சைவ சித்தாந்த ஞான விளையாட்டு

கலாநிதி வ. பொன்னையா


சைவ சித்தாந்த ஞான விளையாட்டு

ஆசிரியன்:
கலாநிதி வ. பொன்னையா
கொக்குவில், இலங்கை.

தை - 1963.

----------------------------------------


சைவ சித்தாந்த ஞான விளையாட்டு

நூலாசிரியன்:
கலாநிதி வ. பொன்னையா
கொக்குவில், இலங்கை.

சிறீ லங்கா அச்சகம்
யாழ்ப்பாணம்
1963

உரிமைப்பதிவு
விலை சதம் 35

-----------------------------------------

முன்னுரை

இவ்வுலகத்தில் மக்களிடையே இலட்சியவாதிகள் தோன்றி மக்களை ஒருவரோடொருவர் மாறுபடுமாறு ஒன்றுக்கொன்று முரணான இலட்சியங்களைக் கொடுத்துப் பல்வேறு இனங்களாகப் பிரித்து நிற்கின்றனர். ஒரு மதத்தைப் போற்றுவோன் மற்றை மதங்களைக் கற்காது அம்மதத்தினரை நிந்திக்கின்றனன். இதுவேண்டற் பாற்றன்று. உயிரினும் மதம் பெரிதாகாது. எல்லாவுயிர்களுங் கடைத்தேறல் வேண்டும் என்பது மக்கள் எல்லார்க்குங் குறிக்கோளாயிருத்தல் நன்று. உடனலனுக்குப் பந்தாட்டங் கண்டுபிடிக்கப்பட்டது. புத்திப்பயிற்சிக்கு விஞ்ஞானக் கல்வி தரப்பட்டுள்ளது. ஆத்மலாபத்திற்குச் சைவசிந்தாந்த விளையாட்டு முதலியன காணப்பட்டுள்ளன. எவ்வாறு பந்தாட்டமும் விஞ்ஞானமும் மக்கள் எல்லாராலும் பேணப்படுகின்றனவோ, அவ்வாறே சைவசிந்தாத்த விளையாட்டுக்களுஞ் சாதிமத பேதம் யாதுமின்றி எல்லா மக்களாலும் ஓம்பப்படத்தக்கவை என்பது எனது துணிபு. இந்நூலை கற்போர்க்கு இது புலனாகும்.

பரிவே சொரூபமாகிய கொழும்புத்துறை யோகசுவாமி என்பாரோடு சென்ற நாற்பது ஆண்டுகளாகப் பழகிய பழக்கத்தின் பயனாக யான் அறிந்தவற்றைப் பிறருக்கு அறிவுறுத்தும் பொருட்டு இந்நூலை இயற்றியுள்ளேன். உபநிடதக் கருத்துக்களும் ஆகம முடிபுகளும் இந்நூல் முழுவதிலுஞ் செறிந்து காணப்படும். உபதேசத்தாற் பெறப்பாலனவே இந்நூலில் உள்ளன. இது சைவசித்தாந்தக் கைநூலாகுமொழிய விரிநூலாகாது. கூடுதலான அறிவு பெறவிழைவோர் சிவஞானபோத மாபாடியத்தையுஞ் சைவாகமங்களையும் உபநிடதங்களையுங் கற்றல் வேண்டும்.

இந்நூலை வெளியாக்க உடன்பட்ட சிறி லங்கா புத்தகசாலை அதிபருக்கு எனது நன்றி உரித்தாகுக.

வ. பொன்னையா
கொக்குவில், இலங்கை

1-1-63

--------------------------------------------


சிவமயம்

சைவசித்தாந்த ஞான விளையாட்டு


ஆசிரியர் வழிபாடு

சும்மா விருவொரு பொல்லாப்பு மில்லை யெனத்தெருட்டி நின்றே
யிம்மா நிலத்து யானுய்ய ஞான விளையாட் டருளிய
பெம்மான் தென்னம் பொழில்சூழ் கொழும்புத் துறைநகர்மேவிய
வெம்மா நருள் வள்ளல் யோக சுவாமி போற்றி போற்றி.

