மகாபாரதம்-அறத்தின் குரல்
நா. பார்த்தசாரதி 

மகாபாரதம்

அறத்தின் குரல்

மகா பாரதக் கதையை⁠

முழுமையாகத் தெளிவான ⁠

உரைநடையில் தருகின்ற⁠

நூல்.⁠

சமர்ப்பணம்

காலஞ்சென்ற என் தந்தையாரின்

பெருமை சார்ந்த நினைவுகளுக்கு.

-நா. பார்த்தசாரதி

மகாபாரதம்

அறத்தின் குரல்

நா. பார்த்தசாரதி

தமிழ்ப் புத்தகாலயம் #G - 3/8, மாசிலாமணித் தெரு பாண்டிபஜார்

தி.நகர் சென்னை - 600 017 4345904

மின் அஞ்சல் : tamilputhakalayam@vsnl.com

tamilputhakalayam@yahoo.com

Website: http://expage.comltamilputhakalayamமகாபாரதம் அறத்தின் குரல் (மகாபாரதக் கதை முழுவதும்)

முதற் பதிப்பு : செப்டம்பர், 1964

இரண்டாம் பதிப்பு : ஜூன், 1979

மூன்றாம் பதிப்பு : ஏப்ரல், 1992

நான்காம் பதிப்பு : டிசம்பர், 2000

விலை ரூ. 200-00

MAHABARATHAM

ARATHIN KURAL

© Mrs. Sunaravalli Parthasarathy

By NAA. PARTHA SARATHI

Fourth Edition : December, 2000

Pages : 568

Computer Cover Design : K.UMA

TAMIL PUTHAKALAYAM

Flat No. G-3, No, 3 Masilaimani Street

Pondy Bazaar, T. Nagar

Chennai - 600 017 ✆ 4345904

Email : tamilputhakalayam@vsnl.com tannilputhiakalayam@yahoo.com

Website : http://akilan.50megs.com

Price : Rs.200.00

Laser Typeset at : ‘Stanbic Laser Graphics', Ph: 8239192

Printed at : Udayam Offsets, Chennai - 2.

: 2534808; 8520906

உள்ளடக்கம்

முன்னுரை

தோற்றுவாய்

ஆதி பருவம்

1. மூவர் தோற்றம்

2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை

3. ஐவர் அவதாரம்

4. பாண்டுவின் மரணம்

5. சோதரர் சூழ்ச்சிகள்

6. துரோணர் வரலாறு

7. பகைமை பிறக்கிறது

8. நனவாகிய கனவு

9. ஒற்றுமை குலைந்தது!

10. கானகத்தில் நிகழ்ந்தது

11. பாஞ்சாலப் பயணம்

12. வெற்றி கிடைத்தது

13. தருமன் முடி சூடுகிறான்

14. யாத்திரை நேர்ந்தது

15. “நான் தான் விசயன்!”

16. வசந்தம் வந்தது

சபா பருவம்

1. வேள்வி நிகழ்ச்சிகள்

2. சிசுபாலன் போட்டி

3. கர்ணன் மூட்டிய கனல்

4.விதுரன் செல்கிறான்

5. விதியின் வழியில்

6. மாயச் சூதினிலே!

7. தீயன செய்கின்றான்

8. அவையில் நிகழ்ந்தவை

9. பாஞ்சாலி சபதம்

ஆரணிய பருவம்

1. விசயன் தவநிலை

2. விசயன் தவநிலை

3. சிவதரிசனம்

4. இந்திரன் கட்டளை

5. வீமன் யாத்திரை

6. தீமையின் முடிவு

7. தருமம் காத்தது!

8. மாண்டவர் மீண்டனர்

விராட பருவம்

1. மறைந்த வாழ்வு

2. கீசகன் தொல்லைகள்

3. பகைவர் சோதனை

4. வேடம் வெளிப்படுகிறது!

உத்தியோக பருவம்

1. உலூகன் போகின்றான்

2. போர் நெருங்குகிறது!

3. மாயவன் தூது

4. தூது சென்ற இடத்தில் ...

5. கண்ணன் திரும்பி வரல்

6. சூழ்ச்சியின் தோல்வி

7. நன்றி மறக்கமாட்டேன்

8. படை ஏற்பாடுகள்

9. களப்பலியும் படைவகுப்பும்

வீட்டும பருவம்

1. போரில் மனப்போர்

2. சிவேதன் முடிவு

3. போர் நிகழ்ச்சிகள்

4. ஐந்து நாட்களுக்குப் பின்

5. வீட்டுமன் வீழ்ச்சி

துரோண பருவம்

1. பதினொன்றாவது நாளில்

2. சூழ்ச்சியின் தோல்வி

3. போரின் போக்கு

4. ‘வியூகத்தின் நடுவே’

5. வீரச்சிங்கம் வீழ்ந்தது!

6. அர்ச்சுனன் சபதம்

7. பொழுது புலர்ந்தது

8. சயத்திரன் சாகின்றான்

9. இரவிலும் போர்

10. துரோணர் முடிவு

கர்ண பருவம்

1. கர்ணன் தலைமையில்

2. அந்திம காலத்துப் போர்

3. தீயவன் தீர்ந்தான்

4. சங்கநாதம்

5. கர்ணன் மரணம்

6. துயர அமைதி

சௌப்திக பருவம்

1. அழிவின் எல்லையில்

2. முடிவு நெருங்குகிறது

3. எல்லாம் முடிந்து விட்டது

4. அறத்தின் வாழ்வு

முன்னுரை

காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. புதிய கதைகள், புதிய புதிய காவியங்கள், புதிய புதிய உண்மைகள், யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை ஆண்டுக்கு ஆண்டு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. கதைகளும் அவை அமைக்கப்பட்ட காலச் சூழ்நிலையும், சம்பவங்களும் நாளடைவில் வலுக்குறைந்து நம்பிக்கைக்கு அளவுகோலான நிகழ்கால வரம்புக்கு நலிந்து போகலாம். கதையும் கற்பனையும்தான் இப்படி அழியும். அழிய முடியும். அழிக்க முடியும்.

ஆனால் சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை ! தர்மத்துக்கு என்றும் அழிவில்லை ! கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தர்மமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை. காலத்தை வென்று கொண்டே வாழக் கூடியவை. இதை மறுப்பவர் எவருமில்லை. எங்கும் இல்லை என்றும் இல்லை.

மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் ‘ஐவர் காவியம்’ என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம்.

நெருப்பைத் தொட்டவர்களுக்குத்தான் அது சுடுகிறது. நெருப்புக்குச் சுடுவதில்லை. தருமமும் இப்படி ஒரு நெருப்புத்தான். அறியாமையினாலோ, அல்லது அறிந்து கொண்டே செருக்கின் காரணமாகவோ, தருமத்தை அழிக்க எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது. நன்மையைத் தீமை நெருக்கினால் நன்மை அழிவதில்லை. தீமைதான் அழிகிறது.

துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்ற தீயவர்களையும் இந்தக் கதையில் காண்கிறோம். விதுரன், வீட்டுமன், தருமன், விகர்ணன், அர்ச்சுனன் போன்ற நல்லவர்களையும் காண்கிறோம். கர்ணனையும், வீமனையும் போலப் பலசாலிகளைக் காண்கிறோம். குந்தியையும், காந்தாரியையும் போலத் தாய்மார்களையும், திருதராட்டிரன், பாண்டு போன்ற தகப்பன்மார்களையும் காண்கிறோம். திரெளபதி, சுபத்திரை, சித்திராங்கதை போன்ற பெண் திலகங்களையும் இந்த மகாகாவியத்தில் தான் சந்திக்கிறோம். எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிக்கொண்டே ஒன்றுமறியாத பாமரன் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவான கண்ணன் இதயத்திலிருந்து மறைவானா? அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம் விம்மிப் பூரிக்காமல் இருக்குமா?

மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப் போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம். இப்போது நம்முடைய இதயத்தில் முரசு கொட்டுவது போல் முழங்கும் எண்ணம் யாது?

தர்மத்துக்குத்தான் வெற்றி சத்தியத்துக்குத்தான் வெற்றி!

நேர்மைக்குத்தான் வெற்றி! தியாயத்துக்குத்தான் வெற்றி!

இந்த எண்ணம்தான் நம் நெஞ்சமெங்கணும் இடைவிடாமல் முழங்குகிறது. முழங்கிக்கொண்டே இருக்கட்டும். ‘இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பலாமா’ என்று யாரோ கேட்கும் குரல் ஒன்றும் நம் செவிகளில் விழுகிறது! அப்படிக் கேட்பவர்களுக்கு நாம் இந்தப் பதிலைச் சொல்லுவோம்.

நம்புவதில்தான் எல்லாம் இருக்கிறது! நம்பாத்தில் எதுவும் இல்லை.

நல்லதைச் சொல்லுவது எதுவோ நல்லவர்களின் வெற்றியைக் கூறுவது எதுவோ அது நல்லது. அதை நாமும் நம்புவோம்; நம்பி வாழ்வோம்!

இந்த நவீனத்தில் மாபெரும் அரசியல் நுட்பங்களும் கதை நுணுக்கமும் நிறைந்த மகாபாரதக் கதைகளை ஓர் அழகிய நாவலைப் போல் உரைநடையாக்கி அறத்தின் குரலாக ஒலிக்கச் செய்திருக்கிறேன். இந்த அறத்தின் குரலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் காலத்தை வென்று நிற்கப் போகிற தெய்வீகக் கதாபாத்திரங்கள். எனக்கு முன்பே வியாசர் முதல் வில்லிபுத்தூரார் வரை புனைந்து புகழ்ந்து கவிதையில் வனைந்து அழகு படுத்தப் பெற்ற பாத்திரங்களை நானும் தரையினாலாகிய இந்த நவீனத்தில் இயன்றவரை ஆக்கி அறிமுகப்படுத்துகிறேன். இந்த அறத்தின் குரலுக்குத் தமிழ்ப் பெருமக்கள் செவிசாய்ப்பார்களென்ற நம்பிக்கை யோடு இந்தச் சுருக்கமான முன்னுரையை முடிக்கிறேன்.

14-9-64 அன்பன்

சென்னை நா. பார்த்தசாரதி

தோற்றுவாய்

உலகம் என்ற ஒன்று தோன்றிய நாளிலிருந்து அறம், மறம் என்னும் இரண்டு மாறுபட்ட பேருணர்ச்சிகளும் தோன்றிப் போராடித்தான் வருகின்றன. காலந்தோறும் வாழ்க்கை தோறும் மனித சமுதாயத்தின் உயர்நிலை தாழ்நிலை ஆகிய நிலைகள் தோறும் தர்ம அதர்ம யுத்தம் என்கிற இந்தச் சத்திய அசத்தியப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாகரிக வளர்ச்சியோ இதயப் பண்பாடோ, அல்லது சமூக முன்னேற்றமோ, எந்த ஒரு புதுமையின் முயற்சியாலும் உலகின் அழியாப் போராகிய இந்தப் போரை நிறுத்தவே முடியவில்லை. மண்ணும் விண்ணும் மண்ணையும் விண்ணையுங் கொண்டு வாழும் உயிரினங்களும் உள்ள வரை இந்தப் போரும் நித்தியமாக நிலைத்து நின்று நிகழும் என்பதை மறுக்க முடியாது. இதை வற்புறுத்துவது போலக் காலமும் கவிகளின் உள்ளமுமாக இணைந்து கொடுத்த எண்ணற்ற பல காவியங்களின் தொகுதி நம் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

காவியங்களைக் கற்கும் போதும் ‘இது என்றோ நடந்தது; அல்லது கற்பனை செய்யப்பட்டது’ என்னும் நினைவு நமக்கு எழலாம். மெய்தான்! அப்படி எழுகின்ற நினைவு மனித மனத்திற்கு இயற்கையே. ஆனால் கால முற்பாடும், ‘கற்பனையோ?’ என்ற நினைவும் ‘காவியங்களில் அறப்பண்புகளும் மறப்பண்புகளும் மோதுகின்றன. இறுதியில் வெற்றி தோல்வியும் ஏற்படுகின்றது’ - என்ற நமக்குத் தேவையான உண்மையைச் சிறிதளவும் பாதிக்க முடியாதல்லவா? உண்மைக்கும் வாய்மைக்கம் நிகழ்ந்த போர் அரிச்சந்திரன் கதையாக நிலவுகிறது. விதிக்கும் தனி மனிதனுக்கும் நிகழ்ந்த போர் சிலப்பதிகாரக் கதையாகத் திகழ்கின்றது. கடமையைக் காக்க வேண்டுமென்று நேர்மைக்காக வந்து போராடிக் கொடுமையை அழித்த கடவுட் பிறப்பின் கதை இராமவதாரமாகக் காட்சி தருகின்றது. கட்டியங்காரன் என்ற ஒருவனின் மனத்தில் முளைத்த தீமை வித்து மெல்லக் கருகி அழிந்து சீவகன் என்ற திறமையாளனின் நல்மனம் நல்லன எண்ணி நல்லன செய்து நன்மை பெறும் மேன்மையைச் சீவக சிந்தாமணி தெரிவிக்கிறது. இன்னும் வளர்ப்பானேன்? வாழ்க்கையில் மட்டும் அல்ல, வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டிருக்கும் காவியம், கலை, கற்பனை ஆகிய இவைகளிலும் கூட அறவுணர்ச்சிகளும், மறவுணர்ச்சிகளும் வந்து கலகமிடுகின்றன. மென்மையும் வன்மையுமான இந்த நேர்மாறான இரு துருவங்கள் போன்ற உணர்ச்சிகள் கொடிய முறையில் காக்கும் போது எளிய முறையில் மென்மையாக இயற்றப்பட வேண்டிய காவியங்களின் தாய்ச் சரக்கு என்னும் மூலப் பொருள் கிடைக்கிறது. உலகின் நாற்றிசைகளிலுமுள்ள உயிரிணம் முழுதுமே அறச் சார்புடையதாய், நேர்மை ஒன்றே நோக்கமாக வாழும் வழி எப்போதோ, எப்படியோ ஏற்பட்டு விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அன்று தொடங்கி வாழ்க்கையில் - உலக வாழ்க்கையில்தான் - சுவை, ஆர்வம், விரைவு என்ற இந்த அவசியமான அம்சங்கள் செத்துப் போகும். கலை, கற்பனை, காவியம் இவைகளும் மூலப் பொருளான தாய்ச் சரக்கு இல்லாமல் ஏங்கி நிற்க வேண்டியது தான்! எனவே அறத்தின் பெருமை, என்ற இந்த மாபெரும் ஒளி விளக்கமுற்று இலங்குவதற்கு வாழ்க்கையிலும் சரி, காவியத்திலும் சரி, மறத்தின் தீமை என்ற புலையிருள் பொதிந்திருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

‘காவியப் பண்பு’

அறுசுவையில் கைப்பு என்ற ஒன்று, பெரும்பான் மையாக - ஏன் முற்றிலுங்கூட உலகில் எவராலும் விரும்பப் படுவதில்லை. அதற்காக அந்த சுவையிலும் அதைச் சார்ந்த பொருள்களிலும் நாம் குரோதங்கொண்டு அழித்து விடவா செய்கிறோம்? அல்லது அவைகளாகவே அழிந்து விடத்தான் செய்கின்றனவா? இரண்டும் இல்லையே? வாழ்க்கையிலும் மறத்திற்கு இத்தகைய விலக்க இயலாத ஓர் இடம் ஏற்பட்டு இருக்கின்றது. கைப்பு என்றோர் சுவை இருப்பதனால்தானே இனிப்பின் பெருமை விளங்குகின்றது. அதுபோல, மறம், பாவம், தீமை என்ற இந்த விலக்கப்பட்ட குணங்களுக்கும் வாழ்வில் நிற்குமிடம் நிலைத்தவையாக இருக்கின்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அறம், ஒழுக்கம், நேர்மை என்ற இந்த விதிக்கப்பட்ட குணங்களுக்கு உலக வாழ்வில் ஒளியும் பெருமையும் நிலைத்திருக்கின்றன. கைகேயியின் இரக்கமின்மையாலேயே இராமனுடைய பரந்த புகழ் என்னும் அமுதம் உலகுக்குப் பருகக் கிடைத்ததாகக் கம்பன் கூறுகின்றான். பகைப்புலனாக நிற்கவல்ல எதிர்மறைப் பண்பு ஒன்றினால்தான் காவிய குணமாகிய உடன்பாட்டுப் பண்பு ஒன்றை நிலை நிறுத்திக் காட்டுவதற்கு இயலும். இதிகாச காவியங்களாகிய இராமாயணம், பாரதம், முதலியவற்றின் கதைப் போக்கில் பகைப்புலனின் பண்பாலேயே காவியம் கூறக் கருதும் பொருளை வற்புறுத்தும் நிலையைக் காணலாம். காவியத்தில் எந்தச் சில பாத்திரங்களின் சார்பாக, அவற்றின் வெற்றி நோக்கிக் கதையாகச் சித்திரித்துச் சொல்லப்படுகின்றதோ, அந்தச் சில பாத்திரங்களின் வாழ்வே அந்தக் காவியம் முழுவதும் ஊடுருவி நிற்கின்றது எனக் கொள்ளலாம். இதிகாச காவியங்களைப் பொறுத்த வரையிலோ இது பெரிதும் பொருத்தமான மெய்யாகத் தோன்றுகிறது.

யாருடைய காவியம்?

மகாபாரதம் பெயரளவைக் கொண்டு நோக்கும் போது பாரத யுத்தத்தைப் பற்றிய கதை என்ற பொருளைத் தருமானாலும் உண்மையில் பாண்டவர் ஐவரின் வெற்றியை அறத்தின் வெற்றியாகச் சித்திரிப்பதே பாரதத்தின் தாத்பரியம். துரியோதனாதியர், கண்ணன் முதலியவர்களுக்கும் பாரதக் கதைக்கு இன்றியமையாத பாத்திரங்கள் என்பதை இங்கே மறுக்க வில்லை. ஆனால் பாரதம் என்ற இந்த மாபெரும் காவியம் காட்டுகின்ற வாழ்க்கை துரியோதனாதியருடையதும் அன்று, கண்ணனுடையதும் அன்று, முற்றிலும் ஐவருடைய வாழ்க்கையே, துரியோதனாதியர், கண்ணன் என்னும் இவர்கள் இடையிடையே இக்காவியத்தில் வருகின்றார்கள் எனினும் பாண்டவர்களாகிய ஐவருக்கே வாழ்வுரிமை கொடுப்பது தான் இக்காவியத்தின் நிலைக்களன் ஆகும். தருமன், வீமன், விசயன், நகுலன், சகாதேவன் என்னும் இவர்கள் ஐவருடைய வாழ்க்கையில் அறத்திற்கு ஏற்பட்ட சோதனைகளும் இறுதியிலே அறம் வெற்றி பெற்றதும் ஆகிய இவற்றின் முழுவடிவமே பாரதம். இஃது அறத்தின் காவியம்; அறச்சார்போடன்றி வாழலாகாது என அறவாழ்விற்காகப் போரிட்ட ஐவர்கள் காவியம். அறமும் மறமும் மோதி முரண்பட்டுப் போராடும் போது நேர்மையையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ முயன்ற ஓர் ஐந்து சகோதரர்கள் அடைந்த இன்னல்களையும் முடிவில் தருமத்தின் வெற்றியை இவர்கள் வாழ்வின் வெற்றியாக விளக்கிப் பேசுவதையும் தனதாகக் கொண்டு சொல்லும் ஒரு நெடுங்கதைதான் மகாபாரதம். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து பாரதக் கதை அன்றே தமிழ்நாட்டில் மக்கள் விருப்பத்திற்குரிய பெருங்கதையாகத் திகழ்ந்து வந்ததை அறிகிறோம். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியம் முதலிய நூல் வகைகளில் ஆங்காங்கே பாரதக் கதையைச் சிறப்பித்தும், சான்றாக எடுத்தாண்டும் போற்றியிருக்கக் காண்கிறோம். இதைத் தவிரப் பாரதக் கதைக்கு வேறோர் சிறப்பும் அமைந்துள்ளது. இராமாயணம் என்ற இதிகாச காவியத்தைத் தமிழில் இயற்றும் சிறந்த நோக்கம் கம்பர் ஒருவருக்கே ஏற்பட்டது. ஆனால் பாரதத்தையோ சங்க காலத்துப் பெருந்தேவனாரிலிருந்து நேற்றைய பாரதியார் வரை ஒவ்வொரு புலவரும் தமிழ்க் காவியமாக ஒவ்வொரு நோக்குடன் அமைக்க ஆசையுற்றிருக்கின்றனர். இந்தக் கருத்துடனே காணும் போது இராமாயணத்தைக் காட்டிலும் பாரதம் தமிழ்ப்புலவர்களை மிகுதியாகக் கவர்ந்திருக்கின்றதென்ற உண்மை புலப்படும். கடவுள் மனிதனாக அவதரித்து அறத்தைக் காப்பதற்கு முயன்ற கதை இராமாயணம் என்றால், மானிடர்களாக உடன் பிறந்த ஐந்து சகோதரர்களின் வாழ்க்கையில் அறத்தைக் காக்க முயன்ற கதையே பாரதம். இராமன் என்ற அவதார புருஷன் சிலரையும் பலரையும் இயக்கி நிகழ்த்தின அவதார நாடகமே இராமாயணம். ஆனால் பாரதம் அவ்வாறில்லாமல் ஐவர் வாழ்க்கையில் அவரவர் இயக்கத்தைக் காட்டும் காவியம். இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களுக்கும் இடையிலுள்ள இந்த வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாரதக் கவிஞர்கள்

தமிழில் தோன்றிய முதல் பாரத காவியமாகிய பெருந்தேவனார் பாரதம் இப்போது கிடைக்கவில்லை. சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவராகிய இந்தப் பெருந்தேவனார் தவிர ஒன்பதாம் நூற்றாண்டின்ராகிய மற்றோர் பெருந்தேவனார் பாரத காவியத்தை வெண்பாக்களால் இயற்றினார். இப்பாரத வெண்பாவின் பெரும் பகுதி இப்பொழுது கிடைக்கின்றது. அச்சிட்டும் வெளியிட்டிருக்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக விரிவான முறையில் பெருங்காப்பிய அமைப்புடன் தமிழில் பாரதக் கதையை இயற்றிய ஒரே ஓர் ஆசிரியர் வில்லிப்புத்தூரார் தாம். நாலாயிரத்து முந்நூற்று முப்பத்தொன்பது பாடல்களால் வில்லி பாடிய அதே காவியத்தை வில்லிக்குப் பிற்பட்டவராகிய நல்லாப்பிள்ளை என்பவர் பதினையாயிரத்து முந்நூறு பாடல்களாகப் பெருக்கி அமைத்தார். வில்லியின் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாடல்களும், நல்லாப்பிள்ளை அவற்றுடன் கலந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களும் சேர்ந்த மொத்தத் தொகுதிக்கே நல்லாப்பிள்ளை பாரதம் என்று பெயர். நல்லாப்பிள்ளையின் ஒருசாலை மாணாக்கராகிய முருகப்பிள்ளை என்பவர் பாடிய பாடல்களும் இதில் கலந்துள்ளன என்பது சிலர் கருத்து. இவர்களுக்கெல்லாம் பிற்காலத்திலே நம்முடைய தலைமுறையில் வாழ்ந்து மறைந்த வரகவியாகிய பாரதியார் முற்றிலும் புதியதொரு நோக்குடன் பாரதத்தின் ஒரு பகுதியைக் காவிய அமைப்புடன் தமிழில் படைத்தார். சூதாட்டம், அதில் திரெளபதியையும் தன்னையும் தம்பியரையும் தன் உடைமைகளையும் தருமன் இழந்து போவது ஆகிய இந்நிகழ்ச்சிகளே குருட்சேத்திர யுத்தத்துக்குக் கால்கோளென்பதை நன்கறிந்தவராகிய பாரதியார் ‘பாஞ்சாலி சபதம்’ என்று தம் காவியத்திற்கு மகுடமிட்டுக் கொண்டார். பாஞ்சாலியின் சபத மொழியையே தமது புதுக்காவியத்தின் மையப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் கவியரசர் பாரதியார். வில்லி பாரதத்தில் சபாபருவத்தில் விவரித்த செய்திகளையும் பாரதக் கதையின் இயற்கையான முடிவையும் இணைத்து இடப்பட்ட தலைப்பிற்கும் பொருத்தமாகப் பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றிக் கூந்தலை முடித்துக் கொள்வதோடு காவியத்தை முடிவு செய்து விடுகின்றார். சுருக்கமான காவிய அமைப்பாலும், பாரதியாரது ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் நடையும் காவியப் பாத்திரங்களின் குணசித்திர வரம்பும் சிறந்து விளங்குவதாலும், தமிழிலுள்ள பாரதக் கதைகளில் தனக்கென ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுவிட்டது பாஞ்சாலி சபதம். பாரதம் ஐவராகிய பாண்டவர்களின் வாழ்க்கையை பேசும் காவியம் என்று கண்டோம். இதில் ஒரு சிறப்பான ஒற்றுமை இயற்கையாகவே அமைந்து சிறப்பளிக்கிறது பாருங்கள். பாரதத்திற்கு பாண்டவர் ஐவரே போலத் தமிழில் பாரதக் கதையை இயற்றிய காவிய ஆசிரியர்களும் ஐவர்தாம். சங்க காலத்தினரான பெருந்தேவனார் முதல் இருபதாம் நூற்றாண்டினரான பாரதியார் வரை ஐந்து காவிய கர்த்தாக்களையே பாரதம் கவர்ந்திருக்கின்றது. எனவே, ஐவர் காவியம் என்ற தலைப்பு இரண்டு வகையாலும் பொருத்தமானதாகவே அமைந்து விடுகிறது. தருமன் முதல் சகாதேவன் இறுதியாகவுள்ள காவியப் பாத்திரங்களும் ஐவரே. பெருந்தேவனார் முதலாகப் பாரதி இறுதியாக உள்ள பாரதம் பாடிய புலவர்மணிகளும் ஐவரே. இஃது ஐவருடைய காவியம் மட்டுமன்று; தமிழில் ஐவரால் பாடப்பெற்ற காவியமும் ஆகும்.

இந்தத் தொடர்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற சங்ககாலத்துப் புலவர் ஒருவரைத் தவிர ஏனைய புலவர்களின் காவியங்களே பாரதத்தைப் பற்றி இப்போது நமக்குக் கிடைக்கின்றன என்பதை முன்பே அறிந்தோம். ஐவர் காவியம் என்ற இத்தொடரின் நோக்கம். தமிழிலுள்ள பாரதக் கதைகள் - அனைத்தையும் காவிய ஒப்புநோக்கு முறையில் எளிய இனிய கதைத் தொடராக விமர்சிக்க வேண்டும் என்பதே ஆகும். பாரதக் கதையைப் பற்றி தமிழில் இந்த நூற்றாண்டில் எண்ணற்ற உரைநடை நூல்கள் எழுந்துள்ளன. தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் பெருந்தகையாராகிய இராஜாஜி அவர்கள் வியாச பாரத காவியத்தை ‘வியாசர் விருந்து’ என்ற அரும்பெரும் கலை விருந்தாக அளித்துள்ளார்கள். ஆனால் வில்லி, நல்லாப்பிள்ளை, பாரதி, பெருந்தேவனார் (ஒன்பதாம் நூற்றாண்டு) என்னும் இவர்கள் ஒவ்வொருவரும் இயற்றிய காவியங்களைத் தழுவி அவற்றின் எளிய விமர்சனமாக அமைக்கப்பட்ட பாரத உரைக் கோவை இன்றுவரை எவராலும் எழுதப்படவே இல்லையென்று துணிந்து கூறலாம். தமிழில் இந்த முயற்சி புதுமையும் இனிமையும் பொருத்திய ஒன்றாக அமைவதற்குத் தடையே இல்லை.

பாரதமும் பாத்திரங்களும்

பாரதக் கதையின் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது, வாழ்க்கைக்குத் தேவையான நன்மைப் பாற்படுகின்ற உடன்பாட்டுக் குணங்களையும் வாழ்க்கைக்குத் தேவையற்ற தீமைப் பாற்படும் எதிர்மறைக் குணங்களையும் ஒருங்கே அறிந்து கொள்ளுகின்றோம். ‘அறமே குறிக்கோள்' என்று நிற்போரையும் அங்கே காண்கின்றோம். ‘ஆண்மையே யாவும் - என்று பேசுவோரையும் அங்கே காண்கின்றோம், ‘மறமும், தீமையும், சூதும், வஞ்சகமுமே வாழ்வு’ என்று மயங்கித் தவறான வழிகளால் தம்மையே ஏமாற்றிக் கொள்ளுபவர்களையும் காண்கின்றோம். மனித வாழ்க்கையில் என்றுமே நிலைத்த அமைப்போடு இடம் பெற்றிருக்கும் உத்தம், அதம், மத்திய குணங்கள் பாரதக் கதையின் போக்கிலேயே முற்றிலும் முழுமையாக அமைந்திருக்கின்றன. பாத்திரங்களின் மூலமாக அந்தக் குணங்களைப் புரிந்து தெளிவு கொள்கின்ற காவிய நேயர் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையிலே ‘கடைப்பிடிக்க வேண்டிய குணங்கள் யாவை? நீக்க வேண்டிய குணங்கள் யாவை?’ என்பதை நன்றாக உணர்வதற்கு முடிகின்றது. இத்தகைய பயன் கனிந்த பேருணர்வை உண்டாக்குவதுதான் உன்னதமான காவியம் ஒன்றின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். பாரதம் ஓர் உன்னத காவியமாகையால்தான் அதன் குறிக்கோளும் இவ்வாறு பொருந்தியிருக்கிறது. இப்பொருத்தத்தைச் சற்றே விளக்கமாகக் காண்போம். ‘தருமன்’ - என்று ஒரு பாத்திரம் பாரதக்கதையின் உயிர்நாடி. அன்பு, அருள், அறம், நேர்மை, ஒழுக்கம் என இவ்வாறு வரும் மேனிலைப் பண்புகளாலேயே படைக்கப்பட்ட பாத்திரம், தன் வாழ்வைச் சுற்றி எழுகின்ற எண்ணத் தொலையாத சூழ்ச்சிகளையும் சோதனைகளையும், மனத்திற்குத் தோன்றியபடி வெல்ல வேண்டும் என்றெண்ணாமல், அறத்திற்காகத் தாங்கி நிற்கும் பொறுமையைத் தருமனிடம் காண்கின்றோம். 'இரும்பை இரும்பால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற அரசியற் கருத்துள்ள பழமொழிகளை அறியாதவன் அல்லன் தருமன். ‘வில்லும், வாளும் ஏந்திப் போர் செய்யும் திறனும், அரசியலை எப்படி நடத்தவேண்டும் என்ற சூழ்ச்சியைக் கற்பிக்கும் அரசியல் நூல்களும், தனக்குத் தெரியாதவை என்ற பலவீனம் தருமனிடம் இல்லை. ‘வாழ்க்கையில் ஒருமையான சட்டம் அறம். அதை மீறியோ, விலகியோ, வாழ்வது பிழை’ என்ற உயரிய நோக்கு அவனுக்கு இருந்தது. அந்த நோக்கு ஒன்றினால்தான், ‘மற்றைய வழிகள் அவனுக்குப் புலப்படவில்லையோ?’ - என்று நாம் ஐயுறுகின்ற அளவிற்கு அறம் பழுத்த வாழ்வாக விளங்கிற்று அவனுடைய வாழ்வு. இதயம் பண்பாட்டுக் கனிந்த நிலை அடைந்திருந்தால் ஒழிய இப்படிப்பட்ட வாழ்வு சாத்தியமில்லை. கைகுவித்து வணங்க வேண்டிய கடவுள் வாழ்க்கை அல்லவா இது? பீமனை நோக்கினால் ‘வாழ்ந்தால் ஆண்மைக்காக வாழவேண்டும்’ என்ற நோக்கு அவனுக்கு அமைந்திருந்ததை உணர்கிறோம். தருமன் அறத்தின் பெயரால் பொறுமை கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் வீமன் ஆண்மையின் பெயரால் குமுறுவதைக் கண்டு இருவருக்குமுள்ள பண்பு வேறுபாடு புலனாகிறதைத் தெளியலாம். ஆண்மை ஒன்றே கொழித்து வளர்வதற்கு ஏற்றபடி வீமனுக்கு உடலும் உள்ளமும் மென்மை விரவாத தனி வலிமையினால் ஆகியிருந்தன. இந்த ஆண்மையும் தீமை கலந்த ஆண்மை அன்று, தீமையைக் கண்டு பொறுக்க முடியாமல் குமுறுகின்ற நேரிய ஆண்மையே. தருமனுக்கு இருந்த 'பொறுமையுள்ளம்’ வீமனுக்கு இல்லை. வீமனுக்கு இருந்த ‘தீமை கண்டு சீறும் ஆண்மை நெஞ்சம்’ தருமனுக்கு இல்லை.– இதுதான் இவர்களிருவருக்கும் இடையேயுள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு இல்லை என்றால் காவியத்தில் சுவையும் விறுவிறுப்பும் எப்படி இருக்க முடியும்? அருச்சுனனுடைய வாழ்வோ, காதல், வீரம் உணர்ச்சி ஆகிய மூன்று வேறு பண்பு நிலைகளிலும் மாறி மாறித் திகழ்கிறது. மென்மையும் வன்மையும் சம அளவில் விரவி இணைந்த வாழ்வு அது. தருமனுக்கு அடுத்த நிலையில் உள்ளப் பண்பாட்டினால் எய்தும் பெருமை அருச்சுனனுக்கே கிட்டுகிறது. வீமனைப் போலத் தீமையைக் கண்டு குமுறிக் கொதிக்கும் உணர்ச்சி மயமான உள்ளம் அருச்சுனனுக்கு இல்லை என்றாலும் தீமை கண்டபோது, அதை அழிக்க வேண்டும் என்ற இயற்கையான உணர்வும், வில்லைத் தேடி விரையும் கரங்களும் இருந்தன. இதேபோல அழகையும் மென்மையையும் நுகரவேண்டும் என்ற கலையுணர்வும் அவனுக்கு இருந்தது. அவற்றைக் காதலித்து நுகரவேண்டும் என்ற மன ஆர்வமும் அவனுடைய உள்ளத்திற்கு இருந்தது. வில்லைப் பிடித்த கைகளுக்கு மலர் மாலைகளை ஏந்தவும் தெரிந்திருந்தது. சுருங்கக் கூறினால் வீரத்துடனே அழகு உணர்ச்சியும் அருச்சுனனிடம் நிறைந்திருந்தது. இது தருமனுக்கும் வீமனுக்கும் இடைப்பட்ட ஒருவகைக் குணச்சித்திரமாக அமைந்து சிறப்பை அளிக்கின்றது. நகுல், சகாதேவர்களுடைய குணங்கள் தெளிவாக விளங்கும்படியான முறையில் பாரதக் கதையைப் பற்றி நிகழும் எந்த ஒரு காவியமும் அவர்களுடைய குணங்களைச் சிறப்பாக வரையறுத்துக் கூறக் காணோம். பாரதக் கதையில் மிகச் சாதாரணமான துணைப் பாத்திரங்களைப் போலவே இவர்கள் எப்போதாவது வந்து போகின்றனர். இவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளோ மிகச்சில இடங்களிலேயே குறுகிய முறையில் கூறப்பட்டுள்ளன. ஆகையால் நகுல சகாதேவர்களின் குணங்களை மிக உன்னதமாகவோ, இழிவாகவோ, எந்த வகையிலும் தெளிவு செய்து ஒப்பிடுவதற்குரிய வாய்ப்பு நமக்கு இல்லை. பாண்டவ சகோதரர்களில் அவர்களும் இக்காவியமாகிய பெருவாழ்வில் இடையிடையே வந்து போகும் இருவர் என்ற முறையிலும் அவர்களைப் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம், அதுவே இப்பொழுதுக்கு இங்கே பொருத்தமாக ஏற்பது. இதுவரை பகைப் புலனுக்கு நேர் எதிரிடையாகவும் காவியக் கருத்துக்கு உடன்பாடாகவும் நின்ற பாத்திரங்கள் ஐந்தைக் கண்டோம். இனிக் காவியக் கருத்துக்கு எதிரிடையாகவும் பகைப்புலனுக்கு உடன்பாடாகவும் நிற்கும் துரியோதனன் முதலிய பாத்திரங்களைப் பற்றிக் குண அமைப்பு முறையை அறிந்து கொள்ள முற்படுவோம். இருளில் கொண்டு போனால் தானே விளக்கு ஒளியைக் கொடுக்கும். வேறோர் விளக்கு இருக்கும் இடத்திற்கோ, அல்லது பகல் நேரத்திலோ, விளக்கின் ஒளி எடுத்துத் தோற்றாது அல்லவா? இதே போலத்தான் காவியத்தில் நேர்புலனும், பகைப்புலனும். இரண்டுமே நேர் புலனாக இருந்துவிடுமானால் ஒளிக்கு முன் ஒளிபோல விளக்கமிழந்து போகும். பாண்டவர்களைப் போலவே கெளரவர்களையும் படைத்திருந்தால் பின் ‘பாரதம்’ என்ற இந்தக் காவியந்தான் ஏது? கதைதான் ஏது? பாண்டவர்களுக்கு நேரிய அறத்தையும் வீரத்தையும் குணமாக்கிக் கௌரவர்களுக்குப் போலி வீரத்தையும், பொய்மையையும் குணமாக்கியதனால்தானே பாரத காவியத்தை அடைய முடிந்தது? துரியோதனனை அறிவும் சிந்தனை வளமும் உடைய ஒருவனாகக் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. தீயவனாயினும் அறிவும் சிந்தனை உள்ளவனாக இருந்திருக்கலாம் அல்லவா? தெளிவற்ற அறிவோடு தகுதியற்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காத ஒரு மனநிலையை அவனிடம் காண்கின்றோம். பிறர் காட்டும் தவறான வழிகளில் சென்று விடுகின்ற அளவு பலவீனமுடையது அவன் அறிவு. இல்லையென்றால், சகுனி முதலியவர்கள் கருத்தை அப்படியே ஏற்று அதன்படி நடக்கின்றவரை சிந்திக்கும் திறமின்றிக் கழிந்திருக்குமா அவன் மனம்? சூழ்ச்சியும், வஞ்சகமும், தீமையும் புரிகின்ற இறுக்கமான மனத்திடமும் சொந்தமாக அவனிடம் இல்லை. சூழ்ச்சி முதலிய தீய பண்புகள் அவனை ஒரு வெறுங்கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களைத் துன்புறுத்தின என்றே கூறுதல் தகும். சகுனி முதலிய தீயோர் அதை வற்புறுத்தித் தூண்டும் துணைக் கருவிகளாக இருந்தார்கள். ஆகவே அறிவுத் தெளிவற்ற சிந்தையும் சூழ்நிலையும் துரியோதனனைத் தீயவைகளைக் கூசாமற் செய்பவனாக ஆக்கியிருந்தன எனலாம். கர்ணன், அவனைப் பொறுத்தமட்டில் தனி நிலையில் சிறந்த வீரனாகத் தோன்றினாலும் பொறாமை, ஆத்திரம், அளவிறந்த மானம் என்னும் இம்மறைக் குணங்களால் கெளரவர்களைப் போலவே தானும் ஒரு தீயவனாகவே தோற்றம் பெற நேரிடுகின்றது. கொடையும், குன்றா வீரமும் ஆகிய இருபெரும் பண்புகளைப் பெற்றிருந்தும் அவன் எந்த ஒரு நல்ல பண்பையும் பெற முடியாத கெளரவர்களில் தானும் ஒருவனாக விளங்க வேண்டியதாகின்றது. சகுனியோ கல்மனமும் தீமைப் பண்புகளுமே முற்றிய கொடியவனாகச் சித்திரிக்கப்படுகின்றான். துச்சாதனன் முதலிய மற்றையோரையும் இந்த வகையிலேயே சேர்க்க நேரிடுகின்றது.

திருதராட்டிரன் குண அமைப்பு அநுபவமும் முதுமையும் பொருந்திய ஓர் அரசனுக்கு ஏற்ற இயல்பான முறையில் பெரும்பகுதி நன்மைக் கூறுபாடும் சிறு பகுதி தீமைக் கூறுபாடும் உடையதாக வரையறுக்கபட்டிருக்கிறது. விதுரன், வீட்டுமன், துரோணன் முதலிய சான்றோர்கள் சான்றாண்மைக்குரிய குணக்குன்றுகளாகவும் கடமை வீரர்களாகவும் இக்காவியத்தில் ஒளியுற்று இலங்குகின்றனர். இனி பாண்டவர், கெளரவர், இருசாரார்க்கும் ஆதி காரணமாய் நின்று பாரதக் கதையை நிகழ்த்திச் செல்லும் கண்ணனும் இக்காவியத்தில் ஒரு பாத்திரமே. இறைமையின் பேராற்றல்கள் யாவும் நிறைந்த இறையம்சத்திற்குரிய தலை பெரும் பாத்திரமாக வருகின்றான் கண்ணன். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே தூதுவனாகச் செல்லும் நிலையிலும் போர்களத்திலும் தயக்கமுற்ற அருச்சுனனைத் தேற்றிப் 'போர் செய்யலாம்’ என்று அறிவுரை கூறும் நிலையிலும் கண்ணனின் இறைமைக் குணங்கள் நுணுக்கமான முறையில் விளங்குகின்றன. பரம்பொருளின் சாயையான மனிதனாக உலாவினாலுமே காண்போர்க்கு அங்கங்கே எண்ணத்தால் வியப்பும் அருள் நிறை அன்பும் நல்கும் பாத்திரம் கண்ணனே. பாரதகாவியத்தில் ஆடவர் என்னும் பிரிவிலடங்கும் பாத்திரங்கள் இங்கு மேலே விவரித்த இவ்வளவோடு அமையாமல் இன்னும் பலராக எண்ணற்றுப் பரந்து கிடக்கின்றனர். ஆனால் பாரத காவியத்தின் இன்றியமையாத ஆண் பாத்திரங்கள் என்ற முறையில் இங்கு மேலே விவரித்த சிலரே அமைகின்றனர்.

ஆகையால் அவர்களைப் பற்றிய செய்தியை இவ்வளவில் நிறுத்திவிட்டு இனி மேலே சில பெண் பாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ள முற்படுவோம். பாண்டவர்களின் தாய் குந்திதான் வரிசை முறைமையாலும் தகுதியாலும் பாரதத்தின் முதற்பெண் பாத்திரமாக இலங்குகின்றாள். பாண்டவர்கள் பிறப்பதற்கு முன்பும் பாண்டுவை மணந்து கொள்வதற்கு முன்பும் முனிவர்க்கும் பெரியோர்க்கும் தொண்டு செய்து கழித்த இவளுடைய கன்னிப் பருவம் கள்ளங்கபடமற்ற முறையில் தூயதாகத் தோற்றுகிறது. கதிரவன் அருளால் கர்ணன் பிறந்தபோது பயமும் குழப்பமும் அடைந்து, அவனைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விடும்போது இத்தகைய நிலைகளில் இயல்பாக ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மன நிலையையே குந்தியிடமும் காணமுடிகிறது. அரக்கு மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்று வேத்திரகீயத்தில் ‘ஐந்து புதல்வர்களோடு தனிமை வாழ்க்கை நடத்தும் போதும், பிற்காலத்தில் போர்க்களத்தில் கர்ணனைத் தனியே சந்தித்துத் தான் அவனுக்குத் தாய் எனவும், பாண்டவர்கள் அவனுக்குச் சகோதரர்கள் எனவும் கூறி அவனைப் பாண்டவர் பக்கம் சேருமாறு கேட்கும் போதும், குந்தியின் மாசு மறுவற்ற தாய்மையுணர்ச்சி தெளிவாக அமைந்து விளக்கம் பெறுகிறது. இக்காவியத்தில், குந்திக்கு அடுத்தபடியாக இங்கே குணவிளக்கம் பெறுவதற்கு உரியவள் பாஞ்சாலி. பல்வேறு நிலைகளிலும் அவ்வவற்றிற்கேற்பப் பாஞ்சாலியின் குணப்போக்குச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. திருமண ஏற்பாடு, சுயம்வரம், இவைகளுக்கு முன் இருந்து கன்னிப்பெண் பாஞ்சாலிக்கும், துரியோதனன் தருமனுடனே சூதாடி உன்னை வென்றான், என்றபோது ‘தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா? தன்னை இழப்பதற்குமுன் என்னை இழந்தாரா?’ என்று உரிமைக் குரல் கொடுத்து உணர்ச்சியோடு கேள்வி கேட்கும் பாஞ்சாலிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு பாருங்கள்! துரியோதனன் அவையில் தான் இழிவு செய்யப்பட்டபோது, ‘இனி மனிதர் துணையால் நம் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது’ என்று உணர்ந்து தோன்றாத் துணையாகிய பரம்பொருளின் உதவியை நாடும் நிலையிலும் இவளுடைய அறிவுத் திறனையே காண்கிறோம். குந்தியைக் காட்டிலும் சிறப்பான வேறு ஒரு தகுதியும் பாஞ்சாலிக்கு எய்துகின்றது. குந்தியைப் போல் காவியத்தில் அங்கங்கே வந்து போகும் பாத்திரமாக இராமல் காவியம் முழுதும் 'தலைவி' என்ற இடத்தைப் பெறும் பேறு இவளுக்கு இருக்கிறது, பாரதம் பாண்டவர்களாகிய ஐவர்கள் காவியம் என்றால் பாஞ்சாலிதானே அதன் தலைவி? இந்த நோக்கில் பாஞ்சாலியின் குணசித்திர அமைதி பற்றி எவ்வளவு விவரித்தாலும் ஏற்கும். ஆனால் இது சுருக்கமான அமைப்புடைய முன்னுரை என்பது பற்றி இவ்வளவில் நிறுத்த வேண்டியிருக்கிறது. கெளரவர்களுக்குத் தாயாகிய காந்தாரியைப் பற்றிக் காவியத்திலிருந்து பொதுவாக அறிந்து கொள்ள முடிகின்றதே அல்லாமல் குணசித்திரம் என்ற முறையில் தெளிவாக விளங்குவதற்குரிய அவ்வளவிற்குப் பெரும் பங்கு இவளுக்கு இக்காவியத்தில் இல்லை. எனவே, குந்தியைப் போல ஒரு பெரும் பாத்திரமாகக் கொண்டு காந்தாரியைப் பற்றி விளக்குவதற்கு விவரங்கள் எவையும் இங்கே கிடையா. துரியோதனன் மனைவியாகிய பானுமதியைப் பற்றிச் சிறிதளவு கூறலாம். பாஞ்சாலியைப் போல வாழ்க்கைச் சோதனைகளையும் துயரங்களையும் அனுபவிக்கும் சந்தர்ப்பம் ஒன்றாயினும் இவளுக்கு நேரவில்லை. ஆகையால்தான் குணங்களால் தீமையற்ற, நன்மகளாக இருந்தும் இவளுடைய குணம் சிறப்பாகத் தோன்றுவதற்குரிய வாய்ப்பு இல்லாமலே கழிந்துவிட்டது. வஞ்சகக் கலப்பில்லாத தூய்மையான வெள்ளையுள்ளமும், பிறருக்குத் தீமை நினையாத எண்ண நலமும் பெற்றிருந்தும் இவளுடைய நலம் பெரிதும் பாராட்டிச் சித்திரிக்கப்பட படாமைக்கு இதைத் தவிர வேறெந்தப் பெரிய காரணமும் கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம். துரியோதன மன்னன் அரண்மனையில் இல்லாத ஒரு பொழுதில் அவன் மனைவி பானுமதி துரியோதனனுக்கு நெருங்கிய நண்பன் என்ற முறையுரிமை கொண்டு கர்ணனோடு சொக்கட்டான் விளையாடிக் கொண்டி ருந்தாள். விளையாட்டில் தன்னை மறந்து இலயித்துப் போய் ஈடுபட்டிருந்த கர்ணன் சிறிது நேரத்தில் துரியோதனன் அங்கே வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை . ஆனால் துரியோதனன் உள்ளே வருவதை அவன் மனைவி பானுமதி கண்டு கொண்டாள். கண்டவுடன் கணவனுக்குச் செய்ய வேண்டிய மரியாதை முறைப்படி எழுந்து நின்றாள். திடீரென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு அவள் எழுந்து நின்றது கண்ட கர்ணன் அவள் எதற்காக எழுந்து நிற்கிறாள் என்ற காரணம் விளங்காமல் மனத்தில் தவறாக எண்ணிக்கொண்டு அவளை உட்காரச் செய்யும் கருத்துடன் விளையாட்டு வெறியில் அவளைத் தொட்டு மேகலையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்து விட்டான். துரியோதனன் இதற்காகக் கர்ணனை மன்னித்து விட்டதோடு இதை ஒரு பெருங்குற்றமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதைப் பாரதம் விவரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் துரியோதனனுடைய பெருந்தன்மைக்கும் மேற்பட்ட பெருந்தன்மையாகப் பானுமதியின் சிறந்த கற்பு நிலையே விளக்கம் பெறக் காண்கின்றோம். இன்னும் சுபத்திரை, சித்திராங்கதை, இடிம்பி முதலிய வேறு பல பெண் பாத்திரங்களும் அக்காவியத்தின் ஓரோர் பகுதியில் பயின்று செல்கின்றனர். அருச்சுனனைக் காணாமலே அவனை எண்ணி எண்ணிக் காதலுணர்வு பெற்றுத் துறவியாக உருக்கொண்டு வந்திருக்கும் அவனிடமே, ‘அருச்சுனர் நலமா?’ - என்று கேட்கும் பேதமை நிறைந்த சுபத்திரையின் காதலிலும் ஒரு வகை அழகு இருக்கத்தான் இருக்கிறது. பாண்டியன் மகளாகப் பிறந்து பார்த்தனை மணந்து இன்புற்ற நிலையிலும் அவனைப் பிரிந்து துன்புறுகின்ற நிலையிலும் ஆகிய இரண்டு மாறுபட்ட நிலைகளிலுமே சித்திராங்கதையின் பற்றும் மெய்ம்மையும் பிறழாத காதலில் மனோ திட்டத்தின் கனிந்த நிலையைக் காண்பதற்கு முடிகின்றது. அரக்கியாகப் பிறந்து அரக்கனுக்குத் தங்கையாக வாழ்ந்தும் அண்ணனாகிய அரக்கனைக் கொன்ற பீமன் மேல் அன்புள்ளத்தோடு காதல் கொள்ளும் இடும்பியினுடைய குணப்போக்கு ஒரு தனி விந்தை. வன்மையும், கொடுமையும் உள்ள அன்பற்ற அரக்கி ஒருத்தி மென்மையும் காதலும் கொண்டு அன்பு செலுத்துபவளாக மாறும் விசித்திர நிலையை இடிம்பி இக்காவியத்தில் நமக்கு அளிக்கிறாள். பாரதக் கதையின் பரப்பை நோக்கினால் சாதாரணமான ஒரு சிறிய பாத்திரமே இடும்பி. ஆனாலும் தன்னுடைய சிறந்த குணசித்திரத் தோற்றத்தினால் மறக்க முடியாத ஓர் இடத்தை இக்காவியத்தில் அவள் பெற்றிருக்கின்றாள். ஆடவர், பெண்டிர் என்று இருவகையிலும் பாரதம் என்னும் காப்பியக் கடலிற் பயிலும் பாத்திர முத்துக்கள் எண்ணிலடங்காதவை. எண்ணிலடங்காத அந்த முத்துகளில் எல்லாவற்றையும் குளித்தெடுத்துக் கொணர்ந்து காட்டுவதற்குரிய வாய்ப்பும் விரிவும் இந்தச் சிறிய முன்னுரைக்குப் போதாது. மேலே தொடர்ந்து விவரிக்கப்படவிருக்கும் கதையின் விரைவான வசனப் போக்கிற்கு ஒரு முன் விளக்கமாக அமைந்தால் போதும் என்ற நோக்கத்தோடுதான், இந்தச் சிறு முன்னுரையும் கூட இங்கே எழுதப்பட்டது. பொன்னை, பொருளை, உணவை, உடையை, அனுபவிக்கப் பிறந்தவர் களைக் காட்டிலும் காவியத்தைச் சுவைக்கும் அனுபவத்திற்கு உரியவர்களாகப் பிறந்தவர்களே பெரும் பாக்கியசாலிகள். உலகின் வேறெந்த மகாபாக்கியங்களும் இந்த ஒரேயொரு பாக்கியத்திற்கு ஈடாக முடியாது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இத்தகைய உறுதிப் பொருள்களை விளக்கி இவை பற்றிய உணர்வை உண்டாக்குவதுதான் ஒவ்வோர் சாதாரணமான காவியத்துக்கும் நோக்கம் என்றால் பாரதம், இராமாயணம் போன்ற பெரிய இதிகாச காவியங்கள் இந்த உணர்வை உண்டாக்கத் தவறிவிடப் போவதில்லை. பிற காவியங்கள் உறுதிப் பொருளுணர்வை எவ்வளவு உண்டாக்க முடியுமோ அவ்வளவிற்கும் ஒருபடி விஞ்சி நின்று பாரதம் முதலியவை அதே வகை உணர்வை உண்டாக்குமே ஒழியக் குன்றிப்போகமாட்டா. இதிகாச காவியங்களின் உயர்ந்த குறிக்கோளே இந்த உணர்வை ஒவ்வொருவருக்கும் உண்டாக்க வேண்டும் என்பதே ஆகும். ஒரு நாட்டு மக்கள் பொருள் துறையில் வளம் பெற வேண்டுமானால் விளைவு, தொழில் முதலியவற்றைப் பெருக்கி உழைப்பை வளர்த்தால் போதும். வெளியாருடன் இதயங்கலந்து பழகுவது போலப் பழகாமற் பழகுகின்ற நாகரிக வளம் பெற வேண்டுமானால் சாதாரணமான பொது அறிவு மட்டும் பெற்றால் போதும். ஆனால் உள்ளத்தின் பண்பாடு வளம் பெற வேண்டும் என்றாலோ காவியங்கள் வேண்டும், கவிதைகள் வேண்டும், அவைகளை உணர முற்படும் உள்ளங்கள் வேண்டும். உணரத் தயங்காத உணர்வுகள் வேண்டும். அற நூல்களும் நீதி நூல்களும் உண்டாக்குகின்ற இதயப் பண்பாட்டினும் விரைவாகப் பெருகிய அளவில் காவியங்களே இதயப் பண்பாட்டை வளர்ப்பதற்கு முடியும். இது அனுபவம் மலரச் செய்கின்ற பேருண்மை. ‘பொய் சொல்லாதே பொய் சொல்லாதே!’ என்று சிறு குழந்தைக்கு நூறு முறை வாய் உபதேசம் செய்யும் வறண்ட முறையைக் கைவிட்டு ஒரே ஒரு முறை அரிச்சந்திரன் கதையை உருக்கமான முறையில் உள்ளத்தில் பதியும்படியாகச் சொன்னால் ‘பொய் பேசல் தீது’ என்ற உணர்வை எளிமையான முறையில் அழுத்தமாக ஏற்படுத்திவிட முடியும். இது உறுதி. இந்த உணர்வுதான் காவியத்தின் தலைசிறந்த குறிக்கோளாம். ‘ஐவர் காவியமாகிய’ பாரதக் கதையை எத்துணையோ முறை எழுத்திலும் பேச்சிலும் கண்டு அனுபவித்தவர்கள் தாம் நாம். பாரதமும், இராமாயணமும் பாரத நாட்டின் பரம்பரையான அநுபவச் செல்வங்கள் . இதிகாசமாக அலர்ந்த இணையற்ற இலக்கிய வடிவங்கள். அவற்றை எத்துணை முறைகள் எழுதினாலும் பேசினாலும் சுவையோ, உண்மைகளோ, நயங்குன்றப் போவதில்லை. வாடாத செந்தளிர்க் கற்பகத்தின் வைப்புகள் அவை. இங்கே விரியும் இந்த ஐவர் காவியம் இதயப் பண்பாட்டை மலரச் செய்ய வேண்டும் என்ற தூய குறிக்கோளின் விளைவு. இந்த விளைவுக்கு ஏற்படும் பயன்மிகுந்தால் அதுவே இத் தொடரின் மாபெரும் வெற்றி. பாரதத்தின் தருமனைப் போல் இல்லாவிடினும் வாழ்வில் ஒல்லும் வாய் எல்லாம் அறத்தைக் கைவிட்டு விடாமல் காக்கும் நல்ல உள்ளம் பெறுமாறு எல்லோரையும் தூண்டிச் செயற்படுத்தும் தூய பண்பையாவது இது நல்கியே தீரும்.

1. மூவர் தோற்றம்

அந்தி மகள் மேலை வாயிலில் வந்து செவ்வண்ணக் கோலங்களைப் பரப்பி உலகை அழகு மயமாகச் செய்து கொண்டிருந்த அந்த இன்பமிக்க மாலை நேரத்தில் வீட்டுமன் மாத்திரம் சோர்ந்த மனத்துடன் கங்கைக் கரையில் அமர்ந்திருத்தான். கங்கைப் பிரவாகத்தின் நீல நிற நீர்ப் பரப்பில் மேலை வானின் செந்நிற ஒளி மின்னி விளங்கும் அழகை அவன் கண்கள் காணவில்லை. சுற்றுப் புறத்தின் கவின்மிக்க எந்தக் காட்சியும் அவனைக் கவரவில்லை! தன்னை மறந்து தான் வீற்றிருக்கும் இடத்தை மறந்து உள்ளத்தோடு சிந்தனையில் ஒன்றிப் போயிருந்தான் அவன். அப்படி அவன் மனதை வாட்டிய அந்தச் சோகம் முற்றிய சிந்தனைதான் எதுவாக இருக்கும்? பிரம்மசரிய விரதத்தால் கவின் கொண்டு மின்னும் அவனது ஒளிமிக்க உடலில் நுழைந்து உடலை அணுக எந்தக் கவலைக்கும் துணிவு இருக்க முடியாதே? பின் ஏன் அவன் கமல வதனம் வாடியிருக்கிறது? கண்களில் அழகொளி இலகவில்லையே? ஏன்? கொடிய நோயால் தம்பி விசித்திர வீரியனின் மரணத்தைக் கண்ட அவன் அந்தத் துன்பத்தைக் கூடப் பொறுத்தான். ஆனால், இரண்டு பெண்களை மணந்து கொண்டு சந்திர வமிசத்திற்குச் சந்ததியைப் படைத் தளிக்காமலே இறந்து போன அவன் தீயூழை நினைக்கிற போது தான் வீட்டுமனுக்குத் துயரம் தாங்கவில்லை. நித்திய பிரம்மசாரியாகிய தான் சந்திரவமிசத்திற்காக இனி எதுவும் செய்ய முடியாதாகையினால், சந்திர வமிசம் தன்னோடு அழிந்து போகுமே - என்பதை நினைக்கவும் முடியாமல் தவித்தான் அவன். சிறிய தாயாகிய பரிமளகந்தியும் மகன் வீட்டுமனைப் போலவே இந்தத் தவிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். தன்னைப் போலவே அரண்மனையில் சிற்றன்னையும் சந்திர வமிசத்திற்கு நேர்ந்த இந்தப் பெருந்தீவினையை எண்ணிக் குமைத்து கொண்டிருக்கிறாள் என்பதை வீட்டுமன் நன்கு அறிவான். இளமை அழகு மாறாத நிலையில் கணவனை இழந்து மங்கலமின்றிக் கவல்கின்ற தம்பியின் மனைவியர்களான அம்பிகை, அம்பாலிகை இருவரையும் காண்கின்ற போதுகளில் எல்லாம் சந்திர வமிசம் குலக் கொழுந்தில்லாமல் ஏமாற்றப்பட்டு விட்டதே என்ற பயங்கர எண்ணந்தான் வீட்டுமனின் மனத்தில் உதிக்கும். வேதனையின் வடிவமே இந்த எண்ணந்தான்! அன்று காவையில் சிற்றன்னை அவனிடம் கூறிய வேறோர் முடிவு இடியோசை கேட்ட நாகம் எனத் திடுக்கிடச் செய்திருந்தது அவனை. தன் உயிரினும் சிறந்ததாக அவன் மேற்கொண்டிருந்த விரதத்தை அழித்துக் குலைப்பதாக இருந்தது அந்த முடிவு. கங்கையில் விழுந்து மாண்டாலும் மாளலாமே ஒழிய அதற்கு இணங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டான் அவன்.

“குலத்தைத் தொடரச் செய்வதற்கு மக்கட்பேறில்லாத நிலையில் மாண்டவன் மனைவியை அவனுடைய சகோதரன் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொண்டு வமிசத்தை வளர்க்கலாம்! இதை வேதங்களும் நீதி நூல்களும் அங்கீகரிக்கின்றன. நீயும் இந்த முறைப்படி நடந்து கொண்டால் தான் சந்திர வமிசம் தழைக்க முடியுமப்பா” என்று அவனுடைய சிற்றன்னையாகிய பரிமளகந்தி அவனை வேண்டிக் கொண்டாள்.

“நீங்கள் கூறுகின்ற இந்தச் செயலைச் செய்ய முடியாத விரதமுடையவனாக நான் இருக்கிறேன் தாயே! ஆகவே இதை மறுப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்! இத்தகைய நிலையிலே கணவனை இழந்த பெண்டிர் முனிவர்களால் மக்கட்பேறு அடையலாமென்ற வேறோர் முறை பரசுராமர் காலத்தில் ஏற்பட்டுள்ளது! முனிவர்கள் மூலமாக வேண்டுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்று அப்போதே சிற்றன்னைக்கு மறுமொழி கூறிவிட்டான் வீட்டுமன்.

“அப்படியானால் அதற்கும் ஒருவழி இருக்கிறது மகனே! பராசர முனிவரருளால் என் கன்னிப் பருவத்தில் நான் பெற்ற தெய்வீகப் புதல்வன் ஒருவன் இருக்கிறான்! அவன் இப்போது ‘வியாசன்’ என்னும் பெயருடன் நிகரில்லாத முனிபுங்கவனாக விளங்கி வருகிறான். அவனை அழைத்தால் நம் கருத்துப்படி செய்ய இசைந்து தன் அருள் வலிமையினால் விசித்திர விரியனின் மனைவியர் மக்கட்பேறு அடையும்படி செய்வான்! நீ என்ன நினைக்கிறாய்?..” என்று சிற்றன்னை மீண்டும் அவனைக் கேட்டாள்.

“நான் நினைப்பதற்கும் சொல்வதற்கும் இனி என்ன இருக்கிறது தாயே? வியாசர் திருவருளால் சந்திரவமிசம் வளர ஏதாவது வழி ஏற்படுமானால் அது நம்முடைய பெரும் பேறு ஆகும். தடையின்றித் தங்கள் கருத்துப்படியே செய்யுங்கள்” என்று வீட்டுமன் கூறினான்.

இதன் பின் மாலையில் கங்கைக் கரைக்கு வந்தபோது தான் மீண்டும் சிந்தனை அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அதையே தொடக்கத்தில் கண்டோம். உலகெங்கும் தம்முடைய அறிவு மனத்தைப் புனிதமான முறையில் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த மகாமுனிவர் அருள் புரிவார், என்ற நம்பிக்கையுடனே மாலைக் கடன்களை முடித்தான் வீட்டுமன். கடன்களை முடித்துக் கொண்டு அவன் அரண்மனைக்குப் புறப்படும்போது கங்கைக்கரை மெல்ல இருண்டு கொண்டிருந்தது. செல்லும் வழி மங்கிக் கொண்டிருந்தது. ஆனால் மனத்தில் மட்டும் நம்பிக்கைச் சுடர் சிறிது சிறிதாக ஒளி பெருக்கி வளர்ந்து கொண்டிருந்தது. பரிமளகந்தி வியாசரை அழைத்தாள். வியாசர் எல்லாப் பற்றுகளையும் துறந்த முனிவராயினும் பெற்றவள் அழைத்த அந்த அழைப்பை மறுக்கவோ, துறக்கவோ முடியவில்லை. அவர் பெற்றவளுக்கு முன் தோன்றினார். பரிமளகந்தி, சந்திரவமிசம் குலமுறையின்றித் தவிப்பதைக் கூறி அந்தத் தவிப்பு நீங்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு காலஞ்சென்ற விசித்திர வீரியனின் தேவியர்களாகிய அம்பிகை, அம்பாலிகை இருவரையும் அவர் வசம் ஒப்புவித்தாள் வியாசர் அருள் புரிந்தார் குருகுலக் கொழுந்து மூன்று தளிராகத் தழைத்து வளர்ந்தது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் என்று மூவரை வியாசரின் அருள் அளித்துச் சென்றது. திருதராட்டிரன் பிறவிக் குருடனாகவும் பாண்டு உடல் வெளுத்தவனாகவும் தோன்றியிருந்தனர், அறிவிலும் அழகிலும் சிறந்த புதல்வனாகத் தோன்றியவன் விதுரன் ஒருவனே! எவ்வாறானால் என்ன? ‘குரு குலக்கொடி வேரறுத்துப் போகவில்லை. தழைத்துப் படரத் தொடங்கி விட்டது - என்று திருப்தியுற்றனர் பரிமளகந்தியும் வீட்டுமனும்.

“காலம் வளர்ந்தது! வளர்ந்து வளர்ந்து பெருகியது. திருதராட்டிரன், பாண்டு, விதுரன் மூவரும் கவின்பெற்று விளங்கும் மூன்று மலைச்சிகரங்கள் போலப் புகழ்பூத்து வளரலாயினர். வீட்டுமன் கண்ணை காக்கும் இமை போல அந்த மூன்று குலக் கொழுந்துகளையும் போற்றி வளர்த்து வந்தான். கல்வி, கேள்வி, படைப்பயிற்சிகளில் அவர்களைத் தேர்ச்சி பெற்று வலிமையடையச் செய்வதற்காகத் தானே அவர்களுக்கு ஆசிரியனாக அமைந்தான். குருகுலத்தின் எதிர்கால நலம், எதிர்காலச் சிறப்பு ஆகிய யாவையும் அந்த மூவரால் தான் நிலை பெற்று வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு தான் வீட்டுமன் அவர்களை இவ்வாறு உருவாக்கலானான். இந்த உணர்ச்சிதான் தளர்ச்சியே குறுக்கிடாமல் அவனுக்கு ஊக்கமளித்த உணர்ச்சி. தகுந்த பருவம் வந்ததும் மூத்தவனாகிய திருதராட்டிரனுக்கு முடி சூட்டினான் வீட்டுமன். பாண்டுவை அவனுக்குச் சேனாதி பதியாக நியமித்தான். கடைசித்தம்பியாகிய விதுரனை அவனுடைய அறிவாற்றல்களுக்கேற்ற அமைச்சுத் தொழிலுக்குரியவனாக நியமித்தான். இவ்வளவும் செய்து முடித்தபின், திருதராட்டிரனுக்குத் திருமணத்தையும் விரைவில் முடித்துவிட்டால் நல்லதென்று தோன்றியது வீட்டுமனுக்கு. காந்தார நாட்டு மன்னன் மகள் காந்தாரியை அவனுக்கேற்ற மனைவியாகக் கருதித் தூதுவர்களை மணம் பேசி வருமாறு அனுப்பினான். திருதராட்டிரன் கண்ணில்லாதவன் என்ற உண்மை தெரிந்தவனாகையினால் காந்தார வேந்தன் அவனுக்குத் தன் மகளைக் கொடுப்பதற்குத் தயங்கினான். தன் தயக்கத்தை அவன் தன் மகளிடமே கூறியபோது, “கலங்காதீர்கள் அப்பா? விதி என்னை இந்த வழியில் தான் அழைக்கிறது போலும்! குருடராக இருந்தால் இருக்கட்டும்! நான் அவரையே மணந்து கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!” என்று காந்தாரி மறுமொழி தந்தாள். ‘மணத்திற்குச் சம்மதம்’ என்று தூதுவர்களிடம் கூறியனுப்பினான், காந்தாரமன்னன். விரைவில் காந்தாரிக்கும் திருதராட்டிரனுக்கும் மணம் முடிந்தது. ‘கணவனுக்கு இல்லாத கண்கள்’ எனக்கு மட்டும் எதற்கு? என்று கூறினவளாய் மணமான அன்றே தன் கண்களையும் திரையிட்டு இறுகக் கட்டி மறைத்துக் கொண்டாள் காந்தாரி. அவளுடைய இந்தக் கற்புத் திறத்தைக் கண்டு வியக்காதாரில்லை. அதியற்புதமான அழகும் நற்குணங்களும் படைத்த இந்த யுவதிக்கு இவ்வளவு இளம் பருவத்திலேயே தியாகமும், கற்புணர்ச்சியும் செறிந்த இந்த உள்ளம் எப்படி அமைந்தது?’ - என்று நாடு முழுவதும் அதிசயித்தது! சாதாரணமாக எவராலும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்து காட்டுகின்றவரிடம் ஒரு விதமான தெய்வீகக் கவர்ச்சி இயற்கையாகவே ஏற்படுகின்றது. காந்தாரியின் தியாகமும் அவளுக்கு இத்தகையதொரு கவர்ச்சியை அளித்திருந்தது. திருதராட்டிரனுக்குத் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாண்டுவின் திருமணத்தைப் பற்றிய சிந்தனை வீட்டுமனுக்கு ஏற்பட்டது. குந்திபோசமரபில் சூரன் என்னும் அரசனின் மகளாகிய ‘பிரதை’ (குந்தி ) என்பவளைப் பாண்டுவுக்கு மணமுடிக்கலாமென்று கருதினான் அவன். அதற்கு முன்பாகவே ‘பிரதை’யின் கன்னிப் பருவத்து வரலாறு ஒன்றை நாம் கண்டு விடுவோம். கதைப் போக்கிற்கு அவசியமான வரலாறு ஆகும் இது.

2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை

குந்தி போசர் அரண்மனையில் எழிலும் வனப்புமாக வளர்ந்துவந்த பிரதை, வளர்பிறைச் சந்திரன் கலை கலையாக வளர்ந்து முழுமை கனிவது போல நிறைவை நெருங்கிக் கொண்டி ருந்தாள். துள்ளித் திரிந்து ஓடியாடி விளையாடும்இளமைப் பருவத்தில் இளமயில் போலப் பழகி வந்தாள் அவள். இந்த நிலையில் தவ வலிமை மிக்கவராகிய துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசர் அரண்மனைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தார். முனிவர் வரவால் தன் விளையாடல்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு முழு நேரத்தையும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபடுத்தினாள் பிரதை.

“இவர் இங்கே தங்கியிருக்கின்ற வரையிலும் இவருக்குரிய பணிவிடைகள் எல்லாவற்றையும் நீயே செய்ய வேண்டும்! முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி யிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்  கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன்? எதற்காக? எப்படி? அந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது அவளுக்கே விளங்கவில்லை. மேலே முழு நிலவு! மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான்! செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும்! தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம்! பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி! உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப் பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ! நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே! இது அறமா? முறையா?” - என்று அவன் பிடியிலிருந்து விலகித் திமிறி ஒதுங்கினாள். அவள் இவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கவும், கதிரவனுடைய கண்கள் மேலும் சிவந்தன. அவன் ஆத்திரத்தோடு, “அப்படியானால் என்னை ஏன் வீணாக அழைத்தாய்? என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா? அல்லது உன் குலம் என்ன கதியடையும்? என்பதாவது உனக்குத் தெரியுமா? பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் உன்னைப் பெற்ற தந்தை இதை அறிந்து உன் மேல் வெறுப்புக் கொள்வானே என்று நீ பயப்பட வேண்டாம். என் வரவு உனக்கு நன்மையையே நல்கும்! இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய்! இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ? அவன் சட்டென்று தன் முகத்தை மேகத்திரளுக்குள் மறைத்துக் கொண்டான். மேகத்திலிருந்து, சந்திரன் மறுபடியும் விடுபட்டு வெளியே வந்த போது நிலா முற்றத்தில் கதிரவன் குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான். தான் வந்தது, குந்தியை மகிழ்வித்தது, அவளுக்கு மீண்டும் கன்னியாக வரங்கொடுத்தது, எல்லாம் வெறுங் கனவோ, என்றெண்ணும் படி அவ்வளவு வேகமாக விடை பெற்றுக்கொண்டு சென்றான் அவன். சஞ்சலம், சஞ்சாரம், சாரத்யம், முதலியவைகளையே தன் குணமாகக் கொண்ட காலம் மீண்டும் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. குந்தியின் வயிற்றில் ‘கர்ணன்’ பிறந்தான். தேவர்களும் அறியாத கொடைப் பண்பை நிரூபித்துக் காட்டுவான் போலத் தோன்றிய இந்தப் புதல்வன் செவிகளில் கவச குண்டலமும் ஈகை யொளி திகழும் முகமுமாக விளங்கினான். உலகும், குலமும், பழிக்கும் என அஞ்சிய குந்தி இந்தப் புதல்வனை ஒரு பேழையில் பொதிந்து வைத்துக் கங்கை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டாள். பேழை கங்கையிலே மிதந்து கொண்டே குழந்தையுடன் சென்றது. அதிரதன் என்னும் பெயரைப் பெற்ற ‘சூதநாயகன்’ என்கிற தேர்ப்பாகன் தன் மனைவி ‘ராதை’ என்பவளுடனே நீராடக் கங்கைக்கு வந்தான். குந்தி மிதக்கவிட்ட பேழையை இவர்கள் கண்டெடுத்தனர். வெகுநாட்களாக மக்கட்பேறின்றி வருந்தி வந்த இவர்கள் மனமகிழ்வோடு அழகும் அருளொளியும் ததும்பும் கர்ணனாகிய குழந்தையை இன்னானென்று தெரியாமலே வளர்த்து வந்தனர். இது தான் குந்தியின் கன்னிப் பருவத்தில் நடந்த மறைமுகமான கதை.

3. ஐவர் அவதாரம்

பாண்டுவின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டுமென்பதற்காக வீட்டுமன் அனுப்பிய தூதுவர்கள் குந்தி போச நாட்டை அடைந்து சூர மன்னனைச் சந்தித்தனர். குந்தியைப் பாண்டுவுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்குச் சூரன் உவகையோடு சம்மதித்தான். ஒருப்பட்டு இசைந்த கருத்தைத் துருவாசர் சென்று வீட்டுமனுக்குக் கூறினர். வீட்டுமன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஒரு குறிப்பிட்ட மங்கல நாளில் குந்திக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணமான புதிதில் மண இன்பத்தை இயற்கைச் சூழலில் நுகருவதற்காக இமயமலைச் சாரலிலுள்ள அழகிய பூம்பொழில்களில் பொழில் விளையாடக் கருதி மனைவியோடு பாண்டு புறப்பட்டான். இதற்குள் மந்திர ராசன் என்ற வேறொர் அரசனும் ‘மாத்திரி’ என்ற பெயரையுடைய தன் மகளையும் பாண்டுவுக்குத் தானாகவே விரும்பி மணமுடித்துக் கொடுத்திருந்தான். இரு மனைவியருடனும் இமயமலைச் சாரலுக்குச் சென்ற பாண்டு பொழுது போக்குக்காக வேட்டையாடவும் விரும்பினான். தங்கியிருந்த பொழிலில் குந்தியையும் மாத்திரியையும் விட்டுவிட்டு வில்லும் கணைப்புட்டிலும் சுமந்து வேட்டைக்குப் புறப்பட்டான் பாண்டு, வேட்டையாடுவதற்கு அருமையான பலவகை விலங்குகளை எளிமையாக வேட்டையாடி வீழ்த்தியபடியே மேலும் மேலும் பெருகுகின்ற வேட்டை விருப்பத்தோடு மலைச் சாரல் வழியே வில்லேந்திய கையனாய்ச் சென்று கொண்டிருந்தான் அவன். இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, தொலைவில் ஓர் ஆண்மானும், பெண்மானும் தம்முட்டி ஒன்று பட்டு இன்ப நிலையில் ஆழ்ந்திருக்கும் காட்சி அவன் கண்களுக்குத் தென்பட்டது. பாண்டுவின் போதாத வேளைதானோ என்னவோ, அந்த நிலையிலிருந்த அவ்விரண்டு மான் களையும் அவன் கண்டது? அறிவற்ற ஓர் ஆசை அவன் மனத்தில் எழுந்தது. அந்த மான்களை வேட்டையாடினால் என்ன என்ற ஆசை தான் அது! அவைகள் இருக்கின்ற ‘மயங்கிய நிலை’ குறி தப்பாமல் அம்பு செலுத்துவதற்கு ஏற்றபடி அமைந்திருந்தது. பாண்டுவின் மனத்தில் கருணை சிறிதளவும் எழவில்லை ! ஆசையே விஞ்சி நின்றது. கை வில்லை வளைத்தது! ‘அம்பு’ ஒன்று விர்ர்ர்ரென்று குறி வைத்த திசை நோக்கிப் பறந்த அடுத்த விநாடியில் அந்த ஆண் மான் அலறிக் கொண்டே கீழே சாய்ந்தது. சாய்ந்த மறுகணம் அங்கே மான் இல்லை. மார்பிலே குருதி ஒழுக ஒரு முனிவர் எழுந்து நின்றார். பாண்டு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டே திகைத்துப் போய் நின்றான். ‘தான் அம்பு எய்த மான் எங்கே? இந்த முனிவர் எப்படி வந்தார்? தம் அம்பு இவர் மார்பில் எப்படித் தைத்தது?’ என்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன.

