தமிழர் சமயம் எது?
ந.சி. கந்தையா
1. தமிழர் சமயம் எது?
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழர் சமயம் எது?


தமிழர் சமயம் எது?

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : தமிழர் சமயம் எது?
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 16 + 304 = 320
  படிகள் : 2000
  விலை : உரு. 140
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,
  இராயப்பேட்டை, சென்னை - 600 014.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.

2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.

எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்

முன்னுரை
இன்று பலவகைக் கிரியைகளோடும் ஆடம்பரங் களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமயத் தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திரவித்தைக்காரர், பூசாரிமார்களால் கையாளப் பட்ட சில பழக்க வழக்கங்களின் நிழல்கள். உண்மையான சமயம் என்பது உலகம், கடவுள், உயிர் என்னும் முப் பொருள்களின் இயல்புகளை ஆராய்ந்து அறிவால் உயர் வெய்துவது. இன்று சைவ சித்தாந்தம் என்று வழங்கும் சமயக் கருத்துக்களே வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுவரும் தமிழரின் மதக்கொள்கைகளாகும் என டாக்டர் போப்பையர் தமது திருவாசக மொழிபெயர்ப் பில் ஓரிடத்திற் கூறியுள்ளார். தமிழரின் உண்மையான சமயக்கொள்கை “ஞானத்தினால் வீடு” என்பதேயாகும். இன்று மக்கள் “மூடத்தனத்தினால் வீடு” என்று சொல்லும் படியாக உழன்று வருகின்றனர். கிரியைகள் புரிவதாலும், பொங்கல், படையல், பலிகள் இடுவதினாலும், குடைகள், ஆபரணங்கள், வாகனங்கள் முதலியவைகளைக் காணிக்கையாகக் கொடுப்பதினாலும், கொட்டு முழக்கு, ஆடல் பாடல் முதலிய ஆரவாரங்களோடு விழாக்கள் எடுப் பதினாலும் கடவுளை ஏமாற்றிவிட முடியாது. இவைகள் எல்லாம் மக்களை மேலும் மேலும் அறியாமையில் ஆழ்த்துவன. இவ்வியல்புகளை மக்கள் அறியாதிருக்கும் படி புரோகிதரும், பூசாரிகளும் விழிப்பாயிருந்து, அவர்களுக்கு நாளுக்கு நாள் அறியாமையை வளர்த்து வருகின்றனர். இவ்வறியாமை ஒழியும் பொருட்டும், சமயம் என்றால் என்ன என்பதை மக்கள் அறியும் பொருட்டும், இச் சிறு நூல் வெளியாகின்றது.

சென்னை

23.1.1947

ந.சி.கந்தையா.

தமிழர் சமயம் எது?


தோற்றுவாய்
சமயம் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றிற்று? இவ்வுலகில் சமயங்கள் பலவாகக் காணப்படுதல் ஏன்? அவைகள் தனித்தனியே தோன்றி வளர்ந்தனவா? இன்றேல், ஒரு தொடக்கத்தினின்றும் பிரிந்து வளர்ச்சியடைந்தனவா? என்பன போன்ற கேள்விகள் மத ஆராய்ச்சி செய்யும் பொழுது - எழுகின்றன. இவைகளுக்கு இறுக்கப்படும் விடைகள் சமய வரலாறாக அமையும். தமிழரின் சமயம் எது என்று விளங்கிக் கொள்வதற்குச் சமய வரலாற்றைப் பற்றிய அறிவு இன்றியமையாதது. சமயத்தின் வரலாற்றை அறியும்போது தமிழரின் சமயம் எது என்பது நன்கு புலப்படுமன்றோ? ஆகவே முதலில் சமயம் எவ்வாறு தோன்றிற்று என்பதைக் குறித்து ஆராய்வோம்.

சமயத் தோற்றம்
எல்லா உயிர்களுக்கும் பெரிய அச்சத்தை விளைவிப்பது மரணம். முற்கால மனிதன் தன்னுடன் வாழ்பவர்கள் இறந்து போவதைப் பார்த் தான். அவன் அவர்களின் உடல்களைத் தூரத்தே கொண்டு சென்று எறிந்தான். உடம்பில் இருக்கும் ஆவி, உடலை விட்டு நீங்குவதே மரணம் என அவன் எண்ணி முடிவு செய்தான். அவன், ஆவி அல்லது உயிர் அழியாது என நம்பினான். உயிர் உடலின் பக்கத்தே தங்கி நிற்கும். அது சில சமயங்களில் உடலிற் புகுந்து உயிர்த்து எழும். அது பழையபடி தான் வாழ்ந்த இடத்தை அடையும். அதனால் தீமைகள் உண்டாகும் என்னும் ஒரு புதிய எண்ணம் அவன் மனதில் உதித்தது. பிரேதம் உயிர்த்தெழும் என்னும் நம்பிக்கையினால் மனிதன் முற்காலத்திற் கையாண்ட வழக் கங்கள் சில இன்றும் சில மக்களிடையே காணப்படுகின்றன. பிரேதங் களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது வீட்டின் வழக்கமான வாயிலால் எடுத்துச் செல்லாது, பிறிதொரு வழியால் எடுத்துச் செல்லும் வழக்கு மக்கள் பலரிடையே உண்டு. இவ்வாறு செய்வது பிரேதம் உயிர்த் தெழின் வீட்டுக்குச் செல்லும் வழியை அறியாமல் இருக்கும்படியாகும். கால் கைகளை கட்டுவதும், அவை எழுந்தாலும் நடக்க முடியாதிருக்கும் படியே. பிரேதங்களுக்குப் பின்னே நெற்பொரி, தேங்காய்த் துண்டுகளை எறிவது, ஆவிகள் வீட்டுக்குத் திரும்பிவராது அவைகளை உண்டுகொண்டு இடுகாட்டுக்குச் செல்லும்படியேயாகும். இன்னும் பிரேதத்தைப் புதைத்த பின் அம்பட்டனால் செய்யப்படும் கிரியைகளும் இது தொடர்பானவை களே. கிறித்துவ மதத்தினர் இறந்தவர்கள் உயிர்த் தெழுவார்கள் என இன்றும் நம்பி வருகின்றனர்.

பிரேதத்தைப் புதைத்து அதன் நெஞ்சை ஊடுருவும்படி கூரிய மரக்கட்டையை அறைவதும் முற்கால வழக்கு. இவ்வாறு செய்வது பிரேதம் எழும்பாமல் இருக்கும்படியேயாகும். இங்கிலாந்தின் சில இடங்களில் தற்கொலை புரிந்தவர்களின் பிரேதங்களுக்கு இவ்வாறு செய்யப்படுகின்றது. அதனால் அவன் இறந்தவர்களின் உடல்கள் உயிர்த்தெழாதபடி அவைகளைப் புதைக்கலானான். இந் நம்பிக்கை வலுவடைந்தபோது பிரேதங்கள் ஆழமான குழிகளில் புதைக்கப் பட்டன. குழிகள் கற்பலகைகளால் மூடப்பட்டன. கற்பலகைகளின் மேல் உயரமாக மண் கொட்டி மேடு செய்யப்பட்டது. மேட்டின் மீது பெரிய கல் வைக்கப்பட்டது. இவ்வாறு செய்தால் புதைக்கப்பட்ட பிரேதம் எளிதில் வெளியே வரமாட்டாது என முற்கால மக்கள் கருதினார்கள்.

இறந்தவர்களின் ஆவிகள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தங்கி நிற்கின்றன. அவைகளுக்குப் பசி தாகங்கள் உண்டு. வாழ்நாளில் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அவர்களுக்குத் தேவை உண்டு எனவும் மக்கள் எண்ணத்தில் பட்டது. ஆகவே அவர்கள் பிரேதங்களைப் புதைக்கும் போது உணவையும் நீரையும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பக்கத்தே வைத்தார்கள்; பின்பும் அவ்விடத்தில் உணவையும் நீரையும் வைத்து வருவாராயினர்.

இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மையையோ தீமையை யோ செய்ய வல்லன என்றும் அவர்கள் கருதினார்கள். நாட்டில் நோய், பிணி, பஞ்சம் போன்ற துன்பங்கள் நேர்ந்த காலத்தில், அவை ஆவிகளின் கோபத்தினால் உண்டாயின என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அக்காலங்களில் ஆவிகளுக்குச் சிறப்பாக உணவும் நீரும் (பலி) வழங்கப்பட்டன. சில தலைமுறைகள் கழிந்தன. இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கப்பட்டன. அப்பொழுது இறந்தவர்களின் சமாதிகள் சிறு தெய்வங்களாகவும் கிராமத் தெய்வங்களாகவும் மாறின. குடும்பத்த வரின் ஆவிகள் இல்லுறை தெய்வங்களாயின. குடும்பத் தலைவனின் ஆவி (குடும்ப) தெய்வமாயிற்று. அதிகாரியின் ஆவி கிராம தெய்வமாயிற்று. அரசனின் ஆவி நாட்டு மக்களின் தெய்வமாயிற்று. சமாதிகள் வைக்கப் பட்ட கற்களே ஆவி உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. அவைகளின் முன் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு தென்புலத்தார் (இறந்தவர்) வழிபாடே முதலில் தோன்றி இருந்தது. பின்பு தென்புலத்தார் தெய்வ மாயினர். இதுபற்றியே வள்ளுவனார் “தென்புலத்தார் தெய்வம்” எனக் கூறினாரென்க. இன்றும் மலையாளத்தில் தெற்கட்டு என்னும் வீட்டின் ஒரு பகுதியில் இறந்தவர்களின் சாம்பர், அவர்கள் பயன்படுத்திய கைத்தடி முதலியன வைத்து வழிபடப் படுகின்றன.

பூசாரியின் தோற்றம்
இறந்தவர்களின் ஆவிகளுக்கு அவர்களின் கிட்டிய உறவினர் பலி செலுத்தி வந்தனர். அதிகாரி, அரசன் முதலிய பெருமக்களின் ஆவிகளுக் கும் அவ்வாறு செய்யப்பட்டது. பெரும்பாலும் வேலையாட்களும் அடிமைகளும் அவ்வேலையைச் செய்யும்படி நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட்டது. அவர்கள் செய்துவரும் பணிவிடை கால் வழியாகத் தொடர்ந்து நடைபெறும் பொருட்டும், அவர்களின் கூலி எளிதிற் கிடைக்கும் பொருட்டும் அச்சமாதிகளுக்கு மானியங்கள் விடப்பட்டன. நாட்கள் கழிந்தன. பூசாரிகளின் தொடக் கத்தைப் பற்றிய வரலாறுகள் மறக்கப்பட்டன. பூசாரியும் அவன் குடும்பத்தினரும், சமாதியும் அதற்குரிய மானியங்களும் தமக்குச் சொந்தம் எனக் கருதினார்கள். சமாதி தெய்வமானபோது பலி இட்டு வழிபடும் பொருட்டு மக்கள் அவ்விடங்களிற் கூடினார்கள். அவை பொதுமக்கள் வழிபடும் இடங்களாக மாறின.

கோவில்களின் தொடக்கம்
தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களைக் குகையில் அடக்கஞ் செய்தார்கள். இது ஒரு குடிசை அல்லது பந்தரின் கீழ் அவர்களை விடுவதை ஒத்தது. எல்லா நாடுகளிலும் குகைகள் காணப்படுவதில்லை. ஆகவே செயற்கைக் குகைகள் செய்யப்பட்டு, அவைகளில் பிரேதங்கள் அடக்கஞ் செய்யப்பட்டன. எகிப்திய அரசர் உடல்கள் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள கூர்நுதிச் சமாதிகள் இவ்வகைச் செயற்கைக் குன்று களேயாகும். புத்தர் சேடங்களை வைத்துக் கட்டப்பட்ட “டாகபா” எனப்படும் சமாதிகளும் இவ் வகையினவே. எகிப்திய சமாதிகளைப் போன்றவை தென் அமெரிக்காவிலும் காணப்படுகின்றன.1

தெய்வம் உறையும் கற்களைச் சுற்றிக் கட்டடம் எழுந்தது. அக் கட்டடம் முற்காலச் சமாதிகள் போன்ற குகைகள் வடிவாகக் கட்டப் பட்டன. சில சமயங்களில் இறந்தவரின் குடிசையும், இறந்தவரைப் புதைத்த இடத்தின் அயலே பலி செலுத்தும் பொருட்டும், நிழலின் பொருட்டும், இடப்பட்ட பந்தரும் கோயிலாக மாறியுள்ளன. மக்கள் நாகரிகம் அடைந் தார்கள். கட்டடங்கள் அழகாகக் கட்டப்பட்டன. கோயில் பெருக்கப் பெருக்க வழிபடு மக்களும் பலராயினர். அவர்கள் தெய்வத்துக்குக் காணிக்கை அளித்தனர். பூசாரி அக் காணிக்கைகளைப் பெற்று செல்வன் ஆனான். கோயில் எவ்வளவுக்குப் பெரிதாகின்றதோ அவ்வளவுக்குத் தெய்வத்தின் உயர்வும் உண்டாகின்றது. அப்பொழுது வழிபடுவோரும் அதிகரிக்கின்றனர். அதனால் அதிக வருவாய் உண்டாகின்றது. இவை களை அறிந்த பூசாரி ஆலயத்தைப் பெரிதாகவும் அழகாகவும் அமைக்க லானான். மக்கள் தாம் வழிபடும் தெய்வம் தம்மைப்போல முன் மனித வடிவில் இருந்ததென்பதை இப்போது நம்பமாட்டார்கள்.

சமய நூல்கள்
கோயில் எவ்வளவு பெரிதாகின்றதோ அவ்வளவுக்குப் பூசாரியும் பெருமை அடைகின்றான்; தெய்வமும் பெருமை அடைகின்றது. தெய்வத் தின் பெருமையைப் பொறுத்ததே பூசாரியின் பெருமையாகும். பூசாரி தெய்வத்தைப் பெருமைப்படுத்த எண்ணினான். அவன் தெய்வத்தைப் பற்றிப் பல கற்பனைக் கதைகளைப் புனைந்தான். அவைகளோடு சில உண்மை வரலாறுகளையும் கலந்துகொண்டான். தெய்வத் தின் பெருமை களைக் கூறும் கதைகளின் இடையிடேயே அவன் தனது பெருமைகளை யும் நாட்ட மறந்துவிடவில்லை. இவ்வாறு தெய்வங்களைப் பற்றிய “புரா ணங்கள்” தோன்றின. பூசாரி, தான், தனதும் பலி செலுத்தும் தெய்வத்தி னதும் பெருமைகளைக் கற்பித்து எழுதிவைத்த நூல்களே முற்காலச் சமய நூல்களாகும்.

