ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
கட்டுரை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆரியப் பார்ப்பனரின்
அளவிறந்த கொட்டங்கள்


—பாவலரேறு பெருஞ்சித்திரனார்


பதிப்பு⁠ : ⁠
முதல் பதிப்பு : தி.பி. 2036 ஆடவை 4
(18.06.2005) ⁠


நூல் தலைப்பு⁠ : ⁠
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் ⁠


உள்ளடக்கம்⁠ : ⁠
கட்டுரை ⁠


ஆசிரியர்⁠: ⁠
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ⁠


வெளியீடு⁠: ⁠
தென்மொழி பதிப்பகம்,
பாவலரேறு தமிழ்க்களம்,
1, வடக்குப்பட்டுச் சாலை,
மேடவாக்கம்,
சென்னை - 601 302. ⁠


அச்சாக்கம்⁠: ⁠
தென்மொழி அச்சகம்,
சென்னை - 601 302. ⁠


தாள்⁠: ⁠
வெள்ளைத்தாள் ⁠


பக்கங்கள்⁠: ⁠
296 ⁠


அளவு⁠: ⁠
மடி(தெம்மி) 1/8 ⁠


படிகள்⁠: ⁠
1000 ⁠


விலை⁠: உரு 100/-

பதிப்புரை

பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன.

அவரின் எண்ணமும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் குறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புகளுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன.

விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.

எனவே அவரின் எழுத்து உயிர்ப்பாற்றல் கொண்டவை. உயிர்ப்பிக்கும் உணர்வு சான்றவை.

ஐயா அவர்களின் பாக்கள் எப்படி வீரிய ஆற்றல் சான்றவையோ அப்படி அவரின் உரைநடை நேரிய சீற்றம் கொண்டவை.

எவ்வகை அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் வீறிட்டுப் போர்க்குரலாய் ஒலிப்பவை.

ஆரியக் கொட்டங்கள் குறித்தும், சாதியத் தீமைகள் குறித்தும் ஐயா அவர்களின் உரைவீச்சுகள் எதிரிகளின் குலைகளை நடுங்க வைத்தன.

1995 – தம் வாழ்நாள் இறுதிநாள் வரை ஐயா அவர்களால் எழுதப்பெற்ற ஆரியப் பார்ப்பனர் குறித்த கட்டுரைத் தொகுப்புகள் யாவும் கால வரிசைப்படுத்தப்பட்டு ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் இத் தலைப்பில் இடம் பெற்றுள்ளன. 

‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் தனித் தலைப்பிட்ட கட்டுரை தென்மொழியின் ஆசிரியவுரையில் தொடராக வெளிந்தவை.

அத் தொடர் கட்டுரை சிறுவெளியீடாக மூன்று மறுபதிப்புகளோடு இதற்கு முன்னர் வெளியிடப் பெற்றிருக்கின்றன என்றாலும், ஆரியப் பார்ப்பனக் கொட்டங்கள் குறித்து ஐயா அவர்களால் எழுதப் பெற்ற அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பாக இந்நூல் இப்போதே முதல் பதிப்பாக வெளிவருகின்றது.

இத் தொகுப்புள் முதல் கட்டுரையாக ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் அமைக்கப் பெற்று, அதைத் தொடர்ந்த கட்டுரைகள் கால வரிசைப்படி நிரல்படுத்தப்பட்டுள்ளன

இவையன்றி, ஆரியப் பார்ப்பனியம் குறித்து எழுதப்பெற்ற ஐயா அவர்களின் பாடல்கள் யாவும் கனிச்சாறு (பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்) தொகுப்புள் உள்ளடக்கப்பட்டதால், இக் கட்டுரைத் தொகுப்புள் இணைக்கப் பெறவில்லை.

பாவலரேறு தமிழ்க்களம் – கட்டுமானப் பணி, அலுவலக அமைப்புப் பணிச் சுமைகளின் அழுத்தத்தால் கடந்த ஈராண்டுகளாக ஐயா அவர்களின் நூல்கள் வெளிக்கொண்டுவர வேண்டிய பெரும்பணிகள் இடைநின்று போயின.

இனி, ஐயா அவர்களின் வெளிவராத நூல்கள் அனைத்தும் ஒருசேரவும், வெளிவந்த நூல்களின் மறுபதிப்புகள் அனைத்தும் ஒருசேரவும் படிப்படியாக ஓராண்டுக்குள் முழுமையாக வெளியிடப்பட வேண்டுமான முயற்சி மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது.

தென்மொழி பதிப்பகம் – முன்னெடுத்திருக்கிற இம் முயற்சிக்குத் துணை வேண்டி தென்மொழியில் வேண்டுகை வெளியிடப் பெற்றது.

சிலர் உடனடியாக முன்தொகை செலுத்தியிருந்தனர். அவர்களின் பெருந்துணையைக் கொண்டும், பிற வகையில் கடன்பெற்றும் இந் நூல் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றிருக்கின்றன. 

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – எனும் இத்தொகுப்பு நூல் உருவாகப் பெருமளவில் துணைநின்ற பேரன்பு உள்ளங்களுக்குத் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

திருக்குறள்மணி ஐயா புலவர் இறைக்குருவனார், ஐயா புலவர் கு. அண்டிரன், திருவாளர்கள் தென்மொழி ஈகவரசன், குணத்தொகையன் – ஆகியோர் முழுமையாய் இருந்து திருத்தம் செய்து பெருந்துணை நின்றனர்.

அரசி, தமிழ்மொய்ம்பன் – ஆகியோர் காலத்தே கணிப்பொறி அச்சாக்கம் செய்தும், அச்சீடு செய்தும் பணியாற்றினர்.

அவர்கள் அனைவர்க்கும் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறது.

தமிழ் இன உணர்வாளர்கள் இந் நூலினை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்வதோடு, தமிழின முன்னேற்றத்திற்குப் பெரும் பணியாற்றிடுவதே பாவலரேறு அவர்களின் கருத்தாக்கத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.தி.பி. 2036, ஆடவை 4

18-6-2005

சென்னை – 601 302 — தென்மொழி பதிப்பகம்முன்னுரை

ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.

தமிழ்மொழியிலும், தமிழர்தம் இலக்கியம், சமயம் முதலிய கலைத்துறைகளிலும், நாகரிகம் பண்பாடு ஆகிய வாழ்வியல் துறைகளிலும் ஆளுமை பெற்று மேம்பட்ட ஆரியப் பார்ப்பனர்கள் அவற்றையெல்லாம் மறைத்துத் திரித்துந் தம்மனவாக்கிக் கொள்ளும் பொருட்டுச் செய்த வகைவரிசைகள் பலப்பல. கெடுத் தொழித்தனவும் எண்ணில.

கோயில் வழிபாடு ஆரியர்க்குரிய தன்று. ஆனால் இன்று கோயில்களெல்லாம் ஆரியக் கூடாரங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ் வழிபாட்டு உரிமைக்குத் தடையாக நின்று வழிமறிப்பவர்கள் அவர்களே. பிராமணன் எவனுக்கும் சமற்கிருதம் தாய்மொழியன்று. ஆனால், ஒவ்வொருவனும் சமற்கிருதமே தன் தாய்மொழிபோல் கருதிக்கொண்டு, அதன் மேல் அளவு கடந்த பற்றுவைத்துக் கொண்டிருக்கின்றான்; அவ்வளவிற்குத் தமிழ் மொழி மேல் வெறுப்பும் கொண்டிருக்கின்றான். இஃதொன்றே ஆரியப் பார்ப்பனரின் மனப்பான்மையை வெளிப்படுத்தப் போதுமானதாகும்.

ஆரியத்தளையை அறுத்தெறிந்து விடுதலை பெறுவதே தமிழினம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணியாகும். ஆரிய அழிம்புகளை வரலாற்றடிப்படையில் நாம் எடுத்துக் கூறும்போது அதனை ஒப்புக் கொள்கின்ற நம்மவர்கள் சிலர், பிராமணர்கள் இப்போது திருந்திவிட்டனர் என்றும், முன்னை நிலைகளையே சுட்டிக்காட்டி அவர்கள்பால் பகைமை பாராட்டக்கூடாது என்றும் ‘பரந்த’ மனத்தவர்போல் பேசுகின்றனர். அவர்கள் திருந்திவிட்டனர் எனக் கருதுவது ஏமாறித்தனமே.

இற்றை நிலையிலும், இந்த நொடியிலும் கூட ‘வர்ணாசிரம (அ) தர்மம்’ ஓரளவு நெகிழ்ந்து விட்டமைக்கு வருந்தி யழுது கொண்டிருக்கின்றனரே யன்றி அந்நிலையை வாழ்த்தி வரவேற்கவில்லை. அதனைக் கட்டுக்குலையாமல் காப்பாற்றவும், தம் மேனிலை வாழ்வை நெகிழவிடாமல் நிலைப்படுத்திக் கொள்ளவும் மற்றையோர் தலையெடுக்க மாட்டாமல் தாழ்ந்து கிடக்கவும் ஆரியப் பார்ப்பனன் ஒவ்வொருவனும் மடிதற்று நிற்கின்றமை அவர்களுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.

திருக்குறளை மாணவர்கள் படிக்கத் தேவையில்லை என்று அறிவுரை (!) கூறிக் கொண்டும், இன்னும் தம் வருணாசிரம வரையறைகளைக் கடைபிடித்துக் கொண்டும், ஆர்.எசு.எசு. இயக்கத்தினைப் பாராட்டி வாழ்த்திக் கொண்டும் சங்கர(ஆசு) ஆரியர்கள் இன்னும் வளமாகவும் நலமாகவும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள்.

‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ என்னும் இந்நூலில் ஆட்சி - அலுவல் துறைகளிலும், தாளிகை(பத்திரிகை), வானொலி, நூற்பதிப்பு முதலிய பல்வேறு துறைகளிலும் இன்றும் நடைபெறும் ஆரிய வல்லாண்மைத்திறம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் பெயர் இடஞ் சுட்டித் தக்க சான்றுகளோடு விளக்கப்பட்டிருக்கின்றன.

தமிழின விடுதலையிலும் அதன் மேம்பாட்டு முயற்சிகளிலும் ஈடுபடும் மறவர்கட்கு இந் நூல் போர்வாளாகப் பயன்படுவதொன்றாம். தமிழ்மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்வார்களென நம்புகின்றோம்.

— புலவர் இறைக்குருவனார்உள்ளுறை1. ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

2. ஆரியர் கூத்து

3. பார்ப்பனரின் எழுச்சி

4. ஆரியக் குறும்பு

5. இராசாசி ஓர் அரசியல் ஏரி

6. வடவரும் பார்ப்பனரும், நாமும்

7. எச்சரிக்கை பகைவர் இருவர்

8. வாரியும் பூரியும்

9. பிராமணியத்திற்கு இறுதி எச்சரிக்கை

10. கோயில்களில் உள்ள ஆரிய இடைத் தரகர்களை அகற்றுக!

11. பார்ப்பானையே குறைகூறிப் பயனில்லை!

12. மத உரிமைகளும் அரசின் கடமைகளும்

13. ஆரியப் பார்ப்பானின் மொழிக் குறும்பு

14. மொழி வளர்ச்சியில் அவர்களுக்குள்ள அக்கறையும் நம்மவர்களுக்குள்ள அக்கறைக் குறைவும்

15. வேத மத இந்தியா

16. தீபம் பார்த்தசாதிகள் தெளிவடையட்டும்

17. தேசியம் பேசும் திருடர்கள்

18. மதமென்னும் பெயரால் நடைபெறும் பொதுத் தொல்லைகளை அரசு தடுத்து நிறுத்துதல் வேண்டும்.

19. பார்ப்பன எழுச்சியும் திராவிடர் கழகத்தின் முனைப்பும் விரும்புகின்ற விளைவுகளும்

20. இந்து மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியே வேண்டும்

21. மதம் பெரிதில்லை; மக்கள் நலமே பெரிது!

22. யார் பிரிவினைக்காரர்கள்

23. மூடநம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே!

24. சேலம் உருக்காலைக் குடியிருப்பில் பார்ப்பனரின் கொட்டம்.

25. கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 இந்து கோயில்களை பிர்லா கட்டித் தருகிறார்.

26. காஞ்சி காமகோடி பீடத் தலைவர் ஒரு குமுகாயக் குற்றவாளி.

27. ஆன்மீகம் என்பது என்ன? அதன் செயல் வரம்பு எது? வீரப்பன் விளக்க முடியுமா?

28. இந்திரா காந்தியின் சாம்பல் (அஸ்தி) மற்றப் பொருள்களின் சாம்பலைப் போன்றதே.

29. இந்து மதம், இந்தி, இந்தியா, இந்திரா

30. இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள் இந்தி பேசும் வடநாட்டவரும், ஆரியத் தமிழ் பேசும் பார்ப்பனரும் தாமா?

31. இந்து மதம் தமிழர் மதமா?

31. பொருள்நசையும் சாதிநசையும் மதநசையும்

32. மதம் ஆட்சிக் கட்டிலில் ஏறினால் ஆட்சி இருண்டுவிடும்! எச்சரிக்கை

32. இராமாயண நாடகம்

34. இராசீவ் காந்தி நலனுக்காக இரண்டு பெரிய வேள்விகள்

35. பார்ப்பனர்க்கு இரட்டைக் கொம்பு

36. இராசீவின் குட்டிப் பூசாரிகள் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

37. தொலைக்காட்சி 'இராமாயணம்' ஆரியத் திராவிடப் போரை மீண்டும் தட்டி எழுப்பும்படி அமைந்திருக்கிறது.

38. இந்து மதத்தினின்று வெளியேற வேண்டும்

39. ஆரியப் பார்ப்பனரும் சமற்கிருதமும்

40. இப்பொழுதுள்ள அரசியல்காரர்கள் அனைவரும் பதவி பணம் புகழ் ஆகியவற்றுக்கு அலைவர்களாகவே உள்ளனர். மக்கள் நலம் கருதுபவர் ஆயிரத்தில் ஒருவர் இருப்பாரா என்பது ஐயமே.

41. செயலலிதாவே தமிழினத்திற்கு வாய்த்த கடைசி எதிரி

42. தமிழக அரசின் மூடநம்பிக்கை

43. இந்திய படைத்துறையிலும் இந்துமதப் பரப்புதல் ஏற்பாடு

44. சாதி மத மூடநம்பிக்கைகள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள்
ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

ஆரியப் பார்ப்பனர்கள் அளவில் சிறிய இனத்தவராயினும், அவர்கள் இந்தியாவை - குறிப்பாகத் தமிழ்நாட்டைக் கெடுப்பது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லை. அரசியலிலாகட்டும் பொது வாழ்வியலிலாகட்டும் அவர்களின் திருவிளையாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவைபற்றி ஏற்கனவே பலமுறை பலவாறு விரித்து எழுதியிருந்தாலும், அவர்களைப் பற்றிய தனி ஆய்வு இது. பொதுவாழ்வில் அவர்களால் மற்ற இனங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அல்லது அவர்களின் தலையீடுகள், அவற்றால் விளையும் கேடுகள் அளவுக்கு மீறி நடைபெறுவதால் இத்தகைய ஒரு தொகுப்பு நோக்கு தேவைப்பட்டது.

ஆரியப் பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் எனப்படுவோர்க்கு இந்நாட்டில் ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு என்றாலும், அஃதெல்லாம் ஓர் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகாலச் சிறப்புடையதே. ஆனாலும் அவர்கள் வேதங்களிலும் பழங்கதைகளிலும் இத்தொடர்பு ஐம்பதினாயிரம் அறுபதினாயிரம் ஆண்டுகள் என்று கட்டியுரைக்கப் பெற்றுள்ளது. இதனால் பிற்காலத்து வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இவர்களைப் பற்றி உண்மை வரலாறு தெரியாமல், பலவகையிலும் தம்முள் வேறுபட நேர்ந்தது. வேதங்கள் அனைத்தும் கட்டு உரைகளே! அவற்றில் வரும் செய்திகள் யாவும் இவர்களின் வளமிகுந்த கற்பனை உரையாடல்களே! இந்நாட்டுப் பழங்குடிகளிடம் இவர்கள் நடத்திய போராட்ட வெறுப்புணர்ச்சிகளே இருக்கு வேத, அதர்வ வேத மந்திரங்களாக விளங்குகின்றன. எதிரிகளை வெல்வதற்கும் கொல்வதற்கும் இவர்கள் கொண்ட முயற்சிகளே – இவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு உணர்ச்சிகளே எசுர் வேத வேள்விகளாகக் காணப்படுகின்றன. அவற்றில் காணப் பெறும் சில பச்சையான அருவருப்பு நிகழ்ச்சிகளைக் கொக்கோக நூல்களிலும் காண்பதரிது. காட்டு விலங்காண்டிகள் போல் அவர்கள் நடந்துகொண்ட முறைகள் அவ்வேதங்களில் நன்கு வண்ணிக்கப் பெறுகின்றன. எனினும் இவர்கள் அவ்வேதங்களைத் தோற்றுவிக்கப் பெறாதவை (அநாதி) என்றும், தொன்றுதொட்டு வருவன என்றும்; இறைவனுக்கு முந்தித் தோன்றியவை என்றும் பொய்யுரையும் புளுகுரையும் கூறிப் பழங்கால மக்களை ஏமாற்றிவந்தனர்; இன்று வரை அவற்றையே திரும்பத் திரும்பக் கூறிக் கற்றவர்களையும் அறிஞர்களையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். வரலாற்றாசிரியர்கள் சிலரும் இவர்களின் மதிமயக்குப் பேச்சுகளில் நம்பி உண்மையைப் பறிகொடுத்துள்ளனர். வேதங்களை நேரிடையாகப் படிப்பவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது. இருப்பினும் அவ் ‘வேத “புராண” இதிகாசங்’களை வைத்துக்கொண்டு ஆரிய இனத்தவரில் பெரும்பாலோர் பிழைத்து வருகின்றனர்.

தொடக்கக் காலத்திலிருந்தே ஆரியப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு அரசியலையும் வாழ்வியலையும் கெடுத்து வந்தமைக்கு அளவிறந்த சான்றுகள் உண்டு. இந்திய வரலாற்றில் அரசர்களின் வீழ்ச்சி குறிக்கப்படும் இடத்திலெல்லாம் பார்ப்பனியம் நடத்திய திருவிளையாடல்களை நன்கு உணரலாம். காலம் செல்லச் செல்ல இவர்களின் மேலாண்மைகள் ஓரளவு குறைந்துகொண்டே வந்தாலும், இன்றும் தனிப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆரியப் பார்ப்பனனும் வேத கால ஆரியத்தினின்று எவ்வகையிலும் மாறுபட்டவன் அல்லன். அவன் மனத்திலும் நடவடிக்கைகளிலும் என்றும் தான் எல்லாரினும் படைப்பால் உயர்ந்தவன் என்பது பிறர் எல்லாரும் தனக்குக் கீழானவர் என்பதுமே காணக் கிடக்கின்றன.

அரசியல் நிலையில் அவர்கள் செய்கின்ற கீழறுப்பு வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆட்சியைப் பொறுத்த அளவில் பார்ப்பனர்கள் எக்காலத்தும் இருபிரிவினராகவே பிரிந்து செயல்படுகின்றனர். ஒரு பிரிவு ஆளுங்கட்சியைச் சார்ந்து நிற்கும். மறுபிரிவு எதிர்க்கட்சியைச் சார்ந்து இயங்கும். இதனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் ஒரு பகுதியினரால் மற்ற பகுதியினருக்கு மறைமுகமான நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். (பிற இனத்தவர்க்கோ இவர்களால் என்றும் தொல்லைதான்) ஆட்சிக்கு எதிரான பிரிவு மக்களிடையே எப்பொழுதும் ஒரு வகையான நிறைவில்லாத தன்மையை உருவாக்கிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் குழப்பத்தையும் அந்நிலை தோற்றுவிக்கும். இதற்கு இக்காலத்தில் ஒர் எடுத்துக்காட்டு தரவேண்டுமாயின் ‘ஆனந்த விகடனை'யும் ‘துக்ளக்'கையும் சொல்லலாம். ஆனந்தவிகடன் அச்சகத்திலேயே துக்ளக் அச்சிட்டு வெளிப்படுத்தப் பெறுகின்றது, மேலும் இரண்டாவதன் பொறுப்பும் முதலாவதைச் சேர்ந்ததே! அவ்வாறிருக்கையில் ‘ஆனந்த விகடன்’ அரசியல் கொள்கை ‘துக்ளக்'கால் தாக்கப்பெறும். ‘துக்ளக்'கின் போக்கை கண்டித்து ஆனந்தவிகடனில் கட்டுரை வரும். இரண்டு நிலைகளையும் இரண்டு வேறுபட்ட போக்குகளாகக் கொண்டு இளிச்சவாய்த் தமிழர்கள் அவ்விதழ்களைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படித்து வருவார்கள். இத்தகைய ‘சகுனி’ ‘சாணக்கிய’ வேலைகள் ஆரியத்தின் தலையாய மந்திர முறைகளில் ஒனாறும். இதனால் அவ்வினம் பெறுகின்ற நேரடி மறைமுக ஊதியங்களுக்கு அளவே இல்லை.

இன்றும் இந்தியாவில் மேலைப் பைதிரத்தில் உள்ள ‘அகில பாரத ஆரிய சபா’ முதற்கொண்டு தில்லியிலுள்ள ‘பாரதிய சனசங்கம்’ வரையுள்ள ஏறத்தாழ எண்பது அரசியல் கட்சிகளிலும் பெரும்பாலானவற்றில் பார்ப்பனர்களே முகாமையாக இருந்து வேலை செய்கின்றனர். அவர்களின் பழமைக் கொள்கைகளுக்கு முற்றிலும் நேர் எதிரிடையான பொதுவுடைமைக் கட்சிகளிலும்கூட அவர்களே மேல் வரிசைத் தலைவர்களாக விளங்குகின்றனர். எனின், அவர்களின் அரசியல் நரித்தனங்களைப் பற்றி மிகுதியும் விளக்கத் தேவையில்லை.

இன்னும், தங்களுக்கு வேண்டாத பிற இனத்தவரின் ஆட்சி ஏற்பட்டு விடுமானால் இவர்களின் வெறுப்பு வேலைகளுக்கும், பொறுப்பற்ற மனப்போக்குக்கும் அளவே இல்லை. இக்கால் தமிழக அரசு தங்களுக்குத் துணையாக இல்லை அல்லது தங்களில் ஒருவரையும் அவர்கள் அமைச்சராக அமர்த்தவில்லை என்பதற்காகவே, பாப்பனர்கள் செய்யும் குழிபறிப்பு வேலைகள் எண்ணற்றன. இக்கால் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள், கையூட்டு வாங்குதல், வேலைகளைச் சுணங்கப் போடுதல், வேண்டாதார்க்குப் பலவகையிலும் இருட்டடிப்புச் செய்தல், வேண்டியவர்க்குச் சலுகைகள் காட்டுதல் முதலிய பெரும்பாலான சீர்கேடுகளுக்கும் பார்ப்பனர்களே மிகுதியும் பொறுப்பாவார்கள். வேண்டுமென்றே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் மக்களுக்கு அரசின்மேல் ஒருவகை வெறுப்பு ஏற்படட்டும் என்பதே இவர்களுடைய எண்ணமாகும். இதைப் பலவகையிலும் மறைப்பதற்காகத் தாங்களாக இக் குற்றச்சாட்டுகளில் முந்திக் கொள்கின்றனர். காலஞ்சென்ற இராசாசி முதல் கல்வி அலுவலகக் கடைசிப் பார்ப்பான்வரை இதை அறிந்திருந்தும் மிகவும் நேர்மையானவரைப் போலவே நடித்துப் பேசி வருகின்றனர்.

இக்கால் அரசு அலுவலகங்களில் பார்ப்பனப் பெண்கள் பணியாற்றவது மிகுந்து வருகின்றது. அப் பெண்களின் நடைமுறைகளில் உள்ள பண்பாட்டுக் குறைவான செய்தியைக் கூறுவதற்கே நாக் கூசும். பார்ப்பன வழக்கறிஞர்கள் சிலர்தம் பெண்டு பிள்ளைகளை வைத்தே வழக்குகளை வெற்றியாக நடத்திக் காட்டிய வரலாறும் உண்டு. தம் இனத்தான் ஒருவன் அலுவலக மேலதிகாரி யாகவோ, அத்துறைச் செயலாளராகவோ வந்துவிட்டால் அவர்களின் கீழ்ப் பணியாற்றும் அனைத்துப் பார்ப்பனர்களும் அவர்களுக்கு எப்படி ஒத்துழைக்கின்றனர் என்பதையும், அவ்வாறில்லாவிடத்து அவர்கள் எப்படிக் கீழறுப்பு வேலை செய்கின்றனர் என்பதையும் அவ்வத்துறைகளில் பணியாற்றும் பிற இன அலுவலர்கள் நன்கு அறிவர்.

அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்கள், பிள்ளையார் கோயில்கள், அவற்றுக்கான பூசனை, வழிபாடுகள், திருவிழாத் தண்டல்கள் முதலிய யாவும் ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகளின் தூண்டுதல்களே. அந்நிகழ்ச்சிகளால் அவ்வதிகாரிகளின் ஒழுக்கக் கேடுகள், கையூட்டு, ஊழல் நடவடிக்கைகள், இனச் சலுகைகள் பெரிதும் மறைக்கப்படுகின்றன. அவ்வலுவலகங்களில் உள்ள தமிழர்களோ, பிற இனத்தவர்களோ கடந்த காலங்களில் இவற்றைக் கண்டுங் காணாதவர்போல் இருந்து வந்தனர். இக்கால் அவற்றை ஆங்காங்குக் கண்டிக்கத் தொடங்கி யுள்ளனர். எனவே அவர்களுக்குத் துணைபோகும் அரசை அப் பார்ப்பனர்கள் தூற்றத் தொடங்கியுள்ளனர்.பொய்த்துத் தள்ளும் செய்தித்தாள்கள் !

கல்வித்துறையில் அவர்களால் ஏற்படும் சீர்கேடுகளுக்கோ வரைமுறையே இல்லை. பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ – என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில் ஊழல்கள் என்று பேசப் பெறுகின்றவற்றுள் பெரும்பாலானவை ஆரியப் பார்ப்பனர்களால் செய்யப் பெறுவனவே! பிற இனத்தவரை அமைதியாக ஆளவிடக் கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். இவர்களுக்குப் பக்கத்துணையாக நிற்பவை அவர்களிடம் உள்ள ஆங்கில, தமிழ்ச் செய்தித்தாள்களே! அவை பொய்த்துத் தள்ளுவதற்கு ஓர் எல்லையே இல்லை.

பார்ப்பனர்களின் கையுள் வலிவான செய்தித்தாள்கள் இருப்பதாலேயே அவர்கள் பொதுமக்களிடம் தங்களுக்குச் சார்பான கருத்துகளை எளிதாக உருவாக்க முடிகின்றது. இந்து, எக்சுபிரசு, மெயில் போலும் ஆங்கில நாளிதழ்களிலும் சுதேசமித்திரன், தினமணி, தினமலர் போலும் தமிழ் நாளிதழ்களிலும், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தீபம், கலைமகள், துக்ளக் போலும் கிழமை, மாத இதழ்களிலும் அவர்கள் எழுதும் எழுத்துக்களே இந்நாட்டை ஒரு நிலையான ஆட்சிக்குக் கொண்டு வரமுடியாமல் செய்கின்றன என்றால் அது மிகையாகச் சொல்லப்பெற்ற தாகாது.

வடபழனியில் உள்ள பிள்ளையார் கோயிலின் ஒரு செங்கல் இடிந்து விழுந்தாலும் அந்தச் செய்திதாள்களில் முதல் பக்கத்தில் முதல் வரியில் செய்தி வரும். தலைமைத் தமிழன் ஒருவன் வீடோ நிலமோ பறிபோனாலும் அச்செய்தி வராது. எங்காவது ஒர் எளிய ஆரியப் பார்ப்பானோ ஒரு பார்ப்பன நாட்டிய நங்கையோ இறந்து போனால் ஊரே கொள்ளையில் அழிந்துபோனது போல், பெரிய அளவில் இறந்துபோனவர்களின் படம், வரலாறு, அவர்களின் பண்பு நலன்கள் ஆகிய அனைத்து விளக்கங்களுடனும், அவர்களின் இழவால் இந்நாட்டுக்கோ, கலைக்கோ ஏதோ நேரமுடியாத இழப்பு ஏற்பட்டுவிட்டது போலவும் இட்டுக்கட்டி - பூனையை யானையாக்கிச் செய்தி வரும். ஆனால் தமிழினத் தலைவர்களில் பாவேந்தர் பாரதிதாசனைப் போன்றவர்கள் மறைந்து போனாலும் எங்கோ ஒரு மூலையில் ஓரிரண்டு வரிகளில்தான் அவற்றில் செய்தி போடுவார்கள்.

கடந்த இரு மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டையில் உள்ள பார்ப்பனப் பேராசிரியர் ஒருவர் அடிபட்ட செய்தி பார்ப்பன இதழ்களில் நாள் தவறாமல் பெரிதுபடுத்தி எழுதப்பெற்று, அல்லோல கல்லோலப்படுத்தப் பெற்றது. அதன் கரணியமாகப் பல கல்லூரிகளும் மூடப்பெற்றுக் குழப்பங்கள் விளைந்தன. அதுவுமன்றி, அண்மையில் முழுக்க முழுக்கத் தமிழர்களாகவே உள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் நெடுநாளைய விருப்பப்படியும் வடவர் செய்த இரண்டகச் செயல்களின்படியும் இரண்டாக உடைந்ததைப் பயன்படுத்தி எதிர்ப்பாளராகிய ம.கோ. இராவிற்கு இவர்கள் தரும் விளம்பரங்களும், அவர் கருத்தைப் பெரிதுபடுத்திப் பொதுமக்களுக்குத் தி.மு.க.வின் மேல் வெறுப்புண்டாகும்படி செய்யும் முயற்சிகளும் மேலே கூறிய கருத்துரைகளை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும். சூத்திரர்கள் ஆட்சியில் பிராமணர்கள் வாழக்கூடாது என்பதும், அவ்வாட்சியைத் திட்டமிட்டுக் கவிழ்த்தல் வேண்டும் என்பதும் இவர்களின் வேத, புராணங்கள் பறைசாற்றுங் கொள்கை. அக்கொள்கை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் இவர்களை விட்டுப் போனதாகத் தெரியவில்லை.

அண்மையில் இராசாசி இறந்துபோனதை ‘ராஜாஜி அமரரனார்’ என்று தினமணி தலைப்பிட்டு எழுதியதுடன் அந்த (26.12.1972) நாளில் வந்த இதழின் எட்டுப்பக்கங்களிலும் அவர்களுடைய தலைவரைப் பற்றிய செய்தியே நிறைந்திருந்தது. அவரை என்னென்ன சொற்களைக் கொண்டு புகழ முடியுமோ, எவ்வெவ்வகையில் அவர்க்கு உயர்ச்சி காட்ட முடியுமோ, அவ்வச் சொற்களால் அவ்வவ் வகையிலெல்லாம் வானளாவப் புகழ்ந்து தள்ளியிருந்தது தினமணி. ‘மாமலை சாய்ந்தது’ என்னும் தலைப்பிட்டுத் தினமணிச் சிவராமன் எழுதிய அன்றைய ஆசிரியவுரையைப் படித்தவர்கள் இந்தியாவில் உள்ள எல்லா நல்லறங்களும், நலன்களும் இராசாசியோடு பறிபோய்விட்டதாகவே உணர்வார்கள். ‘விடுதலை வீரர், அபார இராசதந்திரி, சிறந்த நிர்வாகி, தீண்டாமை ஒழிப்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு பாடுபட்ட தீரர், ஆன்மீக உயர்வினால் ராசரிசியாகத் திகழ்ந்தவர். ஏழைபங்காளர். குணநலன்களின் உறைவிடம், தலைசிறந்த பண்பினர், அறநெறியின் உருவம், சனநாயகத்தின் காவலன், சமாதானப் பிரியர், முன்னணி எழுத்தாளர், மாமேதை, பாரதப் பண்பின் உயர்நிலைகளை வாழ்ந்து காட்டியவர். இத்தகைய சிறப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வேறு எவரிடமும் காணமுடியாது. அவர் தமது சாதனைகளால் யுக புருசர்கள் வரிசையில் இடம்பெறக் கூடியவர்’ – இவ்வாறு எழுதியது, தினமணி.

இங்குக் கூறப்பெற்ற புகழுரைகளுக்கு இராசாசி உரியவரா அல்லரா என்பதன்று நம் கேள்வி. இத்தகைய உரை இராசாசிக்காகத்தான் எழுதப்பெறும் என்பதன்று. பார்ப்பன இனத் தலைவராக உள்ள எவருக்கும் – காஞ்சி காமகோடிப் புதுப்பெரியவாள் மறைந்தாலும் அவருக்கும் எழுதப்பெறும் ஒரு வேட்கை உரையாகும். இராசாசி மறைந்தபொழுது திரு. ஈ.வெ. இரா அவரை ஒரு பெரியார் என்று சொன்னதற்காகவே ஈ.வெ. இராமசாமி நாய்க்கர் என்பதைத் தவிர வேறுவகையாக எழுதாத தினமணி அன்று ஈ.வெ. இராமசாமி பெரியார் என்று எழுதியிருந்ததை ஆழ்ந்து நோக்குவார்க்கு அவாளின் இன நலவுயர்ச்சி நோக்கம் விளங்காமல் போகாது. இராசாசி இருக்கும்பொழுது அவரின் அரசியல் கருத்துரைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தலைமை அமைச்சர் இந்திராகாந்திகூட, ‘அவர் ஒரு மேதை; சிக்கல்களை அலசி ஆராயும் திறனுள்ளவர்; அவர் பெரிய அரசதந்திரி என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார். அத்தகைய அறிவு வன்மையாளரின் அறிவுரைகளை அம்மையார் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது ஏனோ?

இத்தகைய நிகழ்ச்சிகளால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னெனின், பார்ப்பனர்களுக்கு வேண்டியதானால் துரும்பும் துரணாகும்; வேண்டாதெனில் தூனும் துரும்பென்று இழித்துரைக்கப் பெறும். அதற்கான ஆற்றல்கள் செய்தித்தாள் வன்மைகள் அவர்களிடம் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது என்பது தான். அத்துடன் நாம் இன்னொன்றையும் மறந்துவிடக்கூடாது. தினமணி, மித்திரன், கல்கி, விகடன், இந்து, எக்சுபிரசு போன்ற இதழ்களின் கையோங்கிய ஓரின நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். இக்கால் பல இழிவான பாலியல் இதழ்கள் வேறுமாணவர்களை பாசக் கயிறுகள் போல் பிணித்துக் கொண்டுள்ளன. அவற்றின் பெயர்களே தமிழ்மொழியை இழிவுபடுத்துவது போல் அமைந்திருக்கும். எழுத்து என்பது ஓரிதழின் பெயர். கசடதபற என்பது மற்றோர் இதழின் பெயர். ஓரிதழின் பெயர் புள்ளி. தலையெழுத்து என்றும் ஓரிதழ் வருகின்றது. இவ்வாறு பற்பல இதழ்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இவையன்றி அனுராதா, காரிகை, காமம், துக்கடா, மல்கோவா, சரசி, வாலிபம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் போலும் இதழ்கள் குப்பைத் தொட்டியில் மொய்க்கும் ஈக்களைப் போல் நாளுக்கு நாள் மிகுதியும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை பார்ப்பனரின் தூண்டுதலால் நடத்தப்பெறும் இதழ்களே! இவை தமிழ்மொழியை இழிவுபடுத்தும் நோக்கத்துடனும் அதில் உள்ள இலக்கிய இலக்கண அமைப்புகளைக் கிண்டல் செய்து தகர்த்தெறியும் எண்ணத்துடனும் பார்ப்பன விடலைகளால் வெளியிடப் பெறுவன ஆகும்.

அவற்றில் வெளிவரும் கதைகளில் வரும் பாலியல் செய்திகளை மற்றொருவரிடம் படித்துக் காட்டவோ, படிக்கக் கொடுக்கவோ முடியாது எனின், அவற்றைப் பற்றி வேறு என்ன சொல்வது? அவற்றின் தலையாய நோக்கம் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுக்க வேண்டுமென்பதும், தமிழ் இலக்கியங்களையும் நெறிநூல்களையும் அழித்துவிட வேண்டும் என்பதுமே ஆகும். மற்றும் அவ்விதழ்களில் வரும் படங்களோ இழிவின் கழிவறைகள், குமுகாயக் கேடர்களின் வெறியாட்ட உடலுறவுச் செய்திகள். அமெரிக்க நாகரிகத்தை இங்கு வேரூன்றச் செய்யும் நோக்கத்தோடு மட்டும் வெளியிடப்பெறுவன அல்ல. மறைந்துவரும் ஆரிய வேத, புராண, இதிகாசங்களுக்கு மீண்டும் மதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்தோடும் வெளியிடப் பெறுவனவாகும். மனவுயர்வை அழித்துவிடும் ஒரு கெடும்பு நிலையில் மக்களைப் படிப்படியாகக் கொண்டு ஆழ்த்திடும் அதேநிலையில், இராசாசி, காஞ்சிப் புதுப் பெரியவாள் போன்றவர்கள் சொல்லும் இராமாயண பாரத, இதிகாச விளக்கங்களும், வேத, புராண, கீதைப் பொழிவுகளும் அமிழ்ந்து போகும் உள்ளங்களுக்குக் கலங்கரை விளக்கங்கள் போல் கருத்திலும் கண்ணிலும் படவேண்டும் என்பதே அவர்கள் உட்கருத்தாகும்.ஒழுக்கக் கேடுகளுக்குத்

தூண்டுகோல்!

இக்கால் மாணவர்களுக்கிடையில் உள்ள போராட்ட உணர்ச்சிகளுக்கும் பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கும் பெரும்பாலும் பார்ப்பன மாணவர்களே தூண்டுகோலாயிருக்கின்றனர். கிருதா வைத்துக்கொள்ளுதல் முதல் தலைமயிரை அலங்கோலமாய்க் கலைத்து விட்டுக் கொள்ளுதல், உடைகளைப் பல வண்ணங்களிலும் வகைகளிலும் தைத்துக் கொள்ளுதல், இப்பி போல் நடந்து கொள்ளுதல் வரை அனைத்துக் கோமாளிக் கூத்துகளுக்கு நிலைக் களனாக இருப்பவர் பார்ப்பன மாணவர்களே. இத்துறையில் பார்ப்பனப் பெண்களும் விலக்கல்லர். நோய் குடிகொண்டுள்ளதற்குப் பார்ப்பனர்களின் அமெரிக்கப் பாலியல் வெறியே அடிப்படைக் கரணியம். சென்னையில் பார்ப்பன இளைஞர்கள் சிலரிடம் உள் வெளிநாட்டுப் பாலியல் இதழ்கள், படங்கள், திரைப்படச் சுருள்கள் முதலியவை இருப்பதாகக் கேள்விப்பட்டு மிக வருந்த நேரிட்டது. இவ்வாறு நாட்டை அழிம்பு நிலைக்குக் கொணரும் பார்ப்பன இனம், அதற்கு வேறு எவரையோ கரணியங் காட்டித் தம் சமயத்துறைக்கு மறைமுகமாக நல்ல வரவேற்பைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

சமயத்துறையில் ஆரியப் பார்ப்பனர் செய்யும் அடாத செயல்களுக்கு அளவே இல்லை. கடவுளர்களுக்கு இவர்களே சொந்தக்காரர்கள்போல் இவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் மற்ற இனத்தாரை வெறுப்படையச் செய்கின்றன. அலுவலகங்களில் நிகழ்த்தப் பெறும் கருவிப்பூசை (ஆயுத பூசை) கலைமகள் பூசை (சுரசுவதி பூசை) முதலியவற்றிற்கும் அவர்களே கரணியம். விளக்கணி விழா (தீபாவளி) நாட்களில், குறைந்தது பத்து பதினைந்து நாட்கள் தெருக்களில் நடமாட முடியாமல் செய்யும் வகையில் குவியல் குவியலாக வெடிகளைக் கொளுத்திப் போட்டுக் காட்டுத்தனமாக வெறிக்கூச்சல் இட்டுக்கொண்டு ஊரையே அலைக்கழிப்பதும் அவர்களே ! நம் மக்களில் ஒரு சில செல்வக் குடும்பங்களே அவர்களை பின்பற்றி அவ்வாறு செய்கின்றன. இவர்கள் விளக்கணி விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப் பாடிக்கொண்டு தெருவலம் வருவதும் ஊரை இவர்களுக்காகவே ஆக்கிக் கொள்வதும் போல இல்லையா? அக்கால் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கவும் இடையூறு நேர்வதை அரசும் கவனிப்பதில்லை. இந்தப் பாவைப் பாடல் வழக்கம் தேவைதானா? இந்தப் பாடலைப் பாடாத நாட்களில் விடிவதே இல்லையா? இவர்களின் இதழ்களும் விளக்கணி விழாவுக்காக மலர்கள் வெளியிடுகின்றனவே தவிர, பொங்கலுக்கு வெளியிடுவதில்லை.

பொது வாழ்க்கையில் இவர்களின் கட்டுப்பாடு தனி. இவர்கள் வாழும் பகுதிகளில் வேறு இனத்தவர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு வீடுகள் கிடைப்பதே அரிது. பல குடியிருப்புகள் கொண்ட பெரிய வீடுகளில் இவர்களைத் தப்பித் தவறிக் குடியமர்த்தினால் ஒரிராண்டுகளில் அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டுப் பார்ப்பனர் குடும்பங்களாகவே பார்த்துக் குடியமர்த்திக் கொள்ளுதல் இவர்கள் பழக்கம். சில வீட்டுப் பகுதிகளில் பிராமணர்களுக்கே வீடு விடப்படும். (To let only for Brahmins) என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம். இவர்கள் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்களை இவர்கள் என்றும் மதிப்பு வைத்தே அழைப்பதில்லை. அவர்களையும் சரி, பார்ப்பன அதிகாரிகளின்கீழ்ப் பணியாற்றும் பணியாட்களையும் சரி, அடே, அடி என்னும் சொற்களால்தாம் அழைக்கின்றனர். அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களும்கூட அவர்களை வாய்கூசாமல் ‘அடே, அடி’ எனக் கூப்பிடுவதைக் கண்டு மனம் நோக வேண்டியுள்ளது.

நிலா மண்டிலம் போகும் இக்காலத்திலும் பிற இனத்தவரைத் தொட்டால் தீட்டு என்று கடுமையாகக் கருதும் பார்ப்பனர்கள் பெரும் பகுதியும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் வீடுகளில் பிற இனத்தவரை உள்ளேவிட இன்றுகூட இசைவதில்லை. இராசாசியின் தீண்டாமைப் போராட்டத்தைப் பாராட்டும் தினமணிச் சிவராமன்கள் இவ்வகையில் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கண்டால், இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கே என்பது தெற்றெனப் புலப்படும். துக்ளக்கில் இவர்களுக்காகப் பரிந்து எழுதிவரும் அரைப் பிராமணனான செயகாந்தனுக்குப் பார்ப்பன இனத்தவரின் முழுக்கேடுகளும் தெரிய வழியில்லை. அவர்களின் நச்சுத்தனத்தை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அகற்ற வழியில்லையானால் அவர்களை எப்படித் தமிழ் இனத்தோடு ஒப்ப எண்ணுவது? தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் என்று கருதப்பட வேண்டும் என்றால், ஆங்கிலம் பேசுகின்ற தமிழரை ஆங்கிலேயர் என்றன்றோ கருதுதல் வேண்டும்? ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கரைக்கூட ஆங்கிலேயர் என்று அவர்களே ஒப்புக்கொள்ளாதபோது, தமிழ் பேசும் எவரும் எப்படித் தமிழர் ஆவார்? வேண்டுமானால் செயகாந்தன் என்னுடன் வரட்டும்; எனக்குத் தெரிந்த ‘சமசுக்கிருத’ ஆசிரியர் பலர் தமிழர்களாய் உள்ளனர். அவர்களை ‘பிராமணர்கள்’ என்று அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று பார்ப்போம். சமசுக்கிருதம் பயிற்றும் ஆசிரியர் ஒருவர் தமிழராகவிருந்தார் என்பதற்காக, அவரிடம் அம்மொழியைக் கற்க விரும்பாத பார்ப்பன மாணவர்கள் அத்தனை பெயரும் இந்தி வகுப்புக்குச் சென்றதை நானறிவேன். இப்பொழுதும் நிலை மாறிவிடவில்லை. அண்ணாமலையில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த ஒருவர், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தும் பார்ப்பனர் அவரைப் போற்றவில்லை.

பார்ப்பனப் பெண்களில் சிலர் நம் தமிழ இளைஞர்களை வறிதே வந்து மணந்துகொள்கின்றனர். பார்ப்பன வீடுகளில் பணியாற்றும் தமிழ இளைஞர் சிலர் பார்ப்பனப் பெண்களை விரும்பி மணந்து கொள்வதையும் பார்க்கின்றோம். எனினும் பார்ப்பன இளைஞர்கள் தமிழ்ப் பெண்களை மணந்துகொண்ட செய்தி மிகவும் அரியது. தமிழ் இளைஞர்கள் பார்ப்பனப் பெண்களை மணந்துகொள்ளும் வகையில் பல அடிப்படைக் கோளாறுகளே கரணியங்களாக இருக்கின்றன. அவ்வாறு மணந்து கொண்ட பெண்களும் அவ் விளைஞர்களின் கொள்கைகளையும் போக்குகளையும் அறவே திசைதிருப்பி விட்டு விடுகின்றனர். இவற்றிற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். பார்ப்பனத் தமிழினக் கலப்பு தவிர்க்க முடியாததே! அதனால் பார்ப்பனர்கள் தமிழர்களைத் தழுவிக் கொண்டனர் என்று கூற முடியாது. மக்களினம் எல்லாம் ஒன்றுதான். அதை வரவேற்கவே செய்வர். ஆனால் கொள்கை வேறுபாடு போன்றவையே இன, மொழி வேறுபாடுகள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றினாலன்றி ஒரு நிலத்தில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை ஓரினத்தவர் என்று கூறிவிட முடியாது.

பார்ப்பனர்களை நாம் தமிழர்கள் என்று ஒப்பினாலும் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பதுபோல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார் பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செருமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதைச் செயகாந்தன்கள் உணரவேண்டும்.

ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத கரணியத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியின் பரிமாறி (Butllor) பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். 'காவிரி ஜலம், கலாசார பலவினம்', ‘பாரத ஞானபூமி' என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்’ ‘இருதய வீக்னசு’ ‘பாரத நாலெட்ச் பூமி’ என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், ‘வாய்மை மேவ் செய்தா’ ‘பண்பாட்டு ஞானீபட’ என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!தமிழ்மொழியை மட்டும் அவர்கள் வந்து ஒண்டுதற்குரிய குட்டிச் சுவராக்கலாம். அவர்கள் மொழியான சமசுக்கிருதத்தை மட்டும் சிதைக்கக்கூடாது என்பதில் என்ன நடுநிலை உள்ளது? மொழித் துய்மையும் இனத் தூய்மையும் எல்லா மொழிக்கும் இனத்துக்கும் தானே. மொழியிலும் இனத்திலும் தூய்மை பார்க்க வேண்டா என்பதும் எல்லா மொழிக்கும் இனத்துக்குமான பொது அறமாகத் தானே இருத்தல் வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குச் சார்பானவர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தங்களுடைய மனம் போனவாறு எழுதவும், மக்களிடையே எளிதில் பரப்பவும் ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே பிறர் கருத்து வலிவிழந்து போய் விட்டதாகக் கருதிவிட முடியுமா?

தேசிய மொழித் திருட்டு விளையாடல்!

இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63-இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளத்தங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் பேசுபவர் ஏறத்தாழ ஐநூறு பேர்களே ! இந்த ஐநூறு பேர்களின் மொழியைக் கற்றுக்கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்பிக்க 12 பல்கலைக் கழகங்கள் இதுதான் தேசிய மொழித் திரு(ட்டு)விளையாடலா?

மேலும் தமிழ்மொழிப் புலமையிலும் வேறுபாடு காட்டப் பெறுகின்றது. வடமொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழ்மொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழே தெரியாத சமசுக்கிருதப் பார்ப்பனப் புலவராகிய சுனிதிகுமார் சட்டர்சி போன்றவர்கள் தமிழுக்கதிகாரிகள்! தமிழையும் பிற திரவிட மொழிகளையும் சமசுக்கிருதம், இலத்தீன், கிரேக்கம், சாக்சானியம் போன்ற மொழியிலக்கணங்களையும் பழுதறக் கற்ற பாவாணர் போன்றவர்கள் வெறும் தமிழ்ப்புலவர்கள். இந்த வேறுபாட்டு நிலை உள்ள வரை பார்ப்பனர்களைத் தமிழர்களோடு மொழி, இன நிலையில் இணைத்துக் கருதமுடியுமா?

மொழித் தூய்மையைப் பார்ப்பனர்களும் அவர் அடிவருடிகளும் ஒப்புக்கொள்வதே இல்லை. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு மொழி கற்க வரும் மாணவ அறிஞர்களிடம் தங்களுக்குள்ள மேனிலை வாய்ப்புகளால் பிறரினும் முந்திக் கொண்டு போய்த் தாங்கள் பேசுவதே மொழியென்றும் எழுதுவதே எழுத்து என்றும் அவர்களிடம் இட்டுக்கட்டி உரைப்பதும், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தீபம் முதலிய தமிழ்க்கொலை செய்யும் ஏடுகளையே இலக்கிய ஏடுகள் என்று அவர்களிடம் காட்டி விதந்துரைப்பதும், அம் மாணவ அறிஞர்களின் பரிவால் மொழி ஆய்வுக்கென்றும் இலக்கிய வளர்ச்சிக் கென்றும், அமெரிக்கா, செருமனி முதலிய மேலை நாடுகளினின்று அனுப்பப் பெறும் அளவிறந்த பொருளுதவிகளைத் தாங்களே அமுக்கிக் கொள்வதும் அன்றாட நடைமுறைகளாகவிருக்கின்றன. இத்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் கள்ளத்தனங்களுக்கும், முல்லை மாறித்தனங்களுக்கும் ஒரு வரம்பே கிடையாது. சாகித்திய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி என்றும் நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீடப் பரிசு என்றும், பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் இனத்தவர்க்கே தேடிப் பிடித்துத் தரப்பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப் பெறுவதானாலும் அவர்களின் அடிமைகளுக்கே தரப்பெறுகின்றன.

இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறானவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறுபட்ட நாடக வடிவில் உள்ளதுமான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு - அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே சாகித்திய அகாடமி பரிசு கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் அவர்தம் ஆற்றல்களையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கியத் திறனிலும், பா வன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும் அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப்பெறும் வகையில் உள்ள மாறுபாடுகளுட்ம கொஞ்ச நஞ்சமல்ல.

மேலும், தேசிய விருதுகளாகிய ‘பாரத ரத்னா’, ‘பத்மவிபூசண்’ ‘பத்மபூசண்’ போலும் உயர்ந்த பாராட்டுகளும் பெரும்பாலும் அவர் இனத்தவர்களுக்கும் வடநாட்டவர்களுக்குமே கொடுக்கப் பெறுகின்றன. எங்கேனும் தகுதி வாய்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு அவ்வரிசையில் கடைநிலையதான ‘பத்மஸ்ரீயே’ தரப் பெறுகின்றது. இதுவரை மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா'வை பெற்ற பதினைவரில் ஒருவரும் தமிழரல்லர். தமிழ் பேசுபவராகக் கருதிக் கொடுக்கப் பெற்ற திரு. இராசாசியும் பிராமணரே. மற்றுத் தமிழர் தொடர்புள்ள திரு. இராதாகிருட்டிணன் அவர்களும் சி.வி. இராமனும் கூடப் பிராமணர்களே. இந்தியா விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரிலும் பாரத மணியாகத் திகழத் தக்கவர் ஒருவரும் இலர் என்று அவர்கள் கருதுவார்களானால், இந்தத் தமிழர்களும், தமிழ்நாடும் வடநாட்டுத் தலைமையின்கீழ் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில் என்ன கட்டாயம் இருக்கின்றது?

தனிப்பட்ட ஒருவர் செய்யுந் தீங்கைவிடக் கொடியது. குறிப்பிட்ட ஓரினம், பொதுவான ஒருவகை மொழி, இன வெறுப்புடன், பல நூற்றாண்டுகள் இத் தமிழகத்தில் இயங்கி வருவது பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராக வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர் திறத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்! இவை யெல்லாவற்றையும் விடுத்து, மாந்தர் குலம் எல்லாமும் ஒன்றுதான் என்றால் மத, இன, குல வேறுபாடுகளும் மாந்தரின் உயர்வு தாழ்வு முறைகளும் அடியோடு தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.

வானொலிக் கொட்டங்கள் !


வானொலித்துறை அவர்கள் கைகளில் கிடைத்துவிட்டது என்பதற்காக அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிக்கும் கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும் அருள் வாக்கு என்னும் பெயரால் அவர்களின் வேத, புராணப் பொய்யுரை புளுகுரைகளே பெரிதும் பரப்பப்படுகின்றன. இல்லை திணிக்கப்பெறுகின்றன என்றே சொல்லலாம். பிற சமயச் சமன்பாடு என்னும் போர்வையில் ஓரிரு கால் இசுலாமிய, கிறித்தவ மதக் கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. எனினும் அவற்றை யெல்லாம் எடுத்து விழுங்கும் அளவுக்கு இவர்களின் வேத புராணக் கருத்துகள் வலிந்து ஒலிபரப்பப் பெறுகின்றன. அதுவுமின்றி இடையிடையே ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளும் கருத்தளவிலோ மொழியளவிலோ தமிழ் இனத்திற்கு எதிர்ப்பாகவே இருக்கின்றன. அவற்றில் வரும் கதைகள், பாட்டுகள், நாடகங்கள், உரையாடல்கள் அனைத்தும் பார்ப்பனர் வீட்டுப் பழக்க வழக்கங்களை அடியொட்டியும், அவர் வழங்கும் சிதைவுச் சொற்களையும், இழுப்புச் சொற்களையும் கொண்டுமே விளங்குகின்றன.

வானொலிப் பாடல்களைக் கேட்கவே முடியவில்லை. திரைப்படங்களில் வரும் இழிந்த, அருவருப்பான இருபொருள் கொண்ட இழுப்புப் பறிப்பான கெக்கலிசை முக்கல் முனகலோசை கொண்ட பாடல்களாகவே பொறுக்கியெடுத்து ஒலிபரப்பப்படுகின்றன. அதுவும் இரவு நேரங்களில் படுக்கையறைத் தொடர்பாகப் பச்சையான பொருள் தரக்கூடிய பாடல்களையே அங்குள்ள பார்ப்பனர்கள் தேர்ந்து ஒலிபரப்புகின்றனர். தமிழில் இசையும் இல்லை, நல்ல கருத்துள்ள பாடல்களுமில்லை என்று மக்கள் தாமே உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே அப்படிச் செய்கின்றனர். தமிழ்மொழியை, இசை, உரை, நாடகம் அனைத்துத் துறையிலும் இழிவுபடுத்த வேண்டுமென்பது இவர்கள் கருத்து. கருநாடக இசை என்பதாகக் கூறித் தெலுங்குத் தியாகராயர் பாடல்களே திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்படுகின்றன. இவை இரண்டையும் மாறி மாறி ஒலிபரப்புவதில் அவர்களுக்கு ஒர் உள்நோக்கம் இருப்பதாகவும் கூறலாம். தமிழ் மொழிப் பாடல்களைப் பகடி செய்வது போலும், தமிழ்ப் பாடல்கள் என்றால் இப்படித் தான் கீழ்த்தரமாக இருக்கும் என்று காட்டுவது போலும், மிகவும் இழிவான பொருள் தரும் இழுப்பிசைப் பாடல்களையே பொறுக்கி ஒலிபரப்புவது, அவர்களின் சமயக் கருத்துகள் நிறைந்த தெலுங்கிசைப் பாடல்களில் ஒர் உயர்ச்சியைக் காட்டுவதற்காகவே ஆகும். இல்லெனில், இக்காலத் திரைப்படப் பாடல்களிலேயே ஒரளவு உயர்ந்த பொருள் கொண்ட பாடல்களும் இருக்க அவற்றை விட்டு விட்டு, இழிந்த இசையும் பொருளும் கொண்ட பாடல்களையே பொறுக்கிப் போடுவார்களா?

நம்மவற்றின் இழிவையும் அவர்களின் சிறப்பையுமே விளம்பரப் படுத்துவது அவர்களின் பல்வேறு தந்திர முறைகளுள் ஒன்றாகும். அவர்களுக்கு எது பிடித்ததோ, சார்பானதோ அதைப் பனிமலை என்பார்கள். அவர்களுக்கு எதைப் பிடிக்காதோ, எது சார்பு இல்லாததோ, அதைக் குப்பைமேடு என்பார்கள். அவர்கள் கதைகளும் அவ்வாறான நோக்கில் வரைந்தவைதாம். இராமனை மாந்தருள் மிகவுயர்ந்தவனாகக் கற்பிப்பார்கள். இராவணனை (அவன் ஆரியர்களுக்கு மாறானவன் என்பதால்) மிகவும் தாழ்ந்தவனாகக் கற்பித்து உரைப்பார்கள். வானொலிப் பாடல்கள் தேர்விலும் அதில் வரும் கதை, நாடகங்கள், பாட்டுகள் இவற்றைக் கொண்டும் இவர்களுக்குத் தமிழ்மொழியின் மேல் உள்ள வெறுப்பையும் சமசுக்கிருதத்திலும் இவர்களின் வேத, புராண, இதிகாசங்களில் கொண்ட வெறியையும் நன்கு தெரிந்துகொள்ளலாம்.

தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு இவர்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்த ஒன்று. எப்பொழுது இராசாசியின் வாழ்த்தை மட்டும் பெற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியைத் தி.மு.க.வினர் புறக்கணித்தனரோ அன்றிலிருந்தே தி.மு.க. அழிந்துபோக வேண்டும் என்பது இவர்கள் குறிக்கோள். கடந்த இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக்கூடாது என்பதற்காக இவர்கள் இல்லாத கடவுளர்களை யெல்லாம் வேண்டாத வேண்டுதல் செய்ததைத் தன்மானத் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கலாம். வானொலியிலும் இதே வகை வெறுப்பை அன்றாடம் இவர்கள் உமிழ்ந்து வருவதை அறிகையில் நாம் அவர்களின் அழிம்புகளை மற்தது, அவர்கள்மேல் அன்பு காட்ட முடியாது. திரு. ம.கோ. இராமச்சந்திரன் இவர்களுக்கு வேண்டியவராக என்றும் இருந்ததில்லை. திரைப்படங்களில் அவரின் ஆடல் பாடல்களும் உரையாடல்களும் தி.மு.கவைச் சார்ந்திருந்தமையால் அவரை இந்தப் பார்ப்பனர் என்றுமே வெறுத்து வந்துள்ளனர். ஆனால், அண்மையில் திரு. ம.கோ. இராமச்சந்திரன் ஆளுங்கட்சியாகிய தி.மு.க.வை வேறு சில அரசியல் காரணங்களுக்காகக் கண்டித்து வெளியேறி, வேறொரு கட்சியை அவர்களுக்கு எதிராகத் தொடங்கிக் கொண்டார் என்பதற்காகவே, அந்தப் பிரிவு ஏற்பட்ட நேரத்திலும் சரி, அதற்குப் பின்னும் சரி, திரைப்படங்களில் அவர் பாடுவன போல் உள்ள பாடல்களாகவே பார்த்துப் பொறுக்கி அவற்றையே ஒலிபரப்பி வந்ததையும் வருவதையும் உணர்கின்றவர்கள். இவர்களின் மனக் காழ்ப்பையும் நடுநிலை திறம்பிய குறும்புத் தனங்களையும் நன்றாக அறியலாம்.

சென்னை, திருச்சி, புதுவை ஆகிய மூன்று வானொலி நிலையங்களிலும், தில்லியில் உள்ள ‘விவித பாரதி'யிலும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனர்களே கொட்டமடித்து வருகின்றனர். அவற்றில் உள்ள பார்ப்பனத்திகள் பேசுகின்ற திண்ணைப் பேச்சுகளைத் தன்மானமுள்ள எந்தத் தமிழனாலும் காதுகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. மொழிப் பற்றும், இனப் பற்றும் அற்ற தமிழின முண்டங்கள் சிலரின் தலையாட்டுதல்களே தமிழர்களின் ஒருமித்த கருத்துகளாகிவிட முடியாது.

புதுவை வானொலி நிலையத்தில் காலை நேரத்தில் ‘கிள்ளைகளே கேளுங்கள்’ என்னும் பகுதியில் அங்குள்ள பார்ப்பனத்தி ஒருத்தி ஒருநாள் கீழ்வருமாறு பள்ளி செல்லும் பிள்ளைக்கு அறிவு(!)றுத்தினாள்.

என்ன குழந்தைகளே! காலையில் ஸ்நானம் பண்ணி டிரஸ், செய்துகொண்டு ஸ்கலுக்குப் புறப்பட்டுட்டீங்களா? உங்கள் புக்ஸ், நோட்புக்ஸ், பென்சில், பேனாக்களை யெல்லாம் டயம் டேபிள் பிரகாரம் கரெக்டா எடுத்து வச்சீட்டிங்களா? டிபன் சாப்பிடறதுக்குள்ளே நான் சொல்றதையுங் கேளுங்க’ என்று தொடங்கி ‘அவாள்’ பார்ப்பனச் சேரி மொழியிலே இரண்டு மூன்று நிமையயங்களிலே நஞ்சையே கொட்டினாள். இப் பார்ப்பனப் பெண் ஏதோ ஆங்கிலேயக் குழந்தைகட்குச் சொல்வது போல் தோன்றியதே தவிர, தமிழ்நாட்டில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்குச் சொன்னதாகத் தெரியவில்லை. குளித்தலை ஸ்நானம் என்றதையும், உடையுடுத்தலை டிரஸ் செய்தல் என்றதையும், பொத்தகங்களையும், சுவடிகளையும் புக்ஸ், நோட்புக்ஸ் என்றதையும் பிற சொற்களையும் கேட்கும்பொழுது இவள் தமிழைக் கெடுப்பதற்காக வேண்டுமென்றே சொன்னதாகத் தெரிகின்றதே தவிர, அங்குள்ள ஆங்கிலச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் அவளுக்குத் தெரியாமல் அப்படிச் சொல்லிவிட்டாள் என்று நினைக்கத் தோன்றவில்லை. இன்னொரு முறை அதே வானொலியில் அந்தப் பார்ப்பனத்தியே ‘மார்கழி’ மாதம் அதிகாலையில் எழுந்து குளித்துப் பாவைப் பாடல்களைப் பாராயணம் பண்ணினா, புயல் அடிக்காது; கடல் பொங்காது; பசுக்களெல்லாம் குடங் குடமாகப் பால் பொழியும்; பயிர்களெல்லாம் வானத்தளவு வளர்ந்து பயன் தரும்” என்று கூறுவதைக் கேட்க நேர்ந்தது.

அதற்குச் சில நாட்கள் முன்னர்தான் தமிழகம் கடுமையான புயலாலும், மழையாலும் மிகவும் துன்புற்றது. அந்த நேரத்தை எவ்வாறு தம் பழங் கருத்துகளுக்குப் பக்கத் துணையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் பார்ப்பனர் என்பதைப் பாருங்கள். இராமாயண, பாரதக் காலத்தில் உள்ள மக்களாக நம்மை கருதிக் கொண்டு அவள் புளுகினதைக் கேட்கையில் ஒருபுறம் எரிச்சலும், ஒருபுறம் வருத்தமும் வந்தன. இவ்வளவு உயர்ந்த கருவி இவர்களின் கைகளில் கிடைத்துக் கொண்டு, எவையெவற்றிற்கோ பயன்பட்டுச் சீரழிகின்றதே என்பதில் எரிச்சலும், நிலவு மண்டிலக் காலத்திலும் நம்மவர்களை இந்த ஆரியப் பார்ப்பனர்கள் இப்படி ஏமாற்றுவார்களானால் நம் முன்னோர்களை எப்படி ஏமாற்றியிருப்பார்கள் என்பதில் வருத்தமுமே எஞ்சின.

மேலும் வானொலியில் நடக்கும் அழிம்புகளைச் சொல்வதானால் ஏடே கொள்ளாது. அதில் கொள்ளை போகும் பணம் தமிழ்மொழியை அழிக்கவும், தமிழர்களை ஒடுக்கவுமே செலவிடப்பெறும் தமிழர் பணமாகும். அப்பணத்தைப் பார்ப்பனர்கள் பங்குபோட்டுக் கொள்ளும் வகைகளைச் சொல்லி முடியாது. எவ்வளவு சிறந்த மொழிப் புலவரானாலும் இசைப் புலவரானாலும் தன்மானமுள்ள தமிழர்களானால் அவ் வானொலி நிலையங்களின் முற்றங்களிலும் ஒதுங்க முடியாது.

தமிழகத்தின் தனிப்பெரும் புலவர்களாகிய மறைமலையடிகள், பாவாணர் ஆகியோரின் குரல்களை இவ் வானொலி நிலையங்கள் ஒருமுறைகூடப் பயன்படுத்திக் கொண்டதே இல்லை. ஆரியப் பார்ப்பனரின் தமிழ் அடிவருடிகளே வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கு அங்காந்து கிடந்து இடம்பிடிக்கின்றனர். பார்ப்பனரின் யானை வாய்களுக்குத் தப்பி விழும் எச்சில்களே இவ் வெறும்புகளுக்கு நல்லுணவாகப் பயன்படுகின்றன. அப்பெருமையில் இவர்கள் தலை கால் புரியாமல் நடந்துகொள்ளுகின்ற வகைகள், இவ் வேதுங்கெட்ட தமிழர்களுக்கும், அவர்களின் கைகளில் உள்ள உலகின் உயர்ந்த மொழியாகிய தமிழுக்கும் மறைமுகமாக கேடுகளாகவே விளங்குகின்றன. இவ்வானொலிப் புலவர்கள் வடமொழிப் பெயர்களாகக் காட்டுகின்ற இசைப்பெயர்கள் முழுவதும் திரிக்கப் பெற்ற தூய தமிழிசைப் பெயர்களே என்பதைத் தமிழிசை வல்லோர் நன்கு உணர்வர். இசைப்பேரரசு, பண்ணாராய்ச்சிப் பாவாணர், குடந்தை சுந்தரரேசனார் இவ்வகையில் செய்துவருகின்ற ஆய்வுரைக்கு எந்தப் பார்ப்பானும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களுக்கு முந்தைய விபுலானந்த அடிகளின் அரும்பெரும் ஆய்வுரைகளும் புறக்கணிக்கப் பெறுகின்றன. இற்றைக் கருநாடக இசை முழுவதும் தூய தென்தமிழ் இசையேயாகும் எனத் தம் துண்மாண் நுழைபுல வன்மையால், உரக்கப் பேசி மெய்ப்பித்து வருகின்றார் என்னும் கரணியத்தாலேயே, இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரேசனார்க்கு வானொலியிலும், பிற இசை நிகழ்ச்சிகளிலும் இப் பார்ப்பனர்கள் இடம் தருவதே இல்லை. இதையறிந்து ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

நாம் தமிழுக்கோ தமிழினத்திற்கோ ஆக்கம் உண்டாகும்படி பட்டிமன்றமோ, மாநாடோ ஊரே வியக்குமளவிற்கு நடத்தி வானொலித் துறைக்குச் செய்தியறிவித்துக் கொண்டாலும்கூட, அவர்கள் வந்து அதைப் பதிவதும் இல்லை; வானொலியில் ஒலிபரப்புவதும் இல்லை. ஆனால் அவர்கள் இன ஆக்கத்திற்கும் பெருமைக்கும் உகந்தவாறு, இராமாயணச் சொற்பொழிவோ, பாரதக் கதைப் பட்டிமன்றமோ, போன்று ‘அவாள்’ இன நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் ஒரு நிகழ்ச்சியைக்கூட விடுவதில்லை. எங்கேனும் ஒரு சிறிய இடிந்த கோவில் புதுப்பிக்கப் பெற்றுக் குடமுழுக்குச் செய்யப் பெற்றால்கூட அதன் மேளதா சங்கள் உட்பட அத்தனை நிக்ழச்சிகளையும் ஏதோ ஒர் ஊசைப் பார்ப்பானையோ, பார்ப்பனத்தியையோ விட்டு நேர்முக வண்ணனை செய்து வானொலியில் போட்டுவிடுவார்கள். ஒருமுறைக்கு இருமுறைகூட அத்தகைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பெறுவதை ஊன்றிக் கவனிப்பார் அறிந்திருக்கலாம். அவர்கள் வீட்டுச் சமையல் திறங்கள் கூட, அம்மாமிகளால் அன்றாடம் வானொலியில் திக்கித் திக்கிச் சொல்லப் பெற்று அமர்க்களத்தப்படுகின்றது என்றால், பிறவற்றிற்குக் கேட்கவே வேண்டியதில்லை.

‘கிரிக்கெட்’ என்னும் மட்டைப்பந்து விளையாட்டின் நேர்முக வண்ணனையை வானொலியில் போடுவதுங்கூட அவாள் இனத்துக்கான ஒரு பொழுதுபோக்கிற்காகவே ஆகும். அக்காலங்களில் சிறிய வானொலிப் பெட்டியும் கையுமாக அலையும் அவாள் இனச் சில்லுண்டிகளும் இப்பி இளைஞர்களும் இளம் பெண்டிரும் தெருவுக்குத் தெரு, அலுவலகத்திற்கு அலுவலகம் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லை. நம் இளைஞர்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதே இல்லை. சிற்சில இடங்களில் அவர்களுடைய பகடிப் பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் தமிழின இளைஞர்களைக் கூட அரிதாகத்தான் பார்க்கவியலும். அண்மையில் தஞ்சையில் உ.த.க. நடத்திய தமிழன் பிறந்தகக் கருத்தரங்குச் செய்தியை வானொலிக்கும் செய்தித்தாளுக்கும் அறிவித்திருந்தும் அதைப்பற்றி ஒரு செய்தியும் போடாத வானொலியும் பார்ப்பன இதழ்களும் திருவனந்தபுரத்தில் ஐந்து நாட்கள் நடத்திய இராமாயண ஆராய்ச்சி மாநாட்டைப் பற்றிய செய்திகளை மிகுந்த அளவில் விளம்பரப்படுத்தின. மொத்தத்தில் சொன்னால் வானொலி நிலையங்கள் பார்ப்பான் வீட்டுச் சமையலறைகள்! அவாள் இனம் சேர்ந்து அரட்டையடிக்கும் தெருத் திண்ணைகள்! அவர்கள் ஒருங்குகூடிப் பொழுதுபோக்கும் திருவல்லிக்கேணிக் கடற்கரைப் பகுதிகள் என்று சொல்லலாம்.

பொதுவாக வானொலித் துறையிலும் சரி, கலை, இசை, நாடகத் துறையிலும் சரி ஒன்றால் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவனடி தழுவிய தமிழக் கேடர்களாகவோ, அவன் வேத, புராண, இதிகாசக் கருத்துகளைப் பரப்பும் வகையில் பாடுபடுபவனாகவோ இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் முன்னுக்கு வரமுடியும்; அப்பொழுதுதான் அவனை அவர்களுடைய தாளிகைகள் புகழும்; வானொலிகள் இடந்தரும்; நாடக மேடைகள், திரை மேடைகள் அவனுக்கு வழிவிடும். இல்லெனில் அங்கங்கே அவனுக்குத் தாழிடப்படும்.

திரைப்பாட்டாசிரியர் கண்ணதாசன், தி.மு.க.வினின்று விலகி அவர்களைத் தழுவிக்கொண்ட பின்னரும், ஏ.பி. நாகராசன் அவர்களின் புராணக் கருத்துக் கதைகளையே தொடர்ந்து படமெடுத்த பின்னரும், நாடக நடிகர் மனோகர் அவர்களைச் சார்ந்து அரங்கேற்றின பிறகும், திருவாட்டி இசைப்பேரரசி எம்.எசு. சுப்புலட்சுமி அவர்கள் இனமாகவே மாறிய பிறகுந்தான் அவர்களைப் பார்ப்பனர்கள் வானளாவப் புகழத் தொடங்கினர். ம.கோ. இராமச்சந்திரனை இராசாசி வாழ்த்திய பின்னரே பார்ப்பனர் இதழ்கள் அவருக்கு விளம்பரங்கள் கொடுத்தன. அவர்களின் இனத்தில் ஒரு சிறுவனோ சிறுமியோ கலையுலகத்தில் கால் வைத்தாலும் சரி, அவர்களைப் பற்றி அவர்களின் இதழ்கள் எழுதுகின்ற பாராட்டுரைகளும், புகழ்ச்சி மாலைகளும், நம் இனத்தவரின் மிகச் சிறந்த கலைஞர் ஒருவருக்குக் கூடக் கிடைப்பதில்லை. இவ்வாறு கலைத்துறையும் வானொலித்துறையும் பார்ப்பனரின் அனைத்ததிகார வல்லாண்மையின் கீழ், நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் அவர்களின் சூழ்ச்சிக்கிடையில் சிக்குண்டு ஆட்பட்டிருப்பதைப் பார்த்தால், தமிழர்கள் இனி எதிர்காலக் கலையுலகத்தில் இடம்பெறுவார்களா?, பெற்றால் முன்னுக்கு வருவார்களா என்று எண்ணவே அச்சமாகவிருக்கின்றது.

நூல் வெளியீடுகளிலும் பார்ப்பனர்கள் நுழைந்து குழப்பாமல் இல்லை. செய்தித்தாள் துறையில் இவர்கள் எப்படி உள்ளே புகுந்து குட்டை குழப்புகின்றனரோ, அப்படியே நூல் வெளியீட்டுத் துறையிலும் மிக மும்முரமாக ஈடுபட்டுத் தம் பழைய வேத, புராண, இதிகாசங்களுக்கே மிகுந்த விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். பொதுவாகவே இவர்கள் எழுதுகின்ற தமிழ்நடையோ கருத்துகளை வெளிப்படுத்தும் முறையோ தனி அந்நடையைக் கொண்டே கருத்துகளை வெளிப்படுத்தும் முறையைக் கொண்டே இவர்களின் உட்கிடையை உணர்ந்துகொள்ளலாம்.

‘காவிரித் தண்ணிர்’ என்று இவர்கள் எழுதுவதே இல்லை. ‘காவிரி ஜலம்’ என்றுதான் தினமணி எழுதும். அண்மையில் தினமணியில் பொங்கல் திருவிழா மகர சங்கராந்தி என்றே குறிக்கப் பெற்றது, இராசாசி நினைவாலயத்துக்கு இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக்கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிபட்ட இடங்களையெல்லாம் புண்ணிய தலமாகக் கருதவேண்டும்’ என்று ‘சுதந்திர’க் கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளியிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண்பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள்.... மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் துய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத்தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது. இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த இந்த ‘பூமி’யை இறைவன் காப்பாற்றட்டும்″.

– எப்படி? துக்ளக் ‘சோ’வின் தூக்கி வைத்துப் பேசும் தன்மை, ‘அவாள்’ இனத்துத் தலைவர் என்றால் உலகத்துக்கே தெய்வம்; அவர்களைவிட மேம்பட்டவன் ஒருவனும் இருக்க முடியாது; அல்லது இருக்கவும் கூடாது என்பது பார்ப்பனர்களின் ஒருமித்த கருத்து. இராசாசிக்கென்றே சில தனித்தன்மைகள் உண்டு. அவை அவருக்குத் தான் சொந்தம். அவர் தன்மைகள் பிறர்க்கு எப்படி வரும்? பெரியார் இராமசாமியின் தனித்தன்மைகள் எப்படி துக்ளக் இராமசாமிக்கு வரமுடியாதோ, அப்படியே இராசாசியின் தன்மைகள் ஒரு கந்தசாமிக்கு வரமுடியாது. மற்றபடி இராசாசி என்ன உலகத்துக்கே, அல்லது இந்தியாவுக்கே தெய்வமா? அவரைப் போல் நாட்டிற்கு உழைத்தவர்கள் இல்லையா? பார்ப்பன இனத்தலைவர் ஒருவர் இறந்துபோனால், அவர் வாழ்ந்ததற்காக இறைவன் இந்தப் பூமியைக் காப்பாற்றட்டும் என்றால் அவர் இருந்தபோது ஏன் இதைக் காப்பாற்றவில்லை? ‘துக்ளக்’ சோ ஏன் இறைவனிடம் அப்பொழுது பரிந்துரை செய்யவில்லை. இறைவன் என்றால் அவன் பார்ப்பன இனத்துக்கு மட்டுந்தானா சொந்தம்? அவர்களுடைய பாட்டனா அவன்?

இவற்றிலிருந்தெல்லாம் என்ன தெரிய வருகிறது என்றால் அவர்கள் எழுதும் எழுத்தெல்லாம் அச்சாகி வருவதற்கான வாய்ப்புகளை அவர்கள் வலிய ஏற்படுத்திக்கொண்டு, மக்களை எந்த அளவில் என்றென்றும் மடயர்களாகவே, தங்கள் நல்வாழ்வுக்குத் துணை போகின்றவர்களாகவே மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்பதுதான். சொல்வதைச் சொன்னால் கேட்பாருக்குக் கொஞ்சமேனும் மதி இருக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லுவதைக் கொஞ்சம் கவனித்தால் போதும்; எந்த நோக்கத்தில் அவர்கள் சொல்லுகின்றார்கள். எந்த நோக்கத்திற்காகச் சொல்கின்றார்கள் என்பனவெல்லாம் விளங்கிக்கொள்ள முடியும்.

தமிழர்களுக்கு இழிந்த பெயர்கள்!

