உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
ந.சி. கந்தையா
1. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு


உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு


முன்னுரை
கி.பி. ஏழாம் நூற்றாண்டுமுதல் பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் பெரிய மாறுதல்கள் உண்டாயின. அக் காலத்து தமிழர்க ளது சமயமும் மொழியும் பெரிதும் ஆரியச் சார்பு அடைந்தன. இதற்குக் காரணம் தமிழர் கோயில்களை மேற்பார்த்து வந்தவர்களாகிய பார்ப் பார் எனப்பட்ட தமிழ் மக்கள் பிராமண மதத்தைத் தழுவிச் சமக்கிருத மொழியைத் தமது சமயமொழி சாதி மொழியெனக் கொண்டமை யாகும். இது இன்று கிறித்துவ கத்தோலிக்கராக மாறிய தமிழர் இலத்தீன் மொழியைச் சமயமொழியாகக் கொள்வது போல்வது. பிற்காலத்தில் தமிழ் மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்தார்கள். பற்பலர் பொல்லாத ஆரியக் கொள்கைகளை எதிர்த்து வந்தனர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலம்முதல் தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அறிவு நூல் முறையான ஆராய்ச்சி தலையெடுத்தது. அக் காலம்முதல் பல அறிஞர் தமிழர் வரலாற்றுண்மைகளை விளக்கி அரிய கட்டுரைகளை ஆங்கில மொழிகளில் எழுதித் திங்கள் வெளியீடுகளிலும், பிற வெளியீடுகளிலும் வெளியிட்டனர். அவைகளைத் தக்க முறையில் தமிழிற் றிருப்பிப் பொது மக்கள் படிப்பதற்கு எவருமுதவவில்லை. அவ்வாறு மறைந்து கிடக்கும் அறிஞரின் ஆராய்ச்சி உரைகளை யாம் இயன்றவரையில் தமிழ்ப்படுத்தி எமது நூல்கள் மூலம் வெளியிட்டுள்ளோம். உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு என்னும் இச் சிறிய நூல் இலங்கையில் சிறந்த கல்வியாளராயுள்ள திரு. க. பாலசிங்கம் அவர்கள் முப்பது ஆண்டுகளின் முன் ஆசிரியர் கலாசாலை மாணவர் முன்னிலையில் செய்த ஓர் சொற்பொழிவின் சுருக்கமாகும். இக் கட்டுரை இக் கால ஆராய்ச்சி முடிவுகளை மிகத் தழுவியிருத்தல் எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கது.

1-12-48

சென்னை

ந.சி.கந்தையா

உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
வரலாற்றின் பழமை
இவ் வுலகின் வரலாறு, கிறித்து பிறப்பதற்கு 4004 ஆண்டுகளின் முன் செல்லவில்லை என மேல்நாட்டவர்கள் அண்மை வரையில் கருதினார்கள். வேறு சாதியினர் இப் பூமியின் தோற்றத்துக்கும் மனிதத் தோற்றத்துக்கும் அதிக பழமையைக் கூறினார்கள். எகிப்தியர் தமது பழமை பதின்மூவாயிரம் ஆண்டுகள் முதல் முப்பத்து மூவாயிரம் ஆண்டுகள் வரையில் எனக் கூறினர். மக்கள் ஒரு இலட்சம் ஆண்டுகளின் முன்னும் தாவர உயிர்களும் பிற உயிர்களும் ஒரு கோடி ஆண்டுகளின் முன்னும் இவ் வுலகில் தோன்றியிருக்கலாம் என இக் கால விஞ் ஞானிகள் கருதுகின்றனர்.

இவ் வுலகின் வயது
இவ் வுலகின் பழமை அளவிடற்கரியது. பூமி ஒரு காலத்தில் அனல் வாயுக் கோளமாக இருந்து குளிர்ந்தது என்னும் கொள்கையை ஆதார மாகக் கொண்டு அதன் வயதை அளக்க முயற்சிகள் செய்யப்பட்டன. 1898இல் இரேடியம் (Radium) என்னும் உலோகம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்பின் பூமியின் வயதைப்பற்றிக் கூறப்பட்ட முடிவுகளில் பல ஐயங்கள் எழுந்தன. ஒரு ‘கிராம்’ (Gramme) இரேடியம் ஒரு கிராம் தண்ணீரை ஒரு மணி நேரத்தில் கொதிக்கச் செய்யவல்லது. வரலாற்றுக் காலத்திலேயே பல நாடுகள் மழை யில்லாது காய்ந்து உயிர்கள் வாழ்வ தற்கு முடியாதனவாய் மாறியுள்ளன. இப்பொழுது பூமி வெப்பமேறி வருகின்றதா குளிர்ந்து வருகின்றதா என்னும் கேள்விகள் கேட்கப்படு கின்றன. பழைய வரலாறுகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. பழைய நிலப்பரப்புகள் நீருள் மூழ்கிவிட்டன. அவைகளோடு எவ் வகை நாக ரிகங்கள் மறைந்து போயின என்று எவரால் கூறமுடியும்?

பழைய நாகரிகங்கள்
அமெரிக்க ஆராய்ச்சியாளர் மேற்கு ஆசியாவிலுள்ள நிப்பூரில் புதை பொருள் ஆராய்ச்சி நடத்தினர். அந் நகரின் நாகரிகம் கி.மு. 7,000 முதல் கி.மு. 5,000 அல்லது கி.மு. 6,000 வரையிலுமுள்ளது. எகிப்திய நாகரிகத்தைக் காட்டும் எழுத்து மூலமான சான்றுகள் காணப்படு கின்றன. எகிப்தில் கிடைத்துள்ள மிகப் பழைய புத்தகம் எகிப்திய பிரமிட்டுச் சமாதி கட்டுவதற்கு (கி.மு. 4,000) முற்பட்டது. அக் காலத்தில் தமது நாகரிகத்தின் பொற்காலம் கழிந்து விட்டதென எகிப்தியர் கருதினார்கள். தாம் பெரிய சாதியாராய் விளங்கியிருந்த பழமையை அறிய அவர்கள் தமது பழைமையை நோக்கினார்கள். கி.மு. 9,000க்கு முன் பாபிலோனியரும், கி.மு. 6,000க்கு முன் எகிப்தியரும் பெரிய கட்டிடங் களை எழுப்பித் தமது பெருமையை நாட்டினார்களென்றால் வரலாற் றுக் காலத்தின் தொடக்கத்தை அல்லது பழைய நாகரிகங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

பாபிலோனிய நாகரிகம்
இன்று அறியப்படும் நாகரிகங்களுள் பாபிலோனிய நாகரிகம் பழமையுடையது. பழைய பாபிலோனியர் சுமே ரியர் என்றும் அக்கேடியர் என்றும் அறியப்பட்டார்கள். அவர்களைச் சுமேரிய அக்கே டியர் எனக் குறிப்பிடுவோம். அக்கேடியரும் சுமேரியரும் ஒரே மொழியைச் சிறிது வேறுபாட்டுடன் வழங்கினார்கள். இவைகளுள் சுமேரிய முறையான பேச்சே பழமையானது. சுமேரியர் உயர்ந்த கல்வி யாளர். பாபிலோனியச் சக்கரவர்த்திகள் காலத்தில் சுமேரிய மொழி இறந்துவிட்டது; அது இலக்கிய மொழியாகப் பயிலப்பட்டது; அது சமயமொழியாக இருந்தது. சட்டங்களும் அம் மொழியில் எழுதப்பட் டிருந்தன. கால்வாய்கள் அமைத்தல் போன்ற அமைப்பு வேலைகள் சுமேரியரால் செய்யப்பட்டன. பின்பு செமித்திய மக்கள் அராபியாவி னின்றும் வந்து குடியேறினார்கள். கி.மு. 3,800 வரையில் முதலாம் சார்கன் பாபிலோனியச் சிற்றரசுகளை ஒன்றுபடுத்தினான். பாபிலோனைத் தலைநகராகக் கொண்ட அரச பரம்பரை கி.மு. 2,450இல் தொடங்கிற்று. அசீரியா பாபிலோனின் குடியேற்ற நாடாக இருந்தது. அதன் தலைநக ராகிய நினேவா கி.மு. 3,000-க்கு முன் அமைக்கப்பட்டது. கி.மு. 1450இல் அசீரியா விடுதலை பெற்றுத் தனிநாடாகப் பிரிந்து பாபிலோனியா, சிரியா, எகிப்து, யூதேயா முதலிய நாடுகளடங்கிய பேரரசாகத் திகழ்ந்தது. கி.பி. 606இல் அசீரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அப்பொழுது பாபி லோனியா விடுதலை அடைந்தது. இரண்டாவது பாபிலோனியப் பேரரசு கி.மு. 538இல் முடிவடைந்தது. அப்பொழுது பாபிலோனியா பாரசீகத்தின் ஒருபகுதியாக அடங்கிற்று. அது மறுபடியும் அலக்சாந்த ரால் கி.மு. 324இல் வெற்றி கொள்ளப்பட்டது.

பாபிலோனிய மன்னர்
அமுரபி என்னும் பாபிலோனிய அரசன் காலத்தில் (கி.மு. 2342) ஆபிரகாம் சாலதியாவின் தலைநகராகிய ஊரை விட்டுக் கானான் தேசம் சென்று குடியேறினார். நபுச்சண்ட்நேசர் கி.மு. 586இல் யூதரை மறியற் படுத்தினான். பாபிலோனிய, அசீரிய நாகரிகங்கள் இணைந்து அசீரியப் பண்பாடாக மாறின. கி.மு. 1,000 வரையில் வாழ்ந்த சாலமன், புத்தகங்கள் எழுதுவதற்கு முடியவில்லை எனக் கூறியுள்ளான். அவன் கூறியது எபிரேய இலக்கியங்களைக் குறிக்குமாயின் அக் கூற்று பொருளற்ற தாகும். அசுர் பானிப்பால் என்னும் அசீரிய அரசனின் நூலகத்தில், ஒழுங்குபடுத்தி இலக்கமிட்டுத் தட்டுகளில், வரிசையாக அடுக்கி வைத்து அரசாங்க மேற்பார்வையாளனால் கவனிக்கப்பட்ட 10,000 நூல்களைப் பற்றி நாம் அறியும்போது அக் கூற்றின் உண்மை விளங்குகின்றது. இந் நூலகம் இலயாட் (Layard) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பாபிலோனிய நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிவைக்கப் பட்டன; பைபிரஸ் என்னும் நாணல் தாள்களும் பயன்படுத்தப்பட்டன. பலவகைப் பொருள்கள், பழங்கதைகள், பாடல்கள் அடங்கிய பல நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கில்கமஷ் வரலாறு, படைப்பு வரலாறுகளைக் கூறும் இதிகாசங்கள் கிடைத்தவைகளுள் முக்கியமுடை யன. பாபிலோனியர் அக்கரகணிதம் (Mathematics), வானஆராய்ச்சி, சோதிடம் என்பவைகளில் திறமையடைந்திருந்தனர். அவர்கள் சந்திர சூரிய கிரகணங்கள், வால் வெள்ளி, வெள்ளிக்கிரகம் செல்லும் பாதை, சூரிய மறுக்கள் முதலியவைகளைப் பற்றியும் பொருள்களை பெரிதாகக் காட்டும் ஆடிகளைப் (magnifying lenses) பற்றியும் அறிந்திருந்தார்கள். பாபிலோனியச் சட்டங்கள் சுமேரிய சட்டங்களைப் பார்த்துச் செய்யப் பட்டவை. அமுரபியின் சட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை குற்றம், திருமணம், திருமண நீக்கம், வேலையாட்களின் கூலி முதலியவை போன்ற பல பிரிவுகளைப் பற்றிக் கூறுகின்றன. எல்லம், மத்தியத்தரை நாடுகள், எகிப்து என்னுமிடங்களுக் கிடையில் அவர்கள் போக்குவரத்து அஞ்சல்(தபால்) ஒழுங்குகள் செய்திருந்தார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் பாபிலோனியப் பண்பாடு பரவியிருந்தமையால் எகிப்திய அரசாங்கக் கருமகாரரும் (Officials) மேற்கு ஆசிய மக்களும் பாபிலோனிய மொழி யைப் பயன்படுத்தினர்.