சமயம் என்பதில் அடங்கியவை
சமயம் என்றவுடன் தெய்வம், பூசாரி, பலி, வழிபடுபவன் என்னும் நான்கின் தோற்றங்களும் நமது அகத்தே எழுகின்றன. இந்நான்கின் சேர்க்கையே சமயம் என்னும் கருத்து மக்கள் உள்ளத்திற் பதியலாயிற்று.

தெய்வங்களின் வடிவம்
சமாதிக் கற்களே தெய்வம் உறையும் இடமாகவைத்து வழிபடப் பட்டன. கற்களை வழிபட்ட மக்கள் இறந்தவர்களைக் கற்களில் செதுக்கி வைத்தும் வழிபடுவாராயினர். இம் முறையினால் கற்களின் இடத்தைக் கற்களில் செதுக்கப்பட்ட ஆண் பெண் உருவங்கள் ஏற்றதும் உண்டு.

மர வணக்கத்தின் தோற்றம்
இறந்தவர்கள் வணக்கத்தை ஒப்ப, மர வணக்கமும் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. மக்கள் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுவதில்லை; அம் மரங்களில் தெய்வங்கள் உறைவதாகக் கருதி அவைகளையே வழிபடுகின்றனர். பிரேதம் புதைக்கப்பட்ட இடத்தில், முளைத்து வளரும் மரங்கள் இறந்தவரின் அல்லது அவரின் ஆவிகள் உறையும் இடங்களாகக் கருதப்பட்டன. பிரேதங்களைப் புதைத்தபின் அவ்விடங்களில் மரங்களை அல்லது மரக்கிளைகளை நாட்டும் வழக்கு இன்றும் பல மக்களிடையே காணப்படுகின்றது. ஆகவே இறந்தவர்கள் ஆவிகளுக்குச் செய்யப்படும் வழிபாட்டை ஒப்ப இம் மரங்களும் பலி கொடுத்து வழிபடப்பட்டன.

பாம்பு வணக்கம்
சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவரின் பிறப்பு என்று கருதப்பட்டது. இக் கருத்து அல்லது நம்பிக்கை இன்றும் உலகின் பல பாகங்களிலுள்ள மக்களிடையே காணப்படுகின்றன. ஆகவே பாம்புகள் இறந்தவர்களின் மறு உருவங்களாகக் கருதப்பட்டன. 1ஆகவே மக்கள் அதனைக் கொல்லாது அதற்குப் பால் வைத்தும் பிற உணவுகளைக் கொடுத்தும் வழிபடலாயினர். உலகில் பாம்பு வணக்கம் காணப்படாத இடம் இல்லை எனக் கூறலாம். இதனால் பாம்பு வழிபாடும் இறந்தவர் வழிபாட்டின் ஒருவகை எனத் தெரிகின்றது.

கிணறுகள்
முற்காலச் சமாதிகள் ஆறுகளின் அருகே எடுக்கப்பட்டன. சமாதிகள் கோயில்களானபோது அவைகளின் பக்கத்திற் செல்லும் நீர் ஊற்றுக்கள் தெய்வத்தன்மை உடையனவாகக் கொள்ளப்பட்டன. அவ்வாறுகளுக்குப் பலிகள் இட்டு வணங்கப்பட்டன. அவை பாவத்தைத் தீர்க்கும் தீர்த்தங்களாகக் கொள்ளப்பட்டன. எல்லா இடங்களிலும் ஆறு இருப்பதில்லை. ஆறு இல்லாத இடத்தில் ஆற்றுக்குப் பதில் கிணறு தோண்டப்பட்டது. கிணற்றுக்குப் பலிகள் இடப்பட்டன. இவ்வாறு கோயில்களுக்குப் பக்கத்தே உள்ள கிணறுகள் தீர்த்தங்களாயின.

குறிப்பு: இதுவரைவிற் கூறியவை சமயம் தோன்றியதின் ஒரு வகை. சமயம் வேறு வகை யிலும் தோன்றியுள்ளது. வெவ்வேறு வகையாகத் தோன்றிய சமயக் கொள்கைகள் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. அவைகளை இன்றைய சமயங்களுட் காணலாம்.

தாய் வணக்கம்
மக்களின் முற்பருவத்தில் தாயே அதிகாரமுடையவளாயிருந் தாள்; 1 ஆட்சி அவள் கையில் இருந்தது. தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொத்து பெண்களுக்கே உடையதாயிருந்தது. அக் காலத்தில் மக்கள் தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில், முதல் தோன்றி நடைபெற்றது தாய்வணக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர்.

தரைத்தெய்வம்
இப் பூமியினின்றும் பயிர் பச்சைகள் தோன்றுவதைப் பழங்கால மக்கள் கண்டார்கள். அவர்களுக்கு அது மிக வியப்பாயிருந்தது. பயிர் பச்சைகளைத் தோற்றுவிக்கின்ற இத் தரையை அவர்கள் தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடலானார்கள். விதைப்புக் காலங்களில் அவர்கள் இக் கடவுளுக்குப் பலிகள் இட்டு வழிபட்டார்கள். விழாக் காலங்களில் இடக்கரான கிரியைகள் நடத்தப்பட்டன. இவ்வாறு தோன்றி நடைபெற்ற தாய்க் கடவுள் வழிபாடே, சத்திவணக்கம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவானது.

கோயிற் கிரியைகள்
ஆவிகளுக்குப் பலியிட்டோர் ஒருவருக்கு உணவு அளிக்கும் போது செய்யும் உபசாரங்களைத் தெய்வத்துக்குச் செய்தார்கள். தாய்க் கடவுளை வழிபட்டோர் ஒரு தாய்க்குச் செய்யப்படும் பணிவிடைகளை ஒத்த கிரியைகளைச் செய்தார்கள். இவ்வாறு கிரியைகள் மக்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டன. பிற்காலத்தில் தாம் செய்யும் கிரியைகளின் பொருள், மறைவாயிருக்கும்படி சில மாற்றங் களையும் செய்யலானார்கள்.

ஞாயிற்று வணக்கம்
முற்கூறிய வழிபாடுகள் தோன்றி நடைபெறும்போது இன்னொரு வழிபாடு தோன்றிற்று. இவ் வுலகில் நிறைந்துள்ள இருளைப் போக்குவ தாகிய ஞாயிற்றின் தோற்றம் மக்கள் கருத்திற்பட்டது. அவர்கள் இவ்வொளியுடையதாகிய பொருளே எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானது என்று எண்ணினார்கள்; பலி செலுத்தி அதனை வழிபட் டார்கள். இவ் வழிபாடு உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ளது.

ஞாயிற்றை மக்கள் மலை முகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். ஆகவே கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என மக்களால் நம்பப் பட்டது. ஆகவே ஞாயிற்று வணக்கம் மலை சூழ்ந்த நாடுகள் ஒன்றில் தோன்றியிருத்தல் ஆகலாம்.

செய் குன்றுகள்
எல்லா நாடுகளிலும் மலைகள் இருப்பதில்லை. மலையில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் மலைகளுக்குப் பதில் செய்குன்றுகள் எழுப்பி னார்கள். அச் செய் குன்றுகள் மீது ஞாயிற்றின் வடிவான வடிவங்களை வைத்தார்கள். அங்கு ஞாயிற்றுக் கடவுளை வழிபட்டார்கள். இவ் வகையான ஞாயிற்றின் கோயில்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன.

முக்கோணக் கற்கள்
செய் குன்றுகளை எழுப்புவது எளிதன்று. ஆகவே மக்கள் செய்குன்று அல்லது மலைவடிவமான முக்கோணக் கற்களை நிழல் மரங்களின் கீழ் நிறுத்தினார்கள். அவைகளை ஞாயிற்றின் வடிவங்களாக வழிபட்டார்கள். முக்கோணக் கற்கள் நாளடைவில் அடி அகன்று நுனி ஒடுங்கிய ‘ஆதீண்டு குற்றி’களின் வடிவை அடைந்தன.

தீ, திங்கள் வழிபாடுகள்
ஒளியுடைய ஞாயிற்றை வழிபட்ட மக்கள் ஒளியுடையனவாகிய திங்கள், தீ என்பவைகளையும் வழிபடலாயினர். கோயில்களில் ஒரு போதும் அவிந்து போகாதபடி தீ எரித்துக் காப்பாற்றப்பட்டது. எல்லாக் காலங்களிலும் ஞாயிறு திங்கள் என்பவைகளைக் காண்டல் அரிது. ஆகவே மக்கள் ஞாயிறு, திங்கள், தீ என்பவைகளைக் குறிக்க வட்டம், பிறை, முக்கோண வடிவான குண்டங்களில் தீ வளர்த்து, மூன்று ஒளி யுடைப் பொருள்களையும் வழி படுவார்கள். அடி நிமிர்ந்து நுனி ஒடுங்கிய கற்கள் முச்சுடர்களைக் குறிக்கும் வடிவங்களாகவும் கருதப்பட்டன.

பல உற்பத்தியுடைய கற்றூண்கள் ஞாயிற்றின் குறியாக மாறுதல்
சமாதிகளின் மீது நிறுத்தப்பட்ட கற்றூண்கள், ஆவிகள் உறையும் இடங்கள் எனக் கொள்ளப்பட்டு, வழிபடப்பட்டன என்று முன் கூறினோம். பழைய பலி பீடங்களும் தூண்களின் வடிவைப் பெற்று வழிபடப்பட்டன. இவ்வாறு வணக்கத்துக் குரியனவாகிய கற்றூண்கள் இப்பொழுது ஞாயிற்றின் வடிவம் எனக் கொள்ளப்படலாயின. இது பற்றியே ஞாயிற்றின் வடிவாகிய இலிங்க உற்பத்திக் குரிய பழங்கதை பலவாகக் காணப்படுகின்றன.

மிகப் பழைய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுளின் வடிவம்
மிகப் பழைய மக்கள் ‘சோகி’ என்னும் ஒரு வகைக்கடல் உயிரின் ஓட்டினைத் தாய்க் கடவுளின் வடிவாகக் கொண்டு வழிபட்டனர். இதற்குக் காரணம் அவ்வோடு பெண்கள் இரகசிய உறுப்பு போன்ற வடிவுடையது. இம் முறையிலிருந்து தாய்க்கடவுளைக் குறிக்கப் பெண்ணுறுப்பின் வடிவங்களும் அமைத்து வழிபடப் படலாயின. இவ்வகை வடிவங்கள் ‘மொகஞ்சதரோ’விற் காணப்பட்டன.

தந்தை ஆட்சி உண்டாதல்
உலகில் தாயாட்சியே முதலில் இருந்ததென்று ஓரிடத்திற் கூறினோம். சிறிது சிறிதாக நிலைமை மாறத் தொடங்கிற்று. தந்தை ஆட்சி உண்டா யிற்று. அப்பொழுது எல்லாக் கடவுளுக்கும் தலைவராகிய ஞாயிற்றுக் கடவுளை ஆண் கடவுள் எனக் கருதப்படலாயினர். அதுவே ஞாயிற்றின் வடிவமாகிய இலிங்கம், ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது.

வானக் கடவுள்
தரைக்கடவுளைத் தாய்க்கடவுளாகக் கொண்டு வழிபட்ட மக்கள், வானத்தைத் தந்தைக் கடவுள் எனக் கொண்டார்கள். இவ்வாறு கொண்ட மக்கள், இலிங்கங்களை வான்கடவுளின் வடிவாகக் கொண்ட னர். நாளடைவில் வான் கடவுள் ஞாயிற்றுக் கடவுளாகக் கொள்ளப் பட்டது. தரைக் கடவுள், வான்கடவுள்களை வழிபட்ட மக்கள், தரைக் கடவுளை பெண்வல்லமை (உயிர்களைக் கருக்கொண்டு ஈனுகின்ற வல்லமை) என்றும், வான் கடவுளை ஆண்வல்லமை (உயிர்களை உண் டாக்குகின்ற வல்லமை) என்றும் கருதினார்கள். அவர்கள் இலிங்கங் களை ஆண் வல்லமை எனவும் கொண்டனர்.

இலிங்கத்தின் வடிவு மாறுபடுதல்
இவ்வாறு கொண்ட மக்கள் இலிங்கங்களை ஆண் உறுப்பு வடிவாக அமைக்கலாயினர். ஆண் பெண் வல்லமைகள் சேர்வதால், படைப்புக்கள் தோன்றுகின்றன என்பதை உணர்ந்த அவர்கள், இரு வடிவங்களையும் இணைத்து ஒரு வடிவமாகக் கொண்டும் வழிபட லாயினர். இவ்வாறு இணைந்த வடிவங்கள் மேற்கு ஆசியாவில் ‘எல்லோகிம்’ என்னும் பெயர் பெற்றன. தனி வடிவம் பெத்தெல், அல்லா, பால் முதலிய பெயர்களைப் பெற்றது. இந்திய நாட்டில் அதற்கு ஆவுடையார் என்று பெயர்.

ஞாயிறும் திங்களும் ஆண் பெண் தெய்வங்களாதல்
இந்திய மக்கள் திங்களை ஆண் தெய்வமாகவே கொண்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாக கொள்ளப்பட்டது. இலிங்கங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிழல் மரம், பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. ஞாயிறும் திங்களும் கணவன் மனைவியர் எனக் கொள்ளப்படலாயின. சமாதியின் மீது வளர்ந்த மரம் வழிபடப்பட்ட தென முன்பு கூறினோம். அவ் வழிபாட்டுக்குரிய வரலாறுகளும் இப் பொழுது மர வணக்கத்துக் குரியனவோடு கலந்தன. நாளடைவில் மரத்துக்குப் பதில் மரத்தூண், கற்றூணுக்குப் பக்கத்தே நிறுத்தி வழிபடப் பட்டது. இம் மரத்தூண் வணக்கத்தையும் ஒன்றாக வைத்து மயங்கற்க. இப்பொழுது இறந்தவர்களின் ஆவி சம்பந்தமான வணக்கங்கள் எல்லாம் மறக்கப்பட்டு அவை ஞாயிறு திங்கள் தொடர்பான வணக்கங்கள் எனக் கொள்ளப்பட்டன.

