பிள்ளையார் சிரித்தார்
கே. பி. நீலமணி


 

உள்ளடக்கம்

1. பிள்ளையார் சிரித்தார்

2. ஓடிப்போன ராஜா

3. சிதம்பர ரகசியம்

4. சுதந்தர மிட்டாய்

5. கார்த்திகேயன் கனவு

6. மாயக்கண்ணன்

7. பொன் வாத்து


1 பிள்ளையார் சிரித்தார்

* * *

மிகச் சிறிய ஊராக இருந்தாலும், சங்கரபுரம் சிறந்த புண்ணிய சிவஸ்தலம். அழகான ஊருக்குச் சோபை அளிப்பதேபோல், மத்தியில் ஏகாம்பரேசுவரருடைய ஆலயம் எழும்பி நின்றது. ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற்போல் வளமான மணியாறு ஒடிக் கொண்டிருந்தது.

அநேகமாய் ஏழைச் சர்மாவைத் தவிர அந்த ஊரில் எல்லோருமே சுக ஜீவனம் செய்பவர்கள் என்றே சொல்ல வேண்டும். அக்கிரகாரத்தின் கோடியிலே வளைவு திரும்பியதும் காணப்படும் பாதி வேய்ந்த கூரை வீடுதான் சர்மாவினுடையது. தினமும் அவர் உஞ்சவிருத்தி செய்து சம்பாதித்துக் கொண்டு வரும் அரைச் செம்பு அரிசியை எதிர்பார்த்து, அதனுள் ஐந்து ஜீவன்கள் அதாவது, அவரது தர்ம பத்தினியைத் தவிர, அதிக ஏற்றத்தாழ்வான வயதுகளுக்கு இடையே வந்து அவதரித்த நான்கு குழந்தைகள்-வாழ்ந்து வந்தன.

ஐம்பத்து ஆறாவது வயதை அணுகிக்கொண்டிருக்கும் சர்மா அபாரமான தெய்வ பக்தி கொண்டவர்; பூஜை செய்ய ஒரு நாள்கூடத் தவறமாட்டார்; காலையிலும் மாலையிலும் சிவதரிசனம் செய்யாமல் நீர் அருந்துவதுகூடக் கிடையாது. அவருக்கு வாய்த்த மனைவியோ சர்மா அவர்களுக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்த காலத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் இந்தப் பத்தினித் தெய்வம். 'இல்லை' என்று தன் கணவர் அறிய அவள் குறை ஏதும் வைட்பதில்லை.

தானும் குழந்தைகளும் துளசி ஜலத்துடன் இருக்க நேர்ந்தபோதும்கூட, மனைவியால் உபசரிக்கப்பட்டு வயிறார உண்டுவந்த சர்மாவுக்கு வீட்டின் சூழ்நிலையே தெரியாமல் இருந்து வந்தது ஆச்சரியம் இல்லை அல்லவா? ஆனல், ஒரு நாள் அதை அவரும் உணரும் சந்தர்ப்பம் ஒன்று எப்படியோ ஏற்பட்டுவிட்டது!

சர்மா துடிதுடித்துப் போனார். 'இப்படி எத்தனை நாள்கள் என் பொருட்டுத் தாயும் குழந்தைகளும் பட்டினி கிடந்திருப்பார்களோ! என்று எண்ணிப் பார்க்கக்கூட அவர் மனம் தாளவில்லை. தம்மையும் மீறி 'ஹோ' வென்று அழுதுவிட்டார். அவரது அந்த வேதனைக் கண்ணிர் வெண்ணீறணிந்த கைலைநாதனது மேனியைக் கொதிநீராகப் பட்டுப் பொசுக்கியிருக்க வேண்டும். இனித் தாமதித்தால், தம் பக்துன் உயிர் - வாடிப்போகும் என்பதை உணர்ந்தார் பரமன்.

ஆனால், பரமனுக்கு சர்மாவைப் போலவே, நாள் தவறாமல், இருமுறை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை வாரி இறைத்துவிட்டுச் செல்லும் வேறு ஒரு பக்தனும் உண்டு. அவன் பெயர் தனபாலன். பெயருக்கேற்றபடி அவனிடம் மிகுந்த செல்வம் மண்டிக் கிடந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் பேராசை அவனை விடவில்லை. தர்மம் என்கிற வார்த்தைக்கே அவனுக்குப் பொருள் தெரியாது. மகா லோபி அவன் கைக்குச் சென்ற பொருள், காலன் வாயில் விழுந்த உயிர்போல, ஒரே ஐக்கியம் தான்!

ஆயினும், செல்வத்தின்மீதுள்ள பேராசையால் அதை மீண்டும் மீண்டும் பெருக்க எண்ணி, தெய்வத்தினிடம் அவன் நம்பிக்கை வைத்தான். 'ஆயிரம் ரூபாய்க்குத் தான் ஆரம்பித்த வியாபாரத்தை லட்சத்திற்குக் கொண்டுவந்த தெய்வம், நம்பினால் ஏன் ஒரு கோடி வரைக்கும் தன்னைக் கொண்டுபோய் விடாது?' என்கிற உள்ளச் சபலத்தினால் ஏற்பட்டதுதான் அவனுடைய நாளுக்கு இருமுறை கோயில் விஜயமும், பைசா பைசாக் கர்ப்பூர்ம் வாங்கித் தவறியும் கொளுத்திவிடாத கடவுள் பக்தியும்!

அன்று சர்மா வழக்கம்போல், ஒரு குரல் உள்ளம் உருகி அழுதுவிட்டுச் சென்ற பத்து நிமிஷங்களுக்கு எல்லாம் தனபாலன் உள்ளே துழைந்தான். அப்போது தற்செயலாய்த் தெய்வங்கள் இரண்டும் கர்ப்பக் கிருகத்தில் இருந்து பேசிக்கொள்வது தனபாலன் செவிகளில் விழவே, 'சட்' டென்று சனிபகவான் சந்நிதிப் பக்கமாக வந்து ஒளிந்துகொண்டபடி தெய்வச் சம்பாஷணையை உன்னிப்பாகக் கேட்டான்; கடவுளுக்குத் தெரியாமல் ஒட்டுக் கேட்பதாகத்தான் அவன் நினைப்பு!

"ஏண்டா கணபதி, அந்தச் சர்மாதான் இப்படித் தினம் பசியும் பட்டினியுமாகக் கிடந்து கூண்டோடு நொந்து மாய்கிறானே! அவனுக்கு இன்னும் நீ ஒரு வழி செய்யக் கூடாதா?" — இது பரமசிவனின் குரல். "செய்யத்தான் போகிறேன், அப்பா! கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கிறேன் என்றால் காலம் வரவில்லை! காத்திருந்தேன். சர்மா பக்குவம் அடைந்துவிட்டான். இப்போது ஒரு நல்ல ஏற்பாடும் செய்துவிட்டேன்" — இது பிள்ளையாரின் குரல்.

என்ன ஏற்பாடு குழந்தாய் அது?"

"வருகிற புதன்கிழமையன்று ஐயாயிரம் ரூபாய் அந்தச் சர்மாவுக்குக் கொடுக்கப்போகிறேன்!"

"அப்படியா? ரொம்பச் சந்தோஷம்! பிள்ளை குட்டிக்காரன். சம்சாரி, பிழைத்துப் போகட்டும்!"

இதற்குள் எங்கோ வேறு மனித அரவம் கேட்கவே, தெய்வங்கள் இரண்டும் மீண்டும் மெளனிகளாகிவிட்டன. ஆனால், தனபாலன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தெய்வ சம்பாஷணையின் சாராம்சத்தை அறிந்துகொண்டுவிட்ட அவன் மனம், சந்தோஷ மிகுதியால் குதிபோட்டது.

பெரிய தேவரகசியத்தையல்லவா கேட்டுவிட்டான்! சர்மாவுக்குக் கடவுள் கொடுக்கப்போகும் பொருளைப் பற்றி -அதாவது நாளைய விதியைப்பற்றி அல்லவா அவன் அறிந்துவிட்டான்! மனம் கட்டு மீறி அலைந்தது. எப்படியாவது சர்மாவுக்குப் பிள்ளையார் கொடுக்கப்போகும் பணத்தைத் தந்திரமாகத் தான் அடைந்துவிடுவதற்கான குறுக்கு வழிகளில் அவன் மூளை வெகு தீவிரமாக வேலை செய்தது!

'ஏழைச் சர்மாவுக்கு இத்தனை பணம் ஒரேயடியாக எதற்கு?’ என்பது ஒரு காரணம். அப்படியே கிடைத்தாலும், அதை அருமை தெரிந்து தன்னைப் போல் வைத்துக் காப்பாற்றத் தெரியுமா அவருக்கு என்பது மற்றறொரு காரணம்! இறுதியாகத் தனபாலன், ஒரு புதுத் தந்திரத்துடன் சர்மாவின் வீட்டை அடைந்தான். அதாவது, தனபாலன் முன்னதாகவே தன் கைப்பணம் ஆயிரம் ரூபாயைக் கொண்டுபோய்ச் சர்மாவிடம் கொடுத்து விட்டு, "உமக்கு நாளைப் புதன்கிழமை என்ன கிடைக்கிறதோ, அதை நீர் அப்படியே என்னிடம் கொடுத்துவிட வேண்டும்!" என்று ஒரு நிபந்தனை மட்டும் போட்டான்.

இதைக் கேட்ட சர்மா சிரித்தார். "தனபாலா! அன்று அப்படி எனக்கென்ன அதிர்ஷ்டம் அடித்துவிடப் போகிறது? அப்படி அடித்தாலும் அரைப்படிக்கு ஒரு படி அரிசி கிடைக்கலாம். இல்லாவிட்டால் என்னை மாத்திரம் சில நாள் சாப்பிடக் கூப்பிடும் பண்ணையார் அன்று, 'நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து போஜனம் செய்ய வேண்டும்’ என்று அழைக்கலாம்; இரண்டு வாழைக்காய்களுக்கு நான்கு வாழைக்காய்களாக உபாதானம் கிடைக்கலாம். இவற்றை எல்லாம் நம்பி நீங்கள் ஏன் அநாவசியமாக ஆயிரம் ரூபாயைத் துாக்கி எனக்குக் கொடுத்து நஷ்டப்பட வேண்டும்?" என்றார் சர்மா, சூதுவாது அறியாமல்.

ஆனால் தனபாலன் அதை லட்சியமே செய்யவில்லை. அவன் தேவ ரகசியத்தை அறிந்தவனல்லவா? துணிந்து சொன்னான். உமக்கு அதைப்பற்றி என்ன? கிடைத்தால் கிடைத்ததைக் கொடுத்துவிடும். இல்லாவிட்டால் இந்த ஆயிரம் ரூபாயையும் நீர் எடுத்துக்கொண்டுவிடும்" என்றான். தெய்வ வாக்கு ஒரு காலும் பொய்யாகாது என்கிற தைரியம் அவனுக்கு!

குறிப்பிட்ட புதன்கிழமையும் வந்தது. சர்மாவைத் தனபாலன் காலையிலேயே வந்து எச்சரித்துவிட்டான். இன்று நீர் சற்று நிதானமாகக் கவனமாகக் கண்ணைத் திறந்துபடியே தெருவில் நடந்து செல்லும். கீழே ஏதாவ்து துணிமூட்டைபோல் கிடந்தால், ஆசாரத்தை எண்ணி, அதை அலட்சியமாக விலக்கிவிட்டு வந்துவிட வேண்டாம். முன்பின் பரிச்சயமில்லாதவர்கள்கூட, யாராவது பெயரைச் சொல்லி அழைத்தாலும் தயங்காமல் செல்லும்" என்று எல்லா வழிகளையுமே விவரமாக விளக்கினன். ஏனென்றால், வரப்போகிற ஆதாயத்தை எண்ணி, முன்பே துணிந்து முதல் போட்டவனல்லவா அவன்? அந்தப்படியே நடப்பதாக ஒப்புக்கொண்டார் சர்மா. தம்மை நம்பி ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறானே என்கிற விசுவாசம் அவருக்கு.

ஆனால் என்ன ஆச்சரியம்! உஞ்சவிருத்திக்குக் கிளம்பிய சர்மா, ஒரு நாளுமில்லாமல் அன்று மட்டும் சோதனை போல், பிடி அரிசிகூடக் கிடைக்காமல், மிகச் சோர்வுடன் வீடு திரும்பினார். தனபாலன் தெரிவித்ததுபோல் துணி மூட்டைக்குப் பதில் ஒரு கல்லைக்கூட அவர் வழியில் காணவில்லை. தெரிந்தவர்கள்கூட அன்று ஏனோ முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்; சலனமடையாத சர்மாகூடச் சஞ்சலம் அடைந்தார்.

ஆனால், தனபாலனுக்கு மிகுந்த ஆத்திரந்தான் வந்தது. "நீர் ஆகாசத்தைப் பார்த்தபடி கண்ணை மூடிக் கொண்டு கூப்பிடுவதுகூடக் காதில் விழாமல், மெய்ம்மறந்து நாம பஜனை செய்துகொண்டு போயிருப்பீர்" என்று இரைந்தான். ஆனால் சர்மா, இன்று நான் அப்படி நாம பஜனைகூடச் செய்யவில்லை என்று ஒரேயடியாகச் சாதிக்கவுமே, அவனது அடங்காத கோபமெல்லாம், தன்னை ஏமாற்றிய பிள்ளையார்மீது திசை மாறிப் பாய்ந்தது.

வேகமாகக் கோயிலை அடைந்தவன், ஆத்திரம் தீரத் திட்டிக்கொண்டே, பொய் சொன்ன குற்றத்திற்காகப் பிள்ளையாரின் தொந்தியில் தொடர்ந்து குத்துகள் விட்டான். ஆனால், அப்போதுதான் தனபாலனே திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.

அவன் பிள்ளையாரைக் குத்திக்கொண்டிருக்கும் போதே, மரத்தைச் சுற்றி மலைப்பாம்பு இறுக்குவதைப் போல், தன் கழுத்தை ஏதோ ஒன்று சுற்றி வளைப்பதை உணர்ந்தான். மறுகணம் பிள்ளையாரின் நீண்ட துதிக்கையினுள், தயிர் மத்துப்போல், இறுக்கப்பட்டு நின்றான் தனபாலன். அந்த இரும்புப்பிடியின் அணைப்பிலே மூச்சுத் திணறிக்கொண்டிருந்த தனபாலனது செவிகளில் சற்றைக்கெல்லாம் பழக்கமான ஏதோ ஒரு குரல் விழுந்தது.

