சேரர் தாயமுறை
சோமசுந்தர பாரதியார்சேரர் தாயமுறை


1.  சேரர் தாயமுறை
    1.  மின்னூல் உரிமம்
    2.  மூலநூற்குறிப்பு
    3.  பதிப்புரை
    4.  நுழைவாயில்
    5.  சேரர் தாயமுறை
    6.  முதற்பதிப்புப் பாயிரம்
    7.  பதிப்புரைகள் (1)
    8.  (2)
    9.  (3)
    10. (4)
    11. (5)
    12. (6)
    13. சேரர் தாய முறை
    14. பகுதி 1 : முன்னுரை
    15. பகுதி 2 : தாயமுறை நியமங்கள்
    16. பகுதி 3 : சங்கநூற் சான்றுகள்
    17. பகுதி 4 : பிற சான்றுகள்
    18. பகுதி : 5 மருகன் என்ற சொல்லின் பொருளாட்சிகள்
    19. பகுதி6: பதிற்றுப்பத்துப் பாட்டுக்களிலெல்லாம் மருகரென்றே சுட்டவும் பதிகங்களில்மட்டும் ‘மகன்’ என்றுவந்த பிரயோகத்தின் பொருட்பொருத்தம்
    20. பகுதி : 7 முடிவுரை
    21. கணியம் அறக்கட்டளை

 

மூலநூற்குறிப்பு

  நூற்பெயர் : சேரர் தாயமுறை

  தொகுப்பு : நாவலர் பாரதியார் - நற்றமிழ் ஆய்வுகள் -1

  தொகுப்பாசிரியர் : ச. சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி

  பதிப்பாளர் : ஆ. ஆதவன்

  பதிப்பு : 2009

  தாள் : 16 கி வெள்ளைத்தாள்

  அளவு : 1/8 தெம்மி

  எழுத்து : 11 புள்ளி

  பக்கம் : 304

  நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)

  விலை : உரூபா. 190/-

  படிகள் : 1000

  அட்டை வடிவமைப்பு : வ. மலர்

  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்சு, இராயப்பேட்டை, சென்னை - 14.

  வெளியீடு : ஆதி பதிப்பகம்4/2, 2 வது மாடி சீனிவாசா தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004.


பதிப்புரை

20ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழி, இன மேம்பாட்டிற்கு அரும்பாடுபட்ட தலைவர்களில் முன்னவர். இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்காக இவர்தம் குடும்பம் சிறைசென்று பெரும் பங்களிப்பைச் செய்த குடும்பம்; வணங்குவோம்.

பெருமை பெற்ற பிறப்பினர் முதல் , முத்தமிழ்ப் பட்டம் பெற்ற முது முனைவர் வரை 15 பெருந் தலைப்புகளில் உள்ளடக்கி நாவலர் சோமசுந்தர பாரதியார் எனும் தலைப்பில் அவர்தம் அருமை பெருமைகளை, ஆய்வு நெறிமுறைகளை தமிழின் பாலும், தமிழினத்தின்பாலும், இந்தியப் பெரு நிலத்தின் விடுதலை யின்பாலும் அவர் கொண்டிருந்த பற்றினை ஆசிரியர் ச. சாம்ப சிவனார் எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள நூலில் காண்க.

எனது அன்புள்ள பெரியார் பாரதியார் அவர்களுக்கு, ஈ.வெ.ராமசாமி வணக்கம். என்று தொடங்கி தயவு செய்து தங்களது அபிப்பிராயத்தையும், யோசனையையும் தெரிவிக்க வேண்டுகிறேன்- . இது தந்தை பெரியார் நாவலர் பாரதியாருக்கு எழுதிய கடித வரிகள்.

குகை விட்டுக் கிளம்பிய புலியெனப் போர்க்கோலம் கொண்டு, ஊரை நாடி, மக்களைக் கூட்டி உரத்த குரலில், உறங்கிடுவோருக்கும் உணர்ச்சிவரும் வகையில் தமிழின் தன்மையை, அதன் சிறப்பை, அதனை அழிக்க வரும் பகையை, அந்தப் பகையை வெல்லவேண்டிய இன்றியமையாமையை எடுத்துச் சொன்னார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினார். தமிழ் கற்றதன் கடனைத் தீர்த்தார்! - இது பேரறிஞர் அண்ணா கூறியது.

அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைவர்கள், சான்றோர்கள், பாவலர்கள் கூறிய அரும்பெரும் செய்திகள் ஐந்தாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தலைவர்களாலும். நண்பர்களாலும், ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் மதித்துப் போற்றிய பெருமைக்குரியவர்.

தாய்மொழி வழிக் கல்வி கற்கும் நிலை வரவில்லையே? என்று அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாவலர் பாரதியார் கூறியது இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. தாய்மொழி வழிக் கல்வி வளரும் இளம் தமிழ்த் தலைமுறைக்குக் கட்டாயம் கற்பிக்கப்படவேண்டும் என்று அன்று அவர் கூறியது இன்றும் நிறைவேறவில்லையே என்பது தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமும் கவலையும் ஆகும். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு தாய்மொழி வழிக் கல்விக்கு முதன்மைதரும் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி நடைமுறைக்கு வருமானால் தமிழ் உணர்வாளர்களின் கவலைக்கு மருந்தாக அமையும்.

தமிழ் மரபு இது; அயல் மரபு இது! என்று கண்டு காட்டியவரும், இந்தி ஆதிக்கத்தைத் தமிழகத்தில் முதன் முதலில் எதிர்த்தவருமான செந்தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் படைப்புகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஆறு தொகுதிகளாக நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் எனும் தலைப்பில் வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம்.

இத்தொகுப்புகள் செப்பமுடன் வெளிவருவதற்கு வழிகாட்டியதுடன், உதவியும் செய்த தொகுப்பாசிரியன்மார் ச.சாம்பசிவனார், ம.சா. அறிவுடைநம்பி ஆகிய பெருமக்களுக்கு எம் நன்றி.

இந்நூலாக்கத்திற்குக் கணினியில் தட்டச்சுச் செய்த திருமதி. விசயலெட்சுமி, திரு.ஆனந், செல்வி. அனுராதா, திரு. சிவமூர்த்தி ஆகியோருக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய திரு.இராசவேலு, திரு. கருப்பையா, திரு.சொக்கலிங்கம் ஆகியோருக்கும், அட்டைப் படம் செய்த செல்வி வ.மலர் மற்றும் குமரேசன், நூல் கட்டமைப்பாளர் (Binder) வே.தனசேகரன், மு.ந.இராமசுப்ரமணிய ராசா ஆகியோருக்கும் எமது நன்றி.

இந்நூல்களை வாங்கிப் பயனடைவீர்.

- பதிப்பாளர்


நுழைவாயில்

முன்னுரை:

பெருமக்களின் வாழ்க்கைகளே வையகத்தின் சிறந்த ஆசிரியர்கள்”1 என்பர் அறிஞர்.

“பாரதிர்ந் தெழுந்து யார்யாரெனக் கேட்குமா(று)
ஊரெழுந் தோடி, எம் உயிரெனக் கூறுமா(று)
ஏரெழுந் தன்ன, எம் பாரதி எழுந்துசொல்
மாரி பெய்வான், புனல்மாரி பெய்வான்என,
மாத மும்மாரி இம்மண்ணிடைப் பொய்ப்பினும்
நாத மும்மாரி நடாத்துவான் பாரதி!”

என்பது கவிஞர் கண்ணதாசன் கூற்று. 1879ஆம் ஆண்டில் பிறந்து, 1959 ஆம் ஆண்டில் மறைந்த நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், மேற்காட்டிய அறிஞர்களின் கூற்றுக்கிணங்க, இவ் வையகத்தின் சிறந்த ஓர் அறிஞராகப் பிறங்கியவர். அன்னைத் தமிழுக்குத் தம் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவிட்ட இவ் வித்தகச் செல்வர் எழுதிய நூல்களில் “திருவள்ளுவர், தசரதன் குறையும் கைகேயி நிறையும், சேரர் தாய முறை, சேரர் பேரூர் எனும் இந்நான்கும் அறிஞர் பெருமக்களால் பெரிதும் போற்றப்படுபவை. இவ் ஆராய்ச்சி நூல்களைப் பற்றிய ஒருசிறு அறிமுகம் இவண் தரப்படுகின்றது.

நாவலர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

நாவலர் ச.சோ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு சுவையுடையது; பிறரால் பின்பற்றத்தக்கது. இவரது வரலாற்றையும், இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளையும் முன்னர்யான் எழுதிய நூல்களில்1 பரக்கக் காணலாம். எனினும் சுருக்கமாக ஒருசில சுட்டுதல் சாலும்:

1.  இவர் , எட்டையபுரத்தில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து, கல்வி கற்று, வழக்கர் தொழில் மேற்கொண்டு, பல்கலைக் கழகப் பேராசிரியர் பணிபூண்டு, இரு பெண்களை மணம் புரிந்து, மக்கட்செல்வம் பெற்று, எண்பதாண்டுகள் வாழ்ந்த பெரியர்;

2.  எட்டையபுர அரண்மனைச் சூழல், சி.சு. பாரதியாரின் நட்பு, நெல்லைத் தமிழ்ப் புலவர் தொடர்பு, சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர்கள் புகட்டிய அறிவு, வ.உ. சிதம்பரனாரின் தொடர்பு முதலாயின இவரின் தமிழ்த் தொண்டிற்கு அடிப்படையாய் அமைந்தன.

3.  செம்மல் சிதம்பரனார் தொடங்கிய கப்பல் கம்பெனியின் செயலராக இருந்து, இந்திய நாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்ட சிறப்பும் இவருக்கு உண்டு;

4.  இவரது தமிழ்த் தொண்டிற்குச் செல்வம், தொழில், ஆங்கிலப் புலமை பெரிதும் துணைபுரிந்தன;

5.  இவர், ஆடவரிற் சிறந்த அண்ணல் எனும்படி தோற்றப் பொலிவும், அஞ்சாமைப் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தார்;

6.  புதிய ஆராய்ச்சி நூல்களைப் படைத்தல் முதலாய பல்வேறு தமிழ்ப்பணிகளையும் ஒருங்கே ஆற்றிய பெருந்தகையாளர்.

தலையாய தமிழ்த்தொண்டு!

நாவலர் பாரதியார் ஆற்றிய தமிழ்த் தொண்டுகள் பலப்பல; அவற்றுள் சிலமட்டும் இவண் குறிப்பிடல் பொருந்தும் :

1.  தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கணத்திற்கும், பிற இலக்கியத்திற்கும் புத்துரை காண்டல்;

2.  அரிய ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக இதுகாறும் எவரும் கூறாதவாறு புதுமைக் கருத்துக்களை எடுத்துக்காட்டல்;

3.  மாநாடுகள், ஆண்டு விழாக்கள், பாராட்டு விழாக்கள், இலக்கிய மன்றக் கூட்டங்கள் முதலானவற்றிற் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழுணர்ச்சி ஊட்டுதல்:

4.  அரசியல் மேடைகளையும் தமிழ் மேடையாக்குதல்;

5.  இந்தி கட்டாய மொழி என ஆக்கப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்துத் தமிழ் காக்கும் போரில் முன்னிற்றல்;

6.  வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த பெரு வருவாயினையும் வெறுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பொறுப்பேற்றல்;

7.  முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற தமிழ் காக்கும் பேரறிஞர்களை உருவாக்கல்;

8.  தமிழ்ப் புலவர்களைப் போற்றுதல்;

9.  வறுமையால் வாடிய தமிழ்ப் புலவர்கட்குப் பொருளுதவி செய்தல்;

10. பேச்சாலும், எழுத்தாலுமன்றிச் செயலாலும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்;

11. பதவியைப் பெரிதெனக் கருதாது, தமிழுக்கு ஊறு நேர்ந்த போதெல்லாம் அஞ்சாது தடுத்து நிறுத்தல்;

12. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலக்கட்டுரைகள் வாயிலாகவும் தமிழ்ப் பெருமையை உலகோரும் அறியச் செய்தல்;

13. தமிழில் நல்ல நடையை (ளுவலடந)க் கையாண்டு, பிறர்க்கும் வழி காட்டுதல்;

14. ‘ஆய்வு நெறிமுறைகள் இவை’ எனக் காட்டி, மாணவரிடையே ஆய்வுமனப்பான்மையை உண்டாக்கித் திறனாய்வுத் துறையை வளர்த்தல்;

15. யார் எது கூறினும், மெய்ப் பொருள் காண்பதே நோக்கமாகக் கொண்டு அதனை வெளிக் கொணர்தல்;

16. தமிழ் மரபு - ஆரிய மரபு இவ்விரண்டிற்குமிடையே காணலாகும் வேறுபாடுகளை அஞ்சாது எடுத்துரைத்துப் பண்டைத் தமிழ் மரபினைக் காக்க வற்புறுத்தல்.

இவ்வாறு பல்வகையானும் தமிழ்ப் பணிசெய்த பான்மையினால், நாவலர் பாரதியார், தாம் வாழ்ந்த காலத்திலேயே, ‘நாவலர்’, ‘கணக்காயர்’, டாக்டர் எனும் பட்டங்கள் பெற்றுப் பெரும் புகழுக்குரியரானார்.

‘திருவள்ளுவர்’

தமிழகத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரைப்பற்றி எழுந்த கட்டுக்கதைகள் பல! அவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்த பெருமைக்கு உரியவருள் நாவலர் பாரதியாரும் ஒருவர். திருவள்ளுவரைப்பற்றிய மெய்யான வரலாற்றைப் பல்வேறு சான்றுகள் காட்டித் திருவள்ளுவர் எனும் அரிய ஆராய்ச்சிநூல் (தமிழ், ஆங்கிலம்) வாயிலாக உலகுக்கு உணர்த்தியவர் இவர். இந்நூல் வாயிலாக இவர் - கூறும் முடிவு

களாவன :

1.  திருவள்ளுவர், புலைமகளின் பழிமகவல்லர்;

2.  மயிலையில் வாழ்ந்தவரல்லர்;

3.  ஏலேலசிங்கரின் உதவி பெற்றவரல்லர்;

4.  மூன்றாம் சங்கத்தின் முற்காலத்தே வாழ்ந்தவர்;

5.  மதுரையில் வாழ்ந்தவர்;

6.  மாதானுபங்கியை மணந்தவர்;

7.  குறளடியால் அறம்பாடி உலகுக்களித்தவர்;

8.  பண்டைப் பாண்டியரின் உள்படுகருமத் தலைவராயிருந்தவர்;

9.  அருந்தமிழ் வேளிர்குடியில் தோன்றிய பெரியர்.

நீதி நூல்களின் தோற்றத்திற்கு அடிப்படை வடமொழி நூல்களே என்றும்; வள்ளுவரும் பிரமதேவர் எழுதிய திரிவர்க்கம் என்ற நூலைச் சுருக்கியே முப்பாலாக மொழிந்தார் என்றும்; அதனாற்றான் அவரை நான்முகன் அவதாரம் என்றும் கூறுவதுண்டு.

இதனை நாவலர் பாரதியார் பின்வருமாறு இந்நூலில் வன்மையாக மறுத்துரைக்கின்றார்:

ஆரிய தரும சாத்திர முறை வேறு; தமிழற நூன் மரபு வேறாகும்; இரு முறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள் தமிழ் மரபு வழுவாது பொருளின் பகுதி களான அகப்புறத் துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்கா மாறு? ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல்.

தமிழிற் பெருமையுடைய அனைத்தும், ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகு மென்பது வெள்ளிடை மலையாம்!

இவ்வாறே நூலின் பல்வேறிடங்களிலும், அறிவுக்குப் பொருந்தாக் கருத்துக்களை மறுத்துரைக்கும் நாவலர் பாரதியாரது நுண்மாண் நுழைபுலம் கண்டு மகிழமுடிகின்றது.

இத் திருவள்ளுவர் ஆராய்ச்சியை அறிஞர் பலரும் ஒருமுகமாகப் பாராட்டியுள்ளனர். அவர்களுள் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் கூறுவது இவண் எண்ணத்தகும்:

“வள்ளுவர் வரலாற்று மலர்வனத்தில், அவர் வாழ்க்கைச் செய்தி களாகிய வனப்புமிக்க நறுமணங் கமழும் மெல்லிய அரும்பு மலர்கள் நிறைந்த பயன்றரு சிறுபூஞ் செடிகளை, அகப்புறச் சான்றுகள் யாதுமின்றிச் செவித் தொடர் வழக்காய் நீண்ட பலகாலமாக வழங்கிவந்த புலைக்குடிப் பிறப்பு-மயிலை வாழ்வு-ஏலேலசிங்கர் தொடர்பு-கூடற்சங்க வென்றி - கால அணிமை - ஆரிய முதனூல் பற்றி அறம் பாடியது - என்னும் இன்னோரன்ன பொய்படு செய்திகளாம் பயனில் பெருமரங்கள் பண்டையுருத் தெரியவொட்டாது வேரூன்றியடர்ந்திருத்தலைக் கண்ட நம் பாரதியார், செப்பமுற ஆய்ந்து, தெளிவுரை கூறும் நாக்கோடரியால் அவ்வடர் பெரு மரங்களை வெட்டி வேரறக் களைந்து காண்போர் கண்ணும் மனமும் களிப்புறும் வண்ணம் அப்பண்டைப் பயன்றருமலர் வனத்தைப் புதுக்கிப் பழமுது நூற்குறிப்புக்களாக்கிய தெண்ணீர் பாய்ச்சிச் செழிப்புற வளர்க்க முற்பட்டனர்.”

இதனால் நாவலர் பாரதியாரின் திருவள்ளுவர் ஆராய்ச்சி மேன்மை ஒருவாறு புலனாகும்!

‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’

“தசரதன் நேர்மையாளன்” என்றும் “அவனது உயிருக்கே உலைவைத்த மாபாதகி கைகேயி” என்றும் பொதுவாகக் கூறுவதுண்டு. இதன் உண்மையை ஆராய்வான்வேண்டி, நாவலர் பாரதியார், தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் நூலினை வெளியிட்டார். நிறை என்பது, ஈண்டுக், குறை என்பதற்கு மாறான ஒரு சொல்லாகவும் கற்பு என்று பொருள்படும் சொல்லாகவும் அமைந்துள்ள நயம் உன்னத் தக்கது.

தசரதனின் குறைகளாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு :

1.  தசரதன், கைகேயியை மணமுடித்தகாலத்து, அவளுக்குக் கன்யாசுல்கமாக அயோத்தி நாட்டினை அளித்தவன்; அதனால் நாடு, பரதனுக்கே உரியது. ஆனால், தசரதனோ, அவனை வஞ்சித்து, இராமனுக்கு முடிசூட்ட முயன்றான்;

2.  சம்பராசுரப் போரின்போது, தான் கொடுத்த வாக்குறுதியை மீறிக் கைகேயியை வஞ்சிக்கத் துணிந்தான்;

3.  மிதிலை மணவிழா முடிந்தபின், காரணம் காட்டாமலேயே பரதனைக் கேகயநாட்டிற்கு அனுப்பிவிட்டான்;

4.  பரதன் சென்றதும், ஆட்சித் துறையில் இராமனை ஈடுபடுத்தினான்;

5.  பரதன் இல்லாத சமயம் பார்த்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் நடத்த முடிவு செய்தான்;

6.  பட்டாபிடேக அழைப்பினை அனைவருக்கும் அனுப்பியவன், கேகயனுக்கும் அவனிடத்திருக்கும் பரதனுக்கும் அனுப்பாமல் விட்டுவிட்டான்;

7.  பட்டாபிடேக ஏற்பாடுகளைக் கைகேயினிடத்துமட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்;

8.  ஏதுமறியாப் பரதனைத் தன்மகன் அல்லன் என்றான்.

இவ்வாறு தசரதன்பாலமைந்துள்ள குற்றங்களை வரிசையாக அடுக்கிச் செல்லும் நாவலர் பாரதியார், கைகேயினிடத்து அமைந்துள்ள நிறைகள் இவையிவை எனப் பட்டியலிட்டும் காட்டுகின்றார்.

1.  கைகேயி, மக்கள் நால்வரிடத்தும் வேறுபாடு காணாதவள்;

2.  தன் மகன் பரதனைவிட இராமனிடத்து அளவற்ற அன்புடையள்;

3.  கொண்டானையன்றிப் பிற தெய்வம் அறியாதவள்;

4.  போர்க்களத்தும் தன் கணவனைப் பிரிய எண்ணாமல், அவன் தேர்ச்சாரதியாய் இருந்து, தன் இன்னுயிரையும் அவனுக்காகப் பலியிடத் துணிந்தவள்;

5.  தசரதனிடத்து அன்பு பூண்டவள். ஆனால் அவனுக்குப் பழி வந்திடல காது என்பதற்காக வரம் கேட்டவள்;

6.  தன் கணவனுக்காகத் தானே பழி சுமந்தவள்;

7.  தெய்வக் கற்பினள் எனக் கம்பரால் பாராட்டப் பெற்றவள்.

இவ்வாறு கூறுதற்கு அடித்தளமாய் இவர் எடுத்துக் கொண்ட கம்பன் பாட்டொன்று :

“கெடுத்தொ ழிந்தனை யுனக்கரும் புதல்வனை; கிளர்நீ
ருடுத்த பாரக முடையவ னொருமகற் கெனவே
கொடுத்த பேரர(சு) அவன்குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கு மாம்;பிறர்க் காகுமோ என்றாள்!”

(கம்ப : அயோத்தி; மந்தரை : 76)

இப்பாடலில் வரும் ஒருமகற்கு என்பதற்கு இராமனுக்கு என்பதே இதுகாறும் பலரும் கூறிவரும் உரையாகும். ஆனால் நாவலர் பாரதியாரோ, ஒப்பற்ற மகனாகிய பரதனுக்கு முன்பே கொடுக்கப்பட்ட பேரரசு எனும் புதுப் பொருள் காண்கின்றார். ஆங்ஙனமெனில், பரதனுக்கு இவ்வரசு எப்போது, எதற்காகக் கொடுக்கப்பட்டது? என்ற வினா எழுதல் இயல்பு. தசரதன் கைகேயியைத் திருமணம் செய்தபோழ்து, தான் அயோத்தி அரசாட்சியைக் கன்யா சுல்கமாகக் கொடுத்திருந்தான். இதன் முழுவிவரம், வான்மீகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“கம்பரும், இக்கருத்தைப் பின்னால், இராமனது கூற்றில் வைத்து வெளிப் படுத்துகின்றார் என்று கூறும் நாவலர் பாரதியார், பின்வரும் பாடலைச் சான்றாகக் காட்டுவர்:

“கம்பரும் உந்தைசொல் மரபி னால்உடைத்
தரணி நின்னதென் றியைந்த தன்மையால்
உரனில் நீபிறந் துரிமை யாதலால்
அரசு நின்னதே ஆள்க என்றனன்”

(கம்ப. : திருவடி : 112)

இங்ஙனம் இது, தசரதன் குறைகள் கைகேயி நிறைகள் பற்றிய அரியதோர் ஆராய்ச்சிநூலாக மிளிர்கின்றது. தமிழ் இலக்கிய ஆராய்ச்சி உலகில் இதுகாறும் எவருமே எண்ணிப் பார்க்காத வகையில் தசரதனையும் கைகேயியையும் ஆய்வுக்கண் கொண்டு நோக்கிய பெருமை நாவலர் பாரதியாருக்கு உண்டு!

“அவரது வாதத் திறமைக்கு (தசரதன் குறையும்
கைகேயி நிறையும்) சிறந்த எடுத்துக்காட்டாகும்”

என முனைவர் மா. இராசமாணிக்கனார் கூறுவது சாலப் பொருந்தும்!

அன்றியும், நாவலர் பாரதியார், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும். மாசு கற்பித்தலாகாது என்ற கொள்கையும் கொண்டவர்; தம் கெழுதகை நண்பர் சி.சு. பாரதியார், பாஞ்சாலிக்காகப் பாஞ்சாலி சபதம் பாடியது போல, இவரும் கைகேயிக்காகத் தசரதன் குறையும் கைகேயி நிறையும் கூறினார் என்று கூறுவதும் பொருந்தும்!

இவ்வகையில் தமிழ் இலக்கிய உலகுக்கு இந்நூல் ஒரு முன்னோடி எனலாம்.

‘சேரர் தாயமுறை’

“மக்கட்டாயமுறை, மருமக்கட்டாயமுறை, இவ் விரண்டும் கலந்த தாயமுறை எனத் தாயமுறையில் முப்பிரிவுகள் உண்டு. இவற்றுள் மருமக்கட்டாயமுறை, கேரளத்தில் கடந்த ஐந்து நூற்றாண்டுகட்கு மேலாக இருந்து வருவது . ஆனால் சோழ பாண்டிய நாடுகளில் இருப்பது மக்கட்டாயமே! எனவே, பண்டைச் சேரநாட்டிலும் மக்கட்டாயமே இருந்தது; பின்னர் தான் மருமக்கட்டாயமாக மாறியது என்பர் அறிஞர். இதுபற்றி ஆராய எழுந்ததே சேரர் தாயமுறை என்னும் நூல்!

