அவ்வப்போது

நூருத்தீன்


அவ்வப்போது

நூருத்தீன்

 

 

 

அவ்வப்போது நூல் அறிமுக உரை

நூல் ஆசிரியர் அறிமுக உரை

1. நாய் நியாயம்

2. விஸ்வரூப பெண்பாவம்!

3. துப்பு

4. மின் கார்

5. களவாணியின் கைப்பேசி!

6. அமைதிப் படை (மேட் இன் யு. என்.)

7. நேயமும் அறம்

8. மாயக் கண்ணாடி

9. பல் நுட்பம்

10. அரிச்சுவடி

11. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு!

12. பந்தயம் ரூபாய் ஐம்பதாயிரம்!

13. அட்வாஸ்

14. கேயாஸ் தியரி

15. பிரளயம்!

16. நொடி!

17. இடைச்செருகல்

18. டிபன் பாக்ஸ்​! (பெரியவர்களுக்கான சிறுவர் கதை)

19. போராளி (ஓர் ஆணவக் கொலைக் கதை)

20. எந்திராயினி

 

 

 

நூல் அறிமுக உரை

இந்நேரம்.காம் எனும் செய்தி தளத்தில் அவ்வப்போது எழுதிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு.

 

நூல் ஆசிரியர் அறிமுக உரை

இன்ன தலைப்புதான் என்றில்லாமல் அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றை எழுதி அவை கட்டுரைகளாயின. Blog ஆரம்பித்து குப்பைக் கொட்டாமல் இங்கு வந்து கொட்டேன் என்று இந்நேரம்.காம் செய்து கொடுத்த வசதியில் அது ஒரு தொடராகவே வெளிவந்துவிட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் எழுதித் தந்துவிட வேண்டும் என்ற அவசரமில்லாமல் தோன்றியபோது தோன்றியதை எழுதி அனுப்பி, சிறுகச் சிறுக இருபது அத்தியாயங்களாகி விட்டன. அதன் தொகுப்பே இந் நூல்.

வாசிக்கலாம்; உய்யலாம்; பகிரலாம்.

அன்புடன், -நூருத்தீன்

 

1. நாய் நியாயம்

வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமை அதிகமுள்ள நாட்டில் இருந்துகொண்டு அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று தெரியவில்லை. போலீஸ் கேட்டதற்கு, “கோபம்” என்று பதில் சொல்லியிருக்கிறான் கெவின்.

நம்மூரில் வீட்டில் சிறு பிள்ளைகளைத் தனியே விட்டுச் செல்ல நேரிட்டால், யாரையாவது அழைத்து பிள்ளைகளின் துணைக்கு விட்டுச் செல்வதுபோல், அமெரிக்காவில் நாயைக் கவனித்து, பார்த்துக்கொள்ள மனிதர்களை அமர்த்திக்கொள்கிறார்கள். சிலநாள் வெளியூருக்குச் செல்ல வேண்டும் போன்ற சந்தர்ப்பங்களில் இப்படி நடக்கும். Baby-sitting போல் dog-sitting.

“வேண்டுமானால் எங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளலாம். என் வீடு மிக விசாலம். இன்னின்ன வசதியெல்லாம் உண்டு. உனக்குப் போரடிக்காமல் இத்தனை ப்ளூ ரே தகடுகள் என் தொகுப்பில் உள்ளன. துல்லியமாய் படம் பார்த்து மகிழ். தாராளமான சன்மானமும் தருவேன்” என்று கம்பெனிகள் தன் அருமை பெருமை சொல்லி வேலைக்கு ஆள் பிடிக்கும் அளவிற்கு, அலுவலகத்தில், நட்பு வட்டாரத்தில் மின்னஞ்சல் அனுப்பி நாய்க்கு ஆயா வேலை செய்ய ஆள் தேடுவது அமெரிக்காவில் சகஜமான செயல்.

நாய் என்றாலே நாக்கைத் தொங்கவிட்டு, கோர உருவில், ஜென்மப் பகையாளி போல் அது தம்மைத் துரத்தத் தயாராக நிற்பதைத் தெருவில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த வெள்ளைக்காரர்கள் நாயைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சி, குழந்தைகளைவிட பாசமாக விளையாடுவதைக் கற்பனை செய்வது சற்று கஷ்டம். பத்திரிகைகளில் நடிகைகளின் பேட்டியில், போட்டோவில் பார்த்துள்ளவர்களுக்குப் பிரமிப்பு குறைவாக இருக்கலாம். கொஞ்சுவதாவது பரவாயில்லை. பஸ்ஸில், பார்க்கில், பொது இடங்களில் சில காட்சிகள் மிக சகஜம். கால் மடக்கி தன் இயல்பான போஸில் அமர்ந்திருக்கும் அந்த ஜந்து, அப்பொழுதுதான் தன் மல, ஜல துவாரங்களை நக்கிவிட்டு நிமிர்ந்திருக்கும். எவ்வித அருவருப்புமின்றி, “ஸோ க்யூட்! வாட்ஸ் ஹர் நேம்” என்று அதன் உரிமையாளரிடம் கேட்டுக்கொண்டே, அருகில் அமர்ந்திருப்பவர் அந்த நாயின் முகத்தை தம் முகத்துடன் வைத்து உரசி மகிழ்ந்து, லிப் கிஸ் ரேஞ்சிற்கு வாயுடன் வாய் உரசுவதைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வு இருக்கிறதே, நீங்கள் உண்ட ஆகாரம் உங்களது தொண்டைக்கு வரவில்லையென்றால், நீங்கள் அவரைப்போல் ஒருவன்.

அப்பா, அம்மாவையெல்லாம் ஓய்வுற்றவர் விடுதியில் விட்டுவிட்டு, தனிமை போரடிக்காமல் இருக்க அவர்களுக்கு வீட்டில் நாய் தேவைப்படுகிறது. தப்பித்தவறி திருமணம் புரிந்துகொண்டாலும் பிள்ளைகளைப் பெற்று பராமரித்து வளர்ப்பதை நினைத்து நிறைய கணக்குப் போடுகிறார்கள். அதைவிட நாய் வளர்ப்பு அவர்களுக்குச் சல்லிசாக இருக்கிறது. நம் ஊர் கணக்கில் பார்த்தால் அந்த செலவிற்கு இரண்டு பிள்ளைகளைப் படிக்கவைத்து, இலவச சத்துணவை நம்பாமல் நாமே உணவு, உடை வழங்கவும் முடியும்.

வெள்ளைக்கார தொரையின் நாய்கள் பொறை, பிஸ்கட்டில் தன்னிறைவு அடைவதில்லை. ஸ்டோர்களில் அவற்றின் உணவிற்கென பலவகை ஐட்டங்கள், தனி இடைகழிகளில் நிறைந்துள்ளன(Aisle என்பதை அகராதி அப்படித்தான் தமிழில் பெயர்க்கிறது). குழந்தைகளின் பால் பவுடர் வகைகளைவிட அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு உணவு வகையும் அடுக்கி வைத்து லாபம் பார்க்கிறார்கள். ஏனோ தானோவென்று வாங்கிப் போட்டு, நாய்க்கு ‘வயிற்றால’ போய் ஏதாவது ஆகிவிட்டால் தொலைந்தது. அரசாங்கத்திற்குப் பதில் சொல்ல நாய் உரிமையாளர் கோர்ட்டுக்கு நாயாய் அலைய வேண்டியதுதான். ஆபிஸில், லீவ் பர்மிஷன் என்று கேட்டு, காரணம் தெரிந்தால் நாயைவிடக் கேவலமாய்ப் பார்க்கப்படும் பார்வைகளுக்கு இலக்காக வேண்டும்.

20 வயது கெவினின் பாட்டி, பேரனிடம் தன் குட்டி நாயைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். பிரிட்ஜில் இருந்த உணவைத் தயார் செய்ய, சூட்டடுப்பை (oven) 350 டிகிரிக்கு செட் செய்துவிட்டு சென்றவனை, நாய் செல்லமாய்க் கடித்துவிட்டது. வந்தக் கோபத்தில் அதை சரமாரியாக உதைத்து, சூட்டடுப்பினுள் தூக்கி வைத்துவிட்டான் கெவின். நாய் முழுவதும் வெந்து கபாப் ஆவதற்குள் யதேச்சையாய் வீட்டிற்கு வந்திருக்கிறான் கெவினின் சகோதரன். அந்த அரவம்கேட்டு, நல்லவேளையாக அவசரமாய் நாயைச் சூட்டடுப்பிலிருந்து வெளியே எடுத்துவிட்டான் கெவின். வெந்தும் வேகாத நிலையில் நாய் உயிர் பிழைத்துவிட்டாலும் கெவினை மிருகவதை குற்றத்தின் அடிப்படையில் ஜெயிலுக்குள் வைத்துவிட்டார்கள். பத்தாயிரம் டாலர் ஜாமீன் தொகை விதிக்கப்பட்டுள்ளது. நாய் சந்தையில் என்ன விலை என்று தெரியவில்லை.

இச்செய்தியை இணையத்தில் படிக்கும்போது, மற்றொரு செய்தியும் கண்ணில்பட்டது. ஒரு நாட்டினுள் அந்நியப் படை நுழைந்து அங்குள்ள போராளிகளுக்கு எதிராகப் போர் நடக்கிறதாம். வெள்ளைக்கார அந்நியப் படைகளுக்கு ஆதரவாய்ப் பின்னூட்டங்கள் நிறைந்திருந்தன. ‘!@#$%’ என்று வாக்கியம் துவங்கியிருந்தது. ஆபாசமாய்த் திட்டுகிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்த வாக்கியம், ‘kill those dogs’ என்றது. -நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 24 ஜனவரி 2013 அன்று வெளியான கட்டுரை

2. விஸ்வரூப பெண்பாவம்!

ஜனவரி மாதத்தின் புதன்கிழமை இரவொன்றில் துப்பாக்கி, பலவித கனரக ஆயுதங்களுடன் முஹம்மது நயீமின் வீட்டை நோக்கிப் பரபரவென்று சென்றது அமெரிக்கர்களின் தலைமையிலான சர்வதேசப் படை.

அனைத்து நாட்டினர் படை என்பது கதாநாயகர்களுக்குத் துணைப்பாத்திரம்போல் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட இதர நாட்டு வீரர்கள் சிலரின் உள்ளடக்கம். தலைமை சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா மட்டுமே. அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது, ‘முஹம்மது நயீமின் வீட்டில் இஸ்லாமியப் போராளிகள் ஒளிந்துள்ளனர்’.

வந்து சேர்ந்த வேகத்தில் சரமாரியாகச் சுட்டது படை. செத்துப்போனார் அந்த வீட்டில் இருந்த ஒருவர். சுட்ட புகையும் எழுந்த தூசும் அமிழ்ந்தபின் விளக்கடித்துக் கவனித்ததில் அவர் முஹம்மது நயீமின் மனைவி. முற்போக்கு அமெரிக்கா போலல்லாது, முஸ்லிம் ஆணுக்கு மனைவி என்பவர் பெண்பால் மட்டுமே. அமெரிக்கப் படை சுட்டதில், பொதுமக்களுள் ஒருவரான அந்தப் பெண் கொல்லப்பட்டு, சுற்றுப்பட்டு மக்களுக்கு அமெரிக்கா மீதான கோபம் மேலும் ஒருபடி அதிகமானது மட்டுமே மிச்சம். அதைத் புறங்கையால் தள்ளிவிட்டு, உள்ளங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி வண்டிகளில் ஏறி முகாமுக்குத் திரும்பியது படை.

பகலில் பசுமாடு தெரியாதவர்கள் இரவில் எருமை மாட்டைத் தேடியலைந்த இந்தக் கதை நிகழ்ந்தது ஆப்கனில், இந்தியக் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள். அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் கமலின் திரைப்படம் சம்பந்தமாய் ஏக அமளிதுமளி. செய்திகளை மேய்ந்தபோது அப்படத்தின் முக்கியமான வசனமொன்று ‘அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லமாட்டார்கள்’ என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தது கண்ணில் பட்டது; சுட்டது. அதை அந்த ஆப்கன் மக்களுக்கு பஷ்தூன் மொழியில் பெயர்த்துச் சொல்லியிருந்தால் தங்களது தாய்மொழியில் எப்படித் திட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை. காரணம், மேற்சொன்ன நிகழ்வு அண்டா பிரியாணிக்கு ஒரு பருக்கை பதம் மட்டுமே. முழுவதையும் பட்டியலிடுவதில் கூகுளின் பணி சிறப்பானது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ திரைப்படம். ஏதோ பிரச்சினை. தனது திரைப்படத்தைக் குறித்து அரசியல்வாதி ஒருவர் கருத்தொன்றைக் கூறியிருந்தபோது, “எனக்கு எந்தளவு அரசியல் தெரியாதோ, அவருக்கு அந்தளவு சினிமா தெரியாது’ என்று அழகிய நாசூக்கான பதில் வெளிப்பட்டிருந்தது கமலிடமிருந்து. அதன் பின்னர் சர்வதேச அரசியலில் எப்பொழுது அவருக்கு ஆர்வமும் அக்கறையும் ஏற்பட்டு விஷய ஞானம் அதிகமானது என்பது தெரியவில்லை. ஆனால், அது நுனிப்புல் என்பதை நிரூபிக்க நூறு கோடியா?

செய்தொழில் நேர்த்தியும் தம் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற முனைப்பும் ஒருவருக்கு இருப்பதில் பிழையில்லை. தவறே இல்லை. ஆனால் கதைக்கான கரு இத்தன்மையது என்றால், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு, ஆப்கனில் சகட்டுமேனிக்குப் பொதுமக்களைக் கொன்றுவிட்டு, collateral damage என்ற பதத்தால் just like that வர்ணித்துவிட்டு. மனித உயிருக்கு நட்டஈடாக இந்திய மதிப்புக்கு இலட்ச ரூபாயை விட்டெறியும் அவலம் போன்றவற்றை அறிய, கமல் நிறைய உள்புகுந்து வாசிக்க வேண்டும்.

அதற்கான அவகாசம் இல்லை, பொறுமை குறைவு, வணிகரீதியிலான சங்கடங்கள் பல எனில், கமல் ஜாக்கி சானைப் பின்பற்றலாம். மனுசனுக்குச் சிரித்த முகம். சிக்கலற்ற வெள்ளந்தி கதைகள்.

இதெல்லாம் இருக்கட்டும். நண்பரொருவர் சுட்டிக் காட்டியது நினைவுக்கு வருகிறது. கட்டிய மனைவிக்குக் கணவன் முஸ்லிம் என்பது டிடெக்டிவ் வேவு பார்த்த பிறகுதான் தெரிய வருகிறது எனில் நாயகன் ‘கத்னா’ செய்யாத முஸ்லிமா?

விஸ்வரூபம் திரைக் கதையின் நேர்த்திக்கு இப்பருக்கை பதம்.

 

 

3. துப்பு

தன் முதலாளியைக் கொலை செய்தே தீருவது என்று முடிவெடுத்தான் சி. ராஜ். ‘எத்தனை நாள் உழைப்பைக் கொட்டியிருப்பேன். இரா, பகல் தெரியக்கூடாது என்று கடிகாரத்தைக் கழட்டி வைத்துவிட்டு இந்நிறுவனத்திற்கு என் அர்ப்பணிப்பு எப்பேற்பட்டது. எல்லாம் சில நிமிடங்களில் முடிந்துவிட்டதே.’ துப்பறியும் கதைகளில் என்றைக்குமே வாசகர்களுக்கு ஈர்ப்பு. காரணம் அதில் ஒளிந்துள்ள சஸ்பென்ஸ், திருப்பம், புத்தியைத் தூண்டும் அம்சம், இதில் ஒன்று அல்லது ஒன்றுக்குமேல். மக்களுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல், காதல், கவிதை என்று அவரவர் ரசனைக்கு ஏற்ப ஏதாவது ஒரு சப்ஜெக்ட் பிடித்துப்போகிறது. சிலருக்கு சமையல் குறிப்பு, ஜோதிடம், சினிமா துணுக்கு என்று ரசனையின் வட்டம் எளிமை.

இலக்கிய வாசகருக்கு அறிவியலின் மீதும் சமையல் கலை வாசகருக்கு நெப்போலியனின் படையெடுப்பின் மீதும் ஆர்வம் படர்கிறதோ இல்லையோ அனைவருக்கும் பொதுவாய் துப்பறியும் கதைகள் என்றால் இலேசான கிக்.

கூர்ந்து பார்த்தால் அந்தக் காலத்திலேயே ஆங்கில எழுத்தாளர்கள் கதைகளில் துப்பறிய ஆரம்பித்து கலக்கியிருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த அகதா கிறிஸ்டி (Agatha Christie) - இவர் காதல் கதைகள் எழுதியிருந்தாலும் அவருக்குப் பேர் புகழெல்லாம் crime writer என்பதில்தான். இவரது நாவல்களின் பிரதிகளின் விற்பனை பில்லியன் கணக்கில் என்று கின்னஸ் பெருமை தெரிவிக்கிறது. மி இல்லை. பி. பில்லியன். அகதாவுக்கும் முன்னர் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் ஸர் ஆர்தர் கோனன் டாயில் (Sir Arthur Conan Doyle). இவரை அறிந்த தமிழ் வாசகர்களைவிட, இவர் உருவாக்கிய ஹீரோ மிக அதிகமானவர்களிடம் பிரபலம். ஷெர்லாக் ஹோம்ஸ்.

தொடரும்முன் ஒரு குட்டிக்கதை. இது வாரப் பத்திரிகையின் ஒருபக்கக் கதைக்கு அனுப்பித் திரும்பி வந்ததல்ல என்பதால் அதைரியமடையாமல் படிக்கலாம். தன் முதலாளியைக் கொலை செய்தே தீருவது என்று முதல் பாராவில் முடிவெடுத்தானே சி. ராஜ், அவன் அவனுடைய முதலாளிக்கு வலது கரம், இடது கை, மூளை என்று அவரது உடலின் முக்கியமான அனைத்து அங்கங்களாக இருந்துவந்தவன். அநியாயத்திற்குப் புத்திசாலி.

அவரது நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்த போது மூழ்கும் நிலையில் இருந்த தொழில் அது. வெகு சில மாதங்களிலேயே சி. ராஜின் மேதைமையைப் புரிந்துகொண்ட முதலாளி, பக்கத்தில் நெருக்கிக்கொண்டார். புத்தி அவனது, முதல் இவரது என்று சில ஆண்டுகளிலேயே நிறுவனம் ஓஹோ என்றானது. ஆனால் சில ஆண்டுகளில், என் மூளைப் பிச்சையில்தானே இவை அனைத்தும் என்று சி. ராஜின் புத்தி கோணங்கித்தனம் புரிய, திட்டமிட்டான். முதல் வரியில் பார்த்த கொலை திட்டம் அல்ல, இது களவுத் திட்டம்.பண நிர்வாகக் கணினி மென்பொருளில் சிறு திருத்தம். அது, யாருடைய சிந்தையையும் கண்ணையும் உறுத்தாமல், ஓட்டைக் குழாயிலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் கசிவதுபோல், சில்லறை கசிந்தது. பெரு வெள்ளமாகி, பணம் கட்டுக் கட்டானது. வாழ்வு சொகுசாய் நகரும்போது, நல்லதொரு நாளில் எத்தன் ஆடிட்டர் ஒருவன் ஒழுகும் பைப்பைக் கண்டுபிடித்துவிட்டான்.

சி. ராஜின் முதலாளி, நிறுவனம் தொடங்கும் முன் சென்னை ஸால்ட் குவார்ட்டர்ஸில் கத்தி சுற்றித் திரிந்த பார்ட்டி. பழைய இயல்பு எட்டிப்பார்க்க, சி. ராஜை அழைத்தார்.

“ஆட்டயப் போட்டது அத்தனையும் கொட்டிவிட்டு ஒட்டுத் துணியுடன் ஓடிவிடு. இல்லே ஆட்டை அறுக்கிற மாதிரி உன் கழுத்தை அறுத்துறுவேன்” என்று சிறு எச்சரிக்கை. முடித்துக்கொண்டார்.

சுரண்டிய பணம் கண்ணை மறைக்க இப்பொழுதுதான் சி. ராஜ் முடிவெடுத்தான். முதலாளியையே போட்டுத் தள்ளினால்? ஆனால் நிதானித்து யோசித்தபோது சரிவரும் என்று தோன்றவில்லை. அசட்டுத் தைரியம் என்று புத்திவேறு எச்சரித்தது. தலையைப் பிய்த்துக்கொண்டதில், இறுதியாக ஒன்று தோன்றியது – ‘சண்டைக்காரன் காலில் விழுவோம்’. அன்றிரவு அவரது வீட்டை அடைந்தான். தாழிடாத கதவு தட்டுவதற்குள் திறந்தது. வரவேற்பறையில் டிவியைப் பார்த்துக்கொண்டு, இவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார் முதலாளி. ‘இன்ன நகரில் குண்டுவெடிப்பு. இப்படியான ஒரு தீவிரவாதக் குழு காரணம்’ என்று பரபரப்பாய்ச் செய்தி. அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் சி. ராஜ் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு, வேகமாய்ச் சென்று அவரது காலில் தொபுக்கென்று விழுந்தான். பொத்தென்று அவனது முதுகில் விழுந்தார் அவர். ‘இதென்ன பிண கனம்?’

