ஊர்வலம் போன பெரியமனுஷி
வல்லிக்கண்ணன் 

நேரு பாலர் புத்தகாலயம்

ஊர்வலம் போன

பெரியமனுஷி

வல்லிக்கண்ணன்

சித்திரங்கள்

எஸ். கோபாலன்

ஊக்குவிப்பாளர் - விற்பனையாளர்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி. லிமிட்,

44-பி, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,

அம்பத்துார், சென்னை - 600 098

ISBN 81-237.0737-1

* * *

1994 (சக 1915) வல்லிக்கண்ணன், 1982

ரூ. 9.00

Madam Rides the Bus (Tamil)

வெளியீடு : டைரக்டர், நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா

ஏ-5, கிரீன் பார்க் புது டில்லி - 110 016

* * *

வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது.

அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் காட்சி தருகிற சிறுமியே வள்ளியம்மை.

அவளுக்கு அந்தப் பெயர் பிடித்திருந்தது. தனது பெயர் மீது கொஞ்சம் வெறுப்பு ஏற்படுவதும் உண்டு. அது எப்பொழுது என்றால், இதர சிறுமிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு, ராகம் போட்டு

'வள்ளி அம்மே தெய்வானே,

உம் புருசன் வைவானேன்?

கச்சேரிக்குப் போவானேன்?

கையைக் கட்டி நிப்பானேன்?'

என்று இழுக்கும்போதுதான்.

அவ்வேளையில் அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல ஓடாது. கண்கள் நீரைக் கொட்டத் தயாராகி விடும். அவள் உலகத்தின் வெறுப்பை எல்லாம் தனது சின்னஞ்சிறு உள்ளத்தில் சேர்த்து, கூடிய அளவு முகத்தில் கொண்டு வந்து நிறுத்தி, 'வவ்வவ்வே' என்று கீழுதட்டை கடித்து 'வலிப்பு' காட்டுவாள்.

மற்றப் பிள்ளைகள் சும்மா இருந்து விடுவார்களா? 'வலிச்ச மோரையும் சுறிச்சுப்போம்- வண்ணாந் துறையும் வெளுத்துப்போம்' என்று வேறொரு கோரஸ்' எடுப்பார்கள். அப்புறம் வள்ளியம்மை அழுது கொண்டு போக வேண்டியதுதான்!

அப்படி அவள் அழுதபடி தன் இடம் தேடிப் போகின்ற போதுதான் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள் மீது கோபம் கோபமாக வரும். கோபமெல்லாம். கொஞ்ச நேரத்துக்கே. பிறகு அதே பெயர் அழகானதாக, இனியதாகத் தோன்றும்.

எட்டு வயது வள்ளியம்மை எப்பப் பார்த்தாலும் தெருவில் நிற்பதற்கு அவளோடு சேர்ந்து விளையாடக் கூடிய பிள்ளைகள் அக்கம் பக்கத்து வீடுகளில்

. இல்லை என்பதும் ஒரு காரணம். அடுத்த தெருவுக்குப் போலாம். ஆனால் 'நீ வாசல்படி தாண்டினியோ, அவ்வளவுதான். உன்னை வெட்டிப் பொங்க லிட்டிருவேன்... உன் காலை முறிச்சிருவேன்.... உன் முதுகுத் தோலை உரிச்சிருவேன்' என்ற ரீதியில் மிரட்டக் கூடிய தாயார் இருக்கிறாளே. அம்மாவிடம் கொஞ்சம் பயமிருந்தது வள்ளிக்கு.

தெருவாசல் படியில் நிற்பதனால் பொழுது போகும் என்பதோடு, புதிய புதிய அனுபவங்களும் கிட்டும். அது வள்ளிக்கு நன்றாகத் தெரியும். ஒரு சமயம் வெள்ளைக்காரத் துரை ஒருவன் அந்த வழியாகப் போனான்.

தோள் மீது துப்பாக்கியைச் சுமந்து கொண்டு, 'தொப்பியும், கால்சராயும் பூட்சும் போட்டுக்கிட்டு, செக்கச் செவேல்னு- ஏயம்மா, அது என்ன நிறம் கிறே! கருனைக் கிழங்கைத் தோலுரிச்சுப் போட்ட மாதிரி போனான்' என்று, அவனைப் பார்த்த பெண்கள் பேசினார்கள்.

