ஆங்கில அறிஞர் ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை
கா. அப்பாத்துரையார் 

மூலநூற்குறிப்பு

  நுற்பெயர் : ஆங்கில அறிஞர் ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை (அப்பாத்துரையம் - 45)

  ஆசிரியர் : கா.அப்பாதுரையார்

  தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்

  பதிப்பாளர் : கோ. இளவழகன்

  முதல்பதிப்பு : 2017

  பக்கம் : 20+252 = 272

  விலை : 340/-

  பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654

  மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in

  தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312

  கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500

  நூலாக்கம் : கோ. சித்திரா

  அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)

  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.

நுழைவுரை

தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.

தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.

தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.

தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.

இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.

தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்

கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை

யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்

திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,

திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.

இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.

நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”

-   பாவேந்தர்

கோ. இளவழகன்

தொகுப்புரை

மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.

“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.

சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.

-   தனித்தமிழ் இயக்கத் தோற்றம்

-   நீதிக் கட்சி தொடக்கம்

-   நாட்டு விடுதலை உணர்ச்சி

-   தமிழின உரிமை எழுச்சி

-   பகுத்தறிவு விழிப்புணர்ச்சி

-   இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்

-   புதிய கல்வி முறைப் பயிற்சி

-   புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்

இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.

“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!

அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!

பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,

-   உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.

-   தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.

-   தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.

-   தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.

-   திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.

-   நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.

இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.

பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.

உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.

1.  தமிழ் - தமிழர் - தமிழ்நாடு

2.  வரலாறு

3.  ஆய்வுகள்

4.  மொழிபெயர்ப்பு

5.  இளையோர் கதைகள்

6.  பொது நிலை

பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.

இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்

உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.

** -கல்பனா சேக்கிழார்**

நூலாசிரியர் விவரம்

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
  இயற்பெயர் : நல்ல சிவம்

  பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989

  பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

  பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

  உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்

  மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

  வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா

  தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி

  பள்ளிக் கல்வி : நாகர்கோவில்

  கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

  கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

  நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)

  இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

  பணி :

-   1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

-   1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

-   பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

-   1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி

-   1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

-   1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்

அறிஞர் தொடர்பு:

-   தொடக்கத்தில் காந்திய சிந்தனை.

-   1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு

விருதுகள்:

-   மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,

-   1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.

-   1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.

-   1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.

-   மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.

-   1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

-   1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.

-   இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.

பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

-   அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.

-   பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.

பதிப்பாளர் விவரம்

கோ. இளவழகன்
  பிறந்த நாள் : 3.7.1948

  பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு

  இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்

ஆற்றியுள்ள பொதுப்பணிகள்

1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.

பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.

உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.

பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.

பொதுநிலை

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.

தொகுப்பாசிரியர் விவரம்

முனைவர் கல்பனா சேக்கிழார்
  பிறந்த நாள் : 5.6.1972

  பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.

  கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்

  இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆற்றியுள்ள கல்விப்பணிகள்

-   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.

-   திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.

-   புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.

-   பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

-   பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.

-   50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-   மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.

-   இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.

-   செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

நூலாக்கத்திற்கு உதவியோர்

தொகுப்பாசிரியர்:

-   முனைவர் கல்பனா சேக்கிழார்

கணினி செய்தோர்:

-   திருமதி கோ. சித்திரா

-   திரு ஆனந்தன்

-   திருமதி செல்வி

-   திருமதி வ. மலர்

-   திருமதி சு. கீதா

-   திருமிகு ஜா. செயசீலி

நூல் வடிவமைப்பு:

-   திருமதி கோ. சித்திரா

மேலட்டை வடிவமைப்பு:

-   செல்வன் பா. அரி (ஹரிஷ்)

திருத்தத்திற்கு உதவியோர்:

-   பெரும்புலவர் பனசை அருணா,

-   திரு. க. கருப்பையா,

-   புலவர் மு. இராசவேலு

-   திரு. நாக. சொக்கலிங்கம்

-   செல்வி பு. கலைச்செல்வி

-   முனைவர் அரு. அபிராமி

-   முனைவர் அ. கோகிலா

-   முனைவர் மா. வசந்தகுமாரி

-   முனைவர் ஜா. கிரிசா

-   திருமதி சுபா இராணி

-   திரு. இளங்கோவன்

நூலாக்கத்திற்கு உதவியோர்:

-   திரு இரா. பரமேசுவரன்,

-   திரு தனசேகரன்,

-   திரு கு. மருது

-   திரு வி. மதிமாறன்

அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:

-   வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.

ஆங்கில அறிஞர் ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை

முதற் பதிப்பு - 1952

நூற்சிறப்பு

ஆசிரியர்: ஹெரால்டு ஜோஸஃப் லாஸ்கி முன்னேற்றக் கருத்துடைய ஆங்கில அறிஞரும் எழுத்தாளரும் ஆவர். அவர் பிரிட்டனின் சமதருமக் கட்சியைச் சேர்ந்தவராயினும், அதன் அரசியல் துறையை விட அதன் அறிவாராய்ச்சித் துறையுடனேயே பெரிதும் தொடர்புடையவர். தற்கால அரசியல் நிலைகள் பற்றி அவர் எழுதியுள்ள நூல்கள் மிகப் பல.

லாஸ்கி 1893இல் மாஞ்செஸ்டரில் பிறந்தவர். அவர் மெக்கில் பல்கலைக் கழகத்திலும் இலண்டன் பொருளியல் குழுவிலும் வரலாறு, அரசியல் ஆகியவை பற்றிய பேராசிரியராயிருந்தார். ‘பொதுவுடைமை’ என்ற நூல் அவரால் 1927இல் எழுதப் பெற்றது.

பொதுவுடைமையைப் பற்றிய பொதுவுடைமை யாளர் கருத்தின் ஆர்வத்துடன் முதலாளித்துவக் கோணத்திலிருந்து காண்பவரின் புறநோக்கும் அவர் நூலில் மிளிர்கின்றது. பொதுவுடைமையின் வரலாறும் விளக்கமும் அறிய விரும்பும் பொது மக்களுக்கு அது பெரிதும் பயன்படுவதாகும்.

கோட்பாட்டின் வளர்ச்சி

பொதுவுடைமை என்பது இன்று ஒரு குறிக்கோள் மட்டுமன்று. அது ஒரு முறை.

பொதுவுடைமையின் குறிக்கோளாவது: பொருளை உண்டுபண்ணும் கருவிகள், அதை மக்களிடையே பரிமாற்றம் செய்யும் உரிமை ஆகிய வற்றைச் சமூகப் பொதுவுடைமை ஆக்கி, அதன் மூலம் வகுப்பு வேறு பாடற்ற சமூகத்தை நிறுவுவதே. அதை நிறைவேற்றும் வகை துறையாவது; சமூகப் புரட்சியை உருவாக்கி உழைப்பு வகுப்பின் வல்லாட்சியை உண்டு பண்ணுவதே.

பொதுவுடைமையின் குறிக்கோள் புதிதல்ல. பிளேட்டோவின் ‘குடியரசு’ என்ற நூலில் அதன் அடிப்படைக் கனவார்வத்தைக் காணலாம். 5-முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள இடையிருட் காலத்தில் கிறிஸ்துவ மதவாதிகள் கூட, கிறிஸ்துவ மதத்தின் தொடக்கக் காலத்தை மக்கள் சரிசமத்துவம் நிலவிய பொற்காலமாகக் கற்பனை செய்திருந்தனர். ‘கடவுள் ஒரே தந்தை; மக்கள் அனைவரும் ஒரே உடன் பிறப்பாளர்’ என்ற சமத்துவக் கொள்கையைத் தீவிரமாகப் பரப்பியதனாலேயே, ஆங்கில நாட்டில் விக்ளிஃவ்வின் கூட்டத்தார் மட்டந்தட்டிகள், (LeVellers) உளறுவாயர் (Babbless) என்று அழைக்கப்பட்ட துடன், தீக்கும், இரையாக்கப்பட்டனர்.