அவனுடைய திகைப்பையும் வியப்பையும் போக்கு பவர் போல் ‘இந்தமன்’ என்னும் பெயரையுடைய அந்த முனிவர் ஆத்திரத்துடனே மொழியலானார்; ‘நானும் என் மனைவியும் ஆண்மானும் பெண்மானுமாக உருமாறி இன்பத்தில் ஈடுபட்டிருக்கும் போது என் மேல் அம்பு எய்து கொன்றாய் நீ! இந்தத் தகாத காரியத்தைச் செய்ததற்காக, ‘நீயும் உன் மனைவியை இன்பம் நாடி எப்போது தீண்டுகிறாயோ, அப்போதே இறந்து போவாய் இது என் சாபம்’ என்று இதைக் கூறியவுடன் கீழே விழுந்து இறந்து போனார் இந்தமன் முனிவர். பெண்மானாக உருமாறியிருந்த அவர் மனைவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் கணவன் பிரிவைப் பொறுக்காமல் காட்டுத் தீயிலே பாய்ந்து உயிர் துறந்தாள். சாபம் பெற்ற பின்பு தான் பாண்டுவுக்குத் தன் குற்றமும் அதில் நிறைந்திருந்த தீமையும் புலப்பட்டன. அவன் தன்னை உணர்ந்தான். ‘செய்த பாவம் எவ்வளவு பெரியது?’ என்பதையும் உணர்ந்தான். இந்தப் பாவத்திற்கு எப்படியாவது பரிகாரம் தேடியாகவேண்டும் என்று அவனுடைய மனச்சான்று அவனை வதைத்தது. தனக்கு மெய்யுணர்வைத் தோற்றுவித்தது அந்தச் சாபமேயாகையால் அது ஏற்பட்டதும் ஒரு வகையிலே நல்லதாகவே தோன்றியது அவனுக்கு. தன் பாவத்துக்குப் பரிகாரமாக, அரசாட்சி, அந்தஸ்து, படைத்தலைமைப் பதவி முதலிய எல்லாவற்றையும் துறந்து மனைவியரோடு வனத்திலேயே தங்கித் தவத்துறையில் ஈடுபடக் கருதினான். அதன்படியே செய்தான்!

படையை அடக்கி நடத்திய பாண்டு இப்போது தவத்திற்காகப் புலன்களை அடக்கி நடத்தப் பழகினான். அரசாட்சியின் ஒரு பிரிவில் தலைமை பூண்டிருந்தவன் இப்போது ஞானத்திற்குத் தலைமை பூண்டவனாயினன். அவனுடைய தவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெருகிச் சிறந்து வந்தது. இடையே, ‘மக்கட்பேறில்லாமையினாலே தன் வாழ்வு பயனற்றதாகி விடுமோ?’ - என்ற கவலையும் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்டது! திருதராட்டிரனுடைய மனைவியாகிய காந்தாரி வியாசருடைய அருளால் நூறு புதல்வர்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு கருக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அப்போது கேள்விப்பட்டிருந்ததும் இந்த ஏக்கத்தை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாயிற்று. குந்தியை அழைத்துக் காந்தாரி கருவுற்றிருக்கும் செய்தியையும் தன் ஏக்கத்தையும் கூறுத் தொடங்கினான் பாண்டு.

“ஆருயிர்க் காதலி! இந்த உலகில் அறிவறிந்த மக்களைப் பெறுவதும், அங்ஙனம் பெற்ற மக்களின் மழலை மொழிகளைக் கேட்பதும் போலச் சிறந்த இன்பம் வேறு எவற்றிலுமே இல்லை. ஆனால் என் தீவினையால் நானடைந்திருக்கின்ற சாபத்தை நினைத்துப் பார்த்தால் இந்தப் பிறவியில் மக்களைப் பெற்று மழலை கேட்கும் இன்பத்தை நான் அடையாமலே இறந்து விடுவேனோ? - என்று எனக்குத் தோன்றுகிறது. மக்கள் இன்பத்தை நான் அடைவதற்கு உன்னால் ஏதேனும் உதவி செய்ய இயலுமா குந்தி?” உள்ளம் உருகும் சொற்களால் குந்தியிடம் வேண்டிக் கொண்டான் பாண்டு. கணவனின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட போது தனக்குத் துர்வாசர் கற்பித்துச் சென்ற மந்திரத்தின் நினைவு ஏற்பட்டது குந்திக்கு. தான் சூரியனைச் சேர்ந்தது, கர்ணனைப் பெற்று ஆற்றிலே விட்டது, ஆகிய இரண்டு செய்திகளை மட்டும் கூறாமல், துருவாசருக்குப் பணிவிடை செய்தது தொடங்கி அவரிடம் வரம் பெற்றது வரை எல்லாச் செய்திகளையும் பாண்டுவிடம் விவரமாகக் கூறிவிட்டாள் அவள். குந்தி கூறியதைக் கேட்ட பாண்டு இழந்த பொருளை இரு மடங்காகத் திரும்பப் பெற்றார் போல மனமுவந்து, “இதற்கு நான் மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றேன் குந்தி, நீ விரும்புகின்ற தேவர்களை அழைத்து அவர்களுடன் கூடி எனக்கு மக்கட் செல்வத்தைக் கொடு! அது ஒன்றே எனக்கு வேண்டியது!” என்றான்.

குந்தி கணவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கித் தர்மராசனை மந்திரம் ஒலித்து அழைத்தாள். முன்பு முதன் முறை கதிரவன் தோன்றியது போல் இப்போது தருமன் அவள் முன்பு தோன்றினான். அவளுக்கு அருள் செய்த பின் தருமன் விடை பெற்றுச் சென்றான். உரிய காலத்தில் குந்தி கருக்கொண்டாள். கருமுற்றிப் பிறந்த புதல்வனே தருமபுத்திரன். ‘உலகையெல்லாம் தன் நேரிய ஆட்சி வன்மையினால் செங்கோல் நெறியிலே செலுத்தி ஆளவல்ல மன்னர் மன்னன் இவன்!’ - என்று கண்டவுடன் சொல்லும்படி விளங்கினான் இளந் தருமபுத்திரன். அவனிடம் அவ்வளவு தேஜஸ் நிறைந்து விளங்கியது! ‘குந்திக்கு இத்தகைய புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற செய்தியைக் கருக்கொண்டிருந்த காந்தாரி கேட்டாள். அளவுக்கதிகமான பொறாமை பயங்கரமானது. காரணமின்றிப் பிறரைப் பற்றி மனங் கொதித்தால் தனக்கே துன்பத்தை அடைய வேண்டியதுதான்.

இடைவிடாத பொறாமையினால் காந்தாரியின் கருச்சி சிதைந்து வெளிப்பட்டது. இதைக் கண்டு என்ன செய்வதென்றறியாமல் பலரும் அஞ்சியிருக்கும்போது வியாசர் வந்தார். சிதைந்த கருவை நூறு தாழிகளில் தனித்தனியே பிரித்து அடைத்துவிட்டு, ‘இவைகள் தாமாகவே முற்றிக் குழந்தைகளாக வெளிப்பட்டால் ஒழிய இடையே எவரும் தீண்டலாகாது! - என்று கூறிச் சென்றார் அவர். அதன்படியே தாழிகளைத் தீண்டாமல் தொலைவிலிருந்து குழந்தைகள் வெளிப்படும் நாளை அடைக்காக்கும் பாம்பைப் போல் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள் காந்தாரி. இங்கே அத்தின புரியில் இவ்வாறிருக்கும்போது தபோ வனத்தில் பாண்டு மீண்டும் குந்தியை அழைத்து மக்கட் பேற்றுக்கு வற்புறுத்தினான். குந்தி துர்வாசர் கற்பித்த மந்திரத்தைக் கூறி வாயு தேவனை அழைத்தாள். வாயுதேவனின் நல்வருளால் வலிமையிலும் ஆற்றலிலும் நிகரற்றவனாகிய வீமன் தோன்றினான். குந்தியும் பாண்டுவும் மனமுவந்தனர்.

வீமன் பிறந்த சில நாட்களில் அத்தினபுரியில் வியாசர் வைத்துவிட்டுச் சென்ற கருப்பத் தாழிகளுள் முதல் தாழியிலிருந்து குழந்தை வெளிப்பட்டது. இந்தக் குழந்தையே துரியோதனன். இதன் பிறந்த நாட் போதில் நல்லவர்கள் கண்டு மனம் வருந்தும்படியான பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பின்பு சில நாட்களில் தொடர்ந்து வரிசையாகத் தொண்ணூற்றொன்பது தாழிகளிலிருந்தும் துச்சாதனன் முதலியவர்கள் பிறந்தார்கள். இறுதியாகத் ‘துச்சனை’ என்னும் பெண்ணொருத்தியும் பிறந்தாள். புதல்வர்கள் நூற்றுவராலும் பெண் ஒருத்தியாலும் திருதராட்டிரனும் காந்தாரியும் இறும்பூதடைந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மூன்றாவதாக மீண்டும் பாண்டு விரும்பியபடியே குந்தி இந்திரனை அழைத்து அவனருளால் அருச்சுனனைப் பெற்றாள். பிறந்த காலத்தில் பங்குனன் என்னும் பெயர் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. தன் மனைவியரில் குந்திக்கு மக்கள் மூவர் பிறந்திருந்தும் மாத்திரி மக்களின்றி வருந்துவதைக் கண்டு பாண்டு, “குந்தி! உனக்கு துர்வாசர் கற்பித்த மந்திரத்தை நீ மாத்திரிக்கும் கற்பித்து அவளும் மக்கட்பேறு அடையுமாறு செய்!” என்று அன்புடன் குந்தியை வேண்டிக் கொண்டான்.

கணவனுடைய வேண்டுகோள்படி துர்வாசர் தனக்களித்த மந்திரத்தை மாத்திரிக்குக் கூறினாள் குந்தி. அந்த மந்திரத்தைக் கொண்டு கதிரவன் புதல்வராகிய அசுவினி தேவர்கள் இருவரையும் தனித்தனியே இருமுறை அழைத்து அவர்களருளால் நகுல, சகாதேவர்களைப் பெற்றாள் மாத்திரி. புதல்வர்கள் ஐவரை அடைந்த பாண்டு தான் செய்து வந்து தவத்திற்கே பயனைப் பெற்றவன் போல உள்ளம் உவந்தான். பாண்டு, குந்தி, மாத்திரி ஆகியவர்கள் மனத்தில் மகிழ்ச்சி வளர்ந்ததைப் போலவே பாண்டவர்கள் ஐவரும் வளருங் குருத்து எனக் கொழித்து வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் முனிவர்களைக் கொண்டு குடுமி களைமங்கலமும் முந்நூல் மங்கலமும் செய்வித்துப் புதல்வர்களைக் கலைப் பயிற்சி மேற்கொள்வதற்கேற்றவர்களாக்கினான். தபோவனத்து வாழ்க்கையின் இனிய சூழ்நிலையில் முனிவர்களாகிய ஆசிரியர்கள் கற்பித்த பலவகைக் கலைகளிலும் தேர்ந்து திகழ்ந்தனர் பாண்டவர்.

4. பாண்டுவின் மரணம்

தீவினை எவரை அணுகினாலும் சரி, சொல்லிக் கொண்டு அணுகுவதில்லை. கண்ணுக்குத் தோற்றாமல் விளைவு நெருங்குகிறது வினை. பாண்டுவின் வினையும் இப்படித்தான் அவனை நெருங்கியது. வினைக்கும் விதிக்கும் முன்னால் மனிதன் எம்மாத்திரம்? அப்போது வசந்தகாலம்! தபோவனத்தைச் சுற்றி வசந்த கால எழில் மனோரம்யமாகப் பரவியிருந்தது. மரங்களின் பசுமைப் பரப்பிற்கு நடு நடுவே செவ்வண்ண மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. தென்றல் மனோகரமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சூழ்நிலை, பாண்டு மான் தோலை விரித்து அமர்ந்து கொண்டிருந்தான்.

ஆசிரம வாசலில் மாத்திரி நீராடி விட்டுக் கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் நின்று கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்த நிலை கண்டோர் காமுறத்தக்க கவர்ச்சியினதாக இருந்த்து. தவத்துக்காக அமர்ந்து கொண்டிருந்த பாண்டு, கண்கள் இமையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், நீராடி முடிந்த நிலையில் கடைந்தெடுத்தவை போன்ற அவளுடைய அங்கங்கள் ஓளி நிறைந்து தோன்றிக் காணும் கண்களை வசீகரித்தன. தோகை விரித்தாடும் இளமயில் போல் அவள் தன்னை மறந்த அவசத்துடன் கூந்தலைக் கோதிக் கொண்டேயிருந்தாள். பாண்டுவின் மனத்தில் அவளுடைய இந்த மோகனமான தோற்றம் ஆசைத் தீயை மூட்டியது. அங்குசத்தையும் பாகனையும் மீறிக் கொண்டு மதத்தால் கொழுத்து ஓடும் யானையைப் போலத் தவத்தையும் ஒழுக்கத்தையும் மீறிக் கொண்டு அவன் மனம் மோகவெறியில் ஆழ்ந்தது. மாத்திரியின் குமுதச் செவ்விதழ்களும், கொஞ்சும் கிளி மொழியும் அவன் தவத்தை அபகரித்தன. அவன் மான் தோலிலிருந்து எழுந்தான். தவத்தை மறந்தான். தணிக்க முடியாத ஆசை வெறியால் இந்த முனிவரின் சாபத்தையும் மறந்து மாத்திரியை அணுகினான் அவன். அடுத்த வினாடி மாத்திரி அவன் கையில் விளையாட்டுப் பாவையாக மாறினாள். அவன் கரங்கள் ஆசை தீர அவளைத் தழுவி முயங்கின. அதே நேரத்தில் சரியாகத் தொலைவில் எங்கோ ஓர் ஆந்தை பயங்கரமாக ஒரு முறை அலறி ஓய்ந்தது. முயங்கிய பாண்டுவின் கரங்கள் சோர்ந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது. கை கால்கள் ஓய்ந்து கொண்டு வந்தன. சிறிது சிறிதாக உணர்வு ஒடுங்கிக் கொண்டே வந்தது. மாத்திரி ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் உடல் வேரற்ற மரம் போலக் கீழே சாய்ந்தது! அந்த உடலிலிருந்து உயிர் நீங்கிவிட்டது.

முனிவரின் சாபத்திற்கு வெற்றி பாண்டுவின் ஆசைக்குத் தோல்வி! மாத்திரி கதறி ஓலமிட்டு அழுதாள்; அலறினாள்; அரற்றினாள். குந்தியும் புதல்வர்களும் அவள் அலறலைக் கேட்டு ஓடி வந்தனர். பாண்டுவின் திடீர் மரணம் அவர்களையும் கதறியழச் செய்தது. எல்லோரையும் அழவைத்த விதி எங்கோ தனிமையில் எவரும் காணாதபடி பாண்டுவை, தான் வென்றுவிட்டதாகச் சிரித்துக் கொண்டிருந்தது! இவர்கள் அழுதார்கள்! விதி சிரித்தது ! இவர்களுடைய அழு குரலைக் கேட்டுத் தபோவனத்தைச் சேர்ந்த மற்ற முனிவர்களும் வந்து கூடினார்கள். குந்தி, மாத்திரி, பாண்டவர்கள் ஆகியோர்க்கு அந்த முனிவர்கள் ஆறுதல் கூறினர். புதல்வர்களைக் கொண்டு பாண்டுவின் அந்திமக் கிரியைகளை நிறைவேற்றினர். கணவன் இறக்கத் தான் காரணமாகியதனால் மாத்திரி, தானும் ஈமச் சிதையில் விழுந்து கணவனுடனேயே விண்ணுலகு எய்தினாள்.

‘புதல்வர்களைக் காத்துய்க்க வேண்டும்’ என்ற கடமையை மேற்கொண்ட குந்தி மனத்தைக் கல்லாகச் செய்து பொறுத்துக் கொண்டவளாய் இவ்வுலகில் தங்கினாள். பாண்டவர்கள் ஐவரும் தாயாலும் காசிபர் முதலாகிய தபோவனத்து முனிவர்களாலும் ஆறுதலும் தேறுதலும் பெற்றுத் தந்தையிழந்த துயரத்தை மறந்து வந்தனர். பாண்டுவுக்கும் மாத்திரிக்கும், செய்ய வேண்டிய கிரியைகளை யெல்லாம் முடித்த பின்பும் குந்தியும் பாண்டவர்களும் துயரம் நிறைந்த வருத்தச் சின்னமாகத் தோன்றும் அந்த தபோவனத்தில் தங்கியிருப்பது நல்லதல்ல - என்று எண்ணினர் அங்கிருந்த மற்ற முனிவர்கள். வருத்தம் நிகழ்வதற்கு இடமாக அமைந்தது அந்தத் தபோவனம். இனியும் அங்கே தங்குவதனால் அவர்களுடைய வருத்தம் வளரலாமே தவிரக் குறைய முடியாது. ஆகையால் குந்தியும் பாண்டவர்களும் வருத்தத்தை மறந்து ஆறுதல் பெற வேண்டுமானால் தங்கள் உறவினர்களோடு அத்தினாபுரியிற் சென்று தங்கியிருப்பதே சிறந்தது என்று முடிவு செய்தனர் தபோவனத்தில் உள்ளோர்.

காசியர் முதலிய முனிவர்கள் குந்தியையும் பாண்டவர் களையும் தலைநகரமாகிய அத்தினாபுரிக்கு அழைத்துக் கொண்டு வந்து திருதராட்டிர மன்னனிடம் விட்டு விட்டுச் சென்றனர். திருதராட்டிரன் தம்பியின் புதல்வர்களையும் மனைவியையும் கண்டு அவன் மறைவிற்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கினான். தன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய தம்பியின் புதல்வர்களை மார்புறத் தழுவி மகிழ்ந்த காட்சி திருதராட்டிரனது பாசத்தை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருந்தது. பாட்டனாகிய ‘வீட்டுமன்’ சிறிய தந்தையாகிய விதுரன் முதலியோரும் பாண்டவர்களையும் ஆதரவும் ஆறுதலும் கூறிப் போற்றி வரவேற்றனர். ஐவரும் நூற்றுவரும் சகோதர பாசத்துடனே நெருங்கிப் பழகினர். ஒரே பொய்கையில் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் நெருக்கமாக மலர்ந்து கொழித்து வளர்ந்தாற் போலப் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்புடன் நேயம் பெருக்கி வாழ்ந்தனர். பெருகி வளர்ந்து வந்த இந்த நட்புப் பிற்கால வெறுப்பிற்குக் காரணமாக அமைந்ததுவோ என்னவோ?

பாண்டவர்களும் குந்தியும் இவ்வாறு அத்தினாபுரியில் தங்கியிருந்தபோது குந்திபோச நாட்டுச் சூரமன்னனுக்குத் தன் மகளின் நாயகனாகிய பாண்டு இறந்து போன செய்தி எட்டியது. தன் மகளுக்கு நேர்ந்த இந்த அமங்கல நிகழ்ச்சிக்காகப் பெரிதும் கலங்கினான் அவன். அவனும் குந்திபோசர்களைச் சேர்ந்த ஏனையோரும் பேரர்களாகிய பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறுவதற்காக அத்தினாபுரிக்கு வந்து சேர்ந்தனர். யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறைமைக்காகப் பலராமனும் கண்ணனும் கூட வந்து தங்கி ஆறுதலுரைத்தனர். தந்தையை இழந்து கவலையில் ஆழ்ந்து போயிருந்த பாண்டவர்கள் ஐவரும் இவர்கள் வரவால் பெரிதும் மனந்தேறினார்கள்.

பாண்டவர்கள் பெற வேண்டிய செல்வம், ஆட்சியுரிமை முதலியவற்றையும் அவர்களுக்கு முறைப்படி பகுத்தளிப்பதற்குரிய முயற்சியைக் கண்ணன், பலராமன், குந்தி போசகர்கள் முதலிய இவர்கள் மேற்கொண்டனர். தண்ணீர்ப் பெருக்கோடு தண்ணீர்ப் பெருக்கு ஒன்று பட்டுக் கலந்தது போல இவர்கள் யாவரும் ஒன்று பட்டு அத்தினபுரியில் உவந்திருந்த நிலை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களுக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றுப் போற்றிப் பேணுவதிலேயே நேரமெல்லாம் கழிந்தது. பாண்டவர்க்கு வாழ்நாள் முழுவதும் கண்ணபிரானுடைய அனுதாபமும் உதவிகளும் கிடைப்பதற்கு இந்த முதல் சந்திப்புப் பெரிதும் பயன்பட்டது. சில நாட்கள் தங்கியிருந்த பின்னர் குந்தி போசர்களும், கண்ணன், பலராமன் முதலியவர்களும் புறப்பட்டு விடை பெற்றுக் கொண்டு தத்தம் நாடு சென்றனர். கருடனுக்கு அஞ்சித் தளரும் பாம்புகள் போலப் பாண்டவர்களை நோக்கத் துரியோதனாதியர் தளர்ந்தவர்களாகத் தென்பட்டனர். பாண்டவர். கல்வியாலும் வீரத்தாலும் நாள்தோறும் சிறப்புற்று வாழத் தலைப்பட்டனர். அவர்கட்கு முன் கெளரவர், மதிக்கு முன் மின்மினி யாயினர்.

5. சோதரர் சூழ்ச்சிகள்

இளமைப் பருவத்துப் பழக்க வழக்கங்கள், நட்பு முதலியன யாவும் அடியிலிருந்து கரும்பு தின்பதைப் போன்றவை. அடிக்கரும்பின் கணுக்களிலிருந்து மேலே மேலே சுவைக்கும் போது உவர்ப்புத் தென்படுகிறதல்லவா? தந்தையின் மரணத்திற்குப் பின்பு பாண்டவர்கள் அத்தினாபுரிக்கு வந்து துரியோதனாதியர்களுடன் கலந்து பழகிய நட்பும் வளர வளரக் கசப்பையே அளித்தது. தேர்ப்பாகன் சூதநாயகன் ஆற்றில் கண்டெடுத்து வளர்த்து வந்த கர்ணனும் துரியோதனாதியர்களோடு சேர்ந்து அவர்கட்கு உயிர் நண்பனானான். சுபல நாட்டு மன்னன் துரியோதனாதியர் தாயாகிய காந்தாரிக்கு உறவினன். எனவே சுபல் மன்னனின் புதல்வன் சகுனியும் அத்தினபுரியில் வந்து தங்கித் துரியோதனாதியரோடு நெருங்கிப் பழகலானான்.

கர்ணன், சகுனி என்ற இவ்விருவரது புதிய பழக்கத்தால் தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பொறாமை தலைப்பட்டது. நட்பிலே பிளவு என்பது பொறாமை பகைமை இவைகளின் பிறப்பு ஆகும். மாங்காய் காம்போடு பொருந்தியிருக்கும் போது பால் வடிவதில்லை. காம்பிலிருந்து அதைத் தனியே பிரிக்கும் போது பால் வடியாமலிருப்பதில்லை. பொறாமைக்கும் பிளவுதான் காரணம். சகுனியும் கர்ணனுமாக நூற்றுவர் மனத்தைப் பாண்டவர்களிடமிருந்து தனியே பிரித்து விட்டனர். மனங்களின் இந்தப் பிரிவில் எழுந்த குரூரமான சூழ்ச்சிகள் ஒன்றா இரண்டா? பல சூழ்ச்சிகள் எழுந்தன. வானவிளிம்பை அளாவி நிற்கும் உயரமான மலைச்சிகரம் போலச் சத்தியத்தையும், தருமத்தையும் போற்றி உயர்வு பெற்று விளங்கும் தருமன், வல்லமையால் உலகையே வெல்லும் உடலும், உள்ளமும் ஊக்கமும் பெற்ற வீமன், சிந்தனை, செயல், அழகு, ஆண்மை, இவற்றில் நிகரின்றி நிற்கும் விஜயன் என இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் உன்னத நிலை பெற்றுத் தோன்றும் பாண்டவர்களை எதிர்த்துப் பொறாமை கொள்வது கெளரவர்களுக்கு எளிமையான இயல்பாகத் தோற்றியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தை தோற்றுவித்தவன் கர்ணன் வளர்த்து முதிரச் செய்தவன் சகுனி. இதன் விளைவு?... பாண்டவர்களை எந்தெந்த வழியில் எல்லாம் துன்புறுத்த முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் துன்புறுத்துவது என்ற பகைமை எண்ணம் கெளரவர் மனத்தில் எழுந்தது. ‘காளான்‘ ஒரே நாளில் முளைத்து வளர்ந்து முழு வளர்ச்சியும் பெற்று விடுகிறது. ஆனால் கடம்ப மரம் அப்படி வளர முடிகின்றதா என்ன? நல்ல எண்ணங்களைக் காட்டிலும் தீய எண்ணங்களே விரைவில் வளர்ந்து வளம் பெற்று விடுகின்றன. இது உலகியல்பு.

பாண்டவர்களின் முழு ஆற்றலும் பொருந்தி நிறைந்திருப்பது வீமனிடத்தில் தான் என்பதை நன்கு அறிந்து கொண்ட துரியோதனாதியர் தங்கள் சூழ்ச்சி வலையை எடுத்த எடுப்பில் வீமன் மேலே விரித்தனர். கெளரவர்கள் மனத்தில் அமைதியும் இன்பமும் நிரம்பியிருந்த ஒரு நாள் இது நிகழ்ந்தது. புயலை எதிர்பார்த்து நின்ற அமைதி அது! அழிவை எண்ணி இறுமாந்து கொண்ட இன்பம் அது! அவர்கள் பாண்டவர்களை அணுகி, “இன்றைய பொழுதை இன்பமாகக் கழிப்போம் ... கங்கையாற்றின் மனோரம்மியமான நீரலைகளில் நாம் நீந்தி விளையாடி மகிழலாம்! நீங்களும் வரவேண்டும் சோதரர்களே! என்று அன்பொழுகப் பேசுவது போல் நடித்து அழைத்தனர். வஞ்சகம் அறியாத பாண்டவர்கள் வருவதற்கு மனமிசைந்து கெளரவர்களோடு கங்கைக் கரைக்குப் புறப்பட்டனர். கங்கைக்கரை.. பனிமலைப் படிவங்களிலே தவழ்ந்து வளர்ந்து கன்னிப்பருவ மெய்திய கங்கைச் செல்வி கடலாகிய காதலனை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். மோகனமான நீள அலைக்கரங்களை நீட்டிப் பாவசரீரங்களை நீராட அழைப்பது போல இருந்தது, தன்னுடைய நீர்த்தரங் கங்களால் அவள் செய்து கொண்டிருந்த சலனம். கெளரவர்களும் பாண்டவர்களும் நீர் விளையாடலுக்காக நதியில் இறங்கினார்கள்.

தொடக்கத்திலேயே துரியோதனனுக்கும் வீமனுக்கும் நீந்துவதில் போட்டி ஏற்பட்டது. தங்களுக்குள் செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின் படி பாண்டவர்களை அன்று எப்படியும் துன்பமும் அவமானமும் அடையும் படி செய்ய வேண்டும் - என்று முனைந்தனர் துரியோதனாதியர். சுழித்துச் சுழித்து ஓடிய கங்கை நங்கை அவர்களுடைய இந்த நிறைவேற முடியாத முயற்சியைக் கண்டு தனக்குள் மோனப் புன்னகை செய்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. விதி என்பதோ அல்லது இயற்கை என்பதோ, தவறிக் கூட அநீதிக்குத் துணை செய்வதில்லை. நீதிக்கும் அநீதிக்கும் கங்கையாற்றிலேயே ஒரு போராட்டம் ஏற்பட்டுவிட்டதோ? என்று சொல்லும்படி வெகுநேரம் கெளரவர்களும் பாண்டவர்களும் ‘நீந்துதல்’ என்ற போரை நடத்தினர். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதிபதியைப் போல அமைதியாக இந்தப் பொறாமைப் போரைக் கண்டுகொண்டிருந்தாள் கங்கை நங்கை. உலகில் அறத்தின் துணை யார் பக்கமோ அங்கே தான் வெற்றியின் துணையும் இருக்கும். அவமதிப்பைச் செய்ய நினைத்தவர்கள் அவமதிப்பை அடைந்தார்கள். தோல்வியைப் பாண்டவர்களுக்கு உண்டாக்கத் திட்டமிட்டவர்கள் தாமே அதை அடைந்தனர். வீமனைத் தலைகுனியச் செய்ய வேண்டும் என்று கருதிய துரியோதனன் தானே தலைகுனியும்படி ஆகியது.

பொறாமைக்காரர்களின் தோல்வியால் பொறாமை தானே வளரும்? கங்கைக் கரையில் நீர் விளையாட்டு முடிந்ததும் யாவரும் பசி தீர உண்டனர். பின் ஓய்வு கொண்டனர். மாலையில் மாளிகைகளுக்குத் திரும்பினர். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்னும் நால்வருக்கு மட்டும் தோல்வியால் விளைந்த மனத் தவிப்பு அடக்க முடியாமல் குமுறிக் கொண்டிருந்தது. இருண்டு குமுறிய அவர்கள் இதயத்தின் இருட்டைத் தன்னோடு ஒப்பு நோக்கிக் காண வந்தது போல இரவும் வந்தது. பகலில் மிகுந்த நேரம் நீரில் விளையாடிக் களைத்துப் போயிருந்ததனால் பாண்டவர்கள் முன்பே உறங்கச் சென்றுவிட்டார்கள். கெளரவர்களிலும் துரியோதனன் முதலிய நான்கு பேர்களைத் தவிர ஏனையோர் உறங்கச் சென்றிருந்தனர். பொறாமையாலும் பழிவாங்கும் எண்ணத்தினாலும் இந்த நால்வருக்கும் மட்டும் உறக்கம் வரவில்லை. “வீமனை எந்தவிதத்திலாவது பழி தீர்த்துக் கொண்டாலொழிய என் மனத்திற்கு அமைதி இல்லை“ - என்றான் துரியோதனன்.

“அது தான் அண்ணா என் எண்ணமும் அந்த முரடனுக்குச் சரியானபடி பாடங்கற்பிக்க வேண்டும்” - என்றான் துச்சாதனன். “இன்றே இப்போதே இந்த இருளிலேயே அந்தப் பழியை நாம் தீர்த்துக் கொள்ளத் தவறக் கூடாது” - என்றான் கர்ணன். அதுவரை சிந்தனையில் ஆழ்ந்திருந்த சகுனி அவர்கள் மூவரையும் அருகில் அழைத்து, “வீமனைப் பழிவாங்குவதற்கு நான் இதுவரை எண்ணி முடிவு செய்த திட்டம் இது” - என்று அதை அவர்களிடம் காதோடு காதாகக் கூறினான். சகுனி கூறிய சூழ்ச்சியைக் கேட்டதும் மற்ற மூவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். உடனே அதை நிறைவேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டார்கள் அவர்கள்.

சலனமற்று அமைதி திகழும் இரவு. எங்கும் செறிந்த கருக்கிருட்டு. வீமனின் பள்ளியறை, பகலிலே கங்கை நீரில் ஆடி விளையாடிய அலுப்புத் தீர ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தான் வீமன். கட்டிலில் படுத்திருந்த அவள் மூச்சுவிடும் ஒலியைத் தவிர வேறு ஒலி அங்கே இல்லை . தன் குகையிலே சுதந்திரமாக உறங்குகிற சிங்கத்தோடு ஒப்பிடும்படியாகத் தோன்றியது அவன் உறங்கும் நிலை. உறங்கும் சிங்கத்தின் குகைக்குள்ளே பதுங்கிப் பதுங்கி நுழையும் குள்ளநரிகளைப் போலத் துரியோதனன் முதலிய நால்வரும் கையில் கயிற்றுச் சுருள்களுடன் வீமனின் பள்ளியறைக்குள் நுழைந்தனர். வீமனோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழமாக இலயித்துப் போயிருந்தான். வந்த நால்வரும் தாங்கள் கொண்டு வந்திருந்த கயிறுகளால் கட்டி லோடு கட்டிலாக வீமனை இறுக்கிக் பிணித்தனர். அவன் அப்போதும் உறக்கம் நீங்கி விழித்துக் கொள்ளவில்லை. கட்டிலோடு அவனைத் தூக்கிக் கொண்டு கங்கையை நோக்கி நடந்தனர். அவர்களுடைய இந்த வஞ்சகச் செயலுக்குத் துணை செய்வது போல இரவின் தனிமையும் அமைதியும் வேறு பொருந்தியிருந்தன. தடுப்பதற்கு எவருமில்லை. சதி செய்யும் நினைவோடு விரைந்தனர்.

வீமன் கட்டிலோடு, பொங்கி நுரைத்துப் பாயும் கங்கை வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டான். அமுதம் கடையக் கடல் புகுந்த மந்தர மலையோ என்றெண்ணும்படி இருந்தது, வீமனை அவர்கள் கங்கையில் இட்ட காரியம். வீமனை இவ்வாறு வீழ்த்திவிட்டுப் போகும் போதே துரியோதனன் முதலியோர்க்கு வேறு ஒரு சந்தேகமும் உடனெழுந்தது. ஒரு வேளை வீமன் பிழைத்தெழுந்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ - என்று அஞ்சினர். அவன் பிழைத்துக் கரையேறி வந்தாலும் அவனை அடித்துப் புடைத்துக் கொன்றுவிட வேண்டுமென்று நான்கு கொழுத்த வீரர்களையும் கங்கைக் கரையில் இருளில் ஒளிந்திருக்குமாறு செய்து விட்டு அதன் பின்பே அரண்மனைக்குத் திரும்பினர். அவர்கள் நினைத்தபடியே வீமன் கரையேறிப் பிழைத்து வந்தது மெய்தான்! தண்ணீரின் குளிர்ச்சி அவனுடைய உறக்கத்தைக் சுலைத்தது. உடல் கட்டிலுடனே பிணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மூச்சை அடக்கி அழுத்தமாக வெளியிட்டான் வீமன், கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து சிதறின. வீமன் நீந்திக் கரையேறினான். கரையில் துரியோதனன் முதலியோரால் ஏவப்பட்டிருந்த தடியர்கள் நாலு பேரும் வீமன் மேல் பாய்ந்தனர். வீமனை அவர்கள் புடைத்துக் கொல்ல வேண்டுமென்பது துரியோதனனுடைய ஏற்பாடு. ஆனால் நிகழ்ந்தது என்னவோ நேர்மாறான நிகழ்ச்சி. வீமன்தான் அவர்களை அடித்துப் புடைத்து வீழ்த்திவிட்டு இரவோடு இரவாக மாளிகைக்கு திரும்பினான். தன்னைக் கொல்லுவதற்கு முயலும் சூழ்ச்சிக்காரர்கள் யாவர் என்பதை அவன் அறிந்து கொண்டான்.

ஆயினும் சூழ்ச்சிக்கு ஆளாவது போல நடித்து அதை வெல்லுவது தான் உண்மையான திறமை என்று தெரிந்து கொண்ட வீமன் வெளிப்படையாக ஏதுமறியாதவன் போல அமைதியாக இருந்தான். மற்றோர் நாள் வீமனைக் கொல்வதற்காக அவன் இருக்குமிடத்தில் அவனுக்குத் தெரியாமல் நச்சுப் பாம்புகளை நிறைத்து வைத்திருந்தனர். வீமன் இந்த சூழ்ச்சியை அறிந்தும் தன் இருக்கையை அடைந்தான். முசுட்டுப் பூச்சிகளைக் கையால் நசுக்கிக் கொல்லுவது போல் வஞ்சகர்கள் இட்டுவைத்த நச்சுப் பாம்புகளைச் சிதைத்துக் கொன்றான். இதன் பின் மீண்டும் வீமனையும் மற்றவர்களையும் கங்கைக்கு நீராட வருமாறு ஒரு நாள் துரியோதனாதியர்கள் அழைத்தனர். கங்கையாற்றில் இடையிடையே கழுக்களை (ஈட்டிகளைப் போவ நுனிப் பகுதி கூர்மையான ஒரு வகை ஆயுதங்கள்) இட்டு வைத்து வீமனை அந்த இடங்களிலே பாயுமாறு செய்து, கொல்ல வேண்டுமென்று இம் முறை துரியோதனாதியர் சூழ்ச்சி செய்திருந்தனர். இதற்குப் பாண்டவர்களை அழைத்தபோதே ‘வீமனின் அழிவு’ ஒன்றே துரியோதனாதியர்களின் நோக்கமாக இருந்தது. சூதுவாதறியாத பாண்டவர் சம்மதித்து நீராடச் சென்றனர். நீராடும் போது கழுக்களை நட்டுவைத்த இடங்களை முன்பே தெரிந்து கொண்டிருந்த கெளரவர்கள் ஜாக்கிரதையாக வேறு பகுதிகளில் ஒதுங்கி நீராடினர், வீமன் கழுக்களில் பாய்ந்து அழிந்து விடுவானோ என்று அஞ்சத்தக்க நிலை ஏற்பட்டுவிட்டது. நல்ல வேளையாக இறையருள் துணை செய்தது. எந்தெந்த இடங்களில் கழுக்கள் நாட்டப்பட்டி ருந்தனவோ, அங்கே கண்ணபிரான் வண்டுகளாகத் தோன்றி வீமனைக் காப்பாற்றினார். வீமன் கழுக்கள் இருந்த இடங்களை விலக்கி விட்டுத் திறமாக நீராடிக் கரையேறினான். தீய உள்ளம் படைத்த துரியோதனாதியர் இம்முறையும் ஏமாற்றமே அடைந்தனர்.

வஞ்சகர்களைப் பொருத்தமட்டில் ஏமாற்றம் என்பது குரூரத்தை மேலும் மேலும் வளர்க்கின்ற சாதனமாகப் பயன்படுகிறது. அடுத்த முயற்சியாக, வீமனை விருந்துக்கு அழைத்து நஞ்சு கலக்கப் பெற்ற உணவு வகைகளைப் பரிமாறிக் கொன்று விடுவதென்று தீர்மானித்தனர். இம்முறை வீமனின் உயிர் எப்படியும் தங்களுடைய வஞ்சகத்திற்குத் தப்ப முடியாதென்பது அவர்களது திடமான எண்ணம். ஆனால் வாழ்க்கையின் முதல் முடிவு என்பது மனித சித்தத்திற்கு மீறிய செயல் என்பதை அவர்கள் சற்றே சிந்தித்து உணர முற்பட்டிருந்தால் இவ்வளவு திடமாக எண்ணியிருக்க மாட்டார்கள்! துரியோதனாதியர் ஏற்படுத்திய விருந்துக்கு வீமன் வந்தான். உணவுகளில் நஞ்சு கலக்கப் பெற்றிருப்பதை அறியாமலே உண்டான். எதிர்பார்த்தபடி உணவு உண்டு. முடிந்த சிறிது நேரத்திலேயே மயங்கி வீழ்ந்தான். துரியோதனாதியர் தங்கள் ஏவலாட்களைக் கொண்டு மயங்கி விழுந்த வீமனின் உடலைக் கயிறுகளால் பிணித்து மீண்டும் கங்கையில் கொண்டு போய்த் தள்ளினர். பீமனுடைய உடல் கங்கையில் அமிழ்ந்து ஆழத்திற்குச் சென்றது. கங்கையில் வசித்து வந்த பாம்புகள் அவனுடைய உடலைக் கடித்தன. ஏற்கனவே நஞ்சு கலந்த உணவை உண்டிருந்ததனால் பாம்புகளின் நஞ்சு அவனை ஒன்றும் துன்புறுத்த வில்லை. அதனுடன் மட்டுமின்றி வீமனுடலில் முன்பே ஏறியிருந்த நஞ்சையும் முறிவு செய்து போக்கி விட்டன இந்தப் பாம்புகள்.

பின்பு ‘வாசுகி’ என்னும் பெயர் பெற்ற பாம்புகளின் தலைவனுக்கு வீமன் அறிமுகமானான். வீமன் வாயு புத்திரன் என்பதை அறிந்து கொண்ட வாசுகி அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினான். வாசுகியின் உதவியால் வீமனுக்கு அமுதம் கிடைத்தது. அமுதம் அருந்திய சிறப்பால் வீமன் நஞ்சுண்ட வேதனையும் சோர்வும் நீங்கிப் புதிய அழகும் உடல் நலமும் பெற்றான். மேலும் சில நாட்கள் வாசுகியுடன் அங்கே தங்கியிருந்தான். வீமன் திரும்பி வராததைக் கண்டு அவன் இறந்து போய்விட்டான் என்றே நினைத்து செருக்குற்று மகிழ்ந்தனர் துரியோதனாதியர். பாண்டவர்களும் குந்தி தேவியும் வீமனைக் காணாமல் கலங்கிப் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர். பாட்டனாராகிய வீட்டுமர் ஒருவர் மட்டுமே “நடந்தது யாது?” என்பதை அனுமானித்து உணர்ந்து கொண்டு பாண்டவர்களுக்கும் குந்திக்கும் ஆறுதல் கூறி “வீமனைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்! அவன் எப்படியும் நலமாக மீண்டும் திரும்பி வந்து விடுவான்” என்றார். எட்டு நாட்கள் சென்ற பின் வாசுகியின் உதவியால் கங்கைக் கரையை அடைந்து நகருக்குள் நுழைந்தான் வீமன். ஏதோ வேற்றூர் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பு கிறவனைப் போலக் காணப்பட்டானே தவிர, வேறு சோர்வு ஏதும் அவனிடம் தெரியவில்லை . பாண்டவர்களும் குந்தியும் அன்போடு வரவேற்றனர். ‘வீமன் இறந்து போய் விட்டானோ?’ என்று எண்ணி மனம் துன்புற்றிருந்த நகரமக்களும் அவனைக் கண்டு துன்பம் நீங்கினர். சகோதரர்களாக இருந்தும் துரியோதனாதியர் பாண்டவர்களோடு முரணி, அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சிகளே செய்து வந்தனர். பாண்டவர்களில் வீமனின் வலிமை தங்களுக்கு அச்சத்தை விளைவிப்பதாக இருந்ததனால் அவனையே முதலில் அழிக்கக் கருதினர். ஆனால் விதியோ. இந்த வஞ்சகர்களின் கருத்துக்கு நேர் எதிராக இருந்தது.

‘நன்மையும் தீமையும், சத்தியமும் அசத்தியமும், தர்மமும் அதர்மமும் போராடுகின்ற நெருக்கடியான சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் அடிக்கடி வருகின்றன. சத்தியம் தோற்று விடுவோ?’ - என்ற பயம் இம்மாதிரி நேரங்களில் காண்போர்க்கு ஏற்படத்தான் ஏற்படுகிறது! ஆனால் நன்மை, சத்தியம், தர்மம் முதலிய இவைகள் யாவும் பொறுத்து ஆற அமரவே வெற்றி பெறுகின்றன. வேகமாகச் செல்லும் தண்ணீர் வேகமாகவே வடிந்து விடுவது போல் தீமையும், அசத்தியமும், அதர்மமும் வேகமாக வளர்வது போலவே  வேகமாக அழிந்து விடுகின்றன. அதற்கு மாறாகச் சூழ்ச்சி செய்யும் மனிதர்கள், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஆகிய யாவும் விரைவாக முன்னேறி வெற்றியை நெருங்குவது போலத் தோன்றுவது இயற்கைதான். ஆனால் முடிவில் அழிவும் தோல்வியும் இவர்களுக்கே ஏற்படப் போவது உறுதி. உலக வாழ்வின் மிக நுணுக்கமாக உண்மை இது. இந்த உண்மையை முடிவில் விளக்குவது தான் காவியப் பயன்.

6. துரோணர் வரலாறு

கெளரவர்களும் பாண்டவர்களும் படைக் கலப் பயிற்சி பெறுவதற்குரிய இளமைப் பருவத்தை அடைந்தனர். வீட்டுமன், விதுரன் இருவரும் அரசிளங்குமாரர்களாகிய இருசாரார்க்கும் ஏற்ற ஆசிரியரைக் கொண்டு போர், படைப்பயிற்சி முதலிய வித்தைகளைக் கற்பிக்கக் கருதினர். ‘கிருபாச்சாரியார்’ என்ற சிறந்த ஆசிரியர் குருவாகக் கிடைத்தார். பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் இவரிடத்தில் வில், வேல், வாள் முதலிய படைக்கலப் பயிற்சிகளைப் பெறுமாறு வீட்டுமனால் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதர்களும் ஏற்பாட்டின்படி கிருபாச்சாரியார் பால் பயிற்சி பெற்றனர். கிருபாச்சாரியார் ஆசிரியராக இருந்தும், வேறொர் சிறந்த ஆசிரியரையும் தேடினர் வீட்டுமன் முதலியோர், துரோணர் இரண்டாவதாக அகப்பட்டார். துரோண மரபில் தோன்றிய துரோணர் பரத்துவாச முனிவரின் புதல்வர், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர். வில்வித்தையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திறமை துரோணருக்கு உண்டு.

அத்தினாபுரியிலிருந்து ஆசிரியரைத் தேடிச் சென்ற தூதுவர்கள் துரோணரை அழைத்து வந்ததனால், யாவருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது அது. திருதராட்டிரனது அவை துரோணருக்கு மரியாதை செய்து, அவரை அன்போடு வரவேற்றது. துரோணர் அந்த மரியாதையையும், அன்பான வரவேற்பையும் ஏற்றுக் கொண்டு அவையோர்க்கு நன்றி கூறினார். நன்றி கூறியவர், அப்படியே தம்முடைய வாழ்வில் தம்மைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி ஒன்றையும் கூறத் தொடங்கினார்.

“இளமையில் குருகுல வாசம் செய்யும் போது நானும் பாஞ்சால நாட்டு இளவரசன் யாகசேனனும் அங்கிலேசர் என்னும் முனிவரிடம் இருந்தோம். எனக்கும் யாகசேனனுக்கும் அப்போது நெருங்கிய நட்பு இருந்தது. உயிர் நட்பு என்றே அதனைச் சிறப்பித்துக் கூறலாம். ஒரு நாள் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் தந்தையின் மறைவுக்குப் பின் அரசாட்சி எனக்குக் கிட்டும். அப்போது என் அரசில் ஒரு பகுதியை உனக்கு மனமுவந்து அளிப்பேன் நீயும் என்னைப் போல வளமான வாழ்க்கையை அடையலாம்’ என்றான். அப்போது அவன் கூறிய இச்சொற்களை நான் உறுதியாக நம்பினேன். பின்பு சில நாட்களில் பாகசேனனுடைய தந்தை மறைந்து விடவே அவன் நாடு சென்று விட்டான். நானும் குருகுல வாசம் முடிந்தபின் இப்போது இதே அரசகுமாரருக்கு ஆசிரியராக இருக்கும் கிருபாச்சாரியாருடைய தங்கையை மணந்து கொண்டு இல்லறத்தில் பிரவேசித்தேன். நாளடைவில் என் இல்லற வாழ்வின் போக்கில் நான் யாகசேனனையும் அவன் கூறிய உறுதி மொழிகளையும் ஒருவாறு மறந்து போனேன். காலம் வளர்ந்தது. எங்களுக்கு ஒரு புதல்வன் பிறந்தான்.

அவன் பிறந்தபோது எங்கள் வாழ்வில் வறுமை பெரிய அளவில் குறுக்கிட்டிருந்த காலம். உண்பதற்குப் பாலும் அளிக்க முடியாத துயரநிலை, ‘வேதனையை மிகுவிக்கும் இந்த வறுமையை நீக்கிக் கொள்ள என்ன செய்யலாம்’ என்று மனம் மயங்கிச் சிந்தித்தேன் நான். அப்போது எனக்கு யாகசேனனுடைய இளமைப் பருவத்து நட்பும் உறுதி மொழிகளும் நினைவிற்கு வந்தன. தன் அரசாட்சியிலேயே ஒரு பகுதியை அவன் எனக்குத் தருவதாகக் கூறியிருந்த சொற்களை எண்ணினேன். உடனே நம்பிக்கையோடு பாஞ்சால் நாட்டையடைந்து யாகசேனனைச் சந்திக்கச் சென்று அவன் முன் கூறிய சொற்களை நினைவுபடுத்தி என் வறுமை நிலையில் எனக்கு உதவுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவனோ என்னை அதற்கு முன்பு கண்டும் அறியாதவனைப் போல நீ யார்?’ என்று என்னையே கேட்டான். எனது மனம் அப்போது மிகுந்த வேதனையை அடைந்தது. நான் இளமையில் குருகுலவாசத்தின் போது நடந்ததிலிருந்து எங்களுடைய நட்பை நினைவுபடுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரித்துக் கூறினேன்.

ஆனால் அப்படிக் கூறியும் அவன், ‘நானோ நாடாளும் மன்னன். நீ சடை முடி தரித்த முனிவன். அவ்வாறிருக்க உனக்கும் எனக்கும் நட்பு எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும்? வீணாக ஏன் பொய்யைச் சொல்லுகின்றாய்? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா என்ன?’ என்று என்னைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டே கேட்டான். எனக்கு அந்த நிலையில் அவன் மேல் அளவற்ற சினம் ஏற்பட்டுவிட்டது. ஏமாற்றத்தால் எனது மனம் குமுறிக் கொதித்தது. ‘ஞாபகமறதியால் நீயே அன்று கூறிய உறுதி மொழிகளையும் மறந்து என்னை இகழ்ந்து பேசுகிறாய். உன்னுடைய இந்தத் தகாத செயலுக்காக உன்னைப் போரில் சிறை செய்து உன் நாட்டில் ஒரு பகுதியை நானே எடுத்துக் கொள்வேன்! இது சபதம், அவசியம் நடக்கப் போகிறது பார்!’ என்று அவையறியக் கூறிச் சூளுரைத்தேன். “அதை நிறைவேற்ற வேண்டும்.” - துரோணர் இவ்வாறு தம் வாழ்க்கையையே பாதித்த பழைய நிகழ்ச்சியைக் கூறி முடித்தார். அரசகுமாரர்களாகிய பாண்டவர்களும் கெளரவர்களும் அவைக்கு அழைத்து வரப் பெற்றனர். குருவாக வந்திருக்கும் பெருந்தகையாளராகிய துரோணரைப் பணிந்து வணங்கினர்.

“துரோணரே! உம்மை அவமானப்படுத்திய யாக சேனனை வென்று அவனுக்கு அறிவு புகட்ட இவர்களே ஏற்றவர்கள், தாங்கள் இவர்களுக்குக் கற்பிக்கும் வித்தைகளால் தங்களுடைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்!" என்று அரச குமாரர்களைச் சுட்டிக்காட்டி வீட்டுமர் கூறினார். பின்பு துரோணருக்கு அத்தினாபுரியில் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. ஒரு பேரரசனுக்குரிய அந்தஸ்துக்களோடு அவர் மேலான சிறப்புக்கள் செய்யப் பெற்றார். பண்பட்ட ஆசிரியனின் கடமை தனது மனம் பொருந்த, தான் கற்ற கல்வியை மாணவர்க்குச் சிறிதும் ஒளிக்காமல் அளிப்பது ஆகும். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் துரோணர் கற்பித்த கலைப்பயிற்சி அத்தகையதாக இருந்தது. சகோதரர்களில் அவரவர்கள் அறிவிற்கும் ஆற்றலுக்கும் ஏற்ற கலையைத் தேர்ந்து போதித்தார் அவர்.

விசயன் வில்வித்தையில் தலைசிறந்து விளங்கினான். வில் பயிற்சி என்ற கலை காவிய நாயகர்களில் இராமன் ஒருவனுக்காகவே ஏற்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் விசயனோ, அவனைப் போன்றே தகுதிபெற்று விளங்கினான் இந்தக் கலையில், விசயனின் ஒப்புயர்வற்ற பெருமைக்கு முன் கௌரவர்கள் கதிரவனுக்கு முன் மின்மினி போலாயினர். நல்ல மாணவன் ஆசிரியரின் உள்ளத்தில் தனித்த அன்பையும் நட்பையும் பெறுவது இயற்கையல்லவா? துரோணர் விசயனின் மேல் அளவற்ற பற்றும் அன்புணர்வும் கொண்டு ஆர்வத்தோடு அவனுக்குக் கற்பித்து வந்தார். நல்ல மாணவன் உடலைப் பின்பற்றும் நிழலைப் போல ஆசிரியனை விட்டு விலகாமல் போற்றிப் பாராட்டி வழிபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும். விசயன் துரோணரை அவ்வாறு மதித்து வழிபட்டுக் கற்றான். இஃது இவ்வாறிருக்கும் போது துரோணரால் வில்வீரனாகிய ‘ஏகலைவன்’ என்பவனின் விந்தை மிக்க வரலாறு ஒன்றை இங்கே காண்போம். அவனுடைய தியாகத்தையும் குருபக்தியையும் அறிந்து கொள்வோம்.

ஏகலைவன் ஓர் வேட்டுவன், இளமையில் துரோணர் விற்கலையில் ஒப்பற்ற பேரறிஞர் என்பதைப் பலமுறை பலரிடம் கேட்டு மகிழ்ந்தவன். ‘கற்றால் அவரிடம் வில் வித்தை கற்க வேண்டும்’ என்று அவரையே தனது இலட்சிய குருவாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மனத்தையுடையவன். துரோணரைக் காணாமலும் கண்டு பழகாமலுமே அவரை மனத்தின் உயர்ந்த இடத்திலே வைத்துத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இயல்பினன். கல்விக்குரிய பருவமும் ஆர்வமும் முறுகி வளர்ந்து பெருகியபோது அவன் துரோணரை நாடிச் சென்றான். அவரிடம் தன் ஆர்வத்தைக் கூறிப் பணிவுடனே தனக்கு வில்வித்தை கற்பிக்குமாறு வேண்டினான். ஆனால் துரோணர் தம்மால் இயலாதென்று மறுத்து விட்டார். ஏகலைவன் பெரிதும் ஏமாற்றமடைந்து மனம் வருந்தினான். இறுதியில் எவ்வாறேனும் துரோணரிடமே கற்க வேண்டும் என்ற முடிவு தான் அவன் மனத்தில் நிலைத்து நின்றது. வனத்தில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு அதில் துரோணரைப் போன்ற உருவச்சிலை ஒன்றைச் செய்து வைத்தான். அந்த சிலையையே தன் குருவாகப் பாவித்து அதற்கு முன்னால் நின்று விற்பயிற்சி பெறும் முயற்சியில் தானாகவே ஈடுபட்டான் அவன். உறுதியான நல்லெண்ணங்களும் முயற்சிகளும் ஒரு போதுமே வீண் போவதில்லை. நல்ல பயனளித்தது. நாட்கள் செல்லச் செல்லத் துரோணரிடம் நேரிற் கற்றால் எவ்வாறு பயன் அடைந்திருப்பானோ அவ்வளவு பயனை ஏகலைவன் அடைந்து விட்டான். வில்வித்தையில் சிறந்த வீரன் என்று பெயரும் புகழும் பரவலாயின.

ஏகலைவன் விற்கலையில் இவ்வாறு அடைந்த புகழ் துரோணர் செவிகளுக்கும் எட்டியது. துரோணர் ஏகலைவனைக் கண்டு செல்ல வேண்டும் என்று வனத்திற்கு வந்தார். கோவிலில் விளங்கும் வழிபாட்டுக்குரிய தெய்வச்சிலையைப் போலத் தம்முடைய உருவச்சிலை அங்கே ஏகலைவனின் ஆசிரமத்தில் இடம் பெற்றிருப்பதை அவர் கண்டார். மனம் பூரித்தார். துரோணரே தம் ஆசிரமத்தை நாடி வந்திருப்பதை உணர்ந்த ஏகலைவன் மனமகிழ்ந்து பயபக்தியோடு அவரை வரவேற்று உபசரித்தான். “எல்லாம் தேவரீர் அருளால் வந்த திறமை ! தாங்களே என்னுடைய ஆசிரியர். மானசீகமாக நுட்பமான விற்கலையைத் தங்களிடமிருந்தே நான் கற்றேன்.” என்றான் ஏகலைவன்.

“அப்படியானால் நீ எனக்கு ஆசிரியர் காணிக்கையாக ஏதாவது அளிக்க வேண்டும் அல்லவா?” - என்றார் துரோணர். ‘தாங்கள் எதனைக் கேட்டாலும் சரி! அதை அளிக்க எளியேன் தயங்க மாட்டேன்’ - என்று ஏகலைவன் பணிவான குரலில் உள்ளன்போடு மறுமொழி கூறினான். “நல்லது! உன் வலது கைக்கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறேன். அதை எனக்கு அறுத்துக் கொடு” - என்று துரோணர் கேட்டார். வலதுகைக் கட்டைவிரல் - விற்கலைக்கே இன்றியமையாத உறுப்பு. அந்த விரலை இழந்தபின் ஏகலைவன் கற்ற அத்தனை கலைகளும் பயனற்றுப் போகும். “சுவாமி! வேறு ஏதாவது கேளுங்களேன், தருகிறேன்” என்று ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாகத் தருவதற்கு மறுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவன் ஆசிரியரின் உன்னத நிலையை உணர்ந்து வழிபடும் உயரிய பண்பும் தியாகமும் கொண்ட ஆண்மகன். துரோணருக்குக் கட்டைவிரலைத் தர இயலாது என்று அவன் மறுக்கவில்லை! அவர் கேட்ட மறுவிநாடியே கட்டைவிரலை அறுத்துக் குருதியொழுகும் கரத்தினால் அவர் திருவடிகளில் வைத்து வணங்கினான். துரோணர் திகைத்தார். ஏகலைவனது பண்பு அவரைவியக்கச் செய்தது. அவனுடைய உயர்ந்த பண்பு நிறைந்த உள்ளம் அவருக்கு அப்போதுதான் புலனாயிற்று. அவர் அவனைப் பாராட்டி வாழ்த்தினார்.

ஏகலைவனுக்குப்பின் அர்ச்சுனன் ஒருவனிடமே அவர் மெய்யான வில்வித்தையின் திறமையைக் காணமுடிந்தது. அர்ச்சுனன் மேல் ஒரு தந்தைக்கு மகன் மேல் ஏற்படும் பாசமும் அன்பும் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் துரியோதனாதியர் அர்ச்சுனன் மேல் அளவற்ற பொறாமை கொண்டிருந்தனர். துரோணரே இதை அறிந்து கொண்டார். மெய்யான திறமை அவனுக்கு இருக்கும் போது காரணமின்றி இவர்கள் பொறாமைப்படுவது விருப்பு வெறுப்பற்ற ஆசிரியராகிய அவர் மனத்தையே மிகவும் வாட்டியது. அர்ச்சுனனின் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளும்படியான சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி பார்த்தாவது அவன் மேல் அவர்கள் பொறாமைப்படுவது குறையலாம் என்று எண்ணி அதற்கு ஏற்பாடுகளைச் செய்தார் துரோணர். அவர் ஒருநாள் காலை தம்முடைய மாணவர்கள் யாவரையும் அழைத்துக் கொண்டு கிணற்றுக்கு நீராடச் சென்றார். வேண்டுமென்றே மடுப்போல நீர் ஆழமாக நிறைந்திருந்த அந்தக் கிணற்றில் தம் கைவிரலில் அணிந்திருந்த மோதிரத்தைத் தவறி விழுந்து விட்டது போலப் போட்டு விட்டார். பின்பு மாணவர்களை அழைத்துக் கிணற்றில் இறங்காமலே அம்பு செலுத்தி மோதிரத்தை எடுத்து வருமாறு செய்ய எவராலாவது இயலுமா? என்று கேட்டார். எல்லோருமே, ‘என்னால் முடியும்’ - ‘என்னால் முடியும்’ என்று கூறி முன் வந்து அம்புகளைச் செலுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் செலுத்திய அம்புகள் தண்ணீருக்குள் சென்று முழ்கினவே ஒழிய மோதிரத்தை மீட்டுக் கொண்டு வரவில்லை.

இன்னும் ஒரே ஒருவன் மட்டும் அம்பு எய்யவில்லை. அந்த ஒருவன்தான் அர்ச்சுனன் துரோணர் ஏதோ கட்டளையிடுவது போல அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் வில்லை எடுத்துச் சாமர்த்தியமாக வளைத்து அம்பைக் கிணற்றுக்குள்ளே செலுத்தினான். என்ன விந்தை? அம்பு மோதிரத்தோடு கிணற்றுக்குள்ளிருந்து மீண்டும் திரும்பவும் மேலே பாய்ந்து வந்தது. கூடியிருந்த மாணவர்கள் யாவரும் அர்ச்சுனனை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்தோடு பார்த்தனர். துரோணர் புன்னகை புரிந்தார். ‘அர்ச்சுனனின் வில் திறமை உங்கள் யாவரினும் சிறந்தது, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது போலிருந்தது அந்தப் புன்னகை. மற்றோர் நாள்! துரோணர் தம் மாணவர்களுடனே கங்கையாற்றுக்குச் சென்றிருந்தார். கங்கைக் கரையில் அவர் மாணவர்களோடு நீராடிய படித்துறைக்கு அருகில் ஒரு பெரிய அரசமரம் படர்ந்து வளர்ந்திருந்தது. சட்டென்று துரோணர் தம் மாணவர்களின் பக்கமாகத் திரும்பி, “இந்த மரத்திலுள்ள அத்தனை இலைகளையும் துளைக்கும்படியாக ஒரே அம்பைச் செலுத்தக் கூடிய திறமை உங்களில் எவருக்காவது உண்டா ?” - என்று கேட்டார். துரியோதனாதியர் அதைக் கேட்டதுமே மலைத்தனர். வேறு எவருக்கும் வில்லைக் கையிலெடுத்து முயன்று பார்க்கக் கூடத் துணிவில்லை. அர்ச்சுனன் தயங்காமல் வில்லை எடுத்தான். அவன் வில்லிலிருந்து விர்ரென்று அம்பு பறந்ததைத்தான் மற்றவர்கள் காண முடிந்தது. பின் அந்த அம்பு எல்லா இலைகளையும் துளைத்துவிட்டுக் கீழே விழுந்தபோது தான் கண்டவர்களுடைய கண்கள் இமைத்தன!

வேறோர் சமயம் துரோணர் நீராடிக் கொண்டிருக்கும் போது கொடிய முதலையொன்று அவர் காலை இறுகப் பற்றிக் கவ்விக் கொண்டது. உடனே அவர் அலறிக் கொண்டே தம் மாணவர்களைக் கூவி அழைத்தார். எல்லோருமே ஓடி வந்தனர். அவர் காலை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார்கள். யாராலுமே அக்காரியத்தைச் செய்ய முடியவில்லை. ஓடி வந்த மாணவர்கள் அத்தனை பேரும் கையில் ஆயுதங்கள் எதுவுமே இல்லாமல் வந்திருந்தார்கள். அர்ச்சுனன் மட்டும் எங்கோ வெளியிற் சென்றிருந்தான். அவனுக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது வில்லும் அம்புமாக ஓடி வந்து துரோணரை முதலையின் பிடியிலிருந்து விடுவித்தான். தாங்கள் வெறுங்கையர்களாக அவசரத்தில் ஓடி வந்து ஒன்றும் உதவமுடியாமற் போனதற்காக வெட்கித் தலைகுனிந்தனர் மற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக வில்லும் அம்பும் கொண்டு வந்து ஆசிரியரைத் துன்பத்திலிருந்து விடுவித்த அர்ச்சுனன் திறமையைப் போற்றினர். துரோணரே மனம் நெகிழ்ந்து அன்பு சுரக்கும் சொற்களால் அவனுக்கு நன்றி கூறினார். தமது நன்றிக்கு அறிகுறியாக ஆற்றலும் வேலைப்பாடும் செறிந்த அம்பு ஒன்றை அவனுக்கு அவர் அளித்தார்: துரோணரிடம் பெருமதிப்புக் கொண்டுள்ள அன்பர்களும், நகரத்துப் பெரியோர்களும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் அர்ச்சுனன் அவரைக் காப்பாற்றியதைக் கேள்விப்பட்டு அவனைப் புகழ்ந்தனர்.

ஓர் நல்ல மங்கல நாளில் கௌரவர்களும் பாண்டவர் களும் பிறரும் கற்ற கலைகளை அரங்கேற்றம் செய்ய முடிவு கொண்டார் துரோணர். விழாப்போல நிகழ வேண்டிய இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி நகரத்தார் எல்லோருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அரசவையைச் சேர்ந்தவர்களும், நகரமாந்தரும் கூடியிருந்த ஓர் அரங்கில் விழாத் தொடங்கியது. வழிபடு தெய்வத்தை வணங்கியபின் மாணவர்கள் தாம் கற்ற கலைகளைக் காட்டுமாறு பணித்தார் துரோணர், மாணவர்களும் அவையிலிருந்த சான்றோர்களை வணங்கி அரங்கேற்றத்தில் ஈடுபட்டனர். துரியோதனனும் வீமனும் அரங்கேறிய போது இருவருக்கும் இடையே உள்ள மனப்பகை புலப்படுமாறு போர் செய்து கொண்டனர். நடுவே இவர்கள் போரிடுவது சுவைக்குறைவான நிகழ்ச்சியாகத் தென்பட்டதனால் துரோணரின் புதல்வனான அசுவத்தாமன் புகுந்து அமைதியை உண்டாக்க வேண்டியதாயிற்று. கடைசியாகத் துரோணரை வணங்கி விசயன் தான் கற்ற கலைகளைச் செய்து காட்டி அவையில் கூடியிருந்தவர்களை மகிழ்விக்கத் தொடங்கினான். அவனுடைய அபாரமான திறமைகளையும் நுணுக்கங்களையும் கண்டு போற்றினர் அவையோர். துரோணர் அவனுக்குக் கற்பித்த போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். ஆனால் ஒரே ஓர் உள்ளம் மட்டும் இவ்வளவையும் கண்டு குமுறிக் குமைந்து வெதும்பிப் பொறாமையால் தவித்துக் கொண்டிருந்தது. அதுவே கர்ணனுடைய உள்ளம். விசயன் மேல் அசூயை அவனுக்கு.

7. பகைமை பிறக்கிறது

தன்னினும் இளம் பருவத்தினான அர்ச்சுனனின் திறமை அங்கே புகழ் பெற்று ஓங்குவதைக் கண்டு கர்ணன் மனங் கொதித்தான். ‘இவனுடைய ஆற்றலை எவ்வாறேனும் மங்கச் செய்து என் புகழை இங்கே நிலை நாட்டுவேன்’ - என்று எண்ணிக் கொண்டு அவையில் தன் கலைத்திறனைக் காட்டுவதற்குத் தயாராக எழுந்து நின்றான். சினத்தோடு பாய்ந்து எழுகின்ற சிங்கத்தைப் போலத் தன் குரலை முழக்கிக் கலைச் செயல்களைச் செய்து காட்டத் தொடங்கினான். அர்ச்சுனனுடைய திறமையை முற்றிலும் மங்கச் செய்து விட வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அவனை வம்புக்கு இழுத்தாவது மட்டந்தட்டி விட வேண்ட மென்ற எண்ணத்துடனே, “தனியாக உன் திறமையைக் காட்டினாய்! நீ உண்மையான திறமையும் வீரமும் உள்ளவன் ஆனால் என்னோடு இந்த அவையில் போர் செய். உன் தலையைக் கிள்ளி எறிந்து காட்டுகிறேன்!” - என்றான் கர்ணன்.

“போருக்கு அழைப்பது சரிதான் என்னோடு சரி நிகராக நின்று போர் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” - என்று அவனைத் தன் கேள்வியால் மடக்கினான் அர்ச்சுனன். இவர்களுடைய இந்தப் பகைமையும் மனக் கொதிப்பை வெளிக்காட்டுவன போன்ற சொற்களும் சுற்றியிருந்த வர்களை விளைவு என்ன ஆகுமோ?’ என்று அஞ்சும்படி செய்தன. இதற்குள் வயது முதிர்ந்தவரும் சிறந்த கலைகளின் ஆசிரியருமாகிய கிருபாச்சாரியார் எழுந்து அர்ச்சுனனின் கேள்வியைத் தழுவி ஆதரித்துப் பேசினார்.

“விசயன் கூறுவது ஒரு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய செய்தி தானே? அரசகுமாரனாகிய அர்ச்சுனனுடன் எதிர்நின்று சமமாகக் கருதிப் போர் செய்வதற்குத் தேர்ப்பாக சூதநாயகனின் வளர்ப்பு மகனாகிய கர்ணனுக்கு என்ன தகுதி இருக்கிறது? கர்ணன் விசயனைப் போருக்கு அழைப்பதே முறையும் பொருத்தமும் இல்லாத ஒன்றாயிற்றே?” - என்றார் அவர். கர்ணனைத் தன் உயிர் நண்பனாக எண்ணி வந்த துரியோதனன் கிருபாச்சாரியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். அவர் பேசிய விதம் பாண்டவர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல இருந்ததனால் அவனுக்கு முன்பே பாண்டவர்கள் மேல் இருந்த பகைமை உணர்ச்சியும் முதிர்ந்து எழுந்தது. இப்போது அவ்வளவு கோபமும் கிருபாச்சாரியார் மேலே திரும்பியது.

“கல்வியினால் பிறரைக் காட்டிலும் உயர்நிலை பெற்றவர்கள், அழகினால் கவர்ச்சி நிறைந்து விளங்குபவர்கள். பிறருக்குக் கொடுத்து மகிழும் கொடைப் பண்பு பூண்டவர்கள், இவைகள் போன்ற தகுதியுடையவர்களுக்குச் சராசரி உலகம் நிர்ணயிக்கும் சாதாரணமான பொருத்தங்களும் தகுதிகளும் அவசியமில்லை. பிறவியும் செல்வ நிலையும் கொண்டு மனிதர்களை இழிவு செய்து பேசுவது நேரியதாகாது. கிருபாச்சாரியார், அர்ச்சுனனோடு போர் செய்யும் தகுதி கர்ணனுக்கில்லை என்கின்றார்! என் உயிர் நண்பனாகிய கர்ணனுக்கு நானே அந்தத் தகுதியை உண்டாக்கிக் கொடுக்கிறேன். என் ஆட்சியைச் சேர்ந்த அங்க நாட்டிற்கு மன்னனாக இன்றே இப்போதே இந்த அவையிலேயே கர்ணனுக்கு முடி சூட்டுகின்றேன். பின்பு கர்ணன் அரசன் என்ற தகுதியை அடைந்து விடுவான்” - என்று துரியோதனன் கூறினான். கூறியபடியே கர்ணனை அப்போதே அவ்விடத்திலேயே அங்க நாட்டு வேந்தனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்தான். அரசவையில் கூடியிருந்த பெரியோர்களனைவரும் திடீரென்று துரியோதனன் கர்ணனுக்குச் செய்த இந்தச் சிறப்பைக் கண்டு திகைத்தனர். வியப்புக்குரிய முறையில் கர்ணனுக்கும் அவனுக்கும் இடையே அமைந்திருந்த நட்பின் அழுத்தம் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியது.

‘முடியளித்து ஒருவனை அரசனாக்கி விடுவது என்பது எவ்வளவு பெரிய காரியம் ? அதை இவன் இவ்வளவு எளிமையாக வாயாற் கூறிய மாத்திரத்திலேயே நிறைவேற்றி விட்டானே?’ - என்பது தான் அவையினரின் வியப்புக்குக் காரணம். கர்ணனுக்கு முடிசூட்டியவுடன் அவனைத் தன் அருகில் தன் அரியணையோடு சரிசமமாக இடப்பட்டிருந்த அரியணை ஒன்றில் அன்போடு தழுவி அமரச் செய்தான் துரியோதனன். துரியோதனன் எவ்வளவோ வழிகளில் தீயவன் ஆனாலும் நட்பு என்ற இந்தப் பண்பில் மட்டும் அவன் வழி உயரியதாகவே சென்றது. கர்ணனின் நட்புக்காக அவன் செய்த இந்தப் பேருதவியே அதற்குச் சான்று, அரங்கேற்று விழா இவ்வாறாக முடிந்தது.

தம்முடைய மாணவர்களின் திறமை துரோணரின் மனத்தை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அரங்கேற்றத்திற்குப் பின் மாணவர்களைத் தனியே அழைத்து ஒன்றுகூற விரும்பினார் அவர். இளமைப் பருவத்தில் தனக்கு அரசாட்சியில் பாதி தருவதாகக் கூறிவிட்டுப் பின் மறுத்து அவமானப்படுத்திய யாகசேனனைப் பழிவாங்கும் நினைவு அவருக்கு அப்போது எழுந்தது. “நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய ‘ஆசிரியர் காணிக்கை’ பொன்னோ, பொருளோ அல்லது வேறு பல செல்வங்களோ அல்ல. குருகுலத்து இளைஞர் செல்வங்களே! ‘இளம் பருவத்தில் யாகசேன மன்னன், தான் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து என்னைப் பிற்காலத்தில் அவமானப்படுத்தி விட்டான். அந்த யாகசேனன் இப்போது பாஞ்சால நாட்டு மன்னனாக இருக்கின்றான். அவனை வென்று கைதியாகச் சிறைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் நீங்கள் என்னிடம் கற்ற கல்விக்காக எனக்கு அளிக்க வேண்டிய ஆசிரியர் காணிக்கை! என்னுடைய இந்த விருப்பத்தை எப்படியும் நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும். அது உங்கள் கடமை.” - என்று தனியே அழைத்துச் சென்று தன் மாணவர்களிடம் கூறினார்.

குருகுலத்துச் சிங்கக் குருளைகளான அந்த மாணவர்கள் அத்தனை பேரும் துரோணரை வணங்கி அவருடைய  வேண்டுகோளைத் தங்கள் உயிரை ஈந்தாவது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்தனர். துரோணர் உள்ளம் குளிர்ந்தார். தங்களுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் குருபக்தி அதிகம் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பிய வர்களைப் போல் கௌரவர்கள் உடனே நால்வகைப் படைகளையும் திரட்டிக் கொண்டு பாஞ்சாவநாட்டை நோக்கி வேகமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாண்டவர்கள் ஆர அமர நின்று நிதானித்துப் படைகளுடன் புறப்பட்டனர். அர்ச்சுனன், வீமன் முதலியோரிடம் நிகரற்ற வீரப்பண்பு சிறந்திருந்ததைப் போலவே எதையும் சிந்தித்துப் பார்த்து நன்மை தீமை ஆராயும் பண்பும் நிறைந்திருந்தது. ஆனால் துரியோதனாதியர்களிடமோ இந்த இரண்டு விதமான பண்புகளுமே இல்லை. ஆத்திரப்படுகின்றவர்களுக்கு அறிவு குறைவு என்று சொல்லுவார்கள். அறிவுக் குறைவினால் வெற்றி எங்காவது விளையுமா? வேகமாகப் படைகளோடு யாகசேனனை எதிர்த்து வந்த துரியோதனாதியர் கதியும் இந்தப் பழமொழியின் கருத்தையே நிரூபணம் செய்தது. பேரரசனான யாகசேனன் கெளரவர்களது படையெடுப்பை முன்கூட்டியே அறிந்து கொண்டு தன் படைகளைச் சரியான படி எதிர்முனையில் அணிவகுத்து நிறுத்தியிருந்தான். துரியோதனாதியரும் படைகளும் களத்தில் நுழையவும் யாகசேனனும் அவன் படைகளும் அவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது. யாகசேனனின் மின்னல் வேக எதிர்ப்பினாலும் தாக்குதலினாலும் சிதறிப்போன கெளரவர்களும் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓட வேண்டியதாக நேர்ந்து விட்டது.