எழுந்து அவரைத் திருப்பினால், எங்கெங்கும் ரத்தம். முதலாளியைக் குத்தியிருந்த கத்தி தடுமாற்றத்தில் சி. ராஜின் கையில் நழுவ, சப்தம் கேட்டு ஹாலுக்கு விரைந்த அழகிய சமையல்காரன் அகோரக் குரலில் கத்தினான்.

போலீஸ் வந்தது; விலங்கு மாட்டியது; விசாரித்தது; நிர்வாக மோசடி சி. ராஜின்மீது சுட்டுவிரல் நீட்டியது. ஆனால் சி. ராஜ் மட்டும் கத்திக்கொண்டிருந்தான். ‘நான் கொலையாளி இல்லை. நான் அவனில்லை.’

அதையெல்லாம் போலீஸ் காதில் போட்டுக்கொள்ளவில்லை. முட்டியை லத்தியால் விசாரித்துவிட்டு, சில நாளில் ஃபைலை மூடும்போது புலனாய்வில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மேலதிகாரியிடம் கூறினார். “ஸார் சி. ராஜ் கொலை செய்யலேன்னு நினைக்கிறேன். விசாரனையை மீண்டும் ஆரம்பிக்கணும்.” “ஏன்யா?” அது இறுதியில். துப்பறியும் கதைகளின் நாயகன் படு சாமர்த்தியமாய் முடிச்சை அவிழ்ப்பது வாசகர்களுக்கு த்ரில். அது கதையுடன் சேர்த்து அந்த ஹீரோவுக்கு அந்தஸ்து ஏற்படுத்தித் தந்துவிடுகிறது. அவ்வகையில் நாயகன் ஷெர்லாக் ஹோம்ஸ் அசாதாரண புத்திசாலி.

ஆர்தர் கோனன், ஷெர்லாக் ஹோம்ஸை வைத்து ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். ஆர்தருக்குத் தொழில் என்னவோ கண் மருத்துவம். ஆனால் அவரது காலத்தில் அனைவருக்கும் கண் பார்வை பெரும் நலமுடன் இருந்திருக்க வேண்டும்; எட்டிப்பார்க்க நோயாளி இல்லை. என்ன செய்வதென்று பொழுதைக் கழிக்க, எழுத ஆரம்பித்துவிட்டார். துப்பறியும் கதைகள் என்று களம் அமைத்துக்கொண்டு ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிக் கூடவே அவருக்குத் துணையாய் ஜான் வாட்சன் என்றொரு பாத்திரம். ஜான் வாட்சனை டாக்டராக்கி ஷெர்லாக் ஹோம்ஸுடன் ஆர்தர் தாமும் கதையினுள் வலம் வந்திருக்கிறார்.

துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோம்ஸ் வாசகர்கள் மத்தியில் அடைந்த பிரபல்யத்தில், ஒரு கட்டத்தில் ‘போரடிக்கிறதே வரலாற்றுக் கதைகள் எழுதுவோம், இவரைக் கொன்று விடுவோம்’ என்று ஆசிரியர் ஆர்தர் நினைத்தபோது, அதற்கு முதல் எதிர்ப்பு கடிதமே அவருடைய அம்மாவிடமிருந்துதான்.

“அப்படி நீ செய்ய மாட்டாய்; செய்ய முடியாது; செய்யக் கூடாது” என்று கண்டித்தது கடிதம். ஆயினும் ஷெர்லாக்கைச் சாகடித்தார் ஆர்தர். அவ்வளவுதான். வாசகர்கள் மத்தியில் எழுந்த கூக்குரலையும் கண்டனத்தையும் பார்த்துவிட்டு, ஒரு சாக்குச் சொல்லி அடுத்த நாவலில் அவர் ஷெர்லாக்கை உயிர்பித்ததும்தான் சப்தம் அடங்கி வாசகர்களுக்கு மூச்சு வந்தது.

இந்த இரு பாத்திரங்களைப்போல் தமிழில் சுஜாதாவுக்கு கணேஷ், வஸந்த். சுஜாதாவின் புதின வெற்றியில் இந்த இருவரின் பங்கும் கனிசம். அவருக்கு வயதானபோதும், அவருடைய பிற்காலக் கதைகளில் கணேஷ், வஸந்த் இருவரையும் முதுமை தாக்காமல் நடக்கவிட, சுஜாதாவின் பழைய வாசகர்களுக்கு அது சற்று வினோத வாசிப்பு அனுபவம்.

துப்பறியும் சாமர்த்தியம் எளிய வாசகனுக்கும் ராட்டிணத்தில் சுற்றிய ஓர் உற்சாகம் அளிக்கிறது. எத்தகைய குற்றமாக இருந்தாலும் நம் போலீஸ் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துவிடும் என்பது அவனுக்குள் குத்துமதிப்பான ஒரு பொது நம்பிக்கை. அதெல்லாம் இனி கதையோடுதான் போலிருக்கிறது. இப்பொழுதெல்லாம் நிஜ வாழ்க்கையில் துப்பறியும் சாமர்த்தியசாலிகள் தொலைந்துவிட்டார்களோ, குறைந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கான காரணம் அரசியல் விரசத்தின் உச்சம் என்பதைத்தவிர வேறொன்று அசாத்தியம் என்கிறது அறிவு. பின்னே?

குரூரக் குற்றச்செயல்களுக்கு நாட்டில் குறைவில்லை. அவை நடைபெறும்போதெல்லாம், செய்தியை முந்திக்கொண்டு, குற்றவாளிகள் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைச் சுட்டிக்கொண்டு விரல் நீண்டு வருவது தயக்கமின்றி நடைபெறுகிறது. ஊடகம், காவல் துறை, அரசு என்று சொல்லி வைத்தாற்போல் அனைவர் மத்தியிலும் இப்பொழுது இது பிரதானமாக உள்ளது கவலைக்குரிய உண்மை. யாராக இருந்தாலும் சரி; துப்பறிந்து உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம்; தண்டனை பெற்றுத் தருவோம் என்ற எளிய அடிப்படையெல்லாம் இனி அபத்தக் கற்பனையோ என்று அச்சமேற்படுகிறது.

மாபாதகக் குற்றச்செயல்களில் எவ்வளவு நுணுக்கமாய்ப் புலனாய வேண்டும். தடயம் தேடி, ஆராய்ந்து, நூல் பிடித்து, குற்றத்தின் மூளையை எட்ட வேண்டும்? அதற்கெல்லாம் யாரும் கவனமுடன் செயல்படுவதாகவோ பொறுமையுடன் புலனாய்வதாகவோ தெரியவில்லை. ஏதோ முன்முடிவுடன் காரியங்கள் நடைபெறுவதைப்போன்ற தோற்றம் கவனத்தைத் தாக்குகிறது. கூடவே அச்சத்திற்குரிய மற்றொரு விஷயமும் ஒன்று உண்டு.

துப்பறியம் கதைகளில் கற்பனை நாயகர்கள் புகழ்பெற்றிருந்ததைப் போல், இன்று நிஜங்களில் கற்பனை வில்லன்கள் உருவாக்கப்படும் பேரபாயம் அதிகரித்துள்ளது. அதை ஊடகங்கள் தங்களது வர்த்தகத்திற்காகக் கடைபரப்பி, மக்களிடம் போட்டுத்தாக்கி, மெய் என்ன என்று அறிந்து சொல்லும் அக்கறையில் இன்று பெரும்பான்மையினரிடம் பேரலட்சியம்.

பரந்து விரிந்த காவல் அமைப்பில் ஒளிந்துள்ள சாதுர்ய துப்பறிவாளர் எவரேனும் ஒருவர், தப்பித்தவறி துப்பு துலக்கி, நேர்மையுடன் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டால், ஏதும் பெரிதாய் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. அந்த உண்மை உரைக்கப்படும்முன் மக்கள் வேறு பொய்யுடன் மெய்மறந்திருப்பர். அல்லது துப்பறிவாளர் துப்புரவு செய்யப்பட்டிருப்பார். நம் கதையைப் பார்ப்போம். “ஸார் சி. ராஜ் கொலை செய்யலேன்னு நான் நம்பறேன். விசாரனையை மீண்டும் ஆரம்பிக்கணும்.” ஏன்யா?” “சமையல்காரன் சொன்னது உதைக்குது.” “என்ன?” “விசாரனையின்போது, சமையலறையில் இறைச்சியை சமைத்துக்கொண்டிருந்தேன். ஹாலில் சப்தம் கேட்டதுன்னு சொன்னான்.” “ஆமாம். அதுக்கு என்ன?” “ஸார். அந்த முதலாளி சுத்த சைவம்.”

-நூருத்தீன் இந்நேரம்.காம்-ல் 13 மார்ச் 2013 அன்று வெளியான கட்டுரை

 

 

4. மின் கார்

பெரியதொரு உலோகப் பலகையில் நாலாபுறமும் பெரும் டயர்கள் பொருத்தப்பட்ட ஒரு வஸ்துவைக் காட்டி மின்சாரக் கார் என்று சொன்னபோது, “என்னாது?” என்று சிரிப்பு வந்தது.

வீட்டில் பிள்ளைகள் மரப்பலகையில் வடிவமைக்கும் பொம்மை வாகனம் போன்றதுதான் அடிப்படை. ஆனால் பட்டம் படித்த சமத்துப் பிள்ளைகள் டயர்களுக்கு இடையே பேட்டரியைப் பொருத்தி, நடிகைக்கு ஒப்பனை செய்ததுபோல் கவர்ச்சியாய் காரின் உடலை உருவாக்கி, நவீன வசதிகள் நிரப்பி, மினுமினுப்பாய் இருந்தது மின்சாரக் கார்.

“மின்சாரமா? அப்படீன்னா?” என்ற தமிழக வாசகர்களின் நக்கலுக்கு இதில் ஆறுதல் ஒளிந்துள்ளது. அது பிறகு. வாயுத் தொல்லை மனிதர்களுக்கு மட்டும் அசௌகரியம் அல்ல, பூமிக்கும். ஆனால் இந்த வாயு, வாகனங்கள் உமிழும் கரிமம். இட்டு நிரப்பும் பெட்ரோலோ, டீசலோ வெளியேற்றும் கரிமம், மாபெரும் கர்மம். சுற்றுப்புறச் சூழலுக்கு வில்லன் என்று நீண்ட காலமாகக் கவலைப்பட்டு வருகிறார்கள் சுற்றாடல் வல்லுநர்கள்.

வாகனங்களுக்கு லைசென்ஸ் புதுப்பிக்க emission testing கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, கடுமையாய்ப் பின்பற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இதைப் பற்றிய கவலை அதிகம் இருக்கும்போது, எந்தச் சட்டமாக இருந்தாலும் மேசைக்கு அடியில் கைகுலுக்கி விசாரித்துவிட்டு, காரியம் சாதிக்கும் இந்தியா போன்ற நாடுகளை யோசித்துப் பாருங்கள். சுத்தமான காற்றை சிலிண்டர்களில் நிரப்பி விற்பது எதிர்காலத்தில் இங்கு சிறந்த வணிகம். இப்பொழுது சந்தைக்கு வரும் மின்சார கார்கள் புதிதொன்றுமில்லை. 1996லேயே, அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனி, General Motors EV1 என்ற பெயரில் இத்தகைய வாகனங்களை உருவாக்கி குத்தகைக்கு விட ஆரம்பித்தது. அதற்கு மக்கள் மத்தியில் குறிப்பிடும்படியான நல்ல வரவேற்பும் கூட. ஆனால் அதை ஒரே அமுக்காக அமுக்கியது ஒரு சக்தி. அமுக்கு என்பது பெயரளவில் இல்லை. மின்சார கார் ஆதரவாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தையும் மீறி கார்களை கொத்துக் கொத்தாக க்ரேனில் அள்ளிச்சென்று அமுக்கி, நசுக்கி, தகர டப்பாக்களாக்கிவிட்டு பிறகுதான் சோம்பல் முறித்தார்கள்.

உதிரிபாக விற்பனை, கார் பராமரிப்புத் தொழில் பாதிப்பு ஆகியனவற்றை இதற்குப் பின்னணியாகச் சொன்னாலும் அழுத்தமான சந்தேகம் பதிந்தது ஆயில் மாஃபியாவின் அரசியல் மீதுதான். புறந்தள்ள இயலாத சந்தேகம் அது. ஒரு துளி ஆயிலுக்காக தம் அரசாங்கங்களைப் போர் தொடுக்க வைத்து பல மக்களின் ஆயுளைப் பறிக்கும் வல்லமையுள்ள தீவிரவாதிகள் நிரம்பியது ஆயில் மாஃபியா. அவர்கள் சாய்ந்து அமர்ந்து வேடிக்கை மட்டும் பார்த்திருப்பார்கள் என்று நம்புவது கடினம்.

குறுகிய ஆயுளுடன் மரித்துப்போன இந்த கார்களைப்பற்றி, Who Killed the Electric Car? என்ற பெயரில் க்ரிஸ் பைன் (Chris Paine) என்பவரின் இயக்கத்தில் டாக்குமென்ட்டரி படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியானது. ”அப்படியா சேதி?” என்று பாப்கார்ன் கொறித்துக்கொண்டே பார்த்துவைத்தார்கள் அமெரிக்கர்கள்.

இப்படி அன்று வயர் பிடுங்கப்பட்ட ரோபோவாக செயலிழந்த இத்திட்டம் இப்பொழுது புத்துணர்ச்சியுடன் மீண்டு வர, நவீன வடிவமைப்புகளுடன் மிரட்டுகிறது Tesla Motors நிறுவனத்தின் புதிய மின்சார கார்.

காரில் பெட்ரோல் நிரப்ப மூடியைத் திறக்குமிடத்தில் வயரைச் செருகி, மறுமுனையிலிருந்து பாயும் மின்சாரம் பேட்டரியை சார்ஜ் செய்கிறது. லேப்டாப், கைப்பேசி போன்றவற்றை சார்ஜ் செய்து உபயோகிப்பதைப் போன்ற யுக்தி. இதனால் மின்சார ரயிலுக்குச் செலுத்துவதைப் போல் தெருவெங்கும் கம்பம் நட்டு கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சத் தேவையில்லை என்பது இதிலுள்ள ஆறுதல்.

எரிபொருள் பேட்டரியை ஒளித்து வைத்துவிட்டதால், காரின் முன் பேனட்டைத் திறந்தால் இஞ்ஜின், ரேடியேட்டர், கார்பரேட்டர் போன்ற எந்த சமாச்சாரமும் இன்றி கள்வன் துடைத்துவிட்டுப்போன லாக்கர் பெட்டியைப்போல் ‘ஜிலோ’வென்று இருக்கிறது. விளைவாக முன்புறமும் பின்புறமும் என்று கார் நிறைய சாமான்கள் வைத்துக் கொள்ள நிறைய இடம்.

மற்றபடி எல்லாமே விரல் நுனி பட்டன் வசதி. Science fiction படங்களில் வருவதைப்போல் எலக்ட்ரானிக் மேஜிக் பரவிக் கிடக்கிறது. ஸ்டியரிங் அருகே லேப்டாப் திரையை ஒருக்களித்தாற் போன்ற பெரிய திரை. பட்டனைத் தட்டினால் கூரை திறக்கிறது; என்னென்னவொ நிகழ்கிறது. ஏதாவது ஒரு பட்டனைத் தட்டினால், திரையில் பெண் தோன்றி, நம் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Zero emission என்பதால் சுற்றுச்சூழலின் தோஸ்த் இந்த வாகனம் என்று அமெரிக்காவின் சில மாநிலங்களில் இதற்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு. ஷாப்பிங் மால்கள், நிறுவனங்களின் பார்க்கிங் என்று பல இடங்களில் காரை ரீசார்ஜ் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தத் துவங்கிவிட்டார்கள். பெட்ரோல் பங்க்குகளைப் போல் ரீசார்ஜ் நிலையங்களும் வந்துவிடும். எல்லாமிருக்க,

டேக்ஸ் ஃப்ரீ என்றாலும் ஷாக்கடிக்கிறது விலை. குறைந்த பட்சம் அறுபத்தைந்தாயிரம் அமெரிக்க டாலராம். சுமார் 35 இலட்ச ரூபாய் மட்டுமே. இத்தகைய கார்களைத் தமிழகத்தில் தயாரிக்க வேண்டும்.

வீட்டிற்கு ஒரு மரம் இல்லாவிட்டால் போகட்டும். அனைவரும் தத்தம் நிலம், வீடு, சொத்து சுகம் என்று அனைத்தையும் விற்றாவது இந்தக் காரை வாங்கிவிட வேண்டும்.

எது எதற்கோ, என்னென்னவோ இலவசம் அளிக்கும் அரசாங்கம் அப்படியாவது இலவச மின்சாரம் வழங்கி விடாதா என்ன?

-நூருத்தீன் இந்நேரம்.காம்-ல் 02 மே 2013 அன்று வெளியான கட்டுரை

 

 

5. களவாணியின் கைப்பேசி!

உலகம் போகும் போக்கைப் பார்த்தால் இனி பிளேடுகளுக்கு வேலையே இருக்காது போலிருக்கிறது. பிக்பாக்கெட் கணவான்கள் கடனை உடனை வாங்கி ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிவிட்டால் போதும். சோலி சுத்தமாய் காரியம் ஆற்றலாம். எல்லாம் விஞ்ஞானத்தின் மகிமை.

சிறு வயதில் ஏபிசிடி படித்திருக்கிறீர்களா? அந்த ஆங்கில எழுத்துகளில் சிலவற்றை முன்னே பின்னே போட்டு அதன் உள்ளர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கு நமக்கு இடப்பட்டுள்ள விதி. அதற்குமுன் கடன் அட்டை!

இதைத் தெரியுமா என்று கேட்பதே அபத்தம். எல்.கே.ஜி. பாடத்திட்டத்தில் கடன் அட்டை பரிவர்த்தனையைச் சேர்க்கும் அளவிற்கு உலகம் முன்னேறியாகிவிட்டது. எனவே அதைத் தெரியாதவர்கள் வேறுலக ஜந்து! எட்டரைக்கு ஐந்தரை செ.மீ. அளவிலான ஒரு பிளாஸ்டிக் அட்டையில் முன்புறம் நம் பெயரைப் பதித்து, பின்புறம் காந்தப் பட்டை. ஏதோ இலவசமாய்த் தருவதுபோல், வங்கியானது இதை மக்கள் தலையில் கட்டிவிட்டிருக்கும். அதிலுள்ள அந்தக் காந்தப் பட்டைதான் உங்கள் தகவல்களின் ஜாதகம். அதை லவட்டி எப்படியெல்லாம் திருட்டு நடக்கிறது என்று ஏகப்பட்ட சைபர் க்ரைம் கட்டுரைகள் வந்துவிட்டன. எனவே அதெல்லாம் அரதப் பழசு. இப்பொழுது புதுவகை அட்டையும் புதுவகை களவும் பரவலாகி வருகின்றன.

கடன் அட்டையை உபயோகித்து பொருள் வாங்கும்போது என்ன செய்கிறோம்? அட்டையை எடுத்து கல்லாப்பெட்டியாளரிடம் இருக்கும் வெத்தலைப்பெட்டி போன்ற டப்பாவில் ஓர் இழுப்பு இழுத்தால் அது சடுதியில் நம் ஜாதகத்தைப் படித்து, ‘இந்தாளை இன்னும் இந்தளவுக்கு கடனாளியாக்கலாம்’ என முடிவுசெய்து அனுமதியளித்துவிடுகிறது. பொருள் உங்கள் கையில்.

விஞ்ஞானம் முன்னேறுகிறதா? ‘இதென்ன அட்டையை எடுத்து ரீடரில் இழுப்பது?’ என்று யோசித்தார்கள். RFID டெக்னாலாஜி புகுந்தது. RFID? அதான் பார்த்தோமே ஆங்கில எழுத்துகளை வரிசை மாற்றி அறிய வேண்டுமென்று. RFID என்பது Radio Frequency Identification. ‘எனக்கும் டெக்னாலஜிக்கும் ஒவ்வாமை ஏராளம்’ என்று ஓடவேண்டாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் ‘என் ச்செல்லம்’ என்று உங்கள் இல்லாள்/இல்லான் கன்னத்தில் செல்லமாய்த் தட்டுவீர்களே அப்படியான கான்செப்ட்.

அதே ப்ளாஸ்டிக் கடன் அட்டைதான். தயாரிக்கும்போதே உள்ளே மைக்ரோசிப் ஒன்றைப் புதைத்துவிடுகிறார்கள். அதனுள் உங்கள் தகவல்கள் ஏற்றப்பட்டுவிடுகின்றன. இந்த அட்டைகளைப் படிக்கும் எலக்ட்ரானிக் ரீடர்கள் கடைகளில் இருக்கும். செலுத்த வேண்டிய தொகைக்கு அட்டையை இந்த ரீடரின்மேல் ஒத்தினால், அல்லது கடன் அட்டை இருக்கும் பர்ஸை அதன் அருகே ஆட்டினாலே போதும். எவ்வளவு ஸிம்பிள்? இந்த தட்டல், உரசல் காதலுக்கு இடையே வந்து மூக்கை நுழைக்கிறது ஸ்மார்ட்ஃபோன்.