எகிப்து
நிப்பூரில் புதைபொருள் ஆராய்ச்சி நடத்துவதன் முன் எகிப்தே மிகப் பழைய நாடாகக் கருதப்பட்டது. இப் பொழுது அது பாபிலோனி யாவுக்கு அடுத்த பழமை யுடைய நாடாகக் கொள்ளப்படுகின்றது. எகிப்தியர் ஆசிய சாதியினரதும் வடஆப்பிரிக்க சாதியினரதும் கலப்பினால் தோன்றினார்கள். மேன்ஸ் அரசன் எகிப்திய சிற்றரசர் நாடுகளை எல்லாம் ஒன்றுபடுத்தி கி.மு. 4,000ஆம் முதல் எகிப்திய அரச பரம்பரையைத் தொடங்கினார். கி.மு. 332இல் அலக்சாந்தர் படை எடுக்கின்ற அளவில் எகிப்தில் 31 அரச பரம்பரையினர் ஆட்சி புரிந் தார்கள். முதல் அரச பரம்பரைக்கு முன் பெடோயின் (Bedouin) அராபியர் எகிப்தின் மீது படை எடுத்தார்கள். கி.மு. 2,000-த்திலிருந்து சில நூற்றாண்டுகள் கிசோஸ் (Hysos) என்னும் செமித்திய சாதியினர் எகிப்தை ஆண்டார்கள். கி.மு. எட்டாவது நூற்றாண்டில் எதியோப்பியர் எகிப்தை வெற்றி கொண்டனர். அசீரியர் எதியோப்பியரை வெருட்டி யடித்தனர். கி.மு. 525இல் பாரசீகர் எகிப்தை வெற்றி கொண்டனர். கி.மு. 332இல் அலக்சாந்தர் எகிப்தை வெற்றி கொண்டார். அதன்பின் எகிப்து விடுதலை பெறவில்லை. எகிப்து பாபிலோனியா என்னும் இரு நாடு களின் நாகரிகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பேராசிரியர் சேயி (Professor Sayee) கூறியிருப்பது வருமாறு: “செமித்திய ரல்லாத மக்களின் நாகரிக எழுச்சியினாலேயே பாபிலோனிய நாகரிகம் தோன்றிற்று. ஆசிய நாட்டினின்று படை எடுத்துச் சென்ற மக்களே உயர்ந்த நாகரிகப் பண்புகளை எகிப்துக்குக் கொண்டு சென்றார்கள்.” 1

நாலாவது அரச பரம்பரைக் காலத்திலே (கி.மு. 3233) பெரிய பிரமிட்டுச் சமாதி கட்டப்பட்டது. அது 480 அடி உயரமுடையதாய் 13 ஏக்கர் நிலத்தில் நிற்கின்றது. இலங்கையிலே அனுராதபுரத்தில் வாலகம் வாகு கி.மு. 89இல் கட்டி எழுப்பிய 405 அடி உயரமுள்ள அபயகிரி தாகபா எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நிற்கின்றது. இத் தாகபா இலண்டனி லுள்ள சென்போல்ஸ் தேவாலயத்திலும் பார்க்க 50 அடி அதிக உயர முடையது; பிரமிட்டுச் சமாதியிலும் பார்க்க 75 அடி தாழ்வானது.

எகிப்தியரிடம் நல்ல இலக்கியங்கள் இருந்தன. கி.மு. 3,000 வரையில் எழுதப்பட்ட பைபிரஸ் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரைசி பைபிரஸ் (Prisse Papyrus) என்னும் நூல்கள் மக்கள் நல்ல வகையில் வாழ வேண்டிய விதிகளைக் கூறுகின்றன. சமயம், மருந்து, கணக்கு, வான ஆராய்ச்சிப் பாடல்கள் அடங்கிய பல நூல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. படங்களோடு கூடிய “இறந்தவர்களின் நூல்” என்னும் புத்தகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குருமாரும் கற்றோ ரும் தத்துவக் கொள்கையோடு கூடிய சமயத்தைக் கைக் கொண்டார்கள். வடிவம் அறியவொண்ணாததும், எல்லாவற்றையும் படைப்பதும், தன்னை ஒருவரும் படையாததுமாகிய ஒரு கடவுள் உண்டு என்று அவர்கள் சமயம் கூறுகின்றது. மரணத்தின்பின் உயிர் அழியாதிருப்பதை யும், அது பிறவி எடுப்பதையும் அவர்கள் நம்பினார்கள். அவர்களின் வழிபாட்டில் இலிங்கம் சம்பந்தப்பட்டிருந்தது. எகிப்தியர் பல தெய்வங் களை வழிபட்டார்கள். ஒரு கடவுளே பல வடிவுகளில் வழிபடப்படுவ தாகக் கற்றவர்கள் நம்பினார்கள். குருமார் மூன்று நாளுக்கு ஒரு முறை தலையையும் உடல் முழுமையும் மழித்துக்கொண்டார்கள். நாளில் நான்கு முறை நீராடினார்கள். கடவுளுக்கு உணவு, நீர், ஆடை, தைலம் முதலியவற்றைக் கொடுப்பதும் ஆடுவதும் பாடுவதுமே அவர்களுடைய வழிபாடு. எகிப்தில் விலங்குகளும் வழிபடப்பட்டனவாகலாம்.

இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்திய இரண்டாம் இராம்சே நீலநதிக்கும் செங்கடலுக்கும் இடையில் போக்குவரத்து நடத்துவதற்கு சூயஸ் கால்வாயை வெட்டினான்.

சீனா
இப்பொழுது உள்ளவைகளில் சீன இராச்சியமே மிகப் பழமை யுடையது. கி.மு. 2852இல் வாழ்ந்த வு கி. (fu-hi) சீனரின் முதல் அரச னாவன். அவனுக்கு முன் மக்களுக்குத் தமது தாய்மாரையன்றித் தந்தை மாரைத் தெரியாதென்றும் அவர்களுக்கு உணவைச் சமைக்கத் தெரியா தென்றும் கூறப்பட்டுள்ளன. அவன் மக்கள் திருமணம் செய்வதாகிய ஒழுங்கை நாட்டி அவர்களை வேட்டையாட, மீன் பிடிக்க, பயிர் செய்ய, இசைக் கருவிகளைப் பயன்படுத்தப் பழக்கினான். இதனால் எழுதும் முறை வெளியிலிருந்து வந்ததெனத் தெரிகிறது.

கடவுள் தன்மையுள்ள பாம்பு, மஞ்சள் ஆற்றினின்றும் தோன்றி, வூகி அரசனுக்கு ஒரு சுருளைக் கொடுத்ததென்றும், அதில் கோடுகள் காணப்பட்டன என்றும், அதன்பின் வூகி சீன எழுத்துகளைச் செய்தா னென்றும் கூறப்பட்டுள்ளன.

குஆங்தி (Huang Ti கி.மு. 2697) காலத்தில் மரம் உலோகம் களி மண்ணாலான வீட்டுத் தட்டுமுட்டுகள், மரக்கலங்கள், வண்டிகள் செய்யப்பட்டன. நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன. குஆங்தி என்பவன் எல்லம் முதல் சீனம் வரையில் பயணம் செய்த ஒரு கூட்டத் தாரின் தலைவனாகிய நக்குந்தி (Nakunte) எனப்படுபவனேயாவன் என்று கூறப்படுகிறது.

எல்லம்
இப்பொழுது மற்றைய பழைய சாதியார்களைப் பற்றியும் சுருக்க மாக ஆராய்வோம். எல்லம் பாபிலோனுக்குக் கிழக்கே உள்ளது. இது சுமேரிய அக்கேடிய காலம் முதல் பாபிலோனிய விழுகைக் காலம் வரை யில் இருந்தது. இது அடிக்கடி பாபிலோனோடு போரிட்டுக் கொண் டிருந்தது. எல்லம் நாகரிகம் பாபிலோனிய அல்லது அசீரிய நாகரிகத் தைப்போல் உயர்வடைந்திருந்தது.

பினீசியர்
இன்னொரு பழைய சாதியினர் பினீசியர். இவர்களின் செழிப் புடையவும் வாணிக முதன்மையடையவும் காலம் கி.மு. 13ஆம் நூற்றாண் டளவில் அவர்கள் அக் காலத்து அறியப்பட்ட எல்லா நாடுகளிலும் காணப்பட்டார்கள். அவர்களின் பட்டினங்களாகிய தயர், சிடோன் என்பன அழியாப் புகழ் பெற்றிருந்தன. காதேஜ் என்பது ஆப்பிரிக்காவி லிருந்த பினீசியக் குடியேற்ற நாடு. இங்குதான் அனிபால் (Hannibal) என்னும் மிகப் புகழ்பெற்ற வீரன் தோன்றினான். இவன் உலக அதிகாரத் தைக் கைப்பற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தான். உரோமர் கடும் போர் செய்து இவனைத் தோற்கடித்தார்கள்.

எபிரேயர்
எபிரேய நாகரிகம் கி.மு. 1,200 முதல் தொடங்குகிறது. இது இஸ்ர வேலர் எகிப்திலிருந்து பயணப்பட்டதற்குச் சிறிது பிந்திய காலம். கி.மு. 8ஆம் நூற்றாண்டில் பாலத்தீனம் அசீரிய மாகாணமாக மாறிற்று. அசீரி யாவின் விழுகைக்குப்பின் அது பாபிலோன் அரசனாகிய நெபுச்சட் நேசருக்கு (கி.மு. 586) உட்பட்டிருந்தது.

கிரேக்கர்
கிரேக்க நாகரிகம் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்த மைசீனிய (Myceanean) நாகரிகம் கி.மு. 13ஆம் நூற்றாண்டளவில் தொடங்குகின்றது. கிரேக்க நாடுகளாயிருந்த சின்ன ஆசியாவும் ஐசியன் கடலும் பாரசீகரால் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வெற்றி கொள்ளப்பட்டன. அடுத்த ஆண்டில் கிரேக்கர் பாரசீக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டனர். பாரசீகம், சிரியா, பாபிலோனியா, எகிப்து, இந்தியா முதலிய நாடுகளை அலக்சாந்தர் (கி.மு. 384 - 322) வெற்றி கொண்டார். கிரீசு 146இல் உரோமரின் நாடாக மாறிற்று.

கிரீத்தியர் (CRETANS)
சின்ன ஆசியாவினின்றும் வந்த கிரீத்திய நாகரிகம் எகிப்திய பன்னிரண்டாவது அரச பரம்பரைக் காலத்தில் உயர்நிலை அடைந் திருந்தது. கிரேக்க மக்கள் கட்டிடம் அமைத்தல், களிமண், வெண்கலம் முதலியவைகளில் உருவங்கள் அமைத்தல், ஓவியம் வரைதல் என்பவை களில் திறமை அடைந்திருந்தனர். திராய் (Troy) நகரின் வீழ்ச்சி கி.மு. 1,783 வரையில். ஓமர் தமது காவியங்ளை கி.மு. 850 வரையில் செய்தார்.

பாரசீகர்
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசு தொடங்கிற்று. சைரஸ் என்னும் பாரசீகப் பேரரசன் லிதியா, அசீரியா, பாபிலோனியா முதலிய நாடுகளையும் சின்ன ஆசியாவிலும் அயலிலுள்ள கிரேக்கப் பட்டினங்களையும் வெற்றி கொண்டான் (கி.மு. 538). இது காரணமாக எகிப்து, மசிடோனியா, திராய் முதலிய நாடுகள் பாரசீக ஆட்சிக்கு உள்ளாயின. இவ் வாட்சி அலக்சாந்தரின் வெற்றியோடு (கி.மு. 331) முடிவடைந்தது. அற்ப ஆயுளுள்ள இவ் விராச்சியத்தைப் பற்றி, அது கிரேக்கரோடு நடத்திய போர்களைக் கொண்டு அறியவருகின்றது. பாரசீகரின் நாகரிகம் பெரிதும் எல்லம் பாபிலோனியச் சார்புடையது.