‘துக்ளக்’ இராமசாமி எழுதி வரும் வாசிங்கடனில் நல்லதம்பி எனும் தொடர்கதையில் வரும் கதைத்தலைவனாக இப்பொழுதுள்ள முதலமைச்சரைத்தான் கிண்டல் செய்து எழுதுகின்றார் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாகத் தெரியும். அதைப் பற்றிய ஆய்வுகள் இருக்கட்டும். ஆனால் அதில் நல்லதம்பிக்குத் துணையாக வருபவர்களின் பெயர்களையும் அவர்கள் பேசிக் கொள்கின்ற தமிழ் (!) உரையாடல்களையும் பார்த்தாலே ‘சோ’ என்னும் இருபதாம் நூற்றாண்டுப் பார்ப்பானுக்குத் தமிழினத்தின் மேல் எவ்வளவு எரிச்சல் – வெறுப்பு இருப்பதைக் கண்டுகொள்ளலாம். நல்ல தம்பியின் நண்பன் பிசாசு, முக்கண்ணனாம்! இன்னொருவன் உலக்கைக் கொழுந்தாம். எப்படி! வேடிக்கைக்காக இப்படி எழுதுவதாகக் கூறிக்கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவதும் தமிழ் மொழியைத் தாழ்த்துவதுந்தான் ‘துக்ளக்’கின் நோக்கம். தனக்கு நேர் எதிரிடையான ஓர் இன அரசனின் பெயரைத் தனக்கே உரிய ‘கிண்டல்’ மனப்பான்மையுடனும் கோமாளித்தனமாகவும் சூட்டிக்கொண்டு, இப் பிராமண வழக்கறிஞன் எழுதிவரும் கதைகளைப் போலத்தான் அன்றைய இராமாயண, மகாபாரதங்கள் எழுதப்பெற்றன. நல்லதம்பிக் ககதையில் வரும் இட்சுகாக், பர்ட்டன், நிக்சன் கீசிங்கர் முதலிய உண்மை மாந்தர்களையும், நல்லதம்பி, பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய உறுப்பினர்களையும் எதிர்கால மக்கள் படிக்க நேர்ந்தால், முன்னையவர்களின் வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு பின்னையவர்களும் வாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்வார்களா இல்லையா? அப்படிக் கருதிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தக் கோமாளியின் நோக்கம். மேலும் இந்தத் ‘துக்ளக்’ இராமசாமி வைத்த பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய பெயர்களைப் போலத்தான் இராமாயணத்திலும் தமிழர்களுக்கு இழிந்த பெயர்களே சூட்டப் பெற்றிருக்கின்றன. கும்பகர்ணன் (கும்பம் – குடம். கர்ணன் - காதன் = குடக்காதன்) மண்டோதரி (மண்டை - பானை, உதரம் - வயிறு - பானை வயிறி) சூர்ப்பநகை, (சூர்ப்பம் - முறம், நகை - பல் = முறப்பல்லி) இராவணன் (இரவு வண்ணன் - கறுப்பன்) முதலிய பெயர்களும் இழிவான பொருள் தரும்படி வைக்கப் பெற்றிருக்கின்றன.

நாம் அப் பெயர்களில் உள்ள இழிவுகளை அறியக்கூடாது என்பதற்காக அவை வடமொழியில் வைக்கப் பெற்றுள்ளதை அறியுங்கள். அந்த இராமாயண, மகாபாரதக் கதைகளிலெல்லாம் உள்ள இழிவுகளை எடுத்தெழுதினால் இவ்வேடு கொள்ளாது. இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே சென்னையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனன், நம் இனத்தைப் பார்த்து இவ்வாறு கிண்டல் செய்து எழுதுவதும், அதை நாம் பொறுத்துக் கொண்டிருப்பதும் நேருமானால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வினத்தினால் நேர்ந்த – முன்னோர் பட்ட – பாடுகளை நினைத்தும் பார்க்க முடியாதன்றோ? அக்காலக் கதைகளைச் சொல்லி இக்காலத்தில் அவர்களை வஞ்சம் தீர்க்க முடியாமற் போயினும், இக்காலத்தில் நம் கண்முன் நிகழும் அக் கொடுமைகளை நாம் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? எனவே நமக்கு அவர்கள் மேல் வளர்ந்துகொண்டு வரும் வெறுப்புணர்ச்சிக்குங்கூட அவர்களேதாம் பொறுப்பன்றி நாமோ நம் செயல்களோ பொறுப்பாவதில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவற்றை உணர்ந்தோ உணராமலோ இரக்கத்துக்குரிய திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் என்னும் தமிழ்க் குடி(!)மகன் ‘துக்ளக்’ இதழின் மூன்றாம் ஆண்டு விழாவில், அங்குக் கூடியிருந்த கோமாளிக் கூட்டத்தைப் பார்த்து, “வரும் தேர்தலில் முறையாக முடிவுக்கு வர, துக்ளக் உங்களுக்கு வழிகாட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கின்றார். இதைவிட வெட்கங்கெட்ட தனம் வேறு என்ன இருக்க முடியும்? காமராசர் என்னும் தூய தமிழினத் தலைவனுக்குத் துக்ளக் என்னும் ஆரியப் பார்ப்பானைப் பரிந்துரைக்கச் சொல்லித் தான் ஒப்போலை தேடவேண்டுமா? வெட்கம்! வெட்கம்!இத்தகையதொரு நிலைக்கு வந்ததால்தான் தி.மு.கவை. முன்பே தென்மொழி கண்டித்தது: குற்றமும் சாட்டியது. இன்று தி.மு.க. அதன் விளைவையும் உணர்ந்து திருத்திக்கொண்டு வருகின்றது. மேலும் தி.மு.க. தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டிய நிலைகளும் பலவுள. ஆனால் திருந்தாத தமிழனைவிடத் திருந்திவரும் தமிழனால் தமிழுக்கும் தமிழினத்திற்கும் ஓரளவேனும் ஆக்கம் பிறக்கும் என்னும் கருத்திலேயே தி.மு.க.வைத் தென்மொழி பாராட்டிக் காக்க முனைந்துள்ளது. (இந் நிலைக்குத் தென்மொழி மேல் கொதிபபடையும் ‘கண்ணதாச’த் தமிழர்கள் ஆழ்ந்து எண்ணி முடிவு கட்டுவார்களாக!).

நூல்கள் எழுதி வெளியிடுகின்ற வகையில் ஆரியப் பார்ப்பனர்கள் ஐந்து வகையான தந்திரங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அவை:

வேத புராணங்கள்

வேறுவேறு வடிவில்!

ஒன்று தங்கள் புராண இதிகாசக் கருத்துகளைக் காலத்துக்கும் இடத்திற்கும் தக்கவாறு, வேறு வேறு வடிவங்களுடனும் முறைகளுடனும் மாற்றி எழுதி, அல்லது எழுதுவித்து வெளியிட்டுக் கொண்டேயிருப்பது.

இக்கால் அண்மையில் இறந்துபோன இராசாசிசுடப் பழைய இராமாயண, மகாபாரதக் கதைகளை ஒரு புதிய வகையில் படிப்பதற்கு விருப்புடனும், சுருக்கமாகவும் ஆரியர்க்குச் சார்பான இடங்களை மேலும் சிறிது கவர்ச்சியுடனும், விளக்கத்துடனும் எழுதி வெளியிட்டதும், அவற்றைக் கல்கியினத்தவர்கள் உலக முழுதும், பொதுவுடைமை நாடான உருசியாவிலும்கூடப் பரப்பி, இலக்கக் கணக்கான படிகளை விற்று வருவதும் இக்கருத்தை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். இதுதவிர லிப்கோ எனும் வெளியீட்டுக் குழுமமும் பலவகைகளில் இராமாயண மகாபாரதங்களையும் புராணப் புளுகுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

வெளிநாடுகளில் வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவன் இராசாசி போல் இராமாயண மகாபாரதங்களையா பிழைப்புக் கெட்டுப் போய் உட்கார்ந்து எழுதிக்கொண்டு கிடப்பான்? பிழைப்புக் கெட்டவன் கழுதையைப் பிடித்து சிரைத்தது போல, வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்துச் சட்ட துணுக்கமும், அரசியல் அறிவும், ஆட்சியியல் பட்டறிவும், கட்சித் தலைமையும் உள்ள ஒருவர் அத்துறைகளில் நூல்கள் எழுதி நாட்டின் ஆளுமையறிவை வளர்க்க முயலாமல், மாம்பலத்து மகாலிங்க அய்யர் இராமாயணம் போல் பாகவதங்களையா மக்களுக்குச் சொல்லிக் கொண்டு கிடப்பது? ஆனால், அவ்வாறு அவர் எழுதுகிறார் என்றால், அதில் ஒரு வரலாறே அடங்கியிருக்கின்றது. பார்ப்பனருக்கு நாட்டு நடப்புகளைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ இருக்கும் கவலைகளெல்லாம், தங்களுக்கு வழிவழியாக உள்ள சாய்காலைத் துர்த்துவிடக் கூடாதே என்பதும் மேலும் அவர்களுக்கு அவ்வகையில் எவ்வாறு வலிவு சேர்த்துக்கொள்வது என்பதுந்தான்.

தமிழ்நூல் அழிப்பு!

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.இக்கருத்தை நாம் சொல்வதில்கூட அவர்களுக்கும் அவர்தம் அடிமைகளுக்கும் எரிச்சல் இருக்கலாம். அவர்கள் இனத்தவரும், அவர்களின் தன்மைகளையெல்லாம் ஒருவாறு அறிந்து கொண்டவருமான வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்ற பரிதிமாற் கலைஞரே அவரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் நூலில் இக்கருத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவர் எழுதுகின்ற சில பகுதிகளைப் பாருங்கள்.

“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து, அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர் (பிராமணர்) அரசர் (ஷத்திரியர்), வணிகர் (வைசியர்), வேளாளர் (சூத்திரர்) என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர். இன்னும் அவர் தம் புத்தி நலங்காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமர்ந்துகொண்டனர்” (பக்கம்-33).“தமிழரிடத்திருந்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” (பக்கம் 33).

இனி. இவ்வாறு தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் முழுவதும் தெளித்து விட்டிருப்பது ஆரியர்தம் திருவிளையாடல்களில் ஒன்று. தமிழர்களுக்குச் சார்பாகவும் நடுநிலையாளர் போலும் சில வரலாற்றுக் கருத்துகளை ஒருபக்கம் எழுதுவது; மறுபக்கம் அவர்களுக்குக் கேடானவும் முற்றும் ஆரியர்களுக்கே ஏற்றந் தருவனவுமான பல கருத்துகளை அதே நூலில் சொல்லி விடுவது. இவ்வாறு அவர்கள் எழுதுவது ஏனெனில், படிப்பவர்கள் தங்களை நடுநிலையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் கருதிக் கொள்ளட்டும் என்பதே! மேலும் திரு. வி.கோ. சூ அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தருமாறு, வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ்மொழி பெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக் கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்! ஆனாலும் அவர் கொட்டிய பிற நச்சுக் கருத்துகளை நாம் நினைவுகூரும் பொழுது, அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத் தானோ அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார் என்றும் கருத வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் அவரினத்துக்குச் சார்பாகவும் ஏற்றம் தரும் வகையிலும் அதே நூலில் கூறிய கருத்துகளையும் தெரிந்துகொள்வது நலம். அவற்றையும் கீழே காணுங்கள்:

“பல்லாயிர வாண்டுகளுக்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது – அக்காடுகளில் தீய விலங்குகள் திரிந்து கொண்டிருந்தன – அங்கும் இங்கும் காட்டு மனிதர்கள் சிலர் கரடிகளெனக் குகைகளில் வசித்தனர் – அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறியவுடலினர்... அவர்கள் கற்கால மனிதர் எனப்படுவர்... கொஞ்சங் காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக்கப்பால் இருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சமவெளிகளிற் கண்ட இக் காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேக காலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் நாகர்கள் எனப்படுவோர். இவர்களில் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர். இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவர். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். தங்கள் ஆடு மாடுகளுக்காகப் புல்லைத் தேடிக் கொண்டு ஊரூராய்த் திரிந்தவர்கள்”. (மேற்படி நூல் பக்கம் 21-23).

“வடமொழி தமிழ்மொழியோடு கலக்கப் புகுமுன்னரே முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டு வழக்கு ஒன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் (வடமொழி)ச் சொற்கள் பின்னதன்(தமிழின்)கண் சென்று சேருமே யன்றிப் பின்னதன்(தமிழின்) சொற்கள் முன்னதன் (வடமொழியின்) கண் சென்று சேரா. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கண் புகுந்தன. தமிழ்ச் சொற்களில் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. (மேற்படி நூல் பக். 35).

“தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும் தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர். (நூல் 1903-இல் எழுதப்பெற்றது). இவ்வாறு இருவரும் ஒத்தியங்கும் இடத்துத் தமிழ்ச்சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பாஷையிற் புகுதலும் இயற்கையே! இதனைத்தடுக்க முடியாது தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமே அன்றி வேறில்லை. பேச்சுத் தமிழில் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிக்கைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின்கண் ஏற்றப் புகுந்தன. மதுரைப் பழந்தமிழ்ச் சங்கத்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமை யாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே... இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையில் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும் நலமே!...” மேற்படி நூல் பக். 136-137).

- எப்படி, தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படுபவரின் உள்நோக்கம்? இந் நூலில் இவர் ஒரோவோர் இடங்களில் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியென்றும், சிறந்த மொழியென்றும் கூறியிருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அஃது அவருடைய கருத்தாக நாம் கொண்டு பெருமைப்பட முடியாது. ஏனெனில் தமிழ்மொழிக்கு இயல்பாகவே உள்ள இத்தன்மைகளை இவர்போலும் உள்ள பிராமண நூலாசிரியர்கள் பலர் மாற்றியும், மறைத்தும், குறைத்துமே மதிப்பிட்டுப் போந்தனர். அவ்வாறின்றி இவர் தமிழ் மொழி பற்றிய உண்மையான கருத்துகளைச் சொன்னது பாராட்டுக்குரியதே! ஆனாலும், அவர் அவற்றைச் சொல்லு முகத்தான் தம் உள்நோக்கத்தை மறைத்துவிட முடியவில்லை என்பதற்காகவே இதனை இங்கெடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று. இவ்வகையில் இவ்வினத்தவரும் இவரடித் தமிழ்க் கோடரிக் காம்புகள் சிலரும் ஆங்காங்குப் புகுத்திய நச்சுத்தனமான கருத்துகளை யெல்லாம் எடுத்தெழுதின் அவை ஒரு நூலாகவே விரியும். எனவே இதை இவ்வளவில் நிறுத்திக்கொண்டு அவர்களின் மூன்றாவது தந்திர முறையினைப் பார்ப்போம்.

ஆரியத்துக்குத் துணைபோவார்க்குப்

பாராட்டுகளும் உதவிகளும் !

அது, வடமொழி ஏற்றத்துக்கும், ஆரியர்தம் பெருமைக்கும் துணை நின்று நூலெழுதும் தமிழ்ப் புலவர்களைத் தாங்கிப் போற்றிப் பாராட்டுதலும், உதவிகள் முதலியன செய்தலும், அவ்வாறல்லாத பிறரை அந்தத் தமிழ்ப் புலவர்களைக் கொண்டே தாக்கித் தூற்றி எழுதுவதும் மறைமுகமாக இடர் விளைவிப்பதும் ஆகும்.

இத் தந்திரத்திற்காட்பட்டு இவர்களின் பாராட்டுக்கும், உதவிக்கும், அங்காந்துதான், வையாபுரி, தெ.பொ.மீ., சேது முதலிய பெரும் புலவர்கள்கூடத் தம் புலமையை அவர்களுக்குச் சார்பாக விலைபேசியும் விற்றும், பெயரும், புகழும், பெரும் பணமும் பெற்று வந்திருக்கின்றனர். இவ் வழியில் அவர்களைத் தொடர்ந்து போகாதவர்கள் போல் வெளிக்குக் காட்டி, அவர்களின் கருத்துகளை எதிர்த்துப் போகாமல் தம்மை நல்ல பிள்ளைகளாக ஆரியத்துக்குக் காட்டிக் கொள்ளும் பேராசிரியர்கள் சிலர் உளர். அவர்கள் தமிழர்களுக்கும் சில நேரங்களில் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதும், அதனால் தமிழராட்சியுள்ள இக்காலத்தில் பல்கலைக் கழகத்துணைக் கண்காணகர்போலும் பெருமையும் பெரும்பொருள் வருவாயும் உள்ள பதவிகளில் அமர்த்தப் பெறுவதும் உண்டு. அத்தகையார் எழுதும் நூல்களில், ஆரியர் குறும்புகளை அவை எத்துணைதாம் அளவிறந்து காணப்படினும் அவற்றைச் சுட்டிச் சொல்லவே அஞ்சுவதையும், தமிழர்களின் அல்லது தமிழின் உண்மையான வரலாற்றுக் கருத்துகளை அவை எத்துணைதாம் உயர்வாகவும் உண்மை சான்றனவாகவும் இருப்பினும் அவற்றை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதையும், ஆனால் மறைத்துவிட முடியாமல் மேலோட்டமாகவே எழுதி அவற்றின் வலுவைக் குறைத்துவிடுவதையும் தெளிவாகக் காணலாம். இதனால் இவர்கள் இருபுறத்தாராலும் பாராட்டப் பெற வேண்டுமென்பதும், இவர்கள் நூல் நன்கு பரவவேண்டும் என்பதும் இவர்களின் உள்நோக்கமாக விருக்கலாம்.

அவ்வகையில் வெளிவந்ததாக அண்மையில் பண்டாரகர் மு. வரதராசனார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலைக் குறிப்பிடலாம். இந்நூலில் திராவிடர்களின் வரலாறே துரானியர்களின் வரவிலிருந்துதான் தொடங்குகின்றது. அவர்கள் வருகையைப் பற்றிய காலக் குறிப்பீடும் இல்லை. தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டென்று பலவிடங்களில் திருப்பித் திருப்பிச் சொல்லியிருக்கின்றார். தமிழ் எழுத்துத் தோற்றத்தை ஏனோ தானோ என்று மேலோட்டமாகவே குறித்திருக்கின்றார்.

“தமிழ் நூல்களையும் வடமொழி அறிஞர்கள் தக்க மதிப்புத் தந்து போற்றவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழே வீட்டில் பேசித் தமிழராகவே வாழ்ந்த வடமொழியறிஞர்கள் தேவாரம், திருவாசகம் முதலான தமிழ்நூல்களையும் படிக்காமல் புறக்கணித்தார்கள்” என்று, அடிவாங்கி அழுது கொண்டு வீட்டுக்கு வரும் சோணிப்பிள்ளை போல் முணகித் தொலைத்திருக்கின்றார். தெ.பொ.மீ அமர்ந்த இடத்தில் தாம் அமர்த்தி வைக்கப்பெற்றதன் பின் (1972இல்) வெளிவந்த நூல் இதுவாகையால், அவர் சாயலில் ஆரியத்தை முட்டுக் கொடுத்துத் தாங்கி வலிக்காமல் குட்டியிருக்கின்றார். இவர்தம் கைகள் வலிக்கும் என்று கருதினாரோ, அல்லது அவர்களின் மண்டை வலிக்கும் என்று கருதினாரோ தெரியவில்லை.

கழகக் காலத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள பகுதி இவரை வெறும் ஓர் இலக்கியப் பேராசிரியர் என்னும் அளவில்தான் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதற்குப் போய் ‘வரலாறு’ எழுதுவானேன். கழகப் பாடல்களில் உள்ள கருத்துரைகளை யெல்லாம் பல தலைப்புகளில் திரட்டிப் பல்சுவைத் திரட்டுகளை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கலாமே! வரலாறு என்பதை எப்படி எழுதுதல் வேண்டும் என்பதை மொழி மூதறிஞர் பாவாணரின் ஒப்பியன் மொழி நூல், தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம் முதலிய நூல்களைப் பார்த்தேனும் மு.வ. உணர்ந்து கொள்ளுதல், அவர்க்கும் நல்லது அவர் எதிர்காலத்துக்கும் நல்லது என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். ஆரியத்தைத் தழுவிக் கொள்வதும் அதன் அடிப்படுப்பதும், இத்தகைய வரலாற்று நூல்கள் சாகித்திய அகாடமி வழியாக வருவதற்கும், வீடுகளும், தெருக்களும் மலைத் தோட்டங்களுமாகவே வாங்கித் தள்ளுவதற்கும் ஒருவேளை பயன்படலாம். அல்லது மு.வ.வின் வையாபுரித்தனத்தை எதிர்காலத் தமிழ் மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகவும் பயன்படலாம். ஆனால், இத் தொடை நடுங்கித்தனமெல்லாம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் இன்னும் எவ்வளவோ நடை போட வேண்டிய தமிழ்க் குமுகாய அடிமை நீக்கத்திற்கும் துளியும் பயன்படாது.

மேலும், தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றி இவர் எழுதியுள்ள கருத்துகள் இவர் மனக் கசண்டை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளன. இவர் போலும் வெறும் கதைகள் கட்டுரைகளாகவன்றி, தமிழையே கட்டிக் காத்துத் தமிழ்ப் பேரினத்தின் தாழ்ந்த நிலையை நிமிர்த்துகின்ற தனிச்செந்தமிழ் ஆராய்ச்சி நூல்களாகப் பலவற்றை இந்நூற்றாண்டில் எழுதிக்காட்டிய மொழிநூல், மூதறிஞர், தனித்தமிழ் ஞாயிறு பாவாணரைப் பற்றி இப்பகுதியிலோ, நூலிலோ ஓரிடத்திலும் பெயரளவிலும் இந்நூலில் குறிக்கப்பெறவில்லை. நேற்றுப் பிறந்த மொட்டைப் பயல்களையெல்லாம் இலக்கிய ஆசிரியர்களாகக் காட்டியிருக்கும் இவர், இவருக்கு 1959இலிருந்தே தொடர்ந்து பல்லாண்டுகள் தென்மொழி இலவயமாக அனுப்பப்பெற்றிருந்தும் அதன் செம்மாப்பான இலக்கிய வெளியீடுகளையும், மொழித் தொண்டையும், இனப்போராட்ட எழுத்தாண்மையையும் இவர் தெளிவாக அறிந்திருந்தும், அவற்றைப் பற்றி ஒரு சொல் தானும் இவர் பரந்த (!) உள்ளம் இசைந்து எழுதிவிடவில்லை.

மறைமலையடிகளைப் பற்றி ஒரு பக்கமும், திரு.வி.க.வைப் பற்றி இருபக்கங்களும், பாரதிதாசனைப் பற்றி ஐந்தரைப் பக்கங்களும், பாரதியாரைப் பற்றிப் பதிமூன்றரைப் பக்கங்களும் தன் மனம் போனவாறு, விருப்புக்கும், வெறுப்புக்கும் ஆட்பட்டு, சொல்மிடையல் செய்துள்ளார், பர். மு.வ. அவர்கள். கண்ணதாசன் முதல் சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி ஈறாக அனைத்துப் புலமைக் குஞ்சுகளையும் அடிமுடியறக் காட்டிய பண்டாரகர்க்குத் தனித்தமிழ் இயக்க எழுத்தாளர்களைக் கண்டு கண்கள் கூசினவோ என்னவோ? பாவாணரையும், அவர் வழியைப் பின்பற்றுபவர்களையும் தம் பகைவர்களாகவே மு.வ. நினைத்துப் புறக்கணித்துவிட்டாரோ? அல்லது இவர்களால் தமக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று கருதி ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டாரோ என்னவோ, அவருக்குத்தான் வெளிச்சம் ! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகி அதுவும் இல்லாமற் போன கதையாக மு.வ. தேய்ந்து தெ.பொ. மீ.யாகி அப்புறமும் தேய்ந்து வையாபுரியாக மாறி வருகிறாரோ, தெரியவில்லை; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

துணிக் கூடாரங்கள்

நிலையான வீடுகளாகா !

இனி, நூல் எழுதுகின்ற வகையிலும் அதன் வெளியீட்டு வகையிலும் ஆரியரும், அவரடிமைகளும் கடைப்பிடிக்கின்ற நான்காவது தந்திரமுறை இது.

கூடியவரை இலக்கியத் துறையையும், செய்தித்தாள் துறையையும் என்னபடியான வாணிகத் தந்திரங்களைக் கைக்கொண்டேனும் கைப்பற்றிக் கொள்வதும், பற்றிக் கொண்டது கைநெகிழ்ந்து விடாமல் கவனமாக நடந்து நிலைநிறுத்திக் கொள்வதுமாகும்.

இத்துறையில் ஆரியப் பார்ப்பனரை அடித்துக் கீழே தள்ள அஃதாவது விஞ்ச - தமிழரில் ஆளேயில்லை. பெரியார் எத்தனை பேசினாலும் கரடியாய்க் கத்தினாலும் இந்த ஒரு தந்திரத்தை அவர் சரியாக விளங்கிக் கொள்ளாத கரணியத்தால், அவர் கொள்கைகளுக்கு நேர்ந்த - நேர்கின்ற இழப்புகள் பல. என்ன கரணியத்தாலோ அவர் மூளைக்கு இஃது எட்டவே இல்லை. தினமணி போலவோ, மெயில், எக்சுபிரசு போலவோ, ஒரு செய்தித் தாளை அவர் தொடங்கியிருந்தால் அவர் வீணான நடைகளில் பெரும்பகுதி மிச்சப்பட்டிருக்கும் அவர் சுற்றுச் செலவு வண்டியும் தேயாது.

நடத்தினால் தமிழனுக்குத் ‘தினத்தந்தி’ போலும் ஒரு கழிசடைத் தாளைத்தான் நடத்தத்தெரியும்; அன்றால் அச்சிட்டுப் பெரும்பகுதி விற்பனையாகாமல் திரும்பி வரும் ‘விடுதலை’ போலத்தான் நடத்தத் தெரியும் என்று வரலாறே உருவாகும்படி யானதற்குப் பெரியாரும் ஒரு கரணியம் என்று சொல்வதில் பிழையிருப்பதாகத் தெரியவில்லை. அவரிடம் உள்ள ஏந்துகளுக்கு விடுதலை என்பது சுற்றறிக்கை! அப்படியே, ஆதித்தனாரிடம் இருந்த தமிழ்ப்பற்றுக்குத் தினத்தந்தி என்பது ஒரு குப்பைத்தொட்டி, இவையிரண்டாலும் தமிழனுக்குச் சில அரசியல் பொறுக்குகளும், சில மேலோட்டமான பயன்களும் கிடைக்கலாமே தவிர, அவர்கள் விரும்புகின்ற அடிப்படையான நன்மைகள் கிடைத்துவிடும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. இன்னுஞ் சொன்னால் ‘விடுதலை’யால் பெரியார் எங்கிருக்கிறார் என்பதையும், ‘தினத்தந்தி’யால் ஆதித்தனார் எப்படி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார் என்பதையுந்தாம் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றபடி அவை வங்காள வீரர்களைப் போல் ஓர் ஆயிரம் பேர்களைக்கூட உருவாக்கிட முடியாது. மற்றபடி வழிபோக்குக்காகப் போட்டுக் கொள்ளப் பெறும். துணிக் கூடாரங்களைப் போன்றவை அவை நிலையாகத் தங்கிக்கொள்ளும் வீடுகளாக அவை பயன்பட முடியாது.

பதிப்பு வேலையில் திரிப்பு!

இனி, ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

இவ்வகையில் பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த அரிய தொண்டுகளைச் செய்தவர் பர். உ.வே. சாமிநாதர் என்ற ஆரியப் பார்ப்பனர் என்பதை நாம் நன்றி உணர்வுடன் நினைக்கின்ற அதே பொழுதில், அவர் அவ்வாறு பதிப்பிக்கையில், அவர் இனத்தின் மேம்பாட்டுக்கென்று திட்டமிட்டுச் செய்த சில செயல்களை மறந்துவிடவும் கூடாது. உ.வே. சா அவர்களின் தொண்டு அளப்பரிய தொண்டு. அதை எவரும் மறுக்க வில்லை. நாமும் அதை நன்றியுடனும் மதிப்புடனும் போற்றவே செய்கின்றோம். அதன் பொருட்டுத் தென்மொழி தொடக்கத்திலேயே அவர் வரலாற்றையும் நடுநிலையினின்றெழுதித் தன் நன்றியை அவர்க்குத் தலைதாழ்த்தித் தெரிவித்துக் கொண்டது. இன்னும் அத் தென்கலைக்குரிசில் தமிழ்மேல் காட்டிய அன்பை நினைந்து நினைந்து வியப்புறுகின்றது தென்மொழி. அவரின் அரிய முயற்சியாகிய குறுந்தொகை உரைப்பதிப்பின் முன்னுரையில் மனங்கசிந்து,“பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையெழுதிய இந் நூலுக்கு உரையெழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை யென்பதையும், என் முதுமையாலும் பல்வேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்குண்டாகியுள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும், இளமை தொடங்கி, இவ்வுலகில் யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருவதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ங்ணமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி யருள்வானென்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன”.

- என்றெழுதியுள்ள பகுதி அவர் தமிழ்மேல் கொண்ட அன்பைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இருப்பினும் அவரின் சமசுக்கிருதப் பற்றும் ஆரிய மேலாண்மை உணர்வும் அவருடைய இக்கூற்றை மெய்ப்பிக்கவில்லை.

இவர் நூல்களில் எங்கும் தமிழ்ப்பாஷை என்றெழுதுவாரே தவிர தமிழ்மொழி என்று எழுதவே மாட்டார். நூல்களைப் புஸ்தகங்கள் என்றெழுதுவதே இவர் வழக்கம். தமிழில் வடமொழிச் சொற்களை விழிப்பாகவும் அவற்றை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவையின்றித் தமிழே இயங்காது என்பதை உண்மைபோல் மற்றவர்களுக்குப் புலப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் இவர் எழுதும் உரைநடைகளிலெல்லாம், அளவிறந்து கலந்து எழுதியது இவரின் வடமொழி உயர்வு மயக்கத்தைத் தெளிவாகக் காட்டும். ஒருகால் ஒரன்பர் இவரிடத்து ‘வணக்கம்’ என்று சொல்லி வணங்கியும் அதனை ஏற்றுக்கொள்ளாது ‘நமஸ்காரம்’ என்று கூறச்சொல்லி, அதனை ஏற்று நிறைவடைந்த நிகழ்ச்சியை அறிந்தால் உ.வே.சா. அவர்களின் வடமொழி யுயர்த்தமும், ஆரிய இன மேம்பாட்டு நினைவும் அவரை விட்டு அகலவே இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது - எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையிரே’என்று தொடங்கும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

‘ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.தமிழ் மொழிக்கு மிகவுழைத்தவரெனச் சொல்லப்பெறும் பர். உ.வே. சாமிநாதர் தமிழ்மொழியின் தனிமைச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற் பதிப்புகளுக்காக அவர் ஊரூராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந் நூல் ளிலெல்லாம் ஆரிய நச்சுக் கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவர்க்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றந்தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர் திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக்கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக் கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸ்-சர் ஸ்மஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை, நக்ஷத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றுரட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதைத் துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகின்றது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களைப் பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமசுகிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாகவிருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப் புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக விருப்பினும் ஒரோவிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருளெழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியை யென்றும், மருந்தென்பதற்கு பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குத் தரித்ததென்றும், ஒம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.”

- என்று எழுதியுள்ளார். புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம். புறநானூற்று உரையாசிரியரையும் ஒர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோ வாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றுாட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும். சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப் பற்றையும், ஒரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் 'அந்தணத் திலகன்' என்றும் 'கௌண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்' என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறுகுறிப்பைக் கொண்டே சிலரை இவரினத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவர்க்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனாரை இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்னும் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன் - அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது இப்பெயர் குடிப்பெயர்; இதனால் அவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க் குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்குக் கிழக்கே உள்ளதோரூர்; வேம்பத்துரரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசாசனத்தால் தெரிகிறது” என்னும் குறிப்பெழுதி, கடைச்சங்கப் புலவர் காலந் தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார் என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனச் சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் துது செல்லுதற்குரியன் என்பது இவர் பாடலால் தெரியவருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல்தரையில் இவர் தம் இனப்பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

இனி, இவரைப் பின்பற்றித்தான் இவர் மாணாக்கர் கி.வ. சகந்நாதன் அவர்களும் அவரினும் மேலாக ஆழமாக இயங்கி வருகின்றார். அவர் பேசப்புகும் சில கூட்டங்களில் முன்னுரையாக “என் குருநாதராகிய மகாமகோபாத்தியாய தாகூவினாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் இட்ட பிச்சையால் சிறந்து விளங்கும் இத் தமிழ்மொழி” என்னுந் தொடரைப் பயன்படுத்தி வருகின்றார். ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் எத்துணை ஆழமாகத் தம் இனப் பெருமையை வேரூன்ற வைத்துள்ளார்கள் என்பதை அறிந்தால், நாம் நம் தமிழ்மொழிக்கே உரித்தான சிறப்பியல்களை எத்துணை ஆயிரம் முறை சொன்னாலும் பிழையில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

நாளிதழ்களிலும் நச்சு வேலைகள் !


ஆரிய நச்சுக் கருத்துகளை அவர்கள் நூல்களில் போன்றே அன்றாடம் அவர்கள் நடத்தும் நாளிதழ்களில் பலவகைகளிலும் பல துறைகளிலும் இன்னும் விடாப்பிடியாக நுழைத்து வருகின்றனர். தினமணி, சுதேசமித்திரன், விகடன், கல்கி, கலைமகள், கதிர், துக்ளக் முதலிய ஆரியக் கும்பல் இதழ்கள் தமிழ்மொழியையும், பண்பாட்டையும் திட்டமிட்டே அழித்து வருகின்றன.

‘கல்வி வாய்ப்புகளை விரிவாக்க முடிவு’ - என்பதைக் ‘கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு என்றும்,

‘கோவையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. என்பதை ‘கோவையில் ஸ்டிரைக் வாபஸ்’ என்றும்,

‘மன்னார்குடியில் உழவர்கள் ஊர்வலம்’ - என்பதை, ‘மன்னார்குடியில் கிஸான் ஊர்வலம்’ என்றும்,

முதல்வரிடம் வேண்டுகோள் என்பதை, ‘முதல்வரிடம் மகஜர்’ என்றும்,

‘முசுலீம் லீக் செயற்குழு தீர்மானம்’ - என்பதை முஸ்லிம் லீக் காரியக் கமிட்டி தீர்மானம்’ என்றும்,

‘பாதுகாப்புத் துறை மறுப்பு’ - என்பதைப் பாதுகாப்பு இலாகா மறுப்பு’ என்றும்,

மேட்டுர் நீர்மட்டம் - என்பதை மேட்டுர் ஜலமட்டம் என்றும்,

‘சரியாகக் கடைப்பிடிக்கவும் - என்பதைச் ‘சரியாக அனுஷ்டிக்கவும் என்றும் ‘ஆலைச்சிக்கல்’ என்பதை, ‘ஆலைத் தகராறு’ என்றும்,

‘கொள்ளைக்கூட்டம் பிடிபட்டது’ என்பதைக் ‘கொள்ளைக் கோஷ்டி பிடிபட்டது’ என்றும்,

- இன்னும் பலவாறும் வேண்டுமென்றே அவ்விதழ்கள் எழுதுவதைப் பார்த்தால், தமிழ்மொழியை எவ்வகையானும் அழிப்பதும், அதன் தனித்தன்மையையும் தூய்மையையும் கெடுத்து அதனை ஒரு புன்கலவைமொழி என்று ஆக்குவதுமே அவர்களுக்குத் தலையாய நோக்கம் என்று தெரியவில்லையா? தகராறு என்னும் சொல்லையோ இலாகா, கமிட்டி, கிஸான் என்னும் சொற்களையோ சமசுக்கிருத நூல்களில் ஆரியப் பார்ப்பனர்கள் பயன்படுத்துவார்களா என்பதைச் சுப்பிரமணிய, பத்தவச்சலத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்மொழியின் தனித்தன்மையை அழித்து ஆரிய மொழியான சமசுகிருதத்திற்கு அடிமையாக்கி, அதன் வழித் தமிழினத்தை என்றென்றும் ஆரியத்திற்கு அடிமையாக்கி வைத்திருப்பதே அவர்களின் உள்ளக்கருத்து என்பதைக்கூட உணராமல், தலைக்கொழுப்பு மண்டிய சுப்பிரமணியன்கள் தில்லிச் சப்பாத்திக்கும், ஆரிய வெள்ளைத் தோலுக்கும் அடிமையாகி, ‘தனித்தமிழ் முயற்சி ஓர் அறியாமை முயற்சியே’ என்று தம்மை எல்லாம் அறிந்தவர்போல் கருதிப் பேசிக் கொண்டிருக்கும் பேதைமையை என்னென்பது!

வழக்கறிஞர் படிப்புப் படித்துவிட்டு, நடுவணரசில் ஒர் அமைச்சனாகிவிட்டால், உலகத்து அறிவெல் லாம் தன் மூளையிலேயே ஏறிவிட்டது என்று எண்ணித் தனக்குத் தொடர்பில்லாத் துறைகளிலும் வாய்வைத்துக் கருத்தறிவிக்கும் அக்குயக்கொண்டான் தனத்தை இன்னும் எவ்வாறு சூடேறும்படி சுட்டிக்காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் தமிழ்மொழி யழிவையே சமசுக்கிருத மொழியின் வளர்ச்சியாகக் கருதியிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் இனம் வெளியிடுகின்ற இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படியை எடுத்து ஒரு சேரத் தொகுத்துப் பார்த்தாலே போதும்; நன்கு விளங்கும். அடிமை உள்ளந் தவிர நடுநிலையான எந்த உள்ளமும் அச்சூழ்ச்சியை நன்கு உணரமுடியும்,

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பார்ப்பனர்க்குத் தமிழ் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியும், தமிழர்மேல் ஒரு பகையுணர்ச்சியும் கட்டாயம் இருந்தே வருவதைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியாது, மாந்தன் நிலாக்கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் சென்று கொண்டிருக்கின்ற இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலுங் கூட, அவர்கள் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறார்க ளென்றால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்களின் போக்கு தமிழ்க் குமுகாயத்திற்கே எப்படி மாறுபட்டு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாது.

தமிழ்த்துறையில் அவர்களின் கைவரிசை மறைமுகமாகவே காட்டப்பெற்றது. தமிழை வளர்ப்பது போலும் தமிழ்மேல் பற்றுக் கொண்டிருப்பது போலும் அவர்கள் வெளிப்படையாக ஈடுபட்டாலும், மறைமுகமாக அவாக்ள் இனத்துக்கும் மொழிக்குமே ஏற்றந் தந்து எழுதியிருக்கின்றனர்; பாடியிருக்கின்றனர். அந்நிலையில் பெரும் புலவர்களாக விளங்கிய பர், உ.வே. சாமிநாதர் அவர்களையும் பரிதிமாற் கலைஞர் அவர்களையும் ஒருசில எடுத்துக்காட்டுகளால் பார்த்தோம். அவற்றிலிருந்து அவர்களின் உள்ளக் கிடக்கைகள் எவ்வாறு தமிழ்க்கும் தமிழர்க்கும் மாறுபட்டு விளங்கியிருந்தன என்பது காட்டப் பெற்றது.

பார்ப்பனர் என்பதற்காகவே

அளவிறந்த போற்றுறதல்!

இனி, பாட்டுத்துறையில், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதையும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகல்வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனை யாற்றலை வேண்டுமானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் கற்பனையாற்றல் இருப்பவர்களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் பயிற்சியையும் சொல்லாற்றலையும், இயற்கை யீடுபாட்டையும் உலகியலறிவையும், மெய்யுணர்ச்சியையும் பொறுத்து அமைவது. கற்பனைத்திறன் பொதுவாக எல்லாரிடத்தும் இருக்கும். மொழிப் பயிற்சியோ, சொல்லாற்றலோ, உலகியலறிவோ, மெய்யுணர்ச்சியோ, இலக்கியப் பயிற்சியோ எல்லாரிடமும் இருக்கும் என்று சொல்ல முடியாது. அவை பயிற்சியினாலும் கல்வியினாலுமே கைவருவனவாகும். இயற்கை யீடுபாடோ சூழலால் அமைவதாகும்.

பாரதியாரிடம் கற்பனையாற்றலும் அதை வெளிப்படுத்தும் உணர்ச்சியும் ஓரளவு இருந்தன என்று சொல்லலாமே தவிர, மொழிப் பயிற்சியும், சொல்லாற்றலும், இலக்கியப் பயிற்சியும் அவ்வளவு மிகுந்திருந்தனவாகச் சொல்ல முடியாது. உலகியலறிவும், மெய்யுணர்ச்சியும் அவ்வளவு சிறப்புற விளங்கியிருந்தன என்றும் பாராட்ட முடியாது. இயற்கை ஈடுபாடும் ஒரளவே இருந்தது, ஆனால் அவர் கம்பனுக்கும் மேல், இளங்கோவுக்கும் மேல் பாராட்டப் பெறுவதன் நோக்கமெல்லாம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு இருக்க முடியாது. பாட்டுத்திறத்தில் பாரதிதாசன் அவரைப் பலவகையிலும் வென்றிருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தமிழர்; அதுவும் தன்மான எழுச்சியுள்ள தனித்தமிழர் என்பதற்காகவே ஆரியப் பார்ப்பனராலும் நம் வீடனத் தமிழர்களாலும் அழுத்தி வைக்கப் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கிய வுலகில் கம்பனைப் போல் கற்பனை வளம் படைத்தவர்களைக் காணமுடியாது. இளங்கோ போல் மொழி வளம் மிக்கவர்களும் அருமையே. ஆனால் கம்பனுக்கு விழா எடுப்பது போல் பாரதியாருக்கும் விழா எடுப்பது போட்டி போட்டுக் கொண்டு செய்யும் ஓர் இன எழுச்சி ஈடுபாடேயொழிய இலக்கியச் சிறப்பான ஒரு செயலன்று. தேசியப் பாவலர் என்பதில் வேறு ஆரியச் சூழ்ச்சி புதைந்து கிடக்கிறது.

கம்பனுக்கு விழா எடுப்பதிலுங்கூட ஆரியப் பார்ப்பனர்க்கே மிகுந்த அக்கறையுண்டு என்பதும் இன்னொரு வேடிக்கை. அவன் இராமாயணத்தை எழுதினான் என்பதே அவன் பாராட்டப் பெறுவதற்குத் தலையாய ஒரு கரணியம். ஏனெனில் இராமாயணத்தில்தான் வேறு எந்த நூலையும்விடத் தமிழர் இழிவு செய்யப் பெற்றுள்ளனர். அதனால் பார்ப்பனர்க்கு அதில் ஈடுபாடு மிகுதி. இதற்காகவே கம்பனும், ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே பாரதியாரும் பாராட்டப் பெறுகின்றனர். பார்ப்பான் ஒரு துறையில் உள்ள ஒருவனைப் பாராட்ட வேண்டுமானால் முதலில் அவன் பார்ப்பானாக இருத்தல் வேண்டும்; அல்லது அவன் ஒரு பார்ப்பன அடிமையாகவேனும் இருத்தல் வேண்டும். இவ்விரண்டு தகுதியும் ஒருவனிடம் இல்லையானால் அவன் பனைமர உயரத்தவன் என்றால் குட்டையன் என்பான்; பரந்தமுடித் தலையன் ஆனாலும் மொட்டையன் என்பான்.

பாரதியாரின் பாட்டு ஆராய்ச்சியைப் பிறிதொருகால் பார்ப்போம். இக்கால் அவர் தமிழைப் பற்றி மிகச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் ; தமிழ் மொழிக்கு மிகப்பெருமை சேர்த்திருக்கின்றார் என்று தமிழர்களே பாராட்டுகின்றனரே, அந்தப் பாராட்டில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை மட்டும் பார்ப்போம். அவர் தமிழ் உரைநடை இது.

“ஸூர்யோதத்திலேயும் ஸூகிர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக் கட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு”.

- பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்

இவ்வாறான ஒரு நடையைப் பாரதியார் எழுதினால் என்ன? யார் எழுதினால் என்ன? இதனால் தமிழ்மொழிக்கு ஆக்கம் ஏற்படும் என்று எவராவது சொல்லமுடியுமா? தம் வடமொழி கலந்த நடை, ‘நம்மவர்க்குப் பிரியந் தருவதாகும் என்று வேறு பாரதியார் குறிப்பிடுகின்றார். அவர் கண்ணோட்டத்தில் இவ்விந்திய நாடும் இங்குள்ள மக்களும் எவ்வாறு கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உரையால் அறியலாம்.

“பாரத தேசத்தில் முற்காலத்திலே பாரத ஜாதி முழுமையின் அறிவுக்குப் பொறுப்பாளியாகப் பிராமணர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பினர் இருந்ததாகப் பழைய நூல்களிலே காணப்படுகிறது. அந்தப் பிராமணர் தமது கடமைகளைத் தவறாது நடத்தியிருப்பார்களானால் மற்றக் குலத்தவரும் நெறி தவறியிருக்க மாட்டார்கள். ஒரு தேசத்திற்கு ஏற்படும் உயர்வு தாழ்வுகளுக்கு அத் தேசத்திலுள்ள பிராமணர்களே பொறுப்பாளிகள்”.

- பாஞ்சாலி சபத விளக்கக் குறிப்புகள்

மேலே காட்டப்பெற்ற இரு குறிப்புகளே பாரதியார் தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் இனத்தைப் பற்றியும் என்ன கருத்துக் கொண்டிருந்திருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டப் போதுமான சான்றுகளாகும். ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு உயர்வு தாழ்வுகளுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் தாம் பொறுப்பாளிகள் என்றால் மானமுள்ள எந்தத் தமிழன் அவரை வெறும் பாட்டுத் திறனுக்காகவோ கற்பனைத் திறனுக்காகவோ பாராட்டுவான்? தன் மொழியைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும், அவை யழிக்கப் பெற்ற வரலாறு பற்றியும் அவை புதுப்பிக்கப் பெற வேண்டிய முயற்சி பற்றியும் சிறிதும் கவலை கொள்ளாத ஆரிய அடிமைகளே அவரை ஒரு பாவலர் என்பதற்காகப் பாராட்டுவார்கள். வெறும் பாவலர் என்பதற்காகப் பாராட்டுப் பெற வேண்டியவர்கள் நம் இனத்தில் ஏராளம்! தடுக்கி விழுந்ததற் கெல்லாம் பாட்டு உண்டு. இங்கே, தமிழ் இலக்கியங்களில் உள்ள பாட்டுச்செறிவு போல் வேறு இந்திய மொழிகள் எவற்றிலும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை. பாவலர்களுக்குப் பஞ்சம் என்றும் இருந்ததில்லை. எனவே, அதற்காகப் பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.

பாவலன் ஒருவனால் எதிர்காலத்திற்குக் கிடைத்த கருத்துகள் எவை? அவற்றால் அந்த மொழிக்கும், மக்களுக்கும், அந்நாட்டுக்கும் வந்து சேரும் பயன்கள் எவை? - என்பன பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டுமே தவிர ஒருவர் ஒரு பாவலர் என்பதால் மட்டுமே நமக்குப் பெருமை வந்துவிடப் போவதில்லை. பாரதியாரின் உள்ளம் ஆரியர்க்காக எண்ணிய உள்ளம்; அவர் இந்த நாட்டை ஆரிய நாடு என்பதனாலேயே பெருமை கொள்வதாக அவர் பாடல்கள் தெரிவிக்கின்றன. பின்வரும் பாடலடிகளைப் பாருங்கள். .

“பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்

ஆரிய நாடு என்று அறி”“முன்னை இலங்கை அரக்கர் அழிய

முடித்தவில் யாருடை வில்? - எங்கள்

அன்னை பயங்கரி பாரத தேவிநல்

ஆரிய ராணியின் வில்”“சித்த மயம் இவ் வுலகம்; உறுதிநம்

சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்

அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்

ஆரிய ராணியின் சொல்”"- எம்மை

ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவி"“வீரிய வடிவம் - என்ன

வீரிய வடிவம் - இந்த

ஆரியன் நெஞ்சம், அயர்ந்ததென் விந்தை!”“எங்கள் ஆரிய பூமி”“ஆரிய பூமியில் தாரிய ரும்தர

சூரிய ரும்சொலும் வீரிய வாசகம்”“உன்னத ஆரிய நாடெங்கள் நாடே

ஒதுவம் இஃதை எமக்கில்லை ஈடே”“ஆதிமறை தோன்றியதால் ஆரியநா டெத்தாளும்

நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு”- எப்படி பாரதியாருக்கு இது தமிழ் நாடாகவோ இந்தியாவாகவோ படவில்லை. அப்படிப்பட்டாலும் அவருக்குச் சொல்ல விருப்பமில்லை. இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில்தான் அவர்க்குப் பெருமையிருந்திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்தாலும் தாழ்வில்லை. ‘அவர் உண்மையைத்தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மைகளையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமையுடையது என்றால் இந்நாட்டையே பிறந்தகமாகக் கொண்ட தமிழர்களுக்கு எந்த நாடு உரிமையுடையது? தமிழ்நாடு என்பதாகவே ஒரு நாடு இருப்பதாக அவர் நினைவு கொள்ளவில்லை. இந்திய நாட்டில் அடங்கிய பத்தொன்பது திரவிட நாட்டுப் பகுதிகளும் ஆரியர்களுடையனவே என்று வல்லடி வழக்கு நடத்தியிருக்கின்றார்.

‘ஆரியர்’ என்பது பெருமைக்காகச் சொல்லப் பெற்றதாகத் தெரியவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரு பெயர் சொல்ல வேண்டுமே என்றுங் கூட அந்தப் பெயரைச் சொன்னதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்தம் இனப் பெருமையை நிலைநாட்டவே அவ்வாறு சொல்லியிருக்கின்றார். இன்னொருவர்க்குச் சொந்தமான ஒரு வீட்டை அல்லது பொதுவான ஒரு சாவடியை ஒருவன் தன் வீடு என்று சொன்னாலும் தாழ்வில்லை; தன் இனத்தாருடைய வீடு என்று சொல்வானானால் அவன் தன் இனத்தார்க்கு அதன் பெருமை அனைத்தும் வந்து சேர வேண்டும் என்று நினைக்கின்றவனா இல்லையா ? இதை எவரேனும் மறுக்க முடியுமா? இந்நாட்டை ஆரிய நாடாகக் கருதியதை, அவர் பொதுநோக்கங்கொண்டு சொன்னது என்பது, பித்தலாட்டமும் புரட்டுமாகும். வருங்காலத் தமிழ்க் குமுகாயத்தை இனி இவ்வாறெல்லாம் ஏமாற்ற முடியாது. மேலும் அவர் கூறியதைக் கவனியுங்கள்.

“ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!”“வீரியம் ஒழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்

ஆரியர் புலையருக் கடிமைகள் ஆயினர்”“மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்

ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்”ஆரியரை இந்தியாவுக்கே உரிமையாக்கி, இந்தியாவை ஆரியர்க்கே உரிமையாக்கிப் பேசும் உணர்ச்சி பாரதியாரிடம் நிறைய இருந்திருக்கின்றது. ஆரியர் என்றால் அவர்களிடம் ஒரு தனித்தன்மை, சிறப்பு, எல்லாருக்கும் உயர்வான ஒரு தேவப் பெருமை இவையெல்லாம் இருப்பனவாகக் கற்பனை செய்து கொள்ளும் மனநிலை அவர் பாடல்களில் ஒலிக்கின்றது. இந்தியப் பண்பாடு, நாகரிகம், வீரம், சமயம் முதலிய அனைத்துப் பண்புகளையுமே அவர் ஆரியமாகப் பார்க்கின்றார். அப்பண்புகள் குறைந்தவரை அவர் ஆரியரினும் தாழ்ந்தவராகப் பேசுகின்றார்.“ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்

யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!”“ஆரியர் இருமின் ஆண்களிங் கிருமின்;

வீரியம் மிகுந்த மேன்மையோர் இருயின்!”- என்று பலவாறாக ஆரியர்களையே - அல்லது அவரைச் சார்ந்தவர்களையே இந்நாட்டுக் குடிமக்களாக எண்ணிக் கொண்டு அவர் யாக்கும் வரிகள் இங்குள்ள எல்லாப் பிரிவினர்களையும் இழிவு செய்வனவாகும். வரலாற்றடிப்படையில் இந்நாட்டுக்கு உரிமையான ஓரினம் உண்டென்னும் ஒரு கருத்தை அவர் அடியோடு மறுப்பனவாகவே இவ்வரிகள் அமைகின்றன.

தமிழ்மொழியைப் பாராட்டுகையிலும், அஃது ஆரியச் சார்பு உடையதனால்தான் பெருமை கொண்டு விளங்குகின்றது என்னும் பொருள்படவே எழுதுகின்றாரே தவிர, அதன் தனித் தன்மை, பழைமைச் சிறப்பு, தாய்மை நிலை, வளமைக் கொழிப்பு முதலியன நிறைந்திருக்கும் தன்மையை அவர் ஒப்புக்கொள்வதில்லை. ஆதிசிவன் பெற்ற தமிழை ஆரிய மைந்தன் அகத்தியன்தான் சிறப்புறச் செய்தான் என்பது பாரதியார் கருத்து. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தது கி.மு. 1500இலிருந்து 2000க்குள் எனக் கூறலாம். அவர் தென்னாடு வந்தது அதற்குப் பின்னர்தான். அக்காலத்திற்கு முன்பே தமிழ் மிகவும் சிறப்புற்று விளங்கியிருந்தது. அவர்கள் தென்னாடு வந்தபின் அஃதாவது கடைக் கழகக் காலத்திற்குப் பின்னர்தான் தமிழ்மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் பண்பாடு முதலிய யாவும் சிதையத் தொடங்கின. இவர்கள் கூறிப் பெருமைப்படும் சமசுக்கிருத மொழி அதன் பின்னர்தான் செயற்கையாக உருவாக்கப் பெற்றது. இந்த வரலாற்று நிலைகளை யெல்லாம் உணராமல் அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாமல் அல்லது ஒப்புக்கொண்டும் அவற்றை அடியோடு மறைக்கின்ற முயற்சியில் தமிழ்த்தாய் உரைப்பதாகப் பாரதியார் இப்படி எழுதுகிறார்.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”அகத்தியர் அகத்தியம் என்னும் இலக்கணத்தையும் நாரதர் பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழ் இலக்கண நூலையும் இயற்றியது உண்மைதான். தமிழில் ஏற்கனவே இருந்த நூல்களை ஒட்டியும் தழுவியுமே அந்நூல்கள் எழுதப் பெற்றன. அவ்வாறு செய்தது தம் ஆரியக் கருத்துகளைத் தமிழ்மொழியின் மூல நூல்களான இலக்கண நூல்களிலேயே நுழைத்தற்கு வேண்டியே தவிர, தமிழை வளர்க்க வேண்டியன்று. இம்முயற்சி இக்காலத்தும் நடந்து வருகின்ற வெளிப்படையான முயற்சியாகும். தஞ்சை ‘சரசுவதி மகாலில்’, பழைய ஓலைச் சுவடிகளைப் பெயர்த்தெழுதுகின்ற முயற்சியில், இவ்வாறு பழந்தமிழ்ச் சுவடிகளினின்று வடமொழியில் பெயர்க்கப் பெற்ற பின், அச்சுவடிகளையே அழித்துவிடுகின்ற இரண்டகச் செயல் இன்றும் நடந்துவருவதாக அங்கிருந்து பணியாற்றிய புலவர்களே அறிவிக்கக் கேட்டிருக்கின்றோம். இந்தக் கொடுமை மாந்தன் நிலாக்கோளில், இறங்கிய காலத்தும் துணிவாகவும் சூழ்ச்சியாகவும் நடைபெறுகின்றதெனில் அக்காலத்தில் நடைபெற்றிருக்க முடியாதென்று ஒரு கருத்துக் குருடனும் ஒப்பமாட்டான். மேலும் உ.வே.சா, போலும், பாரதியார் போலும் தமிழ்த்திறமும் ஈடுபாடும் கொண்டவர்கள் வாயிலிருந்தே இத்தகைய கருத்து வருவதற்கு வேறு பக்க வலிவுகளே தேவையில்லை.

அவ்வாறு அகத்தியர் போன்ற ஆரிய முனிவர்கள் தமிழ் இலக்கணம் செய்தபின்தான் தமிழ்மொழி ஏற்கனவே உயர்ந்து விளங்கிய ஆரிய மொழியான சமசுக்கிருதத்திற்கு நிகராக விளங்கியதாம். பாரதியார் கருத்திது. நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருப்பர்.

“ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்

ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்”- என்பது அவர் கூற்று. இப்படி எழுதப் பாரதியார் வரலாறு தெரியாதவராக இருக்க வேண்டும்; அல்லது வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். எளிய புலவர்கள் இவ்வாறு உண்மைக்கு மாறாக எழுதினாலும், பாரதியார் போலும் ஓரளவு சிறந்து விளங்கிய தேசியப் புலவர்கள் இவ்வாறு கற்பனைகளை உண்மைபோல் எழுதக்கூடாது. இப்படி எழுதுவதால் வரலாறு சிதைக்கப் பெற்று, உண்மை நிலைகள் உணரக் கூடாமற் போய்விடுகின்றன என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பாவலர்களும் இதற்கு நெறிவிலக்கினர் அல்லர். அவர்கள் கற்பனை, வரலாற்றைத் தழுவிய கற்பனையாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்றுக்கு மாறான கற்பனையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அத்தகைய கற்பனைகளால் எதிர்காலம் சிதைக்கப்படும் என்பதை உணர்தல் வேண்டும்.

இனி, தமிழர் தமிழ்மொழி சிறந்தது, உயர்ந்தது என்று பாராட்டிப் புகழ்ந்து எழுதுவதைப் போல், பாரதியாரும் ஆரிய மொழியையும் ஆரிய இனத்தையும் அவ்வாறு எழுதியிருக்கக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். பாரதியார் அவர் இனத்தையும் மொழியையும் எவ்வளவு உயர்வுக்கேனும் தூக்கட்டும். அதைப்பற்றி எவருக்கும் கவலையில்லை. ஆனால் அதை வரலாறாக்கக் கூடாது. அவர் தூக்கிப் பேசுகின்ற தன்மை இன்னொரு மெய்ப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பேசப் பெறுகையில்தான் வரலாறு சிதைக்கப் பெறுகின்றது. இந்திய வரலாற்றுச் சிதைவுக்கு ஆரியரின் இந்தக் குழப்ப நிலைகளே கரணியங்கள். அவர்களின் தொன்மங்களிலும், தொல் கதைகளிலும் உள்ள அரசர் பெயர்களில் சிலவும், நிகழ்ச்சிகளில் சிலவும் உண்மையே! ஆனால் அவ்வுண்மையைச் சார்ந்தவாறு பொய்ம்மைகளும் புளுகுகளும் நிரம்பப் படைக்கப் பெற்று அவற்றுள் இணைக்கப் பெற்றுவிட்டன. எனவே உண்மை எது பொய்யெது என உணரமாட்டாமல் வரலாற்று மயக்கங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு, மக்களைப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு உள்ளாக்குகின்றன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் இந்நிலைகள் மிகுதி. அதற்குக் கரணியம் ஆரியப் பூசல்களே !

பாரதியாருக்கு ஆரியவுணர்ச்சி அளவிறந்து இருந்ததுடன் வேதங்களே இந்திய நாட்டின் உயர்வுக்கு அடிப்படையானவை என்னும் மூடக் கொள்கையும் மிகுதியாகவிருந்தது. வேதங்களைப் பழிப்பவர்களை வெளித்திசை மிலேச்சர் என்று இழித்தும் அயன்மைப்படுத்தியும் கூறுகின்றார். மற்றும்,

‘தெள்ளிய அந்தணர் வேதம்” - என்றும்,“ஒதுமினோ வேதங்கள்

ஓங்குமினோ! ஓங்குமினோ!” - என்றும்,“பன்னரும் உபநிடத நூலெங்கள் நூலே

பார்மிசை யேதொரு நூல்.இது போலே?” - என்றும்,‘நாவினில் வேத முடையவள் கையில்

நலந்திகழ் வாளுளடை யாள்” - என்றும்,“அவள்; வேதங்கள் பாடுவாள் காணீர் - உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்’ - என்றும்,“வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை -

மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!” - என்றும்,“மீட்டுமுனக் குரைத்திடுவேன் ஆதிசக்தி

வேதத்தின் முடியினிலோ விளங்கும் சக்தி!” - என்றும், “வேதமுடைய திந்த நாடு - நல்ல

வீரர் பிறந்திந்த நாடு;

சேதமில் லாத ஹிந்துஸ் தானம் - இதைத்

தெய்வமென்று கும்பிடடி பாப்பா!” - என்றும்,அவர் வேதப் பெருமைகளாகக் கூறுபவை யெல்லாம் ஆரியத்தின் பெருமைகளைப் பறைசாற்றவே கூறியவையாகும். வேதங்களை மட்டுமின்றி ஆரிய நூல்கள் அனைத்தையும் பாராட்டும் வகையில்,

“அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்

ஆணிமுத்துப் போன்றமணி மொழிகளாலே

பன்னிநீ வேதங்கள், உபநிடதங்கள்,

பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள்

இன்னும்பல் நூல்களிலே இசைத்தஞானம்

என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?”- என்று பலவாறாக உண்மைக்கு மாறாகக் கட்டி உரைப்பது அவர் ஆரிய மதிமயக்கத்தினின்று விடுபடவில்லை என்பதையே காட்டுவதாகும். மேலும் இவரைப் பற்றியும் இவர் எழுதியுள்ள கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள ஆரியக் கருத்துகள் பற்றியும் இன்னும் பிறரைப் பற்றியும் கூறுவதென்றால் இக்கட்டுரை அளவிறந்து நீளும் என்பதால் இக்கருத்துரைகளை இவ்வளவில் நிறுத்திக் கொள்வோம்.

மொத்தத்தில் நாம் குறிப்பிட வந்தது, ஆசியப் பார்ப்பனர்கள் தமிழ் நிலையிலாயினும் சரி, குமுகாய நிலையிலாயினும் சரி, அரசியல், தொழில், சமயம் முதலிய எந்த நிலைகளிலாயினும் சரி. அக்காலத்திலிருந்து இக்காலம் வரை, தமிழர்களுடன் இரண்டறக் கலந்து உறவாடவில்லை என்பதையும்; அவர்கள் தவிர்க்கவியலாத நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்களிடையில் தமிழர்களைப் போன்றே வாழ நேரிட்டாலும், அவர்கள் மனநிலையில் எவ்வகை மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் இன்றும் தங்களை உயர்ந்தவர்களாகவும், தங்கள் மொழியையே தேவமொழி அதுவே உலகிற்கு மூலமொழியென்று நம்புபவர்களாகவும், அப்படி நம்பச் செய்பவர்களாகவும், அப்படி நம்புகின்ற பிற இனத்தவரையே தாங்கிப் போற்றிக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றார்கள் என்பதையும்; அந்த நிலைகளுக்கு உ.வே. சாமிநாதர் போலும் தமிழறிஞர்களும், பரிதிமாற்கலைஞர் போலும் தனித்தமிழ் வழிகாட்டிகளும், பாரதியார் போலும் பாவலர்களுங்கூட விலக்கல்லர் என்பதையும் உணர்த்த வேண்டியே ஆகும்.காப்பாக வைத்துப் பேணப்பெறும்

வலிந்த கருவிகள்!

இறுதியாக, இவர்களின் இனவுணர்வு மிகவும் பாராட்டக் கூடியதாகும். இவர்களுக்குள்ளே இன்னொருவரைப் போற்றிக் கொள்ளும் தன்மையால் தான் இவர்கள் சிறிய அளவினராயிருப்பினும், இவர்களின் தனித்தன்மைகளை இன்று காறும் எவராலும் அழிக்கமுடியாமல் இருக்கின்றது. இவர்களைப் பார்த்துப் பிற இனத்தினர், குறிப்பாகத் தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய - பின்பற்றக்கூடிய தன்மைகள் - பண்புகள் மிகுதியாகும். தாய்மொழிப் பற்று, இனப்பற்று, தன் இனத்தாரைப் பேணிக் கொள்ளும் தகைமை, தம்முள் ஒருவர் எவ்வளவு தாழ்ந்திருந்தாலும் அவரைப் பழித்துரையாமையும், காட்டிக் கொடாமையும், பிறருடன் ஒத்துப் போகவியலா விடத்துப் பழி கூறாமல் ஒதுங்கிவிடும் தன்மை, எந்த நிலையிலும், எவ்விடத்தும் தம் இனத்தவனைப் போற்றிக் கொள்ளும் தன்மை, உண்மையான திறமையுள்ளவனை மனம் விட்டுப் பாராட்டிப் பெருமை செய்யும் பரந்த பண்பு முதலிய அருங்குணங்களே ஓரினத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவனவும், காக்கின்றனவுமான வலிந்த கருவிகளாகும். அக்கருவிகள் இவ்வாரிய இனத்தாரிடம் இன்றளவும் காப்பாக வைக்கப்பெற்றுப் பேணப் பெற்று வருகின்றன.

தமிழர்களிடம் இவற்றுக்கு நேர்மாறான இழிந்த தன்மைகள் மிகப் பலவாகும். இவை பண்டைத் தமிழரிடம் இருந்தனவாகக் குறிப்பில்லை. இடையிடையே வந்த வேற்றினத்தவரிடமிருந்து கற்றுக் கொண்ட தீய பண்புகள் இவை. பன்னாடைகள் போல் நல்லனவற்றை விட்டு விட்டு அல்லனவற்றைத் தமக்கொவ்வாதனவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை தமிழினத்தின் கள்ளங் கவடற்றப் போக்கால் ஒட்டிக் கொண்டதாகும். இவ்விழி தகைமைகளை அறவே விலக்கினால் தவிரத் தமிழர் முன்னேற்றம் என்பது இந்தத் தலைமுறையில் மட்டுமன்று, இனி எந்தத் தலைமுறையிலும் கருதிப் பார்க்க முடியாத வொன்றாகும். இந்த மனமாற்றத்தை வலிந்தேனும் தமிழர்கள் உருவாக்கிக் கொள்ளவே இக்கட்டுரைக் கருத்துகள் பயனளிக்க வேண்டும். மற்றபடி ஆரியப் பார்ப்பனர் மேல் நமக்கு எவ்வகை வெறுப்பும் இல்லை. அவர்களை மட்டுமன்று, எத்திறத்தினரையும் நம்மவர்களாக ஏற்றுக் கொள்ளும் பண்பில் தமிழர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களல்லர். ஆனால் அதன் பொருட்டு, தங்கள் இனத்தை வேண்டுமென்றே தாழ்த்தி வைக்கும் நிலைக்கு - மிகவும் சிறந்ததும் உலக மொழிகளுக்கே தாயானதுமான தங்கள் மொழியை இழித்து ஒழிக்கும் நிலைக்குத் தமிழர்கள் தங்களை இனியும் ஆளாக்கிக் கொள்ளக்கூடாது. தமிழர்களின் இம்முயற்சியை ஆரிய இனம் மட்டுமன்று, உலகின் அனைத்து இனங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அவர்களாக உணராவிடத்து, தமிழர்கள் எவ்வகையானும் இதனை உணர்த்த, பறைசாற்றச் சிறிதும் தயங்கக் கட்டாது.

தமிழர்க்கென்று ஒரு தனிமொழி, தனிப்பண்பாடு, தனி நாகரிகம், தனிநாடு என்பன என்றும் உண்டு. அவற்றை வலியுறுத்துவதே தனித்தமிழியக்கத்தின் கொள்கை. அவை ஊறுபடுத்தப் பெறுங்கால், அல்லது சிதைக்கப் பெறுங்கால் அந் நிலைகளால் ஏற்படும் எதிர் விளைவுகளைத் தொடர்புள்ள அனைவருமே எண்ணிப் பார்க்க வேண்டுமேயல்லாமல், தமிழர் மட்டுமே எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது நடுநிலையற்ற ஒரு சார்பான - ஓரினத்தை மற்றோர் இனம் அழிக்கின்ற ஒரு அழிவுக் கொள்கையாகும். அந்நிலையை எத்தகைய மாந்த உணர்ச்சியுள்ளவனும் - அல்லது அவ்வுணர்ச்சியுள்ள எந்த ஓரினமும் பொறுத்துக் கொள்ள முடியாது. பிறிதோரினத்தினும் தங்களை ஓரினம் உயர்த்திக் கொண்டு பேசுவது, எழுதுவது, நடப்பது, மற்ற இனம் அதைப் பொறுத்துக்கொண்டு தான் கிடக்க வேண்டும் என்பது உடலில் நல்ல அரத்தம் ஓடாத கண்ணதாச அல்லது சுப்பிரமணிய அல்லது பக்தவத்சலத் தமிழர்களின் மானங்கெட்ட தன்மையாக விருக்கலாம். அது மற்றவர்களுக்கும் இருக்கத்தான் வேண்டும் என்னும் வெண்டைக்காய் அறிவுரை அறவுரையன்று; தமிழினத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் காட்டிக் கொடுப்பு உரை யாகும். அந்நிலைக்குத் தமிழர்கள் தாழக் கூடாது; எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

— தென்மொழி சுவடி : 11, ஒலை : 2-10,11, 1973

ஆரியர் கூத்துஅண்மையில் தில்லி அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “1965-66-ஆம் ஆண்டில், சமற்கிருத வளர்ச்சிக்கெனப் பொருள் உதவி கோரிச் சமற்கிருதக் கழகங்கள், சமற்கிருதப் பள்ளிகள், சமற்கிருத நிலையங்கள் ஆகியவை, நடுவணரசுக் கல்வி அமைச்சரகத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். கையெழுத்துப் படிகள் புத்தகங்கள் வெளியீட்டுக்கும், சமற்கிருதத் தாளிகைகளுக்கும் இந்த உதவியைக் கோரலாம். சமற்கிருதக் கழகங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகச் சமற்கிருத மொழியிலுள்ள சிறந்த நூல்களின் படிகளை இந்திய அரசு நிறைய வாங்குகிறது” - என்பதாகும் அந்த அறிக்கை.

ஏறத்தாழ நாற்பது கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில், அரசினர் கணக்குப்படி ஏறத்தாழ 555 பெயர்களே பேசுவதாகக் கணக்கிடப் பெற்று, கோயில்கள், ஆரிய நான்மறை வகுப்புகளிலன்றிப் பிறவிடங்களில் முற்றிலும் பேச்சு வழக்கற்று இறந்துபட்ட மொழியாகிய, சமற்கிருத மொழியின் வளர்ச்சியில் அரசு எத்துணையளவு கருத்துக் கொண்டுள்ளது என்பதைக் கல்வி அமைச்சரகம் வெளியிட்டுள்ள மேற்கண்ட அறிக்கை தெளிவாக உணர்த்துகின்றது. இந்திய ஒருமைப்பாடு என்ற பொருந்தாக் காரணம் கூறித் திணிக்கப்படும் இந்தி மொழிக்குத், தென்னாட்டிலும் வடநாட்டிலும் ஏற்பட்டு வரும் எதிர்ப்புணர்ச்சி வலுவடையும் இந்த நேரத்தில், அரசின் அமைச்சரகங்களிலும், பிற அதிகாரங்களிலும் உள்ள பார்ப்பனர்கள் வடமொழி வளர்ச்சிக்கென மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து வருவதை, அவர்தம் அடிவருடிகள் போக மற்றவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகின்றோம். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதுபோல் இந்தி பேசும் வடநாட்டினரால் பிற மொழியாளர் மேல் வலிந்து திணிக்கப்படும் இந்திமொழியின் காரணமாக, இந்தியைத் தேசிய மொழியாக ஒப்புக்கொண்டவர்களும், ஒப்புக் கொள்ளாதவர்களுமாக இரு கொள்கையை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் இக்கால், இறந்துபட்டதாக அல்லது பேசத் தகுதியற்றதாகக் கருதப்படும் ஆரிய மொழியான சமற்கிருத மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அரசினர்தம் வ்ரிப் பணத்தைப் பயன்படுத்துவது, பார்ப்பனர்தம் அரசியல் விரகாண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பார்ப்பனர்களின் காவலர்களான திரு. சி.பி. இராமசாமி, திரு. இராசாசி, குடியரசுத் தலைவராக வல்லதிகாரம் பெற்றுள்ள திரு. இராதாகிருட்டினண் ஆகியவர்களின் உள்நோக்கமெல்லாம் பார்ப்பனர்தம் ஆட்சியே ஓங்கவேண்டுமென்பதும், வடமொழி மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்பதுமே ஆகும். இவ் உள்நோக்கங் கருதியே திரு. இராசாசி அவர்களும் இந்தி மொழியை எதிர்க்கின்றார். இந்தி மொழியைத் தென்னாட்டவர்கள் ஒரு நாளு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதும், இக் காரணங்காட்டிச் சமற்கிருத மொழியைத் தேசிய மொழியாக்க வடவரிடம் எடுத்துக் கூறி ஒப்புக் கொள்ளச் செய்வதும் இராசாசி போன்றவர்களின் மொழித் திட்டமாகும். இந்தியைத் தமிழ்நாடு ஒருபொழுதும் ஏற்காது’ என்று தம் கட்சியின் மொழித் திட்டத்துக்குப் புறம்பாகக் கூறிவருவதும் இக்காரணம் பற்றியே! “வட மொழியே தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்ற மொழி” என்று திரு. சி.பி. இராமசாமி அவர்கள் கூறி வருவதும் இதுபற்றியே! இன்னமும் தெளிவாகக் கூறுவதானால், திரு. காமராசர் போன்ற தமிழுணர்வு கொஞ்சமேனும் உள்ளவர்கள், இந்தியைக் கொண்டுவரும் நோக்கமும் அதுதான். “இந்தியை இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்கத் தவறினால், பிற்காலத்தில் பார்ப்பனர்தம் வலிவாலும் சூழ்ச்சியாலும் சமற்கிருதமே தேசிய மொழியாக ஆகிவிடக்கூடும்” என்பதே காமராசரின் அச்சமாகும். மற்றபடி இந்தியினால் ஏற்படப் போவதாகப் பேசப்பட்டு வருகின்ற தேசிய ஒருமைப்பாடுபற்றிக் காமராசரைவிட இராசாசியே மிக நன்றாக அறிவார். பெரியார் திரு. இராமசாமி அவர்கள் காமராசரின் கொள்கைகளுக்குத் துணைநிற்கும் காரணமும் இதுவே! ஆனால் தன்னம்பிக்கையற்ற இத்தகைய அச்சங்களுக்கெல்லாம் நாம் மதிப்பளிக்கப் போவதில்லை. இவ் வச்சங்கட்கு அடிப்படைக் காரணம் நம் தலைவர்களுக்கு மொழிப் பற்றும் மொழியறிவும் இல்லாமையேயாகும்.

திரு. இராசாசி, திரு. சி.பி. இராமசாமி அவர்களின் திட்டங்கட்கு, அவர்கள் கருதுகின்ற அடிப்படைக் காரணம், “தமிழும் வடமொழியும் ஏற்கனவே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட மொழிகள் கழகக் காலந் தொட்டே தமிழ்நாடு வடநாடு ஈடுபாடு கொண்டு, பல்லாயிரக் கணக்கான சொற்களையும் சொல் மூலங்களையும் கொண்டும் கொடுத்தும் வந்துள்ளன. தமிழின் பிள்ளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய தலையாய திரவிட மொழிகள் பிரிவதற்குக் காரணமாக இருந்ததும் சமற்கிருதமே. சமற்கிருதத் தொடர்பால் தோன்றிய பிற - திரவிட மொழிகளின் சிதைவே இக்கால வடநாட்டு மொழிகளிலும் பரவிக் கிடக்கின்றது. ஆகவே சமற்கிருத மொழி தென்னாடு வடநாடு இரண்டிற்கும் மாறுபாடில்லாத ஒரு மொழி. எனவே அம்மொழியே தேசிய மொழியாவதற்கு ஏற்ற மொழியாகும்” என்பதே! இக்கொள்கை இந்தியா முழுவதிலுமுள்ள பார்ப்பனர் எல்லார்க்கும் ஏற்ற கொள்கையாகும். இக்கொள்கைக்குத் துணையாக, ஆங்காங்கே அரசினர் அலுவலகங்களிலும், அமைச்சரகங்களிலும் வலிந்த அதிகாரங்களில் உள்ள பார்ப்பனர்கள் இயங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம். பார்ப்பனரின் இக் கொள்கைப் போருக்குப் படைக்கருவிகளாக இருப்பன - செய்தித்தாள்கள், வானொலி, பொழுதுபோக்கு மன்றங்கள், மாதர் நலத்துறை முதலிய விளம்பரத் துறைகளும், அமைச்சரகம், செயலகம், பிற நாடுகளிலுள்ள ஒற்றரகங்கள், பிற நாட்டு நூல், தாளிகை வெளியீட்டு அகங்கள், இந்நாட்டுப் பிரிட்டிசு, அமெரிக்க உருசிய ஒற்றரகங்கள் முதலிய அதிகாரமும் ஆக்கமும் உள்ள துறைகளும், தமிழறியாத மொழி, இலக்கிய, அரசியல் வல்லடிமைகளும் அவர்தம் இரந்து குடிக்கும் மனப்பான்மைகளுமேயாகும். இங்கிருந்து உருசியாவுக்கும் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் போகும் பார்ப்பனர்கள் ஆங்காங்குள்ள மொழி, இலக்கிய, அரசியல் தொடர்பாக உள்ள பணிகள் அத்தனையிலும் தலையிட்டுச் சமற்கிருதமே உலக மொழிகளில் பெரும்பாலாக உள்ள மொழிக் குடும்பத்தின் சிறந்த மொழியென்றும், அதுவே இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்துக்கும் தாய் என்றும் பறைசாற்றுகின்றனர். அதற்குத் தக ஆங்காங்குள்ள மொழிகளில் இவைத் தொடர்பாக உள்ள ஓரிரண்டு சொற்களையும் எடுத்துக்காட்டி, அச் சொற்களுக்கான மூலவடிவம் தங்கள் மொழியாகிய சமற்கிருதத்தில் உள்ளதாகவும் எடுத்துக்கூறி, அவர்களை வியப்பிலாழ்த்திப் பொருளும், மதிப்பும், ஏந்துகளும் தேடிக்கொள்கின்றனர். இங்கிருந்து தமிழ்த் தொடர்பாக வெளிநாடுகள் செல்லும் மீனாட்சிசுந்தரங்களும், சோமசுந்தரங்களும் வெளிநாடுகளில் ஏற்கனவே - பரவியுள்ள தவறான மொழிக் கொள்கைகளுக்கு ஏற்பவே தமிழைத் தாழ்த்தியும், வடமொழியை உயர்த்திப் பேசியும் வையாபுரியின் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இத்தனைத் துறைகளிலும் ஈடுபட்டுத் தம் ஆரிய மொழியாகிய சமற்கிருதத்தையும், ஆரியப் பண்பாட்டையும் பரப்பிவருகின்ற காரணத்தாலும், தமிழர்களின் விழிப்பின்மை, ஒற்றுமையின்மை, மொழியறிவு, உணர்வின்மை, துணிவின்மை - முதலியவற்றாலும் இன்று தமிழ்மொழிக்கென ஒரு பெரும் போராட்டமே நடத்திக் காட்ட வேண்டிய அளவுக்கு, வடமொழி ஊடுருவலும், இந்தித் திணிப்பும் - ஏற்பட்டுவிட்டன; ஏற்பட்டு வருகின்றன. தேவையும் பொழுதும் வாய்க்கையில் இப் புறச்செயல்களுக்கெல்லாம் உள்ளீடு காட்டி விளக்குவோம். இக்கால் சொல்வழக்கற்ற சமற்கிருதத்திற்கு மட்டும் சலுகைகள் பல காட்டிப் பரிந்து காக்கும் அரசினரைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், அப் பரிவு வேண்டுவதொன்றே ஆயின், அத்தகைய சலுகைகளைப் பிறமொழி வளர்ச்சியிலும் நேரடியாகக் காட்டும்படி நடுவணரசையும், மாநில அரசையும் கேட்டுக் கொள்கின்றோம். இத்தகைய முயற்சிக்கு ஆங்காங்கே அரசினர் தொடர்புள்ள தமிழ் அதிகாரிகளும் எழுத்தாளர்களும் செய்தித்தாள்களும் துணைநிற்குமாறு வேண்டிக் கொள்கின்றோம். ‘ஆரியர் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருப்பர்’ என்ற முதுமொழியை நினைவூட்டி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவும், ஏமாளிகளாகவும் உள்ள தமிழ் மக்கள் இனியேனும் எல்லாத்துறைகளிலும் விழிப்புற் றெழுவார்களாக என்று பல்லாற்றானும் வலியுறுத்துகின்றோம்.

