ஆரியத்தால் விளைந்த கேடு
ந.சி. கந்தையா 

 

ஆரியத்தால் விளைந்த கேடு


1. ஆரியத்தால் விளைந்த கேடு
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
 

ஆரியத்தால் விளைந்த கேடு

 

ந.சி. கந்தையா

 

 

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : ஆரியத்தால் விளைந்த கேடு
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

ஆரியத்தால் விளைந்த கேடு


முன்னுரை
உடம்பில் நஞ்சு கலந்தால் எவ்வளவு தொல்லை உண்டோ அவ்வளவு தொல்லை ஆரியத்தால் தமிழ் மொழிக்கும் தமிழருக்கு முண்டாயிருக்கின்றது. அப் பொல்லாப்பை ஒழிப்பதற்குத் தமிழ் அறிஞர் பற்பல காலத்தில் முயன்றார்கள். அக் கால அரசர், ஆரியக் கொள்கைகளைத் தழுவியிருந்த புரோகித வகுப்பினர், அரசரின் மந்திரிகள், கருமத்தலைவர், கருமகாரராயிருந் தமையாலும் ஆரியத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட கிளர்ச்சிகள் பயனளிக்கவில்லை. தமிழர் கோயில்களை மேற்பார்த் தமையிற் பார்ப்பார் எனப்பெயர் பெற்ற கோயிற் பூசாரிகள் பிராமண மதத்தைத் தழுவித் தாம் புரிந்துவந்த பார்ப்பனத் தொழிலையே செய்த காரணத்தினால் ஆரியம் கோயில்களில் நுழைவதாயிற்று. ஆரியம் எனப்படுகின்ற சமற்கிருதமொழி, கிரேக்கு, இலத்தின், எபிரேயம், சுமேரியம் முதலிய மொழிகளைப் போன்று பொதுமக்களாற் பேசப்பட்ட மொழியன்று. இது ஒரு கூட்டத்தாருக்கே உரிய சாதிமொழி. இம் மொழியைத் தமது தாய்மொழி எனக் கூறிக்கொள்ளும் குழாத்தினர் இந்திய சனத் தொகையில் மூன்று சதவீதத்தினராவர். இம் மக்கள் இறந்துபோன இம் மொழியை உயிர்ப்பித்து இந்தியப் பொது மொழியாக்கவும் உலகப் பொதுமொழியாக்கவும் வேண்டுமெனப் பைத்தியக்காரத்தனமாகப் பேசிவருகின்றனர். ஒரு போதும் மக்கள் பேச்சு வழக்கிலிருந்து இறந்துபோன மொழிகளை உயிர்ப்பிக்க முடியவில்லை யானால் பொதுமக்களால் பேசப்படாது மாண்டுபோன ஒரு மொழியை உயிர்ப்பிப்பது எங்ஙனம்?

“ஆரியம் தேவபாஷை. அம்மொழியிலுள்ள வேத ஆகம புராணங் களைக் கடவுள் செய்தார்” எனக் கற்பனைக் கதைகளை ஏடுகளில் எழுதிப் பொதுமக்க ளிடையே பரப்பித் தமது மாயத்தால் அவர்களை மயக்கித் தாம் விரும்பியவாறெல் லாம் அவர்களை ஆட்டுவித்துப் புரோகிதர் குழாத்தினர் உழைப்பின்றி உயர்ந்த வாழ்க்கை நடத்தி வருவாராயினர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் காலம் முதல் தமிழ்உலகு விழிப்படைந்து உண்மை உணர்ந்து தமிழையே சமயமொழியாக்க வேண்டுமென்றும், பொல்லாத ஆரியக் கொள்கைகளை ஒழிக்க வேண்டுமென்றும் தமிழை வட மொழிக் கலப்பின்றி எழுத வேண்டுமென்றும் முயன்று வருகின்றனர். ஆரிய மாயையில் சிக்குண்ட பழம் போக்கான சைவர்கள் “சைவ சித்தாந்தச் செந் தமிழ்ச் செந்நெறியை” வளர்ப்பதாக அறைகூவினாலும் ஆரியத்தை ஆலயத்தில் ஒழிப்பதற்கு வகை தேடவில்லை. ஆழ்வார் திருவாய் மொழிகளையே உச்சிமேல் வைத்துப் போற்றும் வைணவர்களும் அவ்வாறு செய்ய முயலவில்லை. தீண்டாமை ஒழிப்பு, குழந்தை மணத்தடுப்பு, தேவடியாள் ஒழிப்பு, தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவுத் தடைஒழிப்பு போன்றதொன்றே ஆரிய ஒழிப்புமாகும். இக்கருத்துக்களை வரலாற்று மூலம் வலியுறுத்துவதே இந்நூலின் இலக்கு.

சென்னை,

1-11-1948.

ந. சி. கந்தையா

ஆரியத்தால் விளைந்த கேடு
ஆரியம்
ஆரியம் இந்திய நாட்டுக்கு அயலே இருந்து வந்த மொழி என்பதை எவரும் அறிவர். அரபு, ஆங்கிலம், பிரஞ்சு முதலிய மொழிகளும் அவ் வாறே பிற நாடுகளிலிருந்துவந்தன. இம்மொழிகளை அன்னிய மொழிகள் என்று கருதுவதுபோல நம்மவர் ஆரியத்தை அன்னிய மொழியாகக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் பெரும்பாலும் நம்மவர் ஆரியத்தைப் பற்றிய வரலாற்றை அறியாதிருப்பதே. ஆங்கிலம் அன்னிய மொழியா யிருப்பதால், அதைப் படிப்படியாக நமது நாட்டை விட்டு ஒழிக்கவேண்டும் என்னும் கிளர்ச்சிக்குக் காரணம் அது அன்னிய மொழியாயிருப்பதே. ஆரியம் நமது நாட்டுக்குரிய மொழியன்று; அது, வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு இந்திய நாட்டுக்கு வந்து, பின் அந்நாட்டின் பகுதிகளை ஆக்கிர மித்துக்கொண்ட ஒரு சாதியாரின் மொழி என்பதை நம்மவர் நன்றாக மனத் தில் கொள்வாராயின் அதனையும் நம் நாட்டைவிட்டு ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி துரிதமாகத் துடித்தெழுதலை நாம் காணலாம்.

ஆங்கிலம் அரசாங்க மொழியாக மாத்திரம் இருந்துவந்தது. ஆரியம் சமயமொழியாகித் “தேவ பாஷை” யாகித் தமிழனின் சமயத்திலும் நுழைந்து கொண்டது. ஒருவன் கடவுளுக்குத் துதி கூறவேண்டுமாயின் அம்மொழியில் எழுதப்பட்ட துதிகளை மனப்பாடஞ் செய்துள்ள ஒருவனுக்கு, (ஒரு பூசாரிக் குக்) கூலி கொடுத்து அதனை அவன் திருவாயால் சொல்லுவிக்கவேண்டி யிருக்கிறது. நாகரிகம் முற்போக்கு அடைந்துள்ள காலம் எனக்கொள்ளப் படும், இவ் விருபதாம் நூற்றாண்டிலேயே அன்னியர் பார்த்து ‘அநாகரிகம்’ என நகையாடத்தகும் இச் செயல் நமது நாட்டில் நடைபெறுதல் வெட்கத் தின்மேல் வெட்கத்திற்கு இடமாகும்.