அரசக் கடவுள்
மக்களின் அறிவு இன்னொரு நிலையை அடைந்தபோது அவர்கள் ஞாயிறே இவ் வுலகத்துக்கெல்லாம் அரசன். அவனால் மக்களை ஆளும் பொருட்டு அனுப்பப்பட்ட அவன் புதல்வனே அரசன் என எண்ணத் தலைப்பட்டார்கள். அப்பொழுது மக்கள் அரசனுக்குக் கடவுளுக்குச் செய்யும் வழிபாட்டைச் செய்து வந்தனர். அவர்களும் தாம் கடவுளின் அதிகாரத்தைப் பெற்று ஆளப் பிறந்தவர்கள் என நம்பி மக்கள் மீது அதிகாரம் செலுத்தினர். இறந்தபின் அவர்கள் ஞாயிற்றை அடைந்து ஞாயிற்றுக் கடவுளாக மாறுகின்றார்கள் என மக்கள் நம்பினார்கள். அவர்களைப் புதைத்த இடத்தில் ஞாயிற்றின் குறியாகிய கல் நட்டு வழிபட்டார்கள். இவ்வாறு தோன்றிய ஞாயிற்றுக் கடவுளரே எகிப்தில் “ரா” எனப்படுவர்.

அரசன் ஆண் கடவுளாகக் கருதப்பட்டது போல, அரசியர் பெண் கடவுளருக்குரிய மரியாதையைப் பெற்றனர்.

ஞாயிற்றுக் கடவுளின் கோயிலில் அரசனே பூசாரியாக இருந்தான்
அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனக் கொள்ளப்பட்ட போது ஞாயிற்றுக் கடவுளின் ஆலயம் அரசனுக்கு உறைவிடமான அரண்மனை யின் வடிவை அடைந்தது. ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி அரசனாக இருந்தான். சில சமயங்களில் அரச குடும்பத்தினரே பூசாரிய ராக இருந்து வந்தனர்.

ஞாயிற்றுக் கடவுளின் வடிவு மாறுபடுதல்
ஞாயிற்றுக் கடவுள், அரசனுக்கு அரசனாகக் கருதப்பட்டபோது, மக்கள் அவரைப் பேரரசன் வடிவில் வழிபடத் தொடங்கினார்கள்.

ஞாயிற்றுக் கடவுளுக்கு முற்கால மக்கள் இட்டு வழங்கிய
இரு சிறந்த பெயர்கள்
இவ் வுலகில் நாகரிகம் பெற்று விளங்கிய மக்கள் எல்லோரும் நம் முழு முதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய பெயர்களை ஆராயின், அவை ஒளி, அல்லது ஒளியுடையவன் என்னும் பொருள்களுடையனவாகக் காணப் படுகின்றன. அப் பெயர்களுள் ‘எல்’ என்னும் பெயர் மிக விரிவு அடைந்திருந்தது. எல் என்பது ஒளி என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம். மேற்கு ஆசிய நாடுகளில் கடவுளைக் குறிக்க எல் என்னும் பெயர் சிறப்பாக வழங்கிற்று. அராபியர் மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் எல் தொடர்பான இடப் பெயர்கள் நூற்றுக் கணக்கிற் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் எல் கடவுளின் கோயில்கள் இருந்த இடங்களாகும். முகமதியர் வணங்கும் கடவுளின் பெயராகிய அல்லா என்னும் பெயர் எல் அடியாகப் பிறந்தது. “எல்லா” என்பது அல்லா என வழங்கும். கிறிஸ்துவ வேதத்திலும் எல் எலியன், எலோகிம், எல்சடை முதலிய பெயர்கள் ‘யேகோவா’ கடவுளைக் குறிக்க வழங்கின. அரசர் கடவுளின் பிறப்புகளாக (அவதாரங்கள்) கொள்ளப்பட்ட போது அவர்களும் தமது பெயர்களின் இறுதியில் ‘எல்’ என்னும் பெயரைச் சேர்த்து வழங்கினார்கள். ‘எல்’ என்னும் பெயரே ‘பால்’ (Baal) பெல் (Bel) எனத் திரிந்தும் வழங்கிற்று. கடவுளின் அடிய வர்களும் தம் பெயர்களுடன் எல், பால், பெல் முதலிய பெயர்களைச் சேர்த்துக் கொண்டனர். இது இந்திய மக்கள் சிலர் தம் பெயர்களுடன் சிவம், பிரமம் முதலிய பெயர்களைச் சேர்த்து வழங்குவதை ஒத்தது. இலங்கை அரசர் பலர், தம் பெயர்களின் இறுதியில் சிவன் என்னும் பெயரை இட்டு வழங்கினார்கள்.

மேற்கு ஆசியாவிலன்றி இந்திய நாட்டிலும் எல்லென்னும் பெயர் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. இன்றும் மலைச்சாதியினர் சிலர் எல்லம்மா, எல்லப்பன் (எல்லையன்) முதலிய கடவுளரை வழிபடுகின்ற னர். மனுவின் பேழை சென்று தங்கியதெனப்படும் மலை, இளா விருதம் எனப்படுகின்றது. இளாவிருதம் என்பதில் இளா என்பது எல் என்பதன் திரிபு. இலங்கைத் தீவின் பழைய பெயர் எல்லம். எல்லம் என்பதன் அடி எல். எல்லே பின்பு இல் ஆகி இலங்கை ஈழம் முதலிய திரிபுகளைப் பெற்றது. எல் தொடர்பான இடப் பெயர்கள் பல, இலங்கையிற் காணப் படுகின்றன. ‘நுவர எலியா’ என்பது அவைகளுள் ஒன்று.

எல்லை ஒப்ப மிகப் பழமை உடையதாய், ஞாயிற்றைக் குறிக்க வழங்கிய பெயர் சிவன். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இதற்கு அடி சிவ(ப்பு). இன்றும் பிலிப்பைன் தீவுகள் சிலவற்றிலுள்ள மக்கள் கடவுளைச் சிவப்பன் என வழங்குவர். சிவன் என்னும் பெயர், மக்களிடையே தந்தை ஆட்சி தோன்றிப், பெரிய கடவுள் ஆண் என்னும் கொள்கை உண்டாயிருந்த காலத்தில் தோன்றியிருத்தல் வேண்டும். மெக்சிகோவில் “கொலறடோ” ஆற்றுப் பள்ளத்தாக்கிலுள்ள குன்று ஒன்றில், சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. சிவன் ஆலயம் என்பது மலை உச்சியிலுள்ள தட்டையான பகுதியேயாகும். அச் சிவன் ஆலயத்தின் காலம், குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேண்டு மென மேல் நாட்டு அறிஞர் கூறியிருக்கின்றனர். எபிரேயரின் (Hebrew) மூன்றாவது மாதம் சிவன் எனப்பட்டது. மோசே என்பவர் இம் மாதத் தின் ஆறாவது நாள் கடவுளால் தனக்கு உணர்த்தப்பட்ட ஏழு கட்டளை களை மக்களுக்கு வெளியிட்டார். மோசேயின் காலம் இற்றைக்கு 17000 ஆண்டுகளின் முன். கிரீஸ் நாட்டுக்கு அயலே உள்ள கிரேத்தா (crete) என்னும் தீவில், சிவன் என்னும் பழைய நகரம் ஒன்று இருந்தது. அங்கு சிந்துவெளியிற் கிடைத்த புதை பொருள்களை ஒத்தவை காணப்பட்டன. சகரா வனாந்தரத்தில் சிவன் என்னும் பாலைநிலப் பசுந்தரை உண்டு. அங்கு ஞாயிற்றுக் கடவுளின் அழிபாடுகள் காணப்படுகின்றன. சின்ன ஆசியாவில் சிவாஸ் என்னும் ஓர் இடமுண்டு. சுமேரிய மக்கள் சிலர் சிவன் என்னும் பெயரைப் பெற்றிருந்தனர். கிறிஸ்துவ மறையில் சொல் லப்படும் சியன் (Cian) வழிபாடு சிவன் வழிபாடே என மேற் புல அறிஞரால் நாட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சிவன் ஒளிமலை என ஒன்று உள்ளது. இவை போன்ற பல சான்றுகளால் எல் என்னும் பெயரை ஒப்பச் சிவன் என்னும் பெயரும் ஞாயிற்றுக் கடவுளின் சாலச் சிறந்த பெயராக இவ்வுலக மக்களால் வழங்கப்பட்டதெனத் தெரிகின்றது.

எல் அல்லது சிவன் கடவுளின் வடிவங்கள்
இவ் வுலகம் முழுமையிலும் எல் அல்லது சிவன் கடவுள் கற்றூண் வடிவில் வழிபடப்பட்டார். மக்கள் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சி யாளர் இதனை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பேரரசன் வடிவில் வழிபட்ட காலம் ஒன்று உண்டு எனக் கூறினோம். அவ் வழக்கு இந்திய நாட்டிலே தொடங்கி மேற்கு நோக்கிப் பரவியிருந்ததெனத் தெரிகின்றது. சிவன் கடவுளின் ஊர்தி இடபம். இந்திய மக்கள் ஆரியரின் வருகைக்குப் பின்னரே குதிரையைப் பற்றி அறிந்தார்கள். அதன் முன் கழுதை, எருது என்பன மக்களின் ஊர்திக ளாக இருந்தன. அக் கால அரசர் மாட்டையே சிறந்த ஊர்தியாகக் கொண்டனர். பிற்காலங்களில் கடவுளின் ஊர்தியாகிய இடபமும் கடவுளாக வணங்கப்பட்டது. இவ் வணக்கம் மேற்குத் தேசங்களுக்குப் பரவிற்று. அப்போது நாணயங்களிலும் முத்திரைகளிலும் இடபங்கள் பொறிக்கப்பட்டன. அவ்விடபங்களுக்கு இமில் காணப்படுகிறது. இமில் உள்ள இடபங்கள் இந்திய நாட்டுக்கே உரியன. இதுபற்றி இடப வழிபாடு இந்திய நாட்டினின்றும் மேற்குத் தேசங்களுக்குச் சென்ற தெனத் துணியப்படுகின்றது. இந்திய மக்கள் சிவன் கடவுளை இடப ஊர்தி உடையவராயும், ஒரு கையில் முத்தலைச்சூலம், உடையவராயும் மற்றக் கையில் கைக்கோடரி (மழு)யை உடையவராயும் வழிபடுகின்ற னர். இவ் வகை வடிவங்கள் மேற்குத் தேசங்களிற் காணப்பட்டனவாயின் அவை இந்திய நாட்டினின்றும் சென்றன என்று துணியப்படுமன்றோ? பபிலோன் நாட்டிலும், சிரியா நாட்டிலும், சின்ன ஆசியாவிலுள்ள கிதைதி நாட்டிலும் இவ்வகை வடிவங்கள் காணப்பட்டன. இவ்வகை வடிவங்கள் கிரேக்க நாட்டிலும் பிரித்தன் (இங்கிலாந்து) நாட்டிலும் வழிபடப்பட்டன என்று மேற்புல அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். எகிப்திய மக்கள் இடபத்தை வணங்கினார்கள். அவர்களின் அமன், ஒசிறிஸ் என ஞாயிற்றைக் குறிக்கும் கடவுளரின் ஊர்தி இடபமாகவே இருந்தது.

கடவுள் பேரரசன் வடிவினனான போது பழைய வழிபாட்டுச் சின்னங்கள் வந்து அடைதல்
கடவுள் பேரரசன் வடிவினனானபோது, ஆவி வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருந்த பாம்பு, அக் கடவுளின் அணிகலமாயிற்று. ஆவிகள் உறையும் சுடலையில் திரிவன என்று கருதப்பட்ட பிசாசுகளும் பூதங்களும் அவர் பரிவாரங்களாயின. ஞாயிறு, திங்கள், நெருப்பு என்னும் முச்சுடர் வழிபாட்டினரின் மூன்று சுடர்களும் கடவுளின் கண்களாயின. சுடலையில் கிடக்கும் எலும்புகள் அவர் மாலைகளாயின. சுடலையில் உண்டாகும் ஊமத்தை எருக்கு என்பவை, அவர் சூடும் பூக்களாயின. மண்டை அவர் ஏந்தும் ஓடு ஆயிற்று.

தாய்க்கடவுள்
இந்திய மக்கள் தாய்க்கடவுளைச் சிங்கவாகன முடையவளாகவும், ஒரு கையில் தண்டையும் இன்னொரு கையில் கேடகத்தையும் வைத்திருப் பவளாகவும் கொண்டு வழிபடுகின்றனர். எகிப்திய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின்மேல் நிற்பதாகும். இதனை ஒத்தனவே சின்ன ஆசியா, சிரியா முதலிய நாடுகளில் வழிபடப்பட்ட, தாய்க் கடவுளரின் வடிவங்களுமாகும். சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் இடத்திலே கிடைத்த பழைய நாணயம் ஒன்றில், ஒரு பக்கத்தே இரு இடபங்கள் தாங்கும் கட்டிலின் மீது தந்தைக் கடவுளும், இரு சிங்கங்கள் தாங்கும் கட்டிலின்மீது தாய்க் கடவுளும் இருக்கும் வடிவங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. தாய்க்கடவுள் வழிபாட்டுக்குரிய இவ்வடிவம், இந்திய நாட்டினின்றே சென்றிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வுலக நாகரிகம் இந்திய நாட்டினின்றே மற்றத் திசைகளுக்குப் பரந்திருத்தல் வேண்டுமென ஜி.ஆர். ஹன்டர் (G. R.Hunter) ஹெரஸ் பாதிரியார், றைஸ் டேவிட்ஸ், சில்டி முதலிய பல மேல்நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் கருதினார்கள்.

