியைச் சரித்திரம் வல்லார் அறிவர். ஆகவே, அக்கொள்கைக்கும் சிறிது இடமுளது எனலாம்.

இந்நிலையில், தென்வட்டக் கல்வெட்டிலாகாவின் தலைவர் அஞ்சுவண்ணம் என்பது அஞ்சுமான் என்ற உருது மொழியின் திரிபாக இருக்கலாமோ என்று ஐயுறுகின்றனர். (ஹ.சு.நு கடிச 1926-27.யீயசவ11.)

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் வெளி யிட்டுள்ள களவியற்காரிகை என்ற நூலில் அதன் உரையாசிரியர் இறந்தொழிந்த தொன்னூல்களிலிருந்து பல பாடல்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியுள்ளனர். அவற்றுள் பல்சந்தமாலை என்ற நூலிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ள சில பாடல்கள் அஞ்சுவண்ணம் என்பதைப் பற்றி அறிந்து கோடற்குப் பெரிதும் உதவுகின்றன. அவை,

கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த   தலைமைய ரேழ்பெருந் தேரங்க மும்பெற்ற கநதசச   மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதல்தன்   முலையினை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று   முன்னுவனே’ (1)இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ணவந்தோர்
அயன்மிகு தானைய ரஞ்சுவண் ணத்தவ ரஞ்சலென்னாக்
கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம்
பயன்விளை வாம்பாடி பூத்தது வேங்கை பணிமொழியே’ (2)
பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும   மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட்   டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின்   றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே’ (3)வானது நாணக் கொடையா லுலகை வளர்த்தருளும்
சோனகர் வாழுஞ் செழும்பொழில் சூழ்ந்து பாரனையாள்
தானணிவாணுதல் கண்டும் பகலே தனித்தனியே
மானமி லாதிரை தேரும் பறவைக டாமகிழ்ந்தே’ (4)
`வில்லார் நுதலிய நீயுமின் றேசென்று மேவுதிர்சூ
தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தேரங்கத் தியவனவர்கள்
அல்லா எனவந்து சத்தியுந நதாரவகை தொழுஞ்சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரும் நாட்டகமே’ (5)

என்பனவாம்.

இவற்றுள் இரண்டாம் பாடலால் யவனராசனாகிய கலிபாவின் வழியினர் அஞ்சுவண்ணத்தவர் என்பதும் ஐந்தாம் பாடலிலுள்ள “யவனர்கள் அல்லா எனவந்து” என்ற தொடரால் அன்னோர் முகம்மதியராயிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. எனவே முஸ்லிம் மரபினரே அஞ்சு வண்ணத்தவர் என்று வழங்கப் பெற்றுள்ளனர் என்பது தெள்ளிது. இச்செய்தியை நான்காம் பாடலில் பயின்றுவரும் ‘சோனகர்’ என்ற சொல் உறுதிப்படுத்துதல் அறியத்தக்கது. மேலே குறித்துள்ள பாடல்களிலே காணப்படும் கலுழ்பா, கலபதி, கலுபா என்பன முன்னே துருக்கிவேந்தனாக விளங்கிய காலிபைக் (உயடயீ) குறிப்பன வாகும்

இனி, தஞ்சைமா நதரிலுள்ள ‘சரஸ்வதிமகால்’ என்ற புத்தகசாலையிற் காணப்படும் பழைய பாடற்றிரட்டொன்றில்,

குடக்கினிற் றுரங்கமும் வடக்கினிற்க லிங்கமும்   குணக்கினிற் பசும்பொனும் குளித்ததெற் கிலாரமும்    அடிப்பரப் படைக்கலத் தனேகலண்ண மாகவந்   தஞ்சுவண்ண முந்தழைத் தறத்தின்வண் ணமானவூர்   கடற்கரைக் குவித்திடு சந்தனத்தை யிந்துடன்   கலந்திறைக்கு மந்தியைக் களன்றுமு சுவின்குலம்    புடைப்பதற் கெழுந்துகை முறுக்கலு மிழுக்கிவாய்   புக்கமுத்தை விட்டெறிந்து பூகமேறு நாகையே

என்ற பாடல் காணப்படுகிறது.

இதிற் பயின்றுவரும் அஞ்சுவண்ணம் என்பது கீழ்க் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகத்தின் பொருட்டு தங்கியிருந்த முகம்மதியர் தன்னகத்து மிகுதியாகக் கொண்டு விளங்குவது யாவரும் அறிந்ததே. ஆகவே கோட்டயம் தீத்தாண்டதானபுரம் நாகப்பட்டினம் முதலான கடற்றுறைப் பட்டினங்களில் முற்காலத்தில் நிலவிய முஸ்லிம் வணிகர் குழுவே அஞ்சுவண்ணம் என்று செப்பேடுகளிலும் கல்வெட்டுக் களிலும் குறிக்கப் பெற்றுள்ளது என்பது நன்கு புலப்படுதல் காண்க.

முஸ்லிம் மரபினர் அஞ்சுவண்ணத்தவர் என்னும் பெயர் எய்தியமைக்குரிய காரணம் யாது? என்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘எது இஸ்லாம்?’ (றுhயவ ளை ஐளடயஅ?) என்ற ஆங்கில நூலில் இஸ்லாம் மார்க்கத்திற்குரிய ஐம்பெருங் கொள்கைகள் கூறப்படுகின்றன. அவை(1)கடவுள் ஒருவரே; அவருடைய தூதர் முகம்மது என்பார் (2) கடவுள் வழிபாடு (3) உண்ணாவிரதம் (4) ஏழைகட்கு அறஞ்செய்தல் (5) மெக்காயாத்திரை என்பன. இவ்வைந்தையும் தம் சமயக் கொள்கைகளாகக் கொண்டு ஒழுகிவந்த காரணம் பற்றி முஸ்லிம் மரபினர் அஞ்சுவண்ணத்தவர் என்று முற்காலத்தில் வழங்கப்பெற்றிருப்பார்களோ என்ற ஐயம் நிகழ்கின்றது; ஒரு தலையாகத் துணிதற்கியலவில்லை.

கல்வெட்டுக்களில் நாட்டோடு இணைந்து வழங்கப்பெறும் எண்கள்


பண்டைத் தமிழ் மக்களின் சிற்பக் கலைக்கும் ஒவியக் கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இக்காலத்தில் தஞ்சை மாநகரில் நிலவுகின்ற ‘இராசராசேச்சுரம்’ என்ற திருக் கோயிலை எடுப்பித்தவனும் சிவபாதசேகரன் என்ற சிறப்புப் பெயர் எய்தியவனும் ஆகிய முதல் இராசராச சோழனது கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்க்கீர்த்தியில்,

இரட்டபாடி ஏழரையிலக்கமும்’முந்நீர்ப்ழந்தீவு பன்னீராயிரமும்’

என்ற தொடர்கள் பயின்று வருதலை வரலாற்று ஆராய்ச்சி யாளர் யாவரும் அறிவர். அங்ஙனமே,

கங்கபாடி தொண்ணூற் றாறாயிரம்
நுளம்பாடி முப்பத்தீராயிரம்
பிரட்னை யேபட்டங் கட்டழித்து   பேரே ழரையிலக் கம்புரக்க    இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட    இராசகம் பீரனை வாழ்த்தினவே’   என்ற தக்கயாகப்பரணிச் செய்யுளிலும், …….. ……. ……. ஏழரையிலக்கமு மிரியச்
சீறிய அபயன் குலோத்துங்கசோழன்
உருட்டுக சிறு தேரே’

என்ற குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்ச் செய்யுளிலும் இது பயின்று வருதல் காண்க.

வனவாசி பன்னீராயிரம்
இடைத்துறைநாடு இரண்டாயிரம்
வேங்கைநாடு ஆறாயிரம்

என்ற முற்காலத்தில் வழங்கப் பெற்றுவந்தமை கல்வெட்டு களாலும் செப்பேடுகளாலும் அறியக் கிடக்கின்றது.

இத்தொடர்களின் பொருளை ஆராயத் தொடங்கிய அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவராயினர். ஒரு சாரார், அவ் வெண்கள் அவ்வந்நாட்டில் அடங்கியிருந்த ஊர்களின் தொகையாகும் என்றனர். மற்றொரு சாரார், அவை நாட்டின் வருவாயை யுணர்த்தும் என்றுரைத்தனர். பிறிதொரு சாரார், அவை, நாட்டிலுள்ள குடிகளின் தொகையைக் குறிக்கும் என்று கூறினர். எனவே, அவ்வெண்கள் எதனை உணர்த்துகின்றன என்பது இதுகாறும் ஒரு தலையாகத் தெளிவுறுத்தப்பட வில்லை.

ஒரு நாட்டின் வருவாயும் குடிகளின் தொகையும் ஆண்டு தோறும் மாறிக்கொண்டே போகும் இயல்புடையனவாகும். ஆதலால், அவ்வெண்கள் நாட்டின் வருவாயையாதல் குடிகளின் தொகையையாதல் குறிக்கும் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடையதன்று.

வடவிமயம் முதல் தென்குமரிகாறும் பரந்து கிடக்கும் நம் இந்தியாவிலுள்ள ஊர்களின் தொகையே ஏழரை யிலக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், பம்பாய் மாகாணத்தின் தென்பகுதியும் நைசாம் இராச்சியத்தின் மேல் பகுதியும் தன்னகத்துக்கொண்டு நிலவிய மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி நாடு மாத்திரம் ஏழரை யிலக்கம் ஊர்களைத் தன்பாற் கொண்டாதாக இருத்தல் வேண்டும் - என்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்?

ஆகவே, மேலே எடுத்துக் காட்டப்பெற்ற முத்திறக் கொள்கைகளும் வலியுடையனவாகாமை காண்க.

இனி, திருக்கோவிலூரில் திருமால் கோயிலிற் காணப்படும் கல்வெட்டொன்று அவ்வெண்களின் பொருளை ஓரளவு உணர்ந்துகோடற்கு உதவுகின்றது. அது, ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல்வளரத் தன் திருத்தமயனொடும் போய் இரட்டபாடி ஏழரையிலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்து

ஐயஸ்தம்பம் நாட்டி மீண்டுபோந்து பேராற்றங்
கரைக் கொப்பத்து ஆகவமல்லனை யஞ்சுவித்து
அங்கவன் ஆனையும் குதிரையும் பெண்டிர்
பண்டாரமும் கைக்கொண்டு விஜயாபிஷேகமும்
செய்து வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய
கோப்பரகேசரிவன்மரான உடையார் ஸ்ரீஇரா
ஜேந்திரதேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான
ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
பிரமதேயம் திருப்கோவலுரான ஸ்ரீமதுராந்தகச்
சதிர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார்
ஸ்ரீவிமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப்
பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து
மிலாடுடையார் இரணகேசரி இராமரான நரசிங்க
வன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கற்கொண்டு ஸ்ரீவிமா
னமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம்
அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும்
முன்பில் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிபந்தங்
கள் எல்லாம் இந்த ஸ்ரீவிமானத்தே கல்லுவெட்டு
வித்தார் நரசிங்கவன்மரென்று அபிஷேகம் பண்ணி
முடிகவித்து மிலாடு இலண்டாயிரம் பூமியும் ஆண்ட
மிலாடுடையார் நரசிங்கவன்மர் நரசிங்கவன்மர்
சந்திராதித்த வல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு
இரண்டு இவைக்கு விளக்கெரிக்கக் கொடுத்த
சாவாமூவாப் பெரும் பசு அறுபத்துநாலு’

என்பதாம்.

இக்கல்வெட்டில் ‘மிலாடு இரண்டாயிரம் பூமியும்’ என்று காணப்படும் ஓர் அரிய செய்தி ஈண்டு அறியத்தக்கது.

மிலாடு என்பது மலாடு என்ற நாட்டைக் குறிப்பதாகும். மலாடு என்பது மலையமான்நாடு என்ற தொடரின் மரூஉவாகும் இந்நாடு திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு பண்டைக் காலத்தில் விளங்கியது. இது. செந்தமிழ் நாட்டைக் சூழ்ந்திருந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று என்பது உரையாசிரியர் கருத்து. கடைச்சங்க நாளில் இந்நாளடு கடையெழுவள்ளல் களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக் காரிக் குரியதா யிருந்தது என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது. சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட நாடும் இதுவேயாம்.

இத்துணைத் தொன்மை வாய்ந்த இந்நாடு இரண்டாயிரம் பூமிகளையுடையதாயிருந்தது என்று திருக்கோவலூர்க் கல்வெட்டு உணர்த்துவதால், நாட்டுடன் இணைத்து வழங்கப் பெற்றுள்ள எண் அதிலடங்கியுள்ள பூமிகளின் தொகையேயாம் என்பது நன்கு பெறப்படுகின்றது. அன்றியும், மைசூர் இராச்சியத்திலே கோலார் ஜில்லாவிலுள்ள இரண்டு கல்வெட்டுகளில்2 `ஐயங் கொண்ட சோழமண்டலம்3 நாற்பத்தெண்ணாயிரம் பூமியும்’3 என்று வரையப் பெற்றிருத்தலால் அச்செய்தி உறுதியாதல் காண்க.

இனி, ஒரு பூமி என்பது எத்தனை வேலிகளை (அல்லது நிலத்தின் வேறு சிறு பிரிவுகளை)த் தன்னகத்துக் கொண்டது என்பது இப்போது புலப்படவில்லை. இந்நாளிலே சில ஊர்களில் உட்கிடை, பங்கு என்ற உட்பிரிவுகள் உள்ளன. இவற்றுள், ஒவ்வொன்றும் சில அல்லது பல வேலி நிலங்களைத் தன்பாற்கொண்ட ஓர் உட்பிரிவாகும். எனவே, சில அல்லது பல வேலி நிலங்களைத் தன்னகத்துக்கொண்டு நிலவிய ஒரு கிராம உட்பிரிவிற்குப் பூமி என்ற பெயர் முற்காலத்தில் வழங்கி வந்தது என்று கொள்வதே அமைவுடத்து.

மைசூர் இராச்சியத்திலுள்ளஆதகூரிலிருந்து கொண்டு வரப்பட்டு பங்களூர்ப் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டினால் ஆதகூர் என்ற கிராமம் பன்னிரண்டு பூமிகளை யுடையதாயி ருந்தது என்னும் உண்மை வெளியாகின்றது.

இனி, தொண்டைமண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலம் இருபத்துநான்கு கோட்டங்களையும் எழுபத்தொன்பது நாடுகளையும் ஆயிரத்துத் தொள்ளாயிரம் நத்தங்களையும் முற்காலத்தில் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று என்பது,

கோட்டமோ ரிருபா னான்கு   கூறுநா டெழுபத் தொன்பான்   தோட்டெழி லாயிரத்துத்   தொளாயிர நத்த மாகும்

என்னும் பழைய பாடல் ஒன்றால் அறியக்கிடக்கின்றது.

சயங்கொண்ட சோழமண்டலம் நாற்பத்தெண்ணாயிரம் பூமிகளை யுடையதாயிருந்தது என்பது முன்னர் விளக்கப்பட்டது எனவே, ஆயிரத்துத் தொள்ளாயிரம் நத்தங்களையுடைய சயங் கொண்ட சோழமண்டலம் நாற்பத்தெண்ணாயிரம் பூமிகளுடைய தாயிருந்தமை ஈண்டு அறியத்தக்கது. இதனால் ஒரு கிராமம் சற்றேறக்குறைய இருபத்தைந்து பூமிகளைத் தன்பாற்கொண்டு சயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டை மண்டலத்தில் முன்னாளில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்துகின்றது.இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து ஒரு பூமி என்பது இரண்டு வேலி முதல் பத்துவேலி வரையிலுள்ள ஒரு நிலப்பரப்பாக அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம்.

இதுகாறும் கூறியவற்றாற் கல்வெட்டுகளிலே நாட்டோடு இணைத்து வரையப்பெற்றுள்ள எண்கள் பூமியைக் குறிக்கும் என்பதும், ஒரு பூமி என்பதும் சில வேவி நிலங்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு நிலப்பரப்பாயிருத்தல் கூடும் என்பதும் நன்கு விளங்குதல் காண்க.

தமிழ் எழுத்துக்கள்


தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கப் பெற்ற காலத்தே தான் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இப்போது காணப்படும் நிலையான வரிவடிவங்களைப் பெற்றன. ஆகவே சற்றேறக் குறைய இரு நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள வரிவடிவ அமைப்பை அடைந்தன என்று கூறலாம். அதற்குமுன் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வெழுத்துக்களின் வரி வடிவங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாகி வளர்ச்சியடைந்து வந்திருக் கின்றன.

தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களைக் கோயில்களிலுள்ள கருங்கற் சுவர்களிலும் செப்பேடுகளிலும் வரையப்பெற்ற பழைய தமிழ்ச் சாசனங்களில்தான் பார்க்கலாம். தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே இக்காலத்தில் கிடைக்கின்றன. அவற்றை நோக்குங்கால், தமிழ் மொழிக்கு இரண்டு வகையான வரிவடிவங்கள் வழங்கி வந்தன என்று தெரிகிறது . அவை தமிழ் எழுத்துவட்டெழுத்து எனப்பெறும். அவற்றுள் தமிழ் எழுத்து என்பது இந்நாட்களில் வழங்கிவரும் தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களேயாம். இத்தகைய எழுத்துக்களால் வரையப்பெற்ற தமிழ்ச் சாசனங்கள் தொண்டைமண்டலம், சோழமண்டலம் ஆகிய நாடுகளில் பல்லவர்களின் ஆட்சிக்காலமுதல் காணப்படுகின்றன. வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்தாகும். வட்டெழுத்தால் பொறிக்கப் பெற்ற தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் பாண்டிமண்டலம் சேர மண்டலம் ஆகிய நாடுகளில் 8- ஆம் நூற்றாண்டு முதல் 11- ஆம் நூற்றாண்டு வரையில் அகப்படுகின்றன. பாண்டியரது முதற் பேரரசில் பாண்டிய மண்டலத்திலும் சேர மண்டலத்திலும் வழங்கிவந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்கள் என்பது அவ்வேந்தர்களுடைய கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கு அறியப்படுகிறது. பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்குட்படுத்திய முதல் இராசராச சோழன், அதற்குமுன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துக்களை நீக்கித் தொண்டை மண்டலத்திலும் சோழமண்டலத்திலும் வழங்கிய தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துமாறு செய்தனன். இச்செய்தி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் இனிது புலனாகிறது. எனவே, 11- ஆம் நூற்றாண்டு முதல் பாண்டி மாண்டலத்தில் இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் வழங்கிவருகின்றன. இத்தமிழ் எழுத்துக்களைப் பல்லவர்கள் கிரந்த எழுத்துக்களிலிருந்து அமைத்துக்கொண்டு, தம் ஆட்சிக் குட்பட்ட தொண்டை மண்டலம் சோழ மண்டலங்களில் வழங்கி வருமாறு செய்தனர் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுக்கின்றனர். பல்லவர்கள் அமைத்த தமிழ் எழுத்துக்கள் வழக்கிற்கு வருமுன் அந்நாடுகளில் வழங்கி வந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்ளேயாம். எனவே பண்டைக் காலத்தில் தமிழ் நாடு முழுமையும் வட்டெழுத்துக்களே வழங்கியுள்ளன என்பது உணரற்பாலது. கடைச்சங்க காலத்தில் சேரமண்டலத்திலும் சோழமண்டலத்திலும் வழங்கி வந்த தமிழ் எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் என்ற பெயருடையன வாயிருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியக் கிடக்கின்றது இவ்வுண்மையைக் ‘கண்ணெழுத் தாளன் காவல் வேந்தன் மண்ணுடைய முடங்கலம் மன்னவர்க் களித்து’ (சிவப். கா. 26 அடிகள் 170-1 ) எனவும், இருபதினாயிரம் -கண்ணெழுத்துப்படுத்தன கைபுனை சகடமும்’ (சிலப். கா.26.அடிகள் 135-36) எனவும், வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’(சிலப். கா.5.அடிகள் 11-12) எனவும் போதரும் இளங்கோவடிகளது வாக்கினால் நன்குணரலாம். இவ்வடிகள் குறித்துள்ள கண்ணெழுத்துக்கள் முற்காலத்தில் தமிழகம் முழுவதும் வழங்கி வந்த வட்டெழுத்துக்களாகும். இவ்வெழுத்துக்கள் கண்போன்றிருந்ததால் கண்ணெமுத்துக்கள் என்றும் வழங்கப்பட்டனவாதல் வேண்டும். இவ் வட்டெழுத்துக்களிலிருந்துதான் பல்லவர்கள், கிரந்த எழுத்துக்களையும் இக்காலத்துள்ள தமிழ் எழுத்துக் களுக்கு அடிப்படையா யுள்ள பழைய தமிழ் எழுத்துக்களையும் அமைத்துக் கொண்டனர் என்பது அறியத்தக்கது.

தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் பண்டைக் காலமுதல் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதை நன்காராய்ந்து அறிந்துள்ள கல்வெட்டிலாகா அறிஞர்கள் பழைய வட்டெழுத்துகளிலிருந்தே இப்போது வழங்கும் தமிழ் எழுத்துக்கள் தோன்றியுள்ளன என்று கூறியிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இவ்வட்டெழுத்துக்கள், அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துக்களிவிருந்து தோன்றி வளர்ச்சியடைந்தவை என்று டாக்டர் பூலர் கூறுகின்றார். (ஐனேயைn ஞயடயநடிபசயயீhல யீ.73.) தமிழ் நாட்டிற்கு ஆரியர்கள் வந்து தம் நாகரிகத்தைப் பரப்புவதற்கு முன்னரே இவ்வெழுத்துக்கள் தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் அதனால் இவை பிராமியின் வழித்தோன்றியனவாக இருத்தற்கு இடமில்லை என்றும் பிராமி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் கருதப்படும் பீனிஷிய எழுத்துக்களிலிருந்து பண்டையக் காலத் தமிழ் மக்கள் இவ் வட்டெழுத்துக்களை அமைத்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் டாக்டர் பர்னல் கூறுகின்றனார் .(நடநஅநவேள டிக ளடிரவா iனேயைn யீயடயநடிபசயயீhலயீ.49). இவ்வறிஞர்களின் கருத்துக்கள் ஈண்டு ஆராயற்குரியன.

இந்தியாவில் வழங்கும் பழைய மொழிகளும் தமிழ் மொழியும் ஒன்று. இதற்குரிய இலக்கண நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம். அந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியனார் வடமொழி வியாகரண ஆசிரியராகிய பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. அத்துணைப் பழங்காலத்தே விளங்கிய அவ்வாசிரியர் வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது வட எழுத்துக் களை நீக்கித் தமிழ் எழுத்தாலே எழுத வேண்டுமென்று, `வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ- எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்ற எச்சவியற் சூத்திரத்தில் கூறியுள்ளனர். மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களோடு கூடிய வழி வரி வடிவில் உருவுதிரிதலைப் ‘புள்ளியில்லா எல்லாமெய்யும்’ என்று தொடங்கும் சூத்திரத்தில் அவ்வாசிரியர் குறித்துள்ளனர் அன்றியும்,ஆசிரியர் தொல்காப்பியனார், மெய்யெத்துக்களும் எகர ஒகர எழுத்துக்களும் புள்ளி பெற்று நிற்றல் வேண்டும் என்பதையும் மகரக்குறுக்கம் மெய்ப்புள்ளியோடு உள்ளே மற்றொரு புள்ளியும் பெறுதல் வேண்டும் என்பதையும் ‘மெய்யின்இயற்கை புள்ளியொடு நிலையல்’ ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ ‘உட்பெறு புள்ளி உருவா கும்மே’ என்ற சூத்திரங்களில் கூறியுள்ளனர். இவற்றால் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வழக்கில் இருந்தமை தெள்ளிதிற் புலப்படும். அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துக்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தான் சமண முனிவர்களின் மூலமாகத் தமிழ் நாட்டில் தோன்றிப் பரவியிருத்தல் வேண்டும். ஆகவே. பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழிக்குரிய தனி எழுத்துக்கள் இருந்தன என்பது தொல்காப்பியச் சூத்திரங்களால் பெறப்படுக்கின்றது அவ்வெழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என்பது தோற்றம். எனவே, பிராமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கள் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது.

வலக்கைப் புறத்திலிருந்து இடக்கைப் புறமாக எழுதப்பட்ட பீனிஷிய எழுத்துக்களிலிருந்து இடக்கைப் பக்கத்திலிருந்து வலக்கைப் பக்கமாக எழுதப்பட்ட வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்க முடியாது என்பது திண்ணம்.

ஆகவே, பண்டைத் தமிழ் எழுத்துக்களாகிய வட்டெழுத்துக்கள், தமிழ் மக்களாலேயே முற்காலத்தில் அமைக்கப் பெற்றவை என்பதும், அவ்வட்டெழுத்தின் திருந்திய வடிவங்களே இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் என்பதும் உணரற்பாலவாம். எனவே, தமிழ் எழுத்துக்கள் தமிழ் நாட்டிலேயே தோன்றிய தனி எழுத்துக்கள் ஆகும்.