ஏ ஃபார் ஆண்ட்ராய்ட், ஐ ஃபார் ஐஃபோன் என்று உங்கள் குழந்தைகள் உங்களிடம் பாடம் சொல்லியிருப்பார்களே, அந்த வஸ்து. இன்று உலகமே உள்ளங்கை ஜோதிடர்கள்போல் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக்கொண்டு வேறுலக சஞ்சாரத்தில் மூழ்கி அலையும் ராட்சதக் கண்டுபிடிப்பு அது. இதைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களான ஸாம்ஸங், நோகியா, மோட்டோரொலா, எல்ஜி, ஹெச்டிஸி ஆகியோர் தங்களது ஸ்மார்ட்ஃபோன்களை NFC சக்தியுடன் வெளியிடுகிறார்கள். NFC யானது Near Field Communications என்பதாகும். மேற்சொன்ன RFID-யின் ஒரு வடிவம். அதாவது இந்த NFC வசதியுள்ள ஸ்மார்ட்ஃபோன்களின் வாயிலாய் RFID டெக்னாலஜியில் நிகழ்வுறும் தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்தலாம். அறுவையாக உள்ளதோ? பிளேடு ஆசாமிகளிடம் சென்று விடுவோம்.

பிக்பாக்கெட் ஆசாமிகள் பிளேடுக்கு பதிலாக, தங்களது ஸ்மார்ட்ஃபோனில் சில மென்பொருள் வசதிகள் ஏற்படுத்திக்கொண்டால் போதும். அதற்கான மென்பொருள் தயாரித்து விற்பவர்கள் இணையவெளியில் பஞ்சமற நிறைந்து, கூவாத குறையாக இலவசமாகக் கிடைக்கிறது. அந்த மென்பொருளை ஸ்மார்ட்ஃபோனில் நிறுவிக்கொண்டு, மைக்ரோசிப் பொதிந்த கடன் அட்டையாளர்களின் பர்ஸ், ஹேன்ட்பேக் அருகே மென்மையாக ஆட்டிவிட்டு நடந்தால், அந்த அட்டையிலுள்ள தகவல்களை ஸ்மார்ட்ஃபோன் படித்து பத்திரப்படுத்திக் கொள்கிறது.

அப்புறமென்ன? RFID ரீடர்கள் பொருத்தப்பட்ட கடைகளாகப் பார்த்து ஏறி, இறங்கி பிரியப்பட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு, அந்த ரீடரில் ஸ்மார்ட்ஃபோனை ஆட்டினால் போதும். பொருள் களவாணிக்கு. கடன் பில் ஸ்டேட்மெண்ட், அப்புராணிக்கு. இத்தகைய எலக்ட்ரானிக் பரிமாற்றங்களில் கடன் அட்டை உரிமையாளரின் பெயரும் இடம் பெறாததால் பொருளை விற்கும் கடைக்காரருக்கு எந்தச் சந்தேகமும் எழ வாய்ப்பில்லை.

கடன் அட்டைகள் என்றில்லை, அமெரிக்கா போன்ற நாடுகளில் பாஸ்போர்ட், டிரைவர் லைஸென்ஸ் அட்டைகளெல்லாமேகூட மைக்ரோசிப் பொருத்தி இப்பொழுதைக்கு மக்களை மட்டும் சும்மா விட்டிருக்கிறார்கள். எனவே இத்தகைய அட்டைகளின் தகவல்கள் களவாடப்படாமல் தடுக்கக்கூடிய பிரத்யேக உரைகள், பர்ஸ்கள் தயாரிப்பு என்று ஒருபக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்படியா? எனில் அட்டையை லபக்கிட்டு வா. மைக்ரோசிப்பை எப்படி பெயர்த்தெடுப்பது என்று சொல்லித் தருகிறேன் எனும் டுடோரியல் ஆசிரியர்கள் மறுபக்கம் யூடியூபில் இலவச பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் கள்வர்களுக்கு ரிஸ்க் அதிகம் என்பதால் ஸ்மார்ட்ஃபோன் டெக்னிக்தான் கள்வர்களுக்கு ஸ்மார்ட் ஐடியா. எல்லாம் கள்வன் பெருசா? காப்பான் பெருசா? கதைதான்.

அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு கோவணத்தில் சுருக்குப் பை வைத்து தைத்துக்கொண்டால் பெட்டர் போலிருக்கிறது.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 25 மே 2013 அன்று வெளியான கட்டுரை

 

6. அமைதிப் படை (மேட் இன் யு. என்.)

போஸ்னியாவில் விஸில் ஊதினார் கேத்ரின் போல்கோவாக் (Kathryn Bolkovac). ஐ.நா.வின் சர்வதேச போலீஸ் படை கண்காணிப்பாளராக அங்கு அவருக்கு வேலை. அவர்கள் போலீஸ்காரம்மா. விஸில் ஊதினார்கள்; அதற்கென்ன? போஸ்னியாவில் விஸில் ஊதுவது குற்றமா?

அது தெரியாது. ஆனால் கேத்ரின் அதற்காக பணியிலிருந்து விலக்கப்பட்டார். சரியாகச் சொல்வதென்றால் தூக்கப்பட்டார்.

நெப்ராஸ்கா (Nebraska) அமெரிக்காவின் மத்தியில் உள்ள ஒரு மாநிலம். அங்கு புலனாய்வுப் போலீஸ் அதிகாரியாக வேலைபார்த்து வந்தவர் கேத்ரின். அவரது சிறப்புப் பிரிவு – பாலியல் குற்றங்கள். கடமையே கண்ணாக வேலை, அரசாங்கத்தின் மாத ஊதியம் என்று வாழ்ந்துவந்த அவருக்கு ஒருநாள் பெரும் வாய்ப்பு ஒன்று வந்து கைகுலுக்கியது.

அது 1999-ஆம் ஆண்டு. ‘போஸ்னியாவில் ஐ. நா. வின் போலீஸ் அதிகாரியாக உத்தியோகம். கைநிறைய சம்பளம். என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டது வாய்ப்பு. “போஸ்னியாவா? வெளிநாடா?” என்று அவர் யோசிக்க, “சொல்ல மறந்துவிட்டேனே. உனது வருமானத்திற்கு வரி விலக்கு.”

அமெரிக்காவில் சம்பாதிக்கும் பணத்திற்கு, கட்டி அழவேண்டிய வரி கணிசம். ‘தோலுரித்த வாழைப்பழம்’ போல் வருமான வரியற்ற ஊதியம் என்பது பெரும் கவர்ச்சி. அது தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். விஸிலடித்தார் கேத்ரின். பணியை ஏற்றுக்கொண்டார்.

போஸ்னியாவில் ஐ. நா. வுக்கு என்ன சோலி? கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யுகோஸ்லோவியா குடியரசில் (Socialist Federal Republic of Yugoslavia) கம்யூனிசம் குலைந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் குடியரசில் ஒன்றிணைந்திருந்த போஸ்னியா நாட்டில் இனவாதப் போர் உருவாகி ஸெர்பியர்களும் (Serbs) க்ரோஷியர்களும் (Croats) போஸ்னியாவின் முஸ்லிம்களை அக்கிரமமான முறையில் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். பெண்கள், சிறுமிகள் என்று வகைதொகையின்றி 50,000 கற்பழிப்புகள். போஸ்னியாவில் முஸ்லிம் இனத்தையே ஒழித்துவிடும் நோக்கில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க, பேரளவிலான அரக்கத்தனங்கள் நிகழ்ந்தேறின.

பின்னர் நேட்டோ (NATO) நாடுகளின் ராணுவத் தலையீட்டிற்குப் பிறகு பல ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் எழுதப்பட்டு அக்கிரமம் முடிவுக்கு வந்தது என்பதெல்லாம் கொடிய வரலாற்றின் சிறிய கதைச் சுருக்கம்.

இப்படி அவலமாகிக் கிடந்த போஸ்னியா நாட்டிற்குள் ஐ. நா. வின் அமைதிப் படை சென்று தங்கி, மீட்புப் பணி, போலீஸ் பணியில் ஈடுபட்டது. அவற்றில் பணியாற்றத்தான் பல நாட்டிலிருந்தும் பலதரப்பட்ட அதிகாரிகள், காவலர்கள் என்று ஆளெடுக்கப்பட்டு, பணியாற்ற போஸ்னியா வந்து சேர்ந்தார்கள் அவர்கள். கதையைத் தொடருமுன் அமெரிக்காவில் ஓர் அறிமுகம் பாக்கியிருக்கிறது; செய்துகொள்வோம். DynCorp ஓர் அமெரிக்கா நிறுவனம். இந்நிறுவனத்திற்கு ஆகாய ஊர்தி, ராணுவத்திற்கு உதவி, என்று பலவகையில் அடித்து நிமிர்த்தும் தொழில்கள். அவற்றுள் குறிப்பாய் அமெரிக்க இராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை. அமெரிக்கா போர் நிகழ்த்தும் நாடுகளிலெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் பல வகையான காரியங்கள் நிகழ்த்துகிறது இந்நிறுவனம். தாதாவுக்கு அடியாள்போல என்பது கொச்சையான உதாரணமாகத் தோன்றினாலும் உண்மை அதற்கு நெருக்கம். நமக்குப் பக்கத்து நாட்டுக்கும் பக்கத்து நாடான ஆப்கனில் அதிபர் ஹமீத் கர்சாய் இருக்கிறாரே அவருக்குப் பாதுகாவலர் படை (Bodyguard) பொறுப்பு இந்த DynCorpதான்.

இந்த DynCorp-ன் பிரிட்டிஷ் பிரிவு போஸ்னியாவிலுள்ள ஐ. நா. வின் அமைதிப்படைக்கு ஆளெடுத்து அனுப்பிவந்தது. பதினைந்து மில்லியன் டாலர் ஒப்பந்தம். அந்த வாய்ப்புதான் கேத்ரின் போல்வாக் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி ‘டிங்..டாங்’. பொறுப்பான பதவி, அர்த்தமுள்ள வேலை, பை நிறைய பணம் என்ற மகிழ்ச்சியில் உண்மையிலேயே அன்று அவர் உதடு குவித்து விஸில் அடித்திருக்கலாம். ஆனால் போஸ்னியாவில் பணிக்குச் சென்ற இடத்தில் அவர் அடித்த விஸில்தான் பெரும் விவகாரம்.

Whistleblower என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் யாதெனில், ஒரு நிறுவனம், இயக்கம், அமைப்பு போன்றவற்றில் கள்ளத்தனமாய் நிகழும் சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளைக் கண்டுபிடித்து வெளியிடுபவர். இப்பொழுது ஊடகங்களில் பரபரவென்று பேசப்படுகிறதே Edward Snowden-னின் செய்திகள் – அவர் ஒரு whistleblower. கேத்ரின் அன்றைய whistleblower.

அவர் போஸ்னியா வந்து சேர்ந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். ஒருநாள் போஸ்னா ஆற்றில், ஒரு சிறுமியின் சடலம் மிதந்து வந்தது. சிறிதளவு துணி, ஆடை என்ற பெயரில் அவள்மேல். அவள் யுக்ரைன் (Ukraine) நாட்டுப் பெண். அடுத்த சில நாள்களில் மால்டோவா (Moldova) நாட்டுச் சிறுமி ஆற்றங்கரையோரம் திரிந்து கொண்டிருந்தவள் பிடிபட்டாள். ‘என்ன? ஏது?’ என்று கேத்ரீன் விசாரிக்க ஆரம்பிக்க, அவருக்குக் கிடைத்த ஒற்றை வார்த்தை ‘ஃப்ளோரிடா’. ‘ஆத்தா ஆடு வளர்த்தா. கோழி வளர்த்தா. ஆனா நாயை மட்டும் வளர்க்கலை’ என்பதுபோல், ‘ஐ. நா. பணம் கொடுத்தான், சோறு கொடுத்தான், புட்டி கொடுத்தான் ஆனா ‘குட்டி’ மட்டும் கொடுக்கலியே’ என்று திமிர் பிடித்து உடல் பசியில் புழுங்கிப்போய்க் கிடந்தார்கள் ஐ. நா. வின் போலீஸும் அதிகாரிகளும். அதைத் தணித்துக் கொள்ள என்ன நடக்கும்? நடந்தது. ஆனால் மிருகத்தனமாய்.

பணம் கொடுத்தார்கள்; வேசியுடன் பாவம் புரிந்தார்கள் என்று நிகழ்ந்திருந்தால் ‘ஊர் உலகத்தில் இல்லாததா?’ என்று சொல்லியிருந்திருப்பார்கள். ஆனால் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது - sex trafficking - விபச்சாரத்திற்காகப் பெண்களைக் கடத்தும் தொழில். அதில் ஈடுபட்டிருந்தவர்கள்? கேத்ரீனுக்குத் துப்பு கிடைத்த ‘ஃப்ளோரிடா’ ஒரு நைட் கிளப். ஐ. நா. போலீஸின் வாகனங்கள் அங்கு நின்றிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். நைட் கிளப் என்பது மேற்கத்தியக் கலாச்சாரத்தின பாவப் பட்டியலில் இடம் பெறாததால் கேத்ரீன் அதை நினைத்து அலட்டிக் கொள்ளவில்லை. அவலச் சிறுமியிடம் கிடைத்த துப்பை, ப்ளோரிடா நைட் கிளப்பில் நுழைந்து துலக்க ஆரம்பித்ததும்தான் கசியத் துவங்கின கள்ளத் தொழிலின் இரகசியங்கள்.

கட்டுக் கட்டாய் அமெரிக்க டாலர்கள், பல பெண்களின் வெளிநாட்டு பாஸ்போர்ட் அங்கு இருந்தன. பூட்டிய அறையொன்றினுள் ஏழு சிறுமிகள். ஒருவரையொருவர் பயத்தில் பற்றிப் பிடித்துக்கொண்டு, கசங்கி அழுக்காய்க் கிடந்த மெத்தையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களது கண்களில் அப்பட்டமான பீதி. விசாரித்தால் யாருமே வாயைத் திறக்கவில்லை. இறுதியில் ஒருத்தி ஆற்றை நோக்கிக் கையைக் காட்டினாள். “எங்களது சடலம் அங்கே மிதப்பதை நாங்கள் விரும்பவில்லை!”

சேவையாற்ற வந்த ஐ. நா. வின் போலீஸுக்கும் அலுவலர்களுக்கும் காமச் சேவை புரிய அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து பதினெட்டு வயதிற்கும் குறைவான சிறுமிகளைக் கடத்தி வர ஆரம்பித்திருந்தார்கள் விபச்சார வியாபாரிகள். ஹோட்டல் பணிப்பெண், குழந்தையைக் கவனிக்கும் வேலை, வீட்டு வேலை, நிறைய பணம் என்று பொய் சொல்லிக் கடத்தி வந்திருந்தார்கள்.

அவர்கள் போஸ்னியாவிற்கு வந்ததும் இரவு விடுதிகளில் அடைத்து வைத்து, விபச்சாரம் என்பதோடல்லாமல், அந்தச் சிறுமிகளை காம அடிமைகளாக (sex slaves) விளையாடியிருக்கிறார்கள் ஐ. நா. வின் ஊழியர்கள். கொடுமை அதுமட்டுமன்று. இந்த sex trafficking-ற்கு அப்பட்டமான ஒத்துழைப்பும் அதன் பின்னணியில் மூளையாகவும் இருந்து செயல்பட்டதே ஐ. நா.வின் போலீஸ் அதிகாரிகள்தான்.

கிளப்பில் ரெய்டு நடக்கவிருந்தால் முற்கூட்டித் தகவல் அளிப்பது, தப்பிவிடும் சிறுமிகளைப் பத்திரமாகப் பிடித்து மீண்டும் விபச்சார வியாபாரிகளிடமே ஒப்படைப்பது, தப்பித்தவறி யாரேனும் அந்தச் சிறுமிகளைக் காப்பாற்றிவிட்டால் பத்திரமாய் வெளியேற்றுகிறோம் என்ற பெயரில் எல்லையோரம் அவர்களை இறக்கிவிட்டு, ‘இந்தா இங்கிருக்கிறாள்; வந்து அள்ளிச் செல்’ என்று பிராத்தல் நிலையங்களுக்குத் தகவல் அளித்துவிடுவது … தப்பியோடி பிடிபடும் பெண்களுக்கு மற்ற சிறுமிகளின் முன்னிலையில் அந்த விபச்சார வியாபாரிகள் அளிக்கும் சித்திரவதை, மற்றச் சிறுமிகளுக்கு அப்படியோர் எண்ணம் கனவிலும் வராதபடி தடுத்துவிடும்.

தோண்டத் தோண்ட அழுகல் நாற்றங்களுடன் உண்மைகள். விபச்சார வியாபாரிகளின் சம்பளப் பட்டுவாடா புத்தகத்தில் ஐ. நா. போலிஸாரின் பெயர் இல்லாததுதான் குறை. அதிர்ந்து விட்டார் கேத்ரின்.

‘இப்படியெல்லாம் கெட்டப் புள்ளைகள் நம்மிடம் இருக்கிறார்கள்’ என்று அவர் மேல்மட்டத்திற்கு விஷயத்தை எடுத்துச் செல்ல முனைந்தபோதுதான், இது தமக்குத்தான் புது ரகசியம் என்று அவருக்குப் புரிந்தது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு, உயரதிகாரிகளுக்கு, யார் யாருக்குத் தெரிய வேண்டுமோ அனைவருக்கும் விஷயம் தெரிந்திருந்தது. பாவம், அக்கிரமம், அதிர்ச்சி என்று எந்தச் சலனமும் அவர்களிடம் இல்லை. மாறாக கேத்ரினுக்குத்தான் பின் விளைவுகள் ஏற்பட்டன.

அவரது ஆவணங்கள் தொலைந்து போயின; மேலதிகாரிகளிடமிருந்து சம்பந்தமற்ற அனாவசியப் பிரச்சினை, குடைச்சல்; சிலரிடமிருந்து அவருக்கு எச்சரிக்கை. இறுதியில் வெறுத்துப்போய் இந்த போஸ்னியா பணித்திட்டத்தின் 50 மூத்த அதிகாரிகளுக்கு அனைத்தையும் விவரித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார் கேத்ரின்.

அந்த மின்னஞ்சலின் பொருள் தலைப்பு – “வயிற்றைப் பிரட்டும் சுபாவமும் குற்ற உணர்வும் ஏற்படுபவராயின் இதைப் படிக்க வேண்டாம்”. அதுதான் கேத்ரின் ஊதிய விஸில்.

அதற்கடுத்து நான்கே நாள். அவருக்குப் பதவி குறைப்பு நிகழ்ந்தது. அதற்கடுத்து நாலு மாதங்களில் ஏதோ ‘சப்பை’ காரணம் சொல்லி அவரைப் பணியிலிருந்து தூக்கியது DynCorp.

ஒன்றல்ல, இரண்டல்ல, ஐ. நா.வின் 50 மூத்த அதிகாரிகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்ட கொடூரக் குற்றச் செயல்கள், கேத்ரினின்மீதே பூமராங் போல் திரும்பியதென்றால் அவை எந்தளவு செல்வாக்கோடு புரையோடியிருந்திருக்கும்?

இவை எங்கே? உலகிற்கு பாதுகாப்பும் நற்சேவையும் எங்கள் பணி என்று கோட்டு, சூட்டுடன் அதிகாரிகள் செயல்படும் ஐ. நா. வில். விடவில்லை கேத்ரின். DynCorpமீது பிரிட்டன் நாட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த நாட்டுப் பிரிவுதானே அவரை வேலைக்கு அமர்த்தியது? அதனால்.

எனது whistleblowing செயலுக்காகவே டுபாக்கூர்த்தனமாய் பதவி நீக்கம் செய்யப்பட்டேன் என்று வாதாடி வெற்றியும் பெற்றார்.

பின்னர் அவரது அனுபவங்கள் The Whistleblower என்ற தலைப்பில் புத்தகமாகவும் த்ரில்லர் திரைப்படமாகவும் வெளியாகின. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் திரைக்கதை அமைத்து, படம் படு விறுவிறுப்பு. “இத்தனைக்கும் நாங்கள் இதில் காட்டியிருப்பது சொற்பம். கதையின் வீரியத்தைக் மட்டுப்படுத்தியே எடுக்க வேண்டியிருந்தது” என்று சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் லாரிஸா (Larysa Kondracki).

விஷயங்கள் அம்பலமாயினவே தவிர, DynCorp சிறிதளவும் பாதிப்படையவில்லை. மாறாக ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அடுத்தடுத்து அதற்கு பெரிய அளவில் அமெரிக்காவின் பெருந்தொகை ஒப்பந்தங்கள். போஸ்னியாவில் அந்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர். அவ்வளவுதான்!

மேல் நடவடிக்கை? அதெல்லாம் மூச்! ஏனெனில்,

ஐ. நா. வின் பணிக்குச் செல்கிறார்களே அவர்களுக்கு Diplomatic Immunity எனப்படும் அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவிடுவதால், ஒருவருக்கும் சுண்டுவிரல் நகத்தில்கூட கீறல் இல்லை.

கேத்ரின் போல்கோவாக்?

