இன்பம்
கட்டுரைத் தொகுப்பு

முல்லை முத்தையாஇன்பம்

□ அறிஞர் அண்ணா நடத்திய “திராவிடநாடு” இதழில் வெளிவந்த “இன்பம்” குறித்த ஒன்பது அறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பு.

தொகுப்பு

முல்லை பிஎல். முத்தையா

நூல் பற்றிய குறிப்புகள்

நூற்பெயர் : இன்பம்

தொகுப்பாசிரியர் : முல்லை பிஎல். முத்தையா

உரிமை : பதிப்பகத்தாருக்கு

முதற்பதிப்பு : ஜனவரி-1998

தாள் : 10.5 கி. கிராம்

நூலின் ஆளவு : 18.5 செ.மீ, 12.5 செ.மீ.

பக்கங்கள் : 68

வெளியிடுவோர் : தேன் மழைப் பதிப்பகம் 34, கொத்தவால் தெரு, ஆலந்தூர், சென்னை-16.

பொருள் : கட்டுரைகள்

அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா அச்சகம் 7/49, கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை-16.

* * *

விலை : ரூ. 15-00

* * *

இன்பம் என்றால் என்ன?

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்த ஒன்பது அறிஞர்களின் கருத்துரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

-முல்லை பிஎல். முத்தையா

உள்ளே...

பக்கம்

1. நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார்

2. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

3. புலவர் க. மாணிக்கம், தில்லை

4. பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்

5. டி. வி. நாராயணசாமி

6. எஸ். எஸ். அருணகிரிநாதர்

7. எஸ். தனபாக்கியம்

8. மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்

9. இராய. சொக்கலிங்கம்


1 இன்பம்

* * *

நாவலர் சோமசுந்தர பாரதியார்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி நாவலர், எஸ். எஸ் பாரதியாரின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மக்கள் மனமலர்ச்சியை 'இன்பம்’ என்பது தமிழ் மரபு. அது புறத்திருந்து ஊட்டல் வேண்டாது உள்ளத்தாறும் உணர்வின் மலராம். 'களியும்', 'மகிழ்'வும் வெளிப் பொருட்தொடர்பால் விளையும் உணர்ச்சிகள். புறத்து நிகழ்வதைப் பொறிவழி நுகர்வதால் அகத்தெழும் உவகை மகிழ்வென வழங்கும்; மதியை மயக்கும் மகிழ்வின் மிகையைக் 'களி' யெனக் கருதுவார் தமிழ் மரபுணர்வோர். 

உள்ளத்துணர்வைக் கொள்ளை கொண்டு ஆழ்த்தும் கள்ளும் காமமும் விளைக்குங் ‘களி’யை எள்ளி விலக்குவர் தெள்ளறிவுடையோர்.

புறத்துணையால் எழும் அகத்தின் மகிழ்ச்சி பழி படாவிடத்தும், நிலையா நீர்மையால் அறனறி வார்பால் தலைவிடம் பெறாது. பொறிக் குணவாகும் புறப்பொருளியல் பின் மாற்றமும் மறைவும், புலன்தரும் உவகையைப் போக்கவும் குறைக்கவும் போதியதாகும். பொருள் நிலை மாறாவிடத்தும், அது தரும் மகிழ்ச்சி மனநிலைமாற அதனொடு மாறித் தந்நிலை குன்றவும் பொன்றவும் கூடும். புறத்துணையாலே இன்பம் எய்த எண்ணியோன் ஒருவன், காவும் கடலும், யாறுமலையும் யாவும் துருவி நாடெலா மலைந்தும் தேடிய இன்பம் கூடப்பெறாமல் மீண்டு தன்னகத்தே விளைபொருள் அதுவெனத் தெளிந்த உண்மையை, ஆங்கில மொழியில் பொற்கொல்லப் பெயர்ப் புலவன்பாட்டுத் தெள்ளமுதம் போல் தெவிட்டாதுணர்த்தும்.

இனி, நிலையா உணர்வின் நீர்மையால் அமையும் உவகை; உலையா அறிவினில் நிலையிறும் இன்பம், அறிவையும் உணர்வையும் அயர்த்தி மயக்கும் களி அவை இரண்டொடும் ஒவ்வாதா கையால், அதை எல்லாரும் எள்ளி வெறுத்து இகழ்வர். “களியை மெய்யறியாமை” எனவும் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாது” எனவும் வள்ளுவர் பழிப்பதனால், அதன் இழிவு தெளிதல் எளிது.

அறம் திறம்பாது மனத்தை நெறிவழி நிறுத்துவது அறிவு, “தீதொரீஇ, நன்றின்பால் உய்ப்பதறிவு” எனுங்குறளால் அறிவிலக்கணம் விளக்கமாகும் , அதுமாறாது நிலவும் உள் ஒளியாதலால், அதனைக்கரவாப் பண்பென்பர் தமிழ்ச் சான்றோர். கணந்தொறும் மாறும் முகிலினம் போல, உணர்வின் தன்மை ஓயாது மாறும். அறிவு போல் அதனில் விளையும் இன்பமும், நிறை நீர்த்தாகிப் பிறைபோல் வளரும். நெறியால் ஒளிரும் உணர்வுநிலையாலே உவகை நிலைமாறும். நன்றிலும் , தீதிலும் சென்று திரியுணர்வு போல் நின்று நிலையாது உவகை நின்ற நிலைமாறும். அறிவுத்துறையே அறநெறியாதலின் அறிவுதரும் இன்பம் அறத்தின் விளைவாகும் “அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த, புகழுமில,” என்ற பழந்தமிழ்க் கொள்கை இன்பத்தின் இயல் விளக்கும்.

கடைசியாக, ஆரியர் ஆனந்தம், தமிழர் இன்ப மாகாமை ஆராய்ந்து அறியத்தக்கது. சந்தோஷமும் துக்கமுமற்ற வெறுநிலையே ஆனந்தம் என்பது ஆரியர் கொள்கை. ‘இன்பத்தின் முடிவு துன்பம்’ என்பது அவர்மதம். அதனால் அவ்விரண்டும் ஒழிந்த வெறுநிலை (சாந்தி)யே ஆனந்தம் என்று அவர் கொள்வர் உவப்பின் மறுதலை உவர்ப்பெனக் கருதுவது இயல்பு. அதனால், உயிர்கட்கு இன்பம் உடன்பாட்டுணர் வாயிருத்தல் ஆகாதென்பது மருட்சி. தேய்ந்து மறைவதும் திரும்பி வளர்வதும் மதி ஒளி இயல்பு. அதுபோல் மகிழ்வின் தன்மை மாறுவது இயல்பு. என்றும் ஒன்றுபோல் நின்று திகழ்வதால் ஞாயிற்றின் ஒளியை இருளும் ஒளியும் இறந்த வெறுநிலை என்பார் உளரோ அதுவே போல், மாறும் மகிழ்வினும் மாறா இன்பம் விரும்பத்தக்கது. இன்பமும் பகல்போல் உயிர்கள் விரும்பும் உடன்பாட்டுணர்வே என்பது தமிழர் மரபு

திராவிட நாடு

15-4-1945

2 இன்பம்

* * *

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

இன்பம் எது?

துன்பம் அற்ற உள்ளத்தின் நிலையே இன்பம். அது சிற்றின்பம் பேரின்பம் என இரண்டு வகைப்படும். சிற்றின்பம் என்பது சிறிது மட்டான இன்பம், பேரின்பம் பெரிது-மட்டற்ற இன்பம்.

இதுவன்றி, சிற்றின்பம் என்பது ஒருவன், ஒருத்தி சேர்க்கையின் நுகர்வது என்றும், மக்கள் நிலைக்கு அப்பாலான வீடுபேறு, பேரின்பம் என்றும் விள்ளுவது உண்மையானது அன்று; அது சமயக் கொள்கை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதோர் முயற்சி என்க,

துன்பம் இல்லாவிடத்து இன்பமே! துன்ப மில்லாத நிலைமை ஒன்றும் அந்நிலைமைக்குப்பின் தேடப்படும் இன்பம் மற்றொன்றும் இருப்பதாகக் கருதவேண்டா.

துன்பம் என்பதென்ன?

துன்பம் என்பது ஊறு, உறுவல், உறுகண் என்ற பெயர்களால் குறிக்கப்படும் நெருங்குவது என்பதுதான் அவற்றின் பொருள்.

துன்பம் என்பதன் வேர்ச்சொல் துன். அதன் தொழிற்பெயர் துன்னல்! துன்னல்-நெருங்குதல். துன் என்பதன் பண்புப் பெயர் துன்மை! துன்மை, துன்பம். நெருங்குவது என்ற காரணம் பற்றித் துன்பம் எனப்பட்டது.

மலையின் அடர்ந்த மூங்கில்கள் ஒன்றின் ஒன்று தேய்ந்து பற்றவே, அந்நெருப்பு நெருங்குவதைத் துன்பம் என்றனர் பண்டைத் தமிழர். மலையினின்று கிளம்பும் அந்தக் கனவைத் தாவம் என்றனர். தாவம் தாவும் எரி! மற்றும் தீயை அக்கால மக்கள் தீங்கு என்றே சொல்லி வந்தனர். தீ-எரி, தீங்கு! மற்றும் மேற்பாங்கிற் பெய்த மழையும், மலையருவியும் பெருகிக் குறிப்பின்றி நெருங்குவதையும் துன்பம் என்றனர் பண்டைய தமிழர், வெள்ளம், வெள்; வெள்கல் என ஆகி அச்சத்தைக் குறிப்பதும் உணர்க. வெள்கல்-அச்சம் வெள்ளம் விரைவது. இவையும் அன்றி, விண் வீழ் கொள்ளியும் நில நடுக்கமும், பெருங்காற்றும், துன்பம் ஆயின. விலங்கு அணுகலும், நோய் அணுகலும் துன்பமே இடைக்காலத்தில் மக்களை மக்கள் நலிவு செய்ய அணுகலும், துன்பமாயிற்று. இனி, இன்பம் என்பதன் பொருளை நோக்குவோம்.

இன்பம் (துன்பம்) இல்லாதது! இன்பம், இன்மை, இல், என்பனவற்றை நோக்குக.

இல்லல்-கடத்தல்; துன்பத்தைக் கடத்தல் என்பது பொருள்.

மேலும் கடி என்பது இன்பத்திற்குப் பெயர், கடி-நீக்கம்:(துன்பம்) நீங்கிய நிலை.

எனவே, ஐயுற, துணுக்குற, நடுக்குறத் துன்னுவது-வருவது துன்பம் என்பதும். அஃது இன்மையே இன்பம் என்பதும் தெளிவு.

இதனால், தீ நெருங்குதல் முதலியவை இல்லாத இடத்து, நிலவுவது இன்பமோ? எனின், ஆம், வேறென்ன? அவ்வாறாயின், ஒருவன் தூங்கும்போது மேற்சொன்னவை அவனை, நெருங்குவதில்லையாதலின் அப்போது அவன் நிலை இன்பமோ எனில் அது, இன்பமும் அற்ற நிலை என்க. ஆயினும், தூங்கல் என்பது சோர்வை யும் நிரம்பாத் தூக்கத்தையும் குறிப்பதாயின் அத் தூங்கல் இன்பமுடையது எனல் பொருந்தாது. அச்சந்தரும் கனாக்காண்பதும், கண் தூங்கவும். கை சிரங்கு சொரியவும் உள்ள நிலை தூக்கமேயல்ல. ஆயின் ஒருவன் செத்த நிலை இன்பநிலை தானோ என்றும் இன்பநிலையாயின் அதனை அவன் சொல்லியதுண்டோ என்றும் கேட்டால், அக்கேட்பானை நோக்கி நானும், செத்தநிலை துன்ப நிலையா என்றும், துன்பநிலையாயின் அதனை அவன் சொன்னதுண்டோ என்றும் கேட்கின்றேன்.

சாவு இன்பமும் துன்பமும் அற்ற நிலை என்க.

“அப்படியானால் அது நல்லதுதானே!”

“ஆம் நல்ல நிலைதான்”

“விரும்பத்தக்கதுதானா?”

“உன் மகனுக்குக் கல்வி தரவேண்டும். அப்பையன் இறகு முளைத்த பறவையாதல் வேண்டும். அவனுக்குத் திருமணம் முடிவதை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். தமிழுக்குத் தொண்டு செய்தல் வேண்டும். தமிழர் உயர்நிலையை நீ கண்டு இன்புறுதல் வேண்டும். புகழ்பெறுதல் வேண்டும். இவைபோன்ற பற்றுக்களை நீ விட்ட போது சாக்காடு விரும்பத்தக்கதுதான்.” இன்னொரு கேள்வி

தீயணுகல் முதலிய துன்பமும், நோயும், மக்களை மக்கள் நலிக்கும் துன்பமும், இல்லாமல் ஒழியுமாயின் அவ்வுலகம் இன்ப உலகமா? நுணுகி ஆராயின், அது இன்ப உலகமாயிராது என்பது புலப்படும். ஏனெனில், மேற்சொன்ன துன்பங்கள் எதுவுமில்லாதபோது அங்கு நுகரப்படும் உண்ணல், உறங்கல் என்னும் நிலையைவிட மேலான நிலையை அவ்வுலகம் வேண்டி நிற்கும் ஆதலால் இன்பம் என்றுகூறிய அந்நிலையே துன்பமாகக் கருதப்படும்.