‘சேரர் தாயமுறை’ என்னும் இவ் ஆராய்ச்சி நூலை முதன்முதலில் நாவலர் பாரதியார், 1929ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் (SystemofSuccession in the Chera Kingdom) எழுதி வெளியிட்டார்; பின்னர்த் தமிழிலும் அது வெளிவந்தது.

கேரளத்தில் வழங்கும் மருமக்கட்டாயமுறைக்கு அடிப்படையாக நாவலர் பாரதியார் கூறுவன வருமாறு:

1.  பெண் வழியிலேயே உறவு முறை - தாய்மாரே குடிபேணும் அடிமரம்;

2.  ஆடவர்கள், தம் மாமன்மார்க்கு உரிய வழித்தோன்றல்கள்;

3.  குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்று மில்லை;

4.  குடியின் தலைமை, உரிமை - மருகர்களில் வயது முறைப்படி வரும்;

5.  அரசர் குடும்பங்களிலும் நாடாளும் உரிமை, மருகர் வழியே வரிசை முறையில் வருவது;

6.  தந்தைமார்க்கு அவர்களின் ஆண்மக்கள் வாரிசு ஆகார்; அத்தந்தையருடன் பிறந்த பெண்வயிற்று மருகரே வழித்தோன்றல்!

இந்நூலின் ஆய்வுக்கு இவர் சான்றாகக் காட்டும் முதன்மை நூல் பதிற்றுப்பத்து ஆகும்.

நாவலர் பாரதியார் கூறும் பல்வேறு கருத்துக்களில் ஒன்றுமட்டும் இவண் குறிக்கத்தகும்.

“சங்க நூல்களில் சேரரைக் குறிக்க வருமிடத்து, ஒரு சேரனையாவது
அவன் தந்தைக்கு ‘மகன்’ என்ற குறிப்புக் கிடையாது அம்
முன்னோனின் ‘மருமகன்’ என்ற குறிப்பே வந்துள்ளது;
‘இளஞ்சேரலிரும்பொறை. பெருஞ்சேரலிரும் பொறையின் மருகன்’
என்ற பொருளில் விறல் மாந்தரன்றன் மருகன் (மருகன்.
வழித்தோன்றல்) என்று பெருங்குன்றூர் கிழார் பாடுகின்றார்!”

இந்நூல் வாயிலாக நாவலர் பாரதியார் காட்டும் ஆய்வு முடிவுகளிற் சில வருமாறு:

1.  தமிழ்நாட்டில் குடகுமலைத் தொடருக்கு மேற்கே, குடபுலத்தில் மட்டுமே இம் மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றது. நாயர் என்ற திராவிட சமுதாயத்தார். நம்பூரி என்ற ஆரியப் பிரிவினர், பிறநாட்டி லிருந்து குடியேறிய மாப்பிள்ளைமார் இவர்கள் மருமக்கட்டாயிகளாவர்;

2.  இம் ‘மருமக்கட்டாயமுறை’, சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சி பெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாகத் தெரிகிறது;

3.  அம் மலைத் தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்க காலந்தொட்டே மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது.

இவ்வாறு கூறுபவர்,

1.  மக்கட்டாய மரபும், மருமக்கட்டாய மரபும் ஆகிய இவ்விரண்டும் பண்டைத் தமிழ் மரபா?

2.  அவ்வாறாயின், தமிழகத்தில், மருமக்கட்டாயமுறைவழக்கிழந்தது எதனால்?

3.  தமிழ் மரபின்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருந்து எப்படி இதனை மேற்கொண்டனர்?

4.  மிகப்பழங்காலத்தில் தாய்வழிமரபே இருந்து, பின்பு தந்தைவழித் தாயம் வந்ததாகக் கருதலாமா?

5.  மாப்பிள்ளைமார்-அராபி நாட்டினர். மகமதியர், குடநாடு வந்த போது தங்கள் பூர்வீக அராபியப் பழக்கத்தைப் புகுத்தினரா?

6.  இத் தாயவழி ஆதிக்கத்தால், நாஞ்சில்நாட்டுத் தமிழர்களும் இம்முறையைப் பின்பற்றினார்களா?

எனும் வினாக்களை எழுப்பி, மேலும் ஆராய்ச்சி தேவை என்கின்றார்.

ஆனால் இவரது ஆராய்ச்சியைப் பேரறிஞர்களான மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் ஆகியோர் மறுத்து நூல்களும் எழுதியுள்ளனர். எல். கிருட்டிணசாமி பாரதியார், நாவலர் பாரதியாரின் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் நூல் ஒன்றும் எழுதியுள்ளமை இவண் குறிக்கத்தகும்.

எனினும் “இவ் ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளது; புலவருக்கு நல்விருந்து” என்றும் அறிஞர் போற்றுவர்.

சேரர் பேரூர்

பண்டைச் சேரமன்னர்களின் தலைநகரம் வஞ்சி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் ‘இக்காலத்தில் அஃது எங்கு உள்ளது? என்பதுகுறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.

“கடலோரம்** பேராற்றின் மேலது வஞ்சி” என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் மற்றும் ‘தமிழ்த்தாத்தா’ உ.வே. சாமிநாதையர் போன்றவர்களும் கூறுவர். தமிழறிஞர் வி. கனகசபைப்பிள்ளை. “குடமலைத் தொடரின்** அடிவாரத்தில் பேரியாற்றங் கரையில் ஒரு பாழூராகிய திருக்கரூரே வஞ்சி என்பர். அறிஞர் மு. இராகவையங்காரோ. திருச்சிக்கு மேற்கே ஆம்பிராவதிக் கரைமேலதாய கரூவூரானிலையே வஞ்சி” என்பர்.

இம் மூன்று கருத்துக்களுள் பொருந்துவது யாது என ஆராய எழுந்ததே சேரர் பேரூர் எனும் ஆய்வு நூல்! இது. பெரும் பாலும் மு. இராகவையங்கார் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூற்கருத்தை அடியோடு மறுப்பதாக அமைந்துள்ளது. போகிறபோக்கில் வி. கனகசபைப்பிள்ளையின் கருத்தையும் மறத்துத் தங்கோள் நிறுவுகின்றார் நாவலர் பாரதியார்.

இவ் ஆய்வு நூல்வாயிலாக இவர் கூறும் முடிந்த முடிபு வருமாறு :

1.  பட்டினப்பாக்கமும், அரசன் குடிப்பாக்கமும் கூடியது வஞ்சி மூதூர். பிற்காலத்தில் ‘பட்டினப்பாக்கம்’, மகோதை என்றும்; * அகநகராய கருவூர்ப்பாக்கம் வஞ்சி முற்றம் என்றும் அழைக்கப்பெற்றன. இவ் வஞ்சிமுற்றம் நாளடைவில் வஞ்சைக் களமாயிற்று. வஞ்சி - வஞ்சை முற்றம் - களம். பிற்காலத்து இது தலங்களுள் வைத்தெண்ணப் படுங்கால் திரு அடைபெற்றுத் திருவஞ்சைக் களமா’க ஆகியிருக்க வேண்டும்.

2.  எனவே சேரர் சங்ககாலப் பேரூர், பேராற்றின் மலை வாரத்தே கடலினின்றும் ஏறத்தாழ 30 மைலுக்கு அப்பாலுள்ள திருக்கரூருமன்று; காவிரி ஆம்பிராவதி கூட்டத்திற்கு மேற்கே புனல்நாட்டில் உள்ள சோழர் பழவூரான திருவானிலையுமன்று;

3.  சேரர் பேரூரான வஞ்சி மூதூர் மலைநாட்டில், மேலைக்கடற்கரையில் பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம் பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டூர் எதுவுமாகாது!

சேரர் தலைநகராம் இவ் வஞ்சிமாநகரம் குறித்து அறிஞர் களிடையே கருத்துவேறுபாடுகள் உள. எனினும் வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை கூறுவதனை இங்குக் குறிப்பது பொருந்தும்.

….ஆயினும் அது (வஞ்சி) மேலைக் கடற்கரையில் இருந்தது என்பதற்கே சிறந்த சான்றுகள் உள்ளனவாகக் கருதலாம். ஒருகால் சேர மன்னர் வஞ்சியையே யன்றிக்கரூவூரையும்மற்றொருதலைநகராகக்கொண்டிருப்பார்!”

உண்மை எதுவாயினும், இந்நூல் ஆராய்ச்சிக்கு நாவலர் பாரதியார் மேற்கொண்ட கடுமையான உழைப்பை எவரும் மறந்துவிட இயலாது. இவரது ஆராய்ச்சித் திறனை விளக்க வல்ல ஓர் அரியநூல் இது எனலாம்!

முடிவுரை

நாவலர் பாரதியார் எழுதிய இந் நான்கு ஆராய்ச்சி நூல்களும் தமிழகத்திற்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் எனலாம். இந் நான்கினையும்குறித்தவிரிவhன ஆராய்ச்சியை, யான் எழுதிய ‘நவலர் சோமசுந்தர பாரதியாரின் தமிழ் இலக்கியப் பணி’ என்னும் முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பக்20முதல் 91 முடிய)காணலாம்.
வாழ்க நாவலர் பாரதியார்!
அன்பன்

முனைவர் ச. சாம்பசிவனார்


சேரர் தாயமுறை


முதற்பதிப்புப் பாயிரம்

பல ஆண்டுகளுக்குமுன் சேரர் தலைநகரான வஞ்சிப்பற்றிய ஆராய்ச்சிக்காக முன் இடைவிட்டுப் படித்துவைத்த பதிற்றுப்பத்தை மீண்டும் முற்றும் ஒருமுகமாகத் தொடர்ந்து உற்றுநோக்கநேர்ந்தது. அப்போது அந்நூலுட் செய்யுட்களுக்கும் பதிகப்பாட்டுகளுக்கும் பாட்டுடைச் சேரரைப் பற்றிய தொடரமைப்பிற் சில மாறுபாடுண்மை புலப்பட்டது. பதிகங்களிலெல்லாம் ஒருபடியும், நூலின் பாட்டிலெல்லாம் வேறுவிதமும் குடிமரபுக்குறிப்புக்களைச் சுட்டுந்தொடர்கள் அமைந்துநிற்பது என் கவனத்தைக் கவர்ந்தது. எனினும் அப்போது செய்த சேரரின் ஊராராய்ச்சியை முடித்துப் பின் இச்செய்தியை ஆய்தல் நலமெனநினைத்து அதனைக்குறித்து வைத்தேன். பிறகு வஞ்சிப்பற்றியஎன் ஆராய்ச்சியை முடித்துச் சேரர்பேரூர் என்ற கட்டுரையை எழுதி, என்னை அது செய்யத்தூண்டிய பெருந்தகையார் கற்பவை கசடறக்கற்றுக் கற்றதனா லாய பயன் காட்டுமாபோலக் கற்றபடி நிற்றலை மேற்கொண்டொழுகிய தமிழ்வாணரான தஞ்சை வக்கீல் இராவ்பகதூர் ஸ்ரீநிவாசப் பிள்ளையவர்களுக்கு அனுப்பினேன். அதன் பிறகு தனியே ஆராயக் குறித்துவைத்த சிலசொற்றொடரின் கருத்தறியவிரும்பி மறுபடியும் பதிற்றுப் பத்தையும் சிலப்பதிகாரம் புறப்பாட்டுக்களில் சேரரைப் பற்றிய பகுதி களையும் ஊன்றிப்படித்தேன். அப்போது, தமிழிலக்கியமுழுதும் தந்தைக்கு மகன்முறை சுட்டுமிடந்தோறும் இன்னான்சேய் இன்னான் என்ற வாய்பாடே எங்கும் வரும் பொதுவியல்புக்கு மாறாகப் பதிற்றுப்பத்துப் பதிகங்கள் மட்டும் வேறோர் தனிமுறையாளக் காரணம்வேண்டுமெனக் கண்டேன். இப்பதிகங் களில் யாண்டும் முன்னையே சேரர் பெயர்க்கெல்லாம் தவிராமல் குவ்வுருபு கொடுத்துப் பிரித்து முதலில் நிறுத்தி, அதன்பின் அவனுக்கு இன்னான்தேவி யீன்றமகன், பாட்டுடைச்சேரன் எனத் தெரித்துப்போகும் தனிப் புதுமுறை என்னை ஊன்றிச் சிந்திக்கச் செய்தது. அச்சிந்தனையும் அதுபற்றித் தொடர்ந்த ஆராய்ச்சியும் பண்டைச்சேரர் தாய்வழித்தாயத்தார் என்பதை எனக்குத் தெளிவிக்க அதன் உண்மையுணரலானேன்.

பிறகு வழக்கம்போல் நான் கண்ட உண்மையைப் புலத்துறை போகிய என் நண்பர் சிலருக்குச் சல்லாபப்பொருளாகச் சொல்ல நேர்ந்தது. அவர்கள் அக்கருத்தை வெளியிடுமாறு என்னைத் தூண்டி வந்தனர். மதுரைத் தமிழ்ச்சங்க நிருவாகம் திறமையுடன் நடத்துபவரும் தமிழறிவாளரைத் தலைக்கூட்டி அவருக்கு இயைந்த முறை வேளாண்மை செய்து மகிழும் தலைநின்ற நீதிவாதியுமான திரு. டி.சி ஸ்ரீநிவாஸையங்காரவர்களிடம் இதை ஒருநாள் நான் பேசநேர்ந்தது. தமிழாராய்ச்சிகளினும் தன் நண்பரிடத்தும் அவர்களுக்குள்ள பேராதரத்தால், உடனே இதை விளக்கி ஒருகட்டுரையாக வெளியிட வேண்டுமென என்னை வற்புறுத்தி ஊக்கினார்கள். அப்பணி மறுக்க அஞ்சி ஊர்தோறும் உழன்று உழைக்கும் என் வக்கீல் உத்தியோக நெருக்கடியினிடைக் கிடைத்த சிறுநேரத்தை மீண்டும் இவ்வாராய்ச்சிக்கு உபயோகித்து ஆழ்ந்து ஆராய்ந்து கண்ட என் முடிவுகளை ஆங்கிலத்திற் சிறு சஞ்சிகையாக 1929 ஆம் வருடம் வெளியிட்டேன். அப்போது அதைத் தமிழ்ப்படுத்தித்தரும்படி நண்பர்சிலர் வேண்டித் தூண்ட நானும் என் அவகாசக்குறைவில் இயன்றவரை ஒரு கட்டுரை தமிழில் எழுதிக் கொடுத்தேன். அது தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழில் (27 ஆம் தொகுதி யின் 4ஆம் பகுதியில்) பிரசுரிக்கப்பெற்றது.

பிறகு அதைப்படித்த பண்டிதர் திரு.மு. இராகவையங்கா ரவர்கள் என் முடிவையும், நான்கொண்ட பதிற்றுப்பத்துப் பதிகத்தொடர்ப் பொருளையும் மறுத்துச் செந்தமிழில் (27ஆம் தொகுதியின் 10ஆம் பகுதியில்) ஒரு கண்டனமெழுதி வெளியிட்டார்கள். அதைப்படித்த பல நண்பர் அதற்கு மறுப்பெழுத என்னைத் தூண்டினர். உண்மை காண முயல்வதே என் கருத்தாகையால், பண்டிதர்களோடு சொற்போர் தொடர விருப்பமின்மையை விளக்கி, எங்களின் இரு கட்டுரைகளையும் முறையே படிப்பவருக்கு உண்மை தானே எளிதில் வெளிப் படுமென வாளாவிருந்தேன். எனினும் என் மருகர் மதுரை அட்வோகேட் எல். கிருஷ்ணசாமிப்பிள்ளையவர்கள் என் விருப்பமறிந்தும் அமையாது பண்டிதரவர்களின் கண்டன வுரைக்குத் தாம் ஓர் விளக்க மறுப்பெழுதிச் செந்தமிழிலேயே (28ஆம் தொகுதியின் 7ஆம் பகுதியில்) வெளியிட்டார்கள். அத்துடன் அவ்வாதம் நின்றது.

பதிற்றுப்பத்துப் பதிகத்தொடர்கள் தாய்வழிகுறிப்பதென முதலிற் கண்டவன் நானல்லன்; முன்னமே இக்குறிப்புணர்ந்து ஆங்கிலத்தில் தாமெழுதிய தமிழ்வரலாற்றில் இதைக் காலஞ்சென்ற திரு. எம். ஸ்ரீநிவாசையங்காரவர்கள் சுட்டியுள்ளார்களென பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் என் கட்டுரைக் கெழுதிய கண்டன உரையால் அறிந்து மகிழ்ந்தேன். பிறகு அக்குறிப்பையும் அவர்கள் ஆங்கிலப்புத்தகத்திற் படித்துப்பார்த்தேன். பதிகத் தொடர்களின் முதலிற் குறிக்கும் சேரமன்னருக்கு, பாட்டுடைச்சேரர் புதல்வரல்லர்; இடைத்தொடர் சுட்டும் இருமுதுகுரவருக்கும் புதல்வராய்ச் சேரருக்கு வழித்தோன்றலாம் மருகரேயாவரென முதலிற்கண்ட பெருமை ஸ்ரீநிவாசை யங்காரவர்களதே எனத் தெளிந்தேன். தேவி வேண்மாள் என்ற சொற்கள் மனைவியரையே குறிக்கு மெனத் தெளிந்த அவர்கள் மகள் என்ற சொல் சங்கநூலில் மனைவிப் பொருளில் வருமென அறியாமையால் சிறிது மறுகி, சேரலாதற்குச் சோழன்மகள் ஈன்றமைந்தன் என்ற சிலப்பதிகாரத்தொடரில் வரும் மகள் என்பது மகன் என்றிருக்க வேண்டு மெனவும், அது சுவடிபெயர்த் தெழுதுவோரால் மகள் எனப் பிழைபட எழுதப்பட்ட தவறான பாட பேதமெனவும் கருதினார்கள். மகள் என்பதற்குச் சிலப்பதிகாரம் மணி மேகலை முதலிய சங்க நூல்களிலேயே மனைவிப் பொருட்பிரயோகம் உண்மையை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் கண்ட பதிகப்பொருள் துணிவை இன்னும் வலியுறுத்தி விளக்கியிருப்பார்கள். அப்போது என் கட்டுரையே வேண்டப்படாது. அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டதை முன் அறிந்திருந்தால் பிறிது பொருளாராய்ச்சி யிடையே இப்பதிகத்தொடர்கள் சுட்டிய குறிப்பைக்கொண்டு நான் செய்த ஆராய்ச்சிக்கு அவசியமே இருந்திராது.

இனி, சமீபத்தில் மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் தங்கள் சங்கப் பண்டித பரீக்ஷைக்கு இக் கட்டுரையைப் பாடமாக்கியதால், சில மாணவர் இக் கட்டுரைப் பிரதி வேண்டிக் கேட்கலாயினர். முன் செந்தமிழில் விரைந்தெழுதி வெளிவந்த என்கட்டுரையை இன்றியமையாச் சில சிறு திருத்தங்களுடன் இப்போது சஞ்சிகையுருவில் தருதற்குரிய காரணம், மாணவரும் தமிழன்பர் சிலரும் இதைப் படிக்கவிரும்பிப் பிரதிகள் வேண்டிய தொன்றேயாகும். இதைப் படிப்பவர் இன்னும் விரிந்த ஆராய்ச்சிகளி லிறங்கி மெய்ப்பொருள்காண முயலுதற்கு இஃது உதவுமாயின், அதுவே நான் விரும்பும் கைம்மாறாகும்.

என் கட்டுரையைப் படித்து மதிப்புரைகள் உதவிய புலமைப் பெருந்தகையினர்க்கு என் நன்றி என்றும் உரியதாகும். இவ்வாராய்ச்சி யுரையை மதித்துப் பரீக்ஷா பாடமாக்கிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் அன்பைப் பாராட்டுதலன்றிப் பிறிது நான் செய்தற்கில்லை. இதனை அச்சிட்டு வெளிவரச்செய்வதில் அனைத்துதவியும் விரும்பிச் செய்த என் நண்பர் மதுரைச்சங்க நூற்பரிசோதகரும் செந்தமிழ்த் துணைப்பதிப்பாசிரியரு மான திரு இராமாநுஐயங்காரவர்களின் உதவி மறக்கொணாது.

என்னைப் பல ஆராய்ச்சிகளிலும் ஊக்கி என் கட்டுரைகளைப் பாராட்ட வெளியிடப்பண்ணிவரும் கெழுதகைமைத் தமிழ்வாணரெல்லார்க்கும் இக் கட்டுரையை உரிமைசெய்து உவக்கின்றேன்.

அண்ணாமலை நகரம்,
பவ வருடம்
மாசி மாதம் 14ஆம் தேதி
25.2.1935

ச. சோமசுந்தரபாரதி

அட்வோகேட்,

தற்போது தமிழ்ப்பேராசிரியர்,

சர்வகலாசாலைத் தமிழ்ப்பகுதித்தலைவர்


பதிப்புரைகள் (1)

(சென்னைச் சட்டசபைச் செக்ரட்டரி திருவாளர் திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ண ஐயரவர்கள் பி.ஏ.எம்.எல்.,)
(ஆங்கிலக் கடித மொழிபெயர்ப்பு)
அன்புமிக்க பாரதியாரே!

சேர அரசர் தாயமுறையைப்பற்றிய தங்கள் மிக இனிய கட்டுரையை முழுவதும் படித்துப்பார்த்தேன். சேர அரசருள் மருமக்கட்டாயமுறை யுண்மையைச் சங்கநூல்கள் ஆதரிப்பன என்றே யான் எஞ்ஞான்றும் எண்ணினேன். தங்கள் கட்டுரையில் 5ஆம் பக்கத்து 4ஆவது பிரிவில் தங்களாலும் காட்டப்படும் சொற்றொடரைத் திரு. எம். ஸ்ரீநிவாஸ ஐயங்கார் தம் தமிழ் ஆராய்ச்சிகள் என்ற நூலுள் 273 ஆம் பக்கத்தில் மணக்கிள்ளியை நெடுஞ்சேரலின் உடன்பிறந்தாட்குக் கணவனாகவே கொண்டு விளக்கியுள்ளார். திரு. பி.டி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் தம் தமிழ்ச் சரிதம் என்ற நூலுள் 512ஆம் பக்கத்தில் இக்கருத்தொடு மாறுபடக் கூறினா ரெனினும், அவர்கூற்று வலியற்றதென நான் கருதலானேன். சேரவரசர் வழியில் மருமக்கட்டாயத்தை ஆதரிக்கச் சங்கநூல்களில் இவ்வளவு பொதி நிதிபோன்ற செய்திகளிருப்பதை நான் முன்அறியேன். இவ்வெல்லாச் சான்றுகளையும் திரட்டித் தாங்கள் ஒரு கட்டுரையாக வெளியிட்டது தமிழகத்திற்கு ஒரு பெரும்பணி இயற்றினதாகும். மருமக்கட்டாய முறை யானது மக்கட்டாயக்குடிகளின்மேல் புதிதாகச் சுமத்தப்பட்டதென்னும் கொள்கை அதனளவில் முதன் முகத்தே நிலையுறுவதென்றாம். தாய் வழித்தாயநிலை ஏற்படுவது எஞ்ஞான்றும் இல்லையாகும். தென்னாட்டில் வந்தேறிய ஆரியர் (தந்தைவழி) நாகரிகம் இப்பழைய தாய்வழித் திராவிட நாகரிக முறையை மேலைக்கடற் புறத்தே ஒதுக்கியதென்பதும், அக் குடகடலடைகரைக்கேரள நாட்டினினின்றும் இப்பழைய தாயமுறையை ஒழித்துவிட ஆரிய நாகரிகத்திற்கு மாகாது போயிற்றென்பதும் இயல்பாகக் கூடியதாம்.

ஆரியர் நாகரிகம் தந்தைவழித் தாயத்தின் மேல் நிலைபெற்றது. இன்னும் சின்னாளில் இம் மருமக்கட்டாயமுறை எவ்வளவில் தமிழர் பழ இயலொழுக்கம் என்பதையும் தாங்கள் ஆராய்வீர்கள் என்றும் அதனையும் ஆராய்ந்து நாகரிக உற்பத்திவளர்ச்சி விசாரத்திற்கு விரும்பத்தகும் நல்லுதவி யாற்றுவீர்கள் என்றும் நான் நம்புகின்றேன்.

  செயின்ட் ஜார்ஜ்கோட்டை
  16-1-1935.

