ஐந்து செல்வங்கள்
கி. ஆ. பெ. விசுவநாதம் 

முதற் பதிப்பு : 1950

இரண்டாம் பதிப்பு : 1952

மூன்றாம் பதிப்பு : 1954

நான்காம் பதிப்பு : 1955

ஐந்தாம் பதிப்பு : 1956

ஆறாம் பதிப்பு : 1958

ஏழாம் பதிப்பு : 1960

எட்டாம் பதிப்பு : 1963

ஒன்பதாம் பதிப்பு : 1966

பத்தாம் பதிப்பு : 1972

பதினோராம் பதிப்பு : 1975

பன்னிரண்டாம் பதிப்பு : 1978

பதின்மூன்றாம் பதிப்பு : 1984

பதினான்காம் பதிப்பு : 1991

பதினைந்தாம் பதிப்பு : 1997

விலை ரூ. 7-00

அச்சிட்டோர் :

ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம்,

7/40, கிழக்குச் செட்டித் தெரு,

பரங்கிமலை, சென்னை - 16

முன்னுரை

திரு.தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் M.A.B.L.M.O.L அவர்கள்

(அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர்.)

நண்பர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழுலகம் நன்கு அறியும். தமிழ் மேடையுலகிலும், தமிழ்த்தாள் உலகிலும் சிறப்புடன் காட்சியளித்து மக்கள் மனத்தினைக் கவர்ந்து வருகின்றார்.

தமிழ் நாட்டினையும் தமிழ் மொழியினையும் பற்றி எண்ணிவரும் ஒரு சிலரில் இவர் ஒருவர். இவர் எழுதிய ஐந்து கட்டுரைகள், “ஐந்து செல்வங்கள்” என்ற அழகிய பெயரோடு வெளிவருகிறது.

சிறந்த கருத்துக்களை எளிய முறையில் பசுமரத்தாணி போலப் பதிய வைப்பதில் ஆசிரியர் சிறந்து விளங்குகிறார்.

நண்பர் ஒரு செல்வர்; செல்வங்களைப்பற்றி எழுதுகின்றார். அவர் உயிர்போல் போற்றுகிற தமிழில் எழுதுகிறார்.

இதனைச் சிறந்த முறையில் வெளியிடுவது அறிந்து என் மனம் மகிழ்ச்சியடைகிறது. தமிழ் மக்கள் இந்நூலைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

சென்னை

10-10-50

தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்


உள்ளுறை

 

1. தாய்ச் செல்வம்

2. சிந்தனைச் செல்வம்

3. கிழட்டுச் செல்வம்

4. உடற் செல்வம்

5. திருச் செல்வம்


1. தாய்ச் செல்வம்

“செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் செல்வம் எனப்படும்” என அறிந்திருக்றோம். ஆனால், இன்று ஒரு புதிய செல்வத்தைப்பற்றி ஆராய்வோம். *

செல்வம் பலவகைப்படும். அவை முறையே மனை, மனைவி, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் எனப் பதினாறு வகைப்படும் எனக் கூறலாம்.

'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும்' எனப் பெரியோர்கள் வாழ்த்தக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல என்றும், மேற்கண்ட பதினாறு செல்வங்களைப் பெறுவதே என்றும், நமக்கு நன்கு விளங்குகின்றது. ஆம்! அவை அனைத்தும் ஒவ்வொரு மனிதனும் பெறவேண்டிய பெரும் பேறுகளாகிய செல்வங்களேயாம். இச்செல்வங்களில் எது ஒன்று குறையினும், நமது வாழ்வு சிறக்காது என்று நன்கு தெரிகிறது.

இப் பதினாறு செல்வங்களுள் தாயும் ஒரு செல்வமாகும் தாயைப் பலர் தெரிந்திருப்பர். ஆனால், தாயார்? தாய் +யார்? என அறிந்திருப்பவர் மிகச் சிலரே எனத் துணிந்து கூறலாம்.

எல்லாச் செல்வங்களிலும் சிறந்தது தாய்ச் செல்வமாகும். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால், முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்றுவிடலாம். தாய்ச்6

செல்வத்தை இழந்துவிட்டால், அதை எவராலும் எவ்விதத்தும் திரும்பப் பெறமுடியாது. இழந்தது இழந்தது தான். அச்செல்வம் இருந்த இடத்தை நிரப்பவோ, ஈடு செய்யவோ எக்காலத்தும் இயலாத அவ்வளவு உயர்ந்த செல்வமாகும் அது. ஆகவே, செல்வங்களனைத்திலும் தலையாய செல்வம் ஆதலின், அதனைத் “தாய் செல்வம்” எனவும் கருதலாம்.

‘பட்சம், பாசம், பக்தி, கடாட்சம், கிருபை’ என வடமொழியாளர் கூறுவதும், ‘அன்பு, இரக்கம், பற்று காதல், கண்ணோட்டம்’ எனத் தமிழ் மொழியாளர் கூறுவதும், மக்கள் மனம் இளகிநிற்கும் நிகழ்ச்சி ஒன்றையே குறிக்கும். இச்சொற்கள் இடவேறுபாடு, மன வேறுபாடு ஆகியவைகளுக்குத் தக்கவாறு கையாளப் பெறும். என்றாலும், தாய் தன் பிள்ளையிடத்துக் காட்டுகின்ற அன்பே தலையாய அன்பாகும். இதனையே அறிஞர்கள் ‘தாயன்பு’ எனக் குறிப்பிட்டுக் கூறுவர்.

சிறந்த துறவிகளில் இருவர் துறந்தும் துறவாதவர். ஒருவர் இளங்கோவடிகள்; மற்றொருவர் பட்டினத்தடிகள், இளங்கோவடிகளால் நாட்டை, முடியை நல்வாழ்வை, பொன்னை, மணியை, பூவணையை, பட்டதைத், பல்லக்கை, பட்டுடையைத் துறக்க முடிந்தது. ஆனால், அவரால் தமிழைத் துறக்கச் சிறிதும் முடியவில்லை. அவரது துறவாத தமிழ்ப் பற்றிற்குச் சிலப்பதிகாரம் இன்றும் சான்று கூறிக் கொண்டிருக்கிறது.

பட்டினத்தடிகளும் அவ்வாறே. அனைத்தும் துறக்க முடிந்தும், துறந்தும், தாய்ச் செல்வத்தைத் துறக்க அவரால் முடியவே இல்லை.

“குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளியை வைக்க.”

“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பலாகுதே.”

“அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு.”

“பூமானே என்றழைத்த வாய்க்கு.”

“எப் பிறப்பிற் காண்பேன் இனி?”

என்ற அவரது சொற்கள், முற்றும் துறந்தும், தாயைத் துறவாத அம் முனிவரின் மன நெகிழ்ச்சியை நமக்கு நன்கு அறிவிக்கின்றன. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.”

என்பது ஒளவையின் வாக்கு. மனிதன் தன் கண்முன்னே முன்னதாக அறியப்படுகின்ற கடவுள் தாயே யாம் என்பதை இது நன்கு விளக்குகிறது.

தெய்வம் மட்டுமல்ல; கோயிலும் கூடத்தான் என்பதை “தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை” என்பதால் நன்கு அறியலாம். பெற்ற தாயைப் புறக்கணித்து விட்டு, புண்ணியம் கருதிக் கோயில் குளங்களுக்குச் சென்று வருவது பயனற்றது என்பது கருத்து. தன் பிள்ளைக்காகப் பரிந்து பேசுபவர் தாயைவிட வேறு எவரும் இவ்வுலகில் இல்லை என்பது முடிந்த முடிபாகும். இதனை அறிந்துதான், மாணிக்கவாசகர் இறைவனைக் குறித்து வேண்டும் பொழுது, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என வேண்டியிருக்கின்றார். இதிலிருந்து தாயைவிட அதிகமாகப் பரிவு காட்டுகிறவர்கள் தெய்வங்கள்தாம் என்பதும், மக்களில் எவரும் இல்லை என்பதும் விளங்கலாம்.

எத்தகைய துன்பம் வந்தாலும், சான்றோர்கள் பழிக்கின்ற தீய செயல்களை ஒரு போதும் செய்யலாகாது என்பது, தமிழ் மக்களின் பண்புகளில் ஒன்று. பெற்ற தாயின் பசியைக் கண்ணால் கண்டு துடிக்கும் மகன் கூட தவறான வழியில் பொருளைத் தேடித் தன் தாயின் புசியைப் போக்கலாகாது என்பது தமிழரின் நெறி. இதனைக் கூறவந்த பேரறிஞர் திருவள்ளுவர்,

“ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை”

என அறுதியிட்டுக் கூறிவிட்டார். இதிலிருந்து, மக்கள் படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றிலும் தலைசிறந்தது தாயின் பசியைக் காண்பதுதான் என்பதும், பெற்ற வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்குப் பெரிய இழிவு. என்பதும் நன்கு விளங்குகின்றது. தாயை யார் என நன்கு அறிவிக்க, வள்ளுவர் மற்றொரு குறளையும் கூறியிருக்கிறார். அது,

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி”

என்பது. தாயின் தன்மை எக்குற்றத்தையும் பொறுக்கும் இயல்புடையதாகும். பிள்ளையை வெறுக்கும் குணம் (தந்தைக்கு வந்தாலும்) தாய்க்கு வாராதாம். தன் பிள்ளையைத் திருடன் என்று கூறத்கேட்டாலும் நம்பாளாம். ‘திருட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து போயிருப்பான்’ என்றே எண்ணுவாளாம். விலைமதர் விட்டுக்குச் சென்றான் எனக்கேட்டாலும் நம்பாளாம் ‘தெருவிலுள்ள பிற பிள்ளைகள் அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றிருப்பர்; விரைவில் திருந்திடுவான்’ என்றே எண்ணுவாளாம். கொலைக்காரன் எனக் கூறக் கேட்டாலும் ஒப்பாளாம். ‘ஆத்திரத்தால் நேர்ந்திருக்குமோ’ என ஐயப்பட்டு, ‘அவனை விட்டுவிடுங்கள்’ எனப் படபடத்துத் தன் மகனை உயிரோடு திரும்பப்பெற ஓடியாடி அலைந்து உருக்குலைவாளாம்.

