சிவஞான போத மூலமும் சிற்றுரையும்
ஒளவை துரைசாமி
சிவஞான போத மூலமும் சிற்றுரையும்


1. சிவஞான போத மூலமும் சிற்றுரையும்
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. மங்கல வாழ்த்து
7. பதிப்புரை
8. சிவஞான சுவாமிகள் வரலாறு
9. சிவஞான போதச் செம்பொருள்
10.சிறப்புப்பாயிரம்
11.சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளியசிற்றுரையும்
12.பொதுவதிகாரம்
13.உண்மையதிகாரம்
14.பயனியல்


சிவஞான போத மூலமும் சிற்றுரையும்

 

ஒளவை துரைசாமி

 


நூற் குறிப்பு
  நூற்பெயர் : சிவஞான போத மூலமும் சிற்றுரையும்
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 2
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 492 = 512
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 295/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போத மூலமும்
சிவஞான சுவாமிகள் அருளியசிற்றுரையும்

மங்கல வாழ்த்து


திருவெண்ணெய் நல்லூரில் கோயில்கொண்ட பிள்ளையார் பேரருள் பெற்றவர் மெய்கண்டார். ஆதலால் தாம் கண்டடைந்த சிவஞான போதச் செம்பொருளை ஓதத் தொடங்குங்கால், அப் பிள்ளையாரை வணங்கி வாழ்த்தினார்.

பிள்ளையார் உளியால் பொளியப்படாத தன்னிலையுருவர். (சுயம்புமூர்த்தி), ஆதலால், பொல்லப்படாத(பொளியப்படாத-செதுக்கப்படாத) அவர் பொல்லாப் பிள்ளையார் எனப்பட்டார். (பொல்லுதல் = பொள்ளுதல்)

பிள்ளையார், ‘கல் ஆல் நிழல் மலவு இல்லார் அருளிய பிள்ளையார்’ எனச் சொல்லப் பட்டார். தந்தை தகவு மைந்தர் தகவென உலகம் ஓதுதல் உண்மையால். ‘கல் ஆல்’ என்பது ஆலமரத்தின் வகையுள் ஒன்று. கல் என்பது அதன் வலிமை சுட்டியது. கல்அத்தி, கல்வாழை, கல்தாழை போல ஒருவகை என்க. கல்லால மரத்தின் நீழலில் இருந்து அறமுரைக்கும் ‘மலைவு இல்லார்’ என்று செம்பொருட் சிவத்தைக் குறித்தார். மலையை வில்லாக உடையவர் என்று பொருள் கொள்ளவும் இத்தொடர் கிடக்குமாயினும், மலைவு இல்லார் என்று பிரித்து ‘மயங்குதல் எள்ளளவும் சேர்தல் இல்லாத முழுமுதல்’ என்பதே தகுமாம். மயக்கம் நீக்குதல் நோக்கிலே அருளப் பட்ட நூல் இந்நூல் ஆகலின் அதற்கு ஏற்ப உரைத்தார் எனல் தகும். பற்றறுதல் வேண்டுவார் பற்றற்றானைப் பற்றுதல் நெறியாதல்போல, மயக்கம் நீங்க வேண்டுவார் மயங்குதல் சேராத இறைவனை நினைந்தொழுகுதல் நெறியாம். இனித் தன்னை யுணர்ந்த தகவாளர் மயக்கத்தை இல்லையாகச் செய்பவர் என்பதுமாம். அவர் தகவு கூறவே, பிள்ளையார் தகவு அறியவருமாகலின் அவர்க்கு உரைத்தார்.

பொல்லார் இணைமலர் நல்லார் புனைவர்
பொல்லார்-பொல்லாப் பிள்ளையார்; பெயர்; அவர்தம் இணைமலர், இரண்டாகிய திருவடி மலர்கள். புனைதற்குரியவை மலர்கள். ஆதலால், ‘நல்லார் புனைவர்’ என்றார். அடிமலரைப் புனைதல் எவ்விடத்தோ என்பது புனைதலால் விளக்கினார். சூடுதல், வேய்தல், புனைதல் என்பவை தலைக்கணிதலைச் சுட்டுவன ஆகலின், ஆத்திசூடி கொன்றைவேந்தன் போலப் புனைதல் நின்றதாம். புனைவார் எவர் என்பதை விளக்குமுகத்தான் ‘நல்லார்’ என்றார், திருவருளால் நற்பேறு வாய்த்தார்க்கே அது கூடும் என்பது உள்ளிடையாகலின் அவனகுளாலே அவன் தான் வணங்கி மெய்யுணர்வாளர் உரையாகலின்.

“கல்லால் நிழல்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே”

என்பது கடவுள் வாழ்த்து.

சுருக்கமும் செறிவும் அமைய இயற்றப்போகும் நூற்கு, அதன் யாப்புரவையும் கோப்புரவை யும் குறிப்பாய்ச் சுட்டுமுகத்தான் அமைந்த கடவுள் வாழ்த்து இது.
#அவையடக்கம்

மங்கலவாழ்த்துக்கூறிய ஆசிரியர் அடுத்து அவையடக்கம் கூறினார். அவையடக்கம் கூறுவது பழைமையான வழிமுறையே. ஆசிரியர் தொல்காப்பியர் அதனை ‘அவையடக்கியல்’ என்பார்.

“திறனற்றவற்றைக் கூறினாலும் அதனை ஆய்ந்து திறமானதாக அமைத்துக்கொண்டு உதவுக என்று நூலாசிரியன் எல்லார்க்கும் பொதுவாக வேண்டிக்கொள்வது அவையடக்கியல்” என்பார் தொல்காப்பியர் (1370).