இன்பம் என்பது இவ்வளவு என்னும் எல்லை. குறிக்க முடியாது. துன்பமே, அடுத்து நுகரப்படும் இன்பத்திற்கு அளவுகாட்டி நிற்கிறது,

இன்பம் எப்போது கிடைக்கும்? துன்பத்தின் இறுதியில் கிடைக்கும். எதிலிருந்து இன்பம் கிடைக்கும்?

துன்பத்தின் பயன் இன்பம் என்று முழக்கஞ் செய்த தூங்கும் உலகிற்கு! தொண்டு துன்பம். அதன் விளைவு இன்பம், முயற்சி துன்பம். அதன் விளைவு இன்பம். சூல் தாங்கல் துன்பம் மகப்பேறு இன்பம், வித்திடுவது துன்பம் அறுப்பது இன்பம். குற்றுவது துன்பம் அரிசிகாணல் இன்பம், ஆக்குவது துன்பம் அருந்துவது இன்பம். 

இங்கு குறித்தது-மட்டான இன்பம்-சிற்றின்பம் என்க. அதன் பிறகு நிலையான இன்பம், நிலையற்ற இன்பம் என இரண்டு உண்டா?

நிலையான இன்பம் என ஒன்று இருக்கவே முடியாது. இருப்பின் அது இன்பமல்ல என்று மறுக்க, இறந்தவனின் ஆன்மா நிலைத்த இன்பத்தை யடைவதாய்க் கூறுவதில் உண்மையுண்டா எனின், கூறுவேன்;

‘தலைநாளில் கோல் என்பது ஆட்சியாயிற்று. கோலன், (கோல் எடுத்தவன்) ஆள்வோன்; அரசன் என்று போற்றப்பட்டான். ஆயினும், அவன்- அக்கோலன் தனக்கு அஞ்சி வரும் பெருமக்கள், மற்றொரு நாள் தன்னை மீறுதல் கூடும் என்று அஞ்சியே கிடந்தான், அவன் மக்களின் அறிவை இருட்டாக்கவும். ஏமாற்றவும் துணை தேடினான். தன் நாட்டானைக் கருவியாகக் கொள்ள அவன் வெள்கினான். ஆரியன் வந்தான்; அவன் அரசனின் துணையை விரும்பினான்.

முற்பிறப்பில் நல்வினை செய்ததால் இப்பிறப்பில் இவன் அரசனானான்! முற்பிறப்பில் தீவினை செய்தால் இப்பிறப்பில் இப்பெருமக்கள் ஆட்பட்டார். ஆட்பட்டோர் இப்பிறப்பில் நல்வினை செய்து மறுபிறப்பில் உயர்நிலை யடைவதன்றி எம் முயற்சியும் பலிக்காது. ஆதலால் ஆட்பட்டோர் நான் கூறும் வகையில் என்னை வழிபட்டுக் கிடக்க, அரசனும் அடுத்த பிறவியில் தாழாது பெருநிலை யடைய வேண்டில் என்னால் தீவினை நீங்கிக்கிடக்க என்றான். இச்சொற்கள் கோலனுக்கும் மகிழ்ச்சியைத் தந்தன. அரசன், ஆரியனைத் தாங்கினான். அவனைத் தேவகுலமாக்கினான். அவனால் பெருமக்களை அடக்கினான். அவர்களின் எழுச்சியைத் தரைமட்டமாக்கினான். “இதுவன்றி முற்பிறப்போ, ஒருவனுக்கு மறுபிறப்போ உண்டு எனலும் செத்த பிறகு சிவலோகம், வைகுந்தம், உண்டு எனலும் உண்மையல்ல. இனி, மட்டான இன்பம் தவிர, பேரின்பம் எது என்றால் கூறு கிறேன்.

உன்னாட்டுக்கு மற்றொரு நாட்டால் துன்புமில்லை; நீ விடுதலையுடையவன்; நீ நோயற்றவன் தீயும் வெள்ளமும் உன்னை நெருங்காத நிலையில் நீ உள்ளவன். நீ இன்பம் நுகர்கின்றாய்! அந்த நிலையில் உன்னை உயர்ந்த ஒவியம் நெருங்குகிறது. உன் கண்கள் பேரின்பம் நுகர்கின்றன! அதே நிலையில் உன் செவி நோக்கி இசையேறிய பாட்டொன்று வருகின்றது. உன் காது பேரின்பம் அடைகின்றது. அரும்பிலும் மணக்கும் முல்லை வருகிறது. உன் மூக்கும் பேரின்பம் அடைகின்றது. அன்னத்தின் தூவி திணிந்த மெல்லணையில் படுக்கின்றாய், உன் மெய் பேரின்பம் எய்துகின்றது! கோடைபுறம் போக்கும் ஓடுபிடிக்காத இளநீரைக் குடிக்கின்றாய். உன் வாய் பேரின்பம் நுகர்கின்றது. உன் கண்ணையும் மனத்தையும் கவர்ந்தாள். அவளோ எண்ணையும் எழுத்தையும் தெரிந்தாள். அவளை நீ, கிட்டுதற்கரிதென்று கருதினாய். துன்பம் பெரிதுற்றாய் அவளோ உன்னைத் தொட்டிழுத்து வலிய அணைத்தாள். இன்பம் பெரிதுற்றாய். அவள் அறிவை உன் அறிவால் அறிந்தாய். ஒரே நேரத்தில் உன் கண், மூக்கு, காது, மெய், வாய், அறிவு அனைத்தும் பேரின்பம் நுகர்கின்றன! இனி,

இப்பேரின்பம் துன்பத்தின் பயன்தானோ என்று கேட்பின், காதல் என்னும் தீயின் பயனே இது! அவள் கிட்டுவாளோ என்று காத்த முயற்சியின் பயனே இப் பேரின்பம்! இதன் பின்னும், அவன் “ஊடல்” ‘பிரிதல்’ என்ற துன்பத்தின் பயனாகவே இன்பத்தை யடைதல் வேண்டும்.

திராவிட நாடு

22-4-1945

3 இன்பம்

* * *

புலவர் ந. மாணிக்கம், தில்லை

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம் நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி புலவர் ந. மாணிக்கம் தில்லை அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

இன்பம் என்பது என்ன?

இன்பத்தைக் குறித்து உலகோர் அனைவரும் பேசுகின்றனர். ஒரு மனிதனே ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றை இன்பம் என்று கூறிடக் கேட்கின்றோம். நம் நாட்டு மத நூல்கள் உயிரின் குறிக்கோளே இன்பம் எய்துவதுதான் என்றும் அதற்காகத்தான் உயிர்கள் தோன்றுகின்றன என்றும் அல்வுலக இன்பங்கள் எல்லாம் சிற்றின்பம் என்றும் இறைவனோடு கலக்கும் இன்பமே பேரின்பம் என்றும் சிற்றின்பம் அழிந்து போவது என்றும் பேரின்பம் அழிவில்லாததென்றும் கூறுகின்றனர். முதற்கண் இன்பத்தின் இயல்பு இன்னதென அறுதியிட்டு முடிவு கட்டல் இதன் உண்மை பொய்மையை வெளிப்படுத்துவனவாகும்.

விஞ்ஞானிகள் இவ்வுலகம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கின்றது என்பர். இயங்கும் உலகத்தில் இயக்கத்தினால் மனதில் உண்டாகும் ஒரு உணர்ச்சியையே இன்பம் என்று மக்கள் கூறுகின்றனர் என்று உலகினர் வாய்ச் சொல் கொண்டே நிறுவ இயலும். ஆடுதல், பாடுதல், உண்ணல், காண்டல், கருதுதல், ஓடுதல், கூடுதல், கேட்டல், முகர்தல் என்பனபோல உலகில் மக்கள் ஆற்றுகின்ற தொழில்கள் அனைத்துமே, பொருள் இடம் காலத்தின் ஒற்றுமையினால் மனத்தில் ஒரு கிளர்ச்சியை விளைவிக்கக் காணுகிறோம், வெறுக்கத்தக்கன, இகழத்தக்கன, நகைக்கத்தக்கன. மயங்கத்தக்கன, போன்ற நிகழ்ச்சிகள் மனத்தினைப் பற்றும் போது ஒவ்வொரு வகையான கிளர்ச்சியுண்டாகின்றது. இவற்றிற்கு நாம் வெவ்வேறு பெயர் கூறிக் குறிப்பிடுகின்றோம். அது போலவே பொருள், இடம், காலம் துணை செய்ய நிகழ்த்தும் ஒவ்வொரு தொழிலும் மனதைப்பற்றி ஒரு வகையான கிளர்ச்சியை விளைவிக்க நாம் இன்பம் என்று அதனைக் கூறுகின்றோம்.

இவ்வின்பம் தானும் உலகில் எல்லோருக்கும் ஒரே படித்தாக அமைகின்றதா எனின் இல்லை யென்றே துணிந்து கூறலாம். உலகிலுள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று உருவத்தில் வேறுபட்டு விளங்கும் இயற்கையை மனதிலெண்ணி, உள்ளெண்ணங்கள் ஒன்றுக் கொன்று வேறுபடுவதையும் மனதிலெண்ணினால் உள்ளத்தைப் பற்றுகின்ற கிளர்ச்சியும் உள்ளத்தின் இயல்பிற்கேற்ப வேறுபட்டு விளைவதையே காண்கின்றோம், கேட்கின்றோம். இந்நிலையில் எல்லோரும் ஒரே தன்மைத்தான இன்ப உலகத்தை எய்தலாம் என்பது நம் உலக இயற்கைக்கு எவ்வளவு மாறுபட்டது என்பதனைத் தோழர்கள் எண்ணிப் பார்த்திடுக. நிற்க, இயக்கத்தினால் மனதில் உண்டாகும் கிளர்ச்சிக்கு இடமாக விளங்கும் ஒரே பொது இயல்பை வரையறுத்துக் கூறுதல் இயலுவதே ஆகும்.

இன்பத்தின் இயல்பை இன்னது என வரையறுப்பதின் முன்னர் எத்தகையோருக்கு இன்பம் உண்டு எனக் காணல் இக்கட்டுரைக்கு நலம் பயப்பதாகும். இன்பம் நுகர்பவனுக்கு எத்தகைய தகுதி வேண்டும்? மக்கள் உருவொடு காணப்படும் தகுதி ஒன்றே மக்கள் இன்பத்தைத் துய்க்கப் போதுமானதாகாது. இன்பமாகிய கிளர்ச்சி அல்லது உணர்ச்சித் தோன்றுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தகுதி வலிமைஒன்றேதான், ஆம். வலிமையே! என்ன வலிமை? வலிமை என்னும்போது மன வலிமை, உடல் வலிமை, பொருள் வலிமை, ஆள் வலிமை எனப் பற்பல நினைவிற்கு வரல் இயல்பு. இவை யத்தனையும் உள்ளிட்டி ஒன்றைத்தான் மேலே வலிமையென்று கூறியது. இங்குக் கூறிய வலிமையின் பிரிவுகளுக்கு வெவ்வேறு பெயர் தரலாம். மனவலிமையென்பது அகவலிமை, உடல்வலிமையென்பது இகப்புற வலிமை, பொருள் வலிமை என்பது புறவலிமை, ஆள் வலிமை என்பது புலப்புற வலிமை, இந்நான்கு வகையான வலிமைகளும் அகவலிமையில்லாது ஏனைய வலிமைகள் ஒருவனுக்கு வேறு காரணங்களால் வாய்த்திருப்பினும் இன்பம் என்பதைக் காணலும் அரிதாகும். அகவலிமை இருந்து ஏனைய வலிமைகள் இல்லாதிருப்பினும் ஒருவனுக்குத் தீதின்று, அகவலிமையுடையவன் ஏனைய வலிமைகளை உடையனாவதும் அகவலிமைக்குரிய இயல்பேயாகும். இதனால் இன்பமும் நுகர்பவனுக்கு மனவலிமையே இன்றியமையாது வேண்டப்படுவதாகும் என உறுதியிட்டு கூறலாம். ஆனால் ஏனைய வலிமைகள் வேண்டுவதில்லை என்பது இதன் கருத்தன்று.