தான் பெற்ற மகன் சூதாடுவதற்குத்தான் பொருள் கேட்கிறான் என்பதைத் தாய் அறிவாளாம். என்றாலும், புத்தி சொல்லி, சில தடவை தந்தாலும், ஒரு தடவை மறுப்பாளாம். தர மறுத்த தாயை மகன் கன்னத்தில் அடிப்பானாம். அடிபட்ட தாயின் வாய் இரத்தம் கசிய, ‘பாவிப்பயலே! ஏண்டா என்னை அடிக்கிறாய்?’ எனக் கூறுமாம். ஆனால், அவளுடைய உள்ளமோ “தான் பெற்ற மகனுக்கு எவ்வளவு வலு இருக்கிறது?” என எண்ணி மகிழுமாம். இத்தகைய தாய்கூட தன் மகன் குடித்து வெறித்திருக்கிறான் எனக் கண்டால். வெட்கிப் போய் முகஞ்சுளித்து வெறுத்து விடுவாளாம். “பெற்ற தாய் முகத்தும்கூடக் குடி வெறுக்கப்படுமானால், சான்றோர் முகத்தின் முன்னே அது என்னாகும்?” என்பதே வள்ளுவரின் கேள்வியாகும். இதிலிருந்து, ஒரு சிறு குற்றம் செய்தாலும் வெறுப்பவர் சான்றோர் என்பதும், எக்குற்றம் செய்தாலும் பொறுப்பவள் தாய் என்பதும் நன்கு விளங்குகிறது. பெற்ற தாயின் பெருமையை, அவள் தன் உள்ளக் கிடக்கையை நன்கு விளக்க வள்ளுவர் கையாண்ட இம்முறை வியக்கத் தகுந்ததும், மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

இராவ்பகதூர் ப. சம்பந்த முதலியார் அவர்கள். “மனோகரன்” என ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார். அந்த நாடகத்தின் உயிரோட்டமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது,

“தன்னைப் பழித்தவன் தந்தையா யிருந்தாலும் விடாதே!

ஆனால், தாய் தடுத்தால் விட்டுவிடு” என்பதேயாம்.

தாய்ச் செல்வத்தின் பெருமையை அந்நாடகம் மக்களுக்கு நன்கு அறிவிக்கிறது. அக்கதையை எழுதுவதற்கென்றே பிறந்தவர் சம்பந்த முதலியார் என்பதும், மனோகரனாக நடிப்பதற்காகவே பிறந்தவர்கள் டி. கே. சண்முகமும், கே. ஆர். இராமசாமியும் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்வதற்காகவே பிறந்தவர்கள் நம் போன்றவர்கள் என்பதும், அந்த நாடகத்தைப் பார்த்துத் திருந்துவதற்காகப் பிறந்தவர்கள் பெற்ற தாயைப் புறக்கணிக்கும் மக்கள் என்பதும் நமது கருத்து.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு கவிதை புனைந்திருக்கிறார் அக்கவிதை மனோகரன் கதையை ஒரு படி அதிகமாகத் தாண்டியிருக்கிறது. அது,

“தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!”

என்பதாகும். இவ் வுறுமொழியை ஒவ்வொரு தமிழனும் கூற வேண்டுமென்பது நமது விருப்பம். கவிஞர், “தாய் தடுத்தால்’’ எனக் கூறுவதிலிருந்து, ஒரு வீர மகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் எத்தகைய வீரனுக்கும் இல்லையென்பதும், பெற்ற தாய் ஒருத்திக்கே உண்டு என்பதும் நன்கு புலப்படும். தாய்ச் செல்வத்தின் பெருமையைப் புலவர் இச் சொற்களைக்கொண்டு கூறாமல் கூறியிருப்பது அறிந்து மகிழத்தக்கது.

தாயின் சொற்களைத் தட்டிவிட்டால், பின்பற்றி நடப்பதற்குப் பிற சொற்கள் இல்லையென்பது ஓர் அறிஞரின் முடிவு. இதை அவர், “தாய் சொல் துறந்தால் வாசகமில்லை” என்ற சொற்களால் கூறிவிட்டார். பிறர் கூறுகின்ற புத்திமதிகளில் ஒருகால் வஞ்சகம் கலந்திருந்தாலும் இருக்கலாம்; ஆனால், தாயின் சொற்களில் இது அடியோடு இராது என்பது அவரது கருத்து.

இறைவிக்கும் இறைவனுக்கும் உவமையாகக் கூறப் பக்திமான்களுக்குக் கிடைத்த உவமைகள் கூட, தாயும் தந்தையும்தான் எனத் தெரிகிறது. இவ்வுண்மையை “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்ற மணிவாசகரின் திருவாசகம் நமக்கு விளக்கும். ‘அம்மையே! ஒப்பிலா மணியே!’ என்ற சொற்களில் தாயையும் இறைவியையும் ஒன்றாகச் சேர்த்தக் கூறி, இவர்கள் ஒப்பிலா மணிகள் என வியந்து கூறியிருப்பது உய்த்துணரத்தக்கது.

தன் குழந்தை, ‘அம்மா!’ என்று அழைப்பதைக் கேட்ட தாயின் உள்ளம் எவ்வளவு குளிர்ச்சியடைகின்றது? என்பதைக் குழந்தைகளைப் பெறாத பெண்கள் எவ்வாறு அறிவார்கள்? அவர்கள் அறியவும் முடியாது; அவர்களுக்கு அறிவிக்கவும் இயலாது. தான் பெற்ற பிள்ளை மட்டுமா? பிறர், “அம்மா!” என்றழைப்பதைக் கேட்டுவிட்டால், பெண்மக்களின் உள்ளம் இளகியே போய்விடும். இதனை அறிந்தே, பிச்சை எடுப்பவர் அனைவரும், இச் சொல்லையே துணையெனக்கொண்டு வாழ்கின்றனர் போலும்! அம்மா என்பது எவ்வளவு இனிமை கலந்த சொல்? இந்த நல்ல தமிழ்ச் சொல்லையே உலகிலுள்ள எல்லா நாட்டினரும், மொழியினரும் பெற்ற தாய்க்கு இட்டு அழைக்கின்றனர் அம்மா என்பதில் பின் எழுத்தும், தாயே என்பதில் முன் எழுத்தும் சேர்ந்தே வடமொழியில் “மாதா” ஆயிற்று. ஆங்கிலத்திலும் “மதர்” ஆயிற்று. மனிதன் தமிழ்ச்சொற்களைச் சிதைத்துக் கூறினாலும், ஆடு, மாடுகள் சிறிதும் சிதைக்காமல் நல்ல தமிழை அப்படியே வைத்து, “அம்மா” என்றே அழைத்து வருகின்றன. இச்சொல்லைக் கேட்ட தாய் மனம் இளகி எதையும் தந்துவிடுகிறாள். என்னே தாயின் உள்ளக் கனிவு!

பல ஊர்களில் பல கழகங்கள் நிறுவப் பெற்றிருக்கும். அவைகள் அனைத்தும் கிளைக் கழகங்கள் என்றே பெயர் பெறும். ஆனால், அவைகளைத் தன்னுள் அடக்கி, தாங்கி உயர்ந்து நிற்கும் கழகமோ, “தாய்க் கழகம்” என்ற பெயரைப் பெறும். இப்பெயரும் தாயின் பெருமையை நமக்கு நன்கு அறிவிக்கின்றது.

இதுகாறும் கூறியவைகளைக்கொண்டு, தாயும் ஒரு செல்வம் என்பதும், அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது என்பதும் ஒருவாறு விளங்கியிருக்கலாம்.

தம்பி! உனக்குத் தாய் உண்டா? இருந்தால் விடாதே! உன் தாய் உயிரோடு இன்றிருந்தால், நீ ஒரு சிறந்த செல்வத்தை பெற்றிருக்கிறாய் என்று கருது. இன்றோ, நாளையோ, இன்னும் சில ஆண்டுகளிலோ, அச்செல்வம் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். பிறகு அச்செல்வத்தைத் திரும்பத் தேட உன்னால் முடியுமா? என்று நினைத்தப் பார். அதனை இப்போதே நன்குபயன் படுத்திக்கொள் வாயாரப் போற்றி, கையார அள்ளிக் கொடு! மனத்தை மகிழச் செய்! வயிற்றைக் குளிரச் செய்!

வாழுங்காலத்தில் வயிறு எரியச் செய்து மாண்ட பிறகு மனம் புழுங்கி அழும் மக்களும் உண்டு. அவர்களைக் கண்டால், அவர்களுக்காக இரங்கு! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சையெடுக்க கும்பகோணத்தில் கோதானம் கொடுக்கும் பிள்ளைகளும் உண்டு. அவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்கு; தாயின் வயிற்றைப் பற்றி எரியச் செய்யாதே! அவ்வயிற்றைப் பசிக்கவும் விடாதே! ஏனெனில், நீ இருந்த இடம் அது அல்லவா? ஆகவே,தாயைப் போற்று! அது உனது கடமை !

தம்பி! இன்னும் ஒன்று. தாய் என்ற சொல் நம்மைப் பெற்றோர்களுக்கு மட்டும் வைக்கிற ஒரு சொல் என்று எண்ணி விடாதே. நம்மைப் பெற்ற நாட்டிற்கும் ‘தாய் நாடு’ என்று பெயர். தம்மை வளர்த்த மொழிக்கும் ‘தாய் மொழி’ எனப் பெயர். தமிழ் மக்களாகிய நமக்குத் தமிழ்நாடும், தமிழ் மொழியுமே தாய்நாடும் தாய்மொழியுமாகும். இவைகளை நமது தாய்ச் செல்வங்களேயாம். தாயை இழந்த பிள்ளைகள் சில காலம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ முடியும். ஆனால், தாய் நாட்டை இழந்து, தாய்மொழியை இழந்துபோன மக்கள் எக்காலத்தும் வாழ இயலாது. ஒருகால் வாழ்ந்தாலும், அவ்வாழ்வு வாழ்வாக இராது.

தம்பி முடிவாகக் கூறுகிறேன். உனக்கு என்று ஒரு தாய் இருந்தால், அவளைப் போற்றி வாழ், இன்றேல் தாயை இழந்து திக்கற்றுத் தெருவில் நிற்கும் பிள்ளைகளைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு மொழி இருந்தால், அதனை வளர்த்து வாழ்! இன்றேல், தன் மொழியை இறந்துபடச்செய்து பிற மொழிகளைக் கலந்து குளறிப்பேசி வாழும் மக்களைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு நாடு இருந்தால், அந்த நாட்டைக் காப்பற்றி வாழ்! இன்றேல், நாடற்று நாடோடிகளாய்த் திரியும் மக்களைப் பார்த்தேனும் திருந்து!

