விறலிவிடு தூது வசனம்
ந.சி. கந்தையாவிறலிவிடு தூது வசனம்


1. விறலிவிடு தூது வசனம்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. விறலிவிடு தூது வசனம்


விறலிவிடு தூது வசனம்

 

ந.சி. கந்தையா

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : விறலிவிடு தூது வசனம்
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

விறலிவிடு தூது வசனம்


முன்னுரை
இற்றைக்கு நூற்றுச் சில்லரை வருடங்களுக்கு முன் சீரங்கத்தில் வாழ்ந்த சுப்பிரதீபக் கவிராயரென் பவர் தன் மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு மதுரைக்குச் சென்றவிடத்து மதனாபிஷேகம் என்னும் தேவடியாள் ஒருத்தியின் மாயக்கன்னியிற் பட்டுக் கைப்பொருளை இழந்து அவமானப்பட்ட வரலாற்றை “விறலிவிடுதூது” என்னும் நூலாகப் பாடியிருக் கின்றார். அவர் தமது சொந்த அனுபவத்தையே கூறு கின்றமையின் அந் நூலிற் கற்பனைகளும் ஊகை களும் இல்லை என அறியலாம். எவராவது தாசிகளின் முழுத் தத்துவத்தையும்அறிய வேண்டுமானால் “விறலிவிடு தூது” என்னும் செய்யுள் நூலின் வசன நடையாகிய மதனாபிஷேகம் என்னும் நூலைப் படியுங்கள். இது உண்மை வரலாறாகும்.

ந.சி. கந்தையா

மதனாபிஷேகம்
ஐயர் மனைவியைப் பிரிய நேர்ந்தமை
ஸ்ரீரங்கத்திலே சுப்பிரதீப ஐயர் என்னும் ஓர் பிராமணர் இருந்தார். இவர் பதினாறு வயசுக்குள் தமிழும் ஆரியமும் கற்றுக் கவி பாடும் திறமை அடைந்தார். ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை அவதானித்துச் சொல்லும் வல்லமையைப் பெற்றிருந்தமையால் இவர் அட்டாவதானி எனப் பெயர் பெற்றார். திருப்பதியிலே வாசுதேவ ஐயரின் புதல்வி பூங்காவனம் என்னும் மாதை இவர் மணந்தார். பூங்காவனத்துடனிருந்து இல்லறம் நடத்தும் நாளில், செவ்வந்தீசர் கோயிற் சந்நிதியில் சதிராடும் தாசி ஒருத்திமீது ஐயர் ஆசையாகி நேசமானார். இவளுறவு சில காலம் அந்தரங்கமாக விருந்தது. திருச்சிராப்பள்ளிக்குச் சென்று இவளைத் தரிசியாதிருக்க ஐயர் மனம் ஒரு நாளும் தரித்திராது. சிறுவனொருவனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஐயர் திருச்சிராப்பள்ளியில் அந்தப் பொன்னனையாள் வீடு சென்று திரும்பினார்.

திரும்பினதும் சிறுவன் திடுதிடுமென ஓடிப் பூங்காவனத்தினிடம் சொல்லுவான் : ஐயர் ஓடத்தில் ஏறினார். சால்வையைப் போக்கடித்தார். திருச்சிராப்பள்ளி சென்றார். என்னை வீதியில் நிற்கவைத்தார். இன்பரச வல்லி என்னும் தாசி வீட்டிற்புகுந்தார். அவ்வேசி மகள் மிஞ்சி மிஞ்சிப் பேசினாள். ஐயர் அஞ்சி அஞ்சிப் பேசினார்.

வேசி கதவடைத்தாள்; அவருடன் கொஞ்சிக் குலாவினாள். ஐயர் வீட்டைவிட்டுப் புறப்பட்டார். என்னை வாவென்றார். காவிரியிற் கைகால் அலம்பினார். திருச்சிராப்பள்ளிக்குச் சென்ற கதை ஆருக்குஞ் சொல்லாதே என்றார்.

துட்டப் பையன் இவ்வாறு சொல்லுதலும் பூங்காவனம் வைரங் கொண்டாள். கடுகடுத்தாள். தூங்குமஞ்சம் விட்டிறங்கித் தரையிற் படுத்தாள். ஐயர் அடுத்தடுத்து வேண்டினார். தீண்டாதே என்றாள். திருச்சிராப்பள்ளி யில் அந்தத் தேவடியாள் தேடுவாளென்றாள். இன்னுஞ் சொல்லாத வார்த்தை சில சொன்னாள்.

“இல்லாள் வலிகிடந்த மாற்றமுரைக்குமேல்
இல்வல்லின் புலிகிடந்த தூறாய்விடும்”

என்னும் ஒளவை வாக்கை ஐயர் நினைந்தார்.

ஐயர் யாத்திரை சென்றமை
கைக்கடங்கியதைக் கொண்டு அன்றிரவே ஐயர் பயணமானார். பல தலங்களைத் தரிசிக்கவும் புண்ணிய தீர்த்தமாடவும் ஐயர் மனங்கொண்டார். தேவாரம் பெற்ற பல தலங்களையும் திருமால் ஆலயங்களையும் தரிசித்த பின் சோலை மலையை அடைந்தார். அவ்விடத்தில் ஞானியார் ஒருவர் தங்கியிருந்தார். அஞ் ஞானியாருடன் ஐயர் நட்பானார். மதுரைச் சொக்கரைத் தொழுது வருவோம் வாருமென்று ஞானியரையும் உடன் அழைத்தார். அதனைக் கேட்டு ஞானியார் நகைத்துக் கூறுவார்:

ஞானியார் நல்வழி உரைத்தது
கொந்தி என்னும் அரசன் திருவொற்றியூர் பார்க்கவேண்டுமென்று விருப்பமானான். அப்பொழுது அவன் மந்திரி அவ்விடத்துள்ள தாசிகள் சதி செய்வார்கள் என்று கூறினான். மந்திரி சொற் கேளாது சென்ற அரசன் ஒரு வேசி கைக்குள் சிக்கினான். அவள் இட்ட மருந்தால் புத்தி மாறு பட்டான். யானைகளையும் நாடு நகரங்களையும் அவள் வாங்கினாள். ஓடும் குழையுமாக அவனை ஓட்டினாள். அவன் கூத்தாடிகளுடன் கள்வன்போல் வேடமிட்டு ஆடுதலை நீர் பார்த்ததில்லையோ மதுரையைக் காணச் செல்வதென்றால் விலைமாதரால் நேரும் தொல்லைகள் மெத்தவுண்டு.

மதனாபிஷேகத்தின் பிறப்பு
மதுரைச் சொக்கர் ஆலயத்தில் பணிசெய்யும் தாசிகளுள் மாணிக்க மாலை என்பாள் ஒருத்தி. அவள் தனக்கோர் பெண் பிறக்கவேண்டுமென்று பல நேர்த்திக்கடன்கள் செய்தாள். கோயில் மெழுகுவாள். விரதமிருந்தாள். என்ன குறை என்று கேட்டுச் செப்புத்தகட்டில் யந்திரம் எழுதிக் கழுத்திற் கட்டினாள். கெர்ப்பத்துக்காக மருந்து கிண்டி உண்டாள். இளமை கழிந்து ஒருவரும் விரும்பாத நாற்பதுக்கு மேற்பட்ட பிராயத்தே காற்றடிக்கத் தாழை பூத்ததுபோல இவள் கர்ப்பமானாள். பத்து மாதமும் நிரம்பிய பின் வயிறுளைந்து இவள் ஓர் மகவை ஈன்றாள். பெற்ற வேதனையால் மூர்ச்சை யானாள். தாதியர் பெண் என்றார். காதில் மருந்து பிழிந்து விட்டதுபோற் கேட்டுத் துண்ணென்றெழுந்தாள். மூர்ச்சை தீர்ந்தாள். மாணிக்கமாலை பெற்றெடுத்த குழந்தையைப் பொன் காய்க்கும் பூடு என்று சொல்லித் தாதிமார் ஏந்தி எடுத்து நீராட்டினர்; பட்டாடையினால் உடம்பைத் துவட்டி னார்கள்.

மதனாபிஷேகத்தின் வளர்ப்பு

“தேனே, கனியே, தெவிட்டாத தெள்ளமுதே,
மானே, என் கண்ணே, மரகதமே”

என்று சொல்லி மாணிக்கமாலை மடிமீது எடுத்து வைத்துத் திருநீறிட்டாள். காலுக்குக் காப்பிட்டாள். நீல மலர்போலுங் கண்ணுள்ள மயிலே! பொருளுள்ள பேர்களைக் கைக்குள் வளை என்று சொல்லிக் கைக்குக் காப்பிட்டாள். பணமுள்ள பேர் உன் பொட்டுக்குள் ஆக வென்று பொட்டிட்டாள். ஆரார் உனக்குள் ஆசைகொண்டு சுற்றாதார் ஆராரோ என்று பொற்றொட்டிலில் வைத்துத் தாலாட்டினாள். இவ்வாறு மாணிக்கமாலை தானீன்ற மகளைக் சீராட்டிப் பாராட்டி வளர்த்தாள். பெண் சிற்றாடை யுடுத்துத் தெருவில் வரக் கண்டு திருட்டி சுற்றினாள். மதனாபிஷேகமென அவளுக்குப் பெயரிட்டு ஆரியமும், தமிழும், தெலுங்கும், கன்னடமும் படிப்பித்தாள்.

தாய் பருவக்குறி கண்டமை
வயதேற ஏற மதனாபிஷேகம் பரத நாட்டியம் எல்லாம் கற்றறிந்தாள். முனிவரையும் மயக்கும் சங்கீத வித்தை எல்லாம் கரைகண்டாள். வாச மஞ்சள் பூசுவாள். மல்லிகைப்பூச் சூடுவாள். ஆடவரை வீட்டுக்கழைப்பாள். ஓடி நின்று பிலுக்குவாள். கிட்ட நின்று பேசுகையிலே முத்துக் குலுக்குவாள். வந்தவர்களை விழியால் வாள் வீச்சுப் போல வெட்டுவாள். இவைகளைப் பொக்குவாய்ச்சியாகிய தாய் கண்டு உள்ளம் பூரித்தாள். மன்மதனை ஒத்த வாலிபர் அவள் கைக்குள் வசமாகிவந்து காலைப் பிடிக்கும் சொக்குப்பொடி மருந்தையும் சொல்லிக்கொடுத்தாள். மதுரையிலே புதுமண்டபத்தின் முன்னே வசந்தன் திருநாளிலே மதனாபிஷேகம் தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினாள். அவள், தனங்கள் சின்னச் சிமிழாகித் செப்பாகித் தேங்காயாய் வளர்ந்து கன்னியானாள். அப்போது மாணிக்கமாலை தனது பழைய தேட்டமாகிய பொன்னை எல்லாம் ஒரு பக்கத்திற் புதைத்து வைத் தாள். மதனாபிஷேகத்தை பல பணக்காரர் சுற்றுவதையும், அவர்களைச் சேர மகளின் மனம் பற்றுவதையும் மாணிக்கமாலை கண்டறிந்தாள்.

