அருஞ்சொல் அகராதி
ந.சி. கந்தையா 


1. அருஞ்சொல் அகராதி

2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)

3. அகம் நுதலுதல்

4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை


அருஞ்சொல் அகராதி

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : அருஞ்சொல் அகராதி
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

அருஞ்சொல் அகராதி


பா.எண்

  அ - சுட்டு 45
  அகப்பகை - உட்பகை 55
  அகம் - மனம் 15, 65
  அகற்றும் - அகலமாக்கும், போக்கும் 3, 60
  அங்கம் - அவயவம் 94
  அங்காத்தல் - வாய்திறத்தல் 23
  அஞ்சல் - பயப்படல் 5, 22, 23, 42, 55, 69, 73, 79, 94
  அச்சுறுத்து-பயமுறுத்து 63
  அடங்கி -ஒதுங்கி 101
  அடிகள் - ஆசிரியன் 27
  அணிகலம் - ஆபரணம் 13
  அணியது - கிட்ட இருந்தது 36
  அந்தப்புரம் - அரசன் தேவி இருக்கும் தனியறை 26
  அம்மா-அசை, ஆச்சரியத்தை உணர்த்தும் ஓர் இடைச்சொல் 15, 46, 64, 68
  அமைச்சு - மந்திரி, மந்திரித் தன்மை 45
  அயலான் - அயலே உள்ளவன் 82
  அயில் - உணவு 86
  அயின்று -உண்டு 38, 86
  அரிது - அருமையுடைத்து, கூடாது, இல்லை 8, 32, 54, 68, 70
  அரியன்-அருமையுடையவன் 46
  அரிப்பரித்தல் - அரித்துப் பார்த்தல் 9
  அருமை - இலகுவில் பெறமுடியாதது 53
  அரும்பு - மொட்டு 37
  அருள் - கருணை, இரக்கம் 67, 87
  அலன் - அப்படி அல்லாதவன் 30
  அல்ல - அல்லன 11, 69, 70, 75
  அல்லவர்க்கு - அல்லாதவர்களுக்கு 28
  அல்லன - தீயன, நன்மையல்லாதவை 49, 79, 92
  அல்லால் - அல்லாமல் 97
  அலைத்தல் - வருத்துதல் 30
  அவமதிப்பு - அவமானம் 53
  அவாம் - விரும்பும் 24
  அவை - சபை 4, 6, 8, 26, 48
  அழகு - வடிவு, உரு 13
  அழி - கெடு 15, 42, 66, 80
  அழுகி - கெட்டு 43
  அள - அளத்தல், வரையறுத்தல் 102
  அளி - அன்பு, இரக்கம் 28,71
  அற - மிகுதியை உணர்த்தும் உரிச்சொல் 61
  அறங்கடை - பாவம் 65
  அறம் - தருமம், நல்லொழுக்கம், இல்லறம் 2,10
  அறு-இன்மை, அற்றுப்போகுதல் 23, 24
  அறன் - அறம் 70, 77
  அறவோர் - நல்லொழுக்கமுடையோர் 27
  அறி - உணர் 5, 51, 52, 101
  அறிமடம் - அறிந்தும் அறியான், போலிருத்தல் 72
  அறிவு - அறிவு விளக்கம் 3, 32, 45, 94
  அறைந்து - அடித்து 95
  அனல் - நெருப்பு 59
  அனைத்து - முழுவதும் 55, 58
  அனைவோர் - எல்லோரும் 27
  அன்பு - ஆதரவு 67, 81, 87
  அன்றால் - அன்று, ஆல் அசை 49
  அன்றி - அல்லால் 24
  அன்று - அல்ல 12, 25, 32, 93
  அன்றே - அப்பொழுதே, அல்லவோ 17, 19, 36, 37, 57, 60, 74, 77
  அன்னார் - ஒத்தவர் 78
  அஃது - அதனை 5,88
  ஆ - ஆகவென்பதின் விகாரம்,பாதை 29
  ஆ - பசு இரக்கக்குறிப்பு 29,68