இவை மூன்றும் உனது தாய்ச் செல்வங்களாகும். இவைகள் வாழ்ந்தாலன்றி உனக்கு வாழ்வில்லை. இம்மூன்றும் உன்னைப் பெற்றவைகள், ஆனால், அவைகள் உன்னைப் பெற்றதினால் பெற்ற பயன் எனன? என்பதை எண்ணிப் பார்! எண்ணிப் பார்க்க வேண்டியது உனது கடமை. எண்ணு! துணி! செய்!!!

வாழட்டும் தாய்ச் செல்வங்கள்!

2. சிந்தனைச் செல்வம்

“தம்பி! எதையும் சிந்தித்துப் பார்! சிந்தனையும் ஒரு செல்வமாகும். ஆகவே, அச் செல்வத்தை நீயும் பயன் படுத்து.”

“அண்ணா! எதைப்பற்றி நான் சிந்திப்பது? சிந்திக்க என்று பொருள் வேண்டாமா?”

“தம்பி! நீ சிந்திக்க முதலில் தொடங்கு. பிறகு பல பொருள்கள், ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ ‘என்னைப் பற்றிச் சிந்தனை செய்!’ என, ஒவ்வொன்றும் முந்திக்கொண்டு வரும்.”

“அண்ணா! முதலில் சொல்லுங்கள்; இப்போது நான் எதைப்பற்றிச் சிந்திக்க?”

“தம்பி! மக்களின் கண்களைப் பற்றிச் சிந்தனை செய்! முதற் கேள்வியை நானே கேட்கிறேன்; கண்கள் எதற்காக இருக்கின்றன?”

“அண்ணா! பார்ப்பதற்காக இருக்கின்றன.”

“தம்பி! விலங்கு, பறவை முதலியவைகளின் கண்களும் பார்ப்பதற்காகத்தான் இருக்கின்றன. நான் சிந்திக்கச் சொல்லியது மக்களின் கண்களையல்லவா?”

“அண்ணா! கண்கள் இல்லாதவர்களின் முகம் அழகாகத் தோன்றவில்லை. கண்கள் அழகுக்காக இருக்கின் றனவோ?”

“தம்பி! எல்லா உறுப்புக்களும் அழகுக்காகத்தான் இருக்கின்றன. மேலே சிந்தனை செய்!”

“அண்ணா! படிப்பதற்காக, ஓவியக் காட்சிகளை , இயற்கை அழகுகளைக் கண்டு மகிழ்வதற்காக இருக்கின்றன.” “தம்பி! அது சரி! கலை உணர்ச்சி ஒன்றுதான் மக்களையும் மாக்களையுப் வேறுபடுத்திக் கூறுவதற்கு உதவி செய்து வருகிறது. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! வாடி வதங்கி அழுவோரின் துன்பங்களைக் கண்டு வருந்தி, கண்ணீர் வடிப்பதெற்காகத்தான் கண்கள் இருக்கின்றன.”

“தம்பி! ஆம்; அதுவும் கண்களுக்கு அணி செய்கிறது. “கண்ணுக்கணிகலன் கண்ணோட்டம்; அஃதின்றேல் புண் என்றுணரப்படும்” என்பது வள்ளுவர் வாக்கு. மேலும் சிந்தனை செய்.”

“அண்ணா! தூசி, கல், மண் முதலியவை விழுந்து பாழாகிவிடாமல், கண்களை இமைகள் காப்பாற்றி வருகின்றன. பிள்ளைகளைப் பெற்றோர் காப்பாற்றுவதைவிடச் சிறிது அதிகமாகவே கண்களை இமைகள் காப்பாற்றுகின்றன. கம்பர்கூட தமது இராமாயணத்தில் விசுவாமித்திரரையும், அவர்தம் யாகத்தையும், இராமலட்சுமணர்கள் கண்களை இமை காத்தது போல் காத்தனர் எனக் கூறியிருக்கிறார். அண்ணா! இதில் ஒரு நயமும் காணப்படுகிறது.”

"கீழ் இமை இருந்தவிடத்திலேயே இருக்கிறது. மேல் இமை கீழ் இமையைத் தொட்டுத் தொட்டு விழிப் படையச் செய்து இரண்டுமாகச் சேர்ந்து கண்களைக் காப்பாற்றுகின்றன அல்லவா? அதுபோலவே இலட்சுமணர் யாகசாலையின் வாயிலில் இருந்திருக்கிறார். இராமர் சுற்றிச் சுற்றி வந்து, தம்பியைத் தொட்டு, தம்பி! எச்சரிக்கை! தம்பி! எச்சரிக்கை!” என விழிப் படையச் செய்து, இருவருமாகச் சேர்ந்து விசுவாமித்திரரையும் அவர்தம் யாகத்தையும் காப்பாற்றி இருக்கின்றனர் போலும்! இதை அறிந்துதான் கம்பர் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது.”

“தம்பி! அதுவும் சரி! நன்கு சிந்திக்கிறாய்! மேலும் சிந்தனை செய், உம்!”

“அண்ணா இமைகள் இல்லாவிட்டால் கண்களுக்கு ஒளியே இராதுபோலத் தோன்றுகிறது. சிறிது நேரம் இமைக்காதிருந்தால், கண்களில் நீர் சுரந்து பார்வை மங்கிப் போகிறது. ஆகவே, இமைகள் இமைத்து கண்களில் இயல்பாகச் சுரக்கும் நீரை அழுத்தி அழுத்தி சுரக்காமற் செய்து, கண்களுக்குப் பேருதவியைச் செய்து வருகின்றன.”

“தம்பி! அதுவும் சரி! உன் அறிவு சரியாக வேலை செய்கிறது. மேலும் சிந்தனை செய். முயற்சி! உம்!”

“அண்ணா! இமைக்குள்ள உணர்ச்சியை எண்ணும்போது மயிர் சிலிர்க்கிறது. கல், குச்சி, தூசி முதலியவைகளைக் கண் அறியாதிருந்தாலும், இமைகள் அறிந்து மூடித் தடுத்துவிடுகின்றன. அண்ணா! அதை எண்ணும்போது இமைகளுக்கும் ஒரு கண் இருக்கலாமோ என்ற ஐயமும் உண்டாகிறது. இமைகளுக்குக் கண்களிருக்கக் காரணமில்லை, இல்லாதிருந்தும் உணர்ச்சி இருப்பது வியப்பாகத் தோன்றவில்லையா? அண்ணா! ஒரு மாட்டின் மீது கல்பட்டாலும், அடிவிழுந்தாலும், ஈ உட்கார்ந்தாலும், அந்த மாடு அந்த இடத்தின் தோலை மட்டும் சுழித்து உதறிக் காட்டும். மனிதன் தோல் அவ்வாறு செய்வதில்லை என்றாலும், இமைகளுக்கு மட்டும் அச்செயல் இருந்துவருவது ஒரு வியப்பாகவே இருந்து வருகிறது.”

“தம்பி! அதுவும் உண்மைதான் மேலும் சிந்தனை செய்! விடாதே முயன்று பார்!”

“அண்ணா! சன்னற் கதவுகள் காற்றும் வெளிச்சமும் வேண்டியபோது திறந்து வைக்கவும், பனி, சாரல் முதலியவைகள் அடிக்கும்போது மூடவும் உதவுவதைப் போல, கண்களுக்கும் இமைகள் உதவவேண்டும் போலத் தோன்றுறது. நலலவைகளைப் பார்க்கும்போது திறக்கவும், தீயவைகளைப் பார்க்கும்போது மூடவும் வேண்டி அவ்வாறு அமைந்திருக்கின்றன என நினைக்கிறேன். வாய்க்கு உதடுகளும் அப்படித்தான் போலும். வீட்டு வாயிற்படியின் இரட்டைக் கதவுகளும், வாயின் இரட்டை உதடுகளும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன! வாயிற்கதவுகளை நல்லவர்களின் வரவிற்குத் திறந்தும், திருடர்களின் வரவிற்கு மூடியும் வைப்பதுபோல, வாயின் உதடுகளையும் நல்ல சொற்களைப் பேசுவதற்காகத் திறந்தும், தீயசொற்களைப் பேசாதிருப்பதற்காக மூடியும் வைக்க வேண்டும் என்று அவற்றின் அமைப்பே கூறுவது போலத் தோன்றுகிறது.”

“தம்பி! நீ மிகவும் சிறந்தவன். சிந்தனைக் கலை உன்னிடத்தில் குடிக்கொண்டிருக்கிறது. நீ மேலும் மேலும் முயற்சி செய்யவேண்டும். நீ இப்போது கூறியவை சிறந்தவையே. ஆனாலும், என்னால் ஒப்புவதற்கு முடியவில்லை. நீ கூறுவதை நான் ஒப்புவதானால், காதுகள் இரண்டும் தீய சொற்களை கேட்பதற்காகத்தான் திறக்கப்பட்டே இருக்கின்றன என்பதை நான் ஒப்பவேண்டி நேரிடும். அது என்னால் இயலாது. ஆகவே, அந்த முடிவை மாற்று. மேலும் சிந்தனை செய். முயன்று பார் ! உம்!”

“அண்ணா! தாங்கள் கூறுவதும் உண்மைதான். எனக்கு அதற்குமேல் ஒன்றும் புரியவில்லை. சிந்தித்தாலும் ஒரே இருட்டாக இருக்கிறதே தவிர ஒளி வீசுவதாய் இல்லை. அதற்குமேல் சிந்தித்துத் தங்களால் உண்மையை அறிய முடியுமானால், அறிந்த அதை எனக்கும் அறிவிக்க வேண்டுகிறேன்.”

“தம்பி! நீ இவ்வளவு அறிவாளியாக இருந்தும் திடீரெனத் துப்பாக்கிக் கட்டையைக் கீழே போட்டு விடலாமா; போட்டுவிட்டால் போரின் நிலை என்னாகும்? முடியாது என்ற ஒன்று முயற்சியுடையார்க்கு இல்லை. அதை நீ எப்போதும் நம்பு. ஏனெனில் அது திருவள்ளுவரின் வாக்கு!”