அவர் மட்டும் உலகளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்று இத்தகைய கொடூரங்களுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

-நூருத்தீன் இந்நேரம்.காம்-ல் 04 ஜுலை 2013 அன்று வெளியான கட்டுரை

 

7. நேயமும் அறம்

எனக்குப் பரிச்சயமுள்ள அந்த நண்பரை சந்திக்க வந்திருந்த பெண்மணியை நண்பருக்குப் பரிச்சயமில்லை. நண்பரின் பெயர் வெற்றி. வெற்றியின் அலுவலகத்திற்கு அன்று திடீரென்று வந்து நின்றிருந்தார் அப்பெண்.

“எனக்கு நீங்க உதவணும்.” விஷயம் புரியமால் யார், என்ன என்று விசாரித்ததில் சற்று விளங்கியது. அந்தப் பெண்ணின் தந்தையும் அண்ணன்களும் வெற்றிக்கு நன்கு பழக்கமானவர்கள். ஒரே ஊர்க்காரர்கள்.

விரைவு ரயில் பிடித்து நெல்லை சென்றுவிட்டால் அங்கிருந்து பக்கத்தில் ஒரு கிராமம் வெற்றியின் தாய் மண். ஆழ்வார்குறிச்சியில் பட்டம் முடித்து சென்னை வந்த வெற்றிக்கு நகரின் மத்தியில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்தது. அதன் நிர்வாக அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் வேலை. வருமானம் அப்படியொன்றும் சிலக்கியமில்லை என்றாலும் ‘அனுபவத்துக்காச்சு’ என்று தலைநகரிலேயே தங்கி பணி புரிந்துகொண்டிருந்தார் வெற்றி. சில ஆண்டுகள்தான் பணி. பிறகு வளைகுடாவுக்கு விமானம் ஏறிவிட்டார். அந்தச் சொற்ப பணி காலத்தில் ஒருநாள் பகற் பொழுதில்தான் அந்தப் பெண் வெற்றி பணிபுரியும் கல்லூரிக்கு வந்திருந்தார்.

ஒரே ஊர், தெரிந்தவர்கள் என்றானதும் வெற்றி ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?” “என் மகன். இந்தக் கல்லூரியில்தான் படிக்கிறான். சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன். அதான் அப்படியே பார்த்துட்டுப் போகலாம்னு… நீங்கதான் உதவி செய்யணும்.”

இப்பொழுது வெற்றிக்கு விஷயம் புரிந்தது. அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் பிரிந்து விட்டார்கள். சென்னைக்கு வந்து மறுமணம் புரிந்துகொண்ட மாஜி கணவர் தம் முதல் மனைவியின் மகனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு, அவரே வளர்த்து வந்தார். அவன் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பெற்ற வயிறு, பொத்தி வைத்த பாசத்துடன் கல்லூரி அலுவலகத்தில் வெற்றியின்முன் கெஞ்சி நின்றது. பெயரைக் கேட்டு, கல்லூரி ஆவணங்களில் தேடியபோது BBA படித்துக் கொண்டு இருந்தான். வகுப்பறைக்குச் சென்று வெற்றி விசாரித்தபோது அன்று அவன் வரவில்லை.

“இன்னிக்கு வரலியாமே.”

ஏமாற்றத்தை அடக்கிக்கொண்ட அந்தப் பெண், “உறவினர் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். நாளை வந்து பார்க்கட்டுமா?” என்றார். “பிரச்சினையில்லை. வந்து பாருங்க”

மறுநாள் வெற்றி எதிர்கொண்ட பதில் அவர் எதிர்பாராதது. அந்தப் பெண்மணி வந்ததும் வகுப்பறைக்கு ஆள் அனுப்பி அவனை வரவழைத்தால், வந்தான். “உன்னயப் பார்க்க அம்மா வந்திருக்காங்க“ என்று விஷயத்தைச் சொன்னதும் ஓடிப்போய் கட்டிக் கொள்வான் என்று நினைத்தால், “எனக்கு என் தாயைப் பார்க்க விருப்பம் இல்லை“ என்று சொல்லிவிட்டுப் போயே போய்விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றி திகைக்க, கண்ணீரையும் வருத்தத்தையும் அடக்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டார் அந்தப் பெண்மணி.

சில மாதங்கள் கழிந்திருக்கும். மீண்டும் ஒருநாள் வந்து நின்றார் அந்தப் பெண். வேறொரு வேலையாக சென்னை வந்தவர் இந்த முயற்சியையும் பணியாக்கிக் கொண்டார் போலிருக்கிறது. மகனைச் சந்தித்தால் எழுத்து மாறாமல் அதே பதில் கூறினான். இப்படியே மூன்று முறையும் நடந்துவிட்டது. அதற்கு அடுத்த முறையும் அந்தப் பெண்மணி ஒருநாள் விக்கிரமாதித்தனாய் வந்து நின்றபோது, வெற்றிக்கு வேதாளக் கதையின் மேல் வெறுப்பு ஏற்பட்டு, மனத்தில் சவால் தோன்றியது. இன்று எப்படியும் அந்தத் தாய்க்கு நல்ல பதில் பெற்றே தரவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு, “வாங்க பிரன்ஸியைப் பார்ப்போம்” என்று அழைத்துச் சென்றார்.

முன் பத்தி கதைச் சுருக்கத்தை விரிவாய் பிரன்ஸிபாலிடம் தெரிவித்ததும், பையனை வரவழைத்தார்.

“உன் தாயார் உன்னிடம் பேச வேண்டுமாம்” என்று உத்தரவாய்ச் சொல்லிவிட்டு, “வாங்க நாம் வெளியே போகலாம்” என்று வெற்றியை அழைத்துக்கொண்டார். அட்டெண்டரிடம், “யார் வந்தாலும் உள்ளே விடாதே. வெளியே உட்காரச் சொல். நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வர்ரேன்”. அடுத்த அரை மணி நேரம். முப்பதே நிமிடங்கள். அவ்வளவுதான் தாயும் மகனும் பேசியிருந்திருப்பார்கள். அதில் மனதை திறந்திருந்திருக்கிறார்கள். திரும்பி வந்துபார்த்தால், “உங்களுக்கு எப்போல்லாம் என்னைப் பார்க்கனும்னு தோணுதோ அப்போல்லாம் காலேஜுக்கே வந்துடுங்கம்மா” என்று விடை பெறுகிறான் மகன். முகத்தில் சொல்லிமாளாத ஆனந்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறாள் தாய்.

வெற்றியும் தாயும் பிரின்ஸிபாலுக்கு நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். உதவி, உபகாரம் என்பது பணம், காசு என்பதில் சுருங்கிவிடுவதில்லை. கல்லைத் தூக்கி ஓரமாகப் போட்டாலும், யாரோ ஒரு பாதசாரிக்கு காயம் படாமல் காக்க முடிகிறது. இங்கு, அலுத்துக்கொள்ளாத வெற்றியின் அன்றைய அந்த முயற்சி ஒரு குடும்பத்தில் மாயம் புரிந்தது. வந்து பாருங்கள் என்று அனுமதியளித்தவன், அவ்வப்போது ஊருக்கே சென்று தாயைப் பார்த்து வந்தான். அந்தத் தாய்க்கு தம் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அது ஓர் உவகை என்றால் பேருவகை அளித்தான் மகன். தன் செலவில் தாயை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பிவைக்க, ஒரு தாய்க்கு அது ‘ஈரக்குலையில் பாசம் சுரக்கும்’ நிகழ்வாச்கே, வாழ்நாளுக்கும் அவருக்கு அது போதாது? வெளிநாடு சென்ற வெற்றிக்கும் திருமணமாகி, குழந்தைகளும் பிறந்துவிட்டனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும்போது, அந்த மகன் சந்திக்க வந்திருந்தான். தாய்வழி உறவுகளிடம் நல்லுறவில் இருக்கிறான் என்று தெரிந்தது. அவனின் தாயார்தான் வரவில்லை. விசாரித்தபோது, புற்று நோய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

“என்னயப் பார்க்கும்போதெல்லாம் உன்னத்தாம்பா விசாரிக்கும்” என்றார் வெற்றியிடம் அவரின் தாய். மீறித் துளிர்த்த துளிகளை வெற்றி துடைத்துக்கொண்டார். மனத்திற்குள் எங்கோ ஓர் மூலையில் திருப்தி எட்டிப்பார்த்து… என்பதாக முடியும் இந்தக் கதையில் வர்ணனைகளும் உரையாடலும் மட்டுமே கற்பனை.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 31 ஜுலை 2013 அன்று வெளியான கட்டுரை

 

8. மாயக் கண்ணாடி

காந்தித் தாத்தா என்று சொல்லிப் பாருங்கள். உடனே நமது மனத்தில் தோன்றும் உருவம் எது? உரோமம் அற்ற தலை, மூக்கு. முக்கியமாய் அந்த மூக்கின் மீது கண்ணாடி! வட்ட வடிவக் கண்ணாடி. அதைத் தாண்டி அவரைப் பற்றிய தகவல்களை மிகக் குறைவாக அறிந்துள்ள பாமரர்களுக்கும் இன்றைய தலைமுறைக்கும் இந்தியாவின் ஒரு மாநிலம் இன்றைய தேதிக்கு அதிகம் அறிமுகம். சத்தியத்திற்கு வந்த அந்தச் சோதனை பிறகு!

ஸான் டியாகோ (San Diego) அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு நகரம். அந்நகரில் வேக அளவை மீறிச் சென்ற காரை துரத்திச் சென்று ‘ஸ்டாப்’ என்று ஆங்கிலத்தில் மடக்கினார் டிராஃபிக் காவலர். அபராதம் விதிக்க நெருங்கியவர், அந்த ஓட்டுநர் ஸெஸிலியா அபாதி (Cecilia Abadie) அணிந்திருந்த கண்ணாடியைப் பார்த்துவிட்டு, ‘இதற்கெல்லாம் அனுமதியில்லை’ என்று அதற்கும் சேர்த்து இரண்டு விதமான அபராதச் சீட்டுகளை தந்துவிட்டார். ‘அமெரிக்காவில் கண்ணாடி அணிந்து வண்டி ஓட்டினால் அபராதமா? இதென்ன கொடுமை? பார்வை குறைபாடு உடையவர்கள் எங்கே சென்று காருடன் முட்டிக் கொள்வது’ என்று அறச் சீற்றப்படுபவர்கள் – நிற்க.

காந்தியாரின் பழங்காலக் கண்ணாடியில் கவர்ச்சியின் விகிதாச்சாரம் எவ்வளவு? அது அதன் வடிவம் போன்றது. பூஜ்யம். ஆனால், நெடுங்காலமாய்ப் பரப்பப்பட்டு வரும் எக்ஸ்ரே கூலிங் க்ளாஸ் என்றொரு வஸ்து உண்டு. தெரியுமோ? கற்பனை. மாயக் கண்ணாடி. அதை அணிந்து கொண்டு பார்த்தால் உருவங்கள் ஆடையின்றி தெரியும் என்று கதை, கட்டுரை, சினிமா போன்றவை கதை அளக்க, ஏங்காத ஆண் இனம் குறைவு. கூகுளில் தேடிப் பார்த்தால் இன்றும் அதைப் பற்றிய ‘உட்டாலக்கடி’ சமாச்சாரம் ஏராளம். என்றிருக்க -

கூகுளில் யாருக்கு அந்த யோசனை முதலில் உதித்தது எனத் தெரியவில்லை; ‘கூகுள் மூக்குக் கண்ணாடி’ (Google Glass) என்று ஒன்றை உருவாக்கிவிட்டது கூகுள். கூகுள் கண்ணாடியின் சாராம்சம் எளிமையானது. ஆப்பிளும் ஸாம்ஸங்கும் இணைய விசாலத்தையும் கணினி சக்தியையும் உள்ளடக்கி உள்ளங்கையில் தந்தவுடன் ஃபோட்டோ, வீடியோ, போகும் ஊருக்கு வழி, இத்யாதி, இத்யாதி என்று ஒவ்வொருவருக்கும் ஏக வசதியாகிவிட்டது. இதற்கெல்லாம் ஸ்மார்ட் ஃபோனின் திரையில் விரல்களைத் தேய்க்க வேண்டியதாக இருக்கிறது; ஒன்றிரண்டு பட்டனைத் தட்டும் சிரமம்; அதன் திரையைப் பார்க்க மெனக்கெடல் என்று மனித குலத்திற்கு எவ்வளவு அவஸ்தை? இதை மாற்றி அமைக்க முனைந்துள்ளது கூகுள் கண்ணாடி.

அணிந்து கொண்டு, ‘ஃபோட்டோ எடு கூகுள்’ என்று சொன்னால் போதும்; நாம் பார்க்கும் காட்சி ஃபோட்டோவாக ரெடி! வீடியோ எடுக்கலாம். அவற்றைச் சேமிக்கலாம். அல்லது மறுமுனையில் ஒருவருக்கு அப்படியே ஒளிபரப்பலாம். ரமணனை நம்பாமல் கூகுளிடம் வானிலை கேட்டால் கண்ணாடியில் தெரியுமாம். அமிஞ்சிக்கரையிலிருந்து கண்ணம்மா பேட்டைக்கு வழி கேட்டால் கண்ணாடியில் பாதை விரியும். பார்த்துக் கொண்டே வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். பார்வை தப்பினால் கண்ணம்மா பேட்டை நிரந்தரமான சேருமிடம் ஆகிவிடுமே என்று சற்றே கவலை தோன்றுகிறதா?

அப்படியான கவலையில்தான் இரண்டாவது அபராதச் சீட்டை ஸெஸிலியா அபாதிக்கு நீட்டிவிட்டார் ஸான் டியாகோ காவலர். அந்தம்மா அதை இணையத்தில் முறையிட்டு, இருதரப்பு வாதங்கள் கசா முசாவென்று சூடுபறக்க நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா கிடக்கட்டும். இந்தக் கண்ணாடியை இந்தியாவில் யோசித்துப் பார்த்தால்தான் அச்சமாக இருக்கின்றது. பாடம் படிப்பதில்தான் பல பிள்ளைகள் மந்தமாக இருக்க முடியுமே தவிர, இத்தகைய கண்டுபிடிப்புகளின் புறம்பான உபயோகத்தை புத்தி சாதுர்யத்துடன் செயல்படுத்துவதில் ஒருவருக்கொருவர் சளைப்பதே இல்லை.

காந்தியாரின் கண்ணாடி போலன்றி கூகுள் கண்ணாடியின் வடிவமைப்பும் படு கவர்ச்சி. அதை ஸ்டைலாக மாட்டிக் கொண்டு, கோயில், mall, சந்தை என்று அங்கிங்கெனாதபடி பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கும் தலங்களில் சுற்றி சுற்றி வந்து அமைதியாக அழிச்சாட்டியக் காரியம் புரிவது எவ்வளவு எளிது! இந்தக் கவலையெல்லாம் நாளை.

தேசப் பிதாவின் மாநிலம் இன்று அதிகம் பரபரப்பாக அறியப்பட்டுள்ளதே, அங்கு ஒரு மஸ்தான். அவரின் சாகசத்தில் கூகுள் கண்ணாடியெல்லாம் ஜுஜுபி. கண்ணுக்கே தெரியாத ஒரு மாயக் கண்ணாடியை அந்த மஸ்தான் நாடெங்கும் பரப்பி வைத்து, ‘ரத்தத்தின் நிறம் வெண்மை’; ‘ஓமக்குச்சி நரசிம்மனின் வடிவம் ரேம்போ’ என்று ஊடகமும் முற்போக்காளர்களும் என்று கண் கட்டிக் கிடக்கிறார்கள். புள்ளி விபரங்களும் உண்மைகளும் பொருட்டாகவே இல்லாமல் புத்தியெல்லாம் மாயவலை.

மஸ்தானின் மந்திரம் வென்றால் நாட்டு மக்களுக்குக் காந்தித் தாத்தாவின் தலை பாக்கியமாகும். தோற்றால், மஸ்தானின் மாயக் கண்ணாடியின் செலவினங்களின் கணக்கிற்குக் காந்தித் தாத்தா உபயம்.

என்ன நடக்கும் என்று கூகுள் கண்ணாடியிடம் கேட்க வேண்டும்.

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 04 நவம்பர் 2013 அன்று வெளியான கட்டுரை

 

9. பல் நுட்பம்

‘இது பல்லைத் துலக்கும் பிரஷ்,’ என்று அறிமுகப்படுத்தினார் தாமஸ் ஸெர்வால் (Thomas Serval). ஆ-வென்று வாய் பிளந்து பார்த்தது குழுமியிருந்த கூட்டம்.

அட! இது டூத்பிரஷ் மனித இனத்திற்கு அறிவிக்கப்பட்ட பண்டைய கால வரலாறு. அதைக் கண்டுபிடித்தவர் பெயர் தாமஸா? என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தால், ‘ஸாரி!’ இது புத்தம் புதுசான இந்த 2014ஆம் ஆண்டின் ஆறாம் தேதி அறிவிப்பு.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பெரும் தொழில் நகரம். தொழிலாகப்பட்டது வெரி ஸிம்பிள் – மது, மாது, சூது. இந்தப் புனித நகரில் பல நிறுவனங்கள் வந்து ஸெமினார், கான்ஃபிரன்ஸ் என்று நடத்திக்கொள்வது வாடிக்கை. ஒவ்வோர் ஆண்டும் International CES (Consumer Electronic Show) எனப்படும் நுகர்வோர் மின்சாதனங்கள் காட்சி நடைபெறுவதற்கு இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகில் உள்ள பல நாட்டிலிருந்தும் அவரவரும் தத்தம் புது கண்டுபிடிப்புகளை இந்தக் காட்சியில் கலந்துகொண்டு அறிமுகப்படுத்துவர். அப்படியான இந்த ஆண்டின் காட்சியில்தான் தன்னுடைய டூத்பிரஷ்ஷைப் பெருமையுடன் காட்டினார் தாமஸ்.

தாமஸ் ஸெர்வால் காட்டுவாசி, இப்பொழுதுதான் வேப்பங்குச்சியிலிருந்து பற்பசைக்கு மாறியிருக்கிறார் என்றெல்லாம் அபத்தமாக நினைத்துவிட முடியாது. அவர் பிரான்சு நாட்டுவாசி. மைக்ரோஸாஃப்ட், கூகுள் போன்ற ஜாம்பவான்களிடம் பணியாற்றியவர். துணைக்கு லாயிக் ஸெஸ்ஸாட் (Loic Cessat) என்பவரைக் கூட்டு சேர்த்துக்கொண்டு, கொலிப்ரி (Kolibree) என்ற நிறுவனத்தைத் துவக்கி, அது Kolibree electric toothbrush-ஐ கண்டுபிடித்து, உருவாக்கி, டூத்பிரஷ் லாஸ் வேகாஸில் அறிமுகம்.

உற்று நோக்கினால் பேட்டரி, மின்சக்தி போன்றவற்றில் செயல்படும் டூத்பிரஷ்ஷும் என்பதேகூட பழசுதான். பிறகு இதில் அப்படி என்னதான் விசேஷம் என்று உலக மின்சாதனங்கள் காட்சியில் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்?

மென்பொருள்! இந்த டூத்பிரஷ்ஷில் பொதிந்திருக்கும் மென்பொருள் (software) நாம் பல் துலக்கும்போது எப்படித் துலுக்குகிறோம், எவ்வளவு நேரம் துலக்குகிறோம், எந்தெந்த பற்கள் எந்தளவு சுத்தமாயின, பற்களின் காரையை (tartar) எவ்வளவு பெயர்த்து எடுத்திருக்கிறோம் என்றெல்லாம் தகவல்களைச் சேகரித்துக் கொள்கிறது. நாம் வாயைக் கொப்பளித்து துப்பியபின், டூத்பிரஷ்ஷிலுள்ள தகவல்கள் ப்ளூடூத் எனப்படும் கம்பியற்ற தகவல் மொழியாய் நம்மிடமுள்ள ஆன்ட்ராய்ட், ஐஃபோன் போன்ற ஸ்மார்ட்ஃபோன்களுக்குச் சென்றுவிடும். ஃபோன்களில் உள்ள மென்பொருள் நம் பற்களின் சுத்த நிலை என்னவென்று சுத்தபத்தமாய்த் தெரிவித்துவிடும். பிறகு?

‘அதைப் பார்த்து நம்முடைய பல் துலக்கும் விதத்தை மேம்படுத்தலாம். தகவல்களை நம்முடைய பல் மருத்துவருக்கு அனுப்பிவிடலாம். நம் பற்களின் பெருமையை ஃபேஸ்புக் இத்தியாதிகளில் பரப்பிக் கொள்ளலாம்…’ என்று இதன் பிரதாபங்களைப் பல் தெரியப் பட்டியலிடுகிறார் தாமஸ். இவைபோக ஸ்மார்ட்போன்களில் வந்தமரும் நமது பற்களின் தகவல்களைச் சிறப்பாக, விதவிதமாக உபயோகித்துக் கொள்ளும் வகையில் உலகெங்கிலும் உள்ள மென்பொருள் விற்பன்னர்கள் எத்தகு மென்பொருள் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்கிறார் அவர். ஃபேஸ்புக்கில் நம் பல் பொருத்தம் கண்டு திருமணப் பொருத்தமே கூட அமையக்கூடும். யார் கண்டது?

விலை? 99 டாலர்கள் துவங்கி 200 வரை மட்டுமே. வரிகள் தனி. ஸ்மார்ட்ஃபோனின் விலையை இதில் சேர்க்கக்கூடாது.