அவையடக்கின் அருமை பெருமையை அறிந்து, குறைவற்ற நூல், தாம் யாப்பது மெய்யேயாயினும், பழமரபு போற்றி வழிகாட்டுதல் நூலோர் நெறி என்பதால், அதனைத் தாமும் செய்வாராய்க் கூறினார். கூறும் கூற்றிலேயே, தாம் யாக்கப் புகுந்த செம்பொருள் சிறப்பின் ஊடகத்தைப் பற்றிக்கொண்டு உரைத்தருளினார்.

“தம்மை யுணர்ந்து தமையுடைய தன்உணர்வார்
எம்மை யுடைமை எமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்”

என்பது அது

“தம்மை உணர்ந்துகொண்டு தம்மை ஆளுடைய தலைவனை உணர்ந்தவர்கள் எம்மை உடைமையாக உடையவராம். ஆகலின், அவர்கள் எம்மை இகழார். ஆனால், தம்மை உணராதவரோ தம்மை ஆளுடைய தலைவனையும் உணராதவரே! அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டு ஒன்றைக் கூறமாட்டார். அத்தகையர் புறம்பான சொல்லையாம் ஒரு பொருளாகக் கொள்ள மாட்டோம்” என்பது இதன் பொருளாம்.

தம்மை உணர்ந்தவரே தலைவனை உணர்வர் என்றும், அவரைத் தலைவராகத் தாம் கொண்டிருத்தலால், தம்மை உடைமையாகக் கொண்ட அவர்கள் அன்பாற் பாராட்டுவரேயன்றி இகழமாட்டார் என்றும் அவரைப் போற்றி அவையடக்கம் உரைத்தார்.

இனித், தம்மையுணரார் உளர்; அவரோ தம்மை யுணராமையால் தலைவனையும் உணராதவர்; அவர் தம்முள் ஒன்றுபட்டு உறவாடலும் ஒரு கருத்துக்கொள்ளலும் இலராய்த் தம்முள் முரண்பட்டு நிற்பர். அத்தகையர் சொல்லும் உண்மைக்குப் புறம்பான சொல்லை யாம் பொருட்டாகக் கொள்ளமாட்டோம் என்று அவர்க்கு அவையடக்கம் கூறாது வீறுமொழிந்தார்.

‘எல்லா மாந்தர்க்கும் வழிமொழிதல்’ என்று கூறிய தொல்லாசிரியர் நெறியை, மெய்கண்டார் புதுக்கிக்கொண்டு உரைத்த அவையடக்கம் இதுவாம்.

தக்காரை வழிபடுதலும் தகவிலரை ஒதுக்குதலும் தகவெனக் கொண்ட பெருமிதம் ஈது என்க.

முதற் நூற்பா
உலகம் பெரியது; உலகத்திற்கு அண்டம் என்பது ஒரு பெயர்; அண்டம் ஒன்றா? இரண்டா? “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்பது மணிமொழி! “பன்னூறு கோடி அளவின அண்டம்” என்பது அறிவியல் ஆய்வு! இவ்வண்டங்களை யெல்லாம் சேர்த்து எப்படிக் குறிப்பது? ‘பேரண்டம்’ என்பது பெருமக்கள் குறிப்பு!

அண்டத்தில் உள்ள பொருள்களை எல்லாம் அறிந்து முடித்தாகிவிட்டதா? அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தாகிவிட்டதா? இத்தனை என்று எண்ணிக்கை யிட்டாகி விட்டதா? இல்லை! இன்று மட்டுமில்லை, என்றுமே முழுதுற அறிந்ததாக மனித ஆற்றலுக்கு இடமில்லை! “அறிதோறும் அறியாமை கண்டற்று” என்பது வள்ளுவம் !

“எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா” என்று வியப்பது இயற்கை இறைமை! இத்தனை கோடி என்று இன்பச் சுரப்பையே எண்ண முடியவில்லையானால், இன்பச் சுரப்பின் மூலமாம் அண்டப் பொருள்களை எவரே எண்ணிக் கணக்கிடவல்லார்?

உலகப் பொருள்கள்தாம் எத்தனை எத்தனை வகைய! பருப்பொருள் நுண்பொருள்; காட்சிப் பொருள் கருத்துப் பொருள்; நீர்ப் பொருள் ஆவிப் பொருள்; இயங்கு பொருள் நிலை பொருள்; கூட்டுப் பொருள் கலப்புப் பொருள்; அகப் பொருள் புறப் பொருள்; மூலப் பொருள் ஆக்கப் பொருள் - இப்படி இப்படிப் பொருள்களைப் பகுத்துப் பகுத்து எண்ணினாலும் அவ்வத் துறை வல்லாராலும் எண்ணிமுடிக்க முடிவதோ? ‘யாவரே முழுதுறக் கண்டார்?’ என்று கைவிரிக்கவே நேரும். ஆனால் ஒருவர், “உலகத்துப் பொருள்களை யெல்லாம் சுருக்கமாக எண்ணிவிட வேண்டும்” அதுவும் சுருக்க மென்றால் சுருக்கம். மூன்றே சொற்களில் எண்ணிவிட வேண்டும்” என்று ஒரு புதிர் போட்டால், ஆழ அழுந்திய புலமையில்லார் ‘நடக்கும் ஒன்றா’ என்று திகைப்புறுவர். ஆனால், அறிவறிந்த பெருமக்களோ வழிவழி வந்த அறிவு மாட்சியால் செவ்விய மறுமொழி சொல்லிவிடுகின்றனர். அவர்கள், பொய்யறியாப் புலமையாளராய்-மெய்கண்டாராய்-விளங்குதலால் சொல்ல முடிகின்றது. அவர்கள் சொல்லும் மூன்று சொற்கள் தாம் எவை?

“அவன் அவள் அது”

முழுதுலகையும் குறிப்பதற்கு அவர்கள் சொல்லும் சொற்கள் “அவன், அவள், அது” என்பனவேயாம்.