ஆரிய மொழி இந்தியாவில் எவ்வாறு வேரூன்றிற்று?
காஸ்பியன் கடலை அடுத்த நாடுகளினின்றும் கிளம்பிய ஆரியக் குழுவிற் சிலர் இந்திய நாட்டை அடைந்தார்கள். இவர்களின் காற்சுவட்டைப் பின்பற்றி மேலும் பற்பல கூட்டத்தினர் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்கள் எல்லோரும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும் இவர்கள் பேசிய மொழிகள் வெவ்வேறு வகையாகவிருந்தன. இம்மொழிகள் ஒன்றில் பாடல்கள் செய்யப்பட்டன. அக் காலத்தில் ஆரிய மக்கள் எழுத்தெழுத அறியாதிருந்தமையாலும், அப் பாடல்கள் சமய சம்பந்தம் பெற்றிருந்தமை யாலும், ஒருவர் சொல்ல மற்றவர்கள் கேட்டு மனப் பாடஞ்செய்து அவை களைக் காப்பாற்றிவந்தனர். நாளடைவில் இம் மொழி சமய மொழியாக அவர் களாற் கொள்ளப்படுவதாயிற்று. காலம் செல்லச் செல்ல இம் மொழி உச்சரிப்பு வேறுபட்டும் நாட்டு மொழிச் சொற்களிற் பலவற்றை ஏற்றும் மாறுபடுவ தாயிற்று. அப்பொழுது ஆரிய மொழிப் பற்றுடையார் அதற்கு இலக்கணஞ் செய்து அதனை மேலும் திரிய ஒட்டாமல் பாதுகாத்தனர். பழைய பாடல்கள் செய்யப்பட்ட ஆரிய மொழி பேச்சு வழக்கில்லாததும் இலக்கிய வழக்கில் உள்ளதுமாகிய மொழியாக மாத்திரம் இருந்துவந்தது1. மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்திய மொழிகள் பிராகிருதம் எனப்படும். பிராகிருதம் என்பதைக் கிராமிய மொழி எனக் கூறலாம்.

உள்நாட்டு மொழிகள்
ஆரியர் வரும்போது வடநாட்டில் நாகரிகத்தால் உயர்ந்த தமிழர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களின் கோட்டை கொத்தளங்களைப் பற்றியும், செல்வங்களைப்பற்றியும் ஆரியரின் பழைய பாடல்களே நன்கெடுத்துக் கூறுகின்றன. இந்திய நாட்டை அடைந்த ஆரியர் மிகச் சிலரும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர் மிகப்பலருமாயிருந்தனர்2. ஆரிய மக்களுக்குத் தம் கருத்துக்களை விளக்கும் பொருட்டுத் தமிழ் மக்கள் ஆரியச் சொற்கள் பலவற்றைக் கையாண்டனர். இதே கருத்துடன் ஆரிய மக்களும் பல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினர். ஒருவர் மொழிச் சொற்களை இன்னொருவர் உச்சரிக்குமிடத்து அவை சிதைவுபட்டுப்போதல் இயல்பு. இவ்வாறு ஒருவர் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் கலந்து இருவர் மொழிகளும் மாறுதலடையத் தொடங்கின. பின்பு இரு மக்களுக்குமிடையே திருமணக் கலப்பு உண்டாகிப் புதிய சந்ததியினர் தோன்றுவாராயினர். இதனாலும் சாதிக் கலப்பும் மொழிக் கலப்பும் முன்னிலும் அதிகமாயின. இக் காரணங்களினால் வட நாட்டில் மொழிக் குழப்பமுண்டாகிப் பல புதிய மொழி கள் தோன்றின. இம் மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரம் நிலவின. இலக்கிய வழக்கிற்கு ஆரியமே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி. மு. ஆயிரம் வரையில் விந்தமலைக்கு வடக்கே உள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் எனப்பட்டன. விந்தத்துக்கு வடக்கே உள்ள மக்கள் எல்லோரும் ஆரியர் அல்லராயினும் அவர்கள் ஆரிய மொழியையே தமது இலக்கியப் பொது மொழியாகக் கொண்டமையால் தம்மை ஆரியர் எனக்கூறினர்.

கி.மு. ஆயிரத்துக்குப்பின் வடநாட்டு முனிவர்கள் சிலர் தமது மதத்தைப் பரப்பும் பொருட்டுத் தென்னாட்டு யாத்திரை செய்தார்கள். 1வட நாட்டு முனிவர் சிற்சிலர் விந்தத்துக்குத் தெற்கே வந்து குடியேறியிருந் தமையை இராமாயணம் கூறுகின்றது.
புத்தரும் மகாவீரரும் ஆரிய மதத்துக்கு எதிராகக்கிளம்பினர்.

வடநாட்டிலே ஆரியருக்கும் தமிழருக்கு மிடையில் நேர்ந்த போர்கள் பெரும்பாலும் மத சம்பந்தமானவை. நாளடைவில் ஆரியரின் மதம் வடநாடு முழுமையும் பரவுவதாயிற்று. ஆரியர் தமது மதத்தைப் பொதுமக்களிடையே திணிக்க முடியவில்லை. அவர்கள் தமது மதத்தில் சில மாற்றங்களை உண்டாக்கினர். தமிழரின் சிவன், அம்மன் முதலிய கடவுளரைத் தமது மதத்துள் சேர்த்துக் கொண்டார்கள். திராவிடக் கோயிற் பூசாரிகள் பிராமண ராக மாறினர். எல்லாக் கூட்டத்தினரின் அரசரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறினர். இவ்வாறு சில தணிவுகளை உண்டாக்கியபின் அவர்கள் மதம் வட நாடுகளிற் பரவிற்று. அவ்வாறிருந்தபோதும் தமிழரின் பழைய சமயக் கொள்கைகள் ஆங்காங்கு நிலைபெற்றிருந்தன.2

தமிழர் தம் பழைய மதக்கொள்கைகள் நிலை பெற்றிருந்த மகத நாட்டில் மகாவீரரும், புத்தரும் தோன்றினார்கள். இவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சைனம், புத்தம் என்னும் மதங்கள் ஆரிய மதத்துக்கு மாறுபட்டவை.3 இம்மதங்கள் விரைவில் மக்களிடையே பரவின. இம்மதங்களுக்கு எதிராக ஆரிய மதத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. கி. மு. மூன்றாம் நூற் றாண்டுவரையில் பொதுமக்கள் எல்லோரும் இம்மதங்களையே கைக் கொண்டனர். உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லப்பட்ட ஒரு சில பழங் கொள்கையாளரிடையே மாத்திரம் இந்துமதம் எனப்பட்ட பிராமணமதம் காணப்பட்டது.