நம் நாட்டு மக்களுள் எவ்வளவு பேர் இந்த அகவலிமையை உடையவர்கள்? அகவலிமையென்பது ஒருவனுக்கு எவ்வாறு அமையும்? நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று கூறிய கவியின் வாக்கு, இன்றளவும் ஆழியவில்லை. அஞ்சியஞ்சிச் சாகும் இயல்புடைய மக்கள்தானே நம் நாட்டில் நிறைந்து காணப்படுகின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? மக்கள் அனைவரும் இயற்கையில் மனவலிமை யுடையாரே ஆயினும் நம்நாட்டு மக்கள் ஏன் மனவலிமைவியிழந்து காணப்படுகின்றார்கள்? அறியாமையும் அதனடியாகப் பிறக்கும் அச்சமும், பொய்மையும் நம் நாட்டு மக்களினத்துள் எவ்வாறு புகுந்தன? ஆரியத்தை இன்றையத் தமிழர்கள் வெறுக்கின்றனர். அதற்குப் படுகுழிதோண்டிப் புதைக்க வீறுகொண்டு எழுந்துள்ளனர். ஏன்? அறியாமையும், அச்சத்தையும், பொய்மையையும் ஆரியமே படைத்தது என்பதில் கருத்து வேற்றுமையிருப்பினும் ஆரியம்தான் அம்மூன்றையும் நாட்டில் வளர்த்துக் கொண்டும் பரப்பிக் கொண்டும் வந்தது வருகின்றது என்பதில்கருத்து வேற்றுமையுண்டோ? நம் நாட்டில் இன்று காணப்படும் கோயில்கள் நமக்கு எவற்றை நினைப்பூட்டுகின்றன. வானளாவிய கோபுரங்கள் தமிழரின் பெருமை வானளாவ உயர்ந்திருந்த தன்மையை தோற்றுவிப்பது உண்மையா? நம் நாட்டில் அச்சம் எவ்வளவு ஆழமாகவும் எவ்வளவு பரந்தும் உயர்ந்தும் அழகோடு குடிகொண்டுள்ளது என்பதனைக் காட்டுவது உண்மையா? கோவில்களும் பேய் பிசாசுகளும் சகுனமும் இராகு காலமும் இவற்றிற்கு மேலாக விதியும், இவை போன்ற பிறவும் மக்களினத்தின் அச்சத்தின் சின்னங்கள் அன்றோ? இந்நாட்டில் ஒரு குழந்தைச் சுற்றுப்புறமாய் அமையவும் தாயும் தந்தையும் ஆசிரியரும் நண்பரும்,அரசாங்கத்தாரும் அவர்தம் துணையால் செய்தியாளர்களும் வானொலியார்களும் அஞ்சத் தகுவனவற்றை இடைவிடாது புகுத்தி வளர்த்துக் காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் நம் நாட்டு மக்களின் மனவலிமையைக் கருதவும் இயலுமோ?

இன்பம் துய்ப்பதற்குரிய தகுதியான அகவலிமை அறிவொடு பொருந்தியதாக இருத்தல் வேண்டும். உலகில் அறியாமையொடு பொருந்திய மனவலிமையையும் காணுகின்றோம். இதைத்தான் பேதமை யென்று கூறுவர். அறிவொடு பொருந்திய மன வலிமையொரு எழுச்சியையும், அறியாமையொடுபட்ட மனவலிமை சோர்வையும் இடையிடையே தோற்றுவிப்பதே இவற்றிற்கு வேறுபாடு.

எந்தத் தொழிலும் இன்பத்தைத்தர வல்லதாயினும் செய்யும் தொழில்கள் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பெரும் பகுதியும் மற்றையோருக்குச் சிறு பகுதியுமாகப் பயன் விளைவிக்காமல் தனக்கும் மற்றையோருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிக்கும் நல்ல குறிக்கோளை ஒருவன் கொள்ளல் வேண்டும். இத்தகைய குறிக்கோளையுடைய நிகழ்த்தும் தொழிலாலுண்டாகும் கிளர்ச்சி யைத்தான் பேரின்பம் எனலாம். (இன்பம் என்று கூறப்படுவது உண்மையில் இன்பமாக இருப்பின் அவ்வின்பத்தில் உண்மையில் சிறுமை பெருமைக்கு இடமின்று, இங்கு சிற்றின்பம். பேரின்பம் என்று கூறியது இன்பத்தைத் தரும் வழிகளின் சிறுமை பெருமைகளை நோக்கியேயாகும்.)

அறிவொடு பட்ட மனவலிமையொடு தனக்கும் உலகினருக்கும் ஒத்த அளவு பயன் விளைவிப்பதாக ஒரு நற்குறிக்கோளைக் கொண்டு அதனை யடைய முயலுதல் இன்பம் நுகர்தற்கு முதல் நிலையெனலாம். அறிவு, தொழில் நிகழ்த்த வேண்டிய களத்தையும் காலத்தையும், தொழிலின் வலிமையையும் உணர்த்த அதன்வழி நின்று தொழிலைச் செய்யுங்காலை அத்தொழிலின் வெற்றி தோல்விக்கிடையே துணிந்த நிலையாலோ, துணியாத நிலையாலோ ஏற்படும் எதிர்நிகழ்ச்சிகளை வரவேற்று தன்னுள்ளுணர்ச்சியனைத்தையும் ஒரு சேர அவ்வெதிர் நிகழ்ச்சிகளுக்கு எதிர் நிறுத்திச் செய்யும் போராட்டமே ஒருவனுக்குச் சிறந்த இன்பத்தை பேரின்பத்தை அளிப்பதெனலாம். பொதுவாக எந்தத் தொழிலாக இருந்தாலும் ஒரு சிறு முட்டுப்பாடும் இல்லாது தன் வழியே இயங்கி முடிவு பெறுமானால் அதனை உயிர்ப்பு இல்லாத தொழில் அல்லது ஒரு இயந்திரம் நிகழ்த்தும் தொழில் என்றே இயம்புதல் வேண்டும். தொழில் நிகழ்ச்சிக்கிடையே உண்டாகும் எதிர் நிகழ்ச்சியே இன்ப உணர்ச்சிக்குப் பிறப்பிடமாகும், எதிர் நிகழ்ச்சி எவ்வளவு வன்மையுண்ட் யதோ அவ்வளவு இன்பமும் வன்மையுடையதாகும் இத்தகைய இன்பத்தை நுகரவல்ல ஒருவனுக்கு தொழில் நிறைவேறுவதோ நிறைவேறாமையோ ஒரு பொருட்டன்று.

இனி இன்பம் நிலையானதா நிலையற்றதா என்ற விடை காண்டல் முறையாகும். இன்பம் என்பது மனத்திலுண்டாகும் ஒரு கிளர்ச்சியென்னில் அக்கிளர்ச்சி நிலையுடையதா அல்லவா என்ற வினாவை யெழுப்புதலே முறையுடையதாகும். மனதில் உண்டாகும் கிளர்ச்சிகள் சார்ந்ததின் வண்ணத்தாகும் மனதினால் வேறுபட்டுக்கொண்டு செல்வதை நாம் உணர்கின்றோம். ஆனால் மனத்தில் அழுத்தமாக தைத்த ஒரு கிளர்ச்சி அதனை அடிக்கடி எண்ணச் செய்து விடுகின்றது என்பதனையும் நாம் உணர்கின்றோம், ஒன்றை நிகழ்த்துங்கால் உண்டாகும் கிளர்ச்சியை இன்பம் எண்ணில் பின் அதனைக் குறித்து எண்ணுவதாலுண்டாகுங் கிளர்ச்சியை இன்பத்தின் நிழல் எனலாம். இன்பத்தின் நிலையுடைமை அதன் வன்மையைப் பொறுத்தது என்றே விடையிறுக்க வேண்டும்.

ஆதலால் இன்பத்தை அடைய விரும்பும் ஒருவனுக்கு முதற்கண் பகுத்தறிவும் அறிந்தபடியொழுகும் மனவலிமையும், தான் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்றதாய்த் தன் நிலைக்குப் பொருத்தமானதாயுள்ள ஒரு குறிக்கோளும், அக்குறிக்கோளை அடையத் தன் உழைப்பையும், பொருளை யும் இறுதியில் வேண்டப்படின் உயிரையும் இழத் தற்கேற்றதாய் நிகழ்த்தும் போராட்டமே வேண்டற்பாலது.

திராவிட நாடு

29-4-1945

4 இன்பம்

* * *

பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்

இன்பம் இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றிப் பொள்ளாச்சி மா. வேங்கடாசலம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது

இன்பம் என்பது எண்ணத்தின் ஒரு வகைத் தோற்றம்; துன்பமும் அதுபோன்றதே. இத் தோற்றம் தோன்றாவிடத்து, எண்ணமானது, பொதுநிலை, அல்லது சாதாரண நிலை அல்லது இன்ப துன்பமில்லாத நிலையில் இருக்கிறது. எண்ணத்திற்கு அதனோடு தொடர்புடைய அறிவு வாயிலாகத்தான், இத்தோற்றம் ஏற்படுகிறது. அறிவு தனக்குள்ள மற்றோர் தொடர்பான ஒரு புலன் அடையும் உணர்வை, எண்ணத்திற்குக் காட்டித்தான் மேற்சொன்ன தோற்றத்தை உண்டாக்குகிறது.

உதாரணமாக, சிரங்கு சொறிதல், காது குடைதல் போன்ற உணர்ச்சியையும் அடிபடல், ஆயுதம் படல் போன்ற உணர்ச்சியையும், ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னையது, தோலிலுள்ள சின்னஞ் சிறிய உயிர் உள்ள அறைகள் (cells) விரும்பத் தக்கதாயும், பின்னையது அவ்வறைகள் வெறுக்கத்தக்கதாயும் இருக்கிறது. இந்த விருப்போ அன்றி வெறுப்போ ஆன எழுச்சிகள், உணர்ச்சி நரம்புகளால், மேற்சொன்ன அறைகளுக்குத் தொடர்புடையனவும், மூளையில் இருப்பனவுமான அறிவறைகளுக்கு அறிவிக்கப்படுகின்றன. அவ்வறிவறைகளிலிருந்து அதன் அடுத்துள்ள எண்ணத்துக்குத் தோன்றும் தோற்றமே, முன்னையது இன்பமாயும் பின்னையது துன்பமாயும் தோன்றும் தோற்றங்கள். இதுபோலவேதான், வாய், கண், மூக்கு, செவி, அறிவு ஆகியவற்றின் விருப்பு வெறுப்பு எழுச்சிகள், எண்ணத்திற்கு இன்ப துன்பத் தோற்றங்களை உண்டாக்குகின்றன.

இவைகளை ஏன் தோற்றங்கள் என்கின்றோமெனின்; விளக்குதும். ஒழுங்கல்லாத முறையில், ஒரு பெண்ணும் ஆணும் கூடி இருக்கின்றனர். இதை மணமாகாத அன்னிய வாலிபன் ஒருவன், மறைந்திருந்து பார்த்து மனமகிழ்கிறான். ஆனால் அதை அப்பெண்ணின் கணவனோ அல்லது உடன் பிறந்தானோ ஆன ஒரு வாலிபன் கண்டவுடன் மனம் நொந்து துடிக்கிறான். மேற்சொன்ன இரு வகையினரும் வாலிபர்களே; அவர்கள் கண்டதும் ஒரே காட்சியைத்தான். ஆனால், அது ஒருவனுக்கு இன்பமாயும், மற்றொருவனுக்குத் துன்பமாயும் தோன்றின. மற்றப் புலன்கள் வாயிலாயும், இவ்விதமாகவே தோற்றங்கள் ஏற்படும். எனவே, இதைத்தோற்றமென்றல்லாது, வேறென்னவென்று கூறமுடியும்?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளைப்போல, வெளியிலிருந்து இன்ப துன்பங்களை நுகர்ந்து காட்ட , அறிவுக்கு எங்ஙனம் அமைப்புள்ளது என்ற சங்கை உண்டாகலாம். ஒரு ‘டைனமோ’விலிருந்து உற்பத்தியாகும் ‘கரன்ட்’ நேராகவோ அன்றி ஒரு பேட்டரி மூலமாகவோ ஒரு விளக்கை எரிக்கிறதும்; டைனமோ இல்லாமலே ஒரு பேட்டரி முன்பு, டைனமோவிலிருந்து சேகரித்து வைத்திருந்த ‘கரன்ட்’டினாலேயே ஒரு விளக்கை எரிக்கிறதும் கண்டுதானே? அதைப் போலவே அறிவும், மற்ற ஐம்புலன்களிலிருந்தும் சேகரித்து வைத்திருக்கும் உணர்ச்சிகளை, உண்ணும்போது எண்ணத்திற்குத் தோற்றமளித்து இன்ப துன்பங்களை உண்டாக்குகிறது. இவை தான் எண்ணும்போது ஏற்படும் இன்பதுன்பங்களாகின்றன. 