  மிக்க அன்புபாராட்டுடன்,

  உண்மையில்

  தங்களவன்

  ஆர். வி. கிருஷ்ணன்

  (ஆங்கிலத்தில் ஒப்பம்)


(2)

(மதரா கார்ப்பொரேஷன் வித்யாஇலாகா பரிசோதகர் திருவாளர் எஸ். சச்சிதாநந்தம்பிள்ளையவர்கள் பி.ஏ. எல்.டி.,)
(ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு)
தமிழ்ப்பேராசிரியர் திரு. எஸ்.எஸ். பாரதியாரவர்களின் சேரநாட்டுத் தாயமுறை என்ற தனிக்கட்டுரையை மிக்க ஆர்வத்துடன் படித்தேன். தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற ஆராய்ச்சியுரையை திறம்பெற ஆக்கியோராகிய அப்பேராசிரியர், இக் கட்டுரையில் பண்டைத் தமிழக வரலாறுகளை விசாரிப்பார் பலருள்ளத்தே தோன்றிய சங்ககாலப் பெருஞ்சேரர் வழிமுறைபற்றிய மயக்கங்கள் தவறான சில கருத்துக்களையும் தெளியவைத்து விளக்கியுள்ளார்கள். பண்டைச் சேரகுல அரசர்கள் இன்று மலையாள நாட்டில் வழக்கிலுள்ள மருமக்கட்டாய முறையையே மேற் கொண்டிருந்தனரென்று மறுக்கவொண்ணாவாறு இவர்கள் நிறுவியமுடிபு தமிழக வரலாற்றுத் துறையிலுழைப்போர் பலர்க்குப் புதிதாக வெளிப்படுத்தப் பட்ட உண்மையாகும். பேராசிரியர் பாரதியாரவர்கள் இப் பத்தகத்தே தமது ஆழ்ந்த தமிழிலக்கிய ஆராய்ச்சியையும் சட்ட ஞானத்தை யும், தம் வளமிக்க நுண்மாண் நுழைபுலப் பேற்றினையும் இவ்வாராய்ச்சியிற் புகுத்திப் பயன் படுத்தியமையால், இது புகழ்சான்ற பழஞ்சேரர் வரலாற்றில் நமக்குள்ள குறையறிவை நிரப்பப் பேருபகாரமாயிற்று. நூற் சான்றுகளை வடித்தெடுத்துச் சீர்தூக்கி ஆளும் அவர்கள் திறம் மிக வியக்கத்தக்கதாம்.

புலமைமிக்க இந்நூலாசிரியர் தாம் வழக்கறிஞராயிருந்த ஞான்று தமது இன்பக்காலப் போக்காய்த் தமிழ்ச்சுவை துய்க்கும் இடையே இத் தனி யாராய்ச்சிக்கட்டுரை எழுதினரென்பது குறித்து வியக்கத்தக்கது. அண்ணா மலை நகர்க் கண் நிறுவப்பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்ப்பகுதித் தலைவராக இவர்களை நியமித்து இவர்களை முழுநேர விழுப்பணியைத் தனதாகப்பெற்றது தமிழகத்துக்குப் பெரும்பேறாகும். இதுபோன்ற திறஞ்சான்ற நுண் பொருணூல் இன்னும் பல உபகாரநிதியாக இவர்கள் தருவார்களென எதிர்பார்ப்பவன் யானொருவனல்லன். என்போல்வார் பலருள்ளார்.

  சென்னை
  12-2-35

  எஸ். சச்சிதாநந்தம்பிள்ளை,

  (ஆங்கிலத்தில் ஒப்பம்)
  சபாபதிநிலையம். லாயிடுரோடு
  இராயப்பேட்டை


(3)

(மதுரைத் தமிழ்ச்சங்கக்கலாசாலைத் தலைமையாசிரியர் பிரும்மஸ்ரீ திரு. நாராயணையங்காரவர்கள்)
‘சேரர் தாயமுறை’ என்னும் இவ்வாராய்ச்சியுரையானது நுண்மாண் நுழைபுலச் செல்வரான திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் எம்.ஏ.,பி.எல்., அவர்களால் எழுதப்பெற்றது.

இதன்கட் சேரர் குலத்தினர்க்கு அவர்நாட்டில் இக்காலத்தில் வழக்கத்தி லிருக்கும் மருமக்கட்டாயமுறையே முற் காலத்திலும் வழங்கிவந்த தென்று பலசான்றுகளால் ஆராய்ந்து காட்டப்பட்டிருக்கிறது.

அது இக்காலத்துள்ள புலவர் பலர்க்கும் புதுவிருந்தாயமைந்து மகிழ்வூட்டி வருகிறது. பாரதியார் எழுதும் ஆராய்ச்சியுரை ஒவ்வொன்றும் அப்படிப்பட்டதே.

அவற்றுள்ளும் இவ்வாராய்ச்சி மறந்தொழிந்திழந்த (பண்டைச்)சேரர் மருமக்கட்டாயத்தை நாட்டற் கெழுந்ததொரு போராட்டமாயும் உள்ளது.

இத்தகைய போராட்டத்தில் எதிர்ப்போரைப் பழித் துரைத்தலின்றி விடயத்தை விரித்துரைத்து மேற்சொல்லும் மேலான வாதமுறைக்கு இது வழிகாட்டியாயிருக்கிறது.

தம் துணிபுரைத்தற்குச் சாதனமான சான்றுகள் ஒருசில பிறர் துணி புரைத்தற்கும் சாதனமாவனபோன்று தோன்றுமவை யொவ்வொன்றும் அவ்வாறன்றென்றுகாட்டி நாட்டுதற்கேற்ற தடைவிடைகளை யுட்கொண்ட தொடைநடையினால் விடயங்கள் விளங்கச் சொல்லிச் செல்லும் திறமானது வழக்கியன் முறையால் மன்றாடற்றிறமையின் மாண்பமைந்து விளங்கு கின்றது.

ஆராய்ச்சியுரை வரைவார்க் கீதோர் அருமைவாய்ந்த உரையாணியாய் அமைந்துள்ளது.

இன்பம்பயக்கப் படிப்பார்க்கு இஃதோர் விநோதமாகத் தோன்றத் தக்கது.

பாரதியாரவர்கட்குள்ள தமிழ்மொழிப்புலமைக்கும் சங்க நூற்பயிற்சிக் கும் இவ்வாராய்ச்சியுரையொன்றே வாய்சான்ற சான்றாய் அமையவல்லது.

“இன்னோனுக்கு, இன்னோன்தேவி இன்னோள் ஈன்ற மகன் இன்னோன் என்ற வாய்பாடுடைய பதிற்றுப்பத்துப் பதிகச் சொற்றொடர்களெல்லாம் மருமக்கட்டாய முறையை நாட்டு தற்கே ஏற்றசாதனமென்று காட்டியிருக்கும் பாரதியாரது கல்வித்திறமையும் சொல்வித்தகமும் பாராட்டத் தக்கன.

இவ்வாராய்ச்சிக்கு அடிப்படையான சாதனம் மலை நாட்டுள் இக்காலத்தும் மருமக்கட்டாய முறை இருந்துவருதலேயாம். அதனை முதலில் நன்கு விளக்கிக்கொண்டு முறையே பழைய சங்க நூற்சான்றுகளை அதற்கு இணங்கக் காட்டிச் செல்வது நிரந்தினிது சொல்லுதல் என்னும் சொல் வன்மையைப் புலப்படுத்துகிறது.

சொல்வன்மையும் நுண்ணுணர்வும் கொண்டு தாம் பிடித்ததனையே சாதிக்கவிரும்பும் ஒருசிலர் போலன்றிச் செப்பத் தினின்றும் திறம்பாதுநின்றே சங்ககால நிகழ்ச்சியினை உள்ளவாறுணர்ந்து, உணர்ந்தவாறு பிறர்க்குணர்த்தும் பாரதியார்தம் உழைப்பும் ஊக்கமும் ஒப்புரவாண்மையும் நன்குமதிக்கத்தக்கன.

சுருங்கச்சொல்லின் இவ்வாராய்ச்சியுரையானது அளவினாற் சிறியதேயாயினும் புலமையாற் பெரியதென்று போற்றத்தகும் என்பதே எனதுதுணிபு.

(ஒப்பம்) திரு. நாராயணயங்கார்

தமிழ்ச்சங்கம், மதுரை.


(4)

(அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பேராசிரியர் திருவாளர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்கள்)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப்பகுதித்தலைவர் திரு. சோமசுந்தரபாரதியாரவர்கள் எம்.ஏ.பி.எல்., அரிதின் ஆராய்ந்தெழுதிய சேரர் தாயமுறை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். இஃது இக்காலத்துக் கேரள நாட்டினரிடைக் காணப்படும் மருமக்கட்டாயமுறைக்குச் சங்க நூல்களில் ஒன்றாகிய சேரவேந்தர்களின் சிறப்புக்கூறிய பதிற்றுப் பத்து என்னும் பழந்தமிழ் நூலின் பதிகப்பாட்டுக்களிற் கண்ட குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டுள்ளது. இவ்வாராய்ச்சி தமிழில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத தொன்று அப்பதிகப்பாடல்களில் தாம் மேற்கொண்ட பொருட்கு இயைந்த பகுதிகளுக்குத் திரு. பாரதியாரவர்கள் கண்ட பொருள், முட்டுப்பாடின்றியும் கலக்கமின்றியும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பொருள் வலியுறுத்தற்குரிய பற்பல சான்றுகள் திறனுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பழமையே நினைவு கூர்ந்தொழியாது உண்மை யாராய்ச்சியிற் றலைப்படலும், முன்னூல்களிற் கண்டவொன்றை யெதிர்த்தாராய்தலும், உண்மையெனக் கண்டவற்றை எக்காரணங்களையுமுன்னிட்டு மறையாது வெளிப்படுத்தலும் நம் பாரதியார வர்கள்பாற் காணப்படும் அருஞ்செயல்களாம் இவற்றிற்கு இக்கட்டுரையொன்றே போதிய சான்றாக நின்று திகழ்கின்றது. பதிற்றுப் பத்துப்பதிகப்பாடல்களிற் கண்ட பகுதிகள் இன்னசேரற்கு இன்னான் தேவி யீன்ற மகன் இன்னான் என்று பின் ஒருசேரன் சுட்டப்படுதலான், அவற்குத் தாயும் தந்தையும் வேறாக அவன் முன்னைச் சேரற்கு ஏதோ ஒருவகைத் தொடர்புடையானாவன் என்பது போதரும். அத்தொடர்பு அரசியலுரிமை யெனவும் அவ்வுரிமைக்கு அவன் உரியனாதல் மருமக்கட்டாய முறையானாமெனவும், அதனால் அவற்கு முன்னைச்சேரன் மாமனாவ னெனவும், அச்சேரன் சோதரிய பின்னவன் தாயாவளெனவுங் கொண்டு மருமக்கட்டாய முறையை நிறுவிய திரு. பாரதியா ரவர்களின் நுண் மாணுழைபுலமும் நூலறிவும் ஆராய்ச்சித் திறனும் அறிஞருள்ளத்தை வியப்புறச் செய்து இன்புறுத்து வனவாம். இவர்கள் ஆராய்ச்சித் துறையெல்லாம் இங்ஙனமே புதிய நெறியிற் சென்று பழமையின் உண்மை யைப் புலப்படுத்தும் இயல்பினவாமென்பது முன்னர் இவர்கள் வெளிப் படுத்திய சில ஆராய்ச்சிக் கட்டுரைகளானும் உணரலாம். தொன்மைய வாமெனும் எவையும் நன்றாகா, இன்று தோன்றிய நூலெனும் எவையும் தீதாகா என்னுங் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் திரு. பாரதியாரவர் களின் ஆய்வுரை புலவருலகத்துக்கு நல்ல விருந்தாதலையறிந்து மகிழ்ச்சி யடைகின்றேன். நீடுவாழ்க!

  அண்ணாமலைநகர்,

  (ஒப்பம்) மு. கதிரேசன்

  26-2-35


(5)

(கால்நடை மருத்துவ இலாகாவிற் பென்ஷன்பெற்ற மேலதிகாரி திருவாளர் இராவ்சாகிப் வி.பி. சுப்பிரமணியமுதலியாரவர்கள் ஜி.பி.வி.சி.,)
(ஆங்கிலக்கடித மொழிபெயர்ப்பு)
என் அன்பிற்குரிய ஐயா!

… … தங்கள் சேரர் தாயமுறை ஆராய்ச்சிக்கட்டுரையைப் பற்றிய விவரமான என்கருத்தை எழுதி இப்போது அனுப்புகிறேன். இது வரையறையும் தெளிவுமற்ற பொதுவுரையாகக் கருதப் பெறாதென நம்புகிறேன். தங்கள் சேரர்தாயமுறையையும் அதற்கு மறுப்பாகப் பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள் எழுதி வெளியிட்ட சேரர்தாய வழக்கினையும், அம்மறுப்பை மறுத்த நீதிவாதி திரு. எல். கிருஷ்ணசாமிப் பிள்ளையவர் களின் சேரர்தாயமுறைக் கட்டுரையையும் நான் படித்துமுடித்த பிறகே இத்துடன் அனுப்பும் என் கருத்துரை எழுதப்பட்டது. இதுவரை உலகறியாப் புதிய செய்திகள் இனி வெளிவந்தா லன்றித் தங்கள் கட்டுரைமுடிபுகள் அசையமாட்டா.

ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன் (1929 ஆம் ஆண்டு பெப்ருவரி மார்ச்சு மாத வெளியீட்டில்) செந்தமிழ்ப் பத்திரிகையில் தங்கள் சேரர்தாயமுறையைப் படித்துள்ளேன். அக்கட்டுரை மெய்ம்மையா ராய்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம் என்பதே அப்போது அக்கட்டுரை என்னுள்ளத்தே தோற்று வித்த கருத்தாம். தங்கள் வாதங்கள் திட்டமானவையாய் நேரக்கூடிய தடைகளுக்கும் தக்கவிடைகளாய்நின்று பதிற்றுப்பத்துப் பதிகங்களுக்குத் தாங்கள் கூறும் செம்பொருட்பொருத்தத்தை எனக்கு வலியுறுத்திக்காட்டின. அன்றியும், இதில் தாங்கள் கண்ட முடிபுகள், ஒருநாட்டில் நடைபெறும் வழக்கானது புதிதிடைவந்ததெனக் காட்டும் தக்க பிறவேறு சான்றில் வழி ஆண்டு அப்படியே முற்காலத்தும் வழக்குப் பெற்றிருந்ததென்றே கொள்ளவேண்டும் என்னும் சரித அளவை அறிவு நூற்றுணிபுக்குச் சாலப் பொருத்தமுடைத்து.

தங்கள் விருப்பப்படி தங்கள் கட்டுரையை யான் மறுமுறையும் படித்துமுடித்ததால் யான் முன்கொண்ட கருத்தே மிகவும் வலியுறுவதாயிற்று.

இளங்கோவடிகளும் அவருரையாளராகிய அடியார்க்கு நல்லாரும் எடுத்தாளும் மகள் என்னும் மொழி புதல்விப் பொருளன்றிப் பிறிதுபொருள் தராதாயின், பதிகங்களுக்குப் பொருள்விளக்கத் தாங்கள் மேற்கொண்ட பெருமுயற்சி பயனற்றதாமென்று மேற்குறித்த செந்தமிழ் 134ஆம் பக்கத்தில் தாங்கள் கூறுகின்றீர்கள்.

தனக் குண்மையினுரிய ‘மனைவி’ என்ற பொருள் மகள் என்ற மொழிக்கு இலதாமியனுங்கூட, பதிகமியற்றியோர் சேரர்க்கு மருமக்கட்டாயமுறையைத் தவறாகச் சார்த்திவைத்தாரென்ற செய்தியைத்தாங்களே முதன்முதலில் மறுக்க வொண்ணாவாறு நிறுவிய நற்பணிசெய்தீராவீர்கள். ஆனால் மகள் என்ற சொல்லுக்கு மனைவிப் பொருள் உண்டென்பது தங்களாலேயே பின்னால் சான்றுகாட்டி நிறுவப்படுகின்றது. பதிகங்கள் மருமக்கட்டாயமுறையைக் குறியாது மக்கட்டாயவழியினையே குறிக்குமெனக் காட்டக்கருதி வருந்தி முயன்றோரெல்லாராலும், தங்களின் உரைமுகத்தே பதிக ஆசிரியரது தவற்றினை அகற்றிக்காத்தல் ஆகாது. உண்மையில் மகட்பொருள் விளக்கம் என்ற தலைப்பின்கீழ்த் தாங்கள் விளக்கிய நியாயவாதங்களால் மேற்கூறிய முயற்சியாளர் அப்பதிக ஆசிரியர்க்கு வழங்கிய வழுநிலையினின்றும் அவரைத் தாங்களே மீட்டுத் தந்துள்ளீர்கள்.

பிறசான்றுகள் என்ற தலைப்பின்கீழ்த் தாங்கள் விளக்கும் நியாயங்கள் முதலிலே அசைக்க இயலாதவாறு தங்களால் நிறுவப் பெற்றுள்ள சேரர்தாயமுறையைப் பற்றிய தங்கள் முடிபுகளை மீண்டும் நன்கு வலியுறுத்துகின்றன.

பதிகங்களில் மகன் என்றசொல் வந்தமையானே பதிகங்களில் பொருள்பற்றிய இடர்ப்பாடுண்டாயதென்று எனக்குத் தோற்றுகின்றது. தாங்கள் தெளிய விளக்கியுள்ளவாறு பதிகங்களின் ஆசிரியரால் மகன் என்னும் மொழி செழும் பொருணயத்துடன் வழங்கப்பட்டுள்ளது. யானறிந்தவரையில் மகன் என்னுஞ் சொல்லைவிட, அன்றி அதனை ஒப்பாவாகிலும், பதிக ஆசிரியரது கருத்தை விளக்குதற்குரிய சிறந்த சொல் வேறொன்று தமிழ்மொழியில் இல்லை. அரசுரிமைத் தந்தையான அம்மான்பால் தன் தாய்வழியரசினை உரிமையிற் பெறும் அரசுரிமைப் புத்திரனாகிய மருமானைக் குறிக்க மகன் என்ற சொல்லை வழங்கிய பதிக ஆசிரியர் ஞானபிதா ஞானபுத்திரன் என்னும் வழக்கினை உளத்துக் கொண்டார் போலும்! கைவல்யநவநீதம் தத்துவம் விளக்கப்படலம் `19ஆம் செய்யுளில் ஞானகுரு தன் மாணவனை வாராய் என் மகனே என்று விளித்தல் ஈண்டு நோக்கற்பாற்று!

வெ.ப. சுப்பிரமணியமுதலியார்

(ஆங்கிலத்தில் ஒப்பம்) வெள்ளகால்,

திருநெல்வேலி ஜில்லா, 26-1-35


(6)

(சென்னைச் சருவகலாசாலைத் தமிழ்ப்பேரகராதித் தலைமைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் பி.ஏ.பி.எல்.,)
சிறந்த தமிழறிஞரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. சோமசுந்தர பாரதியாரவர்கள் எழுதிவெளியிடும் இந்நூலுக்குப் பிறரொருவரது, முன்னுரையொன்று வேண்டுமென யான் கருதமாட்டேன். 1929 ஆம் வருஷத்திலே பாரதியாரவர் களின் வாசதான மாகிய பசுமலைக்கு யானும் எனது நண்பரொருவரும் சென்றிருந்தோம். அப்பொழுது சேரர் தாயமுறையைக் குறித்து அவர்கள் ஆங்கிலத்தில எழுதியிருந்த கட்டுரையிற் சிலபாகங்களை எங்களுக்கு வாசித்துக்காட்டினார்கள். அவர் களுடைய ஆராய்ச்சித்திறத் தினைப் பெரிதும்வியந்த அக் கட்டுரையினைச் சரித்திரசம்பந்தமான மாதாந்தரப் பத்திரிகை களில் வெளியிட்டுப் பலர்க்கும் உபகாரமாம்படி செய்ய வேண்டு மென வற்புறுத்தினேன். பின்னர் அதனைத் தமிழ்ப் படுத்திச் செந்தமிழ்ப்பத்திரிகையில் வெளியிட்டார்கள். இங்கேகூறிய படி எனக்கும் இந்நூலுக்கும் ஒருசிறு தொடர்பு இருத்தல் பற்றியே பாரதியாரவர்களின் வேண்டுகோளின்படி ஓர் முன்னுரை எழுதுதற்கு யான் மனமுவந்து இணங்கினேன்.

பழந்தமிழ்க் குடிகளுள் ஒருசாராராகிய சேரமரபினருள் எவ்வகையான தாக்கிரமம் அமைந்திருந்ததென்று ஆராய்ந்து தெளிவதே இந்நூலின் நோக்கம். இந்நூற்பொருளாகிய தாயவழக்கு பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அதிவாரம் போன்றது. தமிழ் மக்களது பூர்வசரித்திர விளக்கத்திற்கு மிக இன்றியமையாதது. ஆதலால் இந்நூலின்கண் ஆராய்ச்சிக் கெடுத்துக் கொண்ட பொருள் மிகமிக முக்கியமானதாகும். இதுவரை தமிழ் அறிஞர் களும் தமிழ் நாட்டுச் சரித்திர அறிஞர்களும் ஆராய்ந்துவந்த பொருள்களில் இந்நூற் பொருளைக்காட்டினும் சிறந்ததொன்றைக் காணுதல் அரிதாம். இதனை வாசகர்கள் நன்குணர்தல் வேண்டும்.

இந்நூல் தோன்றுவதற்கு முன்புதான் இப்பொருளைக் குறித்துத் தமிழாராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியிருந்தார்கள். ஸ்ரீமான் மு. இராகவையங்காரவர்கள் ‘சேரன் செங்குட்டுவன்’ என்னும் நூலில் பாரதியாரவர்கள் கொள்கையொடு மாறுபட்ட மக்கட்டாயக்கொள்கையை வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். காலஞ்சென்ற ஸ்ரீமான் எம். ஸ்ரீநிவாஸ ஐயங்காரவர்கள் தமது தமிழாராய்ச்சியுரைகளில் (கூயஅடை ளுவரனநைள) பாரதியாரவர்களது கொள்கையை ஒருவாறாக முற்பட வுணர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால் பாரதியாரவர்கள் எழுதியதன்பின்னரே இப்பொருள் தமிழ் மக்களது பூர்வ சரித்திரவுணர்ச்சிக்கு எத்தனை யின்றியமையாததென்பது அறிஞர்களால் நன்குணரப்பட்டது. இவ்வுணர்ச்சி தோன்றுதற்கும் பல அறிஞர்களும் பலபடியாக இப்பொருளை ஆராய்தற்கும் பாரதியாரவர்களே முக்கியக் காரணராயுள்ளார்கள். பாரதியாரவர்களே இப்பொருளின் சரித்திர கௌரவத்தை நாமனைவரும் நன்குணரும்படி செய்தவர்கள்.மேற்கூறியவற்றால் இந்நூல் மறுப்புரையாகவும் துணிந்துரையாகவும் இயன்றுள்ளதென அறியலாகும். ஆனால், ஆராய்ச்சியால் உண்மைகாணவேண்டுமாயின், அது தருக்க நெறிபிறழாத வாதத்தினால் ஆகுமேயன்றிப் பிறவாறு ஆகாது. வாதம் இன்றியமையாததாக இருப்பதினால், அதனைக் கௌரவபுத்தியோடு நிகழ்த்துதல் வேண்டும். எவ்வகையான குற்றமுமின்றிச் செவ்வையாகவும் கௌரவமாகவும் எழுதிய மறுப்புரைகளுள்ளே பாரதியாரவர்களியற்றிய இந்நூல் மிகச் சிறந்ததாகும்.

இச் சிறந்த ஆராய்ச்சிநூலினைக் கற்றுத் தமிழறிஞர்களனைவரும் பெரிதும் பயனடைவார்க ளென்பது திண்ணம்.

(ஒப்பம்)

எஸ். வையாபுரிப்பிள்ளை


சேரர் தாய முறை


பகுதி 1 : முன்னுரை

கழிந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கேரளத்திற் பல வகுப்பார் பெண்வழியில் மருமக்கட்டாயமுறை பேணுவதைக் காணுகின்றோம். நாம் அறிய இவ்வழக்கம் நாயர் பெரு மக்களிடை மட்டுமில்லை; தென்திருவாங் கூரில் நாஞ்சில் நாட்டு வேளாளர் முதல் வடமலையாளத்தில் மகம்மதிய மாப்பிள்ளைமாரும், பொய்யானூர்க் கூற்றத்துப் பார்ப்பன நம்பூதிரிகளும், தென்கன்னடத் தொன்மக்கள் பலரும், துளுவர் கொங்கணர் சிலரும் இத்தாய் வழித்தாய முறையையே நெடுநாளாகக் கையாண்டு வருகின்றனர். இவ் வழக்க முடையாரெல்லாரும் குடமலைக்கு மேற்கே பண்டைச் சேரநாட்டின் பகுதிகளான மேலைக்கடற்கரை நாடுகளிலே இருப்பதாகவும் அறிகின்றோம். பார்போசா, சோனரத்து முதலிய ஐரோப்பிய யாத்திரிகர் மேலமலைத் தொடருக்கு மேற்குநில மக்கள் பலர் தம்முள் பிறிதிடத்திற் காணரிய இப் பெண்வழித் தாயம் பெரிதும் வழங்கப்பெறுவதைக் கவனித்துத் தம் யாத்திரைக் குறிப்புகளில் இவ்வதிசயச் செய்தியை எழுதியிருக்கின்றனர்.