"ஏனப்பா! கணேசா, இன்றுதானேடா புதன் கிழமை? முன்பு நீ சொன்னபடி சர்மாவுக்கு ஐயாயிரம் ரூபாயைச் சேர்ப்பித்துவிட்டாயோ?” என்றார் பரமசிவன், ஒன்றும் அறியாதவர்போல்.

"'ஆஹா! நான்கு நாட்களுக்கு முன்னமேயே ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டேனே! இப்பொழுது மீதிப் பணத்திற்குத்தான் வழி செய்துகொண்டிருக்கிறேன்!” என்று விநாயகர் சொல்லி முடிக்கு முன்னர், "அப்போது மீதி நாலாயிரத்தையும்கூட, நானேதான் கொடுத்து உங்கள் வார்த்தையை நிறைவேற்ற வேண்டுமா?" என்றான் தனபாலன், அழுதவண்ணம், கழுத்து வலி பொறுக்க மாட்டாதவனாய்!

"சந்தேகம் இல்லாமல் நீதான் கொடுக்க வேண்டும்! காசையும் பணத்தையும் உன்னைப் போல் நானா உள்ளே அமுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன்?" என்றார் பிள்ளையார்.

அப்போது, "என்னை விட்டுவிடுங்கள், சுவாமி! வீட்டுக்குப்போய்ப் பாக்கித் தொகையையும் கொடுத்துத் தீர்த்துவிடுகிறேன்" என்று கெஞ்சினான் தனபாலன், உயிரின்மீதுள்ள ஆசையினால்.

உடனே, "ஏமாற்றினால் என்ன ஏற்படும் தெரியுமா?" என்றார் பிள்ளையார், சற்று உரத்த குரலில். "ஐயோ! சத்தியமாக அந்த எண்ணமே எனக்குக் கிடையாது சுவாமி! ரூபாய் செலவழித்துக் கற்றுக் கொண்ட புத்திமதியை அதற்குள் நான் மறந்துவிடுவேனா?" என்ற தனபாலன், மறுகணம் 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

கஞ்சப் பிரபுவான தனபாலன் தம் கையில் மீண்டும் ஒரு நாலாயிரம் ரூபாய்களைக் கொண்டு வந்து கொட்டவுமே, சர்மா ஒரு கணம் "திருதிரு" வென்று விழித்தார், ஒன்றும் புரியாதவராய் எல்லாம் உணர்ந்த பிள்ளையார் கல்லாக உட்கார்ந்திருந்தார்.

2 ஓடிப்போன ராஜா

* * *

பள்ளிக்கூடத்தின் ஆரம்ப மணியடித்துங் கூடப் பைத்தியம் பிடித்தவனைப் போல், சுவரில் ஒட்டியிருந்த விளம்பரத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜா. குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு அந்தக் கம்பெனியார் அளிக்கும் ஒரு லட்சம் ரூபாய்ப் பரிசை எண்ணிக்கூட அவன் மனம் வியக்கவில்லை. அதைவிடப் போட்டியில் கடைசிப் பரிசை அடைபவருக்குக்கூட, 'கைலாசம் காம்படிஷன்ஸ்' கம்பெனியார் இனமாக அளிக்கப்போகும் விலை உயர்ந்த பேனாவை நினைக்கும் போதுதான் ராஜாவின் பிஞ்சு உள்ளத்தில் ஆசைத்தீ கொழுந்துவிட்டெரிந்தது.

வறுமையால் வாடும் ஏழைக் குமாஸ்தாவிற்கு மகனாய்ப் பிறந்த அவனால் பெயரளவில்தான் ராஜாவாக இருக்க முடிந்ததே தவிர, அவன் வாழ்வைச் சுற்றிலும் ஏழைமைதான் இரும்புவேலி இட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆடம்பரத்தின் அடிச்சுவட்டைக்கூட அவன் அறிந்தவனல்ல.

தகப்பனார் சம்பாதித்துக் கொண்டுவரும் நாற்பது ருபாயில், அன்றாடம் செத்துப் பிழைக்கும் அவனது அருமைத் தாய் ஒருத்தி, கையில் பொருள் இல்லாத காரணத்தால் கல்யாணமாகாமல் காத்து நிற்கும் சகோதரி பிரேமா, அருமைத் தம்பி ரவி-இத்தனை உயிர்களும் ஜீவித்தாக வேண்டும். இதுதான் அவனது குடும்ப ஜாதகம்.

நான்காவது படிவம் படிக்கும் அவன், முதல் படிவத்திலிருந்தே தனக்கு எழுத ஒரு நல்ல பேனா வாங்கித் தர வேண்டுமென்று தன் தந்தையைப் பல முறை கெஞ்சியிருக்கிறான். ஆனால், அவனது ஆசை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிள்ளையின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என மனமுடைந்து, தந்தை வடிக்கும் சோகக் கண்ணிர்தான் அவன் கண்ட பலன்.

சர்க்கார் தயவில் இலவசக் கல்வி கற்கும் ராஜாவுக்கு ஆழ்ந்த அறிவை மட்டும் அளித்திருந்தார் கடவுள். 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தன் வகுப்புத் தமிழ் வாத்தியாரின் வார்த்தைகளை அடிக்கடி தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு ஆறுதல் அடைவது அவன் வழக்கம். ஆனால் இன்று, அத்தனை நாள் அவன் உள்ளத்தில் புதைந்து கிடந்த பேனாப் பைத்தியத்தை, பள்ளிச் சுவரில், நேற்றிரவு எவனோ ஒருவன் ஒட்டிவிட்டுச் சென்ற விளம்பரம், பலமாகக் கிளப்பி விட்டுவிட்டது.

அன்று முழுவதும் வகுப்பில் அவனுக்குப் புத்தியே செல்லவில்லை. அவன் சிந்தனை முழுவதும் சுவரொட்டியிலே காணும் அழகிய பேனாவையே சுற்றியவண்ணம் இருந்தது. பள்ளி விட்டதும் நடைப்பிணம் போல் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். வெள்ளி நிறத்திலும் தங்க நிறத்திலுமாகத் தன் சகமாணவர்கள் அழகாகப் பைகளில் செருகிக்கொண்டிருக்கும் பேனாக்கள் தன் ஏழைமையைக் கண்டு பரிகசிப்பனபோல் இருந்தது அவனுக்கு. தளும்பிக்கொண்டிருந்த கண்ணிர் அவனது பார்வைக்குத் திரை போட்டுத் தடுத்தது.

மெளனமாக வீட்டை யடைந்த ராஜா, ஒருவரிடமும் பேசாமல் அறையில்வந்து படுத்துவிட்டான். துள்ளித்திரிய வேண்டிய இளம் உடம்பில் சோர்வு குடி புகுந்து விட்டது. உள்ளத்திலே உற்சாகம் இல்லை. அது முகத்திலும் பிரதிபலித்தது. இந்தக் கவலைக்குக் காரணம் கேட்ட பிரேமாவைக் கசப்புடன் நோக்கினன். அவள் பதில் ஏதும் கூறாமல், கொண்டு வந்த காபியை ராஜாவின் எதிரில் வைத்துவிட்டுத் தன் தாயாரிடம் சென்று, முகத்தைத் தூக்கிக்கொண்டிருக்கும் ராஜாவைப்பற்றிக் கூறிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் வெளியில் ஒடியாடி விளையாடிவிட்டுத் துள்ளிக்கொண்டே, தன் அண்ணன் அருகில் வந்த ரவி, சில்லிட்டுப் போயிருந்த ராஜாவின் காபியைச் சரிவரக் கவனிக்காமல் காலால் தட்டிவிட்டான். உள்ளே எதற்காகவோ வந்தவன், மறுகணம் அங்கே நிற்கவே இல்லை. கையில் அகப்பட்டால், ராஜா என்ன செய்வான் என்பது அவனுக்கா தெரியாது? தன் முதுகைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி மின்னல் வேகத்தில் அந்த அறையினின்றும் ஒடி மறைந்துவிட்டான் ரவி.

வெறுப்புடன் தன் இடத்தை விட்டெழுந்த ராஜாவின் பார்வை, தற்செயலாய் எதிரிலிருந்த தன் தந்தையின் கோட்டின் மீது விழுந்தது. ஏதோ ஒருவித உணர்வு அவனை உந்தித்தள்ளியது. மின்சாரத்தினால் இயக்கப்பட்டவன் போல் கோட்டுப் பைகளில் ஒவ்வொன்றாகத் தன் கைகளை விட்டுத் துழாவினான். கடைசியில் கோட்டின் உள் பையில் இருந்த நான்கு ஒற்றை ருபாய் நோட்டுகள் அவன் கையில் சிக்கின. அதைத்தொடர்ந்து அவன் நினைவும் அதிர்ஷ்டப் பரிசு விளம்பரத்தைச் சுற்ற ஆரம்பித்தது. அவன் மனம் ஒரு முடிவுக்கு வந்து நின்றது.

ஒரு ரூபாயை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு நேராகச் செட்டியார் கடைக்குச் சென்றான். ஒரு ரூபாயைக் கொடுத்து, கைலாசம் காம்படிஷன்ஸ் கம்பெனியின் பரிசு டிக்கெட் ஒன்று வாங்கிக் கொண்டு வீடு வந்துவிட்டான். ஆனால், அன்று இரவு முழுவதும் ராஜாவுக்குத் தூக்கமே வரவில்லை. குற்றமுள்ள அவன் நெஞ்சு உறுத்திக் கொண்டேயிருந்தது. தன் திருட்டு வெளியாகிவிட்டால்...? என்ற ஒரு பயம் அவன் உள்ளத்தைக் கெளவிக்கொண்டது.

மறுநாள் பொழுது புலர்ந்தது. ஆபீசுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த ராஜாவின் தந்தை, பையில் வைத்திருந்த பணத்தில் ஒரு ரூபாய் குறைவதைக் கண்டு இரைந்துகொண்டிருந்தார். ராஜாவின் உடல் பயத்தால் வெடவெடத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் தந்தைக்குச் சந்தேகம் முழுவதும் ரவியின் பேரில்தான். ஏனெனில், அவன்தான் இதற்கு முன்பு சில தடவைகளில் தன் தாயாரின் காசுகளைத் திருட்டுத்தனமாக எடுத்து, மிட்டாய், முறுக்கு முதலியவை வாங்கித் தின்றிருக்கிறான். ஆகவே, வழக்கம் போல், ரூபாய் காணாத பழியும் ரவியின் தலையில் விழுந்தது.

அவன் தந்தை பலம் கொண்ட மட்டும், அவனது திருட்டுச் செய்கைக்காக அடித்துக்கொண்டிருந்தார். நிரபராதியான ரவி, "அப்பா! அப்பா! நான் அந்த ரூபாயைக் கண்ணால்கூடப் பார்க்கவில்லை!" என்று எவ்வளவோ கதறியும் அவன் தந்தை நம்பவிலலை. தன் மனைவி தடுப்பதையும் அவர் லட்சியம் செய்யவில்லை.

"இனிமேல் இந்தத் திருட்டுப் புத்தியை விடுவாயா? மருந்துக் கடைக்குப் பணம் கொடுக்க வேண்டுமே! பாக்கிப் பணத்திற்கு இப்போது எங்கே போவேன்? என்றார் அவர். அவருடைய கைகள்தாம் வலித்தன. பயன் ?

இத்தனையையும் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜாவுக்கு அதற்கு மேலும் மனம் கேட்கவில்லை. தான் செய்த குற்றத்திற்கு, ஒன்றுமறியாத தன் தம்பி அநுபவிக்கும் தண்டனை அவன் இதயத்தை உலுக்கி விட்டது.

ஒடிச் சென்று, தந்தையிடம் தம் செய்கையைப் பற்றிக் கூறி, குற்றத்தை ஒப்புக்கொண்டான் ராஜா. ஆனால், அவர் அப்போதிருந்த மனநிலையில், பிள்ளையின் நேர்மையைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றவில்லை. அவரது ஏமாற்றமும் கோபமும் திசை மாறிக் கடுமையாகச் சுழன்றது. வீட்டைவிட்டே ராஜாவைத் துரத்திவிட்டார். அன்று இரவு முழுவதுமே ராஜா வீட்டிற்கு வரவில்லை. தாயாரின் கவலை வரம்பு மீறியதாகிவிட்டது.

பெற்ற மனம் எதையெல்லாமோ எண்ணிப் பதைபதைத்தது. தன் கணவரின் ஆத்திரத்திற்காகவும், அவசர புத்திக்காகவும் அவளது மனம் அளவில்லாத கவலைகொண்டு தவித்தது. ராஜாவின் தந்தை அவனை எங்கெல்லாமோ ஒரு வாரம் வரை தேடி அலைந்துவிட்டு, உடைந்த உள்ளத்துடன் வீடு திரும்பினர்.

புத்திசாலியான பிள்ளை, தன்னைவிட்டுப் போனதிலிருந்தே தாயார் படுத்த படுக்கையாகிவிட்டாள். தாங்க முடியாத புத்திரபாசம் அவள் மனத்தை வாட்டிப் பிழிந்தது. பிரேமாவும் ரவியும் ஆறுதல் இன்றித் தவித்தனர். பிடிவாதமான பிள்ளையின் செய்கை குடும்பத்தையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

மாதம் ஒன்று வாடி உதிர்ந்தது. கால்கள் சென்றவிடமெல்லாம், கஷடத்தையே சுமையாகக்கொண்டு, பட்டணத்தை அடைந்தான் ராஜா. ஆனால், அங்கே அடியெடுத்து வைத்ததுமே, அதிர்ஷ்ட தேவதை அவனை வாரியணைத்துக் கொண்டுவிட்டாள். பல நாள் பட்டினியும் சில நாள் அரைவயிற்றுக்குமாக, வேளைக்கு ஓர் இடமாய் அலைந்து, சோர்வடைந்து போயிருந்த அவன் செவிகளில், ஒரு விளம்பர மோட்டாரிலிருந்து ஒலி பெருக்கி வந்த ஓசை பளிச்சென்று கேட்டது.