தமிழ் இலக்கணங்களில் ஒன்றாகிய நன்னூலில் ஒலியைக் கொண்டு சொல்லப்பட்ட முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் ஆகியவற்றின் தொகை முந்நூற்றறுபத்தொன்பது. வரிவடிங்களைக் கொண்டு நோக்குமிடத்து உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் உயிர் மெய் இருநூற்றுப் பதினாறும் ஆய்தம் ஒன்றுமாகத் தமிழ் எழுத்துக்களின் தொகை இருநூற்று நாற்பத்தேழாகும்.

தமிழ் எழுத்துக்கள் அகர முதல் னகர இறுதியாக இக்காலத்து நெடுங்கணக்கினுள் காணப்படுவது போன்றே தொல்காப்பியனார் காலத்தும் முறைப்பட முதற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். அகர முதலிய பன்னிரண்டு உயிரெழுத்துக் களும் பிற எழுத்தின் உதவியின்றித் தனித்து ஒலிப்பனவாதலாலும், ககர முதலிய பதினெட்டு மெய்களும் அகர முதலிய உயிரெழுத்துக்ளோடு கூடி ஒலிப்பதல்லது தனித்தொலிக்கும் ஆற்றல் இல்லாதனவாதலாலும், உயிரெழுத்துக்கள் முன்னும் மெய்யெழுத்துக்கள் பின்னுமாக வைக்கப்பட்டுள்ளன. உயிரெழுத்துக்கள் அகர முதல் ஒளகாரம் இறுதியாக எழுதப்படுதற்கும், மெய்யெழுத்துக்கள் ககர முதல் னகர இறுதியாக எழுதப்படுதற்கும், ஏற்ற காரணங்களை ஆசிரியர் சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் விளங்கக் கூறியுள்ளனர். ஒலியின் பிறப்பு முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்துக்கள் அகர முதல் னகரம் ஈறாக வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

மிழலை நாடும் மிழலைக் கூற்றமும்


நம் தமிழகம், சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம், கொங்குமண்டலம், தொண்டைமண்டலம் என்னும் ஐந்து மண்டலங்களாக முற்காலத்திற் பிரிக்கப் பட்டிருந்தது என்பதைக் கற்றார் பலரும் அறிவர். அவற்றுள் ஒவ்வொன்றும் பல உள்நாடுகளையுடைய தாயிருந்தது. அவ்வுண்ணாடுகளுள் பல நாடுகள் எனவும் சில கூற்றங்கள் எனவும் அக்காலத்தில் வழங்கப்பெற்றன. நாடும் கூற்றமும் தற்காலத்துள்ள தாலுகாவைப் போன்றன எனலாம்.ஆனால் நாட்டிற்கும் கூற்றத்திற்கும் உள்ள வேறுபாடு யாது என்பது இப்போது புலப்படவில்லை.

இனி, பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுமிடத்து மிழலைக்கூற்றம் என்ற கூற்றம் ஒன்றும் அந்நாளில் நம் தமிழகத்தில் இருந்தன என்பது நன்கு புலப்படுகிறது. சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் தாம் அருளிய திருநாட்டுத் தொகையில் ‘மிழலை நாட்டு மிழலையே வெண்ணிநாட்டு மிழலையே’1 என்ற பாடற்பகுதியில் மிழலை நாட்டைக் குறித்திருப்பது அறியத்தக்கது. அன்றியும் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில்,

‘சூதநெருங்கு குலைத்தெங்கு பலவு பூகஞ் சூழ்படைத்தாய்
வீதி தோறும் நீற்றினொளி விரிய மேவி விளங்குபதி
நீதி வழுவா நெறியினராய் நிரவுங் குடியால் நெடுநிலத்து
மீது விளங்குத் தொன்மையது மிழலை நாட்டுப் (பெருமிழலை`2)

என்ற பாடலில் மிழலை நாட்டைக் கூறியிருப்பது உணரற் பாலதாகும்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மீது மாங்குடிகிழார் பாடியுள்ள ‘நெல்லரி யுமிருந் தொழுவர்’ என்று தோடங்கும் 24-ஆம் புறப்பாட்டில் மிழலைக்கூற்றம் கூறப்பெற்றுள்ளது. மிழலை நாடும் மிழலைக் கூற்றமும் ஒரே நாடுதான் என்பது ஆராய்ச்சியில் வல்ல சில அறிஞர் கருத்து. அன்னோர் கொள்கை வலியுடைத்தா என்பதை ஈண்டு ஆராய்வோம்.

1. மிழலைநாடு

மிழலைநாடு எனப்படுவது சோழமண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகிய இராசேந்திரசிங்கவள நாட்டின் உள்நாடுகளுள் ஒன்று என்பது கல்வெட்டுக்களாற் புலனாகின்றது.1 வளநாடு என்பது இந்நாளிலுள்ள ஜில்லாவைப் போன்றதாகும். இராசேந்திரசிங்கவளநாடு என்பது காவிரியாற்றின் வடகரையிலிருந்த ஒரு பெரு நிலப்பரப்பாகும். இவ் வளநாட்டில் சற்றேறக்குறைய இருபது உள் நாடுகள் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் மிழலை நாடு என்பதும் ஒன்று அது, சோழகேரளபுரம், சேய்ஞலூர், திருவாப்பாடி, திருந்துதேவன்குடி முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்டு நிலவிய ஒரு நாடாகும். இவ்வுண்மைகளை இராஜேந்திரசிங்க வளநாட்டு மிழலை நாட்டுச் சோழகேரள புரத்து வியாபாரி’2 எனவும், ‘இராஜேந்திர சிங்க வளநாட்டுப் சபையார் இடக்கடவ திருமெய்க்காப்பு ஓன்று’3 எனவும் போதரும் கல்வெட்டுக்களால் நன்கறியலாம். மிழலை நாட்டிலுள்ளதாகக் கல்வெட்டால் உணர்த்தப்படும் சோழ கேரளபுரம் என்பது இக்காலத்தில் சோழபுரம் என்று வழங்கப் படுகிறது . இது கும்கோணத்திற்கு வடகிழக்கே ஆறு மைல் தூரத்தில் திருப்பனந்தாள் செல்லும் பெருவழியில் உள்ளது. சேய்நல்லூர் என்பது சோழபுரத்திற்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கின்றது. சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவராகிய சண்டேசுவர நாயனார் தோன்றியருளிய பெருமை வாய்ந்தது. இதற்கண்மையிலுள்ள திருவாப்பாடி சண்டேசுவரர் பூசித்த சிவலிங்கப் பெருமான் உள்ளதலமாகும். மிழலை என்பது சோழபுரத்திற்குத் தெற்கே ஒன்றரை மைலில் உள்ளது. இது மிழலை நாட்டின் தலைநகரம்; முற்காலத்தில் பெருமிழலை என்ற பெயருடன் நிலவியது; அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவரும் சுந்தரமூர்த்திகள்பால் பேரன்பு பூண்டொழுகியவரும் ஆகிய பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி வாழ்ந்து வீடெய்திய திருப்பதியாகும். திருந்துதேவன்குடி என்பது மிழலைக்குத் தெற்கே ஒன்றரை மைலிலுள்ள ஒரு பாடல் பெற்ற தலமாகும்.

மிழலைநாட்டூர்களான சோழபுரம், சேய்நல்லூர்1, திருவாப்பாடி, மிழலை, திருந்துதேவன்குடி என்பவை இப்போது கும்பகோணம் தாலூகாவில் காவிரியாற்றிற்கு வடக்கே யுள்ளன இவற்றுள் திருவாப்பாடியும், சோழபுரமும் சேய்ஞலூரும் மண்ணியாற்றிற்குத் தெற்கே அண்மையில் இருக்கின்றன. மிழலைநாட்டிற்கு மேற்கே இன்னம்பர்நாடும் கிழக்கிலும் வடக்கிலும் மண்ணிநாடும் இருந்தன. எனவே, மிழலைநாடு எனப்படுவது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலூகாவில் காவிரியாற்றிற்கு வடக்கே மண்ணி யாற்றின் தென்கரை வரையில் அமைந்திருந்ததோர் உள்நாடு என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. ஆகவே, இது சோழ மண்டலத்திலிருந்த ஒரு நாடு என்பது தேற்றம்.

2. மிழலைக்கூற்றம்

மிழலைக்கூற்றம் என்பது முற்காலத்திற் பாண்டி மண்ட லத்தில் இருந்த உள்நாடுகளுள் ஒன்றாகும் அவ்வுண்மையை,

‘கோச்சடையவன்மரான திரிபுவனச் சக்ர
வர்த்திகள் சீவல்லபதேவற்கு யாண்டு இருபத்தஞ்சா
வது மேஷ நாயிற்றுப் பூர்வபக்ஷத்து ஏகாதசியும்
சனிக்கிழமையும் பெற்ற மகத்துநாள் பாண்டி
மண்டலத்து மிழலைக்கூற்றத்து ஒக்கூருடையார்.’

என்ற திருக்களர்க் கல்வெட்ட்லும் 1 வேறு சில கல்வெட்டுக் களாலும் 2 இனிதுணரலாம்.

இம்மிழலைகூற்றம் கீழ்க்கடலைச் சார்ந்திருந்த ஒரு பெரு நிலப்பரப்பு என்பதும், கடைச்சங்ககாலத்தில் வேள் எவ்விக்குரிய தாயிருந்தது என்பதும் 24-ஆம் புறப்பாட்டால் நன்கு வெளியா கின்றன.

வீரசோழியம் என்ற இலக்கணநூலின் ஆசிரியராகிய புத்தமித்தரன் என்பார், மிழலைக் கூற்றத்திலுள்ள பொன் பற்றியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குறுநிலமன்னர் என்பது,

‘ஈண்டுநூல் கண்டான் எழின்மிழலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே - மூண்டவரை
வெல்லும் படைத்தடைக்கை வெற்றிபுனை வீரன்றன்
சொல்லின் படியே தொகுத்து’

என்ற பாடலால் அறியப்படுகிறது

கி.பி.1063 முதல் 1070 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்தவனும் கங்கை கொண்டசோழன் புதல்வனும் ஆகிய வீரராசேந்திர சோழனே, பொன்பற்றி காவலன் புத்திமித்திரனைக் கொண்டு வீரசோழியம் என்ற நூலைச் செய்வித்தவன் என்பது,

மேவிய வெண்குடைச் செம்பியன் வீர ராசேந்திரன்றன்   நாவியல் செந்தமிழ்ச்சொல்’தேர்வீரசோழன் திருப்பெயரால் பூமேலுரைப்பன்.

என்னும் அவ்வாசிரியரது கூற்றுக்களால் தெள்ளிதிற் புலனா கின்றது. அவரது ஊராகிய மிழலைக்கூற்றத்துப் பொன்பற்றி என்பது இந்நாளில் பொன் பேத்தி என்றபெயருடன் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலூகாவில் உளது இம்மிழலைக்கூற்றத்தில் மணமேற்குடி என்ற ஊர் ஒன்று உளது என்பது ‘மிழலைக்கூற்றத்துக் கீழ்கூற்று மணமேற்குடி’ என்ற மாறமங்கலக் கல்வெட்டொன்றால்2 அறியப்படுகிறது. இது கீழ்க்கடலையடுத்துள்ளதோர் ஊராகும். சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவரும், மதுரையம்பதியில் நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பாண்டியற்கு அமைச்சராக விளங்கிய வரும் ஆகிய குலச்சிறைநாயனார் பிறந்த திருப்பதி இம்மணமேற்குடியே யாகும். அதனைக் ‘குருந்தவிழ்சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே’3 என்னும் நம்பியாண்டவர் நம்பியின் திருவாக்கினால் அறியலாம். அன்றியும் சேக்கிழார் மணமேற் குடியைப் பாண்டி நாட்டூர் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூர் இக்காலத்திற் பாண்டி நாட்டின் வட எல்லையாகிய வெள்ளாற்றிக்குத் தெற்கே அறந்தாங்கித் தாலூகாவில் உளது.

எனவே, மிழலைக்கூற்றத்தூர்களான பொன்பற்றியும் மணமேற்குடியும் இந்நாளில் அறந்தாங்கித் தாலூகாவில் இருத்தல் உணரற்பாலாதாம்.

மணிவாசாகப் பெருமானை இறைவன் ஆட்கொண்டருளிய தலமாகிய திருப்பெருந்துறை மிழலைக்கூற்றத்திலிருந்ததோர் ஊர் என்பது கல்வெட்டுக் களாலும்1 பெரும் புற்றப்புலியூர் நம்பியின் திருவிளையாடற்புராணத்தாலும் அறியப்படுகின்றது. அவ்வூர் இக்காலத்தில்ஆவுடையார் கோவில் என்ற பெயரோடு அறந்தாங்கித் தாலூக்காவில் வெள்ளாற்றிற்குத் தெற்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது. ஆகவே பொன்பற்றி, மணமேற் குடி, திருப்பெருந்துறை ஆகிய ஊர்களைத் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய மிழலைக்கூற்றம் எனப்படுவது சோழ மண்டலத்திற்குத் தென்னெல்லையாக வுள்ள வெள்ளாற்றிற்குத் தெற்கும் திருப்புவனவாசலுக் கண்மையில் கடலோடு கலக்கும் பாம்பாற்றிற்கு வடக்கும் பாண்டிமண்டலத்தி லிருந்த ஓர் உள்நாடு என்பது தெள்ளிது.

இம் மிழலைக்கூற்றம் , புதுக்கோட்டை நாட்டில் ஒரு பகுதியையும் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவின் தென்பகுதியையும் இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு பகுதியையும் தன்பாற் கொண்டு மேற்கூறு, நடுவிற்கூறு, கீழ்க்கூறு என்னும் முப்பிரிவுகளையுடைய பெரு நாடாகப் பாண்டிமண்டலத்தின் வடபகுதியில் அமைந்திருந்தது என்பது கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது. இதனையே பிற்காலத்தார் மிழலைநாடு எனவும் வழங்கியுள்ளனர். சர்க்கரைப் புலவர் வழியினராய சர்க்கரைமுத்து முருகப்புலவர் என்பார் இதன்மீது மிழலைச் சதகம் என்ற நூலொன்று பாடியிருத்தல் அறியத்தக்கது.

இதுகாறும் விளக்கியவற்றால் மிழலைநாடும் மிழலைக் கூற்றமும் ஒன்றிற்கொன்று மிகச் சேய்மையி லிருந்த வெவ்வேறு நாடுகள் என்பதும், அவற்றுள் முன்னது, சோழமண்டத்திலே கும்பகோணந் தாலூகாவில் காவிரி யாற்றிற்கு வடக்கும் மண்ணியாற்றிற்குத் தெற்குமுள்ள நிலப்பரப்பில் இருந்தது என்பதும், பின்னது பாண்டி மண்டலத்திலே புதுக்கோட்டை நாட்டிலும் அறந்தாங்கித் தாலூகாவிலும் ஒடும் வெள்ளாற்றிற்குத் தெற்கும் பாம்பாற்றிற்கு வடக்குமுள்ள நிலப்பரப்பில் இருந்தது என்பதும், பிற்காலத்தார் இவ்விரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் மிழலைநாடு என்ற பெயரால் வழங்கியுள்ளனர் என்பதும் நன்கு புலனாதல் காண்க.

பழையாறை நகர்


கடைச்சங்கநாளில் அரசாண்ட சோழமன்னர்க்குக் கடற்கரை நகரமாகிய காவிரிர்பூம்பட்டினமும் உள்நாட்டு நகரமாகிய உறையூரும் சிறந்த தலைநகர் களாக விளங்கியமை போலப் பிற்காலச் சோழர்க்குத் தஞ்சைமாநகரும் கங்கை கொண்ட சோழபுரமும் பழையாறை நகரும் தலைநகர்களாக நிலவின. அவற்றுள், பழையாறை நகரைப் பற்றிய செய்திகள் இதுகாறும் ஆராய்ந்து விளக்கப்படவில்லை. ஆதலால். இத் தொன்னகரைப்பற்றி ஈண்டு ஆராய்வோம்.இருக்கும் இடம் - இது, கும்பகோணத்திற்குத் தென்மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறு என்னும் பெயருடன் இந்நாளில் ஒருசிற்றூராக உளது. இது முற்காலத்தில் ஐந்து மைல் நீளமும் மூன்றுமைல் அகலமும் உள்ள ஒரு பெரிய நகரமாயிருந்தது. ‘தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து - பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை’ என்று பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழாரடிகள் கூறியிருப்பதும் இச்செய்தியை வலியுறுத்துவாதாகும்.

தொன்மை - கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய திருநாவுக்கரசு சுவாமிகள் பழையாறை வடதளியைப் பாடியிருத்தலாலும்1 அவர் காலத்திலிருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் பழையாறையிலுள்ள பட்டீச்சுரத்தைப் பாடியிருத் தலாலும்2 இந்நகர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

வரலாறு - திருநாவுக்கரசர் பழையாறை வடதளியை வணங்கச் சென்றபோது, அங்கிருந்த சிவலிங்கத்தைச் சமணர்கள் மறைத்து விட்டனர் என்றும், அதுபற்றி அடிகள் வருந்தினாராக, இந்நகரிலிருந்த அரசன் அதனையறிந்து அடிகள் துன்பத்தைப் போக்கி வடதளிப் பெருமானுக்குச் சிறந்த விமானம் எடுப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தமும் அளித்தான் என்றும் சேக்கிழாரடிகள் தம் பெரியபுராணத்திற் கூறியுள்ளனர். எனவே, ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் காலத்தில் இந்நகரில் ஓர் அரசன் இருந்தனன் என்று தெரிகிறது. அவன் பல்லவ அரசனாகிய முதல் மகேந்திரவர்மனுக்குக் கீழ் அரசாண்ட ஒரு சோழர்குலக் குறுநில மன்னனாதல் வேண்டும்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த நத்திவர்ம பல்லவ மல்லன் என்னும் இரண்டாம் நந்திவர்மன் பழையாறையில் ஓர் அரண்மனையும் நந்திபுர விண்ணகரம் என்னும் திருமால் கோயிலும் கட்டி இந்நாகரை, மாமல்லபுரமும் காஞ்சியும் போலத் தனக்குரிய சிறந்த நகரமாக வைத்துக் கொண்டான். அன்றியும் இந்நகரின் பெயரை நந்திபுரம் என்றும் மாற்றிவிட்டான். பிற்காலத்தில் சோழர் ஆட்சிக் காலத்திலும், இந்நகர் பழையாறையாகிய நந்தியும் என்று வழங்கப்பட்டுள்ளது. (ஐளே. 30 டிக 1931, 365 யனே 267 டிக 1924). இந்நகரில் இரண்டாம் நந்திவர்மன் கட்டிய நந்திபுரவிண்ணகரம் இவன் காலத்திருந்த திருமங்கை மன்னனால் பாடப்பட்டுள்ளது. இவ்வேந்தன் இந்நகரில் தங்கியிருந்த போது தமிழ் வேந்தர்களாலும் சித்திரமாயன் என்னும் பல்லவ அரசகுமாரனாலும் முற்றுகையிடப்பட்டான் என்றும், அந்தநாட்களில் இவன் படைத் தலைவன் உதயசந்திரன் என்பான் பெரும்போர் புரிந்து இவனை விடுவித்தான் என்றும் உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன. (ளு.ஐ.ஐ.ஏடிட. ஐஐ. சூடி. 74) எனவே சோழர்குலக் குறுநிலமன்னன்பா லிருந்த இந்நகரை, இரண்டாம் நந்திவர்மன் கைப்பற்றிக் கொள்ளவே தமிழ் வேந்தர்கள் ஒன்று சேர்ந்து இதனை மீட்க முயன்றும் இயலவில்லை போலும். இவன் பேரனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் பழையாறு என்னும் இந்நகரில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன என்று நந்திக் கலம்பகம் கூறுகின்றது.

பிற்காலச் சோழர்களின் முதல்வனாகிய விசயாலயன் முன்னோர் அங்கிருந்திருத்தல் வேண்டும். அவன் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழ நாட்டின் தலைநகராக வைத்துக் கொண்ட பின்னரும் சோழ அரச குடும்பத்தினர் இந்நகரில் இருந்து வந்தனர். முதற் பராந்தகச் சோழன் பேரனாகிய இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரசோழன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்நகரிலிருந்து அரசாண்டான் என்று தெரிகிறது. வீரசோழியவுரையிற் காணப்படும் பழைய பாடல்கள் ‘மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச்சோழர்’ (வீரசோ-யாப்பு. 11) என்றும், ‘பழையாறை நகர்ச் சுந்தரச்சோழர்’ (வீரசோ- அலங்.10) என்றும் கூறுவதால் இவ்வுண்மையை உணரலாம்.

முதல்இராசராசசோழன் தமக்கையாகிய குந்தவைப் பிராட்டியார் தஞ்சைமாநகரில் கி.பி. 1015-ல் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்னும் மருத்துவ நிலையம் ஒன்று நிறுவி, அதற்கு மருத்துவபோகமாக நிலமும் பொருளும் அளித்து, அவ்வுத்தரவைப் பழையாறையிலுள்ள அரண்மனை யிலிருந்து அனுப்பிய செய்தி ஒரு கல்வெட்டிற் காணப்படுகிறது. (ஐளே. 248 டிக 1923).

கங்கை கொண்ட சோழன் என்று வழங்கும் முதல் இராசேந்திர சோழன், பழையாறையில் தன் அரண்மனையிலிருந்து கொண்டு கி.பி. 1015-ல் கோயிலுக்குரிய நிலங்களை யெல்லாம் அளக்குமாறு உத்தரவனுப்பினான் என்று உய்யக் கொண்டான் திருமலையிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது, (ஐசூனள 463 டிக 1908). கி.பி. 1017-ல் இவ்வேந்தன் இந் நகரிலிருந் தனுப்பிய மற்றோர் உத்தரவு வடஆற்காடு ஜில்லாவிலுள்ள எம்பாடி என்ற ஊரில் வரையப்பெற்றுள்ளது (585 டிக 1906). இவன், பழையாறை நகர்க்கு முடிகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டு, கங்கைகொண்ட சோழபுரம் அமைப்பதற்கு முன் அங்கிருந்து அரசாண்டான் என்று தெரிகிறது (271 டிக 1927). சோழ மன்னர்களின் சரிதங்களை ஆராய்வதற்குப் பயன்படுவனவாய்ச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள திருவாலங் காட்டுச் செப்பேடுகள், இவன் பழையாறையாகிய முடிகொண்ட சோழபுரத்திலிருந்து கி.பி. 1019-ல் அளித்தனவேயாம்.(ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐஐ சூடி. 205) இம்மாநகரின் தெற்கெல்லை யில் ஓடும் முடிகொண்ட சோழப் பேராறும் இவ்வரசன் வெட்டுவித்ததே.

கி.பி. 1112-ல் முதற் குலோத்துங்கசோழன் இந்நகரிலிருந்த தன் அரண்மனையில் வாணாதிராசன் என்ற சிங்காசனத்தில் வீற்றிருந்தபோது தேவாதானங்களைப் பற்றி அனுப்பி ஓர் உத்தரவு அம்பர்மகாளாத்தில் வரையப்பட்டுள்ளது.1 இவன் மகன் வீக்கிரமசோழன் கி.பி. 1122-ல் முடிகொண்ட சோழ புரத்தில் தன் அரண்மனையிலிருந்து தென் ஆற்காடு ஜில்லாவி லுள்ள எலவாணாசூர்க் கோவிலுக்கு நிவந்தம் அளித்த செய்தி அவ்வூரில் வரையப்பட்டுள்ளது. (ஐளே. 168 டிக 1906). இவன் பேரன் இரண்டாம் இராசராசன் இந்நகரின் பெயரை இராசராசபுரம் என்று மாற்றித் தன் தலைநகராக வைத்துக் கொண்டான் என்று தெரிகிறது.

விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவேந்தர் காலத்தும் வாழ்ந்த புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், அம் மூவருள் இரண்டாம் இராசராசன் ஆட்சிக்காலத்தில் தாம் பாடிய தக்கயாகப்பரணி என்னும் நூலில் கடைதிறப்பு என்ற பகுதியில்,

“உம்ப ராளும் அமராபு ரந்தவிர லோக
பாலரெயில் காவல்கூர்
செம்பொன் மாடநிரை ராச ராசபுரி வீதி
மாதர்கடை திறமினோ”

என்பது முதலான தாழிசைகளிற் பாராட்டியிருக்கும் இராசராசபுரி என்பது இப்பழையாறை நகரேயாம். இஃது அந்நாளில் இரண்டாம் இராசராசனுக்குத் தலைநகராயிருந்ததா லன்றி இங்ஙனம் கடைதிறப்பில் பாராட்டப் பெற்றிராது என்பது ஒருதலை. அன்றியும் இறுதியில் தக்கனுக்கு அருள் புரியும் பொருட்டு இராசராசபுரியிலுள்ள இறைவன் இடபாரூடராய் எழுந்தருளினார் என்று அப் புலவர் கூறியிருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாம்.