தாய்க்கிழவியின் போதனை
மாணிக்கமாலை தன் மகளை அழைத்துக் கூறுவாள் :

“மானே! என் கண்ணே! மயிலே! குயிலே! செந்
தேனே! மதனாபிஷேகமே! -மீனீன்ற
குஞ்சுக்கு நீச்சுங் கொடும் பாம்பின் குட்டிக்கு
நஞ்சுங் கொடுத்தவரார் காரிகையே”
“யாருக்கும் சாதித்தொழில் தனக்குத்தானே வருமொருவர்
போதிக்கவேண்டுமோ போற்கொடியே”

பெண் சிங்கம் குட்டி யீனும்போது அதற்கு முன் எழுதி வைக்கப் பட்ட யானைமீது அக்குட்டி பாய்ந்ததென்னும் கதை பொய்யல்லவே. ஆருக்கம் சாதித்தொழில் தானே வரும். பெண்களுக்குள் என் புத்திக்கு உன் புத்திக்கு இரட்டியாயினும் என் புத்தியையும் சற்றே கேள். நீ நாளும் மஞ்சட் குளிப்பதை மறாவாதே. மஞ்சள் மணங்காட்டியும் வாடைப் பொடியின் குணங்காட்டியும் உத்தரியத்தை ஒரு பால் விட்டு சற்றே தனத்தைக் காட்டியும், முத்துப்போற் பற்கள் தெரியச் சிரித்தும், நடையைக் காட்டியும், இடையைக் காட்டியும் வாலிபருக்கு ஆசையைக்காட்டுவாய். யானைக் கொம்பு தனம் சாய்ந்தால், முகம் சுருக்கு விழுந்தால் அரைக் காசு தந்து ஆதரிப்பாரார்? பஞ்சுப் பெட்டிபோல் நரைத்த பெண்கள் என்ன செய்வார்? சட்டி சுரண்டுவார். கட்டழகு மிகுந்த வாலிபப் பருவத்தில், மனம் வைத்தால் வீடெல்லாம் பொற்றகட்டில் வேலைசெய்து கட்டலாம்.

சிலர் வந்து உன் காலைப் பிடிப்பார்கள் முழுப் புரட்டெல்லாம் பேசி வெற்றிலை மடித்துத் தருவார்கள். இவர்களை வீட்டில் அழைக்காதே. நீ ஒருவரிடத்தில் ஆசை வைத்தால் பின்பு ஒருவரும் வந்துன்னை அண்டார். இது மற்ற வேசியருக்கெல்லாம் சிரிப்பாகும். காசு பணம் கும்பல் கும்ப லாய்த் தந்தாலும் வாலிபத்தில் வைப்பிருக்க மனம் வையாதே. சரசம் பண்ணிவிட்டு உன்னை அலையவிடும் முட்டாள்களை வீட்டுக் கழை யாதே. முன்பின் அறியாதவர்கள் எழுநூற்றொன்பது பொன் தந்தாலும் இணங்காதே. இன்பமாகச் சேருவர். நித்திரையில் மயக்குப்பொடி தூவுவர். சேலைகளையும் பொன்னுடைமைகளையும் சுருட்டிக்கொண்டு போய் விடுவர். விடிந்ததும் ஆரிடம் நாமவற்றைக் கேட்பது.

ஊரிலே தகப்பன்கீழ்ப் பிள்ளைகளும் தாய்க்கீழ் சிறுவர்களும் உண்டு. அவர்கள் வந்தால் வாயில் வடுச்செய்யாமற் சுகங்காட்டு. மாலைக் காலத்து ரொக்கப்பணங் கிடைத்தா லிணங்குவாய். தூரத்திலே யிருந்துவந்து இராத்தங்கிப் போவார் மீது ஆசையாயிருப்பது போல பிறகே போ. போய் உன்னைக் கணமும் பிரிந்து இருக்கமாட்டேன் சாமி என்று ஆசை கூறு. உடனே புதையல் எல்லாம் கிளம்பும்.

பிரபுக்களைச் சப்பிர மஞ்சத்திலிருத்திக் காசு பணங் கேளாமற் கூடு. அது ஊரிலும் புகழ், நம்மோடொத்தவர்களுக்கும் பெருமை. புல்லுவிற்றும் கீரை விற்றும் ஆரும் நமக்குப் பணந்தருவார். பல்லு விழுந்த கூனற் கிழவன் கொடுக்கும் பணத்தில் நரை உண்டோ?

“… … … … … … … … … … … மானமின்றி
அப்பன் வருவான் அதன்பின் மகன் வருவான்
தப்புமுறை என்று நீ தள்ளாதே”

குடிகாரர் கள்ளர்களின் சோலிக்குப் போகாதே. வேலையின்றி வேசி களைச் சேர்ந்து பணம்பறிக்கும் எத்தர்களும் உண்டு. அவ் எத்தர்களை நாம் எத்த வேண்டும். நான் ஆடுகின்ற பருவகாலத்தில் இவ்விடத்தில் ஓர் பையல் இருந்தான். அவன் மதுரையில் மழுங்குண்ணி என்பவளின் பணத்தைத் தழுவிப்பறித்தான். கிழக்குத் தெருவில் கிஷ்ணாயி வீட்டை ஒரே பறியாகப் பறித்தான். தாசி குப்பியின் உடைமை முழுவதையும் கொள்ளையடித்தான். வைப்பென்று பசப்பி தஞ்சாவூர்ச் செல்லியைக் கந்தை யுடுக்கவைத்தான். இவன் இப்படி மற்றவரது பொருளை வாங்கினானேயன்றி அவன் பொருளை ஆரும் வாங்கினதில்லை. என்மீது மையலாகி அவன் இவ்விடம் வந்தான். கொழுத்த குட்டி கிடைத்ததென்று பூரிப்படைந்தேன். அன்று முதல் மாட்டுப் பறங்கிக்காய் கறி ஆக்கிக்கொடுத்தவனைச் சேர்ந்தேன். அவன் வீட்டில் வந்த நாலாம் நாள் நடுச்சாம இரவில் நித்திரை சோதித்தேன். காலிலே செருப்பிட்டேன். மேலெல்லாம் வெண்ணீறு பூசினேன். ஐந்து சடை பின்னி விட்டேன். கண்டவர் பெண் பசாசு என்று நினைக்கும்படி கோலங்கொண் டேன். கையில் கள்ளும் சோறும் கைவாளுமாகச் சுடலை சென்றேன். கழுவிற் கிடக்கும். கள்ளம் குதிக்கால் நரம்பில் மெள்ள விளக்கெரித்து நெய்யெடுத் தேன். வீட்டில் வந்து அரிசியில் ஊற்றி ஊறவைத்து புளிப்பில்லாச் சாற்றில் பாற் குழம்பிற் சர்க்கரையில் கூட்டியும், சோற்றிலிட்டும் கொடுத்தேன். நெஞ்சு சுழலச்செய்த உபாயத்தால் அவன் தேடும் பணம் முழுதும் கரடி புற்றில் வாய் வைத்தாற்போல வாங்கிவிட்டேன். உள்ளதெல்லாங் கொடுத்துக் கையில் ஓடெடுத்துத் தெய்வமே என்று திரிகிறான். பெண்ணணங்கே! அந் நெய்யரிசி நாளுக்கு நாள் செலவாய் இனி உனக்கு வரும் ஆளுக்கென்று காற் படி இருக்கிறது.

காரிகையே! வீதியிலே நாம் உலாவும்போது பணக்காரரை மெல்லக் கூட்டிப் போய் முத்து மாலை பவள மாலைகளைக் காட்டு. மோதிரத்தையோ கடுக்கனையோ வைத்தென்றாலும் வாங்கித்தா என்று சொல்லு. அவன் கையிலுள்ள பணத்தைக் கொடுப்பான். கடையிலுள்ள சரக்கெல்லாம் வாங்கி அறையில் வை.
சிலர் மருந்தை இடுப்பிற் கட்டிக்கொண்டு வருவார்கள். நீ அவர் களைச் சேர்ந்து கைச்சரசம் போல் தடவிக் கண்டுபிடித்துப் பிடுங்கி எறிந்து விடு. கொக்கோகம் படித்தவரைச் சென்மம் உள்ள வரையிற் சேராதே. சன்னியாசிகள்போல் உருத்திராட்சப் பூனைகள் சிலர் உண்டு. வந்தால் மெத்தையிலே வைத்து விளக்கணை. கூடையிலே ஆள் வந்து கூப்பிட்டால் கூடையிலே மூடிவைத்துக் கூப்பிடு. கடுக்கனை ஆட்டும் கவிபாடும் புலவர்கள் வந்தால் துடுக்காக ஒரு வார்த்தை சொல்வார். ஐந்து பொன்னும் கொடுக்கமாட்டார். அரைப் பணம் போதும் என்பார். அவர் மனத்தைக் களிக்கச் செய்தால் எம்மேல் புகழ் பாடுவார். முடியாதென்றால் எம்மேல் வசை பாடுவார். எமது வாழ்வு கெட்டுவிடும். கச்சேரியில் வேலைசெய்யும் சேவுகர் வந்தால் அவர் தருவதை வாங்கிக்கொள். கொஞ்சமென்று நினை யாதே. கை முதல் என்ன செலவாகும் ஒரு செம்பு தண்ணீர் போகும். நாம் செய்யும் பொய்ச் சத்தியமும் போம். மணியகாரர் வந்து வாவென்று அழைப்பார். சும்மா போ என்று சொன்னாலும் பொல்லாப்பு. சீலையிலே தம்பலத்தைப் பூசிச் சூதகமென்று தூர இரு. மாதவிடாயானாலும் ரொக்கப் பணம் வந்தால் ஒருபானை வெந்நீருக்காகப் பாராதே. நான் உன்மேல் ஆசையானேன். நீ என்மேல் ஆசையில்லை எனச் சிலர் உனது கருத்தைச் சோதிப்பார்கள். நீர் எவ்வாறு சொன்னீர் உம்மீது நான் ஆசை என்று தலை யில் தொட்டு சத்தியம் செய். பொய்ச் சத்தியத்தால் சீவன் போய்விடுமோ? அச்சத்தியம் எங்களுக்குத் தயிர் சாத மல்லவோ? இருட்டிற் செல்லாக் காசைக் கொடுத்து கருக்கலில் எழுந்துபோவார்மீது கண்ணாயிரு. கோயிற் குருக்கள் என்னுடன் உண்டு. நீ அவர் தம்பியைக் கூடிக்கொள். சோறு சமைக்கும் சமையற்காரன் வந்தால் அவன் தரும் பொருளை வாங்கிக் கொள். நாடகத்திற் பாடுகிறவனைத் தனது பண்ணிக்கொள். தித்திக்காரனை யும் கைத்தாளக்காரனையும் கூட்டிச் சுகங் காட்டாதே. உன்னோடு திரிந்த உத்தியோகஸ்தருக்கு இடைஞ்சல் வந்தால் உன்னை வந்தேய்ப்பார். உனது உடைமைகளை அடைவு வைத்து அடுத்த மாசம் திருப்பித் தருகிறோம் என்பார். பெண்ணே, நீ சிறிதும் இரங்காதே. தாய்க்கிழவி சம்மதித்தால் எனக்கும் சம்மதம் என்பாய். எனது வாய்க்குப் பயந்து அவர் பேசார். நேசமாய் என்னைக் கலந்தவரென்றாலும் கை நிறையப் பொருள் தந்தாற் புணர்ந்துவிடு. பறவை மிருகங்கள் முறை பார்க்குதோ? வேசி முறை பார்த்தால் பிழைப்பு மோசம்.