"கைலாசம் காம்ப்டிஷன் கம்பெனியாரின் புத்தாண்டு பரிசுப் போட்டியின் முடிவு இன்று வெளியாகிவிட்டது. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சத்தயும் அடையப் போகும் அதிர்ஷ்டசாலி, '1330-ஆம் நம்பருக்கு உடையவர்". விளம்பர் லாரி மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

ராஜா பரபரப்புடன் தன் டிராயர் பைக்குள் கையை விட்டுக் கசங்கிப் போயிருந்த சிறிய கடிதத் துண்டை எல்லைமீறிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தான். அவ்வளவுதான்! அடுத்த நிமிஷமே, தாங்க முடியாத சந்தோஷத்துடன் அந்த விளம்பர வண்டியை நோக்கி ஓடினான்.

அவனது வரலாற்றைக் கேட்டு மனமிரங்கிய அந்த அதிகாரி ராஜாவை உற்சாகப்ப்டுத்தினார். போட்டியிலே முதலாவதாக வெற்றி பெற்ற அவனுடைய அதிர்ஷ்டத்தைப் புகழ்ந்தார். நேராக அவனையும் அழத்துக் கொண்டு காரியாலயத்திற்குச் சென்றார்.

திடீரென்று தன் வீட்டு வாசலில் அழகிய நீல நிறக் கார் ஒன்று வந்து நிற்கவுமே, உள்ளே இருந்த ரவியும் பிரேமாவும் ஓடோடியும் வெளியில் வந்து நின்றனர். அவர்களைத் தொட்ர்ந்து ராஜாவின் தந்தையும் வந்தார். ஆனால், அடுத்த கணம் புத்தம் புதிய, பளபளப்பான் சில்க் நிஜார், சொக்காய்-இவைகளை அணிந்த வண்ணம் காரி லிருந்து ராஜா இறங்கியதைப் பார்த்ததும் எல்லோருக்கும் ஒன்றுமே புரியாமல் ஒரே வியப்பாக இருந்தது.

'ஒடிப்போன ராஜாவுக்கு ஒன்பதாம் இடத்தில் வியாழன், இருந்திருக்கிறார்’ என்பதை அவர்கள் எப்படி அறியமுடியும்! "அதிர்ஷ்டசாலியான பிள்ளையைப் பெற்றிருக்கிறீர்கள், ஸார்!" என்று கூறிக்கொண்டே போட்டிக் கம்பெனி மானேஜர், ராஜாவுக்குச் சேர வேண்டிய முதற்பரிசுத் தொகை முழுவதற்கும் ஒரு செக் எழுதி, பலர் முன்னிலையில் ராஜாவின் தந்தையிடம் நீட்டினர். ஆனால், அத்துடன் அந்த மானேஜர் நிறுத்திவிடவில்லை. ராஜாவைப் போட்டியில் சேரத் தூண்டிய ஆசைப் பொருளை அவர் மறப்பாரா? மூன்று அழகிய பேனாக்களை எடுத்து, ரவி, பிரேமா, ராஜா ஆகிய மூவருக்கும் ஆளுக்கொன்றாய் அளித்துவிட்டுத்தான் விடைபெற்றுச் சென்றார்.

ராஜாவின் திடீர் அதிர்ஷ்டத்தைக் கண்டு ஊரே வியந்தது. பெற்ற வயிறு குளிரத் தாய் அவனை ஓடிவந்து அனைத்துக்கொண்டாள், வறுமை என்னும் குட்டையில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த தங்கள் குடும்பத்தை உயர்த்த, தெய்வமாக வந்த பிள்ளையைப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது அந்தத் தாயுள்ளம்.

3. சிதம்பர ரகசியம்

* * *

'சாந்தி நிவாஸம்' தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. தலைத் தீபாவளிக்கு வரவேண்டிய மாப்பிள்ளைகளுக்காகவும் தலைத்தீபாவளிக்குச் செல்ல வேண்டிய பிள்ளைகளுக்காகவும் வீட்டில் காரியங்கள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன.

அதையும் தவிர சாந்தி நிவாஸம் எப்போதுமே கலகலப்பாகத்தான் இருக்கும். பெயருக்கு ஏற்றபடி இருக்காது. காரணம்: அந்தப் பங்களாவில் நிரந்தர உறுப்பினர்களாக (கைக்குழந்தைகளைத் தவிர) சுமார் இருபத்தெட்டுப் பேர்களுக்கு மேல் இருப்பார்கள்.

ராவ்பகதுர் புருஷோத்தமனும் ஸ்ரீமதி புருஷோத்தமனுந்தான் சாந்தி நிவாஸின் அதிபதிகள். அதன் பிறகுதான் அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் பெண்களும் பிள்ளைகளும்; மாப்பிள்ளை, மருமக்களும், பேரன் பேத்திகளும் கொள்ளு வகையருக்களுமாகப் பெருகி, ஆலமரமாக வளர்ந்து, சாந்தி நிவாஸம் முழுவதும் வியாபித்து, உற்றாரும் சுற்றத்தாருமாக, வெளியூர்களிலும் வேர்விட்டிருந்தார்கள்.

சுமார் அறுபத்து மூன்றாவது வயதை எட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஆஜானுபாகுவான புருஷோத்தமன், சாய்வு நாற்காலியில் சாய்ந்தவண்ணம் எதிர்த்தாற்போல் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் 'சன்ன' தையே பார்த்துக்கொண்டிருந்தார். அது, ஸ்ரீமான் புருஷோத்தமனின் ராஜவிசுவாசத்தை மெச்சிப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அளித்த விருது. அதன் பிறகு அவருக்கு, ‘சர்’ பட்டமும் கிடைத்தது. அவரைப் போலவே, லேடி புருஷோத்தமனும் மிக்க இளகிய மனம் படைத்தவர். அன்புச் சங்கிலியால், குடும்பத்தின் உறவைப் பிணைத்துக் காப்பாற்றி வருபவர்.

அவர் பெரிய உத்தியோகங்களுக்கெல்லாம் மத்தியில் முதலாவது உலக மகாயுத்தத்திலும் பங்கு கொண்டு பணியாற்றினார். பிறகு, நாட்டில் சுதந்தர தாகம் பெருக்கெடுத்தோடிய காலத்தில் பட்டம் பதவிகளையெல்லாம் துறந்துவிட்டு நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டார். ஆனால், அப்போது லேடி புருஷோத்தமன் தான் பெருகிநிற்கும் குடும்பப் பட்டாளத்தைக் காட்டிப் பயமுறுத்தி, கெஞ்சிக் கூத்தாடித் தடுத்து நிறுத்திவிட்டாள்.

இதில் புருஷோத்தமனுக்குப் பெரும் குறை.

'அந்தப் பெரும் குறையைத் தீர்க்கத் தம் குடும்பத்திலிருந்து யாராவது தேச சேவைக்குத் தயாராயிருப்பார்களா, அல்லது உருவாவார்களா? என்பதே அவரது அடங்காக ஆவலாக இருந்தது. அந்த மாதிரி, தம் பரம்பரையில் ஒரு வீரனை உருவாக்கும் வாய்ப்பைத்தான் அவர் நெஞ்சம் சதா தேடி வந்தது.

திடீரென்று, பெருகிக்கொண்டே போன பேரிரைச்சலைக் கேட்டு எழுந்து, கூடத்துப் பக்கம் போனர் புருஷோத்தமன்.

அங்கே—

ஒரே குழந்தைகளின் களேபரம். பெரிதாக ரேடியோவைத் திருப்பி வைத்துவிட்டு, குடும்புத்தின் பால கோஷ்டிகள் அனைவரும் அதைச் சூழ்ந்து உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சிதம்பரம் அந்தக் கோஷ்டியில் கலக்காமல், ஏதோ சோகமாக ரேடியோவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான்.

அதே சமயத்தில் அடுக்களையிலிருந்து ஸ்ரீமதி புருஷோத்தமன், "குழந்தைகளே, ரேடியோவை நிறுத்தி விட்டு எல்லோரும் சாப்பிட வாருங்கள்’’ என்று குரல் கொடுத்தாள்.

மறுநிமிஷம் அத்தனை சிறுவர்களும் அடுக்களையை நோக்கி ஓடினர்கள். சிதம்பரம் மட்டும் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பதைப் புருஷோத்தமன் கவனித்தார். சிதம்பரம், அவரது மூன்றாவது பெண்ணின், நான்காவது பையன். அவனைக் கண்டதும் அவருக்குத் 'திக் 'கென்றது!

அவனது முகமெல்லாம் வீங்கி, கண்ணெல்லாம் சிவந்து நன்றாக அழுது ஒய்ந்தவன் போலிருந்தான். இதைக் கண்ட புருஷோத்தமனின் மனத்திற்கு மிகுந்த துக்கம் ஏற்பட்டது. என்றாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர் குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களுடைய அழுகைக்கோ கோபத்திற்கோ காரணங்களை விசாரிப்பதில்லை. ஏனென்றால், அது சுற்றிச் சுற்றி அவரது குடும்பத்தையேதான் பாதிக்கும்.

ஆனால், சிதம்பரத்தைக் கண்டதும் அவரால் அப்படித் தாண்டிப் போக முடியவில்லை. மிகவும் நல்ல பையன். புருஷோத்தமன் அவன் அருகில் சென்று, "பாட்டி சாப்பிடக் கூப்பிடுகிறாளே, போகவில்லையா சிதம்பரம்?" என்று அன்புடன் கேட்டார்.

சிதம்பரம் ஏதோ யோசனையிலிருந்து, "அதிருக்கட்டும் தாத்தா, எனக்குத் தீபாவளி டிரஸ்ஸெல்லாம் எப்போது வாங்கித் தரப்போகிறீர்கள்?" என்றான்.

இதைக் கேட்டதும், அசடு, இதற்காகவா இப்படிச் சாப்பிடப் போகாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்' என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்ட வண்ணம், "சிதம்பரம், உனக்கு மட்டும் என்ன; நாளைக்கு விட்டில் எல்லோருக்குமே துணிமணிகள் வந்துவிடும் — ராதாகிருஷ்ணன் போகப் போகிறான்" என்றார்.

"உங்களை ஒன்று கேட்பேன்; ஒப்புக்கொள்வீர்களா?" என்றான்.

அவர் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந் தார்.

"எனக்கு வேண்டிய டிரஸை நானே நேரில் போய் என் இஷ்டம்போல் வாங்கிக்கொள்கிறேன். அந்த ருபாயை என் கையில் கொடுப்பீர்களா?" என்று கேட் டான் சிதம்பரம்.

புருஷோத்தமன் ஒரு சிரிப்புச் சிரித்து, "அசடு, இதற்காகவா இத்தனை கோபம், இத்தனை பீடிகை? யார் வாங்கினல் என்ன? என்ன வேண்டுமோ, என்னைக் கேள், நான் தருகிறேன்! போய் வாங்கிக்கொள்! இப்போது சாப்பிட வா" என்று அழைத்தார். சிதம்பரமும் நிறைந்த மனத்துடன் பின் தொடர்ந்தான்.

மறுநாளே புருஷோத்தமன் சிதம்பரத்தின் டிரஸ்ஸுக்காக ஒதுக்கியிருந்த ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்துவிட்டார். அவர் சொன்னபடி, சிதம்பரம் நீங்கலாக, அத்தனை சிறுவர்களுக்கான துணிமணிகளையும் பெரியவர்களுக்கான ஜவுளியையும் வாங்கிக்கொண்டு ராதாகிருஷ்ணன் வந்து சேர்ந்தான். ரூபாயை வாங்கிக் கொண்டுபோன சிதம்பரம் மட்டும், டிரஸ் வாங்கி வராத தோடு அடுத்தநாள் தன் தாத்தாவிடம் வந்து, "இன்னும் ஒரு நூறு ரூபாய் கடனாகத் தருகிறீர்களா? அடுத்த வருஷம்வரை எனக்கு நீங்கள் பாக்கெட் மணியே தர வேண்டாம்-கழித்துவிடுகிறேன்."

புருஷோத்தமன் மனத்திற்குள்ளேயே சிரித்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தார்.

சிதம்பரம் பொறுப்புள்ள பையன்தான்; அவனிடம் மற்றவரை விட ஏதோ ஒருவிதக் கவர்ச்சி அவருக்கு உண்டு. என்றாலும் அவ்வளவு அதிகமான தொகையை அவனிடம் கொடுக்கலாமா? மேலும் இவனுக்கு மட்டும் நூற்றைம்பது ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் மற்றக் குழந்தைகள் நேரடித் தாக்குதல்களிலேயே இறங்கிவிட்டால் என்ன செய்வது? சட்டென்று அவருக்கு ஏதோ தோன்றியது. அவன் கேட்ட தொகையைக் கையில் கொடுத்துவிட்டார்.

அன்றுதான் தீபாவளி. எல்லோரும் கங்காஸ்நானம் செய்தாகிவிட்டது. எல்லோரும் புத்தாடை உடுத்திக்கொண்டும் விட்டனர்.

பலகாரம் சாப்பிடும்போதுதான் சிதம்பரத்தின் உடையைப் புருஷோத்தமன் பார்த்தார்; அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. பட்டும் சில்க்கும். டெரிலி னும் ஷார்க் ஸ்கின்னுமாகப் பளபளக்கும் கும்பலுக்கு மத்தியில் கைத்தறிச் சட்டையும் நிஜாருமாக ஒரு மூலையில் சிதம்பரம் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

புருஷோத்தமனுக்கு அதற்கு மேல் வாயும் கையும் ஓடவில்லை. நூற்றைம்பது ரூபாயை வாங்கிக்கொண்டு போய் என்ன செய்தான்?

எல்லோரும் சாப்பிட்டானதும், சிதம்பரத்தைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் ரகசியமாகக் கேட்கவேண்டும் என்று அவர் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, கை அலம்பினதும் அவன் பாட்டியையும் அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் போனான் சிதம்பரம். என்னவோ ஏதோ என்று, குழந்தைகள் படையும் பெரியவர்கள் கோஷ்டியும் கும்பலாகக் கூடவே பூஜையறையில் வந்து சேர்ந்தன.

சுவாமி படத்திற்கு முன்னால் ஒரு பெரிய பொட்டலம் இருந்தது. சிதம்பரம் அதைப் பிரித்தான்.

மறுகணம் புருஷோத்தமன், அப்படியே அசந்து நின்றுவிட்டார். அத்தனையும் கம்பளித்துணிமணிகள்: தலைக்கும் கழுத்துக்கும் உடம்புக்கும். காலுக்கும் அணிந்து கொள்ளக்கூடிய துணிமணிகள். அததனையும் ராணுவ வீரர்களுக்காக!