இம்முச் சொற்களால் சுட்ட முடியாத ஒரு பொருள் உண்டோ? உண்டோ? உலகில் எந்த மொழியில் இந்த முச்சுட்டுகள் இல்லை! எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இந்த முச்சுட்டுகள் இல்லை! மெய்ப்பொருள். காலம் இடம் மொழி இனம் எல்லாம் எல்லாம் கடந்த பொதுப்பொருள்! இறைமையும் இயற்கையும் எப்படிப் பொதுப் பொருள்களோ அப்படியே, மெய்ப்பொருள் மெய்யுணர்வு என்பவும் பொதுப் பொருள்களே!

உலகம், ‘அவன், அவள், அது’ என்னும் முப்பொருள்களையுடையது எனின், ‘அவர்’ என்றும் ‘அவை’ என்றும் இணைந்து ஐந்தாக்கிச் சொல்வாரே தொல்லாசிரியர்? மெய்கண்டார் மூன்றாக்கிக் கொண்டதென்ன?

‘அவன்’ பலர், ‘அவள்’ பலர் - ‘அவர்’ அல்லரோ? ‘அது’ பல ‘அவை’ யல்லவோ? ஐந்தை மூன்றாக்கிக்கொண்ட அருமை விளங்குகின்றதே அன்றி, குன்றக் கூறிய குறைபாடு இல்லையாம்!

‘அவன் அவள் அது’ என்பவை படர்க்கைகள்! தன்மை முன்னிலைப் பெயர்களைச்சுட்டினால் என்னை?

சுட்டினால் குற்றமாம்! படர்க்கையாகிய அவனை, அவளை, அதை - அடைய விரும்புபவன், தன்மை முன்னிலையை விடாமல் முடியுமா? ஒருகிளையை விடாமல் மறுகிளையைப் பற்றுவது எப்படி?

“யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்பது மறைமொழி. “முகத்திற்கு முகம் புகழ்தல், நட்பிற்கும் கூடாது” என்பதும் மறைமொழி! அகப்பொருளைக் கூட, தன்மை முன்னிலை விலக்கிப் படர்க்கையால் சுட்டல் பழந்தமிழ் வழக்கு எனின், அகப்பொருளில் அகப்பொருளாம் மெய்ப் பொருளைச் சுட்டுவார் தன்மை முன்னிலை கருதுவரோ?

‘அவனன் அணுவும் அசையாது!’ என்பதை அறியார் எவர்? ‘அவன் துணை’ ‘அவன் அருள்’ ‘ஒருவன் துணை’, ‘ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்பவற்றில் வரும் அவனும் ஒருவனும் படர்க்கையே அல்லவோ? இன்னும் ஒன்று: நான், நீ என்பன போலும் தன்மை முன்னிலைச் சொற்களில் பால்வேறுபாடு காணக்கூடுவது இல்லையே!

அவனுக்காக அவள்; அவளுக்காக அவன்; ஆதலால் ‘அவன் அவள்’ எனப் பெற்றனர். அவர்களுக்காக எது எனின் ‘அது’ ஆதலால், ‘அவன் அவள் அது’ என்று கூறல் முறையாயிற்றாம்!

அவனை முற்படக் கூறுவானேன்? அவளை முற்படக் கூறக்கூடாதா? கூறலாம்; இடப்பக்கம் இருந்து வந்தால் என்ன? வலப்பக்கம் இருந்து வந்தால் என்ன? ஒன்றே! ஆனால், வலம் சுற்றலும், ஊர்வலம் நகர்வலம் வருதலும் வழக்காயிற்றே! அத்தகைய ஒரு வழக்கே, அவனை முற்படக் கூறிற்று! ஏற்றத் தாழ்வு காட்டுவது இல்லது தமிழ் வழக்கு! தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, நம்பி நங்கை என்பவற்றைக் கருதுக. அம்மை அப்பன், தந்தை தாய் என்பவற்றையும், ‘அன்னையும் பிதா’வும் ‘மாதா பிதா’ என்பவற்றையும் எண்ணினால் முன்பின் கூறல் பெருமை சிறுமை இல்லை எனத் தெளிவாக்கும்.

‘சிறந்ததை முற்படக் கூறல்’ என்பது ஓர் இலக்கண நெறியென்றால், சிறந்ததைப் பிற்படக் கூறல்’ என்பதும் ஓர் இலக்கண நெறியேயாம்.

மனையறம் பேணற்கு முன்னது மணம்; மணத்தை ஊரறியக் காட்டுதற்கு, மணச் சடங்கு; மணச் சடங்கிற்கு முதற்கண் வருபவன் ‘அவன்’; பின்னே வருபவள் அவள்; பின்னே ‘அது’ நிகழும். உலகெல்லாம் ஆய்ந்தாலும் இந்நாள் வரை இதற்கு மாறாக நடைபெறும் காட்சி இல்லையே! ஏன்?

அவன், ஆடவன்; அவள் பெண்ணின் நல்லாள்; அவன் வன்மை மிக்கோன்; அவள் மென்மைப் பெட்டகம்; இயற்கை அவனுக்கு அருளிய ‘வலம்’ அது; இயற்கை அவளுக்கு அருளிய ‘நலம்’ அது! அவ்வலமும் நலமும் உலகை உய்ப்பன! இதில் ஏற்றமென்ன? இறக்கமென்ன ஒரு தாய் வயிற்றிலே பிறந்த ஒருவன் தாய்மையை அணுவளவேனும் தாழ்த்த நினைப்பனாயின், அவன் தாய் பெற்ற மைந்தன் அல்லன்! அவன், அவள், அது எனல் பண்டு தொட்டுவந்த வழக்காதலின் அம்முறையே முறையாய்ச் சொல்லப் பெற்றதாம்.

