பஞ்ச தந்திரக் கதைகள்
பாவலர் நாரா. நாச்சியப்பன்


 

பஞ்சதந்திரக் கதைகள் (படங்களுடன்)

நாரா நாச்சியப்பன்

அன்னை நாகம்மை பதிப்பகம்

2/141 இரண்டாவது தெரு, கந்தசாமி நகர்,

பாலவாக்கம்⁠சென்னை 600 041

அன்னை நாகம்மை வெளியீடு மார்ச், 1996

விலை ரூ 30.00

* * *

கவின் கலை அச்சகம், கந்தசாமிநகர் பாலவாக்கம், சென்னை 600 041

தொலைபேசி 492 77 21

என் ஆசை

பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.

கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத் தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத் திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க வேண்டும். சலிப்புத் தராத தன்மையும் அந்தக் கதைக்கு இருக்க வேண்டும் இந்தச் சிறப்புக்களெல்லாம் பஞ்ச தந்திரக் கதைகளில் அடங்கி யிருக்கின்றன.

தமிழில் பஞ்ச தந்திரக்கதைகள், எத்தனையோ பதிப்புகள் வெளிவந்து விட்டன. பாட்டு வடிவிலும், உரைநடையிலும் பலப் பல பதிப்புக்கள் பலப் பல நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொரு முறை வெளி வருவதென்றால், அதில் ஏதாவது புதுமை யிருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். வாசகர்கள் ஏமாற வேண்டியதில்லை; இதில் நிறையப் புதுமை இருக்கிறது.

முதலாவதாக இதுவரை வெளிவந்துள்ள எந்தத் தமிழாக்கத்திலும் கையாளப்படாத மிக எளிமையான தமிழ் நடையை நான் கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் படிக்கவேண்டும் என்ற கருத்தோடு, மிகமிக முயன்று எளிமையாக எழுதியிருக்கிறேன். எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல தமிழைக் கை விட்டு விடவில்லை. வேண்டாத சில கதைகளை விலக்கியுமிருக்கிறேன்.

காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி அறிவைப் பயன்படுத்துகிறவன் எடுத்த செயலைச் சிறக்கத் தொடுத்து வெற்றி பெற முடிப்பான் என்பதுதான் பஞ்ச தந்திரக் கதைகளில் அமைந்துள்ள கருத்தாகும். முன்னதாகவே ஆழ்ந்து சிந்தித்து வேலை செய்யும் அறிவுடைமைக்கு பஞ்ச தந்திரக் கதைகளின் ஆசிரியர் முதன்மை கொடுத்துச் சிறப்பிக்கிறார். சூழ்நிலைக்கேற்ற சிந்தனையை அடுத்தபடியாக ஆதரிக்கிறார். மேற்போக்காகப் படிக்கும் போது, ‘எப்படியாவது சூழ்ச்சி செய்து. தான் வாழ்ந்தால் போதும்’ என்ற கருத்தை ஆசிரியர் கூறுவதாகத் தோன்றக் கூடும். ஆழ்ந்து கதைகளைப் படித்துப் பார்த்தால்தான், ஆசிரியர் நெறி வழிப்பட்ட சூழ்ச்சி முறைகளை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது தெளிவாகப் புலப்படும். ஆசிரியர் கொள்கை, யாரும் ஏமாளித்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதேயாகும்.

வருங்காலக் குமுகாயம், சூழ்ச்சிகளுக் காட்படாத-ஏமாறாத-தன்னறிவுள்ள குமுகாயமாக வளர வேண்டுமானால், இதுபோன்ற சூழ்ச்சி முறைக் கதைகளை நிறையப் படிக்க வேண்டும். அறிவு வளர வேண்டும். இதுவே என் ஆசை.

நாரா நாச்சியப்பன்


பஞ்சதந்திரக் கதைகள்

பொருளடக்கம்

பகுதி 1

நட்புப் பிரித்தல்

1. எருதும் சிங்கமும்

2. ஆப்புப் பிடுங்கிய குரங்கு

3. முரசொலி கேட்ட நரி

4. தங்களால் தாங்களே கெட்டோர்

5. கரும்பாம்பைக் கொன்ற காகம்

6. சிங்கத்தைக் கொன்ற முயல்

7. கொக்கைக் கொன்ற முயல்

8. மூட்டைப் பூச்சியால் இறந்த சீலைப்பேன்

9. ஒட்டகத்தைக் கொன்ற காகம்

10. கடலை வென்ற சிட்டுக்குருவி

11. வாயடக்கம் இல்லாத ஆமை

12. மூன்று மீன்கள்

13. குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு

14. சாட்சி சொன்ன மரம்

15. கொக்கு முட்டை தின்ற பாம்பு

16. எலி இரும்பைத் தின்றது

17. வாழ்வு தந்த கிழட்டு வாத்து

 

பகுதி 2

நட்பு உண்டாக்குதல்

1. நான்கு நண்பர்கள்

2. புலியால் மாய்ந்த பார்ப்பனன்

3. வஞ்சக நரி

4. பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு

5. ஆசையால் தேர்ந்த அழிவு

 

பகுதி 3

அடுத்துக் கெடுத்தல்

1. கோட்டான் குலத்தைக் கூடிக்கெடுத்த காகம்

2. தன் வாயினால் கெட்ட கழுதை

3. யானையை வென்ற வெள்ளை முயல்

4. மோசம் போன முயலும் மைனாவும்

5. ஏமாந்த வேதியன்

6. உதவி செய்த கள்ளன்

7. அன்பரான அரக்கனும் கள்ளனும்

8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்

9. வேட்கைக்குதவிய புறாக்கள்

10. பொன்னாய் எச்சமிடும் பறவை

11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி

12. உருவம் மாறிய எலி

13. பாம்பு வாகனமேறிய தவளை

 

பகுதி 4

பெற்றதை இழக்கச் செய்தல்

1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

2. பாம்புடன் பழகிய தவளை

3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை

4. குயவன் சேனாபதியானான்

5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி

6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

7. சாமபேத தான தண்டம்

8. கடிபட்ட நாய்

 

பகுதி 5

ஆராயாத செயல் தவிர்த்தல்

1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்

2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்

3. கழுமர மேறிய நாவிதன்

4. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

5. தலையில் சுழன்ற சக்கரம்

6. மந்திரத்தால் அழிந்த மதிகேடர்

7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

8. பாட்டுப் பாடி அடிப்பட்ட கழுதை

9. வரங் கேட்டிறந்த நெசவாளி

10. பழிவாங்கிய குரங்கு

11. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு

12. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்

13. அகப்பட்டவனை விட்டுவிட்ட அரக்கன்

14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

 

⁠பாயிரம்

பகைநட்பை வெட்டிப் பலன்காணல்; மிக்க

தகவுடையார் நட்பு வளர்த்தல்:-மிகப்பழகிச்

சாய்த்தல்; அடைந்த திழக்கவிடல்; ஆயாமை

நீத்தல்இவை பஞ்சதந்தி ரம்

காட்டு விலங்குகளைக் காட்சிப் பொருளாக்கி

நாட்டு கதைகேட்பார் நாடோறும்-வேட்டதெலாம்

பெற்றுநலங் காண்பார்; பிறர்சூழ்ச்சி தூளாக்கி

வெற்றிகாண் பாரே விழித்து.

அன்று வடமொழியில் ஆக்கிவைத்த சூழ்ச்சிமுறை

இன்று தமிழில் இயம்பினான்-நின் றபுகழ்

நாச்சியப்பன் சொல்லின் நயந்தெளிவார்க் கெந்நாளும்

வீழ்ச்சியிலை என்றே விளம்பு.

ஐவ்கைச் சூழ்ச்சியையும் ஆராய்ந்து காண்போர்க்கே

உய்வகை தோன்றும் உயிர்வாழ்வில் -மெய்புகல்

நாச்சியப்பன் செந்தமிழில் நல்குமிதைத் தம்பிஒரு

மூச்சிலே கற்று முடி.

பஞ்ச தந்திரக் கதைகள்

பகுதி 1

நட்புப் பிரித்தல்

1. எருதும் சிங்கமும்

தென்னாட்டில் மகிழாருப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்குகளைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்துவிட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகிவிட்டது.

இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான்.

‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்!'என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான்.

ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது.

அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணிர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரி தாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லையாகையால், நடுங்கிப் போய்விட்டது.இதேது புதிதாக இருக்கிறதே!என்று பயந்து அது தண்ணிர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது.

சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண்டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, “நம் அரசன் ஏன் நடுங்கி நின்று விட்டான்?" என்று கேட்டது.

"அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடுகிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப்பட வேண்டியது தான்" என்றது இன்னொரு நரி.

“அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமையானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண்டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கெளவிக்கடித்துத்தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லாமல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத்தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத்துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமையுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை" என்றது முதல் நரி,

"சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?" என்று மறுத்தது இரண்டாவது நரி.

‘எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய்தால் உயர்வையடையலாம். யோசனை யில்லாவிட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல்களைச் செய்து நன்மை யடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது.

'ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோடும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமையுண்டாகும்’ என்று கூறியது முதல்நரி.

‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டது இரண்டாவது நரி.

'நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்’ என்றது முதல் நரி,

“மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மையுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்' என்று இரண்டாவது நரி கூறியது.

‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமையாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறுவேன்’ என்று உறுதியாகக் கூறியது முதல் நரி.

‘நன்று, நீ வெற்றியடைக!’ என்று இரண்டாவது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது.

முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது.

'இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?' என்று கேட்டது சிங்கம்.

‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்ட தால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெருமையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர்களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையுடன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமையான இசையும் இன்பந்தரும் யாழும், பரந்த உலகமும், அழகிய பெண்களும், அறிவு நிறைந்த பெரியோரும், பயன் மிக்க நூல்களும் ஆகிய இவையெல்லாம், வைத்துக் காப்பாற்றுகின்றவர்களின் தன்மை யாலேதான் சிறப்படையும். அதுபோல் அரசு சிறக்க அறிஞர் துணை தேவை’ என்றது நரி.

‘நரியே, நீ அமைச்சருடைய மகன் அல்லவா? அதனால்தான் உயர்ந்த ஆலோசனைகளைக் கூறுகின்றாய். நீ என்னிடமே இருந்து, உண்மையாக வேலை செய்து வா!’ என்று சிங்கம் கூறியது.

உடனே நரி துணிச்சலுடன் 'அரசே, தங்கள் மனத்தில் ஏதோ பயம் ஏற்டெடிருக்கிறது போல் தோன்றுகிறதே!' என்று கேட்டது.

'ஆம், இதுவரை இந்தக் காட்டில் நான் கேட்டறியாத ஒரு பெரு முழக்கத்தைக் கேட்டேன். அதனால் என் மனம் கலங்கியிருக்கின்றது. முழக்கம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாய் அந்த முழக்கம் செய்த மிருகமும் இருக்க வேண்டும் அல்லவா? அந்த மிருகம் என்னைக் காட்டிலும் பெரியதாய் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். வழுக்கி விழ இருந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல் சரியான சமயத்தில் நீ வந்தாய். என் கவலை நீங்க ஒரு வழி கூறு’ என்று மனம் விட்டுப் பேசியது சிங்கம்.

‘அரசே வெறும் ஒலியைக் கேட்டுப் பயப்படுவது சரியன்று. முன் ஒரு நரி இது போலத்தான், பெரும்

சத்தத்தைக் கேட்டுப் பயந்தது. கடைசியில் பார்த்தால் அது வெறும் தோல் முரசாக இருக்கக் கண்டது. நீங்கள் பயப்பட வேண்டாம். நான் போய் இந்த முழக்கத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்' என்று சொல்லி நரி புறப்பட்டது.

காட்டுக்குள்ளே தேடிக் கொண்டு சென்ற நரி, சிறிது தூரத்தில் அந்தக் காளை மாட்டைக் கண்டது. அதனுடன் பேசி அதன் நட்பைப் பெற்றது. சிங்கத்திடம் திரும்பி வந்து, அரசே, 'அது நம்மைப் போல் ஒரு மிருகம் தான். ஆனால் முரட்டு மிருகம், இருந்தாலும் அது தங்களுடன் நட்புக் கொள்ளவே விரும்புகிறது' என்று கூறியது.

'அப்படியானால், அதை இங்கே அழைத்து வா’ என்று சிங்கம் கூறியது.

நரி அவ்வாறே எருதை அழைத்து வந்து சிங்கத்திடம் விட்டது. எருதும் சிங்கமும் அன்று முதல் உயிர் நண்பர்களாய் வாழத் தொடங்கின. சிங்கம் அந்த எருதையே தன் அமைச்சனாக்கிக் கொண்டது. இவ்வாறு பல நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் காட்டு மிருகங்களும் அமைச்சர்களாகிய நரிகளும் ஒன்று கூடி, அரசனுக்கோ நம்மிடம் அன்பில்லை. இரையே நமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை. இனி நாம் என்ன செய்வது?’’ என்று ஆலோசித்துக் கொண்டிருந்தன. அப்போது முதல் நரி இரண்டாவது நரியைப் பார்த்து, 'யானை தன் மத்தகத்தைக் கொத்துவதற்குத் தானே பாகனிடம் அங்குசத்தை எடுத்துக் கொடுத்ததுபோல், இந்த மாட்டையும் சிங்கத்தையும் நட்புக் கூட்டி வைத்து நமக்கு நாமே கேடு செய்து கொண்டோம். தங்களால் தாங்களே கெட்ட மூன்று பேருடைய கதைபோல் இருக்கிறது நமது கதையும்' என்று வருத்தத்துடன் கூறியது.

'இப்போது நாம் என்ன செய்வது?’ என்று இரண்டாவது நரி கேட்டது.

‘கவலைப்படாதே, சூழ்ச்சியாக அவ்விருவருடைய நட்பையும் குலைத்து விடுவோம். பிறகு நாம் இந்தக் காட்டையே நம் கைவசப்படுத்திக் கொள்ளலாம்' என்று உறுதியுடன் பேசியது முதல் நரி. மேலும் அது தொடர்ந்து, ‘எப்படியோ கைவிட்டுப் போனதை மீண்டும் கைகூடச் செய்வதும், இடையூறுகள் வராமல், தடுத்துக் கொள்வதும், முயற்சியினால் அருமையான செல்வத்தைத் தேடி அடைவதும், எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து செய்வதும் ஆகிய காரியங்களில் வல்லவன் தான் சரியான அமைச்சன்’ என்றது.

‘இவ்வளவு நெருங்கிய நட்பாய் இருக்கும் சிங்கத்தையும், எருதையும் நம்மால் பிரிக்கமுடியுமா? இது ஆகிற காரியமா?’ என்று கேட்டது இரண்டா வது நரி.

‘பூ! சூழ்ச்சியால் ஆகாத காரியம் எதுவும் இல்லை. காகம் கரும்பாம்பைக் கொன்றதும், முயல் ஒரு சிங்கத்தைக் கொன்றதும், நண்டொன்று கொக்கைக் கொன்றதும் எல்லாம் சூழ்ச்சியால்தான்!’ என்று கூறியது முதல் நரி.

‘உண்மைதான். சூழ்ச்சியால் இவர்கள் நட்பைப் பிரிக்கமுடியுமே யல்லாமல் வேறு வழியில்லை. நீ அதற்கானதைச் செய்' என்றது இரண்டாவது நரி,

சிங்கம் தனியாக இருக்கும் வேளை பார்த்து, ‘அரசே, தங்களுக்கு ஒரு தீமை ஏற்பட இருப்பதை அறிந்து நான் எச்சரிக்கவே வந்தேன்’ என்று புதிர் போட்டது போல் கூறியது.

'அப்படியென்ன தீமை யது?’ என்று சிங்கம் கேட்டது.

‘அரசே, இதைப்பற்றி முன்னாலேயே சொல்லியிருப்பேன். ஆனால், உங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தின் காரணமாக நான் சொல்லக் கூடிய உண்மையைப் பொய்யாக எண்ணி விடுவீர்களோ என்று பயப்பட்டேன். அந்தப் பயத்தினால் தான் இதுவரை எதுவும் சொல்லவில்லை' என்று நல்லவன் போலப் பேசத் தொடங்கிய நரி மேலும் தொடர்ந்து கூறியது. "ஆனால், என் மனம் கேட்க வில்லை. நீங்கள் என்ன நினைத்தாலும், எவ்வளவு கோபம் கொண்டாலும், எவ்வாறு தண்டித்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்குத் தீங்கு வராமல் காப்பாற்ற வேண்டிய வழிகளைச் செய்ய வேண்டியது என் கடமை என்று தோன்றியது. தங்களுக்கு நேரான புத்தி சொல்லி, செய்யவேண்டியதைச் செய்யும்படி செய்து விட்டால்தான், பகைவர்கள் ஒழிவார்கள் என்று உறுதி கொண்டேன். நல்ல ஆலோசனைகள் சொல்லி அரசனுடைய மயக்கத்தை அகற்றுவதும், தகுந்த சூழ்ச்சிகளைச் செய்து பகைவர்களை அழிப்பதும், முன்னோர்கள் இயற்றி வைத்த ஆட்சி நூல் முறை தப்பாமல் அரசாளச் செய்வதும் அமைச்சர்களின் கடமையல்லவா? அதனால் தான் நான் இனி மேலும் சும்மாயிருக்கக் கூடாதென்று துணிந்து வந்தேன். அரசே, தாங்கள் பழைய சேனை அமைச்சரை விலக்கிவிட்டு, இந்தக் கொம்பு மாட்டை அந்தப் பதவியில் வைத்துக் கொண்டீர்கள். தாங்களோ அதனிடம் நட்புக்கொண்டு, அன்பினால், அதை உயர்ந்த இடத்தில் வைத்தீர்கள். ஆனால் அந்தப் பொல்லாத மாடோ, தானே இந்தக் காட்டை அரசாள வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு எப்போது வேளை வரும் என்று காத்திருக்கிறது!"

இதைக் கேட்டதும் சிங்கத்திற்குச் சிரிப்பாக வந்தது.' சே! என்ன வார்த்தை சொன்னாய்? அந்த எருது என்னிடம் வந்து சேர்ந்த போது என்னிடம் என்றும் நட்பாக இருப்பதாக ஆணையிட்டுக் கூறியதே தன் வாக்குறுதியை மீறி அது என் அரசைத் தரன் ஆள நினைக்குமா? ஒருகாலும் அப்படியிருக்காது’ என்று மறுத்துக் கூறியது.

‘அரசே, எதையும் நான் நன்றாக விசாரியாமல் சொல்லவே மாட்டேன். தன் பலத்திற்கு உங்கள் பலம் ஈடாகாதென்று என் எதிரிலேயே தங்களை இகழ்ந்து பேசியது அந்த மாடு. இன்னும் அது எவ்வளவு கொழுப்பாய்ப் பேசியது தெரியுமா? இதற்கு மேலும் தாங்கள் என்னை நம்பவில்லை என்றால், நான் என்ன சொல்ல இருக்கிறது?’ என்று நரி சலித்துக் கொண்டது.

‘அரசரை இகழுகின்ற ஓர் அமைச்சனையும், பிற அமைச்சர்கள் பலரும் வருந்தும்படி செய்கின்ற அரசனையும் திருமகள் விலகிச் செல்வாள். ஆட்சியும் அவர்கள் கையை விட்டுப் போய்விடும், நல்ல குலத்தில் பிறந்தவர்களாகவும், அறிவிற் சிறந்தவர்களாகவும் உள்ளவர்களை விலக்கிவிட்டு ஒரே ஒருவனை மட்டும், தலைமை அமைச்சனாக வைத்தவுடன் அவனுக்கு ஆணவம் உண்டாகி, அவன் அரசையே கைப்பற்றிக் கொள்ள எண்ணமிடுகிறான். கடைசியில் அவன் தன் அரசனையே கொல்லவும் நினைப்பான். தம்மைப் பெருமைப்படுத்திப் போற்று கின்றவர்களுக்கு கைமாறு செய்யாமல், மூடர்களுக்கு உபகாரம் செய்ய முந்திக்கொண்டு செல்பவர்கள் தமக்குத்தாமே கெடுதல் செய்து கொள்பவர்கள் ஆவார்கள். நஞ்சு கலந்த சோற்றையும், அசைந்து ஆடுகின்ற பல்லையும், வஞ்சகர்களின் நட்பையும், தன்னை மிஞ்சி நடக்கின்ற அமைச்சர்களையும்,உடனுக்குடன் அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால், அதனால் பெருந் துன்பம் உண்டாகும்’ என்று பலவாறாக நரி எடுத்துக் கூறியது.

'அப்படி அந்த எருது எனக்கு என்ன தீமை செய்து விட்டது, சொல்!' என்று சிங்கம் கேட்டது.

‘அரசே, அது தங்களை இகழ்ந்து பேசுகிறதே அது ஒன்றே போதாதா?’ என்று நரி கேட்டது.

'இருக்காது. நாமே அதன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டோம். அப்படியிருக்க அது நமக்குத் தீமை செய்ய நினைக்கக் காரணமே யில்லை. அப்படியே அது தீமைசெய்ய முற்பட்டாலும், அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல் நாம் அதற்குத் தீமை செய்யக் கூடாது’ என்று சிங்கம் பெருந்தன்மையுடன் கூறியது.

அப்போது அந்த நரி இடை மறித்து, ‘அரசே, அரச பதவியிலும் செல்வத்திலும் ஆசையில்லாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்தக் காளை மாடு பொல்லாதது. அதை நீங்கள் நம்பிக் கொண்டிருப்பதே சரி இல்லை. எப்போது, எந்த வகையால் உங்களைக் கொல்லலாம் என்று அது சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல அறிவுடைய அமைச்சர்கள் சொல்லும் புத்திமதி முதலில் நஞ்சைப் போல் தோன்றினாலும் பின்னால், அளவில்லாத செல்வத்தையும், வாழ்க்கையையும், இன்பத்தையும் உண்டாக்கும். தீயவர்களின் ஆலோசனை முதலில் அமுதம் போலத் தோன்றுமேனும், விரைவில் எல்லா

வற்றையும் இழக்கச் செய்யும். தனக்கு வேண்டியவர் களை விட்டுவிட்டு வேண்டாதவர்களின் உதவியை நாடுகின்ற ஒருவன், துன்பம் என்கிற முதலையின் வாயில் அகப்பட்டு, துணை செய்வார் யாருமின்றி உயிரை இழக்க நேரிடும். அமுதுாற்றி வளர்த்தாலும் எட்டி மரத்தின் நச்சுக் குணம் மாறாது. பாலுற்றி வளர்த்தாலும் பாம்பு நஞ்சைத்தான் கக்கும். தேனை ஊற்றி ஊற்றி வளர்த்தாலும் வேப்பமரத்தின் கசப்பு மாறாது. அதுபோல, தீயவர்களுக்கு எத்தனை நன்மை செய்தாலும் அவர்களுடைய கெட்ட எண்ணம் மாறாது. தீயவர்களை அடியோடு அழித்துவிட வேண்டும். அப்போதுதான் தீமை அழியும். இத்தனையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், அரசனுக்கு ஒர் அபாயம் வந்தால் அதை முன் கூட்டியே அறிவிப்பது அமைச்சன் கடமையாகும். தன் அறிவினாலே அந்த அபாயம் வராமல் தடுப்பதும் அரசனுக்கு மன உறுதி உண்டாக்குதலும் அந்த அமைச்சனுக்குரிய கடமைகளாகும். நான் இவ்வளவு எடுத்துச் சொல்லியும் தாங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மதம் பிடித்த யானையைப் போல் மனம்போன வழியில் செல்வதும், பெருங்கேடு ஏற்பட்ட காலத்தில், அமைச்சர்களை வெறுத்துப் பேசுவதும் மன்னர்களின் இயல்பாகப் போய்விட்டது’ என்றது நரி.

‘சரி, நான் இன்று அந்த எருதை இது பற்றிக் கேட்கிறேன்” என்றது சிங்கம். 'சரிதான், சரிதான்! இதைவிட வேறு என்ன ஆபத்து வேண்டும்? சூழ்ச்சிக்காரன் ஒருவனைப் பற்றிய யோசனைகளை மனத்தில் வைத்துக் கொள்ளாமல், அவனிடமே வாய்விட்டுச் சொன்னால் அதைவிட ஆபத்து வேறு என்ன வேண்டும்?

'தனக்கென்று சிறப்பாக ஆசிரியர் கூறிய உபதேச மொழிகளையும், தன் மனைவியிடம் கண்ட இன்பத்தையும், தன்னிடம் இருக்கும் செல்வத்தையும், தன் கல்வியையும், வயதையும், தான் செய்யும் தருமத்தையும், தன் ஆலோசனையையும் பிறர் அறியக் கூறக் கூடாது .கூறினால், அதனால் ஏற்படும் பயன் அழிந்து போகும்’ என்று உபதேசம் புரிந்தது நரி.

“என்னை அந்த மாடு என்ன செய்துவிட முடியும்?’ என்று சிங்கம் தன் வலிமையும் ஆங்காரமும் தோன்றக் கேட்டது.

அந்த மாட்டை நம்புவதே கூடாது. அதைப் பக்கத்தில் வைத்திருப்பதே சரியல்ல. அதை மேலும் கூட வைத்துக் கொண்டிருந்தீர்களானால் மூட்டைப் பூச்சியால் அழிந்த சீலைப் பேனைப் போல் அழிய நேரிடும்” என்று எச்சரித்தது நரி.

அந்த எருது என்னைக் கொல்ல நினைத்திருக்கிறது என்பதை நான் எப்படித் தெரிந்து கொள்வது?’ என்று சிங்கம் கேட்டது.

'இப்போது அதைத் தெரிந்து கொள்ள முடியாது. அது வாலை முறுக்கிக் கொண்டு, கொம்பை அசைத்து எகிரிக் குதித்துப் பாய வரும் போதுதான் தெரியும்! அரசே, உங்கள் நன்மைக்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வாய்விட்டுச் சொல்லிவிடாமல் நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள். அந்த மாடு தங்களைப் பாயவரும்போது நீங்கள் அசட்டையாக இருந்து விடாதீர்கள். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். பாயவரும் மாட்டை உயிர் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நரி சிங்கத்திடமிருந்து புறப்பட்டது. எருதைப் போய்க் கண்டது.

‘நரியப்பா, நலம் தானே?’ என்று நலங் கேட்டு வரவேற்றது எருது.

காளையரசே! இந்தச் சிங்க அரசனிடம் சேவை செய்து வாழ்பவர்களுக்கு நலம் எங்கிருந்து வரும்? பொல்லாத பாம்பு போல எப்போதும் கொலைத் தொழிலே குறியாய் வாழும் இந்தச் சிங்கத்தைச் சேர்ந்து விட்டோம். நமக்குக் கிடைக்கும் செல்வத்தால் அதன் பயன் கிடையாது. நாம் எண்ணுகின்ற ஏண்ணங்களாலும் ஏதும் பயனில்லை. நாம் எதைத் தான் அனுபவிக்க முடிகிறது?’ என்று நரி கேட்டது.

நரியப்பா, மனத்தில் வஞ்சகம் இல்லாமல், மன்னன் மணமறிந்து நடந்து கொண்டால் துன்ப முண்டோ? எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும் நம்மிடம் அன்பாய் இருப்பார்களே! தங்கள் சுற்றத் தாரைப்போல நம்மையும் கருதி உயர்வு தருவார்களே!’ என்று எருது கூறியது.

காளையரசே, செல்வத்தையடைந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை அடையாதவர்கள் இல்லை. பெண்களின் இன்பத்தையடைந்து அதனால் தங்கள் பலம் இழக்காமல் வாழ்ந்தவர்கள் இல்லை. கொடிய சாவுக்குத் தப்பி வாழ்ந்தவர்களும் இல்லை. அதுபோல் அரசர்கள் மனம் விரும்பும்படி நடக்கக் கூடியவர்களும் இந்த உலகத்தில் இல்லை.

‘தீயவர்களைச் சேர்ந்து நலமடைந்தவர்கள் யாருமே இல்லை. பிச்சைக்குப் போய் துன்பப்படாத வர்கள் ஒருவரும் இல்லை. களவுத் தொழிலினாலே பெருஞ் செல்வத்தை உண்டாக்கிக் கொண்டவர்கள் எவரும் இல்லை. அதுபோல பயமற்ற அரசர்களாலே வாழ்வு அழியாதவர்களும் யாருமே இல்லை.

‘நல்ல இடத்தை அடைந்து, தங்கள் நல்ல காலத்தினாலே, நல்ல பொருளை அடைந்து நல்ல தோழர்களைப் பெற்று, நடுக்கமில்லாத மனவுறுதி படைத்தவர்கள் சில நாள் இன்ப வாழ்வு வாழ்வார்கள். மற்றவர்கள் எப்போது எந்தக் கணத்தில் அழிவார்கள் என்று சொல்ல முடியாது’ என்று கூறி முடித்தது நரி.

‘நரியப்பா, இதெல்லாம் எதற்காகச் சொல்கிறாய். அரசர் உனக்கு என்ன கேடு நினைத்தார்?” என்று காளை கேட்டது.

‘அரசர் வஞ்சகமாய் நடந்து கொண்டாலும் அதை வெளியில் சொன்னால், சொல்பவர்களுக்குத் தான் அவமானம் உண்டாகும். இந்தச் செய்தி அரசனுக்குச் சிறிது தெரிந்தாலும் என்னைக் கொன்று விடுவான்?.

'இருந்தாலும் நீயும் நானும் மனம் ஒன்றிய நண்பர்கள். ஆகையால்தான் சொல்கிறேன். நாளைக்குச் சிங்கமன்னன் தன் சேனைகளுக்கெல்லாம் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறான். அதற்கு உன்னைத்தான் கொன்று கூறு போட எண்ணியிருக்கிறான்' என்று கூறி முடித்தது நரி.

இதைக் கேட்டதும் அந்த எருதின் நெஞ்சு கலங்கியது. நரியப்பா, அரசன் என்னைக் கொல்ல நினைத்ததற்கு என்ன காரணம்?’ என்று நாக்குழறக் கேட்டது. ப_2

. “இளைத்தவர்கள் மேல் எல்லாருக்குமே கோபம் வரும் என்பார்கள். கொடிய அரசர்களின் கோபத்திற்குக் காரணம் யாரால் அறிய முடியும்?

பரந்து கிடக்கும் கடலின் ஆழத்தை அளந்தாலும் அளக்கலாம்; உலகத்தின் சுற்றளவை அளந்தாலும் அளக்கலாம்; மலையின் உயரத்தை அளந்தாலும் அளக்கலாம்; பெண்களின் மனத்தை அளந்தாலும் அளக்கலாம்; தன்னிடம் வருபவர்களை இரைக்காகக் கொல்லும் இந்த அரசர்களின் மனத்தையாராலும் அளக்க முடியாது.

'மின்னல் கொடிபோன்ற பெண்களின் மனம் எப்போதும் காமுகரையே விரும்பி நிற்கும். பொன்னெல்லாம் உலோபிகள் சேர்த்து வைத்திருக்கும் பொருளோடுதான் போய்ச் சேரும். பெருமழையும் கடலிலே போய்த்தான் பெய்யும். அதுபோல், அரசர்களும் அருகதை இல்லாதவர்களைத்தான் விரும்பிக் கூடுவார்கள்.

'ஏதாவது ஒரு காரணத்தால் அரசன் கோபம் கொண்டிருந்தால், வேறொரு காரணம் கூறி அவன் மனத்தைத் திருத்திவிட முடியும். காரணம் இல்லாமலே கோபம் கொண்டவனை எப்படி மனம் மாற்ற முடியும்? அன்று உன்னை அழைத்து வந்து அதிகாரம் கொடுத்தது சிங்கம். இன்று கொல்ல நினைக்கிறது. இதையெல்லாம் நினைத்தால் பாவமாயிருக்கிறது!’ என்று நரி இரக்க பாவத்துடன் பேசியது.

'துட்டர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வதும், மூடர்களிடம் இனிய மொழி பேசுவதும், ஊமைக்கு உபதேசம் செய்வதும் நட்டமே தவிர ஒரு நன்மையும் இல்லை.

‘அறிவில்லாதவனுக்கு நல்லறிவு புகட்டுவதும், தீய அற்பர்களிடத்தும் தன் இல்லாமை கூறி இரப்பதும், துன்பமும் நோயும் தரும் பெண்களைக் காப்பதும், கல்லின்மேல் எறிந்த கண்ணாடி வளையல் போல் பயனின்றிக் கெடும்.

‘உப்பு மண் நிலத்தில் பெய்த மழையும், செவிடர்களுக்குச் செய்த உபதேசமும், தீயவர்களுக்குப் படைத்த சோறும் ஒன்றுதான்.

‘சந்தனமரக் காட்டிலும், தாமரைக் குளத்திலும், தாழைச் செடியிலும் பாம்பும் முதலையும் முள்ளும் சேர்வதுபோல் அரசர்களைத் துட்டர்கள் போய்ச் சூழ்ந்து கொள்வார்கள்.

'ஆகவே நல்லறிவு படைத்தவர்கள், மன்னர்களிடம் போய்ச் சேர்ந்தால், அம்மன்னர்களை மனமாறுபாடடையச் செய்வதும், அவர்களைக் கொல்ல நினைப்பதும், சூதுகள் புரிவதும் துட்டர்களின் இயற்கை நீதியேயாகும்,’

இப்படியெல்லாம் நரி கூறியதும் அந்த மாடு துயரத்துடன், சிங்க மன்னனின் இனிய சொல்லும், ஆதரவான பேச்சும், அன்புப் பார்வையும் எல்லாம் உண்மை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் அவன் என்னைக் கொன்றுவிட முடிவு செய்து விட்டானா? இது நீதியா? நியாயமா?’ என்று கேட்டது.

‘உனக்கு நமது மன்னன் வணக்கம் சொல்லியதும், உன்னைத் தழுவிக் கொண்டதும், அருகில் வைத்து உபசாரங்கள் செய்ததும் எல்லாம், ஒரு நாள் கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான்.

‘கடவுள் இருளைக் கடக்க விளக்கைப் படைத்தார். கடலைக் கடக்கத் தோணியை உண்டாக்கினார். ஆனால் தீயவர் நெஞ்சில் உள்ள வஞ்சகத்தைக் கடக்கத் தக்க எதையும் அவர் உண்டாக்க வில்லை.

‘யானையின் வெறியை அங்குசத்தால் அடக்கலாம். வெயிலின் கொடுமையை விசிறியால் தணிக்கலாம். அற்பர்களின் வெறியை அடக்க மட்டும் வழியில்லை. அவர்கள் செத்தால்தான் அது அவர்களோடு சேர்ந்து அழியும்.

'பூவில் இருக்கும் தேனை உண்டு இன்பமாக வாழ்வதை விட்டு, யானையின் மத நீரை உண்ணப் போய் அதன் முறம் போன்ற காதினால் அடிபட்டுச் சாகும் வண்டு. அதுபோல் நல்லவர்கள் பேச்சைக் கேட்காமல், தீயவர்கள் சொல்வதைக் கேட்டு ஒழிந்து போவது துடுக்குடைய அரசர்களின் தன்மை.

‘தீயவர்களின் சேர்க்கையால் நல்லவர்களும் நட்டம் அடைவார்கள்; அதனால் ஒரு நன்மையும் வராது. ஒரு காகம், ஒர் ஒட்டகத்தை அழித்த கதையும் இதைப் போன்றது தான்.

கொடியவர்களோடு கூடியவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் உயிர்விட்டு ஒழிய வேண்டியது தான். மூர்க்கத்தனமுள்ள அரசர்கள் கையில் இறப்பதை விடப் போரில் இறப்பது சிறப்பாகும்.

போரில் உயிர் விட்டால் சுவர்க்கம் போகலாம் இல்லாவிட்டால் இந்த உலகத்தை ஆளலாம். வீணாக, ஒன்றுக்கும் பயனில்லாமல் உயிரை விட்டால், சொர்க்கமும் கிடைக்காது; பூமியும் கிடைக்காது; நரகத்தில் தான் போய்ச் சேர வேண்டும் .

பகைவர்களோடு போரிட்டு இறந்தவர்கள் இறந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். உயிருக்குப் பயந்து கொண்டு உயிரோடு இருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களேயன்றி வேறல்லர்.

அறிவில்லாதவர்கள், தங்களுக்கிருக்கும் பலத்தை வைத்துக் கொண்டு மற்றவர்களைச் சிறியவர்கள் என்று மதித்து விடுகிறார்கள். இது எப்படியிருக்கிற தென்றால் சிட்டுக் குருவியை அற்பமென்று நினைத்து கடைசியில் கடலரசன் தன் வீராப்பு அடங்கியதைப் போலிருக்கிறது.’ என்று பல கதை களைக் கூறி, நரி காளை மாட்டுக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது.

எல்லாவற்றையும் உண்மை என்று நினைத்துக் கொண்ட எருது ,'ஒப்புயர்வில்லாத அந்தச் சிங்கத்தைச் சண்டையிட்டுக் கொல்ல எப்படி முடியும்? அதற்கு ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும்’ என்று நரியைத் தானே கேட்டது.

'சிங்கம் உன்னைக் கொல்ல வரும்போது, கோபத்துடன் வரும். அப்போது அதன் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும். வாயைப் பிளந்து கொண்டு கண்கள் சிவக்க அது பாய்ந்து வரும். அந்த சமயம் பார்த்து வாலைத் தூக்கிக் கொண்டு தலையையும் கொம்பையும் ஆட்டியபடி எதிரில் சென்று போரிடு’ என்று நரி வழி சொல்லியது.

இவ்வாறு எருதை முடுக்கிவிட்டு நரி, நேரே சிங்கத்திடம் சென்றது.

'இன்று எருது தங்களைக் கொல்ல வருகிறது அரசே, எச்சரிக்கையாயிருங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில் எருது அங்கே வந்தது. அப்போது சிங்கம் கோபத்தோடு அதை உற்றுப் பார்த்தது. அதன் கண்கள் சிவந்திருந்தன. இதைக் கண்டதும், நம்மோடு சண்டை செய்யச் சிங்கம் தயாராக இருக்கிறது என்று நினைத்துக் காளைமாடு வாலைத் தூக்கிக் கொண்டு கொம்பை ஆட்டியபடி ஒடி வந்தது.

சிங்கம் அதன் வாயைப் பிளந்து கொண்டு அதன் மேல் சீறிப் பாய்ந்தது. மண்ணும் விண்ணும் அதிர,

கடலும் மலையும் அதிர, அவை ஒன்றொடொன்று மோதிப் போரிட்ட காட்சி பார்க்கப் பயங்கரமாயிருந்தது. இரண்டு நரிகளும் இந்தப் பயங்கரமான காட்சியை ஒரு புதர் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தன. காரணமில்லாமல் அவையிரண்டும் ஒன்றையொன்று உதைப்பதும் மோதுவதும் அறைவதும் கண்ட இரண்டாவது நரிக்கு மனம் பொறுக்கவில்லை.

அது, முதல் , நரியைப் பார்த்து, 'போதும், அரசர்க்குத் துன்பம் உண்டாக்குவது தெய்வத் துரோகம் அல்லவா? சண்டையை விலக்கி மீண்டும் நட்பை உண்டாக்கி விடுவதுதான் சரி.

'உண்மை யில்லாமல் புண்ணியம் தேடுவோரும், உறவினர்களைக் கெடுத்துச் செல்வம் சேர்ப்போரும், பலாத்காரத்தினால் பெண்களை அடைவோரும், உயிருக்குயிரான இருவரைக் கெடுத்துத் தாம் வாழ நினைப்போரும் உலகில் இன்பமடைய மாட்டார்கள். துட்ட புத்தி கெட்டதைப் போலவும், இரும்பை எலி தின்ற தென்ற செட்டியைப் போலவும் துன்பமடை வார்கள். ஆகவே, நீ இப்போதே போய் அவர்கள் சண்டையை விலக்கி விடு' என்று பலவாறாக எடுத்துச் சொல்லியது.