மதனாபிஷேகத்தின் செய்தி
அவள், அன்று முதலாய், காதல் என்னும் மதம் மிஞ்சிவரும் காமுகரை கும்பமுலையாம் கம்பத்திற் பிடித்துக் கட்டினாள். யோக முனிவரையும் அவள் பாவை ஆட்டலானாள். அரசர் பெருஞ் செல்வத்தை உண்பதில் அவள் குறுமுனிவரை ஒத்தாள்.

மதனாபிஷேகத்தின் தோழிகள்
மதனாபிஷேகத்தின் தோழிகள் பத்துப் பேர். அவர்கள், கைமருந்துச் சொக்கி, சாராயத்தாழி, தூதுசவுந்தி, எழுமதிலேறி, தஞ்சாவூர் எத்தி, மாமாயக் காரி, குண்டுணிவாய்க்கள்ளி, மாறாட்டக்குள்ளி, மாயக்குருவி, மாரீசக்கள்ளி என்போர். இவர்கள் காமுகரை மெல்ல அழைத்துக் கூட்டுவார்கள். வந்து பிரிந்து செல்கின்றவர்களை மெல்லச்சந்து செய்வார்கள். பணம் கொடாதவர் களை அடித்துத் துரத்துவார்கள். கல்லிலே நார் உரிப்பதுபோல வந்தவர் களைக் கசக்கிப் பணம் பறிப்பார்கள். நனைந்த விடத்தைக் கல்லித் தோண்டுவார்கள்.

மதனாபிஷேகத்தை விரும்பிய ஆடவர் செய்தி
இவ்வாறு மதனாபிஷேகம் பொருள் சம்பாதிக்கிற காலத்திலே, இவளது இருண்ட விழிக்கும், பிறைபோன்ற நெற்றிக்கும், கொடிபோன்ற அழகிய இடைக்கும், ஒளி வீசும் பற்களுக்கும் பிடி போன்ற நடைக்கும், வயிரம் பதித்த வளையல்களுக்கும், அமுதம்போன்ற இனிய சொற்களுக் கும், மலைஒத்த தனங்களுக்கும் ஆசைகொண்ட இளைஞர் வலையுள் மான் சிக்கினதுபோலானார்கள்.
தூண்டிலிலே மீன் சிக்கினதுபோலச் சிலர் மெலிவார்கள். சிலர் ஏன் சிக்கினோம் என்று வருந்துவார்கள். சிலர் இவர்களைச் சேர்ந்து இன்பம் பெற்றோமென்று களிப்பார்கள். கற்கண்டைப்போன்ற பேச்சுடைய மதனாபி ஷேகத்துக்குப் பிடிக்குமென்று பூச்சு மருந்திட்டு அணையச்செல்வார் சிலர். மாயப்பொடி போடும் அவள்முன் வாசப்பொடி பூசிச் செல்வார் சிலர். தந் தனத்தைக் கொடுத்து சரிந்த தனமுடையவளின் ஆட்டத்துக்குள்ளாய்த் தளர்வார் சிலர். சிலர் பசப்பவென்று சிலர் வாசல்மட்டும் வந்து நரைத்த பூதத்தைக் கண்டு அகலப்போவார்கள். சிலர், பெண்ணே, உன்கால் பிடிக்கவோ, வெற்றிலைப்பை கட்டவோ, சண்பகப் பூப்போன்ற மேலைப் பிடிக்கவோ, விசிறி வீசவோ, அழகிய மலர் கட்டவோ, உறக்கம் வரத் தொடையைத் தட்டவோ என்று அருகிற் செல்வார்கள். வெட்டிவேர் வைத்து முடிந்த கூந்தலாள் குளித்த வாச மஞ்சள் நீரை சிலர் அள்ளித் தலைமேற் றெளித்துக் கொள்வார். சிலர், கோயிற் சந்நிதானத்தில், ஆள் நெருக்கடியில் தள்ளப்பட்டு விழுகிறவர்களைப்போல் அவளைத் தாவிப் பிடிப்பார். ஒருவன் வீட்டிலே இருக்க வெளியிலே நின்று சாடைகாட்டித் திரிவார் சிலர். சப்பிரமஞ்சத்தில் தூங்கும்போது துப்பட்டிகொண்டு அவள் காலைத் துடைப்பார் சிலர். காலிலே பவளக்குமிழிலங்கப் பிரபுக்கள் அறைக்குள் வரும்போது பரணில் ஏறிப் பதுங்கியிருப்பார் சிலர். இவளுக்குக் கொடுக்கப் பொன்னில்லாதார் சிலர் இரசவாதஞ் செய்வோமென்று இரசத்தைக் குகை யில் வைத்துக் குனிந்தூதிப் புகையிலடிபட்டு மாலைக் கண்ணானார்கள். இவளுக்காகப் பொன் திருடிக் கையிரண்டுங் கட்டுப்பட்டு நிற்பார் சிலர். அவள் இட்ட மருந்தால் இருமல் பிடித்து குட்டி ஈன்ற நாய் போல் ஓயாமற் குரைப்பார் சிலர். அரையாப்புக்குச் சத்திரமிட்டுத் தோப்பிற் கிடந்து துடிப்பார் சிலர். இவள் நம்மோடு முத்து முத்தாய்ப் பேசினாலும் போதும், தூஷணமாய் ஏசினாலும் போதும் என்பார் சிலர். பூப்படுக்கைமீது அவள் கும்பகர்ணன் போல் தூங்க பக்கத்தே இந்திரனைப்போல் இருப்பார் சிலர். சிலர் ஐம்பது மாடு விற்றோம், நூறு ஆடு விற்றோம், குத்துவிளக்கு விற்றோம், காணி விற்றோம், உடைமை விற்றோம், இவள் செலவுக்குக் கேட்டால் என்னத்தைக் கொடுப்போம் என்னத்தைச் சொல்லுவோம் என்பார் சிலர். சிலர், பாண்டிநாட்டுச் சிறுக்கி பணம் எல்லாம் உரிஞ்சினாள் ஆண்டியானோ மென்று அலைவார்கள். சிலர், வேசிக்கீந்த பொருளை வட்டிக் கீந்தோமோ, மச்சு வீடு கட்டி வைத்தோமோ, வீட்டுப் பெண்டாட்டிக்கு உடைமை பூட்டிப் மகிழ்ந்தோமோ, ஆடு கொண்டுவிட்டோமோ என்பார்கள். இவ்வாறெல் லாம் காமுகர் மயங்கிச் சுழன்றார்கள்.

ஆதி ஐயர் என்னுமொருவர் மாசித்தெருவிலே மதனாபிஷேகத்தைக் கண்டார். அவர் அவளின் மையலுக்குள்ளானார். காயப்பட்ட மாமரத்தில் உரைஞ்சிய கவரிமான் மயிரிழந்ததுபோல் கையிலிருந்ததெல்லாம் வீட்டிலிருந்ததெல்லாம் ஆஸ்தி எல்லாம் தோற்றார். பிச்சை எடுத்தார். மருந்தினால் கள்ளுண்டவர்போற் கலங்கினார். வாசலிலே தள்ளுண்டார். இப்பொழுது ஆதி ஐயர் என்னும் பெயர் போய் வியாதி ஐயன் என்னும் பெயரெடுத்தார். அவர் பாதி உடலாய்ச் சுருங்கித் தொடலாகாச் சீழ், சிரங்கு, அரையாப்பு, மேகவெட்டை, அடைவாதம், பவுத்திரம், புகைச்சல், இருமல் இளைப்போடு மருந்திட்ட நோயால் களைப்புமாய் பூனைபோல் கத்தி அடுத்த வீட்டுத் திண்ணையிற் படுத்துக்கிடக்கிறார். இப்படியாகத் தேடி உண்ணும் தேவடியாள் வாழ் மதுரைக்கு எப்படிப் போவீர். திரும்பி வருவது எப்படி என்று ஞானியார் சொன்னார்.

ஐயர் மதுரைக்குச் சென்றமை
ஐயர் ஞானியாரைப் பார்த்து, “இரும்புத்தூணில் கறையான் ஏறுமோ, நெருப்பிற் புழு விழுமோ” என்றார். ஞானியாரும் நல்லது ஐயரே என்று சொல்லி அவர் பிறகே சென்றார். ஐயர் வைகையிலே தீர்த்தமாடி அங்கயற் கண் அம்மையையும் சொக்கரையும் தொழுதார். பிரகாரத்தைச் சுற்றிவந்து வடமேற்கில் சங்கப்புலவரைத் துதித்தார்.

ஐயர் மதனாபிஷேகத்தைக் கண்டு மருண்டமை
ஆயிரங்கால் மண்டபத்தே ஐயர் மதனாபிஷேகத்தைக் கண்டார். அவளது, முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயழகும், வேலைப்போன்ற விழி அழகும், தண்டையிட்ட காலழகும், பொற்காப்பிட்ட கையழகும், இறவிக்கை இறுக்கிய மார்பழகும், கட்டழகும் பொட்டழகும் கண்டு ஐயர் மயங்கினார். பூங்கொம்பு போன்ற மதனாபிஷேகம் தித்தி மத்தளம் கொட்ட, பாடி ஆடினாள். ஐயர் அவள் கண்ணம்பு பட்டு அம்பு ஏறுண்ட மான்போலானார். சயமங்களம் பாடி சதிர் முடித்த மாது வீடு திரும்பினாள். பெண் யானையைத் தொடரும் ஆண் யானையைப்போல் ஐயரும் அவள் பின்னே சென்றார். அவள் காலிலிட்ட சதங்கைகள் கலின் கலின் என்று சத்தமிட்டன. மேலே அணிந்த ஆபரணங்கள் மின்னல்போல் விளங்கின. அவளைக் கண்ட வாலிபர் அவள் அண்ணாந்த கொங்கைக்கு அறிவைப் பறிகொடுத்து வெற் றிலைக்குச் சுண்ணாம்பிட மறந்து சுருட்டி உண்டனர். பெண்மேல் கண்ணாக வருவாரும் போவாரும் தங்களிலே தங்கள் தலையை மோதுவார்கள். மங்கைநல்லாள் சந்தனகும்பஸ்தனங்கள் சுமந்து இடை வருந்தினதென்று நடுங்க நடந்து தனது வீடுபோய்ப் புகுந்தாள். ஐயரும் பின்தொடர்ந்து முன் முகப்பு வாயிலில் ஓர் ஊமைபோல் நின்றார். அப்போது அவரெதிரே செக்கு வருவது போல் கைமருந்துச்சொக்கி என்னும் பாங்கி வந்து தோன்றினாள்.