எனும் அவை :
‘அவன்’ என்றும் ‘அவள்’ என்றும் ‘அது’ என்றும் சொல்லப்படுகின்றவை எவை? அவை, ‘அவை’யாகின்றன! அது பலவாகிய அவையா இவ்வவை! இல்லை! உயர்திணையை அஃறிணைக்குரிய அவையாக்கிக் கூறுவரோ, அறிவறிந்தோர்? இவ்வவை, ‘கூட்டம்’ என்றும் பொருள்தரும் அவையாம். அவையும் அவைத் தலைவரும் இந்நாளில் பெருக வழங்குகின்றனர். ஆனால் மெய்கண்டார் காலத்தும் அவை உண்டோ?

மெய்கண்டார் காலத்தில் என்ன? மெய்கண்டார்க்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தொல்காப்பியனார் அருளிய தொல்காப்பியநூல், ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்துத் தானே’ அரங்கேறிற்று. அதங்கோட்டாசான் அல்லரோ அவைத் தலைவராகத் திகழ்ந்தார்! நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லனோ அவையத்தைக் கூட்டுவித்தான்! கழக நூல்களெல்லாம் சான்றோர் அவைக்கண் அல்லவோ ஆராயப்பெற்றன! மூவர் முதலிகளும் ஆழ்வாராதிகளும் திருக்கூட்டத்தார் தொடரவன்றோ பாமழை பொழிந்து பண்ணோடு இசைத்துப் பைந்தமிழ் வளர்த்தனர்! இவற்றை அறிவார் ‘அவை’ புதியது என்றோ புதிய பொருளது என்றோ கொள்வரோ?
அவை, தானே கூடுமோ? கூடாது! கூட்டக்கூடும்; கூட்டுவார் ஒருவர் இருந்து கூட்டுவார்; அவர் கூட்டக்கூடும்! ஒருமுறை மட்டும் கூடுமா? பலமுறை கூடுமா? எடுத்த பொருளாய்வு முடிவுறும் அளவும் கூடும். அதற்கு ஒரு முறையும் போதும்! ஒன்பது முறையும் வேண்டும்! எடுத்துக்கொண்ட பொருளையும், எடுத்துக்கொண்டு ஆய்வார் நிலையையும் பொறுத்தது அது. இந்த உலகமும் ஓரவையே! அதுவும் இறையால் கூட்டக் கூடுகின்றது; கூடி ஆய்கின்றது; ஆய்வு முடிந்ததும் அடையும் இடத்தை அடைகின்றது. அவையைக் கூட்டி ஆய்ந்து நிறைவிப்பார் அவைத் தலைவர்; உலகைக் கூட்டி நிகழ்த்தி நிறைவிப்பார் இறைவர். ‘அவை’ என்னும் உவமையால் மெய்கண்டார் சுட்டும் பொருள் இதுவாம்.

மூவினை :
‘மூவினை’ எனினும் ‘முத்தொழில்’ எனினும் ‘முச்செயல்’ எனினும் ஒன்றே. மூவினை எதற்கு உண்டு? மேலே சுட்டிய அவைக்கு உண்டு! உலகுக்கு உண்டு! உலகியற் பொருள்கள் அனைத்துக்கும் உண்டு. மூவினை எவை? கூட்டக் கூடியது ஒன்று. நிகழ்த்த நிகழ்ந்தது இரண்டு; நிறைவிக்க நிறைந்தது மூன்று! அவைக்குரிய இம்மூன்றும் உலகுக்கும், பொருள்களுக்கும் உண்டென்பதெப்படி?

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும்”

என்னும் கம்பர் வாக்கு மூவினை விளக்கமும், மூவினை முதலாம் முதல்வன் விளக்கமும்தாமே! படைத்தல் காத்தல் அழித்தல் என்பவைதாமே மூவினை! ஆற்றின் செயலை அல்லது நீரின் செயலை மூவினைப்படுத்துதல் தமிழர் மரபு. நீர், படைப்பு, காப்பு, அழிப்பு வினைகளைச் செய்தலால் இறைவணக்கத்தை அடுத்து வான்சிறப்பு வைத்தல் தமிழர் மரபாயிற்று.

கடலுக்குப் ‘புணரி’ என்பதொரு பெயர். ஆறுகள் கூடிக் கலத்தலால் கடல் புணரியாயிற்று! நீர்க்கலப்பு, புணரியாவதுபோல், சொற்கலப்பு ‘புணர்ச்சி’ எனப்பெறுவதாயிற்று. புணர்ச்சியின் வகையை இரண்டாகப் பகுப்பர். ஒன்று இயல்புப்புணர்ச்சி; மற்றொன்று ‘விகாரப் புணர்ச்சி; விகாரப் புணர்ச்சி முக்கூறுபட்டது. அவை தோன்றல், திரிதல், கெடுதல் என்பன.

உலகும், இயல் நிலையில் இருந்து, விகார நிலைக்கு வருங்கால் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய மூவினைக்கு உட்படும்! தமிழர் தம் மெய்யுணர்வுக் கோட்பாடுகளே, அவர்தம் இலக்கணத்தில் பொதிந்து கிடத்தல் இத்தகைய ஆட்சிகளால் புலப்படும்.

ஆக, உலகாம் அவை மூவினைகளையுடையது என்பது கொள்க.

தோற்றிய திதியே ஒடுங்கி :
மூவினையை உளவாக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் என்றும், படைத்தல் காத்தல் அழித்தல் என்றும் பிறவாறும் பிறர்பிறர் கூறினாராக மெய்கண்டார், ‘தோற்றிய திதியே ஒடுங்கி’ என்றார். தோற்றம், திதி, ஒடுக்கம் என்பது அவர் ஆட்சி. திதியாவது உளதாதல்; காத்தல் என்பதும் அது. ஒடுக்கம் ஆவது அழித்தல்.