“நான் ஒன்றும் அதிகமாகச் சிந்திக்கவில்லை. நீ கூறியவைகளையே கூர்ந்து கவனித்தேன். எனக்குப் புலப்படுவதெல்லாம், பார்ப்பது கொஞ்சமாக இருக்கட்டும் பேசுவது குறைவாக இருக்கட்டும்; கேட்பது அதிகமாக இருக்கட்டும் என்பதுபதான். கேள்வி ஒன்று தான் சிந்தனைக்குக் கருவூலமாக இருந்துவருகிறது. வள்ளுவர் பெருமானும் கேள்வியை ஒரு சிறந்த செல்வம் என்றார். அது மட்டுமல்ல, ‘செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் செவிச் செல்வமே!’ என்று அறுதியிட்டும் கூறியுள்ளார். மனித உறுப்புக்களின் இயற்கை அமைப்பே கொஞ்சமாகப் பார்! குறைவாகப் பேசு! அதிகமாகக் கேள்! என்று கூறுவது போலத் தெரிகிறது. நீ இன்னும் சிறிது முயன்றிருந்தால் உனக்கே இது புலப்பட்டிருக்கும். நான் கூறியிக்க வேண்டியதில்லை.”

“ஆம் அண்ணா! உண்மைதான். இயற்கை அமைப்பே அமைப்பு! நெடுநேரம் பார்த்தால் கண் வலிக்கிறது, நெடுநேரம் பேசினால் வாய் வலிக்கிறது. நெடுநேரம் கேட்டால் காது வலிப்பதில்லை. இதுவும் தங்கள் கூற்றை மெய்ப்பிக்கிறது அண்ணா?”

“தம்பி! பார்த்தாயா? என்னிலும் நீ ஒரு படிதாண்டி விட்டாய் அதை நான் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் யாவும் நன்கு விளங்கும். உண்மையைக் காண, சிந்தனை ஒன்றே பெருந்துணை செய்யும். சிந்தனை ஒரு சிறந்த செல்வம், அதை இழந்துவிடாதே. பயன்படுத்து! நன்கு பயன்படுத்து. திருவள்ளுவர் செவியைச் செல்வம் என்றது, எல்லோருடைய செவியையும் அல்ல. சிந்திக்கும் ஆற்றலுடைய மக்களின் செவியை மட்டுமே; செல்வம் என்றார். சிந்தனையற்ற மக்களின் செவியானது செல்வமுமல்ல; செவியுமல்ல; அது ஒரு துளை! அவ்வளவுதான்!”

“ஆகவே தம்பி நீ சிந்தனைச் செல்வத்தைப் பெறு! அது உனக்குக் கல்விச் செல்வத்தையும் கேள்விச் செல்வத்தையும், பொருட் செல்வத்தையும், பிற செல்வத்தையும் தரும்.”

“அண்ணா! அப்படியே ஆகட்டும். சிந்தனையும் ஒரு செல்வம் என்பதை நான் இன்று தான் அறிந்தேன். இனி நான் சிந்திப்பேன். அச்செல்வத்தால் பயன் அடைவேன். தங்கள் அன்பிற்கு நன்றியும் வணக்கமும்!”

3. கிழட்டுச் செல்வம்

“வாங்கம்மா! வாங்க! வர இவ்வளவு நேரமா ஆயிற்று?”

“இல்லை பாட்டி! பள்ளியிலிருந்து முன்னமேயே வந்துவிட்டேன். செல்லம் என்னை அவள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனாள். பேசிக்கொண்டே இருந்து விட்டேன். கொஞ்சம் நேரமாய்ப் போய் விட்டது.”

பாட்டி : கண்னு உனக்கு எத்தனை தரம் சொல்கிறது, செல்லத்தோடு சேராதே என்று? இனிமேல் நீ கண்டிப்பாகச் சேரக்கூடாது. செல்லம் கெட்ட பிள்ளை. அவளோடு சேர்ந்தால் நீயும் கெட்டுப் போவாய். தெரியுமா?

கண் : பாட்டி! நான் நல்ல பிள்ளையா பாட்டி?

பாட்டி : ஆமா கண்ணு! நீ நல்ல பிள்ளைதான்!

கண் : அப்படியானால், செல்லம் என்னோடு சேர்ந்து விளையாடட்டுமே பாட்டி.

பாட்டி : என்ன சொன்னாய்? அவள் உன்னோடு சேர்ந்து விளையாடுவதா?

கண் : ஆம் பாட்டி! செல்லம் கெட்ட பிள்ளை . அவளோடு சேர்ந்தால் நான் கெட்டுப்போவேன். நானோ நல்ல பிள்ளை; என்னோடு அவள் சேர்ந்தால் அவளும் நல்ல பிள்ளையாகி விடமாட்டாளா? அதற்காகத்தான் பாட்டி, அப்படிச் சொன்னேன்.

பாட்டி : கண்ணு! உன் உடல் வளர்கிற மாதிரியே உன் அறிவும் வளர்கிறது. இந்த அழகை, உன் தாயும் தந்தையும் இருந்து கண்டு களிக்காமற் போனார்களே என்றுதான் வருந்துகிறேன்.

கண் : ஆமா பாட்டி! பண்டிட் மோதிலால் நேரு கூட இப்போது இருப்பாரானால், விஜயலெட்சுமி பண்டிட்டைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியடைவார்? என்ன செய்கிறது? உங்கள் பேச்சு, செத்துப்போன மாடு இருந்தால் உடைந்து போன கலயத்தில் தினம் நான்கு கலயம் கறக்கலாம் என்பதுபோல இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் பாட்டி! என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.

பாட்டி : இப்படியெல்லாம் பேச எப்படிக் கற்றுக் கொண்டாய் கண்ணு? உன் கேள்வி என்ன?

கண் : செல்லத்தோடு சேர்ந்தால் நான் கெட்டுப் போவேன் என்று சொன்னீர்களே, அது எப்படி?

பாட்டி : ‘பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் உண்ணும்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி கண்ணு!

கண் : நான் அதைத்தான் கேட்கிறேன், கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னாதா என்று?

பாட்டி : தின்னாது அம்மா! தின்னாது!

கண் : ஏன் அப்படி?

பாட்டி : கன்றுக்கும், பன்றிக்கும் உள்ள பற்களின் அமைப்பே வெவ்வேறு! கன்று மலத்தை உண்டாலும், பன்றி புல்லைத் தின்னாது; தின்னவும், மெல்லவும் அதன் பற்கள் துணை செய்யா!

கண் : அப்படியானால், எனக்கும் செல்லத்திற்கும் அப்படிப்பட்ட வேற்றுமைகள் எதுவுமில்லையே!

பாட்டி : பன்றிக்கும் கன்றுக்கும் பல் வேற்றுமை: செல்லத்திற்கும் உனக்கும் மனவேற்றுமை.

கண் : என்ன பாட்டி! ஏமாற்றுகிறீர்கள். அந்த மன வேற்றுமையைத் தான் குறிப்பிட்டுக் கேட்கிறேன். என்னோடு அவள் சேர்வதால், அவ்வேற்றுமை கெட்டு, என் மனத்தோடு அவள் மனமும் ஒன்றுபடாதா என்ன?

பாட்டி : நன்றாகக் கேட்கிறாய் கண்ணு! நன்கு பேசக் கற்றுக் கொண்டுவிட்டாய்!

கண் : பாராட்டுதல் இருக்கட்டும் பாட்டி! பதில் வேண்டும் எனக்கும்.

பாட்டி : நல்லதைக் கெட்டது எளிதாக வென்று விடுகிறது. ‘நல்லது கெட்டதின் முன்பு நிலைத்து நிற்பது’ என்பது மிகவும் கடினமானது.

கண் : பாட்டி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள்.

பாட்டி : நல்லதை நினைக்கவும், நல்லதைச் சொல்லவும், நல்லதைச் செய்யவும், அதிக மனவலிமையும் உறுதியும் வேண்டும். கெட்டதை நினைக்க, கெட்டதைச் சொல்ல, கெட்டதைச் செய்ய எவராலும் எளிதாக இயலும். நல்லவளாக வாழ ஆண்டுகள் பல வேண்டும். கெட்டவள் ஆக ஒரே வினாடி போதும். இந்த வலிமைக் குறைவினால்தான் கண்ணு, நம் நாட்டில் நல்ல மனம் படைத்தவர்கள் அருகியும், கெட்ட மனம் படைத்தவர்கள் பெருகியும் காணப்படுகிறார்கள் பெருமீனுக்குச் சிறு மீன் இரையாவது இயல்புதானே?

கண் : அப்படியானால் என் மனது நல்லது என்றும் செல்லத்தின் மனது கெட்டது என்றும் தாங்கள் கருதுகிறீர்கள். இது அவரவர் பிள்ளைகளின் மீது அவரவர்கள் வைக்கும் பற்றுதலாக இருக்க முடியுமே தவிர, உண்மையாக இருக்க முடியாதே பாட்டி!

பாட்டி : கண்ணு! நீ கூறுவது உண்மைதான். செல்லத்தின் பெற்றோர்களும் கூடச் செல்லத்தை அப்படித் தான் எச்சரிப்பார்கள். எச்சரித்துப் பயன் என்ன?

கண் : என்ன பாட்டி? அப்படிப் பெருமூச்சுவிட்டுச் சொல்லுகிறீர்கள்?

பாட்டி : பிள்ளைகள் கெடுவது பெரும்பாலும் தாய் தந்தைகளால்தான். பெற்றோர்களின் கெட்ட பழக்கங்களும் வழக்கங்களுமே பிள்ளைகளின் உள்ளத்தில் நன்றாகப் பதிகின்றன. அதை அறியாத பெற்றோர்களிற் சிலர், பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தித் திருத்த முயலுவார்கள் முயன்றால் முடியுமா? பிள்ளைகளைத் திருத்துவதைவிட்டு, அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

கண் : பாட்டி! செல்லத்தின் பெற்றோர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அவ்வளவு கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவர்களா?

பாட்டி : அவர்களைப் பற்றியாவது, அவர்களின் குடும்பத்தைப் பற்றியாவது, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியாவது எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள ஆசைப்பட்டதுமில்லை. ஆசைப்படுவதும் நல்லதல்ல. ஆனால், செல்லத்தின் தாய் பொய் பேசுவாள் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

கண் : பொய்சொல்வது அவ்வளவு பெரிய தவறா? பாட்டி!