  ஆகா - ஆகமாட்டா 75,97
  ஆகும் - ஆம் 34, 58, 65, 82
  ஆகுலம் - ஆரவாரம் 6, 72
  ஆகுவ - உண்டாவன 86
  ஆக்கம் - செல்வம் 17, 64, 69, 75
  ஆங்கு - அவ்விடம்,போல்,ஓர் இடைச்சொல் 9, 23, 38, 41, 44, 52, 62, 70, 72, 90, 101
  ஆடி - மூழ்கி 88
  ஆண் - ஆண்மை 24,28
  ஆதல் - ஆகுதல் 35
  ஆம் - ஆகும், அசை 10, 28, 61, 71
  ஆயுள் - வாழ்நாள் 49
  ஆரும் - நிறைந்த 38
  ஆர் - யார் 72
  ஆர்வலர் - அன்பர் 47
  ஆவன - ஆகுவன 30, 49, 98
  ஆள் - செய் 52
  ஆள்வினை - முயற்சி 52
  ஆறலைத்தல் - வழிபறித்தல் 30,92
  ஆறு - வழி 30, 60, 90, 92, 96
  ஆற்றல் - வலி 41
  ஆற்று - செய், ஆறப்பண்ணு 56, 91, 101
  இகல் - வன்மை 44
  இகழ் - பழி 35, 44, 67
  இங்கு - இவ்விடம் 97
  இசையாத - பொருந்தாத
  இடித்து - நெருங்கிக் கூறி 31, 45
  இடை - இடம், நடு, சமயம் 17, 57, 63
  இணைவிழைச்சு - புணர்ச்சி 89
  இயக்கம் - அசைவு 87
  இரந்து - கேட்டு 12, 16
  இரவு - இராத்திரி 90
  இரா - அஃறிணை ஒருமை எதிர்மறை 64
  இல் - மனைவி வீடு 8, 87
  இலம்பாடு - வறுமை 10
  இலள் - இல்லாதவள் 10
  இவறன்மை - ஈயாததன்மை 12
  இழை - ஆபரணம் 3
  இளையாள் - இலக்குமி 36
  இறுதல் - முடிதல், முறிதல் 49, 100
  இறுவரை - முடிவு காலம் 41, 49
  இறை - அரசன், திறைப் பொருள் 27, 29
  இறைப்ப - கழிப்பர் 90
  இறைமகன் - அரசன் 33, 44
  இறைமாட்சி - அரசப்பண்பு 28
  இறை மாண்டார் - அரசப் பண்புடையார் 47
  இன் - இனிமையின் விகாரம் 6,37,41,74
  இன்பு - இன்பம் 75
  இன்று - இல்லை 5, 73, 74, 91, 102
  இன்னார் - பகைவர் 59
  ஈகை - கொடை 39
  ஈத்து - கொடுத்து 6
  உடைந்து - வருந்தி 8
  உடைத்து - பெற்றது 5
  உட்கு - அச்சம் 8
  உண்ணா - உண்டு 31
  உத்தி - மனம் 102
  உமிழ்ந்து - கக்கி 80
  உய்த்து - செலுத்தி 5,9
  உயிர்ப்பர் - மூச்சுவிடுவர் 43
  உயிர்நிலை - உடம்பு 87
  உயிர்ப்பு - மூச்சு 31
  உரிமை - அன்பு, சொந்தம் 62
  உரை - சொல் 21
  உலகு - பூமி, பூமிலுள்ளார் 51, 55
  உலந்தது - முடிந்தது 57
  உலம்பல் - முழங்கல் 72
  உலைதல் - அசைதல் 51
  உலை - கொல்லனுலை 14
  உவப்பு - மகிழ்ச்சி 26
  உளி - தச்சுளி 14
  உளைவு - வருத்தம் 91
  உள்ளும் - நினைக்கும் 64
  உறா - அடையா 38
  உறுதல் - பொருந்துதல் 4,25
  உறு - மிக 70
  உறுத்து - அலங்கரித்து 4, 63
  உறைப்ப - படியும்படி 21, 85
  உன்னுதல் - விரும்பல் 40
  ஊக்கல் - செலுத்தல் 90
  ஊங்கு - மிகுதி 2
  ஊத்தை - அழுக்கு 23
  ஊழ் - விதி 23, 50
  ஊற்றம் - ஆதாரம் 50
  ஊன்றல் - நடல் 65
  ஊன் - இறைச்சி 40
  எஞ்சல் - சுருங்கல், குன்றல் 71
  எண்மையன் - எளியன் 46