நிவந்தோங்கு நல்லிசை மறைசைச் சிவஞான முனிவ னென்பான்
சைவசித் தாந்த மென்னும் விளையாட்டை யாடிக் கண்டான்
பவக்கடல் வாய்ப்பட் டலையும் பல்லுயி ரனைத்திலும் பரிந்து
முவந்தும் நல்கிய வாட்டுக் கவனைப் போற்றுவம் நாவே.


பொது

1.தூல வருந்ததி நியாயம் பற்றிப்
பதிபசு பாச மெனுமுப் பொருளின்
பொதுவியல் பளவை முகத்தானு மிலக்கண
முகத்தானு முணர்த்திச் சிறப்பியல் புரைப்பான்
புகுந்து சாதனம் பயனெனு மிருதிறம்
பற்றிக் கூறித் தந்தனம் சிவஞான
முனியெனும் பெருந்தகையே யவற்றைக் கொண்டு
சரியை கிரியை யோகஞ்
ஞான மென்னு மாட்டங்க ளாடலாமே.

2.நனந்தலை யுலகில் மக்க ளாடிக்
கண்ட விளையாட் டொன்றலப் பலவே
அறநூற் கற்று நல்வினை செய்து
விளையாடி நிற்பா ரறவிலை வணிகர்
பசித்துண்டு பின்னும் பசித்து நிற்பாரை
யொப்ப ரவர்பெறு மின்பம் நிலையிலதே
சரியை கிரியை யோகஞ் ஞான
மெனுஞ்சைவ சித்தாந்த விளையாட்டு நான்கனுள்
முன்னைய மூன்று மமிழ்த வுண்டி
யின்பம் பயக்கும் பின்னதற் கேதுவாய்
நிற்கும் பின்னது பேரின்பந் தந்து
பிறப்பினை யொழிக்கு மதனால் முத்தி
விழைவோர் யாவரு மாடுவது
சைவசித் தாந்த ஞான விளையாட்டே.


சரியை கிரியை யோக விளையாட்டுக்கள்

1.அடியெனு மளவை நிறமுண்மை யின்மை யிவற்றைச் சாரன்
முடியாது நிற்றல் போல வுருவ மருவ மிரண்டுங்
கடிந்து நிற்கு மிறைவனுக் குருவங் கொடுத்து வினையாதுந்
தடியாமே காயம் பற்றி யாடுவதே சரியை விளையாட்டு.

2.கழஞ்செனு மளவைக்கு நீள முண்மை யின்மைகளுள் யாதுங்
கழறல் முடியாத வாறு போல வுருவ மருவங்
கழன்று நின்ற விறைவனுக் குருவ மருவங்க ளேற்றி
யழிகாய மகமிவை பற்றி யாடுவதே கிரியை விளையாட்டு.


3.நாழிகை யென்னு மளவைக்கு நிறையுண்மை யின்மை யாது
மாழிசூழ் வையத்திலாமை போல வுருவ மருவங் கடந்த
கேழி லிறைவனுக் கருவங் கொடுத்தே யுளத்தொழின் மாத்திரையான்
பாழில் விழாது தாழா தாடுவதே யோக விளையாட்டு.

4.அரிதின் முயன்று செய்யு மாறு பற்றித் தவமெனப்
பெரியர் கூறுஞ் சரியை கிரியை யோக மெனுமிவை
தெரிந்த ஞானம் நல்கி யல்லது பயன்படாமை யறிந்தியான்
விரித்துக் கூறுவதே சைவசித் தாந்த ஞான விளையாட்டு.

ஞான விளையாட்டு

1.காண்டல்கருத லுரையெனு மளவைக் கெட்டாத தொன்றை
மாண்ட விலக்கணம் யாது மில்லாத வொரு தனி முதலை
யாண்டவன் சிவனெனப் பெயரிட்டுஞ் சத்துச் சித்தானந்த மெனுங்
காண்டகு மடைகள் கொடுத்து மாடுவது ஞான விளையாட்டே.

2.இனமானந் தன்மான மிரண்டும் விட ஞான மிளிர்ந்து
மனத்தொழி லுடற்றொழி லிவைகடந் தறிவுத் தொழில் வாய்ப் பட்டவன்
நனவே கனவே நித்திரையே யிவற்றி னின்றவா றாடுவது
தனதியல்பு கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தாடு ஞான விளையாட்டே.