பாட்டி : ஆம், கண்ணு! பொய் என்றதுமே என் உடல் நடுங்குகிறது. ஒரே ஒரு பொய்யால்தான் நம் குடும்பம் இத்தகைய அழிவிற்கு வந்தது. உன் தாய் உப்பு வாங்க எதிர் வீட்டில் நுழைந்தாள். உன் தந்தை வரும் பொழுது அதைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் பின்னாலேயே உன் தாயும் வந்துவிட்டாள். ‘எங்கே போயிருந்தாய்?’ எனக் கேட்டான். ‘இங்கேதான் இருந்தேன்’ என்றாள். இப்பொய்யைச் சகியாத உன் தந்தை, முன்கோபி ஆதலின், ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான் அடியைப் பெற்ற உன் தாய், அன்று முதல் உணவு அருந்தவில்லை பத்தாம் நாள் படுக்கையில் வீழ்ந்தாள். நாட்கள் பல ஆயின. எழுந்திருக்கவில்லை. உன் பாட்டன் என்னிடம் வந்து, “உன் மகன் மருமகளை அடித்தானா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றால் அப்பன் மகனுக்குள் வருத்தம் வருமோ என அஞ்சி, அரைப் பொய்யாகத் ‘தெரியாது’ என்று கூறினேன், அவர் மகனைக் கேட்டார். அவன் “ஆம்” என்று உண்மையைக் கூறி, மனைவி கண்முன்னே பொய் கூறியதால், சகிக்க முடியாமல் ஆத்திரம் வந்து அடித்துவிட்டேன் என்று வருந்தி அழுது, அவன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டான். உன் தாயும் தான் பொய்சொன்ன தவறுக்காக வருந்தி, உன் தந்தையிடம் மன்னிக்கும்படி வேண்டினாள். உன் தந்தையும், உன் தாயிடம், தான் அடித்ததை மறந்து மன்னிக்கும்படி வேண்டினான், அடுத்த நாள் உன் தாய் அமைதியாக இவ்வுலகத்தைத் துறந்துவிட்டாள்!

உன் தந்தைக்கு இவ்வுலகமே இருண்டு விட்டது போலத் தெரிந்தது. அவனுக்கு மன அமைதியில்லை. மறுமணம் செய்துகொள்ள எவ்வளவோ வேண்டியும் உன் தந்தை மறுத்து விட்டான். அடிக்கடி அவன் தன்னைப் “பாவி! பாவி!” என்று கூறிக்கொண்டேயிருந்தான். அடுத்த ஆண்டு தொடங்குவதற்குள் அவனும் உயிர்நீத்தான்!

உன் பாட்டனோ, நான் சொன்ன அரைப் பொய்க்காக 3. ஆண்டுகள் என்னோடு பேசவேயில்லை. இந்த அரைப் பொய்யையும் ‘பயந்துதான் சொன்னேன்’ என்று பல தடவை உன் பாட்டனிடம் கூறி மன்னிப்பை வேண்டியும், அவர் மரணப் படுக்கையிலிருந்தும்கூட, மன்னிப்பு அளிக்க மறுத்து விட்டார். உயிர் பிரியும்போது, அவர் சொன்ன சொல் என்ன தெரியுமா? ‘கண்ணம்மாளைக் காப்பாற்று அவள் முன்பு பொய் பேசாதே’ என்பதுதான் கண்ணு! உனக்காகவே என் உயிர் உடலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு இவ்வுலகமே நீதான் நான் ஒருத்தியே உனக்கு மீதி. ஆ! ஒரு சிறிய பொய்யைப் பேசாதிருந்தால், இக்குடும்பம் எவ்வளவு சிறப்பாக இருத்திருக்கும்?

கண் : பாட்டி! வருந்தத்தக்க இச்செய்தி என் உள்ளத்தை வருத்துகிறது என்றாலும், ‘கோடானு கோடிப் பேர் மிக எளிதாகக் கருதிப் பேசிவருகிற பொய்யை, மிகப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தது நம் குடும்பம்’ என்று எண்ணும்போது, அதைவிட அதிகமாக மகிழ்ச்சி உண்டாகிறது பாட்டி?

பாட்டி : கண்ணு! இச்சிறிய வயதிலே உனக்குப் பரந்த நோக்கமும், விரிந்த மனப்பான்மையும் அமைந்திருப்பதைக் கண்டு என் உள்ளம் குளிர்ச்சியடைகிறது. கண்ணம்மா! நீ நன்றாக இருத்தல் வேண்டும்!

கண் : உங்கள் வாழ்த்துதல் பொய்க்காது பாட்டி! செல்லத்தின் தாயும், என் தாயைப்போலச் சிறு பொய் சொல்லியிருக்கக்கூடும். அதற்குச் செல்லம் குற்றவாளியானால், நானும் குற்றவாளிதானே பாட்டி!

பாட்டி : அப்படியல்ல...கண்ணு கொலுப் பொம்மைகளை விற்கக் கூடையோடு ஒருத்தி வந்தாள். செல்லத்தின் தாய் 4 பொம்மைகளை விலைபேசி எடுத்துக்கொண்டு பணம் கொடுத்துவிட்டாள். செல்லம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் சிறுபிள்ளைதானே! அப்பொழுது அவளுக்கு 8 வயது இருக்கும். பொம்மை ஒன்றைப் பொம்மைக்காரி அறியாமல் எடுத்துப்போய் அவள் தாயாரிடம் கொடுத்துவிட்டாள். கடைசியாகப் பொம்மை ஒன்று குறைவதைக் கண்ட பொம்மைக்காரி, செல்லத்தின் தாயைக் கேட்டாள். செல்லம் பொம்மையை எடுக்கவுமில்லை, தன்னிடம் கொடுக்கவுமில்லையென்று பொய் கூறிவிட்டாள்.

கண் : இது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பாட்டி : மறுநாள் பொம்மைக்காரி கொலுப் பார்க்கும் கூட்டத்தோடு கூட்டமாகச் செல்லத்தின் வீட்டிற்குப் போனாள் அங்கு அந்த ஐந்தாவது பொம்மையைப் பார்த்து விட்டாள். அவள், அங்கேயே உட்கார்ந்து கொண்டு கொலுப்பார்க்க வருகிறவர்கள் எல்லோரிடமும் இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள். செல்லத்தின் தந்தை வெளியிற் சென்றிருந்து வந்தவர், மனைவியை விசாரித்தார். ‘பொம்மைக்காரி சொல்வது பொய்’ என்று அவரிடமும் சொல்லிவிட்டாள். ‘எது எப்படியானாலும் காசைக் கொடுத்துவிடு, போகட்டும்’ என்றார். அதற்கு அவள், காசைக் கொடுத்தால் பொய் வெளிப்பட்டுவிடுமே எனப் பயந்து மறுத்துவிட்டாள். பொம்மைக்காரியும் போகவில்லை. செல்லத்தின் தந்தை, அவளை விரட்டினார். “திருட்டுப் பெண்டாட்டியை மிரட்ட முடியவில்லை. என்னை மிரட்டவருகிறீரே!” என்றாள். பொம்மைக்காரியை அடித்துவிட்டார். அவ்வளவுதான், தெருவில் நடந்த இரைச்சல் ஊரில் பரவத் தொடங்கிவிட்டது. இறுதியில் போலீசார் தலையிட்டனர். செல்லத்தின் தந்தை இதற்காகத் தண்டனையும் பெற்றார்.

கண் : பாட்டி! இதையா நீங்கள் பொய் என்று கூறினிர்கள்? பொய், திருட்டு, வஞ்சகம், சூது, ஏமாற்றம், ஆத்திரம், அடிதடி, அவமானம் அத்தனையுமல்லவா இதில் கலந்திருக்கிறது?

பாட்டி : ஆம் கண்ணே! பொய் உள்ளத்தே புற்று வைக்கும். கரையான் காட்டிலே புற்று வைக்கும். கறையான் புற்றில் நுழைந்தபின் எலி, பாம்பு முதலியவைகள் நுழைவதுபோல, பொய் உள்ளத்தில் புகுந்தபின் அப்புற்றில் திருட்டு, வஞ்சகம், சூது, நெறிதவறல் அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்துவிடும்.

கண் : பாட்டி! இதனால் பெருங்கேடு விளையுமே!

பாட்டி : ஆம் கண்ணே! புற்றில் எலியும், பாம்பும் நுழைவதைக் கண்டுவிட்டால், கண்டவர்கள் சும்மா விடுவார்களா? அப்புறம் கடப்பாறை, மண்வெட்டிகளெல்லாம் நுழைந்து, புற்றையே நாசமாக்கிவிடும்.

கண் : பொய்யை உள்ளத்தில் நுழையவிட்டவர்கள் கதியும் அதே நிலைதான் போலும்!

பாட்டி : ஆம் கண்ணு! அதனால்தான் செல்லத்துடன் சேராதே என்றேன்.

கண் : பாவம்! செல்லம் இதை ஒன்றும் அறியாள் பாட்டி!

பாட்டி : ஆம். அவள் அறியாமல்தான் செய்தாள். அவள் தாய் அப்போதே அவளைக் கண்டித்துத் திருத்தியிருக்க வேண்டும். அவள் செய்யவில்லை. அதற்கு மாறாக அவள் திருட்டை ஆதரித்து, அதை மறைத்துப் பொய்யையும் கூறியிருக்கிறாள். அதனால், செல்லத்திற்குத் தான் செய்தது சரி என்றுதானே படும்? அதையே அவள் மேலும் தொடர்ந்து செய்து கெடுவாள். பல குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே பெரிய பகைவர்களாக இருந்து வருகிறார்கள். பிறகு, குழந்தைகளை யார் எப்படித் திருத்தமுடியும்?

கண் : அப்படியானால், பாட்டி! பிள்ளைகள் இளமையிலேயே கெட்டுவிடுகிறார்களா?

பாட்டி : ஆம் கண்ணு! குழந்தைகளுக்கு மூன்றாவது வயது நிறையும்போதே அறிவு வளரத் தொடங்கி விடுகிறது. அப்பொழுதிருந்தே அது உலகத்தை ஆராயவும் தொடங்குகிறது. அதன் உள்ளம் மாசு மறுவற்றது. அது படம் எடுக்கப் பயன்படுகிற (Plate of photo) உருவப் பதிவுக் கண்ணாடியைப் போன்றிருக்கும். எது தன்னெதிரில் தோன்றுகிறதோ அதை அப்படியே தன்னில் பதிப்பித்துக்கொள்ளும்.

