மணிமேகலை சுருக்கம்
ஒளவை துரைசாமி
1. மணிமேகலை சுருக்கம்
2.  பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
3.  நுழைவாயில்
4. தண்டமிழாசான் உரைவேந்தர்
5. முகவுரை
6.  உரை பெறு கட்டுரை
7.  ஆராய்ச்சி முன்னுரை
8. முன்னுரை
9.  விழாவறை காதை
10. ஊர் அலர் உரைத்த காதை
11. மலர்வனம் புக்க காதை
12. பளிக்கறை புக்க காதை
13. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
14. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை
15. துயிலெழுப்பிய காதை
16. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
17. பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை
18. மந்திரம் கொடுத்த காதை
19. பாத்திரம் பெற்ற காதை
20. அறவணர்த் தொழுத காதை
21. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
22. பாத்திரமரபு கூறிய காதை
23. பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதை
24. ஆதிரை பிச்சையிட்ட காதை
25. உலக அறவி புக்க காதை
26. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
27. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் fஆக்கிய காதை
28. உதயகுமரனை வாளால் எறிந்த காதை
29. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
30. சிறைசெய் காதை
31. சிறைவிடு காதை
32. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
33. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
34. வஞ்சிமா நகர் புக்க காதை
35. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
36. கச்சிமா நகர் புக்க காதை
37.தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை

 


மணிமேகலை சுருக்கம்

 

ஒளவை துரைசாமி

 

 

நூற் குறிப்பு
  நூற்பெயர் : மணிமேகலைச் சுருக்கம்
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 3
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 448 = 472
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 295/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு : வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.
  #பதிப்புரை

  ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

  தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

முகவுரை


“நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக்
கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே - கூடலார்
கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன்
தண்டா உரைமுத் தமிழ்.”

சிலப்பதிகாரம் என்பது செந்தமிழ் இலக்கியங்களுள் மிக்க தொன்மையும் சிறப்பும் அமைந்த பேரிலக்கியமாகும். “செஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என இந்நூற்றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த தேசியக் கவி, சுப்பிரமணிய பாரதியார் பாராட்டினர். பண்டைய ஆசிரியன்மாரும் இவ்விலக்கியத்தை மிக்க சிறப்பாகக் கருதியுரைத் துள்ளனர். சென்ற நூற்றாண்டில் இருந்த ஒரு சான்றோர், “சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்” என ஒரு நயந்தோன்றக் கூறியது, இன்று நாம் நினைக்குந்தோறும் நம் நெஞ்சத்தே இன்பம் நிறைவிக்கின்றது.

இச் சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிவரும் பேரிலக்கிய மாதல்பற்றி, இதனைப் பண்டையாசிரியன் மார், இயலிசை நாடகத் தொடர்நிலைச் செய்யுள் என்றும், நாடகக் காப்பியம் என்றும் உரைப்பர். இதன்கண் இடையிடையே உரை நடையும் விரவுதலால், இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் சான்றோர் கூறுவர்.

    I. நூலாசிரியர்:- இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள். இவர் சேரர்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை “ஆராத்திருவின் சேரலாதன்” என்னும் வேந்தர் பெருந்தகை; தாயார், நற்சோணை எனப்படுவார். சேரலாதனுக்கும் நற்சோணைக் கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்; இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒரு நாள் மக்கள் இருவரும் தம் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகன் ஒருவன் வந்தான். வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, “இவனே அரசுரிமை பெறுவன்” என்றான். அதுகேட்ட செங்குட்டுவன் சினந்து எரிதவழ நோக்கினன். மூத்தோன் இருப்ப, இளையனான தான் அரசுரிமை யெய்துதல் ஆகாதெனக் கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார். அதனால், இவ்விளங் கோ, இளங்கோ அடிகள் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படு வாராயினர். இவ்வரலாறு, இச் சிலப்பதிகாரத்துக்கு உரைவிரித்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரால் பின்வருவாறு உரைக்கப்படுகிறது:  

“குமரியொடு வடஇமயத்து,
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலா தற்குத் திகழொளி ஞாயிற்று
ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன்மகள்
நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள்
முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப்
பின்னோன் தன்னையும் பெருநம்பி யாகஎன
அன்னவர் தம்மொடு தென்னர் செம்பியர்
தன்னடி போற்றத் தமனிய மண்டபத்துச்
சிங்கம் சுமந்த பொங்கணை மீமிசை
உவரித் திரையின் கவரி இரட்ட
வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன்
அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி
“இன்தோள் கழியப் பொன்திகழ் உலகம்
சேர்தி நீ” எனச் சேரலற்கு உரைத்தவன்
மைந்தரை நோக்கி, “நந்தாச் செங்கோல்
அந்தமில் இன்பத்து அரசாள் உரிமை
இளையோற்கு உண்டு” என உளைவனன் நனிவெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன்
கண்ணெரி தவழ அண்ணலை நோக்கிக்
கொங்கவிழ் நெடுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து
ஆயினன்.”

என்பது.

    II. நூலாசிரியரின் காலம்:- இவ்விலக்கியத்துட் கூறப்படும் கண்ணகி வரலாற்றினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்த னார் என்னும் நல்லிசைப்புலவர், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகட்கு உரைத்தனர்; அதுகேட்ட அடிகள் இந்நூலை இயற்றி அவரைக் கேட்பித்தனர். சாத்தனார் கடைச்சங்கப் புலவராதலின், இளங்கோவடிகளும் கடைச் சங்க காலத்தவர் என்பது பெறப்படுகிறது.  

இனி, இலங்கைநாட்டு வரலாற்றினை விளக்கும் மகாவம்சம் என்ற நூல் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகட்குமுன் இலங்கையைக் கயவாகு என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான் என்று கூறுகின்றது. அவனுக்குப் பின் எண்Q று ஆண்டுகள் கழிய, வேறொரு வேந்தன் கயவாகு என்னும் பெயருடன் இலங்கையை ஆண்டனன் என்றொரு செய்தியும் தெரிகிறது. இச் சிலப்பதிகாரமும் சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழி பட்ட போது, கயவாகு என்னும் இலங்கை வேந்தன் ஒருவன் வந்திருந்து வழி பட்டு வரம்பெற்றான் என்று கூறுகிறது. இவ்வேந்தனுடன் நூற்றுவர் கன்னர் என்னும் வடநாட்டு அரசர் பெயரும் இச்சிலப்பதிகாரத்திற் காணப்படுகிறது. அவர்கள் வடநாட்டு வரலாற்றுட் காணப்படும் சதகரணிகள் என்பர். அவர் காலம் கி.பி. 77-ம் 133 மாகும். ஆகவே, இவர் காலத்துக் கயவாகு முதற் கயவாகுவே என்பது தெற்றென விளங்குகிறது. எனவே, இளங்கோவடிகள் காலம் முதற் கயவாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.

இனி, வேறு சிலர் இச்சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறுசிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

இக் கூற்றுக்களை நோக்கின், இப் பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது. இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந் துணையும், இளங்கோவடிகள் இன்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத்தெண்Qறு யாண்டு கட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம்.
III. நூலாசிரியரின் சமயம்:- இவர் காலத்தே நம் தமிழ் நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்விசெய்தலு மாகிய வைதிக சமயமும், புத்த சமண சமயங்களும் பரவி இருந்தன. தமிழ் நாட்டிற்கே உரிய சிவவழிபாடாகிய, இக்காலத்தே சைவம் எனப்படும் - தமிழ்ச் சமயமும் இருந்துவந்தது. இளங்கோவடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதி யினைத் தக்காங்கு அறிந்திருந்தனர். அவற்றைக் கூறவேண்டுமிடங் களில், அவ்வவற்றிற்குரியவர் போலவே கூறுவது கொண்டு, அவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாரும் பலதிறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவரென்றே துணியுமாறு டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுகின்றார். அஃதாவது:

“கால்கோட்காதையில், செங்குட்டுவன் இமயம் செல்லப் புறப்பட்டபொழுது, “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங் கொண்டு” எனவும், “ஆடக மாடத்து அறிதுயி லமர்ந்தோன், சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணீர் கரந்த செஞ் சடைக்கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” எனவும், செங்குட்டு வனை நோக்கி இமயத்தினின்றும் வந்த முனிவர்கள் கூறியதாகச் “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும், வரந்தருகாதையில், மாடலன் கூறியதாக “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” எனவும் இவரே (இளங்கோவடிகளே) கூறியிருத் தலாலும், இவர் அவனுடைய (அச் செங்குட்டுவனுடைய) தம்பியாதலாலும், இவரது சமயம் சைவமென்று தோற்றுகின்றது.”

IV. நூல் வரலாறு:- இளங்கோ அடிகள் துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் உறைந்து வந்தனர். அவர்பால், ஒருகால், தண்டமிழாசானாகிய சீத்தலைச் சாத்தனார் வந்திருந்தார். அப்போது குறவர் பலர் கூட்டமாக வந்து, தமது குன்றத்தே நிற்கும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கண்ணகியார் வந்து நின்று ஆங்கு அப்போது விண்ணவர் கொணர்ந்த வானவூர்தி யில் அவள் ஏறி விண்ணுலகு சென்றதைத் தாம் கண்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட அடிகள் பெருவியப்புக் கொள்ள, சாத்தனார், “யான் அறிகுவன் அது பட்டது” என்று கூறலுற்று, கண்ணகியின் வரலாறு முற்றும் எடுத்துரைத்து, கண்ணகி மதுரை யைத் தீயூட்டியபோது மதுராபதி அவள் முன் தோன்றி அவள் பழம் பிறப்பை யுணர்த்தி, ‘இன்றைய பதினான்காம் நாள் நீ நின் கண வனை வானவர் வடிவில் காண்பாய்’ என்று சொல்லிற்று; அதனை யான் கேட்டேன்’ என்றார். கேட்டதும், அடிகள் மனமகிழ்ந்து,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்,
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்”

என்று மொழிந்தனர். அதற்கு அச் சாத்தனார் “இந்நிகழ்ச்சி முடிகெழு வேந்தர் மூவர் நாட்டினும் நிகழ்ந்ததாதலால், அவ்வேந்தர் குலத்து அடிகளாகிய நீரே இதனை அருளுக” என்றார். அவ்வாறே, அடிகள் இச் சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தைச் செய்தருளினர். பின்பு, இதனை அடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டனர்.

V. நூற்பொருள்:- இச் சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங் களாகப் பகுத்தோதப்பெற்றுள்ளது. கண்ணகியார் வரலாற்றுள், சோழநாட்டில் நிகழ்ந்தன புகார்க் காண்டத்தும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன மதுரைக் காண்டத்தும், சேரநாட்டில் நிகழ்ந்தன வஞ்சிக் காண்டத்தும் கூறப்படுகின்றன. புகார் என்பது காவிரிப்பூம் பட்டினம்; இது சோழநாட்டிற்குத் தலைநகர். மதுரை பாண்டி நாட்டின் தலை நகரம். வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். வஞ்சி நகரமென்பது இப்போது கோயமுத்தூர் சில்லாவிலுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக்களம் என்பாரும் பலதிறத்தர் ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சி நகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை. இதனை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

    1. புகார்க் காண்டம்:- புகார் நகரத்தே, கோவலனும் கண்ணகியும் பெற்றோர் உவப்பத் திருமணம் புணர்ந்து மனையறம் செய்து வருகின்றனர். அந்நகரத்து நாடகக் கணிகையான சித்திரா பதியின் மகள் மாதவி, ஆடலும் பாடலும் வல்லவளாய் அழகு மேம்பட்டுத் திகழ்கின்றாள்; அவள் தன் நாடகக் கல்வித்திறத்தைச் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குக் காட்டக் கருதி அரங்கேற்று கின்றாள். அவளது கல்வி நலங் கண்ட கரிகாலன் “ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அவட்குத் தலைவரிசை” என அருள்செய்கின்றான். அச்செய்தியறிந்த கோவலன், அவட்கு அப் பொன்னைப் பரிசமாகத் தந்து, அவள் மனையை யடைந்து அவள் பான்மையனாகித் தன் மனையை மறந்து ஒழுகுகின்றான். மாதவி அவனொடு கூடி அந்திமாலையின் இன்பம் நுகர்ந்து நகரத்தார் இந்திர விழா அயர, தன் ஆடல் பாடல்களால் அதனைச் சிறப்பிக்கின்றாள். விழாக் கழித்த உவாநாளில் மக்கள் கடலாடச் செல்கின்றனர். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று, புன்னை நீழற் புது மணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்; அப்போழ்து, வசந்தமாலை யென்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாடவேண்டுகின்றாள்; அவனும் தான் ஒன்றின் மேல் மனம் வைத்துக் காவிரிபற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான். பாட்டுக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினானெனப் புலந்தாள் போல் அவ் யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக்கின்றாள். அக் குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளின் நீங்கித் தன் மனையை அடைகின்றான். மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள்.  

இதுநிற்க, கோவலன் பிரிவாற் பெருந்துயர் உழந்து, கற்புநெறி வழுவாது, மனையறம் ஓம்பிவந்த கண்ணகி, தீக்கனா ஒன்று கண்டு நெஞ்சுகலுழ்ந்து தன் தோழி தேவந்தியுடன் சொல்லாடியிருக் கின்றாள். கோவலன் அவள்பாற் போந்து,

“சிலம்புமுத லாகச் சென்ற கலனோடு
உலந்தபொருள் ஈட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச் சென்று; (பக். 45)

என்னோடு வருக” என்று மொழிகின்றான். “அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு அன்மையின்” கண்ணகியாரும் உடன் செல்ல இசைகின்றனர். இருவரும் விடிவதற்குள் புகார் நகர் நீங்கி, மதுரை நோக்கி நடந்து செல்கின்றனர். வழியிற் கவுந்தி யடிகளின் துணை அவர்கட்குக் கிடைக்கின்றது. அவருடன் செல்லும் இருவரும் புனல் நாடு நல்கிய இயற்கைக் காட்சியின் இன்பத்தை ஆர நுகர்ந்துகொண்டே உறையூரை அடைகின்றனர்.

    2. மதுரைக் காண்டம்:- உறையூரை யடைந்த மூவரும் ஆங்கிருந்த அருகன் கோயிலைச் சார்ந்து சமணமுனிவர்களைக் கண்டு அன்றைய பகற் போதினைப் போக்கி, மறுநாள் மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்; வழியில் மறையவன் ஒருவனைக் காண்கின்றனர். அவன் கோவலனுக்கு மதுரைக்கு ஏகும் நெறியின் திறத்தை விரியக் கூறுகின்றான். பின்னர், தெய்வம் ஒன்று போந்து, மாதவியின் தோழிபோல் உருக்கொண்டு நின்று, கோவலனை மருட்ட முயல்கின்றது. அவன் ஒரு மறைமொழி யோதி அத் தெய்வ மயக்கைப் போக்குகின்றான். வேனில் வெப்பம் மிகுகின்றது. கோவலன் கவுந்தியடிகட்கும் கண்ணகிக்கும் நீர் கொணர்ந்து தருகின்றான். பின்பு மூவரும் ஐயை கோட்டமடைந்து ஆங்கே ஒரு புறத்தே தங்குகின்றனர்.  

அக்காலத்தே, அக்காட்டில் வாழ்ந்த வேட்டுவர் தமக்கு வேட்டம் வாய்த்தல் வேண்டி, ஐயைக்கு வழிபாடு செய்ய வருகின்றனர். அவருள் ஐயையின் கோலத்தில் வந்த சாலினி, தெய்வமருள் கொண்டு கண்ணகியைப் பார்த்துப் பலபடப் பாராட்டுகின்றாள். கண்ணகி நாணி நிற்ப, அவ் வேட்டுவர் பல்வகைப் பாராட்டுகளைப் பாடிக் கூத்தாடுகின்றனர்.

பின்னர் மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரை அடை கின்றனர். அவர்களை ஓரிடத்தே இருத்திக் கோவலன் தன் காலைக் கடன்களைக் கழிக்கச் செல்கின்றான். சென்ற விடத்தே கவுசிகன் என்னும் பார்ப்பனனால், மாதவி ஆற்றாது விடுத்த ஓலை காண்கின் றான். அதனையே தன் பெற்றோர்க்கும் அமைய விடுக்கின்றான். பின்பு அம்பணவர் என்னும் இசைப்பாணர் காட்டிய நெறியால் மதுரை அண்மையில் இருப்பதை அறிகின்றான்.
அன்றைப் பகற்போது கழிதலும் மூவரும் மதுரை மூதூரை யண்மி, வையையாற்றைக் கண்டு, அதன் கரை வழியே சென்று, மதுரைப் புறஞ்சேரியை அடைகின்றனர். அங்கே மாதவர் உறையும் தவப் பள்ளியில், கவுந்திபால் கண்ணகியை விடுத்துக் கோவலன் மட்டில் மதுரை நகர்க்குட் புகுந்து பல்வேறு தெருக்களையும் கண்டு பெயர்கின்றான். பின்பு, மாதரி என்னும் ஆய்ச்சியொருத்தி அங்கே வருகின்றாள். அவளைக் கண்ட கவுந்தியடிகள், கண்ணகியை அவள்பால் அடைக்கலப்படுத்த, அவள் கண்ணகியையும் கோவல னையும் தன் ஆயர் சேரிக்கு அழைத்துச் சென்று தன் மனையில் ஒருபுறத்தே இருக்கச் செய்கின்றாள். கண்ணகியார் இனிய உணவு சமைத்துக் கோவலனை உண்பிக்கின்றார்.

உணவு கொண்டபின் கோவலன் கண்ணகிபால் விடை பெற்றுக்கொண்டு அவரது சிலம்பொன்றை விற்கும் கருத்துடன் மதுரைக் கடை வீதியில் பொற் கொல்லன் ஒருவனைக் காண் கின்றான்; அவன் சூழ்ச்சியால் அரசுமுறை கோடுகின்றது, கோவலன் கொலைசெய்யப்படுகின்றான்.

ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி நிகழக் கண்டு அவர்கள் குரவையயர்கின்றனர்; அவரால் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியாருக்குத் தெரிகிறது. உடனே, திடுக்கிட்ட அவர், ஞாயிற்றை வினவிக் கோவலன் குற்றமிலனாதலைத் தெளிந்து, கோவெனக் கதறி யரற்றிக்கொண்டு ஊர்க்குட்புகுந்து, கொலைக் களம் அடைந்து அங்கே கோவலன் உடல் துணிபட்டுக் கிடப்பது கண்டு பெருவருத்தமுற்றுப் புலம்பி அவ்வுடலைத் தழுவுதலும், அவன் எழுந்து “ஈண்டே இருக்க” எனப் பணித்து விண்ணகம் செல்கின்றான். தீராத் துயரத்தால் மனம் திண்ணியராகிய கண்ணகி யார், பாண்டியன் கோயிலுக்கு வந்து அவன்முன் வழக்குரைத்துக் கோவலன்பால் குற்றமின்மையை மெய்ப்பிக்கப் பாண்டியன் தனது ஆராயாமை யுணர்ந்து ஆவிவிடுகின்றான்; அவன் மனைவியும் உயிர்விடுகின்றாள். உடனே, கண்ணகியார் வெளிப் போந்து தமது இடப்பக்கமார்பைத் திருகி நகர்மீது எறிகின்றார்; மதுரை மூதூரில் பெருந்தீ எழுகின்றது.

மதுரையை எரித்தும் செற்றம் தணியாது திரிந்த கண்ணகியை மதுராபதி என்னும் தெய்வம், கோவலனது பழம்பிறப்புணர்த்தி, “இன்றைய பதினான்காம் நாளில் நீ நின் கணவனை வானவர் வடிவிற் கண்டு கூடுவை” என்று சொல்லுகின்றது. கண்ணகியார் பின்பு ஐயை கோயிலை யடைந்து, தன் கை வளையை உடைத் தெறிந்துவிட்டு வையைக் கரை வழியே சென்று திருச்செங்கோடு என்னும் இடத்தையடைந்து ஒரு வேங்கை மரத்தின் கீழ் நிற்கின்றார். பதினான்கு நாட்களும் கழிந்து விடுகின்றன. விண்ணவர் வந்து தாம் கொணர்ந்த வானவூர்தியில் கண்ணகியாரை ஏற்றிக்கொண்டு, தம் விண்ணாடு செல்கின்றனர்.

3.  வஞ்சிக் காண்டம்:- கண்ணகியார் விண்ணாடு ஏகியது கண்ட வேடுவர், அவ்விடத்தே அவரைப் பரவித் தெய்வம் கொண்டாடி மகிழ்கின்றனர். இஃதிவ்வாறாக, சேரன் செங்குட்டுவன் இலவந்தி வெள்ளி மாடத்தில் தேவியோடு எழுந்தருளியிருக்கின்றான். ஒரு நாள் மலைவளம் காண விரும்பித் தேவியும் உரிமைமகளிரும் அரசியற் சுற்றமும் உடன் வரச் சென்று பேரியாற்றங் கரையை யடைந்து ஓரிடத்தே தங்குகின்றான். அவளைக் காண விரும்பிய குறவர் யானைக் கோடும், அகிலும், கவரியும் இவைபோல்வன பிறவும் கொணர்ந்து வழிபட்டுக் கண்ணகி விண்ணுலகு புக்க செய்தியை விளம்புகின்றனர். அங்கே, அப்போது, உடனிருந்த தண்டமிழாசானாகிய சாத்தனார், கண்ணகியின் வரலாறு முற்றும் விரிவாக எடுத்தோதி வாழ்த்துகின்றனர். பின்பு, குட்டுவன், அவரும் பிறரும் கேட்ப, அரசியலின் அருமையை யுரைத்துத் தன் தேவியை நோக்கி, “பாண்டி மாதேவியோ, கண்ணகியாரோ, வியத்தற்கு உரியோர் யாவர்?” என்று வினவ, அரசமாதேவியாகிய வேண்மாள், “கண்ணகியைப் பரவுதலே வேண்டுவது” என்று கூறுகின்றாள். அதனைச் செங்குட்டுவன் உடன்பட்டு நோக்க, அவனுடைய அமைச்சர், “கண்ணகியின் படிமம் சமைத்தற்குப் பொதியிலிலாவது இமயத்திலாவது கல்கொணர்ந்து காவிரியிலாதல் கங்கையிலாதல் நீர்ப்படை செய்தல் தகவுடைத்து” என்கின்றனர். செங்குட்டுவன், “இமயத்துக் கல்கொண்டு கங்கையில் நீர்ப்படை செய்தல் சீரிது” எனச் செப்பலும், அமைச்சர் உடன்பட்டுத் தகுவன கூற, வடநாடு செல்வது குறித்து வஞ்சிநகர்க்கண் முரசு அறையப்படுகின்றது.

இமயச் செலவு கருதிய செங்குட்டுவன், கணிகள் மொழிந்த நன்னாளில் புறப்படுகையில், வடநாட்டு அரசரான கனக விசய ரென்பார் தமிழரசரை இகழ்ந்தனரென்று ஒரு செய்திவரக் கேட்டுச் சினம் மிகுந்து, தான் கொணரக் கருதும் சிலையை அக் கனகவிசயர் தலைமேலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறிப் புறப்பட்டுச் செல்கின்றான். அவற்கு நட்பரசர்களான நூற்றுவர் கன்னர் அவனை வரவேற்றுக் கங்கையைக் கடத்தற்கு ஓடம் அமைத்துத் தருகின்றனர். கங்கையை இனிது கடந்து சென்ற செங்குட்டுவன், தன்னை யெதிர்த்த கனகவிசயரை வென்று, அவர்கட்குத் துணையாய் வந்து தோற்றோடிய பிற அரசர்களையும் பற்றி வருமாறு வில்லவன் கோதை யென்பானை ஒரு பெருஞ் சேனையுடன் செலுத்துகின்றான். தான் இமயத்திலிருந்து, வேண்டும் சிலை யொன்றை வருவித்துக் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து தன் வஞ்சினம் முடிக்கின்றான்.

அக்காலையில், மாடலன் என்பான் குட்டுவன்பால் வந்து, கோவலன் வரலாறும், பாண்டியனுக்குப் பின் இளங்கோ வேந்தன் நாடாளும் திறமும் கூறுகின்றான். அவற்குக் குட்டுவன் ஐம்பது துலாம் பொன்னை நிறுத்துத் தந்து, கனகவிசயரை ஏனைத் தமிழரசர் கட்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய தானைத் தலைவர்களைப் பணிக்கின்றான். சின்னாளில் தானும் புறப்பட்டு, இடையே இருந்த நாடுகளின் பல்வகை வளங்களையும் கண்டு மகிழ்ச்சியுடன வஞ்சி மாநகர் வந்து சேர்கின்றான்.

கனகவிசயரைக் கொண்டு சென்ற நீலன் முதலியோர் திரும்பப் போந்து, “அஞ்சியதனால் மாறுவேடம் பூண்டு ஒடிய இவரைப் பற்றிவருதல் தூய வீரமன்று எனச் சோழரும் பாண்டியரும் இகழ் கின்றன” ரென்று கூறுகின்றனர். அது கேட்டலும் செங்குட்டுவனுக்குச் சினத் தீ மூண்டு எழுகின்றது. அருகே, ஆங்கு வந்திருந்த மாடலன், இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை எடுத்தோதி, வேள்விசெய்து உயர்நிலை யுலகத்துக்கு உறுதி செய்து கோடலே தக்கதென மொழிந்து அவ் வெகுளித் தீயைத் தணிக்கின் றான். செங்குட்டுவன், மாடலனுக்கு வேள்விக்கு வேண்டியவற்றை உதவுமாறு ஏற்பாடுசெய்து, கண்ணகியாருக்குக் கோயில் எடுப்பித்து, இமயத்துச் சிலையாற்செய்த கண்ணகிப் படிமத்தைக் கோயில் கொள்ளநிறுவிச் சிறப்புப் பலவும் செய்து வழிபாடு ஆற்றுகின்றான்.

சிலநாட்கள் கழிக்கின்றன. கோவலன் மாண்டதை மாடலன் சொல்லக் கேட்டு அறிந்த தேவந்தியும், கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும் மதுரைக்கு வந்து, மாதரி மகளான ஐயையைக் கண்டு அவளுடன் வையைக் கரை வழியாக மலைநாடு வருகின்றனர். அங்கே கண்ணகியாரின் கோயிலைக் கண்டு, அங் கிருந்த செங்குட்டுவனுக்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாது வருந்திப் புலம்புகின்றனர். அப்பொழுது, கண்ணகியார் தெய்வவடிவிற் போந்து அவர்கட்குக் காட்சி வழங்கிச் செங்குட்டுவனை வாழ்த்தி மகிழ்விக்கின்றார். அவ்விடத்தே, கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய நற்றாயரும் மாதரியும் என்ற இவர்தம் பிறப்பு வரலாறு வெளியாகின்றது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளான மணிமேகலை துறவுபூண்டதும் அங்கே தேவந்தியால் சொல்லப்படுகிறது. அங்கே வந்திருந்த ஆரியமன்னரும், மாளவமன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும் தம் நாட்டில் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட அருளுமாறு வேண்டி வரம்பெற்றுச் செல்கின்றனர்.

இந்நூலாசிரியரான இளங்கோவடிகளும் கண்ணகி கோயிற்குச் செல்கின்றார். அங்கே இவர்க்கும் இவரது முன் பின் நிகழ்ச்சி தெரிவிக்கப்பெறுகிறது. முடிவில், சோழவேந்தனான பெருநற்கிள்ளி யும் கயவாகு மன்னனும் தத்தம் நாட்டில் கண்ணகியாருக்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்கின்றனர். பாண்டி வேந்தனும் கண்ணகி கோயிலில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு வழிபட்டான் என்று சொல்லப்படுகிறது.

VI. நூற்பயன்:- ஒருநூலை யெழுதும் புலவன், தான் எழுதும் நூலைப் படிப்பவர், படிப்புக்காகச் செலவிடுங்காலம் அவர் வாழ்நாளின் ஒரு பகுதி யென்பதை நன்கு உணர்ந்து, அப் பகுதி நல்லமுறையில் செலவாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் உடையவனாவான். அதனால், அவன் தான் எழுதும் நூலின் நோக்கம் இன்னதெனத் தொடக்கத்தே சுட்டிக் காட்டிதல் பெரிய நாகரிகமாகும். இது குறித்தே, நூற்குப் பாயிரமாவனவற்றுள் நூற்பயன் என்பதை ஓர் இன்றியமையாத உறுப்பாகச் சான்றோர் வரையறுத்தனர்.

இந்நெறியை நன்குணர்ந்த சான்றோராதலின், இந்நூலாசிரிய ரான இளங்கோ அடிகள், தொடக்கத்தே, தாம் இந்நூலைச் செய்வதன் நோக்கம் இதுவென்பாராய்,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்” (சிலப் - பதிகம்)

என்று எடுத்தோதுகின்றார். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்” என்பதனால், இவர் தாம் பாடும் நூற்குப்பெயர், “சிலப்பதிகாரம்” என்பது என்று கூறுதல் காண்க.

இவ்வாறு நன்னெறி காட்டித் தொடங்கிய இவர், தமது நூலின் முடிவில் வறிது செல்கின்றாரல்லர். ஆங்கும் பல நன்னெறி களை வற்புறுத்தி யோதுகின்றார்.

“தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்,
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள் மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது,
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்” (பக். 180 - 1)

என்று இவ்வாறு கூறுகின்றார். இவற்றால், இவர் தமது நூல், படிப் போர்க்கு அறிவு நலமும் ஒழுக்கநலமும் அறவுணர்வும் பெருக வழங்கும் பேரிலக்கியமாய்த் திகழ்தல் வேண்டுமென்ற குறிக்கோளுடன் அதனைச் செய்துள்ளார் என்பது இனிது தெளியப்படும்.

VII. நூல்நுவலுந் திறம்:- தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளங்க வுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது; தான் உணர்த்தக் கருதுவன வற்றை நன்கு ஆராய்ந்து பலநெறிப்படப் பகுத்தும், தொகுத்தும் செம்மை செய்து இலக்கண வரம்பு கடவாது உரைக்கும் மாண்பே, புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர்* கூறுவர். அது நம் அடிகள் பால் மிகச் சிறந்து நிற்கிறது என்றற்கு ஒன்று காட்டுதும்.

கோவலன் கண்ணகியுடன் வாழ்பவன், மாதவியொடு கூடி யிருந்து, பின் அவளின் நீங்கி, தன் மனைவியுடன் மதுரை சென்று கொலையுண்டு இறத்தலும், கண்ணகி, ஆராயாது கொலைபுரிவித்த பாண்டியன்முன் வழக்குரைத்துக் கோவலன் பால் குற்றமின்மை காட்டி மதுரைமாநகரைத் தீக்கிரையாக்கி, மலைநாட்டுச் செங்குன் றத்தில் தேவர் கொணர்ந்த ஊர்தியேறி விண்ணுலகு செல்லுதலும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுதலும் இச்சிலப்பதிகாரத்தின் பிண்டித்த கருப்பொருள் என்பது மேலேகூறிப் போந்த நூற்பொருளால் இனிது விளங்குகின்றது.

இதனை மூன்று காண்டமாக வகுத்துச் சீரிய முறையில் பெயரிட்டு, அடிகள் உரைக்கும் திறம் ஆராய்வார்க்கு மிக்க இன்பம் தருகின்றது. தொடக்கமுதல் கோவலன் கொலையுண்டதுவரை ஒரு காண்டமாகவும், கண்ணகி கேவலனையிழந்து வருந்தி முடிவில் விண்புகுவதுரை ஒரு காண்டமாகவும், செங்குட்டுவன் இவ்வரலாற் றினை யறிந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதுவரை ஒரு காண்டமாகவும் வகுத்து ஓதலாம்; அவ்வாறு ஓதியவழி, பொருட்பாகு பாடும் பொலிவு குன்றாது.
இனி, இதனையே, தொடக்கமுதல் கோவலன் இறப்பது வரை அவனது செயலே மிக்கு நிற்றலால், அவன் பெயரால் ஒரு காண்டமும், அவன் இறந்தது முதல் விண்புகுமளவும் கண்ணகியார் செயலே மிக்குச் சிறத்தலால் அவர் பெயரால் ஒருகாண்டமும், இவ்வரலாறு கேட்டது முதல் கோயிலெடுத்து வழிபடுதல் வரைச் சேரன் செங்குட்டுவன் வெற்றிச்சிறப்பும் பிறவும் மேம்பட்டு நிற்றலின் அவன் பெயரால் ஒரு காண்டமும் வகுத்தோதினும் பாகுபாட்டு நெறி பிழையுறாது.

இக்காட்டிய நெறியேயன்றி வேறுதிறத்தால் படுத்தோதினும் பகுப்பு முறையேயாகும். இவ்வாறு, நெறி பல இருக்கவும், இளங் கோவடிகள், புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம் எனப் பகுத்துக்கொண்டிருக்கும் முறையொன்றே அவரது உயர்வற உயர்ந்த புலமைக்குச் சீரிய சான்று பகருகின்றது. இவர் கூறியது போலப் புகார்க் காண்டமென்னாது கொலைவினைக் காண்ட மென்றோ, கோவலற் காண்டமென்றோ பிறிதென்றோ வகுத்துப் பெயர் கூறலுறின், அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிகழுமிடத்து, அதற்குரிய வினைமுதல், வினை, செயப்படுபொருள், காலம், இடம் முதலியன இன்றியமை யாது ஆராயப்படும். இதனோடு, இந் நிகழ்ச்சிதானும், ஏதுவும் பயனுமாக வரும் பல உள் நிகழ்ச்சிகளையுடையதாக இருக்கும். இந் நிகழ்ச்சிகளை ஒரு பெயரால் குறிக்க வேண்டின், மேற்கூறிய வினைமுதல் முதலியவற்றையும் உள் நிகழ்ச்சிகளையும் தேர்ந்து அவற்றுள் யாதேனும் ஒன்றைத் தலைமைபற்றியோ பன்மை பற்றியோ வரைந்துகொண்டு அதனால் பெயர் குறித்தல் மரபாம். அன்றியும், வினைமுதல் முதலியவற்றுள், வினைமுதல் நூற் பெயரிலாதல் பிறவாற்றாலாதல் உணரப்படுமாதலின், வினை, செயப்படுபொருள், காலம், இடம் என்ற இவையே சிறப்பாகத் தேறப்படுகின்றன.

முதற்கண், புகார்க் காண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதன்கண் நிகழும் வினை, கோவலன் தன் மனையை நீங்கி, மாதவிபால் தங்கிப் பொருளிழந்து, கண்ணகியுடன் மதுரைக்கு ஏகுகின்ற செய்தியாகும். கோவலன் தன் மனையை நீங்குவது மாதவிபால் தங்குதற்கும், அவ்வாறு தங்குதல் பொருள் இழத்தற்கும், அவ்விழப்பு மதுரைக்கு ஏகுதற்கும் ஏதுவும் பயனுமாய் வரும் உள் நிகழ்ச்சிகளாகும். சுருங்கிய சொல்லால் இவ்வனைத்தும் தோன்றக் கூறுதல் ஆகாமையால், வினைவகைதேர்ந்து இக்காண்டத்திற்குப் பெயர் குறித்தல் அமையாதாகின்றது. இவ்வினைகளாற் செயப்படு பொருள், கோவலன் உயிரிழத்தலும், கண்ணகி ஆறாத்துயருழத் தலுமே யாதலின், கேடுபற்றிய முடிபால் பெயர் குறித்தல் பொருந்துவதாக இல்லை. இந்நிகழ்ச்சிகட்குச் செலவாகிய காலமும் பலவாதலால், காலத்தாற் பெயர் குறிப்பதும் பொருத்தமன்று. இவ்வெல்லாத் திறங்களையும் நன்கு தேர்ந்தே, அடிகள், இந் நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்தற்கு இடனாகிய புகார் நகரத்தால், புகார்க்காண்டம் எனப் பெயர் குறித்துள்ளார். இவ்வாறே ஏனைக் காண்டங்களும் பெயர் குறிக்கப் பெற்றுள்ளன.

கோவலன் புகார் நகரத்தில் இருந்து பின் மதுரை நகரை நோக்கிச் சென்று சோழநாட்டின் நலம்பலவும் கண்டு கொண்டே உறையூரையடைவது கூறும் பகுதி புகார்க் காண்டம். இதனை உரைக்கப்புகுந்த அடிகள் பத்துப் பகுதிகளாக வகுத்துக்கொள் கின்றார். கோவலனும் கண்ணகியும் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சியும், இருவரும் மனையறம் புரிதலும், மாதவி ஆடல்பாடல் களில் வல்லளாய் அரங்கேறுதலும், கோவலனைக் கூடியிருக்கும் மாதவியின் இன்பமும், பிரிந்துறையும் கண்ணகியின் இடும்பையும் இந்திரவிழாவும், அதன் இறுதியாய கடலாட்டும், இவற்றால் இன்புற்ற கோவலனும் மாதவியும் பிரிந்து நீங்குவதும், மாதவி படும் பிரிவுத் துயரும், கோவலன் மனமாற்றமும், கோவலன் சென்று கண்ணகியோடு கூடி மதுரைக்குச் செல்ல ஒருப்படுதலும், செல்பவர் சோழநாட்டின் நலமும் கவுந்தியடிகளின் துணையும் பெறுதலும் எனப் பல திறமாய் வரும் நிகழ்ச்சிகளை மங்கல வாழ்த்து முதலாக நாடுகாண் காதை ஈறாகப் பத்துப்பகுதிகளால் உரைக்கின்றார். மாதவி கோவலனுடன் கூடி இன்புறும் நிகழ்ச்சியை அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடு காதை என்ற மூன்று காதைகளிலும், அவள் அக்கோ வலனைப் பிரிந்து வருந்தும் நிகழ்ச்சியை மட்டில், வேனிற் காதை யிலும் விரித்து உரைக்கின்றார். இஃதேபோல், கண்ணகி கோவலனை யிழந்து வருந்திய வருத்தத்தை, துன்ப மாலை, ஊர்சூழ்வரி, வஞ்சினமாலை முதலிய பல பகுதிகளில் விரித்துக் கூறுகின்றார்.

இப்பகுதிகள் பலவும் காதை என்ற சொல்லால் பெயர் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் காதை யென்று பெயர் பெறுவன இருபத்திரண்டாகும். இவை பெரும்பாலும் வேற்றிசை விரவாது செந்தூக்குத் தனிப்பாட்டுக்களாகவே இருத்தலால், ஒரு தனிப் பாட்டைக் காதை என்று வழங்குவது முறையென்று தெரிகிறது. இவ்வாறே மணிமேகலையின் ஒவ்வொரு பகுதியும் காதை யென்றே பெயர் பெற்றுள்ளது. அக் காதைகள் முப்பதையும், அந்நூலாசிரியரான சாத்தனார் முப்பது பாட்டுக்களில் உரைத்தனர் என்று அம் மணி மேகலையின் பதிகம் கூறுகின்றது. “வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு, ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனனென்” என்பது அப் பதிகக் கூற்று. இனி, இச் சிலப்பதிகாரப் பதிகம், “இவ்வாறைந்தும், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்றே உரைக்கின்றது. மேலும், மங்கலப்பாட்டும், வரிப்பாட்டும் குரவைப்பாட்டும் பிறவுமாய் வரும் ஏனைய எட்டனுள் பல்வகைப் பாட்டுக்கள் உரையிடையிட்டு இசையும் நாடகவுறுப்பும் விரவிவந்ததனால் அவற்றை ஆசிரியர் இளங்கோவடிகள் “காதை” என்று பெயர் கூறிற்றிலர். ஆகவே, ‘காதை’ என்பது வேற்றிசை விரவாது செந்தூக்காய் வரும் பாட்டு என்று பொருள்படுவதொரு சொல்லாக அடிகள் முதலியோரால் வழங்கப்பெற்றுள்ளது என்பது முடிபாகிறது. இனி, நீலகேசி உரைகாரரான சமயதிவாகரவாமன முனிவர், அடிகள் கூறியவாறே காதையென்னும் சொல்லைச் செய்யுள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். “மானொத்த நோக்கி” (நீல. 117) என்னும் செய்யுளில் வரும், “உயிராதிய உள்பொருள்கள் தான் நற்கு உணர்தல் இதுவாம்” என்பதன் கருத்தை, அதனை அடுத்து வரும், “காண்டலு மல்லதே” (நீல. 118) என்னும் செய்யுளுரையில், “மானொத்த நோக்கி என்னும் காதையுள் உயிராதிபொருள் நற்குணர்தல் நன்ஞான மென்றார்” என்று கூறுதலால், செய்யுள் என்னும் பொருளில் காதை என்ற சொல் வழங்குவதைக் காணலாம்.

இனி, டாக்டர்.உ.வே. சாமிநாதையரவர்கள், “காதை யென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச் சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர்” என்று கூறுகின்றார். இசையுள் நாடகவுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்’காதை’ யென்னும் சொல்லால் அடிகள் குறித்திருத்தலின், அவ் ‘வடமொழி யாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது பெரியதோர் இழுக்காம் என்று தெளியத் தோன்றுகிறது. இதுகுறித்தே, திரு. ஐயரவர்களும், “இதனாலேயே, இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர்பெற்றன போலும்” என நெகிழ்ந்தோதிச் சென்றனர்.

இனி, “வாழ்த்துக் காதை”யுள், பல்வகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையோடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், வாழ்த்துக் காதைக்கு அதுபெயரன்றாதலால், அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப்படும். வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது.

பதிக்கத்துப் பொருளையும், சிலப்பதிகாரப் பகுதிகளின் பெயரையும் ஆராய்ந்து நோக்கின், காடுகாண் காதை புகார்க் காண்டத்தும், குன்றக் குரவை மதுரைக் காண்டத்தும் இருக்கற் பாலனவாம் என்பாரும் உளர்.* இப் பிறழ்ச்சியை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

VIII. நூற் புணர்ப்பு:- இச் சிலப்பதிகார நிகழ்ச்சி ஆற்றொழுக் காகச் செல்கின்றதனால், இதனால் புணர்ப்புவகையில் நுண்ணிய புணர்ப்பு ஏதும் இல்லை. கோவலன் கண்ணகி முதலாயினார் பிறப்பு வளர்ப்புக்களில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுமில்லை; அவ்வரலாறுகளைக் கூறாது, திருமணம் புணரும் செயலையே எழுவாயாக அடிகள் மேற்கொள்கின்றார். மணத்துக்குப் பின் இருவர்க்கும் மனையறம் இனிது செல்கின்றது. கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் கூட்டற்கண் அடிகள், மாதவியின் அரங்கேற்றத்தால், அவளை இலக்கியக் காட்சிக்குக் கொணர்கின்றார். மாதவி அரங்கேற்றம், சோழவேந்தனான கரிகாற் பெருவளத்தானை நமக்குக் காட்டி, அவனால் அவட்குப் பரிசமாலை தரப்பெறும் சிறப்பினையுணர்த்து கிறது. கோவலன் “நகர நம்பியர் திரிதரும் மறுகில்” வந்து தோன்றுகின்றான். அவ்விடத்தே மாதவியின் பரிசமாலை அவன் கண்ணுக்கு இலக்காக, அவன் அதனை வாங்கி மாதவிபால் சென்று சேர்கின்றான்.

ஈண்டுக் கூறற்பாலன கண்ணகியின் பிரிவுத்துன்பமும் மாதவி யின் புணர்ச்சி யின்பமுமே யாகின்றன. மாதவியை அரங்கேற்றி, கோவலனைக் கூடச்செய்தபின், அக்கூட்டவின்பத்துக்குச் சிறப்புச் செய்வது அந்திமாலையாதலின், அதனை அடிகள் எடுத்தோது கின்றார். ஓதுமிடத்து மாதவியின் இன்பத்தை முதற்கண் விதந்தோதி, கண்ணகி துன்பத்தைப் பிற் கூறுகின்றார். இருவர் நிலைக்கும் உரியகாலம் அந்திமாலையாதலின், அதனையே வரைந்துகொண்டு “தாழ் துணை துறந்தோர் தனித்துயர் எய்ம, காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்த….மல்லல் மூதூர் மாலை வந்திறுத்தது” என்று தொடங்கி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக், கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி” என்று மாதவியின் இன்பச் சிறப்புக் கூறி, கண்ணகியின் துன்ப நிலையைச் சிறிது விரித்து, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள் நுதல் திலகம் இழப்ப தவள வாள் நகை கோவலன் இழப்ப, மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப, கையறு நெஞ்சமொடு கலக்கமுற்றனள்” என்று கூறுகின்றார். இதற்குப் பின், புதுமணம் புணர்ந்து இன்புறுவார்க்கு இன்பம் மிகுவிக்கும் விழாச் செய்தி கூறுவார். ‘இந்திரவிழவூர் எடுத்த காதை’ உரைக்கின்றார். அதன் இறுதிக்கண், பின்னர் நிகழ இருக்கும் பிரிவுக்குத் தோற்றுவாயாக, “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உள்நிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன, எண்ணுமுறை இடத்தினும் வலத் தினும் துடித்தன” என்கின்றார். கடலாடுகாதைக்கண் கோவலன் உள்ளத்தில் தோன்றும் ஒரு சிறு மாறுதலைக் காட்டுகின்றார். அஃதாவது இந்திரவிழாவில், மாதவியின் “ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள, ஊடற் கோலமோடு” கோவலன் இருப்ப மாதவி, அவனுவக்குமாறு தன்னை மிக்க சிறப்புடன் புனைந்து கொண்டு, அவனுடன் கடலுக்குச் செல்கின்றாள். கானற் சோலை யில், இருவர்க்கும், பாடிய பாட்டு வாயிலாகக் கருத்து வேறுபடு கின்றது. கோவலன் மாதவியைப் பிரிந்து நீங்குகின்றான்.

வேனிற் காதையில் கோவலனது மனவன்மையும் அவன் பிரிவாற்றாது துயருறும் மாதவியின் கற்பு மாண்பும் எடுத்தோதி, அவள் வரலாற்றை ஓராற்றால் முடித்துக் கோவலனைக் கண்ணகி பால், கனாத்திற முரைத்த காதையில் சேர்ப்பித்து மதுரைக்குப் புறப்படுவிக்கின்றார். நாடுகாண் காதையில் கவுந்தியடிகளோடு தொடர்பு எய்துவித்து அவரது தவப்பெருமையும், கோவலன் கண்ணகி யிருவரது அருள் நிலையும் தெரிவித்து, உறையூரை அடைவிக்கின்றார்.

இவ்வாறு மதுரைக் காண்டத்து, காடுகாண் காதைக் கண், வழி கூறும் மறையோன் வாயிலாகப் பாண்டியர் குடிச் சிறப்பும், திருவேங்கடம், திருவரங்கம் முதலியவற்றில் திருமால் எழுந்தருளிய இயல்நலமும் கூறி, வேட்டுவவரிக்கண், கண்ணகிக்குப் பின்னே விளைய இருக்கும் துயர்நிலையைக் குறிப்பாகக் காட்டி, புறஞ்சேரி இறுத்த காதையில், மாதவியின் மாறாக் காதன்மையும், கோவலனுக்குப் பெற்றோர்பாலுள்ள அன்புடைமையும் உணர வைத்து வையையாற்றின் வனப்பும் மதுரை மூதூரின் மாண்பும் கூறுகின்றார். ஊர்காண் காதையில் கோவலன் தனக்கு நேர்ந்த வருத்தத்தை யெண்ணிமயங்க, கவுந்தியடிகள் தகுவன கூறித் தேற்றரவு செய்ய, அவன் தேறி மதுரை மூதூர் சென்று அதன் கடைத்தெரு, வாணிகவளம் முதலியன கண்டு வருகின்றான். அடைக்கலக் காதையில், அடிகள் கோவலனுக்கு மாதரியின் வேளாண் பகுதியின் தொடர்பு எய்துவிக்கின்றார். கொலைக்களக் காதையில் பிரிந்திருந்து கூடியபின் கண்ணகி கோவலன்பாலும், அவன் அவள்பாலும் கொண்டிருந்த மெய்க்காதற் சிறப்பைத் தெரிவித்து, அவனைக் கண்ணகியை விட்டு நீங்குவித்துக் கொலை யுண்டு இறக்கச் செய்கின்றார். இதன்கண் பொற்கொல்லனது களவு வன்மை அவன் கூறும் களவுநூற் குறிப்பால் இனிது விளக்குகின்றார். ஆய்ச்சியர் குரவை தீக்குறி காட்ட, துன்பமாலை, கண்ணகியின் - கடவுளும் ஏவல் செய்யும் - கற்பு மேன்மை புலப்படுத்த, ஊர்சூழ்வரி அவளது ஆறாத்துயர் தெரிக்க, வழக்குரைகாதையால் பாண்டியனது கோடிய அரசு முறைக்குக் கழுவாய் பிறப்பிக்கு மாற்றால் அவனை யும் வீழ்வித்து, வஞ்சனமாலைக்கண், கண்ணகியின் தீராத் துயர்ப் பட்ட நெஞ்சம் மாறி அவளைச் சீறிய கற்புடையளாகத் திகழ்வித்து நகரைத் தீக் கொளுவுதல் கூறி, அழற்படுகாதையில் அவளது சினத்தீயின் வெம்மை தெரிவித்து, கட்டுரைகாதையால் அவட்கு எய்திய துன்பத்துக்கு ஏது பழம்பிறப்பில் தோன்றிய வினையாம் என்பது காட்டி நம்மனோர் மனத்தை அமைதி பெறுவிக்கின்றார்.

வஞ்சிக் காண்டத்துக் குன்றக் குரவையில், கண்ணகியின் கடவுட்டன்மைக்குரிய இயைபுகாட்டி, காட்சிக் காதையால், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்துப் படிமம் சமைத்தற்கு இமயம் செல்லும் செலவுக்குத் தோற்றுவாய் பிறப்பித்து, கால்கோட் காதையில், செங்குட்டுவனது சிவபத்தியும் வட ஆரிய மன்னர்க்கும் தமிழ்வேந்தர்க்கும் உள்ள போர் மாண்பும் வெற்றிச் சிறப்பும் விளக்கி, கோவலன் நீங்கியபின் புகார் நகரத்தே நிகழ்ந்த பிறவற்றை யும் தெரிவித்து, கண்ணகிப் படிமத்திற்குரிய சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்தது கூறி, நடுகற்காதையில் கண்ணகிக்குக் கோயி லெடுப்பதும், மாடலன் வாயிலாக வேள்வி வேட்டலின் சிறப்பும் பிறவும் விளக்கி, வாழ்த்துக் காதைக்கண், மாசாத்துவான் துறவும், அவன் மனைவி இறத்தலும் காவற்பெண்டும், அடித்தோழியும், தேவந்தியும் பிறரும் வந்து கண்ணகி கோயிலைக்கண்டு பாராட்டலும் உரைத்து, வரந்தருகாதையில் மணிமேகலை துறவும், செங்குட்டுவன் வரப்பேறும் இளங்கோவடிகளின் வரலாறும் பிறவும் குறிக்கப் படுகின்றன.

இனி, இடையிடையே, அடிகள் தொடுத்திருக்கும் உரை நடைகள் மிக்க அழகுவாய்ந்தவை. ஆயினும், அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது பாட்டுத் தன்மை விரவியுள்ளன. இது கருதியே இவற்றை உரைப்பாட்டு* என்று கூறுகின்றனர். இவ் வுரைப் பாட்டுக்களைச் சில இடங்களில் உரைப்பாட்டு என்றும், சிலவிடங்களில் கட்டுரை யென்றும் இந் நூல் வழங்குகின்றது.
இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்டமென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பது போலச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதன்பின், இலங்கை வேந்தனான கயவாகு என்பானும் சோழ பாண்டிய வேந்தரும் வழிபட்டதும், மதுரை எரியுண்டபின் நிகழ்ந்த பாண்டி நாட்டு அரசியல் நிகழ்ச்சியும் உரைபெறு கட்டுரை† யென்னும் பகுதி உரைக்கின்றது. இதுவும், மேலே கூறிய உரைப் பாட்டுவகையைச் சேர்ந்ததே யாகும்.

IX. இந்நூற்கண் வரும் பெருமக்களின் குணமாண்புகள்:-
1. மாசாத்துவான்: மாசாத்துவான் என்னும் பெயர் குடிப்பெயர் என்று அரும்பதவுரைகாரர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும், “மாசாத்துவான் என்பான்” என்றே கூறியிருத்தலால், அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

இம் மாசாத்துவான் கோவலனுக்குத் தந்தை; உயர்ந்த குடிப்பிறப்பும் மிக்க செல்வமும் உடையன்; சுற்றம் சூழ வாழும் பெருமாண்பினன். கண்ணகி, பாண்டியன் முன் வழக்குரைத்த போது, இவன் குடிமைச் சிறப்பையேவிதந்து, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்பதும், செல்வச் சிறப்பை, கோசிகமாணி யென்பான், “இருநிதிக் கிழவன்” என்பதும் நன்கு விளக்குகின்றன. முடிவில் கோவலன் இறந்தது கேட்டு இவன் துறவு பூண்டு விடுகின்றான்.

இனி, கண்ணகியின் தந்தை பெயர் தெரிந்திலது. மாநாய்கன் என்பது இயற்பெயரன்று, குடிப்பெயர் என்றே உரைகாரர் கூறுகின்றனர். “மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்” என்றே அடிகள் கூறி மொழிந்தனர். இவன் தன் மகளுற்றது கேட்டு ஆசீவகப்பள்ளியில் அறம் கேட்டுத் துறவு பூண்டான்; இவன் மனைவியும் உயிர் துறந்தாள். இவனைப்பற்றி வேறே செய்தி யொன்றும் அடிகள் குறித்திலர். கண்ணகியாரின் கற்பு மாண்பே ஒராற்றால் இவன் குடிப் பெருமை விளக்குதலால், அடிகள் வேறொன்றும் குறியாதொழிந்தார் போலும்!

    3. கோவலன்: இவன் சிலப்பதிகாரத்துக்குத் தலை மகளாகிய கண்ணகிக்குக் கணவன். உயர்குடிப் பிறப்பும் செல்வ மிகுதியும் வாய்த்தவன். பிறர்க்குத் தன்னால் இயன்ற உதவிபுரியும் அருளுள்ளம் நிறைந்தவன். மதயானையின் கைப்பட்ட முது வேதியனைக் காத்ததும், பார்ப்பனியைக் கைவிட்டுச் சென்ற பார்ப்பனன் ஒருவற்கு மிக்க பொருள் தந்து இல்லிருந்து அறம் செய்யச் செய்ததும், மகனை யிழந்த தாயொருத்தியின் வருத்தம் கண்டு ஆற்றாது தன்னுயிரை இவன் கொடுக்கத் துணிந்ததும், பிறவும் இவனுடைய அருளுடைமையைப் புலப்படுத்துகின்றன. கவுந்தியடிகளால் குறு நரியாக்கப்பட்ட இருவர் பொருட்டு, அடிகள்பால், “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமையென்றறிதல் வேண்டும்” என்று கூறுவது இவனது ஈர நெஞ்சின் இயல்பை விளக்குகின்றது.  

இன் நலம் பலவும் உடையனாயினும், இக் கோவலன் கண்ணகிபால் தீராக் காதற்காமம் கொண்டு அவளது நலம் புனைந்தும் பாராட்டியும் ஓதுவதை நோக்கின், பெருங் காமத்தான் என்பது புலனாகின்றது. ஒருவரையொருவர் முன்னுறக் காண்டலும், காதல் கொளலும், பின்பு கடிமணம் புணர்தலுமாகிய காதற் காமத்துறை இவன் வாழ்வின் காணப்பட வில்லை. மாதவியிடத்தும் இவனது காதல் உயிரொடு கிடந்து தொடரும் உயர்காதலாக இல்லை. மாதவியின் மாலையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டு அவன், மனைக்குச் சென்று,

“மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்” (பக். 11)

என்றே அடிகள் கூறுகின்றார். மாதவியினின்று பிரிந்த போதும் இவற்கு அவளது தொடர்பு ஒரு வருத்தமும் பயக்கவே இல்லை. கருத்து வேறுளது போலத் தோன்றிய குறிப்பேதுவாக மாதவியை அறவே வெறுத்துப் பேசும் இவன் மனக்குறிப்பு, பின்னர் மாதவியைப் பற்றிய பேச்சு நிகழுந்தோறும் முற்பட்டுத் தோன்றுகிறது. கொலை யுண்டு கிடந்தபோது கண்ணகியாரால் உயிர்பெற்று விண்ணுலகு சென்றபோதும், இவன், கண்ணகிக்கு, “உண்கண்ணாய், நீ ஈண்டே இருக்க” (பக். 112) என்கின்றான்; இதனால் இவன் கண்ணகிபால் கொண்டிருந்த காதலும் உயர்ந்த காதலாகத் தோன்றவில்லை. மாதரியின் மனையில் இருந்து, கண்ணகி சமைத்திட்ட உணவுண்டு இனிதிருக்கும்போது, கண்ணகியை நோக்கி, “பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” என்பன முதலாகப் பல பாராட்டுரைகளை இவன் வழங்குகின்றான். இவை முற்றும் கண்ணகியின் கற்பு மாண்பு கண்டு தெளியப் பிறந்த வியப்புரையாமே தவிர, காதற் கட்டுரையாகா.

“குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்,
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து என்துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்” (பக். 93)

என்ற இக் கூற்று, கோவலன் மனத்தெழுந்த வியப்பும் நன்றியறிவும் தோன்ற நிற்றல் காண்க.

ஆயினும், தான் செய்த தவற்றினை நன்கு உணர்ந்து வருந்து கின்றான். “தேற்றா ஒழுக்கத்தால் தீநெறிப்பட்டேன்” என்றும்,

“இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன்” (பக். 92)

என்றும் கூறுவன உருக்கமாக உள்ளன.

இனி, இவன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் காவலருடைய கைப்படுத்தப்பட்ட போதாவது, கொலைக்களத்தாவது ஒன்றும் கூறவேயில்லை. காவலரிடம் பொற்கொல்லன் கள்வர் செயல் பலவும் வகுத்து விரித்து உரைக்கின்றான். அதனைக் கோவலன் அறிந்துமிருக்கலாம். அக்காலை இக் கோவலன் தன்பாற் களவின் மையை இனிது கூறியேனும் இருக்கலாம்; அஃதும் இல்லை. அப்போது தன் நிலைமையையோ, கண்ணகியையோ, பெற்றோரையோ, கவுந்தியடிகளையோ யாரையாவது எதனையாவது நினைந்து சில கூறியிருக்கலாம். அவன்பால் ஒரு பேச்சும் நிகழவே இல்லை. எதிர்பாராவகையால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கண்டு அறிவு மயங்கி நினைவு, சொல், செயல் யாவும் மழுங்கித் தம்பித்து விட்டான் போலும். இன்றேல், ஏதேனும் ஒன்று மொழிந்திருப்பான்; வினைப் பயன் என்றுகூட அவன் எண்ணவில்லை; எண்ணியிருப்பின், அதனையேனும் விதந்து ஓதியிருக்கலாமே!

3.  மாடலன்: இவன் தலைச்செங்கானம் என்னும் ஊரிற் பிறந்த வேதியன்; நான்மறையும் வல்லோன்; மறையோதிய ஒழுக்கம் நிரம்பியவன். குமரியாடி வருமிடத்தே கவுந்தியடிகளுடன் இருந்த கோவலனைக் கண்டு அளவளாவி, கோவலன் தனக்கு மாதவிபாற் பிறந்த மகட்கு மணிமேகலை யென்று பெயர் வைத்த சிறப்பினை நாமறியச் செய்கின்றான். மேலும், இவனாற் கோவலன் முதுமறையோன் பொருட்டுக் “கடக்களிறடக்கிய கருணை” (பக்.84)யும், பார்ப்பனி யொருத்தியை அவள் கணவனுடன் கூட்டி, “நல்வழிப்படுத்த செல்வ” (பக். 84) நிலையும், மகன் பூதத்துக் கிரையாகியதால் வருந்திய தாய் ஒருத்தியின் பொருட்டு, அம் மகனுடைய

“சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைக்கும்,
பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த”

பண்பும் நமக்குத் தெரிகின்றன. கோவலனை இவன் தேற்றுங் கால்,

“இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (பக். 85)

என்று கூறுவது இவனது இனிய அரிய சொல் வன்மையைக் காட்டு கின்றது. கோவலன் தான் கண்ட தீக்கனவு கூறிய வழி, அதற்குத் தக்க விடை கூறாது வேறு கூறுவது மிக்க வியப்புத் தருகிறது.

இனி, செங்குட்டுவன் கங்கைப் பேரியாற்றின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடிவீட்டில் இனிதிருந்தபோது இம்மாடலன் வந்து அவனைக் காணும் திறம் மிக்க இன்பம் தருவது. கோவலன் மாதவியைப் பிரிந்தது முதல், செங்குட்டுவன் கண்ணகிக் குச் சிலை கொணர்வான் கங்கையிடை நீர்ப்படுத்தது ஈறாகக் கிடந்த வரலாறு முற்றும் மிகச் சுருங்கிய அளவில் அழகுறக் கூறுவான்,

“வாழ்க எங்கோ, மாதவி மடந்தை
கானற் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது” (பக். 153)

என்கின்றான். இவனன்றோ “சொல்லின் செல்வன்.” இதனால் குட்டுவன் அவ்வரலாறு முற்றும் அறிய அவாக் கொள்ளவே, அவன் பின்பு விரித்துக் கூறலுறுகின்றான்.
இவனாற்றான், பின்பு, செங்குட்டுவன், கண்ணகியாரின் முழுவரலாறுமே யன்றி, மாதரி தீயிற் புகுந்ததும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததும், மாசாத்துவான் துறவு பூண்டதும், அவன் மனைவி உயிர் துறந்ததும், மாநாய்கன் ஆசீவகப் பள்ளியில் அறம் பூண்டு துறவு மேற் கொண்டதும், கண்ணகியின் நற்றாய் உயிர்விட்டதும், மாதவி புத்த சமயம் மேற்கொண்டதும் பிறவும் அறிந்துகொள்கின்றான். கோவலன் கொலையால், கோல் வழுவிற்றென உயிர் இழந்த பாண்டியற்குப் பின் வெற்றிவேற் செழியன் பொற்கொல்லர் ஆயிரவரை உயிர்ப்பலி யூட்டி, மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினன் என்று சொல்லும் மாடலன்,

“உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத்து அலமறும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலில்,
நிரைமணிப் புரவி ஒரேழ் பூண்ட
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவு ளேறினன்என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதோ றூழி உலகம் காத்து
வாழ்க எங்கோ வாழியர் பெரிது” (பக். 156)

என்பது மிக்க இறும்பூதும் இன்பமும் பயத்தல் காண்க.

பின்பு அச் செங்குட்டுவன், தன் மைத்துன வளவனான கிள்ளி யென்பானது ஆட்சிமுறை எத்திறமென வினவிய போது மாடலன்,

“வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அறிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” (பக். 157)

என்று உள்ளுதோறினிக்கும் உரை பகர்கின்றான். அப்போது, பெரு மகிழ்வுற்ற குட்டுவன் தன் நிறையான ஐம்பது துலாபாரம் பொன்னை அம் மாடலனுக்கு அளிக்கின்றான்.

பிறிதொருகால், செங்குட்டுவன் சோழ பாண்டியர் மேல் ஆறாச் சினங் கொள்கின்றான். அப்போது அங்கிருந்த மாடலன், அவன் சீற்றந் தணியுமாறு தகுவன கூறி, மேலும்,

“அரைச ரேறே! அமைகநின் சீற்றம்;
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினும் சிறக்க;
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி
இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்;
வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை” (பக். 164 - 5)

என்று தொடங்கி, யாக்கை, செல்வம், இளமை முதலியவற்றின் நிலையாமை விளங்கக் கூறி,

“விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;…….
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது;
செய்வினை வழித்தால் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின்…

நீ பெரிய வேள்வி செய்தல் வேண்டும்;

நாளைச் செய்குவம் அறம்,எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீ ருலகில் முழுவதும் இல்லை” (பக். 165 - 6)

என்று கூறி முடிக்கின்றான். செங்குட்டுவனும் வேள்வி செய்கின்றான்.

முடிவில், கண்ணகி கோயிற்கு வந்த தேவந்தி, செட்டி மகளிர் முதலியோரால் நிகழ்ந்தவற்றைக் கண்டு செங்குட்டுவன் பெரு வியப் பெய்த, மாடலன் அதுவே வாயிலாக, அவனுக்கு அறமுறைக்கக் கருதி, “கோவலன் தாயும், கண்ணகி தாயும் மாதரியும் நல்லறம் செய்யாமையின் செட்டி யொருவனுக்குச் சிறுமகளாயினர்;

நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கை,” (பக். 178 - 9)

என்று தெளிவித்து, மறுவலும், அச் செங்குட்டுவனை நோக்கி,
“அரசே,

    ஆனேறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,  
    மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்,  
    செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும்  
    கையகத் தனபோல் கண்டனை யன்றே” (பக். 179)  

என்று சொல்லி, அவனை அறத்தாற்றில் நிற்கப் பண்ணுகின்றான்.

    4. செங்குட்டுவன்: இவன் வரலாறு இந்நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்தும், மாடலன் செய்தி கூறுமிடத்தும் ஓராற்றால் விளங்குகின்றன. இவன் மறம் மிக்க வேந்தன். இவன் தன் தம்பி இளங்கோவுடன் தந்தைபால் இருக்கும்போது, கணி யொருவன் போந்து, இளங்கோவுக்கும் அரசாளும் குறிப்புண்மை யறிந்து, கூறக், கேட்ட மாத்திரையே கண் சிவந்தது. காய் சினம் பொங்கிற்று. தன் உடன் பிறந்து உடன் வளர்ந்து உடனொழுகும் இளங்கோவின் உள்ளப்பான்மையை உணராது இவன் சினங்கொண்டான். இதனை, “அரசாளுரிமை இளையோற் குண்டென உளைவனன் நனி வெகுண்டு அழுக்காற் றொழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன், கண் எரி தவழ அண்ணலை நோக்கும்” என அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார்.  

இதுவேயன்றி, தான் பற்றிக் கொணர்ந்த ஆரியமன்னரை ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்க்குக் காட்டி வருமாறு விடுப்ப, அவர்களைக் கொண்டு சென்றோர் அவ்வண்ணமே காட்டித் திரும்ப வந்து, சோழ மன்னனும் பாண்டிய வேந்தனும்

“அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது” என்றனர் (பக். 164)

என்று கூறினர். அது கேட்டலும், “தாமரைச் செங்கண் தழல் நிறம் கொள்ள” அச் செங்குட்டுவன் கொண்டசினம் சொல்லும் தரத்த தன்று; அக்காலை மாடலன் ஆங்கிருந்து தகுவன கூறி அவன் கருத்தை மாற்றாதிருந்திருந்தால், இவ் வரலாறே வேறு வகையாகச் சென்றிருக்கும்.

தமிழ் வேந்தரை ஆரிய மன்னர் இகழ்ந்து பேசினர் என மாதவர் சிலர் கூறக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு உண்டாகிய சினம், காலம் கருதி அமைந்து கிடந்து, கண்ணகிக்குக் கல் கொணர நேர்ந்தபோது எழுந்து நிற்கிறது. அப்போது அவன்,

“இமையத் தாபதர் எமக்கு ஈங்குணர்த்திய,
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தருஉம்” (பக். 145)

என்று கூறி, மறனிழுக்கா மானமுடைமையைப் புலப்படுக்கின்றான். அவன், அக்காலை கூறிய வஞ்சினம் நெஞ்சிற்கு மிக்க மருட்கை யைப் பயக்கின்றது.

“வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும்என் வாய்வா ளாகின்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுக” (பக். 145)

என்பது அவ் வஞ்சின வாய்மொழியாகும். அவ்வஞ்சினமும் தப்பாமே செய்து முடித்தான் இச் செங்குட்டுவன்.

இவ்வஞ்சினம் மொழிந்தபோது மாடலன் ஆங்கில்லை. ஆசான் வேறொருவன் இருந்து பொருந்தாக் கூற்றொன்று புகலு கின்றான். “அவ் வடவாரிய மன்னர் இகழ்ந்து பேசியது நின்னை யன்று; ஏனைச் சோழபாண்டியரையேயாகும்.”

“அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல், நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப! நின் இகழ்ந்தோ ரல்லர்;
அமைகநின் சினம்”

என்பது அவ்வாசானுடைய உரை. ஆனால், அவன் உரையை இச் செங்குட்டுவன் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை வரலாறு கூறிகின்றது.

இனி, இவன் பெற்றுள்ள ஏனை வெற்றிச் சிறப்புக்களை உரைக்கின் இம் முன்னுரை பேருரையாய் விரியும். அவை மிகப் பலவாகும்.

இவன் சிவனிடத்தில் மாறா அன்புடையவன். இவன் இமயம் நோக்கிப் புறப்பட்டபோது, திருமாலின் சேடம் கொணர்ந்து சிலர் கொடுப்ப, அதனைத் தன் மணிப்புயத்தே பெய்து கொண்டான். அதற்குக் காரணம் கூறப் புகுந்த இளங்கோவடிகள்,

“ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின்” (பக். 147)

சென்றான் என்று கூறுகின்றார். மாடலன் ஒருகால் இச்செங்குட்டு வனை நோக்கிக் கூறுமிடத்து, “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” என்று கூறுகின்றான்.

இவன் அறிஞருடன் சொல்லாடுங் காலத்து மிக்க கம்பீரமாகப் பேசும் பண்பு படைத்தவன். மாடலன், கண்ணகி வரலாற்றை மிக்க சுருக்கமாகக் கூறக் கேட்டதும்,

“பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா
நகைத்திறங் கூறினை, நான்மறை யாள!
யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு”

என்கின்றான். இதன்கண், “நான் அறியாத நகை யென்னாது மன்னர் பலரும் அறியாத என்றான், இராசபாவத்தாலே” என்று உரைக் கின்றார் அரும்பதவுரைகாரர்.

செங்கோல் கோடிய பாண்டியன் செய்தி கேட்டதும், இச் செங்குட்டுவன் கூறும் கூற்று நம்மனோர்க்குப் பெருமிதத்தைத் தருகின்றது. அது,

“எம்மோ ரன்ன வேந்தற்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உறுபதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை, மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” (பக். 140)

என வருவதாகும். இம்மட்டில் நில்லாது, இன்னோரன்ன வழுக்கிற்கு இடனாகி, அரசரை வருத்தும் அரசியலின் தன்மையைச் செங் குட்டுவன் நன்கு உணர்ந்திருக்கின்றான். சீத்தலைச் சாத்தனார் மதுரை நிகழ்ச்சியை விரியக் கூறக்கேட்டு மனம் வருந்திய இவன், பாண்டியன் உயிர் துறந்ததை நினைத்து மேலே காட்டியவாறு கூறி,

“மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்,
பிழைஉயி ரெய்தின் பெரும்பே ரச்சம்,
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்” (பக். 140)

என்று கூறுகின்றான்.

    5. கண்ணகி*: கண்ணகியாரின் காற்சிலம்பே இப்பேரிலக்கி யத்துக்குப் பெயராவது. இவர் வடிவில் திருமகளையும், கற்பில் வடமீனையும் நிகர்ப்பர் என அவரை யொத்த மகளிரால் பாராட்டப்படுபவர். நற்குண நற்செய்கை மிக வுடையவர். இவரது உருநலனும் மனை மாண்பும் கோவலனுக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. அவன் இவரை, “அரும் பெறற்பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடிவாணிகன் பெருமடமகளே” எனப் பாராட்டிப் பரவுகின்றான். இவர் கற்புக் கடம்பூண்ட பொற்புடைத் தமிழ்மகள் என்பதைப் பல விடங்களில் இவர் கூறும் சொற்களால் இனிது தெளியலாம்.  

கணவனாகிய கோவலன், காதலொழுக்கத்துக் கண்ணிய நெறியால் வாராது, பெற்றோர் புணர்ப்பவந்த காதலனாயினும், அவன்பால் இவர் கொண்டொழுகிய காதலொழுக்கம் தமிழ் வழங்கும் காதலின்ப ஒழுக்கமாகவே திகழ்கின்றது. அவன் மாதவி வயப்பட்டு மயங்கித் தன்னைப் பிரிந்து ஒழுகிய காலத்து, கண வருவப்ப அணியும் அணிகலன்களை இவர் அணியவேயில்லை. இதனை, அடிகள்,
“அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய,
மென்துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி அணியாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்” (பக். 14)

என்று கூறுகின்றார்.