உரோமர்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உரோம் முதன்மை எய்திற்று. காதேஜ் நகரின் அழிவுக்குப் பின்பே உலகத்தை ஆளுதற்கு உரோமர் திமிறிக் கொண்டிருந்தார்கள்.

இலங்கையும் இந்தியாவும்
இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுக் காலத்திற்கு முன்தொட்டு ஒன்றோடு ஒன்று தொடர்பு பெற்றிருந்தன. கிறித்துவ ஆண்டு தொடங்கு வதன் முன் இலங்கையின் முக்கிய நிகழ்ச்சி விசயன் 543ஆம் ஆண்டு அங்கு வந்து இறங்கியது. விசயன் வந்து இறங்கிய இடம் இலங்கையின் வடகரை என முதலியார் இராசநாயகமவர்கள் பற்பல ஏதுக்கள் காட்டித் தனது “பூர்வீக யாழ்ப்பாணம்” என்னும் நூலில் எழுதியுள்ளார். விசயன், மதுரையை ஆண்ட பாண்டிய அரசன் புதல்வியை மணந்தான். பாண்டிய குமாரியுடன் 700 உயர் குடும்பப் பெண்களும், 18 அரசாங்க கருமகாரரும், அடிமைகளும் 75 பணியாளரும் வந்தார்கள்.

இயக்கரும் நாகரும்
விசயன் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் இயக்கர், நாகர் என்னும் இரு குலத்தினர் வாழ்ந்தார்கள். நாகர் வடக்கிலும் மேற்கிலும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தனி அரசன் இருந்தான். இயக்கர் இலங்கையின் தென்பகுதியில் வாழ்ந்தார்கள். விசயன் முதலில் இயக்க இராசகுமாரியை மணந்திருந்தான். இயக்கர் என்பது இராக்கதர் என்பதன் மாறுபட்ட உச்சரிப்பு ஆகலாம். இராமாயணம் இராக்கதருக் கும் இராமருக்கும் இடையில் நிகழ்ந்த போரைப்பற்றிக் கூறுகின்றது. இராசவளி என்னும் நூல் இப் போர் கி.மு. 2370இல் நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. இந்துக்களின் புராணங்கள் கந்தக் கடவுளுக்கும் இலங்கை வேந்தனான சூரனுக்குமிடையில் நேர்ந்த போரைப் பற்றிக் கூறுகின்றன.

ஆரியர்
இப்பொழுது ஆரியரின் வரலாற்றைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். இச் சாதியாரின் ஆதி உறைவிடம் மத்திய ஆசியா, லிதுவேனியா, ஸ்காந்தினேவியா, காக்கேசியா அல்லது ஊரல் மலைப் பக்கங்கள் ஆகலாம். இவர்களில் ஒரு கூட்டத்தினர் சிந்துவுக்கும் பாரசீகக் குடாவுக்கு மிடையில் சென்று தங்கினர். வேத ஆரியரும் ஈரானியரும் (பாரசீகர்) இரண்டாகப் பிரிந்த சாதியினர். இப்பொழுது அவர்களின் தொடர்பு வெளிப்படையாகத் தோன்றாதபடி மறைந்துவிட்டது. பாரசீக ரின் பழைய சென்ட் மொழிக்கும் இருக்கு வேதப் பாடல்கள் செய்யப் பட்ட மொழிக்கும் ஒற்றுமையுண்டு. இந்து ஐரோப்பிய மக்களுள் இவ் விரு பிரிவினருமே தம்மை ஆரியர் என வழங்கினர். இப் பெயர் மாக்ஸ் மூலராலும் மற்றைய கீழ்நாட்டு வரலாறுகளை ஆராய்வோராலும் ஏனைய கூட்டத்தினருக்கும் இட்டு வழங்கப்பட்டது. இப்பொழுது இப் பெயர் இந்தியரையும் பாரசீகரையுமே குறிக்கின்றது. இச் சாதியாரின் ஒரு கூட்டத்தினர் பஞ்சாப்பை வடமேற்குக் கணவாய்கள் வழியாக வந்தடைந் தனர். இவர்கள் இந்தியாவை வந்தடைந்தது கி.மு 2000க்கும் கி.மு. 1400க்கு மிடையிலென ஆர்.சி. தத்தர் இந்தியாவின் பழைய நாகரிகம் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஆரிய மக்கள் இந்தியாவை அடைந்த போது இந்தியா முழுமையும் பரவி வாழ்ந்தோர் திராவிட மக்களேயாவர்.1

ஆரியர் குடியேறிய இடங்கள்
பாரதப் போர் கி.மு. 1250 வரையில் நிகழ்ந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக் காலக் கணக்குகள் ஏற்றனவாயிருக்கலாம். இக் காலத்தின் முன் வேறு எந்த ஆரிய சாதியினரும் உலகின் வேறெப் பகுதியிலும் உயர்ந்த நாகரிகம் அடைந்திருக்கவில்லை. மித்தானி (Mittani) ஆரியரைப் பற்றி முதன் முதல் பாபிலோனிய இலக்கியங்களில் அறிகின்றோம். கி.மு. 15ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பாபிலோ னியப் பட்டையங்களில் இவர்களைப் பற்றிக் காணப்படுகின்றது. இந்துக்குஷ் கணவாய்களைக் கடந்து ஆரியர் வந்தபோது அவர்கள் திராவிடரோடு மோதினர். திராவிடர் ஆரியருக்கு மிக்க பயம் விளைவித் தார்கள். அக் காரணத்தினால் அவர்களைப் பேய்கள், தீமை விளைக்கக் கூடிய மந்திரங்களறிந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கவும், வேண்டிய வடிவங்களை எடுக்கவும் வல்லவர்கள் என்றும் ஆரியர் நினைத்தனர். ஆகவே அவர்கள் தாம் எதிர்க்க நேரிட்ட மக்களைக் குறிக்க இராக்கதர் அசுரர் என்னும் பெயர்களை வழங்கினர். இப் பெயர்களுக்கு அவர்கள் மொழியில் பேய் என்ற பெயருண்டு.

ஆரியரின் பழைய புத்தகங்கள்
வரலாற்றுப் போக்கில் இருக்கு வேதம் தாவீதின் துதிகள் போன்றவை. திராவிடரை அழிக்கும்படி இந்திரன் கேட்கப்படுகிறான். திராவிடர் ஆட்டு மூக்கும் கறுப்புத் தோலுமுள்ள பைசாசுகள் (தாசர்) என்று கூறப்பட்டுள்ளார்கள். ஆரியர் பெரிய கூட்டமாக இந்தியாவுள் நுழையவில்லை. கி.மு. 1400-க்கு முன் ஆரியர் சட்லெஜ் (Sutlej) ஆற்றைக் கடக்கவில்லை. கி.மு. 1000 வரையில் இவர்களில் சில பிரிவினர் சட்லெஜ் ஆற்றைக் கடந்து கங்கைச் சமவெளி வரையிற் சென்று வாழ்ந்தார்கள்.
இந்தியரில் மூன்றில் இரண்டு பங்கினர் சமக்கிருதத் தொடர்பான மொழிகளைப் பேசுவதால் அம் மூன்றிலிரண்டு பங்கினரும் ஆரியர் எனக் கருதப்படுகின்றனர். உண்மை அவ்வாறன்று. ஒரு மொழியைப் பேசுவோர் அம் மொழியைத் தோற்றுவித்தவர்களாக மாட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு உரோமரின் வழித்தோன்றல்களல்லரான பல சாதியினர் உரோமன் மொழியைப் பேசுவதாகும். ஆரியரல்லாத பல மக்கள் சமக்கிருதத்தை வழங்குவதைப்பற்றி மனு நூல் குறிப்பிடுகின்றது. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள ஆரிய வர்த்தம் மாத்திரம் வாழ்வதற்கு ஏற்றதென்றும், பழமையைப் பின்பற்றுகின்ற பிராமணர் பஞ்சாப்புக்கும் இராசபுத்தானாவுக்கும் இடையிலுள்ள பிரம வர்த்தத்தில் வாழவேண்டு மென்றும் அது கூறுகின்றது.

இந்திய குலத் தொடர்புகள்
இந்திய மக்கள் இன ஆராய்ச்சித் தலைவராயிருந்த சர் அர்பேட் ரைஸ்லி (Sir Herbert Risly) என்பார் கலப்பற்ற ஆரியர் பஞ்சாப், இராச புத்தானா, காசுமீரம் முதலிய இடங்களில் வாழ்கின்றார்கள் என்றும் ஆனால் அவர்களிடை சிறிது அவுண சித்திய (Huns Seythian) இரத்தக் கலப்புக் காணப்படுகின்றதென்றும் கூறியுள்ளார். சுத்தமான திராவிட சாதியினர் கன்னியாகுமரிமுதல் கங்கைக் கரை வரையும், மேற்கே ஆக்ரா வரையும் காணப்படுகின்றனர். இப் பகுதி சென்னை மாவட்டம், ஹைதரா பாத்து, மைசூர், மத்திய மாகாணங்கள், மத்திய இந்தியப் பகுதிகள், சூடிய நாகபுரி, வங்காளத்தின் பெரும்பகுதி என்பவைகளை அடக்கிநிற்கும். கீழ் வங்காளத்திலும் ஒரிசாவிலும் மங்கோலியரும் திராவிடரும் கலந்த கலப்புச் சாதியினர் வாழ்கின்றனர். ஆக்கிரா அவுத் (oudh) பீகார் அடங்கிய ஐக்கிய மாகாணங்களில் திராவிட ஆரியக் கலப்பினால் தோன்றிய மக்கள் வாழ்கின்றனர். இந்தியா முழுமையிலும் பிராமணர் காணப்படு கின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இப் பிரிப்பு ஏற்றதாயிருக்கலாம் அல்லது ஏலாததாயிருக்கலாம்; ஆனால் இந்திய மக்க ளில் ஐந்தில் நான்கு பகுதியினர் ஆரிய இரத்தக் கலப்பற்றவர்களேயாவர்.

1872இல் அரசினர் எடுத்த மக்கள் எண்ணிக்கையின்படி இந்தியா வில் ஒருகோடி அறுபது இலட்சம் ஆரியரும், ஒருகோடி பத்துலட்சம் ஆரியத் திராவிடக் கலப்பு மக்களும் வாழ்ந்தார்கள். மீதி இந்தியர் ஆரியக் கலப்பில்லாதவர்களாவர். இந்தியாவிலுள்ள சாதித் தொடர்புகளைப் பற்றி அறியாவிடின் புராண இதிகாசங்களில் சொல்லப்படும் இந்திய வரலாறு மயக்கத்துக்கு இடமாகும்.

போர்க்குணமுள்ள திராவிடக் கூட்டத்தினர்
ஆரியரைப் போர்க் குணமுள்ள பல கூட்டத்தினர் சூழ்ந்திருந் தார்கள். ஆரியர் தமது அதிகாரத்தை வலிமையால் நாட்ட முடியாதெனக் கண்டார்கள். ஆகவே அவர்கள் கிளைவும் (Clive) வாரன்ஹேஸ்டிங்கும் கையாண்ட முறையையே கையாண்டனர். அவர்கள் உள்நாட்டு அரச ரோடு அரசாங்க ஒப்பந்தங்கள் செய்தார்கள். ஆரியப் பாடகர்களும் குருமாரும் நாகர், அரசர், இராக்கதர்களுடைய நாடுகளுக்குச் சென் றார்கள். செல்லும்போது தம்மோடு அக்கினி சோம வழிபாடுகள், ஆரியப் பேச்சு, ஆரியப் பழக்கவழக்கங்களையும் கொண்டு சென்றார்கள். இருக்கு வேதத்தில் இதற்குப் போதிய சான்றுகளுண்டு. வேத காலத்திய இரண்டு பெரிய இருடிகள் வசிட்டரும் விசுவாமித்திரரும். திரிற்சு எனப் பட்ட தூய ஆரியருக்கு வசிட்டர் குருவானார். பூருவர், பரதர் எனப்பட் டவரும் அதிகாரம் படைத்தோரும், ஆரியரின் பகைவருமாகிய இரு திராவிடக் கூட்டத்தினருக்கு விசுவாமித்திரர் குருவானார்.1 இவ்விரு இருடிகளும் பிற்காலப் பிராமணக் கொள்கைகளுக்கு எடுத்துக்காட் டாவர்.