இக் கேரளவழக்கத்தை நாம் அறிவோம். எனினும், இது புதிதாகக் குடபுலத்தில் எப்படியோ வந்தேறி நடக்கும் ஒரு இடைக்கால வழக்க மெனக்கொண்டு வாளா அமைகின்றோம். சேரநாடு தமிழகத்தின் பகுதி யென்றும், சேரர்பரம்பரையிலும் மற்றைத் தமிழ்வேந்தர் குடிமரபாம் மக்கட்டாயமே பண்டை நாளில் அடிப்பட்ட பழவழக்காய் ஆட்சிபெற்றிருந்த தென்றும் நாம் நம்புகின்றோம். எப்படியானாலும் சங்காலத்துக்கு நெடிய பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சேரநாட்டில் மருமக்கட்டாய முறை புதுவழக்காய்ப் புகுந்திருக்க வேண்டுமெனக் கொள்கின்றோம். அப்படி நாம்கொள்வதால் அதன் உண்மையினை எனைத்தளவும் ஆராய்தற்கு அவசியம் நாம் காணகில்லோம். நம்மிடத்து இம்மனநிலைக்குத் துணையாகுங் காரணங்கள் பலவுள. எதனையுமே ஆராயாமல் கண்டபடி கொண்டமையும் இயல் நமது பெரியமாட்சி. ஊழொன்றிற்கிறைமைகொடுத்து, ஊக்கத்தை அறத்தொலைத்துப் பாழொன்றைப் பொறுமையுடன் பல துறைகளிலும் நாம் பயின்று வருகின்றோம். இப்பழக்கத்தால் நாம் பெற்ற பயன் பலவற்றுள், உண்மைகளைத் தேடுவதிற் பெருவெறுப்பும், கையறவிற் கழிவிருப்பும் என இரண்டுமாம். இவ்விரண்டும் நம் மனத்தில் நாளடைவில் மிகத்தடித்து வேரூன்றிவளர்கின்றன. மேனாட்டார் கண்டளந்து சொல்லுமுன்னே நமது பழஞ்சரிதங்களை நாம் உணரோம். நம்மிடையே கிடையாத நமது அரிய பழைய தமிழ் நூல்களெல்லாம் இன்றளவில் இலண்டனிலும் பாரிசிலும் இருக்கப் பார்ப்போம். நமது தற்கால நிலைக்கு இவ்வாறு உண்மைநலம் பேணாத நம்மவரின் பெருநொதுமல் மனப்பாங்கைச் சிறிதல்ல, செம்பாதி காரணமாக் கூறல் கூடும்.

“பார்ப்பனருக்கும், பணமுடைய மேல்வகுப்பார் பலருக்கும். பெண்டி ரெல்லாம் மணமற்ற இன்பத்திற்குத் துணையாகி வாழவேண்டும் என்ற இழிவழக்கைக் கேரளத்தில் வடவாரியமுனிப் பொருநர் பரசுராமர் அந் நாட்டார் நலம் பேணிப் புகுத்தியதாய் நம்பூதிரிமார் சிலர் நவில்வதனைப் பழமறைபோற் கொள்ளுகின்றோம். சங்கநூல்களில் யாதொன்றும் நம் மக்கட்டாய மரபிற்கு மாறாய தாயமுறை சேரருக்குச் சுட்டில தென்று ஒருதலையாத் துணிகின்றோம். இவை கொண்டு மருமக்கட்டாயமுறை சங்ககாலத் தமிழ்ச் சேரர்க்கில்லாத பின்பெழுந்த புதுவழக்கமென்று அதனிற் சங்கையற்றுத் தெளிந்து நிற்போம்.

நாம் அறிய நெடுங்கால ஆட்சியுடைய வழக்கொன்றைப் புதியதெனத் தெளிவிக்கும் தக்கசான்று காணு மட்டும், வழங்குமிடத்து அது நிலைத்த பழவழக்காய்க் கொள்ளுவதே ஆராய்ச்சித்துறையில் அறிவுடைய நெறியாகும். தொல்லைச்சேரர் கையாண்ட தாயமுறைக்குத் தமிழகத்திற் பழப்பனுவல் ஏதேனும் கரிபகரக் காணுவமேல், அதன் உண்மை ஆராயத்தக்கதாகும். சேரர்குடிப்புகழ் விரிக்கும் தொன்னூல்கள் சிலவற்றுள் இது பற்றிய சான்று சிறிதுள்ளதென ஊகித்தற்கு இடமுண்டு. ஊன்றிநோக்கில், இந்நூல்கள் சிலவற்றுள், பழஞ்சேரர் பரம்பரையில் மக்கள்வழி பேணப்படாமல் தற்காலக் கேரளத்தார் கையாளும் மரு மக்கட்டாய முறையே வழங்கியதாய்க் கரிகூறும் சான்றுண்மை காணு கின்றோம். உண்மையினை உணர்தற்குக் காய்தல் உவத்தல் இல்லாத நடுநிலையில் நின்று நாம் ஆய்தல் வேண்டும்.


பகுதி 2 : தாயமுறை நியமங்கள்

ஆயுமுன்னர் நாம் அவசியம் அறிந்துவைக்க வேண்டியவாய் இவ்வாராய்ச்சிக்கு உதவுவனவாய தாயமுறை வழக்கங்கள் சிலவற்றை வரையறுத்துத் தெளிய வேண்டும். கேரளத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாய முறைக்கு அடிப்படையாயுள்ள சில வருமாறு :

1.  ஆண் வழியிலன்றிப் பெண்வழியிலேயே உறவு முறையும் கிளைமரபும் ஆட்சிபெறும்; தாய்மாரே குடிபேணும் அடிமரமாய்க் கருதப்படுவர். கிளைவளமும் குடிநிதியும் பெண்வழியே தழையும் வகை முறைவகுத்துக் குடியறங்கள் நிற்பனவாகும்.

2.  மக்களெல்லாம் தாய்க்குடியின்கிளைஞராவர்; அக்குடியில் ஆடவர்கள் தம் மாமன்மார்க்குரிய வழித்தோன்றல்களாய் வரன்முறையே உரிமைபெறுவர். மருகரெல்லாரும் வயது வரிசையிலே வரன்முறையாய்த் தனித்தனியே குடியாளும் தலைமைகொள்வர்.

3.  தற்கால நாகரிகப் புதுமாற்றம் சில புகுந்து பழவழக்கைப் பிறழ்வித்துத் தடுமாறச் செய்யுமுன்னே, கேரளத்திற் குலநிதியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்றும் இல்லை. தாய்வழிகள் பிரிந்து சில புதுக்குடிகள் தழையலாகும். குடிதோறும் பொதுநிதியம் பிரியாமல் வளர்வதாகும். பெண்களுக்கு நிதியாட்சியுரிமை இல்லை. குடிநிதி யின் பயனுகர்ந்து பொதுவாழும் உரிமை அக்குடியிற் பிறந்தவர்கள் – ஒரு தாயின் வழியினர்கள்- இருபாலார் எல்லார்க்கும் பொதுவுடைமையாக நிற்கும். பொதுக் குடியைத் தருவாடு என்று அந்நாட்டார் தற்கால மொழி வழக்கிற் சொல்லுகின்றார்.

4.  தருவாட்டின் (குடியின்) தலைமை, அதன் நிதியாட்சி மேற்கொள்ளும் உரிமையெல்லாம் மருகருள்ளே படிப்
    படியாய் வயது முறை வரிசையினில் வழிமுறையே வந்திறங்கும். ஒரு தலைமுறையாரின் தநயரெல்லாம் இம்முறையில் ஒப்புரிமை யுடையவராய், அவர் பெற்ற புதல்வரெல்லாம் சோதரராய் வயதுமுறைவரிசையினில் ஒவ்வொருவராக இதை ஏற்கலாவர். அவர்கட்குப் பின் அவர் தாய்மாரின் பெண்மக்களீன்றுடைய ஆண்மக்கட்கு அவ்வுரிமை அம்முறையே வந் திறங்கும். குடித்தலைமை பெற்று அதனை ஆள்வோரைக் காரணவர் என்றும், அவருக்குப்பின் அக்குடியில் அவ்வுரிமையடைதற் குரியவரை அநந்தரவர் என்றும் இன்று கேரளத்தில் இத்தாயமுறை வழங்குங் குடிகளிலே கூறிவருவர். மருகரெல்லாம் வயது முறை வரிசையினில் வழிமுறையே இவ்வுரிமை வரப்பெற்றுத் தத்தம் முறையில் ஒவ்வொருவரும் அத்தலைமை மேற்கொண்டு காரணவராகித் தம்கடனாற்றிக் கிளைதாங்கிக் குடியோம்பி (தருவாட்டைப் பேணி) ஆள்வர்.

5.  கேரளத்திற் கோக்குடிகள் தம்முள்ளும் நாடாளுங் கோலுரிமை, குடியாவார்தங்கள் சிறு குடித்தலைமை யுரிமையைப் போலவே, மருகர்வழியே வரிசை முறையில் வருவதாகும். கோக்குடியிற் பெண்கள் சிலர் தகவுடைய குறுமன்னர் குடியினரை மணந்து வாழ்வார். எனின், மனைவியர்க்குக் கணவர்குடிகளில் உறவுக்கடன் உரிமைபதவிகள் ஒன்றும் இல்லை. பெண்களெல்லாம் பிறந்தகுடியின் மட்டுமே கிளை உரிமை கடமைகளும் உரியநிலை மேதகவும் உடையராவர்.

6.  ஆண்மக்கள் தம் தந்தையர்க்குப் புதல்வரெனினும், அன்னார் குடிசிறக்க வழிநிற்கும் உரிமைபெறும் பிறங்கடையர் (வாரிசு) ஆகமாட்டார். அத்தந்தையர்க்கு வழித்தோன்றலாவார் அவருடன் பிறந்த பெண்வயிற்று மருகரோயாவர். ஆகவே, ஆண்மக்கள் தத்தம் மாமன்மார்க்கு மட்டுமே வழித் தோன்றல்களாகி நிற்பர்.

இவைபலவும் மருமக்கட்டாயமுறைக்கு நிலைக்களமாய், அதனோடு ஆட்சிபெறும் அறவழக்காம். இதை மறவாமல் மனத்திருத்தித் தொன்னூல்களின் உதவி கொண்டு, பழஞ்சேரர் பரம்பரையில் வழங்கியது இத்தகைய மருமக் கட்டாயமா நாம் ஆளும் மக்கட்டாயமா என்றதொரு சிற்றாராய்ச்சியில் இறங்குவோமாக.


பகுதி 3 : சங்கநூற் சான்றுகள்

இவ்வாராய்ச்சிக்குத் துணையாகும் சான்றுகள் பல. அவற்றுள், சங்கநூல்கள் சிறந்தன. அவற்றுள்ளும் பதிற்றுப் பத்தே தலைசிறந்தது. சேரரைச் சோழபாண்டியருடன் சேர்த்துப் பாடும் பிறநூல்கள் போலாது. இது முழுதும் தனியே சேரரையே பாராட்டுவதாகும். பத்துப் பழம்பெரும் புலவர் ஒவ்வொரு சேரனையும் பப்பத்துப் பாட்டிற் பாராட்டிப்பாடிய பாக்களைத் தொகுத்துப் பதிற்றுப்பத்து எனும் பெயரால் நின்றுநிலவ வைக்கப்பெற்றதொரு தொகைநூல் இது. இதில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடையாமல் இடை யெட்டுப் பத்துப் பாட்டுக்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இவற்றின் ஒவ்வொரு பத்துப்பாட்டின் தொகையிறுதியில் அப்பாட்டுடைக் கோச்சேரனின் குடிவழியும் அவன் வெற்றி முதலிய சில பிற சிறப்புக்களும் அடங்கிய பதிகமொன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே சேரர் குலமுறை தெளிவதற்கு இப்பதிகங்கள் மிகவும் உபகாரப்படும். இப்பதிகப் பாட்டுக்களில் சேரர் குடிவழிகூறும் அடிகளையும் தொடர்களையும் ஆதரவாகக்கொண்டே பண்டிதர் பலரும் இதுகாறும் இச்சேரர் குலமுறை கிளத்தியுள்ளனர். அதனால் ஈண்டு அவ்வடிகளையும் தொடர்களையுமே முதலில் நாம் ஊன்றி நோக்கி அவற்றின் பொருளும் குறிப்பும் ஆழச் சூழ்ந்து தெளியக்கடவோம். அவை வருமாறு :

1.  முதற்பத்து : முற்றுமே அகப்பட்டிலது

2.  இரண்டாம் பத்து : இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது.

“மன்னிய பெரும்புகழ் மருவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு,
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்”

3.  மூன்றாம் பத்து : பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் பாடியது.
    “இமையவரம்பன்தம்பி……
    பல்யானைச் செல்கெழுகுட்டுவனை”

4.  நான்காம் பத்து : களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
    “ஆராத் திருவிற்சேர லாதற்கு
    வேள் ஆவிக் கோமான்
    பதுமன் றேவி யீன்ற மகன்”

5.  ஐந்தாம் பத்து: கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணம மைந்த காசறுசெய்யுட் பரணர்பாடியது.
    “வடவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக்
    குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு,
    சோழன் மணக்கிள்ளி யீன்றமகன்”

6.  ஆறாம்பத்து:ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது.
    “குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு, வேஎள்
    ஆவிக் கோமான் றேவி யீன்றமகன்”

7.  ஏழாம்பத்து: செல்வக் கடுங்கோவாழியாதனைக் கபிலர் பாடியது.
    “மடியா வுள்ளமொடு மாற்றார்ப் பிணித்த
    நெடுநுண் கேள்வி யந்துவற்கு, ஒருதந்தை
    யீன்றமகள் - பொறையன் பெருந்தேவியீன்றமகன்”

8.  எட்டாம்பத்து : பெருஞ்சேரலிரும் பொபாறையைஅரிசில்கிழார்பாடியது.
    “பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு,
    வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன்”

9.  ஒன்பதாம்பத்து: இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
    “குட்டுவ னிரும்பொறைக்கு, மையூர் கிழாஅன்
    வேண்மாள் - அந்துவஞ்செள்ளை யீன்றமகன்”

10. இறுதிப்பத்தும் இறந்ததே போலும்.

இவையிற்றை உற்றுநோக்குங்கால், பதிகம் எட்டனுள் இரண்டு நான்கு ஆறுமுதல் ஒன்பதான ஆறுபதிகத் தொடர்களால் அவ்வப் பதிகப்பாட்டுடைத் தலைவனான கோச்சேரன் ஒவ்வொருவனும், ஓரோர் கோமாள் (கோக்குடிப்பெண்) தன் கணவனுக்கு மகனும் மற்றொரு கோச்சேரனுக்கு வழித் தோன்றலுமாய்ப் பெற்றெடுத்து தவிய பெருமகனாகவே தோன்றுகிறான். மூன்றாம்பதிகமான மற்றொன்றும் அதனையே வலியுறுத்தும். ஏனெனில் அதிற்பாடப்பெற்றவன் இரண்டா வதன் தலைவனான இமையவரம்பனுக்குத் தம்பியெனப்படுவதால், இப்பதிகமும் இரண்டாம்பதிகச் செய்யுள் கூறும் குல முறையையே கூறுவதாகும். எஞ்சிய ஐந்தாம்பதிக அடிகள் சிறிது சங்கைக் கிடனாக நிற்கின்றன. இதில் ஏதோ ஒரு சொற் குறைவு காணப்படுகின்றது.அக்குறைவால் இப்பதிகத் தொடர் இதுவரை சிறிது பிறழ்ச்சியுணர்ச்சிக்கு ஒருவாறு இடந்தந்து வருகிறது. இப்பதிகத்தொடர்களெல்லாம் பொருள் நேர்மையால் ஒருதிறப்படுமாயினும். சொன்னீர்மையாற் பல துறைப்பட்டு நிற்கின்றன. 4,6,8 பதிகங்கள் ஒருவகை; 2,9 ஒருவகை; 3ஆவது தனிவகை; 7ஆவது ஒருவகை; 5வது ஒருவகை; ஆக இவைகள் இப்படிப் பலபட அமைந்து கிடப்பதால் இப்பதிகத் தொகுதியை இம்முறையிலேயே பகுத்துத் தனித் தனியே அவ்வத் தொடர்வகைகளின் சொல்லாற்றலையும் பொருளாக்கத்தையும் ஈண்டுச் சிறிது ஆழத் துருவி ஆராயப்புகுவோம்.

(I) பதிற்றுப்பத்து 4,6,8 ஆம் பதிகத் தொடர்களின் பொருட்குறிப்பு

1.  முதலிலே, நான்கு ஆறு எட்டுப் பதிகப்பாக்களில் அப்பாட்டுடைத் தலைவரின்தாய் அங்குப் பெயர் குறித்த சேரரல்லாத பெருந்தகையார் பிறர் ஒருவரின் தேவியெனச் சுட்டப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. இதுவரை இப்பதிகங்களைக் கொண்ட சேரர்குலமுறை கண்ட பண்டிதர்கள், ஈண்டுத் தேவி என்ற சொல்லினாற்றலை விசாரியாமல் அது தநயை என்னும் பொருளுடையது போலவே கருதிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இச்சொல், தெய்வங்களில் பார்வதி காளி துர்க்கை என்பாரையும், மக்கள் வருக்கத்துள் முறைப்பொருளில் மனைவியையு மட்டுமே குறிப்பதாகும். தேவி என்ற சொல்லுக்கு. மனைவிப் பொருளல்லது, மகள் அல்லது தநயை என்ற பொருள் இல்லை. இலக்கியம் திவாகராதி நிகண்டுகள் முதலிய நூல்களில் மகட்பொருளில் இச்சொல்லுக்கு ஆட்சி இல்லை. எனவே, இச்சொல் இயல்புவழக்கில் மனைவியையே சுட்டவேண்டும். ஆகவே 4, 6, 8 பதிகங்களிற் சுட்டப்படும் கோச்சேரர்தாய், வேள் ஆவிக் கோமானின் மனைவியாகவேண்டும். அதனாலே இவள் வேறு சேரருக்கு மனைவியாயிருந்திருக்க முடியாததாகும்.

2.  நார்முடிச்சேரல்: ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், பெருஞ்சேரலிரும் பொறை என்ற மூன்று கோச்சேரர்களை யீன்ற தாயை வேள் ஆவிக்கோமான் பதுமனின் தேவி என்றே இம் மூன்றுபதிகங்களும் விசதமாக விளக்கு கின்றன. எனவே, பதுமன்மனைவியான இக்கோப்பெரும் பெண்டு இப்பதிகங்களிற் பாட்டுடைத் தலைவருக்கு முன்தோன்றல்களாகக் குறிக்கப் படும் சேரலாதன், செல்வக்கடுங்கோ என்ற இருபெருஞ் சேர மன்னருக்கும் அறக்கிழத்தியாமாறில்லை.

அன்றியும், தேவிச்சொல்லுக்கு இல்லாத தநயைப் பொருள் கொடுத்துவைத்து, வேள் - ஆவிக்கோமான் பதுமனுக்கு இவளை அவன் பெற்ற மகளெனவே கொண்டாலும், இவள் இப்பதிகங்கள் சுட்டும் இருவேறுசேரருக்கு இற்கிழத்தியாகுமுறை கொள்ளற்கில்லை.

3.  இம்மூன்று பதிகத்தும் குறிக்கப்பெற்ற வேள்பதுமன் ஒருவனேயாக வேண்டும். வெவ்வேறு வேண்மானைச் சுட்டுவதான குறிப்பு ஒன்றும் இவற்றுள் இல்லாத நிலைமையில் இவை ஒருவனையே சுட்டும் எனக் கொள்ளுவதே முறையாகும். அன்றியும், பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்களும் பிறரும் இம்மூன்று பதிகமுமே ஆவிக்கோமான் பதுமனெனும் ஒரு வேளிர் தலைவனையே குறிக்குமென விளக்கி யுள்ளார்கள். இயற்பொருளில் இப்பதிகத் தொடர்கள் சுட்டுகிறபடி இப் பதிகச்சேரரின்தாய் பதுமன்தேவி ஆவளேல், சேரலாதன், கடுங்கோ என்ற இருவர் தமக்கும் இவள் மக்களீன்றாள் என்று உரைப்பதற்கு தன் பதியாகும் பதுமனொடு மற்றிருவர் சேர்க்கையும் இவட்கு ஏற்றவேண்டும்.

பதுமனுக்கு இவளைத் தநயை எனக் கொள்ளினுமே இருபெருங்கோச்சேரருக்கு அறத்துறையில் இவள் மக்கள் பெறுமாறில்லை. ஒருவேளை பெற்றாலும், அப்பெற்றி உலகறிய வசைநிற்கப் பாடாண்பாட்டில் அதைப் புலவர் பாடமாட்டார்.

4.  இவளை வேள்பதுமனுக்கு மகளாக்கிச் சேரர் பலர் சேர்க்கை இவட்கு எய்தாமல் அகற்ற விரும்புவோர்கள், பதுமற்கு ஈங்கு இரு மகளிர் பெறுவித்து, ஒருத்தியைச் சேரலாதற்கும் மற்றவளைக் கடுங்கோவுக்குமாகப் பிரித்து மணம்புரிவித்து விழவுகொள்வர். மூலத்தில் இரு மகளிர் எனும் குறிப்பே எங்கும் இல்லை. மூவேறு பதிகத்திற் குறித்த வேள் ஆவிக்கோ மானை, மூன்றில் ஒன்றிற் பதுமன் என்ற பெயர் குன்றவந்திருந்தும், ஒருவனே எனத்துணியும் பண்டிதர்கள், மூன்றிடத்தும் ஒரு படியே ஆவிக்கோமான் தேவி எனக் குறித்த கோமாட்டியார் ஒருத்தியல்லள், மூவரல்லர், இருவரேயாவரெனக் கொள்ளுவானேன்? ஆவிக்கோமான் மனைவியை இங்கு அவனுக்கு மகளாக்கி, பதுமனை முன் மணந்தவளை மறுபடியும் கன்னியாக்கிப் புதுமன்றல் புரிவிக்க முயலும்போது, அதன் குறுக்கே வந்துபுகும் ஆபாசத் தொல்லை களை விலக்குதற்கு ஒருத்திவிழாப் போதாமல் அவள் தந்தைக்கு இரு மகளிருண்டாக்கி, இருவரையும் இரு சேரர்க்கு உரியராக்கி, அவர் தம்மால் மும்மக்கட் பெறுவித்து ஒருவகையாய் முறைப்படுத்த அவசியங்கள் எழுகின்றன. இவள் பதுமனுக்கு மனையாளாய் அவனுக்கே தநயர்களைப் பெற்றெடுத்துத் தன்கிளையிற் சேரருக்குப் 1பிறங்கடைய (as heirs) மருகர்களாய் உதவுவதிற் கோமகட்குக் குறையில்லை; குடிப்பழியும் கூறற்கில்லை.

மேலும், ஏழாம் பத்துப் பதிகத்தில் இத் தேவிச் சொல் தெளிவாக மனைவிப்பொருட் குறிப்பிலேயே வந்திருப்பதும் இங்குச் சிந்திக்க வேண்டும். ஆண்டு எனைத்தானும் இச் சொல்லுக்கு மனைவியல்லாத எப்பொருளும் பொருந்தாது. “அந்துவற்கு ஒரு தந்தை யீன்ற மகள்பொறையன் பெருந் தேவி” என்று கடுங்கோவை ஈன்ற தாயை அப்பதிக ஆசிரியர் விசதமாக விளக்கியுள்ளார். அந்துவன் தந்தைக்கு மகளும் பொறையனுக்குத் தேவியும் ஆவளென, அவளை ஈன்ற தந்தை யோடும் கொண்ட கணவனோடும் தனித்தனியே அக்கோமாட்டிக்கு உள்ள தொடர்பை விளக்கும் முறைப் பெயர்களைப் புலவர் விதந்து பிரித்துக் கூறியிருப்பதால், தேவிச்சொல் ஆண்டு எவ்வகையிலும் மகளைக் குறிக்கவே முடியாது. மனைவியையே குறித்துத் தீரவேண்டும். பதிகங்களெல்லாம் ஒரு புலவராற் செய்யப் பெற்றன. என்றே கொள்ளப்படுகின்றன. எப்படியும் எல்லாப் பதிகங்களிலும் ஒரே பொருளைக் குறிப்பதாய் ஒரு படியான சந்தர்ப்பத்திலே வரும் இத்தேவிச் சொல்லுக்கு யாண்டும் பொருந்துவதான மனைவிப் பொருள் ஒன்றையே இவ்வெல்லாப் பதிகங்களிலும் கொள்ள வேண்டுமென்பதே நியதமாகிறது.

5.  இன்னும், இம்மூன்று பதிகத்துக் கோச்சேரர் தாயாரைப் பதுமனுக்கு மகளாயும், சேரருக்குத் தநயர் தரும் மனைவியாயும் குறிப்பதுவே ஆசிரியர் கருத்தாமேல், சேரரொடு இவளை மனையறக்கிழமை தரும் சொற்கொண்டு சேர்த்திருப்பர். பதுமனுக்குத் தநயை எனத் தெளிவிக்கும் சொற்பெய்யத் தவறி, மிகத் தடுமாறி மனைவியதன் மறுபெயரால் அவனொடு சேர்த்து ஈங்கு இவளைச் சுட்டமாட்டார். இப்பதிகப் பாவலர் மூவருள் ஒருவர் குறையா நிறையும் கணவன்பால் தூய காதலும் உடையராய்க் கற்பரசியராய்ப் புகழ் சிறந்த நச்செள்ளையார் என்ப. அத்தகைய பெருந்தகையார், நிறையிறந்து, மணந்தவனைத் தணந்து, தன் பெண்ணியலை மறந்து பிற மன்னர் பலரைக் கூடி மக்களைப் பெறுபவளை வாயார வழுத்துவரோ? அல்லது அவள் இழிதகவைச் சுட்டித்தான் பாடுவாரோ?