ஆரியர் மிலேச்சர் எனப்பட்ட காலம்
கௌதமபுத்தர், மகாவீரர் காலத்தை அடுத்து ஆரியர் சிலர் தென்னாடு வந்தனர். இவர்கள் தென்னாட்டில் மதிப்புப் பெறவில்லை. தமிழர் அவர்களை மிலேச்சர் என அழைத்தனர். மிலேச்சர் என்பதற்கு அன்னியர் (barbarians) என்பது பொருள். மிலேச்சர் என்னும் சொல் ஆரியருக்குப் பெயராயிருந் தமையை நாம் நிகண்டு நூல்களிற் காணலாம். சங்ககாலத்தில் ஆரியத்துக்கு மதிப்பு உண்டாயிருந்ததாகத்தோன்றவில்லை. ஆரியரைப் போரில் வெல்வதே தமிழரின் சிறந்த வீரச் செயல்எனக்கருதப்பட்டது. ‘ஆரியப் படை வென்ற’ என்பதுபோன்ற பட்டப்பெயர்கள் முற்கால அரசருக்கு இருந் தமையே இதற்குச் சான்று. தமிழ் அரசர் வடவரை வென்று இமயத்தில் தமது அடையாளங்களைப் பொறித்தலும் வீரத்தின் அறிகுறியாகக் கொள்ளப் பட்டது1 ஆரிய மன்னர் தமிழை இகழ்ந்தனர் எனக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் ஆரிய நாட்டின்மீது படை எடுத்துச்சென்று ஆரிய மன்னர் முடிமிசை பத்தினிக்கல் எடுப்பித்த வரலாற்றைச் சிலப்பதிகாரம் மிக மிக அழகாகக் கூறுகின்றது.

தென்னாட்டில் வேதமதம் தலைஎடுத்தல்
ஆரிய மதம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தென்னாட்டை அடைந்ததென்று கூறலாம்2 வைதிக மதம் தென்னாட்டை அடைந்தும் அது தலையெடுக்கவில்லை. முதலில் புத்தமதம் தலையெடுத்திருந்தது. அதன் விழுகைக்குப் பின் சைன மதம் தலையெடுத்தது. அதன் விழுகைக்குப் பின் கி. பி. ஏழாம் நூற்றாண்டளவிலேயே தமிழ்நாட்டுக் கடவுளர்களையும் ஏற்றுக் கொண்டு சில மாறுதல்களுடன் பிராமண மதம் தலையெடுப்பதாயிற்று.

புத்த சமயத்தவர்கள் தமது சமய நூல்களைப் பாலி மொழியில் எழுதி வைத்திருந்தார்கள். புத்த சமயத்தினர் தமிழ் நாட்டில் தங்கியிருந்தபோது அவர்கள் தமிழ்நாட்டு மொழியைப் பயின்று தமிழில் மக்களுக்குச் சமயபோதனை செய்து வந்தார்கள். பாலிமொழியில் உள்ள நூல்களைப் பயிலும் பொருட்டுப் பாலிமொழியையும் பயின்று வந்தார்கள். பிற்காலத்தில் பாலியும் சமற்கிருதமும் கலந்தபாஷை என்னும் நடையிலும் இவர்களால் நூல்கள் எழுதப்படலாயின. புத்த சமயம் தலையெடுத்திருந்த காலத்தில் பல வடசொற்கள் தமிழிற்கலந்தன. முற்காலங்களில் மதங்களை எதிர்த்து வாதங்கள் நடந்தன. புத்த மதத்தை எதிர்க்கப் புகுந்தவர்களும் பாலி சமற் கிருதம் முதலியவைகளைப் பயின்று அம் மொழிகளில் எழுதப்பட்டிருந்த புத்த சமய நூல்களைப் பயின்றனர். இவர்களும் தமிழில் பல வடசொற் களைப் புகுத்தினர். வடசொற்கள் தமிழ் மொழியின் ஓசை அமைதிக்கு ஏற்பத் திரித்து வழங்கப்பட்டன. சைன மதம் தலையெடுத்தபோதும் இதே போன்று பல வடசொற்கள் தமிழிற் புகலாயின.

பௌத்தரும், சைனரும் தாம் சென்ற நாடுகளிலெல்லாம் தமது சமய நூல்களை அவ்வந் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்து மக்கள் பயிலும்படி அளித்தனர். “பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப்பான்மை உடையவர்களல்லர். அதற்குமாறாக, தமது மதத்தைத் தாங்கள் மட்டும் அறிய வேண்டும் என்னும் எண்ணமுடையவர்கள். பொது மக்கள் அறியாத சமற் கிருத மொழியில் தங்கள் மதக்கொள்கைகளை எழுதிவைத்துக் கொண்ட தோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர் படிக்கவுங்கூடாது, பிறர், படிப்பதைக் காதால் கேட்கவுங்கூடாது, அப்படிச் செய்வாராயின் அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சட்டமும் எழுதி வைத் துள்ளார்கள்.”

ஆரியம் ஆலயங்களில் நுழைதல்
சைவரும், வைணவரும், (தமது மதத்தைத் தென்னாட்டிற் புகுத்தும் பொருட்டுச் சமயம் பார்த்திருந்த) பிராமணரும் ஒரு முகமாக ஐக்கியப்பட்டு நின்று புத்த, சைன மதங்களை ஒடுக்கினர். அப்பொழுது ஆரியக் கலப் பின்றித் தென்னாட்டில் வழங்கிய சிவ, திருமால் வழிபாடுகளில் சிலமாற்றங் கள் உண்டாயின. சிவன் கோயில்களையும் திருமால் கோயில்களையும் மற்றைய கோயில்களையும் மேற்பார்த்துக் கடவுள்தொண்டு செய்தவர்கள் பார்ப்பார் எனப்பட்டிருந்தனர். இவர்கள் கோயில்களில் தமிழ் பாடினர். இவ்வாறு தமிழ் பாடுவதற்கெனத் தனியாகவும் சிலர் இருந்தனர். அவர்கள் ஓதுவார் எனப்பட்டனர். சைன, புத்த மதங்கள் வீழ்ந்தபோது தென்னாட்டு அரசர் பிராமண மதத்திலும் அவர்கள் கிரியைகளிலும் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் புரியும் யாகங்களால் பலனுண்டு என நம்பினர். ‘அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி’ என்பதற்கிணங்க அரச வட்டங் களிலுள்ள பெருமக்களும் பிராமண மதத்தில் நம்பிக்கை கொண்டனர்1. தென்னாட்டு அரசர் ஆரியப்பெண்களின் வடிவழகில் மயங்கி அவர்களை மணந்தனர். அம்மனைவியர் மூலம் பிறந்த பிள்ளைகள் தம்மை ஆரிய ரெனக் கூறிக்கொண்டனர். இதனாலும் தென்னாட்டு அரசர் ஆரியர் சமயக் கொள்கைகளைப் பின் பற்றுவாராயினர்.