தக்கயாகபரணியின் பதிப்பாசிரியர், கடைத்திறப்பில் உள்ள ஒரு தாழிசையின் அடியில் இராசராசபுரி என்பது தஞ்சாவூர் என்று குறிப்பெழுதி யுள்ளனர். இதுகாறும் எடுக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் தஞ்சாவூருக்கு இராசராசபுரி என்ற மற்றொரு பெயர் இருந்தது என்பது புலனாகவில்லை. ஆனால் பழையாறையாகிய இராசராபுரம் என்ற தொடர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள கோயிலுக்கு இராசராபுரி என்று வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதி அங்ஙனம் குறிப்பெழுதினர் போலும்.எனவே, பழையாறையே இராசராசபுரி என்றும் இராசராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது என்க.

பதிமூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மூன்றாம் இராசராச சோழனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிய முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் சோழ நாட்டில் முடிகொண்ட சோழபுரத்தில் விசயாபிடேகமும் செய்து கொண்டு பழையாறையாகிய முடிகொண்ட சோழபுரத்தையும் சோணாட்டையும் தன்பால் வந்து அடைக்கலம் புகுந்த சோழ மன்னனுக்கு மீண்டும் வழங்கினானென்று உணர்த்துகின்றது.

சோழ மன்னனை வென்று சோழநாட்டைத் தன்னடிப்படுத்திய பாண்டிவேந்தன் இம்மாநகரில் வெற்றிமுடி சூடிக் கொண்டான் என்ற செய்தி, இது முற்காலத்திலே சோழர்க் குரிய தலைநகரங்களில் ஒன்றாயிருந்திருத்தல் வேண்டு மென்பதை நன்கு வலியுறுத்துவதாகும்.

எனவே, கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையில் இம்மாநகர் பழையாறை, நந்திபுரம், முடிகொண்ட சோழபுரம், இராசராசபுரம், என்னும் பெயர்களை சிலவேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் எய்தி அன்னோர்க்குரிய இரண்டாவது தலைநகராகச் சிறப்புடன் விளங்கிக் கொண்டிருந்தது எனலாம். அன்றியும் சோழர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களுள் ஒன்றாகவும் இது நிலவிற்று என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்க தாகும்.

இந்நகரிலிருந்த கோயில்கள் - (1) பழையாறை வடதளி. (2) பழையாறை மேற்றளி. (3) பழையாறைத் தென்றளி (4) பட்டீச்சுரம் (5) திருச்சத்திமுற்றம் (6) அருண்மொழிதேவச்சுரம் (7) பஞ்சவன்மாதேவீச்சுரம் (8) அரிச்சந்திரம் (9) இராசராசேச்சுரம் (10) கோபிநாதப் பெருமாள் கோயில் (11) நந்திபுரவிண்ணகரம் (12) சுந்தரப் பெருமாள் கோயில் என்பன.

இவற்றுள் வடதளி, மேற்றளி, திருச்சத்திமுற்றம், பட்டீச் சுரம் என்னுந் தலங்கள் சைவசமயகுரவர்களால் பாடப் பெற்றவை; நந்திபுரவிண்ணகரம் திருமங்கை யாழ்வாரால் பாடப்பெற்றது.

இதன் தற்காலநிலை - காலச்சக்கரத்தின் சுழற்சியினால் உலகில் எத்துணையோ மாறுதல்கள் ஏற்படுகின்றன. பெரிய நகரங்கள் போர், பூகம்பம், கடல்கோள் முதலான நிகழ்ச்சிகளால் அழிவெய்திச் சிற்றூர்களாக மாறிவிடு கின்றன. பல சிற்றூர்கள் ஒன்றாகச் சேர்க்கப்பெற்றுப் பெரியதொரு நகரமாக அமைதலும் உண்டு. தலைநகரங்கட்குப் பிறவேந்தர் படை யெழுச்சிகளால் ஆபத்தும் அழிவும் ஏற்படுவது இயல்பு என்பது அண்மையில் முடிவுற்ற மாபெரும் உலகப்போரால் நன்கறியக் கிடக்கின்றது. அத்தகைய போர் நிகழ்ச்சி யொன்றால் பழையாறை மாநகர் அழிவிற்குள்ளாகி இந்நாளிற் சில சிற்றூர்களாகச் சிதறிக் கிடக்கின்றது.

அவ்வூர்கள் பழையாறை, முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், திருமத்தடி, சோழமாளிகை, ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், சுந்தரப்பெருமாள் கோயில், தாராசுரம், நாதன்கோயில், இராசராசேந்திரப் பேட்டை, அரிச்சந்திபுரம், கோணப்பெருமாள் கோயில் என்பனவாம்.

இவற்றுள், திருமத்தடி என்பது திருமேற்றளி என்பதன் மரூஉ. சோழமாளிகை என்பது சோழமன்னர்களின் அரண் மனையிருந்த இடம். இது, சுமார் ஒரு மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உடையது. இதில் எஞ்சியிருந்த மதிற்சுவரின் ஒருபகுதி 75 ஆண்டுகட்கு முன் நம் அரசாங்கத் தினரால் இடிக்கப்பெற்றது என்று முதியோர்கள் கூறுகின்றனர். இதன் நிலப்பரப்பு முழுமையும் செங்கற்களாகவே இன்றும் உளது. சுந்தரப் பெருமாள்கோயில் என்பது கும்பகோணத்திற்கு மேற்கே புகைவண்டி நிலையமுள்ள ஓர் ஊராக இருக்கின்றது. தாராசுரம் என்பது இராசராபுரம் என்பதன் மருஉ. இது கும்பகோணத்திற்கு மேற்கே புகைவண்டி நிலையமுள்ள ஊர். நாதன்கோயில் என்பது நந்திபுர விண்ணகரம் அமைந்துள்ள இடம். இராசராசேந்திரப்பேட்டை என்பது கும்பகோணத்தின் மேற்பகுதி. இவ்விடத்திற் சோழர்களின் நாணயங்கள் அடிக்குமிடம் ஒன்றிருந்தது என்று தெரிகிறது. கோணப் பெருமாள் கோயில் என்பது கோபீநாதப் பெருமாள் கோயில் என்பதன் மரூஉ. பம்பைப்படை, ஆரியப்படை, புதுப்படை, மணப்படை என்னும் நான்கு படைவீடுகள் இருந்த இடங்கள் அப்பெயர்களோடு நான்கு சிற்றூர்களாக இன்றும் உள்ளன. இந்நிலப்பரப்புக்களெல்லாம் அரிசிலாற்றுக்குத் தெற்கும் முடிகொண்டான் ஆற்றிற்கும் வடக்கும் வளம்பொருந்திய இடங்களாகவே இன்றும் இருக்கின்றன.பழையாறை என்னும் இம்மாநகரின் தொன்மைச் சிறப்புக்களெல்லாம் எடுத்துணர்த்துவன இதிலுள்ள கோயில்களும் அவற்றில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களுமேயாம்.

இதில், சோழமாளிகை என்ற பகுதியையாவது அரசாங்கத்தார் தோண்டுவித்தால் எத்துணையோ உண்மைச் செய்திகள் வெளியாகும் என்பது திண்ணம்.

நந்தனாரது ஆதனூர்


சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவரும், நந்தனார் என்று வழங்கப் பெறுபவரும் ஆகிய திருநாளைப் போவார் நாயனாரது வரலாற்றை, நம் தமிழகத்தில் அறியாதார் யாவர்? அப்பெரியார் பிறந்து வாழ்ந்த திருப்பதி ஆதனூர் என்பர், திருத்தொண்டர் திருவந்தாதியின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பிகள். ஆதனூர் என்று வழங்கும் ஊர்கள் நம் நாட்டில் பல இருத்தல் யாவரும் அறிந்ததே. அன்பினாலோ, ஆராய்ச்சியின் மையாலோ, பலரும் தம் தம் ஊருக்கு அண்மையிலுள்ள ஆதனூரே, நந்தனாரது ஊர் என்று கூறி வருகின்றனர். எனவே, உண்மையில் நந்தனார் பிறந்த பேறு எய்திய பதி யாது என்பது ஆராய்தற் குரியதாகு மன்றோ?

அறுபான் மும்மை நாயன்மார்களது வரலாறுகளைக் கூறும் திருத் தொண்டர் புராணம், நத்தனாரது ஆதனூர் யாண்டையது என்பதை அறிந்து கோடற்குப் பெரிதும் உதவுகின்றது. சேக்கிழாரடிகள், அப்புராணத்தில் ஆதனூரைப் பற்றிக் கூறியிருப்பது,

பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகும்
திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிகள்
திரைக்கரத்தால்
முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கையேற்கும்
அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கா நாட்டாதனூர்

என்பது. இவ்வரிய செய்யுளால், ஆதனூர் என்பது சோழ மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மேற்காநாட்டில் உளது என்னும் செய்தி வெளியாகின்றது.

சோழ மண்டலத்திருந்த உள் நாடுகள் எல்லாவற்றையும் கல்வெட்டு களின் துணைக்கொண்டு துருவி நோக்குங்கால், மேற்காநாடு என்ற பெயருடைய நாடு ஒன்று கொள்ளிடத்தின் வடகரையில் முன்னர் இருந்தது என்று தெரிகிறது. கொள்ளிடத்தின் வட கரையிலுள்ள பாடல் பெற்ற தலமாகிய ஓமாம்புலியூர், அம் மேற்கா நாட்டில் உள்ள ஒரு திருப்பதி என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, சிதம்பரந் தாலூகாவிலுள்ள ஓமாம்புலியூர் என்னும் தலத்திற்கு அண்மையில் நந்தனாரது ஆதனூர் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, ஓமாம்புலியூர்க்கு மேற்கே, ஒன்றரை மைல் தூரத்தில் கொள்ளிடக்கரையிலுள்ள ஆதனூரே, நந்தனார் பிறந்தருளிய பெருமையுடையது என்பது வெளிப்படை. கொள்ளிடத்தின் அலைகள் வந்து அடிக்குமாறு, அதற்கு அத்துணை அண்மையில் ஆதனூர் அமைந்துள்ளது என்று சேக்கிழாரடிகள் குறித்திருப்பது ஈண்டு அறியத்தக்கது. இவ்வாதனூர்க்கு அண்மையிலுள்ள பாடல்பெற்ற தலமாகிய கடம்பூரும், மேற்கா நாட்டில் உள்ளதோர் திருப்பதி என்று அப்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆதனூரைப்பற்றிய எனது கொள்கையை வலியுறுத்தல் காண்க. எனவே, மேற்கா நாட்டிலுள்ள பாடல்பெற்ற தலங்களாகிய ஓமாம்புலியூர்க்கும், கடம்பூர்க்கும், இடையிலுள்ள ஆதனூரே, நந்தனாரது ஊர் என்பது நன்கு துணியப்படும். இனித் திருப்பனந்தாளுக்கு வடக்கேயுள்ள கீழை அணைக் கட்டுக்குக் கிழக்கே, ஏழு மைல் தூரத்தில், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ளது இவ்வாதனூர் என்பது அறியற்பாலதாகும்.

மாற்பிடுகு பெருங்கிணறு


மாற்பிடுகு பெருங்கிணறு என்பது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் உள்ள திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலின் தென் பக்கத்தில் உள்ளது. ஈண்டுக் குறிக்கப்பெற்ற திருமால் கோயில் ஆழ்வார் களாற் பாடப்பெற்ற பெருமையுடையதாகும். அவ்வூரிலே சிவாலயம் ஒன்றும் உளது. அது மலையிற் குடைந்ததொரு கோயில் என்பது பார்ப்போர்க்கு நன்கு புலப்படும். அக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை இந்நாளில் சம்புநாதர் என்று வழங்குகின்றனர். ஆனால் அங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் திருவானைக்கல் பெருமானடிகள் என்று கூறுகின்றன. அவ்விருகோயில்களிலும் சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பல்லவர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அவற்றுள், இரண்டு கல்வெட்டுக்கள் ஒருகிணற்றின் மேற்பக்கத்தில் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கிணற்றை வெட்டுவித்தவன் யாவன்? என்பதையும், அதற்கு இடப்பெற்ற பெயர் யாது? என்பதையும், கிணறு வெட்டப் பெற்ற காலத்தையும் அறிவிக்கின்றது. மற்றொன்று அறுசீர்விருத்தமாக உள்ளது. இக்கல்வெட்டுக்கள் இரண்டையும் அடியிற் காண்க.

I
1.  ஸ்வஸ்திஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தின் வழித் தோன்றிய பல்லவதிலக குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவதெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான், ஆலம்பாக்க விசைய நல்லூழான் (2) தம்பி கம்பன் அரையன் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு; இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறென்பது. இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத் தெழுநூற்றுவரும்.

II
1.  கண்டார் காணா வுலகத்திற்
    காதல் செய்து நில்லாதேய்
    பண்டேய் பரமன் படைத்தநாள்
    பார்த்து நின்று நையாதேய்
2.  தண்டார் முப்பு வந்துன்னைத்
    தளர்ச்செய்து நில்லாமுன்
    உண்டே லுண்டு மிக்கது
    உலகம் மறிய வைம்மினேய்

இவற்றுள், முதற்கல்வெட்டு வரலாற்றுண்மைகள் சிலவற்றை நன்குணர்த்துகின்றது. இது, பல்லவகுலத்தினர் பாரத்துவாசகோத்திரத்தினர் என்பதையும் அக்குலத்திலே தந்திவர்மன் என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான் என்பதையும் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு அம் மன்னனது ஆட்சியின் நான்காமாண்டில் தோண்டத் தொடங்கப் பெற்று ஐந்தாமாண்டில் முடிவெய்தியது என்பதையும், அப்பெருங் கிணற்றைத் தோண்டுவித்தவன் ஆலம்பாக்க விசையநல்லூழான் தம்பியான கம்பன் அரையன் என்பதையும், அதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதையும் இனிது புலப்படுத்துதல் அறியற்பாலதாம்.

நந்திவர்மப் பல்லவமல்லனது உதயேந்திரச் செப்பேடு களிலும் காசாக்குடிச் செப்பேடுகளிலும் பரத்துவாசமுனிவர், பல்லவமன்னர்களின் முன்னோர்களுள் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளனர். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐ. சூடிள. 73 & 74). எனவே, பல்லவர்கள் பாரத்துவாச கோத்திரத்தினர் என்று இக்கல் வெட்டு உணர்த்துவது மிகப் பொருத்தமேயாம். இதிற் கூறப்பெற்றுள்ள தந்திவர்மன் என்பான் நந்திவர்மப் பல்லவ மல்லனுடைய மகன்; கி.பி. 775 முதல் கி.பி. 826 முடிய நம் தமிழகத்திற் சோழமண்டலத்தையும் தொண்ட மண்டலத்தையும் ஒருங்கே ஆட்சிபுரிந்த நெடுமுடிவேந்தன். ஆகவே இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 780-ல் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணற்றின் வேலை முடிவெய்தி, அது மக்கட்குப் பயன்படும் நிலையில் இருந்தது என்பது ஒருதலை.

இப்பெருங்கிணற்றைத் தோண்டுவித்தவன் கம்பன் அரையன் என்பான். இவன் ஆலம்பாக்கவிசைய நல்லூழானுக்குத் தம்பி என்று இக்கல்வெட்டு உணர்த்துவது குறிப்பிடத்தக்க தாகும். ஆலம்பாக்க விசைய நல்லூழான் என்பவன் தந்திவர்மன் தந்தையாகிய நந்திவர்மப் பல்லவ மல்லனது ஆட்சியின் பிற்பகுதியில் அவனுக்கு அமைச்சனாக விளங்கியவன். இச்செய்தி, அவ்வேந்தனது ஆட்சியின் 62-ம் ஆண்டாகிய கி.பி 772-ல் வெளியிடப்பெற்ற பட்டத்தாள் மங்கலச் செப்பேடுகளால்1 அறியப்படுகின்றது. பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையனும், தன் தமையனைப் போலவே பல்லவ வேந்தர்களது ஆட்சியில் உயர்நிலையில் இருந்தவனாதல் வேண்டும். அரையன் என்பது அரசனால் வழங்கப்பெற்ற பட்டமாகும். கம்பன் என்பது இத்தலைவனது இயற்பெயர். எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் என்பது இயற்பெயராக வழங்கிவந்தமை உணரற்பாலது. உடன் பிறப்பினராய் நிலவிய இவ் விரு தலைவர்களும் ஆலம்பாக்கம் என்னும் ஊரில் பிறந்து, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல்லவ வேந்தர்களின் அரசாங்கத்தில் உயர்நிலையில் அமர்ந்து பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் வெளியாகின்றன. இவற்றுள் சில செய்திகளை முதற் கல்வெட்டிலும் காணலாம்.

இனி, ஆலம்பாக்கம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் லால்குடி என்று இந்நாளில் வழங்கும் திருத்துவத் துறையிலிருந்து அரியலூருக்குச் செல்லும் பெருவழியில் 12-ஆவது மைலில் உள்ளது. இது, பல்லவர்களது ஆட்சிக் காலங்களில் தந்திவர்ம மங்கலம் என்னும் பெயரெய்தி யிருந்தது; சோழ மன்னர்களது ஆட்சிக்காலங்களில் மதுராந்தச் சதுர்வேதி மங்கலம் என்று வழங்கி வந்தது. சோழ மண்டலத்தில் அக்காலத்திலிருந்த வளநாடுகளுள் ஒன்றாகிய இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய பொய்கை நாட்டிலிருந்த ஊர்களுள் ஒன்று. திருவெள்ளறையிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி என்னும் ஏரி ஒன்றிருந்தது என்பது கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது. இருவேறு ஊர்களில் ஒரு பெருங்கிணறும் ஓர் ஏரியும் மாற்பிடுகு என்னும் பெயரால் வழங்கப்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இதனைக் கூர்ந்து நோக்குமிடத்து, திருவெள்ளறையில் பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையன் என்பவனே தன் ஊராகிய ஆலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்திருத்தல் கூடும் என்று கருதுவதற்கு இடமுளது. ஒருகால் இவன் தமையன் ஆலம்பாக்க விசையநல்லூழான் என்பவன் அவ்வேரியை அமைத்திருப்பினும் இருக்கலாம். ஆலம்பாக்கத்திற்குத் தந்திவர்ம மங்கலம் என்னும் பெயரொன்று அக்காலத்தில் வழங்கி வந்தமையை நுணுகி யாராயுங்கால், இவ்வூர், பல்லவ வேந்தனாகிய தந்திவர்மனால், உடன் பிறப்பினராய இவ்விரு தலைவர்க்கும் முற்றூட்டாக அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது.

இனி, திருவெள்ளறையில் தோன்டுவிக்கப்பெற்ற கிணற்றின் பெயர் ஆராயற்பாலதாம். முதற்கல்வெட்டு, ‘இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிண றென்பது’ என்று கூறுவதால், நாகரிகம் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும் பிற கட்டிடங்களுக்கும் அரசர்கள், வள்ளல்கள், அறிஞர், பெரியோர் முதலியோர்களுடைய பெயர்களை இட்டு வழங்குவது போல, அந்நாளிலும் வழங்கிவந்தனர் என்பது நன்கறியக் கிடக்கின்றது. மாற்பிடுகு என்பது பல்லவர்ட்கு முற்காலத்தில் வழங்கிய ஒரு சிறந்த பட்டமாகும். மால் பிடுகு என்னும் இத்தொடரின் பொருள் பேரிடி என்பதேயாம். இப்பட்டத்தையும் விடேல்விடுகு, பகாப்பிடுகு, பெரும்பிடுகு என்னும் பட்டங்களையும் உடைய சில முத்தரையர்களின் கல்வெட்டுக்கள், செந்தலை, திருச்செந்துறை, திருமெய்யம் என்னும் ஊர்களில் உள்ளன. அன்னோர், பல்லவ வேந்தர்கட்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த குறுநிலமன்னர் ஆவர். எனவே, இப்பட்டங்கள் பல்லவர்களால் அவர்கட்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

செங்கற்பட்டு ஜில்லா வல்லங் குகைக் கோயிவிலுள்ள கல்வெட் டொன்று, பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திர வர்மன் என்பான் பகாப்பிடுகு என்னும் பட்டமுடையவனா யிருந்தனன் என்றுணர்த்துகின்றது. இவன் வழித் தோன்றல்களுள் ஒருவனாகிய முதல் பரமேசுவரவர்மன் பெரும்பிடுகு என்னும் பட்டத்துடன் விளங்கினானென்று கூரத்துச் செப்பேடுகள் கூறு கின்றன. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. ஞயபந. 154). தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்பவன் விடேல்விடுகு என்னும் பட்டமுடையவன் என்பது நந்திக் கலம்பகத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தையாகிய தந்திவர்மன் என்னும் பல்லவ வேந்தனே மாற்பிடுகு என்னும் பட்டத்துடன் நிலவியவன்.

எனவே, கி.பி. 780-ஆம் ஆண்டில் திருவெள்ளறையில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் அமைக்கப்பெற்ற பெருங்கிணறு கி.பி. 775 முதல் 826 முடிய அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மனது பட்டப்பெயரால் மாற்பிடுகு பெருங்கிணறு என்று பெயரிடப்பெற்று அந்நாளில் விளங்கியது என்பது நன்கு துணியப்படும்.

மண்ணில்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணுட் பெருந்தகையாட் பெற்றோனும் - உண்ணுநீர்க்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா வுடம்பெய் தினார்.

இராசராசன் கிணறு


இராசராசன் கிணறு என்பது காஞ்சிமா நகரிலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் பெருவழியில் மாமண்டூருக்குத் தெற்கே ஐந்து கல் தூரத்திலுள்ள உக்கல் என்ற ஊரில் மேலைப் பெருவழியிலுள்ளது. இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள புவனி மாணிக்க விஷ்ணுகிரகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு நன்கு விளக்குகின்றது. அது பின்வருமாறு-

1.  ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியுந் தடிகை பாடியும்.

2.  குடமலைநாடும் கொல்லமுங் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற்

3.  கொண்ட தன்னெழில் வளரூழியு ளெல்லா யாண்டுந்தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்குயாண்

4.  டு 29 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீவிக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்து மேலைப்

5.  பெருவழியில் ஸ்ரீ ராஜராஜ தேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த

6.  விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணனா ரூரன் இவனே ஸ்ரீ ராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீரிறைப்பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் 23 குறுணி ஆ

7.  கத் திங்கள் 6-க்கு நெல் 30 கலமும் ஸ்ரீராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசதம் நெல்1 23 (குறுணி) ஆக திங்கள் 6-க்கு நெல்லும் 30 கலமும் இப் பந்தலுக்கு குசக்கலம் இடு

8.  வார்க்கு திங்கள் 1-க்கு நெல்லு ¾ இருதூணி ஆக திங்கள் 6-க்கு நெல்லு 4கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டு தோறும் புதுக்குப் புறமாக வைச்ச

9.  நெல்லு 2 கலம் ¾ (இருதூணி) ஆக நெல் 66 கலம் ¾ (இருதூணி) இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறைத்ரவியமும் கிரையத்ரவியமும் கொண்டு இறை இழிச்சி…1

இக்கல்வெட்டினால் பல செய்திகள் அறியக் கிடக்கின்றன. இதில் குறிக்கப்பெற்றுள்ள கோராஜகேசரி வர்மன் இராஜராஜன் சுந்தரசோழன் என்று வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது மகன், தஞ்சை மாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்த பெருமையுடையவன்; கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் சோழ மண்டலத்தையும் பிற மண்டலங்களையும் சிறப்புடன் ஆட்சி புரிந்த பெருந்தகை யாளன்; இவ்வேந்தனது திருப்பெயரால் இராஜராஜன் கிணறு அமைக்கப்பட்டது. இக்கிணற்றைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசன் பெயரால் அமைப்பித்துத் தண்ணீர் இறைத்தற்கு நிபந்தம் விட்டவன் முதல் இராஜராஜ சோழனது பணி மகனும் சோழ மண்டலத்தில் நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரில் வாழ்ந்த தலைவனு மாகிய கண்ணன் ஆரூரன் என்பான்.

நித்த விநோத வளநாடு என்பது முதல் இராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகும். சோழ மண்டலம் முதல் இராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர், பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததேயன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்க வில்லை. முதல் இராஜராஜனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில்தான் சோழ மண்டலம் இராஜேந்திர சிங்க வளநாடு, இராசாச்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, அருண்மொழி தேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்ற ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. வளநாட்டைத் தற்காலத்தி லுள்ள ஜில்லாவுக்கும் நாட்டைத் தாலூகாவிற்கும் ஒப்பாகக் கூறுதல் பொருந்தும். வளநாட்டின் உட்பகுதிகளுள் சிலவற்றைக் கூற்றங்கள் என்று வழங்குவதும் உண்டு. மேலே குறித்துள்ள ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் இராஜராஜ சோழனது இயற்பெயரும் புனை பெயர்களுமேயாம். பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைத்திருந்த நிலப்பரப்பேயாகும்.