நல்லவேளையாகக் கெளரவர்கள் பின்வாங்கித் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் அர்ச்சுனன் தன் படைகளோடு களத்துக்குள் புகுந்தான். யாகசேனனின் படைகளுக்கும் அர்ச்சுனனின் படைகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. துரியோதனாதியரைத் தாக்கி ஓடச் செய்தது போல் அர்ச்சுனனையோ அவனது படை வீரர்களையோ சுலபமாக அவர்களால் பின் வாங்குமாறு செய்வதற்கு முடியவில்லை. அதற்கு நேர்மாறாக யாகசேனனையும் அவனுடைய படைவீரர்களையும் அர்ச்சுனன் தன் வில் வலிமையாலும் போர்த்திறமையினாலும் தளர்ந்து பின் வாங்கும்படி செய்திருந்தான். நொடிக்கு நொடி அர்ச்சுனன் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு யாகசேனனே பயந்து கலக்கமடையும் நிலையாகிவிட்டது. அர்ச்சுனனின். வில்லுக்கும் விற்பிடித்த கைகளுக்கும் ‘வெறி’ பிடித்து விட்டது. அன்றைக்கு அம்புமழை பொழிந்தது அவன் வில். ஆண்மை மழை பொழிந்தது அவன் நெஞ்சம். வெகு நேரம் போர் நிகழ்ந்தது. முடிவில் பாஞ்சால நாட்டு மன்னன் யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன் ஆயுதங்களின்றித் தலைகுனிந்து வெறுங்கையனாகி நிற்கவேண்டிய நிலை வந்து விட்டது. படைகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டன, விசயனின் கணைகளால் சிறு பகுதி அஞ்சி ஓடிவிட்டன. எஞ்சி நின்றவன் யாகசேனன் ஒருவனே . வயதிலும் அனுபவம், ஆற்றல் முதலியவற்றிலும் அர்ச்சுனனைக் காட்டிலும் மூத்தவனான யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன்னால் கைதியைப் போல் நின்றான்.

துரோணரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வெறுங்கையனாய் நின்ற யாக்சேனனைச் சிறைப்பிடித்துத் தன் தேர்க்காலில் இழுத்துக் கட்டினான் அர்ச்சுனன், யார் யாரையோ வென்று வாகை சூடிப் பேரரசனாக விளங்கும் தன்னைக் கேவலம் ஓர் இளைஞன் போர்க்களத்தில் சிறைப்பிடித்துத் தேர்க்காலில் கட்டியது யாதசேனனுக்கு மலைப்பைக் கொடுத்தது. இது அவனுக்கு விந்தையும் புதுமையும் நிறைந்த அனுபவம். வாழ்விலேயே அழிக்க முடியாதபடி அவனுக்குக் கிடைத்த தோல்விக் கறை இது ஒன்றுதான். அர்ச்சுனன்தான் ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகச் சிறைப் பிடித்த யாகசேனனை அவருக்கு முன் கொண்டு சென்றான். துரோணர் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து பார்த்தார்.  தன்னை அவமானப்படுத்திய யாகசேனன் தன் முன் தலைகுனிந்து உடல் கூசி ஒடுங்கிப்போய் நின்று கொண்டிருந்தான். அவனைச் சிறை செய்துகொண்டு வந்த களிப்போடு வில்லேந்திய கையனாய் அர்ச்சுனன் அருகில் நின்று கொண்டிருந்தான்.

இளமையில் தன்னுடன் கற்ற ஒரு சாலை மாணாக்கனும் பின்பு அரசனாகிய கர்வத்தின் மமதையினால் தன்னை மறந்து அவமானம் செய்தவனுமாகிய யாகசேனன் இப்போது தன் முன் கைதியாக நிற்பதை நோக்கித் துரோணர் மெல்ல நகைத்தார். அமைதியான நீர்ப்பரப்பில் காற்றினால் உண்டாக்கிய சிற்றலைகளைப் போலத் துரோணர் செய்த இந்த நகையை யாகசேனனும் கேட்டான். அவன் செவி வழிய புகுந்த அந்தச் சிறுநகை உள்ளத்தை வாட்டி அனலாகிக் கொதிக்கச் செய்தது. ஆனால் இந்தப் புன்னகையை விட அதிகமான வேதனையைச் செய்த துரோணர் கூறிய சொற்கள். “பாஞ்சால நாட்டுப் பேரரசரே வருக! நீங்கள் என் இளம் பருவத்து நண்பர் யாகசேனனல்லவா? அதனால் தான் இவ்வளவு அன்போடு தங்களை வரவேற்கிறேன். நல்லது, யாக்சேனா! அன்றைக்கு உன் அவையில் நான் உனக்கு நண்பனேயில்லை’ என்று கூறி என்னைப் பொய்யனாக்கி அவமானப்படுத்தினாய், குலத்திலே அந்தணன் நான். வேதத்தின் வழியே வாழ்கிறவன் நான். மன்னன் நீ. அரசின் பெருமைக்கேற்ப உன் பெருமையை வளர்த்துக் கொள்கிறவன் இதோ, உன்னைச் சிறைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் கைதியாக நிறுத்தியிருக்கும் இந்த இளைஞனைப்பார்! இவன் என் மாணவன் அர்ச்சுனன்! இந்திரகுமாரன் மிகச் சிறியோனாகிய இவன், பெருமை பொருந்திய உன்னைச் சிறை செய்து விட்டான்! மமதையில் இல்லை வாழ்வின் நேர்மை, அன்பில் இருக்கிறது அது! தெரிந்து கொள். நீ ‘எனக்குத் தருகிறேன்’ என்று கூறியிருந்த பாதியரசாட்சி மட்டுமில்லை; உன் முழு அரசாட்சியுமே இப்போது என் கையில் இருக்கிறது. ஆனால், அது எனக்கு மிகை. நீயே இப்பொழுது என் கைதி என்றால் அரசு எம்மாத்திரம்? எனக்கு நீ கூறியிருந்த அளவு பாதி அரசு போதுமானது! உனக்கு இரங்கி மற்றோர் பாதியரசை உன்னிடமே அளித்து உன்னையும் விடுதலை செய்து அனுப்புகிறேன் நான் பறித்துக்கொள்ள முடியும் உன் வாழ்வை. ஆனால் உன்மேல் கருணை கொண்டு அதை உனக்கே தருகிறேன். போய் வா... அர்ச்சுனா! இவனை விடுதலை செய்து அனுப்பு... பாவம்... அரசவாழ்வை மீண்டும் அடையட்டும்!” என்று துரோணர் கூறினார்.

அர்ச்சுனன் துரோணரை வணங்கி யாகசேனனை விடுதலை செய்தான். அவன் ஒன்றும் பேசாமல் மெளனமாகக் குனிந்த தலையோடு நடந்து சென்றான். அவன் நடந்து சென்ற நடையில்தான் அமைதியிருந்தது. அவன் உள்ளமோ பொங்கிப் புரண்டு அலைபாய்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. கிரகணத்திற்குப் பின் வெளிப்பட்ட சந்திரனைப் போன்ற கலங்கிய நிலை அவன் மனத்தில் நிலவியது. ஓர் இளைஞனால் தன்னை அவமானப்படுத்திப் பழிக்குப்பழி வாங்கிவிட்ட துரோணரின் செயல் அவனை வதைத்தது. அதே சமயத்தில் தன்னையும் வென்று சிறைப்படுத்திவிடும் அளவிற்கு வீரனான அர்ச்சுனனின் சாமர்த்தியத்தில் அவனுக்கு ஒரு வகையான கவர்ச்சியும் பற்றும் ஏற்பட்டன. அத்தினாபுரியிலிருந்து விடுதலை பெற்று அவன் பாஞ்சால நாட்டிற்கு வந்த பின்பும் துரோணரின் அவமானச் செயலையும் அர்ச்சுனனின் வீரமும் அழகும் விவேகமும் கலந்த சிறப்பையும் அவனால் மறக்கவே முடியவில்லை. துரோணரைப் பற்றி நினைவு எழும் போதெல்லாம் குரூரமான பகைமையே அவன் உள்ளத்தில் பிறந்தது. அர்ச்சுனனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ‘அந்த இளைஞனின் மெய்யான வீரத்தைப் பாராட்டி அதற்கு நன்றி செலுத்த வேண்டும்’ என்ற ஆசையே அவன் உள்ளத்தில் அலைமோதியது. ஒன்று பழிவாங்கும் ஆசை! மற்றொன்று பாராட்டும் ஆசை துரோணரைக் கொன்று பழிவாங்கு வதற்காக ஒரு மகன்; அர்ச்சுனனைப் பாராட்டி அவன் வீரத்திற்கு நன்றி செலுத்தும் முகமாகக் கொடுக்க ஒரு பெண். ஆக இரு மக்கள் தனக்கு வேண்டும் என்ற விநோதமான எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது.

இந்த எண்ணமே நாளடைவில் தவிர்க்க முடியாத ஆசையாகவும் வளர்ந்துவிட்டது. இரவு பகல் எந்நேரமும் இந்த ஆசையைத் தழுவி இழையோடிய எண்ணங்கள் இடைவிடாமல் அவன் உள்ளத்தை ஏக்கங்கொள்ளும்படி செய்தன. மக்களைப் பெறுவதற்கு ஓர் வேள்வியைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முனிவர்களை அழைத்தனுப்பினான் யாகசேனன். இங்கே நிலைமை இவ்வாறிருக்க அத்தினாபுரியில் பாண்டவர்கள் மேல் துரியோதனாதியரது பொறாமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போயிற்று. சிறு வயதில் விளையாடும் போதும் குருகுலவாசம் செய்யும்போதும் பாண்டவர்கள் மேலே இயற்கையாகவே இவர்கள் நெஞ்சங்களில் பகைமை உணர்ச்சி கருக்கொண்டிருந்தது. அப்படிக் கருக்கொண்டிருந்த அந்தப் பகைமை உணர்ச்சி இப்போது வெளிப்படையாகவே பிறந்து சொல்லாலும் செயலாலும் புலப்பட்டது. இந்தச் சமயத்தில் வீட்டுமன், திருதராட்டிரன், விதுரன் முதலிய பெரியோர் தங்களுக்குள் ஒன்று கூடிச் சிந்தனை செய்து தருமனைத் தகுதியுடையவனாகத் தேர்ந்தெடுத்து இளவரசுப் பட்டம் கட்டிவிட்டனர்.

தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுதற்கு முன்னும் கட்டும்போதும் பேசாமல் இருந்துவிட்ட துரியோதனன் பின்பு மனம் குமுறிப் புழுங்கினான். “நம்மை ஒரு பொருட்டாக மதித்து நமக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் தருமனுக்குக் கட்டுவதற்குத் தந்தை மனம் இசைந்திருக்கிறாரே!” என்றெண்ணி அசூயை கொண்டான். கர்ணன், சகுனி முதலிய தோழர்களும் துச்சாதனன் முதலிய பண்பற்ற தம்பிமார்களும் அவனுடைய இந்த அசூயையைப் பெருகச் செய்தார்கள். துரியோதனன் பொறுக்க முடியாத ஆத்திரத்துடன் தன் தந்தையாகிய திருதராட்டிரனை அணுகினான்.

‘தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது முறையில்லை’ என்று அவன் தன் தந்தைக்கே அறிவுரை கூறத்தொடங்கிவிட்டான். “தந்தையாக இருந்தும் நீங்கள் உங்கள் புதல்வனாகிய எனக்குத் துரோகமே செய்ய நினைக்கிறீர்கள்!” என்று திருதராட்டிரனைப் பழித்துக் கூறினான். “பாண்டு என் தமையன்! அவன் இறந்து போய்விட்டதனால் அவனுடைய மக்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடிசூட்டி இளவரசுப் பட்டமும் கட்டி விட்டேன். ஆகவே நீ சினம் கொள்வது எந்த வகையால் பார்த்தாலும் பிழையான செயலாகும்” என்று அவனுக்கு அறிவுரை கூறினான் திருதராட்டிரன்.

ஆனால் துரியோதனனோ தந்தையினுடைய இந்த அறிவுரையைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “பாண்டவர்களை எனக்குச் சிறிதளவும் பிடிக்கவில்லை. அவர்களோடு நட்புக் கொண்டு வாழ இனியும் என்னால் முடியாது! சகோதரர்களும் சகுனி முதலியோர்களும் என் பக்கம் துணையாக இருக்கிறார்கள். எனக்குத் தனியான உரிமைகளும் வேண்டும்” என்று பகைமை கொழுத்த நெஞ்சத்துடனே துரியோதனன் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்டான்.

8. நனவாகிய கனவு

துரோணரிடமிருந்து விடுதலை பெற்றுத் தன் நாடு சென்ற யாகசேனன் அமைதியிழந்த மன நிலையோடு வாழ்ந்து வந்தான். முன்பே கூறியவாறு, ‘துரோணரைப் பழிக்குப்பழி வாங்குதல் - அர்ச்சுனனைப் பாராட்டிப் போற்றுதல்’ - என்ற இவ்விரண்டு எண்ணங்களும் அவன் மனத்தில் இடையீடில்லாமல் சுழன்று கொண்டிருந்தன. இதனாலேயே வேள்வி செய்யக் கருதி முனிவர்களை அழைத்தனுப்பி யிருந்தான் அவன். முனிவர்கள் வந்தார்கள். யாகசேனன் தன் கருத்தை அவர்களிடம் விவரித்தான், வேள்வி செய்து மக்களைப் பெற வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். முனிவர்கள் வேள்வி செய்ய இசைந்து ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.

வேள்விக்குக் குறித்த மங்கல் நாளிலே வேள்வி தொடங்கி நிகழ்ந்தது. மறையொலி எங்கும் முழங்கி எதிரொலித்தது. தெய்வத் தன்மை பொருந்திய மணம் கமழும் வேள்வி நிலையத்திலே பாஞ்சால நாட்டுப் பெரியோர்கள் குழுமியிருந்தனர். வேள்வியில் பயன்படுத்தி மிகுந்த வேள்வி அமிழ்தமாகிய பிரசாதத்தை யாகசேனன் மனைவிக்கு அளிக்கவேண்டியது முறை. ஆனால், வேள்வி நிகழ்ந்து கொண்டிருந்த போதே அவள் தீண்டாமை எய்தி விலக்காக இருக்கவேண்டியதாயிற்று. எனவே, வேள்விப் பிரசாதத்தை அவளுக்கு அளிக்க இயலவில்லை. என்ன செய்வதென்று செயல் விளங்காமல் திகைத்த யாகசேனன் இறுதியில் ஒரு தீர்மானமான முடிவிற்கு வந்தான். வேள்வியில் எஞ்சிய பிரசாதத்தை ‘இறைவன் விட்ட வழியில் முடியட்டும்’ என்றெண்ணிக் கொண்டு வேள்விக் குழியிலேயே இட்டான் அவன். வேள்விக் குழியில் அவன் நல்வினை விளக்கம் பெற்றது! கனவு நனவாகியது. தீயிலே பெய்த அமுதம் வீண் போகவில்லை. வேள்வியில் முதல்வரான உபயாச முனிவரின் மந்திர அருள் வலிமையினால் ஓமகுண்டத்தில் இட்ட பிரசாதம் உயிர் வடிவத்தை அடைந்தது. முதலில் ஓர் ஆண் மகன் அந்த வேள்வித் தீயிலிருந்து பிறந்து எழுந்தான். அவன் உடல் ஒளியும் அழகும் பெற்றுத் தோன்றியது. பொன்னொளிர் மேனியும் புன்னகை தவழும் நிலா முகமும் சுற்றியிருந்தோர்களைத் தன்பாற் கவர, வேள்விக் குழியிலிருந்து கிளம்பும்போதே தேரின் மீது நிற்கும் தோற்றத்துடனே கிளம்பினான் அம்மகன்.

சிரத்திலே மணிமுடி செவிகளிலே மகர குண்டலங்கள்! மார்பில் பொற் கவசம்! கரங்களில் வில்! - என்று இவ்வாறு தன் போக்கிலே வனத்தில் திரியும் சிங்கக் குரளையைப் போலக் காட்சியளித்தான் அவன். யாகசேனனது மனம் இந்தப் புதல்வனைக் கண்டு திருப்தியால் பூரித்தது. அவன் உபயாச முனிவரை வணங்கி நன்றி செலுத்தினான். ‘துரோணரைப் பழிவாங்கிக் கொள்வதற்குத் தகுதியான புதல்வன் பிறந்து விட்டான்’ என்று மகிழ்ச்சி வெறியால் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது அவன் மனம் புதல்வன் பிறந்ததற்காகக் கொண்டாடப் பெற்ற கொண்டாட்டம் அரண்மனையெங்கும் திருவிழாக் காட்சியை உண்டாக்கி யிருந்தது. மங்கல நிகழ்ச்சியைக் குறிக்கும் இன்னிசைக் கருவிகள் முழங்கின. ‘யாகசேனனுக்குப் புதல்வன் பிறந்துள்ளான்’ - என்ற நற்செய்தி அரண்மனைக்கு அப்பால் நாட்டு மக்களிடமும் களிப்பையும் ஆரவாரத்தையும் பரப்பியிருந்தது. புதல்வனுக்குத் ‘துட்டத் துய்ம்மன்’ என்று பெயரிட்டார்கள். இந்த நிலையில் யாகசேனன் உபயாச முனிவரை அணுகி மீண்டும் யாகத் தீயில் அமுதை இட்டு ஒரு பெண் மகளையும் தனக்கு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

முனிவர் வேள்விக் குழியில் மீண்டும் அமுதத்தை இடச் செய்தார். இந்த முறையும் இறைவன் அருள் துணை யாகசேனனுக்கு இருந்தது போலும்! முகில் கற்றைகளுக்கு இடையே வானில் மின்னும் மின்னலைப் போன்ற சிற்றிடையுடன் மதன கலைகளெல்லாந் திரண்ட வடிவழகு தன்னை அலங்கரிக்கத் திரெளபதி தீக் கொழுந்துகளுக்கு இடையே எழுந்து தோன்றினாள். அவளுடைய அழகிலே தெய்வீகம் கனிந்து இலங்கியது. வனத்திலே புதர் மண்டி வாளிப்பாகக் கருத்துச் செழிப்போடிருக்கும் பச்சை மூங்கில் போலப் பளபளக்கும் அழகான தோள்கள், சுழன்று மருளும் மான் விழிகள், மலர்வதற்கிருக்கும் வரிசையான முல்லை மொட்டுக்களைக் கோத்து வைத்தாற் போன்ற பல்வரிசை, திருமகளின் அழகில் எவ்வளவு கவர்ச்சி நிறைந்திருந்ததோ, அவ்வளவு கவர்ச்சி, காண்போர் வியக்குமாறு இத்தகைய தோற்ற நலங்களுடனே திரெளபதி வேள்விக் குழியிலிருந்து  யாகசேனனின் இரண்டாவது மக்கட் செல்வமாக வெளிப்பட்டாள்.

பேரரசர்களெல்லோரும் வியந்து புகழத்தக்க அர்ச்சுனனின் வீரத்திற்குக் கைம்மாறாக அளிக்க இவள் சரியான கன்னிகைதான் என்று விம்மி நிறைந்தது யாகசேனன் உள்ளம். தனக்குக் கிடைப்பதற்கரிய பேறாகக் கிடைத்த அந்தப் புனித சுன்னிகையைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே சமயத்தில் ‘இத்தகைய கன்னிகைகள் சாதாரணமான செயலை நிறைவேற்றுவதற்காக உலகில் பிறப்பதில்லை! இவர்கள் அசாதாரணமான அழகும் பண்பும் கொண்டு பிறப்பதைப் போலவே அதிசயமான பெருஞ்செயல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சீதை பிறந்தாள். இராவணன் முதலிய அரக்கர்கள் அழிந்தார்கள். இப்போது இவள் பிறந்திருக்கிறாள்! இவளால் எந்தத் தீமையை, எந்தத் தீயவர்களை அழிக்க வேண்டும் என்பது இறைவன் கருத்தோ?’ - என வேறோர் தெய்வீகக் குரலும் அவன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்தது. அர்ச்சுனன் தோள்களைத் தழுவி அவனை மணப்பதற்காகப் பாஞ்சாலியையும், தன்னைப் பெரிய அவமானத்திற்குள்ளாக்கிய துரோணரை அழித்து வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்குத் துட்டத்துய்மனையும் தனக்கு மக்களாக அளித்த விதியை வணங்கினான் பாஞ்சால மன்னன் யாகசேனன். கனவாக இருந்து மனத்தைக் குழப்பிய விருப்பங்கள், எண்ணங்கள் பலித்து விட்டால் அப்படிப் பலித்தவருக்கு ஏற்படுகின்ற மன அமைதி எதுவோ அதை யாகசேனன் அடைந்திருந்தான் இப்போது.

9. ஒற்றுமை குலைந்தது!

தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது குறித்து ஏற்கனவே பொறாமை கொண்டிருந்த துரியோதனன், தந்தையைச் சந்தித்துத் தனக்குச் சுதந்திரமான அரச போகங்களும் உரிமைகளும் வேண்டுமென்று வற்புறுத்தினான் அல்லவா? அது திருதராட்டிரன் மனத்தைக் கலக்கமடையச் செய்திருந்தது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் மனம் மயங்கினான். திருதராட்டிரன், வீடுமன், விதுரன் முதலியோர்களை அழைத்து ஆலோசனை செய்தான். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவே அசூயை, பொறாமை, பகைமை. ஆகிய தீய உணர்வுகள் தோன்றியதனால் ஓற்றுமை குலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்பதை விளக்கினான். இந்த ஒற்றுமைக்குலைவைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவர்களை வினவினான். “உறவு நெருக்கமாக இருந்தால் இவர்களுக்குள் பொறாமையும் பகைமையும் உண்டாவது இயற்கைதான். எனவே பாண்டவர்களும் ‘இவர்களும்’ தனித்தனியே விலகியிருந்து வாழுமாறு செய்து பார்ப்பது நல்லது. பிறந்ததிலிருந்தே ‘இவர்கள்’, ஐவர் மேல் அசூயை கொள்வது இயற்கையாகி விட்டதனால் நாம் அழைத்து அறிவுரை கூறினாலும் கேட்கமாட்டார்கள். இந்த ஒற்றுமைக் குலைவும் குரோதமும் உண்டாக்கப் போகின்ற தீய விளைவுகளை நுகர்ந்து துன்புற்றாலொழிய இவர்கள் திருந்தப் போவதும் இல்லை. எனவே இவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம்...” - என்று வீடுமன் முதலியோர் மனக் கசப்போடு கூறிவிட்டுச் சென்றனர்.

“மனம் என்பது விந்தையானது! போட்டி, பொறாமை, வஞ்சகம் முதலிய உணர்வுகள் புகமுடியாத நல்ல மனத்திலும் சூழ்நிலை காரணமாக அவை புகுந்து விடுவது உண்டு. பாதுகாப்பு நிறைந்த வீட்டிலும் அஜாக்கிரதையால் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டால் நாய்கள், திருடர்கள், நுழையும்படி நேர்ந்து விடுகிறதல்லவா? மனத்தின் அஜாக்கிரதையினால் இப்படிப்பட்ட தீய குணங்களும் இடம் பெற்று விடும். ‘தன் மக்களாகிய துரியோதனாதியர்களின் அசூயையும், பொறாமையும் தவறானவை’ என்று அஞ்சி மனம் பதறிப் பதைத்த திருதராட்டிரனது பண்புகூட  நாளடைவில் மாறுபட்டது. தன் புதல்வர்கள், பாண்டுவின் புதல்வர்களென்று வேறுபடுத்திப் பாராத அவனே துரியோதனனின் துர்ப் போதனையாலும் தன்னலத்தினாலும் மனம் மாறி வஞ்சகமாக நினைக்கத் தொடங்கி விட்டான். கர்ணன், சகுனி, துர்ச்சாதனன் முதலியவர்களும் சேர்ந்து பொறாமை பேசிப் பேசி அவன் மனத்தையும் அதன் வண்ணமாக மாற்றி விட்டார்கள். நல்லாசிரியராகவும், பாண்டவர்கள் கௌரவர்கள் ஒற்றுமையில் அக்கறை கொண்டவராகவும் இருந்த துரோணர் இந்த ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், அவரோ அப்போது துட்டத்துய்ம்மனுக்குக் கல்வி, கலைகளைக் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரிடமே தன் மகனைக் கற்கச் செய்து அவரையே பழி வாங்கத் திட்டமிட்டிருந்தான் யாகசேனன். உயரிய நோக்கமும் கொள்கையினாற் பரந்த உள்ளமும் படைத்தவராகிய துரோணர் ‘கலை’ என்ற ஒன்றை மட்டும் தன்னைக் கொல்லவரும் அரசகுமாரனுக்கும் கற்பிக்கத் தயாராக இருந்தார். துட்டத்துய்ம்மன் அவரிடம் வந்து ‘தனக்கு வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும்’ - என்று பிரார்த்தித்தபோது அவன் இன்னானுடைய மகன் என்றும் இன்ன விதத்தில் தனக்கு வைரி என்றும் நன்கு தெரிந்திருந்தும் கூடத் துரோணரால் அவன் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. தன் உயிருக்கு எமனாக எவன் வளர்ந்து வருகிறானோ அவனுக்கே தாம் ஆசிரியனாக இருந்து உள்ளன்போடு கற்பிக்க ஒப்புக் கொண்டார் துரோணர். ‘சான்றோர்கள் பகைவனுக்கும் அருள் புரிகிற பண்பட்ட மனமுடையவர்கள்’ - என்னும் உண்மையை நிதர்சனமாக்கிக் காட்டியது துரோணரின் கருணை மிக்க இக்காரியம்.

இதனால் துரோணர் கூடத் திருதராட்டிரனையோ கெளரவர்களையோ சந்தித்து ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு வழியின்றிப் போயிற்று. தந்தை திருதராட்டிரனையும் தங்களது வஞ்சகக் கருத்துக்கு ஏற்றபடி மாற்றிவிட்ட துரியோதனாதியர், புரோசனன் என்னும் பெயரினனான தீய அமைச்சன் ஒருவனைத் தங்கள் கருத்துக்குத் துணையாக வைத்துக் கொண்டனர். புரோசனனும், சகுனி, கர்ணன், துரியோதனாதியர், ஆகியோரைப் போலப் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டவன் தான். புரோசனனும் துரியோதனாதியர்களும் கூடிச் சிந்தித்துப் பாண்டவர்களை அழித்தொழிக்க ஒரு வழி கண்டுபிடித்தனர். ‘வாரணாவதம் என்ற ஊரில் பாண்டவர் களைத்தனியே ஓர் அரக்கு மாளிகையில் வசிக்குமாறு தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் வசித்து வரும்போது ஒருநாள் இரவில் மாளிகைக்குத் தீ வைத்து விட வேண்டும்’ - இது தான் அவர்களது சிறுமை நிறைந்த உள்ளங்களுக்குத் தோன்றிய வழி.

இந்த எண்ணத்தை அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சென்று திருதராட்டிரனிடம் கூறினார்கள். புறக் கண்களை இழந்து போய்க் குருடனாயிருந்த அந்தப் பெருவேந்தன் அகக் கண்களையும் இழந்து போனானோ என்றெண்ணும்படியாக அதற்கு இசைந்து அரக்கு மாளிகை கட்டவும் ஏற்பாடு செய்து விட்டான். இந்த ஏற்பாடு விதுரனுடைய மனத்தில் மட்டும் சந்தேகத்தை நுழையச் செய்தது. அரக்கு மாளிகை கட்டி முடிந்தவுடன் திருதராட்டிரன் பாண்டவர்களை அழைத்து விவரத்தைக் கூறினான். தருமன் அவன் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டான். “நீங்களும் கெளரவர்களும் இங்கு ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அது ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் வளர்வதற்குக் காரணமாகிவிடும். ஆகவே நீங்கள் வாரணாவத நகரத்தில் தனியே வசித்து உங்களது ஆட்சியை நடத்துவதே நல்லது. உங்களுக்கு வேண்டிய படைகளையும் மற்ற வசதிகளையும் கொடுத்துத் துணையாக இருப்பதற்குப் புரோசனன் என்னும் அமைச்சனையும் கூட அனுப்புகிறேன். உங்கள் ஒற்றுமைக் குலைவைத் தவிர்ப்பதற்கு இது தான் சரியான வழி -என்று திருதராட்டிரன் கூறினபோது தருமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் சகோதரர்களுடனும் தாய் குந்தியுடனும் வாரணாவத நகரத்திற்குப் புறப்பட்டான்.

இவ்வாறு திருதராட்டிரன் பாண்டவர்களை வாரணா வதத்திற்கு அனுப்பியது தெரிந்ததும் துரியோதனாதியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீமைக்கு மகிழ்வது தானே சிறுமையின் இயல்பு? வாரணாவத் நகரில் தங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த அரக்கு மாளிகையிற் குடியேறி வசிக்கத் தொடங்கிய போது பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சி எதையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக வாரணாவத் நகரில் தங்களை வசிக்குமாறு செய்ததில் ஏதோ சூது அடங்கியிருப்பதை உணரத் தலைப்பட்டனர். தங்களோடு உடனிருக்கும் மந்திரி புரோசனன் படைகளின் நிர்வாகத்தையும் வேறு சில முக்கிய நிர்வாகப் பொறுப்பு களையும் தானே வைத்து அதிகாரம் புரிந்து கொண்டு வந்ததைக் கண்டு அவன் மேல் சந்தேகம் கொண்டனர் பாண்டவர்கள். புரோசனனின் அளவுக்கதிகமான பணிவும் வணக்கமும், அவர்களை ஐயம் கொள்ளச் செய்தன. அவனுடைய சில மர்மமான நடத்தைகள், தங்களை ஆதரிப்பது போல் கேடுகளைச் செய்வனவாய் அமைவதையும் அவர்கள் நுட்பமாகக் கவனித்துக் கொண்டே வந்தார்கள். இவைகளுக்கெல்லாம் மேல் தங்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மாளிகை முழுவதும் அரக்கினாலேயே கட்டப்பட்டிருந்தது எதற்காக என்பது அவர்கள் சிந்தனையில் சந்தேகத்துக்குரிய வினாவாகப் பற்றி நின்றது.

இதை அறிந்து கொள்ளும் முயற்சியில் வீமன் ஈடுபட்டான். மாளிகை ஏன் அரக்கினால் கட்டப்பட்டிருக்கின்றது என்ற புதிருடன் வேறோர் பயங்கர உண்மையும் விடுபட்டது. அந்த அரக்கு மாளிகையைக் கட்டிய தச்சர்களில் முதன்மை வாய்ந்த ஒருவன் விதுரனுக்கு நண்பன். அவன் வீமனைத் தேடி வந்தான். அவனிடமிருந்து கெளரவர்களின் எல்லாச் சூழ்ச்சிகளையும் வீமன் அறிந்து கொண்டான். “இந்த அரக்கு மாளிகையை தீக்கு இரையாக்கி உங்களை அழிக்க வேண்டும் என்பது அந்தச் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணம். இதை அறிந்த விதுரர் நான் இந்த மாளிகையை அமைக்கும்போதே, ‘பாண்டவர்கள் தப்பிச் செல்ல உள்ளே இரகசியமாக ஒரு சுரங்கம் அமைத்து விடு’ - என்று என்னிடம் கூறினார். நானும் அவ்வாறே ஒரு சுரங்கம் இங்கிருந்து காடுவரை போக வசதியாக அமைத்திருக்கிறேன். ஆபத்து ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - என்று கூறி அந்தச் சுரங்கம் ஒரு பெரிய தூணுக்கு அடியில் கீழே அமைந்திருப்பதையும் விளக்கிவிட்டுச் சென்றான். வீமன் அவனைப் பாராட்டி நன்றி செலுத்திப் பரிசு பல கொடுத்தனுப்பினான் அவனுக்கு.

இதன் பின் வெகு விரைவிலேயே ஒருநாள் வீமன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விபத்து ஏற்பட்டது. ஆனாலும் அவன் முன்னேற்பாடுடனே தயாராக இருந்தான். அன்று பாண்டவர்கள் மிகுந்த நேரம் வனத்திலேயே வேட்டையாடி அலைந்த களைப்புடனே மாளிகைக்குத் திரும்பியிருந்தார்கள். அவர்கள் ஓய்வாக உறங்கப் போகும் நேரத்தில் புரோசனன் என்னும் அமைச்சன் வந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் வேறோர் புறத்தில் துரியோதனாதியர்களால் ஏவப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயாகிய வேட்டுவச்சி ஒருத்தியும் அந்த அரக்கு மாளிகைக்கு நெருப்பு வைப்பதற்காக ஒளிந்து கொண்டிருந்தார்கள். இது வீமனுக்கு மட்டும் முன்பே தெரியும். பேசிக் கொண்டே இருந்த மற்ற நால்வரும் அமைச்சன் புரோசனனையும் உறங்கச் சொல்லிவிட்டுத் தாங்களும் உறங்கி விட்டனர், நெருப்பு வைப்பதற்காக அனுப்பப்பட்டிருந்தவர்கள் எங்கே தங்கியிருந்தார்களோ, அங்கே முதலில் அவர்களை முந்திக் கொண்டு தானே நெருப்பை வைத்துவிட்டுத் தூண்டியிலிருந்த சுரங்கத்தைத் திறந்தான் வீமன், மாளிகையில் வேகமாகத் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. அது தான் வெளியேறுவதற்குச் சரியான சமயம் என்று தன் சகோதரர்களையும் தாயையும் சுரங்க வழியாக வெளியேற்றிக் கொண்டு வீமன் கிளம்பினான். பாண்டவர்களும் குந்தியும் பிழைத்தனர். புரோசனனும், வேட்டுவர்கள் ஐவரும் அவர்கள் தாயும் தீக்கிரையான மாளிகைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்க வழியாகவே வெகு தொலைவு நடந்து காட்டுக்குள் வந்து சேர்ந்தனர் பாண்டவர்களும் குந்தியும்.

ஆனால் உலகறியாத இரகசியம் இது! மறுநாள் பொழுது விடிந்ததும் இறந்து கருகிப்போன வேட்டுவர், வேட்டுவச்சி பிணங்களைப் பாண்டவர்களும் அவர்கள் தாயும் இறந்தவர் என்றெண்ணி வருந்தியது உலகம். விதுரன், வீட்டுமன் முதலியவர்கள் கூடப் ‘பாண்டவர்கள் அழிந்தனரோ’ -என்றெண்ணி வேதனை கொண்டனர். விதுரன் தச்சன் மூலமாக உதவி செய்திருந்தாலும் என்ன நடந்ததோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கத் தான் செய்தது. ஊரோடு தாங்களும் அழுது வருந்துபவர்களைப் போலத் துரியோதனாதியாரும் வருத்தப்பட்டுப் பொய்யாக நடித்தனர். ‘பாண்டவர்களை அறம் காக்கும்! அவர்கள் உறுதியாக இறந்திருக்க மாட்டார்கள்!’ -என்று வேறு சிலர் நம்பினர். விதுரன் மெய்யாகவே பாண்டவர்களைக் காக்க வழி கூறியிருந்ததனால் இந்த நம்பிக்கையால் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் இந்தச் சம்பவத்தால் குலைந்து இடிந்து விழுந்த அரக்கு மாளிகை போலவே குருகுலத்தின் ஒற்றுமையும் ஒடுங்கிக் குலைந்து போய்விட்டது.

10. கானகத்தில் நிகழ்ந்தது

அரக்கு மாளிகையிலிருந்து வெளியேறிய வீமன், சகோதரர்களுடனும் தாயுடனும் ஒரு கானகத்தின் இடையே வந்து சேர்ந்திருந்தான். சுரங்க வழியின் முடிவு அந்த வனத்தில் தான் அவர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தான் வைத்த நெருப்பு எங்கும் பற்றிப் பரவி மாளிகையில் அழிவு உண்டாக்குவதற்கு முன்னால் சுரங்க வழியில் வெகு தொலைவு நடந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தால் வீமன், தாய், சகோதரர் ஆகியோர்களோடு மிக விரைவாக நடந்து வந்திருந்தான். வழி நடந்த களைப்பும், இரவு நேரத்தின் உறக்கச் சோர்வும், அவர்களைப் பெரிதும் அலுத்துப் போகும்படியாகச் செய்திருந்தன. களைத்த நிலை தீர ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். இரவின் அமைதியும் தனிமையும் எங்கும் நிறைந்து குடிகொண்டு இலங்கிற்று அவ்வனம். மெல்லிய காற்றும் காட்டினது இதமான சூழ்நிலையும் வீமனைத் தவிர யாவரையும் உறக்கத்தில் ஆழ்ந்து போகச் செய்திருந்தது. பலவிதமான குழப்பம் நிறைந்த சிந்தனைகளால் அவன் மனம் கலக்க முற்றிருந்த காரணத்தால் உடலில் களைப்பு இருந்தும் உறக்கம் அவனை நாடவில்லை, உறங்காமல் உடன் பிறந்தவர்களுக்கும் தாய்க்கும் காவலாக இருப்பதுபோல அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறு அவன் விழித்திருந்த போது அங்கே ஓர் வியப்புக்குரிய நிகழ்ச்சி நடந்தது! சிந்தனைப் போக்கில் இலயித்துப் போய் வீற்றிருந்த அவன், ‘கலின் கலின்’ என்று சிலம்புகள் ஒலிக்க யாரோ அடிபெயர்த்து நடந்து வரும் ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்தான். ஆச்சரியகரமான ஒரு காட்சியை அப்போது வீமன் தன் எதிரே கண்டான். அழகே வடிவான இளம் பெண் ஒருத்தி அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். மயிலின் சாயலும் அன்னத்தின் நடையும் விளங்க அவள் நடைபயின்று வந்து கொண்டிருந்த விதம் வீமனுடைய அடி மனத்தில் இனிய உணர்வையும் கவர்ச்சியையும் உண்டாக்கிற்று. வீமன் தலைநிமிர்ந்து தன்னை நோக்கியதும் அந்தப் பெண் சிரித்தாள். சிரிப்பா அது? முத்துப் போன்ற வெண்பற்களின் ஒளி அவன் கண் வழிப் புகுந்து இதய உணர்வைக் கரைத்தது. வீமனுடைய மனத்தைப் பற்றிக் கொண்டிருந்த கலக்கம் நிறைந்த சிந்தனைகள், அந்தச் சிரிப்பின் மோகனத்திலே ஐக்கியமாகி விட்டன.

அந்த அழகி சிறிதும் தயங்காமல் வீமனை நெருங்கினாள். “நீங்களெல்லாம் யார்? இந்த நள்ளிரவில் மனிதர்கள் நுழைவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் எவ்வாறு நுழைந்தீர்கள்? உங்களுக்கு இங்கு இந்நேரத்தில் என்ன வேலை?” -யாழிசை போன்ற மெல்லிய குரலில் சிறிதும் தயக்கமின்றி வீமனை நோக்கிக் கேட்டாள் அவள்.

அவளுடைய கேள்விக்கு உடனடியாக அப்போதே மறுமொழி கூறிவிடவில்லை அவன். ஆர்வம் ததும்பும் விழிகளால் அந்த இளங் கன்னிகையை ஏற இறங்க ஒரு முறை கூர்ந்து நோக்கினான். வீமனுடைய அந்தப் பார்வை அவளையும் அவள் உள்ளத்தையும் ஊடுருவியது. அந்த யுவதியின் கண் பார்வை தாழ்ந்து பிறழ்ந்தது. கன்னக் கதுப்புக்கள் சிவந்தன. கேள்வியிலிருந்த மிடுக்கு இப்போது இல்லை. தோற்றத்தில் நாணம் தென்பட்டது. மூடிய இதழ்களில் நகைக் குறிப்புப் புலப்பட்டது. இப்போது வீமன் கலகலவென்று சிரித்தான். எழுந்திருந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்று நின்று கொண்டான். அது சரி, நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? இந்தப் பயங்கரமான காட்டில் இரவு நேரத்தில் அழகே வடிவான வன தேவதை போலத் தோன்றும் உங்களுக்கு என்ன வேலையோ? மெல்லியலாராகிய தாங்கள் எவ்வளவு துன்புற்று இந்தக் காட்டிற்குள் நுழைந்தீர்களோ?” -வீமன் கேட்டான்.

அவன் சிரித்துக் கொண்டே கேட்ட இந்தக் கேள்வி அவளைத் திகைப்புக்குள்ளாக்கிவிட்டது. அவளுடைய திகைப்பில் நாணமும் கலந்திருந்தது. வீமனுடைய சிரிப்பும் பதிலுக்குப் பதிலாகக் கேட்கப்பட்ட குறும்புத்தனமான கேள்விகளும் அவள் இதயத்தைத் தழுவி இருக்க வேண்டும். அவளது வெட்கம் இந்த உண்மையை விவரித்தது. வெட்கத்தோடு வெட்கமாக அவள் தலையைக் குனிந்து கொண்டே கூறிய விடைதான் அவனைச் சிறிதளவு திடுக்கிடச் செய்தது. தான் அந்த வனத்தில் வசிக்கும் கொடிய அரக்கனாகிய இடிம்பன் என்பவனின் தங்கை என்றும், மனிதர்களைக் கொன்று தின்னும் இயல்பும், கொடுமைகளும் நிறைந்தவன் தன் தமையன் என்றும் மனிதர்கள் எவரோ வந்திருக்க வேண்டும் என்பதை அனுமானித்தே தன்னைத் தன் தமையன் அங்கு அனுப்பினான் என்றும் அந்தப் பெண் கூறினாள். வீமனுக்கு உண்மை புரிந்தது. அந்தப் பெண் இடிம்பனின் தங்கை இடிம்பி. அவன் ஏவலால் அவள் வந்திருக்கிறாள் என்ற செய்திகளை வீமன் தானாகவே உய்த்துணர்ந்து கொண்டிருந்தான். உண்மை நன்கு விளங்கியதும் இவன் திகைத்தான். ஆனால் அஞ்சவில்லை.

“அப்படியானால் உன் தமையனிடம் சென்று நாங்கள் இருக்குமிடத்தைச் சொல்லி எங்களைக் கொல்லும்படிச் செய்யேன்” - தன் திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்தவாறே இப்படிக் கேட்டுவிட்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான் வீமன். அவள் அனுதாபமும் அனுராகமும் ஒருங்கே வந்து திகழும் நோக்கு ஒன்றை அவன் மேல் செலுத்தினாள்.

“உங்களைத் தேடிக் கொண்டு வருகிறபோது கொல்ல வேண்டும் என்ற குருதி வெறியோடுதான் வந்தேன். ஆனால்... ஆனால்... இப்போது ...” அவள் தலை கவிழ்ந்தது. கால்விரல்கள் நிலத்தைக் கிளைத்தன.

“ஆனால் என்ன? இப்போது மனம் மாறிவிட்டதா?”

“ஆமாம்! ஆமாம்! என் மனத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். உங்களையும் அழைத்துக் கொண்டு இந்த வனத்தையும் இதில் ஏகபோகமாகக் கொடுங்கோல் ஆட்சிபுரியும் என் தமையனைவும் விட்டுவிட்டு எங்காவது ஓடிப் போய்விடலாம் போலிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் என் தமையன் இங்கே வந்துவிடுவான். அவன் வந்தால் உங்களையெல்லாம் உயிரோடு தப்பவிடமாட்டான். பேசாமல் என்னோடு புறப்பட்டு விடுங்கள். நாம் இருவரும் என் தமையனுக்குத் தெரியாமல் அருகிலுள்ள ஒரு மலைச்சிகரத்துக்கு ஓடிப் போய்விடலாம். உங்கள் அழகு அழிவதை என்னுடைய இந்தக் கண்களால் காண முடியாது! வாருங்கள் உடனே ஓடிவிடலாம்“ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வீமனைக் கெஞ்சினாள் அவள்.

“நான் கோழையில்லை, பெண்ணே! இதோ உறங்கிக் கொண்டிருக்கும் என் சகோதரர்களையும் தாயையும் அனாதரவாக விட்டுவிட்டு உன்னோடு ஓடிவருவதற்கு என் அறிவு மங்கிப் போய்விடவில்லை. உன் தமையன் வரட்டுமே! அவன் கையால் நாங்கள் அழிகிறோமா அல்லது என் கையால் அவன் அழிகின்றானா என்பதை நீயே நேரில் காண்பாய்” - வீமன் ஆத்திரத்தோடு கூறினான்.

அவன் இவ்வாறு கூறி முடிக்கவில்லை. அந்தக் காடே அதிரும்படியாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தரை நடுங்க யாரோ அந்தப் பக்கமாக நடந்து வரும் ஒலி கேட்டது. வந்தது வேறெவருமில்லை! இடிம்பன்தான். அவனுடைய நெருப்புக் கங்கு போன்ற கண்களையும் யானைக் கொம்புகள் போன்ற பெரும் பற்களையும், மலை போன்ற உடலையும் வீமனைத் தவிர வேறு எவரும் பார்த்திருந்தால் நடுங்கி மூர்ச்சித்துப் போயிருப்பார்கள். ஆனால், வீமனோ தன்னைப் போருக்குச் சித்தம் செய்து கொண்டான். அளவற்ற துணிவுணர்ச்சி அவன் உள்ளத்திலும் உடலிலும் திரண்டு நின்றது. அங்கே வந்த இடிம்பனின் கண்களிலே முதலில் அவன் தங்கையே தென்பட்டாள். வீமனை நோக்கி நாணத்துடனே தலை குனிந்து தயங்கி நின்ற நிலையை அவன் விளக்கமாகப் புரிந்து கொண்டான். ஏற்கனவே சிவந்திருந்த அவன் விழிகள் இன்னும் சிவந்தன.

“இடிம்பி! பெண் புலி ஆண்மானின் மேல் பாய்வதை மறந்து காதல் கொள்ளத் தொடங்கிவிட்டதா? உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உன் காதலனை நான் உயிரோடு விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! இதோ பார். உன் காதலன் எனக்கு உணவு என்றாக்குகிறேன்” -என்று கூறிக்கொண்டே வீமனை நோக்கிப் பாய்ந்தான் இடிம்பன். அந்தப் பாய்ச்சலை எதிர்பார்த்து அதைச் சமாளிக்கத் தயாராயிருந்தான் வீமன். இருவருக்கும் போர் தொடங்கியது.

“நான் ஆண் சிங்கம்! நீ வெறும் பூனை. ஒரே ஒரு நொடியில் உன்னை வானுலகுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே தேவமாதர்கள் உன்னைக் காவல் புரிவர். அரக்கனை எதிர்க்கிற துணிவும் உனக்கு உண்டா? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்!” -என்று தன் இடிக்குரலில் முழங்கிக் கொண்டே பாய்ந்து பாய்ந்து போர் செய்தான் இடிம்பன். இந்தக் கலவரமும் ஒலியும் பாண்டவர்களை எழுப்பிவிட்டது. குந்தியும் எழுந்து விட்டாள். சகோதரர்களும் குந்தியும் வியப்புடன் ஒரு புறம் நின்று போர்க் காட்சியைக் கண்டனர். இடிம்பியும் மற்றோர் புறம் நின்று கண்டாள். இடும்பனைப் போல் வாய் முழக்கம் செய்யாமல் போரில் தன் சாமர்த்தியத்தைக் காட்டி அவனைத் திணறச் செய்து கொண்டிருந்தான் வீமன். இடிம்பன் தன்னுடைய மதிப்பீட்டிற்கும் அதிகமான பலத்தை வீமனிடம் கண்டதனால் மலைத்தான். ஒரு புறம் தன் தமையன் தருகிறானே என்ற பாசமும் மறுபுறம் தன் உள்ளங்கவர்ந்தவன் நன்றாகப் போர் புரிகின்றானே என்ற ஆர்வமும் மாறி மாறி எழுந்தன, இடிம்பியின் மனத்திலே. வீமனிடத்தில் அவளுக்கு ஏற்பட்ட காதல் சகோதர பாசத்தையும் மீறி வளருவதாக இருந்தது. வீமன் தன் கைவன்மை முழுதும் காட்டிப் போர் புரிந்தான். மலைச்சிகரங்களிடையே கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் செங்காந்தள் பூக்களைப் போல இடிம்பனின் பருத்த மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. இடிம்பன் பயங்கரமாக அந்தக் காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாய் அலறிக் கொண்டே வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்தான்.

வீமன் நிமிர்ந்து நின்றான். தன் புதல்வன் பெற்ற இந்த அரிய வெற்றி, குந்தியை மனமகிழச் செய்தது. சகோதரர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். இடிம்பி தன் தமையனின் உடலைக் கட்டிப் புரண்டு கதறியழுது கொண்டிருந்தாள். ஆயிரமிருந்தாலும் உடன் பிறப்பல்லவா? அவன் மார்பில் பீறிட்டு வழியும் அதே குருதி தானே அவள் உடலிலேயும் ஓடுகின்றது? ஆனால் அவள் அடிமனத்தின் ஆழத்தைத் தொட்டுப் பார்த்தால் ஓருண்மையினை அங்கே காணலாம். தன் தமையன் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஆண்மையும் ஆற்றலும் வந்தவுடனேயே தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனைச் சேர்ந்தது என்றெண்ணும் போதே ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அவள் அடிமனத்தின் ஆழத்திலிருந்த அந்த உண்மை. மகிழ்ச்சியும் சோகமுமாக இரண்டுணர்வுகளும் நிரம்பி வழியும் நெஞ்சுடன் பாண்டவர்களும் குந்தியும் அங்கிருந்து காண அழுது தவித்துக் கொண்டிருந்தாள் அந்த இளநங்கை.

அப்போது இரவு படிப்படியாகக் கழிந்து கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. வைகறையின் குளிர்ந்த காற்றும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் கதிரவன் உதிப்பதற்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை அறிவித்தன. நேரம் வளர வளரக் கிழக்கே அவன் வட்ட வடிவம் சிறிது சிறிதாக வளர்ந்து மேலே எழுந்தது. “பறவைகளே! இதோ கொடுமைக்கே இருப்பிடமாக இருந்த ஓர் அரக்கனின் பிணம் இங்கே கிடக்கிறது. நீங்கள் விருப்பம் போல் உண்ணலாம். நான் உங்களுக்கு விளக்காக இருக்கிறேன்” - என்று கூறிக்கொண்டே எழுவது போலிருந்தது கதிரவனுடைய தோற்றம், பொழுது விடிந்த பின்பும் வீமன் முதலியவர்களைக் விட்டுப் பிரிய மனமில்லாமல் தமையன் இறந்த துயரத்தையும் மறந்து அங்கேயே தயங்கித் தயங்கி நின்றான் இடிம்பி. அவள் உள்ளக் கருத்து வீமனுக்கும் தெரிந்தது. அந்தக் கருத்தை வரவேற்கும் கவர்ச்சியும் அனுதாபமுங்கூட அவனுக்கும் இருந்தது. என்றாலும் சந்தர்ப்பம், சூழ்நிலை முதலியவற்றை உத்தேசித்துத் தன் மறுமொழியைக் கடுமையாக அமைத்துக் கொண்டு கூறினான்; “பெண்மணியே! உன் உள்ளக் கருத்து எனக்கும் புரிகிறது. ஆனால், என் தமையன் திருமணமாகாதவன். இந்நிலையில் உன்னை நான் அங்கீகரிக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். தவிர இன்னோர் தடையும் உண்டு. நாங்களோ மானிடர்கள். நீயோ காட்டில் கொடிய வாழ்க்கையும் கடும் இயல்புகளும் கொண்டு வாழ்ந்தவனின் தங்கை!” -என்று கூறி இழுத்துத் தயங்கி நிறுத்தினான் வீமன்.

இடிம்பி கண்ணீர் விட்டு அழுதாள். ஏமாற்றம் அவள் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. உடன் பிறந்தவனைப் பறி கொடுத்த துயரத்தை விட வீமனின் அன்பைப் பறி கொடுத்த துயரமே அவளைப் பெரிதும் வருத்தியது. அவள் குந்தியின் காலடியில் வந்து விழுந்தாள். தனக்குச் சரணளிக்குமாறு கெஞ்சினாள். குந்தி மனம் இரங்கினாள். தருமன் முதலிய சகோதரர்களும் இடிம்பியின் நிலைக்கு இரங்கினார்கள். சகோதரர்களும், குந்தியும் கூறிய பின் வீமன் இடிம்பியை ஏற்றுக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே அவளைக் காந்தர்வ விவாகம் புரிந்து கொண்டான். தருமனின் அனுமதி பெற்றே இந்த விவாகத்தை வீமனுக்குச் செய்வித்தாள் குந்தி.

இந்த மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்தவர் போல அன்று பகலில் வியாசமுனிவர் அவர்களைக் காண வந்தார், “இந்தக் காட்டில் இனி மேலும் தங்காதீர்கள்” என்று கூறி அவர்கள் சென்று தங்குவதற்கு வேறிடம் கூறினார் அவர். பாண்டவர்களும் குந்தி, இடிம்பி ஆகியவர்களோடு அவர் கூறிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். வியாசருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள். புதிதாக அவர்கள் வந்த இடம் சாலிகோத்திர முனிவர் என்பவருடைய ஆசிரமம் இருந்த வேறோர் வனம் ஆகும். இந்த வனத்தில் அவர்கள் பல நாள் தங்கியிருந்தார்கள். வீமனுக்கு இடிம்பியிடம் கடோற்கசன் என்ற புதல்வன் ஒருவன் இந்த வனத்தில் பிறந்தான் மனம் ஒருமித்த காதலர்களாகிய வீமனும் இடிம்பியும் இங்கே ஒருவரையொருவர் பிரிய நேர்ந்தது. ஆனால் மனோதிடம் வாய்ந்தவளாகிய இடிம்பி புதல்வன் கடோற்கசனின் அழகிய தோற்றத்தில் இந்தப் பிரிவை மறக்க முயற்சி செய்தாள். வீமன் விரும்பும்போது அவளை வந்தடைய உதவுவதாகக் கூறிவிட்டு இடிம்பியும் கடோற்கசனும் பிரிந்து சென்றனர். அவர்கள் பிரிவு வீமன் முதலியோர் மனத்தை வருத்தினாலும் தங்கள் கடமை களையும் துயரம் நிறைந்த சூழ்நிலைகளையும் எண்ணி மனத்தை ஆற்றிக் கொண்டனர்.

பின்பு அவர்கள் அந்தணர்கள் போல உருமாறிய தோற்றத்துடன் வேத்திரகீயம் என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தணர்கள் நிறைய வசிக்கும் அவ்வூரிலே பாண்டவர்களுக்கும் குந்திக்கும் அன்பான வரவேற்புக் கிடைத்தது. ஊரார் போட்டியிட்டுக் கொண்டு பாண்டவர்களை விருந்தினர்களாகப் பேணினர். ஓர் நல்லியல்பு மிக்க அந்தணர் வீட்டில் அவர்கள் அங்கே தங்கி வசிப்பதற்கும் இடம் கிடைத்தது.

11. பாஞ்சாலப் பயணம்

ஓர் நாள் காலைப் பொழுது விடிவதற்கு இரண்டு நாழிகை இருக்கும்போது தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் எவரோ பலமாகக் கதறியழுகின்ற ஒலியைக் கேட்டுக் குந்தி திடுக்கிட்டாள். முன்பின் அறியாத தாங்கள் வேத்திரகீய நகருக்கு வந்ததுமே தங்களை நம்பி வீட்டில் இடம் அளித்த அவர்களுக்கு எதுவும் துன்பம் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணிக் கலங்கியது குந்தியின் நெஞ்சம். அவள் மெல்ல அரவமின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து சென்று அழுகை வந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தாள். அந்த மங்கலான நேரத்தில் தங்களுக்கு ஆதரவளித்த அந்தணரின் மனைவி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டாள் குந்தி. நன்றி உணர்ச்சியால் நிறைந்திருந்த அவளுடைய இதயம் பதைபதைத்தது. அன்போடு அவள் அந்தப் பார்ப்பனியை நெருங்கி அழுகைக்குரிய காரணத்தை விசாரித்தாள். பார்ப்பனி தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை விரிவாக எடுத்துக் கூறினாள்:-

“அம்மா! இன்று நான் என்னுடைய ஓரே மகனை உயிருடனே பறிகொடுக்க வேண்டிய தீவினைக்கு ஆளாக இருக்கிறேன். இந்த வேத்திரகீய நகரை அடுத்திருக்கும் காட்டில் எவராலும் வெல்லமுடியாத ‘பகாசுரன்’ என்னும் அரக்கன் ஒருவன் இருக்கிறான். அவனால் இந்த ஊரும் இதில் வசிக்கும் மனித ஜீவன்களும் இதற்குள் என்றோ ஒரு நாள் அழிந்து போயிருக்க வேண்டியவை. ஆனால் அவ்வாறு அழிந்து போகாவண்ணம் இந்த ஊர் முன்னோர்கள் அந்த அரக்கனோடு ஓர் உடன்படிக்கை செய்து வைத்துக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கையினால் அரக்கன் ஊர் முழுவதையும் மொத்தமாக அழித்துக் கொல்ல இருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டது. ஆனால் உடன்படிக்கையின் படி நாள்தோறும் இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டினராக முறை பகிர்ந்து கொண்டு அந்த அரக்கனுக்கு உணவாக ஒரு வண்டி சோறு கறிகளும் ஒரு முழுமையான மனிதனின் சரீரமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்று வரை இவ்வூரில் முறைப்படி இந்த ஏற்பாடு தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்த வீட்டின் முறை வண்டியோடு அனுப்ப என் ஒரே மகன்தான் பயன்பட வேண்டும். அவன் உயிர் தான் பலியாக வேண்டும். இந்தக் கொடுமையை எண்ணித் தான் நான் அழுகிறேனம்மா! வேறு ஒரு வழியும் இல்லை. ஒரே மகன் என்று பார்க்காமல் பெற்ற பிள்ளையை வண்டியோடு பகாசுரனிடம் அனுப்ப வேண்டியது தான்.”

“வேண்டாம்! உங்கள் ஒரே மகனை அனுப்ப வேண்டாம். நானாயிற்று அவனைக் காப்பாற்றுவதற்கு. எனக்கு ஐந்து புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை வண்டியோடு அனுப்பி விடுகிறேன்” -என்றாள் குந்தி.

முதலில் பார்ப்பனி அதை மறுத்தாலும் பின்பு குந்தியின் வற்புறுத்தலின் மிகுதியால் அதனை ஒப்புக் கொண்டாள். வீமனைச் சோற்று வண்டியோடு அனுப்ப வேண்டுமென்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் குந்தி. வீமன் எப்படியும் பகாசுரனை வென்று அவன் கொட்டத்தை அடக்கிவிட்டு வருவான் என்பது அவள் நம்பிக்கை. ஆனால் அவள் அதை வெளிப்படையாக எவரிடமும் கூறிக் கொள்ளவில்லை. வீமனை அணுகித் தன் ஏற்பாட்டைக் கூறினாள் குந்தி.

“தாயே! உறுதியாக என்னையே அனுப்புங்கள். அந்த அரக்கனைத் தொலைத்துவிட்டு வருகிறேன். இந்த நகரில் நாம் தங்கியதற்கு அடையாளமான ஓர் நல்ல காரியமாக இருக்கட்டும் இது” -என்று தாயின் கருத்தை வரவேற்று ஆமோதித்தான் அவன்.

குறிப்பிட்ட நேரத்தில் சோற்று வண்டியோடு காட்டுக்குப் புறப்பட்டான் வீமன். கறிவகைகளும் சோறும் மலைப் போலக் குவிந்திருந்தது வண்டியில். கொஞ்சங்கூட அச்சமில்லாமல் உல்லாச யாத்திரை புறப்படுபவன் போன்ற மகிழ்ச்சியை மனத்திற் கொண்டிருந்தான் வீமன். காட்டை யடைந்ததும் பகாசுரனது குகை இருந்த இடத்தை, அங்கே சிதறிக் கிடந்த எலும்புக் குவியல்களால்தானே அனுமானித்துக் கொண்டு விட்டான். குகையைச் சுற்றி ஒரே கழுகுக் கூட்டம். நரிகளும் அலைந்து கொண்டிருந்தன. நிண நாற்றம் மூக்கைத் துளைத்தது. குகைக்கு இப்பால் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திக் கொண்டு வீமன் தானே சோற்றையும் கறிவகைகளையும் காலி செய்யத் தொடங்கினான். பகாசுரனோடு யுத்தம் செய்வதற்கு வலிமை நாடியும் அவனைச் சண்டைக்கு இழுக்க ஒரு வழி தேடியும் தான் அவன் இதைச் செய்தான். வண்டியிலிருந்த சோற்றையும் கறி வகைகளையும் வீமன் ரசித்துச் சாப்பிட்டதினால் நேரம் கழிந்து கொண்டிருந்தது. வழக்கமாக உணவு வரும் நேரத்திற்கு அன்று உணவு வராததால் பகாசுரன் ஆத்திரத்தோடு குகையிலிருந்து வெளியே கிளம்பினான். குகைக்கு எதிரே மரத்தடியில் வண்டியில் தனக்காக உணவு வந்திருப்பதையும், யாரோ ஒருவன் அதை வேகமாகத் தின்று கொண்டிருப்பதையும் கண்டு அவன் கண்கள் சிவந்தன. பற்களைக் கடித்துக் கொண்டே மரத்தடியை நோக்கித்தாவிப் பாய்ந்து ஓடி வந்தான் அவன். வீமனோ அசுரன் வருகிறான் என்பதை அறிந்ததும் அறியாதவனைப் போலச் சாப்பாட்டி லேயே கவனமாக ஈடுபட்டிருந்தான்.

“புலிக்கு வந்த உணவைக் கேவலம் ஒரு பூனை தின்று கொண்டிருக்கிறது. இந்தப் பகாசுரன் யார் என்பதை அந்தப் பூனைக்குப் புரிய வைக்கிறேன்” -பகாசுரன் கர்ஜித்துக் கொண்டே வண்டியை நெருங்கினான். அடுத்த விநாடி உண்டு கொண்டிருந்த வீமனுடைய முதுகிலும் பிடரியிலும் விண்விண்ணென்று சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. வீமனோ அந்தக் குத்துக்களைச் சிறிதும் பொருட்படுத்தாது வண்டியில் கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த சோற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். சோறு தொண்டையிலே விக்கிக் கொள்ளாமல் முதுகிலே மென்மையாகத் தட்டிக் கொடுத்தது போலிருந்த பகாசுரனின் குத்துக்கள். வண்டியிலுள்ள எல்லா உணவுப் பொருட்களையும் சாப்பாட்டு முடிந்தபின் மலை எழுந்திருப்பது போல ஏப்பம் விட்டுக் கொண்டே எழுந்திருந்து பகாசுரன் மேல் பாய்ந்தான் வீமன்.

“நீ அரக்கன். நான் வெறும் மனிதனே. போரில் என்னை வெல்ல முடியுமானால் தைரியமாகப் போர் செய்! இடும்பனுக்கு ஏற்படுத்திய இறுதி முடிவையே உனக்கும் ஏற்படுத்துகின்றேன்” - வீமன் சிங்க ஏறு போல் முழங்கிக் கொண்டே கைகளைப் புடைத்தான். இருவரும் கைகலந்தனர். குன்றோடு குன்று கட்டிப் புரள்வது போலப் போர் நடந்தது. திடீரென்று அருகிலிருந்த மரக்கிளை ஒன்றை முறித்துக் கொண்டு வீமனை அடிக்கப் பாய்ந்து வந்தான் பகாசுரன். அதே வேகத்தில் வீமனும் ஒரு மரக்கிளையை முறித்துக் கொண்டு அதை எதிர்த்தான். பகாசுரன் கீழே கிடந்த பாறைக் கற்களை வீமன் மேல் உருட்டிவிட்டு நசுக்குவதற்கு முயன்றபோது, வீமனும் கற்களை உருட்ட முற்பட்டான். எந்த வகையிலும் அரக்கனால் அடக்கிவிட முடியாததாக இருந்தது வீமனுடைய போரும் வீரமும் அசுரனுக்கு அது பசி வேளை. உடல் சோர்ந்து தள்ளாடியது. ஆனாலும் தன் கையால் வீமனைக் கொல்லாமல் விடுவதில்லை என்ற உறுதியோடு போர் புரிந்தான். வீமனுடைய குத்துக்கள் சரியான மர்ம ஸ்தானங்களில் விழுந்து பகாசுரனைத் தள்ளாடச் செய்தன. பகாசுரன் தீழே மல்லார்ந்து விழுந்தான். வீமன் “அது தான் அவனை தொலைக்கச் சரியான நேரம்” என்று அவனுடைய மார்பிலே தாவி ஏறி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்க முடியாமல் முழங்கால்களால் அழுத்திக் கொண்டு அவன் கழுத்தைத் திருகிக் கொன்றான். பகாசுரன் கதை அதோடு முடிந்தது.

வீமன் சோறு கொணர்ந்த வண்டியிலேயே பகாசுரனின் பிணத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு வேத்திரகிய நகரின் இடுகாட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். இடுகாட்டில் அவனது பிணத்தை இட்டுவிட்டு அருகில் ஓடிக் கொண்டிருந்த யமுனைக் கால்வாயில் நீராடியபின் நகருக்குள் புகுந்தான். வீமன் பகாசுரனைக் கொன்று விட்டு உயிரோடு திரும்பி வந்த செய்தி ஒரு நொடியில் வெத்திரகீய நகரம் முழுவதும் பரவி விட்டது. அந்தச் செய்தி வேத்திரகீயத்து மக்களை நம்ப முடியாத பேராச்சரியத்தில் மூழ்கச் செய்தது. தங்களை நிரந்தரமான பயங்கொள்ளிகளாகச் செய்து வந்த அரக்கனின் இறந்த சடலத்தை இடுகாட்டில் சென்று கண்டு திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். பாண்டவர்களும் குந்தியும் தங்கியிருந்த வீட்டு அந்தணனும் அவன் மனைவியும் காலில் விழுந்து வீமனை வணங்கினர். நகரெங்கும் வீமனுடைய புகழ் எழுந்து ஓயாமல் ஒலித்த வண்ணமிருந்தது. வேத்திரகீயத்தின் வழியாடு கடவுளாயினர் வீமனும் குந்தியும் உடன் பிறந்தோர் பிறரும்.

இங்கு இவர்கள் நிலை இவ்வாறிருக்கும்போது பாஞ்சால நாட்டில் யாக்சேன மன்னன் தன் தவமகள் திரெளபதிக்குச் சுயம்வரம் நடத்த நன்னாள் குறித்து ஓலை போக்கினான். பாண்டவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனனே தன் மகளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அவன் தன் பழம் பெரும் ஆசை ஆசை அவ்வாறு இருந்தாலும் முறைப்படியே அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று கருதிச் சுயம்வர ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

‘பாண்டவர்கள் அரக்கு மாளிகைத் தீ விபத்தில் இறந்து போனார்கள்’ -என்று பரவியிருந்த போலிச் செய்தியை எல்லோரையும் போல அவன் நம்பவில்லை. ‘அவர்கள் எவ்வாறேனும் அரக்கு மாளிகையிலிருந்து தப்பி உயிரோடு மறைவாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்’ -என்று அனுமானித்து, அந்த அனுமானத்தை உறுதியாக நம்பவும் நம்பினான். இந்த நம்பிக்கையினால் பாண்டவர்கள் எங்கிருந்தாலும் சுயம்வரச் செய்தியை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணி எங்கும் பரவச் செய்தான். ‘அர்ச்சுனனைத் தவிர வேறு எவரும் திரெளபதியை மணந்து கொள்ளக்கூடாது; மணந்து கொள்ள முடியவும் முடியாது!’ - என்ற நம்பிக்கை யாகசேன மன்னன் மனத்தில் தளராமல் இருந்தது. இங்கே பாஞ்சால நகரத்திலிருந்து தற்செயலாக வேத்திரயம் சென்றிருந்த பார்ப்பனன் ஒருவன் மூலம் பாண்டவர்கள் திரெளபதியின் சுயம்வர ஏற்பாட்டை அறிந்து கொண்டனர், அந்தணர்களாக உருமாறி வாழ்ந்து வந்த அவர்கள் தம் வேடத்திற்கேற்ப அவ்வூர் வேதியர்கள் சிலரோடு பாஞ்சால நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திரெளபதியின் சுயம்வர நினைவே தேராக, ஆசை என்ற கடிவாளத்தை இட்டுத் தங்களைத் தாங்களே செலுத்திக் கொள்வது போல் அமைந்தது, அவர்களது பாஞ்சாலப் பயணம். மீண்டும் வியாச முனிவர் அவர்களைச் சந்தித்தார்.

“இரவு பகல் என்று பாராமல் பிரயாணம் செய்து விரைவில் பாஞ்சாலத்தை அடையுங்கள். சுயம்வரத்தில் உங்கள் பக்கம் வெற்றி ஏற்பட்டு, ‘நீங்கள் யார்?’ என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் அச்சமின்றி ஆண்மையோடு நீங்கள் பாண்டவர்கள் என்பதை வெளிக் காட்டிக் கொள்ளுங்கள். இது தான் நான் உங்களுக்குக் கூற வேண்டிய செய்தி ஆசி! சென்று வாருங்கள். யாவும் நலமே நிகழும்” -என்றார் அவர்.

பாண்டவர்கள் அவரை வணங்கி மேலே சென்றனர். அர்ச்சுனன் கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு வழி காட்டியதனால் இரவிலும் அவர்கள் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. ஓர் இடத்தில் அவர்கள் கங்கையாற்றைக் கடந்து மேலே செல்லும்படி வழி நடுவே கங்கையாறு குறுக்கிட்டது. அப்போது கங்கையாற்றில் சித்திரரதன் என்னும் பெயருடைய கந்தருவன் ஒருவன் தன் மனைவியோடு நீராடிக் கொண்டிருந்தான். இரவின் தனிமையை நாடி மனைவியோடு வந்திருந்த அவனுக்குப் பாண்டவர்கள் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு அவ்வழியாக வந்தது இடையூறாக இருந்தது. அவன் சினம் அடைந்தான். கங்கையாற்றினது பெரிய நீர்ப்பரப்பில் இருளில் ஓர் ஆணும் பெண்ணும் நீரில் விளையாடிக் கொண்டிருப்பது அந்தச் சிறிய தீப்பந்தத்தின் ஒளியில் பாண்டவர்களுக்கு எவ்வாறு தெரியும்? எனவே அவர்கள் ஆற்றைக் கடந்து செல்வதற்காக இறங்கி விட்டார்கள். ஒரு பெண் தன் கணவனோடு தனிமையில் நீராடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டிருந்தாலும் பாண்டவர்கள் தண்ணீரில் இறங்கத் தயங்கியிருப்பார்கள். அல்லது அவர்களை ஒதுங்கிக் கொள்ளுமாறு தொலைவிலிருந்து எச்சரித்து அவர்கள் ஒதுங்கிக் கொண்ட பின் இறங்கியிருப்பார்கள். ஆனால் சித்திரரதனோ அவர்கள் தண்ணீரில் இறங்கித் தன் மனைவியுடன் நீராடிக் கொண்டிருந்த இடத்திற்கு வருகின்ற வரை பேசாமல் இருந்து விட்டான். தன் அருகே வந்ததும் இரைந்து திட்டிக் கொண்டே அர்ச்சுனனை வம்புக்கிழுத்தான் சித்தரரதன்.

அர்ச்சுனன் அமைதியாக, ‘நீங்கள் நீராடிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாது! தெரிந்திருந்தால் வேறு வழியாகப் போயிருப்பேன்’ என்று கூறிப் பார்த்தான். ஆனால் சித்திரரதனோ மனக்கொதிப்புத் தணியாமல் அர்ச்சுனன் மேல் போருக்குப் பாய்ந்தான். இவ்வளவு நடந்த பின்பும் பொறுமையைக் கடைப்பிடிக்க அர்ச்சுனன் பைத்தியக்காரனா என்ன? அவனும் தீப்பந்தத்தைச் சகோதரர்களிடம் கொடுத்து விட்டுச் சித்திரரதனோடு போர் செய்ய முற்பட்டான். இருவருக்கும் பயங்கரமான போர் நிகழ்ந்தது. சித்திரரதனுடைய அகம்பாவத்திற்கு அர்ச்சுனன் சரியான புத்தி கற்பித்தான். தோல்வியடைந்த பின்புதான் அவனுக்குப் புத்தி வந்தது. அவன் பாண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தான். சித்திரரதனின் பேதமையை எண்ணித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டே கங்கையின் அக்கரையிலிருந்து தெளமிய முனிவரின் ஆசிரமத்தை யடைந்தனர் குந்தியும் பாண்டவர்களும். அப்போது பொழுது புலர்கின்ற நேரமாகியிருந்தது. ஆசிரமத்தில் இருந்த தெளமிய முனிவர் தாமும் பாஞ்சால நகரத்துக்கு உடன் வருவதாகக் கூறி அவர்களோடு புறப்பட்டார். அவர்கள் பாஞ்சால நகருக்குச் செல்லும் வனவழியிலே வீசிய மலர்களின் மணத்தோடு கூடிய இனிய தென்றற் காற்று இரவெல்லாம் நடந்து வந்த களைப்பைப் போக்குவதற்கென்றே வீசியது போலிருந்தது. வழி நடையின் போது அவர்கள் அங்கங்கே கண்ட சில காட்சிகள் சுயம்வரத்தில் அர்ச்சுனனுக்கே வெற்றி கிட்டும் என்பதற்கேற்ற நல்ல நிமித்தங்களாக அமைந்தன.

கதிரவன் நன்கு வெளிப்போந்து ஒளி பரவத் தொடங்கியிருந்த நேரத்தில் அவர்கள் பாஞ்சால நகரத்தின் ஊரெல்லைக்குள் பிரவேசித்தனர். பொற்கலசங்களின் மேல் கொடிகள் வீசிப் பறக்கும் கோபுரங்களுடனே கூடிய மதில்களையும் மாடங்களையும் கம்பீரமான கட்டிடங் களையும் பாண்டவர்கள் ஊரெல்லையிலேயே தொலைவுக் காட்சியாகக் கண்டுகளித்தனர். கோட்டைச் சுவர்களிலே வீசிப் பறந்த கொடிகள் பாண்டவர்களை ‘நீங்கள் வர வேண்டும், வரவேண்டும்’ -என்று கைகாட்டி அழைப்பது போல விளங்கின. நகரத்தின் புறமதிலை அடைந்த பாண்டவர்கள் அங்கே இருந்த ஒரு குயவனுடைய இருக்கையில் தங்கள் தாயைத் தங்கச் செய்துவிட்டுத் தெளமிய முனிவரோடு திரெளபதியின் சுயம்வரம் நடந்து  கொண்டிருந்த அரண்மனை மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். அப்படிப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவர்கள் முன்பிருந்த அந்தணர் உருவிலேயே இருந்தனர். ‘சந்தர்ப்பமும் வெற்றியும் ஏற்பட்டாலொழிய ‘நீங்கள் யார்?’ என்பதை வெளிபடுத்திக் கொள்ள வேண்டாம்’ -என்று வியாசரின் அறிவுரையை அவர்கள் சிறிதும் மறந்து விடவில்லை. எனவே, அரண்மனைக்குள்ளும் ‘அந்தணர்களாகவே’ நுழைந்தார்கள் அவர்கள்.

12. வெற்றி கிடைத்தது

பிறந்து வளர்ந்து பேதையாய் வாழ்ந்த பருவம் முதல் நினைவு தெரிந்த நாளான அன்று வரை தான் அர்ச்சுனனை மணந்து கொள்வதற்கென்றே பிறந்தவள்’ - என்ற உணர்வைக் கொண்டிருந்தவள் திரெளபதி. சுயம்வர மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தோழியர்கள் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்த போதும் கூட இந்த எண்ணமே அவளுடைய இதயத்தை நிறைத்துக் கொண்ட ஏக உணர்வாக நின்றது. அவளுடைய அந்த உணர்வுக்கு விடை கிடைக்க வேண்டிய நாள் அன்றுதான். சுயம்வர மண்டபம் முழுவதுமே அரசிளங்குமாரர்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. திரெளபதி தோழியர்கள் புடைசூழச் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவள் தோற்றமும் அங்கே வீற்றிருந்த வேந்தர்களை அனலில் மெழுகென உருகி மயங்கச் செய்தது. சுயம்வரத்துக்குரிய நிபந்தனைகளைத் திரெளபதியின் தமையன் துட்டத் துய்ம்மன் எடுத்துரைத்தான். அவையிலிருந்த வேந்தர்களின் கவனம் திரெளபதியினிடமிருந்து அவன் பக்கம் திரும்பியது.

அவன் கூறினான் : “அறிவிலும் அழகிலும் கலையிலும் சிறந்த மன்னர்களே! இதோ இந்த மண்டபத்தின் மேலே சுழலும் இயந்திரப் பொறியைப் பாருங்கள். வட்ட வடிவிலும் சூழ ஆரங்கள் அமைந்திருப்பதாகிய இந்தச் சுழல் இயந்திரத்திற்குள் மீன் போன்ற அடையாளச் சின்னம் ஒன்று இருக்கிறது. இயந்திரத்திற்கு நேரே கீழே பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மஞ்சள் கரைந்த நீரில் தெரியும் பொறியின் நிழலைப் பார்த்துக் கொண்டே மேலே இயந்திரத்தோடு இயந்திரமாக அதனிடையே சுழலும் மீன் சின்னத்தை அம்பு எய்து வீழ்த்த வேண்டும். வில் இதோ இருக்கின்றது. இந்த அருஞ்செயலைச் செய்து நிறைவேற்ற வல்ல மன்னன் எவனோ அவனுக்கு என் தங்கை திரெளபதி மாலையிடுவாள். முடிந்தவர்கள் முன் வந்து செய்யலாம்.”