இதைக் கேட்ட முதல் நரி ஒருவாறாக மனம் தேறிச் சிங்கத்தை நோக்கிச் சென்றது. அதற்குள் சிங்கம் எருதைக் கொன்று விட்டது.

செத்துக் கிடந்த மாட்டைக் கண்டு சிங்கம் கண்ணிர் விட்டுப் புலம்பிக் கொண்டிருந்தது,

அருகில் சென்ற முதல் நரி, சிங்கத்தைப் பார்த்து, 'சண்டைக்கு வந்தவனைத்தானே கொன்றீகள்? இதற்கு ஏன் அழ வேண்டும் அரசே?' என்று கேட்டது. .

ஒரு நன்மையும் தராத நச்சு மரமானாலும், நாம் வளர்த்ததை நாமே வெட்டுவதென்றால் உளம் பொறுக்குமோ, உலகம் புகழும் ஓர் அமைச்சனைக் கொல்லுகின்ற அரசனுக்குப் பெரும் கேடு வராதா?’ என்று கூறிச் சிங்கம் வருந்தியது.

‘அரசே, கடமைப்படி நடவாதவர்களையும், தன் சொல் கேளாத மனைவியையும், மனத்தில் கபடம் நினைத்திருக்கும் தோழனையும், பெரும் போரிலே புறமுதுகிட்டு ஓடும் சேனையையும், ஆணவ வெறி பிடித்திருக்கும் அமைச்சனையும் முன்பின் பாராமல் அழித்து விடுவதே சிறந்த நீதியாகும். இவர்களால் கிடைத்த இன்பத்தைப் பற்றி அரசர்கள் நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை.”

இப்படிப் பலவிதமாகக் கூறி, அந்தச் சிங்கத் தின் நெஞ்சில் இரக்கமே இல்லாமல் அடித்து விட்டது முதல் நரி.

பிறகு, இரண்டாவது நரியையும் சேர்த்துக் கொண்டு செத்துக் கிடந்த எருதின் உடலை இழுத்துச் சென்று காட்டின் வேறொரு பக்கத்தில் கொண்டு போய்ப் போட்டுத் தன் இனமாகிய நரிகளுக்கெல்லாம் விருந்திட்டுத் தானும் தின்று மகிழ்ந்திருந்தது.

2. ஆப்பு பிடுங்கிய குரங்கு

பழைய ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது. கோயில் திருப்பணிக்காக மரங்களை அறுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த மரங்களின் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன், பாதி அறுத்தபின் அறுத்த பிளவிலே ஆப்புவைத்துவிட்டு, மீதியை அறுக்காமல் சென்று விட்டான். கோயிலையடுத்திருந்த மாதுளை மரச் சோலையில் பல குரங்குகள் இருந்தன. அந்தக்

குரங்குகளில் சில, தாவி விளையாடிக் கொண்டே மரம் அறுத்துக் கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது. அது சும்மாயிருக்காமல், அந்த மரப்பிளவில் வைத்திருந்த ஆப்பை

அசைத்து அசைத்துப் பிடுங்கியது. ஆப்பைப் பிடுங்கியவுடன், பிளந்திருந்த மரத்தின் இரு பகுதிகளும் நெருங்கின. அவற்றிற் கிடையிலே மாட்டிக் கொண்ட அந்தக் குரங்கு உடல் நசுங்கி உயிர் விட்டது.

ஆகையால் தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடக்கூடாது.

3. முரசொலி கேட்ட நரி

ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப்போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு

மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது. இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது. நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

4. தங்களால் தாங்களே கெட்டோர்

முன் காலத்தில் ஒரு சாமியார் இருந்தான். அவன் பெயர் தேவசன்மா என்பது. அவன் பிச்சை யெடுத்துப் பிழைத்து வந்தான். பிச்சை யெடுத்துச் சேர்த்த காசை யெல்லாம் அவன் ஒரு கந்தையில் முடிந்து வைத்திருந்தான். அவன் பணம் சேர்த்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை எப்படியோ ஆஷாடபூதி என்ற பார்ப்பனன் தெரிந்து கொண்டு விட்டான். ஆஷாடபூதி ஒரு திருடன் திருடிப் பிழைப்பதே அவன் தொழில். சாமியாருடைய கந்தையைத் திருடி எடுத்துக் கொண்டு விட்டால், பிறகு நாள்தோறும் திருட வேண்டியதில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு பல நாள் இன்ப வாழ்வு நடத்த முடியும் என்று ஆஷாடபூதி நினைத்தான். இதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.

ஆஷாடபூதி சாமியாரிடம் வந்து, அவன் காலில் விழுந்து வணங்கினான். தனக்குத் திருமணமாக வில்லை என்றும், தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு, நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினான். தேவசன்மாவும் அவனைத் தன் சீட னாக ஏற்றுக் கொண்டான். ஆஷாடபூதியும் மிகவும் நல்லவன் போல் சாமியாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான்.

இப்படியிருந்து வரும் நாளில் ஒரு நாள், ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந் துண்டுவிட்டுப் புறப்பட்ட அவர்கள் நெடுந்துாரம் சென்ற பிறகு, ஆஷாடபூதி தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, 'சுவாமி, நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்து இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவளித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஒடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று ஓடினான். சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடு நேரம் உட்கார்ந் திருந்துவிட்டு அவன் திரும்பி வந்தான்.

இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவசன்மாவுக்கு தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமாகியது.

ஒரு நாள் சாமியாரும் சீடனும் ஒரு குளக் கரையை அடைந்தார்கள். குளத்தில் இறங்கிக்

கால் கை கழுவிக் கொண்டு வருவதற்காக சாமியார் போகும் போது, கரையில் இருந்த ஆஷாடபூதியிடம் என்றும் விட்டுப் பிரியாத தன் கந்தை முடிப்பைக் கொடுத்து. வைத்திருக்கும்படி கூறிவிட்டுப் போனான்

சாமியார் கை கால் கழுவிக் கொண்டு திரும்பும் போது, குளத்தின் கரையில் மற்றொரு பக்கத்தில், இரண்டு ஆட்டுக் கடாக்கள் முட்டி மோதிச் சண்டை

போட்டுக் கொண்டிருந்தன. துரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நரி அவற்றின் தலையிலிருந்து வழிந்து தரையில் கிடக்கும் இரத்தத்தைக் குடிப்பதற்காக அங்கு வந்தது. இரண்டு கடாக்களுக்கு இடையில் புகுந்து இரத்தம் குடிக்கத் தொடங்கிய நரி அவற்றின் இடையில் சிக்கி முட்டுப் பட்டு மோதுண்டு உயிரை இழந்தது. இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே சாமியார் தேவசன்மா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.

இந்த வேளை போனால் இன்னொரு வேளை வாய்க்காது என்று எண்ணிய ஆஷாடபூதி அப்போதே, சமியாரின் கந்தை முடிப்பை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான். காட்டுக்குள் எங்கோ சென்று மறைந்து விட்டான். திரும்பி வந்த சாமியார் தன் சீடனைக் காணாமல் மனம் வருந்தினான். அவனைத் தேடிக் கொண்டு ஊர் ஊராக அலைந்தான்.

அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவன் ஆஷாடபூதியைக் கண்டு பிடிக்கவில்லை.

அறிவின்மையால் தேவசன்மா தன் கைப்பொருளை இழந்தான். யோசனையில்லாமல் ஆட்டுக்கடாப் போரில் நடுவில் சென்று மாட்டிக் கொண்டு நரி உயிரிழந்தது.

இதுதான் தங்களுக்குத் தாங்களே கேடு செய்து கொண்ட கதை.

5. கரும்பாம்பைக் கொன்ற காகம்

ஒரு மரக் கிளையில் ஆணும் பெண்ணுமாக இரண்டு காகங்கள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன. அந்தக் காகங்கள் அம்மரக் கிளையில் நெடு நாளாகத் தங்கியிருந்து வந்தன. அந்த மரத்தில் இருந்த ஒரு பொந்துக்குக் கரும்பாம்பு ஒன்று புதிதாக வந்து சேர்ந்தது. அந்தக் கரும்பாம்பு, பெண்காகம் இடுகின்ற முட்டைகளை எல்லாம் ஒன்று விடாமல் குடித்துக் கொண்டிருந்தது. காகங்களால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

ஆண் காகம் தன் உயிர் நண்பனான நரி யொன்றிடம் போய் யோசனை கேட்டது.

'அந்தப் பாம்பைக் கொல்வதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். அரசியாரின் குளியல் அறைக்குப் பறந்து போ. அவர்கள் குளிக்சுச் செல்லும் போது கழற்றி வைக்கும் நகைகளில் ஒன்றைக் கொண்டு வந்து பொந்தில் போட்டு விடு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்!' என்றது நரி.

காகம் அப்பொழுதே அரண்மனைக்குப் பறந்து சென்றது. அரசி அப்போதுதான் நகைகளைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கத் தொடங்கினாள். காகம் போய் ஒரு நகையைக் கெளவிக் கொண்டு பறந்தது. அரசி கூவினாள். உடனே வேலை ஆட்கள் ஓடி வந்தார்கள். அரசி நடந்ததைக் கூறியதும் வேலையாட்கள் காகத்தைப் பின் தொடர்ந்து ஒடி வந்தார்கள், காகம் பறந்து வந்து, பாம்பு இருந்த பொந்துக்குள் நகையைப் போட்டுவிட்டு வேகமாகப் பறந்து சென்றது. பின் தொடர்ந்து வந்த வேலைக்காரர்கள் இதைக் கண்டார்கள். உடனே வேகமாக ஓடி வந்து அந்த மரப் பொந்தைப் பிளந்தார்கள். உள்ளேயிருந்த பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது. அரண்மனையாட்களில் ஒருவன், தன் வாளால் அதை இரு துண்டாக வெட்டிப் போட்டான். பிறகு வேலைக்காரர்கள் பொந்துக்குள் கிடந்த நகையை எடுத்துக் கொண்டு போய் அரசியிடம் கொடுத்தார்கள்.

காகங்கள் எவ்விதமான கவலையும் இல்லாமல் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து மேலும் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்து வந்தன.

சூழ்ச்சியினால் எதையும் எளிதாக முடிக்கலாம் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக் காட்டாகும்.

6. சிங்கத்தைக் கொன்ற முயல்

ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்நது அது அந்தக் காட்டில் இருந்த மற்ற விலங்குகளை எல்லாம் கண்டபடி வேட்டையாடிக் கொன்று தின்று கொண்டிருந்தது. இவ்வாறு நாளுக்கு நாள் அதன் வெறிச் செயல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதைக் கண்ட மற்ற விலங்குகளெல்லாம் ஒன்றாகக் கூடி அந்தச் சிங்கத்தினிடம் சென்றன.

'சிங்கம், இந்தக் காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் கண்டபடி வீணாகக் கொன்று கொண்டிருக்க வேண்டாம். இப்படிச் செய்து கொண்டிருந்தால் விரைவில் இந்தக் காட்டில் விலங்குகளே இல்லாமல் போய்விடும். ஆகையால் நாங்கள் இதற்கு ஒர் ஏற்பாடு செய்கிறோம். நாள் ஒன்றுக்கு ஒரு விலங்கு ஆக உனக்கு இரையாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்றன.

சிங்கம் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொண்டது. அதுபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலங்காக வந்து சிங்கத்திற்கு இரையாகிக் கொண்டிருந்தன.

ஒரு நாள் ஒரு முயலின் முறை வந்தது.' இனி நாம் பிழைக்க முடியாது. இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். இதில் நாம் வெற்றி பெற்றால் காட்டு விலங்குகளை எல்லாம் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும். நாமும் சாவினின்று தப்பலாம்’ என்று அந்த முயல் ஒரு சிந்தனை செய்தது.சிங்கத்தின் பசி வேளைக்குச் செல்ல வேண்டிய முறைப்படி செல்லாமல், நெடுநேரம் கழித்துச் சென்றது முயல். வேளை தப்பி வந்த முயலைக் கண்ட சிங்கத்திற்குக் கோபம் வந்து விட்டது.

‘ஏ, அற்ப முயலே, பெரிய மதயானை கூட என் பசி வேளைக்குத் தப்பி வந்ததில்லை. நீ ஏன் பிந்தி வந்தாய்?’ என்று சீறியது.

ஐயா, கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் பசி வேளைக்குச் சரியாக வந்து சேர வேண்டும் என்று சரியான நேரத்தில்தான் புறப்பட்டேன். ஆனால் வழியில் மற்றொரு கொடிய சிங்கத்தைக் கண்டு, எங்கே அதன் கண்ணில் பட்டால் அதற்கு இரையாகி விடுவோமோ என்று பயந்து ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல அந்தச் சிங்கம், அங்கிருந்த ஒரு பெரிய குகைக்குள் நுழைந்து சென்றதைக் கண்ட பிறகு, வெளிப்பட்டு வேகமாக உங்களிடம் வந்து சேர்ந்தேன்’ என்றது அந்த முயல்.

‘என்னைத் தவிர இன்னொரு சிங்கமும் இந்தக் காட்டில் இருக்கிறதா? எங்கே அதைக் காட்டு பார்க்கலாம்! 'என்றது சிங்கம்.

உடனே முயல் சிங்கத்தை அழைத்துக் கொண்டு போய்ப் பக்கத்தில் இருந்த ஒரு பாழுங் கிணற்றைக் காட்டியது. சேறும் நீருமாக இருந்த அந்தக் கிணற்றுக்குள் சிங்கம் எட்டிப் பார்த்தது. தெளிவாகக் கிடந்த அந்தக் கிணற்று நீரில் சிங்கத்தின் நிழல் தெரிந்தது.

முயல் சொல்லிய மற்றொரு சிங்கம் அது தான் என்று எண்ணிய அந்த மூடச் சிங்கம், ஆத்திரங் கொண்டு கிணற்றுக்குள்ளே பாய்ந்தது. கிணற்றுக்குள் இருந்த சேற்றில் சிக்கி அது வெளியில் வர முடியாமல் உயிரிழந்தது.

சூழ்ச்சியினால் யாரையும் வெல்லலாம் என்பதற்கு இந்தக் கதை நல்ல எடுத்துக் காட்டாகும்.

7. கொக்கைக் கொன்ற நண்டு

நாள் தோறும் மீன்களைக் கொத்தித்தின்று உடல் வளர்த்து வந்த ஒரு கொக்கு இருந்தது. அது வழக்கம் போல ஒரு குளத்திற்கு மீன் கொத்தித் தின்னச் சென்றது. அப்போது குளத்தின் கரையில் ஒரு பால் நண்டு மிகக் கவலையோடு நின்று கொண்டிருந்தது.

அந்த நண்டைப் பார்த்து, 'நீ ஏன் கவலையோடிருக்கிறாய்?' என்று கொக்குக் கேட்டது.

என்ன சொல்வேன்! கொலைகாரர்களாகிய வலைகாரர்கள் இந்தப் பக்கத்திலுள்ள ஏரி, குளம் எல்லாம் வலை வீசி ஒரு சின்னஞ்சிறு பொடி மீன் கூட விடாமல் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். நாளைக்கு இந்தக் குளத்திற்கு வரவேண்டும் என்று பேசிக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைக்கு வந்து பிடித்துக் கொண்டு போய் சந்தைக்கடைகளிலே வைத்து விற்று விடுவார்கள். இவர்கள் கைக்குத் தப்புவது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பால்நண்டு பதில் கூறியது.

'நண்டே, நண்டே, பால் நண்டே! அந்தப் பழி கார வலைகாரர்கள் வருமுன்னே தப்புவிக்க நான் ஒரு வழி சிந்தித்திருக்கிறேன். அந்தப்படி செய்தால் எல்லா மீன்களுமே உயிர் தப்பலாம்' என்று கொக்கு கூறியது.

'எப்படி?’ என்று நண்டு ஆவலோடு கேட்டது. ‘எப்படியாவது, அந்த மீன்களையெல்லாம் இங்கே கூட்டிக் கொண்டு வா. நான் ஒவ்வொரு மீனாகத் தூக்கிக் கொண்டு போய் இன்னொரு குளத்தில் விட்டுவிடுகிறேன்’ என்றது கொக்கு.

கொக்கு சொன்னதை நம்பிய அந்த நண்டு, மீன்களிடம் போய் இந்த யோசனையைக் கூறியது. எப்படியும் வலைகாரர்களிடமிருந்து தப்பினால் போதும் என்றிருந்த மீன்கள் இந்தக் கருத்தை உடனே ஒப்புக் கொண்டன.

கொக்கைக் கொன்ற நண்டு 47

மீன்கள் எல்லாம் கரையோரத்திற்கு வந்தன. கொக்கு ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு மீனாகக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சிறிது துரம் சென்றதும் அந்த மீன்களைக் கொத்தித் தின்றது. வயிறு நிரம்பிய பிறகு, கொண்டு போன மீன்களை ஒரு பாறையில் காயப் போட்டு வைத்தது.

மீன்கள் எல்லாவற்றையும் கொத்திக் கொண்டு சென்ற பின் நண்டுதான் மிஞ்சியது. நண்டின் தசையையும் தின்னலாம் என்ற ஆசையோடு, அதையும் கொத்திக் கொண்டு பறந்து சென்றது. பறந்து செல்லும் வழியில் நண்டு கீழே பார்த்தது. எங்கு பார்த்தாலும் மீன் எலும்புகள் தரையில் கிடப்பதைக் கண்டதும், அது கொக்கு செய்த செயல் என்ன வென்று புரிந்து கொண்டது.'மீன்களையெல்லாம் தின்றது போதாமல் நம்மையும் இந்தக் கொக்கு கொல்லத் துணிந்து விட்டது. சூழ்ச்சியை, சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும். நம்மை இது கொல்லுமுன் இதை நாம் கொன்றுவிட வேண்டும்’ என்று எண்ணிய நண்டு, மெல்லத் தன் முன்னங் கால்கள் இரண்டையும் நீட்டி, கொக்கின் கழுத்தை வளைத்துப் பிடித்து நெருக்கியது. கழுத்து நசுங்கியதும், கொக்குக் கீழே விழுந்து இறந்தது. நண்டு வேறொரு குளத்திற்குப் போய்த் தன்இனத்தோடு சேர்ந்து கொண்டது.

பெரும் பகையையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என்பது இக்கதையிலிருந்து விளங்குகிறது.8. மூட்டைப்பூச்சியால் இறந்த சீலைப்பேன்

ஓர் அரசனுடைய படுக்கையில் சீலைப்பேன் ஒன்று வாழ்ந்து வந்தது. அரசனும் அரசியும் உறங்கும் நேரம் பார்த்து அது அவர்கள் உடலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்து வந்தது. ஒருநாள் கொள்ளிவாய்ப் பிசாசு வந்ததுபோல் ஒரு சிறு மூட்டைப் பூச்சி அங்கு வந்து சேர்ந்தது. அது சீலைப் பேனை நெருங்கி, 'நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறியது.

'இல்லை இல்லை, வேண்டாம். முள் போன்ற உன் பற்களால் அரசன் துங்குவதற்கு முன்னாலேயே நீ கடித்து விடுவாய். உன்னால் என் வாழ்வுக்கும் முடிவு வந்து விடும்’ என்று சீலைப் பேன் மறுத்துக் கூறியது.

'நான் அப்படித் துடுக்குத் தனமாக நடந்து கொள்ள மாட்டேன். நீ சொன்னபடி கேட்டுக் கொண்டிருப்பேன்'என்று கெஞ்சியது மூட்டைப் பூச்சி.

'சரி, அப்படியானால் இங்கேயே இரு. எப்பொழுதும் வெடுக்கென்று கடிக்காதே. அரசனும் அரசியும் உறங்குகின்ற நேரம் பார்த்து மெதுவாகக் கடித்து இரத்தம் குடித்து உன் பசியைப் போக்கிக் கொள்’ என்று கூறி அந்த மூட்டைப் பூச்சிக்குச் சீலைப்பேன்".இடம் கொடுத்தது.

கெஞ்சி இடம் பிடித்துக் கொண்ட அந்த மூட்டைப் பூச்சி, அன்று இரவே அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அரசனை வெடுக்கென்று கடித்து விட்டது.

'ஏதோ என்னைக் கடித்து விட்டது’ என்று அரசன் கூறியதும் வேலைக்காரர்கள் விளக்குடன் ஒடி வந்தார்கள்.

அரசனைக் கடித்த மூட்டைப் பூச்சி வேலைக்காரர்கள் வருவதற்குள் எங்கோ ஒரு மூலையில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. நடந்தது அறியாத சீலைப் பேன் அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டது உடனே அவர்கள், ' நீ தானே இந்தப் பொல்லாத வினையைச் செய்தாய்?’ என்று சொல்லிக் கொண்டே, சீலைப் பேனை நசுக்கிக் கொன்று விட்டார்கள். வகை தெரியாமல் நட்புக் கொண்ட அந்தச் சீலைப் பேன், பாவம் இறந்து ஒழிந்தது.

ஒருவனுடைய தன்மையை உணராமல் அவனுடன் நட்புக் கொள்ளக் கூடாது. 

9. ஒட்டகத்தைச் கொன்ற காகம்

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்துகொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும் ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன.

ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்களில் ஒருவனாக இருக்கும்படி கூறியது.

எல்லாம் ஒன்றாகப் பல நாட்கள் இருந்தன. ஒரு நாள் சிங்கம் நோயுற்றிருந்ததால், தன் அமைச்சர்களாகிய புலி, நரி, காகம், ஒட்டகம் ஆகியவற்றைப் பார்த்து, ' என் பசியைத் தீர்க்க ஏதாவது இரை தேடிக் கொண்டு வாருங்கள்’ என்று கூறியது.

அவை நான்கும் காடெல்லாம் சுற்றித் திரிந்து எங்கும் இரை கிடைக்காமல் திரும்பி வந்தன.

ஒட்டகத்திற்குத் தெரியாமல், காகம் மற்ற இரண்டையும் அழைத்துக் கொண்டு சிங்க மன்னனி டம் சென்றது.

‘மன்னா, காடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் இரை கிடைக்கவில்லை” என்று காகம் கூறியது.

“அப்படியானால் என் பசிக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?’ என்று சிங்கம் கேட்டது.

'மன்னா ஒட்டகம் இருக்கிறதே!’ என்று காகம் கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும் பாவம்’ என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது.

“மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்’ என்று காகம் எடுத்துக் கூறியது.

‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரியல்ல' என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.

‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம்' என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலியையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது.

ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன.

‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்’ என்று காகம் கூறியது.

‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?' என்று சிங்கம் பதில் கூறியது.

உடனே நரி, 'என்னைத் தின்னுங்கள்’ என்றது.

‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே' என்று சிங்கம் கூறியது.

புலி முன் வந்து,' அரசே என்னைச் சாப்பிடுங்கள்!' என்று வேண்டியது,

'நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல’ என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம்' நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது’ என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், 'அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது.

அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது.

சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத்தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது.

கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. 

10. கடலை வென்ற சிட்டுக்குருவி

ஒரு கடற்கரையில் மேய்ந்து வாழ்ந்து வந்தது ஓர் ஆண் சிட்டு. அந்தச் சிட்டுக்கு ஒரு மனைவிச் சிட்டு இருந்தது. இரண்டும் கடற்கரையில் இருந்த ஒரு செடியின் கீழ் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. பெண் சிட்டுக்குச் சினை ஏற்பட்டவுடன் அது ஆண் சிட்டைப் பார்த்து 'நான் எங்கே முட்டையிடுவது?' என்று கேட்டது.

'எங்கே இடுவது? இங்கேயே இட வேண்டியது தான்! இதைவிட வேறு இடம் நமக்கு எங்கேயிருக்கிறது?’ என்று பதில் சொல்லியது ஆண் சிட்டு.

'கடற்கரையில் முட்டையிட்டு வைத்தால் அலையடித்து கடல் எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது?’ என்று பெண் சிட்டுக் கலங்கியது.

'போடி, போ! பெண் புத்தி என்பது சரியாக இருக்கிறது. நாம் இன்னார் என்று நினைத்துப் பார்க்காமல் அந்தக் கடல் நம் முட்டைகளை எடுத்துக் கொண்டு போனால், அது படும்பாடு நாயும் படாது!’ என்று அந்த ஆண் சிட்டுக்குருவி வீராப்புப் பேசியது.

'என்ன புத்தியோடு இப்படிப் பேசுகிறாய்? வாயடக்கமில்லாத ஆமை இறந்த கதை உனக்குத் தெரியாதா? அந்த ஆமையின் கதையும் மூன்று மீன்

களுடைய கதையும் தெரிந்தால் நீ இப்படிப் பேச மாட்டாய்! என்று பெண் சிட்டுக் கூறி அந்தக் கதைகளையும் விளக்கமாகச் சொல்லியது.

'அது கிடக்கட்டும், நமக்குள்ள இடம் இதுதான்! இங்கேதானே நீ உன் முட்டைகளை யிடு' என்று கட்டாயமாகக் கூறியது ஆண் சிட்டு.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கடலரசன் ‘ஓகோ! இவற்றின் சமர்த்தைப் பார்க்கலாம்!’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டது.

பெண் குருவி யிட்டு வைத்த முட்டையை அலையடித்துக் கொண்டு போய் விட்டது.

இதைக் கண்ட ஆண் சிட்டுக்குருவி கடலைப் பார்த்து, 'ஏ, கடலே, இப்போதே என் முட்டையைத் திருப்பிக் கொண்டு வந்தால் சும்மா விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் உனக்குத் துன்பம் ஏற்படச் செய்வேன்’ என்று கூறியது.

கடல் அதற்குப் பதில் ஒன்றும் பேசவில்லை.

சிட்டுக்குருவி, உடனே பறந்து சென்று எல்லாச் சிட்டுக்களையும் அழைத்தது. சிட்டுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின் மற்ற பறவைகளை எல்லாம் அழைத்துக் கொண்டு பறவை அரசனை நோக்கிப் பறந்தது அந்த ஆண் சிட்டு. பறவையரசன் கருடன் முன் போய், கருடதேவா, பறவைக் குலங்களுக்கே பெரிய பழி ஏற்பட்டு விட்டது. கடலரசன் எங்கள் முட்டைகளை யடித்துக் கொண்டு போய் விட்டான். இக்கணமே அதைத் திரும்பப் பெறாவிட்டால், யாரும் நம் குலத்தை மதிக்க மாட்டார்கள்’ என்று வருத்தத்துடன் கூறியது.

கருடன் உடனே திருமாலிடம் பறந்து சென்று முறையிட்டது. திருமால் உடனே கடலரசனை அழைத்து,' ஏன் முட்டையை எடுத்துச் சென்றாய்? இப்பொழுதே கொண்டு வந்து அந்தச் சிட்டுக் குருவியிடம் கொடுத்துவிடு. இல்லை என்றால் என் கோபத்துக்கு ஆளாவாய்’ என்று கட்டளை யிட்டார்.

கடவுளின் கட்டளையைக் கேட்ட கடலரசன் பயந்து நடுங்கி உடனே முட்டைகளைக் கொண்டு வந்து சிட்டுக் குருவிகளிடம் கொடுத்து விட்டான்.

கூட்டு முயற்சியால் ஆகாத காரியம் உலகத்தில் என்ன இருக்கிறது? எதுவுமே இல்லை. 

11. வாயடக்கம் இல்லாத ஆமை

இரண்டு அன்னங்களும் ஒர் ஆமையும் ஒரு குளத்தில் இருந்தன. அன்னங்களும் ஆமையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இருந்து வரும் போது, நெடுநாள் மழை பெய்யாததால் அந்தக் குளத்து நீர் வற்றிப் போயிற்று. இதைக் கண்ட அன்னங்கள் இரண்டும் வேறொரு குளத்துக்குப் போகத் தீர்மானித்தன. அவை தங்கள் நண்பனான ஆமையை விட்டுப் போக மனமில்லாமல், அதை எவ்வாறு அழைத்துப் போவதெனச் சிந்தனை செய்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, அந்த ஆமையை அழைத்து, ‘நாங்கள் இரண்டு பேரும் இந்தக் குச்சியின் இரு நுனியையும் கவ்விக் கொண்டு பறக்கிறோம். நீ அதன் நடுப்பாகத்தை உன் வாயினால் பற்றிக் கொண்டு வா. இடையில் வாய் திறக்காதே’ என்று கூறின.

ஆமையும் சரியென்று அந்தக் குச்சியை வாயினால் பற்றிக் கொண்டது. அன்னங்கள் இரண்டும், இரண்டு பக்கமும் குச்சியைக் கவ்விக் கொண்டு பறந்தன. வானத்தில் ஆமை பறக்கும் புதுமையைக் கண்ட அந்த ஊரில் இருந்தவர்கள், வியப்புத் தாங்

காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள். இதைக் கண்ட அந்த ஆமை,' எதற்காகச் சிரிக்கிறீர்கள்!’ என்று அவர்களைக் கேட்பதற்காகத் தன் வாயைத் திறந்தது. உடனே அது பிடி நழுவித் தரையில் விழுந்து இறந்து போய்விட்டது. 

12. மூன்று மீன்கள்

ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன.அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும்.

ப-4

அவை மூன்றும் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள், வலைஞர்கள் வந்து நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டவுடன் வருமுன்காப்போன் என்ற மீன், மற்ற மீன்களைப் பார்த்து, 'இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும்’ என்று சொல்வியது.

அதற்கு வருங்கால்காப்போன் என்ற மீன் 'என்ன அவசரம்? அந்தச் சமயத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். சமயத்திற்குத் தகுந்தாற் போல் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம்' என்று கூறியது.

வருமுன்காப்போன் என்ற மீன், இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளாமல் அப்பொழுதே அந்தக் குளத்தைவிட்டு மற்றொரு குளத்திற்குப் போய்

விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன் முதலிய மீன்களெல்லாம் அந்தக் குளத்திலேயே இருந்தன. பேசிச் சென்றபடி மறுநாள் வலைஞர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்போது வலையில் அகப்பட்டுக் கொண்ட வருங்கால்காப்போன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது. அதைக் கண்டு ஒரு செம்படவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் காணாமல் தண்ணிருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. வந்தபின் காப்போனும், மற்ற மீன்களும் வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்டு செம்படவர்கள் கையிலே சிக்கி மடிந்து போயின.

முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவு செய்பவன் உறுதியாகப் பிழைத்துக் கொள்வான். அவ்வப்போது சிந்தித்து வேலை செய்யும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான். 

13. குரங்குக்கு அறிவு சொன்ன கொக்கு

ஒரு காட்டில் பல குரங்குகள் வசித்து வந்தன. ஒரு நாள் இரவு குளிர் தாங்காமல் அவை குளிர் காய்வதற்கு எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் மின்மினிப்

பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டு தீ என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தை நோக்கிச் சென்றன. குரங்குகள் பேசிக் கொண்டதைக் கேட்டு, மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஒரு கொக்கு 'குரங்குகளே அது தீயல்ல; மின்மினிப் பூச்சி’ என்று கூறியது. இதைக் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. உடனே அது மரத்தின்மேல் பாய்ந்து சென்று அந்தக் கொக்கைப் பிடித்து, 'நீயா எனக்கு அறிவு புகட்டுகிறவன்?' என்று கேட்டு அப்படியே ஒரு பாறையில் அடித்துக் கொன்று விட்டது.

தீயவர்களுக்கு நல்லது சொல்லக் கூடாது.14 சாட்சி சொன்ன மரம்

ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி. இரண்டு பேரும் பணம் சேர்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றார்கள். அங்கே நல்லபுத்திக்கு ஆயிரம் பொன் கிடைத்தது, கெட்டபுத்திக்கு எதுவும் கிடைக்க வில்லை.

நல்ல நோக்கமுடைய நல்லபுத்தி, கெட்டபுத்தியைப் பார்த்து, 'கவலைப்படாதே, நாம் இருவரும் ஆளுக்கு ஐநூறு பொன்னாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்' என்று கூறினான்.

'சரியென்று ஒப்புக் கொண்ட கெட்டபுத்தி, 'நாம் உடனே இவ்வளவு பணத்தையும் ஊருக்கு எடுத்துச் சென்றால் கெடுதல் உண்டாகும். இங்கேயே ஒரு மரத்தின் கீழ்ப் புதைத்து வைப்போம். மற்றொரு நாள் வந்து எடுத்துக் கொண்டு போவோம்’ என்றான்.

இது பொருத்தமாகத் தோன்றவே, நல்லபுத்தி ஒப்புக் கொண்டான். உடனே அங்கொரு மரத்தடியில் பள்ளம் தோண்டிப் பணத்தைப் புதைத்து ஓர் அடையாளம் வைத்துவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள்.

கெட்டபுத்தி அன்று இரவே திரும்பி வந்து ஆயிரம் பொன்னையும் அடித்துக் கொண்டு போய் விட்டான்.

சில நாள் கழித்து இருவரும் அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தார்கள். பணம் காணவில்லை. உடனே, கெட்டபுத்தி முந்திக் கொண்டு நல்லபுத்தியைப் பார்த்து, 'நண்பா இப்படி மோசம் செய்யலாமா?' என்று கேட்டான்,

'நீதான் எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்று கிறாய்!' என்றான் நல்லபுத்தி.

இருவருக்கும் சண்டை வந்து விட்டது. கடைசியில் வழக்கு மன்றத்திற்குப் போனார்கள். ஊர் வழக்காளர் அவர்களுடைய வழக்கை விசாரித்தார். பிறகு, 'ஏதாவது சாட்சி உண்டா?' என்று கேட்டார். 'எங்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறுயாரும் சாட்சியில்லை’ என்றான் நல்லபுத்தி.

'அந்த மரமே இதற்குச் சாட்சி சொல்லும்’ என்றான் கெட்டபுத்தி.

‘உண்மைதானா? காலையில் வாருங்கள் அந்த மரத்தையே கேட்போம்’ என்று சொல்லி வழக்காளர் போய்விட்டார்.

வீட்டுக்கு வந்த கெட்டபுத்தி தன் தந்தையை அழைத்து மரப்பொந்தில் போய் ஒளிந்து கொண்டு, மரம் சாட்சி சொல்வது போல் பேசச் சொன்னான்.

‘தம்பி, கொக்கின் முட்டையைத் திருடிய நாகத்தைப் போல் நமக்குத் துன்பம் ஏற்படக் கூடும். இந்தக் கெட்ட நினைப்பை விட்டுவிடு’ என்று

அறிவுரை கூறினார் அவர். ஆனால், கெட்டபுத்தி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அவரை வலுவாக இழுத்துச் சென்று அந்த மரப் பொந்தில் ஒளிந்து. கொள்ளும்படி வற்புறுத்தினான்.

பொழுது விடிந்தது. ஊர் வழக்கர் தன் ஆட்களோடு நல்லபுத்தியையும் கெட்டபுத்தியையும் அழைத்துக் கொண்டு வந்து மரத்தைச் சாட்சி சொல்லும்படி கேட்டார்.

மரம் பேசியது : ‘நல்லபுத்திதான் பணத்தை எடுத்தான்!' ஏன்று அழுத்தந்திருத்தமாகக் கூறியது.'ஆ! என்ன புதுமை! மரம் சாட்சி சொல்லுகிறதே!” என்று ஊர் வழக்காளர் ஆச்சரியப்பட்டார்.

‘இது சூது!’ என்று தெரிந்து கொண்ட நல்ல புத்தி, மரத்தில் ஏறி அந்தப் பொந்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் சூடு தாங்காமல், கெட்டபுத்தியின் தந்தை மரப்பொந்தின் உள்ளிருந்தபடியே' கெட்ட புத்தி, உன்னால் கெட்டேன்!’ என்று பதைபதைத்துக் கதறினான். நெருப்பில் வெதும்பி இறந்து போனான்.

இதைக் கண்ட ஊர் வழக்காளர் அரசரிடம் போய் நிகழ்ந்ததைக் கூறினார்.

பொன் முழுவதையும் நல்லபுத்திக்குக் கொடுக்கும்படி சொல்லி, கெட்டபுத்தியை அரசர் சித்திரவதை செய்து கொல்லும்படி உத்தர விட்டார்.

பிறரைக் கெடுக்க நினைப்பவர்கள் தாங்களே கெட்டொழிவார்கள். 

15. கொக்கு முட்டை தின்ற பாம்பு ஒரு கொக்கு இருந்தது. அது இடுகிற முட்டைகளை யெல்லாம் ஒரு நாகப் பாம்பு தெரியாமல் வந்து தின்று கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாத கொக்கு, தனக்குத் தெரிந்த நண்டு ஒன்றிடம் போய் என்ன செய்யலாம் என்று கேட்டது. அது ஓர் அருமையான வழி சொல்லிக் கொடுத்தது. ஒரு கீரி வளையிலிருந்து பாம்புப் பொந்து வரை வரிசையாக மீனைப் போட்டுவைக்கச் சொல்லியது.

கொக்கு அவ்வாறே பிடித்துக் கொண்டு போய்ப் போட்டது. கீரிப்பிள்ளை ஒவ்வொரு மீனாகத் தின்று கொண்டே பாம்பின் பொந்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்த பாம்போடு சண்டையிட்டு, அதைக் கடித்துக் கொன்று விட்டது.

திருட்டுப் பிழைப்பு என்றும் ஆபத்துதான். 

16. ‘எலி இரும்பைத் தின்றது’

ஒரு பட்டணத்தில் இரண்டு செட்டிமார்கள் இருந்தார்கள். இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன், அயல் நாடு போக வேண்டி யிருந்ததால், தன்னிடம் உள்ள ஆயிரம் துலாம் இரும்பையும், தன் நண்பனிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய்விட்டான்.

வெளிநாடு சென்றவன் திரும்பி வந்து கேட்ட போது, 'இரும்பை யெல்லாம் எலி தின்று விட்டது' என்று நண்பன் கூறி விட்டான்.' சரி, போனால் போகிறது!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான்.

பிறகு ஒரு முறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளிநாடு சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டான். நண்பனுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட்டான். பிறகு அந்தப் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான். குளித்த பின், அந்தப் பிள்ளையைத் தகுந்த ஓரிடத்தில் ஒளித்து வைத்து விட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான்.

வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் 'என் பிள்ளை எங்கே?’ என்று கேட்டான். :உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது!' என்றான் வணிகன். உடனே மற்ற வணிகனுக்குக் கோபம் வந்து விட்டது. 'எங்கேயாவது பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுமா?’ என்று சண்டைக்கு வந்து விட்டான். வாய்ச்சண்டை முற்றிக் கைச் சண்டையாகி விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் ஊர் வழக்காளர் முன்னே அழைத்துச் சென்றார்கள்.

வழக்காளர் அந்த வணிகனைப் பார்த்து 'ஏனையா இது என்ன வேடிக்கை! எங்கேயாவது பிள்ளையைப் பருந்து துக்கிக் கொண்டு போகுமா?' என்று கேட்டார்.

‘ஐயா, ஆயிரம் துலாம் இரும்பில் ஓர் அணுவும் மீதி வையாமல், எலி கடித்துத் தின்றிருக்கும் போது, பிள்ளையைப் பருந்து தூக்கிப் போவது என்ன அதிசயம்?’ என்று கேட்டான். ‘இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது!’ என்று வழக்காளர் விசாரித்தார்.

உடனே அவன் முன் நடந்தவைகளைக் கூறினான்.

'அப்படியானால், நீ செய்தது சரிதான்!' என்று சொல்லி விட்டு, வழக்காளர் அந்த வணிகனுடைய நண்பனைப் பார்த்து,'ஆயிரம் துலாம் இரும்பையும் நீ திருப்பிக் கொடுத்தால், அவன் உன் பிள்ளையைத் திருப்பிக் கொடுப்பான்’ என்று தீர்ப்பளித்தார்.