  எத்துணை - எவ்வளவு 5
  எப்பாலும் - எவ்விடத்தும் 98
  எய்தல் - அடைதல் 26
  எய்த்து - வருந்தி 9
  எய்தாமை - உண்டாகாமை 60
  எய்யாமை - அறியாமை 57
  எயிறு - பல் 30
  எயிறலைத்தல் - பற்கடித்தல் 30
  எல்லி - இரவு 92
  எவன் - என் 25
  எழில் - அழகு 82
  எள்ளல் - இகழல் 48
  எறிகால் - வீசும்காற்று 50
  எற்று - எவ்வளவு 15
  என - போல 98
  எனைத்துணைய - எவ்வளவு 10
  ஏக்கழுத்தம் - பெருமிதம் 39
  ஏதிலான் - அயலான் 8
  ஏந்து - சிறந்த 82
  ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு 63
  ஏர் - அழகு 78
  ஒண்மை - அறிவு, 70
  ஒடுங்கு - குன்று 42
  ஒருப்படல் - சம்மதித்தல் 61
  ஒரீஇ - நீங்கி 33
  ஒல்கல் - அடங்கல் 72
  ஒழிதல் - தவிர்தல், விடல் 42
  ஒழுகுதல் - நடத்தல் 70
  ஒழுக்கல் - விடுதல் 49
  ஒறுத்தல் - தண்டித்தல் 74
  ஒற்று - ஒற்றன், மறைந்து அறிபவன் 32
  ஒற்கம் - அடக்கம் 23
  ஓதல் - சொல்லுதல் 72
  ஓர்தல் - அறிதல் 32
  ஓம்புதல் - பாதுகாத்தல் 9
  கஞ்சுகம் - சட்டை 93
  கடப்பாடு - கடமை 65
  கடவ - தகுவ,காரியம் 71
  கடு - நஞ்சு, கைப்பு 59, 80
  கடும்பகல் - நடுப்பகல் 8
  கடை - இடம், வாயில், இறுதி 2, 26
  கடைத்தலை - தலைவாயில் 77
  கடைப்பிடி - மறவாதிரு, நினை 47
  கட்டுரை - உறுதிமொழி 31
  கண்கூடு - காட்சி அளவை 34
  கண்ணறையன் - கண்ணோட்டமில்லாதவன் 67
  கண்ணோட்டம் - இரக்கம் 56
  கண்பாடு - நித்திரை, கண்ணுறக்கம் 91
  கதுவுதல் - கவருதல் 79
  கந்து - யானைகட்டும் தறி 26
  கம்மியன் - கம்மாளன் 68
  கயம் - ஆழம் 54
  கரி - சான்று, எடுத்துக்காட்டு 51
  கருந்தனம் - பொன் 9
  கருத்து - மனம், எண்ணம் 15
  கருமம் - தொழில், காரியம் 53
  கருவி - ஆயுதம், கத்தி 56
  கலன் - ஆபரணம் 13
  கலைமகள் - சரசுவதி, நாமகள் 7
  கவர்தல் - பறித்தல் 82
  கவல் - கவலை, துன்பம் 2
  கவளம் - வாயளவு உணவு 38
  கவயமா - காட்டுப் பசு 75
  கழகம் - படிப்பிக்குமிடம், சபை 23
  கழி - மிகுதி 43
  களி - மகிழ், செருக்கு 14
  களிறு - யானை 26
  களைகண் - ஆதரவு 40
  கறுப்பு - கோபம், குற்றம் 58
  கற்பதரு - கற்பக மரம் 37
  கற்பு - படிப்பு, பெண்கள் கற்பு 4,12
  கற்றா - கன்றுடைய பசு. றகரம்வலித்தல் விகாரம் 29
  கனம் - பாரம் 14
  கனிந்த - பழுத்த 37
  காதலித்த - விரும்பிய 46
  காதன்மை - அன்புடைமை 47
  காந்தையர் - மகளிர், பெண்கள் 82
  கால் - காலம், காற்று 3, 50
  காறும் - வரையும் 49
  கான்முளை - பிள்ளை, குழந்தை 51
  கிழத்தி - மனைவி 80
  கிழமை - உரிமை, உரியவள் 47
  கிளை - சுற்றம் 38
  கீழ்மக்கள் - மூடர் 34
  குடில் - சிற்றில், குடிசை 87
  குடிமை - குலப்பிறப்பு 65