வசிட்டரைப் பின்பற்றினோர் ஆரியக் கொள்கைகள் அல்லாத வற்றைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளவில்லை. விசுவாமித்திரன் வமிசத்தவர் அவ்வா றிருக்கவில்லை. அவர்களின் முயற்சியினால் திராவிடர் ஆரிய மயமாக்கப்பட்டிருக்கலாம். இவர்களின் கொள்கையினால் திராவிடக் கொள்கைகளும் வழக்கங்களும் ஆரிய வணக்கத்துள் நுழைந்தன. நம் காலத்திலும் விசுவாமித்திரரின் கொள்கையை “பாதர் பெஸ்கி” இடத் திற் காண்கின்றோம். இந்தியத் தெய்வமாக அவர் கிறித்துவை நுழைக்க முயன்றார். தனது பெயரையும் வீரமாமுனிவரென மாற்றினார்; இந்து மதத் துறவி போல உடையணிந்தார். சைவக் கோயில்களில் நடைபெறும் கிரியை முறையால் கிறித்துவை வழிபட்டார். தமிழில் பல துதிகளையும் புராணங்களையும் செய்தார். போப்பு இவருக்கு உற்சாகம் அளிக்காமை யால் இவரது முயற்சி பலனளிக்கவில்லை. புராண இதிகாசங்களை இம் முறையில் பயில்வதால் பல உண்மைகள் விளங்கும்.

பாரத இராமாயணங்கள்
பாரதம் இன்றைய நிலையை அடையுமுன் பல மாறுதல்கள் அடைந்திருத்தல் வேண்டும். இது தொடக்கத்தில் 8,000 சுலோகங்கள் உடையதா யிருந்த தென்றும் பின் சேர்க்கப்பட்ட சுலோகங்களோடு 21,000 சுலோகங்களாயின என்றும் அந் நூலே கூறுகின்றது. இப்பொழுது 100,000 சுலோகங்களுக்குமேல் காணப்படுகின்றன. பிற்காலப் பிராமணர் பல இடைச் செருகல்களைப் புகுத்தினார்கள். ஆகவே மாபாரதத்தைக் கொண்டு உண்மை வரலாற்றை அறிய முடியாது. இப்பொழுது நினைக் கப்படுவது போல் இராமாயணம் ஆரியர் தென்னிந்தியாவையும் இலங்கையையும் வெற்றிகொண்ட வரலாறன்று. இராமர் ஒருபோதும் தனது படையோடு இலங்கைக்கு வரவில்லை. இராவணனது தம்பி விபீடணனுடையவும், மைசூருக்கு அண்மையில் ஆட்சிபுரிந்த சுக்ரீவ னுடையவும் உதவியைப் பெற்று அவர் இராவணனை வென்று உடனே சீதையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இராமாயணத்தின்படி இராமர் கறுப்பு நிறத்தினர். ஆகவே அவர் திராவிடராகலாம். தமிழில் இரா என்பது இருளைக் குறிக்கும். சமக் கிருதத்தில் இராமா என்பது கலப்பையைக் குறிக்கும். சீதை என்பது உழவுசாலையைக் குறிக்கும்.

ஆரியப் பாடகர்
திராவிட அரசரின் அரண்மனைகளில் இருந்த ஆரியப் பாடகர் பிற்கால ஆரிய வீரர்களையும் பாடினர். திராவிடரின் உள்நாட்டு இலக் கியம், வரலாறு, பழங்கதைகள் படிப்படியாகச் சமக்கிருத இலக்கியங் களிற் புகுந்தன. இதனாலேயே திராவிடராகிய பாண்டவர் மாபாரதத்தில் ஆரியராகத் தோன்றுகின்றனர். பாண்டவரின் மூத்தவனாகிய உதிட்டிரன் இயமனின் புதல்வன். இயமன் பழைய தமிழ் அரச பரம்பரையை நிறுத்தியவனாவன். அருச்சுனன் இந்திரனின் புதல்வன். இந்திரனுடைய இராச்சியம் கோதாவரிக்கும் கிருட்டிணாவுக்கும் இடையிலுள்ளது. பகன் என்னும் பெரிய அசுரனை வெற்றி கொண்ட வீமன் வாயு புத்திரன். அனுமானும் அம் மரபைச் சேர்ந்தவன். வாயு பரம்பரையினர் மைசூரை ஆண்டவர். நகுல சகாதேவர் மலையாளத்தை ஆண்டவர். இவ் வைவரும் உடன்பிறந்தா ரல்லர்; நண்பர். சமக்கிருத மாபாரதத்திலும் ஐந்து அரசரும் அவரவர் பரம்பரைப் பெயர்களா லறியப்படுவர். மாபாரதப் போரில் பாண்டவரின் படைக்குப் பெருஞ் சோறு அளித்த உதியனைப் பற்றிய பழம் பாடலொன்று புறநானூற்றிற் காணப்படுகின்றது.

இராமர் வாழ்ந்த காலம் எனக் கருதப்படுகின்ற அப்பொழுது தென்னிந்தியா இலங்கை என்னும் நாடுகளை ஆரியர் வெற்றி கொண் டார்கள் எனக்கொள்ள ஆராய்ச்சியாளரால் முடியவில்லை. தத்தருக்கு இவ் விடர்ப்பாடு தோன்றிற்று. அவர், மாபாரத்திற் போலவே இராமா யணத்திற் கூறப்படும் பெயர்கள் கற்பனைகள் எனச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். இருக்கு வேத காலம் முதல் சீதை உழவு சாலாகக் கொள்ளப்பட்டுத் தாய்த்தெய்வமாக வணங்கப்பட்டாள். பயிர்ச் செய்கை தெற்கு நோக்கிப் பரவியபோது சீதை தெற்கே கவர்ந்து செல்லப்பட்டாள் என்னும் பழங்கதையைத் தோற்றுவிப்பது கடின மன்று. சீதையும் இராமரும் திராவிடர் எனவும் அவர் நிகழ்ச்சிகள் ஆரியர் வருகைக்கு முற்பட்ட செயல்களெனவும் கொள்ளின், இராமா யணம் மாபாரதங்களைப் பற்றிய மயக்கங்கள் அகன்று விடும். ஆரியக் கவி ஒருவர் திராவிடக் கதை ஒன்றை எடுத்து இராமாயணக் கதையாகச் செய்திருக்கலாம்.

கந்தபுராணம் இலங்கையை ஆண்ட அசுர வேந்தனை வெற்றி கொண்ட வீரனின் வரலாறு.

தமிழ்நாடு
மங்கோலியர் வடகிழக்கு வழியாக இந்தியாவை அடைந்து அசாம், கூச் பீகார், நேபாளம் முதலிய இடங்களிற் குடியேறி கீழ்வங்காள மக்களோடு கலந்தார்கள். தெற்கிலிருந்து தொடங்கினால் திராவிடரின் வரலாற்றை அறிவது எளிது. தெற்கே இருந்த நாடுகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளாகும். இவைகளைப் பற்றிப் பழைய இதிகாசமாகிய இராமாயணம் கூறுகின்றது. பாண்டியர் தலைநக ரமாகிய கபாடபுரத்தின் வாயிற் கதவுகள் பொன்னாலும் இரத்தினக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று இராமாயணம் கூறுகின்றது. பாண்டியநாடு பழைய சங்கங்களுக்கு இருப்பிட மென்று பழைய நூல்கள் கூறுகின்றன. தலைச்சங்கப் புலவர்களின் சில நூற் பெயர்கள் மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. அச் சங்கம் கடல் கொண்ட மதுரையில் இருந்தது. இரண்டாவது சங்கம் கவாடபுரத்தி லிருந்தது. இவ் விடமும் கடலுள் மறைந்தது. இரண்டாஞ் சங்கத்து நூற்பெயர்கள் சில மாத்திரம் நமக்குக் கிடைத்துள்ளன. முதற் சங்கம் நாற்பத்தொன்பது புலவர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. இக் கால ஆராய்ச்சி இந்தியாவின் பெரும்பகுதி கடலுள் மறைந்து போனதை வலியுறுத்துகின்றது. இந்தியாவின் நில அமைப்பைப் பற்றி எழுதிய ஒல்லந்து (Holland) என்பார் கூறியிருப்பது வருமாறு: “பம்பாய்த் தீவுக்குக் கீழே சேற்றுள் பன்னிரண்டடி ஆழத்தில் மரங்கள் படிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருநெல்வேலிக் கரைப் பக்கத்திலும் நீருள் மூழ்கிப்போன காடு காணப்படுகின்றது.” பழைய இலக்கியங்கள் கூறுகின்றபடி திருநெல்வேலிக்குத் தெற்கேயே பூமி கடலுள் மறைந்தது; மறைந்துபோன தரையைப் பற்றிப் பழைய நூல்கள் கூறுகின்றன. அத் தரை கன்னியாகுமரிக்கும், பஃறுளிக்கும் மிடையே கிடந்தது. 19ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவின் தரைப் பரப்பில் பல மாறுதல்கள் உண்டாயின. ஒல்லந்து (Holland) கூறியிருப்பது வருமாறு:- அண்மையில் இந்தியாவின் தரை நீர்மட்டங்களில் பல மாறுதல்கள் உண்டாயின. கச்(cutch)சில் 1819இல் நேர்ந்த பூமி அதிர்ச்சியினால் ரானின் (Rann) ஒரு பகுதி நீருள் மறைந்தது. 1897இல் உண்டான பூமி அதிர்ச்சிக்குப்பின் அளந்து பார்க்கும்போது அசாம் மலைகளின் உயரத்திலும் சரிவாக நோக்கும் தூரத்திலும் பல மாறுதல் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட் டது. இவ் வுலகில் மக்கள் தோன்றி 4004 ஆண்டுகளாகின்றன என்னும் கொள்கை அடிபட்டுப் போகின்றது. ஆகவே பழைய பாடல்களையும், அரசரையும் புலவரையும் பற்றிய பழைய வரலாறுகளையும் நாம் பயனற் றனவென்று கொள்ளுவதற்குக் காரணமில்லை. இமயமலையும் கங்கைச் சமவெளிகளும் பிற்காலத்தில் கடலாழத்தினின்றும் கிளம்பியவை. இமய மலையில் 20,000 அடி வரையில் கடல் சம்பந்தப்பட்ட பொருள்கள் காணப்படுகின்றன. இந்திய நாட்டின் வேறெங்காவது இவ் வகைச் சின்னங்கள் காணப்படவில்லை. அமைப்பில் மிகப் பழமையுடைய தென்னிந்தியாவே மக்களின் ஆதியிடமாயிருத்தல் இயலாததன்று.

கக்ச்லியும் வேறு சில மக்களின ஆராய்ச்சியாளரும், ஆஸ்திரேலிய மக்களும் திராவிடரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி னார்கள். மண்டை ஓட்டின் அளவு, மயிரின் தன்மை, முதலிய உடற்கூற்று ஆராய்ச்சிகளால் ஆஸ்திரேலியரும் திராவிடரும் ஒரே இனத்தவர் ஆகமாட்டார் என வில்லியம் டேயிலர் நவின்றுள்ளார். திராவிடர் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்தவர் என்னும் கொள்கை சிறிதும் பொருத்தமற்றதெனவும் அவ் வாசிரியரே குறிப்பிட்டுள்ளார்.