'சரி'யென்று ஒப்புக்கொண்டு இருவரும் திரும்பினார்கள்.

அந்த நண்பன் முன் இரும்பைத் திருடி விற்ற போது விலை குறைத்திருந்தது. இப்போது விலை கூடிவிட்ட படியால் அவன் பெரு நஷ்டப்பட்டு வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று ஆயிரம் துலாம் இரும்பையும் வாங்கிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவன் ஏழையாகி விட்டான்.

வஞ்சகம் செய்பவர்கள் வாழ மாட்டார்கள். 

17. வாழ்வு தந்த கிழட்டு வாத்து

ஒரு காட்டில் ஓர் ஆலமரம் இருந்தது. அதன் கிளைகளில் ஒரு வாத்துக் கூட்டம் தங்கி இருந்தது.

அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது. அந்தக் கொடி இலேசாகப் படரத் தொடங்கியது. அதைக் கண்ட ஒரு கிழட்டு வாத்து மற்ற வாத்துகளைப் பார்த்து, இந்தக் கொடி, மரத்தைப் பற்றிக் கொண்டு சுற்றிப் படருமானால் நமக்கு ஆபத்து ஏற்படும். யாராவது இதைப் பிடித்துக் கொண்டு மரத்தின் மேல் ஏறி வந்து, நம்மைப் பிடித்துக் கொன்றுவிடக் கூடும். இப்பொழுதே நாம் இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட வேண்டும் என்று சொன்னது.

ஆனால் மற்ற வாத்துக்கள் அந்தக் கிழட்டு வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. 'இது என்ன வேலையற்ற வேலை’ என்று அலட்சியமாகப் பேசி விட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்து விட்டன. அந்தக் கொடியோ நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக நீண்டு மரத்தைச் சுற்றிப் படர்ந்தது.

'ஒரு நாள் எல்லா வாத்துக்களும் இரை தேடப் போயிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேடன் அந்த வாத்துக்களைப் பிடிக்க நினைத்தான். மரத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த கொடியைப் பிடித்துக் கொண்டு மிக எளிதாக அதன் மேல் ஏறினான். ஏறிக் கண்ணி வைத்து விட்டு இறங்கிச் சென்று விட்டான்.

இரை உண்டும், விளையாடியும், திரும்பிய வாத்துக்கள் எதிர்பாராமல் அந்தக் கண்ணியில் சிக்கிக் கொண்டன.

கிழட்டு வாத்து மற்ற வாத்துக்களைப் பார்த்து நான் சொன்னதைக் கேட்காததால் இவ்வாறு அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. இனி எல்லோரும் சாக வேண்டியதுதான்’ என்று சொன்னது.

மற்ற வாத்துக்க ளெல்லாம் அந்தக் கிழட்டு வாத்தை நோக்கி, 'ஐயா, பெரியவரே! ஆபத்துக்கு நீங்கள் தான் அடைக்கலம். இனி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எப்படியும் நம் உயிர் தப்பினால் போதும்' என்று கூறின.

அறிவும் நல்லெண்ணமும் கொண்ட அந்தக் கிழட்டு வாத்துக்குத் தன் இனத்தினர் அழிந்து போகக் கூடாது என்று தோன்றியது. அத்தோடு மற்ற வாத்துக்களைப் பார்க்க இரக்கமாகவும் இருந்தது. 'சரி, நான் சொல்வதைக் கேளுங்கள், வேடன் வரும்போது எல்லாரும் செத்த பிணம் மாதிரிச் சாய்ந்து விடுங்கள். செத்த வாத்துக்கள்தானே என்று அவன் எச்சரிக்கையற்று இருக்கும் போது தப்பி விடலாம் என்று வழி கூறியது.

விடிகாலையில் வேடன் வந்தான். வேடன் தலையைச் சிறிது தொலைவில் கண்டதுமே எல்லா வாத்துக்களும் செத்ததுபோல் சாய்ந்து விட்டன. மரத்தின் மேல் ஏறிப்பார்த்த வேடன் உண்மையில் அவை இறந்து போய்விட்டன என்றே எண்ணினான். உயிருள்ள வாத்துக்களாயிருந்தால் அவன் அவை ஒவ்வொன்றின் கால்களையும் கயிற்றால் கட்டிப் போட்டிருப்பான். ஆனால், அவை செத்த வாத்துக்கள் தானே என்று கால்களைக் கட்டாமலே,கண்ணியிலிருந்து எடுத்துத் தரையில் போட்டான்.

ஒவ்வொன்றாக மரத்தின் மேலேயிருந்து தரையில் வீழ்ந்ததும் அவை வலியைப் பொறுத்துக் கொண்டு செத்த மாதிரியே கிடந்தன. எல்லா வாத்துக்களையும் அவன் கண்ணியிலிருந்து எடுத்துக் கீழே போட்டு முடித்தவுடன், கீழே இறங்கினான்.

அவன் பாதி வழி இறங்கும்போது, கிழட்டு வாத்து குறிப்புக் காட்டியது. உடனே எல்லா வாத்துக்களும் படபட வென்று அடித்துக் கொண்டு பறந்து மரத்தின் மேல் ஏறிக் கொண்டன.

வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.

அனுபவமும், நல்லறிவும், நல்லெண்ணமும் உள்ள பெரியோர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் எப்போதும் நன்மை யுண்டு.பஞ்ச தந்திரக் கதைகள்

பகுதி 2

நட்பு உண்டாக்குதல்

1. நான்கு நண்பர்கள்

தெளிவான நீர் ஓடும் கோதாவரிக் கரையில் ஓர் இனிய காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் இலவமரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது!

ஒரு நாள் விடியற்காலையில் அந்தக் காகம் தன் இனத்துடன், ஒரு குளத்தில் போய்க் குளித்து, சிறகுகளைக் காய வைத்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு வேடன் வந்து சேர்ந்தான். அவன் தன் கைகளில், வலையும், வில்லும், அம்புகளும் வைத்திருந்தான். வேட்டையாட வந்த அவனைக் கண்டவுடன் எல்லாக் காகங்களும் பறந்து ஓடி விட்டன. இலவமரத்துக் காகம் மட்டும் ஒடவில்லை. இந்தக் கொடியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று அது ஒரு சோலைக்குள்ளே போய் ஒளிந்து கொண்டது.

அந்த வேடன் வலையை விரித்து வைத்து அதைச் சுற்றித் தீனியும் போட்டு வைத்தான். ஏதாவது பறவைகள் வந்து அகப்படாதா என்று எதிர் பார்த்து அவன் ஓரிடத்தில் ஒளிந்து கொண்டிருந்தான். அப்போது புறாக் கூட்டம் ஒன்று அந்த வழ யாகப் பறந்து வந்தது. அருகில் இருந்த மரத்தில் இறங்கிய அந்தப் புறாக்கள் கீழே கிடந்த தானியங்களைக் கண்டன.

அந்தப் புறாக்களின் அரசனும் அந்தக் கூட்டத்தோடு வந்திருந்தது. அது மிகுந்த அறிவுள்ளது. அந்த அரசப் புறாதன் கூட்டத்தைப் பார்த்து, ‘காட்டில் தானியம் கிடப்பதென்றால், தானாக வந்து கிடக்காது. யாரோ இதைக் கொண்டு வந்து எதற்காகவோ போட்டு வைத்திருக்க வேண்டும். இதை நன்றாகத் தெரிந்து கொள்ளாமல் நாம் போய்த் தின்னக் கூடாது. ஆராயாமல் நாம் இதைத் தின்னப் புகுந்தால் புலியால் மாய்ந்த பார்ப்பனன் போலத் துன்ப மடைய நேரிடும்' என்று மற்ற புறாக்களை எச்சரித்தது.

அப்போது அந்தப் புறாக்களில் ஒன்று 'இப்படி ஒவ்வொன்றுக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் நாம் இரையே இல்லாமல் இறந்து போக வேண்டியதுதான்! எப்படியும் எந்தெந்தக் காலத்தில் என்னென்ன நடக்க வேண்டுமோ, அந்தந்தக் காலத்தில் அது அது அப்படி அப்படி நடந்தே தீரும்' என்று

ப--5 சொல்லியது. உடனே எல்லாப் புறாக்களும் இறங்கித்தீனி தின்னப் போய் வலையில் மாட்டிக் கொண்டன.

இதைக் கண்ட அந்த அரசப்புறா எல்லாப்புறாக்களும் சிக்கிச் சாகும்போது, தான் மட்டும் உயிர் பிழைத்திருப்பது தக்கதல்ல என்று மனத்தில் நினைத்துக் கொண்டு, தானும் வலையில் போய் வீழ்ந்து அகப்பட்டுக் கொண்டது.

அப்போது அதன் மனத்தில் ஓர் அருமையான எண்ணம் தோன்றியது.

'வேடனிடம் அகப்படாமல் தப்ப வேண்டுமானால், எல்லோரும் இந்த வலையைத் துக்கிக் கொண்டு ஒன்றாகப் பறப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று அரசப்புறா மற்ற புறாக்களைப் பார்த்துக் கூறியது.

உடனே எல்லாப் புறாக்களும் கூடிப் பறந்தன. வலையை எடுத்துக் கொண்டு அவை வானத்தில் பறந்ததைக் கண்ட வேடன் கலங்கிப் போனான். புறாக்கள்தான் அகப்படவில்லை என்றால், வலையும் போச்சே என்று மனம் வருந்தினான்.

'இந்தப் புறாக்கள் எவ்வளவு தூரம்தான் இப்படியே பறந்து ஒடப் போகின்றன. விரைவில் களைப் படைந்து கீழே விழத்தான் நேரிடும். அப்போது அவற்றைப் பிடித்துக் கொள்வதோடு வலையையும் திரும்பப் பெறலாம்' என்று எண்ணிக் கொண்டு அந்த வேடன் அவற்றின் பின்னாலேயே ஓடினான். ஆனால், அவனுக்குத்தான் விரைவில் களைப்பு வந்ததே தவிர அந்தப் புறாக்கள் களைக்கவேயில்லை. அவை வெகு தொலைவில் பறந்துபோய் அவன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டன.

என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக இலவ மரத்துக் காகமும் பின்னால் பறந்து சென்று கொண்டேயிருந்தது.

வலையோடு புறாக்கள் பறந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு காடு குறுக்கிட்டது. அதைக் கண்டவுடன் அரசப்புறா, 'எல்லோரும் இங்கே இறங்குங்கள். என் நண்பனான எலி ஒன்று இங்கே இருக்கிறது’ என்று கூறியது. எல்லாப் புறாக்களும் அங்கே இறங்கின.

சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு புறாக்கள் கூட்டமாக இறங்கியதைக் கண்டவுடன், என்னவே ஏதோ என்று பயந்து போன அந்த எலி, தன் வளைக்குள்ளே ஒடிப்போய் ஒளிந்து கொண்டது.

அதன் வளைக்கு நேரே இறங்கிய புறாவரசன், 'நண்பா, நண்பா என் எலி நண்பா, இங்கே வா’ என்று வளைத்துளையில் மூக்கை வைத்துக்கொண்டு கூப்பிட்டது.

நண்பனின் குரலைக் கேட்டு வெளியில் வந்தது அந்த எலி. அது தன் நண்பன் நிலையைக் கண்டு மனம் வருந்தியது.

‘எதையும் முன்னும் பின்னும் சிந்தித்துச் செய்யக் கூடிய அறிவாளியான நீ எப்படி இந்த வலையில் சிக்கினாய்?’ என்று அந்த எலி கேட்டது.

'எவ்வளவு சிறந்த அறிவிருத்தாலும் எவ்வளவு சாமார்த்தியம் இருந்தாலும் விதியை மீறமுடியுமா? எந்த இடத்தில், எந்தக் காலத்தில், எப்படிப்பட்ட காரணத்தினால், யாரால் எவ்வளவு நல்வினை தீவினைகளின் பயனை அனுபவிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் அந்தக் காலத்தில், அப்படிப்பட்ட காரணத்தால், அவரால் அல்வளவும் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்!’ என்று புறா பதில் கூறியது.

கடலில் திரியும் பீன்களும், வானில் பறக்கும் பறவைகளும், தம்மைத் தொடர்ந்து வீசப்படுகின்ற வலையில் சிக்குகின்றன. குன்று போன்ற பெரிய யானையும், வெம்மையான தன் நஞ்சினால், எவரையும் கொல்லக் கூடிய பாம்பும், நெஞ்சின் நிலைதளர்ந்து தம்மைப் பிடிப்பவர்க்குக் கட்டுப்பட்டு விடு கின்றன. வானில் இருக்கும் பெரும் சுடர்களான கதிரவனும், நிலவும்கூட கிரகணப் பாம்பால் பீடிக்கப் படுகின்றன. அறிவில் மிக்க புலவர்களும் வறுமைக்கு ஆட்படுகின்றனர். அறிவில்லாத அற்பர்களின் கையிலே பெரும் பணம் போய்க் குவிகிறது. எல்லாம் அவரவர் நல்வினை தீவினைகளின் பயனேயாகும், இந்த வினையின் பயனை யாராலும் தள்ளமுடியாது.'

இவ்வாறு கூறிய அந்த எலி, தன் நண்பனான அரசப்புறாவையும் அதன் கூட்டத்தையும் சிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த வலையைத் தன் கூர்மையான பற்களால் அறுத்தெறிந்து அவற்றை விடுவித்தது. அரசப்புறாவும் அந்த எலியும் ஒன்றுடன் ஒன்று மிக அன்பாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தன. பின் எலியிடம் விடை பெற்றுக்கொண்டு புறாக்கள் பறந்து சென்றன.

அவை சென்றபின் அந்த எலி மீண்டும் தன் வளைக்குள்ளே போய் நுழைந்து கொண்டது.

புறாக்களைத் தொடர்ந்து பறந்து வந்த இலவமரத்துக் காகத்திற்கு அந்த எலியின் மீது அன்பு பிறந்தது. ஆகவே, அது கீழே இறங்கி வந்து, எலி வளையின் வாயிலில் மூக்கை வவத்து அந்த எலியைக் கூப்பிட்டது.

எலி வளையின் உள்ளேயிருந்தபடியே, 'நீ யார்? ஏன் என்னை அழைத்தாய்?’ என்று கேட்டது.

'நான் ஒரு புறாவரசனின் பின்னால் வந்தேன். உன்னுடைய பெருந்தன்மையையும், நற்குணத்தையும், நட்புத் திறத்தையும், மரியாதைப் பண்பையும் பாசவுறவையும் கண்டு மனம் வசப்பட்டேன். நானும் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், அதற்காகவே அழைத்தேன்’ என்று காகம் கூறியது.

அதற்கு அந்த அறிவுமிகுந்த எலி, 'நானோ உன்னால் தின்னப்படும் இரைகளில் ஒன்றாயுள்ளவன். நீயோ என்னைப் போன்ற எலிகளைக் கொன்று தின்னும் இனத்தைச் சேர்ந்தவன். நானும் நீயும் நட்பாய் இருப்பது எனக்குப் பேராபத்தாய் முடியுமே யல்லாமல் வேறல்ல. நரியோடு நட்புக் கொண்டாடிய மான், வலையில் சிக்கிக் கொண்டது போல், எனக்குத் தீங்கு வரக் கூடும், ஆகையால் உன்னுடன் நண்பனாயிருக்க நான் விரும்பவில்லை’ என்று பதில் சொல்லிவிட்டது.

அதைக் கேட்ட காகம், மனங்கரையும்படியாக இவ்வாறு கூறியது:

'ஐயோ! எலியே, நீ என்ன சொல்லி விட்டாய். என் குணம் தெரியாமல் இவ்வாறு பேசி விட்டாய். உன்னைக் கொன்று தின்றால் ஒரு வேளைப் பசிகூட எனக்குத் தீராதே. ஆனால், நட்பாக இருந்தால் எத்தனையோ காலம் நாம் நன்றாக வாழலாமே!

‘அந்தப் புறாவரசனிடம் உள்ளது போல் என்னிடமும் நீ நட்பாக இருந்தால், என் உயிருள்ள அளவும் நான் நட்பு மாறாமல் இருப்பேன். இது உண்மை. சூதாகச் சொல்லும் வார்த்தை அல்ல.

‘அலை வீசிக் கொண்டிருக்கும் கடல் பரப்பிலே, எரியும் கொள்ளிக்கட்டை போய் நுழைந்தால் கடல் நீரா வற்றி விடும்? கொள்ளித் தீ தானே அணையும். அறிவுள்ள மேலோரிடம் கோபம் பற்றி எரியாது. அவர்கள் கடலைப் போன்ற தங்கள் விரிந்த நெஞ்சால் அந்தக் கோபத் தீயை அணைத்து விடுவார்கள்’ என்று இலவமரத்துக் காகம் எடுத்துக் கூறியது.

‘உங்கள் காக்கைப் புத்தியே ஒரு நிலையில்லாதது. உன்னை நண்பனாகச் சேர்ப்பதால், என்னுடைய செயல்கள் ஒன்றும் ஆகப்போவதில்லை. மேலும் அவை கெட்டுத்தான் போகும். நானும் நீயும் எவ்வாறு கலந்து வாழ முடியும்?

'கப்பல் கடலில்தான் ஓடும். அதைத் தரையில் ஓட்ட முடியாது. தேர் பூமியின் மீது தான் ஓடும். அதைக் கடலில் ஓட்டிச் செல்லமுடியாது. சேரக் கூடாதவை சேர்ந்தால் அந்த உறவு திடமாக நிலைப்பதில்லை. கெட்டுப் போவதே தவிர அந்தச் சேர்க்கையால் ஆகும் சிறப்பு எதுவும் இல்லை.

'பெண்களிடத்தும், ஒழுக்கம் கெட்டவர்களிடத்தும் நியாயத்தை எதிர்பார்த்தும், தீயவர்களிடம் ஒரு நன்மையைச் செய்து கொள்ள எதிர்பார்த்தும், நட்புக் கொண்டு அதனால் இன்பம் அடைந்தவர்கள் உலகத்தில் இல்லவே இல்லை. பாம்பை மடியில் கட்டிக் கொண்டவர்களைப் போல், அவர்களுக்கு எந்தக் கணமும் துன்பம் தாம் ஏற்படும் என்று எலி காகத்தின் உறவை மறுத்துரைத்தது.

'எலியே, நீ சொல்வது உண்மைதான். தீயவர்களின் உறவு ஒருக்காலும் சேர்க்கக் கூடாதுதான். ஆனால், என்னை ஒரு காக்கை என்பதற்காக ஒதுக்கித் தள்ளி விடாதே. நான் உனக்கு என்றும் உயிர் நண்பனாவேன். நீ என் நட்பை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விட்டால், நான் என் உயிரை விட்டு விடுவேன், சத்தியம்!

'செல்வத்தினால் மனிதர்களுக்குள் நட்பு உண்டாகும். ஒன்றாகக் கூடித் தின்பதால், பறவைகளுக்குள் நட்பு உண்டாகும். கோப புத்தியால் துட்டர்களுக்குள்ளே நட்பு உண்டாகி விடும்.

மென்மையான ஊசி காந்தத்தைக் கண்டவுடன் போய் ஒட்டிக் கொள்ளும். இரும்புத் துண்டுகளோ, நெருப்பில் கலந்து வருத்தப்பட்ட பின்பே ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். அது போல, கண்டவுடனே நல்லவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். தண்டனையடைந்த பின் ஒன்று சேர்ந்து புல்லர்கள் நண்பர்களாயிருப்பார்கள்.

`உன் அறிவின் உயர்வையும், உன் நெஞ்சில் உள்ள நட்பின் தன்மையையும், அந்த நட்பை நீ பாது காக்கும் முறையையும் கண்டு, உன் நட்பைப்பெற எண்ணியே நான் உன்னிடம் வந்தேன். என் நிலைமையை நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அன்பு ஒன்றுக்காகவே நான் உன்னை நாடி வந்திருக்கிறேன்’ என்று காக்கை கூறியது.

இவ்வளவு உறுதிமொழிகள் கூறியபின், அந்த எலி, இந்த இலவமரத்துக் காகத்தை நம்பிவிட்டது. நம்பிக்கை பிறந்தவுடன் அதன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. மலர்ந்த முகத்துடன் அது காகத்தை நோக்கி, `நன்று, இனி நாம் என்றும் நண்பர்களாய் இருப்போம்' என்று ஆதரவான பதிலை யளித்தது.

அன்று முதல், காகம் தனக்குக் கிடைக்கும் மானிறைச்சி முதலியவற்றில் எலிக்கும் ஒரு பங்கு கொண்டு வந்து கொடுத்து வந்தது. இப்படியாய்ப் பல நாட்கள் அவை ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்துவந்தன. Highlights ஒரு நாள் காகம் எலியிடம் வந்து, இந்தக்காட்டில் இரை எளிதாகக் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஆமை ஒன்று இருக்கிறது. அதனிடம் சென்றால் குளத்தில் இருக்கும் மீன்களையெல்லாம் நமக்கு உண்ணத் தந்திடும். நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு நலமாக இருக்கலாம்' என்று கூறியது. `சரி, நானும் அங்கு வருகிறேன். எனக்கு அங்கே ஒரு வேலையிருக்கிறது. அதை நான் அங்கு சென்ற பின் உனக்குத் தெரிவிக்கிறேன்' என்று எலி சொல்லியது.

உடனே காகம், தன் கால்களால் எலியைத் தூக்கிக் கொண்டு ஆமையிருக்கும் குளத்தை நோக்கிப் பறந்தது.

அங்கு போய்ச் சேர்ந்ததும், ஆமை வெளியில் வந்து, காகத்தை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தது. பேசிக் கொண்டிருக்கும் போது, காகத்தை நோக்கி ஆமை, `இந்த எலி யார்?’ என்று கேட்டது.

`ஆமை நண்பனே, நாம் முன் வருந்திச் செய்ததவத்தால் நமக்கு அருமையாகக் கிடைத்த நண்பன் இந்த எலி. இதன் பெருமையையாராலும் சொல்ல முடியாது' என்று சொல்லிப் புறா அரசன் வேடன் வலையில் அகப்பட்டுக் கொண்டதையும் அதை எலி மீட்டதையும் விளக்கமாகக் கூறியது.

அத்தனையும் கேட்ட ஆமை, `ஆ! இவன் உண்மையான நண்பனே!' என்று சொல்லி அன்பு பாராட்டி, காகத்திற்கும் எலிக்கும் விருந்து வைத்து அவற்றோடு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நாள் ஆமை எலியை நோக்கி, `உன் சொந்த ஊர் எது? உன்னுடைய வரலாறு என்ன? நீ இங்கு வரக் காரணம் என்ன என்று கேட்டது.

எலி தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது.

என்னுடைய சொந்த ஊர் சம்பகாவதி என்பது. அங்கே ஒரு மடத்தில் நான் இருந்து வந்தேன். அந்த மடம் ஒரு சைவத் துறவியுடையது. அந்தச் சைவத்துறவி நாள்தோறும் தெருவில் பிச்சை எடுத்து வந்து, தான் உண்டது போக மீதியை வேறு யாரேனும் பரதேசிகள் வந்தால் கொடுப்பதற்கென்று ஒரு சிறு பாத்திரத்தில் வைத்திருப்பான். அவன் மீத்து வைக்கும் சோற்றை இரவில் நான் வந்து வயிறு புடைக்கத்தின்பேன், அவன் கையில் அகப்படமாட்டேன். இப்படிப் பல நாட்கள் என் வாழ்க்கை இன்பமாக நடந்தது.

ஒரு நாள் அந்த சைவத்துறவியின் மடத்துக்கு இன்னொரு சந்நியாசி வந்திருந்தான். இருவரும் பல விதமான சாத்திரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருந்தார்கள். இரவு வெகு நேரமாகியும் அவர்கள் பேச்சு முடிந்து தூங்கப் போவதாகத் தெரியவில்லை. எனக்குப் பசி பொறுக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் தூங்கும் முன்னாலேயே அந்தப் பாத்திரத்தில் இருந்த சோற்றைத் தின்னத் தொடங்கினேன். நான் சோறு தின்னும் சத்தம் கேட்டு சைவத்துறவி அதட்டி என்னைத் துரத்தி விட்டான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.

தன்னோடு பேசாமல் ஏதோ நினைவாய் இருப்பதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த சந்நியாசி அவனை நோக்கி, `திடீர் என்று என்ன யோசனை?' என்று கேட்டான்.

“அந்த எலி குதித்தோடியதைப் பார்த்துத் தான்யோசனையில் ஆழ்ந்து விட்டேன். நான் தெருத் தெருவாகச் சுற்றிப் பிச்சை யெடுத்துக் கொண்டு வருகிற சோற்றை யெல்லாம் இது இங்கிருந்து கொண்டே தின்று கொழுத்துப் போய்விட்டது. எவ்வளவு வேகமாக அது குதித்துப் பாய்கிறது! அதைப் பிடிக்கக்கூட'முடியவில்லை. இப்படி மதமதப்பான அச்சமில்லாத எலியை நான்,[ பார்த்ததேயில்லை’ என்று சைவத்துறவி கூறினான்.

‘இந்த எலி ஒன்றுதானா, இங்கு இன்னும் வேறு எலிகள் இருக்கின்றனவா?’ என்று வந்திருந்த சந்நியாசி கேட்டான்.

‘ஒன்றுதான்’ என்று சொன்னான் சைவத்துறவி.

“அப்படியானால், உன் சோற்றுப் பருக்கையினால் மட்டும் இது கொழுக்கவில்லை. இது கொழுத் திருப்பதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்த இடத்திலே நாம் மண்வெட்டியால் வெட்டிப் பார்க்க வேண்டும்’ என்றான்.

“ஏன்?” என்று சைவத்துறவி விவரம் புரியாமல் கேட்டான்.

“எவனிடத்தில் பொருள் இருக்கிறதோ, அவன் கொழுப்பாக இருக்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல, இந்த எலி இருக்குமிடத்தில் ஏதோ புதையல் இருக்க வேண்டும்’ என்று வந்திருந்த சந்நியாசி கூறினான்.

'உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர்கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். நான் பயந்து போய் வேறொரு வளையில் பதுங்கிக் கொண்டேன். மறுபடி பசியெடுத்த போது, நான் அங்கு சோறு தின்னப் போனேன். அந்தத் துறவி துரத்திக் கொண்டு வந்து என்னை அடித்து! விட்டான். அன்று முதல் இன்றுவரை அந்த மடத்திற்குத் திரும்பிப் போகவே எனக்குப் பயமாக இருக்கிறது. இப்போது ஓர் ஆண்டாகக் காட்டில்தான் இருந்து வருகிறேன்.

‘அறிவும் கல்வியும் நன்மையும் பயனும், வன்மையும் இன்பமும் எல்லாம் பொருளினால்தான் உண்டாகின்றன.

`சுதியில்லாத பாட்டும், உறவினர் இல்லாத நாடும், அறிவில்லாதவர் கவிதையும், நல்ல மனைவியில்லாத வீடும், கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீண் பாழே! பொருள் இல்லாதவர்களுக்கு உலக வாழ்வே பாழ்!

`கதிரவன் இல்லை யென்றால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் மறைந்து போகும். அது போல் பொருள் இல்லாதவர்களுக்கு எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.

'அந்தச் சைவத்துறவி என்னை அடித்து விரட்டும் போது, 'தங்கப் புதையலின் மேல் இருந்து கொண்டு என் சோற்றைத் தின்று கொழுத்த எலியே, இப்போது உன் தங்கம் பறி போச்சே! இன்னும் உனக்கு வெட்கம் இல்லையா?' என்று கேட்டான். அது எனக்கு இன்னும் வேதனையாக இருக்கிறது. அந்த வேதனை நீங்க நீதான் ஒரு வழி சொல்ல வேண்டும். அதற்காகவே உன்னிடம் வந்து சேர்ந்தேன்’ என்று எலி கூறியது.

'கவலைப்படாதே, இந்தக் காகத்திற்கு நீ ஒரு செல்வம் போல உற்ற நண்பனாகக் கிடைத்தாய். நீங்கள் இருவரும் என்னிடம் வந்து சேர்ந்ததே பெரும் பாக்கியம். நட்பாகிய பெரும் செல்வம் நம்மிடம் இருக்கிறது. அதை நமக்குக்கொடுத்த தெய்வத்தை வழிபட்டுக் கொண்டு நாம் நலமாக இருப்போம்’ என்று ஆமை கூறியது.

ஆமை குளத்திலிருந்து மீன்களைக் கொண்டு வரும். காகம் எங்கிருந்தாவது இறைச்சி கொண்டு வரும். எலி ஊருக்குள் போய்ச் சோறு கொண்டு வரும். மூன்றும் ஒன்றாகக்கூடியிருந்து கொண்டு, நாள் தோறும் உண்டு அன்புடன் பேசிக்காலம் கழித்திருக்கும்.

இப்படி அன்போடு அவை ஒன்றாக வாழும் நாளில் ஒரு நாள் ஒரு மான் ஓடி வந்தது. அந்த மான் நடுங்கிக் கொண்டே நின்று, மருண்டு மருண்டு விழித்தது.

‘சிறிதும் அறிவில்லாத நண்பனே, ஏன் நடுங்கு கின்றாய்? என்று அந்த மூன்று நண்பர்களும் கேட்டன.

‘யமனை யொத்த கொடிய வேடன் ஒருவன், நஞ்சு தோய்ந்த அம்பு கொண்டு என்னைக் கொன்று வீழ்த்த வந்தான். நான் அதற்குத் தப்பி ஓடி வந்தேன். இப்போது நான் உங்கள் அடைக்கலம், என்னை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று அந்த மான் கூறியது.

‘நல்லது. நீ யார், எங்குள்ளவன் என்றெல்லாம் சொல்லு’ என்று அவை கேட்டன.

'எனக்குத் தாய் தந்தையர் யாரும் கிடையாது. சுற்றத்தாரும் ஒருவரும் இல்லை. காடுதான் எனக்கு வீடு. என் மீது அன்பு கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களானால், உங்களையே தாய் தந்தையராகவும், உற்ற சுற்றத்தாராகவும் கொண்டு, என்றும் உங்களைப் பிரியாமல் வாழ்வேன்’ என்று அந்த மான் கூறியது.

அந்த மானின் சொற்களில் உண்மையிருந்தது. எனவே அவை மூன்றும் அதை நம்பின.

‘நல்லது, நீ இங்கேயே எங்களுடன் இரு. இனி நாம் நால்வரும் நண்பர்களாக வாழ்வோம்’ என்று கூறி மானைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டன.

புதிதாக வந்த அந்த மான் வகை தெரியாமல் ஒரு வேடன் விரித்திருந்த வலையில் மாட்டிக் கொண்டது. அது துயரத்தோடு கத்தியதைக் கேட்டுக் காகம், மற்ற நண்பர்கள் இருவரையும் கரைந்து அழைத்தது. காகத்தின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டே, ஆமையும், எலியும் அந்தத் திசை நோக்கி விரைந்து சென்றன, அப்போது கரைந்து கொண்டே எதிரில் வந்த காகம், 'அந்த மான் குட்டி ஒரு கொடிய வேடனுடைய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது. இப்போதே நாம் அதை விடுவிக்க வேண்டும்' என்று கூறியது.

மூன்றும் விரைந்து மான் வலைப்பட்டிருந்த இடத்தை அடைந்தன. சிறந்த அறிவுடைய நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?' என்று அவை கேட்டன,

‘எல்லா விளக்கமும் பின்னால் சொல்லுகிறேன். வேடன் வந்து என்னைக் கொல்வதற்கு முன்னால் விடுவித்து விடுங்கள்’ என்று மான் பதறியது.

'வலையில் அகப்பட்டு விட்டதற்காக ஏன் இப்படிப் பதறித் துடிக்கிறாய்? ஏன் இப்படிப் பயப் படுகிறாய்?' என்று எலி கேட்டது.

'முன் ஒரு நாள், நான் என் அம்மாவுடன் இருக்கும் போது ஒரு வேடன் வலை விரித்திருந்தான். அதைத் தாண்டிப்போய் நான் ஒரு சோலைக் குள் புகுந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாவி

வேடன், என்னைத் தொடர்ந்தோடி வந்து உயிரோடு பிடித்துக் கொண்டான். என்னை அவன் அந்த நாட்டு அரசருக்குக் காணிக்கையாகக் கொண்டு போய்க் கொடுத்தான். அவர் தம் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார். அவர்கள் என்னோடு விளையாடி மகிழ்ந்தார்கள். நான் ஓடி விடாதபடி அவர்கள் என்னைக் கட்டி வைத்திருந்தார்கள். ஒரு நாள் பகல் நேரத்தில் இடி முழக்கத்துடன் மழை பெய்தது. அப்போது மற்ற மான் குட்டிகளோடு கூடிச் சுதந்திரமாக ஓடி ஆடித் திரிந்து, விரும்பிய தழைகளை ஒடித்துத் தின்பது எப்போது, அந்தக் காலம் எப்போது வரும்?’ என்று நான் அழுது கொண்டிருந்தேன்.

'நான் வருந்தி அழுது கொண்டிருப்பதைக் கண்ட இளவரசர்கள், 'பாவம், ஏனோ இது வருத்தமாக இருக்கிறது. இதை நாம் கட்டிப் போட்டு வைத்திருப்பது நல்லதல்ல' என்று இரக்கப்பட்டு என்னை விடுவித்து விட்டார்கள். அதன் பிறகுதான் நான் இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தேன். இப்போது மீண்டும் வேடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் என்ன தீமை செய்வார்களோ, தெரியவில்லையே! அதுதான் எனக்கும் பயமாக இருக்கிறது! சீக்கிரம் என்னை விடுவியுங்கள்!' என்று மான் குட்டி கூறியது.

எலி சிறிதும் காலந் தாழ்த்தாமல், அந்த வலை யைத் தன் பற்களால் கொறித்து அறுத்து விட்டது. வலை அறுந்தவுடன் மான் வெளிப்பட்டுத் தங்கள் இடத்தை நோக்கி நடந்தது. அப்போது, அந்தக் கொடிய வேடன் அங்கு வந்து சேர்ந்து விட்டான். வேடனைக் கண்டவுடன் மான் குட்டி துள்ளி ஓடியது. எலி அங்கிருந்த வளைக்குள் ஓடி மறைந்து கொண்டது. ஆமையால்தான் வேகமாக நடக்க முடியவில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. மானைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த வேடன், வழியில் ஆமையைக் கண்டதும், அதைப் பிடித்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டு ஓடினான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த காகம், எலியிடம் வந்து 'அந்த வேடன் ஆமையைத் தூக்கிக் கொண்டு மானை விரட்டிப் போகிறான். மான் ஓடித் தப்பிவிட முடியும். ஆனால், ஆமை சிக்கிக் கொண்டு விட்டதே. போய் மானைக் கண்டு இதற்கு ஒரு வழி பார்க்க வேண்டும் வா!’ என்று கூறியது.

'வேடனிடமிருந்து நம் நண்பனான ஆமையை விடுவிக்காமல் நாம் உயிருடன் வாழ்வது சரியல்ல. வா, வா, விரைவில் போவோம்’ என்று எலி துள்ளிக் குதித்தோடியது.

காகம் வேகமாகப் பறந்து சென்று ஓடிக் கொண்டிருந்த மானைக் கண்டது.

'மான் குட்டி, மான் குட்டி, உன்னை விரட்டிக் கொண்டு வந்த வேடன், வழியில் தென்பட்ட ஆமை யாரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறான். இப்போது அவரை நாம் காப்பாற்ற வேண்டும். நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறாயா? என்று கேட்டது.

'காக்கையண்ணா , சீக்கிரம் சொல்லுங்கள்!' என்று மான் குட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூறியது.

'அதோ , நமது குளம் அருகில்தான் இருக்கிறது. குளத்தை நெருங்கியவுடன் அதன் கரையில் நீ செத்ததுபோல் விழுந்து கிட. செத்த பிணத்தைக் கொத்துவதுபோல் நான் உன் மேல் நின்று கொத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியைக் கண்டதும் வேடன் உன்னைத் தூக்கிக் கொண்டு போக வருவான்.

அவன் வருமுன் ஆமையிருக்கும் தோள் பையைக் கீழே வைத்துவிட்டுத்தான் உன்னைத் தூக்க வருவான். அவன் தரையில் பையை வைத்தவுடன் நமது எலியார் அதன் வாயைக் கத்தரித்து விடுவார். உடனே ஆமையார் பக்கத்தில் இருக்கும் குளத்திற்குள் நழுவி விடுவார். வேடன் உன்னைத் தொடுமுன் நீ அம்புபோல் பாய்ந்து சென்று அருகில் எங்காவது ஒளிந்து விடு. நானும் வானில் பறந்து மரங்களுக்குள் மறைந்து விடுகிறேன்’ என்றது காகம்.

'அருமையான திட்டம். அப்படியே செய்வோம்’ என்று சொல்லி மான் குளக்கரையில் போய் விழுந்து கிடந்தது. காகம் பின்னால் வந்து கொண்டிருக்கும் எலியிடம் பறந்து சென்று தன் திட்டத்தைக் கூறியது. பின் திரும்பிவந்து, விழுந்து கிடந்த மானின்மேல் உட்கார்ந்து அதைக் கொத்தித் தின்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தது.

மானை விரட்டிக் கொண்டு வந்த வேடன், “இதோ அந்த மான் செத்து விழுந்து கிடக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்தான். தன் தோளில் ஆமை போட்டுக் கட்டியிருந்த பையைக் குளக்கரையில் இறக்கி வைத்து விட்டு, மானைத் தூக்க ஓடினான்.

உடனே எலி பாய்ந்தோடி வந்து அந்தப் பையை கடித்துக் குதறி எறிந்தது. வேடன் மானை நெருங்கிச் சென்றவுடன், இலேசாகக் கண்ணைத்

திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்த மான், வெடுக்கென்று துள்ளி எழுந்து ஓடியது. அதை விட மனமில்லாமல் வேடன் துரத்திக் கொண்டு ஓடினான். மானோ காட்டு மரங்களுக்கிடையே, வளைந்து வளைந்து ஓடி ஒரு புதரில் போய், வேடன் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. அதற்குள் ஆமை குளத்திற்குள் இறங்கி விட்டது. எலி வளைக்குள் பதுங்கி விட்டது. காகம் மரத்தின் மேல் ஏறியமர்ந்து கொண்டது.

வேடன், ஓடி இளைத்து ஒன்றுமில்லாமல் ஏமாந்து திரும்பினான்.

வேடன் அங்கிருந்து போனபின், காகம், வேடன் போய்விட்டான்!' என்று அறிவித்துக் கரைந்தது.

அந்தக் குரல் கேட்டதும் ஒளிந்திருந்த எலி ஒடி வந்தது. மறைந்திருந்த மான் பாய்ந்து வந்தது. குளத்திலிருந்த ஆமை கரைக்கு வந்தது. நான்கும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன. அந்த நான்கும் ஒன்றுக் கொன்று உற்ற உதவியாக இருந்து பெற்ற இன்பம் பெரிது. அவை வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தின.

நல்லவர்கள் நட்புப்போல் இலாபமானது வேறு எதுவும் இல்லை. 

2. புலியால் மாய்ந்த பார்ப்பனன்

ஒரு காட்டில் ஒரு கிழட்டுப் புலி இருந்தது. அது போதுமான பலம் இல்லாததால் உணவு தேட முடிய வில்லை. ஓர் ஏரிக்கரையில் போய் நீராடிவிட்டுக் கையில் தருப்பைப் புல்லும் ஒரு தங்கக் காப்பும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. அப்போது வேதம் படித்த பார்ப்பனன் ஒருவன் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தான். அவனை அந்தப் புலி கூப்பிட்டது.

'அந்தணா, இதோ பார்! இந்தக் காப்பை உனக்குத் தருகிறேன். இங்கே வா!’ என்று புலி கூறியது.