பாங்கிகள் சந்து செய்தமை
“ஐயரே, உனது ஊரேது, பேரேது” என்று அண்டி அண்டிக் கேட்டாள். ஐயரும், “பெண்ணே! எனது ஊர் சீரங்கம். எனது தகப்பனார் சிங்கையர். எனது தம்பி சாரங்கபாணி ஐயர். எனக்குக் கவிபாடும் அட்ட அவதானி என்று பெயர். என் மனைவியோடு மனத்தாபமாய் உங்கள் வீடு தேடி வந்தேன். இன்று சொக்கர் முன் கதிராடிவந்த காரிகை யார்?” என்று வினவினார்.

அவர் “மாணிக்கமாலை பெற்றெடுத்த `மானை மரகதத்தை மதனாபிஷேகத்தை’ இப்பூமியிலுள்ள எல்லாரும் அறிந்திருக்க தாம் அறியேம் என்று சொல்லுவது எப்படி?” என்றாள். ஐயர் “பெண்ணே, இன்று இவளிடத்து யார் வருவார்” என்று கேட்டார். “அவள் பட்டணத்துப் பாஸ்கர ஐயனோ, சோலையப்ப பிள்ளையோ, மணியம் கனக சபாபதியோ என்று எத்தனையோ பேர் பொற்கொடிமேல் காதலாகி எத்தனையோ பொன் கொண்டு வந்து எத்தனையோ எத்துகள் கூறுவார். ஆனால் உத்தமி அவர் ஒருவருக்கும் இணங்கமாட்டாள். சிங்கம் ‘சிறு’ தேரையை உண்ணுமோ? உங்கள் போல் நற்குணமுடையோரையே நாடுவாள். அரசரே வந்து பொன்னை மலைபோற் குவித்தாலும் உடன்படுவளோ?” என்று கை மருந்துச் சொக்கி கூறினாள்.

சொக்கி இதனை தூதுசவுந்தி என்னும் பாங்கிக்குச் சொன்னாள். அவளும் ஏனழைத்தீர் என்று சொல்லிவந்தாள். ஐயர், “இன்று மாதுக்கு ஆர் வருவார்” என்று கேட்டார். “இன்று ஆருமில்லை, பொன் கொடுத்து வருவீராகில் இங்கு நிற்பானேன் வாரும்” என்றாள்.

“அவளுக்குப் பணயம் எத்தனை பொன் கொடுக்கவேண்டு” மென்றார். “முன்னூறு பொன் மகளுக்கும், முன்னூறு பொன் எனக்கும், இன்னொரு நூறு பொன் தோழிமாருக்கும் ஒரு முடிப்பாகத் தரவேண்டு” மென்றாள். அப்படியே ஐயர் பொன்னை எண்ணிக் கொடுத்தார்.

ஏவற் பெண்கள் உபசரித்தமை
பெண்கள் சிலர் வந்து தொழுது ஐயரை உள்ளே அழைத்தார்கள். சந்தனத்தி கைவிளக்கும் கொண்டுவந்தாள். தெய்வி கால்விளக்கப் பொற்செம்பில் நல்ல தண்ணீர் கொண்டுவந்தாள். வெற்றிலைப் பையைச் சின்னதங்கி பிடித்தாள். பூச்சி என்பாள், பூத்தொடுத்தாள். பூவி என்பாள் பொன் கவரியும் வெண் கவரியும் மெல்ல வீசினாள். இராசி பாவாடை விரித்தாள்.

மனைக்குள் சென்றிருந்தமை
உட்பகட் டறியாத புலியைப்போல ஐயர் மதனாபிஷேகத்தின் மண்டபத்தே சென்றார். சிங்கக்காற் கட்டில்மீது பெண்கள் திண்டு கொண்டு வந்து போட்டார்கள். ஐயர் அரச பாவனையாக வீற்றிருந்தார்.

மதனாபிஷேகம் கண்டு உபசரித்தமை
மதனாபிஷேகம் ஐயர் கொடுத்தனுப்பிய பொன் முடிப்பைப் பெற்றாள். இரண்டு எலுமிச்சம் பழமும், மருக்கொழுந்துச் செண்டும் கொண்டு வந்து நின்று ஐயரைக் கும்பிட்டாள். காதலரை இதற்கு முன் காணாக் கன்னிபோலவும் சூதறியாப் பேதை போலவும் கூசி மெள்ளப் பேசினாள். “நான் புது மண்டபத்தில் ஆடினேன். வந்து நின்றீர். உம்மை நான் கண்டு மையலானேன். பக்கத்தே நின்ற பாங்கியை மெள்ளப் போய் வீட்டுக் கழைத்துவாவென்றேன். அவள் குழப்பிவிட்டாள். செந்தமிழ் பாடுவதில் வல்லவரே! எங்கள் குலதெய்வமே வீட்டிற் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது. வீட்டுக்கு வந்தால் தலைவாயில் முற்றத்தில் நிற்பானேன். நீர் நல்ல பூவைக் கண்டு எடுத்து முடித்துப் போக நினைந்தீர். இனி உம்மை விடமாட்டேன். தேவரீரது விருப்பமே எங்கள் பாக்கியம்” என்றாள். இச்சால வித்தைகள் அத்தனையும் ஐயர் மெய்யென்று நம்பினார். அவள் கையைப் பிடித் திழுத்து முன்னாள் இருத்தியவள் முகத்தைப் பார்த்தார். அவள் யாழை மீட்டுக் கீதகானஞ் செய்தாள். அவள் பாடல்கள் தேன்போல் காதுக்குச் சுவை அளித்தன. ஐயர் தொண்ணூறு பொன் பெறும் கற்கட்டு மோதிரத்தை அவள் கையிலிட்டார்.

தாய்க்கிழவி உபசரித்தமை
அப்போது வில்லைப் பிடித்து வளைத்தாற் போன்ற வளைவும், வறண்ட உடலும், தடிக்கம்பும், தேங்காய்க் குடுக்கைபோல வாயும், சற்றே நடுங்கும் தலையும், நரையும், பொடிக் கொசுகு மொய்த்த கண்ணுமாய்த் தாய்க்கிழவி தோன்றினாள். கிட்டச் செல்ல நாணினாள். மாமியென்று அறியத்தூணோடு ஒதுங்கினாள். “எங்கள் துரையே, வந்தீரோ ! சந்தோஷ மாக வர இந்த வீடு என்ன பாக்கியஞ் செய்ததோ ! இவள் முற்பிறப்பிலே என்ன தவஞ் செய்தாளோ! முந்தனாளிவள் கண்ட கனவு நன்மையாய் முடித்தது. இவள் தோளின் இடப்புறந் துடித்தது. ஆள்வரத்தில் காகங் கரைந்ததது. கட்டைச்சி தும்மினாள். யோகம் வரப் போகுதென்று ஒரு குறத்தியுஞ் சொன்னாள். பல்லியும் பல தடவை நிமித்தஞ் சொன்னது. இந் நிமித்தங்கள் மங்கைக்கு நல்லவரைச் சேர்க்கும் என்று சொல்லி வைத்தேன். அப்படியே நீரும் வந்தீர்.

என் ஆசை மகள் குணத்தை இன்னும் எப்படி என்று அறியமாட்டீர். பொய் புரட்டுச் சால வித்தைக்காரிகளின் அடிகளிலும் மிதித்தறியாள். அவர்கள் வீட்டுக்குப் போகாள். மற்றப் பரத்தையரைப்போல காசு பணந் தேடும் விருப்பு இவளிடத்தில்லை. ஓர் ஆடவரிடமும் இவளை நான் விட்டறியேன். கிரந்திப் புண் வந்தால் இவள் அரைக் காசுக் குதவு வளோ? இவளுக்கு இராச வளர்ச்சியேயன்றி வேறெதையுங் கண்டறியாள். இவளுக்குச் சிறு வயதானாலும் உம்மைக் கூடிச் சுகிக்க வயது காண். மன்மதனைப்போல வேறு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளாள். பாலிலே பழம் நழுவி விழுந்ததுபோலாயிற்றே. நான் நீலி, ஓர் பேய்ப்பிள்ளையைப் பெற்றேன். மாப்பிள்ளையும் பெண்ணுமாய்க் கொண்ட பற்று விடாமல் வாழ்ந்திருங்கள். மாப்பிள்ளைக்கு நித்திரைக்கு நேரமாகுதுபோலும் “ என்று சொல்லி மாமியாரும் போயினாள். தோழிமாரும் போயினர். சிவந்த வாயுடைய மதனாபிஷேகம் ஐயரை உள் வீட்டுக் கழைத்தாள்.
பள்ளியறைச் சிறப்பு
மதனாபிஷேகம் முன்னாகச் சென்றாள். ஐயர் பின்னாகச் சென்றார். பள்ளியறைச் சிறப்பைச் சொல்லி முடியாது. தூங்குமஞ்சப் பிரகாசமெங்கே! மேல்விரித்த பட்டாடை எங்கே! பட்டாடைமீது பரப்பிய மல்லிகைப் பூவெங்கே! சூத்திரப் பாவை எண்ணெய் விடும் விளக்கெங்கே! வெள்ளிப் படிக்கமெங்கே!

பள்ளியறையின் நாற்புறமும் சித்திர வகைகளெங்கே! இரதியும் மதனும்போல்வார் சையோக வகை காட்டும் ஓவியங்களெங்கே! இவ்வாறு பள்ளியறைச் சிறப்பினை நாவாற் கூறமுடியுமோ? மதனாபிஷேகமும் வேதியரும் தூங்குமஞ்ச மேறினார்கள்.