கோவலனது பிரிவாற்றாது வருந்தி மெலிந்த கண்ணகியார் ஒருநாள் தீக்கனாக் கண்டு தன் தோழி தேவந்திக்குத் தெரிவிப்ப, அவள், “பிரிந்த கணவனைப் பெறக் கருதும் மகளிர், கானற்கண் உள்ள சோமகுண்டம் சூரியகுண்டமென்னும் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவர்;

‘காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்’ (பக். 44)

யாம் ஒருநாள் ஆடுதும் வருக” என்கின்றாள். அவட்கு நம் கண்ணகி யார், “கணவனையல்லது பிற தெய்வங்களைத் தொழுதல் கற்புடைய மகளிர்க்குத் தீது” என்ற கருத்தால், “அது பீடன்று” என்று மறுத்து விடுகின்றார்.

அக்காலை, திரும்பப் போந்த கோவலன், தன் காதற் குறிப்புத் தோன்றும் மொழிகள் சிலவேனும் கூறலாம்; கூறிற்றிலன். துவண்ட மேனியும் சோர்ந்த முகமும் கொண்டு அவர் எதிரில் நிற்பவன், கண்ணகியார் செய்யும் வழிபாட்டையும் நோக்கிற்றிலன்; அவன் உள்ளம் கண்ணகியின் “வாடிய மேனி வருத்தங் கண்டு” பெருங் கலக்கம் எய்துகின்றது. உடனே, அவன் மனத்தே மிக்க நாணம் தோன்றி அலைக்கின்றது;

“சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு” (பக். 45)

என்று சொல்கின்றான். காமக்களியாட்டில் மயங்கினார்க்கு வேறு நாணமேது; நல்ல காதலேது. பொருளின்மை யொன்றே அவரை வருத்தக்கூடியது. அவன் வருத்தத்தின் பெற்றியை யறிந்த கண்ணகியார்,

“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புள கொள்ளும்”

என்று மொழிகின்றார். செவிவழி சென்று அவன் நெஞ்சு துளைத்து வருத்தும் சுடுசரம் இதனிற்காட்டில் அக்கோவலற்கு வேறு வேண்டாவே.

ஆனால், அவன் இச் சிலம்பையே முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு அழைக்கின்றான். இவ்வாறு தன் மனைவியையும் உடன் அழைத்தது இவன் வரலாற்றில்தான் புதுமையாய்க் காணப்படுகிறது. அக் கண்ணகியாரும் அவன் சொற்படியே புறப்பட்டு விடுகின்றார்.

நெடிது நடந்தறியாப் பெருஞ் செல்வத் திருமகளாகிய கண்ணகியார் அவனுடன் ஒரு காவதம் சென்று, ஆங்கிருந்த கவுந்தியடிகளின் தவப்பள்ளியை யடைந்து கோவலனை அன்புகனிய நோக்கி, முள்ளெயிறு இலங்க முறுவலித்து,
“மதுரை மூதூர் யாது?” என வினவ,
கோவலன்,

“ஆறைங் காதம் அகல்நாட் டும்பர்,
நாறைங் கூந்தல், நணித்து” (பக். 47)

என்று விடையிறுக்கின்றான். அவனது நயமென் மொழியினைக் கேட்டு உவகை நகை செய்து, கவுந்தியடிகளை வணங்கி வழிபடு கின்றார். வழியில் கோவலன் கண்ணகியார்பால் காட்டிய காதல், சான்றோராகிய கவுந்தியடிகள் உணர்ந்து, “கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ” எனப் பாராட்டப் பெறும் பேறு பெறுகின்றது.
உயிரினும் சிறந்த நாணும், அதனிற் சிறந்த கற்பும் உருக்கொண் டாற்போலும் உயர்மகளாதலின், கண்ணகியார், வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் கவுந்தியடிகள்பால் தீமொழி பகரக்கேட்டதும், உடல் நடுங்கி மனங் கூசித் தன் செவி புதைத்து நிற்கின்றார். அது காணப்பொறாமையால் கவுந்தியடிகள் அத் தீயோர் இருவரையும், “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக” எனச் சபிக்கின்றார். மேலும், வேட்டுவர் கூட்டத்துட் சாலினி தெய்வமருள் கொண்டு, கண்ணகி யாரைப் பார்த்து, “இவளோ ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறுகின்றாள். அது கேட்டதும், கண்ணகியார், “பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி” என்று கோவலற்குப்பின்னே சென்று ஒடுங்கி நிற்கும் தோற்றம் உள்ளக்காட்சியில் உவகை செய்கின்றது.

கண்ணகியார் மாதரியென்னும் ஆய்ச்சி வீட்டில் இருந்து, அவள் உதவிய காய், கனி, அரிசி முதலியவற்றால் இனிய உணவு சமைத்துக் கோவலற்கு இடும் திறம் மிக்க இன்பம் தருவதாகும். கோவலனைப் பனையோலைத் தடுக்கில் அமர்வித்து,

தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக்
குமரிவாழையின் குருத்தகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க, அடிகள்! ஈங்குஎன

அவர் மொழியும் மொழிகள் இற்றை நாளை மகளிர்க்கு இனிய நல்லுரையாகும்.

உணவு கொண்டபின் கோவலன், கண்ணகியாரின் வழி நடை வருத்தத்திற்கு வருந்தியும் தன் பெற்றோரை நினைந்தும் சில கூறுகின்றான். அவற்குக் கண்ணகியார் தம் பேரறிவுடைமை சிறக்க ஒரு நல்லுரை கூறுகின்றார்.

“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (பக். 92)

நும் பெற்றோர், அன்பு சிறந்து அருள்மொழி வழங்கி இனிது பாராட்டி வந்தனர். என் பொய்முறுவல் கண்டு, என் உள்ளுறு வருத்த முணர்ந்து வருந்தினர். அவர் அவ்வாறு வருந்தவும் நீவிர்,

போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்,
ஏற்றெழுந்தனன் யான்”

என்று கூறித் தெருட்டுகின்றார்.

இதுகாறும் காட்டியவற்றால் கண்ணகியாரின் கற்பும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் யாம் தெளியக் காண நிற்பது விளங்கும். கோவலனது பரத்தைமையும் பிரிவும் பெரிது ஆற்றியிருந்த இக்கண்ணகியார், கோவலன் கொலையுண்டது கேட்டதும், ஆற்றாமையின் வரம்பு கடந்து விடுகிறார். அவரது ஆறிய கற்பு சீறிய கற்பாக மாறுகிறது; மெல்லியற் பொறை வல்லியற் பொறையாகின்றது; மென் மொழி வழங்கிய மலர்வாயில் வன்மொழி வருகிறது; அருள் கிடந்த உள்ளத்தே மருட்கை இடம் பெறுகிறது; அழுகையும் அவலமும் அவரைக் கவர்ந்து கொள்கின்றன; பெண் மையின் வரம்பாகிய பெருநாண் நெகிழ்ந்து நீங்குகின்றது.

“பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த்
திங்கள் முகிலொடும் சேண் நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனை,
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்” (பக். 108)

என அடிகள் அழகுறக் காட்டுகின்றார்.

கண்ணகியார்க்கு இவ்வுலகமே புல்லிதாகத் தோன்றுகிறது; எதிர்காலம் புலனாகிறது; கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு நோற்று வாழும் காட்சி தெரிகிறது; மன்னவன் ஆட்சியில் நேர்ந்த தவறும் இனிது விளங்குகின்றது. தன்னை நோக்குகின்றார், “அன்பனை இழந்தேன் யான்” என வாய்விட்டு அரற்றுகின்றார்; கைம்பெண் எனத் தான் ஆவது கண்டு அருவருக்கின்றார்; அவலம் மிக மிக அவருள்ளம் திண்ணிதாகின்றது. அறிவு சிறிது அவர் வசம் வருகிறது. ஏனை மகளிர் காணத் தம் கணவனான கோவலன் கள்வனல்லன் என்பதனை, செங்கதிர்ச் செல்வனைக் கேட்டுத் தெளிகின்றார்; பிறரையும் தெளிவிக்கின்றார்.

மதுரை நகர்க்குட் கையிற் சிலம்பேந்திப் புகுந்து, தெருவில் தம்மைக் கண்டு வியந்து நிற்கும் நன்மகளிர் அறிய வன்மொழி சில கூறுகின்றார்.

“முறையில் அரசன் தன் ஊரிருந்து வாழும்
நீறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்!……
கள்வனோ அல்லன் கணவன்,என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட் டால்கொன் றாரே,
ஈதொன்று.” (பக். 110)

என் கணவனைச் சென்று காண்பேன்; கண்டு அவன் வாயில் “தீதறு நல்லுரை கேட்பேன்” என்கின்றார். கேளாதொழியின், அது நன்மகளிர் எள்ளி இகழ்தற்கு இடனாகுமன்றே; அதனையுணர்ந்து,

“தீதறு நல்லுரை கேளா தொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்”

என்று இனைந்து கூறுகின்றார்.

பின்பு இவர் நேரே கொலைக்களம் சென்று கோவலன் உடல் கொலையுண்டு குருதி நிறைந்து பொடியாடிக் கிடப்பது கண்டு ஆறாத் துயரமுற்று அவலித் தழுகின்றார். பத்தினிப் பெண்டிர், சான்றோர், தெய்வம் என்ற இவற்றை நினைந்து நோகின்றார். கோவலன் உடலை எடுத்துத் தழீ இக்கொள்கின்றார். அவன் உயிர் பெற்று, கண்ணகியாரின் “நிறைமதி வாண்முகம் கன்றியது” என்று அவர் கண்ணீரைக் கையால் மாற்றுகின்றான். அவர் அவன் திருந்திய அடியைத் தன் வளைக்கையால் பற்றுகின்றார். உடனே, அவன், “இருக்க” என்று சொல்லிவிட்டு விண்ணுலகு சென்று விடுகின்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாகின்றது. கண்ணீர் ஆறாகச் சொரிகிறது. உள்ளம் கொதிக்கின்றது. உடல் நடுங்குகின்றது; சுற்று முற்றும் கண்களைப் பரக்க விழித்துப் பார்க்கிறார்; “போய் எங்கு நாடுகேன்” என்று புகல்கின்றார். கோவலன் கொலைக் காரணத்தை நினைக்கின்றார். அவர் முகம் சிவக்கின்றது; வாயிதழ் துடிக்கின்றது; கண்கள் சிவந்து காய் சினங் காட்டுகின்றன; கணவன் நினைவும் இடையே நிகழ்கின்றது.

“காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;
தீவேந்தன் றனைக்கண்டுஇத் திறம்கேட்பல் யான்” (பக். 113)

என்று சொல்லிக்கொண்டு அரசன்பால் வருகின்றார்.

இவரது காய்சினக் கோலத்தைக் கண்டு அச்சமும் வியப்பும் அடையக் கொண்ட, அரசனது வாயிற் காவலன் அரசன்பால், “கொற்றவையோ, பிடாரியோ, பத்திரகாளியோ என்று கூறற்குரி யளல்லள், கணவனை யிழந்த ஒரு நங்கை” என்கின்றான். இக்குறிப் பறியாத, கல்லா நாடகமக்கள், எங்கள் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியாரை, உயிர்க் கொலை வேட்டுத் திரியும் கூளியாக்கி நடித்துத் திரிகின்றனர். இஃது அறிஞர்க்கு எத்துணை அருவருப்பை யும் வருத்தத்தையும் தருகிறது, காண்மின்.
அரசன்பால் இவர் வழக்குரைக்கும் திறம் மிக்க நயமும் இலக்கிய நலமும் நிரம்பியதாகலின், அதனை ஈண்டுரைப் பிற் பெருகும்.

வழக்குரை முடிவில் அரசன் இறந்ததும், கோப்பெருந் தேவிக்கு உரியன கூற அவள் இறந்ததும் கண்டபின்னும் கண்ணகி யார்க்குக் காய்சினம் தணிந்திலது;

“மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்,
பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும்.” (பக். 119)

என்று மதுரை நகரைத் தீக்கிரையாக்குகின்றார். எரிக்கடவுள் போந்து, “என்னால் விலக்கற் குரியார் யாவர்?” என்று இரந்து கேட்க, கண்ணகியார், அறத்தாறு நுவலும் பூட்கை குன்றாது,

“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்,
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க” (பக். 120)

என்கின்றார். வீரபத்தினியாகிய நம் கண்ணகியார் பின்பு மதுராபதி யால் பழம் பிறப்புணர்ந்து, செங்கோடு அடைந்து, தன்னைக் கண்டு வினவிய வேட்டுவர்க்கு, “மணமதுரையோடு அரசு கேடுற, வல்வினை வந்து உருத்த காலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன், யான்” என்று கூறிவிட்டு, தம்பால் வந்த வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வதால் தோன்றும் நலம் பலவும் இனி விரிக்கில் மிகப்பெருகும்.

    6. மாதவி: காவிரிப்பூம்பட்டினத்து நாடகக் கணிகையருள் சித்திராபதி யென்பாட்கு மகள் இம் மாதவி. இவள், ஆடல், பாடல், அழகு என்ற இவற்றுள் ஒன்றிலும் சிறிதும் குறைபாடு இல்லாதவள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வரையில் ஆடலும் பாடலும் அறிவுமிகு கல்வியும் நன்கு பயின்றவள். திருந்திய அறிவும் பொருந்திய கல்வியும் விரிந்த மனமும் உடையவள். கரிகாற் பெரு வளத்தான் முன் நிருமித்த நாடக அரங்கில், இளங் கோவடிகள், இவளை நமக்குக் காட்டுகின்றார். அங்கே,  

“பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்” (பக். 10)

காண்கின்ற நம் மனம் மகிழத் தன் நாடக நூற்புலமையை நன்கு காட்டுகின்றாள்.

மாதவி கோவலனுடைய தொடர்பு பெற்று, அவன்பால் சிறந்த காதல் கொண்டு ஒழுகுகின்றாள். இதனை, அடிகள்,

“நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி” (பக். 14)

என்கின்றதனால் அறிகின்றோம். இவளோடு கூடியிருக்குங் கால் கோவலன் இன்புற்ற திறம்,

“காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு…
காமக் களிமகிழ் வெய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து…
பூமலி கானத்துப் புதுமணம் புக்கு,
புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்” (பக். 19)

என்பதனால் இனிது விளங்குகிறது.

இந்திரவிழாவில் இம் மாதவி அரங்கேறி, திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பல வகைத் தேவபாணி பாடி, பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம், முதலாகவுள்ள பதினொருவகைக் கூத்தும் ஆடி மக்களைக் களிப்பிக் கின்றாள். அவளுடைய பாடலும் ஆடலும் அழகும் மக்கள் மனத்தை இன்புறுத்தக் கண்டு கோவலன் “ஊடற்கோலம்” உறுகின் றான். இங்கேதான், அவன் மாதவியைப் பிரிதற்குத் தோற்றுவா யாகிய மனப்பிளவு தோன்றுகிறது.

இதனை மாதவி தெளிய உணராது, வாளாது கூடற்குரிய ஊடலென்றே கருதி யொழிகின்றாள். அவனுவக்குமாறு தனது கூந்தல் முதல் சீறடி ஈறாகப் பலவகையுறுப்பும் அழகு திகழப் புனைந்து கொள்ளுகின்றாள். இக்கோலம் கொண்டது அவன் உவக்குமாறே யன்றித் தன்னைக் காண்பார் மகிழுமாறு அன்று என்பதை அடிகள், “ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப” (கடலாடு. 75) என்றும், “கூடலும் ஊடலும் கோவலற் களித்துப், பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்” (கடலாடு. 109 -10) என்றும் நன்குவற்புறுத்துவதனால், இம்மாதவி, நாடகமகளாயினும் குலமகட்குரிய கற்பும் பொற்பும் உடையளாய் இருந்தமை தெளிய விளங்குகிறது. கடற்கானற்குச் செல்லும்போதும் இம்மாதவி, கோவலனுடன் ஒரே ஊர்தியிற் செல்லாது, அவன் ஒரு கோவேறு கழுதை மேலிவர்ந்து வர, தானோர் வையமேறிச் செல்கின்றாள்.

மாதவி கடற்கானற் சோலையில் இருந்தபோது, தொடக்கத்தே தன் கையிலிருந்த யாழை அவன்பால் தந்து அதனை இசைத்துப் பாடுமாறு வேண்ட, அவனே குறிப்பு வேறுடைய பாட்டுக்களை முதற்கண் பாடலுறுகின்றான். இவற்றைக் கேட்ட மாதவி, இசையின் பத்தோடு பொருள் நலமும் தேர்ந்து, “இவன் மனத்தே வேறு குறிப்பு உளது போலத் தோன்றுகிறது; அவ்வாறு இருத்தற்கு இடமில்லை; இவன் தன் நிலைமயங்கினான்” என்று உட்கொண்டு “கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ் கை வாங்கித், தானும் ஒரு குறிப்பினள்போல்” பாடுகின்றாள். இப்பாட்டுக் குறிப்பை நன்கு ஆராய்ந்து காண்டற்குரிய கோவலன் அதனைச் செய்யாதது அவன் குற்றமே. குறிப்பு வேறு உண்மை கண்டதும், அவன் உள்ளத்தே பொறாமை குடி கொண்டுவிடுகிறது; அறிவு மழுங்கிவிடுகிறது; வெகுளி எழுகின்றது. “கானல்வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்” என்ற நினைக்கின்றான். நினைத்தவன் சிறிதேனும் அங்கே இருந்தானோ எனின் இல்லை; உண்மையிலே அப்போது, பொழுதும் நெடிது கழிந்தது. “பொழுது கழிந்தது, வருக, செல்வோம்” என்றேனும் கூறி, அவளுடன் புறப்பட்டுத் தான் வேண்டுமாயின் தனித்தேகியிருக்கலாமன்றோ! அஃதன்றோ ஆடவர்க்குப் பண்பு. சட்டி சுட்டது, கை விட்டது என்பதுபோல, குறிப்பு வேறுபாடு கண்டதும், “பொழுது ஈங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்று உடனெழாது” சட்டெனத் தனக்குரிய ஏவலர் சூழ்வரத்தான் மட்டில் பிரிந்து ஏகிவிடுகின்றான். மாதவி உண்மை விளங்காளாய்க் கையற்று மனம் வருந்தித் தன் மனையை அடை கின்றாள். இதற்குக் காரணம் ஊழ்வினை என்கின்றார் இளங்கோ வடிகள். இதனால், கோவலன் பிரிவுக்கு மாதவி ஏதும் பிழை செய்திலள் என்பது பெறப்படுகிறது.

பின்பு, அவள் கோவலன் பிரிவாற்றாது வருந்தி அவற்குத் தன் தோழி வயந்தமாலை வாயிலாகத் திருமுகம் விடுப்ப, அதனையும் அவன் மறுத்து விடுகின்றான்; அவளோ மனம் வெறாது, “மாலை வாராராயினும், காலை காண்குவம்” என்று எண்ணிக் கையற்று இருந்தொழிகின்றாள். கோவலன் புகார் நகரின் நீங்கித் தன் மனைவியுடன் வேற்று நாட்டிற்குச் சென்றொழிந்தது அறிந்து கோசிகமாணி என்பான்பால் ஓலையொன்று விடுக்கின்றாள். அதனைக் கண்டபின்பே கோவலன், “அவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து தன் தீதிலள்” எனத் தளர்ச்சி நீங்குகின்றான். முடிவில் கோவலன் கொலையுண்டது கேள்வியுற்றுப் புத்தமாதவர்பால் அறம் கேட்டு புத்தபிக்குணியாய் விடுகின்றாள். இவ்வரலாற்றால், அவள் முடிவுகாறும் கோவலனையன்றிப் பிற ஆடவரைக் கருதாத பெருங் கற்புடையவளாய் விளங்கினதை அறிகின்றோம். இதனை யறியாது, இக்கால நாடகமாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்புமுடைய ‘மாதகி’யாக்கி நடித்துத் திரிகின்றனர்.

    7. கவுந்தியடிகள்: இவர் சமணசமயத் துறவிகளில் பெண் பாலருள் ஒருவராவர். இவர் சோழ நாட்டில் புகார் நகர்க்கு மேற்கில் ஒரு காவதத் தொலைவில் பள்ளியமைத்து அறம் புரிந்து வருகையில், தன்பால் வந்த கோவலனையும் கண்ணகியையும் காண்கின்றார். அவர்களைக் கண்டதும், “உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்” என்று வினவுவது இவரது நல்லொழுக்கத்தைப் புலப்படுக்கின்றது.  

மேலும், இவர் கோவலனை நோக்கிக் கண்ணகியின் மென்மைத் தன்மையை விதந்தோதி மதுரைக் கேகுதலை ஒழிக என விலக்குகின்றார்; அவன் அதனைக் கேளாதொழியவே, தானும் மதுரைக்கு அவருடன் வர இசைகின்றார்.

வழிகாட்டிச் செல்லுமிடத்து முதற்கண் அவர் மனத்தே கண்ணகியின் அருமையும் மென்மையும் முன்னின்று வருத்தவே, அக் கண்ணகிக்கு அவலம் செய்வனவற்றையே எடுத்தோதி விலக்கிச் செல்கின்றார். ஏனை யுயிர்கள்பால் அவர் கொண்டிருந்த அருள் நிலை மிகப் பெரிது.

“குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதம் கூடும்”

என்றும்,

“எறிநீ ரடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா”

என்றும் கூறுவன (பக். 49) அவரது அருளறத்தின் இயல்பை நன்கு தெரிவிக்கின்றன.

சாரணர் தோன்றி அக்கவுந்தியடிகளை நோக்கி,
கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:
ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை,
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங்கான் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை யுயிர்கள் (பக். 51)

என்று ஓதி அருகனுடைய பல மாண்புகளையும் எடுத்துரைக் கின்றனர். அவற்றைக் கேட்டதும் கவுந்தியடிகள் கூறுவனவற்றால் அவர் தம் சமய மெய்ப்பொருள்பால் கொண்டிருந்த திண்ணிய பற்று விளங்குகிறது. அவர்,

ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாம மல்லது நவிலாது என் நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்;
அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லது என்
பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர் அறவன் அறிவோர்க் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லது என்
தலைமிசை யுச்சி தான்அணிப் பொறாஅது;
இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறிதர ஓதிஎன் மனம்புடை பெயராது; (பக். 52)

என்பது அதற்குத் தக்க சான்றாவதாம். வழியில் வந்து இகழ்வுரை வழங்கிய வம்பப்பரத்தையரைக் ‘குறுநரியாகுக’ எனச் சபித்ததும், பிறகு சாபவிடை வழங்கியதும் அவருடைய ஆற்றற்குத் தக்க சான்றாகின்றன.
மாடலன் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான் பிலத்தின் பெற்றியினைக் கூற, கவுந்தியடிகள், “நலம்புரி கொள்கை நான்மறை யாள, பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை” என்று மறுத்து,

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வம் கண்டடி பணிய
நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்” (பக். 60)

என்று மொழியும் திறம் அவரது விழைவின்மையைக் காட்டுகின்றது.

தன்பால் கண்ணகியை விடுத்துத் தான் தனியே மதுரை மூதூர்க்குச் சென்று வரவேண்டுமென்று கூறி வருந்திய கோவலனுக்கு அவர் மனைத் தொடர்பின் துன்பமும் இராமன் நளன் முதலியோர் வரலாறும் கூறி, தெருட்டுவது அவரது துறவு நெறியும் அறிவின் ஒட்பமும் நன்கு உணரக் காட்டுகின்றது.

அவர் கண்ணகியை மாதரியென்னும் ஆய்ச்சிபால் அடைக் கலப்படுத்துமிடத்துக் கூறுவன மிக்க இன்பந்தருவனவாகும். கண்ணகியைப் பேணுமாறு இது என்பார்போல், கவுந்தியடிகள் மாதரியை நோக்கி,

“மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி,
தேமென் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கு; (பக். 87)

என்றும், கண்ணகியின் கற்புப் பெருமையைக் குறித்து,

“இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடுஎன்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ,” (பக். 88)

என்றும், துறவியாகிய தான் தரும் அடைக்கலத்தைத் தாங்கின் வரும் பயன் குறிப்பாராய்,

“தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும்
மிகப்பே ரின்பம் தருவது கேளாய்” (பக். 88)

என்றும் கூறுகின்றார்.

இவ்வண்ணம் கண்ணகிபால் பேரன்பு செலுத்திய கவுந்தி யடிகள், கோவலன் கொலையுண்டதும் பிறவும் கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்பதிப் பெயர்க்கின்றனர்.

இவ்வாறே பிறர் ஒவ்வொருவருடைய குணம் செயல்களையும் தனித்தனியே காணலுறின், வரம்பின்றிப் பெருகுமாதலின், இம் மட்டில் நிறுத்தி, இவ்விலக்கியத்துள் காட்டப்படும் வரலாறுகள் சில காண்பாம்.

X. வரலாறுகள்:- இதன்கண் சோழவேந்தர் மரபில் தூங்கெ யில் எறிந்த தொடித்தோட் செம்பியன், முசுகுந்தன், மனுவேந்தன், கரிகால்வளவன் முதலியோர் செய்த சிறப்புடைச் செய்திகள் குறிக்கப்படுகின்றன. பாண்டி வேந்தருள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தியும், இந்திரன் சென்னியில் வளையுடைத்தவன், கடலில் வடிவேலெறிதலும், இந்திரன் ஆரத்தைத் தான் பூண்டு கோடலும், மேகத்தைச் சிறை செய்தலுமாகிய செய்திகளும், பாண்டியன் கைகுறைத்துக் கோடலும் பிறவும் காணப்படுகின்றன. சேரவேந்தர் இமயத்தில் விற்பொறித்ததும், கடலில் கடம்பரை யெறிந்ததும், நேரிவாயில் என்னுமிடத்து எதிர்த்த வேந்தர் ஒன்பதின் மரை வென்றதும், முடிவேந்தர் எழுவரை வென்று, அம் முடிப் பொன்னும் மணியும் கொண்டு ஆரமொன்று செய்து சேரவேந்தர் வழிவழியாக மார்பிற் பூண்டொழுகியதும், ஆரிய மன்னரையும் பிறரையும் வென்றதும் பிறவும் விரியக் கூறப்படுகின்றன.

இவையேயன்றி, இறைவன் மூவெயில் முருக்கியதும், முரு கனைப் பயந்ததும், முருகன் சரவணத்தே அறுவர் பாலுண்டு வளர்ந்ததும், அவுணரை வென்றதும், வள்ளியை வேட்டதும், திருமால் வைய மளந்ததும், நரசிங்கமானதும், இராமன் சீதையை இழந்து வருந்தியதும், இராவணனை வென்றதும், கஞ்சனைக் கண்ணன் கொன்றதும், பஞ்சவர்க்குத் தூது சென்றதும், இந்திரன் மலைகளின் சிறகை யரிந்ததும், அவன் மகன் சயந்தன் என்பான் அகத்திய முனிவனால் சாபமுற்று மூங்கிலானதும், நளன் கதையும், பிறவும் ஏற்றவிடத்து எடுத்துக் காட்டப்படுகின்றன.
இவற்றோடு இடையிடையே துறவிகட்குத் தானம் செய்வோர் பெறும் பேறும், கள்வர் தொழில் வன்மையும் கற்புடைய மங்கையர் சிறப்பும் பிறவும் விளக்கும் வரலாறுகள் பல ஓதப்படுகின்றன.

கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்தி முதலியோர் பிறப்பு வரலாறும், பழம் பிறப்பும், சுட்டப்படுகின்றன.

XI. இசை நாடகக் குறிப்புக்கள்:- இந்நூல் “இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள்” எனப் பண்டை ஆசிரியன்மாரால் சிறப்பித் தோதப்படுவதென்று முன்பே கூறினோம். ஆகவே, இதன்கண் இசையும் நாடகமும் குறிக்கப்பெறும் என்பது சொல்லாமலே விளங்கும். இதன்கட் காணப்படும் மங்கல வாழ்த்துப் பாடல், கானல் வரி,வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசையும் நாடகமும் பயின்றுவரும் பகுதிகளாகும். துன்ப மாலையும் வஞ்சின மாலையும் இசைவிரவி அழுகைச் சுவை மிக்கு நிற்பனவாகும்.

அரங்கேற்று காதை, வேனிற் காதை முதலியவற்றுள் பண்டை இசை நாடக நூற்குறிப்புக்கள் செறிந்திருக்கின்றன. காண்டந்தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசை நாடகக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.
இவற்றை இப் பேரிலக்கியத்துக்கு உரைகண்ட அரும் பதவுரைகாரர், அடியார்க்கு நல்லார் என்ற இப் பெருமக்கள் வழங்கியுள்ள உரைக் குறிப்புக்களால் ஒருவாறு காண்டல் கூடும். விரியவுணர்தற்கு ஆகாதவாறு அவ்விசை நாடக நூல்கள் பலவும் இறந்தொழிந்தன. இக்குறை அறிஞர் உலகிற்குப் பேரவலத்தைச் செய்து நிற்கிறது. இத்துறையில் சுவாமி விபுலானந்தர், மகாமகோ பாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், நாவலர் பெருந்தகை பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலி யோர் உழைத்து வருகின்றனர். அவர் முயச்சி வெற்றி பெறுவதாக.

XII. சில வழக்காறுகள்:- ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தும், சங்க நூற் காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் இருந்த திருமணமுறை இச் சிலப்பதிகாரக் காலத்தே மாறியிருக்கிறது. தொல்காப்பியனார் முதலியோர் காலத்தே நிலவிய களவு வழி நிகழ்ந்த காதல்மணம் இளங்கோவடிகள் காலத்தே இல்லையென் பதை, கோவலற்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த மணவினை காட்டு கின்றது. “இரு பெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்ந்தனர்” என்பது அடிகள் உரையாகும். மேலும், “மாமுது பார்ப்பான் மறைவ காட்டிடத், தீவலஞ் செய்வது” என்ற முறை இவர் காலத்தே தோன்றிவிட்டது.

திருமணம் புணரும் மக்களை வாழ்த்துமிடத்தும், கடவுட் பூசை நிகழ்த்துமிடத்தும் பிறாண்டும் அரசனை வாழ்த்தும் நன்முறை, “செருமிகு சினவேற் செம்பியன், ஒரு தனியாழி உருட்டுவோன் எனவே” (மங்கல.) என்றும், “பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறநாட்டுக், கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சிசூடுக விறல் வெய்யோனே” (வேட்டுவ.) என்றும், “உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர், வில்லெழுதிய இமயத்தொடு, கொல்லியாண்ட குடவர்கோவே” (குன்றக்.) என்றும் வருவனவற்றால் இனிதுணரப் படுகின்றது.

இவ்வாறே, மனையறம் செய்தலும், வாணிப முறையும், கைத்தொழில் வளமும், இசை நாடக நலனும், ஆய்ச்சியர் வாழ்வும், குன்றவர் செல்வ நிலையும், அரசியல் முறையும் பிறவும் பண்டைத் தமிழ் வாழ்வின் உயிரோவியம் போல இந் நூற்கண் உருக்கொடுத்துக் காட்டப்படுகின்றன. அவற்றை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

வேள்கி வேட்கும் வழக்கு அடிகள் காலத்தே தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது. மதுரை நகரிலும், சேரனாட்டிலும் ஆகுதிப் புகையும், மாடலன் வேள்வியும் பிறவும் நாம் காண்கின்றோம்.

அடிகள் காலத்தே, இசை, நாடகம், சமயம், அரசியல் வாணிபம், மருத்துவம் முதலிய துறைகட்கேயன்றி, கனவு, களவு முதலியவற்றின் உண்மை காண்டற்கும் நூல்கள் பல இருந்திருக் கின்றன. கனாத்திறமுரைத்த காதையும், கொலைக்களக் காதையும் இவற்றைப் புலப்படுத்துகின்றன.
அடிகள் காலத்தே வடநூற்புராண இதிகாசக் கதைகள் தமிழ்நாட்டில் வந்துவிட்டிருக்கின்றன. அவை வாயிலாக, வடவர் வழக்க ஒழுக்கங்களுட் பல தமிழகத்தே புகுந்திருக்கின்றன.

முடிப்புரை:- இப் பேரிலக்கியத்துக்கு அரும்பதவுரை யொன்றுண்டு; அதன் பிற்போந்த அடியார்க்கு நல்லார் என்னும் பேராசிரியர் அழகியதொரு விரிவுரை எழுதியுள்ளார். அரும்பத வுரை நூல் முழுமைக்கும் உண்டு; அடியார்க்கு நல்லார் உரை தொடக்க முதல் வழக்குரை காதை வரையில் தான் உளது. இவற்றின் இடையே கானல்வரிக்கு அவரது உரை கிடைத்திலது. இஞ்ஞான்று நடுக்காவேரி நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நன்காராய்ந்து, நூன் முழுமைக்கும் எழுதிய நல்லுரை தமிழ்மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கின்றது. இப் பெருமக்களின் உரை நலத்தை முதனூலைப் படித்து இன்புறுதல் வேண்டும். இச்சிறு நூலகத்தும் ஆங்காங்கு ஒன்றிரண்டு காட்டப்பெற்றுள்ளன.

இப் பெருநூல், பண்டைத் தமிழ் வாழ்வும் தமிழறிஞர் அறிவு நுண்மையும் பிறவும் நாம் அறிந்துகோடற்கு ஏற்ற பெருமணியாய்த் திகழ்வது. இதன் நலம் முற்றும் காண்பதற்கு வேண்டும் அவாவைப் படிப்போருள்ளத்தில் எழுப்புவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு இச் சிறு நூல் வெளியிடப்படுகின்றது.

இதுபோலும் பல தொண்டுகள் இற்றைய நம் தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு வேண்டுவனவாம் என்று நன்கு அறிந்து, இவற்றை ஆற்றுதற்கு முன் வந்திருக்கும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு நாம் பெரிதும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையோம்.

இத்தகைய தொண்டினை ஆற்றற்குரிய பெரும்புலமையும் அருந்திறமையும் படைத்த புலவர் பெருமக்கள் பலரிருக்க, வேங்கடத்தடியில் தமிழ் கற்பிக்கும் தொழில் தாங்கியிருக்கும் அடியேனைப் பொருளாக் கொண்டு இப் பணி புரிவிக்கும் உமையொரு பாகத்து ஒருவன் திருவருளை வியந்து மனமொழி மெய்களால் பணிந்து மகிழ்ந்து பரவுகின்றேன்.
திருவேங்கடம்

9.7.1942 rஒளவை. சு. துரைசாமி**

உரை பெறு கட்டுரை


    1. அன்றுதொட்டுப் பாண்டியன் நாடு, மழை வறங் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடரக், கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன், நங்கைக்குப் பொற் கொல்லர் ஆயிரவரைக் கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, நாடுமலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது.  

2.  அது கேட்டுக் கொங்கிளங் கோசர், தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய, மழை தொழில் என்றும் மாறாதாயிற்று.

3.  அது கேட்டுக், கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, “அரந்தை கெடுத்து வரம் தரும் இவள்” என, ஆடித்திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.

4.  அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து “எத்திறத்தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும்” என நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித் தோனே.

மணிமேகலைச் சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
அவர்கள் தொகுத்தெழுதியது

ஆராய்ச்சி முன்னுரை


மணிமேகலை யென்பது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று என்பது தமிழுலகு நன்கறிந்த செய்தியாகும். பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது. இந்த அரிய காப்பிய நூல், ‘கற்பனைக் களஞ்சிய’மாக விளங்கிய துறை மங்கலம் சிவப்பிரகாச அடிகளால் தாம் அருளிய திருவெங்கைக் கோவையில், “கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ஙன்?” என்றும் அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், “மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே” என்றும் தொனி நயம் படப் போற்றியுரைத்த அருமையுடையது; அழகிய செம்பாக மான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவக சிந்தாமணி, சிலப்பதி காரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க, அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது; காவிரிப்பூம் பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெரு நகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது; இயற்கையழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங்களையும், பண்டை நாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்”தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவைததும்பச் சொல்லும் சீர்மையுடையதுமாகும்.

I.நூலாசிரியர்:
1. பெயர்; இக்காப்பிய நூலை ஆக்கிய சான்றோர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்போராவர். “வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திற மணிமேகலைத் துறவு, ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன்” என்று இந்நூற் பதிகம் கூறுகின்றது. “ஞகாரை முதலா” என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையில், ஆசிரியர் பேராசிரியர், “சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும், கொங்கு வேளாற் செய்யப் பட்ட தொடர் நிலைச் செய்யுளும் போல்வன” என்று கூறுவதும் அப்பதிகக் கூற்றுக்கு நல்ல சான்று பகருகின்றது. இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன் என்றும், சீத்தலைச் சாத்தன் என்றும் அறிஞர் வழங்கி யிருக்கின்றனர்.

இங்ஙனம் வழங்குவதை நோக்கின், இவரது பிறந்தவூர் சீத்தலை யென்பதும், வாணிகம் செய்தற் பொருட்டு மதுரையில் இருந்தவர் என்பதும் அறியப்படும். சீத்தலை என்னும் இவ்வூர், இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லா பெரம்பலூர்த் தாலுக்காவில் உளது என்பர். கூலமாவது நெல், வரகு, தினை, சாமை முதலிய பதினெண்வகைப் பொருள்களின் பொதுப் பெயர்.

இனி, சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கொள்ளாது, ஒரு காரணம் பற்றி வந்த பெயராகக் கொண்டு காலஞ்சென்ற டாக்டர் உ.வே. சாமிநாதையர் பின்வருமாறு கூறுவர்: “சங்கத்தில் அரங்கேற்றுவித்தற் பொருட்டு வரும் நூல்களிற் பிழைகள் காணப் படுந்தோறும், ஆக்கியோர்களைக் குற்றம் கூறுதற்குத் துணியாராய், ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று மனம் வருந்தித் தமது தலையைக் குத்திக் கொள்வாரென்றும், அதனால் தலை புண்பட்டுச் சீயோடிருந்தமையின் சீத்தலைச் சாத்தனா ரென்பது இவர்க்குப் பெயராயிற் றென்றும் கூறுவர்; ‘வள்ளுவர் முப்பாலால், தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று மருத்துவன் தாமோதரனார் திருக்குறளைச் சிறப்பித்துக் கூறிய செய்யுளில் இதனைக் குறிப்பித்திருத்தலும், ‘இயற் பெயர் சினைப் பெயர்’ என்பதன் உரையில், ஆசிரியர் இளம்பூரணர் முதலியோர் சினை முதற் பெயருக்கு உதாரணமாக, ‘சீத்தலைச் சாத்தன்’ என்னும் இவர் பெயரைக் காட்டி யிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதாரங்களாக அமைவது காண்க” என்பர். இனி, நற்றிணை யுரைகாரரான பின்னத்தூர் அ.நாராயணசாமி அய்யர், அந்நூலின் பாடினோர் வரலாற்றுப் பகுதியுள், நம் சாத்தனாரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “சீத்தலையென்பது ஓர் ஊர்; செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவை போல. பெருஞ்சாத்தன், பேரி சாத்தன் முதலியோரின் வேறு படுத்த இவர் இயற்பெயர் ஊர்ப்பெயர் புணர்த்திச் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டது. சீத்தலை யென்னுமூர் திருச்சிராப்பள்ளி ஜில்லா பெருமளூர்த் தாலுக்காவில் உள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் தாமோதரனார் பாடலில் ‘தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு’ என்று இருத்தலானே அதற்கேற்பச் ‘சீத்தலை - சீப்பிடித்த தலை’ என்று கதை கட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம்; அதுபற்றிச் சீப்பிடித்தல் ஒருதலை யன்மையின், சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுதல் பொருத்த மாகத் தோன்றவில்லை” என்பது.

இவ்விருவர் கூறும் கூற்றுக்களை நோக்கின் நற்றிணையுரை காரர் கூறுவதே இயற்கையில் பொருந்துவதாகத் தோன்றுதலால், எதிர் காலத்தே அறிஞர் ஆராய்ந்து உண்மை துலங்குங் காறும் சீத்தலை யென்பதை ஊர்ப்பெயராகக் கோடலே சிறப்பு என்க. இதனைத் திரு.உ.வே.சாமிநாதையரும் ஒருவாறு உடன்பட்டுச் “சீத்தலை யென்னும் ஊரிலுள்ள ஐயனார் பெயராகிய சீத்தலைச் சாத்தனார் என்பது இவரது இயற்பெயரென்று ஒரு சாரார் கூறுவர்” என்று உரைத்துள்ளார்.

2.  பிறப்பு வளர்ப்பு: இவருடைய பெற்றோர் பெயரும் பிறப்பு வளர்ப்பு வரலாறும், வாழ்க்கைத் துணை, மக்கட்பேறு முதலிய நலங்களும் இதுகாறும் சிறிதளவும் தெரிந்தில.

3.  காலம்: இவருடைய பாட்டுக்கள் சில சங்க இலக்கிய மெனப்படும் தொகை நூல்களிற் காணப்படுகின்றன. இவர் சிலப்பதிகாரம் பாடியருளிய இளங்கோவடிகளுடன் இருந்திருக் கின்றார். அடிகள் சிலப்பதிகாரம் பாடுதற்கேற்ற வேட்கைச் சுடரைக் கொளுத்திய வரும் இவரே; அது முடிந்தபின், அதனை அடிகள் சொல்லக் கேட்டவரும் இவரே. ஆகவே, அடிகள் காலமே இவரது காலமாமென்பர். அடிகள் இற்றைக்குச் சற்று ஏறக்குறைய 1800 ஆண்டுகட்கு முன்னிருந்தவர் என்பது அறிஞர் முடிபு. திருமணக் காலத்தில் “மாமுது பார்ப்பான் மறைவழி” காட்டலும், “தீவலம் செய்தலும்” சங்க இலக்கிய காலத்தில் இல்லை. இந்நூலுட் கூறப்படும் தருக்க முடிபுகள் நான்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகத் தோன்றுகின்றன. இன்னோரன்ன வற்றைக் கொண்டு ஆராயும் அறிஞர், அடிகள் காலம் கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டாகலாம் என்பர். இக்கூற்று மெய்ப் பிக்கப்படுமாயின், அடிகள் காலத்தோடு சாத்தனார் காலமும் தெளிவாகிவிடும். காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், மதுரைமாநகர் கண்ணகியாரால் எரியூட்டப் பெற்றதும் இவர் காலத்தே நிகழ்ந்திருக்கின்றன.

4.  இவர் காலத்திருந்த அரசர்: இவர் காலத்தே சோழ நாட்டில் கரிகால் வளவனும், பாண்டி நாட்டில் நெடுஞ் செழியனும், சேரநாட்டில் செங்குட்டுவனும் ஆட்சி புரிந்திருக்கின்றனர் இவரால், சோழருள் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், கிள்ளிவளவன், இளங்கிள்ளி, நெடுமுடிக் கிள்ளி, வென்வேற்கிள்ளி என்போரும், பாண்டியருள் நெடுஞ்செழியனும், சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும், சேரருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலா தனும் பிறரும் இந்நூற்கண்ணும் பிறாண்டும் சிறப்பிக்கப் பெற்றிருக்கின்றனர். இவர் காலத்துப் புலவர் பெருமக்களை நோக்கின், மேலே கூறிய முடிவேந்தர் மூவரையும் பாடிய புலவர் பெருமக்கள் பலரும் இவர் காலத்துச் சான்றோர் என்பதொன்றே அமைவதாம். இவரை இளங்கோவடிகள், தமதுசிலப்பதிகாரத்தில் குறிக்க நேரும்போதெல்லாம், “தண்டமிழ்ச் சாத்தன்” (பதி) என்றும், “தண்டமிழரசான் சாத்தன்”, “நன்னூற் புலவன்” (காட்சி) என்றும் சிறப்பித்து ஓதியுள்ளார். இவற்றை நோக்கின், இவர் அடிகட்கு ஒருகால் தமிழாசிரியராக இருந்திருக்கலாமோ என்று நினைத்தற்கும் இடமுண்டாகின்றது.

5.  நன்மாறன் தொடர்பு: இவன் பாண்டியர் மரபினன். நன்மாறன் என்ற பெயரினர் பலர் இருந்தமையின் இவனை அவரிற் பிரித்துக் கூறுவார், சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறன் எனச் சான்றோர் சிறப்பித்திருக்கின்றனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் எனப் பலர் இருந்திருத்தல் காண்க. துஞ்சுதல், இறத்தல். ஆகவே, நம் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பெறும் பெருமை வாய்ந்த நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தே இறந்தவன் என்பது விளங்கும்.

இந் நன்மாறன், இவர் புலமை நலத்தை வியந்து பெரிதும் ஆதரித்துள்ளான். இவன் இறந்தது கேட்டோ, அதற்கு முன்னர் இவன்பால் சென்றிருந்த தன்னை ஆதரித்தது கண்டோ, இவர் தன்னைப் பேணிச் சிறப்பித்த நலத்தை ஓர் அழகிய பாட்டால் இனிது உரைத்துள்ளார். அப்பாட்டுக் கையறுநிலையாக இன்மையின், நேரிற் கண்டு பாடியதாகவே கோடல் வேண்டும். அவனைக் கண்டபோது, அவனுடைய அணிகிளரும் அழகிய மார்பும் தாள்வரை நீண்ட தடக்கையும் பிற நற்பண்பும் இவர் உள்ளத்தே நன்கு பதிந்து விட்டன. அதனால்.

“ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதீ!”

என்று தொடக்கத்தே எடுத்தோதி இன்புற்றார். பின்பு, அவன் அளிக்கும் திறத்தை,

“வல்லைமன்ற நீ நயந்தளித்தல்,
தேற்றாய், பெரும, பொய்யே என்றும்
காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும்
ஞாயிறனையை நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே” (புறம்.59)

என்று மனங்குளிரப் பாடி மகிழ்ந்திருக்கின்றார். இடையறாது பன்னாள் பகைமை செய்யினும், நன்மாறன் வலி சிறிதும் குன்றாது போருடற்றி வென்றி யெய்திய சிறப்பைக் “காய்சினம் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயிறனையை” என்று உவமையடையால் எய்துவித்தோதும் இயல்பும், “தேற்றாய் பெரும பொய்யே” என அவன் கொடைமடச் சிறப்பும் அழகு கனிய உரைக்குந்திறம் உன்னுந்தோறும் இன்புறுவிக்கின்றது.

6.  ஏனைப்பாட்டு நலம் - பொது: இம் மணிமேகலை யொழிய, சங்க இலக்கியங்களுள் மேலே நன்மாறனைப் பாடிய புறப்பாட்டு ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாகப் பத்துப் பாட்டுக்கள் காணப்படுகின்றன*. புறமொழிந்த ஒன்பதும் அகனைந் திணைப் பாட்டுக்களாதலின், அவற்றை முறையே ஆராய்வது சீத்தலைச் சாத்தனாரது புலமை நலத்தைக் காண்டற்கு இனிய வாயிலாகும், அகப்பாட்டுக்களின் திணை வகுப்பு, முதற் பொருளும், அஃது இல்வழிக் கருப்பொருளும், இரண்டும் மில்லையாயின், உரிப்பொருளும் அடிப்படையாகக் கொண்டது அந்நெறியே நோக்கின், இப்பாட்டுக்கள் ஒன்பதும் குறிஞ்சித் திணையில் இரண்டும், பாலையில் மூன்றும், முல்லை மருதங்களில் தனித் தனியே ஒவ்வொன்றும், நெய்தலில் இரண்டுமாகும். ஆகவே இவர் பாலை குறிஞ்சி, நெய்தல் என்ற மூன்று நிலத்துக் கருப் பொருளையே மிகுதியாகப் பாடும் பான்மை யுடையவர் என்பது புலனாகும். உரிப்பொருள் நெறியே தூக்கியாராயின், குறிஞ்சித் திணையில் மூன்றும், முல்லையில் நான்கும் மருதத்தில் இரண்டும் அடங்குகின்றன. எனவே, பாலை நெய்தல் கட்குரிய உரிப் பொருளைப் பாடுதலில் இவர்க்கு விருப்பம் மிகுதியும் இன்மை எய்துகின்றது. இவ்வியல்பே, இம் மணிமேகலைக் காப்பியத்தும் விளங்கித் தோன்றுகின்றது. இவ்வாறு முதல், கருவிளங்கித் தோன்றுகின்றது. இவ்வாறு முதல், கரு, உரி என்ற பொருள் மூன்றாலும் ஆராய்ந்த வழி, முல்லைத் திணையும் இவராற் பாடப்பெற்றிருந்தால் இனிது விளங்கவும், பின்னத்தூர் திரு. அ.நாராயணசாமி அய்யரவர்கள் “இவர் முல்லை யொழிய ஏனை நானிலங்களையும் புனைந்து பாடியுள்ளார்” என்று கூறியுள்ளார். ஒருகால், அவர்,

“வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந் திறுந்தென,
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவின்” (அகம்.134)

என வரும் சீத்தலைச் சாத்தனாரது முல்லைப் பாட்டினைக் காணாது போயினார் போலும்; கண்டிருப்பின் இவ்வாறு கூறாரன்றே!

    8. குறிஞ்சித் திணை: தலைமைப் பண்பு முற்றும் நிரம்பிய ஒருவனும் ஒருத்தியும் தம்மில் தாமே எதிர்ப்பட்டுக்காதல் கொள் கின்றனர். இக்காதல், நன்கு உருக்கொள்ளும் வாயிலாகக் கூறும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்பவை நிகழ்கின்றன. தனக்கும் தலைமகட்கும் உண்டாகிய காதலன்பு முறுகிச் சிறப்பது குறித்துத் தலைமகன் விரைய வரைந்து கொள்ளாது. பகலினும் இரவினும் தலைவியும் தோழியும் குறிக்கும் குறிவழி வந்து கூட்டம் பெற்றுச் செல்கின்றான். இதனைத் தோழி நினைந்து, “இவர் தம் களவொழுக்கம் பிறர்க்குப் புலனாயின் யாவர்க்கும் இகழ்ச்சியுண்டாம்; அதனால் தலைமகற்கும் ஏதமாம்; தலைமகளும் உயிரிற் சிறந்த பெருநாணம் உடையாளாதலின் இறந்து படுவாள்” என்றெல்லாம் எண்ணி, அத் தலைமகன் தெருண்டு வரையுமாறு தகுவனவற்றைக் கூறத் தொடங்குகின்றாள். இதனை வரைவு கடாதல் என்பர். தலைமகனைக் குறியிடத் தேனும் பிறாண்டுத் தனித்தேனும் காணலுற்றால் வெளிப்படையாகவே சில கூறி, விரைய வரைந்து கொள்ளுமாறு வேண்டுவள்; தங்கள் கடிமனையின் சிறைப் புறத்தே கண்டால், பிறர் செவிப்படினும் அவர்கள் ஐயுறு வண்ணம், மறைத்த சொற்களையே சொல்லி அவனை வரைவு கடாவுவள்.  

ஒருநாள், தலைமகன் பகற்காலத்தே, தலைவியும் தோழியும் விளையாட்டயரும் குறியிடத்திற்கு வந்திருக்கின்றான். அவனைத் தோழி கண்டு, “எம் தலைவிக்கும் நினக்கும் உளதாகிய தொடர்பு அலராகி விட்டது; அதனால் அவள் எய்தும் வருத்தம் மிகப் பெரிது; அதனினின்றும் நீ அவளைக் காத்தல் வேண்டும் என்று யாம் பல முறையும் இரந்து நின்றோம். நீயோ எம் வேண்டுகோளை ஏற்று அருளாயாகின்றனை” என்ற கருத்துப் பட,

“கானலம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப!
மலரேர் உண்கண் எம்தோழி எவ்வம்
அலர்வாய் நீங்கநீ அருளாய்”

என்கின்றாள். அது கேட்கும் தலைமகன், “அதற்காகத் தானே இவ்வாறு ஒழுகுகின்றேன்” என்று உரைக்கின்றான். தோழி, வருத்த முற்று, “இல்லையில்லை; அருளுதல் மெய்யாயின், இதுகாறும் நீட்டியது இவளை வரைந்து கொண்டிருப்பாய்; அருள்வாய் போலத் தோன்றி அருளாமையே செய்கின்றாய்; இவ்வொழுக்கம் ஒருகால் புறத்தார்க்கு நன்கு தெரிந்துவிடின், அப்போழ்தும் இது போலவே பொய்ப்பாய் போலும்! நீ பொய்க்கினும், அன்று யாம் வண்டலாடுமிடத்தே அவ்வண்டல் சிதையத் தேரொடு வந்து, எம் தலைவியின் புது நலத்தை நுகர்ந்தபோது, நீ செய்த சூளும் பொய்யாகுமோ? இக் கடலே எமக்கு அறிகரியாக உளது, காண்” என்பாளாய்,

“தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை
நடுங்கயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
வண்டற் பாவை சிதைய வந்துநீ
தோள் புதிது உண்ட ஞான்றைச்
சூளும் பொய்யோ, கடல்அறி கரியே” (அகம். 320)

என்று கூறுகின்றாள். இதனைக் கேட்கும் தலைமகனோ, “இவர்கள் மெய்யாகவே ஊரவர் எடுக்கும் அலர்க்கு அஞ்சி யலமருகின்றனர்; இவர்களை இனியும் வருந்த விடுவது முறையன்று” எனத் தெருண்டு வரைந்து கொள்ளத் துணிகுவன். இதுவே தோழி கூறியதன் கருத்தும் பயனுமாகும்.

இனி, ஊரவர் அலரெடுத்துரைக்கும் குறிப்பும், அதனினின்றும் தலைமகளைக் காத்தற்குரிய பொறுப்பும் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்ற தோழி, உள்ளுறையால் அவன் உணர்ந்து கொள்ளு மாறு உரைக்கின்றாள், தலைமகனைக், கண்டு, “கானல் சிறு குடிப் பெருநீர்ச் சேர்ப்ப” என்பவள், ஊரவர் கூறும் அலரை உள்ளுறுத்து,

“ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழையணி யல்குல் செல்வத் தங்கையர்
விழவயர் மறுகின் விலையெனப் பகரும்
கானலஞ் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப”

என்கின்றாள். இதன்கண் திமிலோனாகிய பரதவன் கொணர்ந்த வயமீனை, அவனது செல்வத் தங்கையர் எடுத்துச் சென்று மறு கிடத்தே விற்பர் என்றது, நின்னால் இவட்கு உண்டாகிய வேறு பாட்டினை, ஏதில் மகளிர் எடுத்து ஊரிடத்தே அலர் கூறுகின்றனர் என்றதாகும்.

இனி, இவ்வலரால் உண்டாகிய துன்பத்தைப் போக்குதற்கு உரியவன் தலைமகனே என்றும், அதற்கு ஏற்றது உடனே செய்தல் வேண்டும் என்றும் தோழி கூறக் கருதி, அதனையும் உள்ளுறையால்,

“நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை யுளரும்
தடவுநிலைப் புன்னைத் தாதணி பெருந்துறை”

என்று கூறுகின்றாள். இதனால் கழி படிந்து துழவிய அன்னம், நனைந்த தன் சிறகினை எக்கரை யடைந்து உலர்த்துவது போல, தலைமகளும் இவ்வூரவர் எடுத்த அலர்மிகு வருத்தத்தை நின்னை யடைந்து போக்கிக் கொள்ளற்குரியள் என்றாளாயிற்று.

வந்த போதும் வண்டற்பாவை சிதைய வந்தாயாதலின், இப்போதும் எம் புதுநலம் கெட்டு வருந்த ஒழுகுகின்றாய். இவ்வாறு பிறர்க்கு எய்தும் கேடு கருதாது ஒழுகும் நீ எம்பால் அன்று செய்த சூளும் பொய்ப்பையாயின், அதனை மெய்ப்பித்தற்கு அறிகரியாகக் கடலுண்டு என்பாள், “கடலறிகரியே” என்று கூறுகின்றாள். இவ் வண்ணம் ஒரு பணிப்பெண் தலைமகனை நெருங்கிக் கூறல் தகுமோ எனின், “உறுகண் ஓம்பல் தன்னியல்பாகலின், உரியதாகும் தோழிகண் உரனே” என ஆசிரியர் தொல்காப்பியனார் வழுவமைத்திருக்கின்றார்.

இப்பாட்டு நெய்தற்குரித்தாயினும் குறிஞ்சி வந்து மயங்கிய திணைமயக்கமாகும்.
இனி, பகற் குறிக்கண் வந்த தலைமகனை இவ்வாறு நெருங்கிக் கூறிய தோழி, ஒரு கால் அவன் இரவுக் குறிக்கண் வந்து சிறைப் புறத்தானாதலை அறிகின்றாள்; உடனே, இரவுக்குறியிடத்தும் தலைமகள் போந்து அவனைத் தலைப் பெய்து கூடற்கு இயலாத வாறு ஊரவர் உறங்காது விழித்திருத்தலைக்காட்டி, இம்முட்டுப் பாடு நீங்க, விரைய வரைந்துகோடலே தக்கது என்று அவற்கு உணர்த்தக் கருதி,

“கல்லக வெற்பன் சொல்லில் தேறி
யாம் எம்நலன் இழந்தனமே; யாமத்து
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொ டொன்றிப்
புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
ஆனாக் கௌவைத் தாகத்
தான் என் இழந்தது இவ்வழுங்க லூரே?” (நற்.36)

என்று கூறுகின்றாள். “யாம் வெற்பனது சொல்லைத் தேறி, நலன் இழந்தமையின் உறங்காது விழித்திருப்பேமாக, இவ்வூர் உறக்க மின்றி ஆரவாரத்துடன் இருத்தற்கு இஃது எதனை இழந்தது?” என்று சொல்லு முகத்தால், தலைப்பெய்தற்கு முடியாமையும், அலர் மிகுதியும் குறிப்பிடுதல் காண்க.

இதனோடு தலைமகற்குத் தம் தந்தை தன்னையரால் ஏத முண்டாகுமோ என அஞ்சும் அச்சமும் உடன்தோன்றி வருத்தும் வருத்தத்தை உள்ளுறையில் வைத்து,

“குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை,
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம்
கல்லக வெற்பன்”

என்றுரைக்கின்றாள்.

இதன்கண், புலியேறு, பிடி புலம்புமாறு களிற்றையடும் என்றது, எம் ஐயன்மார் யாம் வருந்துமாறு தலைமகனைப் பற்றி வருத்துவரோ என்று அஞ்சுவதனைக் குறிப்பித்தாளாம்.

பிறிதொரு காலத்தே தலைமகன் தங்கள் கடிமனையின் சிறைப்புறத்தே வந்து நிற்கின்றான். அவனுக்குத் தலைமகள் மேனி வேறுபாடு கண்டு பெற்றோர் இற்செறித்திருத்தலும் அவள் அதனால் தலைமகனைக் கூடலருமை கண்டு வருந்திருத்தலும் உணர்த்தக் கருதி, தலைமகனை நோக்கிக் கூறுவாள்போல மிக்க அறிவு நலம் தோன்றக் கூறுகின்றாள். கூறுவோள் தொடக்கத்தே, தலைவியது வருத்தமும் மேனி வேறுபாட்டினைத் தாய் அறிந்தமையும் எடுத்து,

“தோலாக் காதலர் துறந்துநம் அருளார்;
அலர்வ தின்றுகொல் இதுஎன்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை………………”

என்று மொழிந்து பின் தாயின் செய்கையினை ஓதலுற்று

“………………………………………………………………………சிறந்த
சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி,
நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல்
ஒண்ணுதற் பெதும்பை நன்னலம் பெறீஇ
மின்னே ரோதி இவளொடு நாளைப்
பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித்
தெண்ணீர் மணிச்சுனை யாடின்
என்னோ மகளிர்தம் பண்பென் றோளே” (நற்.339)

என்று சொல்லி முடிக்கின்றார். இது தாயறிவுறுதலும் காப்பு மிகுதலும் கூறி வரைவு கடாவியதாகும்.

இவ்வாறு பல வகையாலும் வரைவு கடாவப்பெற்ற தலை மகன்பின்பு தெருண்டு, தலைகளை வரைந்து கொண்டு இல்லிருந்து நல்லறம் புரியத் தொடங்குகின்றான்.

8.  முல்லைத் திணை: இல்லிருந்து நல்லறம் செய்யும் தலைமகன், அவ்வறமும் இன்பமும் சிறத்தற் பொருட்டுப் பொருள் குறித்துத் தலைவியைப் பிரிந்து ஏங்குகின்றான். அப்பிரிவுத்துயர் தலைவியைப் பெரிதும் வருத்துகின்றது. கூடியிருந்தபோது தலைமகன் தன்னை இறையும் பிரியாது இருந்து இன்புறுவித்ததை நினைக்கின்றாள்; அவன் தன்னை இன்றியமையாக் காதல்கொண் டொழுகியது அவள் நெஞ்சில் நிலவுகின்றது. அதனால் அவள் தோழியை நோக்கி,

“யாங்கு அறிந்தனர்கொல்? தோழி! பாம்பின்
உரிநிமிர்ந் தன்ன உருப்பவிர் அமையத்து
இரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை
பொரிகால் கள்ளி விரிகாய் அங்கவட்டுத்
தயங்க இருந்து புலம்பக் கூஉம்
அருஞ்சுர வைப்பின் கானம்
பிரிந்துசேண் உறைதல் வல்லு வோரே” (குறுந் 154)

என்று வினவுகின்றாள். என்னைப் பிரிந்துறைய மாட்டாத காதலர் உடைமையது உயர்ச்சி கருதி இப்போது பிரிந்துறைய ஒருப்பட்டா ராயினும், அவர் பெடை தனித்திருந்து புலம்பிக் கூவுமதனைக் காண்பரேல் உடனே யான் ஈண்டு அவர் பிரிவாற்றாது புலம்புதலை நினைந்து வந்துவிடுவர்; அற்றாகவும், அவர் வாராது பிரிந்து சேண் உறைகின்றார். அங்ஙனம் உறைதற்கு வேண்டும் வன்மையினை எவ்வாறு கற்றனரோ, தெரிந்திலதே என்பாள், “பிரிந்து சேண் உறைதல் வல்லுவோர் யாங்கறிந்தனர் கொல்” என்று கூறுகின்றாள். இப் பிரிவாற்றாது கூறலும் ஒருவாறு ஆற்றியிருத்தற்கு நிமித்த மாதலின், கருப்பொருளால் இப்பாட்டுப் பாலைக் குரியதாயினும், உரிப்பொருளால் முல்லைத் திணைக்கு உரியதாகின்றது.

தலைமகனது பிரிவை ஒருவாறு ஆற்றியிருக்கும் தலைமகள், அவன் பிரிந்து நெடிது உறைதலை நினைக்கின்றாள்; உடல் மெலி கின்றாள். இதனைக் கேட்ட தோழி, “அன்னாய், நம் தலைவர் பொருளினும் அருளுடைமை பெரிதும் சிறந்தது எனக் கருதும் பெற்றியர். தாம் செல்லும் சுரத்தில், மாவும் புள்ளும் தத்தம் துணையொடு கூடியுறையும் அன்பு நிலையைக் காணுந்தோறும், அவர் உங்களையே உள்ளுவராதலின், விரைய வருவர்; வருந்தற்க” என்று தேற்றுகின்றாள். அவட்குத் தலைவி, “தோழி, அவர் காதல் நிலையை நீ அறியாய்; யான் அறிகுவன்; அவர்க்குக் காதல் பொருளே யன்றி, நம்பால் அருள் என்று தெளியேன். அருளே அவர்க்குக் காதல் என்று நீ தான் கூறுகின்றாய்” என்ற கருத்துப்பட,

“அறியாய், வாழி, தோழி………..
……….. ……….. ………….. …………
அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல்என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்;
அருளே காதலர் என்றி நீயே” (அகம்.53)

என்று செப்புகின்றாள். இதன்கண், தலைவன் பொருளே காதல னாதற்குக் காரணம் கூறுவாள், “என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்” என்று தலைவனது உள்ளத் தன்மையை உள்ளவாறே மொழிகின்றாள். நெஞ்சம் அவ்வாறு வலித்தலால் எழுந்த வன்மையே, கொடிய சுரத்தையும் அவரை இனிது கடந்தேகுமாறும் செய்தது என்பாள், சுரத்தின் கொடுமையை விரித்து,

“……….. ……….. ………….. இருளற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய
நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய்
நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின்
விழுத்தொடை மறவர் வில்லிட, வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை…………………………….” (அகம்.53)

என்று, உரைக்கின்றாள்.

தோழி, வேறே தகுவன கூறித் தேற்றுமுகத்தால் “தலைவர் இளவேனிற் பருவ வரவின்கண் வருவதாகக் கூறியிருக்கின்றார்; அதுவும் இதோ வந்து விட்டது; நீ மேனி வேறுபட்டு வருந்தற்க; அவர் விரைய வருகுவர்” என்று வற்புறுக்கின்றாள். இவ்வாறு பன்முறையும் தோழியால் வற்புறுக்கப்பட்டுளாளா தலின், தலைவி, அவ்வன்புறைக்கு எதிரழிந்து வருத்தம் மிக்கு,

“நெடுஞ்சே ணிடைய குன்றம் போகிய
பொய்வ லாளர் முயன்றுசெய் பெரும்பொருள்
நம்மின் றாயினும் முடிக வல்லென
பெருந்துனி மேவல் நல்கூர் குறுமகள்
நோய்மலிந் துகுத்த நொசிவரற் சின்னீர்
பல்லிதழ் மழைக்கண் பாவை மாய்ப்பப்
பொன்நேர் பசலை யூர்தரப் பொறிவரி
நன்மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கினப்
போதவிழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனிலும் வாரார்,
இன்னே வருதும் எனத்தெளித் தோரே” (அகம்.229)

என்று வருந்திக் கூறுகின்றாள். இதன்கண், அவள், தான் இறந்து படினும், தலைவன் கருதிய பொருள் முடிக்க என நினைந்து நோய்மலிந்து, கண்கலுழ்ந்து, பசலைபடர்ந்து, மேனிநலம் தொலைந் தமையும், அதுகாணும் தோழி, அவர் இளவேனில் வரவின்கண் வருவர் என்றதும், அவன் வாராமையும் கூறுதல் காண்க.

இனி, இதன்கண் வேறொரு கருத்தும் புலப்படுக் கின்றாள்: அவர் குன்றங்கள் பல கடந்து சென்றுள்ளார். அவ்விடத்தே, களிற்றைப் பிரிந்த மடப்பிடி தன் குழவியுடன் கூடி உண்டற்குரிய குளகினை மறுத்து உண்ணாது உயங்கித் தோன்றுவதைக் கண்டிருப்பர். அதன் செயல், தன்னைப் பிரிந்திருக்கும் என்னை நினைவுறுத்தாது போயிராது. அற்றாகவும், பொய்வலாளராதலின், அவர் அந் “நெடுஞ் சேணிடைய குன்றம்” போயினர். காண் என்பாளாய்,

“பகல்செய் பல்கதிர்ப் பருதியஞ் செல்வன்
அகல்வாய் வானத் தாழி போழ்ந்தென
நீரற வறந்த நிரம்பா நீளிடைக்
கயந்தலைக் குழவிக் கவியுகிர் மடப்பிடி
குளகுமறுத் துயங்கிய மருங்குல் பலவுடன்
பாழூர்க் குரம்பையின் தோன்று மாங்கண்
நெடுஞ்சேண் இடைய குன்றம் போகிய
பொய் வலாளர்…………” (அகம். 229)

என்று இனைகின்றாள்.

இவள் செய்கை இவ்வாறிருக்க, பிரிந்த தலைமகன் தான் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு, இவளைக் காண்டற் கெழுந்த வேட்கை பெரிதும் முடுகுதலால், விரைந்து வருகின்றான். அவன் மீளலுறுங் காலம் கார்காலம். மழை நன்கு இனிது பெய் திருக்கிறது; கானம் இனிய காட்சி வழங்குகிறது. காயாமரங்கள் நீலமலரைப் பூத்திருக்கின்றன. தம்பலப் பூச்சிகள் ஆங்காங்குப் பரந்து கிடக்கின்றன. இடையிடையே முல்லை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இவற்றைக் காணும் அத்தலைமகன்,

“வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134)

என மகிழ்ந்து கூறுகின்றான். அப்போது, அவன் கண்ணெதிரே மான் கூட்டம் தோன்றுகிறது. மானேறு பிணைமானைக் கூடும் காட்சியைக் காண்கின்றான். அருள் வள்ளலாதலின், தான் செல்லும் தேரிற் பூட்டிய குதிரையின் செலவு மானின் புணர்நிலைக் கூட்டத்தைக் கெடுக்குமென்று அஞ்சுகின்றான். உடனே பாகனை நோக்கி,

“ வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து ஏமதி, வலவ, குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழுகுலை யன்ன திரிமருப் பேற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேரொலி கேட்பின்
நடுநாட் கூட்டம் ஆகலு முண்டே” (அகம். 134)

என்று சொல்லி மெல்லச் செல்விக்கின்றான்.

9. மருதத் திணை
இவ்வண்ணம் பொருள் முதலியன ஈட்டலும், ஆண்மைப் பணி புரிதலும், ஈகைமேல் நிற்கும் இசை பெறுதலும் முதலிய நற்செயல் புரிந்து இன்புற்று வாழ்ந்துவரும் தலைமகனுக்குப் பரத்தைமை யொழுக்கம் உண்டாகின்றது. அதனால், அவன் தலைமகளைப் பிரிந்தேகுகின்றான். அவட்குப் பொறாமை மிகு கின்றது. அவளும் தோழியும் அப்புறத் தொழுக்கத்தை மாற்று தற்குப் பெரும்பாடு படுகின்றனர். ஒருநாள், அவன் பரத்தையிற் பிரிந்து வருகின்றான். தலை மகள், அவனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாள். தோழியை வாயில் வேண்டித் தலைமகளையடையத் தலைமகன் விழைகின்றான். அவனை மறுக்கும் தோழி, “ஊரனே, இனி எம்மைப் பேணாது அகன்று சென்று அவளையே பேணுக. அவள் நீ பிரிந்தமையின் இகழ்ந்தன சொல்லிக் கண்ணீர் சொரிந்து சிறு துளி கொண்டு எம் தெருவைக் கடந்து சென்றாள்; அவள் ஈங்கே இல்லை” என்பாளாய்,

“பெரும் பெயர் மகிழ்ந, பேணாது அகன்மோ
………………………………………………………………………………………….
………………………………………………………………………. மாண்ட
மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த
ஆயிதழ் மழைக்கண் நோயுற நோக்கித்
தண்நறுங் கமழ்தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறுதுனி செய்து, எம்
மணல்மலி மறுகின் இறந்திசி னோளே” (அகம். 306)

என்று கூறுகின்றாள். பெரும் பொருளை விரும்பும் நினக்கு இயைய ஒழுகப்பண்ணாது, இகழ்ந்த சொல் சொல்லி, நோயுற நோக்கி, தார்பரிந்து, ஊடிச் சிறு துனி செய்து மறுகிடை இறந்து திரியப் பண்ணுதல் நின் தலைமைக்கு அமைவதன்று என்று கூறி மறுப்பாள், “பெரும் பெயர் மகிழ்ந,” என்றும், “இதுவோ மற்றுநின் செம்மல்” என்றும் கூறி மறுக்கின்றமை காண்க. மேலும், பரத்தையின் இகந்த செயலைக் கூறி இகழ்கின்றாளாதலின், அவளை, “மாண்ட மதியேர் ஒண்ணுதல் வயங்கிழை ஒருத்தி” எனப் புகழ்வாள்போல இகழ்கின்றாள்.

நாளும் புதிய புதிய பரத்தையரைக் கூடி, நினக்கு வாயிலாகிய பாணன் முதலாயினார் பரவ அவர் மனைக்கண்ணே தங்குகின்றாய் எனத் தலைவனது புறத்தொழுக்கத்தை வெளிப்படக் கூற நாணி, உள்ளுறையால்,

“பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மரத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம். 306)

என்கின்றாள். பொய்கை பரத்தையர் சேரியாகவும், ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ புதிய பரத்தையராகவும், மரத்தின் இளந்தளிர் வாயில்களாகவும், குருகு தலைமகனாகவும் உள்ளுறை கொள்க. நின்மனையிடத்தே விளையாட்டயரும் புதல்வன் மார்பிவர்ந்து மகிழ, அதனால் இன்புற்று இனிதிருக்க வேண்டியவனான நீ இவ்வாறொழுகல் நன்றன்று என்னும் பொருள் பயப்ப,

“கழனிக் கரும்பின் சாய்ப்புற மூர்ந்து
பழனயாமை பசுவெயிற் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர” (அகம். 306)

என்று தோழி உரைக்கும் திறம் மிக்க நயமாக இருத்தலைக் காண்மின். கரும்பின் சாய்ப்புறம் தலைவன் மார்பாகவும், யாமை மனையிடத்து விளையாடும் புதல்வனாகவும் கொள்க.

பிறிதொருகால் தலைமகன் பரத்தையிற் பிரிந்த போது, மீளத் தன் மனையை அடையக் கருதித் தோழியின் கருத்தறிந்து வருமாறு பாணனை வாயிலாக விடுகின்றான். பாணனும் அவ்வண்ணமே போந்து தோழியைக் காண்கின்றான்.