மேலே வரைந்துள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்ற நித்த விநோத வளநாடு என்பது தஞ்சாவூர் தாலூகாவின் கீழ்ப் பகுதியும் பாவநாசத் தாலூகாவின் மேற்பகுதியும் மன்னார்குடித் தாலூகாவின் வடபகுதியும், அடங்கிய நிலப்பரப்பாகும். ஆவூர் கூற்றம், கிழார்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், நல்லூர் நாடு, கரம்பை நாடு, முடிச் சோணாடு என்பவை நித்த விநோத வளநாட்டின் உட்பகுதிகளாகவுள்ள சில நாடுகள் ஆகும்.

இனி, ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலூகாவிலுள்ளதும் சைவசமயா சாரியர்களால் பாடப்பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சுரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது மாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகத் கொண்டு இதனைச் சூழ்ந்திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. எனவே, தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலூகா ஆவூரில் வாழ்ந்த தலைவனும் முதல் இராஜராஜ சோழனது பணிமகனாகிய கண்ணன் ஆரூரன் என்பவனே செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசனாகிய இராஜராஜன் பெயரால் கிணறு தோண்டுவித்துத் தண்ணீர் இறைப்பார்க்கு நிபந்தம் விட்டவன் என்றுணர்க.

இக்கல்வெட்டில் காணப்படும் அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க முத்திரையிடப் பெற்ற மரக்கால் ஆகும். அருமொழி தேவன் என்பது முதல் இராஜராஜனுக்குரிய பெயர்களுள் ஒன்றாம். இவ்வேந்தன் காலத்திருந்த அரசாங்க மரக்காலுக்கு ‘இராசகேசரி’ என்ற பெயர் வழங்கிற்று என்றும் இம்மன்னர் பெருமானால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரம் திருக்கோயிலிலிருந்த மரக்காலுக்கு ஆடவல்லான் என்ற பெயர் வழங்கிற்று என்றும் கல்வெட்டுக் களால் அறியப்படுகின்றன. இங்குக் குறிக்கப்பெற்ற அருமொழி தேவன் இராசகேசரி, ஆடவல்லான் என்ற மூன்று மரக்கால் களும் ஒரே அளவுள்ளவை என்பது ஈண்டு உணர்தற்குரியது.

நாள்தோறும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பவனுக்கு நாள் ஒன்றுக்குக் கூலி இரண்டு மரக்கால் நெல்லும் கொடுக்கப் பட்டு வந்தது என்பது இக்கல்வெட்டால் புலப்படுகின்றது. அன்றியும், திங்கள் தோறும் மட்பாண்டங்கள் இடுவோனுக்குத் திங்கள் ஒன்றுக்கு எட்டு மரக்கால் நெல் கூலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் நேருமாயின் அவற்றைப் புதுக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு இரு கலனே எட்டு மரக்கால் நெல் நிபந்தமாக வைக்கப் பட்டுள்ளது.

இனி, இக்கல்வெட்டில் காணப்படும் பெருவழி (சுடியன) பணிமகன் (ளுநசஎயவே) புதுக்குப்புறம் (ஊடிளவ கடிச சநயீயசைiபே) என்ற செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந் தன்மை யனவா யிருக்கின்றன.

‘மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப்
பெண்ணுப் பெருந்தகையாள் பெற்றானும் - உண்ணுநீர்க்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா வுடம் பெய்தினார்’ - ஒரு வெண்பா

கொல்லம் ஆண்டு


இந்நாளில் கிறிஸ்தவாப்தம் நம் நாட்டில் வழங்கி வருதல் போல முற்காலத்தில் சகாப்தம் கலியப்தம் என்பன வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றன. மலை மண்டலமாகிய மலையாள தேயத்தில் மாத்திரம் கொல்லம் ஆண்டு முன்னர் வழங்கி வந்தமையோடு இக்காலத்தும் வழங்கி வருகின்றது. இக் கொல்லம் ஆண்டு, எப்போது எங்ஙனம் தொடங்கியது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்த்திய அறிஞர்கள் ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். அஃது அறுபத்துமூன்று அடியார்களுள் ஒருவரும், சேரநாட்டில் திருவஞ்சைக் களத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய முடிமன்னரும், சிவபெருமான்மீது திருக்கைலாய ஞானஉலா, பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தங்கள் இயற்றியவரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் தம் ஆட்சியை விட்டு நீங்கிக் கயிலாயஞ் சென்ற ஆண்டாகிய கி.பி. 825 முதல்தான் கொல்லம் ஆண்டு மலைமண்டத்தில் வழங்கத் தொடங்கியது என்பதேயாம். ஆனால், அந்நாட்டிற் காணப்படும் கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து, கொல்லம் ஆண்டின் வரலாறு அன்னார் முடிபிற்கு முரணாக உளது. அன்றியும் அக்கல்வெட்டுக்களில், கொல்லம் ஆண்டு வரையப் பெற்றிருப்பதோடு அது தோன்றியமைக்குக் காரணமும் காணப்படுகின்றது. அவற்றுள், இரு கல்வெட்டுக்களை அடியிற் காண்க.

I
1.  ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந்தோன்றி இருநூற்றைம் பத்திரண்டாமாண்டு நாஞ்சிநாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து கண்ணன் தேவனான உத்தம பாண்டியச் சிலை செட்டியேன் இந்நகரத்(2)தே… விலை கொண்டுடைய பூமி கொட்டியார் குளத்தில் தெற்கடைந்த நெடுங்கண்ணும் மேலைத் தடியும் பேய் காட்டில் நீர் பாய்கின்ற காலுக்கு வடக்குப் பிராயோடு குழிக்குமே(3) ற்கும் மாப்பாண்டி வயக்கலுக்குத் தெற்கும் இந்நான்கெல்லைக் குட்பட்ட பூமி இந்நகரத்துப் பவித்திரமாணிக்க விண்ணகரெம் பெருமானுக்கு நித்தம் நானாழியரிசி திருவமுதுக்குச் சந்திராத்தவரை செல்வதாக வைச்சுக் கொடுத்தேன் கண்ணன்(4) தேவனான உத்தம பாண்டியர் சிலை செட்டியேன்.

II
1.  ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந்தோன்றி இருநூற்றுத் தோண்ணூற்றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு நாஞ்சிநாட்டதியனூரான அழகியபாண்டியபுரத்து நகரத்தோம் இந்நகரத்துத் திருமேற்கோயில் பவித் (2) திரமாணிக்க விண்ணகரெம் பெருமானுக்கு இந்த நகரத்தோம் சந்திராதித்த வரை செல்வதாக நீர்வார்த்துக் கொடுத்த நிலமாவது,2 இக்கல்வெட்டுக்களால் புதிய கொல்லம் அமைக்க பெற்ற ஆண்டு முதல்தான் கொல்லம் ஆண்டு வழங்கத் தொடங்கியது என்பது நன்கறியக் கிடக்கின்றது.

இனி, ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும் தங்குறிப்பினவே திசைச் சொற்கிளவி’ என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் தெய்வச் சிலையார் கூறியிருப்பது கொல்லத்தைப் பற்றிய சில செய்திகளை இனிது புலப் படுத்துகின்றது. அது, ‘பன்னிரு நிலமாவன - குமரியாற்றின் தென் கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடசமும் குன்றகமும், கிழக்குப் பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும்’ என்பதாம்.

நம் தமிழ்மொழியில் கலந்து வழங்கும் திசைச்சொற்கள் எவ்வெந்நாடு களிலிருந்து வந்துள்ளன என்பதை விளக்க வந்த உரையாசிரியர் தெய்வச் சிலையார், குமரியாற்றின் தென்கரையில் கொல்லம் என்ற நாடு முன்னர் இருந்தது என்றும், அதனைக் கடல்கொண்ட பிறகு அவ்வாற்றிற்கு வடக்கே புதிய கொல்லத்தை அமைத்து மக்கள் அங்குக் குடியேறினர் என்றும் நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருப்பது அரிய உண்மைச் செய்தியாகும்.

எனவே, பழைய கொல்லம் அழிந்த பிறகு இக்காலத்துள்ள கொல்லத்தைப் புதிதாக அமைத்து மக்கள் குடியேறிய காலத்தில் தான் கொல்லம் ஆண்டு முதலில் தொடங்கியது என்பது உறுதியாதல் காண்க. இவ்வுண்மையைக் ‘கொல்லந் தோன்றி இருநூற்றுத் தொண்ணூற் றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு’ எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர் மொழிகள் வலியுறுத்தி நிற்றல் அறியற்பாலதாகும்.

கி.பி. 822-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்து விட்டது என்றும் கி.பி. 825-ஆம் ஆண்டில் புதிய கொல்லம் அமைக்கப் பெற்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, கி.பி. 825-ல் புதிய கொல்லம் அமைக்கப்பெற்ற காலந்தான் கொல்லம் ஆண்டின் தொடக்கமாகும்.

இனி, சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு கயிலாயஞ் சென்றனர் என்பது பெரிய புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். ஈண்டு அவ் யாண்டு யாது என்பது ஆராயற்பாலதாகும்.

சுந்தரமூர்த்திகள் தாம் திருவாய் மொழிந்தருளிய திருத் தொண்டத் தொகையில் ‘கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் சுற்சிங்கனடியார்க்கு மடியேன்’ என்று கூறியிருக்கின்றனர். இவ் வடியில் வந்துள்ள ‘காக்கின்ற’ என்னும் நிகழ்காலப் பெயரெச்சம் காடவர் கோனாகிய சுழற்சிங்கன் நம் சுவாமிகள் காலத்து மன்னன் என்பதை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக் குரிய பெயர்களுள் ஒன்று. ஆகவே, இக் கழற்சிங்கன் பல்லவ மன்னனாக இருத்தல் வேண்டும். அன்றியும், இவ்வேந்தன் அறுபத்துமூன்று அடியார்களுள் வைத்துச் சுந்தரமூர்த்திகளாற் போற்றப்பட்டிருத்தலாற் சிறந்த சிவபக்தனாக இருத்தல் வேண்டும்.

நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் சுழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனும் இல்லை. ஆனால் நரசிங்கவர்மன் என்ற பெயருடைய பல்லவ அரசர்கள் இருவர் இருந்துள்ளனர். அவர்களுள், முதல் நரசிங்கவர்மன் சிறுத்தொண்ட நாயனாரைத் தன் படைத் தலைவராகக் கொண்டவன்; அவரை வடபுலத்திற்கு அனுப்பி மேலைச்சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்று கி.பி. 642-ல் அவனது தலை நகராகிய வாதாபியைக் கைப்பற்றி அங்குவெற்றித் தூண் நிறுவியவன்; அதுபற்றி ‘வாதாவி கொண்ட நரசிங்கவர்மன்’ என்று அந்நாளில் வழங்கப் பெற்றவன். எனவே, இவ்வீரச் செயல்களை நிகழ்த்திய முதல் நரசிங்கவர்மன் திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தினன் என்பது தெள்ளிது. ஆகவே, சுந்தர மூர்த்திகள் அவ்வரசன் காலத்தவரல்ல என்பது திண்ணம்.

இனி, இரண்டாம் நரசிங்கவர்மன், இராசசிங்கவர்மன் என்னும் பிறிதொரு பெயரும் உடையவன். காசிமா நகரிலுள்ள இராசசிம்ம பல்லவசேச்சுரம் என்னும் கைலாய நாதர் கோயிலை எடுப்பித்தவன். அக்கோயிலிற் காணப்படும் இவனது வட மொழிக் கல்வெட்டொன்று இவனைச் ‘சிவ சூடாமணி’ என்று புகழ்ந்து கூறுகின்றது. (ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே. ஏடிட. ஐ. சூடி. 24) இவ் வேந்தனது பெருமையை உணர்த்தும் இருநூற்றைம்பது சிறப்புப் பெயர்கள் அக்கோயிலில் வரையப்பட்டுள்ளன. அவற்றுள், ‘சங்கர பக்தன்’ ‘ஈசுவர பக்தன்’ என்ற சிறப்புப் பெயர்கள் குறிப்பிடத்தக்கனவாகும். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. சூடி. 25 ஏநசளந 55).

அன்றியும், மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்தில் இவ்வரசன் எடுப்பித்துள்ள இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற கோயிலிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இவனைச் ‘சிவசூடாமணி’ என்று புகழ்ந்து கூறுதல் அறியத்தக்கது.

காசாக்குடிச் செப்பேடுகள் பரமேசுவரனே இராசசிங்க பல்லவனாக அவதரித்தனர் என்று சிறப்பித்துக் கூறுகின்றன. உதயேந்திரச் செப்பேடுகள் இவனைப் ‘பரம மாகேசுவரன்’ என்று புகழ்ந்துரைக்கின்றன (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐ. சூடி. 74). வேலூர்ப் பாளையச் செப்பேடுகள் இவ்வேந்தன் காஞ்சிமா நகரில் சிவபெருமானுக்குக் கயிலாயத்தை ஒத்த கோயில் எடுப்பித்த பெருமையுடையவன் என்றுணர்த்து கின்றன. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ.ஐ. சூடி. 98). எனவே, இவன் சிறந்த சிவபக்தி யுடையவனாய்த் திகழ்ந்தவன் என்பது நன்கு வெளியாதல் காண்க.

இம்மன்னன் காஞ்சியில் கயிலாயநாதர்கோயில் எடுப்பித்த காலத்தில்தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக்கோயில் கட்டினாரென்பது ஆராய்ச்சி யாளர்களின் முடிபாகும். சிவபெருமான் தாம் பூசலாரது மனக்கோயிலுக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின் அரசன் எடுப்பித்த கற்றளிக்குக் கடவுண் மங்கலஞ்செய்யக் குறிப்பிட்டிருந்த நாளை மாற்றி வேறொரு நாளில் அதனைச் செய்யுமாறு கனவிற் கூறியருளினார் என்பதும், பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்திகளாம். அக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்று, நற்குணங்கள் விலகி நிற்கும் கலியுகத்தில் இவன் அசரீரி வாக்கினைக் கேட்ட பெருமையுடையவன் என்று கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. சூடி. 24 ஏநசளந 7).

ஆகவே, இவன் ஈடும் எடுப்புமற்ற சிவபக்தனாக அந்நாளில் இருந் திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இத்துணைச் சிறந்த சிவபக்தி வாய்ந்த இப்பல்லவ வேந்தனே, சுந்தர மூர்த்திசுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் கூறப்பெற்ற காடவர்கோன் சுழற்சிங்கனாதல் வேண்டும்.

இனி, இவ்வேந்தன் இயற்பெயரால் குறிக்கப்படாமல் ‘சுழற்சிங்கன்’ என்று அடிகளால் கூறப்பெற்றமைக்குக் காரணம் யாது என்பது ஆராய்தற்குரியதாகும்.

மாமல்லபுரத்தில் இவ்வரசன் எடுப்பித்த கோயில்களுள் ஒன்று க்ஷத்திரிய சிம்மபல்லவேச்சுரம் என்ற பெயருடைய தாயிருந்ததால் இவனுக்கு க்ஷத்திரியசிம்மன் என்னும் பெயரும் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, இவன் நரசிம்மன், இராசசிம்மன், க்ஷத்திரியசிம்மன் என்ற பெயர்களை யுடையவனாயிருந்தமை உணரற்பாலது. சிம்மன் அல்லது சிங்கன் என்பது அம்மூன்று பெயர்களிலும் இறுதியில் பொதுவாக அமைந்திருத்தலால், அரசர்க்குரிய பெருமையையும் வீரத்தையும் அறிவிக்கும் கழல் என்னும் மொழியை அதற்குமுன் பெய்து கழற்சிங்கன் என்று சுந்தரமூர்த்திகள் கூறியுள்ளனர் என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. ஆகவே, அடிகளால் பாராட்டப் பெற்ற ‘காடவர் கோன் கழற்சிங்கன்’ என்பான் காஞ்சி மாநகரிலிருந்து கி.பி. 680 முதல் 705 வரையில் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனே என்பது நன்கு துணியப்படும். அடிகளோடு கயிலாயஞ்சென்ற சேரமான் பெருமான் நாயனார் வாழ்ந்த காலமும் அதுவேயாகும்.

எனவே, கொல்லம் ஆண்டு தொடங்குவதற்குச் சற்றேறக் குறைய நூற்றிருபது ஆண்டுகட்கு முன்னரே சேரமான் பெருமாள் நாயனார் தம் ஆட்சியை நீத்துக் கயிலாயஞ் சென்றிருத்தல் வேண்டும். ஆகவே, அப் பெரியார் தம் நாட்டை விட்டுக் கயிலாயஞ் சென்ற ஆண்டில் கொல்லம் ஆண்டு தொடங்கியது என்று கூறுவது பொருந்தாதென்க.

இதுகாறும் விளக்கியவற்றால், பழைய கொல்லம் கடல் கோளால் அழிவெய்திய பிறகு புதிய கொல்லம் அமைத்து மக்கள் அங்குக் குடியேறிய ஆண்டில் தான் கொல்லம் ஆண்டும் தொடங்கப்பெற்றது என்பது நன்கு புலனாதல் காண்க.

திருக்கைக் கோட்டி


பண்டைக் காலத்தில், நம் முன்னோர்கள் நூல்கள் எல்லாவற்றையும் பனையேடுகளில் எழுதிப் படித்து வந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. ஏட்டுச் சுவடிகள் பழுதுற்று அழிந்து போகுந் தன்மையவாகும். ஆதலால், அரியநூல்கள், இறவாது என்றும் நின்று நிலவுமாறு, அவற்றைச் செப்பேடு களில் எழுதிவைக்கும் வழக்கமும், முற்காலத்தில் நம் நாட்டில் இருந்து வந்தது. ‘அன்பினைந்திணை’ என்று தொடங்குவதும், அறுபது சூத்திரங்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளதுமாகிய, ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் நூல், மூன்று செப்பிதழ கத்து வரையப்பெற்று, ஆலவாய் அவிர்சடைக் கடவுள் பீடத்தின் கீழ் இடப்பெற்றிருந்தது என்னும் வரலாறும் ஈண்டு உணரற்பாலது.

இலண்டன் மாநகரிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் வெள்ளி யேடுகளில், பாலி மொழியில் எழுதப்பெற்ற சிறு நூல் ஒன்று உளதாம். அன்றியும், ஈயத் தகட்டில் எழுதப்பெற்ற பௌத்த நூல் ஒன்றும் அங்கிருக்கின்றதாம்.

கி.பி. 1070 முதல் 1120 வரையில் ஆட்சி புரிந்த முதற் குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பான், சைவ சமய குரவர் மூவரும் பாடிய தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிலுள்ள கோயிலில் வைத்தனன் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.2 அக்கல்வெட்டு இனிய வெண்பாவாக அமைந்துள்ளது. அது,

முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவர்
ஒத்தமைத்த செப்பேட்டின் உள்ளெழுதி - இத்தலத்து
எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன்
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று

என்பதாம். எனவே, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பிகள் தேடிக் கொணர்ந்து, திருமுறைகளாகத் தொகுத்த பின்னர், அப் பதிகங்கள் அழிந்து போகாதவாறு, தில்லை மாநகரில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் செப்பேடுகளில் எழுதிவைக்கப்பட்டன என்பது இங்கு அறியத்தக்க தாகும். அன்றியும், தேவாரத் திருமுறைகள் சிவாலயங்களில் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்தன என்பதும், அவற்றைக் கண்காணிப்பதற்கு ஒரு தமிழ் விரகரும், இறைவன் திருமுன் திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வார் சிலரும், அந்நாளில் ஆலயங்களில் இருந்து வந்தனர் என்பதும், திரு முறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என்று வழங்கப்பட்டு வந்தது என்பதும் சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன. அத்தகைய கல்வெட்டுக்களுள் ஒன்று, சீர்காழியிலுள்ள திருஞான சம்பந்த மூர்த்திகள் கோயில் கருப்பகிரகத்தின் தென்புறத்தில் உள்ளது. அது, ‘திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4ஆவது இராஜதி ராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக நாயிறு முதல் கிராம காரியஞ் செய்கிற பெருமக்களோம் ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத் தமிழ்விரகர் கண்டு இக்கோயிற் திருக்கைக் கோட்டியில் எழுத்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுதருளிவித்தும் மற்றும் புதிதாக எழுந்திருளிவிக்கும் திருமுறைகள் எழுந்தளி வித்தும் திருமுறை பூசித்துமிருக்கைக்கு இவ்வூர் காசுகொள்ளா இறையிலியாக இட்ட நிலம் இவ்வூர் சண்டேஸ்வரவதிக்குக் கிழக்கு நீரோடு வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று இரண்டாஞ் சதுரத்துகீழ் இறையான் குடிபால் பாரத்துவாசி ஸ்ரீகாழி நாடுடையான் திருபெண்காடுயுடையான் நிலத்து விளைநிலம்… இந்நிலம் இருமாவரை அரைக்காணி முந்திரிகை… ..இனினிலஞ் சூழ்ந்த குலையும் திடலும் குளமும் கிழக்கடைய கொழ…. மேற்கடைய குன குடியிருப்புத் திடர் நிலமும் சுத்தமலி வதிக்கு மேற்கு நின்ற.. வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று மூன்றாம் சதுரத்துப் பாலாசிரியன் மாதேவன் ..நிலத்து வடமேற்கடைய புன்செய் நிலத்து உடைப் புன்செய் நிலம் அரை மாவும் உட்படக் கைக்கொண்டு சந்திராதித்த வரை காசுகொள்ளா இறையிலியாகவும் சில்வரி பெருவரி வெட்டி கொள்ளாதோமாகவும் சொன்னோம் இந்நிலங் கைக்கொண்டு அனுபவித்துத் திருமுறை திருக்காப்பு நீக்கி இப்படியேம் திருமாளிகையிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக் முட்டையாள் கொள்க. பணியால் ஊர்க்கணக்குப் பிரியன் எழுத்து,’ என்பதாம். இஃது அரிய செய்திகளை அறிவிக்கும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். சீர்காழிக் கோயிலிலுள்ள திருக்கைக் கோட்டியில் தேவாரத் திருமுறைகள் வைத்து வழிபாடு செய்யப் பெற்று வந்தன என்பதும், அத் திருமுறை ஏடுகள் பழுதுற்ற போது, அற்றைப் புதுக்குதற்கு ஒரு தமிழ் விரகர் இருந்தனர் என்பதும், அவ்வூர்ச் சபையார், அவற்றின் வழிபாடு முதலியவற்றிற்கு, இறையிலி நிலம் அளித்துப் போற்றி வந்தனர் என்பதும், இக் கல்வெட்டினால் நன்கு அறியக் கிடக்கின்றன. இங்ஙனம் சிவாலயங்களில் வைத்துப் போற்றப்பட்டு வந்த தேவாரத் திருமுறைகள் செப்பேடுகளாகவும், ஏட்டுச் சுவடி களாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை.’

இனி, நாகப்பட்டினம் தாலூகாவிலுள்ள திருக்காராயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு, அவ்வூர் ஆலயத்துத் திருக்கைக் கோட்டியில் திருப்பதிகம் ஓதுவார் சிலர்க்கு உணவளிக்க இறையிலி நிலம் விடப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது.1 திருஞான சம்பந்தருக்கும் திருநாவுகரசருக்கும் சிவபெருமான் பொற்காசு அளித்தருளிய தலமாகிய திருவீழிமிழலையில், நரசிங்கதேவன் என்ற தலைவன் ஒருவனால், திருக்கைக் கோட்டி மண்டபம் கட்டப் பெற்றது என்பது, அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படு கின்றது.2 இந் நாளில் கோவிலூர் என்று வழங்கப்பெறும் திருவுசாத்தானம் என்னுந் திருப்பதியிலுள்ள திருக்கைக்கோட்டி ஓதுவார்க்கு இராஜகம்பீர சோழியவரையன் என்பான் இறையிலி நிலம் அளித்தனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.3 எனவே, தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என்று முற்காலத்தில் வழங்கப்பெற்று வந்தமை காண்க.