-தென்மொழி சுவடி : 3, ஓலை : 6, 1965

பார்ப்பனரின் எழுச்சி!

பொதுவாகப் பார்ப்பனர் என்று குறிக்கப் பெறும் ‘பிராமணர்கள், நிலத்தேவர்கள் என்றே மறை(வேதங்களிலும், நூன்முறை(சாத்திரங்களிலும், பழநூல்(புராணங்களிலும், பழங்கதை இதிகாசங்களிலும், அறிவு நூல்(ஆகமங்களிலும், அறநூல்(மிருதி) களிலும், வேள்வி முறை(பிராமணங்)களிலும், மறையறிவு(உபநிடதங்) களிலும், சமயச்சடங்கு(ஆரண்யகங்)களிலும், மெய்ந்நூல்(தத்துவங்)களிலும், வினைநூல்(கரும காண்டங்)களிலும், வழிபாட்டு நூல் (பூஜா நியமங்)களிலும், ஓக(யோக) நூல்களிலும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் அடிப்படை உண்மைபோலும் கூறப்பட்டிருக்கின்றது. அவ்வடிப்படையிலேயே மக்களின் அமைப்புகளும் ஒருசார்புடையன வாகவே பகுக்கப் பெற்றுள்ளன.

இந்நூல்களில் கூறப்பெற்ற உண்மைகளின்படி தூய்மையே (சத்துவம்) நிரம்பியவர்கள் பிராமணர்கள் என்றும், ஆண்மை (ரஜஸ்) நிரம்பியவர்கள் ‘க்ஷத்திரியர்கள்’ என்றும், சோர்வு(தமஸ்) நிரம்பியவர்கள் ‘வைசியர்கள்’ என்றும் இம்மூன்று தன்மைகளில் எதுவுமே சரிவர அமையாதவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் கூறப் பெற்று வருகின்றன. இந்நால்வரும் உலகில் அறிவுபுரத்தல், உலகு புரத்தல், பொருள்செயல், தொண்டுசெயல் என்ற காரணங்களுக்காவே பிரம்மா என்னும் படைப்புக் கடவுளின் முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்று தோன்றியவராகக் கூறப் பெற்றுள்ளனர். இந்நால்வகை மக்களுக்கும் கூறப்பெற்ற வாழ்முறைகளும், அறமுறைகளும், ஒழுக்க முறைகளும் மனு முதலிய ஆரிய நூல்களில் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன. அந்நூல் உட்பட எந்நூலையும், கலைகளையும், மறைகளையும் கற்று உணர்தற்கு உரியவர் பிராமணரே என்றும், பிறர் அவற்றைப் படிப்பதும், படிக்கக் கேட்பதுங்கூடக் கூடாவென்றும் கண்டிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிப்பவனும், படித்து அவற்றின் ஒழுங்கு முறைகளில் ஒழுகுவோனுமாகிய பிராமணனுக்கே இவ்வுலகம் முழுவதையும் கட்டியாளும் தகுதியிருக்கின்றது என்றும் கூறப்பெற்றுள்ளது.

பத்தே ஆண்டு நிரம்பிய பிராமணன்னைத் தந்தையைப் போலும், நூறு ஆண்டு உடைய ‘கூத்திரியனை’ப் பிள்ளையைப் போலும் மதித்தல் வேண்டும் என்றும் மனுநூல் கூறுகின்றது. இன்னும் அரசன் பிராமணரைக் கேட்டு அவர் கருத்துப்படியே அரசு செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் பிராமணரைக் கூப்பிட்டு, அவர்களுக்கு உள்ள குறைகளைக் கேட்டு, அவற்றை நீக்குவது அரசன் அன்றாடக் கடமைகளில் ஒன்று என்றும், அரசன் நோயுற்றவிடத்துப் பிராமணனே அரசவையை நடத்தத் தக்கவன் என்றும், நான்காம் இனத்தவனாகிய ‘சூத்திரனை’க் கொண்டு எந்த நாடு அரசாளப் பெறுகின்றதோ அந்நாடு சேற்றில் அகப்பட்ட மாட்டைப் போலத் துன்புற்று, வறுமைமிகும் என்றும், புதையல் பொருளைப் பிராமணன் தவிரப் பிறர் எடுத்தால் அப்பொருள் அரசனையே சாருமென்றும், பிராமணன் எடுத்தால் அஃது அவனுக்கே சொந்தமென்றும், மன்னனுக்குப் புதையல் கிடைத்தால் அதில் பாதியைப் பிராமணர்களுக்குத் தரவேண்டுமென்றும், குற்றம் செய்தவனை அவன் குலமறிந்தே தண்டிக்க வேண்டுமென்றும், பிராமணர் விருப்பத்திற்கு மாறாக எந்தத் தீர்ப்பையும் அரசன் சொல்லக்கூடாதென்றும், பிராமணனைக் காக்கும் பொருட்டு எவனும் எப்பொய்யைக் கூறினாலும் கரிசு(பாவமும் குற்றமும் ஆகாவென்றும், பிராமணன் பொய் கூறினால் அவனை மன்னிக்க வேண்டுமென்றும், பிற மூவினத்தாரும் பொய் கூறினால் அவர்களை நாடு நடத்த வேண்டும் என்றும், பிராமணன் தவிர்த்த பிறரைக் கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண், நாக்குக்கு நா, செவிக்கு செவி, உடலுக்கு உடல் சிதைக்க வேண்டுமென்றும், பிராமணனை மட்டும் எந்த வகையான காயம் படாமலும் அவன் சொத்துகளுடன் ஊரைவிட்டு துரத்திவிட வேண்டுமென்றும், பிராமணர்களை இழிந்த பிறப்பினனாகிய நான்காம் இனத்தவன் திட்டினால் அவன் நாக்கை அரசன் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணன் அமரத்தக்க உயர்ந்த இடத்தில் சமமாக அமர்ந்தால், சூத்திரனின் இருப்புறுப்பையே அறுத்தெறிந்து, ஊரைவிட்டே ஓட்ட வேண்டுமென்றும், பிராமணனை அவன் காறியுமிழ்ந்தால் உதடுகளையும், அவன்மேல் சிறுநீர் படும்படி செய்தால் ‘சூத்திரனின்’ ஆண் குறியினையும் அறுத்தெறிய வேண்டுமென்றும், பிராமணனுடைய குடுமி, தாடி, மீசை இவற்றைத் தொட்டாலும் பிடித்து இழுத்தாலும் சூத்திரனுடைய கைகளையே துண்டிக்க வேண்டுமென்றும், பிராமணனுடைய பொருள்களைத் திருடியவன் தானே தன் தோளின்மேல் உலக்கை, கருங்காலித்தடி, அல்லது இருமுனையும் கூரான கத்தி இரும்புத்தடி இவற்றில் யாதேனு மொன்றைத் துரக்கிக்கொண்டு போய் முறையிட வேண்டுமென்றும், உடனே அரசன் அவனை உயிர்போகத் தண்டிக்க வேண்டிய தென்றும், அதனால் உயிர் போய்விடுமானால் ‘சூத்திரனின்’ கரிசே (பாவமே) போய்விடுமென்றும், அவ்வாறு தண்டியாமல் விட்டால் அரசனுக்கே அக் கரிசு போய்ச் சேருமென்றும், பிராமணனுடைய மாட்டினைத் திருடிக்கொண்டு போனவனின் முழங்காலை வெட்டி யெறிய வேண்டுமென்றும், பிராமணன் வைத்து வளர்க்கும் செடியிலுள்ள பூவைத் திருடிக்கொண்டு போனாலும் அவனை 5 குன்றிமணியளவுள்ள பொன்னைத் தண்டமாகக் கட்டச் செய்ய வேண்டுமென்றும், பிற குலத்துப் பெண்களைச் சேர்வதால் உலகில் எல்லாச் சாதிகளும் கலந்து விடுமாகையால் உலகில் அறங்கள் குன்றி மழை பெய்யாமல் போகுமென்றும், ஆகவே ஒரு குலத்தில் உள்ள ஆடவர் பெண்டிர் பிற குலங்களிலுள்ள ஆடவர் பெண்டிர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதென்றும் சூத்திரன் பணத்தை எக்காரணங் கொண்டும் தன் தேவைக்கு மிகுதியாகச் சேர்க்கக் கூடாதென்றும், அவ்வாறு சேர்த்தால், தான் அடிமையாக இருந்து உழைக்க வேண்டிய தலைவனாகிய பிராமணனையே துன்புறுத்த நேரிடலாம் என்றும், பிராமணன் தலையிலுள்ள குடுமியை மொட்டை யடிப்பதே அவனுக்கு உயிர்த் தண்டனையாகுமென்றும், ஆனால் பிறரை அவ்வாறு செய்ய நேருங்கால் உயிரை வாங்குவதே முறையாகு மென்றும், நாட்டிலுள்ள எல்லாக் கடின வேலைகளுக்கும் நான்காம் இனத்தாரான சூத்திரரையே அரசன் அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு அவர் எந்த வேலை செய்தாலும் அந்த வேலையினால் வரும் வருமானம் முழுவதும் அவருடைய தலைவர்களுக்கே சொந்தமாகுமென்றும், உழைப்பவர்களுக்குத் தம் தலைவர்கள் கொடுக்கின்ற பொருள்களல்லால் பிறிதோர் உடைமை இல்லை யென்றும், பிராமணன் இந்த உழைப்பாளர்களிடமிருந்து எல்லா வகைப் பொருள்களையும் இலவசமாகவோ வலுக்கட்டாயமாகவோ பெற்றுக் கொள்ளலாம் என்றும், நான்காம் இனத்தவராகிய சூத்திரரை அரசன் தம்தம் தொழில்களையே தொடர்ந்து, விடாமல் செய்து வரும்படி கட்டாயப்படுத்தி வேலை வாங்கவேண்டுமென்றும், இல்லையெனில் வேலையற்ற இவர்கள் உலகத்தையே அழித்து விடுவார்களென்றும், அரசன் பிராமணர்களைக் கொண்டே வரவு செலவு எழுதல், கருவூலப் பொருள்களை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்ய வேண்டுமென்றும், பிராமணனைப் போல் பூணூல், குறிகள் முதலியவற்றை அணிந்துகொள்ளும் நான்காம் இனத்தவரின் உறுப்புகளைக் குறைத்தல் அரசன் கடமை யென்றும், அரசனின் கருவூலமே கொள்ளை போனாலும் பிராமணர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாதென்றும், இவ்வுலகத்தில் தீ சுடுவதும், கடல் நீர் உவர்ப்பதும், நிலவு தேய்ந்து வளர்வதும், உலகங்கள் இயங்குவதும், மாந்தர்கள் படைக்கப் பெறுவதும், வேதங்கள் ஒதப்பெறுவதும் பிராமணர்களாலேயே என்றும், எனவே அவர்களுக்குச் சினம் வரும்படி அரசன் நடந்துகொள்ளக்கூடாதென்றும், பிராமணன் உடலிலிருந்தே அரசன் (க்ஷத்திரியன்) உண்டாக்கப் பெற்றனாகையால் பிராமணரை அரசர்கள் காக்க வேண்டியதே கடமையென்றும், இவ்விருவரே உலகிலுள்ள இன்பங்களை யெல்லாம் நுகரத்தக்கவர் என்றும், மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன்னிடம் மிகுந்திருக்கும் பொருள்களைப் பிராமணர்களுக்கும் அரசைத் தன் பிள்ளைகளுக்குமே விட்டுச் செல்ல வேண்டுமென்றும், உள்ளும் புறமும் கவடின்றி, மேலினத்தாரைத் தாழ்த்திச் சொல்லாமல், அவர்களுக்குத் தம் வாழ்க்கை முழுவதும் மேலான அடிமையாயிருந்து மன மகிழ்ச்சி யுடையவனே முதல் தரமான ‘சூத்திரன்’ என்றும், இனக்கலப்பே அறத்துக்குக் கேடு என்றும், நான்காம் இனத்தவர் பேசும் அத்தனை மொழிகளும் ‘மிலேச்ச’ மொழிகளே என்றும், சமற்கிருதமே தேவமொழி என்றும், சூத்திரர்கள் ஒரோவொருகால் சமற்கிருதத்தைக் கற்றுக்கொண்டாலும் அவர்கள் அடிமைகளாகவும் திருடர்களாகவுமே ஆவார்கள் என்றும், இவர்களனைவரும் ஊருக்கு வெளியிலும், மரத்தடிகளிலும், தோப்பு துரவுகளிலும், இடுகாடு சுடுகாடுகளிலும், மலைமடுவுகளிலுமே வாழ்ந்திருக்க வேண்டுமென்றும், இவர்கள் எந்த வகையான மாழை(உலோக) ஏனங்களிலும் புழங்கக் கூடாதென்றும், இவர்கள் உண்ணுவதற்கு உடைந்த சட்டிகளையே வைத்துக் கொள்ளுதல் வேண்டுமென்றும், பிணங்களுக்கு இடுகிற துணி வகைகளையே இடுப்புவரையில் அணிய வேண்டுமென்றும், பொன், வெள்ளிகளை நகைகளாக இவர்கள் அணியக் கூடாதென்றும், இரும்பு, பித்தளைகளாலான நகைகளையே இக் குலத்துப் பெண்டிர்கள் அணிந்துகொள்ளவேண்டுமென்றும், இவர்கள் மார்புக்கு எவ்வகையான துணிகளையும் அணியக் கூடாதென்றும், எப்பொழுதும் கடினமான தொழில்களைச் செய்தே பிழைக்க வேண்டுமென்றும், இவர்கள் நாய், கழுதைகள் தவிர மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாதென்றும், இவர்களைப் பிறர் தீண்டவே கூடாதென்றும், இவர்களுக்கு வேலைக்காரர்களைக் கொண்டே சோறிட வேண்டுமென்றும், இதுவே பிரமன் கட்டளை யென்றும், சூத்திரன் சுண்ணாம்பு வீடே கட்டக் கூடாதென்றும், வீட்டிற்குக் கதவே வைக்கக்கூடாதென்றும், படித்த சூத்திரனும் மதம் பிடித்த யானையும் ஒன்று என்றும், அதனால் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கவே கூடாதென்றும், பிராமணன் எந்தக் காலத்திலும் உழவு செய்யக்கூடாதென்றும், உழவுத் தொழில் உலகில் உள்ள தொழில்களெல்லாவற்றிலும் மிகத் தாழ்ந்த தொழில் என்றும், அதைச் சூத்திரர்களைக் கொண்டே செய்விக்க வேண்டுமென்றும் இன்னும் பலவாறாகவும் பார்ப்பனர்களுக்கு நன்மையாகவும் பிறருக்குத் தீமையாகவும் மிக விழிப்பாகவும் கரவாகவும் மனுநூலில் எழுதப் பெற்றுள்ளன.

இவற்றை எதற்காக இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறினோம் என்றால் அக்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் இந்த அடிப்படையான கொடுமைகளையே உலக நெறிமுறையாகக் கொண்டு பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை விளக்கிக் காட்டவே! இத்தகைய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகும் அரசர்களையே அவர்கள் வாழ்த்தினர் என்பதற்கும், அவ்வாறு அல்லாதவர்களை அவர்கள் சூழ்ச்சியாலும், விரகாலும் தாழ்த்தினர் என்பதற்கும் தமிழக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் ஏராளமான சான்றுகள் உள. தப்பித்தவறி அவர்களின் விரகுக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் தமிழறம் புரந்த தமிழரசர்களின் வரலாற்றை மாற்றியெழுதி அவ் வரலாறுகளையும் தங்களுக்குத் துணையாக்கிக் கொண்டனர். ‘மனுநீதி கொன்ற சோழன்’ என்னும் பெயராக மாற்றி, அவர்களின் அடிப்படையான எண்ணங்களில் பிறர் ஐயுறா வண்ணம் திறமையாக நடந்துகொண்டனர். தாங்களே நிலத்தேவர்கள் என்றும், தங்களிடமே இவ்வுலக ஆட்சியைப் ‘பிரமன்’ ஒப்படைத்தான் என்றும் எழுதிவைத்துக் கொண்டு செயல்படும் இவர்களின் கரவும், எத்தும், புரட்டும் இன்றுகாறும் தொடர்ந்தே வருகின்றன.

தமிழரை மொழியாலும், செயலாலும், அரசாலும், கல்வியாலும் அடிமைப்படுத்தி, உலகாண்மை முழுவதும் தங்கட்கே உரியன என்று வக்கணை பேசி ஏய்த்துக்கொண்டு வரும் இவ்வாரியப் பார்ப்பனர்தம் கேடுகளை எடுத்து ஒவ்வொன்றாக விரித்துரைப்பதென்றால் ஏடும் காலமும் போதா. ‘கருநிறக் காக்கைக்கும் கல்நெஞ்சப் பார்ப்பனர்க்கும் உருவத்தில் மாற்றம் வேறொன்றில்லை’ என்று பழம்பாடல் ஒன்று கூறுகின்றது. இவையெல்லாம் பழங்கதைகள் என்று கூறித் தள்ளுமாறில்லை.

அண்மைக் காலம் வரை அவர்களின ஆகாத போக்கிற்குப் போராடிய குமுகாயத் தொண்டர் பலர். இராவண்ணன் காலம் முதலாக இக்கால் பெரும் அளவில் குமுகாயப் போராட்டம் நடத்தி வரும் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் காலம் வரை இவர்களின் வல்லாண்மை ஓங்கியே வந்திருக்கின்றது. தன்மான இயக்கமும் பகுத்தறிவுக் கொள்கையும் வலிமிகுந்த இவ் விடைக் காலத்தில், மக்கள் ஒருவாறு பார்ப்பனரின் கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்படாமல் விழிப்புற்றனர் எனினும், இக்கால் அச் சூழ்ச்சியும் கரவும் மேலோங்கி வருவதைப் பார்த்தால் நம் போன்றவர்கள் வேறெதிலும் நாட்டம் செலுத்தவியலாமற் போகின்றது.

இற்றை மீண்டும் இப் பார்ப்பணியம் தலையெடுக்கத் தூண்டு கோலாயிருப்பவர்களுள் திரு. இராசாசியும், அவர்தம் குலக் காவலரான காமகோடி பீடாதிபதி சகத்குரு சங்கராச்சாரியார் அவர்களும், அவரைச் சார்ந்த வரும் பிற தமிழ் அடிமைகளுமேயாவர். அவர்களுக்கு உள்ள நோக்கமெல்லாம் அரசியல் பற்றியது மன்று; பொருளியல் பற்றியது மன்று. அவர்களுக்கிருக்கும் ஒரே கவலை தம் இனம் துன்புறக் கூடாது; தம் இனத்திற்கிருக்கும் தேவத் தன்மை குறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். இக்கொள்கை முறியடிக்கப்படும் பொழுது அதன் எதிர்புறத்திலிருப்பவர் காந்தியானாலும் சரி, வேறு எவரானாலும் சரி, அவர்களை அழிப்பதே அவர்களின் முழுநோக்கமாகும். திரு. இராசாசி அவர்கள் இக்கால் அறம் பிறழ்ந்துவிட்டது என்றும், அவ்வறத்தைச் சரி செய்யவே இதுநாள்வரை இறைவன் தம்மைப் பிழைக்கச் செய்து கொண்டு வருகின்றான் என்றும் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். இவர் அறம் என்று கூறியதற்கு அடிப்படைப் பொருள் இக் கட்டுரையின் முற்பகுதியில் கூறப்பெற்ற மனுநூலின் ஒழுகலாறுகளே! இவையெல்லாம் அறங்கள் என்று அவரடி சாரும் மடயர்களே யன்றி, தன்மானம் உள்ள எவனாகிலும் ஒப்புவானா?

திரு. இராசாசி அவர்கள் 1938-இல் பதவியில் இருந்தபொழுது 2500 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், மீண்டும் பதவிக்கு வந்த 1952-ஆம் ஆண்டில் 6000 பள்ளிக்கூடங்களை மூடியதற்கும், சமற்கிருத மொழியைக் கற்பிக்கவே இந்தியைக் கட்டாயமாக ஆக்கினேன் என்று கூறியதற்கும், இம்மனுநூலில் கூறப்பட்ட ஒழுகலாறுகளே காரணமாக இருந்தன என்று கூறாமலிருக்க முடியுமா? மேலும் இவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் சிற்றூர்ப் புறங்களில் இருந்தவையே! அவற்றில் படித்துவந்தவர்கள் எல்லாரும் தமிழப் பிள்ளைகளே; அஃதாவது இவர் கருத்துப்படி சூத்திரப் பிள்ளைகளே! இவ்வளவு பள்ளிக்கூடங்களையும் மூடியதல்லாமல் மிகுதியிருந்த பள்ளிக்கூடங்களில் படித்துவந்த மாணவர்களுக்கும் அரைநேரப் படிப்புப் போதுமென்றும், மிகுந்த அரைநேரத்தில் அப்பிள்ளைகள் அவனவன் அப்பன் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சட்டம் செய்தாரே அதற்கும் இம் மனுநூல்தானே காரணமாக இருக்க முடியும்.

இக்கால், அவர் மூடிய அத்தனைப் பள்ளிகளும் திறக்கப் பெற்றதுமன்றி, மேற்கொண்டும் பல்லாயிரக்கணக்கான பள்ளிக் கூடங்கள் திறக்கப் பெற்றதையும், பள்ளி இறுதி வகுப்பு வரை இலவசக் கல்வி புகட்டப்படுவதையும், இனிக் கல்லூரிவரை இலவசக் கல்வி புகட்டப் பெற இருப்பதையும், இவ் வேந்து(வசதி)களால் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து முன்னேற வாய்ப்புள்ளதையும் கண்டுதானே வயிற்றெரிச்சல் தாளாது ஆட்சியே குட்டிச்சுவராய்ப் போய்விட்டது என்று குதிக்கின்றார். இவர் உள்ளப் புழுக்கத்தைப் புரிந்துகொண்டன்றோ ‘மெயில்’ முதலிய பார்ப்பன ஏடுகளும் பல்கலைக்கழகப் படிப்பு என்பது யாருக்குத் தகுதி இருக்கிறதோ அவர்கட்கு மட்டுந்தான் தரப்படவேண்டும் என்றும் தரத்தைக் கெடுக்கும்வகையில் கண்டவர்களுக்கும் படிப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்றும் பின்பாட்டுப் பாடுகின்றன.

கல்வியின் தரங்கெட்டுப் போனதற்குக் காரணங்கள் பல. அதன் இழப்பைத் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஊதியமாகக் கருதிக் கொண்டு கதைக்கும் இத்தகைய எழுச்சிகளுக்கெல்லாம் என்ன காரணம்? எங்குப் பார்த்தாலும் ‘சமஸ்கிருத சதஸ்', ‘ஆகம சில்ப வியால பாரத வித்வத் சதஸ்’ என்றும் பலவாறான பார்ப்பனர்க ளெல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு பழமைக்கு வித்திடுவதும் அழிந்துவிட்டதாகக் கூறும் இந்தியப் பழக்க வழக்க(சம்பிரதாய)ங்களை யெல்லாம் புதுப்பிக்க முயற்சி செய்வதும் எதைக் காட்டுகின்றன? தங்கள் தங்கள் கைக்குக் கிட்டிய செய்தித்தாள்கள், பதிப்பகங்கள், வானொலிக் கூடங்கள், நாடகமேடைகள், காலக்கழிப்பு(காலட்சேப) மேடைகள் எல்லாவற்றிலும் சமற்கிருத மொழியை வளர்க்கவும் பரப்பவும் படுகுழிக்கு வித்திடும் பார்ப்பன நெறிமுறைகளை வளர்ப்பதும், மக்களிடையே செல்வாக்கிழந்துவரும் இராமாயண, பாரதப் பழங்கதைகளைப் பேசி அவர்களை மதிமயக்குகளில் ஆழ்த்தி வருவதும் எதைக் குறிக்கின்றன? அரசினர் சார்பில் இயங்கி வரும் தொழிற்கூடங்கள், திட்டத் தொழில்கள் முதலிய யாவற்றிலும் தங்கள் தங்கள் இனத்தாரான பூணுால் திருமேனிகளையே அமரச் செய்வதும், அவர்களுக்கு ஏதாகிலும் ஒரு தீங்குவரின் உடனே உயர்நெறி மன்றம், தலைமையமைச்சர், குடியரசுத் தலைவர் முதலிய பேரிடங்களில் முறையிடுவதும் எதனைக் காட்டுகின்றன. தமிழகத்துள் பார்ப்பனர் மீண்டும் தங்கள் கைவரிசைகளைக் காட்டத் தொடங்கிவிட்டனர் என்பதைத் தானே? இவையெல்லாவற்றிற்கும் காரணமென்ன?

தமிழன் மொழியடிமைப்பட்டு, அரசியல் அறியாமையுள் அழுந்தி, பதவிப்பித்துத் தலைக்கேறி, தன்னலத்திற்காகத் தன் மனைவி, மக்கள், நாடு, நலங்கள், மொழி, முன்னேற்றங்கள் முதலிய யாவற்றையும் அடகுவைக்கத் துணிந்துவிட்டான் என்பதாலன்றோ மீண்டும் பார்ப்பணியம் தலையெடுத்து வருகின்றது. இவற்றைப் பற்றி எல்லாம் எண்ணுகையில் நமக்கு ஆக்க வேலைகள் எவற்றிலும் கவனம் செல்லுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகச் சாணக்கிய மூளைகளை அணைக்கத் துணிகின்ற தமிழர்களே! பதவிப் பித்திற்காகக் கழுதைகளின்பின் கற்பூரந் தேடிப்போகும் குருடர்களே! நீங்கள் மானமுள்ளவர்கள் தாமா? இனநலம் காப்பவர்கள்தாமா? உங்களால் தமிழும் தமிழரும் முன்னேற வழியுண்டா? எண்ணிப் பாருங்கள்!

–தென்மொழி சுவடி : 4, ஓலை : 8, 1966

ஆரியக் குறும்பு!

தமிழர்கள் அறியாமையில் மிகுந்திருந்த காலத்திலும், இரக்க உணர்வாலும் கொடைமடத்தாலும் தம்மை அண்டினார் எவராயினும் அவரைக் கரவின்றிப் புரந்து வந்த காலத்திலும், பிராமணர்கள் என்னும் ஆரியப் பார்ப்பனர் தம் பிழைப்புக்காகவும் மேம்பாட்டுக்கு ஆகவும், பொய்யும் புனைகருட்டும் மிடைந்த கதைகளையும், போலி வழக்கங்களையும் புகுத்தி மன, அறிவு, மெய்களால் தமிழரைத் தாழ்த்தி அவர்தம் நலன்களை உழைக்காமலேயே உண்டுவந்தனர் என்பதற்கு வரலாற்று வழியாகவும் வாய்வழிச் செய்தியாகவும் பல சான்றுகள் உள. அத்தகைய ஏமாற்று வேலைகளை ஆரியப் பார்ப்பனர்கள், இவ் விருபதாம் நூற்றாண்டுக் காலத்திலும் கைவிடவில்லை என்பதற்கு இன்று உள்ளுரவும் வெளிப்படையாகவும் நிகழ்ந்துவரும் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக உள்ளன.

பார்ப்பனர்களின் கைக்கேடயங்களாக இன்று விளங்கி வருபவை அவர்கள் நடத்திவரும் செய்தித்தாள்கள், அவர்கள் மேலாண்மை செய்து வரும் வானொலி நிலையங்கள், அரசினர் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் முதலியவை. இவற்றின் வழியாக அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் செய்துவரும் கேடுகள் கணக்கிலடங்காதவை. இவற்றைப் பற்றி எண்ணிப்பார்க்கவும் இடம் வைக்காமல் அவர்கள் விடாது செய்துவரும் மடமைப் பெர்ழிவுகளும், வெளியீடுகளும், நடைமுறைகளும் எதிர்காலத்தில் தமிழ்மொழியையே - தமிழர்களையே அழித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது. பொது மக்களுக்குத் தெரிந்த - மிகவும் புழக்கத்திலுள்ள சில சொற்களைக் கூட தமிழில் எழுதாமல் வேண்டுமென்றே வடமொழியிலேயே செய்தித்தாள்களில் எழுதிச் சமற்கிருதத்திற்கு ஆக்கந்தேடுவதும், பார்ப்பனச் சேரியில் குஞ்சுங் குளுவானுமாகவுள்ள விடலைகள் முதல், திக்கொன்றாய்ச் சிதறிக் கிடக்கும் பார்ப்பனப் பாட்டுக்காரர்கள், பேச்சுக்காரர்கள் வரை பார்ப்பன ஆடவரையும் பெண்டிரையும் அவர்தம் அடிமைகளையும் கூட்டிப் பொறுக்கி வானொலிக் கூடத்தில் குழுமவைத்து ‘அருள் வாக்கு’ என்றும், ‘ஸுப்ர பாதம்’ என்றும், ‘மதுரகீதம்’ என்றும், ‘இசை அமுதம்’ என்றும், ‘சங்கீத உபந்நியாசம்’ என்றும், ‘மகிளா மண்டலி’ என்றும், ‘திண்ணைப் பேச்சு’ என்றும், ‘சிறுவர் கதம்ப நிகழ்ச்சி’ என்றும் ‘உரைச்சித்திரம்’ என்றும், ‘ஸம்ஸ்கிருத நிகழ்ச்சி’ என்றும், ‘ஊர்ச்சாவடி’ என்றும், ‘சூரிய காந்தி’ என்றும், ‘மணிமலர்’ என்றும், ‘பெண்ணுலகம்’ என்றும், ‘மெல்லிசை’ என்றும், ‘ஒளி மிகு பாரதம்’ என்றும், ‘விவசாயிகளுக்கு’ என்றும், ‘ஜயபேரி’ என்றும், ‘மாதர் நிகழ்ச்சி’ என்றும், பலவாறாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கற்பனைக் கதைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றிற் கலந்து கொண்டமைக்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அரசினர் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வதும், அரசினர் அலுவலகங்களில் மேலாளராகவும், செயலாளராகவும், தலைமையராகவும், கணக்காளராகவும், ஆய்நராகவும் அமர்ந்துகொண்டு எங்கெங்கெல்லாம் தமக்கும் தம் இனத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டுமோ அங்கங் கெல்லாம் அவற்றைக் கொடுப்பதும், அவ்வழியில் குறுக்கிடும் தமிழர்களைப் பல்லாற்றானும் கெடுப்பதும் நாம் நாள்தோறும் கண்டு மனம்புழுங்கி உள்நடுங்கும் செயல்களாகும்.

‘மேட்டுர் அணைத்தண்ணிர்’ என்றெழுதாமல் ‘மேட்டுர் டாம் ஜலம்’ என்றும் ‘கண்ணிர்ப் புகை யூட்டப்பட்டது’ என்பதைக் ‘கண்ணிர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது’ என்றும் ‘கூட்டம்’ என்பதைக் கோஷ்டி என்றும் வேண்டுமென்றே எழுதித் தமிழைக் கெடுத்துவரும் அவர்களின் கேடயங்களான சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தவிகடன், கல்கி முதலிய தாள்கள் செய்யும் குறும்புத்தனங்களுக்கோ அளவில்லை. கீழுள்ள செய்தி அவர்கள் தாள்களில் ஒன்றான ‘தினமணி'யில் வெளிவந்தது. அதனை அப்படியே தருகின்றோம்.

“சென்னை ராஜ்யத்தில் வறட்சிப் பிரதேங்களில் ஸர்வே நடத்தி, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சர்வே கோஷ்டியைச் சர்க்கார் நியமித்தது.இதில் உள்ள 12 சொற்களில் 4 சொற்களே தமிழ்ச் சொற்கள். அவற்றிற்கும் வடமொழிச் சொறக்ளையே போட்டிருக்கலாம். தங்களின் கேடான எண்ணங்களைப் பிறர் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடுமே என்று அவற்றைச் செய்யாது விடுத்தனர் போலும் ! தமிழுக்கு இவ்வளவு கேடு செய்துகொண்டுவரும் நேரத்திலேயே, அவர்தம் மொழிக்கு எவ்வளவு அக்கறை காட்டப் பெறுகின்றது என்பதற்கு, அதே தாளில் அதே நாளில் வெளிவந்த கீழுள்ள செய்தியையும் பாருங்கள்.

“இது மகாரிஷிகளின் சமஸ்கிருதம் - நமது வேதங்கள் அனைத்தும் தர்மத்தை ஆதாரமாகக் கொண்டவை. வேதங்கள் உப-வேதங்கள் எல்லாவற்றையும் புதுப்பிக்க இந்த சதஸ் முயல்வது குறித்து சந்தோஷம்” என்று ‘ஸ்ரீவெங்கடேஸ்வர ஆலய சம்ஸ்கிருத சதஸ் ஆண்டு பூர்த்தி விழாவில், பெரிய ஜியர் பூரீரங்கராமானுஜ ஜியர் ஸ்வாமிகள் தலைமையில், ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூர் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் சதஸ்ஸைத் துவக்கி வைத்து அருளுரை நிகழ்த்தினார்”.

எப்படி...? ஒருபுறம் தமிழுக்குக் கேடு, மறுபுறம் ஆரியத்திற்குப் பாடு! இவ்விரண்டு முயற்சிகளுக்கும் பயன்படுவது அரசினர் பணம் அல்லது அரசினர் கை வைக்க இயலாத - தேவையானால் இன்னும் போட்டு நிரப்புகின்ற கோயில் பணம். திருப்பதி கோயில் அதிகாரி கொடுத்த அறிக்கைப்படி மேற்குறித்த ‘ஸ்ரீ வெங்கடேஸ்வர சமஸ்கிருத சதஸ்’ தொடங்கிய மூன்று மாதக் காலத்தில் அவர்களின் திருவிளையாட்டிற்குச் செலவிடப்பெற்ற பணம் நாற்பத்தேழாயிரம் உருபா அழைக்கப்பட்ட பார்ப்பன வேத பண்டிதர்கள் 200 பேர்; ‘வேத பாராயணக்காரர்கள்’ 400 பேர் செய்த பணி பார்ப்பனர்களைத் தேவர்களாக்கும் ஆரியப் பூசல்களைப் பரப்புதல் ! தமிழ்மொழியை அடிமைப்படுத்தும் சமற்கிருதத்தை எழுப்புதல். போதுமா ? தமிழன் துரங்கிக் கொண்டிருக்கிறான் அல்லது அடிமைப்பட்டுக் கிடக்கிறான் என்பதற்கு இன்னும் என்ன சான்று வேண்டும்?

இதோ இன்னொரு பார்ப்பனக் குறும்பு!

நூற்றுக்கணக்கான கோடி உருபாக்களைக் கொட்டி மணலைப் புரட்டிக் கரியைத் தோண்டிய நெய்வேலியின் கைவண்ணமெல்லாம் தமிழன் செய்தவை. அங்கிருக்கும் கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் தமிழரைக் கொண்டு கட்டப்பெற்றன. ஆனால் அங்குக் குடியமர்ந்தவர்களோ கெடுப்பது தமிழ்க்குடிகளை - தமிழ் மொழியை! தொழில் முறையாலும் அதிகார முறையாலும் அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் ஆரியப் பேய்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க மொழியைப் பொறுத்த அளவில் அவர்களின் கூத்து எப்படித் தமிழன்னையின் முகத்தில் கரிபூசும் வேலை என்பதை இன்றைய அரசியல் தமிழர் கண்ணுான்றிப் பார்ப்பார்களாக மொழிநலம் காப்பதாக வாய்ப்பறை சாற்றிக் கொண்டுள்ள காவலர்களும் நாவலர்களும் கலைஞர்களும் வேள்களும் இவற்றைக் கண்ணுற்ற பின்னும் தம் அரசியல் ஊடாட்டங்களுக்கு ஆரிய மாயைகளைப் பயன்படுத்துவார்களானால், அவர்தம் முயற்சி முற்றும் அரிமாவைக் குறிவைத்து அதன் நிழல்மேல் அம்புவிட்ட பேதையின் வேலையாகவே முடியும்

நெய்வேலியில் வாரும் நிலக்கரியைக் காட்டி ஆரியவேலி கட்டிக் கொண்டிருக்கும் அங்குள்ள பார்ப்பனர்கள் அங்கு ‘வைதீக சமாஜம்’ என்றும் ‘கோகுலம்’ என்றும், ‘தபோவனம்’ ‘மணித்வீபம்’ என்றும் பல அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்க்கும் தமிழர்க்கும் நாளொரு கேடும் பொழுதொரு சூழ்ச்சியும் செய்த வண்ணமாகவே உள்ளனர் என்று அங்குள்ள தமிழர் பலர் மனம் புழுங்கி நமக்கு மடல்கள் எழுதியவாறே உள்ளனர். அண்மையில் வந்த மடல் அங்குள்ள தெருக்களின் பெயர்களைப் பற்றிய ஒரு விளக்கமாக அமைந்திருக்கின்றது. அம்மடலில் உள்ள ஒரு பகுதியை அப்படியே குறிக்கின்றோம். “....... மேற்கண்ட கூட்டத்தினரே(பார்ப்பனரே) அங்குள்ள வேலைகளில் பெருவாரியாக உள்ளனர். தலைமை அதிகாரிகள் அத்தனைப் பெயரும் அவர்களே. அவர்கள் ‘சத்சங்கங்கள்’ கூடி அங்குள்ள தெருக்களுக்குப் புதுமைப்(!) பெயர்களைச் சூட்டியுள்ளனர். அவற்றில் சில வருமாறு: உளுந்து தெரு, துவரைத் தெரு, பாதாம்கொட்டைத் தெரு, பருத்திக் கொட்டைத் தெரு, பிண்ணாக்குத் தெரு, பேனா தெரு, பென்சில் தெரு, பாய் தெரு, தலையணை தெரு, கருங்கல் தெரு, கத்தரிக்காய்த் தெரு, விசிறி சாலை, வளையல் தெரு..... இன்ன பிற. இப் பெயர்களை வேண்டுமென்றே அவர்கள் வைத்துள்ளனர். காரணம் நல்ல அழகிய தமிழ்ச் சொற்களாக வைத்தால் தமிழ்ப்பற்று வளர்ந்துவிடக்கூடும் என்பதும், தாங்கள் தங்கள் உறவினர்களுக்கும் வேண்டியவர்களுக்கும் பல வேலைகளும் வேலை உயர்வுகளும் வழங்கி வருகின்ற முறை கேடான செயல்களில் தமிழர்க்கு எண்ணம் எழாமல் தடுக்க வேண்டும் என்பதுமே! இவற்றை முன்கூட்டியே கருதித் திட்டமிட்டு வைக்கப்பட்ட பெயர்களாகும் இவை. காந்தியடிகள், நேரு, திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள் ஆகியவர்கள் பெயர்களையோ, அல்லது தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் புலவர் பெருமக்கள், மன்னர்கள், அமைச்சர்கள், மறவர்கள், வள்ளல்கள் ஆகியோர் பெயர்களையோ வைக்காத காரணம் அறவுணர்வும், தமிழ் உணர்வும் அரசியல் விழிப்பும், நேர்மையும் பற்றி மக்கள் எண்ணிப் பார்க்கவே கூடாதென்ற எண்ணந்தான்”. இந்த மடலுடன் அங்குள்ள தெருக்களின் பெயர் வரிசை ஒன்றும் வந்துள்ளது. அதில் எள்ளத்தக்கனவும், வருந்தத் தக்கன வுமான பெயர்கள் பல. அவற்றுள் தமிழில் தெருக்களுக்குப் பெயர்கள் வைக்க வேறு பொருள்களோ, ஆட்களோ, இயற்கையறிவோ, வாழ்க்கை அறிவோ தமிழர்களுக்கு அறவே இல்லையென்று அங்குவரும் பிறநாட்டினர் கருதும்படி அமைந்துள்ள பெயர்கள் மிகப் பலவாகும். காற்றாடி, தொப்பி, தொட்டில், சேவல், முயல், குடை, கோழி, கட்டில், நாடா, ஊதி, கஞ்சிரா, கொத்துமல்லி, காக்கைப் பொன், ஒட்டகம், துலை(தராசு), மத்தளம், கண்ணாடி, கூழாங்கல், சீப்பு, கோடரி, நூல், ஊசி, மாடு, மான், அம்பு, கட்டாரி, கிளி, வாள், தாழ்ப்பாள், புறா, வாத்து, கயிறு, கிண்ணம், பாக்கு, பறவை, கம்பளி, கலப்பை, விளக்கு, கரண்டி, குழாய், பனைமரம், தேங்காய், எலுமிச்சை, மயில், பசும்புல், முதலியவற்றின் பெயர்களிலெல்லாம் அங்குத் தெருக்கள் உள்ளன. இதில் என்ன வியப்பு என்றால் இப் பெயர்களுக்கோ அத் தெருக்களுக்கோ எந்தவகைத் தொடர்பும் இல்லை. தேங்காய்த் தெருவில் பெயருக்குக் கூட ஒரு தேங்காயையோ தென்னை மரத்தையோ பார்க்க முடியாது. ஊசித் தெருவில் ஊசி இருக்காது. குடைத் தெருவில் மழைக்கு ஒதுங்கவும் இடமிருக்காது. தச்சர் தெரு என்று ஒரு தெரு அங்குத் தச்சர் ஒருவரும் இலர். ‘தோல்வித் தெரு’ என்று ஒரு பெயர்! இப்படித் தம் மனம்போன போக்கெல்லாம், இவர்களின் வேத மூளைக்கு எட்டியபடி யெல்லாம் ‘தெருப்பொறுக்கியின் கையில் இருப்பூசி’ கிடைத்ததுபோல் மண்டைக்குடுமி உதிர உதிர எண்ணி அவர்கள் இத்தகைய பெயர்களை ஏன் வைத்தல் வேண்டும்? அது தான் ஆரியக் குறும்பு! அதற்குப் பொருள் இல்லாதது போல் தோன்றும்! ஆனால் அதனால் ஓரினமே அழியும்; ஒரு மொழியே குலையும். இது வரலாறு.

இவற்றையெல்லாம் ஒருபுறம் வளரவிட்டுக்கொண்டு ‘தமிழை வளர்க்கின்றேன்; இந்தியை எதிர்க்கின்றேன் என்று வறட்டுப் பேச்சைக் கூட்டந்தோறும் பேசித் திரிவதில் என்ன பயன் விளையப் போகின்றது? இவற்றைப் பார்க்கையில் நாம் காலங்கருதி இடத்தால் செய்யவிருக்கும் வினையைக், காலங்கருதாமலும் இடம் கருதாமலும் செய்தால் என்ன என்று எண்ணத் தோன்றுகின்றதில்லையா? தமிழ்மானம் உள்ளவர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!

-தென்மொழி சுவடி : 4, ஒலை : 9, 1966

இராசாசி ஒர் அரசியல் நரி!

இந்தியா தன்னுரிமை பெற்றவுடன், அதற்கு வெள்ளைக்காரன் இட்ட அடிமை விலங்கு தகர்க்கப்பட்டதேயன்றி, இந்தியர்கள் தம்முள் தாமே இட்டுக்கொண்ட பல வகையான அடிமை விலங்குகள் இன்னும் உடைக்கப்படவில்லை. இப் பெரிய நிலப்பரப்பில் உள்ள மக்களில் ஒருபுறத்து மக்கள் அரசியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் பொருளியல் உரிமையின்றியும், ஒருபுறத்து மக்கள் குமுகாய உரிமை இன்றியுமே கிடக்கின்றனர். தமிழகத்து மக்களோ குமுகாயம், அரசியல், பொருளியல் எனும் முத்துறையிலும் மூவகை விலங்குகளால் பிணிக்கப்பட்டு, உரிமையின்றிக் கிடக்கின்றனர். இக் கருத்து தமிழர் எனக் கூறப்படுபவர் பலருக்கும்கூட ஒப்புதலையாய் இராது என்பதை அறிவோம். ஆனால் அவ்வாறான ஒரு நிலையே அவர்கள் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடப்பதற்கு ஒரு பெரிய சான்றாகும். அடிமை தன்னை அடிமை என்று உணராத வரையில் தான் அடிமைப்பட்டுக் கிடப்பதை ஒப்பான் அல்லனோ? அவ்வாறு உணர்கையில்தான் உரிமை உணர்வு முளைக்கின்றது. அதுவே பின் விடுதலை வேட்கையாகக் கிளைக்கின்றது.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய குமுகாய, அரசியல், பொருளியல், விடுதலைகளுக்குத் தடையாக விருப்பவர் முறையே பார்ப்பனரும், வடவரும், அவருள்ளிட்ட பெரும் முதலாளிகளுமே ஆவர். இம் முத்துறையிலும் இம் மூவரும் இன்று பகைவர்களாகவே இருந்து வருகின்றனர். குமுகாய நிலையில் தமிழர்களை அடிமைப்படுத்தியிருப்பன குல, சமயக் கட்டுப்பாடுகளும் அவற்றின் வழியாக வந்த அறியாமையும் ஆகும். அரசியல் நிலையில் இவர்கள் முழு ஆட்சியுரிமையின்றியும், மொழி உரிமையின்றியும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். பொருளியல் நிலையில் இவர்கள் வடநாட்டுத் தென்னாட்டு முதலாளிமார்களால் நலம் உறிஞ்சப்பட்டு ஏழைமை நிலையுற்றுக் கிடக்கின்றனர். புறத்தே பார்ப்பவர்களுக்கு இம் முத்துறையிலும் இவர்கள் பிற மக்களைப் போலவே உரிமை பெற்றிருப்பதாகத் தோன்றினும், அகத்தே நோக்குவார்க்கே இவர்களின் இரங்கத் தக்க நிலை தெளிவாகத் தெரியவரும். இப்பொழுது அரசியல் கட்சிகள் எல்லாம் சேர்ந்து எழுப்பும் சிக்கல்களுக்கெல்லாம் தனிப்பட்ட எவரும் பொறுப்பாகாதது மட்டுமன்றி, இம் மூன்று வகையான அடிமை நிலைகளே முழுப் பொறுப்பான பெருத்த காரணங்களாகும். மேலே கூறப்பெற்ற இம்மூன்று விடுதலைகளிலும் தமிழர் பெறவேண்டிய முதல் விடுதலை குமுகாய விடுதலையே ஆகும். குமுகாயத்தில் ஓரின மக்கள் சமநிலைப்படுத்தப்பட்டாலன்றி அவர்களாலேயோ, அவர்களைத் தூண்டிவிட்டோ நடத்தும் அல்லது நடத்தப்பெறும் எந்தவகையான அரசியல், பொருளியல் போராட்டமும் நேரடியாக வன்றி மறைமுகமாகவேனும் ஒடுக்கப் பெறும் என்பது வரலாறு நமக்குக் காட்டுகின்ற உண்மை. இதற்கு, வழிவழியாய் ஆங்காங்குள்ள வலிந்த அல்லது பெருத்த சூழ்ச்சிகளைக் கொண்ட ஓரினத்தால் ஆட்டிவைக்கப் பெற்றுக், குமுகாய நிலையில் இன்னும் முன்னேற்றம் கொள்ளாத தமிழர் இனமும், ஆப்பிரிக்க அமெரிக்க நாட்டு நீக்ரோ இனமும் கண்காணும் சான்றுகளாகும்.

இவ்வுண்மைகளை இன்னும் சற்றுத் தெளிவாகப் பார்ப்போமானால், பார்ப்பனரின் வலிந்த சூழ்ச்சியும் வல்லாண்மையும் குமுகாயத் துறையில் மட்டுமின்றி, அரசியலிலும் பொருளியலிலுங்கூட மிகவும் மேம்பட்ட போக்கிலேயே ஊடுருவி நிற்கின்றன. இதற்கு மாறாக இன்று வடநாட்டில் பார்ப்பனரைவிட வடவரே மிக்க அதிகாரமுற்றவர்களாக இருப்பதால், பார்ப்பனரின் போராட்டம் சமயம் என்ற போர்வையிலோ அறம் என்ற பெயரிலோ இக்கால் நடத்தப்பெற்று வருகின்றது.

தமிழர் குமுகாய விடுதலையின்றிக் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றனர். அதற்கு முன்பு இருந்தே ஆரியப் பார்ப்பனர் அக்கால் இருந்த ஏமாளி அரசர்களையும், இரக்கவுணர்வால் பேதையராக விருந்த பொது மக்களையும் தம்வயப்படுத்தி வேள்வி, கணியம் முதலிய மந்திர மாயங்களாலும், ஏமாற்று அரசியல் நடவடிக்கைகளாலும் தமிழரை முற்றும் அடிமைப்படுத்தினர். தூய்மையுடன் தனித்து வழங்கிய தமிழ்மொழியையும் கலப்புற்றதாக்கி மொழிக்கலப்பும், கருத்துக் கலப்பும், இனக்கலப்பும் செய்து கையோங்கினர். அன்றிலிருந்து படிப்படியாகத் தமிழர் தாழ்ந்தனர். இவற்றிற்கெல்லாம் அவர்களின் மறைநூல்களிலும் தமிழர் தம் பண்டைய நூல்களிலும் மறுக்கமுடியாச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. அன்று அவர்கள் ஏற்படுத்திய குலச் சேற்றிலிருந்தும், சமயச் சகதியிலிருந்தும் தூய இறைநெறியரான தமிழரை விடுவிக்கப் பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அப் போராட்டங்களின் தோல்விக்கெல்லாம் முற்றும் முழுக் காரணமாயிருந்தவர்கள் தமிழர்க்குள்ளேயே முளைத்த வீடணர்களும், பிரகலாதன்களும் . ஆகிய கோடரிக் காம்புகளே! ‘தமிழ்மொழியினும் தேவமொழியான வடமொழியே உயர்ந்தது’ என்று நக்கீரனிடத்துச் சொற்போரிட்ட குயக்கொண்டான் முதல், ‘சமற்கிருதம் கல்லாமற் போயின் பொறியியல் அறிவை முற்றும் பெற வாய்ப்பில்லை’ என்று இக்கால் திரிபுரை கூறித் திரியும் சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி இயக்குநரும், வையாபுரியின் மூன்றாம் பிறங்கடையரும், (முதலிரண்டு பிறங்கடையர் தெ.பொ.மீ.யும், அண்ணாமலை முத்துச்சண்முகமும் ஆவர்) ஆன முத்தையன் இவரைப் பற்றிய செய்திகளும், இவர் கூறும் துணிந்த புரட்டுகளுக்கு மறுப்பும் விரைவில் தென்மொழியில் வெளிவரும்) வரை தமிழையும் தமிழரையும் தாழ்த்திய - தாழ்த்திக் கொண்டிருக்கின்ற கோடரிக் காம்புகளே ஆகும். இப்படித் தமிழரைத் தமிழர்க்குள்ளேயே தோன்றிய ஒரு சிலரைக் கொண்டு ஆட்டுவிக்கவும், அடிப்படுத்தவும் அவ்வக்கால் ஆரியத்தலைவர்கள் பலர் தோன்றிக் கொண்டே உள்ளனர். அவ்வழித் தோன்றி, இக்கால் தமக்கும் தம் வழியினர்க்கும் புறம்பாகப் போகும் இந்திய அரசையே சேற்றிற் புகுந்த எருமை யெனக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆரியத் தலைவரே திரு. இராசாசி அவர்கள்.

திரு. இராசாசியின் அறிவும், வினைப்பாடும் என்றும் ஆரியப் பார்ப்பனர்களின் நலங்கருதியே நிற்கும் காந்த முட்கள்! அவர் காட்டும் வழி ஆரியர் வெட்டிய படுகுழிக்குத் தமிழரையும் பிற இனத்தவரையும் இட்டுச் செல்லக்கூடியதாகவே இருக்கும் என்பதில் எவர்க்கும் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. ஐயப்பாடு கொண்டவர் எவராயினும் அவர் தமிழராகவும் தமிழர்நலங் கருதுபவராகவும் இருக்கவே முடியாது. இதற்குக் கடந்த காலத் தமிழகத்தின் அரசியல் வரலாறும், குமுகாய வரலாறுகளுமே சான்று கூறி நிற்கும். தென்னாட்டுக் கலப்பற்ற ஆரியப் பார்ப்பனராகிய அவர் நெஞ்சம் ஆரியர்களின் வேள்விக் களரி. அவர் எழுதும் ஒவ்வோர் எழுத்தும் ஆரியப் பார்ப்பனரின் வலிந்த ஊடுருவலுக்காக அடிக்கப்பெறும் முளைக்குச்சியே! அவர் பேசித் திரியும் ஒவ்வொரு பேச்சும் ஆரியப் பார்ப்பனர்க்காக உயிர்க்கப்படும் வலிந்த மூச்சே யாகும். அவரிடத்துக் கொள்ளும் எவ்வகையான ஒப்பந்தமும் அவர் பிணிக்கும் கட்டுக்கயிறே ஆகும்! இவற்றைத் தமிழர் கடந்த பன்னூறு ஆண்டுகளாகவும் - இன்றும் உணராமற் போயினும் இனி வரும் எதிர்காலத் தமிழர் கட்டாயம் உணர்வர் என்பதில் துளியும் ஐயமின்று.

திரு. இராசாசியின் உருவில் அல்லது அவர் பேச்சின் உருவில் வெளிவரும் ஆரியச் சாணக்கியம் இந்தியாவையே அடிமை கொள்ளும் திறம் படைத்தது. அவர் அசைக்கும் ஒவ்வொரு விரலசைவுக்கும் ஏற்ற பொருத்தமான பொருளை, பனிமலையிலிருந்து குமரிமுனை வரை ஊடுருவிக் கிடக்கும் பார்ப்பனரே அன்றிப் பிறர் அறிய ஒல்லாது. அவர் கண்ணசைவிற்கும், கையசைப்பிற்கும் தனித்தனிப் பொருள்கள் உண்டு. அவரின் அமைதிக்கும், அவர் சீற்றத்திற்கும், நகைப்பிற்கும்கூடத் தனித்தனிப் பொருள்கள் பார்ப்பனர் தம் அகரமுதலிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சுருங்கக்கூறின் இந்தியப் பார்ப்பான் எந்த உருவில் இருந்தாலும், எந்த இடத்திலிருந்தாலும், எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்கு இராசாசியின் அசைவிற்கும் பெருத்த தொடர்புண்டு. மொத்தத்தில் அவர் இக்கால ஆரியத் தலைவர். அவர் புன்னகை தமிழர் நலத்திற்கு முன் துரக்கப்பெறும் வாள் ஒளி! அவர் பாராட்டு தமிழர்க்கு வெட்டப்பெறும் படுகுழி! இந்தியப் பெரும்பரப்பில் உள்ள ஆரியப் பார்ப்பனரால் தமிழர் பெற்ற தொல்லையையும் துயரத்தையும் போல் வேறு எந்த இனத்தினரும் பெற்றிலர். அவர் தொடர்பால் தமிழர் இழந்த செல்வங்கள் பலப்பல. அவர் இழந்த பண்பாடுகள் பற்பல; நாகரிகங்கள் பற்பல; செப்பங்கள், செம்மாப்புகள், ஒழுகலாறுகள், உயர்வுகள் பற்பல! அவர்தம்மர்ல் தமிழர் வரலாற்றில் ஏறிய கறையை எத்தனை எத்தனை மறைமலையடிகள், திரு.வி.க.கள், பெரியார் இராமசாமிகள், அண்ணாத்துரைகள் தோன்றி அழுத்தி அழுத்தித் துடைத்தாலும் போக்கிவிட முடியாது. இவ்வுலகிலேயே பண்டைய கிரேக்கர், எகுபதியர் முதலிய பழைய நாகரிக மக்கள் பெற்ற பெருஞ்சிறப்புகளைவிடத் தமிழர் பெற்ற சிறப்புகள் ஏராளம் ! கொள்ளையோ கொள்ளை! ஆனால் அத்தனை பெருமைகளும், வளர்ந்து மணம் பரப்பிய அறிவு நிலைகளும் நாகரிக முகடுகளும் ஆரியப் பார்ப்பனர் என்ற நாடோடிக் கூட்டத்தால் சிதைக்கப் பெற்றன. இதனால் உலகமே தனக்கு முன்னோடியாக இருந்த ஒர் ஒப்புயவர்வற்ற மீமிசை மக்களினத்தை இழந்துவிட்டது என்று சொல்லலாம். இவையெல்லாம் வெறும் கற்பனையோ, கதையோ, கனவுகளோ அல்ல. ஏக்கப் பெருமூச்சுகள்! வரலாற்றுக் குமுறல்கள்! கண்ணிரால் எழுதப்பெற்ற பாவிய வரிகள்! அம்மாவோ இத்துணைச் சிறப்பு வாய்ந்த மக்களின ஒவியங்கள் அத்தனையும் இன்று அழிக்கப்பெற்றன. அவ்வாறு அழித்துவரும் ஒரு வலிமை வாய்ந்த - கரவு வாய்ந்த - ஏமாற்று நிறைந்த ஆரிய இனத்தின் கடைசித் தலைவராக இருப்பவரே இராசாசி! இவரைத் தமிழர்கள் இனங் கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காகவும், இவர் முயற்சிக்கு என்னருமைத் தமிழர்கள் துணைபோகக் கூடாது என்பதற்காகவுமே இவற்றை இங்கெடுத்துக் கூறவேண்டி வந்தது.

ஆரிய இனத்தின் தனித் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் இராசாசியின் அரசியல் போராட்டங்கள் தனி வடிவம் பெற்றவை. அவர் பொருளியல் போராட்டங்கள் தனி உருவம் சான்றவை. அவர் கூறும் சீர்திருத்தங்களுக்கு அடியில் என்றுமே ஆரிய வேர் கிளைத்துக் கொண்டிருக்கும். இவற்றை மனத்தில் உட்கொண்டே அவர் போக்குக்குப் பொருள் காணவேண்டும்.

இக்கால் இந்தியாவில் எழுந்துள்ள அரசியல் அழுகல்கள் இந் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பேராயக் கட்சியின் தான்தோன்றித் தனமான - முரட்டுத்தனமான போக்கின் விளைவு என்பதை எவரும் எந்நிலையிலும் மறந்துவிட முடியாது. ஆனால் அத்தகைய விளைவையே தங்களுக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டு, குழம்பிக் கிடக்கும் மக்களைத் தங்கள் கொட்டாரத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகளையே நாம் மறக்கமுடியாமல் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது; கண்காணிக்க வேண்டியுள்ளது. குமுகாய உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் குமுகாய விடுதலை நாடகமாடியும், அரசியல் உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் அவர்களுக்குப் புரியாத அரசியல் பாட்டிசைத்தும், பொருளியல் தாழ்ச்சியுற்றுக், காய்ந்த வயிறும் மேய்ந்த நலனுமாக ஒட்டியுலர்ந்து பேசவும் திறனற்ற மக்களிடம் - தங்களுக்குற்ற தேவைகளைத் தாங்களே கேட்டுக் கொள்ளவும் தெரியாத மக்களிடம் - செல்வச் சிறப்புகளை அழகுபெற எழுதிக் காட்டியும் நடித்துக் காட்டியும் ஆட்சி நாற்காலிகளைப் பிடிப்பதற்கு இராப்பகல் காத்துக் கிடக்கும் வேட்டை நாய்களையே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பதவியெனும் பச்சை அரத்தத்திற்குப் பணம் என்னும் பலிக்கடாக்களைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அவ்வரத்தம் குடிக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஆரிய நரிகளை நாம் இனங் காட்ட வேண்டியுள்ளது. அது நாம் நம் தலைமேலே எடுத்துப் போட்டுக் கொண்ட கடமைகளில் தலைமை யானதும், இன்றியமையாததுமாகும்.

ஆரியப் பார்ப்பனர் தம் வேராக நின்று இயங்கும் இராசாசி வேண்டும் மாற்றங்கள் இரண்டு. ஒன்று வழிவழிக் காலமாகத் தம் திருமறைப் பட்டயத்தின் வைப்பூட்டாக இருந்துவரும் தமிழகத்தில், தம் செல்வாக்குக் குறைக்கப்பட்டு வருதலை - குமுகாய நிலையில் விழிப்பேற்பட்டு வருதலைத் தவிர்த்துத் தம் இனத்திற்குக் காப்பேற்படுத்துவது. இரண்டு, தமிழகத்தின் இந்நிலைக்குச் செவி சாய்த்துக் கொண்டு வரும் வடவரின் ஆட்சி வண்டியில் தம் இனத்தை ஏற்றிவைப்பது. இவ்விரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் அடிப்பதற்கே திரு. இராசாசி அவர்கள் காலத்தையும் கருவியையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்.

தமிழர்கள் இந்நிலையில் புரிந்துகொள்ள வேண்டிய சில விளக்கங்கள் இவை. நாம் குமுகாய நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது பார்ப்பனர்க்கு அரசியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது வடவர்க்கு; பொருளியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது அப் பார்ப்பனரும், வடவருமே ஆண்டு நுகர்ந்துவரும் முதலாளித் தன்மைக்கு என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளல் வேண்டும். இதை இன்னுங் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நமக்கு முதல் பகை பார்ப்பனரே! இரண்டாவது பகையே வடவர்! பார்ப்பனரின் பகை உட்பகை. வடவரின் பகை புறப்பகை. பார்ப்பனரின் உட்பகையே நமக்கு இன்று நேற்று ஏற்பட்டதன்று; கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சுற்றிச் சூழ்ந்து வருவது; பின்னிப் பிணித்து வருவது. வடவர் பகை நமக்குக் கடந்த பதினேழு ஆண்டுகளாகவே ஏற்பட்டு வருவது. அன்றைய வடநாட்டுப் பகை வேறு, இன்றைய வடநாட்டுப் பகை வேறு. அன்றைய பகை ஆரியப்பகை; இனப்பகை. இன்றைய பகை ஆட்சிப்பகை. தமிழர்க்கு நலம் பயவாத இந்த இரண்டு பகைகளும் வெட்டிப் புதைக்கப்பட வேண்டியவையே ஆகும். அவ்வாறு செய்யாவிடில் தமிழர் இனம் இன்றிருக்கின்ற நிலையினின்று இன்னும் தாழும் என்பதும், தமிழ்மொழி இன்னும் சிதைக்கப்பட்டு ஒழியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டால், நாம் இந்த இடர்ப்பாடான நேரத்தில் செய்ய வேண்டுவது என்ன என்பது திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

தன்துணை யின்றால், பகையிரண்டால்; தானொருவன்

இன்துணையாக் கொள்கவற்றில் ஒன்று.பகைத்திறந்தெரிதலில் வருகின்றது இக்குறள். எதிர்க்கப்படுவோன் தான் ஒருவன்; அவன் தனக்குத் தன் இனத்தைத் தூக்கி நிறுத்தும் துணைவன் ஒருவனுமிலன்; அவனுக்கு உற்ற பகையோ இரண்டு. இந் நேரத்தில் அவன் செய்ய வேண்டுவது என்ன? அந்த இரண்டு பகைகளிலும் எந்தப் பகை ஓரளவு இனிய பகை; அல்லது எளிதே களையத் தகுந்த பகை என்பதைப் பார்த்தல் வேண்டும். அவ்வாறு பார்த்து எப்பகை எளிதே களையத் தக்கதோ அப்பகையையே துணையாகக் கொண்டு தனக்கு நெடுநாளைய பகையாகிய, தன் உட்பகையாக இருந்தே நலங்கெடுக்கும் ஒரு பகையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே குறள் நமக்குக் காட்டும் நெறியாகும். இக்காலத் தமிழர்களின் இடர்ப்பாட்டிற்கு, முன் கூட்டியே வழிகாட்டியாக எழுதி வைக்கப்பட்டதாகத் தெரிகின்றது இக்குறள்.

வடவரின் அரசியல் வல்லாண்மையால் நமக்கு நேரடியான - முழுமையான தீங்கு இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. அவரின் - அல்லது அவர் ஏறியுள்ள பேராயக் கட்சியின் வண்டி இன்னும் நமக்கு எதிர்ப்போக்காக நிறுத்தப்படவே இல்லை. மொழித் துறையிலும் அதன் உட்கிடையான அரசியல் துறையிலும் வடவரின் கை இன்னும் ஓங்கிவிடவில்லை. அப்படியே அஃது ஓங்கினாலும் தமிழர்களின் பெருத்த கிளர்ச்சியால் அவ்வாட்சி வண்டி கவிழப் போவது உண்மை! ஆனால் அவ்வாறு கவிழ்க்கப்படும் ஆட்சி வண்டியில் தமிழனே ஏறவேண்டுமேயன்றி ஆரியப் பார்ப்பனரைத் தப்பித் தவறியும் ஏற்றிக்கொள்ளுதல் கூடாது. அவரைப் பற்றிய ஐயம் தமிழர்க்குத் தீர இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போதல் வேண்டும். அத்துணை அளவில் அவர்களின் நச்சுச் செய்கை தமிழர்களை நிலைகுலைத்திருக்கின்றது. எனவே, தமிழன் தான் கைப்பற்றிய அரசியல் வண்டியில் தானே ஏறத் தகுதி பெறும் வரை - தன்னுணர்வும் தன்னாற்றலும் தன்னாண்மையும் பெறும் வரை, இவன் நமக்கு நன்றாகத் தெரிந்த கொள்ளையனோடு கூட்டுப் போதல் பல்லாற்றானும் தீங்கு பயப்பதே ஆகும். அக்கூட்டு எவ்வகைக் கூட்டாயினும் நமக்குத் தீதே! ‘குடியாட்சி அமைப்பில், தேர்தல் விளையாட்டில் நாம் கலந்துகொள்வதைத் தவிர்த்தல் இயலாது; அப்படித் தவிர்ப்பது அரசியலாகாது’ என்று அரசியலை மட்டும் பேசிக்கொண்டு தொடைதட்டித் திரியும் தமிழர்கள் ஒருவேளை படைதிரட்டிப் போனாலும், அப்படையில் ஆரியப் பார்ப்பனரின் சாணக்கியத்தனத்திற்கு இடங்கொடுக்கவே கூடாது என்பதே தமிழர்களுக்கு நாம் விடும் எச்சரிக்கை.

அண்மையில் புதுத்தில்லியில் நடந்த தன்னுரிமைக் கட்சி மாநாட்டில் திரு. இராசாசி அவர்கள், “தன்னுரிமை(சுதந்திரா)க் கட்சியினர் பொறுமையுடன் பேராயக் கட்சியின் கொடுங்கோல் ஆட்சியையும் ஊழலையும் எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை ஒர் அறவழியான போராட்டமாகவும், சமயக் கடமையாகவும் கருதுதல் வேண்டும். இஃது எனக்கு ஒரு கட்சியின் அரசியல் போராட்டம் அன்று; அறவழிப் போராட்டமே”. (அதாவது தர்ம, தார்மீக, மதப் போராட்டமே) என்றும், சென்னையில் நடந்த அவர் பிறந்த நாள் கூட்டத்தில், “பேராயக் கட்சியைக் கவிழ்ப்பதும் நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கவே வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்குறிப்பில் அவர் நடத்துவது ஒரு கட்சியினர் அரசியல் போராட்டம் அன்று என்ற குறிப்பிற்கு, இராசாசியின் அகர முதலியில் ‘ஒர் இனத்தின் தன்னுரிமைப் போராட்டம்’ என்றே பொருள். அந்த இனம் பார்ப்பன இனமே! அடுத்து, இரண்டாவது குறிப்பில் உள்ள ‘நல்ல ஆட்சியை ஏற்படுத்துவது’ என்னும் கூற்றுக்குப் பார்ப்பன ஆட்சியை ஏற்படுத்துவது என்பதே. மற்றபடி அவருடன் சேர்ந்துள்ள கட்சிகள் யாவும் அது தான், தானே என்று எண்ணி இறுமாப்பதில் பொருளில்லை. பார்ப்பனர் இந்தியா முழுவதும் - ஏன் உலகம் முழுவதுமே உள்ளனர். வேறு வேறு மொழிகள் பேசிக் கொண்டும் வேறு வேறு உடைகள் உடுத்துக்கொண்டும், வேறு வேறு கொள்கைகளை கூறிக் கொண்டும் இருந்தாலும் அவர்களின் உள்நோக்கமெல்லாம் பிறரைத் தங்கள் காலடிகளில் கிடத்திக் கொள்ள வேண்டும் என்பதே! இங்கு வந்து ஒரு பார்ப்பான் தமிழ் சமற்கிருதத்திலிருந்து தோன்றியதென்பான். உருசியாவுக்குப் போய் ஒரு பார்ப்பான் உருசிய மொழியில் சமற்கிருதச் சொற்களும் இருக்கின்றன பார்த்தீர்களா? என்பான். இப்படி உலகமெங்கும் பரவி, வாய்ப்புக் கிடைத்தவிடங்களிலெல்லாம் தங்கள் வால்களை ஆட்டிக் காட்டும் இனம் பார்ப்பன இனம், திரு. இராசாசி அந்த இனத்தின் தனிப் பெருந்தலைவர். அவர் பேச்சுகளையும் உளக் குறிப்புகளையும் உலகெங்கணும் எடுத்துச் செல்லப் பல்லாயிரக்கணக்கான வாய்ப்பு வகைகளை அவர்களே உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவ் வினத்தால் உலகில் ஏற்பட்ட மாறுதல்களோ எண்ணிலடங்காதவை யாகும். வீழ்ந்த அரசுகள் பல! வீழ்த்தப் பெற்ற பேரரசர்கள் பலர். உலகத்தின் மாபெரும் மறவன் அலெக்சாந்தரும் அவ்வினத்தின் நச்சுச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டான் எனின், இவ் வடவர்கள் எம் மூலை ? அவர்களால் மூவாயிரம் ஆண்டு ஊடுருவலாலும், போராட்டத்தாலும் முற்றும் வீழ்த்தப்படாத தமிழினத்து அவ்வப்பொழுது தோன்றிய பெருந்தலைவர்களும் பேரறிஞர்களுமே காரணம்! ஆரியர்கள் குடம் குடமாகக் கொட்டிய நச்சுக்குத் திரிந்திடாத உயர்தனிப்பால் தமிழ் மொழியே! இதை நாம் உணர்வாலோ, தமிழ்மேல் வைத்த பற்றாலோ, தமிழர்மேல் வைத்த கரிசனத்தாலோ கூறவில்லை. மெய்யுணர்வோடு, பகுத்தறிவுக் கண்கொண்டு, அரசியல் குமுகாயப் பாடங்கொண்டு கூறும் உண்மைக் கருத்துகளாகும்.

எனவே இந்திய நாட்டு அரசியலில் திரு. இராசாசி அவர்கள் ‘ஓர் அரசியல் நரி’ என்றும், எவர் ஆட்சிமேடை ஏறினும் அவர் ஆட்சியைக் கவிழ்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் என்றும், தமக்கும் தம் இனத்திற்கும் தக்காரையே அவர் ஆட்சியில்’ அமர்த்த விரும்புவர் என்றும், அல்லது அப்படி அமர்ந்தவரைத் தமக்கும் தம் இனத்திற்கும் நலஞ் செய்வதற்கே ஆட்படுத்துவர் என்றும், இவ்விடர்ப்பாடுகளிலும் இடிபாடுகளிலும் தமிழர் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருப்பதே நன்று என்றும் அறிந்துகொள்க.

- தென்மொழி, சுவடி : 4, ஒலை : 11, 1966

வடவரும் பார்ப்பனரும் நாமும்!

தமிழகம் தனிப் பண்பாடும், மக்கள் வரலாறும், உலகிற்கே உயர்ந்த நாகரிகம் கற்பிக்கும் ஒப்புயர்வற்ற ஒரு மொழி வரலாறும் கொண்ட ஒரு நாடு. இஃது இறுதிக் காலத்திலன்றிப் பிறிதோர் இனத்திற்கு எப்பொழுதும் அடிமைப்படாத நிமிர்ந்த அரசியல் வரலாறு கொண்டது. இந்திய வரலாற்றை எழுதிய ஆரியச் சார்பினரும் பிற மேனாட்டினரும் இதன் வரலாற்றைத் தனியே ஆய்ந்தும், நடுநிலையோடும் இதுவரை எழுதவில்லை. எழுதிய சிலரும் வரலாற்றுக்கு அடிப்படையான மொழி, இனம், பண்பாடு, நாகரிகம் என்ற வரலாற்றுப் பாகுபாட்டின் அடிப்படையில் எழுத முற்படவே இல்லை; எனவே இந்தியப் பண்பாடே தமிழகத்தின் பண்பாடாகவும், சமற்கிருத மே தமிழகத்து வழங்கும் மொழிகளுக்கெல்லாம் மூல மொழியாகவும், தமிழினம் ஆரிய இனத்தால் கலப்புற்ற ஓர் இனமாகவும், இதன் நாகரிகம் ஆரிய நாகரிகமாகவுமே காட்டப்பட்டு வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பெரிய சூழ்ச்சியினைக்கண்டு கொள்ளவும், விழிப்படையவும் இதனின்று விடுபடவும் தமிழர் இன்று முற்பட்டு விட்டனர். இனி, இதைத் தடுத்து நிறுத்த உலகத்தின் எந்த ஒரு மாந்த இனத்திற்கும், ஆட்சி வல்லாண்மைக்கும் ஆற்றல் இல்லை. இவை வெறும் சொற்களல்ல. உணர்ந்த உண்மை; முடிந்த முடிவு.

இந்தியாவில் இக்கால் நிலவிவருவது குடியரசாட்சியே என்றாலும், இந்தியு அரசியலை ஆட்டிப்படைக்கும் மாபெரும் ஆற்றல்கள் இரண்டு. ஒன்று வடவரின் அரசியல் வெறி. இரண்டு ஆரியப் பார்ப்பனரின் சமயவெறி, வடவரின் அரசியல் வெறியே குடியரசு நெறியாக உள்நாட்டினர்க்கும் வெளிநாட்டினர்க்கும் வலிந்து காட்டப்பெற்று வருகின்றது. ஆரிய பபார்ப்பனரின் வேதப் பிராமணணரின் இந்து சமய வெறியே, இந்தியரின் பண்பாட்டுச் சிறப்பாகவும், உயர்ந்த மக்கள் நெறியாகவும் வலியுறுத்திப் பேசப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது. இவர்கள் இருவர் தம்போக்குக்கும் முயற்சிகளுக்கும் ஏற்ற படைக்கருவிகளாக இருப்பன செய்தித்தாள்கள், வானொலி, சமய குலப்பாகுபாடுகள், பகுத்தறிவற்ற பழக்க வழக்கங்கள். அண்மையில் வெளிவந்த செய்திப்படி, இந்தியாவில் ஏறத்தாழ 5000 ‘சாதியமைப்புகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் அத்துணையும் இயற்கையாகவே ஏற்பட்டன என்று சொல்லமுடியாது. ஆரியப் பார்ப்பனர் வருகைக்குமுன் தமிழர்களைப் பொறுத்த அளவில் தொழில் பாகுபாடுகளே இருந்தன என்றும், அவற்றுள் உயர்வு தாழ்வு வேறுபாடுகள் கிடையாவென்றும் வரலாற்று நூல்கள் குறிக்கின்றன. பார்ப்பனரே இவற்றுள் ‘வருணாசிரம தர்மம்’ என்ற இனவேறுபாட்டு முறையைப் புகுத்தினர் என்பதாகவும் அவை கூறுகின்றன. இவற்றை அவர்கள் புகுத்தியதன் நோக்கம் சிறுபான்மையரான தங்கள் இனத்தைப் பெரும்பான்மையரான தமிழரினம் அழித்து ஒழித்துவிடாமல் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும், சாதி வேற்றுமைகளால் பாகுபாடு செய்யப்பெற்ற அச்சிறு சிறு கூட்டங்களிடையில் தம் செல்வாக்கை வலுப்படுத்தவுமே என்றும் மேனாட்டாசிரியர் சிலர் துணிந்து குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்குப் பயன்படாத ஆட்சியினை எவ்வகையாலும், எவரைக் கொண்டேனும் ஒழித்துவிட வேண்டும் என்பதாகவே, பார்ப்பனர் தம் வேதங்கள், உபநிடதுகள் முதலியன குறிப்பிடுகின்றன. இன்ன ஓரை (இராசி)யில் பிறப்பவன் சூத்திரனாகவே பிறப்பான். அவன் பிராமணர்களுக்குக் கேடுகளையே செய்வான் என்பதாகக் கூட அவர் தம் கணியநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்குக் கல்விக் கண்களைத் திறப்பதே பெரிய கரிசு(பாவம்) என்றெல்லாம் அவர்தம் நெறிநூல்கள் சாற்றுகின்றன. இவற்றிற்கெல்லாம் சான்றுகள், அடிப்படைகள் ஆயிரக்கணக்காக உள்ளன. அவற்றை யெல்லாம், இங்கெடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை ஒரு பெரிய நூலாகவே விரியும்; மேலும் அவைபோன்ற எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே தென்மொழியில் பலமுறை வெளியிடப் பெற்றுள்ளன.