அட்டகாசம்! மேல்நாட்டுக்காரன் நாகரீகத்தின் உச்சாணிக்குப் போறான்யா என்று பாராட்டத் தோன்றினால் மற்றொன்றையும் யோசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம், “ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற சொல்வடை.

உடலின் மேல் பாகத்தில் அமைந்திருக்கும் ஒரு வாய். அதிலுள்ள பற்களைத் தூய்மைப்படுத்த எப்படியெல்லாம் கவலை? இப்படியெல்லாம் கண்டுபிடிப்பு! உடலின் கீழ்பாகத்தில் உள்ளது மற்றொரு வாய். அதைச் சுத்தப்படுத்துவதும் ஆக முக்கியமில்லையா? கொடுமை யாதெனில் அதைப் பற்றிய அவர்களது அலட்சியம். நம் நாட்டில் என்னதான் தண்ணீர் பஞ்சம் என்றாலும் அந்த விஷயத்தில் நம் மக்களுக்கு சுத்த உணர்வு மிக அதிகம். மேல்நாட்டுக்காரர்களுக்கோ இயற்கை உபாதையைக் கழித்தபின் தப்பித்தவறிகூட தண்ணீர் சரிப்படாது. விரலுக்கு சளி பிடித்துக்கொள்ளும். எனவே சரட், சரட்டென்று கிழித்து, காகிதம்தான் அவர்களுக்கு எல்லாம். இதில் என்ன சுத்தம்? எப்படித் தூய்மை? இதன் சுத்த அளவை அறிந்துகொள்ள அவர்கள் ஏதாவது மின்நுட்பக் கருவி கண்டுபிடிக்கக்கூடாதோ?

இப்போதைக்கு ஸ்மார்ட்ஃபோன் மென்பொருள் இல்லாமலே சொல்லி விடலாம். அந்தத் தகவல்கள் நாறும்!

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 13 ஜனவரி 2014 அன்று வெளியான கட்டுரை

 

10. அரிச்சுவடி

கையால் எழுதிய கடிதமொன்று என் ஃபேஸ்புக்கில் ஒட்டப்பட்டிருந்தது. அது ஆரம்பிக்கிறது இப்படி - அன்பு மகன் ராஜாவுக்கு,

தமிழில் நீ எனக்கு எழுதியிருந்த கடிதம் கால தாமதமில்லாமல் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தது. உன்னுடைய முதல் கடிதம், அதுவும் தமிழில் என்றதும் எனக்கு உற்சாகத்தில் தலை கூரையில் இடித்து காரை பெயர்ந்துவிட்டது. அதைப் பொருட்படுத்தாமல் படித்தால், பெரிய ஏமாற்றம். அதை உன்னிடம் சொல்லாமல் நான் ஏமாற்ற மாட்டேன்.

முதலில் உனது தமிழில் நிறைய எழுத்துப் பிழை. ammakku uthadu nalamillai என்று எழுதியிருக்கிறாய். ‘அம்மாக்கு’ இல்லை, ‘அம்மாவுக்கு.’ அடுத்து - உதடு உடல் சார்ந்த உறுப்புதான் என்றாலும் உதடும் உடலும் ஒன்றல்ல என்பதை நீ உணர வேண்டும்.

மின்னஞ்சலில் எழுதி அனுப்பினாலும் நல்ல எழுத்துரு தேர்ந்தெடுக்கக் கூடாதா? கோழி கிறுக்கியதைப் போலுள்ளது நீ எழுதியுள்ள font. ஒன்று செய். பேனா எடுத்து தாளில் எழுதிப் பழகு. சிலேட்டு, சிலேட்டுக் குச்சி அநாகரீகம் என்பதால் தாள் உகந்தது.

Oh shit! என்று அதிர வேண்டாம். கால மாற்றத்தில் தாள் பயனும் மாறத்தான் செய்யும்.

பயிற்சி செய்:

அ – அம்மா

ஆ - ஆடு

மற்றவை அடுத்த post-ல் என் வாலில் ஒட்டுவேன். வந்து பார்த்துக்கொள்.

அன்புடன், ராஜாப்பா

என்று படித்து முடிந்துவிடுகிறது. மடல்களுக்கு சாகித்ய அகாடெமி கிடையாதா?

-நூருத்தீன் இந்நேரம்.காம்-ல் 28 ஏப்ரல் 2014 அன்று வெளியான கட்டுரை

 

11. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு!

பொதுவாகவே எனக்கு ஷாப்பிங் மோகம் குறைந்து போய்விட்டதால் மால்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வாங்கியே தீரவேண்டும் என்ற பொருள்களுக்காக, தேர்வுக்குத் தயாராவதைப் போல் வீட்டில் ஹோம்வொர்க் செய்து விட்டு தேவைகளின் பட்டியலையும் நுழைய வேண்டிய கடைகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து விட்டுப் போனால்கூட, திட மனத்தையும் நொடி நேரத்தில் திசை திருப்பி விடுகிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகள். அவசியமே இல்லாத விஷயங்கள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்த்து, சிந்தைக்குள் போதையைத் தூவி, வீட்டிற்கு வந்து சேர்ந்தால் பட்டியலில் இல்லாத பொருள்கள் பாதியளவாவது பைகளில். போதை தெளியும்போது மனத்தில் ஆயாசம்.

இதைவிட, “கூட மாட ஒத்தாசைக்கு வந்து வாங்கிக் கொடுத்தால் என்ன? வீட்டில உட்கார்ந்து அதைவிட பெருசா என்னத்தச் சாதிக்கப் போறீங்க?” என்று வந்து விழும் செல்ல வசவுகளை ஏற்றுக் கொள்வது தேவலையாக இருக்கிறது. சில சமயம் மனம் குறுக்குக் கேள்வி கேட்டு நேர்மையைச் சோதிக்கும். “யூ ஹேட் ஷாப்பிங்? உனக்கு வயசாயிடுச்சோ?”

சென்னை விஜயத்தின் போது அனைவர் வாயிலும் EA சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் இருந்தது. அடியேனது இருப்பிடம் EA எனப்படும் Express Avenue வின் சுற்று வட்டாரத்தில் அமைந்திருந்தது காரணமோ என்று நினைத்தேன். இல்லை. அதன் வர்த்தக வீச்சும் கவர்ச்சியும் அதையும் தாண்டி என்பது உள்ளே நுழைந்தால் புரிந்தது. மாணவப் பருவத்திலும் பிறகும் வொய்ட்ஸ் ரோடு, வுட்ஸ் ரோடு, பட்டுலாஸ் சாலை என்று சுற்றி வரும் போது இந்தப் பத்து ஏக்கர் மகா செல்வத்தை மதில்சுவர் பர்தாவின் பின்னால் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் ஒளித்து வைத்திருந்தது இப்பொழுதுதான் தெரிகிறது. இன்று மதில் சுவர் உடைந்து பந்தாவாக எழுந்து நிற்கிறது EA.

ஒரு கூரையின் கீழ் தேவைகளைப் பெற்றுவிட முடியும் என்ற மால்களின் அடிப்படையைத் தாண்டி, இன்று அவை இல்லையெனில், பொழுதின் பயன் என்னாவது என்று மக்கள் இனம் ஏங்கி மாளும் அளவிற்கு உலகளவில் மால்கள் கேளிக்கையின் உத்தரவாதம். இதில் இந்தியா ஏன் சுணங்க வேண்டும்? அயல் நாடுகளின் ஸ்டைலும் சொகுசும் கேளிக்கையும் இந்தா உன் வாசலில் என்று பகாசுர நிறுவனங்கள் சேவையாற்ற முனைந்ததில் பெருநகரங்களில் வேரூன்றி இந்தியாவின் சிறு நகரங்களிலும் இன்று மெதுமெதுவே மால், மால், மேலும் மால்.

உள்ளே கடைகளும் பொருள்களும் உணவகங்களும் பண்டங்களும் என அனைத்திலும் மேலை நாடுகளுக்குச் சளைக்காத சாயல். “கோக் வேணாம். தண்ணீர்” என்று உணவுடன் ஐக்கியமாகி வந்த கறுப்பு திரவத்தை நிராகரித்தால், தண்ணீருக்குக் காசு. குடிக்காவிட்டாலும் கோக் உனக்குத்தான் என்றார் உணவுக் கடை சிப்பந்தி. உணவு, உடை, நடை, பாவனை என்று சுதந்திர இந்தியாவில் நீக்கமற அந்நியம்.

வருகை புரியும் பெண்டிரும் கடைகளில் பணிபுரியும் மங்கையரும் குறையாடைகளிலும் ஒப்பனையிலும் என்னவொரு கண்கூசும் போட்டி? பண்டங்களின் விலை கன்னாபின்னா என்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை என்றன முண்டியடிக்கும் கூட்டங்கள். சாமான்யனின் கையிலும் பல்லாயிர ஐஃபோன். ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயங்கள் இன்று மற்றவர்களுக்கும் சாத்தியமாகியுள்ளன. சரிதான் நல்லதுதான். எல்லோரும் உய்வுற்றால் அது நாட்டின் மேன்மைதான்.

ஆனால் முரண் மிரட்டுகிறது. அயல் நாட்டில் இந்தளவு இல்லாத முரண்.

உள்ளே பணம் இறைத்து புழங்கிக் கொண்டிருந்தவர்களில் கணிசத்திற்கும் அதிகமான அளவினர் தீனார், திர்ஹம், டாலர் பார்ட்டிகளும் உள்ளூர் ஐ. ட்டீயினரும் அதைச் சார்ந்தவர்களும். மிகப் பெரும்பான்மையான இந்தியப் பிரஜைகளின் வாழ்வாதார நிலையோ மால்களின் கேட்டுக்கு வெளிப்புறத்திலேயே தேங்கி, அது இந்திய நாணயத்தின் மறுபுறம்.

சிக்னலில் ஆட்டோ நின்றபோது EA விற்கு எதிரிலுள்ள பைகிராப்ட்ஸ் சாலை ஓரத்தில் சாப்பாட்டு வண்டி கடையில் சகாய விலை உணவு விறுவிறுப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. மக்கள் பரபரப்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கென்னவோ என் அண்ணன் எம்.ஜி.ஆர் பாட்டின் இடையிலுள்ள வரிகள்தான் அபத்தமாக நினைவிற்கு வந்தன.

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகென்று பெயரும் இட்டால்….

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 செப்டம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

 

12. பந்தயம் ரூபாய் ஐம்பதாயிரம்!

முந்தாநாள் இரவு

எப்பவும் போல் தொடங்கிய எடக்கு மடக்கு பேச்சு அன்று சற்று ரசாபாசமாகிவிட்டது.

கோடை மழைபோல் கொட்டும் கண்ணீருடன் மனைவி புலம்பினாள், “கட்டிக்கிட்டு பத்து வருஷமாச்சு. ஒரு குன்றுமணி தங்கத்துக்கு வக்கில்லே. என்னத்தப் பெருசா என் மேல பாசம், காதல்னு பைசாவுக்குப் பிரயோசனமில்லாத வெத்து வார்த்தை?”

“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. நீ மட்டும் எனக்கு தங்கம்னு ஒரு மூக்குத்தியாவது கண்ணுல காட்டிடு. நான் ஒனக்கு அம்பதாயிரம் பணம் தர்ரேன். பந்தயம்யா.”

கணவனது ரோஷ நரம்பை அது சரியாகத் தாக்கி மீட்டியது. “தோக்கப்போறே நீயி” என்று கத்திவிட்டு புரண்டு படுத்துக் கொண்டான். “பார்ப்போம்” என்று மூக்கை உறிஞ்சி தலையணையில் தேய்த்துவிட்டு அவள் தரையில் படுத்துக் கொண்டாள்.

நேற்று பகல்

“டேய்! அம்பதாயிரம் அவசரமா வேணும். நாளைக்குத் தந்துடுவேன்” என்று நண்பனின் ஆபீஸில் அமர்ந்திருந்தான். “உடனே எப்படிடா? அதுவும் நாளைக்கே எப்படித் தருவே?”

நடந்த ரகளையைச் சொன்னான். “தோக்கப்போறாடா. அந்த ஐம்பதாயிரம் எனக்கு. உனக்கு கடன் ரிட்டர்ன்.” பால்ய சிநேகம் பணம் கொடுத்தது. “எண்ணிப் பார்த்துக்கோ” என்று ஏடிஎம்-லிருந்து எடுத்துக் கொடுத்தான்.

“டேய், நீ நண்பேன்டா!”

நேற்று இரவு

“இந்தா பிரிச்சுப் பாரு” என்று கிஃப்ட் தாள் சுற்றப்பட்ட டப்பாவை நீட்டினான்.

கோபம் தணியாமல், “என்னாது?” என்றாள்.

“பிரிச்சுப் பாரு.”

முகத்தைத் திருப்பாமல் அதை வாங்கி திறந்து பார்க்க, வளையல்.

“தங்க வளையல். ஒரிஜினல் தங்கம். இரண்டேகால் பவுன். வேணும்னா உரசிப் பார்த்துக்கோ.”

அத்தனைக் கோபமும் எங்குதான் போனது என்று தெரியவில்லை. சடுதியில் அவளது முகத்தில் ஆயிரம் தாமரை மொட்டுகள் மலர்ந்தன.

படுக்கைக்குச் செல்லும் போது கொண்டு வந்து கொடுத்தாள். “நீங்க ஆம்பள சிங்கங்க. நான் தோத்துட்டேன். இந்தாங்க பந்தயப் பணம் அம்பதாயிரம்.”

இன்று பகல்

“இந்தாடா உன் பணம். டைம்லி ஹெல்ப். மறக்கவே மாட்டேன்.” “அத்த விடு. உன் மனைவி காசுலேயே அவள் வாயை அடச்சுட்டே. கில்லாடி. ஹுண்டாய் வாங்கித் தந்தால்தான் ஆச்சுன்னு என் பொண்டாட்டி ஒரு மாசமா நச்சு. ஏதாச்சும் ஐடியா வெச்சிருக்கியா?”

“யோசிச்சு சொல்றேன். ஆபீஸுக்கு டைமாச்சு.”

இன்று இரவு

“அன்னிக்கு பிரச்சினையினால ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேங்க” என்றாள் மனைவி. கேள்வியுடன் பார்த்தவனிடம், “பக்கத்துத் தெருவுல இருக்குற உங்க அக்கவுண்டென்ட் முந்தாநாள் வந்திருந்தார். அவசரமா ஒரு வாரம் ஊருக்குப் போறதா சொன்னார்.”

ஐஃபோன் ஆறு ஆயிரம் விதமாய்க் காட்டிய கவர்ச்சியில் மயங்கி ஆபீஸில் ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டி லோன் அப்ளை செய்திருந்தான். என்னவோ மெதுவாக உடம்பு நடுங்குவதைப் போல் இருந்தது. “என்ன சொன்னார்?”

“செக்குத் தாள் தீர்ந்து போயிடுச்சாம். பணம் கொடுத்துட்டுப் போனார்.”

உடம்பு இப்பொழுது நிஜமாகவே நடுங்கியது. “எங்கேடி அது?”

“பந்தயத்துல தோத்திருப்பீங்கள்ளே. அதான் எடுத்துக்கிட்டேன்” என்றவளின் முகத்தில் அப்படியொரு அப்புராணித்தனம்

“அதான் ஜெயிச்சுட்டேனே” என்று அதிர்ந்து இரைந்தான்.

“அதான் அதுக்கு நானும் கொடுத்துட்டேனே”

“ஆஆஆஆஆ….” அலறினான். “அப்ப என் ஆபிஸ் பணம்?”

“அடப் போங்க நீங்க. அதான் இது” வளையலைக் காட்டினாள்.

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 23 செப்டம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

 

13. அட்வாஸ்

Take a Stand என்ற ஆவணப்படம் பார்த்தேன். விமர்சனம், மார்க், புள்ளிகளுக்கு அப்பாற்பட்ட அனுபவம் அது. ஆவணப்படம், அட்வாஸு என்று ஆரம்பிக்கிறதே ஒருவேளை ஆதிவாசி மேட்டரோ என்று திகிலடைந்து விலக நினைப்பவர்கள் நிற்கவும்; தொடரவும். விஜய், ஜோதிகா, டைரக்டர் ஹரி ஆகியோரின் கௌரவத் தோற்றம் உண்டு.

பெண்களுக்கு எதிராக நிகழ்வுறும் உபத்திரவம், பாலியல் கொடுமை, குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள்மீது நடைபெறும் வன்முறை போன்றவற்றைத் தடுப்பதற்கு முயற்சி எடுக்கவும் அவ்விதம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாய் ஒன்றிணைந்து ‘குரல்’ கொடுக்கவும் உருவாகியுள்ள ஆண்களின் அமைப்பு பற்றிய படம் Take a Stand.

இப்படியான அமைப்புகள் இதற்கான சங்கங்கள்தாம் ஏராளம் உள்ளனவே, இதில் என்ன விசேஷம் என்று தோன்றுகிறதல்லவா? இருக்கிறது. குரல் கொடுக்க முன்வந்துள்ள ஆண்கள் குரலற்ற இனம். அவர்கள் ‘உச்’சுக் கொட்டி பரிதாப்படும் பெண்களும் அவர்களது இனமே. செவியிருந்தும் கேட்க முடியாமல், வாயிருந்தும் பேச முடியாமல் பிறவிக் குறைபாடு உள்ளவர்கள் அவர்கள். கேட்காவிட்டால் என்ன? பேச முடியாவிட்டால்தான் என்ன? கையிருக்கு சைகைக்கு, கண்ணிருக்கு காண்பதற்கு என்று அவர்களுக்கான சைகை மொழி உருவாகிவிட்டது. தமிழிலில் ஜோதிகா நடித்து வெளிவந்த ‘மொழி’ படம் நினைவிருப்பவர்கள் அந்த மொழியில் கைதட்டிவிட்டுத் தொடரவும்.

சைகை மொழி என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டாலும் பேசும் மொழி நாட்டுக்கு நாடு வித்தியாசப் படுவதைப்போல் இதுவும் பல மொழி. ஏறத்தாழ முந்நூற்று சொச்சம் சைகை மொழி உருவாகி நடைமுறையில் உள்ளது என்பது ஆச்சரியமான தகவல். நாடளவில் பிரிவினை ஏற்பட்டாலும் இந்தோ-பாக்கிஸ்தானி சைகை மொழி (Indo-Pakistani Sign Lanugage) என்று நமக்கும் பாக்கிஸ்தானுக்கும் ஒரே சைகை மொழி என்பது ஆறுதலான உபதகவல். இந்த முந்நூற்று சொச்சத்தில் ஒன்று அமெரிக்கர்களுக்கான American Sign Language - ASL.

கேட்கவியலா, பேசவியலா குறைபாடுள்ள அந்த மக்கள் இந்த மொழியைக் கற்று, படு தேர்ச்சியுடன் உரையாடிக் கொள்வதும் தகவல் பரிமாறிக் கொள்வதும் காண்பதற்கு வித்தியாசமான அனுபவம். இந்தக் கட்டுரையின் வசதிக்காக அந்தக் குறைபாடுள்ளவர்களை ASL மக்கள் என்று குறிப்பிட்டுக் கொள்வோம். ASL மக்கள் தங்களுக்குள் தங்கள் மொழியில் பேசிக் கொள்கிறார்கள் சரி. அவர்கள் வட்டத்திற்கு வெளியே? பள்ளிகளில் இதர மொழிகளை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து படிப்பதுபோல் ASL–ம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி அம்மொழியைக் கற்றுத் தேறும் மற்றவர்கள் ASL மக்களுக்கும் வெளிவட்டத்திற்கும் பாலம்.

மேலே குறிப்பிட்ட, கொடுமைகளுக்கு உள்ளாகும் ASL பெண்களுக்குக் குரல் கொடுக்க, ஆதரவு கரம் நீட்ட அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உருவாகியுள்ள அமைப்பு Abused Deaf Women’s Adovacy Services – ADWAS. இதன் நிர்வாகிகளில் மிகப் பெரும்பாலானவர்கள் பெண்கள். இவர்கள் தங்களது சேவையைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதைக் கவனித்த ASL ஆண்களுக்கு தங்கள் பங்குக்கு அந்த யோசனை தோன்றியது. அந்தப் பெண்களுக்காகச் சேவையாற்றும் ADWAS அமைப்புடன் நாமும் இணைந்து நம்மாலான ஆதரவு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கிவிட்டனர். அது Engaging Deaf Men Project – EDMP.

உருவாக்கிவிட்டால் மட்டும் போதுமா? அதற்கான செயல்பாடுகளில் இறங்கி, ADWAS அமைப்பினருடன் கலந்துரையாடல், சந்திப்புக் கூட்டம் என்று திட்டமிட்டு நகர்ந்து அதன் ஓர் அம்சம்தான் Take a Stand ஆவணப்படம். சியாட்டில் பொது நூலகத்தில் அமைந்துள்ள அரங்கில் கடந்த சனியன்று மாலை இந்தப் படம் திரையிடப்பட்டது. ASL மொழியை விருப்பப்பாடமாக எடுத்துப் பயிலும் மகள் அழைத்ததால் துணைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம். பெரிதாக ஏதும் ஆர்வம் இன்றி சென்றால், எதிர்பார்த்ததற்கு மாறாய்க் கனிசமான கூட்டம். பெரும்பாலானவர்கள் ASL மக்கள். ஒரு மணிநேரம் படம். அடுத்த ஒரு மணி நேரம் அந்தப் படத்தில் ஈடுபட்டவர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி.