  குமிழி - கொப்புளம் 1
  கும்பி - நரகம் 88
  குய்யம் - பொய், வஞ்சகம் 57
  குலமகள் - கற்புடையவள் 27
  குலைகுலைதல் - மிகவுஞ்சிரித்தல், பதறுதல் 90
  குலைவது - நடுங்குவது 94
  குவை - திருட்சி, குவியல் 39
  குழை - காதணி 14
  குறளை - புறங்கூறல் 60
  குறி - அடையாளம் 35
  குன்றல் - கெடுதல், குறைதல் 78
  கூடம் - சம்மட்டி 14
  கூழ் - பயன், உணவு 72
  கேண்மை - நட்பு 47
  கேள் - காதலன், சுற்றம், 82, 83
  கை, சிறுமை 25
  கைத்து - செல்வம் 11
  கைம்மா - யானை 45
  கைமையர் - கணவனை இழந்தமகளிர் 66
  கைவரல் - இணங்கிவரல் 46
  கொடிறு - கன்னம் 73
  கொல்லுலை - கொல்லனுலை 14
  கொழுநன் - நாயகன் 27
  கொண்டான் - கணவன் 81
  கொன் - பயனில்லாமை 67
  கோ - அரசன் 22
  கோது - குற்றம், சக்கை 33
  கோமான் - அரசன் 29
  கோறல் - கொல்லுதல், அழித்தல் 35
  சலித்தல் - இளைத்தல் 37
  சழக்கு - ஓசைக்குறிப்பு, நிலைதவறல் 96
  சால்பு - நிறைவு, நீதி 33
  சிங்கி - ஓர் நஞ்சு 59
  சிந்தும் - கெடுக்கும் 51
  சிதை - கெடு 78
  சிறைப்புறம் - ஒதுக்கிடம் 32
  சின்னீர - சிறுபொழுது அற்பத்தன்மையுடைய 88
  சீர் - சிறப்பு 13
  சுடர் - விளக்கு 23
  சுழித்தல் - வெறுத்தல் 40
  செங்கோன்மை - அரசநீதி 32
  செயிர்த்தல் - கோபித்தல் 71
  செவ்வி - சமயம் 46
  செறித்தல் - இறுக்கல் 99சேயார் - தூரத்தார் 95
  சேயத்து - தூரத்தது 36
  சேறல் - செல்லல் 77
  சொற்ற - சொல்லிய 21
  ஞாட்பு - போர் 42
  ஞாலம் - பூமி, உலகத்திலுள்ள 11
  தகர்தல் - உடைதல் 14
  தகை - அழகு 26
  தகையார் - தகுதியுடையார்,பெண்கள் 18
  தணிவு - குறைவு, அடங்கல் 36
  தபுதல் - கெடுதல் 96
  தப்பி - தவறி 38
  தமிழோர் - தமிழறிந்தோர் 7
  தரு - மரம் 37
  தலம் - இடம் 9
  தவம் - நோன்பு, விரதம் 62
  தழல் - தீ, நெருப்பு 64
  தழும்பு - வடு 76
  தளர்தல் - மெலிதல் 40
  தாக்கணங்கு - தாக்கி வருத்தும் தெய்வப் பெண் 24
  தாழ் - தாழ்ப்பாள் 99
  தாள் - முயற்சி 65
  திரிபு - வேறாதல், மாறுபாடு 102
  திறம் - கூறுபாடு, பங்கு, குணம்,பலம், பலவகை 22
  தீங்காய் - இனிப்பாகிய காய் 37
  தீட்டல் - எழுதல், தோற்றுவித்தல் 39
  துஞ்சல் - உறங்கல் 53
  தொடங்கல் - துவங்கல் 3, 92
  துணை - அளவு 5
  துமி - வெட்டு 71
  தும்பை - ஓர் பூ 43
  துய்த்தல் - அனுபவித்தல் 78
  துலை - தராசு 17
  துறைபோதல் - முடிவறிதல் 77
  தூ - மாசின்மை 50
  தூக்கல் - நிறுத்தல் 17
  தூர்த்தர் - கெட்ட நடத்தையுடையவர் 89
  தூற்றி - பலரறியக் கூறி 20
  தெரிதந்தும் - அறிந்தும் 32
  தெவ் - பகை 89
  தெளிதல் - துணிதல் 102
  தென்புலத்தார் - பிதிர்கள் 22