அவனை வெகுண்டு வாயில் மறுக்கலுற்ற தோழி, “தலை மகன் முன்பு பரத்தையிற் பிரிந்து வந்தபோது வினாயதற்கு ‘யாரையும் அறியேன்’ என்றான்; அப்பொய்ம் மொழி இப்போது ஊரெங்கும் பரந்து நடுக்கம் செய்வதாயிற்று” என்று உள்ளுறுத்து,

“இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ? பாண………..” (நற்.127)

என்று மொழிகின்றாள். இவண் அவன் வருதலால் ஒரு பயனும் இல்லை யென்பது பட, “உவன் வரின் எவனோ?” என்றது கேட்டதும் பாணன் காரணம் தெரியாது மருண்டு நிற்க, “தலை மகள் தலை மகனை யின்றியே ‘கானற்குப் பண்டு வண்டலயரச் சென்றது போல இன்றும் செல்வாம்’ என்கின்றான். எனவே தலை
மகனையின்றியே தான் தனித்துச் சென்று விளையாட்டயரக் கூடிய அளவு அவட்குத் துனியுண்டாகி விட்டது; இவ்வளவிற்கும் தலைவனது புறத்தொழுக்கமே காரணம்,” என்பாள்.

“ ………. பேதை
கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன்னைய ராகவும்
வண்ட லாயமொடு பண்டுதான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட் டோரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கான லானே. ” (நற்.127)

என்று உரைக்கின்றாள். “அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின்” (தொல்.பொ) தலைமகள் தலைவனின்றியே தன் மனையின் நீங்கிச் சேறல் அறமன்றே; செல்ல ஒருப்பட்டதாகத் தோழி கூறல் வழுவே; ஆயினும், “அறக்கழிவுடையன பொருட் பயம் படவரின்” (தொல்.பொ.) அமையும் என ஆசிரியன்மார் கூறுதலின், தோழி இவ்வாறு உரைத்தல் அமையும் என்பர்.

இது கேட்கும் பாணன் அஞ்சித் தலைமகனைக் கொணர்ந்து கூட்டுகின்றான். தலைவன் தலைமகளோடு கூடி இன்புற்று இனிது வாழ்கின்றான்.

10. இப்பாட்டுக்களின் சிறப்பராய்ச்சி: இது காறும் கூறிய வாற்றால், நம் சீத்தலைச் சாத்தனாரது பாவன்மை நன்கு தெரியக் கண்டோம். இப்பாட்டுக்களுள் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும் வறிதே செல்லாது. கூறுவோர் உள்ளத்தில் எழும் உண்மைக் கருத்துக் களையும் உடன் உணர்த்திச் செல்லும் இயல்புடையதாய் இருத் தலைக் காண்கின்றோம். பொருட் டுறையின் வரம்பு இகந்தன போலத் தோன்று வனவும் நுணுகி நோக்குமிடத்து, அவ்வரம்பு இகவாதே செல்லும் நேர்மை, நம் சாத்தனாரது புலமைத் திறத்தை இனிது காட்டிவிடுகிறது.

இனி, இப்பாட்டுக்களால், இவர் இயற்கைப் பொருள் களைக் கூர்மையுடன் கண்டு, உள்ளதன் உண்மை சிறிதும் மறையாத வாறு உரைக்கும் திறத்தைச் சிறிது காண்டல் வேண்டும். இக்காட்சி, பரந்து பட்டுச் செல்லும் இம்மணிமேகலைக் காப்பியத்தை நுகர்தற்குத் துணை செய்யும்.

குறிஞ்சி நிலத்தே யானைகள் வாழ்வனவாகும். அவை கூட்டம் கூட்டமாகவே வாழ்வன. மேலும், அவற்றுள் களிற்றுக்கும் பிடிக்கும் உண்டாகும் காதலன்பு மிகச் சிறந்ததென்பர். தான் காதலித்த களிறு இறந்துபடின், பிடியானை பலநாள் வரையில் புலம்பிக் கொண்டிருக்குமென யானை வேட்டுவர் கூறுகின்றனர். இவ்வுண்மையை நம் சாத்தனார்,

“குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
பூநுதல் இரும்பிடி புலம்பத் தாக்கித்
தாழ்நீர் நனந்தலைப் பெருங்களிறு அடூஉம்” (நற்.36)

என்று கூறுகின்றார். யானை பிடிப்போரும் நீர்நிலைக் கண்ணே சென்று பதுங்குவராதலின், புலியும், யானையைத் “தாழ் நீர் நனந்தலைக்” கண்ணே இருந்து தாக்குதலை இவர் கூறுவதைக் காண்மின்.

இரலைமானின் கொம்பு முறுக்குண்டு கணுக்கணுவாய் இருத்தலை நாம் காண்கின்றோம். இதற்கு ஓர் எளிய உவமை காட்டி இதனைக் காணார்க்கு உரைக்க முயலின், அப்போது அதன் அருமைப்பாடு தெற்றெனப் புலனாகிறது. இதனை மிக எளிதாகக் காட்டலுற்ற நம் தண்டமிழாசானாகிய சாத்தனார், வாழைப் பூவை எடுத்து, அதனை மூடியிருக்கும் இதழ்களை நீக்க, எஞ்சி யிருக்கும் தண்டினை வேறுபடுத்து இரலைமானின் கொம் பிற்கும் உவமை கூறுவார்.

“…………………………….குவி முகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை யன்ன திரிமருப் பேறு” (அகம். 134)

என்று கூறுகின்றார்

நீர்நிலையில் நின்று மீன் நாடி யுண்டிருந்த நாரைகள் கரை யிடத்திருக்கும் மரங்களில் தங்கித் தம் நனைந்த சிறகுகளை உதறும் போது, அவற்றில் ஒட்டியிருந்து உதிரும் நீர்த் திவலைகள் பனி போல் துளிக்கும் என்பதை நன்கு கண்டதனால்,

“இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறகெறி திவலையின் பனிக்கும் பாக்கம்” (நற்.127)

என்று இசைக்கின்றார். அன்னங்கள் அத்துணை உயரத்தில் சென்று தங்காது, நீர் நிலையின் அருகிலுள்ள மணல் மேட்டில் இருந்து தம் சிறகுகளை உலர்த்தும் என்பார்,

“நெடுங்கழி துழைஇய குறுங்கா லன்னம்
அடும்பமர் எக்கர் அஞ்சிறை உளரும்” (அகம்.320)

என்று உரைக்கின்றார்.

வயலருகே யுள்ள பரந்த ஒரு நீர்நிலையின் கரையில் பிரம்பும் ஈங்கையும் வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இடையே மாமரம் ஒன்று மிக உயரமாக நில்லாது கிளை விரிந்து தழைத்துத் தளிரொடு தாழ இருக்கிறது. மீனுண் குருகு ஒன்று ஈங்கையின் பூங்கொத்தில் இருப்ப, காற்றால் மாந்தளிர் அதன் புறத்தைத் தடவியசைய, அஃது இனிது உறங்குகின்றது. இதனைக் கண்ட சாத்தனார் இனிய சொல்லோவியம் எழுதுவாராய்,

“பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய,
முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புதுவீ
ஈன்ற மாத்தின் இளந்தளிர் வருட
வார்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயல்” (அகம்.306)

என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தே, பசிய அரும்பும் சிவந்த பூவும் உடைய முருக்க மரத்தில் குயிலொன்று உட்கார்ந்து அப்போது மலர்ந்த பூக்களைக் கோதி, அவற்றின் தாதினை அருந்துகிறது. பின்பு, அதனை விட்டு நீங்கி, புதுத் தளிர் ஈன்ற மாமரத்தையடைந்து, அசைகின்ற தளிர்க்கொத்தில் இருந்து கொண்டு கேட்போர் விரும்புமாறு கூவுகிறது. இஃது இளவேனிற் காலத்தின் இயல்பு. இவ்வியல்பினை நன்கு கண்ட சாத்தனார்,

“……………………………………………………சினைய
பாசரும் பீன்ற செம்முகை முருக்கின்அப்
போதவீழ் அலரி கொழுதித் தாதருந்து
அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச்
செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம்
இன்இள வேனில்” (அகம். 229)

என்று பாடுகின்றார்.

இறுதியாக ஒன்று காட்டி இப்பகுதியினை முடிக்கின்றாம். நம் சாத்தனார் முல்லைநிலம் ஒன்றைக் காண்கின்றார். காடு தழைத்துப் பூத்து இனிதாக இருக்கிறது. காயா மரங்கள் நீலநிறமான பூக்களைப் பூப்ப, அவை தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அவற்றின் இடையிடையே செக்கர்ச்செவேரென வுள்ள தம்பலப் பூச்சிகள் மேய்கின்றன. அவற்றோடு, புதர்களில் படர்ந்துள்ள முல்லைக் கொடிகள் பூப்ப, அவற்றின் பூக்களும் உதிர்ந்து கிடக்கின்றன. செந்நிலத்தே புல்லின் பசுமையும், காயாம் பூவின் நீலமும், தம்பலப் பூச்சியின் செம்மையும், முல்லைப் பூவின் வெண்மையும் மனக் கண்ணால் கூர்ந்து நோக்கினார் நம் தமிழ்ப் பெரும் புலமைச் சான்றோராகிய சாத்தனார். இதனை நமக்கு வழங்க வேண்டு மென்ற அருள், அவரது உள்ளத்தைச் செலுத்த, அதன் வழி நின்று, வினை முற்றிய சிறப்பும் தன் காதலிமேற் சென்ற பேரன்புமுடைய தலைமகன் ஒருவன் கூற்றில் வைத்து,

“வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,
மணிமருள் பூவை யணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன்
செய்கை யன்ன செந்நிலப் புறவு” (அகம்.134)

என்று தாமும் ஓர் சொல்லோவியம் தீட்டி விட்டார். இனி, இவை போலவரும் பிறவற்றையும் விரிப்பின் இம்முன்னுரை மிக விரியும் என்று அஞ்சி விடுக்கின்றாம்.

II.நூல்
இதுகாறும், சீத்தலைச் சாத்தனார் பாடிய தொகை நூற் பாட்டுக்களை ஓராற்றால் ஆராய்ந்து அவரது புலமைச் சிறப்பைக் கண்டோம். சொற்களை வறிதே செலவிடாது, ஒவ்வொன்றும் நன்கு பயன்பட வழங்குதலும், இயற்கைப் பொருளை உள்ளவாறே எடுத்துக் காட்டுதலும், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் குறிப்பாகவும் உணர்த்தற்குரிய கருத்துக்களை ஏற்றவாறு புலமை நலம் விளங்கக் கூறலும் பிறவும் அவருடைய புலமைப் பண்பாதலை இனிது தெளிந்தோம். இனி, அவர் பாடிய இம் மணி மேகலையின் நலத்தைக் காண்பது வேண்டி, முதற்கண், கதைச் சுருக்கத்தைத் தருகின்றாம்.

இக் காப்பியத்துக்குத் தலைவியாய மணிமேகலை, காவிரிப் பூம்பட்டினத்துப் பெருங்குடி வணிகனான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் மதுரையில் கொலை யுண்டது கேள்வியுற்று, மாதவி துறவு பூண்டு பௌத்த சங்கத்து அறவண வடிகள் என்பவர்பால் நால்வகை வாய்மையும் ஐவகைச் சீலமும் கேட்டுத் தெளிந்து அவ்வறத்தை மேற்கொண்டு ஒழுகு கின்றாள். மணிமேகலையும் ஆடலும், பாடலும் அழகும் சிறந்திருந்த போதும், “தாயைப் போல மகள்; நூலைப் போலச் சீலை” என்ற பழமொழிக் கிணங்கத் தானும் அப்பௌத்த தருமங்களைப் பின்பற்றி ஒழுகி வருகின்றாள்.

காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடைபெறுகிறது. விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து, கொள்ளவில்லை. மாதவியின் தாயான சித்திராபதி, வயந்த மாலையை மாதவி பால் செலுத்தி, அவள் விழாவிற்கு வாராமையால் ஊரவர் அலர் கூறுகின்றனரென உரைத்துவரச் செய்கின்றாள். வயந்த மாலை, மாதவியையும் மணிமேகலையையும் மலர் மண்டபத்தே காண் கின்றாள். அவட்கு மாதவி,

“மாபெரும் பத்தினி மகள் மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (2:55-57)

என்று கூறித், தான் மாதவர் உறைவிடம் புகுந்து அறவண வடிகள் பால் வாய்மையும் சீலமும் கேட்டு அறம்பூண்டொழுகுவதைத் தெரிவித்து இதனைச் சித்திராபதிக்குச் செப்புக என்று விடுக்கின்றாள்.

அப்போது, மாதவி யுரைத்தவற்றைக் கேட்டிருந்த மணி மேகலை கோவலனுற்ற துயர்கேட்டுக் கண்ணீர் வடிப்ப, அந்நீர் அவள் தொடுத்திருந்த பூமாலையை நனைத்து அதன் தூய்மையைச் சிதைக்கவே, மாதவி, அவளைச் சுதமதியுடன் மலர்வனம் புகுந்து புதுப்பூக்கள் வேறே கொணருமாறு பணிக்கின்றாள். இருவரும் விழா வயரும் பல தெருக்களைக் கடந்து, உவவனம் என்னும் அழகிய மலர்ச் சோலையை அடைந்து மலர் கொய்கின்றனர்.

நகரத்தே காலவேக மென்னும் பட்டத்தியானை மதம் பட்டுத் திரிய, அதனை உதய குமரன் என்னும் அரசகுமாரன் அடக்கிப் பணிவித்து, தான் ஒரு தேர் ஊர்ந்து வருகையில் மணி மேகலை மலர்வனம் சென்றிருத்தலைக் கேள்வியுற்று, ஆங்கே குறுகவர, தேரொலி கேட்ட மணிமேகலை, சுதமதியை நோக்கி, உதய குமரன் என்பாற் காதல் மிகக்கொண்டுள்ளான் என்று யான் அறிவேன். இஃது அவன் தேரொலிபோல இருக்கிறதே; இதற்கு யான் என் செய்வேன்” என்று கூறுகின்றாள். சுதமதி மனம் துளங்கி, அங்கிருந்த பளிக்கறை மண்டபத்தில் அவளை ஒளித்து விடு கின்றாள். உதய குமரன் அவளை யணுகி, “மணிமேகலை தனித்து வந்ததற்குக் காரணம் என்ன?” என்று வினவ, சுதமதி, மக்கள் யாக்கையின் புன்மை யியல்புகளை விளங்கக் கூறுகின்றாள். அப் போதில், பளிக்கறையின் உள்ளேயிருந்த மணிமேகலையின் படிவம் அவன் கண்ணிற்குப் புலனாகிறது.

உடனே, மணிமேகலையை யடைய எண்ணி, அவ்வறையின் வாயிலைக் கையால் தடவி நோக்கிக் காணமாட்டாது, “அவள் எத்திறத்தாள்?” எனச் சுதமதியைக் கேட்ப, அவள், “இம் மணி மேகலை, தவவொழுக்கமும் சபிக்கும் வன்மையும் காமம் கடந்த வாய்மையும் உடையள்” என்று உரைக்கின்றாள். அது கேட்கும் அவன், மணிமேகலை “செவ்வியளாயின் என் செவ்வியளாக” எனச் செப்பிவிட்டு நீங்குவோன், “இனி, இவளைச் சித்திராபதியால் சேர்வேன்” என்று சொல்லி ஏகுகின்றான். பின் வெளிவந்த மணி மேகலை, தன் நெஞ்சம் அவன்பால் செல்வது கண்டு, “இதுவோ, அன்னாய், காமத்தின் இயற்கை,” என்று வியந்து, “இதன் இயற்கை இதுவாயின், இஃது என்பால் கெடுக” என்று மொழிந்து நிற்குங் கால், இந்திர விழாக்காணப் போந்த மணிமேகலா தெய்வம் ஒரு பெண் வடிவிற் போந்து, பளிக்கறையில் இருந்த புத்த பீடிகையை வலங்கொண்டு உயரத்தில் எழும்பி நின்று பலவாறு ஏத்தி நிற்ப, பகற்போது நீங்குகிறது; அந்தியும் இரவும் ஒன்றன் பின்னே ஒன்றாக வருகின்றன.

பின்பு, மணிமேகலா தெய்வம், சுதமதியை அவ்வனத்திற்கு இருவரும் வந்த காரணம் கேட்டறிந்து, “இது முனிவர் வனமாதலை யறிந்து உதயகுமரன் தீங்கு செய்யாது சென்றான்: அவற்கு மணி மேகலைபால் எழுந்த வேட்கை தணிந்திலது; இப்போது வெளியே செல்லின் அவன் அகப்படுத்திக் கொள்வன்; நீவிர் இருவரும் சக்கர வாளக் கோட்டத்திற்குச் செல்க” என்று சொல்ல, சுதமதி, “சுடு காட்டுக் கோட்டம் எனப்படும் இதனைச் சக்கரவாளக் கோட்ட மென்று கூறுதற்குக் காரணம் யாது?” என்று வினவுகின்றாள். அத்தெய்வம் அவளைத் தழுவி யெடுத்துக் கொண்டு சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து ஆங்கே ஓரிடத்தே அவளை வைத்து விட்டுச் சென்றுவிடுகிறது.

சென்ற தெய்வம் உதய குமரனை யடைந்து, அவன் முன்னே நின்று, அரசு முறையின் இயல்பை எடுத்தோதி, “தவத்திறம் பூண்ட மணிமேகலைபால் வைத்த வேட்கை யொழிக” என்று கூறுகிறது. பின்பு, அத்தெய்வமே, சுதமதியை யடைந்து, அவளை யெழுப்பித் தன்னை இன்னாரென்று அறிவித்து, தான் இந்திர விழாக் காண வந்ததும் மணிமேகலை மணிபல்லவத்தே வைத்ததும் சொல்லி, ‘மணிமேகலை தன் பழம் பிறப்புச் செய்திகளை யறிந்து கொண்டு இற்றைக்கு ஏழாம் நாள் இங்கே வருவள்; அவள் வேற்று வடிவம் கொள்ளினும் நினக்குத் தன்னை மறைக்காள்; இச் செய்திகளை யான் கூறியதாக மாதவிக்குச் சொல்லுக அவட்கு என்னைத் தெரியும்; அவள் தான் பெற்ற மகட்குப் பெயரிடும் நாளில், யான்,

“காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்;” (7:36 -38)

இதனையும் அவட்குக் கூறி நினைப்பூட்டுக,’ என்று சொல்லி நீங்கிவிடுகிறது.

மணிமேகலையின் பிரிவாற்றாத சுதமதி வருத்தத்துடன் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள உலகவறவியின் பக்கத்தே நின்று வருந்த, அங்கிருந்த தூணிற் செய்த பாவையொன்று தெய்வச் சாயை பெற்று, சுதமதியின் பழம்பிறப்புச் செய்தியும், காவிரிப்பூம் பட்டினத்திற்கு அவள் வந்த வரலாறும் கூறி,

“இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன்பிறப் பதனொடு நின்பிறப்புணர்ந்து ஈங்கு
இலக்குமி யாகிய நினக்குஇளை, யாள்வரும்
அஞ்சல் என்று” (7:106 - 109)

உரைக்கின்றது. சிறிது போதில் பொழுது விடிகிறது. அவள் மாதவி பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவட்குக் கூறுகின்றாள். இருவரும் மணிமேகலையின் பிரிவு நினைந்து வருந்தி யிருக்கின்றனர்.

மணிபல்லவத்தே தனித்திருந்த மணிமேகலை விழித் தெழுந்து வேற்றிடமாதலை யறிந்து மனம் மருண்டு, “உவ வனத்தின் ஒருபுறம்போலும் இது” என்று நினைந்து, பின்னர்ச் சுதமதியைக் காணாது கலங்கி, அரற்றியும் உரப்பியும் அலமருகின்றாள்; அங்கும் இங்கும் அலைந்து நோக்குகின்றாள்; கோவலனை நினைக்கின்றாள்; கோவெனக் கதறிப் புலம்புகின்றாள். அவளெதிரே, புத்தனாகிய

“பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும்
பொருவறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை” (8:61-63)

தோன்றுகிறது. அதனைக் கண்டதும், அவட்குக் கைகள் அவளை யறியாமலே தலைமேற் சென்று குவிகின்றன; கண்கள் நீர் உகுக் கின்றன. அதனை அவள் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கி யெழுகின்றாள். எழும்போதில் அவட்குப் பண்டைப் பிறப்பில், தான் அசோதர நகரத்து இரவிவன்மன் என்னும் வேந்தற்கும் அமுதபதியென் பாட்கும் இலக்குமி என்னும் மகளாய்ப் பிறந்து, அத்திபதியென்னும் அரசன் மகனான இராகுலன் என்பானை மணந்து வாழ்ந்ததும், அவனொடு வாழ்ந்து வருநாளில் பிரமதரும முனிவனை வணங்கி பாம்பால் இறப்பத் தான் தீப்புகுந்து இறந்ததும், அப்போது அம்முனிவன், நீ வரும் பிறப்பில் மணிபல்லவத்தில் மணிமேகலா தெய்வத்தால் இராகுலனது மறுபிறப்பை அறிவாய் என்று உரைத்ததும் பிறவும் நன்கு தெரிந்து கொள்கின்றாள். உடனே மணிமேகலை அம்மணி மேகலா தெய்வத்தை நினைந்து வருந்துகின்றாள். அபபோது, மணிமேகலா தெய்வம் அங்கே போந்து தரும பீடிகையைப் புத்தனாகவே எண்ணித்துதித்து நிற்க, அத் தெய்வத்தை நோக்கி, மணிமேகலை இராகுலனது பிறப்பை வினவுகின்றாள். அத்தெய்வம் அவள் பிறப்பும் ஏனைச் சுதமதி மாதவி முதலாயினார் பிறப்பும் கூறி, மணிமேகலைக்கு எதிர்வில் நிகழ விருப்பனவும் வேற்றுருக்கோடல், அந்தரம் திரிதல் என்ற இரண்டிற்கு முரிய மந்திரமும் கூறி நீங்குகிறது. நீங்குங்கால், ஒன்று நினைவு கூர்ந்து,

“மறந்ததும் உண்டென மறித்தாங்கு இழிந்து,
சிறந்த கொள்கைச் சேயிழை, கேளாய்;
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்;
இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்கும் என்று
ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து” (10:88-92)

சென்று விடுகிறது.

மணிமேகலை,தானும் உடனே புறப்படாது, அம்மணி பல்லவத் தீவிலுள்ள மணற்குன்றம், பூஞ்சோலை, பொய்கை முதலியவற்றைக் கண்டு வருகின்றாள். அவள் எதிரே தீவதிலகை யென்பாளொருத்திவந்து மணிமேகலையை யார் என்று வினவ, இவள் தன் பழம்பிறப்பும் இப்பிறப்பும் சேரக் கூறுகின்றாள், மணிமேகலைக்குத் தீவதிலகை தான் இந்திரன் ஏவலால் பீடிகை காவல் புரிந்துவருவதும், பீடிகையின் இயல்பும் கூறி, “இற்றை நாள், இங்கே உள்ள கோமுகிப் பொய்கையில் அமுத சுரபி யென்னும் பாத்திரம் வெளிப்படு நாளாகும். அது முன்நாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது நாம் அங்கே சென்றால், அப்பாத்திரம் நின்கைக்கு வரும்;

“ஆங்குஅதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துத லல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்” (11:48-50)

அதன் வரலாற்றை நின் ஊரில் அறவண அடிகள் பால் கேட்கலாம்; வருக” என்று சொல்லி அப்பொய்கைக்கு அழைத்தேகுகின்றாள். இருவரும் கோமுகியை வலஞ் செய்து நிற்ப, அமுதசுரபி யெழுந்து வந்து மணிமேகலையின் கையில் தங்குகிறது. தீவதிலகை பசிப் பிணியின் கொடுமையைப் பலபடக் கூறி அதனைத் தீர்ப்பதாகிய நல்லறத்தைச் செய்யுமாறு மணி மேகலைக்கு உரைக்க, அவளும் மகிழ்வோடு இசைந்து, “வெயிலென முனியாது புயலென மடியாது” எவ்விடத்தும் எக்காலத்தும் சென்று, பசிப்பிணியால் வாடுவோரைக் கண்டு,

“…………………………………….விஞ்சைப் பாத்திரத்து
அகன் சுரைப் பெய்த ஆருயிர் மருந்து அவர்
முகம்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்” (11:116-118)

என்று கூறுகின்றாள், தீவதிலகையும் பெருமகிழ்ச்சியுற்று, ‘இப்பாத்திரம்,

“அறம்கரி யாக அருள்சுரந் தூட்டும்
சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது;
ஆங்கன மாயினை, அதன் பயன் அறிந்தனை” (11:120-122)

இனி, நீ செல்க’ என்று விடுப்ப, மணிமேகலை பீடிகையை வழி பட்டு, வான் வாழியாகக் காவிரிப்பூம் பட்டினம் வந்து, வாடி வருந்தித் தன் வருகை நோக்கியிருக்கும் மாதவி சுதமதி என்ற இருவரையும் கண்டு, அவர்தம் பழம் பிறப்பும், அமுத சுரபியின் இயல்பும் கூறுகின்றாள்; யாவரும் மகிழ்கின்றனர். பின்பு மூவரும் அறவணவடிகள் இருக்கும் இடத்துக்குச் சென்று அவரைக் கண்டு வணங்குகின்றனர். மணிமேகலை தான் மலர் வனம் புக்கதுமுதல் நிகழ்ந்த அனைத்தும் அவர்க்கு உரைக்கின்றாள்.

அறவண அடிகள், “மணிமேகலைக்கு மாதவி சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பு வரலாறும், முற்பிறப்பில் தான் அவர்களைக் கண்டதும், சக்கரவாளத்துத் தேவரனைவரும் துடிதலோகம் சென்று, பிரபாபாலரை இரப்ப, அவர் அறம் செழித்தல் வேண்டிப் புத்தனாகத் தோன்றியதும், அவன் தோற்றச் சிறப்பும் பிறவும் கூறி, நின்னால் இங்கே பல நிகழ்ச்சிகள் நிகழ விருக்கின்றன; இம் மாதவியும் சுதமதியும் நின்னுடன் புத்தனை வணங்கி அவன் காட்டிய நல்வழிப் படர்குவர்; நீ பெற்ற அமுதசுரபி கொண்டு மக்களது பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை மேற்கொள்க” என்று உரைக்கின்றார். மணிமேகலையும் அப்பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொள்கின்றாள்.
அதைக் கண்டதும் அவ்வறவணவடிகள் ஆபுத்திரன் வரலாறும், அவன் வீடுதோறும் ஐயமேற்றுக் ‘காணார் கேளார், கால்முடப் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணியுற்றோர்’ முதலிய பலர்க்கு உணவூட்டி வந்த திறமும், அவற்குச் சிந்தாதேவி இப்பாத்திரத்தைத் தந்ததும், அவன் அது கொண்டு உணவு தரும் நல்லறம் உவந்து செய்து வந்ததும், இந்திரன் செய்கையும், அவன் சாவகநாட்டிற்குச் செல்லுங்கால் மணிபல்லவத்தில் விடப் பட்டதும், அப்பாத்திரம் பயன் படாமையின், அவன் அதனைக் கோமுகியில் எறிந்து விட்டு உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்து சென்றுசாவக நாட்டில் ஒரு பசு வயிற்றில் பிறந்து சிறந்ததும், அவனைப் பூமிசந்திரன் என்ற அந்நாட்டு வேந்தன் தனக்கு மகனில்லா மையின் மகனாகக் கொண்டு பேணினமையும் அவன் புண்ணிய ராசனாய் அரசுரிமை யெய்தியது மெல்லாம் எடுத்துக் கூறுகின்றனர்.

பின்பு அவர், மணிமேகலையை நோக்கி, “இப்போது நாட்டில் வறன் உண்டாகி யிருக்கிறது. நீ இவ் வமுத சுரபியை வறிதே வைத்திருத்தல் முறையன்று” என்று சொல்லி விடுப்ப, அவள் பிக்குணிக் கோலங் கொண்டு திருவோடேந்தித் தெருவில் வருகிறாள். அவளைக் கண்டோர்,

“உதய குமரன் உளங்கொண் டொளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரம் கையிலேந் தியது
திப்பியம்” (15:67-70)

என்று வருந்துகின்றனர். காய சண்டிகை யென்னும் விஞ்சை மகள் வந்து மணிமேகலையைக் கண்டு “ஆதிரை யென்னும் கற்புடை யாளின் மனையில், முதன் முதலாக ஐயமேற்றல் நன்று” என்று கூறுகின்றாள். அவ்வாதிரையின் வரலாறறியும் குறிப்பொடு மணி மேகலை காயசண்டிகையை நோக்க, அவள், ஆதிரை கணவனான சாதுவன் வரலாறும், ஆதிரையின் கற்பு மாண்பும், சாதுவன் நாகரை நல்வழிப் படுத்தியதும், பின்பு அவள் சந்திரதத்தனென்னும் வணிகனது வங்கமேறி வந்து ஆதிரையை யடைந்து அறம் புரிய லுற்றதும் விரித்துரைத்து, “அவள்பால் பிச்சை பெறுக” என் கின்றாள். மணிமேகலை மனம் இசைந்து ஆதிரை மனையெதிரே “புனையா ஓவியம் போல” நிற்ப, அவள் அமுதசுரபி நிறைய “மாதிர மடங்கலும் பசிப் பிணியறுக” என்று உணவைப் பெய் கின்றாள்.

அதுகொண்டு மணிமேகலை பசித்தோர்க்கு உணவளிக் கின்றாள்; உணவோ எடுக்க எடுக்கக் குறையாது சுரக்கின்றது. காயசண்டிகை தன்னைப்பற்றி யிருந்த யானைத்தீ என்னும் நோய் கெடுமாறு உணவுண்டு, தன் வரலாறு முற்றும் கூறித் தொழுது விடைபெற்றுப் போகின்றவள், “உலகவறவியில் பசித்தோர் பலர் உளர்; அங்கே செல்க” என்று சொல்லி விட்டுப் போகின்றாள். மணிமேகலையும் அவ்வண்ணமே சென்று பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைச் செய்கின்றாள். இவள் செயல் இதுவாக, இதனை யறிந்த சித்திராபதி, மாதவியும் மணிமேகலையும் செய்வன நாடக மகளிர்க்கு அடுப்பன அல்ல எனச் சினங்கொண்டு, வஞ்சினம் மொழிந்து உதயகுமரனையடைந்து மணிமேகலையின் செய்தியைக் கூறு கின்றாள். அவன் பண்டு அவளைப் பளிக்கறையில் கண்டதும், தெய்வம் போந்து செங்கோன்மை காட்டி, மணிமேகலையை மறப்பாய் என்றதும் கூற, சித்திராபதி அவனைத் தன் மாய மொழியால், மயக்கி விடவும், அவன் மணிமேகலையைக் கண்டு, நற்றவம் பூண்டதற்குக் காரணம் நவில்க என்கின்றான். அவன் தனக்கு முன்பிறப்பிற் கணவனாதலின் அக்கருத்துடன் வணங்கி,

“பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலும் உடையது, இடும்பைக் கொள்கலம்,
மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்” (18:136-139)

என்று சொல்லிச் சம்பாபதியின் கோயிலுக்குள் நுழைந்து காய சண்டிகையின் வடிவுடன் வெளிவருகின்றாள். அதுகண்டு திடுக் குற்ற உதயகுமரன், தானும் சம்பாபதிமுன் சென்று “மாயையால் மறைந்த மணி மேகலையைக் காட்டல் வேண்டும்; காட்டி யருளாயாயின், பன்னாளாயினும் பாடுகிடப்பேன்; மணிமேகலை யின்றியான் போகேன்; உன் அடி தொட்டேன்; இஃது என்குறை” யென்று வேண்டுகின்றான். அப்போது அங்கிருந்த பாவைகளுள் ஒன்று தெய்வமுற்று,

“ஏடவிழ் தாரோய்! எங்கோ மகள்முன்
நாடாது துணிந்து நாநல் கூர்ந்தனை,” (19:3-4)

என்கின்றது. அதனால் உதயகுமரன் மனம் வருந்தி, “பின்னர்க் காண்பாம்” என்று சொல்லிக் கொண்டு போய் விடுகின்றான். பின்பு மணிமேகலை காயசண்டிகை வடிவிலேயே சிறைக் கோட்டம் சென்று ஆங்கே பசித்திருந்தோர்க்கு உணவு தருகின்றாள். சிறைக் காவலர் சென்று, அரசற்குணர்த்த, அவன் மணிமேகலையைத் தருவித்து அமுதசுரபியின் அருமை யறிந்து, “யான் செயற் பாலது யாது?” என்று கேட்கின்றான்; மணி மேகலை “சிறைக் கோட்டத் தைச் சீத்து அறவோர்க்குரிய அறக்கோட்ட மாக்குதல் வேண்டும்” என்று கூற, அவ்வாறே சிறைக்கோட்டம் அறக்கோட்ட மாக்கப் படுகிறது.

இச் செய்திகளை யெல்லாம் கேள்வியுற்ற உதயகுமரன், அவனைப் பற்றித் தன் தேர்மேற் கொணர்ந்து அவள் கூறும் வித்தையும் அறிவுடை மொழியும் கேட்க மனங்கொண்டு உலக வறவியை அடைகின்றான். அப்போது, காயசண்டிகையைக் காணாத அவள் கணவன் காஞ்சனனென்பவனும் ஆங்கு வருகின்றான். காய சண்டிகை வடிவில் இருக்கும் மணிமேகலை அவனருகே செல்லாது, உதயகுமரன் பக்கலில் நின்று, நரை மூதாட்டி யொருத்தி யைக் காட்டி யாக்கையின் புன்மை கூறித் தெருட்டுகின்றாள். காஞ்சனன் பொறாது, “இவன் இவட்குக் காதல னாயினன்” எனத் தவறாகவுணர்ந்து, ஆங்கே ஓரிடத்தே மறைந்திருக்கின்றான். உதயகுமரன் இடையிருள் யாமத்தே வந்து தன் கருத்தை முற்று வித்துக் கொள்ள எண்ணி, நீங்கி, இடையிருள் யாமத்தே வருகின் றான். அவனைக் கண்டதும் காஞ்சனன் அவன் பின்னே சென்று தன் கைவாள் வீசி உதயகுமரனை வீழ்த்தி, மணிமேகலையைப் பற்றிக் கொண்டு செல்லத் துணிந்து அவள் இருக்குமிடம் போகின்றான், அக்காலை, கந்திற் பாவை காஞ்சனனுக்குக் காயசண்டிகை வான்வழியே போகுங்கால் விந்தர் கடிகையின் வயிற்றில் அடங்கிய வரலாற்றைக் கூறி, “உண்மை தெளியாது நீ செய்த தீவினை நின்னை நீங்காது வந்து பற்றும்” என்று தெருட்ட அவன் வருத்தத் துடன் செல்கின்றான்.

மணிமேகலை உறக்கம் நீங்கி நிகழ்ந்தது கண்டு தன் உண்மை வடிவுடன் உதயகுமரனுக்காகப் புலம்ப, கந்திற்பாவை அவளைத் தடுத்து உதயகுமரன் வெட்டுண்டு வீழ்தற்கேதுவாகிய பழம்பிறப்பு வரலாற்றை யுரைத்து, எதிர்காலத்தில் இனி அவட்கு நிகழ விருப் பனவும் தெரிவிக்கின்றது. அது கேட்கும் மணிமேகலை மனமயக்கம் தீர்கின்றாள்; பொழுதும் விடிகிறது.

சக்கரவாளத்து மாதவர் மணிமேகலையால் உதய குமரற்கு உற்றது தெரிந்து அரசற்குரைப்ப, அவன் மந்திரியாகிய சோழிக ஏனாதியை நோக்கி, “உதயகுமரனை ஈமத்தேற்றிக் கணிகை மகளாகிய மணிமேகலையைக் காவல் செய்க,” என்று கட்டளை யிடுகின்றான்; மணிமேகலை சிறையிடப்படுகின்றாள்.

மணிமேகலை காரணமாகத் தன் மகன் இறந்தது கேட்டறிந்த இராசமா தேவி, அவளை வஞ்சனையால் துன்புறுத்தக் கருதி, அரசனிடம் இனிய நன்மொழி பலபேசி, மணிமேகலையைத் தன்பால் இருக்கச் செய்கின்றாள். மணி மேகலைக்கு மயக்க மருந்தளித்தும், கற்பழிக்க முயன்றும், உணவளியாது விடுத்தும் வருத்துகின்றாள்; மணிமேகலை அவையனைத்தையும் வென்று விடுகிறாள். அது கண்டு அஞ்சிய இராசமா தேவிக்கு மணி மேகலை அறம் பல கூறி, உதயகுமரன் பழம்பிறப்பு வரலாற்றைத் தெளிய உரைத்து, காமம், உயிர்க் கொலை, பொய் முதலியவற்றின் தீங்குகளைக் காட்டித் தேவியைத் தேற்றி நிற்ப, இராசமாதேவி மணிமேகலையை வணங்க, அது பொறாத மணிமேகலை அவளை வணங்குகின்றாள்.

அப்போது சித்திராபதி போந்து, இந்திரவிழா நடைபெறா தாயின் காவிரிப்பூம் பட்டினத்திற்கு உண்டாகக் கூடிய தீங்கும், மணிமேகலா தெய்வம் கூறியிருக்கும் கட்டுரையும் உரைத்து மணி மேகலையைத் தன்னோடு வரவிடுமாறு வேண்ட, இராசமாதேவி மறுக்கின்றாள். அதே சமயத்தில் மணிமேகலை மீட்டற்பொருட்டு அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் தேவியிடம் வருகின்றனர். தேவி அடிகளை வணங்க, அவர் அவட்கு நிதானம் பன்னிரண்டும் தெளியவுரைத்து, மணி மேகலையை நோக்கி, “வேற்றிடங்கட்குச் சென்று பிற அறங்களைக் கேட்டுத் திரும்பும்போது, இவ்வறங்களை விளங்க உரைப்பேன்” என்று சொல்லி விட்டுப் போகின்றார். மணி மேகலையும் வான்வழியாக ஆபுத்திரன் புண்ணியராசனாய்ப் பிறந்து ஆட்சிபுரியும் நாட்டையடைந்து, தருமசாவகன் என்னும் முனிவன் இருக்கு மிடத்தில் இருக்கின்றாள்.
அங்கே புண்ணியராசன் வந்து, முனிவனை வணங்கி அறங் கேட்டு, மணிமேகலையை நோக்கி, “இவள் யார்?” என்று வினவு கின்றான். அருகே நின்ற கஞ்சுகி யொருவன் தான் காவிரிப் பூம்பட்டினம் சென்றிருந்தபோது அறவணவடிகளால் சுட்டப் பட்ட மணிமேகலையே இவள் என்று கூற, உடனே மணிமேகலை அரசனை நோக்கி, “அரசே, உன் கையிலிருந்த அமுத சுரபியே என் கைப்புகுந்தது; நீ உன்னை மறந்தனை; உடனே மணிபல்லவத்துக்கு உன் பழம்பிறப்பை அறிய வருக” என்று சொல்லி விசும்பு வழியாக, மணிபல்லவம் சென்று தரும பீடிகையை வணங்கி நிற்கின்றாள், புண்ணியராசன் அரண்மனை யடைந்து, அமரசுந்தரி என்னும் தாயார் தன் பிறப்பு வரலாறு கூறக் கேட்டுத் தான் அரச போகத்தில் ஆழ்ந்து கிடந்தமை நினைந்து வருந்த, அமைச்சன், அரசற்குரிய அறம்பலவும் மொழிகின்றான். அரசன், “யான் மணி பல்லவம் சென்று திரும்புதற்கு ஒரு திங்கட்காலம் பிடிக்கும்; அதுகாறும் இந்நாட்டைக் காத்துவருக” என்று சொல்லி, பிற உரிமைச் சுற்றத்தையும் விட்டு மணிபல்லவம் வந்து சேர்கின்றான், அவனை மணிமேகலை யெதிர்கொண்டு சென்றுதரும பீடிகை யைக் காட்ட, அவன் வணங்கித் தன் பிறப்பைத் தெரிந்து கொள்கின்றான். அங்கே தீவதிலகை போந்து புண்ணியராசனுக்குப் பழம் பிறப்பில் நிகழ்ந்த சிலவற்றைக் கூறி, மணிமேகலையைப் பார்த்துக் காவிரிப்பூம் பட்டினம் கடல் கொள்ளப் பட்டதும், அதற்குரிய காரணமும் விரியக்கூறி, மாதவியும் சுதமதியும் அறவணவடிகளும் இதனை யறிந்து வஞ்சிமாநகர்க்குச் சென்று விட்டனர் என்று சொல்லுகின்றாள். மணிமேகலை, பிரியமாட்டாது வருந்தும் புண்ணிய ராசனைத் தேற்றி, அவனைத் தன் நாட்டிற்கேகுமாறு பணித்துத் தான் மட்டில் வான்வழியாக வஞ்சி நகரை யடைந்து, கண்ணகி கோயிலுக்குச் சென்று வணங்கி நிற்கின்றாள்.

கண்ணகி, தன் கணவன் கோவலனுக்குற்ற தீங்கிற்கு ஏது வாகிய பழம் பிறப்பு வரலாற்றைத் தான் மதுராபதியிடத்துக் கேட்டதைக் கேட்டவாறே உரைத்து இனி எதிர்காலத்தில் தனக்கு (கண்ணகிக்கு) நிகழ விருப்பனவும் சொல்லி, “இனி, நீ சென்று பல்வகைச் சமயவாதிகளைக் கண்டுஅவர்தம் அறங்களைக் கேட்பாயாக; அதற்கு நீ வேற்று வடிவம் கொள்க” என்று உரைக் கின்றாள். மணிமேகலை, தனக்கு மணி மேகலா தெய்வம் தந்த மந்திரத்தால் ஒரு மாதவன் வடிவுகொண்டு, சமயக் கணக்கர் வாழும் இடம் சென்று, அவர்களுள், பிரமாண வாதி முதல் பூதவாதி ஈறாகப் பலரையும் கண்டு அவர்தம் அறங்களைக் கேட்டுக் கொண்டு, வஞ்சி நகரின் பல அழகிய இடங்களைப் பார்த்து மகிழ்வுற்று, பௌத்தப் பள்ளி யடைந்து அங்கே தவம் பூண்டிருக்கும் கோவலன் தந்தையான மாசாத்து வானைக் காண் கின்றாள். அவனுக்குத் தனக்கு நேர்ந்தது முற்றும் உரைக்கின்றாள். அவனும், தன் வரலாறு முழுதும் கூறி, “அறவணவடிகளும், மாதவியும் சுதமதியும் கச்சிமாநகர்க்குச் சென்று விட்டனர்; அங்கே மழைவளம் இன்மையின் மக்கள் பசியால் வாடுகின்றனர்; ஆண்டுச் செல்க” என்று உரைக்கின்றான்.

மணிமேகலை, தன் உண்மை வடிவுடன் கச்சிநகரை யடைந்து அதன் நடுவண் சென்றிருக்க, அவள் வருகையைக் கஞ்சுகன் ஒருவன் அறிந்து, அரசனான இளங்கிள்ளிக்கு உரைக்கின்றான். அரசன், “கந்திற்பாவை கூறியது முற்றும் உண்மையாயிற்று” என்று மகிழ்ந்து மணிமேகலையைக் கண்டு, தன் நாடு வறங்கூர்ந்ததும், தெய்வம் தோன்றி மணிபல்லவத்துப் போலப் பொய்கையும் பொழிலும் சமைக்குமாறு பணிக்கத் தான் அவ்வாறே செய்ததும் அவட்குக் காட்டுகின்றான். பின்பு, அங்கே, தீவதிலகைக்கும் மணிமேகலா தெய்வத்துக்கும் படிமமும் கோயிலும் நிறுவி விழாவும் சிறப்பும் நிகழ்த்தப் படுகின்றன. மணிமேகலை பின்பு அமுத சுரபி கொண்டு பசிப்பிணியால் வருந்தும் மக்கட்குப் பேருணவு வழங்கி அவர்தம் வருத்தம் போக்குகின்றாள். அச்செய்தி நாடு முழுதும் பரவுகிறது. அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் மணி மேகலையிருந்த அறச்சாலைக்கு வருகின்றனர். அவர்களை இனிது வரவேற்று நல்லுணவளித்து மணிமேகலை இன்புறுகின்றாள்.

பின்பு, அறவணவடிகள், காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதும், தாங்கள் மூவரும் கச்சி நகர்க்கு வந்ததும் கூறுகின்றார். மணிமேகலை தனக்கு நிகழ்ந்தன பலவும் கூறித் தான். சமயக் கணக்கர் பலரையும் சமயப் பொருள் கேட்டதும், அவை செம்மையாக இன்மையின் சிந்தையில் வையாமையும் சொல்லித் தனக்குப் புத்தன் சொல்லிய மெய்யறத்தை விளம்புமாறு வேண்டு கின்றாள். அவர் புத்த சமயத்துத் தருக்க நெறியும், பிறவும் கூறுகின்றார். அதன்மேல் மணிமேகலை, “புத்தம் சரணங்கச் சாமி என்றவற்றை மும்முறை சொல்லி வணங்கி அடிகளை இரந்து நிற்க, அவர் அறங்குன்றிய காலத்துப் புத்தர் தோன்றி, போதியின் கண் இருந்ததும், அவர் உரைத்தருளிய பன்னிரு நிதானங்களின் தோற்றவொடுக்க நெறி களும் பிறவும் விரியக்கூறி, “நின் மனத்திருள் நீங்குக” என்று அருளுகின்றனர். மணிமேகலை ‘தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம்’ அறுவேன் என நோற்கலுறுகின்றாள்.

III.நூற்புணர்ப்பு
இதுகாறும் கூறிய கதைச் சுருக்கத்தை வகுத்து நோக்கின், மணிமேகலை மலர்வனம் புகுதலும், மணி மேகலா தெய்வத் தால் பின்பு மணிபல்லவம் சென்று தன் பழம் பிறப்பும் அமுத சுரபியும் மந்திரமும் பெறுதலும், பின்னர் காவிரிப்பூம் பட்டினம் போந்து பசித்தோர்க்கு உணவளித்தலும், அவனைக் காதலித்த உதய குமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டலும், அது காரண மாக அவள் சிறைப்படுதலும் சிறை வீடு பெறுதலும், ஆபுத்திரன் நாட்டிற்குச் சென்று அவனை மணிபல்லவம் கொணர்ந்து பழம் பிறப்பறிவித்தலும், அவனின் நீங்கி, வஞ்சிமாநகர் சென்று சமயக் கணக்கர் தம் சமயத்திறம் கேட்டலும், காஞ்சிநகர்க்கு வந்து அறவணர் பால் புத்தரோதிய அறம் கேட்டுத் தெளிந்து “பவத்திறம் அறுப்பேன்” என்று நோற்றிருத்தலும் இக்காவியத்தின் சிறப் புடைய நிகழ்ச்சி களாம் என்பது இனிது விளங்கும்.

இவற்றை நமக்கு உரைக்கப்புகுந்த இந்நூலாசிரியர், இந்நிகழ்ச்சி களுடன் சுதமதி, தீவதிலகை, காயசண்டிகை, ஆதிரை முதலியோர் வரலாறும், சக்கர வாளக் கோட்டம், தரும பீடிகை, காவிரிப் பூம்பட்டினம் கடல் கோட்படுதல் முதலியவற்றின் வரலாறும். உதயகுமரன், ஆபுத்திரன், துவதிகள், சுகந்தன், தருமதத்தன், கோவலன் முதலியோர் வரலாறும் எனச் சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட வரலாறுகளை இணைத்து, விழாவறை காதை முதல் பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை யீறாக முப்பது காதைகளாக விரித்தோதுகின்றார். பதிகம் நீங்கலாகக் காதை முப்பதும் சிறிது குறைய ஐயாயிர மடிகளில் இயன்றுள்ளன.

இக்காப்பிய நிகழ்ச்சியுடன் கிளைக் கதைகள் வந்து இயைந்து செல்லும் செலவு, தொடக்கத்தே ஒரு மலையடியில் தோன்றும் யாறொன்று இடையிடையே தோன்றி வரும் சிற்றாறுகளின் சேர்க்கையால் பெருகித் தங்கு தடையின்றி யேகும் காட்சியினை நினைவில் தோற்றுவிக்கின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் கால் கொள்ளும் இக்காப்பிய நிகழ்ச்சி, மணி பல்லவம், சாவகநாடு என்ற இரண்டில் நிகழும் நிகழ்ச்சி வந்து கூட வஞ்சிக்குச் சென்று, பின்பு காஞ்சியை யடைந்து கடை நிலையெய்துகின்றது. இவ்வாறு பதினைந்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சியோடு விரவி யொழுகிய போதும், காப்பியப் பொது நிகழ்ச்சி சிறிதும் சிக்குண்டு தெளிவு படும் திறம் பெறவே இல்லை. இவையாவும் காரண காரிய முறையிலும் எடுத்துக் காட்டு வகையிலும் வந்து இயைவதால், படிப்போர்க்குக் காப்பியநிகழ்ச்சியைப் பின்பற்றிச் செல்லுதற்குச் சிறிதும் அருமை தோன்றுவது கிடையாது. ஒரு நிகழ்ச்சியைக் கண்டபின் இதன் விளைவு என்னவோ எனப் படிப்போரைத் திகைப்பித்துத் தெளிவிக்கும் புலமைத் திறம் இக்காப்பியக் காலத்தில் இல்லை. அத்திறம் இதன்கண் அமைந்திருந்திருப்பின், இதனிற் சிறந்ததோர் இலக்கியம் வேறே இல்லையென்றே துணிந்து கூறிவிடலாம்.

இவ்வாறு இம்மணிமேகலை வரலாற்றை நம் சாத்தனார் ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதன் நோக்கம்யாதாகும்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம்பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை; அக்காரணம் முன்னைப் பிறவியினும் தோன்றும்; இப்பிறவியினும் தோன்றும். மக்கட்கு உண்டாகும் நலந்தீங்குகள் யாவும் காரணமாகிய முன்னை வினையின் பயனே; ‘பிறப்புப் பலமாறினும் வினைப்பயன் விடாது வந்து பற்றும்’ என்ற ஒன்றை வற்புறுத்துதலே இவர் நோக்கமாக உடையர் என்பது தோன்றுகிறது. இவ்வகையில் இவர் நோக்கமும் இளங்கோவடிகள் நோக்கமும் ஒன்றாதல் விளங்கும். ஏனைச் சமயக்கணக்கர் தம் சமயப் பொருள் காட்டி புத்த சமயத்தின் கருப் பொருளை உணர்த்தல் வேண்டும் என்பது இரண்டாவதேயாகும்.

இனி, இக்காப்பியத்தை உரைக்கப்புகுந்த இவர், மணி மேகலையை மலர் வனத்துக்குக் கொணரக் கருதி, விழாவறை காதையால் இந்திர விழா நிகழ்ச்சியைப் புலப்படுத்தி ஊர் அலர் உரைத்த காதையால் மாதவியும் மணிமேகலையும் தவவொழுக் கினரானது உணர்த்தி அதுவாயிலாக மணிமேகலையை மலர்வனம் புகுவிக்கின்றார். அப்பொழுது மணிமேகலை தனித்துச் செல்லுதல் கூடாது என்பதை வற்புறுத்து முகத்தால் தனித்து வந்து கெட்ட தன் வரலாற்றைத் தோழியாகிய சுதமதியைச் சொல்விக்கின்றார்.

இனி, மணிமேகலை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகக் கருதிய சாத்தனார், உதயகுமரனுக்கு மணிமேகலைபால் உள்ள காதலைத் தோற்றுவித்து, அவனை அவ்வனத்திற்கு வருவிக் கின்றார். அவனது ஆண்மையைக் காலவேகத்தை அடக்கினா னென்பதாலும், மணிமேகலைக்கும் அவன்பால் காதலுண்மையை அவன் தேரொலி கேட்டு அவள் சுதமதிக்கு உரைக்கும் உரை யாலும் தெரிவித்து, அவனின் நீக்குவது காரணமாக மணிமேகலா தெய்வத்தை வருவித்து மணிமேகலையை மணிபல்லவத்துக்குக் கொண்டு போகின்றார். மணிபல்லவத்தில் மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவதிலகை வரலாறும் வந்து சேர்கின்றன. இங்கே மணிமேகலா தெய்வத்தால் கொடுக்கப்பெறும் மந்திரம், பின்பு அவள் உலகவறவியில் உதயகுமரன் கைப்படாது தப்பற்குக் காயசண்டிகை வடிவு கோடற்கும்; அரசன் தேவி கற்பழிக்க முயன்றபோது ஆணுருக்கோடற்கும்; சமயக் கணக்கர்பால் சமயப்பொருள் கேட்டதற்குத் தவத்தோன் வடிவு கோடற்கும்; அரசன் தேவி உணவு கொடாது துன்புறுத்த நினைத்தபோது, உணவு துறந்திருத்தற்கும்; வான்வழியாக மணிபல்லவத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம், ஆங்கிருந்து சாவக நாடு. வஞ்சி, காஞ்சி முதலிய இடங்கட்கும் சேறற்கும் பயன்படுகிறது. காயசண்டி கையின் வரலாறு உதயகுமரனைக் கொல்லுதற்கும், அதுவே வாயிலாக மணிமேகலையைச் சிறைப்படுத்தற்கும் உதவுகிறது. ஆதிரையின் வரலாறு அமுதசுரபியில் பெய்த சோறு கொடுக்கக் குறைபடா வளம் பெறுதற்கு ஓராற்றால் மதிப்புத் தருகிறது. ஆபுத்திரன் வரலாறு அமுதசுரபியோடு இணைந்து நல்வினையின் மாண்பை எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறே சக்கரவாளக் கோட்டம் கந்திற்பாவை யென்ற வற்றின் வரலாறுகளும், இந்திரவிழா வரலாறும், அதனைக் காவிரிப் பூம்பட்டினத்தார் மறத்தற்கு ஏதுவாகும் வரலாறுகளும், கற்புடை மகளிரைக் காமுறுவார் எய்தும் கேட்டிற்கு வேண்டும் எடுத்துக் காட்டுக்களும் பிறவும் முன்னே கூறியவாறு இக்காப்பிய நிகழ்ச்சியில் ஆங்காங்கு வந்து சேர்கின்றன. அவற்றை ஈண்டு விரிப்பதால் பயனில்லை.

எங்குச் செல்லினும் மாதவியுடன் சுதமதி பிரியாது வருதற்குக் காரணம் கூறுவார், மணிமேகலையின் பழம் பிறப்பில் உடன் பிறந்த
வளாயிருந்த வரலாறும், மணிமேகலைக்கு உதயகுமரன் பாலும், அவனுக்கு மணிமேகலைபாலும் காதலுண்டாயதற்குக் காரணமாக, அவன் முன்னைப் பிறப்பில் இராகுலன் என்ற பெயருடன் கணவனா
யிருந்தான் என்ற வரலாறும், அவன் கொலையுண்டதற்குக் காரணம், அப்பிறப்பில் அவன் தன் மடையனைக் கொன்ற வரலாறும் பிறவும் காட்டப்படுகின்றன. மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்குத் துணை செய்தற்கு உரிய காரணமும், கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குற்ற காரணமும் ஈங்கும் கூறப்படுகின்றன.
இவ்வாறு நிகழும் நிகழ்ச்சி யொவ்வொன்றிற்கும் முன்னைப் பிறவியிற்செய்த வினையைக் காட்டுமிடத்து, காஞ்சனன் உதய குமரனைக் கொலை செய்தற்கும், கண்ணகி மதுரையை எரித்தற்கும் காரணம் அவரவர் வரலாறே காட்டுதலால், இத்தீவினைப் பயனை மறுபிறவியில் நுகரக்கடவர் என்றும் கூறி விடுகின்றார். உயிர்கள் தம் வினைப்பயன் நுகர்தற்குப் பிறந்தும் இறந்தும் மீட்டும் பிறந்தும் வரும் என்பதை நேரிற் கண்டு காட்டுதற்குச் சான்றாக அற வணவடிகள் வந்து சேர்கின்றார்.
IV. நூலிற்கண்ட சிலருடைய குணஞ்செயல்கள்.

இக்காப்பியத்தின்கண் வரும் ஆண்களும் பெண்களும் மிகப் பலராதலின், அவருள், மணிமேகலையின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையோரை மட்டில் எடுத்துக் கொள்வாம். ஆடவரில், மாவண்கிள்ளி, உதயகுமரன், ஆபுத்திரன், அறவணவடிகள், காஞ்சனன் என்போரும், பெண்மக்களில், மணிமேகலை, மாதவி, சுதமதி, காயசண்டிகை, இராசமாதேவி, சித்திராபதி என்போரு மாவர்.

1.  மாவண்கிள்ளி: உதயகுமரனுக்குத் தந்தையாகிய இவ்வேந்தன் பெயர் மாவண்கிள்ளி யென்றே கூறப்படுகிறது. ஒரு காலத்தே இவனைப் பகைத் தெதிர்த்தசேர பாண்டியர்களைக் காரியாறு என்னும் யாற்றின் கரையில் தன் பின் பிறந்தோனால் வென்று வாகை சூடினான். (மணி. 19:119-27) இவன் மனைவியின் பெயர் சீர்த்தி யென்பது. இவன் அரசுமுறை கோடாச் செங்கோன்மையும் மானமும் உடையன். இவன் ஒரு நாள் தன் தேவியுடன் பூங்காவில் இனிதிருக்கையில் மணிமேகலை காயசண்டிகை வடிவுடன் சிறைக் கோட்டம் புகுந்து உணவளிப்பதனைக் காவலர் போந்து கூறக் கேட்டு, அவளை உடனே தன் முன் வருவித்து, வினவ, அவள் அமுத சுரபியின் சிறப்பைக் கூறினாளாக, அதனைக் கேட்டதும், அவள் செயலை வியந்து பாராட்டி, “யான் செயற்பாலது என்?” என்று வினவுகின்றான். பின்பு அவள் விரும்பியவாறே சிறைக் கோட்டத்தை மாற்றி அறவோர்க்கு உரிய கோட்ட மாக்குகின்றான். உதயகுமரன் காஞ்சனனால் கொல்லப் பட்டதைக் கூற வந்த சான்றோர், அதனைக் கூறாது, பத்தினிப் பெண்டிரையும் தவ மகளிரையும் காமுற்றுக் கெட்ட வேந்தர் சிலர் வரலாறுகளைக் கூற, இவ்வேந்தன் அவர்தம் குறிப்பறிந்து,

“இன்றே யல்ல என்றெடுத் துரைத்து,
நன்றறி மாதவிர்! நலம்பல காட்டினிர்;
இன்றும் உளதோ இவ்வினை? (22:163-65)

உரையும்” என்று வினவுகின்றான். அவர்கள் உதய குமரன் கொலை யுண்டது கூறுகின்றனர். மகன் தவறு செய்ததனால் அவன் பொருட்டு வருந்தாது, மந்திரியை நோக்கி,

“யான்செயற் பாலது இளங்கோன் தன்னை
தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்” (22: 206-207)

எனக் காஞ்சனன் செய்கையை வெறுத்துரைப்பதும்,

“மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றுஎனில் இன்றால்;” (22: 208-209)

என அரசு முறையின் அமைதி கூறலும்,

“மகனை முறைசெய்த மன்னவன் வழிஓர்
துயர்வினை யாளன் தோன்றினன் என்பது
வேந்தர் தம்செவி யுறுவதன் முன்னம்
ஈங்குஇவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
கணிகை மகளையும் காவல் செய்க” (22: 210-14)

என்பதனால் அவனுடைய மானவுணர்வும், மணிமேகலையைச் சிறை செய்யும் ஆட்சி நலனும் இனிது புலனாகின்றன.

மணிமேகலை சிறையில் இருக்கும்போது அவளைத் தன்பால் கொண்டுவைத்துத் தீங்கிழைக்க எண்ணி வந்து அரசனை வேண்டிய அவட்கு அச்சோழர் பெருமான் அவளது உட்கருத்தை யுணராது. மகன்பால் குற்ற முண்மையும் மணிமேகலைபால் அஃது இன்மையும் தேர்ந்து அரசி அம் மணிமேகலையின் சிறப்புணர்ந்து அவளைத் தன்னோடு உடனிருக்க விரும்புகின்றாள் என்று வியந்து.

“சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை யாயின்இவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்க” (23: 31-34)

என்று சொல்லுகின்றான். இதனால் இவனுடைய உள்ளம் மிக்க நேர்மையுடைய தென்பது நன்கு விளக்க மெய்துகிறது.

2.  உதயகுமரன்: இவன் மாவண் கிள்ளிக்கு மகன்; மிக்க ஆண்மையும் மனவன்மையு முடையவன். காவிரிப்பூம் பட்டினத்தில் விழா நிகழும் போது கால வேக மென்னும் பட்டத்துயானை மதம்பட்டுத்திரிய, அதனை இவனொருவனே அடக்கி யொடுக்கு கின்றான். (4: 44-6) மணிமேகலைபால் இவனுக்குப் பெருங் காதலுண்டு. எட்டி குமரன் ஒருவனால் அவள் மலர்வனம் சென் றிருப்பது தெரிந்து வருபவன், உவவனத்தே சுதமதியைக் கண்டு மணிமேகலை இளமை நலம் கனிந்திருக்கும் திறத்தை வெளிப்பட மொழிந்து,

“மாதவர் உறைவிடம் ஓரீஇ மணிமேகலை
தானே தமியள்இங்கு எய்தியது உரை” (4: 103-4)

என்று வினவ, அவள் செவ்வன் இறைமொழியாது யாக்கையின் இயல்கூற அமைதியுடன் கேட்கின்றான். பளிக்கறையில் மணி மேகலையின் உருவம் தெரியக் கண்டதும் காமத்தீ யெழுந்து அவன் உள்ளத்தைக் கடாவ, பளிக்கறையின் உள்புகக் கருதி வாயில் தேடிக் காண்கின்றான். மாட்டாமையின், சுதமதியை நோக்க, அவள் மணிமேகலை தவவொழுக்கினாள்; சாபம் தரும் வன்மையள் என்று அச்சுறுப்ப, அதனால் ஒருவாறு மனம் நீங்கிச் செல்வோன்,

“சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீ இ?
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்?
செவ்விய ளாயின்என் செவ்விய ளாக” (5: 19-21)

என்று சொல்லிச் செல்கின்றான். செல்கின்றவன் மணிமேகலையை வவ்விய நெஞ்சினனாய்ச் செல்கின்றான். தவவொழுக்கம் பூண்டா ளாயினும், காமச் செவ்வி முதிர்ந்த வழித் தன் செவ்வியளாவள் என்று நினைத்தலின், அவனை ஆசிரியரும், “வவ்விய நெஞ்ச மொடு அகல்வோன்” (5:22) என்கின்றார். பின்பு அவன் சுதமதியின் வரலாறு கேட்பது தோழியிற் கூட்டம்பெற முயல்வோன் கூற்றாக இருத்தலும் நோக்கற் பாலது. அற்றாக, இதன் அரும்பதவுரை காரர், “அவ்விய நெஞ்சமோடு அகல்வோன்” என்று கொண்டு, “ஒளவியம் - பிறர்க்கு இவள் உரியளாதல் கூடுமோ என்பதால் உளதாகிய பொறாமை” என்று கூறுகின்றார். அவன் அவ்வாறு நினைத்தற்கு வேண்டும் ஏது ஒன்றும் அவள் அவன்பால் நடந்து கொண்டதிலோ, அவன் கூறுவனவற்றிலோ இல்லாமையால், அவ்வரும்பதக் குறிப்புப் பொருந்தாமை யுணரப்படும்.

சுதமதியின் வரலாறு கேட்டதும், அவளால் மணிமேகலை யைப் பெற முடியாதென்று அவன் உணர்ந்தமை தோன்ற,

“வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச்
சித்திரா பதியால் சேர்தலும் உண்டு” (5: 81-82)

என்று செப்பிவிட்டுச் செல்கின்றான். இதனாலும் அவன் எப்போதும் அவ்விய நெஞ்சத்தனாகாமை தெளியப்படும்.

உதயகுமரன் மணிமேகலையை வவ்விய நெஞ்சினனா தலை உணர்ந்த மணிமேகலா தெய்வம் அவன்முன் தோன்றி, செங்கோன் மையின் சிறப்புணர்த்தி,

“தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக” (7: 13-4)

என்று உரைக்கவும், அவன் அஃது ஒழியாது, இருத்தலையும், மணிமேகலை ஓடேந்திப் பிச்சையேற்று இல்லோர்க்கு உதவு தலையும் அறிந்த சித்திராபதி அவனிடம் போந்து அவன் மயங்கத் தகுவன கூறியபோது, அவன்தான் அவளைப்பளிக்கறையில் கண்டு பாவையென்று ஒருவாறு எண்ணிவரத் தெய்வம் தோன்றி, அவள் பால் கொண்ட நினைவை யொழிக என்றதைச் சொல்லி.

“தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ
எய்யா மையலேன் யான்” (18:84-5)

என்று கூறுகின்றான்; அவன் “எய்யா மையலை”ச் சித்திராபதி தன்மதி நுட்பத்தால் மாற்றிவிடலும், அவன் “இடங்கழி காம மொடு அடங்கானாகி,” மணிமேகலையைக் கண்டு,

“உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்துஎன்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி!
நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? எனத்” (18: 120-23)

தானே தனித்து நிற்கும்போது அவளைக் கேட்க வேண்டு மென்று நினைத்துச் சென்றவன், அவளை அவ்வாறே கண்டவிடத்துத் தான் நினைத்தபடியே வினவாது,

“நல்லாய்! என்கொல் நற்றவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப” (18: 126-7)

அவனது மனத்தடுமாற்றம் அறிந்து, மணிமேகலை “கேள்வி யாளரில் தோட்ட செவியை நீ யாகுவையெனில்” என்று தொடங்கிச் சில கூறுகின்றாள். அது நிற்க, இவன், அவளை நேரிற் கண்டதும், அவளது தவநிலையும், தெய்வம் கூறியதும், சுதமதி சொல்லும் நெஞ்சை அலைப்ப, அலைப்புண்டு, “கேட்கலாமோ, ஆகாதோ,” என்று, தனக்குள் தடுமாறிப் பின்பு சிறிது தேறி நயமாகக் கேட்டல் நன்று என்று துணிந்து, “நல்லாய், என்கொல் நற்றவம் புரிந்தது? சொல்லாய்” என்று துணிந்து கேட்கின்றான். இதனால், மணி மேகலையின் வனப்புக் கண்டுடைந்த மனவலி, சுதமதியும் தெய்வமும் கூறியவற்றால் கலங்கியதாயினும் சித்திராபதியின் சொல்லால் ஒருவாறு திண்ணியதாகியும் மீட்டும் அம்மணிமேகலையின் தவ வுருவால் கெட்டழிதலைக் காண்கின்றோம்.

மணிமேகலை காயசண்டிகை வடிவில் தோன்றலும், “மணி மேகலை மறைந்து சம்பாபதியின் கோயிலில் உள்ள சுதைப் பாவைகளுள் ஒன்றாயினாள் போலும்; இவளைச் சம்பாபதியால் பெறலாம்” என எண்ணி, அத்தெய்வத்தின் முன்நின்று, தன் வேட்கை நன்கு புலப்பட,

“மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங்குஇம் மண்ணீட்டு யாரென உணர்கேன்;
ஆங்கவள் இவள்என்று அருளா யாயிடின்
பன்னா ளாயினும் பாடு கிடப்பேன்
…………………………………………………….
முதியா ளுன்றன் கோட்டம் புகுந்த
மதிவாண் முகத்து மணிமே கலைதனை
ஒழியப் போகேன்; உன்னடி தொட்டேன்
இது குறை” (18: 155 -172)

என்றுகூற, இவன்பால் மனத்தெளிவின்மை கண்ட அத் தெய்வம், ஒன்றும் கூறாதொழியப் பாவையொன்று, “எம் சம்பாபதிமுன் தகாதன மொழிந்து நல்கூர்ந்தனை” என்கின்றது.

இவற்றை யெல்லாம் கேட்டுப் பெரும் கலக்கமுற்றுச் செல்லும் உதயகுமரன் தனக்குள்ளே,

“அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்;
பையர வல்குல் பலர்பசி களையக்
கையி லேந்திய பாத்திரம் திப்பியம்;
முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்” (19: 9-14)

என்று நினைத்து, “இதனைப் பின்னும் காண்பாம்,” என்று செல் கின்றான். இவற்றால் எல்லாம் மனமாற்ற முறாது மணிமேகலை பாற் கொண்ட காமத்தால் மனவலி யுடையனாய்ச் செல்லும் இவனது செலவு குறிக்கத் தக்கது; இவன் கற்ற கல்வி இப்போது துணை செய்கின்றதில்லை; “காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்” எனத் திருத்தக்கதேவர் கூறுவது உண்மையாதல் காண்க.

மணிமேகலை வேண்டுகோட் கிசைந்து, சோழ வேந்தனான மாவண்கிள்ளி சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கியது கேள்வி யுறுகின்றான் உதயகுமரன்; அவனுக்கு அவள்பால் எழுந்த காமவேட்கை அளவு கடந்து மிகுகிறது. அறிவு, ஆண்மை, நேர்மை நாணுடைமை, மானம் முதலிய நற்பண்பு பலவும் கெட்டழி கின்றன. அவளது முயக்கின்பம் கிடைக்கா விடினும், அவளுரைக்கும் விச்சையும் முதுக்குறை முதுமொழியு மேனும் கேட்டுத் தன் வேட்கையைத் தணிக்கக் கருதுகின்றான்.

“……………………………. தோட்டார் குழலியை
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று,
பற்றினன் கொண்டுஎன் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையும் கேட்டு, அவ ளுரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்” (20: 13-18)

என்று அவன் மனம்கொண்டு செல்கின்றான். உலக வறவியில் இவன் வரவு கண்ட மணிமேகலை இவன்பால் வந்து, இவன் காதற் குறிப்புணர்ந்து, அதனை மாற்ற நினைத்து, தகுவன பல கூறுகின்றாள். அக்கூற்றால், “மணிமேகலையே காயசண்டிகை வடிவில் இருக்கின்றாள்; மாயவிஞ்சையால் என்மனம் மயக்குறுக்கின்றாள்; இவளை இடையிருள் யாமத்துப்போந்து கொண்டேகல் வேண்டும்” என்று துணிந்து மீள்கின்றான். பின்பு இடையிருள் யாமத்தே போந்து விஞ்சையனால் கொல்லப்படுகின்றான்.

3.  ஆபுத்திரன்: இவன் வரலாறு ஆபுத்திரன், புண்ணி யராசன் என்ற இருகூறாய் அடங்கும்: இதனைப் பாத்திரம் பெற்ற காதையில் தோற்றுவாய் செய்து ஆபுத்திரன் திறமறிவித்த காதையில் அவன் பிறப்பும் வளர்ப்பும் அறம் செய்தலும் கூறி, பாத்திர மரபு கூறிய காதையில் அவன் சிந்தா தேவியால் அமுதசுரபி பெற்றதும், இந்திரன் சூழ்ச்சியால் அறஞ்செய்தற் கிடன் இன்றிச் சாவகநாடு செல்லுதலும், வழியில் மணிபல்லவத்தே இறத்தலும் சாவக நாட்டில் அவன் பிறத்தலும் உரைத்து, பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதையில், அந்நாட்டு வேந்தனான பூமிச்சந்திரன் என்பானால் வளர்க்கப்பெற்றுப் புண்ணியராசனாய் அரசனாதலும், ஆபுத்திரன் நாடடைந்த காதையில் மணிமேகலை அவன் அரசாளும் சாவகநாடு செல்லுதலும், ஆபுத்திரனோடு மணி பல்லவம் அடைந்த காதையில் மணிமேகலை அவனை மணி பல்லவத்திற்கு வருவித்துப் பழம் பிறப்புணர்வித்துப் பின்பு அவன் நாட்டிற்குச் செல்லுவித்தலும் கூறப்படுகின்றன. இவற்றால், இம் மணிமேகலைக் காப்பியப் பகுதிகள் பதிகம் ஒழிந்த முப்பதனுள் ஆறு காதைகள் இவ்வாபுத்திரன் வரலாறு கூறுவனவாதல் உணரப்படும்.

ஆபுத்திரன் இளம்பூதி யென்னும் அந்தணனுக்கு வளர்ப்பு மகனாய் வளர்ந்து நன்னூல் பலவும் கற்று விளங்குங்கால், மறை யோர் வேள்வியில் கொலை செய்தற்பொருட்டுக் கொணர்ந் திருந்த பசுவைக் கண்டு மனமிரங்கி அதனை இரவிற் கொண்டு போகையில் அந்தணர் வந்து அவனைப் பற்றிப் பலவாறு வைது ஏசியபோது. “நோவன செய்யன் மின் நொடிவன கேண்மின்” (13: 50) என்று கூறி, பசு மக்கட்குப் பயன்படுந் திறத்தை எடுத்தியம்புவது, அவனுடைய அருள் நிரம்பிய உள்ளத்தின் அழகையும் அறிவின் ஒட்பத்தையும் புலப்படுத்துகிறது.