கி. பி. 3ஆம் நூற்றாண்டளவில் பல்லவ அரசர் ஆட்சி தமிழ் நாட்டில் நிலை பெற்றது. தமிழ் அறிவில்லாத பல்லவ அரசர் ஆட்சியில் வட மொழிக் கும், பிராமணருக்கும் பெரிதும் ஆதிக்கம் உண்டாயிற்று. பல்லவ அரசர் காலத்தும் பிற்காலத்தும் தமிழ்நாட்டுக் கோயில்களை மேற்பார்ப்பதற்குப் பிராமணர் வட நாட்டினின்றும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லா வகை மரியாதையும், மானியங்களும் அரசர் மூலம் கிடைத்தன. பல்லவர் காலத்துப் பொறிக்கப்பட்ட கல் வெட்டுக்களில் வடநாட்டினின்று அழைக்கப் பட்ட பிராமணக் கூட்டங்களைப் பற்றியவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றியவும் செய்திகள் நிரம்பக் காணப்படுகின்றன. வடநாட்டுப் பிராமணருக்கு நல்வாழ்வு கிடைத்ததைக் கண்ட தமிழ்ப் பார்ப்பனர் பலர் பிராமணரோடு கலந்து அவர் மதத்தைத் தழுவினர். 2பிற் காலங்களில் பார்ப்பனர் எல்லோரும் தாம் பிராமணரென்றும், தாம் ஆரிய வகுப்பினரென்றும், தமது பரம்பரைமொழி ஆரியமென்றும் கூறுவாராயினர். இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழுக்கு ஆதரவில்லாது தட்டழிவு உண்டாயிருந்த காலத்திலேயே ஆரியம் தெய்வ மொழியாகத் தமிழர் ஆலயங்களில் நுழைந்தது; அதனைத் தமிழ் அறிஞர் எதிர்த்து வந்தனர். அக்காலத்திலேயே தேவார, திருவாசகம் முதலிய தமிழ்ப் பாடல்கள் எழுந்தன. ஆரியம் தமிழ் என்னும் இரண்டுக்குமிடையே நடந்துவந்த போர்களைச் சந்து செய்யும் பொருட்டே தேவாரத்தில் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” “செந்தமி ழோடு ஆரியனைச் சீரியானை” என்பவை போன்ற வாக்கியங்கள் கூறப்பட லாயின. அக்காலத்தில் தமிழ் உயர்ந்தது; ஆரியஞ் சிறந்தது என்னும் வாதங்கள் நிகழ்ந்து வந்தன. தொல்காப்பிய உரையில் பேராசிரியர்,

“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையினாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா”

என, நக்கீரர், ஒருவனைச் சாவப்பாடியதாகக் குறிப்பிட்டுள்ள பாடலால் அக்காலத்தில் ஆரியத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்ததென்பதை நாம் நன்கு அறியலாகும். பிற்காலத்திலிருந்தவரெனக் கருதப்படும் இன்னொரு நக்கீரர் பாடிய கோபப் பிரசாரத்தில் ‘ஆரியப் புத்தகப்பேய் கொண்டு புலம்பும் மூர்க்க மாக்களை இன்னேகொண்டு ஏகாக் கூற்றம் தவறு பெரி துடைத்தே தவறு பெரிதுடைத்தே’ எனக் கூறப்பட்டிருப்பதையும் நோக்குக. இவ்வாறு சில காலம் கழிதலும் ஆரியத்தை எதிர்க்கும் தமிழர்வீறு சிறிது சிறிதாகக் குறைந்தது. மொதுமக்கள் அறியாமையினால் ஆரியமொழியே உயர்வுடையதென நம்பத் தலைப்பட்டார்கள். அப்பொழுது தமிழ் ஆரியத் தோடு ஒத்த சிறப்புடையது என்றாவது கொள்ளப்படுதல் வேண்டும் என்னும் உணர்ச்சி நிலவுவதாயிற்று. இதனை,

“ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இது
சீரியதென வொன்றைச் செப்பரிதால்-ஆரியம்
வேத முடைத்து தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா வுடைத்து

எனவரும் திருவள்ளுவமாலைச் செய்யுளால் அறிகின்றோம்.

பிராமணரது ஆதிக்கம் உண்டானபின் தமிழரசர் தமிழை ஓம்ப வில்லை; தமிழை வடமொழிக்குத் தாழ்ந்ததாகக் கொண்டனர். பல்லவ அரசர் காலத்தும் அவர்களுக்குப் பிற்பட்ட அரசர் காலத்தும் தமிழ்க் கல்வி வளர்ச்சி யின் பொருட்டு அரசர் மேற்கொண்ட செயல்கள் ஒன்றேனும் பட்டையங் களிற் காணப்படவில்லை. அவ்வரசர் காலங்களில் கல்வி என்றால் வட மொழிக் கல்வி என்ற பொருளே வழங்கிற்று. பிராமணர் வேதங்கள், வேதாந் தங்கள், வியாகரணங்கள், மிருதிகள் கற்பதற்கே கல்விச் சாலைகள் அமைக் கப்பட்டன. அவைகளுக்கு மானியங்கள் விடப்பட்டன. பிராமணருக்கும் வடமொழிக் கல்விக்கும் என்ன என்ன வசதிகள் அளிக்கவேண்டுமோ அவைகளை எல்லாம் அரசர் அளித்துவந்தனர்.சில சமயங்களில் சில கிராமங் களையே அரசர் பிராமணருக்குத் தானமாக அளித்தனர். கடம்ப அரசனாகிய மயூரவர்மன் அசுவமேத யாகம் செய்ததற்குக் கூலியாக ஒரு அக்கிரகாரத் துக்கு 144 கிராமங்களைக் கொடுத்தான். பிராமணர் ஆதிக்கம் அளவு கடந்து பெருகியமையால் அவர்கள் தமிழ் மக்களின் அதிகாரத்திலிருந்த மடங் களையும், சமய நிலையங்களையும் ஒழிக்க அல்லது தாம் கைப்பற்றிக் கொள்ளப் போரிட்டனர். தமிழ் மக்களின் அதிகாரத்தில் இருந்த சைவமடம் ஒன்றுக்குவிடப்பட்டிருந்த மானியத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் பிராமணரின் தூண்டுதலினால் பிடுங்கினான். இதைக் குறித்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.1 இவ்வாறு தமிழர் அதிகாரத்தி லிருந்த மடங்கள் பல பிராமணருக்குக் கைமாறின. கும்பகோணத்தில் முதலியார் மரபினர் தலைமையில் இருந்த மடமொன்று இன்று சங்கராச் சாரியர் மடமாக மாறி யுள்ளதென அறிகின்றோம். இவ்வாறு சாசனங்களில் காணப்படாத பல நிகழ்ச் சிகள் நிகழ்ந்தனவாகலாம். இவ்வாறு தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் உண்டாகித் தமிழ் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் மனம் தளர்ந்த தமிழ்ப் புலவோர் தமிழ் வடமொழிக்குச் சமமானது என்று கூறிவரு வாராயினர்.
ஆரியம் தேவபாடையும் தமிழ் மனிதபாடையுமாதல்