3.பொன்றும் வாழ்க்கைப் பொள்ளலைப் பொருளெனக் கொள்ளாது நின்று
கன்றுங் கால தேசத்தைக் கடந்துங் கடவாமை பெற்று
நின்று மிருந்துங் கிடந்தும் நடந்து மோடியு மாடியு
மென்று மல்லும் பகலு மாடுவது ஞான விளையாட்டே.

4.உலகனைத்துங் களரி யாக வுளமதுவே பந்தாகக் கொண்டு
மலகி லுயிர்களோடு கலந்து முடனாயும் வேறாயும் நின்று
மலங் கழலுமாறு தத்துவங்க ளெல்லா மிரிந்தோடக் கண்டு
சலமில் வாழ்க்கை யாட்ட மாடுவது ஞான விளையாட்டே.

5.தெரித்த விதிகள் பதினாலும் விலக்குக்க ளொன்பதும் பேணி
வரித்த விரதஞ் செபதவம் யாது மின்றி யொன்றியாய்
விரித்த வுளத்தை யொருக்கா தொடுங்க விட்ட வாற்றாற்
பிரித்தறிவு துணையாய் நிற்ப மாடுவது ஞான விளையாட்டே


விதிவிலக்குக் கொத்து

மறதி யோம்பிக் கழிந்தவைக் கிரங்கா
தெதிர்வு நோக்காது நிகழ்வு போற்றி
யொன்றிப்புக் கண்டு சான்று கையாண்
டியற்கையோ டிசைந்து பொதுவியல்பு பெருக்கா
துலக மனைத்தையு மாண்டு சிறப்பியல்பி
னின்று மனைவி மக்களைத் துறவாது
பெருமை சிறுமை யொழித்துப் பிரித்தறிவு
பெருக்கிச் செய்தன செய்து கடன்யாது
மில்லையெனக் கொண்டிறப்புப் பிறப்புக் கஞ்சாது
தெளிவுக் கேங்காது பேற்றைப் பொருளெனக்
கொள்ளா துடலால் வழிபாடு செய்யா
துளத்தால் வணங்கா தறிவுத் தொழிலாற்
கட்டு நீங்கி முயல்வின்றி வாழ்ந்து
சிவனொடு வேறற நிற்க
வீடு பேறு பெறுவ துறுதி.


விதிவிலக்குகள்

1. மறதி யோம்புக

மறதி பெரிது மறதி பெரிது
என்னின் வேறலா வன்பனே யறிக
பிறப்பு மிறப்பும் பலபல பெற்றனை
நல்வினை தீவினை யளவில செய்தனை
யாதுமொரு பிறப்பிற் சொற்ற பொய்க
ளெத்தனை யென்பதை யெட்டுணையு மறியாய்
கொலைக ளெத்தனை செய்தனை யென்பதை
யறிந்தா யல்லை களவுக ளெத்துணை
புரிந்தா யென்பதை யறிந்திலை யென்பேன்
கள்ளருந்திக் கேடுபல சூழ்ந்து கழித்த
நாள்கள் பலவே காமஞ் செப்பிக்
கருத்தழிந்த காலம் வறையறைப் படாவே
ஒருபிறப்பிற் செய்தவை யளவிறந் தனவே
எண்ணில் பிறப்பிற் செய்தவை யனைத்தையு
மெண்ணுவை யாயி னேங்கி யேங்கி
யுளநலிவு வாய்ப்பட் டிம்மையு மறுமையு
மொருசேர வழித்து நிற்பா யாதலின்
கழிந்த செயல்களை நினைவு கூரற்க
கழித்த மலத்தை யருவருப் பின்றித்
திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை
செய்தவை முன்னிலை நீங்க
வோம்புக மறதி யோம்புக மறதி.