மிகக் கருத்தோடும் கவனத்தோடும் சொற்களை ஆள்கிறார் மெய்கண்டார். சின்னஞ் சிறிய சொற்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டு பென்னம் பெரிய பொருளைப் புகுத்துகிறார். திருவள்ளுவர் ஆட்சியில் திளைத்துத் திளைத்து, திருமூலர் முதலியோர் ஆட்சியில் அழுந்தி அழுந்தி, தமிழ் இலக்கண மூலவேரில் தோய்ந்து தோய்ந்து, ‘தாமே போதமாக’ நின்று அருள்கின்றார். ஆகலின், அவர்தம் சொல்லின் மாட்சிக்கு எல்லையொன்று இல்லையாம்!

தோன்றிய என்னாமல் ‘தோற்றிய’ என்று பிறவினை வாய்பாட்டால் அருளியது ஏன்? கூட்டம், தானே கூடாமை போலவும், பிறரொருவர் கூட்டக் கூடியது போலவும், இவ்வுலகமும் தானே தோன்றியதாகாமல் பிறர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை உணர்த்தவே ‘தோற்றிய’ என்றார். தோன்றுதல் தோற்றுதல் என்பவற்றில் ஒரோ ஓரெழுத்து மாற்றமே நேர்ந்துளது. எனினும் அதன் வினைப்பாட்டில் எத்தகைய வேறுபாடு? ‘கழுவேறியது’ என்பது பழைய திருவிளையாடல். ‘கழுவேற்றியது’ என்பது பரஞ்சோதியார் திருவிளையாடல். எழுத்து மாற்றத் திருவிளையாடல், எத்தகைய கொடுமாற்றத்திற்கு இடனாகிவிட்டது?

இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், அவனால் காக்கப்படுதல் ‘திதி’ எனப் பெற்றது. தன்னால் தோற்றுவிக்கப் பெற்றுக் காக்கப்பெற்ற உலகத்தை, ஒடுக்குகிறான். அவன் வினை உலகத்தை ஒடுக்கிக் கொள்ளல் எனினும், அதனைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டதால், அவ்வுலகம் ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பவன் அவன் ஆகலின், ஒடுங்கி எனப் பெயர் பெற்றான்.

துறவோர் ஒடுங்கிய இடங்கள் ஒடுக்கம் எனப் பெறுகின்றன. அந்த ஒடுக்கங்கள் வேறு! அவை, ஒடுக்கம் செய்யப்பெற்ற இடங்கள். அவையே, உடலைத் தன்னுள் ஒடுங்க வைத்துக் கொண்டவை அல்ல! ஆனால், இறைவனோ உலகம் ஒடுங்குவதற்கு இடனாக இருத்தலால் ஒடுங்கியா
கின்றான். ஒடுக்கத்திற்கு இடமாக இருப்பவன் ஒடுங்கியானான் என்க. இறைவனின் மெய்யியல் அறிந்து சூட்டப் பெற்ற பெயர் ‘ஒடுங்கி’ என்க.

மலத் துளதாம் :
அவை கூடிற்று; கூடிய அவ்வவை மீண்டும் கூடுவானேன்? அவையில் எடுத்துக்கொண்ட பொருள் நிறைவுறவில்லை. நிறைவுற்றால் மீண்டும் கூடவேண்டுவது இல்லை. கூடிய ஒன்றே அவையின் ஆய்வுக் கருத்து முற்றுப் பெறவில்லை என்பதைக் காட்டும். முற்றுப் பெறாமையைத் ‘தடை’ எனலாம். அதுபோல் உலகம் மீண்டும் மீண்டும் தோன்றுதற்கும் காரணம் தடையேயாம். அத்தடையை ‘மலம்’ என்பது வழக்கு.

ஒடுங்கிய அவை அல்லது உலகு, மலத்தினால் உளதாகும் அல்லது தோன்றும்! மலத்தினால்ம அவை உண்டாக வேண்டுவதென்ன! மல நீக்கத்திற்காகவே தோற்றம் உளதாகின்றதாம். கறையைப் போக்கப் பலமுறை வெளுப்பதில்லையா துணியை? களிம்பு போக்கப் பலமுறை விளக்குவது இல்லையா செம்பை? அழுக்குப் போக்கப் பலமுறை துடைப்பது இல்லையா கண்ணாடியை? அவைபோல் என்க.

அந்தம் ஆதி :
அண்டம் என்பது உலகம் எனக் கண்டோம். அண்டம் என்பதற்கு முட்டை, விதை முதலியன பொருள்கள். அதன் வடிவம், வட்டம் என்பதே. உலகின் வடிவமைப்பை உள்ளடக்கிய பெயர்கள் அண்டம், உலகம், பார் முதலியன. வட்டத்தில் முதல் எது? முடிவு எது? முதலும் முடிவும் ஒன்றே. தோன்றும் இடமே முடிவிடம்; முடிவிடமே தோன்றுமிடம். பிணையல் வரிசையில் எவ்வரிசை முதல் வரிசை? எவ்வரிசை இறுதி வரிசை? எதுவும் முதல்; எதுவும் இறுதி! இவ்வட்டச் சுற்றே படைப்பியல் சுற்று!

கடலில் இருந்த நீர் ஆவியாகவில்லை? ஆவி மேலே மேலே சென்று குளிரவில்லையா? குளிர்ந்து மழையாய்-அருவியாய்-ஆறாய்-காலாய் நடந்து கடலைச் சேரவில்லையா? புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்த நீரின் சுழல் நடை, முதலும் முடிவும் காட்டும் நடை! அந்தமும் ஆதியுமாம் கடல்போல், உலகின் அந்தமும் ஆதியும் ஆகின்றவன் இறைவன். நீர்க்கு அந்தத்தைச் செய்யும் இடமும், ஆதியைச் செய்யும் இடமும் வெவ்வேறல்ல! ஓரிடமே! அதுபோல் உலகுக்கு ஆதியும் அந்தமுமாக அல்லது அந்தமும் ஆதியுமாக இருப்பவன் ஓர் இறைவனே! அந்தமும் ஆதியும் இல்லா அருளாளன். உலகின் அந்தமும் ஆதியுமாம் அமைவு இது! பாவகையிலே அந்தாதி கண்ட திறவோர், ‘ஆதிபகவனை’க் கண்டு தெளிந்த வகை இது!