தஞ்சாவூர்


சென்னை இராச்சியத்திலுள்ள பெரிய நகரங்களுள் தஞ்சாவூரும் ஒன்றாகும். இம்மாநகர் இந்நாளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தலைநகராகச் சிறப்புடன் விளங்குவதை யாவரும் காணலாம். இப்போதுள்ள சில பெரிய நகரங்கள் முன்னே சிற்றூர்களாயிருந்து ஆங்கிலேயர் ஆட்சியில் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் மாநகர்களாகிப் பெருமை பெற்றுள்ளன என்பது வரலாற்றாராய்ச்சியால் வெளியாகின்றது. தஞ்சாவூரோ அவ்வாறு அண்மையில் தோன்றி வளர்ச்சி எய்திய நகரமன்று, இது மிக்க பழமை வாய்ந்த நகரம் ஆகும். ஏழாம் நூற்றாண்டில் நிலவிய சைவசமய குரவர்களுள் ஒருவராகிய அப்பரடிகளை தம் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் ‘தஞ்சைத்தளிக் குளத்தார்’ எனவும், nக்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் ‘தஞ்சை’ எனவும் கூறிச் சிறப்பித்திருத்தலால் இந்நகர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே புகழுடன் விளங்கியதாதல் வேண்டும். முத்தரையர் என்ற பட்டத்துடன் எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு களில் சோழ மண்டலத்தில் அரசாண்ட சிற்றரசர்களுக்கு இது தலைநகரமாக இருந்தது என்பது திருக்காட்டுப்பள்ளியின் பக்கத்திலுள்ள செந்தலைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக் களாலும் பிற ஆதாரங்களாலும் அறியப்படுகின்றது. முத்தரையர் என்பார் முதலில் பாண்டியர்கட்கும் பிறகு பல்லவர்கட்கும் திறை செலுத்திக் கொண்டு அவர்கட்குக் கீழிருந்த குறுநில மன்னர் குடியினர் ஆவர். எட்டாம் நூற்றாண்டிலிருந்த பெரும் பிடுகு முத்தரையனான சுவரன்மாறன் என்பவனைத் தஞ்சைக் கோன்’ எனவும், ‘தஞ்சை நற்புகழாளன்’ எனவும் செந்தலைக் கல்வெட்டுக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியாராகிய திருமங்கை யாழ்வார் தம் தஞ்சைப் பாசுரத்தில் ‘வம்புலாஞ் சோலை மாமதின் தஞ்சை’ என்று குறித்துள்ளமையால், அக்காலத்தில் இந்நகர் சிறந்த மதில் அரண் உடையதாக இருந்தது என்பது தெள்ளிது. முத்தரையர் ஆட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பிற்காலச் சோழர் பேரரசில்தான் இது பல்வகைச் சிறப்புகளும் எய்தி மாபெருந் தலைநகராகிப் புகழுடன் விளங்குவதாயிற்று.

பல்லாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர்நிலைக்குக் கொண்டுவர அடிகோலியவனும் பிற்காலச் சோழர்களுள் முதல் மன்னனும் ஆகிய விஜயாலயசோழன் என்பான், முத்தரையர் மரபினனாகிய குறுநில மன்னனைப் போரில் வென்று தஞ்சை மாநகரைக் கைப்பற்றித் தன் தலைநகராக வைத்துக் கொண்டான். இது 846-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். இச்செய்தி கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடு களிலும் வீராராசேந்திர சோழனது கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. அன்றியும், தென்னார்க் காடு மாவட்டத்தில் திருக் கோவிலூர்க் கண்மையிலுள்ள வீர சோழ புரத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்று, விஜயாலய சோழனைத் ‘தஞ்சை கொண்ட கோப்பரகேசரி வர்மர்’ என்று குறிப்பிடுவதும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். தான் நிகழ்த்திய போர்களில் வெற்றி பெறுமாறு அருள் புரிந்த துர்க்கைக்குத் தன் தலைநகராகிய தஞ்சாவூரில் இவ்வேந்தன் ஒரு கோயில் அமைத்து வழிபாடு புரிந்தனன் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. அவ்வம்மையின் பெயர் நிசும்பசூதனி என்று தெரிகிறது. இப்பெயருடைய துர்க்கையின் கோயில் இப்போது தஞ்சை மாநகரில் காணப்பட வில்லை. எனினும், தஞ்சை மாநகரின் மேலைக் கோட்டை வாயிலில் இந்நாளிலுள்ள கோடியம்மன் கோயிலே அந்தத் துர்க்கையின் கோயிலாக இருத்தல் வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். கோடியம்மன் கோயில் காளியின் கோயிலாகவே காணப்படுவதால் அன்னோர் கருத்து ஒருவாறு பொருந்தும் எனலாம்.

விஜயாலய சோழன் பேரனும் ஆதித்த சோழன் புதல்வனும் ஆகிய முதற் பாராந்தக சோழனது ஆட்சிக் காலத்தேதான் தஞ்சை மாநகரின் வடபால் ஓடும் வடவாறு என்ற ஆறு வெட்டப் பெற்றது. அதற்கு வீரசோழ வடவாறு என்று இவ்வேந்தனது சிறப்புப் பெயர் அந்நாளில் இடப்பட்டிருந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. பொது மக்கள் நலங்கருதித் தன் தலைநகர்க்கு அணித்ததாக அவ்வாற்றை இவன் வெட்டுவித்திருப்பது குறிப்பிடத்தக்கதோர் அரிய செயலாகும். கருவூர்த்தேவர் தஞ்சை இராச ராசேச்சுரமுடைய சிவபெருமான் மீது பாடியுள்ள திருவிசைப்பாப் பதிகத்தில் ‘மறிதிரை வடவாற்றிடு புனல் மதகில் வாழ்முதலை எற்றுநீர்க் கிடங்கு’ என்று அவ்வாற்றைச் சிறப்பித் துள்ளமை உணரற்பாலது. முதற்பராந்தக சோழனுடைய புதல்வராகிய கண்டராதித்த சோழர் தில்லையம்பலவாணர் மீது பாடியுள்ள திருவிசைப்பாப் பதிகத்தின் இறுதிப்பாடலாகிய திருக்கடைக் காப்பில் தம்மை ‘தஞ்சையர் கோன் கலந்த ஆராவின் சொற் கண்டாதித்தன்’ என்று குறித்துள்ளமை காணலாம்.

985 முதல் 1014 வரையில் ஆட்சிபுரிந்த முதல் இராசராச சோழன் ஆளுகையில்தான் தஞ்சை மாநகரம் பல்வகைச் சிறப்புக்களும் ஒருங்கே எய்தி மிக்க உயர்நிலையில் அமைந்தது என்பது தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள பல கல்வெட்டுக் களால் நன்கறியப்படுகின்றது. இவ்வேந்தன் சிறந்த சிவபக்தன்; சிவபாத சேகரன் என்ற சிறப்புப் பெயர் எய்தியவன். இவன் தன் பெயராகிய இராசராசன் என்பது, என்றும் நின்று நிலவுமாறு தலைநகராகிய தஞ்சாவூரில் மாபெருங்கோயில் ஒன்றை எடுப்பித்து, அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு, நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் பொருளும் நிலமும் மிகுதியாக வழங்கிச் சிறப்பித்துள்ளனன்.

அம்மாடக் கோயில், பிற்காலச் சோழர்காலச் சிற்பத் திறத்திற்கு எடுத்துக் காட்டாகவும், இராசராச சோழனுடைய பெருமைக்கும் புழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்க மாகவும், காண்போர் கண்களைப் பிணித்து யாவரும் வியந்து நோக்குமாறு வானளாவ நின்று நிலவுவதும் பலரும் அறிந்த தொன்றாகும். அப்பெருங் கோயில் கல்வொட்டொன்றில் இவ்வரசர் பெருமான் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராஜ ராஜஸ்வரம்’ என்று பெருமிதமும் பேரன்பும் தொனிக்குமாறு குறிப்பிட்டுள்ளமை அறியத்தக்கதாகும். இக்கல்வெட்டுப் பகுதியினால் தஞ்சை மாநகர், சோழ மண்டலத்தில் பாண்டிய குலாசனி வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய தஞ்சாவூர்க் கூற்றத்தில் இருந்தமை நன்கு புலப்படுதல் காண்க.

இம்மன்னர் பிரான் எடுப்பித்துள்ள இராசராசேச்சுரம் என்ற திருக்கற்றளி, 216 அடி உயரமுள்ள நடு விமானத் தோடு 793 அடி நீளமும் 397 அடி அகலமுமுள்ள பெருங்கோயிலாய்த் தமிழ் மக்களின் பண்டைப் பெருமையையும் நாகரிகத்தையும் உலகத்தார்க்கு உணர்த்திக் கொண்டு தஞ்சை மாநகர்க்கு அணி செய்யும் ஒப்பற்ற ஒரு முடிமணியாய் இன்றும் விளங்குகிறது. சோழர்கால ஓவியத்தின் சிறப்பினையும் இத்திருக்கோயிலி லிருந்து நன்கறியலாம்.

முதல் இராசராச சோழன் காலத்தவரான கருவூர்த் தேவர் இராசராசேச்சுரமுடைய பெருமான்மீது பாடியுள்ள திருவிசைப் பாப் பதிகத்தில்,

‘குடைகெழு நிருபர்
முடியோடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு
குவையோங்கு
இடைகெழு மாடத்திஞ்சி
சூழ் தஞ்சை’

என்று தம் காலத்தில் தஞ்சை மாநகர் எய்தியிருந்த பெருஞ் சிறப்பினைக் கூறியுள்ளனர். இதன் பொருள் குடைகளையுடைய அரசர்களின் முடிகள் ஒன்றோடொன்று மோதுவதால் உதிர்ந்த ஒள்ளிய மணிகள் குவிந்து கிடக்கும் இடங்களையுடைய மாடங்கள் நிறைந்ததும் மதில் சூழப்பெற்றதுமாகிய தஞ்சையம்பதி என்பதாம். இதில் குறிக்கப்பட்டுள்ள அரசர்கள் இராசராச சோழனுக்குத் திறை செலுத்தும் பொருட்டுத் தஞ்சை மாநகர்க்கு வந்து தங்கியிருந்த குறுநில மன்னராவர். கடல் போன்ற ஆரவாரம் மிகுந்த தெருக்களையும் நெடு நிலை மாடங்களையும், யாழ் பயில் இடங்களையும், நாடகசாலைகளையும் கழுநீர்ப் பொய்கைகளையும், நந்தவனங்களையும் தன்னகத்துக் கொண்டு சிறந்து விளங்கியது என்பது திருவிசைப்பாப் பாடல்களால் நன்கு புலப்படுகின்றது.

இனி, தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள கல்வெட்டுக் களை ஆராயுமிடத்து, தஞ்சை மாநகர், அக்காலத்தில் ‘உள்ளாலை’ ‘புறம்படி’ என்ற இரு பெரும் பகுதிகளை யுடையதா யிருந்தது என்று தெரிகிறது. அவற்றுள், உள்ளாலை என்பது உள் நகராகும். புறம்படி என்பது புற நகரமாகும். இம்மாநகரில் வீர சோழப் பெருந்தெரு, ஜயங் கொண்ட சோழப் பெருந் தெரு, சூர சிகா மணிப் பெருந்தெரு, வானவன் மாதேவிப் பெருந்தெரு, கந்தர்வத் தெரு, வில்லிகள் தெரு, ஆனையாட்கள் தெரு, ஆனை கடவுவார் தெரு, மடைப்பள்ளித் தெரு, சாலியத் தெரு முதலான பல்பெருந் தெருக்களும், திரிபுவன மாதேவிப் பேரங்காடி, கொங்காள்வாரங்காடி, இராசராச பிரம்மராயன் அங்காடி முதலான கடை வீதிகளும், உய்யக் கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம், பஞ்சவன் மாதேவியார் வேளம், உத்தமசீலியார் வேளம், அருமொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் வேளம் முதலான அரண்மனைப் பணிமக்கள் இடங்களும் அந்நாளில் இருந்தன என்பது பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. ஆகவே, இஃது எத்துணைப் பெரிய நகரமாக அப்போது இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். முதல் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைச் சோழ இராச்சியத்திற்குத் தலைநகரமாக அமைத்துக் கொண்ட பின்னரும் தஞ்சை மாநகரில் பெருமையும் சிறப்பும் குன்றாமலே இருந்தன. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1219-ல் சோழ மண்டலத்தின் மேல் படையெடுத்து வந்தபோது இம்மாநகர் பேரழிவிற்கு உள்ளாயிற்று. கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய தஞ்சை நாயக்கர் ஆட்சியில்தான் இது மீண்டும் பழைய சிறப்பை எய்துவதாயிற்று. தஞ்சையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர்களில் முதல்வனாகிய சேவப்ப நாயக்கனால் சிவகங்கைக் கோட்டையும் சேவப்பன் ஏரியும் அமைக்கப்பட்டன. இப்போதுள்ள தஞ்சை அரண்மனையும் இராசகோபால சுவாமி கோயிலும் இறுதியிலிருந்த விஜயராகவ மன்னனால் கட்டப்பெற்றனவாகும். தஞ்சை யிலிருந்த கோட்டையும் அகழியும் இவ்வேந்தனால் புதுப்பிக்கப்பட்டனவே யாம். நாயக்க அரசர்கள் பரம வைஷ்ணவர்களாதலின் வெண்ணாற்றின் கரையில் நீல மேகப் பெருமாள் கோயில், தஞ்சையாள் விண்ணகர், மணிக்குன்றப் பெருமாள் கோயில் ஆகிய மூன்று திருமால் கோயில்கள் கட்டி அவற்றிற்கு நிலமும் பொருளும் வழங்கியுள்ளனர். நீலமேகப் பெருமாள் கோயில் முன்னர் வடவாற்றின் தென்கரையில் வம்புலாஞ் சோலையில் இருந்தது. அதனை இடித்துக்கொண்டு போய் இரண்டு மைலுக்கு வடக்கே வெண்ணாற்றங் கரையில் கோயில் அமைத்துள்ளவர்கள் நாயக்க அரசர்களே ஆவர்.

நாயக்கர் ஆட்சிக்குப் பின்னர் கி.பி. 1676-ல் இம் மாநகர் மராட்டிய மன்னர்கட்குத் தலைநகராக விளங்கியது. இவர்கள் ஆட்சிக் காலத்தில் தம் குல தெய்வமாகிய சந்திர மௌலீஸ்வரர்க்கு ஒரு கோயிலும் திருவோலக்க மண்டபம் ஒன்றும் அரண்மனைக்குள் அமைந்துள்ளமை அறியத்தக்கதாகும். திருவோலக்க மண்டபத்தின் சுவர்களில் மராட்டிய மன்னர்களின் உருவங்கள் பல வண்ணங் களோடு வரையப்பட்டிருத்தலை இன்றும் காணலாம். இவ்வேந்தர் களுள் இரண்டாம் சரபோஜி மன்னன் சிறந்த ஆங்கிலப் பயிற்சியும் பல்வகைக் கலைகளில் பற்றும் உடையவன். இவ்வரசன் தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலுக்குப் புரிந்த திருப்பணிகள் எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் மராட்டிய மன்னர்களின் பரம்பரை வரையப் பெற்றிருத்தல் குறிப்பிடத் தக்கதாகும். இவன் இம் மாநகரில் புரிந்துள்ள அருஞ்செயல் ஒன்றுளது. அது, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு. மகாராஷ்டிரம் முதலான மொழிகளிலுள்ள ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொணர்ந்து அரண்மனையில் சரஸ்வதிமால் புத்தகசாலை அமைத்தமையே யாம். இவன் உருவச்சிலையை அரண்மனைக்கொலு மண்டபத்தில் இன்றும் பார்க்கலாம்.

மராட்டிய மன்னர் ஆளுகைக்குப் பிறகு ஏற்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியிலும் அம் மாநகர் தஞ்சை மாவட்டத்திற்குத் தலைநகராகிய பல்வகைச் சிறப்புகளுடன் விளங்குவதாயிற்று. இவ்வாறு, முத்தரையர், சோழர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் பெருமையுடன் திகழ்ந்த இம் மாநகர், இக் காலத்தில் பல பல புதிய சிறப்புகளைப் பெற்று உயர் நிலையில் இருப்பதை யாவரும் நன்குணர்வர். இத்தஞ்சை மாநகர் புகழுடன் என்றும் நின்று நிலவுவதாக!

திருச்சிராப்பள்ளி


தென்னிந்தியாவிலுள்ள புகைவாண்டி நிலையங்களுள் முதன்மை பெற்று விளங்கும் திருச்சிராப்பள்ளியைப் பலரும் அறிவர். நம் அரசாங்கத்தார், சுதந்திர இந்தியாவில் ஊர் களெல்லாம் தம் பழைய பெயர்களோடு நின்று நிலவ வேண்டு மென்ற கருத்தினராய் இப்போது சில ஊர்களின் பெயர்களை மாற்றியுள்ளனர். அவற்றுள் திருச்சிராப்பள்ளி என்பது ஒன்றாகும். அப்பெரு நகரின் பண்டைப் பெயர் யாது என்பதை ஈண்டு ஆராய்வோம்.

கடைச் சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில், ‘கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது - நெடும் பெருங்குன்றம்’1 என்று உறையூர்க்குக் கிழக்கே ஒரு குன்று கூறப்பட்டுள்ள தேயன்றி, அதன் பெயராதல் அஃது அமைந்துள்ள ஊரின் பெயராதல் அப்பாடலிற் குறிக்கப்படவில்லை. சைவசமய குரவர்களாகிய திஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அக்குன்றின்மேல் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது பாடியுள்ள பதிகங்களிலேதான் சிராப்பள்ளி என்ற பெயர் காணப்படுகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் ஒருங்கே ஆட்சி புரிந்த பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திரவர்மன் என்பவனே சிராப்பள்ளிப் பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெரு மானுக்குத் திருக்கோயில் அமைத்தவன் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுகின்றது. வடமொழியிலே சிறந்த புலமை பெற்றிருந்த அவ் வேந்தன் எட்டுச் சுலோகங்கள் இயற்றி அவற்றைத் தான் எடுப்பித்த சிராப்பள்ளி சிவன் கோயிலில் பொறித்துள்ளனன். அச்சுலோகங்களிலே தான் புறச்சமயத்தி லிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித்துச் சைவனாகியதையும் சிராப்பள்ளிக் குன்றின்மேற் குகைக் கோயிலிற் சிவலிங்கத்தை எழுந்தருளி வித்ததையும் குறிப்பிட்டுள்ளான்.1. அச் செய்திகளை நுணுகி நோக்குமிடத்து, அம் மன்னனது ஆட்சியின் பிற்பகுதியிலேதான் சிராப்பள்ளிக் குன்றிற் சிவாலயம் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதற்கு முன்னர் அவன் சமண சமயத்தைக் கைக்கொண்டொழுகிய காலத்தில் அங்கே சிவாலயம் இருந்திலது என்பதும் நன்கு புலனாகின்றன. சமணர்களாற் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் போடப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் சிவபெருமான் திருவருளால் அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து,2 திருப்பாதிரிப் புலியூரையடைந்து திருக்கோயிலுக்குட் சென்று, ‘ஈன்றாளுமாய்’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கினர் என்பது பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணத்தால் அறியப்பெறும் ஓர் வரலாறாகும். அந்நிகழ்ச்சிகள்தான் மகேந்திரவர்மன் சமண சமயந் துறந்து சைவனாகும்படி செய்துவிட்டது என்பது தேற்றம். அந் நாட்களில், திருப் பாதிரிப்புலியூர் என்று வழங்கும் பாடலி புரத்திலிருந்த ஓர் அமண் பள்ளியை இடித்து, திருவதிகை நகரில் தன் பெயரால் குணபரேச்சுரம் என்ற சிவன் கோயிலோன்று அவ்வரசன் அமைந்ததனன். இச்செய்தியைச் சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.3 அவனுக்குக் குணபரன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு என்பது அவனுடைய சிராப்பள்ளி கல்வெட்டுக்களாலும் செங்கற்பட்டிற்கு அண்டையிலுள்ள வல்லத்திற் காணப்படும் அவன் கல்வொட் டொன்றாலும் நன்கறியக் கிடக்கின்றது.4 ஆகவே, சேக்கிழார் கூறியுள்ள அச்செய்தி பெரிதும் உறுதியெய்தல் உணரற்பால தாகும். அங்ஙனமே, அவன் தன் நாட்டிலிருந்த பல அமண் பள்ளிகளை இடித்து அவ்விடங்களிற் சிவன் கோயில்கள் அமைந்திருத்தல் வேண்டும். அவற்றுள் சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள சிவாலயமும் ஒன்றாகும். அவ்வுண்மை, அக்கோயிலிற் காணப்படும் அவனுடைய வட மொழிக் கல்வெட்டுக்களாலும் அக் குன்றின் உச்சியில் வரையப்பெற்றுள்ள வேறு சில கல்வெட்டுக்களாலும் வலியுறுகின்றது.

இனி, சிராப்பள்ளிக் குன்றின்மேலுள்ள உச்சிப் பிள்ளை யார் கோயிலுக்குப் பின்புறத்தில் பல சமண முனிவர்களின் கற்படுக்கைகள் தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். அத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர்கள் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை ஆராய்ந்த கல்வெட்டிலாகா அறிஞர்கள், அவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.2 எனவே, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின்மெற் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து கொண்டிருந்தனர் என்பது நன்கு தெளியப்படும். அவர்களுள் ‘சிரா’ என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. அம்முனிவர் அத்தவப் பள்ளியின் தலைவராயிருந்தமை பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கத் தொடங்கி, அவர் காலத்திற்குப் பின்னரும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று. முதல் மகேந்திரவர்மனும் தன் ஆட்சியின் முற்பகுதியில் அத்தவப் பள்ளியை ஆதரித்துப் போற்றி வந்திருத்தல் வேண்டும் என்பது அவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று அங்கே பொறிக்கப் பெற்றிருத்தலால் நன்கு துணியப்படும். திருநாவுக்கரசர் பொருட்டுச் சிவபெருமான் நிகழ்த்திய அரிய நிகழ்ச்சிகளை அறிந்த அப்பெரு வேந்தன் அமண் சமயத்தை வெறுத்துச் சைவனாயினமை முன்னர் விளக்கப்பெற்றது. அந்நாட்களிலே தான் அவன் சிராப்பள்ளி என்னும் அமண் பள்ளியை இடித்து அக் குன்றின் மேல் சிவன்கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும். அச் சிவாலயமும் சிராப்பள்ளி என்னும் பழைய பெயருடன் வழங்கி வருவதாயிற்று. சைவவமய குரவர்களாகிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தம் காலத்தில் வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற அப்பெயரைத் தாம் அக்கோயிலிற் பாடியருளிய பதிகங்களில் குறிப்பிட்டுச் செல்லுவாராயினர். ஆகவே சிரா என்ற சமண முனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்த சிராப்பள்ளி என்பது பின்னர் முதல் மகேந்திரவர்மன் அங்கு எடுப்பித்த சிவன் கோயிலின் பெயராக மாறிவிட்டமை அறியத்தக்கது.

தமிழ் நாட்டிலே சில ஊர்களிலுள்ள திருக்கோயில்களுக்குத் தனிப்பெயர்கள் முதற்காலத்தில் வழங்கி வந்தன என்பது சமய குரவர் அருளிய தேவாரப் பதிகங்களாலும் கல்வெட்டுக்களாலும் புலப்படுகின்றது. உறையூரிலுள்ள கோயில் மூக்கிச்சுரம் எனவும், கருவூரிலுள்ள கோயிலை ஆனிலை எனவும், பழையாறையிலுள்ள கோயில்கள் பட்டீச்சுரம் திருச்சத்திமுற்றம் எனவும், திருநறை யூரிலுள்ள கோயில் சித்தீச்சுரம் எனவும், கொட்டையூரிலுள்ள கோயில் கோட்டீச்சுரம் எனவும், கோவந்த புத்தூரிலுள்ள கோயில் விசயமங்கை எனவும், சாத்தனூரிலுள்ள கோயில் ஆவடுதுறை எனவும், சாத்தமங்கையிலுள்ள கோயில் அயவந்தி எனவும், காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள கோயில் பல்லவனீச்சுரம் எனவும், பெண்ணாகடத்தி லுள்ள கோயில் தூங்கானைமாடம் எனவும், திருவெண்ணெய் நல்லூரிலுள்ள கோயில் அருட்டுறை எனவும், தஞ்சாவூரிலுள்ள கோயில் இராசராசேச்சுரம் எனவும், திருப்புறம்பயத்திலுள்ள கோயில் ஆதித் தேச்சுரம் எனவும் பெயர் எய்தியிருந்தன என்பதைத் தேவாரப்பதிகங்களாலும் அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக்களாலும் அறியலாம். அம் முறையிற் சிராப்பள்ளி என்பது கோயிற்பெயரா யிருத்தலால், அக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் யாது என்பது இனி ஆராய்தற்குரியதாகும்.