'மலைக்குப் போயிருப்பான். முசலு வேட்டை யாட' என்று ஒருவர் அறிவித்தார்.

ஆனால் வள்ளியம்மை என்ன செய்தாள்? தன் வலது கையை உயர்த்தி, நெற்றியில் வைத்து, “ஸலாம் தொரெ!" என்றாள்.

அவன் திரும்பிப் புன்னகை புரிந்தான். "குட் மார்னிங்” அறிவித்து விட்டுத் தன் வழியே போனான். அப்புறம் வள்ளியைக் கைகொண்டு பிடிக்க முடியவில்லை!' துள்ளினாள். ஆடினாள். குதியாய்க் குதித்தாள்.

'வெள்ளைக்காரத் துரை எனக்கு ஸலாம் போட்டாரே!' என்று பாடினாள். அவள் பெருமை அந்தத் தெருவில் சிறிது உயர்ந்து விட்டது

"என்ன இருந்தாலும் இந்தப் புள்ளெக்கு ரொம்ப தைரியம் தான்" என்று பலரும் சொன்னார்கள்.

அது போக்குவரத்து மிகுந்த ரஸ்தா அல்ல. தெருக் காரர்கள் ஏதாவது சோலியின் பேரில் அப்படியும் இப்படியும் போவார்கள். வேறு தெருக்காரர்கள் எங்காவது செல்வார்கள். எப்பவாவது ஒரு வண்டி போகும். கட்டை வண்டி, மை போடப்படாத சக்கரங்கள் கிரீச்சிட, 'கடக்ட்டக்' என்று ஓசையிட்டுக் கொண்டு நகரும். வண்டிமாடுகளின் கழுத்து மணி ஒசை ஜோராக ஒலிக்கும். நாய் ஒன்று வேலை யில்லாவிட்டாலும், ஏதோ அவசர அலுவல் மேல் போகிறது போல், தெற்கே இருந்து வடக்கே ஓடும். அங்கொரு வீட்டுத் திண்ணைப் பக்கத்தில் நின்று மோந்து பார்க்கும். பிறகு தும்பைச் செடியை மோந்து பார்க்கும். காலைத்தூக்கி, செடியை நனைத்து விட்டு, வேகமாக நடக்கும். அப்புறம், புறப்பட்ட இடத்தில் எதையோ மறதியாக விட்டுவிட்டு வந்தது போலவும், அதை எடுப்பதற்காக விரைவது போலவும், அது வடக்கேயிருந்து தெற்கு நோக்கி ஓடியே போகும். பிச்சைக்காரன் வருவான். காய்கறி விற்பவன் வருவான்- இப்படி எவ்வளவோ வேடிக்கைகள்!

அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்துக்கு- களங்கமற்ற பெருவிழிகளுக்கு எல்லாமே இனிமைகள்தான்; எல்லாம் அற்புதமே.

அனைத்திலும் மேலான வேடிக்கை ஒன்று உண்டு. ஒரு மணிக்கு ஒரு தடவை டவுண் பஸ் அந்த வழியாக வரும். கால் மணி நேரம் கழித்துத் திரும்பிப் போகும். அப்படி வருகிற போதும், போகிற போதும் பஸ்ஸினுள் இருப்பவர்களைப் பார்ப்பதில் வள்ளி அம்மை அலுப்படைவதே இல்லை. அவள் உள்ளத்தில் ஒரு ஆசை.

தினந்தோறும் எத்தனையோ தடவை கார் வந்து போகுதே. அதில் ஒரு தடவை கூட்டப் போக முடியலியே. என்றாவது ஒரு நாள் நானும் பஸ்ஸில் ஏறி, அது போற இடத்துக்கெல்லாம் போவேன். ஆமா. போகத்தான் வேணும் -- இப்படி ஆசைப்பட்டாள் வள்ளி.

அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தில் பிறந்த ஆசை மெதுவாகப் பரவியது. அடர்த்தியாக மண்டியது. இனிய கற்பனைகளை மலர வைத்தது. ஊருக்குள் வந்து திரும்பிய ஒவ்வொரு பஸ்ஸும், அவற்றிலே வந்திறங்கிய- அல்லது, கிளம்பிச் சென்ற- ஒவ்வொரு ஆளும் அவளுடைய எண்ணங் களை, ஏக்கங்களை, கனவுகளை, வளர்க்கும் வாய்ப்பு களாகவே விளங்கினர்.