6.  பாட்டுக்களிற் பதுமனுக்குத் தேவி எனப் பகர்ந்த பின்னர், அவன் தேவி சேரருடன் சேர்க்கையினால் அவர் தமக்கு மைந்தர்களைப் பெற்றாள் என்று உரைத்து அவளைப் பழிப்பதுடன், அவள் ஈன்ற கோச்சேரர் மூவர் புகழும் மாசுபட மூன்று புலவரும் பாடமாட்டார். பாடினரேல், ஒறுப்பதைவிட்டு அவர் பழிக்குப் பரிசில் தர அக்கோச்சேரர் மூவரும் கழிபித்தர்களாய் இருக்கவொல்லார். பாடினவர் பலவேறு புலவரென்றும், பாடிப்பெற்ற பரிசில் அளவிறந்ததென்றும் இப்பதிகங்களே விளக்குவதைக் கருதுங்கால், பாடப்பட்ட கோச்சேரரின் குற்றமற்ற குடிப்பிறப்பினையும், அவர்தம் கற்பு நிறை தாய் வயிற்றில் - தந்தை வேண்மான் - ஆவிக்கோமாற்கு மைந்தராய்ப் பிறந்து, தாய்வழியில் தலைசிறந்த சேரருக்கு மருகரென வழித்தோன்றி நின்றுயர்ந்த குறிப்பினையும், இப்பதிகத் தொடர்நிலைகள் சுட்டுவதைத் தெளியலாகும்.

இனைய பல நினையுங்கால் நான்கு ஆறு எட்டுப் பதிகங்களிற் புகழ்பெற்ற கோச்சேரர் மூவரும், ஆவிக்கோமான் பதுமனுக்கே மைந்தரும், சேரலாதன் செல்வக் கடுங்கோ இருவருக்கும் வழித் தோன்றல்களாய்ச் சிறந்த பெருமருகரும், தம் கோத்தாயின் வயிற்றுதித்து வளர்ந்த கோப்பெரு மக்களும் ஆவர் எனத் துணிவதே கருமமெனத் தோன்றக் காண்போம்.

(II) 2, 9ஆம் பதிகத் தொடர்ப் பொருட்குறிப்பு

இனி இரண்டாவதாக 2, 9 ஆம் பதிகத்தொடர்களையும் அவை சுட்டும் பொருட் குறிப்பையும் நிதானித்தறிய முயல்வோம். இவை முறையே இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனை உதியஞ்சேரலாதற்கு வெளியன் வேண்மாள். நல்லினியீன்ற மகன் என்றும், இளஞ்சேரலிரும்பொறையைக் குட்டுவன் இரும்பொறைக்கு மையூர்கிழான்வேண்மாள் அந்துவஞ் செள்ளையீன்ற மகன் என்றும் கூறுகின்றன. 2, 9 பதிகங்கள் அப்பாட்டுடைத் தலைவரின் தாய்மாரை வேண்மாள் நல்லினி’, வேண்மாள்-அந்துவஞ்செள்ளை என்று சுட்டுகின்றன. இவ்விடங்களில் வேண்மாள் என்னுஞ் சொல் அத்தாய்மாரின் இயற்பெயரில்லையென்பது வெளிப்படை. நல்லினி அந்துவஞ் செள்ளை என்பன அவர்தம் இயற்பெயரும் வேண்மாள் என்பது அவ்விருவருக்கும் பொதுவாயதொரு சிறப்புப் பெயருமாயிருக்க வேண்டும். சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க்கிளவி முற்படக்கிளவார் என்னும் தொல்காப்பியச் சூத்திர விதிப்படி, இவ்விருவர் இயற்பெயர்களுக்கும் முன்னிற்கும் வேண்மாள் எனும் பொதுச்சொல், கோமனைவி என்னும் பொருளுடையதொரு சிறப்புப் பெயரேயாதல் வேண்டும்.

இன்னும், வேண்மாள் என்னும் சொல், கோவேந்தர் கோப்பெருந் தேவியாரையும், கோவியலார் முடிபுனையாக் குறுமன்னர் தேவியரையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயராய்ப் பழந்தமிழிலக்கியங்களிற் பலவிடத்தும் வழங்கக் காண்பாம். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தம்கோத்தமையன் செங்குட்டுவன் கோமனைவியை வேண்மாள் என்று சுட்டியுள்ளார். ஆண்டு அச்சொல் அத்தேவிக்கு இயற்பெயர் என்று நினைப்பவரும் சிலருளர். உண்மையிலே இது அவளுக்கு இயற்பெயரன்றென்று எளிதில் தெளியலாகும்.

“வானவர் தோன்றல் வாய்வாட் கோதை
விளங்கில வந்தி வெள்ளி மாடத்து”

“இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி”

என்பன சிலப்பதிகாரக் காட்சிக் காதையடிகளாகும். சேரர் பெருமான் இயந்திரவாவி எழின்மாடத்தில் தம்பி இளங்கோவோடும் தனது தேவியோடும் ஓலக்கத்து எழுந்தருளியிருந்தவன், மலைவளம் காணுவமென அவரிருவருடனும் பரிவாரங் களோடும் புறப்பட்டான் என்று சுட்டும் குறிப்பின இவ்வடிகள்.

இன்னும் செங்குட்டுவன் மனைவி இக்காட்சிக்காதையிற் பின்னோரிடத்தில் மாபெருந்தேவி எனவும், நடுகற் காதையில் மீண்டும் வாளா வேண்மாள் எனவுமே குறிக்கப்படக் காண்கின்றோம். இதனால் வேண்மாளும் மாபெருந்தேவியும் கோமனைவி என்ற ஒருபொருள் குறிக்கும் இரு விசேடணங்களென வெளியாகிறது. இவை இரண்டும் செங்குட்டு வனின் ஒரே கோமனைவியைக் குறிக்கும் இரு சிறப்புப்பெயர்களேயாகும்.

3.  மேலும், இளங்கோவுக்குச் செங்குட்டுவன் தமையன்; அதனால் குட்டுவன்கோத்தேவி அவருக்கு அண்ணியார் (மதிநியார்) ஆகவேண்டும். தமிழகத்தில் தமையன்மார் மனைவியர்பெயரைத் தம்பியர் கூறுவது மரபில்லை; வழக்குமில்லை. கோவேந்தன் பெருந்தேவிக்குரிய மதிப்பும் தமிழ்மரபும் ஒருங்கேநின்று இளங்கோவடிகளை அவளியற் பெயரைச் சுட்டவொட்டாமல் தடுப்பது முறைமை. தமையன்பெயர் தன்பெயர்களைச் சொல்லுவதில் அத்தகைய தடைகிடையாது. அப்படியிருந்தும் இவ்விடத்தில் இவர்களியற் பெயரைக்கூடக் கூறாமல், மன்னனை வாளா வானவர் தோன்றல்’, கோதை எனவும், தன்னை இளங்கோ எனவும் கூறிப்போகும் அடிகள் மன்னவன் கோமனைவியை மட்டும் அவள் இயற்பெயர் கொண்டுசுட்டுவர் எனக் கொள்வதிற் பொருத்தமாகும் பொருளும் இல்லை.

4.  இதுவுமன்றி, இச்சொல் மன்னர்மனைவியரின் பொதுப் பெயராகுமென்பதை வலியுறுத்தும் சான்றுசில இன்னும் உள. தொன்னூல்களில் நன்னன்வேண்மாள், உதியன் வேண்மாள் என்ற பிரயோகங்களைக் காணுகின்றோம். ஈண்டு ‘நன்னன்’, உதியன் என்ற சொற்கள் ஆண்பாற்பெயர்கள் என்பது ஒரு தலை. அவற்றோடு வேண்மாள் எனும் பெண்பாற்பெயர் தொடருங்கால் நன்னன்தேவி, உதியன்தேவி என்றே பொருள்படும். அல்லாக்கால் இப்பெயர்த்தொடர்கள் பொருளற்ற சொல்லின் வெறுங் கூட்டமாகும். இத்தெளிவு கண்டே மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் தம் அரும்பத அகராதியில் வேண்மான் என்பதற்குச் சிற்றரசன் எனவும், வேண்மாள் என்பதற்குச் சிற்றரசன் மனைவி - முடியுடை யரசன்மனைவி எனவுமே பொருள் குறித்துள்ளார்கள். இவ்வாறு வேண்மாள் எனும்சொல் கோவேந்தர் குறுமன்னர் மனைவியர்க்குப் பொதுப்பெயராக வழங்குவதால், அது ஒருவருக்கும் இயற்பெயராகாமல் சிறப்பு முறை குறிக்கவரும் பொதுப்பெயரேயாதல் வேண்டும் என்பது ஐயமற்ற துணிபாய்க் கொள்ளக்கிடக்கின்றது.

5.  வேண்மாள் என்பது இயற்பெயராமேல் பிறிது சொற்சார்பு வேண்டாமல் தன்னிலையில்நின்று அந்தப் பெயருடைய பெண்மகளைச் சுட்டல்கூடும். இவ்வாறு தனி வழக்கு இக்கிளவிக்கு எங்குமில்லை. வருமிடங்கள் தோறும் இது ஆண்பாற் சொற்கள் பிறவற்றைத் தழுவியேவரக் காணுகின்றோம். ஆண்பாற் பெயரொடுவாளா தொடருங்கால் அவ்வாண் மகனுக்குத் தொடர்புடைய பெண்ணொருத்தியைச் சுட்டும் ஒரு சிறப்பு முறைப்பெயராவதன்றி, தொடர்புசுட்ட வேண்டாத இயற்பெயராய்க் கொள்ளுவது பொருந்தாது; பொருள்தராது.

6.  ஆண்பெயரொடு பெண்ணொருத்தியினியற் பெயரைப் புணர்க்குங்கால், அவ்விருவருக்கும் உள்ளதொரு முறைகுறிக்கும் சொற்பெய்து விளக்குவதே மரபாகும். இராமன் தேவி சீதை, இராமன்தாய் கோசலை, இராமன் மைத்துனி ஊர்மிளை என்று ஒரு முறைப் பெயர்த்தொடர்பு கொண்டே இருபாலார் இயற்பெயர்த் தொடர்கள் வழங்கப்பெறும். முறை சுட்டாமல் வாளா இராமன் ஊர்மிளை என்று இரண்டு இயற் பெயர்களைத் தொடுத்தால் ஒரு பொருளுமறியாமல் மருளுதற்கே ஏதுவாகும். அத்தகைய பிரயோகம் வழக்காறில்லை; மரபிறந்த தவறுமாகும்.

7.  ஈண்டு இரண்டு ஒன்பது பதிகப்பாட்டுக்களில் வெளியன் - வேண்மாள் கிழாஅன் - வேண்மாள் என்று ஆண் பெயர்களோடு தொடர்ந்து பிறசொற்சார்பின்றி நிற்றலால், வெளியன் கிழாஅன் இவ்விருவருக்கும் தனித்தனியே ஒரு தொடர்புடைய பெண்களுக்கு வேண்மாட் சொல் முறைப் பெயராயமைவது. அங்கையில் நெல்லிபோல் தெளியப்படும். மற்றைய 4, 6, 8 பதிகங்களில் பதுமன்தேவி, ஆவிக்கோமான் தேவி என்றிருப்பதே போல், ஈண்டும் வெளியன் வேண்மாள், கிழாஅன் வேண்மாள் எனவே வருவதால், தேவிப் பொருளிலேயே வேண்மாட்சொல்லும் நிற்கிறதென்று ஒருதலையாகத் துணியப்படும்.

8.  இனி, முறைப்பெயராய்க் கொண்டாலும் இதற்கு மனைவிப் பொருளைக் கொடுப்பானேன். மகட் பொருளிலேயே இதைக்கொள்ளுவோ மென்பார்க்குச் சொல்லுவேம். மகள் என்னும் பொருளில் இச்சொல்லைக் கொள்ளற்கில்லை. தம் தமையன் செங்குட்டுவன் தேவியை இளங் கோவடிகள் வேண்மாள் என்று உரைப்பதாலும். மகட்பொருளில் யாண்டும் இதற்கு ஆட்சியில்லாததாலும் மனைவியையே வேண்மாட்சொல் குறிப்ப தாகும்.

9.  பதிற்றுப்பத்தின் பதிகங்களைச் செய்தவர் ஒருவரே என்பது அப்பதிக இயல்பாற் புலப்படுவதாகும். திரு மு. இராகவையங்காரவர்கள் போன்ற பண்டிதரும் அப்படியே கொள்ளுகின்றார்கள். இஃது எப்படியிருப்பினும் இந்நூலில் ஐந்தொழியப் பிறபதிகங்களிலெல்லாம் ஆசிரியர் ஆண்பாற் சொற்களோடு தேவி வேண்மாள் என்ற சொற்களை நிறுத்தி, அவைகொண்டே அங்குக் குறித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள முறையை விளக்கிப்போவதனால் இச்சொற்களிரண்டுமே மனைவி என்னும் ஒருபொருளில் முறைப் பெயராய் வருமாறு தெளியக்கிடக்கின்றது. இவ்வமைப்பால் தேவி வேண்மாள் என்ற இருசொல்லும், ஒருநிலையில் ஒன்றையொன்று விளக்கி, இரண்டிற்கும் மனைவி எனும் ஒரே முறைப்பொருளுண்மையை வலியுறுத்தும். சுருங்கச் சொல்லின், வேண்மாள் என்பது வேண்மாளின் பெண்பாலாம். வேண்மான் என்னுஞ் சொல் சிற்றரசரான வேளிர் அல்லது குறுமன்னருக்குப் பொதுப்பெயர் என்று அறிவோம். ஆகவே வேண்மாள் என்பது குறுமன்னர் தேவியர்க்குப் பொதுப்பெயராய், கோவேந்தர் மனைவியர்க்கும் சில இடத்தே முறைப்பெயராய் வழங்குமென அறியலாகும்.

10. 4, 6, 8 பதிகங்களில் தேவி என்னும் முறைப்பொதுப் பெயர்மட்டும்நின்று, அம்முறையுடையாளான பதுமன் தேவியின் இயற்பெயர் சுட்டப்பெறாமலிருக்கிறது. 2, 9 பதிகங்களிலோ வேண்மாள் என்ற முறைப்பெயரோடு நல்லினி அந்துவஞ் செள்ளை எனும் இயற்பெயர்கள் தொடர்ந்து வெளியன்மனைவி நல்லினி’, மையூர்கிழான் மனைவி அந்துவஞ்செள்ளை எனத்தெளிக்கப்படுகின்றது. இங்கு இவர்கள் இயற்பெயரைத் தனித்தனியே விளக்குவதால், இருவருக்கும் பொதுவான வேண்மாட்சொல் முறைப் பெயரேயாவதனை முன்னரே விளக்கியுள்ளேம்.

11. இன்னும், வேண்மான் என்பதற்குச் சிற்றரசன் என்றும், வேண்மாள் என்பதற்குச் சிற்றரசன் மனைவி முடியுடையரசன் மனைவி என்றுமே பதிற்றுப்பத்து அரும்பத அகராதியில் மகா மகோபாத்தியாய சாமிநாதையரவர்கள் பொருள்குறித்துள்ளார்கள். அதனாலும் இச்சொல் இப்பதிகங்களில் சிற்றரசரான வெளியன் மையூர்கிழான் என்ற வேளிர்களின் மனைவிமாரையே சுட்டுகின்றதென்று துணியலாகும்.

12. இவை பலவற்றாலும், இப்பதிகங்களில் வரும் வேண்மாட்சொல் மனைவிப்பொருளையே குறிக்குமென்பது விசதமாகும். ஆகவே இரண்டாம் பதிகத்தால் வேள்வெளியனுக்கு நல்லினி மனைவியென்பது விளங்குகிறது. இனி இப்பதிகத்திலேயே இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேள் - வெளியனுக்கும், அவன் வேண்மாள் - நல்லினிக்கும் மகனென்று சொல்லப்படுவதலால், அவன் உதியஞ் சேரலாதற்கு மகனாமாறில்லை. மருகனே யாவனெனத் தெளிகின்றோம். அதுவேபோல், 9ஆம் பதிகத்தாலும் இளஞ்சேரலிரும் பொறைவேள் - மையூர்கிழானுக்கும் அவன் தேவி அந்துவஞ் செள்ளைக்கும் மைந்தனாய், குட்டுவன் இரும்பொறைக்கு மருகனேயாவனென அறிகிறோம். குட்டுவன் இரும்பொறை - குடக்கோ இளஞ்சேரலிரும் பொறையின் மாமன் என்று மகா மகோபாத்தியாய பிரும்மஸ்ரீ உ.வே. சாமிநாதையரவர்கள் பதிற்றுப்பத்தின் அரும்பத முதலியவற்றின் அகராதியிற் காட்டியிருப்பதும் இதனை வலியுறுத்தும்.

(III) 3ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு

இனி மூன்றாம் பதிகத்தைப்பற்றிய தொல்லையில்லை. அப்பதிகத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பதிக ஆசிரியர் வாளா இமையவரம்பன்தம்பி என்றே சுட்டியமைவதனால், அவன், தன் தமையன் 2ஆம் பதிகத் தலைவனான நெடுஞ்சேரலாதனைப் போலவே, வேள்வெளியனுக்குத் தநயனும் உதியஞ்சேரலாதற்கு மருகனும் ஆவனென்பது எளிதறியக் கிடைப்பதாகும்.

(IV) 7 ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு

ஏழாம்பதிகத்தொடரோ, நெடுங்கால இருளகற்றிச் சேரர் குடித் தாயவழி யுண்மைமுறையைத் துலக்கும் ஒளி விளக்கா யிருக்கிறது. இவ்வுண்மையறி தற்கு இது மிகவும் துணையாவதாய்த் தோன்றுவதால், இதனைச் சிறிது ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசியம். இக்கிளைமுறை கிளத்தும் தொடராவது : அந்துவற்கு ஒரு தந்தை யீன்றமகள் - பொறையன் பெருந்தேவி யீன்ற மகன் என்பதே. இதிற் பாட்டுடைத் தலைவனான செல்வக்கடுங்கோவை ஈன்ற தாயைப் பொறையன் பெருந்தேவியெனவும், அந்துவற்கு ஒருதந்தையீன்றமகள் எனவும் இப்பதிக ஆசிரியர் தெளிவித்துள்ளார். இவர் கபிலர் எனவே கொண்டால், கபிலர் பொய்யாநாவிற் புலவராதலால் அவர் கூறுவது மெய்யென்பது ஒருதலை. யாவர் கூற்றாயினும் இத்தொடர்கூறும் பொருளைத்தெளிய முயல்வோம்.

முதலில், இத்தொடரில் அந்துவனும் கடுங்கோவின் அன்னையும் ஒரு தந்தையீன்ற மகளென்பது துளக்கமற விளக்கப்படுகிறது. அதனால் அந்துவஞ்சேரற்கு அவள் சோதரியாவளென்று அறிகின்றோம். அதுவுமன்றி, அவள் அடுத்து உடனே பொறையன்தேவி எனவும் விதந்து விசேடிக்கப் படுகிறாள். அதனாலும் முற்கூறிய அந்துவற்கு அவள் மனைவியா மாறில்லை. இத்தொடரிறுதியில் இவளீன்ற கடுங்கோ அந்துவற்கு மகனெனவும் சுட்டப்படுகிறான். இந்நிலையில் இவள் அந்துவற்கு மைந்தனீன்று தருவது எப்படி? பொறையனுக்கு மனைவியாதலாலும், அந்துவனின் தந்தைக்கு மகளாகவே - அந்துவனுக்கு இவள் சோதரியாவதாலும், இவள் அவனை மணந்து மகப்பெற முடியது. மணவாக் காதலனாக அவனைக்கூடிக் கடுங்கோவை யீன்றாளென்றால், அது அவளையும் அவள் குடியையும் சுடும் பழியாவதல்லால், சேரர்குலம் தழைய அவள் மகனீன்று தந்தாளென நன்மக்களாற் புகழத்தகுதியன்றாம். அவள் பெற்ற கடுங்கோவை அந்துவற்குத் தநயனாக்குவதால் அவளுக்குச் சகோதரனுடன் விபசார தோசம் சம்பவிக்கும். இத்துணை விபரீதம் விளைக்கும் இக்கருத்தைவிட்டு வேறு செம்பொருள் உண்டாயின் அதைக் கொள்ளுவதே நமது கடமையாகும்.

இவ்வாக்கியத்தில் வந்துள்ள விசேடணச் சொற்களின் நிலையும் அமைப்பும் விபரீதப்பொருளுக்குச் சிறிதும் இடமின்றி உண்மையை எளிதில் தெளிவிக்கின்றன. முதலிற் கடுங்கோவின் தாயை அந்துவனின் தந்தை மகளென்று கூறியதோடமையாமல், மீண்டும் அவளைப் பொறையன்தேவி என இடைத்தொடர் கொடுத்தும் விசேடித்திருப்பதாற் புலவர்கருத்துச் சந்தேக விபரீதங்களுக்குச் சிறிதும் இடந்தராமல் விளங்குகிறது. அந்துவனின் சோதரியும் பொறையனின் மனைவியுமான கோமாட்டி கடுங்கோவைப் பெறுகின்றாள். அவள் பெற்ற கடுங்கோவே, பொறையனுக்குத் தநயனும், அந்துவற்குப் பிறங்கடையாம் மருமானுமாகின்றான். தெளிவான இத்தொடர் மொழிப்பொருளை மாற்றிக் கடுங்கோவை அந்துவனுக்கு மகனெனவே கொள்ளப்புகின், ஒருவனே மற்றொருவனுக்கு ஒருங்கே மகனும் மருகனும் ஆவன் என ஒரு அபூக அசாம்பாவித விபரீதத்தைக் கூறுவதாக முடியும்.

எப்படியும் இத்தொடரில் தேவி என்பதற்கு மகளெனப் பொருள் கொண்டு இவளைப் பொறையனுக்கு மகளாக்க இடமில்லை. தமிழ்வழக்கில் தேவிச் சொல் முறைப்பெயராக, புதல்விப் பொருளில் ஆட்சிபெறாது என்பதை மேலே (3ஆம் பகுதி, 1ஆவது உட்பிரிவில்) காட்டியுள்ளேன். இவள் தந்தை பொறையனல்லன்; பொறையன்தேவியான இவளுக்குப் பொறையனல்லாத வேறு ஒரு தந்தை உண்டு என்றே பதிற்றுப் பத்து பழையஉரைகாரரும் பதிப்பாசிரியர் மகாமகோபாத்தியாய சாமிநாதையரவர்களும் கருதுகிறார்கள். இதனை ஒருதந்தை - பொறையன் தேவியின்பிதா என்ற அவர்கள் உரைக்குறிப்பு விளக்குகின்றது.

பொறையன் பெருந்தேவி எனும் தொடர்கொண்டு பொறையனை இவளுக்குத் தந்தை எனக்கொள்ளக்கூடுமாயின், ஒரு தந்தை என்றதற்குப் பொறையனாகிய ஒரு தந்தை என்று இவர்கள் பொருள்கூறியிருக்க வேண்டும். அதைவிட்டுப்பொறையன் தேவியின்பிதா என்று பொருளுரைக்க மாட்டார்கள். அவ்வாறு இவர்கள் பொருள் கொண்டிருப்பதால், தேவி என்ற சொல்லுக்கு மகள் என்னும் பொருள் இவர்களுக்கு உடன்பாடும் ஆவதனை அறிகின்றோம். ஆகவே, கடுங்கோவின் தாய், வேண்மான் பொறையனுக்கு மனைவியும், அந்துவன் தந்தைக்கு மகளுமே ஆவளென இப்பதிகத் தொடரால் தெளிகிறோம்.

அன்றியும் இத்தகைய ஐயம் எதுவுமே நிகழாவண்ணம் நிறுத்த சொற்பெய்து புலவர் இதன்மெய்ப்பொருளை விளக்கி வைத்திருக்கிறார். அந்துவன்தந்தைக்குக் கடுங்கோவின் தாய் மகள் என முதலிற்கூறினார். மகள் எனும் சொல்லுக்கு மனைவி, பெண், தநயை எனப் பல பொருள் உண்மையால், பிற பொருந்தாப்பொருள்களை விலக்கி இவள் அவனுக்குத் தநயை என்பதைத் தெளிவிப்பதற்கு மகளுக்குமுன் ஒருதந்தையீன்ற என்ற அடைகொடுத்தார். எனவே இவள் அந்துவன்தந்தைக்கு மனைவியல்லள். அந்துவன் தந்தை பெற்ற தநயையேயாவள் என்பது மலையிலக்காகிறது.