2“இரு மொழியும் நிகர் என்று கருதிய இப் பெரியார் காலத்திற்குப் பின், வடமொழி தெய்வமொழி என்னும் கருத்து மெல்ல மெல்லத் தமிழ் நாட்டில் நுழைவதாயிற்று. வடமொழியில் அமைந்த இதிகாசங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. வான்மிக முனிவர் வடமொழியில் எழுதிய ஆதி காவியத்தைத் தமிழில் அமைக்கப்போந்த கல்வியிற் பெரிய கம்பர் (கி. பி. 12ஆம் நூற்றாண்டு) “தேவபாடையின் இக்கதை செய்தவர்” என முதனூல் செய்த புலவரைப் புகழ்ந்துரைத்தார்; “வாங்கிடும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்-தீங்கவி செவிகளாரத் தேவரும் விரும்பச் செய்தான்” என்று வடமொழிக் கவிஞரை வாயார வழுத்தினார். வடமொழி வானவர் மொழியாதலால் விழுமிய மொழியென்றும், தமிழ் மக்கள் மொழியாதலால் தாழ்ந்த மொழியென்றும் கருதும் வழக்கம் மெல்ல எழுந்தது. வடமொழியி லமைந்த புராணநூல்களைத் தமிழில்மொழி பெயர்க்கப்புகுந்தார் சிலர்; முதல் நூல்களாகத் தமிழில் எழுந்த நூல்களுக்கும் வடமொழியில் நூல் உண் டென்று கூற முற்பட்டார் சிலர். நன்னூல் செய்தபவணந்தியாரும், சின்னூல் செய்த குணவீரனாரும், வீரசோழியமியற்றிய புத்தமித்திரனாரும் வடமொழி இலக்கணப் போக்கைத் தழுவி எழுதுவாராயினர். தமிழ் நாட்டிலமைந்த இடப் பெயர் ஊர்ப் பெயர்களையும் வடமொழியில் பெயர்த்து வழங்கத் தலைப் பட்டார் பலர். இதைக் குறித்துத் தமிழ் நாட்டுச் சாசனங்களை ஆராய்ந்து டாக்டர் பர்னல் என்பார் கூறும் மொழி ஈண்டு கருதத்தக்கனவாம்… சில தமிழ்ப் பெயர்கள் முற்றும் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன வென்றும், சில தமிழ்ப் பெயர்கள் தவறாக வடமொழியிற் பெயர்க்கப்பட்டுள்ளன வென்றும் மற்றும் சில தமிழ்ப் பெயர்கள் அரை குறையாக வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன வென்றும் இன்னும் சில தமிழ்ப் பெயர்கள் இயற்பொருள் இழந்து வடநூற்கதைகளையேற்றுத்திரிந்து வழங்குகின்றன வென்றும் டாக்டர் பர்னல் கூறுகின்றார். பழந்தமிழ்நாட்டில் குடமூக்கு என்று வழங்கிய ஊர் கும்பகோணமாயிற்று. மறைக்காடு வேதாரணியமாயிற்று. வெண்காடு சுவேதாரண்யமாயிற்று. ஐயாறு பஞ்சநதமாகவும், அண்ணாமலை அருணாசலமாகவும் அமைந்தன.

திராவிடம் தமிழாயிற்றென்னும் அழிம்பு
“இவ்வாறாக வடமொழி உயர்ந்ததென்றும் கற்றாரும் கல்லாதாரும் கருதினமையால் தமிழென்னும் சொல்லே வட மொழிச் சிதைவென்னும் கொள்கை வடநாட்டில் பரவுவதாயிற்று. திராவிடம் என்னும் சொல்லே திராமிடம், திராமிளம், திரமிளம், தமிளம், தமிழ் என்று ஆயிற்றென்று இலக்கணநூலோர் எடுத்துரைப்பாராயினர். இன்னும் தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுந்ததென்று பிரயோக விவேகம் கூறுவதாயிற்று. தமிழ் தனி மொழியன்றென்றும் இலக்கணக் கொத்துரைத்த சாமிநாத தேசிகர் எழுதுவாராயினர்.

‘ஐந்தெழுத்தால் ஒரு பாடையும் உண்டென
அறையவும் நாணுவர் அறிவுடையோரே
வடமொழி தமிழ்மொழியெனு மிருமொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக’

என்று தமிழ் மொழியைத் தனிமொழியென்று கருதும் கொள்கையைத் தேசிகர் இழித்துரைத்தார். பிரயோக விவேகமும் இலக்கணக் கொத்தும் பதினாழாம் நூற்றாண்டில் எழுந்தனவாம்.”

ஆரியர் தமிழ் நாடுவந்தது முதல் இன்றுவரை ஆரிய, தமிழ்ப் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆரியத்தைக் கடவுள்மொழி எனக் கொண்ட குழுவினர் தமிழை இழிவுபடுத்தும் கொடுமைக்கு ஆற்றாமலே பரஞ்சோதி முனிவர்.

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததுந்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”

என்பது போன்ற பாடல்களைப பாடுவாராயினர். சிவஞான முனிவர் காலத்தி லும் தமிழை இழிவுபடுத்திக் கூறும் பொல்லாமை இருந்ததென்பது அவர் காஞ்சிப் புராணத்தில் கூறியுள்ள பின்வரும் பாடல்களால் தெளிவாகும்.

“வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை யுலக மெலாந்தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார்.”

“இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற் குரவரிகல்வாய்ப்ப
இருமொழியும் வழிப் படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும்
இரு மொழியுமான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
விரு மொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.”

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலத்தும் தமிழுக்கு எதிராக ஆரிய எதிர்ப்பு மிக்கிருந்தமையை அவர் மனோன்மணீயத்தில் கூறிய தமிழ் வணக்கச் செய்யுட்கள் இனிது காட்டும். அவை பின்வருவன:

“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்று பல வாயிடினும்
ஆரியம் போலுலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே”
“சதுமறையா ரியம் வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே”

இன்றும் தமிழுக்கு மாறாக இவ் வுணர்ச்சி எவ்வாறிருக்கின்றதென்பதை நாமெல்லோரும் நன்கு அறிவோம்.

மணிப்பிரவாளம்
ஆரியம் தெய்வமொழி; தமிழ் அதற்குத் தாழ்ந்த மனிதமொழி; அதனொடு வடமொழியைக் கலப்பது தமிழுக்குச் சிறப்பளிக்கும் என்னும் பொல்லாத கொள்கையும் மக்களிடையே பரவத் தொடங்கிற்று. அக் காலத் தில் சைன, வைணவ வித்துவான்கள் தமிழொடு சரிக்குச் சரி சமற்கிருதம் கலந்த ஒரு வகை நடையை வழங்குவாராயினர். இந் நடை மணிப்பிரவாளம் எனப் பெயர் பெறும். இந் நடைக்கு உதாரணம் பின் வருவது.