சமயச் சீர்த்திருத்தமும் மறுமலர்ச்சி இயக்கமும் நிலவிய 15ஆம் நூற்றாண்டிலும், புலவரான ஸர் தாமஸ் மோர் பிளேட்டோவைப் பின்பற்றி ஒரு பொதுவுடமை உலகைக் கற்பனை செய்து தீட்டினார். கிராம்வெல் காலத்திலிருந்த கெரார்டு வின்ஸ்டான்லி கூட்டுறவு முறை உற்பத்தி, செலாவணி முறை ஒழிப்பு, எல்லாருக்கும் சரிசம உழைப்பை வலியுறுத்தும் சட்டம் ஆகியவற்றைத் தம் பொதுவுடைமை அரசின் திட்டமாக்கினார்.

18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் மெஸ்லியர் மோரெலி ஆகியவர் களும் பிரெஞ்சுப் புரட்சியறிஞர்களான மாண்டிஸ்க்யூ, ரூசோ ஆகியவர்களும் இங்கிலாந்தில் காட்வினும் சமூக சமத்துவத்தைத் தம் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டனர்.

ஆனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இக் கருத்துகள் யாவும் குறிக்கோளைப் பற்றித்தான் கனவு கண்டன. வகை முறைகளில் கருத்துச் செலுத்தவில்லை. சமயவாதிகளைக் கூட இக் கருத்துகள் பெரும்பாலும் புண்படுத்தவில்லை. அரசியல், பொருளியல் ஆட்சிக் குழுவினரிடையிலோ, அவை பொதுவுடைமை வேதாந்தமாக அடிக்கடி உலவின.

தொழிற் புரட்சி இந்நிலையை மாற்றிற்று. அது ஒரு புதிய தொழில் முதலாளித்துவத்தை உண்டுபண்ணிற்று. முதலாளித்துவத்தின் கொடிய உருவத்தை இது விரைந்து பன்மடங்கு பெருக்கிக் காட்டிற்று. ஏழைகள் விரைந்து மேன்மேலும் பஞ்சை ஏழைகளாயினர். செல்வர்கள் மேன் மேலும் விரைந்து பெருஞ்செல்வர்களாயினர். அது மட்டுமன்று செல்வரிடையே கூடப் பெரும்பாலரான சிறு செல்வர் நலிய, சிறுபாலரான பெருஞ்செல்வர் தழைத்தனர். செல்வர் ஏழை வேறுபாடு முன்கால அளவுகளைத்தாண்டி என்றும் விரிவுபட்டு வளர்ந்தது. முன் பல வகுப்புக்களாகத் தோற்றிய மனித சமூகம் இப்போது தெளிவாக ஆண்டான் வகுப்பு, ஆட்பட்ட வகுப்பு என இருவேறு இனங்களாகப் பிளவுபட்டுக் கொண்டே சென்றது.

‘’தனி மனிதனை இப்போது யாரும் தனி மனிதனாகக் கருதுவதில்லை. சுழலுகின்ற இயந்திரங்களின் சக்கரங்களில் அவன் ஒரு சக்கரம்; சுற்றுகின்ற தொழிற்சாலை என்னும் பம்பரத்தில் ஒரு புள்ளி அவன்!’’ என்று கடுஞ்சினத்துடன் புதிய சமூகத்தில் மனிதன் நிலையைக் கண்டிக்கிறார், ஐஸாக் டிஸ்ரேலி.

1815க்கும் 1848க்கும் இடைப்பட்ட காலத்தில் பொது வுடைமைக் கருத்துக்கள் காட்வினைப் பின்பற்றி ஓவென் என்பவரால் ஒழுக்க முறை வாதமாகவே பரப்பப்பெற்றன. ஆயினும் தொழிற் புரட்சியால் ஏற்பட்ட புதிய சூழ்நிலையின் காரணமாக, தொழிற் சங்கங்களின் தேசக்கூட்டுறவு, பொது வேலை நிறுத்த நடைமுறைகள் ஆகியவை வளர்ந்தன. அத்துடன் 1848இல் இங்கிலாந்தில் ஆண் பெண்கள் அனைவர் மொழியுரிமை, மறைமொழிச் சீட்டு ஆகிய காலந்தாண்டிய முனைத்த கருத்துகளைக் கொண்ட பத்திர இயக்கமும் (Chartist Movement) பிரான்சில் இரண்டாவது புரட்சியும் ஏற்பட்டன.

பொதுவுடைமை வேதாந்தத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாகவும் ஓர் உலகத் தொழிலாளர் இயக்கமாகவும் மாற்ற உதவிய சக்திகளுள், தொழிற் புரட்சிக்கு அடுத்த முக்கியத்துவம் உடைய சக்தி கார்ல் மார்க்ஸ் என்ற ஒரு தனிமனிதன் முயற்சியே! அவருக்கு முன் பொதுவுடைமை ஒரு கருத்துக் குளறுபடியா யிருந்தது. பல வகுப்பு நலங்களை நாடிய பல அறிஞர்களும் இதுவரை குறிக்கோள் அளவிலேயே அதில் ஊடாடினார். கார்ல் மார்க்ஸ் குறிக்கோளொற்றுமையை மட்டுமன்றிக் கருத் தொற்றுமையையும் உண்டு பண்ணினார். அதுமட்டுமன்று. கருத்துத் துறையில் இறங்கி. வழிமுறைகளும் திட்டமும் நோக்கி முனைந்தவரும் அவரே. சமய வேதாந்தப் போக்கு ஒழுக்கமுறைப் போக்கு, ஆகியவற்றை விட்டு அவர் அதை ஒரு பொருளிய, சமூக, அரசியல் முறை ஆக்கினார்.

மார்க்சின் கோட்பாடு கூறுகூறாகப் பிரிக்கத் தக்கதன்று; அது ஒரு முழுநிறை கோட்பாடு ஆயினும் அதை உணரும் வகையில் நாம் அதில் நான்கு கூறுகளைக் காணலம். ஒன்று வரலாற்றுக்கு அவர் தந்த புது விளக்கம், இரண்டாவது அவர் பொருளியல் வகுப்புப் போராட்டக் கோட்பாடு. மூன்றாவது அவர் வகுத்த வகை முறையாகிய புரட்சிப் பிரச்சாரம். நான்காவது அவருடைய பொருளியல் தத்துவங்கள். அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு வகுப்புப் போராட்டக் கோட்பாடும் புரட்சிப் பிராச்சாரமுமே முதுகெலும்பு போன்றவை ஆகும். வரலாற்றாராய்ச்சியும் பொருளியலும் இவ்விரண்டுக்கும் வலுத் தர உதவின. அவை அவர் கோட்பாட்டுக்கு ஒரு புதிய சமயத்தின் ஆர்வத்தையும் வரலாறு, அறிவுநூல் ஆகியவற்றின் உறுதியையும் ஒருங்கே அளித்தன.

உலகத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்ஸ் அளித்த ஊக்கமும் உந்துவிசையும் மிகப் பெரியது. 1866இல் ஜெனிவாவில் கூடிய உலகத் தொழிலாளர் கூட்டுறவுப் பேரவை (First International) பல தொழிற் சங்கத் தலைவர்கள், மிதவாதச் சீர்திருத்த வாதிகள் முயற்சியாலேயே கூடிற்று. இதில் தனித்தனி தன்னுரிமை உடைய தொழிற்சங்கங்களின் கூட்டுறவையே நாடிய தலைவர் பக்குனின் என்பவர். அவர் அரசியலற்ற நிலையையே (அராஜக நிலையையே) குறியாகக் கொண்டார். ஆனால் மார்க்சு அரசியலைக் கைப்பற்றும் புரட்சிக் கொள்கையை வலியுறுத்தினார். இவ்வேறுபாட்டால் அது படிப்படியாக வலுவிழந்தது.

இரண்டாவது உலகத் தொழிலாளர் கூட்டவை கூடுமுன் 1871இல் தீவிரக்கட்சி பிரான்சில் பாரிசு பொதுமைக்குழு (பாரிஸ் கம்யூன்) அமைத்து வேலை செய்தது. இது தோல்வியுற்றது. புரட்சி எதிர்ப்பாளர் ஆட்சியால் மார்க்ஸ் பிரான்சையும் செர்மனியையும் விட்டு, பிரிட்டனிலேயே நாட்கழிக்க வேண்டியதாயிற்று. ஆனால் பிரிட்டனில் அவர் வறுமை யிடையே செய்த வேலை பொதுவுடைமைக்கு அறிவுத் துறையிலும் செயல் துறையிலும் இரும்புக் கோட்டையை எழுப்ப உதவிற்று.