எப்பவாவது அவளுடன் சேர்ந்து விளையாடும் எந்தச் சிறுமியாவது "நான் ஊருக்குப் போயிருந்தேன். தாத்தா வீடு டவுணில் இருக்குதே" என்ற ரீதியில் ஆரம்பித்து, பெருமையடிக்கும் போது வள்ளி அம்மையின் உள்ளம் பொறாமை கொள்ளும் தனது எரிச்சலையும், பொறாமையையும் காட்ட அவள் "பிரவுடு பீத்துறா என்று கரிப்பாள்.

"பிரவுடு என்ற பதத்திற்கு அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ வள்ளி அம்மையைப் போன்ற சிறுமிகள் அதைத் தாராளமாக உபயோகித்து வந்தார்கள். அதை ஒரு ஏச்சுப் போல் உபயோகித்தார்கள். அதை அழுத்தமாக உச்சரிப்பதில் வள்ளிக்கு ஒரளவு திருப்தி உண்டாகும். அவ்வளவுதான். அவளுடைய ஆசையோ மேலும் கொஞ்சம் வளர்ந்திருக்கும்.

வள்ளி அம்மை, பஸ்ஸில் போய் வருகிறவர்கள் போக விரும்புகிறவர்களுக்கு அனுபவ மொழி புகன்றவர்கள் எல்லோரது பேச்சுக்களையும், சந்தர்ப்பம் கிட்டிய போதெல்லாம் கூர்மையாகக் கவனித்து வந்தாள். தானும் சிலரிடம் கேள்வி கேட்டு சில விஷயங்களைத் தெரிந்து கொண்டாள்.

அவ்வூரிலிருந்து டவுணுக்கு ஆறு மைல். பஸ் சார்ஜ் முப்பது காசு. போக முப்பது காசு, வர முப்பது காசு; ஆக அறுபது காசு வேண்டும். ஒரு பஸ்ஸில் ஏறினால், அது முக்கால் மணி நேரத்துக்குள் டவுண் போய் சேரும். அதிலிருந்து இறங்காமல், இன்னொரு முப்பது காசு கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டால், அதே பஸ்ஸில் உடனேயே திரும்பி விடலாம். அதாவது, மத்தியானம் 1 மணிக்கு பஸ் ஏறினால் 1-45-க்கு டவுணில் இருக்கலாம். அதே பஸ்ஸில் 'பட்டணப் பிரவேசம்' மாதிரிச் சுற்றி வருவதனால் இரண்டே முக்கால் மணிக்குள் ஊருக்கு வந்து சேர்ந்து விடலாம்.

இந்த வாய்ப்பாட்டை வைத்துக் கொண்டு வள்ளி அம்மையின் பிஞ்சு மனம் ஏதேதோ கணக்குகளைப் போட்டது. சரியான விடை காண்பதற்காக, பல தடவைகள் அழித்துக் கழித்துத் திருத்திக் கஷ்டப் பட்டது. வழி வகைகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமாய் 'ஆராய்ச்சி' பண்ணியது.

முடிவில் ஒரு விடை அதற்குக் கிடைத்து விட்டது. ஒருநாள்.....

'இரண்டு மணி பஸ்' ஊர் எல்லையைத் தாண்டி, பெரிய ரஸ்தாவில் திரும்பியபோது “பஸ் நிக்கட்டும்! பஸ் நிக்கட்டும்!" என்று மெல்லிய குரல் ஒன்று எழுந்தது. சிறு கை ஒன்று முன் நீண்டு சைகையும் காட்டியது.

பஸ்ஸின் வேகம் குறைந்தது. கண்டக்டர் எட்டிப் பார்த்து, “யாரு வரப்போறாங்க? சீக்கிரம் ஓடி வரச் சொல்லு!” என்று கத்தினான்.

“பஸ் நிக்கட்டும். நான் ஏறணும்” என்று - மிடுக்காகக் குரல் கொடுத்தாள் எட்டு வயது வள்ளி

"ஓகோ, அதும் அப்படியா!” என்று சிரிப்புடன் சொன்னான் அவன்.