மும்மூர்த்திகள்
முற்கால மக்கள் எல்லோரிடையும் மும்மூர்த்திகள் வழிபாடு இருந்து வந்தது. மும்மூர்த்திகளில் தாய், தந்தை, குமாரன் என்று மூன்று கடவுளரும் அடங்கும். ஆரியமக்கள் இந்தியநாடு வந்த பின்பு மும்மூர்த்தி கள் பிரமா, விட்டுணு, உருத்திரன் எனப்பட்டனர். இது தமிழ் மக்களும், பிற மக்களும் கொண்ட முறையன்று.

செவ்வாடை உடுத்துதல்
ஞாயிறு செந்நிறக்கடவுள் ஆதலின், ஞாயிற்றுக் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரி சிவந்த உடையை உடுத்தான். அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டமையின் அவனும் செவ்வாடையை உடுத்தான். ஞாயிற்றுக் கடவுளின் பூசாரிகளும் அரசர்களும் அல்லாமல் அரச குடும்பத்தினரும் சிவப்பு ஆடையை உடுத்தனர். எகிப்து பபிலோன் முதலிய நாடுகளில் தெய்வங்களுக்கு உடுத்தப்படும் உடை சிவப்பு நிறம் உடையதாக இருந்தது. கிரீஸ், உரோம் முதலிய நாடுகளில் குருமார், அரச குடும்பத்தினர், பெருமக்கள் அல்லாத பிறர் சிவப்பு ஆடையை உடுத்தல் ஆகாது என்னும் சட்டம் இருந்து வந்தது. இன்றும் உரோமன் கத்தோலிக்க உயர்ந்த குருமார் சிவப்பு அங்கியையே அணிவர். இந்திய நாட்டிலும் இவ்வழக்கே இருந்து வந்தது. மத்திய தரைக்கடலின் கிழக்கு ஓரங்களில் வாழ்ந்த பினீசியர் சிவப்பு ஆடைகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து வாணிகம் புரிந்தார்கள். அவ்வாடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. பிற்காலங்களில் அரசர் பூசாரிகள் பெருமக்கள் மாத்திரம் சிவப்பு ஆடையை அணிதலாகிய வழக்கு மறக்கப்பட்டது. கடவுளின் அடியார் எனத் தம்மைக் காட்டிக்கொள்ள விரும்பிய மக்கள் எல்லோரும் சிவப்பு ஆடை உடுத்தினர். சிவப்பு ஆடை மிக விலை உயர்ந்ததாக இருந்தது. ஆகவே சிவப்புக்குப் பதில் காவி தோய்த்த ஆடைகள் பயன்படுத்தப் பட்டன. புத்த குருமார் தம்மை முன்னையவர்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு மஞ்சள் உடை உடுத்தனர். இதுவே காவி உடை அணிவதின் வரலாறாகும்.

சங்குவாத்தியம்
இவ்வுலக மக்கள் எல்லோரும் சங்கைப் புனிதமுடையதாகக் கொண்டனர். சங்குவாத்தியம் கடவுள் வழிபாட்டிற் பயன்படுத்தப் பட்டது. கிறித்துவ வேதத்திலும் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்ட செய்தி காணப்படுகின்றது. இன்றும் சில கிறித்துவ ஆலயங்களில் சில சிறப்புக் காலங்களில் சங்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்தியா, சப்பான், அமெரிக்கா, கிரேத்தா, கிரீஸ் மத்தியதரை நாடுகளிலெல்லாம் கோயில் களில் சங்குவாத்தியம் பயன்படுத்தப்பட்டது.

முத்து
முத்து உயிர்ச்சத்தியை அளிப்பதாக எல்லா மக்களாலும் கொள்ளப் பட்டது. அது அரசராலும் பெருமக்களாலும் பூசாரிகளாலும் அணியப் பட்டது. தெய்வங்களுக்கும் அவை அணியப்பட்டது. முத்துக்குடை, முத்துப்பல்லக்கு முதலியன சிறப்புடையன. முத்து மிகவும் விலை ஏறப் பெற்றது. பிற்காலங்களில் கடவுள் தொண்டர் எனத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்பிய இந்திய நாட்டு மக்கள், முத்துக்குப் பதில் உருத்திராக் கத்தை அணிந்தாராகலாம். இது ஆராய்ச்சிக்குரியது.

சுவத்திகம்
சுவத்திகம் என்பது ஞாயிற்றின் குறி. இவ் வடையாளம் இலிங்க வணக்கம், பாம்பு வணக்கங்களைப் போல உலகம் முழுமையிலும் வழங்கின. உலகின் பல பாகங்களில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய சுவத்திகம் பொறித்த பொருள்கள் இந்திய நாட்டிலும், உலகின் பல பாகங்களிலும் காணப்பட்டன. புத்த மதத்தினர் ஞாயிற்று வழிபாட்டினராகவே முன் இருந்தார்கள். ஆகவே சுவத்திகத்தை அவர்கள் மதச்சின்னமாகக் கொண்டனர். காஞ்சியிலுள்ள புத்த ஆலயத் தின் அழிபாடுகளில் சிவலிங்கங்கள் பல காணப்பட்டன. புத்ததந்தம் என வைத்து இலங்கை மக்களால் வழிபடப்படுவது புத்தரின் பல்லன்று; சிறிய இலிங்கமே என்றும், புத்தர் கோயில்களில் வைக்கப்படும் முடி, இலிங்கமேயென்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். சுவத்திக அடை யாளத்தின் இன்னொரு வகையே சிலுவைக் குறியாகும். கிறித்து நாதருக்கு முன்பும் சிலுவைக் குறி சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. அது கிறித்து நாதர் சிலுவையில் அறையப்பட்டமையால் தோன்றியதன்று.

தேவதாசிகள்
தென்னிந்தியக் கோயில்களில் தேவதாசிகளைக் காண்கின்றோம். இவர்களின் கடமைகளும் ஒழுக்கங்களும் எவை என்பதை ஈண்டு விரிக்க வேண்டியதில்லை. இவ்வகைத் தேவதாசிகள் பபிலோன், பாலஸ்தீனம், சிரியா, சின்ன ஆசியா, ஆபிரிக்கா, கிரீஸ், ரோம் முதலிய நாடுகளிலுள்ள கோயில்களிலும் இருந்தார்கள். தேவதாசி வழக்கம் தோன்றியதற்குப் பல காரணங்கள் உண்டு. முன் ஓரிடத்தில் தரைக் கடவுள் தாய்க் கடவுளாக வழிபடப்பட்டது எனக் கூறினோம். அக் கடவுளுக்குப் பெண் பூசாரிகளே பூசை செய்தார்கள். அங்குப் பெண் தொண்டர்களும் வந்து கூடினார்கள். அக் கடவுளுக்குச் சந்ததி உற்பத்திக்குரிய நேர்த்திக் கடன்களால் மகிழ்ச்சி உண்டாகின்றதெனக் கருதப்பட்டது. ஆகவே கோயில்களில் ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் அம் மகிழ்ச்சிக்குரிய செயலை அவ் விடத்தில் நிகழ்த்துவாராயினர். அரசனே கடவுளான போது, ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களில் செய்யப்படும் கிரியைகள், ஓர் அரண்மனையில் அரசனுக்கு அவன் ஏவலாளர் செய்யும் பணிகளாக நடத்தப்பட்டன. அரசனது அரண்மனையில் ஆடலாலும் பாடலாலும் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் பலர் இருந்தனர். இதுபற்றியே தசரதனுக்கும் அறுபதினாயிரம் தேவியர். இன்னும் பழைய நூல்களில் சொல்லப்படும் அரசருக்கும் நூற்றுக்கணக்கான மனைவியர் இருந் தார்கள் எனக் கூறப்படுதல் காண்க. அரசன் நிறைவேற்றும் கிரியை களைக் கடவுளின் சார்பாளர் (பிரதிநிதி)களாகிய குருமாரே நிறைவேற்றி வந்தனர். பின்பு கோயில்கள் வியபிசார விடுதிகளாக மாறின. ஆலயங் களில் குன்றாத் தீ வளர்த்தலும் வழக்காயிருந்தது. மேற்குத் தேசங்களில் அரச குமாரிகளும், உயர்குலப் பெண்களுமே இதற்காக நியமிக்கப் பட்டார்கள். கடவுட்பணி விடை செய்யும் பொருட்டு, ஆலயங்களில் விடப்பட்ட பெண்கள், கூடா ஒழுக்கமுடையவர்களாக மாறியதும் உண்டு.

பலி
பலியிடும் வழக்கு எவ்வாறு உண்டாயிற்று என்று முன் குறிப்பிட்டுள் ளோம். மனித பலியே தெய்வங்களுக்குப் பிரியமானது என்று மக்கள் கருதினார்கள். மனிதர், மனித ஊன் புசிப்பவர்களாயிருந்த ஒரு காலம் இருந்ததென்பதைப் பற்றி, நாம் வரலாறுகளில் படிக்கின்றோமன்றோ? போரில் சிறை பிடிக்கப்பட்டோர், அடிமைகள், விலைக்கு வாங்கப்பட் டோர், குற்றவாளிகள் என்போர் பெரும்பாலும் தெய்வங்களுக்குப் பலியாக வெட்டப்பட்டனர். அவர்களின் இரத்தம் கலங்களில் ஏந்தி தெய்வச் சிலை மீதும், மக்கள் மீதும் தெளிக்கப்பட்டது. சில சமயங்களில் பலியிடப்பட்டவர்களின் ஊன் புசிக்கப்பட்டது. அவ்வுடல்களை நெருப்பில் இடுதலும், கோயிலின் பக்கத்தே உள்ள மரங்களிற் கட்டித் தூக்குவதும் வழக்கமாயிருந்து வந்தது. சில சமயங்களில் அரசர் தம் பிள்ளைகளைத் தெய்வங்களுக்குப் பலி செலுத்தி இருக்கிறார்கள். இவ்வகைப் பலியைப் பற்றிக் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் காணலாம்.

அரசனே தெய்வத்துக்குச் சிறந்த பலி என மக்கள் ஒரு காலத்திற் கருதினார்கள். இவ்வாறு அரசனையே மக்கள் கொன்று பலி செலுத்திய வரலாறுகள் பல சரித்திரங்களில் காணப்படுகின்றன. கள்ளிக்கோட்டை அரசர் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்கொலை புரிய வேண்டு மென்னும் வழக்கு இருந்ததை மேல்நாட்டுச் சரித்திரக்காரர் கூறியிருக் கின்றனர்.

அரசனுக்குப் பதில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட ஒருவனை, அரசனாகப் பாவித்து பலியிடுவதும் வழக்காக இருந்து வந்தது. இன்னும் மக்கள் அறிவு சிறிது பண்பட்ட போது மனிதனுக்குப் பதில் எருமை, மாடு, ஆடு, பன்றி, ஒட்டகம் முதலிய விலங்குகள் பலியிடப்பட்டன. உரோமையில் இலக்கிய காலத்திலும் மனிதரைப் பலியிடும் வழக்கம் இருந்தது.

பலியிடுவதைப் பற்றியும் ஒரு வகையான தத்துவ ஞானம் உண்டா யிருந்தது. பலரின் பாவத்துக்காக ஒருவனைப் பலியிடுதலே அதுவாகும். இவ்வாறு மக்களின் பாவத்துக்காக ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ அவர்களால் தெரிந்தெடுத்த மக்கள் பலியிடப்பட்டார்கள். கிறித்து நாதர் மக்களின் பாவத்துக்காகச் சிலுவையில் அறையுண்டு இறந்தார் எனப்படுவதும் இவ் வழக்கைப் பற்றியதே. ஒருவனின் பாவத் துக்காக இன்னொருவன் கடவுளைத் தொழுதல் போன்ற வழக்கும், மேற்படி கொள்கையின் நிழலேயாகும்.

செகந்நாதத்தில் பலர் தேர்ச்சக்கரங்களின் கீழ் பலியாக விழுந்து இறந்தனர். கொண்ட் மக்கள் தரைக் கடவுளின் பொருட்டு மனித பலி செலுத்தி வந்தனர். இவை ஆங்கில அரசாட்சியாரால் நிறுத்தப்பட்டன. புராணங்களில் நரபலியால் தெய்வம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் திருப்தி யுறுகின்றது என்று எழுதப்பட்டுள்ளது.

இறந்தவர் பொருட்டும் பலிகள் செலுத்தப்பட்டன. இறந்தவனைத் தீயிலிட்டுக் கொளுத்தும்போது அவன் மனைவி, நாய், அடிமைகள் போன்றவர்களும் கொளுத்தப்பட்டார்கள். இறந்த கணவருடன் மனைவி யையும் பதைக்கப் பதைக்கத் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் (ஆங்கில ஆட்சியினரால் நிறுத்தப்படும் வரை) இந்திய நாட்டில் இருந்துவந்தது. அதற்கு வைதீகர் மந்திரங்களோடு கூடிய கிரியைகளையும் எழுதி வைத்திருந்தார்கள். ஆப்பிரிக்காவில் இறந்தவன் ஒருவனுக்குச் செய்தி அனுப்ப வேண்டி இருந்தால் அச் செய்தியை அடிமை ஒருவன் காதில் சொல்லியபின் அவன் கழுத்துக் கொய்யப்பட்டது.

மக்கள் இவ்வாறு தெய்வங்களுக்கு மனிதரையும் விலங்குகள் பறவைகளையும் வெட்டிக் கொன்று பலியிடுவதே, தாம் செய்யத் தகுந்த மேலான கடவுட்பணி என நீண்டகாலம் நம்பி வந்தார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்னும் உணர்ச்சி அவர்கள் உள்ளத்திற் பிறக்க வில்லை.

மேற்குத் தேசங்களில் கிறித்துவ மதம் தோன்றிப் பரவிற்று. அக் காலங்களில் பழைய பலியிடும் வழக்கங்கள் சிறிது சிறிதாக நின்று போயின. கிறித்துவ சமயத்துக்குப் பின் முகமதிய சமயம் தோன்றிற்று. அப்பொழுதும் இவ் வழக்கம் மேல் நாடுகளில் நின்று போயிற்று.

இந்திய நாட்டில் அறியாமையுடைய மக்களிடையே பலியிடும் வழக்கம் இருந்து வருவதாயிற்று. ஆரியரின் மதத்தில் பலியிடுவதே முக்கிய கொள்கை. பலியிட்டு யாகங்கள் செய்வதால், மனிதன் தேவர் களுக்கு அரசனான பதவியை அடைகின்றான் என்னும் கொள்கை வலிபெற்றிருந்தது. ஆகவே குதிரையாகம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம், நரமேத யாகம் போன்ற பல யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. குருக்களாயிருந்து அவ்வகை யாகங்களைச் செய்வதற்கு ஏற்பட்டோரே பிராமணர் என்னும் குழுவினராவர்.