தங்கக் காப்பைக் கண்டவுடன் பார்ப்பனனுக்கு ஆசையுண்டாகி விட்டது. ஆனால், புலியின் அருகில் செல்லவும் பயமாயிருந்தது. புலியாரே, நீர் மிகவும் கொடியவராயிற்றே. மனிதர்களைக் கொன்று தின்பதே உமது தொழிலாயிற்றே, அதை விட்டுவிட்டு எப்போது தானம் செய்யக் கிளம்பினர்!’ என்று தூரத்தில் நின்று கொண்டே பார்ப்பனன் கேட்டான் .

அதற்கு அந்தப் புலி, ஏ, பார்ப்பனனே, என்னைப் பார், நானோ கிழப்புலி ஆகி விட்டேன். எனக்குப் பல்லும் இல்லை; நகமும் இல்லை, பாவம் செய்வதை விட்டுவிட்டு இப்போது தானம் செய்து புண்ணியம் தேட ஆசை கொண்டு விட்டேன். பயப் படாதே! இதோ இந்த ஏரியில் இறங்கித் தலை

முழுகிச் சுத்தமாக வந்து இந்தக் காப்பை வாங்கிக் கொண்டு போ!’ என்று கூறியது.

நல்லதென்று பார்ப்பனன் ஏரிக்குள் இறங்கினான். ஏரி ஒரே சேறும் சகதியுமாக இருந்தது.

சேற்றில் கால்கள் அழுந்திச் சிக்கிக் கொண்டான் பார்ப்பனன். என்ன செய்வதென்று தெரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்தான். அதைக் கண்ட புலி,' ஆ! சேற்றில் சிக்கிக் கொண்டாயோ? இதோ நான் உன்னை வெளியில் எடுத்து விடுகிறேன்' என்று சொல்லி அவன் மீது பாய்ந்தது. தன் முன்னங்காலால் அவனை அறைந்து கொன்றது.

அவனுடைய இரத்தத்தைக் குடித்து அது பசியாற்றிக் கொண்டது.

முன் யோசனையில்லாமல் கண்டவற்றில் ஆசை கொள்வது ஆபத்தையே உண்டாக்கும். 

3. வஞ்சக நரி

மகத நாட்டில் சண்பகவனம் என்று ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு மான் குட்டி இருந்தது. அந்த மான் குட்டியுடன் ஒரு காகம் நட்பாய் இருந்து வந்தது. ஒரு நாள் காகம் இரை தேட எங்கோ பறந்து சென்றது, அப்பொழுது மானும் ஓரிடத்தில் இளம் பச்சைப் புல்லை மேய்த்து கொண்டிருந்தது. நாள் தோறும் நல்ல இளம் புல்லை மேய்ந்து திரிந்ததால், அந்த பின் குட்டி கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது.

புல் மேய்ந்து கொண்டிருந்த அந்த மான் குட்டியின் உடலைக் கண்ட ஒரு நரி, அதைக் கொன்று தின்ன வேண்டும் என்று ஆகை கொண்டது. அந்த அழகான மான் குட்டியைக் கண்டவுடனே அதன் நாக்கில் எச்சில் ஊறியது. மானைக் கொன்று தின்ன அது ஒரு தந்திரம் செய்தது.

மானின் அருகிலே போய், 'என் நண்பா, நலம் தானே?’ என்று பேச்சைத் தொடங்கியது.

‘நீ யார்? உன்னை நான் இதற்கு முன் பார்த்ததாகவே நினைவில்லையே! நீயோ என்னைத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே?’ என்று மான் அந்த நரியைக் கேட்டது.

“மானே, நானும் இந்தக் காட்டில்தான் வாழ்கிறேன். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு உறவினர் யாரும் கிடையாது. தன்னந் தனியாக ஒரு துணையும் இல்லாமல் வீண் வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்று உன்னைக் கண்ட பிறகுதான் என் மனத்தில் மகிழ்ச்சி தோன்றியது. உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டு, உன்னிடமே இருந்துவிட முடிவு செய்து விட்டேன். என்னிடம் நீ இரக்கங் காட்டி அன்பாக நடந்து கொள்ள வேண்டுகிறேன்” என்று நரி பதிலளித்தது.

நரியின் தந்திரமான பேச்சைக் கேட்டு அந்தக் களங்கமில்லாத சின்ன மான்குட்டி மயங்கி விட்டது. அது கூறியதெல்லாம் உண்மையென்று எண்ணி அதைத் தன் நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டது. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து சண்பக மரத்தினடியில் போய் இருந்தன.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்து சேர்ந்த காகம் மான் குட்டியைப் பார்த்து,

'மானே, உன்னுடன் புதிதாக வந்து தங்கியிருப்பவன் யார்?’ என்று கேட்டது.

'காக்கையண்ணா, இந்த நரி என்னோடு நட்பாயிருக்க வந்திருக்கிறது. மிகவும் அன்பாகப் பேசுகிறது!’ என்று மான் குட்டி கூறியது.

“மானே, புதிதாக வந்தவர்களை உடனே நம்பி விடக் கூடாது. ஒருவனுடைய குலமும் முன் நடத்தைகளும் தெரியாமல், அவனுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அப்படி இடங்கொடுத்தால், பூனைக்கு இடங் கொடுத்து மடிந்த கழுகைப் போலத் துன்பமடைய நேரிடும்’ என்று காகம் கூறியது.

அதைக் கேட்ட நரி காகத்தைப் பார்த்து, ‘ஏ காகமே, நீ இந்த மானோடு நட்புச் செய்யும் முன்பு

உன்னுடைய குணம் என்ன வென்று ஆராய்ந்தா இது நட்புக் கொண்டது? நீங்கள் இருவரும் இப்போது உண்மையான நண்பர்களாய் இல்லையா? அது போல ஏன் என்னையும் கருதக் கூடாது? என்று மிகவும் தந்திரமாகக் கேட்டது.

இதைக் கேட்ட மான்குட்டி, நரி சொல்வது சரி தான் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டது. அது காக்கையைப் பார்த்து காக்கையண்ணா, ஒருவனை நாம் புதிதாகப் பார்க்கும்போது அவனிடம் நம்பிக்கை யுண்டானால் போதாதா? அவனைப் பற்றி யாரிடம் போய் நாம் விசாரிக்க முடியும்? அது ஆகிற காரியமா? இது நம்மோடு இருக்கட்டும்’ என்று நரிக்காகப் பரிந்து பேசியது.

கடைசியில் காக்கையும் அரை குறையான மனத்தோடு சரியென்று ஒப்புக் கொண்டது. அதன் பின் அவை மூன்றும் ஒன்றாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் நரி மான் குட்டியைப் பார்த்து,' ஓரிடத்தில் அருமையான பயிர் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கிறது, வா, உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூப்பிட்டது.

மான் அதன் கூடப் போய் நன்றாக வளர்ந் திருந்த அந்தப் பயிரை மேய்ந்து பசி போக்கிக்

கொண்டது. நாள்தோறும் அந்தப் பயிர்க் கொல்லைக்குப் போய் மான் மேய்ந்து வரத் தொடங்கியது

தான் விதைத்து வளர்த்த பயிர் அழிந்து வருவதைக் கண்ட கொல்லைக்காரன், தன் பயிர்க் கொல்லையில் வலை கட்டி வைத்திருந்தான். வழக்கம் போல் மேயப் போன மான், அந்த வலையில் சிக்கிக் கொண்டது.

‘என் உயிருக்குயிரான காகமோ நரியோ வந்தாலொழிய என்னால் பிழைக்க முடியாதே’ என்று தயிரில் சுத்தும் மத்தைப் போல் மான் குட்டி மனத் துயரத்தோடு துடித்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த நரி, மான் வலையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என் நெடு நாளைய எண்ணம் இன்று நிறைவேறிற்று. இன்று நான் நிச்சயமாக இந்த மானின் எலும்பையும் தசையையும் சுவைத்துச் தின்பேன்” என்று மனம் மகிழ்ந்திருந்தது.

மான்குட்டி அதைக் கண்டவுடன், நரியண்ணா, நரியண்ணா! விரைவில் என்னை விடுவியுங்கள்’ என்று கதறியது.

“மானே, இன்று எனக்கு நோன்பு நாள். இந்த வலை தோல் வலையாக இருப்பதால், இன்று நான் இதைத் தொடவும் கூடாது. நாளைக்கு நான்

நிச்சயம் இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றுகிறேன். ஒரு நண்பனுக்காக நான் உயிர் விடவும் தயாராயிருக்கிறேன்’ என்று வஞ்சகமாகப் பதில் கூறியது அந்த நரி. பிறகு கொல்லைக்காரன் வந்து மானைக் கொன்று போடும் நேரத்தை எதிர் பார்த்து ஒரு செடி மறைவில் பதுங்கிக் காத்திருந்தது.

பகலெல்லாம் இரை தேடித் தின்று விட்டு இரவு சண்பக மரத்துக்கு வந்த காகம் அங்கு மான் குட்டியை காணாமல் மனங்கலங்கியது. அந்தக் காடு முழுவதும் பறந்து சென்று அதைத் தேடியது. கடைசியில் பயிர்க் கொல்லைக்கு வந்து அது வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் பரிதாபக் காட்சியைக் கண்டது.

‘அறிவுள்ள மான் குட்டியே, நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்?' என்று காகம் கேட்டது.

'காக்கையண்ணா, எல்லாம் நீங்கள் சொன்ன பேச்சைக் கேளாததால் வந்த பிழைதான்!' என்று துயரத்தோடு கூறியது மான்.

'நண்பர் நரியார் எங்கே காணோம்?’ என்று காகம் கேட்டது.

‘என் இறைச்சியைத் தின்பதற்காக இங்கே பக்கத்தில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது' என்று மான் குட்டி கூறியது.

அப்போது வலை போட்ட கொல்லைக்காரன் வந்து கொண்டிருந்தான். காகம் உடனே மானைப் பார்த்து, 'இதோ, கொல்லைக்காரன் வருகிறான். நான் சொல்லுகிறபடி கேள். செத்துப் போனது போல் படுத்துக் கொள்’ என்றது. உடனே மான் குட்டி அவ்வாறே செத்த பிணம் போல் கிடந்தது.

பயிர்க் கொல்லைக்காரன் வந்து பார்த்து விட்டு இந்த மான் செத்துப் போய் விட்டது என்று நினைத்துக் கொண்டு வலையைச் சுருட்டிக் கட்டினான். அவன் வலையைச் சுருட்டிக் கட்டிக் கொண்டிருக்கும் போது, ‘இப்போதே ஓடிவிடு’ என்று கத்தியது காகம், மான் குட்டியும் சட்டென்று துள்ளிப் பாய்ந்து ஓடியது.

‘என்னையே இந்தச் சின்ன மான்குட்டி ஏமாற்றி விட்டு ஓடுகிறதே! என்று கோபம் கொண்ட கொல்லைக்காரன், கையில் இருந்த குறுந் தடியை மான் குட்டி ஓடிய திசையில் வீசினான். மான் அதற்குள் சிட்டாய்ப் பறந்து விட்டது. அவன் வீசிய தடியோ செடி மறைவில் பதுங்கியிருந்த நரி யின் மேல் விழுந்து அதைச் சாகடித்து விட்டது.

ஒருவன் செய்கின்ற நன்மையும் தீமையும் அதிக மானால், அதன் பலன் உடனடியாக அவனுக்குக் கிடைத்து விடும் என்ற உண்மை இக்கதையினால் நன்கு விளங்குகிறது.4. பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு

கங்கைக் கரையில் திரிகூட மலை என்று ஒரு மலையிருந்தது. அதற்கப்பால் ஒரு பெரிய இத்தி மரம் இருந்தது. அந்த மரப்பொந்தில் ஒரு கிழட்டுக் கழுகு வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு கண்ணும் தெரியாது, கால்களில் நகமும் கிடையாது. அதற்காக இரக்கப்பட்டுக் காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் தாந்தாம் தேடுகின்ற இரையில் சிறிது சிறிது கொண்டு வந்து கொடுத்து அதைக் காப்பாற்றி வந்தன.

ஒரு நாள் அந்த இடத்திற்குப் பூனையொன்று வந்து சேர்ந்தது. அது பறவைகளின் குஞ்சுகளைப் பிடித்துத் தின்னும் நோக்கத்தோடு தான் அங்கே வந்தது. அந்தப் பூனையைக் கண்டதும் அங்கிருந்த பறவைக் குஞ்சுகளெல்லாம் பதை பதைத்துக்கத்தின. கண் தெரியாத அந்தக் கிழக்கழுகு ஏதோ கெடுதல் வந்து விட்டதென்று துடித்து அந்தக் குஞ்சுகளைப் பார்த்து, ‘ஏன் பயந்து கத்துகிறீர்கள்’ என்று கேட்டது.

இதற்குள் அந்தப் பூனை தந்திரமாக நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி, கழுகின் முன்போய் நின்றுகொண்டு, 'ஐயா, வணக்கம்' என்று கூறியது.

‘நீ யார்?’ என்று கழுகு கேட்டது.

'நான் ஒரு பூனை!’ எனறது பூனை.

'நீ இப்பொழுதே இந்த இடத்தைவிட்டு ஓடிப்போய்விடு! இல்லையானால் உன் உயிர் போய்விடும்' என்று கழுகு எச்சரித்தது.

'ஐயா கழுகாரே, முதலில் என் கதையைக் கேளுங்கள். அதன் பின் நீங்கள் என் மேல் கோபித்துக் கொண்டாலும் சரி. சாதி வேறுபாட்டை மனத்தில் கொண்டு மற்ற பிராணிகளைக் கொல்லுவதும், சாதிக் கொரு நீதி என்ற முறையில் உபசாரம் செய்வதும் நேர்மையான முறையல்ல. அவனவன் கொண்டுள்ள ஒழுக்கங்களைக் கண்டபின்பே எது செய்ய வேண்டுமோ அது செய்ய வேண்டும்’ என்று பூனை கூறத் தொடங்கியது.

'நீ இங்கு எதற்காக வந்தாய்? அதை முதலில் சொல்’ என்றது கழுகு.

"நான் கங்கைக் கரையில் வாழ்கிறேன். நாள் தோறும் கங்கை நதியில் உடல் முழுவதும் அமிழக்குளித்து, சாந்திராயணம் என்ற விரதத்தைச் செய்து வருகிறேன். நீர் மிகுந்த புண்ணியவான் என்று கேள்விப்பட்டேன். அதனால் உம்மைப் பார்த்துப் போகவே புறப்பட்டு வந்தேன். ஏனெனில், வயது முதிர்ந்த அறிவாளிகள் எங்கிருக்கிறார்கள் என்று. கேட்டு அவர்களிடம் தருமோபதேசம் கேட்பது ஒருவனுடைய கடமை என்று தர்ம சாத்திரம் படித்தவர்கள் எல்லோரும் சொல்லுவார்கள். உம்மிடம் அறங்கேட்க வந்த என்னை நீர் கொல்ல நினைத்து விட்டீர். இது சரியா? பகைவர்களும் கூடத் தம்மை அடுத்தவர்களுக்கு நன்மையே செய்வார்கள். பகை கொண்டு தன்னை வெட்ட வருபவனுக்கும் மரம் நிழல் கொடுத்துக் களைப்பாற்றும். நிலவு தீயவன் வீட்டிற்கும் வெளிச்சம் கொடுக்கிறது. பெரியவர்கள், புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு உபகாரம் செய்வார்கள். எவனொருவன் வீட்டிற்கு, ஒரு விருந்தாளி வந்து முகம் வாடித் திரும்புகிறானோ, அவன் வீட்டுப் புண்ணியத்தை எடுத்துக் கொண்டு தன் பாவத்தை அங்கே விட்டு விட்டுச் செல்லுகிறான் அந்த விருந்தாளி என்று சொல்லுவார்கள்.’’ என்று பூனை சொல்லிக்கொண்டிருந்தது.

'ஆனால், இறைச்சி அருந்துவதும் அதற்காக உயிர்களைக் கொல்லுவதும் உங்கள் குலத்துக்குரிய குணம் அல்லவா?’ என்று கிழட்டுக் கழுகு கேட்டது.

'சிவ சிவா! என்ன தீயவுரை! பஞ்சமா பாதகத்தில் பெரிய பாவம், கொலைப் பாவம். அப்பாவம் செய்பவர்கள் தீய நரகம் அடைவார்கள். அற நூல்கள் பல அறிந்துள்ள நான், இத்தீய கொலைத் தொழிலை விட்டுவிட்டேன். நல்ல பழவகைகளை உண்டு வாழ்கின்றவர்கள், பாவச் செயல் செய்யப் புகுவார்களா?’ என்று பூனை தன்னைப்பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டது.

கழுகு கடைசியில் அதை நம்பியது. பூனையும் தன்னோடு இருக்க அது இடங் கொடுத்தது. பூனை பிறகு கழுகுக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல நடந்து

சென்று, இளம் பறவைக் குஞ்சுகளைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. நாளடைவில் தங்கள் குஞ்சுகளைக் காணாமல் பறவைகள் தேடத் தொடங்கின. இது தெரிந்தவுடன் பூனை அங்கிருந்து ஓடி விட்டது.

தங்கள் குஞ்சுகளைத் தேடி வந்த பறவைகள், கழுகிருக்கும் பொந்தருகில் வந்து பார்த்தன. பூனை தான் கொன்று தின்ற குஞ்சுகளின் வெள்ளெலும்புகளையும் சிறகுகளையும் கழுகுப் பொந்தின் எதிரிலே போட்டு வைத்திருந்தது. அந்த எலும்புகளையும் சிறகுகளையும் கண்ட பறவைகள், கழுகுதான் தங்கள் குஞ்சுகளைக் கொன்று தின்றுவிட்டது என்று நினைத்துக் கோபம் கொண்டன. எல்லாமாகக் கூடி அந்தக் கிழட்டுக் கழுகைக் கொத்திக் கொத்திக் கொன்று விட்டன.

குணம் தெரியாமல் யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பது இதனால் நன்கு விளங்குகிறது.5. ஆசையால் நேர்ந்த அழிவு

ஒரு வேடன் காட்டுக்கு வேட்டைக்குப் போய்,ஒன்றும் கிடைக்காமல் பல நாள் அலைந்து திரிந்து

கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் ஒரு மானைக் கண்டான். அதன் பின்னே விரட்டிக் கொண்டு ஓடி அம்பெய்து கொன்று அதைத் தூக்கிக் கொண்டு தன் சேரி நோக்கி நடந்தான். வழியில் ஒரு பெரிய பன்றியைக் கண்டான். உள்ள மான் போதாதென்று, இந்தப் பன்றியை எய்து கொன்றால் இரண்டு நாள் சாப்பாட்டுக்காகும் என்று அதன்மேல் அம்பெய்தான். அந்தப் பன்றி கோபம் கொண்டு அவன் மேல் பாய்ந்தது. அவனைக் கொன்று தானும் செத்து விழுந்தது. அப்பொழுது அந்த வழியாக ஒரு நரி வந்தது. செத்துக் கிடக்கும் வேடனையும் மானையும் பன்றியையும் கண்டு, ஆகா! மூன்று நாளுக்குச் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை’ என்று சொல்லிக் கொண்டே வேடன் வைத்திருந்த வில்லின் நானைப் போய் முதலில் கடித்தது. நாண் அறுந்தவுடன், வில்கம்பு சடக்கென்று விரிந்து நரியின் வயிற்றில் குத்தியது. உடனே அந்த நரியும் செத்து விழுந்தது.

ஆசை மிகுந்திருக்கக் கூடாது. 

பஞ்ச தந்திரக் கதைகள்

பகுதி 3

அடுத்துக் கெடுத்தல்

1. கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

இருள் குடிகொண்டது என்று சொல்லும்படியான ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் இருந்த ஓர் ஆலமரத்தில் மேகவண்ணன் என்ற பெயருடைய காகம் ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் உள்ள காகங்களுக்கெல்லாம் அதுதான் அரசனாக விளங்கியது. மேகவண்ணன் தன் அமைச்சர்களோடும், மற்ற காகங்களோடும் அந்த ஆலமரத்தில் நெடுநாள் இருந்து வந்தது.

பக்கத்தில் இருந்த ஒரு குகையில் கோட்டான்களின் கூட்டம் ஒன்று குடிகொண்டிருந்தது. அந்தக்கோட்டான்களின் அரசனும், தன் அமைச்சர்களோடும் கூட்டத்தோடும் அச்சமில்லாமல் வாழ்ந்தது. தடுப்பாரில்லாமல் அந்தக் கோட்டான் அரசன் இரவில் வேட்டையாடிக் களித்திருந்தது.

கோட்டான்களுக்கும் காகங்களுக்கும் அடிக்கடி பகை ஏற்படும். பகற் பொழுது முழுவதும், காகங்கள் கோட்டான்களைப் பதைக்கப் பதைக்க வதைப்பதும், இரவெல்லாம் காகங்களை எழும்பவிடாமல் கோட்டான்கள் அடிப்பதும், இப்படியாக நாளுக்கொரு பகையும் வேளைக்கொரு சண்டையுமாக இருந்து வந்தது.

ஒருநாள் இரவுப்பொழுது வந்ததும் கோட்டான் அரசன் தன் அமைச்சர்களை அழைத்துப் பேசியது.

‘கதிரவன் தோன்றிவிட்டால், நாம் அந்தக் காக்கைகளை ஒன்றும் செய்யமுடியாது. இதுதான் நல்ல சமயம். இப்போதே நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு வாருங்கள். நம் பகைவர்களாகிய அந்தக் காகங்களை இந்த இருட்டு நேரத்திலேயே வளைத்து அடித்துக் கொன்று குவித்துவிட்டு வருவோம்’ என்றது.

உடனே அமைச்சுக் கோட்டான்கள், இது நமக்கு நல்ல வேளைதான். இப்போதே நாம் சென்று அந்தக் காக்கைகளை வென்று மீள்வோம்’ என்று சொல்லி உடனே விரைவாகப் படை கூட்டித் திரண்டன. எல்லாக் கோட்டான்களும், ஆலமரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, அங்கு கூடு கட்டி வாழ்ந்த காகங்களையெல்லாம், கொத்திக் கொன்று விட்டுத் தங்கள் அரசனிடம் திரும்பி வந்தன.

ஆலமரத்தில் இருந்த அந்தக் காகக் கூட்டம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆலமரம் முழுவதும் இரத்தம் வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காகங்கள் சின்னாபின்னமாகக் கிடந்தன. சிறகொடிந்த காக்கைகள் ஒருபுறம், காலொடிந்த காக்கைகள் ஒரு புறம், குடல் சரிந்து விழுந்து கிடந்த காக்கைகள் ஒரு புறம், இப்படி அந்த இடம் ஒரே பயங்கரமாகக் காட்சியளித்தது.

அந்தக் காக அரசன் எப்படியோ, கோட்டான்களின் கண்ணுக்குத் தப்பிப் பிழைத்துக் கொண்டது.

மறுநாள் பொழுது விடிந்து கதிரவன் தோன்றியவுடன், காக அரசன், ஆலமரத்தின் கீழ் தன் கூட்டம் கொலைபட்டு மலைபோல் கிடப்பதைக் கண்டது. அவற்றின் மத்தியில் தனது பெரிய மந்திரிகளான ஐந்து காகங்களும் மற்ற சில காகங்களும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டு காக அரசன் ஓரளவு மகிழ்ச்சி கொண்டது.

உயிர் பிழைத்த காகங்களையும் தனது மந்திரிகளையும் அரச காகம் ஒன்று திரட்டியது. நம் குடியே அழியும்படியாக இப்படி நேர்ந்து விட்டதே!’ என்று வருந்தியது. பிறகு, அவற்றைக் கொண்டு, காயப்பட்டுக் கிடந்த காகங்களுக்கெல்லாம், மருந்து வைத்துக் காயங்களைக் குணப்படுத்தச் செய்தது. இறந்து போன காகங்களுக்கெல்லாம் செய்ய வேண்டிய ஈமக்கடன்களைச் செய்தது. பிறகு, பொய்கையில் சென்று தலை முழுகிவிட்டு வந்தது. அரச காகம் உயிர் பிழைத்த மற்ற காகங்களுடன் வேறொரு மரத்திற்குக் குடிசென்றது. அங்கு சென்றதும், தன் அமைச்சர்களை நோக்கி ‘இப்பொழுது நாம் என்ன செய்யலாம்? உங்கள் யோசனைகளைச் சொல்லுங்கள்’ என்று கேட்டது.

‘அரசே ஒரு பகைவனை அவனைக் காட்டிலும் வல்லவர்களோடு சேர்ந்து வெல்லுதல் வேண்டும். அந்த முறை நடைபெறக் கூடாததாக இருக்குமாயின் அந்தப் பகைவனையே வணங்கி வாழவேண்டும். அல்லது அவன் வாழவிடக் கூடியவனாக இல்லாமல் இருந்தால் நாம் இருக்கும் நாட்டை விட்டு வேறு நாடு போய்விட வேண்டியதுதான். இப்படி மூன்று வழிகள் இருக்கின்றன’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது.

'தான் இருக்குமிடத்தை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியேறக் கூடாது. நாய் கூடத் தான் இருக்கும் இடத்தில் இருந்தால்தான் சுகமாக இருக்கும். சிங்கமாக இருந்தாலும் அது தன் இடத்தை விட்டுவிட்டால் யாரும் அதை நினைத்துப் பார்க்கக் கூடமாட்டார்கள். பசுமாடும், இடம் மாறினால் பால் சுரக்காது. ஆகவே, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, பகையை வெற்றி காணும் வழியை நாம் சிந்திக்க வேண்டும்' என்று இரண்டாவது அமைச்சுக்காகம் கூறியது.

எல்லாம் சரிதான். ஆனால், நம்மை வெற்றி கொண்ட பகைவர்கள், நாம் இங்கே இருக்க அனுமதிப்பார்களா? மேலும் மேலும் தீமை செய்து கொண்டேதான் இருப்பார்கள். அந்தத் தீமைக்கு ஆளாகாமல் தப்ப, அவர்களுடன் இனிமேல் சமாதான ஒப்பந்தம் பேசிக்கொண்டு இருப்பதுதான் நல்லது என்று மூன்றாவது அமைச்சுக்காகம் கூறியது.

கோட்டான்களுக்குப் பகலில் கண் தெரியாது. நம் காகங்களுக்கோ இரவில் கண்கள் தெரியாது. இந்த நிலையில் எப்படிச் சமாதானம் பேசிக் கொண்டு இருக்க முடியும்? பேசாமல் இப்பகல்

நேரத்திலேயே, இப்போதே போய் அந்தக் கோட்டான்களை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று போட்டுவிட்டு வருவதே நல்லது என்று நான்காவது அமைச்சுக் காகம் கூறியது.

முதல் நான்கு அமைச்சுக் காகங்களும் ஒன்றையொன்று மறுத்தும், தத்தமக்குத் தெரிந்ததைக் கூறியும் யோசனை சொல்ல, ஐந்தாவது அமைச்சுக் காகம் பேசாமல் இருந்தது.

அந்த ஐந்தாவது அமைச்சுக் காகம் மிக வயதான கிழட்டுக் காகம். அமைச்சுத் தொழிலில் நெடுநாள் அனுபவமும், தந்திரத்தில் பெருந்திறமையும் கொண்டது.

சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்தை நோக்கி, ' உன் கருத்து என்ன? சொல்’ என்று அரச காகம் கேட்டது.

விதையைச் சும்மா வைத்திருந்தால் பயன் ஒன்றும் இல்லை. அதை ஒரு நிலத்தில் விதைத்தால் தான் அது விளைந்து பயன் கொடுக்கும். அதுபோல, அமைச்சர்களிடம் மந்திராலோசனை செய்வது மட்டும் பயன்படாது. அதை மன்னர்கள் மனத்தில் இருத்திச் செயல்பட முற்பட்டால்தான் சரியான பயன் உண்டாகும்.

'பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களை பகைவர்களோடு, நட்புக் கொண்டு கூடியிருப்பது ஒரு முறை; கூடியிருந்து அவர்களைக் கெடுப்பது ஒரு முறை: நாட்டை விட்டுப் போவது ஒரு முறை; நாட்டிலேயே தகுந்த கோட்டையில் பாதுகாப்பாக இருப்பது ஒரு முறை; இருக்கும் இடத்தை விட்டுப் போகாமல் இருப்பது ஒரு முறை; நட்புப் பிரித்தல் ஒரு முறை; இப்படியாக ஆறு முறைகள் அரசர்கள் கையாளக் கூடியவைகளாகும்.

ஒரு செயலைச் செய்யக் கூடிய அங்கங்கள் ஐந்து எனப்படும். அவை, அந்தச் செயலுக்கான முயற்சிகளில் ஈடுபடுதல், அதற்கான காலத்தையும் இடத்தையும் ஆராய்தல், அதற்கு வேண்டிய பணமும் ஆளுதவியும் தேடுதல், ஒருவன் தனக்குச் செய்ததை யொத்த செயலைத் தானும் செய்தல், சமாதானம் செய்து கொள்ளுதல் என்பன ஐந்தும் ஒரு செயல் முறையின் அங்கங்களாகும்.

‘ஒப்பந்தம் செய்தல், தானமாக வழங்குதல், பகைத்தல், தண்டித்தல் என்று உபாயங்கள் நான்காகும்.

'ஆர்வம், மந்திரம், தலைமை ஆகிய சக்திகள் மூன்றாகும்.

'ஆறு குணங்கள், ஐந்து அங்கங்கள், நான்கு உபாயங்கள், மூன்று சக்திகள் ஆகியவற்றிலே தக்கவற்றை ஆராய்ந்து கொண்டு நடத்துவதே அரசர்

'நம்மினும் வலிமை யுள்ளவர்களோடு சேர்ந்திருப்பது நமக்கு நன்மை தராது. ஆகவே சமாதானம் செய்து கொண்டு நாம் நன்றாக வாழ வழியில்லை. நமக்கும் அந்தக் கோட்டான்களுக்கும் குலப்பகை. அப்படிப்பட்ட பகைவர்களுக்கு அடி பணிந்து நடப் பதும் ஆகாது என்று சிரஞ்சீவி கூறிக் கொண்டிருக்கும்போது அரச காகம், காகங்களுக்கும் கோட்டான்களுக்கும் பகை வரக் காரணம் என்ன?’ என்று கேட்டது.

‘அரசே, எல்லாம் வாயினால் வந்த வினை தான்! கழுதை தன் வாயினால் கெட்டது போல, நம் காகங்களும் வாயினாலேயே இந்தக் கோட்டான்களோடு பகை தேடிக் கொண்டன.

“ஒரு முறை காட்டில் உள்ள பறவைகளெல்லாம் கூடித் தங்களுக்கோர் அரசனைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தன. அவை யாவும் ஒரு கோட்டானைத் தங்களுக்கு அரசனாகப் பட்டம் கட்டி அதன் ஆணைப்படி வாழ்வதெனப் பேசி முடித்து வைத்திருந்தன. அப்போது அங்கு ஒரு கிழட்டுக் காக்கை போய்ச் சேர்ந்தது.

போயும் போயும் ஒரு கோட்டானையா நமக்கு அரசனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்தக் கோட்டான் குலத்திலும் நல்லதல்ல, குணத்திலும் நல்ல தல்ல. அத்தனையும் தீக்குணங்கள். கோட்டான் என்ற சொல்லே அருவருப்புக்குரியது. இரவில் நட மாடும் இந்தக் கோட்டானுக்குப் பகலில் கண்கள் குருட்டுக் கண்களாயிருக்கும். பார்வைக்கு இது கோரமாகக் காட்சியளிக்கும். முகத்திலே அழகும் இல்லை. மொழியிலே இனிமையும் இல்லை. அகத்திலே அறிவும் இல்லை. இதை யாரும் நினைப்பதும் இல்லை. இதன் பெயரைச் சொன்னாலே நமக்கு எதிரிகள் அதிகமாவார்கள். இப்படிப்பட்ட மோசமான ஒன்றையா நாம் அரசனாக ஏற்றுக் கொள்வது?

‘அரசனாகத் தகுந்தவர்கள் நல்ல குணமுடைய பெரியவர்களே, அவர்கள் பெயரைச் சொன்னால், பெரும் பகைகளையும் வெல்லக் கூடிய வன்மை யுண்டாகும். அப்படிப்பட்ட பெரியவர்களைச் சேர்ந்தால் தான் ஒவ்வொருவனும் அவனுடைய கூட்டத்தாரும் மேன்மையடையலாம். சந்திரன் பெயரைச் சொல்லியே யானைகளின் படையை வென்று முயல் தன் இனத்துடன் இனிதாக வாழ்ந்திருப்பதைப் போல் உயர்வாக வாழ வேண்டும். அதற்கு அரசன் நல்லவனாக வாய்க்க வேண்டும்.

இதை யெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் எப்படி இந்தக் கோட்டானுக்கு முடிசூட்ட முகூர்த்தம் பார்த் தீர்கள்? உங்கள் எண்ணம் சரியாகவே யில்லையே.

'பாவிகள் மெளனிகளைப் போலவும், பல விரதங்களைக் காக்கும் பெரியவர்களைப் போலவும் தோன்றுவார்கள். உதவி செய்பவர்களைப் போலவும், உறவினர்களைப் போலவும் வந்து ஒட்டிக் கொள்ளுவார்கள். அவர்களிடம் ஏமாந்து சேர்ந்து விட்டால் எவ்வளவு மேன்மையுடையவர்களும் தப்பிப் பிழைக்க முடியாது. ஒரு மைனாவும் முயலும், பூனை யொன்றைச் சேர்ந்து மோசம் போன கதையாய் முடிந்து விடும்.

‘உலகத்தில் அற்பர்களைச் சேர்ந்தவர்கள், கெட்டொழிந்ததைத் தவிர இன்பமாக வாழ்ந்ததாகக் கதை கூட இல்லை. கோட்டானை அரசனாக்குவது நம் பறவைக் கூட்டத்துக்குத் தீமையே உண்டாக்கும்? என்று சொல்லிச் சென்றது அந்தக் கிழட்டுக் காகம். மற்ற பறவைகள் அரசனைத் தேர்ந் தெடுக்காமலே பறந்து சென்று விட்டன. அன்று முதல் இன்று வரை கோட்டான் கூட்டம் நம் காகக் குலத்தின் மீது தொடர்ந்து பகை கொண்டாடி வருகிறது.

சிரஞ்சீவி என்ற அமைச்சுக் காகம் இவ்வாறு சொல்லியதைக் கேட்ட மேகவண்ணன் என்ற காக அரசன், 'இனி நாம் என்ன செய்யலாம்? அதைக் கூறு’ என்று கேட்டது.

'அடுத்துக் கெடுத்தல் என்ற முறைப்படி நான் பகைவர்களிடம் சென்று காரியத்தை முடித்து வரும் வரையில் மற்றோர் இடத்தில் போயிருக்க வேண்டும். நம்முடைய இந்த ஆலோசனைகள் வேறு யாருக்கும் தெரியாதபடி இரகசியமாய் வைத்திருக்க வேண்டும்” என்று சிரஞ்சீவி சொல்லியது.

'எப்படி நீ அந்தக் கோட்டான்களை வெல்லப் போகிறாய்?' என்று காக அரசன் ஆவலோடு கேட்டது.

‘மூன்று வஞ்சகர்கள் கூடி ஒரு பார்ப்பனனை மோசம் செய்து அவனுடைய ஆட்டைக் கைப்பற்றியது போலத்தான் நானும் அந்தப் பகைக் கூட்டத்தை வெல்லப் போகிறேன்” என்றது சிரஞ்சீவி.

காக அரசன் தன் அமைச்சனான சிரஞ்சீவியின் சொற்படியே, அப்போதே தன் கூட்டத்தோடு ஒரு மலை முடியில் போய்த் தங்கியிருந்தது. சிரஞ்சீவி கோட்டான் கூட்டத்திடம் போய்ச் சேருவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே இருட்டி விட்டது.

இரவு வந்தவுடன், கோட்டான்களின் அரசன், மிகுந்த வெறியோடு தன் கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு ஆலமரத்தை நான்கு புறமும் வளைத்துக் கொண்டது. இன்றே ஒரு காக்கை விடாமல் கொன்று போட வேண்டும் என்று வஞ்சினம் கூறிக்கொண்டு வந்தது. ஆனால், ஆலமரத்தில் ஒரு குஞ்சுக் காக்கை கூட இல்லை. இதைக் கண்ட கோட்டான் அரசன், மற்ற கோட்டான்களைப் பார்த்து, 'காகப் பெரும் பகையை வென்றொழித்து விட்டோம். இனி நமக்கு யாரும் எதிரிகளே இல்லை’ என்று வெற்றிப் பெரு மிதத்தோடு கூறியது.

இதையெல்லாம் ஒளிந்து மறைந்து கேட்டுக் கொண்டிருத்த சிரஞ்சீவி, 'நல்ல வேளை! இன்றே எல்லோரும் வேறிடம் போனதுதான் நல்லதாகி விட்டது. இல்லாவிட்டால் நம் கூட்டம் அடியோடு செத்திருக்க வேண்டும்' என்று மனத்திற்குள் நினைத்து மகிழ்ந்தது.

அடுத்து அது தன் சூழ்ச்சி வேலையைத் தொடங்கியது.

முதல் நாள் கோட்டான்கள் அடித்துக் கொன்று போட்டிருந்த காக்கைகள் ஆலமரத்தினடியில் சிறகு ஒடிந்து போய் இரத்தம் வழிந்து அலங்கோலமாகக் கிடந்தன. அந்தப் பிணக் கூட்டத்தின் இடையிலே போய் மறைவாகக் கிடந்து இரக்கந் தரத்தக்க முறையில், துன்பமும் வருத்தமும் நிறைந்த குரலில் முக்கி முனகிக் கொண்டிருந்தது சிரஞ்சீவி.

கோட்டான் அரசன் காதில் இந்தக் குரல் விழுந்தது. 'காகம் ஏதோ கிடந்து கதறுகிறது. போய்ப் பார்’ என்று ஒரு தூதனிடம் கூறியது. அந்தக் கோட்டான் துரதன், பிணக் குவியலிடையே தேடிக் கதறிக் கொண்டிருந்த சிரஞ்சீவியைத் தூக்கிக் கொண்டு போய்க் கோட்டான் அரசன் முன்னே விட்டது.

'நீ யார்?’ என்று கோட்டான் அரசன் கேட்டது.

சிரஞ்சீவி தந்திரமாய்ப் பேசியது.

'என் பெயர் சிரஞ்சீவி. காக அரசனாகிய மேக வண்ணனுடைய தலைமுறையில் வந்தவன் நான், நான் அவனுடைய அமைச்சனாக இருந்தேன். நான் சொன்னபடி அவன் நடந்து வந்தான். நலமாக இருந்தான். நல்லறிவு சொல்பவர்களின் சொற்படி நடப்பவர்களுக்குத் தீமை வருவதுண்டா? ஆனால், பிறகு தீய அமைச்சர்கள் அரசனுக்கு வாய்த்தார்கள். அதன் பிறகு அவன் என் பேச்சைக் கேட்பதில்லை.

அவர்கள் அரசனுக்குத் தீய யோசனை கூறி உங்கள் கூட்டத்தோடு சண்டையிடும்படி தூண்டிவிட்டார்கள். வேண்டாம் வீண் பகை என்று நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. உங்களோடு சண்டையிட்டார்கள். உங்கள் குலத்தில் பலரைக் கொன்று போட்டார்கள். நான் சொன்னேன், 'வீண் சண்டைக்குப் போகிறீர்கள். அவர்கள் ஒரு நாள் வந்து நம்மை வளைத்துக் கொண்டு அடித்துக் கொன்று விடுவார்கள்’ என்று. யாரும் கேட்கவில்லை. நேற்று இரவு நான் சொன்னபடியே நடந்து விட்டது.