மேலே கூறப்பெற்ற நெறிமுறைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் பார்ப்பனரால் இன்றும் செவ்வையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவற்றைத் தம் மக்கள் என்றும் மறந்து போகாமல் கடைப்பிடித்து அவ்வொழுக்கங்களில் சிறிதும் வழுவாது நடைபெற வேண்டும் என்பதற்காகவே காஞ்சிமுதல் காசி வரையுள்ள நூற்றுக் கணக்கான சமய பீடங்களும் மடங்களும், அவற்றின் வெறிபிடித்த தலைமைகளும், அவற்றிற்குரிய கோடிக் கணக்கான சொத்துகளைக் கொண்டும், பொண் வெள்ளி முதலிய மதிப்புள்ள நகைநட்டுகளைக் கொண்டும் ஆயிரக்கணக்கான வேலி விளைச்சல் நிலங்களைக் கொண்டும் வேலை செய்தும், காப்பாற்றியும் வருகின்றனர். இவையும் போதாவென்றும் இராசாசி முதலிய அரசியல் தலைவர்களும் தங்களால் முடிந்த ஆற்றல்களை முழுவதும் பயன்படுத்தி, அவர்தம் குலங்களுளம் கூறுபாடுகளும் மயிரிழையும் பிறழாது நடைபெற நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வகையாகப் பொருளாலும் அதிகாரத்தாலும்.துணையாக நின்று வருகின்றனர். இவற்றின் பயனாக இவர்கள் எண்ணியது எண்ணியபடி இயங்கவும் இயக்கவும் போதுமான வலிமை மிக்க செய்தித் தாள்கள் இயங்குகின்றன. நீங்கள் படிக்கின்ற இத் ‘தென்மொழி’ ஏட்டை அச்சிடுகின்ற பொறியின் விலை மதிப்பைப்போல் ஏறத்தாழ 2000 மடங்கு விலைமதிப்பும் ஆற்றல் வாய்ந்ததுமான பொறிகளாலேயே, பார்ப்பனர்களின் Indian Express, Mail, தினமணி, மித்திரன் முதலிய நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களும், கல்கி, ஆனந்த விகடன் முதலிய ஆயிரக்கணக்கான கிழமை, மாத இதழ்களும் அச்சிடப்பெற்று வெளிவருகின்றன என்று நீங்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இவற்றுடன் நெய்வேலி, உயிர்முறிக் குழும்பு(L.I.C.) வானொலி முதலிய ஆயிரக்கணக்கான அரசினர் தொழிலகங்களிலும், பிற தனியார் தொழிலகங்களிலும் நூற்றுக்கு 70, 80 புழுக்காடு பார்ப்பனர்களே நீக்கமற நிறைந்துள்ளனர். இவையுமன்றி எங்கெங்குத் தமிழர் திறமையுடன் செயல்படுகின்றனரோ, அவ்விடங்களிலெல்லாம் பார்ப்பனப் பெண்டிர்களும், மேலாளர்களும் திறமையுடன் ஊடுருவல் செய்து அவர்தம் வல்லாண்மைத் திறத்திற்கும் செயற்பாட்டிற்கும் நிலையான தடையிட்டு வருகின்றனர். பெரும் புகழ்பெற்ற புதின ஆசிரியர் ஒருவர் தம்பால், அழகும் இளமையும், கல்வித்திறமும் வாய்ந்த பார்ப்பனக் கன்னிப் பெண் ஒருத்தியை, அவருக்குத் துணையாக மாத இதழ் நடத்தும் பார்ப்பனக் கூட்டம் ஒன்று அனுப்பி வைத்ததும், அப்பெண் அவருக்கே இரண்டாம் மனைவியாக அமர்ந்துகொண்டு அவர் எழுதிவரும் நூல்களிலெல்லாம் கருத்துகளிலெல்லாம் தன் இனத்தின் திருவேலைகளைச் செய்து கொண்டிருப்பதையும், அவ்வடிப்படையில் இயங்கும் தமிழ் எழுத்தாளர் பலர் அறியார்.இவ்வாறு எங்கும் எத்துறையிலும் அவர்கள் நீக்கமற ஊடுருவி, ஊக்கமுற உழைத்து அவர்தம் இன முன்னேற்றத்தை ஆக்கமுறச் செய்வதைப் பெரும்பான்மைத் தமிழர் இன்னும் உணர்ந்திரார். அவ்வாறு அவர்கள் ஊடுருவி நிற்பதற்கு அவர்களுக்கிருக்கும் சூழ்ச்சி வாய்ந்த மூளைத்திறனும், கலையுணர்வும் கரவும் பொதிந்த நடிப்பும், அன்பொழுகுமாறு பேசும் பேச்சும் தேவையான பொழுது நாணத்தையும் பண்பாட்டையும்கூட கைவிட்டுவிட்டு மேற்செல்லும் வினைத்திறனுமே காரணங்களாகும். இவற்றில் ஒன்றேனும் நம் தமிழரால் இன்னும் செப்பமாகக் கடைப்பிடிக்கப் படுவதில்லை. சூழ்ச்சி நமக்கு எதிராகச் செயல்படும் பொழுதில் நாம் நடுநிலையைக் கையாள வேண்டிய தேவையில்லை. இனி, இவற்றையெல்லாம் இங்கு எதற்காகக் குறிப்பிடுகிறோமென்றால், நம்மைக் கீழறுக்கும் வேலை, எத்துணை ஆற்றலொடும் முடுக்கத்தொடும் இந்திய ஒற்றுமை, தேசியம் என்ற பொன்முலாம் பூசப்பட்ட பெயர்களால் செயற்படுத்தப் பெறுகின்றது என்பதை உணர்த்திக்காட்ட வேண்டியே ஆகும்.

இவ்வாறு, இந்திய ஆட்சி என்பது வெளிப்படையாகக் குடியரசு எனப்பட்டாலும், உள்முகமாகப் பார்ப்பனராலும், வடவராலும் பிற இனங்களை ஆரியத்தால் ஆளப்படுகின்ற ஓர் ஆட்சியாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இப்படிப்பட்ட ஓர் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் மொழி, இன, பண்பாடு முதலிய அடிப்படைக் குமுகாய உரிமைகளை அழித்துக்கொண்டே வாழ வேண்டியுள்ளது. இவ்வடிப்படை உரிமைகளை முற்றும் இழந்துகொண்டு தமிழரினம் வாழ்ந்துகொண்டிருப்பதைவிடத் தன்னுரிமை பெற்றுச் செத்துப்போவது எவ்வளவோ மேலென்று கருதவேண்டி உள்ளது.

தமிழர்களில் ஒரு சாராரும், இந்தியர்களில் பெரும்பான்மையோரும் பேராயக்கட்சி போன்ற பெரிய தேசியக் கட்சிகளில் இருந்து இந்தியாவைக் குமுகாய அளவிலும், அரசியலளவிலும் சீர்திருத்திவிட முடியும் என்பது வெறும் கனவுக் கற்பனைகளாகவே முடியும் என்பது திண்ணம். அவர்கள் எத்துணையளவு சிறந்த கோட்பாடுகளையும் திட்டங்களையும் கொண்டதாகத் தங்கள் கட்சியை அமைத்துக்கொண்டாலும், அத்துணைச் சிறப்பும் வடவரின் அதிகார வெறியாலும் பார்ப்பனரின் சாதிசமய பூசல்களாலுமே சிதைத்தொழிக்கப்படும் என்பதை உண்மை அறிவுடையோர் எவரும் எளிதே கண்டுகொள்வர். குறிப்பாகப் பார்ப்பனர்க்கிருக்கும் படைக் கருவிகளான செய்தித்தாள்கள், வானொலி வாய்ப்புகள், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் சற்றும் பொருந்தி வராத இந்து சமயப் பூசல்கள், வேத புராணப் பழக்க வழக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு, அவர்கள் எத்தகைய பெரிய அரசையும் கவிழ்த்துவிட முடியும், எத்தகைய பெரிய குமுகாய அமைப்பையும் மாற்றி அமைத்துவிட முடியும். எவ்வளவு மிகுதியாகக் கற்றவரையும் உருச்சிதைத்துவிட முடியும்; தாங்கள் எவ்வளவு புறக்கணிக்கப் பெற்றுத் தங்களை எத்துணைக் கீழ்ப்படியில் கொண்டுபோய் நிறுத்தினாலும் மேலே கொண்டு வந்து உய்வித்துக்கொள்ள முடியும். பொதுவாக தம் போக்கிற்கு மாறாக உள்ள எவ்வளவு வலிமை மிகுந்த எதிரிகளையும் முறியடித்துவிட முடியும். இவற்றை உடனடியாகச் செய்யமுடியாமற் போனாலும் படிப்படியாகவேனும் அவர்களால் செய்து கொள்ளமுடியும். இனி, இத்தகைய வேலைகளை அவர்கள் நேரடியாகச் செயய் முடியாமற் போனாலும் எதிராளர்களில் உள்ள பேராவற்காரர்களையும், பேதைகளையும், பட்டம், பதவி தசையாளர்களையும், அநுமவீடனப் பிரகலாதன் போன்றவர்களையும், வையாபுரி, முத்துச்சண்முகம், முத்தையன், பக்தவத்சலம், சுப்பிரமணியம் போன்றவர்களையும் கொண்டாவது தங்கள் உளக்கருத்துகளைச் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிடப்பெற்ற வகைகளிலன்றி, இன்னொரு வகையிலும் தமிழினம் தாழ்த்தப்பட்டும், சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருகின்றது. அதுதான் பண்பாட்டையும், இனவுணர்வையும், தன்மானத்தையும் தம் உடற்பசிக்கும், வயிற்றுப் பசிக்கும், மனப்பசிக்கும் விலை போக்கிக் கொண்டுள்ள ஆதித்தன் போன்றவர்கள் நடத்தும் கழிசடை இனக்கவர்ச்சி இழிநிலை யிதழ்களால் காசு திரட்டும் கயமைச் செயல்கள். அவர்கள் நடத்தும் தாள்களால் தமிழ்ப்பண்பாடே கெட்டுச் சீரழிந்து குட்டிச் சுவராகிவிட்டது. இவர்களால் ஏற்பட்ட குமுகாய ஒழுக்கச் சீர்கேடுகளை, நூறு குன்றக்குடிகளும், கிருபானந்தவாரிகளும், மூலிகைமணி ஆசிரியர்களும் வந்தாலும், சொல்லாலோ, சமயவுணர்வாலோ மருந்து மனவியல்களாலோ அகற்றிவிட முடியாது என்பதை எல்லாத் தமிழர்களும் தெள்ளிதின் உணர்ந்துகொள்க. ஏனெனில் அவ்வகைத் தாள்களில் எழுதும் எழுத்தாளர்களும் கயவர்களும் தங்கள் தூவல்களைச் சாய்க்கடையிலும், மலக்கரைசல்களிலும் தொட்டு மேனாட்டு கண்ணாடித் துணிகளின் மேலேயே எழுதிவருகின்றனர்.இவற்றை யெல்லாம் 2000 கற்களுக்கு அப்பால் உள்ள “இந்திய அரசியலில் அக்கறையும் இந்தியர் முன்னேற்றத்தில் நாட்டமும் கொண்ட ஓரிரு நடுநிலையான அமைச்சர்கள் கண்டுகொள்வார்கள் என்றோ, அக்கறை கொண்டு போக்கி விடுவார்கள் என்றோ இங்குள்ள தமிழர்கள் நம்பிக்கை கொள்ளமுடியாது. இவற்றை அரசியல் சட்டத்தாலேயே ஒன்றும் செய்துவிட முடியாது. மவத்தைக் கத்திகொண்டு அகற்றிவிட முடியாது. பார்பயனர்களால் வெட்டப்படும் படுகுழிகளையே தூர்த்து முன்னேறிப் போகமுடியாத தமிழர்கள், இப்படிப்பட்ட தமிழ்க் குமுகாயக் கேடர்களால் போடப்படும் தடைக் கற்களை அகற்ற முடியாமல் திணறிக் கொண்டுள்ளதை உண்மைத் தமிழன்பர் உணரவேண்டும்.

இவ்வாறு தமிழர் இனமே வடவராலும், பார்ப்பனராலும் தமிழ்க் கழிசடைக் கயவர்களாலும் சீரழிக்கப்பட்டு வரும் ஒரு நிலையை யாரிடம் போய்க் சொல்லி அழுவது? அரசியல் சார்பில் வடவனிடமே போய் உரிமை கேட்டு அழவேண்டியுள்ளது; குமுகாய அளவில் பார்ப்பனர்களிடமே போய்ச் சாதியை ஒழி, சமயத்தைச் சமப்படுத்து என்று அவன் உச்சிக்குடுமியையும் பூணுரலையும் பிடித்துத் தொங்கித் தொலைக்க வேண்டியுள்ளது. ஏதாவது எழுதவோ எழுதுகின்ற கருத்து விளம்பரம் பெறவோ வேண்டியிருப்பின் தினத்தந்திக் கூட்டங்களிடமே போய்க் கால்பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் எந்த அரசியல், பொருளியல், குமுகாயவியல் அறிஞனும் எந்தக் கருத்தையும், உண்மையையும் எடுத்துச் சொல்லி எதனையும் செய்துவிட முடியாதபடி தமிழ்க் குமுகாயமே இருண்டு கொண்டுள்ளது.

ஆகவே இருண்டுள்ள இத்தமிழர் தம் உள்ளங்களில் தன்மான உணர்வை எழுப்ப எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நாங்கள்'தள்ளப்பட்டு விட்டோம். அதற்கு ஒரே முடிவு இது தான். தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், ஒழிக்கப்பட்டும் வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்தியே ஆகல்வேண்டும். அதற்கு இந்திய அரசின் இணங்கிய தேசிய வுணர்வு தோதாய் அமையவில்லை. ஒருவேளை இப்படிப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டை உருசியனோ, அமெரிக்கனோ, சீனனோ வந்து அமைத்தால்தான் சரிவர அமையுமோ தெரியவில்லை. பூனைகள் என்றைக்கும் எலிகளுக்குத் தலைவர்களாக முடியாது. பாம்புகள் என்றைக்கும் தவளைகளுக்கு வழிகாட்டிவிட முடியாது. கோடரிக்காம்புகள் என்றும் அரியப்படும் கோடுகளையும், கொம்புகளையும் காப்பாற்றிவிட முடியாது. வடவர்கள் இந்தியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டே தமிழை வாழவைக்க முடியாது. பார்ப்பனர்கள் தங்கள் மேனிகளில் சுற்றிக்கொண்டுள்ள பூலுரலைக் கழற்றி நீர்ச்சிலை கட்டும் இடுப்புநூலாகப் பயன்படுத்தும்வரை, தங்கள் குடுமிகளைக் கத்தரித்துக் குப்பையில் போடும்வரை, அவற்றிற்கொரு புனிதமும் ‘புராணமும்’ கூறி மக்களை மடயர்களாக ஆக்குவதை நிறுத்தும்வரை, ஆதித்தன் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கேடர்களின் தினத்தந்தி, இராணி போன்ற தாள்கள் ஒழிக்கப்படும்வரை இந்தியாவில் தேசியமும் வளராது; தமிழர்களும் முன்னேறிவிட முடியாது. கடல் வற்றுவது எப்பொழுது கருவாடு தின்பது எப்பொழுது?

எனவே தமிழர்களுக்குள்ள ஒரேவழி தமிழகத்தைத் தனியாகப் பிரித்துக்கொண்டு தாமே ஆண்டுகொள்வதுதான். தமிழன் என்றைக்கும் அடிமையாகவே இருக்க விரும்பவில்லை. அவன் தன்னைத் தானாகவே ஆண்டுகொள்ள எண்ணங் கொண்டு விட்டான். தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எழுந்துவிட்டனர். தமிழக மறுமலர்ச்சி ஏற்பட்டே தீரும் என்று சூளுரைத்துவிட்டனர். பெரியார் ஈ.வே. இரா அவர்களும் தமிழக விடுதலைக்குச் சங்குமுழக்கம் காட்டிவிட்டார். அவர் கூட்டும் படைக்கு ஆயிரம் ஆயிரம் தமிழுணர்வுள்ள இளைஞர்களும், மாணவர்களும் தேவை. அவர்களுள் ‘தென்மொழிப் படை’ முனைமுகத்து நிற்கத் துடிக்கின்றது. முதற்பலியாகவும் தன்னை அணியப்படுத்திக் கொண்டது. இந்த உறுதியைத் தமிழக விடுதலை நோக்கிப் படை நடித்தும் பெரியாருக்கு முதல்படையலாகத் தருகின்றது. “தமிழர் படை வெல்க! தமிழ்த்தாய் அரியணையேறுக” எனக் குரலுயர்த்தித் தமிழரை அழைக்கின்றது. தென்மொழி! எல்லாரும் வம்மின் !

-தென்மொழி சுவடி : 6, ஓலை : 2, 1968

எச்சரிக்கை! பகைவர் இருவர்!

பகை எப்பொழுதும் இரண்டு வகைப்படும். அவை உட்பகை, புறப்பகை உட்பகை உள்முகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் உள் முகமாகவே புகைந்து கொண்டிருப்பது. புறப்பகை புறமுகமாகக் கிளர்ந்து எப்பொழுதும் வெளிப்படையாகவே கனன்று கொண்டிருப்பது உட்பகை நெருங்கியிருக்கும்; நம்மோடு உண்ணும்; உறவாடும்; நம் நலமே கருதுவது போல் பேசும்; சிலபொழுதில் சிலவற்றைச் செய்தும் காட்டும்; இவைவழி நமக்குத் தான் பகை இல்லை என்பதை ஓரளவு வலியுறுத்தியும் கூறும். புறப்பகையோ நம் நேருக்கு நேர் எதிர்முகமாக, சீனர் இந்திய எல்லைக் கோட்டுக்கு அப்புறமாக இருப்பதுபோல் நின்றுகொண்டிருக்கும்; நாம் முறைத்தால் அதுவும் முறைக்கும்; நாம் கையைத் துரக்கினால் அதுவும் கையைத் துக்கும்; நாம் கையோங்குமுன் அதுவும் கையோங்கும். காலம் வரும்பொழுது நாம் அதனை அழிக்க முனையுமுன், அதுவும் நம்மை அழிக்க முன்வரும். இவ்வாறான இரட்டைப்பகை உலகில் இருந்த, இருக்கின்ற, இருக்கும் எல்லா நாட்டு அரசுக்குமே, இனத்திற்குமே, மக்களுக்குமே எப்பொழுதும் உண்டு. இருப்பினும் பிற நாடுகளில், பிற இனமக்களில் இக்கால் இப் புறப்பகை யுணர்வு என்றும்போல் இருந்து வரினும், இவ்வகப் பகையுணர்வு ஓரளவு குறைந்துள்ளது என்றே கூறலாம். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ, நம் தமிழ் மக்களிடத்தோ, புறப்பகை பாராட்டும் ஆரியப் பார்ப்பனரும், அகப்பகை பாராட்டும் வீடணத் தமிழரும் முன்போலவே இன்றும் - ஓரளவு கூடுதலாகவே இவ்வகப் புறப் பகைப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாம்.ஆரியப் பார்ப்பனர் புறத்தே தம் குடுமிகளைப் பெரும்பாலும் களைந்து ஒழுகை(கிராப்) வாரிக்கொண்டிருந்தாலும், எப்படி தம் தம் சட்டைத் துணிக்குள் உடம்போடு உடம்பாக ஒட்டிக்கிடக்கும் பூணுரலை அறுத்தெறியாமல் இருக்கின்றார்களோ, அப்படியே புறத்தே தமிழரைப் போலப் பேச்சிலும் செயலிலும் பண்பாட்டிலும் இருந்து வந்தாலும், உணர்விலும், குருதியோட்டத்திலும், மூளைச் சுணப்பிலும் இன்னும் ஆரியத்தன்மைகளை - பார்ப்பனப் புன்மைகளை - பிராமணர் செருக்கை விட்டுவிடவில்லை. இவர்கள் உடம்பில் பூணூல் புரளுவது போல் நெஞ்சில் இன்னும் வேறுபாடு புரண்டு கொண்டுதான் உள்ளது. நம் முகத்தோடு முகம் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாலும் அகத்தில் நம்மேல் உள்ள வெறுப்புணர்வு கனன்று கொண்டுதான் இருக்கின்றது. பார்ப்பனருள் நன்கு படித்தவரும் சரி; படியாதவரும் சரி; ஆண்களும் சரி; பெண்களும் சரி, எவராயினும் இந்நிலை வேறுபாட்டை நம்மால் அன்றும் பார்க்க முடியவில்லை; இன்றும் பார்க்க முடியவில்லை. பொதுவாக நாம் எப்படி உண்ணுவது, உரையாடுவது, உறங்குவது முதலிய எல்லாவற்றிலும் ஒன்றெனக் கலந்து கொண்டாலும், கொள்வது கொடுப்பது ஆகியவற்றில் நம் பிறப்பு, வளர்ப்பு, சாதி, குலம் முதலிய மலக் குட்டைகளிலேயே குளித்துக் கொள்ள விரும்புகின்றோமோ, அப்படியே ஆரியப் பார்ப்பனனும், தம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் பிராமணக் குருதியில் சூடேறும் வரை நம்மைப் பூணுரல் மேனியுடனேயே கட்டித் தழுவிக் கொள்கின்றான்; ஒட்டி உறவாடுகின்றான். ஆனால் அவன் உட்கணப்பு அவியாத தீ! ஈரம் உலராத களிமண் மனுநெறி மறவாத நெஞ்சம்! எனவே அவனுடைய பகையுணர்வு என்றும் நம் எதிரிலேயே நின்றுகொண்டுள்ளது சீனனைப் போல, ஒருகால் நாம் அமைந்துள்ள பொழுது அவனும் அமைந்துள்ளவன்போலக் காட்டிக்கொண்டாலும், நாம் கைதுரக்கு முன்பே அவன் அடித்துவிடும் மனவுணர்வில்தான் இன்றும் உள்ளான்; என்றும் இருப்பான் என்பதை உண்மைத் தமிழன் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் தெளிவான நம் புறப்பகை!

இனி, நம் அகப்பகையாக என்றென்றும் இருந்து வருகின்ற வீடனப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்களைப் பற்றியும் நாம் என்றும் எச்சரிக்கையாக இருக்கவேண்டி இருக்கின்றது. இவர்கள் இனத்தால் தமிழரே எனினும் மனத்தால் ஆரியரே! இவர்கள் குடுமி வைத்துக் கொள்ளாத - பூணூல் அணியாத (ஒருவேளை அணிந்திருக்கின்றனரோ, நமக்குத் தெரியாது) பார்ப்பனர்கள். இவர்களுக்கு என்றைக்குமே எதிலுமே தம் தம் பெண்டு பிள்ளை நலன்களே குறி! அதன் பொருட்டு ஆரியப் பார்ப்பனர்க்குத் தொண்டு செய்து வாழ்வதே தம் நெறி. இத்தகையாரே நம்மைக் கடந்த மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனருக்குக் காட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்! இவர்களைப் பொறுத்தமட்டில் தமிழர்கள் மிகமிக எச்சரிக்கையாகவே இருத்தல் வேண்டும். நாம் கடந்த தேர்தல் காலங்களிலெல்லாம் பேராயக்கட்சியைப் பற்றிப் பேசிய விடங்களில் காமராசரைத் தவிர்த்து இந்த வீடணப் பிறங்கடைப் பக்தவத்சல சுப்பிரமணியன்களைத் தனியே பிரித்துப் பேசியதன் அகக்காரணத்தை இக்கால் அப் பேராயக் கட்சியிலுள்ளவர்களே உணருங்காலம் வந்துவிட்டது. இத்தகைய தமிழ்ப்பகைவர் அரசியலில் மட்டுமன்றிக் கல்வித்துறை, ஆட்சித்துறை, தொழில்துறை முதலிய எத்துறைகளிலும் நீக்கமறக் கலந்து நிற்கின்றனர். இவர்கள் பேச்சும், ஒரளவு எழுத்தும், பெரும்பாலும் நடையும் தமிழர்க்காகவும், தமிழ்நாட்டவர்க்காகவும் அமைவது போலவே இருக்கும். ஆனால் இவர்கள் கொள்கைப்படி தமிழர் எனப்படுவோர் 80 விழுக்காடு பார்ப்பனரும், 15 விழுக்காடு இவரைபோன்ற வீடணத் தமிழரும், 5 விழுக்காடே உண்மைத் தமிழரும் ஆவார். இவர்கள் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ போய்த் “தமிழர்களைக் கண்டு உரையாடினர்” என்றாலோ, “தமிழப் பெண்களால் நெற்றியில் பொட்டிட்டு வரவேற்கப்பட்டனர்” என்றாலோ, உண்மையாக அவர் கண்டு உரையாடியது பார்ப்பனர்களையே என்றும், அவர் நெற்றியில் பொட்டிட்டது அம்மாமிகளே என்றும் நாம் பொருள்செய்து கொள்ளுதல் வேண்டும். இராசாசியைத் தமிழ்க் குல முதியவராகவும், சங்கராச்சாரியைத் தமிழின முனிவராகவும் இவரனையர் கொண்டு பெருமை பாராட்டுவதும், பாதங்களைக் கழுவித் தண்ணிர் குடிப்பது உண்மையான தமிழன் எவனுக்கு வராத மானமிழப்புச் செயல்களாகும்.

இத்தகைய அகப்பகைவும் புறப்பகையும் உண்மைத் தமிழர்க்கு என்றும் இருப்பதால், தமிழின முன்னேற்றம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கைவராத ஒரு கவின்கலையாகவே இருந்து வருவது வருந்தற்குரியதும் உணர்ந்து திருந்தற்குரியதுமான ஒர் உண்மையாகும். தமிழர்க்குள் இன உணர்வை உண்டு பண்ண ஏதேனும் முயற்சி செய்தாலும், அல்லது தமிழ்மொழியை அதன் தாழ்ச்சி யமுக்கங்களினின்று விடுவிக்க முயன்றாலும் இவ்வகப் பகையும், புறப்பகையும் நம்மைத் தலையெடுக்க வொட்டாது தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சிகளே நம் வரலாற்றிலும் இலக்கியங்களிலும், ஆரிய ‘இதிகாசங்'களிலும், ‘புராணங்'களிலும் பெரும்பகுதியாகும். நாம் தலையெடுத்ததும், தலைகவிழ்ந்ததும் ஆரிய நூல்களில் தேவ –அசுரப் போர்களாக எழுதிவைக்கப்பட்டிருக்கும்; தமிழ் இலக்கியங்களில் தமிழ – வடவர் எழுச்சி வீழ்ச்சிகளாகப் பாடி வைக்கப்பட்டிருக்கும். ஆரிய நூல்களில் காணப்பெறும் முனிவரும், அரசரும், ஆடவர் பெண்டிரும் ஆரிய மதர்ப்பு மிக்கவர்களாகத் தோன்றுகின்ற அதேவேளையில், தமிழ் இலக்கியங்களில் உள்ள அரசரும், துறவியரும், ஆடவர் பெண்டிரும் ஆரியர்க்கு அடிமைகளாகவே நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு படைக்கப் பெற்றுள்ளனர். காரணம் கடைக் கழகக் காலத்திலேயே புலவர்களும், அரசர்களும் தொண்ணூறு விழுக்காடு ஆரிய அடிவருடிகளாகவே இருந்துள்ளனர். அவர்கள் அழுத்தி வைக்கப்பெற்ற ஆரியச் சேற்றிலிருந்து தமிழர்களால் இன்னும் தங்கள் இனத்தையும் மொழியையும் மீட்டுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு ஆழத்தில் இவ்வினம் புதைக்கப்படுமாறு துணை நின்றனர் என்பதைக் கண்டு கொள்ளுங்கள். இன்றுள்ள தமிழர் கையாள்கின்ற சமயங்கள், சாதிகள், பழக்க வழக்கங்களுளம் பெரும்பாலன ஆரியருடையனவே! பிற்காலச் சமயநூல்களிலன்றிக் கழகக் காலத்துள்ள நூல்களில், தமிழன் சமயத்தளைகளுள் இவ்வளவு கட்டுண்டிருந்தான் என்பதற்கு எவரேனும் ஒரு சான்று காட்ட முடியுமா ? இறைக்கொள்கை இருந்தது; முழு முதல் மெய்ப்பொருளைத் தமிழன் என்றும் மறுக்கவில்லை. ஆனால் அதன் அடிப்படையில் இற்றைத் தமிழன் போல் பல்லாயிரக்கணக்கான சமயப் பூசல்களை உண்டுபண்ணிக் கொண்டிருந்தான் என்று எவரேனும் கூறுதல் முடியுமா? இவற்றை ஈண்டு எதற்குக் குறிப்பிட நேர்ந்தது என்றால், தமிழன் எத்துறையில் விழிப்பற்றிருந்தானோ, ஆரியன் அத்துறையில் விழிப்போடிருந்தான்; தமிழன் எங்கெங்கு துரங்கத் தலைப்பட்டானோ, அங்கங்கெல்லாம் ஆரியன் விழித்துக் கொண்டிருந்தான். தமிழன் எவ்வெவரைப் பகைவர்களாகக் கருதினானோ அவரவர்களை யெல்லாம் ஆரியன் நண்பர்களாகக் கருதி வந்துள்ளான். தமிழன் எதில் எதிலெல்லாம் தன் பகுத்தறிவையும் தன்மானவுணர்வையும் இழந்துவந்தானோ அதிலதிலெல்லாம் ஆரியன் தன் அறிவையும், மானவுணர்வையும் செலுத்தத் தொடங்கினான். இந்த நிலை அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது, இனியும் தொடர விருக்கின்றது. தமிழினம் இப்படியே தூங்கிக் கொண்டும், ஏங்கிக் கொண்டும், வீங்கிக்கொண்டுமே இருந்தால், ஆரியவினம் இப்படியே நம் உள்ளுயிரை வாங்கிக் கொண்டும், ஒங்கிக்கொண்டுமே இருக்குமென்பதில் துளியும் ஐயம் இல்லை.

இவ்வுண்மைகளின் அடிப்படையில் எழுந்த சலசலப்புகள் தாம் அண்மையில் தமிழக அரசின்மேல் ஆரியர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள்.

இக்கால் தமிழக அதிகாரத்தையும் ஆட்சியையும் அரசியல் அமைப்புப்படி கைப்பற்றியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நாம் கூறிவந்த, வருகின்ற சில உயர்நிலை அரசியல் அமைப்பின்படி நடக்க முற்படவில்லையாயினும், இதன் முன்னிருந்த பேராயக் கட்சியின் அரசியல் ஆட்சிமுறைக்கு எவ்வகையிலும் தாழ்ந்து போய்விட்வில்லை என்பது நாம் இவ்வீராண்டுக் காலமாகப் பொறுத்திருந்து கண்ட ஒர் உண்மையாகும். இவ்வீராண்டுக் காலத்தில் இது செய்த அரசியல் திறம்பாடுகளோ, பொருளியல் முன்னேற்ற அடிப்படைகளோ பெரும்பாலும் நம் தமிழ்நாட்டிற்குத் தேவையான அளவில் இல்லை என்றாலும், இது செய்திருக்கின்ற குமுகாயப் புரட்சிக்கு நாம் இதனைப் பாராட்டியே ஆதல் வேண்டும். சென்னைப் பகுதிகளின் பெயர்களைத் தூய தமிழ் வடிவங்களாக மாற்றியது. ‘மதராஜ் என்ற தெலுங்குச் சொல்லினின்று திரிந்து வழங்கிய ‘மெட்ராஸ்’(Madras) என்ற ஆங்கிலச் சொற்பெயர் இத்தமிழ்நாட்டுக் குரிய பெயராக வழக்கிலும் சட்டத்திலும் ஆளப்பட்டு வந்ததை அடியோடு தகர்த்துத் ‘தமிழ்நாடு’ என்ற உரிமை வழக்குப் பெயரைச் சூட்டியது, ஆரியப் புரோகிதன் வேள்வி நடத்திய திருமணங்களே செல்லும் என்ற மனுநெறிவழி இந்தியச் சட்ட அமைப்பை அசைத்து, தமிழ் நெறி முறையில் நடைபெறும் திருத்தத் திருமணங்களும் செல்லும் என்று சட்டமாக்கியது, சாதிகுல முறையொழிப்பின் முதல் முனைப்பாகக் கலப்புத் திருமணங்களை ஊக்கியது, அரசினர் அலுவலகங்களில் எங்கும் தமிழ்மணங் கமழச்செய்தது. அலுவலக அதிகாரங்களில் பார்ப்பனராயிருந்தவர்களின் கொட்டம் ஒடுங்குமாறு அவர்களை மாற்றியும் இறக்கியும் நீக்கியும், அவ்விடங்களில் தமிழர் நலம் நாடும் அதிகாரிகளை அமர்த்தியும் தமிழர் நலம் பேணியது, உலகத் தமிழ் மாநாடு நடத்தி உலகிற்குத் தமிழின் ஏற்றம் உரைத்தது, உணவுப் பொருள் முடக்கும் குமுகாய முதலைகளின் வாயடக்க வயிறு கிழித்து உள்ளொளித்த பன்னூறாயிரம் மூட்டைகளை வெளிக்குக் கொணர்ந்தது. இந்தி யெதிர்ப்புக் கொள்கையை விடாப்பிடியாகத் தலைமேற் கொணர்ந்த தில்லியரசின் கழுத்துநரம்பு தெறித்து விழுமாறு தடுத்து நிறுத்தித் தமிழர்தம் தன்மானம் தலைநிறுத்தியது, மாணவர் பயிற்சிப்படையில் பத்தே பத்து கட்டளைச் சொற்களாயினும் அவை இந்தியில் இருந்தால் அந்தப் படையே தேவையில்லை என்று அற்றைப் பாண்டியனின் நெற்றுக்குரல் ஒலித்து நடுவணரசின் செருக்குக் கொள்கையை எற்றித் தள்ளியது. இன்னோரன்ன இன்னும் வியம்பப்படாதனவும், வெளியிடக் கூடாதனவுமாக தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலந்தேடு செயல்களையும் உணரின், இவ்வாட்சி பேராயக் கட்சியின் ஆட்சிக்கு நூறுபங்கு மேல் என்றே குரலோங்கிக் கூற வேண்டியுள்ளது. இவையன்றி இது செய்திருக்கின்ற சில துணிவான செயல்களைக் கொண்டு, இனிச் செய்யவிருக்கின்ற செயல்களிலும் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை என்றே கருதவேண்டி உள்ளது.

இனி, இவற்றிற்கெல்லாம் முடிவைத்தாற்போல், கல்வி நிலையில் நம் தமிழக அரசு செய்த சில நற்செயல்களும் உண்டு. அவற்றுள் இந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வுக்காக வைக்கப் பெற்றுள்ள தமிழ்ப் பாட நூலின் அமைப்பும், அந்நூற் கட்டுரை வரிசையுள் முதலாம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ள தனித்தமிழ்த் தலைவர் திரு. மறைமலையடிகளின் தமிழ்த்தாய் என்ற கட்டுரையுமாகும். இக்கட்டுரையில் பயிலப்பெற்ற கருத்துரைகளுக்காகவும், பன்னிரண்டு முறை பயின்றுள்ள ‘ஆரியம்’ என்ற சொல்லுக்காகவும் பார்ப்பனர் ஆடிய ஆட்டமும், குதித்த குதியும், கொதித்த கொதியும், கரைத்த கரைவும், கத்திய கத்தலும், எழுதிய எழுத்தும்... அடடா! தமிழர்க்குத் தாம் எத்துணையளவு தன்மானத்தீயை எழுப்பி விட்டன! இவற்றை யெல்லாம் கண்டுங் காணாது போலிருந்து உடலை அலப்பிக் கொள்ளாமல் வாளா விருந்து தமிழக அரசு எத்துணைப் பெரிய வெற்றிமாலையைச் சூட்டிக்கொண்டது! அடிகளார் எழுதிய தமிழ்த்தாய் கட்டுரைகூட கொஞ்சம் தண்ணென்றிருந்தது. அடிகளாரின் பணிபோன்ற குளிர்மையான செந்தமிழ்ச் சொற்களே இவ்வாரியப் பார்ப்பனர்களை இத்துணை அளவில் சூடேற்றுமானால், ‘தென்மொழி’ ஆசிரியவுரைகளில் பயிலப் பெறும் சொல் நெருப்புத் துண்டங்கள் அவர்களை எவ்வளவு கொதிப்பேற்றுமோ, நாம் அறியோம்? ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆரியப் பார்ப்பனர்களின் ஒவ்வோரெழுச்சியும் தமிழரில் ஒராயிரம் பேர்களைத் தன்மான வுணர்வுடையவர்களாக்கும் ஆற்றலுடையது. ஆரியன் குருதிச்சூடே அவ்வளவில் தோன்றுமானால் தமிழன் குருதிச்சூடு அளவுமானியை உடைக்குந்தன்மை யது என்பதை ஆரிய இனத்துளார் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஆரியர்தம் உள்ளழும்புகளை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்களும் அவர்களுக்குத் துணைபோகும். சுப்பிரமணியப் பிரகலாதன்களும் உணர்ந்துகொள்ளுவார்களாக.திரு. திருவாட்டி என்ற சொற்கள்தாம் இனிப் பயிலப்பெறுதல் வேண்டும் என்று அரசு கட்டளையிட்டிருந்தும், சென்னைத் தினமணிப் பார்ப்பனர் ‘ஸ்ரீ’ என்ற சொல்லை இன்னும் விடாப்பிடியாக எழுதி வருவதுபோன்ற ஆரியப் பிடிகளைத் தளர்த்திக், குமுகாய, மொழி, நாட்டு அமைப்பில் அவர்கள் தம் இன, சாதிப் பூசல்களை அறவே கையை விட்டுத் தமிழர்களுடன் ஒரு பொதுமை உணர்வைக் கைக்கொண்டு வாழ்ந்தாலொழிய, இனித் தமிழகத்தில் அவர்கள் அமைதியையே காணமுடியாத ஒருநிலை வளர்ந்துவிடும் என்று எச்சரிக்கின்றோம். மதுரையினின்று வெளிவரும் தினமணி மட்டும் மதுரைத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் தலையீட்டின்பின் ‘ஸ்ரீ’யைத் தவிர்த்துத் ‘திரு’வையே வாழவைத்துள்ளது. சென்னைக் கல்லூரி மாணவர்கள் இது பற்றி வாளாவிருப்பதால் ஒருவேளை சென்னைத் தினமணி ‘ஸ்ரீ’ரியை சிரிக்க வைத்திருக்கலாம்.)

இனி, தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட ‘தெய்வப்பட நீக்கச் சுற்றறிக்கை’ ஆரியர், ஆரியத்தமிழர் ஆகிய இரண்டு திறத்தாரிடமும் எழுச்சியை ஊட்டியுள்ளது. சமய வெறியில் ஆரியத் தமிழரும் ஆரியரும் ஒரே ஆற்றில் ஊற்றுப் பறித்தவரே ஆவர். இவ்வொரு வழி கொண்டே ஆரிய மாயையினின்று தமிழர் இன்னும் விடுபட முடியவில்லை. இறைக்கொள்கையை வீடு, வாசல், முற்றம், தெரு, காய்கறிக்கடை, அலுவலகம், எல்லா இடங்களிலும் இழுத்துக் கொண்டு திரிந்தால்தான் வீடுபேறு எளிதில் கிடைக்குமோ? மலந் தின்னும் பன்றி, சேற்றில் புரளும் எருமை, மூட்டை சுமக்கும் கழுதை, பிணந்தின்னும் கழுகு, உடலைக்கொத்தும் புழு முதலிய எல்லாவகை உயிர்களிடையிலும் வேற்றுமையிலாது விளங்கும். இறைப்பேரருள் அலுவலகங்களில் படப்படைப்பு செய்யாது போனால் அவனை வீட்டுக்கினின்று தலைகுப்புறத் தள்ளிவிட்டு விடுமோ ! எல்லாம் வல்ல மெய்ப்பொருளன் உண்மை உணராத போலிக் கடவுள் கொள்கையரே இத்தகைய குமுகாயத் திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்புக் காட்டுவர். உண்மைத்தமிழர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழில் எப்படி வடமொழிக் கலப்பு ஏற்பட்டு எவ்வாறு மெய்ம்மைத் தமிழையும் அதன் எழிலையும் தமிழன் காணமுடியாது போயிற்றோ, தமிழ் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் எப்படி ஆரியக் கலப்பேற்பட்டு மெய்ம்மைத் தமிழ்ப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அவற்றின் சிறப்புகளையும் தமிழன் அறியமுடியாமற் போயிற்றோ, அவ்வாறே தமிழரின் இறைக்கொள்கை – கடவுட் கொள்கையிலும் ஆரியக் கொள்கை கலப்புற்றுச் சமய ஆரவாரங்களை உண்டாக்கிவிட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. காலமும் இடமும் வாய்க்கும் பொழுது இவை பற்றியும் அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசுவோம்.

ஈண்டு இவ்வுண்மைகளால் புலப்படுத்த வந்தவை இரண்டு. “தமிழ்த்தாய்”க் கட்டுரை எதிர்ப்பு ஆரியப் பகைவர்களை மட்டும் கொதித்தெழச் செய்வானேன்? “தமிழக அரசின் தெய்வப்பட நீக்கக் கொள்கை” ஆரியப் பகைவர்களையும், வீடணத்தமிழரையும் கொதித்தெழச் செய்வானேன்? இவ்விரண்டு கேள்விகளுக்கான விடைகளில் தாம் தமிழனின் உண்மையான தன் மானம் புதைக்கப்பட்டுக் கிடக்கின்றது. அவன் வரலாறு மறைந்து கிடக்கின்றது. உண்மையான தமிழக மறுமலர்ச்சிக்குப் பாடுபடும் தமிழன் ஒவ்வொருவனும் எண்ணி, ஆராய்ந்து, தெளிய வேண்டிய உண்மைகள் இக்கேள்விகளிலேயே இருப்பதால், அக்கட்டுரை பற்றியும், இப் படநீக்கக் கொள்கை பற்றியும் நாம் விரிவாகப் பேசவில்லை. ஆனால் இவ்விரண்டு கொள்கைகளின் அடிப்படையில் தமிழக அரசு தான் எண்ணியதைச் செய்தே தீரவேண்டும் என்றும், எவர்க்கும், எதற்கும் இனி அஞ்ச வேண்டுவதில்லை என்றும், தமிழனின் உள்ளுயிர்ப்பும் தமிழக மறுமலர்ச்சியும் மிக அண்மையிலேயே தோன்ற விருக்கின்றன என்றும் அழுத்தமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

– தென்மொழி, சுவடி : 6, ஒலை : 5–6, 1968

வாரியும் பூரியும்!

விடுதலை பெற்ற ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சட்டமும் வரலாறும் நமக்குக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் நாம் பலவகையாலும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம் என்று எண்ணி மனங்குமுற வேண்டியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் பற்றியும் உலக ஒற்றுமை பற்றியும் அரசியல் வாணிகர்கள் வானளாவப் பேசுகின்றனர். ஆனால் மக்கள் இன்னும் காட்டு விலங்காண்டிகளாகவே இருந்து வருவதைப் பார்த்து உளம் புழுங்க வேண்டியுள்ளது. ஒருபுறத்தே ஒருமைப்பாட்டின் உளறல்; மறுபுறத்தே குல மதக் கொடுமைகளின் கீழ்மை! மக்களைச் சமநிலைப்படுத்தும் முயற்சி ஒருபுறம்; மக்களுக்கு இழிவுசாற்றி அடிமைப்படுத்தும் தீமைகள் மறுபுறம், மதப் பித்தங்களும் குலவெறிகளும் இவ் விந்திய நாட்டை உலகத்தின் சாய்க்கடையாக மாற்றியிருப்பதைக் கண்டு நாண வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆரியாவர்த்தம், பாரத நாடு, மெய்யறிவுப் பிறப்பிடம் எனப் பெருமையாகப் பேசப்பெறும் இந்நாட்டைப் போல் கேடுகெட்ட நாடு உலகில் வேறு எங்கும் இல்லை என்று கூறும் வகையில் இங்கு ஒழுக்கக் கேடுகளும் வாழ்க்கைப் புரட்டுகளும் மண்டிக் கிடக்கின்றன. ஆரியப் பார்ப்பனர்களின் நச்சுரைகளால் இந்நாடு தூய்மையிழந்து ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளாகின்றன. அவர்தம் பொய்யுரைகளும் புரட்டுச் செயல்களும் இந்நாட்டு மக்களை மீளா அடிமைச் சேற்றிலும் அருவருப்புப் படிகுழியிலும் அழுத்தியிருக்கின்றன. முகமதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள நூல்கள் எதிலுமே குறிப்பிட்டிராத ‘இந்து’ என்ற ‘கற்பனைக் கலவை மதத்’தினால் இந்தியாவே தூய்மை யிழந்து கிடக்கின்றது. மக்களிடையே கலந்த இந்துமதம் என்னும் நச்சாறு துர்க்கப்பெற்று இந்நாடு தூய்மையுறுவது இயலுமா என்று எண்ணிக் கவலையுற வேண்டியுள்ளது. ஆரியப் பார்ப்பனர்கள் வித்திய நச்சு மரங்கள் பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளன. அவர்கள் பின்னிய மதவலைகளும், ‘சாதி'க் கண்ணிகளும் மீண்டும் மக்களிடையே பரப்பப்பெற்று வருகின்றன. ஓயாத பெருமுயற்சி, ஒழியாத அழிவுவேலை, இங்குள்ள கோயில் பார்ப்பான் முதல் தில்லி, அரசியல் பார்ப்பான் வரை வரிந்து கட்டிக்கொண்டு தங்கள் ‘வேத’ ‘புராண’ ‘இதிகாசங்'களை யெல்லாம் காத்தே தீர்வதென்றும், தங்கள் புளுகுரைகளுக்கு எவ்வாறேனும் அரண்கட்டியே முடிப்பதென்றும் முயன்று வருகின்றனர். இத்தகைய முயற்சிகளுக்குத் துணையாக நிற்பவர்களுள் திருவாளர் கிருபானந்தவாரியையும், பூரி – சங்கராச்சாரியையும் பற்றி ஒருசில கூறுவோம்.

வாரியார் தமிழர்; மதப்பித்தர்; ஆரிய அடிவருடி முருகன் பெயரால் ஆரியப் பார்ப்பனர்களின் பொய் புரட்டுகளுக்கு உரமேற்றிக் கொண்டிருப்பவர். ஊர்தோறும் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் கொடுக்கும் பெருஞ்செல்வத்தால் தின்று கொழுத்துத் தெருத் தெருவாய் நின்று கதைபாடி ஊரைக் குட்டிச் சுவராக்கி வருபவர். புனிதக்கதைகள் என்ற பெயரில் ஆரவார அருவருப்புகளை ஒன்றுமறியா ஏழை மக்கள் மனங்கொள்ளுமாறு நயமும் நகைச்சுவையும் தோய்ந்த தழுதழுத்த குரலில் அன்றாடம் சொல்லிச் சொல்லி இத் தமிழகத்து மக்களையெல்லாம் பார்ப்பனப் பயிர்களுக்கு உரமாக்கி வருகின்றவர். இவரைப் போன்ற தமிழர் அரசியல், கலை, வாணிகம், அரசினர் அலுவர்கள். போன்ற எல்லாத் துறைகளிலும் உளர். அவ்வத் துறைகளிலும் வல்ல வீடணப், பிரகலாத, பக்தவத்சல, சுப்பிரமணியன்கள் ஒவ்வொரு நாளும் தந்தத் திணிப் பகைகளை நிரப்பப் பார்ப்பனத் திருவேலைகளை மறவாமல் செய்து வருகின்றனர். பார்ப்பனர்களுக்குத் துணைநிற்கும் இக் காட்டிக் கொடுப்பான்களாலும் குயக்கொண்டான்களாலும் ஆரியம் மீண்டும் தலைதூக்கி வருவது தமிழகத்திற்கு மட்டுமன்றி இவ்விந்திய நாட்டிற்கே பெருங்கேட்டை உண்டாக்கப் போகின்றது. ஆரியப் பார்ப்பனத் தலைவர் இராசாசி ஒன்றிலும் ஈடுபடாமல் பற்றற்ற துறவிபோல் இருந்து இத்தனை முயற்சிகளுக்கும் எருவிடுவோராகவும் இயக்குநராகவும் இருந்து பழந்தமிழ்க் குமுகாயத்தையே அழிக்கக் காலம் பார்த்திருப்பதுடன் இவ்விந்திய நாட்டையே அடிமை கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றார். “வர்ணானாம் ப்ராஹ்மணே குரு” என்றபடி அவர் பார்ப்பனர்க்கு மட்டுமன்றி இந்துமத வெறியர் . எல்லார்க்குமே அரசியல், இனத் தலைவராக உள்ளார். தமிழர்க்கும் . பிற இந்தியர்க்கும் தன்மானம் குன்றி இருப்பதால் அவர்கள் இப் பார்ப்பன நரி ஊளையிடுவதை எல்லாம் ‘வேதம்’ போல் கருதிப் பின்பற்றிவரத் தொடங்குகின்றனர். அரசியல் அதிகாரங்களில் உள்ள தமிழர்களுட் சிலருங்கூட அவர் கருத்துரைகளுக்குப் பெருமதிப்புக் காட்டி வருகின்றனர் என்றால் வேறு கூறுவானேன்?

இனி, வாரியாரைப் போலும் ஆரிய அடிமைகள் ஒருபுறம் தமிழர் உருவில் தமிழர்களையும் பிறரையும் கெடுத்துக் கொண்டிருக்க, பூரி சங்கராச்சாரி போன்ற பச்சைப் பார்ப்பன மடத்தலைவர்களும், ஆரிய நச்சுக் கருத்துகளை உதிர்க்கத் தலைப்பட்டுவிட்டனர். தீண்டாமை பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர் அண்மையில் கூறியவை பார்ப்பணியம் இன்னும் அழிந்துபோக வில்லை; உயிர்த்துக் கொண்டுதான் உள்ளது என்பதை நமக்கு நன்கு நினைவூட்டுகின்றன. ‘சாதி’க் கொடுமைகளை இந்நாட்டில் வித்தூன்றிய இந்துமதமும், அதன் அடிப்படைகளான ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச'க் குப்பைகளும்ம அடியோடு ஒழிந்து போகதவரை, இந்நாடு விடுதலை பெற்றதாகக் கூறிக் கொண்டிருப்பதில் எள்ளத்துணையும் பொருளில்லை. தீண்டாமை என்னும் கொடுமை இன்று நேற்றன்று, கடந்த பன்னூறு ஆண்டுகளாக இந்நாட்டைச் சீர்குலைத்து வருகின்ற கொடிய தொற்றுநோயாகும். அந் நோயின் நச்சுக் காற்றால் துயருற்ற மாந்தரினம் பலகோடி நிலாத் தரையில் மாந்தன் காலடி பதிகின்ற இவ்வறிவியல் காலத்து, இக் குடியரசு நாட்டில் இந்துமதத்தின் தலைவர் என்று விளம்பரப்படுத்தப்பெறும் ஒருவர் தருக்குற மொழிந்த, சட்டத்திற்குப் புறம்பான இம்மொழிகளைக் கேட்டுக் கொண்டு இங்குள்ள அமைச்சர்களும் மக்களும் வாளாவிருக்கின்றனர் என்று சொன்னால், ஒன்றால் அவர்கள் ஆரிய வல்லடிமைகளாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவர்கள் பெருத்த கோழைகளாக இருத்தல் வேண்டும். குமுகாயக் கொத்தடிமைகள் நிறைந்து விளங்கும் இந்நாடு அரசியல் விடுதலை பெற்றுவிட்டது என்பது எத்துணை இழிவு? எத்துணைப் பேதைமை? இந்துமதப் பூசல்களும் வரணாசிரமப் பாகுபாடுகளும் உள்ளவரை இந்நாட்டில் ஒவ்வொரு குலமும், ஒவ்வொரு கூட்டமும் தனித்தனியான பகையினங்களே.

“வேத காலத்தில் உள்ள ஆரிய ஒழுக்கங்களை அப்படியே இனியும் கடைப்பிடித்து வருவேன்’ என்று பேசும் கொழுப்புரை இவ்விந்தியக் குடியரசின்மேல் இட்ட சமட்டியடியாகும்; மக்கள் நாகரிகத்திற்கிட்ட சூளுரையாகும்; உலக ஒற்றுமைக்கு அடிக்கப்பெற்ற சாவுமணியாகும். பார்ப்பனியத்தின் வலிந்த வேற்றுமைக் கைகளால் பரந்துபட்ட மக்களை ஒன்றாக இணைத்துவிடத் துடிக்கும். நடுவணரசின் அறியாமையை என்னென்பது? வாரியார்களும் பூரியார்களும் செல்வ வலிவுற்று இந் நாட்டு மக்களை மடயர்களாகவும், கொடுமையாளர்களாகவும் ஆக்குகின்ற முயற்சி இந்நாட்டின் முன்னேற்றங்கள் அத்தனையையும் தடுத்து நிறுத்தும் பேரணையாகும். இத்தகைய வல்லணைகளை உடைத்துத் தகர்க்காமல் இவ்வரசாட்சியில் சட்டங்களுக்கு ஒரு கேடா? அமைச்சர்களுக்கு ஒரு தேவையா?

‘தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என் பிறப்புரிமை’ – என்று பேசுமளவிற்கு அவருக்குத் துணிவைக் கொடுத்தவர் யார்? அவர் கடைப்பிடிக்க விரும்பும் தீண்டாமை எத்தகையது? வேதக் காலத்தில் நான்கு வரணத்தார்களும் நான்கு வகையான உடை உடுத்தியிருந்தார்களாமே அத்தகைய வண்ண உடைகளையே பூரியார் உடுக்கச் சொன்னாலும் நாம் வியப்படைவதற்கில்லை. (The Social distinction of Vedic times were those of occupation and of colour (Varna) which implied race, marked also by a difference of dress, white for Brahmins, red for Kshatrias, yellow for Vaisyas and black for Sudras–Short History of India – E.B. Havell)

மநுவினால் கூறப்பெற்ற ஒழுக்கங்களே இனிக் கடைப்பிடிக்கத் தக்கனவாகும் எனப் பூரியார் முழங்குகிறாரா? பொதுவிடங்களில் தீண்டப்படாதாரை நடக்கவிடக் கூடாது என்பது அவர் எண்ணமா? ‘இந்துக்கள்’ நடக்கும் தெருக்களில் வரும் தீண்டப்படாதவர்க்ள் இனிப் பண்டை முறைப்படி கழுத்திலோ மணிக்கட்டிலோ ஒரு கறுப்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் வருதல் வேண்டுமா? பண்டையில் (மிகவும் அண்மைக்காலம் வரை) பூனாவில் உள்ள தீண்டப் படாதவர்கள் தாங்கள் தெருவில் நடக்கும்பொழுது எழும்புகின்ற தூசுகள் பட்டு, இந்துக்கள் தீட்டடையாதிருக்கும் பொருட்டு, தங்கள் முதுகுப்புறங்களில் நீண்ட துடைப்பக் கட்டைகளைச் சுமந்து திரிந்தார்களே, அதுபோலவே இனியும் திரியவேண்டும் என்பது பூரியின் கருத்தா? அவர்கள் துப்புகின்ற எச்சில்களை மிதித்துத் தீட்டுப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் கழுத்துகளில் எச்சில் படிக்கங்களைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு. சென்றார்களே, அவ்வகையில்தான் தீண்டப்படாதவர்கள் இனி நடமாடவேண்டும் என்பது பூரிப் பார்ப்பானின் எண்ணமா? இல்லை மது தன் நூலில் கூறியிருப்பது போல், ‘சண்டாளர்கள்’ ‘பிரதிலோமர்கள்’ ஆகிய ‘பாகிய’ சாதியினர் (தீண்டத்தகாதவர்கள்) நகரத்திற்கு வெளியே சுடுகாடு, மரத்தடி, தோப்பு, மலைப்புழை இவற்றில் குடியிருக்க வேண்டுமா? (மநு 10–50) குடவம்(பித்தளை) முதலிய மாழை(உலோக) ஏனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தாமல் (மநு : 10–51) உடைந்த மண்சட்டிகளில்தான் (மநு : 10–52, 54) உண்டுவர வேண்டுமா? பிணத்தின் மேலிட்ட ஆடைகளை அணிந்துகொண்டு (மநு : 10–52) நாய், கழுதை முதலியவற்றைத்தான் வளர்க்க வேண்டுமா? மாடு முதலியவற்றை வீடுகளில் வளர்க்கக் கூடாதா? (மநு : 10–5)

இவை தவிர ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஏற்றம் தருகின்ற மது நூலின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றாரா பூரி மடத் தலைவர்? அவ்வாறெனில், “கருவூலம் கொள்ளை போனலும் பிராமணர்க்கு (அரசர்) இடையூறு செய்யக் கூடாது; ஏனெனில் பிராமணரின் வருத்தமும சினமும் அரசனின் படைகளையும் ஊர்திகளையும் அழியச் செய்துவிடும்” (மநு 9–313); “தீய செயல்களுடையவராயினும் பிராமணர்கள் போற்றற்குரியவர்களே” (மநு 9–319); “பூனூல் முதலிய பிராமணர் அடையாளங்களைப் பூணுகின்ற பிறரை அரசன் உறுப்புக் குறைப்பு (அங்கசேதம்) செய்து விட வேண்டும் (மநு : 9–224);” பிராமணர் பிற இனத் தொழிலாளரிடமிருந்து அவர்கள் உடைமைகளை வலிந்து பிடுங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு அப்பொருள்கள் என்றும் உரிமை யுடையன அல்ல” (மநு : 8–415) “பிராமணர்க்குத் தலையை மொட்டை அடிப்பதே உயிர்த்தண்டனை ஆகும்; பிற சாதியார்க்கு உயிரைப் பறித்தே ஆகவேண்டும் (மநு : 8–378); அரசியல் ஒவ்வொரு நாளும் மூன்று வேதங்களையும் ‘தர்ம’ நூல்களையும் கற்றுணர்ந்த பிராமணரின் கருத்துப்படியே நடைபெறவேண்டும் (மநு : 7–37)” என்பவற்றையும் இவை போன்ற பிற ஒருதலையான – கொடுமையான கட்டளைகளையும் அரசினரும் மக்களும் கடைப்பிடித்தொழுகுவதே தக்கது என்பது பூரியாரின் உட்கிடையோ?

பூரி சங்கராச்சாரியின் நினைவில் தீண்டத்தகாதவர்களாகக் கணக்கிடப் பெறுபவர் யார் யார்? வரணாசிரம முறைப்படி சண்டாளனும் (சூத்திரன் ஒருவனுக்கும் பிராமணப் பெண் ஒருத்திக்கும் பிறந்தவன்) க்ஷத்தாவும், (சூத்திரனுக்கு க்ஷத்திரியப் பெண்ணிடத்தில் பிறந்தவன்), அயோகவனும் (சூத்திரனுக்கு வைசியப் பெண்ணிடம் பிறந்தவன்) மேற்கூறிய சண்டாளனும், க்ஷத்தாவும், அயோகவனும் முறையே தந்தம் இனப் பெண்டிரிடத்தும், நால்வரணப் பெண்டிரிடத்தும் பெற்ற பதினைந்து வகையான மக்களும், ஆகப் பதினெட்டுவகைச் சாதியாரே தீண்டப்படாத பாகிய சாதியினர் என்று மது குறிப்பிடுகின்றார். பூரியும் அவர்களைத்தான் தீண்ட மாட்டேன் என்று குறிப்பிடுகின்றாரா? இவர் குறிப்பிடுபவர்களுக்கு என்ன அடையாளங்கள்? பூரி சங்கராச்சாரியின் தாய் இங்குக் குறிப்பிடப்பெற்றிருக்கும் ஓரினத்தானிடமும் அவரைப் பெற்றெடுக்க வில்லை என்பதற்கு என்ன உறுதி கூறிவிட்டுப் போயிருக்கின்றாள்? அல்லது இவர் குறிப்பிடும் தீண்டத்தகாதவர்கள் எல்லாரும் மநு எழுதிவைத்த வகைப்படி பிறந்தவர்கள்தாம் என்பதைக் கண்டுபிடிக்கப் பூரியார் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றார்? இவருக்கு இத்தகைய வேலையைக் கொடுத்த அதிகாரி யார்? ஒருவனைத் தீண்டத்தகாதவன் என்று கூறப் பூரிப் பிராமணனுக்கு எவர் அதிகாரம் கொடுத்தவர்? இந்த ஆளின் மேல் பிழையில்லை. இப்படிப்பட்ட ஒருவரை, சாதி வெறியரை இன்னும் நார் நாராகக் கிழித்தெறியாமல் வைத்திருக்கின்றார்களே அவர்களின் மேல்தான் பிழை ! “தீண்டாமையைக் கடைப்பிடிப்பேன்” என்று கூறிய இவர் வாயில் மநுவின் முறைப்படி, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாலும் குற்றமில்லை. தென்னகத்து மண்ணில் இவர் கால் வைப்பாரானால் ஒருகால் அது நிறைவேறலாம்.

பிராமணீயம் என்றைக்கும் சாகாத ஒரு நச்சுக் கொடி. அது வேருடன் கல்லி யெறியப்பட்டாலொழிய இந்நாட்டிலுள்ள மக்கள் முன்னேறப் போவதில்லை. காந்தியாரின் பெயரைக் கூறிக்கொண்டும் கைந்நூல் நூற்றுக்கொண்டும் இராம வழிபாடுசெய்து பிழைக்கும் அநுமன்கள் இந்நாட்டில் உள்ளவரை பிராமணியம் இருந்துகொண்டு தான் இருக்கும். பேராயக் கட்சியே பிராமணியத்திற்குத் தீனி போடுவது. இராசாசியின் உரிமைக் கட்சியே பிராமண உரிமையைக் கட்டிக் காப்பது. இக் கட்சிகளில் உள்ளவர்களின் துணிவாலேயே வடநாட்டுப் பூரியாரும், தென்னாட்டு வாரியாரும் தம்தம் வினைப்பாடுகளை மிகத் துணிவாகவும், மிக விரிவாகவும் செய்து வருகின்றனர். மற்றப்படி அறிவியலும் மாந்தவுரிமையும் மிகவும் உயர்ந்து விளங்கும் இக்காலத்தில் இவர்கள் இந்த வகை வெறிக் கூத்தும் பேயாட்டமும் ஆடியிரார். தமிழர்கள் இந்நிலையில் ஒன்றைக் கருத்தாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் வடதிசைப் பக்கமிருந்தே வந்துள்ளன. வேதகால ஆரியச் சூழல் இன்னும் அழிந்துவிடவில்லை. சமற்கிருதம் ஒருவேளை இந்திமொழிக்கு மாறாக ஒருமைப்பாட்டிற்குகந்த மொழியென்று வடவாரிய அரசால் கொள்ளப்படினும் கொள்ளப்படலாம். இந்தியத் தலைமையிடத்தை அடுத்தபடி ஒர் ஆரியப் பார்ப்பனன் பெற்றாலும் நாம் வியப்பதற்கில்லை. கூட்டுணர்வோடு ஆரிய பார்ப்பனர்கள் ஆற்றுகின்ற இனப் போராட்டம் மீண்டும் வெற்றி பெறுமானால் தமிழன் தன் இனத்தையே மறந்துபோக வேண்டியதுதான். ஏனெனில் தமிழனின் உள்ளத்தே இன்னும் இனவுணர்வும் மொழியுணர்வு இளமைப் பருவத்திலேயே உள்ளன. அவன் மூளையும் குல மத மயக்கங்களால் நன்றாகச் சிதைக்கப்பட்டு உள்ளது. அவன் மனத்தில் தூவப் பெற்ற வேற்றுமை வித்துகள் அங்கும் இங்கும் முளையிட்ட வண்ணமாகத் தான் உள்ளன. தமிழனிடத்து அவ்வப்பொழுது தலைதூக்கும் ஒற்றுமை உணர்ச்சிகளை ஊடுருவி அழிக்க இன்னும் பார்ப்பனர்கள் முனைந்துகொண்டுதான் உள்ளனர். இந்நிலையில் தமிழன்தான் பார்ப்பானாகிக்கொண்டு வருகின்றானேயன்றி ஒரேயொரு பார்ப்பானோ பார்ப்பனத்தியோ தமிழுணர்ச்சி பெற்றுவிடவில்லை. பார்ப்பன வெறுப்புக் குறைந்துபோன தமிழனைப் பார்க்க முடிகின்றதே தவிரப் பார்ப்பனியப் பற்றுக்குறைந்த ஒருவரையே காண முடியாத பொழுது, தமிழ்ப்பற்று மிகுந்த ஒரு பார்ப்பன உயிரைப் பார்ப்பது மிகவும் அரிதாகின்றது. பார்ப்பனர்தம் இன வழக்கத்தை விடாதவரை பார்ப்பனியம் என ஒன்று இருக்கவே செய்யும்.

எனவே தமிழர் இனவொற்றுமை பெறாமல் நாட்டுக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ வந்த அல்லது வருகின்ற எத்துணைச் சிறிய தீமையையும் அகற்றிவிட முடியாது. தமிழர் இனவொற்றுமை பெற வேண்டுமாயின் அவர்கள் தம்மிடம் உள்ள குலவேற்றுமைகளை அடியோடு களைந்துதானாக வேண்டும். மதச் சுவர்களையும் சாதிச் சுவர்களையும் அப்படியப்படியே வைத்துக்கொண்டு நாம் இன நலத்தைப் பேணிவிட முடியாது. நமக்குள் ஒருவரை யொருவர் பகைத்துக்கொண்டு நம் எதிராளியிடமிருந்து வரும் தீமைகளைப் போக்கிவிடுதல் என்பது அறியாமையாகும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஏமாளிச் செயலாகும். நம் சாதிச் சழக்குகளை வேரறக் களைந்தாலன்றி நாம் வெற்றியடையப் போவதில்லை. ஆரியப் பார்ப்பனரின் இனவொற்றுமையையும் அவர்தம் அடிப்படைக் கொள்கைகளையும் பார்த்த பின்னாகிலும் நாம் நம் குல இழிவுகளைப் போக்கிக் கொள்ளாமல் இருப்பது நம்மை எத்தனைக் காலமானாலும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டுக் கொள்ள முடியாமலேயே செய்யும். இதனையுணர்ந்து செயல்படுவோமாயின் நம்மிடை எத்தனை வாரிகளும் பூரிகளும் முளைத்தாலும் அவர்கள் பயனற்றுப் போவார்கள் என்பது திண்ணம். எண்ணிச் செயற்படுவோமாக.

– தென்மொழி, சுவடி : 7, ஒலை : 3, 1969

பிரமணியத்திற்கு இறுதி எச்சரிக்கை!

பிராமணியம் இந்த நாட்டைக் கெடுத்ததுபோல் வேறு எந்த ஆற்றலும் எந்த நாட்டையும் கெடுத்துவிடவில்லை. ஒவ்வொறு தனி மாந்தனும் இச்த நாட்டில் பிராமணியத்தால் சிதைக்கப்பட்டிருக்கின்றான். அதன் கொடுமைப்பிடியில் சிக்கிய ஒவ்வொருவனும் தன்மானத்தை இழந்திருக்கின்றான்; அறிவை விலை போக்கியிருக்கின்றான்; தன் வாழ்க்கையை ஒரு நாயைப் போலும் பன்றியைப் போலும் நடத்தியிருக்கின்றான். ஏறத்தாழ ஈறாயிரத்தைந்நூறு ஆண்டுகளாய்த் தமிழன் அதில் சிக்குண்டு தன்னையே இழந்திருக்கின்றான். அரசியல் துறையிலும் சரி, குமுகாயத் துறையிலும் சரி, பொருளியல் துறையிலும் சரி, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் எந்த வீழ்ச்சிக்கும் பிராமணியமே முழுக் கரணியமாக இருந்திருக்கின்றது. அதன் நச்சுப் பல்லால் கடியுண்டு சிதைந்து போகாத துறையே இல்லை. பெண்ணை, ஆணை, குழந்தைகளை எல்லாரையும் கடித்துக் குதறி, அவர்களின் சதைகளையும் நார் நரம்புகளையும் அணுஅனுவாய்ச் சிதைத்திருக்கின்றது பிராமணீயம்.

வெள்ளைக்காரன் இந்திய மண்ணை விட்டுப்போய் இருபத்து மூன்றாண்டுகள் ஆகியும், இம்மண்ணில் சரிவர அரசியல் மலர்ச்சியோ, பொருளியல் வளர்ச்சியோ எள்ளத்துணையும் ஏற்படவில்லை யென்பதற்கும் பிராமணியமே கரணியம். அது விதைத்த நச்சு விதைகளே இந்நிலத்தில் வேறு எந்த விளையும் ஏற்படா வண்ணம் கெடுத்து வந்திருக்கின்றது. மக்களிடையில் ஒற்றுமை ஏற்பட வழியில்லையென்றால் அதற்கு பிராமணீயம் விதைத்த இன ஏற்றத்தாழ்வுகளைத் தவிர வேறு எந்தக் கரணியத்தையாவது எவராவது காட்ட முடியுமா? மக்களிடையே கல்வி பரவவில்லையென்றால், அதற்குப் பிராமணியம் ஊன்றிய மூடத்தனங்களைவிட வேறு ஏதுக்களை எந்த அறிஞனாகிலும் எடுத்துக்கூற முடியுமா? மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளுக்குப் பிராமணியத்தைவிட வேறு தடையிருக்க முடியுமா?

எல்லா மக்கள் நிலையினின்றும் தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு, வேறு பிரித்துக்கொண்டு, காப்பமைத்துக் கொண்டு பிராமணியம் முன்னேறியதை பிற இன முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை இட்டதை வரலாற்றடிப்படைகளைக் கொண்டு எந்த அறிஞனாகிலும் இல்லை என்று மெய்ப்பிக்க முடியுமா? வானத்தினின்று. பொழிகின்ற மழைக்கும், மண்ணிலிருந்து விளைகின்ற பயிர்க்கும் ‘வருணபகவானும்’ ‘பூமாதேவியுமே’ கரணிய கருத்தாக்கள் என்று பிராமணீயம் இட்டுக்கட்டிப் பேசியிருக்கவில்லையானால் இந்நாட்டில் அறிவியல் வளர்ந்திருக்குமா, வளர்ந்திருக்காதா? அவர்களால் கண்டு காட்டப்பெற்ற ‘சரசுவதிதேவி’ இங்கிருந்த மக்களின் நாவிலும் நெஞ்சிலும் வந்து நின்றாலொழியக் கல்வியருள் கிடைப்பது அரிது என்னுமொரு கருத்தை இந்த பிராமணர்கள் பரப்பியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் எத்துணையளவு கல்வி முன்னேறியிருக்கும் பணம் பெருத்தவனாகவும் பஞ்சையாகவும் ஒருவன் வாழ்வதற்கு அவனவன் முற்பிறவியிலே செய்த வினைகளே கரணியமென்றும், அதற்கு ‘இலட்சுமி’யின் (இந்தச் சரசுவதி, இலட்சுமி போன்ற கற்பனைக் கடவுள்களைக் ‘கலைமகள்’ என்றும், தூயதமிழ்ப் பெயர்களாகக் குறிப்பிட எனக்கு மனம் வரவில்லை.) கடைக் கண் அருள் வேண்டும் என்று இந்த ஆரியப் பார்ப்பனர் பிதற்றியிருக்கவில்லையானால், இந்த நாட்டில் பொதுவுடமை பூத்திருக்குமா? பூத்திருக்காதா? இப்படிப்பட்ட பிராமணியப் பூசல்களை இன்னமும் இந்த நாட்டில் வைத்துக்கொண்டு, அவற்றை ஆண்டுதோறும் தவறாமல் நினைவூட்டிக்கொண்டு, மேனாடுகளைப்போல் இந்த நாட்டில் கல்வி வளரவில்லை, செல்வம் செழிக்கவில்லை, பொதுவுடைமை பூக்கவில்லை என்று கூறித்திரியும் மடயர்களை, மடயர்கள் என்று சொல்வதால் என்ன பிழையேற்பட்டுவிட்டது என்று எவனாவது கூற முடியுமா?

பிறந்து கொப்பூழ்க்கொடி அறுபடும் நேரத்திலிருந்து, இறந்து மண்ணைப் போட்டு மூடும்வரை, இங்குள்ள ஒருவனின் அல்லது ஒருத்தியின் மேல் பிராமணியம் எவ்வளவு ஆட்சி செலுத்தி வருகின்றது என்பதை, இந்த நாட்டின் நடைப்போக்கை அன்றாடம் தன் விருப்பம் போல் மாற்றி மகிழும் இந்திரா காந்தி முதல், சென்னைத் தியாகராய நகர் சாய்க்கடையில் கிடந்து நெளியும் புழு வரை, எவராகிலும் மறுத்துரைக்க முடியுமா? எத்தனை யெத்தனைச் சடங்கு சாங்கியங்கள்? எத்தனை யெத்தனைக் கழிப்பு, கருமாந்திரங்கள்? எத்தனை யெத்தனைப் பூசனை, புனைவுகள்? எத்தனை யெத்தனை விழா, வேடிக்கைகள்? கடவுள்கள் என்ற பெயரால் எத்தனை யெத்தனைக் கொண்டைத் தலைகளும், மொட்டைத் தலைகளும், பம்பைத் தலைகளும், காவி உடைகளும், கமண்டலங்களும்? இவற்றுக்கெல்லாம் என்ன விளக்கம், என்ன விளைவு, என்று இந் நாட்டின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு, ஒருபுறம் பூரிசங்கராச்சாரிகள், காஞ்சி காமகோடிகள் முதலியோர்களின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டே, ஒருபுறம் கால்சட்டை குப்பாயத்துடன் உருசியா முதலிய பொதுவுடைமை நாடுகளை வலம்வந்து கொண்டிருக்கும் கிரி முதலியோர் கூற முடியுமா? இவற்றால்தான் இந்தியா முன்னேற முடியும் என்று உறுதிகூற முடியுமா? இந்தியாவில் உள்ள கோயில் கோபுரங்களே, அவற்றுள் செருகியிருக்கும் வேல்கள், சூலங்களே இந்தியப் படைகளுக்குப் போதுமென்றால், அவர்கள் கைகளில் ஏன் வெடிகுண்டுகளும் வேட்டெஃகங்களும்? இவற்றிற் கெல்லாம் பிராமணியப் ‘பட்டாள’ப் படைத்தலைவர் இராசாசி விடை கூறுவாரா? இவை யெல்லாம் என்ன மூடத்தனங்கள்? எத்தனை வகைப் புரட்டுகள்? இவற்றில் கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் எவ்வளவு? சொத்துகள் எவ்வளவு? இந்தக் கோயில் பெருச்சாளிகளுக்குண்டான விளைநிலங்கள் எவ்வளவு? இவை யெல்லாம் ஏன் இந்தப் பொதுவுடைமைக்காரர்களின் கண்களிலும், ‘நக்சல்பாரி’களின் கைகளிலும் படவில்லை?

இராமாயணப் பாரதக் கதைகளை எழுதியும், சொல்லியுமே இராசாசிகளும், வாரியார்களும் இந்த நாட்டில் பிழைத்துக்கொள்ள முடியும்! ஆனால் இந்த மண்ணில் உள்ள புழுவொடு புழுவாய் நெளிந்து கிடக்கும் ஒரு விறகுவெட்டியும், செருப்புத் தைக்கும் ஏழையும் அப்படிப் பிழைக்க முடியுமா? அவர்களும் அவர்கள் பெண்டு பிள்ளைகளும் என்றென்றைக்கும் அந்தப் ‘பெரிய'வர்களின் கால்களைப் பிடித்துத் தானே பின்ழக்க வேண்டி உள்ளனர் அவர்கள் கண்ட கடவுள்களெல்லாம் அந்த இரும்புக் கோடரிகளும், எருமைத் தோல்களுந் தவிர வேறு எவை? அவர்கள் அப்படியே இருப்பதைத் தானே இராசாசிகளும், வாரிகளும், பூரிகளும் விரும்புகின்றன? இல்லையென்றால் அவர்களை வாழ்விக்க அல்லது குமுகாயத்தின் மேல்நிலைக்கு அவர்களை உயர்த்த இவர்கள் வைத்திருக்கும் திட்டங்கள் எவை? இராமாயணமும் மகாபாரதமுந் தாமா? அவற்றைப் படித்தாலும் படிக்கக் கேட்டாலும் அவர்கள் முன்னேறி விடுவார்களா? இராசாசியும், காமகோடியும் கூறும் ‘ஆன்மீக’மும், ‘பக்தி’யும் அவர்களுக்கு எந்த வகையில் கைகொடுத்துதவும்? அல்லது இதுவரை உதவின? இவற்றைப் பற்றியெல்லாம் ஏன் இவர்கள் தங்கள் ‘கல்கி’களிலும் ‘ஆனந்தவிகடன்’களிலும், ‘துக்ளக்’களிலும் எழுதித் தீர்க்கவில்லை? ‘பார்ப்பான்’ என்றாலோ ‘ஆரியன்’ என்றாலோ கீழ்ப்பாய்ச்சிக்குமேல் ஒரு தார்ப் பாய்ச்சை வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரும் இவர்கள், இராமாயணமும் மகாபாரதமும் பகவத்கீதையுந்தாம் இந்த நாட்டை முன்னுக்கு கொண்டுவரும் என்றால் துணிந்து வெளிப்படையாக ‘ஆம்’ என்று அவர்கள் அச்சுப்பொறியில் அச்சுப்போட்டுக் காட்டட்டும். இல்லையானால் ‘இல்லை’ என்று வெளிப்படையாக எழுதிக் காட்டட்டும்.

“ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே தமிழன் அடிமையாகவே இருந்தான்; இன்னும் இருப்பான்; அவன் அடிமடியும் நெஞ்சாங்குலையும் என்றென்றைக்குமே நம்முடையவைதாம்; எனவே அவன் நெஞ்சில் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் விதைப்போம்; அவற்றின் விளைவை அவன் அடிமடியிலிருந்து அறுப்போம்’ என்று ஆரியப் பார்ப்பனர்கள் இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் இந்தத் தலைமுறையைத் தங்கள் இறுதித் தலைமுறையாக எண்ணிக் கொள்ளட்டும். இப்பொழுதுள்ள வீடனத் தமிழர்களையே தங்கள் இறுதி அடிமைகளாகக் கருதிக் கொள்ளட்டும் இல்லையெனில் இனிமேலாகிலும் தங்கள் மதக் குப்பை, கூளங்களான ‘வேத’ ‘புராண’ங்களையும், ‘இராமாயண, மகாபாரதங்’களையும் எடுத்துக் கொண்டு போய் இலெனின் கிராடிலோ, கென்னடி முனையிலோ குவித்துக் கொளுத்தட்டும். அந்தச் சாம்பலை ‘வால்கா’விலும் பசிபிக்கிலும் கரைத்து விடட்டும். ஏனென்றால் இந்தச் சாம்பல் எருக்கூட – தமிழக மண்ணின், அல்லது இந்திய மண்ணின் விளைச்சலைக் கெடுத்துவிடும்.

இங்குள்ள ஆரியப் பார்ப்பனர்களை எவரும் வெறுக்கவில்லை. அப்படி இங்குள்ளவர்களில் எவரும் முழுக்க முழுக்க, நூற்றுக்கு நூறு ஆரியர்களும் இல்லை. அவர்கள் நாடிநரம்புகளில் ஒடிக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க ஆரிய அரத்தமும் இல்லை. அவற்றில் பண்டைத் தமிழர்களின் அரத்தமும் கலந்து ஒடுகின்றது. எனவே நாங்கள் வெறுப்பது, குறைகூறுவது, திருந்திக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவது ஆரியத்தை, ஆரியப் பார்ப்பனியத்தை – இன்னும் தெளிவாகவும் சரியாகவும் சொல்வதானால் பிராமணியத்தை! ஆமாம், படைப்புக் கருத்தா(!)வான பிரமனின் முகத்தில் உள்ள கருவாயினின்று புறப்பட்டார்களாமே, அந்த உயிரினங்களின் கொள்கை – கோட்பாடுகளை, அப்படியாக அவர்கள் எழுதி வைத்துக்கொண்டு ஏமாற்றிவரும் ‘வேத’, ‘புராண’ ‘இதிகாச’ விளக்கங்களை! அவற்றால்தான் பண்டைத் தமிழன் இடுப்பொடிக்கப்பட்டான்; அவற்றால்தான் அவன் மனைவி, மக்கள், பிறங்கடைகள் ஆகிய யாவரும் என்றென்றும் மீளா அடிமைகளாக விலைபேசப்பட்டனர். அவற்றில்தான் தமிழர்களின் அடிமைப் பட்டயமே தீட்டிவைக்கப் பெற்றுள்ளது.