  தேய்தல் - கெடுதல், குறைதல் 63
  தேற்றார் - தெளியார், அறியார் 54
  தொடி - வளை 83
  நச்சு - நஞ்சு, விடம் 56
  நடுவன் - இயமன் 57
  நமரங்காள் - நம்மவரே 1
  நயத்தகு - விரும்பத்தகுந்த 71
  நயன் - மகிழ்ச்சி, மெல்லிய 82
  நல்குரவு - வறுமை 67
  நல்கூர்தல் - வறுமைப்படல் 61
  நல்லாறு - நல்லொழுக்கம் 61
  நவை - குற்றம் 6
  நறுவிய - இனிய 80
  நனவு - தெளிவு, விழிப்பு 102
  நனி - மிகுதியுணர்த்தும் உரிச்சொல் 17
  நாகரிகம் - முகமன், பேச்சு 71
  நாண்மலர் - புதுப்பூ 37
  நாள்வாயும் - நாடோறும் 7
  நாறும் - வீசும் 43
  நிதி - பொருள் 39
  நிதியம் - நிதி, செல்வம் 29
  நீப்பு - நீக்கல் 8
  நெறி - வழி ஒழுக்கம் 76
  நொய்ய - அற்பமாகிய 96
  நோலாதார் - தவஞ் செய்யாதார் 12
  நோனாமை - பொறுக்காமை, தரிக்காமை 92
  படை - ஆயும், சேனை 28
  பணி - தொழில் விதிக்கப்பட்ட 101
  பணிதல் - வணங்கல் 36
  பதறுதல் - நடுங்குதல் 90
  பயத்தல் - கொடுத்தல் 15
  பயம் - பயன் 73
  பரபரப்பு - விரைவு 90
  பரிதல் - விரும்பல் 9
  பலம் - பழம் 37
  பற்றல் - பிடித்தல் 101
  பாகு - யானைப்பாகன் 45
  பாடு - பெருமை 18
  பாராட்டு - கொண்டாடு 85
  பாரின்பம் - உலக இன்பம் 88
  பால் - பக்கம், இடம் 8, 24
  பாழ் - வீண் 88, 90
  பாற்று - தக்கது 71
  பித்து - பைத்தியம் 11
  பிரான் - கடவுள் 1
  பீடு - பெருமை 80
  பீழை - துன்பம் 3
  புகல - சொல்ல 33
  புக்கில் - வீடு 87
  புணை - தெப்பம் 44
  புண்ணியம் - நல்வினை 28
  புலம் - இடம் 22
  புலால் - ஊன் 87
  புலியேறு - ஆண்புலி 61
  புறங்கடை - தலைவாயில், உலகில் 2
  புறந்தரார் - தளரார் 87
  புறம்பு - வெளி, வேறு 93
  புனம் - காடு 61
  புன்மை - இழிவு 87
  பூஞை - பூனை 26
  பூசி - தடவி 31
  பூண் - ஆபரணம் 18
  பூத்தல் - உண்டாதல் 6
  பூவாமை - உண்டாகாமை 6
  பூழ்க்கை - யானை 26
  பெண்ணலம் - பெண்ணின் அழகு 24
  பெருமூச்சு - நெட்டுயிர்ப்பு 34
  பெற்றிமை - தன்மை, குணம் 84
  பேடு - அலி 24
  பேண் - ஓம்பு, பாதுகா 84
  பேதைமை - அறியாமை 84
  பேறு - பயன், பெறல் 81
  பைங்கண் - பசுமையாகிய இடம் 61
  பைஞ்கூழ் - பயிர் 61
  பைம்பூண் - பசுமை ஆபரணம் 27
  பொடித்தல் - சிலிர்த்தல் 59
  பொதிதல் - மூடுதல் 56
  பொதுமகள் - விலைமகள் 66
  பொம்மல் - பொலிவு 63
  பொறி - மெய் வாய் கண்மூக்குச்செவி, வரிகள் 61
  பொற்றொடி - பொன்வளை 83
  போகம் - இன்பநுகர்ச்சி, சேர்க்கை 36
  போக்கு - குற்றம் 24
  போதம் - ஞானம், மெய்யறிவு 87
  போர்வை - சட்டை, வேடம் 93
  மடம் - அறியாமை 3
  மடநல்லார் - அழகிய பெண்கள் 63
  மடி-பசுவின் முலைமேற்றிரள் 29