சமயம்
இந்தியாவில் பழமை தொட்டு வாழ்ந்த மக்களின் நாகரிகம், தொழில், சமயமென்பவைகளை ஆராய்வோம். திராவிடர் சிவனை வணங்கினர். லில்லி (Lille) என்னும் மேல் நாட்டாசிரியர் தமது நூல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: “ஆரிய வணக்கத்துக்கு எதிராக இருந்தது சிவ வணக்கம் என்பதில் ஐயம் இல்லை. இலிங்கக் கடவுளை வழிபடுவோர் எங்கள் கிரியைகளை அணுகாதிருக்கட்டும் என இருக்கு வேதம் கூறுகின்றது. இருக்கு வேதம் பாம்பு வணக்கத்தையும் கண்டிக் கின்றது. இருக்கு வேதத்தில் பாம்பு அகி எனப்பட்டது. சிவனுக்கு இன்னொரு பெயர் பால் (Bal); அது பாலேசுவர என வழங்கும். சிவன் பினீசியரின் பால் என்றும் எகிப்தியரின் பால், சித் அல்லது தைபன் (Typhon) என்றும் கலோனல் தாட் (Colonel Tod) நம்பினார். பாட்டர்சன் (Paterson) எழுதியிருப்பது வருமாறு: “இவ்வுலகில் பெரும்பாலான மக்களிடையே சைவ சமயக் கொள்கைகள் பரவியிருந்தனவென்று தெரிகிறது. அவை மிகப் பழங்கால மக்களிடையே பரவியிருந்தன. அவர்கள் தாம் கைக்கொண்ட கிரியைகளின் பொருளை அறியாதிருந்த னர். இது பற்றியே பழைய கிரேக்கர் உரோமர்களிடையே கடவுட் சிலைகள், பழங்கதைகள் கலப்புக்களும் மாறுபாடுகளும் உண்டாயின. அயல்நாட்டு மக்கள் வெளித்தோற்றத்திலுள்ள கிரியைகளையும் குறி களையுமே பின்பற்ற முடியும். அவர்கள் கோவிலின் வாயிற்படியைக் கடந்து செல்ல விடப்பட மாட்டார்கள். சிவன் சூபிதர், ஒசிரிஸ்1, மூன்று கண்களுடைய சியஸ் (Zeus) ஆக மாறுபட்டார். சிவனின் பாரியாகிய பவானி2 யூனோ, வீனஸ், செபிலி ரோகியா, இரிஸ், செரிங், அன்னா பெரன்னா முதலிய தெய்வங்களாக மாறுத லடைந்தார். தெய்வங்கள் பலவானமைக்குக் காரணம் அயல்நாட்டு மக்கள் தாம் கையாண்ட பழங்கதைகளின் தொடக்கத்தையும் திருவடிவங்களின் கருத்துகளையும் அறிந்திராததினாலேயாகும். அவர்கள் தமது நாட்டுக்கும் பழக்கவழக்கங் களுக்கும் ஏற்றவாறு பழங்கதைகளைச் செய்தார்கள். ஆகவே அவர்கள் பழங்கதைகளில் ஒன்றோடு ஒன்று மாறுபடும் மயக்கங்கள் எழுந்தன.”

திராவிட இந்தியாவினின்றும் சென்ற சிவ வழிபாடு பால், பெல் வழிபாடுகளாகப் பரவிற்று என்றும் லில்லி கருதினார். இவ் வழிபாட் டுக்கு எதிராக மொசேயும் யூத தீர்க்கதரிசிகளும் போராடினார்கள். இறுதியில் இவ் வழிபாடு ஐரோப்பாவினின்று பவுல் ஞானியரால் வெருட்டப்பட்டது. தியுதேனியரைப் (Teutons) போல இயற்கைகளை வழிபட்ட இந்திய ஆரியர் திராவிடரின் சமயக் கொள்கைகளைத் தடை செய்ய முடியவில்லை. திராவிடர் சமயக் கொள்கைகள் விசுவாமித்திரர் போன்ற இருடிகள் வழியாக அவர்கள் நூல்களில் புகுந்தன. இவ்வாறு புராண கால இந்துமதம் தொடங்கிற்று.

ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்திய யோகியர் மனிதனுக்கும் அவனைச் சூழ்ந்துள்ள உலகத்துக்குமுள்ள தொடர்பைப் பற்றியும் ஆராய்ந்தனர் என லில்லி என்பார் கூறி அதற்குப் பாரசீக இலக்கியத்தினின்று ஆதாரமுங் கhட்டியுள்ளார். 1இக் கருத்துப் பற்றியே மனத்தை ஒரு வழிப்படுத்துவதால் உயர்நிலை அடைந்த யோகியின் வடிவாக சிவன் வடிவம் கொள்ளப்பட்டது. ஆகவே அவர் பெரிய யோகி எனப்பட்டார். நீறு பூசிய உடலும், பின்னிய சடையும், உடையராய் மரத்தின் கீழிருந்து மனத்தை ஒரு வழிப்படுத்தியிருப்பவராக அவர் கொள்ளப்படுவர். பிற்காலத்திலும் திராவிடச் சூழல்களிலேயே தத்துவ ஆராய்ச்சி வளர்ச்சி யடைந்தது.

இந்திய தத்துவ ஆராய்ச்சிகளுள் வளர்ச்சியடைந்த சித்தாந்தக் கொள்கை தெற்கிலேயே வளர்ச்சியடைந்தது. வேதாந்தக் கொள்கை களை விரித்து விளக்கியவர் மலையாளியாகிய சங்கராச்சாரியரே. அதன் தர்க்க முறையான விரிவுரை காஞ்சிபுரத்திலிருந்த மத்வரால் வெளியிடப் பட்டது. துவைதக் கொள்கையை விரித்து விளக்கியவராகிய மத்வர் தென் கன்னடத்தில் விளங்கியவர்.

கிருட்டினனும் திராவிடக் கடவுளாவர். பகவத் கீதை அவரால் செய்யப்பட்ட தெனப்படுகின்றது. இந்துமத வழிபாட்டுள் புகுந்துள்ள மற்றைய திராவிடக் கடவுளர் பலராமர், முருகன், காளி எனப்படுவர்.2

பத்தாயிரம் ஆண்டுகளின் முன், தமிழ், இலக்கிய மொழியா யிருந்ததென தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. ஆரியர் இந்தியாவை அடைந்த போது தமிழ் திருத்தமடைந்த மொழியாக விருந்தது. விஞ் ஞானம், தத்துவம் சம்பந்தமான பல சொற்களை தமிழ் சமக்கிருதத்திடம் இரவல் பெற்றதென்று சிலர் கருதுகின்றனர்; இது தவறு. அச் சொற்கள் மற்றைய ஆரிய மொழிகளில் எவ் வடிவிலும் காணப்படவில்லை. எனவே இச் செய்திவழி நாம் அறியக் கூடியது இச் சொற்களையும் அறிவிற்குரிய பல செய்திகளையும் ஆரிய மக்கள் இந்தியாவுக்கு வந்தபின் கற்றார்கள் என்பதே. அக்காலத்தில் அதிக பண்பாடடைந்திருந்த திராவிட சாதியா ரிடமிருந்து அச் சொற்களையும் கருத்துகளையும் அவர்கள் கற்றார்கள் எனக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லையா?1 தமிழரிடத்தில் பழைய பாடங்கள் அடங்கிய நூல்கள் இருந்தபோதும் சமய சம்பந்த மான பழைய நூல்கள் காணப்படவில்லை. இவ் வகைப் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் அவர்களிடத்தில் சமயத் தொடர்பான இலக்கி யங்கள் இருக்கவில்லை எனக் கூறுதல் பொருத்தமாகாது. அவ் விலக் கியங்களெல்லாம் இறந்தன. முதலாம், இரண்டாம் சங்கங்கள் இருந்த இடங்கள் கடலுள் மறைந்து போனதில் சந்தேகம் இருப்பினும் அந் நூல்கள் அமிழ்ந்து போயின என்பதில் சந்தேகம் எழுதற் கிடமில்லை. சமீப காலங்களில் தோன்றிய பல நூல்கள் மறைந்து போனமையே அச் சந்தேகத்தைத் தெளிவிப்பதாகும். சீசர் காலத்தில் வாழ்ந்த தயதோரஸ் (Diadoras) எழுதிய நாற்பது நூல்களில் பதினொரு நூல்கள் மாத்திரம் கிடைத்துள்ளன. லிவி (Livy) எழுதிய நூல்களுட் பல மறைந்து போயின. தசிதஸ் (Tacitus), தயேனிசஸ் (Dinoysius), காசியஸ் (Dion Cauuius), பொலிபியஸ் (Polybius) முதலியோரின் நூல்கள், பெரிதும் அழிந்துபோ யின. கிறித்துவ ஆண்டுக்குச் சிறிது முன் எழுதப்பட்ட நூல்களாகிய பெரோசசின் பாபிலோனிய வரலாறு, கிளேசியசால் எழுதப்பட்ட பாரசீக வரலாறு, மெகஸ்தீனசின் இந்திய வரலாறு, மெனிதோயிசின் எகிப்திய வரலாறு முதலியவைகளில் பிற ஆசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பகுதிகளையன்றி மற்றவை மறைந்து போயின.

ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, திராவிடர் சிறந்த நாகரிக முடையவர்களா யிருந்தார்களென்று இருக்கு வேதம் கூறுகின்றது1. திராவிடர் அரண் செய்யப்பட்ட நகரங்களில் வாழ்ந்தார்கள்; உலோகங் களில் செய்த அணிகலன்கள், திறமையான ஆயுதங்கள், ஆடு, மாடு முத லான திரண்ட செல்வம் உடையவர்களாகவும் மாயவித்தை யறிந்த வர்களாயு மிருந்தனர். இந்தோ ஆரியர் அலைந்து திரியும் மக்களா யிருந்தனர். முந்திய நாகரிகத்தைப் பற்றிய வரலாறு அவர்களுக்கு இல்லை. “பழங்குடிகளிடமிருந்தே ஆரியர் கல்லினாற் கட்டிடம் அமைக்க அறிந்தார்கள். அவர்கள் மற்றைய இந்து ஐரோப்பியரைப் போல மரத்தினால் அல்லது மரக் கம்புகளினால் கட்டிட மமைக்கவும் குகைகளில் வாழவும் அறிந்திருந்தனர்” எனப் பெரிய வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பழைய திராவிடர் கடற்பயணம் செய்யும் சாதியினர். மலையாளக் கரைக்கும் பாபிலோனுக்குமிடையில் வாணிகம் நடந்ததென்பதற்கு அரிய சான்றுகள் உண்டு. சாலதியாவிலே கி.மு. 3000இல் அமைத்த கட்டிடமொன்றில் மலையாளத் தேக்க மர உத்திர மொன்று காணப்பட்டது. இந்தியாவிலிருந்து பாபிலோனுக்கு வேட்டை நாய்கள் அனுப்பப்பட்டன; இரத்தினக் கற்கள், துணிக்கு ஊட்டும் சாயங்களும் அனுப்பப்பட்டன. பாபிலோனியர் ஆடையைக் குறிக்க வழங்கிய பெயர் சிந்து. சிந்து என்பது சிந்து ஆறு. சிந்து ஆற்றின் முகத் துவாரத்தில் நாக சாதியாரின் பெரிய இராச்சியம் இருந்தது.

நாகர்
பாண்டி நாட்டில் வாழ்ந்த நாகர் அதிக மசிலின் துணிகளைப் பிற நாடுகளுக்கு அனுப்பினர். இது பிற்காலத்திலும் நடைபெற்றது. திராவிடர் மேற்கு ஆசியாவொடு வாணிகம் நடத்தியதன் பயனாகத் தமிழ்ச் சொற்கள் பல கிரேக்க எபிரேய மொழிகளில் சென்று வழங்கின. அவை, அரிசி, மிளகு, குரங்கு, மயில், தந்தம், சந்தனக்கட்டை, இஞ்சி, கறுவா முதலியவைகளைக் குறிக்கும் சொற்கள்.