‘கால் வேறு தலை வேறாகக் கிடந்த காகங்கள் பல. கரிய சிறகு வேறு வால் வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. குடல் வேறு வாய் வேறாகக் கிழிக்கப் பட்ட காகங்கள் பல. தோல் வேறு துடை வேறாகத் துண்டுபட்ட காகங்கள் பல. இப்படி எங்கள் கூட்டமே அழிந்து போய் விட்டது. நானும் இன்னும் நான்கு மந்திரிகளும் எங்கள் அரசனும், தப்பிப் பிழைத்தோம். அடிபட்ட காகங்களின் கீழே நடுநடுங்கி மறைந்து கிடந்த நாற்பது காகங்கள் பிழைத்துக் கொண்டன. எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி, அரசன் கேட்டான், இனி என்ன செய்யலாம் என்று. அப்போது ஓர் அமைச்சன் பகல் நேரத்தில் நாம் அந்தக் கோட்டான்களைப் பழி வாங்குவோம் என்றது. இன்னோர் அமைச்சன் வேண்டாம் வேறு இடம் போவோம்’ என்றது. 'நம் பகையைத் தேடிக்கொண்ட அந்தக் கோட்டான் இனி நம் கண்ணில் அகப்படுமா?’ என்று ஓர் அமைச்சுக் காகம் கூறியது. 'நாம் எப்படி அவற்றை வெல்ல முடியும்? நமக்குள் இத்தனை கருத்து வேறுபட்டிருக்கிறதே?' என்று கடைசி அமைச்சன் சொல்லியது.

'இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான், 'இவ்வளவு அழிவு நேர்ந்த பின்னும் உங்களுக்கு அறிவு வரவில்லையா? இனி நாம் பகை கருதாமல், கோட்டான் அரசனுக்குப் பணிந்து வாழ் வதுதான் பிழைக்கும் வழி!’ என்று சொன்னேன். உடனே அவையெல்லாம் ஒன்று கூடி, என்னை அடித்துத் துவைத்து இழுத்துப் போட்டுவிட்டு இங்கிருந்து பறந்து போய்விட்டன.

'நான் செத்தேனென்று நினைத்துக் கொண்டு என்னை அத்தோடு விட்டு விட்டுப் போனார்கள். ஆனால் நல்ல வேளையாக நான் பிழைத்துக் கொண்டேன். உத்தமனாகிய கோட்டான் அரசே! உடனடியாக உன் காலில் வந்து விழ வேண்டும் என்பது தான் என் ஆவல். ஆனால் அடிபட்ட சோர்வினால் என்னால் எழுந்து பறந்து வரமுடியவில்லை. இனி உன் முடிவு என் விடிவு!’ என்று கூறிச் சிரஞ்சீவி, கோட்டான் அரசனுக்கு வணக்கம் செலுத்தியது.

கோட்டான் அரசனின் மனம் இளகியது. அது தன் அமைச்சர்களை நோக்கி, 'இது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டது.

'கொடிய புலி தானாக வந்து வலைகோட்யில் சிக்கிக் கொண்டால் அதை விட்டு விடுவது புத்திசாலித்தன மல்ல' என்று பெரும்பாலான அமைச்சுக் கோட்டான்கள் கூறின. அந்த அமைச்சர்களிலே குருதிக் கண்ணன் என்ற கோட்டான் 'அடைக்கலம் என்று வந்த ஒருவனைக் கொல்வது அறமல்ல’ என்றது. கொடுங்கண்ணன் என்ற அமைச்சனைப் பார்த்துக் கோட்டான் அரசு கருத்துக் கேட்ட போது 'பகைவர்கள் நமக்குப் பணிந்து வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதுதான் மனுநீதி முறைப்படி சரியாகும். அவர்களைக் கொன்றவர்களையும் அவர்கள் உதவியைக் கைவிட்டவர்களையும் இதுவரை உலகத்தில் நான் பார்த்ததில்லை’ என்று கூறியது.

கொள்ளிக் கண்ணன் என்ற அமைச்சனைக் கேட்ட போது, 'பகைவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் களானாலும், நமக்கு இனிமையாகப் பேசி உதவ முன் வருபவர்களை நல்ல பதவி கொடுத்து ஆதரித்துக் காப்பாற்றுவதே உத்தமர்களின் கடமை. அப்படிபட்ட உத்தமர்கள் உலகில் நெடுங்காலம் நலமாக வாழ்வார்கள். கோமுட்டியின் வீட்டில் திருட வந்த கள்ளனுக்கு அந்தக் கோமுட்டி ஓர் உதவி செய்தான். அதனால் திருடன் அவனுக்குப் பதிலுக்கொரு உதவி செய்தான். அதுபோலப் பகை வர்களாலும் பயனடைய முடியும்' என்று கூறியது.

குருநாசன் என்ற கோட்டான் அமைச்சனைக் கேட்டபோது, 'கள்ளனுக்கும் பேய்க்கும் பரிசு கொடுத்துப் பயன் கண்ட பார்ப்பனன் போல் இவனுக்கு உதவி செய்து நாம் இலாபம் அடையலாம் என்றும், 'பகைவருக்குப் பகைவன் நமக்கு நட்பாவான்’ என்றும் கூறியது.

அடுத்துக் கோட்டான் அரசன் பிராகார நாசன் என்ற தன் அமைச்சனைப் பார்த்து, 'உன் கருத்தை உரை' என்று கேட்டது.

'பகைவர்கள் நல்லவர்கள் போல் வந்தாலும் அவர்களை நம்பி விடக் கூடாது. நம்பினால் இரகசியத்தை விட்டுக் கொடுத்த பாம்புகள் போல் அழிய நேரிடும். வேடனைக் காப்பாற்ற எண்ணிப் புறாக்கள் இறக்க நேர்ந்தது போல், பகைவனைக் காப்பாற்ற நம் உயிரைத் தத்தம் செய்யவேண்டி வந்தாலும் வரும். பொன் எச்சமிடும் புறாவைக் காப்பாற்றப் போய் மூடப்பட்டம் பெற்ற அமைச்சனைப் போல், பகைவர்களைக் காப்பாற்ற முற்படுவோர் மூடராகி விடுவர். ஆதலால் பகைவன் என்று அறிந்த பின் ஒருவனை நம்புபவன், தானே சாகும்படியான நிலையை அடைவான். சிங்கத்தின் மோசம் அறிந்த நரியைப் போல் பகைவனை ஆராய்ந்து அவன் தீமையை விலக்கிக் கொள்வதே சிறந்ததாகும்’ என்று பல கதைகளை எடுத்துரைத்துக்காகத்தை நம்பக்கூடாதென்று வலியுறுத்தியது.

ஆனால், கோட்டான் அரசு அதன் அறிவுரையைத் தள்ளிவிட்டது. முன் கூறிய பல அமைச்சர்களின் ஆலோசனைகளே அதற்குப் பொருத்தமாகத் தோன்றின.

ஆகவே, அது சிரஞ்சீவி என்ற அந்தக் காகத்திற்குப் பல பரிசுகள் கொடுத்து, 'சிரஞ்சீவி, இனி நீயும் என் அமைச்சர்களில் ஒருவனாய் இருந்துவா’ என்று பதவி கொடுத்துச் சிறப்பித்தது.

அப்போது சிரஞ்சீவி என்ற அந்தக் காகம், ‘அரசே, என் அன்புக்குரிய கோட்டான் அரசே, உனக்கு நூறு கோடி வணக்கங்கள். காக்கைகளால் அடிபட்ட நான் இந்தக் காக்கை யுருவத்தை வைத்துக் கொண்டு உன்னிடம் இருக்க வெட்கப் படுகிறேன். இப்போதே தீயிட்டு இந்த உடம்பை அழித்து விடுகிறேன். மறுபிறப்பிலாவது ஒரு கோட்டானாகப் பிறந்து அந்தக் காகங்களைப் பதிலுக்குப் பதில் தப்பாமல் அடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!' என்று பசப்பியது.

'சிரஞ்சீவி, ஆகாததைப் பற்றி ஏன் பேச வேண்டும். பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாக மாறியே வாழ வேண்டியிருப்பதைப் போலத்தான், அவரவர்கள் எடுத்த உடம்பை வைத்தே ஆக வேண்டிய செயல்களைப் புரிய வேண்டும். நீ நினைத்தாலும் உன்னுடைய காக வடிவத்தை மாற்றிக் கோட்டான் உருவம் அடைய முடியாது. அது குறித்து நீ மனக்கவலை கொள்ள வேண்டாம். இங்கே என்னிடத்தில் நீ எப்பொழுதும் நலமாக இருக்கலாம்’ என்று கோட்டான் அரசு சொல்லியது.

சிரஞ்சீவிக் காகம் கோட்டான் அரசு மனம்போல் நடந்து, மற்ற கோட்டான் அமைச்சர்களைக் காட்டிலும் மேலான பதவியை யடைந்தது. பதவியின் மூலமாகத் தன் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டு, கோட்டான்கள் தங்கியிருந்த குகை வாசலைத் தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டது. ஒரு நாள் பகலில் கோட்டான் அரசு தன் அமைச்சர்களோடும் கூட்டத்தினரோடும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, சிரஞ்சீவிக்காகம் குகை வாயிலில் குச்சிகளைக் கொண்டு வந்து போட்டுக் குவித்து, அதில் நெருப்பு வைத்துவிட்டது.

குகைக்குள்ளே நெருப்பும் புகையும் சூழ்ந்து கொண்டது, உள்ளேயிருந்த கோட்டான்களெல்லாம் கண்ணும் தெரியாமல், வழியும் தெரியாமல், புகையில் மூச்சுத் திணறியும், நெருப்பில் வீழ்ந்து ஒரே கூட்டமாக இறந்து ஒழிந்து போவிய்ட்டன.

வெற்றிகரமாகத் தன் பகைவர்களை ஒழித்து விட்ட சிரஞ்சீவிக் காகம், தன் அரசனாகிய மேகவண்ணனும், பிற காகங்களும் உள்ள சிங்க மலைக் குப்பறந்து சென்றது.

அங்கு தான் செய்த செயலைப் பற்றி அது கூறியவுடன், மேகவண்ணன் மனம் அடங்காத மகிழ்ச்சி கொண்டு சிரஞ்சீவியைக் கட்டித் தழுவிக் கொண்டது, எல்லாக் காக்கைகளும், 'கொண்ட பகை தீர்த்தகுலமணி’ என்று போற்றிப் பாராட்டின.

காக அரசன், சிரஞ்சீவியைப் பகைவர்களிடையே இருந்து செயலாற்றியது குறித்துப் பலவாறாகப் புகழ்ந்துரைத்தது.

மேகவண்ணனுடைய புகழுரைகளை யாற்றாமல் சிரஞ்சீவி இவ்வாறு கூறியது.

‘அரசே, அருமையான தம்பிமார்களையும், அளவில் அடங்காத சேனைகளையும் கொண்டு ஒப்பில்லாத அரசாட்சி செய்து உலகாண்ட தருமராசன் கூட, துறவி வேடங்கொண்டு விராடனிடம் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

‘தன் தோள்வலியால் பெரும்புகழுடன் வாழ்ந்த மாவீரனான வீமன் கூடத் தன் பழிப்புக்குரிய பகை யரசனிடம் போய் அடுக்களைச் சமையல்காரனாக இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'விஜயன் என்ற புகழ்ப் பெயர் பெற்ற அர்ச்சுனனே நாடகப் பெண்களுக்கு நட்டுவனாராகச் சிகண்டி என்ற பெயரில் இருக்கும்படி நேர்ந்த தில்லையா?

'நகுலன், விராடனிடம் குதிரைக்காரனாகச் சேர்ந்து வாழ நேர்ந்ததில்லையா? சகாதேவன் மாடு மேய்ப்பவனாக நேர்ந்ததில்லையா?

நெருப்பில் பிறந்த சிறப்பினையுடையவளும், சூரிய குலத்தில் பிறந்து சந்திர குலத்தில் புகுந்த மின்னல் கொடி யொத்தவளும் ஆகிய பாஞ்சாலி, விராடன் மகளுக்குத் தோழியாய் இருக்கும்படி நேர்ந்ததில்லையா?

'பாண்டவர் குலத் தோன்றல்களைப் போல எடுத்த காரியம் முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டியது நம் கடமை யல்லவா?’ என்று சிரஞ்சீவி மேகவண்ணனுக்குப் பதிலளித்தது.

'கத்தி முனையிலிருந்து தவம் செய்பவர்களைப் போலவும், நெருப்பினிடையே புகுந்திருந்தவர்களைப் போலவும், பாம்புப் புற்றினுள் நுழைந்தவர்களைப் போலவும், பகைவர் கூட்டத்தினிடைப் புகுந்த நீ என்னென்ன துன்பம் அடைந்தாயோ?” என்று மேகவண்ணன் மேலும் அரற்றியது.

'அரசே, உன் அருளால் நான் எவ்விதமான தீமையும் அடையவில்லை. இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் இந்த மலைக்காட்டில் வந்து இருந்து, கவலையினால் நீ உடல் மெலிந்து போன தெல்லாம் நான் செய்த பாவமே!’ என்று சிரஞ்சீவிக் காகம் மேகவண்ணனிடம் அன்புடன் பரிந்து பேசியது.

‘இராமர் தான் இருந்த அயோத்தியை விட்டு வனவாசம் புகுந்ததும், அவருடைய தேவியான சீதை சிறைப்பட்டதும், இராவணனைக் கொன்று சீதையைச் சிறை மீட்டதும் எல்லாம் ராமருடைய தீவினையின் பயன் தானே!

'நளன் தன் அரசை இழந்ததும், தூயவளான தமயந்தியை, இரவில் சேலையை அரிந்து காட்டில் விட்டு விட்டுச் சென்றதும், கொடிய பாம்பு தீண்ட உடல் பழுப்பு நிறம் கொண்டதும், நளனுடைய தீவினையின் பயன்தானே!

பாண்டவர் சூதாடி அரசை இழந்ததும், பாஞ்சாலி வாட்டமடைந்ததும், காட்டில் வாழ்ந்ததும் எல்லாம் அவர்களுடைய தீவினையின் பயன்தானே,

‘தன் செல்வம், நாடு, மகன், மனைவி எல்லாம் இழந்ததும், பறையனுக்கு ஊழியம் செய்ததும், தன்னையே அடிமையாக விற்றதும் அரிச்சந்திரனுடைய தீவினையின் பயன்தானே!

வினைப்பயனைக் கடந்தவர்கள் யாருமில்லை! அந்தக் கோட்டான்களினால் நம் குலம் அழிந்ததும், இருந்த இடம் பெயர்ந்ததும், இன்பம் இழந்ததும்’ மலையில் ஒளிந்து வாழ்ந்து வருவதும் எல்லாம் நம் தீவினையின் பயனே! இப்போது நீ நம் குலத்தினை வாழவைத்தாய்’ என்று மேகவண்ணன் பாராட்டியது.

எதிரிகளை ஒரு வேளை தலை மேல் துக்கி வைத்துப் பேசியும், தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டாடியும் புகழ்ந்து, சமயம் வரும்போது வதைத் தொழிக்க வேண்டும். கருநாகம் தவளைகளைச் சுமந்து கடைசியில் கொன்றொழித்தது போல நடந்து கொள்ள வேண்டும். அரசர்களும் அமைச்சர்களும் அறிவுடையவர்களாக இருந்தால் என்றும் துன்பங்களை விலக்கி இன்பமாக யிருக்க லாம். இல்லாவிடில் கருநாகப் பாம்பிடம் ஏமாந்த தவளைகளைப் போலவும், என்னிடம் ஏமாந்த கோட்டான்களைப் போலவும் கூட்டத்தோடு ஒழிய வேண்டியதுதான்’ என்று சிரஞ்சீவி சொல்லிற்று.

அதை ஒப்பி காக அரசன் மேகவண்ணன் 'நல்ல அறிவினாலும், பொறுமையினாலும், திறமையினாலும் எச்செயலும் வெற்றியாய் முடிவது போல, சேனைகளாலும், செல்வத்தாலும், கோபத்தாலும், மான உணர்ச்சியாலும், மனோ சக்தியாலும் கூட முடிவதில்லை'. என்று சொல்லியது.

அதன் பின் பல்வகையான சூழ்ச்சிகளிலும் தந்திரங்களிலும் வல்லமையுடையதான சிரஞ்சீவியுடனும், மற்ற அமைச்சர்களுடனும், தன் காக்கை இனத்துடன், திரும்பவும் முன்னிருந்த பழைய ஆல மரத்தை அடைந்து மேகவண்ணன் பல ஆண்டுகள் நலமாக வாழ்ந்தது.2. தன் வாயினால் கெட்ட கழுதை

ஒரு வண்ணான் பொதி கழுதை யொன்றை வளர்த்து வந்தான். அவன் தன் அழுக்கு மூட்டைகளை யெல்லாம் அதன்மேல் ஏற்றிக் குளத்திற்குக் கொண்டு போவான். துவைத்து முடிந்த பின் மீண்டும் சுமை ஏற்றிக் கொண்டு வருவான்.

இவ்வளவு உழைக்கின்ற அந்தக் கழுதைக்கு அவன் தீனி வைப்பதில்லை, ஆனால், கழுதையின்  வயிற்றை நிரப்ப அவன் ஒரு தந்திரம் கண்டு பிடித்திருந்தான். இரவு நேரத்தில் அந்தக் கழுதையின் மேல் ஒரு புலித்தோலைப் போட்டுப் போர்த்தி, அதை அருகில் உள்ள ஒரு பயிர்க் கொல்லையில் மேயவிட்டு விடுவான். கழுதை வயிறு நிறையப் பச்சைப் பயிரை மேய்ந்து நன்றாகக் கொழுத்து வளர்ந்தது. வண்ணானுக்கும் மிகுந்த வேலை பார்த்திது.

இரவில் பயிர்க்கொல்லையைக் காவல் செய்பவர்கள் கழுதையைக் கண்டவுடன் புலி என்று நினைத்துக் கொண்டு பயந்து ஓடிப் போவார்கள். அது வேண்டுமட்டும் மேய்ந்து விட்டுப் போகும். இப்படி நெடுநாள் நடந்து வந்தது.

`புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்று பழமொழி யிருக்கிறது. ஆனால், இப்போது புலி நெல்லைத் தின்னும் புதுமையைப் பார்க்கிறோம். எல்லாம் கலிகாலக் கோலம்' என்று எல்லோரும் எண்ணி வியப்பு கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு முரடன் இருந்தான். இது உண்மைதானா , அல்லது சூழ்ச்சியா என்று அறிந்து கொள்வதற்காக அந்தத் துணிச்சல்காரன், கையில் ஓர் ஈட்டியை ஏந்திய வண்ணம், கம்பளத்தால் தன் உடல் முழுவதும் மூடிக் கொண்டு ஓர் இடத்தில் ஒளிந்திருந்தான். வழக்கம் போல் பயிர் மேய்வதற்காகக் கழுதை வந்த நேரம் பார்த்து அவன் எழுந்திருந்தான். கம்பளப் போர்வையோடு வந்த உருவத்தைக் கண்டதும், அது பெட்டைக் கழுதை என்று நினைத்துக் கொண்டு, புலித்தோல் போர்த்த கழுதை கத்தத் தொடங்கியது. அதன் குரலைக் கேட்டவுடன், ஈட்டிக்காரன், `பூ! நீ ஒரு கழுதைதானா? சரி, இதோடு தீர்ந்து போ!’ என்று தன் கை ஈட்டியால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.

அவ்வளவுதான்! கழுதை சுருண்டு பிணமாக விழுந்தது.

வாயடக்கம் வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கழுதையைப் போல், தன் வாயினாலேயே கெட்டொழிய நேரிடும். 

3. யானையை வென்ற வெள்ளை முயல்

ஒரு பயங்கரமான காட்டில் ஒரு பெரிய யானைக் கூட்டம் வாழ்ந்து வந்தது. ஒரு முறை அந்தக் காட்டில் மழையில்லாமல் அங்கிருந்த நீர்ச் சுனைகள் எல்லாம் வற்றி விட்டன. தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகி விட்டது. ஆகவே அந்த யானைகளின் அரசன் தன் ஒற்றர்களை ஏவி, குடிதண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிப்பார்த்து வரும்படி கட்டளையிட்டது.

அந்த யானைகள் எங்கும் தேடிப் பார்த்து சிறிது தொலைவில் ஒரு நீர்நிலை தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதாக வந்து கூறின. உடனே எல்லா யானைகளும் அந்த நீர் நிலையை நோக்கி நடந்தன.

அந்த நீர் நிலையைச் சூழ்ந்த இடத்தில் ஒரு முயல் கூட்டம் வாழ்ந்து வந்தது. அந்த முயல்களுக்கு, யானைகள் வந்து சேர்ந்தது பெருந்தொல்லையாக இருந்தது. யானைகளைக் காணவே பயமாயிருந்தது. அவற்றின் அருகில் நெருங்கவோ மனம் நடுங்கியது. யானைகள் இருக்கும் நேரத்தில் நீர்நிலைப் பக்கம் போகவே துணிச்சல் இல்லை. இந்த யானைகள் இருக்கும் வரை தாங்கள் அமைதியாக வாழ முடியா தென்று முடிவுக்கு வந்தன. அந்த முயல்களின் அரசன் தன் அமைச்சர்களை அழைத்து இதற்குத் தகுந்த ஆலோசனை கூற வேண்டும் என்று கேட்டது. ‘இன்று வரை நாம் இந்த நீர் நிலையைச் சுற்றியுள்ள இடத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தோம். இன்று நம் சுதந்திரத்திற்குக் கேடுவந்தது போல் இந்த யானைகள் வந்து சேர்ந்தன. இனி நாம் இங்கு முன்போல் உரிமையோடு கவலையில்லாமல் நடமாட முடியாது. வேறோர் இடத்திற்குப் போகலாம் என்றால், நமக்குத் தகுந்த இடம் எதுவும் இல்லை. மேலும் இந்த இடத்தில் நாம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். இதைவிட்டுப் போகாமல் இருக்கவும், அந்த யானைகளை இவ்விடத்தினின்று அகற்றவும் நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டும்’ என்று அரச முயல் கேட்டது.

அந்த அமைச்சர்களிலே மிகவும் திறமை வாய்ந்த வெள்ளை முயல் ஒன்று உடனே எழுந்து, ‘அரசே, இந்த யானைகளை வெல்வது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. தாங்கள் விடை தாருங்கள். நான் இப்போதே புறப்பட்டுப் போய் வெற்றியோடு திரும்பி வருகிறேன்’ என்றது.

அவ்வாறே அரச முயல் அந்த வெள்ளை முயலை ‘வெற்றியோடு திரும்பி வருக' என்று வாழ்த்தியனுப்பியது.

வெள்ளை முயல், தங்கள் மறைவிடத்தை விட்டுப் புறப்பட்டது. வேழக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றது. தொலைவில் அந்த யானைகளைக் கண்டபோதே அதற்கு மன நடுக்கம் ஏற்பட்டது.

‘இந்த யானைகளின் கையில் அகப்பட்டால், நம்மைப் பந்தடித்து விளையாடியே கொன்று விடும். ஒரத்தில் ஒதுங்கி நின்றால் கூட வந்து அடிக்கத் தொடங்கி விடும். இவற்றின் கண்ணில் படுவதே தவறு” என்று அந்த முயல் பயந்தது.

இவற்றின் கையில் அகப்பட்டுக் கொள்ளாமல் நாம் வேலையை முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, அது, பக்கத்திலிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறி நின்று கொண்டது.

மேட்டில் இருந்தபடியே, அந்த வெள்ளை முயல் யானை அரசனை நோக்கி,`ஏ, தும்பி! நலமாக இருக்கிறாயா?' என்று நலம் விசாரித்தது. வியப்புடன் திரும்பிப் பார்த்த அந்த யானை மேட்டின் உச்சியில் நின்ற முயலைப் பார்த்து, `நீ யார்?” என்று கேட்டது. ‘உலகம் எங்கும் நிலவொளி பாய்ச்சும் திங்கள் அரசருடைய தூதன் நான். எங்கள் அரசருடைய கட்டளையை உன்னிடம் கூற வந்தேன்!” என்று கம்பீரமான குரலில் அந்த வெள்ளை முயல் கூறியது.

'திங்கள் அரசன் தனக்குத் தூது விடுப்ப தென்றால் ஏதோ தீமையான செய்தியாகத் தான் இருக்க வேண்டும்’ என்று பயந்து அந்த யானை அரசு, ‘நிலாவின் தூதனே, நீ வந்ததென்ன?’ என்று கேட்டது.

யானையின் நடுக்கத்தைக் கண்டவுடன், வெள்ளை முயலுக்கு வீறாப்பும் ஊக்கமும் மிகுதியாயின.

எங்கள் நிலாவரசரும் அவருடைய தேவிமார்களும் நீராடுவதற்தென்று இந்தக் கானகத்தில் ஓர் அருமையான சுனையை ஏற்படுத்தினோம். இரவு முழுவதும் அவர்கள் இந்தச் சுனையில் நீராடிக் களிப்பார்கள். பகலில் யாரும் இதில் இறங்காதபடி பார்த்துக் கொள்ள எங்களைக் காவல் வைத்திருக்கிறார்.

'தேவர்களானாலும் இந்தச் சுனையில் இறங்கக் கூடாதென்பது எங்கள் அரசர் ஆணை. ஆனால், இப்பொழுது, நீ உன் கூட்டத்தாருடன், இந்தச் சுனை நீரையருந்துவதற்கு வந்திருக்கிறாய் என்று தெரிந்து, நீ போய் அவனைத் தடு’ என்று கூறி என்னை அனுப்பி வைத்துள்ளார். 

‘தூது செல்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், தாம் சொல்லுகின்ற செய்தி கேட்கின்றவர்களுக்குக் கோபத்தை யுண்டாக்கக் கூடியதாக இருந்து, அவர்கள் வாளையுருவிக் கொண்டு தம் மேற் பாய வந்தாலும், பதைப்படையாமல், கூறவேண்டியதைக் கூறி முடித்தே ஆக வேண்டும். தூதுவர்கள் என்ன கூறினாலும், அவர்கள் பகையரசர்களுடைய ஆட்களாயிருந்தாலும், மிகுந்த அறிவுடைய அரசர்கள் அவர்கள்மேற் கோபம் கொள்ளக் கூடாது.

'உடல் வலி தனக்கு இருக்கிறது என்பதற்காக பெரியவர்களோடு பகைத்துக் கொண்டால், பின் அவர்களால் வெல்லப்பெற்று உயிரையும் இழக்க நேரிடும். முதலிலேயே அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் வணங்கிப் போற்றினால், உயிர் பிழைத்துக் கொள்ளலாம். மூன்று கடவுள்களிலும் முதல் கடவுளான சிவபெருமானுடைய திருமுடியில் வாழும் எங்கள் நிலாவரசரின் பகைமையைத் தேடிக் கொள்ளாமல், நீ இந்தச் சுனையை விட்டுப் போய் விடுவதே நன்று. நீ வீணாக எங்கள் அரசருடைய கோபத்துக்கு இலக்காகக் கூடாதே என்பதற்காக நான்தான் இவ்வளவு கூறினேன். நிலாவரசர் உன் மேல் கொண்டிருக்கும் கோபம் கொஞ்சநஞ்சமல்ல. நீ இப்பொழுதே உன் யானைக் கூட்டங்களுடன் திரும்பப் போய்விட்டால், தான் அவருடைய கோபத்தை ஆற்றப் பாடுபடுகிறேன்” என்று பல வாறாக உரைத்தது அந்த வெள்ளை முயல்.

இதைக் கேட்ட அரச யானை, நிலாவரசர் எப்போது இங்கு புனலாட வருவார் ஏன்று சொல். நான் நேரில் வந்து அவரிடம் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போகிறேன்’ என்று சொல்லிற்று.

சரி, அவ்வாறே செய்கிறேன்” என்று சொல்லி முயல் அன்றிரவு யானையைக் கூட்டிக் கொண்டு அந்த நீர் நிலைக்கு வந்தது. தெளிந்த நீரின் இ டையே தோன்றிய நிலவின் சாயையைக் காட்டி, அதோபார்!” என்றது.

அத்தச் சாயையைத் திங்கள் என்றும், அதைச் சுற்றித் தெரிந்த விண்மீன்களின் சாயையை, நிலா வரசனின் மனைவிமார் என்றும் எண்ணிக் கொண்ட யானை,' நிலாவரசே! எனக்கு இது தெரியாது. தாங்கள் புனலாடும் சுனையென்று தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். தெரியாமல் வந்த என் பிழையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இப்போதே நான் என் இனத்தாரோடு திருப்பிப் போய் விடுகிறேன்’ என்று துதிக்கையைத் தூக்கி வணக்கமிட்டது. பிறகு அது மற்ற யானைகளை அழைத்துக் கொண்டு வேறு சுனையைத் தேடிச் சென்றுவிட்டது.

அதன் பின் முயல்கள் யாவும் முன்பு போல் சுதந்திரமாகவும் இன்பமாகவும் அந்தக் கானகத்தில் வாழ்ந்து வந்தன.4. மோசம் போன முயலும் மைனாவும்

இருப்பதற்கு இடமில்லாமல் ஒரு முயல் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. ஒரு மரத்தில் ஒரு பொந்து இருப்பதைக் கண்டு அதற்குள் புகுத்து இருந்து கொண்டது.

சிறிது நேரம் சென்றதும் அங்கு ஒரு மைனா வந்து சேர்ந்தது. அந்த மைனா முயலைப் பார்த்து, 'இந்தப் பொந்து நான் இருக்கும் வீடு; இதற்குள் நீ எப்படி வரலாம்?’ என்று கேட்டது. அதற்கு அந்த முயல் இது உன் வீடு என்று யாருக்குத் தெரியும்? நிழலும், மரங்களும், சாலைகளும், குளங்களும், கிணறுகளும், தண்ணீர்ப் பத்தல்களும், சத்திரங்களும் சாவடிகளும் எல்லாருக்கும் பொதுவானவை தாம். இதில் நீ உரிமை கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை' என்று சொன்னது.

இப்படியாக வார்த்தை முற்றி இரண்டுக்கும் சண்டை வந்துவிட்டது. தொண்டை வற்றச் சண்டை போட்ட பிறகு முயல் மைனாவைப் பார்த்து, நாம் ஏன் சண்டையிட வேண்டும்? யாராவது நடுவு நிலை உள்ளவர்களிடம் போய் நியாயம் கேட்போம்” என்று சொல்லிற்று. அதற்கு மைனா 'நம் வழக்கைத் தீர்க்கக் கூடிய நல்லவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்டது.

யமுனை ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டு ஒரு பூனையார் இருக்கிறார். அவரிடம் போய் நியாயம் கேட்போம்.' என்று முயல் சொன்னது. இதைக் கேட்டதும் மைனா பயந்து போய் 'அதன் பக்கம் நாம் போனால் அது நம்ம்மைப் பிடித்துத் தின்று விட்டால் என்ன செய்வது?' என்று கேட்டது.

இல்லை அப்படி ஒன்றும் நடக்காது. இருந்தாலும் நாம் தூரத்தில் நின்றே நம் வழக்கைச் சொல்லுவோம்' என்று சொல்லி முயல் மைனாவை அழைத்துச் சென்றது. யமுனை. ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டிருந்த பூனையாரை அவை கண்டன. அவர் தவம் செய்து கொண்டிருந்த கோலத்தைக் கண்டு, 'இவர் பெரியவர்? உயர்ந்த ஞானி; நம்மைப் பிடிக்க மாட்டார்' என்று நினைத்துக் கொண்டு அந்தப் பூனையாரின் எதிரில் விழுந்து, பணிந்து, எழுந்து, கை கட்டிப் பயபக்தியோடு நின்றன. பூனையார் தவம் கலைந்து கண் விழித்து அவற்றைப் பார்த்தார்.

'நீங்கள் யார்? என்னைத் தேடி என்ன காரியமாக வந்தீர்கள்? சொல்லுங்கள்’ என்று எடுப்பான குரலில் கேட்டார் பூனையார்.

முயலும் மைனாவும் தங்கள் பெயரைச் சொல்லித் தாங்கள் சென்ற காரணத்தையும் எடுத்துரைத்தன.

‘எனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. காது சரியாகக் கேட்கவில்லை. சற்று நெருங்கி வந்து சொல்லுங்கள்' என்று பூனையார் சொன்னார்.

அவை இரண்டும் தாம் நின்ற இடத்திலிருந்து சிறிது முன்னால் சென்று, மீண்டும் தம் வழக்கை எடுத்துரைத்தன.

“உங்கள் பேச்சில் பாதி காதில்விழுகிறது; பாதி காதில் விழவில்லை. நானோ எப்போதும் ஒருவர் பக்கமாக நின்று நியாயம் தீர்ப்பது வழக்கமில்லை. நடுவு நிலையாக இருந்தே எந்த வழக்கிலும் தீர்ப்புச் செய்வேன்.

தருமத்தை விரும்புபவர்களைத் தருமமே காப்பாற்றும். தருமத்தை இகழ்வோரைத் தருமமே பழிக்கும். தருமமே உலகில் உண்மையாக நின்று எல்லாம் செய்கிறது. ஆகையால், தருமம் சொல்லுவேனே தவிர நான் சிறிதும் பொய் சொல்லேன்.

'என்னென்ன நோன்புகள் நோற்க வேண்டும் என்று எண்ணினேனோ அத்தனை நோன்பும் நான் செய்து முடித்து விட்டேன். இவற்றிற்கெல்லாம் மேலாக, நாள்தோறும் பொய் சொல்லாமை என்னும் புண்ணிய நோன்பு ஒன்றையும், உயிர்களைக் கொல்லுவதில்லை என்கிற உயர்ந்த நோன்பு ஒன்றையும் கைக் கொண்டு வருகிறேன். வழக்கில் நான் என்றும் ஓரம் சொல்லேன்.

‘அருகில் வந்து நீங்கள் உங்கள் வழக்குகளை ஏடுத்துரைத்தால் தான் எனக்குக் காது நன்றாகக் கேட்கும். நீங்கள் தொலைவில் நின்று கொண்டு சொன்னால் ஒன்றும் சரியாகக் கேட்காது. எதையும் தெளிவாகக் கேட்டால்தான் நியாயம் தப்பாமல் தீர்ப்பளிக்க முடியும். அருகில் வாருங்கள்!' என்று பூனை அழைத்தது.

பூனை உண்மையையே பேசுகிறது என்று எண்ணிய முயலும் மைனாவும் பூனை அருகில் மிகவும் நெருங்கிச்சென்றன. உடனே பூனை அவை இரண்டையும் தன் இரு கைகளானும் சடக்கெனப் பிடித்துக் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்தது.

பாவம் வழக்குரைக்க வந்த முயலும் மைனாவும் அதன் வயிற்றுக்கு இரையாகி விட்டன.

வஞ்சகர்களைச் சேர்ந்தோர் வாழ்வதில்லை என்ற உண்மை இந்த கதைலிருந்து தெளிவாகத் தெரிகிறது.5. ஏமாந்த வேதியன்

ஓர் ஊரிலே ஒரு வேதியன் இருந்தான். அவன் தெய்வங்களுக்கு ஒரு வேள்வி செய்வதாக வேண்டிக் கொண்டான். வேள்வியில் பலி கொடுப்பதற்கு ஒர் உயிர் வேண்டியிருந்தது. அதற்காக அவன் வெளியூர் சென்று, ஒரு செல்வனிடத்தில் தன் வேண்டுதல் பற்றிச் சொன்னான். அந்தச் செல்வனும், வேதியனிடம் அன்பு கொண்டு வேள்விக்காக ஓர் ஆடு கொடுத்தான். அந்த ஆட்டைத் தன் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு வேதியன் தன் ஊர் நோக்கிப் புறப்பட்டான் .

அவன் ஆட்டுடன் வருவதை வழியில் மூன்று வஞ்சகர்கள் கண்டார்கள். அந்த ஆட்டை அவனிடமிருந்து பறிப்பதற்கு அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.

வழியில் போய்க்கொண்டிருக்கும் . வேதியனிடம் முதலில் ஒருவன் வந்தான். ஐயா வேதியரே, நாயைத் தோளில் தூக்கிக் கொண்டு போகிறீரே? நாய்க்குப் பயப்பட வேண்டாமா?’ என்று கேட்டான்.

'யாகத்திற்காக நான் கொண்டு செல்லும் ஆட்டைப் பார்த்து, நாய் என்கிறாயே! உன் கண் கெட்டுப் போய்விட்டதா?’ என்று பதில் அளித்து விட்டு வேதியன் நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது வஞ்சகன் வேதியன் எதிரில் வந்து, பெரியவரே, செத்துப்போன கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறீர்களே. உங்கள் குலத்துக்கும் தகுதிக்கும் பொருத்தமாயிருக்கிறதா?' என்று கேட்டான்.

ஆட்டைப் பார்த்துக் கன்றுக் குட்டி என்கிறாயே, உன் கண் என்ன குருடா?’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு மேல் நடந்தான் வேதியன்.

சிறிது தூரம் சென்றதும் மூன்றாவது வஞ்சகன் குறுக்கில் வந்தான். இது என்ன நீசத்தனம்? சண்டாளன் கூட இப்படிச் செய்யமாட்டானே? வேதியரே கழுதையைச் சுமந்து செல்லுவது சரிதானா?” என்று கேட்டான்.

இதைக் கேட்டவுடன் வேதியன் மனத்தில் ஐயம் தோன்றியது. நான் ஆட்டைத் தூக்கிக் கொண்டு வருகிறேன். ஆனால், வழியில் பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். அப்படியானால், ஒவ்வொரு முறையும் அந்த ஆடு வெவ்வேறு விதமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். இது சாதாரண ஆடாக இருக்க முடியாது. மாயவித்தை செய்யும் இராட்சத ஆடாக இருக்க வேண்டும். இதை இனிச் சுமந்து போவது கூடாது, அதனால் ஏதும் கெடுதி நேரலாம் என்று எண்ணி அதைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டான். வஞ்சகர்கள் அந்த ஆட்டைப் பிடித்துச் சென்று வெட்டிக் கொன்று சமைத்துத் தின்றார்கள்.6. உதவி செய்த கள்ளன்

ஓர் ஊரில் ஒரு கோமுட்டி இருந்தான். அவன் சுருங்கிய தசையும், நடுங்கிய உடலும், ஒரக் கண்ணும் உடைய கிழவன். அவன் மனைவி ரதியைப் போல் அழகானவள். அவள் கிழவனிடம் பிரிய மில்லாமல் இருந்தாள். அவனிடம் நெருங்குவதே கிடையாது. கிழவனும் அவள் பிரியத்தை அடைய வழி தெரியாமல் துயரத்தோடு இருந்து வந்தான்.

ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு இரவு வேளையில் ஒரு கள்ளன் வந்தான். கத்தியும் கையுமாக பயங்கரமான தோற்றத்தோடு அங்கு வந்த அத்தக் கள்ளனைக் கண்டவுடன் அந்தப் பெண் பயந்து போய்ததன் கணவனான கிழவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டவுடன் கிழவனுக்கு ஆனந்தம் உண்டாகி விட்டது. அவன் திருட வந்த கள்ளனைப் பார்த்து, அப்பா, நல்ல காரியம் செய்தாய்! இது வரை என் அருகில் வரக்கூடப் பிரியமில்லாமல் இருந்த என் மனைவி என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி நீ செய்து விட்டாய். உன் உதவியை நான் என்றும் மறக்க முடியாது.

‘இந்தா பெட்டிச்சாவி, வேண்டிய அளவு பணம் எடுத்துக் கொண்டு போ’ என்று சொன்னான்.

இதைக் கேட்ட கள்ளனுக்கு மனம் மாறி விட்டது. தன்னால் ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டது என்ற நினைப்பே அவனுக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் கோமுட்டிக் கிழவனைப் பார்த்து ஐயா, உம் மனைவி உம்மைச் சேர்ந்ததே, எனக்கு பெரும் செல்வம் கிடைத்தது போலிருக்கிறது. ஆகையால் எனக்கு உம்முடைய செல்வம் வேண்டாம். நீங்கள் என்றும் ஒற்றுமையாக இன்பமாக இருந்தால் அதுவே போதும். இவள் உங்களிடம் பிரியமில்லாமல் ஒதுங்கியிருந்தால் நான் மறுபடியும் வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் போனான்.