2. கழிந்தவைக் கிரங்கேல்

கழிந்தன கழிக வருவன வருக
வென்றிறுத்த லொழிந்து சென்றன நினைந்து
வருந்த லாண்மை யாகாது கல்லாக்
கல்வி கற்றுக் கொன்னே கழித்தேன்
பிணிமூப் பில்லா விளமைக் காலத்தை
யென்று கொள்ளற்க இறைபக்தி யாதுஞ்
செய்திலே னென்று மனநோ கற்க
உளநிலை பெரிது வுளநிலை பெரிது
கலக்காது வைத்த லறிஞர் செயலே
யிளமையிற் றுள்ளு முதுமையி லடங்கும்
மடங்கிய வுளத்தை யாளுத லெளிது
போதும் போதும் நின்கட் பத்தி
தானாய் வளரும் பொருளை வளர்க்க
முயலுதல் பேதமை யாதலின்
கழிந்தவைக் கிரங்கேல் கழிந்தவைக் கிரங்கேல்.


3. எதிர்வு நோக்கேல்

எதிர்வன வெதிர்க விறந்தன விறக்க
வென்றிருத்த லல்லது வெதிர்பார்த் திருத்தல்
நினக்கிசை வன்று நின்ற முனைப்புக்கள்
பயன்றா லொழியா பிறவிக் கடலி
லாழ்த்தினு மாழ்த்தும் வித்தகன் நீயெனிற்
புத்தியை வீழ்த்திப் பற்றினை விடுக
முந்திய கட்டுக்க ளுடலோ டொழிய
வெதிர்வுப் பிணிப்பை யாக்காமே நிற்க
காலிற் றளைதளர வூக்கி நிற்கும்
யானை மடப்பந் தெளிந்து
நோக்கே லெதிர்வு நோக்கே லெதிர்வு.


4. நிகழ்வு போற்றுக

இறப்பு மெதிர்வும் முனைப்பை யுடைய
இறப்பு முனைப்பி லொருசிறை யுடலா
யொழியு மொருசிறை பிறப்பை விளைக்கும்
எதிர்வு பிறவிக் கடலி லுய்க்கும்
மற்று முனைப்பு யாதுந் தராத
நிகழ்வு நிகள நின்றாங்கு நிற்பின்
கட்டு வீழ்ச்சியு மின்பப் பெருக்கமும்
வழிவழிப் பெறலா மாதலின்
நிகழ்வு போற்றுக நிகழ்வு போற்றுக.


5. ஒன்றிப்புக் காண்க

அணுவள விற்றாய வுருவனக் கில்லை
உடலள வாக நின்றாயு மல்லை
அலகிறந்த வுயிர்களிற் கலந்து வேறற
நின்ற விறைவனோ டிணைந்து விரித
லொடுங்க லின்றிப் பரந்து வண்ட
கோளம் யாவையு மடக்கி நின்ற
யுருவினன் நீயே யாதலின் நாள்கள்
கோள்கள் யாவையும் நின்கட் காண்க
இடையீ டின்றி யிவ்வா றியற்றியார்
வினையொழிவு பெற்றமை யறிஞர்வா யறிக
நீயு மதுபெற விழையி
னொன்றிப்புக் காண்க வொன்றிப்புக் காண்க.


6. சான்று கையாள்க

யானெனு முனைப்பு மெனதெனு மெண்ணமு
முலகிற் செய்தநோ யளவிலவே நிலையிலா
வின்பதுன்ப மவற்றின் பாலன வியிர்வருக்க
மனைத்தையும் விழுங்குந் திமிங்கில மவையே
யானெனு மகந்தை யுடலுக் குற்றவை
தனக்கே யுற்றவை போலச் செய்து
பிறப்புப் பலதந்து நிற்கு முடைமை
யெண்ண மிழப்புப் பேறெனுஞ் சுழல்காற்றுக்
கிலக்காக்கி யலைக்கு மிவற்றைத் தீர்க்கு
மருந்தே சான்றாட்சி நீயுட லல்லை
பொருள்கள் யாதும் நின்னுடைமை யன்றென
வுடல்பொரு ளிரண்டுக்குஞ் சாட்சியாய் நிற்க
பயன்கவர்ந்து நீக்கி நுகரும் வினைமுதல்
நீயகல நென்ப துணர்ந்து
சான்று கையாள்க சான்று கையாள்க.