திருச்சிராப்பள்ளியில் முதல் இராசராசசோழனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டாகிய கி.பி. 1000-ல் வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று1 விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் ஒருவன் விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் நிலம் விலைக்கு வாங்கி, அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகின்றது. அதனை ஆராயுமிடத்து, அத்தலைவனால் இறையிலிநிலம் வழங்கப்பெற்ற சிவன் கோயில் சிராப்பள்ளி என்னும் பெயருடையது என்பதும் அக்கோயில் அமைந்துள்ள நகர் சிற்றம்பர் என்னும் பெயருடையது என்பதும் அந்நகர் உறையூர்க் கூற்றத்தில் உள்ளது என்பதும் நன்கு புலனாதல் காண்க. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் முதல் வரகுண பாண்டியனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டில் அக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள வேறாரு கல்வெட்டொன்றும்1 அவ்வுண்மையை உறுதிப்படுத்துதல் உணரத்தக்கது. அது,

‘கோமாறஞ்சடையற்கு யாண்டு நான்கு நாள்
ஈராயிரத் தைந்நூற்றொன்று வேம்பில்
மதிளழித்துப்போந்து நியமத்திருந்தருளி சோம
சூர்யாந்வயத்வ யதிலகாலங்காரயி யினபாண்டி
யாதிராஜர் வரகுணதேவர் திருமலை படாரர்க்குக்
கொடுத்த பொன் பாடிக்கல்லால் 125 நூற்றிருபத்
தைங்கழஞ்சும் - இப்பொன் முதனிற்க பொலி
கொண்டு முப்பதின் கழஞ்சு பொன்னின் பொலியால்
ஒரு நொந்தாவிளக்காக நூற்றிருபதின்கழஞ்சு பொன்
னால் நாலு நொந்தா விளகெரியக் காண நாழியால்
நிசதி அட்டகடவ நெய் இருநாழி, நின்ற ஐங்கழஞ்சு
பொன்னாலும் திங்கடொறும் திங்கட்டிருவாதிரை
நான் றவ்விராப் புலருமளவும் ஐந்து விளக்கெரிய
அட்டக்கடவ நெய் இருநாழியுரி இவ்வாட்டின
பரிசு நெய் அட்டி இத்திரு விளக்கெரிப்பான் இப்
பொன் நூற்றிருபத்தைங் கழஞ்சுங் கொண்டோம்;
சிற்றம்பர் நகரத்தோம் - இவ்வொட்டின பரிசு நெய்
அட்டுவிப்பதற்கு அமைந்து புணைப்பட்டோம்
சிற்றம்பர் புதியும் பாதமூலத்தோமும்; இது பன்
மாகேசுவரர் இரக்ஷ’ - என்பதாம்.

இக் கல்வெட்டில் அவ்வூர், சிற்றம்பர்நகர் எனவும் சிற்றம் பர்பதி எனவும் குறிக்கப்பட்டிருத்தல் காண்க.

நம் தமிழ்நாட்டில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் என்ற ஊர்கள் இருத்தலைப் பலர் அறிந்திருத்தல் கூடும். அவ்வூர்களைப் போற் சிற்றம்பர் என்ற ஊரும் இருந்துளது. இக்காலத்தில் அவ்வூரின் பெயர் மறைந்தொழிந்தது எனினும், அவ்வூர் திருச்சிராப்பள்ளி என்னும் பெயருடன் இஞ்ஞான்று எல்லோர்க்கும் காட்சி யளித்துக்கொண்டு பெருமையுடன் விளங்குவது மகிழ்தற் குரியதாகும்.

இதுகாறும் ஆராய்ந்து கூறியவாற்றால் பண்டைக் காலத்தில் சிராப்பள்ளி என்பது சிரா என்ற சமணமுனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்தது என்பதும், பிறகு பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திரவர்மன் அதனை இடித்துவிட்டு அங்கு எடுப்பித்த சிவன் கோயில் பெயராயிற்று என்பதும், அதன் பின்னர் அத்திருக் கோயில் அமைந்துள்ள நகரின் பெயராக வழங்கி வருகின்றது என்பதும், கோயிலின் பெயர் நகரின் பெயராகப் போய் விட்மையின் சிற்றம்பர் என்னும் அந்நகரின் பழைய பெயர் மறைந்து விட்டது என்பதும் நன்கு விளங்குதல் காண்க.

சோழர்களும் இராஷ்டிரகூடர்களும்


கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழ மண்டலத்தில் பழையாறை நகரிலிருந்த விசயாலய சோழன் என்பான், முத்தரையர் குடியினனாகிய ஒரு குறுநில மன்னனிட மிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி அதனைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை அரசாளத் தொடங் கினான். அவன் தன் புதல்வன் முதல் ஆதித்த சோழனுக்குக் கி.பி. 871-ல் இளவரசுப் பட்டங் கட்டி அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடும்படி செய்தான். அவன் இளவரசனாயிருந்த காலத்தில் கி.பி. 880-ஆம் ஆண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து அதனைப் பல அல்லல்களுக்கு உள்ளாக்கினான். அந்நாட்களில் சோழ நாட்டின் மற்றொரு பகுதி பல்லவ வேந்தனாகிய அபராஜித வர்மன் ஆட்சிக் குட்பட்டிருந்தது. அதனால், அப் பல்லவன் ஆதித்த சோழனுக்கு உதவி புரிந்து, வரகுண பாண்டியனைச் சோழ நாட்டை விட்டுத் துரத்துவது இன்றியமையாததாயிற்று. எனவே, அபராஜித வர்மன் பாண்டியனோடு போர் புரிவதற்குப் பெரும்படையோடு புறப்பட்டான். அக்காலத்தில் அவனுக்கு நண்பனாயிருந்த மேலைக்கங்க அரசன் முதல் பிருதுவிபதியும் அவன் நண்பனாகிய இராஷ்டிரகூட வேந்தன் இரண்டாங் கிருஷ்ணதேவனும் அபாராஜித வர்மனுக்கு உதவி புரியப் படைகளுடன் வந்தனர். எனவே, முதல் ஆதித்த சோழன், அபராஜிதவர்மன், முதல் பிருதுவிபதி, இரண்டாம் கிருஷ்ண தேவன் ஆகிய நான்கு அரசர்களும் இரண்டாம் வரகுண பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தனர்.

கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையிலுள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் பெரும்போர் நடைபெற்றது.1 அப் போரில் வரகுண பாண்டியன் தோல்வியெய்திச் சோழ நாட்டை விட்டோடிவிட்டான். வெற்றி பெற்ற அபராஜிதவர்மன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியை முதல் ஆதித்த சோழனுக்கு அளித்தனன். ஆகவே, அப்போரின் பயனாகச் சோழ நாடு முழுவதும் சோழ மன்னனாகிய முதல் ஆதித்த சோழனின் ஆளுகைக்குள் வந்து விட்டது எனலாம். அப்போர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்னர்களில் முதல் பிருதுவிபதி என்ற கங்க அரசன் போர்க்களத்தில் உயிர் துறந்தான். முதல் ஆதித்த சோழன் இளம் பருவத்தினனா யிருந்தும் பேராற்றலோடும் பெருவீரத்தோடும் போர் புரிந்தமை, இரண்டாம் கிருஷ்ணதேவன் உள்ளத்தைப் பெரிதும் பிணித்து விட்டது. திரும்புறம்பயப் பெரும்போரில் அவன் புரிந்த வீரச் செயல்களாலும் அடைந்த வெற்றியாலும் எதிர்காலத்தில் சோழ இராச்சியத்தைப் பேரரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங் குமரன் என்பது எல்லோருக்கும் நன்கு புலப்பட்டது. ஆகவே, இரண்டாம் கிருஷ்ணதேவன் அவன்பால் பெரிதும் ஈடுபட்டுத் தன் அருமை மகள் இளங்கோப்பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து கொடுக்க விரும்பினான். அத் திருமணமும் விரைவில் நிறைவேறியது.

முதல் ஆதித்தசோழனும் இளங்கோப்பிச்சியும்,2 சோழ நாட்டின் தலைநகராகிய தஞ்சை மாநகரில் இனிது வாழ்ந்து வருவாராயினர். இதுவே, பம்பாய் மாகாணத்தின் தென் பகுதியில் ஆட்சி புரிந்த இராஷ்டிரகூடருக்கும் சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில் அரசாண்ட சோழருக்கும் முதலில் ஏறப்பட்ட திருமணத் தொடர்பாகும்.

இனி கிருஷ்ணதேவன் என்பது கன்னட மொழியில் கன்னரதேவன் என்று வழங்கும். ஆதித்த சோழன் தன் புதல்வன் ஒருவனுக்குக் கன்னரதேவன் என்று பெயரிட்டிருந்தனன் என்பது திருநெய்த்தானத்துக் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.1 ஆகவே, அச்சோழமன்னன் தன் மாமனாகிய இராஷ்டிரகூட மன்னன் பெயரை இட்டு வழங்கி வந்தனனாதல் வேண்டும். கன்னரதேவன் என்ற அச்சோழ அரசகுமாரன் இராஷ்டிரகூட வேந்தனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவனுடைய மகள் வயிற்றுப் பேரனாய் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

முதல் ஆதித்த சோழனுக்குப் பிறகு சோழ நாட்டில் அரசாண்ட அவன் புதல்வன் முதல் பராந்தக சோழன் இராஷ்டிரகூடர் உறவும் நட்பும் தன் காலத்தும் நிலை பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதினான். எனவே, வடபுலத்தில் பேரரசாக நிலவிய இராஷ்டிரகூட இராச்சியத்தின் வலிமையை அவன் நன்குணர்ந்திருந்தான் என்பது தேற்றம். ஆகவே, அவன், இரண்டாம் கிருஷ்ணதேவனுடைய பேரன் மூன்றாம் இந்திரன் மகன் நான்காம் கோவிந்தனுக்கு தன் மகள் வீரமாதேவியை மணஞ் செய்து கொடுத்து2 அவ்வரச குடும்பத்தின் உறவை நிலைபெறச் செய்தனன். குந்தள நாட்டின் மூன்றாம் இந்திரன் இறந்த பின்னர் அவன் மூத்த மகன் இரண்டாம் அமோக வர்ஷன் ஓராண்டு ஆட்சி புரிந்து இறந்தான். அவனுக்குப் பிறகு அவன் தம்பியும் முதற் பராந்தக சோழன் மருமகனுமாகிய நான்காம் கோவிந்தன் என்பான் கி.பி. 898-ல் முடிசூட்டப் பெற்று, கி.பி. 934 வரையில் அந்நாட்டில் அரசாண்டான். அவன் தன் ஆட்சிக் காலத்தில் குடிமக்களின் வெறுப்பையும், அரசியல் அதிகாரிகளின் பற்றின்மையும் தேடிக் கொண்டான்; அந்நிலையில் கீழைச் சளுக்கிய வேந்தனாகிய யுத்த மல்லனுக்கு உதவிபுரிய வேண்டி கி.பி 934-ல் இரண்டாம் வீமனை எதிர்த்து போர் புரிந்து தோல்வியுற்றான்.1 அந்நாட்களில் உள் நாட்டில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தினால் அவ்வேந்தன் தன் இராஜ்ஜியத்தை இழந்து மனைவி வீரமாதேவியோடு தஞ்சைமாநகருக்கு வந்து மாதுலன் பராந்தக சோழன்பால் தங்கியிருந்தான்.1 இவ்வாறு கோவிந்தன் தன் இராச்சியத்தை இழந்தமைக்குக் காரணம், அவன் செயலும் உள் நாட்டுக் குழப்பமும் ஒருபுறமிருக்க அவன் சிறிய தந்தை மூன்றாம் அமோகவர்ஷன் மகன் மூன்றாங் கிருஷ்ணதேவன் செய்த சூழ்ச்சியும் ஒன்று எனலாம். அவன் தன் சூழ்ச்சித் திறத்தால் பயன் எய்தியவுடன் மக்கள் நலத்தையே பெரிதெனக் கருதி நடப்பவன்போல் தான் பட்டம் பெற விரும்பவில்லை என்று கூறி வயது முதிர்ந்த தன் தந்தை மூன்றாம் அமோக வர்ஷனுக்கு கி.பி. 935-ல் முடி சூட்டினன். அவ்வேந்தனும் கி.பி. 940-ல் இறந்தான். ஐந்து ஆண்டுகள் தஞ்சையில் தங்கிக் காலங் கருதிக் கொண்டிருந்த நான்காம் கோவிந்தன் என்பான் தான் இழந்த ராச்சியத்தைத் தன் மாதுலன் பாராந்தக சோழன் துணைகொண்டு அப்போது கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தான். ஆகவே முதற் பராந்தக சோழன் தன் மருமகன் கோவிந்தனுக்கு இராஷ்டிரகூடச் சிங்கானத்தனத்தைக் கைப்பற்றிக் கொடுத்தற் பொருட்டுக் குந்தள நாட்டிற்குப் பெரும் படையனுப்பி, மூன்றாங் கிருஷ்ண தேவன் முடிசூடுங் காலத்தில் அவனோடு போர் நிகழ்த்துவது இன்றியமையாததாயிற்று. மூன்றாங் கிருஷ்ண தேவனுக்கு அவன் தமக்கையின் கணவனும் மேலைக்கங்க மன்னனுமாகிய இரண்டாம் பூதுகன் என்பான் தக்க சமயத்தில் பெரும் படையுடன் வந்து உதவி புரிந்தான். இரு பகுதியினர்க்கும் நடைபெற்ற பெரும் போரில் நான்காம் கோவிந்தனும் அவனுக்கு உதவும் பொருட்டுச் சென்ற சோழ நாட்டுப் படையும் தோல்வி எய்தவே, மூன்றாங் கிருஷ்ணதேவன் வெற்றி பெற்று அரியணை ஏறினான்.

இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு நான்காம் கோவிந்தனைப் பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லை. ஆகவே அவ்வேந்தன் இப் போரில் உயிர்துறந்திருத்தல் கூடும் என்று கருதற்கு இடமுள்ளது. இராஷ்டிகூடரது நாட்டில் மூன்றாம் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் கி.பி. 940 முதல் கி.பி. 968 வரையில் காணப்படுகின்றன. எனவே, அவன் இருபத்தெட்டு ஆண்டுகள் அந்நாட்டில் ஆட்சி புரிந்தனன் என்பது தேற்றம்.

முதற் பராந்தக சோழன் செய்த முயற்சி இங்ஙனம் தோல்வியுறவே அதன் பயனாகவும் அவன் கருத்திற்கு முரணாகவும் வடபுலத்தில் மூன்றாங் கிருஷ்ணதேவன் அவனுக்குப் பெரும் பகைஞன் ஆயினன். கிருஷ்ணதேவன் தமக்கையின் கணவன் இரண்டாம் பூதுகனும் பராந்தக சோழனுக்குப் பகைவன் ஆயினான்.

அந்நிலையில் மூன்றாம் கிருஷ்ணதேவன் தனக்குப் பராந்தக சோழன் புரிந்த தீங்கினைச் சிறிதும் மறவாமல் அவன் நாட்டின் மேல் படையெடுத்துத் தன் ஆற்றலை அவனுக்குப் புலப்படுத்த எண்ணினான். அவ்வெண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகள் வரையில் தன் படைகளைப் பெருக்கிக் கொண்டு கி.பி. 949-ல் அவ்வேந்தன் சோழ இராச்சியத்தின் மேல் படையெடுத்தான். அவனுக்கு உதவி புரிய வேண்டி மேலைக்கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் வந்து சேர்ந்துகொண்டான். திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரிலிருந்து1 சோழ இராச்சியத்தின் வடபகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இளவரசனாகிய இராசாதித்த சோழன், அவ்வடவேந்தரின் படை யெழுச்சியைத் தடுத்துப் போர் புரிவானாயினன்.

வடஆர்க்காடு ஜில்லாவில் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே ஆறுமைல் தூரத்திலுள்ள தக்கோலத்தில் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில் இருபக்கங்களிலும் பல்லாயிரவர் உயிர் துறந்தனர். வெற்றித்திரு எவர்க்குரித்தாகுமோ என்ற ஐயப்பாடு நிகழ்ந்த நிலையில் இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று யானைமேல் வீற்றிருந்த இராசாதித்த சோழன் மார்பில் தைக்கவே, அவன் விண்ணுல கடைந்தான். இச்செய்தி, திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும்2ஆனமைங்கலச் செப் பேடுகளிலும்3 சொல்லப்படுகிறது. பங்களூர் பொருட்காட்சிச் சாலையிலுள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று4 பூதுகன் இராசாதித்தனைக் கொன்ற வீரச்செயல் பாராட்டி மூன்றாங் கிருஷ்ணதேவன் வனவாசி பன்னீராயிரம் என்ற நாடும் மற்றுஞ் சிலவும் அவனுக்கு வழங்கினான் என்று கூறுகின்றது. திருவெள்ளறை, கும்பகோணம், திருவிடை மருதூர் என்ற ஊர்களிலுள்ள சில கல்வெட்டுக்கள்5 இராசாதித்த சோழனை ‘ஆனைமேற்றுஞ்சின தேவர்’ என்று கூறுவதால் அவர் யானைமேல் வீற்றிருந்த போது இறந்த செய்தி வலியுறுதல் காண்க.

தக்கோலப் போரில் வெற்றி யெய்திய மூன்றாங் கிருஷ்ண தேவன் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டின் வடபகுதியையும் கைப்பற்றித் தன் ஆளுகையின் கீழ் வைத்துக் கொண்டான். எனவே, அப்போரின் பயனாக முதற் பராந்தக சோழன் தன் ஆட்சியின் இறுதியில் சோழ இராச்சியத்தின் வட பகுதியை இழக்கும்படி நேர்ந்தது. இராஷ்டிரகூடர் ஆட்சியும் தொண்டை மண்டலத்திலும், திருமுனைப்பாடி நாட்டின் வட பகுதியிலும் நிலைபெற்றது எனலாம். புதுச்சேரிக்கு அண்மையிள்ள வரகூருக்கும் பண்ணுருட்டிக் கருகிலுள்ள திருவதிகைக்கும் தெற்கே மூன்றாம் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் காணப்பட வில்லை. எனவே அவனது ஆட்சியும் அவ்வூர்கட்குத் தெற்கே பரவாமல் அவ்வெல்லையோடு நின்றுவிட்டது என்பது வெளிப் படை. அவன் பிரதிநிதிகளாகிய சில தலைவர்கள் வென்ற நாடுகளை ஆட்சி புரிந்து வந்தனர். அவன் ‘கச்சியும் தஞ்சையுங் கொண்ட கன்னர தேவன்’1 என்று தன் கல்வெட்டு களில் கூறிக்கொள்வதைப் பல ஊர்களில் காணலாம். அவ்வேந்தன் கச்சியாகிய காஞ்சீபுரம் கொண்டதே உண்மை நிகழ்ச்சியாகும். தஞ்சை கொண்டது வெறும் புனைந்துரையேயாம்.

முதற் பராந்தக சோழன் புதல்வன் அரிஞ்சயனும் அவன் மகன் இரண்டாம் பராந்தக சோழனும் தம் ஆட்சிக் காலங்களில் இராஷ்டிரகூடரைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முயன்றனர்; அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் எனலாம். இரண்டாம் பராந்தகசோழன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு ஜில்லாக்களில் காணப்படுவதால் அச்செய்தி உறுதி யெய்துகின்றது.2 அந்நிலையில் இராஷ்டிர கூடப் பேரரசனாகிய மூன்றாங் கிருஷ்ணதேவனும் கி.பி. 968-ல் இறந்தான். ஆகவே, இராஷ்டிரகூடர் ஆட்சியும் தொண்டை மண்டலத்திலிருந்து முற்றிலும் ஒழிந்தது. அம்மண்டலம் முழுதும் மீண்டும் சோழ மன்னர்களின் ஆட்சிக்குள்ளாயிற்று. மூன்றாம் கிருஷ்ண தேவனுக்குப் பிறகு இராஷ்டிரகூட இராச்சியம் சீர் குலைந்து மேலைச்சளுக்கியர் ஆளுக்கைக்குட் பட்டுப் போயிற்று.

தூங்கானை மாடம்


பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த நம் முன்னோர் களாகிய தமிழ் மக்கள் தெய்வக்கொள்கை யுடையவர்களாக விளங்கினர் என்பது, நம் தாய் மொழியாகிய தமிழில் கடவுள், இயவுள் முதலான தனித் தமிழ்ச் சொற்கள் தொன்று தொட்டு வழங்கி வருதலால் நன்கறியக் கிடக்கின்றது. தமிழ் நூல்களுள் மிகப் பழமை வாய்ந்ததாகவுள்ள தொல்காப்பியத்தில் காணப் படும் சில சூத்திரங்களாலும் இவ்வுண்மை வலியுறுதல் உணரற் பாலதாகும். கடவுட் கொள்கையினராய் வாழ்ந்துவந்த அன்னோர் தம் கடவுளர்க்குக் கோயில்கள் அமைத்து நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர் என்பது பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான கடைச்சங்க காலத்து நூல்களால் தெள்ளிதிற் புலப்படுதல் காணலாம். ஆனால், அத்திருக்கோயில்களின் அமைப்பும் சிற்பத்திறனும் பிறவும் எத்தகையன என்பதை இக்காலத்தில் ஆராய்ந்தறிந்து கொள்வது இயலாததொன்றே யாம். எனினும், அக் கோயில்கள் எல்லாம் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் மரங்களாலும் கட்டப்பெற்றவை என்பதை மாத்திரம் உறுதியாகக் கூறலாம். இவ்வுண்மையினைச் ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’1 எனவும், ‘இட்டிகைப் புரிசை’2 எனவும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம்’3 எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல்களிலுள்ள தொடர்களால் அறிந்து கொள்ளலாம். அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவராகிய கோச்செங்கட் சோழர் பல சிவன் கோயில்கள் எடுப்பித்துள்ளனர் என்பது சைவசமய குரவர்களின் திருப்பதிகங்களால் புலப்படுகின்றது. கடைச்சங்க நாளில் நிலவிய அவ்வரசர் பெருமான் எடுப்பித்த அக்கோயில்கள் எல்லாம் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் அமைந்தனவேயாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் நம் தமிழகத்தில் முதலில் கருங்கற் கோயில்கள் தோன்றின என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்டதோர் உண்மையாகும். அக்கோயில்களும் குன்றுகளைக் குடைந்து அமைக்கப் பெற்றவையே. அவற்றை முதலில் அமைக்கத் தொடங்கி வெற்றி கண்டவன், நம் தமிழ்நாட்டின் வட பகுதியைக் காஞ்சிமா நகரிலிருந்து கி.பி. 600 முதல் 630 வரை அரசாண்டவனும், திருநாவுக்கரசு அடிகள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கண்டு சைவ சமயத்திற்குத் திரும்பியவனும், பல்கலைச் செல்வனு மாகிய முதல் மகேந்திரவர்மன் என்ற பல்லவ வேந்தனேயாவன். அவன் அமைத்த கோயில்கள் குடைவரைக் கோயில்கள் எனவும் வழங்கப்படுகின்றன. அவற்றில் கருவறையின்மேல் விமானமின்மை அறியத் தக்கது.

அவன் மகனும் ‘வாதாவி கொண்ட நரசிங்கப் போத்தரையர்’ என்று பாராட்டப்பட்டவனும் சிறுத்தொண்ட நாயனாரைத் தன் படைத்தலைவராகக் கொண்ட பெருமையுடையவனும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவனும் ஆகிய முதல் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) என்ற பேரரசனே, சிறு குன்று களைக் குடைந்து கருவறையும் அதன்மேல் விமானமும் அவற்றின் முன்னர் முகமண்டபமும் பொருந்திய கோயில்களாக அமைத்தவன். அவற்றில் காணப்படும் சிற்ப நுட்பங்களும் பிற சிறப்புக்களும் காண்போர் கண்களைக் கவர்ந்து தன்வயமாக்கும் இயல்பினவாகும். அக்கோயில்களிலுள்ள விமானங்கள் இரண்டு நிலை மூன்று நிலைகளையுடையன வாயிருத்தல் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும், நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கங்களின் மேல் அமைக்கப் பெற்ற சிங்கத்தூண்கள் முதல் நரசிம்மவர்மனுடைய கோயில்களில்தான் முதலில் காணப்படுதல் உணரற்பாலது.

கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கருங்கற் கோயில் முதலில் எடுப்பித்தவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னனேயாவன். அவன் மேலே குறிப்பிட்ட முதல் நரசிம்மவர்மனின் பேரனாகிய முதல் பரமேசுவரவர்மனுடைய மகன். அவன் கருங்கற்களால் அமைத்த பெருங்கோயில் காஞ்சி மாநகரிலுள்ள கைலாயநாதர் ஆலயமேயாகும். முற்காலத்தில் அக்கோயில் அவன் சிறப்புப் பெயரால் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்று வழங்கி வந்தது. அவன் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்ததைப் பற்றி அவனைச் ‘சிவசூடாமணி’ எனவும், ‘சங்கர பக்தன்’2 எனவும், ‘ஈசுவரபக்தன்’ எனவும், ‘பரம மகேசுவரன்’ எனவும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் புகழ்ந்துரைக்கின்றன. வேலூர்ப் பாளையச் செப்பேடுகள், அவன் காஞ்சி மாநகரில் சிவபெருமானுக்குக் கயிலாயத்தை யொத்த கோயில் எடுப்பித்த பெருமையுடையவன் என்று பாராட்டிக் கூறுகின்றன. சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், தம் காலத்தில் பரம மகேசுவரனாக வாழ்ந்த அப் பேரரசனை அறுபத்துமூன்று சிவனடியார்களுள் ஒருவராக வைத்துத் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்’ என்று வணக்கம் கூறியிருத்தல் அறியற்பால தொன்றாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய அவ்வேந்தனே முதன் முதல் கருங்கற் கோயில் கட்டியவன் என்பது நன்கறியப் படுவதால், சைவ சமய குரவர்கள் மூவரும் ஊர்தோறும் சென்று இறைவனை வணங்கித் திருப்பதிகங்கள் பாடியருளியபோது இருந்த சிவன் கோயில்கள் எல்லாம் செங்கல்லால் கட்டப் பெற்ற கோயில்களே என்பது தெள்ளிது.