என்மனார் புலவர் :
இறைவன் உயிர் மலம் என்னும் முப்பொருள் கூறுகளையும் செந்தமிழ்ச் சிவஞான போதச் செல்வர் மெய்கண்டார்தாம் கண்டாரோ? அவர்க்கு முந்தையோர் கண்டிலரோ? கண்டவர் உளராயின் அவர்தாம் யாவர்? என வினவுவார்க்கு விடையாக ‘என்மனார் புலவர்’ என இயம்பினார் மெய்கண்டார்.

“என்று சொல்லுவர் மெய்ப்பொருள் வல்ல புலமையாளர்” என்பது என்மனார் புலவர் என்பதன் பொருளாம். செழுஞ்செந்தமிழில் செம்பொருள் துணிவு நூல்கள் பல இருந்தன என்றும், அவற்றை ஆக்கிய அந்தண்மை மிக்க செந்தண்மையாளர் பலர் என்றும், அவர் கூறிய வழியே வழியாகக் கூறினேன் யான் என்றும் ‘என்மனார் புலவர்’ என்பதால் விளக்கினார் ஆசிரியர்.

இம்முழுப் பொருளையும் சுட்டும் முதல் நூற்பா :
“அவன்அவள் அதுவெனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

கடவுள், உயிர், மலம் என்பவை சமய நூலாரால் முப்பொருள்கள் எனப்படும். இவை ‘பதி, பசு, பாசம்’ என வட நூலாரால் சுட்டப்பெறும்.

கடவுள் என்று உண்டோ அன்றே உயிரும் உண்டு; அவ்வுயிருக்கு மலமும் உண்டு, மலமாவது என்ன? செம்பில் களிம்பு இருப்பதுபோல், உயிரிடத்தே மலம் இருக்கிறது! செம்பில் களிம்பு எப்பொழுது தோன்றியது? செம்பு தோன்றியபோதே களிம்பும் தோன்றியது. அதுபோல் உயிர் தோன்றியபோதே அதனுடன் மலமும் தோன்றியது. செம்பில் களிம்பு நீங்கினால் சுடர்விடும். உயிரில் மலம் நீங்கினால் ஒளியெய்தும்! உயிருக்கும் மலத்துக்கும் உள்ள தொடர்பு, செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்பே! இதனைத் தொல்பழந் தொடர்பு என்பர். ‘அனாதி சம்பந்தம்’ என்பர் வடநூலார்.

“அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் குறிக்கப்பெறும் அண்டத் தொகுதி படைப்பு, காப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களை உடைமையால், ஒருவனால் படைக்கப்பட்ட உள்பொருளேயாம். அது மல நீக்கத்தின் பொருட்டு, தான் ஒடுங்குதற்கு இடனாக இருந்த கடவுளினின்றும் மீண்டும் தோன்றுவதாம். ஆதலால், அந்தமாக இருக்கும் அவனே, முதலும் ஆகிறான் என மெய்ப்பொருள் ஆய்வாளர் கூறுவர்” என்பது இந்நூற்பாவின் பொருளாம்.

இரண்டாம் நூற்பா
அவன், அவள், அது என்றும் சுட்டப்பெறும் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருப்பவன் இறைவன் எனக் கண்டோம். அவன் எவ்வாறு இருப்பன்? எங்கு இருப்பன்?

‘இறைவன்’ என்னும் பெயராலேயே இறைவன் இருப்பை முன்னோர் தெளிவித்தனர். இறைவன் என்பதற்கு, ‘எங்கும் தங்கி இருப்பவன்’ என்பதே பொருளாம்.

‘இறைவன் எங்கே இருக்கிறான்?’ என வினாவுவார்க்கு, ‘அவன் எங்கே இல்லை?’ என்று எதிர்வினா வினாவுவர்! ‘இறைவன் எங்கும் இருக்கிறான்’ என்று உடன்பாட்டு விடையும் கூறுவர். இவை இறைவன் எங்கும் உளன் என்பதைத் தெளிவிப்பனவாம்.

“பாலில் நெய் எங்கே யுள்ளது? பழத்தில் சுவை எங்கே யுள்ளது? தேனில் இன்பம் எங்கே உள்ளது? எங்கும் எங்கும் உள்ளதேயன்றோ! இவற்றைப்போல், இறைவன் எங்கும் உள்ளவனே” என உவமையால் விளக்குவர் மெய்யுணர்வாளர். இறைவன் இருப்பை மிக நுண்ணிதாக விளக்குகிறார் மெய்கண்டார்.

அவையே தானே ஆய்
இறைவன் அவையே ஆயும், தானே ஆயும், அவையே தானே ஆயும் இருக்கிறான் என்று கூறுகின்றார். ‘அவையே தானே’ என இரண்டு நிலையாய்க் கூறினும், அவ்விரண்டனையும் இணைத்துக் காணும் முந்நிலைப்படத் தொடரை அமைத்துள்ளார்.

அவையேயாய் நிற்றல்
உலகமாகிய அவை வேறு, தான் வேறு என்று இல்லாமல் ஒன்றாகக் கலந்து நிற்கும் நிலையே அவையேயாய் நிற்றலாம்.

உடலுக்குள் உயிர் வேறாய் இல்லாமல், அவ்வுடல் எங்கும் கலந்து இருப்பதுபோல உயிர்கள்வேறு தான்வேறு என்று இல்லாமல் உயிர்களில் எல்லாம் கலந்து நிற்றல் அவையேயாய் நிற்றலாம்.

“உயிர் தொறும் ஒளித்துநின்ற வஞ்சக்கள்வன்” என்பார் திருவிளையாடலார்.
வளர வளரும் வளர்ந்தநிலை, ‘அவையேயாய் நிற்றல்’ என்பது, முருகி உருகி நிற்கும் நிறைவாளர்க்கு உரிமையாதலை உணர்வார், இறைநிலை அஃதென எளிதில் அறிவர்.