7. இயற்கையோடிசைக

சான்று கையாள்வோர் சித்திபல பெறுவ
ரெதிர்வு மிறப்புந் தோற்ற மளித்து
மனத்தைக் கலக்கினுங் கலக்குங் கலக்காமை
விழைபவ ரியற்கையொடு முரணார் முரணுவர்
மடவோர் குன்று முட்டிய குருவியேய்ப்ப
வழிவ ரியற்கையோ டிசைந்து வாழ்பவர்
பெய்யு மழையைப் பெய்யெனக் கூறுவர்
வீசாக் காற்றை வீசுக வென்னார்
இறைவன் றிருவரு ளல்ல தியற்கை
யென்ப தொன்றில்லை யவர்க்ககே தமக்கும்
பிறர்க்கும் நிகழும் நிகழ்ச்சிக் குடன்பட்
டிருப்ப ரலைகடலிற் றுரும்பு போல
வெதிர்ப்பு யாதுஞ் செய்யா தங்குமிங்கு
மாடி நீரி னொழுக்கு நிகர
வாழ்வை நடத்தி வீடுபேறடைவர்
நீயு மதனை விரும்பி
னியற்கையோ டிசைக வியற்கையோ டிசைக.


8. பொதுவியல்பு பெருக்கேல்

பொதுவியல் பிடையே விளங்கி மறையுந்
தன்மையன வவற்றைப் பொருளெனக் கொள்ளா
ரறிஞ ரறியாரவ் வுடைமையைப் பெருக்கி
நிற்பர் காமக் கிழத்தியை விழைந்து
முயங்கிப் பின்னும் விழைவாரை யொப்பர்
பதவிப் பற்று பட்ட வேட்கை
கல்வி செல்வமெனு முடைமை யெல்லாம்
முத்திப் பெற்றுக்குத் தடையா கும்மே
யுய்தி வேண்டுதி யாயின்
பொதுவியல்பு பெருக்கேல் பொதுவியல்பு பெருக்கேல்.


9. உலகமனைத்தையுமாள்க

பொதுவியல் பொழியச் சிவனோ டொன்றி
நிற்க வல்லுந னண்ட மனைத்தையுந்
தன்கட் காண்பன் வசிவசி யென்னு
மந்திரத்தாற் றன்வசப் படுத்துவன் சுட்டியோ
ருயிரையுந் தன்னிடங் கொள்ளான் சராசரங்க
ளெல்லா மிந்நீரான் வாழ்க்கைப் பொறுப்பேற்
றுண்டியு முறையுளு மருந்து முதவு
மதனா லுலகியற் கவல்வு யாதுமின்றிச்
சிவோகம் பாவனை செய்து வீடுபே
றடைவன் நீயது விழையி
னாள்க வாள்க வுலக மனைத்தையும்.


10. சிறப்பியல்பினிற்க

பெத்த முத்தி யிரண்டிலு மதுவதுவாய்
நின்றறியு மிலக்கண மான்மாவுக் குண்டெனக்
கூறுவ ரான்ம பெற்றி யுணர்ந்தோ
ருலகைச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்றல்
பொதுவியல் பென்றுஞ் சிவத்தைச் சார்ந்தவன்
வண்ணமாய் நிற்ற லெக்காலத்தும் நிலைபெற்ற
சிறப்பியல் பென்று முரைப்ப ரதனால்
முத்தி விழைபவன் தான்சிவ னென்னுஞ்
சிவோகம் பாவனையை யயராது செய்து
நிற்கப் பேரின்பந் தலைப்பட் டுய்தி
கூட்டும் நீயதை விரும்பின்
சிறப்பியல்பி னிற்க சிறப்பியல்பி னிற்க.


11. மனைவிமக்களைத்துறவேல்

ஓருயிரில் விருப்பு மோருயிரில் வெறுப்புங்
காட்டுவ னஞ்ஞானி ஞானி பல்லுயிர்
மீதுங் காய்த லுவத்த லின்றிப்
பொதுமையிற் பரிந்து நிற்பன் சுட்டி
யொருவர் மாட்டும் விருப்பு வெறுப்பு
பரிவு யாதுஞ் செய்யாது நிற்க
மனைவி மக்க ளுறவினர் யாவரு
மவன்வசப் பட்டத் தடையாதுங் கொடா
தவன்செல்லு நெறிக்குத் துணையாய் நிற்ப
ரதனால் இனது விளையாட்டு முடிவு
போக வேண்டுதி யாயி
னொருபோதும் மனைவி மக்களைத் துறவேல்.