பின்பு அவ்வந்தணர்கள் அவனை “ஆமகனாதற்கு ஒத்தனை” என்று இகழ்ந்துகூற, அவன், “உங்கள் முனிவர் கூட்டத்தே அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசகம்பளன் என்பவர் முறையே பசு, மான், புலி, நரி என்ற இவற்றிற்குப் பிறந்த வரல்லரோ?” என்று அவர் களைத் தெருட்டலும், அவர்கள் தெருளாது, இவனைக் “காப்புக் கடை கழிந்து கணவனை யிழந்து” கெட்ட சாலி யென்னும் பார்ப்பனி மகன் என்று இகழகின்றனர். அவர்களை நோக்கி, ஆபுத்திரன் நகைத்து, பிறப்பால் உயர்வு தாழ்வில்லை யென்பதை விளக்கு முகத்தால்,

“மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ;
…………………………………….
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்;
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்;
புரிநூல் மார்பீர்! பொய்யுரை யாமோ?
சாலிக் குண்டோ தவறு?” (13: 93-98)

என்று சொல்லுகின்றான்.

இவன் மதுரைக்குச் சென்று, தெருக்கள் தோறும் ஐயமேற்றுக். காணார், கேளார் முதலிய பலர்க்கும் உணவூட்டும் அறம் செய்தலும், அவ்வூரிலுள்ள சிந்தாதேவி கோயிலில் தங்கியிருத் தலும் இவனுடைய நற்பண்புகளாகும். நெடுந்தொலை நடந்து இளைத்தும் பசித்தும் ஒருநாள் நள்ளிரவில் வந்து நின்றோரைக் கண்டு இவன் வருந்தவும், சிந்தாதேவி தந்த அமுதசுரபி பெற்று இவன் அவர்கட்கு உணவூட்டி மகிழ்தலும் சிந்தாதேவியைப் பரவுதலும் அறிவுக்கு இன்பந் தருவனவாகும்.

இவனுடைய அறச்செயற்கு மகிழ்ந்து போந்த இந்திரன் இவனைக் கண்டு, தான் இந்திரனென்றும் ‘வேண்டும் வரம் கேள்’ என்றும் உரைக்கும்போது, இவன் அவனைக் கண்டு நகைத்து,

“அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்,
நற்றவம் செய்வோர், பற்றற முயல்வோர்,
யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெருவிறல் வேந்தே” (14: 40-43)

என்பதும், “எனக்கு இவ்வமுதசுரபியென்னும் ஓடே அமையும்” என்பான்,

“வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
திருந்துமுகம் காட்டும் தெய்வக் கடிஞை” (14: 44-45)

என்பதும் பிறவும் இவனது பற்றற்ற உள்ளத்துறவை நன்கு புலப்படுக் கின்றன.

சாவகநாடு வறுமையுற்றது கேள்வியுற்று அங்கே வங்கமேறிச் செல்லும் ஆபுத்திரன் வங்கமாக்களுடன் மணிபல்லவத்தில் இறங்கி யிருக்கையில், அவர்கள் இவனை அங்கேயே தனிப்ப விட்டுச் சென்றுவிடுகின்றனர். இவனோ சாவநாட்டில் உண்ண உணவின்றிப் பசிப்பிணியால் வருந்தும் உயிர்கட்கு உணவளித்து உவப்பிக்கும் நல்லறத்தைச் செய்தற்குத் தான் இயலாதிருப்பது தெளிந்து மனம் வருந்தி, மணிபல்லவத் தீவில் மக்கள் ஒருவரும் இல்லாமையால்,

“மன்னுயி ரோம்பும்இம் மாபெரும் பாத்திரம்
என்உயி ரோம்புதல் யானோ பொறேஎன்
……………………………………………..
சுமந்து என்? பாத்திரம்” (14: 87 -90)

என்று வருந்தி உண்ணா நோன்பிருந்து உயிர்விடுதலும், உயிர் விடுங்கால் அப்பாத்திரத்தைக் கோமுகிப் பொய்கையில் எறிபவன்,

“அருளறம் பூண்டு ஆங்கு ஆருயி ரோம்புநர்
உளர்எனில் அவர்கைப் புகுவாய்” (14: 93-94)

என்று உரைத்தலும் அவனது தனக்கென வாழாத் தகைமை யினைக் காட்டுகின்றன.

ஆபுத்திரன் பின்பு சாவகநாட்டில் பசுவயிற்றிற் பிறந்து பூமிசந்திரனால் வளர்க்கப்பெற்றும் புண்ணிய ராசனாய் அரசாளும் திறத்தை நம் சாத்தனார் சில சொற்களால் விளக்கி விடுகின்றார். அது,

“நாக புரம்இது; நன்னக ராள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்;
ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது;
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்;
உண்ணின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்” (24: 169 - 74)

என வருவது.

புண்ணியராசனாகிய ஆபுத்திரனை, ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் முதற்கண், தருமசாவகன் என்னும் முனிவன் தவப் பள்ளியில்,

“அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும்
சார்பிற் றோற்றமும் சார்பறுத் துய்தியும்
ஆரியன் அமைதியும்” (25: 3-6)

அமைவுறக் கேட்டு மகிழும் நிலையில் நமக்குக் காட்டுகின்றார். அங்கே மணிமேகலை பெண்ணிணையில்லாப் பெருவனப்பும், காமனோடு இயங்காக் கண்ணிணை இயக்கமும் கொண்டு நிற்கின்றாள். அப்போது அவன்,

“அங்கையிற் பாத்திரம் கொண்டு அறங்கேட்கும்
இங்கு இணையில்லாள் இவள்யார்?” (25: 9-10)

என்று முனிவனை வினவுவது இவனுடைய மனத்தூய்மையையும் நல்லொழுக்கமும் நன்கு விளங்கத் தெரிவிக்கின்றது.

அங்கே நின்ற கஞ்சுகன் ஒருவன், மணிமேகலையைப் பற்றித் தான் அறிந்தது கூறுவான்.

“கள்ளவிழ தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்,
மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்து ஆங்கு
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன்” (25:15-18)

என்கின்றமையின், அறவண அடிகளை ஆபுத்திரன் புண்ணிய ராசனாகிய பின்பு அறிந்திருத்தல் பெறப்படுகின்றது.

பின்பு, மணிமேகலை அவனுக்கு அவன் பழம் பிறப்புச் செய்தியைக் குறிப்பதும் மணிபல்லவம் வருக என்று சொல்லி விட்டு வான் வழியாகச் சென்றது கண்டும், புண்ணிய ராசனாகிய தான் ஆன் வயிற்றிற் பிறந்தது அமரசுந்தரியால் அறிந்தும் ஆபுத்திரன் மனம் மாறு பட்டு, அரசபோகமும் காமக் களியாட்டும்.

“தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித்
தெளிந்த நாதன்என் செவிமுதல் இட்டவித்து
ஏத மின்றாய் இன்று விளைந்தது
மணிமே கலைதான் காரணமாக” (25: 92-5)

என்று மொழிகின்றான்; சனமித்திரன் என்னும் மந்திரி, துறத்தல் நன்றன்று என்றற்கு அவன் தோன்றுதற்கு முன் இருந்த நாட்டின் நிலைமை கூறி, அதன்பின்,

“நீயொழி காலை நின்நா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம்;
துயர்நிலை யுலகம் காத்த லின்றிநீ
உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின்
இறுதி யுயிர்கள் எய்தவும், இறைவ!
பெறுதி விரும்பினை யாகுவை யன்றே;
தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயிர் ஓம்பும்
மன்னுயிர் முதல்வன் அறமும் ஈதன்றால்,
மதி மாறு ஓர்ந்தனை, மன்னவ!” (25: 110-18)

என்கின்றானாக அது கேட்கும் ஆபுத்திரன், அவற்கு இசைந்து, “ஒரு திங்கட் காலத்தே திரும்ப வந்து சேர்வேன்; அதுகாறும் நாடாட்சி காத்தல் நினக்குக் கடன்,” என்பவன், “மணிபல்லவம் வலம் கொள்வதற்கெழுந்த, தணியாவேட்கை தணித்தற் கரிதால்” (25:120-1) என உள்ளத்தின் நினைவை ஒளியாது உரைக்கின்றான்.

மணிபல்லவத்தில் ஆபுத்திரன் தன் பழம் பிறப்பும், தன் பொருட்டு, வங்கமாக்கள் திரும்பப் போந்து உயிர்விட்டதும் பிறவும் அறிந்து வருந்த, மணிமேகலை அவனைத் தேற்றி, “மன்னு யிர்க்கு உண்டியும் உடையும் உறையுளும் வழங்குவதே நல்லறம்” என்று தெளிவிக்கின்றாள். அவட்கு அவன்,

“என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும்
நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன்;
என்பிறப் புணர்த்தி என்னைநீ படைத்தனை;
நின்திறம் நீங்க லாற்றேன் யான்” (25: 234-35)

என்று தன் நன்றியறிவும் பிரிவருமையும் புலப்படுத்துத் தன் பெருந்தகைமையை நம் நெஞ்சத்தே நிறுவுகின்றான்.

4.  அறவணவடிகள்: இவரை அறவணன் என்றும், அறவணர் என்றும் வழங்குதலின் இவர் இயற்பெயர் அறவணன் என்றே தெரிகிறது. இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி, உதயகுமரன் முதலியோரின் முற்பிறவிக்காலத்தே இருந்து வாழ்ந்துவரும் பெரு முதியோராக இருக்கின்றார். மணிமேகலை அறிவறியும் காலத்து இவர் முதியோராய் இருப்பதனை,

“நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன்” (12: 3-4)

என்று இந்நூலாசிரியர் கூறுதல் காண்க. மணிமேகலையைச் சிறைவீடு செய்தற்கு இவர் இரசாமாதேவிபால் வந்தபோது, அவளும் இவரது முதுமை கண்டு,

“நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து
மூத்ததிவ் யாக்கை வாழ்கபல் லாண்டு” (24: 99-100)

என்று கூறுதல் காண்க.

கோவலன் மதுரையில் கொலையுண்டது கேட்டு வருந்திய மாதவிக்கு இவரே வாய்மை நான்கும் சீலமைந்தும் உரைத்துத் தவநெறிப் படுத்துகின்றார் (2: 60-69); மணிமேகலை மணிபல்ல வத்திலிருந்து அமுத சுரபியுடன் திரும்ப வந்ததும், இவரைக் கண்டு வணங்கி நிகழ்ந்தது கூற, அவட்கு இவர், மாதவியும் சுதமதியு மாகிய இருவரும் முற்பிறப்பில் தாரை வீரை என்ற பெயரினராய்க் கச்சயநாட்டு வேந்தனான துச்சயனுக்கு மனைவியராய் இருந்ததும், அவ்வேந்தனை இவ்வடிகள் கண்டு வீரையும் தாரையும் மாய்ந்த செய்தி யறிந்ததும் கூறி,

“ஆடுங் கூத்திய ரணியே போல
வேற்றோ ரணியொடு வந்தீரோ” (12:51-2)

என்று கூறுகின்றார்.

இவர் புத்தன் கூறிய நல்லறம் நாட்டிற் பெருகாமைக்கு இரங்கிக் கூறுவன இவரை அறவணவடிகள் என்பது ஏற்புடையதே என்றற்குச் சான்று பகர்கின்றது. மாதவி, சுதமதி யென்ற இருவரது பழம்பிறப்பைத் தான் அறிந்தமை கூறுமிடத்து, புத்த தருமம் பர வாமைக்கு இரங்கி,

“தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி,
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைந்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது;
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென வுணர்த லல்லது யாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது;
சலாகை நுழைந்த மணித்துளை யகவையின்,
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
ஆங்கத் துளைவழி உகுநீர் போல
ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச்
சொல்லலும் உண்டுயான்; சொல்லுதல் தேற்றார்
மல்லல் ஞாலத்து மக்களே” (12: 57-71)

என்றும், புத்தர்பிரான் தோன்றுங் காலத்தில்,

“பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல,
அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி யுவகையோடு உயிர்கொளப் புகூஉம்” (12: 79-81)

என்றும் கூறுதலால் அறியலாம். மேலும், இவர் புத்தரது திருவடி பரவுவதே உட்கோளாக வுடையரென்பது,

“போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன்” (12: 101-103)

என்பதனால் விளங்குகிறது.

இவர் மணிமேகலை, மாதவி, சுதமதி முதலாயினார்க்கு எதிர்வில் நிகழ இருப்பனவற்றையும் தெரிந்துரைக்கும் அறிவு நலம் சான்றவர். அவ்விருவரையும் கூறுமிடத்து முற்பிறவியில் துச்சய னுடன் பாதபங்கய மலையைக் கண்டு பரவிய காரணத்தால்,

“ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு
ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி
தொழுது வலங்கொண்டு வினை நீங்கிப்
பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய்” (12: 110-13)

என்று உரைக்கின்றார். தீவதிலகையும் மணிமேகலா தெய்வமும் கூறியவாறே, இவ்வறவண வடிகள் மணிமேகலையின் எதிர்காலத்தை யுரைத்து, ஆபுத்திரன் வரலாற்றையும் விரியக் கூறுகின்றார். கூறுபவர், ஆபுத்திரன் மணிபல்லவத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுங்கால் தான் சென்றிருந்த தாகவும், அப்போது அவனை, இவர் “என்னுற்றனையோ?” என்று கேட்க, அவன், “தன்உற்றனபல தான்எடுத் துரைத்தனன்” (14: 67-8) என்றும் கூறுகின்றார். ஆபுத்திரன் புண்ணியராசனாய் ஆ வயிற்றில் தோன்றியவன்று நிகழ்ந்த நிகழ்ச்சி களைக் கண்டு, சக்கரவாளக் கோட்டத் தேவர் பலரும் கந்திற் பாவையை வினவ, அது,

“மணிபல்ல வத்திடை மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிருயச் சாவகத் துதித்தனன்,
ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று
ஈங்கென் நாவை வருந்தியது” (15: 36-39)

என்று உரைக்கின்றார். இவ்வாறு உரைத்தவர் முடிவில் மணி மேகலையை நோக்கி, “இக்காவிரி நாட்டில் வறமுண்டாகி விட்டது; நீ விரைந்து சென்று இவ்வமுதசுரபியால் பசித்தோர்க்கு உணவளிப் பாயாக” என்பார்

“வெண்திரை தந்த அமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித்து வைத்தாங்கு
வறனோடு உலகின் வான்துயர் கெடுக்கும்
அறனோடு ஒழித்தல், ஆயிழை, தகாது” (15:51-4)

என்று சொல்லி விடுகின்றார். இதனால், உயிர்கட்கு உணவளிக்கும் நல்லறத்தில் மிக்க ஊக்கமுடையர் இவர் என்பது விளங்குகிறது,

மணிமேலையைச் சிறைமீட்டற் பொருட்டு, இவ்வடிகள் மாதவி சுதமதி என்ற இருவருடன் இராசமாதேவிபால் வர, அவள் இவரை வணங்கி வழிபட்டது கண்டு, அவட்கு அறங்கூறத் தொடங்கி, முதற்கண், மகன் இறந்தது குறித்து,

“தேவி கேளாய், செய்தவ யாக்கையின்
மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன்;
பிறந்தார், மூத்தார், பிணிநோ யுற்றார்,
இறந்தார் என்கை இயல்பே; இதுகேள்” (24: 101-4)

என்று கூறிப் பின் பேதைமை முதல், வினைப்பயன் ஈறாகவுள்ள பன்னிரு வகை நிதானங்களையும் விளக்கி, மணிமேகலையை நோக்கி, இவற்றின் பகுதிகளைத் தான் பிற்கூறுவதாகச் சொல்லி விடுக்கின்றார்.

கச்சிநகர்க்கண் மணிமேகலை இருந்து அறஞ் செய்தலைக் கேள்வியுற்று இவ்வடிகள் ஏனை மாதவியும் சுதமதியுமாகிய இருவருடன் அவள்பால் சென்று அவள் இட்ட உணவுண்டு, காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப் பட்டதற்குரிய காரணத் தைக் கூறுகின்றார். அது கேட்கும் அவள் இவ்வாறே தனக்குத் தீவ திலகை செப்பிய தாக வுரைத்துத் தனக்கு அறங்கூற வேண்டுமென வேண்ட அவற்றைத் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற இரண்டாலும் விரித்துரைக்கின்றார்.

5.  காஞ்சனன்: இவன் காயசண்டிகை யென்னும் விஞ்சை மகட்குக் கணவன் அதனோடு, உதயகுமரனைக் கொன்றதனால், இக்காப்பியத்தில் ஒரு தொடர்பு பெறுபவன். இன்றேல், சுதமதியைக் கெடுத்தொழிந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் போலப் பெயர் மறைந்து போயிருப்பன். “அக்கரை தீர்ந்த பின் அக்கை மகள் சக்கை” என்று கருதும் மாருத வேகன் போலாது, இக் காஞ்சனன் தன் மனைவி காயசண்டிகைபால் கழியாக் காதல் கொண்டிருப்பவன். காயசண்டிகை தன் செருக்கினால் முனிவன் சாபத்துக்கு இலக்காயது கண்டும், சிறிதும் வெறாது, அவள்பாற் சென்ற காதலால், இக் காஞ்சனனும் மிக இரங்கி,

“ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரண மின்றியும் கடுநோ யுழந்தனை” (17: 53-4)

என்று கூறுகின்றான். அவள் வானூடேகும் மந்திரம் மறந்ததும், யானைத் தீயால் வருந்துவதும் கண்டு வருந்தி, கனியும் கிழங்கும் நல்லன கொணர்ந்து தருகின்றான். அவனே, அவள் பசி வருத்தம் கண்டு ஆற்றாது,

“சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்,
ஆற்றா மாக்கட்கு ஆற்றுந் துணையாகி
நோற்றார் உறைவதோர் நோனகர் உண்டால்;
பலநா ளாயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுக” (17: 62-67)

என்று அருளுடன் கூறுகின்றான். இவ்வாறே ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத் தில் இந்திரவிழா நிகழுந் தோறும் வந்து அவள் பசித்துன்பம் கண்டு வருந்தி விட்டுச் செல்கின்றான்.

இத்துணைக் காதலுடைய இவன் மணிமேகலை காயசண்டி கை வடிவிலிருப்பக் கண்டு, அவளைக் காயசண்டிகையே எனக் கருதிவிடுகின்றான். உதயகுமரன் போலக் கூர்த்த அறிவில்லா மையின், அவளது புறத்தோற்றத்தையே கண்டு மயங்கி விடுகின்றான் இக்காஞ்சனன். உதயகுமரன் தொடக்கத்தே காயசண்டிகையே என்று மயங்கினும் அவள் சொல்லும் செயலும் நோக்கி உண்மை யறிந்தது போல இவ் விஞ்சையன் நோக்கவில்லை. மணிமேகலை உதயகுமரனைக் கண்டதும் அவன் பாற் செல்லவே, இவன் மனம் பொறாமையால் மூடப்படுகிறது. வெகுளி யெழுகின்றது. உண்மை யறிவு கலங்கி விடுகிறது. அவன் தனக்குள்ளே

“தற்பா ராட்டும் சொற்பயன் கொள்ளாள்,
பிறன் பின் செல்லும்; பிறன்போல் நோக்கும்;
மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
பவளக் கடிகையின் தவளவாள் நகையும்
குவளைச் செங்கணும் குறிப்போடு வழா அள்;
ஈங்கிவன் காதல னாதலின் ஏந்திழை
ஈங்கொழிந்தனள்” (20:71-78)

என்று சொல்லி, மனம் சினத் தீயால் வெதுப்பப் படுகின்றான். மணிமேகலையான காயசண்டிகையை முதற்கட் கண்டதும், அவள் அமுத சுரபி கொண்டு உணவளித்தலை வியந்து,

“இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே யாயினும் உண்போர் பலரால்;
ஆனைத் தீநோய் அரும்பசி களைய,
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?” (20; 33-36)

என்று கூறுவதால் அவன் காதல்நிலை குன்றாமை பெறப்படுகின்றது.

இப்பெற்றியோனுக்கு உதயகுமரன்பால் செற்ற முண்டா தலும், அவனை மறைவிருந்து கொலை செய்தலும் இக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சிபோல் வனவே யாகின்றன. ஆயினும், ஓருயிரை அது நின்ற உடலினின்று நீக்குதலாகிய கொலை வினையை அரசரன்றிப் பிறர் செய்தற்கு உரியரன்மையின், இதனையுணர்ந்த அரசனான மாவண் கிள்ளி, இக் காஞ்சனனைப் பற்றிக் கூறுமிடத்து, “யான் செயற்குரிய கொலையை அவ்விஞ்சையன் செய்தமையின், அவன் தகவிலன்” என்று இகழ்ந்துரைக்கின்றான்.

6.  மணிமேகலை: மணிமேகலை மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளாயினும் கண்ணகிபால் சிறந்த அன்பும் தொடர்பும் கொண்டு வளர்ந்திருக்கின்றாள். இதனை மாதவி, இவளைப் பற்றிக் கூறும்போது, “காவலன் பேரூர் (மதுரை) கனையெரி யூட்டிய, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை” (2: 54-5) என்று கூறுதலால் அறியலாம். ஆனால், மணிமேகலை வஞ்சிமாநகர்ச் சென்று கோயில் கொண்டிருந்த கண்ணகியைக் கண்ட போது, அக் கண்ணகிக் கடவுள், கோவலற் குற்ற துன்பத்தை “எம்மிறைக் குற்ற இடுக்கண்” (26:11) என்று சொல்லக் காண்கின்றோமேயன்றி, மணிமேகலையை, என்மகளே என்றோ, எம்மிறை மகளே என்றோ சொல்லக் காண்கிலோம்.

மணிமேகலை பேரழகு படைத்தவள். இதனைச் சுதமதி, “மணிமேகலையின் கண்ணிற் சொரியும் நீர்த் துளியைக் காணின் காமன் தன் படையை எறிந்துவிட்டு உடல் நடுங்குவன்; ‘ஆடவர்’, கண்டால் அகறலு முண்டோ, பேடியரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3; 20-5) என்று கூறுவதாலும், மலர்வனம் சென்ற போது மணி மேகலையின் தவ வடிவு கண்டோர், ‘அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய தாயோ கொடியவள் தகவிலள்’ (3: 149-50) என்றும் கூறுவதாலும், ஆபுத்திரன் நாடடைந்தபோது அவளைக் கண்ட அவன், “பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றான்” (25:7) என்றலினாலும் பிறவற்றாலும் அறியலாம்.

உதயகுமரன் தன்பால் காதல் கொண்டுள்ளான் என்பதை வயந்தமாலை மாதவிக்குரைப்பக் கேட்டு, அவன்பால் மணிமேகலை யுள்ளத்தே காதல் பிறக்கின்றது. அதனை யுணர்ந்து, அவன் தேரொலி கேட்டு அவன்பால் தன்னுள்ளம் சென்று ஒடுங்கு தலையறிந்து “என் செய்வேன்” என்றலும் (4;79-84); அவன் பளிக்கறைக்கு வந்த போது அவனைக் கண்டதும் அவள் மனத்தில் காதல் எழுதலும், அதனை அவன் செய்த இகழ்ச்சிக் குறிப்பு நினைந்து கெடுக்க முயன்றும், “இகழ்ந்தனனாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போயதென் நெஞ்சம், இதுவோ அன்னாய் காமத்தி யற்கை” (5: 88-90) என்றலும்; “இதுவே வாயின் கெடுக தன்திறம்” என்றலும் பிறவும் அவள் தான்பெற்ற கல்வியறிவு, சமய நூலறிவு என்ற இரண்டாலும் தன்னையும் தன் மனத்தையும் வேறு வைத்து எண்ணி மனத்தை அறிவால் அடக்கும் திறல் பெற்றிருப்பதைக் காட்டுகின்றன.

கோவலனுற்ற கொடுந்துயர் கேட்டு இவள் கண்ணீர் சொரிந்து புலம்புதலும், மணிபல்லவத்தே தனித்தபோது, தனிமையாற்றாது சுதமதியை நினைந்து, “சுதமதி யொளித் தாய்; துயரம் செய்தனை,” “மனம் நடுக்குறூஉம்; மாற்றம் தாராய்; வல்லிருள் கழிந்தது; மாதவி நடுங்கும்; எல்வளை வாராய், விட்டகன்றனையோ?” எனத் தன் இளமைப் பண்பு தோன்ற அழுபவள்,

“விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்” (8: 25-26)

என்று கூறலும் பிறவும் அவளுடைய மெல்லியற் பொறையை விளக்குகின்றன.

புத்த பீடிகையைக் கண்டு தன் பிறப்புணர்ந்த மணிமேகலை, உடனே, “காதலன் பிறப்பும் காட்டாயோ?” (10:66) என்று விழைதல் அவள் உள்ளத்தே காதற்குறிப்பு அறாது நிலவுதலும், அம்பலத்தே உணவு நல்கும் அறம் செய்யும்போது, உதயகுமரன் போந்து “நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது?” என்று வினவ, இவள்,

“என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி” (18: 128-9)

அதனோடு நின்றொழியாது, காதல் வெள்ளத்தால் ஈர்ப்புண்டு,

“அறைபோய் நெஞ்சம் அவன்பா லணுகினும்
இறைவனை முன்கை ஈங்கிவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்லலெதிர் மறுத்தல்
நன்றி யன்றுஎன நடுங்கினள் மயங்கி” (18: 130-33)

அவனுடன் பேசலுற்றனள் என ஆசிரியர் கூறலும், பின்பு அவ்வுதய குமரன் விஞ்சையனால் கொலையுண்டது கண்டதும் ஆறாத் துயருற்று, காயசண்டிகை வடிவு நீங்கித் தன் உண்மை வடிவுடன் தோன்றி, அவனைக் காண்டலால் எழும் காதல் தன் கருத்து முழுதும் கவர்ந்து கொள்ளவே, பழம் பிறப்பில் அவன்பால் தான் கொண்டிருந்த ஆராக் காதலால் தீயில் விழுந்து உயிர் விட்டது சொல்லி,

“பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக்கு உரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன், காதல!
வாய்வாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ” (21: 19-24)

என்று அரற்றிப் புலம்பி அவனைத் தழீஇக் கொள்ள நெருங்கு தலும், கந்திற்பாவை “செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண்” என்று கூறித் தடுத்தலும் நோக்கின், பழம் பிறப்புணர்ந்தும் உயிரொடு தொடர்ந்து நின்ற காதல், அவள் உள்ளத்தே இருந்து, பிறகு ஓரிடத்தும் எழாமையின் பெரிதும் கெட்டமை தெரிகிறது. சிறிது நின்ற இத்தொடர்பும் இராசமாதேவி மணிமேகலையின் அடி வீழ்ந்து வணங்கிய போது, தானும் அவள் அடிவணங்கி, “தகுதி செய்திலை; காதலற் பயந்தோய்” (23: 145-7) என்று கூறுமிடத்துத் தோன்றிக் கெடுகின்றது.

இக் காதற் குறிப்பு உள்ளத்தே நிலவினமையின் உதய குமரனைக் காணுந்தோறும் அவன் தன்னை விடாது நயத்தற்கு ஏற்ற குளிப்புக்கள் இவள்பால் நிகழ்ந்தன; இன்றேல் அவன் இவளை இடையிருள் யாமத்திற் போந்து எடுத்தேக நினைத்தற்கு ஏதுவே இல்லாது போயிருக்கும். இக் குற்றம், சோழவேந்தன் “கணிகை மகளையும் காவல் செய்க” என்றற்கு அமைதி செய்கின்றது.

அமுத சுரபியின் இயல்பு கேட்டதும், இவட்குத் தானும் பசித்த மாக்கட்கு உணவு நல்கும் நல்லறம் புரியவேண்டும் என்ற வேட்கை மிக்கு எழுகின்றது; வறியோரின் வறுமை நிலை அவள் மனக்கண்ணில் இனிது தோன்றுகிறது; இவற்றை ஒளியாது உரைக் கலுற்று,

“துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து,
வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்” (11: 109-113)

என்று மொழிகின்றாள்.

மணிமேகலையின் பழம் பிறப்புணர்வும், எதிர்கால நிகழ்ச்சி யுணர்வும் அவட்கு வாராதிருப்பின், அவள் வாழ்க்கையே வேறு வகையில் திரும்பி யிருக்கும். இவட்கு மணிமேகலா தெய்வமும் தீவதிலகையும் அறவண வடிகளும், கந்திற் பாவையும் கண்ணகி கடவுளும் மாசாத்துவானும் பெருங்காவல் செய்வது போல இவ்வுணர்வுகளைக் கொளுத்தினமையின், இவள் தன் வாழ்வைத் தூய்மையாக நடத்தி அறப்பயனைப் பெறநேர்ந்தது. இவளுடைய இயற்கையறிவு யாண்டும் தனித்து நின்று ஒரு நிகழ்ச்சியையும் நிகழ்த்தவில்லை. இதனை, மணிபல்லவத்துத் தனித்துப் புலம்பலும், உதயகுமரனைக் கண்டு உள்ளம் குழைதலும் பிறவும் இனிது விளக்கிவிடுகின்றன.

வஞ்சிநகரத்தே கண்ணகியைக் கண்டு, அழுது நின்று,

“அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது
அருளல் வேண்டும்” (26: 7-9)

என்று வினவலும், சமயக்கணக்கர்தம் திறம் அறியப் போந்தவள், நிகண்ட வாதியை நோக்கி, ஆராய்ச்சித் திறம்பட,

“…………………………………………………………….நீயுரை: நின்னால்
புகழுந் தலைவன்யார்? நூற்பொருள் யாவை?
அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு” (27: 167-70)

என்று வினவலும், காட்சி, அனுமானம் என்ற இருவகை அளவை களையும் உடன்படாத பூதவாதியைத் தெருட்டுமுகத்தால்,

“……………………………………………………………………..நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 283-85)

எனக் கூறலும், பிறவுமாகியவற்றிற்கு அவள் மேலே கூறியவாறு கொண்ட உணர்வும் நல்லோர் துணையுமே காரணமாதல் துணியப்படும்.

மணிமேகலையின் சிறப்பனைத்திற்கும் தோற்றுவாயாக மாதவி இவளை இளமையிலேயே நாடக மகளிர்க்குரிய துறையில் செலுத்தாது விலக்கிய செயல் நினைக்குந்தோறும் இறும்பூது பயக்கின்றது. கச்சிநகர்க்கண் இவள் பாத பீடிகையையும், தீவதிலகை, மணிமேகலா தெய்வம் என்ற இவர்கட்குக் கோயிலையும் அரசனைக் கொண்டு அமைத்துச் சிறப்புச் செய்தது அவராற் பெற்ற அறிவுக்கு நன்றி செலுத்தியதாகும்.

7.மாதவி: இவள் காவிரிப்பூம்பட்டினத்துக் கணிகையருள் சித்திராபதி யென்பாட்குமகள். இவள் ஆடல், பாடல் அழகு என்று மூன்றினும் தலைசிறந்து விளங்கி, கோவலன் நட்புப் பெற்று மணிமேகலையைப் பயந்தவள். கோவலன் மதுரையிற் கொலை யுண்டிறந்தது கேட்டு வருந்தித் துறவு பூண்டு, புத்த சங்கத்தைச் சேர்ந்து அறவணவடிகள் பால் அறங்கேட்டு ஒழுகிவருகின்றாள். தன்னைப் போலவே தன் மகள் மணிமேகலையும் நல்ல கல்வியறிவும் அழகும் பெற்றிருப்பினும் இளமையிலே அறத்துறையில் ஒழுகு மாறு விடுகின்றாள். இவள் இதனால் அறச்செயலும் அருளுள்ளமும் உடையளாதல் பெறப்படும்

இவள் உள்ளத்தை மாற்றி நாடகக் கணிகையர்க்குரிய செயலில் ஈடுபடுத்தற்கு முயன்ற சித்திராபதி, மாதவியின் தோழியான வயந்தமாலையை அம் மாதவிபால் விடுப்ப, அவள் போந்து கூறியவற்றைக் கேட்டு மாதவி, சிறிதும், மனம் மாற்றம் எய்தாது,

“காதலனுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன்” (2:38-41)

என்றும், மணிமேகலையைத் தவநெறிப் படுத்தலே தக்கது என்றும், தான் புத்த சங்கத்தை யடைந்து அறவணவடிகளைச் சரண்புக, அவர்,

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது; அறிக, என் றருளி,
ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி,
உய்வகை இவை; கொள்” (2: 64-69)

என்று உரைத்ததையும் கூறுதலால், அவள் உள்ளம் அறநெறிக் கண் உறைந்து நிற்றலை அறிகின்றோம்.

தன் மகளாகிய மணிமேகலைபால் மாதவிக்கிருக்கும் அன்பு தாயன்பாயினும் மிகச் சிறந்ததாகும். மாதவி மணிமேகலையைப் பயந்து பெயரிடும் நாளிலே மணிமேகலா தெய்வத்தால், தன் மகள் மணிமேகலை, “காமன் கையறக் கடுநவை யறுக்கும் பெருந் தவக் கொடி” (7; 36-7) என்று பாராட்டப் பெற்றதைக் கனவால் அறிந்திருப்பது, அவட்குத் தன் மகள்பால் பேரன்பு கொள்ளற்குத் தக்க ஏதுவாகிறது. இதனால், மணிமேகலை மணிபல்லவத்துக்குக் கொண்டேகப் பட்டது சுதமதியால் அறிந்து; “நன்மணி யிழந்த நாகம் போன்ற அவள், தன்மகள் வாராத் தனித்துயருழப்ப, இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்” (7;131-33)என்று ஆசிரியர் குறிக்கின்றார். மேலும், அவள், மணிமேகலை மணிபல்லவம் சென்ற ஏழாம் நாள் வந்ததும் இனியும் வாராமை கண்டு வருந்து வதனை,

“வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்தது; என்மகள் வாராள்;
வழுவாய் உண்டு” (11: 128-30)

என்று மயங்குகின்றாள்.

தன்பால் வந்த மணிமேகலை, “தாயே” என்று சொல்லித் தன்னைத் தழீ இக்கொள்ளாது, பழம் பிறப்பைச் சுட்டி,

“இரவி வன்மன் ஒருபெரு மகளே,
துரகத் தானைத் துச்சயன் தேவி,
அமுத பதிவயிற்று அரிதின் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினிர்; நும்மடி தொழுதேன்;
வாய்வ தாக மானிட யாக்கையின்
தீவினை யறுக்கும் செய்தவம் நமக்கு ஈங்கு
அறவண வடிகள் தம்பால் பெறுமின்” (11: 133-40)

என்று கூறலும், மாதவி அற்புதமுற்று அயர்ந்து போகின்றாள். அதற்குப் பின் அவள்பால் மிகுதியும் சொல்லாடலோ சிறப்புச் செய்கையோ உண்டாகவோ இல்லை. அவள் அறவணன் கூறியது போல, முற்பிறப்பில் பாதபங்கய மலையைப் பரசிய பயனால், போதி மாதவன் திருந்தடி வணங்கி, அவன் கூறிய அறநெறிக் கண் நிற்கின்றாள்.

இந்நெறி நிற்கும் மாதவி அவ்வப்போது மணிமேகலை செயலை அறிந்து வருகையில் மணிமேகலை வேந்தனால் சிறை செய்யப்பட்டுப் பின் அரசமாதேவியுடன் இருப்பதை அறிகின்றாள். அவள் மனம் படாதபாடு படுகிறது. அதனைச் சீத்தலைச் சாத்தனார்.

“மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துளங்கிய துபோல்
தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து
வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி” (24: 83-6)

துன்புற்று,- (வயிறு வருந்தச் சுமந்து பெற்றவளன்றோ!) அறவணரை வணங்கி, அவரை யழைத்துக்கொண்டு அரசமா தேவிபால் வந்து சேர்கின்றாள்.

மணிமேகலை நீங்கிய பின், அறவணரோடே யிருந்து முடிவில் கச்சிமாநகர் போந்து, ஆங்கே மணிமேகலை அமைத்திருந்த அறச்சாலையில்அவள் அளித்த அமுதுண்டு இனிதிருந்து அறம்புரிந்து வருகின்றாள்.

8.  சுதமதி: இவள் சண்பை நகரத்துக் கௌசிகன் என்னும் பார்ப்பனனுக்கு மகள்; இளமையிலேயே தாயை யிழந்தவள். தந்தையால் வளர்க்கப்பட்டு ஒருநாள் பூஞ்சோலையில் தனித்துப் பூக்கொய்திருக்கையில், மாருதவேக னென்னும் விஞ்சையனால் கவரப்பட்டுக் கற்பிழந்து காவிரிப்பூம் பட்டினத்தே அவனால் கைவிடப் பட்டவள்; இவளைத் தேடித்திரிந்து போந்த கௌசிகன் பிச்சையுண்டு வாழ்கையில், அவனைப் பசுவொன்று முட்டி வயிற்றைக் கிழித்துக் குடரைச் சரிவிக்க, அவனை யேற்று ஆதரிக்கச் சமணர் கூட்டம் மறுத்து வருத்தவே, இவளும் அவனுடன் பெருந்து யருழப்ப, பின்பு, சங்கதருமன் என்னும் புத்தமுனிவனால் அவன் ஆதரிக்கப் பெற்று உடல்நலம் பெற்றுப் புத்த சங்கத்தை யடைந்து தானும் அறங்கேட்டு மாதவியுடன் மணிமேகலைக்குச் செவிலி போல் இருந்து வருபவளாகும்.

இவள் நல்ல சொல்வன்மையும் இடமறிந்து நலமுரைக்கும் தன்மையு முடையவள். இவள், மாதவி, மணிமேகலையை மலர்வனம் கூடாதென்றற்கு, அம் மணிமேகலையை “ஆடவர் கண்டால் அகறலு முண்டோ; பேடியாரன்றோ பெற்றியின் நின்றிடில்” (3: 24-5) என்றாலும், தன் வரலாறு கூறலும், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம் முதலியனவற்றின் இயல்பு கூறி விலக்கலும், செல்லுதற்குரிய உவவனத்தை,

“அருளும் அன்பும் ஆருயி ரோம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவன தாணையிற் பன்மரம் பூக்கும்
உவவனம் என்பதொன் றுண்டு” (3: 56-62)

என்று உரைத்து, இதன் இயல்பும், அஃது ஏற்பட்டதற்குரிய காரணமும் கூறும் வகையும் பிறவும் மிக்க நயமுடையனவாகும்.

உவவனத்தின் காட்சியை இச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டலுற்று,

“குழலிசைத் தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்,
மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்;
மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப்
பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று
ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரச வன்னம் ஆங்கினி திருப்பக்
கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
கம்புட் சேவல் கனைகுரல் முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்” (4: 3-13)

என்பன முதலாகக் கூறிச் செல்வது இயற்கைக் காட்சியில் அவட் கிருக்கும் ஈடுபாட்டினை எடுத்துக் காட்டுகிறது.

மணிமேகலையைத் தேடிப் பளிக்கறைக்கண் உதய குமரன் வரக்கண்டு உளம் நடுங்கிநிற்கும் இவள், அவன் மணிமேகலையைப் பற்றி வினவ, அவற்குத் தவமகளாதலின் அத் தகுதி தோன்ற, உடலின் இயற்கையைக் கூறத் தொடங்கி விடுகிறாள்; இதற்குத் தோற்று வாயாக அவள் கூறுவது அவளது நாநலத்தைப் புலப் படுத்துகிறது.

“இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ?
அனைய தாயினும் யானொன்று கிளப்பல்” (4: 107-111)

என்பது அது. “மணிமேகலை எத் திறத்தினள்” என்று கேட்கும் அவ்வுதயகுமரனை அச்சுறுத்தி வெருட்டவும், அவன் மனம் வருந்தா வகையில் அவன் நலத்தைப் புகழவும் கருதி, முதற்கண் அவன் நலத்தை வியந்தாள் போன்று.

“குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
முருகச் செவ்வி” (5: 13-14)

என்று புகழ்ந்துரைத்து, மணிமேகலையின் தவநிலையை யோது வாளாய்,

“நின், முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள்; *ஆயின், பைந்தொடி நங்கை
ஊழ்தரு தவத்தன்; சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்” (5: 14-17)

என்று சொல்லுகின்றாள். அதற்குமேல் அவன் சுதமதி வரலாற்றைக் கேட்கின்றான். அவனுக்குத் தன் வரலாற்றைக் கூறுமுன், தன் வரலாறறிந்தால், அவன் பால் தோன்றும் காமக் கிளர்ச்சி கண்டு, தனக்கு ஏதேனும் தீங்கு நினைப்பனோ என்று அஞ்சி, முன்ன தாகவே,

“வார்கழல் வேந்தே வாழ்க நின்கண்ணி,
தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (5; 28-9)

என்றுரைப்பதும், தன் நிலைமையைத் தெரிவிப்பாளாய்,

“தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்
இன்பச் செவ்வி மன்பதை எய்த
அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின்
அறக்கதி ராழி திறப்பட உருட்டிக்
காமற் கடந்த வாமன் பாதம்
தகைபா ராட்டுத லல்லது யாவதும்
மிகைநா இல்லேன்; வேந்தே வாழ்க” (5: 73-79)

என்றுரைப்பதும் அவளது, அறிவு நுட்பத்துக்கு அமைந்த சான்று களாகும்.

9.  காய சண்டிகை: இவள் காஞ்சனன் என்னும் விஞ்சை யனுக்கு மனைவி. அவனோடு வருங்கால் பொதியிலின் அருகே ஒரு காட்டாற்றில், விருச்சிகனென்னும் முனிவன் உண்டற்கு வைத்திருந்த நாவற்கனியைத் தன் செருக்கினால் காலாற் சிதைத்து, அவன் இட்ட சாபத்தால் வானூடு செல்லும் மந்திரம் மறந்து, யானைத்தீ யென்னும் நோயுற்று வருந்துபவள்; தன் பசித்தீயவித் தற்குக் காவிரிப்பூம் பட்டினத்தே தங்கியிருந்தவள்; கற்புடைய மகளிரின் இயல்பறிந்தவள்.

இவள்தான், மணிமேகலை அமுதசுரபி பெற்றுக் காவிரிப் பூம்பட்டினம் வந்த பின், அவளை, முதற்கண் ஆதிரை யென்பாளின் மனைக்கண் ஐயமேற்கச் சொல்லுகின்றாள்; ஆதிரையின் வரலாற்றை உரைப்பவளும் இவளே. மணி மேகலையை உலக வறவிக்குச் செல்க என்று சொல்லுமிவள், அதன் இருப்பை,

துக்கம் துடைக்கும் துகளறு மாதவர்
சக்கர வாளக் கோட்டமுண்(டு); ஆங்கு அதில்
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக வறவியொன் றுண்டு; அதனிடை
ஊரூர் ஆங்கண் உறுபசி யுழந்தோர்
ஆரு மின்மையின் அரும்பிணி யுற்றோர்
இடுவோர்த் தேர்ந்தொங்கு இருப்போர் பலரால்;
வடுவாழ் கூந்தல், அதன்பாற் போக (17: 75-82)

என்று உரைப்பது இனிதாக இருக்கிறது. இவள் தான் வருந்திய யானைத் தீயின் கொடுமையை,

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி,
அடலரு முந்நீ ரடைந்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம்
அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழற் கடும்பசிப்
பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால்” (17: 9-14)

என்று விளக்குந்திறம் நன்றாக இருக்கிறது.

இவள் செல்லும்போது விந்தாகடிகை யென்பாளது வயிற்றிற் பட்டு இறந்துபோகின்றாள்.

இவளது வடிவு கொண்டு, மணிமேகலை அறம் செய்ததனால் தான், காஞ்சனன் உதயகுமரன்பால் பொறாமையும் செற்றமும் கொண்டு கொலை புரிகின்றான். இதனை அவன் வரவு கண்டதும் மணிமேகலை நினைக்கவில்லை; உதயகுமரன் இறந்த பின்பே, உணர்ந்து அவ்வடிவினை அவள் உதறி நீங்குகின்றாள்.

10. ஆதிரை: இவள் வரலாறு இம் மணிமேகலைக் காப்பியத்தில் நெருங்கிய தொடர்புடைய தன்று; மணிமேகலைக்கு முதற்கண் பிச்சையிடும் பேறு ஒன்றுதான் இவட்கு இந்நூலில் கிடைக்கின்றது. இவள் கற்பிற் சிறந்தவள்; கணவன் சாதுவன் என்பவனோ “வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி” கணிகை மாதரின் கூட்டத்தால் கெட்டழிந்தவன். கெட்ட பொருளைமீட்டற்குச் சென்றிருந்த போது, ஏறிச் சென்ற கலம் கெடவே, தப்பி வந்தோர் அவன் இறந்தான் என ஆதிரைக்குச் சொல்ல, அவள் தீப்புக விரும்பி, தீமூட்டி அதில் விழுகின்றாள்; தீ அவளைக் கொல்ல வில்லை. தீயில்,

“விரைமலர்த் தாமரை யொருதனி யிருந்த
திருவின் செய்யோள் போன்று இனிதிருப்ப”

அவளே வருந்தி,

“தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்,
யாது செய்கேன்!” (16: 33-6)

என்று ஏங்குகின்றாள். அசரீரி தோன்றி, “சாதுவன் இறக்கவில்லை; நாகர் தீவில் இருக்கின்றான்; வந்து சேர்வான்’ என்கின்றது. அவள் வீடு போந்து,

“கண்மணி யனையான் கடிதீங் குறுக” எனத் தன் கணவன் பொல்லா
வொழுக்க முடையனாகிய தறிந்தும் வெறாது அவனையே நினைந்து,

“புண்ணியம் முட்டாள் பொழிமழை தரூஉம்
அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம்” (16: 48-51)

பெருமையுடன் வாழ்கின்றாள். சாதுவனும் நாகர்க்கு நல் அறம் கூறித்தெருட்டி வந்து ஆதிரையுடன், “தன்மனை நன்பல தானம்” செய்கின்றான்.

11. இராசமா தேவி: இவள் சோழன் மாவண் கிள்ளியின் மனைவி; உதயகுமரனைப் பெற்ற தாய். சீர்த்தி யென்பது இவள் இயற்பெயர். இவள் மாவலியின் குலத்து வந்தவள் என்பார், நம் சாத்தனார்,

“நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னும் திருத்தகு தேவி” (19: 51-5)

என்று கூறுகின்றார். இவ் வரசியை முதற்கண் நமக்குக் காட்டலுற்ற சாத்தனார், சோழர் பெருமான் கண்டு உளம் சிறக்கும் விரைப்பூம் பந்தரும் பிற இனிய காட்சிகளும் அமைந்த வேனிற் பூம்பொழிற் கண் கொணர்ந்து நிறுத்துகின்றார். அப்பொழிற் சிறப்பை,

“கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட,
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய,
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
விரைப்பூம் பந்தர்” (19: 57-60)

முதலியவற்றை விரித்துரைக்கின்றார்.

உதயகுமரன் இறந்தது கேட்டு வருந்தும் இவட்குத் தேறுதல் கூறற்கு வந்த வாசந்தவை யென்பாள், அவன் சாக்காட்டினை இகழ்ந்து,

“தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது!
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்
துன்பம் கொள்ளேல்” (26: 17-20)

என்று சொல்லிவிட்டுப் போகின்றாள். மகன் இறந்த துயரமும் வாசந்தவை சொன்ன இகழ்ச்சி யுரையும் அரசியின் உள்ளத்தைச் சிதைக்கின்றன. மணிமேகலை பால் அவட்கு ஆறாச் சின முண்டா கிறது. மணிமேகலையின் நிலைமையைக் கெடுக்க வேண்டுமென்று ஒரு தீய நினைவு உண்டாகிறது. இதனை மறைத்துக் கொண்டு, அரசன்பாற் சென்று, முதற்கண் தன் மகனை இகழ்ந்து,

“பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தான்இலன்”

என்று கூறி,

“கரும்புடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறைதக் கன்று செங்கோல் வேந்து” (23: 25-30)

என்று செப்புகின்றாள், அரசன் மகிழ்ந்து, சிறை வீடு செய்கின்றான். மணிமேகலையைத் தானே அழைத்துச் சென்று தீங்கு செய்யின் பழியாமென்று கருதி, அவளே தன்னோடு இருக்க வருமாறு,

“என்னோடு இருப்பினும் இருக்க; இவ் இளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்” (23; 35-36)

என்று சொல்வது அவளது சூழ்ச்சித் திறனைக் காட்டுகிறது.

தன் மனையிடத்தே மணிமேகலைக்கு அவள், மயக்க மருந்து கொடுக்கின்றாள்; கல்லா இளைஞன் ஒருவனை யழைத்து அவளைக் கற்பழிக்க முயல்கின்றாள்;

“மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று
உய்யா நோயின் ஊண் ஒழிந்தனளெனப்
பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை” (23: 58-60)

ஒன்றில் அடைக்கின்றாள். இவற்றாலெல்லாம் மணிமேகலை சிறிதும் மேனி வருந்தாது இருப்பக் கண்டு, அஞ்சி நடுங்கி, உண்மை யுரைப்பாளாய்,

“செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்!
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்னே ரனையாய்! பொறுக்க” (23: 64-66)

என்று வணங்குகின்றாள். அவள் வணங்குவது தகாது எனக் கருதி மணிமேகலை தானும் அவள் அடிபணிந்து தன் மாண்பினை நிறுவிக் கொள்கின்றாள். பின்பு சித்திராபதி போந்து மணிமேகலை யைத் தன்பால் விடுக்க வேண்டுமென்று வேண்டியபோது, நல்லறிவு பெற்ற இராசமாதேவி,

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக்களவு மென்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்;
என்னொடு இருக்கும் (24; 77 - 82)

என்று கூறித் தன் பெருந்தன்மையைப் புலப்படுக்கின்றாள்.

12. சித்திராபதி: இவள் மாதவியின் நற்றாய்; நாடகக் கணிகையர்க்குள்ள நலமும் தீங்கும் திரண்டு உருக்கொண்டாற் போல்பவள். இவட்கு மாதவியும் மணிமேகலையும் அறம் கேட்டு மாதவர் உறையும் பௌத்த சங்கத்தில் இருப்பதில் சிறிதும் விருப்பம் கிடையாது. காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழாவில் மாதவியும் மணிமேகலையும் கலந்து கொள்ளாது புத்த சங்கத்தில் இருப்ப தனால் இவள் மிக்க வருத்த மடைகின்றாள்.

“தீவகச் சாந்தி செய்தரு நன்னாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர,” (2 ; 3 -5)

இச் சித்திராபதி மிகமிக வருந்துகின்றாள்; ஊரவர் அலர் கூறுகின்றனரெனக் கூறி வருமாறு வயந்தமாலையைச் சங்கத்துக்கு விடுக்கின்றாள். மணிமேகலையின் நலம் புனைந்து கூறி, உதய குமரனுக்கு அவள்பால் தீரா வேட்கை யுண்டாகச் செய்தவளும் இவளே என்று மணிமேகலை சுதமதிக்குக் கூறும் கூற்றால் உணர நிற்கிறது. உதயகுமரனும், பளிக்கறையில் சுதமதியிடம், “வஞ்சி நுண்ணிடை மணிமேகலைதனைச், சித்திராபதியால் சேர்தலும் உண்டு” (5: 81-2) என்று உரைக்கின்றான்.

மணிமேகலை அமுதசுரபி யேந்தி அம்பலம் புக்கது கேட்டு, இச் சித்திராபதி கொள்ளும் சினத்துக்கு எல்லையில்லை.

“மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக் கன்றே; நன்னெடும் பேரூர்
இதுதக் கென்போர்க்கு எள்ளுரையாயது” (18: 8-10)

என்று தொடங்கி, நாடகமகளிரின் இயல்பெல்லாம் விடாது வாய்விட்டுரைத்து, சூள் ஓன்றும் செய்துவிடுகின்றாள், அஃதாவது, மணிமேகலையை உதயகுமரனால் பற்றுவித்து அவன் பெற்றோர் மேல் அவளைக் கொணரச் செய்வது ஒன்று; இன்றேல்,

“சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையே னாகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகா மரபினன்” (18; 33-36)

ஆவேன் என்பது மற்றொன்று. இவ்வாறு சூள்செய்தவள் உதய குமரனை அடைகின்றாள். அவன் தனக்குச் சுதமதி, மணிமேகலா தெய்வம் முதலியோர் கூறியதைக் கூறுகின்றான். அவனைத் தெளிவிக்குமுகத்தால் பல கூறி முடிவில், அவன் தடையின்றி முற்படுமாறு, மிக்க விரகுடன்,

“நாடவர் காண நல்லரங் கேறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச்
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன்முறை யன்றோ குமரற்கு” (18; 103-11)

என்கின்றாள். அவனது பேதையுள்ளம் அவள் நினைத்தவாறே பிறழ்ந்துவிடுகிறது.

உதயகுமரன் இறந்ததும், மணிமேகலை சிறைசெய்யப் பட்டதும் இவள் கேள்வியுற்று, அச்சமும் நடுக்கமும் கொள்கின்றாள். இப்பொழுதேனும் மணிமேகலையைத்தான் தன்னோடு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்று ஒரு சூழ்ச்சி செய்கின்றாள். மாதவியால் தன் குடிக்குக் குறைவும் மணிமேகலையால் பட்டினத்துக்குத் தீங்கு முண்டாகுமென்று அரசமாதேவிக்குச் சொல்லி, அவள் மனத்தை மாற்றித் தன் கருத்தை முற்றுவிக்கக் கருதுகின்றார்; அதனால் அவள் தேவிபால் வந்து முதலில் தனக்குண்டான குறையை,

“யானுறு துன்பம் யாவரும் பட்டிலர்;
பூவிலை யீத்தவன் பொன்றின னென்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி
அரங்கக் கூத்திசென்று ஐயங் கொண்டதும்
நகுத லல்லது நாடகக் கணிகையர்
தகுதி யென்னார் தன்மை யன்மையின்” (24; 17-24)

என்று சொல்லி, மணிமேகலையால் நகர்க்குத் தீங்கு முண்டாம் என்பதை, முன்நாளில் நெடுமுடிக்கிள்ளி யென்பான், பீலிவளை யென்பாளைத் தேடிச் சென்றபோது சாரணன் ஒருவன் தோன்றி, “இந் நகரத்தே இந்திர விழா நிகழாதொழியின் கடல்கோள் நிகழும்; மணிமேகலா தெய்வத்தால் பிறந்த இந்திர சாபம் இது” என்று கூறியது சொல்லி, இப்போது,

“தன்பெயர் மடந்தை துயருறு மாயின்
மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென
அஞ்சினேன் அரசன் தேவி” (24;72-74)

என்று உரைத்துத் தேவியை வணங்கிப் பணிவுடன் இரந்து,

“நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருக” (24; 75-76)

என்று வேண்டுகின்றாள். ஈங்கும் அவள் மனத்தே மணிமேகலை ஒரு தவமகள் என்று தோன்றவில்லை; நாடகக் கணிகையென்று அவள் நவிலுதல் காண்க. ஆனால், தேவியோ மறுத்துவிடுகின்றாள். சித்திராபதி மனம் உடைந்து போய்விடுகின்றாள்.

V.நூலுட் காணப்படும் சில வரலாற்றுவமைகள்:
இந் நூலுள் வைதிக சமயப் புராண வரலாறுகள் பல உவமை களாகக் காட்டப்படுகின்றன. இவ் வரலாறுகளின் குறிப்புக்களே காணப்படுதலின், இந்நூலாசிரியர் காலத்தே, இவை மக்களிடையே நன்கு பயின்றிருந்தமை புலனாகிறது. முருகன் கிரவுஞ்ச கிரியை எறிந்த வரலாறு, “குருகு பெயர்க் குன்றம் கொன்றோனன்ன நின் முருகச்செவ்வி” (5: 13-14) என்றும், திருமால் இராமனாய்த் தோன்றிக் கடலணையிட்ட செய்தி, “நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரு முந்நீ ரடைத்த ஞான்று, குரங்கு கொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம், அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு” (17; 9-12) என்றும், திருமால் வாமனனாய்த் தோன்றி மாவலிபால் நிலம் பெற்றது, “நெடியோன் குறளுருவாகி நிமிர்ந்து தன், அடியிற் படியை அடக்கிய அந்நாள், நீரிற் பெய்த மூரிவார் சிலை மாவலி” (19: 51-4) என்றும், அசுரர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவு கொண்டு கூத்தாடியது, “திருவின் செய்யோள் ஆடிய பாவை” (5:4) என்றும் நெடியோன் கண்ணனாய்த் தோன்றி இடையர் சேரியில் விளையாடிய செய்தி, “மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும், ஆடிய குரவை யிஃதாம்” (19: 65-6) என்றும், இந்திரன் அகலிகைபாற் பெரு வேட்கை கொண்ட செய்தி, “மாதவன் மடந்தைக்கு வருந்து துயரெய்தி; ஆயிரஞ்செங்கண் அமரர்கோன் பெற்றது” (18: 90-1) என்றும். இந்திரன் மகன் சயந்தனை அகத்தியன் சபித்ததும், அங்கிக் கடவுள் முனிவர் மகளிர்பால் வேட்கையுற்றதும், காமன் தன் மகன் பொருட்டு வாணன் நகரில் பேடிக் கூத்தாடியதும், விசுவாமித்திர முனிவன் பசி மிக்கு நாயூன் தின்றதும் பிறவும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

இவர் காலத்தே உதயணன் கதை நாட்டில் நன்கு பரவியிருந் திருக்கிற தென்பதற்குச் சான்றாக, உதயணனைப் பிரச்சோதனென்ற அரசன் வஞ்சனையாற் பற்றிக்கொண்ட போது, அவ் வுதயணன் மந்திரியாகிய யூகி, தன் சூழ்ச்சியால் மீட்ட வரலாறு, “கொடிக்கோ சாம்பிக் கோமகனாகிய, வடித்தேர்த் தானை வத்தவன் றன்னை, வஞ்சஞ் செய்துழி வான்றளை விடீஇய, உஞ்சையிற் றோன்றிய, யூகி யந்தணன் உருவுக்கு” (15: 61-5) என்று குறிக்கப் பெறுகிறது. திருவள்ளுவர் தம் திருக்குறளில், “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்ற அப், பொய்யில்புலவன் பொருளுரை தேறாய்” (22: 59-61) என்று காட்டப்படுகிறது.

கரிகால் வளவன், முதுமை வடிவு கொண்டு, தன் இளமை குறித்து இகழ்ந்தோர் வியப்ப, நீதி வழங்கிய செய்தி, ‘இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்’ (4: 107-8) என்று குறிக்கப் பெறுகிறது. இந் நூற்பதிகம் காவிரிப்பூம் பட்டினத்தின் வரலாறு கூறுகிறது. தொடித்தோட் செம்பியன் தூங்கெயி லெறிந்ததும், மனுச்சோழன் மகனை முறைசெய்ததும், சேரன் செங்குட்டுவன் ஆரிய வரசரை வென்று கண்ணகிக்குக் கோயிலெடுத்ததும் இந் நூற்கண் குறிக்கப்பெறுகின்றன.
இந்நூலின் இடையிடையே வேறு பல வரலாறுகள் காட்டப் படுகின்றன; அவற்றை ஈண்டு விரித்தோதின் பெருகுமாதலின் இவ்வளவில் நிறுத்துகின்றாம்.

VI. இயற்கை நலம் கூறல்:
விழாக் காலங்களில் மக்கட்கு விழாவைத் தெரிவிக்கும் மரபும், விழா நிகழும் நகரை மக்கள் இன்ன வகையில் புனைதல் வேண்டுமெனக் காட்டலும் விழா வறை காதையில் குறிக்கப்படுகின்றன. ஊரலர் உரைத்த காதையில் நாடக மகளிர்க்கென வகுத்த கூத்தும், இசையும், கணிதமும் ஏனைக் கலைகளும், ஓவியமும் சுருங்கக் குறிக்கப் படுகின்றன. விழாக் காலத்தே தொகுகின்ற மக்களிடையே துறவிகளும், விடரும் தூர்த்தரும், கட்குடித்தோரும், பித்தரும், பிறரும் வந்து தொகுவது இயல்பன்றோ; அவர்களை மக்கள் கூடி இகழ்ந்துரைத்து மகிழ்வது முண்டே. அவையாவும், மலர் வனம் புக்க காதைக்கண் உரைக்கப்படுகின்றன.

பளிக்கறை புக்க காதையிலும், சிறைக் கோட்டம் அறக் கோட்டமாக்கிய காதையிலும் பிறாண்டும பூம் பொழில்களின் இயற்கை யழகுகள் எடுத்தோதப்படுகின்றன. கச்சிமா நகர் புக்க காதை அந் நகரின் பல்வேறு தெரு நலங்களும் பிறவும் கூறுகின்றது.

இவையே யன்றி அந்திமாலைச் சிறப்பும், விடியற் சிறப்பும், மிக அழகாகக் கூறப்படுகின்றன. மணி மேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில், அந்திமாலைப் போதினை ஒரு பெண்ணாக நிறுத்தி,

“குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும்
வெள்ளிவெண் தோடு பொற்றோ டாக
எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்,
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை யடைக்க,
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மட லேற,
அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்ப,
பவளச் செங்கால் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப,
கன்றுநினை குரல மன்றுவழிப் படர,
அந்தி யந்தணர் செந்தீப் பேண,
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப,
யாழோர் மருதத்து இன்னரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள,
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு
அந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
வந்திருத் தனளால் மாநகர் மருங்கு” (5:119-41)

என்று பாடியிருக்கும் இப் பகுதியும், விடியற் காலத்தைத் சொல்லணி நயந்துறும்,

“காவ லாளர் கண்துயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்க
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப,
பணைநிலைப் புரவி பலஎழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக்
காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்” (7; 111-26)

என்று பாடியிருக்கும் இப் பகுதியும், ஒவ்வொருவரும் நன்கு சுவைக்கும் இனிய நலம் பொருந்தி யிருப்பதைக் காணலாம்.

VII. நூலின் பொதுநிலைக் கருத்து;
இந்நூலுட் கூறப்படும் வரலாறும் பிறவமைதிகளும் பொதுவாக வைத்து நோக்கின், இந் நூலாசிரியர் பெண்மையின் அமைதியும், பெண்ணின் பத்தின் சிறுமையும் விளக்கும் கருத்தினராதலைக் காணலாம். உதயகுமரன் வாயிலாக ஆண்மகனுக்குப் பெண்ணின்பத்தை நுகர்தற்கு எழும் வேட்கையை விரித்தோதுவார் அதன் இயல்பை,

“சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமம் காழ்க்கொளின்” (5: 19-20)

என்றும், பிறாண்டும், “மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று, பற்றினன் கொண்டு” (20: 14-6) வருவேன் என்றும் அவனே கூறுதலால் நாம் உணரச் செய்கின்றார்.

மணிமேகலைக்கும் இவ்வுதயகுமரன்பால் வேட்கை யெழுந்து அவள் உள்ளத்தை அலைக்கின்றது. அவளே தனக்கு உண்டாகும் வேட்கையின் இயல்பை,

“கற்புத் தானிலள்; நற்றவ வுணர்விலள்;
வருணக் காப்பிலள்; பொருள்விலை யாட்டி யென்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது,
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்;
இதுவோ அன்னாய் காமத் தியற்கை” (5: 86-90)

என்று கூறுகின்றாள், உதயகுமரன் போலாது, அறவோர் கூட்டுறவும், பழம்பிறப் புணர்வும் பிறவும் பெற்றிருந்தும், மணிமேகலை, உலகவறவிக்கண் காஞ்சனனும் உதயகுமரனும் ஒருங்கிருப்ப, அவ் வுதயகுமரன் பகலிலே சென்று நின்று நயமாக உரைக்குமாறு செய்துவிட்டது இவ்வேட்கையெனின், ஆண் பெண் இரு பாலாரி டத்தும் எழும் வேட்கை, இருவர் நிறையையும் ஒருங் கழிக்கும் வன்மையுடைய தென்பதை ஆசிரியர் ஓராற்றால் நிறுவி விடுகின்றார்.

இதன் தோற்றுவாய் பெண்ணுடம்பில் இருக்கிற தென்று காட்டுவார், மணிமேகலை வாயிலாக, நரை மூதாட்டி ஒருத்தியின் வனப்பிழந்த மேனியை வகுத்துக் காட்டி,

“பூவினும் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத்
தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே” (20: 67-9)

என்று முடிவு கட்டுகின்றார்.

இதனால் மகளிர் தம்மைக் காத்துக் கொண்டு ஒழுகும் கடப்பாடுடையர் என்பார் போலப் பலவிடங்களில் அவர்கட்கு வேண்டும் ஒழுகலாறுகளை வற்புறுத்துகின்றார்.

“காதலர் இறப்பின், கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்துஅகத் தடங்காது
இன்னுயி ரீவர்; ஈயா ராயின்,
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்;
நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து” (2: 42-8)

என்றும்,

“காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரி புகூஉம் முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர்” (18: 11-5)

என்றும்,

“கன்னிக் காவலும் கடியிற் காவலும்
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்” (18: 98-102)

என்றும்,

“மண்டினி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகார்” (22: 45-6)

என்றும் கூறுவனவற்றாலும் பிறவற்றாலும், நன்மகளிர்க் குரிய ஒழுகலாறுகளை நன்கு பலமுறை வற்புறுத்துதலைக் காணலாம்.

உதயகுமரன் வரலாற்றாலும், ககந்தன் மக்கள் வரலாற்றாலும் ஆண்மகனுடைய வரம்பிகந்த காமமே கொடிதெனக் காட்டி வற்புறுத்துகின்றார். இதனை,

“பத்தினி யில்லோர் பலவறம் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டும் அறிதியோ” (22: 117-9)

என்று கூறுதலால் அறியலாம். பத்தினியுடன் கூடியுறைவோர் கோடற்குரிய வேட்கை, மகப்பேறு கருதியதேயன்றிப் பிறிதில்லை யென்பது ஒரு சாரார் கருத்து. அதனை மறுத்து, இந் நூலாசிரியர், பத்தினிக்கூட்டம் அறஞ்செய்தற் பொருட்டேயன்றி மகப்பேற்றின் பொருட்டன்று என்பார்,

“இளமையும் நில்லா - யாக்கையும் நில்லா;
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா;
புத்தே ளுலகம் புதல்வருந் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை யாவது” (22: 135-8)

என்று ஓதுகின்றார்.

இக்கருத்துக்களோடு வினையுணர்வு ஒன்று இந்நூன் முழுதும் ஊடுருவிச் சென்று நிலவுகிறது. இதனை முன்பும் கூறினோம். ஈண்டு ஒன்றே கூறுவோம். இவ்வுடல் “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது” (4: 113); “உம்மை வினைவந்து உருத்தல் ஒழியாது” (26:32) வினைநீக்கமே வீடுபேறு என்பது. இதனை, உதயகுமரன் இறந்த செய்தியை அவன் தந்தை மாவண் கிள்ளிக்குக் கூறவந்த அறவோருள் ஒருவர் கூறுமாற்றால் அறியலாம்:

“மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்
உதய குமரன் ஒழியா னாக,
ஆங்கு அவள் தன்னை அம்பலத் தேற்றி,
ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்குய்த்துக்
காய சண்டிகைதன் கணவ னாகிய
வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென
வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி,
ஆங்கவன் தன்கை வாளால் அம்பலத்து
ஈங்கிவன் தன்னை எறிந்தது”(வினை) (22: 194-203)

என்பது அவ்வறவோர் வினைமேல் ஏற்றிக் கூறிய கூற்றாகும். இவ் வண்ணமே, மணிமேகலை அரசமாதேவிக்கு, அவள் மகன் இறந் தற்குக் காரணம் முன்னை வினையெனப் பழம் பிறப்புக் கூறி,

“மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல்துணி செய்தாங்கு உருத்தெழும் வல்வினை,
நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி
விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே” (23: 82-5)

என்று அறிவுறுத்துகின்றாள்.

VIII. இந் நூலாசிரியர் காட்டிய தருக்க முடிவு பற்றிச் சிறு குறிப்பு;
இந் நூலில் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் வரும் தருக்க முடிபுகளைப் பற்றி ஆசிரியர் டாக்டர். உ.வே. சாமிநாதையர் பலவாறு முயன்று விளக்கம் பெறாது விட்டு விட்டனர். ஆனால், அவர்க்குப் பின் பலர் இவற்றைத் தம்மால் இயன்றவரை முயன்று ஆராய்ந்திருக்கின்றனர். அவ் வாராய்ச்சியின் குறிப்பை இங்கே தருவது முறையாதல் பற்றிக் குறிக்கின்றோம்.

இத் தருக்க முடிபுகளை யாராய்ந்து கண்ட டாக்டர். திரு. S.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் இவை தின்னகர் காலத்துக்கு முற்பட்டனவாதல் வேண்டும் என்கிறார்; மகா மகோபாத்தியாய S.குப்புசாமி சாத்திரியார் அவர்களும், எச்.சாக்கோபி (Hermann Jacobi, Professor of Sanskrit, University of Bonn) என்பாரும், இந்நூன் முடிபுகள் வடமொழியிலுள்ள நியாயப் பிரவேசம் என்ற நூன் முடிபை அடிப்படையாகக் கொண்டன வென்றும், ஆகவே இம் மணிமேகலை, தின்னகர் காலத்திற்குப் பிற்பட்டதாகல் வேண்டும் என்றும்கூறுகின்றனர். தின்னகர் கி.பி.நான்காம் நூற்றாண்டில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு; நியாயப் பிரவேசத்தை இயற்றிய ஆசிரியர் சங்கரசுவாமி என்பாரும் அந்த நான்காம் நூற்றாண்டினரே என்பர்.

திரு. அய்யங்காரவர்கள், “இந் நூல், ‘ஆதி சினேந்திரன் அளவை யிரண்டே, ஏதமில் பிரத்தியம் கருத்தளவு என்ன’ (29: 47-8) என்றது கொண்டு, இந் நூலாசிரியர் காட்சி, அனுமானம் என்ற இரண்டையுமே அளவையாகக் கொண்டனர்; தின்னகர் நையாயிகர் கூறும் நான்கும் கொண்டு ஆராய்ந்து இறுதி யிரண்டையும் விலக்கி முதலிற் கூறும் இரண்டையுமே கொண்டனர் பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்று ஐந்துள; அவற்றில்……. ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும். திட்டாந்தத்திலே சென்றடங்கும்” (29: 57-8; 109-10) என்றது கொண்டு, “இந் நூலாசிரியர், பக்கம், ஏது, திட்டாந்தம் மூன்றுமே கொண்டார்; தின்னகர் இவ்வைந்தை யுமே கொண்டொழிந்தார். தின்னகர் அனுமானத்தைப் பரார்த்தானுமானம், சுவார்த்தானுமானம் என வகுத்து நெடிது ஆராய்ந்து பரார்த்தம் சுவார்த்தத்தில் அடங்கும் என்றாராக, இந் நூலாசிரியர் அனுமானத்தை அவ்வகையில் ஆராயவேயில்லை” என்று கூறினார் எனக் காட்டி, அக் கூற்றை மறுத்து, இந் நூலிற் கூறப்படும் தருக்க முடிபுகள் நியாயப்பிர வேசம் என்ற வடமொழித் தருக்க நூலையே மேற்கொண்டிருக்கிற தென்று, எங்கள் கல்லூரி வடமொழி விரிவுரையாளரான திரு. ஐயாசாமி சாத்திரியவர்கள் காட்டுகின்றார்கள்.*

சாத்திரியவர்கள் இந்நூலின் இப் பகுதிக்கு எழுதியிருக்கும் பொருள், நூலில் மூலத்தை வைத்து நோக்கிப் பெரிதும் தூய்மை செய்தற்குரித்தாயினும், இம் மணிமேகலைக்கும் நியாயப்பிரவேசத் துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காட்டி யிருப்பது போற்றத்தக்கது. இப் பகுதியையே சிறிது விரிய ஆராய்ந்து வெளியிடக் கருதுகின்றேனாதலின், தருக்க முடிபு பற்றிய குறிப்பினை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்; இவ்விருவர் கூற்றுக்களின் வன்மை மென்மைகளை ஈண்டுக் காட்டலுறின், இம் முன்னுரை மிக விரியும்.