“சுடும் உணவை உண்ணேன்; உண்ணின் என் உள்ளத்துறையும் என்னவரைச் சுடும்” என்பாள் ஒரு காதலி என்னின், அவள் அவனாய் நிற்றல் அன்றோ!

“என் உள்ளத்தைப் பிளந்து கண்டால் அங்கே என்ன காண்பாய்? நின்னைக் காண்பாய்” என்று ஒரு நண்பன் கூறினான் எனின், அவன், அந்நண்பனாய் நிற்றல் அன்றோ!

‘என் உயிர் கொண்டும் இறைவா! இவனுயிர்தா’ என ஒரு தந்தையோ தாயோ வேண்டிக் கிடப்பரேல், அவர் அவனாய் நிற்றல் அன்றோ!

“எங்கே புயல்; எங்கே நிலநடுக்கம்; எங்கே தொற்றுநோய்; எங்கே வன்முறைக்கேடு; எங்கே அச்சுறுத்தல்; எங்கே அரற்றுதல் அங்கே யாம்” என்று அருளாளர் நிற்பரேல், அவர் அனைத்துயிராய் நிற்றல் அன்றோ!

‘ஆட்டைப் பலியிடவா ஆகாது ஆகாது’ என்று சொல்லி நொண்டியாட்டைத் தோளில்மேல் போட்டுக்கொண்டு கால்கடுக்க நடந்த அருளாளர் வரலாறு சொல்வது என்ன? அதுவாய் நிற்றலே அன்றோ!

“இந்த ஆட்டை வரைந்த ஓவியன் ஆடாகவே மாறித்தான் வரைந்திருக்க வேண்டும்” என்றும், “இவன் வரைந்த சிறுமணிப் புறாவைப் பார்க்கும் போது கல்லைப் பொறுக்கித் தின்ன வேண்டும் என்று ஆர்வம் எனக்கு எழுகின்றது” என்றும் ஒரு கலைஞனை ஒரு கலைஞன் கூறினான் எனின், அவ்விருவரும் அவையாய் நிற்றலே அன்றோ!

பலப்பல குறைகளையுடைய மாந்தனே அவையாய் நிற்க இயலுமெனின், குறைவிலா நிறைவாம் இறைமை அவையாய் நிற்றற்கு ஐயுறவும் உண்டோ?

தானாய் நிற்றல் :
இறைவன் தானே ஆய் நிற்றல் என்பது உலகொடும் உயிர்களொடும் கலவாமல் வேறாகத் தனித்து நிற்கும் நிலையாம்.

கதிரோன் ஒளியால் கண் பார்க்கிறது; பார்த்தாலும், கதிரோனும் கண்ணும் ஒன்றோ? இல்லை! கதிர் வேறாகவும் கண்வேறாகவும் இருப்பது போல, இறைவனால் உயிர்கள் அறிந்தாலும், உயிரும் இறையும் ஒன்றல்ல. உயிர் வேறாம்; இறை வேறாம். உயிரையும் உலகையும் விடுத்து இறை தனித்து நிற்கும் நிலையே
தானாய் நிற்றலாம்.

‘கூத்தாட்டு’ என்பது பழைமையானது. கூத்தாட்டு அவை வள்ளுவரால் பேசப்படுகிறது. ‘கூத்தச் சாக்கையன்’ இளங்கோவடிகளாரால் இயம்பப்படுகிறான். இறைவனே ‘கூத்தப் பெருமான்’ எனக் கொஞ்சப்படுகிறான். “அவரவரைக் கூத்தாட்டுவானாகி” என்கிறார் மணி மொழியார்.

கூத்தாட்டுபவனும் கூத்தாடுபவனும் வேறு வேறானவர் என்பதை எவரே அறியார்? இதனை ஒருமுறை கூறினால் போதாது என்று தானே நாவுக்கரசர், ஏழு முறை கூறினார் : ‘வலியுறுத்தல் நிலைபெறுத்தும்’ என்பது இந்த விளம்பர உலகம் அறியாத ஒன்றன்றே:

“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே;
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே;
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே;
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே;
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே;
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே;
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே;
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே”

ஏழு காட்சிகளை விளக்கி, ஏழின் நிறைவாய்க் “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” என்று கூறிக், காண்பானும் காட்டுவானும் தனிமைப் பட்டிருத்தலை விளக்கினார்.

கொடும் போரின் இடையேயும் நெப்போலியன் ஒரு கணக்கிலே மூழ்கியிருக்க முடியுமானால், குண்டு வெடிக்கும் போதும் அதிர்வின்றி உரையாற்றிக்கொண்டிருக்க விவேகானந்தரால் முடியுமானால், தவ
நிலையில், கட்டையென அறியாரால் சுட்டெரிக்கப்படும் போது தம்மை உணரும் நிலைவந்து முற்றுமெரித்துவிடச் சொல்ல ஒரு தாயுமானவரால் முடியுமானால், பெண்ணையாற்றின் இடைப்படு கல்லில் எரியூட்டிப் பாரியைப் பிரிந்திருக்க ஒண்ணாத கபிலரால் தாமே கனல் புகமுடியுமானால்-இறைவனால் தானாய் நிற்க முடியாதோ? அவன், அருளிப் பேற்றாளன்; அவன் அருட்கானோர் இவர்; அருட்கானோர் திறமே ஈதென்றால், அருளியோன் திறத்தை அளந்து காணவும் காட்டவும் வேண்டுமோ? படைப்பான், படைப்புப் பொருளுக்கு அப்பால் இருப்பவன் என்பதை எவரே அறியார்?