மக்களின் அறிவு பண்பட்டது; பாவ புண்ணியங்களைப் பற்றிய அறிவு உண்டாயிற்று. பண்டு தாம் அறியாமையாற் புரிந்து வந்த பலிகளை, அவர்களால் விடமுடியவில்லை. ஆகவே அவர்கள் மாவி னால் மிருகங்களையும் பறவைகளையும் மனிதரையும் செய்து தெய்வங் களுக்குப் பலியிட்டார்கள். மாவினாற் செய்த பணியாரங்களைப் படைத்தார்கள். சிலர் இரத்தத்தின் குறி இல்லாமல் செய்யப்படும் பலியில் திருப்தி உறவில்லை. ஆகவே மிருக பலிக்குப் பதில் பூசினிக்காய் வெட்டப்பட்டது. இரத்தத்துக்குப் பதில் குங்குமம் பூசப்பட்டது. இன்று இடப்பட்டு வரும் பூசினிக்காய்ப் பலி, மிருகபலியின் தேய்வேயாகும்.

பூசாரிகள் பலமடைதல்
பூசாரிகள் எவ்வாறு தோன்றினார்கள் என்று முன் கூறினோம். கோயில்கள் பல தோன்றின. கோயில்களில் புரியும் பணிவிடைகள் பல இருந்தன. ஒருவன் மேலான பூசாரியாக இருந்தான். அவனுக்கு உட் பட்டுப் படிப்படியே தாழ்ந்த பணிகளைச் செய்வதற்குப் பல படியான பூசாரிகள் இருந்தனர். உரோமன் கத்தோலிக்க பூசாரி வரிசையில் இதனைக் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் ஆறுவகைப் பார்ப்பார் எனப் பட்டோரும் இவ்வகையினரே. ஒரு கிராமத்தில் அல்லது ஒரு ஊரில் கோயிலே முக்கியம். கோயிலைச் சூழ்ந்து மக்கள் இருந்தார்கள். கிராமம் அல்லது ஊர், கோயிலில் இருக்கும் கடவுள் சார்பான பெயரைப்பெற்றது. மக்களுக்காகக் கோயில் இருப்பது என்னும் கருத்து மாறுபட்டுக் கோயிலுக்காக மக்கள் இருக்கிறார்கள் என்னும் கொள்கை உண்டா யிற்று. பூசாரி கடவுளின் விருப்பங்களை அறிந்து சொல்லவும், மக்களின் தேவைகளைக் கடவுளுக்கு உணர்த்தவும், வல்லவன் என்று மக்கள் நம்பினர். அதற்கேற்ப அவன் கடவுளின் வாக்கு என வெளிப்பாடு (oracle) சொன்னான். மக்கள் அவனிடம் மிகவும் பயபத்தி உள்ளவர்களாக இருந்தனர். பஞ்சம் பிணி போன்ற காலங்களில் மக்கள் அவனை யோசனை கேட்டார்கள். அவன் தெய்வம் ஆடிக், கடவுளின் எண்ணங் களைத் தெரிவித்தான். சில சமயங்களில் தெய்வம் அரசனையே பலியாகக் கேட்கின்றது என்று அவன் சொன்னான். உடனே மக்கள் அரசனைக் கொன்று பலியிட்டார்கள்.1

மோட்ச நரகங்களின் திறவுகோல் தமது கையில் இருப்பதாகவும், அவர்கள் மக்களை நம்ப வைத்து நடு நடுங்கச் செய்தார்கள். இவர்கள் அரசரையும் அடி வணங்கும்படி செய்யும் வலிமையைப் பெற்றனர். சக்கர வர்த்திகளும் அவன் கால் அடிகளை முத்தமிட்டார்கள்.2 12 ஆம் நூற் றாண்டில் போப்பாண்டவர் அரசருக்காவது விசுப்பாண்டவருக்காவது ஒரு அதிகாரமும் இல்லை என்றும், அவர்கள் பெற்றுள்ள அதிகாரம் தன்னிடத்தினின்று கிடைத்ததாகுமென்றும், தாம் உலகத்துக்குத் தலைவன் என்றும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

பூசாரிகள் மந்திரவாதிகள்
பொதுமக்கள் உயர்ந்த அறிவுக்குக் கட்டுப்படமாட்டார்கள்; மருந்து, மாந்திரீகம் போன்ற வித்தைகளுக்கே அடிமைப்படுவார்கள். இதனை முற்காலப் பூசாரி அறியாதவனல்லன். அவன் சில தந்திரங் களைக் கையாண்டு மக்களை வசப்படுத்தினான். அவன் மற்றவர்கள் விளங்கிக் கொள்ளாத வகையில் சில கிரியைகளைச் செய்தான். மற்றவர்கள் விளங்க மாட்டாத சில சொற்றொடர்களை மந்திரமென முணுமுணுத்தான். அவன் செய்யும் கிரியைகளிலும், சொல்லும் மந்திரங் களிலும் பெரிய வல்லமை இருப்பதாக மக்கள் நம்பினார்கள், இன்னும் நம்பி வருகிறார்கள். இன்னும் பூசாரி நோய்களுக்கு நூல் கட்டுதல், குழை அடித்து மந்திரம் (பாடம்) போடுதல், தண்ணீரில் மந்திரம் ஓதிக் கொடுத்தல், தெய்வம் ஏறி ஆடி வெளிப்பாடு கூறுதல் போன்றவை, பழமை தொட்டுப் பூசாரிகள் கையாண்டு வரும் தந்திரங்களேயாகும்.

சமய சம்பந்தமானவையும், கடவுள் அருளால் சொல்லப்பட்டன வென்று அவர்களால் எழுதப்பட்டனவுமான நூல்களை மற்றவர்கள் அறியாவகை மறைத்து வைத்தார்கள், பழைய கிறித்தவர்கள், ஆரியர், தமிழர், எகிப்தியர் எல்லோரிடையும் இவ் வழக்கு இருந்தது. குருமார்கள், மற்றவர்களுக்கு விளங்காத ஒரு மொழியை வைத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறு இல்லாவிடில் பொதுமக்களை ஏமாற்றுவது கடினமாகும்.

தொகுப்புரை
இதுவரையும் கூறியவற்றால், முற்காலத்துத் தொடங்கி நடை பெற்ற சமயம் என்ன என்று நமக்கு விளங்குகின்றது. இறந்தவர்களின் ஆவி வணக்கத்தில் தொடங்கிய சமயம், பூசாரிகளின் ஆட்சி வரையில் படிப்படியே வளர்ச்சி அடைந்ததை நாம் நன்கு அறிந்துகொண்டோம். பூசாரிகளின் அதிகாரம் மேல் ஓங்கியிருந்த காலத்தில், அவர்கள் தமது வருவாயை நாடிப் பல மூடப் பழக்கவழக்கங்களை மக்களிடையே தோற்றுவித்தனர். அப் பழக்கங்களை நிலைநாட்டும் பொருட்டுக் கடவுள் சொன்னதாகப் பல கற்பனை நூல்களை எழுதி, மக்களிடையே பரவச் செய்தனர். மறுமையில் தனது நிலைமை என்ன ஆகுமோ என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த மக்கள், மறுமையில் தமக்கு நேரக்கூடிய துன்பங்களைத் தாண்டுவதற்குத் தெப்பம் கிடைத்ததென நினைத்து அப்பொய் நூல்களிற் சொல்லப்பட்டவாறு ஒழுகத் தலைப்பட்டார்கள். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அம் மூடப் பழக்கங்களை மக்கள் சடுதியில் நிறுத்துவது அரிது. மாசிமகத் தீர்த்தம் என்று மக்கள் கோடிக்கணக்கில் கும்பலாய்க் கூடிக் குளத்தில் குளிக்கின்றனர். இதற்குக் காரணம் குறிக்கப்பட்ட ஒரு குளத்தில், குறிக்கப்பட்ட ஒரு நாளில் குளித்தால் மனிதன் புரிந்த பாவங்கள் கழியும் எனப் பூசாரிகள் எழுதி வைத்த கதையே ஆகும். மக்கள் எல்லோரும் பாவம் செய்பவர்களே. பாவம் செய்யும் மூடமக்கள் அதனை எளிதில் கழுவிவிடலாமெனத் திரள்கின்றனர். சுகாதாரக் குறைவினால் வாந்திபேதி போன்ற தொத்து நோய் கண்டு உடனே இறக்கின்றனர். பூசாரிக்குப் பணம் கொடுத்துக் கடவுளுக்குக் குடமுழுக்காட்டுதல், ஆயிரந் திருநாமங்களைச் சொல்லச் செய்தல் போல்வன, பூசாரியின் “உண்டியலை” நிரப்பும்படி செய்யப் பட்டுள்ள சூழ்ச்சிகளே அன்றிப் பிறவல்ல. திருப்பதிக்குக் குடை கொண்டு போதல் போன்ற வழக்கமும் இவ் வகையினதே. உண்மையாக ஈடேறும் வழியை மக்கள் அறிந்துகொள்ளாது, முட்டாள் தனமாக வீதி வீதியாக அலைந்து அல்லோல கல்லோலப் படுவது மிக மிக இரங்கத் தக்கது. மக்கட் சமூகம் ஈடேறுவதற்கு இன்று அறிஞர் செய்யத்தக்கது பூசாரி ஆட்சியை ஒழிப்பதும், மக்கள் சமயம் என்னும் பெயரால் விழலுக்கிறைத்த நீரை ஒப்ப, பொருளையும் காலத்தையும் விரயம் செய்வதையும் தடுப்பதுமேயாகும். இன்றைய சமயத்தின் முடிவு எத்தத்துவக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொள்ளாது. சோம்பேறிகளாகிய பூசாரிகளைக் கொழுக்க வைப்பதேயாகும்.

சமய சீர்திருத்தம்
மேற்கு உலகில் சமயம் மிகவும் சீரழிந்திருந்தது. சமயம் என்னும் பெயரால் பல கொடுமைகள் நடந்தன; கொலைகள் அதிகரித்தன; வியபிசாரங்கள் பெருகின. பூசாரி ஆட்சி உச்சநிலை அடைந்திருந்தது. அக்காலத்திலேயே பாலஸ்தீன் நாட்டில் கிறித்துநாதர் தோன்றினார். அவர் தெய்வம் ஒன்று என்னும் கொள்கையை உபதேசித்தார்; “தன்னைப் போல் பிறரை நேசி” என மக்களுக்கு நல்லறிவு கொளுத்தினார். கிறித்துநாதரின் நல்லுபதேசங்கள் மக்களின் மனத்தைக் கவர்ந்தன. பலர் அவருக்கு மாணாக்கரானார்கள். நல்லறிவு பெற ஆவல்கொண்ட மக்கள் அவரைச் சூழ்ந்தார்கள். குருமார் இதனைக் கண்டு பொறாராயினர். அவரை எவ்வகையிலேனும் கொன்றுவிடக் கருதினார்கள்; அவர், தானே அரசன் என மக்களுக்குப் போதித்தார் என, நீதிபதியின் முன் குற்றஞ்சாட்டினர். அவன் அவரை அவமானப்படுத்திச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி கட்டளை இட்டான். அக் காலத்தில் மத சீர்த்திருத்தஞ் செய்ய எழுவோரின் முடிவு இவ்வாறாக இருந்தது. பூசாரிகள், அல்லது குருமார் தமது அதிகாரத்துக்குப் பங்கம் விளையாத வாறு மேற்கூறப்பட்டது போன்ற அடக்குமுறைச் செயல்களைக் கை யாண்டு வந்தனர். போப்பு ஆட்சியில் இவ்வகையான பல கொடுமைகள் நடந்தன. அவைகள் வரலாறுகளிற் காணப்படுகின்றன. மத்திய காலத் தில் உயர்ந்த கல்வி அறிவுடைய ஒரு பிரபு, போப்பு ஆட்சிக்கு மாறாக நூல் வெளியிட்டதன் விளைவாக, காது மூக்கு முதலிய உறுப்புக்கள் அறுக்கப்பட்டும், சவுக்கால் அடிக்கப்பட்டும் சிறையிலிட்டும் சித்திர வதை செய்யப்பட்ட வரலாறு, நூல்களிற் காணப்படுகின்றது. 1கிறித்து நாதர் பிற்கால மக்கள்களால் வழிபடப்பட்டார். கிறித்து மதம் போப் ஆட்சிக்கு உட்பட்டுப் பழைய பூசாரி ஆட்சியின் கடுமையை அடைந்த போது, மார்டின் லூதர் என்னும் பேரறிஞர் தோன்றி சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். மார்டின் லூதரின் சீர்திருத்த முறைகளைப் பலர் பின்பற்றினர். அவர்கள் போப்பு ஆட்சியினின்றும் நழுவி இப் புதிய மதத்தில் சேர்ந்தனர்.

கிறித்துநாதருக்குப் பின் முகமது நபி என்னும் ஒரு பெரியார் அராபிய நாட்டில் தோன்றினார். அக்காலத்தில் பூசாரி ஆட்சியும் சிறு தெய்வ வழிபாடுகளும், பெரிதும் தலையெடுத்திருந்தன. அப்பொழுது ‘நபி கடவுள் ஒருவரே உளர்; அவர் அல்லா. விக்கிரக வழிபாடுகள் அழிக்கத் தக்கன, என்று மக்களிடையே போதித்தார். அதனால் கோயில்களில் வருவாய் குறையத் தொடங்கிற்று. பூசாரிகள் நபியைக் கொல்ல முயன்றார்கள். நபி சிறந்த போர்வீரன். அவர் பலரைத் தமக்குப் பக்க பலமாகத் திரட்டிக் கொண்டு படை பலத்தினால் நாட்டையே தம் வசப்படுத்திக் கொண்டு தனது கொள்கைகளை நிலைநாட்டினார். கிறித்து மதம், முகமது மதம் என்பவை மிகப் பரவினமையால், மக்க ளிடையே சமயம் என்னும் பெயருடன் காணப்பட்ட மூடப் பழக்க வழக்கங்கள் பல மறைந்தன.