‘சுயம்வரம் என்றால் கழுத்தை நீட்டியவுடன் சுலபமாக மாலை விழுந்துவிடும்’ -என்று எண்ணிக் கொண்டு வந்திருந்த மன்னர்களைத் திடுக்கிட்டு அஞ்சுமாறு செய்தது இந்த நிபந்தனை. ஆனால் ஆசை என்ற அந்த உணர்வு பயம், வெட்கம் எவற்றையுமே அறியாததல்லவா? தங்களால் நிபந்தனையை நிறைவேற்ற முடியாது என்பதைத் தாங்களே உறுதியாக உணர்ந்து கொண்டிருந்த அரசர்கள் கூட வில்லை எடுத்து முயற்சி செய்யத் தொடங்கினார்கள். இப்படி மன்னாதி மன்னர்களெல்லாம் அவளுடைய அழகு மயக்கத்தில் ஆழ்ந்து நாணமின்றி வில்லேந்தி நின்றார்களே, அப்போது தான் திரெளபதி தன் தோழிகள் மூலம் அவையிலிருந்த அரசர்களைப் பற்றிய விவரங்களை மெல்லக் கேட்டு அறிந்து கொண்டாள். ‘அர்ச்சுனன் வந்திருப்பானோ? வந்திருக்க மாட்டோனோ’ என்ற இந்த உணர்ச்சியால் தவித்துக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.

‘நான் எய்துகிறேன் பாருங்கள்!’ -‘இதை எய்து வீழ்த்தாவிட்டால் நான் ஆண்மை உடையவனில்லை’ - என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு வஞ்சினம் கூறிவிட்டுத் தோற்றுத்தலை குனிந்தனர் பலர். பெரும்பாலான அரசர்களுக்கு இதே கதிதான் ஏற்பட்டது. சல்லியன் கைதேர்ந்த விற்போர் வீரனாகிய வில்லாளன், பசுதத்தன், சராசந்தன், துரியோதனன் ஆகிய யாவர்களுக்கும் வெற்றி கிடைப்பது போலத் தோன்றி நெருங்கி வரும்போது அதுவே தோல்வியாக  முடிந்துவிட்டது. இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களில் ஒரே ஒருவன் தோல்விக்குத் தப்பி வெற்றி தனக்குத்தான் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவன் தான் கர்ணன். அவன் மட்டுமென்ன? எல்லோருமே நம்பினார்கள் மகா வீரனாகிய கர்ணன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று. கர்ணன் சாமர்த்தியமாக வில்லை வளைத்து அதில் அம்பையும் பொருத்தி விட்டான். ஆனால், அம்பு வில்லிலிருந்து புறப்படுவதற்கு முன் யாருமே எதிர்பாராத விதமாக வில்லின் நாண் நிமிர்ந்து அவன் தலையிலே தாக்கி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. கர்ணனுக்கு மட்டுமின்றி அவையிலே கூடியிருந்த எல்லோருக்குமே பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. கர்ணன் இறுதியாகச் சுயம்வரத்திற்கு வந்திருந்த அத்தனை மன்னர்களும் தோற்றாகிவிட்டது.

‘நிபந்தனைப்படி பார்த்தால் திரெளபதி இனிமேல் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான்’ -என்று துட்டத்துய்ம்மன் நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அவையில் அந்தணர்கள் வீற்றிருந்த பக்கத்திலிருந்து கணீரென்று எழுந்தது ஒரு கம்பீரமான குரல். துட்டத்துய்ம்மன் முதல் எல்லோரும் வியப்படைந்து அந்தணர்கள் வீற்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். மாறு வேடத்திலிருந்த அர்ச்சுனன்தான் எழுந்திருந்து பேசினான். அவன் பேச்சு துட்டத்துய்ம்மனை நோக்கி எழுந்தது. ‘அரசர்களில் எல்லோருமே முயன்று பார்த்துத் தோல்வியடைந்து விட்டார்கள். அந்தணர்களாகிய எங்களிலிருந்து எவரேனும் முன்வந்து முயற்சியில் வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி திரெளபதியை மணம் செய்து கொடுப்பீர்களா?’ -கூட்டத்தில் ஏளனத்தைக் குறிக்கின்ற சிரிப்பொலி ‘கலகல'வென்று எழுந்தது.

‘அந்தணனுக்கு ஆசையைப் பார்! இத்தனை வீரதீரர்களான வேந்தர்களால் முடியாததை இந்த அந்தணனா செய்துவிடப் போகிறான்?’ -என்ற மாதிரிப் பலதரப்பட்ட இகழ்ச்சிக் குரல்களும் கேட்டன. துட்டத்துய்ம்மன் அவையை அமைதியடையுமாறு செய்துவிட்டு, மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனனின் கேள்விக்குப் பதில் கூறினான். ‘அந்தணர் திலகமே! உங்கள் கேள்வியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அந்தணர்களுக்கும் இதில் பங்கு கொள்ள உரிமையுண்டு, உங்களில் எவரேனும் நிபந்தனையை நிறைவேற்றினால், அவ்வாறு நிறைவேற்று பவருக்குத் திரெளபதியைத் தடையின்றி மணம் செய்து கொடுக்கிறேன். இது உறுதி’ -துட்டத்துய்ம்மன் மறு மொழியை முற்றிலும் கூறி முடிப்பதற்குள்ளேயே அர்ச்சுனன் வில்லும் பொறியும் அமைந்திருந்த மேடையை அடைந்து விட்டான்.

சுற்றி வீற்றிருந்த அரசர்களின் கண்களில் பொறாமையின் சாயையும் இகழ்ச்சியின் சாயையும் ஒருங்கே இலங்கின. ஆனால், அவர்களுடைய இகழ்ச்சியும் பொறாமையும் தூள் தூளாகச் சிதறிப் போகும்படியான காரியத்தை அடுத்த விநாடியிலேயே அவன் செய்து முடித்தான். வெகுநாள் பழக்கப்பட்டவனைப் போல எடுத்த வேகத்தில் அந்த வில்லை நாணேற்றிக் குறி தவறாமல் அம்பெய்து இயந்திரப் பொறியை அறுத்து வீழ்த்தினான். அப்போது இயந்திரப் பொறி மட்டுமா அறுந்து வீழ்ந்தது? இல்லை! இல்லை! அங்கே கூடியிருந்த மன்னர்களின் மனத்தில் இருந்த அலட்சியம் என்ற உணர்ச்சியும் அறுந்து வேரற்றுக் கீழே விழுந்தது. அவையிலிருந்த ஏனைய அந்தணர்களின் கூட்டம் தங்களில் ஒருவனுக்கு வெற்றி கிடைத்ததற்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது ‘கேவலம் ஒரு அந்தண இளைஞன் அரசர்களும் அடைய முடியாத வெற்றியை அடைந்து விட்டானே’ என்று கூடியிருந்த அரசு குலத்தினர் மனம் பொருமினர்.

கையில் வளைத்த வில்லுடன் பெருமிதம் விளங்க நின்று கொண்டிருந்தான் அர்ச்சுனன். திரெளபதி ஓரக் கண்களால் தொலைவில் நின்றவாறே அவன் அழகைப் பருகிக் கொண்டிருந்தாள். ‘ஒருவேளை அவனே அர்ச்சுனனாக இருக்கலாமோ? அந்தணனாக உருமாறி வந்திருக்கிறானோ?’ என்று சந்தேகம் இயற்கையாகவே அவள் மனத்தில் எழுந்தது. துட்டத்துய்ம்மன் அந்தணனுக்கு (அர்ச்சுனனுக்கு) மாலையிடுமாறு திரெளபதிக்குக் கூறினான். அவள் மெல்ல நடந்து வந்து விற்பிடித்த கையினனாக நிற்கும் அவன் கழுத்தில் மணமாலையை அணிவித்து விட்டு நாணத்தோடு அருகில் தலைகுனிந்து நின்று கொண்டாள். தாங்களெல்லாம் வீற்றிருக்கும் பேரவையில் திரெளபதி ஓர் அந்தண இளைஞனுக்கு மாலை சூட்டிய காட்சி துரியோதனன் முதலிய அரசர்களின் மனங்களைக் கொதிக்கச் செய்தது. அவனையும் அவையிலுள்ள மற்ற அந்தணர்களையும் போர் புரிந்து துரத்தினால் என்ன?... என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது அவர்கள் சிந்தனையின் கொடுமை. திடீரென்று அந்தணர்கள் மேலும் மணமாலையோடு நின்ற அர்ச்சுனன் மீதும் ஆவேசத்தோடு பாய்ந்தனர் அங்கே கூடியிருந்த வேந்தர்கள்.

சுயம்வர மண்டபம் ஒரு நொடியில் போர்க்களமாகி விட்டது. திரெளபதியும் தோழியர்களும் மனம் பதைத்து ஒதுங்கி நின்று கொண்டனர். அந்தணர்களுக்கும் அரசர் களுக்கும் யுத்தம் நடந்தது. அர்ச்சுனன் தனக்காகப் பரிந்து கொண்டு வந்த மற்ற வேதியர்களைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தானே தன் சகோதரர்களுடன் போரில் இறங்கினான். போர் உக்கிரமாக நிகழலாயிற்று. போரில் பல தேசத்து அரசர்கள் ஒன்று சேர்ந்திருந்ததனால் மிகச் சீக்கிரமே அர்ச்சுனன் அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவது சுலபமாக இருந்தது. எதிர்த்து வந்த மன்னர்கள் சிதறியோடினர். அர்ச்சுனனும் சகோதரர்களுமே இறுதியில் சுயம்வர மண்டபத்தில் எஞ்சினர். ‘மாறுவேடத்திலிருக்கும் இந்த ஐந்து அந்தணர்களும் பாண்டவர்கள் தாமோ?’ -என்ற சந்தேகம் தப்பி ஓடும் போது அரசர்களுக்கு ஏற்பட்டது. சுயம்வரத்திற்கு வந்த கண்ணபிரான் அரசர்களுடைய இந்தச் சந்தேகம் வலுத்து விடாமல் தடுத்து அவர்களைத் தங்கள் தங்கள் ஊர் திரும்பும்படி செய்து பாண்டவர்களைக் காப்பாற்றினார். மாறுவேடத்திலிருந்த பாண்டவர்கள் ஐவரும் சுயம்வரத்தில் அர்ச்சுனன் அடைந்த கன்னி திரெளபதியுடன் புறநகரில் குந்திதேவி தங்கியிருந்த குயவனின் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டு வாசலில் இருந்தவாறே, ‘தாயே! இன்று ஓர் பெறற்கரிய பொருளைப் பெற்று வந்திருக்கிறோம் நாங்கள்’ -என்று குந்தியின் செவியில் கேட்குமாறு கூறினார்கள் பாண்டவர்கள். உண்மை என்ன என்பதை வெளியே வந்து காணாத குந்தி, ‘அப்படியானால் அந்த அரும் பொருளை நீங்கள் ஐவருமே அனுபவித்து மகிழுங்கள்!’ என்று உள்ளே இருந்தவாறே மறுமொழி கூறிவிட்டாள். தாய்மொழியை மந்திரமாக மேற்கொள்ளும் பாண்டவர்கள் இந்த விபரீத நிகழ்ச்சி காரணமாக ஐவருமே திரெளபதியின் மேல் உரிமை கொண்டாடுமாறு நேர்ந்து விட்டது. வெளியே வந்து உண்மையைக் கண்டு அறிந்து கொண்டதும், ‘எல்லாம் விதியின் விளைவு!’ என்று கூறி மனம் வருந்தினாள் குந்தி. சுயம்வர நிகழ்ச்சியிலிருந்து போர் ஏற்பட்டதுவரை யாவற்றையும் தாயிடம் விவரித்துக் கூறினார்கள் பாண்டவர் கள் சுயம்வர மண்டபத்திற்குள்ளிருந்து பாண்டவர்கள் புறப்பட்ட போதே அவர்கள் மேல் சந்தேகங் கொண்ட துருபத மன்னன் பின்னாலேயே ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அந்த ஒற்றர்கள் மூலம் அந்தணர்களாக மாறுவேடத்தில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்றும், திரௌபதியினால் மணமாலை சூட்டப்பட்டவன் அர்ச்சுனனே என்றும் அவன் அறிந்து கொண்டான். உடனே தகுந்த மரியாதைகளுடன் பாண்டவர்களையும் குந்தி திரெளபதி ஆகியவர்களையும் அழைத்து வரச் செய்தான். திரெளபதிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணத்தைச் சிறப்பாக நடத்தக் கருதினான். ஆனால் பாண்டவர்களோ திரெளபதியை ஐவரும் மணந்து கொள்ளும்படி நேர்ந்த சம்பவத்தைக் கூறி அப்படியே செய்ய வேண்டும் என்றார்கள்.

துருபதன் திடுக்கிட்டு மனங் கலங்கினான். அப்போது வியாச முனிவர் அங்கே வந்து துருபதனுக்கு ஆறுதல் கூறித் ‘திரெளபதியின் பழவினைப்படி அவள் ஐவரை மணக்க வேண்டியிருப்பதை’ -விளக்கினார். வியாசர் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின் துருபத மன்னனும் ஒருவாறு மனந்தேறித் திரெளபதியை ஐவருக்கும் மனைவியாக மணம் முடித்துக் கொடுக்கச் சம்மதித்தான். பின்பு ஒரு நல்ல மங்கல நாளில் தெளமிய முனிவர் தலைமையாளராக இருந்து பாண்டவர்கட்கும் திரௌபதிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தின் போது பாண்டவர்கள் தங்கள் உண்மை உருவத்தோடு விளங்கினர். இந்தச் செய்தி எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்துவிட்டது. சுயம்வரத்திற்கு அந்தணருருவில் வந்திருந்த ஐவரும் பாண்டவர்களே என்பதை அறிந்ததும் கெளரவர்களின் சினத் தீ பெருகி வளர்ந்தது. முன்பே இருந்த பகையும் ஒன்று சேர்ந்து கொண்டது. அவர்கள் பாண்டவர் மேல் படை எடுத்துப் புறப்பட்டனர்.

13. தருமன் முடி சூடுகிறான்

உலகத்தில் தாங்கள் எந்த இடத்தை நிலைக்களன்களாக கொண்டு தோன்றுகின்றனவோ அந்த இடத்தையே அழிக்கும் பொருள்கள் இரண்டே இரண்டு தாம் இருக்கின்றன. ஒன்று நெருப்பு மற்றொன்று பொறாமை தான் எந்தக் கட்டையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எரிக்கின்றதோ அதையே அழித்து விடுகிறது நெருப்பு. தான் எந்த மனத்தில் அளவை மீறி வளர்கின்றதோ அந்த மனத்தையே அழித்து விடுகிறது பொறாமை திரௌபதி சுயம்வரத்தில் வென்றவன் அர்ச்சுனன்! அவனோடு வந்தவர்கள் பாண்டவர்கள். துருபத மன்னன் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் திருமணம் நிகழ்த்தி விட்டான் என்று வரிசையாக இந்தச் செய்திகளை எல்லாம் அறிய அறியப் பொறாமையால் கொதித்தது கெளரவர் மனம். பாண்டவர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை மூலமற்றுப்போகும்படி அழித்து விட்டால் என்ன? என்று தோன்றியது துரியோதனன் முதலியோர்க்கு. இறுதியில் இந்தக் குரோதம் நிறைந்த எண்ணமே அவர்கள் உள்ளத்தில் வலுப்பெற்று வளர்ந்து விட்டது. படைகளைத் திரட்டிக் கொண்டனர். கொதிக்கும் உள்ளமும் குமுறும் அசூயையுமாகப் படைகளோடு மீண்டும் பாஞ்சால நகரத்துக்குப் புறப்பட்டனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு வருவார்கள் என்பதை உறுதியாக எதிர்பார்த்திருந்த துருபதன் புதல்வன் துட்டத்துய்ம்மன், பாஞ்சால நாட்டுப் படைகளோடு எதிர்ப்பதற்குத் தயாராக இருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கூடத் துட்டத்துய்ம்மனோடு போருக்குத் துணிந்து ‘வீர வேள்வியாக’ அதை எண்ணி வந்து காத்திருந்தனர். துரியோதனாதியர் ‘பாண்டவர்களை எளிதாக வென்று விடலாம்’ -என்றெண்ணி வந்தனர். ஆனால் விளைவு நேர்மாறாக முடிந்து விட்டது. வந்த வேகத்தில் பெருந்தோல்வி அடைந்து திரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது துரியோதனாதியர்களுக்கு. பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை விடத் தாங்கள் இவ்வளவு விரைவில் தோல்வி அடையும்படி நேர்ந்து விட்டதே என்ற வருத்தம் தான் அதிகமாக வாட்டியது அவர்களை

இந்த நிலையில் இவர்கள் படையெடுத்துச் சென்றதும் தோல்வியுற்று வந்ததுமாகிய நிகழ்ச்சிகள் திருதராட்டிரனுக்குத் தெரிந்தன. அவன் சிந்தித்தான். பாண்டவர்கள் அவனுக்குத் தம்பியின் புதல்வர்கள். அவர்களுக்கும் தன் மக்களுக்கும் இருக்கின்ற இந்தப் பகைமை, குரோதம் முதலிய உணர்ச்சிகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்களானால் அது நன்றாக இராது என்றஞ்சியது அவன் உள்ளம்: எனவே பாண்டவர்களின் வழியில் தன் மக்கள் அடிக்கடி குறுக்கிட்டு அவர்களைத் துன்புறுத்த முடியாத படி ஒதுங்கி வாழும்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே முதல் வேலையாகப் பாண்டவர்களை அழைத்து வருமாறு தன் தூதுவர்களைப் பாஞ்சால நாட்டிற்கு அனுப்பினான், தூதுவர்கள் பாஞ்சால நாடு சென்று பெரிய தந்தையின் ஆணையைப் பாண்டவர்களிடம் தெரிவித்தனர். உடனே பாண்டவர்கள் துருபத மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு திரெளபதி, தாய் குந்தி ஆகியவர்களோடு அத்தினாபுரம் வந்து சேர்ந்தனர்.

திருதராட்டிரன் அவர்களை அன்போடு வரவேற்று “அருமைப் புதல்வர்களே! உங்களுக்கு அறிவும் நினைவும், பெருகிய திறன் வாய்ந்த வாலிபப் பருவம் கிட்டிவிட்டது. இனி உங்கள் தந்தைக்குரிய நாட்டின் பகுதியை உங்களிடமே ஆள்வதற்கு ஒப்பித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதனை செவ்வனே ஆளும் பொறுப்பும் கடமையுணர்ச்சியும் உங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு” -என்று கூறிப் பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய உடைமைகளை முறையாகப் பிரித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டான். தருமன் முதலியவர்களும் தந்தைக்கு நன்றி செலுத்தி அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் ஒரு நல்ல நாளில் தன் அலையிலுள்ள சான்றோர்களைக் கொண்டு பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். பாண்டவர்கள் பகுதியாகிய அரசுக்குத் தருமன் அரசனானான், அத்தினாபுரமே பாண்டவர்கள் அரசுக்கும் தலைநகரமாக இருந்தது.

தொடக்கத்தில் சில நாட்கள் துரியோதனாதியர் பாண்டவர்களின் நலத்தை வெறுக்காமல் நாட்களைக் கழித்தனர். பின்பு நாளாக ஆகப் பாண்டவர்களுக்குத் தொல்லைகளைச் செய்யத் தலைப்பட்டனர். திருதராட்டிரனோ தன் மக்கள் செய்யும் குற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் வாளாவிருந்தான். ‘தீயோர்களை விட்டு விலகி வாழ்வதே இன்பம்‘ -என்பதை நன்குணர்ந்திருந்த தருமன் தன்னுடைய தலை நகரத்தை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளக் கருதினான். இந்திரப் பிரத்தம், முன்னோர்கள் வாழ்ந்து சிறந்த நகரம். ஆனால் தற்போது வெறும் வெளியாக இருந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த அந்த நகரத்தைத் திருத்தி அமைத்துத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தான் தருமன். இந்திரப்பிரத்தமோ காண்டவப் பிரத்தம் என்னும் பாழடைந்த நகரத்துக்கு அருகில் இருந்தது. எந்த முக்கியமான செயலைச் செய்வதாக இருந்தாலும் கண்ணப்பிரானைக் கலந்து கொண்டே அதைச் செய்யும் வழக்கம் தருமனிடம் இருந்தது. இந்திரப் பிரத்த நகரத்திற்குப் புறப்படும்போது தன் சகோதரர்களுடனே கண்ணபிரானையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

இந்திரப்பிரத்தம், அப்போதிருந்த பாழ் நிலையைக் கண்ட கண்ணன் அதில் அந்த நிலையிலேயே பாண்டவர்கள் வசிக்க முடியாதென்பதை உணர்ந்தான். அருள் நிரம்பிய அவன் உள்ளம் மலைத்தது. தயங்கித் திகைத்தது. கண்ணபிரானே மனம் வைத்தால் நடக்காத துண்டா? பாண்டவர்களுக்கு நலம் புரிய வேண்டும் என்ற ஆர்வம் அந்த அடியார்க்கருளும் பண்புடைய மனத்தில் தோன்றி விட்டதானால் பின் என்ன குறை? வானவர் தலைவனாகிய இந்திரனும் வானுலகத் தச்சனாகிய விச்சுவகன்மா என்பவனும் கண்ணபிரானால் பாண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்ளப்பட்டனர். தேவர்களே உதவி புரிய முன் வந்தால் காரியம் வெற்றிகரமாக முடிவதற்குக் கேட்கவா வேண்டும்? காடும் புதருமாக மண்டிக் கிடந்த இடத்தில் கவின் மிக்க மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்தன. எல்லா வகையான அழகுகளும் நிரம்பிய ஓர் நகரம் அங்கே உருவாயிற்று. ‘அமராபதியும் அளகாபுரியும் இதற்கு இணையாக இயலாது’ என்று மண்ணவர்களும் விண்ணவர்களும் கொண்டாடும் படியாக அவ்வளவு சீரும் சிறப்பும் கொண்டு இலங்கியது அந்தப் புதிய நகரம். அதன் பழமையை நினைத்து கண்ணபிரானே அதற்கு ‘இந்திரப் பிரத்தம்’ -என்றும் பெயர் சூட்டினார்.

பெரிய தந்தை தவறாக எண்ணிக் கொள்ளாதவாறு அவரிடமும் சகோதரர்களிடமும் ஏனைப் பெரியோர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மங்கல நிறைவு செறிந்த ஓர் நல்ல நாளில் இந்திரப்பிரத்த நகரத்துக்குக் குடியேறினர். வனப்பிலும் அழகிலும் நிகரற்ற அந்த மகாநகரத்தைப் படைத்துக் கொடுத்தவனாகிய தேவதச்சன் நகரத்தின் அமைப்பையும் எழிலையும் பாண்டவர்கட்கும் மற்றை யோர்க்கும் விளக்கிக் கூறினான். நகரம் முழுவதையும் சுற்றிக் காண்பித்தான். தேவதச்சனாகிய விஸ்வகன்மா, இந்திரன், கண்ணபிரான் ஆகியவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படியே அந்த நகரத்தைப் பாண்டவர்க்காக உண்டாக்கிக் கொடுத்திருந்தான் என்றாலும் தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய முறையைக் கருதி அவனுக்குப் பெரும் பரிசில்களையும் அன்பளிப்புகளையும் வழங்கினார்கள் தருமன் முதலிய சகோதரர்கள். பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரைத் தங்கள் தலைநகரமாக அமைத்துக் கொண்டு சில நாட்கள் கழிந்தன. நகர் புகு விழாவுக்காக வந்திருந்த கண்ணபிரான் முதலிய விருந்தினர் பாண்டவர்க்கு நல்லாசி கூறி விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் தலைநகரை அடைந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல அது புதுமையாகத் தோன்றிய நகரம் என்ற நினைவே மறந்து விட்டது. ஊழி ஊழியாக வாழ்ந்து பழகிப்போன நகரம் போன்ற மனோபாவம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த மனோபாவத்தோடு மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

முடிசூடிக் கொண்டிருந்த தருமன் அறக்கடவுளே அரியணையில் அமர்ந்து முயன்று அரசாள்வது போலச் செம்மை பிறழாத ஆட்சியை நடத்தி வந்தான். ஒரு தாய் தன் அன்புக் குழந்தைகளைப் பேணிப் போற்றும் தன்மை போலத் தாய் ஒத்த அன்பும் தவம் ஒத்த பண்பும் கொண்டு தனக்குக் கிடைத்த நாட்டைத் தம்பிமார்களோடு நிர்வகித்து வந்தான். இந்நிலையில் இந்திரப்பிரத்த நகரத்து வாழ்வு கோலாகலமாகக் கழிந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத நிலையில் இசைப் புலவரும் மூவுலகங்களிலும் சஞ்சரிக்கின்றவருமாகிய நாரத முனிவர் ஓர் நாள் (இந்திரப்பிரத்த நகருக்கு) அங்கே விஜயம் செய்தார். அவருடைய வரவை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் கொண்ட பாண்டவர்கள் அன்புடனும் ஆர்வத்துடனும் தக்க உபசாரங்கள் செய்து அவரை அரண்மனையில் வரவேற்றனர். ஏதாவது ஓர் இடத்திற்கு நாரதமுனிவர் வருகின்றார் என்றால் அவருடனே சிறப்புமிக்க செய்தி ஒன்றும் வருகின்றது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றும் ஒரு செய்தியோடுதான் இந்திரப்பிரத்த நகரத்தில் பாண்டவர்களைக் காண்பதற்கு வந்திருந்தார் அவர். அது வெறும் செய்தி மட்டும் இல்லை. பாண்டவர் நலனில் அக்கறை கொண்டு கூற வந்த செய்தி. அதை அவர் சொல்லத் தொடங்கிய போது, ‘இவர் இப்போது எதற்காக இப்படி ஏதோ கதை கூறுவது போலக் கூறுகிறார்?’ -என்று திகைத்தனர் பாண்டவர். இறுதியில் தான் அவர்களுக்கு நாரதர் கூறவந்த கருத்து விளங்கியது.

“பாண்டவர்களே முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன். இது ஒரு பெண்ணின் காரணமாக இருவர் தங்களுக்குள் மாறுபட்டுப் பெறுவதற்கரிய தவத்தையும் இழந்து போன நிகழ்ச்சி அது. அதை நீங்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சுந்தன், உப சுந்தன் என்று இருவர் பிரம்மாவை நோக்கி இடைவிடாமல் தவம் செய்து கொண்டிருந்தனர். தவம் வளர வளர அதன் சித்தி அருகில் நெருங்கும் அல்லவா? சுந்தோப் சுந்தர்களுடைய தவமும் அதன் பயனை சித்தி வடிவில் பெற வேண்டிய காலம் வந்தது. அப்போது இறுதி முறையாக அவர்களுடைய தவத்தைச் சோதனை செய்யும் பொருட்டு வானுலகிலிருந்து திலோத்தமை அனுப்பப்பட்டாள். பிறரை மயக்கி மோகத்துக்கு மிக விரைவில் ஆளாக்கி விடும் சக்தி வாய்ந்த பேரழகி. அவள். ஈரேழு - பதிநான்கு புவனங்களிலும் வடிவமோகனத்தில் அவளுக்கு நிகரான பெண்ணைத் தேடிக் காண முடியாது.

அத்தகைய அழகி சுந்தோபசுந்தர்கள் தவம் செய்து கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் பெண்ணாக மட்டுமா வந்தாள்? இல்லை! இல்லை. அவர்களுடைய வைராக்கியத்தைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பராக்கும் அகோர நெருப்பைப் போல வந்தாள். கண்டவர்களை வாரி விழுங்கும் அந்த அந்தகாரத்தின் அடியே தங்கள் தவத்தை, ஆழத்திற்கும் ஆழத்திலே அழித்துப் புதைக்க முற்பட்டு விட்டார்கள் சுந்தோபசுந்தர்கள். திலோத்தமை என்ற அந்த அழகியின் காரணமாகத் தங்களுக்குள்ளேயே ஒவ்வொருவர் சண்டையிடவும் தொடங்கிவிட்டனர். “அடே இவள் அருகில் நெருங்காதே! இந்த அழகி எனக்குத் தான்” என்றான் சுந்தன்.

“விலகி நில்! உன் அழகுக்கு இவள் ஒருத்திதான் குறை. இவளை அனுபவிக்கும் யோக்கியதை எனக்குத் தானடா இருக்கிறது” என்றான் உபசுந்தன். அவ்வளவு தான் இருவரும் கட்டிப் புரண்டார்கள், அவர்களுடைய தவமும் மண்ணில் விழுந்து புழுதியோடு புழுதியாகப் புரண்டது. இருவருடைய தவத்தையும் பாழாக்கிவிட்ட பெருமையில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள் திலோத்தம்மை! -இந்த நிகழ்ச்சியைக் கூறி நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் நாரதர். அப்படி இருந்தபோது அவர் விழிகள் பாண்டவர்களை ஊடுருவின. பாண்டவர்கள் ஒன்றும் புரியாமல் திகைப்புடன் மலங்க மலங்க விழித்தனர். அப்போது நாரதர் தொடர்ந்து மேலும் கூறத் தொடங்கினார்:

“பாண்டவர்களே! இந்தப் பழைய நிகழ்ச்சியை இப்போது எதற்காக நினைவூட்டினேன் என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் நலனுக்காகத் தான் இதை நினைவூட்டினேன். திரெளபதியை நீங்கள் ஐவரும் மணம் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு அரசு, ஆட்சி, புது நகரம் என்று இப்படி எல்லாவிதமான நலன்களும் கூடி வருகின்ற நேரத்தில் அவள் காரணமாக ஒரு சிறு பூசல் ஏற்பட்டாலும் ஒற்றுமை அதிவேகமாகக் குலைந்துவிடும். இதனால் நீங்கள் ஐவரும் திரௌபதியோடு இல்வாழ்க்கை நடத்த வேண்டியது பற்றி நான் வகுத்துக் கொடுக்கும் வரன் முறையை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒருவர் வீதம் அவளோடு நீங்கள் ஐவரும் தனித்தனியே இல்வாழ்க்கை நடத்துங்கள். அவ்வாறு நடத்தும்போது ஒருவர் இல்வாழ்க்கைக் காலத்தில் உங்களில் அந்த ஒருவர் ஒழிய மற்றவர்கள் அவளைக் காணவே கூடாது. இந்தக் கட்டுப்பாடு மிகமிக அவசியமானது. தப்பித் தவறிக் காணும் படியாக நேர்ந்து விட்டால் அப்படிக் கண்டு விட்டதன் பரிகாரத்திற்காக ஓர் வருட காலம் கண்டவர் எவரோ அவர் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்படுத்திக்கொண்டால் திரெளபதி காரணமாக உங்கள் சகோதரத்துவத்திற்கு அழிவு ஏற்படாது.” நாரதர் இவ்வாறு கூறி முடித்ததும் பாண்டவர்கள் இந்த நிபந்தனைக்கு உடன் பட்டனர்.

தங்கள் ஒற்றுமைக்கு இந்த ஏற்பாடு நல்ல பாதுகாப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. நிபந்தனையின்படி அந்த ஆண்டில் தருமனோடு திரெளபதி இல்வாழ்வு நடத்த வேண்டுமென்று முடிவு செய்து கொண்டார்கள். நாரதர் தம்மால் ஒரு நல்ல காரியம் நிறைவேறிய திருப்தியுடன் விடைபெற்றுக் கொண்டு சென்றார். தங்கள் நலனில் அக்கறை கொண்டு அம்முனிவர் இந்திரப் பிரத்த நகருக்கு விஜயம் செய்து நல்லுரை கூறியதற்காக அவரை வணங்கி மரியாதை செலுத்தி நன்றியோடு விடை கொடுத்தனர். சுந்தோப சுந்தர்கள் திலோத்தமையின் மேல் கொண்ட மோகத்தால் தவத்தையும் தங்களையும் அழித்துக் கொண்ட வரலாறு அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது.

14. யாத்திரை நேர்ந்தது

பாண்டவர்கள் எது நடக்கக் கூடாது என்று கருதினார்களோ அதுவே ஒரு நாள் நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்க வில்லை . சிறிதும் எதிர்பாராத நிலையில் தற்செயலாக நடந்து விட்டது. அர்ச்சுனன் அன்று காலை ராஜமாளிகையின் பிரதான வாயிலில் ஏதோ காரியமாக நின்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று யாரோ ஒருவர் பரிதாபகரமாக ஓலமிட்டுக் கொண்டே வாயிலுக்குள் நுழைந்து வரும் ஒலி கேட்டது. அர்ச்சுனன் திடுக்கிட்டுப் போய்த் தலை நிமிர்ந்து பார்த்தான். ஓர் அந்தணர் பதறியடித்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவன் அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி “உம்முடைய குறை என்ன? எதற்காகத் துயரமுற்றவர் போல் காணப்படுகிறீர்?” என்று வினவினான்.

“அரசே! நான் என்ன வென்று கூறுவேன்? தருமமே உருவான தங்கள் தமையனார் ஆட்சியில் கூட இப்படி நடக்குமா? எனக்குச் சொந்தமான பசுக்களைக் காட்டு வேடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டனர். அவைகளை மீட்டுத் தருவதற்கு உதவி நாடி இங்கே வந்தேன்” -என்று பரபரப்புடனும் பதற்றத்துடனும் அந்த அந்தணர் மறுமொழி கூறினார். “அஞ்சாதீர்! இப்படியே நில்லும். நான் மீட்டுத் தருகிறேன் உம்முடைய பசுக்களை. இதோ, உள்ளே சென்று வில்லும் கணைப்புட்டிலும் எடுத்துக் கொண்டு வருகிறேன்” -என அவருக்கு மறுமொழி கூறி அங்கேயே நிறுத்திவிட்டு, தான் வில்லெடுத்து வருவதற்காக உள்ளே சென்றான் அருச்சுனன் . அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது! மாளிகைக்குள் நுழைந்து படைக்கலங்களாகிய வில், வேல், முதலியன வைக்கப் பெற்றிருக்கும் இடத்தை அடைவதற்கு நடுவில் ஓர் பூம்பொழிலைக் கடக்க வேண்டும். இந்தப் பூம்பொழில் திரெளபதிக்கும் அவளுடைய அந்தப்புரத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் பழகுவதற்குரிய இடம். அந்தணருக்கு உதவி செய்து அவருடைய பசுக்களை மீட்டுத் தரவேண்டுமென்ற அவசரத்தினால் மகளிர்க்குரிய அந்தப் பூம்பொழிலின் நடுவே செல்லும் குறுக்கு வழியாகப் படைக்கலச் சாலையை நோக்கி நடந்தான் அர்ச்சுனன். அங்கே திரெளபதி தன் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியாது. தருமனும் அப்போது அவளோடு பூம்பொழிலில் இருந்தான். ஒரு பூஞ்செடிக்குக் கீழே திரெளபதியின் பாடகமும் சிலம்பும் சுமந்த பாதங்களை மட்டும் அர்ச்சுனன் பார்க்கும்படியாக நேர்ந்து விட்டது. தீயை மிதித்து விட்டவன் போலத் திடுக்கிட்டான் அவன். நாரதர் கூறிய நிபந்தனை நினைவிற்கு வந்தது. திரெளபதியையே பார்க்கக் கூடாது என்றால் அவள் திருவடிகளை மட்டும் எப்படிப் பார்க்கலாம்? அதுவும் பிழைதானே? எனவே கட்டுப்பாட்டுக்கு அடங்கி நிபந்தனைப்படி தான் தீர்த்தயாத்திரை போவதென்று மனத்திற்குள்ளேயே தீர்மானம் செய்து கொண்டான்.

அந்தணருக்கு வாக்களித்தபடி பசுக்களை மீட்டுத் தந்த பின் யாத்திரையைத் தொடங்க முடிவு செய்து கொண்டு வில்லும் கணையும் ஏந்தி அந்தணரோடு புறப்பட்டான். காட்டு வேடர்களை வென்று அந்தணரின் பசுக்களை மீட்டுக் கொடுத்த உடனே அவசரமாக அரண்மனை திரும்பி யாத்திரைக் கோலம் பூண்டான். புறப்பட்டுச் செல்வதற்கு முன் சகோதரர்களிடம் நிகழ்ந்த செய்தியைக் கூறி விடைபெற்றான். பாரத தேசத்தில் மானிட சரீரத்தின் பாவங்களைக் கழுவி பவித்திரமாக்கும் புண்ணிய நதிகள் அநேகம் இருக்கின்றன. அவற்றுள் சிறந்ததும் முதன்மை வாய்ந்ததும் கங்கை நதியே. வேறு பல முனிவர்களுடனும் தேசயாத்திரை புரிபவர் களுடனும் சேர்ந்து பிரயாணம் செய்த அர்ச்சுனன் முதன்முதலாக இவ்வளவு சிறப்புப் பொருந்திய கங்கை நதியில் நீராடும் வாய்ப்பைப் பெற்றான். உடன் வந்த முனிவர்கள் யாவரும் அவரவர்களுக்குத் தோன்றிய துறைகளில் நீராடுவதற்காக இறங்கினர். அர்ச்சுனன் மட்டும் ஒதுக்குப்புறமாகத் தனியே ஓர் துறையில் இறங்கினான்.

அந்தத் துறையருகே பெரும் பெரும் பாறைகளும் பாறைக் குகைகளும் இருந்தன. துறையில் இறங்கி நதியின் நடுப்பகுதிக்கு வந்து நீராடிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அப்போது கரையருகே இருந்த பாறைப் பிளவுகளோடு கூடிய குகை ஒன்றிலிருந்து யாரோ சில பெண்கள் சிலம்பு குலுங்க நடந்து வரும் ஒலி கேட்டது. வளையொலியும் சிலம்பொலியும் கேட்டு வருபவர் யௌவன மகளிர் என்பதை அனுமானித்துக் கொண்டான் அவன். உடனே அவர்கள் தன்னைக் கண்டு அஞ்சி ஓடிப் போய்விடாமல் இருப்பதற்காகச் சில வினாடிகள் மூச்சை அடக்கி நீரில் மூழ்கிக் கொண்டான். மேலெழுந்து மறுபடி அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது செளந்தரியமான காட்சியை அங்கே கண்டான். விண்மீன்களுக்கு நடுவே எடுப்பாக விளங்கும் தண்மதியைப் போல, பல இளம் பருவத்துத் தோழிப் பெண்களுக்கு நடுவே தனியழகுடன் நாககன்னிகை போலத் தோன்றிய யுவதி ஒருத்தி நீராட இறங்குவதற்காக ஆடை அணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அங்கங்கள் அத்தனையும் கண்களாகவே இருந்தால் இரண்டு கண்களால் மட்டும் பார்க்க முடியாத அவள் அழகைப் பரிபூரணமாக அனுபவிக்கலாமே என்று தோன்றியது அவனுக்கு. நீராடுவதற்குத் தயாராக ஆடை அணிகளைக் குறைத்துக் கொண்டு நின்ற அந்த நிலை அந்த யுவதியின் சரீரத்தில் ஒவ்வொரு அணுவிலும் ஜதி போடுகின்ற அழகை அவன் கண்களுக்குக் காட்டின. அர்ச்சுனன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றான்.

சட்டென்று அவர்கள் துறையிலே இறங்குவதற்காகத் திரும்பியபோது அவள் பார்வை நீரோட்டத்தின் நடுவே நின்ற அவன் மேல் நிலைத்தது. ஓடும் நீர் நடுவே எடுப்பான தோற்றத்தோடு நிற்கும் அவன் அழகு அவளைத் தலைகுனிய வைத்தது. அவள் நாணித் தலைகுனிந்தாள். அதன் பின் நீராடும் போது அவனும் சரி, அவளும் சரி, கங்கை நீரில் மட்டும் திளைத்து ஆடவில்லை. ஒருவர் மனத்தில் மற்றொருவராக மாறி மாறித் திளைத்தாடினார்கள். கங்கையின் நீரோட்டத்தில் இடையிடையே தென்படும் கயல் மீன்களைப் போன்ற அவள் விழிகள் அவனையே கடைக்கணித்தன. அவன் கண்களோ, அவள் தோற்றத்தை நோக்குவதிலிருந்து இமைக்கவே இல்லை. கண்களின் இந்த ஒத்துழைப்பு, காதலின் பாஷையோ என்னவோ?

அந்தப் பெண்களின் உரையாடலிலிருந்து அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்த கன்னிகைகள் என்றும் அவள் நாகலோகத்து இளவரசி ‘உலூபி’ என்றும் அர்ச்சுனன் பராபரியாகத் தெரிந்து கொண்டான். நீராடி முடித்த பின் அவர்கள் மீண்டும் குகை வழியாக நாகலோகத்துக்குக் கிளம்பினார்கள். அப்போது ‘உலூபி’ மட்டும் அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். ‘நீங்கள் என்னை இப்படித் தனியே செல்லவிட்டு வாளா இருக்கலாமோ? என்னைப் பின்பற்றி என்னோடு வந்தால் என்ன?’ -என்று அவனை அழைப்பது போல இருந்தது உருக்கம் நிறைந்த அந்தப் பார்வை. திடீரென்று அவன் மனத்திலும் மின்னலைப் போல் அதிவேகமாக ஓர் எண்ணம் தோன்றியது: ‘நாம் இந்த அழகியைப் பின்பற்றி இவளோடு சென்றால் என்ன?’ -இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே காவி ஆடைகளைப் பிழிந்து அரையில் கட்டிக் கொண்டு துறையிலிருந்து கரையேறிக் குகைக்குள்ளே நுழைந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். உலூபியோடு நாகலோகத்தை அடைந்த அர்ச்சுனன் நாகலோகத்து அரசனால் அன்போடு வரவேற்கப்பட்டான். தன் மகளுக்கும் அவனுக்கும் கங்கைக்கரையில் ஏற்பட்ட சந்திப்பையும் காதலையும் தோழிகள் மூலம் அறிந்து இருவரையும் மணமக்களாக்கித் திருமணம் செய்து வைத்தான்.

அர்ச்சுனனும் உலூபியும் மணமான பின் பல நாள் இன்பவாழ்வில் திளைத்தனர். காதலர்களின் மனமொத்த போக வாழ்வாகிய அந்த வாழ்வில் நாட்கள் கழிந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. காலம் நேரம் இவைகளை மறந்து தன்மயமாய் ஒன்றி நுகரும் இன்பந்தானே உயர்ந்த இன்பம். அர்ச்சுனனுக்கும் உலூபிக்கும் இராவான் என்றோர் புதல்வன் பிறந்தான். புதல்வன் பிறந்த சில நாட்களுக் கெல்லாம் அர்ச்சுனன் நாகலோகத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் தனது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினான். நாகலோகத்திலிருந்து திரும்பி வரும் போது, இமாசலத்தின் சாரலிலுள்ள பல தீர்த்தங்களிலும் நீராடி மகிழ்ந்தான். இவ்வாறே வடநாட்டிலுள்ள சகல தீர்த்தங்களிலும் நீராடி முடித்த பிறகு ஞானவளமும், நில வளமும் மிகுந்து, ‘சித்திக்கு ஒருவித்து’ -என்று கூறத்தக்க சிறப்பையுடைய தென்னாட்டை அடைந்தான் அர்ச்சுனன்.

தென்னாட்டில் அவன் முதல்முதலாகப் பார்த்த இடம் திருவேங்கடமலை. தமிழ்த்திருநாட்டின் வடபால் அமைந்திருந்த அந்தத் திருமலையில் உள்ள அருவிகளில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டபின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை சிதம்பரம் முதலிய தலங்களைக் கண்டான். அங்கங்கே இருந்த ஆறுகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி மேற் சென்றான். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீரங்கத்திற்கு வந்து காவேரியில் நீராடி அரங்கநாதப் பெருமானைத் தரிசித்துக்கொண்டு பொதியைத் தென்றலும் தமிழ்த் தென்றலும் ஒருங்கு வீசும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த மதுரை மாநகரத்தை அடைந்தான். வையை வளமும் தமிழ் வளமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சி வளமும் ஒருங்கு திகழும் கூடல் மாநகரில் பாண்டிய மன்னர் பரம்பரையில் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசனைக் காணச் சென்றான்.

“துறவுக் கோலமுடையவர் போலத் தோன்றுகிறீர்! மிக இளம் பருவத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு மேற்கொண்டு விட்டீர் போலும் நீவிர் இங்கே பாண்டிய நாடு

15. “நான் தான் விசயன்!”

பாண்டிய மன்னனிடமும் சித்திராங்கதையிடமும் அர்ச்சுனன் அவ்வளவு சுலபத்தில் விடை பெற்றுக் கொண்டு விட முடியவில்லை. அரிதின் முயன்று மிகுந்த நேரம் மன்றாடித் தான் விடை பெற்றுக் கொள்ள முடிந்தது. கண்களில் நீரும் நெஞ்சில் துயரமும் மல்கத் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தாள் சித்திராங்கதை. மதுரை மாநகரிலிருந்து புறப்பட்ட பின் மற்றும் பல பாண்டி நாட்டுத் திருப்பதிகளுக்குச் சென்றான். அவைகளில் நீராடி வழிபாடு செய்தபின் மேற்குக் கடலில் நீராடச் சென்றான். மேற்குக் கடலருகில் ஐந்து சிறு சிறு பொய்கைகள் இருந்தன. கடலில் நீராடி விட்டு வந்த அவன் இந்த ஐந்து பொய்கைகளையும் கூடப் புண்ணிய தீர்த்தமாகக் கருதி இவற்றிலும் நீராட விரும்பினான். ஒவ்வொரு பொய்கையில் நீராடும் போதும் ஒவ்வோர் முதலையால் அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. ஆனால் அதன் விளைவு மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரக் கூடியதாக இருந்தது. ஒவ்வோர் முதலையும் அவனைக் கடிக்க வந்தபோது அவன் எதிர்த்துத் தாக்கிச் சமாளிக்க முயன்றான். ஆனால் அவன் கை முதலை மேல்படவேண்டியது தான் தாமதம்; ஒவ்வொரு முதலையும் ஓர் வனப்பு நிறைந்த நங்கையாக மாறிக் காட்சியளித்தது. எல்லா முதலைகளையும் தாக்கி முடித்தபின் ஆச்சரியம் திகழும் கண்களால் அவன் பார்த்தான். என்ன விந்தை! அவனைச் சுற்றி அழகிலும் பருவத்திலும் சிறந்த ஐந்து தேவகன்னிகைகள் நின்றார்கள். பின்பு “நாங்கள் இந்திரனால் இத்தகைய சாபத்தை அடைந்திருந்தோம்; தாங்கள் இங்கு வந்து நீராடியதால் எங்கள் சாபம் நீங்கிற்று” -என்று அந்தப் பெண்களே கூறியதனால் அவன் உண்மையைப் புரிந்து கொண்டான். அந்தப் பெண்கள் அவனை வணங்கி நன்றி செலுத்திவிட்டு வானுலகு சென்றனர்.

அங்கிருந்து திருக்கோகர்ணம் சென்று தோகர்ணத்து எம்பெருமானை வணங்கிவிட்டுக் கண்ணபிரான் முதலியோர் வசிக்கும் தெய்வீகச் சிறப்பு வாய்ந்த துவாரகாபதியை அடைந்தாள். துவாரகை நகரத்துக்குள் பிரவேசிக்கும் போதே சுபத்திரைப் பற்றிய இன்பகரமான உணர்வுகள் அவன் இதயத்தில் எழுந்தன. துறவி போன்ற கோலத்துடனே தான் வந்திருப்பதால் தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ள இயலாதென்று தோன்றியது அவனுக்கு. தான் வந்திருந்த ஆண்டின் கோவத்துக்கு ஏற்பத் துவாரகை நகரத்தின் கோட்டை வாசலில் இருந்த ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அவதாரமாகிய கண்ணபிரானை மனத்திற்குள் தியானித்தான். அன்பர்களின் நினைவைப் பூர்த்தி செய்தலையே தன் முக்கிய காரியமாகக் கொண்டுள்ள அந்தப் பெருமானும் அர்ச்சுனன் துவாரகைக்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கோட்டை வாயில் ஆலமரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் தோன்றினார்.

அவன் மனத்தில் யாரைப் பற்றிய இன்பகரமான நினைவுகளோடு எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டார். அர்ச்சுனனோடு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் அவன் அவா நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார் அவர். மறுநாள் துவாரகைக்கு அருகிலுள்ள மலை ஒன்றில் அந்நகரத்து மக்கள் இந்திரதேவனுக்காகக் கொண்டாடுகிற விழாவின் பொருட்டுக் கூடியிருந்தார்கள். கண்ணன், பலராமன், சுபத்திரை முதலிய ராஜ குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். கண்ணபிரான் துறவிக் கோலத்திலிருந்த அர்ச்சுனனையும் அங்கே அழைத்து வந்திருந்தார். திருவிழாவுக்காக வந்திருந்தவர்கள் கபட சந்நியாசியாக வீற்றிருந்த அர்ச்சுனனை ‘சிறந்த சக்திகளைப் பெற்ற மாபெருந்துறவி இவர்‘ - என்றெண்ணி வலம் வந்து வணங்கினர். பலராமனும் சுபத்திரையும் கூட இந்த மாபெருந் துறவியின் சிறப்பைக் கேள்வியுற்று இவரை வணங்கிச் செல்வதற்காக வந்தனர். அப்போது அவர் - களுடனே கண்ணபிரானும் வந்தார். உடன் வந்தவர்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காகக் கண்ணனும் அர்ச்சுனனைப் பயபக்தியோடு வணங்குகிறவர் போல நடித்தார்.

“ஆகா!⁠உலகமெல்லாம் வணங்கக் கூடிய சர்வேசுவரனும் என்னைக் கையெடுத்துக் கும்பிடும்படியான அபசாரத்தைச் செய்து விட்டேனே” -என்று மனத்திற்குள் தன்னை நொந்து கொண்டான் அர்ச்சுனன். “அண்ணா! இவர் பெரிய ஞானி. நம் தங்கை சுபத்திரையே கன்னிகை மணமாக வேண்டியவள். இவரைப் போன்ற ஞானியர்களுக்குக் கன்னிகைகள் தொண்டு செய்தால் விரைவில் நல்ல கணவனை அடையலாம். எனவே இந்த முனிவரின் தொண்டில் சுபத்திரை இன்றிலிருந்து இந்த விழா முடிகின்றவரை ஈடுபடுவது நல்ல பயனை அளிக்கும்” -என்று அர்ச்சுனனைக் கடைக்கண்ணால் குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே பலராமனை நோக்கிக் கூறினார் கண்ணன்.

பலராமன், “அப்படியே செய்யலாம் தம்பீ!” என்று சம்மதித்தான். அர்ச்சுனன் உள்ளூரத் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி முகத்தில் தெரிந்துவிடாதபடி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இந்த ஏற்பாட்டின் படி கபட சந்நியாசியாக இருந்த அர்ச்சுனனுக்கும் பணி செய்வதற்காகச் சுபத்திரையையும் அவளுக்குத் துணையாக ஒரு தோழிப் பெண்ணையும் அங்கே விட்டு விட்டுப் பலராமனும் கண்ணனும் தங்கள் காரியங்களைக் கவனிக்கச் சென்றார்கள். போகிற போக்கில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கிக் கண்ணைச் சிமிட்டி விட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து சுபத்திரையும் அவளுடைய தோழியும் துறவிக்கு பணிபுரிந்து மகிழ்ந்தார்கள். சுபத்திரை ஒரு நாள் முனிவரிடம் சில செய்திகளை விசாரித்து அறிய ஆசை கொண்டாள். “சுவாமி! தாங்கள் எந்த ஊரிலிருந்து யாத்திரை புறப்பட்டீர்கள்? தங்களுடைய சொந்த ஊர் எது?” என்று கேட்டாள் சுபத்திரை.

“அம்மா! எனக்கு யாதும் ஊர்தான். ஆனாலும் நீ, நான் பிறந்து வளர்ந்து பெரியவனான ஊரைக் கேட்கிறாய் போலும்! என் ஊரை ‘இந்திரப் பிரத்தம்’ என்று பெயர் சொல்லுவார்கள்.”

“சுவாமி! தங்கள் ஊர் ‘இந்திரப் பிரத்தம்’ என்று கேள்வியுற்று மிகவும் மகிழ்கின்றேன். இந்திரப்பிரத்த நகரத்தில் தருமன், வீமன், நகுலன், சகாதேவன் ஆகியவர்கள் நலமாக இருக்கின்றார்களா?”

“நல்லது பெண்ணே! பாண்டவர்களைத் தானே கேட்கிறாய்? அவர்களுக்கு நலத்திற்கென்ன குறைவு? ஆமாம், எனக்கொரு சந்தேகம். நீ பாண்டவர்களில் எல்லோருடைய நலத்தையும் விசாரித்தாய். அர்ச்சுனனைப் பற்றி மட்டும் ஏன் விசாரிக்கவில்லை? அவனை உனக்குப் பிடிக்காதா? இல்லை. அவன் மேல் உனக்கு அன்பில்லையா? என்ன காரணம்?” துறவியின் இந்தக் கேள்விக்கு மட்டும் சுபத்திரை விடை கூறவில்லை. அவளுடைய கன்னங்கள் நாணத்தால் சிவந்தன! கால் கட்டைவிரல் நிலத்தைக் கிளத்தது. உதடுகளில் நாணப் புன்னகை நெகிழத் தலைகுனிந்தாள் அவள்.

“சுவாமி! எங்கள் இளவரசி சுபத்திராதேவி அர்ச்சுனரை மணந்து கொள்ள வேண்டிய மணமுறை உரிமை கொண்டவள். ஆகையால் தான் வெட்கப்பட்டுக் கொண்டு அவரைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டாள்” - என்று அருகிலிருந்த தோழி விடை கூறினாள்.

“ஓகோ காரணம் அதுதானா” -என்று கூறிக்கொண்டே நிம்மதியாக மூச்சுவிட்டார் துறவி. “தவிரவும் அர்ச்சுனர் இப்போது தீர்த்தயாத்திரை போயிருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம் சுவாமி! தங்கள் ஞான திருஷ்டியால் அவர் இப்போது எங்கே தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருக் கிறார் என்று கூற முடியுமானால் கூறுங்களேன்” -தோழி மேலும் அவரைத் தூண்டினாள். கபட சந்நியாசி வேஷத்திலிருந்த அர்ச்சுனன் சிரித்துக் கொண்டே சன்னமாகக் குழைந்த குரலில் கூறலானான்.

“அம்மா? உங்கள் இளவரசியை மணந்து கொள்ளப் போகும் அந்த அர்ச்சுனர் இப்போது இதே இடத்தில் உட்கார்ந்து சந்நியாசியாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குச் சொல்லுங்கள்” - இவ்வாறு கூறிக் கொண்டே தன் சொந்தத் தோற்றத்தோடு அவர்களுக்கு முன்னால் நின்றான் அவன். தோழிப் பெண் திடுக்கிட்டு விலகிச் சென்றாள். சுபத்திரை அதே நாணமும் பயபக்தியும் கொண்டு எழுந்து நின்றாள். ஆர்வமிகுதியோடு அருகில் நெருங்கி அவள் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டு, “சுபத்திரை! நான் தான் விசயன். என்னைத் தெரிகின்றதோ?” -என்றான். சுபத்திரை இலேசாகச் சிரித்தாள். அவர்கள் ஒருவரையொருவர் அன்போடு நோக்கினார்கள். தோழி பதறிப் போய்ச் சுபத்திரையின் அன்னை தேவகியிடம் சென்று உண்மையைச் சொல்லி விட்டாள்.

தேவகி பரபரப்படைவதற்கு முன்னால் விஷயத்தைக் கண்ணபிரான் அறிந்து அவளை அமைதியாக இருக்கும்படி செய்தார். பின்பு பலராமன் முதலிய எவருக்கும் தெரியாமல் அர்ச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார் கண்ணபிரான். திருமணச் சடங்குகளை நடத்துவதற்கு வசிட்டர் முதலிய முனிவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்ச்சுனனுக்குத் தாய், தந்தை முறையினராக இந்திரனும் இந்திராணியும் வந்தனர். “அர்ச்சுனா சுபத்திரையை மணந்து கொண்டு யாருமறியாமல் அவளோடு இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்றுவிடு! எவர் எதிர்த்தாலும் சரி அவர்களைத் தோல்வியுறச் செய்து மேலே செல்க” -என்று கூறி அவர்கள் இருவருக்கும் இரகசியமாகத் திருமணத்தை முடித்து வைத்தார் கண்ணபிரான், அவர் கூறியபடியே திருமணம் முடிந்தவுடன் ஓர் இரதத்தில் மணக்கோலத்தை நீக்காமலே சுபத்திரையுடன் இந்திரப்பிரத்த நகருக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.

‘பாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன்’ என்கின்ற கதையாக அர்ச்சுனனையும் புறப்படச் சொல்லிவிட்டுப் “பலவந்தமாக அர்ச்சுனன் சுபத்திரையை மணம் செய்து கொண்டு போகிறான்” -என்று பலராமனிடமும் சொல்லி விட்டார் கண்ணபிரான். இதனால் அளவற்ற சினமும் ஆத்திரமும் கொண்டுவிட்ட பலராமன் படைகளைத் திரட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். சுபத்திரையைத் தேரில் வைத்துக் கொண்டு இந்திரபிரத்த நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அர்ச்சுனன் பின்னால் பலராமனின் படைகள் தன்னைத் துரத்தி வருவதைக் கண்டு திடுக்கிட்டான். ‘தானும் போர் செய்து எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை’ - என்று உணர்ந்த அவன் சுபத்திரையைத் தேரோட்டும் சாரதியாக இருக்கச் செய்து விட்டுத் தான் வில்லேந்தித் துரத்திவரும் படையை எதிர்ப்பதற்குத் தயாரானான்.

“சுபத்திரை ! நீ பயப்படாதே! உன் அண்ணனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ, என் விற்போரால் ஒரு சிறு புண்ணும் ஏற்படாமல் போர் செய்து நான் தடுத்து விடுகிறேன்” - என்று கூறிவிட்டு எதிரிகள் பக்கம் திரும்பவில்லை நாணேற்றுவதற்குத் தொடங்கினான் அர்ச்சுனன். மிகக் குறுகிய நேரப் போரிலேயே பலராமனையும் படைகளையும் தடுத்து நிறுத்திவிட்டு வேறெந்தத் தடையும் இன்றி மேற் சென்றான் அவன். இந்திரப்பிரத்த நகரம் வருகின்ற வரை தேரை சுபத்திரையே சாரத்தியம் செய்தாள். இந்திரப்பிரத்தத்தில் சகோதரர்கள் அர்ச்சுனனையும் சுபத்திரையையும் மணக்கோலத்தில் கண்டு களிப்போடு வரவேற்றனர். அந்தப்புரத்தில் இருந்த திரெளபதி முதலிய மகளிர் சுபத்திரைக்கு மங்கல நீர் கரைத்துப் பாதங்களைக் கழுவி அன்போடு அழைத்துச் சென்றனர். தேர்க்குதிரைகளின் சுடிவாளத்தைப் பிடித்து இழத்துத் திறமையோடு சாரத்தியம் செய்து கொண்டு வந்த அவள் ஆற்றலை வியந்தனர்.

வில்லும் கையுமாகச் சுபத்திரையோடு தேரிலிருந்து இறங்கிய அர்ச்சுனனைக் குறித்து என்ன துன்பம் நேர்ந்ததோ என்று திகைத்தனர் சகோதரர்கள். பின்பு அவனே நடந்த நிகழ்ச்சிகளைக் கூறக் கேட்டு அறிந்து கவலை தவிர்த்தனர். இங்கு இவ்வாறு இருக்கும் நிலையில் கண்ணபிரான் படையெடுத்து வந்திருந்த பலராமனைச் சமாதானப்படுத்தி அவனிடம் உண்மையைக் கூறினார். பலராமனும் ஆர அமரச் சிந்தித்துப் பார்த்தபின் மன அமைதியுற்றுச் சீற்றம் தணிந்தான். அவ்வாறு சீற்றம் தணிந்த அவனையும் அழைத்துக் கொண்டு சுபத்திரைக் குரியனவும் அர்ச்சுனனுக்குரியனவுமாகிய மணப் பரிசில்களுடன் இந்திரப்பிரத்த நகரத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தார் கண்ணபிரான். பலராமன் அர்ச்சுனனிடமும் சுபத்திரையிடமும் தன் ஆத்திரத்தை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டு பரிசில்களையும் அளித்தான். சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்துவிட்டுப் பலராமன் துவாரகைக்குச் சென்றான். கண்ணபிரானோ பிரிய மனமின்றி அவர்களுடனேயே தங்கியிருந்தார். காலம் இன்ப வெள்ளமாகக் கழிந்து சென்று கொண்டிருந்தது. உரிய காலத்தில் அர்ச்சுனன் - சுபத்திரை இவர்களுக்கு ‘அபிமன்யு’ என்ற வீரப்புதல்வன் பிறந்தான். பாண்டவ புத்திரர்களாகத் திரெளபதிக்கு ஐந்து ஆண் மக்கள் பிறந்திருந்தார்கள். இவர்கள் வளர்ந்து நினைவு தெரிகின்ற பருவத்தை அடைந்தபோது குருகுல வாசம் செய்து அறிவுக் கலையும் போர்க் கலையும் கற்றுக் கொள்ள ஏற்ற ஆசிரியர்களை நியமித்தனர்.

16. வசந்தம் வந்தது

புதல்வர்களின் குருகுல வாசமும், பாண்டவர்களின் அமைதி நிறைந்த நல்வாழ்வுமாக இந்திரப்பிரத்த நகரத்தில் நாட்கள் இன்ப நிறைவுடனே கழிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் மனோரம்மியமான வசந்த காலம் வந்தது. எங்கும் தென்றல் காற்று வீசியது. சோலைகள் தோறும் குயில்கள் தங்கள் மகிழ்ச்சியைப் புலப்படுத்தும் இன்னிசைக் கீதங்களைப் பாடின. தீக்கொழுந்துகளைப் போல மாமரங்களில் செந்தளிர்கள் தோற்றின. பொய்கைகளின் குளிர்ந்த நீர்ப்பரப் பிற்கு மேல் பசிய இலைகளுக்கிடையே அல்லி தாமரை முதலிய மலர்கள் அழகு செய்தன. வசந்தகாலத் தலைவனாகிய மன்மதன் தென்றலாகிய தேரில் ரதியோடு பவனி வரத் தொடங்கியிருந்தான். வசந்த காலத்தின் இன்பத்தை நுகரும் ஆவலால் கண்ணபிரானும் அர்ச்சுனனும் தத்தம் தேவியர் களுடனும் உரிமை மகளிர்களுடனும் இந்திரப்பிரத்த நகருக்கு அருகிலிருந்த ஒர் பூஞ்சோலைக்குச் சென்று தங்கினர். சோலையில் மலர்ந்திருந்த பலவிதமான மலர்களைக் கொய்ய ஆரம்பித்தனர் பெண்கள். சோலையிலிருந்த குளிர்ப்பூம் பொய்கைகளில் நீராடி வெம்மையைத் தணித்துக் கொண்டனர். வேனிற் காலத்தில் தம் வெம்மையை உலகம் தாங்கொணாதபடி வெயிலைப் பரப்பிக் கொண்டிருந்தான் கதிரவன். அவர்கள் தங்கியிருந்த பூஞ்சோலைக்கு வெளியே வெயில் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்ததால் எங்கும் கானல் பரந்து கொண்டிருந்தது. தரையில் ஈரப்பசை இன்றி வறண்டு போயிருந்தது. வெயிலின் கொடுமை தாங்காமல் சோலைக்குள்ளேயே ஓர் பெரிய மரத்தின் கீழ்க் குளிர்ந்த நிழலில் அர்ச்சுனனும் கண்ணபிரானும் உட்கார்ந்து பலவகையான செய்திகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தணர் ஒருவர் அவர்களுக்கு எதிரே வந்து ஏதோ கேட்க விரும்பும் பாவனையில் நின்றார். ‘தகதக’வென்று எரியும் தீக்கொழுந்து போன்ற நிறம், மார்பில் வெள்ளை நிறம் மின்னலைப் போலக் கண்ணைப் பறிக்க விளங்கும் முப்புரி நூல், செம்மை நிறத்தோடு பின்னிக் கிடந்து பிடரியில் புரளும் சடை, கம்பீரமான முகத்துக்கு மேலும் தனிச் சோபையை அளித்தான், அவர் செவியிலே அணிந்திருந்த மகர குண்டலங்கள். இத்தகைய தோற்றத்தோடு தங்கள் முன்னே வந்து நிற்கும் ‘அவர் யார்?’ என விளங்காமல் திகைத்தனர் அர்ச்சுனனும் கண்ணபிரானும். ஆனாலும் ‘அந்தணர்’ என்பதற்காக அவரை மரியாதையாக வரவேற்று வணங்கினார்கள். அந்தணர் மரியாதையையும் வணக்கத் தையும் ஏற்றுக் கொண்டு அருகில் அமர்ந்தார்.

“நான் அந்தணன்! உணவைக் கண்டு வெகு நாட்களாயிற்று. வெகு நாட்களாகப் பட்டினி என் பசி தீர உணவளிக்க வேண்டும்! நீங்கள் மறுக்காமல் அளிப்பீர்கள் என்று நம்பி வந்தேன்” -என்று குழிவிழுந்த கண்களால் நோக்கிக் கொண்டே அவிமணம் கமழும் வாயால் பரிதாபகரமான குரலில் வேண்டினார் அவர்.

“அந்தணச் செல்வரே! தங்களுக்கு உணவளிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததற்காகப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம்” - என்றனர் கண்ணபிரானும் அர்ச்சுனனும். அவர்கள் கூறி முடிக்கவில்லை ! எதிரே அந்தணன் அமர்ந்திருந்த இடத்திற்கு தேஜோமயமான தோற்றத்துடனே அக்னி தேவர் நின்றார். “அக்னி பகவானே! தாங்கள் தாம் அந்தணராக உருமாறி வந்தீர்களா?” என்று வியந்து கூறி அர்ச்சுனனும் கண்ணபிரானும் மீண்டும் அவரை வணங்கினர்.

“எனக்குத் தேவையான உணவை இப்போது கூறுகிறேன் கேளுங்கள். ‘காண்டவம்’ -என்றோர் பெரிய வனம் இருக்கிறது. அது இந்திரனுடைய பாதுகாப்புக்கு உட் பட்டது. அந்த வனம் முழுவதையும் என் தீ நாக்குகளால் எரித்து வயிறார உண்டு பசி தீர வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. இந்த ஆசையை நான் நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் இந்திரன் தடையாக இருந்து வருகின்றான். நான் வனத்தை உண்ணத் தொடங்கும்போதே மேகங்களால் மழையைப் பொழிந்து அவித்து விடுகின்றான் அவன் . இம் முறை அவன் அவ்வாறு அவிக்காமல் நீங்கள் எனக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்க வேண்டும்” -என்று தம் வேண்டுகோளை மேலும் விவரித்தார் அக்னி பகவான்.

“அந்தணரே! நான் கொடுத்த வாக்கை ஒரு போதும் மீறமாட்டேன். காண்டவ வனத்தை இப்போதே நீர் புகுந்து எரித்து உண்ணலாம். இந்திரன் உம்மை அவித்துவிட முடியாமல் நான் பாதுகாக்கிறேன் இது உறுதி” என்று அர்ச்சுனன் அவருக்கு மீண்டும் உறுதியாக வாக்களித்தான். அக்னி பகவான் மனமகிழ்ந்து நன்றி செலுத்தினார். அர்ச்சுனன் இந்திரனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக அப்போதே போர்க்கோலம் கொண்டு புறப்பட்டான். தனக்கு உதவி செய்ய முன்வந்த அவனுக்கு வில் அம்பு முதலிய ஆயுதங்களை அக்கினி பகவானே அளித்தார். இந்திரன் தனக்குத் தந்தை முறை உடையவனாயினும் கனற் கடவுளுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக அவனையும் எதிர்க்கத் துணிந்து விட்டான் அர்ச்சுனன்.

உறவு முறையை விடக் கடமை சிறந்தது அல்லவா? அர்ச்சுனன் வாக்களித்த மறுகணத்திலேயே காண்டவ வனத்தில் எங்கும் நெருப்புப் பற்றிக் கொண்டு பயங்கரமாக எரியலாயிற்று. வனத்திலே பிடித்த நெருப்பின் ஜ்வாலை பிரதிபலித்ததனால் எட்டுத் திசைகளும் தகத்தகாயமாகச் செந்நிறம் படியத் தொடங்கி விட்டது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசத் தொடங்கி விட்டதனால் நெருப்பிற்கு வசதி பெருகிவிட்டது. காட்டு மூங்கில்கள் தீயில் வெடிக்கும் ஒலியும் அங்கே வசிக்கும் விலங்குகள் தீயிலிருந்து தப்புவதற்கு வழி தோன்றாமல் வேதனையோடு கிளப்பிய துயர ஓலங்களுமாகக் காடெங்கும் கிடுகிடுத்தன. சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், பலவகைப் பறவைகள் எல்லாம் நெருப்பிலே சிக்கி நீறுபட்டுக் கொண்டிருந்தன. அசுரர், வேடர் முதலிய இனத்தவர்களாகிய மக்களும் தீக்கிரையாயினர்.

காண்டவம் தீக்கிரையாகும் செய்தி இந்திரனுக்கு எட்டியது. அடக்கமுடியாத ஆத்திரம் பொங்கியது அவன் உள்ளத்தில் தனக்கு மிகவும் வேண்டியதான தட்சகனென்னும் பாம்பு காண்டவ தகனத்தில் அழிந்து போய் விடுமோ என்றஞ்சியது அவன் மனம். காண்டவத்தில் பற்றி எரியும் நெருப்பை உடனே சென்று அவித்து நிர்மூலமாக்கும்படி தன் கட்டளைக்குட்பட்ட எல்லா முகில்களையும் ஏவினான் இந்திரன். முகில்களை முதலில் அனுப்பிய பின் தானும் சினம் பொங்கும் தோற்றத்தோடு படைகளுடன் ஐராவதத்தில் ஏறிப் புறப்பட்டான். கனற்கடவுள் காண்டவத்தைச் சுவைத்துப் பருகிக் கொண்டிருக்கும் போது மேலே கொண்டல்கள் திரண்டு மழை சோணாமாரியாகப் பிரளய வெள்ளமாகக் கொட்டு கொட்டென்று கொட்டத் தொடங்கிவிட்டது.

அக்னிபகவான் திடுக்கிட்டார். ‘ஐயோ! இம்முறையும் அர்ச்சுனன் நம்மைக் காப்பாற்ற முடியாமல் போய் இந்திரன் வென்று விடுவானோ?’ என்று அவர் உள்ளம் அஞ்சியது. நல்ல வேளையாக அர்ச்சுனன் தன் சாமர்த்தியத்தினால் காண்டவ வனத்திற்கு மேல் அம்புகளாலேயே ஒரு கூடாரம் சமைத்து ஒரு துளி மழைநீர் கூட உள்ளே இறங்க முடியாதபடி தடுத்து விட்டான். மேகங்களுக்கும் அவற்றை அனுப்பிய இந்திரனுக்கும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அவனும் அவனோடு வந்த மற்ற தேவர்களும், எப்படியாவது தட்சகனைக் காப்பாற்றிவிட வேண்டும்’ -என்று முயன்றனர். தட்சகனுடைய மனைவி தன் புதல்வனாகிய அசுவசேனன் என்னும் பாம்புடனே அர்ச்சுனனின் அம்புக் கூடாரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றது. அர்ச்சுனன் இதைக் கண்டு விட்டான். ஓர் அம்பைச் செலுத்தி அந்தப் பாம்பின் தலையை அறுத்து வீழ்த்தினான். ஆனாலும் அசுவசேனன் என்ற தட்சகனின் மகன் தப்பித்துச் சென்றுவிட்டான். இந்திரனிடம் போய்ச் சேர்ந்த அசுவசேனனை அவன் நன்குப் பாதுகாத்தான். பிற்காலத்தில் இந்தப் பாம்புதான் கர்ணன் கையில் நாகாஸ்திரமாகப் பயன்பட்டுத் தன் தாயைக் கொன்றதற்காக அர்ச்சுனனைப் பழி வாங்க முயல்கிறது.

“தட்சகன் அழிந்து போய்விட்டான். காண்டவத்தில் பற்றிய தீயும் நின்றபாடில்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த அர்ச்சுனன் தான். இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திரன் தன் படைகளுடனே, தன்னந்தனியனாய் நின்ற அர்ச்சுனனோடு கடும் போர் தொடுத்தான். அர்ச்சுனன் ஓரே ஆளாக இருந்தும் அஞ்சாமல் இந்திரனையும் அவனுடைய பெரும் படைகளையும் சமாளித்தான். இந்திரனும் நிறுத்தாமல் போரை வளர்த்துக் கொண்டே போனான். ‘தட்சகன்’ இறந்திருக்க வேண்டும் என்று தவறாக அனுமானம் செய்து கொண்டதே அதற்குக் காரணம். அப்போது வானிலிருந்து “இந்திரா ! தட்சகனும் பிழைத்து விட்டான். அவன் மகன் இருப்பது தான் உனக்கே தெரியும். உன்னுடைய முயற்சியால் காண்டவ வனத்தை அக்னியிடமிருந்தோ, அர்ச்சுனனிடமிருந்தோ காப்பாற்றி விட முடியாது. உன் வீரத்திற்குக் கண்ணபிரானும் அர்ச்சுனனும் சிறிதும் இளைத்தவர்களில்லை. ஆகவே, போரை உடனே நிறுத்திவிட்டு அமராபதிக்குத் திரும்பிச் செல்” -என்று ஓர் தெய்வீகக் குரல் எழுந்தது. அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்ட இந்திரன் போரை நிறுத்திவிட்டு தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். இந்திரன் போரை நிறுத்தி விட்டுப் பின் வாங்கி விடவே அர்ச்சுனன் வெற்றி வாகை சூடினான்.

வெற்றிக்கு அறிகுறியாகத் திக்குத் திகாந்தங்களெல்லாம் அதிரும்படி சங்கநாதம் செய்தான். தனியொருவனாக நின்று வென்ற அவன் சிறப்பையாவரும் புகழ்ந்து பாராட்டினார்கள். காண்டவம் தீப்பற்றி எரியும் போது கண்ணபிரானுடைய சம்மதத்தாலும் தன் கருணையினாலும் சிலரை உயிர் தப்பிச் செல்லுமாறு விட்டிருந்தான் அர்ச்சுனன். அவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன், “பாண்டவர்கள் எந்த நேரம் எத்தகைய உதவியை விரும்பினாலும் செய்யக் காத்திருப்பேன்” என்று நன்றிப் பெருக்கோடு கூறி அர்ச்சுனனிடமும் கண்ணபிரானிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் அவன் மயனைப் போலவே தட்சகன் மகனும் சில குருவிகளும் தீக்கிரையாகாமல் தப்பிப் பிழைத்தன. கனற்கடவுளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியின்படியே காண்டவம் முழுவதையுமே விருந்தாக அளிக்க முடிந்ததே என்பதற்காகத் திருப்திப்பட்டான் அர்ச்சுனன். பலகாத தூரம் விரிந்து பரந்து கிடந்த அந்த மாபெரும் கானகத்தை உண்டு கொழுத்த வலிமையோடு கனற்கடவுள் அர்ச்சுனனுக்கும் கண்ண பிரானுக்கும் முன்னால் வந்து நின்றார்.

“இப்போது திருப்தி தானே?” என்றார் கண்ணபிரான் நகைத்துக் கொண்டே. “திருப்தி மட்டுமா? மட்டற்ற மகிழ்ச்சியும் கூட கைம்மாறு செய்ய முடியாத பேறுதவியை இன்று எனக்கு அளித்திருக்கிறீர்கள்...” - கனற் கடவுள் மறுமொழி கூறி இருவரையும் பாராட்டி வணங்கினார்.

“விருந்து கேட்டீர்கள்! அளிக்க வேண்டிய கடமையோடு அளித்தோம். தங்களுக்குத் திருப்தியானால் அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி” என்று அடக்கமாக அவருக்குப் பதில் கூறினான் அர்ச்சுனன். அவர் அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார். கண்ணபிரானும் அர்ச்சுனனும் தாங்கள் தங்கியிருந்த பூம்பொழிலுக்கு வந்து உரிமை மகளிரையும் தேவியரையும் அழைத்துக் கொண்டு இந்திரப்பிரத்தம் திரும்பினர்.