தான் ஒதுங்கியிருந்தால் மறுபடியும் கள்ளன் வந்து விடுவான் என்ற பயத்திலேயே அன்று முதல் என்றும் அவள் தன் கணவனோடு சேர்ந்தேயிருந்தாள். கோமுட்டிக் கிழவனும் இன்ப வாழ்வு நடத்தினான்.7. அன்பரான அரக்கனும் கள்ளனும்

ஓர் அந்தணன் வீட்டில் ஒரு பசு இருந்தது. அதைக் களவு செய்வதற்காக ஒரு திருடன் இருளில் வந்தான். வழியில் ஓர் அரக்கன் அவனைக் கண்டான். 'நீ யார்?’ என்று அரக்கன் திருடனைப் பார்த்துக் கேட்டான். பதிலுக்குத் திருடனும் அரக்கனைப் பார்த்து 'நீ யார்?’ என்று கேட்டான்.

“எட்டுத் திக்கிலும் எவரும் கண்டு நடுங்கும் பிரம்மராட்சசன் தான்!” என்று அரக்கன் கூறினான்.

'செல்வர்களின் வீட்டில் குவிந்திருக்கும் பணத்தைக் கன்னமிட்டுக் கொள்ளையடிக்கும் கள்ளன் நான்!' என்றான் திருடன்.

‘இன்றிரவு நீ என்ன கருதிப் புறப்பட்டாய்?” என்று அரக்கன் கேட்டான்.

‘நீ எதற்குப் புறப்பட்டாய்? அதை முதலில் சொல் என்றான் கள்ளன்.

‘இந்த வேதியன் உடலைத் தின்ன வந்தேன்’ என்றான் அரக்கன்.

'நான் இவன் பசுவைத் திருட வந்தேன்’ என்றான் திருடன்.

'அப்படியானால் இருவரும் ஒன்றாய்ப் போவோம்’ என்று பேசிக் கொண்டு இருவரும் வீட்டு முன் வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.

அரக்கன் திருடனைப் பார்த்து, நீ இங்கேயே இரு. முதலில் நான் போய் அந்தணனைத் தின்று விட்டு வந்துவிடுகிறேன்’ என்றான்.

‘இல்லை, நான்போய் முதலில் பசுவை அவிழ்த்து ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்' என்றான் திருடன்.

'ஏதாவது ஓசை கேட்டால் அந்தணன் விழித்துக் கொள்வான். அவன் விழித்துக் கொண்டு விட்டால், நான் அவனைச் சாப்பிட முடியாது' என்றான் அரக்கன்.

நேரமானால் யாராவது வந்து விடுவார்கள். யாராவது வந்தால் நான் பசுவைத் திருட முடியாது. என்றான் கள்ளன்.

நான் முந்தி, நீ முந்தி என்று இருவருக்கும் சச்சரவு அதிகமாகியது. இவர்கள் சண்டையிட்டுக் கொண்ட சத்தத்திலேயே அந்தணன் விழித்துக் கொண்டு விட்டான். அவன் தன் பிள்ளைகளையும் எழுப்பிக் கொண்டு வந்து, வாசல் கதவைத் திறந்தான்.

'அந்தனரே! உங்களைக் கொல்ல வந்தான் இவன்' என்று திருடன் அரக்கனைக் குற்றம் சாட்டினான்.

'ஐயா, உம் பசுவைக்களவாட வந்தான் இவன்' என்று அரக்கன் கள்ளனைக் குற்றவாளியாக்கினான்.

இருவரும் கூறியதைக் கேட்ட அந்தணன் 'இரண்டும் நடக்காதது பற்றி மகிழ்ச்சி இருந்தாலும் நீங்கள் வந்தவர்கள் சும்மா திரும்பிப் போக வேண்டாம். ஏதாவது பெற்றுக் கொண்டு போங்கள்’ என்று சொல்லி அவர்கள் இருவக்கும் சில பொருள்களை வெகுமதியாகக் கொடுத்தனுப்பினான்.

அவர்கள் அந்தணனின் நல்ல குணத்தைப் பாராட்டி, அன்று முதல் அவன் நண்பர்களாக மாறி அவனுக்குப் பல உதவிகள் செய்து வந்தார்கள்.

பகைவர்களிடம் அன்பு காட்டினால் அவர்களும் நண்பர்களாக மாறி விடுவார்கள்.8. இரகசியத்தை வெளியிட்டழிந்த பாம்புகள்

ஓர் இளவரசன் இருந்தான். அவனைப் பல நாட்களாக வயிற்று நோய் வாட்டிக் கொண்டிருந்தது. எத்தனை மருத்துவம் செய்தும் அவனுடைய வயிற்று நோய் தீரவில்லை. உடல் மெலிந்து கொண்டே வந்தது. இந்த நோய் தீருவதற்கு எந்த வழியும் காணாத அவன், கடவுளைத் தொழுது தலயாத்திரை செய்தாலாவது தீருமா என்று ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தான்.

ஒர் ஊரில் உள்ள கோயிலில் அவன் சில நாட்கள் தங்கி அங்கிருந்த கடவுளை நாள்தோறும் வழிபட்டுக் கொண்டிருந்தான்.

அந்த ஊர் அரசனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியை அரசனுக்குப் பிடிக்காது. ஆகவே, அவளை எவனாவது ஒரு நோயாளிக்குக் கட்டிக் கொடுத்துவிட வேண்டு மென்று எண்ணினான். கோயிலில் தங்கியிருந்த நோயாளிப் பையனைக் கண்டதும், அவனுக்கே தன்மகளை மணம் செய்து கொடுத்து விட்டான்.

அரசன் வெறுப்புக்காளான அந்த இளவரசி நல்ல குணமுடையவள். அவள் தன் கணவன் ஒரு நோயாளி என்று தெரிந்திருந்தும் அவனையே தெய்வமாக எண்ணி, அவனுக்குப் பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவன் தலயாத்திரை சென்ற ஊர்களுக்கெல்லாம் அவளும் கூடவே சென்று உதவி புரிந்தாள்.

ஒரு நாள் வேற்றூர் ஒன்றுக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். ஓரிடத்தில் அவள் கணவனை இருக்கச் செய்து அவள் சமையலுக்கு அரிசி முதலியவை வாங்குவதற்காக ஊருக்குளளே கடைத் தெருவைத் தேடிப் போனாள். அவள் சென்ற பின நடைக்களைப் பால் சோர்ந்திருந்த இளவரசன் தூங்கத் தொடங்கி விட்டான்.

அவன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அந்தப் பக்கமாகப் போன பாம்பு சத்தமிட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும் அவன் வயிற்று நோய்க்குக் காரணமாக அவன் வயிற்றுக்குள் இருந்த பாம்பும் சத்தமிட்டது. உடனே அவை ஒன்றுக் கொன்று பேசிக் கொள்ளத் தொடங்கின. முதலில் சாதாரணமாகப் பேசிக் கொண்ட அந்தப் பாம்புகள் கடைசியில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுச் சச்சரவு செய்து கொளளத் தொடங்கின. இந்தச் சமயத்தில் அரிசி வாங்கப்போன இளவரசி அங்கு திரும்பி விட்டாள். பாம்புகள் விவாதம் புரிவதைக் கண்ட அவள் அப்படியே ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அவை பேசுவதைக் கூர்ந்து கவனித்தாள்.

வெளியில் இருந்த பாம்பு இளவரசன் வயிற்றில் இருந்த பாம்பைப் பார்த்து, 'ஏ பாம்பே, ஏன் இளவரசனுடைய வயிற்றில் போய் இருந்து கொண்டு அவனை இம்சைப் படுத்துகிறாய்?’ என்று கேட்டது.

'உணவுக் குறையில்லாத இவனுடைய வயிறாகிய குடத்தில் நான் இருப்பது உனக்குப் பொறாமையாக இருக்கிறதா, ஏன் என்னை நிந்திக் கிறாய்?’ என்று வயிற்றுப் பாம்பு கேட்டது.

'உன் மீது எனக்கேன் பொறாமை வருகிறது. என்றாவது இளவரசன் கடுகுதின்றால் நீ செத்தொழிய வேண்டியதுதானே' என்று புற்றுப் பாம்பு கூறியது.

‘நீ மட்டும் என்னவாம்? யாராவது வெந்நீரை ஊற்றினால் சூடு பொறுக்காமல் சாக வேண்டியது தானே?’ என்று வயிற்றுப் பாம்பு கூறியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளவரசி அவற்றின் சண்டை தீர்ந்து அவை பிரிந்த பிறகு தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். தன் சமையலுக்கு வாங்கி வைத்திருந்த கடுகை எடுத்து அரைத்து இளவரசனுக்குக் கொடுத்தாள். அவன் கடுகை உண்டதும், வயிற்றுக்குள் இருந்த பாம்பு செத்து விட்டது. அவன் வயிற்று நோயும் தீர்ந்தது. தான் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதை யறிந்தால் புற்றுப் பாம்பு என்ன செய்யுமோ என்று பயந்த இளவரசி, வெந்நீரைக் காய்ச்சிப் பாம்புப்புற்றிலே ஊற்றினாள். புற்றுப் பாம்பும் செத்தது. வயிற்று நோய் தீர்ந்த இளவரசன் தன் ஊருக்குத் திரும்பி இளவரசியோடு இன்பமாக இருந்து தன் நாட்டை ஆண்டு வந்தான்.

தன் இரகசியம் யாரும் அறியும்படி பேசக்கூடாது.9. வேட்டைக்குதவிய புறாக்கள்

ஒரு நாள் ஒரு வேடன், பறவைகள் பிடிப்பதற்காகக் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெட்டைப் புறா அகப்பட்டது. அதைத் தன் கையில் இருந்த கூட்டிற்குள் அடைத்து எடுத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில்,திடீரென்று வானம் இருண்டு மழை பொழியத் தொடங்கிற்று. சூறைக்காற்றும் சேர்ந்து வீசவே, மேற்கொண்டு போகப் பயந்து, ஒரு மரத்தின் கீழ்த் தங்கினான்.

அந்த மரத்தின்மேல் இருந்த ஆண் புறா ஒன்று, தன் துணைவியான பெட்டைப் புறாவைக் காணாமல் கலங்கியது. 'இந்தப் புயல் மழையில் எகுங் போய்ச் சிக்கியதோ? காட்டில் செல்கையில் யாரும் பிடித்துக் கொண்டார்களோ? இறந்து விட்டதோ? தெரிய வில்லையே!' என்று அது வாய் விட்டுப்புலம்பியது.

அதைக் கேட்ட பெண்புறா, வேடனுடைய கூட்டில் இருந்து கொண்டே, அத்தான்! இதோ இருக்கிறேன், என் முன் வினைப் பயனால் நான் வேடனிடம் அகப்பட்டுக் கொண்டேன். இருந்தா

லும், இவன் இப்போது நம் இருப்பிடத்திற்கு வந்திருப்பதால், நீங்கள் இவனுக்கு உதவி புரிய வேண்டும்!’ என்று கூறியது.

ஆண் புறா கீழே நோக்கியது. தன் துணைப்புறா கூட்டிலிருப்பதைக் கண்டது. அதைப் பிடித்து வைத்திருந்த வேடனுடைய உடல் குளிரால் நடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்டது. உடனே அது பறந்து சென்று மழையில் நனையாத சிறு சுப்பிகளைக் கொண்டு வந்து மரத்தடியில் போட்டு, ஓர் எரிகிற கொள்ளிக் கட்டையும் எங்கிருந்தோ கொண்டு வந்து போட்டு நெருப்பு மூட்டியது, இவ்வாறு வேடன் குளிர் காய உதவிய ஆண்புறா. ‘ஐயா நீங்கள் பசியாயிருக்கிறீர்கள் போலிருக்கிறது! என்னை உண்ணுங்கள்?’ என்று சொல்லிக் கொண்டே எரிகிற நெருப்பில் விழுந்து விட்டது.

இரண்டு புறாக்கள் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்த வேடனுக்குத் திடீரென்று ஆண்புறா தீயில் விழுந்ததைக் கண்டதும். மனம் கசிந்து விட்டது. தனக்காக உதவிபுரிய முற்பட்ட அதன் உடலை அவன் தின்ன விரும்பவில்லை. மேலும், அதன் துணையான பெண் புறாவைப் பிடித்துக் கொண்டு போகவும் விரும்பவில்லை. அதாவது உயிர் வாழட்டும் என்று கூட்டைத் திறந்து விட்டான். பெண்புறா வெளியில் வந்தது. ஆனால் மேலே பறக்கவில்லை. தன் கணவனில்லாமல் தான் மட்டும் உயிர் வாழ்வதா என்று ஆண்புறா விழுந்த அந்தத் தீயிலேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது.

அன்பே உருவான அந்தப் புறாக்கள்சாவதற்குத் தான் காரணமாக இருந்ததை எண்ணி அந்த வேடன் மிகவும் வருந்தினான். 

10. பொன்னாய் எச்சமிடும் பறவை

ஒரு மலையில் ஒரு பறவை இருந்தது. அது எப்பொழுது எச்சமிட்டாலும் அது பொன்னாக இருக்கும். நெடுநாளாக இதைக் கவனித்து வந்த ஒரு வேடன் ஒரு நாள் கண்ணி வைத்துப் பிடித்து விட்டான்.

அதைப் பிடித்த பிறகு, அரசனுக்கு இது தெரிந்தால், தன் உயிரை வாங்கிவிடுவானே என்று வேடனுக்குப் பயம் உண்டாகியது. பலவாறு சிந்தித்துக் கடைசியில் அதை அரசனிடமே தன் காணிக்கையாகக் கொடுத்து விட்டால் வம்பு விட்டது என்று முடிவுக்கு வத்தான். அரசனிடம் போய் அந்தப் பறவையின் சிறப்பை எடுத்துக் கூறி, அதைக் கொடுத்தான்.

அரசன் அந்தப் பறவையை வாங்கிக்கொண்டான். அரண்மனைத் தச்சர்களை வர வழைத்து அதற்கு ஓர் அழகான கூண்டு செய்யச் சொன்னான். அந்தக் கூண்டில் வைத்து அதை வளர்த்து வந்தான்.

இதைக் கண்ட அரசனுடைய அமைச்சன், 'எங்காவது பறவை பொன் எச்சமிடுமா? அந்த வேடன் எதையோ சொன்னான் என்றால் அதை உடனே நம்பிவிடுவதா? யாரும் கேள்விப்பட்டால் சிriப்பார்கள். நம் மதிப்புக்கே கேடு வரக்கூடும். இதை விட்டு விடுங்கள்' என்று சொன்னனன்.

எப்பொழுதும் அமைச்சருடைய சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் அரசன் உடனே கூண்டைத் திறந்து அந்தப் பறவையை விடுதலை செய்து விட்டான்.

விடுதலையான அந்தப் பறவை உடனே நேராக அரண்மனைக் கோபுரத்தின் உச்சிக்குப் பறந்து சென்றது. கோபுரத்தின் உச்சியில் இருந்து கொண்டு எல்லோருக்கும் கேட்கும் படியாக.

'வேடனிடம் தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட நான் முதல் மூடன். என்னை அடைந்தும் இழத்து விட்ட வேடன் இரண்டாம் மூடன். அது போலவே என்னை விட்டுவிட்ட அரசன் மூன்றாம் மூடன். அவனுக்கு யோசனை சொன்ன அமைச்சன் நான்காம் மூடன்!' என்று இரைந்து கூறியது.

பகைவருக் கிரங்குவதால் பழிவந்து சேரும். 

11. சிங்கத்தின் மோசம் அறிந்த நரி

ஒரு நாள் ஒரு சிங்கம் இரை தேடிக் கொண்டிருந்தது. ஒன்றும் அகப்படவில்லை. கடைசியில் ஒரு குகையைக் கண்டது. 'இந்தக் குகை ஏதாவது ஒரு மிருகம் தங்குமிடமாக இருக்கக்கூடும். அந்த மிருகம் தங்குவதற்கு வரும்வரை காத்திருப்பேன். வந்தவுடன் அடித்துக்கொன்று தின்பேன்’ என்று சிங்கம் அதனுள்ளே ஒளிந்திருந்தது.

நெடுநேரம் சென்று அந்தக் குகையில் தங்குகின்ற ஒரு நரி திரும்பி வந்தது. குகை வாசலில் சிங்கத்தின் காலடிச் சுவடுகளைக் கண்ட நரி, விழித்துக் கொண்டது. உள்ளே சிங்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டது.

நரி, 'ஏ குகையே! ஏ குகையே! என்று கூப் பிட்டது.

பதில் இல்லை.

‘ஏ குகையே! ஏ குகையே!' இன்று ஏன் பேச வில்லை’ என்று நரி, இரண்டாவது முறை கூப்பிட்டது.

அப்போதும் பதில் இல்லை.

எப்போதும் இந்தக் குகை பேசும் போலிருக்கிறது. நாம் இருப்பதால் பயந்து பேசவில்லை

போலும். குகை பேசாவிட்டால் நரி கோபித்துக் கொண்டு திரும்பிப் போய்விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய சிங்கம், குரலை மாற்றிக் கொண்டு 'ஏன்?' என்று கேட்டது.

அந்தப் பதிலைக் கேட்டதும் நரி தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி விட்டது.

எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது. 

12. உருவம் மாறிய எலி

ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பருந்து எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு சென்றது. அந்த எலி எப்படியோ வளைந்து நெளிந்து அந்தப் பருந்தின் வாயிலிருந்து தப்பிக் கீழே விழுந்தது. கீழே வந்து கொண்டிருந்த எலி முனிவருடைய கையில் வந்து தொப்பென்று விழுந்தது.

தியானம் கலைந்து கண் விழித்த முனிவர் தன் கையில் விழுந்த எலியைக் கூர்ந்து நோக்கினார் தன் தவ வலிமையினால் ஒரு மந்திரம் கூறி அப்போதே அந்த எலியை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். தன் மனைவியிடம் கொடுத்து நன்றாக வளர்க்கும்படி கூறினார். அவ்வாறே முனிவர் மனைவி அந்த அழகிய பெண்ணை வளர்த்துப் பெரியவளாக்கினாள்.

பெரியவளாகிய அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பருவம் வந்தது. அந்தப் பெண்ணை உலகத்தில் பெரிய பலவான் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். பெரிய பலவான்யாரென்று யோசித்த போது சூரியன் தான் என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன் தவசக்தியினால், சூரியனைத் தன் முன் வரும்படி கட்டளையிட்டார்.

அவனிடம், “நீ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்" என்று கூறினார்.

அதற்குச் சூரியன், 'முனிவரே என்னைக் காட்டிலும் பலவான் என்னை மறைக்கும் மேகம் தான் அவனுக்குக் கட்டிக் கொடுப்பதுதான் சிறப்பு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

முனிவர் மேகத்தை அழைத்தார்.

மேகம் வந்து "ஐயா, முனிவரே என்னைக் காட்டிலும் பலவான், என்னைத் தூள்தூளாகப் பறக்கச் செய்யும் காற்றுதான். காற்றுக்கே கல்யாணம் செய்து வையுங்கள்" என்று சொல்லி விட்டுப் போனான்.

காற்றை அழைத்து முனிவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்.

"என்னை மறைத்துத் தடுத்து விடும் சக்தி பெற்ற மலையைக் காட்டிலும் நான் பலவான் அல்ல! அந்த மலைக்கே உங்கள் பெண்ணைக் கொடுப்பது தான் பொருந்தும்" என்று சொல்லி விட்டுப்போய் விட்டான் காற்று.

மலையரசனை அழைத்துத் தன் மகளை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார் முனிவர்.

‘உலகத்தில் நான் என்ன பலவானா? என்னை அறுத்தெடுக்கும் எலியே பலவான். எலியரசனுக்கே இவள் ஏற்றவள்" என்று ஆலோசனை கூறி விட்டு அகன்றான் மலையரசன்.

முனிவர் எலியரசனை யழைத்தார்.

எலியரசன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவில்லை.

“முனிவரே. இவள் என் வளைக்குள் வந்தால் நான் இவளை மணம் புரிந்து கொள்கிறேன்” என்றான் எலியரசன்.

பெண் எப்படி வளைக்குள் போகமுடியும்? ஆகையால் மறுபடியும் எலியாக்கி வளைக்குள் அனுப்பினார் முனிவர்.

பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாகவே ஆகி விட்டது.

எலியரசன் அதை மணம் புரிந்துகொண்டான். இன்பமாக அந்தப் பெண்னெலியுடன் வாழ்ந்து வந்தான்.

செயற்கையில் தன் நிலையை யாரும் உயர்த்திக் கொள்ள முடியாது. 

13. பாம்பு வாகனமேறிய தவளை

தவளைகள் நிறைந்திருந்த ஓர் ஓடைக் கரையில் ஒரு பாம்பு இருந்தது. அது தவளைகளையெல்லாம் விழுங்கித் தன் பசியை ஆற்றிக்கொள்ள எண்ணியது. தவளைகளைப் பிடிப்பதற்காக அது ஒரு சூழ்ச்சி செய்தது. அந்த ஓடைக் கரையில் வந்து தன் தலை விதியை எண்ணி வருந்துவது போல் துயரக் குறியோடு இருந்தது.

அப்போது அந்த வழியாகத் தவளை அரசன் ஊர்வலம் வந்தது. வரித் தவளை என்ற தவளையைத் தன் வாகனமாகக் கொண்டு அதன் மேல் தவளை அரசன் ஏறிவர, அமைச்சர்களும், சேனைகளும் சூழ்ந்து வர, சில தவளைகள் மேளம் வாசிக்க மிகவும் கம்பீரமாகத் தவளையரசன் ஊர்வலம் வந்தது.

கரையின் மேல் கவலையுடன் உட்கார்ந்திருந்த பாம்பைக் கண்டதும், தன் தூதன் ஒருவனை அனுப்பி என்ன காரணம் என்று அறிந்து வரச் சொல்லிற்று, தவளையரசன்.

அந்தத் தூதனும், பாம்பின் அருகில் போய்: "நீ யார்? நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய்? " என்று கேட்டது.

“நான்தான் பாம்பரசன், பாம்புகளின் அரசனாக சீரும் சிறப்புமாக இருந்த நான் ஒருநாள், தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரைத் தீண்டி விட்டேன். உடனே அந்த முனிவர் என்னைச் சபித்து விட்டார்." நீ தவளையைச் சுமக்கக்கடவது, அந்தத் தவளையிடமே இரை வாங்கி உண்ணக் கடவது” என்று அவர் சாபம் இட்டுவிட்டார். நான் சாபமடைய நேர்ந்த என் தலைவிதியை நினைத்து வருத்தமாயிருக்கிறேன். இனி என் சாபம் நிறை வேறினால்தான் நான் பிழைக்க முடியும். உங்கள் அரசனிடம் சொல்லி, மேலும் ஆபத்து வராமல் காப்பாற்றச் சொல். நான் என்றும் உங்கள் அடிமையாக இருப்பேன்" என்று கூறியது.

தூதன் திரும்பி வந்து தவளையரசனிடம் பாம்பரசன் கூறிய கதையை அப்படியே கூறிற்று. தவளையரசன் தன் முதலமைச்சனைக் கூப்பிட்டு யோசனை கேட்டது.

"பாம்பரசன் நம்மைச் சுமப்பதென்றால் சாதாரணமா? தினமும் அவன் தங்களைச் சுமப்பதென்றால் வரும் பெருமையே பெருமை! நம்மைப் போல் உயர்ந்த சாதி உலகத்திலேயே இல்லையென்றாகி விடும்" என்று அந்த மண்டுகம் கூறியது.

உடனே தவளையரசன், பாம்பரசனைக் கூட்டி வரச் சொல்லியது.

"பாம்பே, நீ என்னைத் தினமும் சுமந்து கொண்டிருந்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தவளை உனக்கு உணவாகக் கிடைக்கும்" என்று கூறியது.

"ஆகா! என் பாக்கியம்! சீக்கிரம் என் சாபம் தீர்த்தால் போதுமானது" என்று சொல்லித் தலையைக் குனிந்தது பாம்பு.

அதன் தலையின் மேல் தவளையரசன் ஏறிக் கொண்டது. "இன்று என் எண்ணம் பலித்தது. இந்தத் தவளைகள் எல்லாம் என் வயிற்றுக்குத்

தான்" என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்ட பாம்பு, தவளையரசனைப் பார்த்து, “இனி நான் உங்களைப் பிரியவே மாட்டேன்" என்று சொன்னது.

தவளையரசனும் மனமகிழ்ந்து ஒரு தவளையைத் தின்று கொள்ளும்படி அனுமதி கொடுத்தது.

ஒவ்வொரு நாளும், ஏதாவது சொல்லித் தவளையை மன மகிழ வைத்துப் பாம்பு ஒவ்வொரு தவளையாக விழுங்கிக் கொண்டு வந்தது. கடைசியில் தவளையரசனைத் தவிர மீதித் தவளைகள் முழுச்க இரையாகி விட்டன. அப்போதுதான் தவளையரசனுக்குத் தான் மோசம் போனது புரிந்தது.

தவளையரசன் கவலைப் படத் தொடங்கிவிட்டதைக் கண்ட பாம்பு, மெல்லக் கீழே இறக்கி அதன் வளை எதிரில் விட்டது. தவளையரசன் வளைக்குள் துழைந்தது. பாம்பு பின் தொடர்ந்து போய் அதையும் விழுங்கி விட்டது.

மூடர்களின் யோசனையைக் கேட்டால் ஒரு குலமே நாசமடைந்து விடும். 

பஞ்ச தந்திரக் கதைகள்

பகுதி 4

1. கிடைத்த குரங்கைக் கைவிட்ட முதலை

ஓர் ஆற்றங்கரையில் ஒரு குரங்கு இருந்தது. அந்தக் குரங்கு ஒரு நாள் பழம் பறித்து உண்பதற்காக ஆற்றின் ஒரத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறியது. அது பழம் பறித்துத் தின்று கொண்டிருக்கும் போது கை தவறிச் சில பழங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. அம்படி அவை விழுந்த போது கள கள வென்ற ஓசை உண்டாயிற்று. அது ஒரு வேடிக்கையாகத் தோன்றவே, அந்தக் குரங்கு ஒவ்வொரு கிளையாகத் தாவி மரத்தில் இருந்த பழங்களை உதிர்த்து விட்டுக் கொண்டிருந்தது. அப்போது முதலையரசன் அந்தப் பக்கமாக வந்தது. அது மரத்திலிருந்து உதிர்ந்த பழங்களைத் தின்றது. அந்தப் பழங்கள் மிகச் சுவையாக இருந்தபடியால் அது அந்த இடத்திலேயே நின்று விட்டது. குரங்கைப் பார்த்து அந்த முதலை, "நண்பனே, “நான் உன்னைப் பிரியவே மாட்டேன். ஏனென்றால் நீ எனக்கு மிகச் சுவையான பழங்களை உதிர்த்துக் கொடுத்தாய்" என்று சொல்லியது.

நாள் தோறும் குரங்கு பழங்களை உதிர்த்துக் கொடுக்க, முதலை அதைத் தின்றுகொண்டு அந்த இடத்திலேயே இருந்தது. அது தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்லாததால் அதன் மனைவியான முதலையரசி மிகவும் கவலை கொண்டது. அது தன் தோழியான ஒரு முதலையை அழைத்துக் கணவனிடம் தூது போய் வரும்படி அனுப்பியது. அந்தத் தூதி முதலையரசனிடம் வந்து "மன்னவா, தங்களைக் காணாமல் அரசியார் மெலிந்து போய் விட்டார்கள். அவர்களுடைய காதல் நோய் வெப்பு நோயாக மாறி உடலை இளைக்கச் செய்து விட்டது. தாங்கள் வந்து நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறியது.

“ஏ தூதியே, குரங்கோ எனக்கு உயிர் நண்பனாகி விட்டது. அதைப் பிரிந்து வருவதோ என்னால் முடியாது, நீயோ என் மனைவி நோயாய் இருக்கிறாள் என்று சொல்கிறாய். அதைக் கேட்டதும் என் மனமோ மிகவும் வருந்துகிறது. புறப்படவும் முடியவில்லை நான் என்ன செய்வேன்" என்று வாய்விட்டுச் சொல்லி முதலை வருந்தியது. 'இந்தக் குரங்கு என்ன சொக்குப் பொடி தூவியதோ, நம் அரசர் இதை விட்டுவர மறுக்கிறார். இந்தக் குரங்கைத் கொன்றால்தான் இதற்குப் புத்தி தெளியும்’ என்று நினைத்தது அந்தத் தூதி முதலை. அது முதலையரசனைப் பார்த்து, “மன்னவா, அரசியாருக்கு நாங்கள் எத்தனையோ மருந்து கொடுத்துப் பார்த்து விட்டோம். நோய் தீர வில்லை. குரங்கின் ஈரல் கொண்டு வந்து கொடுத்தால்தான் பிழைப்பாளென்று பெரிய மருத்துவர் சொல்கிறார். நீங்கள் அதற்கு வேண்டிய ஏற்பாட்டுடன் உடனே வர வேண்டும். இல்லா விட்டால் அரசி உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ என்று சொல்லியது.

இதைக் கேட்டதும்‌‌ முதலையரசனின் மனம் குழம்பியது. குரங்கின் ஈரலுக்கு அது எங்கே போகும். அதற்குத் தெரிந்தது ஒரே ஒரு குரங்கு தான். தினமும் பழம் பறித்துப் போடும் உயிர் நண்பனான அந்தக் குரங்கைக் கொல்வது பாவம். அதைக் கொல்லாமல் இருந்தால் முதலையரசி இறந்து போய் விடும். நண்பனைக் கொல்வதா, அரசியை இழப்பதா? என்று எண்ணிக் கடைசியில் அரசியைக் காப்பது தான் முக்கியம் என்று முடிவுக்கு வந்தது.

இப்படி அது வருத்தத்தோடு இருக்கும் போது எங்கோ போயிருந்த குரங்கு அங்கு வந்து சேர்ந்தது. அது முதலை கவலையாய் இருப்பதைப் பார்த்து அதன் துயரத்திற்கு என்ன காரணம் என்று

கேட்டது. "நண்பா, இதுவரை நான் உன்னைப் பிரியாமல் இருந்தேன். இப்போதோ என் மனைவி நோயாகக் கிடப்பதால் உன்னைவிட்டுப் பிரிந்து போக வேண்டி இருக்கிறது. அதுதான் கவலையாக இருக்கிறது” என்றது முதலையரசன்.

"இப்போதே போய்வா. இதற்கெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியாது!" என்று குரங்கு பதில் அளித்தது.

"உடனே போகத்தான் வேண்டும். ஆனால் உன்னைப் பிரிந்து என்னால் ஒரு கணமும் இருக்க முடியாது. ஆகையால் நீயும் என்னோடு வரவேண்டும்?" என்று முதலை கேட்டுக் கொண்டது.

“நீயோ நீரில் இருப்பவன்; நானோ தரையில் வாழ்பவன். நான் எப்படி உன்னோடு வர முடியும்?” என்று கேட்டது குரங்கு.

“என் முதுகில் ஏறிக் கொண்டு வா. போய் விரைவில் திரும்பி விடலாம்" என்றது முதலை.

அவ்வாறே குரங்கு முதலையின் முதுகில் ஏறிக் கொள்ள அது தன் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டது. போகும் வழியெல்லாம் முதலையின் மனம் குழம்பிக் கொண்டே இருந்தது.

"பொன்னின் தரத்தைக் கல்லில் உரைத்துக் காண்பார்கள். மனிதனின் தரத்தை அவர்களின் சொல்லைக் கொண்டு தெரிந்து கொள்வார்கள். அறிவில்லாத வஞ்சகர்களின் தரத்தோடு ஒப்பிட்டு உயர்ந்தவர்களின் மதிப்பை அறிந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்வதற்கு வழியே இல்லை. உயிருக் குயிரான இந்தக் குரங்கு நண்பனைக் கொல்ல நான் முடிவு செய்தேன். இது என் மனைவி செய்த வஞ்சகமா? இல்லை இடையில் வந்த இந்தத் தூதி செய்த கபடமா? ஒன்றும் புரியவில்லையே" என்று பேசாமல் இருந்தது முதலை. அதன் குழப்ப நிலையைக் கண்ட குரங்கு, “நண்பா, இன்றெல்லாம் உன் முகம் மிக வாடி இருக்கிறதே என்ன காரணம்? உன் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாளா? எதையும் ஒளிக்காமல் சொல்’’ என்று கேட்டது.

"நண்பா, நான் என்ன சொல்வேன்! என் மனைவியோ சாகும் நிலையில் இருக்கிறாளாம். வானரத்தின் ஈரல் கொடுத்தால்தான் அவள் பிழைப்பாளென்று மருத்துவர்கள் சொல்லுகிறார்களாம். அதற்கு நான் எங்கே போவேன்?'என்று சொல்லி முதலைக் கண்ணிர் வடித்தது முதலை.

முதலையின் மன நோக்கத்தைக் குரங்கு புரிந்து கொண்டது. "பூ! இதற்குத்தானா இவ்வளவு கவலைப்படுகிறாய்? வானர ஈரல் எத்தனை வேண்டும்? நூறு வேண்டுமா?" என்று கேட்டது.

"அவ்வளவு வேண்டாம். ஒன்று இருந்தால் போதும்" என்றது முதலை.

"அதோ அந்த நீண்ட மரத்தின் கிளைகளில் வரிசையாக தொங்கிக் கொண்டிருக்கிறதே! முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கக் கூடாதா? இத்தனை தூரம் வந்த பிறகு சொல்கிறாயே! சரி, சரி, நண்பா திரும்பு. போய் ஈரல்களில் ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டு, உன் மனைவிக்குக் கொடுக்கப் பழங்களும் பறித்துக் கொண்டு திரும்புவோம்" என்று கூறியது குரங்கு.

முதலையும் அதன் சொல்லை நம்பி உடனே திரும்பி புறப்பட்ட கரைக்கே கொண்டு வந்து விட்டது. கரை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது குரங்கு.

மரத்தின் மேல் ஏறிய குரங்கு இறங்காததைக் கண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலை, நெடுநேரமான பின் "நண்பா, ஈரலை எடுத்துக் கொண்டு விரைவில் வா!" என்று அழைத்தது.

" ஏ முதலையே, இன்னும் ஆசை வைத்துக் கொண்டு ஏன் காத்துக் கொண்டிருக்கின்றாய்? பசி யோடிருப்பவனுடைய நட்பில் ஆசை வைத்தால், பாம்பை நண்பனாக்கிக் கொண்ட தவளையைப் போல் துன்பப்பட வேண்டித்தான் வரும். உனக்கும் எனக்கும் உள்ள நட்பு இத்தோடு போதும். இனியும் நான் ஏமாறுவேன் என்று எதிர் பார்க்காதே.

"பெண்கள் பேச்சுக்குக் காது கொடுத்தவர்கள் ஏளனத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீயோ உன் பெண்டாட்டிக்காக என்னைக் கொன்று விடவே நினைத்து விட்டாய். இது மிகவும் தீது.”

இவ்வாறு குரங்கு சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த முதலையொன்று, "அரசி முதலை இறந்து விட்டது” என்று சொல்லியது.

தன் பிரிவால் தன் மனைவி இறந்து விட்ட செய்தியறிந்து முதலைக்குத் துக்கம் தாளவில்லை. அது குரங்கைப் பார்த்து, "நான் ஒரு பாவி. அருமை மனைவியையும் இழந்தேன். உன்னைக் கொல்ல நினைத்து உன் அருமையான நட்பையும் இழந்தேன்" என்று சொல்லி வருந்தியது.

"என்னைக் கொல்லும்படி சொன்ன உன் மனைவி பொல்லாதவன், அப்படிப்பட்ட தீயவள் இறந்ததற்காக நீ இவ்வளவு துயரப்பட வேண்டாம், கவலையை விடு. உன் இருப்பிடத்திற்குப் போ’ என்று குரங்கு கூறியது.

முதலையரசன் தன் இருப்பிடத்திற்குப் போய்ப் பார்த்தது. அங்கு வேறொரு முதலையிருக்கக் கண்டு, திரும்பி வந்தது. குரங்கைப் பார்த்து "என் இருப்பிடத்தில் வேறொரு முதலை வந்து இருந்து கொண்டு விட்டது. அதனை விரட்ட வழி சொல்ல வேண்டும்" என்று கேட்டது.

"தீயவர்களுக்கு வழி சொன்னால் தீமையே உண்டாகும்" என்று குரங்கு கூறியது.

"நான் உனக்குத் தீமை நினைத்தவன் தான். இருந்தாலும் நீ என்னிடம் இரக்கம் காட்டி ஓர் யோசனை சொல்ல வேண்டும்?’ என்று முதலை கெஞ்சியது.

நேரே சென்று உன் பகைவனாகிய அந்த முதலையிடம் போர் செய், சண்டையில் ஒரு வேளை நீ தோற்றால் வீர சுவர்க்கம் கிடைக்கும். எப்போதும் உரிய இடத்தில் வாழ்வதே நன்மை உண்டாக்கும். புதிய இடத்திற்குப் போனால் அதனால் துன்பங்கள் பல ஏற்படும். ஆகையால், உன் இடத்தை நீ அடைவதே சிறந்தது. நியாயம் உன் பக்கம் இருப்பதால் உனக்கே வெற்றி ஏற்படும். போ" என்று குரங்கு ஆலோசனை கூறியது.

முதலையரசன் தன் இருப்பிடத்திற்குச் சென்று அங்கு வந்து தங்கியிருந்த முதலையோடு போரிட்டு, அதைக் கொன்றது.

பிறகு அது தன் இடத்தில் இருந்து கொண்டு முதலைகளுக்கெல்லாம் ஓர் ஒப்பற்ற அரசனாக விளங்கிப் பல நாட்கள் இன்பமாக வாழ்ந்தது.

2. பாம்புடன பழகிய தவளை

ஒரு நீர் நிலையில் ஒரு தவளை இருந்தது. அந்நீர்நிலையில் இருந்த தவளைகள் அதனோடு ஒற்றுமையாக இல்லை. மேலும் அதைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்தன. இதனால் வெறுப்படைந்த தவளை, மற்ற தவளைகளின் மேல் ஆத்திரம் கொண்டு, ஒரு பாம்புடன் போய்ப் பழகத் தொடங்கியது. தன் நண்பனாகி விட்ட அந்தப் பாம்பைப் பார்த்து, ‘இந்தத் தவளைகளையெல்லாம் விழுங்கி விடு’ என்று கூறியது. பாம்பும் அவ்வாறே தனக்குப் பசித்த போதெல்லாம் தவளைகளைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. தன் எதிரிகள் சாவதைக் கண்டு, அந்தத் தவளை மன மகிழ்ச்சி கொண்டிருந்தது.

பாம்பு விழுங்கி விழுங்கித் தவளைகளெல்லாம் ஒழிந்து போய் விட்டன, கடைசியில் இந்தத் தவளையின் குடும்பம் ஒன்றுதான் மிஞ்சியது. எல்லாரும் ஒழிந்தார்கள் என்று இந்தத் தவளை களிப்புற்றிருக்கும் நேரம் பாம்பு அங்கே வந்தது.

"எனக்கு இரை தா!" என்று பாம்பு கேட்டது.

"எல்லாம் தான் தீர்ந்து விட்டதே, தெரியவில்லையா?" என்று தவளை கேட்டது.

உடனே பாம்புக்குக் கோபம் வந்தது. அது தவளையைப் பார்த்து கூறியது. "ஏ அற்பத் தவளையே, உன் பேச்சை நம்பித்தான் நான் வேறு

இரை தேடாமல் இருந்தேன். இப்போது நீ எனக்கு இரை தர வழி செய்யாவிட்டால் உன்னையும் விழுங்கி விடுவேன்" என்று சொல்லித் தவளையின் குஞ்சுகளை விழுங்கி விட்டுச் சென்றது.