இரண்டாம் நரசிம்மவர்மனும் அவனுக்குப் பிறகு ஆட்சி புரிந்த மன்னர்களும் எடுப்பித்த கருங்கற் கோயில்கள் மிகச் சிலவேயாம். அவற்றுள், சித்தூர் ஜில்லாவிலுள்ள திருத்தணிகை வீரட்டானேசுவார் கோயில் அமைப்பு, ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் ஒரு முடிந்த முடிபிற்கு வருமாறு செய்துள்ளமை ஈண்டுக் குறித்தற்குரியதாகும். அக் கோயில் கருங்கல்லால் கட்டப்பெற்றது. அதன் கருவறையின் மேலுள்ள விமானம் யானை படுத்திருப்பது போன்ற அமைப்பு உடையது. அது ‘தூங்கானைமாடம்’ என்று வழங்கப்படும். அதனை வட மொழியாளர் ‘கஜபிருஷ்ட விமானம்’ என்பர். அவ்விமானத் துடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தணிகைக் கற்றளியில்,

‘திருந்து திருத்தணியற் செஞ்சடையீ சற்குக்
கருங்கல்லாற் கற்றளியா நிற்க - விரும்பியே
நற்கலைக ளெல்லா நவின்றசீர் நம்பியப்பி
பொற்பமையச் செய்தான் புரிந்து’

என்ற வெண்பா ஒன்றும் அதன் கீழ் ‘இவ்வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்பும் வரையப்பட்டுள்ளன. இவற்றால் திருத்தணிகைக் கோயிலைக் கற்றளியாக அமைத்தவன் நம்பி அப்பி என்ற தலைவன் என்பதும், இச்செய்தியைக் குறித்த இப்பாடலை இயற்றியவன் ஓர் அரசனாயிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். அக்கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டு2 அபராஜித விக்கிரவர்மனது ஆட்சியின் 18-ம் ஆண்டில் நம்பி அப்பி என்பான், அங்கு நடைபெறவேண்டிய நாள் வழிபாடு முதலானவற்றிற்கு நிவந்தமாக நிலம் அளித்ததை உணர்த்துகின்றது. எனவே, நம்பி அப்பி என்பவனது திருத்தணிகைக் கோயில் திருப்பணியைப் புகழ்ந்து வெண்பா இயற்றியவன் பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர்மன் என்பது தேற்றம். இவன் தன் நண்பர்களாகிய முதல் ஆதித்த சோழன், கங்கமன்னன், முதல் பிருதுவிபதி ஆகியோர் துணைகொண்டு, இரண்டாம் வரகுண பாண்டியனைத் திரும்புறம் பயப் பெரும்

போரில் கி.பி. 880 - ஆம் ஆண்டில் வென்று வாகை சூடியவன். ஆகவே பல்லவ அரசர்களுள் இறுதியில் இருந்தவன் இவனேயாவன். இவனது ஆட்சிக் காலமாகிய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருத்தணிகையில் அமைக்கப் பெற்றுள்ள தூங்கானை மாடக் கோயில், பல்லவர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தோன்றிய ஒரு புதிய அமைப்பைக் கொண்டது என்பது ஆராய்ச்சியாளர்களாகிய அறிஞர்களது கருத்து. எனவே தூங்கானை மாடக் கோயில்கள் எல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் கட்டப் பெற்றவை என்பதும் அவை அபராஜிதவர்மன் காலத்துக் கோயில் அமைப்பு என்ற ஒருவகைத் தனி அமைப்புடையவை என்பதும் அவர்கள் கண்ட முடிவுகளாகும்.

இனி, சைவ சமய குரவர்களுள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகள் பாடியருளிய திருப்பதிகங்களுள் திருத்தூங்கானை மாடப் பதிகம் ஒன்று உளது. அப்பதிகத்துள் ஏழு பாடல்கள் கிடைக்காமையால், இப்போது மூன்று பாடல்களே இருக்கின்றன. அப்பாடல்களால் பெண்ணாகடம் என்னும் கடந்தையிலிலுள்ள திருக்கோயில் ‘தூங்கானை மாடம்’ என்ற பெயருடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் ஒன்று,

‘பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்
போற்றி செய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங்
கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி
மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச்
சுடர்க்கொழுந்தே’

என்பதாம்.

ஆகவே, திருநாவுக்கரசு அடிகள் விளங்கிய காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய பெண்ணாகடத்திலிருந்த திருக்கோயில் தூங்கானைமாட அமைப்பினை யுடையதாக இருந்தது என்பது தெள்ளிது. எனவே, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் அபராஜிதவர்மன் என்ற பல்லவ மன்னர் ஆட்சிக் காலத்தில்தான் தூங்கானை மாடக் கோயில் முதலில் அமைக்கப்பட்டது என்பது எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்க தன்று. அன்றியும், பல மாடக் கோயில்கள் திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்னரே நம் தமிழகத்தில் இருந்தன என்பது பல சான்றுகளால் உறுதியாதல் காணலாம்.

இனி, மாடக்கோயில்கள் எக்காலத்தில் தோன்றின என்பது ஆராய்தற்குரியதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நந்திவர்மப் பல்லவமல்லன் ஆட்சிக் காலத்தில் நிலவிய வைணவ சமய குரவராகிய திருமங்கை யாழ்வார், தம் திருநறையூர்ப் பதிகத்தில் கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்கள் எடுப்பித்து உலகமாண்ட செய்தியைக் கூறியுள்ளனர். திருநாவுக்கரசரும் தம் காலத்தில் எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் இருந்தமையை அடைவு திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளமை அறியத்தக்கதாகும். அக்கோயில்கள் எல்லாம் கோச்செங்கட் சோழர் எடுப்பித்தவையே என்பது தேவாரப் பதிகங்களால் தெளிவாகப் புலப்படுகின்றது. அவைகள் செய்குன்றுகள் மேல் அமைக்கப்பெற்றவை யாதலின் அவற்றைப் பெருங்கோயில் எனவும் மலைக் கோயில் எனவும் சைவசமய குரவர் மூவரும் தாம் பாடியருளிய திருப்பதிகங்களில் குறித்துள்ளமை உணரற் பாலது. அவ்வகையைச் சேர்ந்ததே தூங்கானைமாடமும் ஆகும். எனவே, மாடக் கோயில்களுள் ஒன்றாகிய தூங்கானை மாடம் கோச்செங்கட்சோழர் கடைச் சங்க காலத்தில் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் எடுப்பித்த கோயிலேயாகும். ஆகவே, அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே கோச்செங்கட் சோழரது ஆட்சியில் ஏற்பட்ட கோயில் அமைப்பு என்று உறுதியாகக் கூறலாம். அவ்வமைப்பைப் பின்பற்றியே பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர்மன் ஆட்சிக் காலத்தில், திருத்தணிகையிலுள்ள வீரட்டானேசுவரின் தூங்கானை மாடக்கோயில் கருங்கற்களால் எடுப்பிக்கப் பெற்றுள்ளது என்பது திண்ணம். எனவே, அஃது அப் பல்லவ அரசன் காலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய கோயில் அமைப்பு என்று கூறுவது சிறிதும் பொருந்தாமை காண்க.

இனி, பல்லவர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் நடைபெற்ற சோழர் பேரரசில்தான் தமிழகத்திலுள்ள செங்கற் கோயில்களுள் பல, கருங்கற் கோயில்களாக அமையப் பெற்றன என்பது அவ்வக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றன. அவற்றுள், கோச்செங்கட்சோழர் முற் காலத்தில் செங்கற்களால் எடுப்பித் திருந்த மாடக் கோயில்களைப் பிற்காலத்தில் ஆட்சி புரிந்த பேரரசர்களாகிய சோழர்கள் கருங்கற்கோயில்களாக அமைத்திருத்தலை இன்றும் காணலாம். கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள இன்னம்பரிலும் பேரளத்திற்கு அண்மையிலுள்ள திருமீயச்சூரிலும் தூங்கானைமாடக் கோயில்கள் இருத்தல் அறியத்தக்கதாகும்.

சொல் வரலாறு


நம் தென்னாட்டு மொழிகளுள் தமிழ் மொழியே மிகப் பழமை வாய்ந்தது என்பது யாவரும் அறிந்ததோர் உண்மை. இம்மொழிக்குரிய இலக்கண நூலே தொல்காப்பியம் என்பது. இக்காலத்தில் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் இதனினும் பழமை வாய்ந்தது வேறொன்று மில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாதலில் இத்தொல்காப்பிய இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்னர் எத்தனையோ இலக்கிய நூற்கள் தமிழ் மொழியில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவ்விலக்கிய நூல்கள் எல்லாம் காலப் போக்கில் அழிந்தொழிந் தமையால் எஞ்சிநின்ற பழந்தமிழ் நூல் இத்தொல்காப்பிய மேயாம். இந்நூல் எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றின் இயல்புகளையும் வரலாற்றையும் நன்கு விளக்கு கின்றது. இதன் ஆசிரியர், சொல்லானது தன்னை உணர்த்துதலும் பொருளை உணர்த்துதலும் ஆகிய இருவகை இயல்பினையுடையது என்று,

“பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர்”

என்ற சூத்திரத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, சொல்லானது பொருளை அறிவிப்பதாயிருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து.

அப்புலவர் பெருமான், தமது நூலுள் சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொற்களுக்குரிய இலக்கணங்கள் எல்லாவற்றையும் கூறியுள்ளராயினும் அச்சொற்கள் எவ்வாறு பிறந்தன என்பதை ஆராய்ந்து அவற்றையெல்லாம் பகுத்து, பகுதிகளில் அடக்கிக் காட்டி விளக்கவில்லை. எனினும் ஒவ்வொரு சொல்லும் காரணம் பற்றியே தோன்றியுள்ளது என்றும், அக்காரணம் அறியுடையோர்க்கு மாத்திரம் தெளிவாகப் புலப்படும் என்றும், மற்றை யோர்க்குப் புலப்பட மாட்டாதென்றும் “மொழிப் பொருட்காரணம் விளிப்பத் தோன்றா” என்ற சூத்திரத்தில் அவ்வாசிரியர் உணர்த்தியிருத்தல் அறியற் பாலதாகும். எனவே, சொற்கள் காரணத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டே பொருள்களை உணர்ந்துகின்றன என்பதும், ஆகவே, எல்லாச் சொற்களும் காரணப்பெயர்களே என்பதும் அக்காரணங்கள் அறியமாட்டாதார் இடுகுறிப் பெயர்களும் மரபுப் பெயர்களும் கொள்ள நேர்ந்தது என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.

வடமொழி இலக்கண ஆசிரியராகிய பாணினி முனிவர் என்பவர், தம் காலத்தில் வழங்கிய பல்லாயிரம் வடமொழிச் சொற்களை எல்லாம் பகுதி விகுதிகளாகப் பகுத்து அவற்றைத் தாதுபாதத்தில் சில்லாயிரம் பகுதிகளில் அடக்கியுள்ளனர். அவர் கையாண்ட முறை சொல் வரலாற்றாராய்ச்சிக்கு இன்றியமையாச் சிறப்பினதாகும். எனவே அம்முறை சொற்களின் வரலாறுகளை எளிதில் அறிந்து கொள்ளுவதற்குப் பெரிதும் பயன்படுவதொன்றாம். கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்த பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் - என்பார் தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலில் வடமொழி வியாகரணத்தைப் பின்பற்றித் தாதுப் படலம், கிரியாப்படலம் அமைத்துச் சொல் வரலாற்றைக் கூற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதில் அவ்வாசிரியர் வெற்றி பெறவில்லை யென்றே சொல்ல வேண்டும். எனினும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டி லிருந்த பவணந்தி முனிவர் என்பார் தமிழ் இலக்கண நூலாகிய நன்னூலில் சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பகுத்துச் சொல் வரலாற்றை ஓரளவு விளக்கியுள்ளனர். ஆனால் அவரது நூல் தமிழ் மொழியிலுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு வரலாறு கூறாமல் சிலவற்றிற்கு மாத்திரம் வரலாறு உரைத்து அவ்வளவில் அமைந்துவிடுகின்றது. அவருக்குப் பிறகு தமிழ் இலக்கணம் எழுதிய ஆசிரியர்கள் அவர் கூறியவற்றைத் தாமுங் கூறினரேயன்றி, அம்முறையைப் பின்பற்றி ஆராய்ச்சி செய்து புதிதாக ஒன்றுஞ் சொல்லவில்லை. மேனாட்டறிஞருள் சிலர் அம் முயற்சியில் ஈடுபட்டுத் தம் பேருழைப்பினால் வெற்றி எய்தியுள்ளனர். அவர்களுள், பிஷப் கால்டுவெல், கிரையர்சன் என்போர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் தென்னாட்டு மொழிகளை நன்கு பயின்றவர்களாதலின் தாம் நடுநிலையுடன் ஆராய்ந்து கண்ட உண்மைகள் பலவற்றை வெளியிட்டுள்ளனர். அவற்றை யெல்லாம் என்ற ஆராய்ச்சி நூல்களுள் காணலாம். அவை அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த அரிய செய்திகள் என்பதில் ஐயமில்லை. தென்னாட்டில் இப்பொழுது வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் மொழியிலிருந்து தோன்றியவை என்பது அந்நூல்களில் அன்னோர் கூறியுள்ள முடிபாகும். வடமொழிப் புலமையும் மொழி நூற் புலமையும் ஒருங்கே பெற்றிருந்த காலஞ்சென்ற சேடகிரி சாத்திரியார் அவர்கள் தாம் எழுதியுள்ள “ஆந்திர சப்த தத்துவம்” என்ற நூலில் தெலுங்கிற்குத் தாய் மொழி தமிழே என்று கூறியிருப்பது அறியத்தக்கது. அன்றியும், காலஞ்சென்ற பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் “மனோன்மணீயம்” என்னும் நாடக நூலில் தமிழ்த் தெய்வ வணக்கம் கூறுமிடத்து,

“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலை யாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்”

என்று அவ்வுண்மையை வலியுறுத்தல் காண்க.

உலகில் பேசப்படும் மொழிகள் எல்லாம் மக்களால் உண்டுபண்ணப்பட்ட ஆக்கப் பொருள்களேயாம். மக்கள் எல்லோரும் ஒருங்குகூடி வாழ வேண்டியிருத்தலால் அவர்கள் தத்தம் எண்ணங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்வது இன்றியமையாததாயிற்று. அவர்கள் முதலில் உறுப்புக்களின் சைகைகளாலும் பிறகு ஒலிக் குறிப்புகளாலும் தம் கருத்துக்களைப் பிறருக்கு அறிவித்தனர். அதன் பின்னர், சில சில காரணம்பற்றிச் சொற்கள் வழங்கத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் வழங்கத் தொடங்கிய சொற்களுள், வெறுப்பு, வெகுளி, உவகை, வியப்பு, அவலம், அச்சம் முதலான சுவைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றிய சில குறிப்புச் சொற்களும், அம்மை, அப்பன் முதலான முறைச் சொற்களும், ஒன்று, இரண்டு, முதலான எண்களை உணர்த்துஞ் சொற்களும், தலை, கண், வாய், கை, கால் முதலான உறுப்புக்களை உணர்த்துஞ் சொற்களும், யான், யாம், நீ, நீவிர் முதலான தன்மை முன்னிலைப் பெயர்களும் முதலில் தோன்றிப் பிறகு அவற்றின் அடியாகப் பற்பல சொற்கள் உண்டாகி வழக்காற்றில் வந்திருத்தல் வேண்டும் என்பது மொழிநூல் வல்லார் துணிபாகும்.

பொதுவாக மக்கள் எல்லோரும் சுவையுணர்ச்சி வாய்க்கப் பெற்றவர்களாதலின் அவ்வுணர்ச்சி விளைக்கத் தக்க பொருள்கள் தம் எதிரே தோன்றும்போது சில குறிப்புச் சொற்களைத் தாமாகக் கூறத் தொடங்குவர். அவ்வாறு வெறுப்புச் சுவையில் “சீ” என்ற சொல்லும், வெகுளிச் சுவையில் “போ” என்ற சொல்லும், உவகைச் சுவையில் “வா” என்ற சொல்லும் எழுந்தன எனலாம். அங்ஙனமே, “ஐ” என்பது வியப்பினாலும், “ஓ” என்பது அவலத் தினாலும் “ஐயோ” என்பது அச்சத்தினாலும் தோன்றியவை என்றுணர்க.

இனி, முறையை உணர்த்தும் சில சொற்களைப் பார்ப்போம். தந்தையைக் குறிக்கும் அத்தன் என்ற சொல் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அரிய சொல்லாகப் போய்விட்டது.

“அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே”

என்று அப்பர் அடிகளும்,

“அத்தாவுனக் காளாய்இனி அல்லேன் எனலாமே”

என்று சுந்தரமூர்த்திகளும்,

“அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே”

என்று மணிவாசகப் பெருமானும் கூறியிருத்தல் காண்க. முற்காலத்தில் அத்தன் என்ற இச்சொல் பொதுமக்கள் எளிதிற் கையாண்ட உலக வழக்குச் சொல்லாக இருந்திருத்தல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. தமிழிலிருந்து பிரிந்த வழிமொழியாகிய மலையாளத்தில் தந்தை என்ற பொருளிலேயே இச்சொல் “அச்சன்” என்று இந்நாளில் வழங்குகிறது. அன்றியும் இவ்வொரு சொல்லே தமிழ்மொழி வெவ்வேறு முறைச் சொற்கள் தோன்றுவதற்குக் காரணமாக நிற்றல் அறியற்பாலது. அத்தன் என்பது தந்தையை உணர்த்தும் பழந்தமிழ்ச் சொல் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அத்தனுடைய மனைவி ஆத்தாள் எனப்பட்டனள். தாயை ஆத்தாள் என வழங்குவதை இந்நாளிலும் காணலாம். “அப்பன் மலைக்குறவன், ஆத்தாள் மலைநீலி” என்று புலவர் பெருமக்கள் பழந்தமிழ்ப் பாடலிலும் இச்சொல் பயின்று வருதல் உணர்க.

அத்தனுடைய உடன் பிறந்தாள் அத்தை என்று வழங்கப் பெற்றனள். அத்தையின் மகன் அத்தான் எனப் பட்டான். அவ்வத்தையின் கணவர் அத்தையன்பர் ஆயினார். அத்தையன்பர் என்ற சொல்லே இக்காலத்தில் அத்திம்பேர் என்று சிதைந்து வழங்குகின்றது. அத்தையின் மகளும் அத்தாச்சி என்று கூறப்பட்டள்.

தாயை உணர்த்தும் அம்மை என்பது ஒரு பழந் தமிழ்ச் சொல். அஃது இந்நாளில் அம்மா எனவும், அம்மாள் எனவும் வழங்குகிறது. முற்காலத்தில் பொதுமக்களிடையே வழங்கி வந்த அம்மை என்னும் சொல் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடிய அருஞ் சொல்லாயிற்று. ஆயினும், இச் சொல்லின் அடியாகத் தோன்றிய முறைப் பெயர்கள் இன்றும் உலக வழக்கில் இருந்து கொண்டிருக்கின்றன. அம்மையின் உடன் பிறந்தான் அம்மான் என்று கூறப்பெற்றனன். அம்மானுடைய மனைவி அம்மாமி என்று வழங்கப் பெற்றனள். அம்மானுடைய மகன் அம்மான் சேய் என்று சொல்லப்பட்டனன். அம்மான் சேய் என்ற சொல் இந்த நாளில் அம்மாஞ்சி என்று சிதைந்து இடுகுறிப் பெயர் போல் வழங்குகின்றது. அம்மாமி என்ற சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் “அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி” என்ற அடியில் பயின்று வருதல் காண்க.

இனித் தந்தையைக் குறிக்கும் தகப்பன் என்ற சொல் இந்நாளில் எவ்விடத்தும் மிகுதியாக வழங்கி வருதலை யாவரும் அறிவர். இச்சொல் இப்பொருளில் எவ்வாறு வழங்கத் தொடங்கியது என்பதைப் பார்ப்போம். அப்பன் என்ற சொல் உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் தந்தையை உணர்த்தி வருதலை நாம் அறிவோம். தம் அப்பன் என்ற இரு சொற்கள் சேர்ந்து தமப்பன் என்றாகி, முற்காலத்தில் தந்தையைக் குறிக்கும் நிலையில் உலகவழக்கில் வந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. தமப்பன் என்ற சொல்லே கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளிலே தமிழ்நாட்டில் யாண்டும் பெருக வழங்கி வந்தது என்பது ஆங்காங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு வெளியாகின்றது. பிறகு, நாளடைவில் தமப்பன் என்பது தகப்பன் எனறு பேச்சு வழக்கில் மாறிப்போய் பின்னர் அச்சொல் நூல்களிலும் ஏறிவிட்டது. அங்ஙனமே தம் ஆய் என்பது தாய் என்று மருவி வழங்குகிறது. தமக்கு முன் பிறந்தாளைத் தமக்கை என்றும் அக்காள் என்றும் வழங்குவர். தம் + அக்கை என்பதே இப்பொழுது தமக்கை என்று வழங்குவது உணரற்பாலது. ஐயன் என்ற சொல் உடன் பிறந்தாருள் மூத்தோனைக் குறிக்கும் என்பது,

“கன்னின்றான் எந்தை களப்பட்டா ரென்னையர்
முன்னின்று மொய்விந்தான் என் கணவன்”

என்ற புறப்பொருள் வெண்பமாலைப் பாடலால் நன்கு தெளியப்படும். தந்தைக்குப் பிறகு தமையன் குடும்பத் தலை வனாயினமை பற்றி அவன் அண்ணல் என்று பின் பிறந்தோரால் கூறப்பட்டன. அச்சொல் பின்னர் அண்ணன் என வழங்கு வதாயிற்று. அண்ணல் என்பது தலைவனை உணர்த்தும் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களிற் காணலாம். தம்+பின் என்பதில் இறுதியிலுள்ள னகர வொற்றுப் போய்த் தம்பி என்றாகித் தமக்குப்பின் பிறந்தவனை உணர்த்துதல் காண்க.

இனிச் சில சொற்கள் தாம் குறிக்கும் பொருள்களின் பழைய வரலாற்றை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. அத்தகைய சொற்களுள் சிலவற்றை ஆராய்வோம். குறுணி என்ற அளவினைக் கொண்ட கருவி முற்காலத்தில் மரத்தால் செய்யப் பட்டிருந்தமையால் அது மரக்கால் என்னும் பெயர் பெற்றது. இரும்புத் தகட்டினாலும் பித்தளைத் தகட்டினாலும் செய்யப் பெற்று, இக்காலத்தில் மக்களால் கையாளப்படும் குறுணி யளவுக் கருவியும் மரக்கால் என்றே சொல்லப்பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. எனினும், மரக்கால் என்ற சொல் அக்கருவியின் பழையநிலையை அறிவித்தல் காண்க.

ஓலை, தோடு என்ற சொற்கள் தமிழ்நாட்டு மகளிர் அணிந்து கொள்ளும் காதணிகளாகும். அவர்கள் பனையோலைச் சுருளையும் தென்னையோலைச் சுருளையும் முன்னாளில் காதணிகளாகக் கொண்டிருந்த காரணம் பற்றி அவை ஓலை எனவும், தோடு எனவும் சொல்லப்படுகின்றன. இக்காலத்தில் பொன்னாலும் மணியாலும் செய்யப் பெற்ற காதணிகளும் ஓலை எனவும் தோடு எனவும் சொல்லப்படுகின்றன. ஆகவே, ஓலை, தோடு என்னுஞ் சொற்கள் அவ்வணிகளின் பழைய வரலாற்றை உணர்த்துதல் அறியத்தக்கது. அவ்வாறு வழங்குஞ் சொற்கள் பல உள்ளன. அவற்றை யெல்லாம் நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் எளிதிற் கண்டு கொள்ளலாம்.