அந்த ‘அவை’ இருக்கும்வரை தமிழர்கள் ‘பிராமணர்கள்’ எனப்படுவோரைத் தங்களின் புலத்தை வேறுக்க வந்தவர்களாகத் தான் கருதிக்கொள்ள முடியும். தங்களின் வாழ்க்கைப் பகைவர்களாகத் தான் எண்ணிக் கொள்ள முடியும். தங்கள் முன்னோர்களைப் பழிவாங்கியவர்களாகத்தான் நினைத்துக் கொள்ள முடியும். தங்கள் பின்னோர்களையும் பழிவாங்கக் காத்திருக்கும் கழுகுகளாகத்தான் பேசிக்கொள்ள முடியும். இவ்வியல்பான போக்கிலிருந்து மாறுபடும் தமிழ் உடம்புகளைத் தமிழ் மறவனுக்கோ தமிழ் மறத்திக்கோ பிறந்தவையாகக் கருத முடியாது, ஒருவேளை அவ்வுடம்புகளின் தந்தையோ, அதைப் பெற்ற பாட்டனோ அல்லது அதையும் பெற்ற பூட்டனோ ஆரியனாக அல்லது ஆரியப் பார்ப்பானாக இருந்திருக்கலாம் என்று கருதிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இவற்றையெல்லாம் எழுதுகையில் இவற்றைப் படிக்கப் போகும் ‘அவர்’களின் உள்ளக் கொதிப்பு என்ன என்பதை நான் உணர்வேன். இங்குக் கொட்டப்பெற்ற சொற்கள் எவரெவர் உள்ளங்களைப் புண்படுத்தும், எவரெவர் உயிர்களைக் கொத்தித் தின்னும் என்பதும் எனக்குத் தெரியும். அவை இப்பொழுதுள்ள இவ்விந்தியச் சட்ட அமைப்புகளுக்கு எவ்வெவ் வகையில் மாறுபட்டன என்பதையும் நான் அறிவேன். அவற்றால் என்னென்ன அகப்புற விளைவுகள் நேரும் என்பதையும் நன்கு உணர்வேன். இச் சொற்களைத் தூக்கிக் கொண்டு எத்தனை வீடணத் தமிழர்கள் ஆரியப் பார்ப்பன நெஞ்ச அரிப்புகளுக்கேற்பச் சொரிந்து கொடுப்பார்கள் என்பதையும் ஒருவாறு உய்த்துணர்வேன். ஆனால் அவையாவும் அவற்றின் பிராமணியம் என்னையும் என் முன்னோர்களையும் படுத்திய பாடுகளைவிட மிகமிகக் குறைந்தவையே. இக்கால் நானும் என் தமிழர்களும் படும் பாட்டைவிட மிகவும் சிறியவையே! எனவே அவற்றிற்கெல்லாம் நான் விடைகூற. வேண்டும்; அல்லது தண்டனை ஏற்கவேண்டும் என்று நான் அழைக்கப்படும்பொழுதுதான் என்னையும் என் தாய்நிலத்தையும் இந்தப் பிராமணியம் படுத்திவரும் பாடுகளுக் கெல்லாம் விடிவு ஏற்படும் என்று கருதுகின்றேன். எனவே சொற்களை உணர்வு நெருப்பில் புரட்டி உங்கள் முன் வைக்கின்றேன். கனிவான சொல்லைப் பேசத் தெரியாதவனல்லன் நான்; கண்ணியமாக எழுதி மக்களைக் குளிப்பாட்ட உணராதவனல்லன் நான்; காற்றைப் போலும் நீரைப்போலும் சொற்களைப் பயன்படுத்த என்னால் முடியும். இருந்தாலும் நெஞ்சத்தை மறைத்துப் பேசும் இயல்பு எனக்குச் சொற்களால் புனைந்துரைத்து நல்ல பெயர் தேடிக்கொள்ளுவோர் பார்ப்பனர்களாகவோ அல்லது அவர்களின் பாங்கர்களாகவோதாம் இருக்க முடியும். என்னைப்போல் ஆரியத்தால் நெருக்குண்ட, நசுக்குண்ட ஏழைகளின் கூட்டத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள ஒவ்வோரடி மண்ணிலும் ஆரிய நச்சு துவப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு மனத்திலும் ஆரிய நினைவுகள் அலைமோதுகின்றன. தமிழ் கற்றவனாயினும் சரி, அறிவியல் ஆய்ந்தவனாயினும் சரி, மருத்துவ மண்டையாயினும் சரி, வானூர்தி வலவனானாலும் கப்பல் மீகாமனானாலும், படைத் தலைவனானாலும் சரி, எல்லாருடைய நடை, உடை, தொழில், அறிவு, மனைவாழ்வு யாவற்றிலும் ஆரிய நச்சு நன்கு பாய்ச்சப்பட்டுக் கிடக்கின்றது. பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போன்று ‘நான்கு பக்கமும்’ வேடர் சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல்’ தமிழனின் அகம், புறம், உயிர், உடல் யாவும் ஆரிய வலையால் பின்னப்பட்டுக் கிடக்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பிராமணீயம் அவனை வாட்டி வதைக்கின்றது. பண்டையில் அன்று; இன்றுங்கூட அவனை ‘அது’ நாள்தொறும் கொட்டி வருகின்றது. அச்சு வடிவில் தாளிகைகளாக ‘அது’ விற்கப்படுகின்றது. செய்தி வடிவில் ‘அது’ விளம்பரப்படுத்தப்படுகின்றது. வானொலி உயிர்ப்பில் ‘அது’ பீச்சப்படுகின்றது. பள்ளிப் பொத்தகங்களில், கோயில் குளங்களில் பிராமணியம் தன் நச்சுக் கைகளைப் பரப்பியிருக்கின்றது. ‘இராகு’ காலம் பார்க்காமல் தமிழன் காலெடுத்து வைப்பதில்லை; முழுத்தம் பாராமல் அவன் மனைவியொடு கூடுவதில்லை; பிள்ளையார் சுழியிடாமல் அவன் எழுதத்தொடங்குவதில்லை; ‘நீறு’ ‘நாமம்’ என்ற பெயரால் அவன் நெற்றிகளிலும், ‘கொட்டை’ ‘மணி’ என்ற பெயரால் அவன் கழுத்துகளிலும், பிராமணீயம் நெளிந்து புரள்கின்றது. எல்லாம் வல்ல இறைப் பேராற்றல் ஒன்றுண்டு என்ற தூய அறிவியல் உண்மை, ‘சிவ’மாகவும் ‘மாலி’யமாகவும் ஆரியப் பூச்சுகளால் பல்லாயிரங்கோடி வடிவங்கள் கொண்டு மக்களை மருட்டி வருகின்றது. பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் திரிக்கப் பெற்று விலைபேசப் பெறுகின்றன. ‘கல்விக்குக் கலைமகள்’ ‘செல்வத்திற்குத் திருமகள்’ – என்று கற்ற தமிழ்ப் புலவர்களும் தூயதமிழ் என்ற பெயரால் ஆரியத்தைப் பறைசாற்றுகின்றனர். அரசினர் சார்பில் வந்திறங்கும் அமெரிக்க, உருசிய, செருமானிய, சப்பானியப் பொறிகளும் இங்குள்ள ஆரியப் பார்ப்பான் ஒருவன் பூசனைகள் செய்த பின்னர்தாம் இயக்கப் பெறுகின்றன. ‘வானியல்’ ஆய்வு ஒருபுறம்; மழைபெய்ய ஆரிய வேள்விகள் ஒருபுறம், சாணியும் சோறும் பிசைந்துண்ணப் பெறுதல் போன்றதொரு நிலையை இவ்விந்திய நாட்டைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. நிலவில் அடி வைத்த காலத்திலேயே மாம்பலத்தில் தான்தோன்றிப் பிள்ளையாரின் கல்படிமம் ஒன்று நிலத்தினின்று வெடித்து வந்ததென்ற புரட்டு நடந்திருக்கிறதென்றால், ‘வேத’ காலத்தில் என்னென்ன நடந்திருக்கும் என்று சற்றே எண்ணிப் பார்த்தால் விளங்காமல் போகாது.

இவற்றிற்கெல்லாம் முடிவு என்ன? இவை இப்படியேதான் போய்க் கொண்டிருக்குமா? இப்படிப்பட்ட பிராமணீயத்திற்குத் தமிழன் அடிமைப்பட்டு ஏமாறத்தான் வேண்டுமா? அவனும் அவன் பிள்ளைகளும் என்றென்றும் அடிமைகளாக இத் தமிழ் மண்ணில் பிறந்து பிறந்து சாகத்தான் வேண்டுமா ? இவற்றிற்கெல்லாம் ‘ஆம்’ என்று ஆரியம் விடையிறுக்குமானால், நாம் அவர்களுக்குக் கூற – அல்லது எச்சரிக்க விரும்புவது – “இவற்றிற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியிட்டாக வேண்டும்; அதுவும் இந்தத் தலைமுறையிலேயே வேண்டும்” என்பதுதான், அதன்படி, அவர்களின் பூணூல் முதலியவை கழற்றப்பட வேண்டும். கோயில் கருவறைகளினின்று ‘பிராமணியம்’ வெளியேற்றப்பட வேண்டும். தமிழ் மொழியினின்று ‘அது’ தூக்கியெறியப்பட வேண்டும். அரசின் காவலிலிருந்து அது விலக்கப்படவேண்டும். ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச’ ‘மநு’ முதலிய நூல்கள் எரிக்கப்பட வேண்டும். அவற்றைப் படிப்பது ‘குற்றம்’ என்று சட்டமியற்ற வேண்டும். இவை அத்தனையும் இந்தத் தலைமுறையிலேயே செய்யப் பெற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த தலைமுறையில் தமிழ் இருக்காது; தமிழனும் இருக்கமாட்டான். எனவே இதனைப் பிராமணீயத்திற்கு விட்ட எச்சரிக்கையாக மட்டும் கொள்ளாமல் தமிழர்க்கு விட்ட எச்சரிக்கையாகவும் கொள்ளுக.

– தென்மொழி, சுவடி : 8, ஒலை : 5–6, 1970

கோயில்களில் உள்ள ஆரிய இடைத் தரகர்களை அகற்றுக

எல்லாம் வல்ல ஒர் இறைப் பேராற்றல் இவ் வனைத்து உலகங்களையும் கட்டியாண்டு கொண்டிருப்பதை அறிவியலும் மறுத்ததில்லை. அவ்வாற்றல் கல், மண் என்ற வேற்றுமையின்றி, அனைத்துக் குற்றுயிர்களிலும் சிற்றுயிர்களிலும் ஊடுருவி, யாவற்றையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதையும் உள்ளொளி சான்ற எவரும் மறுக்க முடியாது. அவ்வாற்றலே அறிவாயும் அறியப் பெறும் பொருளாயும் புடைபெயர்ச்சி மாறி, அதுவதுவாய் இப் பேரண்டங்கள் அனைத்திலும் நின்று இயங்கியும் இயங்குவித்தும் வருவதை உளத்தாலும் உணரலாம்; அறிவாலும் அறியலாம். இல்லை என்றாலும் அதுதான்; உண்டு என்றாலும் அதுதான். இவ்வாற்றலை அது என்னலாம்; அவன் என்னலாம்; அவள் என்னலாம். சொற்களாயும், சொற்படு பொருள்களாயும், பொருளுறு வடிவங்களாயும், வடிவமை குணங்களாயும், பன்னூறாயிரம் வேற்றுமை மாற்றங்களால் இயங்குவனவாயும் உள்ள அம் மெய்ப்பெரும் பரம்பொருளை எனது என்றும் உனது என்றும் வகுப்பவனும், வகுத்துப் பேசுபவனும் கல்லாத மூடனாகவோ, கற்றறிந்த பேதையாகவோ, அன்றி வல்லடி வழக்கனாகவோதான் இருத்தல் வேண்டும். உலகத்துப் பொருள்களையே எனது உனது என்று பேசுதல் அறியாமை யாகின்ற பொழுது, உலகப் பொருள்களை யெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு கிடக்கும் ஓர் ஆற்றலை, மெய்ப்பொருளை, என்னுடையது என்றும், உன்னுடையது என்றும் பேசும் அறிவிலிகள் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் உலக வியக்கத்திற்கு மாறுபட்டவரே யாவர்.

இம் மெய்ப்பொருளுக்குக் கோயில் தேவையில்லை; கோலங்களும் தேவையில்லை. இவ்வுலகமே, ஏன் இப் புடவியே(பிரபஞ்சமே) அதன் திருக்கோயில், இவ்வுலகப் பொருள்களே அதன் திருக்கோலங்கள். அறிவறிந்த மெய்யறிவோனுக்கு மலமும் சந்தனமும் ஒன்றுதான்; மண்ணும் பொன்னும் ஒன்றுதான்; இலையும் பூவும் ஒன்றுதான்; அஃதாவது ஒரே மதிப்புடையவைதாம். ஆனாலும் அறிவறியாப் பொது மாந்தர்க்குக் கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. இந்தக் கற்பிதங்கள்தாம் பொருள்களாயும் அவற்றின் வேறுபாடுகளாயும் உலகத்தில் நின்று நிலவுகின்றன. கற்பித அறிவையே சமய நூலார் மாயையாக உருவகித்துள்ளனர். கற்பிதம் என்பது ஒன்றை ஒன்றாகக் கருதிக் கொள்வது. தாயை முதற்கடவுள் என்பதும், தந்தையும் அவர்போல் உள்ள பெரியோரும் வணங்கப் பெறுவதும் இக்கற்பிதத்தின்பாற் படுவனேயாம். மெய்ப்பொருளியலை எந்த இங்கர்சாலாலும், மார்க்சாலும், பெர்ட்ரண்டு ரசலாலும், ஓமரினாலும், சின் மெசிலியராலும் மறுத்துவிட முடியாது. அறிவியற் பேராசிரியர்களான நியூட்டன், எடிசன், ஐன்சுடைன் ஆகியோரும் இறையாற்றலை ஒப்புகின்றனர். அறிவியல் உணர்ந்த எவனும் மெய்யறிவியலை ஒப்புக்கொண்டுதான் ஆதல் வேண்டும். அறிவியல் அடிப்படையை உணராதவனே இறைப்பேராற்றலை மறுக்கின்றான். இவ்விடத்து நம் நாட்டில் பரப்பப் பெற்றுள்ள கற்பிதப் பூசல்கள் நிறைந்த ஆரியச் சமயப் போலித்தனங்களையும் உணர்ந்தே கூறுகின்றோம்.

ஆனால் மெய்யறிவியலும், உலகியற் கற்பிதங்களும் எந்தச் சமயத்திற்கோ, எந்த ஒரு சமயக் குரவர்க்கோ உடைமைகள் அல்ல. இன்று உலகில் உள்ள மதங்கள் யாவும் உலகியற் பொருள்களைப் போன்ற கற்பிதங்களே! இம் மதத்தில்தான் உண்மையிருக்கின்றது. இதில் இல்லை; என்று பேசுபவன், ‘கதிரவன் என் நாட்டில்தான் இருக்கின்றது; வேறெந்த நாட்டிலும் இல்லை’ என்று பேசும் பேதையைப் போன்றவனே யாவான். மதக் கற்பிதங்கள் குல வேறுபாடுகளைப் போல் பூசல்களை விளைவிப்பவையே யாகும். குலங்களில் எவ்வாறு உயர்வு தாழ்வு கற்பிக்கப்பெற்றதோ, அவ்வாறே மதங்களிலும் உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பெற்றன. கற்பனை என்பதும் ஒருவகை உண்மையே. இல்லாத ஒன்றை எவரும் கற்பனை செய்துவிட முடியாது. கற்பனை செய்தவை யாவும் நமக்கு உகந்தவையாக விருக்கலாம்; உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உகந்தவையும், உண்மையும் அவைமட்டுந்தாம் என எண்ணிவிடக் கூடாது. நம் அடுப்பில் உள்ள நெருப்பும் நெருப்புத்தான். கதிரவன் நெருப்பும் நெருப்புத்தான். அதனால் நெருப்பு என்பதே கதிரவன் தான் என்பதோ, நம் அடுப்பில் இருப்பது தான் என்பதோ அறியாமை யாகும். இனி புறநெருப்பாக வன்றி அக நெருப்பாய் உள்ள மிளகாய் போலும் பொருள்களும் உள்ளனவென்று அறிதல் வேண்டும்.

இறைப்பொருளும் அப்படித்தான். இதை எழுதுபவனும் அவன் எண்ணும் கருத்தும், இக்கருத்தைப் புறப்படுத்திக் காட்டும் இவ் வெழுத்துகளும், அவ் வெழுத்துகளைப் படிக்கும் நீங்களும் இன்னும் யாவும் மெய்ப்பொருளின் கூறுபாடுகளே! ஒப்புதலும் மறுப்பும், விருப்பும் வெறுப்பும், அன்பும் சினமும், குளிர்ச்சியும் சூடும், உண்டும் இல்லையும் அப்பொருளின் கற்பிதத் தோற்றங்களே! இவையல்லாமல் நேரடியாக இறைப்பொருளை நுகர்பவர்களுக்கு இக் கற்பித அலகுகள் தேவையில்லை. காற்றை இயற்கையாக நுகர்பவர்க்கு விசிறியின் வீசல் தேவையில்லை யன்றோ?

ஆனாலும் மெய்ப்பொருளின் கற்பிதங்களாக வுள்ள கோயில்களும் அவற்றின் கற்பித வழிபாடுகளும் பொது மாந்தர்க்கு – அஃதாவது காற்றை நேரடியாக நுகரவியலாதவர்க்கு – ஒருவகையில் தேவையே! கால விரிவில் அவையும் மக்கட்குத் தேவையில்லாமல் போகலாம். அதுவரை கோயில்களும் இருக்கலாம்; அங்கு வழிபாடுகளும் நிகழலாம். ஆனால் அவை குறிப்பிட்ட ஒருவர்க்குத்தான் சொந்தம்; பிறரெல்லாம் ஒதுங்கி நிற்கத்தான் வேண்டும் என்பவர்கள் மத வெறியர்களே – மதத் திருடர்களே ஆவர். அவர்கள் என்ன இனத்தவராயினும், எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் அவர்களைக் குமுகாயக் குற்றவாளிகளாக்கிக் கூண்டில் நிறுத்துதல் வேண்டும். மதத் துறையிலும், மக்கள் உரிமை முறைகளிலும் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செல்லும் அவர்களை வாழ்நாள் சிறைத்தண்டனைக் குள்ளாக்கி மக்களினமற்ற ஒரு தனித்தீவில்கூடக் குடியேற்றலாம்.

கோயில்களில் இருக்கும் வடிவங்களில் மட்டுமே இறைப் பொருள் இல்லை. உலக அனைத்துப் பொருள்களிலும் அப் பொருள் அதுவதுவாக நின்று இயங்குவதை எவரும் உணரலாம்; எவர்க்கும் உணர்த்தலாம். இத்தகைய புறவெளிச் சமயக் கோட்பாடுகளும், அகவொளிச் சமயக் கோட்பாடுகளுந்தாம் மாந்தர் யாவர்க்கும் ஏற்றவை, தக்கவை. பிறவெல்லாம் பூசல் விளைப்பவை. இயற்கை வழிபாடுதான் தமிழ்வழிபாடு. சிவனியமும் மாலியமும் இயற்கை திரிந்த வழிபாடுகளின் விரிந்த கூறுபாடுகளே! ஒரு கூம்பின் முனையை இயற்கை வழிபாட்டிற்கு இணையாகக் கூறினால், அதன் விரிந்த அடிப்பகுதியைச் சமயங்களுக்கு ஒப்பிடலாம். ஆரிய மதங்களின் ஊடுருவலுக்குப் பின்னர்தான் தமிழ் வழிபாடு தன் தூய்மையினின்று நெகிழ்ந்தது. இறைவழிபாட்டிற்கு மந்திர மாயங்கள் தேவையில்லை. இக்கரண முறை ஒரு திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் முன், பின் சடங்குகளைப் போன்றவையே! திருமண நிகழ்ச்சி மாந்த உலகியல் ஒழுக்கத்திற்குத் தேவையானது. ஆனால் இறைவழிபாடு வெறும் உலகியல் ஒழுக்க நிகழ்ச்சி மட்டுமன்று; இயற்கை நிகழ்ச்சி. ஆம், மூச்சை நாம் நம்மையறியாமல் உள்ளிழுத்து வெளிவிடுதலைப்போல் – நம்மையறியாமல் நம் அகப்புற உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் போல், நம்மையறியாமல் நாம் இறைப் பரம்பொருளை வழிபட்டுக்கொண்டும், அதனுள் நாம் ஊடுருவிக் கொண்டும் நம்முள் அஃது ஊடுருவிக்கொண்டுமாய் இருக்கின்றோம். இந்நிலையில் வழிபாடு எற்றுக்கு? மேலும் சிற்றறிவும் சிறுதொழிலும் கொண்ட சிற்றுயிர்களாகிய நம் வழிபாட்டைப் பேரறிவும் பெரும் பேராற்றலும் பெருவினையும் கொண்ட மெய்ப்பரம்பொருள் விரும்புவதென்பது ஒரு கற்பித நினைவே! இது நிகழ்ந்தாலும் ஒன்று தான்; நிகழவில்லையானாலும் ஒன்றுதான்; ஆனாலும் உலகியல் நடப்பின் ஒழுகலாறு வேண்டியும் சிற்றுயிர்களின் மனவளர்ச்சி வேண்டியும் மொய்ம்பு நிலை பெற்ற முனிவோர் கோயில் வழிபாடுகளைப் பொதுவியல் மாந்தர்க்குப் பொதுவென்றாக்கினார்.

இனி, வழிபாடே பொதுவென்பது உலகியற் பொதுவறமாய் இருக்க, அதைச் சமசுக்கிருதத்தில்தான் ஆற்றுதல் வேண்டும்; அதுவும் ஓர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டு தான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; அதுவும் ஒர் ஆரியப் பார்ப்பானைக் கொண்டுதான் செய்விக்க வேண்டும் என்பதும், அதற்குப் பார்ப்பனப் பரம்பரையே மடிகட்டிக்கொண்டு முன்னிற்பதும் கண்டிக்கத் தக்கவை; கடியத்தக்கவை; மீறினால் தண்டிக்கத் தக்கவை. எனவே கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்று பெரியதொரு புரட்சி மாற்றத்தைச் செய்து கர்ட்டிய தமிழக அரசு, இவ்வாரியப் பார்ப்பனர்களின் அரற்றலுக் கெல்லாம் அஞ்சாமல், ஆரியப் பார்ப்பனர்கள் கோயில்களில் இடைத் தரகராயும் இருக்கத் தேவையில்லை என்பதையும் செயலுக்குக் கொணர்தல் வேண்டும். இரண்டுக்கும் ஒரே வகையான எதிர்ப்புத்தானே வரும். அதை மானமுள்ள தமிழர்கள் கவனித்துக் கொள்வார்கள்.அண்மையில் சென்னையில் நடந்த இந்து தேவாலயப் பாதுகாப்பு மாநாட்டில் ஆரியப் பார்ப்பனரும் அவர்களைச் சார்ந்த வல்லடிமைத் தமிழர்களும் கொணர்ந்த தீர்மானங்கள் எந்தத் தமிழனின் குருதியையும் கொதிப்பேறச் செய்வன. “கோயில் ஆள்வினைகளை அரசினர் ஏற்கக் கூடாதென்பதும், நடைபாதைக் கோயில்களை அரசினர் அகற்றக் கூடாதென்பதும், தியாகராயர் நகர்த் திடீர்ப் பிள்ளையாரை மீண்டும் தோண்டிய இடத்திலேயே புதைக்க வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கை. இக் கோரிக்கைகள் ஆரிய இனத்தின் வல்லாண்மையை இந்நாட்டில் மேலும் வேரூன்றச் செய்வதற்கான தந்திர மொழிகளே. பன்னூற்றாண்டுக் காலமாய் அடிமையுற்றுக் கிடந்த தமிழன் இப்பொழுதுதான் சிறிது கண்விழித்து எழுந்து அமர்ந்துள்ளான். இனி இவன் நடையிடத் தொடங்குவானானால் தமக்குற்ற போலிப் பெருமைகளெல்லாம் தலைகீழாகப் போய்விடும் என்பதை நன்குணர்ந்து கொண்ட இவ்வாரியப் பூஞ்சைகள், மேலும் தமிழினத்தை வீழ்த்தி அடிமை கொள்ளச் செய்யவே இக் கோரிக்கைகளை எழுப்பியுள்ளன. எனவே இத்தகைய கோரிக்கைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் துக்கியெறிந்து விட்டு, நாம் மேலே கூறிய திருத்தத்தைத் துணிந்து செயலாற்றுதல் வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.

கோயிலில் இறைவழிபாடு செய்கையில் இவ்விடைத் தரகர்கள் எதற்காகக் குறுக்கே நிற்கவேண்டும். இவர்களுக்கும் இறைவனுக்கும் மட்டும் என்ன அவ்வளவு நெருக்கம்? நம்மையெல்லாம் அங்குள்ள இறைவனுக்குப் பிடிக்காதோ? பிடிக்காத நம்மை அவன் ஏன் நேரடியாகவோ – பிறர் வழியாகவோ படைத்தல் வேண்டும்? அங்குள்ள இறைப் படிமத்திற்கு வழிபாடு செய்பவர்கள் எப்படித் தமிழிலும் செய்யலாமோ, அப்படியே தாங்களாகவும் செய்யலாம் என்றும் ஒரு சட்டமியற்றுதல் வேண்டும். அதுவுமன்றி இவ் விடைத் தரகர்களே அங்குத் தேவையில்லை என்றும் செய்துவிட வேண்டும். தேவையானால் அங்குள்ள பொன்னையும் பொருள்களையும் காப்பதற்குக் காவல் வைத்துவிடலாம். இக்குமுகாயப் புரட்சியை இன்று செய்யத் தவறினால் வேறு என்றும் செய்ய முடியாது. கிறித்தவ, இசுலாமியத் திருக்கோயில்களில் இத்தகைய இடைத்தரகர்களா வழிபாடுகளை நடத்திக் கொடுக்கின்றனர்? எனவே இக்கோயில்களில் மட்டும் இந்தத் தரகர்கள் எதற்காக இருத்தல் வேண்டும்? இதுபற்றி நன்கு எண்ணி, பகுத்தறிவாளர்களின் அரசு என்று கூறிக்கொள்ளும் பெருமைக்கேற்ப, தமிழ்வழிபாட்டுடன், இம்மாற்றத்தையும் சேர்த்துச் செய்யுமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறோம்.

– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 3–4,

பார்ப்பானையே குறைகூறிப் பயனில்லை!

ஆரிய இனம் வேறு சில இனங்களைப் போலவே உலகெங்கணும் பரந்து கிடக்கின்றது. ஆனால் அஃது இவ்விந்திய நிலத்தொகுதியுள் - குறிப்பாகத் தென்னாட்டுத் திரவிடரிடை - தமிழரிடை மிகுந்த அளவில் ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளது போல் வேறெந்த இனத்தொடும் அவ்வாறு கலப்புக் கொண்டதில்லை. அதற்கு வரலாற்று நிலையில் பல கரணியங்களைச் சொல்லலாம். அவற்றுள் ஒன்று, பிற நாட்டு மக்கள் ஆரியரைப் போல் வெள்ளை மேனியராகவே இருக்க, தென்னாட்டவர் மட்டும் - தமிழர்மட்டும் கறுத்த மேனியராய் இருந்தமையால், அவர்கள்பால் தங்களை நிலத்தேவர் என்று கூறி ஏமாற்றுவதற்கும், அவர்கள் வளங்களை கொள்ளையடித்து வயிறு வளர்ப்பதற்கும் இவர்களுக்கு எளிதாகவிருந்தது. அத்துடன் தமிழர்கள் பொதுநிலைப் பண்பினராயும் தீவினைக்கஞ்சும் தெய்வ நம்பிக்கை யுடையவராகவும், வந்தவரை விருந்தோம்பும் அற வுணர்வினராயும், பகைவர்க்கும். உதவும் அன்புணர்வுடையவராகவும் விளங்கி வந்தமை, அவர்கள் தங்கள் இருப்பிடத்தைத் தென்னாட்டிலேயே பெரிதும் நிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக விருந்தது. ஆனால் இது மூவாயிரமாண்டுகளுக்கு முந்திய கதை. அவ்வளவு பழங்கதை எனினும், அன்று தொடங்கிய தமிழரின் வரலாற்றுச் சிதைவுக்கு இன்றும் அது கரணியமாக விளங்குவதால், மேலும் மேலும் அதையே திரும்பத் திரும்ப நினைவுகூர வேண்டியிருக்கின்றது. மற்றபடி நம் தமிழரிடையேயும் மதத்துறையில் ஆரியத்தையும் தமிழத்தையும் வேறுபாடுணராமல் கடைப்பிடித்து வரும் சமயத் தலைவர் சிலர், “பிராமணர் தமிழருடன் வேறுபாடின்றிக் கலந்துவிட்ட இந்நிலையிலும் அவர்களைப் பிரித்துப் பேசியோ, அவர்தம் முன்னோர் செய்த செயல்களுக்காக இன்றுள்ளோரை இழித்துரைத்தோ வருவது தேவையில்லாதது; தவறானது” என்று கூறத்தான் செய்கின்றனர். எஃது எவ்வாறாயினும், ஓரினம், இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பிறிதோரினத்தின் மனமும் மானமும் வீறுகொள்ளுமாறு தன்னைத் தேவ இனமென்று கூறி, மாந்தச் சலுகைகளை அளவுக்கு மீறிப் பெறுவதும், மற்ற இனத்தை அறவே இழிப்பதும் பழிப்பதும் அவ்வாறு தன் முன்னோரால் எழுதி வைக்கப்பெற்ற பழங்கதைக் குப்பைக் கருத்துகளை இன்னமும் விடாது கூறி அவற்றில் சொல்லப் பெற்ற சடங்கு, ‘சம்பிரதாய’ முறைகளை வலுக்கட்டாயமாகப் பின்பற்றி வருவதுமாக, இருந்து வருகையில், போலியான சில பொது வுணர்வுகளை மட்டும் கூறிப் பிறரை ஆற்றுவிப்பது என்பது இயலாத ஒன்றே. எனவே ஆரியரின் இனவழியினரான இன்றைய பார்ப்பனர் தங்களை எந்த அளவில் திருத்திக்கொண்டு தமிழினத்தவருடன் ஒன்றியுணர்ந்து போக முன்வருகின்றனரோ, அந்த அளவில் தமிழரும் அவர்களை அரவணைத்துக் கொண்டு போகத் தயங்கார் என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இதற்கிடையில் ஆரிய இனத்தால் பெரும்பான்மையும் அலைக்கழிக்கப்பட்டு வந்த – வரும் திராவிட இனம் என்று தங்களைக் கூறிக்கொள்ளுளம் தமிழினத்திற்கும் அதனின்று கிளைத்த தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழியாளர்க்கும் ஒன்றைத் தெளிவாக்க வேண்டியே இதனை எழுதப் புகுந்தோம். அவ்வின, மொழிக்காரர்கள் அனைவரும் இதனைப் படிக்க வாய்ப்பில்லாமற் போகுமென்றாலும், அவர்களுள் வாய்ப்புக் கிடைத்த ஒருசிலரேனும் இக்கட்டுரைக் கருத்துகளை ஊன்றிப் படித்து எண்ணித் தெளிவதுடன் பிறர்க்கும் எடுத்துக்கறுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

பொதுவாக, இன்றைய நிலையில் பிராமணர்கள் எனப்பெறும் ஆரியப் பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் மூன்று அல்லது நான்கு விழுக்காட்டினரே! இவ்வளவு மிகச் சிறிய அளவினரான ஓரின மக்கள், மிகமிகப் பெரும்பான்மையினரான பிறரை அடக்கி யாள்வதாகவோ, ஏமாற்றுவதாகவோ – குறைகூறப் பெறுவதற்கு முந்தைய வரலாற்றில் எங்கேனும் ஓரிடத்தில் பேரளவில் ஒரு தொய்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அதுவும் தன்னம்பிக்கை குறைந்த அளவிலோ, அளவுக்கு மீறிய நம்பிக்கை தங்கள் அறிவை மழுக்கிய அந்நேரத்திலோதான் அச்சரிவு நிகழ்ந்திருக்க வேண்டும். அத்தகைய சரிவு – ஒர் இடைப்பள்ளம் – தமிழினத்தின் வரலாற்றில் நேர்ந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்நிலை ஏற்பட்டுக் கடந்த மூவாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளதே அதுதான் வேடிக்கையினும் வேடிக்கை இனி, அதனினும் வியப்பான – வேடிக்கை எதுவென்றால், மிகவும் பெரும்பான்மைமிக்க அவ்வினம் – அஃதாவது – நம் இனம் – தொடர்ந்து தாழ்ந்த நிலையிலேயே சாய்க்கடைப் புழுவென வீழ்ந்து கிடப்பதற்கு, அந்த மூன்று அல்லது நான்கு விழுக்காட்டுக் கூட்டத்தையே கரணியங் காட்டிப் பேசி வருகின்றோமே அது! அதை நினைக்கையில்தான் வெட்கத்தை விட்டுச் சிரித்துப் புழுங்க வேண்டியிருக்கின்றது!

தமிழர்களாயிருக்கும் நம்மை முன்னேற்றிவிட வந்த நம் தலைவர்களும் நம் எதிரிகளைச் சாடிய அளவிற்கு, நம்மையே அரித்துக் கொண்டிருக்கும் நம் இனப் பற்றின்மையையோ நம்மின் இனங்கொல்லித் தன்மையினையோ, நம்மையே நாம் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் அடி மூடத்தனத்தையோ குல மத வெறியாட்டங்களையோ அத்துணை வலிந்த குரலில் சாடியதில்லை. கம்பனை நாம் அவன் நம்மவரைத் தாழ்த்தும் வகையில் இராமாயணத்தைப் பாடியதற்காக, அவன் இருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகுமளவிற்குத் திட்டித் தீர்த்திருக்கின்றோம். ஆனால் அதற்குப்பின் அத்தகையதொரு நிலை ஏற்படாதிருக்குமாறு நம் இனப்போக்கில் சில தெளிவுகளை உண்டாக்கிக் கொள்ளவில்லை. கம்பவிராமாயணத்தைப் போல் அத்துணை இனக் கேடான ஒரு பாவியம் கம்பனுக்குப்பின் பாடப் பெறவில்லை யாயினும், அப்படி ஒரு பாவியம் எழுந்து செய்ய வேண்டிய வேலையைப் பன்னூறு மடங்காக அவன் இராமாயணமே செய்து கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது. திறமையில் கம்பனைப் போலப் பாட எவரும் முன் வரவில்லையே தவிர, நம் இனங்கொல்லும் தற்கொலை வேலையில் கம்பனையே மிகச் சிறியவனாக்கிய தமிழர்கள் தோன்றித்தான் உள்ளனர். இந்த நிலை ஏன் என்று நமக்கு வழிகாட்டிகளாக அமைந்தவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை. இதற்குப் பார்ப்பானைக் குறைகூறிப் பயனில்லை.

அடுத்து, பார்ப்பானே உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் குலக்கோட்பாடுகளுக்கும் கரணியனல்லன். ஆப்பிரிக்கக் காட்டுக் காபிரியர்கள் இனத்திலும், சீனர்கள் மூட நம்பிக்கைகளிலும், எகுபதியரின் காட்டு விலங்காண்டி வழிபாடுகளிலும் ஆரியம் புகுந்து வேலை செய்யவில்லை. உலகம் எங்கனுமே – மக்கள் உள்ள இடங்களிலெல்லாம் மூட நம்பிக்கைகளும், மதக் கொடுமைகளும் மக்களினத்தைக் கட்டவிழ்த்துத் தாம் வந்திருக்கின்றன; வருகின்றன. அவற்றிற்கெல்லாம் பார்ப்பன இனமே கரணியமாகி விடாது. இன்னுஞ் சொன்னால் பார்ப்பனர் தமிழகத்திற் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு இங்கும் குலசமயங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றை ஆரியர் கைப்பற்றிப் பற்பல மாறுதல்களைச் செய்து தம் இன நலத்திற்கென வடிவமைத்துக் கொண்டனர். இதை வரலாறு படித்த எவனும் மறுக்கமுடியாது. இந்த நிலையில் பார்ப்பானைக் குறைகூறியே தமிழன் தப்பித்துக் கொள்ள முடியாது, தமிழினத்துள் பார்ப்பானைவிடக் கொடுமையான வடிவங்கள் மிகப்பல உண்டு. அவர்களையெல்லாம் நம் இனத்தலைவர்கள் இனங்காட்டத் தவறிவிட்டனர். அவர்கள் நம்மினத்துக்குள்ளேயே இருந்து செய்து வந்த கேடுகள்தாம் இன்று நம்மைத் தன்னாய்வு செய்துகொள்ள முடியாதபடி தடுத்துவிட்டன. நம்மை வீழ்த்திய வரலாற்று நாடகத்தில் நாம் நடித்த காட்சிகளே பலவாக இருக்கத்தான் இருக்கின்றன. இவற்றை நாம் வெளிப்படையாக அவிழ்த்துப் பேச வெட்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தமிழினத்திற்கு நம் மூவேந்தர்களால் ஏற்பட்ட நலிவுகளும் கேடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. நம் இன அரசர்களைப் பார்ப்பர்னுக்கு அடிமையாக இருக்கச் சொன்ன மடயன் எவன் பார்ப்பானை நம் தந்தலத்திற்காக நாம் என்றும் – இன்றுகூட – விலக்கியதில்லை. அவனால் நாம் நலம் பெறுவோம் என்றால், நம்மவனையே புறக்கணிக்கவும், ஏமாற்றவும், கவிழ்க்கவுங்கூட நாம் என்றும் தயங்கவில்லை. இவற்றையெல்லாம் நம் தலைவர்கள் நமக்குச் சொன்னதாக நான் கேட்டதில்லை. நாம் நம் பெருமைகளையும் எதிரியின் சிறுமைகளையும் புட்டுப் புட்டுப் பேசிக் கொண்ட அளவில், நம் சிறுமைகளையும் எதிரியின் பெருமைகளையும் ஒருசில நொடிகள்கூடப் பேசிக் கொண்டதில்லை. நமக்கு நாம் மருத்துவம் செய்துகொள்ள மறுத்தே வந்திருக்கின்றோம்.

நம் சிவனிய (சைவ) மாலிய (வைணவ) சமயங்கள் என்று நாம் கொண்டவற்றில்தாம் மூட நம்பிக்கைகள் மிக்கிருந்தன. எல்லாம் வல்ல இறைப்பேராற்றல் ஒன்றை வடிவம் கொடுத்து அமைத்த முதல் இனம் தமிழினமே! ஆரியத் தெய்வங்களுக்கு வடிவங்களே இல்லை! நீரும், நெருப்பும், காற்றும் அவர்களின் தெய்வங்களாக அவர்தம் வேதங்கள் பேசுகின்றன. தமிழர்களுக்குத்தான் வடிவங்கள் தெய்வங்களாக இடைநின்றன. மிகத் தொன்மைத் தமிழரின் தீவணக்கமான கந்தழி வணக்கம் நம்மவர்களால்தான் கந்தன் வடிவமாக்கப் பெற்றது. (வடமொழி “ஸ்கந்தம் ‘கந்த'னாக மாறியதென்பது, திரவிடம் தமிழாக மாறியதென்பது போலும் பிழையான கருத்து. தமிழமே த்ரமிளமாகிப் பின் திரவிடமாகத் திரிந்த தென்பதே உண்மை). சமயத் தலைவர்களை யெல்லாம் குருக்கள் என்றும், தெய்வ வடிவங்களென்றும் வழிபாடு செய்த – செய்து வருகின்ற – பெரு மூடப் பழக்கங்கள் இன்றும் சிவனிய, மாலியர்க்கிடையில்தாம் மிகுந்த அளவில் பெருகியுள்ளன. மதத் தலைவர்களை யெல்லாம் – குலத் தலைவர்களை யெல்லாம் கடவுளர்களாக்கியவன் நம்மவனே. ஆரியனுக்கு அன்றும் இன்றும் ஒரே வகைத் தெய்வங்களே. புதுப்புதுக் கடவுளர்களின் தோற்றம் நம்மவரின் மோடி வேலையே. திருவிறக்க(அவதார)க் கதைகளுக்கு ஆரியத்தில் அடிப்படையில்லை. கண்ணன் (கிருஷ்ணன்) தமிழனே! பூசாரி முறையும் தமிழர்களுடையதே! பார்ப்பான் பின்னர் கைபற்றிக் கொண்டானே தவிர, அம் முறையை உண்டாக்கியவன் அவனல்லன். இவற்றுக்கெல்லாம் சான்றுகள் உண்டு வரலாறு உண்டு. இன்னுஞ் சொன்னால் பார்ப்பான் கோயில்களைக் கட்டியதில்லை. அவனுக்குக் கோயில் கட்டத் தெரியாது. அவன் அடர்ந்த காடுகளில் தீக்குழிகளையே தெய்வ வணக்கத்திற்குரிய இடமாகக் கருதி அதனையே வழிபட்டு வந்திருக்கின்றான். கோயில்களைக் கட்டியவனும், அவற்றில் படிமங்களைப் பண்ணி வைத்தவனும், அவற்றில் ஆறுகாலப் பூசனை முறைகளைப் புகுத்தியவனும், வழிபாட்டு முறைகளை வரையறுத்தவனும் நம்மவன்தான். இவற்றின் உண்மைகளை வெளிப்படையாக நாம் பேச விரும்பியதில்லை. நம் மேலேயே நாம் குறைகூறிக் கொள்வது, சாணியைத் தெளித்துக் கொள்வது போன்ற ஒரு வெட்கத்தை நமக்கு உண்டாக்கியிருக்க வேண்டும். நம் இன வையாபுரிகளும், தெ.பொ. மீக்களும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வரையில் அவனுக்கு அவனைப்பற்றித்தான் தெரியும்; நம்மைப் பற்றித் தெரியாது. இவற்றையெல்லாம் நம்மவன் நன்கு எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இன்னும் சொன்னால், நம்மவனுக்குச் செருக்கும் தன்னலமும் மிகுதி. நம்மவனை நாம் என்றும் கைதூக்கிவிட்டதில்லை. தப்பித் தவறி எங்கோ ஒருவன் கைதுக்கிவிட்டாலும், அவன் தலைமேலேயே நாம் ஏறி நிற்க விரும்பினோமே யன்றி, அவனுக்கு நன்றியுணர்வு காட்டி அவனை மதித்துப் பாராட்டியதில்லை. சில வேளைகளில் அவனுக்கே நாம் குழிதோண்டி வைக்கவும் தவறியதில்லை. புறம் பேசுவது நம்மிடையில் மிகுதி. இதை நேரிடையாக ஒருவன் கேட்பானானால் அவனையே அக்குற்றத்திற்கு ஆளாக்கிவிட்டு, அவனை விட்டுப் புறம்போதலும் நம்மவரிடையே மிகுதி. நேருக்கு நேராய் வாய்திறக்க நம்மவருக்கு இன்னும் துணிவு வரவில்லை. நம் குறைகளாகவும் நாம் கூறிக்கொண்டிருக்கும் வரை, நாம் ஓர் இம்மியளவும் முன்னேறப் போவதில்லை. இப்பொழுது முன்னேறியுள்ளதாக நாம் கருதிக் கொண்டிருப்பதும் நம் முன்னேற்றமில்லை. ஆற்று வெள்ளத்தில் தப்பித் தவறி வீழ்ந்து அடித்துச் செல்லப்படும் மரக்கட்டைகளைப் போல் நாம் எங்கோ அடித்துச் செல்லப்படுகின்றோம். நம்மில் திறமையான ஒருவனை அவன் பெற்ற அத்திறமையான அத்துறையில் பயன்படுத்திக் கொள்ள மறுக்கின்றோம். நம் எல்லாரையுமே எல்லாத் துறைகளிலும் அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் பேராசை நம் அனைவருக்கும் இருக்கின்றது. சிறிது அளவில் கற்ற மட்டிலேயே பேரளவில் பேச மேடைபோட்டுக் கொள்ளுகின்றோம். ஒரு பக்கங்கூடப் பிழையின்றி எழுத வராத குரும்பைகளெல்லாம் இன்று எழுத்தாளர்களாகவும் கலை மேதைகளாகவும் உலாவரக் காண்கின்றோம். பதவி, அதிகாரம் இரண்டால் அறிவுலகத்தையே ஆளத் துடிக்கின்றோம். தமிழர்களாகிய நமக்கு வாய் நீளம்; கை மிக மிக நீளம். பிசிறு அடிக்கின்ற கருத்துரைகளையெல்லாம் துல்லிய நேர்கோடுகளாகக் காட்டிவிடப் பொழிந்து தள்ளுகின்றோம். வள்ளுவருக்குப் பின் உலகனைத்தையும் இணைத்து நோக்கிய தமிழறிஞர் ஒருவரையும் என்னால் பார்க்க முடியவில்லை.

ஆரியப் பார்ப்பனர்களை அடியூன்றத் திட்டித் தீர்க்கும் ஒரு தன்மானச் செய்தித்தாள் (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஆசிரியரிடம் ஒருபால், தென்மொழித் தாள் சலுகைக்கென நான் கையேந்திப் போன நாட்களில் அவர் தமக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாதெனக் கூறியதை, இன்றும் எண்ணிப் பார்த்து, நம்மவர்க்கு வரவேண்டிய பொதுமை உணர்வுகளுக்காக என்னைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டிருக்கின்றேன். இந்த நிலை இன்னும் சிறுஅளவில் கூட நம்மைவிட்டு நீங்கியபாடில்லை. பாவேந்தர் பாரதிதாசனைப் பற்றி மேடைதோறும் பாமுழக்கும் ஓர் அமைச்சர், தமக்குப் பதவி வந்தபோது, அவரை அணுகிய பாவேந்தர் பெயரனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடந்தர உருபா பத்தாயிரத்தை பாவேந்தர் மகளிடமே கேட்ட நிகழ்ச்சியை நான் நன்கு அறிவேன். நம்மவர்கள் பதவியும் அதிகாரமும் வந்தவுடன் நடந்துகொள்ளும் தகவின்மை யிருக்கின்றதே. அது, பதவியும் அதிகாரமும் பெற்ற பார்ப்பான் ஒருவன் நடந்துகொள்ளும் தகவாண்மையைவிட நூறுமடங்கு தாழ்ந்ததாக விருக்கின்றது. பார்ப்பனர்களையும் அவர்தம் அன்றைய இன்றைய செயற்பாடுகளையும் தென்மொழி கண்டித்த அளவு வேறெந்த இதழும் கண்டித்ததில்லை. ஆனால் அதற்குப் பார்ப்பனர்களால் வந்த கேடுகளைவிடத் தமிழர்களால் வந்த கேடுகளே மிகுதி. எஃது எப்படியோ, புகழ்ச்சி நமக்குச் சுவையாக இருக்கின்றது. அது மனத்தில் இனிக்கின்றது. ஆனால் நம்மைப் பற்றிய இகழ்ச்சியுரைகள் நம் செவிகளிலும் கைப்பதில்லை.

இத்துறையில் நாம் இன்னும் சொல்ல வேண்டுவனவும் விண்டு விளக்க வேண்டுவனவும் நிறையவுள. இவற்றை வேறு வழியின்றி வெளிப்படையாகவே கூறவேண்டியிருப்பதால், ஒரு சோற்றுப் பதமாகவே சிலவற்றைக் கூற வேண்டி வந்தது, ஆனால் தமிழர்கள் இவ்வளவிலேயே தங்கள் குறைபாடுகளை இன்னின்ன என்று இனங்கண்டு கொண்டு, தாம் ஆண்டாண்டுக் காலமாய் வீழ்ந்து கிடக்கும் அத்துணை இடர்ப்பாடுகளுக்கும், ஆரியப் பார்ப்பன இனமே நூற்றுக்கு நூறு கரணியம் என்று வீணே எண்ணி இறுமாந்து திரியாமல் தம் அறியாமையும், மடித்துயிலும், தந்நலமும், நடுநிலையற்ற போக்கும் பிறவுமே நம் வீழ்ச்சிக்குப் பெருங்கரணியங்கள் என்று கண்டு, நம்மை முன்னேற்றிக்கொண்டு போவதில் அக்கறை காட்ட வேண்டும் என்று தலைவணங்கி ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

– தென்மொழி, சுவடி : 9, ஓலை : 8, 1971

மத உரிமைகளும் அரசின் கடமைகளும்

ஆளுமை நிலையில் அரசுக்கு எத்தனையோ கடமைகள் உண்டு; பொறுப்புகளும் உண்டு. அவற்றுள் சட்டத்தால் வழங்கப்பெறும் பொதுவுரிமைகளை மக்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்தும் பொழுது அவற்றால் அதே மக்களில் மறுபகுதியினர் தம் உரிமைகளுக்கு ஊறு நேராவண்ணம் கண்காணிப்பதும் அதன் தலையாய கடமைகளில் ஒன்று. இப்படிக் கண்காணிப்பதில் தவறு நேருமானால், அல்லது சட்டம் இடங்கொடுக்கும் வகையிலேயே புறக்கணிப்பு நிகழுமானால், மக்களில் சிலர் தங்களின் உரிமைகளைப் பயன்படுத்தி மகிழ்கின்ற அதே நேரத்தில், வேறு சிலர் அவற்றால் துன்பப்படவும் நேர்ந்துவிடுகின்றது. இதை விளக்க ஆங்கிலத்திலே கையாள்கின்ற ஓர் உவமையை இங்குக் கூறலாம். “ஒருவர் கைவிசிக் கொண்டு நடப்பதில் யாருக்கும் தடையிருக்க முடியாது; ஆனால் அவர் கை தான் இன்னொருவர் மூக்கில் பட்டுவிடக் கூடாது”.

பொதுவாக ஒரு குடியரசு நாட்டில், அதுவும் குறிப்பாக இந்நாட்டில், மதங்களுக்கு வழங்கப்பெறும் உரிமைகள், சலுகைகள் இப்படி அளவுக்கு மீறின வகையில் இருப்பது, மக்களுக்கு அரசு விளைவிக்கும் பிறவகை நலன்களுக்கு ஓர் இடையூறாகவே இருக்கிறது. மதம் ஒரு கொள்கை அல்லது ஒரு கடைப்பிடியாக இருக்கலாம். ஆனால் அது சட்டமாக்கப்பட்டுவிடக் கூடாது. அரசு ஆளுமைகளில் அது குறுக்கிடவே கூடாது. இதனால்தான் உருசியா போலும் பொதுவுடைமை நாடுகளில் மதங்களுக்கு இடம் கொடுத்தாலும் அரசாளுமையில் அவற்றைத் தலையிடா வண்ணம் தடைப்படுத்தியுள்ளனர். அதனால்தான் அவர்களால் பல நல்ல விளைவுகளைச் செய்ய முடிகின்றது. ஆனால், அவ்வாறு இவ்விந்திய நாட்டின் சட்டம் அமையாமைக்குக் கரணியம், இதனை உருவாக்கிய எழுவரில் ஐவர் பார்ப்பனர். எனவே, தங்கள் வாழ்க்கையின் எல்லாக் கூறுபாடுகளுக்கும் மதமே துணையாக இருக்கின்ற அந்தத் தன்மையினை அவர்கள் சட்டத்தினின்று விலக்கிவிட முடியாமற் போனதுடன், அந்தச் சட்ட அமைப்புகளாலேயே அம் மதக் கோட்பாடுகளைக் காப்பாற்றவும் செய்துவிட்டனர். ஆகவேதான் இந்த நாட்டில் மதத்தின் பெயரால் ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம். நாளைக்கு, இதே இந்திராகாந்தி மக்களிடத்தில் வேடிக்கையாகப் பேசித்திரியும் நிகரமைக் கொள்கைகள் ஒருவேளை செயல்முறைக்கு வந்தாலுங்கூட அவற்றைச் செயற்படுத்த முடியாமல் தடுக்கின்ற வல்லமை இந்த மதக் கோட்பாடுகளுக்கு உண்டு; அவற்றுக்குச் சட்டக் காவலும் உண்டு. எனவே, இந்த ஒன்றை வைத்தே அந்த அம்மையாரின் பேச்சுகளில் எத்துணையளவு உண்மையிருக்கும் என்றும் எடையிட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இந்த நாட்டின் சட்டம் இங்குள்ள மதங்களுக்கு – குறிப்பாக இந்துமதத்திற்குக் காவலாக்கப்பட்டுள்ளது. எனவேதான் எத்தனைப் பொதுவுடைமை சமவுடைமைக் கொள்கைகள் – முழக்கங்கள் வந்தாலும் இங்குள்ள தீமைகளை ஒர் இம்மியளவும் பெயர்த்துக் காட்ட முடியவில்லை. இந்தியச் சட்ட அமைப்பையே உடைத்துத் தூள்தூளாக்கும் கொள்கையை எந்தக் கட்சி கொண்டுள்ளதோ அதுதான் இந்த வகையில் ஒரளவு உண்மையான – நம்பிக்கையுடைய கட்சியாக இருக்க முடியும். அவ்வாறு இங்குள்ள ஒரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருப்பதாகச் சொல்ல முடியாது.

எனவே, இங்குள்ள மதக்கோட்பாடுகளுக்கு மாறாக எத்தனை எழுதினாலும், பேசினாலும், முயன்றாலும் எதனையும் செயலாக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த நாட்டைத் திருத்துவதற்கும், இங்குள்ள தீமைகளை ஒழிப்பதற்கும் இங்குள்ள கட்சிகள் தலைவர்கள் பேசுவதைப் போல், இங்குள்ள தாளிகைகள் எழுதுவதைப் போல், உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் ஒரு முயற்சி நடைபெறவில்லை. அங்கங்குள்ள கட்சிகளும் குறைவு; தலைவர்களோ அதைவிடக் குறைவு; அவர்கள் பேசுவதோ அதைவிடக் குறைவு; அவ்வாறு பேசும் செய்திகளும் அந்தந்த நாட்டின் முன்னேற்றத் திட்டங்களைப் பற்றியனவாகவே இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டுப் புதுக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்; நாமோ இங்குள்ள பழைய கட்டிடங்களையே இங்கு மங்குமாகப் பூசியும் வெள்ளையடித்தும் புதிய கட்டிடங்கள் என்று பேசுவது மல்லாமல் பீற்றிக்கொள்ளவும் செய்கின்றோம். இந்த இடர்ப்பாடுகள் அனைத்துக்கும் இங்குள்ள மத ஆளுமைகளே கரணியங்கள். அவை மக்களை மட்டும் மூடர்களாக்கவில்லை; ஆட்சியையும் முடமாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை எந்தக் கொம்பனாலும் களைய முடியாதபடி சட்ட வல்லமைகள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான் இந்தியா தன்னுரிமை பெற்று இருபத்தேழு ஆண்டுகளாகியும் எந்த ஒரு துறையிலும் உருப்படியாக முன்னேற முடியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதே மதங்களைக் காவலாகக் கொண்டு, மக்கள் பெருக்கத்தில் மட்டும் அளவுக்கு மீறிய சுமையை ஏற்றபடி முக்கி முணகிக்கொண்டு கிடக்கின்றது. இந்த நுட்பத்தை விளங்கிக் கொண்டோ அல்லது கொள்ளாமலோ – நம் தலைவர்கள் – எனப்படுபவர்கள் – அந்த மத உரிமைகளில் கைவைக்க வக்கில்லாமல் – வைத்தால் பிழைப்புக் கெடுமே என்னும் அச்சத்தால் – வாய்க்கு வந்தபடி சீர்திருத்தம் பேசுவதும் பேசியவற்றிற்கு நேர்மாறாகச் செய்வதுமாகக் காலத்தைக் கடத்தி வருகின்றனர். நம் அரசியல் அமைப்புப்படி எந்த ஒரு துறையில் எதைச் செய்தாலும் அதற்கு மதத்தின் ஒப்புதல் இருந்தே ஆக வேண்டும். இதனால்தான் பார்ப்பனியத்தின் ஆணிவேரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஏனெனில் பார்ப்பணியம் இந்த நாட்டில் முழுக்க முழுக்க மதத்தின் வேர்களில்தான் தன் முட்டைகளை இட்டுக் கொண்டுள்ளது. எனவே அந்த நிலை தகர்க்கப்படும் வரை மதத்திற்கு மாறுபடவோ, அல்லது பார்ப்பனியத்திற்கு எதிராகவோ நாம் எதனையும் – சொல்லி விடலாம் – ஆனால் செய்துவிட முடியாது.

இந்த நிலைகள் இந்திய நாட்டின் முழுமையையும் பொறுத்த அளவில் எப்படியிருந்தாலும், நம் தமிழகத்தைப் பொறுத்த அளவிலாகிலும், பகுத்தறிவாளர்கள்(!) ஆளுகின்றதாக நாம் (!) பேசிக் கொள்ளுகின்றோமே, அவர்கள் ஆட்சியிலாகிலும், அவர்கள் முன்னிலையில் சட்டத்திற்கு மாறுபடாத வகையில், சிற்சில நடைமுறைகளுக்கான கருத்துரைகளை, வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றோம். இவ் வேண்டுகோள்களில் பெரும்பாலானவை அவர்கள் ஆட்சிக்கு வராதபொழுது, அஃதாவது பேராயக் கட்சி – அஃதாவது அவர்கள் அன்று பேசிய எழுதிய மொழியிலேயே சொன்னால் வடநாட்டானுக்கு வால் பிடிக்கின்ற கட்சி ஆண்டு கொண்டிருந்தபொழுது – இவர்கள் கோட்டைப் பக்கம் எட்டிப் பார்க்கவே முடியாதவர்களாக இருந்தார்களே. அப்பொழுது பேசியவற்றிலும் – எழுதியவற்றிலும், கேள்விப்பட்ட – தென்பட்ட செய்திகள்தாம்! சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே இவை சொல்லப் பெறுவதால் இவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர மிகுந்த பாடுகள் படவேண்டியிராது. எண்ணமும் துணிவுந்தாம் வேண்டும். இவற்றால் தனிப்பட்ட நிலையிலோ அரசுக்கோ வருமானம் இராது. ஒரு வேளை அதற்குக் குறைவு வந்தாலும் வரலாம். மக்கள்நலம் கருதி (அப்படி ஒரு கோட்பாடு இருந்தால்) அதையும் பொறுத்துக்கொள்ளலாம்.

முதற்கண், அரசு விடுமுறைகளாக, அலுவலகங்களுக்கும், எதிர்காலத்தையே உருவாக்கவிருக்கும் நம் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடங்களுக்கும் இத்தனை விடுமுறைகள் விடுகின்றோமே, அவை தேவைதாமா? நம் அமைச்சர்கள் எத்தனையோ நாடுகள் சுற்றியவர்களாயிற்றே அங்கெல்லாம் இப்படித்தான் விடுமுறைகள் விடப் பெறுகின்றனவா? இல்லையே! இங்கு மட்டும் எதற்கு இத்தனை விடுமுறைகள்? போகட்டும், அந்த விடுமுறைகள்தாம் எதற்கென்று வேண்டாவா? விடுகின்ற விடுமுறைகளில் தொண்ணுறு விழுக்காடு மத விடுமுறைகளே! அவற்றை ஏன் விடுமுறையாக விட வேண்டும்? விருப்ப விடுமுறையாக விட்டுவிட்டுப் போனால் தேவைப்பட்ட மதப்பித்தர்கள் அன்றைக்கு விடுமுறை போட்டுவிட்டுப் போகிறார்கள். பணி செய்பவர்கள் அவர்களுக்குத் தேவையான இன்னொரு நாளில் அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். இந்தப் பழக்கம் நம் ஆட்சியிலும் அஃதாவது – பகுத்தறிவாளர்கள் (!) என்று நாம் நம்மைக் கூறிக் கொண்டோமே – நம் ஆட்சியிலும் – தேவைதானா? மாற்றவே முடியாதா? இதற்கும் மாநிலத் தன்னாட்சி வாங்கித்தான் ஆக வேண்டுமா? கொஞ்சம், சட்டத்தைப் புரட்டிப் பாருங்களேன்!

அடுத்து, இந்தச் சிலை(மார்கழி) மாதத்திலும், வேறு திருவிழாக் காலங்களிலும், தெருத்தெருவாக ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு திருவெம்பாவை திருப்பாவைப் பாடல்களைத் தெருப்பாவைப் பாடல்களாக ஆக்கிக்கொண்டு வருகின்றார்களே, அந்த வீண்கத்தல்கள் தேவைதானா? இந்த முறை எந்த வகையில் மதக்கோட்பாடுகளை வளர்க்கின்றது? அந்த மாதத்தில் எழுந்து நீராடக் கூப்பிடும் பாவைப் பாடல்களுக்கு ஏதாவது பொருளிருக்கின்றதா? எங்குப்போய் நீராடுவது நகராட்சிக் குழாய்களிலா, கூவத்திலா? அது போகட்டும்! அப்படிப் போய் எந்தப் பெண்பிள்ளைகளைக் கூப்பிடுவது? அவர்கள் என்ன, நோன்பு நோற்கவா போகின்றனர்? எந்த நோன்பென்று எந்த மத – மடத் – தலைவனாவது சொல்ல முடியுமா? வெட்கமும் – பொருளுங்கெட்ட இந்தச் செயலுக்காக எத்தனைப் பேர் காதுகளைப் புண்ணாக்குவது? அக்காலங்களில் பள்ளித் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் எத்தனை மாணவர்களின் மனங்களை நோகச் செய்வது? பார்ப்பனப் பிள்ளைகள் எப்படியும் படித்துக் கொள்வார்கள்! நம் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்! வாய்ப்பாகக் கிடைத்த அந்த முப்பது நாள் காலை நேரங்களையும் இப்படியா ஒலிபெருக்கிகளைப் போட்டுக் கொண்டு, தெருத்தெருவாக, மடம்மடமாக, கோயில்கோயிலாகக் கூத்தடிப்பது? இப்படி ஒலிபெருக்கியில் கூப்பிடச் சொல்லியா அந்த ஆண்டாளம்மாளும், மாணிக்கவாசகரும் பாடி வைத்தார்கள்? இலக்கிய வடிவான நூலமைப்பின் உட்பொருள் விளங்காமல் இப்படியா மதப்பித்தர்கள் பொருள்பண்ணிக் கொள்வது? பொருள் எப்படியோ போகட்டும்; தொலைந்து போகின்றது! அதற்காக, ஏன் ஒலிபெருக்கி வைத்து அதை எல்லாருடைய காதுகளிலும் போய்க் குத்தல் வேண்டும். அப்படிக் குத்தினவுடனே அவர்களுக்குப் பத்தி வந்துவிடுமோ? அதனால் படியரிசி இரண்டு உருபாவுக்குக் கிடைத்து விடுமா? பின், ஏன் இதுநாள் வரை கத்தி ஒன்றும் கிடைக்கவில்லை. இப்படி மதப்பித்தர்கள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களின் அமைதியைக் கெடுப்பதற்கு எந்தச் சட்டம் இசைவு தருகின்றது?

ஒலிபெருக்கியை எதெதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஒர் அளவு – எல்லை இல்லையா? பக்கத்து வீட்டுக்காரனுடைய இசைவு பெறாமல் ஒரு தொழிலுக்கான பொறியையே இயக்கக்கூடாது என்று இருக்கும்பொழுது, எல்லாருக்கும் துன்பந்தரும் ஒலிபெருக்கிகளை மட்டும் கோயில்களில் – தனிப்பட்ட ஒருவனின் திருமணக் கொம்மாளத்தில் – மட்டும் எப்படி வைக்கலாம். இஃது என்ன கொடுமை? இதற்கேன் அரசு நடவடிக்கை எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவனோ, ஒரு கோயில் அமைப்பாளர்களோ மகிழ்ந்தால் அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் துன்பப்பட வேண்டும் என்பது தான் குடியரசோ? அமைச்சர்களுக்குத் தொல்லையில்லை. வெளிக்காற்றே புகாத அறைகளில் பகல்வரைக்குங்கூட அம் மாதத்தில் துங்கலாம். பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஒலிபெருக்கி வழியாகவும், வானொலி (இஃது ஒரு சாவக்கேடு – நம் நாட்டில்) வழியாகவும் எவ்வளவு தொல்லை கொடுக்கின்றனர். இதையேன் அரசு கவனிக்கக் கூடாது?இந்த, இந்து மதப் பித்தர்கள் செய்யும் விளம்பரப் பித்தலாட்டங்களைப் பார்த்துவிட்டு தந்தம் மதப்பித்தர்கள் எங்குத் தங்களைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அஞ்சிய கிறித்தவ, இசுலாமிய மதத்தலைவர்களும் தங்கள் தங்கள் கோயில்களிலும் இந்தப் புதிய பாணிகளைப் பின்பற்றி ஒலிபெருக்கி வழியாகவே தங்கள் தங்கள் மதஉரிமை(!)களைப் பரப்பிவரத் தொடங்கிவிட்டனர். இரம்சான் போலும் திருவிழாக் காலங்களில் தங்கள் மதக்காரர்களை (அஃதாவது ஒரு தெருவிலுள்ள ஓரிரண்டு வீட்டுக்காரர்களை) எழுப்புவது போல் இரவு இரண்டு மணிக்கே வந்து, அந்தத் தெருவில் உள்ள அத்தனை வீட்டுக்காரர்களும் திடுக்கிட்டு எழும்படி சலங்கையொலி யெழுப்பும் தமுக்கொலியை அடித்தபடி காட்டுக் கத்தல்கள் கத்திவருவது எப்படி நாகரிகமான மதக்கோட்பாடோ தெரியவில்லை. விருப்பமில்லாத – அல்லது வேண்டாத – பலருடைய – அல்லது சிலருடைய – அல்லது ஒருவனுடைய காதுகளில் – அவர்கள் அல்லது அவன் – விரும்பாத நேரத்தில் – ஒலிபெருக்கி வழியாகவோ வேறு தப்பறைகளின் வழியாகவோ ஒலிகளைப் புகுத்தி அமைதியைக் கெடுப்பது எப்படி நாகரிகமாகும்? மதம் என்னும் அளவில் மட்டும் எப்படி நாகரிகமற்ற ஒரு செயல் நாகரிகமாகக் கருதப்பட்டுவிடும்? இதை எப்படி அரசு விட்டுக் கொண்டிருக்கலாம். பெரும்பாலும் பொதுக்கூட்டங்களைத் தவிர வேறு எதற்காக ஒலிபெருக்கிகள் வைக்கப்படல் வேண்டும்? விலங்குத்தனமான வேண்டாத காட்டுக் கூச்சல்கள் மக்களின் அமைதியை எத்தகைய அளவில் கெடுத்து வாழ்வை வெறுப்புடையதாக ஆக்கி விடுகின்றன!

மற்றும் விளக்கணி விழா(தீபாவளி)ப் போலும் விழா நாட்களில் கேட்கவே வேண்டியதில்லை. பார்ப்பன வாண்டுகள், அல்லது ‘இப்பி’ப் பார்ப்பன விடலைகள் ஒரு சிலர் முதல் நம்(!) சட்டமன்ற உறுப்பினர்களின் குழந்தைகள், நம் (!) மாண்புமிகு அமைச்சர்களின் செல்வத் திரு மகன்கள்வரை எல்லாரும் வேண்டுமென்றே கொளுத்தும் ‘பட்டாசு’ வெடிகளால் பொதுவிடங்களில் அமைதியைக் கெடுத்து நகரத்தையும் தெருக்களையும் குட்டிச்சுவராக்கிக் குப்பை கூளங்களைப் போடத்தான் வேண்டுமோ? எந்த 'நரகாசுரன்' செத்துப்போன இழவிற்காக நாம் இப்படி ஆண்டுதோறும் பட்டாசு வெடிகளின் பட்டாளக்களத்தில் அஞ்சி அஞ்சி நடப்பது? அந்த ’நரகாசுரன்’ எத்தனையாவது ‘நரகாசுரன்’? எந்த ஆண்டில் அவன் இறந்தான்? என்பதை எந்த வரலாற்று நீலகண்ட சாத்திரியாவது ஆராய்ந்து அரசுக்குச் சொல்லியுள்ளாரா? பின், ஏன் அவனுக்காக இந்த அணுக்குண்டுக் காலத்தில் நாம் நம் மூட நம்பிக்கைக்குப் புதுப்புதுப் பொருள்களையெல்லாம் கற்பித்துக் கொண்டு, தாளைத் திரியாக்கிக் காசைக் கரியாக்கி, விலைமதிப்பற்ற மருந்தைப் புகையாக்கி, நம் காதுகளையும் புண்ணாக்கிக் கொள்ளுதல் வேண்டும்? இதில் என்ன மெய்ப்பொருள் இருக்கிறது? எந்தப் புதுப் பெரியவாளாவது ‘தென்மொழி’ அலுவலகத்திற்கு வந்து விளக்கிக் காட்ட முடியுமா? அல்லது, அரசியல் பொருளியல் போலும் பெரிய பெரிய இதுகளுக்கெல்லாம் தொடர் கட்டுரைகளில் விளக்கம் போட்டுக் காட்டும் தினமணிச் சிவராமன்கள் வந்தாவது விளக்கிக்காட்ட முடியுமா? இந்தக் காலங்களில் தொழிலாளர்களிடத்தில் எழும் வெகுமதிப் போராட்டங்களும், அவற்றால் தொழிலகங்கள் இழக்கும் வருமானங்களும், அவற்றைப் பிடுங்கக் காத்திருக்கும் வாணிகக் கள்ளர்களும், இவர்கள் அத்தனைப் பேருடைய நடைமுறைகளுக்கும் அனுப்பிசகாமல் ஆண்டுதோறும் இசைவளித்துவிட்டு, அவ்வப் பொழுது அமெரிக்காவிற்கும் உருசியாவிற்கும் வெட்கமில்லாமல் மடியேந்திப் போகும் ஆட்சி மூடர்களுக்கும் யார் வந்து அறிவு கொளுத்துவது...? – இஃது என்ன அப்படி முழுக்க முழுக்கவா நடுவணரசைப் பொறுத்த செய்தி.... ?

அது போகட்டும்! நம்(!) அமைச்சர்களைக் கேட்கின்றோம். கலைமகள் விழா, திருமகள் விழா, கருவிவிழா என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடுவதற்காகப் பிய்த்துப் பிடுங்குகிறார்களே, அவையெல்லாம் நம்(!) ஆட்சியிலுங்கூடக் கட்டாயம் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்படத்தான் வேண்டுமா? – இப்படி நீங்கள்தாமே அன்றைக்குக் கேட்டீர்கள். இப்பொழுது நீங்களே கொண்டாட விடுகிறீர்களே! (நீங்கள் கொண்டாடுவது ஒருபுறம் இருக்கட்டும்!) அதுமட்டும் ஏன்? இவற்றைக் கொண்டாடுவதை விட்டுக் கொண்டிருந்ததற்காகத்தானே அன்றைய பேராயக்கட்சியை வடநாட்டானுக்கு வால்பிடிக்கும் கட்சி என்று பகடி செய்தீர்கள்? இன்றைக்கு உங்களை யார் பகடி செய்வது? ஒருவேளை இதற்கும். அந்த மாநிலத் தன்னாட்சி (அப்படிச் சொன்னாலும் உங்களுக்கு விருப்பம் இருக்காது) இல்லை – மாநில சுயாட்சி வாங்கியாக வேண்டுமோ? இதையெல்லாம் கண்டித்தால், நாம் நம்(!) அண்ணாவிற்கும் நம்(!) பெரியாருக்கும் விழா – வேடிக்கைகள், தீவ, தூவ, படைப்புகள் செய்ய முடியாது? (மக்களைக் கண்ணுக்குக் கண்ணாக ஏமாற்ற முடியாது; வேண்டுமானால் மறைமுகமாக ஏமாற்றலாம்;) எனவே அவர்கள் கொண்டாடும் விழாக்களை அவை – கருவிப் பூசனையாகட்டும், கலைகள், திருமகள் பூசனையாகட்டும் நாம் விட்டுக் கொடுப்போம்; அப்பொழுதுதான் நம்(!) அண்ணா விழாவை நாம் செய்யவும் அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள் என்ற எண்ணமோ, ஏதோ? சென்ற மாதம் நடந்த நம்(!) முப்பெரு விழாவின்பொழுது கூட நம்(!) அண்ணாச்சாமி(1)க்குப் பலவிடங்களில் கற்பூரம், பூசனைகள் செய்யப்பட்டன!!! நல்ல பகுத்தறிவு.! கூடிய விரைவில் பெரியார் கோயில்கள், அண்ணா கோயில்கள் சென்னையிலேயே கட்டப்பட்டாலும், அவற்றிலாகிலும் நாம்(!) கொண்டுவர விரும்பிய கோயில் பூசகர் சட்டம் நிறைவேற்றப்படுமோ என்னவோ! இல்லை, அதற்கும் மாநிலத் தன்னாட்சி தேவைப்பட்டாலும் படலாம்.

மதங்கள் எப்படி உருவாயின என்பதற்கு நாம் தடித் தடியான வரலாற்று நூல்களைத் தேடிப் படிக்க வேண்டுவதில்லை. நம்முடைய தமிழகத்தின் கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் நாம் வாழ்ந்திருந்தால் போதும். சமணமும் புத்தமும் மட்டுமல்ல – இசுலாமும் கிறித்துவமும் இன்னுஞ் சொன்னால் மாலியத்தின் சிவனியத்தின் முக்காற் பகுதிகளும் – இந்துமதத்தின் குப்பைத் தொட்டிக் கோட்பாடுகளும் – அனைத்தும் தோன்றிய வரலாறெல்லாம் இப்படித்தான் என்று அறிந்துகொள்ளலாம்! முன்னர்ச் சொற்களாக இருக்கும்; பின்னர் மெய்ம(தத்துவ)மாக மாறும்; அதன்பின்னர் மந்திரமாக விளங்குவதென்று, விளம்பரப் படுத்தப்பெற்று மக்களை அடிமைப்படுத்தும், ‘சிவாயநம’ மந்திரங்கள் வேத மந்திரங்கள் தொடங்கி ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று தொடங்குகின்ற ‘கச்சாமி’ மந்திரங்கள், ‘கருத்தருக்குத் தோத்திர’ மந்திரங்கள், ‘அல்லா’கூ அக்பர் மந்திரங்கள் வரை இப்படி வந்தவை தாம்! நம்(!) ‘கடமை’யும், ‘கண்ணிய’மும், ‘கட்டுப்பாடு’ம் இப்படித்தான் ஒரு காலத்தில் ‘அண்ணா’மதத்தின் மந்திரங்களாக இருக்கும். மொத்தத்தில் நாம்(!) பழைய மதங்களைப் பழிக்கிறோம்; ஆனால் புதிய மதங்களைத் தோற்றுவிக்கிறோம். எப்பொழுதும் இந்த இயற்கை முறையில் பிழையிருப்பதில்லை; நடைமுறைகளில்தாம் பிழைகள் மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளும் வந்து புகுந்துகொள்ளும். எனவே புதியமதடுக் கோட்பாட்டுக்காரர்களிடம் பழையமதக் கோட்பாட்டுப் பிழைகளைப் பற்றிச் சொல்வது, பயனளிப்பதாக இருக்குமோ இருக்காதோ? சொல்லியாக வேண்டுவது நம் கடமையாக இருக்கிறது!

– தென்மொழி, சுவடி : 12, ஓலை : 1, 1974

ஆரியப் பார்ப்பானின் மொழிக் குறும்பு!

ஆரியப் பார்ப்பான் - அவன் சீரங்கத்தில் ‘தர்ப்பைப் புல்’ ஏந்தும் நடராச அய்யனாக இருந்தாலும் சரி, கோயங்காவின் நிழலில் வாழ்ந்து எழுதியே பிழைக்கும் ‘சிவராம’ அய்யனாக இருந்தாலும் சரி - தமிழ் மொழியின் சிறப்பைக் கெடுத்து, அம்மொழியில் ‘அவாளுக்கு’ மிக இனிப்பான ‘சமசுக்கிருத’ச் சொற்களைக் கலந்து எழுதவோ, பேசவோ செய்யவில்லையானால், வாழ்க்கையில் ஒரு நிறைவே இருக்காது! நம் வீடண, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமணிய', ‘கண்ணதாசன்’களுக்கும், ‘அவாளுக்கு’ப் பக்கமேளம் கொட்டிப் பேசவில்லையானால் தூக்கமே வராது!

சென்ற (சூன்) மாதம், ‘நம்’ கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் நாகர்கோயிலில், அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர் கழக மாநாட்டைத் தொடக்கி வைக்கையில் ஒரு கருத்தைச் சொன்னார். அஃதாவது,

“அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பாடங்களைப் பயிற்றுவிக்கும் பொழுது, தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - என்பது அவர் கூறிய செய்தி,

இச்செய்தி பூணூல் சிவராமன்களுக்கு மிக இனிக்கின்ற செய்தி. உடனே,

“தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்” “தமிழ்நாட்டுக் கல்வி மந்திரி வரவேற்கிறார்” என்று தினமணியில் செய்தி வந்தது.இதைக் கல்வியமைச்சர் நெடுஞ்செழியனார் கவனிக்க வேண்டும். அவர் பேசிய பேச்சு ஒருவகைப் பொருள் தருவதானாலும், அவர்கள் அச்செய்தியால் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகின்றனர் என்பதைத்தான் அமைச்சர் கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

அந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்ட முறையைப் பாருங்கள்.

தமிழ் மொழியில் அந்நியச் சொற்கள்!

த.நா. கல்வி மந்திரி வரவேற்கிறார்.நாகர்கோவில், சூன். 10 – விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற பாடங்களை போதிக்கும்போது, தமிழ்மொழியில் அன்னிய மொழி வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று த.நா. கல்வி இலாகா மந்திரி நெடுஞ்செழியன் இன்று அ,இ. பல்கலைக் கழகத் தமிழ் ஆசிரியர்கள் சங்கத்தின் மாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் கூறினார். –தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியவைகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியமில்லை. தமது மொழிகளை மேலும் வளப்படுத்துவதற்காக, ரஷியாவும், ஜப்பானும், விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளில், பிற மொழி வார்த்தைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த உதாரணத்தை நாமும் பின்பற்ற வேண்டும் என்றார். அதேசமயத்தில், விஞ்ஞானம், கணிதம் மற்றும் இதர பாடங்களைத் தாய்மொழியிலேயே கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவர் வற்புறுத்தினார்.– இதுதான் தினமணிச் செய்தி.

– இதில் இனி கவனிக்க வேண்டியவை இவை:1. கல்வியமைச்சர் பேசிய கருத்து ‘அறிவியல் சொற்களைத் தமிழில் அப்படியே கையாளலாம்” என்பதேயாகும். ஆனால் அக் கருத்தைத் ‘தமிழ்மொழியில் அந்நியச் சொற்கள்” என்று தலைப்பிட்டுத் தமிழில் கலப்புச் செய்வதை அமைச்சர் வரவேற்பது போல் காட்டியது ‘பார்ப்பனக் குறும்பு’.

2. பிறமொழிச் சொற்கள் என்பதை அந்நியச் சொற்கள் என்று வேண்டுமென்றே எழுதியது ஆரியக் குறும்பு!

3. கல்வி அமைச்சர் என்று எழுதுவதை (மந்திரி என்பது சமற்கிருதச் சொல் என்று நினைத்துக்கொண்டு), கல்வி மந்திரி என்று எழுதியது ஆரியப் பார்ப்பனக் குறும்பு! (மந்திரி என்பது தூயதமிழ்ச் சொல்லே என்னும் ஆராய்ச்சிக்கு நாம் இப்பொழுது போக விரும்பவில்லை.)

4 ‘ஜூன்’ என்பதைத் தமிழ் இலக்கணப்படி, ‘சூன்’ என்று எழுதுதல் வேண்டும். தமிழ் என்பதை ஆங்கிலத்தில் ‘TAMI–ழ்’ என்று எழுதாமல் TAMIL அம்மொழி மரபுக்கேற்ப எழுதுவது போல், ஜூன் என்பதையும் ‘சூன்’ என்றே தமிழ் மரபுக்கேற்ப எழுதுதல் வேண்டும். (ஆனால் நம் இனக் கோடரிக் காம்புகளும், வீடண முண்டங்களும் நடத்தும் இதழ்களிலேயே இவ்வாறு எழுதப் பெறும்பொழுது, சிவராம ‘அய்யர்கள்’ சும்மா விடுவார்களா? இல்லாது போனால் அவர்கள் மேனியில் புரளும் பூணூலுக்குள்ள பெருமைதான் என்ன?