தாய்க்கிழவி வரிசை வரவிட்டமை
அப்போது தேங்காய்போலுந் தனமுடையார் சிலர் தட்டிலே பாக்கு, வெள்ளித் தட்டிலே வெற்றிலை, பொற் பெட்டியிலே மல்லிகை, பிச்சிப்பூ வெட்டிவேர், தந்தச் சிமிழில் சவ்வாது, பவளக் கிண்ணத்தில் சந்தனம், வண்ணக் கிளிமொழியாளைக் கூடியபின் விடாயாறி தேறும்பொழுதி லுண்ண சிற்றுண்டி, வேறு சில பீங்கானிற் பன்னீர், செம்பிலே வெந்நீர் முதலியன கொண்டுவந்து மாமியார் வரவிட்ட வரிசை என்று சொல்லி வைத்தார்கள். மதனாபிஷேகம் கண்ணாற் சாடை செய்தாள். பெண்கள் வெளியே சென்று மறைந்தார்.

படுக்கை அறை சேர்ந்தமை
மதனாபிஷேகம் வாயிற்கத வடைத்தாள். பேதைபோற் கூசினாள். மதிபோன்ற முகத்தைக் கவிழ்த்தாள். வளையல்களைத் திருத்தினாள். புதிய மணவறைப் பெண்போல் நின்றாள். “மதனாபிஷேகமே! என் பிராண சகியே! தாங்காதென் மோகமே!” என்று கையைப் பிடித்துப் படுக்கையில் இருத்தினார். முகத்தோடு முகமும் கண்ணோடு கண்ணும் வைத்துத் தயவு பிறக்கப் பேசினாள். மல்லிகை பிச்சி முதலிய பூக்களை அணிந்தும், வாசச் சாந்து பூசியும் தாம்பூலம் மடித்தும் கொடுத்தாள். அவர் மடிமீதிற் படுத்தாள். ஐயர் மனம் பூரித்தார்.

அனுபோக வகை
நடந்த கலவி விநோதங்களைச் சொல்லவென்றால் நாலு நாள் செல் லும். அவற்றைக் கூற முடியாது. பொழுதும் விடிந்தது. மார்புமீது இலங்கும் வெண் பூணூல் மஞ்சள் படிந்து பொன் பூணூல் போலாயிற்று. அதைக் கண்டு ஐயர் மனம் பூரித்தார். வைகையிலே சென்று நீராடினார். மயக்கத்தால் நாயுருவியென்று குப்பைமேனியைப் பிடுங்கி பல் துலக்கினார். ஆற்றில் ஓர் சோமனை மறந்து விட்டார். விரைந்து வீடு சென்றார். மதனாபிஷேகம், “மீனாட்சி ஆயி வீட்டில் சமையலாயிற்று” என்றாள். சாப்பிட்டார். காய்கறிகள் இன்னதென்றும் சாப்பாட்டின் சுவையும் அறியார். எந்நேரமும் மதனாபி ஷேகத்தைக் கூடிச் சுகிக்க ஆசை கொண்டார். இப்படியே சிலகாலங் கழிந்தது. தாய்க்கிழவி ஐயரை மருந்திட்டு வசப்படுத்த எண்ணினாள்.

வனமூலிகை சேர்த்தமை
தாய்க்கிழவி பலவகைப்பட்ட வனமூலிகைகளைத் தேடலானாள். நாவடக்கி, வாதமடக்கி, கருந்துவரை, பாடவரை, கஞ்சா, பெருந்தும்பை, ஆதளை, ஆவிரைமேற்புல்லுருவி (குருவிச்சை), மாதுளைமேற்புல்லுருவி, தூதுவளை, பேய்ப்பீர்க்கு வல்லாரை, பேய்முசுட்டை, பேய்ச்சிமிட்டி, பேய்ப் புடலை, நாய்ப்பாகல், நாயுருவி, நாய்வேளை, நாய்க்கோட்டான், புன்னைப் பூ, வன்னிப்பூ, பூளைப்பூ, முன்னைப்பூ, மாம்பூ, முருங்கைப்பூ, சின்னிப்பூ, பூலாவேர், சங்கம்வேர், நெட்டிவேர், வெட்டிவேர், பாலைவேர், அத்திக்காய், துத்திக்காய், அல்லிக்காய், நெல்லிக்காய், கத்தரிக்காய், பேய்ச்சுரைக்காய், காஞ்சிரங்காய், நின்றாற்சிணுங்கி, நிலம்புரண்டி, ஆலின்கீழ்க்கன்று, பணம் உறிஞ்சி, காஞ்சோறி, குன்றுமணியிலை, பின்தொடரி, முன்தொடரி, பெண் தொடரி, ஆண்தொடரி, இன்பூறல், ஆனை வணங்கி, அழுகண்ணி, தொழு கண்ணி, பூனைவணங்கி, புளிமடலை, சுருளி, நன்னாரி, தான்றி, வெள்ளைத் தோன்றி, மலைகலக்கி, தேள்கொடுக்கும் வாகையிலை, கருநாரத்தங்காய்ப் பிஞ்சு, மலைநத்தை, சூரிக்கொழுந்து, நாட்டகத்தி, சிற்றகத்தி, தோதகத்திப் பட்டை, நரைத்தோதகத்தி ஆகியவற்றைச் சூரியனைக் கிரகணம் பிடிக்கும் போது தேடினாள்.

கடைச்சரக்குச் சேர்த்தமை
கஸ்தூரி மஞ்சள், அரைத்த சித்திரமூலம், செவிட்டு ஆதிமூலம், தக்கோலம், குரோசாணி, ஏலம், வேலிக்காரம், சீனக்காரம், கர்ப்பூரசாரம், அரிதாரம், நவாச்சாரம், சவுக்காரம், காரீயம், துத்தம், துரிசு, கொத்தமல்லி, குங்குமப்பூ, முத்தக்காசு, இந்துப்பு, வெடிவாண உப்பு, கட்டுப்பு, கறி உப்பு, மட்டிப்பால், இஞ்சி, இலவங்கபத்திரி, கசகசா, மஞ்சள், அதிமதுரம், சதகுப்பை, சாதிக்காய். சாதிபத்திரி, அதிவிடயம், பாக்கு, சிறுதேக்கு, பாஷாணம், வேப்பம் புண்ணாக்கு, பச்சை நாபி, அபினி முதலிய கடைச்சரக்குகளையும் தேடினாள்.

பிராணிகளின் உறுப்புக்கள் சேர்த்தமை
செவ்வரணை வால், ஆந்தைப் பிச்சு, பருந்து நகம், முதலைப் பல்லு, குரங்கின் இந்திரியம், மரஅட்டை, செவ்வட்டை, பெண்ணரியின் முதுகுத் தோல், உடும்பு நாக்கு, குருஞ்சேவல் முள்ளு, வெள்ளைப் பல்லி, ஆண் காடைச் சிறகு, பனையடியில் ஓணான் கண், வாகைமேற் கூகையின் கீழ்வாய் அலகு, செந்நாயின் வாய், தேவாங்குக் கன்னம், பருந்தின் கழுத்து, காடை முட்டை, எலி மூளை, பன்றியிறைச்சி, புலி மீசை, வல்லூற்று எலும்பு, மாடப்புறாவின் எச்சம், கவரி மயிர், நல்ல பாம்பின் ஈரல், தலையீற்று எருமை யின் இளங்கொடி, முயற்புழுக்கை, தேரைக்கால், தூக்கணாங்குஞ்சு, சுழல் வண்டு, நண்டு, காக்கை நிணம், கரிய பசுவின் பால், நாக்குப்புழு, பூனைப் பீசம், கடாவின் கொம்பு, பெருச்சாளிக்குட்டி, வவ்வாற்றலை, குதிரைவாயி னுரை, கரடிச் சவ்வு, கிழட்டு யானை மதம், சங்கின் இறைச்சியும் இரத்தமும், கன்னிகழியாத பெண்ணின் காதுக்குறும்பி, தலையிற்பேன், சின்ன அட்டை, வாற்குருவியின் சந்து எலும்பு, வானம்பாடிக் குடல், காட்டோரித் தொண்டை, காட்டோந்தி மண்டை ஆகிய இவற்றையும் சேர்த்தாள்.
மருந்து கூட்டினமை

இவற்றுள் வனமூலிகைகளை எல்லாம் அவித்துத் தயிலமாக எடுத்தாள். சரக்கை எல்லாம் பேய்க்கருப்பஞ் சாற்றில் அரைத்தெடுத்தாள். விலங்குகளின் உறுப்புகளை எல்லாம் பானையிற் சாராயத்தை ஊற்றி அதில் இட்டுச் சோற்றடுப்பின் கீழ் புதைத்துவைத்தாள். ஒரு மாசங் கழிந்து இவற்றை எல்லாம் அம்மியிலிட்டு மகளின் சூதக நீர், நாக்கழுக்கு, நகத் தழுக்கு, காலடிமண், மூக்கில் வியர்வை முதலியன சேர்த்து மூன்று நாள் அரைத்து மைபோல் உருட்டி எடுத்தாள். எடுத்து மகளிடம் இந்த உருண்டை தப்பாது என்று சொல்லிக்கொடுத்தாள்.

மருந்திட்டமை
மதனாபிஷேகம் அப்பளத்திலும் பழத்திலும் சுண்ணாம்பிலும் வைத் திட்டாள். ஐயர் மதிமயங்கினார்; அவளை விட்டுப் பிரிய முடியவில்லை. கண்ணுறக்கம் வராது, சாப்பாட்டைக் தேடாது, வேறு மனஞ்செல்லாது, மதனாபிஷேகம் என்னும் மோக சமுத்திரத்தில் அமிழ்ந்தினார். செபதபங்கள் மறந்தார். அவள் தன தரிசனமல்லாமல் சிவலிங்க தரிசனம் மறந்தார்.

வஞ்சிக்க உபாயஞ்செய்தமை
ஒரு நாள் அந்த நரைத்த தாய்கிழவி ஐயரண்டை வந்தாள். “இன்று அழகருக்குத் திருவிழா நடக்கிறது. வேடிக்கைப் பார்க்க வெகு சனங்கள் செல்கின்றார்கள். நீங்களும் போய்த் தீர்த்தத்தில் ஆடிவந்தால் நல்ல பலன் கிடையாதோ” என்றாள். ஐயர், “மதனாபிஷேகம்! நீயும் திருவிழாவுக்கு வருகிறாயோ?” என்றார். அவளும் உங்களைக் காணாமலிருந்தால் எனக்கு வீட்டிற் கண்ணுறங்குமோ என்று சொல்லிப் புறப்பட்டாள். மாமியார் பெண்ணுக்குப் பித்தளை நகைகள் பூட்டிவிட்டுத் தானும் பிறகே சென்றாள். பத்துப்பேர் பாங்கியருடனும் மதனாபிஷேகம் அழகர் மலையிலேறித் தீர்த்தமாடினாள். ஐயருடன் மதனாபிஷேகமும் தோழியரும் தேருக்குப் பிறகே சென்றார்கள். ஒரு அம்பு எய்யும் தூரத்தில் ஞானியர் தோன்றினார். ஐயர் தேருக்குப் பின்னால் மறைந்து சென்று ஓர் பிராமணன் வீட்டில் தங்கினார்.