“பும்ஸ்பர் சக்வேச ஸம்பாவனா கந்தவிதுரமாய் ப்ரத்யக்ஷிதிப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேத ஜாதத்துக்கும் வேதோப ப்ரமணங்களான ஸ்ம்ரூதிதி ஹாஸ புராணங்களுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்சாரி சேதனர்க்கும் தத்வ ஞானத்தை ஜனிப்பிக்கை”-தத்துவ செகரம். இந் நடையைத் தமிழ் அறிஞர் வெறுத்தார்கள். அவர்கள் தமிழை இயன்ற அளவில் வடமொழிக் கலப்பின்றி எழுதவே முயன்றுவந்தார்கள். வட மொழிக் கலப்பின்றி எழுதப்படும் தமிழ் சிறப்புடையதெனக் கொள்ளப் பட்டது. மேற்குக் கரையில் வாழ்ந்த மக்கள் மணிப்பிரவாள நடையில் நூல் செய்யும் முறையை அனுமதித்தமையினாலேயே அங்கு வழங்கிய தமிழ் மலையாளமாயிற்று என மொழி வல்ல அறிஞர் கருதுகின்றார்கள்: மணிப் பிரவாள நடை தமிழைப் பிறிதொரு மொழியாக மாற்றிவிடாதபடி முயன்று தடுத்துவந்த தமிழ்ப் புலவர்களின் முயற்சி பெரிதும் போற்றத்தக்கதே.
ஆரியன் என்னும் சொல்லுக்கு அறிவுடையவன் என்னும் பொருள் உண்டாதல்

ஆரியன் என்பதற்கு மிலேச்சன் என்னும் பொருள் வழங்கிற்று என முன் ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளோம். ஆரியத்தின் ஆதிக்கம் தென்னாட்டி லுண்டாகி ஆரியம் சமய மொழியாகி, ஆரியம் பயின்றவர்களே கோயிற் பூசாரிகள், புரோகிதர்களாகிய பின்பு ஆரியன் என்னும் சொல்லுக்குமுன் இருந்த மிலேச்சன் என்னும் பொருள் போய் அறிவுடையவன் ஆசிரியன் என்னும் பொருள்கள் உண்டாயின. தென்னாட்டில் ஆரியர் எனத் தம்மைக் கூறிக்கொண்டோர் ஆரிய மதத்தைக் கைக்கொண்ட தமிழ்ப் பூசாரிகளும் வடநாட்டுப் பிராமணரின் இரத்தக் கலப்பில் தோன்றியவர்களுமே யாவர். தம்மை ஆரியர் எனக்கொள்ளாத பண்டாரங்களும் வடமொழியில் எழுதப் பட்டுள்ள கிரியை முறைகளைப் பயின்று அம் மொழிச் சொற்றொடர்களை உச்சரித்துக் கிரியைகளைப் புரிவாராயினர். அன்னோர் செயல் பெரிதும் கண்டிக்கத்தக்கது.

தமிழ் கோயில்களிருந்து வெருட்டப்படுதல்
கி. பி. ஏழாவது நூற்றாண்டு வரையில் ஆரியம் தென்னாட்டுக் கோயில்களை ஆக்கிரமித்து ஆலயங்களினின்று தமிழ் வெளியே வெருட்டப்பட்து. தமிழ் முன் இருந்து ஆட்சி புரிந்த இடத்தில் ஆரியர் நுழைந்து கொண்டது. சிங்கமிருந்து ஆண்ட இடத்தில் நரி குந்திக்கொண்டது. ஆரிய மதம் வருவதற்குமுன் கோயில்களை மேற் பார்த்த தமிழ்ப் பூசாரிகள் கோயிலை மேற் பார்த்தமையால் பார்ப்பார் எனப் பெயர் பெற்றிருந்தார்கள். இவர்கள் தமிழ் மொழியிலேயே துதிபாடி வந்தார்கள். இம் மரபுபற்றியே தேவார திருவாசகங்களும், திருவாய் மொழிகளும் பாடப்பட்டன. கோயில் களில் ஆரியம் நுழைந்தமையால் தமிழ்த் துதிபாடும் வழக்கு நின்று போயிற்று அதனைத் தமிழ்மக்கள் வெறுத்தார்கள். அப்பொழுது பண்டா ரங்கள் வெளியே நின்று தமிழ் ஓதலாம் என்னும் விதி ஆகமங்களில் எழுதி வைக்கப்பட்டது. வேத, ஆகமங்கள் கடவுளால் செய்யப்பட்டன என்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையை மக்களிடையே தோற்றுவித்து மக்க ளிடையே தமிழ் மொழி ஆலயங்களில் நின்று போனதற்காகப் பெரிய கிளர்ச் சிகள் எழாமல் ஆரியப் பூசாரிகள் காப்புத் தேடிக்கொண்டனர். மேல்நாட்டு மக்கள் இந்திய நாடு போந்து வேதங்களை ஆராய்ச்சி செய்து அவைகளைப் பற்றிய உண்மை வரலாறுகளை உலகுக்கு வெளியிடுவதன் முன் வைணவ, சைவ, பிராமணமதத்தினர் எல்லோரும் வேதங்கள் கடவுளால் நேரில் மக்களுக்கு வெளியிடப்பட்டன வென்றே நம்பி வந்தார்கள்; இன்றும் நம்பிவருகிறார்கள். ஆசிரியர் உயர்திரு மறை மலையடிகள் வேதங்கள் மக்கள் வாய் மொழியே என இற்றைக்கு முப்பது ஆண்டுகள் முன் தமது திருவாசக விரிவுரையில் எழுதிய போது, தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத் திலும் பலத்த எதிர்ப்புகள் இருந்தன.

ஆரியக்கலப்பினால் தமிழ் கேடடைந்த வகை
தமிழ் ஒருகாலத்தில் பிற மொழிக்கலப்பின்றி வழங்கிற்று. சங்ககால நூல்கள் கலப்பற்ற தமிழில் எழுதப்பட்டுள்ளன. அந்நூல்களில் காணப்படும் வடசொற்கள் என்று கருதப்படும் சில சொற்கள் தாமும் வடசொற்களோ என்பது ஐயத்துக்கிடமானவை. வடமொழியிற் காணப்படும் சொற்கள் சில தமிழிற் காணப்பட்டால் அவை வடசொற்களாகிவிடமாட்டா. தமிழ்ச் சொற்கள் பல வட மொழியில் மிகப்பழமையே சென்று ஏறியுள்ளன.1 சங்க காலத்துக்குப்பின் சமய சம்பந்தமாகவே பெரிதும் வடசொற்கள் ஆளப் பட்டுள்ளன. அவையும் தமிழ் ஓசைக்கு அமையத்திரித்து வழங்கப்பட்டுள் ளன. பிற்காலத்தில் வடசொற்களைத் தமிழில் வழங்குவதற்கு வரம்பு இல்லா மல் இருந்தது. வேண்டியவர் வேண்டியவாறு அவற்றைப் பயன்படுத்தினர்.