“எது எப்படியோ- எனக்குத் தெரியாது. நான் டவுனுக்குப் போகனும் இந்தா காசு" "சரி சரி முதல்லே ஏறு" என்று கூறிய கண்டக்டர், அவள் பக்கம் கைநீட்டி, அவளைப் பஸ்ஸுக்குள் துாக்கி வைத்தான்.

"நான்தான் ஏறி வாறேனே. அதுக்குள்ளே நீ ஏன் அவசரப்படுறே?" என்று வள்ளி அம்மை மூஞ்சியைச் சுளித்தாள்.

கண்டக்டர் கொஞ்சம் தமாஷ் பேர்வழி. "கோவிச்சுக்காதிங்க மேடம். ஸீட்லே உட்காருங்க....

எல்லாரும் வழிவிடுங்க ஸார், பெரிய மனுஷி வாறாங்க" என்றான். பொதுவாக அந்நேரத்துப் பஸ்ஸில் கூட்டம் இராது, அங்கொருவர் இங்கொருவராக ஆறேழு பேர்கள் இருந்தனர். எல்லோரும் வள்ளி அம்மை யையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்டக்டரின் பேச்சைக் கேட்டுச் சிரித்தார்கள்.

அவளுக்கு வெட்கமும் கூச்சமும் ஏற்பட்டன. தலையைக் குனிந்தபடி நடந்து ஒரு இடத்தில் வசதியாக அமர்ந்தாள்.

“புறப்படலாமா அம்மா?" என்று கேட்டுச் சிறு முறுவல் பூத்த கண்டக்டர் 'ரைட்' கொடுத்தான். பஸ்ஸும் உறுமிக் கொண்டு கிளம்பியது.

அது நேர்த்தியான பஸ். புத்தம் புதுசு. வெளிப் புறம் வெள்ளை வெளேர் என்றிருந்தது. பச்சை வர்ணம் பல இடங்களில் பளிச்சிட்டது. உள்ளே , கைப் பிடிக்க உதவும் உருளைக் கம்பிகள் எல்லாம் வெள்ளி மாதிரி மினுத்தன. எதிரே ஜோரான கடியாரம் ஒன்றிருந்தது. ஸீட்டுகள் ஜம்மென்று- அருமை பான மெத்தை மாதிரி-விளங்கின.

அனைத்தையும் பார்வையால் விழுங்கினாள் வள்ளி அம்மை. 'ஜன்னல்'களுக்கு கண்ணாடி மறைப்பு இருந்தது, அவள் பார்வையைச் சிறிது மறைத்தது. அதனால் அவள் ஸீட் மீது நின்று வெளியே பார்த்தாள்.

குளத்தங்கரை ரஸ்தா மீது பஸ் ஓடிக் கொண்டிருந்தது. குறுகலான, நொடி விழுந்த பாதை. ஒருபுறம் குளம். அதற்கப்பால் பனைமரங்களும், புல்வெளியும், தூரத்து மலையும், நெடுவானும். இன்னொரு பக்கம் பெரும் பள்ளம். பசும் பயிர், தலையாட்டும் வயல்கள்.

எல்லாம் கண்கொள்ளாக் காட்சி அவளுக்கு.

"ஏபாப்பா!” என்ற குரல் அவளை உலுக்கியது. "அப்படி நிற்காதே. உட்காரு”.

அவள் இறங்கி நின்று, தலை நிமிர்ந்து பார்த்தாள். பெரியவர் ஒருவர் நல்லது எண்ணிப் பேசினார். ஆனால் வள்ளிக்கு அவர் பேச்சுப் பிடிக்கவில்லை.

“இங்கே யாரும் பாப்பா இல்லை, ஆமா. நான் காசு குடுத்திருக்கேனாக்கும்” என்றாள்

கண்டக்டர் முன் வந்தான். “நீங்க பெரிய அம்மா ஆச்சுதுங்களே. பாப்பா வந்து தனியா டவுணுக்குப் போகக் காசு எடுத்துக்கிட்டு வர முடியுங்களா?” என்றான்.

வள்ளி அம்மை அவனைக் கோபமாகப் பார்த் தாள். "நான் ஒன்றும் அம்மா இல்லே. ஆமா.... நீ இன்னும் எனக்கு டிக்கட் தரலே" என்றாள்.