பாரிசு பொதுமைக்குழுவின் தோல்வி மார்க்சீயத்துக்கு உண்மையில் வலுத் தந்தது. பொதுவுடைமை ஆட்சி அமைக்க அரசியலைக் கைப்பற்றுவதும் அரசியல் மன்ற முறைகளும் போதா என்பதையும், படைத்துறையையும் கைப்பற்றிப் பணித்துறை வகுப்பையும் மாற்றியமைப்பதுடன், தொழிலாளர் வகுப்பின் சார்பில் வல்லாட்சி நிறுவுவது அவசியம் என்பதை அது காட்டிற்று.

1871க்கும் 1915க்கும் இடைப்பட்ட காலத்தில் மிதவாதச் சீர்த் திருத்தமே மேலோங்கிற்று. 1889இல் கூடிய இரண்டாவது உலகத் தொழிலாளர் கூட்டமைப்பு பெயரளவிலேயே சமதரும மார்க்சீயப் பதங்களை மேற்கொண்டது. ஆயினும் தீவிரக் கட்சியொன்று வளர்ந்து கொண்டேதான் வந்தது. மிதவாதக் கட்சிகளுக்கு செர்மனியின் பெரும் பான்மைக் கட்சியான தேசிய சமதரும(நாஜி)க் கட்சியும், தீவிரக் கட்சிக்கு உருசியாவில் லெனின் தலைமையிலுள்ள பெரும்பான்மைக் கட்சியான போல்சிவிக் கட்சியும் முதன்மை வகித்தன.

1915இல் சிம்மர்வால்டியில் மிதவாதக் கட்சி கூடிப் பெயரளவில் போரைக் கண்டித்தது. அடுத்த ஆண்டில் தீவிரக் கட்சி கீந்தாலில் கூடிப் பொதுவுடைமைத் தத்துவப்படி போரை ஏகாதிபத்திய முதலாளித்துவப் போட்டி என்று குறிப்பிட்டு உடனடி அமைதி கோரிற்று. உருசியப் பொது மக்கள் ஒரு புறமும் உலகத் தொழிலாளர் மற்றொரு புறமும் போரைப் பெரிதும் வெறுத்திருந்தனர். ஐரோப்பிய வல்லரசுகளும் மிதவாதிகளும் போரெதிர்ப்பை அசட்டை செய்ததினால், தீவிரப் பொதுவுடைமைக் கட்சி விரைவில் உருசியாவின் மக்களாதரவு பெற்ற தேசியக் கட்சியாகவும், ஐரோப்பாவில் தொழிலாளர் வகுப்பின் ஆதரவு பெற்ற உலகக் கட்சியாகவும் வளர்ந்தது.

உருசியாவில் பொதுவுடைமைக் கட்சியின் வெற்றிகள் பெரிதும் தேசிய வெற்றிகளும் அரசியல் வெற்றிகளுமே. பொதுவுடைமை நோக்கிப் புரட்சிப் பாதையில் சென்ற அதன் தொடக்க ஆர்வம் தேசத்தின் சூழ்நிலைகள் காரணமாகவே ஓரளவு தடைப்பட்டுள்ளன. ஆயினும் உருசியாவின் தேசிய முன்னேற்றத்தை இது தடுக்கவில்லை. உருசிய மக்கள் ஆர்வம் இத் தடைகளை மீறி வளரும் என்பது உறுதி. உலகப் பொதுவுடைமை இயக்கமும், சமதர்ம இயக்கமும் இதனால் புத்தாக்கம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை.

வரலாற்றின் பொருண்மைவாத விளக்கம்

வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொடர்பான ஓர் ஆற்றலாகக் கருதுவது புதிதல்ல. ஆனால் வரலாற்றை இயக்கும் ஆற்றலை ஓர் அக ஆற்றலாக, அதாவது தெய்வீக ஆற்றலாக, அல்லது சமயம், பகுத்தறிவு, விடுதலை ஆகிய உயர் பண்பாற்றல்களாகவே பாசூவெட், பிஃட்டெ, தே மயீஸ்தர் முதலியவர்கள் கருதினர். மார்க்ஸ் அவ்வாற்றலை ஒருபுற ஆற்றல் என்றே கருதினார்.

உலகை இயக்கும் ஆற்றல் உலகு கடந்த ஓர் அக ஆற்றலன்று; உலகிலேயே உள்ள புற ஆற்றல்கள்தான் என்பது பொருண்மைவாதம் (மெட்டிரியலிசம்). இதன்படி உயிர்ப் பண்புகள், மனிதன் எண்ணங்கள், கருத்துகள், செயல்கள் ஆகிவற்றால் உலகம் நடைபெறவில்லை. உலகின் சூழல் காரணமாகவே அவை எழுகின்றன. வரலாற்றை விளக்க ஹெகெல் பொருண்மைவாதத்தை முன்னே பயன்படுத்திய துண்டு. சமூகப் பண்புகளை நில இயற்கூறுகளின் விளைவு களாகக் காட்டவும், நிகழ்ச்சிகளைச் சமூகப் பண்புகளின் விளைவுகளாகக் காட்டவும் அவர் முயன்றதுண்டு. ஆனால் மார்க்சு அவர் முடிவுகளை ஏற்காமல், அவர் முறையைப் பயன் படுத்திப் புது விளக்கங் கண்டார்.

புற உலகின் சூழல்களும், அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களுந்தான் மனிதன் கருத்துகளை இயக்குகின்றன என்பதை ஆராய்ச்சியில்லாமலே எவரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் மார்க்சு இந்நிலை கடந்து ஒருபடி மேற்சென்றார். பொதுக் கூறுகளிடையே ஒவ்வொரு காலத்திலும் மற்றெல்லாக் கூறுகளையும்விட மனித சமூகத்தை உருவாக்கும் முனைத்த கூறு பொருள்களின் உற்பத்தி முறையே என்று அவர் கொண்டார். இவ்வுற்பத்தி ஆற்றலே சில சமூக சக்திகளை இயக்கி, அவற்றின் மூலமாக அவ்வக்கால சமூக அமைப்புகளையும் கருத்துக்களையும் உண்டு பண்ணுகின்றது. அவையே ஒழுக்க முறைகள் என்றும், அரசியல் முறை என்றும், சமய விதிகள் என்றும் வழங்குகின்றன. மார்க்சின் மொழிப்படி, ‘’மனிதர்கள் தம் வரலாற்றைத் தாமே ஆக்குகின்றனர், என்பது உண்மைதான். ஆனால் அவ்வேலையை அவர்கள் தாமே தம்மிச்சைப்படி தேர்ந்தெடுத்துக் கொண்ட சூழலிடையே செய்ய முடியாது. ஏற்கெனவே அமைந்துவிட்ட சூழலிடையேதான் செய்யவேண்டும்.’’

மார்க்சின் இவ்விளக்கம் மறுக்கக் கூடியதன்று. எடுத்துக் காட்டாக, நிலப் பண்ணையாட்சி முறை சமூகத்திலுள்ள அமைப்புக்கள் யாவும், சமூகத் தொடர்புகள் யாவும், நிலப்பண்ணை ஆட்சியாளர்களின் நலன்களுக்கேற்ப உருப்படுத்தப்பட்டிருந்தன. சமத்துவப் பேச்சுப் பேசிய சமயத் துறைகூட அதற்கு எளிதில் வளைந்து கொடுத்து அதன் படிமுறை உரிமைகளை ஏற்றுக்கொண்டது. இவ்விடைக்கால சமூக அமைப்புக் குலையும்போது அரசியலும் குலைந்து, நடுத்தர வகுப்பாட்சி அரசியல் ஏற்பட்டது. புதிய ஆட்சியுடன் பழைய சட்டங்கள், அமைப்புக்கள் கருத்துகள் யாவும் மாறின. எங்கும் கூட்டுறவினிடமாகத் தனி மனிதனுரிமை வற்புறுத்தப்பட்டது. சமயத் துறையில் இதுவே உரோமத் திருத் தந்தை (போப்) ஆட்சியினிட மாகப் புதிய சீர்திருத்த சமயத்தை வளர்த்தது. புதிய சமூக ஆட்சிக்குத் தடங்கலாயிருந்த இடைக்காலக் கடுங்கோலர் (வல்லரசர்) கூடத் தூக்கி எறியப்பட்டனர்.