இயக்கர் நாகர் இராக்கதர் அசுரர் எனக் குறிக்கப்பட்டோர் யார் என்பதைப்பற்றி இப்பொழுது ஆராய்வோம். இவர்கள் பழங்காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட கூட்டத்தினர். புராணங்கள் கூறும் பழைய வரலாற்றின்படி அசுரரின் முக்கிய இடம் இலங்கை. பின்பு இலங்கை இராக்கதரின் இருப்பிடமாயிருந்தது. இராக்கதரும் அசுரரும் வலிமை மிக்கவ ராயினும் நாகர் மிகத் திருந்திய மக்கள். சேர் ஹெர்பாட் ரைஸ்லி (Sir. Herbert Risely) கூறுவது வருமாறு: “தக்காணம் உலகில் மிகப் பழைய நிலஅமைப்புடையது. வரலாற்றுத் தொடக்கத்திலிருந்து அது திராவிடரின் உறைவிடமாக வுள்ளது. திராவிடரே இந்தியக் குலத்தினர் களுள் பழமையுடையோர்” வேர்கூசன் (Ferguson) என்பாரும் இக் கருத்தே யுடையர். திராவிடர் சுமேரியரை ஒத்த சாதியினர் என்பதற்கு ஆதாரமுண்டு. வடமேற்கு இந்தியத் திராவிடருக்கும் பாபிலோனியருக் கும் தொடர் பிருந்ததென்பது ஆச்சரியப்படத் தக்கதன்று. இரு சாதி யினருக்கும் பொதுவான பல தொடர்புகள் இருந்தன; இரு சாதியினரும் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களுமாவர். மொழி ஆராய்ச்சி இதனை வலியுறுத்துகின்றது. 1திராவிட மொழிகளைப் போலவே சுமேரிய மொழியும் ஒட்டுச் சொற்களை யுடையது.2 மண்டை ஓடு சம்பந்தமான ஆராய்ச்சியும் இரு சாதியினரும் இனமுடையர் என்பதை வெளியிடு கின்றது. சுமேரியச் சொற்கள் பல தமிழ்ச் சொற்களாகவும் தமிழில் வழங்கும் அதே பொருளுடையனவாயுமுள்ளன. இந்தியாவிலும் இலங்கையிலும் ஊர் என முடியும் இடப்பெயர்கள் பல உண்டு. பாபி லோனியாவிலே நிப்பூர் ஊர் என்னும் இடப்பெயர்கள் இருந்தன. மனா என்பது சுமேரியத்தில் ஊரைக்குறிக்கும். தமிழிலும் அதற்கு அதே பொருள் உண்டு. மன்னன் என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பொன்னை யுடையவன் என்பது பொருள். அசீரிய மன்னர் தமக்குப் பால் என்னும் பட்டப்பெயர் இட்டு வழங்கினர். பால் என்பதற்கு அரசன் அல்லது பாதுகாப்பவன் (பாலிப்பவன்) என்று பொருள். பாபிலோனியரின் இடியோடுகூடிய இருண்ட முகிற் கடவுளுக்கு இராமன் என்று பெயர். இது தமிழில் கறுப்பு மனிதன் எனப் பொருள்படும்.

அசீரியா அசூரின் நாடு. பழைய புராணங்கள் இலங்கை அசுரரின் முக்கிய இருப்பிடம் எனக் கூறுகின்றன. காலா என்பது அசீரிய பட்டினங் களிலொன்று. இலங்கையிலும் காலா என்னும் பட்டினமொன்று இருந்தது. இங்கிருந்து ஆசிய நாட்டுப் பண்டங்கள் பல மேற்கு நாடு களுக்கு ஏற்றுமதியாயின. புராண காலத்தில் இலங்கை இலம் அல்லது ஈழம் எனப்பட்டது. சுமேரிய நாகரிகமுடைய எல்லம் என்னும் நாட்டைப் பாபிலோனியாவின் எல்லையிற் காண்கின்றோம். பாபி லோனியாவில் பயன்படுத்தப்பட்டன போன்ற ஈமத்தாழிகள் தென்னிந்தி யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட பழமை
சென்னையில் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பழம்பொருள்களைப் பார்த்தபின் வின்சென்ட் சிமித் என்னும் வரலாற்றாசிரியர் கூறியிருப்பது வருமாறு: “இப் பழம் பொருள்கள் பாபிலோனிலே பாக்தாத்துக்கு அண்மையில் கிடைத்த பொருள்களை ஒத்திருக்கின்றன. இவ் வுண்மை பழைய இந்திய பாபிலோனிய நாகரிகங் களைத் தொடர்புபடுத்துவதற்குக் காட்டப்படும் பல சான்றுகளில் ஒன்றாகும். இது மேற்கு ஆசிய இந்திய மக்களின் குல ஒற்றுமையை வற்புறுத்திக் கூறுவதற்கும் தூண்டுதலாக வுள்ளது.” இறந்தவர்களைத் தாழிகளில் இட்டுப் புதைக்கும் வழக்கம் இரு நாடுகளிலும் இருந்து வந்தது. திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பழைய இடுகாடு ஒன்று ரே (Rea) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது 114 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்டது. ஒரு ஏக்கரில் 1000 தாழிகள் வரையில் புதைக்கப்பட்டிருக்க லாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தவர்களை இவ் வகையாகப் புதைக்கும் வழக்கம் மற்றைய மக்களிடையே அறியப்பட்டிருக்கவில்லை. இரு நாட்டு மக்களின் சமயமும் ஒரேவகையாக விருந்தது. இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த திராவிடர் பாபிலோனியாவினின்று வந்தார் களா? எல்லா வகையான காரணங்களும் எதிரான முடிவையே தெரிவிக் கின்றன. சுமேரியர் எல்லத்தைத் தமது குலத்தவரின் தொட்டில் எனக் கருதினார்கள். சமக்கிருத புராணங்களின்படி பழைய இந்தியர் இளா (எல்ல) விருதத்தைத் தமது தாயகமாகக் கொண்டனர். விருதம் என்பதற்கு நாடு என்பது பொருள். எல்லம் எங்குள்ளது? எல்லம் பாபிலோனியா வின் அயலே யுள்ள நாடா? எல்லத்தைப்பற்றி விங்கர் (Wenker) எழுதிய வரலாற்றில், “செமித்தியர் (எல்லம் சுமேரியா என்னும்) முழு நாட்டுக்கும் எல்லம் எனப் பெயரிட்டு வழங்கினார்கள் என்றும் அன்ஷான் அல்லது சாம் என்பதே அதன் பெரும்பகுதிக்கு வழங்கிய உள்நாட்டுப் பெயர்” என்றும் காணப்படுகின்றது. செமித்திய காலத்திற்கு முற்பட்ட சுமேரிய காலத்தில் எல்லம் என்னும் பெயர் வழக்கில் இருக்கவில்லை. ஆகவே சுமேரியர் பாபிலோனிய எல்லத்தைத் தமது தாயகமாகக் குறிப்பிட் டிருக்க மாட்டார்கள். அந் நாடு சிறியதாயும் பாபிலோனுக்கு அண்மையி லுள்ளதாயும் இருந்தது. அது பாபிலோனிலிருந்து மலைத் தொடராலா வது கடலாலாவது பிரிக்கப்பட்டிருக்கவில்லை. அதற்குச் சிறிது தொலை வில் வாழ்ந்த சுமேரியர் அதனைப் புறம்பான நாடாகக் கொண்டு அதனைத் தமது தாயகமெனக் கூறினார்கள் என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இந்திய பாபிலோனிய எபிரேய பழங்கதைகள் பழைய வெள்ளப் பெருக்கு ஒன்றைப்பற்றிக் கூறுகின்றன. விவிலிய மறையிற் கூறப்படும் நோவா, பாபிலோனிய ஹாசி சதரா, இந்திய மனு அல்லது சத்தியவிரதன் என்போரும், அவருடன்கூட இருந்த சிலரும் அவ் வெள்ளப் பெருக்கி லிருந்து பிழைத்தனர். யான் படைத்த உயிருள்ளவைகளை எல்லாம் யானே அழிப்பேன் என்று ஜெகோவா நோவாவுக்குச் சொன்னார். இவ் வெள்ளப் பெருக்கு பழைய பெரிய பரந்த இடத்தை அழிவுபடுத்திய தெனக் கூறமுடியாது. இம் மறைவு நிலம் கடலுள் மறைந்தது போல்வ தால் உண்டாயிருக்கலாம். மனிதன் தோன்றிய பின் மேற்கு ஆசியாவின் எப் பகுதியாவது கடலுள் மறைந்துபோனமைக்குச் சான்று இல்லை. இலங்கை இந்தியப் பழங்கதைகள் மறைந்து போன நிலத்தைப்பற்றிக் கூறுகின்றன. மனிதனின் ஞாபகத்துக்கு எட்டாத ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்திருந்தன. வலேஸ் (Wallace) கூறியிருப்பது வருமாறு: “ஐந்தாவது காலக் கூற்றில் (Tertiary Period - மனிதன் இப் பூமியில் தோன்று முன்) இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே பெரிய கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. இவை (இலங்கை யும் தென்னிந்தியாவும்) தெற்கேயிருந்த பெரிய பூகண்டத்தின் பகுதியாக விருக்கலாம்.” இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்திருந்த காலத்தும் தென்னிந்தியா பெரிய தீவாகவிருந்தது. இராமாயணத்திலும் மகாவம்சத் திலும் காணப்படும் பழங்கதைகளின்படி இலங்கையின் 11/12 பகுதிகள் கடலுள் மறைந்து போயின. இதனால் சத்தியவிரதன் என்னும் திராவிட மனு கடலுள் மறைந்துபோன நிலப்பரப்பின் ஒரு பகுதியினின்றும் மலை யத்தை அடைந்தான் என்பது ஏற்றதாகத் தெரிகின்றது. இப் பழங்கதை இந்தியர் இளாவிருதத்தினின்றும் வந்தார்கள் என்னும் பழங்கதையை விளக்குகின்றது. சுமேரியர் எல்லத்தினின்றும் சென்றார்கள் என்பதை யும் இது விளக்குகின்றது. இது பாபிலோனிய இந்திய வெள்ளப் பெருக்கைப்பற்றி விளக்குவதுமாகும்.

பாபிலோனியர் தமது நாகரிகம் கடலுக்கு அப்பால் இருந்து வந்ததென நம்பினார்கள் ஈஆ. சுமேரியரை நாகரிகப்படுத்திய தெய்வம். இக் கடவுளைப்பற்றி டாக்டர் சேஸ் (Dr. Sayce) எழுதியிருப்பது வருமாறு:

“ஈஆ என்னும் கடவுள் நாளும் தனது இடமாகிய கடலினின்றும் எழுந்து மனிதனுக்கு விஞ்ஞானக் கலையையும், கைத்தொழிலையும், நாகரிகப் பழக்கங்களையும் கற்றுக்கொள்ள உதவினார். அவரே முதல் முதல் எழுதும் முறையை அறிவித்தார். ஈஆவின் பண்பு மிக்க இடமாகிய எருது நகர் ஒருபோது கடற்கரைப் பட்டினமாக இருந்தது. அது மற்றைய நாடுகளோடு வாணிப உறவு பூண்டிருந்தது. அந் நாடுகள் அதன் நாகரிகத்தை வளம்பெறச் செய்தன.” சுமேரிய பழங் கதைகளின்படி ஈஆ பாரசிகக் குடாக்கடலில் வாழ்ந்து அழகிய மரக்கலத்தில் உலகைச் சுற்றி அடிக்கடி பயணஞ் செய்தார். இப் பழங்கதையினால் சுமேரியரின் நாகரிகம் கடலுக்கு அப்புறத்திலிருந்து வந்ததெனக் கொள்ளக் கிடக்கின் றது. அவர்களின் ஆதியிடம் இலங்கையும் மலையாளமுமாக இருக்க லாம். அராபியரின் பழங்கதைகளின்படி மனிதனின் ஆதி உறைவிடம் இலங்கையாகும். ஏதேன் தோட்டத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் ஆதித் தாய் தந்தையர் இலங்கைக்குச் சென்றார்கள். இப் பழங்கதை யினால் மேற்கு ஆசிய மக்கள் மேற்கு ஆசியாவைத் தமது ஆதி இருப்பிட மாகக் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.

இப்போதைய விஞ்ஞானிகளின் முடிவு எவ்வாறிருக்கின்றது? பேராசிரியர் ஹெக்கல் மறைந்து போன கண்ட பூகண்டமே மனிதரின் தொட்டில் எனக் கருதினார்.

டாக்டர் மாக்லீன் (Dr. Macleane) கூறுவது, “மக்களின் குல சம்பந்த மான ஆராய்ச்சியினால் வடக்கிலுள்ள மத்தியதரைச் சாதியினர் தென் னிந்தியாவினின்றும் சென்று உலகின் பல பாகங்களில் பரவினார்கள் என்று கூறுவதை மறுப்பதற்குக் காரணமில்லை”1 என்பதாகும்.