முதலாவது ஆதி பருவம் முற்றும்.

1. வேள்வி நிகழ்ச்சிகள்

பாண்டவர்களின் இந்திரப் பிரத்த நகரத்து வாழ்வு பிறருடைய குறுக்கீடற்ற முறையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. ஒற்றுமையாக வாழவேண்டிய தன் அவசியத்தை விவரிப்பதே போல விளங்கியது சகோதரர்கள் ஐவருக்கும் இடையே நிலவிய மாறுபாடில்லாத அன்பு. சொந்த வாழ்விலும் அன்பைச் செலுத்தி அன்பைப் பெற்று அன்பு வாழ்வு வாழ்ந்தார்கள். அரசியல் வாழ்விலும் அன்பால் ஆண்டு அன்பைப் பரப்புகின்ற சிறந்த நெறியை மேற்கொண்டார்கள். எத்தகைய உயர்வு தாழ்வு ஏற்பட்டாலும் நன்றி மறவாத உள்ளம் சிலருக்கு இருக்கிறது. பிறர் தமக்குச் செய்த உதவியை எண்ணி எண்ணி அதற்குக் கைம்மாறு செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் அத்தகையவர்களது உள்ளம் தெய்வத்தை விட உயர்ந்தது. காண்டவம் தீப்பட்டு அழிந்த போது அர்ச்சுனனுடைய உதவியால் அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன் என்பதை முன்பே அறிந்தோம். இந்தத் தேவதச்சனுக்கு ஓர் ஆவல் தன்னுயிரைக் காப்பாற்றி உதவியவனுக்கு என்றென்றும் மறக்க முடியாத கைம்மாறு ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதே அந்த ஆவல். ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று இவன் மனம் விரைந்தது. தன் விருப்பத்தை அர்ச்சுனனிடமும் மற்றப் பாண்டவர்களிடமும் கூற வேண்டுமென்று கருதி, இந்திரப் பிரத்த நகருக்குப் புறப்பட்டு வந்தான் அவன்.

தன் வேண்டுகோளைப் பாண்டவர்களிடம் வெளியிட்டான். “காண்டவத்தில் எரிந்து நீறாய் இறந்து போயிருக்க வேண்டிய என்னை உயிரோடு காப்பாற்றி உதவினீர்கள். கைம்மாறு செய்து திருப்தி கொள்ள முடியாத அளவு உயர்ந்தது உங்கள் உதவி. ஆனால், என் இதயத்துக்கு, நன்றியை நான் எந்த வகையிலாவது செலுத்த வில்லையானால், நிம்மதியும் திருப்தியும் இன்றி எனக்குள்ளேயே குழம்பும் படியாக நேரிட்டு விடும். உங்களைப் போலவே பிறரைப் பற்றியும் சிந்தித்து அவர்கள் நலனுக்காக உதவும் பண்புடையவர்கள் நீங்கள். சிற்பக் கலையில் நல்ல பழக்கமுள்ளவன் யான். கலைஞர்களெல்லாம் கண்டு அதிசயிக்கும்படியான ஓர் அழகிய மணிமண்டபத்தை உங்களுக்கு நான் கட்டித் தருகிறேன். எளியேனுடைய நன்றியின் சின்னமாக நீங்கள் அந்த மண்டபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மண்டபம் அமைப்பதற்குரிய பொருள்கள் யாவும் ஓர் இடத்தில் மறைந்து கிடக்கின்றன. முற்காலத்து அரசன் ஒருவனால் புதைக்கப்பட்டுள்ள பொருள்கள் அவை. ‘விடபருவன்’ என்ற அசுர குலத்துப் பேரரசன் ஒருவன் தனது அரும்பெரும் முயற்சியாலே ஈட்டிய பொருள்களை எல்லாம் எவரும் அறியாதவண்ணம் ‘பிந்து’ -என்னும் பொய்கையில் மறைத்து வைத்துள்ளான். அவன் இறந்த பிறகு அந்தப் பொருள்கள் எவராலும் பயன்படுத்தப் பெறாமல் அப்படியே மறைந்து கிடக்கின்றன. அந்தப் பொருள்களை எடுத்து வந்துவிட்டால் கட்டப் போகிற மணிமண்டபத்தை மிக உயர்ந்த முறையில் கட்டிவிடலாம். அவற்றை எடுத்து வருவதற்கு மட்டும் உங்கள் உதவி எனக்கு வேண்டும்.” மயனுடைய நன்றியுணர்ச்சியும் களங்கமற்ற அன்பும் பாண்டவர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.

“மணிகளையும், அருமையான பல பொருள்களையும் உள்ளடக்கிய விடப்பருவனின் மறைந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்குத் தங்கள் உதவி பூரணமாக உண்டு என்று வாக்களித்த தருமன் உடனே தகுந்த வீரர்களை அழைத்து வரச் செய்தான். ஆற்றலும் செயல் திறனும் மிக்க வீரர்கள் பலர் அழைத்து வரப்பட்டனர். “விட பருவனுக்குச் சொந்தமான ‘பிந்து’ என்னும் பொய்கையில் மறைந்திருக்கும் நிதிகள் யாவற்றையும் கண்டுபிடித்து விரைவில் கொண்டு வாருங்கள்” என்று தருமன் அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். வீரர்கள் சென்றனர். மயனுக்குத் திருப்தி ஏற்பட்டது. கட்டளையை மேற்கொண்டு சென்ற வீரர்கள் மிக விரைவிலேயே பொய்கையில் மறைந்திருந்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தனர். பொருள் வந்து சேர்ந்ததும் மயன் மண்டபம் கட்டுகின்ற வேலையைத் தொடங்கினான். அதிவேகமாக உயர்ந்த செளந்தரியங்களைச் சிருஷ்டிக்கும் திறன் படைத்த அந்தத் தெய்வீகக் கலைஞன் பதினான்கே நாட்களில் கண்ணைக் கவரும் அழகோடு மண்டபத்தைக் கட்டி முடித்து விட்டான். வீமனுக்கும் ஓர் கதாயுதத்தையும் அர்ச்சுனனுக்கு ஓர் வலம்புரிச் சங்கையும் மயன் தன் அன்பளிப்பாக அளித்தான். அவனுடைய நன்றி நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் பாண்டவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான் அவன்.

மயன் இவ்வாறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்ற சில நாட்களில் நாரத முனிவர் இந்திரப் பிரத்த நகரத்துக்கு விஜயம் செய்தார். பாண்டவர்கள் ஐவரும் அவரை வரவேற்றுப் புதிய மண்டபத்தைக் காண்பித்தனர். சிறந்த அமைப்பினாலும் உயர்ந்த பொருள்களாலும் ஈடு இணையற்று விளங்கிய அந்த மண்டபம் நாரதரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. பாண்டவர்களையும் மயனையும் பெரிதும் பாராட்டினார் அவர். “பாண்டவ சகோதரர்களே! இந்த நிகரற்ற மண்டபத்தைப் பெற்ற நீங்கள் இதைக் களனாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்று உண்டு. உங்களைக் கொண்டு ‘இராசசூயம்’ -என்ற பெருவேள்வியைச் செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய பாண்டு பல நாளாகக் கருதியிருந்தான். ஆனால் தீவினை வசத்தால் அந்தக் கருத்து நிறைவேறுவதற்குள்ளேயே அவனுக்கு மரணம் நேரிட்டு விட்டது. இப்போது நீங்கள் அமரரான உங்கள் தந்தையின் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட வேண்டும். உங்கள் தந்தையின் ஆன்மா திருப்தியடையும் படியாக நீங்கள் இந்தக் கணத்திலிருந்தே இராசசூய வேள்விக்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” -நாரத முனிவரின் வேண்டுகோளுக்கு ஒருங்கு இணங்கினர் ஐவரும்.

முனிவர் உவகையோடு சென்றார். நாரத முனிவருக்கும் பாண்டவர்களுக்கும் இந்த உரையாடல் நிகழ்ந்தபோது கண்ணபிரான் உடனிருந்தார். முனிவர் செல்கின்ற வரை அமைதியாகப் பேசாமலிருந்த கண்ணபிரான் அவர் சென்ற பின்பு பாண்டவர்களிடம் வேறு ஓர் யோசனையைக் கூறினார். வேள்வியைத் தொடங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்படுகின்ற எதிரிகளை முன்பே உணர்ந்து தொலைக்க முயல வேண்டும். சராசந்தன் என்றோர் அரக்கர் குலமன்னன் இருக்கிறான். மனிதர்களைக் கொண்டு செய்யும் ‘நரமேத யாகம்’ என்ற வேள்வியைச் செய்வதற்காக ஒரு பாவமும் அறியாத அரசர் பலரைச் சிறையில் அடைத்து வைத்திருக் கிறான். ஆற்றல் மிக்க மன்னர்கள் கூட அவனுக்கு பயந்து அடி பணிகிறார்கள். அவ்வளவு பயங்கரமான அந்த அரக்கர் குலமன்னனை முதலில் நாம் அழிக்க வேண்டும். இல்லையென்றால் நமது வேள்விக்கு அவனால் பெரிய இடையூறு நேர்ந்தாலும் நேரலாம். கண்ணபிரான் இவ்வாறு கூறி நிறுத்தவும் தருமன் “அப்படியானால் அந்த அரக்கனைச் சாமர்த்தியமாகக் கொல்லும் வழியையும் தாங்களே கூறியருள் வேண்டும். தங்கள் யோசனையின்படி நாங்கள் நடப்போம்” -என்று வேண்டிக் கொண்டான்.

“தருமா! அவனை அழிப்பதற்கு எளிமையான வழியை ஏற்கனவே நான் கண்டுபிடித்து வைத்துள்ளேன். நானும், வீமனும், அர்ச்சுனனும், சராசந்தனின் கோட்டைக்கு மாறுவேடத்தில் அந்தணர்களைப் போலச் செல்கின்றோம்..”

“அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடுமா?”

“வீமன் ஒருவன் போதுமே, சராசந்தனைக் கொல்வதற்கு?”

“நல்லது! அப்படியால் போய் வெற்றியோடு திரும்பி வாருங்கள்” -தருமன் சம்மதித்தான். வீமன், அர்ச்சுனன், கண்ணபிரான் மூவரும் தோற்றத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டனர். சராசந்தனின் தலைநகருக்குப் பெயர் கிரி விரசநகரம். வலிமையான அரண்களாலும் தகர்க்க முடியாத பாதுகாப்பினாலும் சிறந்தது அந்த நகரம். சூதுவாதறியாத அந்தணர்களைப் போலச் சென்றிருந்ததனால் சராசந்தனின் கோட்டைக்குள் சுலபமாக நுழைய முடிந்தது அவர்களால் அந்தணர்கள் மூவர் சந்திக்க வந்திருப்பதாக மெய்க் காவலர்கள் மூலம் சராசந்தனுக்குக் கூறி அனுப்பினர். தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தான் சராசந்தன். வீமன் முதலிய மூவரும் சென்றனர். சராசந்தன் அவர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தான். அந்தணர்களை உற்றுப் பார்த்தான். ஆட்களை ஒரு முறை கூர்ந்து நோக்கியவுடனே அவர்களை இன்னாரென்று எடை போட்டு நிர்ணயித்து விடுகிற ஆற்றல் பொருந்தியவை அவனது கண்கள்!

வீமன் முதலியவர்கள் சராசந்தனை ஏமாற்றுவதற்காக வேற்றுருவில் வந்தார்கள். ஆனால், சராசந்தன் அவ்வளவு சுலபத்தில் ஏமாறிவிடுகிறவனா என்ன? அவனுடைய மத நுட்பம் அவனுக்கு உதவி செய்தது. எதிரே அமர்ந் திருப்பவர்கள் போலி அந்தணர்கள் என்பதை அவன் அறிந்து கொண்டு விட்டான். மூவரும் அந்தணர்களுக்குரிய உருவத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தோள்களில் தென்பட்ட வில் தழும்புகள் அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தணர்கள் தோளில் வில் தழும்பு இருக்க வேண்டிய அவசியமில்லையல்லவா? ‘இவர்கள் மூவரும் க்ஷத்திரியர்கள்! ஏதோ ஒரு சூழ்ச்சியின் நிமித்தம் இப்படித் தோன்றி நம்மை ஏமாற்றக் கருதியிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் யார் என இப்போதே விசாரித்துவிட வேண்டும்’ சராசந்தன் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

“அந்தணர்களே! உண்மையில் நீங்கள் மூவரும் அந்தணர்கள் தாமா? உண்மையை ஒளிக்காமல் என்னிடம் சொல்லிவிடுங்கள்” -சராசந்தன் திடீரென்று தங்களை இப்படிக் கேட்டது வீமன் முதலிய மூவரையும் திடுக்கிடச் செய்தது. என்ன சொல்வதென்று தயங்கினர்.

“உண்மையை நீங்களாகச் சொல்லாவிட்டால் நானாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட நேரிடும்”

இனியும் தயங்குவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணபிரான் உண்மையைக் கூறிவிட்டார். “நாங்கள் மூவரும் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து வருகிறோம். உண்மையில் நாங்கள் ஷத்திரியர்கள்தாம்! நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன்! மூவரும் மாறுவேடத்தில் இவண் வந்திருக்கிறோம். உண்மை இது தான்.”

“என்ன காரியத்திற்காக இந்த மாறுவேடத்தில் இங்கே வந்தீர்கள்?”

“கிரிவிரச நகரத்தின் அழகைப் பற்றி கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.” கண்ணபிரான் தன்னைச் சமாளித்துக் கொண்டு இந்த மறுமொழியைக் கூறினார். சராசந்தன் இடி இடிப்பது போலத் கை கொட்டிச் சிரித்தான்.

“யாரை ஏமாற்றலாம் என்று இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள்? உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம்? நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார்?”

“ஏன் நாங்கள் மூவருமே போருக்குத் தயாராக இருக்கிறோம்?”

“இல்லை! இல்லை! முடியாது. உங்களில் கண்ணன் என்னோடு பதினெட்டு முறைபோர் செய்து தோற்று ஓடியவன். அவனோடு போர் செய்ய நான் விரும்பவில்லை. அர்ச்சுனனோ வயதில் எனக்கு மிகவும் இளையவன். எனவே அவனோடு போர் புரிவதும் எனக்கு இழுக்கு. இங்கிருப்பவர்களில் வீமன் ஒருவன்தான் என்னோடு சரிநிகர் சமானமாக நின்று போர் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவன். இன்று என்னோடு போரிட்டுச் சாகப் போகின்ற பாக்கியத்தை வீமனுக்கே கொடுக்கிறேன்” -சராசந்தன் குரலில் ஆத்திரமும் வெறியும் தொனித்தன, வீமனும் தானும் செய்யப் போகின்ற ‘போரின் முடிவு என்ன ஆகுமோ?’ -என்று ஒருவகையான கலக்கமும் அவன் மனத்தில் நிலவியது. எதற்கும் முன்னேற்பாடாகத் தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, அதன் பின் தான் போரில் இறங்குவதே நல்லதென்று தோன்றியது அவனுக்கு. அரசவையைச் சேர்ந்தவர்களையும் அமைச்சர் களையும் அழைத்து அப்போதே தன் புதல்வனுக்கு மணிமூடி சூட்டி அரியணையேற்றினான்.

வீமனுக்கும் சராசந்தனுக்கும் போர் தொடங்கியது. மலைச் சிகரங்களையொத்த தன் புயங்களைத் தட்டிக் கொண்டே வீமன் மேற் பாய்ந்தான் சராசந்தன். ‘உனக்கு நான் எந்த வகையிலும் இளைத்தவனில்லை’ என்று கூறுவது போல மதயானை என அவன் மேல் வீமனும் பாய்ந்தான். இருவருக்கும் போர் நிகழத் தொடங்கியது. போர் என்றால் சாமானியமான போரா அது? அண்ட சராசரங்களையும் நடுங்கி நிலைகுலையச் செய்யும் கோர யுத்தம் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. வெற்றி தோல்வி இன்னார் புறம் என்று நினைக்க முடியாதபடி இருந்தது போர் நிகழ்ச்சி. ஆற்றல், வீரம், சரீரபலம் ஆகியவற்றிலும் சமமான இந்த இரு வீரர்களின் போர் பதினைந்து தினங்கள் தொடர்ந்து நிகழ்ந்தது. போரின் முடிவு நேரம் நெருங்க நெருங்கச் சராசந்தன் கை தளர்ந்து வீமன் கை ஓங்கியது. சராசந்தனுடைய உடலை வீமன் இரண்டு மூன்று முறை கிழித்துப் பிளந்து எறிந்தான்.

ஆனால், என்ன விந்தை? சராசந்தனின் பிறந்த உடல் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி உயிர் பெற்றெழுந்து வீமனோடு போர் புரிந்தது. அவனை எப்படித்தான் கொல்வதென்று வீமனுக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? சராசந்தனை எப்படிக் கொல்வது? -என்று தெரியாமல் அவன் திகைத்தான். நல்லவேளையாக அப்போது அருகிலிருந்த கண்ணபிரான் ஒரு சிறு துரும்பைக் கையிலெடுத்து அதை இரண்டாகப் பிளந்து மாற்றி வீமனுக்கு அதை அடையாளமாகக் காட்டினார். வீமன் கண்ணபிரானின் சூசகமான இந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டான். ‘சராசந்தனின் உடலைப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டால் அவன் உறுதியாக அழிந்து போவான்’ -என்று கண்ணபிரானின் குறிப்பு விளக்கியது. உடனே வீமன் முழு ஆற்றலோடு ஆவேசம் கொண்டு சராசந்தனின் மேல் பாய்ந்தான். மறுகணம் சராசந்தனின் உடலை இரண்டாகப் பிளந்து கால்மாடு தலைமாடாக முறை மாற்றிப் போட்டு விட்டான். சராசந்தன் இறந்தான்.

வீமன் வெற்றி முழக்கம் செய்தான். உடற் பிளவுகளை முறை மாற்றிப் போடுவதற்கு முன்பு பல முறை உயிர் பிழைத்தெழுந்த உடல் இப்போது மட்டும் உயிரற்று வீழ்ந்து விட்டதைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தன் வியப்பைக் கண்ணபிரானிடம் கூறினான். அவர் அவனுடைய வியப்பைத் தெளிவு செய்வதற்காகச் சராசந்தனின் வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடங்கி அவனுக்குக் கூறினார்.

“அர்ச்சுனா! இந்தச் சராசந்தனின் வரலாறு ஆச்சரியகரமானது. அதை உனக்கு இப்போது சொல்கிறேன் தெரிந்து கொள். தேவர்களின் பகைக் குலமாகிய அரக்கர் குலத்தில் ‘பிருகத்ரதன்’ -என்றோர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்குப் பல நாட்களாகப் புத்திரப் பேறு இல்லை . மனம் கலங்கி வருந்திய அவன், ‘சண்ட கெளசிகன்’ என்னும் தவவலிமை மிக்க முனிவரை வணங்கி வழிபட்டுத் தனக்கு அருள் செய்யுமாறு வேண்டிக் கொண்டான். பிருகத்ரதனின் நிலைக்கு மனமிரங்கிய சண்ட கெளசிக முனிவர் அவனுக்கு உதவ வேண்டுமென்று எண்ணினார். அரிய மாங்கனி ஒன்றை அவனுக்கு அளித்து அதை அவன் மனைவிக்குக் கொடுக்கும் படிக் கூறினார். பிருகத்ரதன் முனிவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அரண்மனைக்குச் சென்றான். அவனுக்கு இரு மனைவியர். அதை அவன் முனிவரிடம் கூறவில்லை. முனிவர் கொடுத்த கனியை முழுமையாக ஒருத்திக்குக் கொடுக்காமல் இரண்டாகக் கூறு செய்து இருமனைவியர்க்கும் கொடுத்துவிட்டான் அவன்.

அறியாமையால் அவன் செய்த இந்தக் காரியம் விபரீதமான வினையை உண்டாக்கிவிட்டது. குழந்தை பிறக்கின்ற காலத்தில் இரு மனைவியரும் ஆளுக்குப் பாதி உடலாகத் தனித் தனிக் கூறுகளை ஈன்றெடுத்தனர். இம்மாதிரித் தனித்தனி முண்டங்களாகக் குழந்தை பிறந்தது என்ன விபரீத நிகழ்ச்சிக்கு அறிகுறியோ என்றஞ்சிய பிருகத்ரதன் இரவுக்கிரவே யாரும் அறியாமல் அவைகளை நகரின் கோட்டை மதிலுக்கு அப்பால் தூக்கி எறியும்படி செய்துவிட்டான். இரவின் நடுச்சாமத்தில் ‘சரை’ என்ற அரக்கி கோட்டை மதிற்புறமாக வரும் போது இந்த உடற்கூறுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் பார்த்திருக்கிறாள். என்ன அதிசயம்! உடல் ஒன்று சேர்ந்ததோடல்லாமல் குழந்தை உயிர்பெற்று அழத்தொடங்கியது. அவள் உடனே குழந்தையை மன்னன் பிருகத்ரதனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். ‘சரை’யால் ஒன்று சேர்க்கப்பட்ட குழந்தையாகையால் சராசந்தன் என்ற பெயர் இவனுக்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவன் பட்டத்துக்கு வந்ததும் பேரரசர்களை எல்லாம் வெல்லும் மாவீரனாக விளங்கினான். இன்று வீமனால் அழிந்தான்.” கண்ணபிரான் இவ்வாறு சராசந்தனுடைய வரலாற்றைக் கூறி முடித்ததும் அவர்கள் சராசந்தனின் புதல்வனைக் கண்டு அந்த நாட்டை ஆளும் உரிமையை அவனுக்கே கொடுத்துவிட்டு இந்திரப் பிரத்த நகரத்துக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் இந்திரப் பிரத்த நகரத்தில் இராசசூய வேள்விக்குரிய ஏற்பாடுகளும் பூர்வாங்கமான நிகழ்ச்சிகளும் ஆரம்பமாயின.

2. சிசுபாலன் போட்டி

இராசசூய வேள்வி நிகழ்வதற்கு முன்னால் திக்கு விஜயம் செய்து முடிக்க வேண்டும் என்பது ஓர் மரபு, எல்லாத் திசைகளிலுமுள்ள எல்லா மன்னர்களையும் வென்று பணிவித்த தலைமையோடு அந்த வேள்வியைச் செய்தல் நலம். இதற்காகப் பாண்டவ சகோதரர்களும் திக்கு விஜயத்திற்குப் புறப்பட்டார்கள். வடதிசையை நோக்கி அர்ச்சுனனும் கிழக்குத் திசையை நோக்கி வீமனும் புறப்பட்டார்கள். தகுதி வாய்ந்த படைகளும் உடன் சென்றன. வடமேற்கு, தென்மேற்கு ஆகிய இவ்விரு திசைகளிலும் நகுலனும் தெற்குத் திசையில் சகாதேவனும் புறப்பட்டார்கள். சகோதரர்களை வாழ்த்தித் திக்கு விஜயத்திற்கு அனுப்பி விட்டுத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றார் கண்ணாபிரான். கிழக்குத் திசையிற் சென்ற வீமன், கலிங்கம் முதலிய தேசங்களையெல்லாம் வென்று அந்தந்தத் தேசத்து அரசர்கள் கொடுத்த திறைப் பொருள்களை மலையெனக் குவித்தான். வடக்குத் திசையில் சென்ற அர்ச்சுனன் விந்தமலை, ஏமகூடமலை முதலிய மலைகளைக் கடந்து சென்று அதற்கு அப்பாலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றிக் கொண்டான். இவ்வாறே மற்றத் திசைகளில் சென்றவர்களும் அங்கங்கே பெரு வெற்றிகளை அடைந்தனர். வென்ற நாடுகளிலெல்லாம் அரசர்கள் மனமுவந்து காணிக்கையாகக் கொடுத்த பொருள்கள் மலைகள் மலைகளாகக் குவிந்திருந்தன. எல்லோரும் தாம் தாம் சென்ற திசைகளிலிருந்து இந்திரப் பிரத்த நகரத்துத் திரும்பி வந்தார்கள். இராசசூய வேள்விக்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

துவாரகையிலிருந்து கண்ணபிரானை அழைத்து வருவதற்காக நாரத முனிவர் சென்றார். வேள்வி நடக்கப் போவதை அறிவித்து வெளிநாட்டு அரசர்களுக்கெல்லாம் தூதுவர்கள் மூலம் அழைப்புக்கள் அனுப்பப்பெற்றன. கண்ணபிரானும் பிற நாட்டு மன்னர்களும் இந்திரப் பிரத்த நகரத்தில் வந்து கூடினார்கள். மகாஞானியும் தபஸ்வியும் ஆகிய வேத வியாசரை உலூகன் சென்று அழைத்து வந்தான். இவர்கள் யாவரும் வந்து தங்கியிருப்பதனால் இந்திரப் பிரத்தம் ஒரு தனி அழகைப் பெற்று விட்டது போல் கோலாகலமாக விளங்கியது. மிகவும் சிறப்பான முறையில் வேள்வியை நடத்துவதற்குத் தக்கப்படி வேள்விச் சாலை அமைக்கப்பட்டது. அந்தணர்களும் மறையவர்களும் புனிதமான வேதகோஷங்களைச் செய்தனர். வேள்விச் செயல்களுக்குரிய மங்கல வேளை வந்தது. மூதறிஞராகிய வேதவியாசர் வேள்விக்குத் தலைவனாக தருமனையும் தலைவியாகத் திரெளபதியையும் நியமித்தார். ஏனைய சகோதரர்கள் தமையனின் ஆணை பெற்றுத் தத்தமக்குரிய பணிகளை ஏற்றுக் கொண்டனர். வேள்விக்கு வருகின்ற வர்களுக்கு உணவளித்து உபசரிக்க வீமன் பொறுப்பேற்றுக் கொண்டான். கஸ்தூரி, சந்தனம், பன்னீர், மலர் முதலிய அலங்காரப் பொருள்களை வழங்கும் பொறுப்பை அர்ச்சுனன் ஏற்றுக் கொண்டான். நகுல சகாதேவர்கள் வெற்றிலை பாக்கு முதலிய பொருள்களை வழங்கினர். தானம், பொருட்கொடை, சன்மானம் முதலியவற்றை வழங்கும் பொறுப்பு அதற்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவனான கர்ணனிடம் ஒப்பிக்கப்பட்டது. பொருள்களையெல்லாம் நிர்வாகிக்கும் தலைமைப் பொறுப்பைத் துரியோதனன் ஏற்றுக் கொண்டான்.

தருமனும் திரெளபதியும் மங்கல நீராடி வேள்விக்குரிய ஆடை அணிந்து ஓமகுண்டங்களுக்கு முன்பு வீற்றிருந்தனர். இடம் வலமாக அவர்கள் வீற்றிருந்த தோற்றம் சிவபெருமானும் உமாதேவியாருமே முறை மாறி இடம் வலமாக வீற்றிருப்பது போலக் காட்சியளித்தது. தீக்கொழுந்துகளின் செந்நிற ஒளி திரெளபதியின் பொன்னிற மேனிக்கு மெருகு கொடுப்பது போலச் சுடர் பரப்பியது. ஏழு நாட்கள் கண்ணும் கருத்துமாக வேள்வியை நிகழ்த்தி நிறைவேற்றினார்கள்; அந்தப் புண்ணியத் திருச்செயல் முற்றியதும் தருமனும் திரெளபதியும் தான தர்மங்களைச் செய்தனர். வந்திருந்த அந்தணர்களுக்கும் மறையவர்களுக்கும் புலவர் பெரு மக்களுக்கும் அவரவர்கள் விரும்பிய பரிசில்களை மனமுவந்து அளித்தனர். விருந்தினர்கள் சிறப்பான முறையில் உபசரித்து அனுப்பப் பெற்றார்கள். வேள்வி முற்றிப் பூரணமடைந்ததும் வேள்வியைச் செய்தவர்கள் தக்க பெரியார் ஒருவருக்கு வழிபாடு செய்வது வழக்கம். அப்போது அங்கே இந்திரப் பிரத்த நகரத்து வேள்விச் சாலையில் பல பெரியோர்கள் கூடியிருந்ததனால் யாருக்கு முதல் வழிபாடு செய்வது என்று தருமனுக்குப் புரியவில்லை. அதனால் அவன் வீட்டுமனிடம் யோசனை கேட்கக் கருதினான். வீட்டுமனிடம் கேட்டான்.

வீட்டுமன் அங்கிருந்தவர்கள் யாவருக்கும் மூத்த வராயினும் அறிவிலே சிறந்த வியாச முனிவரை நோக்கி, “வழிபாட்டில் யாருக்கு முதன்மை கொடுக்கலாம்?” என்று கேட்டார். வியாச முனிவர் ‘அங்குள்ளோரில் முதல் வழிபாட்டைப் பெறத் தகுந்தவர் கண்ணபிரான் ஒருவரே’ -என்று கூறினார். வீட்டுமன் இணங்கினார். தருமனும் கண்ணனுக்கே முதல் வழிபாடு செய்ய உடன்பட்டான். அவ்வளவேன்? வேள்விக் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணபிரானையே வழிபாட்டுக்குரியவராகக் கொள்ள வேண்டுமென்பதில் கருத்து மாறுபாடின்றி மகிழ்ந்திருந்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒரே ஒருவனுடைய உள்ளம் மட்டும் பொறாமையால் குமுறிக் கொண்டிருந்தது. கண்ணபிரான் முதல் வழிபாடு பெறுகிறாரே என்ற நினைவால் நெஞ்சம் குமுறிக் குரோதம் கொண்டிருந்தான் அந்த உள்ளத்துக்குரியவன். அவன் தான் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன். தன்னைப் பற்றித் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளும் இயல்பு வாய்ந்தவன். அகங்காரத்தால் கொழுத்த உள்ளம் படைத்த சிசுபாலன் கண்ணபிரானையே எதிர்த்து இழிவான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவையிலிருந்த பெரியோர்கள் அவன் சொற்களைக் கேட்டு மனங் கூசி நாணினர்.

“அறிவு, திரு, ஆற்றல் மூன்றிலும் சிறந்த பேரரசர்கள் பலர் இந்த அவையில் கூடியிருக்கின்றனர். மன்னாதி மன்னர்களாகிய அவர்களுக்கு இல்லாத தகுதி கண்ணனிடம் எந்த வகையில் இருக்கிறது? கேவலம்! மாடு மேய்க்கின்ற குலத்திலே பிறந்த கண்ணன் முதல் வழிபாடு பெறுவதென்றால் அது நம்மை எல்லாம் அவமானப்படுத்துவது போல் அல்லவா தோன்றுகிறது? வழிபடும் முதன்மையோ, தகுதியோகண்ணனுக்கு இல்லை. ஆகவே கண்ணனுக்கு முதல் வழிபாடு செய்யக் கூடாது. செய்தால் என் போன்றவர்களின் கோபத்தைக் கிளறிவிடும் காரியமாகவே அது அமையும். அரச மரபிலே உயர்ந்தவர்களாகிய சூரிய வம்சத்தினரும் சந்திரவம்சத்தினரும் இங்கு நிறையக் கூடியிருக்கிறார்கள். அவர்களில் எவருமே இந்த வழிபாட்டிற்குத் தகுதியில்லா தவர்களா? கண்ணனுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? இவன் தன் வாழ்வில் செய்திருக்கும் இழிந்த செயல்களை விரல் விட்டு எண்ண முடியுமா? ஆயர்பாடியில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வெண்ணையையும் நெய்யையும் பாலையும் தயிரையும் திருடி உண்டான். இளம் பெண்களுடன் தகாத முறையில் நெருங்கிப் பழகினான் தான் பிறந்த வேளையின் தீமையால் தன்னைப் பெற்றவர்களையே சிறைவாசம் செய்யும்படி ஆக்கினான். ‘கம்சன் தனக்கு மாமனாயிற்றே’ -என்றும் பாராமல் அவனைக் கொன்று அழித்தான். இன்னும் எத்தனையோ பேர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் இவன் செய்த தீமைகள் எண்ணற்றவை. இத்தகையவனுக்கா வழிபாட்டில் முதன்மை கொடுப்பது? இதில் நியாயத்திற்கு சிறிதும் இடமில்லையே!” சிசுபாலன் ஆத்திர வெறியினாலும் பொறாமையாலும் குமுறும் இதயத்திலிருந்து சொற்களை வாரி இறைத்தான்.

கண்ணபிரான் தன் கோபத்தைச் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையாக வீற்றிருந்தார். அவருடைய இந்த அசாத்தியப் பொறுமையைக் கண்டு அவையோர் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். சிசுபாலன் பேசி நிறுத்தியதும் அதுவரை அடக்கமாகவும் அமைதி யாகவும் வீற்றிருந்த கண்ணபிரான் மெல்ல எழுந்து நின்றார். “சிசுபாலா? தகுதியைப் பற்றிய உன் பேச்சுக்களை இங்கே கூடியிருப்பவர்கள் முடிவு செய்வதற்குள் நாமே முடிவு செய்து கொண்டு விடுவது நல்லது. எங்கே? நீ இப்போது போருக்குத் தயார் தானே?” -இவ்வாறு கூறிக் கொண்டே யுத்தத்திற்குத் தயாராகத் தம் தேரில் ஏறி நின்றார் கண்ணபிரான்.

சிசுபாலன் திடுக்கிட்டுப் போனான், ‘கண்ணனிடம் மிருந்து போருக்கு அழைப்பு வரும்‘ -என்பதை இவ்வளவு விரைவில் அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் சமாளித்துக் கொண்டு தேரிலே ஏறித்தானும் போருக்குத் தயாராக நின்றான். அவையிலிருந்து வெளிப்புறம் போருக்கு வசதியான இடத்திற்குச் சென்ற பின் இருவருக்கும் போர் தொடங்கியது. வேள்விக்கு வந்திருந்தவர்களும் சூழ இருந்து போர் நிகழ்ச்சியைக் கண்டனர். சிசுபாலன் பேச்சிலேதான் வீரனாகத் தென்பட்டான். ஆனால் போரிலோ? நொடிக்கு நொடி கண்ணபிரானின் ஆற்றலுக்கு முன்னால் அவன் கை தளர்ந்து கொண்டே வந்தது ‘தகுதி யாருடையது?’ -என்று நிரூபிக்க விரும்புகின்றவரைப் போல முழு ஆற்றலோடு போரில் ஈடுபட்டிருந்தார் கண்ணபிரான். இறுதியில் தம் வலக்கரத்திலிருந்த திகிரியை (சக்ராயுதத்தை) அவன் கழுத்தைக் குறி வைத்துச் செலுத்தினார் அவர். திகிரி வேகமாகச் சுழன்று அவன் கழுத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்கள் வியப்பு நிழலிடுகிற முகபாவத்துடன் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். திகிரி சிசுபாலனின் தலையை அரிந்து தலையைப் பிரித்ததும் மற்றோர் ஆச்சரியகரமான நிகழ்ச்சியும் நடந்தது.

உயிரிழந்து வீழ்கின்ற அவன் உடலிலிருந்து ஓர் ஒளிப்பிழம்பு புறப்பட்டு நேரே கண்ணபிரானின் திருவடிகளைச் சென்றடைந்தது. ‘ஆகா இது என்ன ஆச்சரியம்? இந்த மாதிரிக் கொடிய மனிதனின் சரீரத்திலிருந்து ஓர் ஒளி புறப்பட்டு இவரைச் சரணடைகின்றதே? இதற்கு என்ன அர்த்தம்?’ -என்று திகைத்து மலைப்புற்றனர் கூடியிருந்தவர் யாவரும். கூடியிருந்தவர்களின் இந்தத் திகைப்பைப் போக்கி உண்மையை விளக்கவியாசமுனிவர் முன் வந்தார். ‘சிசுபாலன் யார்?’ -என்பதை விவரிக்கலானார் அவர்.

“முன் ஒரு காலத்தில் முன் கோபத்தில் வல்லவரான துருவாச முனிவர் திருமாலைக் காண்பதற்காகச் சென்றார். திருமாலின் இருப்பிடமான வைகுந்தத்தில் வாயில் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் இருவரும் அவருடைய பெருமையை அறியாமல் அவரை உள்ளே விடுவதற்கு மறுத்துவிட்டனர். துருவாசர் அவர்கள் மேல் மிக்க சினங்கொண்டார். எனக்கு இழைத்த இந்த அவமானத்திற்குப் பதிலாக என் சாபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணமே நீங்கள் இருவரும் இவ்வாழ்வைத் துறந்து பூவுலகம் சென்று மானிடராய்ப் பிறந்து துன்பங்களை அனுபவிப்பீர்களாக, அவ்வாறு அனுபவித்தால் தான் உங்களுக்குப் புத்தி வரும்...” என்று கோபம் மேலிட்டுக் கூறினார். அதே சமயத்தில் வாயிற் காவலர்களுடனே யாரோ இரைந்து பேசிக் கொண்டிருக்கும் குரலைக் கேட்ட திருமால் தற்செயலாக வெளியே வந்தார். அங்கே துருவாச முனிவர் சினத்தோடு நிற்பதைக் கண்டதும் விஷயத்தை அனுமானித்துக் கொண்டார். முனிவரை அன்போடு இனிய சொற்களைக் கூறி வரவேற்றார். அவருடைய கோபம் மெல்லத் தணிந்தது.

“முனிவர் பெருமானே! அறியாமையினால் தவறு செய்து விட்ட இந்தக் காவலர்களுக்குத் தாங்கள் கொடுத்த சாபம் நீங்குவது எப்போது?...“ திருமால் கேட்டார்.

“எல்லாம் வல்ல இறைவனாகிய உனக்குப் பக்தர்களாக ஏழு பிறவி பிறந்து முடித்ததும் இவர்கள் மீண்டும் இப்போதிருப்பது போல் உன்னிடம் வந்து சேர்வார்கள். அல்லது உன்னைக் கடுமையாக எதிர்க்கும் விரோதிகளாக மூன்று பிறவிகள் பிறந்து மீட்சி பெறுவர். இவ்விரண்டு வழிகளில் இவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை மேற்கொள்ளலாம்” என்றார் துருவாசர்.

உடனே திருமால், “காவலர்களே! முனிவர் கூறிய இவ்விரண்டு வழிகளில் எதைப் பின்பற்றி நீங்கள் சாபமீட்சி பெறப் போகிறீர்கள்? உங்கள் விருப்பம் யாது?” -என்று தம் காவலர்களை நோக்கிக் கேட்டார்.

“கருணைக் கடலாகிய பெருமானே! உன்னைத் துறந்து ஏழு பிறவிகள் தனித்து வாழ எங்களால் இயலாது. உன் பிரிவை நாங்கள் ஆற்றோம். எனவே மூன்று பிறவிகள் பகைவர்களாகப் பிறந்தே உன்னை அடைவோம்.” காவலர்களின் மறுமொழி திருமாலைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

துருவாச முனிவரும் மூன்று பிறவிகளிலேயே அவர்களுக்குச் சாபமீட்சி கிடைக்கும்படி செய்தார். காவலர்கள் மண்ணுலகில் சென்று பிறந்தனர். முதற் பிறவியில் ‘இரணியன், இரணியாக்கன்’ என்ற பெயரிலும், இரண்டாம் பிறவியில் ‘இராவணன், கும்பகர்ணன்’ என்ற பெயரிலும் மூன்றாம் பிறவியில் ‘கம்சன், சிசுபாலன்’ என்ற பெயரிலும் முறையே இந்தக் காவலர்கள் மூன்று பிறவிகளிலும் திருமாலுக்குப் பகைவர்களாகத் தோன்றினர். சிசுபாலன் இறந்ததும் அவன் உயிர் கண்ணபிரான் திருவடிகளை ஒளியுருவிற் சென்று அடைந்ததற்குக் காரணம் இது தான்!” இவ்வாறு வியாசமுனிவர் விளக்கம் கூறி முடிக்கவும் திருமாலின் அவதாரமே இந்த கண்ணபிரான்‘ -என்றெண்ணி எல்லோரும் அவரைக் கைகூப்பி வணங்கினர். இவ்வளவும் நிகழ்ந்து முடிந்தபின் துன்பத்தை அனுபவித்துப் பெறுகின்ற இன்பத்தின் சுவையைப் போல இறுதியாகக் கண்ணபிரானை அமரச் செய்து அவருக்கே முதல் வழிபாடு செய்தான் தருமன். யாருடைய மறுப்புமில்லாமல் ஒருமித்த மகிழ்ச்சியுடனே நிகழ்ந்து நிறைவேறியது அந்த வழிபாடு. வழிபாடு முடிந்தபின் அந்தந்த நாட்டு மன்னர்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளையும் மரியாதைகளையும் செய்தார்கள். பெரியோர்களையும் முனிவர்களையும் வணங்கி அவர் களுடைய ஆசியைப் பெற்றார்கள் பாண்டவர்கள். தந்தை பாண்டுவின் விருப்பமாகிய இராசசூய வேள்வியை யாவரும் போற்றும்படியான முறையில் செய்து முடித்த திருப்தி அவர்கள் சிந்தையில் நிலவியது.

வேள்வி நிகழ்ந்த ஏழு நாட்களிலும் இந்திரனுடைய அமராபுரியைக் காட்டிலும் கோலாகலமும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்திரப்பிரத்த நகரம் யாவரும் விடை பெற்றுச் சென்றபின் விழா நடந்து முடிந்த இடத்தின் தனிப்பட்ட அமைதியைப் பெற்றது. வியாசர் முதலிய முனிவர்களும் கெளரவர்களும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றபின் இந்தத் தனிமையை இன்னும் நன்றாக உணர்ந்தனர் பாண்டவர்கள். இந்திரப் பிரத்த நகரின் வாழ்வும் தருமனின் ஆட்சியும் எப்போதும் போல் அமைதியாகக் கழிந்து கொண்டிருந்தன. இராசசூய வேள்வியால் திக்குத் திகந்தமெல்லாம் பரவிய புகழ் அந்த வாழ்விற்கு ஒரு புதிய சிறப்பையும் அளித்திருந்தது.

3. கர்ணன் மூட்டிய கனல்

இந்திரப்பிரத்த நகரத்தில் நடந்த வேள்விக்குச் சென்று விட்டுத் திரும்பிய கெளரவர்களின் நெஞ்சம் பொறாமையால் குமைந்து கொண்டிருந்தது. ‘ஒரு சாதாரணமான யாகத்தைச் செய்து அதன் மூலம் எவ்வளவு பெரிய புகழைச் சுலபமாக அடைந்து விட்டார்கள் இந்தப் பாண்டவர்கள்?’ -என்று மனம் குமுறினான் துரியோதனன். மனத்தில் வெளிப்படாமல் புகைந்து கொண்டிருந்த இந்தப் பொறாமை நெருப்பைத் தீயாக வளர்த்துவிட்ட ‘பணி’ கர்ணனுடையது. தானாகவே வளர்ந்து கொண்டிருந்த பொறாமையை வளர்ப்பதற்கு மற்றொருவரும் கூடிவிட்டால் கேட்க வேண்டுமா?

“இப்பொழுது நடந்த இந்த இராசசூய வேள்வியால் தருமனும் பாண்டவர்களும் அடைந்தாற் போன்ற புகழை வேறெவர் அடைய முடியும்? ஏற்கனவே சாந்த குணம் ஒன்றுக்காக மட்டும் அந்தப் பேதை தருமனைப் புகழ்ந்து கொண்டிருந்த இந்த உலகம் இனி அவனைத் தன்னிகரில்லாத் தலைவனாகக் கொண்டாடத் தொடங்கிவிடும். மன்னருலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற பெருமையை அவன் அடைந்து விடுவான். வீரத்திலும் ஆண்மையிலும் சிறந்தவர்களாகிய நாம் இனியும் தருமனின் புகழ் ஓங்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது” -கர்ணன் இவ்வாறு துரியோதனன் மனத்தில் நெருப்பை மூட்டினான். இந்தப் பொறாமை நெருப்பு அந்தத் தீயவன் மனத்தில் நன்றாகப் பற்றி எரியத் தொடங்கிற்று.

“கர்ணா! இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து திரும்பிய நாள் தொடங்கி என் மனமும் இதே சிந்தனையில்தான் அழுந்தி நிற்கிறது. பாண்டவர் புகழை இதே நிலையில் வளரவிட்டுக் கொண்டு போவது நமக்கு ஆபத்து. அவர்கள் வாழ்வின் சீரையும் சிறப்பையும் கெடுக்க ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து தான் ஆக வேண்டும்” என்று கர்ணனுக்கும் மறுமொழி கூறினான் துரியோதனன். இப்படிக் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட சகுனியும் தன் சொந்தப் பொறாமையை வெளிப்படுத்துவதற்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். அவனும் அவர்கள் பொறாமையைப் பெருக்குவதில் பங்கு கொண்டான்.

“அரசே! இந்தப் பாண்டவர்கள் நம்மைவிடப் பலசாலிகளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவர்களை அளவுக்கு மீறி உலகம் புகழ்வதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. சிங்கம் குகையிலே பதுங்கிக் கிடக்குமானால் மதயானை, அதனை மிக எளிதில் வென்றுவிடலாம். புகழ்மயக்கத்தில் பதுங்கிக் கிடக்கும் இந்தப் பாண்டவர்களை இப்போது நாம் வென்று விடுவது சுலபம்” -சகுனி இவ்வாறு கூறி முடிக்கவும் அவனருகில் நின்ற துரியோதனன் தம்பி துச்சாதனனுக்கும் துணிவு வந்தது.

“பாண்டவர்களின் இந்தப் புகழ் நிலா ஒளியைப் போல மென்மையானது. நம்முடைய ஆற்றலோ கதிரவனின் சக்தி வாய்ந்த கதிர்களை ஒத்தவை. பாண்டவர்கள் எவ்வளவு தான் சிறப்புற்றிருந்தாலும் நம் ஆற்றலுக்கு முன்னால் அது எம்மாத்திரம்?” -துச்சாதனனும் ஒத்துப் பாடினான். இந்த மூன்று பேருடைய பேச்சையும் கேட்ட துரியோதனனுக்குத் தன்னைப் பற்றிய கர்வம் அளவு கடந்து தோன்றிவிட்டது. நாம் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று இறுமாப்புக் கொண்டுவிட்டான் அவன். திருதராட்டினன், வீட்டுமன், விதுரன், துரோணன் முதலிய பெரியோர்களும் தன்னோடு அந்த அவையில் இருக்கிறார்கள் என்பதையே அவன் மறந்து விட்டான். அகங்காரம் அவனை மறக்கச் செய்துவிட்டது என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

“தருமன் திசைகள் நான்கையும் வென்று சிறப்புடன் ஓர் வேள்வியையும் செய்து அதற்குத் தலைவனானான். அவன் தம்பியர்களும் அவனும் ஆற்றலிற் குன்றாத சிறந்த வீரர்கள், பாண்டவர்களது ஆற்றவை இதற்கு மேலும் நாம் வளர விடுவோமானால் அவர்கள் நம்மையே வென்று விடவும் முயற்சி செய்வார்கள். முள்ளோடு கூடிய மரத்தை அது வளர்ந்து பெரிதாவதற்கு முன்பே கிள்ளி எறிந்து அழித்து விடுதல் வேண்டும். அந்த மரம் முற்றிவளரும் படியாக விட்டுவிட்டால் பின்பு கோடாரியால் கூட அதை வெட்டிச் சாய்க்க முடியாது. எனவே பாண்டவர்களை எல்லாமிழந்து தோல்வியுறச் செய்யும் முயற்சியில் நாம் இப்பொழுதே ஈடுபட வேண்டும். போர் செய்தோ, சூழ்ச்சி புரிந்தோ அவர்களை வெல்ல வேண்டும். பாண்டவர்கள் செல்வமிழந்து வாழ்விழந்து வெறுங்கையர்களாய் நிற்பதைக் கண்டு நான் மகிழ வேண்டும்...” பொறாமையும் ஆவேசமும் தூண்டியதனால் பண்பாட்டை மறந்து பேசினான் துரியோதனன்.

“ஆம்! இன்றே இப்போதே அதைச் செய்தாக வேண்டும். இந்திரப் பிரத்த நகரத்துப் பளிங்கு மண்டபத்தில் நமது மதிப்பிற்குரிய பெருமன்னர் (துரியோதனன்) நடந்தபோது தடுமாறியதைக் கண்டு திரெளபதி இகழ்ச்சி தோன்றச் சிரித்தாள். மன்னர் மன்னனை இகழ்ந்த அந்தச் சிரிப்பு இன்னும் என் மனத்தில் நெருப்பாகக் கொதிக்கிறது. வேள்விக்குச் சென்று வந்தோமே அதில்தான் நமக்கொரு சிறப்பு, மரியாதை உண்டா? எத்தனையோ அரசர்கள் போனார்கள்! வந்தார்கள்! அவர்களில் நாமும் ஒருவராகப் போய் வந்தோம். உறவைக் குறித்தோ, உலகம் புகழும் பேரரசராயிற்றே என்றோ , நமக்கு ஏதாவது தனி மரியாதை செய்தார்களா? எந்தத் தகுதியும் இல்லாத கண்ணபிரானுக்கு அல்லவா அவர்கள் தனிச்சிறப்பும் முதன்மையும் கொடுத்தார்கள். எதிர்த்துக் கூறிய சிசுபாலனை அழித்துவிட்டார்கள். பாண்டவரும் கண்ணனும் சேர்ந்து இந்த உலகையே வென்று ஆளக் கருதியிருக்கிறார்கள். இந்தக் கருத்து வெற்றி பெற விடக் கூடாது. இன்றே படையெடுத்துச் சென்று பாண்டவர்களை வெல்ல வேண்டும்...” துச்சாதனன் மீண்டும் இவ்வாறு கூறினான்.

கர்ணன் பாண்டவர்களுக்கு எதிராகப் பொறாமைக்கனல் முட்டி விட்டிருந்தாலும் அவன் உள்ளத்தில் நேர்மை ஒருபால் வாழ்ந்தது. அதனால் அவன் “அரசே! பாண்டவர்களைப் போர் செய்து வெல்ல வேண்டியது தான் முறை, சூழ்ச்சி செய்து வெல்வது நமக்கு இழுக்கு, நம்முடைய ஆண்மைக்கு இழுக்கு. நாமும் வீரர்கள், நமக்கும் வீரமிருக்கிறது. சூழ்ச்சி செய்ய வேண்டியது ஏன்?” - என்று துணிவோடு துரியோதனனை நோக்கிக் கூறினான். ‘சூழ்ச்சி செய்து வெல்ல வேண்டும்’ -என்ற துரியோதனனின் கருத்தையே கர்ணன் துணிவாக எதிர்த்துப் பேசியது அங்கிருந்தோர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. கூடியிருந்தோர் கர்ணனின் நேர்மையை வியந்தனர். ஆனால் கர்ணனுக்கு நேர்மாறான குணம் படைத்த சகுனி, துரியோதனனுக்கு முன்னால் தன் சூழ்ச்சி வலையைச் சாதுரியமாக விரிக்கத் தொடங்கினான். நல்லவைகளை விடத் தீயவைகளைச் சீக்கிரமே புரிந்து கொண்டு செய்ய முற்படுகின்ற இதயப் பாங்குள்ள துரியோதனன் சகுனியின் சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லத் தன்னையறியாமலே விழுந்து கொண்டிருந்தான். கர்ணன் ‘சூழ்ச்சி கூடாது’ -என்று சொல்லி முடித்த மறுவிநாடியே சகுனி பேசலானான்:

“இப்போது பேசிய கர்ணனானாலும் சரி, வானுலக வீரரானாலும் சரி! நேரிய முறையில் போர் செய்து பாண்டவர்களை வெற்றி கொள்வது என்பது நடக்க முடியாத காரியம். இன்று மட்டும் அன்று. இன்னும் ஏழேழுப் பிறவிகள் முயன்றாலும் நடக்க முடியாத காரியம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். திரெளபதிக்கு சுயம்வரம் நடந்தபோது அர்ச்சுனனோடு நாம் போர். செய்தோம். அவன் ஒருவன் நாமோ பலர். ஆனாலும், வெற்றி கொண்டவன் அவன்தான். அர்ச்சுனன் ஒருவனுடைய ஆற்றலுக்கு முன்னால் நாமெல்லோரும் தோல்வியடைந்தோம் என்றால் பாண்டவர்கள் எல்லோரையும் வெல்வது எப்படி? எனவே சூழ்ச்சி ஒன்று தான் பாண்டவர்களை நாம் சுலபமாக வெல்வதற்கு வழி, வேறெந்த வழியினாலும் இயலாது!”

“ஆம் ஆம் மாமன் சொல்வது தான் சரி. சூழ்ச்சி செய்து தான் பாண்டவர்களைத் தொலைக்க வேண்டும். வேறு வழியில்லை” -என்று துச்சாதனனும் இப்போது மாமனை ஆதரித்துப் பேசினான்.

தீமையை விரைவில் புரிந்து கொண்டு அதன் வழி நடக்கின்ற துரியோதனன் மனமகிழ்ச்சியோட சகுனியைத் தன் அரியணைக்கு அருகில் அழைத்தான். தன் யோசனைக்கு வெற்றி கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் சகுனி எழுந்து அருகில் சென்றான். “மாமனே! நீ கூறிய யோசனைக்கு என் இதயபூர்வமான நன்றி. சூழ்ச்சியால் தருமனையும் அவன் தம்பியரையும் வெல்லலாம் என்றாய் அப்படி வெல்வதற்கான திட்டங்களையும் நீயே எனக்குக் கூற வேண்டும்” -என்று துரியோதனன் அருகில் வந்த சகுனியிடம் கேட்டான்.

“அரசே! சூதாட்டத்தில் எத்தகையவர்களையும் வெற்றி கொள்ளும் திறன் எனக்கு இருக்கின்றது. பாண்டவர்களையும் இதே திறமையால்தான் வெல்ல வேண்டும். இந்த நகரில் இதுவரை அமையாத சிறப்புக்களோடு புதிய மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள். அந்த மண்டபத்தைக் காண வரவேண்டும் என்று பாண்டவர்களுக்கு அழைப்பு அனுப்பினால் அவர்கள் மறுக்காமல் வருவார்கள். மண்டபத் திறப்பு விழாநாளில் மண்டபத்தை அவர்கள் கண்டு முடித்த பின், “இப்படியே இந்தப் புதிய மண்டபத்தில் பொழுது போக்காகச் சிறிது நேரம் சூதாடலாம்” என்று சூதுக்கு அழைப்போம். தருமனுக்குச் சூதாட்டம் பிடிக்காது என்றாலும் அதற்கு அவனை இணங்கச் செய்வது கடினமான காரியம் இல்லை. முதலில் விளையாட்டுக்காக ஆடுவது போல ஆடுவோம். பின்பு பாண்டவர்களின் உடைமைகளை ஒவ்வொன்றாகக் கவர்ந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள் உடைமைகளைக் கவர்ந்து அவர்களை ஏழையாக்குவது என் பொறுப்பு” -என்றான் சகுனி. அவனுடைய திட்டங்களால் மனமகிழ்ந்த துரியோதனன் அவனை அன்புடன் மார்புறத் தழுவி நன்றி தெரிவித்தான். மாமன் தன் இடத்திற்குச் சென்று அமர்ந்ததும் “மாமனின் யோசனையைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?” என்று விதுரனைப் பார்த்துக் கேட்டான் துரியோதனன்.

“துரியோதனா! நீயும் சகுனியும் உங்களுடைய குறுகிய மனத்திற்குத் தகுந்த எண்ணங்களையே எண்ணுகின்றீர்கள். பாண்டவர்களுடைய உடைமைகளைப் பறித்துக் கொள்வதற்கு இவ்வளவு பெரிய சூழ்ச்சிகள் எதற்கு? நேரே தருமனிடம் சென்று “உன் அரசும் உடைமைகளும் எங்களுக்கு வேண்டும்” -என்று யாசித்தால் மறு பேச்சின்றி உடனே கொடுத்து விடுவானே! எதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சிகளைச் செய்து உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்திற்கும் களங்கத்தைத் தேடிக் கொள்கிறீர்கள்? இப்படிச் செய்தால் பிறநாட்டு மன்னர்களும் சான்றோர்களும் உங்கள் பண்பைப் பற்றி எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்? சூதாடி அடைகின்ற வெற்றி புகழுக்கும் பெருமைக்கும் மாசு அல்லவா? வேண்டாம் இந்தப் பழி! வேண்டாம் இந்த சூழ்ச்சி! பொறாமையைக் கைவிட்டு நேரிய வழியில் வாருங்கள்” -விதுரன் மனம் உருகும்படியான முறையில் துரியோதனனை நோக்கி இவ்வாறு அறிவுரை கூறினார். எரிந்து நீராய்ப் போன சாம்பலிலிருந்து சூடு, புகை தோன்றுவதில்லை. துரியோதனனுடைய நெஞ்சத்தில் அறிவு சூன்யம், பண்பும் சூன்யம். நேர்மை, நீதி, நியாயம் ஆகிய எண்ணமும் அவன் மனத்தில் தலைகாட்டியது இல்லை. விதுரனுடைய அறிவுரை இத்தகைய தீமை நிறைந்த ஒரு மனத்தில் எப்படி நுழைய முடியும்? உண்மையை எடுத்துரைத்த அந்த அறிவுரையை அவன் ஏளனம் செய்தான். அவனுடைய மனமும் ஏளனம் செய்தது.

4.விதுரன் செல்கிறான்

நல்லவர்கள் உள்ளன்போடு கூறினாலும் அந்த அறிவுரை தீயவர்களின் மனத்தோடு பொருந்துவதில்லை. தண்ணீரில் எண்ணெய் கலப்பதில்லையல்லவா? விதுரன் கெளரவர்களுக்குக் கூறிய அறிவுரையும் இதே கதியைத்தான் அடைந்தது. அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அதைக் கூறிய விதுரன் மேல் அவன் அளவற்ற ஆத்திரம் அடைந்தான். “நீ சிறிதும் நன்றியில்லாதவன்! கெளரவர்கள் ஆதரவில் வாழ்ந்து கொண்டே பாண்டவர்களுக்காகப் பேசுகிறாயே? ‘அரசாட்சியைக் கொடு’ -என்று தருமனிடம் கேட்டு வாங்க முயன்றால் தயங்காமல் கொடுத்து விடுவான் என்கிறாய்! அப்படிக் கேட்டு வாங்குவது எங்களுக்கல்லவா இழிவைக் கொடுக்கும்? இந்த மாதிரிப் பயனற்ற வழிகளைத்தான் எங்களுக்காக நீ கூறுவாய்! உனக்கு வேறென்னதான் கூறத் தெரியும்?” என்று துரியோதனன் விதுரனை இவ்வாறு வாயில் வந்த வண்ணமெல்லாம் பேசியதைக் கேட்டு அவையிலிருந்த சான்றோர்கள் தலைகுனிந்தனர்.

விதுரனும் சற்றே பொறுமை இழந்தான்; “துரியோதனா! மொழி வரம்பு கடந்து பேச வேண்டாம். உங்கள் நன்மைக்காகத்தான் இந்த அறிவுரைகளைக் கூறினேன். இதில் எனது சுயநல நோக்கம் சிறிதும் இல்லை. விருப்பமிருக்குமானால் கேட்டு அதன் படி செய்யுங்கள். இல்லையானால் வீண் வார்த்தைகளை ஏன் பேசுகிறீர்கள்?” -என்று ஆத்திரத்தோடு கூறிவிட்டான் விதுரன். அடிக்க அடிக்க அதைப் பொருட்படுத்தாமல் மேலும் படத்தைத் தூக்கி கொத்த வரும் பாம்பைப் போல இவ்வளவு கூறிய பின்பும் மேலும் விதுரனைத் தூற்றிச் சில வார்த்தைகளைச் சொன்னான் துரியோதனன். ‘இனியும் இந்த அரசவையில் நாம் உட்கார்ந்து கொண்டிருப்பதில் பயன் இல்லை, அர்த்தமும் இல்லை’ -என்பதை உணர்ந்து கொண்ட விதுரன் அமைதியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.

இந்த மட்டிலாவது நம்முடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் தடை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு மனிதன் இங்கிருந்து வெளியேறினானே! -என்ற மகிழ்ச்சி துரியோதனனுடைய உள்ளத்தில் ஏற்பட்டது. இறுதியில் சகுனியைக் கொண்டாடி அவனுடைய ஆலோசனையையே ஏற்றுக் கொண்டான் துரியோதனன். பாண்டவர்களைச் சூதுக்கு அழைப்பதற்காக மண்டபம் கட்ட ஏற்பாடு செய்ய முற்பட்டனர் கௌரவர்கள். சித்திர வினைஞரும், சிற்ப வித்தகர்களும், தச்சர்களும் உடனே அவைக்கு அழைத்து வரப்பட்டனர். “கண்டவர்கள் அதிசயித்து வியக்கத்தக்க அழகான மண்டபம் ஒன்றைக் கட்டுங்கள்” என்ற கட்டளை பிறந்தது. துரியோதனனின் ஆணைக்குட்பட்ட குறுநில மன்னர்கள் மண்டபப் பணிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கினர். மண்டப வேலை மிகவும் துரிதமாக வளர்ந்து வந்தது. தீய எண்ணங்களும் அவற்றின் விளைவுகளும் எப்போதுமே இது போல் அசாத்தியமாக வேகத்தோடு வளர்வது தான் வழக்கம். ஆனால், ‘வேகமான வளர்ச்சிக்கு எல்லாம் வேகமான அழிவும் தொடர்கிறது’ -என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

இந்த உலகத்து அழகெல்லாம் கூடி ஒன்று திரண்டு விட்டதோ என்று சொல்லுமாறு மண்டபம் உருவாகி முடிந்தது. தன் வஞ்சகத்தின் முதல்படியாகிய அந்த மண்டபத்தைக் கண்கள் நிறையக் கண்டு மகிழ்ந்தான் துரியோதனன். பின்பு கர்ணன் சகுனி முதலிய தன் தோழர்களை அழைத்துக் கொண்டு தந்தை திருதராட்டிரனைப் பார்த்து அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காகச் சென்றான். சகுனி, கர்ணன் ஆகியோர் இடையிடையே விளக்கம் கூறத் துரியோதனன், ‘பாண்டவர்களை மண்டபம் காண அழைக்க வேண்டும் - அப்படியே அவர்களைச் சூதினால் வெல்ல வேண்டும்’ என்ற கருத்தைத் தன் தந்தைக்குக் கூறினான். திருதராட்டிரனுக்கிருந்த சிறிதளவு கருணையையும், நல்ல உள்ளத்தையும் கூட அந்த மூவருமாகச் சேர்ந்து போக்கிவிட்டார்கள். புறக்கண்களை மட்டும் இழந்திருந்த அவன், அவர்களுடைய வஞ்சகம் நிறைந்த பேச்சால் அகக் கண்களையும் பறி கொடுத்தான். பாண்டவர்களை மண்டபம் காண அழைப்பது போல் அழைத்துச் சூதாடி வெல்ல வேண்டும் என்ற சூழ்ச்சிக்கு அவனும் இணங்கினான். பெருமைக்குணம் படைத்த தந்தை சிறுமைக்குத் தலையசைத்தான்.

“மகனே! சரியான காரியம் செய்தாய்? படை திரட்டிப் போர் முனையில் நேருக்கு நேர் நின்று எதிர்த்தாலும் பாண்டவர்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாது. எனவே சூதாட்டத்தினால் வெல்வதே முடியும். இந்த அரிய திட்டத்தைச் சகுனிதான் உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சகுனிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!” என்று இவ்வாறு வாழ்த்தினான் திருதராட்டிரன்.

இந்த நல்ல சமயத்தைக் கைவிட விரும்பாத துரியோதனன், “தந்தையே! பாண்டவர்களை இந்திரப் பிரத்த நகரத்திலிருந்து மண்டபம் காண அழைத்து வர வேண்டும் அல்லவா? அந்த அழைப்பை மேற்கொண்டு செல்லத்தக்க தூதுவர் விதுரர் தாம் ! ஆகவே அவரையே தூதுவராக அனுப்பிவிடுங்கள்!” -என்றான்.

விதுரனுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் அவனை ஈடுபடுத்தி, துன்புறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை ! அந்த ஆசையும் அடுத்த விநாடியிலேயே நிறைவேறியது. திருதராட்டிரன் ஒரு பணியாளைக் கூப்பிட்டு விதுரனை அழைத்துக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். சில நாழிகைப் போதில் விதுரன் திருதராட்டிரனுக்கு முன்பு வந்து வணங்கி நின்றான்.

“விதுரா ! இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்று இங்கே கட்டியிருக்கும் புதிய மண்டபத்தைக் காண்பதற்காகப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு உன்னைத் தூதுவனாக அனுப்புகிறேன்!” -திருதராட்டிரனின் இந்தச் சொற்கள் நெருப்புக் கங்குகள் போல விதுரன் செவியிற் புகுந்து மனத்தைச் சுட்டன. அவன் மிகவும் வெறுத்த சூழ்ச்சி எதுவோ அதை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவனே கருவியாக இருப்பதா? மனச்சான்று வதைத்தது. இதற்கு இணங்காமலிருந்து விட்டால் என்ன?’ -என்று நினைத்தான். ஆனால் திருதராட்டிரன் அழைப்பையும் தூதுத்திரு முகத்தையும் எழுதிக் கையில் கொடுத்தபோது விதுரனால் மறுத்துப் பேச முடியவில்லை. பேசாமல் இருந்து விட்டான். துரியோதனனுக்கு இருப்பதைப் போல, கூசாமல் பெரியோர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் தனக்கும் இல்லாமல் போய் விட்டதே என்ற விநோதமான ஏக்கம் அவனுக்கு இப்போது உண்டாயிற்று. மனத்தையும் அதன் எண்ணங்களையும் மறைத்துக் கொண்டு இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கித் தூது புறப்பட்டான் அவன்.

‘பாண்டவர் நலனில் அக்கறை கொண்ட தானே அவர்களைச் சூழ்ச்சியில் மாட்டி வைக்கலாமா?’ என்றெண்ணும்போது, ‘நாம் என்ன செய்யலாம்? கடமைக்காகத்தானே தூது செல்கிறோம்!’ என்ற சமாதானமும் அவன் மனத்திலேயே உண்டாகும். விதுரன் தூது புறப்பட்டு வருகின்ற செய்தி பாண்டவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது. சிறிய தந்தை முறையினராகிய அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இந்திரப்பிரத்த நகரத்தின் அழகையும் செல்வ வளத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கொண்டே நகருக்குள் பிரவேசித்தான் விதுரன்.

‘இந்த அழகிய நகரத்திற்குரியவர்களின் நலம் நிறைந்த வாழ்வு இன்னும் சில நாட்களில் என்ன கதியை அடையப் போகிறதோ? விதியின் போக்கை என்னவென்று சொல்வது?’ -என்று அவன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். பாண்டவ சகோதரர்கள் ஐவரும் விதுரனை அன்போடும் உவகையோடும் வரவேற்று உபசரித்தனர். விதுரன் திருதராட்டிர மன்னனின் திருமுகத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு உங்களை அத்தினாபுரிக்கு அழைத்து வருமாறு உங்கள் பெரிய தந்தை திருதராட்டிர மன்னர் என்னை இங்கே தூதுவனாக அனுப்பினார்’ என்று வந்த காரணத்தைக் கூறினார் விதுரன் கொடுத்த திருமுகத்தைப் படித்து முடித்த தருமன், “இந்த அழைப்பின் அந்தரங்கமான நோக்கம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை” - என்றான். துரியோதனன், சகுனி முதலியவர்கள் செய்திருக்கும் சூழ்ச்சி நிறைந்த தீர்மானத்தைப் பாண்டவர்களிடம் தெளிவாகக் கூறிவிடலாமா? வேண்டாமா? -என்று ஒரு கணம் தனக்குள் யோசித்தான். கூறி விடுவதனால் எந்தத் தவறும் இல்லையென்று முடிவு செய்து கொண்டபின் கூறிவிடுவது என்றே துணிந்தான்.

“தருமா! திருதராட்டிரன், உங்களுக்குக் கொடுத்துவிட்டிருக்கும் திருமுகத்தில் என்னவோ ‘மண்டபம் காண்பதற்காக வரவேண்டும்’ -என்று அழைத்திருக்கிறான். வெளிப்படையான இந்த அழைப்பில் வேறோர் சூழ்ச்சியும் மறைந்திருக்கிறது. நீங்கள் மண்டபம் காணச் செல்லும் போது சகுனியின் துணைக் கொண்டு துரியோதனன் உங்களைச் சூதாடுவதற்கு அழைப்பான். நீங்கள் இணங்கினால் உங்களோடு சூதாடி உங்களுடைய எல்லா உடைமைகளையும் கவர்ந்து கொள்ள வேண்டுமென்று கெளரவர்கள் சூழ்ச்சி செய்துள்ளார்கள். உங்களை அழைத்திருப்பதின் அந்தரங்கமான நோக்கம் இது தான்.”

விதுரன் கூறியவற்றைக் கேட்டதும் தருமனுக்கு உண்மை தெளிவாக விளங்கிற்று. ‘சூதாட்டத்திற்காகத் தன்னை அழைக்கிறார்கள்’ -என்று எண்ணும் போதே தருமன் உள்ளம் புண்பட்டது. ‘ஒரு மனிதனின் எல்லாவிதமான சிறப்புகளும் அழிவதற்குச் சூது காரணமாக அமைய முடியும். அறிவு, சத்தியம், ஆண்மை முதலிய உயரிய குணம் நலன்களெல்லாம் சூதாடத் தொடங்குகிறவனிடமிருந்து ஒவ்வொன்றாக நழுவி விடுகின்றன. கள், காமம், சூது என்று இவை மூன்றையும் விலக்கப்பட வேண்டிய குணங்களாக அறிஞர்கள் கூறுவார்கள். இந்த மூன்றிலும் கூட இறுதியிலுள்ள சூது மிகவும் பயங்கரமான ஒன்றாகும். எத்தனையோ மன்னாதி மன்னர்களையும் நற்குடிப் பிறந்தவர்களையும் கெட்டழிந்து போகச் செய்திருக்கிறது இந்தச் சூது கள்ளும், காமமும் மனிதனுடைய உடலைப் பேரளவிலும் அறிவைச் சிற்றளவிலும் தான் பாதிக்கின்றன. ஆனால் சூதோ மனிதனுடைய ஒழுக்கம், சத்தியம், அறிவு எல்லாவற்றையுமே பாதிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ‘சத்தியம், தருமம்’ -என்னும் இவை இரண்டை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னையும் இந்தச் சூது பாதிக்கும்படியாக விடலாமா? இல்லை! ஒருபோதுமில்லை. ‘சூதாட்டத்தினால் தருமபுத்திரனுடைய வாழ்க்கையில் மிகப்பெரியதோர் களங்கம் புகுந்து விட்டது’ -என்று நாளைய உலகில் இப்படி ஓர் அவச் சொல் எழும்படியாக விடலாமா? கூடாது! கூடவே கூடாது’ -தருமனுடைய மனத்திற்குள் ஒரு சிறு போராட்டம் நிகழ்ந்து ஓய்ந்தது.

திருதராட்டிரனுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதா? புறக்கணிப்பதா? என்று போராடி முடிவு காண இயலாமல் நின்றது அவன் மனம். அரசவையைச் சேர்ந்த பெரியோர் களிடமும், விதுரனிடமும், தன் சகோதரர்களிடமும் இதைப் பற்றிக் கலந்து ஆலோசித்த பின்பே ஒரு முடிவுக்கு வரலாமென்று தோன்றியது அவனுக்கு

“உலகில் நாமெல்லாம் எண்ணுகின்ற எண்ணங்களைக் காட்டிலும் விதியின் எண்ணம் வலிமை வாய்ந்ததாக இருக்கின்றது. நம் எண்ணப்படி. விதி நம்மை வாழ விடுவதில்லை. விதியின் எண்ணத்தையோ நம்மால் அறிந்து கொள்ள முடியாது. சிறிய தந்தையே! கெளரவர்கள் எங்களை எதற்காக அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்ற மர்மம் எங்களைக் காட்டிலும் உங்களுக்கு நுணுக்கமாக விளங்கியிருக்கிறது. எனவே நீங்கள் தான் இதைப் பற்றி எங்களுக்கும் பயன்படும் படியான யோசனையைக் கூற முடியும் நாங்கள் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? அருள் கூர்ந்து உங்களுடைய கருத்தைத் தெரிவியுங்கள்”... என்று தருமன் விதுரனை வேண்டிக் கொண்டான். அந்த வேண்டுகோளில் பணிவும் குழைவும், சிறிய தந்தை என்ற உறவுரிமையும் நன்கு வெளிப்பட்டன

“தருமா! உரிமையும் அன்பும் கலந்த உன்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நான் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன், கேட்டுக் கொள்!”

“சொல்லுங்கள்! கேட்கிறேன்.....”

“சூதாட்டத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இப்போது நீ என்னவெல்லாம் சிந்தித்துப் பதறுகின்றாயோ அவற்றையெல்லாம் துரியோதனனுடைய அவையில் தானே கூறினேன். ‘சூதாட்ட நினைவு கூடாது’ -என்று சொல்லித் தடுப்பதற்கு முயன்றேன். ஆனால் என் சொற்களை அங்கே யாராவது பொருட்படுத்திக் கேட்டால் தானே? பிறருடைய சிந்தனையினால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டு கவலைப்படக்கூடாது’ -என்று அன்றிலிருந்து ஒரு சங்கல்பம் எனக்கு உண்டாகியிருக்கிறது. எனவே உன் பெரிய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பதை நீயே சிந்தித்து உன் மனத்தில் தோன்றும் முடிவின்படி நடந்து கொள்வதுதான் நல்லது! இவை தவிர இப்பொழுது நான் வேறொன்றும் சொல்வதற்கில்லை’என்று பற்றில்லாத முறையில் அமைந்து விட்டது விதுரனின் பதில்.

இந்தப் பதிலைப் பற்றித் தருமன் தனக்குள் சிந்திக்க ஆரம்பிக்கு முன் வீமன் குறுக்கிட்டுப் பேசினான். “அண்ணா! பொறுமையையும் உறவு முறையையும் நம்பி வீண் போக இனியும் நாம் பேதையர்களில்லை. எந்த வகையிலாவது நம்முடைய வாழ்க்கையைக் கெடுக்கவேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் கௌரவர்கள். நாம் இளைஞர்களாக இருந்த காலத்திலிருந்து துரியோதனாதியர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மை அழித்து விடுவதற்கு முயன்று வருகின்றார்கள். இப்போது நம்மை மறைமுகமாகச் சூதாட அழைப்பதன் நோக்கம் தான் என்ன? நம்முடைய அரசுரிமையையும், உரிமைக்குட்பட்ட சகல விதமான உடைமைகளையும் பறித்துக் கொள்ள வேண்டுமென்பது தானே அவர்களது எண்ணம்? விஷவிருட்சத்தைப் போன்ற இந்தத் தீய எண்ணத்தை வளரவிடாமல் உடனடியாகக் - களைந்தெறிய நாம் முயல வேண்டும்’ உடன் பிறந்தவர்கள் என்ற உறவைப் பார்க்காமல் உடனே அவர்கள் மேல் படையெடுக்க வேண்டும். படையெடுத்து அவர்களை நிர்மூலமாக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் நாம் ஆண்மையுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்புவதில் அர்த்தமே இல்லை.” என்று தன் உள்ளத்தில் கவிந் திருந்த ஆத்திரத்தையெல்லாம் கொட்டி விட்டான் வீமன்.

மனுடைய ஆவேசப் பேச்சு முடிந்ததும் அர்ச்சுனன் தன் கருத்தைக் கூறினான். “நம்பத் தகுந்தவர்களை நம்பாமலிருப்பதும், நம்பத்தகாதவர்களை நம்புவதும் கூடாது. நமக்குப் பலவிதத்திலும் பகைவர்களாக இருப்பவர்களை நம்முடைய உறவினர் என்றெண்ணி அவர்களுடைய தீமைகளுக்கு இரையாவது பேதைமை. பொது உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. அரசியல் - உலகத்தின் தர்ம நெறிகள் வேறு. எனவே, துரியோதனாதியர்கள் அழைப்பை மிகுந்த சிந்தனைக்குப் பின்பே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அர்ச்சுனனைத் தொடர்ந்து நகுல, சகாதேவர்களும் இதே கருத்தைத் தருமனிடம் வற்புறுத்திக் கூறினார்கள். துரியோதனாதியர் சூழ்ச்சியை எண்ணி அவர்கள் மனங்குமுறுகிறார்கள் என்பது அவர்கள் சொற்களிலிருந்தே புலப்பட்டது. அவர்கள் யாவரும் கூறிவற்றைப் பொறுமையாக இருந்து கேட்ட தருமன் தன் எண்ணத்தைக் கூறத் தொடங்கினான்.