இனி, இன்பத்தின் முடிவுதான் துன்பமெனவும் துன்பத்தின் முடிவுதான் இன்பமெனவும் கூறும் கூற்றை ஆராய்வோம். மேலெழுந்தவாறு நோக்குங்கால், அது அங்ஙனம் தோற்றுவது இயல்பேயாம். கூர்ந்து, நுணுகிப்பார்க்க, அது அங்ஙனமில்லையென்பது (தெற்றெனப்) புலனாகும்,

இன்பம் துன்பம் என உள்ள இரண்டு தோற்றங்களும், ஒன்றிற்கொன்று நேர்மாறான தன்மைகளையுடையன. இதுபோன்ற இரண்டு மாறுபட்ட பொருள்கள் சந்திக்கும்பொழுது, இந்த இரண்டுமல்லாத ஒரு இடத்தில்தான். அல்லது. இந்த இரண்டுங்கலந்து, தன்மை மாறுபட்ட ஒரு இடத்தில்தான், இவைகள் சந்திக்க முடியும். ஒரு கறுப்பு நூலுடையவும், ஒரு சிகப்பு நூலுடையவும், துணிகள் அணுக வைக்கப்பட்டால், அவைகள் நூல் அல்லாத ஒரு சிறிய இடைவெளியில் சந்திக்கும்; அன்றிப் பிணைக்கப்பட்டால், அவைகள் சேரும் இடம், ஒரு செம்மை கலந்த கறுப்பு நிறமானதாயிருக்கும். மோட்டார் வண்டியில், முன், பின் போக ‘கீர்’கள் மாற்றும்பொழுது, அந்தக் ‘கீர்’ ஒரு நிலையிலிருந்து, பொதுநிலைக்கு வந்து பின் மற்றோர் நிலைக்குப் போதலும்; ஒரு கோணத்தின் இரண்டு கைகள், இரண்டுக்கும் சம்பந்தமான ஒரு பொதுப் புள்ளியில் சந்திப்பதும் இத்ற்குப் பின்னும் உதாரணங்களாக அமையும். எனவே, இன்பமும் துன்பமும் சந்திக்குமிடம், இன்பதுன்பமில்லாத அல்லது அவை இரண்டுங்கலந்த ஒரு இடமாகத் தான் இருக்க முடியும். விவாத ஒழுங்குப்படி இப்படித்தான் இருக்கமுடியும். வெளிப்படையாகக் காணுவதும் அங்ஙணமே இருத்தல் காண்க.

இன்பம் முடியும்பொழுது, இன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம்; துன்பம் முடியும் பொழுது, துன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்த ‘இல்லாத’ என்ற நிலைமை, நேர்மாறான நிலையாக எங்ஙணம் கூறமுடியும்? பொது நிலையாகிய மாறுபட்ட நிலையென்றாலும் பொருந்தலாம்.

இதுவேயன்றி, இன்பத்திற்குமேல் இன்பமும், துன்பத்தைத் தொடர்ந்த துன்பமும் ஏற்படுவது இயற்கையாயிருக்க, இன்பத்தின் முடிவு துன்பமென்றும், துன்பத்தின் முடிவு இன்பமென்றும் கூறுதல் எங்கனம் பொருந்தும்?

மேலும், துன்பத்தின் முடிவு இன்பமாயும், இன்பத்தின் முடிவு துன்பமாயும் இருந்தால், அவை ஒன்றை யொன்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்குமல்லாது, இன்ப துன்பமில்லாத ஒருநிலை இதன் இடையே எங்ங்ணம் புகமுடியும்? இன்ப துன்பமில்லாத ஒருநிலை இருப்பதற்கும், அதைப் பற்றி இவர்களே கூறும் கூற்றுக்கும், என்ன அடைவு சொல்வது? 

இதைப்போலவே, சிற்றின்பம், பேரின்பம்,என இரண்டு இன்பங்கள் உண்டு என்று கூறுவதும் உண்மையல்ல; சிறிது பெரிது என்று, இன்பத்திற்கு உண்மையில் அளவும் கிடையாது. தோற்றத்தின் அளவே, அவைகளின் அளவெனக் கொள்ளல் வேண்டும். உடல் வலுவுடையோன் ஒருவன், ஒரு பெண்ணிடம் பெறும் இன்பத்தைப் பேரின்பமாகக் கருதுவதும், சற்றுக் குறைந்தவலுவுடையோன், அதையே துன்பமாகக் காண்பதும், இன்பத்திற்குத் தனியான அளவில்லையென்பதைக் காட்டக்கூடிய தாயிருக்கும்.

தன்னை மறந்தின்பமுறத் தவம் செய்ய வேண்டுமென்று சிலர் சொல்லுவது, வேடிக்கையிலும் வேடிக்கையாயிருக்கிறது. தன்னை மறவாது, நாம் எப்படி இன்பதுன்பங்களை நுகரமுடியும்? நறுக்கென, நம் காலில் ஒரு முள் குத்தும்பொழுது, அந்த முள் குத்திய நினைப்பல்லாது. நம்மைப் பற்றிய நினைவோ அல்லது புலன்களால் நுகர்ந்து கொண்டிருக்கும் இன்ப துன்பங்களின் நினைவோ இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள்.

இதுபோலவேதான், இன்பத்தையும் ஒரு புலன் வழியாக நாம் நுகர்ந்துகொண்டிருக்கும்பொழுது மற்றப் புலன்கள் தானாக அடங்க நாம் நம்மையும் மறந்த நிலையில் இருக்கிறோம். ஏதாவதொரு அனுபவத்தை வைத்துக்கொண்டு, எண்ணிப் பார்த்து, இதன் உண்மையைக் காணுங்கள்.

இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு ஆராய, மற்ற உண்மைகளும் கிடைக்குமென இத்துடன் விடுகின்றனம்.

திராவிட நாடு

6-5-1945

5 இன்பம்

* * *

டி. வி. நாராயணசாமி

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால், என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி டி. வி. நாராயணசாமி அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மாலைக் கதிரவன் மறைந்து கொண்டிருக்கிறான், மேற்குத் திக்கிலே ஒளிமயம், மாசுமருவற்ற ஆகாயத்தின் அடிவாரத்திலே தகதகவென, மின்னிக்கொண்டிருகிறான் அவன். அவன்தரும் மஞ்சள் நிற வெயில் ஆற்றோரம் அடர்ந்திருக்கும் மாமரச் சோலையிலே-அதனருகே ஓங்கி நிற்கும் தென்னஞ் சோலையிலே, படுகிறது, ஆகா! என்னென்பேன் அக்காட்சியை வீசுத் தென்றலால் ஆடும் தென்னங்குருத்தோலைகள் கண்ணிலே குளிர்ச்சியை ஊற்றியது. குயிலின் குரலோசை செவியிலே பாய்ந்து அங்கத்தைக் குறிவைத்தது. என் எதிர்ப்பட்டது அழகு லோகம்-இயற்கை எழில் இன்ப ஊற்று. ஆகா இன்பம் இன்பம் என்கிறார்களே அதை நான் இதோ காண்கிறேன். அழகிலே உருவாகிற்று இன்பம் என்று மாடிச் சாளரத்தின் வழியே, அஸ்தமனக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த எனக்கு என் உள்ளம் எடுத்துச் சொல்லியது. இன்பத்திலே, மூழ்கியிருந்த என் கண்களை அந்த நேரத்தில் யாரோ பொத்தினார்கள், எழுந்தேன், கலகலவெனச் சிரித்தாள் கமலா. இன்பம் என்னை எல்லையில்லா உயரத்திற்குத் தூக்கிச் சென்றது. பேச முடியவில்லை. மெளனமாகிவிட்டேன்.

சிற்றுண்டி கூடச் சாப்பிடாமல் சன்னல் ഖழியாக யாரைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்றாள் அவள்.

உன்னைத்தான் என்றேன். என்னையா? வேடிக்கைதான். என்னைப்போல யாராவது அங்கு உலாவுகிறார்களா? தெரிந்தது விஷயம் என்று குறும்புடன் கூறினாள்.

ஆம், உலாவுகின்றனர். அதோ பார், நீல நிறவானம், அந்திப் பகலவனின் ஒளி, ஆற்றிலே ஓடும் நீர், பச்சைப் பசேலென்ற மாமரச்சோலை, அத்தனையும் சேர்ந்த அழகு வடிவம் நீ. உன்னைத் தான் கண்டேன். அங்கே, ஆம், கமலா உண்மையாக,

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மார்கழி மாதத்தில் ஒர் நாள். அதே இடத்திலே அந்தச் சன்னலருகே நின்றுகொண்டிருந்தேன் 5 மணிகூட ஆகியிருக்காது. பனிவீசத் தொடங்கியது. வீட்டுக் கூடத்தில் தபீல் தபீல் என்று அறையும் சத்தம் கேட்டது. என் இருதயத்தைக் கொடுந்தேள் கொட்டியது போன்ற உணர்ச்சி, பெரிய பையன் ஐயோ! அப்பா! அப்பா என்று கூவினான். மறுகணம் மாடிமீது வந்து நின்றாள் கமலா. சிடுசிடுத்த முகத்தோடு இடுப்பிலே கைகுழந்தை இருந்தது. அவளது முகத்திலே படர்ந்த கோப அனல் தாளாமலோ என்னவோ வீர்வீர் என்று கத்தியது கைக்குழந்தை. என்ன கமலா என்று நான் கேட்க ஆரம்பிக்கவில்லை. ஆமாம், நிரம்பவும் இலட்சணந்தான், நல்ல பிள்ளைகளைப் பெற்றீர்கள். கொஞ்ச நேரமாவது அமைதியிருக்கா தெருவிலே எது போனாலும் வாங்கித் தரவேண்டு மென்று கூச்சல். இது (கைக்குழந்தை) தொட்டிலில் கிடப்பேனா பார் என்று அடம் செய்கிறது. சமையற் காரியத்தை முடிப்பதற்குள் இந்தச் சங்கடம். வேலைக்கார முத்தம்மாள் இன்று வரவில்லை. அவளுக்குச், சம்பளம் தந்தால்தானே! முருக விலாசம் துணிக்கடைப் பையன் பாக்கியை வாங்கிப் போகவந்தான். மளிகைக்கடைச் செட்டியார் கோபித்துக் கொண்டாராம். எங்கேயாவது கடன்கிடன் வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று உள்ளத்திலிருந்த துன்ப வெள்ளத்தைக் கொட்டி விட்டாள். அந்தத் துன்ப வெள்ளத்தினூடே அகப்பட்டுத் தத்தளித்தது என் மனம். பெரிய வார்த்தை பேச முடியவில்லை. இன்னும் கடன் வாங்க வேண்டுமா? இருப்பது போதாதா! என்றேன் கம்மிய குரலில், அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு சென்றாள். சன்னல் வழியாக என்பார்வை ஊடுருவிச் சென்றது; எங்கும் துன்பக் காட்சிகனா, எதிர்ப்படவேண்டும்!

பகலவன் தகதகவெனச் சுழல்கிறான். என்னுள்ளமும் தகதகவென எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சத் தூரத்தில் ஐந்தாறு குடிசைகள், அங்கே சில வடிவங்கள் குந்தியிருந்தன. இடுப்பிலே கரிய கந்தல், தலைமயிர் குப்பை கூளங்கள் நிறைந்த தொட்டிபோல இருந்தது. சில சின்னக் குழந்தைகள் புழுதியோடு புழுதியாக உருமாறிக் கீழே உருண்டன. உழவன் ஒருவன் இரண்டு மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்றான். அவைகளில் எலும்பு தவிர வேறொன்றும் காணோம், கொம்புகள் மட்டும் வாடாமல் இருந்தன. அம் மாடுகள் சாகமாட்டாமல்-காலடி எடுத்து வைத்துக் கொண்டு செல்கின்றன. பின்னே செல்லும் உழவன் ஒரு கிழவன், மரக்கலப்பையைத் தோளிலே போட்டுக் கொண்டு நத்தைபோல் நகர்ந்து சென்றான். வளைந்த உடல், தரைத்தலை, ஐயோ இந்த வயதிலே அவன் துன்பப்படவும் வேண்டுமா? ஏனிந்தக் கோரம் இதனை நீக்க ஓர் வழியில்லையா? என்ற இரைச்சல் குமுறிக் கொண்டிருந்தது என் உள்ளத்தில்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் தான் நின்றேன் வீசுந்தென்றல்-ஆடுந் தென்னங் குருத்துகள்-பொன்னிறப் பகலவன்-நீலவானம் குயிலின் குரல், பட்சிகளின் ஒலம் இவைகளைப் பார்க்க-கேட்க இன்ப மயமாகத்தானிருந்தது எனக்கு எதிரே இன்று தோன்றும் குடிசைகள் அன்றுந்தான் இருந்தன. அன்று இந்தக் குடிசைகளின் கோரம் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆனால் இன்று எல்லையில்லாத தூரத்திற்குத், துன்பச் சாயலையே இந்தச் சாளரம் எனக்குக் காட்டுகிறது. இருண்ட வாழ்வு என் முன் திரண்டு நிற்கின்றது இன்பம் என்னை விட்டோடியது. துன்பம் என்னைச் சூழ்ந்துகொண்டது.