ஒவ்வொரு வரலாற்றுக்காலச் சமூக அமைப்புக்கு மட்டும் மார்க்சின் பொருண்மைவாதம் விளக்கந்தரவில்லை. காலாகால மாறுபாடுகளையும் அது இம்முறையிலேயே விளக்கிற்று. புற உலகச் சூழல்கள் என்றும் நிலையாயிருப்பதில்லை. புதிய விற்பனைக் களங்கள், புதிய தொழில் முறைகள், புதிய மூலப் பொருள் வளங்கள் தோற்றுகின்றன. புதிய அமைப்பு முறைகள் எழுகின்றன. இவற்றின்மூலம் பழைய அடிப்படை அமைதி காலங்கடந்ததாகிவிடுகிறது. மாறுதல் சக்தி நீக்க முடியாத கட்டாய வலு அடைகிறது. அதன் ஆற்றலால் வகுப்புகள், வகுப்புகளின் உயர்வு தாழ்வு முறைச் சட்டங்கள், சமூக அரசியல் அமைதிகள், சமய அமைப்புகள், கருத்துகள் யாவும் தகர்ந்து பொடிந்து புதுப் போக்குக்கு இணங்க உருவாகின்றன.

திரு. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இவ்வகையில் பல நல்ல சான்றுகள் தந்துள்ளார். பிளேட்டோவின் காலத்திலிருந்து பெண்ணுரிமை பேசப் பட்டும், மேரி ஒல்ஸ்டன் கிராஃவட், சான் ஸ்டூவர்ட் மில் ஆகியவர்கள் அதற்காகத் தீவிரப் பிரசாரம் செய்தும் ஏற்படாத பயன், தொழில் துறையில் பெண்கள் புகுந்ததும் உடனே விளைந்தது. 16ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்த இயக்க காலமுதல் 1688இல் நிகழ்ந்த ஆங்கில நாட்டுப் புரட்சி வரை ராபர்ட் ப்ரௌன் போன்ற அறிஞரும், வில்வியம் அவ் ஆரஞ்சு போன்ற அரசியற் சான்றோரும் எவ்வளவு முயன்றும் கைவரப் பெறாத சமய சமரச மனப்பான்மை, தொழில் துறை வளர்ச்சிக்குச் சமயப் பூசல் குந்தகம் ஆகும் என்பது உணரப்பட்டவுடனே வெற்றி பெற்றது.

மார்க்சீய பொருண்மைவாதத்தின் மூன்றாவது கூறு வகுப்புப் போராட்டக் கோட்பாட்டுக்குத் தனி ஊக்கம் தருவது. பழைய அமைப்பு மாறி புது அமைப்பு வரும்போதெல்லாம், அது இயல்பாக, சுமுகமாக வந்துவிடுவ தில்லை. புதுமை பழமையுடன் கடும் போராட்டமாடியே வெற்றியடைய முடியும். எனவேதான் ஒவ்வொரு சமூக அமைப்பிலும் நாம் இருவகையான மக்களைக் காணலாம். ஒரு சாரார் ஏற்கெனவே நிலை பெற்றுள்ள அமைப்பை ஆதரித்து நிற்பர். மற்றொரு சாரார் அதை மாற்றுவதில் ஆர்வங் கொள்வர். முதல் வகுப்புப் பெரும்பாலும் ஏற்கெனவே நிலைபெற்ற அமைப்பில் உரிமையாட்சி யுடையதாகவும். மற்ற வகுப்பு அதனைச் சார்ந்து வாழ்ந்து உரிமையற்றதாய், கடமையாற்றுவதாகவுமே இருப்பது காணலாம். ஆனால் உரிமை வகுப்பு தன் தனி நலன்களையே மொத்த சமூக நலன் என்று அந்த அமைப்பு முறையில் கூற முடிவதால், வகுப்பு வாதம் பேசாமலே அது சமூக அடிப்படையில் பேசித் தன் நலன்களை எளிதில் அடையும். உரிமையற்ற வகுப்பின் எதிர்ப்பை அது மொத்த சமூகப் பகைமை என்று கூறிச் சட்டப்படி தண்டிக்கும். ஏனெனில் சட்டம், கல்வி, ஒழுக்கம், நேர்மை, கடவுள் கொள்கை ஆகிய யாவுமே அவ்வச் சமூக அமைப்பு முறையில் அதனதன் ஆட்சிக் குழுவினரால் அமைத்துக் கொள்ளப்பட்டு அவரவர்கள் நலன்கள் சார்ந்தவையாகவே இருக்கும்.

மார்க்சின் வகுப்புப் போராட்டக் கொள்கை இங்ஙனம் அவர் வரலாற்று விளக்கத்திலிருந்து ஆதரவு பெறுகிறது. ஒவ்வொரு வகுப்புப் போராட்டத்திலும் உடைமை வகுப்பு அதாவது ஆட்சி வகுப்பு நிழலிலிருந்தும், கடமை வகுப்பு அல்லது ஆளப்படும் வகுப்பு தன் வாழ்க்கை பிழைப்புக்காகத் தன் உரிமை போராட்டத்தில், இறங்குவதற்கான சூழ்நிலையாதரவற்றுக் கடுவெயிலில் நின்றும் போராட வேண்டி யிருக்கிறது. இந்நிலையிலும் புதிய சூழல் கடமை வகுப்புக்கு வலுத் தருகிறது. ஆனால் போராட்டமில்லாமல் அவ்வகுப்பினர் உரிமை பெற முடியாது. ஆதிக்க வகுப்பின் நல்லெண்ணத்தையோ, சலுகையையோ எதிர்பார்ப்பதும் மதிப்பதும் தவறு. ஏனென்றால் சலுகை தற்காலிகமாக ஆதிக்க வகுப்புக்கு ஏற்பட்ட சிறு தளர்ச்சிகளையே காட்டுகிறது. அத் தற்காலிக ஓய்வை நிலையான அமைதியாகக் கருதினால் ஆதிக்க வகுப்பு அதைப் பயன்படுத்தித் தன்னைப் பின்னும் எளிதில் வலிமைப்படுத்திக் கொள்ளும். கடமை வகுப்பு அதாவது உழைப்பு வகுப்பு இதனாலேயே சம்பள உயர்வு, வேலை நேரக் குறைவு முதலிய சலுகைகளைத் தன் நோக்கமாகக் கொள்ளாமல், போராட்டத்தின் படிகளாக மட்டுமே கொள்ளவேண்டுமென்று மார்க்சியம் வலியுறுத்துகிறது.

அதுமட்டுமன்று. பகுத்தறிவு, அன்பு, தேசிய ஒற்றுமை, அகிம்சை, கடவுளருள், விதி முதலிய உயர் கருத்துகளை நம்பியோ, ஆட்சியாளர் தயவை விரும்பியோ, இயற்கை மாறுபாட்டை எதிர்பார்த்தோ உழைப்பு வகுப்பு ஏமாறக்கூடாது. ஏனெனில் மார்க்சு கூறுகிறபடி ‘’கருத்துகளது வளர்ச்சி தளர்ச்சிகளின் வரலாறு நமக்குக் காட்டும் படிப்பினை புறப்பொருள் சூழல்களைக் கருத்துகள் இயக்குகின்றன என்பதன்று; கருத்துக்களைப் புற உலகச் சூழல்கள் உருவாக்கி இயக்குகின்றன’’ என்பதே.

மார்க்சுக்கு முன்னும் பல வரலாற்றாசிரியர் பொருண்மை வாத அடிப்படையில் வகுப்புப் போராட்டங்களைக் குறிப்பிட்டதுண்டு. அவர்களுக்கும் தமக்கும் உள்ள வேறுபாட்டை அவர் 1852இல் கீழ் வருமாறு குறிக்கிறார்; ‘’நடுத்தர வகுப்பு வரலாற்றாசிரியர்கள் முன்பே வகுப்புப் போராட்ட வளர்ச்சி பற்றி எழுதியதுண்டு. அவர்கள் கூறியவை கடந்து நான் வற்புறுத்தும் செய்திகள் உண்டு. (1) இன்றைய வகுப்புகள் சில பொருள் உற்பத்தி முறைகளுடன் பிணைக்கப் பெற்றுள்ளன. (2) வகுப்புப் போராட்டம் கட்டாயமாக உழைப்பு வகுப்பின் வல்லாட்சிக்கு வழி வகுத்துத் தீரும். (3) இவ் வல்லாட்சி நிலையானதன்று. வகுப்பு ஒழிப்பு, புதிய சுதந்திரம், சரிசம சமூக அமைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான மாறுதற் காலச் சின்னம் மட்டுமே.’’