IX. காப்பிய நிகழ்ச்சி பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பு:
1. மணிமேகலையின் தாயாகிய மாதவி, இசையும் நாடகமும் நன்கு பயின்று அரங்கேறிய காலத்தே புகார் நகரத்தேயிருந்து ஆட்சி புரிந்த வேந்தன் கரிகால் வளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மணிமேகலை அக்கலையில் வல்லுநளாய் மங்கைப்பருவம் எய்துங் காலத்தே மாவண்கிள்ளி யென்பான் புகார் நகரத்தே ஆட்சி புரிகின்றான். இக் கிள்ளியைக் கரிகால் வளவனுக்கு மகனென்றாதல் பிற தொடர்பு உடையன் என்றாதல் இந்நூல் கூறவில்லை. உதய குமரனை மட்டில் “இளமை நாணி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய உரவோன் மருகன்” (4; 107-8) என்று கூறுகிறது. மணிமேகலை காலத்தில் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்த கிள்ளியும் மாவண் கிள்ளியின் தம்பி ஆட்சி புரிந்த கிள்ளியும் தமிழ்ப் பெயரே கொண்டிருப்ப, உதயகுமரன் வடமொழிப் பெயர் கொண்டிருப்பது வியப்பும் ஆராய்ச்சிக்கு இடமும் தருகிறது.

2.  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்குச் சேரன் செங்குட்குவன் மகன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. கண்ணகி கணவனான கோவலன் மதுரையிற் கொலை யுண்டது வஞ்சிநாட்டில் அக் குட்டுவன் இருந்து ஆட்சி செய்த காலமாகும். இஃதிங்ஙன மிருக்க, மணிமேகலை கச்சிநகருள் அறம் பூண்டிருந்த மாசாத்துவானைக் கண்டபோது, அவள், கோவலனுக்கு அவன் குடியில் ஒன்பது தலைமுறைக்கு முன்பிருந்த கோவலன் என்பான் அவ் விமய வரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு “நீங்காக் காதற் பாங்க” னாயிருந்தான் என்றும், அவ்வேந்தனொடு அவனும் கச்சிநகர்க்குப் போந்து தரும சாரணர் உரைத்த அறம் கேட்டுப் புத்த சைத்தியம் ஒன்று கட்டினான் என்றும் கூறுகின்றாள். இதனால், சேரலாதனுக்கும் செங்குட்டுவனுக்கும் இடையே ஒன்பது தலைமுறைக் காலம் கழிந்திருத்தல் தோன்றுவதோடு, சிலப்பதிகாரக் கூற்றுக்கு முற்றும் மாறுபடுவது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுவது போலவே, இந்நூலும் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்று வந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்த செய்தியைச் சிறிதும் மாறு பாடின்றிக் கூறுகிறது. ஆகவே இப்பகுதியும் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது.

X. முடிப்புரை:
இனி, இவ் வாராய்ச்சி யுரையை முடிப்பதன்முன், இக் காப்பிய அமைப்பும் நடையும் பற்றிய சில குறிப்புக்களைக் கூறுவது நலமென்று தோன்றுகிறது. கோவலனுக்கும் மாதவிக்கும் உண்டாய தொடர்பின் பயனாக மணிமேகலை பிறக்க, அவட்குப் பெயரிடும் சிறப்பு நாளில், கோவலன் ஒரு பெரிய சிறப்பினைச் செய்தான்; அவன் அளித்த கொடையைப் பெறுதற்கு மக்கள் பெருங் கூட்டமாய் வந்திருந்தனர்; அப்போது அரசனது பட்டத்தியானை மதங்கொண்டு போந்து, அக் கூட்டத்திருந்த வேதியனொருவனைப் பற்றிக் கொள்ளவே, கோவலன் அவன்பால் இரக்கமுற்று, யானையின் நெற்றியிற் பாய்ந்து அதனை யடக்கி, அவ்வேதியனை மீட்கு மாற்றால் தன் ஆண்மையினை நிலை நாட்டினானென்று சிலப்பதி காரம் கூறுகிறது. பிறந்து பெயர் பெறும் நாளிலே தன் தந்தைக்குப் பெரும் புகழ் விளைத்த மணிமேகலையின் பிறப்பு மாதவி பிறப்புப் போல்வதன்று. சித்திராபதியின் சொல்லும், செயலும் நோக்கின், மாதவிக்குப் பிறப்பு வரலாற்றை இந் நூல் கூறவேயில்லை; மணிமேகலையின் பிறப்பு வரலாறு காண்டல் அரிதாம். அதனாற்றான் இளங்கோவடிகள், கண்ணகி கோவலன் என்ற இருவர் பிறப்புக் கூறியவர், மாதவியின் பிறப்புக் கூறாரா யினார். மாதவியின் குணம் செயல்கள் கற்புடை நன்னெறிய வாதலின், அந்நெறி வழாது பிறந்த மணிமேகலையின் பிறப்புக் கூறாமைக்குக் காரணம் தெரிந்திலது.

மாதவியும் மணிமேகலையும் இந்திரவிழாவிற் கலந்து தம் ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் மக்களை இன்புறுத் தாமையால், ஊரவர் அலர் தூற்றுகின்றார் எனச் சித்திராபதியால் குறிக்கும் இந் நூலாசிரியர், விழாவறை காதையில் இவ் விருவரும் போந்து மேற்குறித்த பணியை ஆற்றற்குரியர் என்பதனைக் குறிக்கவேயில்லை. ஒன்றனைச் செய்தற்குரியார் அதனைச் செய்யாதொழியின் அன்றோ அலர் பிறக்கும்? நாடகக் கலையை அக் காலத்திருந்த அரசரும் பிற சான்றோரும் நன்கு ஆதரித்தனர் என்பதற்குச் சான்றுகள் பல இருக்கின்றவே. நாடக மகளிர் தத்தம் நாடகக் கலை நுட்பத்தை மக்கட்கு நன்கு காட்டுமின் என்பதனை வெளிப்படக்கூறாது, “வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை, ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்” (1: 56-7) என விழாவறை காதை கூறுதலால் எய்துவித்தார் என்று கொள்வதாயின், மேலே காட்டிய குறைக்கு இடமின்றாம்.

ஆபுத்திரன் மணிபல்லவத்தில் மணிமேகலைபால் விடை பெற்றுச் சென்றவன் என்னானான் என்பதும், காஞ்சனன் உதய குமரனை வாளால் எறிந்த தீவினைப் பயனை இன்னவாறு நுகர்ந்தான் என்பதும் குறிக்கப்படவில்லை. கண்ணகி மதுரையை எரித்த தீவினைப் பயனை நல்வினைப் பயனின் இறுதியில் நுகர்ந்து முடிவில் “பிறவி நீத்த பெற்றிய”ளாவள் என்று கூறின இந்நூலாசி ரியர், இவர்தம் முடிவுநிலை கூறாமை ஆராய்தற்குரியதாம். இம் முடிவு நிலையேயன்றி, சித்திராபதியின் பிற்கால வாழ்வும் தெரிந்திலது. அறவணவடிகள் மணிமேகலைக்கு அறம் கூறுவ தோடு நின்றுவிடுகிறார்; அவரது முடிவும் தோற்றம்போலத் திடீரென நின்று விடுகிறது. மணிமேகலை, உதயகுமரன் கையிற் சிக்குண்டு தன் தூய்மை கெடாது நீங்கியிருப்பளேல், இக்காப்பிய அமைதி மிக்க இன்பமாய் இருந்திருக்கும்.

இனி, இந்நூலாசிரியர் பாடியனவாக மேலே காட்டிய சங்க இலக்கியப் பாட்டுக்களையும் இந் நூலிற் காணப்படும் பாட்டுக்களையும் ஒப்பு நோக்கின், இந் நூல் நடை மிக எளிதாக இருப்பது புலனாகும். மேலும், இதன் கண் மிக்க வடசொற்கள் காணப்படுகின்றன. சங்க காலத்தும், அதனையடுத்து வந்த சிலப்பதி காரக் காலத்தும் காணப்படாத சொல் வழக்குகள் இந் நூலிற் காணப்படுகின்றன. ஏது நிகழ்ச்சி, ஆங்கனம், ஈங்கனம், ஆங்கு, ஈங்கு முதலியன மிகுதியும் பயில்கின்றன, அ,இ என்ற சுட்டிடைச் சொற்கள், அந்த, இந்த எனத் திரிந்து வழங்கும் வழக்குக் கம்பர் காலத்துக்குச் சிறிது முன்னர்த்தான் பயிலுவதாயிற்று. இவ்வழக்கு, சங்க நூற்களுள்ளே கிடையாது. இந் நூலில் இஃது நன்கு வழங்கு கிறது. “முறைமையின் இந்த மூதூரகத்தே” (26:63) என்றும், “இந்த ஞாலத்து எவ்வகை யறிவாய்” (27: 285) என்றும், “ அந்த உதவிக்கு ஆங்கவள் பெயரை” (29:30) என்றும் வருதல் காண்க.

மேலே கூறியவாறு, இந் நூல் நடை சங்க இலக்கியங்களிற் காணப்படும் செய்யுள் நடையின் வேறுபட்டிருந்தலாலும், சங்கச் செய்யுளிற் காணப்படாத வழக்காறு சில இந்நூலிற் காணப்படு தலாலும், இந்நூலுட் காணப்படும் அரசர் வரலாறுகள் சில வரலாற்று நெறிக்கண் நோக்கியவழி மயக்கந் தருதலாலும் இந்நூலை ஆக்கிய சீத்தலைச் சாத்தனாரது வரலாறு ஆராய்தற் குரியதா கின்றது. சிலப்பதிகாரம் இந்நூலாசிரியரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்காது, வறிதே சாத்தன் என்றே கூறுகிறது. இந்நூற் பதிகம் மட்டில் “மதுரைக் கூலவாணிகன் சாத்தன்” என்று கூறுகிறது. தொல்காப்பிய உரைகாரர்களும் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்கின்றனரே யன்றி, “மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்” என்று கூறவில்லை. ஆகவே, இச் செய்தி மிக ஆர அமர இருந்து ஆராய்தற்குரிய தென்பது விளங்கும்.

இவ்வரிய நூலுக்கு ஆசிரியர் டாக்டர். உ.வே.சாமி நாதையர் அவர்கள் அருஞ்சொற் குறிப்பெழுதி வெளியிட்டிருக் கின்றார்கள். இதற்கு விரிந்ததோர் உரை நாவலர் பண்டித. ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களைக் கொண்டு எழுதுவித்துப் பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகத் தமிழ்ப்புரவலர் திருவாளர் மு.காசிவிசுவநாதன் செட்டியாரவர்கள் பதித்து வருவது மகிழ்தற்குரியதாகும்.

இப்பெரு நூலைச் சுருக்கித் தர வேண்டுமென்று என்னைத் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் பணித்தனர். அவர்கள் நம் செந்தமிழ்க்குச் செய்து வரும் திருப் பணியினை நன்கு கண்டிருக்கும் என் போன்றார், தம் அறிவிற்கு எட்டாத ஒன்றாயினும், இயன்றவளவு செய்தளிக்கும் கடமை யுடையராவர் என்பதை யுணர்ந்து இதனைச் செய்யலானேன்.

ஒன்றிற்கும் பற்றாத என்னை இத் துறையில் இயக்கும் உமை யொரு பாகன் திருவருட்கும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும் என் பணிவான நன்றியைத் தெரி வித்துக் கொள்ளுகின்றேன்.

“தென்தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன்சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.”

திருப்பதி

25.10.42

ஒளவை. சு. துரைசாமி

முன்னுரை


வட இமயத்துக்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட நிலப் பரப்பாகிய நம் நாட்டுக்குச் சம்புத்தீவு என்பதும் ஒருபெயர். மிகப் பழைய தொருகாலத்தே வடமேருவின் உச்சியில் சம்பு என்பாள் ஒருத்தி தோன்றினாள். அவள் செஞ்ஞாயிறுபோல ஒளிதிகழும் மேனியும், விரிந்த சடையும் கொண்டிருந்தாள். அக்காலத்தே இந்நாட்டில் அரக்கர் தோன்றி நாட்டுமக்கட்கு நாளும் பெருந் துன்பத்தைச் செய்து வந்தனர். அவர்களது பகைமையைக் கெடுத்து நாட்டில் நல்வாழ்வு நிலவுவித்தற்கு அவள் தென்னாடு நோக்கி வந்தாள்.

தென்னாட்டிற்கு வந்த சம்பு, அக்காலத்தே கீழ்க் கடற் கரையில், சம்பாபதி என்றொரு பேரூர் இருப்பது கண்டாள். அதன் பெயர் தன் பெயரோடு ஒற்றுமைப்பட்டிருப்பது கண்டு, அதன் கண்ணே தங்கினாள். அந்நாளில் அப்பேரூரையும் அதனைச் சூழவிருந்த நாட்டையும் ஞாயிற்றின் வழித்தோன்றல்களான சோழ வேந்தர் ஆட்சி புரிந்து வந்தனர்.

சோழ மன்னருள் காந்தன் என்பவன் ஆண்டுவருங்காலத்தில் நீர் அருகி இன்மை மிகுதியாயிற்று. அவன் நீர் வேண்டிப் பெரு நோன்பு ஆற்றினான். அக்காலத்தே மேற்கே குடமலையில் *அகத்திய முனிவன் இருந்துவந்தான். இவன் காந்தனது நீர் வேட்கை யறிந்து, தன் கைக்குடத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து ஓர் யாறாகப் பெருகி யோடச் செய்தான். அவ் யாறு சம்பாபதிக்கு அயலே வந்தது. அதுவே காவிரி என வழங்கப்படுவது. அதன் வரவு கண்ட சம்பு என்பாள் மகிழ்ந்து எதிர்கொண்டு, “என்1 வேணவா தீர்த்த விளக்கே, வருக” என்றாள். அவளை அக் காவிரி வழிபடுவதை முனிவன் அகத்தியன் முகமலர்ந்து நோக்கி, “அன்னாய், இவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தன்மையள்; நீ வணங்கு” என்று சொன்னான். அதனைக் கேட்டதும்,

2பாடல்சால் சிறப்பின் 3பரதத்து ஓங்கிய
4கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி,
5கோள்நிலை திரிந்து கோடை நீடினும்,
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை

ஆகிய அக்காவிரி தொழுது நிற்க, சம்பு மிக்க உவகை பூத்து, “உலகுயிர்களைப் படைத்த செம்மலர்க் கடவுள், படைப்புக் காலத்தே இவ்விடத்துக்குச் சம்பாபதி என என் பெயரை வைத்தான்; இனி, இதற்கு நின்பெயரை இட்டுக் காவிரிப்பூம்பட்டினம் என்கின் றேன். இன்று முதல் இதற்கு இப்பெயரே நிலவுக” என்றாள். அவ்வண்ணமே காவிரியின் பெயராகிய காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் நின்று நிலவுவதாயிற்று.

விழாவறை காதை


சோழ நாட்டைத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்பவன் ஆட்சி புரிந்துவரும் நாளில், அகத்தியன் ஒருநாள் அவனிடம் வந்து, “இக் காவிரிப்பூம்பட்டினம் மிக்க சீரும் சிறப்பும் எய்துவது வேண்டி, வானவர் தலைவனுக்கு விழா அயர்க” என்று தெரிவித்தான். அதற்கிசைந்த சோழன், இந்திரனை வணங்கி, “யான் அயரவிருக்கும் இந்திர விழா இருபத்தெட்டு நாள் நிகழும், அக்கால முழுவதும் நீ வானவர் சூழ என் நகர்க்கண் வந்திருத்தல் வேண்டும்” என வேண்டினன். இந்திரனும் அவ்வண்ணமே வந்திருந்தான். அது முதல் ஆண்டுதோறும் அவ்விழாக் காவிரிப் பூம்பட்டினத்தே நடந்து வந்தது.

தமிழ் நாட்டின் முப்பகுதிகளுள் சேர நாட்டைச் செங் குட்டுவனும், பாண்டிய நாட்டை வெற்றிவேற் செழியனும் ஆட்சி புரிந்துவர, இச்சோழ நாட்டை நெடு முடிக்கிள்ளி என்பான் ஆண்டு வந்தான். இவன் சேரன் செங்குட்டுவனுக்கு மைத்துனன். அதனால், இவனை அவன் “மைத்துனவளவன் கிள்ளி” என்று கருதினான்.

இக்காலத்தே, கோவலன் மதுரையில் கொலையுண்ட நிகழ்ச்சிக்குப் பின், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த 1சமயக் கணக்கரும், 2அமயக்கணக்கரும், பல்வேறு மொழி வழங்கும் வணிகர்களும், 3ஐம்பெருங் குழுவும், 4எண் பேராயமும் ஒருங்கு கூடி, “இவ் யாண்டில், நாம் இந்திரவிழா செய்யாவிடின், முசுகுந்தன் என்னும் சோழ மன்னனுக்குத் துணைசெய்த பூதம் நமக்கு இடும்பை செய்யும்; சதுக்கப் பூதமும் நகரை விட்டு நீங்கிவிடும்; ஆதலால், இந்திரவிழா கால் கொள்ளல்வேண்டும்” என முடிபுசெய்து, முரசறையும் குடியிற் பிறந்த வள்ளுவன் ஒருவனை அழைத்து, “நகர மக்கட்கு இந்திரவிழா நடக்கும் தினத்தைத் தெரிவிக்க” என்றனர்.

அது கேட்ட வள்ளுவன் வச்சிரக்கோட்டம் சென்று, அங்கே இருந்த முரசத்தை யானையின் கழுத்தில் ஏற்றி, “திருவிழையும் இப்பெருமூதூர் வாழ்க; நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லையாகுக; 1வசியும் வளமும் சுரக்க” என்று வாழ்த்தி, பின்பு,

“வானம் மும்மாரி பொழிக; மன்னவன்
கோள்நிலை 2திரியாக் கோலோன் ஆகுக;
3தீவகச் சாந்தி செய்தரும் நல்நாள்,
ஆயிரங் கண்ணோன் தன்னோடு, ஆங்குள
4நால்வேறு தேவரும், நலத்தகு சிறப்பின்
5பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து,
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்,
இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப்
6பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
7தொல்நிலை யுணர்ந்தோர் துணிபொருள்; ஆதலின்
8தோரண வீதியும் 9தோமறு கோட்டியும்
பூரண கும்பமும், பொலம் பாலிகைகளும்,
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலைக் 10கமுகும், வாழையும் வஞ்சியும்,
பூக்கொடி வல்லியும், கரும்பும் நடுமின்;
பத்தி 11வேதிகைப் பசும்பொன் தூணத்து,
முத்துத் 12தாமம் முறையோடு நாற்றுமின்;
விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்,
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
1கதலிகைக் கொடியும், காழூன்று 2விலோதமும்,
3மதலை மாடமும், வாயிலும் சேர்த்துமின்;
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
4பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக,
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை,
5ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்;
தண்மணல் பந்தரும், 6தாழ்தரு பொதியிலும்,
7புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;
8ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
9பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
10பற்றா மாக்கள் தம்முட னாயினும்;
செற்றமும், கலாமும் செய்யா தகலுமின்”

என்று சொல்லி முரசறைந்தான். மேலும், “இவ்வண்ணம், விழா நடைபெறும் நாலேழ் நாளும் நடத்தல் வேண்டும்; ஏனெனில்,

வெண்மணல் குன்றமும், விரிபூஞ் சோலையும்,
தண்மணல் 11துருத்தியும், தாழ்பூந் துறைகளும்,

தேவரும் மக்களும் தம்முள் ஒத்துத் திரிவர்” என்று முரசு அறைந்து, நால்வகைப்படையும் சூழ வந்த வள்ளுவன் இந்திர விழாவின் இயல் நலங்களை எடுத்து இயம்பினான்.

ஊர் அலர் உரைத்த காதை


இவ்வாறு இந்திரவிழா நடந்துவருநாளில், நாடகமகளிர் தமது நாடகப் புலமை நலத்தைப் பிறர் கண்டு இன்புறக் கண்டு தாமும் இன்புறுவது இயற்கை. இவ்வாறு விழாவிற் கலந்து சிறப்பித்த நாடகமகளிருள் மாதவியும் அவள்மகள் மணிமேகலையும் காணப் படவில்லை. அதனைக் கண்டறிந்த மாதவியின் தாயாகிய சித்திராபதி என்பவள், மாதவியின் தோழியாகிய வயந்தமாலையை நோக்கி, “நீ மாதவிபாற் சென்று, நீயும் மணிமேகலையும் விழாவிற்கு வாரா திருப்பது அறிந்து இவ்வூரவர் அலர் கூறுகின்றனர் என உரைத்து வருக” எனச் சொல்லி மாதவிபால் விடுத்தாள்.
வந்த வயந்தமாலை, மாதவி துறவு பூண்டு, அதற்குரிய கோலமும் கொண்டு இருப்பதைக் கண்டு, உள்ளம் புழுங்கி, “நாடக மகளிர்க்கு இன்றியமையாது வேண்டப்படும் கூத்து, பாட்டு, யாழ் முதலிய அனைத்தும் கரிசறக்கற்று, ஓவிய நூலின் ஒண்பொருளும் தெளிந்து துறைபோகிய நீ, நற்றவம் மேற் கொண்டது நாணுடைத்து என்று பலர் கூடியுரைக்கும் அலர் நலம்தருவதாக இல்லை, காண்” என்றாள். அவட்கு, மாதவி :

1“காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே,
2பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து
நற்றொடி நங்காய்! நாணுத் துறந்தேன்;
காதலர் இறப்பின் 3கனைஎரி பொத்தி
4ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின்,
நன்னீர்ப் 1பொய்கையின் நளிஎரி புகுவர்;
நளியெரி புகா அராயின், அன்பரோடு
2உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்; 3பரப்புநீர் ஞாலத்து
அத்திறத்தாளும் அல்லள்.”

அன்றியும், கணவனுக் குற்ற துயர் பொறாது மதுரை மூதூர்க் கண் அலமந்து தன் மார்பைத் திருகி யெறிந்து, அவ்வூரைத் தீயுண்ணச் செய்த மாபெரும் பத்தினியாகிய கண்ணகிக்கு இம்மணி மேகலை மகளாவாள். அதனால், அவள், அரிய தவநெறிப்படு வதல்லது, நாடக மகளிர்க்குள்ள அவநெறிக்கண் செல்லாள். மேலும், இங்கே, மாதவர் உறையும் இவ்விடத்திற்குப் போந்து, இங்கே எழுந்தருளியிருக்கும் அறவண அடிகளின் திருமுன் சென்று அவர் திருவடியில் வணங்கி, மனம் கலங்கி, என் காதலன் உற்ற கடுந்துயரைக் கூறினேன். அவர், திருவுளம் கொண்டு,

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்,
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; 4பின்னது
அற்றோர் உறுவது, அறிக’ என்றருளி,
5ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
‘உய்வகை, இவை, கொள்’ என்று”

அருளினர்; இதனை என்னைப் பெற்ற சித்திராபதிக்கும், ஏனை மகளிர்க்கும் சென்று தெரிவித்திடுக” என்று உரைத்தாள்.

ஆங்கு அவள் உரைகேட்டு அரும்பெறல் மாமணி,
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று,
6மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
7கையற்றுப் 8பெயர்ந்தனள்.

மலர்வனம் புக்க காதை


மாதவி தன் தோழி வயந்தமாலைக்குத் தன் கணவன் கோவலன் உற்ற துன்பமும், அது வழியாகக் கண்ணகிக் குற்ற கடுந்துயரமும், அவள் பின்னர்ச் செய்தனவும் பிறவும் கூறும்போது ஆங்கிருந்த மணிமேகலை அவற்றைக் கேட்டுப் பெரிதும் வருந்திக் கண்ணீர் வடிக்கலானாள். அதுபோது, மணிமேகலை பூத்தொடுத்திருந் தாளாயினும், அதனை மறந்து அவள் சொரிந்து கண்ணீர் பூமாலையை நனைத்தது. வயந்தமாலை சென்றதும், மணிமேகலை கண்ணீர் சொரிவதைக் கண்ட மாதவி, அவளது கண்ணீரைத் துடைத்து, “நின் கண்ணீரால் நீ தொடுத்த 1தூநீர்மாலை 2தூத்தகை இழந்தது; இனி, நீயே சென்று தூயமலர்களைக் கொணர்க” என்றாள். அங்கே, அம்மணிமேகலையுடன் சுதமதி என்னும் ஒருத்தி மாலை தொடுத்துக்கொண்டிருந்தாள். அவள், மாதவி கூறியதைக் கேட்டு, அஞ்சி, “மாதவி, மணிமேகலை தனித்துச் செல்வது தகுதியன்று, இவளைத் தெருவில் ஆடவர் கண்டால், அகலார்; பேடிகளே, இவளைக் கண்டால் விருப்பமின்றி யொழிவார். மகளிர் தனித்துச் செல்வதால் உண்டாகும் தீங்கு நீ அறியாய்போலும்; யானே அதற்குப் போதிய சான்று, கேள்” எனத் தொடங்கினாள் :

“யான் சண்பை நகரத்தில் வாழ்ந்த கௌசிகன் என்னும் வேதியனுக்கு ஒரே மகள். ஒருநாள் யான் தனியே மலர்வனம் சென்று பூக்கொய்துகொண்டிருந்தேன். அப்போது, மாருதவேகன் என்ற ஒரு விஞ்சையன் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழும் இந்திர விழாவைக் காண்டற்கு வந்தான். வந்தவன், வழியில் மலர்வனத்தில் தனியே இருந்த என்னை வான்வழியாகத் தூக்கிக் கொண்டு வந்தான். அப்போது யானும் அவன் பான்மையேன் ஆயினேன். பின்பு, அவன் என்னை இந்நகர்க்கண் கைவிட்டுக் கண்ணோட்டமின்றி தன் நாட்டிற்குப் போய்விட்டான். அதுமுதல் யான் இங்கே இருப்பேனாயினேன். ஆதலால், மணிமேகலை தனித்தேகுதல் கூடாது.”

இனி, அச் சுதமதி மேலும் கூறலுற்று, “மலர் கொய்யப் போவதாயின், இலவந்திகை, உய்யானம், சம்பாதிவனம், கவேரவனம் என்ற இம்மலர்வனங்கட்குப் போதல் கூடாது” என, அக்கூடா மைக்குரிய ஏதுக்களையும் எடுத்தோதி முடிவில், “உவவனம் போவதே தக்கது” என்று மொழிந்து, அதன் இயல்பைக் கூறத் தொடங்கி,

“அருளும், அன்பும், 1ஆருயிர் ஓம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்,
பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்
உவவனம் என்ப தொன்றுண்டு; அதன் 2உள்ளது,
விளிப்பறை போகாது 3மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு; அதன் உள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
4தாமரைப் பீடிகைதான் உண்டு; ஆங்கு இடின்,
அரும்பு அவிழ்செய்யும்; அலர்ந்தன வாடா;
சுரும்பினம் மூசா 5தொல்யாண்டு கழியினும்”

என்று சொல்லி, “இதன் திறத்தை உரைக்க மறந்தேன்; இதுகேள்,” என மேலும் தொடங்கி, “யாதானுமொரு தெய்வத்தைக் கருத்துட்கொண்டு, ஒரு பூவை அதன்பால் இடின், அப்பூ அத்தெய் வத்தின் அடியைச் சேர்ந்துவிடும்; எதனையும் நினையாது இடின், அது நீங்காது அங்கேயே கிடக்கும். இனி, இத்தகைய பீடிகை அங்கே நிறுவப்பெற்றதற்குக் காரணம் வினவின், கூறுவல்:”

சிந்தை யின்றியும் செய்வினை யுறும் எனும்
1வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்,
செய்வினை சிந்தை இன்றெனின், யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது வாகவும்,
2பயம் கெழு மாமலர் இட்டுக் காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான்;
அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள்
3செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள் :

ஆதலால், மலர் கொய்வதற்கு மணிமேகலையுடன் யானும் போவேன்” என்று இயம்பினாள். அதனை மாதவி உடன்பட்டு மணிமேகலையை விடுப்ப, இருவரும் உவவனம் நோக்கிச் செல்வா ராயினர்.

இருவரும் தேர் செல்லும் தெருவில் செல்லும்போது, உண்ணா நோன்பி ஒருவனைச் சூழ்ந்துகொண்டு, கள்ளுண்ணூமாறு இரந்து கேட்கும் களிமகன் ஒருவனைக் கண்டனர்; அவன் பின்னர் பலர் நின்று கொண்டிருந்தனர். பிறிதொருசார், பித்தனொருவன், அழுவதும் விழுவதும் அரற்றுவதும் கூவுவதும் எழுவதும் தொழு வதும் பிறவும் செய்வது கண்டு மிகப்பலர் கூடி நின்றனர். ஒருபுடை காமன்வாணன் நகரத்தே பேடிக் கோலங்கொண்டு ஆடிய கூத்துப் போல, சிலர் பேடிக் கோலங்கொண்டு ஆடுவதைப் பலர் பார்த்துக்கொண்டு நின்றனர்; பிறிதொரு மருங்கில்,

4சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
5மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
1வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டு

பலர் வியந்து நின்றனர். வேறிடத்தே, மகளிர் பலர் தம் இளஞ்சிறார்களை யானைமீதேற்றி, 2“ஆலமர் செல்வன் மகள் விழாக் கால்கோள் காண்மினோ” எனக் கண்டு நின்றனர்.

இக்கூட்டத்தின் இடையே மணிமேகலையும் சுதமதியும் சென்றனர். மணிமேகலையின் துறவுக்கோலத்தைக் கண்டோருள், பலர் அவளைச் சூழ நின்றுகொண்டு, “அழகமைந்த உருவினை யுடைய இவளை அருந்தவப்படுத்திய தாயோ கொடியவள்; தகவிலள்; இவள் மலர்வனம் புகின், ஆங்கு வாழும் அன்னமும், மயிலும், கிளியும் முறையே இவள் நடைக்கும், சாயலுக்கும், சொல்லுக்கும் தோற்றோடிப் போகும்” என்றெல்லாம் பரிந்து கூறினர். இவற்றைப் பொருள் செய்யாமல்,

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்
3திலகமும் 4வகுளமும் செங்கால் வெட்சியும்
5நரந்தமும் 6நாகமும் பரந்தலர் புன்னையும்
பிடவமும் தளவமும் 7முடமுள் தாழையும்
8குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும்
9எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
1சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னோடு
மலர்கொய்யப் புகுந்தனள் மணிமேகலை.

பளிக்கறை புக்க காதை


உவவனம் புக்க சுதமதியும் மணிமேகலையும் காண்பார் கண்களைக் கவரத்தக்க இயற்கையழகு திகழ நின்ற பூங்காவைக் கண்டனர்.

1“பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு
இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்
2குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட,
மழலை வண்டினம் நல்யாழ் செய்ய,
வெயில் நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்,
3மயில்ஆடு அரங்கின் மந்தி காண்பன காண்;
மாசறத் தெளிந்த 4மணிநீர் இலஞ்சிப்
5பாசடைப் பரப்பின் பல்மலர் இடைநின்று,
ஒருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
அரசஅன்னம் ஆங்கு இனி திருப்பக்
கரைநின்று ஆலும் ஒருமயில் தனக்கு,
6கம்புட் சேவல் கனைகுரல் 7முழவாக்
கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய்;
8இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து
வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய
1கோடுடை தாழைக் கொழுமடல் அவிழ்ந்த
வால்வெண் சுண்ணம்ஆ டியது இதுகாண்;
மாதர் நின்கண் போதுஎனச்சேர்ந்து
தாதுண் வண்டினம் மீது2கடி செங்கையின்
அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச்
செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டுஆங்கு
எறிந்தது பெறாஅது இரையிழந்து வருந்தி
3மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண்”

எனச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டி மகிழ்வித்தாள்.

இவ்வாறு இவ்விருவரும் உவவனத்துப் பொழிலும் பொய் கையும் வழங்கும் காட்சியின்பத்தை நுகர்ந்துகொண்டிருக்கையில், நகரத்திடத்தே பெருங் கிளர்ச்சியுண்டாயிற்று. சோழ வேந்தனது பட்டத்து யானையான காலவேகமென்பது மதவெறிகொண்டு நகரவீதியில் திரியலுற்றது; மக்கள் கலக்கமுற்று அலமந்து நாற் புறமும் ஓடலாயினர். இச்செய்தி, சோழவேந்தனான நெடுமுடிக் கிள்ளியின் மகன் உதயகுமரனுக்குத்தெரிந்தது. உடனே, அவன் விரைபரியொன்றின்மேல் இவர்ந்து, விரைந்து போந்து, அவ் யானையை அடக்கி, பாகர்பால் விடுத்து, தான் ஒரு நெடுந்தேர் ஏறி நாடக மடந்தையர் வாழும் தெருவழியே சென்றான். தெருவில் நெடுமனையொன்றின் மேல்மாடியில், தெருப்பக்கத்தே அமைந் திருந்த பள்ளியறைக்கண், நாடக மடந்தை யொருத்தியொடு 4எட்டி குமரன் ஒருவன் யாழொன்றைத் தழீஇக்கொண்டு கிடந்தான். அவனைத் தேரிலிருந்து கொண்டே பார்த்த உதயகுமரன், அவனை யழைத்து, “நினக்கு உற்ற இடுக்கண் என்ன?” இவ்வாறு மயங்கிக் கிடக்கின்றனையே!” என்று வினவினன். அதுகேட்ட அவ்வெட்டி குமரன்,

1“வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்
2தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம்
மாதவி பயந்த மணிமேகலை யொடு
கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற
3நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி,
4வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது;
இதுயான் உற்ற 5இடும்பை”

என்றான். இதனைக் கேட்டதும் உதயகுமரன், “அவ்வா றாயின் யான் சென்று அவளை என் தேர்மீது ஏற்றி வருவேன்” என்று மொழிந்து உவவனம் நோக்கிச் செல்வானாயினன். அவன் அதனைக் குறுகலும், அவனது தேரிற் கட்டிய மணியொலி உவவனத்தின் உள்ளிருந்த மணிமேகலையின் செவிக்கு எட்டியது. உடனே அவள், சுதமதியை நோக்கி,

“சித்திரா பதியோடு உதயகுமரன் உற்று
6என்மேல் வைத்த உள்ளத் தான்என
வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள்
7கிளந்த மாற்றம் கேட்டேன்; ஆதலின்
ஆங்கு அவன் தேரொலிபோலும், ஆயிழை!
ஈங்குஎன் செவிமுதல் 8இசைத்தது;

என் செய்வேன்” என்று மொழிந்து அஞ்சினள். அஞ்சாத சுதமதி அவளை அழைத்துச் சென்று அவ்வனத்திடையே இருந்த பளிக்கறைக்குள் விடுத்துத் தாழிட்டு, வெளியே வந்து, அதற்கு ஐந்து விற்கிடை அகன்று நின்றாள். உதயகுமரனும் அங்கு வந்து சேர்ந்து, சுதமதியைக் கண்டு மணிமேகலைபால் தனக்குள்ள காதற்காமம் தோன்றப் பல சொற்களைக் கட்டுரைத்தான்.

அவன் உரைத்தவற்றை அமைதியுடன் கேட்ட சுதமதி, உதயகுமரனைத் தெருட்டப் புகுந்து,

1“இளமை நாணி முதுமை எய்தி
உரைமுடிவு காட்டிய 2உரவோன் மருகற்கு
அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ?
அனைய தாயினும் யான்ஒன்று கிளப்பல்:
3வினை விளங்கு தடக்கை விறலோய்! கேட்டி:
வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது;
புனைவன் நீங்கின் புலால்புறத் திடுவது;
மூப்பு 4விளிவு உடையது; தீப்பிணி இருக்கை;
பற்றின் பற்றிடம்; குற்றக் கொள்கலம்;
5புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை;
6அவலக் கவலை, கையாறு, அழுங்கல்,
7தவலா உள்ளம் தன்பால் உடையது;
மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து,
மிக்கோய்! இதனைப் 8புறமறிப் பாராய்”

என்று உரைத்தனள். இச்சொற்கள் அவன் செவியிற் புகுந்து உள்ளத்துச் சென்று சேர்வதன்முன், பளிக்கறைக்குள்ளிருந்த மணி மேகலையின் உருவம் அவன் கண்முன் தோன்றிற்று.

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை


பளிக்கறைக்குள் மணிமேகலையின் உருவம் தோன்றக் கண்ட உதயகுமரன் அப்பளிக்கறைக்குட் செல்ல அதன் வாயிலை நாடினன். அது பளிங்கினால் ஆகியதாதலால், அதனைக் காண முடியவில்லை; அவன் அவ்வறையின் புறச்சுவரைக் கையால் தடவிப் பார்த்துச் சுற்றி வந்தான். வரும்போது மணிமேகலையைக் கண்டு, “சுதமதி! நின்தோழியாகிய மணிமேகலை எத்திறத்தாள்?” என்று அவ்வுதயகுமரன் வினவினன். அவனுக்கு அவள்,

“குருகு 1பெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின்
2முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால்
பருகாள். ஆயின், பைந்தொடி நங்கை
3ஊழ்தரு தவத்தள்; 4சாபசரத்தின்
காமற் கடந்த வாய்மையள் என்றே

உணர்தல்வேண்டும்” என்று உரைத்தாள். அதனால் அவன் அமைந்தொழியாது, 5“செவ்வியளாயின் என் செவ்வியளாகுக” என உரைத்து “சமண மகளிரிடையே விஞ்சையன் ஒருவனால் கைவிடப் பட்டவள் என்று பலராலும் கூறப்படும் அவளல்லையோ?” அவரிடத்தின் நீங்கி, இங்கே இம்மணிமேகலையுடன் எவ்வாறு வந்தனை?” எனத் தெரியக் கேட்டான். அவனுக்குச் சுதமதி தன் வரலாறு சொல்லத் தொடங்கி,

“1வார்கழல் வேந்தே, வாழ்கநின் கண்ணி,
2தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி;
ஈங்கு இவள்தன்னோடு எய்திய காரணம்,
3வீங்குநீர் ஞாலம் ஆள்வோய், கேட்டருள்:

என் தந்தை என்னையும் என் தாயாகிய தன் மனைவியையும் இழந்து, என்னால் என் குடிக்கு நேர்ந்த குற்றத்தைப் போக்க வெண்ணி, குமரியாட வடமொழியாளர் பலரொடு வந்தான். வந்தவன் குமரித்துறையிலும் அதன்பின் காவிரித்துறையிலும் நீராடி என்னைத் தேடலாயினன். அவன் ஒருநாள் என்னைக் கண்டு, யான் தனக்கு மகளாதலால், என்னைப் பிரியமாட்டானாய், என்னோடே இருந்து மனைதோறும் இரந்துண்டு வாழ்ந்துவந்தான். ஒருநாள் கன்றீன்ற ஆவொன்று அவன் மீது பாயவே குடல் சரிந்துவிட்டது. அதரனக் கையில் தாங்கிய வண்ணம் அவன் சமணரிடம் தஞ்சம்புகுந்தான். அவர்கள், அவனையும் என்னையும் புறத்தே போக்கி, ‘நீவிர் இவ்விடத்திற்கு உரியரல்லீர்’ எனக் கையுதிர்த்துவிட்டனர். யாங்கள், ‘யாவரேனும் அறவோர் அகப்படுவரோ?’ என நகரத்தெருக்களில் அலமந்து திரிந்தோம். அப்போது சங்கதருமன் என்பவன், உச்சிப்போதில் மனைதோறும் சென்று பிச்சை எடுத்துவருவோன், எங்களைக் கண்டு, கழிபேர் இரக்கம் கொண்டு எம் சா துயர் நீக்கினன். அப்பெரியோன் சங்கதருமன் எனப்படும் புத்த சான்றோனாவன். அவனே, எங்கட்குப் புத்தனது அருளறத்தைப் புகன்று. அப் பெருமான்,

எங்கோன், இயல்குணன்; 4ஏதமில் குணப்பொருள்;
5உலக நோன்பின் பலகதி யுணர்ந்து
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்;

என்றான். அதுமுதல், யான்,

1இன்பச் செல்வி 2மன்பதை எய்த
அருளறம் பூண்ட 3ஒருபெரும் பூட்கையின்
4அறக்கதி ராழி திறப்பட வுருட்டி,
காமற் கடந்த வாமன் பாதம்
5தகை பாராட்டுதல் அல்லது யாவதும்
6மிகைநா இல்லேன், வேந்தே வாழ்க”

என்று சொல்லி முடித்தாள். இதனைக் கேட்ட உதயகுமரன், “இனி, யான் இம்மணிமேகலையைச் சித்திராபதியால் என்பால் சேர்த்துக் கொள்வேன்,” என்று அப் பொழிலை விட்டு நீங்கினான். அவன் போனதை யுணர்ந்த மணிமேகலை, வெளியே சுதம மதியிடம் வந்து,

கற்புத் தான்இலள், நற்றவ வுணர்விலள்,
7வருணக் காப்பிலள் 8பொருள்விலை யாட்டிஎன்று
இகழ்ந்தன னாகி 9நயந்தோன் எனாது
10புதுவோன் பின்றைப் போனது என்நெஞ்சம்
இதுவோ, அன்னாய், காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுக தன் திறம்

எனச் சொல்லி நின்றாள். அவர்கள் எதிரில் அழகிய பெண் ணொருத்தி மிக்க நலம் திகழப் போந்து பளிக்கறைப் பீடிகையை வலம்கொண்டு வந்து நின்றாள். அவளை அவர்கள் ஆர்வத்தோடு பார்த்து நிற்கையில் அவள், தெய்வ வுருவுடன் ஓங்கி நின்று,

புலவன், தீர்த்தன், புண்ணியன் 11புராணன்,
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ;
குற்றம் கெடுத்தோய், 12செற்றம் செறுத்தோய்
முற்ற வுணர்ந்த முதல்வா, என்கோ;
1காமற் கடந்த ஏம மாயோய்
2தீநெறிக் கடும்பகை கடிந்தோய், என்கோ;
3ஆயிர ஆரத்து ஆழியந் திருந்தடி
நாஆ யிரமிலேன், ஏத்துவது எவன்?

என்று பரவி நின்றாள். அக்காலையில் பகற்போதும் நீங்கிற்று; அந்திமாலை அழகு திகழ வந்தது. அதனுடைய அவ்வினிய காட்சிக்கண்,

அன்னச் சேவல் அமர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் 4தாமரை யடக்க,
5பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு
ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற,
அன்றிற் பேடை 6அரிக்குரல் அழைஇச்
சென்றுவீழ் பொழுது சேவற் 7கிசைப்பப்
பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
குவளை மேய்ந்த 8குடக்கண் சேதா
முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்ப,
கன்றுநினை குரல் 9மன்று வழிப்படர,
அந்நி யந்தணர் செந்தீப் பேணாப்,
பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
யாழோர் 1மருதத்து இன்நரம்பு உளர,
கோவலர் 2முல்லைக் குழல்மேல் கொள்ள,
3அமரக மருங்கில் கணவனை இழந்து
4தமரகம் புகூஉம் ஒருமகள் போல

செஞ்ஞாயிறு மறைந்ததனால் தேம்பிய மேனியுடன் அந்தி மாலையென்னும் அழகி வந்ததுபோல இருந்தது.

சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை


இவ்வண்ணம் தோன்றிய மணிமேகலா தெய்வம் சுதமதி யையும் மணிமேகலையையும் கண்டது. பின்பு, அத்தெய்வம், சுதமதியைப் பார்த்து, “இங்கே வாடி நிற்கின்ற நீவிர் என்உற்றீர்?” என்ற வினவ, சுதமதி உதய குமரன் கூறிய வனைத்தையும் ஒழியாது உரைத்தாள். அப்போது அத்தெய்வம்,

“அரசிளங்குமரன் ஆயிழை தன்மேல்
1தணியா நோக்கம் தவிர்வில னாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன்; ஆயினும்,
2புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்;

ஆதலால், நீங்கள் பெருந்தெருவிற் செல்வதை விடுத்து, இவ்வுவவனத்தைச் சூழ்ந்துள்ள மதிலின் மேற்றிசைச் சிறுவாயில் வழியாகச் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்க. அங்கே இரவுப் போது கழியினும் உங்கட்குச் சிறு தீங்கும் எய்தாது, “என்று சொல்லிற்று, சக்கரவாளக் கோட்டம் என்று தெய்வம் உரைப்பக் கேட்டதும் சுதமதி வியப்புற்று, அதனை நோக்கி, “அக்கோட்டத் தை இங்குள்ளோர்அனைவரும் சுடுகாட்டுக் கோட்டம் என் கின்றனர். என்னை இங்கே” கொணர்ந்த வஞ்ச விஞ்சையனான மாருதவேகன் இதனைச் சக்கரவாளக் கோட்டம் என்று சொல்லக் கேட்டேன் என்று சொல்லக் கேட்டுளேன்; அதுவேபோல, நீயும் இன்று சொல்லக் கேட்டேன். இதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்னாது, நீங்கள் சக்கரவாளக் கோட்டம் என்று சொல்லுவதன் கருத்தென்னை?” என்று வினவினள்.

மணிமேகலா தெய்வம், அக்கருத்தையுரைக்கப் புகுந்து, “இதனை யாவரும் சுடுகாட்டுக் கோட்டம் என்பது வழுவன்று. இந்நன்காடு, சம்பாபதி என்னும் இந்நகர் தோன்றிய காலத்தே உடன் தோன்றிய முதுகாடேயாகும். இதன்கண்,

சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர்,
1தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்,
இரவும் பகலும் 2இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்,
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும்,
துறவோர் இறந்த 3தொழுவிளிப் பூசலும்,
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்,
நீள்முக நரியின் 4தீவிளிக் கூவும்,
5சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்,
புலவூண் பொருந்திய 6குராலின் குரலும்,
7ஊண்தலை துற்றிய ஆண்தலைக் குரலும்,
நல்நீர்ப் 8புணரி நளி கட லோதையின்
இன்னா இசையொலி என்றும் நின்றறாது.

இன்ன இயல்பிற்றாய சுடுகாடு இருப்பக் கண்டும், மக்கள் நிலைத்த வாழ்வுடையார்போல் மயங்குகின்றனர்” என்று விரித்து ரைக்கத் தொடங்கி, அத்தெய்வம்,

“தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ் செல்வர்,
1ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்,
முதியோர் என்னான், இளையோர் என்னான்,
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப, இவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்,
கழிபெருஞ் 1செல்வக் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?

இது நிற்க, ஒருநாள் இரவு ஒரு பேய்மகள் பெண் பிண மொன்றின் கருந்தலையைக் கையில் ஏந்தி,

புயலோ குழலோ? கயலோ கண்ணோ?
குழிழோ மூக்கோ? இதழோ கவிரோ?
பல்லோ முத்தோ என்னாது. இரங்காது,
கண் 2தொட்டுண்டு 3கவையடி பெயர்த்துத்
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து

ஒன்றை, அவ்வழியே அறியாது சென்ற, சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன் ஒருவன் கண்டு அஞ்சி நடுநடுங்கி, தன் வீட்டிற்குச் சென்று, தன் தாயிடம் நடந்தது சொல்லி உயிர் விட்டான். அவன் பெற்றோர் மிக்க முதியோராவர். அவருள், அவன் தந்தை கண்ணிழந்தவன். கோதமை யென்னும் அவனது தாய் வயது முதிர்ந்தவள்.

மகன் பிரிவை ஆற்றாத கோதமை, அவன் உடலைச் சுமந்து ஈமப்புறங் காட்டின் மதில் வாயிலில் நின்று, சம்பாபதியை நோக்கி முறையிட்டழுதாள். அவள் கண்முன் அச்சம்பாபதி தோன்றி, ‘நீ என்னை யழைத்த காரணம் என்னை?’ என்றாள். கோதமை தன் மகன் இறந்து கிடப்பது காட்டி,

‘என் உயிர் கொண்டு இவன் உயிர்தந்தருளில், என்,
கண்ணில் கணவனை இவன் காத்து ஓம்பிடும்;
இவன் உயிர் தந்து என்உயிர் வாங்கு

என்று இரந்தனள். அதுகேட்ட சம்பாபதி,

1‘ஐய முண்டோ, ஆருயிர் போனால்,
செய்வினை மருங்கில் சென்று பிறப்பெய்துதல்;
ஆங்கது கொணர்ந்துநின் 2ஆர்இடர் நீக்குதல்
ஈங்கு எனக்கு ஆவதொன்றன்று; நீ இரங்கல்.
கொலை அறமாம் எனும் கொடுந்தொழில் மாக்கள்,
3அவலப் படிற்றுரை ஆங்கது; மடவாய்!
உலக மன்னவர்க்கு உயிர்க்குஉயிர் ஈவோர்
இலரோ; இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்

அதனால், நீ நின் கருத்தை விடுக’ என்றனள். இதனாலும் மனம் தெளியாத கோதமை, ‘தேவர்கள் இத்தகைய வரம் தருவர் என நான்மறை யந்தணர் நவில்வ துண்டு; அதனால், நீ அருளாவிடின், யான்இப்பொழுதே உயிர்விடுவேன்’ என்று சொல்ல, சம்பாபதி, தெய்வவகை பலவும் விடாது வரவழைத்து, அவள் முன் நிறுத்தி, ‘நீ கேட்கும் வரத்தை இவர் தரவல்லரோ, காண்’ என்றாள். அத்தெய்வங்கள் அனைத்தும், சம்பாபதி கூறியவாறே, ‘இறந்த உயிரை மீட்டும் தருவித்தல் முடியாது’ என்று சொல்ல, கோதமை தன் மகனைச் சுடுகாட்டில் இட்டுத் தானும் உயிர் துறந்தாள்.

சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற
எங்குவாழ் தேவரும் கூடிய இடந்தனில்,
சூழ்கடல் வளைஇய 4ஆழியங் குன்றத்து,
நடுவு நின்ற மேருக் குன்றமும்,
புடையில் நின்ற எழுவகைக் குன்றமும்
5நால்வகை மரபின் மாபெருந் தீவும்,
ஓரீராயிரம் சிற்றிடைத் தீவும்,
பிறவும் ஆங்கதன் இடவகை உரியன,
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி,
ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்,
பாங்குற 1மண்ணீட்டில் பண்புற வகுத்து
மிக்க மயனால் இழைக்கப் பட்ட
சக்கர வாளக் கோட்டம் ஈங்கு இதுகாண்;
இடுபிணக் கோட்டத்து 2எயிற்புற மாதலின்,
சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார்,

இதுவே இதன் வரலாறு” என அம்மணிமேகலா தெய்வம் கூறி முடித்தது. அதன்பின் சுதமதி உறங்கிவிட்டாள். அத்தெய்வம் மணிமேகலையைத் தன் மந்திரத்தால் மயக்கித் தழுவி யெடுத்துக் கொண்டுவான் வழியாக, தென் திசையில் முப்பது யோசனைத் தொலைவில் கடல் நடுவண் இருந்த மணிபல்லவம் என்னும் ஒரு தீவில் கடற்கரையில் மணற்பரப்பில் அவளைக் கிடத்திவிட்டு நீங்கியது.

துயிலெழுப்பிய காதை


மணிமேகலையைக் கைப்பற்ற முடியாது, கையற்றுத் தன் அரண்மனைக்கு மீண்டுவந்த உதயகுமரன், “இக்கங்குல் கழிந்ததும் அவளை என் கையகப்படுத்துவேன்” என்று எண்ணமிட்டுக் கொண்டு, அன்றிரவு கண்ணுறக்கம் பெறாது, தன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். அவன் கண்முன்னே மணிமேகலா தெய்வம் தோன்றி, “மன்னவன் மகனே,

கோல்நிலை திரிந்திடின், கோள்நிலைதிரியும்;
கோள்நிலை திரிந்திடின், 1மாரி வறங்கூரும்;
மாரிவறங் கூரின், மன்உயிர் இல்லை;
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்
2தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக”

என்று உரைத்துவிட்டு நீங்கி, உவவனம் புகுந்து அங்கே உறங்கிக் கொண்டிருந்த சுதமதியைக் கண்டு அவளது துயிலை நீக்கிற்று. அவள் தெளிந்த காலை, அவள் முன்னே நின்று, “சுதமதி, அஞ்சேல், யான் மணிமேகலா தெய்வம், இவ்வூரில் நடைபெறும் இந்திர விழாவைக் காணவந்த யான், என் மந்திரத்தால் மணிமேகலையை மயக்கிக் கொண்டுபோய் மணிபல்லவத்தில் வைத்துள்ளேன். அவள் இன்றைய ஏழாம் நாள், தன் பழம் பிறப்பை அறிந்துகொண்டு இங்கு வருவள். அவளுக்குப் புத்தனது நல்லறத்தைப் பின்பற்றும் நல்லூழ் வந்திருக்கிறது. அவள் இவ்வூரில் தன் உருக்கரந்து உலவிய காலையும் நின்கண்ணுக்குத் தன் உண்மை யுருவை ஒளியாள். இதனை அவள் தாய் மாதவிக்குத் தெரிவிக்க.

திரை 1இரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக்
கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னை, என்
2நாமம் செய்த நல்நாள் நள்ளிருள்
காமன் 3கையறக் 4கடுநவை யறுக்கும்
5மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே
நனவே போலக் கனவகத்து உரைத்தேன்;
ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்குஉரை”

என்று சொல்லிவிட்டு மறைந்தேகியது. சுதமதி தான் உறங்கிக் கிடந்த இடத்தினின்றும் எழுந்து சுற்றுமுற்றும் நோக்கினாள். எங்கும் எவ்வுயிரும் உறங்கின. இடையிடையே,
6யாமம் கொள்பவர் ஏத்தொலி யரவமும்,
****

7நிறையழி யானை நெடுங் கூவிளியும்,
ஊர் காப்பாளர் எறி 8துடி யோதையும்,

            ****  

புதல்வரைப் பயந்த 9புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளனாடு அரவமும்,
10வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்,
11புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கஎன
இடிக்குரல் முழக்கத்து 1இடும்பலி யோதையும்
ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்
கடுஞ்சூல் மகளிர் 2நெடும்புண் உற்றோர்
தம்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க என
நின்றெறி பலியின் நெடுங்குரல் ஓதையும்

பிறவும் எழுந்து இசைத்தன. இவற்றால் உள்ளம் கலங்கி நடுக்கமுற்ற சுதமதி, அவ்வனத்தின் மேற்றிசையில் உள்ள சிறு வழியினூடு, அயலதாகிய சக்கரவாளக் கோட்டத்தை அடைந் தாள். அவ்விடத்தே பலரும்புகுமாறு திறந்தவாயிலையுடைய 3உலகவறவி இருந்தது. அங்கே சென்ற சுதமதி அதன் ஒருபுடையே இருந்தனள். அவ்விடத்தே நின்ற தூணில் அமைந்திருந்த பாவை யொன்றை உடலாகக்கொண்டு ஒரு தெய்வம், அவளை அழைத்து, “சுதமதி, நீ முன் பிறப்பில் அசோதர நகரத்து அரசனான இரவிவன்மன் மகள். நீ துச்சயன் என்னும் வேந்தற்கு மனைவி. நினக்கு முற்பிறப்பில் வீரை என்பது பெயர். நினக்குத் தமக்கை யொருத்தியுண்டு. அவள் தாரை எனப்படுவாள். அவள் இறந்தது கேட்டு நீ உயிர்விட்டாய். இப்போது நீ நின்முன் பிறந்தாளாகிய தாரையொடு கூடியிருக்கின்றாய். இன்றைய ஏழாம் நாள் நின் பழம் பிறப்பின் தங்கை இலக்குமி என்பாள் நின் பிறப்பும் தன் பிறப்பும் அறிந்து வருவள். நீ அஞ்சற்க” என்று சொல்லிற்று. இச்சொற்களால் சுதமதி திகைப்புண்டு அஞ்சி மருண்டிருக்கையில்,

4காவலாளர் கண்துயில் கொள்ள,
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப,
1வலம்புரிச் சங்கம் வறிது எழுந்தார்ப்ப,
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க,
2புகர்முக வாரணம் நெடுங் கூ விளிப்ப,
பொறிமயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப,
3பணைநிலப் புரவி பலஎழுந் தாலப்
4பணைநிலைப் புள்ளும் பலஎழுந் தால,
5பூம்பொழி லார்கைப் புள்ளொளி சிறப்ப,
பூங்கொடி யார்கைப் புள்ளொளி சிறப்ப,
6கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொள,
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள,
7குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர்துயில் எடுப்ப, 8உரவுநீர் அழுவத்துக்
9கார் இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்,

சுதமதிக்கு அச்சம் நீங்கிற்று. அவள் மயிலென நடந்து மாநகரின் தெருவழியே சென்று மாதவியை யடைந்து நிகழ்ந்தது முற்றும் வழுவின்றிக் கூறினாள். மாதவி, அதுகேட்டு, மணியிழந்த நாகம்போல் வருத்தம் கொண்டனள்; மணிமேகலையின் பிரி வாற்றாது உயிரிழந்த உடல்போலத் துயர் உழப்பாளாயினள்.

மணிபல்லவத்துத் துயருற்ற காதை


மணிமேகலா தெய்வத்தால் தனித்து விடப்பெற்ற மணி மேகலை மணிபல்லவத் தீவின் கடற்கரையில், துயிலெழுந்து சுற்றுமுற்றும் பார்க்கலுற்றாள். தன்னோடிருந்த சுதமதியையும் அவள் கண்டிலள். அவள் கண்ணெதிரே,

1ஞாழல் ஓங்கிய 2தாழ்கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி,
வண்டுண மலர்ந்த 3குண்டுநீர் இலஞ்சி
4முடக்கால் புன்னையும் மடற்பூந் தாழையும்
5வெயில் வரவு ஒழித்த பயில்பூம் பந்தர்

தோன்றிற்று. அங்கே தோன்றிய அனைத்தும் அவட்குப் புதுமையாகவே தோன்றின. சிறிது காலத்தே விடியலின் வெள்ளிருள் நீங்க, ஞாயிறு கிழக்கே எழுந்தது. மணிமேகலை, அவ்விடத்தை வியந்து நோக்கி,

“உவவன மருங்கினில் ஓரிடம் கொல்இது!
சுதமதி! ஒளித்தாய்; துயரம் செய்தனை;
நனவோ, கனவோ என்பதை அறியேன்;
மனம் 6நடுக் குறூஉம்; மாற்றம் தாராய்,
வல்இருள் கழிந்தது; மாதவி மயங்கும்;
7எல்வளை வாராய்; விட்டகன் றனையோ?
8விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்,
வஞ்சம் செய்தனள் கொல்லோ! அறியேன்
ஒருதனி அஞ்சுவென், திருவே வா”

எனச் சொல்லிக்கொண்டு, சுதமதியைத் தேடித் திரியலா னாள். நீர்த்துறைகள், மணற் குன்றங்கள், பெரும் பொழில்கள் ஆகிய இவ்விடந்தோறும் தேடினாள். எங்கும் அவளைக் காணா மையால், மணிமேகலை பெரிதும் அச்சமும் அவலமும் கொண்டு,

1குரல்தலைக் கூந்தல் குலைந்து பின்வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
2வீழ்துயர் எய்திய 3விழுமக் கிளவியின்,
தாழ்துயர் உறுவோள் 4தந்தையை உள்ளி
“எம்இதிற் படுத்தும் 5வெவ்வினை உருப்பக்
6கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து
வைவாள் 7உழந்த மணிப்பூண் அகலத்து
ஐயாவோ” என்று

அழலானாள். அவ்வாறு அழுபவள் முன்னர், புத்தனாகிய பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் தரும பீடிகை யொன்று தோன்றுவதாயிற்று. இஃது,

அறவோற்கு அமைந்த ஆசன மென்றே
8நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது;
பறவையும் முதிர்சிறை பாங்குசென்று அதிராது;
தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை,
9பிறப்பு விளங்கு அவிரொளி அறத்தகை ஆசனம்

ஒரு காலத்தே, நாகவேந்தர் இருவர் இப்பீடிகையைக் கண்டு, ஒவ்வொருவரும் தமக்கே உரியதெனக் கருதிக்கொண்டு எடுக்கலுற்று ஆற்றாராயினர். ஆயினும், அதன்பாற் கொண்ட ஆகையால் இருவரும் ஒருவரோடொருவர் பெருந்தானையுடன் நெருங்கிப் போர் செய்தனர். அதுபோழ்து, அவர்முன் புத்தர் பெருமான்தோன்றி, 1“இருஞ் செரு ஒழிமின்; ஈது எமது,” என்று சொல்லி, அதன்மீது இருந்து அறங் கூறினன். இது புத்த பீடிகையின் வரலாறு.

பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை


இவ்வண்ணம் தோன்றிய புத்த பீடிகையைக் கண்டதும் மணிமேகலை தன்னைமறந்து, அதன் அருகேசென்று, தலைமேற் கைகுவித்து உவகையாற் கண்ணீர் சொரிந்து, வணங்கி அதனை மும்முறை வலம் வந்து வழிபட்டு நின்றாள். அந்நிலையே அவட்கும் பழம் பிறப்பின் செய்திகள் நினைவிற்கு வந்தன. உடனே, அவள்,

1“தொழுதகை மாதவ, 2துணிபொருள் உணர்ந்தோய்!
3காயங் கரையில்நீ உரைத்ததை யெல்லாம்,
4வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன்.

காந்தார நாட்டுப் பூருவதேய மன்னனான மத்திபதி என்னும் அரசன் தன்னாட்டிற்கு நிகழவிருந்த பெருந்தீங்கினைப் பிரம தருமன் என்னும் முனிவனால் உணர்ந்து, தன்னாட்டு மக்களுடன் இடவயம் என்னும் தன் நகரின் நீங்கி, அவந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஒருகால் அவன் காயங்கரை என்னும் யாற்றின் கரையில் பாடியமைத்துத் தங்கியிருக்கையில், அம்முனிவன் கூறியவாறே நாடு 5நிலநடுக்கத்தால் கெட்டழியக் கேட்டறிந்து வருந்தினன். அப்போழ்து அம்முனிவன் மீண்டும் வந்து அவ்வர சனுக்கும், குடிமக்கட்கும் நல்லறம் உரைத்தனன். அந்நாளில்,

அரவக் கடலொலி அசோதரம், ஆளும்
இரவி வன்மன் ஒருபெருந் தேவி,
1அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று
இலக்குமி என்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்.”
அத்திபதியெனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்,
நீலபதி யெனும் நேரிழை வயிற்றில்,
காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய
இராகுலன் 2தனக்குப் புக்கேன்; அவனோடு
3பராவரு மரபின் நின் பாதம் பணிதலும்
எட்டிரு நாளில் இவ்விராகுலன் தன்னைத்
4திட்டிவிடம் உணும்; செல்உயிர் போனால்,
தீயழல் அவனோடு சேயிழை மூழ்குவை;
5ஏது நிகழ்ச்சி ஈங்கின்று; ஆதலின்,
6கவேர கன்னிப் பெயரோடு விளங்கிய
7தவாக்களி மூதூர்ச் சென்று பிறப்பெய்துதி;
அணியிழை, நினக்கு ஓர் 8அருந்துயர் வரும்நாள்,
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி,
அன்று அப்பதியில் ஆரிருள் எடுத்துத்
தென்திசை மருங்கில்ஓர் தீவிடை வைத்தலும்,
9வேக வெந்திறல் நாகநாட் டரசர்
10சினமாசு ஒழித்து 11மனமாசு தீர்த்து ஆங்கு
12அறச்செவி திறந்து 13மறச்செவி அடைத்துப்
1பிறவிப் பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும்
2திருந்தொளி யாசனம் சென்று கை தொழுதி;
அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு
இன்று யான் உரைத்த உரைதெளிவாய் என

உரைத்தனை; அதுகேட்டு, என் காதலன் பிறப்பும் காட்டா யோ என்று வேண்டினேன். அதுபோது, அத் தீவிடை நின்னைக் கொண்டு சென்ற தெய்வம் தோன்றி, அவனைக்காட்டி, ‘இவனே நின் கணவன்’ என்று சொல்லுமென்று மொழிந்தனை. அத் தெய்வம் இன்னும் வந்திலதே” என்று உரைத்து நின்று அழுதாள்.

மந்திரம் கொடுத்த காதை


மணிமேகலை தன் பழம் பிறப்புணர்ந்து நிற்கையில், அவளை அத்தீவில் விட்டுச்சென்ற மணிமேகலை தெய்வம், அப்புத்த பீடிகையைப் புத்தனாகவே கருதி,

உயிர்க ளெல்லாம் 1உணர்வு பாழாகிப்
பொருள்வழங்கு 2செவித்துளை தூர்ந்து அறிவிழந்த
3வறந்தலை உலகத்து 4அறம்பாடு சிறக்கச்
5சுடர்வழக்கற்றுத் தடுமாறு காலையோர்
இளவள ஞாயிறு தோன்றியது என்ன,
நீயோ தோன்றினை; நின்அடி பணிந்தேன்;
நீயே ஆகி, நிற்கு அடைந்த இவ்வாசனம்
6நாமிசை வைத்தேன்; தலைமிசைக் கொண்டேன்,

என்று சொல்லி வணங்கி நின்றாள். அவளைக் கண்டதும், மணிமேகலை, அவள் அடியிற் பணிந்து, “நின்திருவருளால் என் பழம் பிறப்பை உணர்ந்தேன்; என் பெருங் கணவன் யாங்கு உளன்?” என்று கேட்டனள். மணிமேகலா தெய்வம், அவட்கு அவளது வரலாறு கூறத்தொடங்கி, “நீ முற்பிறப்பில் இலக்குமி யென்னும் பெயருடனிருந்தாய். நினக்குக் கணவன் இராகுலன் என்பவன். ஒரு கால் அவன் நின்னோடுகூடி ஒரு பொழிலிடத்தே தங்கியிருக்கையில் அவனோடு நீ ஊடினை. அவன் நின்னைப் புலவி தீர்த்தற்கு அடிவீழ்ந்து வணங்கினன். அப்போழ்தில், சாது சக்கரன் என்னும் முனிவன் வான் வழியாக வந்து நிற்க, அவனைக் கண்டு நீ வணங்கினை; இராகுலன் உண்மையுணராது நின்னை வெகுண்டான். அவனுக்கு நீ முனிவனது சிறப்புக் கூறி வணங்கு வித்தனை. பின்பு அம்முனிவனை மீட்டும் வணங்கி,

அமர, கேள்: 1நின் தமர் அலம் ஆயினும்
அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேன்;
உண்டி; யாம் 2உன் குறிப்பினம்

என்று உரைத்து உணவு கொடுத்து ஓம்பினை; அன்று நீ செய்த அறவினை நின்னைப் பிரியாது நின் பிறப்பை அறுப்ப தற்குத் துணையாயிற்று.

உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன், உன் இராகுலன்;
ஆங்கு அவன் அன்றியும் அன்பால் உள்ள
3நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின்,
4கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்
5வெந்துகு வெண்களர் 6வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு உன்னைஓர்
7திறப்படற்கு ஏதுவாச் சேயிழை! செய்தேன்;

இன்னும் கேள் : நினக்கு முன் பிறந்த தாரை, வீரை என்ற இரு மடந்தையரும் தத்தம் கணவன்மாருடன் கங்கைப்பேர் யாற்றங் கரையில் விளையாடிக்கொண்டிருக்கையில், அறவண வடிகள் வந்து சேர்ந்தனர். அவரை இம் மடந்தையர் வணங்கி வழிபட்டனர். அவர்கட்கு, அடிகள், “மங்கைமீர், யான் புத்தன் இருந்து அறம் உரைத்த குன்றின் அருகில் உள்ள பாதபங்கய மலையைத் தொழுது வலம்கொள்ள வந்தேன்; நீவிரும் சென்று வழிபடுமின்” என்று உரைத்தேகினர். அவரும் அவ்வாறே செய்து இப்பிறப்பில் மாதவியும் சுதமதியுமாயினர்,” என்று இவ்வாறு கூறிய அத் தெய்வம் மேலும் கூறத்தொடங்கி,

1“அறிபிறப் புற்றனை, 2அறம்பா டறிந்தனை;
3பிறவறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை;
பல்வேறு சமயப் 4படிற்றுரை எல்லாம்
5அல்லியங் கோதை கேட்கும் அந்நாள்,
இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார்; வேற்றுரு எய்தவும்
6அந்தரம் திரியவும் ஆக்கும் 7இவ்வருந்திறல்
மந்திரம் கொள்க” என வாய்மையின் ஓதி,

முடிவில், “புத்தனருளிய திருவறம் எய்துதல் ஒருதலை” இனி, நீ இப்புத்த பீடிகையை வணங்கி நின் ஊர்க்குச் செல்க” என்று மொழிந்து அந்தரத்தே செல்லத் தொடங்கிற்று.

அத் தெய்வம் சிறிது தொலைவு சென்று, சட்டெனத் திரும்பி வந்து, “நினக்கு ஒன்று சொல்ல மறந்தேன், கேள்,” என்று சொல்லி,

சிறந்த 8கொள்கைச் சேயிழை, கேளாய்;
மக்கள் யாக்கை 9உணவின் பிண்டம்;
இப்பெரும் மந்திரம் இரும்பசி அறுக்கும்

என்று ஒரு மந்திரத்தை வழங்கி, விசும்பு வழியாக மேற் செல்வதாயிற்று.

பாத்திரம் பெற்ற காதை


மணிமேகலா தெய்வம் நீங்கிய பின் மணிமேகலை எழுந்து மணிபல்லவத்துள் செறியத் தோன்றிய வெண்மணற் குன்றுகள், விரிபூஞ்சோலைகள் முதலிய காட்சிக்கு இனிய இடங்களைக் கண்டுவந்தனள். இவ்வாறு ஒரு காவதத் தொலைவு இவள் திரிந்து வருகையில், அவளெதிரே தீவதிலகை என்பவள் தெய்வக் கோலத் துடன் தோன்றினள். தீவதிலகை மணிமேகலையின் தனிமைகண்டு, 1“இலங்குதொடி நல்லாய், நீ யார்?” என்று வினவினள். அவட்கு மணிமேகலை,

எப்பிறப் பகத்துள் யார் நீ என்றது?
2பொற்கொடி யன்னாய், பொருந்திக் கேளாய் :
போய பிறவியில் 3பூமியங் கிழவன்
இராகுலன் மனையாள்; இலக்குமி 4என்பேன்;
5ஆய பிறவியில் ஆடலங் கணிகை
மாதவி ஈன்ற மணிமேகலை யான்;
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர, இம்
6மன்பெரும் பீடிகை என்பிறப் புணர்ந்தேன்;
ஈங்கு என்வரவு இது; ஈங்கு எய்திய பயன் இது,

என்று தன் வரலாறுகூறி, அத் தீவதிலகையின் வரலாற்றை வினவினள். அதுகேட்ட தீவதிலகை, “இத்தீவிற்கு அயலே இரத்தினத் தீவு என்பதொன்றுண்டு, அதன்கண் சமந்தம் என்னும் மலையொன் றுளது. அதன் உச்சியில் புத்தர் பெருமானது திருவடி அமைந்திருக் கிறது. அதனைத் தொழுது வலங்கொண்டு வந்த யான், இங்குள்ள புத்த பீடிகைக்கு வந்தேன். என்னை இந்திரன் அங்கே இருத்தி இதனைக் காவல்புரிந்து வருமாறு கட்டளையிட்டான். யானும் அது முதல் அங்கே இதனைக் காத்துவருகின்றேன்; என் பெயர் தீவதிலகை என்பது” என்றாள்.

தீவதிலகையின் வரலாறுகேட்ட மணிமேகலை மனம் மகிழ் கையில், அத்தீவதிலகை மேலும் கூறலுற்றுப், “புத்தர் பெருமான் உரைத்த நல்லறத்தை யுணர்ந்து, அவன் வழங்கிய நோன்பினை மேற்கொண்டவர் இப்பீடிகையைக் கண்டு தொழுது தம் பண்டைப் பிறப்பை அறிந்து கொள்வர்,” என்று உரைத்தாள். அதன்பின், இப் பீடிகையின் முன்னே கோமுகியென்னும் நீர்நிலை யொன்று உளது. அதன்கண், ஆண்டுதோறும் வைகாசித் திங்கள் பதினான்காம் நாளாகிய விசாகத்தன்று, அமுதசுரபி என்னும் உண்கலமொன்று தோன்றுவதுண்டு. இந்நாள் அந்நாளாகும். நீ செல்வாயாயின், அக்கலம் நின்கையிடத்தேவந்து பொருந்தும், அது முன்னாளில் ஆபுத்திரன் கையில் இருந்தது.

ஆங்கு அதிற்பெய்த 1ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துத லல்லது,
தான் 2தொலை வில்லாத் தகைமை யதாகும்;
நறுமலர்க் கோதை! நின் 3ஊராங்கண்
அறவணன் தன்பால் கேட்குவை இதன்திறம்

என்று மொழிந்தாள். மணிமேகலையும் உடனே எழுந்து சென்று பாத பீடிகையைத்தொழுது வலங்கொண்டு, கோமுகியையும் அவ்வாறே வணங்கித்தொழுது நின்றாள். சிறிது போழ்தில், தீவதிலகை மொழிந்த வண்ணமே, அமுத சுரபியென்னும் உண்கலம் தோன்றி, அவள் கையகத்தே வந்து பொருந்திற்று.

பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள்
1மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி,
1மாரனை வெல்லும் வீர, நின்னடி,
2தீநெறிக் கடும்பகை கடிந்தோய், நின்னடி,
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய், நின்னடி,
3துறக்கம் வேண்டாத் தொல்லோய், நின்னடி,
4எண் பிறக்கொழிய இறந்தோய், நின்னடி,
5கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய், நின்னடி,
தீமொழிக் கடைத்த செவியோய், நின்னடி,
6வாய்மொழி சிறந்த நாவோய், நின்னடி,
7நரகர் துயர்கெட நடப்போய், நின்னடி
8உரகர் துயரம் ஒழிப்போய், நின்னடி
வணங்குத லல்லது வாழ்த்தல், என் நாவிற்கு
அடங்காது

என்று இவ்வாறு மணிமேகலை பரவினாள். தீவதிலகையும் அப் பாத பீடிகையைப் பணிந்து போற்றி, மணிமேகலைக்கு அவ்வுண்கலத்தின் உயர்வு சொல்லத் தொடங்கி,

“குடிப்பிறப் பழிக்கும், 9விழுப்பம் கொல்லும்,
பிடித்த கல்விப் பெரும்புணை 10விடூஉம்,
நாண் அணி களையும், ஆண்எழில் சிதைக்கும்,
பூண்முலை மாதரொடு 11புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி; அது தீர்த்தோர்,
1இசைச் சொல் அளவைக்கு என்நா நிமிராது”

என்று சொன்னாள். பின்பு, ஒருகாலத்தே பெரு வறம் உலகில் தோன்றி, வருத்த, எவ்வுயிரும் பசிப்பிணியால் பெருந்துயர் உழப்ப, கோசிக முனிவன், பசிமிகுதியால் நாயூனைத் தின்ன முயன்று, அதனைப்பெற்று, முறைமைப்படி தொடக்கத்தே இந்திரனுக்குப் படைத்த பின் தான் உண்ணலுற்றான். உடனே இந்திரன் தோன்றி மழைவளம் சுரந்தான். அதன் பின்பே உலகில் வசியும் வளமும் பெருகின. அத் தேவனும் நல்ல சிறப்பைப் பெற்றான்.

2ஆற்றுநர்க்கு அளிப்போர், 3அறவிலை பகர்வோர்,
4அற்றா மாக்கள் அரும்பசி களைவோர்,
மேற்றே உலகில் 5மெய்ந்நெறி வாழ்க்கை;
6மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்,
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே,

இவ்வாறு தீவதிலகை பசித்தோர்க்கு உணவு நல்கும் அறத் துறையின் பாங்கினை உரைக்க, மணிமேகலை, “முற்பிறப்பில், யான் சாது சக்கர முனிவனுக்கு உணவூட்டிய அறப்பயனால் இப்பிறப்பில் இச்சுரபியினையடைவேனாயினேன். நிற்க, இந் நாவலந்தீவில் வெயிலென முனியாது புயலென மடியாது பசி நோயால் வருந்தி, பிறர் பிறர் இல்லந்தோறும் சென்று இரப்போர் பலர் உளர். அவர்க்கு உணவு தந்து அவர் முகம் குளிர்வதைக் காண வேட்கின்றேன்” என்றுரைத்தாள். அவட்கு அத் தீவதிலகையும், “அன்னாய், இச்சுரபிதானும், அருள் மிகவுடைய சிறந்தோர்க் கல்லது, செவ்வனம் உணவு சுரவாது; இஃது அதன் இயல்பு; இதனை முன்பே சொல்லமறந்தேன்” என்றாள்.

சிறிது இவ்வாறு பேசியிருந்தபின் மணிமேகலை தீவதிலகை பால் விடை பெற்றுக்கொண்டு, புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி, காவிரிப்பூம் பட்டினத்திற்கு வான்வழியாக வந்து சேர்ந்தனள். இவள் வருதற்குள், நாட்கள் ஏழு சென்றன. “மணிமே கலா தெய்வம் உரைத்தவாறு இன்னும் மணிமேகலை வந்திலளே” என்று மாதவியும் சுதமதியும் மனம் மயங்கியிருந்தனர். சடேரென மணிமேகலை அவர் முன்னே வந்து தோன்றி நின்றனள். அவ்விரு வரும் அவளைத் தழுவி மகிழ்ச்சி மிக்கனர். அவர்கட்கு மணி மேகலை, நிகழ்ந்தது முற்றும் கூறி, அவர்தம் பழம் பிறப்பையும் எடுத்தோதலுற்று,

இரவி வன்மன் ஒரு பெருமகளே,
1துரகத் தானைத் துச்சயன் தேவி,
அமுதபதி வயிற்று 2அரிதின் தோன்றித்
3தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
4அவ்வையா ராயினீர் நும்மடி தொழுதேன்;
வாய்வதாக மானிட யாக்கையின் தீவினை
யறுக்கும் செய்தவம் நுமக்கு ஈங்கு
அறவண வடிகள் தம்பால் 5பெறுமின்
செறிதொடி நல்லீர் உம்பிறப்பு ஈங்கிஃது

என்று சொல்லிவிட்டு, “இஃதோ, என் கையிலுள்ள அமுத சுரபி! பண்டு ஆபுத்திரன் கையகத்திருந்ததாகும்; இதனை நீவிரும் தொழுமின்” என்று மொழிந்தாள். அவர்களும் அவ்வண்ணமே செய்தனர். பிறகு மூவரும் அறவணவடிகளைக் கண்டு வணங் கற்குச் சென்றனர்.

அறவணர்த் தொழுத காதை


மணிபல்லவத்திலிருந்து திரும்பிவந்து காவிரிப்பூம்பட்டினத் தையடைந்த மணிமேகலை, “அறவணவடிகள் எங்கே உளர்?” என்று வினவிச்சென்று அவரை அடைந்தனள். அவர் நரைத்து முதிர்ந்த யாக்கையுடையர்; 1நடுங்காத நாவினையுடையர். அறம் உரைக்கும் அவ்வடிகளாரைக் கண்ட மணிமேகலை அவரை வலம்வந்து வணங்கித் தொழுது நின்று, தான் சுதமதியுடன் மலர்வனம் புகுந்தது, உதயகுமரன் தன்னை நோக்கி வந்தது என்பன முதலாக, மணிபல்லவத்திற் புத்த பீடிகையைக் கண்டு பழம் பிறப்புணர்ந்தது, அமுத சுரபிபெற்றது ஈறாக நிகழ்ந்தவை அனைத்தையும் ஒன்றும் விடாது உரைத்தாள்.

இவற்றைக் கேட்டதும் அறவணவடிகள் மிக்க மகிழ்ச்சி கொண்டு “பொற்றொடி மாதராய், 2நற்றிறம் சிறக்க” என வாழ்த்தி, மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் வரலாற்றைப் பற்றித் தானும் சில சொல்லல் தொடங்கினர். “யான் ஆதி முதல்வன் அடியிணை யைப் பரவுதற்குப் பாதபங்கய மலைக்குச் சென்றேன். வழியில் ஒரு பொழிலில் கச்சய நாட்டரசன் துச்சயனைக் கண்டு, “மன்ன, நின்னோடு நின்தேவியர்க்குத் தீதின்றோ?” என நலம் உசாவினேன். அவன் மனம் அழுங்கி, கண்கலுழ்ந்து, ‘களிமயக்கத்தால் வீரை யானைமுன் வீழ்ந்து இறந்தனள். அத்துயர் பொறாத தாரை, அரமிய முற்றத்தின்மேல் ஏறி, ஆங்கு நின்று வீழ்ந்து உயிர் துறந்தாள்,’ என்றனன். அது கேட்டு, யான், அரசே, இது பழவினைப்பயன்; நீ 3பரியல் என்றேன். இன்று ஆடும் கூத்தியர் போல மாதவியும் சுதமதியும் மணிமேகலையுமாக நீவிர் வேற்றுருக்கொண்டு நிற்பதைக் காண்கின்றேன்” என்று கூறி, மேலும் கூறத் தொடங்கி,

“பிறவியும் 1அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறுமலர்க் கோதாய்! நல்கினை கேளாய்:
2தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கறி செல்லும் பெருவழி
அறுகையும் நெறிஞ்சியும் அடர்ந்து 3கண்ணடைத் தாங்குச்
4செயிர் வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம்பட்டது:
5தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டேன வுணர்த லல்லது யாவதும்
கண்டு இனிது விளங்காக் காட்சிபோன்றது.”

“இதனால் மக்கள் அறவுணர்வின்றி மெலிந்து தீமைகளின்றிச் செய்து உழலுவாராயினர். இதனைக் கண்ட சக்கரவாளக் கோட்டத்துத் தேவரெல்லாம், துடிதலோகம் சென்று, ஆங்கு உறையும் பிரபாபாலன் என்னும் பெரியோன் திருவடியில் வீழ்ந்து குறையிரந்து நின்றனர். அவர் வேண்டுகோட்கு இசைந்து,

“இருள் பரந்து கிடந்த 6மலர்தலை யுலகத்து
7விரிகதிர்ச் செல்வன்தோன்றினன் என்ன,
8ஈரெண்ணூற்றோடு ஈரெட் டாண்டில்
பேரறிவாளன் தோன்றும்;

“அதன்பின் அவனால், இவ்வுலகில்,

“பெருங்குளமருங்கில் 9சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
10அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
உளமலி யுவகையோடு உயிர்கொளப் புகூஉம்.

“மேலும், அறம் உரைக்கும் திறலோனாகிய அந்தப் பெரியோன், இவ்வுலகில் தோன்றுங்கால்,

“திங்களும் ஞாயிறும் 1தீங்குறா விளங்கத்
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்;
வானம் பொய்யாது; மாநிலம் வளம்படும்;
ஊனுடைய யுயிர்கள் உறுதுயர் காணா;
2வளிவலம் கொட்கும் மாதிரம் வளம்படும்;
3நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்;
4கறவை கன்றார்த்திக் கலநிறை பொழியும்;
பறவை 5பயன்துய்த்து உறைபதி நீங்கா;
விலங்கு மக்களும் 6வெரூஉப் பகைநீங்கும்

“அக்காலத்தே, அவன் உரைக்கும் அருளறத்தைக் கேட்டு ஒழுகுவோர் பிறவித் துன்பம் நீங்குவர். அப்பெருமானது அடியிணை களைப் பிறவிதோறும் யான் மறவாது ஏத்திவருகின்றேன்.

“இனி, நின்னால் இவ்வூரின்கண் ஏது நிகழ்ச்சிகள் பல நிகழ விருக்கின்றன. அவை நிகழ்ந்தபின், நீ நல்லறம் பல பெறுவாய். மாதவியும் சுதமதியும், முன் பிறவியில் பாதபங்கய மலையைப் பரசியவராதலால், இனி அவர்கள் அப் புத்தனது திருவடி தொழுது வினைநீங்கி நன்னெறிப் படர்வர். நீ ஆருயிர் மருந்தாகிய அமுத சுரபி பெற்றுளாய். அதுகொண்டு பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தைப் பண்ணுவாயாக” என்று இவ்வாறு அறவணவடிகள் மணிமே கலைக்கு அறம் உரைத்தார். இதனை மனம்கொள்ளக் கேட்ட மணிமேகலை, பசிப்பிணி தீர்க்கும் பெரும்பணியை மேற்கொண்டு ஆற்ற எழுந்தனள்.

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை


வட நாட்டில் உள்ள காசி நகரத்துக்கு வாரணாசி என்றும் பெயருண்டு. அதன்கண் அபஞ்சிகன் என்னும் ஓர் பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவன் மறை யோதுவிக்கும் தொழிலினன். அவனுடைய மனைவி சாலியென்னும் பெயருடையவள். அவள் ஒருகால் தன் கற்பு நிலையிழந்து கருப்பமுற்றாள். கணவனை வஞ்சித்த இக்குற்றத்துக்குக் கழுவாய் நாடி, தென்குமரியில் நீராடக் கருதித் தென்னாடு நோக்கி வந்து கொண்டிருந்தாள். பாண்டிநாட்டுக் கொற்கை நகருக்குத் தெற்கே ஒருகாவதத் தொலைவில் கோவலர் வாழும் ஒரு சிற்றூரில், ஒரு சோலையில் வயாவும் வருத்தமுமுற்று ஆண் குழந்தை யொன்றைக் கருவுயிர்த்தாள்.

பிறந்த குழந்தையைக் கண்டும், அப்பார்ப்பனி மனம் சிறிதும் தெளியாது, அதன்பால் அன்போ அருளோ இறையும் கொள்ளாது, அச் சோலையிலே தனிக்கவிட்டுச் சென்றொழிந்தாள். அங்கே தனித்துக்கிடந்த குழவியைப் பசுவொன்று கண்டு, அதன்பால் இரக்கமுற்றுத் தன் நாவால் நக்கித் தன் மடிசுரந்து பாலை ஊட்டி ஏழுநாள் வரையில் காத்து ஓம்பிவந்தது. கற்புச் சிறப்பில்லா அவ்வன்னெஞ்சப் பார்ப்பனியின் செயல் ஒருபுறமிருக்க, ஆவின் அருட்செயல் வேறோரு புறத்தே சிறக்க, அவ்வழியே வந்த இளம்பூதி என்னும் அந்தணன் கண்டு, அக்குழவிபால் அன்புமிகக் கொண்டு, வயனங்கோடு என்னும் தன் ஊருக்கு எடுத்துச்சென்று, தன் மனைவியுடன் தான் பெற்ற மகனாகவே கொண்டு வளர்த்து வரலானான். அம்மகனும் பார்ப் பார்க்குரிய நெறிமைப்படியே வளர்ந்து கலைபலவுணர்ந்து அறிவுமிகப் படைத்த நல்லாண் மகனாகச் சிறப்புற்றனன்.

இஃது இங்ஙனமாக, ஒருகால் மறையோதும் பார்ப்பனர் பலர் கூடிப் பசுவேள்வியொன்று செய்யலுற்றனர். அவ்வேள்வியிற் கொலை செய்வதற்காகக் கன்றீன்ற கறவையொன்றைக் கொணர்ந் திருந்தனர். அக்கயவரது செயலை எவ்வாறோ உணர்ந்துகொண்டு அக்கறவை கதறிக் கத்திக் கண்ணீருகுத்து நின்றது. அதனைக் கண்ட இளம்பூதியின் வளர்ப்புச் சிறுவன், அக்கறவையின்பால் கழிபேரருள் கொண்டு, நள்ளிருட் போதில் அக்கறவையை வேறெங்கேனும் கைக்கொண்டு போகக் கருத்தில் எண்ணினான்.

‘அச்சிறுவன், தான் எண்ணிய வண்ணமே, அந்நாள் இரவில், கறவையைக் களவினால் பற்றிக்கொண்டு ஒரு காட்டு வழியே போவானாயினன். பொழுது விடிந்ததும், பார்ப்பனர் தம் கேள்விக் குரிய கறவை காணாது போனமைகண்டு, அதனைத் தேடி நாற்புறமும் திரியலுற்றனர். அவருள் ஒரு சிலர் இச்சிறுவன் செல்வதைக் கண்டறிந்து கொள்ளவே, அனைவரும் இக்காட்டிடத்துக்கு வந்து, இச்சிறுவனையும் கறவையையும் வளைந்து பற்றிக் கோல் கொண்டு அவனை நையப்புடைத்து வருத்தினர். அந்நிலையில், அக்கறவை வெகுண்டு, அப்பார்ப்பனருள் முன்னணியில் நின்ற வேள்வி யாசானைத் தாக்கித் தன் கொம்பினாற் குத்திக் குடர்சரிந்து வீழச் செய்துவிட்டு ஓடிவிட்டது.

பார்ப்பனர் தன்னை மிகவும் அடித்து வருத்திய வழியும், அச்சிறுவன், மனச்சோர்வு கொள்ளாது, அவர்களை நோக்கி, பார்ப்பனர்களே,’
நோவன செய்யன்மின்; 1நொடிவன கேண்மின்;

2விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து,
நெடுநில மருங்கில் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந் தூட்டும்
இதனொடுவந்த செற்றம் என்னை?

என்று வினவினன்; அதற்கு அவ்வேதியர்கள், நேரிய காரணம் உரைக்கும் நீர்மை இல்லாமையால்,

“பொன்னணி 3நேமி வலங்கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய,
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை;
1தெருமரல் உள்ளத்துச் சிறியை; நீ அவ்
ஆமகன் ஆதற்கு ஒத்தனை; அறியா
நீ மகனல்லாய்”

என இகழ்ந்து பேசத் தொடங்கினர்.

“இவன் மக்களினத்து மகனல்லன்; விலங்கினத்து ஆனின் மகன்” என்று அப்பார்ப்பனர் இகழ்ந்து பேச, “அது குற்றமன்று” என்றற்கு அச்சிறுவன்,

2“ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி;
புலிமகன் விரிஞ்சி; 3புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்;
ஈங்கிவர் நும்குலத்து இருடிகணங்கள் என்று
4ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்,”

என அவர் கூற்றை மறுத்து, “ஆவொடுவந்த அழிகுல முண்டோ?” என்று அவர்கள் வாய் அடைப்புண்ணக் கடாவினன். யாவரும் பேசும் திறமின்றிப் பேதுறுகின்றபோது, வேறொரு பார்ப்பனன், பேசுதற்கு வேறு விரகு தெரியாது, இச்சிறுவன் பிறப்பைப் பழிக்கத் தொடங்கி, “இவன்தன் பிறப்பு வரலாற்றினை யான் அறிகுவேன்; கேள்மின்” எனக் கூறலுற்றான்:

5“நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்:
வடமொழி யாட்டி; மறைமுறை எய்திக்
குமரிபாதம் கொள்கையின் வணங்கி,
6தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை
‘யாது நின்னூர்? ஈங்கு என்வரவு’ என,
மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும்:
‘வாரணாசி யோர் மாமறை முதல்வன்,
ஆரண வுவாத்தி அரும்பெறல் மனைவியான்;
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிக்
1காப்புக் கடைகழிந்து கணவனை இழந்தேன்;
2எறிபயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கட் குமரி ஆடிய வருவேன்
பொன்தேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கே னாகி
3தோன்றாத் துடவையின் இட்டனென் போந்தேன்;
செல்கதி யுண்டோ தீவினையேற்கு என்று
4அல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கு இவன்;
5சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்
புல்லல் ஓம்பன்மின், புலைமகன் இவன்

என்று மொழிந்தான். இது கேட்ட அச்சிறுவன், அப் பார்ப் பனரை இகழ்ந்து நோக்கி நகைத்து, “பார்ப்பனமாக்களே, உங்கள் குலமுறை கூறுவேன்; கேண்மின்:

முதுமறை 6முதல்வன் முன்னர்த் தோன்றிய
7கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்,
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்;
8புரிநூல் மார்பீர்! பொய்யுரை யாமோ?”

என்று சொல்லித் “தேவ வேசிமக்களான வசிட்டன், அகத்தியன் என்ற இருவரையும் மேற்கொண்டு அவர் வழியே வரும் பார்ப்பன மாக்களாகிய உங்கள் முறைமையே நோக்கின், என்னைப் பயந்த, சாலிக்கு ஒரு குற்றமும் இல்லையாமன்றோ?” என அப்பார்ப்பனர் முகம் சுளித்துத் தலை குனியுமாறு பேசி நகையாடி எள்ளினன். இது கண்ட இளம்பூதி, இச்சிறுவனைத் தன் மனையினின்றும் நீக்கி விட்டான். அவன்பின், அவ்வூரிடத்து ஓடேந்திச் சோறு இரந்துண் பானாயினன். அவ்வூரில் வாழ்ந்த கன்மனப் பார்ப்பனர், அவன் சோறு இரக்கும் ஓட்டில், சோறு இடாது கல்லையும் மண்ணையும் எறியலுற்றனர்.

அவன், பின்பு அவ்வூரின் நீங்கி, தென்மதுரை யடைந்தான். அங்கே சிந்தாதேவி கோயிலிலுள்ள பீடிகையில் தங்கி, சோறு இரந்துண்டு வந்தனன். அவனேந்திய ஓட்டில்பெற்ற உணவை அவன் அவ்வூரிடத்தே இருந்து பசியால் வாடிய,

1காணார், கேளார், கால்முடப் பட்டோர்,
2பேணுநர் இல்லோர், பிணிநடுக் குற்றோர்,
யாவரும் வருக என்று 6இசைத்து உடனூட்டி,

அவருண்டொழிந்த மிச்சிலைத் தான் உண்டு, அதனையே தலைக்கு அணையாகவும் கொண்டு உறங்கியுறைவானாயினன்.

குறிப்பு : இச்சிறுவனே, ஈங்குப் பார்ப்பனரால் ஆமகன் என இழித்துக் கூறப்பட்டானாயினும், மறுபிறப்பில், சாவகநாட்டில் ஒரு பசு வயிற்றிற் பிறந்து சிறக்கின்றானாதலின், நம் கதை இனிது செல்வது வேண்டி, இவனை இனி ஆபுத்திரன் என்றே வழங்கு கின்றோம்.

பாத்திரமரபு கூறிய காதை


இதுகாறும் தான் கூறிவந்ததை மிக்க ஆர்வத்தோடு கேட்ட மணிமேகலையை நோக்கி, அறவணவடிகள் அச்சிறுவனான ஆபுத்திரனது வரலாற்றை மேலும் கூறுகின்றார்.

மதுரை நகரிலுள்ள, சிந்தாதேவி திருக்கோயிற் பீடிகையில் தங்கியிருந்த ஆபுத்திரன், மழைக்காலத்தில் ஒருநாள் நள்ளிரவில் இனிது உறங்கிக் கொண்டிருக்கை யில், நெடுந்தொலைவு நடந்து பசியால் மெலிந்து சிலர் வந்து அவனை எழுப்பி, “ஐயனே, வயிறு காய்பெரும் பசியால் மிகவும் வருந்துகின்றேம்” என்று வணங்கி மொழிந்தனர். அவனோ ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லாதவன்; அதனால், அவன் அவர் பசி களையும் வகையறியாது திகைத்தான். அப்போழ்தில், சிந்தாதேவி தோன்றி, அவனை விளித்து,

ஏடா! 1அழியல்; எழுந்து இது கொள்ளாய்;
நாடு 2வறங்கூரினும் இவ்வோடு வறங்கூராது;
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான் 3தொலைவில்லாத் தகைமையது

என்று மொழிந்து தன் கையிடத் திருந்த தொரு உணவுக் கலத்தை அவன் கையில் அன்போடு அளித்தது.

அதனைப் பெற்றதனால் பேருவகைக் கடல்மூழ்கிய ஆபுத்திரன், அத்தேவியைப் பரவி,

4சிந்தா தேவி! செழுங்கலை 5நியமத்து
6நந்தா விளக்கே! 7நாமிசைப் பாவாய்!
வானோர்தலைவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர்களைவாய்

எனச் சொல்லித் தொழுது, தன்பால் பசித்துவந்தவரது பசிப்பிணி போக்கினன். அன்றுமுதல், அந்நகரினும் அதனைச் சூழவிருந்த நாட்டிலும் பசிப்பிணி இலதாயிற்று. ஆபுத்திரனது அறப்பயனும் சிறந்து மிகுவதாயிற்று. அதனால் விண்ணுலக வேந்தனான இந்திரனது பாண்டுக் கம்பளம் துளங்கத் தொடங்கியது. இதனை யறிந்த அவ்விந்திரன், திரைத்து நரைத்து மூத்துத் தளர்ந்த மறையோ னொருவனைப் போல ஆபுத்திரன் முன்தோன்றி, “யான் இந்திரன்; நின் அறத்தின் சிறப்பை அறிந்தேன்; நீ வேண்டும் வரம் யாது? கேள், தருவேன்” என்றான். அவனை எள்ளி நகைப்பான் போல ஆபுத்திரன் விலாவறச் சிரித்து,

1“ஈண்டுச் செய்வினை 2ஆண்டு நுகர்ந்திருத்தல்
3காண்தகு சிறப்பின் நும் கடவுள ரல்லது
அறஞ்செய் மாக்கள் 4புறங்காத்து ஓம்புநர்,
நற்றவம் செய்வோர் 5பற்றற முயல்வோர்
6யாவரும் இல்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவ னாகிய பெருந்திறல் வேந்தே!
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர்
7திருந்துமுகம் காட்டும் என்தெய்வக் 8கடிஞை”

எனக்கு ஈது ஒன்றே அமையும்; நின்னால் தரப்படக்கூடிய உண்டியும் உடையும் பெண்டிரும் பிறவும் எனக்கு வேண்டா” என்று விளம்பினன்.

இச்சொற்களைக் கேட்டலும் இந்திரனுக்குச் சினம் தோன்றியது. “ஈத்துவக்கும் இன்ப மிகுதியால் இவன் இவ்வாறு மொழிகின்றான்; இனி, இந்நாட்டில் இவன்பால் உணவு ஏற்பார் இலராமாறு மழையும் விளைநலனும் மிகவுண்டாக்குவேன்” என்று நினைத்து, நினைத்த வண்ணமே செய்தனன். ஆபுத்திரனும் தன்பால் பசித்துப் போந்து உணவு கொள்வோர் இலரானமை கண்டு ஊர்தோறும் உணவின்றி வருந்துவோர் உளரோ எனத் தேடித் திரியலானான். பன்னிரண்டாண்டுகளாக மழையின்மையால் பெருவறம் கூர்ந் திருந்த பாண்டி நாட்டில், இப்போது பெருவளம் சுரந்து பேரின்பம் செய்ததனால்,

1“விடரும் தூர்த்தரும் 2விட்டேற் றாளரும்
3நடவை மாக்களம் நகையொடு வைகி
4வட்டும் சூதும் வம்பக் கோட்டியும்
5முட்டா வாழ்க்கையும் முறைமைய தாக,

பசித்தோரைத் தேடித் திரியும் ஆபுத்திரனை, “யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்தனர்.” அதனால், அவன்,

6திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
7ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்
தானே தமியன் வருவோன் தன்முன்
8மாநீர் வங்கம் வந்தோர்

சிலர் வந்து வணங்கி, “சாவக நாட்டில் பெயலின்மையால் உயிர்கள் பெரிதும் வருந்துகின்றன” என்றனர். அது கேட்டதும், ஆபுத்திரன்,

அமரர்கோன் ஆணையின் 9அருந்துவோர்ப் பெறாது
10குமரி மூத்த என்பாத் திரமேந்தி
அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்துஎன
1வங்க மாக்ககொடு மகிழ்வுட னேறி
2கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
3மால்இதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கியது ஒருநாள்; தான் ஆங்கு இழிந்தனன்.

இழிந்து அம்மணிபல்லவத் தீவிடை அவன் திரிந்துகொண் டிருக்கையில், வங்கமாக்கள், அவன் வங்கம் ஏறிக்கொண்டனன் எனப் பிறழவுணர்ந்து போய்விட்டனர். திரிந்து போந்த ஆபுத்திரன் வங்கம் போய்விட்டதையறிந்து மனம் அழிந்து,

அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்,
4மன்னுயிர் ஓம்பும் இம்மாபெரும் பாத்திரம்
என்னுயிர் ஓம்புதல் யானோ 5பொறேஎன்;
6தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன்;
சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது,

கோமுகியென்னும் பொய்கைக்கண் அப்பாத்திரத்தை எறிந்து, “ஓராண்டில் ஒருநாளில் இது வெளிப்படுக; அதுபோது, அருளறம் பூண்டு ஆருயிரோம்பும் பெரியோர் உளரெனில், அவர் கைக்கண் இது சென்று அமர்வதாக” எனக் கூறி, உண்ணா நோன்பாற்றி உயிர் விட்டான். அக்காலத்தே சென்று யான் அவனை வினவிய போது, அவன் எனக்கு இச்செய்தியைக் கூறினன். பின்பு, அவன் சாவக நாட்டை யாளும் பூமி சந்திரன் என்னும் வேந்தனுடைய கோல் நிழலில் இருந்த மண்முகன் என்னும் முனிவரனிடம் இருந்த ஆவியின் வயிற்றில் பிறந்தான்.

பாத்திரங் கொண்டு பிச்சைபுக்க காதை


ஆபுத்திரனை ஈன்ற சாலியென்பவள் விட்டுப்போன பின், அவனையாதரித்த பசு மறுபிறப்பில், சாவகநாட்டுத் தவளவரை யிடத்தே வாழ்ந்த மண்முகன் என்னும் முனிவன்பால் பொற்கோடும் பொற்கொம்பும் உள்ள பசுவாய்ப் பிறந்து வாழ்ந்து வந்தது. அதன் வயிற்றில் பொற்றகட்டாலான முட்டை யொன்றில் ஆபுத்திரன் சென்று தங்கினன். இதனை முக்காலமும் உணர்ந்த அம்முனிவன் முன்பே அறிந்து, இதன்பால்,

மழைவளம் சுரப்பவும் மன்னுயி ரோம்பவும்,
1உயிர்க்காவலன் வந்து ஒருவன் தோன்றும்;
2குடர்த் தொடர் மாலை பூண்பா னல்லன்;
3அடர்ப்பொன் முட்டை அகவையினான்… என்றான்.

பின்னர்,

பிணிநோய் இன்றியும் பிறந்தறம் செய்ய,
மணிபல்லவத் திடைமன்னுயிர் நீத்தோன்;
4தற்காத் தளித்த தகைஆ அதனை,
5ஒற்கா உள்ளத் தொழியா னாதலின்,
ஆங்கவ் 6வாவயிற்று அமரர்கணம் உவப்ப,
7தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்கு
ஒருதானாகி உலகு தொழத் தோன்றினன்.

இவன் பிறந்த நாள் புத்ததேவன் பிறந்த நாளாதலின்,

மண்ணக மெல்லாம் மாரி யின்றியும்,
1புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது.

இச்சிறப்பைக் கண்ட சக்கரவாளக் கோட்டத்தில் வாழும் மாதவர்கள் திரண்டு சென்று கந்திற்பாவையை வினவினர். அவர் கட்கு அப்பாவை ஆபுத்திரனது தோற்றத்தைக் கூறி, ஏனைச் செய்தி களை அறவணவடிகள்பால் கேட்குமாறு விடுத்தது. அவர்கட்கு அவ்வடிகள், பின்வரும் செய்தியைக் கூறினன்.

2மண்ணாள் வேந்தன், மண்முக னென்னும்
3புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி,
‘மக்களை யில்லேன்; மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை’ என்று அவன் வளர்ப்ப,
4அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின்,
5நிரைதார் வேந்தன் ஆயினன்; அவன்தான்,
6துறக்க வேந்தன், துய்ப்பிலன் கொலோ!
7அறக்கோல் வேந்தன், அருளிலன் கொல்லோ!

இவ்வண்ணமே கூறிப்போந்த அறவணவடிகள், மணி மேகலையை நோக்கி,

8நலத்தகை யின்றி நல்லுயிர்க் கெல்லாம்
9அலத்தற் காலை யாகியது; ஆயிழை,
வெண்திரை தந்த அமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை 10ஒழித்து வைத்தாங்கு
11வறனோடு லகில் வான்துயர் கெடுக்கும்
அறனோடு ஒழித்தல், ஆயிழை, தகாது

என்று மொழிந்தார். அது கேட்டதும், மணிமேகலை தன்னைச் சூழ இருந்த தாயருடன் அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி விடை பெற்று, பிக்குணிக் கோலத்துடன், பிச்சைப்பாத்திரம் கையில் விளங்கக் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருந்தெருவை அடைந்தாள். அவளைக் கண்ட ஊரவரும் பிறரும்,

உதயகுமரன் உளம்கொண் டொளித்த
1முதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது
2திப்பியம் என்றே சிந்தைநோய் கூர,

மணிமேகலை, மனமகிழ்ச்சி மிகவுடையளாய், “பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சையை முதற்கண் ஏற்றல் பெருந்தகவாகும்” என்றனள். அவட்குக் காயசண்டிகை என்னும் விஞ்சையர் மகளொருத்தி,

3“குளன் அணிதாமரைக் கொழுமலர் நாப்பண்,
ஒருதனி ஓங்கிய 4திருமலர் போன்று,
5வான்தரு கற்பின் மனையுறை மகளிரின்
தான் 6தனி யோங்கிய தகைமைய ளன்றோ
ஆதிரை நல்லாள்; அவள்மனை, இம்மனை;
நீ 7புகல் வேண்டும், நேரிழை! என்றனள்.”

இவ்வாறு முன்மொழிந்த காயசண்டிகை மேலே ஆதிரையின் வரலாற்றினைக் கூறலுறுகின்றாள்.

ஆதிரை பிச்சையிட்ட காதை


ஆதிரையென்பவள் சாதுவன் என்னும் வணிகற்கு மனைவி. அவன் தொடக்கத்தே, கணிகைமகளிரின் காமவலைப்பட்டுத் தன் மனைவியைக் கைவிட்டொழுகினன்; அவன்பால் கள்ளுண்டல், கவறாடல் முதலிய தீச்செயல்கள் உளவாயின. அவற்றால் அவன் செல்வமிழந்து வறியனாயினன். அவனாற் பேணப்பட்ட கணிகை யரும் அவனைக் “காணமிலி” எனக் கையுதிர்த்தனர். பின்னர், அவன் தன் நிலையினை நினைந்து வருந்தி, வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தானும் சென்றனன். வழியில், அவன் ஏறிச் சென்ற வங்கம் தீவளியால் கடலிற் கவிழ்ந்துவிட்டது. உடை கலப்பட்ட காதுவன் ஒடிமரம் ஒன்றைப் பற்றி, நாகர் வாழும் தீவொன்றையடைந்து உணர்வற்றுக் கிடந்தான்.

அவனைப் போல வேறோராற்றால் உயிர் தப்பிச் சென் றோர், ஆதிரைபால் நிகழ்ந்தது கூறி, சாதுவன் இறந்தான் என்றனர்.

ஆதிரை நல்லாள் ஆங்கது தான்கேட்டு
1ஊரீரே யோ! ஒள்ளழல் ஈமம்
தாரீரோ எனச் 2சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து,
3முடலை விறகின் முளியெரி பொத்தி,
“மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன்” என்று அவள்

தீயிடை வீழ்ந்தாள். வீழ்ந்த போது,

1படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்,
உடுத்த கூறையும் ஒள்ளெரி உறாஅது;
2ஆடிய சாந்தமும், அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் 3தொல்நிறம் வழாது;
4விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த
5திருவின் செய்யோள் போன்று இனிதிருப்ப,

அவள் பெரிதும் கலக்க முற்று,

தீயும் கொல்லாத் 6தீவினை யாட்டியேன்,
யாது செய்வேன் என்று அவள் ஏங்கினள்;
ஏங்கலும், வானத்தே மெய்யொலி எழுந்து,
ஆதிரை, கேள் : உன் அரும்பெறற் கணவனை,
7ஊர்திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி,
8நக்க சாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கம் சேர்ந்தனன்; பல்யாண்டு இரான்;
சந்திரதத்தன் எனுமோர் வாணிகன்
வங்கம் தன்னுடன் வந்தனன் தோன்றும்;
நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீ என

உரைத்தது. அது கேட்டு மனந்தெளிந்து மகிழ்ந்த ஆதிரை தன் மனையகமடைந்து,

9கண்மணி யனையான் கடிதீங் குறுக எனப்
10புண்ணியம் முட்டாள்; பொழிமழை தரூஉம்
1அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் 2வியப்பின ளாயினள்.

இவ்வாறு ஆதிரையின் செயல் வகை கூறிய காயசண்டிகை நாகர் தீவடைந்த சாதுவன் செயலைக் கூறலுற்று, நாகர் தீவில் மலைப்பக்கத்தே உணர்வற்றுகள் கிடந்த சாதுவனை, ஆங்கே வந்த நாகர் சிலர் கண்டு, தமக்கு அவனது உடம்பு நல்லுணவா மென்று கருதி யெழுப்பினர். எழுந்த சாதுவன் அவர் மொழியை நன்கறிந்த வனாதலின், அவருடன் இனிதே சொல்லாடினன். அவர்கள் அவனைத் தொழுது, “இங்கே எம் தலைமகன் உளன்; அவன்பால் நீ போந்தருள்” என்றனர். சாதுவன் அதற்கு இசைந்து அவருடன் நாகர் தலைவன்பால் சென்றனன்.

கள்ளடு 3குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் 4புணங்கலும் விரவிய இருக்கையில்,
5எண்குதன் பிணவோ டிருந்தது போலப்
பெண்டுடன் இருந்த

நாகர் தலைவனைச் சாதுவன் கண்டான். அவன் இவனது வரவு வினாவி, நிகழ்ந்தது கேட்டு, சொல்லப்பட்டால் அன்பு கொண்டு, இச்சாதுவன்,

6அருந்துதல் இன்றி அலைகடல் 7உழந்தோன்;
வருந்தினன்; அளியன். வம்மின், மாக்காள்!
நம்பிக்கு இளையளோர் நங்கையைக் கொடுத்து,
8வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும்.

என்று உரைத்தான்.
சாதுவன் :-
1வெவ்வுரை கேட்டேன்; வேண்டேன்.

நாகர் தலைவன் முகஞ் சுளித்து :-
பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு
உண்டோ 2ஞாலத்து உறுபயன்? உண்டெனில்,
காண்குவம், யாங்களும்; காட்டுவா யாக.

சாதுவன் : -

மயக்கும் கள்ளும் மன்னுயிர் 3கோறலும்
4கயக்கறு மாக்கள் கடிந்தனர், கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்,
நல்லறம் செய்தோர் நல்லுல கடைதலும்,
அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென வுணர்தலின், 5உரவோர் களைந்தனர்;
கண்டனை யாக.

நா. தலை :- (நகைத்து)

உடம்புவிட்டோடும் உயிர் உருக்கொண்டு ஓர்
இடம்புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்;
அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும்? அவ்வகை,
6செவ்வனம் உரை.

சாதுவன் : - இது கேள்,

7உற்றதை யுணரும் உடல்உயிர் வாழ்வுழி;
8மற்றைய வுடம்பே, மன்னுயிர் நீங்கிடின்,
9தடிந்தெரி யூட்டினும் தானுண ராதெனின்,
உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர், நீ.
1போனார் தமக்கோர் புக்கில் உண்டென்பது
யானோ அல்லேன், யாவரும் உணர்குவர்;
உடம்பீண் டொழிய உயிர்பல காவதம்
கடந்து 2சேண்சேறல் கனவினும் காண்குவை;
ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை
3பூண்ட யாக்கையில் புகுவது தெளி, நீ.

நா. தலைவன் : - (வணங்கி)

கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு
உள்ளுறை வாழுயிர் 4ஓம்புத லாற்றேன்;
5தமக்கொழி மரபின் சாவுறு காறும்
எமக்காம் நல்லறம் எடுத்துரை.

சாதுவன் :-

நன்று சொன்னாய் நன்னெறி 6படர்குவை
உன்தனக்கு ஒல்லும் நெறியறம் உரைக்கேன்;
உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின்
7அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயி ரோம்பி
8மூத்து விளிமா ஒழித்து எவ்வுயிர் மாட்டும்
9தீத்திறம் ஒழிக.

இவ்வறங்களைக் கேட்ட நாகர் தலைவன் பெருமகிழ்வு கொண்டு, வேண்டும் பொன்னும் பொருளும் மிக நல்கினன். அவற்றைப்பெற்ற சாதுவன் சந்திரதத்தன் என்னும் வணிகனது வங்கமேறி இந்நகரையடைந்து தன் மனைவி ஆதிரையுடன் நல்லறம் செய்து வருவானாயினன்; இவ்வாதிரைபால் பிச்சை பெறுவாயாக எனக் காயசண்டிகை சொல்லி முடித்தாள். இவ்வண்ணமே மணிமேகலை ஆதிரை இல்லின் முன் “புனையா ஓவியம்” போல நின்றனள். ஆதிரை நல்லாளும் அவளது பிச்சைப் பாத்திரம் நிறையச் சோறு பெய்தாள்.

உலக அறவி புக்க காதை


ஆதிரையிட்ட பிச்சையுடன் சென்ற மணிமேகலை பசிநோய் வருத்த வருந்தும் மக்கள் பலர்க்கும் உணவு இட்டு வரலானாள். அதனால், அப்பாத்திரத்துப் பிச்சை குறையாது நிறைந்து நின்றது கண்டு, காய சண்டிகை,

1நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
2அடலரு முந்நீர் அடைத்த நான்று,
குரங்கு கொணர்ந் தெறிந்த 3நெடுமலை யெல்லாம்
4அணங்குடை யளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழற் கடும்பசிப்
பட்டேன், என்றன் பழவினைப் பயத்தால்;
அன்னை, கேள்நீ, 5ஆருயிர் மருத்துவி!
6துன்னிய என்நோய் துடைப்பாய் என்றனள்.

மணிமேகலை அங்ஙனமே சோறிடலும், காயசண்டிகை கொண்டிருந்த யானைத்தீ என்னும் பசிநோய் நீங்கிற்று. அவள் நெஞ்சு குளிர்ந்து, தனக்கு அந்நோயுண்டான காரணத்தைக் கூறலுற்றாள்.

வெள்ளிமலையின் பகுதியாகிய சேடி மலையில் உள்ள காஞ்சன புரத்து வித்தியாதர மகளாகிய யான், என் கணவனுடன் பொதியில் மலையைக் காண்டற்கு வந்துகொண்டிருந்தேன். வழியில் ஓர் யாற்றில் என்னை யிருத்தி என் கணவன் கனி கொணரச் சென்றான். அங்கே விருச்சிகன் என்னும் மாதவன் பன்னீராண்டிற் கொரு முறை பழுக்கும் நாவற்கனி யொன்றைக் கொண்டுவந்து தேக்கிலையில் வைத்து நீராடச் சென்றான். அதன் உண்மைநிலை யுணராது செருக்கிச் சென்றயான் அக்கனியைக் காலால் எற்றிச் சிதைத்தேன். திரும்பிப் போந்த விருச்சிகன் என் செயலைக் கண்டு சினந்து,

சீர்திகழ் நாவலில் 1திப்பியமானது,
ஈராறாண்டில் ஒருகனி தருவது
அக்கனி யுண்டோர் ஆறீராண்டு
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்;
பன்னீ ராண்டில் ஒருநாளல்லது
உண்ணா நோன்பினேன் உண்கனி 2சிதைத்தாய்;
3அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து
4தந்தித் தீயால் தனித்துய ருழந்து
முந்நாலாண்டில் முதிர்கனி நான்ஈங்கு
உண்ணும் நாள்உன் உறுபசி களைக

எனச் சாப மிட்டகன்றான். பின்பு வந்த என் கணவன் என் அறி யாமைக் கிரங்கி, வருந்தி, முடிவில்,

5சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
6கம்பமில்லாக் கழிபெருஞ் செல்வர்,
ஆற்றாமாக்கட்கு ஆற்றுந் துணையாகி,
நோற்றோர் உறைவதோர் 7நோனகர் உண்டால்;
பலநாளாயினும் 1நிலனொடுபோகி,
அப்பதிப் புகுக.

என்று கூறிவிட்டுப் பிரிந்தனன். யானும்இந்நகரை யடைந்து இங்கு வதிவேனாயினேன். இந்திரவிழாக் காலத்தே என் கணவன்போந்து என்னைக் கண்டு ஏகுவது வழக்கம். இன்று நீ போந்து என் பசித்துயர் களைந்து பண்டையியல்பு பெறுவித்தாய். இனி யான் என் நகர்க்குச் செல்வேன். நீ இந்நகரில் உள்ள சக்கரவாளக் கோட்டத்து உலகவற விக்குச் சென்று, அங்கே,

2ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர்,
3ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர்,
4இடுவோர்த் தேர்ந்தாங்கு இருப்போர் பலரால்;
5வடுவாழ் கூந்தல்! அதன்பாற் போகுக

என்று சொல்லிவிட்டு அக்காயசண்டிகை போய்விட்டனள்.

அவள் சொல்லியவண்ணமே, மணிமேகலை அவ்வுலக அறவிக்குச் சென்று, சம்பாபதி கோயிலையடைந்து மும்முறை வலம் வந்து வணங்கிப் பின் கந்திற் பாவையைக் கைதொழுது, பசித்த மாக்கட்குப் பேருணவு வழங்கி அவர் பசிநோய் தீர்க்கும் பெருந் தொண்டு புரிந்து வரலானாள்.

உதயகுமரன் அம்பலம் புக்க காதை


மணிமேகலை இவ்வாறு பிச்சையேற்றளிக்கும் பேரறக் துறவியாய் ஒழுகுகின்ற செய்தி, சித்திராபதி என்னும் மாதவியின் தாய்க்கு எட்டியது. பெரும்புண்ணில் எரிசெருகியது போல், அஃது அவள் நெஞ்சில் பெருந்துயரைச் செய்தது. அதனால் அவள், ஏனை நாடக மகளிரை நோக்கி,

கோவலன் இறந்தபின் 1கொடுந்துயர் எய்தி
மாதவி 2மாதவர் பள்ளியுள் அடைந்தது
3நகுதக் கன்றே, நல்நெடும் பேரூர்;
இது 4தக் கென்போர்க்கு எள்ளுரை யாயது;
5காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
6போதல் செய்யா உயிரோடு புலந்து,
7நளியிரும் பொய்கை யாடுநர் போல
8முளியெரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டி ரல்லேம்; பலர்தம்
9கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே;
பாண்மகன் பட்டுழிப் படூஉம் 10பான்மையின்,
யாழினம் போலும் இயல்பினம்; அன்றியும்,
1நறுந்தா துண்டு நயனில் காலை
2வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்;
3வினையொழி காலைத் திருவின் செல்வி
அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்,
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே!
மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி,
4போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதைய குமரனாம் உலகாள் வண்டின்
5சிதையா வுள்ளம் செவ்விதின் அருந்த,
கைக்கொண்ட டாங்கவள் ஏந்திய 6கடிஞையைப்
7பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி
மற்றுஅவன் தன்னால் மணிமே கலைதனைப்
பொற்றேர்க் கொண்டு போதே னாகில்,
8சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி
9வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோ
ரனையே னாகி அரங்கக் கூத்தியர்
10மனையகம் புகாஅ மரபினன்

என்று வஞ்சினங் கூறி, இளங்கோவாகிய உதயகுமரன் இருந்த பேரகத்தை யடைந்தாள். ஆங்கே,

1அரவ வண்டொடு தேனின மார்க்கும்
2தருமணல் ஞெமிரிய திருநாறு ஒருசிறைப்
பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த்
திகழொளி நித்திலச் சித்திர விதானத்து,
விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்து,
3துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி
4வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை
கொண்டுஇரு மருங்கும் 5கோதையர் வீச,

உதயகுமரன் வீற்றிருந்தான். அவன்பால், சித்திராபதி, மணி மேகலையின் இளமைச் செவ்வியும், ஆடல்பாடல்களின் நிறைந்த புலமையும் அழகுறக் கூறி, அவள் உலகவறவியில் இருந்து அறம் செய்தலையும் எடுத்து மொழிந்தாள். கடலில் கலம் கவிழப்பெற்ற ஒருவனுக்குப் பெரிய புணை கிடைத்தாற்போன்ற இச்செய்தியைக் கேள்வியுற்ற அவன், முன்பு அம்மணிமேகலையைக் கண்டது முதல், மணிமேகலா தெய்வம் தோன்றி, அரசுமுறை கூறி அகற்றியது ஈறாக நடந்தவையெல்லாம் சொல்லி, தன் மைய லறிவைப் புலப்படுத்தினான்.

சித்திராபதி அவன் கூறியது கேட்டுச் சிறுநகை செய்து, “அரசே, இவை யாவும் காமக் கள்ளாட்டில் நிகழும் இடையீடும். இவைபோல்வன பலவும் தேவர்க்கும் நிகழ்ந்துள்ளன என்று கூறி, இந்திரன் ஆயிரங்கண் பெற்றதும், தீக்கடவுளின் மனையாள், முனிமகளிர் எழுவருள் அருந்ததியொழிய ஏனையோர் போலத் தோன்றி, அக்கடவுளின் காமத்துயர் துடைத்தும் அவன் அறிய உரைத்தாள். மேலும் அவளே கூறலுற்று,

1வாட்டிறற் குருசில்!
கன்னிக் காவலும், 2கடியிற் காவலும்,
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது,
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தம் குடியில் பிறந்தா ளல்லள்;
நாடவர் காண நல்லவரங் கேறி,
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச்
3சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
4செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டகம் புக்குப்
5பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் 6கொண்டி மகளிரைப்
7பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல்
கோன்முறை யன்றோ குமரற்கு,

என்று அவ்வுதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து அம்மணிமேகலையை விடாது தொடருமாறு தூண்டினாள்.

உதயகுமரன், உடனே , விரைபரி பூட்டிய நெடுந்தேர் ஏறி,. மணிமேகலையிருந்த இடத்தை யடைந்தான். ஆங்கே, பசியால் வாடுவோர்க்குப் பெருஞ்சோறு வழங்கிக்கொண்டிருந்த மணி மேகலையைக் கண்டு, இடங்கழி காமத்தனாய், அவளை அண்மி,

உடம்போடு என்றன் உள்ளம் புகுந்து என்
1நெஞ்சம் கவர்ந்த வஞ்சகக் கள்வி,
2நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
3ஏற்றூண் விரும்பிய காரணம் என்?

என வினவும் எண்ணமுடையனாய், வாய்விட்டு,

நல்லாய், என்கொல் நற்றவம் புரிந்தது?
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப,

மணிமேகலை, “இவன் பண்டைப்பிறப்பில் எனக்குக் கணவனான இராகுலன்; இவனை யான் வணங்கலும், இவன் என் கைப்பற்றலும் குற்றமாகா” என எண்ணினள். எனினும், மனம் நடுங்கி,

கேட்டது மொழிவேன்: 4கேள்வி யாளரின்
5தோட்ட செவியைநீ யாகுவை யாம்எனில்,

என்று முன்மொழிந்து, பின்பு,

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்ட டிரங்கலும்
இறத்தலும் உடையது; 6இடும்பைக் கொள்கலம்;
மக்கள் யாக்கை இது, என உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்;
7மண்டமர் முருக்குங் களி றனை யார்க்குப்
பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ?
கேட்டனை யாயின், 8வேட்டது செய்க

என்று சொல்லிவிட்டு, அம்மணிமேகலை அருகிருந்த சம்பாபதி கோயிற்குள் நுழைந்து, அத்தெய்வத்தைத் தொழுது, மணிமேகலா தெய்வம் கற்பித்த வேற்றுருக்கொள்ளும் மந்திரத்தை ஓதி, காய சண்டிகையின் வடிவுகொண்டு, பிச்சைப் பாத்திரத்துடன் வெளியே வந்தாள். அவனைக் கண்ட உதயகுமரன் உண்மை யுணரானாய், “இக்காயசண்டிகைபால் இப்பாத்திரத்தைத் தந்து மணிமேகலை மறைந்தனள்” என்று நினைந்து, தானும், அச் சம்பாபதி முன் சென்று நின்று,

பிச்சைப் பாத்திரம், 1பெரும்பசி யுழந்த
காயசண் டிகைதன் கையிற் காட்டி
2மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங் 3கிம் மண்ணீட் டியாரென உணர்கேன்;
ஆங்கவள் இவள் என்று அருளா யாயிடின்,
பன்னா ளாயினும் 4பாடு கிடப்பேன்;
இன்னும் கேளாய்: 5இமையோர் பாவாய்!
6பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்,
அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்,
7முரிந்து கடைநெரிய வரிந்தசிலைப் புருவமும்,
8குவிமுட் கருவியும், கோணமும், கூர்நுனைக்
கவைமுட் கருவியு மாகிக் கடிகொளக்
9கல்விப் பாகரின் காப்புவலை ஓட்டி
1வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க,
2முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி,
3புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென
முதியா ளுன்றன் கோட்டம் புகுந்த
மதிவாள் முகத்து மணிமே கலைதனை
யொழியப் போகேன்; 4உன்அடி தொட்டேன்;
இது குறை,

எனக் குறையிரந்து நிற்பானாயினன்.

சிறைக்கோட்டம் அறக்கோட்டம் Fஆக்கிய காதை


“மணிமேகலை யொழியப் போகேன்; உன் அடி தொட்டேன்” என்று சம்பாபதி முன் வஞ்சினம் வறிய உதயகுமரன் கேட்க, அங்குள்ள சித்திரங்களுள் ஒன்றில் நின்று,

1ஏடவிழ் தாரோய்! எம்கோ மகள்முன்
நாடாது துணிந்து 2நாநல் கூர்ந்தனை

என்றொரு தெய்வம் கூறிற்று, அதனைக் கேட்ட உதயகுமரன் மனம் கலங்கி, மெய்வருந்தி,

அங்கவள் தன்திறம் 3அயர்ப்பாய் என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்;
4பையர வல்குல் பலர்பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்;
5முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்;
இந்நிலை யெல்லாம் 6இளங்கொடி செய்தியின்
பின்னறிவாம்.

என்று எண்ணிக்கொண்டே அவ்விடம் விட்டுப் பெயர்ந்து நீங்கினன். மாலைப்போதும் வந்தது.

இனி, வேற்றுருக்கொண்டு நின்ற மணிமேகலை, பலபடநினைந்து,

மாதவி மகளாய் மன்றம் திரிதரின்,
காவலன் மகனோ 1கைவிட லீயான்;
2காய்பசி யாட்டி காயசண் டிகையென
ஊர்முழு தறியும் உருவம் கொண்டே,
3ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென் றளித்தல் 4விழுத்தகைத் தென்றே
நூற்பொ ளுணர்ந்தோர் 5நுனித்தனர்,

என்று கருதி, வேந்தனது ஆணை பிழைத்தோரை ஒறுக்கும் சிறைக் கோட்டம் புகுந்து, ஆங்கே பசியால் வருந்தி மெலிந்து கிடந் தோர்க்குப் பேருணவு தந்து பசிப்பிணியைப் போக்கினள். அவள் பாத்திரம் ஒன்றே கொண்டு மிகப் பலர்க்குப் பசிதீர உணவளித்து நிற்கும் செயலைச் சிறைக் கோட்டக் காவலர் கண்டு பெரு வியப்புக்கொண்டு, இச்செய்தியை அரசற்கு உணர்த்துவது தக்கது என்று எண்ணி அவன்பாற் சென்றனர்.

அக்காலையில், அரசர் பெருமான் தன் மனைவி சீர்த்தியென் பாளுடன், விளையாட்டுக் கருதி யொரு பூம்பொழிற்குச் சென்றிருந்தான். அங்கே,

கொம்பர்த் தும்பி 6குழலிசை காட்டப்
7பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய,
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்,

அழகிய பூம்பந்தர் ஒன்று அரசப் பெருமக்கட்கு இனிய காட்சி பயந்தது. அரசன்,

8புணர்துணை நீங்கிய பொய்கை யன்னமொடு
மடமயிற் பேடையும் தோகையும் கூடி
9இருசிறை விரித்தாங்கு எழுந்துடன் கொட்பன
ஒருசிறைக் கண்டுஆங்கு உள்மகிழ் வெய்தி,
மாமணி வண்ணனும் 1தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவைஇஃ தாம்என நோக்கியும்,
2கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னை,
3பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையைச்
செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப்
பைங்கிளி யூட்டும் 4ஓர் பாவையாம் என்றும்,
5அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
6பிணக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண்,
7மடவோர்க் கியற்றிய மாமணி பூசல்
8கடுவ னூக்குவது கண்டுநகை யெய்தியும்.

இன்புற்றுச் சிறந்தான். கூத்தர், அவிநயப்புலவர், நாடக நூல் வல்லவர், இசைப்புலவர், தண்ணுமைப் புலவர், குழல் இசைப் போர், பாட்டிசை சுவைப்போர், முத்துக்கோப்பவர், சாந்தம் சமைப்போர், பூத்தொடுப்போர் முதலிய பலரும் அரசனைச் சூழவிருந்து இன்புறுத்தினர். அரசன், அவ்வின்பத்தால் ஆராமை யெய்தி, மேலும் சென்று,

குருந்தும் 9தளவும் திருந்துமலர்ச் செருந்தியும்,
10முருகுவிரி முல்லையும் 11கருவிளம் பொங்கரும்,
பொருந்துபு நின்று திருந்துநகை செய்து
1குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும்
2பிறழ்ந்துபாய் மானும் 3இறும்பு அகலா வெறியும்

அரசிக்குக் காட்டி மகிழ்ச்சி மிக்கான். பின்பு,

எந்திரக் கிணறும், 4இடும்கற் குன்றமும்,
வந்துவீழ் அருவியும், மலர்ப்பூம் பந்தரும்,
5பரப்புநீர்ப் பொய்கையும், 6கரப்புநீர்க் கேணியும்,
7ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும்

பிறவுமாகிய இடங்கட்குச் சென்று விளையாட்டயர்ந்து, கடைசியில்,

8மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்,
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
9தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத் திரள்கால் பன்மணிப் 10போதிகைத்
11தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
12கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
13தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்

சந்தன மெழுகிய பசும்பொன் மண்டபத்தையடைந்து இனி திருந்தான். அக்காலத்தே சிறைக்கோட்டக் காவலர் வந்து, சேய்மைக் கண் நின்று வணங்கிப் பின் திருமுன்பு அணுகி, “எதிர்த்து மேல் வந்த சேரரையும் பாண்டியரையும்,

1ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
2காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
3வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி!
4ஒளியோடு வாழி ஊழிதோ றூழி
வாழி யெங்கோ! மன்னவர் பெருந்தகை!
கேள், இது மன்னோ; கெடுகநின் பகைஞர்;
யானைத்தீ நோய்க்கு அயர்ந்துமெய் வாடிஇம்
மாநகர்த் திரியும்ஓர் 5வம்ப மாதர்
அருஞ்சிறைக் கோட்டத் 6தகவயிற் புகுந்து
7பெரும்பெயர் மன்ன! நின்பெயர் வாழ்த்தி
8ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு, ஆங்கு,
9மொய்கொள் மாக்கள் மொசிக்கஊண் சுரந்தனள்;
ஊழிதோ றூழி உலகம் காத்து
வாழி எங்கோ மன்னவ,

என்று தெரிவித்து நின்றனர். அரசன், விரையச் சென்று அம்மடக் கொடியை இங்கே அழைத்து வருக என, காவலர் சென்று உரைத் தலும் மணிமேகலை, அரசன்முன் போந்து அவனை வாழ்த்தி நின்றாள். ”

வேந்தன் :-

10தாங்கரும் தன்மைத் தவத்தோய்! நீயார்?
11யாங்கு ஆகியது இவ்வேந்திய கடிஞை?

மணிமேகலை :-

1விரைத்தார் வேந்தே! நீ நீடு வாழி
2விஞ்சை மகள்யான்; 3விழவணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன்; வாழியர் பெருந்தகை!
4வானம் வாய்க்க; மண்வளம் பெருகுக;
தீதின் றாக கோமகற்கு ஈங்கு; ஈது
ஐயக் கடிஞை; 5அம்பல மருங்குஓர்
தெய்வம் தந்தது; திப்பிய மாயது;
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது;
6ஊனுடை மாக்கட்கு உயிர்மருந்து இது.

வேந்தன் :- இளங்கொடி; யான் செயற்பாலது என்?

மணிமேகலை :-

சிறையோர் கோட்டம் 7சீத்து, அருள்நெஞ்சத்து
அறவோர்க்கு 8ஆக்குமது; வாழியர்

இதுகேட்டு உள்ளம் இசைந்த அரசர் பெருந்தகை, அச்சிறைக் கோட்டத்துள்ளார்க்குச் சிறைவீடு செய்து, அக்கோட்டத்தையும் இடித்துத் தூய்மை செய்து, அறவோர் வாழும் அறக்கோட்ட மாக்கினன்.

உதயகுமரனை வாளால் எறிந்த காதை


மணிமேகலையால் அரசன் சிறைக்கோட்டத்தைச் சீத்துச் செய்த அறக்கோட்டத்தே,

1பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்
அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
2அட்டிற் சாலையும் 3அருந்துநர் சாலையும்

உளவாயின. இந்நிகழ்ச்சி முற்றும் அறிந்தான் உதயகுமரன், உடனே அவன், அவளை, எவ்வாறேனும் கொள்ளல் வேண்டுமென்று கருதி,

4மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்,
5பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று,
பற்றினன் கொண்டுஎன் பொற்றேர் ஏற்றி,
6கற்றறி விச்சையும் கேட்டுஅவள் உரைக்கும்
7முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே

மனங்கொண்டு, மணிமேகலை தங்கியிருந்த உலகவறவிக்குச் சென்றான். அக்காலை, காயசண்டிகையின் கணவனான காஞ்சனன் முனிவன் உரைத்தவாறு பன்னீராண்டு கழிந்தும் தன் மனைவி திரும்ப வாராமை கண்டு, இந்நகர்க்கண் அவளைப் பலவிடங்களிலும் தேடித் திரிந்து முடிவில் பிச்சைப் பாத்திரம் ஏந்திப் பலர்க்கும் உணவூட்டி வருவது கண்டு தன் பழைமைக் கிழமை தோன்றப் பல உரையாடினன். உதயகுமரன் அங்கே உடனிருந்தான். மணிமேகலை காயசண்டிகை வடிவில் நின்றானாயினும் அவள், அக்காஞ்சனன் பால் செல்லாது உதயகுமரன் முகநோக்கி, அவன் உள்ளத்தையும் மாற்ற நினைந்தாள். அப்போது அவ்வழியே போந்த தொண்டுகிழவி யொருத்தியைக் காட்டி,

1தண்ணறல் வண்ணம் திரிந்துவே றாகி
வெண்மண லாகிய கூந்தல் காணாய்;
2பிறைநுதல் வண்ணம் காணா யோ, நீ,
நரைமையின் திரைதோல் 3தகையின் றாயது;
4விறல்விற் புருவம் இவையும் காணாய்,
5இறவின் உணங்கல் போன்றுவே றாயின;
6கழுநீர்க் கண், காண், 7வழுநீர் சுமந்தன;
8குமிழ்மூக்கு, இவை, காண், உமிழ்சீ ஒழுக்குவ;
நிரைமுத் தனைய 9நகையும் காணாய்,
10சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின;
11இலவிதழ்ச் செவ்வாய், காணா யோ, நீ,
12புலவுப் புண்போல் புலால்புறத் திடுவது;
13வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண்,
உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன;
14இறும்பூது சான்ற முலையும் காணாய்,
வெறும்பை போல வீழ்ந்துவே றாயின;
15தாழ்ந்தொசி தெங்கின் மடல்போல் 16திரங்கி,
வீழ்ந்தன, இள1வேய்த் தோளும் காணாய்,
நரம்பொடு விடுதோல் 2உகிர்த்தொடர் கழன்று.
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்;
வாழைத் தண்டே போன்ற 3குறங்கிணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
4ஆவக் கணைக்கால் காணா யோ,நீ,
மேவிய நரம்போடு என்புபுறங் 5காட்டுவ;
6தளிரடி வண்ணம் காணா யோ, நீ,
7முளிமுதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்,
பூவினும் சாந்தினும் 8புலால்மறைத்து யாத்து,
9தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய், மன்னவன் மகன்!

என்று அவளது உறுப்புக்களின் பண்டை வனப்பும், இன்றைய அழிவும் எடுத்து விளக்கினள்.

இச்செய்தியைக் காஞ்சனன் கண்டு மனத்தே பொறாமையும் சினமும் பொங்கி மிகத் தன் நெஞ்சிற்குள்,

10தற்பா ராட்டும்என் சொற்பயன் கொள்ளாள்;
பிறன்பின் செல்லும்; 11பிறன்போல் நோக்கும்;
12மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
13பவளக் கடிகையில் தவளவாய் நகையும்,
குவளைச் செங்கணும் 14குறிப்போடு வழாஅள்;
ஈங்குஇவன் காதல னாதலின், ஏந்திழை
ஈங்கு ஒழிந்தனள்

என நினைந்து, அவ்விடத்தே ஒருசார் தங்கியிருந்தான். உதய குமரனும், அம்மணிமேகலையுரைத்த முதுக்குறை முதுமொழிகளைச் செவியிற் கொள்ளாது,

வளைசேர் செங்கை மணிமே கலையே,
காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி
1மாய விஞ்சையின் மனம்மயக் குறுத்தனள்;
அம்பல மருங்கில் அயர்ந்துஅறி வுரைத்தஇவ்
2வம்பலன் தன்னோடுஇவ் வைகிருள் ஒழியாள்;
இங்குஇவள் செய்தி 3இடையிருள் யாமத்து,
வந்து அறிகுவன்,

என உட்கொண்டு, இடையிருள் யாமத்தே மீண்டுவரத் துணிந்து தேரேறிச் சென்றான்.

அற்றைப்போது கழிந்தது; இடையிருள் யாமமும் எய்துவ தாயிற்று, உதயகுமரன் அரண்மனையின் நீங்கி, மணிமேகலை யிருந்த அம்பலம் நோக்கி வந்தான். காஞ்சனன் மணிமேகலை யிருந்த இடத்திற்கேகும் நெறிக்கண் உறக்கமின்றிக் கிடந்தான்; அதனை யுணராது போந்த உதயகுமரன்,

4வேக வெந்தீ நாகம் கிடந்த
5போகுயர் புற்றளை புகுவான் போல,
6ஆகம் தோய்ந்த சாந்து 7அலர் உறுத்த,
8ஊழடி யிட்டுஅதன் உள்ளகம் புகுதலும்,
ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன்,
“ஈங்குஇவன் வந்தனன் இவள்பால்” என்றே,
வெஞ்சின அரவம் 1நஞ்செயிறு அரும்ப,
தன்பெரு வெகுளியின் எழுந்து 2பை விரித்தென,
3இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்று, அவன்
4சுரும்புஅறை மணித்தோள் துணிய வீசி,

உள்ளே சென்று, காயசண்டிகையாகிய மணிமேகலையைத் தானே வலிதிற் கைக்கொண்டு செல்லக் கருதிச் சென்றான். அப்போழ்தில் ஆங்கிருந்த கந்திற்பாவை,

அணுகல், அணுகல்; விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள்; மறைந்துரு வெய்தினள்;
காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி,
வானம் போவுழி வந்தது கேளாய்

என்று தொடங்கிக் காயசண்டிகை வான்வழியே செல்லுங்கால் விந்தமலையிலிருந்து அதனைக் காக்கும் விந்தாகடிகை, தன்மேல் காயசண்டிகையின் சாயை தாக்க, அதனால், அவளை யிழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக்கொண்டாள்.

5கைம்மை கொள்ளேல், காஞ்சன! இதுகேள்:
ஊழ்வினை வந்துஇங்கு உதய குமரனை,
ஆருயிர் உண்டது; ஆயினும், அறியாய்:
6வெவ்வினை செய்தாய், விஞ்சைக் காஞ்சன!
அவ்வினை நின்னையும் அகலாது ஆங்குறும்!

என்றது. இதுகேட்டு விஞ்சையனும் வருந்திய உள்ளத்தனாய்த் தன் விஞ்சையருலகை யடைந்தான்.

கந்திற்பாவை வருவது உரைத்த காதை


சம்பாபதி கோயிலின் உள்ளே கிடந்த மணிமேகலை காஞ்சனன் செய்தியும், உதயகுமரன் வீழ்ச்சியும், கந்திற்பாவை அக்காஞ்சனற் குரைத்ததும் கேட்டு, எழுந்து, தன் உண்மை வடிவுகொண்டு வெளிப்போந்து, அரசகுமரனது உடலைக்கண்டு, துயர்மிகுந்து,

1திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள்
2கட்டழல் ஈமத்து என்உயிர் சுட்டேன்;
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
3தவிர்விலே னாதலின், தலைமகள் தோன்றி
மணிப்பல் லவத்திடை என்னைஆங் குய்த்துப்
4பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி
என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி,
உன்பிறப் பெல்லாம் 5ஒழிவின் றுரைத்தலின்,
பிறந்தோர் இறத்தலும், இறந்தோர் பிறத்தலும்,
6அறந்தரு சால்பும், மறந்தரு துன்பமும்,
யான்நினக் குரைத்துநின் 7இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன், காதல!
8வைவாள் விஞ்சையன் 9மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனையோ

எனச் சொல்லிப் புலம்பலுற்றனள். அப்போழ்தில், கந்திற்பாவை மணிமேகலையை யழைத்து,

செல்லல், செல்லல்; 1சேயரி நெடுங்கண்!
2அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல்,
நினக்கு இவன் 3மகனாத் தோன்றி யதூஉம்,
மனக்கினி யாற்குநீ 4மகளா யதூஉம்
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்;
கண்ட பிறவியே அல்ல, காரிகை!
5தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய், 6விழுமம் கொள்ளேல்

என்று உரைத்தது. அதுகேட்ட மணிமேகலை, “இவ்வம்பலத்து உறையும் தெய்வமாகிய நீ, சென்ற பிறப்பில் இவன் திட்டிவிடத் தால் உயிரிழந்ததும், இப்பிறப்பில் இன்று ஈங்கு விஞ்சையனால் வெட்டுண்டு வீழ்ந்த காரணம் விளம்ப வேண்டுகின்றேன்” என்றாள். உடனே அத்தெய்வம், “முன்னைப் பிறவியில், காயங்
கரை என்னும் ஆற்றங்கரையில், நீ நின் கணவன் இராகுலனோடு இருந்தபோது, அங்கு உங்கள்பால் வந்த பிரமதரும முனிவனுக்கு உணவு சமைத்தல் வேண்டி மடையனை விடியலில் வரப் பணித்தீர்; அவன் அவ்வாறே வருங்கால், அடித்தளர்ந்து மடைக்கலம் சிதைய வீழ்ந்தான். அதனை நோக்காது, முனிவர்க்குச் செய்தற்குரிய பணிக்கு முட்டுப் பாடு உண்டாக்கினானென அம்மடையனை இராகுலன் சினந்து தன் கைவாளால் துணித்துக் கொன்றான். அக்கொலைவினையே, அவனை இப்பிறப்பில் விஞ்சையனால் வெட்டுண்டு வீழச் செய்தது, காண்” என்று சொல்லி, மேலும், வினையின் இயல்பு சிறிது கூறலுற்ற அத்தெய்வம்,

தலைவன் காக்கும், தம்பொருட் டாகிய
7அவல வெவ்வினை யென்போர் அறியார்;
அறஞ்செய் காதல் அன்பினி னாயினும்,
1மறம்செய் துளதெனின் வல்வினை யொழியாது;
ஆங்கு அவ்வினைவந்து அணுகுங் காலைத்
2தீங்குறும் உயிரே செய்வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பில் மீளினும் மீளும்;
ஆங்கு அவ்வினைகாண், ஆயிழை! 3கணவனை
ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது,

என்று கூறிவிட்டு, அதன்மேலும், மணிமேகலைக்கு நிகழவிருப்பன வற்றையும் முன்பே மொழியத் தொடங்கி,

இன்னுங் கேளாய்: இளங்கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு 4வருந்துதுயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு,
காவலன் நின்னையும் 5காவல்செய் தாங்கிடும்;
ஈடு சிறைநீக்கி, இராசமா தேவி
கூடவைக்கும் 6கொட்பின ளாகி,
மாதவி 7மாதவன் மலரடி வணங்கித்
தீது கூறஅவள் தன்னோடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டுக்
8காதலி நின்னையும் காவல் நீக்குவள்;
அரைசாள் செல்வத்து ஆபுத்திரன் பால்,
9புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை;
போனா லவனோடும் 10பொருளுரை பொருந்தி,
7மாநீர் வங்கத்து அவனோடும் எழுந்து,
1மாயமில் செய்தி மணிபல் லவமெனும்
தீவகத்து 2இன்னும் சேறலுமுண்டால்;
தீவ திலகையின் தன்திறம் கேட்டுச்
3சாவக மன்னன் தன்நா டடைந்தபின்
ஆங்கத் 4தீவம்விட்டு அருந்தவன் வடிவாய்ப்
பூங்கொடி! வஞ்சி மாநகர் புகுவை;
ஆங்குஅந் நகரத்து 5அறிபொருள் வினாவும்
6ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்.

இவ்வாறு பலராய சமயக்கணக்கர் தம் திறம் கேட்டு, அவர் கட்குத்தகுவன கூறிச் சிறப்பெய்துவாய்; ஆதலால், தீவினை வந்து உறுத்தலும் செத்தோர் பிறத்தலும் உண்மையென்று துணிந்து நின் மனமயக்கம் ஒழிவாயாக என்று கூறிற்று.