“ஆமா" என்று அவள் தொனியில் அவன் உச்சரிக்கவே மற்றவர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்தாள்.

அவன் டிக்கெட்டைக் கிழித்து அவளிடம் கொடுத்தான். “ஜோரா ஸீட்டிலே உட்காரு. நீதான் காசு கொடுத்திருக்கிறியே. ஏன் நிற்கணும்?" என்

"உங்கிட்டே ஒண்ணும் கேட்கலே. ஆமா” என்று தலையை தோள்மீது இடித்தாள் வள்ளி.

“நின்றால், பஸ் ஆடுற ஆட்டத்திலே நீ தவறி விழ நேரலாம். மண்டை உடையலாம். அதுக்காகத் தான் பாப்பா ....”

"நான் பாப்பா இல்லேங்கிறேன், நீ என்னா? எட்டு வயகப் பொண்ணு மாதிரியா இருக்கும் பாப்பா?" என்று வெடுவெடுத்தாள் அவள்.

"ஆமா எட்டு வயசு ஆயிட்டா அவங்க பெரியவங்களா வளர்ந்திடுவாங்க என்பது தெரியலியே. நீங்க என்னா ஸார்!" என்று கண்டக்டர் சொன்னான். அவன் பஸ்ஸை நிறுத்தி, வேலையை கவனிக்க வேண்டியிருந்ததால், தொடர்ந்து பேச முடியவில்லை.

ஒருவர் இறங்கினார். இருவர் ஏறினார்கள். "ரைட்" என்று கத்தினான் கண்டக்டர்.

வள்ளி வேடிக்கை பார்ப்பதில் ஆழ்ந்திருந்தாள்.

"ஏம்மா, நீ தனியாவா போறே?" என்று ஒரு குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது. புதிதாக ஏறிய எவளோ ஒருத்தி. வயசு முதிர்ந்தவள். அவள் பாம்படமும், தொள்ளைக்காதும்! கருப்பட்டிப் புகையிலையும் வெத்திலைச் சாறும்! உவே, மூஞ்சியைப் பாரு என்றிருந்தது. வள்ளிக்கு.

“ஆமா. தனியாகத்தான் போறேன். நான் டிக்கட் வாங்கியாச்சு" என்று மிடுக்காகச் சொன்னாள்.

“ஆமா. டவுணுக்குப் போறாங்க. முப்பது காசு டிக்கட்டு" என்றான் கண்டக்டர்.

“நீ போயேன் ஒன் சோலியைப் பாத்துக்கிட்டு!" என்று சொன்னாள் வள்ளி. சிரிப்பு வந்தது அவளுக்கு.

அவன் குறும்புத்தனமாகச் சிரித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

"சின்னப்புள்ளெ இப்படி ஒத்தையிலே புறப்பட்டு வரலாமா? டவுணிலே எங்கே போகணும்? வீடு தெரியுமா, தெரு தெரியுமா?" என்று நீட்டினாள் பெரியவள்.

“ஒங்கிட்டே ஒண்ணும் கேட்கலே. எனக்கு எல்லாம் தெரியும் போ" என்று எரிந்து விழுந்தாள் வள்ளி. மேலே பேச்சைக் கேட்கவோ, பேச்சைக் கொடுக்கவோ, விரும்பாதவளாய் வெளியே பார்த்தபடி இருந்தாள்.

இது அவளுடைய முதல் யாத்திரை. மகாப் பெரிய யாத்திரை. எத்தனை காலமாக ஆசைப்பட்டு, கனவு கண்டு, திட்டமிட்டு, இன்று பலித்திருக்கிறது இது. 'முப்பதும் முப்பதும் அறுபது!' சுலபமாகத் தோன்றலாம் நமக்கு. வள்ளி அதைச் சேர்க்க எவ்வளவு