பொதுவுடமைத் தத்துவம் உண்மையான குடியாட்சிக்கு மாறான தல்ல. ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் குடியாட்சி போலியானது, இரண்டகமானது. லெனின் கூறுவதாவது; ‘’இன்றைய குடியாட்சி முதலாளித்துவச் சுரண்டல் கோட்டையின் குறுகிய மதில்களுக்குள் சிறைப்பட்டுள்ளது. அது உண்மையில் ஒரு சிறுபான்மையின் குடியாட்சி; செல்வர் வகுப்புக்கு மட்டுமே உரிய குடியாட்சி. முதலாளித்துவக் குடியாட்சி பண்டைய கிரேக்கக் குடியரசுகள் காலத்திலிருந்து உருவத்தில் மாறியிருக்கிறதே தவிர, பண்பில் மாறவில்லை. அது இன்னும் அடிமைகளை ஆளும் ஆண்டான்களின் குடியாட்சியே. தற்காலக் ’கூலி அடிமை’களுக்கு உடைமை உரிமை இல்லாதபோது அதைக் காக்கும் உரிமை இருந்து என்ன பயன்? அதற்கு அவர்களுக்கு நேரமோ, ஆற்றலோதான் ஏது? இந்நிலையில் மக்களில் பெரும்பாலோரின் இன்றைய குடியாட்சி உரிமை, வாயைக் கட்டிப் பாடவிட்ட உரிமையாகவே இயங்குகிறது.’’

குடியாட்சியின் போலித்தனத்துக்கு இரு கூர்கள் உண்டு. ஒன்று: பொருளியல் சமத்துவம் இல்லாத அரசியல் சமத்துவம் தந்து, அது மக்களைக் கேலி செய்கிறது. (இது கைகால்களைக் கட்டி விட்டு ‘ஓடு’ என்று அடிப்பது போன்றது.) முதலாளித்துவம் மக்களிடையே அடிமை நிலையையும் அடிமை மனப்பான்மையையும் வளர்த்து விட்டு, விடுதலை வேதாந்தம் அளக்கிறது. இரண்டாவது இந்த விடுதலை வேதாந்தம் கூட முதலாளித்துவ அடிப்படைக்கு இடையூறு ஏற்படாதிருக்கும் வரைதான். அது பேசும் அமைதியான வளர்ச்சி முறையும் (evolution) அதுவரைதான். அவ்விடையூறு வரும் என்ற வாடை தட்டினது முதலே, சட்டமாகிய நகங்கள், அடக்கு முறையாகிய கோறைப் பற்கள், எதிர் புரட்சிப் போர் ஆகிய அழிவு நடவடிக்கைகள் தோன்றிவிடும்!

‘’இங்கிலாந்திலுள்ள மக்கள் மட்டும் எப்போதும் இம்சையை வெறுத்து, அமைதியைப் போற்றிப் பேணி வந்திருந்தால், இந்நாட்டில் மக்கள் சுதந்திரங்களை என்றும் பெற்றிருக்கவே முடியாது’’ என்கிறார். கிளாட்ஸ்டன். இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் ஆட்சியாளருள் இடம்பெற்ற நடுத்தர வகுப்பினரே தம் உரிமைகளைப் பெரும் போரிட்டுப் பெற்றார்களென்றால், உரிமைக்காகச் சரிசம நிலையில் போட்டியிடும் வலுவுமற்ற உழைப்பாளி வகுப்பார், போராட்ட மில்லாமல், அமைதியுடன் எப்படித் தம் உரிமையைப் பெறமுடியும்? நடுத்தர வகுப்பினர் பிரிட்டனில் 1642இல் உள்நாட்டுப் போரையும், பிரான்சில் 1789இல் புரட்சியையும் நடத்தி உரிமை பெற்றது போல், உழைப்பு வகுப்பும் உலகெங்கும் போராட்டம் நடத்தியே உரிமைபெற முடியும் என்பது கூறாமலே அமையும்.

மார்க்சீயத்தின் குறைபாடு ஒன்றே ஒன்றுதான். புரட்சி கட்டாயமாக வந்து தீரும்; பொதுவுடைமை கட்டாயமாக நடந்து தீரும் என்று மார்க்ஸ் கூறுவது நடைமுறைக்கு முற்றிலும் பொருத்தமன்று. வகுப்புப் போராட்டம் நாஜியர் கட்சி போன்று: முதலாளித்துவச் சார்பான நடுத்தர வகுப்பு வல்லாட்சிக்கோ அல்லது முதலாளித்துவ ஆட்சியாளரின் முன்னெச்சரிக்கை யான சீர்த்திருத்தங்களுக்கோ வழிவகுக்கக் கூடும். ஆயினும் இந் நம்பிக்கை வெற்றிக்கு முயல்பவர் ஊக்கத்துக்கு அவசியம் என்பதில் தடையில்லை.

பொருளியல் கோட்பாடு

பொதுவுடைமையின் பொருளியல் கோட்பாடு பெரிதும் மார்க்சின் ‘முதலீடு’ விளக்கும் கோட்பாடே. மற்றப் பொதுவுடைமை வாதிகள் அனைவர் கருத்துகளும் அதற்கு ஆதரவான விளக்கங்களாக மட்டுமே அமைகின்றன.

மார்க்சீய பொருளியலின் அடிப்படைக் கூறுகள் இரண்டு. அது அறிஞர் லோக்கினால் முதன் முதல் குறிக்கப்பட்டு, ரிக்கார்டோ, ஆடம் ஸ்மித் ஆகியவர்களால் விளக்கந் தரப்பட்ட விலைமதிப்புப் பற்றிய உழைப்புக் கோட்பாட்டை விரிவுபடுத்து கிறது. அதனடிப்படையாக அது உழைப்பாளர்க்குரிய மிகைமதிப்பை முதலாளி வகுப்பு கைப்பற்றிக் கொள்ளை கொள்கிறது என்று நிலைநாட்டுகிறது.

மார்க்சின் விலை மதிப்புக் கோட்பாடு இது

பொருளின் மதிப்பு அதன் பயனையும் விலையையும் பொறுத்தது. பயன் பண்படிப்படையாக வேறுபடுகிறது. இதை அளக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் சமயத்திலும் ஒரு பண்பு தேவைப்படுகிறது. மாணவனுக்கு ஒரு சமயம் வாசிக்க ஏடும், மற்றொரு சமயம் உண்ண உணவும், அதுபோல தொழிலாளிக்கு ஒரு சமயம் உண்ண உணவும், மற்றொரு சமயம் உடுக்க உடையும் தேவைப்படுகின்றன. இத்தேவைப் பண்பு அளக்க முடியாதது. அதே சமயம் பொருளின் விலை மதிப்பு அளவிடப்படுவது. அது பயனை ஒட்டிய தன்று. லோக், ரிக்கார்டோவைப் பின்பற்றி மார்க்சு அதை உழைப்பின் பயன் என்று குறிக்கிறார். அத்துடன் மக்கள் சமூக முறைப்படி மதிப்பிட்ட ஒரு பொது உழைப்பளவையின் படியே, இத்தனை மணிநேர உழைப்பை அது குறிக்கும் என்று வரையறுத்த அளவே பொருளின் உண்மையான விலை மதிப்பு என்று அவர் கொள்கிறார்.

தொழிலாளருக்குத் தரப்படும் கூலி அவன் உழைப்புக்கு முதலாளி தரும் விலை. அவன் உழைப்புக் காலத்தில் அவன் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவையளவாக அது பேரத்தால் வரையறுக்கப்படுகிறது. உழைப்பாளன் உழைப்பின் பயனாகக் கிடைத்த பொருளில் உற்பத்திச் சாதனங்களின் உழைப்புக் காலப் பயனீட்டு மதிப்பு, மூலப் பொருள் மதிப்பு ஆகியவற்றைக் கழித்தால், மீந்த பகுதி அவன் உழைப்பின் உண்மையான மதிப்பு ஆகும். இது அவன் உழைப்புக்கு முதலாளி தந்த விலையாகிய கூலியை விட எப்போதும் கூடுதலாகவே இருக்கிறது. இதுவே ‘மிகை மதிப்பு’ என்று மார்க்சினால் குறிக்கப்படுகிறது. முதலாளி தொழிலாளியின் ஒரு நாகரிக உழைப்பை வாங்கி விட்டதனால், உழைப்பு மணி நேரத்தைக் கூட்டி அவன் இதனைப் பெருக்கலாம். இந்நேரம் கட்டுப்படுத்தப்பட்ட பின்னும் உழைப்பாளியின் உழைப்புத் திற வளர்ச்சி, அவர்கள் ஒரே இடத்தில் கூடியுழைப்பதால் ஏற்படும் கூட்டுறவுப் பயன், புதிய உற்பத்தி முறைகளின் பயன் ஆகிய பல வழிகளால் தொழிலாளிக்குரிய இம்மிகை மதிப்பை எல்லையின்றிச் சுரண்டுகிறான். இச்சுரண்டுதல் என்றும் வளர்ந்து வருகிறது.