தமிழ் மொழியில் பொருள்களையும் செயல்களையும் குறிக்கப் பற்பல சொற்கள் இருந்தபோதும் வடமொழி மோகங் கொண்ட மக்கள் தமிழ்ச் சொற்களுக்குப் பதில் வடசொற்களை ஆளத் தலைப்பட்டனர். இதனால் எத்தனை வடசொற்கள் தமிழில் நுழைந்தனவோ அத்தனைத் தமிழ்ச் சொற்கள் வழக்கு நின்றுபோயின. இன்று தனித்தமிழ் எழுதமுயல்வோர் செய்வது வழக்கு நின்றுபோன பழைய தமிழ்ச் சொற்களை மறுபடியும் வழக்குக்குக் கொண்டு வருவதேயாகும். வெவ்வேறுமொழியைப் பேசும் மக்கள் கலக்க நேருமிடத்து ஒருவர் மொழிச்சொற்கள் சில மற்றவர் மொழி யில் கலத்தல் இயல்பேயாகும். அவ்வாறு கலக்கும் சொற்கள் பெரும்பாலும் அம்மொழிகளில் புதியபொருள்களையோ செயல்களையோ உணர்த்து வதற்கு முன் இல்லாதனவாகவேயிருக்கும். இம் முறையினால் மொழி வளர்ச்சியடையும். சமற்கிருத மொழிக்கலப்பினால் தமிழ் மொழி வளர்வ தற்குப் பதில் நாளும் நாளும் கெட்டு உருக்குலைந்துபோகின்றது.

சமக்கிருதத்தில் மோகம்
சமற்கிருதம் வடநாட்டில் இலக்கிய மொழியாகவும் சாதிமொழியாக வும் இருந்து வந்ததென முன் கூறினோம். தென்னாட்டில் பிராமண மதம் நுழைந்தபோது சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டன. எழுதப்படும் போது என்ன என்ன பிராமணருக்கு வாய்ப்பாக இருக்குமோ அவ்வளவும் சேர்க்கப்பட்டன. இதனைப் பார்கிற்றர் (Pargiter) என்னும் அறிஞர் பழைய இந்தியப் பழங்கதைகள் 1என்னும் நூலில் நன்கு எடுத்து விளக்கி யுள்ளார். வடநாட்டில் எவ்வாறு சமற்கிருதம் இலக்கிய, சமய மொழியாக விருந்ததோ அவ்வாறே அது தெற்கிலும் சமய இலக்கிய மொழியாக ஒருகுழுவின ரிடையே இருந்து வந்தது. இம்மொழியினையே தமது தாய் மொழியாகப் பிராமணர் கொண்டுள்ளார்கள். ஆகவே இம்மொழிக்கு ஆக்கந் தேடுவதி லேயே அவர்கள் முயன்று வருகின்றனர்.

ஆரியமொழியிலே பல அறிவு நூல்கள் இருக்கின்றன. அவைகளைப் பயிலும் பொருட்டு வடமொழியைக் கற்கவேண்டும்; அதனைக் வைவிடுத லாகாது என ஒரு கூட்டத்தார் கரைகின்றனர். ஒரு கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்குள்ள மொழி அதுவாதலின் அவர்கள் அம்மொழியின் பொருட்டு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் கூறுவர். அவர்கள் கூற்று வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. “ஆரியம் தேவபாஷை” என்று கருதிய பழங்காலம் மலை ஏறிவிட்டது. அம்மொழியில் எழுதப்பட் டுள்ள நூல்களிற் சிறந்தவை பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுவிட்டன. வடமொழி நூற் கருத்துக்களை அறிய விரும்புவோர் அம் மொழி பெயர்ப்பு நூல்களையே பயிலுதல் போதுமானது. இதற்காகச் செத்துப் போன அம்மொழியை காலத்தையும், உழைப்பையும் செலவிட்டு ஒருவன் பல ஆண்டுகள் பயில்வது புத்தியற்ற செயலாகும். கிரேக்கு, இலத்தின், செர்மன் முதலிய மொழிகளைத் தனிப்பட்ட ஒருவர் இருவர் பயில்தல்போல அம் மொழியைப் பயிலவிரும்பும் ஒருவர் இருவர் பயில்தல் தீமையாக மாட்டாது.

தமிழ்நாட்டில் இந்திப்பிரசரம் செய்பவர்யார்?
தமிழ் நாட்டில் இந்திப் பிரசாரம் செய்வோர் மேற்கூறிய குழுவினரே. சமக்கிருதம் இறந்த மொழியாகிவிட்டது. அதை இனி உயிர்ப்பித்தல் கடினம். இந்தி சமற்கிருதத்துக்கு மிக அண்மையிலுள்ளது. அது தனக்கு வேண்டிய புதியசொற்களைச் சமற்கிருதத்திலிருந்து எழுத்துக் கொள்கின்றது. சமற் கிருதத்தை உயிர்ப்பிக்க வகையின்றி இருப்பவர்கள் இதற்கு மிக நெருங்கிய உறவின் முறையிலுள்ள ஒரு மொழியைப் பிரசாரஞ் செய்வதில் ஊக்கம் காட்டுதல் இயல்பேயாகும். இன்று இந்திப் பள்ளிக்கூடங்களில் கட்டாயக் கல்வி என்றவுடன் இருபதினாயிரம் முப்பதினாயிரம் பேர் அளவிற் கூடி இந்தி ஒழிப்புக்கு வழிதேடுகின்றனர். ஏன் நமது ஆலயங்களில் சமற்கிருத ஒழிப்புக்கு மாபெருங் கூட்டங்கள் கூடிச் “சமற்கிருத எதிர்ப்புச்” செய்தல் கூடாது.?

தமிழோடு ஆரியத்தைக் கலப்பதால் தமிழ் வளர்ச்சியுறுமென்னும் மடமை
ஆரியம் தமிழ் இனத்தைச் சேராத மொழி என்பது மொழி ஆராய்ச்சி வல்லார் கண்டமுடிவு. ஒருமொழியில் ஒரு பொருளையோ செயலையோ குறிக்கும் சொல்லில்லாமையாலோ ஆக்கச் சொற்களைப் பயன்படுத்த முடியாமையினாலோ ஏற்படும் இடர்ப்பாட்டினாலே எல்லா மொழிகளிலும் சிற்சில அயல் மொழிச் சொற்கள் நுழைந்திருப்பது உண்மையே. இன்றியமை யாமை இல்லையாக வடமொழிச் சொற்களைத் தமிழுடன் சேர்ப்பதால் தமிழ் சிதையுமேயன்றித் தமிழ் வளர்ச்சியுறாது. இனிமேல் ஆரியத்தில் நூற்றுக்கு இருபது அல்லது முப்பது தமிழ்ச் சொற்கள் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதுதான் ஆரியத்தை வளர்ப்பதற்கு வழி என்று ஒருவர் கூறி னால் அதனை ஆரியக் குழாம் ஏற்றுக்கொள்ளுமா? அரசினர் தமிழ்க் கலைச் சொற்களை ஆக்கித் தொகுத்த காலத்தில் வடசொற்களும் இருத்தல் வேண்டு மென்னும் கிளர்ச்சி யிருந்ததையும், அவ்வுணர்ச்சிக்கு மாறாகக் கூட்டங்கள் கூடியதை யும் நாமறிவோம். தமது தாய் மொழி தமிழன்று எனக் கருதும் ஒரு குழாத் தினர் தமிழ் வளர்ச்சிக்குப் பங்கம் நேரும் செயல்களைப் புரிந்து வருகின் றனர். இன்று தமிழ் அகராதிகளில் பாதிக்குமேல் சமக்கிருதச் சொற்களே சேர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் வடமொழிப் பித்தேறிய சிற்சிலர் சமீப காலத்தில் புராணங்களிலும், சமய நூல்களிலும், ஒரோரிடத்து வழங்கிய சொற் களேயாகும். அச் சொற்களில் பெரும்பாலான ஓர் ஆசிரியரால் மாத்திரம் ஒரே முறை பயன்படுத்தப்பட்டனவாயிருக்கும். அச்சொற்கள் பயன்படுத்தப் பட்ட நூல்களோ இன்று அவற்றின் பயனற்ற தன்மை நோக்கி பயிலப்படுவ தில்லை. அந்நூல்களில் ஆளப்பட்ட வடசொற்களையெல்லாம் தமிழ் வழக்குச் சொற்கள் என அகராதிகளிற் சேர்த்தல் புத்தியற்ற செயலே யாகும்.