தாய்க்கிழவி, ஒரு கையிலே தோசைச் சுமையும் மறு கையிலே பாக்குப் பையுமாக மதனாபிஷேகத்தின் பின்னே நடந்துவர ஐயர் முன்னே சென்றார். அரை நாழிகை தூரம் போனதும் கிழவி விடுதியில் சரிகைச் சேலையை மறந்துவிட்டு வந்தேனென்றாள். தான் சென்று தேடி எடுத்து வருவ தாகச் சொல்லி ஐயர் ஓட்டமாகச் சென்றார். ஐயர் போய் மீள்வதன்முன் தாய்க்கிழவி மதனாபிஷேகம் அணிந்திருந்த பித்தளை நகைகளை எல்லாம் கழற்றிக்கொண்டு மதுரை சென்றாள். ஐயர் மதனாபிஷேகத்தைத் தேடி ஓட்டமாக வந்தார். அவள் உருவிய முருங்கைபோல ஆபரணங்கள் ஒன்றுமின்றி நின்றாள். மழைபோல் கண்ணீர் வடித்தாள். “பெண்ணே! என்ன காரியம்” என்று ஐயர் பதில் கேட்டார். அவள் ஏங்கினது போல் விம்மி விம்மி நாக்குழறி முன்னின்று கூறுவாள்; ஐயர் வருவார். நாம் திருவிழாப் பார்த்துச் செல்லும் சனங்களோடு செல்லலாமென்று தாய் சொன்னாள். நான் அவரை விட்டு வரமாட்டேன், நீ பயந்தாற்போ என்றேன். அவளும் கோப மாய்ப் போயினாள். கிழவன் ஒருவன் வந்தான். கையிற் பூண்கட்டிய பிரம்பு பிடித்திருந்தான். கூவென்றாற் கேட்பாருண்டோ? நரைத்த பேழ்வாய்க் கிழவன் தனித்த வழியிலே என் உடைமைகளை எல்லாம் அடித்துப் பறித் தான்” என்றாள். இதனைக் கேட்ட ஐயர் திடுக்கிட்டார். “போனாற்போகிறது அதற்குமேல் நான் உடைமை பண்ணித் தாரேன்” என்றார். அவளைத் தேற் றினார். வீடு வந்தார்கள். கிழவி மகளைப்பார்த்து “ஆபரணங்களெல்லாம் எங்கே” என்றாள். “பறிபோயின” என்று கூறினாள்.

தாய்க்கிழவி பொய்ப் புலம்பல்
தாய்க்கிழவி பதறினாள். கையை நெரித்தாள். நெரித்த கையைப் பிரித்தாள். வயிற்றைப் பிசைந்தாள். ஒருவருமில்லாத இடத்தில் அவள் உடலைச் சேதம்பண்ணினால் என்ன செய்வேனென்று வாய்விட்டழுதாள். பரிதவித்தாள். விம்மினாள். நகை எல்லாம் போய்ச்சே. ஊரறிந்தததே. ஏச்சானதே. இன்று ஆபரணம்பண்ணி இடக்காசு பணஞ் சிந்துகிறதோ? பண்ணியிட்டாலும் அவை கள்ளர்பறித்த உடைமைகள்போல் வருமோ? அவை எல்லாம் இரத்தின உடைமைகளே! பறிகொடுத்த தோட்டைப்போல இனி வருமோ! இருநூறு பொன் கொடுத்துச் செய்த கொப்பும் பறியாச்சே! இவளுக்கு முன் காளிங்கன் கொடுத்த பொற்சிமிக்கி போலக் கிடைக்குமோ என்று பலவாறு சொல்லிக் கிழவி புலம்பினாள். ஐயர் கிழவியையும் கன்னியையும் தேற்றினார்.

நகை செய்திட்டமை
ஐயர் ஐயாயிரம் பொன் தட்டான் கையிற் கொடுத்தார்; நகை செய்தார். மதனாபிஷேகத்துக்கிட்டு அழகு பார்த்தார். மனம் பூரித்தார். ஐயரும் மதனாபிஷேகமும் மஞ்சத்தில் மகிழ்ந்திருந்தனர். அப்போது பஞ்சுபோல் நரைத்த கூந்தலுடைய தாய்க்கிழவி பைய வந்தாள் “பெண்ணே! கோவி லுக்குப் போகவில்லையோ? என்றாள். “கோடிப் புடவையில்லை. உள்ள சேலைகள் சாயம் மங்கிவிட்டன” என்று கூறிக் கவலை கொண்டாள் மதனாபி ஷேகம். தாய்க்கிழவி, “அடி பைத்தியமே! பிறந்த ஊருக்குப் புடவை ஏனம்மா, எல்லாரும் அறிந்தவர்களே, வேறார் இருக்கிறார்கள். பொன்னின் குடத்துக்குப் பொட்டும் இடவேண்டுமோ?” என்றாள்.

ஐயர் ஆடை வாங்கிக் கொடுத்தமை
ஐயர் நன்னிச்செட்டி சவுளிக்கடைக்கு மதனாபிஷேகத்தை அழைத்துச் சென்றார். பார்த்துப் பளபளப்பான பட்டுச் சேலைகள் வாங்கி னார். பொன் இறவுக்கைகள் வாங்கினார். பாவாடைக்குப் பதினாறு வகைப் பட்டுகள் வாங்கினார். தாய்க்கிழவி தனக்கும் இரண்டு சேலை வேண்டுமென் றாள். அப்படியே அந்தப் பேய்க்கும் இரண்டு வாங்கிக் கொடுத்தார்.

பலவகைக் கடன் தீர்த்தமை
பாலளந்தவன்னி, நெய்யளந்தமாரி, நெல்லளந்தசின்னி என்னும் இவர்கள் எந்த நேரமும் வைவதும் போவதும், வாசலில் நின்று அலம்பல் செய்வதுமாகத் திரிந்தார்கள். அவர்கள் கடனுக்கென்று ஐயர் ஐம்பது பொன் ஈந்தார். காலையிலும் மாலையிலும் தாயும் மகளும் குடிக்கச் சாராயமூற்றிய நெட்டைப்பிச்சி வந்து இது நியாயமோ? என்று சண்டைக்கு வாய்திறந்தாள். ஐயர் முப்பது பொன் போட்டு வாய்மூடச் செய்துவிட்டார்.

தெய்வ பூசைக்குக் கொடுத்தமை
மதனாபிஷேகம் வயிற்றை வலிக்கிறதென்று மாயமிட்டாள். “இது மருந்துக்கு மாறாது. குலதெய்வத்தின் குறை” என்றாள். ஐயர், “தெய்வத் துக்கு என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார். “கையில் அரிவாள் பிடித்த உருவம் வேணும். உறுமால் வேணும். பொற்பிரம்பு வேணும். சேவல் வெட்டிப் பொங்கவேண்டும்” என்றாள். அதற்கென்று ஐயர் ஐம்பது பொன் கொடுத்தார். கேட்டபோது தா என்று சொல்லி ஒரு ஆழாக்கு முத்தும், ஆயிரம் பொன்னும், ஒரு மாணிக்கமும் ஐயர் மதனாபிஷேகத்திடம் கொடுத்தார்.

பின்னும் பலவகையால் வஞ்சித்துப் பொருள் கவர்ந்தமை
கட்டிலென்றும், கட்டில்மீது விரிக்கப் பட்டென்றும், வட்டிலென்றும், சீப்பு வகை என்றும், குத்து விளக்கென்றும், பால் எருமை என்றும், மாடென் றும், மங்கை விளையாடி நிற்க மேடை என்றும், ஆடவிட்ட நடடுவனுக்கு வேட்டி என்றும், சேடியர்க்குச் சேலை என்றும், காதோலை என்றும், தைப் பொங்கலுக்கென்றும், சிவராத்திரிக்கென்றும் தலை தடவி மூளையை வாங்கு வதுபோல் மதனாபிஷேகம் ஐயர் பொருள் அத்தனையும் வாங்கிவிட்டாள்.

எல்லாம் விற்று இறுத்து வெறுங்கையானமை
ஐயர் ஆடையை விற்றார். காதிற் கடுக்கனையும் விற்றார். வீட்டுச் செலவுக்கு இல்லை என்று தாய்கிழவி தந்திரமாய்க் கேட்டாள். ஐயர் தலை கவிழ்ந்து துரும்பு குத்துவதைக் கண்டாள். குறிப்பறிந்தாள். ஐயரை ஊரைவிட்டுப் போக உபாயஞ் செய்தாள்.

துரத்த வகை தேடினமை
ஐயர் படுக்கையில் முன்புறங் காட்டிப் படுத்தால் மதனாபிஷேகம் பின்புறங் காட்டிப் படுப்பாள். அன்பாய் உபசாரம் செய்தால் அவள் முழங் கையால் இடிப்பாள். தாய்க் கிழவி வந்து அவளை அழைக்கச் செருமுவாள். அந்தக் குறிப்பறிந்து ஐயரைவிட்டுச் செல்வாள். சென்று பிற ஆடவரைக் கூடுவதும், பொன் முடிப்பு வாங்குவதும், ஐயர் அருகில் வந்து படுத்துத் தூங்குவதுமாக விருந்தாள்.

மதனாபிஷேகம் ஐயரை ஏசினமை
மதனாபிஷேகம் பாங்கிமாரில் மாயக்குருவியை பிட்டுப் பழைய மாப்பிள்ளைமாரை அழைத்தாள். அவள் ஐயரைப் பார்த்தாள். அவர்கள் வந்தால் “நான் அவர்கள் அருகிற் போயிருந்தால் சவுங்கலே! குறிப்பறி யாயோ! போடா, போய்ப்புது மண்டபத்து இருந்து வாடா” என்பாள். மட்டுக்கு மிஞ்சிப் புரணிகள் கூறத் தொடங்கினாள். ஏசித் துரத்தினாள். துரத் தினாலும் ஐயர் பூட்டிய செக்கின் எல்லையை விடடுப் போகாத எருது போலானார்.