இந்திய நாட்டை ஆரியர் அடைந்தபோது, விலங்குகளைக் கொன்று இயற்றப்படும் யாகங்களால் மாத்திரம் மக்கள் ஈடேறலாம் என்னும் பொல்லாத கொள்கை மக்களிடையே பரவிற்று. எண்ணிறந்த விலங்குகள் யாகம் என்னும் பெயரினால் கொல்லப்பட்டன. அப் பொழுது புத்தர் என்னும் பெரியவர் வடநாட்டில் தோன்றினார். அவர் ஆரியரின் பொல்லாத கொள்கைகளை எதிர்த்துப் போராடினார். அவர் உண்மை உபதேசங்களைக் கேட்ட மக்கள் அவரைப் பின்பற்றினர். இவர் அரச குடும்பத்தவராய் இருந்தார். இவருக்குப் பொதுமக்களின் ஆதரவு பெரிதாக இருந்தது. ஆகவே கிறித்து நாதரைக் கொன்றது போலப் பூசாரிமாரால் புத்தரையும் கொல்ல முடியவில்லை. புத்தமதம் உலகம் எங்கும் பரவிற்று. மக்கள் புத்தரையே கடவுளாக வணங்கத் தலைப்பட் டார்கள்.

பிற்காலத்தில் தோன்றிய சைவ சமய குரவர்கள், ஒரு தெய்வ வழிபாட்டையே வற்புறுத்தினார்கள். இன்று தமிழருடைய சமயம் உண்மைப் போக்கினின்றும் விலகியுள்ளது. பருப்பை எறித்துவிட்டுக் கோதைக் கைப்பற்றியவனைப் போல மக்கள் உண்மை வழியை நாடாது வீண் ஆரவாரங்களையே பொருளெனக் கருதிச் சீரழிகின்றனர். இன்று பெரும் புரட்சி தோன்றிச் சமயத்தில் சீர்திருத்தம் உண்டாக்க வேண்டியது அவசியமாகும்.

தத்துவஞானம் உதயமாதல்
மக்களின் அறிவு காலத்துக்குக் காலம் பண்பட்டுவந்தது, ஆயினும் பெரும்பாலோரின் போக்கு பழைய போக்கிலேயே சென்றது. சிறுபான்மை யோர் மனஅமைதியுடன் இருந்தனர். அவர்கள் சமயம் என்னும் பெயரால் உலகில் நடப்பவைகளை நோக்கினர். அவைகளில் உயர்ந்த கொள்கைகள் எவையும் இருப்பதைக் காணாராயினர். ஆகவே உண்மை காணுவதில் அவர்களின் உள்ளம் ஆழ்ந்து சென்றது. மனிதனின் மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. அதனை ஓர் இடத்தில் நிறுத்தினால் பெரிய ஆற்றல் உண்டாகின்றது. மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் மனோவசியம் (ஹிப்நாட்டிசிம்) அறிதுயில் (மாக்நட்டிசிம்) முதலிய வித்தைகளிற் பயின்றோர், நாம் வியக்கத்தக்க அருஞ்செயல்களைச் செய்து காட்டுகின்றனரன்றோ? மனதை ஒரு வழிப்படுத்திய மக்கள், தம்மைப் பற்றியும் உலகைப்பற்றியும் இவ்விரண்டையும் இயக்கும் கடவுளைப் பற்றியும் உண்மைகளைக் காண முயன்று வந்தார்கள். இவ் வுண்மைகளை ஆரவாரங்களாற் காணமுடியாது. மொகஞ்சதரோவில் யோகத்தில் வீற்றிருக்கும் கடவுள் வடிவுடைய முத்திரை ஒன்று காணப்படு கின்றது. இதனால் மிக முற்காலத்தில் அறிஞர் சிலர், மனத்தை ஒருவழிப் படுத்தப் பழகி உண்மைகளை அறிய முயன்று வந்தார்கள் எனத் தெரிகின்றது.

அவ்வாறு மனதை ஒருவழிப்படுத்திய அறிஞர் உயிர், உலகம், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை அறிந்தார்கள். தாம் அறிந்தவற்றைப் பக்குவம் வாய்ந்த சிலருக்குக் கூறினார்கள். இவ்வுண் மைகள் இவ்வாறு நீண்டகாலம் குரு மாணாக்க முறையில் வந்தன. அவர்கள் பொது மக்கள் சமயம் எனக்கொண்டு உழலும் புறவிடயங் களில் மனம் பற்றாதிருந்தனர். இவ்வாறு உலகில் இருவகைச் சமயங்கள் நிலவின. முன்னதைப் புறச்சமயம் என்று கூறலாம். அதனைத் தேங்காயைச் சுற்றி மூடியுள்ள தோலுக்கு ஒப்பிடலாம். பிந்தியதைத் தோலின்கீழும், வயிரமான ஓட்டின் கீழும் உள்ள அதன் பருப்புக்கு ஒப்பிடலாம்.

மனம், வளர்ச்சி அடைவதினாலே மக்கள் உயர்நிலை எய்துதல் கூடும். மூடப் பழக்க வழக்கங்களினால் மனிதன் தாழ்நிலை எய்துவான். நமது நாட்டில் மக்கள் மூடப் பழக்க வழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஆகவே, அவர்கள் எல்லாத் துறைகளிலும் தாழ்ந்து, உலக மக்களிலேயே தாழ்ந்த நிலையினர் என்னும்படி நாள் வீதம் ஒடுங்கி வருகின்றனர்.

தத்துவ ஞானங்களோடு கூடிய சமயம், மேற்கு உலகத்தவரால் அறியப்படாமல் இருந்தது. கிரேக்க நாட்டிலே கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் பிதாகாரஸ் என்னும் அறிஞர் இருந்தார். அவர் உயிர், உலகம், கடவுள் போன்ற உண்மைகளை விளக்கும் ஞானத்தை முதன் முதல் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டார். இவர் இந்திய நாட்டுக்கு யாத்திரை செய்து கபிலரின் சாங்கிய மதக்கொள்கைகளைப் பயின்று சென்றார் என்று கோல்புரூக் (Colebrooke) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். கிரேக்கரின் தத்துவ ஞானக் கொள்கைகள் பெரும்பாலும் தென்னிந்திய மக்களின் சித்தாந்த சாத்திர நூற்பொருள்களை ஒத்தன.
தமிழரின் சமயம்
இதுவரையில் உலக மக்கள் எல்லோருக்கும் பொதுவாயுள்ள சமயக்கொள்கைகளைக் கூறிவந்தோம். முற்காலச் சமயம் என்பது மக்களின் பலவகைப்பட்ட அறிவு வளர்ச்சிப் பருவங்களில் தோன்றி வழங்கிய பழக்க வழக்கங்களின் தொகுதிகளாகக் காணப்படுகின்றன. இன்று கல்வி அறிவில்லாத பொதுமக்களின் சமயம் இதுவே. கல்வி யறிவுள்ளவர்களில் பலரும் இதுவே உண்மையான சமயம் எனக் கருதி வருகின்றனர். “பழக்கங் கொடிதுகாண்” என ஒரு தத்துவஞானி கூறியுள் ளார். சித்தாந்த நூல்களில் கூறப்பட்டுள்ள தத்துவக் கொள்கையுடைய சமயம் காணப்படவில்லை.

மொகஞ்சதரோ மக்களின் சமயம்
மொகஞ்சதரோ மக்களின் சமயம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டது. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு பழைய சிந்துவெளித் தமிழரின் சமயம் எவ் வகையினது என்று நம்மால் அறியக்கூடியதாய் இருக்கின்றது. ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சதரோச் சமயத்தைப்பற்றி ஆராய்ந்து கூறி யிருப்பதை இங்குத் தருகின்றோம்.1
மொகஞ்சதரோ முத்திரை ஒன்றில், “இறுவன் கொம்மின்னனீர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்குக் கொம்பு (வாத்தியம்) ஊதுகின்ற மீனவர் என்பது அதன் பொருள். இன்னொரு முத்திரையில் “கோயில் எல்லாக் கடவுள் அது” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலிலுள்ள எல்லாக் கடவுளரிலும் பெரிய கடவுள் என்பது அதன் பொருள். இரண்டு பட்டையங்கள் நாலூரில் இருக்கும் விடுகண் என்னும் கடவுளைப்பற்றிக் கூறுகின்றன, கடவுளருக்கு கண்ணிமை இல்லை என வழங்கும் இந்திய மக்களின் ஐதீகக்தோடு இது பெரிதும் ஒத்திருக்கின்றது. அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றமையால், கண்ணை மூடமாட்டார்கள் என்பதே கண்ணை இமையாதவர்கள் என்பதன் பொருளாகும்.

ஒரு முத்திரையில் மூன்று முகங்கள் உடையதும், யோகத்தில் அமர்ந் திருப்பதும் ஆகிய ஓர் கடவுளின் வடிவம் காணப்படுகின்றது. அதனைச் சூழ்ந்து யானை, காண்டாமிருகம், புலி, எருது முதலிய விலங்குகள் காணப்படுகின்றன. சேர்யோன் மார்சல் என்பார் அவ்வடி வம் சிவனைப் பசுபதி என்று காட்டும் பொருட்டு அமைக்கப்பட்ட தென்று கூறியுள்ளார். ஓர் இடத்தில் கடவுளைக் குறிக்க எண்மை என்னும் பெயர் காணப்படுகின்றது. ஒரு பட்டையம் கடவுளின் மூன்று கண்களைப் பற்றிக் கூறுகின்றது. மூன்று பட்டையங்கள் கடவுளின் ஓர் கண்ணைப் பற்றிக் கூறுகின்றன. அவை குறிப்பிட்டுள்ள “ஓர் கண்” கடவுளின் மூன்றாவது கண்ணையாகும். கடவுள் பேராண் என்னும் பெயராலும் வழிபடப்பட்டார். பேராண் என்பதே பெருமான் என்று ஆயிற்றுப்போலும். கடவுள் தாண்டவம் செய்பவர் என்னும் கருத்தும், அக்கால மக்களிடையே பரவி இருந்தது. இது “தாண்டவன் இர் நால் மரம்” என்னும் பட்டையத்தால் நன்கு விளங்குகின்றது.

கடவுள் சிவலிங்க வடிவிலும் வழிபடப்பட்டாரென்பது அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங்களிற் கிடைத்த அவ்வகைப் பொருள்கள் பலவற்றால் நன்கு விளங்குகின்றது. இலிங்கம் உயரத்தில் உள்ள சூரியனாகக் கருதப்பட்டது என்பதைக் குறிக்கும் பட்டையங்களும் காணப்படுகின்றன.

சுமேரிய மக்கள் ஆண் அம்மா என்லில் என்னும் மும்மூர்த்திகளை வழிபட்டார்கள். தாய்க் கடவுளின் வடிவங்கள் பல, மொகஞ்சொதரோ அரப்பா என்னும் இடங்களிற் காணப்பட்டன. அரப்பாப் பட்டையங் களில், அம்மனை மீன் கண்ணி எனக் குறிக்கின்றன. “உயர் எல்தேர் ஓர் அம்மன்” எனப் பொறிக்கப்பட்ட பட்டையத்திற் காணப்படும் கடவுள் வடிவின், பாதி (இடப்புறம்) ஆண் வடிவாகவும், பாதி (வலப் புறம்) பெண் வடிவாகவும் காணப்படுகின்றன. இவ்வகையான கடவுள் சுமேரியாவிலும் அம்மா (amma) என்னும் பெயருடன் காணப்படுகின்றது. இக் கடவுளைச் சைவர் அர்த்தநாரீசுரர் எனக் கூறுவர்.

ஒரு சாசனத்தில் ஓரிடத்தில் மாத்திரம் கடவுள் பாம்பு வடிவினராகக் கூறப்பட்டுள்ளார். “மீனவர் மூன்று கண்ணுள்ள பாம்பைத் தியானிக்கின் றார்கள்” என ஒரு பட்டையம் கூறுகின்றது. இதைப்போலவே இன் னொரு பட்டையம், கைக்கோடரி (மழு) யைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மறியற் படுத்தப்பட்ட மீனவர் பெரிய கடவுளின் மூன்று கண்களைத் தியானிக்கின்றார்கள் என ஒரு பட்டையம் கூறுகின்றது.
மொகஞ்சதரோ மக்கள் நாட்டுக்கு அரசன் கடவுள் என்றும், அவர் சார்பில் அரசன் ஆள்கின்றான் என்றும் நம்பினார்கள். மொகஞ் சதரோ நண்டூர் எனப்பட்டது அரசன் நண்டூர் உழவன் அல்லது நண்டில் உழவன் எனப்பட்டான். அரசன் பூசாரியாகவும் இருந்தான். இது, “மீனனீர் மாறு அடு ஐயன் செறிதல் தல் எல்லா” என்னும் பட்டையத் தால் விளங்குகின்றது. இதன் பொருள் “மீனவரின் பகைக் குரியவன் சிறைப்படுத்தப்பட்ட அரசனாகிய பூசாரி” என்பதாகும்.

ஞாயிற்றின் கோயில்கள் சதுரவடிவாகக் காணப்படுகின்றன. அதற்கு முன்னால் திறந்த தலைவாயில் இருந்தது. ஞாயிற்றைக் குறிக்கும் வட்ட வடிவம் கட்டிலின் மீது வைக்கப்பட்டிருக்கிறது.

இங்குக் கூறப்பட்டவைகளால் 5000 ஆண்டுகளுக்கு முன்னும், மக்களின் வழிபாடு இன்றைய வழிபாட்டை ஒத்திருந்ததென்றே தெரி கின்றது. அக் காலத்திலேயே மக்கள் மனத்தை ஒருவழிப்படுத்திச் செய்யப் படுவதாகிய யோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள்.