“துரியோதனாதியர்களின் போக்கு நாம் மனம் ஒப்பிப் பழகக்கூடிய விதத்தில் இல்லை என்பது உண்மைதான்! அதற்காகப் பெரிய தந்தையின் அழைப்பை நாம் எப்படி மறுக்க முடியும்?”

“நம்மைச் சூழ்ச்சியினுள்ளே புதைய வைப்பதற்கு அழைப்பவர்கள் யாராயிருந்தால் என்ன? நாம் போகக்கூடாது” என்று வீமன் கூறினான்.

“போகாமல் இருப்பதுதான் நல்லது!” -என்று அர்ச்சனனும் அதையே கூறினான்.

“இல்லை! இல்லை! போகாமல் இருக்கக்கூடாது! அப்படிச் செய்வது பெரிய தவறு ! இன்ப துன்பங்களை விலக்கவும் அனுபவிக்கவும் நாம் யார்? விதி நம்முடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டதில்லையே! கெளரவர்களோடு சூதாட வேண்டும் என்று இருந்தால் அது நடந்து தான் தீரும். நீங்கள் நால்வரும் எனக்குத் தம்பியர்களானால் என்னுடன் பிறந்தவர்களானால் நான் கூறுகிறபடி கேளுங்கள். பெரிய தந்தை திருதராட்டிரனின் அழைப்பை மேற்கொண்டு அத்தினாபுரிக்குப் போகத்தான் வேண்டும். புறப்படுவதற்குரிய ஏற்பாடுகளைக் செய்க. சத்தியமும் தர்மமும் சாமானியர்களின் வெற்றுச் சூழ்ச்சியால் அழிவதில்லை! அழியாது” -தருமன் இவ்வளவு ஆணித்தரமாகக் கூறிய பின்பு அவனை எதிர்த்துப் பேச இயலாமல் சகோதரர்கள் சம்மதிக்க வேண்டியதாயிற்று.

‘பாண்டவர்கள் திருமுகத்தை ஏற்றுக்கொண்டு வருவதற்கு இசைந்துவிட்டார்கள்’ -என்ற செய்தியைக் கூறுவதற்காகத் தூதுவனாக வந்திருந்த விதுரன் முன்பே புறப்பட்டுச் சென்றான். அரண்மனையிலும் தருமனுக்கு அடங்கிய குறுநில மன்னர்கள் நடுவிலும் பாண்டவர்களின் பயணச் செய்தி விரைவில் பரவியது. பயணத்திற்கு தேவை யான ஏற்பாடுகளும் துரிதமாக நடக்க தொடங்கியிருந்தன.

5. விதியின் வழியில்

மறுநாள் காலையிலேயே பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர். பரிவாரங்களும் படைகளும் உடன் வரும் சிற்றரசர்களுமாகப் பயணம் தொடர்ந்து நிகழ்ந்தது. பாண்டவ சகோதரர்கள் ஐவரும் ஐந்து ஒளிமிகுந்த தேர்களில் ஏறிச் சென்றனர். தருமன் நடுநாயகமாகவும் மற்றவர்கள் சூழவும் சென்ற நிலை, நட்சத்திரங்களுக்கிடையே சந்திரன் பவனி வருவது போலத் தோன்றியது. திரெளபதியும் அந்தப்புரத்தைச் சேர்ந்த மற்ற பெண்களும் அழகிய சின்னஞ்சிறு பல்லக்குகளில் பிரயாணம் செய்தனர். நிமித்திகர், கணிகர் முதலிய அரண்மனைப் பணியாளரும் வழக்கப்படி உடன் சென்றனர். இந்திரப் பிரத்த நகரிலிருந்து சில நாழிகைகள் பயணஞ் செய்து ஒரு காட்டுப் பகுதியை அடைந்தபோது, அங்கே சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பல்லிகள் தீமைக்கறிகுறியான குரல் கொடுத்ததையும், செம்போத்து என்னும் பறவைகள் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்குச் சென்றதையும் செல்லும் வழியை மறித்துக் கொண்டு ஆண் மான்கள் கொம்புகளை ஆட்டிச் சண்டை செய்ததையும் கண்டு நிமித்திகர்கள் மனம் வருந்தினர். இந்த நிமித்தங்களால் ஏற்படக் கூடிய தீய பலன்களை உடனே தருமனிடம் கூறவும் கூறினர். அப்படிக் கூறியபோது தருமன் அவர்களுக்குக் கூறிய பதில் அவர்களையே திகைக்கச் செய்தது.

“நிமித்திகர்களே! தீமை நிகழப் போகிறது என்பதை உங்கள் சகுன பலன்களால் மட்டுந்தானா தெரிந்துகொள்ள முடியும்? அதற்கு முன்பே என் மனத்திற்குத் தெரிகிறதே! உங்கள் நிமித்தம், நிமித்த பலன் இவைகளைக் காட்டிலும் விதி சக்தி வாய்ந்தது. அந்த விதி வகுத்த வழியின் மேலே தான் இப்போது நான் என் தம்பியர்கள்; ஏன்! நாம் எல்லோருமே சென்று கொண்டிருக்கிறோம். அதை மீற எவராலும் முடியாது. அதன்படியே எல்லா நிகழ்ச்சிகளும் நிகழும்”. இந்த பதில் மொழிகளைக் கேட்டபின் நிமித்திகரும் ஏனையோர்களும் பேசாமல் இருந்தனர்.

நீண்ட நேரப் பிரயாணத்திற்குப் பின்பு வழியருகில் தென்பட்ட ஓர் குளிர்ந்த சோலையில் அவர்கள் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். சோலைக்கு நடுவே ஒரு பொய்கை இருந்தது. மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன் யாவரும் அதில் நீராடினர். பல வகை மலர்களைக் கொய்து மகளிர்கள் தத்தம் கருங்குழலில் கவர்ச்சிகரமாகச் சூடிக் கொண்டனர். அங்கே தங்கியிருந்த நேரம் யாவருக்கும் களிப்பை அளித்து விட்டுக் கழிந்தது. சோலையிலிருந்து புறப்பட்ட பின்னர் வரிசையாக மருதம், குறிஞ்சி, நெய்தல் நிலங்களைக் கடந்து சென்றனர். வயலும் ஊர்களும் சூழ்ந்த பிரதேசமாகிய மருத நிலத்தில் வெண்ணெய், தயிர், பால் முதலியவற்றை அந்நில மக்கள் அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொண்டு வந்து கொடுத்தனர். மலைச்சிகரங்களின் பசுமை கலந்த கம்பீரமான அழகையும், கடலின் எல்லையற்ற நீலநிற நீர்ப்பரப்பையும் முறையே குறிஞ்சி, நெய்தல் நிலங்களில் கண்டுகளித்தவாறே அவர்கள் சென்றனர்.

பாண்டவர்கள் துரியோதனாதியர் தலைநகரமாகிய அத்தினாபுரியை நெருங்கும்போது அந்தி மயங்கி இருட்டு கின்ற நேரமாக இருந்ததனால் ஊருக்கு வெளியே புறநகரிலிருந்த சோலையொன்றில் இரவு நேரத்தைக் கழித்துவிட்டு மறுநாள் காலை நகருக்கு பிரவேசிக்கலாம் என்று தீர்மானித்தனர். பிரயாண அலுப்புத் தீர அந்தக் சோலையில் இரவைக் கழித்தனர். கீழ்த்திசை வெளுத்து அருணோதயமாகப் போகின்ற சமயம் தருமன் விழித்துக் கொண்டான், தம்பியர்களையும், திரெளபதியையும் எழுப்பினான். யாவரும் அங்கேயே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நகருக்குள் கிளம்பினர். படைகளும் பரிவாரங்களும் மட்டும் தருமன் கட்டளைப்படி அதே சோலையில் இருந்தன. தம்பிமார்களோடும், மனைவியோடும் நகரத்துக்குள்ளே புறப்பட்டுச் சென்ற தருமன் நேரே பெரிய தந்தை திருதராட்டிரனின் மாளிகைக்குச் சென்றான். காவலர்கள் மூலம் திருதராட்டிர மன்னனுக்குத் தாங்கள் வந்திருப்பதைச் சொல்லியனுப்பினான்.

உள்ளே சென்று வந்த காவலர்கள் தருமன், திரெளபதி, தம்பியர்கள் ஆகிய யாவரையும் அழைத்துக்கொண்டு போய்த் திருதராட்டிர மன்னனுக்கு முன்னால் நிறுத்தினார்கள். உடனே பாண்டவர்களும் திரெளபதியும் தங்கள் வரவைத் தந்தைக்கு அறிவிக்குமுகமாக அவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள். திருதராட்டிரன் அன்போடு தன் தம்பியின் மக்களைத் தழுவிக் கொண்டு நிறை நெஞ்சுடனே அவர்களுக்கு ஆசி கூறினான். நீண்ட நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த பின்பு “நீங்கள் வீடுமன், காந்தாரி முதலியவர்களை இன்னும் சந்தித்து வணங்கி ஆசிபெற வில்லையே?” என்று கேட்டான், “இல்லை! இனிமேல் தான் அவர்களைச் சந்திக்க வேண்டும்” என்றான் தருமன். “அப்படியானால் சென்று அவர்களைச் சந்தித்து விட்டு வாருங்கள். சகோதரர்கள் திருதராட்டிரன் சொற்படியே செய்யக் கருதி அவனை வணங்கிப் புறப்பட்டனர். காந்தாரியை வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாண்டவர்கள் புறப்பட்டபோது திரெளபதி மட்டும் அங்கேயே தங்கினாள். அறிவிலும் வீரம், விரதம் முதலியவற்றிலும் தனக்கு இணையற்ற மூதறிவாளராகிய வீட்டுமனைக் கண்டு வணங்கியபோது, “எல்லா நலங்களும் பெறுவீர்களாக!” என்று வாழ்த்தினார் அவர். இவர்களைச் சந்தித்து வணங்கி முடித்தபின் தங்களுக்கு அந்தரங்க முடையவரும் சிற்றப்பனும் ஆகிய விதுரனின் அரண் மனைக்குச் சென்றனர், அவர்கள் அங்கே செல்லும் போது. இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். விதுரன் மாளிகையிலேயே இருந்தான். மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு இரவு உணவை அங்கேயே உண்டனர். உணவுக்குப்பின் அவர்கள் சற்று நேரம் நிலா முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். காந்தாரியுடன் தங்கியிருந்த திரெளபதியும் விதுரன் மாளிகைக்கே அழைத்து வரப்பட்டிருந்தாள். தம்பியர்கள், திரெளபதி, விதுரன் இவர்களெல்லோரும் உறங்குவதற்குச் சென்ற பின்பும் தருமன் மட்டும் அப்படியே நிலா முற்றத்தில் உட்கார்ந்து ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

‘வாழ்க்கையில் எந்தவிதமான சோதனைகளெல்லாம் ஏற்படுகின்றன? மெய்ம்மையையும் அறத்தையும் காப்பதற் காக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கின்றது?’ -தருமனுடைய எண்ணங்கள் சுழித்துச் சுழித்து வளைந்தன. அதுவரை மேகக் கூட்டங்களின் கருமைப் பிடியில் சிக்கியிருந்த சந்திர பிம்பம் மெல்ல வெளிப்பட்டது. அந்த முழுமதி வடிவத்தையும் அதனிடையே தென்பட்ட சின்னஞ்சிறு களங்கத்தையும் தருமன் ஊன்றி நோக்கினான், ‘ஆகா! என் வமிசத்தைச் சேர்ந்த துரியோதனன், எண்ணற்ற தீமைகளையும், சூழ்ச்சிகளையும் செய்யப்போகிறான். அவனைத் தடுக்க நான் எழுந்துள்ளேன்’ என்று அந்தச் சந்திரபிம்பம் வாய் திறந்து பேசுவது போலிருந்தது. இன்னும் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபின் தருமன் உறங்கச் சென்றான்.

விதிக்கு வெற்றியும் பாண்டவர்களுக்குச் சோதனையும் எடுத்துக் கொண்டு வருவது போல மறுநாளும் வந்தது. பாண்டவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்து முடித்துக் கொண்ட பின் துரியோதனாதியரின் புதிய மண்டபத்தைக் காணச் சென்றனர். செல்வதற்கு முன்னால் அறம் செய்வதையே தன் இயற்கைக் குணமாகக் கொண்ட தருமன், ஏழை எளியவர்களுக்குப் பலவகைத் தான தருமங்களைச் செய்திருந்தான். இதற்குள் துரியோதனனே பாண்டவர்களை அழைத்து வருவதற்காகப் பிராகாமி என்ற தேர்ப்பாகனை அனுப்பி விட்டான். அவனுக்கும் கர்ணன், சகுனி முதலியவர்களுக்கும் “எப்படியும் இன்று பொழுது மறைவதற்குள்ளே பாண்டவர்களை வெறுங்கையர் களாக்கிவிட வேண்டும்” என்ற வைராக்கியம், தீமை நிறைந்த இந்த வைராக்கியத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அன்று காலை விரைவாகவே அரசவைக்கு வந்திருந்தனர் அவர்கள். மண்டபம் காணச் செல்வதற்கு முன்னால் திரெளபதியைக் காந்தாரியிடம் போய் இருக்குமாறு அனுப்பிவிட்டனர் பாண்டவர்கள். துரியோதனாதியர்களும் மற்றவர்களும் புதிய மண்டபத்திலேயே வந்து கூடியிருந்தனர். பாண்டவ சகோதரர்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததும் திருதராட்டிரன், வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களை வணங்கினர். மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க அவர்களை அழைத்துச் சென்றனர். துரியோதனன் முதலியோர். எல்லா வகையிலும் உயர்ந்த பொருள்களைக் கொண்டு உயர்ந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் அழகு பாண்டவர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. தருமன் அதனைப் புகழ்ந்து கெளரவர்களிடம் கூறி அவர்களைப் பாராட்டினான்.

மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தபின் எல்லோரும் அங்கு இருந்த அவையில் வந்து முறைப்படி அமர்ந்தார்கள். அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் துரியோதனன் ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ - என்றெண்ணியவனாகத் தன் சூழ்ச்சி வலையை விரித்தான்.

“உணவு கொள்வதற்கு இன்னும் மிகுந்த நேரமாகும். அதுவரை நாம் இங்கே பொழுது போகாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டுதானே இருக்கப் போகின்றோம்! பொழுது போக்காக கொஞ்ச நேரம் சூதாடினால் என்ன?” என்று துரியோதனன் தருமனைப் பார்த்துக் கேட்டான்.

“அறநெறிக்கு முரண்பட்ட குணங்களில் இந்தச் சூது மிகக் கொடியது. ‘இதனைப் பொழுதுபோக்காக விளையாடலாம்’ என்று நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். வேண்டாம்! என்னால் உங்களுடைய இந்த வேண்டுகோளுக்கு இணங்க முடியாது. சூதாடி அதில் வெற்றி பெற்று அதன் மூலம் என்னிடம் எந்தப் பொருளை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை இப்போதே கேளுங்கள். சிறிதும் தயங்காமல் கொடுத்து விடுகிறேன்” -என்றான் தருமன். தீமைக்கு இணங்க மறுக்கும் உறுதியும் ஆவேசமும் அவனுடைய கம்பீரமான குரலிலிருந்து வெளிப்பட்டன. துரியோதனன் தனக்குள், ‘தருமன் சம்மதிக்காமல் போய் விடுவானோ?’ என்று அஞ்சினான். ஆனால் மறுகணமே சகுனியின் பேச்சு அவனுடைய பயத்தைப் போக்கியது!

‘தருமா! நீ கூறுவது போலச் சூதாட்டம் என்பது அவ்வளவு பயங்கரமான ஒன்று அல்ல. ஆனாலும் நீ ஏனோ இதற்கு இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றாய்? சூதுக்காய்களின் முடிவுப்படியே ஆட்டத்தில் வெற்றி தோல்விகள் ஏற்படுகின்றன. வேறெந்தவிதமான சூழ்ச்சிக்கும் இதில் இடமில்ல. உனக்குச் சூதாடுவதற்கு வேண்டிய திறமை இல்லையென்றால் அதற்காகச் சூதாட்டத்தை ஏன் குறை சொல்கிறாய்?”

தருமன் சகுனிக்கு மறுமொழியே கூறவில்லை. மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். சகுனி இந்த மெளனத்தைப் பொருட்படுத்தாமலே மேலும் பேசத் தொடங்கினான்.

“நான் கூறுவதைக் கேள்! ஒருவரை ஒருவர் நம்பி விருப்பத்தோடு சூதாடப் போகிறோம் நாம். நான் தோற்றால் நீ வெற்றி அடைவாய் நீ தோற்றால் நான் வெற்றி அடைவேன். இவ்வளவுதானே? வேண்டுமானால் உனக்காக இரண்டு மடங்கு பந்தயப் பொருளை நான் கொடுக்கிறேன். எனக்கு நீ ஒரு பங்கு பந்தயப் பொருளைக் கொடுத்தால் போதும். சூதாடத் தயங்குகிறாயே நீ? உன்னிடம் செல்வம் இல்லையா? நீ ஏழையா?... பின் ஏன் தயங்குகின்றாய்? பசுவதை செய்துவிட்டுப் பின்னர், ‘ஐயோ, மாபெரும் பாவத்தை செய்து விட்டோமே! என்ன விளைவு நேருமோ?’ என்று நடுங்குகிறவர்களைப் போல நீயும் நடுங்குகிறாயே ஏன்? சூதாடுவதற்குக் கூடத் தைரியமில்லாமல் அஞ்சினால் உன் ஆண்மையைப் பற்றி இங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?” -என்று தன்னுடைய முழுச் சாமர்த்தியத்தையும் பயன் படுத்தித் தருமனை இணங்கச் செய்வதற்கு முயன்றான் சகுனி. ‘தான் அப்போது தன் வழியில் சிந்தித்துத் தன் போக்கில் நடக்கும் நிலையில் இல்லை! விதியின் வழியில் சுழன்று கொண்டிருக்கிறோம்’ -என்பதை உணர்ந்திருந்த தருமன் முன் போலவே அமைதியாக இருந்தான்.

‘தருமனின் அமைதி தங்கள் சூழ்ச்சிக்குத் தோல்வியாகி விடுமோ’ -என்று படபடப்பும் ஆத்திரமும் கொண்டு விட்டான் கர்ணன். அந்த ஆத்திரத்தில் ‘என்ன பேசுகிறோம்? நம் பேச்சு யார் யாருக்குக் கோபத்தை உண்டாக்கும்’ -என்ற சிந்தனையே இன்றிப் பேசி விட்டான் கர்ணன். “தருமா! நீ வீரமுள்ள ஓர் ஆண் மகன் தானா? விளையாட்டாகச் சிறிது நேரம் சூதாடுவதற்கு அழைத்தால் அதற்கு இவ்வளவு தூரம் நடுங்கிப் பதறுவானேன்? கேவலம் சூதாட்டத்திற்கே நீ இவ்வளவு நடுங்கினால் போர்களத்தில் போர் செய்வதற்கு இன்னும் எவ்வளவு நடுங்குவாயோ? நீயும் உன் சகோதரர்களும் வெட்கமுள்ளவர்களாக இருந்தால் இப்போதே உங்கள் இந்திரப்பிரத்த நகரத்திற்கு திரும்பி ஓடிப்போய்க் கோட்டைக் கதவுகளைத் தாழிட்டு விட்டு ஒளிந்து கொள்ளுங்கள்.” கர்ணன் இப்படிச் சொல்லி வாயை மூடவில்லை!

படீரென்று ஒரு சப்தம் கேட்டது. வேறொன்றுமில்லை! வில்லை நாணேற்றுகின்ற சப்தம்தான். அவையிலுள்ள அத்தனை பேரும் தர்மன் உட்படத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள். கனல் கக்கும் விழிகளோடு கர்ணனின் வாயைக் குறி வைத்து வில்லை நாணேற்றி அம்பைத் தொடுக்கத் தயாராகிவிட்டான் அர்ச்சுனன். இன்னும் ஒரு கணம்!.. ஒரே ஒரு கணம் கழிந்திருந்தால் அர்ச்சுனனின் அம்பு கர்ணனின் வாயை உதடுகளோடு அறுத்துக் கீழே வீழ்த்தியிருக்கும்.

“இந்த மண்டபத்தை கட்டியதும், இதைப் பார்ப்பதற்காக என்று எங்களை வரவழைத்ததும், இப்போது ‘பொழுது போக்காகச் சூதாடலாம்’ என்று சூழ்ச்சியில் மாட்டி வைக்க முயல்வதும் உங்கள் வஞ்சகத் திட்டத்தின் விளைவுகள். எங்களுக்கு எல்லாம் தெரியும்! ஒன்றும் தெரியாதென்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இதோ, இந்தக் கர்ணன் பொறுமையே உருவான எங்கள் தமையனைப் பார்த்து அருவருக்கத்தக்க முறையில் இழிந்த சொற்களைப் பேசுகிறான். தகுதியுணர்ந்து பேசத் தெரியாத இவன் நாவுக்குச் சரியான பாடம் கற்பிக்கப் போகிறேன்” என்று அர்ச்சுனன் மீண்டும் நாணை இழுத்து அம்பைக் குறி வைத்து செலுத்த முயன்றான். அவையிலிருந்தவர்கள் ஒன்றும் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். கர்ணனும், அர்ச்சுனனை எதிர்க்கத் தோன்றாமல் செதுக்கி வைத்த சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அவன் வாயை அம்பு துளைப்பதும் நாவு அறுபடுவதும் தவறாது என்றே எல்லோரும் எண்ணி விட்டனர்.

இந்த இக்கட்டான நிலையில், “தம்பீ பொறு” என்று ஒரு சாந்தம் நிறைந்த குரல் அர்ச்சுனன் செவியில் நுழைந்தது. குரல் கேட்டதை அடுத்து சினத்தினால் விம்மித் தணிந்து கொண்டிருந்த அவனது பருத்த தோள்களில் மெல்லியதோர் அன்புக்கரம் விழுந்தது. அர்ச்சுனன் கையை வில்லிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான். தருமன் அவனருகில் நின்று கொண்டிருந்தான். வில் அவனுடைய கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நெருப்பை அணைக்கும் நீரைப் போலத் தன் பார்வை ஒன்றினாலேயே அர்ச்சுனனின் ஆத்திரத்தைப் போக்கி விட்டான் தருமன். ‘தன் வாய் அறுந்து விழுவது உறுதி‘ -என்று நடுநடுங்கியவாறே நின்று கொண்டிருந்த கர்ணனுக்கு இப்போது தான் நடுக்கம் நின்று நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அர்ச்சுனன் சினம் தணிந்து தன் இடத்தில் அமர்ந்து விட்டான். இதை அடுத்துத் தருமன் கூறிய சொற்கள் தாம் யாவரையும் பேராச்சரியம் கொண்டு மலைத்துப் போகும்படி செய்தன.

“கர்ணா! சினம் கொண்டு விட்டால் ‘இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசலாம். இன்ன இன்ன வார்த்தைகளைப் பேசக் கூடாது’ என்ற வரம்பே இல்லாமல் வாயில் வந்தவற்றையெல்லாம் பேசிவிடலாமா? ‘போர் செய்யத் தெரியாத கோழை’ என்றாய் என்னை. வீரமும் போரும் தெரிந்த மெய்யான ஆண்மையாளர்களுக்கு உன்னைப் போலத் தற்புகழ்ச்சி செய்யத் தெரியாது. நான் போர் செய்ய அஞ்சுகிறவனில்லை, என்னோடு போர் செய்ய எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த எதிரியையே நாடுவேன். தெரிந்து கொள். இன்னொன்று உங்கள் சூதாட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன். வரச்சொல் சகுனியை! ஆடிப் பார்க்கிறோம். முடிவுகள், விதியிட்ட வழி ஏற்படட்டும். நான் தயார். உங்கள் பொறுமையையும், மிகக் குறைவான அறிவையும் இனி இதற்கு மேலும் நான் சோதிப்பதற்கு விரும்பவில்லை” -என்று தருமன் முடித்தான்.

6. மாயச் சூதினிலே!

‘சூதாடுவதற்குச் சம்மதம்’ என்று தருமன் கூறிய வார்த்தை அந்த அவையிலிருந்த பெரியோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டுமன், விதுரன் முதலிய முதியோர்களும் பிறரும் ‘இறுதி வரை தருமன் சூதாட்டத்திற்கு சம்மதிக்க மாட்டான்’ என்றே எண்ணியிருந்தனர். அவன் திடீரென்று அதற்குச் சம்மதித்தது கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். துரியோதனன் தருமனிடம் சூதாட்டத்துக்குரிய நிபந்தனைகளைக் கூறலானான். “இந்தச் சூதாட்டத்தில் உன் பங்குக்காக வைத்து ஆட வேண்டிய பந்தயப் பொருள்களை நீயே வைத்து ஆட வேண்டும். சகுனியின் பங்குக்குரிய பந்தயப் பொருள்களை நான் கொடுப்பேன்.”

“சரி, சம்மதம்” -தருமன் இதற்கு இணங்கினான்.

‘விதிக்கு முழு வெற்றி. தருமனுக்குப் படுதோல்வி. தருமனும் சகுனியும் சூதாடும் களத்தில் எதிரெதிரே ஆசனங்களில் அமர்ந்தனர், மாயச் சூது தொடங்கியது. காய்கள் உருண்டன். அழகிலும் ஒளியிலும், விலை மதிப்பிலும் தனக்கு இணையில்லாத முத்துமாலை ஒன்றைத் தருமன் பந்தயமாக வைத்தான். அதற்கு இணையான மற்றோர் மாலை சகுனியின் சார்பில் துரியோதனனால் வைக்கப்பட்டது. சகுனிக்குச் சூதாட்டத்திலுள்ள எல்லாத் தந்திரங்களும் நன்றாகத் தெரியும். ‘என்ன மாயம் செய்து அவன் எப்படிக் காயை உருட்டுகிறான்?’ என்றே விளங்கவில்லை. வெற்றி அவன் பக்கமே சேர்கிறது. முதல் ஆட்டத்திலேயே தருமனுக்கு தோல்வி! முத்து மாலை தருமனிடமிருந்து சகுனியின் கைகளுக்கு மாறியது. இரண்டாவது பந்தயமாகக் கண்ணபிரானால் தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட தேர் ஒன்றை வைத்து ஆடினான் தருமன். சூதாட்டக் காய்களைச் சகுனி மந்திரம் கூறி வசியப்படுத்திவிட்டானோ என்று கூறும்படி இரண்டாம் பந்தயத்திலும் வெற்றி. சகுனியின் பக்கமே விளைந்தது. கள்ளைக் குடிக்கக் குடிக்க அதுகாரணமாக எழுகின்ற வெறியைப் போன்றது சூதாட்டத்தில் ஒருவருக்கு உண்டாகும் ஆசை ‘இழந்த பொருள்களை மீட்க வேண்டும்’ என்ற ஆசையினால் மீண்டும் மீண்டும் இழந்து கொண்டே போவது சூதாட்டத்தில் தோற்றவர்களின் இயல்பு. இந்த நிலையில் தருமனுடைய மன இயல்வும் இதே விதிக்கு உட்பட்டுத்தான் இருந்தது. தருமன் தன்னுடைய நால்வகைப் படைகளில், யானைப்படை, குதிரைப்படை முதலியவற்றை வைத்துத் தோற்றான். அரண்மனை உபயோகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தேர்களை வைத்து இழந்தான். நாடுகள், அரசு, அரசாள்கின்ற உரிமை, அழகிலும் கலைகளிலும் சிறந்த உரிமை மகளிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வைத்துப் பறி கொடுத்தான். சகுனி சிரித்துக் கொண்டே ஆடினான். துரியோதனன் கர்ணன், துச்சாதனன் முதலியவர்களும் சிரித்துக் கொண்டே பார்த்தார்கள். தருமனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் முகத்தில் ஈயாடவில்லை. தானும் தம் தம்பியர்களும், திரெளபதியும்தான் இப்போது தருமனின் உடைமைகள், அடுத்து என்ன செய்வது? எதைப் பந்தயமாக வைத்து ஆடுவது? என்று தெரியாமல் கலங்கிய மனத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்த தருமனைச் சகுனி வலுவில் தானாகவே வம்புக்கு இழுத்தான்.

“ஏன் தயங்குகிறாய் தருமா? உன்னையே ஓர் ஆட்டத்துக்குப் பந்தயமாக வைத்து ஆடேன்! நீயும் தோற்றுவிட்டால் உன் தம்பியர் நால்வரையும் அதற்கு அடுத்த ஆட்டத்திற் பந்தயமாக வைக்கலாமே!” -இப்படிக் கூறிய சகுனியைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்தனர், வீமனும் அர்ச்சுனனும். ஆனால் விளையாட்டு வெறியில் மூழ்கிக் கிடந்த தருமனுக்குச் சிந்தனை செய்ய மனம் இருந்தால் தானே? சகுனியின் கூற்றையே யோசனையாக ஏற்றுக் கொண்டு அடுத்த ஆட்டத்தை உடனே ஆரம்பித்தான் அவன்.

“சகுனி! இந்த ஆட்டத்திற்கு என்னையே பந்தயமாக வைக்கிறேன். விளையாடு பார்க்கலாம்...”

சகுனி தன் சொல் உடனே பலித்ததை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டே காய்களை உருட்டினான். காய்கள் அவனை ஏமாற்றவில்லை. அவன் சொற்படியே உருண்டன்! தருமன் தன்னையே தோற்றுக் கொண்டு விட்டான். தானே தன் தலையில் நெருப்பை அள்ளி வைத்துக் கொண்ட மாதிரி தன்னைத் தோற்ற ஏமாற்றச் சாயை நெஞ்சில் அழிவதற்கு முன்பே, “என் தம்பிமார் நால்வரையும் பந்தயமாக வைக்கிறேன். இந்த ஆட்டத்திற்குக் காய்களை உருட்டுக” என்று கூசாமல் கூறினான் தருமன். அவனுக்குச் சூதாட்ட வெறி பிறந்துவிட்டது. விதியின் கைக் கருவிகள் தாமே அந்தச் சூதாட்டக் காய்கள்? அவை வழக்கம் போலவே சொல்லி வைத்தாற் போலச் சகுனிக்குச் சாதகமாக உருண்டன. தருமனுக்கு அதே நிலையில் அப்படியே சுவாசம் நின்றுவிடும் போல ஆகிவிட்டது. திக்பிரமை பிடித்துப் போய்ச் சிலையாக உட்கார்ந்து விட்டான்.

“என்ன தருமா! எல்லாவற்றையும் தோற்றாகிவிட்டது. இனிமேல் தோற்பதற்கு ஒரு பொருளும் இல்லை போலிருக்கிறது?” -வெந்த புண்ணில் புண்ணுக்கு மருந்திட வேண்டிய மருத்துவனே வேலை நுழைத்தாற் போலச் சகுனி கூறினான். இதற்குள் துரியோதனனும் கர்ணனும் சகுனியைத் தங்கள் அருகில் அழைத்து அவன் காதோடு காதாக ஏதோ கூறினார்கள். சகுனி அவர்களுக்குத் தலையசைத்து விட்டுச் சிரித்துக் கொண்டே மீண்டும் தருமனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான். தருமன் சகுனியிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை . துயரம், ஏமாற்றம், ஏக்கம், கழிவிரக்கம் ஆகிய எல்லாத் துன்ப உணர்ச்சிகளும் அவனுடைய முகபாவமாகத் திரண்டிருந்தன. எங்கோ சூனியத்தை நோக்கி இலக்கற்றுப் போய் இலயிப்பின்றி நிலைத்துக் கிடந்தது அவன் பார்வை.

“நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளக் கூடாது தருமா! உண்மையில் உன்னுடைய நன்மைக்காகத் தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்”... தன் குரலில் தருமனுக்குப் பரிவோடு யோசனை கூறுகிற அக்கறை இருப்பது போலப் பாசாங்கு செய்தான் சகுனி. தருமன் மெல்லத் திரும்பிச் சகுனியின் முகத்தைப் பார்த்தான்.

“நீ இதுவரை என்னிடம் தோற்றுப் போய் இழந்த எல்லாப் பொருள்களையும் திருப்பிப் பெற வேண்டுமானால் என்னுடைய இந்த யோசனையை நீ புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.”

“என்ன யோசனை அது?. அதைத்தான் சொல்லேன்” -தருமன் ஆவலோடு கேட்டான்.

“ஒன்றும் பெரிய யோசனை இல்லை. சாதாரணமானது தான்!... உங்கள் மனைவி திரெளபதியைப் பந்தயமாக வைத்து இன்னும் ஒரே ஓர் ஆட்டம் ஆடினால், ஒவ்வொன்றாக இழந்த பொருள்களை மீண்டும் பெற்று விட முடியும்...”

அவையிலிருந்த அத்தனை பேருக்கும் தலையில் ஆயிரமாயிரம் மலைகளின் சிகரங்கள் தவிடுபொடியாகிப் பாறைகள் விழுந்து அமுக்குவது போலிருந்தது. செவிகளிலே நெருப்புக் கங்குகள் நுழைந்தாற் போல இந்தச் சொற்கள் புகுந்தன. வீமன் முதலிய நால்வருக்கும் சகுனியை அறைந்து கொன்றுவிடலாம். போலக் கைகள் துறுதுறுத்தன. “இந்த உலகத்தில் தருமத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கலி புருஷன் சகுனி, துரியோதனன் முதலியவர்களின் உருவத்தில் பிறந்திருக்கிறான்” -என்று பெரியவர்கள் வருத்தத்தோடு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு முற்றிய பிறகும் கூட அவையில் எல்லோரினும் முதியவனாக இருந்த திருதராட்டிரன் அனுதாபத்தையும் வெளிப்படுத்தாமல் வாயையும் திறவாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

இதை முதலிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த விதுரனுக்கு அடக்க முடியாத சினம் உண்டாகிவிட்டது. அவன் திருதராட்டிரனை நோக்கிக் குமுறியெழுந்தான். அவன் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடிதுடித்தன, “அண்ணா! உனக்குக் கண்கள் மட்டும் இல்லையா? அல்லது செவிகளும் கூட இல்லையா? இந்த அநீதியை, அக்கிரமத்தைச் செவிகளில் கேள்விப்பட்ட பின்பு கூட நீ பிடித்து வைத்த மண் பொம்மை போல இப்படி வாயையே திறக்காமல் உட்கார்ந்திருக்கலாமா? துரியோதனாதியர்களைப் போலவே பாண்டவர்களும் உனக்கு மக்கள் முறை உடையவர்கள் தாமே? உன் சொந்த மக்கள் பாண்டவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு இவ்வளவு தீமைகளைச் செய்வதை நீ கண்டிக்க வேண்டாமா? இம்மாதிரி வஞ்சகச் செயல்கள் எல்லாம் குருகுலத்தின் மேன்மைக்குப் பொருந்துமா? இரு சாரார்க்கும் தந்தை முறை கொண்டு முதன்மை பூண்டிருக்கும் நீயும் இவர்களுடைய சூழ்ச்சிகளுக்கெல்லாம் உடந்தையா? புறக் கண்களைப் போலவே அகக் கண்களும் குருடாகி விட்டனவா உனக்கு? ‘திரெளபதியைப் பந்தயமாக வை’ -என்று கூசாமல் வாய் திறந்து சொல்கிறான் இந்தச் சகுனி. அதை ஆமோதிப்பது போல நீயும் மௌனம் சாதிக்கிறாய். வேண்டாம் இந்தப் பழி. உடனே இந்த சூதாட்டத்தைத் தடை செய்து பாண்டவர் பொருள்களை எல்லாம் அவர்களுக்கு வாங்கிக் கொடு. இல்லையேல் குருகுலத்தின் மானம், பெருமை, புகழ் எல்லாம் இன்றே செத்துப் போய்விட்டன என்று எண்ணிக் கொள்!” தன் ஆத்திரம் முழுவதையும் பேச்சில் கொட்டி விட்டான் விதுரன்.

ஆனால் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டிருந்த திருதராட்டிரன் விதுரனுடைய பேச்சை இலட்சியம் செய்யாமலே இருந்து விட்டான். கண்களை இழந்த அவன் இப்போது பேசுவதற்கு இயலாமல் வாயையும் இழந்து ஊமை ஆகிவிட்டானோ? -என்று கண்டோர் எண்ணுமாறு தோன்றியது அவனுடைய குரூரமான அந்த மெளனம். இனியும் இவனை வேண்டிக் கொள்வதில் பயனில்லை. எல்லாம் ஊழ்வினைப்படியே நடக்கட்டும்! விதியைத் தடுக்க நாம் யார்? -எண்றெண்ணி மனம் அமைந்தான் விதுரன்.

சகுனி கூறிய ஆசை வார்த்தையில் மயங்கிப் போன தருமன், ‘திரெளபதியையும் ஒரு பந்தயமாக வைத்துத் தான் பார்ப்போமே’ -என்று எண்ணத் தொடங்கி விட்டான். ‘இழந்த பொருள்களை எல்லாம் மீண்டும் பெறலாம்’ -என்ற நம்பிக்கையால் இந்தத் துர் எண்ணம் விநாடிக்கு விநாடி பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது. தருமனுடைய அறப்பண்பு, சத்தியம், ஒழுக்கம் எல்லாம் அந்த விநாடி அவனை விட்டு இலட்சோப இலட்சம் காத தூரம் விலகி ஓடிப் போய்விட்டன. சூதுவெறி அவன் பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளியது.

“சரி திரெளபதியே பந்தயம். இறுதியாட்டம் இது தான்! விளையாடு” -தருமனுடைய வாயிலிருந்து சொற்கள் வெளிவந்து முடியவில்லை. சகுனி மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இறுதி ஆட்டத்திற்காகக் காய்களை ஊருட்டிவிட்டான். பொல்லாக் காய்களும் உருண்டன. மனிதர்களில் நல்லவர்கள் உண்டு. தீயவர்கள் உண்டு! நல்லவைகள் உண்டு, தீயவைகள் உண்டு. நேர்மை நீதிகள் உண்டு! வஞ்சகம் வம்புகள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டு இருக்கிறோம். கேவலம் மரத்தினால் செய்த சூதாட்டக் காய்களிலுமா அப்படி உண்டு? வஞ்சகத்தைக் குணமாகக் கொண்டே சகுனியின் மனத்தைப் போலவே அந்தக் காய்களைத் தச்சன் செய்திருந்தானோ என்னவோ? காய்கள் இந்த இறுதி முறையிலும் தருமனைக் கைவிட்டு விட்டன. தருமன் திரெளபதியையும் தோற்றுவிட்டான். தோற்கக் கூடாத பொருளைத் தோற்றுவிட்டான். விதிக்கும் கெளரவர்களுக்கும் வெற்றி. சத்தியத்துக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு சோதனை.

‘திரெளபதியையும் தோற்றுவிட்டோம்’ என்றெண்ணும் போது ஒரு சில கணங்கள் அவன் உள்ளம் தளர்ந்தது. ஒடுங்கியது, விம்மியது, உணர்வுகள் குழம்பின. அவன் கலங்கினான். மிக விரைவிலேயே அவனுடைய இயற்கைக் குணமாகிய, சாந்த குணம், கை கொடுத்து உதவியது. தருமன் கலக்கமின்றி இருந்தான்.

7. தீயன செய்கின்றான்

சூதாட்டத்தினால் தருமனுக்கு விளைந்திருந்த அடுக்கடுக்கான தோல்விகளைக் கண்டு கூட்டத்திலிருந்தவர்கள் கலங்கினார்கள். தோற்கடிக்க முடியாத பொருள்களைத் தாங்களே தோற்றுவிட்டது போன்ற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறு இரங்கிப் பேசிக் கொண்டார்கள்! “என்ன இருந்தாலும் பண்பிற் சிறந்தவனாகிய தருமன் இத்தகைய சூழ்ச்சி நிறைந்த சூதாட்டத்திற்கு இணங்கியிருக்கக் கூடாது!”

“இணங்கினால் தான் என்ன? இப்படியா தோல்விமேல் தோல்வியாக ஏற்பட்டு நல்ல மனிதனை மனங்கலங்கச் செய்ய வேண்டும்? விதிக்குக் கண்ணில்லையா? அறக் கடவுளுக்கு ஏன் இந்தப் பாராமுகம்?”

“எல்லாம் இந்த மாமனுடைய வஞ்சகச் செயல்கள். துரியோதனனும் அவனுடைய தந்தையும் பாண்டவர்கள் தங்களுக்கு உறவினர்களாயிற்றே! என்றெண்ணியாவது இந்த சூதாட்டத்தைத் தவிர்த்திருக்கலாம். தருமன் பொறுமை சாலிதான். அவனால் இந்தத் தோல்விகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்து விட முடியும். ஆனால் வீமன் கோபம் மிக்கவன். அருச்சுனனுக்கோ சினத்தால் கண்கள் இரண்டும் இப்போதே சிவந்து விட்டன. இதன் விளைவு என்ன ஆகுமோ?”

“தன் புதல்வர்கள் பாண்டவர்களுக்குச் செய்யும் தீமைகளைக் கண்டும் பேசாமல் இருக்கிறான் இந்தத் திருதராட்டிரன். நெருப்பைக் கைகளால் ஓங்கி அறைந்தால் கைகள் தாம் சுடும். பாண்டவர்கள் நெருப்பைப் போலத் தூயவர்கள். அந்த நெருப்போடு மோதுகிறார்கள் குற்றம் நிறைந்த இந்தக் கெளரவர்கள். இவர்கள் அழியப் போவது நிச்சயம்“ மேற்கண்டவாறு பலவிதமான பேச்சுக்கள் அந்தப் பெரிய அவையிலிருந்த மக்களிடையே நிலவின.

துரியோதனன் இறுமாப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். தருமதேவதை எங்கே இருக்கிறது என்று அப்போது தேடிப் பார்த்திருந்தால் அது மானசீகமாக அழுது கொண்டிருந்ததைக் கண்டிருக்கலாம். “தருமன் யாவற்றையும் எங்களிடம் தோற்றுவிட்டான். இது அவனுடைய போதாதகாலத்தைத்தான் காட்டுகிறது. அந்தத் தேவடியாள் திரெளபதி அன்று இந்திரபிரத்த நகரத்தில் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புச் சிரித்தாள். மனங்குமுறிப் பெரிதும் வருந்தினேன். இன்று, இதோ இன்னும் சிறிது நேரத்தில் அந்தத் தேவடியாளைக் கண்டு நான் ஏளனச் சிரிப்பு சிரிக்கப் போகிறேன். தருமனும் அவனுடைய தம்பியர்களும் கட்டுக்கடங்காத கர்வம் பிடித்துத் திரிந்தார்கள். இப்போது அவர்களுடைய கர்வம் ஒடுங்கும் நேரம் வந்து விட்டது.” அவையிலுள்ளோர் யாவரும் கேட்கும்படியாக இப்படி இகழ்ந்து கூறினான் துரியோதனன். வயது முதிர்ந்த சான்றோராகிய வீட்டுமரை இச்சொற்கள் பெரிதும் புண்படுத்தின.

“துரியோதனா! உங்களுக்குள் பகைமை, குரோதம் முதலிய வேறுபாடுகள் இருந்தாலும் நீங்கள் சகோதரர்கள். பலர் கூடியிருக்கும் அவையில் உடன் பிறப்பென்ற முறையையும் பொருட்படுத்தாமல் நாகரிக வரம்பையும் மீறி இப்படி இகழ்ந்து பேசுவது நல்லது அல்ல.” அப்போதிருந்த பகைமை வெறியில் வீட்டுமரின் இந்த அறிவுரையை அவன் பொருட்படுத்தவே இல்லை. விதுரனை அழைத்து, ‘'இந்தச் சூதாட்டத்தில் பாண்டவர்கள் நம்மிடம் தோற்ற பொருள்களை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றும் வேலையை நீ செய் அதோடு நாம் வெற்றி பெற்றிருக்கும் இந்த நல்ல நாளைச் சிறப்பாகக் கொண்டாடும்படி ஊராருக்கு அறிவிக்கச் செய்” என்றான்.

ஏற்கனவே மனங்கலங்கித் துயரத்தில் ஆழ்ந்திருந்த விதுரன் இந்த வார்த்தைகளைக் கேட்டும் கேட்காதவனைப் போல வீற்றிருந்தான். விதுரனுடைய அமைதியைக் கண்ட துரியோதனன் அவனை இன்னும் பெரிய துன்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்று எண்ணியோ என்னவோ, “நல்லது! நீ இந்த வேலைகளையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. திரெளபதி இனிமேல் நமக்குச் சொந்தமானவள். அந்தப்புரத்திற்குப் போய் அவளை இங்கே கூட்டிக் கொண்டு வா. வர மறுத்தால் பலவந்தமாகவாவது அழைத்து வர வேண்டும்” என்று புதிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான். விதுரனுக்கு ஆத்திரம் வந்து விட்டது. தன் அமைதியைத் தானே மீறிக் கொண்டு பேசினான் அவன்.

“நீ எத்தகைய தீய சொற்களை வேண்டுமானாலும் பேசு! நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் திரெளபதியை இகழ்ந்து பேசாதே. அந்தப் பேச்சு என் ஆத்திரத்தைக் கிளரச் செய்கிறது. உங்களுக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கி விட்டது என்று எண்ணுகிறேன். அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். முற்பிறவியில் இராட்சதர்களாக இருந்தவர்கள் இப்போது மனித உருவில் பிறந்திருக்கின்றீர்கள். இப்போது அரக்கத்தனமான செயல்களைச் செய்யத் தொடங்கி உங்களை நீங்களே அழித்துக் கொள்ளப் போகிறீர்கள். என்னால் உங்களுக்குக் கூற முடிந்தது இதுதான். இதை நீங்கள் கடைப் பிடித்தால் நல்லபடியாக வாழலாம். உங்கள் போக்கின்படி சென்றாலோ அழிவுதான்” -கூறி விட்டுத் தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டான் விதுரன்.

“உனக்கு எப்போதும் எங்களைத் தூற்றுவதே வழக்கம். எங்களிடம் சோறு உண்டு சுகம் அனுபவித்து விட்டு பாண்டவர்கள் பக்கம் பரிந்து பேசும் நன்றி கெட்ட செயலைத்தான் நீ செய்வாய்! உன் பேச்சை இப்போது இங்கே எங்களில் யாரும் கேட்கத் தயாராயில்லை.” துரியோதன்னுடைய இதழ்களில் ஏளனச் சிரிப்பு நெளிந்தது. அவன் பிராதிகாமி என்ற பெயருடைய தேர்ப் பாகனை அழைத்தான். விதுரனுக்கு இட்ட அதே கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

“பிராதிகாமீ! இவர் நிறைவேற்ற மறுத்த கட்டளையை நீ நிறைவேற்ற வேண்டும். போ! திரெளபதியை இங்கே அழைத்துக் கொண்டு வா!” பிராதிகாமி அரசவை ஊழியன். நல்லதோ, கெட்டதோ, அரசன் கட்டளையை மறுக்க அவனுக்கு என்ன அதிகாரம்? அவன் கட்டளைக்கிணங்கித் திரெளபதியை அழைத்து வருவதற்காக அந்தப்புரம் நோக்கிச் சென்றான். சிந்தனையாற்றல் மிகுந்த அத்தேர்ப்பாகன் போகும் போதே இந்தத் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒருவழி கண்டுபிடித்தான். அந்தத் தந்திரமான வழி தோன்றியதும் மேலே போகாமல் அப்படியே அவைக்குத் திரும்பி விட்டான்.

“அரசே! நான் தங்கள் கட்டளையின்படி சென்று திரெளபதியை அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல், என் கணவர் தம்மை தோற்பதற்கு முன்பே என்னை வைத்துத் தோற்றாரா? அல்லது தன்னை தோற்ற பின்பு என்னைத் தோற்றாரா? தெரிந்து வா; பின்பு வருகின்றேன் என்று கூறுகின்றாள்” என்பதாக ஒரு பொய்யைக் கற்பித்துத் துரியோதனனிடம் கூறினான்.

ஆராய்ந்து பார்க்கும் திறன் குன்றியவனான துரியோதனன் இதை உண்மை என்றே நம்பிவிட்டான். உடனே அவன் தன் தம்பீ துச்சாதனனை அழைத்து “தம்பி! இந்தத் தேர்ப்பாகன் பயந்த சுபாவமுள்ளவனாகத் தோன்றுகிறான். ஆகையினால்தான் அவள் இவனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள். இனிமேல் இவன் போக வேண்டாம். நீயே போ. துணிவாக அவளை இங்கே அழைத்து வா. நம்பிக்கையோடு உன்னை அனுப்புகின்றேன். அது குலைந்து போய் எனக்குச் சினம் உண்டாகாதபடி வெற்றியோடு திரும்பிவா” என்றான். தீய செயல்களைச் செய்யும் பொறுப்புத் தனக்குக் கிடைக்கிறது என்றால் அதை விட மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இருக்க முடியாது துச்சாதனனுக்கு அவன் தமையனை வணங்கிவிட்டுச் சென்றான்.

அவன் திரெளபதி இருந்த அந்தப்புரத்தை அடைந்ததும் அவளுக்கு முன்கூசாமற் சென்று தீய சொற்களைக் கூறலானான், “உன்னுடைய கணவன் தருமன் தன் உடைமைகளை எல்லாம் இழந்து விட்டான். இறுதியில் தன் உடன் பிறந்த தம்பியர்களையும் உன்னையும் கூடச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்றுவிட்டான். இப்போது முறைப்படி எங்களுக்கு உரியவளாகி விட்டாய் நீ. உன்னை அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி என்னை இங்கனுப்பியிருக்கிறான் மன்னனும் என் அண்ணனும் ஆகிய துரியோதனன். மறுக்காமல் வந்துவிடு.” திரெளபதி இதற்கு மறுமொழி கூறாமல் நின்ற இடத்திலேயே குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.

“அன்று இராசசூய வேள்வியின் போது இந்திரப்பிரத்த நகருக்கு வந்திருந்த எங்கள் மன்னன் துரியோதனனைப் பார்த்து ஏளனச் சிரிப்புச் சிரித்தாயே; அது நினைவிருக்கிறதா? அன்று சிரித்து இகழ்ந்த உன் வாயை இன்று அழுது கதறும்படியாகச் செய்கின்றோம் பார்.” திரெளபதி இதையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டாள்.

“ஏன் இன்னும் நின்றுகொண்டே இருக்கிறாய்? புறப்படு தாமதம் கூடாது, என் தமையன் காத்துக் கொண்டிருப்பான்” கூறிக்கொண்டே சட்டென்று அவள் கையைப் பற்றி இழுத்தான் துச்சாதனன். திரெளபதி தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டு அவன் பிடியிலிருந்து திமிறினாள். இந்தச் சமயத்தில் கெளரவர்களின் தாயாகிய காந்தாரி அங்கு வந்தாள். துச்சாதனன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஓடிய திரெளபதி காந்தாரியின் அருகே வந்து நின்று கொண்டாள். காந்தாரி தனக்கு அபயமளித்துக் காப்பாற்றுவாள் என்று எண்ணியிருந்தாள் திரௌபதி.

ஆனால் காந்தாரியோ அதற்கு நேர்மாறான எண்ணத்தோடு இருந்தாள். திரெளபதிக்கு அபயமளித்துக் காப்பாற்ற மறுத்ததோடல்லாமல் அவளைத் துச்சாதனனோடு செல்லும்படி வற்புறுத்தினாள் அவள். காந்தாரியின் கொடிய மனோபாவத்தைக் கண்டு திரெளபதி திகைத்தாள், மீண்டும் அவளை இறைஞ்சினாள்.

“உன்னைக் கூப்பிடுகிறவர்கள் உனக்கு விரோதிகள் அல்லவே? உன் மைத்துனன் தானே உரிமையோடு அழைக்கிறான். போனால்தான் என்ன?” என்று கூறினாள் கல்மனம் படைத்த காந்தாரி. தாயும் தன் பக்கம் பரிந்து ஆதரவாகப் பேசுகிறார் என்பதை அறிந்து கொண்டதும் துச்சாதனனுடைய துணிவு இரண்டு மூன்று மடங்கு பெருகி வளர்ந்து விட்டது. அவன் மீண்டும் பாஞ்சாலியைத் தொட்டு இழுத்தான். இம்முறை அவனுடைய முரட்டுக் கரங்கள் அவளது மென்மையான அளகபாரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தன. கூனிக்குறுகி நாணத்தால் ஓடுங்கி நின்ற அவள் கருங்குழல் அவிழ்ந்து மண்ணில் புரண்டு கொண்டிருந்தது. மயிர்கால்கள் இசிவெடுத்து வலிக்கும் படியாக அவளைக் கூந்தல் வழியே பிடித்து இழுத்தான் துச்சாதனன். இவ்வளவையும் பார்த்துக் கொண்டே பேசாமலிருந்தாள் காந்தாரி. ஓர் இளம் பெண் தன்னிடமுள்ள மிகக் குறைந்த வன்மையைக் கொண்டு முரட்டு ஆண் மகனோடு எவ்வளவு நேரந்தான் போராட முடியும்? உதவுகின்ற நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருந்தாள் என்பதென்னவோ உண்மை. ஆனால் அவளும் உதவ விரும்பாத இராக்ஷஸ மனத்தை ஏற்படுத்திக் கொண்டவளாக இருந்தால் என்ன செய்வது?

துச்சாதனன் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். திரெளபதி தன்னைத் தப்பித்துக் கொள்ளும் வழியறியாமல் அவன் இழுப்புக்கு உட்பட்டுச் சென்றாள். ‘தான் போகிற இடத்தில் தன் கணவன்மார்களும் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல் அளித்தது. வீதியோடு வீதியாக அவளை அவன் இழுத்துக் கொண்டு சென்றபோது கண்டவர்கள் மனம் இரங்கினர். இளகிய உள்ளம் கொண்டவர்கள் இந்த அநீதியைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினர். சிலர் “காந்தாரி ஒருத்தி இருந்தும் தன் மகனால் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு இந்த அநீதி நடக்கும்படி விட்டுவிட்டாளே” என்று குறை கூறினர்.

“ஐயோ! இதென்ன அக்கிரமம்? இந்த நாட்டில் எல்லோரும் பெண்களோடு கூடப் பிறந்தவர்கள் தாமே? பெண்ணுக்கு இந்த வஞ்சனை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே? காலம் எவ்வளவு கெட்டு விட்டது? இனிமேல் இவ்வூரில் குடியிற் பிறந்தவர்கள் கூடக் கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது போலிருக்கிறதே!” பெண்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு மனம் கொதித்துப் பேசிக் கொண்டனர்.

“வீமனும் அர்ச்சுனனும் இந்த வஞ்சகச் செயலுக்குச் சரியானபடி பழிவாங்காமல் விடமாட்டார்கள்” என்றெண்ணித் திருப்தியுற்றனர் சிலர். இன்னும் சிலர் ‘இதெல்லாம் தருமனால் வந்த வினை அல்லவா?’ என்று அவனைக் குறை கூறினார்கள். சிலருக்கு அப்படியே குறுக்கே பாய்ந்து துச்சாதனனைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடலாம் போலத் தோன்றியது. தண்டனைக்கு அஞ்சிப் பேசாமல் இருந்தார்கள். அநியாயமான இந்த நிகழ்ச்சி ஊர் முழுவதும் பிரளய நெருப்புப் போல வேகமாக பரவிவிட்டது.

8. அவையில் நிகழ்ந்தவை

ஈரமில்லாத வன்மனம் படைத்த துரியோதனனின் அனவக்குள்ளே கூந்தலைப் பற்றி இழுத்தது. அதே நிலையில் திரெளபதியைக் கூட்டிக் கொண்டு வந்தான் துச்சாதனன். பூனையின் கையில கப்பட்ட உயிருள்ள பசுங்கிளி போல அழுது புலம்பித் துடித்தவளாய் உள்ளே வந்தாள் திரெளபதி. அவளை அந்த நிலையில் காணச் சகியாது தலைகுனிந்து கண்களை மூடிக் கொண்டனர் அவையிலிருந்த அரசர்கள். எத்தகைய அரக்க மனம் படைத்தவர்களையும் இளகச் செய்து விடுமியல்பு வாய்ந்த இந்தக் காட்சியினைக் கண்டு கர்ணன், துச்சாதனன், சகுனி, அரியணையில் வீற்றிருந்த துரியோதனன், ஆகியவர்கள் மட்டும் மனமிரங்காமல் இருந்தனர். ஒருபாவமுமறியாத பெண் ஒருத்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி உலகத்திலேயே ஒரு பெரிய குழப்பமாகி விட்டது. திக்குத் திகந்தங்களெல்லாம் தடுமாறி நிலை குலைந்து தவிடுபொடியாவன போல் தோன்றியது. விண்மீன்களும் வானவெளியும் இரத்தக் குழம்பிலே தோய்த்தெடுத்தாற் போலச் செந்நிறமடைந்தன. கடல்தன் எல்லையைக் கடந்து ‘அக்கிரமங்கள் மலிந்து போன இந்த உலகத்தை விழுங்கி விடப் போகிறேன்’ என்று குமுறிக் கொந்தளித்தும் பொங்கி எழுவது போலத் தோன்றியது. அண்ட சராசரங்களும் தட்டுக்கெட்டுக் கொத்துக் கொத்தாகப் பிதிர்ந்து விழுவது போல ஒரு மயக்கம் நிறைந்த குழப்பம் எங்கும் இலயித்துப் போயிருந்தது.

விழிகளில் அனற்கதிர் வீச அந்த அவையில் திரெளபதி நிறுத்தப்பட்டிருந்த அலங்கோல நிலையைப் பார்த்தான் வீமன். ஆத்திரத்தால் துடித்த அவன் கைகள் கதாயுதத்தை இறுக்கிப் பிடித்தன. அர்ச்சுனனுடைய கரங்களோ வில்லை எடுக்கத் துறுதுறுத்தன. அப்போதிருந்த கோபவெறியில் அவன் கையில் மட்டும் நாணேற்றிய வில் இருந்திருக்குமானால் கெளரவர்களின் வம்சத்தைப் பூண்டு அற்றுப் போகும்படி துவம்சம் செய்திருப்பான். உணர்ச்சிகளுக்கு விரைவில் ஆட்படாத நகுல சகாதேவர்களும் கூட அளவு கடந்த ஆத்திரமடைந்திருந்தார்கள். வீமனுடைய கதாயுதமும், விசயனுடைய வில்லும், நகுல சகாதேவர்களின் ஆத்திரமும், ஒரே ஒரு பொறுமைசாலியின் கட்டளைக்காகத் தயங்கி நின்றன. யார் அந்த பொறுமைசாலி? தருமன் தான். அவனுடைய சாந்த குணமும் பொறுத்துப் போகின்ற இயல்பும் தான் அப்போது அவர்களுக்குத் தடையாக நின்றன.

“ஆத்திரம் வேண்டாம். பொறுத்திருங்கள். அறம் வீண் போகாது. இந்த மூன்று வாக்கியங்களும் மதிப்பிற்குரிய அவர்கள் தமையன் வாயிலிருந்து வெளிப்பட்டு அவர்களின் சகலவிதமான ஆத்திர உணர்ச்சிகளையும் அடக்கிக் கட்டுப்படுத்தியிருந்தன. நெருப்பின் மேல் விழுந்து துடிதுடிக்கும் ஜீவனுள்ள புழுப்போலத் திரெளபதி கதறியழுது கொண்டிருந்தாள். வெந்த புண்ணில் வேல் நுழைவது போல் துச்சாதனன் குறுக்கிட்டுப் பேசினான்.

“இங்கிருப்பவர்கள் எல்லோரும் கொலைகாரர்கள் என்று நினைத்துக் கொண்டாயா நீ? ஏன் இப்படி ஓயாமல் அழுது தொலைக்கிறாய்?. இந்த மாதிரி நீலித்தனங்கள் எல்லாம் பரத்தையர்க்கு உரியவைகள் அல்லவா? நீயும் ஐவருக்கு மனைவிதானே? அதனால் உனக்கும் அந்தப் பரத்தமைக் குணம் உண்டோ என்னவோ?” இது வரை அழுது கொண்டிருந்த திரெளபதி தன் அழுகையை நிறுத்தினாள். அவளுடைய கணவன்மார்களைப் பார்த்தாள். அவர்கள் சொல்லிழந்து செயலிழந்து மூங்கையர்களாய்ச் சிலை போல் வீற்றிருந்தனர். அவள் உள்ளத்தில் தனக்குத்தானாகவே ஒரு துணிவு தோன்றியது. ‘எனக்குத் தேவையானது. நீதி, அதை நானே வாய்திறந்து கேட்கிறேனே?’ என்று தைரியம் அடைந்தாள். அவையிலிருந்த நல்லவர்களை நோக்கித் தன் குறைகளை முறையிடத் தொடங்கினாள்;

“நல்ல உள்ளம் கொண்டவர்களே! சான்றோர்களே! நேர்மை நெறியறிந்த மன்னர்களே ! சூதாட்டத்தில் என் கணவர் என்னைத் தோற்றுவிட்டதாகச் சொல்லி இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். தோற்றிருக்கலாம், ஆனால் தோற்பதற்கும் ஒரு முறை வேண்டாமா? ஒரு நீதி வேண்டாமா? தம்மைத் தோற்குமன் என்னைத் தோற்றி ருந்தால் அது முறையான தோல்விதான். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தம்மைத் தோற்றப் பின் என்னை அவர் தோற்றிருந்தால் அது முறையான தோல்வியாகுமா? ஒருவர் தம்மையே தோற்றுவிட்ட பிறகு அப்பால் தமது மனைவியை வைத்து ஆடித் தோற்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் கூறுகின்ற இந்த வழக்கு அவையிலுள்ள சான்றோர்களுக்குத் தெளிவாகவே விளங்குமென்று எண்ணுகிறேன். எனக்கு நியாயம் வழங்குமாறு வேண்டுகிறேன்.” திரெளபதியின் உருக்கமான, ஆனால் உறுதி நிறைந்த இந்த வேண்டுகோள் அங்குள்ளோரின் மனங்களை இளகச் செய்தது.

ஆனால் செய்வது என்ன என்பது தான் அவர்களுக்கு விளங்கவில்லை. எழுதிவைத்த சித்திரங்களைப் போல அவையிலிருந்த யாவரும் செய்வதறியாமல் திகைத்திருந்த இந்த நிலையில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது! கெளரவ சகோதரர்களுக்குள் இளம் பருவத்தின்னாகிய ஒருவன் அவையில் துணிந்து பேசுவதற்கு எழுந்தான். அவன் பெயர் விகர்ணன். திரெளபதியின் வழக்கிலே நியாயமும் நேர்மையும் இருப்பதை அவன் உணர முடிந்தது. உணர்ந்த உள்ளத்தில் துணிவு பிறந்தது. துணிவோடு பேசத் தொடங்கி விட்டான்;

“அவையிலுள்ள பெரியோர்களே! மன்னர்களே! திரெளபதியின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் ஊமையர்களைப் போல ஏன் மெளனமாக வீற்றிருக்கின்றீர்கள்? அவளுடைய வாதம் நியாயமானது தானே? எப்போது ஒரு மனிதன் தன்னைத் தானே தோற்று மற்றோர் மனிதனுக்கு அடிமையாகி விட்டானோ அப்போதே அவன் யாவற்றையும் இழந்து விட்டான் என்பது தானே முறை? அதன் பின்பு மனைவியைப் பந்தயமாக வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கின்றது? அப்படியே அவன் ஆடியிருந்தாலும் அந்த ஆட்டம் செல்லுபடியாகுமா? ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? உங்களுக்கு கெல்லாம் இந்த வழக்குத் தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்திருந்தும் சொல்லுவதற்குப் பயந்து கொண்டு பேசாமல் இருக்கிறீர்களா? உண்மையைக் கூறுவதற்குக் கூட நீங்கள் பயப்பட வேண்டுமா?’ விகர்ணன் இவ்வாறு பேசவும் அவையில் மிக வேகமாக ஒரு கிளர்ச்சி உண்டாகியது. அவனுடைய பேச்சின் கருத்தையும் துணிவையும் அவையிலிருந்தவர்களில் பெரும்பாலோர் வரவேற்றனர். சிலர் அவனைப் போலவே எழுந்து பேசுவதற்கும் துணிந்து விட்டனர்.

நிலைமையை வளரவிட்டு விட்டால் தங்களுடைய சூழ்ச்சியே அழிய நேரிட்டு விடும் என்றஞ்சிய கர்ணன் விகர்ணனைக் கண்டிக்கத் தொடங்கினான். இந்த சிறுவனால்தானே இவ்வளவு கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன என்று ஆத்திரங்கொண்டிருந்தான் அவன்.

“விகர்ணா! அறவிற் சிறந்த பெரியவர்கள் அடங்கிய இந்த அவையில் வயதிலும் அறிவிலும் இளைஞனாசிய உன் போன்றவர்கள் ஆத்திரம் கொண்டு பேசுவது சிறிதும் பொருத்தமாகாது. நியாயத்தைக் கூறுவதற்கு நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது. எங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் நீயாகவே எழுந்து வாதாட உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கின்றதா என்ன? தருமன் மனைவியைப் பந்தயமாக வைத்து ஆட உரிமையற்றவன் என்றாலும் அவன் தன்னை எங்களுக்குத் தோற்ற போதே தன் மனைவியையும் தோற்றவனாகிறான். ஆகவே அவள் எங்களுக்கு உரியவள் தான். நான் கூறுகிற இந்த உண்மையை அவையோர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.” கர்ணனுடைய வார்த்தைகள் இளைஞனாகிய விகர்ணனை அடக்கி உட்கார்த்தி விட்டன.

சமயமறிந்து கர்ணன் விகர்ணனை அடக்கியது துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாக மற்றொரு தீய செயலுக்கு உறுதி கொண்டது அவன் மனம். அவன் துச்சாதனனை அருகில் அழைத்துக் கட்டளையிட்டான்.

“தம்பீ! உனக்கொரு உற்சாகம் நிறைந்த வேலை தருகிறேன், செய்வாயா?”

“செய்கிறேன் அண்ணா !”

“கேள்! இந்த அவையிலுள்ள யாவரும் காணும் படியாகப் பாண்டவர்களையும் அவர்களுடைய மனைவியான இந்தத் திரெளபதியையும் அவமானப்படுத்த வேண்டும் அல்லவா?”

“கட்டாயம் அப்படியே செய்ய வேண்டும் அண்ணா !”

“அப்படியானால் அவர்கள் ஆறு பேர்களுடைய ஆடைகளையும் களைந்து விடு தம்பீ!” துரியோதனன் உற்சாகத்தோடு பாண்டவர்களை நோக்கிச் சொன்னான். தன்மானம் மிக்க பாண்டவர்களை அந்த அயோக்கியனின் கரங்கள் தீண்டி ஆடைகளைப் பறிப்பதை விரும்பவில்லை, மேலாடைகளையும் பிற ஆபரணங்களையும் ஐந்து பேரும் தாமாகவே கழற்றி அவன் முன் வீசி எறிந்து விட்டார்கள். சின்னஞ்சிறிய அரை ஆடைகளுடனே காணக் கவர்ச்சியில்லாத தோற்றத்தோடு பாண்டவர் நின்ற நிலையைக் காணச் சகிக்காமல் அவையோர் தலைகுனிந்தனர்.

கொடிய உள்ளமும் வலிய எண்ணமும் தவிர ஈரமும் கருணையும் இன்னவென்றறியாத துச்சாதனன், திரெளபதி யை மானபங்கம் செய்வதற்காக அவளை அணுகினான். அங்கே கூடியிருந்த ஆண்மையாளர்கள் அத்தனை பேருக்கும் மனத்தைக் கொதிக்க வைக்கும் காரியத்தைச் செய்ய இருந்தான் அவன். ஆனால் கொதிக்க வேண்டிய மனங்கள் எல்லாம் உணர்வொழிந்து கிடந்தன. எல்லா ஆண்மக்களும், பாண்டவர்களுட்படக் கல்லாலடித்த சிலைகளாக இருந்து விட்டனர்.

திரெளபதியின் விழி மலர்களிரண்டும் ஆறாகக் கண்ணீர் சொரிந்தன. அவிழ்ந்து பிரிந்து கிடந்த கூந்தல் முதுகை மறைத்தது. ஒரு கையினால் தன் அரையாடையை இறுகப் பற்றிக் கொண்டாள். மற்றோர் கை மார்புத் துகிலைக் காத்துக் கொண்டிருந்தது. உடல் சோர்ந்து துவண்டது. பயம் சோர்வை உண்டாக்கியது. இந்த அநியாயம் நடப்பதற்குள் மண் பிளந்து என்னை விழுங்கி விடக் கூடாதா? என்றெண்ணித் துன்பம் துடைக்கும் இன்பப் பொருளாகிய கண்ணபிரானிடம் தன் மனத்தைச் செலுத்தினாள். மனம், ‘கண்ணா! உன் அடைக்கலம். நீ காப்பாற்றினால் மானம் பிழைக்கும், கைவிட்டால் மானம் அழிந்து விடும். கருணை வள்ளலை காப்பாற்று’ என்ற தியானத்திலேயே மூழ்கியிருந்தது. வாயோ அவன் திருநாமமாகிய ‘கோவிந்தா!’ ‘கோவிந்தா!’ என்பதையன்றி வேறொன்றும் கூறியறியாது. தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும் என்ற அகங்காரம் அவளை விட்டு அகன்றது. ‘உடல், பொருள், ஆவி மூன்றும் இறைவனுக்குச் சொந்தம். அவன் விரும்பினால் காக்கட்டும், விரும்பாவிட்டால் விரும்பியபடியே செய்யட்டும்’ என்று தன்னைக் கண்ணபிரானிடம் ஒப்படைத்தாள்.

இறைவனை நோக்கிச் செய்த இந்த ஆத்ம சமர்ப்பணம் வரப்பிரசாத சக்தி வாய்ந்ததாக இருந்தது. திரெளபதியின் மானத்தை அன்று காப்பாற்றிக் கொடுத்தது இந்த ஆத்ம சமர்ப்பணம் ஒன்றுதான். துச்சாதனனுடைய முரட்டுக் கரங்கள் அவளுடைய ஆடையின் தலைப்பைப் பற்றிப் பரபரவென்று இழுத்தன. ஆடை சுற்றுச் சுற்றாகப் பெயர்ந்து விழுந்தது, துச்சாதனன் பேய்ச் சிரிப்புச் சிரித்தான். மேலும் மேலும் தலைப்பைப் பற்றி இழுத்துக் கொண்டேயிருந்தான். அவையில் குனிந்த தலைகளுடன் வீற்றிருந்த பெருமக்கள் இரக்கம் நிறைந்த சிறு சிறு குரல்களை எழுப்பினர். திரௌபதியின் மானம் இன்னும் ஓரிரு கணங்களில் பாழ் போய் விடப் போகிறதே என்று பதறினர்.

ஆனால் என்ன விந்தை? என்ன பேராச்சரியம்? களிப்போடு பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் கண்களில் பயச்சாயை படிந்தது. துச்சாதனன் கைகள் சோர்கின்றன. திரெளபதியின் மெய்யில் ஆடை பெருகி வளர்ந்து கொண்டே போகிறது. வேதங்களாலும் காணமுடியாத பரம் பொருளின் சொரூபத்தைப் போலத் திரௌபதியின் துகில் மறைத்த சரீரம் காணாப் பொருளாய் நின்றது. துச்சாதனனைச் சுற்றிலும் துகில்கள் மலை மலையாகக் குவிந்துவிட்டன. என்ன மாயமோ? என்ன மந்திரமோ? உரிய உரியத் துகில்கள் வளர்ந்து கொண்டிருந்தன. துச்சாதனன் மலைத்தான். அவன் உள்ளத்தில் பீதியும் திகைப்பும் தோன்றின. கைகளும் உடலும் களைத்து ஓய்ந்து ஒடுங்கிவிட்டன. ஆற்றாமை உடலைத் தள்ளாடச் செய்தது. அவை எங்கும் குவிந்து கிடந்த சேலைக் குவியல்களைச் சேவகர்கள் அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தனர். தள்ளாடியவாறே அந்தச் சேலைக் குவியலின் மீது பொத்தென்று விழுந்தான் துச்சாதனன். கூப்பிய கரங்களுடன் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு நின்று கொண்டிருந்தாள் திரெளபதி. பக்தி பரவசத்தினால் மனம் பூரிக்க முகமலர்ச்சியோடு நின்று கொண்டிருந்த அவள், தோன்றாத் துணையாயிருந்து தன்னைக் காத்த பரம் பொருளுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

வீட்டுமர், துரோணர் முதலிய முதுமக்கள் “ஆகா இந்தப் பெண்ணினுடைய கற்பை இறைவனே துணையாகிக் காக்கிறானே. இவள் வணங்கத் தக்க தூய்மையுடையவள்” என்று கூறிப் பாராட்டினர். கதாயுதத்தைப் பற்றியிருந்த வீமனின் கரங்கள் ஆயுதத்தின் தண்டை முன்னிலும் அதிக ஆத்திரத்தோடு இறுக்கிப் பிடித்தன. குகையிலிருந்து புறப்படுகின்ற ஆண் சிங்கம் போலத் தன் இடத்திலிருந்து எழுந்தான் அவன். “திமிர் பிடித்த கெளரவர்களே! கேளுங்கள். எங்கள் தமையனுடைய சாந்த குணத்துக்குக் கட்டுப் பட்டுத்தான் இது வரை வாளாவிருந்தோம். உங்களுக்கு அஞ்சி நாங்கள் கட்டுண்டு கிடப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆண்மையுள்ள மனிதர்களாகவோ, வீரர்களாகவோ நான் எண்ணவேயில்லை. நீங்கள் பேடிகள், பெண்களின் முந்தானையோடு மட்டும் போராடத் தெரிந்தவர்கள்! எங்கே பார்க்கலாம்? உங்களுக்கும் ஆண்மை இருக்குமானால் இப்போது என் ஒருவனோடு நூறு பேரும் போருக்கு வாருங்கள் பார்க்கலாம்.” வீமனுடைய முழக்கம் அவையையே கிடுகிடுக்கச் செய்தது.

9. பாஞ்சாலி சபதம்

ஏமாற்றமடைந்த துரியோதனன் முன்னைக் காட்டிலும் பல மடங்கு சினமும் ஆத்திரமும் கொண்டிருந்தான். வீமன் பேசிய பேச்சு வேறு அவனை மனங்குன்றிப் போகச் செய்திருந்தது. ஒரே சமயத்தில் இரட்டைத் தோல்விகளை அடைந்துவிட்டது போல் அவன் மனம் புழுங்கினான். இது திரெளபதியை எப்படியாவது மீண்டும் வேறு இன வகையில் மானபங்கம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தை உறுத்தியது.

“துச்சாதனா! இந்த வீமனுடைய ஆண்மையைப் பின்பு பார்க்கலாம். இப்போது திரெளபதியைத் தூக்கி வந்து இந்த அவையிலுள்ள பலரும் காணும்படியாக என் தொடையில் அமரச் செய்! பார்க்கலாம், இவர்கள் வீரத்தையும், அவள், கற்பையும்."

துச்சாதனன் எழுந்து திரெளபதியை நோக்கிப் பாய்ந்தான். வேட்டைப் பொருளின் மேல் பாயும் மிருக வெறி அந்தப் பாய்ச்சலில் இருந்தது.

திரெளபதியின் உடலில் மீண்டும் நடுக்கம் தோன்றியது. ‘மானத்தைக் காத்தளித்த கண்ணபிரான், இப்போது காத்து கருணை செய்ய மாட்டானா?’ என்று கலங்கினாள். அக்கிரமத்தை எண்ணிக் கலங்கிய அவள் உள்ளத்தில் சினமும் தோன்றியது. சினம் வெறியாக மாறியது. வீமன் முழங்கியது போல அவள் முழங்கத் தொடங்கிவிட்டாள். அந்த முழக்கத்தைக் கேட்ட துச்சாதனன் இடியோசை கேட்ட நாகம் போல அவளை நெருங்குவதற்கு அஞ்சி அப்படியே நின்ற இடத்தில் பதுங்கி நின்றான்.