புருஷோத்தமனின் உடம்பெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது. அப்படியே சிதம்பரத்தை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமாரி பொழிந்தார். குடும்பத்தில் வீரன் கிடைத்துவிட்டான்!

ரேடியோவில் எல்லோரும்தான் செய்தி கேட்டார்கள். அதில் சிதம்பரத்தின் செவியில் விழுந்த செய்தி எவ்வளவு வேகத்தோடு எழுந்து, செயல்பட்டு அதன் உரிய பயனை அடைந்துவிட்டது. அந்நிய ஆக்கிரமிப்பை முறியடிக்க, கடும் குளிரிலும், பனியிலும் அல்லல்பட்டு நமக்காக - நம்முடைய தாய் நாட்டிற்காகப் போராடும் ராணுவ வீரர்களின் தியாக வாழ்வு ஒர் இளம் உள்ளத்தை எப்படித் தொட்டு உலுக்கிவிட்டது!

இவன் அல்லவோ வீரன்! தேச பக்தியை உணர்ந்து கொள்ளத் தெரிந்த இவன் அல்லவோ வருங்கால மகா புருஷன்!

போலியாகப் பட்டாசும், மத்தாப்பும் தனக்கென்று வாங்கிக் கொளுத்தி மகிழவேண்டிய வயதில் பயங்கரமான உண்மையான - பீரங்கிகளின் வீரமுழக்கத்துக்கும், எந்த நிமிஷமும் சாவைத் தழுவ வேண்டிய குண்டு வீச்சுகளுக்கும் மத்தியில் உயிரையும் மதியாது போராடும் அந்த வீரர்களை எண்ணி - அவர்களுக்காகவும் - அவர்களுடைய தியாகத்திற்காகவும் வீரத்திற்காகவும் எண்ணிக் கண்ணிர் வடிக்கத் தன் பரம்பரையில் ஒரு வீரன் பிறந்து விட்டான் என்பதை எண்ணிப் பார்க்கையில் புருஷோத்தமனது மனம் பெருமையால் பூரித்தது.

சூழ்ந்திருந்த அமைதியைச் சிதம்பரம்தான் கலைத்தான்.

"ஏன் பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? எல்லாத் துணியிலேயும் உங்க கையினலே மஞ்சளும் குங்குமமும் தடவிக் கொடுங்க. இதைப் போட்டுக்கிற ஒவ்வொரு சிப்பாயும் உங்களுடைய ஆசியினாலே நம் எதிரியைப் போரிலே வென்று முரியடிச்சு, நாட்டைக் காப்பாற்றச் சிரஞ்சீவிகளாகப் பணியாற்றட்டும்" என்று கூறிய வண்ணம் துணிகளை எடுத்துப் பாட்டியிடம் கொடுக்கும் போதே அதன் மத்தியிலிருந்து ஒரு பில் விழுந்தது.

அதைப் பிரித்துப் பார்த்த புருஷோத்தமன் அந்த ஆடைகளுக்கான ரூபாய் 350 என்பதைப் புரிந்துகொண் டார். உடனே அவர், "உன்னிடம் ஏது சிதம்பரம் இவ்வளவு பணம்? நான் 150 ரூபாய்தானே கொடுத்தேன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

சிதம்பரம் சிரித்துக்கொண்டே, "பாக்கி எல்லாம், இதோ, இங்கே நிக்கறாங்களே இவங்ககிட்டே நான் தீபாவளி இனாமாக கேட்டு வாங்கிக்கொண்டது" என்றான். அங்கிருந்த அண்ணா, அத்திம்பேர், அக்கா ஆகிய எல்லோருடைய முகத்திலும், ஒரு மகிழ்ச்சியும் உள்ளத்தில், தாங்களும் - சிதம்ப்ரத்திற்கு இனாம் கொடுத்தன் மூலம் ஒரு பெரிய தியாக வேள்வியில் உதவிய நிறைவும், சுடர் விட்டன.

அப்போது ஸ்ரீமதி புருஷோத்தமன் சிதம்பரத்தைப் பார்த்து, "ஏண்டா, நீ என்னிடம் மட்டும் வந்து இனாம் கேட்கவில்லை? உனக்கு இந்தப் பாட்டியைப் பார்த்தால் அவ்வளவு இளப்பாகப் போய்விட்டதா?" என்று கேட்டுக்கொண்டே, சட்டென்று தன் கழுத்தில் இருந்த கனமான் பழமையான் ஒரு தங்கச் சங்கிலியைக் கழற்றி அந்த மூட்டையில் வைத்துக் கட்டினாள். ஸ்ரீமான் புருஷோத்தமனும் தம் வீரத்தை மெச்சி வெள்ளைக்காரன் அளித்திருந்த இரண்டு பெரிய தங்க மெடல்களையும் அலமாரியிலிருந்து எடுத்து வந்து போட்டார்.

* * *

4. சுதந்தர மிட்டாய்

* * *

பொழுது விடிந்தால் சுதந்தரத் திருநாள். இரவெல்லாம் கண் விழித்து, விதவிதமான மிட்டாய்களைச் செய்தவண்ணமிருந்தான் பாவாடை. மைதாமாவும் ஜீனியும் அவன் கையில் வண்ண வண்ண நிறங்களில் அழகிய பண்டங்களாக உருப்பெற்று வளர்ந்து பெருகின. அவன் மனைவி மாரியம்மாளும் அவனுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்த பையனுக்கு ஒன்பது வயது. ஐந்தாவது படித்து வந்தான். இளையவனுக்கு மூன்று வயது. குழந்தைகள் விழித்துக்கொண்டிருந்தால் தங்கள் வேலை நடக்காது என்று மாரியம்மாள், இரண்டிற்கும் விளக்கு வைத்ததுமே சோற்றைப் போட்டுத் தூங்கச் செய்துவிட்டாள். பொழுது விடிவதற்குள்ளாகப் பாவாடை எத்தனை விதவிதமான மிட்டாய்களைச் சிருஷ்டித் துவிட்டான்! கண்னைப் பறிக்கும் வண்ணத்தைப் புகழ்வதா கருத்தைக் கவரும் கைத்திறனைப் புகழ்வதா? மாரியம்மாள் மனத்திற்குள் பூரித்துப் போனள். எந்தச் சீமான் வீட்டுக் குழந்தைகளாய்த்தான் இருக்கட்டுமே, இவைகளைப் பார்த்தால் வாங்கித் தின்ன வேண்டுமென்று ஆசை பிறக்காமலா போய்விடும்?

உரித்த வெங்காயமும், மனைவி பிசைந்து போட்ட சோறும் பாவாடைக்கு-அவன் செய்து குவித்திருக்கும் மிட்டாய்களை விட ருசித்தன.

மூவர்ணக் கலரில் சொப்புச் சொப்பாகச் செய்து தள்ளியிருக்கும் மிட்டாய்களையெல்லாம், தலையில் சுமந்து செல்லும் வியாபாரத் தட்டில் ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தான். பார்க்க அவனுக்கே, மலைப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆமாம்! அந்த ஊரில் மிட்டாய் வியாபாரத்தில் போட்டி இட்டு, பாவாடையை யாரும் மிஞ்சிவிட முடியாது. அதுவும் அன்று சுதந்தரத் தினமல்லவா? ஒரு கணிசமான தொகையை அவன் மனம் புள்ளி போட்டபடி இருந்தது.

இந்தச் சமயத்தில் திடீரென்று, மிட்டாய்த் தட்டு வைத்திருந்த அறையிலிருந்து 'நாயினா!’ என்ற கடைக் குட்டிப் பயலின் குரலைக் கேட்கவுமே, பாவாடை திடுக்கிட்டுத் திரும்பினான்.

அப்பொழுதுதான் எழுந்திருந்த சின்னப் பயல், தட்டிலிருந்த மிட்டாய் ஒன்றைக் கையிலெடுத்துச் சுவைத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.

அவ்வளவுதான்! ஆவேசத்தோடு கையை உதறிவிட்டுப் பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்திருந்துவிட்டான் பாவாடை . "பாவிப்பய மவனே! பொளுது ஒருபக்கம்-விடியுங்காட்டியுமா உனக்கு முட்டாய்க் கேக்குது? உருப்படாக்களுதே...போணிகூட ஆவாமெ, யாரெக் கேட்டுக்கிட்டு உன் தரித்திரம் பிடிச்ச கையை...?" என்றவன், வார்த்தைகளைக்கூட முடிக்கவில்லை. எட்டி ஒர் உதைவிட்டான்.

குழந்தை பத்தடி தூரத்தில் 'வீல்' என்று அலறிய வண்ணம் போய் விழுந்தது.

"ஐயோ! பாவி..! புள்ளெயெக் கொன்னுப் புட்டியே... " என்று அலறிப் புடைத்துக்கொண்டு ஒடிய மாரியம்மாள், குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

கோபத்துடனேயே கையைக் கழுவிவிட்டு, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

மாரியம்மாள் இறுதிவரை வாயே திறக்கவில்லை. அவளுக்குத் தெரியும் அவனுடைய குணம். கோபம் அடங்கிய பிறகு ஒன்றுக்குப் பத்தாக வட்டியும் முதலுமாக அவனை மண்டியிட வைக்கும் சாமர்த்தியம் அவளுக்கு உண்டு.

ஆகவே, இது விட்டுப் பிடிக்க வேண்டிய சமயம். வாயைத் திறக்காமல் தட்டைத் தூக்கி அவன் தலைமேல் வைத்தாள். கண்களால் விடை பெற்றுக்கொண்டு அவனும் போய்விட்டான், பள்ளிக்கூடத்தை நோக்கி.

அன்று திலகர் பள்ளி திமிலோகப்பட்டது. பள்ளி நிர்வாகிகள் சுதந்தர தினத்தை விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்கள். காலையிலிருந்தே பள்ளி மாணவர்களும், பொது மக்களுமாக வந்து கூடியவண்ணமிருந்தனர். அன்றைய நிகழ்ச்சிக்குக் கல்வி மந்திரி வேறு தலைமை வகிப்பதாக ஏற்பாடாகி இருந்ததால் கூட்டத்திற்கும், போலீஸ் கெடுபிடிக்கும் கேட்க வேண்டுமா? சாலையின் இருமருங்கிலும் மொய்த்துக் கொண்டிருந்த பலூன் வியாபாரிகளையும், ஐஸ்கிரீம் வண்டிகளையும், மிட்டாய்க்காரர்களையும், அந்த நடைபாதையை விட்டுப் போகும்படி போலீஸார் மாறிமாறி விரட்டிய வண்ணமிருந்தனர். ஆனால், பலாப்பழத்தை விட்டு ஈயை யாரால் துரத்த முடியும் ?

பள்ளிக் குழந்தைகள் கூடியிருக்கும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல, அந்த ருசி கண்ட வியாபாரிகளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? வெப்புத் தொப்பி வேறு பக்கம் சென்றதும் பழையபடி அங்கேயே கடையை விரித்துவிடுவார்கள்!

இப்படிச் செய்தால் போலீஸ்க்கு மட்டும் ரோசம் வராதா என்ன? மந்திரி வருகிற சமயம் நெருங்கவுமே, ‚377 எங்கிருந்தோ பாய்ந்துகொண்டு வந்தான். பாவாடையின் மிட்டாய்த் தட்டு 377-இன் கையிலிருந்த 'லத்தி'க்கு இரையாகி, துள்ளிப் போய் நடுத்தெருவில் சென்று விழுந்தது.

கணநேரம் பாவாடை அப்படியே கதி கலங்கிப் போய் நின்றுவிட்டான். உருப்படியாக இருந்த ஒன்றிரண்டு மிட்டாய்களைக்கூடப் பொறுக்கி எடுக்க வழியின்றி, வேகமாக வந்த லாரி ஒன்று அரைத்துக்கொண்டு போய்விட்டது.

தட்டும் மடியும் காலியாக இருந்தாலும், துக்கம் நிாம்பிய மனத்துடன் பாவாடை திரும்பினான், வீட்டை நோக்கி. . ஆமாம்! காலையில் அந்தப் பச்சைப்பிள்ளை ஒரு மிட்டாயை எடுத்துச் சுவைத்ததற்காக, அவன்படுத்திய கொடுமைக்குத் தெய்வம் அவனைச் சரியாகப் பழிவாங்கி விட்டது. ஒரணுவிற்குக்கூட விற்கவில்லையே! ஆசையோடு தாவி எடுத்த மிட்டாயைப் பிஞ்சுக் கரங்களிலிருந்து பிடுங்கிப் பந்துபோல் குழந்தையை எறிந்துவிட்டு வந்தானே. அந்தச் சாபந்தானே!

அப்படியானால் ஊர்க்குழந்தைகளிடமெல்லாம் சிரிக்கச் சிரிக்கக் குழைவாகப் பேசிக் கன்னத்தைத் தடவி முத்தமிடுவதெல்லாம்?

எல்லாம் வெறும் பிழைப்புக்காக ஆடுகிற போலி நாடகம். இல்லாவிட்டால் அத்தனை குழந்தைகளும், எத்தனையோ கடைகளை விட்டு அவன் தட்டைச் சுற்றிக் கொண்டு நிற்குமா?

வீட்டை அடைந்ததும், "நயினா!” என்று ஓடிவந்த சின்னப்பயல், பாவாடையின் கால்களே வந்து கட்டிக் கொண்டான்.

துளிர்த்து நின்ற கண்ணிரைச் சுண்டி எறிந்து விட்டுப் பாவாடை பயலைத் தாவி அணைத்துக் கொண்டான். எவ்வளவு இருந்தாலும், தட்டில் அவனுக்காக ஒரு மிட்டாய் வைத்திருக்காமல் பாவாடை வியாபாரம் செய்யவே மாட்டான். இன்று....?

"என்ன? அப்படியே புள்ளெயெத் தூக்கிக்கிட்டு மலைச்சுப்போய் நிக்கிறே? வியாபாரம் படா ஜோருதான் போலிருக்குதே! தட்டில் ஒன்றுகூடக் காணோமே!"

மகிழ்ச்சி கொப்புளிக்கும் மாரியம்மாளின் பேச்சு பாவாடையின் இதயத்திலே சம்மட்டி கொண்டு அடிப்பது போல் மிகுந்த வேதனையை அளித்தது. நடந்த விஷய மனத்தையும் விளக்கி, 'ஓ' வென்று வாய் விட்டுக் கதறி விட்டான் பாவாடை.