5. அடுத்தது, விஞ்ஞானம் என்னும் சொல் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறியப்பட்ட சொல். ‘அறிவியல்’ என்பதை ஐந்தாம் வகுப்பு மாணவனும் படித்து வருகிறான். அப்படியிருக்க அறிவியலை ‘விஞ்ஞானம்’ என்று வேண்டுமென்றே எழுதுவது நீரை ‘ஜலம்’ என்று விடாப் பிடியாய் எழுதிக்கொண்டிருப்பது போலும் சிவராமக் குறும்பே!

6. போதிக்கும் என்ற சொல் போய், பயிற்றுவிக்கும் என்னும் தூய தமிழ்ச்சொல் புழக்கத்திற்கு வந்து, எல்லாராலும் கையாளப் பெற்று வரும்பொழுது, இந்தச் சிவராம அய்யருக்கு மட்டும் என்ன வந்தது? (அந்த ஆளைச் சொல்லி மட்டும் குற்றம் தீர்ந்து போகாது. நம் ஆதித்தன்களும், கண்ணதாசன்களும், ‘விடுதலை’ ‘வீரமணி’களும், பொதுமக்களுக்கு விளங்கவைக்க வேண்டும் என்று அப்படித்தானே எழுதி வருகிறார்கள். அதற்கு எங்கேபோய் முட்டிக் கொள்வது. நம் தி.க.காரர்களுக்கு இனத்தில் பார்ப்பனியம் வேண்டாமாம்; மொழியில் மட்டும் அவனில்லாமல் நடக்காதாம்! அதென்ன பார்ப்பனியச் சூத்திரத் தன்மையோ நமக்கு விளங்கவில்லை)

7. இனி, செய்திக்கு வருவோம். ‘பாடங்களை போதிக்கும்’ என்று தினமணி எழுதுகிறதே. பாடங்களைப் போதிக்கும் என்பதுதானே சரி சிவராமன் இப்படி ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதுவதை விரும்புவாரா? பின் ஏன் தமிழில் மட்டும் இந்தத் தவறுகளைச் செய்கின்றார். இதுதான் அக்ரகாரக் குறும்பு!

8. பிறமொழி என்றால் நம் தமிழ்ப் ‘பாமரர்’களுக்கு விளங்காதாம். எனவே, ‘அன்னிய’ மொழி என்று எழுதுகிறதுகள். போகட்டும்; அந்தமட்டில் விட்டதுகளே! ‘அன்னிய பாஷை’ – என்றெழுதாமல்! அந்த அளவுக்கு நமக்கு வளர்ச்சிதான். அது சரி, நம் தி.க.காரர்களும், தி.மு.க.காரர்களும் இன்னும் ‘அவாள்’ கருத்துப்படி ‘பாமரர்கள்’ தாமோ? அப்படி நாங்கள் இல்லை’ என்று அவாள் உச்சிக் குடுமியில் உரைக்கும்படி சொன்னால் என்ன? ஒ....... ஒ....... உச்சிக் குடுமி இருந்தால்தானே!

9. இனி, சொற்கள் என்றால் நம்மவாளுக்குத் தெரியாதாம்; எனவே, வார்த்தைகள் என்று எழுதறதுகள் எல்லாம் நம்மவாளுக்குத் தானே, அவாள் தமிழ் எழுதறதும் படிக்கிறதும், அவாளுக்குத் தான் இங்கிலீசு இருக்கிறதே!

10. அவசியம் இன்னும் போகவில்லை. தேவை இன்னும் நமக்கு வரவில்லை. இஃது அம்மாமிக் குறும்பு!

11. கல்வித்துறை, பொதுப் பணித்துறை, காவல் துறை என்றெல்லாம் புழக்கத்துக்கு வந்து தண்ணிர்பட்ட பாடாகப் போன பின்னால்கூட, ‘இலாகா’ என்று எழுதுவதைப் பற்றி என்ன சொல்ல? இதுதான் அய்யராத்துக் குறும்பு!

12. ‘தமிழாசிரியர் கழகம்’ என்பதால் தம் ‘இப்பித்தனம்’ போய் விட்டால் என்ன செய்வது? எனவேதான், ‘தமிழாசிரியர்கள் சங்கம்’ என்று எழுதுகிறார்கள். இதுதான் துக்ளக் குறும்பு!

13. தொடக்கி வைத்துப் பேசினார் – என்று எழுதினால் தமிழ் வளர்ந்துவிடாதா? அதைக் கெடுத்துப் ‘பிராமணர் கருமத்தை’ நிறைவேற்ற வேண்டாவா? எனவேதான், ஆரம்பித்து வைத்துப் பேசினார் என்று அவாள் எழுதுவது. இது கல்கிக் குறும்பு!

14. முன்னேற்றம் என்று சொல்வதில் இரண்டு தடையிருக்கிறது, பார்ப்பனருக்கு! தமிழ் முன்னேறிவிடக் கூடாது என்பது ஒன்று! முன்னேற்றக் கழகத்திற்குப் பெருமை வந்துவிடக்கூடாது என்பது ஒன்று. இந்த இரண்டையும் எண்ணிக்கொண்டுதான், முன்னேற்றம் என்று ‘பூணூல்கள்’ சொல்வதைவிட ‘அபிவிருத்தி’ என்று சொல்வதில் தான் மகிழ்ச்சி அதிகம்.

மதுரையில் நடந்த இரண்டாவது தென்மொழிக் கொள்கை மாநாட்டைக் கூட, ‘தென்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்று அவர்கள் எழுதி மகிழ்ச்சியடைந்தனர். இதுதான் அவர்களின் ஆனந்த விகடக் குறும்பு!

15. ‘வார்த்தைகள்’ என்பதைச் ‘சொற்கள்’ என்று எழுதாத தினமணியா ரஷியா, ஜப்பானை – உருசியா, சப்பான் என்றெழுதப் போகின்றது? இந்த வகையில் நம் விடுதலை, முரசொலி, தினத்தந்திகள் திருந்துவதே இத் தலைமுறையில் நடக்குமா என்பது ஐயம் தினமணி, சுதேசமித்திரன்களை எதிர்பாக்கலாமா? இதுதான் அவர்களின் பிராமணக் குறும்பு ஆயிற்றே!

16. ‘எடுத்துக்காட்டு’ என்னும் சொல் பள்ளியில் படிக்கும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவனுக்கெல்லாம் புழக்கத்திற்கு வந்த சொல். ஆனால், ‘உதாரணத்தை’ப் பார்ப்பனர்கள் விட மாட்டார்கள் என்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு. இது சாமிநாதய்யர் குறும்பு!

17. ‘இதர’ என்பதற்குப் பிற என்று எழுதிவிட்டால், பூனூல் அறுத்த பார்ப்பானை, அக்ராகரம் மதிக்காததுபோல், ‘தினமணியை’ அவர்கள் மதிக்கமாட்டார்கள். எனவே, இஃது அவர்களின் குலக் குறும்பு!

18. மொத்தம் இச்செய்தியில் வந்துள்ள 84 சொற்களில் 23 சொற்கள். கலப்புச் சொற்கள். ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதி கலப்புச் சொற்கள். ஆனால் அந்த 23 சொற்கள்தாம் முகாமையான சொற்கள்; சிறப்புச் சொற்கள். மீதியெல்லாம் பொதுச் சொற்கள்; உரி, இடைச் சொற்கள், மொத்தத்தில் தமிழின முதுகெலும்பை ஆரியமாகவும், அதன் சிற்றுறுப்புகளைத் தமிழாகவும் காட்டி, ஆரியத்தின் உதவியின்றித் தமிழ் இயங்காது என்பதை வழிவழியாக மெய்ப்பித்துக் கொண்டு வரவேண்டுமென்பதே அவர்களின் கொள்கை. இதை நம்மவர்கள் அறியாமலோ அறிந்தோ ஏமாறித் தம்மையும், தங்கள் மொழியையும் தாழ்த்திக்கொண்டு பார்ப்பனீயத்திற்கு என்றென்றும் அடிமையாகக் கிடக்கின்றார்கள்.

இறுதியாக, அந்நிலையினின்று நீங்கும் வரை நெடுஞ்செழியன் போலும் பொறுப்புள்ள அமைச்சர்கள் மிக விழிப்பாகக் கருத்தறிவிக்க வேண்டும். அவர் கூறுவதாக வெளிவந்துள்ள கருத்து. எந்த அளவில் உண்மை என்றே தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அதைப்பற்றி நாம் இங்கு ஆராய விரும்பவில்லை.

–தென்மொழி சுவடி : 12. ஓலை : 8, 1975

மொழி வளர்ச்சியில், ‘அவர்’களுக்குள்ள அக்கறையும், ‘நம்மவர்’க்குள்ள அக்கறைக் குறைவும்

அண்மையில் சென்னை நடுவண் நூல் நிலையக் கூடத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில், நம் கல்வியமைச்சர் உயர்திரு. நெடுஞ்செழியன் அவர்கள், தம் பேச்சுக்கிடையில், தமிழ் அகரமுதலித் திட்டத்தையும், அறிஞர்களையும் தாக்குவது போல் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தனியார் துறை ஓர் அகரமுதலித் திட்டத்தை மேற்கொண்டால், ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மிகுந்த ஒத்துழைப்புத் தருவதாகவும், தாங்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பை விரைந்து முடித்துக் கொடுப்பதாகவும், ஆனால் அத்தகைய ஒரு திட்டத்தை அரசு மேற்கொண்டால், அவர்கள் சுணக்கம் காட்டுவதாகவும், தங்களுக்கு “மிசை தரவில்லை! நாற்காலி தரவில்லை; வண்டி தரவில்லை” என்றெல்லாம். குறைப்பட்டுக் கொள்வதாகவும், ஒரு சொல்லை ஆய்வதற்கே நாள் கணக்கில், மாதக் கணக்கில் காலத்தை எடுத்துக் கொள்வதாகவும், இதனால் அரசுக்கு வீண்செலவு ஆவதாகவும், கிண்டலாகக் குறைகூறிப் பேசியுள்ளார். இந்தப் பேச்சிற்கு அடிப்படையான கருத்து எதுவாக இருக்கலாம் என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்க விரும்பவில்லை என்றாலும், அவர் பேச்சில், தமிழ்மொழி ஆராய்ச்சியறிவை அவர் எவ்வளவு குறைவாகவும், இழிவாகவும் மதிப்பிட்டிருக்கின்றார் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாகவே, நம் அமைச்சர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருவகைப் பற்றும் ஆர்வமும் கொண்டிருப்பதாகப் பேசுகிறார்களே தவிர, போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. முதலில் அவர்கள் பேசுகிற பேச்சும், எழுதுகிற எழுத்தும் துரய தமிழாக இருப்பதில்லை. பொதுமக்களுக்கு விளங்குகிற வகையில் தாங்கள் பேசுவதாகவும், எழுதுவதாகவும் கூறிக்கொண்டு, கலப்புத்தமிழுக்கே ஆக்கந் தருகிறார்களே தவிர, அவர்களுள் ஒருவராகிலும் தூயதமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கருதுவதாகவே தெரியவில்லை. தங்களுடைய சிலைகளையும், தங்கள் தலைவர்களுடைய சிலைகளையும் வைப்பதில் அவர்கள் காட்டுகின்ற அக்கறையிலும் ஆர்வத்திலும், அவற்றிற்காகச் செலவழிப்பதிலும் நூற்றில் ஒரு பங்கையேனும் தமிழ்மொழி வளர்ச்சிக்காகச் செலவிடுவார்களானால், இந்நேரம் தமிழ்மொழி எத்துணையோ அளவுக்கு உயர்த்தப் பெற்றிருக்கும். அந்நிலை நமக்கும் பெருமை தருவதாகவிருக்கும். பெரும்பாலும் நம் அமைச்சர்களும் அவற்றின் கட்சிக்காரர்களும், அவர்கள் நடத்துகின்ற இதழ்களிலும் எழுதுகின்ற நூல்களிலும் தூயதமிழையே கையாளுவதில்லை. இவர்களைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் நடக்கின்ற பார்ப்பன ஏடுகளும் வேண்டுமென்றே நல்ல தமிழைக் கெடுக்கின்ற நோக்கத்துடன் சரிபாதிக் கலப்புத் தமிழாகவே எழுதி வருகின்றன. நம் பேராசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெளியிடுகின்ற நூல்களிலும் மொழித் துய்மை பற்றி அக்கறை செலுத்துவதில்லை. நம் ஆட்சியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ பெரிதாகச் செய்து விட்டதுபோல் பறைசாற்றுகிறார்களே தவிர, வடமொழியான சமசுக்கிருதத்திற்கும், இந்திக்கும் செலவிடுகின்ற தொகையிலும், அவற்றின் வளர்ச்சிக்குக் காட்டப்பெறுகின்ற அக்கறையிலும், பத்தில் ஒரு கூறேனும் செலவிட்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. இந்நிலையில் நம் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து, அறிஞர்களின் மனத்தை மிகவும் புண்படுத்துவதாகவே இருக்கின்றது. ஆராய்ச்சிக்கு வேண்டிய வாய்ப்புகளையும், ஏந்துகளையும் செவ்வனே செய்துதரக் கேட்பது, கிண்டலுக்கும் பகடிக்கும் உரியதாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கக் கூடியதாகவிருப்பது, உண்மைத் தமிழ் நெஞ்சங்களைப் பெரிதும் வருத்துவதாக வுள்ளது.அவர்கள் இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளில், தமிழ்மொழியின் அடிப்படைக் கூறுகளே இன்னும் ஆராயப் பெறவில்லை. நம் மொழி வரலாறு பலவாறு திரித்தும் மாற்றியுமே இதுவரை எழுதப்பெற்று வந்துள்ளது. இதைப்பற்றி எவரும் வருந்துவதாகவே தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வளர்ந்து பல்கிப் பெருகிய நம் தமிழ்மொழி, மிகப் பிந்தித் தோற்றுவிக்கப் பெற்ற, சமசுக்கிருதத்தின் துணையில்லாமல் வாழவே முடியாது என்பதுபோனற் ஒருவகை மயக்கத்தையே இதுவரை வெளியிடப்பெற்ற கருத்துகள் புலப்படுத்துகின்றன. நம் பேராசிரியர்களும், ஆராய்ச்சியறிஞர்களும், உண்மையான வரலாற்றையும் தமிழன் தகுதியையும் வெளிப்படுத்தினால், எங்குப் பார்ப்பனர்களின் துணையும், ஆக்கமும் தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சித் தாறுமாறாக ஆரியச் சார்புக் கருத்துகளையே வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தொழில் வல்லுநர் நா. மகாலிங்கம், கல்வி வள்ளல் முத்தையாச் செட்டியார் போன்ற பெருஞ்செல்வர்களும், கம்பராமாயணம் போன்ற தமிழடிமை இலக்கியங்களுக்கு, தமிழரை அடிமைப்படுத்தும் சமய புராணச் சொற்பொழிவுகளுக்கும் அள்ளித் தருகின்ற ஆக்கத்தையும் ஊக்கத்தையும் போல், தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேரளவில் உதவுவதில்லை. தம்மைப் பெரிய எழுத்தாளர்கள், பாவலர்கள், கதையாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், பேச்சாளர்கள் என்று கூறிப் பெருமை பேசிக் கொள்ளும் தமிழர்களும், பெரும் புளுகர்களாகவும், வரலாறு அறியாதவர்களாகவும், மொழிப் பற்றற்றவர்களாகவும், மதப் பித்தர்களாகவும், சாதி வெறியர்களாகவும், கட்சியார்வலர்களாகவும், ஆரிய அடிமைகளாகவுமே இருக்கின்றார்களே யொழிய, ஒரு சிறிதேனும் தன்மானம் உள்ளவர்களாகவோ, தங்கள் இனத்துக் குற்ற இழிவு துடைப்பவர்களாகவோ, தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவோ, தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாகவோ தெரியவில்லை. அவர்கள்தம் வாய்க்கும் வயிற்றுக்கும், பெண்டு பிள்ளைகளுக்குமாகவே உழைத்துப் பொருள் திரட்டப் புறப்பட்டுவிட்டவர்கள் போலவே, செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களிடத்து உண்மையான தமிழ் ஆராய்ச்சியையும், மொழி ஆராய்ச்சியையும், இன அடிமை நீக்கத்தையும் பற்றிச் சொன்னால், அவர்கள் அவற்றை வெறும் கற்பனையென்றும், வெறியென்றும் குறுகிய மனப்பான்மை என்றுமே கூறி, நம்மை ஒதுக்கியும் புறக்கணித்தும் விடுவதோடு, நம் கருத்துகளுக்கும் ஆக்கங்களுக்கும் என்றுமே எள்ளத்துணையும் துணைநில்லாததுடன், பகைவர்களாகவும் மாறித் தம்மால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தொல்லைகளைக் கொடுத்து, நம்மை ஒழிக்கவும், அழிக்கவுமே முற்பட்டு விடுகின்றனர்.

நம் நடுவணரசும், வடநாட்டவரின் நடவடிக்கைகளும், இவ் விந்திய நாரிகத்தையும், பண்பாட்டையும், இங்கு வழங்கிவரும் மொழியினங்களையும், பிற சிறப்பியல்புகளையும், ஆரியத் தொடர்புள்ளவனாகவும் சமசுக்கிருத அடிப்படை யுள்ளனவாகவுமே காட்டி, இந்தியாவையே ‘ஆரிய’மயமாக்குவதில் பெரிதும் அக்கறையுடன் திட்டமிட்டு இயங்கி வருகின்றன. இந்நிலைகளைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் நம் அமைச்சர்கள், தங்கள் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும், தங்கள் சிலைகளைத் திறந்துகொள்வதற்கும், பிறந்த நாள்களைக் கொண்டாடுவதற்கும் செலவிட்டு வரும் நேரங்களும், தொகைளும் கொஞ்சநஞ்சமல்ல. ஆரியப் பார்ப்பனர்களும், நடுவணரசும் தங்கள் ஆக்கத்திற்கும் மேலாண்மை க்கும் அடிப்படையாக விளங்கும் சமசுக்கிருத மொழிக்கும், வேத புராணப் பரப்புதல்களுக்கும் செலவிடும் தொகைகளையும், நேரங்களையும், முயற்சிகளையும் நினைத்துப் பார்க்கையில், நம் அமைச்சர்களும் அவர்தம் அடிப் பொடிகளும் செய்துவரும் ஆக்க முறையற்ற வினையாரவாரங்களும், தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்வதாகத் தம்பட்டமடித்துக் கொள்ளும் விளம்பர வினைகளும் நடுநிலையான கண்களுக்கு எத்துணைப் பயனற்றவை என்பது புலப்படாமற் போகாது.

நடுவணரசு உதவியுடன் இன்று நாடெங்கும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் சமசுக்கிருத மொழியைக் கற்பிக்கின்றன. தேசிய சமசுக்கிருத நூல்நிலையமொன்றை நிறுவும் திட்டத்தை இந்திய அரசு மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. தமிழ்மொழிக்கென்று முழுமையாக ஒரு பல்கலைக் கழகமும் துணைநில்லாத இற்றை நிலையில் ஏறத்தாழ, 600 பேர்களுக்கே பேச்சு மொழியாக உள்ளதாக, அரசுப் புள்ளி விளத்தங்களில் குறிப்பிடப் பெறும் சமசுக்கிருத மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகமொன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவ, நடுவணரசு திட்டமிட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள எண்பத்தாறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏறத்தாழ 60 பல்கலைக் கழகங்களில் சமசுக்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்ப் படிக்கப் பதினொரு பல்கலைக் கழகங்கிளல் மட்டுமே வாய்ப்புண்டு. திருப்பதியில் இந்திய அரசால் நடத்தப்படும் ‘கேந்த்ரீய சமசுக்கிருத வித்யா பீடத்’தில், மாதத்திற்கு மாணவன் ஒருவனுக்கு உரு. 250 வரை உதவித்தொகை கொடுக்கப்பெற்று, சமசுக்கிருத மொழியும், வேத புராணங்களும் கற்பிக்கப் பெற்று வருகின்றன. ‘வேத விற்பன்னர்கள்’ ஊக்குவிப்புத் திட்டத்தை நடுவணரசு அமைத்து, ஆண்டுதோறும் பேரளவில் அவர்களுக்கு உதவி தந்து வருகின்றது. சமசுக்கிருத மொழி ஆங்கிலம் போல உலக மொழியென்று நடுவணரசு பாராட்டி, அனைத்திந்திய அடிப்படையில் சமசுக்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்துவருகின்றது. பூனாவில் உள்ள ‘தெக்கான்’ கல்லூரி, அதன் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் எசு.எம். காத்துரே அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 15 முதல் 20 தொகுதிகள் வரை, சமசுக்கிருதப் பேரகர முதலியொன்றை வெளியிடவும், அதற்கென ஒரு கோடி உருபா வரை செலவிடவும் திட்டமிட்டுக் கொண்டு, செயல்பட்டு வருகின்றது. அத் தொகுதி ஒவ்வொன்றும் ஒராயிரம் பக்கம் இருக்குமாம். 1986இல் அவ்வகர முதலி வேலை முடியுமாம். அதற்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் நேரடியாக நடுவணரசும் மகாராட்டிர அரசும், நடுவண் அரசுச் சார்புள்ள பல்கலைக் கழக நல்கைக் குழுவும், பூனா பல்கலைக் கழகமும் – செய்ய உறுதி பூண்டுள்ளன. இவையல்லாமல் உலக ஒன்றிப்புக் கழகத்தின் (U.N.O) கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆண்டொன்றுக்கு 3,000 தாலர் (ஏறத்தாழ 22,000 உரு) அப் பணி முடியும் வரை தந்து உதவ ஒப்புக்கொண்டுள்ளது. இவ் வொப்புதலும் நடுவணரசு தலையீட்டின் மேல்தான் கிடைக்கும் என்பதையும் நம்மவர்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்வுதவி யின்றி உலக ஒன்றிப்புக் கழகத்தின் வேறுவகை உதவிகளும் நடுவண் அரசின் பரிந்துரையால் ஆண்டுதோறும் சமசுக்கிருத வளர்ச்சிக்குக் கிடைத்துவருகின்றது. அவ்வுதவித் தொகையைக் கொண்டு, சமசுக்கிருத மொழிக் கழகங்களும், வேதப் பள்ளிகளும், ஆரியமத நிறுவனங்களும், சமசுக்கிருதப் புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் பேணப்பெற்றும், புரக்கப்பெற்றும், காக்கப்பெற்றும் வருகின்றார்கள். மற்றும், 1972இல் தில்லியில் நடந்த அகில பாரத வேத வித்வத் சம்மேளனத்தில் இவ்விந்திய நாட்டின் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கலந்துகொண்டு, அங்குக் கூடிய சமசுக்கிருதப் பேரறிஞர்களையும், ‘வேத விற்பன்னர்’களையும் ஊக்கப் படுத்தியதுடன், அம் மாநாட்டுத் தீர்மானத்தில், அவர்களைப் புரப்பதற்காக நடுவணரசிடம் ஆண்டுதோறும் உதவுமாறு கேட்கப் பெற்றதற்கேற்ப உருபா பத்து இலக்கத்தையும் கிடைக்க ஏற்பாடும் செய்தார். அக்கால் கல்வியமைச்சராக விருந்த திரு. கரன்சிங் அவர்களும், “சமசுக்கிருத மொழியால்தான் இந்தியாவுக்கே பெருமை” என்று பாராட்டியதுடன், கட்சி வேறுபாடில்லாமல் வி.கே.ஆர்.வி. இராவ், பேரா. இரென் முகர்சி (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), திரிதிப் சவுத்ரி, ஆல்டர், எச்.எம். பட்டேல் (சுதந்திரா) போன்ற நூற்றிருபது பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, இந்தியாவில் சமசுக்கிருதத்திற்கு உரிய பெருமையை மீட்டுக்கொள்ள இந்திய அரசு எல்லா வகையிலும் உதவ வேண்டுமென்னும் நோக்கத்துடன் இந்திராவிடம் ஒரு வேண்டுகோளைக் கொடுக்கத் துரண்டுகோலாகவும் இருந்தார். அதில், “அரசின் மும்மொழித் திட்டத்தில் இந்திய நாட்டின் பெரும்பாலான மொழிகளுக்கும் தாயான சமசுக்கிருதத்திற்கு இந்திய அரசு சிறப்பான ஓரிடத்தைத் தரவேண்டும்”. (Sanskrit, the mother of most Indian languages, should be given a special place in three language formula adopted by the govt.) — என்று கூறப் பெற்றிருந்தது.

மேலும், நடுவணரசுக் கல்வியமைச்சர் திரு. கரண்சிங் அவர்கள் சமசுக்கிருத வளர்ச்சியில் தனி நாட்டங்கொண்டு, “அறிவியல், பண்பாடு, இலக்கிய வளர்ச்சிக்கான மொழி சமசுக்கிருதமே என்றும், “சமசுக்கிருதத்தைச் சரியான கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினால் அது நம்முடைய நாட்டின் இணைப்பு மொழியாகப் பெரிதும் தகுதியுடையது” என்றும், அக்கால் நடந்த அலகாபாது உலக சமசுக்கிருத மாநாட்டு அமைப்புக் கழகத்தைத் தொடங்கிவைத்துப் பேசினார். அந்த மாநாடும் தில்லியில் 1972–இல் நம் உலகத் தமிழ் மாநாடு போல் சீரும் சிறப்புமாக நடந்தது. ஆறு நாட்கள் நடந்த அம்மாநாட்டில் 35 அயல்நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கு மேற்பட்ட சமசுக்கிருத அறிஞர்கள் பங்குகொண்டனர். உருசியாவில் நடக்கும் சமசுக்கிருத ஆராய்ச்சிக்கும், டென்மார்க்கு, இசுக்காண்டிநேவியர் அறிஞர்கள் ஒத்துழைப்புடன், ஆரிய நாகரிகத்தைப் பறைசாற்றுவதாகக் கூறப்படும் மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் பற்றியும், குறிப்பாக இரிக்கு வேத காலம் பற்றியும் மேற்கொள்ளப் பெறும் ஆராய்ச்சிக்கும், நடுவணரசுக் கண்காணிப்பும் இருந்து வருகின்றது. இவையன்றி, நைனிடாலில் ஆரிய சமாசத்தின் சார்பில் இவ்வாண்டு இறுதிக்குள் நான்கு வேத ஆங்கில வெளியீட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆரிய சமாசத்திற்கு உலகின் பதினான்குக்கு மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. காஞ்சியில் உள்ள காமகோடி பீடம் இவ்வகையிலும், வேத புராண ஆரியக் கருத்துகளைப் பரப்பும் வகையிலும், ‘வேத ரட்சண நிதிக்குழு’ என்னும் ஒரு குழு போன்ற பல மொழி, இனக் காப்புக் குழுக்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் நேரடியாக ஓரிலக்க உருபாவையும், மறைமுகமாகப் பல இலக்க உருபாவையும் செலவிட்டு வருகின்றது. இவ்வகையில், இங்குள்ள சமசுக்கிருதக் கல்வி மடங்களும் பிற மத நிறுவனங்களும் மிகவும் ஒத்துழைப்புக் காட்டி வருகின்றதைப் பலர் அறிந்திருக்க வழியில்லை. இன்னும் இது போல் பல நிலைகளையும் நாம் புள்ளி விளத்தத்துடன் எடுத்துக்காட்டுதல் இயலும், ஆனால், இவையனைத்தும் நம் தமிழ் மக்களுக்கு ஒர் எள்ளத்துணை உணர்வையோ, ஓர் இம்மியளவு முயற்சியையோ உண்டாக்கிவிடப் போவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். அவ்வாறு முயற்சி செய்து வருவோர் அங்குமிங்குமாக ஒருசிலர் இருந்தாலும் அவர்களுடைய அறிவையும், முயற்சியையும் குறைத்து மதிப்பிடவும், குறைகறித் திரியவுமே இங்குப் பலர் இருக்கின்றனர். அவர்களுடைய ஏசல் இழிவுகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு, மொழிக்காகவும், இனத்திற்காகவும், பண்பாட்டிற்காகவும், பொறுக்கித் தின்னுதற்கன்றி, உண்மையாக உழைக்கின்ற ஒரிருவர் முயற்சிகளையும், நம் கல்வியமைச்சர் போன்றவர்கள், ஏதோ தம் வீட்டுச் சொத்தை எடுத்தெடுத்துக் கொடுத்துக் கை சிவந்தவர்போல், மனச் சலிப்போடும், வாய்ச் சலிப்போடும், கிண்டலும் பகடியும் செய்யத் தொடங்கிப் புறக்கணித்துவிட்டால், தமிழ்தான் எப்படி வளரும்? தமிழன்தான் எப்படி இனவுணர்ச்சி பெறுவான்? தமிழ்நாடுதான் என்றைக்குத் தன் அடிமைத்தனத்தை நீக்கிக்கொண்டு, உரிமையுடன் தலைநிமிரும்.

பார்ப்பன இனம்போல் நம் இனம் முன்னேறாமைக்குக் கரணியம் பார்ப்பனர்களல்லர்; நம்மவர்களேதாம்! அவர்களைப் போல மொழியுணர்வும், இனவுணர்வும் நம்மிடம் என்றும் இருந்ததில்லை. உண்மை முயற்சியுள்ளவர்களை ஊக்கப்படுத்திக் கைகொடுத்துக் கரையேற்றும் போக்கு நம்மிடம் மலர இன்னும் பல நூறு ஆண்டுகள் போகவேண்டும். கோழைகளாகவும், மோழைகளாகஷ், ஏழைகளாகவும் நலிந்தும், மெலிந்தும் கிடக்கும் நம் இனத்தில், தப்பித் தவறித் தலைதூக்கும் ஓரிருவரையும், தலையில் மிதித்துச் சேற்றில் அழுத்தினால், நாம் இன்று நட்டுவைக்கும் நடுத்தெருச் சிலைகளும் எழுதிவைக்கும் வரலாறுமே நம்மைப் பார்த்து நாளைக்குக் கையொட்டிச் சிரிக்கும். விளம்பர வேடிக்கைக்காரர்களன்றி, நல்லவுள்ளம் படைத்த நடுநிலையாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டிக் கொள்கின்றேன்.

–தமிழ்ச்சிட்டு, குரல் : 8, இசை 8–10, 1975

வேத - மத - இந்தியா!

கிடந்த நெருக்கடி நிலையின் அதிகாரக் கடுபிடிகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்துப் பார்ப்பன அதிகாரிகளும் தங்கள் இனத்திற்கு எத்துணையளவு வலிமை தேடிக்கொள்ள முடியுமோ, அத்துணையளவு தேடிக்கொண்டது, எல்லாருக்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடாத கமுக்கமான ஒரு செய்தி. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அன்றைய ஆளுநர் சுகாதியாவும், அவர் செயலர்களாயிருந்த தாவே. சுப்பிரமணியன்களும், கோட்டையில் இருந்துகொண்டு எத்தனை யெத்தனையோ உள்முகத் தமிழ் - தமிழின அரிப்பு வேலைகளைச் செய்து கொண்டு இருந்திருக்கின்றனர்! அவர்களின் சார்பு சலுகை முதலியவற்றைப் பயன்படுத்தி, அன்று எழுந்த, காஞ்சி காமகோடியாரின் பெரியார் பாணிச் சுற்றுச் செலவு இன்றுவரை ஒயவில்லை. இன்றிருக்கும் நிலைகளோ காமகோடியாரின் கால்களுக்கும், வாய்க்கும் இன்னும் வலிவூட்டுவன, தென்பூட்டுவன. ஏனெனில் அவரினத்திற்கு என்றென்றும், தாசர்களாக இருந்து, கால் செருப்பாகத் தேய்வதற்கு முத்தையாக்களும், ‘மகாலிங்க’ங்களும், பக்தவத்சல, சுப்பிரமணியங்களும், ‘கண்ணதாசன்’களும், ‘சிவஞான’ங்களும் ஏராளமாக இங்குள்ளனர்! இந்நிலையில், இந்தியாவை ஆளுவது இந்திராவாக இருந்தால்தான் என்ன; தேசாயாக மாறினால் தான் என்ன? தமிழினத்தைப் பொறுறத்தவரை பேராயக் கட்சியும் சனதாவும் பார்ப்பனியத்தின் இருதலைப் பறவை என்பதே நம் கருத்து. எனவேதான் அரசியல் பொருளியலில் வடவர் ஆளுமையும், அறிவியல், பண்பாட்டியலில் பிராமணியமும் தமிழகத்தில் வேரூன்றுவதற்கான அடிப்படை முயற்சிகள் அனைத்தும் மிகவும் துணிவாகவும், வெளிப்படையாகவும் செய்யப்பெற்று வருகின்றன; வருவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப் பெறுகின்றன. ஆகவே, தமிழர்கள் இக்கால் இவ்வகையில், மிகமிக விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கும், தற்காப்பு முயற்சிக்கும் கொண்டுவரப் பெற்றிருக்கின்றனர். இது வெறும் மேலோட்டமான உணர்வுநிலைக் கருத்தன்று; இன்றைய நாட்டு அரசியல் நிலையின் குமுகாயப் பல்நோக்கு உண்மையாகும்!

பொதுவாகவே, இந்தியா என்றாலோ அஃது ஆரியர்கள் தேசம், இந்துக்கள் என்றாலே அவர்கள் ‘பிராமணர்கள்’ அல்லது அவர்களின் தலைமையை ஒப்புக்கொண்ட அடிமைகள்; இந்தியப் பண்பாடு, நாகரிகம் என்றாலே அவை பூணுரல் போடுவதும் குடுமி வைப்பதும், பஞ்சகச்சம் கட்டிக் கொள்வதுந்தாம் – என்று அமெரிக்க, பிரிட்டிசுக் கலைக் களஞ்சியங்கள், உருசியா, சீனா போலும் பொதுவுடைமைக் கொள்கை வாழும் நாடுகளில் வெளிவரும் நூல்கள் இவற்றில் எல்லாம் விளக்கம் வரும்படி, இங்கிருக்கின்ற பிராமண வரலாற்றுப் பேராசிரியர்கள் நூல்கள் எழுதி, அச்சிட்டு, அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் சிறப்புறப் பரப்பி வருகின்றனர். இத்தகைய பேராசிரியர்கள் வரலாறு என்னும் பெயரில் எதை எழுதினாலும், அதை அச்சிட்டு வெளியிடுவதற் கென்றே தில்லியிலும் பம்பாயிலும் ஆரியப் பார்ப்பனச் சார்பான பணமுதலை வெளியீட்டகங்கள் பல உள்ளன. (உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், இவர்களால் எழுதப் பெறும் வரலாறு என்பது, இக்கால் ஆட்சித் தலைமையில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்கள் தங்களுக்கும் தங்கள் இனத்திற்கும், சார்பாகவும், நன்மை பயக்கும்படியாகவும், பெருமை ஏற்படும்படியாகவும் உண்மை நிகழ்ச்சிகளைத் திரித்தும், தவிர்த்தும், பொய் நிகழ்வுகளைக் கூட்டியும், சேர்த்தும் எழுதிக்கொள்ளும் கற்பனைக் கதையாகும்)

இவ்வரலாற்று நூல்களுக்கொப்பாக, வடஇந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் வலிவான செய்தித்தாள்களும், அரசு விளம்பரத் துறைகளின் கீழ்ச் செயல்படும் வானொலி, தொலைக்காட்சிக் கருவிகளும் இவர்களின் ஆளுமையில் உள்ளதால் இவர்கள் தம் வேத புராணப் பொய்யுரைகளையும் புளுகுரைகளையும் மிக எளிதாகவும் விரைவாகவும் பரப்ப முடிகிறது. அத்துடன், இங்குள்ள காமகோடிகளும், வரதாச்சாரிகளும், நாராயண ராமானுசர்களும், ராம தேசிகன்களும் – தங்கள் விருப்பம்போல் கருத்தறிவிக்க முடிகிறது; கதைக்க முடிகிறது; காலப் பொழிவுகள் நடத்த முடிகிறது! இவர்கள் அனைவரும் ஒருமுகமாகவும் ஒரே மூச்சாகவும் அண்மைக் காலங்களில் கூறிவரும் கருத்துகள் ஒன்றுமறியாத ஏழை எளிய மக்களை ஏமாறச் செய்வன. அவர்களிடையில் கொஞ்சம் நஞ்சமிருக்கும் அறிவுணர்வுகளையும் இழந்து போகச் செய்வன. இவர்களைத் தட்டிக் கேட்பதற்குரிய அரசியல் அதிகாரங்களோ, சட்ட அமைப்புகளோ நம்மவர்க்கு இடந்தருவனவாயில்லை. ஏனெனில், இவர்கள் தங்கள் இனநலன்களைப் பரப்பும் வகைகளுக்கு உதவியாகவே இங்குள்ள இந்துமதம் என்னும் வேத மதமும் இந்திய அரசியலமைப்பும் இருக்கின்றன. இவ்வேத மதத்திற்கு எதிர்ப்பாக இங்குள்ள தமிழர் மதங்களாக உள்ள சிவனிய மதமும் மாலிய மதமும் இணைந்து செயல்படுவதில்லை. ஏனெனில் இவ்விரு பெரிய மதங்களையும், இவற்றைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோட்பாடுகளையும் ஏற்கனவே வேதமதமாகிய இந்துமதம் செரித்துத் தன்னுள் அடக்கி ஆட்கொண்டு விட்டது. தமிழில் ஏற்படுத்தப்பெற்ற சமசுக்கிருத மொழிக் கலப்பைப் போல், இம்மதங்களின் உள்ளேயும் புகுந்து இரண்டறக் கலந்துபோன ஆரியக் கொள்கைக் கலப்பை இவை தவிர்த்துக் கொள்வனவாயில்லை.

மேலும், இவ்விந்திய அரசும், ஏதோ எல்லா மதங்களுக்கும் சலுகைகள் காட்டுவதைப்போல, உள்முகமான கொள்கைப் பூசல்களையும் மூடநம்பிக்கைகளையுமே வளர்த்து வருகிறது. அதேபோல் வெளிப்படையாக இங்குள்ள சாதிப்பூசல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று போலித்தனமாகக் கூறிவந்தாலும், உள்முகமாக, எல்லாச் சாதியினர்க்கும். ஏதோ ஒவ்வொரு வகையில் சலுகைகளும் சார்புகளும் காட்டி என்றென்றும் இந்நிலத்தில் சாதிப் பூசல்கள் இருக்கும்படியும், சாதி வேறுபாடுகள் நிலைக்கும்படியும் செய்து வருகிறது. சாதிகளற்ற குமுகாயம் இருக்க வேண்டும் என்பதில் நடுவணரசுக்குக் கொஞ்சமும் அக்கறை யிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு சாதிகள் அழிக்கப்பட்டால் பிராமணீயமும் அழிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது. எனவே அவர்கள் மறைமுகமான பிராமணீயக் காவலர்களாகவே செயல்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் சாதி வேறுபாடற்ற ஒரு குமுகாயத்தை உருவாக்க விரும்பினாலும், பிராமணியத்தை அழித்துக்கொள்ள அவர்கள் அணியமாயில்லை. பிராமணீயந்தான் இவ்விந்திய நாட்டில் என்றென்றும் தலைமையிடத்திலிருந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இதை அவர்களின் நடவடிக்கைகள், மத ஏற்பாடுகள், மறைமுகச் சட்ட அமைப்புகள் இவற்றின் வழியாக உறுதிப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவுக்கு விடுதலை வந்தால் பிராமணீயமும் அதன் வேரான வேதமதம் என்னும் இந்துமதமும் அழிந்துபோய்விடலாம் என்று அஞ்சியே, 1924ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்று ஆராய்வதற்காகப் பிரிட்டிசுக்காரர் அமைத்த சைமன் குழுவிடம் (Simon Commission), இந்தியாவில் அப்போதிருந்த வேதமதத் தலைவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து, இந்தியாவிற்குத் தன்னுரிமை கொடுக்க வேண்டாம்; எப்போதும் போலப் பிரிட்டிசாரே ஆளுதல் வேண்டும் என்று தம் தூதுவர் வழியாகக் கருத்தறிவித்தனர். இச்செய்தியை இங்குள்ள பலர் மறந்திருக்கலாம். அல்லது இது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

இவ்வாறு, அவ்விடைக் காலத்தில், ஒருவாறு வலுக் குறைந்தும் அஞ்சிக்கொண்டும் கிடந்த வேதமதம் என்னும் அப்பட்டமான ஆரிய – இந்து – மதம், இக்கால் நச்சுப் பாம்பு தலைதூக்குவதுபோல், காஞ்சி காமகோடிகளின் வழியாகத் தலைதூக்கி வருவதற்கு, வடநாட்டு ஆட்சியாளரின் ஒருமித்த பேரனைப்பே கரணியமாக இருக்கமுடியும். அல்லாக்கால், இந்துமதக் கொள்கைப் பரப்புதலுக்கும், அதன் ஆணி வேரான சமசுக்கிருத மொழி வளர்ச்சிக்கும் இப்படி ஓடோடியும் – வரிந்து கட்டிக்கொண்டும் பரிவுரைகளும், பாதுகாப்புகளும், சலுகைகளும் கொடுத்துப் பார்ப்பனப் பாதந்தாங்கிகளாவார்களா?

சமசுக்கிருத மொழிக்குக் கோடிகோடியாக நல்கைகள் ஒதுக்கப்படுகின்றன. சமசுக்கிருதப் புலவர்களுக்கு மாத ஊதியங்கள் வழங்கப் பெறுகின்றன. சமசுக்கிருத பல்கலைக் கழகம் ஒன்றைத் தென்னாட்டுப் பகுதியில் நிறுவப் பெருமுயற்சி நடந்து வருகிறது. கடந்த சனவரி 1ஆம் பக்கலில் சென்னையில் நடந்த சமசுக்கிருத சம்மேளனம் அம் மொழிக்கு ஆக்கத்தரும் பல வேண்டுகோள்களை நடுவணரசுக்கு விடுத்துள்ளது. காஞ்சி காமகோடியார், இந்து மதமாகிய வேத மதத்தையும் அதற்கடிப்படையாகவுள்ள வேதங்களையும் பற்றி வானளாவும் புளுகுரைகளையும் பொய்யுரைகளையும் ஊர்தோறும் நாள்தோறும் பரப்பி வருகிறார். “இந்துமதம் என்பது ‘அநாதி’; எவ்வாறு நில இயல் வல்லுநர்களாலும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும் உலகம் தோன்றிய காலத்தையும், மாந்தன் தோன்றிய காலத்தையும் சரியாக உறுதிசெய்ய முடியவில்லையோ, அதுபோல் இந்துமதமும் அநாதியானது. எவ்வாறு மற்ற மதங்களின் தோற்றத்தை நாள், வரையரை செய்து கூற முடியுமோ, அதுபோல் இம்மதத்தைக் கால வரையறை செய்து கூறமுடியாது” என்று அறிவியல் பொருத்தமில்லாமல் பேசி வருகிறார். இனி, நாராயண இராமானுச சீயர் என்பவர், சென்னையில் பிப்பிரவரி மாதம் நடந்த, வேதம் வல்லார்கள் பெயரகராதி – மூன்றாவது தொகுதி வெளியீட்டு விழாவில், வேதங்களைப் பாதுகாக்கவும், பயிலவும் பரப்பவும் தென்னாட்டில் ‘வேத விசுவகலாசாலையை’ (வேதப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விழாவில் அந்நூலை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் திரு. பட்டுவாரி – பேசுகையில், இன்று இந்தியர்களாகிய நாம் உலகில் மதிப்புடன் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் படைத்த வேதங்களும், வேதவாழ்வுமே காரணமாகுமென்றுற வேதப்பெருமையைப் பேசியுள்ளார்.

இப்படி அரசுச் சார்புள்ளவர்களெல்லாம் வேதங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது, இவ்விந்திய நாடு ஒரு வேத மத நாடு என்னும் கருத்தை உருவாக்குமேயன்றி, இங்குப் பலவகையான மதக் கொள்கைகளும் பண்பாடுகளும் உள்ளவர்கள் வாழ்வதாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்ததாகாது. இனி, வேதங்களைப் பற்றி அளவுக்கு மீறிய வகையில் பெருமை பேசப் பெறுகிறது. இந்திராகாந்தி எப்படிப் பொய்யுரைகளைப் பேசியே அரசியல் ஆளுமை பெற முயற்சி செய்தாரோ, செய்கின்றாரோ, அப்படியே ஆராய்ச்சியறிவற்ற பொய்யுரைகளைப் பேசியே காஞ்சி காமகோடி பீடத் தலைவராகிய சயேந்திர சரசுவதியும் இந்துமத ஆளுமையைப் பெற முயற்சி செய்கிறார்.

இந்துமத முயற்சிகள் என்னும் போர்வையில், ஆரியப் பார்ப்பனரின் வேதமதக் கொள்கைகளே வேர் ஊன்றப் பரப்பப்பெற்று வருகின்றன. வேதமதம் என்பதும் புராண மதம், பெளராணிக மதம் என்பவையும் ஒன்றே! அதுவே இக்கால் இந்து மதம் என்னும் என்னும் பெயர் பெற்று, இந்திய அரசியலிலும் குமுகாயத்திலும் பார்ப்பனியத் தலைமையை என்றென்றும் நிலையாக்கிக் கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுதே, பிராமணர்கள் விழிப்பாயிருந்து இந்து மதத்திற்கும், அது சார்ந்த சாதியமைப்புகளுக்கும் வேத, ஆகம புராண, இதிகாசங்கள் தழுவிய பிராமணியத்திற்கும் பெருங்காப்புச் செய்து கொண்டனர். இந்துமதம் என்பது எப்படி வேதமதமோ, அப்படியே ‘இந்து தர்மம்’ என்பதும் வேத தர்மமே! வேத தர்மம் என்பது பிராமண தர்மமே! பிராமண தர்மம் என்பது மனு முதலிய மிருதிகளின் தர்மமே! இனி மனுதர்மம் முதலிய பதினென் மிருதிகளும், பிராமணனே இங்குள்ளவர்களுக்குத் தெய்வம் என்பதையும், அவன் பேசும் சமசுக்கிருதமே தேவமொழி என்பதையும், சூத்திரர்களாகிய நாம் என்றென்றும் அவனுக்கும் அவன் மொழியாகிய சமசுக்கிருத மொழிக்கும் நிலையான அடிமைகள் என்பனவற்றையுமே வலியுறுத்தும்!

எனவே, இந்திய அரசியல் ஆளுமை முயற்சிகளில் இந்துமதக் கோட்பாடுகள் தலையிடாதபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். அதற்காகப் பலவகை முயற்சிகள் தேவை. மிகவும் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை நாம் செய்து கொண்டாலொழிய, இங்கு இந்துமதச் சார்பான கொள்கைகளையே நடுவணரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும். அத்தகைய ஏற்பாடுகளே படிப்படியாகச் செய்யப் பெற்று வருகின்றன. சமயச் சார்பற்ற அரசு என்று அரசியல் சட்ட அமைப்பில் கூறப்பெறுவது, பிராமணிய மதமான இந்துமதக் கொள்கைகளைப் பல்லாற்றானும் பரப்புவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாகவே, மாந்தன் செய்யும் அரசியல் ஆளுமை முயற்சிகளில் எந்த மதமோ, அதன் ‘தர்மம்’ என்னும் கோட்பாடுகளோ தலையிடவே கூடாது. ஏனெனில் அவ் விரண்டும் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், மக்களுக்கு மக்கள் மாறுபடுவன. அவற்றை அரசியல், பொருளியல், குமுகவியல், நயன்மை(நீதி) முதலிய துறைகளில் புகுத்தி, மக்களைப் பகுத்தறிவற்றவர்களாகவும், ஒரு சாரார்க்கு மற்றொரு சாராரை அடிமைப்பட்டவர்களாகவும் செய்துவிடல் கூடாது. ஏனெனில் அரசியல் நெறிமுறைகள் பெரும்பாலும் நிகழ்காலத்தைப் பற்றித் தீர்மானிக்கும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். சமயம் என்பதும், அதுகூறும் ‘தர்மம்’ என்னும் மதக்கோட்பாடும், கடந்த கால எதிர்காலத் தொடர்புடையவை. இன்னுஞ் சொன்னால் முற்பிறவி, பிற்பிறவிக் கற்பனை சான்றவை. அவை ஏற்கனவே வகுக்கப்பட்ட மக்களின் வேறுபாட்டுக் கொள்கை உடையவை. எனவே அவற்றை உட்படுத்தி எந்த வகையான வகையான நடைமுறை அரசியல் கொள்கையையும் வகுப்பதற்கு நாம் ஒப்புக்கொள்ளக் கூடாது. அவ்வாறு வகுக்கப் புகுந்தால், மக்களில் ஒரு பகுதியினர். தங்களைப் பிறவியில் மேம்பட்டவர்களாகக் கருதியும், தெய்வங்களுக்கு மிக நெருக்கமுடையவர்களாகப் புனைந்துரைத்தும், மற்ற பகுதியினரைத் தாழ்ந்த இழிவான பிறவியாளர்களாகவும், தெய்வத் தொடர்பற்றவர்களாகவும் கூறி, அடிமைப்படுத்தி, என்றென்றும், தாங்களே நிலையான ஆட்சியாளர்களாகத் தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அந்த வகையில்தான் இந்தியாவின் இப்பொழுதைய நடைமுறை அரசியல் கொள்கைகள் இருந்து வருகின்றன என்பதை, அறிவுக்கவலை கொண்ட – நடுநிலை உள்ளங் கொண்ட – சான்றோர்கள் நன்கு உணர்தல் வேண்டும்.

இக்கால் இந்தியாவின் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாடு, வெளிநாட்டுத் தொடர்பு முதலிய அத்தனைத் துறைகளிலும் இந்துமதக் கோட்பாடுகளே கடைப்பிடிக்கப் பெற்றுவருகின்றன. இந்து மதம் என்பது முற்றும் பார்ப்பன மதமே ஆகையால், பார்ப்பனரின் வேத, புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட கொள்கைகளே இன்றைய அரசியலாகவும், மற்ற மக்கள் துறை ஈடுபாட்டுக் கொள்கைகளாகவும் காட்டப்பெற்று வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டுப் பிற இனத்தைச் சாய்க்கும் பிராமணரின் நச்சுத்தன்மை நீங்கினால் ஒழிய, இவ்விந்திய நாட்டு அரசியல் சமவுடைமை அரசியல் என்றோ குடியரசுத் தன்மை வாய்ந்தது என்றோ கூறிவிட முடியாது. இனநிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், அரசு நிலையில் வடவர் தலைமையையும் நிலைப்படுத்துவதே என்றென்றும் நடுவணரசுக் கொள்கையாக இருந்து வருகிறது.

‘இந்தியப் பண்பாடு என்பதே வேதகால ஆரியப் பண்பாடுதான்’ என்று அப்பட்டமாக எழுதப்பெற்றும் பேசப்பெற்றும் வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. இராதாகிருட்டிணன் தம் முன்னாளைய இங்கிலாந்துப் பேச்சு ஒன்றில்(Upton Lectures) “ஆரியர்களுடைய வேத கால அமைப்பே, புராண இதிகாசங்களால் வளர்ந்து, பின்னர் திராவிட மக்களுடன் கொண்ட தொடர்பின் விளைவாக இந்தியப் பண்பாடாக வளர்ச்சி பெற்றது” என்பதை உறுதிப்படுத்திப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாடே, இங்குள்ள நாகரிகம், மதம், கலை, அரசியல் என்றால், அவர்கள்தாமே இங்குள்ள தலைமைப் பதவிகளுக்கும், அதிகாரங்களுக்கும் உரிமையுடையவர்கள் என்பதாகப் பொருள்படும்! பின் எங்ங்ண் இது குடியரசு என்றோ, சமவுடைமை அரசு என்றோ ஆகும் ? இக்கூற்றின் உண்மைப் பொருளை நன்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவேதான், இங்குள்ள அனைத்துத் துறைகளையும் ஆரியப் பார்ப்பனீயம் கைப்பற்றிக்கொண்டு, அவரல்லாத பிறரை ஆளுமைப்படுத்தியும் அடிமைப்படுத்தியும் ஆண்டுகொண்டு உள்ளது. இவ்வகையில் பிராமணர்கள் அனைவரும் ஒருவர்க் கொருவர் ஒத்துழைப்பவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் ஈடுபட்டு வருவதைத் தமிழர்கள் நன்கு உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். இங்குள்ள தினமணி, இந்து போலும் பச்சைப் பார்ப்பன இதழ்களில், வேத, புராண முயற்சிகளுக்கும் செய்திகளுக்கும் பெரிய எழுத்துகளிட்டு முதலிடந் தந்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. வேத, புராணங்கள் பரவப் பரவத்தான் பிராமணியத்திற்கு எழுச்சியும் காப்பும் ஏற்படும் என்பது இவர்களின் கோட்பாடு. அறிவியல் தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்குக் கூட, வேத, புராணத் தொடர்புகளைக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதில் இவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். நிலா மறைப்பு (சந்திர கிரகணம்) எப்படி ஏற்படுகிறது என்பது அறிவியல் படித்த அனைவருக்கும் தெரியும்! அந்நாளில் கங்கையில் மக்கள் புனித நீராடினர் என்பதை ஒரு செய்தியாகப் பரப்பினால்தான், இவர்களின் வேத, புராணக் கொள்கைகளுக்கு வலிவு ஏற்படும் என்பது இவர்களின் எண்ணம்! எனவே அச்செய்தி அனைத்துப் பார்ப்பன இதழ்களிலும் தவறாமல் போடப் பெறுகிறது! காஞ்சி காமகோடியாரின் இந்துமத வேத, புராணப் பரப்புதல் முயற்சிகளுக்கு இவர்கள் கொடுக்கும் விளம்பரங்களைப் பார்த்தாலே, மக்களைத் திட்டமிட்டுத் தம் மதக்கோட்பாடுகளுக்கு இரையாக்கும் முயற்சி நன்கு புலப்படும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியில் இவர்களுக்குள்ள அக்கறை, தமிழ்வளர்ச்சியில் நம் தமிழர்களுக்கு இருக்குமானால் நம் இனம் இவ்வளவில் அடிமைப்பட்டிருக்காது. இவர்கள் இதழ்க்ளில் தமிழர் இனநலக் கட்சிகளுக்கோ, மொழிவளர்ச்சிச் செய்திகளுக்கோ சிறிதும் விளம்பரம் தருவதில்லை. ஆனால் தமிழர் இதழ்களிலோ, வேத புராண முயற்சிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் தரப் பெறுகின்றன! இது மட்டுமா? அவர்களின் பாலியல் குப்பைத் தொட்டிகளாக விளங்கும் கவர்ச்சியேடுகளின் முதலாளிகளே தமிழர்கள் தாம்! அதிலும் தமிழ், தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழினத் தலைவர்கள்தாம் என்பதை மிக வருத்தத்துடன் கூறிக்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனின் தாராள மனப்பான்மை என்னும் இளித்தவாய்த் தன்மைக்கும், காட்டிக் கொடுக்கும் இரண்டகச் செயலுக்கும், குட்டக் குட்டக் குனிந்து கொடுக்கும் இழிந்த அடிமைத்தனத்திற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்?

இன்னொன்றை இங்கெடுத்துக் காட்டுவது மிகமிக இன்றியமையாதது. இக்கால் பிராமணர் நடத்தும் இதழ்கள் சிலவற்றில், பச்சையாகவும் கொச்சையாகவும் தாறுமாறான பாலியல் வெறிவுணர்வு நிரம்பிய கதைகளும் கட்டுரைகளும் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பெற்று வருகின்றன. இவை தமிழ்ப் படிக்கும் மக்களிடையில் மொழித் தாழ்ச்சியையும் மனத்தளர்ச்சியையும், அறிவுவீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்நிலைகளுக்கிடையில் சமசுக்கிருதம் உயர்வானது; வேதமதமாகிய இந்துமதக் கொள்கைகள் உயர்ந்தன என்னும் எண்ணம் வளரும்படி ஒருவகைக் கருத்து. கரவாகவும் சூழ்ச்சியாகவும் பரப்பப்பட்டு வருகிறது. தமிழர்கள் இந்நிலையை மிகவும் எச்சரிக்கையாக எண்ணி உணர்ந்து கொள்வதுடன், அவ்விதழ்களை அறவே புறக்கணிக்கவும் வேண்டும் என்பது அறிந்துகொள்க.

இனி, தமிழ் மொழியின் இயற்கையமைப்பையும் அதன் அறிவியல் கூறுபாடுகளையும் அறியாதவர்களே, அம்மொழியைவிட, சமசுக்கிருதத்தை உயர்வாகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் கருதுவர். உண்மையில் சமசுக்கிருதத்தின் மொழியியல் அமைப்பையும், அதன் கலவைத் தன்மையையும் அறிந்த எவரும், அதனை உயர்தனிச் செம்மொழியாகிய, தமிழினும் உயர்வாகக் கருத மாட்டார்கள். இந்நிலையில்தான் சமசுக்கிருத மொழியைப் பற்றி இக்கால் அரசியல் அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களும், தலைவர்களும்கூட வானளாவ உயர்த்திப் பேசி வருகின்றனர். இதற்குப் பிராமணர்களின் பொய்யுரைகளும் புனைவுரைகளுமே கரணியமாக இருக்க முடியுமேயன்றி, வேறு அடிப்படைகள் எதுவும் இருக்க முடியாது; அம்மொழி தேவமொழி யென்னும் குருட்டுக் கொள்கையும் அறியாமை எண்ணமும் இங்குள்ள மாநில ஆளுநர், நடுவண் அமைச்சர்கள் உட்பட அனைவர்க்கும் இருப்பதைப் பார்த்தால், ஒன்றால், இவர்களுக்கு அம்மொழி பற்றிய வரலாறு எதுவும் தெரியாது என்றே எண்ணி, இரங்க வேண்டியுள்ளது; அன்றால் இவர்கள் வேண்டுமென்றே பார்ப்பனீய இனச் சார்பினராக மாறி, அவர்களின் தலைமைக்கும் தில்லுமல்லுகளுக்கும் தங்களை ஒப்புக் கொடுத்துக்கொண்ட அடிமைகளோ என்று கருத வேண்டியுள்ளது. இல்லெனில் இவர்கள் இச் சமசுக்கிருதத்தை ஏதோ ‘தெய்வங்கள்’ பேசுகிற மொழியென்று மயங்கி, அதன் வளர்ச்சிக்குத் தங்களை அடகு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இக்கால் சமசுக்கிருத வளர்ச்சிக்கென 6–ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2 கோடியே 63 இலக்க உருபாவை அரசு ஒதுக்கியுள்ளது. அம்மொழியின் ஆராய்ச்சி வளர்ச்சிக்கும், கற்பிக்கும் முயற்சிக்கும், அஞ்சல்வழிக் கல்வி, அமைப்புக் கல்வி போன்ற ஏற்பாட்டிற்கும், அம்மொழியை வலுப்படுத்துவதற்கும் அத்தொகை செலவிடப்பட வேண்டும் என்பது அதன் திட்டமாகும். ஏற்கனவே உள்ள ‘தேசிய சமசுக்கிருத’ அமைப்பு நிறுவனத்தின்வழிப் புதுதில்லி, திருப்பதி, சம்மு, பூரி, அலகாபாது ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் சமசுக்கிருதக் கல்வி நிலையங்களில் அம்மொழி பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் மாதம் 100 உருபா முதல் 250 உருபா வரை உதவிச் சம்பளங்கள் அளிக்கப் பெற்று வருகின்றன. இவ்வமைப்புக்குத் தலைவராக உள்ளவர் நடுவணரசுக் கல்வி, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சரான பர். பி.சி. சந்தர் என்பவர், மக்களின் வரிப் பணத்தில் வாழ்ந்து வரும் இவர், ‘சமசுக்கிருத மொழியை எல்லா வகையானும் வளர்ச்சியுறச் செய்யும்படி அவ்வக்கால் அறிக்கைகள் விட்டுவருவது, மற்ற தேசிய மொழியாளர்க்கு எவ்வாறு நடுநிலைமை தாங்குவதாகும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள 86 பல்கலைக் கழகங்களில், சமசுக்கிருதத்தை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்களிலும் இந்தியை ஏறத்தாழ 65 பல்கலைக் கழகங்களிலும் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும்பொழுது, தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் முதலிய தென் திராவிட மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு ஏன் பத்துக்கும் குறைந்த அல்லது ஒன்றிரண்டு கூடிய எண்ணிக்கையுள்ள பல்கலைக் கழகங்களில் மட்டும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்க வேண்டும்? திரவிடர்கள் நடுவணரசுத் தலைமையைக் கைப்பற்ற முடியாமல் இருக்கும் சூழ்ச்சி மிகுந்த அரசியல் அமைப்பை வைத்துக் கொண்டு பிராமணியம் அரசாளும் உண்மையை இது தெரிவிக்க வில்லையா?

இன்னும் இந்திய மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஆரியப் பார்ப்பனரின் மொழியாகிய சமசுக்கிருதத்தைப் பேசுபவரின் மொத்த தொகையே அரசு மக்கள் தொகை மதிப்பீட்டுக் கணக்கின்படி 500 பேராக இருக்க, பிற தேசிய மொழிகளுக்குள்ள உரிமையைப்போல் அச் சமசுக்கிருத மொழியில், வானொலியில் செய்தி அறிக்கைகள் படிப்பதும், நாடகங்கள் நடிப்பதும், பாடல்கள் பாடுவதும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள், கதைப்பொழிவுகள், உரையாடல்கள் நிகழ்த்துவதும் எப்படிப் பிராமணிய வளர்ச்சிக்குத் துணைபோகாத – அல்லது அவ்வினக் காவலுக்கு உதவாத செயல்களாகும்? இது பச்சைப் பார்ப்பனீயக் கொடுமைகள் அல்லவா? பெரும்பான்மை மொழியினர் நலத்தை நசுக்கி ஒரு சிறுபான்மையினரின் வளர்ச்சிக்குத்துணைபோகின்ற அரசின் இரண்டகச் செயல் அல்லாமல் இதை வேறு என்னவென்று சொல்ல முடியும் மிகச் சிறுபான்மையுள்ள பார்ப்பனரிலும் சமசுக்கிருதம் நன்கு படித்த ஒரு சிலருக்குத்தானே இந்நிகழ்ச்சிகள் புரியும்! ஓர் இரண்டு நூறு பேர்களுக்காக, கோடிக்கணக்கான மற்ற மக்களின் உரிமை பறிக்கப்பட வேண்டுமா? இஃது என்ன நேர்மை? என்ன நடுநிலைமை?

இந்த நிலையில் “பள்ளிகளில் சமசுக்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று வேறு, கடந்த சனவரியில் சென்னையில் கூடிய சமசுக்கிருத சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கு அச் ‘சம்மேளனம்’ கூறும் கரணியங்கள்தாம் எத்துணைப் பொய்யும், புளுகும், குறும்புத்தனமும் பிற மொழியாளரை அவமதிக்கும் தன்மையும் வாய்ந்தனவாக உள்ளன! அம்மாநாட்டில் கூறிய கருத்துரைகளையும் தீர்மானங்களையும், தமிழ்ப் பற்றாளர்களும் தமிழ்த் தலைவர்களும், கண்ணுற வேண்டும் என்பதற்காக அச்செய்தி அப்படியே திருத்தமின்றிக் கீழே கொடுக்கப் பெறுகிறது:– (தினமணி – சென்னை – சனவரி – 2)

“ஹிந்தி பிரசார சபையைப் போல ஸ்ம்ஸ்கிருத பிரசார சபை ஒன்று பல்கலைக் கழக அந்தஸ்தில் அமைந்தால்தான் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் பரவ முடியும்.. அதற்கு மத்திய சர்க்கார் ஆவன செய்ய வேண்டும்... சம்ஸ்கிருதம் படித்த மாணவர்கள் மற்ற மாணவர்களைவிடக் கெட்டிக்காரர்களாகவும் படிப்பில் சிறந்தவர்களாகவும் விளங்குவது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமசுக்கிருதம் ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் எல்லோராலும் கற்றுக் கொள்ளப்படுகிறது. நம் நாட்டில் ஒவ்வொருவரும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்வது மிக அவசியம்...... விஞ்ஞான யுகமான இக்காலத்தில்கூட, ஸம்ஸ்கிருத நூல்கள் கணிதம், வான சாஸ்திரம், ஜியாமெண்டரி, டிரிகனாமெண்ட்ரி, அல்ஜீப்ரா, பூகர்ப ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, கட்டிட நிர்மாணம் ஆகியவற்றிற்கு பெரும் உதவியாக உள்ளன.......... எல்லா மாநில சர்க்கார்களும் உடனடியாக ஸம்ஸ்கிருதத்தைக் கட்டாய பாடமாகச் சொல்லித்தரவேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு நமது புராதன கலாச்சாரமானது புரியவரும்...... ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சம்ஸ்கிருத நிறுவனம் ஏற்படுத்தி, மத்திய நிறுவனம், அவற்றின்மூலம் ஸம்ஸ்கிருதம் நாடு முழுவதும் பரவவும், மேல் படிப்புகளும் ஆராய்ச்சிகளும் நடத்தவும் முழு ஆதரவு தரவேண்டும் என்று மத்திய சர்க்காரை இந்தச் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.......... தற்பொழுதைய ஹிந்து அறநிலைய அமைப்பு முழு அதிகாரமும் உள்ள அறநிலையங்கள் ஸ்தாபனம் நிறுவப்பட வேண்டும்........... மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் சமயக்கல்வி சொல்விக், கொடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளையும் சென்னை சர்க்காரையும் இந்த சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.– எப்படி? நடுவணரசைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் அல்ல இவை? நாளை நடைபெறவிருக்கும் திட்டங்கள்! இவை மட்டுமா? இன்னும் எத்தனை, எத்தனை?”சமசுக்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு தான் பிராமண மதமாகிய வேத மதமும் அஃதாவது இந்துமதமும், பிராமணியமும் நிலைத்து நிற்கவும், வளர்ந்து ஓங்கவும் முடியும். சமசுக்கிருத மொழி அழியுமானால், பிராமணியம் இந்தியாவில் ஒரு நொடிப்பொழுதும் உயிர் வாழ முடியாது. “ஓரினத்திற் கடிப்படையாகவுள்ளது அவ் வினத்தின் மொழியே. அம்மொழி அழியுமானால் அவ்வினமும், அவ்வினத்தைப் பற்றி வளரும் கலைகளும் பண்பாடும் பிற அறிவுக்கூறுகளும் படிப்படியாகவும் ஆனால் விரைந்தும் அழிந்துவிடும்” என்னும் இயற்கைக் கோட்பாடே, சமசுக்கிருத மொழி நிலையிலும் உண்மையாகச் செயற்படும் என்பது, பிராமணர்களுக்கு தமிழினத்தவர்களைவிட நன்கு தெரியும். இவ்வகையிலேயே வடநாட்டவர்களான ஆரியப் பார்ப்பனர்களும் தங்கள் ஆட்சியதிகாரங்களை நிலைப்படுத்தும் முயற்சியாக, இந்தியை இந்நாட்டின் ஆட்சிமொழி யாகவும் இணைப்பு மொழியாகவும் ஆக்குவதில் பெரிதும் முனைப்பும் பரபரப்பும் காட்டுகின்றனர். இவ்வுண்மையைத் தமிழர்கள் நன்கு விளங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

இந்திமொழி சமசுக்கிருத அடிப்படை கொண்டது. எனவே அதன் வளர்ச்சி சமசுக்கிருத ஆக்கத்திற்கு ஒருவகைத் துணையாக நிற்கும் என்பதைப் பிராமணர்கள் உணர்ந்திருக்கின்றனர். இந்தியை ஆட்சி மொழியளவில் இந்நாட்டின் அதிகார மொழியாக நிலைப்படுத்திவிட்டால், அதன் வேராக நின்று சமசுக்கிருதம் இயங்கும் அல்லது இயக்கும் என்பதையும் அவர்கள் நன்கு உணர்வர். எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொள்ளும் பிராமணர்கள் இந்தி நுழைவிலும் ஓரளவு அக்கறை காட்டி வருகின்றனர். வடநாட்டினரின் இந்திமொழி வளர்ச்சியையும், சமசுக்கிருத மொழி எழுச்சியையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல், திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ்மொழிக்கே உண்டு. மற்றைய அனைத்துத் திராவிட மொழிகளுக்கும் சமசுக்கிருதம் புறக்கணிக்கப்படும் ஒரு மொழியன்று. சமசுக்கிருதத்தை விடுத்து அம்மொழிகள் ஒருபோதும் தம்மளவில் நின்று தனித்தியங்கா; உயிரும் வாழா, தமிழ்மொழியின் நிலை அவ்வாறானது அன்று. சமசுக்கிருத மொழியின் கூட்டுறவை எவ்வளவுக் கெவ்வளவு அது தவிர்க்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு தன்னளவில் நின்று தனித்து வளர்ந்து செழிக்கும் தன்மையுடையது. சமசுக்கிருத மொழித் தொடர்பே தமிழ்மொழியின் தனித்தன்மையையும், அதன் அறிவு வளத்தையும் வளர்ச்சியையும் கெடுக்க வல்லது. எனவே மற்றைய திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் முதலிய மொழிகள் சமசுக்கிருதத் தொடர்பை ஒரு காலத்தேனும் விட்டுவிடும், அல்லது தளர்த்திக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவ்வாறு செய்வது அவற்றின் தற்கொலை முயற்சியாகவே இருக்கும். மேலும் சமசுக்கிருத மொழியின் தொடர்பை அவை கைவிடக் கைவிட அவற்றின் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்கு அவை மிக நெருக்கமான மொழிகளாகிவிடும். இன்னுஞ் சொன்னால், அவை தமிழாகவும் ஆகிவிடும். அக்கால் அவற்றின் சொற்களில் மட்டும் இடச்சிதைவும், காலச்சிதைவும், வரலாற்றுச் சிதைவும் நன்கு புலப்படும்படி இருக்கும்.எனவே, அவை சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலவே இயலாது. அவற்றிற்கு அது விருப்பமானதாகவும் இல்லை. சமசுக்கிருதத்தைத் தவிர்த்துக்கொள்ள இயலாதபொழுது, அம்மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்து சமயச் சார்பையும் அவற்றின்வழிப் பிராமணியப் பிடிப்பையும் எவ்வாறு அவற்றால் விட்டுவிட முடியும்? இவ் வுண்மையை மொழியளவிலும் அதன்வழி இன அளவிலும், அவற்றின் வழி வரலாற்றளவிலும் நன்கு விளங்கிக்கொள்ளாத நிலையில் தான், தமிழர்களிடையே திராவிட இயக்கம் என்று ஒன்று தோற்றுவிக்கப் பெற்றது. அவ்வாறு தோற்றுவிக்கப்பெற்ற திராவிட இயக்கத்திற்குத் திராவிட நாடு பெறுவது ஒரு தலையாய குறிக்கோளாக விருந்தது. காலப்போக்கில் அவ்வியக்கத்தையும், அதன் குறிக்கோளையும் மிகக் கடினமான கற்பனைகள் என்றுணர்ந்த அதன் தலைவர்கள், அம் மெய்ம்மமல்லாத நோக்கங்களுக்குத் தம் காலத்தையும் முயற்சிகளையும் செலவிடுவது அறியாமை என்று கண்டபின், அவற்றைக் கைவிட்டுவிடத் துணிந்தனர். ஆனால் இத்துணைக் காலம் தம் அறியாமைப் போக்கை நம்பித் தம் உடன்வந்த ஒன்றுமறியாத பல்லாயிரக் கணக்கான பேதை மக்களை உடனடியாக ஏமாற்ற விரும்பாத அவர்கள், அக் கைவிடுப்புக்கு முற்றும் பொருத்தமில்லாத அரசியல் புறக்கரணியங்களைக்கூறி, நெடுநாள் முயன்ற அக் குறிக்கோள்களை, ஒரு நொடிப் பொழுதில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டனர். இவ்வகையில் அவர்களின் பின்னைய தவறுகளின் முன்னைய தொடக்கம் எங்கே இருக்கின்றது என்பதை அவ்வியக்கங்களைச் சார்ந்த தலைவர்களுங்கூட அறியாத உணர்வுடையவர்களாகவே இருக்கின்றனர் என்பதை இரக்கத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கின்றது. தமிழினத்தின் படிப்படியான தோல்விகளுக்கு அடிப்படையான, அக் கரணியம் என்ன என்பதை இன்னமும் அவர்கள் உணர்ந்துகொள்ள அணியமாக இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில், இப்பொழுதுள்ள குழப்ப நிலைகளிலேயே அவர்களுடைய அரசியல் வாணிகம் நன்கு நடந்துவருகிறது. அதைக் கெடுத்துக்கொள்ள அவர்கள் விரும்பாதது, ஆழ்ந்த இன வுணர்வற்றவர்களுக்கு இயற்கையே!

இனி, சமசுக்கிருதம் என்பது அரைச் செயற்கையான ஒரு மொழி என்பதை நம்மில் பலரும் அறியார் மாறாக, பிராமணரின் இந்துமத மயக்கங்களில் தம் மதியைப் பறிகொடுத்த தமிழர், அதை ஒரு தெய்வ மொழியென்றே கருதி, அச்சமும் நம்பிக்கையும் கொண்ட ஒர் உணர்வு கொண்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும், இந்திய அரசின் தலைமை யிடங்களில் உள்ள அதிகாரிகளும், பிற பார்ப்பனத் தலைவர்களும் வாய் கோணாமல் கூறிவருவதைப் போல், ‘இந்திய மொழிகளனைத்துக்கும் தாய் சமசுக்கிருதமே என்றும் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய தெய்விகத் தன்மை கொண்டதும் அதுவே’ என்றும், ‘சமசுக்கிருதம் இறந்துபட்ட மொழியென்பது தவறானது’ என்றும், அது எல்லாரும் படிப்பதற்குக் கடினமானதென்று கூறுவதும் பிழையானது என்றும், இந்தியக் கலை, பண்பாடு இவற்றிற்கெல்லாம் அடிப்படையானது சமசுக்கிருதமே’ என்றும், ‘அதை அனைவரும் வேறுபாடில்லாமல் கற்கவேண்டும் என்றும், பலவகையாகத் தம் வாய்க்கு வந்தபடியெல்லாம், ஒன்றுமறியாத ஏழை மக்களிடமும், பார்ப்பனக் கொள்கைகளால் பலவகைக் குமுகாய, அரசியல் ஊதியங்களும் பொருளியல் நலன்களும் பெற்றுவரும் பணக்கார ஏமாளிகளிடமும் கூறிவருகின்றனர். இவற்றுக்கெல்லாம் இயைபாக, அரசுப்பதவி தாங்கும் அவ்வமைச்சர்களும் ஆளுநர்களும் அதிகாரிகளும், இந்துமத விழாக்களிலும், கோயில் குடமுழுக்குகளிலும் கலந்துகொள்வதும், பிராமணியக் கோட்பாடுகளுக்குத் தம்மை அடகுவைத்துக் கொள்வது போல், சமசுக்கிருத மொழிக்குக் கண்ணை மூடிக்கொண்டு அரசுப் பணத்தை எடுத்துக் கைத்தாராளமாகச் செலவழிப்பதும், அம்மொழி சர்ந்த இந்துமதக் கொள்கைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் அளவிறந்து வழிவிட்டு ஒதுங்குவதும், மிகவும் ஒருசார்புத் தன்மையும் கொடுமையும் வாய்ந்தன ஆகும். சமசுக்கிருத மொழி வளர்ச்சியிலும், பிராமணியப் பரப்புதலிலும், இந்துமத எழுச்சியிலும் இவ்வரசு காட்டுகின்ற தலைக்கு மீறிய அக்கறையும் ஆர்வமும், இதனை ஒரு மதவெறி பிடித்த அரசு என்றுகூடக் கருதும்படி செய்துவிடுகின்றன. இந்துமதத் தலைவர்களுக்கும் மடாதிகாரிகளுக்கும் தங்களை ஆட்டடுத்திக் கொண்டு அடிமைப்படுவது, மதச்சார்பற்ற அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியாது. இந்திரா காந்தியின் வல்லாண்மைக் காலத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ஒரு பிராமண அடிமை, காஞ்சி காமகோடி பீடத் தலைவர் தங்களுக்கு ஆட்சி முறையில் வழிகாட்ட வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்த செய்தி, அரசு அதிகாரிகள் எப்படிப் பிராமணியத்திற்குத் துணைபோகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

பலபடியாக உயர்த்திப் பேசப்பெற்றுவரும் சமசுக்கிருத மொழியே பிராமணர்களுக்கு உயர்ந்த மொழி. அவர்கள் அதில் பேசிப் பழகி எழுத முடியாமற் போனாலும் அவர்களுக்குத் தாய்மொழியும் அதுவே! அவர்கள் தங்கள் தாய்மொழி தமிழ் என்று என்றைக்கும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஒப்புக்கொண்டதே கிடையாது. அவ்வாறு ஒப்புக்கொண்டாலும் அது, அன்றைக்குள்ள அரசியல், வாழ்க்கை முதலிய சூழல்களையும் பொறுத்தே பொருள்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாகவே ஆகும். இவ் விடத்தில் மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர் வயவர் அதி. பன்னிர்ச்செல்வம் என்னும் தமிழர் தலைவரின் கூற்றை எச்சரிக்கையை நாம் நினைவுகூர்தல் நல்லது. “ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்துகின்றனர் அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே. ‘தமிழைவிடச் சமசுக்கிருதமே மேல்’ என்பதே அவர்களின் முடிந்த முடிபாகும்” – என்பது அவர் கூற்று.

அரசியல் அதிகார நிலையில் பிராமணர்கள் எத்தனைக் கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும், அவர்கள் மொழியாகிய சமசுக்கிருதத்தைக் கருதுகின்ற வகையிலும், அதனைக் கட்டிக் காத்து அதன்வழிப் பிராமணியத்தைப் பேணுகின்ற வகையிலும், அவர்களை வேறுபட்டவர்களாகக் கருத முடியாது என்பதற்கு மேற்கண்ட அடிப்படை உணர்வுண்மையே கரணியமாகும். காலஞ்சென்ற இராசாசிக்கும், காந்திக்கும், நேருவுக்கும், அவர்களின் அரசியல் பிறங்கடையினரான கிருபளானிக்கும், தேசாய்க்கும், இந்திராகாந்திக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளில் அவற்றின் நடைமுறைகளில், எவ்வளவு மாறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், மந்த விரைவுப் போக்குகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பிராமணர்களாகையால், சமசுக்கிருத மொழியைப்பற்றியும், வேதங்களைப் பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர்களிடத்தில் எந்த வகையான வேறுபாட்டையோ, மாறுபாடான நடைமுறையையோ எவரும் காணமுடியாது. அவர்கள் இனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரும் பிராமண இனக் காவலர்களே! இக்கருத்தை எந்தச் ‘சூத்திர’ சுப்பிரமணியமோ, ‘அநும’ பத்தவச்சலமோ, ‘வீடண’ மா.பொ.சியோ, ‘பிரகலாத’க் கண்ணதாசனோ, வேறு எவருமோ மறுத்துவிட முடியாது. மற்றபடி, அவர்களுக்கியைபாக இவ்வடிமை மக்கள் எழுதிக் காட்டும், அல்லது பேசிக் காட்டும், ‘அர்த்தமுள்ள இந்துமதக்’ கருத்துகளெல்லாம், அவர்களின் அடிமைத்தனத்தின், அல்லது அறியாமையின் அல்லது பணத்திற்குப் பவ்வீதின்னும் குணக் கீழ்மையின் வெளிப்பாடுகளாகவே இருத்தல் முடியும்.