“வெட்கமில்லாமல் என்னைத் தன் தொடையிலே வந்து உட்காரும்படி அழைக்கிறான் இந்த அரசன். என்னை உட்காரச் சொல்லிய இவன் தொடையைக் கூரிய அலகுகளைக் கொண்ட பறவைகள் குத்திக் கிழித்துக் குலைப்பனவாகுக! என் சொல் வீண் போகாது. ஒரு நாள் இந்தத் தொடைக்கு அத்தகைய கதி நேரிடத்தான் போகிறது. இவன் நாசத்தை அடையத்தான் போகிறான். இந்தப் பேரவையிலே இன்று கூடியிருக்கும் சான்றோர்களுக்கு முன்னே நான் செய்கின்ற சபதம் ஒன்று உண்டு. பெரியோர்களே கேட்பீர்களாக, பலர் கூடியிருக்கும் இந்தப் பேரவைக்கு இழுத்து வரப்பட்டேன் நான். என்னுடைய கூந்தலையும் சேலையையும் மற்றொருவன் தொட்டு இழுக்கும்படியான அவமானத்தையும் இன்று அடைந்தேன். இவைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தவன் இதோ இந்த அவைக்குத் தலைவனாக வீற்றிருக்கும் கொடிய அரசனே ஆவான். இவனைச் சரியானபடி பழி வாங்காமல் விட மாட்டேன்.

என் கணவன்மார்களால் போர்க்களத்தில் இவனைக் கொல்லச் செய்து இவன் தொடையினின்று பீறிட்டெழும் குருதியைப் பூசினாலொழிய என் சினம் தீராது. இன்று விரிக்கப்பட்ட என்னுடைய இக் கூந்தல் இந்தச் சபதம் நிறைவேறினாலன்றி முடிக்கப்படாது. இது உறுதி. சத்தியம். என்னுடைய இந்தப் பயங்கரமான சபதம் நிறைவேறும்போது இந்த அரசனும் இவனுடைய குலமும் வேரற்று வீழ்ந்து போய்விடப் போகிறார்கள் பாருங்கள்.

துச்சாதனன் அவளை அணுகுவதற்கு அஞ்சி நடுநடுங்கி நின்று விட்டான். துணிவும் முரட்டுத்தனமும் திரெளபதியின் பேச்சால் அவனை விட்டு நழுவிப் போயிருந்தன. ஏற்கனவே ஆத்திரமும் கொதிப்பும் கொண்டிருந்த வீமன் தானும் எழுந்து நின்று ஒரு சபதம் செய்தான்.

“ஒழுக்கம் மிகுந்தவர்களும் பெரியோர்களும் நிறைந்துள்ள இந்தப் பேரவையில் என் மனைவியை இழிவு செய்தவர்களைப் போர்களத்தில் கொன்று பழி தீர்த்துக் கொள்ளாது விடமாட்டேன். இந்தத் துரியோதனனும் துச்சாதனனும் இவனைச் சார்ந்த மற்றவர்களும் என் கையாலேயே சாகப் போகிறார்கள். திரெளபதியை மானபங்கப் படுத்த முயன்ற துச்சாதனின் இரத்தத்தைக் குடித்தாலொழிய என் ஆத்திரத்தின் தாகம் தீராது போல் இருக்கிறது. அது வரை தண்ணீரைக் கூட நான் என் கைகளால் குடிக்கப் போவதில்லை. அவசியமானால் என் கதாயுதத்தை நீரில் தோய்த்து அதிலிருந்து வடிகின்ற நீரையே பருகுவேன். இது என் சபதம்” வீமனுக்குப் பின் அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அடுத்தடுத்துத் தங்கள் சபதத்தைக் கூறினர். தான் கர்ணனை கொன்று முடிக்கப் போவதாக அர்ச்சுனன் ஆவேசத்தோடு கூறினான். சகாதேவன் சகுனியையும், நகுலன் சகுனியின் மகனையும் கொல்லப் போவதாகக் கூறினார்கள், சகோதரர்களின் ஏகோபித்த சபதங்கள் கௌரவர்களை உள்ளூரத் திகில் கொள்ளச் செய்தன.

“நன்றாக வேண்டும் இந்தக் கெளரவர்களுக்கு! இவர்கள் பாண்டவர்களுக்கும் திரெளபதிக்கும் செய்த தீமைகளை எண்ண முடியுமா? பாண்டவர்கள் தாங்கள் கூறிய சபதத்தின் படியே இவர்களை அழித்துவிடப் போவது என்னவோ உறுதிதான்” என்று அவையிலிருந்த அரசர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கற்பு நெறி தவறாத பெண் ஒருத்தியின் கண்கள் தீயவர்களின் கொடுமையால் கண்ணீரைச் சிந்துமாயின் அது இந்த உலகத்துக்குப் பெரிய அபசகுணம். வானத்தில் மேகங்கள் கூடாமலே இடி இடித்துவிடலாம். சூரியனின் வடிவத்தைச் சுற்றிக் கோட்டை கட்டினாற்போல் வளையம் தோன்றலாம். பகல் நேரத்தில் தோன்றக்கூடாத நட்சத்திரங்கள் தோன்றிவிடலாம். அவை மண்ணில் உதிர்கின்ற தீமையும் நிகழலாம். ஆனால் இவைகளை எல்லாம் விடப் பெரிய தீநிமித்தம் கற்புடைய பெண் கதறிக் கண்ணீர் சிந்துவதேயாம். திரெளபதியின் கண்ணீரும் உலகத்துக்கு அப்படி ஒரு பெரிய தீமையாக நேர்ந்திருந்தது. அவையிற் கூடியிருந்த எல்லோருடைய மனத்திலும் இப்படி ஒரு பீதி பரவிப் போயிருந்தது. ‘என்னென்ன தீமைகளுக்கு இது எதுவாகுமோ? ஊருக்குத் துன்பம் வருமோ?’ என்று பலருக்கும் பலவிதமாக அச்சம் ஏற்பட்டது.

அதுவரை எல்லாத் தீமைகளையும் தடுக்காமல் வாளா வீற்றிருந்த திருதராட்டிரன் கூட அப்போது தான் கொஞ்சம் திகிலடைந்தான். அவன் நெஞ்சம் துணுக்குற்றது. தன் குலம் குடி எல்லாம் விரைவாக அழிந்து போவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை தோன்றி அவனை வதைத்தது. குருடனாகிய அவன் தன் அரியணையிலிருந்து இறங்கித் தட்டுத் தடுமாறித் திரெளபதி நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.

“அம்மா! நீ பெண் தெய்வம். தர்ம பத்தினி. உன் சக்தி பெரிது. அதை அறிந்து கொள்ளத் தெரியாமல் மூடர்களாகிய என் பிள்ளைகள் ஏதேதோ தீங்குகளை உனக்குச் செய்துவிட்டார்கள். எனக்காக அவற்றைப் பொறுத்துக் கொள். என் குலம் அழிவதும் தழைப்பதும் உன் கையில் இருக்கிறது அம்மா! பேதைகளாகிய என் புதல்வர்களின் குற்றத்தை மன்னித்து இந்தக் குலம் வாழ வழி செய் அம்மா” -திருதராட்டிரனுடைய வேண்டுகோளில் மன உருக்கம் புலப்பட்டது. அவனுடைய அந்த உருக்கம் மிகுந்த வேண்டுகோளால் திரெளபதியின் மனக்கலக்கம் கூட ஓரளவு குறைந்தது, பாண்டவர்களிடமும் இதே மாதிரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் அவன். சூதில் அவர்கள் பறிகொடுத்த எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து விடுவதாகவும் உறுதி கூறினான். “தம்பியின் புதல்வர்களே! உங்கள் ஆட்சி, அரசு, உடமைகள் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறேன். என் புதல்வர்களின் குற்றங்களை எல்லாம் மன்னித்து மறந்து விட்டு உங்கள் தலைநகருக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று பாண்டவர்களைக் கெஞ்சினான் திருதராட்டிரன்.

தங்கள் பெரிய தந்தையின் வேண்டுகோளுக்குப் பாண்டவர்கள் இணங்கி விடுவார்கள் போலிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் சகுனியின் தடை முன்னே வந்து நின்றது. ‘பாண்டவர்களையும், திரெளபதியும் விடுதலை செய்யக் கூடாது. அவர்கள் சூதாட்டத்தில் பறி கொடுத்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து விடுவதும் முறையல்ல! தருமன் முதலிய ஐவரும் நமக்கு எதிரிகள். என்றைக்கிருந்தாலும் அவர்கள் நம்மை அழித்துத் தொலைத்து விடுவதற்கே முயற்சி செய்வார்கள். இப்போது அதிர்ஷ்டவசமாக அவர்கள் நம்முடைய கைதிகளைப் போல் அடிமைப்பட்டிருக்கிறார்கள். இப்போது நாம் அவர்களை அழித்து ஒழித்து விட முயல்வது தான் புத்திசாலித்தனம். இப்போது பாண்டவர்களை இப்படியே விட்டுவிட்டால் நாம் செய்திருக்கும் அவமானங்களுக்கெல்லாம் பழி வாங்குவதற்காக உடனே படையெடுத்து வரத் தயங்கமாட்டார்கள் அவர்கள் ஆகவே நன்கு சிந்தித்து இந்தச் செயலை முடிவு செய்ய வேண்டும். பாண்டவர்களை விடக் கூடாது’ சகுனியின் மேற்படி பேச்சையே துரியோ தன்னுடைய மனமும் விரும்பியது.

துச்சாதனன், கர்ணன் முதலிய தன் கூட்டத்தவர்களைக் கலந்து ஆலோசித்தபோது, அவர்களும் இதையே வரவேற்றனர். பாண்டவர்களை அழித்தொழிக்கின்ற எண்ணமே அவர்கள் மனங்களில் முற்றி கன்றிப் போயிருந்தது. மூவரும் கலந்து ஆலோசித்த பின்னர் அவையினருக்குக் கூறவேண்டிய செய்திகளைத் துச்சாதனன் கூறத் தொடங்கினான்.

“தருமா! எங்கள் தந்தை கூறுவது போல உன் உடமைகளைத் திரும்ப அளித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டு உங்களை நாட்டிற்கு அனுப்ப நாங்கள் தயாராயில்லை. நிச்சயமாக எங்களால் அப்படிச் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரேயொரு விதத்தில் உங்களுக்குக் கருணைக் காட்டுகிறோம். நீங்களும் உங்கள் மனைவி திரெளபதியும் இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு அடிமைகள். எங்கள் தந்தையின் மனத்திருப்திக்காக உங்கள் ஐவருக்கும் திரெளபதிக்கும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கிறோம். நீங்கள் இங்கிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாகச் செல்லலாம். எங்காவது காடு மலைகளில் மறைந்து வாழலாம்.” -துச்சாதனனின் இந்தச் சொற்களை எதிர்த்துப் பேசும் ஆற்றல் துரியோதனாதியர்களுக்குத் தந்தையாகிய திருதராட்டிரனுக்குக்கூட இல்லாமல் போய்விட்டது. வீட்டுமன், விதுரன் முதலியவர்களைத் தனியே அழைத்துச் சென்று திருதராட்டிரனும் ஆலோசித்துப் பார்த்தான். வேறெந்த வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.

முடிவில் தருமனிடம் சென்று, “அப்பா! துரியோத னாதியர்கள் என் மக்கள் எனினும் பிடிவாதக்காரர்கள். நான் இனி எது கூறினாலும் கேட்கமாட்டார்கள். ஆகவே நீ அவர்கள் கூறியபடியே செய்வது தான் நல்லது என்று கூறிவிட்டான். உடனே துரோணர் உரிமையோடும் அன்போடும் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

“நீங்கள் இப்போது உடனே உங்கள் நாட்டின் அரசுரிமையை அடைய முயலவேண்டாம். நேரே காடு சென்று பன்னிரண்டு ஆண்டுகளை எவ்வாறேனும் அங்கு வாழ்ந்து கழித்து விடுங்கள். அதற்குப் பின் ஏதாவது ஒரு நகரில் எவரும் நீங்கள் பாண்டவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விடாதபடி அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை அவசியம். அஞ்ஞாதவாச காலத்தில் உங்களை எவரேனும் பாண்டவர்களென்றும் அடையாளம் கண்டு கொண்டால் மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசிக்க நேரிடும். இதற்கு அவசியம் ஏற்படாமல் பதின்மூன்று ஆண்டுகளைக் கழித்து விட்டு மீண்டும் வாருங்கள், பழையபடி உங்கள் நாடு, அரசுரிமை எல்லாம் உங்களுக்குத் திரும்பிக் கொடுக்கப்படும்.” துரோணர் கூறிய இதே தீர்மானத்தை மூதறிஞராகிய வீட்டுமரும் ஆமோதித்தார்.

இவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திரௌபதி துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘நானும் என் கணவன்மார்கள் பிச்சை கேட்டு வாங்கிக் கொண்டு போவது போல இவர்களிடம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு போக விரும்பவில்லை. என் கணவர் மறுபடியும் சூதாடியே எங்களை அடிமைத்தனத்திலிருந்து வென்று மீட்டுக் கொள்வார்” என்று கூறினாள். யாவரும் திகைத்துப் போயினர். திரெளபதியின் யோசனையைத் தருமனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். இம்முறை வெற்றி என் கணவர் பக்கம் ஏற்பட வேண்டும் என்று தன் இஷ்ட தெய்வமான கண்ணபிரானைத் தியானித்துக் கொண்டாள் திரெளபதி. தருமனும் கண்ணபிரானை எண்ணிவாறே ஆட ஆரம்பித்தான். ஆடத் தொடங்கும்போதே சகுனி மிகப் பெரியதோர் தடையைக் குறுக்கே நுழைத்தான்.

“சூதாட ஆசைப்படுவதெல்லாம் சரிதான் தருமா! ஆனால், எந்தப் பொருளைப் பந்தயமாக வைத்து ஆடப் போகிறாய்? நீதான் வெறுங்கையனாய் மேலாடையையும் இழந்து வீற்றிருக்கிறாயே?” என்று கேட்டான் சகுனி.

“பொருள் இல்லாவிட்டால் என்ன? இது வரை நான் செய்த நற்செயல்களால் எனக்குக் கிட்டியிருக்கின்ற அவ்வளவு புண்ணியமும் இருக்கின்றதே? அதையே இந்த ஆட்டத்திற்குப் பந்தயமாக வைக்கிறேன்! எடு காய்களை, விளையாடலாம்!” என்று சாமர்த்தியமாக அவனுடைய கேள்வியைச் சமாளித்தான் தருமன். சகுனி விளையாடச் சம்மதித்தான்.

விளையாட்டு மறுபடியும் ஆரம்பமாகியது. திரெளபதி கண்ணபிரானைத் தியானித்துக் கொண்ட மகிமையோ! அல்லது தருமனின் புண்ணியப் பயனோ வரிசையாக அடுத்தடுத்து வெற்றிகள் தருமனின் பக்கமே விளைந்து கொண்டிருந்தன. சகுனி பேயடிப்பட்டவன் போலச் சோர்ந்து போனான், அடிமைத்தனத்தை மட்டும் வென்று கொள்வதற்காக ஆடிய ஆட்டம் தருமனுக்கு அடுக்கடுக்காக அவன் தோற்றுப்போன யாவற்றையுமே வென்று கொடுத்துவிட்டது. முதலில் ஆடிய ஆட்டத்தில் தருமனுக்கு நேர்ந்திருந்த முழுப் பெருந்தோல்வி இப்பொழுது சகுனிக்கு ஏற்பட்டது. சகுனி தலை தாழ வாய்மூடி மெளனியாக அவமானம் தாங்காமல் வீற்றிருந்தான்.

தான் தோற்றவற்றை எல்லாம் வென்று விட்டாலும் கூட வீட்டுமர் துரோணர் முதலியவர்கள் கூறிய அறிவுரைப்படி பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த பின்னரே அரசாட்சி மேற்கொள்ள விரும்பினான் தருமன். அதுவரை துரியோதனாதியர்களே தன் உடைமைகளை எல்லாம் அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் அவன். பெரியோர்களும் நல்லவர்களும் தருமனின் உயரிய மனோபாவத்தைப் பாராட்டினார்கள் எண்ணி வியந்தார்கள். துரியோதனாதியர்களது கல்மனங்களையே தருமனுடைய அந்த எதிர்பாராத தியாகம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்ச்சியாக இருந்தது அவர்களுக்கு இது. எல்லோரையும் பணிந்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு தருமனும் அவன் தம்பிகளும் திரெளபதியும் புறப்பட்டபோது, இந்த உலகத்தை இரட்சிக்கும் தரும் தேவதையே தன் பரிவாரச் சுற்றங்களுடன் வனத்திற்குப் போவது போல உணர்ந்தார்கள் அங்கிருந்தவர்கள்.

நாடு நகரங்களில் பாண்டவர்கள் திரெளபதியோடு வனவாசம் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி பரவிய போது தங்கள் நெருங்கிய உறவினர்களை வெகு தொலைவில் பிரிய விட்டு விட்டாற் போலக் கலங்கினர் மக்கள். எங்கும் பாண்டவர்கள் பிரிவு ஒரு விதமான சோக உணர்வை பரப்பியிருந்தது. ஊர் உலகத்தின் துயர் உணர்வைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்றனர் பாண்டவர். அவர்கள் மனங்களிலே நிறைந்திருந்த மகிழ்ச்சி கானகத்திலும் குன்றவில்லை.

(சபாபருவம் முற்றும்)

ஆரணிய பருவம்

1. விசயன் தவநிலை

எங்கு நோக்கினும் பசுமைக் கோலம் பரப்பி நிற்கும் மரக் கூட்டங்கள். சந்தன மரங்கள் ஒரு புறம் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. மலர்களின் நறுமணம் அகிற்கட்டைகளின் வாசனையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தன. மலைச்சாரலைச் சேர்ந்த காடு அது. காமிய வனம் என்று பெயர். தமலைச் சிகரங்களில் அருவிகளாகப் பாய்ந்து கீழே கலகலவென்று சிற்றாறாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் ஓடைகளும், குளிர்ந்த சுனைகளும் மிகுந்திருந்தன. ஆழமாகவும், அகலமாகவும் அமைந்திருந்த சுனைகளின் நீல நிற நீர்ப் பரப்பில் கரிய யானைகள், கூட்டம் கூட்டமாக நீராடிக் கொண்டிருந்தன. வெயிலே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்த மரங்களில் காய்கனிகளை உணவுக்கு நல்கும் பயன் மரங்களும் நிறைந்திருந்தன. அத்தினாபுரத்திலிருந்து வனவாசத்திற்காகப் புறப்பட்ட பாண்டவர்கள் இத்தகைய சிறப்புகளெல்லாம் பொருந்திய காமிய வனத்தில் வந்து முதன் முதலாகத் தங்கினார்கள். பாண்டவர்களோடு உறவினர்களிற் சிலரும் முனிவர்களும் உடன் வந்திருந்தனர். கங்கை முதலிய புனிதமான நதிகள் தோன்றும் இமயமலையின் வளமிக்க சாரலைப் போல் அந்தக் காமிய வனத்தின் இயற்கையழகும் சிறப்புற்று விளங்கியது. பாண்டவர்கள் வந்து தங்கியதால் அந்த வனத்திற்கே ஒரு தனிப்பெருமை ஏற்பட்டு விட்டதைப் போலிருந்தது.

இதற்குள் பாண்டவர்கள் அரசைத் துறந்து வனவாசம் புறப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி பல இடங்களில் பரவியிருந்தது, பாஞ்சால வேந்தன் துருபதன் முதலிய பெருமன்னர்களும் பிறரும் செய்தியறிந்து வருந்தினர். பாண்டவர்களை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிப்பதற் காகக் காமிய வனத்திற்குப் புறப்பட்டு வந்தனர். வந்த வேந்தர்களும் நண்பர்களும் பாண்டவர்களை இக்கதிக்குள்ளாகிய துரியோதனாதியர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற மனக் கொதிப்புடனிருந்தனர். எல்லோருமாக சேர்ந்து படையெடுத்துச் சென்று கெளரவர்களின் குலத்தையே நிர்மூலம் செய்து பாண்டவர்களுக்கு அரசாட்சி நல்கிவிடத் தயாராயிருந்தனர். பாண்டவர்களைக் காண்பதற்காக காமிய வனத்திற்கு வந்திருந்த கண்ணபிரான் அந்த மன்னர்களின் சினத்தை ஆற்றினார்.

“பாண்டவர்கள் மேல் அனுதாபமும் ஆதரவும் காட்டுகின்ற மன்னர் பெருமக்களே! உங்கள் சினமும் ஆத்திரமும் நியாயமானவை என்பதை நானும் அறிவேன். எது எப்படியிருந்தாலும் நாமெல்லோரும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சான்றோர்களும் ஆன்றோர்களும் நிறைந்த பேரவையில் வனவாசம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றான் தருமன். இப்போது நாம் போர் மேற்கொள்வது தருமனுடைய வாக்குக்கு முரணானது. எனவே பாண்டவர்கள் வனவாச காலம் முடிந்த பிறகு ஏற்படப் போகிற பெரும் போரின் போது உங்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் காட்டுகிற ஆத்திரத்தையும் சினத்தையும் அப்போது காட்ட முன்வர வேண்டும்.” கண்ணபிரானின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு மன்னர்கள் சினந்தணிந்தனர். இதன்பின் தருமனுக்கென்று சில செய்திகளைத் தனியே கண்ணபிரான் கூறினார்.

“தருமா! வனவாசத்துக்காகக் குறித்த ஆண்டுகளில் நீயும் தம்பியரும் மறைவாக இருக்க வேண்டியது முக்கியம். வனவாசத்திற்குரிய நிபந்தனைகளில் அதுவும் ஒன்றல்லவா? உங்களுடைய புதல்வர்கள் யாவரையும் அங்கங்கே இருக்கும் சுற்றத்தினர் வீடுகளில் வசிக்குமாறு ஏற்பாடு செய்து விடு. தாயையும் அம்மாதிரியே எங்காவது தங்கி வாசிக்கச் செய்வது, நல்லது. அவ்வாறன்றி அவர்களையும் வனத்துக்கு அழைத்துக் கொண்டு போவது உங்களுக்கும் அவர்களுக்கும் பலவகை இடையூறுகளைக் கொடுக்கும். வனவாசம் மறைவாக நடக்க வேண்டியது முக்கியம். நாம் வெற்றிக்குரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அமைதியும் தனிமையும் வேண்டும்.”

“நீ கூறியதை நான் எப்போதாவது மறுத்ததுண்டா கண்ணா ? இப்போது நீ கூறியபடி உடனே செய்கின்றேன்” -என்று தருமன் ஒப்புக் கொண்டான். தாய் குந்தியைக் காந்தாரியோடு போய் இருந்து வசிக்குமாறு அனுப்பினார்கள். புதல்வர்களைப் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனோடு வசிப்பதற்கு ஏற்பாடு செய்து அவன் வசத்தில் ஒப்பித்தனர். அனுதாபம் கூறுவதற்காக வந்திருந்த மன்னர்களும் உற்றார் உறவினரும் காமிய வனத்தில் பாண்டவர்களை விட்டு விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐவரும் திரெளபதியும் அந்த அழகிய வனமும் அதன் இயற்கை வளமுமே அங்கே எஞ்சியவர்கள். எல்லோரும் சென்ற பின்னர் தனியே இருந்த பாண்டவர்களின் மனநிலை துயரம், ஏக்கம், தனிமை முதலிய உணர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சகோதரர்களின் நெஞ்சங்களில் தெளிவை உண்டாக்கிக் கவலையைப் போக்குவதற்கென்றே வந்தவர் போல வியாச முனிவர் அப்போது அங்கே வந்தார். பிரம்மாவுக்குச் சமமான அந்த மாமுனிவரை ஏற்றபடி வரவேற்று உபசரித்தனர் பாண்டவர். வியாசர் அவர்களிடம் அத்தினாபுரத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டார். விதி வகுத்த துன்பச் சிக்கல்களுக்காக மனமார வருந்தினார். ஆறுதலும் அனுதாபமும் கூறினார்.

“துயரங்களுக்கெல்லாம் காரணம் மாந்தரது வினைப்பயனே. சூதாடியதால் வாழ்விழந்து அல்லலுற்றது உன் ஒருவனுடைய அனுபவம் மட்டும் அன்று. மன்னாதி மன்னனாகிய நளனும் சூதினாலேயே அரசும், இன்பமும் இழந்தான். இப்போது நீங்கள் வனவாசம் செய்ய நேர்ந்திருப்பதும் அந்த சூது விளைத்த பயன்தான். வனவாசம் நிகழ்ந்து முடிந்ததும் உங்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பெரிய போர் நேரிடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் சொந்த ஆற்றல் ஒன்று மட்டும் போதாது. இறைவன் அருள் துணை வலிமையும் வேண்டும். அந்த அருள் துணையை அடையும் முயற்சியில் இப்போது முதலில் அர்ச்சுனனை ஈடுபடுத்தலாம் என்று கருதியே நான் வந்தேன். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் என்ற வன்மை வாய்ந்த அஸ்திரம் ஒன்றுள்ளது. அதை அடைவதற்காக அர்ச்சுனன் அந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்ய வேண்டும். இப்போதே இந்த விநாடியிலிருந்து என் சொற்களை மதித்துத் தனிமையிற் சென்று இந்தத் தவ முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.” வியாசர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் அவரையும் தமையனையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காகச் சென்றான்.

“தர்மம் தோற்காது; சத்தியம் என்றும் அழியாது என்பதை அறிந்து கொண்டவன் நீ தருமா! வஞ்சங்களுக்கும் பகைவர் தீமைகளுக்கும் மனம் தளராமல் இந்த வனவாச காலத்தைக் கழித்து விட்டால் வெற்றி உன் பக்கமே காத்திருக்கிறது” என்று மேலும் கூறிவிட்டு வியாச முனிவரும் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்றார். எத்தனை யெத்தனை துயரங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி கொள்ள வேண்டும் என்ற துணிவு வியாசரின் அறிவுரையால் அவர்கள் உள்ளத்தே விளைந்து முற்றத் தொடங்கியிருந்தது.

2. விசயன் தவநிலை

வியாசரிடமும் சகோதரர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவபெருமானை நோக்கித் தவமியற்றச் சென்ற அர்ச்சுனன் வடதிசையில் பல நாள் இடைவிடாது பிரயாணம் செய்து இமயமலையை அடைந்தான். பராசக்தியாகிய உமாதேவி தோன்றிய அந்த மலையின் மேல் அவனுக்குத் தனிப்பட்ட பய பக்தி ஏற்பட்டது. எங்கு நோக்கினும் முனிவர்களும் தபஸ்விகளுமாகத் தென்பட்ட அந்த மலையில் அவர்களையெல்லாம் வணங்கி வழிபட்ட பின்னர் கைலாச சிகரம் நோக்கி அவன் மேலும் பயணம் செய்தான். அரிய முயற்சியின் பேரில் யாத்திரை செய்து கைலாச சிகரமடைந்த அர்ச்சுனன் வியாச முனிவரின் யோசனையின்படி தன் தவத்தை அங்கே தொடங்கினான். பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி ஒற்றைக் காலில் நின்று கொண்டு தியானத்தில் ஈடுபட்டான்; கைகள் சிரத்திற்கு மேல் உயர்ந்து வணங்கும் பாவனையில் குவிந்திருந்தன. அப்போது விளங்கிய அவனுடைய தோற்றம் சிவபெருமானே அங்கு வந்து நின்று தவம் செய்வதைப் போல இருந்தது.

புலன்களின் ஒடுக்கத்தில் அறிவு மலர்ந்து பரம் பொருளை நோக்கிப் படர்ந்தது. அவனைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் வளர்ந்த பஞ்சாக்கினிகள் வெம்மையை உண்டாக்கியதாகவே தோன்றவில்லை. நெஞ்சம் சிவனை எண்ணிச் சிவமயமாக இருந்தது. உடல் புளகித்தது. இன்பமயமான அந்தப் பரம்பொருள் தியானத்தில் மெய்சிலிர்த்துச் சிலிர்த்துப் புற உணர்வுகள் ஓயப்பெற்ற அந்த உடல் நாளடைவிலே கற்சிலை போல் இறுகி விட்டது. உணர்ச்சிகள் அடங்கி உள்முகமாக ஒடுங்கி விட்டன. மலைச் சிகரங்களிடையே ஒரு கற்சிலை நிற்பது போல அவன் உடலும் நின்றது. காட்டு யானைகள் உடல் தினவு தீர்த்துக் கொள்ளும் நோக்குடனே அவனுடைய சரீரத்தைக் கற்பாறை என்றெண்ணி அதன் மேல் உரசிக் கொண்டன. உடலின் கீழ்ப் பகுதியில் மண் மேவியதால் அதைப் புற்று என்றெண்ணிப் பாம்புகள் வாசஞ்செய்ய வந்து விட்டன. மனித சரீரம் நெகிழ்ந்து, ஆன்ம சரீரம் வலுப்பட்டுக் கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தழைத்திருந்த செடி கொடிகள் சரீரத்தை மறைத்துத் தழுவிப் படந்து வளர ஆரம்பித்து விட்டன. காலம் வளர்ந்து கொண்டே போயிற்று. சிவ நாம ஸ்மரணையும், தியானமும் தவிரத் தனக்குரிய புறவுடலின் நினைவேயின்றித் தவஞ்செய்தான் அர்ச்சுனன். மாரியும் கோடையுமாகப் பருவங்கள் மாறி மாறி வந்தன. மாரிக் காலத்தில் மழை வர்ஷித்தது. கோடைக் காலத்தில் வெயில் வாட்டியது. குளிர் காலத்தில் குளிர் ஒடுக்கியது! ஆனால் அர்ச்சுனனுடைய தவம் குலையவில்லை. சரீரம் தளரத் தளர ஆன்ம சாதனை பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. போர் என்றால் காயங்கள் ஏற்படாமலா போய் விடும்? தவம் என்றால் சோதனைகள் ஏற்படுவது இயற்கை தான்.

அர்ச்சுனனுடைய கடுந்தவத்திற்கும் சோதனைகள் ஏற்பட்டன. அவன் மனத்திண்மையைப் பரிசோதனை செய்வதற்காக இந்திரன் அந்தச் சோதனைகளை ஏற்படுத்தினான். தேவருலகில் உள்ள அழகிய மாதர்களை யெல்லாம் ஒன்று திரட்டி, திலோத்தமை, ரம்பை முதலியவர்களின் தலைமையில் அனுப்பினான். நல்ல இளவேனிற் காலத்தில் மன்மதன் தென்றலாகிய தேரில் பவனி புறப்படும் சமயத்தில் திலோத்தமை முதலிய வானுலகத்து அழகிகள் இமயமலைச் சாரலுக்கு வந்தார்கள். அர்ச்சுனன் காலத்தையும் பருவத்தையும் உணராத கர்மயோகியாகத் தவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவன் தவத்தைக் குலைக்கும் முயற்சியில் நளினமான உடலும் மோகக் கவர்ச்சியும் நிறைந்த அந்த வானர மகளிர் ஈடுபட்டனர். காமக்கலைக்குக் கடவுளாகிய மன்மதன் கூட அவர்களுடன் சேர்ந்து கொண்டு பூங்கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தான். அவர்கள் ஆடினார்கள். பாடினார்கள், உடலைத் தீண்ட முயன்றார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. தேவ மாதர்களுக்குப் பெருந்தோல்வி. அர்ச்சுனனுடைய தவம் சிறிதளவும் சலனமுறாமல் மேலே நடந்தது. மாதர் இந்திரனிடம் சென்று கூறினர்.

இந்திரனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. அர்ச்சுனனின் தவ வலிமை அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்தது. அந்த ஆச்சரியத்தில் தன் மகன் என்ற பெருமிதமும் கலந்திருந்தது. இறுதிச் சோதனையாகத் தானே நேரில் புறப்பட்டுச் சென்று வரலாம் என்றெண்ணினான். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் போன்ற தோற்றங்கொண்டு புறப்பட்டான் இந்திரன். இமயமலைச் சாரலில் அர்ச்சுனன் தவஞ் செய்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது அவனிருந்த நிலையைக் கண்டு இந்திரனே திகைத்து விட்டான். வைராக்கியத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. இந்திரன் தவத்திலிருந்த அர்ச்சுனனை விழிக்கச் செய்து எழுப்பி, “நீ யார் அப்பா? எதற்காக இப்படிக் கடுந்தவம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமானைப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கடுந்தவம் என்று அர்ச்சுனன் பதில் கூறினான்.

“அது உன்னால் முடியாது இளைஞனே! வீணாக ஏன் பயனற்ற இந்தத் தவமுயற்சியில் நேரத்தைக் கழிக்கிறாய்?”

“எனக்கு முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் முயல்கிறேன். அதைத் தடுக்க நீ யார்?”

“அதற்குச் சொல்லவில்லை அப்பா! சிவபெருமான் தேவர்களுக்கும் வேதங்களுக்குமே தோற்றங் கொடுக்காதவர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர். கேவலம் சாதாரணத் தபஸ்வியாகிய உனக்கு எப்படிக் காட்சி கொடுப்பார்?”

“கொடுப்பார் கொடுக்கத்தான் போகிறார். உம்முடைய உபதேசம் தேவையில்லை. நீர் போகலாம்” இந்திரன் தனக்குள் அர்ச்சுனனுடைய உறுதியை எண்ணிச் சிரித்துக் கொண்டான். அவனுடைய திண்மை அதியற்புதமாகத் தோன்றியது. தனது சொந்த உருவத்தை அர்ச்சுனனுக்குக் காட்டினான் இந்திரன். அர்ச்சுனன் முறை கருதி மரியாதை அளித்து இந்திரனை வணங்கினான். தன்னுடைய தவ உறுதியை மட்டும் கைவிடவேயில்லை.

“அர்ச்சுனா! உன் உறுதி எனக்கு வியப்பைக் கொடுக்கிறது. நான் அதனைப் பாராட்டுகிறேன். உன் தவம் உறுதியாக வெற்றியடைந்தே தீரும். சிவபெருமானை நீ காண்பாய். உனக்குரிய வரத்தையும் நீ பெறுவாய்” என்று கூறி வாழ்த்தி விட்டுச் சென்றான் இந்திரன் அர்ச்சுனன் பழையபடி உறுதியுடனும் ஊக்கத்துடனும் தனது தவத்தை ஆரம்பித்தான்.

3. சிவதரிசனம்

கைலாச சிகரத்தின் உச்சியிலிருந்து மவர்களைக் கொய்யவும் நீராடுவதற்காகவும் மலைச் சாரலுக்கு வந்து செல்லும் உமாதேவியின் தோழிப் பெண்கள் ஒருநாள் அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விட்டனர். அவர்கள் மூலமாகச் செய்தி உமாதேவிக்கு எட்டியது. உமாதேவி சிவபெருமானோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருக்கும் செய்தியை அவருக்குக் கூறினாள். மகேஸ்வரனாகிய சிவபெருமான் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவருடைய முகமண்டலத்தில் புதியதோர் விகசிப்புத் தோன்றியது. அவருடைய முகமலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்புகின்ற பாவனையில் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் உமாதேவி.

“தேவி! அர்ச்சுனன் இங்கு வந்து பல நாட்களாகத் தவம் செய்து கொண்டிருப்பதை நான் முன்பே அறிவேன். துரியோதனாதியர்கள் கொடுமை செய்து பாண்டவர்களை யாவும் இழந்து காட்டிற்கு வரும்படி செய்து விட்டார்கள். வனவாசம் முடிந்ததும் துரியோதனாதியர்களோடு போர் செய்வதற்காக பாசுபதாஸ்திரம் பெற விரும்பியே அர்ச்சுனன் என்னை நோக்கித் தவம் செய்கிறான். அவனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்."

“ஏன்? சமயம் என்ன? இப்போதே அந்த அருளைச் செய்து விட்டால் போகிறது.”

“ஆமாம்! ஆமாம் அருள் செய்ய வேண்டிய சமயம் இப்போதே வந்துவிட்டது. தவம் செய்து கொண்டிருப்புவனைக் கொன்று தொலைத்து விடுவதற்காக முகன் என்னும் அசுரனை ஏவி விட்டிருக்கிறான் துரியோதனன். நாம் போனால்தான் பக்தனை உயிரோடு காப்பாற்றலாம்.”

“புறப்படுங்கள்! இப்போதே போகலாம்.”

“போக வேண்டியதுதான். ஆனால் ஒரு நிபந்தனை தேவி!”

“என்ன நிபந்தனை?”

“நான் வேடனைப் போன்ற மாற்றுருவத்திலும் நீ வேட்டுவச்சியைப் போன்ற மாற்றுருவிலுமாகச் செல்ல வேண்டும்.”

“ஏன் அப்படி?”

“அர்ச்சுனனை எதிர்க்க வந்திருக்கும் முகாசுரனைக் கொன்று பின்பு அவன் தவ வலிமையைச் சோதித்த பின் அருள் செய்ய மாறுவேடத்தில் போவதே வசதியாக இருக்கும்.”

“சரி, அவ்வாறே போகலாம்”

உமை சம்மதித்தாள். மறுவிநாடி கைலாச சிகரத்திலிருந்து ஒரு வேடனும் வேட்டுவச்சியும் மலைச்சாரலை நோக்கி இறங்கிச் சென்றார்கள். வேடனாகச் சென்ற சர்வேசுவரன் வில்லும் அம்பும் ஏந்தியிருந்தான். வேட்டுவச்சியாகச் சென்ற பராசக்தி முருகனைக் குழந்தையாக்கி இடுப்பிலே தூக்கிக் கொண்டு சென்றாள். சிவகணங்கள் வேட்டுவக்குலத்து மக்களைப் போல மாறி அவர்களைப் பின்பற்றின. அவர்கள் கைலாச சிகரத்தைக் கடந்து கீழே அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்தை வந்தடைந்த போது, பன்றி வடிவில் வந்திருந்த முகாசுரன் அர்ச்சுனன் மேலே தாவிப் பாய்ந்து அவனைக் கொல்ல முயன்று கொண்டிருந்தான். தியானத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்சுனன் விழித்துக் கொண்டு பன்றி மேல் அம்பு எய்தான். அவன் எய்த அம்பு பன்றியைத் துளைப்பதற்கு முன்பே வேடனாக வந்திருந்த சிவபெருமானின் அம்பு பன்றியைத் துளைத்து விட்டது. இரண்டாவதாக அர்ச்சுனனின் அம்பும் துளைத்தது. இரண்டு அம்புகளுமாகச் சேர்ந்து பன்றியை இறக்கச் செய்து விட்டதென்னவோ உண்மை.

ஆனால் சிவனுடைய ஏவலின்படி சோதனைக்காக அர்ச்சுனனைச் சிவ கணங்கள் வம்புக்கு இழுத்தன. “எங்கள் தலைவன் அம்பு எய்தபின் செத்த பன்றியின் மேல் புதிதாக அம்பு தொடுப்பது போல நீயும் அம்பு தொடுக்கலாமா? அப்படிச் செய்வது சுத்த வீரனுக்கு அழகல்லவே?”

“தவறு நீங்கள் உங்கள் தலைவன் பன்றியை எய்ததாகக் கூறுவது பொய். உங்கள் தலைவன் எய்யத் தொடங்கு முன்பே என் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டு விட்டது.” அர்ச்சுனன் விடவில்லை! பன்றி தன் அம்பினாலேயே இறந்ததென்றும் தானே முதலில் எய்ததாகவும் சாதித்தான்!

சிவபெருமானும் சிவகணங்களும் அதை வலிந்து மறுத்தனர். இறுதியில் வேடனாக வந்திருந்த சிவபெருமானுக்குக் கோபம் வந்து விட்டது. “உண்மையில் நீ ஒரு தபஸ்விதானா? விருப்பு வெறுப்பற்றுத் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் உனக்கு ஒரு பன்றியின் உயிரைக் கொல்லும் ஆசை ஏற்படலாமா? நீ தவம் செய்வது போல் நடிக்கிறாய். உண்மையில் நீ ஒரு அயோக்கியன். நீ இங்கே பொறுமையோடு தவம் செய்வது போல் நடிப்பது யாரைக் கெடுப்பதற்கோ? உன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லவில்லை என்றால் நீ என்னிடமிருந்து உயிரோடு தப்ப முடியாது!”

“வீண் கோபம் கொண்டு துள்ளாதே வேடனே! நான் யார் என்பதைச் சொன்னால் நீ இங்கே நிற்பதற்கே பயந்து என்னை வணங்கி விட்டு ஓடிப் போவாய். ஜாக்கிரதை!"

“சும்மா மிரட்ட வேண்டாம். நான் பேடியல்ல ஓடிப் போவதற்கு நீ யாரென்று சொல்!”

“சொல்லி விடட்டுமா ! நெஞ்சத்தை உறுதியாக்கிக் கொண்டு கேள். நான்தான் அர்ச்சுனன். இந்த உலகத்தில் வில் என்று ஒரு கருவி பிறந்திருக்கிறதே, அதை ஆள்வதற்கென்றே பிறந்த வில்லாளன்.”

“ஓகோ! அப்படியா? இப்பொழுது இதைக் கேள்விப் பட்ட பிறகுதான் என் கோபம் இரண்டு மடங்காகிறது. நீதான் அந்த அர்ச்சுனனா? அப்படிச் சொல்! எங்கள் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கட்டை விரலை இழக்கக் காரணமாக இருந்த துரோணரின் சீடன் இல்லையா நீ? மதிப்பிற்குரிய துருபத மன்னனைத் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து அவமானம் செய்தது, காண்டவத்தில் தீ எரிந்தபோது அங்கு வசித்த பல வேடர்களைத் தீயில் எரிந்து அழிந்து போகுமாறு செய்தது, ஒரு பார்ப்பானுடைய பசுக்களைக் கவர்ந்ததற்காகப் பல வேடர்களைத் துன்புறுத்தியது, ஆகிய தீமைகளை யெல்லாம் கூசாமல் செய்த கொடியவன் நீதானா? நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை வேடர் குலத்துக்கு எவ்வளவு தீமைகள் புரிந்திருக்கிறாய்? இன்று சரியாக என்னிடம் மாட்டிக் கொண்டாய்? உன் உயிரை வாங்காமல் விடப் போவதில்லை. ஆண்மையிருந்தால் என்னோடு போருக்கு வா! பார்க்கலாம்” என்று வேடன் ஆத்திரத்தோடு வில்லை வளைத்தான்.

கையில் வில் வளைந்தது. முகத்தில் புருவங்கள் வளைந்தன. அர்ச்சுனனுக்கும் சினம் வந்து விட்டது. அவனுக்கும் போர் செய்து இரண்டிலொன்று பார்த்துவிட விருப்பம் தான். அவனுடைய வில்லும் வளைந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவராக மாற்றி மாற்றி அம்பு மழை பொழிந்தார்கள். தொடக்கத்தில் வேடன் மேல் அர்ச்சுனன் செலுத்திய அம்புகளை எல்லாம் அவன் சாமார்த்தியமாகத் தடுத்து விட்டான். ஆனால் வேடன் தன் மேற்செலுத்திய அம்புகனை அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ள முடிந்ததே ஒழியத் தடுக்க இயலவில்லை. அர்ச்சுனனின் சாபம் தோள்களும் இரத்தக் காடாசிவிட்டது. தன் முன் நின்று சோதனைக்காகச் சிவபெருமான் போர் என்கின்ற திருவிளையாடலைப் புரிகிறான் என்பதை அறியமுடியாத அர்ச்சுனன் வேடன் மேல் அளவற்ற ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். ஆத்திரத்தோடும் மனக்கொதிப் போடும் அவள் செலுத்திய அம்பு வேடனாக இருந்த சிவபெருமானின் முடியைத் துளைத்தது. முடிந்த சடை மறையில் கங்கை முகிழ்த்துச் சிதறியது. சடைகள் தூள் பரந்தன். சிவகணங்களுக்கு இதைக் கண்டு மிகவும் செதுப்பு ஏற்பட்டுவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்து வில்லை எடுத்துக் கொண்டு அர்ச்சுனன் மேல் பாய்ந்தார்கள். நல்லவேளையாக வேடன் அவர்களுடைய சினத்தை அடக்கினான், மறுபடியும் இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் விற்போர் ஆரம்பமாயிற்று போர் வெற்றி தோல்வி காண இயலாத சமநிலையில் கொடூரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இறுதியில் வேடன் குறி வைத்து எய்த அம்பு ஒன்று அர்ச்சுனனுனடய வில்லின் நாணை அறுத்து வீழ்த்தி விட்டது. விசயன் வெறுங்கையனானான். வில் நாணறுந்து திகைத்த அர்ச்சுனன் கையிலிருந்த வில் தண்டினால் வேடன் மேல் தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஓர் அடி அடித்து விட்டான்.

வேடனாக இருந்த சிவபெருமான் அடி பொறுக்க முடியாமல் மயங்கி விழுந்தவர் போல மூர்ச்சையற்றுக் கீழே விழுந்து விட்டார். சர்வேசுவரானாகிய அவர் மேல் பட்ட அந்த அடி உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் மேலும் பஞ்ச பூதங்களின் மேலும், அவற்றாலாகிய பிரகிருதியின் மேலும் ஒருங்கே விழுந்தது போல வலித்தது, வேடன் மூர்ச்சை தெளிந்து மறுபடியும் எழுந்தான். ஆத்திரத்தோடு அர்ச்சுனனை மற்போர் செய்வதற்கு அழைத்தான். அர்ச்சுனன் இணங்கினான், வேடனுக்கும் அர்ச்சுனனுக்கும் மற்போர் நிகழ்ந்தது. திக்குத் திகந்தங்களெல்லாம் வெடி படுதாளத் திடிபடும் ஓசையென ஒலியெழுந்து அடங்கக் கோரமாகப் போர் செய்தனர். அர்ச்சுனனுடைய குத்துக்கள் வேடன் மேலும் வேடனுடைய குத்துக்கள் அர்ச்சுனன் மேலுமாக மாறி மாறி விழுந்தன. வேடன் தன் வலிமையெல்லாந் திரட்டி அர்ச்சுனனைக் கைகளால் தூக்கி மேலே எறிந்தான். வானத்தில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த அர்ச்சுனன் உணர்வு தெளிந்து கண் விழித்த போது அவனருகே வேடனில்லை. வேட்டுவச்சியும் இல்லை. வேடர் படைகளும் இல்லை. சிவகணங்கள் புடை சூழ கைலாசபதியாகிய சிவபெருமான் உமாதேவியாருடன் புன்முறுவல் பூத்துக் காட்சியளித்தார்.

அர்ச்சுனன் பக்திப் பரவசத்தோடு எழுந்திருந்து வலம் வந்து வணங்கி அவர்களை வழிபட்டான். ‘தன் தவம் வெற்றியடைந்து விட்டது’ -என்ற எண்ணம் அவனுக்குக் களிப்பைக் கொடுத்தது. சிவபெருமானையும் உமாதேவி யாரையும் நோக்கி மெய் புளகாங்கிதம் அடைய விழிகள் ஆனந்தக் கண்ணீர் சொரிய, நோக்கிய கண் இமையாமல், கூப்பியகை தளராமல் அவன் நின்றுக் கொண்டே இருந்தான். சிவபெருமான் மலர்ந்த முகத்தோடு அவனருகில் வந்தார். மகனை அன்போடு தழுவிக் கொள்ளும் தந்தையைப் போல அவனைத் தழுவிக் கொண்டார்.

“அன்பனே! துரியோதனாதியர்கள் உன்னைக் கொல்வதற்காக ஏவிவிட்ட ‘முகன்’ -என்ற பன்றியை அழித்து உன்னைக் காப்பாற்றி, நீ வேண்டும் வரத்தை அளிப்பதற்காகவே வேடனாக மாறி வந்தேன். நீயும் நானும் விற்போரும் மற்போரும் செய்து திறமையைப் பரிசோதித்துக் கொண்டோம். அஞ்சாமை நிறைந்த உனது வீரத்தையும் தவ வலிமையையும் பாராட்டுகிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்."

“அடியேன் விருப்பம் தேவரீருக்குத் தெரியாதது அல்ல. ‘பாசுபதாஸ்திரம்’ பெறுவதற்காகவே இவ்வரிய தவ முயற்சியை மேற் கொண்டேன்.”

சிவபெருமான் பாசுபதாஸ்திரத்தையும் அதனைப் பிரயோகிப்பதற்குரிய முறை நூல்களையும் அர்ச்சுனனுக்குக் கொடுத்தார். அர்ச்சுனன் சர்வாங்கமும் பூமியில் படுமாறு கீழே விழுந்து வணங்கினான். சிவபெருமான் அவனுக்கு எல்லா நலன்களும் உண்டாகுமாறு ஆசி கூறி மறைந்தார்.

அர்ச்சுனனுக்கு சிவபெருமான் காட்சியளிக்கும்போது தானும் தன் பரிவாரங்களோடு அங்கே வந்திருந்தான் இந்திரன். சிவபெருமான் வரங்கொடுத்து விட்டுச் சென்றதும் தேவர்கோனாகிய இந்திரன் அர்ச்சுனனை அணுகி, “மகனே! சோதனைகளெல்லாம் கடந்து உன் தவத்தில் வெற்றி பெற்று விட்டாய். அது கண்டு மிகவும் மகிழ்கிறேன். நீ சில நாட்கள் எங்களுடனே வந்து விருந்தினனாகத் தங்கியிருத்தல் வேண்டும். என் வேண்டுகோளை மறுக்கக்கூடாது” என்றான். அர்ச்சுனன் சம்மதித்து அவனோடு வானுலகுக்குப் புறப்பட்டான். தேவருலகில் அர்ச்சுனனின் விதி அவனுக்காக ஊர்வசி உருவத்தில் காத்திருந்தது போலும். இந்திரன் அர்ச்சுனனுடைய வரவைக் கொண்டாடுவதற்காகத் தன் உரிமை காதல் மகளிருள் ஒருத்தியாகிய ஊர்வசியின் நாட்டியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். ஊர்வசியின் நாட்டியத்தைக் காண்பதற்காக வந்து வீற்றிருந்த அர்ச்சுனனின் மோகனத்தோற்றத்தைக் கண்டு அந்த நடனராணியே அளவற்ற மையல் கொண்டு விட்டாள். நாட்டியம் முடிந்ததும் தான் தனியாகத் தங்கியிருக்கும் மாளிகைக்குச் சென்று விட்டான் அர்ச்சுனன். அவன்மேற் கொண்ட மையலை அடக்க முடியாத ஊர்வசி தனியாக அவனைச் சந்தித்து, தன் மோகத்தை வெட்கமின்றி வெளியிட்டாள். இச்சையை நிறைவேற்றும்படி கேட்டாள். அர்ச்சுனன் திடுக்கிட்டான்.

“அம்மணி! நீ எனக்கு தந்தை முறையுடைய இந்திரனின் காதல் கிழத்தி. உன்னை நான் என் தாயாக எண்ணுகிறேன்” என்று கூறி ஊர்வசியின் விருப்பத்தை மறுத்து விட்டான். இச்சையும் மோகமும் புறக்கணிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த ஊர்வசிக்குக் கடுமையான சினம் மூண்டது. தனக்குள்ள சாபம் கொடுக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி அர்ச்சுனனை ஆண் தன்மை இழந்து பேடியாகுமாறு செய்துவிட்டாள். அர்ச்சுனன் பேடியானான். ஊர்வசியின் சாபத்தால் விளைந்த இந்தக் கோர விளைவை எண்ணி மாளிகையை விட்டு வெளியேறாமலிருந்தான் அர்ச்சுனன். இந்திரன் முதலிய தேவருலகப் பெருமக்கள் வந்து பார்த்து உண்மையைத் தெரிந்து கொண்டனர். ஊர்வசியின் அடாத செயலைக் கண்டிப்பதற்காக இந்திரனும் தேவர்களும் அவளிருப்பிடம் சென்றனர்.

ஊர்வசி, தேவர்களும், இந்திரனும் கூட்டமாக வருவதைக் கண்டு அஞ்சி, “அர்ச்சுனன் தான் விரும்பினால் பேடிவடிவத்தை அடையட்டும், இல்லையெனில் சுய உருவோடிருக்கட்டும்” என்று சாபத்தை மாற்றி விட்டாள். உடனே அர்ச்சுனனுக்குப் பழைய ஆண்மை வடிவம் வந்தது. அவன் கவலை நீங்கி வானவர் கோமான் மனமகிழ இன்னும் சில நாட்கள் விருந்தினனாக அங்கே தங்கியிருந்தான்.

4. இந்திரன் கட்டளை

வானுலகில் விருந்தினனாகத் தங்கியிருந்த நாட்களில் இந்திரன் அர்ச்சுனனைத் தனக்குச் சரிசமமான உபசாரங்களையும் போற்றுதல்களையும் செய்து பேணினான். அர்ச்சுனனின் பெருமையை வாய் சலிக்காமல் தேவர்களுக்கு எடுத்துரைத்தான். இந்திரனுடைய அரசவையிலே அவனுக்கு மிக அருகில் இணையாசனத்தில் வீற்றிருந்தான் அர்ச்சுனன். “வானுலகத்துப் பெருமக்களே! இதோ என்னருகில்

அடக்கமே உருவாக வீற்றிருக்கும் இந்த இளைஞரைச் சாதாரண மானிடர்களில் ஒருவனாக எண்ணி விடாதீர்கள். இவன் பாண்டவ சகோதரர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன். இவனுடைய வீரத்தையும் போர் செய்கின்ற ஆற்றலையும் அளவிட்டுச் சொல்லவே முடியாது. நானும் என்னுடைய மேகப் படைகளும் சேர்ந்து தடுத்தும் கூட காண்டவ வனம் எரியும்போது அதை அவிக்க விடாமல் எங்களை எதிர்த்துப் போர் செய்தவன் இவன் தான். இவனுடைய வீரத்திற்கு வானுலகப் பெருமக்களின் சார்பில் நாம் நன்றி செலுத்த வேண்டும்” என்று கூறிக் கற்பகப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றை அர்ச்சுனனுக்குச் சூட்டினான் இந்திரன்.

மற்றும் பல தேவர்கள் அர்ச்சுனனை மனமகிழ்ச்சியோடு பாராட்டிப் பலவகை அன்பளிப்புகளை வழங்கினர். அன்று இந்திரனும் அர்ச்சுனனும் அருகருகே அமர்ந்து உணவுண்டனர். அதனைக் கண்ட இந்திரனின் கோப்பெருந்தேவியாகிய இந்திராணி அசூயையும் சினமும் கொண்டாள். “ஒரு மண்ணுலகத்து மானிட இளைஞனை வானுலக மன்னராகிய நீங்கள் அருகே அமர்த்திக் கொண்டு உண்பது தகுதியுணராத செயல்” என்று அவள் கூறினாள். இந்திரன் இவ்வாறு கூறிய தன் மனைவியை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே சமாதானமாக விடை கூறலானான்.

“அரசீ! இவனை மானிடனென்று தாழ்வாகப் பேசாதே! உண்மையில் இவன் தேவர்களைவிடப் பன்மடங்கு உயர்ந்தவன். எனக்கு மகன் முறையுடையவன். எல்லாம் வல்லமாயனாகிய கண்ணபிரானுக்கு மைத்துனன், உலகத்தின் சம்ஹாரகர்த்தாவாகிய சிவபெருமானுடனேயே துணிந்து எதிர்த்துப் போர் செய்தவன்” என்று கூறி இந்திராணிக்கு அர்ச்சுனனுடைய தகுதியை உணருமாறு அறிவுறுத்தினான். பெரிய வில்லாளனும் தெய்வீகக் கண்ணனுக்கு மைத்துனனுமாகிய அர்ச்சுனனுடைய வரவினால் தேவலோகத்துக்கு ஏதாவது பெரிய நன்மை ஏற்படலாம் என்று தேவர்கள் கருதினர். ஒரு நாள் இந்திரனும் அர்ச்சுனனும் தனியே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இந்திரன் அர்ச்சுனனிடம் அப்போது ஒரு வேண்டுகோள் விடுத்தான்;

“அர்ச்சுனா! எனக்கும் என் நாட்டிற்கும் தேவர்களுக்கும் எப்போதும் தீமைகளை செய்து கொண்டிருக்கிற அகரர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்காக அந்தக் கொடியவர்களை அழிக்கும் பொறுப்பை நீ மேற்கொள்ள வேண்டும். அன்பு உரிமையோடு இந்தப் பணியை ஒரு கட்டளையாகவே இடுகிறேன்.”

“தங்கள் கட்டளை எதுவானாலும் பணிவோடு நிறைவேற்றுவதற்குக் காத்திருக்கிறேன். தெளிவாகக் கூறியருள வேண்டும்.”

“கடற்பகுதிகளின் இடையே ‘தோயமாபுரம்’ என்ற தலைநகரை அமைத்துக் கொண்டு ‘நிவாதகவசர்’ என்னும் பெயரையுடைய அசுரர்கள் வசித்து வருகிறார்கள். தெய்வங்களும் தேவர்களுமே அந்த அசுரர்களை எதிப்பதற்கு அஞ்சி ஒடுங்கி அவர் செய்யும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்! உலகமே ஒன்று திரண்டு போரிட்டு வெல்ல முடியாத தீரர்கள் நிவாதகவுசர்கள். அவர்களுடைய போர் வலிமையும் தவவலிமையும் அழியாத இயல்புடை யவை. இன்று வரை மற்றவர்களை அழித்திருக்கிறார்களே ஒழிய தங்களுக்குச் சிறு அழிவையும் கண்டதே இல்லை. மூன்று கோடி எண்ணிக்கை உடையவர்களாகிய நிவாதகவுசர்களை நீ உன்னுடைய தனிச்சாமர்த்தியத்தாலேயே அழித்தொழிக்க முடியும். நீ சென்றால் வெற்றியுடனேயே திரும்பி வருவாய் என்று நம்புகின்றேன்.”

“சந்தேகமே வேண்டாம்! உங்கள் அன்பும் ஆசியும் இருந்தால் நிவாதகவசர்களை மட்டும் இல்லை. அவர்களைக் காட்டிலும் சூராதி சூரர்களைக் கூட வென்று வாகை சூடி வருவேன். விடை கொடுங்கள். வெற்றியோடு திரும்பி வருகிறேன்.” அர்ச்சுனன் இந்திரனுக்கு வாக்களித்தான். இந்திரன் விடை கொடுத்தான். பொற்கவசம் ஒன்றையும் சிறந்த தேரையும், தேரோட்டும் தொழிலில் வல்லவனாகிய ‘மாதலி’ என்னும் பாகனையும் அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தான். அர்ச்சுனன் பெற்றுக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். வானுலகம் முழுவதுமே அவனை வாழ்த்தி வழியனுப்பியது.

மாதலி தேரைச் செலுத்தினான். தேரில் அர்ச்சுனன் போர்க்கோலம் பூண்டு நின்றிருந்தான். தேர் சென்று கொண்டிருக்கும்போதே பாகனை நோக்கித் தோயமாபுரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விசாரித்தான். கீழ்க் கடலின் இடையே அந்த அரக்கர்களின் தலைநகரம் அமைந்திருப்பதாகவும் அங்கே போக வேண்டும் என்றும் அவன் கூறினான். மாதலியின் ஏற்பாட்டால் அர்ச்சுனனுக்கும் அவனுக்கும் தோயமாபுரத்திற்குத் தேர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுவதற்காகச் சித்திரசேனன் என்பவனும் உடன் வந்தான். வானுலக வீதிகளைக் கடந்து அர்ச்சுனனுடைய தேர் சென்ற போது மேல் மாடங்களில் நின்று கண்ட தேவருலகப் பெண்கள் அவனை இகழ்ச்சி தோன்ற நோக்கி நகைத்தனர். அவன் நிவாதகவர்களை அழிக்க முடியாது என்று எண்ணியே தேவமாதர்கள் அவ்வாறு செய்தனர். அர்ச்சுனனோ தேரில் சென்று கொண்டே அந்தப் பெண்களின் அறியாமையை எண்ணித் தனக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் அர்ச்சுனனுடைய பேராண்மையையும் வீரத்தையும் உணர்ந்தவர்களோ ‘இவனுடைய ஆற்றல் தேவர்களுடைய ஆற்றலைவிடப் பெரியது! நிச்சயமாக இவன் நிவாதகவர்களை வென்று வாகை சூடி வருவான்’ என்று பேசிக் கொண்டார்கள்.

இவ்வாறு அர்ச்சுனனைப் பற்றி அறிந்தோர் புகழ்ந்தும், அறியாதோர் இகழ்ந்தும், பேசிக் கொண்டிருந்த வானுலக எல்லையைக் கடந்து தேர் தோய்மாபுரத்து வழியில் தனியே செல்லலாயிற்று. “மாதலி! அந்த அசுரர்களைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறு. கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன். உன் கருத்துக்கள் எனக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.” என்று அர்ச்சுனன் கேட்டான். மாதலி, உடனே நிவாதகவசர்களைப் பற்றித் தனக்குத் தெரிந்திருந்த விவரங்களை எல்லாம் கூறத் தொடங்கினான்.

“நிவாதகவசர்கள் கண்டவர் பயப்படும்படியான தோற்றத்தை உடையவர்கள். இடி முழக்கம் போலப் பேசுகிற சினம் மிக்க சொற்களை உடையவர்கள். மலைக் குகை போன்ற பெரிய வாயை உடையவர்கள். நெருப்புக் கோளங்களோ எனப் பார்த்தவர்கள் அஞ்சி நடுநடுங்கும் விழிகனள உடையவர்கள். போர் எனக் கேட்டதுமே பூரித்து எழுகின்ற தோள்களை உடையவர்கள். மகாவீரர்கள். ஈட்டி , மழு, வளைதடி, வில், வாள் முதலிய படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதில் நிகரற்றவர்கள். அவர்களை வெல்ல உலகில் எவராலும் முடியாதென்று மற்றவர்களை எண்ணச் செய்பவர்கள்.” மாதலி இவ்வாறு கூறி வந்த போதே தேர் தோயமாபுரத்தை அடைந்து எல்லைக்கு வெளியில் நின்றது. தங்களோடு வந்திருந்த சித்திரசேனனை நிவாதகவசர்களிடம் தூதாக அனுப்பினர் அர்ச்சுனனும் தேர்ப்பாகன் மாதலியும். சித்திரசேனன் அர்ச்சுனன் போருக்கு வந்திருக்கும் செய்தியை உரைப்பதற்காகத் தோய்மாபுரத்திற்குள்ளே சென்றான்.

மாதவி தேரைச் செலுத்தும்போது தேர்ச்சக்கரங்கள் உருண்ட ஓசையும் வில்லின் நாணை இழுத்து வளைத்து அர்ச்சுனன் உண்டாக்கிய ஒலியும் தோயமாபுர மக்களாகிய அசுரர்களின் செவிகளைக் கிடுகிடுக்கச் செய்தன. ஆனால் அவர்கள் அஞ்சவில்லை. சித்திரசேனன் நகருக்குள் நுழைந்து நிவாதகவுசர்களிடையே அர்ச்சுனன் போருக்கு வந்திருப்பதைக் கூறினான். அவர்கள் இதைக் கேட்டு இடியடி யென்று சிரித்தனர்.

“இந்த நகரத்து வீரர்களாகிய புலிகளுக்கு நடுவே ஒரு பூனை போருக்கு வந்திருக்கிறது போலும் வரட்டும் வரட்டும், அது சாவதற்குத் தான் வந்திருக்கிறது. நாட்டையும், உடைமைகளையும் பறித்துக் கொண்ட துரியோதனாதியர்களை எதிர்க்கத் தெரியாத அந்த அப்பாவி அர்ச்சுனன் எங்களை எதிர்த்தா போருக்கு வந்திருக்கிறான்? வெட்கக் கேடுதான்” என்று அவமதித்துப் பேசினார்கள் நிவாத கவசர்கள்.

மூன்று கோடி அசுரர்களுக்கும் சினம் மூண்டது. மனம் கொதித்துப் படைகளோடு அர்ச்சுனனை எதிர்க்கப் புறப்பட்டனர். கடல் ஒன்று அலைமோதிக் கொந்தளித்துத் திரண்டு வருவதைப் போல் அசுரர் கூட்டம் ஊர் எல்லையில் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைத் தனித் தேரை நோக்கிப் பாய்ந்தது. அம்புகள் எட்டுத் திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. அவனும் தன் கைவில்லை வளைத்து அம்புகளைப் பாய்ச்சினான். “அசுரர்களே! நான் இங்கு வில்லோடு வந்திருப்பதைக் கொண்டே உங்களுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இது வரையிலும் உங்களை எதிர்த்து வந்து உங்களோடு போர் புரிந்து தோற்றுப் போனவர்களைப் போல் என்னையும் எண்ணிவிடாதீர்கள். நான் உங்களை அழித்தொழிப்பதற்கென்றே வந்திருக்கிறேன்.” இவ்வாறு கூறிக்கொண்டே எதிரே கடல் போலச் சூழ்ந்து நிற்கும் அசுரர்களின் மேல் அம்பு மாரி பொழிந்தான் அர்ச்சுனன்.

“உங்கள் மனைவி திரெளபதியை அவமானம் செய்தும், சூதாடி நாட்டை அபகரித்துக் கொண்டு உங்களுக்குத் துன்பமிழைத்த கெளரவர்களை அழிக்கத் தெரியாத நீ எங்களிடமா வீறு பேசுகிறாய்? அழியப் போவது நீதான்! நாங்களில்லை” -என்று கூறிக் கொண்டே நிவாதகவசர்கள் அவனை நெருங்கினர்.

அவர்களுடைய தாக்குதலுக்குத் தான் ஆளாகாமல் சமாளித்துக் கொண்டு தன் அம்புகளால் அவர்களை அழித்துக் கொண்டிருந்தான் விசயன். நிவாதகவசர்கள் தேருக்கருகில் நெருங்கி ஒரேயடியாகத் தேரை அமுக்கிக் கொன்று விட வேண்டும் என்று ஆக்ரோஷமடைந்தனர். அந்த எழுச்சியின் வேகத்தைத் தவிடுபொடியாக்குவதைப் போல அர்ச்சுனன் பிரம்மாஸ்த்ரத்தை எடுத்துச் செலுத்தினான். சக்திவாய்ந்த அந்த அஸ்திரத்தின் விளைவாக அசுரர்களில் பெரும் பகுதியினர் உயிரிழந்தனர். எஞ்சியிருந்தவர் அவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ச்சுனனும் கை ஓயாமல் வில்லிலிருந்து கணைமழை பொழிந்து கொண்டிருந்தான். நிவாதகவசர்கள் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே இருந்தனர். நல்லவர்களுடைய செல்வம் வளர்வது போல அர்ச்சுனனுடைய ஆற்றல் பெருகியது. வஞ்சகர்களின் செல்வம் அழிவது போல நிவாதகவசர்களுடைய ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது.

ஆயிற்று. எல்லா அசுரர்களும் ஏறக்குறைய அழிந்து விட்டனர். இன்னும் சில நூறு பேரே எஞ்சியிருந்தார்கள். அர்ச்சுனன் மனமகிழ்ச்சியோடு அவர்களையும் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் திடுக்கிட்டு மலைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. என்ன மாயமோ? சூனியமோ? திடீரென்று செத்தும் உடல் சிதைந்தும் கிடந்த எல்லா அசுரர்களும் உயிர் பெற்று எழுந்து போருக்கு வந்தார்கள். இறந்தவர் பிழைத்து எழுந்து வரும் அந்த விந்தையைக் கண்டு அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் அவனைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் திடீர்த்தாக்குதல் அவனை தன்னம்பிக்கை இழக்கச் செய்து விட்டது. அவன் சோர்ந்து போய் நின்றான். ஆசரிரீயாக ஒரு குரல் அவனுக்கு அந்த நிலையில் ஊக்கமளிக்கும் அருமருந்து போல் செவிகளில் நுழைந்தது.

“பாசுபதாஸ்திரத்தைப் பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.”

அர்ச்சுனன் உடனே, தவமிருந்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துத் தொடுத்தான். சிவபெருமானால் அளிக்கப்பட்ட மாபெரும் ஆற்றலமைந்த அந்த அஸ்திரம் மூன்று கோடி அசுரர்களையும் ஒரு நொடியில் சாம்பலாக்கியது. தோயமாபுரம் சூனியமாகியது. அங்கே வாழ்ந்து வந்த தீமையின் உருவங்கள் அழிந்து விண்ணகம் புகுந்துவிட்டன. வெற்றி வீரனாக அர்ச்சுனன் தேரில் வீற்றிருந்தான். மாதலிதேரை வானவர்கோ நகரமாகிய அமராபதியை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியால் விரைந்த அவர்கள் உள்ளங்களைப் போலவே தேர்ச்சக்கரங்களும் உருண்டன.

தேர் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை வழியில் அர்ச்சுனன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். அந்தரத்தில் மறைந்து நின்று தொங்குவதைப் போலத் தொலைவில் ஒளிமயமான நகரம் ஒன்று மேகங்களுக்கிடையே தென்பட்டது. அர்ச்சுனன் தேர்ப்பாகனை வினவினான். “மாதலீ! அதோ தெரியும் நகரத்தின் பெயர் என்ன? அந்த நகரத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

“பிரபு! அந்த நகரம் காலகேயர்கள் வசிக்கும் நகரம், காலகை, பூலோமை என்ற பெயரினரான இரண்டு பெண்களுக்குச் சொந்தமானது. அதிரூபவதியான அந்தப் பெண்கள் பிரம்மாவை நோக்கித் தவம் செய்து சாகாவரமும் மற்றும் பல அரிய வரங்களும் பெற்றுள்ளார்கள். நகரத்திற்கு இரணிய நகரம் என்று பெயர். காலகை, பூலோமை இருவருக்கும் மக்கள் முறை உடையவர்களாகிய அறுபதினாயிரம் மாவீரர்கள் அங்கு வாழ்கின்றனர். அந்த நகரில் வாழ்கிறவர்களுடைய அழகிய தோற்றம், கண்டவர்களை வணங்குமாறு செய்யும் இயல்பை உடையது. சுடச்சுடச் சுடரும் செம்பொன் போன்ற மேனி நிறத்தை உடையவர்கள். உலகெங்கும் தங்கள் பெயரை நிலை நாட்டிய பெருமையுடையவர்கள். இன்று வரை யாருக்கும் போரில் தோற்காதவர்கள் தேவர்கள் கூடக் காலகேயர்களின் இரணிய நகரத்துப் பக்கம் போவதற்கு அஞ்சுவார்கள்.“ என்று மாதலி விவரங்களைக் கூறினான்.

“நாம் அஞ்ச வேண்டாம்! அந்த நகரத்தை நோக்கி நம்முடைய தேரைச் செலுத்து. அவர்கள் இதுவரை என்னவென்று அறியாத தோல்வியை இன்று அவர்களுக்கு அறிவிப்போம்.”

மாதலி தயங்கினான். அவனுக்குப் பயம் தெளியவில்லை.

“தயங்காதே மாதலீ! காலகேயர்களை வென்று அடக்குவது என் பொறுப்பு! நீ பயப்படாமல் தேரைச் செலுத்து-” அர்ச்சுனன் மீண்டும் வற்புறுத்தித் தூண்டினான். மாதலி மறுக்க வழியறியாமல் காலகேயர்கள் வசிக்கும் இரணிய நகரத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனனுடைய தேர் இரணிய நகரத்து எல்லையை அடைவதற்கு முன்பே காலகேயர்கள் அவன் போருக்கு வருவதை எப்படியே உணர்ந்து விட்டார்கள். தேரேறித் துணிவோடு தங்களுடன் போருக்கு வரும் மானிடனை எண்ணித் தாங்களே பரிதாபப்பட்டுக் கொண்டனர். அறுபதினாயிர காலகேயர்களும் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கப் புறப்பட்டனர். கண்டவர்களை மயக்கும் அழகிய தோற்றம் உடையவர்களாகிய அவர்களுக்குப் போர்க் கோலமும் சினமும் கூடக் கவர்ச்சி நிறைந்தே தோற்றமளித்தது.

தேரில் நின்று கொண்டு வளைத்த வில்லும் தொடுத்த கணையுமாக அந்த அசுரர்களான அழகர்களைப் பார்த்த போது அர்ச்சுனனுடைய கைகளும் மனமும் ஒரு கணம் தயங்கின. இப்படிப்பட்ட அழகுள்ளவர்கள் தீயவர்களாக இல்லாமலிருந்தால் இவர்களைக் கொல்ல வேண்டாமே! இப்போது இந்த அழகைக் கண்டு மனம் பேதலிக்கிறதே! கைகள் தயங்குகின்றனவே? அர்ச்சுனன் வில்லை வளைப்பதை நிறுத்தினான். ஓரிரு விநாடிகள் தயங்கினான். வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்தான். ஆனால் அவனுடைய தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் காலகேயர்கள் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் அவன் மேற் பாய்ந்தார்கள்.

“இவர்கள் புறத் தோற்றந்தான் அழகாக இருக்கிறது. உள்ளம் குருரமாக இருக்கிறது’ என்றெண்ணிக் கொண்ட அர்ச்சுனன் தயக்கத்தைப் போக்கிக் கொண்டு போரைத் தொடங்கினான். “தேவர்களே நுழைவதற்குப் பயப்படுகின்ற எங்கள் இரணிய நகரத்துக்குள் கேவலம் ஒரு மானிடனாகிய நீ எப்படித் துணிவோடு நுழைந்தாய்? போருக்கு வந்துவிட்டாய்! உன் முடிவு பரிதாபகரமாகத்தான் இருக்கப் போகிறது.”

“தேவர்களை ஏமாற்றி அஞ்சச் செய்தீர்கள். என்னை ஏமாற்ற முடியாது. நான் உங்களைக் கொன்று உங்கள் குலத்தைப் பூண்டோடு அழித்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்.” அர்ச்சுனன் வீர முழக்கம் செய்தான்.

அவனுக்கும் காலகேயர்களுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில் தோயமாபுரத்திற் செய்தது போலவே பாசுபதா ஸ்திரத்தை எடுத்துச் செலுத்தினான் அர்ச்சுனன். பாசுபதாஸ்திரத்தின் விளைவாக காலகேயர்கள் எனப்படும் மாயத் தோற்றங்கள் அழிந்தன. புறத்திலே மினுமினுத்து அகத்திலே வஞ்சனை செறிந்த அந்தப் பொய்யுடல்கள் இருந்த இடம் தெரியாமற் பூண்டோடு போய் விட்டன. இரணிய நகரம் என்று மேகங்களின் ஊடே தெரிந்த அந்த நகரமும் மறைந்தது. வில் நாணையே வெற்றி முழக்கத்துக்குரிய வாத்தியமாகக் கொண்டு ஐங்கார நாதம் செய்தான் அர்ச் சுனன். ‘தேவர்கள் தங்கள் பகைவர்கள் யாவரும் தொலைந்தனர்’ என்றெண்ணி மகிழ்ந்தனர். மாதலி வெற்றி மிடுக்குடன் தேரை வானவருலகத்துத் தலைநகரை நோக்கிச் செலுத்தினான். தன் கட்டளைகளை நிறைவேற்றி அர்ச்சுனன் வெற்றி வாகை சூடி வருகிறான் என்று கேள்விப்பட்டான் இந்திரன்.

மாதலிக்கு வழிகாட்டிய சித்திரசேனன் தேர் வருவதற்கு முன்பே அமராபதிக்கு வந்து வெற்றிச் செய்திகளைக் கூறியிருந்தான். அதனால் விவரங்களை நன்கு அறிந்து கொண்டிருந்த இந்திரன் நகரெங்கும் சிறப்பான அலங்காரங்களைச் செய்யும்படி கட்டளையிட்டான். அர்ச்சுனனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கோலாகலமாகச் செய்து வைத்தான். தன்னாலும் வெல்ல முடியாதவர்களைத் தன் மகன் வென்று விட்டான் என்று அறிந்த போது அவன் உள்ளத்தில் ஏற்பட்ட பெருமிதமும் திருப்தியும் உவமை சொல்ல முடியாதவை. அமராபதியின் நகரெல்லையிலேயே எதிர்கொண்டு சென்று அர்ச்சுனனை வரவேற்றான். களிப்போடு அவனை மார்புறத் தழுவிக் கொண்டு தேவர்களின் சார்பாகப் பாராட்டினான். நன்றி செலுத்தினான். ஐராவதத்தில் அமரச் செய்து நகர்வலம் செய்தான். தோயமாபுரத்திலும் இரணிய நகரத்திலும் பகைவர்களை வென்ற நிகழ்ச்சிகளை ஆவல் தீரக் கேட்டு அறிந்தான்.

அர்ச்சுனன் இந்திரனோடு இவ்வாறு தங்கியிருக்கும் போது வனத்திலுள்ள தருமன் முதலிய தன் சகோதரர்களைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று அவனுக்கு. தன் விருப்பத்தை அவன் இந்திரனிடம் தெரிவித்தான். இந்திரனுக்குத் தன் மகனை அவ்வளவு விரைவில் பிரிய விரும்பவில்லை. இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கும் படி வற்புறுத்தினான். அர்ச்சுனனைப் பற்றிய செய்திகளை வனத்தில் வசித்து வரும் தருமன் முதலிய சகோதரர்களுக்குக் கூறி வருமாறு ‘உரோமேசர்’ என்னும் பெயரை உடைய தூதுவர் ஒருவர் இந்திரனால் அனுப்பப்பட்டார். அர்ச்சுனனும் இந்திரனுடைய விருப்பத்தை மறுக்க முடியாது. அங்கு தங்கியிருந்தான்.