இவ்வண்ணம் சொல்லிப் போந்த அத்தெய்வம், தான் கந்திற்பாவையாய் நின்று

மக்கட்கு வருவதுரைத்து வரும் திறத்தைக் கூறத் தொடங்கி,
என்திறம் கேட்டியோ : இளங்கொடி நல்லாய்!
7மன்பெருந் தெய்வ கணங்களி னுள்ளேன்,
துவதிகன் என்பேன்; 8தொன்றுமுதிர் கந்தின்
மயன்எனக் கொப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான்; என் நிலையது கேளாய்;
மாந்தர் அறிவது வானவர் அறியார்;
ஓவியச் சேனன்என் 9உறுதுணைத் தோழன்
ஆவதை இந்நகர்க்கு ஆருரைத் தனரோ?
அவனுடன் யான்சென்று ஆடிட மெல்லாம்
1உடனுறைந் தார்போல் ஒழியா தெழுதிப்
பூவும் புகையும் 2பொருந்துபு புணர்ந்து
3நாநனி வருந்தஎன் நலம்பா ராட்டலின்
மணிமே கலை!யான் வருபொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன்; என்சொல் 4தேறுக.

என்று சொல்லவே, மணிமேகலை, “யான் தேறாதொழியேன்; இனி எனக்கு முடிவுகாறும் நிகழவிருப்பனவற்றையும் கூறுக” என்று கேட்டாள். அவ்வாறே, அவற்றையும் சொல்லத் தொடங்கிய அத்தெய்வம், காஞ்சிமாநகர் வறம்படுதலும், ஆங்கே மணிமேகலை சென்று, தன் பிச்சைப்பாத்திரத்தால் உயிரோம்புதலும், மேலும் அங்கு நிகழும் நிகழ்ச்சிகளும், சமயக்கணக்கர் பலரொடு கேட்ட வற்றை அறவணவடிகட்கு உரைப்பதும், அவர் தன்செயல் செப்பு வதும், பின்பு மணிமேகலை மகதநாட்டில் ஆண்மகனாய்ப் பிறந்து அருளறம் பூண்டு, புத்த தேவனுக்கு முதல் மாணவனாகுதலும் பிறவும் கூறி, நீ முற்பிறப்பில் சாது சக்கரமுனிவற்கு அமுதளித்த நல்வினைப் பயனால், மணிமேகலாதெய்வம் நின்னை மணி பல்லவத்துக்குக் கொண்டு சென்று புத்த பீடிகை கண்டு பழம் பிறப்பை நீ யுணர்ந்துகொள்ளுமாறு செய்தது” என்று சொல்லி முடித்தது.

சிறைசெய் காதை


பொழுது புலர்ந்ததும், சம்பாபதியையும் கந்திற்பாவை யையும் வழிபட வந்தவர் உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டு, ஆங்கு வாழும் முனிவர்களுக்கு உரைத்தனர். அவர்கள் மணிமேகலையை வினவி நிகழ்ந்ததறிந்து அவளையும் உதயகுமரன் உடலையும் ஓரிடத்தே ஒளித்துவிட்டு, நடந்த செய்தியை அரசர்க் குணர்த்தச் சென்றனர். சென்றவருள் ஒருவர், அரசனைக் கண்டு,

உயர்ந்தோங் குச்சி 1உவாமதி போல
2நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழற்செய,
வேலும் கோலும் 3அருட்கண் விழிக்க;
தீதின் றுருள்கநீ ஏந்திய 4திகிரி;
நினக்கென 5வரைந்த ஆண்டுக ளெல்லாம்
மனக்கினி தாக: வாழிய வேந்தே!
இன்றே யல்ல; இப்பதி மருங்கில்
6கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து
பத்தினிப் பெண்டிர் பாற்சென் றணுகியும்
நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும்
7தீவினை யுருப்ப உயிர் 8ஈறு செய்தோர்
9பாராள் வேந்தே! பண்டும் பலரால்;

என்று மொழிந்து, இவற்றுக்கு எடுத்துக்காட்டாகப் பார்ப்பனி மருதியென்னும் பத்தினிப் பெண்டிர்பால் கருத்துச் செலுத்தி உயிரிழந்த ககந்தன் மைந்தன் செய்தியும், விசாகை யென்னும் நற்றவ மகள்மீது காதலுற்ற அம்மைந்தனுக்கு முன் பிறந்தோன் செய்தியும் எடுத்துக் கூறி அரசனை வாழ்த்தி நின்றனர். அதுகேட்ட வேந்தன்,

இன்றே யல்ல என்றெடுத்து துரைத்து,
1நன்றறி மாதவிர்? 2நலம்பல காட்டினிர்;
இன்றும் உளதோ இவ்வினை? உரையும்,

என்று வினவினன்; அவனுக்கு அம்மாதவர் கூட்டத்து ஒருவர் முன் வந்து, “தீதின்றாக, செங்கோல் வேந்தே!” என்று தொடங்கி,

3முடிபொருள் உணர்ந்தோர் 4முதுநீருலகில்
5கடியப்பட்டன ஐந்துள; அவற்றில்,
கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
தள்ளா தாகும் காமம்; தம்பால்
ஆங்6கது கடிந்தோர் 7அல்லவை கடிந்தோரென
நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள்;
நீங்கா ரன்றே, நீள்நில வேந்தே
8தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்

என்று தொடங்கி, மணிமேகலையின் வரலாறும், அவள்பால் உதயகுமரன் கருத்துச் செலுத்தியுழன்ற திறமும், அவள் காய சண்டிகையின் வடிவுகொண்டு திரிந்த வகையும், விஞ்சையன் செய்தியும் விரியக் கூறி,

…..தீவினை உருத்த தாகலின்,
1மதிமருள் வெண்குடை மன்ன! நின்மகன்
உதய குமரன் ஒழியா னாக,
ஆங்கவள் தன்னை அம்பலத் தேற்றி,
ஓங்கிருள் யாமத்து இவனைஆங் குய்த்துக்
காயசண் டிகைதன் கணவ னாகிய
2வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென
3வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
ஆங்கவன் தன்னை வாளால் அம்பலத்து
ஈங்கிவன் தன்னை எறிந்தது,

என்று சொன்னார். அதுகேட்ட அரசன் நெஞ்சில் தன் மகன் செய்கையை அருவருத்து, அருகுநின்ற சோழிய ஏனாதியை நோக்கி,

யான் 4செயற் பாலது இளங்கோன் தன்னைத்
தான்செய் ததனால் 5தகவிலன் விஞ்சையன்;
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்;
மகனை முறைசெய்த 6மன்னவன் வழி, ஓர்
7துயர்வினை யாளன் தோன்றினன் என்பது,
வேந்தர் தம்செவி 8உறுவதன் முன்னம்
ஈங்குஇவன் தன்னையும் ஈமத் தேற்றிக்
9கணிகை மகளையும் காவல் செய்க

என்று பணித்தான். மணிமேகலையும் சிறையிடப் பெற்றாள்.

சிறைவிடு காதை


தன் புதல்வன், உதயகுமரன் கொலையுண்டிறந்ததனால், சோழ வேந்தன் மனைவி இராசமாதேவிக்கு உண்டான துயரத் திற்கு எல்லையில்லையாயிற்று. அரசன் கோயிலில், அரசர்க் காயினும், அரசகுமரர்க்காயினும், அரசியர்க்காயினும் தகுவன கூறித் துயராற்றுவிக்கும் சான்றோர் பலர் இருந்தனர். அவருள் வாசந்தவையென்பாளும் ஒருத்தி, இவள் ஒரு பெரு முதியோள். இராசமாதேவிக்கு நேர்ந்த துயரம் துடைக்கும் கருத்தினளாய் அவள் அரசியின் கோயிற்கு வந்தாள். வந்தவள், அரசியின் அடியில் வீழ்ந்துரைக்கும் அமைதியை விலக்கி,

அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத்
தொழுது முன்நின்று 1தோன்ற வாழ்த்திக்
2கொற்றம் கொண்டு குடிபுறங் காத்துச்
3செற்ற தெவ்வர் தேஎந்தம தாக்கியும்,
தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து
4செருப்புகல் மன்னர் 5செல்வுழிச் செல்கஎன
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு
6நாப்புடை பெயராது; நாணுத்தக வுடைத்தே.
தன்மண்காத்தன்று, பிறர்மண் கொண்டன்று;
என்னெனப் படுமோ நின்மகன் முடிந்தது!
1மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்
துன்பங் கொள்ளேல் என்று அவள்

சொல்லிவிட்டுப் போயினள். இராசமாதேவியும் ஒருவாறு தேறி, தன் மகன் இறத்தற்குக் காரணமாய் நின்ற மணிமேகலையை வஞ்சனையால் முடிக்கத் துணிந்து, புறத்தே மெய்யன்பும் தெளிந்த வுணர்வு முடையாள்போல் நடித்து, ஒருநாள் அரசனை நண்ணி, அவன் அடிவீழ்ந்து தொழுது,

பிறர்பின் செல்லாப் 2பிக்குணிக் கோலத்து
அறிவு 3திரிந்தோன் 4அரசியல் தான்இலன்;
கரும்புடைத் தடக்கைக் காமன் 5கையற
அரும்பெறல் இளமை 6பெரும்பிறி தாக்கும்
7அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறை 8தக்கன்று செங்கோல் வேந்தே!

என்று சொல்லவே, அரசன் அவளது வஞ்சமறியாது, சிறந்த அறிவினால் ஆய்ந்து,

9சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது,
அறிந்தனை யாயின் இவ்வாயிழை தன்னைச்
செறிந்த 10சிறைநோய் தீர்க்க என்று

அரசிக்குத் தெரிவித்து ஏவலரை நோக்கி மணிமேகலையைச் சிறை விடுமாறு பணித்தான். உடனே, இராசமாதேவி, “அரசே,

என்னோடு இருப்பினும் இருக்க, இவ் விளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் 1தகைக்குநர் இல்”

என்றுரைத்து, மணிமேகலையை மெல்லக் கொணர்ந்து தன் அக நகர்க்கண்ணே தங்குமாறு செய்துகொண்டாள். பின்பு, மணி மேகலைக்குப் பித்துண்டாமாறு மருந்தொன்றைத் தந்தாள்; மறுபிறப் புணர்ந்தவளாதலின், அவளை அம்மருந்து ஒன்றும் செய்ய வில்லை. பின்பொருகால், அரசி, கல்லா இளைஞன் ஒருவனை யழைத்து அவன் கைந்நிரம்பப் பொன் கொடுத்து, மணிமேகலை மார்பில் புணர்குறி செய்து பழிப்புண்டாமாறு செய்ய விடுத்தாள்; அவன் வருகைக்குறிப் பறிந்ததும் மணிமேகலை, வேற்றுருக் கொள்ளும் மந்திரம் ஓதி, ஆணுருக்கொண்டிருந்தாள். வந்தவன், “அரசர் உரிமை மகளிர் இருக்குமிடத்தே ஆடவர் குறுகார்; இங்கோர் ஆடவன் உளன்; ஈது ஏதோ வஞ்சம்” என்று அஞ்சி யோடிவிட்டான். வேறொரு நாள், மணிமேகலை நோயால் உணவுகொள்வதிலள் எனப் பொய் கூறி, அவளை, அரசி, ஒரு புழுக்கறையில் உணவு கொடாது அடைத்துவைத்தாள்; ஆயினும், அம்மணிமேகலை, ஊணொழி மந்திரம் ஓதி, மேனி வருந்தாது இனி திருந்தாள். இந்செய்கைகளால் அவட்குச் சிறிதும் தீங்கு நேராதது கண்டதும் இராசமாதேவி மிகவும் அச்சமுற்று, அவளைத் தாள்தொழுது தன் மகன்மேல் வைத்த காதலால் தான் பிழையாகச் செய்தவற்றைப் பொறுக்க வேண்டினள். மணிமேகலை அவ்வாறே பொறுத்து, “அரசி, நின்மகன், சென்ற பிறப்பில் இராகுலன் என்னும் பெயருடன் வாழ்ந்து திட்டி விடத்தால் தீங்குற்று இறந்தான்; அப்போது அவன்பொருட்டு யான் உயிர் துறந்தேன். நீ யாது செய்தனை? இப்பிறப்பில் அவன்பொருட்டு வருந்தும் நீ முன்பிறப்பில் அவனுக்காக அழுதாயல்லையே.”

பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை.
உடற்கழு தனையோ? உயிர்க்கழு தனையோ?
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே!
உயிர்க்கழு தனையேல், உயிர்புகும் 2புக்கில்
1செயப்பாட்டு வினையால் 2தெரிந்துணர் வரியது;
அவ்வுயிர்க் கன்பினை யாயின், ஆய்தொடி!
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்.

நின்மகன் இறத்தற்குக் காரணமாகியது, முற்பிறப்பில் மடைக் கலம் சிதைத்தானென்று மடையனைக் கொன்ற தீவினையே. அதுவே இன்று விஞ்சையன் வாளால் இவன் வெட்டுண்டு வீழச் செய்தது. இதனை யெவ்வாறு அறிந்தாயெனின், கூறுவேன், என்று தான் மலர்வனம் புகுந்தது முதல் உலகவறவியில் தெய்வம் உரைத்தது ஈறாக நிகழ்ந்தவை முற்றும், தேவி நெஞ்சு கொள்ளு மாறு கூறி முடித்தாள். அதன்மேலும், இராசமாதேவி நிகழ்த்திய தீங்குகளையும், அவற்றில் தான் உய்ந்து தீர்ந்த வகையையும் சொல்லி,

3அந்தரம் சேறலும் 4அயலுருக் கோடலும்
சிந்தையிற் கொண்டிலேன், சென்ற பிறவியின்
5காதலற் பயந்தோய், கடுந்துயர் களைந்து
தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்,

எனத் தன் கொள்கையை யுரைத்தாள். பின்பு, காமம், கொலை, பொய், களவு முதலிய குற்றங்களைக் கடிதல் வேண்டு மென்று சொல்லி, மேலும் சில அறங்களைக் கூறலுற்று,

6செற்றம் செறுத்தோர், முற்ற உணர்ந்தோர்;
7மல்லல்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர்,
8அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்;
திருந்தேர் எல்வளை! 9செல்லுல கறிந்தோர்,
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்;
துன்ப மறுக்கும் 1துணிபொருள் உணர்ந்தோர்,
மன்பதைக் கெல்லாம் அன்பொழியார்

என்ற இவ்வறங்களை இராசமாதேவிக்கு ஓதி, அவளுற்ற வருத்தத்தைப் போக்கி, மனம் தெளிவடையச் செய்தாள்.

2ஞான நன்னீர் நன்கனம் தெளித்துத்
3தேனா ரோதி செவிமுதல் வார்த்து
4மகன்துயர் நெருப்பா மனம்விற காக
அகஞ்சுடு வெந்தீ ஆயிழை யவிப்ப,
5தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
6மாறுகொண் டோரா மனத்தின ளாகி
ஆங்குஅவள் தொழுதலும், ஆயிழை பொறாஅள்
தான்தொழு தேத்தித் 7“தகுதி செய்திலை;
8காதலற் பயந்தோய்; அன்றியும், காவலன்
மாபெருந் தேவி,” என்று எதிர் வணங்கினளென்.

ஆபுத்திரன் நாடு அடைந்த காதை


சித்திராபதி யென்னும் முதுகணிகை, தன் சூழ்ச்சியால் உதயகுமரன் உலகவறவி புக்கு உயிரிழந்தான் என்பது உணர்ந்து நெஞ்சு நடுங்கி மெய்வருந்தி, இராசமாதேவியை அடைந்து, அவள் திருவடியில் வீழ்ந்து வணங்கித் தொழுது,

1தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல்
யானுறு துன்பம் யாவரும் பட்டிலர்;
மாபெருந் தேவி! மாதர் யாரினும்,
2பூவிலை யீத்தவன் பொன்றினன் என்று,
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
3பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
4அரங்கக் கூத்திசென்று ஐயங் கொண்டதும்,
நகுத லல்லது 5நாடகக் கணிகையர்
தகுதி யென்னார், தன்மை யன்மையின்;
மன்னவன் மகனே யன்றியும் மாதரால்,
இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்,

என்று சொன்னவள், முன்பொருகால், சோணாட்டை யாண்ட நெடுமுடிக்கிள்ளி யென்பான் கடற் கானற் பூம்பொழிலில் பீலி வளையென்ற ஒரு நாகநாட்டு மகளைக் கண்டு அவள் நலத்திற் கருத்தைப் போக்கிப் பேதுற்று நிற்கையில், அவள் மறைந்தனள்; அவளைத் தேடித் திரிந்த அவன்முன், தேவசாரணன் ஒருவன் தோன்ற, அவனை யரசன் வணங்கிக் கேட்ப, அவன்,

கண்டிலேன்; ஆயினும் காரிகை தன்னைப்
1பண்டறி வுடையேன்; 2பார்த்திப! கேளாய்.
நாக நாடு 3நடுக்கின் றாள்பவன்,
4வாகை வேலோன், வளைவணன்; தேவி,
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை யென்போள்; பிறந்த அந்நாள்
இரவிகுலத் தொருவன் இணைமுலை தோயக்
5கருவொடு வரும்எனக் 6கணியெடுத் துரைத்தனன்;
ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது,
பூங்கொடி வாராள்; 7புலம்பல்; இதுகேள்;

என அச்சாரணன் மேலும் சொல்லலுற்று, இந்நகரில் இந்திரவிழா ஆண்டுதோறும் நிகழ்தல் வேண்டும்; தவறின் இந்நகர் கடலாற் கொள்ளப்படும். இது மணிமேகலா தெய்வத்தின் வாய்மை மொழி; இந்திரனது சாபமும் உண்டு என்று கூறிவிட்டு நீங்கினன்; கிள்ளியும் தன் நகரையடைந்தான். அன்றுமுதல் இன்றுவரை இப்பூம்புகார் நகரத்தால் இந்திரவிழா எடுத்து வருகின்றனர். அவர் மனத்தே இதுபற்றிய அச்சம் இருந்துகொண்டே வருகிறது. இனி, மணி மேகலைக்கு இப்போதுண்டாய துன்பத்தால், அத்தெய்வம், தன் பெயரையுடையாட்கு உண்டாகிய துன்பம் காரணமாக வருமோ என்று அஞ்சுகின்றேன்; ஆதலால், அம்மணிமேகலையைச் சிறை விடுத்து என்பால் தருக என வேண்டினள்.

இவ்வாறு சிசத்திராபதி வேண்டிச் சொன்னதைக் கேட்ட இராசமாதவி,

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்,
8உள்ளக் களவுமென்று உரவோர் துறந்தவை
1தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை
2புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்;
என்னோ டிருக்கும்

என்று இயம்பினள். சித்திராபதி ஏக்கமுற்றாள். இந்நிலையில் மணிமேகலை சிறைப்பட்டமை சுதமதியால் அறிந்து மாதவி அறவணவடிகளை யடைந்து அவரை வணங்கி, நிகழ்ந்தது கூறி, மணிமேகலையின் சிறைவீடு விரும்பி அவருடன் இராச மாதேவி பால் வந்தனள். அடிகள் வரக்கண்ட இராசமாதேவி பொருக்கென எழுந்து இருக்கை தந்து அவர்க்கு வேண்டிய சிறப்புக்களைச் செய்து,

3யாண்டுபல புக்கநும் இணையடி வருந்தஎன்
4காண்தகு நல்வினை நும்மையீங் கழைத்தது;
5நாத்தொலை வில்லை யாயினும், தளர்ந்து
மூத்ததுஇவ் யாக்கை; வாழ்க பல் லாண்டு

என்று முகமன் மொழிந்தாள். கேட்ட அடிகள், மகிழ்வுற்று,

தேவி! கேளாய்: 6செய்தவ யாக்கையின்,
மேவினே னாயினும் 7வீழ்கதிர் போன்றேன்:
பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார்
இறந்தார் என்கை இயல்பே; இதுகேள்:
பேதைமை செய்கை யுணர்வே 8அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே 1பவமே 2தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீ ராறும்
பிறந்தோர் அறியின் 3பெரும் பேறறிகுவர்
… … … … …
அரைசன் தேவியொடு ஆயிழை நல்லீர்!
4புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்,

எனப் பலர்க்கும் பொதுப்படக் கூறி, மணிமேகலையைச் சிறப்பாக நோக்கி,

மறுபிறப் புணர்ந்த மணிமேகலை, நீ
5பிறவறங் கேட்ட பின்னாள் வந்து உனக்கு
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்
6முத்தேர் நகையாய்! முன்னுறக் கூறுவல்

என்று உரைத்துவிட்டுச் சென்றார். பின்பு மணிமேகலையெழுந்து, அம்மகளிரை வணங்கி, “நீங்கள் இதுகாறும் கேட்ட நல்லறங்களை மறவாது கடைப்பிடித்தொழுகுமின்; யான் இனிமேல் இங்கு உறைவேனாயின், இவள் உதயகுமரன் இறத்தற்கு ஏதுவாயினள் என்பராதலின், யான் ஆபுத்திரன் நாடு செல்வேன். அதன்பின், மணிபல்லவம் சென்று பீடிகை தொழுது, வஞ்சிக்குச் சென்று பத்தினிக் கடவுட்கு நல்லறம் செய்வேன். எனக்கு இடர் உண்டா மென்று நீவிர் இரங்குதல் வேண்டா”என்று சொல்லிவிட்டு, அந்திமாலை வந்ததும், உலகவறவியும் சம்பாதி கோயிலும், கந்திற்பாவையும் வணங்கிப் பரவி, வான்வழியாக, ஆபுத்திரன் நாட்டையடைந்து ஆங்கு ஒரு பொழிலகத்தே தங்கி இளைப் பாறினள். சிறிது போதில், அவள் அங்கே வாழ்ந்த தருமசாவகன் என்னும் முனிவன் ஒருவனைக் கண்டு,

இந்நகர்ப் பேர் யாது? இந்நக ராளும்
மன்னவன் யார்?
என்றாள். அவட்கு, அம்முனிவன்,
நாகபுரம் இது; நல்நக ராள்வோன்
பூமி சந்திரன் மகன், புண்ணியராசன்:
ஈங்கு இவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குயர் வானத்துப் பெயல் 1பிழைப்பறியாது;
மண்ணும் 2மரனும் வளம்பல தரூஉம்;
3உண்ணின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல்லை
என்று உரைத்தான்.

ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை


புண்ணியராசனாகிய ஆபுத்திரன் தன் உரிமை மனைவியுடன் மணிமேகலை யடைந்திருந்த பொழிலையடைந்து, ஆங்கே வாழ்ந் திருந்த தருமசாவகன் என்னும் முனிவன் அடிவணங்கி,

அறனும் 1மறனும் அநித்தமும் 2நித்தத்
திறனும் துக்கமும் 3செல்லுயிர்ப் புக்கிலும்
4சார்பின் தோற்றமு சார்பறுத் 5துய்தியும்
6ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு

வருகையில், அவன் இருந்த பொழிலில் மணிமேகலை பிச்சைப்பாத்திரமேந்தி நிற்பது கண்டு வியந்து,

7பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள்,
கண்ணிணை யியக்கமும் 8காமனோ டியங்கா,
அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
அங்கு இணையில்லாள் இவள் யார் என்ன,

அருகே சட்டையணிந்த காவலன் ஒருவன், அரசனை வணங்கி, “அரசே, இவளையொப்பார் நாவலந்நீவில் ஒருவரும் இலர்; ஒருகால்யான் கிள்ளிவளவனுடைய கெழுதகைமை வேண்டிக் காவிரிப் பூம்பட்டினம் சென்றிருந்த காலத்து யான் இவளைப்பற்றியறிந் தேன். ஆங்கே இவள் பிறப்பை யுணர்ந்து எனக்கு அறவணவடிகள் உரைத்தார் என்பதைத் தங்கட்கு முன்பே உரைத்துள்ளேன்; அவளே அப்பதியின் நீங்கி இப்போழ்தில் இங்கே வந்துள்ளாள்” என்றான். என்றதும், மணிமேகலை, அரசனை நோக்கி, “அரசே,

நின்கைப் பாத்திரம், என்கைப் புகுந்தது
1மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய்;
அப்பிறப் பறிந்திலை யாயினும், 2ஆவயிற்று,
இப்பிறப் பறிந்திலை; என்செய் தனையோ?
மணிப்பல்லவம் வலம் கொண்டா லல்லது,
3பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாய்;
ஆங்கு வருவாய், அரச, நீ”

என்றுரைத்து, வான்வழியே படர்ந்து பகலோன் குடபால் மறை வதற்குள் மணிபல்லவத்தை யடைந்தாள். அங்கே அவள், புத்த பீடிகையைக் கண்டு வலம்வந்து நிற்ப, அஃது அவட்குப் பழம் பிறப்புணர்வை நல்கிற்று. அவள், அப்பிறப்பில் காயங்கரையில் கண்ட பிரமதரும முனிவனை முன்னிலைப் படுத்திக்கொண்டு,

4“பெருமகன் தன்னோடும் பெயர்வோர்க் கெல்லாம்
விலங்கும் நரகரும் பேய்களு மாக்கும்
5கலங்கஞர்த் தீவினை கடிமின்; கடிந்தால்,
தேவரும் மக்களும் 6பிரமரும் ஆகுதிர்;
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்;
புலவன், முழுதும் பொய்யின் றுணர்ந்தோன்,
‘உலகுயக் கோடற்கு ஒருவன் தோன்றும்;
அந்நாள் அவன் அறம் கேட்டார், அல்லது
7இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை;
1மாற்றரும் கூற்றம் வருவதன் முன்னம்
போற்றுமின் அறம்’ எனச் 2சாற்றிக் காட்டி
3நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர்!
அவ்வுரை கேட்டு நும் அடிதொழு தேத்த
4வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர்;

அன்றியும், அப்போதில், யான், புத்தன் தோன்றாமுன்பே இந்திரன் இப்பீடிகை அவற்கு இட்ட காரணம் என்னை? என்று வினவினேன்; அதற்கு, புத்தன் தோன்றியபின் அவன் பிறப்பைத் தான் அறிந்து கொள்வதற்காக இந்திரன் இதனை அமைத்தான்; மேலும் இப்பீடிகை அப்புத்தனையல்லது பிறரைப் பொறாது என்று கூறியதுடன் அவ்விந்திரனே, இப்பீடிகையைப் புத்தனாகிய

5பெருமகற்கு அமைத்துப் பிறந்தார் பிறவியைத்
6தரும பீடிகை சாற்றுக என்றே
அருளினன்; ஆதலின், ஆயிழை பிறவியும்
7இருளறக் காட்டும் என்று எடுத்துரைத்த

வாய்மொழி எனக்கு இன்றும் அன்றேபோல் விளங்குகின்றது”, என்று கூறிப் பாராட்டியேத்தி நின்றாள்.

இஃதிங்ஙனமாக, மணிமேகலை கூறியவற்றைக் கேட்டுக் கலக்கமுற்ற வேந்தன், நேரே தன்தாய் அமரசுந்தரிபாற் சென்று தன் பிறப்பு வரலாறு முழுதும் கேட்டு,

இறந்த பிறவியின் 8யாய்செய் ததூஉம்,
பிறந்த பிறவியின் 9பெற்றியும் நினைந்து,
செருவேல் மன்னர் 7செவ்வி பார்த்துணங்க,
அரைசுவீற்றிருந்து 1புரையோர்ப் பேணி,
நாடகம் கண்டு பாடற் பான்மையின்
2கேள்வி இன்னிசை கேட்டுத் தேவியர்
…. …. … ….
மதிமுகக் கருங்கண் 3செங்கடை கலக்கக்
கருப்புவில்லி 4யருப்புக்கணை தூவத்
5தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து
6தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித்
தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
7ஏதுமின்றாய் இன்று விளைந்தது,
மணிமேகலை தான் காரணமாக,

என்று தன் அரசியற் சுற்றத்தார்க்குத் தெரிவித்தனன். இவற்றைக் கேட்டோருள், சனமித்திரன் என்னும் அமைச்சன், “மன்னன் மனம் வேறாயினன்” என்று நன்கறிந்து, அரசனை அடிவணங்கி,

எங்கோ வாழி, என்சொல் கேண்மதி:
நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள்,
பன்னீ ராண்டிப் 8பதிகெழு நன்னாடு
மன்னுயிர் 9மடிய மழைவளம் கரந்து, இங்கு,
ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகித்
தான்தனி தின்னும் 10தகைமைய தாயது;
காய் 11வெங் கோடையில் கார்தோன்றிய தென,
நீ தோன்றினையே; நிரைத்தார் அண்ணல்!
12தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு
வானம் பொய்யாது; மண்வளம் பிழையாது;
ஊனுடை யுயிர்கள் உறுபசி அறியா;
நீ ஒழிகாலை, நின்நா டெல்லாம்,
1தாய்ஒழி குழவி போலக் கூஉந்;
2துயர்நிலை யுலகம் காத்தலின்றி, நீ
3உயிர்நிலை யுலகம் வேட்டனை யாயின்,
இறுதி உயிர்கள் எய்தவும், இறைவ!
4பெறுதி விரும்பினை யாகுவை யன்றே?
தன்னுயிர்க் கிரங்கான், பிறவுயி ரோம்பும்
மன்னுயிர் முதல்வன் அறமும்ஈது அன்றால்;
5மதிமாறு ஓர்ந்தனை, மன்னவ!

என்று எடுத்துரைத்தான். இதனாலும், அரசன் எண்ணம் சிறிதும் மாறாதாயிற்று. ஆகவே, அவன்,

மணிபல்லவம் வலம்கொள் ளுதற் கெழுந்த
6தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்;
அரசும் உரிமையும் அகநகர்ச் 7சுற்றமும்
ஒருமதி எல்லை காத்தல் நின்கடன்.

என்று கூறி விடைபெற்றுச் சென்று, வங்கமேறி மணிபல்லவம் சென்று சேர்ந்தான். அவனை மணிமேகலை எதிர்கொண்டழைத்துச் சென்று, அத்தீவகத்துச் சோலையை வலம்வந்து புத்தபீடிகையைக் காட்டினள். வேந்தன் அதனைக்கண்டு வலம்வந்து பணிந்துநிற்ப, அப்பீடிகை, அவனது பழம்பிறப்பின் நிகழ்ச்சியை,

கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை
மையறு மண்டிலம் போலக் காட்ட,
அறிந்த அந்த வேந்தன்,
என்பிறப் பறிந்தேன்; என்இடர் தீர்ந்தேன்;
தென்தமிழ் 1மதுரைச் செழுங்கலைப் பாவாய்!
மாரி நடுநாள் 2வயிறுகாய் பசியால்
ஆரிரு ளஞ்சாது அம்பலமணைந்து ஆங்கு
3இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
4அருந்தூண் காணா தழுங்குவேன் கையில்
நாடுவறங் கூரினும் இவ்வோடுவறங் கூராது;
ஏடா! அழியல்; எழுந்துஇது கொள்க என
அமுத சுரபி அங்கையில் தந்து என்
5பவம் அறுவித்த வானோர் பாவாய்!
உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்
6மணிதிகழ் அவிரொளி மடந்தை நின்னடி,
தேவ ராயினும் 7பிரம ராயினும்
8நா மாசு கழூஉம் நலம்கிளர் திருந்தடி,
பிறந்த பிறவிகள் 9பேணுத லல்லது,
மறந்து வாழேன், மடந்தை!

எனச் சிந்தாதேவியை முன்னிலைப்படுத்தி வணங்கி, மணிமே கலையுடன், அப்பீடிகைக்குத் தென்மேற்கில் உள்ள கோமுகி யென்னும் பொய்கைக் கரைக்குச் சென்று, ஒரு புன்னைமரத்தின் நிழலில் இருந்தனன். இவ்விருவரது வரவும், புன்னைநிழலில் பொருந்தியிருப்பதும் உணர்ந்த தீவதிலகையென்பாள், அவர்முன், போந்து, அரசனைச் சிறப்பாக நோக்கி,

“அருந்துயிர் மருந்துமுன் அங்கையிற் கொண்டு
பெருந்துயர் தீர்த்த அப்பெரியோய்! வந்தனை;
அந்நாள் நின்னை 10யயர்த்துப் போயினர்,
பின்நாள் வந்துநின் 1பெற்றிமை நோக்கி,
2நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர்,
ஒன்பது செட்டிகள் உடலென்பு இவைகாண்;
ஆங்கவர் இடவுண்டு அவருடன் வந்தோர்,
ஏங்கி 3மெய்வைத்தோர் என்பும், இவைகாண்;
4ஊர்திரை தொகுத்த உயர்மணல் புதைப்ப,
5ஆய்மலர்ப் புன்னை யணிநிழல் கீழால்
அன்புடைய ஆருயிர் அரசற் 6கருளிய
என்புடை யாக்கை இருந்தது, காணாய்,
7நின்னுயிர் கொன்றாய்; நின்னுயிர்க் கிரங்கிப்
பின்னாள் வந்த பிறருயிர்8 கொன்றாய்;
கொலைவன் அல்லையோ! கொற்றவ னாயினை!”

என்றிவ்வாறு புண்ணியராசனுக்குச் சொல்லி வந்தவள், பின்பு மணிமேகலையை நோக்கி,

“பலர் தொழுபாத்திரம் கையின் ஏந்திய
9மடவரல் நல்லாய்! நின்றவன் மாநகர்,
கடல்வயிறு புக்கது; காரணம் கேளாய்”

என்று தொடங்கி, “நாகநாட்டரசன் பீலிவளை யென்பாள், சோழனுக்குப் பிறந்த தன்மகனுடன் இத்தீவகம் போந்து பீடிகையை வலங்கொண்டேத்தி நிற்ப, காவிரிப்பூம்பட்டினத்திற்குச் செல்லும் கம்பளச் செட்டியின் வங்கம் வந்து நிற்கக் கண்டு அவன்பால் மகனைத் தந்து, அரசன் சேர்ப்பிக்குமாறு கொடுத்தனள். அச்செட்டி அவ்வாறே கொண்டு செல்லுங்கால், அவனது மரக்கலம் கடலில் அன்று இரவே கவிழ்ந்து விட்டது. இதனை யவன் தப்பிச் சென்று, அரசற் குணர்த்த, அவன் மகனையிழந்த துயரம் பொறாது, கானலும், கடலும், கடற்கரையும் தேடித் திரிந்தனன். அதனால், அந்நகரம் இந்திர விழா ஆற்றாது மறந்தொழிந்தது. உடனே, மணிமேகலா தெய்வம் அந்நகரத்தைக் கடல்கொள்ளுமாறு சாபமிட்டாள். அதனால் அது கடற்கு இரையாயிற்று; அரசனான நெடுமுடிக்கிள்ளியும் தனிப்பட்டுப் போயினன் என்று சொல்லி, இச்செய்தியைத் தனக்கு அத்தெய்வம் கூறியதாகவும் தெரிவித்து, இந்நிகழ்ச்சியில், “நின் தாயரும் அறவணவடிகளுடன் வஞ்சி மாநகர் சென்றடைந்தனர்; இனி, நின்குல முதல்வன் ஒருவனை அம்மணிமேகலா தெய்வம் முன்னாளில் ஆதரவு செய்தளித்ததும், அவன் பின்பு அறவரசாண்டதும் பிறவும் அறவணன் பால் கேட்டறிகுவை” என்று தெரிவித்துவிட்டு, அத்தீவதிலகையும் அவர்களை விட்டு நீங்கினள்.

பிறகு, புண்ணியராசன் மணிமேகலையுடன் தன் முன்பிறப் பின் உடம்பு புதை யுண்டிருந்த இடமணுகி, அகழ்ந்து நோக்க, அங்கே, அதன் என்புக்கூடு தோன்றக் கண்டு மனங் கலங்கினன். அவனை மணிமேகலை பார்த்து,

“என்னுற் றனையோ! 1இலங்கு இதழ்த்தாரோய்!
நின்னாடு அடைந்துயான் நின்னை ஈங்கழைத்தது,
மன்னா! நின்றன் மறுபிறப் புணர்த்தி,
2அந்தரத் தீவினும் அகன்பெருந் 3தீவினும்
நின்பெயர் 4நிறுத்த; நீள்நில மாளும்,
அரசர் தாமே அருளறம் பூண்டால்,
பொருளு முண்டோ பிறபுரை5 தீர்த்தற்கு?
அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்,
மறவாது இதுகேள்; மன்னுயிர்க் கெல்லாம்,
உண்டியும் உடையும் உறையுளு மல்லது,
கண்டது இல்,”

எனக் கட்டுரைத்தாள். இதைக் கேட்ட அவ்வேந்தன்,

“என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும்,
நன்னுதல்! உரைத்த நல்லறம் செய்கேன்;
என் பிறப் புணர்த்தி என்னைநீ 1படைத்தனை;
2நின்திறம் நீங்க லாற்றேன் யான்,”

என்றானாக. இச்சொற்களைக் கேட்டலும் மணிமேகலை முறுவலத்து

3“புன்கண் கொள்ளல்; நீ போந்ததற் கிரங்கி, நின்
மன்பெரு நாடு வாயெடுத்4 தழைக்கும்;
5வங்கத் தேகுதி; வஞ்சியுட் செவ்வல்,”

என்று கூறிவிட்டுத் தான் வான்வழியாக வஞ்சி மாநகர்க்குச் சென்றாள்.

வஞ்சிமா நகர் புக்க காதை


தாய் கண்ணகியையும், தந்தை கோவலனையும் தான் காண வேண்டுமென்று எழுந்த வேட்கை மணிமேகலையுள்ளத்தை யலைப்ப, அவள் வஞ்சி நகரின் புறத்தே, அவர்களுடைய படிமம் நிறுவிய கோயிற்குள் நுழைந்து தன் வேட்கை தீர,

வணங்கி நின்று 1குணம் பல ஏத்தி,
2“அற்புக்கடன் நில்லாது, நற்றவம் படராது,
கற்புக்கடன் பூண்டு நும் 3கடன் முடித்தது
அருளல் வேண்டும்,”

என்று அழுது, கண்ணகிப் படிமத்தின்முன் நின்றாள். அப்போது, கண்ணி,

“எம் 4இறைக்குற்ற இடுக்கண் பொறாது,
5வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள்
மதுராபதி யெனும் மாபெருந் தெய்வம்,
இதுநீர் முன்செய் வினையின் பயனால்;

என்று தம் பழம்பிறப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சியை விளங்கவுரைத்து, அப்பிறப்பில், தன் கணவன் சங்கமனைப் பரதன் என்பான் பற்றிக் கொலை புரிவித்தானாக, அவன் மனைவி நீலி என்பாள் இட்ட சாபமே இத்துன்பத்துக்கு ஏதுவாயிற்று என அம்மதுராபதி வற் புறுத்திச் சொல்லியும்,

சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்;
மேற்செய் நல்வினையின் 1விண்ணவர்ச் சென்றேம்;
அவ்வினை யிறுதியின் 2அடுசினப் பாவம்,
எவ்வகை யானும் எய்துத லொழியாது;
3உம்பர் இல்வழி இம்பரிற் 4பல்பிறப்பு
யாங்கணும் இருவினை யுய்த்து உமைப்போல,
நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்
பிறந்தும் இறந்தும் 5உழல்வோம்; பின்னர்,
மறந்தும் மழைமறா மகத நன்னாட்டுக்கு
ஒருபெருந் 6திலகமென்று உரவோர் உரைக்கும்
7கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்,
அளப்பரும் 8பாரமிதை அளவின்று நிறைத்துத்
9துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றி,
10போதி மூலம் பொருந்தி வந்தருளி…
எண்ணரும் 11சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் 12அறக்கதிர் விரிக்குங்காலை…
துன்பக் கதியில் 13தோற்றர வின்றி,
அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டுத்
14துறவி யுள்ளம் தோன்றித் தொடரும்
1பிறவி நீத்த பெற்றிய மாகுவம்;
அத்திற மாயினும் அநேக காலம்
எத்திறத் தார்க்கும் 2இருத்தியும் செய்குவம்.”

இவ்வாறு தாம் செய்தனவும் செய்யவிருப்பனவும் கூறிய கண்ணகியார் மேலே மணிமேகலைக்குச் சில கூறலுற்று,

3“நறைகமழ் கூந்தல் நங்கை! நீயும்,
முறைமையின் இந்த மூதூரகத்தே,
அவ்வவர் சமயத்து 4அறிபொருள் கேட்டு,
5மெய்வகை யின்மை நினக்கே விளங்கிய
பின்னர்ப் பெரியோர் 6பிடகநெறி கடவாய்,
இன்னது இவ்வியல்பு,”

என எடுத்துரைத்து, மேலும், “நீ இளையள் வளையள் என்று கருதி நினக்கு யாவரும் மெய்ப்பொருளை யுணர்த்த முன்வாரார்; ஆதலின், நீ வேற்றுருக்கொள்க” என்று பணித்தனுப்பினள். மணி மேகலையும் ஒருமாதவன் வடிவு கொண்டாள்.

மாதவன் வடிவிற் புறப்பட்ட மணிமேகலை,
7தேவகுலமும் 8தெற்றியும் பள்ளியும்
பூமலர்ப் பொழிலும் பொய்கையும் 9மிடைந்து,
நற்றவ முனிவரும் 10கற்றடங்கினரும்,
நன்னெறி காணிய 1தொன்னூற் புலவரும்,
எங்கணும் விளங்கிய 2எயிற் புறவிருக்கையின்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்

இருந்து அரசுபுரியும் வஞ்சிமா நகர்க்குட் புகுந்தனள்.

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை


வஞ்சி நகர்க்குட் சென்ற மணிமேகலை அங்கே இருந்த சமயக் கணக்கர் பலரையும் கண்டு அவரவர் சமயத்திறங்களைக் கேட்கலானாள். அவருள் வைதிக மார்க்கத்து அளவை வாதியை நோக்கி, “நின் கடைப்பிடியாது?” என வினவ, அவன்,

வேதவி யாதனும் கிருத கோடியும்
1ஏதமில் சைமினி எனும் இவ்வாசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்;
காண்டல், கருதல், உவமம், ஆகமம்,
2ஆண்டைய அருத்தா பத்தியோடு இயல்பு,
ஐதிகம், 3அபாவம், மீட்சி, ஒழிவு, அறிவு
4எய்தி உண்டாம்நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை 5புலங்கொளல் வேண்டும் என்றும்

இவை யொவ்வொன்றின் இலக்கணமும் முறையே கூறி, பிரமாணாபாசங்கள் எட்டு உள என்றும், அவை,

6சுட்டுணர்வொடு, திரியக்கோடல், ஐயம்,
தேராது தெளிதல், கண்டுணராமை,
எய்தும் இல்வழக்கு, உணர்ந்ததை யுணர்தல்,
நினைப்பு என நிகழ்வ

என்றும், இவற்றின் இயல்புகளையும் தெரியக் கூறினன். அதன் மேலும், அவனே,

1பாங்குறும் உலோகாயதமே, பௌத்தம்,
சாங்கியம், நையா யிகம் வைசேடிகம்,
மீமாஞ் சகமாம்: சமயவா சிரியர்
தாம், பிருகற்பதி, சினனே, கபிலன்,
அக்கபாதன், கணாதன், சைமினி;
மெய்ப் பிரத்தியம், அனுமானம், சாத்தம்,
உவமானம், அருந்தா பத்தி, அபாவம்
*இவையே இப்போது இயன்றுள அளவைகள்

என்று கூறினன். அவனை நீங்கியதும், ஈசனே இறைவன் எனக் கொள்ளும் சைவவாதி மணிமேகலை முன் நேர்பட்டான். அவனை வினவிய மணிமேகலைக்கு. அவன்,

2இருசுடரோடு இயமானன் ஐம்பூத மென்று
எட்டுவகையும் உயிரும் யாக்கையு மாய்க்
3கட்டி நிற்போனும் 4கலையுருவி னோனும்
படைத்து விளையாடும் பண்பி னோனும்
5துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதான் ஒன்றி லோனும்
அன்னோன் இறைவ னாகும்.

என்றான்; பிறகு, பிரமவாதி தோன்றி, “பேருலகமெல்லாம் தேவன் இட்ட முட்டை யாகும்” என்றான்; வைணவவாதி, “கடல் வணன், நாரணனே இறைவனே” என்றானாக, வேதவாதி மேல்வந்து சொல்லலுற்றான் :

கற்பகம் கை, சந்தம்கால், எண்கண்,
தெற்றென் நிருத்தம் செவி, சிக்கை மூக்கு,
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
1சார்பில் தோன்றா ஆரண வேதக்கு
ஆதியந்தம் இல்லை; அது நெறி,

என்ற அவ்வேதியின் உரை, மெய்த்திறம், வழக்கு எனவுரைக்கும் எவ்வகையாலும் இசைவதன்று என உட்கொண்ட மணிமேகலை, ஆங்கே தோன்றிய ஆசீவகனைக் கண்டு, “நின் இறைவன் யாவன்? நின் நூற்பொருள்யாது?” என வினவினள். அவன்,

எல்லையில் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்,
2புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
3வரம்பில் அறிவன்இறை; நூற்பொருள்கள் ஐந்து,

என்று கூறி, அவ்வைந்தும், உயிரும், நிலம், நீர், தீ, காற்று எனும் நால்வகை யணுக்களுமாய் என்று வகுத்தும்,

அவ்வணு உற்றும் கண்டும் உணர்த்திடப்
4பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்:
நிலம்நீர் தீக்காற் றெனநால் வகையின
மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும் :
வெவ்வே றாகி விரிவதும் செய்யும்;
அவ்வகை யறிவது உயிரெனப் படுமே

என உயிரையும், இவ்வாறே ஏனை நால்வகை யணுக்களையும் விரித்தும் கூறினன். அங்ஙனம் கூறுமிடத்து, அணுக்களின் பொது வியல்பை.

தீதுற்று யாவதும் சிதைவது 5செய்யா;
புதிதாய்ப் பிறந்தொன்று ஒன்றிற் புகுதா;
முதுநீரணு நிலவணு வாய்த் திரியா;
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா;
அன்றியும் 1அவல்போல் பரப்பதும் செய்யா,

என்றும், உயிர்கள் சென்றெய்தும் பிறப்பும் வீடுபேறும் கூறலுற்று,

2கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ்வாறு பிறப்பினும் மேவிப்
பண்புறு வரிசையிற் 3பாற்பட்டுப் பிறந்தோர்,
4கழிவெண் பிறப்பிற் கலந்து வீடணுகுவர்

என்றும், உயிர்கள்,

பெறுதலும் இகழ்தலும் இடையூ றுறுதலும்,
5உறுமிடத் தெய்தலும் துக்கசுக முறுதலும்,
6பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
7கருவிற் பட்ட பொழுதே கலக்கும்;
இன்பமும் துன்பமும் இவையும் அணுவெனத் தகும்;
முன்னுள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது”

என்றும் கூறி முடித்தான். அவனை விட்டு, நிகண்டவாதியை நோக்கி, மணிமேகலை, “நின்னால் புகழும் தலைவன் யார்? நின் நூற்பொருள் யாவை?” என்றாள். நிகண்ட வாதி,

இந்திரர் தொழப்படும் 8இறைவன்எம் இறைவன்;
தந்த நூற்பொருள் 9தன்மாத்திகாயமும்,
1அதன் மாத்திகாயமும் காலா2காயமும்
தீதில் சீவனும் பரமா ணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ்வினையால்
செய்யுறு 3பந்தமும் வீடும் இத்திறத்த

எனத் தன் நூற்பொருளைத் தொகுத்தும், பின்பு ஒவ்வொன்றையும் விரித்தும் கூறி முடிவில், வீடு பேற்றியல்பை,

சீர்சால் நல்வினை தீவினை யவை செயும்
வரும்வழி யிரண்டையும் மாற்றி முன்செய்
அருவினைப் பயன் அனுபவித் 4தறுத்திடுதல்;
அது வீடாகும்.

என்றனன். அவன்பின் சாங்கியன் தோன்றித் தன் சாங்கிய நூற் கருத்தை யுரைக்கத் தொடங்கி,

தனையறி வரிதாய்த் தான் முக்குணமாய்
மனநிகழ் வின்றி 5மாண்பமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற் கிடமெனச்
சொல்லுதல் மூலப் பகுதி

என்றும், சித்தம், மான், புத்தி, வான், காற்று, தீ, நீர், மண் என்ற இவை ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்படும் என்றும், இவற்றின் கூட்டத்திலிருந்து மனமும், மனத்து ஆங்காரமும், கன்மேந்திரிய ஞானேந்திரிய விகாரங்களும் தோன்றி உலகாய் நிகழும் என்றும்,

வந்த வழியே இவைசென் றடங்கி
அந்தமில் பிரளய மாய்6இறு மளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப்
7பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி
எப்பொருளும் தோன்றுதற் கிடமின்றி
அப்பொருளெல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
1புலமார் பொருள்கள் இருபத் தைந்துள

என்றும், அவை நிலம் முதலாக உயிரெனும் ஆன்மா ஈறாக இருபத்தைந்தும் நிரலே கூறி முடித்தான். மணிமேகலை, உடனே அருகில் நின்ற வைசேடிகனை “நின் வழக்கினை உரைப்பாயாக,” என்று கேட்டாள். அந்த வைசேடிகன், பொருள், குணம், தொழில், சாமானியம், விசேடம், சமவாயம் என நூற்பொருள் ஆறாகும் என்றும், அவற்றுள்,

பொருள் என்பது,
குணமும் தொழிலு முடைத்தாய், எத்தொகைப்
பொருளுக்கும் ஏதுவாம்; அப்பொருள் ஒன்பதாம்;
ஞாலம், நீர், தீ, வளி, ஆகாயம், திசை,
காலம், ஆன்மா, மனம்; இவற்றுள் நிலம்,
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து; நின்ற நான்கும்
2சுவை முதல் ஒரோ குணம் அவைகுறை வுடைய,

என ஒவ்வொன்றின் இயல்புகளையும் விரித்துக் கூறினன். அவன் பின், பூதவாதி தோன்றி,

3தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்டம் 4மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்;
அவ்வுணர்வு அவ்வப்பூதத் தழிவுகளின்
வெவ்வேறு பிரியும்; 5பறையோசையிற் கெடும்;
உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்,
உயிரில் லாத உணர்வில்பூதமும்
அவ்வப் பூதவழி அவை பிறக்கும்;
1மெய்வகை இதுவே;

என்றும், யாம் காட்சியளவை யன்றிக் கருத்து முதலிய அளவை களைக் கொள்ளேம் என்றும், இப்பிறப்பே, இம்மையும் இம்மைப் பயனுமாம்; மறுமையும் வினைப்பயன் துய்த்தல் உண்டு என்பதும் வெறும் பொய்யே என்றும் கூறினன். இவற்றைக் கேட்டு மணி மேகலை மாறுவேறு கூறாது நகைத்தனள்; அவன், நகைப்பது என்னை? என்றானாக, தான் பழம் பிறப்புணர்ந்த செய்தி கூறினள். அதனைக் கேட்டதும் அவன் நகைத்து,

2தெய்வமயக்கினும் கனாவுறு திறத்தினும்
3மையலுறுவார் மனம் வேறாம் வகை
ஐயமன்றி இல்லை,

என்றான். அவனை மணிமேகலை நோக்கி, “காட்சியேயளவை யாயின்

நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய்?
மெய்யுணர் வின்றி மெய்ப் பொருள் உணர்வரிய
ஐயமல்லது இது சொல்லப் பெறாய்,

எனத் தான் கொண்டிருந்த மாதவன் வடிவிலே நின்று தான் உன்னிய பொருளை உரைத்து, இங்கே காட்டிய சமய நூற் பொருள்களை அறிந்தாள்.

கச்சிமா நகர் புக்க காதை


இனி, அவ்வஞ்சி மா நகரத்தே மணிமேகலை தன் தாய ரையும் அறவணவடிகளையும் காண விரும்பி அவரைத் தேடிக் கொண்டு புறஞ்சேரி கடந்து, கலவை நீரும், சாந்துகழி நீரும், விரைநீரும் என்ற பலவகை நீரே எங்கும் பாய்தலால், தாமரை, கழுநீர், ஆம்பல் முதலிய பூக்கள் மலர, வண்டரற்ற விளங்கிய அகழியையும், பல்வகைப் பொறியமைத்து, வினை மாண்பு சிறந்து நின்ற மதிலையும், கடந்து சென்று, கொடிநிலவும் வாயில் வழியாக நகர்க்குள்ளே சென்றனள். அங்கே, காவலாளர், மீன் விலைஞர், உப்புப்பகருநர், கள்விற்போர், 1காழியர், 2கூலியர் என்பவர் முதலாகப் பல தொழிலாளரும் வணிகரும் நிரம்பக் காணப் பட்டனர். அவர் கூட்டத்தைக் கடந்து செல்பவள்,

நலந்தரு பண்ணும் 3திறனும் வாய்ப்ப
4நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்றிவர் பல்வகை மறுகும்,
5விலங்கரம் பொரூஉம் 6வெள்வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞர் 7இரீஇய மறுகும்,
8வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின்
கூத்தியல்பு அறிந்த கூத்தியர் மறுகும்,
9பால்வே றாக எண்வகைப் பட்ட
கூலம் 1குவைஇய கூல மறுகும்,
2மரகதர் சூதர் வேதாளிகர் மறுகும்,
போகம் புரக்கும் பொதுவர் மலி மறுக்கும்,
3கண் நுழைகல்லா நுண்ணூற் கைவினை,
வண்ண, அறுவையர் வளம் திகழ் மறுகும்,
பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்,
பன்மணி பகர்வோர் 4மன்னிய மறுகும்,
மறையோர் 5அருந்தொழில் குறையா மறுகும்,
அரசியல் மறுகும், அமைச்சியல் மறுகும்,
எனைப் பெருந்தொழில் செய் ஏனோர் மறுகும்.
6மன்றமும், 7பொதியிலும், சந்தியும் 8சதுக்கமும்,
9புதுக் கோள்யானையும் 10பொற்றார்ப் புரவியும்,
11கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்,
சேணோங் கருவி தாழ்ந்த செய் குன்றமும்,
12வேணவா மிகுக்கும் விரை மரைக்காவும்,
விண்ணவர், தங்கள் விசும்பிடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த 13நன்னீ ரிடங்களும்,
சாலையும் கூடமும் 14தமனியப் பொதியிலும்
15கோலமும் குயின்ற கொள்கை யிடங்களும்

கண்டு பெருமகிழ்வுகொண்டு, இந்திர விகாரம்போல் எழில்பெற்று விளங்கிய ஒரு மாதவப் பள்ளியைக் கண்டாள். அங்கு உறைந்த மாதவர்களில், கோவலன் தந்தையாகிய மாசாத்துவானும் தவத் திறம் பூண்டிருந்தான். அவனைக் கண்டதும், மணிமேகலை அவன் திருவடி பணிந்து, தான் அமுத சுரபி பெற்றது முதல், சமயக் கணக்கர் திறம் கேட்டதும், அவர் கூறியவற்றைக் கொள்ளாது, புத்த தேவனது நல்லறம் கேட்க நயந்து அறவணனைத் தேடி வந்ததும் ஈறாக நிகழ்ந்தவை யனைத்தும் சொல்லி முடித்தாள். மாசாத்துவான், இனித் தன் வரலாறு கூறலுற்று,

தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது;
தையல்! கேள்: நின்தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழுநகர் கேடுறத்
துன்புற 1விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்புகொள் அறத்திற்கு 2அருகனே னாதலின்,
மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து
தினைத்தனை யாயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
3மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்;

என்றவன், தான் இந்த வஞ்சிமாநகர்க்கு வந்த காரணம் கூறத் தொடங்கி,

குடக்கோச் சேரலன் 4குட்டுவர் பெருந்தகை
5விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள்,
6துப்ப செவ்வாய்த் துடியிடை யாரொடும்
இப்பொழில் புகுந்தாங்கு இருந்த எல்லையுள்,

இலங்கைத் தீவிலுள்ள சமனொளி என்னும் மலைக்குச் சென்று அதனை வலங்கொண்டு போந்த தருமசாரணர், இப் பொழிற்கண் வந்து கற்றலத்தில் இருந்தனர். அவர்களைக் கண்ட அரசன் அவர்கட்கு வேண்டும் உணவும் வேறு பல சிறப்பும் தந்து இறைஞ்சி நின்றான். அவர்கள் மகிழ்ந்து,

பிறப்பின் துன்பமும் 1பிறவா இன்பமும்
2அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை
இன்ப வாரமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச்

சொரிந்தனர். அந்நாளில், அவ்வேந்தற்குக் காதற் பாங்கனாக இருந்தவன், நின்தந்தை கோவலனுக்கு ஒன்பது தலைமுறை முன்னவனாவான்; அவன் பெயரும் கோவலன் என்பதே. அவனும் அவர் கூறிய அறங்களைக் கேட்டு, தன் முன்னோர் படைத்த செல்வத்தையேயன்றித் தான் படைத்ததனையும் கூட்டி ஏழுநாளில் இரவலர்க்கு ஈந்து, புத்தனுக்கு ஒரு சிறந்த சைத்தியம் அமைத் தனன்; அதனைக் கண்டு வணங்குதற்காக யான் வந்தேன். ஈங் குறையும் மாதவர்கள் காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொளும் என்றதனால், இங்கே இருந்தொழிந்தேன்.

இன்னும் கேளாய்: நன்னெறி மாதே!
தீவினை 3யுருப்பச் சென்ற நின்தாதையும்
தேவரின் தோற்றி முற்செய்வினைப் பயத்தால்,
ஆங்கத் தீவினை இன்னும் துய்த்துப்
பூங்கொடி! முன்னவன் போதியின் நல்லறம்
தாங்கிய தவத்தால் தான்வதம் தாங்கிக்
4காதலி தன்னொடு கபிலையம் பதியில்
நாதன் நல்லறம் கேட்டு வீடுஎய்து மென்று
5அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொற்பயன் உணர்ந்தேன்; தோகை! யானும்,
அந்நாள் ஆங்கவன் அறநெறி கேட்குவன்

என்றான். அதன்பின், மணிமேகலைக்கு, “நினக்கு உளவாகும் நிகழ்ச்சிகளை நினக்குக் கந்திற்பாவைக்கண் நின்ற துவதிகன் உரைத்துளான் அன்றோ? அவன் உரைத்தனன் என்ற செய்தியை அறவணன் சொல்லக்கேட்டுள்ளேன்; அவ்வறவணனே, நினக்கு ஏது நிகழ்ச்சி நிகழுமிடம் காஞ்சி என்றான். அவன் காஞ்சிக்குச் சென்ற நாளில் நின் தாயராகிய மாதவியும் சுதமதியும் உடன் சென்றனர், என்று சொல்லிவிட்டு

அன்னதை யன்றியும், அணியிழை! கேளாய்:
பொன்னெயிற் காஞ்சி நாடு கவினழிந்து,
மன்னுயிர் மடிய மழைவளம் 1கரத்தலின்,
அந்நகர் மாதவர்க்கு ஐயமிடுவோர்,
இன்மையின் இந்நகர் எய்தினர், காணாய்;
2ஆருயிர் மருந்தே! அந்நாட் 3டகவயின்
4காரெனத் தோன்றிக் காத்தல், நின்கடன்

என வற்புறுத்தினன். அதுகேட்ட மணிமேகலை வஞ்சிநகரின் மேற்குப் பக்கத்தினின்று விண்ணிடத்தில் ஓங்கி,வடதிசையில் காஞ்சி நோக்கிச் சென்று, அது வளங்குன்றிப் பொலிவிழந்து கிடப்பதைக் கண்டு வருந்தி, நடுநகரெல்லைக்கண் இறங்கி, தொடுகழற் கிள்ளியின் பின்னவனான இளங்கிள்ளி எடுத்த புத்த சைத்தியத்தைப் பரவித்
தொழுது, அந்நகரின் தென்மேற்கிலிருந்த பூம்பொழிலையடைந்
திருந்தாள். அதனைத் தருமதவனம் என்பர். அவள் வரவையறிந்த கஞ்சுகி யொருவன், அரசன்பால் விரைந்து சென்று, வணங்கி நின்று,

கோவலன் மடந்தை 5குணவதம் புரிந்தோள்;
நாவலந்தீவில் தான் நனி6மிக் கோள்,
அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு
தங்காது, இப்பதித் 7தருமத வனத்தே
வந்து தோன்றினள் மாமழை போல

என்று மொழிந்தான். கேட்ட வேந்தன் மந்திரிச்சுற்றம் சூழ்ந்து வரப்
புறப்பட்டுத் தனக்குக் கந்திற்பாவை யுரைத்தவையனைத்தும் உண்மை
யாதல் கண்டு வியந்த உள்ளத்தனாய் வந்து மணிமேகலையைக் கண்டு,

செங்கோல் கோடியோ, செய்தவம் பிழைத்தோ,
1கொங்கவிழ் குழலா கற்புக்குறை பட்டோ,
2நலத்தகை நல்லாய்! நன்னா டெல்லாம்
3அலத்தற் காலை யாகியது; அறியேன்;
மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி
4உயங்காதொழி: நின் உயர்தவத்தால் ஓர்
காரிகை தோன்றும்; அவள்பெருங் 5கடிஞையின்
6ஆருயிர்மருந்தால் அகல்நிலம் உய்யும்;
ஆங்கவள் அருளால் அமரர்கோன் ஏவலின்
7தாங்கா மாரியும் தான்நனி பொழியும்;
அன்னாள் இந்த அகனகர் புகுந்த
பின்னாள் நிகழும் பேரறம் பலவால்;
கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது;
8பாரக வீதியில் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் 9கொழுநீர் இலஞ்சியொடு
மாமணி பல்லவம் வந்தது ஈங்கெனப்
பொய்கையும் பொழிலும் புனையும்என்று அறைந்துஅத்
தெய்வதம் போயபின் செய்தியாம் அமைத்தது
இவ்விடம்.

என்று அவ்விடத்தைக் காட்டினன். அதுகண்டு மகிழ்ந்த மணிமேகலை, அரசனைக்கொண்டே புத்தபீடிகையையும், தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வணங்கி வழிபடுதற்குரிய கோயில் என்ற இவற்றை இயற்றுவித்து, அவற்றிற்குப் பூசையும் விழாவும் செய்வித்து, அமுதசுரபியைப் பீடிகையில் வைத்து வழிபட்டு ஏத்தி, “பசிப்பிணியால் வருந்தும் எல்லா உயிர்களும் வருக” என்றனள். என்றலும்,

காணார் கேளார் கால்முட மானோர்
1பேணா மாக்கள் 2பேசார் 3பிணித்தோர்
4படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்
5மடிநல் கூர்ந்த மக்கள் யாவரும்
பன்னூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன்னுயி ரடங்கலும் வந்தொருங் 6கீண்டி,
அருந்தியோர்க் கெல்லாம் ஆருயிர் மருந்தாய்ப்,
பெருந்தவர் 7கைப்பெய் பிச்சையின் பயனும்,
நீரும் நிலனும் காலமும் கருவியும்
8சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்ப
9வசித்தொழில் உதவி வளந் தந்தது என

மணிமேகலையைப் பாராட்டிக்கொண்டு செல்ல, மாதவியும் சுதமதியும் என்ற இவருடன் அறவணவடிகள் அம்மணிமேகலையின் அறச்சாலையை வந்தடைந்தனர். அவர்களின் திருவடி வணங்கி, நீரால் விளக்கி, இருக்கையில் இருத்தி, நல்லுணவு இனி தூட்டி,

10பாசிலைத்திரையலும் 11பளிதமும் படைத்து
12வாய்வதாக என் 13மனப் பாட்டு அறம்என

மணிமேகலை இறைஞ்சி நின்றாள்.

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை


தன் அடிகளில் வணங்கி நின்ற மணிமேகலையை நோக்கி, அறவணவடிகள், “நாகநாட்டரசன் மகளான பீலிவளை தான் பெற்ற மகனைக் கம்பளச் செட்டியிடம் தந்து சோழனிடம் சேர்ப்பிக்கச் சொல்ல, அம்மகனை அழைத்துப் போந்த அன்றிரவே, அவனது வங்கம் கடலில் கவிழ்ந்தது. தப்பிக் கரையடைந்த அச்செட்டி, காவிரிப்பூம் பட்டினத்தை யடைந்து சோழனிடம் நிகழ்ந்தது கூறினன். அரசன் மகன்பிரிவாற்றாது அவனைத் தேடிக் கடற்கரையிலும் கானற்சோலையிலும் அலைந்துதிரியவே, பூம்புகார் நகரம் இந்திரவிழாவை ஆற்றாது நெகிழ்த்தது. இது நிற்க,

தன்விழாத் தவிர்தலின் 1வானவர் தலைவன்,
நின்னுயிர்த் 2தந்தை நெடுங்குலத் துதித்த
மன்னுயிர் 3முதல்வன் மகர 4வேலையுள்,
5முன்னிய வங்கம் 6முங்கிக் கேடுறப்
பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்
துள்ளிய தென்னத் தொடுகடல் உழந்துழி,
எழுநாள் எல்லை 7இடுக்கண் வந்தெய்தா
வழுவாச் சீலம் 8வாய்மையிற் கொண்ட
பான்மையின், தனாது பாண்டுகம்பளம்
தான் 1நடுக்குற்ற தன்மை நோக்கி,
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாத னாவோன் நளிநீர்ப் பரப்பில்
2எவ்வமுற் றான்தனது எவ்வம் தீர்என

உரைத்தான். அதுகேட்ட மணிமேகலா தெய்வம் போந்து அவனுக்கு வேண்டும் உதவியினைச் செய்தது. இதனை முன்னறியாத அவனுக்கு,

அறவர சாளவும் அறவாழி யுருட்டவும்,
பிறவி தோறுதவும் பெற்றியள் என்று

சாரணர் அறிந்து கூறினர். அந்த உதவி நினைந்து நின் தந்தை நினக்கு மணிமேகலை யென்ற இப்பெயரை இட்டனன்; அன்றிரவே அவன் கனவில் மணிமேகலா தெய்வம் தோன்றி நனவுபோல நீ துறவுபூணும் செய்தியை உரைத்துளது. இந்த மணிமேகலா தெய்வமே புகார் நகரம் இந்திரவிழாவை மறந்தது கண்டு, “இந்நகரைக் கடல் கொள்ளுக” என்று சபிக்க, இந்திரன் சாபமும் உடன் வந்து ஒன்றியது; நகரும் கடலால் விழுங்கப்பட்டது. அப்பால் யானும் நின் தாயரும் நின் பொருட்டு இந்நகரை யடைந்தோம்,” என்று சொல்லி முடித்தனர்.
மணிமேகலை, அவர் தாளை மறுபடியும் வணங்கி, இச்செய்தியையே யான் புத்த பீடிகையைப் போற்றிய காலத்துப் போந்த தீவ திலகையும் உரைத்தனள்.

அன்ன அணிநகர் மருங்கே,
வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும்
நூற்றுரைச் சமயநுண் பொருள் கேட்டே,
அவ்வுரு வென்ன 3ஐவகைச் சமயமும்
1செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்;
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக

என வேண்டி நின்றாள். அறவண அடிகளும், புத்தசமய அளவையியல்களைக் கூறலுற்று, ஆதிசினேந்திரன் அளவை இரண்டே என வகுத்தான்; அவை, பிரத்தியக்கம், அனுமானம் என்பன.

சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொல்லி,
விட்டனர் 2நாமசாதிக் குணக் கிரியைகள்,
மற்றவை அனுமானத்தும் 3அடையும் என,
… …. …. ….
ஏனை அளவை களெல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின், அனுமானமாம்.

இவ்வனுமானத்தில், பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என ஐந்து உறுப்புக்கள் உள. அவற்றில்,

4பக்கம், இம்மலை நெருப்புடைத்து என்றல்;
புகையுடைத் தாதலால் எனல், பொருந்து ஏது;
வகையமை 5அடுக்களைபோல், திட்டாந்தம்;
உபநயம், மலையும் புகையுடைத் தென்றல்;
நிகமனம், புகையுடைத்தே நெருப்புடைத் 6தெனல்.

இனி, பக்கமுதலாக நிகமனம் ஈறாகக் கூறிய ஐந்தனுள், உபநயம் நிகமனம் என்ற இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும். அடங்கவே, நின்ற பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்றிலும் நல்லவும் தீயவும் என இருதிறம் உண்டு. தீயபக்கம் பக்கப்போலி என்றும், தீயஏது, ஏதுப்போலி என்றும், தீய திட்டாந்தம் திட்டாந்தப் போலி யென்றும் திட்டாந்த வாபாசம் என்றும் கூறப்படும். ஏதுப்போலியையும் ஏதுவாபாசம் என்ப.

வெளிப்பட்டுள்ள தன்மியினையும்,
வெளிப்பட்டுள சாத்தியதன் மத்திறம்
பிறிதில் வேறாம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதலுடையது.
நக்கு என் பக்கமென நாட்டுக…
நல்லேது,
மூன்றாய்த் தோன்றும்:ஒழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும், 1சபக்கத்து உண்டாதலும்,
2விபக்கத்து இன்றியே விடுதலும் என.
… … … …
ஏதமில் திட்டாந் தம்இரு வகைய;
சாதன்மியம் வைதன்மியம் என;

இவ்வாறு நற்பக்கம், நல்லேது, நல்திட்டாந்தம் என்ற மூன்றும் கூறிப்போந்த அடிகள், இனி, தீயவாகிய பக்கப்போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி மூன்றையும் தொகுத்தும் வகுத்தும் ஓதுகின்றார்.

பக்கப் போலி ஒன்பது வகைப்படும்;
பிரத்தியக்க விருத்தம், அனுமான
விருத்தம், சுவசனவிருத்தம், உலோக
விருத்தம், ஆகமவிருத்தம், அப்பிர
சித்த விசேடணம், அப்பிரசித்த
விசேடியணம், அப்பிரசித்த வுபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என.

இதன்மேல் ஏதுப்போலி கூறலுற்று, அஃது, அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என மூன்றாமென வகுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் விரிக்கின்றார்.

உபயா சித்தம், மன்னியதா சித்தம்,
சித்தா சித்தம், ஆசிரயா சித்தம்,
என நான்கு,
… … … அநைகாந்திகமும்,
சாதாரணம், அசாதாரணம், சபக்கைக
தேசவிருத்தி, விபக்க வியாபி,
விபக்கைக தேச விருத்தி, சபக்க
வியாபி, உபயைக தேசவிருத்தி,
விருத்த வியபிசாரி யென்று ஆறு,
விருத்தம் தன்னைத் 1திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்,
தன்ம விசேட விபரீத சாதனம்,
தன்மிச் சொரூப விபரீத சாதனம்,
தன்மி விசேட விபரீத சாதனம்,
என்ன நான்கு வகையதாகும்.

இனி, இறுதியாகத் தீய எடுத்துக்காட்டுக்களான திட்டாந்த வாபாச மென்பதை வகுத்துரைக்கின்றார். இதனை முதற்கண், சாதன்மிய திட்டாந்த ஆபாசம், வைதன்மிய திட்டாந்த ஆபாசம் என இரண்டாக வகுத்துக் கொள்ளுகின்றார். இவ்விரண்டனுள்,

சாதன்மிய திட்டாந்த வாபாசம்
ஓதில், ஐந்து வகையுளதாகும்;
சாதன தன்ம விகலமும், சாத்திய
தன்ம விகலமும், உபயதன்ம
விலகமும், அநன்னுவயம், விபரீதான்
னுவயம் என்ன. வைதன்மியதிட்
டாந்த வாபாசமும் ஐவகைய:
சாத்தியா வியா விருத்தி,
சாதனா வியா விருத்தி,
உபயா வியாவிருத்தி, அவ்வெதிரேகம்,
விபரீத வெதிரேகம்

என்பனவாம். இவ்வாறு தொகுத்தும் வகுத்தும் விளக்கிய அடிகள் மணிமேகலையை நோக்கி,

நாட்டிய இப்படித் 2தீயசா தனத்தால்,
காட்டும் அனுமான வாபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்,
3ஐயமின்றி அறிந்துகொள் ஆய்ந்து

என்று அறிவுறுக்கின்றார்.
#பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை

தானம் தாங்கிச் சீலம் மேற்கொண்டு பழம்பிறப்புணர்ந்த மணிமேகலை, புத்த தரும சங்கத்தை யடைந்து, “புத்தம் சரணங்கச்சாமி, தர்மம் சரணங்கச்சாமி, சங்கம் சரணங்கச்சாமி” என்பவைகளை மும்முறை ஓதி மூன்றுமுறை வணங்கிச் சரணடைந்த பின், அவனைநோக்கி, அறவணவடிகள், புத்தனைப்பற்றிச் சில கூறலுற்று,

1அறிவு வறிதாய் உயிர் 2நிறைகாலத்து
3முடிதயங் கமரர் முறைமுறை இரப்ப,
4துடித லோகம் ஒழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி யிருந்து
5மாரனை வென்று வீர னாகிக்
6குற்ற மூன்றும் முற்ற வறுக்கும்
7வாமன் வாய்மை 8யேமக் கட்டுரை,
இறந்த காலத்து 9எண்ணில் புத்தர்களும்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது

பன்னிரண்டு இயல்பினதாகிய பொருள் என்றும், அவை பேதைமை முதல் வினைப்பயன் ஈறாகவுள்ளன என்றும், இவை முறையே ஒன்றினொன்று தோன்றலும் இயல்பால், நால்வகைக் கண்டமும், மூவகைச் சந்தியும், மூவகைத் தோற்றமும், மூவகைக் காலமும், அப்பொருள் உடையதாகி,

குற்றமும் வினையும் பயனும் விளைந்து
1நிலையில, வறிய, துன்பமென நோக்க,
2உலையா வீட்டிற்கு உறுதி யாகி,
3நால்வகை வாய்மைக்குச் சார்பிட னாகி,
4ஐந்துவகைக் கந்தத்து அமைதி யாகி,
மெய்வகை 5யாறு வழக்கு முகமெய்தி,
6நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி,
இயன்ற 7நால்வகையால் வினாவிடை யுடைத்தாய்,
8நின்மதி யின்றி, 9ஊழ்பா டின்றி,
பின் போக்கல்லது பொன்றக் கெடாதாய்,
யானும் இன்றி, எனது மின்றி,
போனது மின்றி, வந்தது மின்றி,
முடித்தலும் இன்றி முடிவு மின்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்

என்ற இவையெல்லாம் தானே யாகியது என்றும், அப்பொருளின் இயல்புகளை,

பேதைமை, செய்கை, உணர்வே, அருவுரு,
வாயில், ஊறே, நுகர்வே, வேட்கை,
பற்றே, பவமே, தோற்றம், வினைப்பயன்
1இன்றென வகுத்த இயல்பு ஈராறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறறிகுவ;
அறியா 2ராயின் ஆழ்நரகு அறிகுவர்

என்றும் கூறி, பேதைமை முதலிய பன்னிரண்டின் இலக்கணங்களைத் தொடங்குகின்றார்.