சமசுக்கிருத மொழி பேணுதல் எவ்வாறு இவ்வாரிய வடவராட்சியில் நடைபெற்று வருகிறது என்பதற்கு இதற்கு முன்பும் சில சான்றுகளைக் காட்டியுள்ளோம். இன்னொரு வெளிப்படையான செய்தியையும் ஒரு சான்றாக இங்குக் காட்டுகிறோம். இந்தியாவில் ஏறத்தாழ இக்கால் 85 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றில் இந்தியாவின் 14 தேசி மொழிகளுள் ஒன்றிரண்டையோ மூன்று நான்கையோ கற்கும் வாய்ப்புகள் உள்ளன. சில குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் சில குறிப்பிட்ட மொழிகளைக் கற்கலாம்’ அனைத்து மொழிகளையும் ஒரே பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவது என்பது அத்துணை எளிதன்று. எனவே சில பல்கலைக் கழகங்கள் குறிப்பிட்ட சில மொழிகளைக் கற்பிப்பனவாய் உள்ளன. இணைப்பு மொழியாகக் கருதப்படும் இந்திமொழியை ஏறத்தாழ 70 பல்கலைக் கழகங்கள் கற்பிக்கின்றன. பஞ்சாபி மொழியில் படிக்க 3 அல்லது 6 பல்கலைக் கழகங்களில் தான் இயலும். அசாமி 2, 3–இல் கற்பிக்கப்பெறுகிறது. இந்தியை ஓரிரண்டு பல்கலைக் கழகத்தில்தான் கற்கலாம். உருது மொழியை ஏறத்தாழ 30 ப.க.க.–இல் படிக்கலாம். தமிழ் மொழியை 12 அல்லது 13 பல்கலைக் கழகங்களில்தான் கற்கலாம். இப்படி இந்தி, உருது, மராத்தி, வங்காளி, குசராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒரியா, மலையாளம், அசாமி, சிந்தி ஆகிய 14 தேசிய மொழிகளையும் பலவாறான அளவில் பல்வேறு எண்ணிக்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இந் நடுவணரசு தேசிய மொழியல்லாத, ஏறத்தாழ 500 பேர் மட்டுமே பேசுவதாகவும், 5000 பேர்க்கு மட்டுமே தெரிந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ள சமசுக்கிருத மொழியைக் கற்றுக்கொள்ள மட்டும் ஏறத்தாழ 80, 82 பல்கலைக் கழகங்களில் வாய்ப்பளிப்பது ஏன்? அதன் முன்னேற்றத்திற்கு மட்டும் மக்களில் 97 விழுக்காட்டினர் தரும் வரிப்பணத்தில் தாராளமாக வாரி வழங்கப்படுவது ஏன்? இவ்வினாவிற்கான விடையில்தான் பிராமணியம் மறைமுகமாக இந்நாட்டை ஆண்டு வருகின்றது என்பதற்கான அடிப்படை உண்மையைக் காணமுடியும்! மற்றபடி அது பேராயக் கட்சி என்று பெயர் பெறலாம்; இந்திரா கட்சி எனப் பெறலாம்; பொதுவுடைமைக் கட்சி என்றுகூடச் சொல்லப்பெறலாம்; இல்லை அனைத்துக் கட்சிகளின் அவியலைப் போலும் ‘சனதா’ என்றும் மாற்றம் பெறலாம். பெயர்கள் என்னவானாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, அதனை ஆளக்கூடிய தகுதி வாய்ந்ததாகவும், வாய்ப்பு:நிறைந்ததாகவும், பிற அனைத்து இன மக்களைத் தன் காலடியில் போட்டு நசுக்கத் தக்க சாதி, மதக் கோட்பாடுகளைக் கொண்டதும், அவற்றுக்கடிப்படையான வேத, புராண, இதிகாச மூடமந்திரப் புளூகு மூட்டைகளைப் பின்புலமாகக் கொண்டதுமான பிராமணீயம் என்னும் சரக்கு ஒன்றே என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

– தென்மொழி, சுவடி : 14, ஒலை : 10–12, 1977

தீபம் பார்த்தசாரதிகள் தெளிவடையட்டும்!

கடந்த 15-1-1980-ஆம் நாளைய ‘துக்ளக்’ இதழில், ‘தேசிய மொழிகளும் தமிழ்நாடும்’ என்னும் தலைப்பில், தீபம் நா. பார்த்தசாரதி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் எவ்வகைக் கரணியமும் இல்லாமலேயே தமிழ்நாட்டு அறிஞர்கள் மேல் ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் அளவு கடந்த வெறுப்பு இருக்கின்றதென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அவ் வெறுப்பு மிகுந்திருக்கின்றதோ, அவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அறிஞர்கள் என்று பாராட்டப் பெறுகிறார்கள் என்றும் அவர் அதில் குறைபட்டுக் கொள்கிறார். இக்குற்றச்சாட்டுடன் அவர் சமசுக்கிருத மொழியின் அருமை பெருமைகளை அக்கட்டுரையில் அளவிறந்து கூறி, அம்மொழியைத் தமிழர்கள் வெறுக்கக் கூடாது; தமிழோடு ஒப்பவைத்துப் பாராட்டிக் கொள்ளுதல் வேண்டும் என்று பொருள்படும்படி கூறியுள்ளார். அவர் வேண்டுகோள், ஒருவேளை தமிழ் வரலாறு தெரியாதவர்களுக்கும் ஆரியப் பார்ப்பனர்களின் மொழி இன வரலாற்று அழிம்புகள் விளங்காதவர்களுக்கும் சரியானது அல்லது நயன்மையுடையது போல் படலாம். ஆனால், கடந்தகால பிராமணிய மொழி, இனத் தாக்குதல்களை நன்கு உணர்ந்தவர்கள் பார்த்தசாரதியின் உரைகளை ஆரியப் பசப்பு மொழிகளில் ஒன்றாகவே கருதுவர்.

பொதுவாக, ஆரியப் பார்ப்பனர்கள் அஃதாவது பிராமணர்கள் தமிழ்மொழியை என்றுமே பாராட்டியதில்லை; பேணிக் கொள்வதுமில்லை. அதைச் சூத்திரமொழி என்றும், நீச பாஷை என்றுமே கூறி வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். மறைந்த நயன்மைக் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், மிகச் சிறந்த அரசியல் வரலாற்று அறிஞருமாகிய வயவர். ஏ.டி. பன்னீர்ச்செல்வம் அவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் தேவையின் பொருட்டே தமிழைப் பயன்படுத்தினர்; அஃதாவது ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதைப் போல. மற்றபடி அவர்கள் சொந்த மொழியாகக் கருதுவது சமசுக்கிருதத்தையே! தமிழை விட சமசுக்கிருதமே மேல் என்பது அவர்களின் முடிந்த முடிபாகும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். பொதுவாக இன நிலையில் ஆரியத்தையும், மொழி நிலையில் சமசுக்கிருதத்தையும், அது முடியாத பொழுது அதற்கு முற்றிலும் இலக்கண இலக்கிய வழியில் வயப்பட்ட இக்கால் உள்ள இந்தி மொழியையுமே ஆரியப் பார்ப்பனர்களும் அவர்கள் வழி வடநாட்டினரும் தலைமைப்படுத்த வேண்டும் அல்லது அதிகாரம் கொண்டனவாக ஆக்க வேண்டும் என்று அங்காந்து திரிகின்றனர். இந்நிலையில் தமிழுக்கு இக்கால் ஏற்பட்டு வருகிற மேம்பாடுகளும், தமிழர்களிடையில் தோன்றி வளர்ந்து வருகின்ற விழிப்புணர்வுகளும் பார்த்தசாரதி போலும் படித்த – ஒரளவு பொதுமக்களிடையே விளம்பரம் பெற்ற – பார்ப்பன எழுத்தாளர்களுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் தருகின்றனவாக இருக்கலாம். அவ்வுணர்வு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே ‘துக்ளக்’கில் அவர் எழுதிய கட்டுரையை நாம் கருதுதல் வேண்டும்.

ஆரியப் பார்ப்பனர்களின் குணக்கேடுகளைப் பற்றி ஆயர் துபாய்சு என்னும் வரலாற்று மேலையறிஞர் தம் புகழ்மிக்க இந்துக்களின் ஒழுக்க வழக்கங்களும், வினைமுறைகளும்(Hindu Manners, customs and ceremonies), என்னும் வரலாற்று நூலில், ‘அவர்கள் பேராசை (avarice), அதிகார வெறி (ambition), வஞ்சனை (cunning), நேர்மையின்மை (Dishonest), இரட்டை நாக்கு(double tongue), ஏய்த்தல் (Fraud), முறைகேடு (Injustice), நயவஞ்சகம் (Insurwating), கள்ளத் தொடர்பு (Intrigne). கொடுமை(Oppression), இழிதகைமை (Servile), சூது (Wile) போன்ற தீய பழக்கங்களுடையவர்கள்’ என்கிறார். இத்தீக் குணங்களுள் முழுமையுமோ ஒன்றிரண்டோ இன்றுள்ள ஆரியப் பார்ப்பனர்களிடமும் காணப்படக் கூடியவையாகவே உள்ளன. எனவே, தமிழ்மொழியின் உண்மையான சிறப்பையும் அல்லது தமிழின மேம்பாட்டையும் எவ்வகையிலும் அவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் நாமும் பார்த்தசாரதி போலும் தமிழ்ப் படித்த பார்ப்பனர்களின் கருத்துகளையும் கவனிக்க வேண்டுவதில்லை. இனி, அவர்கள் வழி, சமசுக்கிருதத்தையும் அதன் மேலாளுமையுமே சிறப்பென்று கொண்ட வையாபுரி, மீனாட்சிசுந்தர, கண்ணதாச அடியார்களையே அவர்கள் தமிழறிஞர்கள் என்று இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழுக்கு உண்மை ஏற்றம் கண்ட மெய்யான தமிழறிஞர்களைப்பற்றி அவர்கள் எப்பொழுதுமே காழ்ப்புக் கொண்டவர்களாகவும், எரிச்சலுற்று மறைமுகத் தாக்குதலை நடத்துபவர்களாகவும், இன்னும் முடிந்தால் அப்படிப்பட்டவர்களையே திட்டமிட்டு அழித்தொழிப்பவர்களாகவுமே இன்றுவரை இருந்து வருகின்றனர்.

இனி, பார்த்தசாரதி, தம் கட்டுரையில் சமசுக்கிருதத்தைப் பற்றி வரம்பின்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார். சமசுக்கிருதம் ஒர் அரைச் செயற்கைக் கலவை மொழி என்பதையும், ஏறத்தாழ கி.மு. 5–ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப் பெற்ற மொழி என்பதையும், வேத கால ஆரியர் பேசிவந்த ஆரிய மொழி அழிந்து போன பின் பிராகிருதம் (வட திரவிடம்), பாலி மொழிகளினின்று தோற்றுவிக்கப் பெற்றதென்பதையும் மறைமலையடிகள், பாவாணர் போலும் மொழி வரலாற்றறிஞர்கள் நன்கு ஆய்ந்து புலப்படுத்தியுள்ளனர். இனி, பாவாணரவர்கள் சமசுக்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி முழுத் தமிழ்ச் சொற்களும் ஐந்தில் இரு பகுதி தமிழ் வேரினின்று திரிந்த சொற்களும், ஐந்தி ஒரு பகுதி இடுகுறிச் சொற்களென்றும் தம் துண்மாண் நுழைபுல வன்மையால் முற்ற ஆய்ந்து முடிவுகட்டியுரைப்பார். சமசுக்கிருத அகர வரிசையில் உள்ள நால்வகை ஒலிப்புகளும் பிராகிருத மொழியில் இருந்தவையே. இக்கால் பேசப்பெறும் மணிப்பிரவாளத் தமிழில் தமிழுடன் பிராகிருதமொழிச் சொற்களே மிகுதி. சமசுக்கிருதம் பிராகிருதம் கலந்து செய்யப்பட்டதால் அவை சமசுக்கிருதச் சொற்கள் போலவே தோன்றுகின்றன.

சமசுக்கிருதம் ஒருபோதும் பேசப்பட்டதில்லை. அந்த இழுக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆரியர்கள் அதால் தம் வேத மதக் கொள்கைகளை மக்கள் இழிவாகப் புறக்கணித்து விடுவார்கள் என்பதற்காக, அஃது இங்குள்ளவர்களால் அன்று, தேவர்களால் பேசப் பெறுவது என்று அதற்கு உயர்வு கூறினர். மொட்டையனைக் கேசவன் என்றும், பெட்டையனைப் புருசோத்தமன் என்றும், மூங்கையனை வாகீசன் என்றும், குருடனைக் கண்ணாயிரம் என்றும் அழைப்பது போல், இந்நிலவுலகத்து எப்பொழுதும் எங்கும் எவராலும் பேசப் பெறாத மொழியைத் தேவருலகத்துப் பேசப் பெறுகிற மொழி என்னும் பொருளில் தேவ பாஷை என்று பெருமைப்படுத்திப் பேசினர். பிரம்மசிரி மருவூர் கணேச சாத்திரியார் என்பவர் எழுதியுள்ள 'வேத மதம் அல்லது வேதாகம இதிகாஸ் புராண ரகஸ்ய நிரூபணம்' என்னும் நூலில் (பக்கம் 194–195) கீழ்வருமாறு எழுதுவதை அன்பர்கள் கவனிப்பார்களாக.

“சிலர் நமது முன்னோர் குடும்பங்களில் ஸம்ஸ்கிருத பாஷை தேச பாஷையாக பூர்வகாலத்தில் வழங்கி வந்ததெனவும், அந்த பாஷை இப்போது செத்த பாஷையாகப் போய்விட்டது எனவும் தற்காலம் சொல்லுகின்றனர். இவ்வுலகில் ஸம்ஸ்கிருத பாஷை ஒரு ஸ்மயமும் தேச பாஷையாக வழங்கப்பட்டதில்லை. கற்றோர்கள் கூட்டங்களில் மாத்திரம் வழங்கப்பட்டதேயன்றி வேறு எவ்விதமுமல்ல. இவ்வுண்மை தெரியாமல் தாறுமாறாய் வசனிக்கும் விஷயங்கள் தற்காலம் விசேஷமாயிருக்கின்றமையால், ஏதோ அவ் விஷயத்தையும் இங்கு நாம் குறிக்க வேண்டியதாயிற்று. ஸம்ஸ்கிருத பாஷை யுண்ணிய புவனங்களாகிய ஸூவர்வோகம், மஹாலோகம், கைலாசம் – முதலிய இடங்களில் வழங்கும் பாஷையேயன்றிப் பூலோக தேச பாஷையல்ல. தென்தேசத்திலிருந்த நம்முடைய முன்னோர்கள் எப்போதும் தென்மொழியையே பேசும் பாஷையாக வழங்கி வந்தனரே பன்றி வேறு எந்த பாஷையும் பேசியவர்களல்லர். ஆனது பற்றியே மகாபாரத்தில் அர்ஜூனனது தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் 'மணலூர்புரே' எனும் சொல்லிலும் ஸ்கந்த புராணத்தில் 'பெண்ணாநல்லூர்' எனும் சொல்லிலும் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி யிருப்பதனாலும், இவ்வாறே மற்ற சிவரஹஸ்யாதி நூல்களிலும் நகர, கிராம ஜனங்களின் பெயர்களை வழங்கும் ஸந்தப்பங்களில் தென்மொழியே பல இடங்களில் வழங்கப்பட்டிருப்பதினாலும் தென் தேசத்தில் தமிழ் மொழியே தேச பாஷையாக வழங்கி வந்ததென வெளிப்படையாகத் தெரிகின்றது. இவ்வுலகில் இவ்வாறு தேச பாஷைகள் வழங்குவது போல் தேவ உலகில் வழங்கும் பாஷை ஸம்ஸ்கிருதமே”

எனவே, அவர்கள் கூற்றுப்படியே சமசுக்கிருதம் தேவருகலத்தில் வழங்கி வரும் மொழியாக இருக்கிறதென்றால், இங்கு, இந்தத் தமிழ்நாட்டில், அல்லது இந்தியாவில்தான் அதற்கென்ன வேலை! இதற்குப் போய் ஏன் தீபம் பார்த்தசாரதியார் அலட்டிக் கொள்கிறார். அவ்வாறு அலட்டிக் கொள்வது அவர் அறிவன்று அவர் போட்டிருக்கும் பூணுரல். தமிழ் பேசும் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டத்தினரைச் சூத்திரர் என்றும், தங்களைப் பிராமணர்கள் என்றும் அறிவியல் வளர்ந்து வரும் இந்த நாளிலும் கூறிப் பெருமை பேசும் வெட்கங்கெட்ட இனம் சார்ந்த பார்த்தசாரதியார், சமசுக்கிருதத்தை வெறுப்பவர்களே தமிழறிஞர்களாக இத்தமிழ்நாட்டில் மதிக்கப் பெறுகின்றனர் என்று வயிறெரிந்து சாவது ? உண்மை அதுவன்று. அற்றை நாள் தமிழறிஞர்கள் சமசுக்கிருதத்தைத் தேவ மொழி என்று கைகட்டி வாய் பொத்தி வணங்கி வாழ்த்துப் பாடினர். அவர் வழி வையாபுரி, தெ.பொ. மீக்கள் தோன்றினர். இன்றுள்ள நிலை வேறு, தேவமொழியை மட்டுமன்று, தெய்வத்தையே ஆராயும் அறிவியல் காலம் இது. சமசுக்கிருதத்தின் உண்மை வரலாறு இங்குள்ள அனைவர்க்கும் தெளிவாகத் தெரிகின்ற காலம் இது. இந்நிலையில் அங்குள்ள இயல்பான வரலாற்று நிலைக்கு மேல் தெய்வீகத்தனம் கற்பித்துப் பேச, தமிழர்கள் இன்னும் குடுமி வைத்தவர்கள் அல்லர். இன்னும் சொன்னால் தமிழ், சமசுக்கிருதத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் விளக்கம் தேவையானால் கேளுங்கள்; தெரிவிக்கிறோம். மற்றபடி எழுதுவதற்குத் துக்ளக் போலும் இதழ்களும், அவற்றைப் பொதுமக்களிடம் பரவலாக விளம்பரப்படுத்த செல்வக் கொழுப்புடையவர்கள் பணமும், அதிகாரக் கொழுப்புள்ளவர்களின் ஆட்சியும் உள்ளதென்று தமிழ் மொழியையும் தமிழ் அறிஞர்களையும் தாழ்த்திப் பேச வேண்டா.

திரவிட மொழிக் குடும்பத்தை வடமொழிச் சார்பற்றவை என்று முதன் முதலிற் கண்டு காட்டியவர் கால்டுவெல் ஆவர். அவர்க்குப் பின் தமிழியல் வரலாறு மிகவும் தெளிவுபடுத்தப் பெற்று விட்டது. இதற்கு மேலும் தமிழ் சமசுக்கிருதத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்க முடியாது. அவ்வாறு கிடக்க சமசுக்கிருதம் தமிழைவிட மேம்பட்ட மொழியுமன்று. சமசுக்கிருத இலக்கணத்தின் தன்மை மிக மிகக் காட்டு விலங்காண்டித்தனமானது. ஓரிரண்டு எடுத்துக்காட்டிகளிலேயே இதை மெய்ப்பிக்கலாம். சமசுக்கிருத பாலியற் பாகுபாடு என்னும் இலக்கணக் கூறு ஒன்றில் உள்ள செயற்கைத் தன்மையைக் கீழ்வரும் சொற்களில் காணலாம்.

சமசுக்கிருதத்தில் அஃறிணைப் பொருளாகிய ‘கல்’ என்று பொருள்படும் 'பாஷாணம்' ஆண்பால். அதே கல்லைக் குறிக்கும் சிலா என்னும் சொல் பெண்பால். இன்னும் மனைவி என்று பொருள்படும் மூன்று சமசுக்கிருதச் சொற்களில் தார - ஆண்பால்; பார்ய - பெண்பால்; களஸ்திர - அலிப்பால். அதே போல் பொத்தகம் என்று பொருள்படும் மூன்று சொற்களில் கிரந்த - ஆண்பால்; ச்ருதி - பெண்பால், புஸ்தக - அலிப்பால். தத்கச்சதி என்னும் ஒரே படர்க்கை வினைமுற்று இடத்தைப் பொறுத்து அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது என்று மூன்று வகையாகவும் பொருள்படும். இத்தகைய திணை, பால், எண், இடம்ட தெளிவாக இல்லாத சமசுக்கிருதம் எப்படித் தேவமொழியாகும்? மேலும் தூய தனித்தமிழ்ச் சொற்களை ஒலி மாற்றியும், திரித்தும், கடைக்குறைத்தும் சமசுக்கிருதம் என்று கூறி வந்த பொய் பித்தலாட்டத்தைத் தமிழர்கள் இன்னும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. ஆயிரக்கணக்கான சொற்களை இதுபோல் காட்டலாம். எடுத்துக்காட்டுக்குச் சில சொற்கள். (இவை பாவாணரின் ஆராய்ச்சி வெளிப்பாடுகள்).

தமிழ் வ. சொல்

அக்கை அக்கா

அம்பலம் அம்பரம்

அரசன் ராஜன்

இடைகழி தேஹலி

உருவம் ரூப

உலகு லோக

உவமை உபமா

கரணம் கரண

கருமம் கர்ம

கலுழன் கருட

கன்னி கன்யா

காக்கை காக்க

காளி காலீ

குண்டம் குண்ட

கும்பம் கும்ப

கோபுரம் கோபுர

சவம் சவ

சவை சபா

சுக்கு சுஷ்க

கடிகை கடிக

திரு ஸ்ரீ

கலாவம் கலாப

தூதன் தூத

தோணி த்ரோணி

படி ப்ரதி

நிலையம் நிலைய

பாதம் பாத

பல்லி பல்லீ

பிண்டம் பிண்ட

புடவி ப்ருத்வி

புழுதி பூதி

புருவம் புருவ

பொத்தகம் புஸ்தகம்

மண்டபம் மண்டப

மயிர் சமச்ரு

மயில் மயூரி

மாத்திரை மாத்திர

முத்தம் முக்த

மெது மருது

வட்டம் வருத்த

சாயை சாயா

கடிகை கடிக

கலாவம் கலாப

சகடம் சகட

சடம் ஜடம்

மேலும், சமசுக்கிருதத்திற்கு முன்னர் வேத ஆரியர் பேசி வந்த வேதமொழியிலேயே தமிழ்மொழிக் கூறுகள் மிக்கிருந்தன என்று பல சான்றுகளுடன் நிலைநாட்டுவர் கேம்பிரிட்சு வடமொழிப் பேராசிரியராகிய இராப்சன்(Rapson) என்னும் அறிஞர்.

இன்னும் தமிழ்மொழி சீரிழந்து போனதற்கும், தமிழினம் சீரழிந்து போனதற்கும் சமசுக்கிருதமும் ஆரியப் பார்ப்பனருமே தலையாய கரணியமும் கரணியரும் ஆவர். சமசுக்கிருதத்தை வேண்டுமென்றே ஆள் பெயர், ஊர்ப் பெயர், நாட்டுப் பெயர், கோவில் பெயர் அனைத்திலும் புகுத்தியவர்கள் சமசுக்கிருத வெறியர்களே. பார்த்தசாரதி கூறுவதுபோல் தமிழில் இன்னும் வெறியர்கள் தோன்றவில்லை. தமிழ் வெறியர்கள் ஒரு பத்துப் பெயராகிலும் இருப்பாரேயாகில், உண்மைத் தமிழகத்தில் பார்த்தசாரதியும் இரார்; ‘துக்ளக்’கும் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் பார்த்தசாரதி மார்பில் பூணூலும், ‘துக்ளக்’ இதழில் பெயருடன் கலப்புத் தமிழும் இல்லாமலிருந்திருக்கும். நிலை அவ்வாறில்லாமல் இருப்பது ஒன்றே பார்த்தசாரதி கூறும் தமிழ் வெறியர்கள் யாரும் இங்கு இல்லை என்பதை உணர்த்தும்,

பார்த்தசாரதி கூட்டத்தினரின் சமசுக்கிருத வெறி இத்தமிழகத்தில் எப்படிச் செயற்பட்டது என்பதற்கான சான்றுகள்:

மாற்றப்பட்ட ஆட்பெயர்கள்:

வடமொழிப்பெயர் பொருள்

கேசவன் மயிரான்

பூவராகன் நிலப்பன்றி

கும்பகர்ணன் குடக்காதன்

மண்டோதரி பானைவயிறி

சூர்ப்பநகா முறம்பல்லி

காமாட்சி காமக்கண்ணி

மீனாட்சி கயற்கண்ணி

ஸ்வர்ணாம்பாள் பொன்னம்மை

'மாற்றப்பட்ட கடவுள் பெயர்கள்:'

தமிழ் வ.சொல்

பொன்னன் ஹிரண்யன்

அரவணையன் சேஷசாயி

அடியார்க்கு நல்லான் பக்தவத்சலம்

அம்மையப்பன் சாம்பமூர்த்தி

தூக்கிய திருவடி குஞ்சிதபாதம்

தென்முகநம்பி தக்ஷணாமூர்த்தி

மங்கைபாகன் அர்த்த நாரீசுவரன்

உலகநம்பி ஜகநாதன்உலகுடையான் ஜகதீச்வரன்

சொக்கன் சுந்தரன்

தாயுமானவன் மாத்ருபூதம்

கருமாரி கிருஷ்ணமாரி

ஆடலரசன் நடராஜன்

செம்மலையான் அருணாசலம்

பிறைசூடி சந்திரசேகரன்

மாலிடங் கொண்டான் சங்கர நாராயணன்

முருகன் சுப்பிரமணியன்

பிள்ளையார் கணபதி

- இவ்வாறு தூய தமிழைக் கெடுத்து இழிவு தோன்றுமாறும் அதை விளங்கிக் கொள்ளாதவாறும் செய்த ஆரியப் பார்ப்பனர்கள் மொழி வெறியர்களா, இத்தீமையை ஏற்றுக்கொள்வதனால் எதிர்வரும் தாழ்ச்சிகளையும் அழிவுகளையும் அழியாத கள்ளங் கவடற்றவர்களானவர்களும், அன்பினாலும் விருந்தோம்பலினாலும் பகைவர்களையும் அரவணைத்து ஆதரித்துப் போற்றி, இன்று அவலத்திற் காட்பட்டுக் கிடப்பவர்களும் ஆன தமிழர்கள் மொழி வெறியர்களா? இதற்குப் பார்த்தசாரதியார் ‘துக்ளக்’கிலேயே விடை தருவாரா? அல்லது தென்மொழிக்கே எழுதித் தம் பெருந்தன்மையை உணர்த்துவாரா?

இன்னொன்றை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுதல் நன்று. மக்களினத்தில் மட்டும் ஆரியப் பார்ப்பனர்கள் சாதி யிழிவுகளைப் புகுத்தவில்லை. தமிழ் எழுத்துகளிலும் சாதிப் பாகுபாட்டைப் புகுத்தி யிருப்பதைப் - பார்த்தசாரதியார் அறிந்திருப்பார். ஏனெனில் அவர் தமிழாசிரியராக இருந்தவர். பாட்டியலில் உள்ள எழுத்துச் சாதிப் பாகுபாடுகள் இவை:

உயிரெழுத்துகளும், முதல் ஆறு மெய்யெழுத்துகளும் -பார்ப்பன எழுத்துகள்

இரண்டாவது ஆறு மெய்யெழுத்துகள் - சத்திரிய

ல், வ், ழ், ள் - வைசிய எழுத்துகள்

ற், ன் - சூத்திர எழுத்துகள்

இன்னும் அதில் குறிப்பிட்டுள்ள பாட்டு நிலைகள் வருமாறு:

பார்ப்பனர்க்கு - வெண்பா

சத்திரியர்க்கு - ஆசிரியப்பா

வைசியர்க்கு - கலிப்பா

சூத்திரர்க்கு - வஞ்சிப்பா

கலம்பகத்தில், தேவர்க்கு 100 செய்யுள். பிராமணர்க்கு 95, அரசர், அமைச்சர்க்கு 70, வணிகர்க்கு 50 செய்யுள், சூத்திரர்க்கு 30 செய்யுள் பாட வேண்டும் என்பது பாட்டியல்,இப்படி எழுத்து, சொல், பாட்டு, மக்கள், ஊர், பேர், கடவுள் எல்லாமும் பார்ப்பனர்க்கு அடிமையாக இருந்தால் பார்த்தசாரதியார் மெச்சி, உச்சி குளிர்வாரோ? நல்லவேளை அவர் உச்சிக்குடுமி எதுவும் வைத்திருக்கவில்லை, பரட்டைத்தலை யராக இருக்கிறார்). இல்லாவிட்டால், அல்லது தட்டிக் கேட்டால், அல்லது ஆரியப் பார்ப்பனர்க்குத் தமிழர் அடிமைகள் ஆக முடியாது என்றால், அல்லது சமசுக்கிருதத்திற்குத் தமிழ்மொழி தாழ்ந்ததன்று உயர்ந்ததே என்றால் உடனே ‘லோகம் கெட்டுப் போயிடுத்து’ என்று கூத்தாடும் சவண்டிப் பார்ப்பனர் போல, பார்த்தசாரதியாரும் தமிழ்நாட்டு அறிஞர்களுக்குச் சமசுக்கிருதத்தின் மேல் காரணமற்ற வெறுப்பு, துவேஷம் என்று ‘துக்ளக்’கில் இல்லையென்றால் தினமணிக் கதிரில் எழுதோ எழுதென்று எழுதுவார். இல்லையா, தீபம் பார்த்தசாரதி அவர்களே!

இன்னொன்றைப் பார்த்தசாரதியார் தம் கட்டுரையில் கூறியிருக்கிறார். அதுதான் சமசுக்கிருதம் கழகக் காலத்திலும் அதையடுத்த காலங்களிலும் ஒர் அறிவுத் தொடர்பை(intellectual Companianship), தொடர்ந்து அளித்து வந்திருக்கிறதாம். நல்ல வேடிக்கை இது. தமிழ்மொழியில் இருந்த நூற்றுக்கணக்கான அறிவு நூல்களைச் சமசுக்கிருதத்தில் பெயர்த்து எழுதிக் கொண்டு, தமிழ் மூலங்களை அழித்து விடுதல் பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்றுவரைத் தொடர்ந்து செய்து வரும் ஒர் அப்பட்டமான அழிம்பு வேலை. இதுபற்றித் தென்மொழியில் முன்பே பல செய்திகளையும் குறித்திருக்கிறோம். இப்பொழுது தஞ்சை சரசுவதி மகாலில் தொடர்ந்து இவ்வேலை நடந்து வருவதையும் சுட்டியிருக்கிறோம். வேதத் தொடரின் இறுதியில் சேர்க்கப் பெற்றிருக்கும் உபநிடதங்கள் யாவும் தமிழ் முனிவர்கள் எழுதியவை என்பதை மறைமலையடிகள் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் அறிவுத் தொடர்புக்கு மட்டுமன்று. உலகத்தின் அறிவுத் தொடர்புக்கே தமிழ்தான் மூலமாக இருந்து உதவும் என்பதைக் கீழ்வரும் பர். கில்பர்ட் சிலேட்டர் (Dr. Gilbert Slater) அவர்களின் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

Since Dravida is as once the part of India where the most ancient culture still survives and the part which is closest in touch with the twentieth century. In the flow of intellectual commerce between the east and the west the English speaking studentss of Tamil will supply many of the most achieve intermediaries.

இனி, அறிஞர்களின் அறிவுப் பரிமாற்றத்திற்கு மட்டுமன்று, இந்திய மக்களினத்தின் ஒருமைப்பாட்டுக்கே தமிழ்தான் இணைப்பு மொழியாக இருந்து உதவும் என்று காந்தியடிகள் கூறியதையும் பார்த்தசாரதிக்கு நினைவூட்டுகிறோம். (Calcutta ‘Modern Review’).

இனி, இறுதியாக,

“தெய்வா தீனம் ஜத்ஸர்வம்

மந்த்ரா தீனந்து தைவதம்

தன்மந்த்ரம் ப்ரர்ஹ்மணா தீனம்

பிராஹ்மணா மம தைவதம்”(இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலால் பிராமணரே நம் தெய்வம்.)

- என்ற காலம் மலையேறி விட்டது. தேசியம், ஒருமைப்பாடு, ஒற்றுமை, இந்தியா என்றெல்லாம் பேசி ஆரிய இனத்துக்கும் மொழிக்கும் பிற இனத்தவரை, குறிப்பாகத் திரவிடரை, இன்னுஞ் சொன்னால் தமிழரை அடிமைப்படுத்தி அரசோச்சிய காலம் கழிந்து விட்டது; இனிமேலும் தமிழினத்தைப் பார்ப்பனர்க்கு மட்டுமன்று. உலகில் வேறு எந்த இனத்துக்கும் அடிமைப்படுத்திவிட முடியாது. தமிழினம் விழித்துக் கொண்டது; விழித்துக் கொள்கிறது; விழித்துக் கொள்ளும்! பார்த்தசாரதிகளும் துக்ளக்குக்கும் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

- தென்மொழி, சுவடி : 16, ஓலை : 6, 1980

தேசியம் பேசும் திருடர்கள்!

நிலம் பரவலாக இருந்தால் கொள்ளையடிப்பவர்களுக்குத் தங்கள் வேலை எளிதாக முடியும்; சிறப்பாகவும் நடைபெறும். அரசியல் கொள்ளையர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் பகலில் கொள்ளையடிப்பவர்கள். இவர்கள் தேசியம் பேசுகிறார்கள் என்றால், உண்மையில் நாட்டு மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டுதான் அப்படிப் பேசுகிறார்கள் என்று எவரும் தவறாக எண்ணிவிடக் கூடாது. மெய்யாகவே இப்பொழுள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற கருத்துகளில் பற்பல வகையான உள்நோக்கங்கள் உள்ளன என்பதைப் போகப் போகத்தான் கண்டுகொள்ள முடியும். மேலும், இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் என்ற உயர்ந்த தகுதியுடைய தலைவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தேசிய நலன் கருதிக் கூறுவதாக இவர்கள் வெளிப்படுத்தும் பேச்சுகளில் எவரும் நம்பிக்கை வைக்கவும் தேவையில்லை. இக்கால் இந்தியத் தேசியம் பேசும் தலைவர்களை இந்த அளவில்தான் நாம் மதிப்பிட முடியும்.

இந்தியா, பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்த நாடு என்றாலும் இங்கு இரண்டு வகையான அடிப்படைக் கோட்பாடுகள் நிலவுவதை எவரும் மறுத்திட வியலாது. ஒன்று, மிக முன்பே இங்குத் தோன்றி வேரூன்றி நிற்கும் திரவிடக் கோட்பாடு. அஃதாவது பழந்தமிழ்க் கோட்பாடு. இரண்டு, இந்தக் கோட்பாட்டை உள்ளடக்கிச் செரித்துக் கொண்டு பரவி நிற்கும் ஆரியக் கோட்பாடு இந்தியாவின் எந்த மக்கள் கூறை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் இந்த இருவகை நீரோட்டங்களை மக்களின் ஆய்வாளர்கள் மிகத் தெளிவாக பார்க்கலாம். இங்குப் பேசப் பெற்று வரும் மொழிகளை எடுத்துக் கொண்டாலும் சரி; இங்குள்ள நாகரிகப் பண்பாட்டு நிலைகளை எடுத்துக்கொண்டாலும் சரி, அல்லது இங்குள்ள கலைகள், கல்வி நிலைகள், அரசியல் பொருளியல் கூறுகள் ஆகியவற்றுள் எதனை எடுத்துக்கொண்டாலும் சரி, அவை அத்தனையுள்ளும் திட்டுத் திட்டான இவ்விரண்டு திரவிட, ஆரிய இன மெய்ம்மக் கூறுகள் இழையோடுவதை வெளிப்படையாகக் காணலாம். இவை காலப் போக்கில் ஒன்றினோடொன்று அல்லது ஒன்றினுள் ஒன்று அல்லது ஒன்றுபோல் ஒன்று கலந்து ஊடாடுவதாகத் தெரிந்தாலும், எத்தனைக் காலத்திற்குப் பின்னும், இவ்விரண்டு தன்மைகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துத் தேர்ந்து கொள்ளும்படியாகவே, இவற்றின் அடிப்படைகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. எனவே, எத்துணைதான் தேசியப் பூச்சுகளை இவற்றின் மேல் பூசினாலும், அல்லது இவையிரண்டையும் ஒட்ட வைப்பதற்கான பற்றவைப்புகளைச் செய்தாலும் இவையிரண்டும் அகத்தும் புறத்தும் ஒட்டாமலே வேறுபட்டுத்தான் காட்சியளிக்கும் தன்மையுடையன.

ஏனெனில், இவையிரண்டும் நேர் எதிரான தன்மைகள் உடையன. ஒன்றையொன்று அழித்துத் தன்னுள் அடக்கும் வலிமை சான்றன. அந்த வகையில் இங்குள்ள திரவிட இன மரபுத் தன்மைகள் ஆரிய இனமரபுத் தன்மைகளால் காலச் சூழலில் வலிமை குறைக்கப்பட்டன; பதவி யதிகாரங்களால் சிதைக்கப்பட்டன. இந்தச் சிதைவே பின் வந்த ஆரிய இனமரபுக் கொள்கைக்கு வலிவாக அமைந்துவிட முடியாதெனினும், தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவுக்கு விடுதலை தந்து அதனைக் குடியரசு நாடாக ஆக்கி விட்டுச் செல்லும் வேளையில், வெள்ளைக்காரர்கள் அதன் இறைமை முழுவதையும் ஆரிய இனத்தவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந் நிலை அவர்களின் இனமரபை இன்னும் ஒருபடி வலிமைப்படுத்திக் கொள்ளும்படியான வாய்ப்பை அவர்களுக்குத் தந்துவிட்டது. இதன் வழி, அவர்களின் மேலாளுமை மிக்கேர்ங்கி, பழந் திரவிட இனமரபு நிலைகள் அனைத்தும் சிறிது சிறிதாகச் தக்கப் பெற்றும் வலுக் குறைக்கப் பெற்றும், உருமாற்றப் பெற்றும் தாழ்த்தப் பெற்றும், வரலாற்று அடிநிலைகள் திரிக்கப் பெற்றும், இன்று இந்தியாவே ஆரிய நாடு என்னும் வகையில் வெளி உலகத்தவர்களுக்குப் பறைசாற்றப்படும் அளவில் பொய்களையும், புரட்டுகளையும் புனைருட்டுகளையும் கருவிகளாகக் கொண்டு, நிலைகள் தலைகீழாக்கப்பட்டு விட்டன. இந்நிலை அவர்களுக்குத் தேசியம் பேசுவது எளிதாகி விட்டது. இந்தியத் தேசியம் என்பது ஏதேர், அரசியல் படிநிலை போலும், பொருளியல் நாகரிக முதிர்ச்சி போலும் திட்டமிட்டுப் பேசிக் காட்டப் பெறுகிறது. வெளியுலகத்தவர்களும் இவர்களின் கரவான பேச்சையும், ஒரு மிகப் பெரும் தேசிய இனத்தையும் வழிவழியாய் மிக்கூர்ந்து வரும் அதன் கலை, கல்வி, பண்பாட்டு நலன்களைக் கட்டழிக்கும் கொடுஞ்செயலையும் வெளிப்படையாக அறிந்துகொள்ள வாய்ப்பின்றி, இத் தேசியம் பேசும் திருடர்களின் திருகுதாள உரை மயக்குகளில், இங்கு நடப்பனவெல்லாம். ஏதோ உயர்ந்த தேசிய இன முன்னேற்ற முயற்சிகளே என்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை தகர்த்தெறியப்பட வேண்டும். அதற்கு இத் திரவிட இன வழிமுறையினர்தாம் பெருமுயற்சி செய்யவேண்டும்.

இம் முயற்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள், இத்திரவிட இனத்திலேயே பிறந்து, இவ்வின நலன்களையே உண்டு கொழுத்து, இங்குள்ளவர்களுக்கே பகைவர்களாகவும் காட்டிக் கொடுப்பான்களாகவும் மாறித் தேசியம் பேசி, வடநாட்டுத் திருடர்களின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் சில்லறைத் திருடர்களே. இவர்களைத்தாம் நாம் முதலில் இனங் கண்டு கொள்ள வேண்டும். கடந்த கால இன நல முன்னேற்ற முயற்சிகளும், நாட்டு விடுதலை முனைப்புகளும் சாணேறி முழஞ்சறுக்கும் வீணான வெற்று ஆரவாரக் கூத்துகளாகவே போயின. பெரியார் ஈ.வே. இரா. அவர்களின் பின்பற்றிகளும் தங்கள் பெயர் முத்திரைகளை மாற்றிக் கொள்ளவில்லையானாலும் அவற்றிலுள்ள சொலவகங்களை மாற்றிக் கொண்டனர். அவர்களினின்று வெளியேறிய முன்னேற்றங்களோ, திசைமாறித் தங்கள் கட்சிக் கப்பல்களை வலித்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் திரவிட இன மரபை நிலைநாட்ட விரும்பும் எஞ்சிய தமிழர்கள் என்ன செய்வது? இந்தியத் தேசிய நீரோட்டத்தில் நீத்திக் கொண்டுள்ள அரசியல் கொள்ளைக்காரர்களை இனங்கண்டு, அவர்களின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிந்து, அவர்களின் கைகளைப் பிடித்து வெளியே இழுத்துவிடுவதே முதலில் செய்ய வேண்டுவது. இத்தியத் தேசியமும், அதற்கப்பால் உலகத் தேசியமும் பேசப் புறப்பட்டிருக்கும் மக்கள் கட்சியினர், இந்திரா பேராயத்தார், அர்சு பேராயத்தார் முதலிய அனைத்திந்தியக் கட்சி ‘அமுக்கர்’களையும் வரும் சட்டமன்ற் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தல் வேண்டும். தென்னாட்டு அரசியலில் இவர்களின் பங்கு இங்குள்ள திரவிட இனமரபுக் கட்சிகளிடம் குட்டை குழப்புவதும் குழிகள் பறிப்பதுமே!

- தென்மொழி, சுவடி : 16, ஒலை : 9, 1980

மதமெனும் பெயரால் நடைபெறும் பொதுத் தொல்லைகளை அரசு தடுத்து நிறுத்துதல் வேண்டும்

நாம் வாழும் இவ்விந்திய நாடு வறுமை மிகுந்த நாடு; அத்துடன் அறியாமை நிறைந்த நாடு. ஆனால் மக்கள் பெருக்கமுடைய நாடு. நாட்டு மக்களில் எண்பது விழுக்காட்டினர் வறுமை மிக்க ஏழையராகவும், தொண்ணூறு விழுக்காட்டினர் அறியாமை நிரம்பிய மூடநம்பிக்கைகள் மிகுந்தவர்களாகவும் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும். எனவேதான், இங்குப் பணம் படைத்தவர்களும் மதச் செருக்கர்களுமே பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றியும் சுரண்டியும் அடிமைகளாக்கியும், இதனை ஒரு கொடுமைமிக்க நாடாக ஆக்கி வருகின்றனர். அறியாமையும் ஏழைமையும் மிகுந்த நாட்டிற்குக் குடியரசுரிமை கிடைத்தது, செல்வக் கொள்ளையர்களுக்கும், மதக் கொள்ளையர்களுக்குமே வாய்ப்பாக அமைந்தது. அவ்விரு வகையினரும் மக்களை நசுக்கிப் பிழிந்து, அவர்களின் உழைப்பைப் பெற்றுத் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், அவர்களை மத மூட நம்பிக்கைகளில் வீழ்த்தி அறியாமையினின்று மீள முடியாதவர்களாக அழுத்தி வைக்கவும் முடிகிறது. இவ்விரு நிலையினரே பதவிகளைக் கைப்பற்றவும் அதிகாரங்களைப் பெறவும் வாய்ப்புகள் அமைகின்றன. இவர்களுக்குத் துணைபோகும்படி இங்குள்ள சட்ட அமைப்புகளும், காவல்துறைக் கண்காணிப்புகளும் கலைத்துறை வாய்ப்புகளும் அரண்களாக அமைந்துள்ளதை எவரும் மறுத்தல் இயலாது. எனவே தான் இங்குத் தொழில்கள் வளர்வதில்லை. வேளாண்மைச் செழிப்பு ஏற்படுவதில்லை; பொதுமை மலர்வதில்லை; பொதுவுடைமை நாற்று விடுவதில்லை. இவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளிய வல்லாண்மையையும், மத ஆளுமைகளையும் ஒழித்தாலொழிய அண்மை எதிர்காலத்தில் இங்குத் தோன்றி வளரும் மறுமலர்ச்சி நிலைகள், தலைதூக்கிச் செழிப்பது அருமையிலும் அருமை!

அறியாமையும் ஏழைமையும் மக்களை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்லும் இரண்டு கீழ்நிலைக் கோட்பாடுகள், பண்டைய அரசர்களாட்சிக் காலங்களில் இவ்விரு கோட்பாடுகளும் மக்களில் ஒரு பகுதியினரிடையே தேவை யென்றே கட்டிக் காக்கப்பெற்றன. ஏனெனில், அவர்கள் இவ்விரு அழிவுக் கூறுகளினின்றும் விடுபட்டு மேம்பாடும் வலிமையும் பெறுவார்களானால், தங்கள் மன்னர் மரபாட்சிக்கு அழிவுநேரும் என்பது அவர்கள் அச்சம். எனவே இவை அரசர்க்குரிய கோட்பாடுகளாக, சூழ்ச்சி மிகுந்த செல்வர்களாலும் மத வல்லாண்மை மிக்க புரோகித க் குருமார்களாலும் அறிவுறுத்தப்பெற்றுச், சாணக்கியம், மாக்கிய வல்லியம் முதலிய பொருள்நூல்களிலும், சுக்கிரநீதி, மனுநீதி முதலிய அறநூல்களிலும் வலியுறுத்தப் பெற்றன. இன்றுள்ள இந்திய அரசமைப்பும் மேற்கண்ட நூல்களுக்குப் பெரும்பாலும் மாறுபடாதவாறு வகுக்கப் பெற்றுள்ளதாலேயே, இந்நாட்டில் செல்வர்களுக்கும் மதவாளுளமைக்காரர்களுக்கும் இவ்வளவு கொடிய ஆளுமையும் அதிகாரங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நாடு உண்மையிலேயே முன்னேறி, மக்கள் சமநிலையும் நிகரமையும் பொதுவுடைமையும் எய்தி, மேம்பட்ட அரசியல், பொருளியல், குமுகாயவியல் ஆளுமை இங்கேற்பட வேண்டுமானால், செல்வர்களுக்குக் கையோக்கம் தருவதும், மதவாளுமைக்காரர்களுக்கு நடைத் தாராளம் ஏற்படுத்துவதுமான இப்பொழுதுள்ள அரசியல் திருடர்களினதும், குமுகாயக் கொள்ளையர்களினதுமான போலிக் குடியரசு ஆளுமை அறவே ஒழிக்கப்படல் வேண்டும். அதுவரை, தப்பித்தவறிப் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நாம் அனுப்பிவைக்கும் நல்லவர்கள் சிலரால், சிற்சில வேளைகளில், பற்பல கட்டுத் திட்டங்களையும் எதிர்ப்புகளையும் மீறிக் கொணரப் பெறும் சட்டதிட்டங்களும், நடைமுறைத் திருத்தங்களும் செயலற்ற வெறும் ஊமைச் சட்டங்களாகவும் நடைமுறைக்குதவாத நொண்டித் திட்டங்களாகவுமே போகும் என்பதை, அரசியல் குமுகாய மாற்றங்களை விரும்பும் சிற்சில நல்லவுள்ளங்கள் உறுதியாகக் கருதிக் கொள்ளுமாக

இனி, தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, திரவிடராட்சி யென்றும், தமிழராட்சியென்றும் சிற்சிலரால் கடந்த காலங்களிலும் இக்காலும் அமைக்கப்பெற்றதும், பெற்றுவருவதுமான ஆட்சியும் அதே வகையில் செல்வர்கள் சாய்கால் உடையதும், மதங்களின் மேய்ப்பர்களால் ஆட்டிவைக்கப் பெற்றதும் பெறுவதுமான ஆட்சியே என்று கூறாம லிருப்பதற்கில்லை. எத்துணைப் பகுத்தறிவு வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஏழையர்மேல் இரக்கமுடையவர்களாக இருந்தாலும் முதலாளியத்திற்கும், மதங்களுக்கும் அஞ்சி, இவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும், திட்டங்களையும் சட்டங்களையும் கைநெகிழ்த்தே வந்துள்ளனர்; வருகின்றனர். சிற்றூர்ப்புறங்களில் வாழும் ஏழைமக்களைக் கொள்ளையடித்துப் பட்டணத்தில் உள்ளவர்களுக்கு ஒர் ஆரவாரமான வாழ்வுவாழக் கற்றுக் கொடுக்கும் சூதாட்டமே இன்றுள்ள அரசியலாகும். அதேபோல், அறியாமை மிகுந்த ஏழைமக்களை ஏமாற்றிப் பணம்பறித்து நகர்ப்புறங்களில் வேடிக்கைகளும் விழாக்களும் நடத்துவதே இன்றுள்ள மதக்கோட்பாடாகும். ஒருநாள் வரும் விளக்கணி(தீபாவளி) விழாவில், மதம் என்னும் பெயரால் புகைக்கப் பெறும் விலைமதிப்பற்ற எரிபொருள்களின் பொருளியல் மதிப்பு எவ்வளவு? வெடி மருந்துகளின் அளவு எவ்வளவு? அவற்றை நாட்டுக் காவல்நிலைக்கும், பிற உள்நாட்டு ஆக்கத்திற்கும் ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவ் விழாவுக்கு ஏன் தடைபோட அஞ்சுகிறது அரசு? தேவையெனில், எண்ணெய் முழுக்கும், தின்பண்டத் தீனிகளும், புத்தாடைப் புனைவுகளுமே நாட்டு நலம் கருதா அக் கொண்டாட்டக் கொடும்பர்களுக்கும் குறும்பர்களுக்கும் போதாவா? வெடிகள், பொறிப் புகைச்சல்கள் ஒரு கேடா? அவை இருந்துதான் ஆக வேண்டுமா? எந்த மடயன் எந்த ஆராய்ச்சியால் இத்தகைய வீண் ஆரவாரப் பொருளியல் கேடான விழா வேண்டுமென்று அரசுக்குச் சொன்னான்? இவ்வாரவார விழாவால் ஏற்படும் பொருள் கேடுகள் எவ்வளவு? எத்தனைக் கல்லெடை வெடிமருந்துகள்! எத்தனைக் கல்லெடைத் தாள்கள்! இரும்புகள்! மரங்கள்! வண்ணங்கள்! எத்துணை அழிவுகள்? எத்துணைப் பெருந் தொல்லைகள்! அமைதிக் கேடுகள்! எத்துணை வேலை வினைக்கேடுகள்! செல்வச்செருக்கர்கள் கொளுத்தும், அல்லது வெடிக்கும். ஆயிரக்கணக்கான உருபா மதிப்புடைய சுடர்ப்புகைகளுக்கும் வெடிகளுக்கும் ஆசைகொண்டு உள்ளம் ஏங்கும் ஏழைமக்களுக்கு எத்துணை மனச்சலிப்பு ஏற்படும்? அம் மனவேக்கம் கொண்ட குழந்தைகளை நிறைவுசெய்யும் பொருட்டு, அவற்றின் ஏழைப்பெற்றோர்கள் படும்பாடு எத்துணைப் பெரிது! கொடியது! மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எத்துணை இரைச்சல் கேடுகள்! ஏத அழிவுகள்! சேத இழப்புகள்! ஏன் இந்த மூளைகெட்ட முண்ட அரசியலாளர்களுக்கு இது. விளங்கவில்லை? அல்லது, விளங்கினாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த ஏன் துணிவில்லை ? அடுத்த முறை முதலாளியர்களினதும், சங்கராச்சாரிக் கூட்டக் குளுவான்களினதுமான ஆதரவு கிடைக்காது என்கின்ற அச்சந்தானே! நாட்டுமக்கள் நலங்கருதாமல் அவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுடுகாட்டுப் பதவி எதற்கு? அதற்கு ஏன் ஆளுமைக் கட்டிலில் போய் அமரவேண்டும்? ‘செயற்கரிய செய்வார் பெரியர்’ என்று திருவள்ளுவர் எழுதியது உந்து வண்டிகளில் பொறிப்பதற்குத்தானோ ? அல்லது பெரியார் நூற்றாண்டு கொண்டாடுவதற்குதானோ?

இனி, நளிகார்த்திகை மாதம் தொடங்கினால் போதும், ஐயப்பன் பெயரைச் சொல்லிக்கொண்டு, திருடர்களும், கொடியர்களும், கொள்ளையர்களும், அரம்பர்களும் ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. ஒலிபெருக்கிக்கான ஒழுங்குமுறைகள் நடைமுறையிலிருந்தும், காலை 4.30 மணிக்கே எழுந்து, ஊரே அலறும்படி ஒரேபடியான பாடல்களை 40, 45 நாட்கள் திருப்பித் திருப்பி வைப்பதால், அண்டையயலில் உள்ள பொதுவுணர்வாளர்களுக்கு எத்துணைத் தொல்லை! அக்காலம் அரையாண்டுத் தேர்வுக் காலமாகையால் அதிகாலையில் எழுந்து படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இவற்றால் எத்துணை இடையூறு! இடர்ப்பாடு! ஐயப்பா, ஐயப்பா என்று ஒலிபெருக்கி அலறுவதால் பத்திமை வளருமா? இறையருள் கிட்டுமா? அல்லது அவ்வாறு கத்திக்கமறும் அந்தக் கொண்டாட்டக் கூத்தாடிகளுக்குத்தான் நன்மை கிடைக்குமா? இவற்றுக்கெல்லாம் இறைவன் ஏமாறி இரங்கி அருள் தருவான் என்றால், அந்த இறைவனும் இவர்களைப் போல் ஒரு கொள்ளையனாகவும், கொடியவனாகவுமன்றோ இருத்தல் வேண்டும்? இஃது என்ன மூடநம்பிக்கை! ‘ஒலிபெருக்கியைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து, இசைத்தட்டுகளைப் போடுவதுதான் ஐயப்பன் திருவிழாவா? பூசையா? நோன்பா? மலைச்செலவுகளுக்கும் ‘மகா விளக்கு’ பார்ப்பதற்கும் அணியப்படுத்தும் ஊக்கவுரைகளா? அவ் வாறானால் அந்நோன்பு நோற்காதவர்களுக்கும், அம் 'மகாவிளக்கு’ பார்க்கப் போகாதவர்களுக்கும் அவ் வொலிபெருக்கி இரைச்சல் எதற்கு? இல்லை, அரசு, நாட்டிலுள்ள அனைவருமே, நாடு நகரங்களை வெறுமையாக்கி விட்டு விட்டு அங்குப் போய், அந்த ‘மகாவிளக்கு’க் காட்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறதா?

இனி, இதுபோலவே, சிலை(மார்கழி) மாதத்தில் மிகுகாலைப் பொழுதில் அலறுகின்ற ஒலிபெருக்கிகளில் ஒரிரு திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் மட்டும் வைத்துவிட்டு, அவற்றைத் தொடர்ந்து, இழிவும் இழுப்பும் நிறைந்த கழிகாமத் திரைப்படக் குக்கலிசைகள் ஆரவாரிப்பது எந்த அமைச்சருடைய காதுகளையும் புண்படுத்தவில்லையா? அல்லது அவர்கள் நகருக்கு வெளியே தன்னந் தனியிடத்தில் அளாவிக்கட்டிய வளமனைகளில், வளிநிலைப்பாட்டு அறைகளில் படுத்துத் துரங்கும் வாய்ப்புகளால் கொண்ட புறக்கணிப்பா? ஏன் இந்நிலைகளைத் தடைசெய்யக் கூடாது? ஏற்கனவே வீட்டுக்கு வீடு, அண்டையயல் வீட்டுக்காரர்கள் விரும்பியோ விரும்பாமலோ, அலறியடிக்கும் வானொலிப் பெட்டிகளின் இரைச்சலுடன், தெருவுக்குத் தெரு கதறியெடுக்கும் ஒலிபெருக்கிகளின் வல்லிரைச்சலும் சேர்ந்து நகரத்தையே நரகலாக்கிக் கொண்டிருக்க வில்லையா? இதை ஏன் அரசு கவனிக்கவில்லை? மதக்கொழுப்பர்களின் மனம் புண்படக் கூடாது என்பதாலா? அல்லது அவர்களே மதமூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டதாலா? இத் தவிர்க்க வியலாக் கொடுமைச் சூழல்களால் அமைதியான வாழ்க்கை வாழ விரும்பும் பிறருடைய மனங்களும் செவிகளும் புண்படாவா?

இவை தவிர ஆடவை, கடக (ஆனி, ஆடி) மாதங்களில் தெருக்கள் தோறும், சந்து பொந்துகளிலும் மூலை முடுக்குகளிலும், நெடுஞ்சாலை ஓரங்களின் இடையிலும் முளைத்துக் கிடக்கும் மாரியம்மன்களுக்கு, மாறி மாறி விழாவெடுக்கும் நோக்கத்துடன், கொட்டு முழக்குடன் கூடிய ஒலிபெருக்கி இரைச்சல்களுக்கு அளவுண்டா? இன்னும் அவ்விழாக்களை நடத்தும் குடிகாரர்களும், குடிகேடர்களும், கொடிய அரம்பர்களும், மூடநம்பிக்கை மூஞ்சூறுகளும், அண்டையிலும் அயலிலும் உள்ள குடியிருப்புக்காரர்களிடம் கும்பல் கும்பலாகப் போய் ஐந்து, பத்தென்றும், தெருக்களில் வருவோர் போவோரிடமும், சாலைகளில் வ்ரும் போகு ர்டிகளில் உள்ளோரிடமும், உண்டியல்களை ஏந்தியும் கொள்ளையடித்தும், வழிப்பறித்தும், இடர்ப்படுத் ல்களை என்னென்று சொல்வது? இதைவிட எப்படி எழுதிக்காட்டுவது? ஏன் இது பொதுத் தொல்லை (Public Nuisance) ஆகாது? இது பற்றி அமைச்சர்களுக்கு ஏன் சூடு சுரணை இல்லை? இவற்றைக் கேட்பதால் பூணுரல் திருமேனிகள் பொங்கியெழும் என்பதனால் வரும் ஊமைத்தனமா? அல்லது தமிழின மூடக் களஞ்சியங்களின் எதிர்ப்பு வரும் என்னும் தொடை நடுங்கித்தனமா? சிங்கப்பூர் முதலிய முன்னேறிய நாகரிகங் கொண்ட நாடுகளிலும்கூட, அண்டை வீட்டாருக்குக் கேட்கும்படி வானொலியை வைத்தாலும் குற்றம், அதற்குத் தண்டம், என்பது இங்குள்ள ஆட்சியாளர் அனைவரும் இல்லையாயினும், ஒரு சிலராகிலும் அறிந்திருக்க மாட்டார்களா ? இனி, அங்கு ஒலிபெருக்கிகளே தெருவில் கட்டக்கூடாது என்பது சட்டமன்றோ? அப்படி யெல்லாம் பொதுவொழுங்கைச் சரி செய்வதற்கு இங்கு என்ன நொட்டை அல்லது நோப்பாலம் வந்தது? இவர்கள் மேல் நாடுகளும் கீழ்நாடுகளும் போவது எதற்கு? வேடிக்கை பார்க்கவா? அல்லது இரவுநேரக் காட்சிகளைக் கண்டு நாக்கைச் சப்புவதற்கா? ஏன், அங்குள்ள சீர்திருத்தங்களை, பொதுவொழுங்கு நடைமுறைகளை. இங்கும் கொண்டுவரக் கூடாது? இதில் என்ன தயக்கம் அல்லது மயக்கம்.

இனி, கலைமகள்விழா வென்றும், கருவிப்பூசை யென்றும், இங்குள்ள அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் ஆண்டுதோறும் நடைபெறும் பார்ப்பனியர்களினதும், பார்ப்பன அடிமைகளினதும் தொல்லை கொஞ்சமா? அவற்றைப் பகுத்தறிவு பேசும் இவர்கள் ஏன் பின்பற்றக் கூடாது? தமிழ் எழுத்துகளில் மட்டுந்தானா - தமிழ் திறந்தமடம் என்பதாலும் - அது ஏதிலி போட்ட பிள்ளை என்பதாலும் கைவைத்துச் சிதைப்பது பகுத்தறிவு என்று கருதிக்கொண்டார்கள்!

இவை தவிர வேறு எத்தனை எத்தனை மத மூடச் செயல்கள் இங்கு நடைபெறுகின்றன! அவற்றால் அரசுக்கு எத்தனை இழப்பு! பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்ற பொதுவான செயல்களை மட்டும் ஊக்கி, அவரவர் விருப்பத்திற்கு அவரவர் வீடுகளிலோ அறைகளிலோ கவனித்துக்கொள்ள வேண்டிய மதச் செயல்களுக்கும், பொது இடையூறுகளுக்கும் ஏன் தடையிடக் கூடாது?

இவ்வேதுங்கெட்ட இந்திய நாட்டில், இங்குள்ள மக்கள் பெருக்கம் போலவே மதப் பெருக்கமும் ஏற்பட்டு வருகிறதே! இந்து மதம் என்ற இழவெடுத்த பார்ப்பன மதத்தில் மட்டும், சிவனியம்(சைவம்), காளியம் (சாக்தம்), மாலியம்(வைணவம்), முருகியம்(கௌமாரம்), ஆனைமுகவம் (காணபத்தியம்), கதிரவம்(சௌரம்) என்னும் வைதீகச் சார்பு மதங்களுக்கும், கபிலம், கணாதம், பதஞ்சலியம், அட்சபாதம், வியாசம், சைமினியம் ஆகிய வேதாந்த மதங்களும்; பெளத்தம், வைரவம்; காளாமுகம், சூனியவாதம், உலோகாயுதம், சமணம் ஆகிய புறமதங்களும்; வாமம், மாவிரதம் முதலிய அகச் சமயங்களும்; தார்க்கியம், மீமாம்சம், ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலிய சிறு சிறு கலவை மதங்களும், ஆக முப்பத்தாறு மதங்களும்; இன்னும் கிறித்துவ மதத்தில் உரோமன் கத்தோலிக்கம், உலூதரம், புரோட்டசுடன்டியம், உரோமானியம், பாப்டிசம், வேசுலியனம், வொயிட்பீல்டி சுடியம், கால்வனிசுட்டம், ஆண்டினோமியனியம், பிரசு பிடேரியனியம், யூனிடேரியனியம், இலண்டனியம், இசுகாட்டியம், சுவீடன் பர்கீயனியம், பிரிமேசனியம், கிரேக்கியம், கீனியாயம் முதலிய பத்தொன்பது சிறு மதப் பிரிவுகளும்; இசுலாம் மதத்தில் சியாம், சுன்னி என்னும் இரு மதப் பிரிவுகளும், இவையன்றிப் பாரசிகம், கான்பூசியம், சாயியம், இராமகிருட்டிணம், அரே இராம அரே கிருட்டிணம், துவைதம், அத்துவைதம், துவைதாத்வைதம், மத்துவம் முதலிய எண்ணிறந்த மதங்களும் தோன்றி நடைமுறையிலுள்ளனவும், தோன்றிக்கொண்டே இருப்பனவும், இந்நாட்டு மக்களின் மூளைகளையும் நெஞ்சங்களையும் என்றென்றும் மேம்பாடடையச் செய்யாமல் அழுத்தி வைத்துக்கொண்டுள்ள நிலை எத்துணை இரங்கத்தக்கது! இனி, இவையல்லாமல் சிற்றூர்ப்புறங்களில் உள்ள காட்டேரி, கருப்பன், வீரபத்திரன், மதுரைவீரன் முதலிய சிறு குலதெய்வங்கள் எத்தனை! எத்தனை! இவற்றுக்கெல்லாம் செய்யப்பெறும் வேடிக்கைகள் எத்தனை! விழாக்கள் எத்தனை ! இவற்றா லெல்லாம் பொது மக்கள் அனைவர்க்கும் எத்தனை யெத்தனைத் தொல்லைகள்! இடையூறுகள்! இடர்ப்பாடுகள்!

ஒருபுறம் அறிவியல் வளர்ச்சி போதவில்லை என்று வாய் கிழியக் கத்துவது! கூச்சலிடுவது! மறுபுறம் மக்களை இன்னும் காட்டு விலங்காண்டித்தனத்திலேயே நிலைபெறும்படி அழுத்தி வைத்திருப்பது! எத்தனை முரண்பாடான போக்கு இந்த நாட்டில் போடப்பெறும் முன்னேற்றத் திட்டங்கள் அனைத்தையும் மூழ்கடிக்கும் வகையில் இங்குள்ள மதப் பெருக்கங்களை - மூட நம்பிக்கைகளை மக்களிடம் பெருக்குவதை எவர் மறுக்க முடியும்! காஞ்சி காமகோடியார் போலும் சங்கராச்சாரியார்கள், அறிவு வளர்ந்தாலும் வளராவிட்டாலும், மக்களிடம் உள்ள மத மூடநம்பிக்கைகள் போய்விடக் கூடாதே என்னும் கவலையினாலும் கருத்தினாலும், எவ்வளவுக்ககெவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பன அடிமைக் கும்பல்களை வைத்துக்கொண்டு, அங்கிங்கெனாதபடி எங்கும் (வண்டியில் போனால் இடையிலுள்ள சிறுசிறு ஊர்கள் விட்டுவிடும் என்பதால்) நடந்து போய், மதத்தின் நச்சு வித்துகளை ஊன்றி வருவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இங்குள்ள மகாலிங்கச் செல்வர்களும், முத்தையச் செல்வர்களும் அன்றாடம் வாய்க்கரிசி போட்டு வழிநடத்தி வருகின்றனர். இவ்வாறு மதத்திற்கு முதலாளிகள் காப்பாகவும், முதலாளிகளுக்கு மதங்கள் காப்பாகவும் இருக்கும் இந்நிலையில் மக்கள் முன்னேற்றம் எப்படி நடைபெறும்?

இறைமை என்பது மதங்களின் மூட நம்பிக்கைகளால் வளர்வதன்று. மாந்த இனத்தின் மீமிசை மனவியற் கோட்பாடு அது. அவ்வுணர்வு முழுவதையும் பார்ப்பனச் சார்புடையதாக்கி, முதலாளிய வாழ்வுக்கு அடித்தளமாக்கி, மக்களைச் சேறாக்கிக் குழப்பும் இந்நிலைகளிலிருந்து அவர்கள் மீட்கப்பெற்றே ஆகல் வேண்டும். அரசியலறம் எவ்வாறு தூய்மையானதோ அவ்வாறே இறைமையறமும் தூய்மையானது. ஆனால், அவ்வரசியலை எப்படி நூற்றுக்கணக்கான கட்சிகள் பங்குபோட்டுக்காலில் மிதித்துக் கொண்டு தங்கள் நலமே குறிக்கோளாக மக்களை அலைக்கழிக்கின்றனவோ, அப்படியே இறையறத்தையும் ஆயிரக் கணக்கான மதங்கள் கூறுறபோட்டுக்கொண்டு, மக்கள் மனங்களையும் மூளைகளையும், இருட்புழைகளாகவும், நாற்றச்சேறாகவும் மாற்றிவருகின்றன. தூய்மையான இறையுணர்வு ஆரவாரமற்றது! மூட நம்பிக்கையற்றது! வானம் போலும் களங்கமில்லாதது! கதிரவன் போலும் இருண்மை நீங்கியது! மழைநீர் போலும் தெளிவானது! அதுதான் அறம்! அதுதான் இன்பம்! அதுதான் பொதுமை! அதுதான் பொதுவுடைமை! அஃது, இவ்வுலகில் பிறந்த எல்லார்க்கும் உணவு, உடை, உறையுள் சமமாகக் கிடைக்க வேண்டும் என்னும் கோட்பாட்டினது! இதுதான் தமிழ்ச் சான்றோர் கொள்கை! எனவே, இதற்கு மாறான அனைத்து மத ஆரவாரங்களையும், மூட நம்பிக்கைகளையும் நேர்மையான அரசு துணிந்து எதிர்த்தல், தடுத்து நிறுத்தல் வேண்டும்! அஞ்சுதல் கூடாது! ஆட்சிக்காக, பதவிக்காகக் கொள்கையன்று கொள்கைக்காகவே பதவி ஆட்சி! முயற்சி வெல்க!

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்!- மணிமேகலை : 25-228-31- தென்மொழி, சுவடி : 17. ஓலை : 4, 1980

பார்ப்பன எழுச்சியும் திராவிடர் கழகத்தின் முனைப்பும் விரும்புகின்ற விளைவுகளும்!

திராவிடர் கழகத்திற்குச் சில வலிவான கொள்கைகள் உண்டு. திராவிட இனக் காப்பு, சாதி, மத, மூட நம்பிக்கை முதலியன ஒழிப்பு, தமிழின நலமீட்பு, தமிழ்நாடு விடுவிப்பு முதலியவை அவை. இவற்றுள் தமிழ்நாட்டு விடுதலைக் கொள்கையை அக் கழகம் பெரியாருக்குப் பின் கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. மற்ற கொள்கைகளில் அது முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இது பின்பற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது பெரும்பாலும் இந்து மதம் என்னும் வேதமதக் கருத்துகளை முன் வைத்ததான ஒரு கொள்கை மற்றபடி, அறிவியலுக்கு மிகப் பொருந்துவதான மெய்ப்பொருள் கொள்கையில் அவர்கள் அதிகம். கருத்துச் செலுத்துவதில்லை என்பதைத் தவிர, வேறு எதிரான கொள்கையை அது கொண்டிருப்பதாகச் சொல்வதற்கில்லை. அது தவிர, தமிழ்மொழி நலன் பற்றிய கூறுகளிலும் அவர்கள் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட ஓரிரு கருத்து வேறுபாடுகளைத் தவிர, நமக்கும் அக்கட்சியினர்க்கும் பெருத்த மாறுபாடுகள் வேறு. இருப்பனவாக நாம் கருதுவதற்கில்லை. எனவே இப்பொழுதுள்ள கால நிலையில், தமிழர்கள் தங்களுக்குள் மாறுபாடான கருத்துக்ள் எவை யெவை என்பதை ஆராய்ந்து அலசிப் பார்த்துக் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதைவிட, நாங்கள் ஒன்றுபடுவதற்குரிய அடிப்படைக் கருத்துகள் எவை என்பதைப் பற்றி எண்ணிப்பார்ப்பது இனநலத்துக் குகந்ததாக இருக்கும் என்று நாம் கருதுவதால், அதையொட்டிய சில எண்ணங்களை இங்குத் தெரிவிக்க முன்வந்துள்ளோம்.பெரியாருக்குப் பின், அவர் அமைத்துக் கொடுத்த கட்சியமைப்பில் சிற்சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தாலும், பெரியாரின் திராவிடர் கழகத்தில் பெரும்பங்கைப் பற்றிக் கொண்டிருப்பதான, திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட திராவிடர் கழகமே தாய்க்கழகமாகவும், மக்களிடையில் அவ்வகையில் மிகுந்த சாய்கால் உள்ளதாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்து, செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, இற்றை நிலையில் பொதுவாக, திராவிடர் கழகம் என்பது திரு. கி. வீரமணி அவர்களைப் பொதுச் செயலாளராகக் கொண்ட கழகத்தையே குறிக்கும். அவ்வாறு குறித்துக் கொண்டுமிருக்கின்றது.

இனி, திராவிடர் கழகம் தந்தை பெரியார் காலத்திலும் சரி, திரு. விரமணி அவர்களின் காலத்திலும் சரி, மக்கள் நலம் கருதும் செயல்களில், குறிப்பாகத் தமிழினத்திற்குப் பாடுபடும் செயல்களில் அதுவே இங்குள்ள பிற அரசியல், பொதுநலக் கட்சிகளை விட மிகுந்த அளவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கட்சியாக இருந்தது; இன்னும் இருக்கிறது. ஒரு கட்சி, தன் கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கின்ற மாநாடுகளும், போராட்டங்களுமே, அதன் செயற்பாட்டைப் போதுமான அளவில் மக்கள் உணர்ந்துகொள்ளத் துணைசெய்வன ஆகும். அவ்வாறு பார்க்கையில், திராவிடர் கழகம் பெரியார் காலத்திலேயே நடத்தி வந்துள்ள தன் கட்சி மாநாடுகளைத் தவிர அது நடத்திய பகுத்தறிவு மாநாடு, பெண்கள் நலவுரிமை மாநாடு, இந்தி யெதிர்ப்பு மாநாடு, திருக்குறள் மாநாடு, சாதி யொழிப்பு மாநாடு, வகுப்படிப்படையில் பங்கு ஒதுக்கீட்டு மாநாடு (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மாநாடு) முதலிய பொது நலக் குறிக்கோளைக் கொண்ட மாநாடுகளும் வீரமணி காலத்தில் நடைபெறும் இந்தியெதிர்ப்பு மாநாடு, பார்ப்பன வல்லாண்மை (ஆதிக்க) எதிர்ப்பு மாநாடு, அண்மையில் குடந்தையில் நடந்த ‘பார்ப்பன வல்லாண்மை ஒழிப்பு மாநாடு’ முதலிய மாநாடுகளும், அக்கழகக் கொள்கையில் உறுதிப்பாட்டை நன்கு விளக்குவன ஆகும். இன்னும் பெரியார் நடத்திய போராட்டங்களும், வீரமணி நடத்தி வரும் போராட்டங்களும் இந்தி யெதிர்ப்புப் போராட்டம், ‘பிராமணர்’ சொல்லழிப்புப் போராட்டம், கருவறைப் போராட்டம் முதலியன) முழுவதும் தமிழின நலங் கருதியவையே ஆகும். இவ்வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும், பதவி நலமும் அரசியல் ஊதியமும் கருதிப் போகையில், திராவிடர் கழகம் ஒன்றே முழுக்க முழுக்க தமிழின நலமும், தமிழர் இன இழிவு நீக்கமும் நாடிப் போகின்ற தமிழர் இயக்கமாக நமக்குத் தென்படுகின்றது. எனவே, திரு. வீரமணி அவர்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு நம் முழு ஆதரவையும் தரவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த வகையிலேயே, அண்மையில் குடந்தை நகரில் திராவிடர் கழகம் நடத்திய, பார்ப்பனர் வல்லாண்மை ஒழிப்பு மாநாட்டில் நாம் கலந்துகொண்டு, அதைத் தொடக்கி வைக்கவும் நேரிட்டது என்க.

இனி, இக்கால் ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களின் இன நல வுரிமைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் இடங் கொடுக்காத வகையில், நாடு முழுவதும் போராடி வருவது, மிகுந்த வருத்தத்துடனும், அக்கறையுடனும் கவனிக்க வேண்டியதும் உடனடியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுமான நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. பார்ப்பனர் எழுச்சி நம்மையெல்லாம் விழிப்புக் கொள்ளச் செய்திருக்கின்றது. நூற்றுக்கு மூன்று அல்லது ஐந்து பேராக உள்ள அவர்கள், பிற திரவிட இனத்தவரின் அனைத்து நலன்களையும் முற்றூட்டாகவும் முழுவுரிமையாகவும் கைப்பற்றி நுகர்ந்து வருவது அடாவடித்தனமும், அறக் கொடுமையானதும் ஆகும். புராண, இதிகாச கால முதல் இன்று வரை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும், பார்ப்பனர்கள் வாழ்வு நலந்தரும் அனைத்துத் துறைகளிலும் வல்லாளுமை(ஆதிக்கம்) செய்து வரும் கொடுமையும் துன்பமும், அதன்கீழ் உழன்று, இழிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் கிடக்கின்ற திரவிட இன மக்களுக்குத்தான் தெரியுமே தவிர, பிற இனத்தார்க்கோ, வெளிநாட்டவருக்கோ இம்மியும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையே தொடர்ந்து நீடிக்கப் பெற வேண்டும் என்பதே பார்ப்பனர்களின் கோரிக்கை என்பது, அண்மையில் நடந்து வரும் குசராத்து, இராசத்தான் முதலிய வட மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களால் தெரிய வருகிறது. இனி, தென்னாட்டிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவை போன்ற போரிாட்டங்களைத் தொடங்குவதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுளம் முயற்சியும் முனைப்பும் செய்வதாகத் தெரியவும் வருகிறது.

கடந்த காலங்களில் பார்ப்பனர்களால் தமிழர்களுக்கும் பிற திரவிட இனத்தவர்க்கும் நேர்ந்த துன்பங்களும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமன்று. கல்வி, தொழில், கலை, பண்பாடு, சட்டம், ஆளுமை, பதவி, அதிகாரம் முதலிய ஆட்சித் தொடர்புத் துறைகளிலும், செய்தித்தாள்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி முதலிய பொதுமக்கள் தொடர்புத்துறைகளிலும் பார்ப்பனர்களின் மேலாளுமையே பல நூறு மடங்கு மேலோங்கியுள்ளது. இதன் உண்மையை அவ்வத்துறைகளின் புள்ளி விளத்தங்களைப் பார்த்தால் நன்கு விளங்கும். பார்ப்பனரைத் தவிர மற்ற இனங்களுக்கோ, அஃதாவது சூத்திரர்களுக்கோ ‘பார்ப்பனனைப் பணிந்து அவனுக்குப் பணிவிடை செய்து மகிழ்ச்சியூட்டுவதே மேலான அறம் (தர்மம்) மற்றவையெல்லாம் பயனில்லாதவை’ (மனு10 : 123) என்றும், சூத்திரன் ‘சுவர்க்க’த்திற்காவது, பிழைப்பிற்காவது பார்ப்பனனையே தொழ வேண்டும்’ (மனு 10 122) என்றும் கூறப் பெற்ற குமுகாய வரைமுறைகளின் படியே இன்னும் நடந்துவர வேண்டும் என்று ஆரியப் பார்ப்பனர்கள் விரும்புவது எத்துணை கொடுமையானது! சட்டம் என்னும் அரசியல் நெறிமுறையும், அறம் (தர்மம்) என்னும் குமுகாய நெறிமுறையும் பார்ப்பனர் நலத்துக்கே சார்பாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். ‘இந்த தேசத்தில் பிறந்த பிராமணர்களிடமிருந்துதான் மற்றவர்கள் எல்லா ‘தர்மத்’தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மனுநூலின் கொள்கையாக (மனு 2 : 20) இருப்பதற்கு இந்நாட்டு அமைச்சர்களின் எவரேனும் அமைவு சொல்ல முடியுமா? அல்லது அவ்வாறு இல்லை என்று மறுத்துத் தருக்கமிட முடியுமா?