"போனப் போவுது போ, கிடக்கு! அதுக்காக இப்படியா ஒரே முட்டா இடிஞ்சுப் போயுடுவாங்க?" மனைவியின் ஆறுதலொன்றும் பாவாடையின் செவியில் நுழையவில்லை. வாசலிலே வந்து நின்ற 'ஜீப்' பின் ஒசை அவன் கவனத்தைத் திருப்பியது.

அதிலிருந்து இறங்கிய ஒரு போலீஸ்காரர் பாவாடையின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு காரில் ஏறும்படி கூறினர். ஒன்றும் புரியாத அவன் 'மிரள மிரள' விழித்தவண்ணம் மனைவியின் முகத்தை நோக்கினான். அவள் ஒரேயடியாக, பயந்து போய் நின்று கொண்டிருந்தாள். மறு நிமிஷம் பாவாடையைச் சுமந்து சென்ற 'ஜீப்' அரசாங்க விருந்தாளிகள் விடுதியின் வாசலல் வந்து, ஓர் உலுக்கு உலுக்கி நின்றது.

உள்ளே நுழைந்த பாவாடை அங்கே கண்ட காட்சி! அவனால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.

அவனுடைய பையன் தணிகாசலத்தைக் கல்வி மந்திரி தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

திலகர் பள்ளியில் மந்திரியின் முன்னிலையில் நிகழ்ந்த ஆறு போட்டிப் பந்தயங்களிலும் முதல் பரிசைத் தட்டிவிட்ட தணிகாசலம், மந்திரியின் மனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டான். அவனை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி, உள்ளம் கனிந்த அன்புடன் பரிசுகளை அவரே அவனுக்கு வழங்கினார்.

தனக்குக் கிடைத்த அந்தச் சலுகையை வைத்துக் கொண்டுதான் தணிகாசலம், மந்திரியை ஜாகையில் சென்று சந்தித்து, காலையில் அவர் பள்ளிவரும்போது 377-ஆல் தன் தந்தை வியாபாரத்தில் அடைந்த நஷ்டத்தைப்பற்றிக் கூறினான்.

அவனுடைய தைரியத்தையும், குடும்பப் பொறுப்பையும் உணர்ந்து மகிழ்ந்துதான் மந்திரி பாவாடையை அழைத்து வரச் சொல்லியிருந்தார். ஆனால் இவற்றுள், ஒன்றையும் அறியாத பாவாடை மேல்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியுடன் வணக்கம் தெரிவித்து நிமிர்ந்தான்.

"நீர்தான் தணிகாசலத்தின் தந்தையா? மிட்டாய் மொத்தம் எத்தனை ரூபாய் விலை மதிப்பு இருக்கும்?" மந்திரிதான் கேட்டார்.

"ஐந்து ரூபாய்க்குள் இருக்குமிங்க !"

"இந்தாரும்! இந்தக் கவருக்குள் ஐம்பது ரூபாய் இருக்கிறது. இனிமேல் தட்டு வியாபாரம் வேண்டாம். சுகாதார முறைப்படி ஒரு சிறு மிட்டாய்க்கடை வைக்க இந்தப் பணத்தை வைத்துக்கொள்ளும்!" என்று மந்திரி அன்போடு அளித்தார்.

"'நன்றாகப் படித்து நீ முன்னுக்கு வரவேண்டும்" என்று பையனையும் வாழ்த்தி அனுப்பினர். அவருக்குத் தகப்பனும் பிள்ளையும் நன்றி தெரிவித்து, பிறகு வீட்டை அடைந்தனர். பெற்றவள் பிள்ளையை வாரி அணைத்துக் கொண்டாள்.

இப்போது திலகர் பள்ளிக்கெதிரிலிருக்கும் 'சுதந்தர மிட்டாய்க்கடை'யின் முதலாளி யார் தெரியுமா? அதே பாவாடைதான்!

5 கார்த்திகேயன் கனவு

* * *

[பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதிய பார்த்திபன் கனவுக்கு

இந்தக் கார்த்திகேயன் கனவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்

என்று எண்ணி வாசகர்கள் மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.]

இரவு மணி எட்டே கால். திருவனந்தபுரம் மெயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்டது.

ஒடுகிற ரெயிலில், ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு மெத்தையொன்றில் சுகமாகப் புரண்டுகொண் டிருந்த சேகரின் உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு புரண்டுகொண்டிருந்தன.

இப்போது அவன் எஸ். எஸ். எல். ஸி. பாஸாகி விட்டான். அதனால் இனிமேலும் அவனே அவனுடைய தந்தை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே, இந்த முறை எப்படியும் அப்பாவினுடைய அந்த ரகசிய அறையைப் பார்க்காமல் தான் பட்டணம் திரும்பப் போவதில்லை என்கிற உறுதியுடன் சென்ருன்.

தஞ்சை ஜில்லாவிலுள்ள பெரிய மிராசுதார்களுள் சேகரின் தந்தை கார்த்திகேயன் பிள்ளையும் ஒருவர். வளமான காவிரிக் கரையில் அவருக்கு நன்செயும் புன்செயுமாக ஏராளமான நிலங்கள். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டையில் பெரிய பண்ணை. அதன் மத்தியில் அழகான பெரிய மாடி வீடு. சுற்றிலும் ஏராளமான தோட்டம் துரவுகள். கூப்பிட்ட குரலுக்குச் சிமிட்டுகிற நேரத்தில் பத்துப் பேர் கைகட்டி நிற்பார்கள்.

இத்தனையிருந்தும் பிள்ளையின் மனத்தில் ஒரு பெரிய குறை. அது, அவருடைய குடும்பத்தில் பரம்பரையாக யாருக்குமே கல்வி அறிவு-அதாவது போதிய பள்ளிப் படிப்பு-கிடையாது என்பதுதான்.

எத்தனைதான் மலையாகச் செல்வம் குவிந்திருந்தாலும், கார்த்திகேயன் உள்ளத்தில் இது ஒர் உறுத்தலாகத்தான் இருந்தது. இந்தக் குறைக்குச் சிகரம் வைத்தாற்போல் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.

கார்த்திகேயன் புதிதாக வாங்கியிருந்த ஒரு நிலத்தில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக, ஒரு தஸ்தாவேஜியை அவரிடம் ஒருவர் கொண்டுவந்து காண்பித்து, தமக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சரி பண்ணிவிடுவதாகக் கூறினார்.

பிள்ளை அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்த்தார். அது முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. பேசாமல் நம்பி, ஆயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்துவிட்டார். ஆனால், அதன் பின்புதான் தெரிய வந்தது, அவர் வாங்கிய நிலத்தில் அப்பழுக்கு இல்லை என்று.

பணம் ஆயிரம் ரூபாயைக் கார்த்திகேயன் பொருட்படுத்தவே இல்லை; ஆனால், பாஷை தெரியாத காரணத்தால்-படிக்காத குறையினால், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்கிற தாழ்வு உணர்ச்சி, அவரது உள்ள்த்தில் பலமான அடியாக விழுந்துவிட்டது.

அதனால், தம்முடைய குடும்பத்தில் ஒருவனேயாவது பட்டப்படிப்புப் படிக்க வைத்துப் பார்க்காமல் கண் மூடுவதில்லை என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டு விட்டார்.

கார்த்திகேயன் பிள்ளையினுடைய ஐம்பதாவது வயதில் அருமையாகப் பிறந்த ஒரே மகன் சேகர். அவனைத் தவிர அதற்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை. ஆகவே, அவருடைய ஆசைகள் நம்பிக்கைகள் எல்லாம் சேகர் ஒருவனிடமே இருந்தன.

அவன் அடுக்கடுக்காய்ப் படித்துப் பெரிய பட்டம் பெற, கிராமத்துச் சூழ்நிலையை மறக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்காக வேண்டியே அவர் பட்டணத்தில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி, சமையலுக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களைத்துனைக்கு அனுப்பி ஏற்பாடு செய்தார்.

சேகரும் தந்தையின் விருப்பத்தைப் பூாத்தி செய்யும் விதத்திலேயே நன்றாகப் படித்து - அந்த வருஷம் எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையும் பாஸாகிவிட்டான்.

ஆனால், ஒவ்வொரு வருஷமும் ஊருக்கு வந்த போதெல்லாம், அழகிய அந்த வீட்டிலுள்ள ஓர் அறை மட்டும் எப்போதும் பூட்டியே இருக்கிற காரணத்தை அறிய, சேகர் எவ்வளவோ பிடிவாதம் பிடித்ததுண்டு.

பி-சி. -3 அதற்கெல்லாம் அவன் தந்தை, "சமயம் வரும் - நீ எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையில் பாஸ் செய்...பிறகு நானாகவே அந்த அறையைத் திறந்து உனக்குக் காட்டத் தான் போகிறேன். அதுவரை பொறுமையாக இரு" என்று கூறிவிட்டார்.

ஆனால் இப்போது?

மகன் பிரமாதமாகப் படித்துப் பாஸ் செய்துவிட்டு வந்ததற்காகப் பிள்ளை அகமகிழ்ந்து போனார். பட்டணத்திலிருந்து சேகர் வந்திருக்கிற செய்தி கேட்டு அந்த வட்.டாரம் முழுவதிலுமுள்ள உறவினர்களும் நண்பர்களும் வந்து கூடினார்கள். நாலைந்து வாரங்கள் வரை விருந்து மயமாகவே வீடு அமர்க்களப்பட்டது.

ஒரு வழியாக அந்த அமர்க்களம் ஒய்ந்து, வீடு பழைய நிலைமையை அடைந்தவுடன், கார்த்திகேயனே சேகரை அழைத்துச் சென்று, அவன் ஆவலோடு பார்க்கத் துடித்துக்கொண்டிருந்த அறையைத் திறந்து காண்பித்தார்.

ஆனால் அதைக் கண்டதும்?

சேகர் ஒருகணம் பிரமித்து அப்படியே சிலைபோல் நின்றுவிட்டான். பிறகு, வந்த சிரிப்பை அடக்க முடியாமல், அவன் வாய் விட்டே உரக்கச் சிரித்துவிட்டான்.

ஆமாம்! அந்த அறையில் அவன் பார்க்கத் தவித்தபடி பரபரப்பூட்டும் அதிசயம் ஒன்றும் இல்லாவிட்டாலும், தந்தைக்கு இப்படி ஒரு கற்பனையா? வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்ட அவன் கண்ட காட்சி இதுதான்---

அறையின் மத்தியில் அழகிய கண்ணாடி அலமாரி ஒன்று இருந்தது. அதனுள், பளபளவென்று கறுப்பு நிற வெல்வெட்டில் தைத்த கான்வகேஷன் உடை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. சுற்றிலும் உள்ள சுவர்களில், பெரிய அளவில் என்லார்ஜ் செய்யப்பட்ட வண்ண வண்ண ஒவியங்கள்.

அனைத்தும் சேகரின் முகச்சாயலே---

முதல் படத்தில் சேகர் பட்டதாரிக் கறுப்பு உடையில் கம்பீரமாகக் கையில் சர்ட்டிபிகேட்டுடன் நிற்கிறான்.

அடுத்ததில் ஒரு டாக்டராக; அதற்கடுத்ததில் ஒர் எஞ்சினியராக; மற்றொன்றில் ஒரு பெரிய கம்பெனி டைரெக்டராக; பெரிய வக்கீலாக; இப்படிப் பல தோற்றங்கள் - விதவிதமான படங்கள்.

"இவையெல்லாம் என்ன அப்பா? - ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்ட சேகருக்குக் கார்த்திகேயன் அமைதியாக ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்:: "கனவு".

'இதுதான் என் கனவு. இதுபோல், நீ கல்லூரிப் படிப்புப் பட்டதாரியாக வேண்டும். அந்தக் காட்சியைக் கண்ட பிறகுதான் என் மனம் குளிரும்.

படித்துப்பட்டம் பெற்ற பிறகு, இவற்றுள் உனக்கு விருப்பமான எந்தத் துறையில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால் நான் உயிரோடு இருக்குபோதே. . . . நீ பட்டதாரியாகிவிடுவதைப் பார்த்துவிட வேண்டும்.

கண்களில் நீர் மல்க, சிறு குழந்தையானார் கார்த்திகேயன்.

சேகருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. 'அப்படியே செய்கிறேன், அப்பா' என்று வணங்கினான்.

மகனே அப்படியே வாரித் தழுவிக்கொண்டு உச்சி மோந்தார் கார்த்திகேயன். ஆனால், உலகத்தில், மனிதர்கள் போடுகிற திட்டப்படியே எல்லாம் நடந்துவிடுகின்றனவா? இல்லையே?

கார்த்திகேயன் கனவு நனவாவதற்குப் பெரும் தடையாக, சேகருடைய கல்லூரி அட்மிஷன் வந்து நின்றது.

எத்தனையோ கல்லூரிகளில் முயன்றும் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக வாக்களித்திருந்த ஒரு கல்லூரியின் காரியதரிசியும் இறுதியில் கையை விரித்தார்.

அந்த அதிர்ச்சியுடனேயே, இன்னது செய்வது என்று புரியாமல், தள்ளாடியபடியே மகனோடு கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து சிறிது தூரம் வந்த கார்த்தி கேயன் கீழே விழுந்துவிட்டார்.

இதற்குள், "என்னா....என்னா.." என்று அங்கே ஒரு சிறிய கூட்டமே கூடிவிட்டது. சட்டென்று, அருகில் வந்த டாக்சியை நிறுத்திய பாதிரியார் ஒருவர்,சேகரின் மூலம் விஷயமறிந்து, அவனையும் அவன் தந்தையையும் ஏற்றிக்கொண்டு ஓர் ஓட்டலுக்குச் சென்றார்.

திரவமாக உள்ளே சற்று இறங்கியதும் பிள்ளை விழிகளைத் திறந்து பார்த்தார். கைகளைக் கூப்பினார்.

பாதிரியார் அவருக்கு ஆறுதல் கூறினார். பிறகு, அவர்கள் போய் வந்த அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் தமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்றும், சேகரின் அட்மிஷனுக்குத் தாம் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுப்பதாகவும் கூறி, உடனே அந்தக் கடிதத்துடன் தவறாமல் மறுநாளே போய்ப் பிரின்ஸிபாலைப் பார்க்கும்படி சேகரிடம் கூறினார். தக்க சமயத்தில் கர்த்தரே தோன்றித் தங்களுக்கு அருள் புரிந்ததாகக் கார்த்திகேயன் மகிழ்ந்தார்.