பேதைமை யென்பது யாதென வினவின்.
ஓதிய இவற்றை உணராது மயங்கி,
இயற்பாடு பொருளால் கண்டது மறந்து
3முயற்கோடு உண்டு எனக் கேட்டு, அதுதெளிதல்.
… … … …
தீவினை யென்பது யாதென வினவின்.
ஆய்தொடி நல்லாய்! ஆங்கது கேளாய்:
கொலையே, களவே, காமத்தீ விளைவு,
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்;
பொய்யே, 4குறளை, கடுஞ்சொல், பயனில்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்;
5வொஃகல், வெகுளல், 6பொல்லாக் காட்சியென்று
உள்ளம் தன்னின் 7உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையால்; 8பயன் தெரிபுலவர்
இத்திறம் படரார்; படர்குவ ராயின்
விலங்கும் பேயும் நரகரு மாகிக்
கலங்கிய 9உள்ளக் கவலையில் தோன்றுவர்;
நல்வினை யென்பது யாதென வினவின்,
10சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி,
1சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி
மேவிய 2மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்;
உணர்வெனப் படுவது உறங்குவோர் உணர்வில்
3புரிவின்றாகிப் புலன் கொளா ததுவே;
அருவுரு வென்பது அவ்வுணர்வு சார்ந்த
உயிரும் உடம்பு மாகும் என்ப.
வாயில் ஆறும் ஆயுங் காலை,
உள்ளம் உறுவிக்க உறுமிடன் ஆகும்.
ஊறுஎன வுரைப்பது உள்ளமும் வாயிலும்
வேறு புலன்களை 4மேவுதல் என்ப;
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்;
வேட்கை விரும்பி நுகர்ச்சி 5ஆராமை;
பற்றெனப் படுவது 6பசைஇய அறிவே;
பவம் எனப்படுவது கரும 7வீட்டம்
தருமுறை இதுவெனத் தாம்தாம் சேர்தல்;
பிறப்பெனப் படுவது அக்கருமப் பெற்றியின்
8உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
காரண காரிய உருக்களில் தோன்றல்;
பிணியெனப் படுவது சார்பிற பிறிதாய்
இயற்கையில் திரிந்து உடம்பு 9இடும்பைபுரிதல்;
மூப்பென மொழிவது அந்தத் தளவும்
10தாக்கு நிலையாமையில் தாம் தளர்ந்திடுதல்;
சாக்காடு என்பது அருவுருத் தன்மை
யாக்கை 11வீழ்கதிர் என மறைந்திடுதல்.

இக் கூறிய பேதைமை முதலியன முன்னதைப் பின்னது சார்வாகக் கொண்டு தோன்றுதலும், தோன்றியவற்றில் மீளவும் முன்போலத் தோன்றுதலும் இவற்றின் இயல்பாம். இவ்வாற்றால் கண்டம் நான்கும், சந்தி மூன்றும், தோற்றம் மூன்றும், காலம் மூன்றும் கூறுகின்றார். அவற்றின்பின் நால்வகை வாய்மையும், ஐவகைக் கந்தமும், அறுவகை வழக்கும், நால்வகை நயமும், நால்வகைப் பயனும், நால்வகை வினாவிடையும் கூறுகின்றார். வினாவிடையைக் கூறுமிடத்து,

வினாவிடை நான்குள:
துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல்,
வினாவின் விடுத்தல், வாய்வாளாமை யென:
தோன்றியது கெடுமோ? கெடாதோ? என்றால்,
கேடுண்டு என்றல் துணிந்து சொலலாகும்.
செத்தான் பிறப்பானோ? பிற வானோ
என்று செப்பின்,
பற்றிறந்தானோ? 1அன்மகனோ? எனல்,
மிகக் கூறிட்டு மொழிதல் எனவிளம்புவர்;
வினாவின் விடுத்தல், முட்டை முந்திற்றோ?
பனைமுந்திற்றோ? எனக் கட்டுரை செய்
என்றால், எம்முட்டைக்கு எப்பனை? என்றல்;
வாய் வாளாமை, ஆகாயப்பூப்
பழைதோ? புதிதோ? என்று 2புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையா திருத்தல்,

இவ்வண்ணமே பேதைமை முதலிய இயல்புகளையுடைய பொருளே பற்றிக் கூறத் துவங்கி,

3கட்டும் வீடும் அதன் காரணத்தது;
4ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை;
யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்,

என்று சொல்லி இவற்றின் குற்றத்தைக் கடிதல் வேண்டுமென வற்புறுத்தக் கருதி மணிமேகலையை நோக்கி, அந்த அறவணவடிகள்,

1அநித்தம் 2துக்கம் 3அநான்மா 4அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் 5பற்றறுத் திடுக;
6மைத்திரி 7கருணாமுதிதை யென்று அறிந்து
திருந்து நல்லுணர்வால் செற்றம் அற்றிடுக;
8சுருதி 9சிந்தனா 10பாவனா 11தரிசனை
கருதியுய்த்து மயக்கம் கடிக;
இந்நால் வகையால் மனத்து இருள் நீங்குக

என முன்பின் மலைவில்லாத மங்கலமொழிகளின் வாயிலாய் இந்த ஞானப்பொருளை உரைத்தருளினர். அதனால், மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுக என்று நோற்பாளாயினள்.
மணிமேகலைச் சுருக்கம்
முற்றும்.
* macaulay on milton.
* இச் சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டத்தை இளங் கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாரும் பலதிறத்து ஆராய்ச்சியாளர் உளர். - History of the Tamils by P.T.S. Ayyangar.

-   இதனை டிரைடன் (Dryden) என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர். † இதனை இம்முகவுரைக்குப் பின் காண்க.

-   கண்ணகி யென்னும் பெயர் பண்டைத் தமிழ் மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுள் ஒன்று. வையாவிக்கோப் பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது. ஒருகால், இக்கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில்சிழார், கபிலர், பரணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப் பட்டனர்.

இனி, நம் கண்ணகியார் தம் மார்பொன்றைத் திருகியெறிந்த செய்தி போல்வதொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனிளநாகனாரால் குறிக்கப்பெறுகின்றது. “இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுத்த திருமா வுண்ணிக் கேட்டோ ரனைய ராயினும், வேட்டோரல்லது பிறர் இன்னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகி யாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராய்தற்குரியது.

    1. கொங்கு - தேன். தார் - மாலை. சென்னி - சோழன்.  
    2.   

2.  அம்கண் - அழகிய இடத்தையுடைய.
3.  திகிரி - ஆக்கினா சக்கரம்.
4.  பொன்கோடு - அழகிய சிகரம்.
5.  நாமநீர் - அச்சம் தரும் கடல்.
6.  மேல் நின்று - எல்லாப் பொருட்கும் மேலாக நின்று.
7.  வீங்குநீர் - மிக்க கடல்; நிறைந்த நீரையுடைய கடல்.

8.  பதி எழுவறியா - பகை காரணமாகவோ, வறுமை காரணமாகவோ இருக்கும் இடத்தைவிட்டு நீங்குவதை அறியாத.
9.  கெழீஇய - பொருந்தின.
10. பொதுவறு சிறப்பு - தனக்கே உரிய சிறப்பு.
11. நடுக்கின்றி - சலிப்பின்றி. நிலைஇய - நிலைபெற்றன.
12. ஒடுக்கம் கூறார் - முடிவு உண்டு என்று கூறார்.
13. முடித்த கேள்வி - கரைகண்ட கல்வி கேள்வி.
14. போதில் ஆர் திருவினாள் - தாமரைப் பூவில் பொருந்திய திருமகள்; தாமரைப் பூவை இல்லமாகக் கொண்ட திருமகள்.
15. வடமீனின் திறம் - அருந்ததியினுடைய கற்பு. தீது - பழுது.

16. ஏத்த வயங்கிய - ஏத்தும்படி விளங்கின.
17. உயர்ந்தோங்கு செல்வம் - மிகவோங்கிய செல்வம்.
18. மண் தேய்த்த புகழ் - மண்ணுலகம் சிறுத்துத் தனக்குள் அடங்கும்படி விரிந்த புகழ்.
19. பண் தேய்த்த மொழி - இனிமையால் பண்ணின் இசையும் கேட்க உவர்க்கும் படியான சொல். ஆயம் - பெண் கூட்டம்.
20. செவ்வேள் - முருகன்.
21. இசை போக்கி - சிறப்பைப் பாராட்டி.
22. கிழமையான் - உரிமையுடையவன்.

23. கவவுக்கை ஞெகிழாமல் - தழுவிய கை தளராமல்; இணைபிரியாமல் என்றபடி.
24. மங்கல அமளி - மணப் பள்ளி.

25. முழுநெறிக் குவளை - இதழ் ஒடியாத குவளைப் பூ.
26. பொதி அவிழ்ந்த - இதழ் விரிந்த.
27. சுரும்பு இமிர் தாமரை - வண்டு இசைக்கும் தாமரை.
28. அளைஇ - கலந்து உண்டு.
29. விரியல் வெண்தோடு - விரிந்த வெண்மையான இதழ்.
30. கோதை மாதவி - மாலைபோன்ற குருக்கத்திக் கொடி.
31. பொதும்பர் - மரங்களின் செறிவு.
32. தாது - தேன்.
33. புகல் ஏக்கற்று - புகுவதற்காக ஏக்கமுற்று.
34. செல்வி - சமயம்; காலம்.
35. தாமம் - மாலை: ஈண்டு மணிமாலை.
36. மணவாய்த் தென்றல் - மணத்தைத் தன்னிடத்தேயுடைய தென்றல்.

37. கோதை - மாலையையுடையாய்.
38. பிறிது அணி அணியப் பெற்றதை - வேறே சில அணிகளை அணிந்ததனால் பெற்ற பயன்.
39. பல் இருங் கூந்தல் - பலவகைத்தாகிய கூந்தல்.
40. எல் அவிழ் மாலை - ஒளி விளங்க மலர்ந்த பூமாலை.
41. என் உற்றனர் - என்ன உறவு உடையவர்கள்.
42. நானம் - எண்ணெய் (வாசனை யெண்ணெயுமாம்).
43. மான்மதம் - கஸ்தூரி
44. திங்கள் முத்து அரும்ப - சந்திரன் போன்ற முகத்தில் முத்துப் போல வியர்வை துளிக்க.
45. காசு அறு விரையே - குற்றமற்ற வாசனைப்பொருளை யொப்பாய்.

46. அலை - கடல்.
47. தாழ் இருங் கூந்தல் - நீண்டு தாழ்ந்த கரிய தலைமயிர்.

    1.  இந்திரன் சபையில் ஒருகால் இந்திரன் மகன் சயந்தன் என்பவன் அங்கே வந்து நடித்த உருப்பசியின்மேல் காமுற்றான்; அதனை அறிந்த அகத்தியன் அவ்விருவரை யும் நோக்கி, “நீங்கள் இருவரும் மண்ணுலகம் அடைந்து, உங்களில் சயந்தன் விந்தியமலையில் மூங்கிலாகவும், உருப்பசி நாடகக் கணிகையாகவும் பிறப்பீர்களாக” எனச் சபித்தான், சயந்தன் பணிந்து, “சாபவிடை எப்போது?” என்று கேட்டனன். அவற்கு முனிவன், “நீ மூங்கிலாய், நாடகமகளிர் முதலரங்கேறும்போது, அரங்கத்தில் முன்னதாக நிறுத்தி வழிபடப்படும் தலைக்கோலாக இருந்து சாபம் நீங்குவாய்” என்றான். இது வரலாறு.
    2.  

48. மண்ணிய - நீராட்டிய.

49. பொலம் பூண் - பொன்னால் செய்த. ஒடை - பட்டம்.
50. அரசு உவா - பட்டத்து யானை.
51. பல் இயம் - பல வாத்தியங்கள்.
52. ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், ஒற்றர், தூதுவர்.
53. கவி கைக் கொடுப்ப - தேர்மேல் நின்ற பாடலாசிரியன் கையில் கொடுக்க.
54. ஏகம், சாப்பு என்ற இருவரைத் தாளத்திற் பாடப்படும் பாட்டுகள் வாரம் என்பர்.
55. தோரிய மடந்தை - வயது முதிர்ந்த ஆடல் மகள்.

56. தண்ணுமை - மத்தளம்.
57. ஆமந்திரிகை - இடக்கை என்னும் இசைக்கருவி.
58. பொன் …. வகுத்தென: பொன்னால் செய்ததொரு பூங்கொடி கூத்து நடித்தது போல.

59. இலைப்பூங்கோதை - பசும்பொன்மாலை; இது அரசனுடைய மாலை. இதனோடு தலைக்கோல் எய்தித் தலையரங்கேறினாள் என்க.

60. இயல்பினின் வழாஅமை - கூத்து, பாட்டு, அழகு என்ற இவற்றிற்கு ஏற்ற முறைமையில் ஒன்றும் வழுவாமல்.

61. விதிமுறைக் கொள்கை - நாடகக் கணிகையர்க்குத் தலைவரிசை ஆயிரத் தெண்கழஞ்சு பொன் என்னும் விதிமுறை.
    “முட்டில் பாணரும் ஆடியல் மகளிரும், எட்டொடு புணர்ந்த
    ஆயிரம் பொன்பெறும்” என்பது அந்த விதி.
62. ஒரு முறையாகப் பெற்றனள்: ஒரு நாளைக்குப் பரிசம் இது என்று அரசனால் பெற்றாள்.
63. மாலை - அரசன் தந்த இலைப்பூங்கோதை.
64. மான் அமர்நோக்கி ஓர் கூனி - மான் போன்ற கண்களையுடைய ஒரு கூனி; ஏவல் மகளுமாம்.
65. நகரநம்பியர் : நகரத்துச் செல்வ இளைஞர்.
66. மறுகு - தெரு.
67. பகர்வனர் - விலைக்கு விற்பவர்.
68. அணைவுறு வைகலின் - சேர்ந்த அந்த ஒரு நாளிலேயே.
69. விடுதல் அறியா - நீங்க முடியாத.
70. ஒரு தனித் திகிரி - ஒப்பற்ற தேரினுடைய ஒற்றைச் சக்கரம். உரவோன் - சூரியன்.

    3.  செம்மலர்க் கண்கள் - செவ்விய மலர்களாகிய கண்; பசந்து - பொன்நிறம் கொண்டு.
    4.  

71. முழுநீர் - துளிக்கின்றநீர். முழுமெயும் பனித்து - மெய் முழுதும் பனிகொண்டு. (பனிமூடி என்றுமாம்).
72. திரைநீர் ஆடை - கடலை ஆடையாகவுடைய.

73. அரைசு - அரசனாகிய சூரியன்.
74. அல்லற்காலை - துன்பக்காலம்.
75. மயங்கு இருள் - மாலையில் படரும் மெல்லிய இருள்.
76. கறை - கடமை (வரி).

77. அறைபோகு குடிகள் - அரசனுக்கு விரோதமான மனப்பான்மை கொள்ளும்படி கொடுக்கப்பட்ட வீரர்கள்.

78. வலம் - வெற்றி.

79. புலம்பட இறுத்த - அவர் நிலத்தே வந்து விட்ட.
80. விருந்தின் மன்னர் - புதிய வேந்தர்.
81. தாழ்துணை - தங்கள் மனதில் தங்கின காதலர் (கணவர்).
82. தனித்துயர் - பிரிவுத் துன்பம்.

83. கோவலர் குழல் வளர் முல்லையில் வாய் வைத்து ஊத - இடையர் ஊது குழலில் முல்லைப்பண் உண்டாகத் தம் வாயை வைத்து ஊத; தும்பி கோவலர் குழல் வளர் முல்லையில் வாய் வைத்து ஊத - வண்டுகள் இடையர் தலையில் சூடிய முல்லைப் பூவில் மொய்த்து ஊத.

84. மழலைத் தும்பி - எழுத்து விளங்காத ஓசையைச் செய்யும் தும்பி.
85. அறுகாற் குறும்பு - ஆறுகால்களையுடைய வண்டு. தென்றலால் தளிர்த்துப் பூத்த பூக்களின் தேனை வண்டு புகுந்து உண்பதால், அந்த வண்டு “குறும்பு” எனப்பட்டது. குறும்பு செய்தல் - பிறர்க்குரியதைத் தான் அக்கிரமமாகப் புகுந்து கவர்ந்து கொள்ளுதல்.

86. சிறுகாற் செல்வன் - தென்றற் காற்று.
87. எல்வளை - விளங்குகின்ற வளையல்.
88. மல்லல் - வளம்.
89. செழும் பூஞ் சேக்கை - செழித்த பூக்கள் பரப்பிய படுக்கை.
90. மலிந்து - மகிழ்ந்து.
91. ஆவியங் கொழுநர் - உயிர் போன்ற கணவன்மார். அகலம் - மார்பு.
92. காவி - நீலோற்பலம்.
93. அல்குல் - அரை.
94. கொடுங்குழை - வளைந்த காதணி.
95. வடிந்து வீழ் காதினள் என்றது அணியாத போதும் அழகு விளங்குவதைக் காட்டுகிறது. வடிதல் - அழகு வடிதல்.

96. செங்கயல் - செவ்விய கயல்மீன்.
97. பவளத் திலகம் - சிவந்த பொட்டு.
98. மையிருங் கூந்தல் - மிகக் கரிய கூந்தல்.
99. ஊதுலைக் குருகு - கருமான் உலைக்களத்துக்காற்றெழுப்பும் துருத்தி.
100. குறுங்கண் - சிறு துவாரம்.

101. அன்னமாகிய மென்னடையையும், ஆம்பல் நாறும் நறுவிரையையும் தாமரை யாகிய செவ்வாயையும் அறலாகிய கூந்தலையுமுடைய பொய்கையாகிய பெண்.

102. தண் அறல் - குளிர்ந்த கருமணல்.
103. நோதிறம் - ஒருவகைப் பாலைப்பண்; இதனைப் புறநீர்மை என்றும் கூறுவர்.
104. காண்வரு - விழிப்ப: அழகிய, குவளையாகிய கள்ளையுடைய மலர் மலர; குவளைப் பூவாகிய கண்கள் விழிக்க என்று இருபொருள் கொள்க.

105. பொறி மயிர் வாரணம் - வரி பொருந்திய சிறகுளையுடைய சேவற் கோழி.
106. முள்வாய் - கூர்மையாகக் குவிந்த.

107. உரவு நீர்ப் பரப்பின் - பரந்த கடல் போன்ற.
108. அலைநீர் - கடல்
109. கண் அகல் பரப்பின் - இடம் விரிந்த நிலமாகிய.

110. அலை நீரை ஆடையாகவும், மலையை முலையாகவும், யாற்றை ஆரமாகவும், மாரியைக் கூந்தலாகவுமுடைய மண்ணக மடந்தை.

111. புதை இருள்படாம் - புதைந்த இருளாகிய போர்வை.
112. உதைய மால் வரை - உதய கிரி.
113. அவிர் ஒளி - விளங்குகின்ற ஒளியையுடைய சூரியன்.
114. வேயாமாடம் - கூரையின்றித் தட்டோடிட்டுச் சாந்து பூசிய பெருவீடு.
115. வியன்கல இருக்கை - அகன்ற பண்டசாலை.
116. பெரும்பாண் இருக்கை - பெரும் பாணர்கள் வசிக்குமிடம்.
117. சிறு குறுங்கை வினையாளர் - சிறு சிறு கைத்தொழில்களைச் செய்பவர்.
118. பெரும்பாய் இருக்கை - பெரிய பரந்த இருப்பிடம்.
119. விழுமியோர் - உயர்ந்தோர்.

120. ஐவகை மன்றம் - வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங் கால் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம்.

121. வச்சிரக் கோட்டம் - வச்சிராயுதம் நிறுத்தப்பட்ட கோயில்.
122. கச்சை - யானையின் கீழ் வயிற்றிற் கட்டிய கச்சை.

123. வால் வெண்களிற்றரசு - ஐராவதம்.
124. கால்கோள் - தொடக்கம்.
125. கடைநிலை - முடிவு.
126. தருநிலைக் கோட்டம் - கற்பகமரம் நிற்கும் கோயில்.
127. எண்பேராயம் - கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், நளி படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர்.

128. பரத குமரர் - வணிக குமரர்.
129. மேம்படீஇய - மேம்படுவது குறித்து.
130. அகல்நிலை மருங்கின் - மிகப்பெரிய நிலவுலகின் கண்ணே.
131. உரை - புகழ்.
132. கொற்றம் - வெற்றி.
133. அரசு தலைக்கொண்ட - அரசர் தலையில் சுமப்பித்துக்கொண்ட.
134. மண்ணகம் மருள - மண்ணுலகம் விண்ணுலகமாய் மாறுபட.
135. பிறவா யாக்கைப் பெரியோன் - சிவன்.
136. வாய்வளை மேனி வாலியோன் - வெள்ளிய சங்கு போன்ற வெள்ளை மேனி யனாகிய பலராமன்.
137. மாலை வெண்குடை மன்னவன் - இந்திரன், மாலை - முத்துமாலை.

-   திறவோர் உரைக்கும் செயல் - புராணம் படித்தல் என்பர் அடியார்க்கு நல்லார்.

1.  சிறைவீடு - சிறை விடுதலை.
2.  கண்ணுளர் - கூத்தர்; மதங்கர் என்றும் கூறப்படுவர்.
3.  குயிலுவர் - தோற் கருவி வாசிப்பவர்.
4.  வியலுள் - அகன்ற தெரு.
5.  மாதர் - காதல், அழகுமாம்.
6.  எரிநிறத்து இலவம் - நெருப்புப் போன்ற நிறத்தையுடைய இலவம் பூ.
7.  குமிழ் - குமிழம்பூ.

8.  உள்வரிக் கோலம் - வேற்றுருக் கொண்டு நடிப்பது.
9.  கள்ளக் கமலம் - கள்ளையுடைய அந்தத் தாமரைப் பூ. மன்னனுக்குப் பெருவளம் காட்டவேண்டித் திருமகள் இச் செழும்பதி புகுந்தாளாம் என இலவமும் முல்லையு மே அன்றிக் குவளையும் குமிழமும் பூத்துக் கமலம், தன் துணைதேடி, உள்வரிக் கோலத்துடன் திரிவதாயிற்றோ என்க.

10. பகுவாய் - திறந்த வாய்.

11. அருந்தொழில் - தடுத்தற் கரிய உயிர் கொள்ளும் தொழில்.

12. நாணுடைக் கோலத்து நகைமுகம் கோட்டி - உண்மையுருவை விட்டு வேற்றுருக் கொள்ளுமிடத்துப் பெண்ணுருவும் அதற்கேற்ப நாணுடைமையும் கொள்ளுதல் அரிதாதலால் அதனை முதலில் கொண்டு, அதன் பின் சிரித்த முகம் மேற்கொண்டு.

13. திவவு யாழ் - செங்கோட்டு யாழ்; யாழிசைபோலப் பேசி என்க. கூற்றம், மறுத்தல் அஞ்சி, தொழில் திரியாது, முகம் கோட்டி, யாழ் மிழற்றி, பெண்ணுருவில் திரியும் பெற்றியும் உண்டாயிற்றோ என்க. பெற்றி - தன்மை.

14. உடனுறைவு - உடன் இருப்பது.
15. மாதர் - காதல்
16. மணித் தோட்டுக் குவளைப் போது - நீலமணி போன்ற இதழை யுடைய குவளைப் பூ.
17. புறங்கொடுத்து - நிகராகமாட்டாமல் தோற்று.

18. செங்கடை - கடைக்கண் சிவந்து தோன்றல்; (மகளிர் கோபித்துக் கண் சிவந்து காட்டும் பார்வை என்பதாம்.)

19. விருந்தின் - விருந்தினால்; நிலவரைப்பு - நிலவுலகம்.
20. உள்ளகம் - உள்ளே யிருக்கின்ற. மீது அழிந்து - மேலே மிகுந்து வழிந்து.
21. கருங்கண் - காதலனோடு கூடாமையால் கரிதாகிய கண்.
22. செங்கண் - காதலனோடு கூடினதால் சிவந்த கண்.
23. செழும்பதி - காவிரிப்பூம் பட்டினம்.

24. நாரதன் - யாழ் வல்லவனாகிய நாரத முனிவன். ஊர்வசி மாதவியாகப் பிறப்பதற்கு உண்டான சாபம் இவன் கலகத்தினால்தான் ஆயிற்று. நயம் தெரி பாடல் - ஏழிசையின்பமும் இனிது தெரியப் பாடுதல்.

25. மங்கை மாதவி - மங்கையாகிய ஊர்வசி. அரவு அல்குல் - மாதவி.
26. தேவபாணி - ஒன்பது வகை இசைப்பாட்டுகளில் ஒன்று. இது பெருந்தேவபாணி, சிறுதேவபாணி எனவரும்; இவ்விரண்டும் பலதேவன் முதல் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகை வருணத்தாரையும் பாடிப் பரவுதல். இங்கே முதலில் பாடியது திருமாலைப் பாடிய தேவபாணி; இது கடவுள் வாழ்த்துப் போல்வது.

27. கொடுகொட்டி: திரிபுரம் எரித்த வெற்றி மகிழ்ச்சியால் சிவன் உமாதேவியை ஒரு பங்கிலே கொண்டு ஆடியது.

28. பாண்டரங்கமும் - வேதக் குதிரை பூண்ட தேரில் தேரோட்டிய பிரமன் எதிரே வாணியின் உருக்கொண்டு சிவன் ஆடிய கூத்து.

29. அல்லியக் கூத்து - கஞ்சன் விடுத்த யானையின் கொம்பை முறிப்பதற்காகக் கண்ணன் ஆடிய கூத்து.

30. மல்லின் ஆடல்: வாணனை வெல்வதற்காகக் கண்ணன் அவனோடு ஆடிய மற்கூத்து.

31. துடி - சூரனைக் கடலின் நடுவே புகுந்து வென்ற முருகன் ஆடிய துடிகொட்டி என்னும் கூத்து.
32. பையுள் - துன்பம்.
33. குடை - சூரனுடைய அசுர வீரர்கள் தோற்றுத் தம் படைகளைக் கைவிட்ட போது முருகன் குடையை முன்னே சாய்த்துக்கொண்டு ஆடிய கூத்து.
34. குடம் - கண்ணன் வாணனுடைய சோ என்னும் அரண் சூழ்ந்த வீதியில் குடம் கொண்டு ஆடியது.
35. காமன், சிறைபட்டிருந்த மகன் அநிருத்தன் சிறை மீட்கப் பெற்ற போது. பேடியுருவுடன் ஆடியது.
36. மாயவள் - துர்க்கை

37. மரக்காலாடல் - அவுணர்கள் வஞ்சனையால் பாம்பும் தேளுமாய் உருக்கொண்டு வந்த போது துர்க்கை மரக்கால் கொண்டு ஆடிய கூத்து. மரக்கால் - மரத்தால் ஆகிய கால்.

38. பாவைக் கூத்து - அவுணர் தம் போர்க் கோலத்துடன் மோகித்து விழும்படி திருமகள் கொல்லிப்பாவை வடிவத்துடன் ஆடியது.

39. அயிராணி - இந்திரன் மனைவி.

40. கடையம் - வாணன் நகரத்து வடக்கு வாயிலில் உள்ள வயலில் நின்றுகொண்டு அயிராணி ஆடிய கூத்து. உழவர் மகளிராகிய கடைசியர் ஆடும் கூத்தாதலால் இது கடையம் எனப்படுகிறது.

41. உருப்பசி அகத்தியனால் சபிக்கப் பெற்று மண்ணுலகு வந்து மாதவியாகப் பிறந்தாள். மாதவி - ஊர்வசி.

42. குறங்கு செறி - துடையில் அணியும் ஒருவகை அணி.
43. தோள் வளை - வாகுவலயம்.
44. உவா - பூர்ணிமை.
45. பெருநீர் - கடல்.
46. இரியல் மாக்கள் - விரைந்து செல்லும் மக்கள்.
47. புள்வாய் புலம்ப - அன்னப் பறவை தங்கிய இடமாகிய பூ தனிப் பட.
48. வெள்ளி - சுக்கிரன். தாரணி மார்பன் - கோவலன்.

49. மாலைச் சேரி - ஒழுங்குபட்ட சேரி. (சேர இருக்குமிடம் சேரி)
50. பண்ணியப் பகுதி - பண்ணிகாரம்.
51. காழியர் - பிட்டு வாணிகர். மோதகம் - பிட்டு.
52. கூவியர் - அப்பம் விற்பவர் . காரகல் குடக்கால் விளக்கு - கரிய அகல் வைத்த குடவிளக்கு.
53. நொடை - பல பண்டங்களின் விலை.
54. இலங்கு நீர் - விளங்குகின்ற கடல்.
55. கலங்கரை விளக்கம் - கப்பல்களைக் கரைக்கழைக்கும் தூண் விளக்கு.
56. மீன் திமில் - மீன் பிடிக்கும் படகு.
57. மொழிபெயர் தேஎத்தோர் - வேறுவேறு வேற்றுமொழி பேசுபவர்,
58. கழிபெரும் பண்டம் - மிக்க பெரிய பண்டங்கள்.
59. கடிப் பகை காணும் காட்சி - கடுகு வீழ்ந்தால் சிறுவருத்தமும் இன்றி எடுக்கக் கூடிய அவ்வளவு வெளிச்சம் அமைந்த காட்சி.
60. ஓவிய எழினி - சித்திரமெழுதிய திரை; சித்திரத் திரை.
61. வெண்கால் அமளி - யானைக் கோட்டினால் கடைந்து செய்த வெண்மையான கால்களை யுடைய கட்டில்.

62. வருந்துபு நின்ற - மக்கட் கூட்டத்தின் இடையே நெருங்கி விரைய வந்ததனால் வருந்தி நின்ற,

63. கொள்கையின் இருந்தனள் - மனங் கொள்ளுவதால் சேரக் கூடியிருந்தாள்.
64. திங்கள் மாலை - திங்களின் தன்மையுடைய (மங்க. 1. காண்க).
65. ஓச்சி - செலுத்தி
66. புணர்ந்தாலும் - அரசாட்சியைப் பரப்பினாலும்; கலந்தாலும்.
67. புலவாய் - வற்றுவதில்லை; பிணங்குவதும் செய்யாய்.
68. கயற்கண்ணாய் - கயல் மீனாகிய கண்ணையுடையாய், கயல் போன்ற கண்ணை யுடையாய்.
69. தண்பதங் கொள் விழவர் - புதுப்புனல் ஆடுபவர்.

70. வாய் காவா மழவர் - நான் நான் எனத் தலைவனை நெருங்குகின்ற வீரர். போரில் தமக்குள்ள விருப்ப மிகுதி தோன்றத் தருக்கிக் கூறுவதால் “வாய்காவா மழவர்” என்றார்.

71. கரியமலர் நெடுங்கண் காரிகை - கருமையான குவளை போன்ற நீண்ட கண்ணையும் அழகையும் உடையவள்.

72. காட்டிக் காட்டிப் பல முறையும் செய்த, பொய்யாக்கக் கூடாத சூள் (சபதம்: ஆணை)

73. எதிரிலே நிற்கும் அவனைப் பிறன்போலக் கூறுகின்றாள்; அதனால் “பொய்த் தார்; அறன் இலர்” என்று சொல்லுகிறாள்.

74. ஆம்பல் வளையையும் முத்துக்களையும் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்று கொண்டு அரும்பு மலரும்; வளை - சங்கு. கணம் - கூட்டம்.
75. முரல்வாய்ச் சங்கம் - முழங்குகின்ற வாயையுடைய சங்கு.

76. வண்டல் - கடற்கரை மணலில் மகளிர் வைத்தாடும் பாவை விளையாட்டு.

77. மாழ்கி - மயங்கி.
78. பரிந்து - அறுத்து, கோதையைக் கொண்டு ஓச்சும் (ஓட்டும்)
79. குவளைமாலைப்போது சிறங்கணிப்ப - குவளை மாலையிலுள்ள பூக்கள் சிதறிக் கடைக்கணித்துப் பார்ப்பது போலக் கிடக்க. “சிறக்கணித் தாள்போல நகும்”

80. போவார்கண் போகார் புகார் - போகின்றவர் அவைகளைக் கண் என்று கருதிப் போகாது நிற்கும் புகார்.

81. மாய்வான் - மறைப்பதற்காக
82. பொறை மலி புன்னை - தழையும், அரும்பும், பூவும் நிரம்பி நிற்கும் புன்னை.

83. மலி உறை உய்யா நோய் - தாங்க முடியாதபடி மிகுவதால் வேறு மருந்துகளால் போக்க முடியாத நோய்.

84. ஊர் சுணங்கு - பரந்த தேமல், வலம்புரி மணலில் தோய்ந்து செய்த தோற்றம் மறையும்படியாகப் புன்னை நுண் தாது போர்க்கும்; அதுபோல, கயற்கண் செய்த நோயை முலையே தீர்க்கும், போலும், அசை.
85. வலை வாழ்நர் - செம்படவர், உணங்கும் - புலரவிட்டிருக்கும்.

-   காமன் செயல் எழுதி - பிறரை வருத்தக் கூடிய காமச் செயல்களை எழுதி.

1.  தீர்ந்த முகம் - அழகு முழுதும் பொருந்த அமைத்துவிட்ட முகம்.
2.  திமில் - படகு.
3.  அரவு - இராகு.
4.  அலவ - மனம் வருந்த.
5.  அணங்கு - தெய்வம்.
6.  அடும்பு - ஒருவகைக் கொடி.
7.  பிணங்கு நேர் ஐம்பால் - செறிந்து நீண்ட கூந்தல். பெண் - பெண் வடிவு.
8.  பணை - பருத்த, வனமுலை - அழகிய முலை,
9.  தளை - முறுக்கு, (அரும்பு).
10. முளை நகை - முளைபோலும் பல்.
11. உயிர் - மீன்வகை.
12. ஐயர் - தந்தை, உடன்பிறந்தோர் முதலியோர்.
13. மிடல் - வலிமை.
14. இடர்புக்கு இடுகும் இடை இழவல் - இடரிலே கிடந்து சிறுகுகின்ற இடை யினை இழந்து விடாதே.
15. கோடும் - வளைந்த.
16. பிறர் எவ்வம் பார்த்தல் பீடு - பிறர்க்கு உண்டாகும் துன்பத்தைப் பார்த்து இரங்கு வது உனக்குப் பெருமை; நீ அதனைப் பார்ப்பாயாக.
17. மருங்கு - இடை.
18. பவள உலக்கை - பவளத் துண்டத்தை உலக்கையாக.
19. தவள முத்தம் - வெண்மையான முத்து. குறுவாள் - குற்றுகிறவள்.
20. புள் வாய் உணங்கல் - உணங்கல் வாய் புள்; உலருகின்ற மீன்களைக் கவரி வரும் பறவைகளை. கடிவாள் - ஓப்புபவள்.

21. வெள்வேல் - வெண்மையான வேல்.
22. ஊர் திரை - பரந்து வருகின்ற அலை. உழக்கி - அலைத்து.
23. கலம் - யாழ்
24. கண்டம் - மிடறு (அடித்தொண்டை).
25. மருங்கு - பக்கம், வண்டு - வண்டுகள், வளையல். ஒல்கி - ஒதுங்கி.
26. திருந்து செங்கோல் - நேர்மையால் அழகிய செங்கோல்.
27. ஆழியாள்வான் - ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர் செலுத்தும் சூரியன். பகல் வெய்யோன் - பகற்பொழுது செய்பவன்; நீதியையே விரும்புபவன்.
28. தீங்கதிர் - இனிய கதிர். மணி முறுவல் - நல்ல நகை.
29. மால் மகன் - மயங்கின மகன்; காமன் என்றுமாம்.
30. வீங்கு ஓதம் - பெரிய கடல். ஓதம் முத்தைத் தந்து கோதை கொண்டு மீளும் புகார் என்க.
31. விரை - மணம்.
32. விலைஞர் - விலை கொடுத்து ஒன்றை வாங்குபவர்.
33. வெல்நறா - மயங்கச் செய்யும் கள்.
34. ஊண் ஒளியா - உண்ட வூனை மறையாத.
35. உறை - உறுத்தல்.
36. தண்டா நோய் - நீங்காத நோய்.
37. வண்டால் - வண்டற்பாவை; விகாரம்.
38. வேல் - வேல் போன்ற கண்.
39. புணர் துணை - கூடுகின்ற பெண் நண்டு.
40. ஆடும் பொறி அலவன் - விளையாடும் பொறிகளையுடைய நண்டு.
41. இணர் ததையும் - பூங்கொத்துக்கள் நெருங்குகின்ற.
42. வணர் சுரி ஐம்பால் - கடைகுழன்று சுரிந்த கூந்தல்.
43. வண்ணம் - மனக் கருத்து.
44. புன்கண் - துன்பம்.
45. உழவாய் - வருந்துவது இல்லாய்,
46. இன் கள் வாய் நெய்தால் - இனிய தேனையுடைய நெய்தற் பூவே,
47. வன்கணார் - அன்பில்லாமையையுடைய காதலர்.
48. புள் இயல் மான் - பறவைபோல் விரைந்து செல்லும் இயல்பையுடைய குதிரை.
49. தெள்ளு நீர் - தெளிந்த நீர்.
50. உள்ளாரோடு உள்ளாய் - நினையாத காதலரோடு சேர்ந்து கொண்டு என் நோயை அறியாதிருக்கின்றாய்.

51. நேமி - சக்கரம்.

52. தீர்ந்தாய்போல் தீர்ந்திலை - உறவுபோல் இருந்து உறவாய் இல்லை; காரியத்தில் வேறுபடுகின்றாய்.
53. நித்திலம் - முத்து.
54. பழனம் - பொய்கை யருகுள்ள கழனி.
55. பொதும்பர் - சோலை.
56. மகரத் திண் கொடியோன் - மகரமீன் எழுதிய வலிய கொடியை யுடைய மன்மதன்.
57. புலவுற்று இரங்கியது - புலால் நாற்றம் உற்று வருந்தியது.
58. பொழில் தண்டலையில் - சோலையில்.
59. செம்மல் - பழைய பூக்கள்.
60. பல துன்பங்களை உற்றதனால் நினைந்து பெற்ற வருத்தம்.
61. அலவுற்று - துயரமுற்று.
    10.இளை இருள் - மெல்லிய இருள்.
62. எல் - பகற் காலம்.
63. களைவரும் - நீக்குதற்கு அரிய. புலம்பு - வருத்தம்.
64. தணந்தார் - பிரிந்தவர்.
65. நிறை நிலா நோய் - நிறுத்தினால் நிறுத்தியவழி நில்லாது பெருகுகின்ற நோய். கூர - உண்டாக.
66. துறுமலர் - செறிந்த பூ.
67. மறவையாய் - மறம் உடையதாய்.
68. கைதை - தாழம்பூ. (தாழம்புதர்).
69. பொய்தல் - மகளிராடும் விளையாட்டு. அழித்து - கைவிடும்படி செய்து.
70. மையல் - மயக்கம்.
71. நென்னல் - நேற்று.
72. பொன் நேர் சுணங்கு - பொன்போன்ற தேமல். இன் - போல.
73. குருகு - நீர்ப்பறவை.
74. உறுநோய் - யான் உற்ற வருத்தத்தை.
75. நுளையர் - செம்படவர். விளரி - அழுகிறவர் பாடும் பண்.
76. நொடிதரும் - பாடும்.
77. இளி கிளையில் கொள்ள - மயக்கத்தால் யாழ் வாசிப்பவர் விரல் சென்று பகை நரம்பில் தடவ.
78. கொளை வல்லாய் - கொள்ளல் வல்லாய்!
79. பையுள் நோய் - வருத்தம் மிக்க நோய்.
80. வையம் - நிலத்தில் வாழ்பவர்.
81. ஞாலம் நல்கூர்ந்தது - உலகு வறுமை உற்றது; அஃதாவது. தனக்குண்டானது போல எல்லார்க்கும் வருத்த முண்டாகியதாக நினைத்து “ஞாலமோ நல்கூர்ந்தது” என்கின்றாள்.
82. தீத்துழைஇ - நெருப்பைத் துழவிக்கொண்டு
83. செல்லல் - வருத்தம்.
84. தூக்காது - நம்மை வருத்துமென்று கருதாமல்.
85. துயரெஞ்சு கிளவி - நல்ல வார்த்தை.
86. மாயப் பொய் - வியக்கத் தகுந்த பொய்.
87. கவவுக்கை - இறுகத் தழுவிய கை.
88. ஒதை ஆய்த்து - ஓசையாகியது.
89. நெடியோன் - திருமால். குன்றம் - வேங்கடம்.
90. தொடியோள் - கன்னியாகுமரி.
91. உறந்தை - உறையூர்.
92. கலி - ஆரவாரம்.
93. மாரன் - காமன்.
94. இளங்கால் தூதன் - தென்றற் காற்று ஆகிய தூதுவன்.
95. மகரவெல் கொடிமைந்தன் - காமன். அவனது சேனை - மகளிர் கூட்டம். புகர் - குற்றம்.
96. குயிலோன் - குயில்.
97. படையுள் படுவோன் - படையில் சிறியவனாய், கானம் ஊதுபவன்.
98. பணிமொழி - கட்டளை; பணித்த சொல்.
99. வேனிற் பள்ளி - வேனிற்காலத்தே கொள்ளுகின்ற படுக்கையறை.
100. வளாகம் - இடம்.
101. கையுறை - காணிக்கை.
102. அதிராமரபு - தன் ஓசையில் அபசுரம் படுவதில்லாத.
103. பித்திகை - பிச்சியென்னும் பூ.
104. அந்திப் போதகம் - அந்திமாலையாகிய யானை.
105. அரும்பிடர் - ஏறுதற்கரிய கழுத்தின்மேல்.
106. செவ்வியனல்லன் - நேர்மையின்றி உடலாலும் கோணியிருப்பவன்; அதனால் இன்பம் செய்யான்.
107. தணந்த மாக்கள் - பிரிந்தவர்கள்.
108. வாளி - அம்பு.
109. வரிவகைகள் - நடிப்பு வகைகள்.
110. விளையா மழலை - முதிராத இளமை கனிந்த சொல்.
111. கொணர்க - அழைத்துக்கொண்டு வருக.
112. கண்கூடு வரி - பிறர் சொல்லாமலே தானே விரும்பி முன்நின்று நடிப்பது.
113. காண்வரிக் கோலம் - நகைத்துக்கொண்டே வாவென வருதலும் போஎனப் போதலும் ஆக நடிப்பது.
114. சிலதியர் - ஏவற் பெண்கள்.
115. உள்வரி யாடல் - சேடிப் பெண்களைப்போல உருக்கொண்டு நடித்து இன்பம் செய்தல்.
116. புன்புறவரி - காதல் மிகவுடையவள்போல அருகில் வந்து பின் புறத்தே சென்று நடிப்பது.
117. கிளர்வரி - தனக்கும் காதலனுக்கும் சேடியர் தூது சொல்ல நெருங்குவதும் போவதுமாக நடிப்பது.
118. தேர்ச்சிவரி - காதலன் பிரிந்தானாகக்கொண்டு, அவனது கிளைஞருக்குத் தன் துன்பத்தைச் சொல்லுவதுபோல நடித்தல்.
119. காட்சிவரி - தன்னைப் பார்ப்பவர் அனைவருக்கும் தன் துன்பங்கள் தெரியக் காண நடித்தல்.
120. எடுத்துக் கோள்வரி - தான் காமத்தால் துன்புற்று மயங்கி வீழ்ந்ததாகவும், பியர் எடுத்துத் தேற்றியதாகவும் நடித்தல்.
121. பாடு பெற்றன - பெருமை பெற்றன.
122. கடுக்கும் - ஐயப்படுகிறது.
123. பிடித்தனன் - என் கணவன் என் கையைப் பற்றிக்கொண்டு போக.
124. இடுதேள் இட்டு - தேள் கொட்டப்படுபவர் தெரியாவகை, தேளல்லாத ஒன்றை மறைத்துக்கொண்டு வந்து அவர் மேலே போட்டுப் பய முறுத்துதல்.
125. உரையாடேன் - இழிவான கனாக் கண்டால் பிறர்க்குச் சொல்லலாகாது என்ற கொள்கையால் சொல்லிற்றிலேன்.
126. தீக்குற்றம் - கடிதான குற்றம் (முலை திருகி யெறிதல்). உற்றேன் - செய்தேன்.
127. உறுவன் - மிக்கவனாகிய கோவலன்.
128. நற்றிறம் - இருவரும் சுவர்க்கம் புகுந்தது.
129. கைத்தாயும் அல்லை - நின் கணவனால் நீ வெறுக்கப்படவில்லை.
130. போய்க் கெடுக - உன்னைப் பற்றிய தீங்குகள் எல்லாம் அழிக.
131. முன்றில் - முன்னேயுள்ள இடம்.
132. தடம் - தடாகம்.
133. போகம் செய்பூமி - போகபூமி.
134. சலம் - பொய்.
135. சலதி - பொய் பேசுபவள்; பொய்யொழுக்க முடையவள்.
136. வான் பொருள் - மிகுந்த செல்வம்.
137. இலம்பாடு - இல்லாமை (வறுமை).
138. உலந்த - கெட்ட.
139. ஈட்டுதலுற்றேன் - தேடிச் சேர்க்கத் துணிந்தேன்.
140. மூதை - பழைய.
141. வியம் கொண்டான் - வினையின் ஏவலை மேற்கொண்டான்.
142. சுடர் கங்குல் கால்சீயாமுன் - சுடர் இருளை அதன் இடத்தினின்று போக்காத முன்பே; விடியுமுன்பே என்றபடி.
143. வான்கண் - சூரியன்,
144. மீன் - நட்சத்திரம்.
145. கடைநாட்கங்குல் - கடையாமத்தில் இருள் நின்ற இரவு.
146. கடைஇ - செலுத்தி.
147. துரப்ப - முடுக்க.
148. உலக நோன்பிகள் - சிராவகர். (இல்லிருந்து வாழும் சைனர்).
149. கலையிலாளன் - உடலுருவில்லாத காமன்.
150. மன்னவன் - சோழன். காமன் சோழனுக்கு வேனிலையும், மாரு தத்தையும் திறையாக இறுக்கும்,
151. இலவந்திகை - வசந்தச் சோலை, எயில் - மதில்.
152. பெருமகன் - அருகதேவன்.
153. உறுகணாளர் - துன்பமுறும் பாவிகள்.
154. கடைகழிந்து - வீடுவாசலைவிட்டு.
155. மற உரை நீத்த மாசறு கேள்வியர் - பாவம் உண்டு பண்ணும் சொற்களைச் சொல்லுதல் குற்றமற்ற ஞானிகள்.
156. அறிவனை - அருகதேவனை.

157. ஒன்றிய உள்ளம் - போவதற்கு ஒருப்பட்ட கருத்து.
158. போதுவல் - வருவேன்.
159. தொடிவளைத் தோளி - தொடியும் வளையும் அணிந்த தோள்களை யுடைய இக் கண்ணகி.
160. வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் - வெயிலின் வெளிச்சத்தைக் கண்ணால் பார்க்கவும் பொறுக்காத மென்மையான தன்மையையுடைய கண்ணகி.
161. படர்குவம் - செல்வோம்.
162. பக வீழ்ந்த - வெடிப்புண்டாகக் கீழே உண்டாகிய.
163. தாது - சண்பகமரத்தின் பூந்தாது.
164. போற்றா மாக்கட்கு - தெரியாமல் நடந்து செல்லுபவருக்கு.
165. பூஞ் செம்மல் - உதிர்ந்து கிடந்த பழம் பூக்களில்.
166. பழம் பகை முட்டும் - பலாப்பழம் பகைபோல முட்டும்.
167. மயங்கு அரில் வலயம் - ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு கிடக்கும் பாத்தி.
168. பல் - பலாக்கொட்டை, பகை உறுக்கும் - பகையாய்க் காலை உறுத்தும்.
169. வயலுழை - வயல்களின் வழியாக.
170. பூ நாறு இலஞ்சி - பூக்களின் மணம் கமழும் குளம்.
171. நெடும் புற வாளை - நீண்ட முதுகையுடைய வாளை,
172. மலங்கு - ஒருவகை மீன்.
173. செறுவில் - வயலில்.
174. அறிவஞர் - அறிவு கலக்கம்.
175. நொண்டு - முகந்துகொண்டு.
176. குறுநர் - களை பறிப்பவர்.
177. பொறிமாண் அலவன் - புள்ளியால் மாட்சிமைப் பட்ட நண்டு.
178. ஊழடி யொதுக்கம் - முறையே அடிமேல் அடி வைத்து நடக்கும் நடை.
179. தாழ்தரு - தங்கும்.
180. அயல்பட - வேறாக.
181. நெறியிருங்குஞ்சி - நெறித்த கரிய தலைமயிர்.
182. மொழிப் பொருள் தெய்வம் - உபதேச மந்திரம்.
183. கருங்கை வினைஞர் - பள்ளர்; பறையர். களமர் - உழவர்.
184. கடைசியர் - உழவர் மகளிர்.
185. தொலைச்சிய - தொலைத்த. விருந்திற் பாணி - பழகாத பாட்டு.
186. பழிச்சினர் - போற்றி.
187. ஏர் மங்கலம் - ஏர் உழுவார் பாடும் பாட்டு.
188. பெருஞ்செய் - பெரிய வயல்.
189. முகவைப் பாட்டு - நீர் இறைப்பவர் பாட்டு. ஏற்றப் பாட்டு.
190. கிணைப் பொருநர் - தடாரி என்னும் வாத்தியத்தை இசைக்கும் பாடகர்.
191. மண்கனை முழவு - வாரால் இறுகக்கட்டி மார்ச்சனை அமைக்கப் பெற்ற முழா. மார்ச்சனை - தட்டினால் கும்கும் என்று ஓசை எழுப்புவது.
192. புரப்போர் - அரசர். கொற்றம் - வெற்றி.
193. சிந்தை விளக்கு - அவதி ஞானம்; திரிகால உணர்வு.
194. செற்றம் - பகை.
195. அகல - நீங்க.
196. விழுமம் - வருத்தம்.
197. இட்டவித்தின் - விளையக்கூடிய நிலத்தில் விதைத்த விதை போல.
198. கடுங்கால் நெடுவெளி - கடிய காற்று வீசும் வெளியிடத்தில் (மைதானத்தில்).
199. மூன்று - காமம், கோபம், மயக்கம்.
200. ஐவர் - இந்திரியம் (ஐம்புலன்கள்.)
201. கைவரை - கைமேலே.
202. பொருளில் - பயனில்லாத.
203. மலர்மிசை நடந்தோன் - தாமரைப் பூவின்மேல் நடந்தவனாகிய அருகதேவன்.
204. அணிப் பொறாது - அணிவதற்கு உடன்படாது.
205. மறு தர ஓதி - உருவேற ஓதி.
206. ஈங்கு - இவ்விடத்தே.
207. நோற்றுணல் - விரத நாட்களில் பட்டினிகிடந்து உண்பது. யாக்கை நொசி தவத்தீர் - உடல் மெலிந்த தவசியே.
208. ஆற்று வழிப்பட்டோர் - வழியில் கூடி வந்த இவர்.
209. பக்கம் நீங்குமின்; அவர் பக்கம் போகாமல் விலகிச் செல்லுங்கள்.
210. பரிபுலம்பினர் - மிகவும் வருந்தி இருக்கின்றனர்.
211. உடன் வயிற்றோர்கள் - ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்.
212. தீமொழி - இகழ்ந்த சொல்.
213. நெறியின் நீங்கியோர் - நல்லொழுக்கத்தில் தவறி நடப்பவர்கள்.
214. நீர் அல - தகாதவற்றை.
215. உய்திக் காலம் - சாபம் நீங்கும் காலம்.
216. நொச்சி - மதிற்புறம்.
217. சாபவிடை - சாப விடுதலை.
218. திங்கள் மூன்று அடுக்கிய திரு முக்குடை: மூன்று முழு மதியை ஒன்றன்கீழ் ஒன்று அடுக்கினால் ஒத்த சிறந்த மூன்று குடை: அவை, சந்திராதித்தம், நித்தியவினோ தம், சகலபாசனம் என்பன.

219. திகழ் ஒளி - விளங்கும் ஒளி.
220. கோதை தாழ் பிண்டி - கடவுள் தன்மையால் தொடுத்த மாலையாகவே பூத்துத் தொங்கும் அசோக மரம்.
221. ஆதியில் தோற்றம் - ஆதியும் அந்தமும் இல்லாத தோற்றம்.
222. அறிவன் - உறையூரில் கோயில் கொண்டிருக்கும் அருகன்.
223. தன் அளவு அடியில் உணர்த்தி - தன் பெருமையினது அளவைக் காலால் மிதித்து உணர்த்தி.
224. வான் பகை பொறாது - (கடல்) பழம்பகையைப் பொறுக்காது.
225. பஃறுளி யாறு - குமரிமலைக்குத் தெற்கில் அதன் அடியில் ஓடிய யாறு.
226. குமரிக்கோடு - குமரிமலை. இஃது இப்போதிருக்கும் குமரி முனைக்குத் தெற்கில் இருந்ததென்பர்.
227. கொடுங்கடல் - யாற்றையும், பலமலையடுக்கத்தையும் விழுங்க நின்ற கொடுங்கடல்; இது தென்பெருங்கடல்.
228. செங்கண் ஆயிரத்தோன் - மெய்யெங்கும் பல கண்களையுடைய இந்திரன். திறல் - வலி.
229. பூண்டோன் அணிந்துகொண்டவனாகிய பாண்டியன்.

230. மழை பிணித்து ஆண்ட மன்னவன் - மழை பெய்யாது ஒழிந்த முகிலினத்தைப் பற்றி நீங்காதவாறு விலங்கிட்டு மழை பெய்வித்துக் கொண்டவனாகிய பாண்டியன். (இச் செயல்கள் திருவிளையாடற் புராணத்து விரியக் காணப்படுகின்றன.)

231. பால் விரிந்து அகலாது - எல்லாப் பக்கமும் விரியப் படர்ந்து நீங்காமல்.
232. தலையுடை அருந்திறல் - தலைகளையுடைய கிட்டுதற்கு அரிய வலிமை கொண்ட ஆதிசேடன்.
233. வியன்பெரும் துருத்தி - அகன்ற பெரிய ஆற்றிடக்குறை.
234. இடைநிலைத் தானத்து - இடைப்பட்ட இடத்தே.
235. மின்னுக் கோடி - மின்னாகிய புதுவுடை.
    3.நல் நிற மேகம் - நல்ல கரிய நிறத்தையுடைய மேகம்.
236. பகை அணங்கு ஆழி - பகைவரை வருத்தும் ஆழிப் படை.
237. தகை - அழகு.
238. பொலம்பூ ஆடை - பூ வேலை செய்யப்பட்ட பொன்னாடை (பீதாம்பரம்.)
239. கண்மணி குளிர்ப்ப - கண்ணின் மணி குளிர, கண்குளிர.
240. கோத்தொழிலாளர் - அமைச்சர்.
241. கோடி - செங்கோல் முறை தவறி.
242. வேத்தியல் - அரச இயல்.
243. வேனலம் கிழவன் - வேனிற்காலமாகிய அமைச்சன், வெங்கதிராகிய வேந்தன்.
244. நலம் திருக - நவம் கெடுமாறு பண்ண.
245. உறுத்து - அடைவித்து, படிவம் - வடிவு.
246. காரிகை - அழகுடையவன்; ஈண்டுக் கண்ணகி மேற்று.
247. ஏற்றிழிவு - உயர்ச்சியும், தாழ்வும் சரிவுமாம்.
248. சூழ் அடுத்து ஓங்கிய - சுற்று முற்றும் சூழக்கொண்டு உயர்ந்த.
249. இடம் படக் கிடந்த - இடப்பக்கமாக இருந்த.
250. பெரு மால் - மிக்க மயக்கம்.
251. பிலம் - பாதல வழி.
252. வியத்தகு மரபு - வியக்கத்தக்க தன்மை.
253. பெயர் போகி - நாற்புறமும் பெயர் சிறந்துள்ள.
254. முட்டாச் சிறப்பு - இடையறாத சிறப்பு.
255. சிலம்பாறு - இஃது ஒர் யாற்றின் பெயர்.
256. செம்மையில் நிற்பது - அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடு.
257. வரைத்தாள் - மலையின் அடி.
258. உரைத்தார்க்கு உரியேன் - உரைத்தவர் யாவராயினும் அவர்கட்கு அடித் தொண்டு புரிவேன்.
259. திருத்தக்கீர் - திருவாளர்களே. திறப்பேன் கதவு என்ன வேண்டியவள், திறப்பதன் விரைவு தோன்றத் திறந்தேன் என்றாள், இது கால மயக்கம்.
260. இறுதி இல் இன்பம் - வீடுபேறு.
261. உறுகண் - வருத்தம்.
262. நெடுவழிப் புறத்து நும் நீக்குவன் எனும் - நீவிர் போக வேண்டிய வழியின் கண்ணே நும்மைச் செலுத்துவேன் என்று சொல்வாள்.
263. உள்ளம் பொருந்துவீராயின் - திருவடிகளை உள்ளத்தில் நினைப் பீராயின்.
264. புள் அணி நீள் கொடி புணர்நிலை - கருடப் புள்ளின் வடிவெழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும் நிலையிடம்.
265. தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் - திருவடிகள் உம்மைத் தாங்கிக்கொண்டு பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்.
266. மாண்பு உடை மரபு - மாட்சிமை பொருந்திய முறைகள்.
267. நலம் புரி கொள்கை - நல்ல ஒழுக்கத்தை விரும்பும் கோட்பாடு.
268. பெற்றி ஈங்கு இல்லை - தன்மை எமக்குக் கிடையாது.
269. வாய்மையின் வழாஅது - வாய்மை என்னும் அறத்தில் தவறாமல்.
270. காமுறு தெய்வம் - காண்பதற்காக விரும்பிய தெய்வமே.
271. நீள்நெறிப் படர்குதும் - நீண்ட வழியைச் செல்கின்றோம்.
272. மேலோர் - முனிவர்.
273. நூலோர் - கற்றோர்.
274. பால் வகை தெரிந்த பகுதியோர் - நூல்களைக் கல்லாது இயல்பாகவே நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் பகுத்தறிந்து ஒழுகும் மதி நுட்பமுடையவர்.
275. பிறக்கிட்டு ஒழியும் - புறக்கணித்து நீக்கும்.
276. வாழ்க்கை - பொய் யொழுக்கம்
277. போன்ம் - போலும். இஃது அசைநிலை.
278. வனசாரிணி - வனத்தில் திரியும் இயக்கி.
279. புனமயில் சாயல் - புனத்தல் வாழும் மயிலின் சாயலையுடைய கண்ணகி.
280. புண்ணிய முதல்வி - கவுந்தியடிகள், தவத்தினும், கற்பு சிறந்தது; அதனால், கண்ணகியை முற்கூறி, புண்ணிய முதல்வியைப் பின்னர்க் கூறினார். இருவர் பாலும் முறையே சாயமும் அறமும் இருப்பினும், “தவறு கண்டுழிக் கணத்தில் வெகுண்டு சவிப்பர் என்று அஞ்சி அவர்கட்கு உரையாதொழிக” என்று இயக்கி இரந்து கேட்டாள்.
281. ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - செல்லுதற்கு அருமை யாகிய வழிகளிலே செல்லுபவர் கையில் உள்ள பொருள் கவர்வது தவிர.
282. வில் ஏர் உழவர் - வில் கொண்டு செய்யும் தொழிலையே உழவுத் தொழிலாக வுடைய மறவர்.
283. கூற்று உறழ் முன்பு - யமனை ஒத்த வலிமை.
284. வேற்றுப்புலம் - பகைவரது போர் முனை.
285. வெற்றம் - வெற்றி.
286. கழி பேர் ஆண்மைக் கடன் - தன்னையே உயிர்ப்பலியாக இடும் பலிக்கடன்.
287. விழிநுதல்; நுதல் விழிக் குமரி - நெற்றிக்கண்ணை யுடைய குமரி.
288. வான நாடி - துறக்க நாட்டையுடையவளான கொற்றவை.
289. ஐயைக் கோட்டம் - கொற்றவையின் கோயில்.
    வேட்டுவ வரி என்பது, வேட்டுவர் கொற்றவை, வள்ளி நாயகி முதலியோர் வேடம் பூண்டு கூத்தாடிப் பல பாட்டுப் பாடிப் பலி கொடுத்துப் பரவுவதைக் கூறுவது. இவ்வாறு வேற்றுருவம் தாங்கி ஆடும் கூத்து உள்வரி எனப்படும், அதனால் இக் காதை வேட்டுவ வரி எனப்பட்டது. அடியார்க்கு நல்லாரும் “இது கூத்தாற் பெற்ற பெயர்” என்று கூறுவர். வேட்டுவ வரி என்பதில் வரியாவது கண்கூடு வரி முதலாகக் கூறப்படும் வரிக் கூத்தையும் குறிக்குமாயினும், ஈண்டு உள்வரிக் கூத்தே குறித்து நிற்கிறது. கானல்வரி என்ற விடத்து வரி என்பது இசைத்தமிழ் வகையிற் கூறப்படும் வரிப் பாட்டுக்களைக் குறித்து நிற்பது.

290. வழங்கு வில் தடக் கை - அம்பைச் செலுத்தும் வில்லேந்திய பெரிய கை.

291. மறக்குடித் தாயம் - மறவர் குடியில் பிறந்த உரிமை.
292. பழங்கடன் - இன்னபடியே ஆயின் இன்ன பலி இடுவேம் என முன்பே நேர்ந்துள்ள கடன்.
293. முழங்கு வாய்ச் சாலினி - கொக்கரிக்கும் வாயையுடைய சாலினி. சாலினி - தெய்வ மருள் ஏறி ஆடுபவள்; பூசாரிச்சி என்பர்.
294. மெய்ம்மயிர் நிறுத்து - மெய்ம்மயிர் சிலிர்த்து.
295. இடு முள்வேலி - முட்களைக்கொண்டு நட்டுவைத்த வேலி.
296. அடிபெயர்த்து ஆடி - தாளத்துக்கு ஒப்ப அடியிட்டு ஆடி, எயினரூர்நடுவே உள்ள மன்றத்து, சாலினி, கானவர் வியப்பக் கையெடுத்து ஓச்சி அடிபெயர்த்து ஆடினள் என்க.
297. களவு ஏர் வாழ்க்கை - களவு செய்தலையே தொழிலாகவுடைய வாழ்க்கை.
298. வண்ணம் - தோளிலும் மார்பிலும் நிறம் தீட்டும் வண்ணம். (நிறம்).
299. புழுக்கல் - அவரை, துவரை, முதலியன (சுண்டல்).
300. நோலை - எள்ளுருண்டை.
301. விழுக்கு உடை மடை - நிணம் கலந்த சோறு. இஃது இக் காலத்தே வழங்கும் பிரியாணி போல்வது.
302. விரை - நறுமணப் பொருள்.
303. கொங்கச் செல்வி - கொங்க நாட்டினை ஆளும் செல்வி.
304. குடமலையாட்டி - குடநாட்டையாளும் செல்வி.
305. தென் தமிழ்ப்பாவை - தென் தமிழ் நாட்டையாளும் பாவை போல்வாள். செய்த தவக் கொழுந்து - இவ்வாறு இம் மூன்று நாட்டையும் ஆள்வதற்காக முற்பிறப்பிலே செய்த நல்வினைக்கண் முளைத்த கொழுந்து போல்பவள்.
306. திரு மா மணி - சீரிய பெரிய மணி.
307. பேதுறவு - தெய்வ மருளால் உண்டான மயக்கம்.
308. வலம்படு கொற்றம் - மேலான வெற்றி.
309. இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - தலை வேறு, உடல் வேறாக உள்ள உருவமும் திரண்ட தோளும் உடைய அசுரன்; இவனை விக்கிரமாசுரன், மயிடாசுரன் என்றும் கூறுவர். தலை - எருமைத் தலை; உடல் - மக்கள் உடல்.
310. மாலவற்கு இளங் கிளை - திருமாலுக்குத் தங்கை.
311. ஐயை - வெற்றித் திருமகள், செய்யவள் - செல்வத்திருமகள்.
312. பாய்கலைப் பாவை - பாய்ந்து ஒடும் மான் ஊரும் பாவை. (மலைமகள்).
313. ஆய்கலைப் பாவை - அறிஞர் ஆராயும் அறுபத்து நான்கு கலைகளையு முடைய பாவை. (கலைமகள்)
314. அருங்கலப் பாவை - தொடி முதலிய அரிய அணிகலன்களை உடைய பாவை. (திருமகள்)
315. நாகம் - சுரபுன்னை.
316. நரந்தை ; நாரத்த மரம்.
317. நிரந்தன - வரிசையுற நின்றன.

318. ஆ - ஆச்சா மரம்.
319. சே - அழிஞ்சில்.
320. செம்பொன் - செவ்விய பொன்னின் நிறத்தை உடைய பூ.
321. பொங்கர் வெண்பொரி - கொம்புகளில் பூத்த வெண்மையான பொரி போன்ற பூ, புன்கு பொரி சிந்தின என்க.
322. வள்ளிக்கூத்து - வள்ளி நாயகியே போல் வேடம் புனைந்து குற மகளிர் ஆடும் கூத்து.
323. அணி - வேடம்.
324. பொற்றொடி மாதர் - பொன்னாலாகிய தொடி அணிந்த பெண்.
325. ஆய்தொடி - அழகிய தொடி.
326. வேய் வில் - மூங்கிலால் சமைத்த வில்.
327. முன்னிலைப் பரவல் - பாடப்படுவோரைக் கேட்போர் போல முன்னிலைப் படுத்திப் பாடிப் பரவுதல்.
328. புலியின் உரி - புலியின் தோல்.
329. எருமைக் கருந்தலை - மயிடாசூரனது பசுந்தலை.
330. மறைமேல் மறையாகி - நான்கு மறைக்கும் மறைப் பொருளாய்.
331. நடுக்கின்றி நிற்பாய் - சலிப்பின்றி நிற்கும் நீ.
332. செங்கண் அரிமான் சினவிடை - சிவந்த கண்ணையுடைய அரிமாவாகிய சினம் பொருந்திய ஏறு. (ஆண் சிங்கம்)
333. மறை - நான்கு மறைகளும்.
334. வென்றிக் கூத்து - போர் செய்து பெற்ற வெற்றி குறித்து அப்போர்க்களத்தே ஆடும் கூத்து.
335. கூத்துள் படுதல் - கூத்து நிகழ்ச்சியில் நிகழ்வது செய்து அதற்கேற்ப ஆடிப் பாடுதல்.
336. கொற்றi9 வ நிலை - கொற்றவையைப் பரவிப் பாடுவது.
337. உட்கு - பகைவர்க்கு அச்சம் தரும்.
338. வெள் வாள் உழத்தி - வெள்ளிய வாட்படை ஏந்தும் கொற்றவை. வேற்றூர்க் கட்சி - பகைவர் ஊர் சூழ்ந்த காடு.
339. காரி - கரியன் என்னும் ஒருவகைப் புள்.
340. கள் விலையாட்டி - கள் விற்பவள்.
341. பொறா மறவன் - மானம் பொறுக்கமாட்டாத வீரன்.
342. புள்ளும் வழிப்படர - அவன் கருத்திற்கு ஏற்ப நற்குறி செய்ய.
343. புல்லார் நிரை - பகைவரது ஆனிரை.
344. கொடுமரம் - வில். வில்லின்முன் கொற்றவை செல்லும் போலும் என்க.
345. கொடை என்னும் துறைப்பாட்டு மடை - பகைவரிடத்தே கொண்ட ஆனிரை களைப் பலர்க்கும் பகுத்து வழங்குவதைப் பொருளாகக் கொண்ட பாட்டுக்களை இடையே தொடுத்துப் பாடுதல்.
346. முருந்து - மயில் இறகின் அடி.
347. கரந்தை - நிறை மீட்க வந்த பகைவர்.
348. வேய் - வேய் பார்த்தல்: அஃதாவது, பகைவர் செயலை மறைவாக அறிந்து வந்தோர் கூறுவது கேட்டல்.
349. புள் வாய்ப்புச் சொன்ன கணி - புள்ளின் நற்குறி கண்டு சொன்ன கணி கூறுவோன்.
350. கயமலர் - பெரிய பூ.
351. நயன் இல் மொழி - ஈரமில்லாத சொல்.
352. நரை முது தாடி - நரைத்து நீண்ட தாடி.
353. அவிப்பலி - செய்த சூள் பொய்யாதவாறு உயிர்ப்பலியிடுதல்.
354. கடரொடு திரிதரும் முனிவர் - “ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தல் ஆற்றா என்று கருதித் தமது அருளினால், அந்த ஞாயிற்றோடு திரிந்து அவ் வெம்மையைப் பொறுக்கின்ற முனிவர்.”
355. அடல் வலி எயினர் - கொலையையும் வலியையுமுடைய எயினர்.
356. மிடறு உகு குருதி - தமது கழுத்தைத் தாமே அறுத்தலால் சொரியும் குருதி. கொள் - கொள்வாயாக. விறல் - வெற்றி.
357. வயிர் - கொம்பு என்னும் ஊது கருவி.
358. வெடிபட - நிலம் பிளக்கும்படியாக முழங்க.
359. அடி தொடு படு கடன் - திருவடியைத் தொட்டுச் சூள் செய்த கடன்.
360. மடை - பலி உணவு.
361. பலிக் கொடை - கொடுத்த பலியை உண்ணுமாறு வேண்டுதல்.
362. துஞ்சு ஊர் எறிதரும் - உறங்குகின்ற பொழுதில் பகைவர் ஊர்க்குள் நுழைந்து கொலை புரியும்.
363. கண் இல் எயினர் - இரக்கமில்லாத எயினர்.
364. விண்ணோர் . . . செய்குவாய் - விண்ணவர் சாவாமையைத் தரும் அதுமுண்டும் ஒருகால் சாகின்றவராக, உண்டபொழுதே உண்டார் உயிருண்பதால் எத்தகை யோரும் உண்டற்காகாத நஞ்சை உண்டு எக்காலத்தும் அழிவின்றி இருந்து உயிர்கட்கு அருள் செய்குவாய்.
365. பொருள் கொண்டு புண் செயினல்லது - வழிப்போவார் பொருளைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்க்குத் தம் வாளால் புண்ணைக் கொடுப்பதன்றி.
366. மருதில் நடந்து - ஆயர்பாடியில் மருதமரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்று. மாமன் - கஞ்சன்.
367. வஞ்ச உருளும் சகடம் - வஞ்சனையால் உருண்டோடும் சகடமாய் வந்த அசுரன்.
368. கோள் வல் உளியம் - நேர்பட்டாரைக் கைக்கொள்ளுதல் வல்ல கரடி.
369. வாள் வரி வேங்கை - ஒளியும் நிறமும் பொருந்திய புலி, மறலா - மாறுபட