திராவிடக் குலத்தினர் வடக்கினின்றும் வரவில்லை. தெற்கினின் றுமே வந்தார்கள், தெற்கே இருந்த நாடு தென்தீவாகலாம்; இலங்கை அதன் பகுதியாக இருந்ததெனலாம். மூன்று உலகத்தாருக்கும் பயம் விளைவித்த திராவிட மக்களின் உறைவிடம் இலங்கை எனப் புராணங் களும் இதிகாசங்களும் கூறுகின்றன. திராவிடர் இந்தியா முழுமையிலும் பரவிப் பலுச்சிஸ்தானம் வரையில் சென்றார்கள். அங்கு திராவிட மொழியின் சிதைவாகிய திராவிடம் இன்றும் வழங்குகின்றது. இன்று வட இந்தியாவில் வாழும் சிறுசிறு கூட்டத்தினர் இன்றும் திரா விட மொழிகளைப் பேசுகின்றனர். தரை வழியாகவும் கடல் வழியாகவும் திராவிடர் பாபிலோனியா, அசீரியா, எல்லம் முதலிய மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார்கள்.

நிநூஸ் (Ninus) மக்களின் இராணியாகிய செமிரமிஸ் நிநேவாவை கி.மு. 3000-க்கு முன் அமைத்தாள் என்றும், உலகிலுள்ள மக்கள் எல்லாரி லும் பார்க்க இந்தியரே உயர்வுடையவர்களும் செல்வமுடையவர்களும் எனக் கேள்வியுற்ற அவள் அவர்களோடு போர் தொடுத்து முறியடிக் கப்பட்டா ளென்றும் பாபிலோனியப் பழங்கதை கூறுகின்றது. தமது நாகரிகம் ஒசிரிஸ் என்னும் கடவுளால் உண்டானதென எகிப்தியர் கூறு கிறார்கள். ஒசிரிஸ் கடவுள் இந்தியாவில் பல பட்டினங்களைக் கட்டிற்று என அவர்கள் பழங் கதைகள் கூறுகின்றன. அக் கடவுள் தான் வாழ்ந்த அடையாளங்களை அவ் விடங்களில் விட்டமையால் பிற்கால மக்கள் அக் கடவுளின் பிறப்பிடம் இந்தியா என நம்பினார்கள்.

பாபிலோனிய வரலாற்றின்படி நீரேவாரகா அமைக்கப்பட்ட காலத்தில் உலகிற் பெரிய சாதியினர் இந்தியாவில் வாழ்ந்தார்கள். இந்திய தெய்வமாகிய ஒசிரிஸ் எகிப்திய நாகரிகத்தை உண்டு பண்ணிற்று என இந்தியர் கூறினார்கள் என பழைய எகிப்திய வரலாறுகளிலிருந்து அறிகின்றோம்.

திராவிடர் வரலாற்று ஆராய்ச்சியினால் இந்தியர் எகிப்தியர் பாபி லோனியர் நாகரிகங்கள் ஒத்த பழமையுடையன எனத் தெரியவருகின்றது.

தமிழர் தென்திசைத் தீவினின்று இந்திய நாட்டை அடைந்தவர்க ளாயின் இலங்கையின் நாகரிகம் இன்னும் பழமையுடையதாகும். தென் கண்டத்தினின்றும் சென்ற திராவிடர் வெள்ளப் பெருக்கின் முன்னிருந்த திராவிட அடிப்படையை மேலும் பலமடையச் செய்திருக்கலாம். இலங்கையில் வாழும் மக்கள் சிலர் பழைய மக்களின் வழித்தோன்றல்க ளாவர்.
1
தென்னிந்தியரின் கடல் ஆதிக்கம்
வரலாற்றுக் காலத்துக்கு முன்தொட்டுத் தென்னிந்தியா மேற்குத் தேசங்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் நடத்திய புதைபொருள் ஆராய்ச்சியில் பழம்பொருள்கள் பல கிடைத்துள்ளன. அவை சூசா, பாபிலோன் முதலிய இடங்களிற் கிடைத்த பழம்பொருள்களை ஒத்தன. அப் பழம்பொருள்களின் காலம் கி.மு. 3000 வரையிலாகும். மண்பாண்டங்கள், கண்ணாடி வளைகள், எழுத்துகள் வெட்டப்பட்ட முத்திரைகள் என்பன அப் பழம் பொருள்கள். சில ஆண்டுகளின் முன் டாக்டர் ஆர்நெல் (Dr. Hornell) சூசா, இலகாஷ் என்னும் இடங்களிற் கிடைத்த கிண்ணங்கள், கை வளைகள் இந்தியப் பொருள்களே எனக் காட்டியுள்ளார். ஆதிச்ச நல்லூர் சமாதிகளிற் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளில் கிடைத்த மண்டை ஓடுகள் எகிப்தியரின் மண்டை ஓட்டை ஒத்தன வென்று பேராசிரியர் எலியட் சிமித் தெளிவுபடுத்தியுள்ளார். பேராசிரியர் சிமித், பெரி என்னும் இருவரும் கி.மு. 2,600 முதல் இந்தியாவுக்கும் எகிப்துக்கு மிடையில் தொடர்பு இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டார்கள். பிளின்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தில் அரச பரம்பரை தோன்றுவதற்கு முற்பட்ட மக்கள் எல்லத்திலிருந்து சென்றவர்கள் ஆகலாம் என்று மண்டை ஓட்டின் அளவு, வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு கூறியுள்ளார். பாபிலோனில் வாழ்ந்த சுமேரியர் கடல்வழி யாகவோ தரைவழியாகவோ இந்தியாவினின்றும் சென்ற திராவிடர் ஆகலாம் என டாக்டர் ஹால் கருதியுள்ளார். மினோவருக்கும் திராவிட ருக்கும் உறவு இருந்ததென்பது ஐதரபாத்தில் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களைக் கொண்டு நன்கு தெளியப் படுகின்றது. பிற்காலத்தில் மேற்குத் தேசங்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருந்த தென்பதை விளக்கும் பல சான்றுகள் உள்ளன. அண்மையில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பக்குவம் செய்யப்பட் டுள்ள பிணங்கள் (Mummies) இந்திய அவுரி நீலத்தால் சாயமூட்டப்பட்ட துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தவை பாக்தாத்திலும், எற்றூஸ்கா(இத்தாலி)விலும் கண்டுபிடிக்கப்பட்டன. எற்றூஸ்கானிய ஈமத்தாழிகள் தென்னிந்தியத் தாழிகளை எல்லா வகையிலும் ஒத்துள்ளன. தென்னிந்தியாவில் தாழி களில் வைத்துப் பிரேதங்களைப் புதைக்கும் வழக்கு இருந்ததென்பது இராமாயணம், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களால் விளங்கு கின்றது. போசானியஸ் (Pousanias) என்னும் கிரேக்கர் (கி.பி. 200) பதி னொரு முழ நீளமுள்ள இந்திய தாழிகளைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

எபிரேய மொழியில் காணப்படும் துகிம் அகலிம் என்பன தோகை அகில் என்னும் தமிழ்ச் சொற்களே என நீண்ட நாட்களின்முன் கால்டு வெல் காட்டியுள்ளார். கி.மு. 9ஆம் நூற்றாண்டில் அசீரிய அரசனாகிய மூன்றாம் சாலமன் சர் நாட்டிய தூணில் இந்தியக் குரங்குகளும் யானை களும் வெட்டப்பட்டுள்ளன. இந்தியாவினின்றும் வெளிநாடுகளுக்குப் போக்கப்பட்ட துணிகளுக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டப்பட்டிருந் தன வென்பது அரிஸ்தோ புலுஸ் (Aristobulus) என்பார் கூற்றுகளால் விளங்குகின்றது. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் ஐந்து நிறங்கள் ஊட்டப்பட்ட உடைகளைப் பற்றியும், மஞ்சள்நிற ஆடைகளைப் பற்றி யும், நாகர் அணியும் மல்லிகைப் பூப்போன்ற நிறமுடைய உடையைப் பற்றியும் கூறுகின்றது.

வாணிகம் பெரும்பாலும் கடல் வழியாக நடந்தது. மிகப் பழங் காலம் முதல் தரைப்பாதை இருந்த தெனவும் கொள்ளப்படுகின்றது. அவ்வாறாயின் இந்தியா பாபிலோன் எகிப்து என்னும் நாடுகளை இணைக்கும் மத்திய இடங்கள் இருந்தனவாகலாம். அரிசி என்னும் தமிழ்ச்சொல் அராபி மொழியில் அல்ராஸ் என்றும் கிரேக்கில் அரிசா என்றும் வழங்கும். அரிசிக்கு வடமொழிப் பெயர் விரீகி, பாரசீகப் பெயர் விரிசினசி. இதனால் கிரேக்கரும் உரோமரும் அராபியர் மூலம் அரிசி யைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. பாரசீகர் இந்துத்தானத்தில் நின்றும் அதனைப் பெற்றனர். கிரேக்கர் அரிசியை வட இந்தியாவினின் றும் பெற்றால் அரிசியைக் குறிக்கும் பெயர் அரிசி என்றிராது. விரீகி என்றிருக்கும் அரிசி இந்தியா, பர்மா, சீனா, என்னும் நாடுகளுக்குரியது. கி.மு. 2,800இல் சீனாவில் அரிசி அறியப்பட்டிருந்தது. தென்னிந்தியாவி லும் அரிசி அக்காலத்தில் அறியப்பட்டிருக்கலாம்.

தென்னிந்தியரிடத்தில் கரை ஓரங்களில் செல்லும் சிறிய மரக் கலங்கள் இருந்தனவென்றும் அவை இலங்கைத் தீவுக்கு அப்பால் செல்லவில்லை என்றும் டாக்டர் கால்டுவெல் கூறியுள்ளார். எகிப்திலே கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள்கள் இக் கொள்கை தவறுடைய தென்பதைக் காட்டிவிட்டன. எகிப்திய ஐந்தாம் அரச பரம்பரைக் கால ஓவியங்களிற் காணப்படும் மரக் கலங்கள் இந்திய மரக்கலங்கள் போலவே உள்ளன. மண்டை ஓடுகளின் ஒற்றுமை, ஞாயிறு பருந்து இடப வழிபாட்டுத் தொடர்புகள் இவ்விரு நாடுகளுக்கிடையில் தொடர் பிருந்த தென்பதை வெளியிடுகின்றன.

தென்னிந்தியா மேற்கு உலகோடும் கிழக்கு உலகோடும் தொடர்பு வைத்திருந்ததாயினும் கடற் பயணங்கள் பிறருதவியின்றி இந்திய மக்களாலேயே நடத்தப்பட்டன. இந்திய மரக்கலங்களின் முன்புறத்தில் இரு கண்கள் வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இன்று அவை அழகுக்காக வைக்கப்படுகின்றன. எகிப்தியர் முற்காலத்தில் அவைகளை ஒசிரிஸ் தெய்வத்தின் கண்களாகக் கருதி அமைத்தனர். மரக்கலங்களுக் குக் கண் வைக்கும் வழக்கம் எகிப்தியரிடமிருந்து தமிழர் பெற்றதெனத் தெரிகின்றது. திராவிடரின் படகு செலுத்தும் தண்டு சத்தகம் எனப்பட் டது. இது வட்ட வடிவுடையது. பாய், பாய்மரம் முதலின திராவிடப் பெயர்களே. நங்கூரம் என்பதும் திராவிடச் சொல்லே. ஓடம், ஒதி, தோணி, தெப்பம், கலம், கப்பல், முதலிய சொற்கள் வெவ்வேறு வகை மரக்கலங்களைக் குறிக்கின்றன. “தமிழகத்தில் கரையை அடுத்துச் செல்லும் மரக்கலங்கள் உண்டு. மரங்களைச் சேர்த்துக் கட்டிச் செய்யப் பட்ட மரக்கலங்களுள்ளன. கங்கை ஆற்றில் செல்லும் மரக்கலங்கள் கொளந்தைய எனப்படுகின்றன.” எனப் பிளினி கூறியுள்ளார். முற்காலத் தில் அறியப்பட்ட பலவகை மரக்கலங்களை இன்னும் மலையாளக் கரையில் காணலாம்.