தவளைக்கு வந்த துயரத்திற்கு அளவேயில்லை. அப்போதுதான் தான் ஆத்திரத்தில் அறிவிழந்தது அதற்குத் தெரிந்தது. இனியாவது புத்திசாலித் தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணியது.

மறுபடி பாம்பு வருவதற்குள், அது தன் மனைவித் தவளையை அழைத்துக் கொண்டு வேறொரு நீர் நிலைக்குப் போய் விடடது.

அந்த நீர் நிலையில் இருந்த தவளைகளுடன் அது அன்பாகப் பழகிக்கொண்டு இன்பமாக இருந்தது.

3. அறிவில்லாமல் ஒழிந்து போன கழுதை

ஒரு காட்டில் ஒரு சிங்கம் அரசு புரிந்து வந்தது. அதன் அமைச்சனாக ஒரு நரி இருந்து வந்தது. ஒரு நாள் அந்தச் சிங்கத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலிக்குக் கழுதை ஈரல் சாப்பிட்டால் நல்ல தென்று யாரோ அதற்குச் சொன்னார்கள். அதனால் அது நரியைக் கூப்பிட்டு, "அமைச்சனே, நல்ல கழுதை ஈரலாகப் பார்த்துக் கொண்டு வா!" என்று கூறியது.

கழுதை எங்கே சிடைக்கும் என்று தேடிக் கொண்டு நரி ஒர் ஊருக்கு வந்தது. அங்கு ஒரு சுனையின் பக்கம் சேர்ந்த போது ஒரு வண்ணான் ஒரு கழுதையை ஒட்டிக் கொண்டு வந்தான். சுனையை நெருங்கியவுடன், வண்ணான் கழுதையின் மேலிருந்த பொதியைக் கீழே தள்ளிவிட்டு, அதன் கால்கள் இரண்டைச் சேர்த்துக் கட்டி’ எங்காவது மேயும்படி ஓட்டினான். கழுதை சிறிது தூரம் சென்றவுடன், நரி அதன் அருகில் சென்று தனியாகப் பேசியது.

“ஐயோ! பாவம்! உன் உடம்பு என்ன இப்படி இளைத்துப் போய்விட்டது?" என்று கேட்டது.

“என்ன செய்வேன்?" எப்பொழுது கோபம் வந்தாலும் இந்த வண்ணான் என்னை அடிக்கிறான். சரியாகத் தீனி போடுவதே இல்லை. என் முதுகில் அவன் ஏறிக்கொள்வது மட்டு மல்லாமல்,

.

பெரிய பெரிய பொதிகளை வேறு ஏற்றிச் சுமக்கச் செய்கிறான். பொதி சுமக்காத நேரத்திலும் என்னைச் சும்மா விடுவதில்லை மாறுகால் பிணைத்துக் கட்டித்தான் விடுகிறான். இப்படி இடைவிடாமல் துன்பம் அனுபவித்தால் என் உடம்பு இளைக்காதா?’ என்று துயரத்துடன் கூறியது கழுதை.

“ உன் கதை கேட்கக் கேட்கப் பரிதாபமாக இருக்கிறது. இந்தத் துன்பம் தீர நான் ஓர் யோசனை சொல்கிறேன். கேள் என்னோடு வா. நம் காட்டரசன் சிங்கத்திடம் உன்னைக் கொண்டு போய் விடுகிறேன். அவனிடம் நீ ஓர் அமைச்சனாக இருக்கலாம். அதிகார பதவியோடு நலமாக வாழும் பேறு கிடைக்கும்" என்று இச்சகம் பேசியது நரி.

“சிங்கமா? வேண்டாம். அது மற்ற மிருகங்களையெல்லாம் அடித்துத் தின்றுவிடும். எனக்குப் பயமாயிருக்கிறது" என்றது கழுதை.

"வீணாகப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இல்லையா? எங்களையெல்லாம் அடித்தா தின்று விட்டது? ஆண் யானையைத் தவிர வேறு எந்த மிருகத்தையும திரும்பிக் கூடப் பார்க்காது. உன் உயிருக்கு ஆபத்தில்லை என்பதற்கு நான் பொறுப்பு. என்ன சொல்கிறாய்?" என்று நரி கழுதையைக் கேட்டது. -

" அப்படியானால் சரி,?’ என்று கழுதை ஒப்புக் கொண்டது.

உடனே நரி அதன் கால்களில் கட்டியிருந்த கயிற்றைத் தன் பல்லினால் கடித்து அறுத்து விட்டது. பிறகு வண்ணானுக்குத் தெரியாமல், அதை அழைத்து கொண்டு காட்டுக்குள் சென்றது.

கழுதையைக் கண்டவுடனே சிங்கம் அதைப் பிடிக்கப் பாய்ந்தது. கழுதை பயந்து கதறிக்

கொண்டு ஓட்டம் பிடித்து விட்டது. வயிற்று வலி அதிகமாக இருந்ததால் சிங்கம் அதைத் தொடர்ந்து ஒட முடியாமல் நின்று கொண்டிருந்தது. நரி அதைப் பார்த்து, அரசே, என்ன இப்படி அவசரப் பட்டு விட்டீர்கள். இப்போது நான் போய் அதைத் திரும்ப அழைத்து வருகிறேன். உங்கள் கையில் கொடுத்தவுடன் அதைக் கொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கழுதையைத் தொடர்ந்து ஓடியது.

கழுதையின் அருகில் சென்றதும் நரி என்ன? இப்படி ஓடி வந்துவிட்டாய்? என்று கேட்டது. . "போ,போ, உன் பேச்சை நம்பி வந்தேன். அந்த சிங்கம் அருகில் போவதற்கு முன்னாலேயே பாய்ந்து கொல்ல வந்தது. நல்லவேளை! தப்பி ஓடி வந்து விட்டேன். மறுபடி நீ எதற்கு வந்தாய்? என்று சினத்துடன் கேட்டது கழுதை.

ஐயையோ! பாவம், பாவம்! சிங்க மன்னனைப் பற்றி அப்படிச் சொல்லாதே. சிங்க மன்னன் இது வரை சொன்ன வாக்குப் பொய்த்ததில்லை. உலகம் புகழும் அந்த உத்தமனைப் பற்றி இப்படிப் புத்தியில்லாமல் பேசாதே.

முன் பிறப்பில் என்ன பாவம் செய்தாயோ? கழுதையாய்ப் பிறந்து வண்ணானிடம் அடிபட்டுப் பொதி சுமக்கின்றாய். உன் பாவம் தொலைய நான் ஒரு நல்ல செயல் செய்தேன். அதைப் புரிந்துகொள்

ளாமல் மூடத்தனமாக ஓடி வந்து விட்டாய், நல்ல நண்பன் ஒருவன் அமைச்சனாகக் கிடைத்தானே என்ற மகிழ்ச்சியால் உன்னைக் கட்டித் தழுவிக் கொள்ள வந்தான் சிங்க மன்னன். நீ பயந்தோடி விட்டாய். தானாக வரும் செல்வத்தை யாராவது தள்ளி வைப்பார்களா? உன் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும். உடனே புறப்படு. நான் சொல்வதைக் கேள். நலம் வரும்" என்று கூறியது நரி.

கழுதை இப்போது நரியை முற்றிலும் நம்பி விட்டது. அதைத் தொடர்ந்து சென்றது. நரி அதைக் கூட்டிக் கொண்டு வந்து சிங்கத்தின் முன் விட்டது.

கழுதையைக் கண்டதும் சிங்கம் மறுபடி எழுந்து பாய்ந்து கட்டித் தழுவிக்கொண்டது. அப்படியே கட்டிப் பிடித்தவாறே அதன் கழுத்தை முறித்துப் போட்டது.

"நரியமைச்சனே, இப்பொழுது கழுதையைக் கொன்ற பாவம் தீரச் சந்தியாவந்தனம் செய்துவிட்டு வருகிறேன். வந்தபின் வயிற்று நோய்தீர நல்ல மருந்தான அதன் ஈரலை எடுத்துக் கொள்கிறேன். அதுவரை நீ இந்தக் கழுதைக்குக் காவலாக இரு’’ என்று சிங்கம் கூறியது.

நரி காவல் இருந்தது. சிங்கம் சந்தியாவந்தனம் செய்ய ஒரு நீர் நிலைக்குச் சென்றது. சிங்கம் அங்கே சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க இங்கே செத்துக் கிடந்த கழுதையின் கண்களையும் காதுகளையும் நரி தின்று முடித்தது.

திரும்பி வந்த சிங்கம், “இந்தக் கழுதையின் கண்காதெல்லாம் எங்கே?"என்று கேட்டது,

‘கண்ணும் காதும் இருந்தால் ஒருமுறை அகப் பட்டுத் தப்பிய கழுதை திரும்பவும் வந்தாசாகும்?" என்று கேட்டது நரி.

ஊனப்பட்ட மிருகங்களைச் சிங்கம் தின்பது கிடையாது. ஆகவே, அது கழுதையின் ஈரலைத் தின்னாமலே போட்டு விட்டுப் போய்விட்டது. நரி அந்தக் கழுதையை இழுத்துக் கொண்டு போய்த் தன் கூட்டத்துடன் அதன் உடலைப் பிய்த்துத் தின்றது.

பட்டனுபவித்து மீண்டும் தவறு செய்பவர்களை என்னவென்று சொல்வது? அறிவில்லாமல் அகப் பட்டிறந்த கழுதையைப் போலத்தான் அவர்களும் துன்பப்படுவார்கள்.

4. குயவன் சேனாபதியானான்

ஒரு சிற்றுாரில் ஒரு குயவன் இருந்தான். ஒரு நாள் அவன் சூளையிலிருந்து மண் பாண்டங்களை எடுக்கும் போது இரண்டு பானைகள் ஒன்றாய் ஒட்டிக்கொண்டிருந்தன. அவற்றைப் பிரிக்க முயலும் போது, ஒரு பானை உடைந்து சில்லுச் சில்லாகச் சிதறியது. சிதறிய சில்லுகளில் கூர்மையான ஒன்று அவன் நெற்றியில் பாய்ந்தது. நெற்றியில் ஒரு பெரிய காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தின் வடு பிறைமதி போல வளைந்திருந்தது. அந்த வடு பெரிதாக இருந்ததால் அது மறையவேயில்லை.

ஒரு முறை அவன் இருந்த நாட்டில் பஞ்சம் வந்தது. அதனால் அவன் குடிபெயர்ந்து மற்றொரு வளமான நாட்டுக்குச் சென்றான். அந்த நாட்டின் அரசன் எப்போதும் போரில் ஈடுபட்டிருப்பவன். வீரக்களத்தில் விளையாடுவதே அவன் பொழுது போக்கு. அவனிடம் போய் இந்தக் குயவன் ஏதாவது வேலை கேட்டான். குயவனுடைய நெற்றியில் இருந்த நீண்டு வளைந்த வடுவைப் பார்த்தவுடன், அந்த அரசன் பெருமகிழ்ச்சி கொண்டான். முன் ஏதோ போரில் இவன் காயப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணி இவனுக்குச் சேனாபதி வேலை கொடுத்தான். குயவன் தன் வேலையைச் சிறப்பாகச் செய்து வெற்றி பல பெற்று அரசனுடைய நன் மதிப்பையும் பெற்றான்.

ஒரு நாள் அரசன் சேனாபதியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது "சேனாபதி, உங்கள் நெற்றியில் ஒரு வடு இருக்கிறதே, அது யாருடன் செய்த போரில் ஏற்பட்டதென்று நீங்கள் இதுவரை சொல்லவில்லையே?"என்று கேட்டான்.

"அரசே, இது போரில் வாள் குத்திக் கிழித்த காயம் அல்ல. நான் ஒரு குயவன், சட்டி பானைகளி

லிருந்து சிதறிய ஒடு கிழித்தகாயம் இது?’ என்று அறிவில்லாமல் அந்தக் குயவன் உண்மையைக் கூறி விட்டான் .

" கேவலம் நீ ஒரு குயவனா? உன்னையா நான் என் சேனாபதியாக்கி என்னருகில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். மற்ற அரசர்களுக்குத் தெரிந்தால் இதைச் சுட்டிக்காட்டியே என்னைப்

பழித்துப் பேசுவார்கள். நீ இன்னார் என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே இந்த இடத்தை விட்டுப் போய்விடு" என்று சீறினான் அந்தச் சாதி வெறி பிடித்த அரசன்.

‘அரசே, நான் குயவனாக இருந்தாலும்' போர்த்தொழிலில் தாழ்ந்தவன் அல்ல. போரில் ப-12 என்னை வெல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை. அப்படியிருக்க நீங்கள் என்னை வேலையை விட்டுப் போச் சொல்வது நீதியல்ல" என்று குயவன் வேண்டினான்.

“அற்பனே, சும்மா பிதற்றாதே! சிங்கத்தோடு சேர்ந்திருந்த நரிக்குட்டி தன்னைச் சிங்கம் என்று எண்ணிக் கொண்டு துள்ளியது போல், நீயும் வீரன் என்று கூறித் துள்ளாதே! உன் குலம் பிறர்க்கு வெளிப்படு முன்னால் ஓடி விடு’ என்றான் அரசன்

வேறு வழியில்லாமல், குயவன் தன் சேனாபதி உடைகளைக் களைந்து விட்டு அங்கிருந்து வேறொரு நாடு நோக்கிச் சென்று விட்டான்.

5. சிங்கத்திடம் வளர்ந்த நரிக்குட்டி

ஒரு காட்டில் ஆணும் பெண்ணுமாக இரண்டு. சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றிற்கு இரண்டு குட்டிகள் இருந்தன. நாள்தோறும் ஆண் சிங்கம் ஏதாவது மிருகங்களைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுக்கும். பெண் சிங்கம் அதைக் குட்டிகளுக்கு ஊட்டி அவற்றை அன்புடன் வளர்க்கும்.

இப்படி நடந்து வரும் நாளில் ஒரு நாள், உயிருள்ள ஒரு நரிக்குட்டியைக் கெளவிக் கொண்டு வந்து ‘இதை உன் குட்டிகளுக்கு உணவாகக் கொடு’ என்று சொல்லிக் கொடுத்து விட்டுச் சென்றது ஆண் சிங்கம். அந்த நரிக்குட்டி அழகாக இருந்ததால் பெண் சிங்கத்திற்கு அதைக் கொல்ல மனம் வர வில்லை. அதைத் தன குட்டிகளோடு சேர்த்து அதற்கும் நல்ல உணவு வகைகள் கொடுத்து வளர்த்து வந்தது.

சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டியும் வளர்ந்து வந்தது. தாமாக இரை தேடக் கூடிய அளவு வளர்ந்ததும், அவை ஒரு நாள் காட்டுக்குள் புகுந்தன.

அப்போது அவை சென்ற வழியாக ஓர் யானை வந்தது. அதைக் கண்டவுடன் நரிக்குட்டி பயந்து ஒடியது. உடனே சிங்கக் குட்டிகள் இரண்டும் அதை நோக்கி, “இப்படிப் பயந்து ஓடுவது சரி தானா?” என்று ஏசிக் காட்டின.

“நான் ஒன்றும் பயந்து ஓடவில்லை. நான் எதற்குப் பயந்து ஓட வேண்டும்?’ என்றெல்லாம்

சொல்லி அந்தச் சிங்கக் குட்டிகளுடன் நரிக்குட்டி சச்சரவிட்டது.

இருப்பிடத்திற்குத் திரும்பிவரும் வரையும், வந்த பின்னும் அவை சச்சரவிட்டுக் கொண்டே இருந்தன.

இதைக் கவனித்த பெண் சிங்கம், நரிக்குட்டியைத் தனியே அழைத்து,

"நீ உன்னை ஒரு சிங்கம் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாய். உண்மை யதுவல்ல. நீ ஒரு நரிக்குட்டி. அறிவறியாத என் குட்டிகளோடு சேர்த்து நான் உன்னை வளர்த்தேன். அவைகளும் உன்னை ஒரு வகையான சிங்கம் என்றே எண்ணிக் கொண்டுள்ளன- உன் பிறப்புத் தெரிந்தால் அவை சீறும் ஆகையால் அவை தெரிந்து கொள்வதற்கு முன் ஓடி விடு" என்று கூறியது. உடனே அங்கிருந்து அந்த நரிக்குட்டி ஓடி விட்டது.

6. குருவிக் கூட்டைக் கலைத்த குரங்கு

ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் பெரும் மழை பெய்தது. அந்த மழையில் நனைந்து குளிரினால் ‘ பற்கள். கிட்டிப் போய், உடல் நடுநடுங்கியபடி ஒரு குரங்கு வந்தது. அது அந்த ஆலமரத்தினடியில் வந்து மழைக்கு ஒதுங்கி நின்றது. அதைப் பார்த்து தூக்கணாங் குருவிகளில் ஒன்று மிகவும் இரக்கப்பட்டது.

குரங்கை நோக்கி, "உனக்குக் கை கால் இருக்கும் போது நீ ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு இருக்கக் கூடாதா? ஏன் இப்படி மழையில் நனைந்து குளிரில் நடுங்க வேண்டும்?" என்று கேட்டது.

இதைக் குரங்கு தவறாக எடுத்துக் கொண்டு விட்டது. அந்தத் குருவி, தன்னைக் கையாலாகா தவன் என்று. பழிப்பதாக அது நினைத்துக் கொண்டது. ஆகவே மிகவும் ஆத்திரம் கொண்டு, "ஏ ஊசி மூஞ்சிக் குருவியே, மூடத்தனமாக நீ எனக்குப் புத்தி சொல்ல வந்து விட்டாயா? எனக்கா கூடு கட்டத் தெரியாது. இருக்கட்டும். இதோ உன் கூட்டை என்ன செய்கிறேன் பார்!” என்று சொல்லிக் கொண்டே மரத்தில் ஏறிக் குருவிக் கூடுகளைச் சின்னாபின்னமாகப் பிய்த்து எறிந்தது. பாவம் அந்தக் குருவிகளும் மழையில் நனைந்து குளிரால் நடுங்கின. மூடர்களுக்கு அறிவுரை சொன்னால் கேடுதான் வரும்.

7. சாம பேத தான தண்டம்

ஒரு காட்டில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி அதைக் கண்டது. அதன் இறைச்சியைத் தின்பதற்கெண்ணி அதன் அருகில் சென்றது. அப்போது அங்கு சிங்கம் வந்து சேர்ந்தது. நரியைக் கண்டு, “நீ யார்? என்று அதட்டியது சிங்கம்.

“அரசே, தாங்கள் கொன்று போட்ட இந்த யானையைக் காத்துக் கொண்டு நான் இருக்கிறேன் என்றது நரி.

நரி அடக்க ஒடுக்கமாகவும் சமாதானமாகவும் பேசியதைக் கண்ட சிங்கம், அதன் பேரில் இரக்கப் பட்டு,” நரியே, இது நான் கொன்ற யானை அல்ல. ஆகவே நீயே இதை எடுத்துக்கொள் என்று சொல்லிச் சென்று விட்டது.

சிங்கம் சென்ற சிறிது நேரத்தில் அங்கு ஒரு புலி வந்து சேர்ந்தது. அது நரியை பார்த்து, “நீ யார்? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று அதிகாரக் குரலில் கேட்டது.

"புலி மாமா, இதை ஒரு சிங்கம் கொன்று போட்டது. அந்தச் சிங்கம் இந்தப் பக்கத்தில் தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஏதாவது புலி வந்தால் எனக்குச் சொல் என்று அந்த சிங்கம் சொல்லியிருக்கிறது. ஏன் என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிங்கம், முன்னொரு யானையை தான் கொன்று போட்டுவிட்டு, நீராடப் போயிருந்த போது, ஒரு புலி வந்து அந்த யானையைக் கடித்துத் தின்று எச்சிலாக்கி விட்டது. ஆகவே புலியை அதற்குத் தண்டிக்க வேண்டும்’ என்று சொல்லியது?"

இவ்வாறு நரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே புலி தப்பித்தேன் பிழைத்தேன் என்று அங்கிருந்து ஓடி விட்டது.

இவ்வாறு பகையுணர்ச்சியினால் புலியை மாறு படச் செய்து ஒட்டியபின் அங்கு ஒரு குரங்கு வந்தது.

‘வா, வா இவ்வளவு பெரிய யானை இறந்து கிடக்கிறது. தின்ன ஆளில்லையே என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் உடலைக் கிழித்து.வேன்டிய அளவு தின்னு’ என்று கூறியது நரி, குரங்கும் சரி யென்று கூர்மையான தன் கை நகத்தால் யானையின் உடலைக் கிழித்தது. அது கிழித்து முடிந்த சமயம், ஐயோ சிங்கம்! சிங்கம் , அதோ வருகிறது!’ என்று நரி கூச்சலிட்டது! சிங்கம் என்றவுடன் பயந்து போய்க் குரங்கு ஒட்டம் பிடித்தது.

'அப்பாடா இந்த யானையின் தடித் தோலை எப்படிக் கிழிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். தானம் கொடுப்பது போல் காட்டிக் குரங்கை ஏமாற்றிக் கிழித்தாயிற்று. தின்ன வேண்டியதுதான்” என்று நரி யானையைத் தின்னப் போகும் பொழுது அங்கு மற்றொரு நரி வந்து சேர்ந்தது.

உடனே அந்த நரியின் மேல் பாய்ந்து சண்டையிட்டு அடித்து விரட்டி விட்டது. இவ்வாறு தண்டம் செய்து அதை ஒட்டியபின் அந்த யானை இறைச்சி யைத் தனக்கே சொந்தமாக வைத்துக் கொண்டு நெடுநாள் வரை தின்று தன் பசியைத் தீர்த்துக் கொண்டது நரி.

சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நான்கு வழிகளாலும் அறிவுடையவர்கள் தங்கள் விருப் பத்தை முடித்துக் கொள்வார்கள்.

8. கடிபட்ட நாய்

ஓர் ஊரில் ஒரு நாய் இருந்தது. அந்த ஊரில் பஞ்சம் வந்ததால் உணவு கிடைக்கவில்லை. ஆகை யால் அந்த நாய் வேறோர் ஊருக்குச் சென்றது. அந்த ஊரில் இருந்த ஒரு பெண் அதற்கு நாள் தோறும் சோறிட்டுக் காப்பாற்றி வந்தாள்.

ஒரு நாள் அந்த நாய் தெருப்பக்கமாக வந்தது. தெருவில் இருந்த மற்ற நாய்கள் எல்லாம் உறுமியும் குரைத்தும் அதை விரட்டிக் கொண்டு வந்து மேலே விழுந்து கடித்துக் குதறி விட்டன. மேலும் சிறிது நேரம் இருந்தால் அது செத்துப் போய் விடும் போலிருந்தது. போதும் போதும் இந்த ஊர் வாசம்' என்று எண்ணிக்கொண்டே ஒரே ஓட்டமாகத் தன் ஊருக்குத் திரும்பியது.

ஊருக்குள் நுழைந்ததும் அந்த ஊர் நாய்களெல்லாம் அதைச் சூழ்ந்துக் கொண்டு, 'நீ. போயிருந்த நாடு நல்ல நாடுதானா?' என்று கேட்டன.

‘எல்லா நாடுகளிலும் அது சிறந்த நாடுதான். ஆனால், நம் இனத்திலேதான் ஒற்றுமை இல்லை. அதனால் நான் இப்படித் துன்பமடைய நேரிட்டது. ஒருவன் தன் இடத்திலேயே இருப்பதுதான் சிறந்தது’ என்று அந்த நாய் மற்ற நாய்களிடம் கூறியது

பஞ்ச தந்திரக் கதைகள்

பகுதி 5

ஆராயாத செயல் தவிர்த்தல்

1. கீரிப் பிள்ளையைக் கொன்றான்

ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவன் அந்த நாட்டு அரசனுக்குப் பஞ்சாங்கம் சொல்லும் வேலை பார்த்து வந்தான். அவன் மனைவிக்கு நெடுநாளாகப் பிள்ளை பிறக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு கீரிப்பிள்ளையை ஆசையோடு எடுத்து வளர்த்து வந்தார்கள்.

அந்தப் பார்ப்பனன் தன் பிள்ளையாசை முழு வதையும் அந்தக் கீரிப் பிள்ளையின் மேல்வைத் திருந்தான். அதை அன்போடு எடுத்து மடியின் மேல் வைத்துக் கொள்வான். மார்பில் சேர்த்து வைத்துத் தழுவிக் கொள்வான். முத்தம் இடுவான். பாலும் சோறும் தன் கையாலேயே ஊட்டுவான். தன் மார்பின் மேல் போட்டுத் தூங்கவைப்பான். இப்படி அன்பாகக் கீரிப்பிள்ளையை வளர்த்து வரும்போது அவன் மனைவி வயிற்றில் கருப்பம் உண்டாகியது.

பஞ்சாங்கம் சொல்பவனாகிய அந்தப் பார்ப் பனன் தன் மனைவியைப் பார்த்து,' அன்பே, உனக்கு ஓர் ஆண் பிள்ளை பிறப்பான். அவன் நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்குவான். பெரும் செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்வான். உன்னையும் என்னையும் நம் குலத்தையுமே ஆதரித்துக் காப்பாற்றுவான். அரசர் மெச்சிப் புகழும்படி புரோகிதம் சொல்லிக் கொண்டு நூறு வயது வரை இருப்பான்’ என்று பிறக்கப் போகும் தன் மகனைப் பற்றி ஆரூடம் கணித்துச் சொன்னான்.

பகற் கனவு கண்ட பிரமசாரியைம் போல் நீங்கள் மனக் கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் நடக்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று அவன் மனைவி செல்லமாக மறுத்துச் சொன்னாள்'

அவன் மனைவிக்குக் கர்ப்பம் முற்றிக் கடைசியில் ஒரு நாள் நல்ல வேளையில் ஓர் அழகான ஆண் பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை பிறந்த பின் ஒரு நாள் தீட்டு கழிப்பதற்காக அவள் சுனைக்கு நீராடச் சென்றாள், பார்பனன் பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தான்.

அப்போது அரச தூதர்கள் வந்து அரண்மனையில் சிரார்த்தம். அதற்கு வாருங்கள்’ என்று அழைத்தார்கள். அந்தச் சமயத்தில் தான போகாவிட்டால்

மற்ற பார்ப்பனர்கள் சிரார்த்த தட்சணைகள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்; தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடும் என்று பார்ப்பனன் உடனே புறப்பட்டான். வீட்டில் பிள்ளைக்கு வேறு துணையில்லாததால், தான் வளர்த்த கீரிப் பிள்ளையைக் கொண்டு வந்து, தன் பிள்ளையின் பக்கம் வைத்துவிட்டு அரண்மனைக்குச் சென்றான்.

அரண்மனையில் சிரார்த்தம் முடித்து, அங்கிருந்து பெற்ற சரிகை வேட்டி, அரிசி, பருப்பு எல்லாவற்றையும் மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.

அவன் அரண்மனை போய்த் திரும்பி வரு முன்னால் வீட்டிற்குள் ஒரு கருநாகம் புகுந்தது. அது குழந்தையிருந்த இடத்தை நோக்கிச் சென்றது. அதைக் கண்ட கீரிப்பிள்ளை உடனே கருநாகத்தின் மேல் பாய்ந்து, அதைக் கடித்து இரண்டு துண்டாக்கிப் போட்டு விட்டது. அதன் வாயெல்லாம் இரத்தம் ஒழுகத் தன் சாதனையைக் காட்ட வேண்டும் என எண்ணி, மிகுந்த மகிழ்ச்சியோடு, அது வீட்டு வாசலில் வந்து நின்றது. அரண்மனையிலிருந்து திரும்பி வந்த பார்ப்பனன் இரத்தம் ஒழுகும் வாயோடு நின்ற கீரிப்பிள்ளையைக் கண்டதும் அது தன் குழந்தையைத்தான் கடித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு அதைத் தடியினால் அடித்துக் கொன்று விட்டான். தன் பிள்ளை என்ன ஆயிற்றோ என்ற கலவரத்தோடு அவன் வீட்டிற்குள் வந்தான். அங்கே அவன் பிள்ளை சிரித்துக் கொண்டு கிடந்தது. அதன் எதிரில் தூரத்தில் கரும்பாம்பு இரண்டு துண்டாகக் கிடந்தது. அப்போதுதான் உண்மையாக என்ன நடந்ததென்று அவனுக்குப் புரிந்தது. ஆராயாமல் அருமையாக வளர்த்த அந்த நல்ல கீரிப் பிள்ளையை வீணாகக் கொன்று விட்டோமே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டான பைத்தியக்காரன் போல் தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டான். பெற்ற பிள்ளையைக் காட்டிலும் அதிகமாக உன்னைப் பேணி வளர்த்தேனே! வாசலில் எதிரே வந்து நின்று என்னையே எமனாகத் தேடிக் கொண்டாயே’ என்று அந்தக் கீரிப் பிள்ளையின் மேல் விழுந்து விழுந்து தரையில் முட்டி மோதிக் கொண்டு அழுதான். நீராடப் போன அவன் மனைவி திரும்பி வந்து, கீரிப் பிள்ளை இறந்து கிடப்பதைக் கண்டு ஓவெனக் கூவியழுதாள். நடந்ததைக் கேட்ட பிறகு நெருப்பிலிட்ட மெழுகுபோல் அவள் உள்ளம் உருகி நின்றாள். தீர விசாரியாமல் செயல் புரிந்தோர் அடைந்த துன்பங்களையெல்லாம் கதை கதையாய்ச் சொல்லி அவள் அழுதாள்.

அவர்கள் கடைசியில் கீரிப் பிள்ளையைக் கொன்ற பாவத்திற்குக் கழுவாய் செய்து ஓரளவு துன்பம் நீங்கியிருந்தார்கள்.

2. பொரிமாக் குடத்திலே இழந்த போகம்

ஒரு நகரத்தில் ஒரு பார்ப்பன இளைஞன் இருந்தான் அவன் தாய் தந்தையற்றவனாகையால் ஏழையாக இருந்தான். தரித்திரனான அவனுக்கு யாரும பெண் கட்டிக் கொடுக்கவில்லை.

அவன் ஒரு நாள் ஒரு சிரார்த்தத்திற்குப் போயிருந்தான். அரைத்த பொரிமாக் குடம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. பருப்பும் சோறும் நன்றாகச் சாப்பிட்டு விட்டுச் சிரார்த்தப் பொருள்களை எடுத்துக் கொண்டு மற்றோர் ஊருக்குப் புறப்பட்டான். வயிறு நிறையச் சாப்பிட்டிருந்ததால் ஒரே மயக்கமாக இருந்தது. ஆகையால் வழியில் ஒரு நிழலில் களைப்பாறத் தங்கினான். மணல் தரையில் சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது அவன் மனத்தில் கோடி வகையான எண்ணங்கள் உண்டாயின.

இந்தக் குடத்திலிருக்கும் மாவை விற்றால் ஓர் ஆடு வாங்கலாம். அந்த ஆட்டை மேய்த்து வளர்த்தால் அது இரண்டு குட்டிகள் போடும். அந்த இரண்டில் ஒன்றைப் பொலி கடாவாக வளர்த்து அதை விற்றால் இரண்டு பெண் ஆடுகள் வாங்கலாம். கையில் இருக்கும் நாலு ஆடுகளும் இரண்டிரண்டு குட்டி போட்டால் மொத்தம் பன்னிரண்டு ஆடுகள் சேர்ந்து விடும். இந்தப் பன்னிரண்டு ஆடுகளையும் விற்று இரண்டு பசுக்கள் விலைக்கு வாங்குவோம். அவை ஊரிலே மேய்ந்து கொழுத்து இரண்டு கன்றுகளை ஈனும். அவை நான்கிலும் கிடைக்கும் பாலையும், நெய்யையும், விற்று மேற்கொண்டு இரண்டு பசு வாங்குவோம். ஆறு பசுக்களும் ஆறு காளங்கன்றுகளை ஈனும் . அந்த மூன்று சோடிகளையும் ஏரில் பூட்டி இருக்கிற நிலங்களை யெல்லாம் உழுது பயிரிடுவோம. விளைந்து வரும் தானியத்தை மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்று விரைவில் பணம் சேர்த்து விடுவோம்.

அந்தப் பணத்தைக் கொண்டு அரசனிடம் அனுமதி வாங்கி ஒரு பெரிய வீடும் கட்டுவோம். அந்த வீட்டில் பணமும், காசும் வைத்துக் கொண்டு தேவையான பொருள்களை வாங்கி வசதியாக வாழ்வோம். அப்பொழுது பிராமணபோசனம் பிராமணர்களெல்லாம் தாங்களாகவே வந்து பெண் கொடுப்பதாகச் சொல்வார்கள். அந்தப் பெண்களில் அழகான ஒருத்தியைக் கன்னிகாதானமாகப் பெற்று அவளோடு மன்மதனும் ரதியும் போல் அன்பாக இருந்து இன்பம் காண்போம். ஒரு நல்ல பிள்ளையைப் பெற்று அதற்குச் சோமசன்மா என்று பெயர் வைப்போம். இப்படி நாம் இன்பமாக வாழும் நாளில் மேயப் போன பசுக்கள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி வரும், பெற்ற பிள்ளையைக் கீழே வைத்து விட்டு மாடு கட்டப் போவாள் மனைவி. தாய்போனவுடன் பிள்ளை அழும். நாம் ஓடிப்பேர்ய்ப் பிள்ளையை ஏன் அழவைத்து விட்டு வந்து விட்டாய் என்று கோபித்துக் கொண்டு அவள் முதுகில் இப்படி அடிப்போம் என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த தடியை எடுத்து எதிரிலிருந்த பொரிமாக் குடத்தில் அடித்தான். அது மண் குடமாயிருந்த படியால் நொறுங்கி மாவெல்லாம் மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.

பொரிமக் குடத்தோடு எல்லாம் போய் விட்டதே என்று வருந்திக் கண்ணிர் வடித்து வயிற்றில் அடித்துக் கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல் தரையில் புரண்டான் அந்த இளைஞன்.

ஆகையால் எதையும் காரியத்தில் பார்க்கும் முன்னே கற்பனையை வளர்க்கக் கூடாது.

3. கழுமரமேறிய நாவிதன்

ஒரு நகரத்தில் ஒரு வணிகன் இருந்தான். அவன் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள். அந்தப் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்றும், அவன் தாய் தந்தையர் விரைவில் இறந்து விடுவார்கள் என்றும், அவன் முதலில் ஏழையாக இருப்பான்; பின்னால் பெரும் பணக்காரன் ஆவான் என்றும் சோதிடர்கள் சொன்னார்கள். இதைக் கேட்ட வணிகன் அந்தப் பிள்ளையின் மேல் வெறுப்படைந்து அதை வெளியில் தூக்கி எறிந்து விட்டான். பிள்ளையை இழந்த சோகத்தில் அவன் மனைவி மூர்ச்சையாகி இறந்து போனாள். அருமை மனைவி இறந்த பிறகு இனி நமக்கு என்ன வாழ்வு இருக்கிறது என்று வருந்தி வணிகன் தற்கொலை செய்து கொண்டான்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட அரசன் அவர்கள் சொத்துக்குரியவர்கள் யாரும் இல்லாததால் அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு விட்டான். வணிகன் பிள்ளையைக் குப்பையில் எறிவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு வேலைக்காரி. எல்லாம் முடிந்த பிறகு குப்பை மேட்டில் போய்ப் பார்த்தாள். சாக வேண்டிய காலம் வராததால் அது அப்பொழுதும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதன்பால் இரக்கப்பட்டு அவள் தன் வீட்டுக்குத் தூக்கிச் சென்றாள். தான் வேலை பார்த்துச் சேர்த்த கூலியில் ஒரு பகுதியைக் கொடுத்து ஒருத்தியைப் பால் கொடுக்க ஏற்பாடு செய்தாள். வேலைக்காரி

யின் வீட்டில் அந்த வணிகர் வீட்டுப் பிள்ளை வறுமையோடு வளர்ந்து வந்தான். வறுமையின் கொடுமை தாங்காமல் அவன் பல முறை வருந்தினான். அவனுக்குப் பதினாறு வயதான பின் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில் ஒரு சித்தர் தோன்றினார். அவர், 'தம்பி இனிமேல் நீ வருந்த வேண்டாம். காலையில் விடியுமுன் எழுந்திரு. பிறகு வீட்டையெல்லாம் சுத்தம் செய். மொட்டை அடித்துக் கொண்டு நன்றாகக் குளித்துத் தூய ஆடை அணிந்து உடலெல்லாம் திரு நீறு பூசிக்கொள். கையில் ஒரு தடியை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் தனியாகக் காத்திரு. பதினைந்து நர்ழிகை வரை நீ அங்கே காத்திருக்க வேண்டும். மதிய வேளைக்குச் சரியாக மூன்று பேர் பிச்சைக்கு வருவார்கள். சிறிதும் பதறாமல் எழுந்து கைத்தடியினால் மூளை கலங்கும்படி மூவரையும் அடிக்க வேண்டும். உடனே அவர்கள் மூன்று நிதிகளாக மாறுவார்கள். நீ நெஞ்சில் நினைத்ததெல்லாம் தருவார்கள்’ என்று சொன்னார்.

வணிகர் மகன் கண் விழித்துப் பார்த்தான். சித்தரைக் காணவில்லை. விடியுமுன் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து தலையை மொட்டையடித்துக் கொண்டு, குளித்து திருநீறுபூசி முற்றம் வந்து தடியுடன் காத்துக் கொண்டிருந்தான். மதிய வேளையில் மூன்று சித்தர்கள் பிச்சைப் பாத்திரத் தோடு வந்தார்கள். குப்பென்று பாய்ந்து தடியினால் ஓங்கி அடித்தான். உடனே அவர்கள் மூன்று பொற் சிலைகளாக மாறி விட்டார்கள். அவர்களை வீட்டில் வைத்துப் பூசை செய்து வேண்டிய செல்வங்களைப் பெற்றான். .

அவனுக்குத் தலை மழித்து விட்ட நாவிதன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே தானும் மொட்டை அடிததுக் கொண்டு தன் வீட்டு வாசலில் காத்திருந்தான். அங்கு யாரோ மூவர் பிச்சைக்கு வந்தார்கள். அவர்களை நாவிதன் தடியால் அடித்தான். வலி தாங்காமல் அவர்கள் மூவரும் உயிரை விட்டுப் பிணமானார்கள். அரச காவலர்கள் வந்து நாவிதனைப் பிடித்துக் கொண்டு போய்க் கொலைக் குற்றத்திற்காகக் கழுவேற்றி விட்டார்கள். ஆகவே எதையும் தீர விசாரியாமல் செய்யக் கூடாது.

4. ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

ஓர் ஊரில் ஒரு வேதியன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் வேதியன் தன் மகனை அடிக்கடி கோபித்துக் கொண்டான். ஒரு நாள் கூட மகனிடத்தில் இன் முகத்தோடு பேசியது கிடையாது. இதனால் வெறுப்படைந்த மகன், தன் தாயிடம் போய், 'அப்பா எப்பொழுதும் என் மேல் காய்ந்து விழுகிறார், எங்காவது பிற நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டுப் போய் விட்டான். நடக்க நடக்க அவனுக்கு ஆத்திரம் அதிகமாகியது. தன் தந்தையைக் கொன்று விட்டால்தான் தன் மனக்

கொதிப்பு அடங்கும் என்று நினைத்தான். ஆகவே, ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, தன் தந்தை படுக்கும் இடத்திற்கு நேராக மேலேயுள்ள பரணில் ஏறி ஒளிந்து கொண்டான்.

வெளியில் சென்றிருந்த வேதியன் பொழுது சாயும் நேரம் வீடு வந்து சேர்ந்தான். சாப்பாடெல்லாம் முடிந்துக் கொண்டு, தன் படுக்கையில் வந்துஉட்கார்ந்தான். அவன் மனைவியும் அங்கு வந்தாள்.