மோர் விற்பதைக் கண்டால், ஒரு கொட்டாங்கச்சியைத் தலையில் வைத்துக்கொண்டு, ‘மோரோ மோர்!’ என்று கூவும். வீடு கட்டுவதைக் கண்டால் மணலைக் குவித்து வீடுகட்டத் தொடங்கும். குதிரை ஏறுவதைக் கண்டுவிட்டால், குட்டிச்சுவரில் ஏறியாவது குதிரை ஒட்டி ஆடும். திட்டுவதைக் கண்டால் திட்டும். மரியாதையாகப் பேசுவதைக் கண்டால் மரியாதையாகப் பேசும். தொட்டிற்பழக்கம் சுடுகாடுவரை போகும். குழந்தைகளின் பேச்சிலிருந்தும், செயலிலிருந்தும் அவ்வீட்டாரின் குணம், நடத்தை முதலியவைகளை எளிதாக அறிந்து கொள்ள எவராலும் இயலும். ஆகவே, பெற்றோர்களிடத்தில் சில தவறான குணங்கள் இருந்தாலும், அவற்றைப் பிள்ளைகள் அறியாதவாறு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். இன்றேல் பிள்ளைகளின் வாழ்வும் கெடும். செல்லத்தின் உள்ளம் அவள் தாயின் தவறுதலால் அழுக்குப் பட்டுவிட்டது. நீ அவளோடு சேர்ந்தால் அந்த அழுக்கு உன் உள்ளத்திலும் படிந்துவிடும் என்றே எச்சரிக்கிறேன்.

கண் : அது எப்படிப் பாட்டி, நாங்கள் இருவரும் சேர்வதால், என் குணம் அவளுக்குப் படியாது? அவள் குணம்தான் எனக்குப் படியும் என்று கூறுகிறீர்கள்? இது ஒன்றை மட்டும் என்னால் ஒப்பமுடியவில்லையே! கெட்டதை நல்லது வெல்லாதா என்ன?

பாட்டி : முதலிலிருந்தே நீ இப்படித்தான் கேட்டு வருகிறாய் அதற்கு விடை இதுதான். நீயே சொல். நெருப்பை நீர் வெல்லுமா? நீரை நெருப்பு வெல்லுமா?

கண் : நெருப்பு மிகுந்திருந்தால் நீர் அழியும்; நீர் மிகுந்திருந்தால் நெருப்பு அணையும். இல்லையா பாட்டி?

பாட்டி : ஆம் கண்ணு! சரியாகச் சொன்னாய், இதிலிருந்து என்ன தெரிகிறது?

கண் : வலிமை மிகுந்த ஒன்று, வலிமை குறைந்த ஒன்றை விழுங்கிவிடும் என்று தெரிகிறது.

பாட்டி : ஆம் கண்ணு; அதுதான் உண்மை. நல்லது மிகுந்தால் கெட்டதை விழுங்கிவிடும். கெட்டது மிகுந்தால் நல்லதை விழுங்கிவிடும். பாலோடு சேர்ந்த நீர் பாலாகும். நீரோடு சேர்ந்த பால் நீராகவே இருக்கும். இப்படித்தான் நீ செல்லத்தோடு சேர்வதும்; செல்லம் உன்னோடு சேர்வதும் ஆகும். அது மட்டுமல்ல; நற்குணத்திற்கு இழுக்கும் வலிமை குறைவு, தீக்குணத்திற்கு இழுக்கும் வலிமை அதிகம் கண்ணு! இப்பொழுது தெரிகிறதா. உன் கேள்வி எப்படிப்பட்டது என்று?

கண் : பாட்டி! நன்றாகத் தெரிகிறது. இனி ஐயம் இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது பாட்டி? நீங்கள் கல்லூரியில் படித்தீர்களா? என்ன?

பாட்டி : இல்லையம்மா! என் காலத்தில் கல்லூரி ஏது: பள்ளிப் படிப்பு இருந்தாலும், நல்வாழ்வு வாழ உலகத்தையும் படித்தாக வேண்டும் கண்ணு!

இச்சமயத்தில் வந்த,

செல்லம் : கண்ணம்மா! கிழடு என்ன உளறுகிறது? கிழத்தோடு சண்டையா, என்ன?

கண் : செல்லம்! வா! இனிமேல் பாட்டியைக் ‘கிழடு’ என்று கேலியாகப் பேசாதே! எப்போதும் மரியாதையாக பேசக் கற்றுக்கொள். கிழடுகள்தாம் நம் நாட்டின் உயர்ந்த செல்வங்கள்! அவர்களிடம் நிறைந்துள்ள அனுபவக் குவியல்கள் எதிர்காலக் கிழடுகளாகிய நமக்கு இப்போது தேவை. கிழட்டுச் செல்வங்களை இழந்தால் நாம் ஒரு நற்செல்வத்தை இழந்தவர்களாவோம்’ செல்லம்! நாம் இருவரும் நட்புடையவர்களாக இருக்க வேண்டுமானால், நான் சொல்கிறபடி நீ நடந்தாக வேண்டும். முதலில் பாட்டியிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும். அடுத்து, நாள்தோறும் பள்ளிப் படிப்பு முடிந்ததும், பாட்டியிடம் வந்து படித்துக்கொள்ள வேண்டும். நீ ஒப்புகிறாயா என்ன?

செல்லம் : அப்படியே செய்கிறேன், பாட்டி! மன்னியுங்கள் பாட்டி! நாள்தோறும் வருகிறோம். எங்களை வாழ்த்துங்கள் பாட்டி!

பாட்டி : அப்படியே செய்யுங்கள். வயது நிறைந்தவர்களைப் போற்றுவது நற்குணங்களில் ஒன்றாகும். நான் இவ்வுலகிற்பட்டு அறிந்த சிலவற்றை உங்களுக்குக் கூற முடியும். வேறென்ன செய்யமுடியும்? நீங்கள் இருவரும் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நல்வழி யில் நடந்து நல்வாழ்வு வாழ்ந்து செல்லக் கண்ணுகளாகத் திகழவேண்டும் என்பதே எனது ஆசை எனக்கென்ன! காடு, வா! வா! என்கிறது ... என்றோ ஒரு நேரத்தில்...

செல்லமும் கண்ணும் : பாட்டி! பாட்டி!! அப்படிச் செய்துவிடாதீர்கள். எங்கள் குழந்தைகளையும் கண்டு வாழ்த்திவிட்டு அப்புறம்தான் பிரியவேண்டும்.

பாட்டி : உங்கள் எண்ணம் வலிமை மிகுந்ததாக இருக்குமானால், அப்படியே நடைபெறும். நேரம், ஆகிறது. போய்ப் படியுங்கள்.

இருவரும் : வணக்கம் பாட்டி! வணக்கம்!

4. உடற் செல்வம்

நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது அறிவைப் பெற்றவர்களின் கருத்து. “நோய் வராமல் தடுப்பவன் அறிஞன், வந்து தடுப்பவன் மனிதன்: வந்தும் தடுக்காதவன் பிணம்” என்பது புதுமொழி. மக்கள் முயன்றால் நோய் வராமல் தடுத்து வாழமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று உண்ணும் உணவிலும், உடலின் உழைப்பிலும் சிறிது கருத்தைச் செலுத்துவதுதான்.

“பனி அதிகமாயிருந்தால் வெளியில் தலை நீட்டாதே என்று புத்திமதி சொல்லும் பெற்றோரைப் பார்த்திருப்பீர்கள். ஏன்? பனி என்றால் அவ்வளவு பொல்லாததா? அல்லது பயங்கரமானதா? ஒன்றுமில்லை. நன்றாகப் பனியில் திரியலாம். மழையிலும் நனையலாம். காற்றிலும் அடிபடலாம், ஆனால், ஒன்று; நீங்கள் வெயிலிலும் காய்ந்திருக்க வேண்டும். நாள்தோறும் ஒரு மணிநேரம் வெயிலைத் தாங்கும் உடம்பு ஒரு மணி நேரம் பணியையும், ஒரு மணி நேரம் மழையையும் தாங்கும். வெயில்படாத குழந்தைகளின் உடம்பில், உடல் நலம் இளமையிலேயே இடிந்து குட்டிச்சுவராகிப் பிறகு மண்ணாகி, மறைவாகிப் போய்விடும்.

வெயிலில் நாள்தோறும் அலைகின்ற மக்களின் உடலைக் காற்றும் மழையும் கடும்பனியும் வளர்த்து வருகின்றன. இவ்வுண்மையைச் சிற்றூர் மக்களிடத்தே காணலாம். கடும் வெயிலிற் காடு திருத்தி, மண்வெட்டி,

உழுது உண்டு வாழும் ஆண் மக்களும், பிள்ளையைப் பெற்ற அன்றே சேற்றில் இறங்கி நாற்று நடும் பெண் மக்களும், ஆடையும் அரைஞாணுமின்றி ஓடி விளையாடும் குழந்தைகளும், தங்கள் தங்கள் உடற்செல்வத்தை நகர மக்களுக்கு நன்கு காட்டி வருகிறார்கள்.

வெயில், மழை, பனி, காற்று ஆகிய நான்கும் மக்கள் உடலுக்கு உறுதி செய்யும் இயற்கைச் செல்வங்கள். இவற்றுள் வெயிலை லிலக்கி, மூன்றை மட்டும் ஏற்றால் உடல் நலம் கெடாமல் என்ன செய்யும்? மனிதன் ஒருவனே மலைபோன்ற இத்தவறுகளைச் செய்கிறான் விலங்குகளும், பறவைகளும் இத்தவறைச் செய்வதில்லை. அவை நான்கையும் பயன்படுத்திக்கொண்டு உடற்செல்வத்தையுப் பாதுகாத்து வருகின்றன.

“உணவு உடலுக்குத் தேவை” என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், “உணவை உண்ணும் உடலுக்கு உழைப்புத் தேவை” என்பதைச் சிலர் அறியார்கள். சிற்றூரில் வாழும் மக்கள் உணவுக்காக உழைத்துத் தீரவும் உழைப்புக்காக உண்டு தீரவும் வேண்டிய கட்டாய வாழ்க்கையில் உழன்று வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைக் கட்டடமும், உடல்நலச் செல்வமும் உழைப்பின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. அதனால், அவர்கள் விரும்பியதெல்லாம் உண்கிறார்கள்; வேண்டிய அளவு உண்கிறார்கள் “உண்பது செரிக்க உழைப்பது துணை செய்கிறது” என்பதை உழைப்பாளிகளாகிய சிற்றூர் மக்களிடத்தில்தான் காண முடிகிறது. உழைக்காது உண்ணுகின்ற மக்கள் நகர வாழ்வில் பலருண்டு. அவர்கள் “எதை உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்?” என ஆங்கில மருத்துவர்களிடம் தேடிச் சென்று கேட்பதும், அவர் துருவி ஆராய்ந்து பார்த்து, எடையில் நிறுத்து , கால்வாசி உணவை அரைவாசி வேகவைத்து, செரிக்கும் மருந்துடன் சேர்த்து உண்ணச் செய்வதும் வழக்கமாகப் போயிற்று.