மறுநாள்---

பாதிரியார் குறிப்பிட்டபடியே கல்லூரி முதல்வர் சிபாரிசுக் கடிதத்தைப் பிரித்துப் படித்தவுடன் இடம் கொடுப்பதாகவும் வாக்களித்தார். சேகரின் முதுகைத் தட்டிக் கொடுத்து, நன்றாகப் படித்து, கல்லூரியின் கௌரவத்தைக் காப்பாற்று என்று புத்திமதியும் கூறி அனுப்பினார்.

முழு மூச்சுடன் படிப்பிலேயே குறியாகப் படித்துப் பரிட்சை சமயங்களில் இரவு பகல் பாராமல் உழைத்தான் சேகர். அதன் பயன்—

சேகர், கல்லூரியில் மட்டுமல்ல, ராஜதானியிலேயே முதலாவதாகத் தேறி, பல்லாண்டுகளாகக் கிராமத்து அறையொன்றில் தொங்கிக்கொண்டிருக்கும் கவுனைப் போட்டுக்கொண்டு, பட்டத்தையும் வாங்கித் தந்தையின் கையில் கொடுத்துவிட்டான்.

தம் கனவு பலிதமான கார்த்திகேயன் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது நிறைவேறக் காரணமாயிருந்த பாதிரியாருக்கும், கல்லூரி முதல்வருக்கும் தம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு மகனுடைய வெற்றியை ஒரு விழாவாகவே கொண்டாடத் திட்டமிட்டார் பிள்ளை.

சென்னையிலுள்ள தமது பங்களாத் தோட்டத்திலேயே விழாவுக்கும் பெரிய விருந்திற்கும் கார்த்திகேயன் ஏற்பாடு செய்துவிட்டார். சேகர் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தான்.

கார்த்திகேயன் தம் கைப்படவே தமிழில் பாதிரியாருக்கும் கல்லூரி முதல்வருக்கும் தவறாமல் விருந்துக்கு வரும்படி வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், பாதிரியாரிடமிருந்து வந்த பதிலில், 'அந்தத் தேதியில் தாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு ஜோலி இருப்பதாகவும், தம்மை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்றும், முடிந்தால் அவசியம் வருவதாகவும் எழுதியிருந்தார். ஆனால், கார்த்திகேயனா விடுபவர் ?

"இந்த விழாவும் விருந்தும் உங்களுடையவை.என் மகனுக்கு வாழ்வு கொடுத்தவர் தாங்கள். தவறாமல், நீங்கள் வந்து, என் மகனை ஆசீர்வதித்தால்தான், நானும் சேகரும் சாப்பிடுவோம்" என்று எழுதிப் போட்டார்.

குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மணிக்கு விருந்திற்கு அழைக்கப்பட்ட அனைவருமே வந்துவிட்டார்கள். இரவு மணி ஏழரை தாண்டி எட்டும் ஆகிவிட்டது. பாதிரியார் மட்டும் வரவில்லை. அனைவரும் காத்திருந்தார்கள். கார்த்திகேயன் தவியாய்த் தவித்தார்.

உடனே பிரின்ஸிபால், "அவர் வராவிட்டால் என்ன? அவர்தான் கடிதத்தில் எழுதியிருந்தார் என்கிறீர்களே. இதற்காக எவ்வளவு நேரம் மற்றவர்களைக் காக்க வைக்க முடியும்? நீங்கள் ஆரம்பித்துவிடுங்கள்!" என்றார்.

இதைக் கேட்ட. பிள்ளை ஒரு முறை சிரித்தார். "சார், உங்களை அறிமுகப்படுத்தி, என் மகனின் இந்த நிலைக்குக் காரணமான அவரையும் உங்களையும் கௌரவிப்பதுதான் இந்த விருந்தின் நோக்கமே" என்று கூறி விட்டார்.

பிறகு பிரின்ஸிபால், "அப்படியானால் நான் இப்போதே என் காரில் புறப்பட்டுச் சென்று, எப்படியும் என் நண்பரை அழைத்து வந்துவிடுகிறேன்" என்று புறப்பட்டுச் சென்றார். ஆனால், என்ன துரதிர்ஷ்டம்! பிரின்ஸிபால் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், பாதிரியாரே வந்து சேர்ந்துவிட்டார்.

பிள்ளையவர்களின் பாடு தர்மசங்கடமாகிவிட்டது.

"இப்போதுதானே பிரின்ஸிபால் உங்களைத் தேடிக் காரில் போகிறார். வழியில் பார்க்கவில்லையா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

பாதிரியார் வருத்தத்துடன், "அட்டா, நான் பார்க்கவில்லையே. சரி; அதனால் என்ன, வந்தால் நான் சொல்லிக்கொள்கிறேன். அவருக்காக வேறு தாமதமாக்க வேண்டாம். விழாவை ஆரம்பிக்கலாம்" என்றார்.

கார்த்திகேயன் பிள்ளை, பாதிரியாருக்கும், பிரின்ஸிபாலிடம் கூறிய முன் பதிலையே திரும்பக் கூறினார்.

வேறு வழியின்றி பிரின்ஸிபாலைத் தேடிப் பாதிரியார் வெளியே போனார். சற்றைக்கெல்லாம் பிரின்ஸ்பால் வந்துவிட்டார். பாதிரியாரைக் காணோம்

விருந்திற்கு வந்திருந்த சேகரின் மாணவ நண்பர்கள் பொறுமையை இழந்தார்கள். எல்லாருடைய வயிற்றையும் பசி கிள்ளியது.

"இது என்னடா இது? பிரின்ஸ்பாலைத் தேடிப் பாதிரியார் போவதும், இவரைத் தேடி அவர் போவதும் அவரைத் தேடி இவர் போவதும் - இன்று நாம் விருந்து சாப்பிட்டாற் போலத்தான்" என்று அலுத்துக்கொண்டார்கள்.

இதைக் கவனித்த பிரின்ஸ்பால் சட்டென்று எல்லோருக்கும் மத்தியில் நின்று கூறினார் : "நண்பர்களே, என் அன்பார்ந்த மாணவர்களே, வருஷத்துக்கு ஒரு முறை அட்மிஷன் சமயத்தில், பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, நான் நடிக்கிற நாடகந்தான், நண்பர் கார்த்திகேயனையும் உங்களையும் இத்தனை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. இது-என்னுடைய நடிப்புத் திறன்--எனக்கு ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது. வேண்டுமானால் அதே பாதிரியாரே இதோ, வந்துவிட்டார். அவரைக் கேளுங்கள்" என்று சொல்லி, தம் கைப்பையிலிருந்த நீண்ட வெள்ளை அங்கியையும், அதன்மீது சிவப்புப் பட்டியையும், சிலுவைச் சின்னம் கோத்த ஜப மாலையும் அணிந்துகொண்டு, பொய்த் தாடியையும் பொருத்தியபடி, கையில் பைபிள் புத்தகத்தையும் கல்லூரி முதல்வர் எடுத்துக்கொண்டார். உடனே மாணவர்களிடையே எழுந்த கைதட்டல் ஒலி அந்தத் தோட்டத்தையே .அதிர வைத்துவிட்டது.

கார்த்திகேயன் பிள்ளையும் சேகரும் பிரமித்து நின்றார்கள்.6 மாயக்கண்ணன்

டைரக்டர் சம்பூர்ணம் ஐந்தாவது முறையாகச் சோர்ந்துபோய்த் தமது நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். தம்முடைய இத்தனை வருட அனுபவத்தில் ஒரு காட்சியைப் படமாக்க அவர் இத்தனை சிரமப்பட்டதே கிடையாது.

ஆம்! குழந்தை நட்சத்திரம் கலா அவரை அத்தனை பாடு படுத்திவிட்டது. பாடுபட்டும் பலன் இல்லையே! காலையிலிருந்து அதனுடன் டைரக்டர் பட்ட பாட்டைப் பார்த்துவிட்டு, சக நடிகர்கள், ஒளி, ஒலிப்பதிவாளர்கள், ஊழியர்கள் அனைவருமே வியந்தனர்.

அவர்களும் சளைக்காமல் டைரக்டருக்குத் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளித்து உதவினர்.

ஆனல், அவர்களுடைய உதவியெல்லாம் யாருக்கு வேண்டும்? நடிக்க வேண்டிய குழந்தை நடித்தால் அல் லவா மற்றவர்களுடைய பணி சிறக்கும்? குழந்தையுடன் துணைக்கு வந்த கலாவின் பாட்டியை டைரக்டர் ஒரு முறை அலுப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வையின் வேகம் தாளாமல் பாட்டி பத்மாஸனி அம்மாள் டைரக்டரைச் சிறிது சாந்தப்படுத்த முயன்றார்.

"டைரக்டர் சார், கலா இந்த மாதிரி இதுவரை அடம் பண்ணினதே கிடையாது. இதுவரை எத்தனை படங்களில் நடித்து வெளுத்து வாங்கியிருக்கிறாள்! இன்று அவளுக்கு 'மூட்' இல்லையோ என்னவோ தெரியவில்லை. இன்னும் ஒருமுறை 'டிரை' பண்ணுங்கள், இல்லாவிட்டால் கலா எப்படியும் நாளைக்கு நன்றாக நடித்துவிடுவாள்" என்று கூறினாள்.

இதைக் கேட்டதும் டைரக்டருக்குக் கொஞ்சம் நஞ்சம் தணிந்திருந்த கோபமும் கிளறியெழுந்தது. ஆயினும் அவர் தம்முடைய நீண்ட காலத் தொழில் துறை அனுபவத்தினாலும், இயற்கையான பொறுமையினாலும் அதை அடக்கிக் கொண்டார்.

"குழந்தைக்கு 'மூட்' வர வேண்டுமாக்கும்! அதை எதிர்பார்த்து அத்தனை காரியங்களும் காத்திருக்கவேண்டும்; அவசியமானால் ஷூட்டிங்கையே ஒத்தி வைக்க வேண்டும் அல்லவா? ஹூம்...இன்னும் ஒரு முறை பார்க்கிறேன். ஒத்து வராவிட்டால் கலாவையே கான்சல் செய்துவிடுகிறேன்!" என்று ஒரு முடிவிற்கு வந்தார்.

டைரக்டர் சம்பூர்ணம் தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு ஏராளப் புகழும் பொருளும் ஈட்டியவர். உணர்ச்சி கொந்தளிக்கும் கட்டங்கள் அவரது படத்தில் சிறந்து விளங்கும். காட்சிகளை அப்படியே தத்ரூபமாக எடுக்க வேண்டும்; அமைய வேண் டும் என்பதில் பிடிவாதமும், அதிக அக்கறையும் காட்டுபவர்.

இப்போது, அவர் ‘தமது எட்டாவது குழந்தை' என்னும் படத்திற்காகவே, சில வெளிப்புறக் காட்சிகளுக்கென அந்த வளமான கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பேபி கலாவுக்குத்தான் எட்டாவது குழந்தையான கண்ணன் வேடம். ஆயர்பாடியில் ஆயர் குல மங்கையர்கள், தலையில் தயிர்க்குடத்துடன் வியாபாரத்திற்காக அருகிலுள்ள கிராமங்களுக்குப் புறப்படுகிறார்கள். மரங்கள் நிறைந்த பாதை வழியாக அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது, கண்ணன் மறைந்து இருந்து கற்களை அவர்கள் தயிர்க்குடத்தின் மீது வீசுகின்றான். பானை பொத்துக்கொண்டு தயிர் ஒழுகி, அவர்களை அபிஷேகம் செய்கிறது. கண்ணன் அதைப் பார்த்துவிட்டு எதிரில் வந்து கை கொட்டிச் சிரிக்கிறான். பிறகு, அவர்களை ஏமாற்றி ஓடுகிறான். இப்படி ஆரம்பிக்கிறது காட்சி.

இந்தக் காட்சிக்காகத்தான் கலாவுடன் டைரக்டர் சம்பூர்ணம் படாத பாடு பட்டார். ஆயர் குல மங்கையரும் மற்றவர்களும் சோர்ந்து போய்விட்டனர். ஒவ்வொரு முறையும், டைரக்டர் 'ரெடி என்று கூறி, அவர்கள் நடிக்க ஆரம்பித்ததும், கண்ணன் வேஷத்திலிருந்த கலா, கதைக்குச் சம்பந்தமில்லாத குறும்புகளிலே ஈடுபட்டிருந்தாள்; அத்துடன் டைரக்டரோ அவளது பாட்டியோ சொல்லிக் கொடுப்பதைக்கூட லட்சியம் செய்யவில்லை.

சம்பூர்ணம் மீண்டும் தம்மை உற்சாகப்படுத்திக் கொண்டு எழுந்தார். இறுதியாக ஒரு முறை பார்த்துவிடுவது என்று 'டேக்' கிற்கு எல்லோரையும் தயார் செய்துவிட்டார். ஆயர் குல மங்கையர்கள் ஒத்திகைப்படி ஒயிலாகக் காட்டுப்பாதையில் சுவாரஸ்யமாக சம்பாஷித்தவண்ணம் சென்றுகொண்டிருந்தனர். ஆனால், அப்போது மரத்தின் மறைவிலிருந்து பானைமீது கல்லெறிய வேண்டிய கண்ணனோ...?

கலா பழைய சண்டித்தனத்தையே தொடர்ந்து செய்தாள்; அழுதாள்; அடம் பிடித்தாள். டைரக்டர் அதட்டினார். அவ்வளவுதான்---

கையிலிருந்த கல்லைப் பாட்டிமீது வீசி எறிந்து விட்டு ஓட்டம் பிடித்துவிட்டாள்.

டைரக்டர் பொறுமையை இழந்தார். சிப்பந்திகள் கண்ணனைத் துரத்திக்கொண்டு ஓடினர். கலாவோ அவர்கள் கையில் அகப்படாமல் வளைந்தும் திரும்பியும் அவர்களுக்குப் போக்கு காட்டியபடியே அந்தக் கிராமமெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால், துரத்திச் சென்றவர்கள் விடுவார்களா?

குறுக்கு வழியில் புகுந்து, எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டு தெருமுனையில் நின்ற கண்ணனை 'லபக்' கென்று பிடித்துக் குண்டுக்கட்டாய்க் கொண்டுவந்து விட்டார்கள்.