'ஏண்டி நம் பிள்ளையாண்டான் எங்கே காணோம்?’ என்று கேட்டான் வேதியன்.

அவள் கண்ணிருடன் அழுது கொண்டே ‘என்னாங்க, வயது வந்த பிள்ளையை இப்படித்தான் அடிக்கடி கோபித்துக் கொள்வதா? அவன் என்ன சாத்திரம் படிக்கவில்லையா? சதுர்மறை யோத வில்லையா? எல்லாவற்றிலும் கெட்டிக் காரனான அவன் மேல் ஏன் இப்படி எரிந்து எரிந்து விழுந்தீர்கள்? இப்போது அவன் கோபித்துக் கொண்டு அயல் நாடு சென்று விட்டான்! எங்கே போய் எப்படிக் கஷ்டப்படப் போகிறானோ?’ என்று வருத்தத்துடன் கூறினாள்.

'அடியே, நீ என்ன புரியாமல் அழுகிறாய்! நம் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? நாமே புகழ்ந்து சொன்னால் அவனுக்கு ஆங்காரம் வந்து விடாதோ? அதற்காகத் தான் புத்தி மேன் மேலும் வளர வேண்டுமே என்று போதனை சொன்னேன்’ என்று வேதியன் கூறினான்.

பரண் மேல் இதைக் கேட்டு கொண்டிருந்த மகன் அப்போதுதான் தன் தவற்றை யுணர்ந்தான். உடனெ பரணிலிருந்து குதித்துத் தந்தையின் காலடியில் விழுந்து வணங்கினான்.

தான் அவரைக் கொல்ல நினைத்திருந்ததைக் கூறி, ‘அப்பா, நான் இந்தப் பாவம் தீர என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்’ என்று கசிந்துருகிக் கேட்டான்.

'மகனே, உன் மாமனார். வீட்டில் போய் சில நாட்கள் இருந்தால் இந்தப் பாவம் தீரும், போ' என்றான் வேதியன்.

உடனே வேதியர் மகன் தன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டான். மாமனார் வீடு வந்து சேர்ந்த பொழுது அங்குள்ள வேதியர்கள், 'எங்கள் மாப்பிள்ளை வந்தான்! மாப்பிள்ளை வந்தான்!' என்று சொல்லிக் கொண்டு அவனை வரவேற்றுப் பலமாக உபசரித்தார்கள். பாகு,பால்,பருப்பு, நெய், தேன், பாயசம் என்று பலவகையான பொருள்கள் படைத்து உவகை ஏற்படும்படி வேதியர் மகனுக்கு விருந்து படைத்தார்கள். அவனும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு ஆனந்தமாக இருந்தான்.

அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நீதிப் பாட்டு எழுதித் தன் படுக்கையில் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு வந்தான்.

முதலில் பலமாக உபசாரம் செய்த மாமனார் வீட்டில் நாளாக ஆக மாப்பிள்ளையை வெறுத்துப் பேசத் தொடங்கினார்கள். ஒரு நாள் அவன் மனைவியை அழைத்து, 'உன்கணவனுக்கு நீதான் புத்தி சொல்லக் கூடாதோ?’ என்று கேட்டார்கள்.

நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று அவள் அவர்களைக் கேட்டாள்.

‘இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் செலவுக்கு என்ன செய்வது? கையில் பணம் இல்லையே என்று கேள் என்றார்கள்.

அவளும் தன் கணவனிடத்தில் அவ்வாறே கேட்டாள்.

உடனே வேதியன் மகன் தான் எழுதி வைத்திருந்த கவிதைச் சீட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்து, 'இந்தா, இதை விற்றுப் பணம் பெற்றுக் கொள். இதன் விலை ஆயிரம் பொன்' என்று சொல்லிக் கொடுத்தான்.

அவள் அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு போய்த் தன் அண்ணன் கையில் கொடுத்து 'இதன் விலை ஆயிரம் பொன்னாம். இதை விற்றுக் கொண்டு வாருங்கள்’ என்று கூறினாள். அவன் அந்தச் சீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தான். 'உண்மையில் இது ஆயிரம் பொன்னுக்கு மேலேயே பெறும்' என்று கூறி அதை விற்கப்பட்டணத்திற்குப் போனான்.

அவன் இந்தப் பாட்டுச் சீட்டை ஒவ்வொருவரிடமும் காட்டி இதன் விலை ஆயிரம் பொன்!' என்று கூறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பார்ந்துவிட்டு, 'பைத்தியக்காரன், புத்தியில்லாதவன்' என்று பழித்துப் பேசி விட்டுச் சென்றார்கள்.

ஒரு தெருவில் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வணிகர் வீட்டு இளைஞன் எதிரில் வந்தான்.

அந்த இளைஞனுடைய தந்தை ஒரு பெரிய வணிகன். அவனுடைய வாணிபம் கடல் கடந்த நாடுகளிலும் பரவியிருந்தது. அவன் ஒரு முறை அயல் நாடு செல்லும் பொழுது அந்த இளைஞன் சிறுவனாக இருந்தான். சிறுவனாக இருந்த தன் மகனைப் பார்த்துத் தத்தை, 'மகனே பழம் பொருள்கள் கிடைத்தால் அவற்றை விடாதே. அரிய பொருள்கள் கிடைத்தால் அவற்றை வாங்கத் தவறாதே, ஆயிரம் கழஞ்சு பொன் கொடுத்தாகிலும் அவற்றைப் பெற மறவாதே!’ என்று சொல்லி விட்டுக் கப்பல் ஏறினான்.

அவன் ஏறிச் சென்ற கப்பல் வழியில் புயல் காற்றினால் திசை தடுமாறி விட்டது. குறித்த ஊருக்குப் போகாமல் வேறொரு தீவுக்குப் போய்ச் சேர்ந்தது. வணிகன் அந்தத் தீவிலேயே தங்கி விட்டான். நெடுநாள் வரை தன் நாட்டிற்குத் திரும்பி வரவில்லை.

அந்த வணிகர் மகனும் சிறு வயதில் தன் தந்தை சொன்ன சொற்கள் நினைவு இருந்ததால் அருமையான அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன்கொடுத்து வாங்கிக் கொண்டான். அந்தச் சீட்டைக் கொண்டு வந்து தன் வீட்டிலே உள்ள படுக்கைக்கு மேலே பட்டுக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டான்.

திசை மாறி முன்பின் அறியாத தீவுக்குப் போய்ச் சேர்ந்த வணிகன், அங்கு நடத்திய வாணிபத்தில் நிறையப் பொருள் தேடிக் கொண்டு, பத்தாண்டுகள் கழித்துத் தன் நாட்டுக்குத் திரும்பி வந்தான். கப்பலை விட்டிறங்கி ஒரு படகில் ஏறிக் கரைக்கு வந்தான். தான் இல்லாதபோது வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பினான். ஆகவே, நள்ளிரவில் யாரும் அறியாமல் அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். தன் மனைவியிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றபோது, அங்கே, அவளோடு ஓர் இளைஞன் படுத்திருக்கக் கண்டான். தன் மகன்தான் அவன் என்பதை அவனால் அப்போது சித்தித்தறித்து கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவனுடன் தன் மனைவி தூங்குகிறாள் என்று எண்ணி அவர்களை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவிக் கொண்டு. போனான். அப்போது மஞ்சத்தின் மேலே பட்டுக் கயிற்றில் தொங்கிய சீட்டு அவன் கண்ணில் பட்டது அதில் என்ன எழுதியிருக்கிறதென்று அறிய அதை இழுத்து விடிவிளக்கு ஒளியில் படித்துப் பார்த்தான்.

ஒன்றும் விசாரி யாமலே நின்று செயல்செய் வோர்களே பொன்று வார்கள் வீணிலே பொன்று வார்கள் வீணிலே!

நின்று விசாரித் தெதையுமே நினைத்துப் பார்த்துச் செய்பவர் ஒன்று செல்வம் கூடியே என்றும் இன்பம் காண்பரே! இதைப் படித்தவுடன், 'சரி, விசாரித்துப் பார்த்தே முடிவுக்கு வருவோம்’ என்று உருவிய வாளை உறையிலே போட்டு விட்டு வந்த வழியே திரும்பினான் வணிகன் ,

பொழுது விடிந்தவுடன் காலையில் அவன் தன் வீட்டிற்கு வந்தான். நெடுநாளைக்குப் பின் திரும்பி வந்த கணவனைக் கண்டதும் அவன் மனைவி, அவனைப் பணிந்தெழுந்து வரவேற்றாள். அவர்கள் மகனான அந்த இளைஞனும் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். வணிகன் தன் மனைவியை நோக்கி, 'இவன் யார்?’ என்று கேட்டான்.

'தெரியவில்லையா? நம் மகன்! நீங்கள் போகும் போது சிறுவனாயிருந்தான். இப்போது வளர்ந்து விட்டான்’ என்றாள் அவள்.

உடனே வணிகன் தன் அருமை மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு தான் புத்தி கெட்டதனமாக நடந்து கொள்ள இருந்தது பற்றிக் கூறி, இந்த நல்லபாட்டுச் சீட்டினால் இவன் பிழைத்தான்? என்று குறிப்பிட்டு, தன் மகனை நோக்கி, 'இந்தச் சீட்டு உனக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டான்.

‘சிறு வயதில் தாங்கள் வெளி நாட்டுக்குப் புறப் பட்டுப் போகும் போது, அரிய பொருள்களை ஆயிரம் பொன் கொடுத்தேனும் வாங்கிவிட வேண்டுமென்று சொன்ன நீதி என்னுள்ளத்தில் பதிந்திருந்தது, அதனால்தான் அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினேன்'என்றான்.

'நல்ல காரியம் செய்தாய்! கோடிப்பொன்னுக்குச் சமமான உன்னை நான் இழவாமல் செய்தது அந்தச் சீட்டு’ என்று அவனைத் தழுவிக் கொண்டான் வணிகன், அவர்கள் பல நாட்கள் அன்பாகவும் இன்பமாகவும் வாழ்ந்தார்கள்.

5. தலையில் சுழன்ற சக்கரம்

ஓர் ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். அந்த நான்கு பேரும் வறுமையினால் வாடினார்கள். தங்கள் வறுமையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒரு யோகியை நாடிச் சென்றார்கள். அவர்கள் குறையைக் கேட்ட அந்த யோகி தமது சித்தியினால் அவர்களுக்குப் பொருள் கிடைக்கும் வழி ஒன்றைச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ஒவ்வொரு திரிச் சீலையை வைத்துக் கீழ்க் கண்டவாறு சொன்னார்.

'உங்கள் தலையில் உள்ள இந்தத் திரிச் சீலைகளோடு இமயமலை நோக்கிச் செல்லுங்கள். போகும் வழியில் யாருடைய தலையிலுள்ள திரிச்சீலை எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய பொருள் கிடைக்கும்.'

யோகியின் சொற்படியே அவர்கள் இமயம் நோக்கிப் புறப்பட்டார்கள். போகும் வழியில் முதலில் ஒருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை நழுவிக் கீழே விழுந்தது. அவன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது பூமியின் கீழே ஏராளமான தாமிரம் கிடைத்தது. அவன் அதை மற்ற மூவருக்கும் காட்டி, 'வாருங்கள் எல்லோரும் பங்கு வைத்துக் கொள்வோம்' என்றான். அதற்கு அவர்கள் வேண்டாம், வெறுந் தாமிரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எல்லாவற்றையும் நீயே எடுத்துக்கொள்’ என்று சொன்னார்கள். ஆண்டவன் கொடுத்தது இதுவே போதும்’ என்று அவன் தாமிரத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டான்.

மற்ற மூவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஓர் இடத்தில் மற்றொருவனுடைய தலையிலிருந்த திரிச்சீலை விழுந்தது. அந்த இடத்தில் வெள்ளி இருக்கக் கண்டார்கள். அதிக ஆசைபிடித்த மற்ற இருவரும் தங்களுக்கு இதன் மேலும் நல்ல பொருள் கிடைக்கு மென்று நினைத்து, அவனை நோக்கி "எல்லா வெள்ளியையும் நீயே எடுத்துக் கொள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் போகும் வழியில் ஒருவனுடைய திரிச்சீலை கீழே விழுத்தது. அந்த இடத்தில் நிறையத் தங்கம் கிடைத்தது. இதை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு நான்காமவன் மேலும் நடந்தான். தங்கத்திற்கு உரியவன் அவனைப் பார்த்து, நீ திரும்பிவரும் வரை நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடு என்று சொன்னான். அவன் சரி என்று சொல்லி விட்டுப் போனான்.

அவன் போகும் வழியில் ஒரு மனிதனைக் கண்டான். அந்த மனிதனுடைய தலையில் சாயாமல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டான். அவனைப் பார்த்து "நீ யார்? உன் தலையில் ஏன் சக்கரம் சுழல்கிறது?" என்று கேட்டான். அவன் கேட்டு முடித்தவுடனே அந்தச் சக்கரம் கேட்டவன் தலையிலேயே வந்து இருந்து கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது.

"என்ன இது? கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டது போல் இருக்கிறதே?" என்று அவன் பயந்து, அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் முன்பு குபேரனால் எனக்கு ஒரு சாபம் ஏற்பட்டது. அதனால் இந்தக் கூர்மையான சக்கரம் என் தலையில் சுழன்று கொண்டிருந்தது. உன்னைக் கண்டால் என் சாபம் தீருமென்று சொல்லியிருந்தான். அதன்படி இன்று நடந்தது" என்றான், பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்காய்முடிந்தது போல் ஆயிற்றே என் நிலை என்று வருந்திய அவன். அந்தப் பழைய சக்கரத் தலையனைப் பார்த்து, நீ எவ்வளவு காலகாக இங்கிருக்கிறாய்?' என்று கேட்டான் .

"எவ்வளவு காலமாக என்று தெரியாது. ஆனால், நான் இங்கு வந்த சேர்ந்தபோது சீதாராமன் அரசாண்டு கொண்டிருத்தான்’ என்றான்."

“உனக்குத்தண்ணீரும்சோறும்யார்கொண்டுவந்துதருவார்கள்?’"என்று மேலும் கேட்டான் திரிச்சீலைக்காரன்.

'இந்த இடத்தில் இருப்பவர்களுக்குத் தாகம் பசியெல்லாம் ஏற்படாது. ஏனென்றால், இந்தச் சக்கரம், குபேரனுடைய நிதியைத் திருட வருகிறவர்களை அச்சுறுத்துவதற்காகவே இந்த இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறது?’ என்று சொன்னான். இதற்கு முன்னால் தங்கத்தை யடைந்து காத்துக் கொண்டிருந்தவன், மேலே சென்ற தன் நண்பன் தெடுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு தேடிக்கொண்டு வந்துவிட்டான். அவன் தன் நண்பனைப் பார்த்து, அவன் தலையில் சுழலும் சக்கரத்தைக்கண்டு, 'இது என்ன' என்று கேட்டான்.

'நண்பா! என் பேராசைக்குக் கிடைத்த பரிசு இந்தத் துன்பம் என்று சொல்லியழுதான் நான்காமவன் .

தங்கம் அடைந்தவன் தன் நண்பனுக்குப் பல ஆறுதலான சொற்கள் சொல்லித் தேற்றி விட்டு விதியை யாரும் வெல்ல முடியாது என்று உபதேசித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் சென்று நலமாக வாழ்ந்தான்.

6. மந்திரத்தால் அழிந்தமதிகேடர்

ஓர் ஊரில் நான்கு பேர் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள். அவர்கள் நால்வரில் மூவர் மந்திர வித்தை யில் மிகத் தேர்ச்சியடைந்தார்கள். நான்காமவன் சரியாகக் கல்வி பயிலவில்லை. மற்ற மூவரும் அரசனிடம் தங்கள் திறமையைக் காட்டிப் பொருள் பெறுவதற்காகச் சென்றார்கள் அப்போதுகல்வித்நோச்சியில்லாதவனாக இருந்தரலும், தங்களுடன் படித்தான்என்பதற்காக நான்காமவனையும் தங்க ளுடன் அழைத்துச் சென்றார்கள். தங்கள் வருவாயில் ஒரு பங்கு தருவதாகப் பேசிக் கொண்டு கூட்டிச் சென்றார்கள்.

அவர்கள் போகும் வழியில் ஒரு சிங்கம் செத்துப் பிணமாகிக் கிடந்தது. 'நாம் கற்ற வித்தையைப் பரிசோதித்துப் பார்க்க இது ஓர் அரிய வாய்ப்பு, நாம் மந்திரவித்தையால் இந்தச் சிங்கத்தைப் பிழைத் தெழச் செய்வோம்’ என்றான் ஒருவன். அப்போது கல்லாதவன், 'சிங்கத்தை எழுப்பினால் அது நம்மைக் கொன்று விடும்!’ என்று கூறினான். மற்றவர்கள்,

கோபத்தோடு அவனை ‘அப்பால் போ’ என்று பிடித்துத் தள்ளினார்கள். அவன் பேசாமல் போய் ஒரு மரத்தின் மேல் ஏறியிருந்து கொண்டான்.

மற்றவர்கள் மூவரும் தங்கள் மந்திர சக்தியைக் கொண்டு அந்தச் சிங்கத்திற்கு உயிரூட்டினார்கள். உயிர் பெற்றெழுந்த சிங்கம், அவர்கள் மூவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றுவிட்டது.

'கல்வியைக் காட்டிலும், அறிவுதான் பெரிது' என்பது இக்கதையினின்றும் தெரிகிறது.

7. அறிவுரை மறுத்தழிந்த மீன்கள்

ஒரு பொய்கையில் இரண்டு மீன்களும் ஒரு தவளையும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ்ந்தன. ஒரு நாள் வலைஞன் ஒருவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த தவளை வந்து, 'நாளை வலைஞன் வந்து மீன்களைப் பிடிப்பதாகச் சொல்கிறான். நரம் இப்பொழுதே வேறொரு பொய்கைக்குப் போய் விடுவது நல்லது’ என்று கூறியது,

அதற்கு ஒரு மீன் 'நான் மிக விரைவாகச் செல்லக் கூடியவன். ஆகையால் இப்பொழுதே வேறிடம் போக வேண்டியதில்லை’ என்று கூறியது. மற்றொரு மீன். 'ஒருவன் தான் இருக்குமிடத்தை

ப-14 விட்டுப் போவதே தவறு? என்று கூறியது.

தவளையோ 'நான் போகிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டது.

மறுநாள் வலைஞன் வந்து மீன்களை யெல்லாம் பிடித்துக் கொண்டு போனான், செத்துப் பிணமாகிப் போன அந்த இரு மீன்களையும் பார்த்து. தவளை தன் மனைவியிடம், 'என்ன அறிவு சொல்லியும் கேட்காததால் இவற்றிற்கு வந்த முடிவைப் பார்’ என்று சொல்லி மிகவும் வருந்தியது.

8. பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை

ஒர் ஊரில் ஒரு கழுதை இருந்தது. அது ஒரு நரியோடு சேர்ந்து பயிர் மேய்வது வழக்கம். ஒருநாள் அது விலாப் புடைகள் வீங்க மேய்ந்து ஏப்பம்

விட்டுக் கொண்டிருந்தது. அப்போது இரவு நேரம், நிலாக் காலம்; பொழுது போவதற்கு நான் இசை பாடுகிறேன்; நீ கேள்’ என்று நரியிடம் கூறியது. ‘உன் குரல் கேட்டால் பயிர்க்காரன் வந்து கொன்று விடுவான்!'என்று நரி கூறியது.

அதன் சொல்லைக் கேளாமல் கழுதை தன் பாழான குரலெடுத்துப் பாடியது. உழவர்கள் வந்து அதை உடம்பு நொறுங்கும்படியாக அடித்து விரட்டினார்கள்.

நரி தூரத்தில் ஓடிப்போய் நின்று கொண்டு 'கழுதை மாமா, என் பேச்சைக் கேட்காததனால் தானே அடிபட்டாய்? ஏன் இந்த இறுமாப்பு!' என்று ஏசி விட்டுச் சென்றது.

9. வரங் கேட்டிறந்த நெசவாளி

நெசவாளி ஒருவன் இருந்தான். அவன் நெசவு செய்து கொண்டிருந்த தறிமரம் ஒரு நாள் முறிந்து விட்டது. அதற்குப் பதில் மரம் வெட்டிவரக் காட்டிற்குச் சென்றான். அங்கு வாகை மரம் ஒன்று இருந்தது. அதை வெட்ட அவன் முயலும்போது, அந்த வாகை மரத்தில் தங்கியிருந்த ஓர் இயக்கன், '<center{{இது என் இருப்பிடம், இதை வெட்டாதே! இதற்குப் பதில் நீ ஒரு வரம் கேள். தருகிறேன். என்று கூறினான். 'சரி, நாளை வருகிறேன், என்று கூறிவிட்டு நெசவாளி வந்து விட்டான். அன்றே தன் நண்பனான நாவிதன் ஒருவனை என்ன வரம் கேட்கலாம்?’ என்று யோசனை கேட்டான். நீ ஓர் அரசனாக வரம் கேள். நான் உன் மந்திரியாக வந்து விடுகிறேன்’ என்றான் நாவிதன். அன்று இரவு தன் மனைவியிடம் இதைப் பற்றிச் சொன்னான்.

'அரசனாக வந்தால் துன்பம் அதிகம். அதெல்லாம் நமக்கு வேண்டாம். இன்னும் ஒரு தலையும் இரண்டு கைகளும் பெற்றால் தினம் இரண்டு தறியில் நெய்து அதிகப் பணம் சேர்க்கலாம்? என்று யோசனை கூறினாள், அவன் மனைவி.

நெசவாளியும் இதையே நல்ல யோசனை குயன்று தெர்ந்தேடுத்துக் கொண்டான். மறுநாள் இயக்கனிடம் சென்று வரம் கேட்டான். அவனும் மறுக்காமல் கொடுத்தான். வரம் பெற்றுத்தன் ஊருக்குத் திருப்பி வரும்போது அவனை மக்கள் பார்த்தார்கள். அவன் இரட்டைத் தலையையும் நான்கு கைகளையும் கண்டு இவன் யாரோ பெரிய அரக்கன் என்று நினைத்துக் கொண்டு ஊரில் இருந்தவர்கள் கல்லால் எறிந்து அவனைக் கொன்றுவிட்டார்கள்.

10. பழிவாங்கிய குரங்கு

ஒர் ஊரில் ஓர் அரசன் இருந்தான். அவன் ஒரு நாள் ஒரு குரங்கு ஆடுவதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதன் பின் அரசன் தன் ஊரில் ஏராளமான குரங்குகளை வளர்த்து வந்தான்.

ஒரு நாள் அரண்மனை வேலைக்காரர்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டது. அதைக் கண்ட ஒரு கிழட்டுக் குரங்கு,'இந்தப் போர் பெரிதானால் தீமை ஏற்படும். நாம் ஏதாவது ஒரு காட்டுக்குப் போய் விடுவோம்’ என்று கூறியது.

‘ஒழுங்காகச் சாப்பாடு கிடைக்கிற இடத்தை விட்டுவிட்டு எங்கோ போக வேண்டுமென்கிறது இந்தக் கிழடு' என்று சொல்லி மற்ற சிறு குரங்குகள் எல்லாம் ‘வெவ்வெவ்வே' காட்டின.

ஆனால், அந்தக் கிழட்டுக் குரங்கு மாத்திரம் தன் குடும்பத்துடன் பக்கத்துக் காட்டுக்கு ஓடி விட்டது.

பிறகு ஒருநாள், அரண்மனை வேலைக்காரர்களுக்குள்ளே நடந்த சண்டை பெரிதாகி விட்டது. அவர்களில் ஒரு தீயவன் எதிரிகளின் மேல் கொள்ளிக் கட்டையை எடுத்து வீசினான். அது தவறிப் போய்க் குதிரைச் சாலையின் கூரையில் பட்டு, குதிரைச் சாலை தீப்பிடித்துக் கொண்டது. குதிரைச்சாலை எரிந்ததால், குதிரைகள் எல்லாம் நெருப்புக் காயம் ஏற்பட்டுத் துன்பமடைந்தன. குதிரைக்காரர்கள் அரசனிடம் போய் நிகழ்ந்ததைச் சொல்ல, அவன் மருத்துவரை அழைந்து வரச் செய்தான்.

குரங்கு நெய் இருந்தால்தான் குதிரை நோயைத் தீர்க்கலாம் என்று மருத்துவன் கூறினான். உடனே அரசன் ஊரில் உள்ள குரங்குகளையெல்லாம் பிடித்துக் கொன்று குரங்குநெய் இறக்கிக் கொள்ளும்படி கட்டளையிட்டான். மருத்துவன் குரங்கு நெய் பூசிக் குதிரைகளையெல்லாம் குணப்படுத்தி விட்டான்.

தன் இனமெல்லாம் கொலையுண்டதைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தக் கிழக்குரங்கு அந்த அரசனைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று மனம் பதைத்தது. அந்தப் பெரிய காட்டில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் கொடுமைக் குணம் நிறைந்த பேய் ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணிய அக்கிழக் குரங்கு அதில் இறங்கி, ஒரு தாமரைத்தண்டை ஒடித்து அதில் நீரை மொண்டு குடித்தது. அப்போது அந்தக் குளத்துப் பேய் அதன் முன் தோன்றியது. 'நீ பெருமை மிக்கவன் என்று அறிந்துதான் நான் உன் கண் முன்னே தோன்றுகிறேன். இதோ மாணிக்க மாலையைப் பெற்றுக்கொள்’ என்று சொல்லி அந்தப் பேய் தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி அந்தக் குரங்கின்கையில் கொடுத்தது.

குரங்கு அந்தப் பேயைப் பார்த்து, 'இந்த நீரில் உன் சக்தி எவ்வளவு?’ என்று கேட்டது.

அருமைக் குரங்கே, ஆயிரம் பேர் வந்தாலும், அத்தனை பேரையும் இழுத்துப் பிடித்து உண்ணக் கூடிய வலிமை என்னிடம் உண்டு என்று பேய் பதிலளித்தது.

'அப்படியானால், நான் உனக்கு நல்ல உணவு கொண்டுவருகிறேன்’ என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டது குரங்கு.

பேய் தந்த மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு குரங்கு, அரசனிடம் சென்றது. அந்த மாலையின் அழகைக் கண்டு வியந்த அந்த மன்னன், 'வானரனே, இந்த அழகு பொருந்திய மாணிக்க மாலையை எங்கிருந்து பெற்றாய்?’ என்று கேட்டான்.

‘அரசே, பக்கத்தில் ஓர் அழகான காடு இருக்கிறது. அங்கே ஒரு குளம் இருக்கிறது. காலை நேரத்தில் முதலில் குளத்தில் இறங்குவோர்க்கெல்லாம் இது போன்ற மாணிக்க மாலை கிடைக்கும்’ என்று கிழக் குரங்கு கூறிற்று.

'அப்படியானால் நானும் அங்குச் சென்று ஒளி வீசும் மாணிக்க மாலைகள் பெறுவேன்' என்று அரசன் தன் சேனைகள் புடைசூழப் புறப்பட்டான்.

குரங்கு அவனைக் கூட்டிக்கொண்டு குளக் கரைக்கு வந்தது. அப்போது அது 'அரசனே, முதலில் உன் சேனைகள் எல்லாம் குளத்தில் இறங்கித் தங்கள் தங்களுக்கு அகப்படும் மாலைகளை எடுத்துக்கொண்டு வரட்டும், கடைசியில் நாம் இருவரும் இறங்கி நமக்குரிய மாலைகளை எடுத்துக் கொள்வோம்’ என்றது.

'அப்படியே ஆகட்டும்!’ என்று அரசன் தன் சேனைகளைக் குளத்தில் குதிக்கச் சொன்னான். எல்லோரும் குளத்தில் குதித்தவுடன் கீழேயிருந்த பேய் அப்படியே வளைத்துப் பிடித்துச் சாப்பிட்டு விட்டது.

நெடுநேரமாகியும் குளத்தில் மூழ்கிய சேனா வீரர்களில் ஒருவர் கூட மேலே வரவில்லை. அவன் குரங்கைப் பார்த்து, 'ஏன் சேனைகள் இன்னும் மேல் வரவில்லை' என்று கேட்டான்.

குரங்கு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு, 'அரசனே, நீ என் குரங்குக்குலம் முழுவதையும் அழித்ததற்காகத்தான் நான் உன்னைப் பழிவாங்க வந்தேன். என் விருப்பம் நிறைவேறி விட்டது. உன் கையில் நான் என் வயிற்றுப் பசிக்குச் சோறு வாங்கி யுண்டபடியால், உன்னைப் பழி வாங்குவது துரோகம் என்று விட்டு விட்டேன்’ என்று சொல்லிக் கிளைக்குக் கிளை தாவி ஒடி மறைந்து விட்டது.

அரசன் மனவேதனையோடு நகருக்குத் திரும்பிச் சென்றான்.

11. குறுக்கில் பேசித் துன்புற்ற குரங்கு

மதுரை மாநகரில் பத்திரசேனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் மகள் இரத்தினாவதி. அவள் அழகில் சிறந்தவள். அவளைக் கைப்பற்றக்

கருதி ஓர் அரக்கன் அவள் அறைக்குள் வந்து ஒளிந்திருந்தான். அதை அறிந்த அவள் தன் தோழியிடம், தன்னைக் கைப்பற்ற ஓர் அரக்கன் முயற்சி செய்வதாகக் கூறிக்கொண்டிருந்தாள். இதைக் கேட்ட அரக்கன், தன்னையல்லாமல் வேறோர் அரக்கன், அவனைக் காதலிப்பதாக எண்ணிக் கொண்டான். அவன் தன்னைக் காட்டிலும் வலியவனாக இருந்தால் என்ன செய்வது என்று அஞ்சினான். அந்த அரக்கன் அங்கு வந்து தன்னைக்

கண்டுவிட்டால் என்ன நடக்கும் என்று எண்ணி நடுங்கினான். ஆகவே அவள் அறையிலிருந்து வெளியேறிக் குதிரை லாயத்திற்குச் சென்று தானும் ஒரு குதிரையாக மாறி அங்கு வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தான்.

அப்போது குதிரை திருடுவதற்காக அங்கு ஒரு கள்ளன் வந்து சேர்ந்தான். அவன் குதிரையாக மாறி

யிருந்த அந்த அரக்கன் மீது ஏறிக் கொண்டு அதை ஓட்டிச் சென்றான். குதிரை நேராகச் செல்லாமல் இடக்குச் செய்வது கண்டு கள்ளன் அடித்தான். அடி பட்ட உடனே குதிரை முரட்டுத்தனமாக கண் காது தெரியாமல் ஓடத் தொடங்கியது. அது எங்கேயாவது தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று பயந்த அந்தக் கள்ளன், வழியில் தென்பட்ட ஓர் ஆலமரத்தின் விழுதைப் பற்றித் தொங்கிக் கொண்டு குதிரையைத் தன் போக்கில் ஓடவிட்டான்.

குதிரையோ அச்சத்தோடு தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அந்த ஆலமரத்தில் இருந்த குரங்கு ஒன்று, 'ஏ! அரக்கனாகிய குதிரையே சாதாரண மனிதனுக்கா இப்படிப் பயந்து ஓடுகிறாய்?’ என்று இழித்துக் கேட்டது. தனக்கு அஞ்சியோடும் அரக்கனின் அச்சத்தை மாற்ற அந்தக்குரங்கு முற்படுவதைக் கண்ட கள்வன் தனக்கு வந்த கோபத்தில், குரங்கின் வாலைப் பற்றித் திருகினான். குரங்கு வலி தாங்க முடியாமல் எட்டுத்திக்கும் கேட்கக் கத்திக் கதறியது.

குரங்கு தன்னைக் கள்ளனிடம் அகப்படுத்தத்தான் சூழ்ச்சி செய்கிறது என்று எண்ணிய அரக்கன், மேலும் வேகமாக அங்கிருந்து ஓடினான். கள்வனும் தான் தப்பியது குறித்து மகிழ்ச்சியடைந்தான்.

12. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்

ஓர் அரசனுக்கு மூன்று முலைகளோடு ஒரு பெண் பிறந்தாள். இது புதுமையாக இருக்கவே அவன் சோதிடனை அழைத்து,' இதற்கு என்ன செய்வது?' என்று கேட்டான். அதற்கு அந்தச் சோதிடன் 'இது நன்றாக ஆராய்ந்த பிறகே சொல்ல வேண்டும்' என்று சொல்லிவிட்டான். அதன்படி அவன் அந்தப் பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து, 'அரசே, தங்கள் மகள் தங்கள் எதிரில் வரக்கூடாது. ஆகையால் அவளைத் தனியாக வைத்திருங்கள்’ என்று சொன்னான். அவளும் தனியாக மாளிகையில் வளர்ந்து வந்தாள். அரசன் பார்க்காமலே பருவவயதை அடைந்தாள்.

அவள் பருவமடைந்ததைக் கேள்விப்பட்ட அரசன் அவளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க எண்ணினான். அவளைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அளவில்லாத செல்வம் கொடுப்பதாக அவன் அறிவித்தான். இதைக் கேள்விப் பட்ட ஒரு குருடன், கூனன் ஒருவன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அரசனைப் பார்க்க வந்தான். இளவரசியைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டான். அரசனும் சரியென்று ஒப்புக்கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொண்டு வேறு எந்த ஊரிலாவது போயிரு. இந்த

ஊரில் மட்டும் இருக்காதே என்று அரசன் சொன்னான். அப்படியே குருடன் இளவரசியைக் கூட்டிக் கொண்டு போனான்.

இளவரசியும், குருடனும், கூனனும் மற்றொரு நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இளவரசிக்குக் குருடன் மேல் அன்பில்லை; கூனன் மேல்தான் ஆசையாய் இருந்தது. ஆகவே குருடனைக் கொல்வதற்காகச் செத்தபாம்பு ஒன்றை அடுப்பிலிட்டுக் கறியாக்கினாள். குருடனைக் கூப்பிட்டு அதற்கு தெருப் பூட்டும்படி கூறினாள். குருடனும் அடுப்பின் அருகில் இருந்து விறகைத் தள்ளித் தீ எரித்துக் கொண்டிருந்தான். அப்போது வெந்து கொண்டிருந்த பாம்பின் ஆவி அவன் கண்களைத் தாக்கியது. அதனால் ஒளி இழந்த அவன் கண்கள் தெளிவாகத் தெரிந்தன. தூரத்தில் கூனனுடன் கூடி இளவரசி குலாவுவதை அவன் தன் இரு கண்களாலும் பார்த்தான். அதனால் ஆத்திரம் கொண்டு அந்தக் கூனனைப் போய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அப்படியே கைகளால் சுழற்றி இளவரசியின் மேல் எறிந்தான். அதனால் இளவரசியின் நடு முலை மறைந்தது. கூனனுடைய கூனும் நிமிர்ந்துவிட்டது.

தீதை நினைக்கப் போய் எல்லாம் நன்மையாய் முடிந்தது. தெய்வத்தின் அருள் இருந்தால் எல்லாம் நன்மையாக முடியும்.

13. அகப்பட்டவனை விட்டு விட்ட அரக்கன்

நண்டகாரணீயம் என்ற காட்டில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் அங்கு வந்த பார்ப்பனன் ஒருவனைப் பிடித்து, அவன் தோள்மேல் ஏறிக் கொண்டான். பார்ப்பனன் அந்த அரக்கனைச் சுமந்து கொண்டு திரிந்தான். அவனுக்கு இது பெரும் வேதனையாய் இருந்தது. எப்போது இந்த அரக்கனிடமிருந்து தப்புவோம் என்று காலத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.

அந்த அரக்கனுடைய காலடிகள் மிகவும் மென்மையாக இருக்கக் கண்ட பார்ப்பனன் ஒரு நாள் அரக்களைப் பார்த்து, 'உனக்கு ஏன் காலடி இவ்வளவு மெல்லியதாய் இருக்கிறது?' என்று கேட்டான்.

அதங்கு அந்த அறிவில்லாத அரக்கன் 'நான் நீராடிய பின் என் காலில் இருக்கும், ஈரம் முழுவதும் காய்ந்தபின் தான் நடப்பேன். அதனால் தான் என் காலடிகள் மெல்லியனவாக அமைந்துள்ளன' என்றுகூறினான்.

ஒரு நாள் அரக்கன், பார்ப்பனன் தோளிலிருந்து இறங்கி நீராடச் சென்றான், குளிர்ந்த நீர் திறைந்த ஒரு பொய்கையில் அவன் நீராடிக் கொண்டிருந்தான். அவன் நீராடிய பின் காலில் ஈரம் காயும் வரை நிலத்தில் காலூன்றி நடக்க மாட்டான்

எபன்தை அறிந்த பார்ப்பனன், அப்பொழுதே ஓடி விட்டால் நல்லது என்று எண்ணினான். அவ்வாறே அரக்கன் நீராடி முடிக்கு முன்பே அவன் ஓடி மறைந்து விட்டான். நீராடி முடித்துக் காலீரம் காய்ந்தபின் அரக்கன் பார்ப்பனனைத் தேடிக் கொண்டு வந்தான்.

பார்ப்பனனைக் காணாத அரக்கன் தான் அறி வில்லாமல் தன்னைப் பற்றிய உண்மைகயைக் கூறியதால் அன்றோ அந்தப் பார்ப்பனன் தப்பியோடி விட்டான் என்று எண்ணி வருந்தினான்.

யாரிடம் எதைச் சொல்லுவது என்று ஆராய்ந்து சொல்லாதவர்கள் இப்படித்தான் துன்பமடைவார்கள்.

14. இளைஞனைக் காப்பாற்றிய நண்டு

ஓர் இளைஞன் தன் ஆசிரியனின் வேலையாக ஒருமுறை வெளியூர் செல்ல நேர்ந்தது. புறப்படுமுன் தன் தாயிடம் விடை பெற்றுக் கொள்ள வீட்டுக்கு வந்தான். வெளியூர் போவதென்றால் ஒரு துணை யோடு போ’ என்று தாய் கூறினாள். 'எனக்குத் துணைவரக் கூடியவர்கள் யாரும் இல்லையே’ என்று இளைஞன் கூறினான்.

அதைக் கேட்ட தாய் , ஒரு நண்டைப் பிடித்து ஒரு கலயத்துக்குள் போட்டு இதைத் துணையாகக் கொண்டு போ’ என்று சொல்லிக் கொடுத்தாள். அவனும் அதை வாங்கிக் கொண்டு போனான்.

போகும் வழியில் அவன் களைத்துப் போனதால் இளைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் தங்கினான்.

நண்டிருந்த கலயத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு அவன் தூங்கினான். அப்போது அந்தப் பக்கமாக ஒரு நல்ல பாம்பு வந்தது. அது அவனைத் தீண்டு வதற்காக நெருங்கியது.

அப்போது ஊர்ந்து ஊர்ந்து கலயத்துக்கு வெளியே வந்த நண்டு, நல்ல பாம்பைக் கண்டு விட்டது. உடனே அது பாம்பை நெருங்கி வந்து தன் கால் கொடுக்கால் இடுக்கி அந்தப் பாம்பைக்கொன்று விட்டது. நெடுநேரம் சென்று தூங்கி

எழுந்த இளைஞன் செத்துக்கிடந்த பாம்பைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனான். அதைக் கொன்றது யார் என்று ஆராய்ந்தபோது தான் கொண்டு வந்த நண்டுதான் என்று தெரிந்து கொண்டான்.

‘தாய் சொல்லைத் தட்டாமல் என் தலைமேற் கொண்டு நடந்ததால் அல்லவா நான் உயிர் பிழைத் தேன்’ என்று தன் அன்புக்குரிய தாயை நன்றி யோடு நினைத்துக் கொண்டான்.

முற்றும்.