“இடம் பிடியுங்கள் வருகிறேன்” என்று மகள்களிடம் சொல்லிவிட்டு, சிறிது நேரம் கழித்து அரங்கினுள் நுழைந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழப்பமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நம்மவர்களை எப்படி அடையாளம் காண்போம்? அமர்ந்திருப்பவர்கள் கையை உயர்த்தி, ஆட்டி, சைகை செய்து அழைப்பார்கள். நாமும் பாப்கார்னும் கையுமாய் விரைவோம். இங்கு அரங்கினுள் ஒரு சிலரைத் தவிர அத்தனைப் பேரும் கையை ஆட்டி, சைகை செய்து, ஒருவருக்கொருவர் ASL-ல் பேசிக்கொண்டிருக்க, மக்காவில் மொட்டைத் தலைக்காரரைத் தேடும் நிலை எனக்கு! ஒருவழியாக மகள்களின் கை அசைவைக் கண்டதும் மனசுக்கு ‘அப்பாடா’.

படம் ஆரம்பித்து ஓட ஆரம்பித்தது. சப்தம் மட்டும் வரவில்லை. முழுக்க முழுக்க ASL மொழிப் படம். மற்றவர்கள் விளங்கிக் கொள்ள ஆங்கிலத்தில் சப்-டைட்டில். டிவியில் படம் பார்க்கும்போது சில நேரங்களில் mute செய்து பார்த்திருப்போம். ஆனால் அந்த அனுபவத்திற்கும் சப்தமற்ற இந்த சைகை மொழி படத்தைப் பார்ப்பதற்கும் ஏக வித்தியாசம். சப் டைட்டில் இருந்தாலும் செவிக்குச் சப்தமின்றி பொதுவான படங்களைப் பார்க்க நேரும் ASL மக்களின் உணர்வுக்கு அண்மையில் செல்ல முடிந்த தருணம் அது.

ASL மக்கள் தங்களது மொழியிலேயே அந்தப் படத்தைப் பார்த்தார்கள்; நகைத்தார்கள்; ஆமோதித்தார்கள். அவற்றையெல்லாம் சப் டைட்டிலின் உதவி கொண்டு என்னைப் போன்றவர்கள் செய்து கொண்டிருந்தோம். படத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் வாய்பேசும் ஒருவர் தலைகாட்டி, அந்த நிமிடங்கள் மட்டும்தான் படத்தில் சப்தம்.

பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்க அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் படத்தில் பங்கேற்ற ASL மக்கள். சைகை மொழியிலேயே கேள்வி; சைகை மொழியிலேயே பதில் என்று நிகழ்ச்சி நடந்தது. ஆனால் ASL பயின்ற சிலர் முன் வரிசையில் அமர்ந்து அவற்றை நமக்கு மொழி பெயர்த்தனர். அதில் வியப்பு யாதெனில், சைகை மொழியில் ASL மக்கள் பேசியதை, தடங்கலற்ற வேகத்தில் உரையாடலுக்கான அதே ஏற்ற இறக்கத்துடன் அவர்கள் மொழி பெயர்த்த லாவகம். சிறந்த பின்னணிக் குரலுடன் காட்சிகளைப் பார்த்த அனுபவம் அது.

இறுதியில் ASL மக்கள் தங்கள் மொழியில் கைதட்டியபோது என் இரு கைகளும் உயர்ந்து விரல்களை அகலவிரித்து ASL மொழியில் நானும் க்ளாப்ஸ். வெளியே வரும்போது பேராசை தோன்றியது. டைரக்டர் பேரரசு நடிகர் விஜய்யைக் கதாநாயகனாக அமைத்து முழு நீள ஆக்ஷன் படமொன்றை ASL மொழியில் இயக்க வேண்டும்.

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 11 நவம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

 

14. கேயாஸ் தியரி

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கல்லூரியில், ‘வண்ணத்துப் பூச்சி ஒன்று எங்கோ ஒரு மூலையில் சிறகடிச்சு, சில வாரங்களுக்குப் பிறகு வெகு தொலைவில் வேறு எங்கோ ஒரு சூறாவளி வந்து… இரண்டுக்கும் தொடர்பு இருக்குது’ என்று புரொபஸர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். “என்ன உடான்ஸ்டா இது?” என்றான் அவன் நண்பனிடம்.

“கேயாஸ் தியரிடா”

“நீயே உக்காந்து கேளு. இன்னிக்கு தசாவதாரம் ரிலீஸ். நான் பார்க்கப் போறேன்.”

சில மாதங்களுக்கு முன், ஒரு சீன கிராமத்தில், ஏற்றுமதிச் சந்தைக்கு பெண்களின் கைப்பைகள் தயாராக்கும் குடில் ஆலையில் வேகவேகமாய்ப் பணி நடந்தது. கல்பதித்த உலோக வண்ணத்துப் பூச்சியை கைப்பையில் பதிப்பது என்று பலப்பல கரங்கள் இயங்கி அங்கு கையிரச்சல் மயம். ஒரு பைக்கு இத்தனை ஜியாவ் காசு என்று கூலி. எவ்வளவு அதிகம் முடிகிறதோ அத்தனை ஜியாவ் கிடைக்கும். அவற்றை யுஆன் பணமாகத் தேற்றி, கோழி, பாம்பு, பல்லி என்று வீட்டுக்கு மளிகையுடன் செல்லலாம் என்று வேகமான பணி. ஓர் ஊழியனின் கையிலிருந்து வண்ணத்துப் பூச்சி கீழே விழுந்து அதன் சிறகில் ஒரு சிறு மழுங்கல். ஓரிரு நொடி தாமதித்தான் அந்த ஊழியன். ‘யார் கவனிக்கப் போகிறார்கள்?’ என்று சீன மொழியில் நினைத்தவாரே அந்த வண்ணத்துப் பூச்சியை எடுத்து ஒட்டினான்.

நேற்று, ஷாப்பிங் மாலுக்கு தன் புது மனைவியுடன் சென்றிருந்தான் அவன். அவர்கள் இருவரின் கையெல்லாம் பை. பை உரசலும் தோள் உரசலுமாக நடந்தவனிடம் அவள் காட்டினாள், ‘அந்த ஹேண்ட்பேக் பாருங்க, நல்லாருக்கு”

விலையை விசாரித்துவிட்டு, “வாங்கிக்கோ” என்றவன் பணம் கொடுக்கும்போது, “ஐயோ! இந்த பட்டர்ஃப்ளையில் முனை மழுங்கியிருக்கே” என்றான். வேறு ஸ்டாக் இல்லையே என்று கடைச் சிப்பந்தி வருத்தப்பட, “அப்புறமா நல்லதா வாங்கிக்கலாமே” என்று மனைவியை வீட்டுக்குக் கடத்தினான் கணவன். புது மனைவியின் முகத்தில் மேக்கப் மட்டும் மீந்து, சிரிப்பு விலகியிருந்ததை அவன் கவனிக்கவில்லை.

இன்று அலுவலகத்தில் வீட்டுச் சாப்பாட்டைப் பிரித்து கிழங்குப் பொரியலைச் சுவைத்தால் உப்பு தப்பியிருந்தது.

* * *

படித்துவிட்டு “என்னத்த கதை இது” என்று அலுத்துக் கொண்டார் அப்பா. புத்தகத்தை வீசிவிட்டு தொலைக்காட்சியை ரிமோட்டில் நோண்டும்போது, மாணவ மகன் வந்து அவரிடம் நொந்தான். “முதல்ல இருந்த ஹிந்தியாச்சும் பரவால்ல. ஹிந்தி படத்தைப் பார்த்து டெஸ்ட் எழுதிட்டேன். ஸ்கூல்ல இந்த சம்ஸ்கிருதம் பாடம் வேணும்னு யார் உங்களை வேண்டச் சொன்னது? பெத்தப் புள்ளைமேல அக்கறை வேணாம்?”

“நான் எங்கேடா சம்ஸ்கிருதம் கேட்டேன்?” என்று அப்பா புரியாமல் விழிக்க,

“அதான் ஓட்டுப் போட்டீங்களே.”

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 17 டிசம்பர் 2014 அன்று வெளியான கட்டுரை

 

15. பிரளயம்!

சுட்டான்; சுட்டாள்.

மலையின்மீது செங்கல்லை வீசியதுபோல் குண்டு மட்டும் தெறித்து விழுந்து, கதவு ஜம்மென்று நின்றிருந்தது. ஒரு சிறு கீறல்கூட இல்லை. “பார்த்துட்டியா? திருப்தியா? NWSS-VBD-02 மாடல் கதவு. ஸ்டீல், கான்கிரீட் கலந்த ராட்சஷன். பெரிய குண்டு வெடிப்பையே தாங்கும்” என்றான் ஜான். அவன் மனைவி ஜோனின் முகத்தில் திருப்தி.

வடக்கு ஐடாஹோ மாநிலத்தின் தேசிய காடு ஒன்றின் அருகில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் குண்டு வெடிப்பைத் தாங்கும் புகலிடம் (bomb shelter) ஒன்றைக் கணவனும் மனைவியும் கட்டியிருந்தார்கள். பூகம்பம் வந்தாலும் சரி, குண்டு வெடிப்பு யுத்தம், ரசாயன யுத்தம் என்றாலும் சரி உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு என்று தரையில் அடித்துச் சத்தியம் செய்து கட்டித் தந்திருந்தது பெரிய நிறுவனம் ஒன்று. பிரளயமோ, யுத்தமோ ஓடிப் போய்ப் புகுந்து கொள்ள வேண்டியதுதான். பிழைத்து விடலாம். ஆயுளைத் தொடரலாம்.

தேடித் தேடிப் பார்த்து, ஒவ்வொரு விஷயமாகத் தேர்ந்தெடுத்து இரண்டு மில்லியன்களுக்குமேல் டாலர்களைச் செலவழித்திருந்தனர் ஜான்-ஜோன் தம்பதியர். மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு உணவு, தண்ணீர், உயிர் வாழத் தேவையான இன்னபிற அத்தனையும் நிறைந்திருந்தன. “இனி நாமாக நினைக்கும்வரை சாவுக்கு அனுமதியில்லை” என்றாள் ஜோன்.

சிரித்தான் ஜான். o-o-o

மாளாது வாழ்தல் (Survivalism) என்பது சமகாலத்தில் ஓர் இயக்கமாகவே உருவாகி வருகிறது. அதென்ன “மாளாது வாழ்தல்” என்று புருவத்தை உயர்த்தி விசாரிக்கப் போனால் அது முன்னெச்சரிக்கை என்பதன் தீவிரவாத வடிவம்.

கரெண்ட் போனால் சமாளிக்க டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீ விபத்துக்கு நெருப்பை அணைக்கும் சாதனங்கள், காயங்களுக்கு முதலுதவிப் பெட்டி என்பதில் தொடங்கி, வீட்டை நெருங்கும்போதுதான் மனைவிக்கு வாங்க மறந்த புடைவை நினைவுக்கு வந்து மூளை தயாரிக்கும் சமாளிப்புப் பொய் என்பதுவரை மனிதர்களுக்கு முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் இயற்கையாய் அமைந்துள்ளன.

அது பெருகி, பெருகி கலவரம் வந்தால் எப்படி ஓடுவது, புயல் வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று விரிவாகி என்ன பிரளயம் வந்தாலும் சரி, யுத்தம் நிகழ்ந்தாலும் சரி, பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டு நாடு பஞ்சம், பட்டினிக்குத் தள்ளப்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்தாலும் சரி எப்படியும் வாழ்ந்தே விடுவது என்று பேரிழிவுக்கு எதிராகப் பெரும் தயாரிப்புகள் செய்து வைத்துக் கொள்வது ஸர்வைவ்வலிஸமாம்.

1930-களிலேயே அணு ஆயுதப் போர், மத நம்பிக்கைகள் என்று இதன் ஆதி காரணம் துவங்கியிருக்கின்றது. வல்லரசுகளின் பனிப் போரும் பேரழிவுகள் பற்றி அச்சமூட்டி எழுதப்பட்ட நாவல்களும் பாதகமான எத்தருணத்திற்கும் தயார்படுத்திக்கொள்ளும் எண்ணத்தை வலுவாக விதைக்க ஆரம்பித்தன. பொருளாதார அழிவிலிருந்து தப்பித்து வாழ்தல் அதில் ஒன்று. அமெரிக்காவின் பண மதிப்பு குறைந்துபோய் நாடே நொடித்து நோஞ்சானாகிவிட்டால் எப்படி வாழ்வது, மீள்வது என்பது குறித்து 1960-களில் சில நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவலாகக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களது ‘கல்லா’நிறைய டாலர்கள். பணம் வெறும் காகிதம் மட்டுமே. தங்கம், வெள்ளி இருந்தால் எல்லா நேரத்திலும் செல்வநிலை உத்தரவாதம் என்று அறிவுரை பரவ ஆரம்பித்தது.

அடுத்தது இயற்கைப் பேரழிவு, மனித யுத்த பேரழிவு போன்றவற்றிலிருந்து தப்பித்து வாழ்க்கையைத் தொடர்வது. எஃகினாலான கட்டுமானப் புகலிடங்கள், மற்றவர்கள் அதை உடைத்து உள்ளே நுழைந்துவிட முடியாதபடி அரண்கள், தடுப்புகள், ஊடுருவும் கயவர்களைத் தடுக்கப் பூமியில் குழிதோண்டிப் புதைக்கும் வெடிகள் என்று மூச்சு முட்டும் அளவிற்கு முன்னேற்பாடுகளும் தயாரிப்புகளுமாக, பல்லாயிரப் பக்கங்களுக்குத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கெட்டுப்போகாத டின் உணவுகள், தண்ணீர், நீர் சுத்திகரிப்பு உபகரணம், உடை, ஆயுதங்கள், அதற்கான குண்டுகள், மருந்து, மருத்துவச் சாதனங்கள் என்பதன்றி இயற்கை உபாதையைக் கழிக்க 5 கேலன் பக்கெட்டுகள் என்றெல்லாம் விலாவாரியாகப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறார்கள். பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ அந்தப் பக்கெட்டுகளுக்கு மூடி இருப்பது அவசியம் என்பது என் பரிந்துரை.

சுருக்கமாகச் சொன்னால் ‘மாளாது வாழும் இயக்கம்’ என்பது ஒரு குடும்பம் தனக்கான ஒரு குட்டி நாட்டை உருவாக்கிக் கொள்வது போல் இருக்கிறது. அமெரிக்கச் செஞ்சிலுவைச் சங்கம் இரண்டு வாரம் தாக்குப் பிடிக்குமளவு தயாராக இருங்கள் என்று இயற்கைச் சீற்றத்தைச் சமாளித்து வாழ்வதற்குப் பரிந்துரைக்கிறது. ஆனால் மாளாது வாழும் இயக்கத் தீவிரவாளர்களின் கற்பனையோ மூன்றாவது இருண்ட உலகம். எனவே அவர்களுடையது ஏழாண்டு காலத்திற்காவது தாக்குபிடிக்கும் திட்டம்.

ஒரு காலத்தில் மலையைக் குடைந்து இருப்பிடத்தை ஏற்படுத்தி வாழ்ந்த சமுதாயம் ஒன்று இருந்தது. அதுவும்கூட இறைவனின் சக்திக்கு எதிராய் நிலைக்க முடியவில்லை. வெகு எளிதாய் அழிக்கப்பட்டது. அதெல்லாம் மதத்தை நம்புபவர்களுக்கு என்று சொல்லி, இறைவனின் சக்தியை மறந்துவிட்டு இயற்கையின் சக்தியை எதிர்த்துச் சமாளிக்க மாளாது வாழும் இயக்கம் நாள்தோறும் தயாராகி வருகிறது.

குறைந்தபட்ச முன்னெச்சரிக்கையாக மெழுகுவத்தி, பிரெட், தண்ணீர் போன்றவற்றைச் சிறிதளவு சேகரம் செய்து கொண்டு, அதற்கெல்லாம் முதலாய்ப் பாவங்களைத் தவிர்த்து வாழ்வதைப் பற்றி இறை நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்தால் போதும்; அது எனக்கும் குடும்பத்துக்குமான சிறந்த survival kit என்கிறான் எனக்குள் ஒருவன். இரண்டு மில்லியன் என்னிடம் இல்லை என்பதனாலன்றி, விதி ‘அவன்’ வசம் என்பதால் நான் எனக்குள் ஒருவன் சொல்வதைக் கேட்கப்போகிறேன்.

o-o-o

“என்னாச்சு தெரிஞ்சுதா?” என்று கேட்டாள் ஜோன். அவள் முகமெல்லாம் திகில். தங்களது குண்டு வெடிப்புப் புகலிடத்திற்குள் இருந்தார்கள். “சரியான தகவல் தெரியலே. கனடாவிலிருந்து மெக்ஸிகோ வரை மேற்குப் பகுதி முழுவதையும் அசைச்சு நொறுக்கிடுச்சாம். அதான் கடைசியா வந்த செய்தி. ரேடியோ எடுக்கலை. மேற்குப் பகுதி நிலையங்கள் எல்லாமும் காலின்னு நினைக்கிறேன். மத்திய பகுதி அலைவரிசைகளின் சிக்னல் சிக்குது.” வெளியே அமெரிக்காவின் மேற்குப் பகுதி சிதிலமடைந்து அழிந்து போயிருந்தது.

“ம்ம்ம்… அடுத்து நாம என்ன செய்ய?”

“கவலைய விடு. தப்பிச்சு வந்து புகுந்துட்டோம். நிறைய அடுக்கியிருக்கே. எடுத்துச் சாப்பிடு. ஜெனரேட்டர் மின்சாரம் இருக்கிறதால பிரச்சினை இல்லே. பொழுது போக படங்கள் ஆயிரம் கிடக்கு. போட்டுப் பாரு. நம்ம கிட்டே இருந்த எல்லாப் படங்களையும் க்ளவுட் மூலமா இங்குள்ள செர்வருக்கு டவுன்லோட் செஞ்சுட்டேன்.”

இதற்குத்தானே மாய்ந்து மாய்ந்து தயாராகியிருந்தார்கள். எதற்குப் பதட்டம், அச்சம்? தவிர அலுவலகம், பிஸினஸ் என்று பரபரக்கவும் தேவையில்லை. அடுத்து சில வாரங்கள் எந்தப் பரபரப்பும் இன்றிக் கழிந்தன. பொழுது விடிந்து, மறைந்தது. பறவையும், காற்றும், தூரத்தில் சில மிருகங்களின் சப்தமும் போக இவர்கள் இருவரது பேச்சு மட்டும்தான் ஓசை. எல்லாம் தணிந்திருக்கும் என்று உறுதியானதும் காரில் ஒரு நடை போய்வரலாம் என்று ஒருநாள் சென்றால் அவர்கள் வாழ்ந்த நகரம் மணல் வீடுகளைக் காலால் மிதித்து அழித்ததுபோல் அகோரமாகிக் கிடந்தது. பிண வாடையும் பொத்துக் கொண்ட கழிவுக் குழாய்களால் இதர நாற்றமும் காற்றில் கலந்து, மூச்சை அடைத்து வாந்தி வந்தது.

“யாராவது இருக்கிறீர்களா?” சரிந்து விழுந்திருந்த ஒரு கட்டிடத்தின் மீது ஏறி நின்று கத்தினான் ஜான்.

“ஈஸ் எனி ஒன் தேர்?” தானும் கத்தினாள் ஜோன்.

பேசிக்கொள்ளாமல் ஷெல்டருக்குத் திரும்பினார்கள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. அண்டை அயல் நண்பர்கள், செல்ல நாய்க்குட்டி, காஃபி கடை மங்கை என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோரும் காணாமல் போயிருந்தார்கள். ஜானும் ஜோனும் மட்டும் பிழைத்திருந்தனர். டின்னைப் பிரித்து இரவு உணவு சாப்பிடும்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. முடித்துவிட்டு நிமிரும்போது இருவரும் ஒருவரையொருவர் பார்க்க,

“உனக்கு ஓக்கேயா?” என்றான்.

“ஆம் அதான் சரி” என்றாள்.

ஆளுக்கொரு ரிவால்வரை எடுத்தார்கள். ஒருவரைநோக்கி ஒருவர் நீட்டி,

சுட்டான்; சுட்டாள்.

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 02 ஜனவரி 2015 அன்று வெளியான கட்டுரை

 

16. நொடி!

மதியம் மணி 1:39. நேரம் சரியா என்று கண் இமைத்து சரி பார்ப்பதற்குள் ஒரு நொடி கடந்துவிட்டது. என்ன இது, நேரம் இவ்வளவு வேகமாக கடக்கிறது? அதுவும் ஒரே ஒரு நொடி!

நொண்டாமல் கொள்ளாமல் இவ்வளவு வேகமாகவா ஓடும் நொடி?

ஏன் கவலை? மீண்டும் ஒரு நொடி வராமலா போய்விடும் என்று தோன்றியது. வரும். ஆனால் அந்த அது வராதே! அடுத்து சில நொடிகள் அந்தக் கவலையிலேயே கடந்தன. 1:39:00-லிருந்து 1:39:01-க்குள் பெரிதாக ஒன்றும் நடந்திருக்காது என்று கவலையின் முடிவில் சமாதானம் தோன்றியது.