வறண்ட வாழ்க்கையின் பள்ளத்தாக்கிலே நான் தள்ளப்பட்டேன். இனி இன்பம் என்னை அண்டுமா? இன்பத்தை நாடுகிறது மனம். இன்பம் எது? பொய்-பொறாமை-சூது வஞ்சகம் நர்த்தனமாடுகின்றன எங்கும். வறுமை அந்த நர்த்தனத்திற்குப் பக்கமேளம் கொட்டுகிறது. கொலை களவு முதலியன நர்த்தனத்தைக் கண்டு கைதட்டி ரசிப்பது போலிருக்கிறது, அமைதியில்லை. ஆகையால் துன்பம் ஆளத் தொடங்கிவிட்டது.  இந்நிலையில் இன்பத்தை எங்கே தேடுவது? இன்பம் எது என்று கூறுவது? ஆண் பெண் இரு பாலாரும் கூடி இருந்தால் துன்பமே முன்னிற்கும். வாழ்வின் தேவை பூர்த்தி செய்யப்படும் அந்நாளில் தான் இன்பந்தோன்றும். ஒருதனி மனிதனுக்கு மட்டுமல்ல. மனித இனத்துக்கே இன்பம் எதுவெனத் தெரியவேண்டுமாயின், மனிதனை ஒடுக்கும் வறுமை ஒழியவேண்டும்.

பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தில் ஒரு சில இலட்சம் பேர் சுகபோகிகளாகி, உல்லாச உருவங்களாகத் திகழ்வதும் ஏனைய பெரும்பாலான மக்கள் சுகபோகிகளின் உல்லாச வாழ்விற்கென உதித்தவர்போல இருப்பதுமான பேதக் கொடுமை ஏற்றத்தாழ்வு நீங்கி, மனிதனை மனிதனாக எண்ணி மேற்குலம்-தாழ்குலம் எனும் இழிவான சாதிப்பித்தம் நீக்கப்பட்டு, மனித சமுதாய வாழ்வதற்கென வகையான திட்டம் அமைத்து, அத்திட்டத்தின் அடிப்படையிலே, புதியதோர். மனித சமுதாயம் தோன்றினால், நிலையான இன்பம் எது என்பதைக் காணலாம். இன்றிருக்கும் மனித சமுதாயமோ பூசல்களை உண்டாக்கிவைக்கும் கலாசாலை! அதிலே பயிற்றுவிக்கப்படுகிறது தனி மனித உணர்ச்சி. என் பிள்ளை, என்விடு, என் சொத்து, என்ற சத்தற்ற கொள்கை. அந்தக் கொள்கையை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு, சமத்துவ வாழ்வினை-பொதுஉடைமைச் சமுதாயத்தைக் காணவேண்டும். ஆம், அதுதான் இன்பம்! இன்பம் அப்படித்தான் இருக்கவேண்டும்! இன்பம் அப்பொழுதுதான் மக்களிடையே தோன்றித் திகழ்ந்து மிளிரும் என்க.

திராவிட நாடு

13-5-1945

6 இன்பம்

* * *

எஸ். எஸ். அருணகிரிநாதர்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், கனமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி பல நூலாசிரியரும் முன்னாள் திராவிடன் துணை ஆசிரியருமான தோழர் எஸ். எஸ். அருணகிரி நாதர் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

இன்பம்! இன்பம்! இன்பம்!!! உலகத்திலே இன்பத்தை வேண்டாத மக்களில்லை. மக்கள் மட்டுமா இன்பத்தை வேண்டுகின்றனர்? பறவைகளும், விலங்குகளும், வேறு காணப்படுகின்ற எத்தனையோ உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன! இன்பத்திற்காக மக்கள் அலைகின்றனர்; திரிகின்றனர்; இன்பத்தைத் தேடுகின்றனர். பகுத்தறிவற்றவைகள் என்று மக்களால் கருதப்படும் உயிர் வகைகள் இன்பத்தைக் கருதித்தான் வாழ்கின்றன.

இன்பமில்லையேல் வாழ்க்கை இல்லை. பல துன்பங்களுக்கு இடையில் தோன்றும் ஒரு அல்ல சிறு இன்பத்திற்காகவே மக்கள் பல துன்பங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள். இன்பங்கண்டபோது அதற்காக அதுவரையில் தாங்கள் பட்ட துன்பத்தையெல்லாம் மறந்து மனம்களிக்கின்றார்கள். ஒரு வக்கீலைக் கவனியுங்கள்! அவர் யோக்கியரா என்று பாருங்கள் ஆம்! யோக்கியர் தாம். பணத்தைப் பெற்றுக்கொள்ளுகிறாரா வழக்கிற்காக! தம் கட்சிக்காரன் நன்மை பெறுவதற்காக தம் முழுத்திறத்தையும் உபயோகித்து நீதிமன்றத்தில் பேசுகிறார் உற்சாகமாக! வழக்கு வெற்றி பெற்றால் அவர் உண்மையில் இன்பமடைகிறார் இன்றேல், தனக்குப் பணம் கிடைத்து விட்டதே என்ற ஒரேகாரணத்திற்காக அவர் இன்பம் அடைவதில்லை. அடையவும் முடியாது. அதுபோன்றே டாக்டர் ஒருவர் தமக்கு வரவேண்டிய பொருள் வந்துவிட்ட காரணத்திலேயே இன்பம் அடைந்து விடுவதில்லை. நோயாளி குணமடைந்தான் என்றால்தான் அவர் மனதில் இன்பம்தோன்றுகிறது.

குழந்தைகளின் உள்ளமும் வளர்ந்தவர்களின் உள்ளமும் ஒன்றாகவே இருக்கின்றது! ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் இன்பமடைகிறார்கள்! காதலர்கள் சந்திப்பில் இன்பம்! பிரிவால் துன்பம்! குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களைக் கண்டால் இன்பம்! அவற்றை இழந்துவிட்டால் துன்பம்! அறிவாளர்களுக்கோ இயற்கையின் வாயிலாக ஓர் உண்மையைக் காணும்போது இன்பம்! ஜேம்ஸ்வாட் எனும் ஓர் ஆங்கில இளைஞன் அடுப்பால் சுடுநீர் கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நீராவியின் வேகத்தால் தடதடவென்று பாத்திரத்தில் மூடி குலுக்கப்பட்டது. அதை அறிந்த வாட்ஸ் நீராவியின் உதவியைக் கொண்டு உலகத்தில் எத்தனையோ அற்புதங்களைக் காணலாம் என்று எண்ணினான். உடனே அவன் குழந்தை உள்ளத்தில் இன்பம் குதித்துத் தோன்றியது. அது அவன் கண்ட இன்பம்.

”இதுவரையில் கண்டறிந்த நிலப்பாகத்தைத் தவிர வேறு நிலப்பாகம் இருந்தே தீரவேண்டும்.” என்று கொலம்பஸ் நினைத்தார். புதிய நிலப்பரப்பை புதிய கண்டத்தைக் காணவேண்டுமென்று அதற்கான வழிவகைகளைத் தேடலானார் கொலம்பஸ், உதவி வேண்டிய அளவுக்கு எளிதில் கிடைக்கவில்லை. உதவி பெறுவதற்காக அவர் அமைந்த துன்பம் கொஞ்சமல்ல. இறுதியிலே அப்போதிருந்த, ஸ்பெயின் தேசத்து ராணி இஸபெல்லாவுக்குக் கொலம்பசின் எண்ணமும் அதற்கான முயற்சியும் தெரிந்தது. இராணியார் கொலம்பசுக்கு மூன்று கப்பல்களையும் அதற்கு வேண்டிய பொருள்களையும் ஆட்களையும் கொடுத்து உதவினார்! கொலம்பஸ் ஒரு நான் ஸ்பெயின் துறைமுகத்திலிருந்து கப்பலில் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். நாட்களாயின! வாரங்களாயின! மாதங்களும் சில சென்றன. எங்குபார்த்தாலும் ஒரே தண்ணீர்-கடல்! சமுத்திரம்! எத்தனைநாள் தான் இப்படிப் பிரயாணம் செய்வது போகாத ஊருக்கு வழி எது என்பார்கள் சிலர்! உண்மையில் கொலம்பஸ் போகாத ஊருக்குத்தான் வழித்தேடினார். அவரோடு சென்றவர்களுக்கு ”இனி ஊர் இல்லை. நிலமில்லை, பாவி கொலம்பஸ் நம்மைக் கொல்லவே நம்மை நமது மனைவி மக்களிடமிருந்து பிரித்துக் கொண்டுவந்துவிட்டான்” என்று முணுமுணுத்தனர். பிறகு நன்றாகவே இப்படிச் சொன்னார்கள், இவ்வார்த்தைகள் கொலம்பசின் காதிலும்பட்டது. பலர், "புதிய கண்டம் ஒன்றிருந்தால் நமது பெரியோர்கள் எழுதி வைத்திருக்க மாட்டார்களா? இந்தக் கொலம்பஸ் நமது பெரியோர்களை காட்டிலும் என்ன மேதாவியா? என்றெல்லாம் சொன்னார்கள்.

சிலமுரடர்கள் ஒருநாள் கொலம்பசினிடம் போய், “நீர் மரியாதையாகக் கப்பலைத் திருப்பும் ஸ்பெயினுக்கு இல்லாவிட்டால் உம்மை நாங்கள் கடலில் எறிந்துவிட்டு நீர் இறந்துவிட்டதாக ஸ்பெயினில் போய் சொல்லிவிட்டு எங்கள் மனைவி மக்களோடு சேர்ந்துவிவோம்,” என்று உண்மையாகவே சொன்னார்கள். கொலம்பஸ் பயந்தார். ஆறு மாதமாயிற்று நாம் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டு எங்கு பார்த்தாலும் ஒரே சமுத்திரம்! எங்கே இருக்கிறது நிலம்? நீ ஒரு பைத்தியம்! அந்த இஸபெல்லா உனக்கு மேல் பெரிய பைத்தியம், என்ன சொல்லுகிறீர்?” என்று மறுபடியும் ஒரு கேள்வியோடு உறுமினர் அந்தமுரடர்கள். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஏதாவது ஊர் கிடைக்காவிட்டால் ஊருக்கு - ஸ்பெயினுக்குத் திரும்பி விடலாம் என்று கொலம்பஸ் பணிவாகச் சொன்னார்! கப்பல் மேலும், செல்லும் திசை நோக்கியே சென்று கொண்டிருந்தது. மறுநாள் விடியற்காலையில் கப்பலாட்களில் ஒருவன் அதோ தரை!! தரை!! என்று கூச்சலிட்டான். அவன் காட்டிய திசைநோக்கிக் கவனித்தவர்கள் எல்லோரும், “ஆம், ஆம்” என்று கூச்சலிட்டனர், உண்மையில் தரைதான்! நிலந்தான்; போகாத ஊருக்கு வழிதேடினார் கொலம்பஸ். அதுவரையில் எவரும் போகாத ஊரைக்கண்டுபிடித்தார், மறுநாள் படகில் கரையை அடைந்து தரையில் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டார் கொலம்பஸ், அப்போது அவருக்கு அளவில்லாத இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம்; அவருக்கு இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும்.

தாமஸ் ஆல்வா எடிஸன் பேசும்படம் தயாரிக்கும் விதத்தை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தார்! இப்படியே அவர் கிராமபோன் ”எலக்ட்ரிக் ரெயின்” முதலிய பல அருமைக்கருவிகளைக் கண்டுபிடித்தபோதெல்லாம் அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்கவேண்டும். பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலில் உள்ள் மின்சார சக்தியை யும், அதற்குரிய காரணத்தையும் கண்டுபிடித்தபோது அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும். இப்படியே விஞ்ஞானிகள் பலர் தாங்கள் இயற்கையை ஒன்று கூட்டிப் பல அற்புதங்களைக் காணும்போதெல்லாம் அவர்கள் இன்பம் அடைந்திருப்பார்கள் என்பதில் தடை என்ன? இப்படியே நல்லதொரு கவியை இயற்றிய புலவன் மனத்திலும் இறந்ததொரு சித்திரத்தைத் தீட்டி முடித்த சித்திரக்காரன் மனத்திலும் இன்பந் தோன்றுவது இயற்கையே! இப்படியே உண்மையை ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறவர்கள் மனத்தில் இன்பம்தோன்றும், “உலகம் தட்டையா யில்லை; உருண்டையாய் இருக்கிறது, இருப்பது இந்த உலகம் மட்டுமல்ல இதைச் சேர்ந்த இன்னும் பலகிரகங்கள் இருக்கின்றன,” என்று கலிலியோ சொன்னபோது அக்காலத்தில் இருந்த அவர்நாட்டு மக்கள் அவரைப் படாதபாடுபடுத்தினர். ஆனாலும் அவர்தாம் உண்மை என்று கண்டவற்றைச்சொல்லாமல் இருக்கவில்லை, உண்மையைச் சொல்வதில் அவருக்கு இன்பம் இருந்தது. ஆகவே, உண்மையைச் சொல்வதனால் நேருவது மரணமானாலும் அவர் அதையே விரும்பி நஞ்சை உண்டு மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயிர் வாழ்வதை விட உண்மையைச் சொல்லி இறப்பதே இன்பமாகத் தோன்றியது.