ஆத்திரத்தோடு பேத்தியை அறைய வேண்டும் என்று கையை ஓங்கிக்கொண்டு வந்த பாட்டி பத்மாசனி அம்மாளை டைரக்டர் தடுத்து, "நீங்கள் அவள் கண்ணிலேயே படக்கூடாது. எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இன்று அவளை நான் விடுவதாக இல்லை." என்று அனுப்பிவிட்டார்.

பிறகு, குழந்தை கண்ணன் அருகில் சிரித்தபடியே வந்து நின்றார். சட்டென டைரக்டர் தம் ‘பாண்' டினுள் கையை விட்டார். சாக்கலேட்டும் டாபியும் கைநிறையக் கொடுத்தார்.

குழந்தையும் ஆவலோடு அதைப் பிரித்துப் பிரித்து ஒவ்வொன்றாகத் தின்று தீர்த்து ஜிகினாப் பேப்பர்களை பறக்கவிட்டது.

பிறகு, டைரக்டர் மெதுவாகக் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அது செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் நிதானமாக விளக்கினார். குழந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டது. டைரக்டரின் முகம் மலர்ந்தது. அதன் எதிரொலி எல்லோர் முகத்திலும் பிரதிபலித்தது.

தெருவெல்லாம் ஓடிப் போய்க் கலைந்திருந்த ‘மேக்அப்பைச்' சரிசெய்து, இடையில் ஒரு புல்லாங்குழலையும் செருகிச் சட்டென்று அனுப்பி வைத்தார். மேக்கப் நிபுணர். கூற வேண்டிய வசனத்தையெல்லாம் டைரக்டர் ஒரு முறை சொல்லிக் கொடுத்தார். குழந்தை ‘பளிச்' சென்று கூறியது. சம்பூர்ணத்தின் மனம் களிப்பில் மூழ்கியது. வாய் விசிலை ஊதியது.

எல்லோரும் 'டேக்' குக்கு 'ரெடி!' கண்ணனும் கையில் கூழாங்கற்களுடன் தயாராய் மரத்தின் பின்னால் நின்றுகொண்டிருந்தான். டைரக்டர் 'ரெடி' என்று குழந்தையைப் பார்த்து குஷிப்படுத்துவதற்காகக் கேட்டார். குழந்தை கன்னம் குழியச் சிரித்துக்கொண்டே. மயில் பீலி அசையத் தலையை ஆட்டியது. அந்த அழகில் டைரக்டர் பூர்த்துப் போனார்.

குழந்தையின் முகக்களையும் வேஷப் பொருத்தமும் சிரிக்கையில் பளிச்சிட்ட முத்துப்பற்களும், அவரைப் பரவசத்தில் ஆழ்த்தின. கண்ணனையே மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் போது பார்ப்பது போலிருந்தது. "இப்படியே குழந்தை சீன் முழுவதும் நடித்து முடித்துவிட்டால், எவ்வளவு நன்றாயிருக்கும்?"

எண்ணங்கள் இதயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று பத்மாசனி அம்மாள் கூறிய 'மூட்' ஞாபகத்திற்கு வந்தது. மறு கணம் டைரக்டர் பரபரப் புடன் விசிலை ஊதினார்.

'ஷாட்' ஆரம்பமாயிற்று.

ஆயர்குல மங்கையர்கள் தலையில் குடத்துடன், வசனம் பேசியபடி ஒய்யார நடை போட்டுக் சென்று கொண்டிருந்தனர்.

மெல்லிய பின்னணி இழையோடிக்கொண்டிருந்ததது.

மறு கணம்? “டொக்......டொக்.....

தயாராகவே காத்திருந்த கண்ணன், கையிலிருந்த கற்களை வீசி நிறுத்தினான். விளைவு...?

பானைகளில் பொத்தல். ஆயர் குல மங்கையருக்குத் தயிர் அபிஷேகம்.

இது கண்ணனின் வேலைதான் என்று அவர்களுக்குப் புரிந்தது. அதை அவர்களது முக பாவம் காட்டியது.. ஆத்திரத்துடன் பானைகளைக் கீழே இறக்கி வைத்தனர். ஆளுக்கொரு மூலையாய்த் தேடுகையில் எதிரில் வந்து இதோ, இங்கே என்று கூறினான். எட்டிப் பிடிக்குமுன் கைகொட்டிச் சிரித்து ஓடிய மாயவனைத் தேடும் பணியில் முனைந்தனர். ஆனால், தேவகி மைந்தனா அவர்கள் பிடியியில் சிக்குபவன்? எல்லோரையும் ஏமாற்றிவிட்டுத் வந்து பானைகள் அருகில் வந்தான். முழங்கை வரை பானையில் கையை விட்டு, இரு கடைவாயும் வழிய வெண்ணெயை வாரி வாரி உண்டான். அந்த இன்பத்தில் திளைத்திருக்கையில் ஆயர் குல மங்கையர் கண்ணனைப் பிடித்துவிட்டனர்.

"வா, இப்பொழுது உன்னை இப்படியே யசோதை அம்மாவிடம் அழைத்துப் போய் என்ன செய்கிறோம், பார்! எத்தனை தரம் இப்படி நீ ஒவ்வொரு மாதிரி விஷமம் செய்து எங்களுக்குத் திரும்பத் திரும்பத் தொல்லை தந்திருக்கிறாய்? இவற்றையெல்லாம் நாங்கள் விற்றுக் காசாக்கி, வயிறு பிழைக்க வேண்டியவர்கள் அல்லவா?"

"வீட்டிற்கு வந்து ஒழுங்காகக் கேட்டால் ஒரு பந்து வெண்ணெய் கொடுத்துத் தொலைத்திருக்க மாட்டோமா? இப்போது எல்லாம் போயிற்றே!"

இப்படி ஆளுக்கொரு பக்கம் கேள்விகளை மாறி மாறிக் கேட்டுத் துளைத்தனர். உடனே, கண்ணன் அவர்களைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பளிச்சென்று கூறினான்.

"கண்டிப்பாக மாட்டீர்கள். நீங்கள் இப்படித் தொலைப்பீர்களே தவிர, மனசாரக் கொடுத்துத் தொலைக்க மாட்டீர்கள்."

"ஆ. .கா, அப்படியா? அதற்காக இப்படித்தான் எங்கள் பானையை உடைத்துத் தொழிலைப் பாழ் செய்வதா? வா உன் அம்மாவிடம், இந்த வாயைப் பார்த்த பிறகாவது. உன் அம்மாவின் வாய் மூடட்டும்" என்று கண்ணனை எல்லோருமாகச் சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கரகரவென்று இழுத்தனர்.

வேறு வழியின்றி வசமாக மாட்டிக்கொண்ட கண்ணன், சட்டென்று தன்னுடைய பாணியை மாற்றிக் கொள்கிறான். "சுஜாதா, சுகந்தி, 'பிரியமாலா" என ஒவ்வொருவர் பெயரையும் செல்லமாக அழைத்துத் தன்னை விட்டு விடும்படி வேண்டினான். 'அம்மாவிடம் அழைத்துப் போனால் கொன்றுவிடுவாள்' என்று கூறிக் கெஞ்சினான்.

"இந்தத் தடவை நீ எத்தனை அழுது புரண்டாலும் நடவாது. உன்னை இந்தக் கோலத்தோடு கொண்டு போய்க் காட்டினால் தான் உன் அம்மா நம்புவாள்" என்று எல்லோருமாகச் சேர்ந்து பிடிவாதமாக இழுத்துச் சென்றனர்.

"ஓகோ....அப்படியா...' என்று எண்ணிய கண்ணன், சட்டென்று இடையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து இதழில் பொருத்தினான்.

மறுகணம்...?

குழலோசை தேவகானமாக ஒலித்தது. மரம், செடி, கொடி ஆநிரைகளே அந்த இன்னிசையில் செயலிழந்தன வென்றால் ஆயர்குல மங்கையர்கள் மயங்குவதா அதிசயம்? அனைவரும் அந்த இனிய நாதத்தில் மெய்மமறந்து சிலைகள் போல் நின்றுவிட்டனர். மெல்லப் பிடி நழுவியது.

மறுகணம்.......?

கண்ணன், கை நழுவிச் சென்றுவிட்டான். வேணு கானம் மட்டும் எங்கிருந்தோ அவர்கள் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஏமாந்தது அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தனர், ஆயர் குல மங்கையர்.

"கட்....கட்...." என்று டைரக்டர், மகிழ்ச்சி பொங்க உரக்கக் கத்தினார் 'டேக்' பிரமாதமாக அமைந்துவிட்டது. குழந்தை கண்ணனை வாரி அணைத்துக் கொஞ்சாதவர் பாக்கி இல்லை. டைரக்டர் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சினார். 'ஐஸ் கிரீமும்' 'புரூட்சாலட்டும்' எதிரில் கொண்டுவந்து வைக்கப்பட்டன. கண்ணனின் வாயில் சம்பூர்ணமே ஐஸ் கிரீமை ஸ்பூனால் ஊட்டினார்.

ஒளிப்பதிவாளர், காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுவிட்டனவென்றும், பேபி கலா வெளுத்து வாங்கிவிட்டதாகவும் வானளாவப் புகழ்ந்தார்.

"சும்மாவா இத்தனை பேரும் புகழும் வந்திருக்கின்றன? அவற்றையெல்லாம் தெரிந்துகொண்டுதான் கலாவும் நம்மைக் கொஞ்ச நேரம் ஆட்டி வைத்தாள்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டே பத்மாசனி அம்மாளும் அங்கு வந்து நின்றாள்.

"எத்தனை அடம் பண்ணினால் என்ன? எப்படியோ குழந்தை இறுதியில் பிரமாதமாக நடித்துவிட்டாள். பட்ட பாடெல்லாம் மறந்து போய்விட்டது" என்று குழந்தையின் உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்தார் டைரக்டர். மறு விநாடி அவரது முகம் சுளித்தது. “இது என்ன....இது.....? வேப்பெண்ணெய் வாசனை..... வீசுகிறது....?

மயில்பீலிகளை விலக்கி மறுபடியும் மோந்தார் அந்த வாசனையை.

'சீ..சீ..என்ன தைலமிது? இந்த வாடை தாளாமல்தான் குழந்தை இத்தனை அடம் பண்ணியதோ என்னவோ...?' என்று மேக் - அப் நிபுணரைப்பற்றிக் குறைவாக எண்ணிக்கொண்டிருக்கும் போதே, முகா முக்கு வெளியிலிருந்து யாரோ உரக்க அழைக்கிற குரல் கேட்டது. எல்லோரும் விரைந்து சென்றனர். பி. சி-4 அங்கே அவர்கள் கண்ட காட்சி....? யாரோ ஒரு கிராமத்து ஸ்திரீயின் கையில் மற்றொரு கண்ணன்....! ஆனால் , மேக்-அப் கலைக்கப்பட்ட கண்ணன்---கொண்டையும் மயில் பீலியும் அவிழ்க்கப்பட்ட நிலையில் காட்சியளித்த கண்ணன்.

பத்மாசனி அம்மாளைப் பார்த்ததும், அத்தனை நேரம் அந்தக் கிராமத்து ஸ்திரீயின் பிடியிலிருந்த கண்ணன் கையைச் சட்டென்று உதறிக்கொண்டு, 'பாட்டீ' என்று ஓடிவந்து கட்டிக்கொண்டது.

பார்த்தால் குட்டி நட்சத்திரம் கலா...!

அனைவருடைய கண்களும் ஆச்சரியத்தினால் அகல விரிந்தன. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. டைரக்டரின் அருகிலிருக்கும் கண்ணனைக் கண்டதும், "குஞ்சம்மா" என்று அழைத்தவண்ணம் அந்தக் கிராமத்து ஸ்திரீ ஓடிச் சென்று, வாரி அணைத்து, வேப்பெண்ணெய் தடவிய உச்சியில் முத்தமாரி பொழிந்தாள்.

அதன் பிறகு, அந்த ஸ்திரீ கூறிய விஷயங்களைக் கேட்ட பிறகுதான் எல்லோருக்குமே எப்படிக் குஞ்சம்மா ‘கலா'வாக மாறினாள்; அல்லது கண்ணனாகவே தக்க சமயத்தில் வந்து தங்களையெல்லாம் ஆட்கொண்டு தங்கள் தொழிலையும் காப்பாற்றினாள் என்பது புரிந்தது.

"ஐயா, இதுதான் என் பெண் குஞ்சம்மா .நேற்று தெருக்கூத்து பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, அதிலே வருகிற கிருஷ்ணன் மாதிரி தனக்கும் வேஷம் போட வேண்டும் என்று அடம் பிடித்தாள். இவள் எனக்குச் செல்லப்பெண். இவளுடைய அப்பாவும் இப்படித்தான். அவருக்கு நாடகப்பித்து. எங்கே போனாலும் இவளையும் அழைத்துக்கொண்டு செல்லுவார். கிராமத்தில் அவர் இல்லாத பெரிய தெருக்கூத்தே கிடையாது.

"கம்சன் வேஷத்தில் தோன்றி, கதையை எடுத்துச் சுழற்றினால் கிராமமே நடுங்கும். வேஷத்தைக் கலைத்து விட்டு வந்தால் கிராமமே புகழும். அந்த திருஷ்டிதானோ என்னவோ,குஞ்சம்மாவையும் என்னையும் அனாதையாக்கி விட்டு, அவரை மட்டும் தெய்வம் கொண்டுபோய்விட்டது. அதிலிருந்து இது என்ன சொன்னாலும் நான் மறுக்கிறதில்லை. வேஷத்தைப் போட்டுவிட்டு அரிதாரத்தைப் பூச, வந்து பார்த்தேன் பெண்ணைக் காணோம். ‘குஞ்சம்மா குஞ்சம்மா' என்று கத்தினேன்; பதில் இல்லை. அக்கம் பக்கம் எல்லாம் தேடினேன். தெரு முனையில் பார்த்தேன். இந்தப் பெண் நின்றுகொண்டிருந்தாள். அசப்பில் குஞ்சம்மாள்தான் என்று குடிசைக்குள் அழைத்துச் சென்றுவிட்டேன். அரிதாரத்தைப் பூசக் கொண்டு போனேன்; கையைத் தட்டினாள். வேஷத்தைக் கலைக்கலாம் என்று தலையைப் பிரித்தால் என் பெண்ணின் நீண்ட கூந்தலைக் காணோம்; டோப்பா தலையாக இருந்தது.