இனி, மகட்சொற்போலவே, தமிழில் மகன் எனுமொழியும் ஆண்மகன், கணவன், வழித்தோன்றலாம் மருமான், புதல்வன் எனப் பலபொருள்களில் வரும். ஆதலால் இத் தொடரிறுதியில் பொறையன் பெருந்தேவி யீன்ற மகன் என்றவிடத்தில் மகன் என்ற சொல்லுக்குப் பொருளென்னை? இவ்விடத் திச்சொல்லின் பொருத்தமென்ன? என்பன சிந்திக்கத்தக்கனவாம். அந்துவன் பெற்ற புதல்வியாய்ப் பொறையனை மணந்த தேவி யீன்ற கடுங்கோ, தன்தாயை மணந்த பொறையனுக்குப் புதல்வனும், தன் மாதுலனான அந்துவனுக்கு வழித்தோன்றலான மருமானுமாவன். இவ்வீரியைபையும் விளக்க மகன் என்னுமொருசொல்லே அமைவுடைய தாதலின், இப்பதிகப்புலவர் ஈண்டு அச்சொல்லைப் பெய்துவைத்தார். இதனை இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் விசதமாக ஆராய்வதால் ஈண்டு விரயாதிம் மட்டில் நிறுத்துகின்றேன்.

அப்படியே இவள்பெற்ற மகன் அந்துவற்குத் தநயனல்லன், மருகனேயாவ னென்று தெளிவிப்பதற்காகப் புலவர் மீண்டும் இவளைப் பொறையன்தேவி என்று விசேடித்து, ஒருதந்தை யீன்ற மகள் என்பதற்கும். (இவள்) ஈன்றமகன் என்பதற்கும் இடையே விசேடணம் (அடை) கொடுத்துப் பிரித்து நிறுத்துகின்றார். இவ்வாறு அந்துவன், பொறையன், கடுங்கோ ஆகிய மூவருக்கும் இவளுக்கும் உள்ள முறை நிரல்நிறையே தெளிக்கப் படுகின்றது. இவள், முதல்வனுக்குச் சோதரி, நடுவனுக்கு மனைவி கடையனுக்குத் தாய் என்பது வெள்ளிடைமலையாம். எப்படியும் இத் தொடரால் அந்துவனுக்குக் கடுங்கோவின்தாய் மனைவி யாதல் இயலா தென்பது ஒருதலை; எனவே, அவனுக்கு இவன் தநயனாகான், வழித் தோன்றலான மருமானேயாக வேண்டு மென்பது தெளியக் கிடக்கின்றது. மருமக் கட்டாயத்தைச் சுட்டுஞ் சான்று இதைவிட வேறு எப்படிக் காணமுடியும். இத்தொடர் மக்கட்டாயத் தோடமைவு பெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்றுகொள்ள இத்தொடர் மக்கட்டாயத் தோடமைவு பெற மறுக்கின்றது. கடுங்கோவை அந்துவனுக்கு மகன் என்று கொள்ள இத்தொடர் எவ்வாற்றானும் இடந்தரவில்லை; மருகனெனும் ஒருபொருளே இத்தொடருக்கு ஒருதலையாய் அமைந்த பொருளென்பதை இத்தொடர் மொழிகள் நின்று பறையடிக்கின்றன. இப்பொருளிற் பிறபதிகத் தொடர்களெல்லாம் இதனோடு பொருந்தக் காண்பாம். பிறிது பொருட்கு இப்பதிகம் இடந்தராது. இந்நிலையில் இவையெல்லாம் ஒருங்கு நின்று தெளிவிப்பது மருமக்கட்டாயமன்றி மக்கட்டாயமன்றென்று விளக்கமாகும்.

(V) 5ஆம் பதிகத்தொடர்ப் பொருட்குறிப்பு

1.  இனி, எஞ்சிநிற்கும் 5ஆம் பதிகமொன்று ஆராயக்கிடக்கின்றது. அதன்பொருளையும் ஒருவாறு அளந்தறிய முயலுவோம். இதில் கிளைகிளைத்தும் தொடர் நெடுஞ்சேரலாதற்கு, சோழன்மணக்கிள்ளியீன்ற மகன் என்று நிற்கிறது. இதில் நிரப்பவேண்டிய சொற்குறையுண்மை புலப்படுகிறது. நிற்கிறபடி இச்சொற்றொடரில் பொருத்தமும் பொருளும் இல்லை.

2.  இதுவரையில், இப்பதிகத் தலைவனான செங்குட்டுவனை நெடுஞ்சேரலாதற்கும் சோழன்மகள் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகனென்று இத்தொடர் குறிப்பதாகப் பலரும் கொண்டமைந்தனர். அதாவது : செங்குட்டுவனுக்குச் சேரல் ஆதனைத் தந்தையும் சோழன் மணக்கிள்ளியைத் தாயுமாகக் கருதிவந்தனர் இம்முறைக்கு வேறு ஆதாரமிருந்தால் அதைக்கண்டபோது விசாரிப்போம். இதுவரையும் பலரும் இத்தொடரொன்றையே இதற்கு ஆதரவாக எடுத்தாளப் பார்க்கின்றோம். இத்தொடர் இப்பொருள் தருமாறில்லை யென்பதுமட்டும் இதைச் சிந்திக்கப் புகுந்தவுடன் தெளிவாகிறது.

3.  இப்போது நிற்குநிலையில் இத்தொடரில் செங்குட்டுவன் தாய் (பெயர்) குறிக்கப்படவில்லை. சோழன் மணக்கிள்ளி ஆண்பாற் பெயர்; அதனால் செங்குட்டுவனின் தாய் பெயராகமாட்டாது. மணக்கிள்ளி என்பது அவன் தாயின் இயற்பெயராகவும். அவளை ஒரு சோழன் மகளாகவும் சிலர் கருதுவர். மணக்கிள்ளி என்னும் சொல் ஒரு பெண்பாற் பெயராய் யாண்டும் வழங்கக் காணற்கில்லை. அதற்கு மாறாகப் பலவிடத்தும் கிள்ளி என்பது ஆண்பாற் பெயராய்ச் சோழ மன்னர் பலருக்குரிய சிறப்புப் பெயராய் வழங்கிவருவது பிரசித்தம், ‘வென்வேற்கிள்ளி’, ‘நெடுங்கிள்ளி’, ‘கழற்கிள்ளி’, ‘நெடுமுடிக்கிள்ளி’, ‘வடிவேற்கிள்ளி’, இளங்கிள்ளி மாவண்கிள்ளி எனப் பல பெயருடைய சோழ வேந்தரைச்சுட்டும் பாட்டுக்கள் சங்க நூல்களிற் பல காணலாம். இப்படிச் சில மன்னரின் சிறப்புடைப் பெயராவதுமன்றி, சோழர் குடியரசுக்கே இது நிலைத்த ஒரு பொதுப் பெயராகவும் துலங்குகிறது. திவாகரத்தில், கோச்சோழன் பெயர் “சென்னி, வளவன், கிள்ளி, செம்பியன் என்று சேந்தனார் கூறிப்போவதனால், இச்சொல் சோழ மன்னர் பொதுப்பெயராதல் தெளியப்படும். ஆகவே இப்பதிகத்தொடரில் மணக்கிள்ளி யென்பது யாதொரு பெண்ணையும் குறியாமல் சோழன் பெயராகவே நிற்ப தெனக் கொள்ளுதலே முறைமையாகும்.

4.  பின்னும் மற்றைப் பதிகங்களிலெல்லாம் பாட்டுடைத் தலைவரின் தாய்மார் பெயர் சுட்டினும் சுட்டாவிடினும், அவ்வவரின் தந்தையர் பெயர் தவறாமற் சுட்டப்படுவது கவனிக்கத்தக்கது. அதன் சிறப்புக் காரணத்தைப் பின்னர் விசாரிப்போம்.1 இவ்விடத்தில் மற்றப் பதிகப் போக்குக்கு மாறாக 5ஆம் பதிகத்தில் மட்டும் தந்தை பெயரைச் சுட்டாமல் விடவும், தாயை மட்டும் மணக்கிள்ளியென விதந்தது கூறவும் தனிக் காரணம் ஒன்றுமில்லை. பதிகங்களெல்லாம் ஒரே ஆசிரியர் செய்தனவென்றே ஆராய்ச்சியாளரனை வரும் ஊகிக்கின்றனர். இப்பதிகப் புலவர் பிற இடங்களிலெல்லாம் தாம் கொண்ட முறையை இங்கு மட்டும் கைவிடக் கருதுவானேன்? அவர் நன்றென யாண்டும் கையாண்ட ஒரு துறையை நெகிழாமல் இப்பதிகத்திலும் பின்பற்றியதாகக் கொள்வதே முறையாகும்.

மற்றெல்லாப் பதிகங்களிலும் பாட்டுடைத் தலைவரின் தந்தைக்குரிய இயற்பெயரும் சிறப்புப் பெயரும் ஒருங்கே கூறப்படுகின்றன. அதுபோல் இதிலும் கூறப்பட்டிருக்க வேண்டுமெனக் கொள்ளுவது நியாயமாகும். அம்முறையிற் சோழன் என்ற சிறப்புப் பெயரின் பின் மணக்கிள்ளி என்று அவன் இயற்பெயர் சொல்லப்படுவது அவசியமும் பொருத்தமுமாகும்.

5.  இன்னும் அடியார்க்குநல்லாரும் பிறரும் செங்குட்டுவன் தாய் பெயர் நற்சோணை என விதந்து கூறுகின்றனர். யாண்டும் அவர் மணக்கிள்ளி என்பது அவள் பெயரெனச் சுட்டவில்லை. இவை பலவற்றாலும் ஈண்டு மணகிள்ளி யென்பது செங்குட்டுவன் தந்தை பெயராக வேண்டுமென்பதே நிலைபெறுகிறது.

6.  ஆனால் சோழன்மணக்கிள்ளி சேரலாதற்குத் தானே மகப்பெற மாட்டான். ஐயனாரைப் பெறுவிக்கும் அரிகரக் கூட்டம் மக்கட் கில்லை. பெண்ணின்றி இருபுருடர் தம்மளவில் புத்திரப்பேறெய்தற்கில்லை. அதனால், செங்குட்டுவனை ஈன்ற தாயைச் சுட்டுஞ் சொல்லொன்று இத்தொடரில் இருக்க வேண்டுவது அவசியம்.

7.  இனி, மணக்கிள்ளியைப் பெண் பெயராகவே கொள்வதானாலும் கூட அப்பெயருடைப் பெண்ணுக்கும் சோழனுக்கும் உள்ள முறை குறிக்குஞ் சொல்லெதுவும், இல்லாததால் இத்தொடருக்குப் பொருளில்லாதாகிவிடும். இருவேறு பாலாரிருவ ரியற்பெயர்களின் வெறும்தொடையால் அவர்களின் முறையியைபு தெளியுமாறில்லை. ஆகையால் எப்போதும் அப்பெயர்த் தொடர்கள் தம்மிடை இயைபுடைய முறைப்பெயரைப் பெறினல்லாற் பொருள் தராவாம். அதனாலும் இங்கு ஒரு சொற்குறைவு தெளியப்படும்1.

8.  மேலும் 4, 6, 7, 8 பதிகங்களில் தேவி என்றும் 2 , 9 பதிகங்களில் வேண்மாள் என்றும் முறைப் பெயர்கள் நின்றே அத்தொடர்கள் பொருள்பயத்தலால், அங்ஙனமே இவ்விடத்தும் அவை போன்றதொரு முறைப்பெயர்ச்சொல் இன்றியமை யாததாகும். அதுவும் மற்றைப் பதிகங் களில் வந்தமைந்த முறைப்பெயர்ச்சொற்பொருளுடையதாக இருத்தலே பொருத்தமாகும். எனவே அது வேண்மாள் தேவி என்பவற்றுள் ஒன்றாகக் கொள்ளுவது தவறாகாது. தேவி என்ற சொல் மணக்கிள்ளிக்கு முன் அல்லது பின் நிற்க வேண்டும். முன்வைப்பின் மணக்கிள்ளிச்சொல் பொருளின்றி நின்றுவற்றும். அது பெண்பெயராகாமையையும் சோழன் பெயராக வேண்டுமென்பதையும் மேலே தெளிந்தோம். ஆதலால் தேவி போல்வதொரு முறைப்பெயர் மணக்கிள்ளி என்பதன் பின்னும் ஈன்றமகன் என்பதற்கு முன்னும் நிற்பதுவே அமைவுடைத்தாம். அத்தகைய குறைநிரப்புஞ் சொற்பெய்து பாடங்கொள்ளின் இப்பதிகத் தொடர் தெளிவுபெற்றுச் சிறப்பதாகும். ஆகையினாலே இவ்விடத்தில் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளிதேவி ஈன்ற மகன் என்பது போன்றதொரு பாடம் கொள்வது அவசியமும் அழகுமாகும். இனையதொருசொல் நிரப்பப்பெறாதவரை இத்தொடருக்கு எப்பொருளும் தெளிதற்கில்லை. பெய்தமைத்தால் அது பொருந்தும் பொருள்தந்து சிறந்துநிற்கும். எனவே இப்பதிகத் தொடரால், செங்குட்டுவன் சோழனுக்குத் தநயனும் சேரலாதற்கு மருகனும் ஆவனெனத் தெளியலாகும்.

(VI) மகட்சொல்லின் பொருள் விளக்கம்

இந்தப் பகுதியை முடிக்குமுன்னே இங்கு நாம் கருத வேண்டிய பிறிதொரு செய்தியுண்டு. செங்குட்டுவனுக்குச் சேரத் தந்தையும் சோழத்தாயும் தருபவர் தமது கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டும் மேற்கோள் வாக்கியம் ஒன்றுண்டு. சிலப்பதிகாரப் பாயிரவுரையில், சேரலாதற்குச் … சோழன்றன் மகள் நற்சோணை யீன்ற மக்களிருவருள் முன்னோன் எனச் செங்குட்டுவனை அடியார்க்குநல்லார் குறிக்கின்றார். இதிற் குறிக்கும் செய்திக்கு அவ்வுரையாசிரியர் கண்ட ஆதரவை அவர் விளக்கினாரில்லை; என்றாலும் அவருரையின் இத்தொடரை ஆதாரமாக்கி, சேரலாதற்குச் செங்குட்டுவன் தநயனெனவும், அவன்தாய் சோழன் மகளெனவும் சிலர் கருதுகின்றனர். இவர் கொள்கைக்கு ஆதாரமாய்க் காட்டக்கூடிய இதனினும் சிறந்த ஒரு சொற்றொடரும் நான் காணுகின்றேன். இளங்கோவடிகளே தம் நாடகக்காப்பியத்தில் திகழொளிஞாயிற்றுச் சோழன் மகளீன்றமைந்தன் … … செங்குட்டுவன்” என்று கூறுகின்றார். அடிகளைவிட அவர்குலமுறையைத் தெளிவிக்கப் பிறர்யாரும் அருகரில்லை. அவர்வாக்கியத்தை எடுத்தெறிய அதிகாரம் எவர்க்குமில்லை. ஆகவே இவ்வாக்கியத்தால் அவருக்கும் அவர்தமையன் செங்குட்டுவனுக்கும் தாயாவாள் சோழன் தநயை என்றே ஏற்படுமானால், இதை ஒப்புக்கொண்டு பதிற்றுப் பத்துப் பதிகப்பாக்களின் ஆதரவைக் கூடப் புறக்கணிக்க வேண்டிவரும். ஏனெனில், அப்பதிகப் பாவலர் சேரர்குலத்துக்கு அந்நியர்; அடிகளோ, அக்குடியிற் பிறந்த சிறந்த பெருந்தகை யாராவதோடு, செங்குட்டுவனுக்கு உடன்பிறந்த தம்பியுமாவர். அதனால் இது சம்பந்தமாக அவர்கூற்றே ஏற்ற பெற்றியதாகும். இவருடைய இவ்வாக்கியமே அடியார்க்கு நல்லாருரைத் தொடருக்கும் ஆதரவாயிருக்கலா மெனவும் தோன்றுகிறது. ஆதலால் இத்தொடர்களின் பொருளை ஊன்றி ஆராய வேண்டுவது மிகவும் அவசியமேயாம்.

அடிகளின் மூலவாக்கியத்திலும் அடியார்க்கு நல்லாரின் உரைத்தொடரிலும் வருகின்ற மகள் எனும் சொல் தநயைப் பொருளிலேயே நிற்குமாயின், இதுவரை நாம்செய்த ஆராய்ச்சியெல்லாம் விழல்நீராகும். அதற்கஞ்சி, அச்சொல்லுக்கு அப்பொருளே அமையுமாயின் அதைக்கொள்ளப் பின்னடையும் பெற்றியில்லை. பதிற்றுப்பத்துப் பதிகத் தொடர்கள் ஈண்டு மகட்சொல்லைத் தநயை எனக் கொள்ளற்கு இடந்தருமாயின், சங்கையின்றிச் சேரருக்கு மக்கட்டாயமே யுள்ளதெனக் கொள்ளல் கூடும். பதிகங்களோ மருமக்கட்டாயத்தையே சுட்டு கின்றன. 7ஆம் பதிகத்தொடர் அறவே மக்கட்டாயத்தை மறுத்து மற்றதனையே வலியுறுத்துகின்றது. இவற்றையெல்லாம் மேலே விசாரித்தோம். பதிகம்பாடிய பழம் புலவர் பிழைத்தனரென்று அவர் பாக்களை எளிதிற் கழித்தற்கில்லை என்றாலும் இளங்கோவடிகளின் சொற்றொடர், மக்கட்டாயத்தை மட்டுமே சுட்டுமாயின், அவரையே தழுவிப் பதிகப்பாவலரை நழுவவிட வேண்டிவரும். ஆனால், அப்படி நழுவவிடுமுன், அவர் பதிகத் தொடரும் இளங்கோவடிகள் சொற்றொடரும் தம்முள் மாறுபடாமல் நின்றமையும் பொருளமைதி பெறக்கூடுமா என்று விசாரிப்பது நமது முதற்கடமை. பெரும்புலவர் சொல்லாற்றல் மெய்ம்மைபிறழா மற்காக்கும் என்னும் மரபுண்மையை மறவாமல், முதலில் இவற்றை அமைத்துக் கொள்ளும் முயற்சியை நாம் மேற்கொள்வதே முறையாகும். எவ்வாற்றானும் அமைதிபெற வழி காணாதவரை, இவற்றுட் சிறந்தது கொண்டு பிறவற்றைக் கழிப்பது இழுக்காகாது. இம்முறையை இங்கு நாம்மேற்கொண்டு அடிகளுடையவும், அவரைப்பற்றியெழும் அடியார்க்கு நல்லாருடையவுமான சொற்றொடர்களைச் சிறிது ஊன்றி ஆராயப்புகு வோம்.

இந்நெருக்கடியில், இவ்வாராய்ச்சிக்கு உதவியாக, எதிர்பாராத இடத்திலிருந்து நமது ஐய இருளகற்றவரும் விளக்கத்தைப் பெறுகின்றோம். சங்கப்புலவரான சாத்தனார், செங்குட்டுவன்-இளங்கோவடிகள் இருவருக்கும் சமகாலத்தவர்; அதுமட்டுமன்று. அவ்விருவர் பழக்கமும் நட்பும் பெற்றவராவர். மாபத்தினியின் மறக்கற்பால் மதுரை அழலுண்டழிந்தபிறகு இவர் சேரநாடு சென்று வஞ்சியிற் கோச்சேரன்வண்மையையும் இளங்கோவின் மதிப்பும் பெற்று வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் இவர் மணிமேகலை நூலை இளங்கோவுக்குப் பாடிக்காட்டியும், அடிகளின் சிலப்பதிகாரத்தை அவர் பாடக்கேட்டும், ஒருவர் நூலையொருவர் பாராட்டியதாகத் தெரிகின்றோம். அடிகளின் அங்கீகாரச் சிறப்புடைய மணிமேகலையுள் மகள் எனும் சொல் மனைவி எனும் பொருளில் வழங்கப் பார்க்கின்றோம்.

“நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம்
மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம்
பண்டும் பண்டும் பலபிறப் புளவால்”

(மணிமேகலை, காதை 21, வரி 29 -31)

எனும் அடிகளிற் சாத்தனார் மணிமேகலையும் உதயகுமரனும் பல முற்பிறப்பு களிற் சதிபதிகளாக வாழ்ந்த விவரத்தை விளக்குகின்றார். இவ்வடிகளில் மகள் என்பது மனைவியையே சுட்டிநிற்பது வெளிப்படை. மகா மகோபாத்தி யாய சாமி நாதையரவர்களும் இவ்வடிகளுக்குத் தாமெழுதிய குறிப்புரையில் மகள் என்பதற்கு மனைவியென்றே பொருள் வரைந்துள்ளார்கள். இதனால் மகட் சொல்லுக்கு மனைவிப் பொருள் வழக்குண்டென்பது தெளியப்படுகிறது. இன்னும் கணவன் மனைவியெனும் பொருளில் மகன் மகள் என்ற சொற்கள் வருமென்பதை நோதக வுண்டோ நும்மக னார்க்கினி’1 என இளங்கோவும் கூறுதலாலும், செய்யுளிலும் வழக்கிலும் மணமகன் - மணமகள் என்ற பிரயோகங்கள் அடிப்பட்ட ஆட்சிபெறுதலாலும், நன்கறியலாம். ஆகவே, மகள் எனுஞ் சொல் மனைவியெனும் பொருளில் வருவது அருமையில்லை. ஆன்ற சான்றோராட்சியும் தமிழ் நன்மக்களிடை நெடுவழக்கு முடையதென்றே தெரிகின்றது.

4.  இப்பொருளில் அடிகள் வாக்கும் அடியார்க்கு நல்லார் உரைத் தொடரும் பதிற்றுப்பத்துப் பாக்களோடு எவ்விதப் பிணக்குமின்றிப் பொருந்தியமைகின்றன. சோழன்மகள் என்பதற்குச் சோழன் மனைவி யென்று பொருள்கொண்டால், சோழனுக்கு அவன் தேவியீன்ற மக்கள் சேரனுக்குத் தநயராகார், மருகரேயாவாரென்ப்து விசதமாகும். எனவே சேரலாதற்குச் சோழன்மகள் ஈன்ற மகன் செங்குட்டுவன் என்ற பிரயோகத்தை மட்டும் வைத்துச் சேரலாதற்குச் செங்குட்டுவனை நேரே தநயனாகவும், சோழனுக்கு அவனை மகள்பிள்ளை பேரனாகவும் கொண்டு தீரவேண்டிய அவசியமேற்படவில்லை. எனவே, சிலப்பதிகாரத்தில் வரும் இம்மகட் சொற் பிரயோகம் பதிற்றுப்பத்துப் பதிகக் குறிப்புக்களோடு முரணுவதாகக் கொள்ளவேண்டா. இப்பதிகத் தொடர்கள் சேரர் குடியில் ஒருதலையாக மருகர் அல்லது வழித்தோன்றல்களையே சுட்டுவனவாகவும், அப்பதிகத் தலைவர் சேரமன்னருக்குத் தநயராகார் மருகரேயாவாரென விளக்குவனவாகவும் தாமே தெளியத் தெரிகின்றன. சிலப்பதிகாரப் பிரயோகங்களும் இத்தகைய முறையைத் தழுவி அமைவனவாகக் காண்கின்றோம்.

(VII) மற்றுமோரையமகற்றல்

இனி, நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை என்று வரந்தரு காதையில் இளங்கோவும், ‘நிமித்திகன்… சேர்தி நீயெனச் சேரலற் குரைத்தவன் மைந்தரைநோக்கி நந்தாச்செங்கோ லந்தமிலின்பத் தரசாளுரிமை யிளை யோற்குண்டென என்று பதிகவுரையில் அடியார்க்கு நல்லாரும், இமையவரம் பனையும் செங்குட்டுவன் இளங்கோ என்பாரையும் முறையே நுந்தை, மைந்தர் எனச் சுட்டிக் கூறியதைக் கொண்டு, இவர்கள் அவனுக்குப் புதல்வரேயாக வேண்டும் எனச் சிலர் வாதிக்க வரலாம். ஆனால் இவ்வாராய்ச்சியில் எவ்வித முடிபையும் இச்சொற்களைக் கொண்டு துணிதற்கில்லை. தந்தை நுந்தை எந்தை என்பன முன்னோன் உன் தலைவன் என்னிறைவன் என்ற பொதுப்பொருளில் மேம்பாட்டுச் சொற்களாயும், மைந்தர் என்பது ஆண்மக்கள் ஆண்சிறார் என்று குறிக்கும் ஒரு பாராட்டுப் பொதுச்சொல்லாயும், சான்றோர் பாட்டுக்களிற் பெருவழக்காய் வருகின்றன. இவை பிதா புதல்வர் என்ற முறையைமட்டும் யாண்டும் சுட்டிநிற்கும் நியதியுடையனவல்ல. எந்தை வாழி ஆதனுங்க என்று வேங்கடத்து வேள் ஒருவனைப் புலவர் ஆத்திரையனாரும், அஃதை தந்தை அண்ணல்யானை அடுபோர்ச் சோழர் எனப் பிறரும் பாடியதும், இனைய பல பிறவும் கொண்டு. நுந்தைச் சொல், - உன் இறைவன் உன் முன்னவன் என்ற பொருளில் அமையுமெனத் தெளிகின்றோம். மாந்தர் மைந்தர் மக்களாண் பொதுப்பெயர் எனும் திவாகரச் சூத்திரத்தால், மைந்தர் - ஆண்மக்களின் பொதுப்பெயரென்று அறிகின்றோம். ஆகவே, நுந்தை, மைந்தா என்ற சொற்களை வைத்துச் செங்குட்டுவனும் அவன் தம்பி இளங்கோவும் நெடுங்சேரலாதற்கு நேரே பெற்ற புதல்வராவரென வரையறுத்து முறைகொள்ள இயலாது. மருமான்மாராய மைந்தருக்கு அவர்தம் குல முதல்வனான அம்மான்கோவை நுந்தை என்று சுட்டுவது தவறாகாது, தகவுடையதேயாகும். பிதா-புதல்வர் என்று தெளிவாக விதந்துசுட்டும் வேறு பிரயோகம் ஒன்றும் சேரரைப் பற்றிய பழம்பாட்டுக்களில் யாண்டும் இன்மை யால், ஈண்டும் அம்முறையை இச்சொற்களால் மட்டும் அமைத்துக்கோடற்கு அவசியமில்லை. ஆகவே, இதுவரை செய்த இவ்வாராய்ச்சியாற் மக்கட்டாய முடையராகத் தெளிவிக்கும் சான்றுகளெதுவுங் கிடையாமையோடு, அவர் மரபினர் மருமக்கட்டாயத்தினரேயாவரென்று ஒருவாறு துணியப் போதிய ஆதாரமும் கண்டோமாவோம்.