சிரமப்பட நேர்ந்தது.... ஐந்து காசு, ஐந்து காசாக.... நல்லவேளை- ஒரு மாமா வந்தார். 'திருவிழாத்துட்டு' என்று இருபத்தைந்து காசு கொடுத்தார். அவள் 'பேராசை' ஒன்றைத் தணிக்கும் முயற்சியில் முழுமனசையும் ஈடுபடுத்தியதால், எத்தனையோ சில்லரை ஆசைகளைக் கொல்ல வேண்டியிருந்தது. நாவுக்கு ஆசை காட்டும் திண்பண்டங்களைத் தியாகம் செய்தாள். கண்ணை வசீகரிக்கும் பலூன், சிறு பொம்மை முதலியவைகளை வேண்டாமென்று ஒதுக்கினாள். குடைராட்டினம் சுற்றுவது- அது எப்பேர்ப்பட்ட விஷயம்!. அதில் ஏறலாம் என்று மனம் என்னமாய்க் குதித்தது! காசு செலவழிந்து விடுமே என்ற பயமல்லவா அவளைப் பின்னுக்கு இழுத்தது.

உலகத்தை ஆராய வேணும் என்ற எண்ணம் மனித உள்ளத்தில் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று புரியவில்லை. அந்தத்துடிப்பு பெற்று விட்டவர்கள் எந்தவிதக் கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளத் தயாராகிவிடுகிறார்கள். அனுபவம் பெற வேண்டும் என்ற தவிப்பு அவர்களை முன்னே முன்னே இழுக்கிறது.

வள்ளி அம்மைக்கும் ஏற்பட்டது. அதன் பலன் தான் அவள் பஸ்ஸில் தனியாக- தனது துணிச்சலே துணையாக- ஏறி உட்கார்ந்திருந்தாள். அதற்காக அவள் வருத்தப்படவில்லை.

பஸ் வெட்டவெளி நடுவே பாய்ந்து ஓடியது. சிற்றூர்களைத் தாண்டிச் சென்றது. வண்டிகளையும், பாதசாரிகளையும் விழுங்குவது போல் பாய்ந்து, ஒதுங்கி, பின் நிறுத்திவிட்டு வேகமாய் முன்னேறியது. மரங்கள் ஓடி வந்தன, ஒன்றும் செய்ய முடியாமல்

நின்றன. புதிய இடங்கள், புதிய காட்சிகள்எல்லாமே புதிய அனுபவம்.

திடீரென்று கைகொட்டிச் சிரித்தாள் வள்ளி. எதிரே- பஸ்ஸுக்கு முன்னால்- ஒரு மாடு, அழகான இளம் பசுமாடு. வாலைத் தூக்கிக் கொண்டு, நாலு கால் பாய்ச்சலில் முன்னே. ஓடியது. பஸ்ஸிடம் பந்தயமிடுவது போல, மிரண்டு போய், அது முன்னே ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் ஹார்ன் அடிக்க அடிக்க அது துள்ளி ஓடியதே தவிர விலகவில்லை.

அது மிகுந்த வேடிக்கையாகப் பட்டது வள்ளிக்கு. கண்களில் நீர் பொங்கும் வரை விழுந்து விழுந்து சிரித்தாள் அவள்.

"அம்மா, நாளைக்கு ஊரு கூடிச் சிரிக்கப் போறாகளாம். அப்ப நீயும் சேர்ந்து சிரிக்கணும். பாக்கி வச்சிரு. இப்பவே பூராவையும் சிரிச்சுக் கொட்டிப்பிடாதே" என்றான் கண்டக்டர்.

பசு ஒரு தினுசாக விலகிக் கொண்டது.

பெரிய ஊர் நடுவே பஸ் ஓடியது. 'ரயில்வே கேட் அடைத்துக் கிடந்ததால், காத்து நின்றது. ரயில் வண்டி ஓடியது. பிறகு பஸ் புறப்பட்டு, பரபரப்பு மிகுந்த ஜங்ஷனை அடைந்தது. நடமாட்டமும் நாகரிகமும் முட்டி மோதிய கடை வீதி வழியாக, பெரிய ஹைரோடு வழியாக, ஒடியது. டவுணுக்குள் பிர வேசித்தது. பெரிய வீதிகளில் சென்றது.

வியப்பால் விரிந்த கண்களோடு வள்ளி அம்மை எல்லாவற்றையும் விழுங்கினாள். ஏயம்மா, எவ்வளவு கடைகள்; என்னென்ன சாமான்கள்! என்ன பகட்டு! எத்தனை ரகப் பட்டாடைகள். அவள் பிரமித்து விட்டாள்.