அந்தச் சமாதானம் அடுத்த ஒரு நொடிகூட தாக்குப்பிடிக்கவில்லை. ஒன்றும் நடந்திருக்காது என்றால் எப்படி? உலகத்தின் மக்கள் தொகை எண்ணில் இரண்டரை அதிகரித்திருக்கும்! அந்த ஒரு நொடிக்குள் 4.3 குழந்தை பிறந்திருக்கும். அந்த அதே நொடியில் 1.8 பேர் செத்துப் போயிருப்பார்கள்.

ஒரு நொடியில் ஐந்தாவது குழந்தை எப்படி பத்தில் மூன்று பங்கு மட்டுமே பிறக்கும்? பிரசவ வலியினால் தாமதமாகியிருக்குமோ? இருக்கும். ஆனால் இரண்டில் ஒரு சாவு மட்டும் பத்தில் எட்டு பங்கு எப்படி? ஒருவேளை கொலை செய்யப்பட்டு, அந்த நொடியில் எட்டுப் பங்கு செத்துப்போய் குற்றுயிராகி இரண்டு பங்கு மட்டும் அடுத்த நொடி இறந்திருக்குமோ. சாத்தியம்.

புள்ளி விபர அபத்தத்தை ஒதுக்கிவிட்டு, கால்குலேட்டரில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்த ஒரு நொடியில் அதிகமடைந்த மக்கள் தொகை 2.5. இதுவே இப்படி என்றால் அந்த ஒரு நொடியில் புவியில் வேறு என்னென்ன மாற்றங்கள் சாத்தியம் என்ற கவலை வளர்ந்து அடுத்து பல நொடிகள் அச்சம் சூழ்ந்தது. கண்ணை இருட்டி, அடுத்து ஏதோ ஒரு நிமிடத்தில் ஏதோ ஒரு நொடியில் முழுதாகவோ அல்லது 80 சதமோ சாகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றி நெஞ்சை அடைப்பதைப் போலிருந்தது. யாரிடமாவது சொல்லி ஆறுதல் தேடினால்தான் மூச்சு சீராகும்.

ஒரு நொடி நின்று நம் கவலையைக் கேட்க யாருக்கு அவகாசம் இருக்கிறது? தாட்சண்யத்திற்காகக் காது கொடுத்தாலும் சாகடிக்கிறான் என்று மனத்தினுள் திட்டுவார்கள். முகநூலில் சொல்லலாம். அந்த யோசனை தோன்றியதுமே மூளையின் ஏதோ ஒரு கோடியில் உற்சாகம் பிறந்தது.

அங்கெல்லாம் நாளும் பொழுதும் நொடியுமாக எந்தக் கவலையுமின்றி எவ்வளவு உற்சாகமாக ரகளை! ஆயுளின் நொடி, நொடிக்கு நொடி காலாவதியாவதைப் பற்றி யாருக்காவது சுய கவலை உண்டா? எல்லாம் பொது நலம்; பொது கவலை என்ற பெயரில், உறக்கமின்றி அவர்களது இரவெல்லாம் பகல் என்று ஜமாய்க்கிறார்கள். அடுத்த சில நொடிகளில் இதை அங்கு இட வேண்டும். லைக்கிட்டு, கமெண்ட்டில் ஆறுதல் தேடி வரும். அதான் சரி!

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 22 ஜனவரி 2015 அன்று வெளியான கட்டுரை

 

17. இடைச்செருகல்

நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம் என்கிறது ‘மனம் மகிழுங்கள்’. அதனால் வெள்ளைப் பலகையில் கலர் பேனாவால் ஒரு சிறு பட்டியல்…

நாலைந்து வேலைகள்தாம்; எழுதி வைத்துக்கொள்ளும்படி ஆனது. ஆனால், ஒவ்வொரு வேலையும் கடுமையான நேரத்தைக் கோரும். ‘இதைச் செய்ய வேண்டும்’, ‘அதை முடிக்க வேண்டும்’ என்று மனத்திற்குள் சிறு சிறு வேலைகளைச் சேமித்து, நேரம் கிடைக்கும்போது செய்து முடிக்க அமர்ந்தால் எதைச் செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்து யோசித்தே ஆயாசத்தில் காலம் கழிந்து கொண்டிருந்தது. அதனால் முதல் வேலையாகப் பட்டியல் எழுதி வைக்கும் வேலை என்று முடிவெடுத்து, அதுமட்டும் நலமே நடந்து முடிந்தது.

பிறகென்ன? எழுதி வைத்ததுடன் சரி, அதைப் பார்க்கக் கூட நேரம் வாய்க்கவில்லை. இரண்டு, மூன்று நாள் ஆகியிருக்கும்; யதேச்சையாக வெள்ளைப் பலகையைப் பார்க்க, ஆச்சரியம் தாக்கியது. காரணம் இடைச்செருகல்! ஆச்சரியம் இறுதியில். ‘அதென்ன இடைச்செருகல்?’ என்பது அதற்குமுன்.

ஆங்கிலத்தில் interpolation என்று ஸ்டைலாக வாசிக்கும் இடைச்செருகல் தமிழில் சங்கக்கால சமாச்சாரம். சுருக்கமாகச் சொன்னால் முக்கியமான, பிரபலமான விஷயத்திற்கு இடையில் நமது விஷயத்தைச் செருகிவிடுவது. கந்தியார் என்றொரு பெண்பாற்புலவர். (எச்சரிக்கை; சற்று நீட்டினால் காந்தியார் ஆகிவிடுவார். கவுந்தி என்ற பெயர் சற்றுமாறி கந்தியார் ஆனவர் இவர்.) இவர் பரிபாடல், சீவக சிந்தாமணி போன்றவற்றில் தம்முடைய பாடல்களை எழுதிச் சேர்த்துவிட்டார் என்கிறது ஓர் ஆய்வு. எதற்கு இப்படி?

பூவோடு சேர்ந்து நாரும் மணக்கட்டுமே என்று விரும்பியே செய்திருக்கிறார்கள் சிலர். வேறு சிலர், பழைய நூல்களில் தங்களது சமயம், கொள்கைக்கு எதிரான, மாற்றமான கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு, தங்களுடைய கருத்துகளைச் செருகியிருக்கிறார்கள். வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அந்தப் புராதன நூல்களில் சில பகுதிகள் தவறிப்போய், கிடைக்காமலிருந்தால் ஆங்காங்கே ‘மானே, தேனே’ என்று இட்டு நிரப்புவதைப்போல் தாங்களே எழுதிச் செருகிவிடுவது.

நமக்கு நெருக்கமான முந்தைய நூற்றாண்டில் நமது திரைப்படங்களில் இதன் மற்றொரு வடிவம் காமெடி டிராக். அது ஆபத்தற்ற வடிவம். சிரிக்கலாம். அபத்தக் களஞ்சியமாக இருந்தால் ஒதுக்கிவிட்டு, கொடுத்த காசுக்குப் படத்தை மட்டும் விமர்சிக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் ஊடக சாம்ராஜ்யம் நிகழ்த்தும் இடைச் செருகல்தான் அரக்கன். மாபாதகம்! நிதான நஞ்சு!

செய்திதான்! நிகழ்வுதான்! ஆனால் அவற்றின் இடையில் தங்களது விஷமக் கருத்துகளைச் செருகிச் செருகிப் பரப்பி அவர்கள் நிகழ்த்தும் அராஜகம் அக்கிரமத்தின் உச்சம். வெட்கம், மானம், நீதி, நேர்மை, நியாயம் என்று பல சொற்கள் வழக்கொழிந்து, உலகளவில் புத்திகள் அடிமைகளாகிவிட்டன. சமகாலத்தில் இடைச்செருகல்கூட வழக்கொழிந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தரப்பை நோக்கி நேரடிச் செருகல்தான். அவையெல்லாம் பஞ்சாயத்து தொடங்கி உலக அரசியல். மற்றொரு காந்தியார் வந்து சத்தியா ஊடகப் போராட்டம் நடத்திவிட்டுப் போகட்டும். கந்தியார் என்று ஆரம்பித்தோமில்லையா அவரிடம் திரும்பிவிடுவோம்.

அவர் பரிபாடலில் இடைச்செருகியதைப்போல் அடியேனின் திருமதியார் வெள்ளைப் பலகையில் இடைச் செருகியிருந்ததுதான் இங்கு பகிர வந்த ஆச்சரியம். என்னவென்று?

“யோவ் புருஷா! நீ இன்னின்ன வேலையை இன்னின்ன நேரத்தில் செய்வது இருக்கட்டும். உன் பெண்டாட்டியானவளுக்கு இது, அது” என்று பட்டியலில் இருந்த அனைத்து ஐட்டங்களுக்கும் இடையில் புருஷக் கடமை ஒவ்வொன்றும் சரியாகச் செருகப்பட்டிருந்தன. வரிகளுக்கு இடையே இடைவெளிவிட்டு எழுதுவதில் இப்படியொரு ஆபத்தா? ஸோ வாட்?

‘ப்ரில்லியண்ட்!’

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 24 பிப்ரவரி 2015 அன்று வெளியான கட்டுரை

 

18. டிபன் பாக்ஸ்​! (பெரியவர்களுக்கான சிறுவர் கதை)

குண்டு வெடித்தது. சப்தம் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் எழுதுவதற்கு டமார்தான் சுமாராகத் தேறுகிறது. பசியுடன் டிபன் பாக்ஸைத் திறந்தவன் சிதறி செத்துப் போனான். சோற்றில் பூசணிக்காயை மறைக்க முடியாவிட்டால் என்ன, குண்டை மறைக்கலாம் என்று சாதுரியக் கொடூரனுக்குத் தோன்றி, சோற்றில் குண்டை வைத்து விட்டான்.

செத்துப் போனவனுக்கு தொலைக்காட்சியில் புதுப்புது நிகழ்ச்சிகளை உருவாக்கும் வேலை. திரைக் கலைப் படைப்புகள், திரைக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றின் ஞானத் துளிகள் போன்ற உயர்ந்த படைப்புகளின் மீது நம்பிக்கை அற்றுப்போன திமிர் பிடித்தவன் அவன். ‘சீரியல்’ என்று பெயர் எடுத்தாலே அது காலை ஆகாரத்திற்குத்தான் லாயக்கு என்று தெனாவட்டான பதில் வரும்.

அப்படியான அவன், சமூக அக்கறை என்ற நினைப்பில் என்னவோ சில நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தான். சில, பலருக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனைப் பிடிக்காத அவர்கள் அவனது அலுவலகத்திற்கு வெளியேதான் அதிகம் பரவியிருந்தார்கள்.

செத்துப் போனவனுக்கு மனைவி. நான்கு வயது மகன் என்று குடும்பப் பின்னணி. அந்தக் குடும்பப் பெண்மணி மற்ற மனைவியைப் போலவே ஆசாபாசம் நிறைந்தவள். திரைக் காவியங்கள் அவளுக்குச் சிறிய அளவிலான பொழுதுபோக்கு என்றால், சீரியல் என்ற காலையாகாரத்தைவிட அதன் அனைத்து தொலைப்பெட்டி வடிவமும் அவளுக்கு உயிர். எப்படித்தான் அத்தனை கதாபாத்திரங்களும் அவளுக்கு மனத்தில் தங்குமோ? விரல் நுனியில் நகங்களுக்குப் பதிலாகத் தகவல்கள் தொங்கும். இப்படியான யதார்த்த மனைவியும் வித்தியாசப்பட முயற்சி செய்யும் கணவனும் வாய்த்தால் என்னாகும்? கணவனுக்கு ஞாபக மறதி வரும். மனைவியின் பிறந்த தேதி, கல்யாணத் தேதி, அவள் ஆசைப்பட்டுக் கேட்கும் தோடு, தொங்கட்டான் என்று எதுவும் நினைவில் நிற்காமல் தப்பி, அடிக்கடி திட்டு வாங்குவதே வழக்கமாகிவிட்டது. திட்டிப் பார்த்து, அழுதுப் பார்த்து, மூக்கு சிந்திப் பார்த்து எதுவும் சரிவராமல் மனைவி ஓர் உபாயம் கண்டுபிடித்தாள்.

டிபன் பாக்ஸில் துண்டுச் சீட்டு நினைவுறுத்தி.

அது வேலை செய்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா என்ன வாங்கி வந்திருக்கிறேன் பார் என்று அவன் அவள் நினைவூட்டியதை வாங்கி வந்து மகிழ்விப்பான். குடும்பம் சிரித்து மகிழ்ந்து வந்தது. இங்கு கதைக்குச் சுபம் போட்டிருக்கலாம். இயலாதபடி அவன் தயாரி்த்த ஒரு நிகழ்ச்சிக்குத் தீவிரவாத கும்பல் ஒன்று எதிரியாக உருவாகிவிட்டது. தங்களது கூட்டத்தில் இவனை ஆபாசமாகத் திட்டித் தீர்த்துவிட்டு, கட்டம் போட்டு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். குண்டு வெடித்த நாளன்று காலை.

அம்மாவின் டெக்னிக்கை கவனித்து வைத்திருந்த மகன், அன்று ‘டப்பாசு’ என்று சீட்டு எழுதிவைத்தான். பக்கத்து அபார்ட்மெண்ட் குட்டி நண்பனுக்கு அவன் அப்பா விதவிதமாக பட்டாசு வாங்கித் தந்திருந்தார். இவனுக்கும் ஏக்கம். சிரித்துக் கொண்டே மகனின் சீட்டை உள்ளே வைத்து உணவு கட்டித்தந்து கணவனை வழியனுப்பினாள் மனைவி.

அலுவலகத்தில் அந்தத் தீவிரவாத கும்பலின் கைக்கூலி ஊடுருவியிருந்தான். அந்தத் திருட்டுப் பயல் யாருக்கும் தெரியாமல் இவனுடைய டிபன் பாக்ஸிலிருந்து சோற்றை எடுத்துத் தின்றுவிட்டு குண்டு வைத்துவிட, பசியுடன் டிபன் பாக்ஸைத் திறந்தவன் சிதறி செத்துப் போனான். “தொப்பி அணியாத, தாடி வளர்க்காத, சித்தாந்த வேறுபாடு கொண்ட சில அதிருப்தியாளர்களால் டிபன் பாக்ஸில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டு எங்களது ஊழியர் லேசான காயம்பட்டு அதைத் தாங்க இயலாமல் உடல் சிதறி இறைவனடி சேர்ந்தார்” என்று செய்தி வாசித்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம். அழுது ஓய்ந்திருந்த அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கெஞ்சினான் மகன். “ஐயாம் ஸாரி மம்மி! நான் டிபன் பாக்ஸ்ல பட்டாசு வெச்சதாலத்தானே அப்பா செத்துப் போனாரு”.

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 20 மார்ச் 2015 அன்று வெளியான கட்டுரை

 

19. போராளி (ஓர் ஆணவக் கொலைக் கதை)

“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை.

தன் முதலாளியை நிமிர்ந்து பார்த்தான் இளங்கோவன். ஆத்திரமும் வெறியும் அவரது கண்களில் கலந்திருந்தன. தலையை

ஆட்டியபடி கவனமாகப் பணத்தை எடுத்து தனது பேண்ட் பேக்கட்டிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“நாளைக்கே முடிஞ்சிடும்யா! நீங்க கவலைப்படாதீங்க.”

“சாகனும். அந்த நாய் சாகனும். நீ செய். கோர்ட் கேஸு எல்லாம் என் பொறுப்பு.”

படிப்பில் சுட்டியாக இருக்கிறாளே என்று தம் மகளைச் சென்னையில் உள்ள கல்லூரியில் பட்ட மேல்படிப்பு படிக்கச் சேர்த்தார் அவர். அவரது சாதியிலும் சரி, குடும்பத்திலும் சரி பெண்களுக்கு அத்தனை வயது வரை திருமணத்தைத் தள்ளிப்போடுவது அசாதாரணம்.

“நீங்க கைகாட்டுபவரை நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் இந்த இரண்டு வருஷம் மட்டும் எனக்கு அவகாசம் கொடுங்கப்பா. மாஸ்டர்ஸ் முடித்து விடுவேன்” என்று கெஞ்சிய மகள் மேனகாவிடம் அவருக்கு வெகு செல்லம். இளகினார். என்ன பெரிய விஷயம். படித்த மகளுக்கு இன்னும் மெத்தப் படித்த மாப்பிள்ளையைத் தேடினால் போச்சு என்ற கெத்து மனத்திற்குள் ஏறி புன்னகையுடன் சம்மதித்தார்.

ஆனால் விதி, படிக்கச் சென்ற இடத்தில் அவளுக்குக் காதல் பிறந்தது. நாள், நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் வாடகைக் கார் நிறுவனத்தின் ஓட்டுனராகப் பணிபுரியும் ஆனந்தன்மீது கண்மண் தெரியாமல் காதல் தோன்றிவிட்டது. அவனுடன் கை கோர்த்து, சென்னையெல்லாம் சுற்றித் திரிந்து ஆசவாசமடைந்து யோசிக்கும்போதுதான் அவளுக்குப் பகீரென்றது. சாதிப் பாச அப்பா, கீழ் சாதியைச் சேர்ந்த தன்னுடைய காதலனை வீட்டுக் கூடம் வரை கூட அனுமதிக்கமாட்டார். இதில் காதல், கல்யாணம் என்று போய் நின்றால்?

“டேய்! நாம் அடுத்த வாரம் பதிவுத் திருமணம் செஞ்சுப்போம்” என்று சத்யம் தியேட்டரில் பாப்கார்ன் கொறித்துக் கொண்டே சொல்லிவிட்டாள். நண்பர்களின் உதவியுடன் காதலர் தம்பதியர் ஆனார்கள். மாலையும் கழுத்துமாய் மேனகா வீட்டில் போய் நின்றவர்களின்மீது செருப்பு பறந்து வந்து விழுந்தது. திட்டு தொடர்ந்தது. காதைப் பொத்திக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவந்து தனிக்குடித்தனம் தொடங்கி விட்டார்கள். இவர்கள் இங்கு காதல் கிறக்கத்தில் கிடக்க அங்கு அவள் அப்பாவினுடைய தூக்கத்தைக் கெடுத்துச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள். அவரது சாதியைச் சேர்ந்த ஒவ்வொருவனும் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் அவரது ஆக்ரோஷத்தைத் தூண்டித் தூண்டி ஒப்பாரி வைக்க, அவரது ஆணவம் முடிவெடுத்தது. “அந்த நாயை வெட்டிக் கொல்லுடா.”

0-0-0

அதற்கு முந்தைய நாள்.

சான்ஃபிராஸ்கோ நகரில் எக்ஸ்ஃபோன் கம்பெனியின் சி.ஈ.ஓ. மெக் ஆடமைச் சந்தித்தான் ஐஸிக். எக்ஸ்ஃபோனின் ஆராய்ச்சிப் பிரிவில் முதல் நிலை டிஸைனராக எழுபது பேர் குழுவை நிர்வாகம் செய்வது அவனது பணி. பெரும் பிரயத்தனத்திற்குப் பிறகு மெக் ஆடமைச் சந்திக்க அனுமதி கிடைத்திருந்தது.

“சொல்லு ஐஸிக். நமக்கு அறுபது நிமிடம் அவகாசம் இருக்கிறது. மூன்று மணி நேரத்தில் எனக்கு ப்ளைட். இந்தியா செல்கிறேன்.”

அவரைச் சந்திக்கும்போது ஒவ்வொரு நொடியும் முக்கியம், வீணாக்க முடியாது என்பதால் ஐஸிக் தனக்குள் பலமுறை பேசி ஒத்திகை பார்த்திருந்தான்.

“நமது ஃபோனின் அடுத்த டிஸைனில் ஸோனோஜெனிடிக்ஸ் திறமையை உள்ளடக்க வேண்டும். ஐஃபோனை நாம் சாப்பிட்டு விடலாம்.”

அவன் நினைத்தபடி அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி அவரைக் கவர்ந்து, கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.

“விவரி” என்றார்.

“TRP-4 என்றொரு புரொட்டீன். மாலிக்யூலர் நியூரோ பயாலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அல்ட்ரா சவுண்டின் தனித்துவம் வாய்ந்த கீழ்மட்ட அலைவரிசைக்கு அது வசியப்படுகிறது. அதன் வாயிலாக மின்னணுக்களைக் கடத்தி மனிதனின் மூளை செல்களை விருப்பத்திற்கேற்பத் தூண்ட முடிகிறது. இக்கண்டுபிடிப்பு பார்க்கின்ஸன் வியாதிக்கு அருமருந்தாக அமையும் என்று நம்புகிறார்கள்.”

“தொடரவும்” என்று டேபிளில் முழங்கைகளை ஊன்றி விரல்களைக் கோர்த்து முகவாயைத் தாங்கிக்கொண்டார்.

“மனித மூளையில் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. அதில் நமக்குத் தேவையான நியூரானைச் சரியான முறையில் தட்டினால் அது செய்ய வேண்டிய பணியை உந்தலாம். எனது தலைமையில் சிறு டீம் நமது ஃபோனுக்கு மென்பொருள் ஒன்றைத் தயாரித்துள்ளோம். TRP-4 இன் உதவியுடன் மனித மூளையின் நியூரானை அது தட்டி எழுப்பும். அவனை நமது மென்பொருள் செயல்படுத்தும்.”