இந்த நிலையில் கீழே வீழ்த்தப் பெற்ற திராவிட இன மக்கள், நீண்ட நெடுங்காலத் துயிலினின்று, இன்று, ஒருவாறு விழித்துக் கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு, தென்னாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், தந்தை பெரியாரின் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத் தொண்டாலும், வடநாட்டில் பேரறிஞர் பர். அம்பேத்கார் போன்றோரின் அரு முயற்சியாலுமே ஏற்பட்டு, இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது என்பதை எவரும் மறுறத்துவிட முடியாது. இனி, இவ் வெழுச்சி யுணர்வு இந்தியா முழுவதுமே இக்கால், கிளர்ந்து பரவி வருகின்ற தெனினும், தென்னாட்டில் அது தீ வடிவில் பரவிப் புயலாக வருகின்ற தென்றே சொல்லுதல் வேண்டும். பெரியார் இல்லாத காலத்திலும், அவரால் ஊட்டப் பெற்ற இவ்வினைவுணர்வு, இவ்வாறு கொழுந்து விட்டுப் படர்ந்து பற்றி எரிவது, இன்றுள்ள திராவிடர் கழகத்தின் தொடர்ந்த செயற்பாடுகளாலும், அதன் பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணி அவர்களாலுமே என்பது சிறிதும் மிகையான கூற்றாக இருக்க வியலாது. தமிழர் நலம் கருதி, அவ்வப் பொழுது நம் இனவுணர்வு கிளர்ந்தெழும் வண்ணம் அவர் ஆற்றி வரும் அன்றாடச் சொற்பொழிவுகளும், எழுதி வரும் எழுத்துகளுமே நம் கூற்றுக்குச் சான்று பகரும். தமிழ்நாட்டில் பெரியாரை விட வேறு எவரும், மக்களுக்கு அறிவூட்டும் முயற்சியில் இவ்வளவு மிகுதியாகப் பேசியதும் இல்லை; எழுதியதும் இல்லை; அதற்கடுத்தபடி அன்பர் வீரமணி அவர்கள் பெரியாரின் அப்பணியை அதே வகையில் தொடர்ந்து வருவது நமக்குப் பெரிதும் மகிழ்ச்சியூட்டுவதாகும்.

எவ்வாறேனும், இந்நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவேனும், தமிழினம் முழு மீட்சி பெற்றாக வேண்டும். மொழியியல் வரலாற்றில் தாய்த் தமிழைத் தொடர்ந்து, பிற திரவிட மொழிகள் எவ்வாறு படிப்படியாய்த் தோன்றி விரிவடைந்து பெருகினவோ, அவ்வாறே, தமிழினத்தில் ஏற்படப்போகும் இவ்வின மீட்சியுணர்வு வளர்ச்சியுற்று, பிற திரவிட இனங்களையும் மிக விரைவில் பற்றுவது மிகவும் உறுதியும், நடைபெறப் போகும் உண்மையுமாகும். அப் பெரும்புரட்சிக்குப் புறநிலையில், நண்பர் திரு. வீரமணி அவர்களின் உழைப்பு மிகவும் உறுதுணையாக நிற்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த உண்மையைக் கண்ணுக்கு கண்ணாக நாம் குடந்தையில் இரண்டு நாட்களிலும் நடைபெற்ற மாநாடுகளில் காண நேர்ந்தது. அதன் பின்னர்தான் அவரின் இந்த இன மீட்சிப் போராட்டத்திற்கு தோளுக்குத் தோளாக நின்று ஊக்கமளிப்பது என்றும் நாம் உறுதி பூண்டோம்.

மொழி, நிலையில் நம் பாதை, திராவிடர் கழகத்தினர்க்குச் சற்று மாறுபட்டதுதான் எனினும், மொழியை அடியொட்டிய இனநலத்திலும், நாட்டு வரலாற்று மீட்சியிலும் நமக்கும் அவர்களுக்கும் நூற்றுக்கு நூறு ஒப்பமுடிந்த இணைவான பாதையாகவே உள்ளது. எப்படியும், பார்ப்பனியம் கடந்த மூவாயிரமாண்டுகளாகக் கால் வைத்துப் பரப்பிக் கொண்டுள்ள கொடுநிலையை இத்தலைமுறையிலேயே அகற்றியாகல் வேண்டும். அதன் ஆணிவேரையும் பக்க சல்லி வேரையும் வேரடி மண்ணையும் அடியோடு கல்லி எடுத்து எரித்துச் சாம்பலாக்கியே ஆகல் வேண்டும். அதன் முடிவு தமிழினத்தின் அழிவாகவும் இருக்கலாம்; அல்லது தன் கூரிய நச்சுப் பற்களால் இத்திரவிட இனத்தைக் குறிப்பாகத் தமிழினத்தைக் கவ்விப் பிடித்தபடி, அனைத்து நிலையிலும் அதன் வாழ்வியல் நலக் குருதியை உறிஞ்சி உயிர் குடிக்கும் பார்ப்பனியக் கொடும் பாம்பைச் சாகடிப்பதாகவும் இருக்கலாம். இவ்வரும் பெரும் பணிக்கு மற்ற தலைவர்களெல்லாம் காலெடுத்து வைக்கவும் அஞ்சும் போராட்டக் களத்தில், யார்ப் பரணி பாடிக் கொண்டு இறங்கித் தம்மையே ஈகம் செய்து கொண்டுள்ளார் திருவாளர் கி. வீரமணி அவர்கள். அவர்களின் தமிழின மீட்புக்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாம் தோள் தருவோம் என்று உறுதி கூறுகிறோம். அத்துடன் இறுதியாகத் தமிழினத்திற்கு நாம் சொல்லிக் கொள்வது, இது வீரமணி தமிழ் இனத்திற்குக் கிடைத்த ஒரு வயிரமணி! அவர் முயற்சி வெல்க!

- தென்மொழி, சுவடி : 17. ஓலை 9, 1981‘இந்து’ மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும்!

மக்களை அடையாளம் காட்டுவதற்குரிய குறிப்புப் பெயர்களுள் மதமும் சாதியும், நாட்டுக்கு அடுத்தபடி மிகவும் முகாமை பெற்றனவாகக் கருதப் பெறுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ, ஒருவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது அண்மைக் காலம் வரை கடைப்பிடிக்கப் பெற்று வந்த அல்லது வரும் ஒரு நடைமுறை. இம் முறை, மக்கள் மதங்களுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்ட காலந்தொட்டு இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவனை அவன் பிறந்த நாடு, பெற்றோர்கள், வைத்துக்கொண்ட பெயர், உயரம், எடை, உறுப்பு அமைவுகள் முதலியவற்றால் மட்டுமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதாக இருந்தாலும், அவன் கடைப்பிடித்தொழுகுகின்ற மதத்தையும், அவன் பிறந்துள்ள குலம் அல்லது சாதியையும் அடையாளம் கூறியாக வேண்டும் என்பது, மத ஆளுமைக்காரர்கள் அல்லது மதத் தலைவர்கள் ஏற்படுத்திவைத்த ஒரு தேவையற்ற மூடக் கொள்கையாகும். குழு இன ஆட்சிக்காலத்தில், தங்கள் இனத்தவர்களே வலுப்பெற வேண்டும், பிற இனத்தவர்கள் நம்மிடையில் ஊடுருவிவிடக் கூடாது என்ற நினைவுடன், குல, இன, அடையாளங்களும், மத ஆட்சிக்காலத்தில் தங்கள் மதத்தவர்களே பெருகி வளரவேண்டும். பிற மதத்தவர்கள் வலிவு பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்துடன் மத அடையாளங்களும் கடைப்பிடிக்கப் பெற்றிருக்க வேண்டும். எப்படியும் இவ் வழக்கம் ஒரு காட்டு விலங்காண்டிக்(Barbarian) கால வழக்கமே!

இக்காலம் அறிவியல் வளர்ந்து செழித்துவரும் காலம் மக்கள் மூடக்கொள்கைகள் தவிர்த்துப் பகுத்தறிவைக் கடைப்பிடித்துவரும் காலம்; குடியரசு மலர்ந்து வளர்ச்சிபெற்று வரும் காலம். ஆயினும், இக்காலத்திலும் ஒருவனை அடையாளம் காட்டுவதற்குப் பழைய முறைப்படியே சாதியும் மதமும் தேவைப்படுவனவாக இருப்பது, மத வெறியர்கள் இன்னும் ஆண்டு கொண்டிருப்பதாலும், ஆட்சி வலுப்பெற்றிருப்பதாலுமே ஆகும். இந்தியாவைப் பொறுத்த மட்டில், இங்குள்ளவர்கள் எத்தனை அறிவியலுணர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இயல்பாகவே உள்ள மதவெறி காரணமாக, இத்தகைய மூடநம்பிக்கைகள் எளிதில் கைவிடப்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. மதவுணர்ச்சியும் சாதியுணர்ச்சியும் இந்திய மத வெறியர்களின் அரத்த நாளங்களிலிருந்து அவ்வளவு எளிதில் சுண்டிப் போய்விடும் என்று எதிர்பாக்க முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இந்திய அரசியல் தலைவர்கள் மதவெறியர்களாகத்தான் இருப்பார்கள்; அல்லது மதவெறி பிடித்த மதக்குருமார்களின் ஆட்டுவிப்புக்கு ஆடுகின்ற அறிவியல் தெளிவற்ற மரப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இங்குள்ள ‘இந்துமதம்’ அவர்கள் மூளைத்திரளைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றது. இந்து மதமும், அதற்கடிப்படையான வேதங்கள், மிருதிகளும் (மனுநூல் போன்றவை) என்ன சொல்கின்றனவோ அவை தாம், ‘தர்மம்’ (நெறி, கடைப்பிடி) (மனு 12-196 என்றும், வேதமறிந்த ‘பிராமணன்’ சொல்லுவதைத் தவிர, வேதமறியாத பத்தாயிரம் பேர் கூடிச் சொன்னாலும் அது ‘தர்மம்’ ஆகாது (மனு 12-13) என்றும், வழிவழியாகவே, அவர்களுக்கு மதவெறிசான்ற மூடநம்பிக்கை கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனவே, இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசியல், அறவியல், பொருளியல், குமுகாயவியல், கல்வி, பண்பாடு, ஒழுக்கம், பொழுதுபோக்கு முதலிய அனைத்துத் துறைகளிலும் ‘மதம்’ குறிப்பாக ‘இந்துமதம்’ தன் வலிந்த, கொடிய, நச்சுத்தன்மை கொண்ட சிறகுகளைப் போர்த்திக் கொண்டிருப்பதை எவ்வளவு பெரிய அறிவாளியாலும் மறுத்துவிட முடியாது.இனி, ‘இந்துமதம்’ என்பது என்ன? அது முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனரின் நன்மைக்காகவே, ஆரியப் பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்டு, இன்றுவரை அவர்களின் வாழ்க்கைக்காக, அவர்களின் நலன்களுக்காக, மற்ற, பிற இன மக்களைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஆட்டிப் படைத்துக் கொண்டும், கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிக் கொண்டும் வரும், கொடிய மூடநம்பிக்கை கொண்ட ஒர் அமைப்பாகும். இந்த அமைப்பு ஏற்கெனவே இங்கிருந்த மக்களமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் அழித்து உருமாற்றித் தன் அகன்ற நச்சுவாய்க்குள் இட்டு விழுங்கிச் செரித்து, அவற்றின் குருதியாலும் சாரங்களாலும் தன் உருவத்தைப் புதிய புதிய கவர்ச்சியாலும், காரணங்களாலும், மெருகேற்றி மிகமிக வலிவும் பொலிவும் பெற்று விளங்குகிறது. இந்துமதத்தின் கால்கள் வேதங்களில் ஊன்றியிருக்கின்றன. இதன் கைகள் மனு முதலிய பல மிருதிகளாக நெறி நூல்களாக விரிந்திருக்கின்றன. இதன் உடல் பல நூறு புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் பூதம் போல் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதன் நச்சுப் பற்கள் இந்தியச் சட்டங்களாகவும், மதவியல் கோட்பாடுகளாகவும் உருப் பெற்றிருக்கின்றன. இதன் ஆர்ப்பாட்ட ஒலங்கள் நூற்றுக் கணக்கான விழா வேடிக்கைகளாக மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. இதன் நச்சுத் தன்மை பொருந்திய கவர்ச்சியான பார்வையால் மக்கள் தம் மூளைத் திரட்சிகள் உருகி நீற்றுப் போயிருக்கின்றன. எனவே, அவர்கள் இந்த இந்து சமயப் பிடியிலிருந்து தங்களை அவ்வளவு எளிதில் விடுவித்துக் கொள்ளுவதென்பது இயலாததொன்றாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இப்பிடிக்குள் அடங்காத அரசர்கள் இல்லை; இதன் கொடுமைக்கு உட்படாத மக்கள் இல்லை; இதன் கவர்ச்சி அழகில் மயங்காத மக்களினத் தலைவர்கள் இல்லை; அறிவாளிகள், வழிகாட்டிகள், பாடலாசிரியர்கள் ஒருவரும் இல்லை. இதன் பிடியிலிருந்து வெளியேறிய அத்தனைப் பேரும் அவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும், மக்களினத் தலைவர்களாக இருந்தாலும், வீரர்களாக இருந்தாலும், அவர்கள் ‘நாத்திகர்கள்’, ‘அரக்கர்கள்’, ‘கொடியவர்கள்’, மக்கட்பகைவர்கள் என்றுதாம் கூறப்பெற்று, அக்கால் உள்ள மதத்தலைவர்களால் அங்கேயே அழிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட இந்துமதத்தை ஒழுக்கங்கெட்ட, குடிவெறி நிறைந்த மூடர்களைத் தவிர வேறு எவரும் ‘அர்த்த’முள்ளது என்று சொல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் சொல்வார்களானால் அதற்கு ஏதோ ‘அர்த்தம்’ இருக்க வேண்டும்! எனவே அந்த மதத்தைப் போற்றுபவர்களைப் பற்றியோ அதுதான் உயர்ந்தது, சிறந்தது, மெய்யானது, உயிரானது, அழிவற்றது(அநாதி), தோற்றமும் முடிவுமற்றது(ஆதியந்தம் இல்லாதது) என்று சொல்பவர்களைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்கள், ஒன்றால், அந்த மதத்தால் தொடர்ந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வரும் பார்ப்பனர்களாக இருத்தல் வேண்டும்; அன்றால், அத்தகைய பார்ப்பனர்களால் தாங்களும் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுவரும் ‘வீடண’, ‘சுக்கரீவ', ‘பிரகலாத’, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமண்ய', ‘சிவஞான கண்ணதாச', ‘அடியார்’களாக இருத்தல் வேண்டும். இந்த இருவகையான ஏமாற்றுக் கூட்டத்தினரைத் தவிர, இந்துமதம் புனிதமானது, உயர்ந்தது, சிறந்தது, ’அர்த்த’முள்ளது என்று அறிவுள்ள, தன்மானமுள்ள வேறு எவருமே சொல்ல மாட்டார்கள்.

மேலும் இவ் விருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக் காலத்தில், எந்த ஒரு தனிப்பட்ட மாந்தனுக்கும் மதம் என்னும் ஓர் இனவுறுப்பு தேவையே இல்லை. அதுவும் மிகமிக அருவருப்பானதும், உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும்விட மிகவும் இழிவானதுமான ‘இந்து’ மதமும் அது பெற்ற சாதியமைப்பு என்னும் கேடான ஒரு தீய அமைப்பும், இங்குள்ள எவர்க்கும் தேவையற்றவையே! இவை இல்லாமற் போனால் வாழ்க்கையில் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும் என்று அறிவியலடிப்படையில் எவரேனும் கூறி, மெய்ப்பித்துக் காட்ட முடியுமா? மதம் என்னும் அமைப்பு இல்லாவிட்டால் மக்களுக்கு எதில் இழப்பு ஏற்பட்டு விடும்? எந்த உறுப்பு ஓட்டையாகி விடும்? அப்படியே, எவருக்காகிலும் எந்த உறுப்பாவது ஓட்டையாகும் என்றால், அந்த ஓட்டையை அடைத்துக்கொள்ள வேண்டிய அவர்கள் வேண்டுமானால் அதைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் வீட்டிலோ, அல்லது பெட்டியிலோ, அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதானே! அவர்களின் ஓட்டைக்காக, அதை ஏன் மற்றவர்கள் தலையிலும் சுமத்த வேண்டும்? பேய்க் கனவு கண்டு அலறுகிறவன், எதற்கு ஊரிலுள்ள அத்தனைப் பேரையும் தன் வீட்டில் வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவேண்டும்? இனி, அலறுகிறவன் ஆட்சியில் உள்ளவனாக இருந்தால் அதற்குச் சட்டமல்லவா போடுவான்? அஃது எப்படி அறிவுடைமையும், தனிமாந்தவுரிமைக்கு ஊறு விளைவிக்காதது ஆகும்.

இனி, மாந்த இனத்தின் மேம்பாடான மீமிசை வளர்ச்சிக்கும், இறைமையுணர்ச்சிக்கும் மதம் இன்றியமையாதது என்பதாக மதத் தொடர்பான அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். மீமிசை மாந்த வளர்ச்சி யென்பது இறைமை யுணர்வு ஒன்றுதான் என்று நினைத்துவிடக் கூடாது. பொது மாந்தவுணர்வு இறைமை யுணர்வின் பால்பட்டது. இறைவன் என்பவன் இப்புடவியில் எங்கேயோ ஓரிடத்தில் இருந்துகொண்டு, மாந்தவுயிர்கள் உட்பட எல்லா உயிரினங்கள், உயிரல்லினங்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கின்றான் என்பது அறிவியலுக்கோ மெய்யறிவியலுக்கோசுடப் பொருந்துவதன்று. இவ்வுலகும், இவ்வுலகஞ்சார்ந்த புடவியின் அனைத்துப் பொருள்களும் வலிந்த ஒரு பேராற்றலால் இயக்கப்பெறுகின்றது என்பது ஓர் உண்மையே! ஆனால் அப் பேராற்றல் மாந்த வடிவமோ வேறெந்த வடிவமோ கொண்டதாக இருத்தல் முடியாது. அதன் வேறுபல கூறுகளும் தன்மைகளும் அனைவர்க்குமே பொதுவான ஆற்றலுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டனவாகவே இருத்தல் வேண்டும். அப்பேராற்றல் இங்குள்ள மதம் என்னும் ஒரு மாந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றது என்பது மெய்யான கோட்பாடு அன்று. மதம் என்பது முற்றிலும் மாந்த அமைப்பே. மாந்தன் என்பவன் உலகியலுணர்வு சான்றவனே. எனவே, அவன் வகுக்கும் எத்தகைய நெறிமுறைகளானாலும் அவை அனைத்து மக்களுக்குமே பொதுவானவையாக அமைந்துவிட முடியாது. மதமும் இத்தகைய ஒர் அமைப்பே ஆதலின் அஃது எல்லாருக்கும் பொதுவான நயன்மை(நீதி) வழங்கிவிடும் என்று கூறிவிட முடியாது. ஒரு மதம் இன்னொரு மத்திற்கு முரண்பாடுள்ளதாகவும், அதனால் உலகில் பல மதங்கள் இருப்பதுமே நம் கொள்கையை வலுப்படுத்துவதற்குரிய போதுமான சான்றாகும். இவற்றில், ‘எங்கள் மதந்தான் உயர்ந்தது; சிறந்தது; கடவுளால் உண்டாக்கப்பட்டது; ‘அநாதி’ அதில்தான் நெய் வடிகிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கையான ஓர் ஏமாற்றுக் கொள்கையே ஆகும். எனவே, இந்துமதம் என்பதும் ஒரு பெரிய ஏமாற்று அமைப்பே இதனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே பெரிதும் நன்மை உண்டாகி வருகிறது. மற்றவர்க்கெல்லாம் தீமையே உண்டாகி வருகிறது. இது முற்றிலும் மெய். இதைப் பொய் யென்று எவரும் மெய்ப்பிக்க முடியாது.

இந்து மதம் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மிகக் கேடான மதம், இழிவான மதம். இதில்தான் பலகோடிக் கடவுள்கள் கற்பிக்கப் பெற்றிருக்கின்றன. அவையும் பல குடும்பம் குடும்பமாக வளர்ந்து, ஒரு பெரும் கடவுள் குமுகாயமாகவே ஆட்சி செய்து வருகின்றன. இந்துமதத்தில் எந்த வகையான மாந்த உயர்ச்சிக்கும் ஒர் எள்ளின் மூக்களவும் வழியில்லை. இது மக்கள் பொதுவான அமைப்பும் இல்லை. மக்களைப் பல நூறு சாதிகளாக வேறு பிரித்து, அவர்களுக்குள் இழிவு தாழ்வு கற்பிக்கின்ற ‘வருணாசிரம’க் கொள்கையே இந்துமதத்திற்கு அடிப்படையானது. இதன் வலிந்த ஆட்சியாலேயே இங்குள்ள மக்கள் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும், நலிக்கப்பட்டும், மெலிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், பழிக்கப்பட்டும், இழிக்கப்பட்டும் எவ்வகை மன, அறிவு, வாழ்வு, உரிமை முன்னேற்றமுமின்றிக் கிடக்கின்றனர். இத்தனைக்கும் இக்கொடுமைகளை இவர்கள் உணர்ந்திருந்தும், இதனின்று வெளியேறி விடுபட முடியாமல் இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை, இம் மதக் கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது; மூச்சு முட்டிச் சாக வேண்டியுள்ளது. இந்துமதக் கோட்பாடுகளை நம்பியே முன்னேற்றம் ஏதுமின்றி அழிந்துபோன குடும்பங்கள் பல. அழிந்து கொண்டிருக்கின்ற குடும்பங்களும் பற்பல.

இன்னும் தெளிவாகச் சொன்னால், உலகில் மிகவும் மூத்ததும், முதலானதும், நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் சிறந்திருந்ததுமான தமிழினம், இந்துமதத்தாலேயே நலிவுற்றது; மெலிவுற்றது; அடிமையுற்றது; மிடிமையுற்றது. பல ஆயிரக் கணக்கான பிரிவுகளாகப் பிரிந்து வலிவு இன்றிப் போனது. இறுதியில் தன் அனைத்து நலன்களையும் இழந்து இன்று அழியும் நிலையில் உள்ளது. இந்த நிலைகளை, இங்கிருந்த பெரியாரைப் போலும் இனத் தலைவர்களால் இன்று ஒருவாறு உணர்ந்துகொண்டு, மீண்டும் தன் இழிவு அழிவுகளைத் தடுத்து நிறுத்திக்கொள்ளும் போக்குடன் ஒருவாறு விழிப்புற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழர்கள் மேலும் இந்துக்களாய் இருக்கத் தேவையில்லை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்தும் அக் காட்டுவிலங்காண்டிக் கொள்கைகளையே தன் சிறப்பு நிலைகளாகக் கொண்ட அந்த இந்து மதத்தினின்று வெளியேறி உரிமைக் காற்றை நுகர்தல் வேண்டும். முன்னேற்றப் பெருவெளியில் வீறுநடை யிடுதல் வேண்டும்.

மதம் மக்களுக்கு நஞ்சு! அஃது ஒரு பேரிருள்; மடமைகளின் கலவைச்சேறு! அது மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையற்ற ஒன்று. அன்பு, அறிவு, பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, பொதுமை, அறவுணர்வு போன்ற எந்த ஒரு நல்லியல்புக்கும் ஓர் இம்மியளவுகூட அஃது உத்வுவதில்லை. அதிலும் இந்துமதம் மிகக் கொடிய ஒரு நச்சுப்பாம்பு! மடமை நிரம்பிய புதைசேற்றுக் குழி! இதனால் கடிக்கப்படாமல், புதையுண்டு போகாமல் தப்பித்துக்கொள்ளத் தமிழர்கள் உடனடியாக, ஒட்டு மொத்தமாக, இதனைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவரை தமிழர்கட்கிடையில் உள்ள மூட நம்பிக்கைகளும், இழிவுகளும் சாதிக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. இந்து மதப் பூசல்களும் சாதிக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாத வரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சத்திலிருந்தும், மேலாளுமையிலிருந்தும் தமிழர்கள் மீளவே முடியாது. அவ்வாறு மீளாதவரை தமிழினமும் தமிழ்மொழியும் தலைதுாக்க முடியாது. தமிழ்நாடும் தன்னிறைவு பெறமுடியாது.

எனவே, தமிழர்கள் தம் முன்னேற்றத்தின் முதல் முயற்சியாக இந்துமதப் பிடியை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். இந்து மதத்திலிருந்து வெளியேறினால் எந்த மத்தில் சேருவது என்ற கேள்வியே இப்பொழுது வேண்டா! எந்த மதமும் மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே கட்டப்படுவது. அங்கு உரிமையுணர்வுக்கு வழியில்லை. அறிவு வளர்ச்சிக்கு விடிவில்லை. மதம் ஒர் ஒருமையுணர்வு வளர்ச்சிக்குத் தேவையென்று சிலர் கருதினால், இந்துமதத்தினின்று வெளியேறிய தமிழர்கள், தங்களைத் ‘தமிழமதம்’ ‘திருவள்ளுவ மதம்’ என்று கட்டுக்குள் வேண்டுமானால் அடைவித்துக் கொள்ளலாம். ஆனால் அவையுங்கூட ஒரு காலத்தில் இந்துமதம் போல் வளர்ந்துவிடா என்பதற்கு உறுதி எதுவும் இல்லை. எனவே, இப்பொழுதைக்குத் தமிழர்கள் தங்கள் இன அழிவினின்று விடுபட வேண்டியிருப்பதால் எந்த மதமும் நமக்குத் தேவையில்லை என்பதுவே நம் கொள்கையாகும். எதுவும் நமக்காகத்தானே யொழிய, எதற்காகவும் நாம் என்று இருப்பது ஒர் அடிமை மனப்பான்மையே! எனவே, ‘இந்துமதம்’ ஒழிக. நாம் ‘இந்து’ என்னும் அடிமைப்பெயர் ஒழிக!

- தென்மொழி, சுவடி : 17, ஒலை: 10, 1981

மதம் பெரிதில்லை; மக்கள் நலமே பெரிது!

நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு குலமக்கள், அண்மையில், அவர்களை அப்படி அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருப்பது இந்துமதமே என்று கண்டறிந்து அம்மதக் கட்சிகளிலிருந்து தங்களை உடைத்துக்கொண்டு, பொதுநிலைச் சமவாய்ப்புக் காற்றை நுகர்வதற்கென்று, வெளியேறிப் போகின்ற செய்தி பரவலாக வந்துகொண்டிருக்கின்றது. நெல்லையில் உள்ள மீனாட்சிபுரத்து மக்கள் இதைக் கடந்த பிப்பிரவரி மாதம் தொடங்கி வைத்த பெருமையைப் பெற்றுள்ளார்கள். அவர்களைத் தொடர்ந்து, இராமநாதபுரம், மதுரை, தஞ்சை, வடவார்க்காடு, புதுவை, செங்கழுநீர்ப்பட்டு ஆகிய தமிழ்நாட்டுப் பகுதிகளிலிருந்தும், குசராத்து, தில்லி, பெங்களூர் முதலிய பிற வடநிலப் பகுதிகளிலிருந்தும், தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்கள் இந்துமதத்தினின்று அணி அணியாக - நூறு நூறாக - ஆயிரம் ஆயிரமாக - வெளியேறிக் கொண்டு வருகின்றனர். இந்துமதத்தை விட்டு வெளியேறியவர்கள் வேறு எந்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர் அல்லது சேருகின்றனர் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்களும் மற்றவர்கள் போல் மக்களாக மதிக்கப்பட வேறு எந்த மதம் வாய்ப்பளிக்கின்றதோ, அதில் அவர்கள் சேரட்டும்; அல்லது சேராமல் போகட்டும். அஃது அவர்களைப் பொறுத்த செய்தி. கணவனின் கொடுமை தாளாது மணவிலக்குக் கோரும் ஒரு பெண், வேறு மணம் செய்துகொள்ளப் போகிறாளா அல்லது மணம் செய்யாமலேயே வாழப்போகிறாளா என்பது அவளைப் பொறுத்த செய்தி. அதில் தலையிட மணவிலக்குத் தரும் நடுவர் உள்பட வேறு யாருக்கும் உரிமையில்லை. இந்த வகையில் உணர்ந்தோ உணராமலோ, நாம் கடந்த மே மாதத் தென் மொழியில் எழுதிய, இந்து மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும் என்ற ஆசிரியவுரைக் கருத்தும் வேண்டுகோளும், காலத்தேவையால் நன்கு செயல்பெற்று வருகின்றன. இந்த வகையில், இவ்விந்துமதச் சரிவை நம்மினும் மேலாக வேறு எவரும் வரவேற்று மகிழ்ந்திருக்கவியலாது.

மீனாட்சிபுரத்திலும் அதையடுத்துப் பிற ஊர்களிலும் நிகழ்ந்த இவ்வித்துமத வெளியேற்றங்களைப் பற்றிப் பலரும் பலவகையான கருத்துகளையும் கற்பனைகளையும் அவ்வப்பொழுது, தங்கள் தங்கள் மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற வகையிலும், விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்த முறையிலும், கூட்டங்களில் உரைகளாகவும், செய்தித்தாள்களில் அறிக்கைகளாகவும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் மதப் பித்தங்களும், மூடக் கொள்கைகளும் நன்கு வெளிப்பட்டு வருகின்றன. சிலர் இந்த மதமாற்றத்தைக் கடுமையான சொற்களால் கண்டித்துள்ளனர். சிலர் இதற்கு இழிவான நோக்கங்களைக் கற்பித்துள்ளனர். சிலர் இம் மதமாற்றத்தினால் ஏற்படும் தீமை நன்மைகளைத் திறனாய்வு முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையில், மத அடியார்கள் பலருங் கூடி, மதம் மாறியவர்களின் புண்பட்ட நெஞ்சுகளில் பொதுமைப்புனுகைத் தடவியுள்ளனர். வேறு சிலர் அவ் வாழ்வறியா மாந்தர்களைத் தம் வாய்க்கு வந்தபடி சாடியுள்ளனர். இன்னுஞ்சிலர் மானங்கருதி மதவிலக்கீடு செய்த அவர்களை நோக்கி ‘அவர்கள் எங்கிருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களே’ என்று மனம்நோகப் பேசியுள்ளனர். இந் நிலையில், ஒரு சில நல்லவர்களே அவர்களின் இத்தகைய போக்கை வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அண்மையில் தவத்திரு. குன்றக்குடியடிகளார் ‘மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்’ என்று மாநில, நடுவண் அரசுகளைக் கேட்டுக் கொண்டிருப்பது பொருளற்றது; நன்றாக ஆராய்ந்து பாராதது. இந்து மதம் என்பது தமிழர் மதமன்று என்னும் வரலாற்று உண்மையை எண்ணிப் பாராதது. வேண்டுமானால் அவர்க்குத் துணிவிருக்குமானால், சாதி வேறுபாடற்ற தமிழர் மதத்தை அவர் வேறுபிரித்துக் காட்டி அதில் மதம் மாறியவர்களைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கலாம்.

பொதுவாக, மதம் என்பது நாமெல்லாம் விதந்து பேசுமளவிற்கு அத்துணை உயர்ந்ததன்று என்றாலும், மிக வலிந்த ஒன்று, பொது மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. ஒரு பெரிய நம்பிக்கை வலை. நாம் விரும்பாமலேயே வீழ்ந்து கிடக்கும் ஒரு படுசேற்றுப் பள்ளம். அதை ஒரு கடவுட்கட்சி என்றுங்கூட விளங்கிக் கொள்ளும்படி கூறலாம். இக்கால் உள்ள திரைப்படங்களுக்குள்ள கவர்ச்சியும் விளம்பர ஆரவாரங்களும் மதங்களுக்கு உண்டு. திரைப்படங்கள் மக்களமைப்பையே நஞ்சாக்கும் வகையில் வளர்ந்து சிறந்து வல்லமை பெற்றாலும், அவற்றை எப்படி ஒழித்துவிட முடியாதோ, அல்லது ஒழிப்பது எவ்வளவு கடினமோ, அப்படி மதங்களையும் ஒழித்துவிட முடியாது; அல்லது ஒழிப்பது அவ்வளவு கடினம். இன்னுஞ் சொன்னால், இக்காலத்து அரசியல் கட்சிகளைப் போன்றவையே மதங்களும், கட்சிகளை ஒழிக்க ஒழிக்க வேறொரு வடிவில் அவை வளர்ந்து கொண்டே வருவது போல், மதங்களும் ஒன்று ஒழிய அல்லது மறைய வேறொன்று தோன்றிக் கொண்டே வரும். இக்கால் புதுவிளம்பரங்கள் பெற்றுள்ள ஐயப்ப மதம், மூகாம்பிகை மதம் போன்ற புதுக் கடவுள் கட்சிகளை நோக்குகின்றவர்களுக்கு நாம் சொல்வதன் உண்மை விளங்கும்.

இத்தகைய மத அமைப்புகள்தாம் மக்களை முதன் முதலாக வேறு பிரித்தன. மத அமைப்புகளை ஒட்டியே சாதியமைப்புகள் வளர்ந்தன. அவையும் ஏற்கனவே மதங்களால் பிரிந்துகிடந்த மக்களை மேலும் வேறு பிரித்துப் பிளவுகளைப் பெரும் பள்ளங்களாக ஆக்கின. அவ்வாறு பிரிக்கப்பட்ட பல்வேறு மத, சாதிப் பிரிவுகளில் தங்களை உறுப்பாக்கிக் கொள்ளாத பல கோடி மக்கள் அந்தப் பிளவுகளிலும் பள்ளங்களிலுமே வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டனர். மக்கள் நம்பிக்கையின் மேலும், மடமைகளின் மீதும் கட்டப்பட்ட மதங்கள் என்னும் இச் செயற்கைப் போலி அமைப்புகள், வலிந்த செல்வமும் ஆளுமையும் உள்ளவர்களின் கைகளில் சிக்கியவுடன், அவை மேலும் வலிவடைந்து, சட்டங்களாகவும், அரசுகளாகவும் உருவெடுத்தன. இந்த வகையில் மதங்கள் இவ் வுலகையே கட்டியாளுகின்ற வல்லமை பெற்றன. அதன்பின் மக்களின் எந்தவொரு தேவையும், மாறுதலும், இம் மதங்களை யொட்டியே சிந்திக்கப் பெற்றன; செயல்படுத்தப்பட்டன. தொடக்கத்தில் ஒரு சில கற்பனைக் கடவுள்களுக்காக உண்டாக்கப் பெற்ற மதங்கள், இவ்வாறு வலுப்பெற வலுப்பெற, பின்னர், புதுப்புதுக் கடவுள்களையே படைத்து வெளி விற்பனைக்கு அனுப்பும் பட்டறைகளாக மாறின. ஓர் உருவாக்கத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் பல பண்டங்களை விற்பனை செய்வதற்குரிய விற்பனைக் கூடங்கள் பல ஏற்படுவதைப் போல, புதிது புதிதாக உருவாகி வெளிவந்த கடவுள் மதங்களுக்கும் மடங்கள் போலும் மத வாணிகக் கூடங்கள் உருவாயின. கட்சி அலுவலகங்களைப் போல், அவையும் சட்டதிட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்கின. அவ்வம் மதங்களின் பண, அதிகார, ஆட்சி வலிவுகளுக்கேற்ப, அச் சட்ட திட்டங்களும், நெறிமுறைகளுளம் மக்களைக் கட்டுப்படுத்தின; அவர்களைச் சிந்திக்க விடாமல் அறிவுப்போக்கிற்குத் தடையிட்டன. மன ஒருமையை வளரவிடாமல் மன வேறுபாடுகளை - தாழ்ச்சி உயர்ச்சிகளைக் கற்பித்தன், கடைப்பிடித்தன. மத வரலாற்று நூல்களில் இவற்றை நெடுகலும் பார்க்கலாம்.

இவ்வாறு வளர்ந்துவிட்ட உலக மதங்களுக்குள் இந்துமதம் என்பது, ஆரியப் பார்ப்பனர்களுக்காகவே வளர்த்துக் கொள்ளப்பட்ட, தூர் நிரம்பிய ஒரு மதமாகும். வேதமதம் என்னும் நச்சு விதையைச் சுற்றியுள்ள சதைப் பகுதியே இந்துமதம் ஆகும். இந்தச் சதைப் பகுதியை மூடியுள்ள தோல் மிகக் கவர்ச்சியுடைய வண்ணப் பூச்சுகள் கொண்டது; இவ்வண்ணப் பூச்சு ஒன்றினாலேயே மனம் மயங்கிப் போகும் படிக்காத ஏழைப் பொதுமக்கள் இந்நாட்டில் ஏராளம்! தோல் வண்ணத்தால் கவர்ச்சியுற்று, இதன் சதைப் பகுதியைச் சுவைப்பவர்களுக்கு ஏற்படும் மதிமயக்கமும், மதவெறியும் மிகுதி! அதன் இனிமையான இன்பவெறி நுகர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதென்பது அரிதினும் அரிது! ஆனால், அதையும் வேறு பிரித்துணர்ந்து, தன் ஆய்வறிவால், தான் யார், இவ்வுலகம் எது, தன் தோற்ற மாற்ற வாழ்வு வளர்ச்சிக்கு என்ன பொருள் - என்பவை பற்றியெல்லாம் பகுத்தறிவு வழியினும் மெய்யறிவு வழியினும் உய்த்துணர்ந்து கொண்டு, மேலே செல்பவர்கள்தாம் அவ்விந்து மதத்தின் நச்சுவிதையையும் அதன் தீய நோக்கங்களையும் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். இந்துமதத்தின் நச்சுவிதை அது போன்ற நச்சுத்தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே வாழ்வளிக்கக் கூடியது. மற்ற அனைத்து மாந்தப் பிரிவினரையும் வேரறுத்து, அடியோடு அழித்தொழிக்க வல்லது. அந்த மூலவிதை எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடியது. எந்த மண்ணிலும் வளர்ந்து செழிக்கும் திறம் சான்றது. அது வேரூன்றிய நிலத்தின் அண்டை அயலில் வளர்ந்து படரும் செடிகொடிகள் அனைத்தையும் தனக்கு எருவாக்கிக் கொள்ளும் வலிமை பெற்றது. அதனால்தான் அந்த வேதமத நச்சுச் செடி, முன்னரே இந் நிலத்தில் பற்றிப் படர்ந்து வளர்ந்து செழித்திருந்த புத்தம், சமணம், உலகாயதம், சாருவாகம், சாங்கியம் முதலிய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட மதங்களின் சாரங்களை யெல்லாம் முற்ற உறிஞ்சிக்கொண்டு, இந்துமதம் என்னும் பெயரில் இப்பொழுது வானளாவிச் செழித்து வளர்ந்துள்ளது. பொதுவாகவே ஆரியம் தன்னைச் சூழ்ந்த அனைத்துத் தனிநிலைச் செழிப்புகளை யெல்லாம் தன்வயமாக்கக் கூடியது. அந்த ஆரியத்தின் அப்பட்டமான நச்சுக்காடே இந்த இந்துமதம் மற்றபடி இந்துமதம் என்பது எவ்வகை மாந்த முன்னேற்றத்திற்கும் சிறிதும் பயன்படாது. மாந்த இனத்தையே கட்டழிக்க வல்ல இக் கொடிய மதம், அடித்து நொறுக்கப்பட வேண்டிய காட்டுவிலங்கு! சுட்டுப் பொசுக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக்காடு: துர்த்து மூடவேண்டிய ஓர் அறியாமை நச்சுப் பொய்கை: மக்களை முன்னேறவிடாமல் மடமைச் சேற்றில் புதைந்துபோகச் செய்கின்ற படுசேறு நிறைந்த ஒரு சாப்பள்ளத்தாக்கு இத் தன்மையுள்ள இந்துமதத்தினின்று வெளியேறுவதற்கு மிக்க தன்மான உணர்வும், வெட்டிச் சலுகைகளைத் துரவென்று காறித் துப்புகின்ற பற்றற்ற துணிவும், வாழ்க்கை என்பது இதுவென்று தேர்கின்ற மனவிளக்கமும் வேண்டும். அல்லது தங்களை வெளியேற்றிக் கொள்ளுகின்ற உள்முகத் தாக்கங்களாகிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

இக்கால், மீனாட்சிபுரங்களில் உருவாகி வரும் மன - மத - மாற்றங்கள், நாம் இரண்டாவதாகச் சொன்ன உள்முகத் தாக்கங்களாலேயே நிகழ்ந்துள்ளன என்பது, அம் மக்களின் வாய்மை) உரைகளாலேயே மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது. ‘பொருளாசையால் அன்று; பொருள் இல்லாமையாலும் அன்று, ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற நிலையால் நாங்கள் பட்ட கொடுமைகள், துன்பங்கள், இழிவுகள், தாழ்வுகள் - முதலியவற்றை இனியும் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்க முடியாது; எங்கள் தன்மான வுணர்வு அதற்கு இடங்கொடுக்கவில்லை’ என்று, அங்குச் சென்று, அவர்களின் மனவுணர்வுகளுடன் விளையாடிய அமைச்சர்கள், தலைவர்கள், மடத்(!)தலைவர்கள், இதழாசிரியர்கள், அதிகாரிகள் பொதுநிலைத் தொண்டர்கள் முதலிய அனைத்துப் பேர்களின் செவிகளிலும் மனங்களிலும் மண்டைக் கொழுப்புகளிலும் உறைக்குமாறு அறைந்து கூவி அழுது அரற்றிப் புலம்பியிருக்கின்றனர்.

அவர்கள் துணிந்துவிட்டனர்; நடைதொடங்கி விட்டனர்; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆடுமாடுகளைப் போல் அழுத்தி வைக்கப்பட்ட பள்ளம் படுகுழிகளிலிருந்து, கையூன்றி, மார்பால் வலித்து, கால்தூக்கி நின்று, சாதிவேறுபாடற்ற, மேடுபள்ளங்களற்ற, சமவெளிகளை நோக்கி, நிகரமை வாழ்வு மூச்சுக் காற்றை உள்வாங்கும், அங்காந்த நெஞ்சுடன், அகன்று விரிந்த கைகளுடன் எல்லாமாகிய ‘அல்லா'வை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர். அவர்களை நிறுத்துவது கடினம்! மிகமிகக் கடினம்! இனி, எவரும், எந்த ஓர் ஆற்றலும், எந்த இந்துமதக் கொம்பனும் - அவர்களைத் தடுத்து நிறுத்தமுடியாது!

மதம் மக்களைவிட உயர்ந்த அமைப்பன்று. மதம் மட்டுமன்று; எந்த ஒரு மக்கள் அமைப்பும் அம்மக்களைவிட உயர்ந்ததாகிவிட முடியாது. அவர்கள் அறிந்தோ அறியாமலோ அல்லது இன்றோ நேற்றோ அமைத்துக்கொண்ட, அல்லது அமைந்துவிட்ட ஒர் அமைப்பு - அது மக்கள் தொடர்புடையதாகட்டும் - அல்லது கடவுள் தொடர்புடையது என்று கருதப்படுவதுதான் ஆகட்டும்- அவர்களின் - அந்த மக்களின் - முன்னேற்றத்திற்கோ அல்லது வாழ்க்கை மகிழ்ச்சிக்கோ - தடையாக இருக்குமானால், அது தகர்த்துத் தள்ளப்பட வேண்டியதே! விலக்கி வீழ்த்தப்பட வேண்டியதே! அப்படிச் செய்யவியலாத பொழுது, அந்த அமைப்பினின்று விட்டு விலகுவதே மேலில்லையா? அதைத்தான் மீனாட்சிபுரங்களும், பிறவூர்களும் நமக்கு உணர்த்திக் கொண்டுள்ளன. அந்த உண்மையை உணர்ந்துகொள்ள முடியாத அல்லது அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள இயலாத நரம்புத் தளர்ச்சி கொண்ட காஞ்சிக் காமகோடிகளும், கூட்டிக் கொடுக்கும் ‘இதய’ங்களும், காட்டிக் கொடுக்கும் வீடணர்களுந்தாம் அந்த அருமையான முடிவுக்கு மாசு கற்பித்துப் பேசித் திரிவார்கள்!

இனி, இறுதியாக இந்துமதம் என்னும் அணிமணி தொங்கும் ஆரவாரப் பளிங்கு மாளிகையின் ஒர் இருண்ட மூலையில், பல்லியாய் - பூச்சியாய் - புல்லிய தேரையாய் ஒட்டிக் கிடந்த - இரக்கத்திற்குரிய அத் தாழ்த்தப்பட்ட உயிர்கள் - இடிந்து விழப்போகும் அம் மணிமண்டபத்தினின்று - வெளியேறிக் கொண்டுள்ளன! இனி, ஒரிரண்டு சலுகைகளின் பொருட்டு, இந்துமதம் என்னும் அம் மண்டப மூலை - முடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம்? இவ்வாழ்க்கை முடிவதற்குள் அவ் விழிவு சேர்ந்த பகட்டு மண்டபத்தினின்று வெளியே போவோமா? அல்லது அதன் இறுதி மூச்சான இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டு திக்கித் திணறித்தான் சாகப் போகிறோமா? அது நம் துணிவையும் தன்மானத்தையும் பொறுத்தது! வீழ்க இந்துமதம்! வாழ்க தன்மானப் பழந்தமிழ் மக்கள்!

- தென்மொழி, சுவடி : 17, ஒலை : 12, 1981

யார் பிரிவினைக்காரர்கள்?

மக்களைக் குலங் குலமாக, சாதி சாதியாகப்

பிரித்த நீங்களா? அல்லது, அவர்களை

ஒன்றுபடுத்த முயற்சி செய்யும் நாங்களா?திருச்சி மாவட்ட உ.த.மு.க. தொடக்க விழாவில் பார்ப்பனர்களைப் பார்த்துப் பாவலரேறு கேள்வி.1982ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் பக்கல், திருச்சிராப்பள்ளி உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் தொடக்க விழா திருச்சி நகர அரங்கத்தில் (Town Hall) சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதில் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், பார்ப்பனர்களும் சில தேசியத் திருடர்களும் எங்களைப் பிரிவினைக்காரர்கள் (பிரிவினைவாதிகள்) என்கின்றனர். நாங்களா பிரிவினைக்காரர்கள்? நீங்கள்தாம் பிரிவினைக்காரர்கள். மக்களைக் குலங்குலமாக, சாதி சாதியாகப் பிரித்து ஒன்றுபடவிடாமல் சிதைத்தவர்கள் யார்? நீங்களா, நாங்களா? என்று வீறு முழங்கக் கேட்டார். அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழினத்தை ஏமாற்றி முன்னேற விடாமல் தடுக்கின்ற முயற்சியைப் பார்ப்பனர்கள் தொடர்ந்து செய்துகொண்டு தான் உள்ளார்கள். அறிவியல் உலகில் வாழும் இக்காலத்திலும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பெரிய பெரிய பொத்தகங்களாக அச்சிடப்பெற்று அதற்குத் தெய்வத்தின் குரல் என்று தலைப்பும் இடப்பெற்று இந்த நாட்டில் வெளிவருகின்றது என்றால் இதைவிடக் கொடிய ஏமாற்று இவ்வுல்கில் இருக்க முடியுமா?பட்டுக்கோட்டையில் பிறந்து, தஞ்சையில் இரப்பு (பிச்சை) எடுத்துக்கொண்டு அலைந்து, காஞ்சியில் ஒதுங்கிய ஒரு ஊசைப் பார்ப்பான் லோக குரு ஆகிவிட்டான். அவனின் வேதமதப் புராணப் புளுகுத் தொகுப்புகளுக்குத்தான் தெய்வத்தின் குரல் என்று பட்டம் சூட்டுகின்றார்கள். சங்கராச்சாரியின் குரல் தெய்வத்தின் குரல் என்றால் எங்கள் குரல் என்ன பேயின் குரலா? நீ தெய்வம் என்றால் எல்லோருக்கும் சோறு போடு பார்க்கலாம்.

உச்சக் கட்டம்:

பெரியார் ஊட்டிய தன்மான உணர்வால் தமிழினம் தலைதூக்கத் தொடங்கிய அதே வேளையில், தலைதூக்கும் தமிழினத்தின் மேல் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பாதந் தாங்கிகளும் சம்மட்டியடிகளைக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அதன் உச்சக் கட்டம்தான் இன்று தமிழ்நாட்டில் ஆர்.எசு.எசு. இயக்கம் தலைகாட்டுவதும் அதற்குச் சங்கராச்சாரியும் ஏனைய பார்ப்பனர்களும் அணிவகுத்து ஆதரவு காட்டுவதும் ஆன இன்றைய இழிநிலை!

தமிழினத்திற்குப் பாடுபடுபவனைப் பாடுபட நிற்பவனைப் பார்ப்பான் எதைச் செய்தாகிலும் தனக்கும் தன் இனத்திற்கும் உரிய அடிமையாக ஆக்கி வைத்துக் கொள்வான். பார்ப்பான் அவர்களிடம் நேரே சென்று ஆசைமொழி பேசுவான். முடியாத பொழுது தன் மனைவியை அனுப்பிப் பேச வைப்பான்; அதிலும் முடியாத போது தன் மகளை அனுப்பிப் பேச வைப்பான். இப்படியாகத் தன்னால் அடிமையாக்கி வைத்துக்கொள்ளப்பட்ட தமிழனைப் பார்ப்பான் எப்படியும் புகழ்ந்து உயர்த்திக் காட்டுவான். அப்படி உயர்த்திக் காட்டித் தனக்கு, தன் இனத்திற்கு உழைப்பவனாக ஆக்கிக் கொள்ளப்பட்ட ஒருவர்தாம் கண்ணதாசன். கண்ணதாசனை எப்பொழுதும் அவாள்கள் மாதொருபாகனாக (அர்த்தநாரீசுவரன்) ஆக்கி வைத்திருந்தனர்.

எழுத்துக் குப்பை

கண்ணதாசன் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தப் பார்ப்பனர்களுக்கு மனநிறைவை உண்டாக்க எழுதித் தள்ளிய குப்பை நூல் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’.

இந்து மதத்தில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது? வேறு மதங்களில் ‘அர்த்தம்’ இல்லையா? புத்த மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இசுலாம் மதத்தில் ‘பொருள்’ இல்லையா? கிறித்துவ மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இந்துமதக் கயவர்களே உங்கள் மதம்தானே தமிழர்களைச் ‘சூத்திரர்கள்’ ஆக்கி வைத்திருக்கிறது. எந்த மதத்தில் உங்கள் மதத்திற்குரிய நூற்றுக்கணக்கான சாதிப் பிரிவுகள் இருக்கின்றன?

இந்து மதத்தையும் இந்து மதத்தின் கயமையையும் நாங்கள் விளக்கிப் பேசித் தமிழினத்தை மீட்க உழைத்தால் உடனே எங்களுக்குப் பிரிவினைக்காரர்கள் என்று பட்டம் சூட்டுகின்றீர்கள். யார் பிரிவினைக்காரர்கள்? கோடிக் கணக்கான ஒரின மக்களை இவன் பறையன், இவன் பள்ளன், இவன் முதலி, இவன் கவுண்டன் என்று கூறு கூறாகப் பிரித்துப் போட்டு, இவனோடு பழகாதே. இவனோடு உறவு வைத்துக் கொள்ளாதே. இவனைவிட நீ உயர்ந்தவன். இவனை விட நீ தாழ்ந்தவன் என்று உயர்ந்த ஒரு மக்களினத்தைப் பிரித்துப் போட்ட நீ பிரிவினைக்காரனா? ஒரு மொழி, ஓர் இனம், ஒரு பண்பாடு, ஒரு நாகரிகம் என்னும் பெயரில் மக்களினத்தை இணைக்கின்ற நான் பிரிவினைக்காரனா? யாரை ஏய்க்கின்றீர்கள்? இனியும் இந்தப் பிரிவினைப் பேச்சும் மிர்ட்டலும் பயனளிக்க மாட்டாது. மக்களுக்குப் பயன்படுகின்ற வினைகளை உருப்படியாக என்ன செய்தீர்கள்?

பயன்படாத சட்டங்கள்:

மக்களுக்கென்ற நீங்கள் போட்ட சட்டங்கள் என்ன ஆயின? போட்ட சட்டங்கள் பயனை விளைத்திருக்குமாயின் நாட்டில் வறுமை இருந்திருக்குமா? சாலை ஓரத்துச் சாக்கடையில் மக்கள் புழுக்களாய் நெளிந்து சாவார்களா? ஒவ்வோர் ஆண்டும் பாடத் திட்டத்தை மாற்றவில்லையா? மூன்று ஆண்டுக்கு முன் படித்த பாடத்தைப் பழைய பாடம் என்று திருத்திக் கொள்ளும் நீங்கள் மக்களுக்குப் பயன்படாத சட்டங்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்தாலென்ன?

சிங்கப்பூருக்கு நான் சென்றிருந்தபோது அந்த நாட்டின் சிறப்பைக் கண்டு வியந்தேன். அப்பொழுது அந்த நாட்டு அலுவலகங்களின் சுவர்களை என் கண்கள் துழாவின. அன்பர்கள் என்ன தேடுகின்றீர்கள் என்றனர். இவ்வளவு சிறப்பாக இந்த நாட்டை அமைத்து ஆளுகின்ற தலைமை அமைச்சரின் ஒளிப்படத்தைத் தேடுகின்றேன் என்றேன். அதற்கு அவர்கள் “எதற்கு அலுவலகங்களில் இந்த நாட்டுத் தலைமை அமைச்சரின் படம் மாட்ட வேண்டும்? அவ்வாறு எங்கும் நாங்கள் மாட்டுவதில்லை. அப்படி மாட்ட வேண்டும் என்ற உத்திரவும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதற்கு அவரின் படம்? ஒரு தாய்க்கு அன்றோ தான் பெற்ற மக்களைப் பற்றிய நினைவு இருக்கவேண்டும்?” என்று விடை கூறினர்.நம் நாட்டை நினைத்துப் பாருங்கள்! சுவரின் அளவை வைத்துக் கொண்டு அதன் நீள அகலகங்களுக்கேற்ப அடித்து ஒட்டிக்கொள்ளும் பெரிய பெரிய சுவரொட்டிகள்! எங்குப் பார்த்தாலும் இந்திரா காந்தி! எங்குப் பார்த்தாலும் ம.கோ.இரா. (எம்.சி.ஆர்) எண்ணிப் பார்க்க வேண்டும்! ஆரவாரங்களும் அச்சடித்த சுவரொட்டிகளும் மக்களை ஈடேற்ற முடியுமா? இவைதாம் அரசியலா? அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக மக்களின் வாழ்வியல் கட்டுமானம் என்பதை என்றாவது நாம் பின்பற்றி இருக்கின்றோமா?

மனம் கெடாதா?

மேலாடையில்லாது பெண்ணொருத்தி தெருவில் நடந்து போவாளானால் அவளைக் காவலர்கள் உடனே தளைப்படுத்தி அழைத்து வந்து வழக்குப் போடுவர். பொது மக்களின் மனவுணர்வைக் கெடுக்கின்ற குற்றத்தை நீ செய்தாய் என்று தண்டனை கொடுப்பார்கள். ஆனால் பெண்ணொருத்தியின் உடை களைந்த கொழுப்பு மேனியை வழுவழுப்பு அட்டைகளில் படமெடுத்துக் கடைக்குக் கடை தொங்க வைத்துள்ளார்கள்? திரைப்படத்தில் எல்லாம் வெளிச்சம்! சாலையில் மேலாடையில்லாமல் சென்ற பெண்ணின் செயல் மக்கள் மனவுணர்வைக் கெடுக்கும் என்றால் இதழ்களிலும் திரைப்படத்திலும் வெளிப்படுத்தும் படங்களால் மனம் கெடாதா?

நாங்களும் காவலர்கள்தாம்?

காவலர்கள் எண்ணவேண்டும். இந்த நாட்டின் காவலர்களும் காவல் துறை அதிகாரிகளும் எங்கே மதிக்கப்படுகின்றனர்? அமைச்சர்களை வரவேற்கவும் வணங்கவும் அவர்களுக்கு கையாட்களாகவும் அன்றோ பயன்படுத்தப்படுகின்றனர். மக்களின் நலனுக்கென்று மக்களின் வரிப் பணத்தால் இயங்கும் காவலர்களும் இக்கொடிய அரசியலால் குலை நடுங்குகின்றனரே! அருமைக் காவலர்களே! நீங்கள் மட்டுமேதான் காவலர்களா? நாங்களும் காவலர்கள்தாம். நாங்கள் மொழிக் காவலர்கள், இனக் காவலர்கள், பண்பாட்டுக் காவலர்கள்.

தமிழினம் இன்று புறப்பூசலாலும் உட்பூசலாலும் அலைக்கழிக்கப் படுகின்றது. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் தமிழினத்தின் நலங்கருதித் தோற்றுவிக்கப்பட்ட ஓர் உண்மை உழைப்பியக்கம். தமிழர்களும் தமிழினத் தலைவர்களும் அகப்பூசலை விட்டொழித்துக் கொண்டு புறப்பூசலையும் அப்பூசலை விளைப்போரையும் தகர்த்தெறிய அணியமாக வேண்டும். அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது.

- தமிழ்நிலம், இதழ் எண் : 1, 1982

மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே!

“ ‘விளக்கு வரிசை’ (தீபாவளி) விழா நாடெங்கும் பரவலாகக் கொண்டாடப்பெற்றது” - என்று வழக்கம் போல, பார்ப்பன வானொலி, தொலைக்காட்சி இரண்டும் வாய் கிழியப் பீற்றிக் கொண்டன. ஊரைக் கெடுத்து, ஏழை மக்களின் பணத்தை உறிஞ்சி வாழும் செய்தித் தாள்களும் பக்கந்தோறும் நடிக நடிகையரின் படங்களொடும், அவர்கள் பெயர்களோடு வெளியிட்ட கட்டுரைகளொடும் வெட்கங்கெட்ட முறையில் மலர்கள் வெளியிட்டு, ஊதியங்களை வாரிக் கொட்டிக் கொண்டன. மொத்தத்தில் மக்களிடையில் மூடநம்பிக்கைகளை வளர்த்துச் செழிக்க வைப்பதில், இந்த நாட்டு முதலாளிகளுக்கும் அவர்களின் அடிமைகளான பார்ப்பனீயப் பாதந் தாங்கிகளுக்கும் மிகுந்த அக்கறை உண்டு.

‘தீபாவளி’க் கொண்டாட்டம் முழுவதும் மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விழா, மொத்தத்தில் இந்த நாட்டில் கொண்டாடப்பெறும் பொங்கல் விழாவைத் தவிர்த்த பிற அனைத்து விழாக்களும் மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்தே கொண்டாடப் பெறுகின்றன. அத்தனை விழாக்களும் பார்ப்பனியத்தை வளர்க்கும் ஆரியச் சேறு நிறைந்தவையே! அறிவியல் அல்லது குமுகாயவியல் தொடர்பான எந்த ஒரு செய்தியும் அவற்றில் மருந்துக்குக்கூட இல்லை. மக்களை அறிவு வளர்ச்சியின் பக்கமே திரும்ப விடாமல் செய்யும் குருட்டுக் கொண்டாட்டங்கள் அவை! சிந்தனையின் மூடு விழாக்களே அவை ! எந்த மானமுள்ள அரசும் இவ்வார்ப்பரிப்புக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தர விரும்பாது. நம் நாட்டு நடுவண்(தில்லி அரசும், மாநில (அரைப்பார்ப்பன) அரசுந்தாம் மக்களை அறியாமையினின்று நீங்கிவிடாமல் செய்ய இவ்வாரவார விழாக்களுக்கு முழு ஆதரவு தந்து, அவற்றைக் காலங் காலமாகப் பாலூட்டி, நெய்யூற்றி வளர்த்து வருகின்றன. மூட நம்பிக்கைக்கு ஆதரவு தரும் எந்தச் செயலும் பார்ப்பனியத்தை வளர்ப்பதே !

இந்த நாட்டில் உள்ள பொதுவுடைமைக் கட்சிக் கோமாளிகளுங் கூட இந்த விழாக்களுக்கு ஏராளமான ஆதரவை தந்து, தங்களின் கொள்கை இளிச்ச வாய்த் தனத்தைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றனர். தீபாவளி போலும் மூட விழாக்களை எதிர்த்துப் பேசும் அல்லது எழுதும் எந்தப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரையும் இந்த நாட்டில் பார்க்க முடியாது, மொத்தத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி என்பது அரைப் பார்ப்பன, அரை மார்க்சீயக் கலவைக் கட்சியே! இந்த விழாக்களுக்கு எந்த அறிவியல் மக்களியல் காரணத்தையும் அக்கட்சி எடுத்துக்காட்டிவிட முடியாது.

எந்தக் கோணத்திலிருந்து கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் - அஃதாவது அரைப் பார்ப்பன அரை மார்க்சியக் கட்சியும், பார்ப்பணியமுமே தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் ஒரு விரற்கடையும்(அங்குலமும்) முன்னேறவிடாமல் தடைபோட்டு அறிவுச் சலவை செய்து, சீர்குலைத்து வருகின்றன.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியானது எந்த மக்கள் முன்னேற்றக் கூறையும் மார்க்சியம் என்றே பறைசாற்றுகிறது. இதனுடன் நெருங்கிய தொடர்புடைய பார்ப்பனியமோ அனைத்து அறிவு நிலைகளும் வேதவழிப் பட்டனவே என்று கூசாமல் நாணாமல் பொய்யுரைத்துக் கொட்டமடித்துக் காட்டுகிறது. இரண்டு இயக்கங்களுமே வேறு மாந்த, மக்களினச் சிந்தனைகளை ஒப்புக் கொள்வதில்லை. இந்தத் தன்மையில்தான் இந்த நாட்டில், அந்த இருபெரும் ஆற்றல்களும் மக்களை அறிவாளுமை - அறிவாளிய முறையில் (இதுவும் ஒருவகை முதலாளியமே) மூளைச் சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள விரும்புகின்றன! இவற்றின் மூடக் கிறுக்கில்தான் தீபாவளி போலும் புரட்டுத் தேசியப் போக்கிரித்தன விழாக்கள். இந்நாட்டில் வியத்தகு அறிவியல் வளர்ச்சியுற்ற இந்தக் காலத்திலும், மிக மிகத் தாராளமாகக் கொண்டாட வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றன. மக்களும், தங்களின் ஏழைமைத்தனத்தை மறந்து, அறியாமையை மறந்து, அடிமைத் தன்மையை அறவே மறந்து, கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச காசுகளையும் பட்டாசாகக் கொளுத்தி நாட்டின் ஆக்கத்தைக் கரியாக்கி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு எப்பொழுது தான் வருமோ, தெரியாது!

தமிழினத்திற்கு மட்டும் ஒரு சொல்! இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியமே! பார்ப்பன ஆளுமை, வேத அதிகாரம், மனு நூல் சட்டம், இந்து மதக் கோட்பாடு, மக்களின் மூட நம்பிக்கை - இவற்றை வலிவாகக் கட்டிக் காப்பதே தேசியம்! இத்தேசியத்தின் அடிப்படையில்தான் பலநூறு கோடி உருபாக்கள் மத விழாக்களுக்குச் செலவிடப்படுகின்றன! பல நூறுகோடி உருபாக்கள் தேசியத் திருவிழாக்கள் என்னும் பெயரில் வாரியிறைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்களில் விளையாட்டு வேடிக்கைகள், குதிரைப்பந்தயக் கொண்டாட்டங்கள் என்னும் பெயரில் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன! பல கோடி உருபாக்கள், கலைகள் திரைப்படங்கள் என்னும் பெயரில் காமக் களியாட்டங்களில் கரைக்கப்படுகின்றன !

நாட்டின் உண்மை நிலையோ பட்டை உரித்த மரம் போலப் பச்சையானது! எங்குப் பார்த்தாலும் ஏழைமை ! ஏழைமை ! ஏழைமை உடலொடியச் சாறுபிழியப்படும் பாட்டாளி மக்கள்! அவர்களின் எலும்புக் கூட்டுப் பரிவாரங்கள்: ஆமாம், அவர்களின் வாழ்விடங்களோ, குப்பை மேடுகள் சந்தி சதுக்கங்கள் ! சாய்க்கடை ஒரங்கள்! புழு, பூச்சிகள் நெளியும் புழக்கடைச் சேறு! உருப்படுமா இந்த நாடு?

- தமிழ்நிலம், இதழ் எண் : 3, 1982

சேலம் உருக்காலைக் குடியிருப்பில் பார்ப்பனரின் கொட்டம்!

அங்குள்ள பள்ளியில் ஆங்கிலம், இந்தி, சமசுக்கிருதம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் கொடுமை! தமிழ்மொழி அறவே புறக்கணிக்கப் பெறுகிறது!

தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை என்றால், தமிழன் தமிழ்மொழியைப் படிப்பது எங்கு? எப்போது?

தமிழ்நாட்டு அரசு இதுபோன்ற கொடுமைகளையெல்லாம், தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்தவில்லையானால் தமிழின் எதிர்காலமே இருண்டு போகும்!

அரசு உடனே தலையிட்டு ஆவன செய்க!

சேலம் உருக்காலை(Steel Plant)க்கென மோகன் நகர் என்னும் பெயரில் நகரியம்(Township) ஒன்று உள்ளது. இம் மோகன் நகரில் ஏறத்தாழ 250 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இக் குடும்பத்தினரின் பிள்ளைகளும், அதனைச் சுற்றியுள்ள சிற்றுரர்களில் வாழ்ந்துவரும் உருக்காலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் படிப்பதற்கென ஒரு தனியார் பள்ளி உண்டு. இதன் பெயர் ‘வித்யா மந்திர்’ (தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப் பெறும் பள்ளிகளுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி, பார்ப்பனர்கள் தமிழில் பெயரிடுவதில்லை என்பதை, இந்த மானங்கெட்டத் தமிழர்கள் முதலில் உணரவேண்டும்.) இந்த ‘வித்யா மந்திர்’ ஒப்பந்த அடிப்படையில் ஏற்பட்ட தனியார் பள்ளி. இது சென்ற ஆண்டு சூன் திங்கள் தொடங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.

இப் பள்ளியில் நடுவணரசுப் பாடத் திட்டப்படி கல்வியமைப்பு உள்ளது. அதன்படி இங்கு ஆங்கிலம் முதல்மொழியாகவும், இந்தி இரண்டாம் மொழியாகவும் கட்டாயமாகக் கற்பிக்கப்படுகின்றன. மூன்றாம் பாடம் விருப்பப்பாடம். இதில் சமசுக்கிருதமும் தமிழும் பயிற்றுவிக்கப் பெறுகின்றன. மேலும் பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியாக(English Medium) மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. தமிழ் வழியாகப் (Tamil Medium) பாடங்களைக் கற்பிக்கும் வகுப்புகள் இல்லை. பள்ளி தொடங்கப்படும் பொழுதே தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பார்ப்பனர்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. எனவே தமிழ்வழியாகவோ, தமிழிலோ கற்பிக்கப்படும் எண்ணமே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்று உணர முடிகிறது.

மேலும் இப்பள்ளி ஒப்பந்த அடிப்படையில் இங்கு அமைந்திடக் காரணம், பெரும்பாலான அதிகாரிகளின் பிள்ளைகள் சுவர்ணபுரி (இது அழகாபுரம் என்று தமிழ்ப் பெயரால் இருந்த பகுதி. இதையும் பார்ப்பனர்கள் ஸ்வர்ணபுரி என்று வடமொழி மாற்றம் செய்திருக்கின்றனர்) என்னும் சேலம் நகர்ப் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தவர்கள் என்பதே.

மாதம் ஒன்றுக்கு வித்யா மந்திர் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரிடம் 30 உருபா கல்விக் கட்டணமாகத் தண்டப் பெறுகிறது. இதில் உருக்காலை ஆளுமை நிர்வாகம் மாணவரின் தந்தையான பணியாளர்க்கு ஏறத்தாழ 50 விழுக்காடு திரும்ப வழங்குகிறது. இது தவிர, பள்ளிக் கட்டிடம், மின்சாரம், மிசைகள், நாற்காலிகள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களை ஒப்பந்தரக்காரர்க்கு இலவயமாக வழங்குவதுடன், அவர்களுக்கு ஏற்படும் இழப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

இதில் இன்னோர் உண்மை என்னவென்றால் அங்குள்ள உருக்காலையில் பணியாற்றும் பணியாளர்களில் ஒரு கணிசமான தொகையினர், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியாகக் கற்பிக்க விருப்பமிருந்தும், வேறு வழியில்லாததால் அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில வழியாகப் படிக்கவும், அவர்களுக்கு இந்தி கற்பிக்கவுமே நேரிடுகிறது என்பதே.

இனி, இவ்வுருக்காலை வளாகத்தில் I.N.T.U.C., C.I.T.U. ஆகிய இரண்டு தொழிலாளர் இயக்கங்களும், அதிகாரிகளுக்கென ஒரு கூட்டமைப்பும், முத்தமிழ் மன்றம் ஒன்றும் (பெரும்பாலும் பார்ப்பனர்களைக் கொண்டது) இருப்பினும், இக்குறைபாட்டினை நீக்கிட எந்த அமைப்பும் முனைந்ததாகத் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 17.3.1983 அன்று தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் சேர்ந்து ஒன்றுகூடி, தமிழ்க்கல்வி வகுப்பின் தேவை குறித்துப் பேசியிருப்பதாகத் தெரிய வருகிறது. அதன் முடிவாக, சேலம் உருக்காலை அனைத்துப் பணியாளர் தமிழ்க் கல்வி கோரும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் தலைவராகப் பயிற்சித் துறை மேலாளர் ஒருவரும், கூட்டு அமைப்பாளராக ஒருவரும் ஆகிய இரண்டு தமிழர்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளனராம். அக்குழு இனி, அங்குள்ள பள்ளியில் தமிழ்க் கல்வியை வலியுறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே தமிழ்க் கல்வி மறுக்கப்படும் பொழுது, நாம் எப்படி, கருநாடகத்திலும், அந்தமானிலும் தமிழ்வழிக் கல்வியையும், தமிழ்க் கல்வியையும் வலியுறுத்த முடியும்? இஃதென்ன கொடுமை! தமிழ் நலமும், தமிழின நலமும் நாடும் தமிழர் கட்சிகளும், அமைப்புகளும் தங்களுக்குள் மாறுபட்டும் வேறுபட்டும் இயங்கிக் கொண்டிருப்பதாலன்றோ, பார்ப்பனர்கள், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல், இப்படி இந்திக்கும் சுமசுக்கிருதத்திற்கும் ஆக்கந்தேடிக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு உண்மையிலேயே தமிழ்நலம் நாடுகின்ற அரசாக இருக்குமானால் இப்படிப்பட்ட தமிழுக்கு மாறான செயல்முறைகள், தமிழகத்திற்குள்ளேயே நடக்க இயலுமா? இளிச்சவாய்த் தமிழர்களும், இரண்டக ஆட்சியாளர்களும் எண்ணி ஆவன செய்வார்களாக.

- தமிழ்நிலம், இதழ் எண். 15, 1983

கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 இந்துக் கோயில்களைப் பிர்லா கட்டித் தருகிறார்!

5000 பேர் சமசுக்கிருதப் பயிற்சி பெறுகிறார்கள்! ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரீட்சத் இவற்றின் செயல்திட்டங்கள்!

சமசுக்கிருத வளர்ச்சி, இந்துமதப் பரப்புதல் - இரண்டுமே அவர்கள் கொள்கை !

தமிழர்களுக்குத் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழின முன்னேற்றம் பற்றி அக்கறை வரவேண்டும்!

செல்வர்கள் அதற்குத் துணைநிற்க வேண்டும்!

பார்ப்பனியத்திற்கும் பிற இந்துமதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முழுக் கவலை என்னவென்றால், இந்தியாவில் முசுலீம் மதத்தையும், கிறித்தவ மதத்தையும், வேரில்லாமல் செய்துவிடவேண்டும் என்பது தான். இரண்டும் இந்தியாவிற்குச் சொந்தமில்லாத வேற்று நாட்டு மதங்கள் என்பது அவர்கள் கருத்து. இந்து என்னும் பார்ப்பனிய மதம் ஒன்று மட்டுமே இந்நாட்டுக்குரிய உள்நாட்டு மதமாம். எனவே, இந்துமதம் பற்றிய அனைத்து முயற்சிகளையும் ஒரு புற முயற்சியாகவும், அதற்குத் துணையான சமசுக்கிருத வளர்ச்சியை ஓர் அக முயற்சியாகவும் அவர்கள் ஒரே பொழுது செய்து வருகிறார்கள். சமசுக்கிருதத்தைத் தவிர்த்து இந்துமதத்தை நிலைப்படுத்துதல் இயலாது இந்துமதத்தின் உயிரே சமசுக்கிருதத்தில் தான் இருக்கிறது.

சமசுக்கிருதத்தை அவர்கள் தேவமொழி என்று சொல்வது நிலைபெற்ற கருத்தாக இருந்தால்தான், ஆரியப் பார்ப்பனர்களுக்கும் தங்களைத் தேவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். அவர்கள் தேவர்கள் அல்லது பூதேவர்கள் என்பது நிலைப்பாடு பெற்றால்தான் இந்து மதத்திற்குக் காவலர்களாகவும் அதிகாரிகளாகவும் அவர்கள் இருக்க முடியும். அப்பொழுதுதான் இந்துமதமும் இந்நாட்டில் நிலையாக இருக்க முடியும். இதைக் கீழ்வரும் ஒரு பழைய சமசுக்கிருதச் சொலவகம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது.

‘தெய்வாதீனம் ஜகத் ஸர்வம்

மந்த்ரா தீனந்து தைவதம்

தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம்

ப்ராஹ்மனா மம தைவதம்’(இதன் பொருள் : உலகம் தெய்வத்தின் ஆளுமையுள் (ஆதிக்கத்தில்) உள்ளது; தெய்வம் மந்திரத்தின் ஆளுமையுள் இருக்கிறது; அந்த மந்திரம் பிராமணர்களின் ஆளுமையுள் இருக்கிறது; எனவே, பிராமணரே நம் தெய்வம்) ஆகவே, இந்து மத வளர்ச்சிக்குச் சமசுக்கிருதமே அடிப்படையாக இருக்கிறது. சமசுக்கிருதமோ பிராமணர்களுக்குத் தேவையான இந்துமத மூலப்பொருளாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியா அஃதாவது பாரத நாடு சமசுக்கிருதத்தையும், சமசுக்கிருதம் பிராமணர்களையும் தவிர்த்து வாழ முடியாது சமசுக்கிருதம் தவிர்க்கப்பட்டால் பிராமணியமும் தகர்ந்து போகும். இந்தக் கருத்துகளை உள்ளடக்கி நாம் இப்படியொரு சொலவகத்தைப் புதியதாக அமைக்கலாம்.‘ப்ராஹ்மணா தினம் சமஸ்கிருதம்;

சம்ஸ்கிருதா தீனந்து ஹிந்துமதம்:

தன்மதம் ப்ராஹ்மணா தீனம்

ப்ராஹ்மணா மம பாரதம்.’எனவேதான் சமசுக்கிருத வளர்ச்சியில் பார்ப்பணியம் தன் ஆளுமைக்கு உரிய நிலமாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்துமதத்தை அது நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துமதம் இந்தியாவை விட்டு உலக நாடுகள் எதிலும் கால்கொள்ள முடியாது. ஏனெனில் அஃது அறிவியலுக்கு மாறுபட்ட ஒரு மதம். எனவே அறிவியலுக்கு மாறுபட்ட, மூடநம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்ட, ஓரினம் மட்டுமே பிழைப்பதற்குக் கருவியாக உள்ள இந்துமதம், இந்தியாவில் நிலைப்பட வேண்டுமானால், அஃது இரண்டு அடிப்படையான வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒன்று, அம்மதக் கருத்துகளுக்கு அடிப்படையான சமசுக்கிருத மொழியை அது வளரச் செய்ய வேண்டும்; அல்லது மறைந்துபோகாமல் காத்துக்கொள்ள வேண்டும். இரண்டு, இந்துமதக் கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வல்லனவும், மக்களைச் சமமாக மதிக்கின்ற கொள்கைகள் கொண்டனவுமான, அஃதாவது வருணாசிரமத்திற்கு மாறுபட்டனவுமான கிறித்தவம், இசுலாமியம் போன்ற புற மதங்கள் இந்தியாவில் பரவுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். இந்த இரண்டு கொள்கைகளும் அவற்றை நோக்கிய செயற்பாடுகளும் வலிந்த முறையில் பரவினால்தான், பிராமணியம் அஃதாவது ஆரியப் பார்ப்பனியம் இந்த நாட்டை முழுவதுமாக கவர்ந்து (ஆக்கிரமித்துக்) கொள்ள முடியும். எனவே, அத்தகைய முயற்சிகளைத்தாம் பார்ப்பனிய இயக்கங்கள் அனைத்தும், குறிப்பாக ஆர்.எசு.எசும், விசுவ இந்து பரீட்சத்தும், அரவிந்த ஆசிரமத்துப் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய முயற்சி செய்கின்றன.

அரவிந்த ஆசிரமம் சமசுக்கிருதத்தை உலகமொழி யாக்குவதற்கு ஒதுக்கிய 800 கோடி உருபாவுக்கு மேலும் அவ் வியக்கங்கள் ஆரியத்திற்குத் துணையான செல்வர்களிடமிருந்து நிறையப் பணத்தைத் திரட்டத் திட்டமிட்டிருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் இலக்கக் கணக்கான பணம் திரளுகிறது. குறிப்பாக, பார்ப்பனிய அடிமைகளாக உள்ள முத்தையா மகாலிங்கங்கள் போன்ற தமிழினச் செல்வர்களே, இந்து மதத்தின் மேலும் சமசுக்கிருதத்தின் மேலும் கொண்ட அறியாமை வெறியினால், அவர்களின் முயற்சிக்குத் துணைபோவது, அவர்களுக்குப் பெரிய ஆக்கமாக இருக்கிறது.

நம் தமிழக அரசும், பார்ப்பனர் மனம் புண்படக்கூடாதே என்ற வகையில், அவர்களின் முயற்சிக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோவது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்.எசு.எசின் முயற்சியால் வடநாட்டுப் பெண் முதலையாகிய பிர்லா மட்டும் தம் பணத்தில், மதமாற்றங்கள் பெரிதாக நிகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், 500 இந்து மதக் கோவில்களைக் கட்டித் தர ஒப்புக் கொண்டிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இவரன்றி டாட்டாவும் இப் பார்ப்பனிய முயற்சிகளுக்குத் துணைபோக முன் வந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இன்னும், தென்னாட்டிலும் உள்ள பெரிய பெரிய பார்ப்பன நிறுவனங்களும், ‘சற்சூத்திரா’ நிறுவனங்களும் இவ்வகையில் அவர்களின் முயற்சிகளுக்கு உதவ முன்வந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. போதிய வரலாற்றறிவில்லாமலும், தமிழினப் பற்றில்லாமலும் நம் தமிழினப் பனக்காரக் கொள்ளையர்களும், தமிழக அமைச்சர்கள் அதிகாரிகளும் இப்படித் துணை போகலாம் என்று கருதுகிறோம்.

இனி, ஆர்.எசு.எசும்., விசுவ இந்து பரீட்சித்தும் வகுத்துள்ள திட்டங்களையும் நாம் கவன