“என்னம்மா, இறங்கலியா? நீ கொடுத்த முப்பது காசு செரிச்சுப் போச்சு” என்றான் கண்டக்டர்.

"நான் இறங்கலே. இதே பஸ்ஸில் திரும்பப் போறேன். இந்தா காசு"

அவன் அந்தச் சிறுமியை அதிசயமாகப் பார்த்தான். "ஏன், என்ன விஷயம்?" என்றான்.

“ஒண்ணுமில்லே. பஸ்ஸில் வரணும்னு நினைச்சேன். அதுதான்."

“கீழே இறங்கி, ஊரைப் பார்க்கணும்கிற ஆசை இல்லையா?” என்று அவன் கேட்டான். “ஒத்தையிலேயா? அடியம்மா எனக்கு பயமா யிருக்குமே” என்றாள் வள்ளி. அவள் அதைக் கூறிய விதமும், காட்டிய முகபாவமும் அவனுக்கு இனித்தன.

"காரிலே வாறதுக்கு மட்டும் பயமாக இருக்க லியோ ?"

"இதிலே என்ன பயம்?" என்று சவாலிட்டாள் சிறுமி.

“சும்மா கீழே இறங்கி, அந்த ஓட்டலுக்குள்ளே போயி, காபி சாப்பிடு. பயம் ஒண்ணும் ஏற்படாது"

"ஊகும், நான் மாட்டேம்மா."

"சரி. நான் உனக்கு மிக்ஸர், பக்கடா ஏதாவது வாங்கி வரட்டுமா?"

"வேண்டாம். என்கிட்டே காசு இல்லே. ஒரு டிக்கட் கொடு. அது போதும்" என்று உறுதியாகச் சொன்னாள் அவள்.

“நீகாசு தர வேண்டாம். நான் வாங்கித் தாறேன்."

“வேண்டாம். வேண்டவே வேண்டாம்." அவள் உள்ளத்தின் உறுதி, குரலிலேயே தொனித்தது.

உரிய நேரம் வந்ததும், பஸ் புறப்பட்டது. இப்பொழுதும் அதிகமாக ஆட்கள் ஏறவில்லை.

“உன்னை ஊரிலே உங்க அம்மா தேட மாட்டாங்களா? நீ பாட்டுக்கு இப்படி வந்துட்டியே!" என்றான் கண்டக்டர், டிக்கட்டைக் கிழித்துக் கொடுத்தபோது.

“ஒருத்தரும் தேடமாட்டாங்க. ஆமா" என்றாள் வள்ளி.

வந்த வழியே மீண்டும் பஸ் பிடித்துத் தந்த காட்சிகள் அவளுக்கு அலுப்புத் தரவில்லை. மகிழ்ச்சியைப் புதுப்பிக்க உதவின அவை. ஆனால் திடீரென்று அந்தப் பகமாடு. நடு ரோட்டில் செத்துக் கிடந்தது. ஆமாம், போகும்போது அவளுக்கு அதிகமான சந்தோஷத்துக்கு வழி செய்த அதே பசுமாடு தான். அவ்வழியே போன வேறொரு பஸ்ஸில் அடிபட்டு இறந்து விட்டது. அது.

அழகான ஜீவன், தனது துள்ளலையும் துடிப்பையும் இழந்து, மரக்கட்டை போல, அசைவில்லாமல் கிடந்தது. அதற்கு எமனாக வாய்ந்த பஸ்ஸும் பக்கத்தில் நின்றது. சிறு கும்பல் கூடியிருந்தது.

இந்த பஸ் வேகத்தைக் குறைத்தது. டிரைவரும் கண்டக்டரும், மற்றவர்களும் விவரம் அறியத் துடித்தனர். அறிந்தனர். தம் வழியைத் தொடர முனைந்தனர். பஸ் புறப்பட்டு வேகமாய் ஒடியது.

வள்ளி அம்மையும் அந்தக் காட்சியைப் பார்த்தாள். "அப்பதே துள்ளி ஒடிச்சுதே அந்தப் பசு தானே?. ஆமா, அதே பசுதான் என்று கண்டக்டர் சொன்னான். ஒவ்வொருவரும்

அவரவர் கருத்தைச் சொன்னார்கள். வள்ளி பிறகு வாய் திறக்கவில்லை.

* * *