  மடு - ஆற்றினுட் பள்ளம், குளம் 54
  மடுத்தல் - கொள்ளல், சூழல்,உண்டல் 34, 64
  மண்டெரி - மிக்கதீ 34
  மண்ணுறுத்தல் - அலங்கரித்தல் 4
  மதம் - மதநீர், செருக்கு 45
  மயல், மயக்கம் 50
  மலரவன் - பிரமன் 7
  மல்லல் - வளம், நிறைந்த 4
  மறலி - இயமன் 42
  மன் - அசை, மிகுதி, இடைச்சொல் 71
  மனை - வீடு 10
  மனைக்கிழத்தி - வீட்டுக்குரியவள் 80
  மனைத்தக்காள் - வீட்டுக்குத் தகுதியானவள், மனைவி 9
  மன்ற - தேற்றம், திண்ணமாக 41
  மன்று - அம்பலம், சபை 1
  மன்பதை - மக்கட்கூட்டம் 28
  மா - விலங்கு 23
  மாகம் - ஆகாயம், மேகம் 39
  மாசு - களங்கம் 58
  மாசுணம் - பெரும்பாம்பு 34
  மாட்சி - பெருமை 28
  மாண்டார் - மாட்சியுடையார், ஆழ்ந்தவர் 47
  மாத்தகைய - பெருமையுடைய பெண்கள் 26
  மாய் - கெடு 7மானம் - பெருமை, தன்னிலையிற்றாழாமை 41
  மிகன் மக்கள் - மேலோர்,உயர்ந்தவர் 26
  மீக்கொள் - மேற்கொள்கின்ற, தற்பெருமை 24
  மீச்செலவு - வரம்புகடந்து நடத்தல் 17
  முகத்த - முகத்தின் கண், போர்க்களம் 39
  முடித்து - சூடி 81
  முடைநாற்றம் - தீய நாற்றம் 43
  முதுக்குறைவு - பேரறிவு 33
  முயக்கு - தழுவல் 36
  முயற்றின்மை - முயற்சியின்மை 50
  முரண் - பகை, வலிய 42
  முறை - ஒழுக்கம் 48
  முறையிடுதல் - முறைப்படுதல் 32
  முற்றிழாய் - தொழில் முற்றிய ஆபரணமுடையாள் 3
  மூத்தாள் - மூதேவி 36
  மூலம் - வேர், ஆழம், பலம் 52
  மேற்கொள்ளார் - ஏற்றுக் கொள்ளார் 53
  மேலையார் - மேலோர் பெரியோர் 97
  மொய்ம்பு - வலிமை 42
  யாக்கை - உடம்பு 1
  யாப்பார் - கட்டவல்லவர் 55
  வசை - குற்றம் 97
  வட்கார் - பகைவர் 57
  வண்மை - வளமை, கொடை 37
  வயம் - வீரம், வெற்றி 28
  வயத்ததோ - இடத்ததோ,வசத்ததோ 45
  வரம்பு - எல்லை 91
  வல்லை - விரைவு 69
  வழுக்காது - வழுவாமல் 60
  வழுத்து - துதி 1
  வளம் - செழுமை, திறமை 4
  வள்ளன்மை - கொடுக்குங் குணம் 67
  வறிது - பயனின்மை, வீண் 48
  வாக்கு - சொல் 69
  வாய்ந்த - பொருந்திய 82
  வாய்மை - மெய்மை 62
  வாளா - சும்மா 57
  விதிர்ப்பு - நடுக்கம் 6
  வியம் - பெருமை 92
  விழலர் - அறிவிலார் 43
  விளிவு - சாவு 43
  விறல் - வீரம், வெற்றி 22
  வெங்காரம் - ஓர் மருந்து 59
  வெய்து - சூடுடையது 43
  வெரீஇ - அஞ்சி 45
  வெறுக்கை - செல்வம் 4
  வெற்று - வெறுமையின் விகாரம் 7
  வெளிது - வெண்மையுடையது 33
  வெள்ளம் - பிரளயம், ஓர் எண் 26
  வெஃகல் - விரும்பல் 65
  வேட்டு - வேள்வி செய்து 97
  வேண்டல் - விரும்பல் 13
  வேத்தவை - அரசசபை தகரம் வலித்தல் விகாரம் 26
  வேந்து - அரசன் 30
  வேய்ந்த - கட்டிய 37
  வேர்ப்பார் - கோபிப்பார் 56
  வேர்ப்பு - கோபம் 56