சைவசமயாசாரியர், ஆழ்வார்கள் வடசொற்களைப் பயன்படுத்தி யமையால் தமிழோடு வடசொற்களைக் கலக்கலாம் என்னும் வாதம்

சைவசமயாசாரியரின் காலம் புத்த, சைன மதங்கள் தலை எடுத்திருந்த காலம். அக்காலத்தில் வைணவர்களும் சைவர்களும், பிராமண மதத்தினர் களும் புத்த, சைன மதங்களை அழித்துவிடும் ஒரே நோக்கத்துடன் ஒரு மித்துப் போராடினர். அக்காலத்தில் புத்த, சைன, பிராமண மதத்தினர் கூட்டுற வால் தமிழில் நுழைந்திருந்த வட சொற்கள் பலவற்றை அவர்கள் பயன்படுத் துவாராயினர். அவர்கள் மதப்போராட்டஞ் செய்தார்களேயன்றி மொழிப் போராட்டம் செய்யவில்லை. ஆரியம் பாடுதல், ஆரியச் சொற்களைத் தமிழிற் கலத்தல் போன்றவைகளை அக் காலத் தமிழ் மக்கள் எதிர்க்காமல் இருக்க வில்லை. அக் காலத்தில் ஆரியந் தமிழ் என்னும் வேறு பாட்டை வளர்த்தால் தாம் செய்துவரும் மதப்போருக்கு ஆற்றல் குன்றுமென்பதை உணர்ந்த சமயாசாரியர்கள் ஆரியம், தமிழ் என்னும் இரண்டும் கடவுளுக்கு உகந்தன எனச் சமாதானம் கூறி வடமொழி, தென்மொழிப் போர்களைத் தவிர்த்தனர். சமயகுரவர்கள் காலத்திற்குப் பின்பே வடமொழி, தென்மொழி என்னும் இரு மொழிகளும் சிவ பெருமானிடம் இருந்து பிறந்தன என்னும் கருத்துத் தமிழ் நாட்டில் பரவலாயிற்று. புத்த, சைன மதங்கள் ஒழிக்கப்பட்ட பின் புதுமுறை யான ‘இந்து’ மதம் தென்னாட்டிற் பரவலாயிற்று. தென்னாட்டுக்கோயில் களை மேற்பார்த்த பார்ப்பனர் பிராமணராக மாறினர். தென்னாட்டு மதக் கொள்கைகளைப் பெரிதும் வடநாட்டுப் பிராமணக் கொள்கைகளைச் சிறிதும் உடையதாகிய புதிய இந்து மதம் சமக்கிருதத்தைச் சமயமொழியாகக் கொண் டது. இன்று இந்தி எதிர்ப்பு நடைபெறுவதுபோலவே அன்றுமுதல் இன்று வரையும் வடமொழிக்கு எதிர்ப்புத் தமிழ்நாட்டில் இருந்துவருகின்றது. ஆட்சி யாளருக்கு மந்திரிகளும் ஆலோசனை கூறுவோரும் பெரிதும் புரோகித வகுப்பினராயிருந்தமையின் அவ் வெதிர்ப்புக் கவனிக்கப்படாது அடக்கப்பட்டு வந்துள்ளது.

ஒரு காலத்தில் பாதிக்குமேல் வட சொற்கள் கலந்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நடை தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்று ஐம்பது ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நடையிலுள்ள வடசொற்களிலும் பார்க்கப் பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையில் வடசொற்கள் மிகக் குறைவு. பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட நடையிலுள்ள வட சொற் களிலும் பார்க்க இன்றைய தமிழ் நடையில் வட சொற்கள் மிக மிகக் குறை வாகும். பிறமொழிச் சொற்களைத் தவிர்த்துப், பிறமொழிச் சொற்களால் வழக்கு ஒழியும்படிச் செய்யப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களை உயிர்ப் பித்தால் தமிழ் தூய்மை அடையும் என்னும் உண்மை மறுக்க முடியாததே.

இன்று இந்தியில் காணப்படும் பாரசீக, துலுக்கச் சொற்களை நீக்கிவிட்டு அவைக்குப்பதில் சமக்கிருதச் சொற்கள் வைக்கப்படுகின்றன. இது எதற்காகச் செய்யப்படுகின்றது? இது எவ்வுணர்ச்சியின் பொருட்டுச் செய்யப்படுகின்றதோ அதே உணர்ச்சியுடனே, தமிழர்களும் தமிழிலிருந்து வடசொற்களை நீக்கிவிட்டுப் பழைய தமிழ்ச் சொற்களையோ புதிய ஆக்கச் சொற்களையோ பயன்படுத்துவது நியாயமன்றோ?

இந்தி பயில்வதால் தமிழ் வளரும் என்னும் குருட்டுக்கொள்கை
பல மொழிகளைப் பயில்வதால் தாய் மொழி கெட்டுவிடும் என்பதற்குச் சான்று ஆங்கிலப் பயிற்சி ஒன்றுமே போதும். தமிழ் நாட்டில் வாழும் தமிழர் பேசும் தமிழிலும் பார்க்க, இலங்கையின் வடகோடியில் வாழும் மக்கள் திருந்திய தமிழ் பேசுவர். இதற்குக் காரணம் அவர்கள் பெரும் பாலும் பல மொழிகளைப் பேசும் மக்களோடு கலவாது தனியே விடப்பட் டிருத்தலே யாகும். மொழிகளின் இயல்புகளை நன்குணர்ந்த மக்கள் எல்லோரது துணிவும் பல மொழிகளைப் பயில்வதால் அம்மொழிச் சொற்கள் தாய் மொழியோடு கலந்து அம்மொழியை மாறுபடச் செய்யுமென்பதே. இன்று இந்திய நாட்டில் வழங்கும் இருநூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் இவ்வாறு உண்டாயினவே. மொழிகளின் இயல்புகளை ஆராய்ந்து கண்டார் கூறிய முடிவுகளை அறியாதார் சிலர் தம் மனம் போனவாறெல்லாம் கரைந்து வருகின்றனர். பலமொழிகளைப் பயில்தல் ஒரு மொழியில் புலமை அடைவ தற்கே தடையாயுள்ளதென மொழியாராய்ச்சி அறிஞர் புகல்வார்.