செரிக்கும் மருந்துடன் உணவும் சேர்ந்து மனிதன் வயிற்றில் போனால்தானா செரிக்கும்?உயிரற்ற இயந்திரத்தில் போய்ச் சேர்ந்தாலும் செரித்துவிடும் என்பதை இப்போது எவரும் நன்கு அறியலாம். ‘உழைப்பு ஒன்றே உணவைச் செரிக்கச் செய்யும் மருந்து’ என்பதை உடற்செல்வம் விரும்பும் மக்கள் அனைவரும் உணர வேண்டும். உழைத்து உண்ணாத எவரும், உடற்செல்வத்தைப் பெற முடியாது என்பது முடிவு கட்டப் பெற்ற முடிவாகும்.

பொருட் செல்வம் தேட முயற்சி தேவை; உடற்செல்வம் தேடப் பயிற்சி தேவை. உடற்பயிற்சியின்றி உடற்செல்வத்தைப் பெற முடியாது. உடற்பயிற்சி என்றதும் தண்டால், கரலாக்கட்டை, எடைக்குண்டு, கைக்குண்டு முதலியவைகளை நினைத்துக்கொள்ள வேண்டாம். உடற்பயிற்சிக்கு அதுவும் தேவைதான். ஆனால், அதைப்பற்றிச் சொன்னால் சோம்பேறிகளின் காதுகளில் அது நுழையுமா? நுழையாது நான் சொல்ல வந்த உடற்பயிற்சி வேறு. அது உன் வேலைகளையாவது நீயே செய் என்பதுதான்.

அவரவர் வேலைகளை அவரவர் செய்வதன்மூலம் ஒரு உடற்பயிற்சி செய்து முடிகிறது. உன் வேலைகளை, நீயே செய் என்பதற்குப் பிறரைக் கொண்டு செய்து கொள்ளாதே என்பது பொருள். அதிகாலையில் எழுந்திரு. உனது போர்வையை மடி படுக்கையைத் தட்டிச் சுத்து; அதை இருக்குமிடத்திற்கு கொண்டுபோய் வை! கிணறாக இருந்தால் நீரை நீயே இறைத்துக் குளி குழாயாக இருந்தால் குளிக்கும் அறைக்கு நீரைக் கொண்டுபோய்க் குளி ஆறு, குளங்களானால் விரைந்து நடந்து செல்! உன் ஆடைகளை நீயே துவை இல்லாவிடில் தலையைத் துவட்டிய துண்டையாவது நீயே கசக்கிக் காய வை. உனக்கு வேண்டியதை நீயே போய் எடு! இவ்வாறு மனைவியையும், மக்களையும், அவரவர் வேலைகளைப் பிறர் துணையின்றிச் செய்யும்படி பழக்கு!

குறைந்த தூரத்தில் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் நடந்துசெல்! பிள்ளைகளையும் விளையாட்டுக் காட்டி நடத்திச் செல் எளிதில் தூக்கக் கூடியவைகளை நீயே எடுத்துப் போ! புகழுக்குப் போர்ட்டரைக் கூப்பிடுவதையும், பெருமைக்கு வண்டி ஏறுவதையும் ஒழி! கைத்தடியை, தலைப்பாகையைத் தூக்க ஆள் கூப்பிடும் மக்களைக் கண்டு நகை! அது அவரவர் வேலைகளை அவரவர் செய்யத் துணை செய்யும்.

உன் வேலைகளை நீயே செய்வதால், உடல் வலுப்பெற்று உறுதியாகி வரும். கற்பனையல்ல; முற்றும் உண்மை இவ்வுண்மையை வேலைக்கார்களுக்கு உள்ள வலு, பசி, உறக்கம் ஆகிய இம்மூன்றும் வீட்டுக்காரர்களுக்கு இல்லா திருப்பதிலிருந்தே நன்கு அறியலாம்.

கட்டுரையின் கருத்தும், அதன் முடிவும் ஒன்றே ஒன்று; அது, உனக்கு நீயே வேலைக்காரனாக மாறு என்பது தான். உடற்பயிற்சி செய்யாத மக்கள் கூட தம் வேலைகளைத் தாமே செய்வதன்மூலம் ஓர் உடற்பயிற்சியைச் செய்து விட முடியும், இரண்டும் செய்யாத மக்கள் உடலைப் பெற்றிருக்கலாம்; ஆனால், அவர்களால் உடற் செல்வத்தைப் பெற முடியாது. பிற செல்வங்களைத் தேடுமுன்னே உடற் செல்வத்தைத் தேடுங்கள். ஏனெனில் நோயற்ற வாழ்வு ஒன்றே குறைவற்ற செல்வமாகும்.

5. திருச் செல்வம்

“திரு” என்பது அழகு, தூய்மை, உண்மை, உயர்வு, நிறைவு எனப் பொருள்படும். ‘செல்வம்’ என்பது ‘பொருளை’க் குறிக்கும் பொன்னும் மணியும் உள்ளவரையே மக்கள் ‘செல்வர்’ எனக் கருதுகின்றனர்.

‘திரு’ செல்வத்தின் அடைமொழி ஆகவே, திருச் செல்வம் என்பது அழகிய செல்வம், தூய்மையான செல்வம், உண்மையான செல்வம், உயர்ந்த செல்வம், நிறைந்த செல்வம் எனப் பலவகையாகப் பொருள்படும், இத்‘திரு’வைப் பெற்ற செல்வம் எது? பொன்னும் மணியுமாகிய பொருள் தானா செல்வம்? இதுவும் ‘பொருட்செல்வம்’ எனக் கூறப்படுவதனால், பொருளுக்கு வேறாக ஒரு செல்வம் உண்டு என்றாவது செல்வம் பலவகைப்படும் என்றாவது எண்ண இடம் ஏற்படுகிறதே!

இந்த ஐயப்பாடு மணிக்கும் முத்துவுக்கும் ஏற்பட்டது. “எது செல்வம்!” என்பதை அறியவேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். மணியும் முத்துவும் நண்பர்கள். மணி பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். முத்து பரம ஏழை. ஆனாலும், இருவரும் அறிவாளிகள் ஆனதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. ஒருநாள் மணி தன் தந்தையிடம் சென்றான். தான் முத்துவுடன் சென்று செல்வம் தேடி வருவதாகக் கூறி, விடையும் பெற்றுப் பொருளும் பெற்றுப் புறப்பட்டான்.

இருவரும் பல ஊர்களைச் சுற்றினர்; பலவிடங்களில் தேடினர். முடிவில் ஒரு மன்னனின் மாளிகையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். மிகவும் விலையுயர்ந்த பொருள்கள், மேசைகள், நாற்காலிகள், தந்தக் கட்டில்கள், பஞ்சு மெத்தைகள், பட்டு விரிப்புக்கள், எளிதில் உருண்டு வரும் நிலைப் பெட்டிகள் என்றுமசையாத இரும்புப் பெட்டிகள், முத்துக்கள், பவளங்கள், பொற்கட்டிகள், மணிக்குவியல்கள், சரிகை உடுப்புக்கள், வைர நகைகள், வெள்ளிக் கோப்பைகள், விளையாடும் குழந்தைகள், அரிய நிலங்கள், அழகான வண்டிகள், ஆடுகள், மாடுகள், யானைகள், குதிரைகள் அனைத்தும் கண்டனர்.

மணி : முத்து! இந்த இடத்தில்தான் செல்வம் நிறைந்திருக்கிறது நாம் பலநாள், பல விடங்களிற்சுற்றி அலைந்தாலும், முடிவில் நிறைந்த செல்வத்தைக் கண்டு வெற்றி பெற்றோம் என மகிழ்ந்து கூறினான்.

முத்து : ‘நண்பா! அவசரப்படாதே! இங்கே செல்வமும் இல்லை; அது நிறையவுமில்லை? நாம் வெற்றியடையவுமில்லை’ என மிகப் பொறுமையாகக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியந்து வினவினான்.

முத்து : “அரண்மனையைச் சுற்றிச் சுற்றி வந்தோமே? அறை அறையாகப் பார்த்து வந்தோமே! எங்கேனும் ஒரு நூல் நிலையத்தைக் கண்டோமா? இல்லையே!” என்றான்.

மணி பெரிதும் வெட்கினான். ஆம். அது இங்கு இல்லை செல்வம் இருவகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட்செல்வம் எனப் பெறும் என மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. வருந்தினான். மறுபடியும் செல்வத்தைத் தேடி இருவரும் வேற்றூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மற்றோர் ஊரில் ஒரு பெருஞ்செல்வனுடைய மனையில் அழகான நூல் நிலையம் ஒன்று அருமையாக அமைக்கப் பெற்றிருப்பதை அறிந்து, இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். அடுத்த நாள்

மணி : முத்து கடைசியாக நாம் உண்மைச் செல்வததை இங்கு கண்டுவிட்டேவமல்லவா? என்றான்.

முத்து : ‘இங்கும் செல்வம் இல்லையே? என் செய்வது’ என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியப்புடன் வினவினான்.

முத்து : இந்நூல் நிலையமானது இம்மாளிகையில் வருவார்க்கும் போவார்க்கும் காட்சிச்சாலையாக வைக்கப்பட்டுள்ளதேயொழிய, இச்செல்வனது உள்ளத்தில் ஒரு நூலாவது இடம் பெறவில்லையே? ஏது இவனுக்குச் செல்வம்? என்றான்.

மணி பெரிதும் வெட்கிக் கலங்கினான். ‘பொருள்கள் அழிவதைப்போல நூல்களும் அழியக் கூடியவையே. கற்ற கல்வியே என்றும் அழியாச் செல்வமாகும்’ என மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. இருவரும் உண்மைச் செல்வத்தைத் தேட அடுத்த ஊர் சென்றனர்.

பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரில், பெரும் பணக்காரரான ஒருவர் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்துள்ளாரென்றும் அந்நூல்களிற் பெரும்பான்மையானவை அவர் படித்தவையே என்றும் அறிந்து இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். மறுநாள் பொழுது புலர்ந்தது. மணிக்கு வெகு மகிழ்ச்சி. தன் நண்பனை நோக்கி, ‘முத்து செல்வம் இங்கு முழு உருவைப் பெற்றிருக்கிறதல்லவா?’ என்று மகிழ்வோடு வினவினான்.