அசுரர் என ஆரியரால் வழங்கப்பட்ட மக்கள், சிவனை நோக்கிக் கடிய தவங்களைப் புரிந்து பெரிய வரங்களைப் பெற்றார்கள் எனப் புராணங்களில் கூறப்படும் பழங்கதைகள், தமிழர் மனதை ஒரு வழிப்படுத்திச் செய்யப்படும் யோகத்தினால் பெரிய ஆற்றலைப் பெற்று விளங்கினார்கள் என்னும் உண்மையை விளக்குவனவே. கிறிஸ்துநாதர், புத்தர், மகாவீரர், முகமது முதலியோர் தனிமையிலிருந்து சிந்தையை ஒடுக்கித் தவஞ் செய்தமையினாலேயே ஞானத்தைப் பெற்று, மற்றவர்கள் ஈடேறும் வழியைக் காட்டினார்கள் என உலகம் நம்பிவருகின்றது.

சங்க காலத்தில் தமிழர் வழிபாடு
சங்க காலம் என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன், சங்க இலக்கியங்களில் தமிழர் வழிபாடு எவ்வாறு இருந்ததென்று நன்கு கூறப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவரவர் வாழும் இடங்களுக்கேற்றவாறிருந்தது. அதற்கேற்பவே அவர்களின் வழிபாடுகளும் இருந்தன.

சங்க கால நூல்கள் நாட்டை, மலை, காடு, வயல், கடற்கரை, மணல் வெளி என ஐவகையாகக் கூறுகின்றன. ஒவ்வொரு நிலத்தும் வாழும் மக்கள், உணவு தேடும் பொருட்டுக் கொண்ட தொழில்கள் வெவ்வேறு வகையின. அவைகளுக்கேற்ப அவர்கள் வாழ்க்கையும் இருந்தது.

முருக வணக்கம்
மலை நாட்டில் வாழ்ந்த மக்கள் முருகக்கடவுளைத் தமது குல தெய்வமாகக் கொண்டிருந்தனர். முருக வணக்கம் என்பது ஞாயிற்று வணக்கத்தின் இன்னொருவகை. காடுகிழாள் அல்லது துர்க்கையே முற்காலத்தில் போர்க் கடவுளாக இருந்தாள். பின்பு முருகன் போர்க் கடவுளாகக் கொள்ளப்பட்டார். கடலிடத்தே காலையிற்றோன்றும் இளஞாயிறு, மயில்மீது எழும் இளங் கடவுளாகக் கொள்ளப்பட்டது. பாலஸ்தின் நாட்டு மக்களும் ஞாயிற்றை முதிய பகல் (old baal) என்றும் இளைய பகல் (young baal) என இருவகையில் வழிபட்டார்கள். இவ்விளம் பகலையே கிரேக்கர் “மார்ஸ்” என்னும் போர்க் கடவுளாகக் கொண்டனர். மலைகளில் வாழும் மக்கள் முருகனின் வடிவாக வேலை நட்டும், கடப்ப மரத்தை அலங்கரித்தும், மறியறித்துப் பலி தூவி வழிபட்டார்கள். திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் ஆலயங்களில் மக்கள் பூவும் புகையும் கையுறைகளும் கொடுத்துத் தாம் எண்ணும் எண்ணங்கள் பலிக்கவேண்டுமென முருகக் கடவுளை நினைந்து வழி பட்டனர். ஆலயங்களில் பெரிய விழாக்கள் நடைபெற்றன.

திருமால் வணக்கம்
முல்லை நிலம் அல்லது காடு சார்ந்த இடங்களில் வாழ்ந்த மக்கள் திருமாலை வழிபட்டனர். மால் ஞாயிற்றுக் கடவுளின் இன்னொருவகை. மால் என்பது பெரிய எல் (மா+எல்) என்னும் பொருள் தரும் பெயர். எல் என்பது அல் ஆயிற்று. இக் கடவுள் முன்பு தாய்க் கடவுளாகக் கொண்டு வழிபடப்பட்டதாகவும், பின்பு தந்தைக் கடவுளாகக் கொள்ளப்பட்ட தென்றும் கருத இடமுண்டு. “அரியலாற் றேவியில்லை ஐயாறனார்க்கே” எனத் தேவாரத்தில் வருதலும் காண்க. பாரதப் போருக்குப் பின் கிருட்டிண வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்றாகக் கொள்ளப்பட லாயின. திருமாலின் கையிலிருக்கும் சக்கரம் ஞாயிற்றைக் குறிப்பது. உலகை மூவடிகளால் அளந்தார் எனச் சொல்லப்படுவதிலுள்ள திருமால் ஞாயிறு. அவரின் மூன்று அடிகள், உதயம், உச்சி, சாய்வு என்னும் மூன்று இடங்களில் செல்லும் செலவுகள் ஆகும். இவ்வாறே திருமால் மூவடிக ளால் உலகை அளந்தார் என்னும் கதைக்குப் பொருள் உரைக்கப்படு கின்றது.

முல்லை நிலத்து ஆயர், திருமாலுக்குப் பாற்பொங்கல் பொங்கிப் படைத்து வழிபடுவர், இடைச்சியர் கைகோர்த்து நின்று குரவைக் கூத்தாடுவர். திருமாலுக்கு உயிர்ப் பலிகள் இடப்பட்டதாகச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ‘திருவனந்தபுரத்திலும், திருவெஃகாவி லும் திருமால் கோயில்கள் மிகச் சிறப்புற்று விளங்கின. திருவனந்தபுரத்தி லுள்ள திருமால் கோயிலில் மக்கள் சென்று வழிபடும் இயல்பு பதிற்றுப் பத்து என்னும் நூலிற் காணப்படுகின்றது. தம் விண் என்பது விஷ்ணு வாயிற்று என ஆராய்ச்சியாளர் அறைவர்.

வேந்தன் வணக்கம்
மருதம் அல்லது வயல் சார்ந்த இடங்களில் வாழ்ந்தோர், இந்திரனை வழிபட்டார்கள். இந்திரன் என்பது இறைவன் என்பதன் திரிபாகலாம். முற்கால மக்கள் மழை பெய்தற்கும், உலகம் செழிப்பதற்கும் அரசனே காரணம் எனக் கருதினார்கள். ஆகவே அவர்கள் அரசனையே தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். உலக வரலாற்றில் இது புதுமை யன்று. முன்னோரிடத்தில் அரச வணக்கம் தோன்றியதற்குப் பிறிதோர் காரணமும் கூறினோம். அரசனால் மழை பெய்கின்றது என்னும் கருத்தைக் கொண்டே, இந்திரன் முகிலை வாகனமாக உடையவன் என்னும் ஐதீகம் உண்டாயித்தல் வேண்டும். இந்திய நாட்டை அடைந்த ஆரிய மக்களும் தாம் வந்தடைந்த நாட்டில் மக்கள் இறைவனை வழிபடுதலைக் கண்டு தாமும் அவ்வாறு செய்தனராகலாம். அவர்கள் இறைவனையே இந்திரன் எனத் திரித்தும் வழங்கினார்களாகலாம். பிற்காலத்தில் இத் தெய்வம் திக்குப்பாலகரில் ஒன்றாகக் கொள்ளப் பட்டது. வயலை அடுத்தே பெரிய பட்டினங்களும் அரசன் தலைநகரும் இருந்தன. விதைப்புக் காலத் தொடக்கத்திலும், அறுப்புக் காலத்தின் பின்பும், இந்திரனுக்குப் பெரிய விழாக்கள் எடுக்கப்பட்டன. அக் காலங் களில் ஆலயத்தில் ஆடல் பாடல் போன்ற பலவகைப் பொழுது போக்குகள் நடைபெற்றன. இந்திரனின் வடிவம் இரும்புத் தண்டா யுதத்தைப் பிடித்து நிற்பவனாக அமைக்கப்பட்டிருந்தது.

கடற்கரைகளில் வாழ்ந்தவர்களின் குல தெய்வம் வருணன். வருணன் அசுரன் என வடமொழி வேதங்களில் கூறப்படுவதால், அக் கடவுள் தமிழர் கடவுளே என ஆராய்ச்சியாளர் முடிவு செய்திருக்கின்ற னர். தமிழரின் வருணன் என்னும் கடவுளையே ஆரியமக்களும் வழி பட்டனர். வருணன் ஆதித்தருள் ஒருவன் எனப்படுகின்றமையால், ஞாயிற்றைக் குறிக்கும் அருணனே வருணனாயிற்று எனக் கருத இட முண்டு. வருணனுக்குப் பெரிய கோயில்கள் இருந்தனவென்று தெரிய வில்லை. கடற்கரைகளில் வாழும் மீன் பிடிப்போர், பூரணைக் காலங் களில் தாழைகளின் கீழ் சுறாக் கொம்புகளை நட்டு மலர்களைத் தூவி வருணனை வழிபட்டார்கள்.

காளி வணக்கம்
பாலை நிலங்கள் அல்லது வெய்யிலால் புல் பூண்டுகள் கரிந்து போன காட்டு, மலை ஒதுக்குகளில் வேட்டையாடி வாழும் பிற்போக் குடைய மக்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் உயிர்ப் பலியிட்டுக் காளியை வழிபட்டார்கள். இக் காளி வழிபாட்டைப் பற்றிப் பரணி நூல்கள் நன்கு விரித்துக் கூறுகின்றன.

கிருட்டிண, பலதேவ வழிபாடுகளும் மருத நிலங்களிலும் முல்லை நிலங்களிலும் இருந்துவந்தன. இன்னும் வீர, வணக்கங்களும் பல சிறு தெய்வ வணக்கங்களும் இருந்து வந்தன.

சிவ வணக்கம்
தொல்காப்பியத்தில் முற்கூறிய ஐம்பெருந் தெய்வங்களின் வழி பாடுகளே கூறப்படுகின்றன. சிவ வழிபாடு கூறப்படவில்லை. ஆதலின் தொல்காப்பியர் காலத்தில் சிவவழிபாடு தோன்றவில்லை எனச் சிலர் கூறுவர். தொல்காப்பிய காலம் கி.மு. 350 வரையில் என்று கூறியுள் ளோம். அதற்கு மிக முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு தோன்றி யிருந்தது. ஐந்து நிலங்களில் வாழும் மக்களும் தத்தம் குல தெய்வங் களாகக் கொண்டு வழிபட்ட தெய்வங்களைப் பற்றியே தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் எல்லா மக்களும் சிவனையே குல தெய்வங் களுக்கும் மேலான பெருந் தெய்வமாகக் கொண்டு வழிபட்டார்கள். இது தமிழ் நாட்டவர் மாத்திரம் கொண்ட முறையன்று; உலக மக்கள் எல்லோரும் கொண்ட முறையாகும். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பனரே கோயிலை மேற்பார்த்தனர். அக் காலத்தில் பார்ப்பனர் பிராமண சமயத்தைக் கைக் கொள்ளவில்லை. தொல்காப்பியத்தில் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” எனக் கூறப்பட்டது. கோயிற் பணிவிடைகளைப் பார்க்கும் உயர்ந்த பார்ப்பான் முதல், படிப்படியே தாழ்ந்த பார்ப்பனரேயாகும். பார்ப்பனர் பிராமண மதத்தைக் கைக் கொண்டபோது ஆலயங்களில் ஆரியம் பாடினர்; அதனை வெறுத்துத் தமிழ் மக்கள் கண்டித்திருக்கின்றனர். இன்று ஆலயங்களில் பிராமணப் பார்ப்பான் ஆரியம் ஓதிக்கொண்டு வெளியே நிற்கும் பண்டாரத்தைத் தமிழ் பாடச் செய்கின்றான். இது தமிழைப் பெரிதும் இழிவு படுத்துவதாகும்.

உண்மை ஞானம்
மக்களில் பெரும்பாலோர் பழமை தொட்டு வருகின்ற சில பழக்க வழக்கங்களுக்குச் சமயம் என்னும் பெயர் கொடுத்து வழங்கினர். மிகப் பழமை தொட்டே உயிர், உலகம், இறை என்னும் முப்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து, உயிர்கள் உயர் நிலை அடையும் உயர்ந்த வழி களைக் கைக்கொண்டு ஒழுகும் மக்களும் இருந்தார்கள். இவர்கள் அறிந்த உண்மைகள் ஏட்டில் எழுதி வைக்கப்படவில்லை. இவ் வுண்மைகள் ஆசிரிய மாணாக்க முறையில் உபதேசிக்கப்பட்டு வந்தன. இவ்வுண்மை ஞானங்களை அறிந்திருந்தோர் பூசாரிகளல்லர். உண்மை ஞானத்தை உபதேசிப்பவர்களுக்கு இட்டு வழங்கப்பட்ட “குரு” என்னும் பெயர், பிற் காலத்தில் பூசாரிகளுக்குத் தவறுதலாக வழங்கப்படலாயிற்று. பூசாரிகள் குருமார் அல்லர்.

இவ் வுண்மை ஞானத்தைப்பற்றி இந்திய நாட்டை அடைந்த ஆரியர் அறிந்திருக்கவில்லை. ஆரியர், தமிழர்களுக்கிடையே கலப்பு உண்டாகி, இரு மக்களும் ஒன்றுபோற் கலந்த காலத்தில், வேள்வி செய்வதே சமயத்தின் உயர்ந்தபடி எனக் கருதியிருந்த ஆரிய மக்கள், தமிழ் மக்களிடையே உயர்ந்த ஞானம் வழங்குவதாகக் கேள்வியுற்று, அதனை அறிவதற்குப் பலவாறு முயன்று வந்தனர். வேள்விகளைச் செய்து கொண்டிருந்த பிராமணரிற் பலர், தாம் செய்யும் வேள்விகள் பயன் விளைப்பனவல்ல என்று நன்கு உணர்ந்தனர். அவர்கள் உயிரை உயர் நிலைப்படுத்தும் உண்மை ஞானங்களை அறியும் தாகத்தினால் உந்தப் பட்டு, அதனைப் பெறும் மார்க்கம் தேடி அலைந்தார்கள்.