ஆரிய மக்கள் கடல் வாணிகத்தால் இலாபஞ் சம்பாதிக்க ஆவலுடை யவர்களாயிருந்தார்கள் என்று இருக்குவேதம் கூறுகின்றது. இருக்கு வேதத்தில் பிலவ, நோ முதலிய சொற்கள் மரக்கலத்தைக் குறிக் கின்றன. நாவாய் என்னும் சொல் இருக்கு வேதத்தில் ஓரிடத்தில் மாத்திரம் வருகின்றது. மரத்தில் குடையப்பட்ட மரக்கலத்தைக் குறிக்கும் தாரு என்னும் சொல் இருக்கு வேதத்தின் கடைசி மண்டலத்தில் காணப்படுகின்றது. இருக்கு வேதத்தில் தண்டைக் குறிக்க அரித்திரா என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. பாய்மரம், சுக்கான் என்பவை களைக் குறிக்கச் சரியான சொற்கள் காணப்படவில்லை. ஓடக்காரனைக் குறிக்கும் நாவாயா என்னும் சொல்லும், சுக்கானைக் குறிக்கும் நோமண்ட என்னும் சொல்லும் சதபதப் பிராமணத்தில் காணப்படு கின்றன. ஓடம் செல்லக்கூடிய ஆறுகளுக்கு நாவாய என்னும் பெயர் முதல் மண்டிலத்திற் காணப்படுகின்றது. ஓடக்காரர் சம்பந்தமாக அரித் திரா என்னும் பெயரைவிட வேறு யாதும் எசுர்வேதத்தில் காணப்பட வில்லை.

அதர்வ வேதத்தில் சம்பின் என்னும் பெயர் காணப்படுகின்றது. இது இருக்கு வேதத்தில் பொருள் மயக்கமுடைய சம்பா என்னும் சொல்லோடு தொடர்புடையதாகலாம். இச் சொற்களை ஆராய்வதால் ஆரியரின் கடற் பயணங்கள் திராவிட அடிப்படையைப் பெற்றிருந்தன வென்பது விளங்கும். அரித்திரா என்னுஞ் சொல் கப்பல் ஓட்டும் தண்டைக் குறிக்கும் அரிகோலா (Harigola) என்னும் திராவிடச் சொல்லை நினைவுக்குக் கொண்டுவருகின்றது. அரிகோலா என்பது அரிவா, கோல் என்னும் இரண்டு சொற்களாலானது. இது பரிசல் என்னும் சொல்லின் வேறுபாடென்றும் அது பார்ஷாற் எனத் திரிந்து வேதகாலச் சொல்லாக வழங்கிற்றென்றும் கொள்ளலாம். சம்பா என்னுஞ் சொல் சம்பான் என்னும் மலாயச் சொல்லை நினைவூட்டு கின்றது. சம்போசின் தலைநகர் சிந்து ஆற்றின் மேற்குக் கரையில் இருந்ததென அரியன் (Arrian) கூறியுள்ளார். சம்பி என அதர்வவேதத்திற் காணப்படுஞ் சொல் மரக்கல மோட்டிகளையே குறிக்கின்றது.

கௌடலியர் மரக்கலம் சம்பந்தமாகக் குறிப்பிடும் பெயர்களுள் வேணு, வேணுகா என்னும் சொற்கள் காணப்படுகின்றன. வேணு என்னும் சொல்லுக்கு நேரான சொல் வேதங்களிற் காணப்படவில்லை. அது ஓடம் என்னும் திராவிடச் சொல்லை ஒத்துள்ளது. அமரகோசம் என்னும் நிகண்டினால் இச் சொற்கள் இரவல் வாங்கப்பட்டன என்று தெரிகின்றது. ஒரே பொருளில் வழங்கும் பிளவ, உடுப, கோல, ஓட, அரிகோல என்பவை போன்றதே வேணு என்பதும். புத்த நூல்களில் சொல்லப்படும் மரக்கலங்கள் கட்டுவதற்கு இரும்பு பயன்படுத்தப் படவில்லை. தந்த குமாரனும் அவனது மனைவியும் தாமிரலிப்தியி லிருந்து இலங்கைக்குப் பயணஞ் செய்த மரக்கலம் பலகைகளைக் கயிற்றினால் பிணைத்துச் செய்யப்பட்டது. பலகைகள் மூங்கில் முளைகள் அறைந்து பொருத்தப்பட்டன.

ஓடம், தோணி, தெப்பம் முதலிய பெயர்கள் மரக்கலங்களின் வளர்ச்சியைக் காட்டுவன. காட்டுப் பிரம்புகளைப் பின்னிச் செய்த ஓடங்கள் பிளினி காலம் வரையில் வழங்கின. இதன்பின் தோணி (மரத்தைத் தோண்டிச் செய்யப்படுவது) செய்யப்பட்டது. இதன்பின் மரங்களைக் கயிற்றினாற் பிணைத்துக் கட்டப்படும் தெப்பங்கள் செய்யப்பட்டன. பின்பு மரப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்படும் பிளாவு செய்யப்பட்டது. இது இன்றும் மலையாளத்திற் காணப்படுவ தும் மரக்கலம் கட்டப் பயன்படுவதுமாகிய அயினிபிளாவு என்னும் ஒருவகைப் பலாவோடு சம்பந்தப்பட்டதாகலாம். இதற்கு அடுத்தபடியி லுள்ளது கலம். அடித்தட்டுக்கு மேலே மேற்கட்டி அல்லது மறைப்பு உடையது கப்பல் எனப்படும். தெலுங்கில் கப்ப என்பதற்கு மறைப்பு என்று பொருள். தோணியைக் குறிக்கும் தாரு என்னும் சொல் ஒரு முறையும், கட்டுமரத்தைக் குறிக்கும் தியுமந, இரண்டு பக்கங்களிலும் சவள் வலிக்கும் பக்கங்களையுடைய சமயானி, நோயான, அரிதிரா முதலிய பெயர்கள் பல விடங்களிலும் வேதங்களில் வந்துள்ளன. சமக் கிருதத்திலுள்ள கர்ப்பாரா என்பது கர்பசாமாத்தியா என்னும் சொல் லின் வேறுபாடு. தியுமந என்னும் சொல் மரக்கலத்திலுள்ள மேடையைக் குறிக்கின்றது.

பழைய தமிழ்நூல்களில் கடற் பயணங்களைப் பற்றிய செய்திகள் அறியக்கிடக்கின்றன. மிகப் பழங்காலத்தில் கடற்பயணஞ் செய்வதிற் பேர்போனவர்கள் கொல் (Kols) என்னும் மக்கள். கோலாப்பூர், கொல் லம் முதலிய பெயர்களே அவர்களின் ஞாபகமாகக் காணப்படுகின்றன.

கொல் மக்களிடமிருந்து கரைநாடுகளை நாக சாதியினர் கைப்பற்றியிருந்தனர். சமக்கிருத நூல்களிற் காணப்படும் கற்பனையோடு சம்பந்தப்பட்ட வரலாறுகளால் நாகர் தீவுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடல் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள் என்பதும் விளங்கும். அருச்சுனன் உலூபியை மணந்தான் என்பதால் நாகர் என்போர் சரித்திரத் தொடர்புடையவர்களே என விளங்குகின்றது. இராமரின் புதல்வனாகிய குசலன் குமுட்வதி என்னும் நாகப்பெண்ணை மணந்தான். நாகதீவு பாரத வருடத்திலுள்ள ஏழு தீவுகளுள் ஒன்று எனப் புராணங்கள் கூறுகின்றன. சரித்திரக் காலத்திற்கு முன்னரேயே நாகர் இந்துமாக் கடற்றீவுகளிற் குடியேறியிருந்தார்களென்பது நாகப்பட்டி னம், நாகர்கோயில் முதலிய இடப்பெயர்களால் அறியவருகின்றது. வராகமிகிரர் கொல்லகிரி சோழ நாட்டுக்கு அயலிலுள்ளதெனக் கூறி யுள்ளார். கிள்ளி என்னும் சோழன் இலங்கை நாக குலப்பெண்ணை மணந்தான். வீர கூர்ச்சா என்னும் பல்லவ அரசன் நாக கன்னிகையை மணந்தான். சோழ பாண்டிய நாடுகளின் வாணிகம் திரையர் வசம் இருந்தது. பாண்டிய நாட்டு மக்கள் வரலாற்றுக் காலத்திற்குமுன் தொட்டே கடலோடிகளாக இருந்தனர். அவர்களின் தலைநகரம் இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஆண்ட முதல் அரசன் பாண்டிய இராசகுமாரியை மணந்தான். குமரி, கொற்கை, காயல், பாம்பன் முதலியவை பாண்டியரின் துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. தொண்டையர், கடாரம் (பர்மா) முதல் சிங்களம் வரையில் வாணிகம் நடத்தினார்கள். உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இளந்திரையனைப் பாடியுள்ளார். வேங்கடத்தைத் தலைநகராக உடைய திரையனைப் பற்றி அகநானூறு (85,340) கூறுகின்றது. இறையனாரகப் பொருளுரை இளந்திரையம் என்னும் நூலையும் திரையன் மாறன் என்னும் அரசனையும் குறிப்பிடுகின்றது.

சரித்திர காலத்திற்குமுன் கன்னட நாட்டுக் கடம்பர் பெரிய கடலோடிகளாயிருந்தனர். புறநானூறு (335), தமிழ் வழங்கிய திராவிட ருள் அவர்கள் மிகப் பழமை உடையவர் எனக் கூறுகின்றது. பதிற்றுப் பத்து பெருவாய் என்னும் துறைமுகத்தைப்பற்றிக் கூறுகின்றது. கடம்பர் கிரேக்கரோடு வாணிகம் நடத்தியதைப் பற்றி டாக்டர் ஹல்ச் (Dr. Hulzsch) என்பாரும் சீனரோடு வாணிகம் நடத்தியதைப்பற்றி நரசிம்மாச்சாரி யாரும் காட்டியுள்ளார்கள்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பைபிரஸ் ஏட்டில் கன்னட வாசகங்கள் இருப்பதை ஹல்ச் கண்டார். தாலமி சோதர் கால நாணயமொன்று பங்களூர் சந்தையில் கிடைத்தது. சந்திரவதி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியில் அகஸ்தஸ் காலத்து நாணயங்கள் மாத்திரமல்லாமல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வாதூ (Wa-to) என்னும் சீனச் சக்கரவர்த்தியின் நாணயங்களும் காணப்பட்டன.

குட்டுவன் நன்னனைப் போரில் கொன்று வெற்றிபெற்றது மாத்திர மல்லாமல் கடம்பரையும் அழித்தான். வெல்லப்பட்ட கடம்பரிற் பலர் துடியன், பாணன், பறையன் முதலியவர்களைப்போல் பயிர்த் தொழில் புரிவோராயினர். இவர்களிற் பலர் கிழக்குக்கரைக்குச் சென்று கலிங்கம், பீகார், ஒரிசா நாடுகளில் தமது அதிகாரத்தை நாட்டியவர்க ளாகவும் காணப்படுகின்றனர். கஞ்சப் பிரிவிலுள்ள முகலிங்கத்துக்குச் சலந்திபுரம் என்பது இன்னொரு பெயர். அங்கு மதுகேசுவரருக்கு ஆலயமுண்டு. மதுகேசுவரர் கடம்பரின் கடவுள். கலிங்கத்தின் கிழக்குக் கலிங்கரின் தலைநகராகிய கலிங்க நகரமும், சலந்திபுரமும் ஒன்று என்று கொள்ளப்படுகின்றன. கஞ்சம் விசாகபட்டினம் முதலிய பகுதிகளில் கடம்புகுடா என்பது இடங்களுக்குப் பெயராக வழங்குகின்றது. கடம்ப அரச வழியினர் மகதத்தை ஆண்டார்கள் எனக் கன்னடக் கையெழுத்து நூல் ஒன்று கூறுகின்றது.