தாய் மகளை ஏசினமை
தாய்க்கிழவி மகளைப் பார்த்துக் கூறுகின்றாள்: “இந்தப் பார்ப்பான் தான் உனக்குப் பொருளோ? உனக்கு முகமாயம் என்ன செய்தான்? நீ அவனுக்கு ஏற்ற உடன்படிக்iகை என்ன சொன்னாய்? இது பார்த்தவருக்கு ஏற்குமோ? கொடுக்கு மட்டும் வாங்கிக் கொடாதிருந்தால் விட்டுத் துரத்துவ தல்லவோ வேசிகளின் முறைமை. நீ என்ன? எடுக்கும் கைப்பிள்ளையோ? நீயும் பேய்ப் பிள்ளையானாய். மாப்பிள்ளைமார் கள்ளரைப் போற்றிரியக் காரண மென்ன? ஓடத்திலேறிக் கடக்காவிட்டால் ஓடக்காரன் தலையில் இடுவது சொட்டு என்பார்கள். உனக்கு நான் சேர்த்தளித்த மருந்துக்கு மலையும் நகர்ந்து வருமே. உனக்கு ஸ்தனங்கள் வயிற்றைத் தொட்டதோ? கன்னம் சுருங்கினதோ? கூந்தல் நரைத்ததோ? மேனி இளைத்ததோ? தொட்டவனை விட்டுப் பிரிந்தால் வேறு பிழையில்லையோ? இந்தப் பிராமணனோ உனக்குப் பிடிப்பாய்ச்சுது. அவனை ஊரைவிட்டுத் துரத்து.” இவள் இவ்வாறு கூறியதை ஐயர் வீட்டின் இறப்புக் கூரையோடு ஒட்டி நின்று கேட்டனர்.

சண்டையிட்டமை
நன்றி மறந்தாரைத் தெய்வங் கேட்கும் என்று சொல்லி ஐயர் எதிரே வந்தார். ஐயர் பொருளை எல்லாம் தனது கையால் வாங்கிவிட்ட மாமியார் ஆங்காரமிட்டாள். இந்த மாமியார் தனது மூப்பைக் கொடுத்து இளமை வாங்க மொட்டைமாப் பிள்ளைமாரைத் தேடுவாள். தன்னை முன்பு சேர்ந்த பணக்காரரை முறை மாற்றி மகளுக்கு இணக்குவாள். இவள், “என்ன பார்ப்பாரப் பயலே ! இன்ன மொருக்காற் சொல்லு. கன்னத்தில் அறைய ஆளில்லையோ? சின்னஞ் சிறுக்கி உனக்கு நன்றாகச் சிக்கினாளோ? உனக்கு வைப்பு நிசமாச்சோ? சாப்பாட்டுக்கு என்ன கொடுத்தாய்? நீ இவ்வளவு காலமுந் திரிந்தாய். இனிப்போதும் போ. பெண் உனக்குத் தாய் மாமன் பிள்ளையோ? தாலிகட்டித் தந்தேனோ? நீ மாத்திரம் என் மகளுக்கு நேசமோ? மாமியிடம் கொடுத்த பணம் நட்டம் போனதுண்டோ? சாண் வயிற்றுப் பிச்சைக்கு வந்தவனும் பெண்ணுக்கு மாப்பிள்ளையோ? சொந்த மாகக் கிட்டக் கிடக்கக் கிடைப்பாளோ? தேவடியாள் அழைத்தொரு வனைச் சேர்வது எத்தனை நாள்? சவுங்கலே ! வாயை மூடு” என்று புடவையை இறுக்கினாள்.

ஐயர் அவளைத் தின்றுவிடலாம் என்னும்படி கோபித்தார். “நெருப்பிற் பட்ட பாம்பை எடுத்த நளனை அது கடித்த கதை மெய்யே. பதறிப் பேசாதே. நான் கொடுத்தது இரகசியமோ? செட்டிகளுக்குத் தெரியாதோ? நான் கொடுத்த கட்டி வராகன் கணக்குண்டோ? தட்டார் அறியாரோ? ஊரார் அறியாரோ? உன் நெஞ்சறியாதோ?” என்றார்.
அவள் பொங்கி எழுந்தாள். “சுவட்டில் நுழையடா. சந்தையின் மாங்கொட்டையே ! களவாணியப் பயலே ! கண்ணைக் கிளறட்டோ ! இனி ஆசை வேண்டாம். புறப்பட்டுப் போ” என்றாள். அந்த வரட்டுத் தோய்ப் பாடி ஐயர் மடியைப் பிடித்தாள். தள்ளினாள். ஐயர் ஐந்தாறு தாக்கினார். பொக்க வாய்ச்சி ஐயர் குடுமியைப் பிடித்தாள்.

சபையேறினமை
ஊரிலுள்ளவர்கள் கூடி விலக்கிவிட்டார். கூகூ என்று அம்பலத்தில் ஓடினாள். ஐயரும் பிறகே சென்றார். அவள் தாடகைபோற் போய்ப் புது மண்டபத்தில் கோயில் தலத்தாரைக் கூட்டமிட்டாள். வாய்விட்டழுதாள். மகளை அருகே நிறுத்தினாள். சபையாரைத் தொழுதாள்.

கிழவி அறிவிப்பு
கிழவி கூறுகின்றாள் : “தெய்வேந்திர பட்டரே! மீனாட்சி பட்டரே! காமாட்சி பட்டரே! நரசிங்க ஐயரே! செவ்வந்தி லிங்கையரே! எங்கள் சொக்கலிங்க ஐயரே! சங்கராசாரியரே! அனந்த சாத்திரியாரே! கோவில் ஸ்தானியரே! ஊருக்குள் நியாயமில்லையோ ! எனது மகளைப் பார்ப்பாரப் பேய் பிடித்ததே. ஐந்தாறு மாதமாக அவள் கோயிலுக்குள் ஆடிப்பாடித் திரியக் கண்டீரோ ! பஞ்சமாபாவி இந்தப் பார்ப்பான் பணங் கொடுத்து ஒரு நாள் அவளுடன் கூடியிருந்தான். விடிந்தவுடன் போவானென்று எண்ணி னேன். என்ன மருந்திட்டானோ? என்ன வகை பண்ணினானோ? இவனுக்கு மதன நூல் பாடமோ? அவளை வைப்பென்று சொன்னான். வட்டிலிற் கஞ்சிக்கும் அவள் உப்பென்று கேளாமல் உபாயமிட்டான். கலியாணஞ் செய்தவன்போலக் கூடிக் குலாவினான். அவள் வேறு ஆடவரைக் கண்டா லும் பேசாமற் கட்டிவிட்டான். இவளுக்கு வாடைப் பொடியிட்டான். எனக்கு வாய்ப்பூட்டும் இட்டான். ஒரு பட்டிமாடு வைக்கிறேன். சம்பா நெல்லுக் கட்டி வைக்கிறேன். பொற் கிடாரங்கள் ஏழெட்டுத் தூங்க வைக்கிறேன் என்றான். சோற்றுக்குத் தூங்கவைத்தான். ஏங்கவைத்தான். அம்பலத்தில் ஏற்றிவைத் தான். தனக்குக் குங்குமம் சம்பாவரிசி கொள்ளவென்றும், பொங் கலுக்குப் பாசிப்பயறு என்றும், பூசுவதற்குச் சவ்வாதென்றும், தோசைக் குழுந் தென்றும் பகலிரவாய்க் கேட்பான். கொடுக்குங் கடன்போற் கொடுத்தேன். இவள் கழுத்திற் கட்டிய பொட்டொழிய எல்லா உடைமையும் தோற்றோம். கள்ளப்பயல் மோகினி மந்திரம் முழுதும் அறிவான். மன்மத நூலெல்லாம் அவனுக்குப் பாடம். வசியப் பொட்டறிவானாம். போகக் கட்டறிவானாம். தண்டுப் பூச்சறிவானாம். ஒரு நாள் இவன் பையைச் சோதித்தேன். சிறிய மயிர்த்தோலும், நரிக்கொம்பும், விபூதி முடிப்பும், சில உண்டைகளும் நான் கண்டேன். இவன் திருட்டுப் புரட்டன் என்று அறிந் தேன். சோதிப்பாரென்று அவற்றை அம்பலத்திற்கொண்டு வருவானோ? இவள் மாதவிடாயானால் தானே தண்ணீர் ஊற்றவேண்டுமென்பான். அல்லும் பகலும் அடைத்த கதவைத் திறவான். இவளைச் சற்றும் வெளியில் விடான். இவன் முற் பிறப்பில் ஊர்க்குருவியோ?

“பொருள் கொடுப்பேனென்று சொன்னதல்லால் இவன் என் மகட்கு என்ன கொடுத்தான். முளை அரையாப்புக் கொடுத்தான். மேகங் கொடுத் தான். உடம்பிற் சிரங்கானாள், மெலிந்தாள். தம்பியிட்ட மருந்தால் மாது குரங்கானாள். குத்து இருமல் கொண்டாள். மருந்து கொடுப்பவரார். புண் ணுக்குக் கூசாமற் கிட்டக் கிடப்பவரார். பாவி ! என் மகளைக் கெடுத்தான். தேட்டம் வந்து சேரும் சிறு வயதில் போக்கறுவான் விடுதிபோல் வந்து சேர்ந்தான். கூடவந்து இருந்த குடுமித் தலையைக்கண்டு ஆடவர் எல்லாம் அகன்றுவிட்டார். நித்தம் படுக்கைக்கு நூறு பொன் தந்த முத்திரைப்பண்டாரம் மெத்தக் கறுப்பானான். மாலை கட்டிக் கன்னியப்பன் முற்றும் வெறுப் பானான்.

“சிறுக்கிமேல் ஆசைவைத்த வாத்தியார் ஐயர் கோபித்துப்போனார். பகையானார். காசு பணம் மாரிபோல் சொரிந்த மாரியப்பன் சண்டையிட்டு வீரிவளவிற் போனான். மீள்வானோ? பொன்னுடைமை பூட்டிவிட்ட பொன்னப்பன் அந்தி சந்தி சாடைசெய்து பார்த்தான். சலித்துவிட்டான். பின்னை வரத்துமில்லை. இவனும் ஒன்றும் கொடுக்கமாட்டான். என் மகள் ஒரு சேலை வாங்கித் தரச் சொன்னாள். சண்டைக்குப் புறப்பட்டான். வாயில் வந்தபடி வைதான். என்னை மடிபிடித்துச் செய்யாததெல்லாம் செய்தான். மகளைச் செவியிலே பிடித்துக் கையால் அடித்தான். என்னைக் கையால் இடித்தான். இடுப்பு முறியப் போட்டான். நான் மூர்ச்சையானேன். எழுந்திருந் தேன். கேட்டார் சிரிக்கக் கீர்த்திவைத்தான். ஏன் செய்தாய் என்று கேட்டால் தாய்க்கிழவி சூதென்பான். கொடுத்த பொருள் கொஞ்ச நஞ்சமோ என்பான். நானும் மகளும் தாமரையில் நீரானோம். பெண்ணென்றால் பேயுமிரங்கும். கண்டிப்பாய் நடுப்பேசி இவன் இந்தச் சோமனைக் கடக்கும்படி கூறுங்கள்” என்று சொல்லி முடித்தாள். அப்போது சபையார் தாய்க்கிழவியைக் கை யமர்த்தி ஐயரை நோக்கி, “இனி உமது கதையைச் சொல்லும்” என்றார்கள். ஐயர் கூறுகின்றார் :