மார்க்சின் இவ்விளக்கம் பேரளவில் உண்மை நிலையை வகுத்துக் காட்டுவதே. ஆனால் அறிவாராய்ச்சி முறையில் அவர் கோட்பாட்டில் குறை இல்லாமல் இல்லை. பொருளின் உண்மையான மதிப்பையே அவர் விலை மதிப்பாகக் கொண்டு அதிலிருந்து மிகைமதிப்பைக் கணக்கிடுகிறார். உண்மையான மதிப்பு வேறு, விலை மதிப்பு வேறு என்பதையும் அவரே குறிக்கிறார். ஆயினும் இரண்டின் வேறுபாடும் போட்டி அதாவது முதலாளித்துவ அறிஞர் கூறும் தேவை-தருவிப்புப் பேரத்தினால் அமைவது என்பதை அவர் மழுப்பிவிடுகிறார். அவர் தோழர் எங்கெல்சு அவர் குறிப்புக்களிலிருந்து தொகுத்துருவாக்கிய முதலீட்டின் 2ஆம், 3ஆம் ஏடுகளில் இது ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் இது முதல் ஏட்டில் கண்ட மார்க்சின் கோட்பாட்டுக்கு மாறுபாடானது.

மார்க்சிய பொருளியல் கோட்பாட்டின் தலைசிறந்த பகுதி ‘மிகை மதிப்பே! அடுத்தபடியாகக் கூறக்கூடிய பகுதி ’நிலை முதலீடு’ (Constant Capital), மாறுபடு முதலீடு (Variable Capital) என்ற முதலீட்டுப் பாகுபாடே. உற்பத்திச் சாதனங்களும் மூலப் பொருளும் கிட்டத்தட்டத் தொழிலில் நிலையான அளவில் தேவைப்படுவதால் அவை நிலை முதலீடு ஆகும். உழைப்பு கூடுதல் குறைவாகத் தேவைப்படுவதால் அது மாறுபடு முதலீடு ஆகும். ஆதாயம் அடிக்கடி மாறுகிறது. இது நிலை முதலீட்டின் பயனாக ஏற்பட முடியாது. மாறுபாடு முதலீட்டாலேயே ஏற்படக்கூடும். மிகை மதிப்பு இதனால் தொழிலாளர்க்கே முற்றிலும் உரியது. உழையாத முதலாளிக்கு ஆதாயத்தில் பங்கு உரியதன்று என்பதை இதனால் மார்க்சு காட்டுகிறார்.

இதிலும் அறிவுத் துறையில் ஒரு குறைபாடு ஏற்படுகிறது, நிலை முதலீட்டினால் ஆதாய உயர்வு தாழ்வு விளக்கப்பட முடியாது. ஆனால் மாறுபாடு முதலீட்டின் உயர்வு தாழ்வு விகிதத்திலேயே அது உயர்வுதாழ்வு பெறுவதாகக் காட்டவும் முடியாது. இங்கும் எங்கெல்ஸ் போட்டித் தத்துவத்தைக் கையாண்டு புது விளக்கவுரை காண்கிறார். சமூகத்தின் மொத்த மாறுபடு முதலீட்டுக்கு ஒத்தே சமூகத்தின் மொத்த ஆதாய உயர்வு தாழ்வு இருக்கிறது என்றும், போட்டி காரணமாக பங்குக் களப்போட்டியில் நடை பெறுவதுபோல, மிகுதி முதலீடு இடுபவர்க்கு மிகை மதிப்புக்கூடியும் குறைந்த முதலீடு இடுபவர்க்கு அது குறைந்தும் இயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

நேர நீட்டிப்பின்போது ஒவ்வொரு மணிநேர உழைப்பினாலும் முதலாளிக்குக் கிடைத்த மிகை மதிப்பை மார்க்சு ‘தனி மிகை மதிப்பு’ (Absolute Surplus Value) என்றும் நேரத்தை நீட்டிக்க முடியாதபோது புதிய இயந்திர முன்னேற்றம் முதலிய வகைகளால் நேரத்தின் உழைப்பு மதிப்பைப் பெருக்கும்போது கிடைக்கும் மிகை மதிப்பைச் ‘சார்பு மிகை மதிப்பு’ (Relative Surplus Value) என்றும் குறிக்கிறார். இப் புதிய முறையால் உழைப்பாளர் மதிப்புக் குறைகிறது. தொழிலாளர் வேலையில்லாமை இதனால் ஏற்பட்டு, உழைப்பாளர் போட்டியால் மதிப்பு இன்னும் தாழ்ந்துகொண்டே போகிறது.

சார்பு மிகை மதிப்புக்காக முதலாளி மாறுபடு முதலீட்டைக் குறைத்து நிலை முதலீட்டைப் பெருக்கிக் கொண்டே போகிறான். இதனால் தொழில் துறையில் முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாகவும், அரசிய லாட்சி தொழில் முதலாளி, பண முதலாளி ஆகியவர்களின் கூட்டுறவால் ஏற்பட்ட சிறுகுழு ஆட்சியாகவும் மாறுகிறது. உழைப்பவர் தொகையும் தொழிலில்லாதவர் தொகையும் பெருகுவதாலும், உழைப்பவர் மொத்த வருவாய் குறைவதாலும் பொருள்களை வாங்கும் சமூக ஆற்றல் குறைகிறது. பொருள்கள் மட்டும் பெருகி அடிக்கடி வாணிக, தொழில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. சமூகத் தேவைக்கேற்ற பொருள்களில் முடையும், தேவையற்ற பொருள்களில் பெருக்கமும் உண்டாகிறது.

உற்பத்தி செய்யும் தொழிலாளரின் மனிதப் பண்புகள் கெடுகின்றன. நல்வாழ்விலிருந்தும், கல்வி கலைகளிலிருந்தும், தொழிலை வளர்க்கும் அறிவியலிலிருந்தும் அவர்கள் பிரித்து வைக்கப்பட்டு அழிகின்றனர். பூரியிலுள்ள ஜகன்னாதர் தேரைப் போல அது தொழிலாளி வாழ்வைத் தன் பாரிய சக்கரங்களிலிட்டு நசுக்கிக்கொண்டு செல்கிறது!

தொழில் முதலாளித்துவம் முற்காலத்திய பிற முதலாளித்துவ முறைகளைவிட மனித இனத்துக்குப் பெருத்த நன்மைகள் செய்துள்ளது என்பதை மார்க்சும் பொதுவுடைமை வாதிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் உலகின் பெரும் பாலான மக்களாகிய உழைப்பினத்தினரை அது அந்நலன்களிலிருந்து பிரித்து வைக்கிறது.

உற்பத்தியாற்றல் பெருக்கம், பயனீட்டாற்றல் குறுக்கம் ஆகிய வற்றின் பயனாக, முதலாளித்துவம் தன் முரண்பாடுகளால் தானே அழியும் என்ற மார்க்சு கூறினார். அவருக்குப் பின் அவர் உரைகள் அவர் எதிர் பார்த்த அளவைவிட மிகுதியாக உண்மையாகிவிட்டன. ‘ஏகாதிபத்தி யத்துவம்’ என்ற நூலில் லெனின் எழுதுவதாவது: ‘’வரவர மிகுதியாக நிலை முதலீட்டைச் சார்ந்து வளரும் போக்கால், மூலப் பொருள் வேட்டைக்காக மேனாடுகள் உலகெங்கும் அலைகின்றன. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பசிபிக்கிலும் இதற்காக அம்முதலாளித்துவ நாடுகள் தம் சுரண்டல் ஆட்சியைப் பரப்பி வருகின்றன. செல்வர் சிறு குழுவாட்சியும், ஏகபோக முதலாளிகள் ஆட்சியும், வட்டிக் கடைக்கார ஆட்சியும் ஏற்பட்டு ஒரு சிலருக்காகக் கோடிக் கணக்கான மக்கள் வாழ்வை அலைகழித்து வருகின்றன.’’