இப்படியே உலகில் பலருக்குப் பலவழிகள் இன்பம் தருவதாக இருந்திருக்கின்றன. சிறந்த பேச்சுச் சிலருக்கு இன்பமாக இருக்கலாம். சிறந்த இசை சிலருக்கு இன்பம் அளிக்கலாம். சிறந்த காவியமும் ஓவியமும் சிலருக்கு இன்பமாகத் தோன்றலாம். வீரமே இன்பம் என்று பலர் கருதலாம். நவநவமாகப் பல பொருள் கண்டு பிடிப்பது இன்பம் என்று எத்தனையோபேர் எண்ணலாம், ”காதலனும் காதலியும் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்” என்று பலர் பாடிக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்னும் எத்தனையோ பேர் எதை எதையோ இன்பம் என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். அவைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவைகளை நாம் ஆராயப்போவதுமில்லை, ஆகவே, இனி எது உண்மையான இன்பம் என்று தீர்மானிக்க வேண்டியதே என்கடமையாகும், என் தீர்மானங்களைப் போல் சரியாகவும் இருக்கலாம் சில தீர்ப்புக்களைப் போல சரியில்லாமலும் இருக்கலாம்! எனக்குத் தோன்றுவதை நான் என் தீர்மானமாகச் சொல்லு கிறேன். நீங்கள் அதை உங்கள் விரும்பம்போல ஏற்றுக்கொள்ளலாம்!

உலகத்தில் தக்கார்க்கு அறம்செய்வதால் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். “அறத்தால் வருவதே இன்பம் மற்றவை, புறத்த, புகழுமில” என்று திருக்குறளை உபமானமாகவும் எடுத்துக் காட்டுவார்கள். உண்மைதான் கதியற்றவர்களுக்குச் செய்த உதவிக்குப் பதில் உதவிசெய்யச் சக்தி அற்றவர்களுக்கும், இன்னும் இவர்களைப்போன்ற பலருக்கும் ஏன்! மிருகங்களுக்கும் தக்க சமயத்தில் உதவிசெய்யும்போது மனத்தில் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று சொல்லலாம், அதை நான் அறிவேன் அதே திருக்குறளில் ”உண்மை பேசுதலே சிறந்த அறம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆகவே, அறத்தால் இன்பம் தோன்றுகிறது. ஆனால் அறத்திலே சிறந்த அறமாகிய உண்மை பேசுவதிலேதான் சிறந்த இன்பம் இருக்கிறது என்பது என்கருத்து, மற்ற வகைகளில் தோன்றுகிற இன்பமெல்லாம் சில விநாடி, சில மணி, சில மாதம், சிலவருடங்கள் தாம் இருக்கும். உண்மையைச் சொல்லுவதால், பேசுவதால் உண்டாகக்கூடிய இன்பமோ நிலைத்திருக்கக்கூடியது. எந்த விஷயத்திலும் உண்மையைப் பேசுகிறவர்கள் மனத்தில்தான் அழியாத இன்பம் நிலைத்திருக்கும். நன்றாகக் கவனியுங்கள்! வீரன், படிப்பாளி, பேச்சாளி, முதலாளி, பணக்காரன், கலெக்டர், கவர்னர் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள்! பிறகு உண்மை பேசுகிறவன், உண்மை பேசுகிறவன் உண்மைபேசுகிறவன் என்று சொல்லிப்பாருங்கள். எந்தச்சொல்லிலே உயர்வு தோன்றுகிறதென்பதை நிதானமாகக் கவனியுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சொல்லுவீர்கள் உண்மைபேசுகிறவன் என்னும் வார்த்தையிலேதான் உயர்வு இருக்கிறதென்று! உண்மையில்தான் இன்பம் இருக்கிறது.  சிலசமயங்களிலே சிலகாலங்களிலே உண்மையாளர்களுக்குத் துன்பம் ஏற்படலாம். அதற்குச் சரித்திரமே சாட்சியாய் இருக்கிறது. ஆனாலும் கடைசிவரையில் பொய் பேசி உயர்ந்தவர்களோ மெய்சொன்னதால் தாழ்ந்தவர்களோ இல்லை. சாக்கரடீட்சும், கலிலியோவும் அவர்கள் காலத்தில் உண்மை சொன்னதற்காகப் பாமரமக்களால் இகழப்பட்டது உண்மைதான். ஆனால், அறிவாளிகள் இன்று அவர்கள் சொல்லியதெல்லாம் உயர்வான கருத்துக்கள் என்று புகழ்கிறார்கள். உண்மையாளர்கள் சீக்கிரத்தில் உயரவில்லைதான். உயர்ந்த பிறகு தாழ்வதில்லை. சமய சந்தர்ப்பத்திற்கேற்றபடி தங்களைச் சரிப் படுத்திக் கொள்ளுகிறவர்கள் விரைவில் உயரலாம், விஷயம் விளங்கிவிட்டாலோ...!

இன்றைக்கு உண்மையைப் பேசுகின்ற எழுதுகின்ற-பெரியார் மெய்க்கு இடமளிக்கவிருப்பமில்லாத மனத்தையுடைய மக்களின் மனத்திலே இடம்பெறாதிருக்கலாம்! ஆனால், தற்கால-எதிர்கால உண்மையான மக்களின் மனத்திலே இடம் பெற்றிருக்கிறவரும், இடம் பெறப்போகிறவரும் இவரே!

முடிவாக நாம் சொல்லுவது இதுதான். பொய் பேசுகிறவர்கள் மனத்திலே இன்பம் இராது. அவர்கள் அடிக்கடி நாம் யாரிடத்தில் என்ன பொய்யைச் சொன்னோம் என்றே நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். அது எப்போதும் முடியக் கூடிய வேலையும் அல்ல! அதனால் குழப்பமே; இன்பமில்லை. மெய்பேசுகிறவர்கள் அப்படிப் பயந்து நடக்கவேண்டியதில்லை. உண்மை பேசுகிறவர்கள் எங்கும் ஒரேமாதிரிதானே பேசமுடியும்? ஆகவே அவர்களுக்குக் கவலை இல்லை, அச்சமில்லை அப்படியானால் இன்பம் உண்மையில்தான் இருக்கிறது என்பதற்கு இனியும், எழுதவேண்டுமா?

திராவிட நாடு

20-5-1945

7 இன்பம்

* * *

எஸ். தனபாக்கியம்

இன்பம். இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி தோழியர் பொள்ளாச்சி எஸ் தனபாக்கியம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

மாலை வேளை; மலைவாயில் வீழ்கிறான் ஆதவன். கண்ணாம்பூச்சி பிடிப்பதுபோல், கீழ்த்திசையில் செம்பொற் குடம்போல் மிதக்கத் திக்குத் திகந்தமெல்லாம் வெண்ணிலாப் பரவுகின்றது, நிலவினது ஒளிபட்டு அடர்ந்த பந்தரிலே இருண்டு படர்ந்துள்ள முல்லை மலர்கிறது. நிலவொளியால் ஏற்பட்ட இன்ப உணர்ச்சியால்தான்! போதாக உள்ள அது அக்காந்த சக்தி பட்டவுடன் ஆவினது அணித்தே அதன் அணைப்பிலே உள்ள கன்று, புறஞ்சிறை வாரணத்தின் கூடாரப் பாதுகாப்பிலே அடங்கிய அதன் குஞ்சுகள் இவைகளின் தன்மையை அடைகின்றன! ஆவும் அதன் கன்றும் கோழியும் அதன் குஞ்சுகளும். ஒரே விதமான இன்ப நிலை அடைகின்றன. மனிதருக்குள்ளது போன்ற ஓர் பேசும் கருவியை இயற்கை அவைகளுக்கு அளித்திருக்குமானால் அதனதன் இன்ப நிலையை மனிதன் காட்டுவதைவிட அழகிய முறையில் ஒழுங்கான முறையில்-வெளிப்படுத்தும்! இப்பண்புகளை நாம் ஓரளவு கண்ணால் காணலாமே யொழியக் கற்பனையால் சிந்திக்கலாமே தவிர, உள்ளவாறு எடுத்துரைத்தல் முடியாத தொன்றாம். ஓரிடத்திலே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதைக் கண்ணுற்றவர் பல மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொடுப்பர். அதேபோலத்தான் பகுத்தறிவில்லாத விலங்கினத்தைப் பற்றி நாம் நினைப்பதும். அவைகளின் இன்பதுன்ப நிலைமையைப் பற்றிக் கூறுதல் சாத்யமன்று.

இரவிலே, இளந்தென்றலிலே - நிலவினது ஒப்பற்ற தட்ப ஆட்சியில் முல்லை நாயகி அசைந்தாடுகின்றாள். நிருத்தம் புரிகின்றாள். இன்ப முண்டாகும்போது ஏற்படும் மகிழ்ச்சியினால் இளித்த வாயர்களாவர் மனிதர்; விலங்குகளும் அவ்வாறே. மற்றைய ஊர்வன, தாவரங்களின் இப்பண்பைக் காணுதல் முடியாது. நிலவொளியின் காந்த சக்தி கண்டு முல்லையாள் தன் வாய்திறந்து. நகைக்கின்றாள் இதழ்கள் விரித்து, இதே நிலவொளி தாமரையாளுக்குத் துன்பத்தை உண் டாக்குகிறது. இரவு பூராவும் இத்தகைய இன்ப நிலை.

கொஞ்சம் கொஞ்சமாக இருள் மறைகிறது. வைகறையை உணர்ந்த இயற்கையின் தொண்டர்களான சேவலும், காகமும் தம் கடமையை நிறைவேற்றுகின்றன. பனிப்பகையோன் பரந்த ஒளிவீசிக் கொண்டு தோன்றுகின்றான். சூரிய ஒளிபட்டவுடன் முல்லையாள்வாடி வதங்கிச் சுருங்குகிறாள். இரவிலே காணப்பட்ட இன்பம் மறைகிறது. துன்பம் வந்து விடுகின்றது. புன்னகை தவழக் காட்சியளித்த முல்லையாள் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறாள். சூரிய வெப்பம் முல்லையாளுக்குத் துன்பமுண்டாக்குகிறது இதே வெப்பம் தாமரையாளுக்கு இன்பத்தைக் கொடுக்கிறது. இவை இயற்கையில் காணப்படும் முரணான சித்திரங்கள்! மாறுபட்ட தோற்றங்கள்! ஒரே காலத்தில் சூரிய சந்திரர்களால் அவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்.

கவிஞன் ஒருவன், கற்பனைக் களஞ்சியம், கவி இயற்ற உட்காருகிறான். அவனது இன்ப நிலையிலே கடல் மடைதிறந்தாலன்ன கவி ஊற்றுக் கிளம்புகிறது. எதுகை, மோனை, சீர் இவைகள் தானாகவே அமைகின்றன. கவிதைக்கு முடிவை உண்டாக்குகிறான் கவிஞன் பிறகு திரும்ப அதை ஓர்முறை. இருமுறை பார்க்கிறான். சில சீர்த்திருத்தங்களைச் செய்து தன் உருவெடுத்ததன் தன்மை கண்டு ஓர் இன்பத்தை உணர்கிறான். அதைப் படிக்கும் நாமும் இன்பமடைகிறோம். கவிதையிலே உள்ள இன்பதுன்ப நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு நம் மனமும் மாறுபடுகின்றது. கவிஞனின் மேதைகண்டு மகிழ்கிறோம். அதே கவிஞன் தனக்கு ஏற்படும் துன்ப நிலையில் கவி இயற்ற முற்படுவானாகில் அது கடைசிவரை வெற்றி அளிக்காது. ஆயிரம் அடித்தல் திருத்தல்கள், காகிதக் கிழிப்புகள், நேர இடமேற்படும்! எழுது கருவிகொண்டு மண்டையில் தட்டிக்கொள்வான். திலகமிடுமிடத்தில் கைவிரல் செல்லுகின்றது. விரலுக்கும் அந்த இடத்திற்குமுள்ள ஏதோ அறிய முடியாத ஒன்று-அஜந்தா இரகசியம் போன்ற உணர்ச்சி-அவன் கற்பனையைத் தூண்டுகின்றது.

பண் இசைக்கும் ஒருவனுடைய இசை இசைக் கலையிலே இசை வெள்ளம் கரை கடந்து செல்லுகின்றது. பாடுவோரையும் கேட்போரையும் மெய் மறக்கச் செய்கின்றது. பலே! சபாஷ்! என்று உற்சாக மூட்டுகின்றனர். கேட்போரும் கைதட்டலைக் கூடச் சேர்த்துக் கொள்கின்றனர். அங்குள்ள அனைவரும் இசைமயமான இன்ப-வெள்ளத்தில் மூழ்குகின்றனர். இசை பாடுபவன் துன்ப நிலையில் அமர்வானாகில் அவ்விசை சோபிக்காது. எல்லோருக்கும் அதே நிலை ஏற்படும். இது இசை அரங்கில் காணப்படும் ஓர் தோற்றம். ஓர் ஓவியனும் சிற்பியும். ஒவியன் இன்ப நிலையிலே ஓர் ஓவியம் தீட்டமுற்படுவானாகில் அது நன்கு அமையும். துன்ப நிலையிலே முடிவுறாது. அலுப்புத் தோன்றும்; சினமுண்டாகும். சிற்பியும் சிற்றுளிகொண்டு சிலை அமைக்க இன்பநிலையிலே முற்பட்டால் சீரிய கருத்துக்களினால் சிறந்த ஓர் சிலை தோன்றும். துன்ப நிலையில் இதற்கு நேர் மாறாக அவனது சிந்தனை சிதறும்!