பகுதி 4 : பிற சான்றுகள்

இதுவரையில் பதிகத் தொடர்களின் சொல்லமைப்பையும் ஆற்றலை யும் கொண்டு அவற்றைத் தனித்தனியே ஆய்ந்துவந்தோம். இனி இவ்வாராய்ச்சிக்குப் பொதுநின்று தவும் சிலசெய்திகளையும் துணைக்கொள்கைகள் சிலவற்றை யும் இங்கு விசாரிப்போம்.

துணைச்சான்றாய்ச் சேரர் தாய்வழித் தாயமுறை துலக்குஞ் செய்திகளாவன :

( 1 ) பதிகங்குறிக்கும் சேரர்தாய்மார் பாட்டுக்களில் சுட்டப்பெறாமை

1.  பதிற்றுப்பத்துப்பாட்டுக்களில், சேரலாதன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்டுவன், செல்வக் கடுங்கோவாழியாதன், இரும்பொறை இளஞ்சேரலிரும் பொறை என்ற பாட்டுடைச் சேரவேந்தர்பலர் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. நன்னுதல் கணவ, நல்லோள்கணவ, புரையோள்கணவ, ஒண்டொடிகணவ, நின்பேரியலரிவை, நின்கற்பின் மாணிழையரிவை’, வாணுதலரிவையொடு காண்வர என்று அவர் பலரை அவரவர் மனைவிமார் கற்புறுகாதற் சிறப்பாற் சுட்டியும் அவரைப்பாடிய புலவர் பாராட்டிச் செல்கின்றனர். எனினும் பதிகத்திற்குறிக்கப்பெற்ற வெளியன் வேண்மாள் - நல்லினி, பதுமன் தேவி, சோழன் மகள் நற்சோணை, வேண்மாள் -அந்துவஞ்செள்ளை முதலிய பெண்டிர்யாரும் யாண்டும் எச்சேரருக்கும் மனைவியராகச் சுட்டப்பெறாமை ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இப்பெண்மணிகள் கோச்சேரருக்குரிய பெருந்தேவிமாராயின், அச்சேரரைப் பாடும்புலவர் அவர் பெண்டிரைச் சுட்டிப் பாராட்டும் பல இடங்களில் யாண்டேனும் இப்பெரு மாட்டிகளுள் யார் பேரையாவது ஒரு புலவரேனும் சுட்டாமல், எல்லோரையுமே எல்லாப்புல வருமே மறந்துவிட்டு, பிற் குறிப்பாகப் பதிகப் பாட்டுக்களில் மட்டும் இவரை விதந்து கூறுவானேன்? உண்மையில் இப்பெண்மைப் பெருந்தகையார் கோமன்னர் மனைவிமாராயின், பாட்டுடைத் தலைவரின் பெண்டிரைச் சுட்டி இன்னவள் கணவ என்று விதந்து பாராட்டு மிடங்களிலேனும் பாடும் புலவர் இவர்களை விசதமாகச் சுட்டாமல் விட்டிராரன்றோ? இப்பெண்டிர்யாரும் மூலப் பாட்டுக்களில் யாண்டும் கோச்சேரர்யாருக்கும் மனைவியராகக் குறிக்கப்படாமையாலேயே இவரைச் சேரமன்னவருக்கு மனைவியராய்க் கருதுவது தவறு என்று தெளியலாகும். இக் கோப்பெண்டிர் சேரருக்குத் தாயரும் சோதரிமாரும் ஆவதன்றி மனைவிமாராகார் என்பதை முன்பதிகப் பாக்களின் ஆராய்ச்சி யால் ஒருவாறு துணிந்து கொண்டோம். அத் துணிவை, மூலப் பாட்டுக்களில் இவர் பெயர் துலங்காமல் பாட்டுடைக்கோச் சேரரின் கற்புடை மனைவிமார்பிறரை அப்புலவர் பாராட்டிப் போவது இன்னும் அதிகம் வலியுறுத்துவதாகும்.

2.  மருமகட்டாயமுடைய சேரர்குடியில் மனைவி மார்க்குப் பெரும்பதவி யொன்றுமில்லை. அம்மனைவியரின் வயிற்று மக்களும் சேரர் குடிதாங்கும்பெற்றி பெறார். வேந்தர்க்குத் தேவியாரவதல்லால் மனைவியர்க்குக் கோக்குடியில் வேறுவித உரிமை இல்லை. அரசியராம் பதவியொடு குடிதழைய மகப்பெற்றுதவும் பெருமை கோச்சேரர் சோதரிமார், அவர் வயிற்று மருகியர்கள் இவர்கட்கே உரியதாகும். அதனாற்றான் சேரரைப்பாடும் புலவர், தம் மூலப்பாட்டுக்களில் அவர் மனைவியர் பெயர் விளக்கமுறத் துலக்காமற் பாடிப்போவார். கோவேந்தர் தாய்மாரைச் சுட்டுங்கால், அத்தாயர் கோக்குடியிற் பெண்வழியில் அரசியராய்ப் பதவியுள்ளாராதலாலே பதிகப் பாட்டுக்களில் அவர் பெயர்கள் உறவுமுறை பதவியொடு பெருமை யெல்லாம் விளக்கமுறப் பேசப்பெறுகின்றன.

3.  மருமக்கட்டாயமுடைய பெருங்குடிப் பெண்டிர் ஒத்த தகவுடைய பிறிதுகுடிப் பெரியாரை மணந்து வாழ்வர். அப்பெண்டிர் பெறும் மக்கள் தாய்க்குடியில் மாமன்மார்க்குப் 1பிறங்கடைகளாகிநிற்பர். தம் தந்தையர் குடியில் அவர்க்குத் தொடர்புரிமை யாதும் இல்லை. கோச்சேரர்குடிப் பெண்டிர், பெரும்பாலும் அக்கோக்குடியில் மகள் கொள்ளற்குரிய தகவுடைய குறுமன்னரான வேண்மாரை மணப்பர்; சிறுபான்மை பிறகுலத்து முடிமன்னர்தமையும் அவர் வேட்டல்கூடும். இவர் யாரைமணந்தாலும், இப்பெண்கள் பெறும் ஆண்மக்கள் எல்லாரும் சேரருக்கு மருகராய்ச் சேரநாட்டில் வழிமுறையே அரசுரிமைக்கு அருகராவர்.

4.  மாதுலச்சேரரொடு மருகச்சேரரைமட்டும் சுட்டி, அவர் தந்தையரைத் துலக்காவிட்டால், அவர் தாயரை மணந்த கணவரில்லாத மகளிராகக் கருதநேருமாகையால் அவ்விழி தகவை அற விலக்கி, மக்கட்டாயமுடைய தமிழகம் மதிக்க மணந்து சிறந்த கற்புடைத்தாய்க்குடிப் பெருமையுடையர் பாட்டுடைத் தலைவரென விளக்கும் பெற்றி வேண்டப்படுகிறது. அதனாலே அக்கோச்சேரர்குலம் விளக்கும் பதிகங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோச்சேரன் தாயையும் அவன் தந்தையொடு விளக்கி, அவ்விருவர் பெற்றமகன் இனையன் எனத் துலக்கி, இன்ன பெருங்கோச்சேரற்கு இவன் மருமான் எனக் குறித்து விவரமெல்லாம் விளக்கமுற விரிக்கின்றது. ஒவ்வொரு பதிகமும் பாட்டுடைத் தலைவனின் இருமுது குரவரையும் விதந்துகூறி, அதன்பின் அவனை அவரீன்ற மகனென ஒருபடியே தெரிநிலை முறையிற் குறித்துப் போகின்றது. அன்றியும், அவன்முன் தோன்றலான கோச்சேரனை முதலிற்கூறி, பின் பெற்றோர்பெயர் கூறி, அச்சேரனுக்கு அப்பெற்றோர் ஈன்று தவியமகன் எனப் பதிகந்தோறும் தவறாமற் கூறிப் போவதால், அப்பாட்டுடைத் தலைவன் கோச்சேரனுக்கு வழித்தோன்றலான மருகன் என்பதும் குறிப்பு வகையால் துலக்கப்படுகிறது.

(II) பதிற்றுப்பத்துச்சேரரின் ஆட்சிமுறை

இனி இப்பதிகங்கள் கூறுமரசர்வரிசையைச் சிறிதாராய்வோம். சேரசிம்மாதனத்தில் உதியஞ் சேரலுக்குப்பின் இமையவரம்பனும், அவனுக்குப்பிறகு அவன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் முறையே ஏறினரெனவும், இவருள் இளையோனாகிய குட்டுவனும், ஆண்டு முடிந்தபின்னரே இவரிருவருக்கும் தொடர்புடைய பதுமன் தேவிமக்களிருவரான நார்முடிச் சேரலும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், அவர்களுக்கிடையே சோழன் மணக்கிள்ளி தேவி மகன் செங்குட்டுவனும் முறையே அரசுகட்டிலேறி நாடாண்டன ரெனவும் தெரிகிறது. மற்றொரு கிளைச்சேரர் வழிமுறையில் அந்துவன்சேரல் முதல் இளஞ்சேரலிரும்பொறை யீறாக நான்கரசர் வரன்முறையாய் ஆட்சி புரிந்தனரெனவும் விளங்குகிறது. இவற்றைக் கொண்டு இமையவரம் பனுக்குப்பதுமன் மகளும் சோழன் மகளும் மனைவியராய் மக்கள் மூவரைப் பெற்றுக் கொடுத்தனரெனவும், அம்மக்கள் தம் தந்தை சிறிய தந்தை இருவரும் ஆண்டபிறகு முறையே நாம் முடிபுனைந்து தனித் தனியே எல்லாரும் சேரநாட்டை ஆண்டனரெனவும், அதுவேபோல அந்துவஞ் சேரலுக்குக் கடுங்கோவும், அவனுக்குப் பெருஞ்சேரலிரும்பொறையும் அவனுக்கு இளஞ்சேரலிரும் பொறையும் வழிமுறையே மகன்மகனாய்க் கிளைச்சேரர் சிறுநாட்டை ஆண்டுவந்தன ரெனவும் ஒருசிலர் கருதுகின்றனர்.

ஆனால், ஆழ்ந்து சூழ்ந்து நோக்குங்கால் உண்மை வேறாகத் தோன்றுகிறது. இமையவரம்பனும் அவன் தம்பியும் வேள்வெளியனுக்கு மக்கள். இவர் தம் மாமன் உதியஞ்சேரலுக்கு மருகராய், அவனுக்குப்பின் சேரநாட்டுரிமை பெற்று, ஒருவர்பின் ஒருவராய் ஆண்டனர். அவருக்குச் சோதரி முறையினரான அவர்கோக்குடிப் பிறந்த பெண்டிருள் ஒருத்தி வேள்பதுமனையும் மற்றொருத்தி சோழனையுமாக மணந்து மக்களைப்பெற்றனர். அம்மக்கள் தம் தாயர்குடிச் சேரமன்னருக்கு வழிமுறையில் மருகராகையால், மாமன்மாரிருவரும் தத்தம் முறையில் ஆண்டு முடிந்தபின்னர் மருகருரிமையில் வரிசை முறையாய்த் தாமும் சேரசிங்காதனம் ஏறுகின்றனர். பதுமன் தேவி ஒருத்தியே சேரர்பெருங்குடியில் இமைய வரம்பனுக்குச் சகோதரியாயும் - கிளைச்சேரர்குடியிற் கடுங்கோ வுக்குச் சோதரிமுறையுடையளாயும் நின்று, தான் பெற்ற மக்களுள் ஒருவனைத் தன்குடியில் மருகனில்லாத கடுங்கோவுக்கு மருகனாய் அவன் கிளைக்குடிதழையக் கொடுத்துதவி யிருக்கலாம். அல்லது வேள்பதுமனுக்குக் கோக்குடி நெடுஞ்சேரலாதன் சோதரி ஒரு மனைவியும் கிளைச் சேரர்குடிக் கடுங்கோவின் சோதரி ஒரு மனைவியுமாயிருந்து அவரவர் தாய்க்குடியைத் தாங்க இவ்விருமனைவி மாரும் பதுமனுக்கு மக்களைப் பெற்றுமிருக்கலாம். எப்படியாயினும், இம்மக்கள் இருவரையும் பதுமன்தேவி மக்கள் எனச் சுட்டுவது தவறாகாது. இவ்விரு குடியிலும் இவ்வாறு மாமன்மார்க்கு மருகர் வழித் தோன்றல்களாய் நின்று, வரன்முறையே நாடாண்டனர். இதுவே இப்பதிகத்தொடர்கள் தெரிவிக்கும் செய்தியெனத் துணியக் கிடக்கிறது. இப்பதிற்றுப்பத்துச் சேரரின் ஆட்சி முறையால் இத்துணிவை வலியுறுத்தி, இதற்கு மாறான மக்கட்டாயக்கொள்கையை நலிவிக்கும் நியாயங்கள் சிலவற்றை இங்கு நிதானிப்போம். அவை வருமாறு :

1.  மக்கட்டாயமுடைய கோக்குடியில், மயின் முறையாய் முதல் மகனின் முதல்மகனே வழிமுறையே அரசு பெறற்குரிமை பூண்பான். கோலோச்சுங் கோவேந்தற்கு ஆண்மக்கள் பிறந் திருக்க, அவரை விலக்கி வேந்தனுடன் பிறந்தவர்கள் நாடாளுமுரிமை கொள்ளார். மருமக்கட்டாக்குடியாமேல் உடன் பிறந்தாரனைவருமே வரிசை முறையில் ஆண்டுமுடிந்த பிறகுதான், அடுத்த கீழ்ப்படியிற் சோதரிமார் மக்கள் அநந்தர வராகிய மருகர்கள் - ஆட்சிபெறுவர்.

இம்முறையிற் பதிற்றுப்பத்திற் பாடப்பெற்றுள்ள சேர பரம்பரையைப் பரிசோதித்துப் பார்ப்போம். சேரரை மக்கட்டாய முடையராய்க் கருதுபவர் எண்ணுகிறபடி 2ஆம்பதிகத் தலைவனான இமையவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு, பதுமன் மகள், மணக்கிள்ளிமகள் எனும் இருமனைவியரால், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என மூவர் மக்கள் உளர். இருந்தும், இவர்களை விலக்கி இவர்தம் சிறியதந்தையான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் முடிசூடி 25 ஆண்டு அரசுவீற்றிருக்கின்றான். அவனுக்குப் பிறகுதான் அவன் தமையன்மக்களான இம்மூவரும் நாடாட்சி பெறுகின்றனர். இது மக்கட்டாய அறமுறையில் நிகழொணாதது.

ஆனால், சேரர் மருமக்கட்டாயமுடையராகில், பதிற்றுப்பத்தில் நாம் காணும் முறைதான் அறமுறையாகும். இமைய வரம்பனுக்குப் பின் அவன்தம்பியே தாய்வழித் தாயக்கிரம உரிமையில் அரசனாகவேண்டும். அவ்விருவர்களுக்கும் பிறகே. அவர்களின் மருகர்கள் தங்கள் வயதுக்கிரம வரிசைப்படி ஒவ்வொருவராய் முடிபுனைந்து நாடாள்வர். மேலே நாம் கண்டபடி களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இவர்களின் தாய் சேரர்கோக்குடிப் பிறப்புடையவள், பதுமனுக்கு மனைவி. ஆவிக்கோமான் பதுமன் எனும்வேளுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனால் இவர் சேரர்கோக்குடிக்கு இருமக்களை ஈன்றுதவினள். அதுவே போல் நற்சோணை என்பாளும் சேரர் குடிப்பிறந்து சோழனை மணந்து வாழ்ந்தவளாவள். அவளீன்ற மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவும் ஆவர். இளங்கோ துறவு பூண்டு அடிகளாகவே, அத் தாய்வழியிற் கோலுரிமைக் குடையவன் குட்டுவன் மட்டுமேயாகி நிற்பன். இவர்கள் தாய் நற்சோணையும் வேள்பதுமனின் மனைவியும் சேரர்குடியில் மணந்து புகுந்த பிறகுடிப் பெண்டிரலர்; அக்குடியிற் பிறந்து சிறந்த பேரரசிமாராவர். அவர்கள் வயிற்றுதித்த மக்களான மூவரும் இமைய வரம்பனுக்கும் அவன் தம்பி குட்டுவனுக்கும் பிறங்கடையரான மருகராவர். ஆகவே தங்கள் மாமன்மாரான அவ்விருவரும் ஆண்டுமுடிந்தபிறகு இம்மருகர் மூவரும் வழிமுறையில் தம் மரபு நியதிப்படி ஆட்சிபெறுகின்றனர். இது அறமும் அடிப்பட்ட குடிவழக்குமாய்ப் பொருத்தமும் சிறப்பும் பெற்று அமைகின்றது, இவர்களுக்குமுன் இமையவரம்பனுக்குப்பின் இவர்தம் இளையமாமனான செல்கெழுகுட்டுவன் நாடாளுவதில் வரிசைமுறைப் பிறழ்ச்சியில்லை. இவர்தம் ஆட்சிமுறையில் தாய்க்குடித் தாயமுறையறமே பேணி ஓம்பப்படுகின்றது,

2.  மேலும், இம்மூவருக்கும் தாம் பெற்ற தநயர் இல்லையென்று யாண்டும் துலக்கப்படவில்லை. இவருட் செங்குட்டுவனுக்கு அவன்பெற்ற மகன் இருந்ததாக 5ஆம் பதிகம் விதந்தும் கூறுகிறது. அவ்வாறு தநயர் உளராயின், மக்கட்டாயமுறைப்படி தந்தைக்குப் பிறகு உடனே உரிய தநயரே முடிசூடவேண்டுவதன்றி, இவ்வாறு சோதரர் மூவரும் தம்முள் வரிசைமுறையில் ஒவ்வொருவராய் ஆட்சி பெறுவது அவசியமும் அறமும் இல்லை. தம் தநயரை விலக்கி இம்மூவரும் முறையே ஆண்டதும், இவர்களை விலக்கி இவர்களுக்கு முன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆண்டதும் இவர் குடியில் மருமக்கட்டாயம் உண்மையையும் அம்முறையில் இவர்களுக்கு உள்ள தாய்வழித்தாய உரிமையையும் நன்கு வலியுறுத்தும்.

3.  இன்னும், மக்கட்டாய முறையிற் கடைசியில் ஆண்ட அரசனின் அடுத்த பிறங்கடை (வாரிசு)க்குத்தான் அடுத்த பட்டம். ஒருதாய்வயிற்று மக்கள் மாற்றாந்தாய் வயிற்றுமக்களை விட நெருங்கிய தொடர்புடையர்; அதனால் சிறந்த உரிமையும் அடைகின்றனர். அற நூல்விதியும் ஆட்சியும் நமது நாட்டில் ஒருதந்தை மக்கள் பலருள், ஒருவருக்குச் சகஉதரரல்லாரை விலக்கி, அவருடன் ஒரு வயிற்றுதித்தாரையே அவருக்குச் சிறந்த பிறங்கடைகளாக்கி நிற்கும். எனவே, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சகோதரன்; செங்குட்டுவன் மாற்றாந்தாய் மகன். இவர்களெல்லார்க்கும் தந்தை இமையவரம்பனாயின், அவனுக்குப்பின் அவன் மக்கள் மூவருள் மூத்தவனே சிறந்த பிறப்புரிமையுடன் பட்டமெய்துவன். அவனுக்குப்பின் அம் மூத்த மகனுடைய வாரிசுக்குப் பட்ட மிறங்குவதல்லது, அவ் வாரிசுகளை விலக்கி, முந்திய தந்தையின் வாரிசுகளுக்குப் போவது முறையில்லை. செங்குட்டுவன் மூத்தவனாயிருந்தால், முதலில் அவனே முடிபுனைந்திருப்பான். அவனுக்குப்பின் அவன் தநயரும் அவனுக்கு ஒருவயிற்றுத் தம்பியருமே ஆட்சிபெறுவர். இவர்க்கு முன்னே அவன் மாற்றந்தாய் மக்களுக்கு உரிமையில்லை. ஆனால், செங்குட்டுவனுக்கு முன் நார்முடிச்சேரல் ஆண்டிருப்பதாய் அறிகின்றோம். அதனால் அவனே வயதில் மூத்தவனாகப் பட்டமெய்தினான் என்று தெரிகிறது. அவனுக்குப் பின் அவன் தநயரும். தநயரில்லையானால் அவனுக்கு ஒருவயிற்றுத்தம்பியான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுமே அவன் அரசு பெறுதற்குச் சிறப்புரிமையுடையராவர். இவர்களை விட்டு இடையே செங்குட்டுவன் ஆட்சிபெறுதற்கு அவசியமும் நியாயமும் இல்லை.

ஆனால் மருமக்கட்டாயக்குடியில் இவர்கள் கோச் சேரருக்கு மருகராவர். ஆகவே வயதுக்கிரமப்படி இம்மூவரும் ஆட்சிபெற்றுத் தீர வேண்டும். மருகருள் ஒருவயிற்றுதித்ததால் மட்டும் யாருக்கும் எவ்விதச் சிறப்புரிமையும் ஏற்படாது. வயது முறைவரிசையில் மட்டுமே அவரவர் ஆட்சியுரிமை வரையறுக்கப்படும். ஆளும் அரசருக்கு மக்கள் இருந்தாலும் அம்மக்களுக்கு உரிமையில்லையாகவே, ஒருவர் பின்னொருவராய்ச் சோதரரும் சோதரருக்குப்பின் அவர்தம் மருகருமே ஆட்சி பெறுவர். பதிற்றுப்பத்துப் பதிகங்களால் இவர்மூவரும் முறையே சேரநாட்டை ஆண்டதாயும், இவருள் ஒரு வயிற்றுடன் பிறந்தார் இருவர்க்கிடையே ஒருவயிற்றுதியாத செங்குட்டுவன் ஆட்சி பெற்றதாயும் அறிகின்றோம். இவையெல்லாம் மருமக்கட்டாயத்தொடு பொருந்துவனவன்றி, மக்கட்டாய முறைக்கு ஒவ்வா. இவற்றாலும் சேரர்குடியில் மக்கட்டாயம் வழங்கவில்லை என்பது உறுதிபெறுகிறது.

(III) சேரமன்னரை யாண்டும் தந்தைக்குத் தநயரென்னாது, முன்னவற்கு மருகரெனவே கூறுமரபின் குறிக்கோள் இதை வலியுறுத்தும் செய்தி இன்னுமொன்றுஉளது. பதிற்றுப்பத்திலும் மற்றும் பண்டைச் சங்கநூல்கள் பலவற்றிலும் சேரரைக் குறிக்கும் பாட்டுக்கள் பல. அவற்றுள் ஒன்றிலேனும் ஒரு சேரனையாவது அவன் தந்தைக்கு மகன் என்று சுட்டுங்குறிப்பே கிடையாது. அதற்குமாறாக முன்னரசரின் தொடர்புகுறிக்கு மிடத்திலெல்லாம் பாட்டுடைச்சேரனை அம்முன்னோனின் மருகன் எனவே எல்லாப் பழம்புலவரும் யாண்டும் ஒருபடியே சுட்டிப் போகப் பார்க்கின்றோம். இது மிகவும் சிந்திக்கத்தக்கது.