மார்க்சின் விவாதங்கள் அவற்றின் அறிவாராய்ச்சியால் வலுப்பெறு கின்றன என்பது உண்மையே. ஆனால் அறிவாராய்ச்சியில் குறை காண்பது அதன் வலுவைக் குறைப்பதன்று. அக்குறைகள் கூட வாதங்கள் பேரளவில் உண்மையே என்பதை மறைக்க முடியாது. அத்துடன் விவாதத்தின் உயிர்நிலை வலு அறிவாராய்ச்சி சார்ந்ததன்று; சமத்துவம், சமூக நலன் ஆகிய அடிப்படை மனித உணர்ச்சிகளை நோக்கி அது செல்வது என்பதே. இது ஒரு குற்றமானால், அதிலிருந்து முதலாளித்துவ அறிஞர் ஆராய்ச்சிகளே தப்ப முடியாது! உண்மையில் லோக்கும் ரிச்சார்டோவும் ஆடம் ஸ்மித்தும் விலை மதிப்புக்கு உழைப்பு மதிப்பிலிருந்து ஆதாரம் தேடத் தொடங்கியதும், முதலாளி தொழிலாளி பேரம் சுதந்திர பேரம் என்று அவர்கள் காட்டத் தொடங்கியதும் தான் மார்க்சுக்கு அவர்களைத் தாக்கும் கருவிகள் தந்தன. மொத்தத்தில் முதலாளித்துவ அறிஞரும் சரி, மார்க்சீய அறிஞரும் சரி, பிரஞ்சுப் புரட்சி இயக்கத்தின் வழிவந்த சமூகத்தின் பிள்ளைகள். ஆனால் மார்க்சு அப்புரட்சி இயக்கத்தின் நேர்மரபு ஆவார். மற்றவர்கள் எதிர்ப்புரட்சி மரபில் வந்தவர்களே. புதிய சூழ்நிலையில் மார்க்சு தன் உயர் குறிக்கோளை மறைத்து ஆராய்ச்சி முறையில் கருத்தைச் செலுத்தினா ரென்றால், மற்றவர்கள் தம் ஆராய்ச்சித் துறையை மறைத்து அவ்வுயர் குறிக்கோளைப் பரப்பத் தவறவில்லை என்று கூறல் வேண்டும்.

மார்க்சிடம் குறை காண்பது எளிது. அவரை எதிர்த்தழிப்பது அரிது. ஏனெனில் அவர் முதலாளித்துவ அறிஞரின் ஆராய்ச்சிச் சலசலப்பை அம்பலப்படுத்தினார். அத்துடன் அவர் முடிவுகள் மனித அவா ஆர்வங்களை அடிப்படையாகக் கொண்டவை.

அரசியல் பற்றிய கோட்பாடு

ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்பும் நடைமுறை மரபுகளும் ஒவ்வொரு வகைப்பட்டதாகவே இருக்கிறது. ஒன்று முடியாட்சியாகவும் மற்றொன்று குடியாட்சியாகவும்; ஒன்று மைய வலுவுடைய கூட்டாட்சியாகவும், ஒன்று தனியரசு வலுவுடைய கூட்டாட்சியாகவும், ஒன்று சட்டமும் ஒழுங்குமுறையும் நடைமுறையும் இணைத்தும், ஒன்று பிரித்தும் இயல்கின்றன. ஆனால் எது எவ்வகை யாயிருந்தாலும், எல்லா அரசியல்களிலும் ஒரே நடுநாயக உண்மையைக் காண்கிறோம். எல்லா இடங்களிலும் ஒரு சிலர் ஆட்சிக்குப் பலர் சட்டப்படி அடங்கியே நடக்கின்றனர்.

அரசியல் பற்றிய செவ்வுயர் குறிக்கோள் சமூக முழுமையின் நலத்தையும் முழுநிறை வடிவில் பேணும் அமைப்பு என்பதே. வாணிகம், தொழில். சமயம் முதலிய மற்ற எல்லா அமைப்புக்களும் ஒரு சிலருடன் நின்றுவிடுகின்றன. அச்சிலர் வாழ்விலும் ஒரு கூறுடன் அமைகின்றன. ஆனால் அரசியல் எல்லாரையும் ஒருங்கே தன்னகம் கொண்டது; அவர்கள் வாழ்வு முழுமையும் அளாவியது. எல்லாருடைய முழுநிறை பொது நலனை அல்லது நடுநேர் நிலையை அது பேணவேண்டும். ஒவ்வொருவர் மனிதப் பண்புகளையும் அது முழுதும் வளர்த்து முழுதும் பயன்படுத்தவேண்டும்.

எந்த நாட்டிலும் இத்தகைய குறிக்கோள் என்றும் இருந்ததாகவோ, இன்று இருப்பதாகவோ கூறமுடியாது. ஆயினும் இக்குறிக்கோள் வெறும் பசப்பன்று. 16-ஆம் நூற்றாண்டைய இங்கிலாந்தைவிட இன்றைய இங்கிலாந்து அந்நிலை நோக்கி வளர்ந்துள்ளது, வருகிற நூற்றாண்டில் அது இன்னும் குறிக்கோள் நிலையை அணுகும் என்று நம்பலாம். எனவே இக்குறிக்கோள் அரசியல் நடைமுறை உலகின் மெய்மையை உணர்த்தவில்லையானாலும், அதன் போக்கை உணர்த்துகிறது என்பதில் ஐயமில்லை.

அரசியல் பற்றிய மிகப் பெரும்பான்மையோரின் கருத்து மேற்கூறிய குறிக்கோளே என்பதில் ஐயமில்லை. சுதந்திரம், சமத்துவம் இக்குறிக்கோளின் அடிப்படை ஆகும். ஆனால் இதற்கு மாறுபட்ட கருத்துகளும் உண்டு. ஒன்று லிங்குவெட், தேமயீஸ்தர், பொனால்டு ஆகியவர்கள் கருத்து. சுதந்திரமும் சமத்துவமும் கைகூட முடியாதவை மட்டுமல்ல, விரும்பத்தக் கவையுமல்ல என்று அவர்கள் கருதுகின்றனர். ஒரு சிலர் நலங்களுக்காக மிகப்பெரும்பாலார் தம் நலங்களை விட்டுக் கொடுப்பதே சமூக அமைப்பின் இன்றியமையா நிலையான அடிப்படை என்கின்றனர். உரிமையிழந்த அப்பெரும்பாலாருக்கு மயீஸ்தரும், பெர்னால்டும் வழங்கும் ஆறுதல் சமய உணர்ச்சி சார்ந்த ஆறுதல் மட்டுமே. இக்கருத்து பிற்போக்காளர் கருத்து எனக் குறிக்கப்படலாம்.

குறிக்கோள் அரசியல் கருத்தை எதிர்க்கும் மற்றொரு அரசியல் கருத்து பொதுவுடைமைக் கருத்தே. இது பிற்போக்காளர் கருத்துடன் ஒரே ஒரு வகையில் இணைந்துள்ளது. பெரும்பான்மை மக்களின் சுதந்திரம் இரு கருத்துகளாலும் எதிர்க்கப்படுகின்றன. ஆனால் பெரும் பாலான மக்களுக்குப் பிற்போக்காளர் காட்டும் ஆறுதல் மேலுலக ஆறுதல். பொது உடைமை யாளர் தரும் ஆறுதல் இவ்வுலக ஆறுதல். அத்துடன் சுதந்திரம் என்ற ஒன்று நீங்கலாக மற்றெல்லா வகைகளிலும் பொது வுடைமைக் கருத்து குறிக்கோள் கருத்தை நோக்கியே செல்கிறது. அது பெரும்பாலார் உரிமைகளை மறுத் தாலும், பெரும்பாலார் நலங்களை வற்புறுத்துகிறது. எல்லார் சரி சமத்துவத்திற் காகவும் நலங்களுக்காகவுமே உரிமைகளைத் தடையின்றி வழங்குகிறது. அதுவும் தற்காலிக மாகவே.

மார்க்சீயவாதி அரசியலையே ஓர் அட்டூழியக் கருவியாகக் கருதுகிறான். அதைத் தகர்த்தொழிப்பதன் மூலமே உண்மையான சுதந்திரம் ஏற்படும் என்று கூறுகிறான். ஏனெனில் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவ சமூக அடிப்படையில், அச்சுரண்டலைப் பாதுகாக்கவே அரசியல் அமைந்துள்ளது. குடியாட்சி பற்றிய குறிக்கோளை அவர்கள் போலிப் பசப்பு என்று நையாண்டி செய்கின்றனர். புக்காரின் கூறுவதாவது: ‘’எல்லா நாட்டிலுமே அரசியல் என்பது ஆண்டார் வகுப்பின் ஒரு கூட்டுறவாகத் தான் இருக்கிறது. எங்கும் அமைச்சரும், உயர் பணி யாளரும், அரசியல் மன்ற உறுப்பினரும் முதலாளிகள், பெரு நிலக்கிழவர், ஆலைமுதல்வர், அல்லது அவர்கள் ஆட்களான பொருளக மேலாளர், வழக்குரைஞர் முதலியவர்களாக இருப்பதையே காண்கிறோம்.’’