"முகத்தைப் பார்த்தேன்; குரலைக் கேட்டேன். அதே அழகு, அதே சிவப்பு; ஆனால், என் பெண் எங்கே? இவள் யார் என்று என்னைப் பயம் பிடித்துக்கொண்டது.

"நீ யார்?" என்றேன். பதிலுக்கு "நீ யார்?" என்று அதே கேள்வியைத் திரும்ப என்னைக் கேட்டாள். பிறகு, என்னை "ஷூட்டிங்குக்கு அழைத்துப்போ ...." என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு வழியில் யாரோ கூறினார்கள், 'சினிமாக் கம்பெனிக்காரர்கள் நம் கிராமத்துக்கு வந்து படம் பிடிக்கிறாங்க' என்று.

"இதுதான் கதை; அதோ உங்கள் குழந்தை. நான் குஞ்சம்மாவை அழைத்துப் போகிறேன்" என்று அந்த ஸ்திரீ கூறி நிறுத்தினாள்.

உடனே டைரக்டர் பளிச்சென்று "அது தான் முடியாது. இனிமேல் குஞ்சம்மாள் உங்கள் பெண் அல்ல!" என்றார். "என்ன.....?" ஸ்திரீயின் விழிகள் வியப்பால் விரிந்தன.

"ஆமாம்; உங்கள் மகளிடம் - கலையும் நடிப்பும் கொஞ்சி விளையாடுகின்றன. அவை அவளிடம் இயற்கையிலேயே அமைந்துவிட்டன. பெரிய கலைஞருடைய பெண் என்பதை நிரூபித்துவிட்டாள். இனி இவள் கலைக்குத்தான் சொந்தம். எப்படியோ இவள் மட்டும் இங்கு வந்து சேராவிட்டால் இன்று எங்கள் படமே முடிந்திருக்காது! இந்தாருங்கள், உங்கள் பெண்ணினுடைய இன்றைய நடிப்பிற்காக" என்று கூறி, ஆயிரம் ரூபாயைத் தூக்கி அந்த ஸ்திரீயிடம் கொடுத்தார்.

"பிறகு நான் இவளைப் பட்டணத்துக்கு அழைத்துப் போய், இன்னும் நிறையப் படங்களில் நடிக்க வைக்கப் போகிறேன். நீங்களும் வந்துவிடுங்கள். இனிமேல் உங்கள் குடும்பம் இவளால் பிரகாசமடையும், மறுக்காதீர்கள்!" என்று கூறினார் டைரக்டர்.

அந்த ஸ்திரீ மறுக்கவில்லை.

ஆம். ஏன் மறுக்க வேண்டும்? கண்ணனது லீலைகளை அறிய வல்லவர் யார்?

7 பொன் வாத்து

மேனகா மில்ஸ் அதிபரான பசுபதியின் முன்னால் அவரது ஆலையில் பணிபுரியும் அத்தனை ஊழியர்களும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தனர். பசுபதி அவர்களையெல்லாம், மொத்தமாகவும் தனித்தனியாகவும் விசாரித்தார். திரும்பத் திரும்ப அதே கேள்விகளைக் குணமாகவும் கோபமாகவும் கேட்டார்.

"இப்பொழுது எதற்காக இந்த வேலை நிறுத்தம்? வாசு உங்களிடம் என்ன சொன்னன் ? இதுவரை உங்களுடைய நியாயமான எத்தனை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எதற்கும் ஒர் அளவு உண்டில்லையா? பொன் முட்டை .இடுகிறதென்றால், வயிற்றையே கிழித்து விடுவதா? இப்பொழுதாவது சொல்லுங்கள், வாசு உங்களிடம் என்ன சொன்னன்? எதைச் சொல்லி உங்கள் மனத்தைக் குலைத்துவிட்டு ஊருக்கு ஒடிப் போயிருக்கிறான், சொல்லுங்கள்." முதலாளியினுடைய இந்த நீண்ட நேரப் பேச்சையும், அவருடைய ஆணையையும் மதித்து ஒருவராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே! ஊஹூம், அவர்கள் வாயே திறக்கவில்லை. இது முதலாளியின் ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

"வயிற்றுக்கு அளக்கிற என்னைவிட, உபதேசம் செய்கிற உங்கள் தலைவன் பெரியவனாகிவிட்டானா? போங்கள், என் முன் யாரும் நிற்க வேண்டாம், போங்கள்."

தொழிலாளர்கள் அமைதியாகக் கலைந்து சென்று விட்டனர். ஆனால், பசுபதியின் உள்ளத்தில் மட்டும் அமைதி ஏற்படவில்லை. வாசு இப்படித் தமக்கெதிராக மாறுவான் என்று அவரால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. "எத்தனை பெரிய துரோகம்-எவ்வளவு இழிவான. நன்றி கொன்ற செயல்! சே! பாம்பிற்குப் பாலை வார்த்தேன்" என்று தம்மையே மிகவும் நொந்து கொண்டார். எத்தனை சமாதானம் செய்துகொண்டாலும் அவர் மனம் ஆறுதல் பெற மறுத்தது.

மேனகா மில்லை ஆரம்பித்துப் பூஜை போட்ட அன்றையிலிருந்து வாசு அவர் கம்பெனியில் இருக்கிறான். அன்று மில் இத்தனை பெரிய வளர்ச்சியில் இவ்வளவு ஊழியர்களுடன் தொடங்கவில்லை. அதன் முன்னேற்றம் படிப்படியாக ஒரு குழந்தையின் வளர்ச்சியை ஒத்திருந்தது.

பெற்ற பிள்ளையைப் போல் பசுபதிக்கு வாசுவினிடம் அளவற்ற அன்பு. அவனும் தன்னை அங்கு சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யும் ஒரு ஊழியனாகக் கருதிக்கொள்ளவில்லை. ஏற்படும் லாப நஷ்டங்களில் பங்கு பெறுபவனைப்போல், மில்லின் முன்னேற்றத்திற்காக, நேரம் காலத்தை மீறி உண்மையுடன் உழைத்தான். இதனால் நாளடைவில் முதலாளி அவனிடம் மிகப்பெரிய பொறுப்புக்களையெல்லாம் ஒப்படைத்து விட்டுத் தொழிலைப்பற்றிக் கவலைப்படாமலே இருக்கத் தலைப்பட்டார்.

வாசுவும் அதை உணர்ந்து நடந்தான். முதலாளி தனக்கு அளித்துள்ள விசேஷ உரிமைகளையும், அதிகாரங்களையும் அத்துமீறி உபயோகிப்பதில்லை. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் வாசு தன் உடன் பிறந்த சகோதரர்களைப் போலவே நேசித்து அவர்களிடம் அன்பு பாராட்டினான். இதனாலேயே மேனகா மில்ஸ் தொழிலாளர்கள் அனைவரும், முதலாளியைத் தந்தையாகவும், வாசுவைத் தலைமகனாகவும் மதித்தனர்.

ஆனால், வாசு இதுவரை தனக்கென்று எதையும் முதலாளியிடம் சென்று கேட்டதில்லை. கம்பெனி லாபமாக நடப்பதால் தொழிலாளருக்கு ஒரு மாதப் பொங்கல் போனஸ் கொடுக்கலாமென்று சிபாரிசு செய்தான். முதலாளி சிரித்துக்கொண்டே. இசைந்துவிட்டார்.

நான்கு வருஷங்கள் கழித்து, போனஸை இரண்டு மாதமாக்கினான் வாசு. சிரிக்காமலே அவர் அதற்கும் மறுக்கவில்லை. ஆனால், இப்போது இந்த வருஷமும் பொங்கல் நெருங்குகிற சமயத்தில், 'மீண்டும் வாசு தொழிலாளர்களைக் கூட்டிக்கொண்டு ஏதோ தீவிரமாகப் போனஸ் விஷயமாகப் பேசுகிறான்' என்று பசுபதி அறியவுமே, 'சே, இவர்களது ஆசைக்கு ஓர் அளவே இல்லையா? ஏற்கனவே இந்த வருஷம் கம்பெனிக்கு ஏக நஷ்டம். வழக்கமான போனசை கொடுப்பதே சிரமம். இவற்றையெல்லாம் சற்றும் உணராமல், சுவரை இடித்து விட்டுச் சித்திரம் தீட்ட முயல்கிறார்களே இவர்கள்' என்று அவருக்குப் பிரமாத கோபம் வந்துவிட்டது. ஆனால், இந்தச் சமயத்தில் வாசு ஊரில் இல்லை. நான்கு நாள் லீவில் சென்றிருந்தான். அதனால்தான் அவர் தமது தொழிலாளர்களை அழைத்து, "வாசு உங்களுக்கு என்ன போதனை செய்தான்?" என்று விசாரித்தார். ஆனால், அவர்கள் யாராவது அவருடைய வார்த்தையை மதித்துப் பதில் கூறினால்தானே!

"சரி, உங்களுக்குள் அவ்வளவு ஒற்றுமையா? வாசு வரட்டும். அவனையே கேட்டில் நிறுத்தி வைத்துக் கேட்கிறேன்" என்று தம்மைச் சமாதானப்படுத்திக்கொண்டு விட்டார். ஆனால்----

மறுநாளே ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்ட வாசு, தன் அறையில் வந்து அடக்கமாக நிற்பதைக் கண்டதும் பசுபதிக்கே ஒரு கணம் 'திக்' கென்றது.

"என்ன?"--என்கிற பாவனையில், முதலாளி அலட்சியமாக அவன் மீது பார்வையைச் செலுத்தினார்.

வாசு ஜேபியிலிருந்த ஒரு கடிதத்தைப் பணிவுடன் முதலாளியிடம் நீட்டினான். 'வெடுக்' கென்று அதைப் பெற்றுக்கொண்ட அவர், வெறுப்புடனேயே பிரித்துப் படித்தார். அதில்--

"அன்புள்ள முதலாளி அவர்களுக்கு,

நமது மில்லில் இந்த வருஷம் உற்பத்திக் குறைவினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக, வழக்கமாக தாங்கள் அளித்து வரும் பொங்கல் போனசை, வாசு அவர்களின் சொற்படி இவ்வாண்டு விட்டுக் கொடுக்க நாங்கள் சம்மதித்து இருக்கிறோம்" என்று எழுதப்பட்டு, அதன்கீழ் அத்தனை தொழிலாளர்களும் தங்கள் பூரண சம்மதத்தைத் தெரிவித்துக் கையெழுத்திட்டிருந்தனர்.

பசுபதி ஒருகணம் ஒன்றும் புரியாமல் வியப்பால் திகைத்துப் போனார். வாசு விளக்கினான்.

‘முதலாளி, இப்போ நம்ம மில்லுக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை---நெருக்கடியை-- எடுத்துக் கூறி இதைச் சொன்னபோது, பாதிப்பேர், என் வார்த்தைகுக் இணங்கினர். மற்றும் சிலர் 'வியாபாரம் என்றால் லாபம் நஷ்டம் இரண்டும்தான் இருக்கும். இதற்கெல்லாம் நாம் பாத்தியப்பட முடியுமா?' என்று கட்சி பேசினார்கள். பணத்திற்கு மட்டும் வாயைத் திறக்கிற அவர்களுடைய பேச்சு என் மனத்தைப் புண்படுத்தியது. ஆயினும் நான் அவர்களிடம் வாதாட விரும்பவில்லை. மனமுடைந்து இங்கிருக்கப் பிடிக்காமல்தான், லீவ் போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். ஆனால், ஏனோ தெரியவில்லை, நேற்றிரவு இவர்கள் எல்லாரும் கிராமத்திற்கு என் வீடு தேடி வந்துவிட்டனர். அதுமட்டுமல்ல; நான் முன்பு கூறியதற்கு இணங்கி, இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு என்னை, இங்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று கூறி முடித்தான்.

இதைக் கேட்டதும் முதலாளியின்கண்கள் உணர்ச்சிப் பெருக்கால், அன்பின் மிகுதியால், பளபளத்தன. 'அவசரப்பட்டு, வாசுவை எவ்வளவு தவறாக எடைபோட்டு விட்டேன்' என்று வருந்தியவர், மறுகணம் கையிலிருந்த கடிதத்தைத் தாறுமாறாகக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டார்.

---ஆம்! அந்த ஏழைத் தொழிலாளருடைய பெருந்தன்மையைவிட அவரது கௌரவம் சிறுத்தா போய் விட்டது? 'ஆலமரத்திற்கு ஒரு கிளை முரியலாம்-பாதகமில்லை. ஆனால், தென்னைக்கு இந்தக் கதி நேரலாமா? இத்தனை அருமை தெரிந்த நம்முடைய தொழிலாளருடைய மகிழ்ச்சிக்குப் பயன்படாத பெரும் சொத்து இருந்து என்ன பயன்?'--- இப்படி எண்ணியபடியே எழுந்த பசுபதி, வாசுவின் முதுகைத் தட்டி, "நீதான் பெரும் தவறு செய்துவிட்டாய்" என்று சிரித்தபடியே கூறினார். வாசு ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித் தான். "ஆம், உன்னுடைய சிநேகிதர்கள் கூறியதுதான் சரி. தொழில் என்றால், அதில் லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். லாபமில்லாமலே, நஷ்டமும் சில சமயம் ஏற்படும். இந்த இரண்டையும் ஏற்க வலிமையுள்ளவன் தான் முதலாளி" என்று சிரித்தபடியே கூறிக்கொண்டு ஒரு பெரும் தொகைக்கான செக்கைக் கிழித்து வாசுவின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்த வாசுவின் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. ஆம்!---

அதில், எல்லோருக்கும் வழக்கத்தைவிட அதிகமான போனசுக்குப் பணம் இருந்தது. வாசுவின் இமைகள் நன்றிப் பெருக்கால் நனைந்தன.

இப்படித் தங்கமான ஒரு முதலாளியையும், அவரது தொழிலையும் போற்றி, உண்மையோடு உழைக்கத் தயாராக இருக்கும் விசுவாசமுள்ள தொழிலாளர்களையும் கொண்ட மேனகா மில்லை ஒரு ஸ்தாபனம் என்பதைவிடச் சிறப்பு மிக்கதொரு குடும்பம் என்றே அழைக்கலாம் அல்லவா?