உபநிடதங்கள்
அவ்வாறு அலைந்தவர்கள் தமிழ் அரச மரபினர் பாதங்களின் கீழ் மாணாக்கராயிருந்து, உண்மை ஞானங்களைக் கற்றுணர்ந்தார்கள். யாக்ஞவல்கி என்னும் பிராமணர் விதேக நாட்டரசனாகிய சனகனிடத் தில் உண்மை ஞானத்தைக் கேட்டறிந்த வரலாறு அறியப்படுகின்றது. ஆரிய வேதங்களை எந்த வருணத்துப் பெண்களாவது சூத்திரராவது படிக்கவோ கேட்கவோ கூடாது; பிராமணன் மாத்திரம் ஆசானாக இருந்து மூன்று வருணத்தவர்களுக்கும் வேதங்களைக் கற்பிக்கலாம் என ஆரியரின் நீதி நூல்கள் வற்புறுத்துகின்றன. அரச வகுப்பினரும், பெண் களும், அரச வகுப்பினரல்லாதாரும் உபநிடத ஞானங்களை அறிந்திருந் தனர். இதனால் உபநிடதங்கள் ஆரியரின் நூல்களல்ல என்பது துணிபா கும். உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்பது என்பது பொருள். கிட்ட இருந்து கேட்பது என்பதற்குக் குரு மாணாக்க முறையில் வருவது எனக் கூறலாம். “இம் மறையைத் தந்தை தனது மூத்த குமாரனுக்கு, அல்லது உண்மையுள்ள மாணாக்கனுக்கு அளிக்கலாம்; இவ் வுலகம் முழுவதையும் பெறுவதாயிருந்தாலும் மற்றவர்களுக்கு அளித்தல் கூடாது. ஒருவன் ஆசிரியனிடம் மாணாக்கனாயிருந்து பல முறை வருந்திக் கேட்டபோது, இந்த ஞானம் வெளியிடப்பட்டது” என்று உபநிடதம் கூறுகின்றது. உபநிடதங்களிலுள்ள உண்மைகளே ஆகமங் களிலும் பொதிந்துள்ளன. ஆகமத்திற் கூறப்படும் பொருள்களை ஆசிரிய னிடத்துக் கேட்டு அறிந்தாலன்றி விளங்காது என்னும் கருத்து இருந்து வந்தது.1 இவ்வாறு மறைவாக இருந்து வந்த உண்மைகளே முற்காலத்தில் மறைகள் எனப்பட்டன. ஆரியரின் வேதங்களுக்கும் இம் மறைகளுக்கும் யாதும் தொடர்பு இல்லை. இவைகளுக்கும் வேதங்களுக்கும் உள்ள தூரம் வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் உள்ளது போலாகும். ஆரிய வேதங்களைப் பற்றி மக்கள் அறியாதிருந்தனர். வைசிய பிராமண வகுப்பினரால் மாத்திரம் வாய்ப்பாடஞ் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் வேதங்களில் இல்லாத அறிவு உலகில் இல்லை என்றும், அதில் எல்லா வகையான அறிவுகளும் உண்டென்றும் மக்களுக்குச் சொல்லி வந்தனர். பிறர் அவைகளை அறிந்தால் தாம் சொல்வதின் பொய்மை வெளியாகி விடும் என்று கருதி, அவைகளைப் பிறர் பயிலுதல் ஆகாது எனக் கூறி வந்தனர். காலத்தில் மறைகள் என்பன ஆரிய வேதங்களே என்றும், அவ்வேதங்களே தமிழ் மதத்தினருக்கும் முதல் நூல்கள் என்றும் தவறான கருத்து உண்டாயிற்று. சைவ சமயத்தை நாட்ட எழுந்த சமய குரவர்களே இக் குருட்டுத் தனமான கொள்கையைக் குறிப்பிட்டுள்ளார்கள். “சைவ சமய வினா விடை” என்னும் நூல் எழுதிய ஆறுமுக நாவலரே, சைவ சமயத்தவர்களுக்கு முதல் நூல்கள், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நூல்கள் எனக் குறிப்பிட்டார். இவ் வகைக் கருத்துக்களே பள்ளிக்கூடங்களில் சிறுவருக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. வேதங்கள் என்றால் என்ன? அவை தமிழ் மக்களின் சமய நூல்களல்ல என்பன போன்ற உண்மைகள் தமிழ்ச் சிறுவருக்கு இளமையில் கற்பிக்கப் படுதல் வேண்டும்.

தமிழர் சமயக் கருத்துக்கள்
திருமூலர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண் டுக்கும் இடையில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுவர், இவர் பழைய தமிழர் சமயக் கொள்கைகளைக் கூறும் ஆகமங்கள் உபநிடதங்களில் பொதிந் துள்ள பொருள்களைத் தொகுத்துத் திருமந்திரம் என்னும் நூலாகச் செய்தார். புராண காலத்தில் பிராமண மதத்தினர், தமது உயர்வு கருதிப் பழைய நூல்கள் பலவற்றை அழித்தும், புதிய நூல்களைச் செய்தும், பழைய நூல்களைத் திருத்தியும் பல தீமைகளைப் புரிந்து வைத்தனர். அவர்களின் பார்வை திருமந்திரத்தின்மீது விழவில்லையே எனக் கருது வது சந்தேகம். திருமந்திரத்திற் கூறப்படும் தத்துவ சாத்திரக் கொள்கை களே, தமிழரின் பழைய மதக் கொள்கைகள் என்பதில் ஐயம் இன்று.

சைவ வைணவ ஆசிரியர்கள்
இவர்கள் சிவன், திருமால் என்னும் கடவுளரை முறையே தலைமை மிக்க கடவுளராகக் கொண்டு துதிபாடியுளரேனும், தமிழரின் பழைய சமயஞானக் கருத்துக்களை இடையிடையே விளக்கிப் போந்தனர்.

சித்தாந்த சாத்திரங்கள்
சைவ சித்தாந்த நூல்கள் எனப்படும் நூல்கள் 13ஆம் நூற்றாண் டில் தோன்றின. இவை நூல் வழக்கிலும் உபதேச முறையிலும் தமிழ் மக்க ளிடையே வழங்கிய சமய உண்மைக்குத் தக்கவாறு யாத்துச் செய்யப் பட்டனவாகும். டாக்டர் போப்பு (Dr.Pope) என்னும் பாதிரியார், சித்தாந்த சாத்திரங்களிற் கூறப்படும் சமயக் கருத்துக்கள், வரலாற்றுக் காலத்துக்கு முன்னரேயே தமிழரிடை தோன்றி வளர்ச்சியுற்ற சமயக் கருத்துக்கள் எனக்கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதன் சுருக்கம் வருமாறு.

“இந்தியாவில் வழங்கும் சமய தத்துவக் கொள்கைகளுள் எல்லாவற்றுள்ளும், சைவ சித்தாந்த நூற்கொள்கைகள் மிக விரிவும், சிறப்பும், உண்மை யும் அடங்கியுள்ளன. இக் கொள்கைகள் தென்னிந்திய தமிழரின் கொள்கைகளாகும். தென்னிந்திய உயர்ந்த மக்களைப்பற்றி அறிய விரும்பும் எல்லோரும் அவைகளைப் பயிலுதல் வேண்டும். சிவமதம் என்பது தென்னிந்திய மக்களின் வரலாற்றுக் காலத்துக்கு முன் தோன்றிய மதம். அது ஆரியர் வருகைக்குமுன் தொட்டுத் தோன்றி வழங்குவது. இக் கொள்கைகள் தமிழரின் உள்ளத்திற் குடிகொண்டுள்ளவை. உலகம், உயிர், நல்வினை, தீவினை, மறு பிறப்புப் போன்ற உண்மைகளை, நன்கு எடுத்துக் கூறும் இம் மத உண்மைகள் ஆங்கிலத்தில் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அவைகளைக் கூறும் நூல்கள் தமிழ் மொழியில் மாத்திரம் எழுதப்பட்டுள்ளன”.1

முன் ஓரிடத்தில் ஞாயிறே சிவன் என்னும் பெயருடன் வழிபடப் பட்டதெனக் கூறினோம். மக்கள் அறிவு விரிவடைந்தபோது, அவர்கள் ஞாயிறு கடவுளன்று என்றும், ஞாயிற்றை இயக்கச் செய்வதும், அதனுக்கு ஒளியினை உதவுவதும், உள்ளத்தினால் உணராததுமாகிய ஒரு பெரும் ஆற்றல் உள்ளதெனக் கண்டு, அப்பெரிய ஆற்றல்மிக்க பொருளைக் கடவுள் (உள்ளத்தைக் கடந்தது) என்று அழைத்தார்கள். ஆயினும், சிவன் என்னும் பழைய பெயரே கடவுளுக்குச் சிறப்பாக வழங்குவதாயிற்று. இந்திய மக்கள் எல்லோரும் தத்துவக் கொள்கைக ளோடு கூடிய தமது சமயத்தையும் சிவமதம் என்றே கூறினர். சைன மதத்தவர்களும் தமது சமயத்திற் சொல்லப்படும் மேலான பதவியைச் சிவகதி எனக் கூறுவர். புத்த சைன மதத்தினர் தம் சமய அடையாளமாக ஞாயிற்றைக் குறிக்கும் சுவத்திகம் (சிவத்திகம்) இலிங்கம் என்பவைகளைச் சமயச் சின்னங்களாகக் கொண்டனர். சிவலிங்கங்களே புத்த தூபிகள். சமாதிகளும் அவ்வடிவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியநாட்டிலும், இவ்வுலகத்திலும் காணப்படும் மதங்களெல்லாம் சிவ மதத்தின் வேறு பாடுகளே யாகும்.

சாங்கியம், புத்தம், சமணம் முதலிய நூல்களிற் சொல்லப்படும் தத்துவக் கொள்கைகள், இச் சைவசித்தாந்தக் கொள்கைகளுள் அடங் கும். ஆனால் அவை சைவ சித்தாந்தக் கொள்கையிலுள்ளவற்றில் சிற்சில வற்றைக் கூறாது விடுத்தன. வேதாந்த சூத்திரத்துக்குச் சங்கரர் பொருள் கொண்டு விரித்த ஏகான்ம வாதமும், சைவ சித்தாந்தக் கொள்கையைத் தழுவியதே. ஆனால் உயிர்கள் என்பவை கடவுளின் பொய்த் தோற்றங் கள் என அவர் மயங்கிக் கூறுவராயினர். இவ் வகையான கருத்துக்கள் தென்னிந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இக் கருத்துக் களையே அடிப்படையாகக் கொண்ட விவேகானந்தரின் போதனைகள் தென்னாட்டில் நிலைபெறவில்லை. தத்துவ ஞானங்களைப் பற்றி அதிகம் கேள்விப்படாதிருந்த மேற்குத் தேசங்களில் அவர் கருத்துக்கள் பாராட்டப்பட்டன.

முடிவுரை
இதுவரையும் கூறப்பட்டவற்றால் இன்று சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெறுவன, பெரும்பாலும் மூடச் செயல்கள் என, நமக்கு நன்கு தெரிகின்றது. ஆயினும் நெடுங்காலம் தொடர்ந்து வரும் பயனற்ற பழக்க வழக்கங்களைக் கைவிட மக்கள் எளிதில் ஒருப்படுவ தில்லை. அறிஞர் அடிக்கடி அறியாமை உள்ள மக்களிடையே பகுத் தறிவை எழுப்பக் கூடிய கருத்துக்களை எடுத்துச் சொல்வதால் அவர்களின் உள்ளம் பண்பாட்டையும், மார்ட்டின் லூதர் (1483-1546) கிறித்துவ மதத்தில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தார். லூதர் சொன்னவைகள் மக்களின் பகுத்தறிவுக்கு ஏற்றனவாயிருந்தமையின், மக்கள் பலர் பழம் போக்குகளைக் கைவிட்டுச் சீர்திருத்த முறைகளைப் பின்பற்றினர். லூதர் கடவுள் இல்லை என்று கூறவில்லை. மதம் என்னும் கயிற்றால் மனிதன் கட்டுப்படக் கூடாது. கடவுள் நல்லவர்; அன்பே வடிவாயுள்ளவர் எனப்படுதலின், நாம் அச்சத்தினால் கடவுளை வழிபடவோ, “கடவுளை அடையச் செய்வோம், அவரை மகிழ்விப் போம்” எனக் கூறித் தரகராக நடிக்கும் பூசாரிகளின் உதவியை நாடவோ வேண்டியதில்லை. பூசாரி நம்மைவிடச் சிறந்தவன் எனக்கொள்ளும் மடமை ஒழிய வேண்டும். இவ் வுலகங்க ளெல்லாவற்றையும், நம்மையும் படைத்துத் தொழிற்படுத்தும் பெரிய ஆற்றல் வாய்ந்த கடவுள் எனப் போற்றப்படுபவர் நாம் அளிக்கும் உணவுக்கும், குடைக்கும், பிற காணிக்கைகளுக்கும் ஆசைப்பட்டு விடமாட்டார். மனிதன் தனது நிலையில் கடவுளை வைத்துப் பார்ப்பது அறியாமை.

அறிவு உண்டாவதற்குக் கல்வி வேண்டும். லூதர் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி வேண்டுமென்று வற்புறுத்தினார். உலக மக்களில் பாதிப்பேர் பெண்கள். ஒரு படித்த பெண் என்பது, ஒரு படித்த குடும்பம். படிப்பினால் அறிவு உண்டாகும். அறிவு உண்டாகப் பகுத்தறிவு உண்டாகும் பகுத்தறிவு உண்டாக, மூட நம்பிக்கைகள் ஒழியும், இன்று நமது நாட்டில் பல லூதர்கள் வேண்டும். அவர்கள் மக்களுக்குச் சமயத்தின் உண்மை இயல்புகளை எடுத்து விளக்க வேண்டும். ஆலயங்கள் கடவுளுக்குக் கைக் கூலி கொடுக்குமிடமும், வரி செலுத்துமிடங்களுமாய் இருத்தல் கூடாது. சிலந்தி இரைக்காக வலையைப் பயன்படுத்துவது போல, ஆலயங்களைப் பயன்படுத்தும் மடிகள் ஒழிய வேண்டும். ஆலயங்கள் பள்ளிக் கூடங்களும், விரிவுரை மேடைகளுமாய் இருக்க வேண்டும். கடவுள் மனிதன் செய்யும் மரியாதைகளை விரும்புகிறார் என நினைத்தல், மிக்க அறியாமையே ஆகும். மனிதனே உருவங்களை அமைத்து வைத்து அவைகளைப் பொன்னாலும் மணியாலும் புனைந்து, பின்பு அவைகளைத் திருடர் திருடுவார்கள் எனப் பயந்து பெரிய பூட்டுக்களாற் பூட்டி வைத்தல் எத்துணைப் பேதமை என்பதை எண்ணிப் பாருங்கள்.