‘மருகன்’ என்பது வழித்தோன்றல் என்ற பொருளுடைய சொல்லாகை யாலும், அடுத்ததந்தையைச் சுட்டாமற் புகழ் சிறந்த மூதாதையரையே சுட்டித் தொடர்பு காட்டுவது புலவர் முறையாகையாலும், அம்முறையிற் பாட்டுடைத் தலைவரை அம்முன்னோருக்கு மருகரெனவே சுட்டிப் பாடுகின்றனரெனச் சிலர் சமாதானம் காட்டவரலாம். எனில், சேரகுலத்தில் புகழ்படைத்த ஒரு சேரலற்குப் புகழ்படைத்த பெருமக்கள் ஒருவருமே எஞ்ஞான்றும் பிறக்கவில்லையென்றாவது. அடுத்துப் பெரும்புகழ்கொண்ட இருதலைமுறைச் சேர வேந்தரைப் பாடப் புலவரில்லை யென்றாவது கொள்ளுவது அசம்பாவிதம். பதிற்றுப்பத்துப் பதிகப் பாட்டுக்களை மக்கட்டாயமுறையிற் பொருள் கொள்ளுவோரே இமையவரம்பனுக்குப் பின் அவனை யொத்துப் பாடல்பெறும் புகழ் படைத்த மூவர்மக்கள் இருந்தன ரென்றும் அந்துவன் சேரல் முதல் இளஞ்சேரலிரும் பொறைவரை நாலு தலைமுறையாக ஒவ்வொரு சேரனுக்கும் பாடப்பெறுஞ் சிறப்புடைய பெருமகனே பிறந்து புகழ்சிறந்துளனென்றும் கூறுகின்றனரே. இப்பெருமக்கள் பலருள் யாரேனும் ஒருவனைப்பாடிய புலவர்கூட அவனை அவன் பெருந்தந்தைக்கு மகனெனச் சுட்டப் பாடாததற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு பதிகத்தலைவனுடைய மனைவியின் தந்தையைக் கூடப் புலவர் தவறாமற்சுட்டிச் சிறப்பிப்பதாக இப் பதிகத்தொடர்களுக்குப் பொருள் கொள்ளுகிறவர்கள், அச்சேரருக்கு முன் பெரும்புகழ் படைத்துப் பல புலவராற் பாடப்பெற்ற அவர் தம் தந்தையரின் தொடர்பைமட்டும் எல்லாப்புலவரும் ஒருபடியாக மறைத்தொதுக்குவானேன்? மக்களைப்பாடும் புலவரெல்லாரும் அம்மக்களினும் புகழ்சிறந்த அவர்தம் தந்தையரை அறமறந்து ஒதுக்கிவிட்டுப் பெயர்சுட்டும் பெற்றிபெறாப் பெண்டிரையும், அப்பெண்டிர் பிதாக்களையும் தம் பாட்டுக்களில் மறவாமற் பாராட்டு வானேன்? போகட்டும். ஒருதலையாகப் பாடும் சேரரின் முன்னோரை மதியாமல் விட்டொழித்து, அச்சேரர்காதற் பெண்டிரோடு அப்பெண்டிர் தந்தையரை மட்டுமே பழம் புலவரெல்லாம் பாராட்டினர் என்றாவது கொள்ளக்கிடந்தாலும் ஒருவாறு அமைதி பெறலாம். உண்மையிற் புலவர் பலரும் தம் பாட்டுடைத் தலைவரின் முன்னோரை விட்டபாடில்லை. அன்ன பெருமுன்னோரைச் சுட்டி, அவர் மருகரெனப்பாட்டுடைத் தலைவர் தமை விதந்து பாராட்டிப் போக நாம் பார்க்கின்றோம். பதிற்றுப்பத்திலே அத்தகைய குறிப்புக்கள் பல வருகின்றன. இதனை ஊன்றிச் சிந்திக்கும்போது மக்கட்டாயமுறை இக்கோச்சேரர் குடியில் இல்லாமையே இவ்வாறு சேர ரெல்லாம் மருகரெனவே பாடப்பெறுதற்குக் காரணமென்று தெரிகிறது. இளஞ்சேரலிரும் பொறையைப் பெருஞ்சேரலிரும் பொறையின் மகனென்னாது, விறல் மாந்தரன் விறன்மருகன் என்று பெருங்குன்றூர்கிழார் பாடத் தக்ககாரணம, இம்மருமக்கட்டாயமன்றிப் பிறிது காணல் அரிது.


பகுதி : 5 மருகன் என்ற சொல்லின் பொருளாட்சிகள்

ஊன்றிச்சிந்தித்தால், மருகன் என்னும் சொல்லுக்கு வழித்தோன்றல் என்னும் பொருளே இம் மருமக்கட்டாய வழக்கால் வந்திருக்க வேண்டு மெனத் தோன்றுகிறது. மருகன் எனும் சொல், நேரே சோதரிமகனையும், மகள் மணவாளனையுமே குறிப்பது மரபு. அந்நேர்பொருளில் வழங்குவதோடமையாமல் அச்சொல் சிலபுலவர் செய்யுள்களில் மக்கட்டாயக் குடிகளில் வழித்தோன்றலாவாரைச் சுட்டவும் வருகின்றது. மக்கட்டாய நாடுகளில் மருகர் மாமன்மார்க்கு என்றும் வழித்தோன்றலாக மாட்டார். மருமான்மார்க்குரிய பெயர்ச்சொல் அவ்வுறவுமுறைக் குரிமையின்றித் தம் தந்தைக்குத் தநயராய் வழித் தோன்றலாவாரைக் குறிக்கப் பெறுவானேன்? மக்கட்டாய முறையில் அச்சொல் அப்பொருளி லாட்சி பெறும் ஆற்றலும் இல்லை. மருமக்கட்டாய வழக்கம் தமிழகத்தில் உளதாயின் அம்முறையில் வழித்தோன்றலாவார் மருகரே யாகையால், நாளடைவில் மருகன் எனும் சொல். மருமான் - எனும் முறைசுட்டும் தன்நேர்பொருளை மட்டுமன்றி, வழித்தோன்றல் எனும் சார்புப்பொருளையும் வழக்காற்றாற் பெறுவது இயல்பாகும். பிறகு இரு தாயக் குடிகளிலும் தாயமுறையைக் குறியாமலே பிறங்கடை (வாரிசு) ஆவார் எவரையும் வழித்தோன்றல் எனச்சுட்டும் பொதுச்சொல்லாகி வழங்கப்பெறும். இதுவே இச்சொல்லுக்கு இப்பொருள் கிடைத்த வரலாறாக வேண்டும். என்றும் யாண்டும் மருமக் கட்டாயமறியாத மக்கட்டாயம் மட்டுமே வழங்கும் ஒரு நாட்டில் மருகர் என்றுமே வழித்தோன்றலாகாராகையால் அவர் பெயர் அப்பொருளெய்தநியதியில்லை; வழியுமில்லை. ஆகவே தமிழில் இப்பொருளில் இச்சொல் வழங்கி வருவதாலும் தமிழகத்திற் சேரநாடல்லாத பிறிதுபுலமெல்லாம் மக்கட்டாயமே தொன்றுதொட்டு நினைவெட்டும் நூல்குறிக்கும் காலமெல்லாம் கையாளப் பெறுவதாலும், இச்சொல்லுக்கு இப்பொருளாட்சி குடபுலச்சேரர் குடித்தாயமுறை கொண்டே கிடைத்திருக்க வேண்டுமென்பது தெளிவு பெறுகிறது. எனவே, பழம்பாட்டுக்களிற் சேரரையெல்லாம் மருகர் எனவே குறித்துப்போகும் வழக்காற்றால் அச்சொல்லின் பிந்திய பொருள் கொண்டு அவரை மக்கட்டாயமுறையில் வழித்தோன்றல்கள் எனக் கொள்ளுவதைவிட, அவர்களின் மருமக்கட்டாயமுறையையே அது சுட்டுமெனவும், அவர்தம் தாயமுறை வழக்குப் பற்றியே நாளடைவில் அச்சொல் வழித்தோன்றல் எனும் பொதுப்பொருள் பெற்று மக்கட்டாய முறையில் வழித்தோன்றலாவாரையும் குறிக்கலாயிற்றெனவும் கொள்ளுவதே பொருத்தமாகும்.


பகுதி6: பதிற்றுப்பத்துப் பாட்டுக்களிலெல்லாம் மருகரென்றே சுட்டவும் பதிகங்களில்மட்டும் ‘மகன்’ என்றுவந்த பிரயோகத்தின் பொருட்பொருத்தம்

இனி, இங்கு நாம் பொதுவாக விசாரித்தறியவேண்டிய செய்தி பிறிதொன்று உண்டு. பதிற்றுப்பத்துப் பதிக ஆசிரியர் பாட்டுடைத் தலைவனைப் பதிகத்திற்குறித்த வேறு சேரவேந்தனுக்கு மேலேகூறியபடி மருகன் என்னாமல் வாளா மகனென்றே கூறிவைத்திருக்கின்றார். ஆகவே இங்கு மகன் எனும் சொற்பொருளை நாம் சிறிது விசாரிப்பது பொருத்தமாகும். பதிற்றுப்பத்து நூலிலும் மற்றச் சங்கச் செய்யுட்களிலும் நிரந்தரமாகப் புலவரெல்லாம் தாம் பாடும் சேரரை அவர்தம் முன்னோருக்கு மருகர் என்றே குறித்துப்போவதற்கு மாறாக, இப்பதிகப் பாட்டுக்களிலெல்லாம் ஒருபடியாக ஒவ்வொரு பாட்டுடைச் சேரனையும் மற்றொரு பெயர் குறித்த சேர மன்னனுக்கு மருகன் என்னாது வாளா மகன் எனவே கூறி வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. ஒருசேரனுக்கு மற்றொருவன் மகன் என்று மட்டும் கூறப்பட்டாலுங்கூட, அதுகொண்டு பின்னவன் முன்னவனுக்கு அவன் பெற்ற புதல்வன் என்று ஒருதலையாகத் துணிய இயலாது. அப்படியிருக்க, இங்குப் பதிகங்களெல்லாம் வாளா இரு சேரரைமட்டும் சுட்டி, அவருள் ஒருவனை மற்றவனுக்கு மகன் எனப் பேசவும் இல்லை. ஒவ்வொரு பதிகத்திலும் மகன் எனும் சொல், தனியே இருசேரர் பெயர்க்கிடையில் முறைப் பெயராய் நில்லாமல், இடையே பிறசொற்றொடராக்கம் பெற்றே வருகின்றது. ஆகவே இங்கு இதன்பொருளைச் சிறிது ஊன்றி விசாரிப்பது அவசியமாகிறது.

மகன்என்ற சொல் தமிழில் (1) ஆடவன், (2) மணவாளன், (3) பெற்றபுதல்வன், (4) பெறாத வழித்தோன்றல் அல்லது வாரிசு எனப் பல்பொருளிலும் வருவதாகும். ஆகவே இச்சொல்லுக்கு ஆங்காங்கே இடம்நோக்கிப் பொருள் இன்னதென்று வகுத்துக் கொள்ள வேண்டுவது இன்றியமையாத கடமையாகும். பதிகங்களிலெல்லாம் இச்சொல் எங்கும் நிரக்க ஈன்ற என்னும் அடையடுத்தே நிற்பதால் இதற்குக் கேவலம் ஆடவன் அல்லது மணமகன் என்ற பொருள்கள் விலக்கப்படும். பெற்றோர் பெயர்குறித்து, இன்னார் மனைவியீன்ற மகன் என்று விதந்து கூறப்படுவதால், அப்பெற்றோருக்குப் பாட்டுடைத் தலைவன் அவர் பெற்றபுதல்வனே என்று தெளியப்படும்.

அதனாலேயே பதிக முதலிற் பெயர் குறிக்கப்பெற்ற சேரனுக்கு அவன் புதல்வன் ஆகான் என்பதும் தெளியப்படும். எனினும், அச்சேரனுக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் வேறு முறைச் சொற்கள் எதுவும் அங்கு இல்லாததால், அத்தொடர்பையும் இம் மகற்சொல்லே குறிப்பாகக் கொள்ளவேண்டும். கொண்டால், அக்குறிப்பில் இச்சொல்லுக்குப் பெற்ற புதல்வனல்லாத வழித்தோன்றல் என்ற பொருளே அமைவதாகும். ஏனெனில், இங்கு ஒவ்வொரு பதிகத்தலைவனையும் புலவர் பதிகப்பாட்டில் அவனைப் பெற்றோரிருவரொடும் விதந்து சுட்டி, அவன் அவருள் இன்னோன்தேவி யீன்ற மகன் என விளக்குவதோடு, பதிக முதலிற் பெயர்குறித்த மற்றொரு சேரனுக்கும் அவன் வழிமுறைமகனாவான் என்றும் தெளிவிக்கின்றார் என்பது விசதமாகிறது. ஆகவே இங்குப் பதிகங்களில் வரும் மகன் எனும்சொல் பதிகத் தலைவனைப் பெற்றோரின் தொடர்பு குறிக்கும் போது அவருக்கு அவன் புதல்வன் முறைப் பொருளிலும், மற்றொரு சேரமன்னனின் தொடர்பு குறிக்கும் போது வழித்தோன்றல் என்ற தகவுப் பொருளிலும் ஆட்சி பெறுகின்றதென்று தெளிவாகிறது.

இதைத் தெளிவிப்பதற்காகவே ஆசிரியர்-பாட்டுச் சேரனைப் பெற்ற இருமுதுகுரவரைக்குறிக்குஞ் சொற்றொடரை அவனைச்சுட்டும் மகன் என்ற சொல்லுக்கு அண்மையில் வைத்த தோடமை யாமல், அடுத்து அச்சொல்லுடன் ஈன்ற என்ற அடை தொடுத்துநிறுத்தியும் - அவனைத் தனக்குப் புதல்வனாகாமல் வழித்தோன்றலாக மட்டும் பெறும் மற்றொரு சேர மன்னன் பெயரைக் குவ்வுருபுகொடுத்துப் பிரித்துச் சேய்மையில் நிறுத்தியும் வைத்திருக்கும் அழகு கவனித்துப் பாராட்டத்தக்கது. இங்கு நான்கனுருபு கொடை, பொருட்டு, முறைப் பொருள்களில் வந்துள்ளது. பதிகமுதலிற் குறித்த ஒருசேரனுக்கு, அவன்மரபு தழையும்பொருட்டு அவன் குடி சிறக்க மகப்பெற்று ஈயும் உரிமையுடைய கோமாள் ஒருத்தி விதந்து கூறப்பட்ட வேறொரு தக்கமணவனை மணந்து அவன் மனைவியாவாள், தனக்கு மகனாய்த் தான் பிறந்த சேரர் குடிதழைய அச்சேரனுக்கு முறைக்கு மகனாய் (வாரிசாய்) ஈன்று கொடுத்தவனே பாட்டுடைச்சேரன் என்பது பதிகத் தொடரமைப்பால் இனிது போதருகின்றது. பதிகமுதலிற் குறிக்கும் சேரன் பெயர்க்கு நான்காம் வேற்றுமையுருபு புணர்த்திப் பிரித்து அதைச் சேய்மையில் நிறுத்தியதனால் அப்பெயருடையானுக்குப் பின் ஈன்ற மகன் என்றுவரும் தொடர்குறிக்கும் பாட்டுடைத் தலைவன் நேரே பெற்ற மகனாகாவிட்டாலும் அச்சேரன்குடி சிறக்கும் பொருட்டு அவனுக்கு மகன் (வாரிசு) முறையாக அவன் குடிப்பிறந்தாளொரு கோமாட்டி பெற்றுக் கொடுத்த (மகன்) வழித்தோன்றலாவான் என்று இப்பதிகத்தொடர் பொருள் பயத்தலால், இங்குப் பொருட்டு முறைப் பொருள்களையும் கொடைப் பொருளையும் முறையே குவ்வுருபு கொடுப்பதாகும். பெற்றோர் பெயர்களை அண்மையிற் குறிப்பதால் அவர்களுக்குப் பாட்டுடைத் தலைவன் நேரே யீன்றமகனாவதைப் பொருந்தக் கூற வேண்டுவதன் பொருட்டும், சேய்மையிற் சுட்டிய சேரனுக்கு அவன் வழித் தோன்றலாவதைக் குறிக்கும் பொருட்டும், இரண்டுக்கும் உதவவொண்ணாத மருகன் என்பதைவிலக்கி ஒருங்கே இருபொருளிலும் செவ்வனே நின்றமைவதான மகன் என்ற சொல்லையே இங்கு இப்பதிகங்களிற் புலவர் ஓர்ந்து உபயோகித்துள்ளார் என்பது பதிகத்தொடரமைப்பால் இனிது தெளியக்கிடக்கின்றது.


பகுதி : 7 முடிவுரை

தமிழ்நாட்டில் குடகுமலைத்தொடருக்கு மேற்கே குடபுலத்தில் மட்டுமே இம்மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்று வருகின்றதென்று இவ் வாராய்ச்சியால் தெளியக்கிடைக்கிறது. எனினும், அம்மலைத்தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்ககாலந்தொட்டு மக்கட்டாயமே நிலைத்து நிற்கின்றது. இக் கீழ்புலத்தில் என்றும் யாண்டும் யாராலும், மருமக்கட்டாயம் ஆட்சிபெற்றதான குறிப்பே நூல்களிற் கிடையாது. இந்நிலையில் இருமக்கட்டாயம் தொல்லைத் தமிழ்மரபா? பழமரபாமேல், தமிழகத்திற் கேரள மொழிந்த பிற பகுதிகளிலெல்லாம் இது வழக்கிழந்தது மட்டுமன்றி, பழஞ்சேரருக்குக் கட்டாயமே மரபாமெனத் தமிழர் மயங்கும்படி இது மறக்கப்படவும் காரணமென்ன? தமிழ் மரபன்றேல், சேரர் எக்காலத்தில் யாண்டிருப்பது எப்படி இதனை மேற்கொள்ள லாயினர்? சேரரே தமிழர்தாம் அன்றி வடவாரியரை வணக்கியது போலவே, தமிழப்படையையெல்லாம் இடையறப்படுத்தித், தருக்கினர் என்று இவர் கீர்த்திகொள்வதால், இச்சேரர் தமிழரல்லாத அந்நியரா?

இவ்விடத்தில் நாம் கருதவேண்டியன இன்னும் சிலவுள. தமிழகத்தில் மேல்புலத்துமட்டுமே இத்தாய் வழித்தாயமுறை நடக்கின்றது. அங்கே நாயர் முதலிய திராவிடசமுதாயத்தார் மட்டுமல்லர்; தம்மை நல்ல அசல் ஆரியப் பிராமணராகப் பாராட்டித் தருக்கும் நம்பூதிரிமாரும், புறமதத்தராய்ப் பிற நாட்டிலிருந்து வந்து குடியேறிய மாப்பிள்ளைமாருமே மருமக்கட்டாயி களாயிருக்கின்றனர். சமீபகாலத்தில் கீழத் தமிழ்நாடுகளிலிருந்து வந்தேறிய சிலரொழிய. நெடுங்காலமாகக் குடமலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டார் எல்லாரும் தொன்று தொட்டு மருமக்கட்டாயத்தையே கையாண்டு வருகின்றனர்.

இவ்வாறு மேல்புலத்தில் மட்டும் தாய்வழியும் பிறிதெங்கும் தந்தைவழியுமாயிருப்பதன் சரித மூலச் செய்திகளைத் தேர்ந்து தெளிதல் தமிழர்கடனாகுமன்றோ? மிகப் பழங்காலத்தில் தமிழகமுழுவதும் தாய்வழி மரபே பரவியிருந்து, பிறகு மக்கட்டாய ஆரியர் வந்தேறியபின் கீழத்தமிழ்நாடுகளில் தாய்வழி நெகிழ்ந்தொழிந்து தந்தை வழித்தாயம் மேற்கொள்ளப் பட்டிருக் கலாம். எனினும் இத்தாய மாற்றம் குடமலைத்தொடர் கடந்து மேலைப்புலச் சேரரையிணக்க மாட்டாமல் கேரளத்தில் மட்டும் பழைய தாய்வழி தங்கிய தெனலாம்.

கேரளத்திலவ்மாப்பிள்ளைமார் என்பார் ஆதியில் அராபி நாட்டின ரென்பது எல்லாருக்கும் ஒப்பமுடிவதொன்றே சமயத்தாலுமிவர் மகம்மதியர். மகம்மதியர் சமுதாய வழக்கவனுட்டானங்களை எளிதில் மாற்ற இணங்காத பிடிவாதி களென்பதும் தங்கள் அனுட்டானங்களுக்காகத் தமதுயிரைப் பொருட்படுத்தாது கொடுத் தேனும் தம்மொழுக்க வழக்கங்களைப் பேணுபவரென்பதும் உலகறிந்த செய்தி. இப்படியிருக்க, இவ்வரபிய மாப்பிள்ளைமார் குடநாடு புகுந்தபின், அங்கே பரசுராமர் சாபத்துக்குப் பயந்து தம் பழைய குலவொழுக்கங்குன்றப் பல புதிய அநாரிய ஆசார அனுட்டானங்களோடு மருமக்கட்டாயத்தையும் மேற்கொண்டுள்ள இந்துக்களின் தூண்டுதலால், தாங்களும் மருமக்கட்டாயி களாகி விட்டார்களா? அல்லது இவர்கள் பூர்வீக அராபியாவில் கையாளப்பட்ட பண்டை மருமக்கட்டாயத்தைப் புதிய மகம்மதியர் அந்நாட்டில் மாற்றினபோது அதனைத் தாம் கைவிடச் சம்மதியாமல் அரபியாவை விட்டுக் குடநாடு புகுந்து, தம் பழந்தாயமுறையை விடாது பேணிவருகின்றனரா? அராபி தேசத்தில் ஆதிகாலத்தில் மருமக்கட்டாயமே இருந்ததென்பது நல்ல ஆராய்ச்சியாளர் ஆய்ந்து துணிந்த செய்தி. 1அராபி நாட்டுக்கும் குடபுலத்துக்கும் தொன்றுதொட்டு நெருங்கிய தொடர் புண்மையும் சரிதமறிந்த செய்தியேயாகும்.

இந்நிலையில், அராபியர் மகம்மதியராகிப் பல புதிய ஆசாரத் திருத்தங்களை ஏற்படுத்தியமைவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே, சில மருமக்கட்டாய அராபியர் குடபுலத்திற்குடியேறினவர் நாளடைவில் இந்துக்களாயினர்; அவரோடு பின்னர் மகம்மதிய மருமக்கட்டாயிகளான அரபி மாப்பிள்ளைமாரும் சமயமாறினும் தங்கள் பழவழக்கங்களைக் கைவிட மனமில்லாதவராய், அப்பழவழக்குக்கட்கிடமற்ற தமது நாட்டைவிட்டுச் சேர நாட்டில்வந்தேறி தங்குலத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆண்டுப் போந்து தமது நாட்டுத் தாய்வழித்தாயமுறையை விடாது பேணிவரும் குடபுலக் குடிகளோடு ஒருங்கு வாழலாயினரென்று கொள்ளலாமா?

இத்தாய்வழித்தாயத்தார் ஆதிக்கம் வளர்ந்தவிடத்தில், தெற்கே நாஞ்சில்நாட்டுத் தமிழரைப் போலப் பிற மக்கட்டாயிகள் சிலரும் நாளடைவில் கால இட மாறுதலால் தாய்வழி முறையைத் தாமும் கையாளத் தொடங்கியிருக்கலாம். அதற்குச் சமாதானங் கூறுமுகத்தால், வடநாட்டில் தாம் தாயைக் கொன்ற உள்ளுளைக்கு முணர்வு தூண்டப்பரசுராமர் தென்மேற்கே கேரளத்தில் தாய்வழிவகுத்துத் தாய்மார்க்குச் சிறப்புநிலை மிகுத்துதவும் புதுமுறைகள் படைத்துத் தம் பழைய பழி துடைத்தது போலோர் அற்புதக் கதையினைக் கற்பித்துமிருக்கலாம்.

இன்னும், வடகங்கை வளநாட்டில் மூன்றூழிகட்கு முன்னிருந்த அசல் ஆரியப்பார்ப்பனப் பரசுராமரைப் பல காடும் நெடுமலையும் கடத்தியிழுத்துக் குடநாடடிற் புகுத்தியதோடு, அவரை ஆரிய ஆசாரங்களை அறவொழிக்குங் குலக் கோடரியாகவும் பழிசுமத்தும் பொருந்தாப் பொய்க் கதைகளைப் புறக்கணித்து, அராபி நாட்டுத் தொடர்பு குறிக்கும் பல சரித சூசனைகளை ஆராய்வது பலன் தராதா? வெள்ளை யானையின் பின் குதிரைமீது கைலாயஞ் சென்றதாக நம்மவர் பாராட்டிப் புகழும் சேரமான், வெண்ணுரையெழுவி யலைமலை தழுவும் தண்கடல் மார்பு தவழுங் கப்பலேறி அராபிநாடு புகுந்தவராக அந்நாட்டில் வழங்கும் வரலாற்றின் உண்மையை விசாரிப்பது மெய்ச் சரிதப் பழஞ்செய்தி யறிய விரும்புவோர்க்குக் கடமையன்றோ? இனைய பல கேள்விகளும் எழுபவெல்லாம் நடுநிலை யிலுண்மை காணும் நோக்கமொடு ஆராயத் தக்கனவேயாம்.

ஆனால் இவையெல்லாம் எடுத்துக்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு அவசியமல்லாதன வாகையால், அவற்றைப் பிந்தித் தக்க சமயம் கிடைத் துழிச் சாவகாசமாக விசாரிக்க விடையேற்பேம்.

தற்போது தமிழகத்தே மேல்புலத்தில் வழங்கிவரும் மருமக்கட்டாய முறை புதிதொன்றில்லை யென்பதும் தொல்லைச் சங்ககாலப் பழஞ் சேரர் குடிகளிலும் அடிப்பட்ட தொன்மரபாய் ஆட்சிபெற்றுத் தொன்றுதொட்டே வழங்கி வருவதாய்த் தெரிகிறது என்பதுமே, இவ்வாராய்ச்சியால் நாம் காணக்கிடைக்கும் பொருளாகும்.