12. பெருமை சிறுமை யொழிக்க

ஞான விளையாட் டாடுதி நீயெனின்
நின்னை நிகர்த்தவ னுலகி லில்லை
நின்னிற் பெரியோனு மில்லைச் சிறியோனு
மில்லை புழுதொடங்கி நின்குரு வுள்ளிட்ட
சகல வுயிர்களும் நினது சொரூப
மென்று பாவிக்க வுய்தி கூடுமெனுஞ்
சான்றோர் கூற்றை யுட்கொண்டு
நின்று பெறுமை சிறுமை யொழிக்க.


13. பிரித்தறிவு பெருக்குக

மன்னுத லுள்ளதே மெய்யென்று மில்லது
பொய்யென்றும் புகன்றனர் பொருளிய லுணர்ந்தோ
ரதனால் முத்தி நிலையிற் றீர்ந்து நிற்கு
மிலக்கண விலக்கிய வறிவொடு பிரித்தறிவும்
பொய்யெனப் படுமால் பிரித்தறி வுரைக்குஞ்
சைவசித் தாந்தம் மெய்யெனப் படுமோ
பொய்யெனினு மரமேறிக் கேணிபோ லுதவுந்
துணைநின்ற நன்றிக் கவ்வேணியை யிறுகத்
தழுவி நின்றிலக்குத் தவற லொல்லுமோ
யிவ்வுலகி லுண்மைநிலை வேண்டுதி நீயெனி
னீற்றிற் சித்தாந்த விளையாட்டு மிறுவது
காணல் வேண்டும் இறைவன் சித்தாந்தி
யல்லனெனத் தெளிந்து விளையாட் டோய்தற்குப்
பதிபசு பாசங்கள் பற்றிப்
பிரித்தறிவு பெருக்குக பிரித்தறிவு பெருக்குக.


14. செய்தன செய்க

முன்னர்ச் செய்தன பின்னர்ச் செய்யத்
தகுமற்றுச் செய்யாதன செய்யப் படாவே
ஞானந் தலைப்பட்ட தென்று செய்தொழி
லொழிந்தால் மாற்றினா லஞ்ஞான மிகுமால்
புதியது புகுந்தாலு மதுதலை தூக்கு
மாயி னறியாமை விளையாமே
செய்தன செய்க செய்தன செய்க.


15. கடன்யாதுமில்லையெனக்கொள்க

ஞான விளையாட் டாடுநர்க்கு விதிவிலக்
குண்டெனினுங் கட்டியாது மில்லை யென்ப
மனைவி மக்களுக் கவரா லாகுவன
கிடைக்கு மெனினு மவர்க ணேகதேச
வறிவு தலைகாட்டா வென்ப ரறிந்தோர்
சுட்டறி வொழியப் பேரறி விலங்க
லுறுவார்க் கெய்தக் கடவ கடப்பா
டியாது மில்லை யென்ப ரொருகாற்
பரிசயத்தால் நின்மாட் டவ்வறி விடையிடை
விளங்கி னதனை நீக்குதற்குச்
செய்கடன் யாது மில்லையெனக் கொள்க.


16. இறப்புப் பிறப்புக்கஞ்சேல்

உதித்த ஞாயி றத்தமன மடையுமோ
வெனவஞ்சி நிற்பா ரெவரு மில்லை
உற்பாதம் யாது மில்லெனின் கட்டிய
மொடுப் பூவாய்ப் பிஞ்சாய்க் காயாய்க்
கனியாய் வருதற் கையப்பட லாமோ
தலைப்பட்ட ஞானம் பிறவிக் கடலை
யொழிக்கு மென்ப துறுதி
யெனக்கொண் டிறப்புப் பிறப்புக் கஞ்சேல்.


17. தெளிவுக்கேங்கல்

ஞான விளையாட் டாடுவா ராடுவது
முப்பொரு ளியல்பைக் கேட்டுச் சிந்தித்து
நிற்றலே சிந்திப்புச் செய்யச் செய்யத்
தெளிவரும்பி யரும்பி நிட்டை கூட்டுவித்
தின்பம் பயக்கு மென்ப ருணர்ந்தோர்
திளியாய்த் தீன்றி யருவியாய் மாறி
யாறாய்ப் பெருகிக் கடலாய் நிற்குமப்
பேரின்பஞ் சிந்திப்பின் வழித்தே யாதலின்
நின்கடன் சிந்தித்து நிற்றலே மற்றெல்லாந்
தாமாய் வருமெனக் கொண்டு
தெளிவுக் கேங்கல் தெளிவுக் கேங்கல்.