ஐயர் தனது அறிவிப்புக் கூறல்
“இவள் சொன்னதற்கு எதிர் யான் என்ன சொல்வேன். வேதியரே! முன்னொரு நாள் நடந்த கதையைக் கேளுங்கள். முன்னொருநாள் செட்டி ஒருவனைக் காட்டு நீலி என்னும் பேய் தொடந்தாள். அவன் யந்திரமும் பிரம்பும் வைத்திருந்தமையால் அதற்குத் தப்பி பழையனூர் அம்பலத்திற் கூடியிருந்த வேளாளர்முன் சென்றான். ஆலங்காட்டுப்பேய் என் மனைவி போல் வருகின்றாள் என்றான். நீலி கள்ளிக் கொம்பொன்றைப் பிள்ளை யாக்கிக் கையில் ஏந்திவந்தாள். என் கணவர் என்னை நடுக்காட்டில் விட்டு வந்தார். என்னைப் பேயென்றார். இந்தப் பிள்ளையை கள்ளிக் கொப்பென் றார். இந்தப் பிள்ளையை நிலத்தில்விட்டால் ஆர் கிட்டப் போகின்ற தென் றறியலாம் என்று சொல்லி அதனைச் சபையில் விட்டாள். அதுவும் தவழ்ந்து சென்று செட்டி மடியில் ஏற அவனும் திடுக்கிட்டான். கண்டோர் இவன் மாயஞ் செய்கின்றானென்று, இப்பெண் சத்துருப் பேயாகி உனக்குச் சதிசெய் தால் நாங்கள் இத்தனை பேரும் உங்களுக்குப் பழிகாண் என்று உரைத்தார்கள். வணிகனையும் நீலியையும் ஒரு வீட்டில் தூங்கும்படி வைத்துக் கத வடைத்துப் பூட்டிட்டு சபையாரும் போனார்கள். நீலி செட்டியின் உதரத்தைக் கடித்து இரத்தங்குடித்தாள். குடல் மாலை சூடினாள். செட்டி இறந்தபின் நடுவுரைத்தவர்கள் கண்டார்கள். ஆதலால் பெண்கள் சொல்லும் சால வித்தைகளை நம்புதல் கூடாது.

“அந்தணர்களே! நான் இவள்மேல் ஆசை கொண்டேன். இந்த விதி வருமென்று நான் அறியேன். இந்தக் கூனி மருந்திட்டாள். அன்று முதல் மேனி ஒடுங்கினேன். இவளுக்கு ஆடையோ ஆபரணமோ என்று கொடுத்த தெல்லாம் கணக்கிட்டுச் சொல்லி முடியாது. இவள் சொந்த வைப்பென்று பேர். ஆனால் ஆயிரம்பேர் போக்குவரத்து. என்னிடத்துள்ள பொருளெல் லாம் உபாயமாய் வாங்கிக்கொண்டு கள்ளி என்னைத் துரத்த உபாயமெடுத் தாள். சும்மா புறப்பட்டுப் போ என்றாள். நீ கொடுத்தது என்ன என்றாள். முன்மடி பிடித்தாள். சந்தியிலே வைத்துப் பூணூலை அறுத்தாள். இந்தக் கிழவி அலக்கழிக்கப் பார்த்திருந்த இந்தக் குமரி ஏனென்றாளோ? ‘பெண்ணே! உணக்கு என்மேல் காதல் உண்டோ இல்லையோ’ என்றேன். அவள் சளக் கென்று தலையில் அடித்தாள். அந்தணரே! நான் நல்ல மெழுகு பிள்ளையார் போல் இருந்ததை நீர் அறியீரோ? கிழவி இட்ட மருந்தாலும், இவள் கொடுத்த புண்ணாலும் ஒட்டி உலர்ந்த உடலானேன். இவளிடத்தில் ஒரு ஆழாக்கு முத்தும், ஒரு மாணிக்கமும், ஒரு பொன் முடிப்பும் வைத்திருந்து தா என்று கொடுத்தேன். அவற்றை வாங்கி வழங்குவீர்” என்று கூறினார். இவ்வாறு ஐயர் முறையிடுதலும் தாய்க்கிழவி துடிதுடித்து,

பின்னும் தாய்க்கிழவி அறிவிப்பு
“இவன் வஞ்சகத் திருடன். இவன் கூத்திச் செலவும் போக்கி ஒரு முடிப்பு வைத்ததுண்டோ? மருதங்குடித் தெய்வம் இருக்கிறது. பதினெட்டாம் படித் தெய்வம் இருக்கிறது. சத்தியஞ் செய்யட்டும் தீர்த்துக் கொடுக்கிறோம். அல்ல என்றால் என்னைக் கிடத்தி எனது மகள் தாண்டுவாள். அல்லது மகளைக் கிடத்தி நான் தாண்டுகிறேன். இவன் சொல்வதென்ன? இவன் முற்பிறப்பில் என் மகளுக்குப் பிள்ளையோ?” என்றாள். இதனைக் கேட்டுச் சபையோர் சிரித்தனர். ஐயரைக் கிட்ட அழைத்து, “ஓய்! ஐயரே! வேசி வசிய மருந்திட்டாள் என்றீர். அச்செய்தி உமக்கு எப்படித் தெரிந்தது” என்றார்.

மருந்திட்ட தறிந்தமை கூறல்
ஐயர் கூறுகின்றார்: “எனக்குக் காதல் தந்த முத்தனையாள் நேற்றிரவு மூலைக்குள் வைத்துச் சாராயம் நிறையக் குடித்துக் கூட்டமிட்டாள். அத்தை முதல் சேடிகளும் குடித்து வெறிபிடித்துத் துள்ளாட்டமாடினர். மதனாபி ஷேகம் சேடியரைத் தூஷித்து வெளி வாயிலில் தள்ளிவிட்டாள். அப் போது ஒருவன் எருதுபோல் உள்ளே நுழைந்தான். நானும் திண்ணையில் படுத்திருந்தேன். குண்டுணிவாய்க்கள்ளி என்னும் தாதி அங்கே வந்தாள். சாராய வெறியாலே அவள் என்மீது விழுந்து பண்ணாத கோலமெல்லாம் பண்ணினாள். அவள் தன்னால் ஆனமட்டும் பார்த்து ஆகாமல் வெம்பிக் காட்டு மருந்தும் கடைமருந்தும், ஊன் மருந்தும் கூட்டி இட்டால் பெண்மீது வரும் ஆசை மட்டுக்கடங்குமோ என்றாள். அவளுக்கு உடந்தையாகத் திரியும் பாங்கி கூறினமையால் நான் அறிந்தேன்” என்றார். இது கேட்ட சபையார் விந்தை என்று சொல்லிச் சிரித்துக் கூறுகின்றார்கள்:

சபையார் ஐயரைத் தேற்றியது
“பிராமணரே! நீர் தாசியுடன் அம்பலத்தில் ஏறுதல் தகாது. வேசி ஒருத்தி ஐயர் தலைமேற் கல்லைப்போட்ட கதை அறியீரோ? அவள் திரவியத்தை மாத்திரம் வாங்கிக்கொண்டு உம்மைச் சீவனுடன் விட்ட பாக்கியம் போதாதோ? வேதியராயுள்ளோர் வேசியரைக் கண்டால் காற்காத வழிதூரம் விலகுதல் முறையன்றோ? மந்திரஞ் செபிக்கும் வேதியன் வேசி எச்சில் கொள்ள எப்படித் துணிவான்? உமது மையல் தீர்த்த கடனுக்குத் திரவியத்தைக் கொடுத்துத் தீர்த்துவிட்டீர்.

இது பிராமணருக்கெல்லாம் வசையாச்சே! வைக்கக் கொடுத்த பொன்னை எடுத்துத் தரச் சொல்லுமென்றீர். இனிக் கேட்க முடியுமோ? பாம்பின் வாய்க்குள் அகப்பட்ட மண்டூகமும், யானைவாய்க்குள் அகப் பட்ட கரும்பும், தீக்குள்விட்ட நறுநெய்யும், பூமியின் வெடிப்புள் ஊற்றிய பாலும், பரம உலுத்தர் கைப்பொருளும் வாங்கினால் உமது பொருளும் வாங்கலாம். நாம் சொல்லும் புத்திமதி கேட்டால் பொன் அரிதல்ல. உமது கல்வியால் பொன் சம்பாதிக்கலாம். பரத்தைக்குக் கொடுத்ததிலும் பத்து மடங்கு யோகம் பிறக்கும். மனத்திலே நினைந்து இடையாமல் ஊருக் கேகும்” என்று சொல்லிச் சபையார் வீடு சென்றனர்.

ஐயர் கலங்கித் தெளிந்தமை
வற்றிய குளத்திற் பறவைபோல் மதனாபிஷேகம் வீடு திரும்பினாள். ஐயர் எண்ணமிடுகின்றார். “மோகமுற்ற என்னைக் கிழவி இடர்செய்து பிரித் தாள். இக்கிழவி தலையிற் கல்லைப் போட்டுப் புறப்பட்டுப் போவோமோ? எனது ஊரெங்கே? தோழர் எங்கே? மனைவி எங்கே? அட்டாவதானி என்னும் பேரெங்கே? நட்டாற்றில் கோரைபோல் ஆனோம்?” என்று இவ்வாறு எண்ணி கலங்கிச் சொக்கரைத் தெரிசித்தார்.

மதுரையினின்றும் சென்றமை
ஐயர் மதுரையை விட்டு நடக்கப் பெண்ணாசை ஒரு காலைப் பிடித் திழுக்கும். மாமியின் சினம் ஒரு காலை முன்னிழுக்கும். ஆசைச் சீமாட்டி ஆசைக் கரும்பை நினைந்து மூன்று தரம் முன்னே திரும்புவதும் மீள்வது மாக நடந்தார்.

ஐயர் மனைவியை அடைதல்
ஐயர் அக்காலத்தில் இருந்த நாகமகூளப்பன் என்னும் ஓர் சிற்றரச னிடம் சென்று தனது வரலாற்றை யெல்லாம் “விறலிவிடு தூது” என்னும் பாட்டாகப் பாடி அதனிடையே இடையே அரசனையும் புகழ்ந்தான். அரசன் அவருக்கு கனபரிசுகளளித்து உபசரித்தான். ஐயரும் சீரங்கஞ் சென்று தனது மனைவியுடன் மகிழ்ந்திருந்தார். இவர் பாடிய விறலிவிடு தூதென்பது, தன்னோடு ஊடல்கொண்டிருக்கும் தலைவியை அவ்வூடல் தணிக்குமாறு விறலியை அனுப்பியதாகப் புனையப்பட்ட பாட்டு.