முத்து : ‘நண்பா, செல்வம் இங்கு இருந்தால் தானே அதைப்பற்றியும், அதன் முழு உருவைப் பற்றியும் பேசலாம்? செல்வத்தைத் தேடிப்போகிற நமது வழியில் ஏதோ குறையிருக்கிறதாகக் காண்கிறேன்’ என்றான்.

மணி : ‘என்ன?’ என வருந்திக் கேட்டான்.

முத்து : ‘இவர் ஒரு புத்தகப் பூச்சி. அவ்வளவுதான். கற்றறிந்த பெரியோர்களிடம் உள்ள உண்மைகளைக் கேட்டு அறியவேண்டும் என்ற உணர்ச்சி சிறிதேனும் இவரிடமில்லை. இனியேனும் ஏற்படும் என எண்ணுவதற்கும் இல்லை. ஏது இவருக்குச் செல்வம்?’ என்றான்.

மணி பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தினான் . ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்று மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. களைப்பு அவனுக்கு அதிகமாயிற்று. என்றாலும் உண்மையான செல்வத்தைத் தேட அவனும், முத்துவும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுவிட்டனர்.

அடுத்த ஊரில் அருமைநாதர் என்ற ஒரு பெரும் பணக்காரர் நூல் நிலையம் வைத்துள்ளார் என்றும், நன்கு கற்றவர் என்றும், கேள்வியறிவும் நிறையப் பெற்றவர் என்றும் மணி அறிந்து முத்துவுக்கும் அறிவித்தான். இருவரும் அங்கு சென்று, அவரோடு உரையாடி அன்றைப் பொழுதைக் கழித்தனர். தான் கேள்விப் பட்ட அனைத்தும் உண்மையாக இருக்கக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் மணி.

மணி : ‘நண்பா! இவரிடத்தில் நிறைந்த வெல்வம் இருப்பதாக நாம் கண்டுவிட்டோமல்லளா?’ என்றான்.

முத்து : நண்பா! செல்வத்தைத் தேடி அலைகின்ற நாம் அதைவிட்டு வெகுதூரம் விலகி, இவ்விடம் வந்திருக்கிறோம். நாம் செல்வத்தைக் காணும் பாதையில் செல்லவே இல்லை என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என ஏங்கிக் கேட்டான்.

முத்து : ‘இம்மனிதன் கற்ற கல்வியும், கேட்ட கேள்வியும் இவனுடைய ஒழுக்கத்திற்குச் சிறிதும் துணை செய்யவில்லை. ஓட்டைச் சட்டியில் செல்வத்தை தேடினாலும் தேடலாம்; ஒழுக்கமற்றவனிடத்தில் செல்வத்தைத் தேடி, செல்வத்தை நெருங்குவதாக எண்ணி, செல்வத்தை விட்டு வெகு தாரம் விலகி இங்கு வந்துவிட்டோம். இனி வழி திரும்ப வேண்டியதுதான்’ எனக் கூறினான்.

மணி : ஆழ்ந்த சிந்தனை செய்தான். ‘ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்’ என்று மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தி மயங்கினான். முத்துவை நோக்கி, ‘நண்பா வழி திரும்பி நடப்போம் வா!’ என அழைத்தான். இருவரும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுச் சென்ற வழியே திரும்பினர்!

மணி : ‘நண்பா! நம்மால் செல்வத்தைக் காண முடியுமா’ என்றான்.

முத்து : ‘ஏன் முடியாது? முயன்றால் முடியும்’ என்றான்.

மணி : ‘நண்பனே! உன்னால் முயன்று காண முடியுமா?’

முத்து : ‘முயன்றால் முடியும். ஆனால், நானோ பரம ஏழை. ஒவ்வொரு நாள் உணவுக்கும் உழைத்துத் தீர வேண்டும். எந்த ஏழைக்காவது சிறிது உணவும் கொடுத்தாக வேண்டும். நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோருக்கும் துணை இருந்தாக வேண்டும். இவைகளை விட்டுச் செல்வத்தைத் தேட, முயற்சி செய்ய, எனக்குப் பொழுது ஏது? என்றான்

மணி : ‘நண்பா! உன்னால் முடியாத ‘அது’ என்னால் முடிந்துவிட்டது. நான் செல்வத்தைக் கண்டுவிட்டேன்’ என்று கூறினான்.

முத்து : ‘ஆ! உண்மையாகவா? எனக்குக் காட்ட மாட்டாயா?’ என்றான்.

மணி : ‘நான் கண்டது மட்டுமல்ல, அது என் கையிலும் அகப்பட்டுக் கொண்டது’ எனக் கூறி, முத்துவின் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் க்ண்களில் ஒத்திக் கொண்டு, கண்ணீரை உகுத்து, ‘முத்து! நீயே செல்வம்’ என்றான்.

முத்து : நண்பனே! நன்றாகக் காட்டினாய். நன்கு. கண்டு கொண்டேன் நீயே நிறைந்த செல்வம் எனக் கூறி மார்புறத் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியடைந்தான். 

மணி : ‘நீ ஒழுக்கத்திற் சிறந்தவன், உன்னுடன்தான் பழகவேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவதுண்டு அச்செல்வத்தை இன்றுதான் முழுதுங்கண்டேன்’ என்றான்.

முத்து : ‘நீயே செல்வத்தின் உயிர்! இயல்பாகவே செல்வத்திற் சிறந்த குடும்பம்! உன் தந்தையோ பெருஞ்செல்வர். நன்கு கற்றிருக்கிறாய். கேள்வி அறிவும் பெற்றிருக்கிறாய் ஒழுக்கத்திற்குப் புது உயிர் கொடுத்துப் போற்றுகிறாய்! உன்னை விட்டுச் செல்வம் வேறாக எங்கிருக்கும்?’ எனக் கூறினான்.

மணி : நண்பா! விளையாட வேண்டாம். ஒழுக்கத்திற்கு உறைவிடமாகிய உன்னிடமிருந்து எனது அறிவு இன்று புதிய ஒளியைப் பெற்றிருக்கிறது. இன்னும் சில ஐயங்களுக்குப் பதில் வேண்டும், தயவுசெய்து கூறு. ஒழுக்கத்திலும் சிறந்த செல்வம் உலகில் இல்லையல்லவா?

முத்து : ஆம்! மக்கட்பிறவிக்கு ஒழுக்கம் ஒன்றே சிறந்ததும், நிறைந்ததும், உயர்ந்ததுமான செல்வம் ஆகும். ஒழுக்கமற்றவர் ‘மக்கள்’ என்று ஆகார். அவரை மாக்கள் என்றே அறிஞர் அழைப்பர்.

மணி : ‘அப்படியானால், செவிச் செல்வத்தைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ஒழுக்கமுள்ள ஒருவருக்குத்தான் கேள்வியும் செல்வமாகும். ஒழுக்கமற்றவன் கேட்டென்ன? கேளாதிருந்தென்ன? ஒழுக்கமில்லாதவன் கேள்வியிருக்கிறதே, அது கேள்வி என்றாகாது; அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்றாகும்.

மணி : ‘அது சரி கல்வியைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ‘ஆம் : ஒழுக்கமுள்ளவன் கற்றதுதான் கல்வி ஒழுககமற்றவன் கற்றது கல்வியல்ல. அது நீர்மேல் எழுதிய எழுத்து!’ மணி: ‘பொருளும் செல்வமல்லவோ?’

முத்து : ‘இல்லையென்றது யார்? ஒழுக்கம் உடையவனிடத்தில் இருக்கும் பொருளுக்குத்தான் செல்வம் என்று பெயர். ஒழுக்கமற்றவனிடத்தில் இருக்கும் பொருளுக்குச் ‘செல்வம்’ என்று பெயரல்ல அது அவனுடைய தீய செயல்களுக்குப் பயன்படுவதால் கொண்டவனைக் கொல்லும் கொடுவாள்’ என்றே பெயர் பெறும்.

வழிப்பேச்சு ஒருவாறு முடிந்தது. மணியும் முத்துவும் வீட்டை அடைந்தனர். மணியின் தந்தை இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்று, ‘எங்கே, தேடிய செல்வத்தைக் காட்டுங்கள்?’ என்றார். இருவரும் நடந்தவைகளைக் கூறினர். முத்து மணியைச் ‘செல்வம்’ என்றான் மணி முத்துவைச் ‘செல்வம்’ என்றாள். ‘நீங்கள் இருவருமே செல்வங்கள்’ என மணியின் தந்தை மனமகிழ்ந்து இருவரையும் இரு கைகளாலும் தழுவிக் கண்ணிருகுத்தார். “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” என்ற குறட்பா அவர்க்கு நினைவுக்கு வந்தது; மகிழ்ந்தனர். முத்துவின் தாய் தந்தையரையும். தன்னோடு வந்திருக்கச் செய்து, முத்துவைத் தன் மருமகனாகவும் பெற்று, உண்மைச் செல்வங்களைப் பெற்ற அச்செல்வர் உயர்ந்த செல்வராகக் காட்சியளிக்கின்றார்.

இவ்வரலாறு நமக்கு அறிவிப்பதெல்லாம், ‘ஒழுக்கமே உயரிய செல்வம்’ என்பதுதான், ‘திரு’வும், ஒழுக்கமுள்ள விடத்தில்தான் இருக்கும். ஒழுக்கம் வேறு, திரு வேறு அல்ல ஒழுக்கமற்றவர்களின் தொடர்பை, ‘திரு நீக்கப் பட்டார் தொடர்பு’ எனக் கூறுவர் அறிஞர்.

முடிவாக நாம் அறிந்துகொண்டது என்னவெனில், ‘ஒழுக்கமே முதற் செல்வம்; மற்றவை துணைச் செல்வங்கள் ; இவை அனைத்தும் சேர்ந்ததே திருச்செல்வம்” என்பதுதான். இதன்படி மணியும், முத்துவும் திருச்செல்வம் பெற்ற திருச் செல்வர்களானார்கள்.

தம்பி! நீ திருச்செல்வனாக இருக்க ஆசைப்படு. தங்கையே! நீ திருச்செல்வியாக இருக்க விரும்பு. நமது குடும்பம் திருச்செல்வம் பெற்ற குடும்பம் என்பதும், நமது வாழ்வு திருச்செல்வம் பெற்ற வாழ்வு என்பதும், நமது நாடு திருச்செல்வம் பெற்ற நாடு என்பதும், என்றென்றும் உனது நினைவிலிருக்கட்டும்.

வாழட்டும் திருச்செல்வம்!

வளரட்டும் திருச்செல்வம் பெற்ற குடும்பங்கள்!