இதனால் இன்பம் எது? அதன் தன்மை என்ன? என்று ஆராய்ந்தால் எளிதில் கிடைக்கப் பெறாத ஒன்று-விரும்பப்பட்ட ஒன்று விரைவில் கிட்டினால் அதன் பயன்தான் இன்பம். இயற்கை இந்த இன்பத்தை அவரவர்களுக்கு ஏற்ற முறையில் அளிக்கின்றது. மாசுமருவற்ற தூய உள்ளத்துடன் பகற்கனவுகள் கண்டு பரிதபிக்கத்தக்க தன்மையில் அல்லாமல், அச்சம் போக்கி, ஆண்மைகொண்டு, இச்சகத்துள்ளோரை ஈகையுடன், உயர்வறு முறையில் ஊக்கமாக ஆதரித்து ஐயங்கள் தவிர்த்து, ஒளி குன்றாமல், ஓங்கிய நிலையில் ஊட்டப்படும், ஒளதடமே இன்பம்! பொதுவாக இயற்கை அழகைத் தன் அகக்கண் கொண்டு நுண்ணிய கருத்துக்களால் ஆராய்பவன் இன்பமடைவான்.

திராவிட நாடு

27-5-1945

8 இன்பம்

* * *

மேட்டூர் டி. கே. இராமச்சந்திரன்

இன்பம், இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம்; நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும் இவை பற்றி மேட்டுர் டி. கே. இராமச்சந்திரன் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.

உடலை வருத்துவது துன்பம், உடலை, உள்ளத்தை குளிர்விப்பது இன்பம், இதைத்தான் பலரும் பொதுவாகக்கூறுகின்றனர். இதுதவிர நிலையாய இன்பம், நிலையற்ற இன்பம் என்றும், மரண நிலைக்குப்பின்னர் கற்பகதருவும் காமதேனுவும் அருளும் பேரின்பத்தைப்பற்றியுங்கூடச் சிலர் கூறுகின்றனர். மரணநிலைக்கு அப்பாற்பட்ட இன்பத்தைப்பற்றிச் சடலம் அழிந்து சவக்குழியின் மணற்புதைப்பிலே புதையுண்டுகிடக்கும் பிரேதங்கள் விவாதித்துக் கொண்டிருக்கட்டும். நாம் இன்னும் இறக்கவில்லை. நடமாடும் உலகிலேதான் உயிருடனிருக்கிறோம், ஆதலால் நமக்கு அத்தகைய அடுத்த உலகத்திய அழியா இன்பத்தைப்பற்றி அறிந்திருக்கக் காரணமுமில்லை வசதியும் கிடையாது. உள்ளத்திலே ஏற்படும் உணர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாயிருந்தால் அதை இன்பம் என்கிறோம். வருத்தம் உண்டாக்குவதாயிருந்தால் துன்பம் எனக் கூறுகிறோம். ஆகவே இந்த முறையிலே பார்த்தால் பசிப்பது துன்பம், புசிப்பது இன்பம். மல்லிகாவின் வரவுக்காக மலர்ச்சோலையில் காத்திருக்கும் காதலனுக்குக் கூட பசி தான்! காதற்பசி!!

ஆனால் பசித் துன்பத்தைப், போக்கிப் புசித்து இன்பமடைவதிலே எத்தகைய விபரீதங்கள் நேரிடுகின்றன. ஓநாய் தனது பசியை ஆட்டுக்குட்டியின் உயிரைக் கொண்டுதானே போக்கிக்கொள்கிறது. நரிபுசித்து இன்பமடையவேண்டுமானால் நண்டு அதற்கு இரையாக வேண்டும். பூனை இன்பமடைய எலியை விழுங்கவேண்டும். மீனுக்கு அதனின் குஞ்சு, இது மிருகராசியில் மட்டுமல்ல!

நீலாவின் கணவனுக்கு, வனிதாவின் தகப்பன் வடிவேலு முதலியாருடைய தென்னந்தோப்பிலே தேங்காய் பறிக்கும் தொழில். பறிக்கப்பட்ட தேங்காய்கள் பம்பாய் மார்க்கட்டிலே பணமாக்கப்பட்டுப் பண்ணை முதலியாரின் பைக்குள் வந்துவிடும். நீலாவின் கணவனுக்குக்கூலி எனும் பெயரால் மாதமொன்றுக்கும் பத்து ரூபாய்கள் கிடைக்கின்றன. மாரிகாலம். கனத்தமழை, மரங்களெல்லாம் வழுக்கல் படிந்துவிட்டன. தேங்காய் பறிக்க ஏறின நீலாவின் கணவன் ஒரு தென்னையிலிருந்து சருக்கிவிழுந்துவிட்டான், மார்பிலே பலத்த அடி. பறிக்கப்பட்ட தேங்காய்கள் வழக்கப்படி மார்க்கெட்டுக்குச் சென்று பணமாகத் திரும்பிவிட்டன. பண்ணையாரின் பெட்டிக்கு. பறித்துக் கொடுத்த பாட்டாளி இன்னும் படுக்கையிலே கிடக்கிறான். மார்பிலே பட்ட அடியால் நெஞ்செலும்பு நொருங்கி விட்டது எனக்கூறிய கிராமவைத்தியர் பணம் இல்லாமல் பார்ப்பதற்கு நான் தர்மவைத்திய சாலை வைத்து நடத்தவில்லை என வேறு கூறிவிட்டார். நிர்க்கதியான நீலா பண்ணையாரை அணுகிச் சற்று உரிமையோடுதான் கேட்டாள். “மரங்களெல்லாம் வழுக்கல். அதனால்தான் என் கணவன் விழுந்துவிட்டான். விலா எலும்பு நொருங்கி விட்டது என வைத்தியர் கூறுகிறார். பணமின்றிப் பார்க்க முடியாது எனவும் கூறிவிட்டார். வைத்தியச் செலவுக்காவது ஏதாவது கொடுங்கள்” என்று. “ஏதோ விஷக்கடிவேளை, அதற்கு நான் என்ன செய்யட்டும். ஏறின மரத்துக்கெல்லாம் காசுகொடுத்தாய் விட்டது, என்னால் இனி ஒன்றும் முடியாது” என்றுகூறிவிட்டார் முதலியார். பாவம்! நீலா கண்களில் நீர் சொரிய பண்ணையாரைப் பார்த்துப் பரிதாபம் கலந்த குரலிலே தனது மாங்கல்யத்தைத் தொட்டுக் காண்பித்துக் கதறினாள். கதறவா செய்தாள், தனது நைந்துபோன இருதயத்தின் ஆழமான புண்ணை அவரிடம் காண் பித்தாள். முதலியார் இதற்கெல்லாம் இரங்குபவரா என்ன! “மாங்கல்யம் போகாமலிருக்கக் கோயிலைச் சுற்று” எனக் கூறிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார். சின்னாட்களிலே நீலாவின் கணவன் இறந்தான். நெஞ்செலும்பு நொருங்கி நீலாவின் கணவன் இறக்கிறான். வடிவேலு முதலி வளமாக வாழ்ந்து இன்பத்தில் புரளுகிறான். இதுதானே இன்றைய இன்பத்தின் நிலை.

முதுகெலும்பு முறிய முறிய, இரத்தத்தின் சத்து வியர்வையாக வெளிப்படத், தோல் காய்ப்பேற ஆலையிலே வேலை செய்யும் ஆயிரம் பேரின் உழைப்பினால்தானே ஆலையின் சொந்தக்காரன் ஆறடுக்கு மாளிகையிலே ஆடம்பரமாய் வாழ்கிறான் துன்பக் கேணியிலே ஆயிரவரைத் தூர்த்து, இவன் இன்ப ஏணியிலே ஏறுகிறான். உருமாறிப் போகுமளவுக்கு உழைத்து அலுக்கிறான் உழவன். காலில் நகம் முளைத்த நாள் முதலாய் அவன் கண்டதெல்லாம் கலப்பையும் கஞ்சிக் கலயமும் தவிர வேறில்லை. மழையிலே நனைந்து, குளிரிலே நடுங்கி, வெப்பத்திலே வெந்து, அவனை வறுமை வதைக்க அவன் குழந்தைகளைப் பிணிபிய்க்க, அவன் உழைத்த உழைப்பை, அறுவடைக்காலத்திலே ஆனந்தித்து இன்பமடைகின்றான் சுகபோகியாகிய வேறொருவன். பலரின் இரத்தத்தையும் சதையையும் கொண்டுதானே பிறிதொருவன் இன்பமடைகிறான், இறைச்சித் துண்டுகளைத் தின்று இன்புறும் கழுகுக் கூட்டத்தைப்போல! தனது ஐந்து மக்கள் களத்திலே மாண்டது கூடக் கவலையைத்தரவில்லையாம் ஒரு இத்தாலிய மாதுக்கு. தன் நாட்டைப் பிடித்திருந்த பாசிசப் பீடை, முசோலினியின் சவம் மிலான் நகருக்கு வந்துள்ளது எனத்தெரிந்தும் இறந்துபோன பிரேதம் என்பதை கூட எண்ணிப் பாராமல் அதனைச்சுட்டாள் மீண்டும் சுட்டாள். மீண்டும் மீண்டும் சுட்டாள். நாட்டின் நாகரிக வாழ்வைச் சிதைத்த அப்பாசிஸ்டுப் பகைவனை வஞ்சந்தீர்ப் பதைத்தான் இன்பம் எனக்கொண்டாள். கிடைக்க வேண்டிய, அவசியமான உரிமையைக் கொடு என்று கேட்ட லெனின் கிராடுத் தொழிலாளர் பலரைத் தனக்கிருக்கும் அதிகார ஆணவத்தால் சுட்டுக்கொன்ற ருஷ்ய அரசன் ஜாரையும், அவன் வம்சவாரிசுகளையும், புரட்சி நடந்தபோது, வரிசையாக நிறுத்தி வைத்துப், பைத்தியம் பிடித்த நாய்களைச்சுடுவது போலச் சுட்டுக்கொல்வதைத்தான் ருஷ்ய மக்கள் “இன்பம்” என மகிழ்ந்தனர். தனிப்பட்ட ஆணோ,பெண்ணோ எவராயினும் சரி,அவன் அல்லது அவள் பரந்து கிடக்கும் மானிடக் கூட்டத்தின் ஒருபகுதிதான். அந்தமுறையிலே இன்பத்தை ஒரு கூட்டம், ஒரு இனம் அல்லது ஒருவர்க்கம் கூட்டாகத்தான் அனுபவிக்க முடியும். அதைத்தான் இன்பம் எனக் கூறவும் முடியும். அவ்வாறின்றேல் ஆட்டின் உயிரைக்கொண்டு இன்பமடையும் ஓநாய் போல்தான் இருக்கமுடியும் அவ்வின்பம். அதை இன்பம் எனக் கொள்ளவும் முடியாது.

அந்த ரீதியில் இன்பம் என்பதைப் பற்றிப் பேசுவோமானால், திராவிட இனத்தின் இன்பத்தைப்பற்றித்தான் பேசமுடியும். பேசவும் வேண்டும். பொதுவான இன்பம் நிலையாக இருக்கவேண்டுமானால் பொருளாதார பேத அமைப்புப் போக்கடிக்கப்பட்டுப், பிறவி காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள உயர்வு தாழ்வு பிய்த்தெறியப்பட்டு, மதத் துறையிலே படிந்துள்ள மாசுதுடைக்கப்பட்டுக் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போகும்படி செய்து, எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சம உரிமை தரப்பட்ட காலத்தில்தான் அத்தகைய “இன்பம்” எல்லோருக்கும் கிடைக்கும், .

திராவிட நாடு

3-6-1945

9 இன்பம்

* * *

இராய. சொக்கலிங்கம்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்கவேண்டும்? இவையற்றித் தோழர் ராய. சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய ‘இன்பம்’ என்ற நூலில் இருந்து முல்லைப் பதிப்பகத் தோழர் முத்தையா அவர்கள் தொகுத்தனுப்பிய கருத்து இங்கு தரப்படுகிறது.

இப்பரந்த பேருலகில் பிறந்தவர் அனைவரும் விரும்புவது இன்பம் என்பதை எவரும் மறுக்கத் துணியார். இன்பமன்றித் துன்பத்தைப் பேதையும் கருதார். ஆனால் இன்பம் எது என்பதிலேயே பெரிய ஐயப்பாடு இருக்கின்றது. உலகத்தில் வசிக்கும் மக்கள் பலப்பலகோடியாவர். இத்துணைக்கோடி மக்களில் இருவர் கருத்துக்கூட எல்லாவற்றினும் ஒவ்வுதல் அருமை. எத்துணை நெருங்கிய நண்பரும் மிகப் பெரும்பாலான கருத்துகள் ஒன்றுதல் பெற்றிருந்த போதிலும் சிலவற்றில் மாறுபட காண்கின்றோம். உளத்தின் போக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி எனவே, வேண்டுவது எல்லோர்க்கும் இன்பம் என்ற ஒருபொருளே யெனினும், ஒவ்வொருவர் ஒவ்வொன்றை இன்பமாகக் கருதுகின்றனர். இது நாள் தோறும் கண்கூடாக அனைவரும் கண்டு வருவதே.