அரசாங்க மாறுதல்களால் நாட்டில் பேசப்படும் மொழியில் பிறமொழிச் சொற்கள் கலத்தலும் உண்டு. நம் தமிழ் மொழியில் எத்தனையோ சொற்கள் அவ்வாறு கலந்து விட்டன. நம் நாட்டில் முகம்மதியர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் பல உருதுமொழிச் சொற்கள் பேச்சு வழக்கிலும் அரசாங்க நிலையங் களிலும் நிலையற்றுப் போயின. அவற்றுட் சில, தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்று விட்டமை வியப்பிற்குரியதாகும். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த புலவர் பெருமானாகிய அருணகிரிநாதர் என்பவர், தாம் இயற்றிய திருப் புகழில் “சபாஷ்” என்ற சொல்லை,

‘கற்பகந் திருநாடுயர் வாழ்வுறச்
சித்தர் விஞ்சையர் மாகதர்
சபாசெனக் கட்ட வெங்கொடு
ஆர்கிளை வேரற விடும்வேலா’

என்ற வரியில் எடுத்தாண்டிருத்தல் அறியற்பாலதாம். அன்றியும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்த குமர குருபர சுவாமிகள் என்ற பெரியார், தாம் இயற்றிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில்,

“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை

முத்துக் குமரனைப் போற்றுதும்”

என்று “சலாம்” என்ற சொல்லை அமைத்துப் பாடியிருத்தல் காண்க. எனவே ‘சலாம்’ ‘சபாஷ்’ என்ற உருது மொழிச் சொற்கள் புலவர் பெருமக்கள் மூலமாக இற்றைக்கு 300,400 ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த தமிழிலக்கியங்களில் இடம் பெற்றமை உணரற்பாலதாம்.

இனிப் பேச்சு வழக்கிலுள்ள மொழி, மக்கள் நாகரிகம் வளர வளரத் தானும் புதிய புதிய சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டே போகும் இயல்புடையதாகும். அன்றியும், ஆட்சி மாறுதலால் ஏற்பட்ட அரசியல் முறை களுக்கு ஏற்றவாறு பற்பல சொற்கள் புதியவையாக அமைக்கப் பெறுதலும் உண்டு. அவ்வாறு நம் தமிழ் மொழியிலும் பல சொற்கள் தோன்றியுள்ளன எனலாம். அத்தகைய சொற்களைக் கடிந் தொதுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழ் இலக்கண ஆசிரியர்களின் கருத்தாகும்.

“கடிசொ லில்லை காலத்துப் படினே”

என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”

என்று நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவரும் கூறியிருப்பது இக்கருத்தில் உட்கொண்டேயாம். அத்தொல் லாசிரியர்களின் விரிந்த மனப்பான்மையும் பேரறிவுடைமையும் பெரிதும் போற்றற்குரியவனவாம்.

நம் தமிழ்மொழியானது காலநிலைக்கேற்பப் புதிய புதிய சொற்களை ஏற்றுக் கொண்டு பெரிதும் வளர்ச்சி யெய்தி வருகின்றது என்பது நன்கு விளங்குதல் காண்க.

சம்புவராய மன்னன்


வடக்கில் திருமால் எழுந்தருளியுள்ள வேங்கட மலையையும் தெற்கில் குமரி முனையையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு பெருங்கடலையும் எல்லைகளாக உடைய இவற்றின் பரப்பு முற்காலத்தே தமிழகம் என்னும் பெயரினை உடையதாக இருந்தது. இத்தமிழகம் சேரமண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தர்களால் ஆளப்பெற்று வந்தது. இற்றைக்கு ஆயிரத் தொண்ணூறு ஆண்டுகட்கு முன்னர், சோழ மண்டலத்தின் ஒரு பகுதி, ஒரு தனி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுத் தொண்டை மண்டலம் என்னும் பெயர் எய்தியது. இத்தொண்டை மண்டலத்தை அந்நாளில் அரசாண்டவர் தொண்டைமான் மரபினர் ஆவர். இவர்கள் சோழரின் வழியினர். இவர்கள் தம் குடி முதல்வராகிய சோழரைப் போல் ஆத்தி மாலையைத் தம் அடையாளமாகக் கொள்ளாமல் ஒரு காரணம் பற்றித் தொண்டை மாலையைத் தம் அடையாள மாகக் கொண்டமையின் ‘தொண்டை மான்கள்’ என்று அழைக்கப் பெற்றனர். இவ் வேந்தர்களுள் முதல்வன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன்; இவன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சி புரிந்த கரிகாற் பெருவளத்தானது பெயரன்; சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனது மகன்; கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற ‘பெரும் பாணாற்றுப் படை’ என்னும் பிரபந்தங் கொண்டவன்; செந்தமிழ்ப் புலமையில் சிறந்தவன்; திருமால் பக்தியில் ஒப்பற்றவன்; இவனும் இவனது வழித் தோன்றல்களும் காஞ்சி மாநகரைத் தலை நகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் மக்களாகப் பிறந்தோர் உலகில் அடையக்கூடிய உயர் நிலைக்கு எல்லையாகத் ‘தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்னும் பழமொழியில் வைத்து இன்னும் பாரட்டப் பட்டு வருதல் காண்க. இவர்களது ஆட்சி, கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையில் தொண்டைமண்டலத்தில் நடைபெற்றது. அந் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர்கள் வடக்கேயுள்ள ஆந்திர நாட்டிலிருந்த தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் தொண்டை மண்டலத்தையும் பிடித்துக் கொண்டு அரசாளத் தொடங்கினர். பல்லவர்களும் தொண்டை மண்டலத்தை அரசாண்ட காரணம் பற்றித் தொண்டைமான்கள் என்றழைக்கப்பெற்றனர். கி.பி. 844 முதல் 867 வரை யாண்ட தெள்ளாற்றெறிந்த நந்திவர்மப் பல்லவன்மேற் பாடப்பட்ட நந்திக் கலம்பகத்திலும் அவ் வேந்தன் ‘தொண்டையந்தார்’ மன்னன் என்றும் ‘தொண்டைமான்’ என்றும் புகழப்பெற்றிருத்தலுக்குக் காரணம் இதுவேயாகும். பல்லவர்களது ஆளுகையும் தொண்டை மண்டலத்தில் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவெய்தியது. ஆயினும் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் நிகழ்ந்த அவர்களது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் ஒரு சிறந்த பகுதியாகும். அக்காலத்தில் தமிழக வேந்தர்களுள் ஒரு பகுதியினராகிய சோழர்கள் தம் நாட்டை இழந்து தாழ்ந்த நிலையை எய்தினர். பல்லவர்கள் நெடுமுடி வேந்தர்களாகவும் உள்நாட்டுத் தலைவர்களிடத்தும் திறை வாங்கும் பெருமை யுடையவர்களாகவும் விளங்கினர். அவர்களது ஆட்சிக் காலத்தேதான் சைவ சமய ஆசாரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் முதலான பெரியோர்களும் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை யாழ்வார் முதலான வைணவ சமய ஆசாரியர்களும் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆகவே அப்பெரியோர்கள் எல்லாம் அரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்திச் சைவ வைணவ சமயங்களை வேரூன்றுமாறு செய்து அவற்றை எங்கும் பரவச் செய்த ஒரு கால விசேடமென்று அப்பகுதியைக் கூறுவது சாலப் பொருந்துமென்க.

இனி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது தொண்டை மண்டலம் பிற்காலச் சோழர்களிள் முதல்வனாகிய விஜயாலயனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழனால் வென்று கொள்ளப்படவே, பல்லவர்களும் குறுநில மன்னர் ஆயினர். தொண்டை மண்டலமும் சயங்கொண்ட சோழமண்டலம் என்னும் புதியதோர் பெயரைப் பெற்றது. அந்நாளில் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்த பல்லவர்குலச் சிற்றரசர் களும், தலைவர்களும் தொண்டை மண்டலத்தில் பல பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சோழ மன்னர்களின் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் நிலவியதோடு நில உண்ணாடுகளையும் தனியூர்களையும் ஆட்சி புரியும் உரிமையும் பெற்றிருந்தனர். இங்ஙனம் வாழ்ந்து வந்த பல்லவர் குலச் சிற்றரசர்களுள் சம்புவராயர் என்ற பட்டப் பெயருடன் விளங்கியவர்களும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தனர் என்பது தெரிகிறது. இவர்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி செங்கற்பட்டு, வட ஆற்காடு ஜில்லாக்களைக் கொண்டுள்ளதாயிருந்தது. இவர்கள் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்தனர். கல்வெட்டுக்களால் அறியப்படும் சம்புவராய மன்னர்களுள் செங்கேணி மிண்டான் அத்திமல்லன் சம்புவராயன் என்பவனே மிகப் பழமையானவன். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 8-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1186) திருவல்லமுடைய மாகதேவருக்கு குற்றத் தண்டம், திரிசூலக் காசு இவற்றால் கிடைக்கும் வருவாய்களைக் கொடுத்தனன் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது.1 இக் கல்வெட்டின் இறுதியில் செங்கேணிகள் வம்சம் உள்ளவரைக்கும் இத் தர்மத்தைச் செய்யாமல் நிறுத்துவோர் கங்கைக் கரையிலும் குமரிக் கரையிலும் குரால் பசுவைக் கொன்றவனது பாவத்தையடைவர் என்று வரையப் பட்டுள்ளது. இதனால் செங்கேணி என்பது குடிப் பெயர் என்பது வெளியாகிறது.

மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் (கி.பி. 1189) செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரம சோழச் சம்புவராயன் பல வரிகளால் கிடைக்கும் வருவாய்களைத் திருவல்ல முடையார்க்கு அளித்தனன்.1 முன்னவனுக்குப் பின்னவன் யாது முறையுடை யான் என்பது இப்போது புலப்படவில்லை. ‘சோழச் சம்புவராயன்’ என்னும் சொற்றொடர் இம் மரபினர் அப்போது சோழ மன்னர்க்குக் கப்பம் செலுத்தி வந்த சிற்றரசராயிருந்தனர் என்பதைப் புலப்படுத்துகின்றது. அன்றியும் பல வரிகளால் கிடைக்கும் வருவாய்களை அவன் திருவல்லமுடையார்க்கு அளித்திருப்பது அப்பகுதி அவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை நன்கு விளக்குகின்றது.

இவ்வரசனது புதல்வன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனி நின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்போன். இதனைக் காஞ்சி புரத்திலுள்ள அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டொன்று ‘அம்மையப்பன் மகன் சோழப் பிள்ளையான அழகிய சோழச் சம்புவராயன்’ என்றுரைப்பதால் நன்குணரலாம்.2 இவனது கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 27-ஆம் ஆண்டாகிய கி.பி. 1205-ல் தான் இவன் ஆட்சி புரியத் தொடங்கியிருத்தல் வேண்டும். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் ஆட்சியுரிமையைப் பற்றிய விவாதம் உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியனுக்கு இலங்கை மன்னனாகிய பராக்கிரமபாகு என்பான் துணைப்படை அனுப்பினான். இலங்கைப் படைக்குத் தலைவனாக வந்தவன் இலங்காபுரித் தண்டநாயகன். குலசேகர பாண்டியனுக்கும் சோழ மன்னர்கள் உதவிபுரிந்தனர். சோழர்களது படைக்குத் தலைமை வகித்து மகாசாமந்தனாகச் சென்றவன் நமது எதிரிலி சோழச் சம்புவராயனது புதல்வனாகிய திருச்சிற்றம் பல முடையான் பிள்ளைப் பல்லவராயன் என்பவனேயாம்.

பாண்டிய நாட்டில் இராமேச்சுரம், திருக்கானப்பேர், தொண்டி, பொன்னமராவதி, மணமேற்குடி முதலான இடங்களில் இவ்விரு படைக்கும் பெரும் போர்கள் நிகழ்ந்தன. முதலில் சிங்களப்படை வெற்றி பெற்றது. அதன் பயனாகப் பல நகரங்களும், கோயில்களும் இடிக்கப்பட்டன. இச்செய்திகளைக் கேள்வியுற்ற எதிரிலி சோழச் சம்புவராயன் பெரிதும் வருந்திக் காஞ்சிபுரத்திற் கருகிலுள்ள ஆரப்பாக்கத்தில் எழுந்தருளியிருந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவரிடம் சென்று இச்செய்திகளை விண்ணப்பித்துச் ‘சிங்களப்படை நம் சோழ நாட்டிற் புகுந்தால் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டு விடுமே; அந்தணர் துன் புறுவரே; ஆதலால் அச்சிங்களப்படை தோற்றோடுமாறு தாங்கள் எவையேனும் உபாயங்கள் செய்தருள வேண்டும்’ என்று கூறினார். இதனைக் கேட்ட அப்பெரியார் ‘அன்னோர் இராமேச்சுரம் கோயில் வாயிலை இடித்துச் சிவபெருமானுக்கு நித்திய பூசை நடைபெறாதவாறு இடையூறு புரிந்தனர் என்று கேள்வியுற்றேன்; எனவே அவர்கள் சிவாபராதம் செய்தவர் ஆவர். ஆகவே அவர்கள் போரில் தோல்வி யெய்தி ஓடுமாறு தக்கவழி தேடுவேன்’ என்றுரைத்து இருபத்தெட்டு நாட்கள் இரவும் பகலும் தவம் புரிந்தனர். அப்போது திருச்சிற்றம்பல முடையான் பிள்ளைப் பல்வராயனிடமிருந்து ‘இலங்காபுரித் தண்ட நாயகனும் சகத் விசயதண்ட நாயகனும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிப்போயினர்’ என்று எதிரிலி சோழச் சம்புவராயனுக்கு ஒரு திமுகம் வந்தது. இதனைக் கண்ட சம்புவராயன் பெரிதும் மகிழ்ந்து ஆரப்பாக்கத்தி லிருந்த சுவாமிகளிடம் கொண்டுபோய்க் காட்டவே, அவரும் உவகையுற்றனர். பின்னர் இவ்வேந்தன் ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை அப்பெரியாருக்கு அளித்தனன். இச்செய்திகளை ஆரப் பாக்கத்திலுள்ள கல்வெட்டுக்களில் விளக்கமாய்க் காணலாம்.

இவ்வேந்தன் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தும் அவனது சிற்றரசர்களுள் ஒருவனாயிருந்தனன். விருஞ்சிபுரத்திற் கருகிலுள்ளதும் பொய்கை என்று தற்காலத்தில் அழைக்கப்படுவது மாகிய இராஜேந்திர சோழநல்லூர் சித்திரமேழி மலை மண்டல விண்ணகரான அருளாளப் பெருமாளுக்குக் குமாரமங்கலம், புத்தூர், அத்தியூர் ஆகிய கிராமங்களைக் கி.பி. 1238, 1239, 1243ஆம் ஆண்டுகளில் மலைமண்டலத்து வணிகன் இராம கேரளச்செட்டியிடம் இம்மன்னன் பொன் பெற்றுக் கொண்டு தேவதானமாகவிட்டான் என்று பொய்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

அத்தி மல்லன் சம்புக்குலப் பெருமாளான இராஜகம்பீரச் சம்புவராயன் என்பானும் மூன்றாம் இராஜ ராஜ சோழனது ஆட்சியின் 20-ஆம் ஆண்டாகிய கி.பி. 1236-ல் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. இவன் எதிரிலி சோழச் சம்புவராயனது தம்பியாயிருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப் படுகிறது. இவ்விரு வேந்தரும் ஒரே காலத்தில் ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. நமது இராஜ கம்பீர சம்புவராயன் குன்றத்தூரை இராஜகம்பீர நல்லூர் என்னும் பெயருடன் நிலவுமாறு பங்களராயர்க்குக் காணியாகக் கி.பி. 1236-ல் அளித்தான். இச்செய்தியை உணர்த்தும் கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படுகின்றது. அதனை அடியில் குறிக்கின்றேன். “ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு இருபதாவது முதல் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தமனூர் நாட்டு வீரன் பாக்கத்து இலாலப் பெருமான் மகள் ஆண்டான்கள் பங்களராயர்க்குப் பல்குன்றக் கோட்டத்துப் பங்களநாட்டு நடுவில்… க் குன்றத்தூரான ராஜகம்பீரநல்லூர் இவர்க்குக் காணியாகக் கீழ் நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாலெல்லையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்துக்கு உருத்தாவதாகக் கொடுத்தோம். அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான ராஜ கம்பீரச் சம்புவராயனேன்.”

இக்கல்வெட்டால், இராஜ கம்பீரச் சம்புவராயன் மூன்றாம் இராஜராஜ சோழனது ஆட்சிக்குட்பட்டிருந்த, ஒரு குறுநில மன்னன் என்பதும், ‘சம்புகுலப் பெருமாள்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதும் நன்கு விளங்குகின்றது. இராஜ கம்பீரச் சதுர்வேதி மங்கலம் எனவும் சம்புகுலப் பெருமாள் அகரம் எனவும் அழைக்கப்படும் ஊர்கள் இம் மன்னன் பெயரால் அமைக்கப்பெற்ற ஊர்கள் போலும். இராஜகம்பீர நல்லூரும் இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலமும் வேறு வேறு ஊர்களாதல் உணர்க.

இனிச் சம்புவராய மன்னர்களுள் இராஜகம்பீரச் சம்புவராயனே மிகவும் பெருமையுற்றவன். இவ்வேந்தன் காலத்தில் இவனது இராச்சியம் பெருகியதோடு ‘இராஜ கம்பீரவிராஜ்ஜியம்’ என்னும் பெயரையும் எய்தியது. இவன் படை வீட்டில் ஒரு மலைக்கோட்டை அமைத்து அதனைத் தனக்கு உறைவிடமாகவுஞ் செய்து கொண்டான். கி.பி. 1258ல் படை வீட்டில் வெட்டப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டு இவன் சோழர்களுக்குக் கப்பஞ் செலுத்தாமல் தனி அரசு புரிந்தான் என்று கூறுகின்றது. இதனால் இவன் காலத்தேதான் சம்புவராயர்கள் நெடு முடிவேந்தராய் ஆட்சிபுரியும் பெருமையை அடைந்தனர் என்பது நன்கு வெளியாகின்றது. இவர்களது இராச்சியமும் ‘தொண்டை மண்டலத்துப் படை வீட்டி ராஜ்யம்’ என்று புகழப்படும் சிறப்பையும் அடைந்தது. படை வீட்டினுள் அம்மையப்பேச்சுரர் ஆலயம் எடுப்பித்து அதற்கு நிபந்தங்கள் விட்டவனும் இவ்வேந்தனேயாவன். இவனது தந்தையாகிய அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழச் சம்புவராயனது பெயரே இவ்வாலயத்திற்கு இடப்பட்டது போலும். சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் எடுக்கப்பெற்ற இராஜராஜேச்சுரம், கங்கை கொண்ட சோழேச்சுரம், விக்கிரம சோழேச்சுரம் என்ற ஆலயங்கள் எய்தியுள்ள பெயர்களையும் ஆராய்ந்து நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு புலப்படும்.

இனி இவனுக்குப் பின்னர் அரசுரிமை எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால் இவனுக்குப் பின்னர்ப் பட்டம் பெற்றவன், தனது சயேச்சையை இழந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப, காஞ்சீபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள சில இடங்களிலும் தெலுங்கு நாட்டுச் சோழர்களது கல்வெட்டுக்களும் சேந்தமங்கலத்துப் பல்லவனாகிய கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களும், அக்காலத்தில் காணப்படுகின்றன. எனவே, சம்புவராயர்களும் சில காலம் இவர்களுக்குத் திறை செலுத்தும் நிலையிலிருந்தனரோ என்று ஐயுற வேண்டியிருக்கின்றது. ஆயினும் கி.பி. 1314-15-ல் வீரசோழச் சம்புவராயன், வீரசம்புவராயன் என்போரது கல்வெட்டுக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இன்னோர் சுயேட்சையுற்று வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. அன்றியும் கி.பி. 1322-ல் சகலலோக சக்கரவர்த்தியென்று மண் கொண்ட சம்புவராயன் பட்டம் சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றிருந்தாலும் ‘வென்று மண் கொண்ட’ என்ற அடைமொழிகளோடு விளங்குவதாலும் இவனே தெலுங்கு நாட்டுச் சோழர் முதலானோரைப் போரில் வென்று மீண்டும் சுயேட்சையுற்றுத் தனியரசு புரிந்தவனாதல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. இவன் கி.பி. 1338 வரை ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் படை வீட்டு ராஜ்யம் மகோன்னத நிலையிலிருந்தது. இவனுக்குப் பிற வேந்த ரெல்லாம் அஞ்சுவாராயினர். விஜயநகர வேந்தர்களும் தமக்குத் தெற்கிலுள்ள சம்புவராயர்களைக் கண்டு அஞ்சி அவர்களை எவ்வாறாயினும் தம் சிற்றசர்களாக்கித் திறை செலுத்தச் செய்ய வேண்டுமென்று காலங்கருதிக் கொண்டிருந்தனர். இன்னோரது முயற்சி வென்று மண் கொண்ட சம்புவராயர் என்பானது ஆட்சியுள்ள வரையில் பயன்படவில்லை. கி.பி. 1338-ல் அவ்வேந்தன் விண்ணுலகெய்தவே அவனது புதல்வன் இராஜ நாராயண சம்புவராயன் முடி சூட்டப் பெற்றான். இவன் நாடாட்சியை எய்திய பின்னர்ச் சகலலோக சக்கரவர்த்தி இராஜ நாராயண சம்பவுராயன் என்று அழைக்கப்பெற்றான். இவன் கி.பி. 1339 முதல் 1366 வரை ஆட்சி புரிந்தான். இவனது கல்வெட்டுக்கள் காஞ்சி, மாமல்லபுரம், படை வீடு, வேலூர், திருப்புக்கொளி, போளூர்த் திருமலை முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவனும் தனது முன்னோர்கள் போலவே பல கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவனது ஆட்சிக்காலத்தில் தான் விஜயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தனன். இது கி.பி. 1365 க்கு முன்னர் நிகழ்ந்தது. பெருமையுடன் தென்னாடு போந்த விஜய நகர வேந்தன் முதலில் படை வீட்டிராஜ்ஜியம் எனப்படும் “இராஜநாராயண சம்புவராயன் ராஜ்ஜியத்தை” தாக்கினான். தாக்கவே இராஜ நாராயண சம்புவராயனும் தன் பகைவரை எதிர்த்துப் போர் புரிந்தான். இறுதியில் விஜயநகர வேந்தன் வெற்றியடைந்தமையின் சம்புவராயன் தன் நாட்டை இழந்தான். ஆயினும், குமாரகம் பண்ணன் தான் கைப்பற்றிய நாட்டைத் திரும்ப அச் சம்புவராய மன்னனுக்கே யளித்து அவனைத் தனக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி வருமாறு கட்டளையிட்டுவிட்டுப் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். பிறகு கி.பி. 1366-ல் இராஜ நாராயண சம்புவராயனும் இறந்தான். அவன் வழியில் தோன்றிய சம்புவராயர்களும் குறுநில மன்னராக விஜயநகரத் தரசர்களுக்குக் கப்பஞ் செலுத்தி வந்தனர். பின்னர் அவர்களது ஆட்சியும் ஒழிந்தது. ஒழியவே அவர்களும் செல்வங் குன்றியவர்களாய்த் தாழ்ந்த நிலையை எய்தினர். வட ஆர்க்காடு ஜில்லாவில் வேலூருக்கண்மையிலுள்ள படைவீடு என்ற இடத்தில் இன்னும் அவர்களது வழியினர் வகிக்கின்றனர். படைவீடு என்னும் அவர்களது தலைமை நகரம் இப்போது ‘படவேடு’ என்றழைக்கப்படுகிறது. அங்கு அழிந்து கிடக்கும் அரண்களையும் கோட்டையையும் அம்மையப்பேச்சுரர் ஆலயத்தையும் இன்றும் காணலாம்.

இனி இரட்டைப் புலவர்களால் பாடப் பெற்ற கலம்பகம் கொண்டவனும் காஞ்சியைத் தலைமை நகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள பகுதியை அரசாண்டவனும் காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதருக்கு அரிய பெரிய திருப்பணிகள் பல புரிந்தவனுமாகிய ஏகாம்பரச் சம்புவராயன் என்பானும் அச் சம்புவராய மன்னர்களின் வழித் தோன்றல்களுள் ஒருவன் என்பது ஈண்டு அறிந்து கோடற்குரியதாகும்.

1.நாளுமின்னிசை யாற்றமிழ்பரப்பு
ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளுமீந்தவன் பாடலுக்கிரங்குத்
தன்மையாளனை யென்மனக் கருத்தை
யாளும் பூதங்கள் பாட நின்றாடும்
அங்கணன்றனை யெண்கணமிறைஞ்சும்
கோளிலிப்பெருங் கோயில் உள்ளானைக்
கோலாக்காவின்றி கண்டுகொண்டேனே.

திருக்கோலக்கா, 8

2.பரந்தபாரிட மூரிடைப்பலிபற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்தநான்மறையோர்க் கிடமாய் திருமிழலை
இருந்துநீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் காசுநித்தனல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீரடியேற்கு மருளுதிரே

-   திருவீழிமிழலை, 8