இவ் அரசியலின் நோக்கங்கள் இரண்டு. ஒன்று உற்பத்திச் சாதனங்களின் மீது முதலாளி வகுப்பிற்குள்ள பிடியைக் காத்து வலுப்படுத்துவது. சட்டமும் காவற்படைத்துறையும், இறுதிக் கட்டங்களில் படைத் துறையும், அமைந்திருப்பது இதற்காகவே. நாட்டுப் பகைமை, அரசியல் அவதூறு முதலியவற்றிற்கான குற்றச் சட்டங்கள் உழைப்பு வகுப்பினர் சார்பான எதிர்ப்பை அடக்குவதற்காகவே அமைந்துள்ளன. மனிதர் உயிருக்கு ஏற்படும் இடையூற்றைவிட முதலாளிகளின் உடைமைகளுக்கு ஏற்படும் இடையூறே குற்றச் சட்டங்களின் முழுக் கனிவைப் பெறுகிறது. அரசியலின் இரண்டாவது நோக்கம் பிற அரசுகளின் தாக்குதல், போராட்டங்களைச் சமாளிப்பது என்பதே. இதன் பொருள் எப்போதும் போருக்கு ஏற்பாடு செய்வது என்பதே.

பொதுவுடைமைக் கோட்பாட்டின்படி பள்ளிக்கூடங்கள் முதலாளித்துவ அடிப்படையான அரசியலின் நலத்துக்கான பயிற்சிக் கூடங்களே. அவை போர் செய்யும் வெல்லிங்டன் போன்ற தன்னல அடிமைகளை உயர்வுபடுத்தி வணங்கவும், உண்மை ஊழியர்களான ஜான் பால் போன்றவர்களை அலைக்கழிக்கவும் மக்களைப் பயிற்றுவிக்கும் அடிமை நிலையங் களேயாகும். சமய நிலையங்களும் இதே அடிமைப் பண்பைத் தான் வளர்க்கின்றன. ஆற்றல் எல்லாம் கடவுளருளியது என்று கூறி அது முதலாளித்துவ அரசியலை எதிர்க்கத் துணிபவருக்கு அரசியல் தண்டனைக்கு மேலாக அதனிலும் அஞ்சத்தக்க கற்பனைப் பழிபாவ அச்சங்களையும் அளிக்கிறது.

குடியாட்சியும் மொழியுரிமையும் பரவுந்தோறும் ஆட்சி விரிவு படவில்லை. இன்னும் குறுகுகிறது. ஏனெனில் பரந்த அரசியல் அமைப்பை ஆளச் செல்வரும் ஆட்சிப் பயிற்சியுடையவரும் தேவை. மக்கள் தேர்தல் உரிமை என்பது முழுவதும் ‘காக்கை வேண்டுமா, அண்டங்காக்கை வேண்டுமா’ என்ற தேர்வுரிமையுடன் நிற்கிறது. அத்துடன் பிரிட்டனில் அரசியல் மன்றம் நடைமுறை ஆட்சியாளர் பிடியிலுள்ளது. பிரான்சிலும் அமெரிக்காவிலும் நடைமுறையாட்சியாளருடன் அவர்கள் இடும் போட்டியால் அவர்கள் வலுவற்றவர்களா கின்றனர்.

புரட்சிச் சூழல் ஏற்படுத்தும் வரையில் பொது வுடைமைவாதி குடியாட்சி மரபைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. தனி மனிதன் ஆட்சி யாகிய கடுங்கோன்மை; உயர்குடிச் சிறப்புரிமை; மொழியுரிமை வகையில் உடைமைத் தகுதி ஆகியவற்றின் ஒழிப்பு வகையில் அவன் குடியாட்சியைப் பாராட்டுகிறான். தொழிற்சங்க இயக்கம் வளரக் குடியாட்சியைப் பயன்படுத்த வும் அவன் தயங்கவில்லை. ஆனால் முதலாளித்துவ சமூக ஆட்சியை ஒழிக்கக் குடியாட்சி ஒருபோதும் பயன்படாது என்றும்; புரட்சி யடிப்படையில் அரசியலைக் கைப்பற்றித் தற்காலிகமாக உழைப்பு வகுப்பின் வல்லாட்சி அமைப்பதன் மூலமே அதைச் சாதிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

ஆனால் வல்லாட்சியைப் பொதுவுடைமை ஒரு இன்றியமையா - இடைக்கால முறையாகவே கருதுகிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர்கள் வரையறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் மரபுகள் அழியும்வரை அது நீடிக்கும். அது உற்பத்தியைப் பெருக்கிச் சமூக ஒழுங்கை வளர்க்கும். இயல்பாகப் பொதுவுடைமைச் சமூகம் இதனால் வளரும். அது வளர வளர, அரசியல் படிப்படியாகத் தேய்ந்து மறையும். அரசியல் தேவையற்ற நிலையிலுள்ள ஒரு சமூகம் ஏற்படும். அதில் தேவைக் கேற்றபடி விரும்பிய அளவு ஊழியம். சக்திக்கேற்றபடி கூடிய மட்டும் மனமார்ந்த உழைப்பு ஆகியவை நிலவும். இதுவே பொதுவுடைமையின் குறிக்கோள் அரசியல்.

இக்கோட்பாடு அரசிலா நிலை அன்று. ஏனெனில் இது ஒழுங்கை நாடுகிறது. அது விடுதலையை மதிக்கவில்லை. ஆனால் உண்மை விடுதலைக்காகவே, விடுதலையின் பயனான நலங்களுக்காகவே, அது விடுதலையையும் பொதுவுடைமை யாக்கி ஆட்கொள்கிறது.

நடைமுறை வகைதுறைகள்

எல்லா நாடுகளிலும் பொதுவுடைமை ஒரு நாளிலோ ஒரே வகையிலோ வந்துவிடும் என்று பொதுவுடைமைவாதி கூறுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும் அது ஒவ்வொரு முறையைப் பின்பற்றும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஊக்குவது முதல், இரஷ்யாவில் ஏற்பட்டது போல, அரசியலைக் கைப்பற்றுவது வரை பல நடைமுறைகளையும் அது மேற் கொள்கிறது.

உலகப் பொதுவுடைமை இயக்கத்தை இயக்கும் நிலையம் மூன்றாவது உலகத் தொழிலாளர் அமைப்பேயாகும். இது இரண்டாவது உலகத் தொழிலாளர் அமைப்பை விட நல்ல கட்டமைதியை உடையது. தொடக்கத் திலிருந்தே அதன் தலைமையிடம் மாஸ்கோவாக இருந்து வந்துள்ளது. இது இயல்பே. வேறு எந்த இடத்திலும் வேறு எந்த அரசியலி லும் அது தடையின்றி இயங்க முடியாது. ஆண்டுதோறும் கூடி பரந்த தீர்மானங்களைச் செய்யும் ஒரு உலகப் பேரவை (World Congress) அதன் பெருமன்றம் ஆகும். அதன் செயற்குழுவில் ஏறத்தாழ 45 உறுப்பினர் இருப்பர். மாதம் ஒரு முறையும் சிறப்புப் பருவங்களிலும் கூடி இதுவே நடை முறை ஆட்சி செய்கிறது. உலக நாடுகளின் கட்சிகளை ஏற்பதும் விலக்கி வைப்பதும் பொதுவாக இதன் செயல். எந்த நாட்டிலும் பொதுவுடைமை உலக அமைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட கட்சியை ஏற்காது. பெருமன்றம் ஒரு உலகத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறது.

செயற்குழுவினுள் ஒரு தலைமைக்குழு (Presidium) நிலையாகக் காரியங்களைக் கவனிக்கிறது. வேறு பல அமைப்புக் குழுக்களும் ஒரு செயலாளரும் உள்ளனர்.

உருசிய பொதுவுடைமைக் கட்சியின் இரும்பாட்சி பற்றிக் குறை கூறப்படுகிறது. ஆனால் முதலாளித்துவ அரசியல் சூழ்ச்சிகளிடையே அவர்கள் முதற்கடமை தற்பாதுகாப்பு ஆகிறது. முதலாளித்துவ முறைகளுக்கு எதிராக அவர்கள் முதலாளித்துவ முறைப் பாதுகாப்பை நாடவேண்டிய தாயிருக்கிறது.