ஒருவர் வேளை தவறாது நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு காலங்கழிப்பதை இன்பமெனக் கருதுகின்றார். ஒருவருக்கு வாணாளில் பெரும்பகுதி நன்றாக உறக்கம் பிடிப்பது இன்பமாக இருக்கின்றது-ஒருவர் மக்களை நிறையப் பெற்றுக் கொண்டிருந்தாற் போதும் அதுவே இன்பம் எனக் கொள்கின்றார். ஒருவர் உளம் பெரிய மாளிகை போன்ற வீடொன்றைக் கட்டிக்கொண்டு அதில் உறைதல் இன்பமென உணர்கிறது. ஒருவர் இயந்திர வண்டிகளிலேறி உல்லாசமாகத் திரிவது இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் உச்சிமுதல் உள்ளங்கால் வரையும் நல்ல ஆடை அணிகளைப் பூட்டிக்கொள்ளுதலே இன்பம் என நினைக்கின்றார். ஒருவர் பெண்ணின்பத்தைத் தவிர உலகில் வேறு இன்பம் எது எனப் பேசுகின்றார் ஒருவருக்குப் பிறன்மனை நச்சுதல் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பிறன்தோள் பொருந்துதல் இன்பமqகத் தோன்றுகின்றது. ஒருவருக்குச் சீட்டாட்டத்தில் உள்ள இன்பம் வேறு எதிலும் இருப்பதில்லை. ஒருவருக்கு மது உண்டல் இன்பம். ஒருவருக்குப் புலால் அருந்துதல் இன்பம், ஒருவருக்குப் புகையிலை பாதி விழுங்குதல் பேரின்பம்,

ஒருவருக்குச் சட்டசபை செல்வதில் இன்பம் ஒருவருக்கு அதனை வெட்ட வெளியாக்குவதில் இன்பம் ஒருவருக்கு அங்கு சென்று முட்டுக்கட்டை போடுவதில் இன்பம், ஒருவருக்கு அதிகாரிகட்குக் காலணிபோல் நடப்பதில் இன்பம். ஒருவருக்குப் பட்டம் வாங்குவதில் இன்பம். ஒருவருக்கு அது நாராசமாகத் தோன்றுகிறது. ஒருவருக்குப் பிறருக்கு இடையூறு செய்வதில் இன்பம். ஒருவர் தம்மைப் பிறர் புகழ்வதே இன்பமென எண்ணுகின்றார். ஒருவர் பிறர் வசை உரைத்தலை இன்பமாகக் கொள்கின்றனர். ஒருவர் புறங் கூறுதலை இன்பமாகக் கூறுகின்றார். ஒருவர் பொய் புகல்தல் இன்பமெ நினைக்கிறார். ஒருவர் எவ்வாற்றானும் பொருள்சேர்த்தல் ஒன்றே இன்பமெனக் கருதுகின்றார். ஒருவர் தனக்குப் பலர் கீழ்ப்படிந்து நடத்தல் இன்பமென உணர்கின்றார். ஒருவர் தன்னைப் பெரிய மனிதன் என்று பலர் சொல்லுவதுதான் இன்பமென எண்ணுகின்றார்; அதன் பொருட்டு ஏராளமாகப் போருளைச் செலவிடுகின்றார். திருவிளையாடல் பலபுரிகின்றார். ஒருவருக்குத் தெருக்கூத்து இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு நாடகம் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு பாட்மிண்டன் என்று கூறுகின்ற பந்து விளையாட்டு இன்பமாக இருக்கின்றது. இவை நிற்க.

ஒருவருக்குப் பத்திரிகை படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு நாவல் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு அறிவு நூல்கள் படிப்பது இன்பமாக விருக்கின்றது. ஒருவருக்கு சொன்மாரி பொழிவது இன்பமாகவிருக்கின்றது ஒருவருக்கு அதனைக் கேட்பது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்கு இசையில் இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு அவைத் தலைமை வகித்தல் இன்பமாக இருக்கிறது. ஒருவருக்கு கழுத்து நிறைய மாலை வாங்கிக்கொள்வது இன்பமாக இருக்கின்றது. ஒருவருக்கு உபசாரப் பத்திரம் பெறுவது இன்பமாக விருக்கின்றது ஒருவருக்குப் பிறர் இகழ்ச்சி புகழ்ச்சி எதையும் எண்ணாது செயலில் அன்பர் பணிசெய்தல் ஒன்றே இன்பமாக விருக்கின்றது.

இவ்வாறாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் இன்பமாகத் தோன்றுகின்றது. ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் பொருள் மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. உதாரணம் பல கூறலாம் ஒருவருக்கு பிறனில் விழைதல் முதல் பேரின்பம், இன்னொருவருக்கு அதைக்கேட்பதும் பெருந்துன்பம் ஒருவருக்குப் படிப்பதில் இன்பம்; மற்றொருவருக்கு படிப்பென்றால் எல்றையற்ற துன்பம்; இப்படியே ஒவ்வொன்றினும் ஒரேபொருள் ஒருவருக்கு இன்பத்தையும் வேறொருவருக்குத் துன்பத்தையும் செய்கின்றது. எனவே இன்பம் என்ற ஒன்றை எப்பொருளும் பெற்றிருக்கவில்லை. எந்தப் பொருளுக்கேனும் அதன் இயற்கைக்குணம் இன்பமாக இருக்குமானால் அது ஒரே படித்தாக எல்லாருக்கும் இன்பந்தந்து நிற்கவேண்டும். அவ்வாறு எந்தப் பொருளும் எல்லோருக்கும் இன்பந்தந்து நிற்கமுடியாது. ஆதலின் எந்தப் பொருளுக்கும் இன்பம் தரும் குணமில்லை. மாம்பழத்திற்கு ருசி, இனிப்பு என்றால் அது எல்லோருக்கும் இனிக்குமேயன்றி எவருக்கேனும் பிறிதாக விருக்குமோ? இன்பத்தில் அவ்வாறில்லை. நூல்கள் விதித்தன. சிலருக்கு இன்பமாக இருக்கின்றன. நூல்கள் விலக்கியவற்றை இன்பமெனக் கொள்வாரும் எண்ணற்றாரிருக்கின்றன என்பதை முன்கூறியவை கொண்டே அறிதலாகும். ஆக, இன்பம் பாண்டிருக்கின்றது அது எப்பொருளினும் இல்லை. உள்ளத்தில் இருக்கின்றது. எவர் உள்ளம் எப்பொருளை இன்பமெனக் கருதிற்றோ ஆண்டு அப்பொருளிடத்து அவர் இன்பம் நுகர்கின்றார், எனவே இன்பம் என்பது உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி என்பது தேற்றம்.

பொருளில் இன்பம் இருப்பதாகக் கருதுதல் அறியாமை. கூர்ந்து ஆராயும் எவரும் பொருளில் இன்பம் இல்லை யென்பதை ஏற்பர். இவ்வுண்மை ஓராமையினாலேயே மக்கள் இன்பம் இன்பம் என எண்ணித் தீய செயல்பல செய்தழிகின்றனர். இன்பம், எப்பொருளிலும் இல்லை, உள்ளத்தின் உணர்ச்சியே இன்பம் என்பது; இன்பமென எண்ணித்தீமை செய்தலாகாது என்பதை நன்றாக உணர்த்துவதற்காக இக்கட்டுரையில் அது விரித்துக்கூறப்பெறுகிறது. இன்பம் உள்ள உணர்ச்சியே என்பதை உள்ளம் பொருந்த உணர்ந்து விடுவார்களானால் பின்னர் இன்பம் என எண்ணிச் செய்யும் தீமைகளை யெல்லாம் போக்கிவிடுதல் கூடுமன்றோ! இன்பம் பொருளிலில்லை யென்பதற்கு ஈண்டுக்காட்டியதை விட இன்னும் விளக்கமாகக் காட்டவேண்டிய தில்லையன்றோ?

மக்கள் செய்யவேண்டுவதென்ன? நூல்கள் விதித்த நற்கடமையாகிய அறனே பிறிது செய்யக் கனவினும் கருதலாகாது. அறன் ஒன்றே இன்பமெனக் கருதப் பழகிவிட்டால், அதன் பாற்பட்ட நற்செயல்கள் தவிரப்பிறயாவும் துன்பமாகவும் அவையே இன்பமாகவும் தோன்றும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அப்பழக்கமே - அறமே இன்பமெனக்கருதும் அறிவே மக்கள் பெறுதல் வேண்டும். அவ்வறிவு படைத்தாலன்றி மக்கள் யாக்கை பெற்ற பயன் இல்லை இல்லை முக்காலும் இல்லை. மக்கள் அறத்தையே இன்பமாகக் கருதும் அறிவுபெற வேண்டுமென்று கருதியே யன்றோ இன்பம் நுகர இவ்வுலகிற் பிறந்த மக்கட்கு முதலில் அமைந்த ஒளவைபிராட்டியருளிய அருஞ்சொற்றொடர் “அறஞ்செயவிரும்பு” எனப் பணித்தது. “எப்பொருளும் அவரவர் எண்ணத்தின் வழி இன்பமாகத் தோன்றுங்கால் அவரவர்களுக்கு இன்பமாகத் தோன்றுவதை அவரவர் செய்யலாமே” என்ற கேள்வி வருமோ என்றஞ்சுகிறேன். அவரவர்க்குத் தோன்றியதை அவரவர் செய்வதென்றால் உலகில் நூல்கள் வேண்டுவதில்லை, ஒழுங்குகள் வேண்டுவதில்லை; ஒன்றுமே வேண்டுவதில்லை யென்றாகிவிடும். அதனை எண்ணியே “மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்ற மூதுரை எழுந்தது. இதனால் எவர் எண்ணத்தின் உரிமையையும் நான் பிடுங்குகின்றேனென்று எவரும் தருதலாகாது. உலகில் எல்லோரும் பேரறிவு படைத்தவர்களாகவிருந்து செய்வன தவிர்வன உணர்ந்தவாகளாகவிருப்பாரானால் அவரவர் எண்ணத்தின் வழிநடப்பதில் தடையொன்றுமிராது, உலகில் பேரறிவு படைத்தவர் ஒரு சிலரே இருத்தல் இயல்பு. இது என்றுங்கண்ட உண்மை; இதனை ஆதாரத்தோடு மறுக்கமுடியாது இதனால் யாரும் தாங்கள் அறியாமையுடையவர்கள் என்று கோபங் கொள்ளலாகாது. உண்மையுணரும் ஆற்றல் வாய்ந்த பேரறிஞர் ஒரு பகுதியார் பண்டும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். பண்டிருந்த பல்லோர் செய்யத் தக்கன இன்னதென உலகத்து மக்கள் உய்யும் பொருட்டு அறநூல்கள் எழுதி வைத்துள்ளனர். இன்றுள்ள ஒருபகுதியாரும் அவைகளை விளக்குவதோடு காணும் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். அவைகளை நன்கு ஓர்தல்வேண்டும். அவை யனைத்தையும்” அப்படியே கொள்ளவேண்டுமென்றும் நான் கூறவில்லை. அகமூடக் கொள்கைக்கட்கெல்லாம் ஈண்டு இடமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் அறிவு கொண்டு எல்லாப் பொருள்களையும் எல்லோர் கருத்தையும் அலசி ஆராய்லாம் தாங்கள் தெளிந்து கொள்ள முடியாதவற்றை நெருங்கிய அன்பர்கள் துணைகொண்டு அறியலாம். அதனின்றும் தாங்கள் உண்மைதேறி அவ்வழியொழுகுதலே மாண்புடைத்து.

எவரேனும் தான் சொல்லுவதுதான் சரி, அதை எல்லோரும் ஆராயாமலே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுவாரானால் அவரே பேரறியாமையுடையவர் என்பது நிச்சயம். அறம் வகுத்த பேரறிஞர்களுள் வள்ளுவரை நிகர்த்தார் எவருமலர் என்பது அறிஞர்களின் கருத்து. அப்புலவர் பெருமானார் நான் சொல்வதே மறை: அதனை ஏற்றுக்கொள்க என்று கூறினாரல்லர். அவ்வாறு கூறியிருந்தால் அவர் உலகம் போற்றும் அறிவுபெற்றிருக்கமுடியாது. “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்பதறிவு” “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்னும் இரண்டு அருங்குறட்களை அருளினார் அப்பெருந்தகை.

எனவே அறிஞர்கள் கருத்துவழித் தம் அறிவைச் செலுத்திமெய்ப்பொருள் காண்டில் வேண்டும். அது கண்டு ஒழுகிய அன்றுதான் பிறவிப்பயன் உண்டு. அம்மேலான நிலையையே இன்பம் எனக்கருதல் வேண்டும். கடமையே இன்பமெனக் கருதும் உளம் பெற்றால் பிற எதுவும் இன்பமாக ஆண்டுத் தோன்றாது.

திராவிட நாடு

10-6-45