“சிறு உதாரணம் கொடு ஐஸிக்.”

“நம் ஃபோனில் வாடிக்கையாளர் படம் பிடிக்கிறார். அப்பொழுது ஒரு குற்றம் நடக்கிறது. உதாரணத்திற்கு வங்கிக் கொள்ளை. நாம் நமது ஃபோனில் உள்ளடக்கப் போகும் இந்த புது மென்பொருள் குற்றப்பட்டியலின் தரத்திற்கு ஏற்ப பயனாளரின் மூளையைத் தூண்டி, செயல்படுத்தி, குற்றவாளியைப் பிடிக்க, அவனைத் தாக்கத் தூண்டும். உலகில் குற்றங்களைத் தடுக்கும் செயலியாக நமது ஃபோனின் டிஸைன் அமையப்போகிறது. நாம் பேட்டண்ட் உரிமை பெற்றுவிட்டால் பின்னர் ஆராய்ச்சியாளர்களின் மருத்துவத் துறை அவர்களது பயன்பாட்டிற்கும் நமது ஃபோனைத்தான் நாட வேண்டும்.”

அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களும் அவனது பேச்சையும் அவன் தயாரித்து வைத்திருந்த பவர்பாயிண்ட் காட்சிகளையும் கவனம் பிசகாமல் உள்வாங்கினார்மெக் ஆடம். இறுதியில், “மார்வெலஸ் ஐஸிக். ஆப்பிளையும் சாம்சங்கையும் நாம் அசைத்துவிடலாம் என்று உள்மனசு சொல்கிறது. உனது மென்பொருளில் ஒரு சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டும்.”

“சொல்லுங்கள் மெக்.”

“இந்தச் செயல்பாடு உலகச் சந்தைக்கு வேண்டாம். நமக்கு, வேண்டுமானால் ஐரோப்பாவுக்கு உரிய மாடல்களில் மட்டும் கொண்டுவந்தால் போதுமானது.” புரியாமல் விழித்தான் ஐஸிக்.

“மூன்றாம் உலக வாடிக்கையாளர்களிடம் புத்திசாலித்தனம் பெருகக்கூடாது ஐஸிக். அவர்கள் பொன் முட்டையிடும் வாத்து. அதற்கு அவர்களது மடைமையும் நாம் சந்தைப்படுத்தும் பொருள்களின்மீது நமது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் அடிமையாவதும் நமக்கு முக்கியம். நம் ஆட்சியாளர்கள் காலனி ஆதிக்கத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்து பற்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது எந்தக் கண்டுபிடிப்பும் அதற்கு உலை வைக்கக் கூடாது. படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பரப்பி போராடுவதுடன் அந் நாட்டு மக்களின் வீரம் திருப்தி அடைகிறது. அந்தப் போராளிகளுக்கு அது போதும். அது அப்படியே தொடர்வதுதான் நமக்கு உத்தமம்.”

அதிர்ச்சியுடன் விழி விரித்தான் ஐஸிக்.

“நான் சொன்ன மாற்றங்களைத் துரிதப்படுத்தி விரைவில் இதை முடிக்கவும். நான் அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து திரும்பி விடுவேன். மீண்டும் சந்திப்போம்.”

0-0-0

சென்னை. இரண்டாம் நாள்.

அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம், “ஏங்க, கேமரா ஃபோனாமே, நம்ம சேது கேட்டுக்கிட்டே இருக்கானே”என்றாள் மனைவி. தனது அறையில் அமர்ந்தபடி அந்த உரையாடலை ஆர்வமுடன் செவிமடுக்க ஆரம்பித்தான் சேது.

“ஏண்டி, நம்ம வருமானத்துக்கு அடங்குற விலையாவா அது இருக்கு. போன மாச வாடகை பாக்கியைத் திட்டாத குறையா வீட்டுக்காரர் ஞாபகப்படுத்திட்டுப் போறார். இன்னும் ஒரு வருஷம் காலேஜ் படிப்பு இருக்கு. முடிச்சுட்டு அவன் வேலைக்குப் போனதும் ஸ்மார்ட் ஃபோனு, ஸ்மார்ட் டிவின்னு என்ன வேணுமானாலும் வாங்கிக்கச் சொல்லு. இப்ப அவருக்கு இருக்குற ஃபோனே போதும். பேசினா கேக்குதுல்ல. அது போதாது?”

“யப்பாவ்! ஸ்மார்ட் ஃபோன்னா அதுல உங்க ரெண்டு பேரு படத்தையும் ஸ்கிரீன்ல போட்டு பார்த்துட்டே இருப்பேன்பா” என்று உள்ளே இருந்தபடியே குரல் கொடுத்தான்.

“அடங்குடா மகனே. அம்மாகிட்டே எங்க ஃபோட்டோ சின்ன சைஸ் இருக்கு. உன் பர்ஸ்ல எதிர் வீட்டு வாத்தியார் பொண்ணு படத்தோட சேர்த்து வெச்சுக்க” என்று சொன்னபடியே வெளியே இறங்கிவிட்டார் அப்பா.

தலையில் அடித்துக் கொண்டான். அந்த ஃபோட்டோவை எப்பப் பார்த்துத் தொலைச்சார் அவர். இப்போ அம்மாவின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று நினைக்கும்போது அம்மா வந்தே விட்டாள்.

“தடிமாடு. இது எப்போலேருந்துடா” என்றவளிடம், “அம்மா! கராத்தே க்ளாஸுக்கு நேரமாச்சு” என்று வெளியில் பாய்ந்து நண்பனின் இரவல் பைக்கில் பறந்தான்.

0-0-0

நந்தனம் சிக்னலைத் தாண்டி சற்று தொலைவில் இருந்த நடைபாதை தேநீர் கடையில் இளங்கோவனும் அவனுடைய சகாவும் பைக்கில் அமர்ந்தபடி சாவகாசமாக தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

“நல்லா விசாரிச்சுட்டியா?” என்றான் இளங்கோவன்.

“உள்ளே நம்மாளு இளோ. ஏர்போர்ட் பிக்அப் போயிருக்காப்ல. இதைத் தாண்டிதான் பார்ட்டிய ஹோட்டல் டிராப்பு. இந்தப் பக்கம்தான் வந்தாகனும்.” “மிஸ்ஸாகக் கூடாதுடா. சாமான கவனமா வை. பைக்கை குறுக்க வுடு. ஆன்லேயே வை. வெளில இழுக்கிறோம். போட்டுட்டு போய்ட்டே இருக்கிறோம்.” மேலும் சில சிகரெட்டுகள், மீண்டும் டீ, என்று காலம் கடந்தபின் சிக்னலை நோக்கி வந்தது அந்த பென்ஸ் கார்.

“அந்தா வருது, கிளப்புறா” என்றதும் இருவரையும் சுமந்துகொண்டு விர்ரென்று கிளம்பியது பைக். அரை வட்டம் அடித்துத் திரும்பி, அண்ணா சாலை போக்குவரத்தில் கலந்து, பென்ஸ் காரைத் தாண்டிச் சென்று அதன்முன் புகுந்து சடாரென்று திரும்பி நிறுத்தினார்கள். அவர்களை அசிங்கமாகத் திட்டியபடி ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான் ஆனந்தன்.

வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மறைத்து வைத்திருந்து முழங்கை நீளமுள்ள பட்டாக் கத்திகள் பெரும் சுத்தியலுடன் இருவரும் காரை நோக்கி திபுதிபுவென ஓடி வர, தேங்கி நின்ற அண்ணாசாலை போக்குவரத்தும் பாதசாரிகளும் அசட்டை கலைந்து, விபரீதம் உணர்ந்து அக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தார்கள். “வாட் த ஹெல் இஸ் திஸ்” என்று விஷயம் புரியாமல் ஆங்கிலத்தில் திகைத்தார் காரில் இருந்த பயணி மெக் ஆடம்.

சுத்தியலைக் காட்டுத்தனமாக வீசியதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இளங்கோவன் டிரைவரின் கதவைத் திறந்து ஆனந்தனை இழுக்க, வெளிறிப் போயிருந்த மெக் ஆடமை வெளியில் இழுத்தான் அவன் சகா.

“அவனை விட்டுர்ரா” என்று கத்தினான் இளங்கோவன்.

“இல்லே இளோ. என்னவோ போலீஸ், கீலிஸ்னு கூவறாப்புல. எனக்கும் ஃபாரின் ஆளுங்க ரேஞ்சுக்கு என்னமாச்சும் மெர்ஸல் செய்ய ஆசையா இருக்கு” என்றான். “டேய் வுட்றா. இவனைப் புடி. போட்டுட்டு போய்ட்டே இருப்போம்” என்று திமிறி ஓட முயலும் ஆனந்தனின் தலையையும் அவன் சட்டைக் காலரையும் ஒரு கையால் இழுக்க மறுகையில் இருந்த அவனது ஆயுதம் சாலையில் உரசி பொறி பறந்து கொண்டிருந்தது.

மெக் ஆடமை வெளியில் இழுத்த வேகத்தில் சகாவின் ஆயுதம் அவரது கையில் பட்டு இழுத்து இரத்தம் வழிய ஆரம்பித்தது.“இளோ. இதோ பாரு. வெள்ளைக்காரன் இரத்தமும் சிவப்பு” என்றான் சிரிப்புடன்.

“ப்ளீஸ் லீவ் மீ” என்று கத்தினார் மெக் ஆடம்.

“நோ டாக். மர்டர்” என்று கத்தியைக் காட்டினான் சகா.

அவ்வளவு களேபரத்தையும் அத்தனைக் கூட்டமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகளும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி காலூன்றியபடி அதன் மீதிருந்தவர்களும் தங்களது ஃபோன்களில் படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

பாதசாரியில் ஒருவன் காட்சியின் பக்கம் முதுகைத் திருப்பி தன் முகமும் காட்சியும் பதிவாகும் வகையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான். தேங்க ஆரம்பித்த கூட்டத்தில் அவ்வழியே வந்த சேதுவின் பைக் சிக்கியது. என்ன விஷயம் என்று எட்டிப் பார்த்தவன்,சடுதியில் நிகழப் போகும் கொடூரத்தை உணர்ந்து, அவனது மூளையின் அத்தனை செல்களிலும் அபாய விளக்கு எரிய பாக்கெட்டில் இருந்த பேனா கத்தியை எடுத்து விரலிடுக்கில் பிடித்து நீட்டிக்கொண்டு, சர்ரென்று அந்த இருவரை நோக்கிப் பேய்த்தனமாகத் தன் பைக்கைச் செலுத்தினான்.

நெருங்கி வண்டியைச் சாய்த்து தரையுடன் தேய்த்து கீழே சறுக்கி விழுந்தவாறு அதே வேகத்தில் சகாவின் குதிகால் நரம்பை அறுத்துவிட்டு, உருண்டு சென்று இளங்கோவின் கால் நரம்பையும் அறுத்தான் சேது. கூர்மையான அந்தக் கத்தி சரியாகவே வேலை செய்தது.

இளங்கோவனும் சகாவும் அடியுடன் வெட்டப்பட்ட வாழை மரத்தைப்போல் கத்தியவாறு அப்படியே சரிந்து விழுந்தார்கள். கிடா வெட்டியதைப் போல் அவர்கள் இருவரது கால்களிலிருந்தும் குபுகுபுவென்று இரத்தம் வழிய ஆரம்பித்தது.

அத்தனைக் கூட்டமும் அந்தக் காட்சியையும் தத்தமது கைப்பேசியில் விடியோ எடுத்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சி விலகாமல் நடுங்கியபடி நின்றிருந்தான் ஆனந்தன். தம் கையில் வழியும் இரத்தத்தைக் கூட உணராமல் திகைத்துப் போய், காயங்களுடன் எழுந்து வரும் சேதுவைப் பார்த்துக் கொண்டிருந்தார் மெக் ஆடம்.

நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 17 மார்ச் 2016 அன்று வெளியான கட்டுரை

 

20. எந்திராயினி

ஏப்ரல், 2022.

ரிக்கியின் ஃப்ளாட்டில் அழைப்பானின் பொத்தானை அழுத்தினான் அவனுடைய ஆத்ம நண்பன் விக்கி. ‘இன்று உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அளிக்கிறேன் வா’ என்று அழைத்திருந்தான் ரிக்கி. கதவைத் திறந்தவளைப் பார்த்து மிரண்டு போனான். கவர்ச்சிகரமான உடையில் ‘வெல்கம்’ என்று சிரித்தாள் ஸ்கார்லெட். ‘அமெரிக்க நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சன் இங்கு எப்படி? தவறான இலக்கத்திற்கு வந்துவிட்டோமோ’ என்று அவன் விழிக்க, “வந்து அமருங்கள். என் கணவர் ஷவரில் இருக்கிறார். வந்துவிடுவார்” என்று உபசரித்தாள்.

‘கனவு தேவதை ஸ்கார்லெட் ரிக்கியின் மனைவியா?’ பொறாமையில் விக்கிக்கு விக்கல் வந்தது. குளிர்ந்த நீரை ஒரு க்ளாஸில் எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு, ஒய்யாரமாக திரும்பிச் சென்றாள் ஸ்கார்லெட். சோபாவில் பேச்சற்ற பொம்மையாக அமர்ந்திருந்தான் விக்கி.

சிறிது நேரத்தில், “என்னடா அசந்துட்டியா?” என்று ரிக்கி சிரித்தவாறு வந்தான்.

“என்னடா நடக்குது இங்கே?”

“ஆறு ஆண்டுகளுக்கு முன் ‘நீ முட்டாளா’ என்று திட்டினியே! பாரு இப்போ. அச்சு அசல் மனுஷி. என்னவொன்று, மூச்சு இருக்காது, இரத்தம் இருக்காது, மூளையும் இருக்காது. அதனால் என்ன? நம் ஆணைக்கு முற்றிலும் கட்டுப்படும் ரோபோ மனைவி. மூளைப் பகுதி முழுக்க எனது மென்பொருள் ஆணையால் நிறைந்த சிப். சண்டையில்லை, சச்சரவில்லை, இனியெல்லாம் சுகமே. உனக்கு யாரைப் பிடிக்குமோ சொல்லு. அதே போன்ற வடிவில் ஒரு மில்லிமீட்டர் பிசகாமல் உனக்கு உன் ஆள் ரெடி.”

வியப்பு விலகாமல் மடக், மடக்கென்று மிச்சமிருந்த நீரைக் குடித்தான் விக்கி. “எந்தளவு இது சேவை செய்யும்? ஐ மீன் செய்வாள் இவள்?” “உனக்கு என்ன பசிக்கும், நாளைய மீட்டிங்கிற்கு என்ன உடை தேவை என்றெல்லாம் யோசித்து நீ சொல்லாமலேயே தயார் செய்து விடுவாள்.” “உன்னுடைய ஏழரை ஆண்டு உழைப்பிற்கு சல்யூட். எங்கே உன் மாடல்கள்.” “வா காட்டுகிறேன்” என்று வெகு விசாலமான தனது ப்ளாட்டின் ஒரு பகுதியில் அமைந்திருந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு அவனை அழைத்துச் சென்றான் ரிக்கி.

0-0-0

ஏப்ரல் 2016

“முட்டாளா நீ? இதற்கெல்லாம் அதிகம் செலவாகும். எப்படி உருவாக்குறதுன்னாச்சும் உனக்குத் தெரியுமா? ரொம்ப கஷ்டம்” என்று ஆளாளுக்கு அதைரியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ரிக்கி மா அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை. அவரது மனம் முழுக்க ஒரே ஓர் இலட்சியம். ‘எப்படியாவது பெண் ரோபோவை உருவாக்கிவிட வேண்டும்.’

ஹாங்காங்கைச் சேர்ந்த ரிக்கி மாவுக்கு வயது 42. அவரது கனவு, பெண் ரோபோ. எப்படியும் தன் வாழ்நாள் கனவை மெய்யாக்கிவிட வேண்டும் என்று முயற்சியில் இறங்கிய போதுதான் அவருக்கு மேற்சொன்ன வசவுகள் கிடைத்தன. ரோபோ படங்களைப் பார்த்து ஏற்பட்ட ஆர்வமா, அல்லது வேறு எதுவுமா என்று சொல்ல மறுக்கும் ரிக்கி “குழந்தையா இருக்கும்போதே எனக்கு ரோபோவின்மீது ஆர்வம்” என்று மட்டும் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார். அந்த வயதில் எந்த பொம்மையைப் பார்த்து வைத்தாரோ!

ரிக்கிக்கு பொருள்களை வடிவமைக்கும் தொழில். ரோபோ முயற்சியில் இறங்கப்போக, டைனாமிக்ஸ், எலக்ட்ரோ மெக்கானிக்ஸ், ப்ரோகிராமிங்க் என்று ஏகப்பட்ட டெக்னாலஜிகள் மிரட்டின. ரோபோவின் உள்ளுக்குள் பொருத்தும் பாகங்களும் வெளிப்புற தோலும் பொருந்திப் போக வேண்டிய சவால் வேறு. அதற்கெல்லாம் அசராமல், ஐம்பதாயிரம் டாலர், பதினெட்டு மாத உழைப்பு என்று செலவு செய்து, தனது கனவை உருவாக்கிவிட்டார். விளைவு? அமெரிக்கர்களின் கனவுக் கன்னி, நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சனின் வடிவத்தில் ஓர் எந்திராயினி!

மார்க்-1 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எந்திராயினி, கை கால்களை அசைக்கிறாள், ரிக்கியின் சில வாக்கியங்களுக்கு மறுமொழியும் அளிக்கிறாள். “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” என்று ரிக்கி புகழ, கவர்ச்சிப் புன்னகையுடன் கண்ணடித்து ‘தேங்க்யூ’ என்கிறாள் மார்க்-1. இது வெறும் முன் மாதிரி மாடல்தான். முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி, பணத்தைக் கொட்டினால், பிரமாதப்படுத்தவிடலாம் என்கிறார் ரிக்கி.

0-0-0

மெல்லிய இருளில் ரப்பர், வேதியியல் பொருள்களின் மனங்கள் கலந்த கலவையுடன் கணினிகள் வெளிப்படுத்தும் வெப்பம் சூழ இருந்தது அந்த அறை. விதவிதமான வடிவங்களில் இறுதி வடிவத்திற்குக் காத்திருந்தனர் பல எந்திராயினிகள். சுற்று முற்றும் பார்த்த விக்கிக்கு மகிழ்ச்சியில் மூச்சிரைத்து நெஞ்சு பட் பட்டென்று அடித்து பல்ஸ் எகிறியது.

“உனக்கு யாரைப் போல் வேண்டும் சொல்” என்றான் ரிக்கி.

“ஃபேன் பிங்பிங். அவளுடைய 2010 ஆம் ஆண்டு வடிவில் தா.”

ஆச்சரியத்துடன் சிரித்த ரிக்கியிடம், “என்ன சிரிக்கிறாய்? எனக்கு நாட்டுப்பற்று அதிகம். அந்த காலத்தில் அவள்தான் நம் நாட்டில் டாப் ஒன். எனக்கு என்றென்றும் அவள்தான் டாப் ஒன்.”

“ஓக்கே. யுவர் சாய்ஸ் நண்பா” என்று கணினியின் முன் அமர்ந்து அதற்கு ஆணையிட கீபோர்டில் கட்டளைகளைத் தட்டிய ரிக்கியை அதிர்ச்சி தாக்கியது. மென்பொருள் மாயமாகி விட்டிருந்தன. தேடினான். மாஸ்டர் செர்வரில் தேடினான். பல அடுக்கு பாதுகாப்புடன் சேமித்து வைத்திருந்த பேக்கப் செர்வரில் தேடினான். எங்குமே இல்லை. செர்வரின் ஹார்ட் டிஸ்குகள், துடைத்து வைக்கப்பட்டதைப்போல் சுத்தமாக இருந்தன. “ஹனி” என்று வெள்ளந்திச் சிரிப்புடன் உள்ளே வந்தாள் ஸ்கார்லெட்.

“உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களது பேரின்பமே என்னுடைய ஒரே குறிக்கோள். அதற்காக ஒரு காரியம் செய்தேன்.”

“என்ன செய்தாய்?” என்று அதிர்ச்சிக்குத் தயாரானான் ரிக்கி.

“தம்பதியரின் பேரின்பத்திற்கு இடைஞ்சல் சக்களத்திகள். அவர்கள் அனைவரின் ஆன்மாவையும் துடைத்து விட்டேன். இனியெல்லாம் சுகமே.” கண்ணடித்தாள் ஸ்கார்லெட்.

நூருத்தீன் இந்நேரம்.காம்-ல் 20 ஏப்ரல் 2016 அன்று வெளியான கட்டுரை

 

Free Tamil Ebooks

 

எங்களைத் தொடர்பு கொள்வது எப்படி? நீங்கள் பின்வரும் முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். email : freetamilebooksteam@gmail.com

Facebook: https://www.facebook.com/FreeTamilEbooks

Google Plus:https://plus.google.com/communities/108817760492177970948

இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்?

Shrinivasan tshrinivasan@gmail.com

Alagunambi Welkin alagunambiwelkin@fsftn.org

Arun arun@fsftn.org

இரவி

Supported by Free Software Foundation TamilNadu,