5. வீமன் யாத்திரை

தீர்த்த யாத்திரைக்காக முன்பு ஒருமுறை அர்ச்சுனன் ‘பாண்டவர் ஐவர்’ என்ற தன்மை மாறித் தனியாக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றிருந்தான். இப்போதும் அதே போலத்தான் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகத் தவம் செய்யும் பொருட்டு அவர்களைப் பிரிந்து சென்றிருக்கிறான். ஆனால் தருமன் முதலியவர்கள் இன்றிருக்கும் நிலை வேறு. அன்றிருந்த நிலை வேறு. அன்று அரசும் அரசாட்சியுமாக இருந்ததனால் அர்ச்சுனனுடைய பிரிவு அவர்களை அதிகம் வருத்தவில்லை. இன்றோ காட்டில் தனிமை அவர்களுக்கு அவன் பிரிவை உணர்ந்து வருந்தும்படியான நிலையை அளித்திருந்தது. தங்களில் அறிவும் வலிமையும் அழகும் ஒருங்கமைந்த சகோதரன் ஒருவன் எங்கோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்டானே தவம் செய்வதற்காக! -என்றெண்ணிக் கலங்கினர். அவர்களுடைய கலக்கத்தைத் தணிப்பதற்கென்றே வந்தவர் போல இந்திரனால் அனுப்பப்பட்ட உரோமேசர் என்ற தூதர் அப்போது அங்கே வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததுமே அவர் ஏதோ நல்ல செய்தியைக் கூறுவதற்காகவே வந்திருக்க வேண்டுமென்று பாண்டவர்களும் திரெளபதியும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வயது மூத்தவராகவும் சான்றோராகவும் இருந்த அவரை அவர்கள் மரியாதையாக வணங்கி வரவேற்றனர். உரோமேசர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களுக்கு ஆசி கூறி அன்பு பாராட்டினார். பின்பு தாம் இந்திரனால் அனுப்பப்பட்ட செய்தியையும் அர்ச்சுனனைப் பற்றிய விவரங்களையும் கூறத் தொடங்கினார், தருமன் முதலிய சகோதரர்களும் திரெளபதியும் ஆவலோடு கேட்டனர். அர்ச்சுனன், நிவாதக்கவசர்களையும் காலகேயர்களையும் தன் ஆற்றலால் அழித்து வெற்றிக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்ட போது அவர்களுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. தேவர்களுக்கும் உதவி செய்யக் கூடிய அளவிற்குத் தன் தம்பியினுடைய வீரம் சிறந்தது என்று தருமன் இறும்பூது கொண்டான். உரோமேசர் பாண்டவர்களைப் பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடலாம் என்று கூறி யாத்திரையாக அழைத்துக் கொண்டு சென்றார். அப்படியே பாசுபதம் பெற அர்ச்சுனன் அமர்ந்து தவம் செய்த இடத்துக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். கைலாயமலையின் அடிவாரத்தில் அர்ச்சுனனை முகாசுரன் கொல்ல வந்தது, சிவபெருமானும் உமாதேவியும் வேடனும் வேட்டுவச்சியுமாக வந்து காத்தது, சிவபெருமான் சோதனைக்காக அர்ச்சுனனோடு போர் செய்தது, ஆகிய நிகழ்ச்சிகளை உரோமேசரிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள் தருமன் முதலியோர்.

தீர்த்தங்களையும் தலங்களையும் கண்டு பல இடங்களுக்குப் பிரயாணம் செய்த பின்னர் கைலாயமலைச் சிகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள காந்தருப்பம் என்ற மலைப்பகுதிக்கு வந்து தங்கினார்கள். இயற்கை வளமும் நல்வினைப்பயனும் மிகுந்த அந்த இடத்தில் அவர்களும் உரோமச முனிவரும் ஒரு வருஷ காலம் வசித்து வந்தனர். அவ்வாறிருக்கும்போது வீமன் தன்னுடைய வீரத்தை வெளிபடுத்தும்படியான வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஒரு நாள் திரெளபதி காந்தருப்ப மலைப்பகுதியிலிருந்த அழகிய பூம் பொழில் ஒன்றின் இடையே உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வானிலிருந்து பொன் போலும் நிறத்தை உடைய தாமரைப்பூ ஒன்று அவள் முன் விழுந்தது. கண்ணைக் கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்த மலரை அவள் கையில் எடுத்தாள். ஆர்வம் தீர நுகர்ந்து பார்த்தாள். அம் மாதிரி மலர்கள் பலவற்றைத் தன் கரங்களில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அந்த மலரை வீமனிடம் கொண்டு போய்க் காட்டினாள்.

“இது போல் அருமையான மலர்கள் சிலவற்றை நீங்கள் எனக்குக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?” -என்று வீமனைக் கேட்டாள். வீமன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான். ஆனால் அத்தகைய மலர்களை எங்கிருந்து பெறலாம் என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை. ‘உரோமேசருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்றெண்ணி அவரிடம் கொண்டு போய்க் காட்டினான்.

“அப்பா! இது தேவர்கோன் தன் முடியிலே அணியத்தகுதி வாய்ந்த பொற்றாமரைப்பூ. நிதியின் கிழவனாகிய குபேரனுடைய அளகாபுரியிலன்றி இம்மலர்கள் வேறெங்கும் கிடைப்பதில்லை. சாதாரண மனிதர்கள் முயன்று இம் மலரைக் கொண்டுவருவது இயலாது. ஒருக்கால் உன் போன்ற வீரனுக்கு எளிமையாக முடிந்தாலும் முடியலாம். முயன்று பார்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கூறினார். வீமன் துணிவோடு புறப்பட்டுவிட்டான். ஆயுதபாணியாகப் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறவனைப் போல அவன் சென்றான். திரெளபதிக்கு விரைவில் அந்த மலர்களைக் கொண்டு வந்து கொடுத்து அவளை மகிழச் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்பட்டு அவசரமாகப் புறப்பட்ட அவன் போகும் போது தருமனிடம் கூறி விடை பெற மறந்துவிட்டான்.

செல்லும் வழியில் கதலி வனம் என்ற ஓர் பெரிய வாழைக்காடு குறுக்கிட்டது. அந்த வனத்தின் ஒரு கோடியில் இராமபக்தனாகிய அனுமன் புலன்களை அடக்கி மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தவம் செய்து கொண்டிருந்தான். வீமனுக்கு இது தெரியாது. அந்த வனத்தின் வழியே போகும்போது சில அரக்கர்கள் வழி நடுவே அவனை எதிர்த்துப் போருக்கு வந்தனர். வீமன் சிறிதும் தயங்காமல் அவர்களோடு போர் செய்தான். சில நாழிகைப் போரிலேயே அந்த அரக்கர்கள் அழிவடைந்து தோற்றுப் போய்விட்டனர். அவர்களை வென்று தொலைத்த பெருமிதத்தால் மகிழ்ச்சியோடு வீமன் தன்னிடமிருந்த சங்கை எடுத்து வெற்றி முழக்கம் செய்தான். அவன் செய்த சங்கநாதத்தின் ஒலியால் அங்கே தவம் செய்து கொண்டிருந்த அனுமனின் தவம் கலைந்து விட்டது. தவம் கலைந்து சிறிது சினம் கொண்ட அனுமன் ஆத்திரத்தோடு எழுந்து வீமனுக்கு முன் வந்தான்.

வந்தவன் ‘வீமன் அஞ்சி நடுநடுங்க வேண்டும்’ -என்ற எண்ணம் கொண்டு தன்னுடைய விசுவரூபத் தோற்றத்தைக் காண்பித்தான். வானத்துக்கும் பூமிக்குமாக நிமிர்ந்து விளங்கிய அந்தப் பேருருவத்தைக் கண்டு வீமன் வியந்தான். தனக்கு முன் நிற்பவன் இராம பக்தனாகிய அனுமன் என்பது அப்போதுங்கூட அவனுக்குத் தெரியவில்லை. தைரியம் குறையாமல் தொடர்ந்து சங்கநாதமும் ஆரவாரமும் செய்தான் அவன். அனுமனுக்கு அளவற்ற சினம் உண்டாகிவிட்டது.

“அடே அற்பமனிதனே! தேவர்களும் அசுரர்களும் கூட இங்கே வரப் பயப்படுகிறார்கள்! திசைகள் எட்டையும் வெற்றி கொண்டு தனிப்பட்ட பெருமிதத்துடன் விளங்குகிறது இந்த வனம். துணிந்து இங்கே வந்தவன் நீ யாரடா?”

“நீ யார் என்பதை முதலிற் சொல் பின்பு அவசியமானால் நானும் சொல்கின்றேன்” -வீமன் திருப்பிக் கேட்டான். “அடே! இதோ உன் முன் விசுவரூபத்தைக் காட்டி நிற்கும் என்னைப் பார்த்தா நீ இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? உனக்கு எவ்வளவு திமிர்? தோள் வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? அல்லது வில்வலிமையினால் இப்படிக் கேட்கிறாயா? ஏ, பேதையே? உன் துணிவிற்குச் சரியான பாடம் கற்பிக்கின்றேன். உன் துணிவு மெய்யானால் என் வாலைக் கடந்து சென்றுவிடு பார்க்கலாம்!”

“ஏ! அறிவற்ற குரங்கே! என்ன உளறுகிறாய், இந்த உலகத்திலேயே என்னால் கடக்க முடியாத வால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இராம பக்தியிற் சிறந்தவனும் எனக்கு அண்ணன் முறை உடையவனுமாகிய அனுமனின் வால்தான். அந்த வாலைத்தான் நான் பணிந்து வணங்குவதற்குக் கடமைப்பட்டவன். உன் போன்றவர்களின் வாலைக் கடப்பதற்கு மட்டும் என்ன? அழித்தொழிப்பதற்குக் கூட என்னால் முடியும்.” அனுமன் வீமனுடைய அறியாமையை எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆயினும் இறுதிவரை தான் யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமலே வீமனுக்குத் தன் மேலிருக்கும் பக்தியைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.

அவன் முன்பிருந்த சினத்தை மறைத்துக் கொண்டு வீமனை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானான்: “அது சரி அப்பா! கேவலம் ஒரு மானிடனைத் தன் தோள்களில் ஏற்றிக் கொண்டு சுமந்து இழித்தொழிலைச் செய்தவன் அந்த அனுமன் தவம் செய்து உயர்நிலை பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கும் எனக்கு ஒப்பாக அந்தக் குரங்கை நீ கூறுகிறாயே! இது சிறிதாவது பொருந்துமா?”

வீமன் கலகலவென்று சிரித்தான். “மனிதனைச் சுமந்த அந்தக் குரங்கின் பெருமையைப் பற்றி உனக்குச் சொல்லுகிறேன் கேள். இலங்கையை அழித்தது அந்தக்குரங்கு தான். தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் பரம் பொருள்வதாரமாகிய இராமபிரானுக்கே பக்கபலமாக இருந்து வெற்றி நல்கியது அந்தக் குரங்குதான். அதையும் அதன் தலைவனையும் நீ சாதாரணமாக எண்ணி இகழ்வது உன்னுடைய பெரும் பேதைமையைத்தான் காட்டுகிறது” -வீமனின் பதிலைக் கேட்ட அனுமன் அப்படியே மார்புறத் தழுவிக் கொண்டான்.

எல்லாம் தெரிந்திருந்தாலும் வெளிக்குக் கேட்பது போல “நீ யார் அப்பா? என்ன காரியமாக இந்தப் பக்கம் வந்தாய்?” -என வீமனை நோக்கிக் கேட்டான். வீமன் தன்னைப் பற்றிய விவரங்களையும் தான் வந்த காரியத்தையும் கூறினான். ‘'நான் தான் அப்பா உன் அண்ணன் அனுமன். இதோ என் சுய உருவத்தைப் பார். இதுவரை உன் துணிவையும் எண்ணங்களையும் சோதித்துப் பார்ப்பதற்காக ஏதேதோ கூறினேன் அதை மனதிற்கொண்டு வருந்தாதே!” -என்று கூறினான். வீமன் உடனே நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அனுமனை வணங்சி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மீண்டும் அனுமனுடைய விசுவரூபத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்ளவே அனுமன் விசுவரூபமெடுத்துக் காட்டினான்.

“அண்ணா ! எங்களுக்கும் துரியோதனாதியருக்கும் ஒரு பெரும்போர் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அந்தப் போரில் உன்னுடைய உதவி எங்கள் பக்கத்துக்குக் கிடைக்க வேண்டும்.'’ வீமன் வேண்டிக் கொண்டான். அனுமன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கினான். குபேரனின் நகரமாகிய அளகாபுரிக்குச் செல்லுகின்ற வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் வீமன் அனுமனை வணங்கி விடை பெற்றுச் சென்றான். அளகை நகருக்குச் செல்லும் வழியில் வலிமை வாய்ந்த அரக்கன் ஒருவன் வீமனைத் தடை செய்தான். ‘புண்டரீகன்’ என்பது அவன் பெயர். நீண்ட நேரத்துப் போருக்குப் பின் வீமன் அவனைக் கொன்று வெற்றிக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். அளகாபுரியை அடைந்ததும் தான் எந்தப் பொற்றாமரை மலரைத்தேடி வந்தானோ அந்த மலர் கிடைக்கக்கூடிய சோலை இருக்கும் இடத்திற்குச் சென்றான். குபேரனுடைய ஏற்பாட்டின்படி அந்தச் சோலையை நூறாயிரம் அசுரர்கள் காவல் காத்து வந்தார்கள். சோலையை நெருங்குவதற்குள்ளேயே வீமன் வரவை அந்த அசுரர்கள் உணர்ந்துவிட்டார்கள். உடனே அவர்கள் பரபரப்படைந்து ஒன்றுகூடி அவனுக்கு முன் வந்து உள்ளே நுழைய விடாமல் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.

“தேவாதி தேவர்களைக் கூட இந்தச் சோலையைக் காணவோ இங்குள்ள மலர்களைப் பறிக்கவோ நாங்கள் அனுமதிப்பதில்லை. நீ யார்? அற்ப மானிடன் இங்கு எதற்காக வந்தாய்?” -அசுரர்கள் அவனை மருட்டினர். வீமனோ அவர்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்றான். “நீ மரியாதையாகப் போகிறாயா? அல்லது உன் உயிரைக் கொள்ளை கொள்ளும் முயற்சியில் நாங்கள் ஈடுபடட்டுமா?”

“அசுரர்களே! ஏன் இந்த வாய் முழக்கம்? இவற்றை எல்லாம் கேட்டுப் பயந்து ஓடுகிறவன் நான் இல்லை, இடி முழக்கம் போன்ற குரலில் அரட்டிவிட்டால் எதிரி பயந்து ஓடிவிடுவான் என்று நீங்கள் எண்ணுவீர்களாயின் அது அறியாமை. எப்படியும் இந்தச் சோலையிலுள்ள மலர்களில் எனக்குத் தேவையான ஒன்றைப் பறித்துக் கொண்டுதான் இங்கிருந்து போக வேண்டும் என்ற உறுதியோடு நான் வந்திருக்கிறேன். ஒருவன் மனிதனாக இருக்கிறான் என்பதனால் அரக்கர்களுக்குத் தோற்றழிந்து போக வேண்டும் என்பது என்ன உறுதி? இராவணன் முதலிய அசுரகுல மன்னர்களை வென்றவர்கள் சாதாரண மனிதர்கள் தாம் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும். நான் இதோ இப்போதே இங்கு உங்களோடு போர் செய்யத் தயார்” -அசுரர்களின் இடி முழக்கப் பேச்சுக்கு வீமன் மறு முழக்கம் செய்தான்.

அசுரர்கள் கோபத்தோடு கூட்டமாக வீமன் மேற் பாய்ந்தார்கள். வீமன் வில்லையும் கதாயுதத்தையும் மாறி மாறிப் பயன்படுத்தி அவர்களைத் திணறச் செய்தான். அவனுடைய முரட்டுப் போருக்கு முன்னால் ஆயிரக் கணக்கான அசுரர்களும் நிற்கமுடியாமல் திணறினர். அவனிடம் வீரத்தையும் போரிடுகின்ற வலிமையையும் இவ்வளவு எதிர்பார்க்காததனால் அவர்களிற் பெரும்பாலோர் இப்போது புறமுதுகிட்டு ஓடினர். எஞ்சிய சிலர் அழிந்து கொண்டிருந்தனர். தகவல் குபேரனுக்கு எட்டியது. அவன் திகைத்தான். திடுக்கிட்டான். தன் அவையிலிருந்த மகா வீரனாகிய ‘சங்கோடணன்’ என்பவனைக் கூப்பிட்டு, “அந்தச் சின்னஞ்சிறு மனிதனை அழித்துக் கொன்றுவிட்டு வெற்றியோடு வா!” என்று ஏவினான்.

அவன் தன்னைப்போலவே வலிமை மிகுந்தவர்களாகிய வேறு சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு வீமனைத் தாக்கினான். ஆனால் வீமனோ தன்னுடைய சாமர்த்தியமான போரினால் அவர்களை மூலைக்கு ஒருவராகக் சிதறி யோடும்படி செய்தான். கால் நாழிகைப் போருக்குள் சங்கோடணன் களைப்பும் மலைப்பும் அடைந்து மனத்தளர்ச்சி கொண்டு விட்டான். இறுதியில் அவனும் வீமனுக்குத் தோற்று, குபேரனை நோக்கி ஓடும்படியாக நேர்ந்தது.

“அரசே! அவன் சாதாரண மனிதன் இல்லை அளவிடற்கரிய வலிமை உடைய பெரு வீரன். அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அவனோடு பகைத்துக் கொள்ளாமல் நமக்கு நண்பனாக்கிக் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது” என்று தோற்றோடி வந்த சங்கோடணன் குபேரனை நோக்கி முறையிட்டுக் கொண்டான். குபேரன் உடனே தன் புதல்வன் உத்திரசேனனை அழைத்துப் பின்வருமாறு கட்டளையிட்டான்.

“மகாவீரனான அந்த அற்புத மனிதன் யார்? அவனைப் பார்த்து அவன் யாரென்று தெரிந்து கொண்டு வா ! இயலுமானால் அவன் கேட்கும் பொருளைக் கொடுத்து விட்டு வா!” தந்தையின் கட்டளைப்படி உத்திரசேனன் பூம்பொழில் சென்று அங்கு வந்திருக்கும் மனிதனைக் காணப் புறப்பட்டான். வீமன் வெற்றி வீரனாகப் பூம்பொழிலில் தனியே நின்று கொண்டிருந்தான்.

“அப்பா! நீ எவ்வுலகைச் சேர்ந்தவன்? எதற்காக இங்கே பலரைக் கொன்று அரும்பாடுபட்டுப் போர் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” உத்திரசேனன் அன்பும் கோபமும் கலந்த குரலில் வீமனை நோக்கிக் கேட்டான்.

உடனே வீமன், “என் பெயர் வீமன். நான் வாயுவின் புதல்வன். கண்ணபிரானுடைய மைத்துனன். இங்குள்ள தெய்வீகமலர் ஒன்று எனக்கு வேண்டும். அதைக் கொடுத்தால் நான் போய்விடுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறினான். உத்திரசேனன் அப்போதே வீமன் கேட்ட மலரைப் பறித்து அவனுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றான். மலர் பெற்ற வீமன் அங்குள்ள குளிர் பூந்தடாகம் ஒன்றில் அலுப்புத் தீர நீராடிவிட்டுக் களைப்புத் தீர அச்சோலையில் தங்கியிருந்தான். இஃது இவ்வாறிருக்க அங்கே வீமன் எங்கே போனான் என்று தெரியாத தருமன் கலக்கமுற்றுப் பல இடங்களிலும் தேடினான். பின்பு திரெளபதியை விசாரித்து அறிந்து கொண்டு அளகாபுரியில் வீமனுக்கு எவையேனும் தீமை நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சி வீமன் மகன் கடோற்கசனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.

வெற்றிப் பெருமிதத்தோடும் மலர் கிடைத்த மகிழ்ச்சியோடும் ஓய்வு கொண்டிருந்த வீமன் தன்னைத் தேடி வந்த தமையனையும் மகனையும் அன்போடு வரவேற்றான். தருமன் தன்னிடம் கூறாமல் வந்ததற்காக வீமனைக் கடிந்து கொண்டான். கடோற்கசன் அன்போடு தந்தையைப் பணிந்து ஆசி பெற்றான். பின்பு மூன்று பேருமாகச் சேர்ந்து காடு திரும்பினார்கள். வீமன் மலரை அன்புடன் திரெளபதிக்குக் கொடுத்தான். நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உரோமேசர் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

6. தீமையின் முடிவு

சகோதரர்கள் நால்வரும் திரெளபதியும் உரோமேசரும் வனத்தில் நலமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வனத்திற்கு அருகேயுள்ள வேறு சில வனங்களில் தவமுயற்சியில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் பலர் ஒருநாள் அவர்களைக் காண வந்தனர். தருமன் அந்த முனிவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுப் பேணினான். முனிவர்கள் கூறினர்;

“தருமா! நீ அறத்தின் காவலன்! சத்தியத்துக்குத் துணைவன். உன்னிடம் நாங்கள் ஓர் உதவியை நாடி வந்திருக்கிறோம். மறுக்காமல் நீ அந்த உதவியைச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் வசிக்கும் வனப்பகுதிகளில், கரடி, வேங்கை, யானை, சிங்கம் முதலிய பயங்கர மிருகங்கள் அடிக்கடி தொல்லை விளைவித்து வருகின்றன. அவைகளை வேட்டையாடி எங்களைப் பாதுகாக்கும் உதவியை உன்னிடம் கோருகிறோம்" முனிவர்களின் வேண்டுகோளைக் கேட்ட தருமன் வீமனை அழைத்து அவர்களுக்கு உதவி செய்து விட்டு வருமாறு பணித்தான். வீமன் வேட்டைக்குரிய படைக்கலங்களோடு முனிவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். வீமன் சென்ற சிறிது நேரத்தில் மற்ற இரு சகோதரர்களாகிய நகுல சகாதேவர்களும் மாலையுணவிற்குத் தேவையான காய்கனிகளைக் கொண்டு வருவதற்காகச் சென்று விட்டனர். தருமன் ஒரு மரத்தின் கீழ் எதோ சிந்தனையில் இலயித்துப் போய் வீற்றிருந்தான்.

திரெளபதி தனியே இருந்தாள். இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள வந்தவனைப் போலச் சடாசுரன் என்ற அசுரன் ஒருவன் அங்கே வந்தான். அவன் ஆகாயத்தில் வேகமாகப் பறக்கிற ஆற்றல் படைத்தவன். திடீரென்று பாய்ந்து திரெளபதியைப் பலாத்காரமாகத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு அவன் பறக்கத் தொடங்கினான். அந்த அரக்கனின் கொடிய கைகளில் சிக்குண்ட திரெளபதி பயந்து போய் அலறிக் கூச்சலிட்டாள். காடெல்லாம் எதிரொலித்த அந்தக் கூக்குரலின் ஒலியை நகுல், சகாதேவர்கள் கேட்டனர். குரல் திரெளபதியினுடையது என்று அறிந்து பதறி ஓடி வந்தனர். சடாசுரனை மேலே பறக்கவிடாமல் வழி மறித்துப் போரிட்டனர். அசுரன் தரையில் இறங்கித் திரெளபதியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நகுல சகாதேவர்களை எதிர்த்துப் போரிட்டான். போர் வெகுநேரம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முனிவர்களோடு சென்றிருந்த வீமன் அன்று வேட்டையாட முடிந்த மிருகங்களை வேட்டையாடி விட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் தொலைவில் வருகிறபோதே நகுல சகாதேவர்களும் சடாசுரனும் போரிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டுவிட்டான். நிலைமையை ஒருவாறு தானாகவே அனுமானித்துக் கொண்டு ஓங்கிய கதையும் கையுமாகச் சடாசுரனை நோக்கிப் பாய்ந்தான்.

“அடே! அவர்களை விட்டுவிடும். இதோ உனக்குத் தகுந்த ஆள் நான் போரிட வந்திருக்கின்றேன். என்னோடு போருக்கு வா?” சடாசுரன் வீமனுடைய அறைகூவலை ஏற்றுக் கொண்டு அவனுடன் போரிடுவதற்கு முன் வந்தான். ஒரு கையில் கதாயுதமும் மற்றொரு கையில் ஒரு பெரிய மரக்கிளையுமாக வீமன் அசுரனைத் தாக்கினான். அசுரன் ஒரு பெரிய மலைப்பாறையை எடுத்துக் கொண்டு வீமன் மேல் எறிந்து நசுக்க முயன்றான் போர் குரூரமாக நடந்தது. ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு இருவரும் மல்யுத்தம் செய்தார்கள். வீமன் அசுரனின் கைகளை ஒடிக்க முயன்றான். அசுரன் வீமனுடைய மார்பைப் பிளந்தெறிய முயன்றான். ஒருவருக்கொருவர் இளைத்தவர்களாகத் தோன்றவில்லை; இறுதியில் வீமன் அசுரனது உடலை மேலே தூக்கி இரண்டு கைகளாலும் பற்றிக் ‘கர கர‘ வென்று சுற்றி வானில் உயரத் தூக்கி எறிந்தான். கீழே விழுந்து சிதைந்த அசுரனின் உடல் பின்பு எழுந்திருக்கவுமில்லை; மூச்சு விடவுமில்லை. தீமையின் அந்த உரு நிரந்தரமாக அழிந்துவிட்டது.

வீமன் சகோதரர்களையும் திரெளபதியையும் அழைத்துக்கொண்டு வெற்றி முழக்கம் செய்தவாறே தமையன் இருப்பிடம் சென்றான். நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டுத் தருமன் வியந்தான். இதன் பின் சில நாட்களில் பாண்டவர்கள் அந்தக் காட்டிலிருந்து புறப்பட்டுக் கயிலாய மலையின் மற்றோர் பகுதியிலுள்ள பத்ரிநாராயணம் என்ற திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்றார்கள். தெய்வீக இயல்பும் தீர்த்த விசேஷமும் பொருந்திய பத்ரிநாராயணத்தில் சில தினங்கள் தங்கியிருந்த பிறகு, அங்கிருந்து சிறிது தொலைவில் இருந்த அஷ்டகோண முனிவர் அவர்களை வரவேற்றுத் தம்முடன் இருக்கச் செய்து கொண்டார். ஞானத்தைப் பெருக்கவல்ல நல்லுரைக் கதைகள் பலவற்றை அவர்கள் கேட்கும்படி கூறினார் முனிவர். நீண்ட காலம் பாண்டவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். வனவாசத் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் வரை கழிந்து விட்டிருந்தன.

ஒரு நாள் காலை திரெளபதி ரிஷிபத்தினிகளோடு வனத்திலுள்ள பொய்கையில் நீராடுவதற்காகச் சென்றாள். பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்போது முன்பொரு முறை கண்ட தெய்வீக மலரைப் போன்ற ஒரு மலர் நீரில் மிதந்து வரக் கண்டாள். முன்பு கண்ட பொற்றாமரை மலரைக் காட்டிலும் சிறந்த மணமும் நல்ல அமைப்பும் உடையதாக இருந்தது இம்மலர். பெண்களுக்கு மட்டும் ஒரு பொருளின் மேல் மனப்பற்று ஏற்பட்டு விடுமானால் அந்தப் பொருளை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். அடைந்தாலொழிய அந்தப் பற்றுத் தீராது. ஆசை பிறக்கும்போதே உறுதியும் பிறந்து விடுகின்றது அவர்களுக்கு. திரெளபதி மறுபடியும் வீமனை அணுகினாள். அவன் மறுக்க முடியாதபடி தன் ஆசையை வெளியிட்டாள். வீமன் மனம் நெகிழ்ந்து விட்டது. அன்பையெல்லாம் கொள்ளைக் கொண்ட பெண் கட்டளையிடுகிறாள். ஈரநெஞ்சுள்ளவன் மறுப்பதற்கு எப்படித் துணிவான்? மீண்டும் யாரிடமும் கூறாமல் அளகாபுரியை நோக்கிப் பிரயாணம் செய்தான்.

இப்போது அளகை நகரம் அவனுக்குக் கொல்லைப்புறத்து வீடு போல. யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் துணிவோடு அளகையிலுள்ள பூஞ்சோலையை நெருங்கினான். தனக்கு எதிரிகள் எவரும் இருக்கின்றனரோ என்று அந்த நகரத்தை நோக்கிக் கேட்கும் பாவனையில் சங்கை எடுத்து முழக்கம் செய்தான். நகரத்தையே கிடுகிடுக்கச் செய்த அந்தச் சங்கநாதம் அளகாபுரி முழுவதும் கேட்டது. பூஞ்சோலையைக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் முன்போலவே போருக்கு ஓடிவந்தனர். ஆனால் அருகில் நெருங்கி நிற்கின்ற ஆளைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப்பின்வாங்கினர். அவ்வாறு பின்வாங்கியவர்களில் ஒரு வித்தியாதரன் ஓடோடிச் சென்று குபேரனின் சேனாதிபதியாகிய மணிமான் என்பவனிடம் செய்தியைக் கூறினான். தன் வீரத்தின் மேல் தேவைக்கு மீறிய நம்பிக்கை உடையவன் மணிமான், குபேரனிடம் தெரிவிக்காமலே வந்திருக்கும் மனிதனைக் கொன்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன். மணிமானும் அவன் ஆணைக்குக் கீழ்ப்பட்ட எண்ணாயிரம் படைத் தலைவர்களுமாக வீமனை எதிர்த்துப் புறப்பட்டார்கள்.

அந்தப் படைத்தலைவர்களுள் துடுக்குத்தனம் நிறைந்தவனும் முரடனுமாகிய சலேந்திரன் என்பவன் வீமனைப் பார்த்து, “அடே நீ உயிரோடு இங்கிருந்து பிழைத்துப் போக முடியாது. இறந்து போகப் போவது உறுதி. இறந்து போவதற்கு முன்பாவது நீ யார் என்பதைக் கூறி விடு” என்று அகம்பாவத்தோடு கேட்டான். வீமன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். “ஓகோ! நான் யார் என்பது உங்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டதா? முன்பு ஒரு முறை நான் இங்கு வந்து வீரர்கள் பலரை ஒருவனாக நின்று வென்று எனக்கு வேண்டிய மலரைப் பெற்றுச் சென்றேனே. மறந்து விட்டதானால் இந்தச் சோலையைக் காவல் காக்கும் வீரர்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்” என்று வீமன் அவனுக்கு மறுமொழி கூறினான்.

வீமனுக்கும் படைத்தலைவர்களுக்கும் போர் தொடங்கியது. முன்னணியின் நின்ற சாதாரணமான படைத்தலைவர்கள் ஒவ்வொருவராக ஆற்றலிழந்து தளரவே, செய்தியறிந்து மணிமான் வீமனுடன் நேருக்கு நேர் போருக்காக வந்து நின்றான். கண் கட்டி வித்தை செய்வது போல் மாயையான பல ஏமாற்றுப் போர் முறைகளை நன்கு அறிந்தவனாகிய மணிமான் தன் சாமர்த்தியத்தை எல்லாம் வீமனுக்கு முன் காட்டினான். ஆனால் மணிமானின் அந்த அதியற்புத சாமர்த்தியங்களைக் கூட வீமன் விட்டு வைக்கவில்லை. வில்லும் அம்புமாகிய ஓரே கருவியைக் கொண்டு மணிமானின் உடம்பைச் சல்லடையாகத் துளைத்தான். கடைசியாக ஓர் அம்பு மணிமானின் உயிரையும் வாங்கி விட்டு அவனது வெற்றுடலைக் குருதி வெள்ளத்திற்கிடையே தள்ளியது. வீமன் முன் போலவே வெற்றி முழக்கம் செய்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் முன்பொரு சமயம் செய்தது போலவே வீமனைத் தேடிக் கொண்டு தருமன், கடோற்கசனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

தம்பியின் பேராற்றலால் குபேரனின் சேனாதிபதி இறந்து கிடப்பது கண்டு தருமன் மனம் வருந்தினான். “வீணாக ஒரு பெண்ணின் விருப்பத்தின் பொருட்டு அசட்டுத்தனமாகத் தேவர்களையெல்லாம் ஏன் பகைத்துக் கொள்கிறாய்?” என்று வீமனைக் கடிந்து கொண்டான்.

மணிமான் குபேரனுடைய சேனாதிபதி மட்டுமல்ல. குபேரனுக்கு ஆருயிர் நண்பனும் ஆவான். அவன் போரில் கொல்லப்பட்டான் என்ற செய்தி குபேரனுக்கு அறிவிக்கப் பட்டபோது அவன் வெகுண்டெழுந்தான். “இனியும் பொறுத்திருக்கமாட்டேன். என் ஆருயிர் நண்பனின் உயிரைப் பறித்துக் கொண்ட அந்த மனிதனைக் கொல்லாமல் திரும்பப் போவதில்லை” என்று வஞ்சினம் கூறியவாறு மலர் பொழிலுக்குப் புறப்பட்டு வந்தான் குபேரன். அவன் அவ்வாறு புறப்பட்டு வந்தபோது அவனுடைய மகன் உத்திரசேனன் சில காரணங்களைக் கூறித் தடுத்தான். அவன் ஏற்கனவே வீமனுக்கிருந்த வலிமையை நேரிற் கண்டு அறிந்தவன். ஆகையால் அவன் தடைக்குக் காரணமிருந்தது.

“அப்பா! இப்போது வந்திருக்கும் மானிடன் சாதாரணமானவன் அல்லன். முன்பு இந்திரர்களாக இருந்த ஐந்து பேர் சிவபெருமானுடைய திருவருளால் பாண்டவர்கள் என்ற பெயரில் மனிதர்களாகத் தோன்றியுள்ளனர், உலகில் நலம் பெருகச் செய்வது அவர்கள் கடமை. அவர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன் இந்திரனால் வெல்ல முடியாதவர்களை எல்லாம் வென்று தேவர்கோனுடன் சரியாசனத்தில் அமரும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். மற்றொருவனாகிய வீமனே இங்கு வந்துள்ளான். இதே வீமன் முன்பொருமுறை இங்கு வந்து ஆயிரக்கணக்கான பொழிற் காவலர்களை அழித்தொழித்தது நாமறிந்த செய்தி அல்லவா? மனிதர்களாக இருந்தாலும் தேவர்களை விடச் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் சிலர் உள்ளனர். அவர்களை நாம் அடக்கி ஒடுக்கிவிட முயல்வது தூணில் வலியச் சென்று முட்டிக் கொள்ளுவதைப் போல ஆகும். மகாவிஷ்ணு இராவணனைக் கொல்ல மனித உருவமே கொண்டிருந்தார். மகாபலியை அடக்குவதற்குக் கண்டோர் இகழும் குள்ளனாக வடிவம் கொண்டார். மனிதத் தோற்றத்தால் அந்தத் தோற்றத்திற்குள் பொருந்தியிருக்கும் வீரத்தைத் தாழ்வாக மதிக்கக் கூடாது. மேலும் மணிமான் இறந்ததற்கு வீமனுடைய கை வில் ஒன்று மட்டுமே காரணமல்ல. மணிமானுக்கு இருந்த சாபமும் ஒரு காரணமாகும். முனிவர் ஒருவருக்கு மணிமான் துன்பம் மளித்ததும் அதனால் சினம் கொண்ட அம்முனிவர், ‘தேவர்களுள் ஒருவனாகிய உனக்கு சாதாரண மனிதன் ஒருவனாலேயே சாவு ஏற்படும்’ என்று சாபம் அளித்ததும் உங்களுக்குத் தெரிந்த செய்திகள் தாமே? தந்தையே! மணிமான் இறந்தது பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். வீமனுடன் போர் செய்யும் எண்ணமும் வேண்டாம். அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்துச் சமாதானமாக அனுப்பி விடலாம். இவ்வாறு உத்திரசேனன் குபேரனுக்குக் கூறிய அறிவுரையை அவன் கேட்கவில்லை,

“உன் சொற்களை நான் கேட்கப் போவதில்லை. என் உயிருக்குயிரான நண்பன் மணிமானை எப்பொழுது கொன்றானோ அப்பொழுதே மணிமானைக் கொன்ற அந்த மானிடன் எனக்குக் கொடிய விரோதியாகி விட்டான். நான் அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்” என்று குபேரன் வீமனோடு போருக்குப் புறப்பட்டுவிட்டான். தன் முயற்சி பலிக்காமற் போனதனால் உத்திரசேனன் தன் தந்தையை அவன் போக்கிலேயே விட்டுவிட்டான். மலர் பொழிலின் வாயிலில் நின்று கொண்டிருந்த தருமன், வீமன், கடோற்கசன், ஆகிய மூவரும் தொலைவில் ஆரவாரத்தோடு எழுச்சி பெற்று வரும் குபேரனின் படைகளைக் கண்டனர். தருமனும் கடோற்க்சனும் திகைத்தனர். வீமனோ மறுபடியும் ஊக்கத்தோடு போருக்குத் தயாரானான்.

வெறுப்பும் சினமும் தவழத் தருமனுடைய விழிகள் அவனை நோக்கின. அந்த விழிகளின் கூரிய நோக்கைத் தாங்க முடியாமல் வீமன் தலை குனிந்தான். போருக்குச் செய்த யத்தனங்களையும் நிறுத்தினான். தருமன் தனக்குள் ஏதோ முடிவுக்கு வந்தவன் போலக் குபேரனுடைய படைகளுக்கு எதிரே சென்றான். ஆத்திரமும் மனக்கொதிப்புமாகக் கனல்கக்கும் விழிகளோடு வந்து கொண்டிருந்த குபேரனுக்கு முன் சென்று நின்று கொண்டு மலர்ந்த முகத்தோடு புன்முறுவல் செய்தவாறு அவனைக் கைகூப்பி வணங்கினான். குபேரன் ஒன்றும் புரியாமல் பதிலுக்கு வணங்கி விட்டுத் தயங்கி நின்றான்.

“குபேரா நீ சற்றே நின்று யான் கூறுவனவற்றைக் கேட்க வேண்டும். உன் சினம் தணிக. நீ அளகாபுரிக்குத் தலைவன். பேரரசன். பெருந்தன்மையுடையவன். என் தம்பி இளைஞன். அறியாதவன் ஏதோ தவறு செய்து விட்டான். மனத்தை வெறுப்புக் கொள்ளச் செய்யும்படியான செயல் ஏதும் நடந்துவிடவில்லை, நான் தருமன், என் மொழிகளை நீ மறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன். சிறியவனாகிய என் தம்பியை மன்னித்து இந்தப் போர் முயற்சியைக் கை விட்டுவிடு“ தருமன் உருக்கம் நிறைந்த குரலில் வேண்டிக் கொண்டான். குபேரனுக்கு மனம் இளகி விட்டது. உணர்ச்சி வசப்பட்டவனாகி அப்படியே தருமனை மார்புறத் தழுவிக் கொண்டான். போர் முயற்சியைக் கைவிட்டு விட்டு வீமனைத் தன் மனப்பூர்வமாக மன்னிப்பதற்கும் இணங்கிவிட்டான்.

தருமனும் வீமனும் குபேரனுடைய விருந்தினர் களாயினர். குபேரனின் அன்பின் மிகுதி அவர்களைக் களிப்பில் மூழ்கடித்தது. தான் சமீபத்தில் தேவர்கோன் தலைநகருக்குச் சென்றிருந்ததாகவும், அங்கே அர்ச்சுனன் நலமாக இருப்பதாகவும், அங்கே அவன் பெருமை பரவியிருப்பதாகவும், விரைவில் அவன் பாண்டவர்களைச் சந்திக்க மண்ணுலகிற்கு வருவான் என்றும் குபேரன் தருமனிடம் கூறினான். தருமன் தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான். தருமன், வீமன், கடோற்கசன் ஆகிய மூவரும் குபேரனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். குபேரன் அவர்களுக்குப் பல உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாக வழங்கினான்.

“விரைவில் உங்கள் சகோதரன் அர்ச்சுனன் உங்களோடு வந்து சேருவான். அதன் பின் உங்களுக்கிருந்த தீமைகளெல்லாம் அழிந்து நற்காலம் பிறக்கும். நீங்கள் ஐந்து பேரும் நலமாக வாழ்வீர்கள்” என்று குபேரன் வாழ்த்தினான். அவர்கள் மண்ணுலகை வந்தடைந்தனர். குபேரன் கூறியபடியே சில நாட்களில் அர்ச்சுனனும் வானுலகிலிருந்து அவர்களை வந்தடைந்தான். ஐவரும் ஒன்று கூடினர். கானகத்தில் வாழ்கின்ற வாழ்க்கையேயானாலும் எல்லோருமாக ஒன்று கூடி வாழ்கின்ற அந்த வாழ்கையில் தீமைகள் யாவும் அழிந்து நன்மைகள் யாவும் பெருகி விட்டாற் போன்ற ஒருவகை அமைதி நிலைத்திருந்தது.

7. தருமம் காத்தது!

காட்டில் பாண்டவர்கள் நலமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்பதை அறிந்த போது துரியோதனாதியர் உள்ளத்தில் பொறாமை கனன்றது. அவர்களை அப்படி நலமாக வாழவிடாமல் அடிக்கடி ஏதேனும் இடையூறுகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினர் துரியோதனாதியர். துருவாசர் என்று ஒரு முனிவர் மகாமுன் கோபி. எதற்கெடுத்தாலும் கொடிய சாபங்களைக் கொடுக்கக் கூடியவர். அந்த முனிவரையும் அவரோடு சேர்ந்த வேறு சில முனிவர்களையும், “காட்டில் போய்ப் பாண்டவர்களைச் சந்தியுங்கள்” என்று வழியனுப்பி வைத்தான் துரியோதனன். துருவாசரும் அவனுடைய சகாக்களும் பாண்டவர்களைக் காண்பதற்காகக் காட்டுக்கு வந்து சேர்ந்தனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐந்து பேரும் மிகவும் பயத்தோடு பக்தியும் விநயமும் கொண்டு துருவாசரை வரவேற்று வணங்கினார்கள். துருவாசர் பாண்டவர்களை நலம் விசாரித்து ஆசி கூறினார்.

அப்போது சரியான நடுப்பகல் நேரமாகியிருந்தது. துருவாசரும் அவரைச் சேர்ந்தவர்களும் வருவதற்கு முன்பே பாண்டவர்களும் திரெளபதியும் இருந்த உணவுப் பொருள்களை உண்டு முடித்துவிட்டு அட்சய பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்திருந்தனர்.

“பாண்டவர்களே! உங்களை இன்று சந்திக்க நேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சி. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து இன்று இங்கே உண்ணலாம் என்று இருக்கின்றோம். போய் நீராடிவிட்டு வருகின்றோம், உணவு தயாராக இருக்கட்டும்” என்று கூறிவிட்டு நீராடப் புறப்பட்டு விட்டனர் துர்வாசர் முதலியோர். பாண்டவர்கள் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்தனர். வேண்டுமென்றே தங்களுக்குச் சாபத்தைப் பெறுவிக்க வேண்டுமென்பதற்காகத் துரியோதனாதியர்கள் இந்தச் சூழ்ச்சியைச் செய்திருப்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. எப்போதுமே விரைவில் ஆத்திரத்தை அடைந்து விடக் கூடிய சுபாவத்தை உடையவனாகிய வீமன் இப்போதும் அதேபோற் சினமடைந்து ‘உடனே போய்த் துரியோதனாதியர்களைத் துவம்சம் செய்து விடுகிறேன்’ என்று கிளம்பி விட்டான். “நீ கூறுவதும் செய்யப் புகும் ஆத்திரமான செயலும் சிறிதளவும் நன்றாக இல்லை வீமா! முனிவர் உண்ண வருகிறேனென்று சொல்லிவிட்டு நீராடப் போயிருக்கும் போது நீ போருக்குப் புறப்படுவது அவருடைய கடுஞ் சாபத்தை வலுவில் அடையக் காரணமாகும்” என்று கூறி அர்ச்சுனன் வீமனைத் தடுத்தான்.

“எப்படியாவது துருவாசருக்கும் மற்றவர்களுக்கும் உணவு படைத்து ஆகவேண்டும். அதற்கான வழியைக் காண முயல்வோம்” என்றான் தருமன்.

“எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் உதவிக் காப்பவன் கண்ணபிரான். அவன் துணையையே இப்போதும் நாடுவோம்!” நகுலன் கூறினான்.

“ஆம்! அதுவே சரியான வழி, கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்கு அவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமும் கூட நமக்குக் கிடையாது, நாம் இருந்த இடத்திலிருந்தே மனத்திலே எண்ணினால் போதும். நமக்கு உதவ வந்து விடுவான் அவன்.” சகாதேவன் அதை ஆமோதித்தான்.

சகோதரர்கள் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருந்த போது வாட்டம் நிறைந்த முகத்தோடு திரெளபதி அங்கு வந்தாள். “இதோ! முனிவர் நீராடி விட்டு வந்து விடப் போகிறார். என்ன செய்யலாம்?” என்றாள். உடனே தருமன் நகுல சகாதேவர்களின் யோசனைப்படிக் கண்ணனை எண்ணி மனத்தில் தியானம் செய்தான். சிறிது நேரத்தில் எல்லாம் வல்ல மாயவனாகிய கண்ணபிரான் பாண்டவர்களுக்கு முன் தோன்றினான். ஐவரும் திரெளபதியும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது தாங்கள் துருவாசருக்கு உணவு படைக்க இயலாது திகைத்திருக்கும் நிலையைக் கூறி வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதவனைப் போலச் சிரித்துக் கொண்டே நின்ற அந்தப் பெருமான் அவர்கள் துன்பத்தை அப்போது தான் அறிந்து கொண்டவனைப் போல நடித்தான்.

“திரெளபதி! கதிரவன் உனக்கு அளித்திருக்கும் அக்ஷய பாத்திரத்தை இங்கே கொண்டு வா” என்று வேண்டினார் கண்ணபிரான். திரெளபதி கழுவிக் கவிழ்த்திருந்த அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வந்தாள். “நன்றாகப் பாத்திரத்தைப் பார்! அதில் ஏதாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதோ?” திரெளபதி பார்த்தாள். ஒரே ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை அப்படியே கண்ணனுக்கருகில் கொண்டு போய்க் காண்பித்தாள். கண்ணன் அந்த ஒரே ஒரு பருக்கையைக் கொடுக்குமாறு வாங்கிச் சாப்பிட்டான். திரெளபதியும் பாண்டவர்களும் கண்ணனின் அந்தச் செயலுக்குக் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.

“அம்மா ! திரெளபதி! துருவாசர் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்'’ என்று திரெளபதியை நோக்கிக் கூறினான். அவள் திகைத்தாள். எவருக்கும் எதுவும் புரியவில்லை. கண்ணன் உண்ட அந்த ஒரு சோற்றுப் பருக்கை துருவாசரது வயிற்றையும் அவர் கூட வந்தவர்கள் வயிறுகளையும் எப்படி நிறைத்திருக்கும் என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. மாயனாகிய கண்ணன் அதன் சூக்ஷமத்தை அவர்களுக்கு விளக்கினான். அதே சமயத்தில் துருவாசர் முதலியவர்கள் நிறைந்த வயிறும் மலர்ந்த முகமுமாக அங்கே வந்து சேர்ந்தனர். எல்லாம் சர்வாந்தர் யாமியாகிய கண்ணபிரானின் திருவிளையாடல் என்பதை முனிவர் புரிந்து கொண்டார். அவர் கண்ணனை வணங்கிவிட்டுப் பாண்டவர்களை நோக்கிக் கூறினார்;

“நீங்கள் இட்ட விருந்து நன்றாக இருந்தது. வயிறு நிறைய உண்டோம். உங்கள் நல்லுள்ளத்தைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.” பாண்டவர்கள் அவரை வணங்கினர். துருவாசர் தாம் காட்டிற்கு வரநேர்ந்த உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டார்.

“நேற்றிரவு அத்தினாபுரியில் துரியோதனனுடைய அரண்மனைக்கு விருந்துண்ணப் போயிருந்தேன். அவன் அன்போடு உபசரித்து விருந்திட்டான். அவன் என்னிடம் காட்டிய பணிவும் அன்பும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தன. அது எதற்காக என்று இப்போது புரிந்து கொண்டேன். விருந்துண்டு முடிந்ததும் “உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக்கேள்!” என்று அவனிடம் கூறினேன். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் ஏனையோருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணக் கூடியவனாகிய அந்தப் பேதை உடனே, “முனிவரே! இன்று நீங்கள் என்னிடம் விருந்தினராக வந்தது. போலவே நாளை பாண்டவர்களிடம் போய் விருந்தினராக அமைய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். ”அதனால் இங்கு உங்களைத் தேடி வந்தேன்.” முனிவர் தாம் வந்த காரணத்தைக் கூறி முடித்ததும் தருமன் அவரிடம் ஒரு வரம் வேண்டிக் கொண்டான்.

“துருவாசரே! துரியோதனாதியர்கள் இம்மாதிரிச் செய்து விட்டார்களே என்று அவர்கள் மேல் சினம் கொண்டு தாங்கள் சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாது என்பதே அடியேன் வேண்டுகோள். “துருவாசர் தருமனின் தன்னலமற்ற வேண்டுகோளைக் கேட்டு வியந்தார். தனக்கு நன்மை விளையாவிட்டாலும் பிறருக்குத் தீமை விளைந்தால் போதும் என்றெண்ணும் துரியோதனனின் மனப்பண்பையும், தனக்கு துன்பமே விளைந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை விளைய வேண்டும் என்று எண்ணும் தருமனின் மனப்பண்பையும் நினைத்துப் பார்த்தார் அவர். ஒன்று மடுவாகத் தாழ்ந்திருந்தது. மற்றொன்று மலையாக உயர்ந்திருந்தது. பின்பு துருவாசரும் கண்ணபிரானும் பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அவர்கள் பழையபடி கானகத்தில் கவலை மறந்து வாழலாயினர். அவ்வாறு வாழ்ந்து வரும் போது ஒரு நாள் திரெளபதி வனப்பகுதியில் உலாவி வரவேண்டும் என்ற ஆசையை அர்ச்சுனனிடம் தெரிவித்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய அர்ச்சுனன் அவளை அழைத்துக்கொண்டு காட்டில் உலாவுவதற்குச் சென்றான். உலவிக் கொண்டே வரும்போது வழியோரத்தில் தென்பட்ட ஒரு நெல்லி மரத்தைத் திரெளபதி கண்டாள். அந்த வளமான நெல்லி மரத்தில் ஒரே ஒரு நெல்லிக் கனி விளைந்து முற்றித்திரண்ட வடிவோடு தோன்றியது. அதைப் பறித்து உண்ணக் கருதி அர்ச்சுனனிடம் கேட்டாள் அவள்.

அவன் உடனே சிறிதும் சிந்திக்காமல் வில்லை வளைத்துக் குறிதவறாமல் ஓர் அம்பை அந்தக் கனியின் மேல் எய்து அதைக் கீழே வீழ்த்திவிட்டான். வில்லை நாணேற்றிய ஒலியையும் அம்பு கனியை வீழ்த்திய ஒலியையும் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள ஆசிரமங்களில் வசித்து வந்த முனிவர்கள் மனம் பதறி வெளிவந்தனர். அர்ச்சுனன் நெல்லிக்கனியைக் கீழே வீழ்த்தியிருப்பதையும் திரெளபதி அவனருகே குனிந்து கனியை எடுக்க முயன்று கொண்டிருப்பதையும் கண்ட அவர்கள் விரைவாக ஓடிவந்து திரெளபதியைத் தடுத்தனர்.

“ஐயோ! அர்ச்சுனா; என்ன காரியஞ் செய்து விட்டாய்? இந்த நெல்லிக் கனி மாபெரும் முனிவராகிய அமித்திரர் உண்ணுவதற்கு உரியது அல்லவா? திரெளபதியின் பேச்சைக் கேட்டுத் தீரவிசாரித்துக் கொள்ளாமல் இதை நீ மரத்திலிருந்து வீழ்த்திவிட்டாயே. அமித்திர முனிவர் இப்போது இந்தக் கனி கீழே விழுந்திருப்பதைக் கண்டால் கடுங்கோபம் கொண்டு விடுவாரே, என்றனர். அதனைக் கேட்டு அர்ச்சுனன் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து வருந்தினான். “எப்படியோ தவறு நேர்ந்து விட்டது, நமக்குப் பயமாயிருக்கிறது. கனியைக் கொண்டுப் போய் தருமனிடம் கொடுத்து என்ன பரிகாரம் தேடலாமென்று ஆலோசிக்கலாம்” என்று கனியுடனும் திரெளபதியுடனும் காட்டில் தாங்கள் வசிக்கும் இடத்துக்குத் திரும்பினான். அர்ச்சுனன் கனியைத் தன் கையில் கொடுத்து நடந்தவற்றைக் கூறியதும் தருமனுக்குச் சினம் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணம் தான் அந்தச் சினம் சினமாக இருந்தது. மறுகணம் அதுவே பொறுமையாக மாறிவிட்டது.

“காட்டில் அனாதைகளைப் போன்று வசிக்கின்ற துன்பம் போதாதென்று இந்தத் துன்பத்தையும் வேறு நீ கொண்டு வந்திருக்கிறாய்!” -என்று அர்ச்சுனனை நோக்கி வேதனைச் சிரிப்போடு கூறினார்.

“நமக்குள் வருந்துவது பின்பு இருக்கட்டும். அமித்திர முனிவர் மரத்தில் கனியைக் காணாமல் சினங்கொண்டு சாபம் கொடுப்பதற்குள் அவரைச் சந்தித்துப் பணிவோடு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடலாம்” என்றான் வீமன்.

“வேண்டாம். என் பொருட்டு எல்லோரும் முனிவரைச் சந்தித்து ஏன் அவருடைய கோபத்துக்கு ஆளாக வேண்டும்? நான் செய்த வினைக்கு நானே சென்று பயனை அனுபவிக்கிறேன்! உங்களுக்கு ஏன் வீணான கஷ்டம்?” என்று அர்ச்சுனன் வெறுப்பினால் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

“நீ பேசுவது சிறிதும் நன்றாயில்லை அர்ச்சுனா! உனக்கு மட்டும் முனிவர் சாபம் கொடுத்துவிட்டால் நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? வருகிற துன்பத்தை எல்லோருமே அனுபவிப்போமே?” -என்றான் தருமன். நகுலன் கூறினான்:

“என்ன போதாத வேளையோ தெரியவில்லை. நமக்குத் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. துருவாசர் திடீரென்று விருந்துக்கு வந்து கொடுத்த துன்பத்தைக் கூடத் தவிர்த்துவிட்டோம். இப்போது இந்தப் புதிய துன்பத்திலிருந்து தப்ப வழி தெரியவில்லை. முன்போலவே கண்ணபிரானைத் தியானம் செய்வோம். அவன் வந்து உதவினால்தான் இத்துன்பம் தீரும் போலும்.”

“இப்படிச் செய்தால் என்ன? அமித்திர முனிவர் மரத்திலிருந்து கனி வீழ்த்தப்பட்டிருப்பதை அறிந்து நம்மைச் சபிப்பதற்கு முன்னால் நாமே ஓடிச்சென்று கனியை அவர் முன்பு வைத்து வணங்கி மன்னிப்புப் பெற்றுவிட்டால் ஒரு துன்பமுமில்லையே?” -சகாதேவன் கூறினான்.

“எல்லாம் என் ஆசையால் வந்த தீவினை. நான் அந்தக் கனியைக் கேட்டிருக்கவில்லை என்றால் இவ்வளவு துன்பமும் ஏற்பட்டிருக்காது” என்று தன்னை நொந்து கொண்டாள் திரெளபதி.

கண்ணபிரானை அழைத்து உதவி வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தோன்றவே தருமன் கருணைக் கடலான கண்ணபிரானை எண்ணினான். எண்ணிய அளவில் அடியார் முன் தோன்றித் துயர் தீர்க்கும் அப்பெருமான் உடன் தோன்றினான். பாண்டவர்கள் அவனை வணங்கிப் பணிவோடு தங்கள் நிலையைக் கூறினார்கள். “இப்போது என் உதவியைக் காட்டிலும் உங்கள் சொந்த தருமம் தான் உங்களைக் காக்க வேண்டும். நீங்கள் ஐவரும் திரெளபதியும் உங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைச் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டால் இந்தக் கனி ஒருவேளை தான்

முன்பிருந்த கிளையில் போய்ப் பொருந்திக் கொண்டாலும் பொருந்திக் கொள்ளும். அதைச் செய்யுங்கள்” -என்றான் கண்ணபிரான். பாண்டவர்களும் திரெளபதியும் கண்ணபிரானும் நெல்லிக்கனியை எடுத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்றனர். கனியைக் கீழே வைத்துவிட்டு அவரவர்களுடைய மனத்தில் இருந்ததைச் சத்தியத்திற்குப் புறம்பாகாதபடி கூறலாயினர்.

“சத்தியமும் மெய்ம்மையுமே உலகில் நிலைத்து வாழக்கூடியவை. மற்றவை எல்லாம் அழிவனவே” என்றான் தருமன்.

“பிறன் மனைவியை விரும்பல் பெருந்தீமை. பிறரை வருத்தாமல் அவர்க்கு உதவுவது பண்பு” என்றான் வீமன்.

“மானத்தைக் காப்பது தான் வாழ்வு. உடல், உயிர் எல்லாம் அழிந்தாலும் அழியவிடக்கூடாதது மானம்” -என்றான் அர்ச்சுனன்.

“உலகில் மதிக்கத்தக்க பொருள் கலைகளாலும் கல்வியாலும் ஏற்படக்கூடிய ஞானமே” -என்றான் நகுலன்.

“சத்தியத்தைத் தாயாகவும், அறிவைத் தந்தையாகவும் தருமத்தைச் சகோதரனாகவும், சாந்தத்தை மனைவியாகவும், பொறுமையைப் புதல்வனாகவும் கொண்டு வாழ்வதே வாழ்வென்று கருதுகின்றேன் நான்” -என்றான் சகாதேவன்

“பெண்ணுக்கு ஆடவர்களின் மேல் ஏற்படக்கூடிய ஆசை அடக்க முடியாதது. எல்லாத் தகுதியும் பெற்ற பாண்டவர்கள் கணவராக வாய்த்தும் என் மனம் வேறொருவனை அடிக்கடி நாடுகிறது. மங்கையர்கள் கற்பு, கணவனாக அமைபவனைப் பொறுத்ததாகும். அது ஒரு உறுதியான பண்பென்று தோன்றவில்லை” என்று திரெளபதி தன் உள்ளத்தில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

இவர்கள் ஆறு பேரும் இவ்வாறு கூறி முடித்தபோது தரையில் இருந்த நெல்லிக் கனியைக் காணவில்லை. ஆச்சரியத்தோடு திகைத்துச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். கண்ணபிரான் சிரித்துக் கொண்டே நெல்லி மரத்தின் கிளையைச் சுட்டிக் காட்டினான் என்ன விந்தை? அர்ச்சுனன் எந்த இடத்திலிருந்து அந்தக் கனியை வீழ்த்தினானோ அந்த இடத்தில் அதே காம்பில் அது பொருந்தித் தொங்கிக் கொண்டிருந்தது. தங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு வழி கூறியருளினதற்காகக் கண்ணபிரானுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்தினார்கள் பாண்டவர்கள். “என் உதவி ஒன்றும் இதில் கலந்துவிடவில்லை. உங்கள் தருமத்தாலும் சத்தியத்தாலும் உங்களை நீங்களே காத்துக் கொண்டீர்கள். வழி கூறிய பெருமை மட்டுமே எனக்கு உண்டு” என்றான் கண்ணன்.

8. மாண்டவர் மீண்டனர்

நெல்லிக்கனிச் சம்பவத்திற்குப் பின் பாண்டவர்கள் அஷ்டகோண முனிவருடைய வனத்தில் அதிக நாட்கள் தங்கியிருக்கவில்லை. அங்கிருந்து புறப்பட்டுச் சென்று ‘விஷ்ணு சித்த முனிவர்’ என்ற வேறோர் முனிவர் வசித்து வந்த காட்டை அடைந்து தங்கினர். இவர்கள் இது விஷ்ணு சித்த முனிவரின் வனத்தில் தங்கியிருப்பது எப்படியோ துரியோதனாதியர்களுக்குத் தெரிந்து விட்டது. இந்த வனத்திலிருந்து உயிரோடு மீளாமல் பாண்டவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் திட்டத்தோடு வேலை செய்தனர். பல வேள்விகளைச் செய்து நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலுடையவரான காள மாமுனிவர் என்ற முனிவரைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தான் துரியோதனன், பல நாட்கள் இடைவிடாமல் அவரை வழிபாடு செய்து போற்றி உபசரித்தான். திடீரென்று தன்னை அழைத்து வந்து எதற்காக இவ்வளவு பெரிய உபசாரங்களை எல்லாம் செய்கிறான்? என்று விளங்காமல் திகைத்தார் முனிவர். துரியோதனன் மனக்கருத்தை அவர் கண்டாரா? பாவம்! மனம் மகிழ்ந்தார். சகுனியின் மூலமாகத் துரியோதனன் அவரிடம் ஒரு வரம் கேட்டான்.

சகுனி முனிவரிடம், “முனிவர் பெருமானே! துரியோதனனுடைய விரோதிகளை அழிப்பதற்கு நீங்கள் உங்கள் தவ வலிமையினால் உதவவேண்டும்” என்று குறிப்பை மறைத்துக் கொண்டு நல்லது போலக் கேட்டான். விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத முனிவர் தமக்கிருந்த மனமகிழ்ச்சியில், “நல்லது துரியோதன்னுடைய பகைவர்கள் எவராக இருந்தாலும் என் உதவியால் நான் அவர்களை ஒழிக்க இணங்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டார்.

உடனே சகுனி, “முனிவரே! அந்த விரோதிகள் வேறெவரும் இல்லை. பாண்டவர்கள் தாம். அவர்களைக் கொல்வதற்காக நீங்கள் ஓர் யாகம் செய்ய வேண்டும்” என்றான். முனிவர் திடுக்கிட்டார். துரியோதனனுடைய வஞ்சகம் அப்போது தான் விளங்கியது. ‘குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல இவனிடம் வாக்களித்து அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே’ என்று கலங்கியது அவருடைய தூய உள்ளம் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் வழியில்லை. பாண்டவர்களைப் பற்றிய நல்லெண்ணமும் நல்ல நோக்கமும் உடையவராகிய அந்த முனிவர் விதியின் கொடுமையை எண்ணி மனம் புழுங்கினார்.

சகுனியின் வேண்டுகோளை எப்படியாவது மறுத்து விடலாம் என்றெண்ணி “அப்பா! தயவு செய்து வேறு ஏதாவது ஒரு வரம் கேள் நான் பாண்டவர்களை அழிக்க வேள்வி செய்தால் என் புண்ணியமும் தருமமும் ஆகிய யாவும் அழிந்து போய்விடும். நல்லதை எண்ணுங்கள்! நல்லதைக் கேளுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்” என்று உருக்கமாகக் கூறினார். துரியோதனனும் சகுனியும் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டார்கள். அதோடு கூறியதையே மீண்டும் கூறி வற்புறுத்தினார்கள். “நீங்கள் வாக்குக் கொடுத்துவிட்டீர்கள், இனி மாறக் கூடாது. எங்கள் விருப்பப்படியே பாண்டவர்களைக் கொன்று தொலைப்பதற்கு யாகம் செய்தே தீரவேண்டும் என்று முரண்டினார்கள். காளமா முனிவர் மறுப்பதற்கு வழியில்லாமல் இருதலைக் கொள்ளி எறும்புப் போல் திண்டாடினார். பாண்டவர்கள் மேலுள்ள அன்பு ‘வேள்வி செய்யாதே’ என்று தடுத்தது. துரியோதனாதியர்க்குக் கொடுத்த வாக்கு ‘வேள்வி செய்’ என்று வற்புறுத்தியது.

கடைசியில் விதியின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேள்வி செய்ய இணங்கினார். அந்தத் தீய வேள்விக்குரிய பொருள்களை எல்லாம் துரியோதனன் அவருக்குக் கொடுத்தான். கள்ளி மரங்களும் எட்டி மரங்களும் மற்றும் பல வாடிய மரங்களுமாகச் சூழ்ந்து நின்ற பயங்கரமானதோர் காட்டுப் பகுதியில் அந்தப் பயங்கரமான யாகத்தைச் செய்யத் தொடங்கினார் முனிவர். ஏராளமான பலிகளையும் பொருள்களையும் தீயிலே இட்டுத் துர்மந்திரங்களைக் கூறித் தொடர்ந்து வேள்வியைச் செய்தார். வானளாவி வளர்ந்த வேள்வியின் தீக்கொழுந்துகளில் இருந்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாகத் தோற்றமுடைய ஒரு பெரும் பூதம் தோன்றியது. கோரமான கடைவாய்ப் பற்களும் குரூரமான செவ்விழிகளும் பாறை போன்ற செவிகளுமாகத் தோன்றிய அந்தப் பூதத்தைக் கண்டு காளமா முனிவருக்கே சதை ஆடியது. எலும்புக் குருத்துக்களுக்குள்ளே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல் இருந்தது.

“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுக” என்று இடி முழக்கம் போன்ற குரலில் அண்டகடாட்சங்கள் எல்லாம் எதிரொலிக் கும்படியாகப் பூதம் முனிவரைக் கேட்டது.

“ஏ பூதமே! நீ போய்ப் பாண்டவர்கள் ஐவரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொன்று தொலைத்து விட்டு வா.”

“நல்லது முனிவரே! ஆனால் ஒரு நிபந்தனை. பாண்டவர்கள் கொல்வதற்கு அகப்படவில்லையாயின் என்னை அழைத்து என் நேரத்தை வீணாக்கிய உன்னையே திரும்பி வந்து கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றது பூதம். பூதம் கிளம்புவதற்கு முன்பே பாண்டவர்கள் உயிரைக் காப்பதற்கு வேறு ஒரு தேவன் கிளம்பி விட்டான். அவனே எமன். எமதருமன், தருமனுக்குத் தந்தை அல்லவா? பாண்டவர்களுக்கு எதிராக துர்வேள்வி நடப்பதை அறிந்து அவர்களைக் காக்க உறுதி பூண்டு மண்ணுலகுக்கு வந்தான். கொல்லும் தொழிலுடையவன் காக்கப் புறப்பட்டால் அது எவ்வளவு பெரிய விந்தையாக இருக்க வேண்டும்! பாண்டவர்களை உயிர் பெற்று வாழச் செய்வதற்கென்றே நிகழ்ந்தவை போலச் சில நிகழ்ச்சிகள் அவர்கள் வசித்த காட்டில் நிகழ்ந்தன. அந்தக் காட்டில் வசித்து வந்த முனிவர் ஒருவருடைய புதல்வன் தான் அணிந்து கொள்வதற்காகப் பூணூலையும் மான் தோலையும் எடுத்து ஆசிரமத்திற்குள் வைத்திருந்தான். எங்கிருந்தோ நால்காற் பாய்ச்சலில் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று அவன் எடுத்து வைத்திருந்த மான் தோலையும், பூணுலையும் வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பயந்து போன முனிவரின் புதல்வன் அங்கிருந்த பாண்டவர்களிடம் வந்து தன் மான் தோலையும் பூணூலையும் மானிடமிருந்து மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டான்.

மான் ஒருவரால் பிடிக்க முடியாத வேகத்தில் தலைதெறித்து விடுவது போல ஓடிக் கொண்டிருந்ததனால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒவ்வொருவராக அதைப் பின்பற்றித் துரத்திக் கொண்டு ஓடினார்கள். மான் அலுக்காமல் சலிக்காமல் வெகு தொலைவு ஓடியது. பாண்டவர்களும் விடாமல் பின்பற்றி ஓடினார்கள். ஓடஓடக் கால் நரம்புகள் விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கின. இறுதியில் மான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. ஏமாற்றமும் உடற்சோர்வுமாகச் சகோதரர்கள் ஐவரும் களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். வாய் வறண்டு தாகம் எடுத்தது. உயிரே போய் விடுவது போலத் தாகம் தொண்டையைக் கசக்கிப் பிழிந்தது. ஐந்து பேரும் நீர் வேட்கையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இதே நேரத்தில் அவர்கள் சோர்ந்து விழுந்திருந்த இடத்திற்கு அருகில் எமனுடைய அருளால் ஒரு பெரிய நச்சுக்குளம் (உண்டவர்களை இறக்கச் செய்யும் நீரை உடையது) தோன்றியது. அதன் கரையில் அடர்ந்த பசுமையான மரக்கூட்டங்களும் தோன்றின. பாண்டவர்களைப் பூதத்தினிடமிருந்து காப்பாற்றுவதற்கு எமன் செய்த ஏற்பாடுகள் இவை.

நீர் வேட்கையைப் பொறுக்க முடியாத தருமன் சகாதேவனை நோக்கி, “தம்பீ! அருகிலே ஏதாவது குளமிருந்தால் சென்று நீயும் தண்ணீர் பருகிவிட்டு எங்களுக்கும் இலைத் தொன்னையில் தண்ணீர் கொண்டு வா!” என்று கூறினான். சகாதேவன் புறப்பட்டான். அங்கும் இங்கும் சுற்றிய பிறகு எமன் போலியாக உண்டாக்கிய நச்சுக்குளம் அவன் கண்களில் தென்பட்டது. வேகமாகச் சென்று. அதில் இறங்கி நீரைக் கைகள் கொண்ட மட்டும் அள்ளிப் பருகினான். பருகி விட்டு அருகிலிருந்த மரத்தில் தொன்னை செய்ய இலை பறிப்பதற்காக இரண்டடி நடந்தவன் அப்படியே வயிற்றைப் பிடித்தவாறே கரை மேலே சுருண்டு விழுந்தான். நீரிலிருந்த நஞ்சு தன் வேலையைச் செய்துவிட்டது. சகாதேவன் போய் வெகு நேரமாகியும் திரும்பாததைக் கண்டு ஐயுற்ற தருமன் நகுலனை அனுப்பினான். அவனும் இதே குளத்தில் வந்து நீரைப் பருகிவிட்டுச் சகாதேவனுக்கு அருகில் இறந்து வீழ்ந்தான். அடுத்து அர்ச்சுனன் வந்தான். அவனும் அறியாமல் நீரைப் பருகி மாண்டு விழுந்தான்.

நான்காம் முறையாக வீமன் வந்தான். கரையில் இறந்து விழுந்து கிடக்கும் தன் சகோதரர்கள் மூவரையும் கண்டவுடன் அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பொய்கை நீரில் ஏதோ தீமை இருக்கிறது என்று அனுமானித்துக் கொண்டான். எனினும் தண்ணீர்த் தாகத்தை அவனால் அடக்க முடியவில்லை. தனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூடத் தன்னை அடுத்து வருகின்ற தருமனுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றெண்ணிக் கொண்டு “இந்தக் குளத்திலுள்ள நீர் நச்சு நீர். இதைக் குடிக்க வேண்டாம்” -என்று குளக்கரை மணற்பரப்பில் எழுதினான். பின்பு நீரைக் குடித்து அவனும். மாண்டு வீழ்ந்தான். சகோதரர்கள் நான்கு பேரும் திரும்பி வராதது கண்டு தருமன் எழுந்து தள்ளாடித் தள்ளாடி நடந்தான். சிறிது தொலைவு நடந்ததும் சோர்வு மிகுதியாகவே ஒரு சந்தன மரத்தின் அடியில் உணர்வற்று மயங்கி வீழ்ந்து விட்டான். அவன் மயங்கி வீழ்ந்த அதே சமயத்தில் காளமா முனிவரால் அனுப்பப்பட்ட பூதம் அங்கு வந்தது. தருமன் மட்டும் தனியாக வீழ்ந்து கிடப்பதைக் கண்டது. முனிவர் ஐந்து பேரையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொல்ல வேண்டும் என்று கூறியிருந்ததனால் மற்ற நான்கு பேரையும் தேடிச் சுற்றியது. நச்சுக் குளத்தின் கரையில் மற்றச் சகோதரர்கள் நால்வரும் இறந்து கிடப்பதைக் கண்டு அதற்கு காளமா முனிவர் மேல் கடுங்கோபம் வந்துவிட்டது.

“கேவலம்! செத்துப் போனவர்களைக் கொல்வதற்காகவா என்னை அந்த முனிவன் அனுப்பினான். உடனே போய் அவனைக் கொல்கிறேன் பார்” -என்று வேகமாகத் திரும்பியது அது. காளமா முனிவர் பூதம் கோபாவேசமாகத் திரும்பி வருவதைக் கண்டு நடுநடுங்கி ஓட முயன்றார். பூதம் அவரை ஓட விடவில்லை. இறுக்கிப் பிடித்துக் கொண்டது. “ஏ! போலி முனிவனே! செத்தவர்களைக் கொல்லவா என்னை அனுப்பினாய்? நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய்! உன்னை என்ன செய்கிறேன் பார் , இப்போது” -என்று கூறிக்கொண்டே அவரைத் திரிசூலாயுதத்தினால் கிழித்துக் கொன்று விட்டது. கொன்றபின் அருகிலிருந்த யாக குண்டத்தில் தீ வழியே தான் தோன்றியது போலவே புகுந்து மறைந்துவிட்டது.

காட்டில் சந்தன மரத்தடியில் மயங்கி விழுந்திருந்த தருமன் குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதனால் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். ஞானமந்திரத்தை உச்சரித்து உடலில் வலுவேற்றிக் கொண்டான். தெம்பு தோன்றியதும் எழுந்து நடந்தான். நச்சுக் குளக்கரைக்குச் சென்று சகோதரர்கள் இறந்து கிடந்ததையும் மணலில் எழுதியிருக்கும் எழுத்துக்களையும் கண்டான். எழுதியிருந்ததைப் படித்தவுடன் அந்த நீரைக் குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். சிறிது நேரம் யோசித்துப் பார்த்ததில், “சகோதரர்கள் எல்லோரும் இறந்த பின் நாம் மட்டும் உயிர் வாழ்வானேன்? இந்த நச்சுப் பொய்கை நீரைக் குடித்து நாமும் உயிரை விட்டுவிட்டால் என்ன?” -என்று தோன்றியது. விநாடிக்கு விநாடி சிந்தனை வளர்ந்தது. சிந்தனை வளர வளர உயிரை விட்டு விடுவதே மேல் என்று தோன்றியது. இந்தத் தீர்மானத்தோடு நீரை அள்ளிப் பருகுவதற்காகக் குளத்தில் இறங்கினான் தருமன்.

“நில் ! இறங்காதே” -தருமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குரல் பெரிதாகக் கேட்டது. ஆனால் குரலுக்குரியவர் யார்? எங்கிருக்கிறார்? என்றே தெரியவில்லை. மீண்டும் ‘வீண் பிரமை’ என்று எண்ணிக் கொண்டு இறங்கினான். “நான் சொல்வது கேட்கவில்லை? இறங்கி நீரைக் குடித்தால் இறந்து போவாய் நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். அவைகட்குப் பதில் கூறினால் இறந்து கிடப்பவர்களை உயிர் மீட்டுத் தருவேன். பதில் சொல்வாயா?”

“ஆகா! தாராளமாகப் பதில் கூறுகிறேன். கேள்!” -தருமன் மகிழ்ச்சியோடு இணங்கினான். உருவமில்லாத அந்தக்குரல் கேட்டது.

“நூல்களில் பெரியது எது?”

“அரிய மெய்ச்சுருதி”

“இல்லறத்தை நடத்த அவசியமான பொருள் எது?”

“நல்ல மனைவி”

“மாலைகளில் மணமிக்கது எது?”

“வண்சாதி மாலை”

“போற்றத்தக்க தவம் என்ன?"

“தத்தம் குல ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது”

“முனிவர்குலம் எல்லாம் வணங்கக்கூடிய கடவுள் யார்?”

“திருத்துழாய் மாலையணியும் முகுந்தன்”

“நங்கையர்க்கு இயல்பான குணம் யாது?”

“நாணம்.”

“பொருள் மிகுந்த செல்வர்களுக்கு பாதுகாப்பு என்ன?”

“தானம்.”

“இரண்டு செவிகளுக்கும் இனியவை யாவை?”

“குழந்தைகளின் மழலை மொழிகள்.”

“நிலைத்து நிற்பது எது?”