18. பேற்றைப் பொருளெனக் கொள்ளேல்

பொருளைப் பொருட்படுத்தி வாழ்ந்து பெற்றனை
யதனைப் பிறவிக டோறும் பலமுறையே
பொருளெனக் கல்வியைக் கருதி நின்று
புலமை படைத்து மகிழ்ந்தனை பலமுறையே
அறிதி யறிதி பொருளும் புலமையு
மாக்கிய வாறு நில்லா செய்த
பேறெல்லா மழிதன் மாலைய வாக்கப்படு
முத்தியம் வாண்டாப் பதமுத்தி
யாதலின் பேற்றைப் பொருளெனக் கொள்ளேல்.


19. உடலால் வழிபடேல்

கைத்தலத் திறைவனைக் கைகூப்பி வணங்க
லொல்லோஒ வொல்லுமோ மெய்யினுட் புகுந்து
நின்றானை மெய்பற்றி யிறைஞ்சன் முடியுமோ
மலருள் நிற்கு மியல்பினனை மலர்கொண்
டேத்தித் தொழுதல் மடனேயது
கொண்டுடலால் வழிபடே லுடலால் வழிபடேல்.

20. உளத்தால் வணங்கேல்

உளத்தா லுள்ளுவன வெல்லா மழிபொரு
ளென்ப தறிந்திலையோ யுள்ளப்படாத் தன்மையனை
யுள்ளாது வணங்குவ தெங்ஙன மெனவோர்ந்து
நின்றநீ பழக்கம் பற்றி
யுளத்தால் வணங்கே லுளத்தால் வணங்கேல்.

21. அறிவுத் தொழிலாற் கட்டு நீங்குக

சித்துச் சடத்தைச் சாராது சாராது
சித்தைச் சடமென் றிவ்வாறு தருக்கித்துப்
பிரித்தறி வுதவிசெயக் கேட்டல் சிந்தித்தல்
தெளித னிட்டை யென்னு
மறிவுத் தொழிலாற் கட்டு நீங்குக.

22. முயல்வின்றி வாழ்க

அரிது வரிது வினையின்றி வாழ்தல்
செய்வினை யாவுஞ் செய்பயன் றந்து
பிறப்பினு ளுய்க்குமே முத்தி பெறுவ
தியாங்ஙன மென்று வினவுதி யாயின்
பெறும்பே றன்றிச் செய்பய னாகாது
முத்தி யெனவறிதி கருத்தொடு முயன்று
செய்வதுங் கருத்தின்றி முயலாது செய்வது
மெனவினை யிரண்டு திறத்தன வவற்றுள்
முன்னையது பிறப்புத் தொடரை நீக்காது
பின்னைய துடலூழா யொழிந்து முத்தி
கூடுதற் கிடங்கொடுக்கு மென்ப
தறிந்து நின்று முயல்வின்றி வாழ்க.


23. சிவனொடு வேறற நிற்க

சிவன்வேறு நீவே றென்ற நிலைநீங்கி
யலைகடலிற் சென்றடங்கு மாறு போலவும்
பண்ணையு மோசையும் போலவும் நீரு
மிரதமும் போலவுங் கலப்பு முடனாதலும்
வேறாதலும் நின்கட் டோன்ற வான்ம
போதமுங் கண்ணொளியுந் தம்மு ணிற்கு
மாறு வத்துவித நிலைபெறும்
வண்ணஞ் சிவனொடு வேறற நிற்க.

முடிவு

அழுந்தோ மழுந்தோ முலகத்தில் யாமென் றிருப்பவர்க்குக்
கொழுந்தா யறிவு துலங்கு முறுதிக் குடன்படுவான்
செழுந்தேன் பிலிற்றும் பொழில்சூழ் மறைசை முனிவனாக
வெழுந்தா னிணையிலா ஞான விளையாட் டருளினனே.