அவையே ஆயும் தானே ஆயும் நிற்றல் :
உயிரும் உடலுமாய்க் கலந்து நிற்கும் நம்மிடம், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காண முடிவதில்லையே! அவ்வாறு காணாதபடி, உயிர் உடலோடு கலந்து ஒன்றாய் நிற்கின்றது. அதுபோல், இறைவனும் உலகில் கலந்து ஒன்றாய் நிற்கின்றான் என்பதே, ‘அவையே ஆயும் தானே ஆயும்’ நிற்றலாம்.

கண் ஒரு பொருளைப் பார்க்கிறது. கண் மட்டுமோ பொருளைப் பார்க்கிறது? கண்ணொடும் உயிரின் அறிவும், அக் கண்ணொளியோடும் உடனாக இருந்தன்றோ காண்கிறது? உயிரறிவும் கண்ணொளியோடு இணையாக்கால் காட்சியென்பதும் ஒன்று உண்டோ? உயிராகியும் ஒளியாகியும் இருத்தல் அவையேயாயும் தானே ஆயும் நிற்றல் அன்றோ! ஒளிக்கு மட்டுமோ உயிரறிவு உடனாகின்றது? கேள்விக்கு, முகர்வுக்கு, சுவைக்கு, ஊற்றுக்கு, நினைவுக்கு எல்லாம் உடனாகி நின்று அவையே யாகியும் தானே யாகியும் உயிர் நிற்குமென்றால், உயிர்க்கு உயிராம் இறைவன் அவையேயாய், தானேயாய் நிற்றல் எளிதுற விளக்கமாகும் அன்றோ!

தொண்டராய் இருக்குங்கால் தொண்டராய், தலைவராய் இருக்குங்கால் தலைவராய் இருப்பார் இலரோ?

அலுவலராய் இருக்குங்கால் அலுவலராய், மற்றை இடங்களில் அன்பராய், நண்பராய், தாயாய், தந்தையாய், மக்களாய், ஊழியராய், உறவாய் இருப்பார் இலரோ?

மாணவரிடம் ஆசிரியராய் இருப்பார், மற்றை இடத்து மாணவராய் இருப்பார் இலரோ?

இவ்வாறு இருத்தல், ‘எந்நிலையில் இருந்தாலும் தம்நிலை மறவாது போற்றவல்லார்க்கு உடைமையாதல்’ கண் கூடே! இத்தகு திறம் வல்லார்க்கு இவை கூடுமெனின், கூடாதனவெல்லாம் கூட்டவல்ல, இறைவனுக்குக் கூடியிருப்பது அரிதாமோ? இவை, ‘அவையே தானே ஆய்’ இறை நிற்கும் முந்நிலையாம்.

இருவினையின் :
இருமைக்குப் பல பொருள் உண்டு. கருமை, பெருமை என்பனவும் இரண்டு என்பதும் குறிக்கத்தக்கன. இருவினை கருவினையாம். கருவினையாவது வல்வினை; கருங்கை என்பது வலியகை என்பது போல! இருவினையை ‘வல்வினை’ என்றும் மேலே ஆளுவார் (நூற். 10). இனி, இருவினை என்பது கடத்தற்கு அரிய பெரிய வினையாம்; இருள் வினையுமாம். இவையன்றி நல்வினை தீவினை எனப்பெறும் இரண்டு வினையுமாம். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்பார் திருவள்ளுவர். “இறையருள் பெற்றார் வினைநீக்கமுற்றார்” என்பது இதன் குறிப்பு. “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்பார் தொல்காப்பியர். இவற்றால், வினைநீக்கமே விடுதலை அல்லது வீடுபேறு என்றாம். வினைநீக்கம் என்பது செயலற்றுக் கிடத்தல் அன்று; பயன் கருதிச் செய்யாதிருத்தலே வினைநீக்கமாம்.

வினை நீக்கம் வேண்டுமோ என்றும், அதிலும் இருவினையுள் ஒன்றாகிய நல்வினை நீக்கமும் வேண்டுமோ என்றும் வினவுவார் உளர். இருவினையால் பிறப்பும் இறப்பும் உண்டாதலால், பிறப்பறுக்க விரும்புவார் இருவினை நீக்கம் கொள்ளல் வேண்டுவதேயாம்.

தீவினையைக் கட்டாயம் நீக்கவேண்டும். நல்வினையையும் நீக்கவேண்டுமோ? ஆம்; நல்வினையை அதன் பயனீடு கருதியன்றோ மாந்தர் செய்கின்றனர்! மறுமை நோக்கிக் கொடுப்பார் எடுப்பார் உள்ள உலகில் “மறுமை நோக்கியதன்று அவன் கொடைவண்மை; சான்றோர் செல்லும் நெறி என்பதை நோக்கியே கொடுப்பதை அன்றிப் பயனொன்று கருதிக் கொடான்” என்னும் புறப்பாட்டு நல்வினை செய்யும் பான்மையை நன்கு வலியுறுத்தும். புகழுக்கு விரும்பிக் கொடுக்கும் கொடையைப் “புறஞ்சுவர்க்கோலம் செய்தல்” என்று கூறும் வில்லிபாரதம்! ஆதலால் நல்வினையைப் பயன்கருதா உள்ளத்தோடு செய்யவேண்டும் என்பதே மெய்ப்பொருளாளர் கருத்து. இரும்புவிலங்கானால் என்ன? பொன் விலங்கானால் என்ன? விலங்கு விலங்குதானே!

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே”

என்பது திருமூலர் வாக்கு. ஈசனை எய்தும் எண்ணத்தோடுகூட, வழிபடல் ஆகாது எனின் பிறவினைகளைக் கூறவேண்டுமோ?

இருவினை நீக்கத்திற்கு வழியென்ன? முதற்கண் இருவினையொப்புக் காணவேண்டும். இருவினை யொப்பாவது நல்வினை தீவினை நுகர்ச்சிகளை ஒப்பாகக் கருதும் ஒருநிலை. இன்பத்தை விரும்பும் நாம் துன்பத்தைக் கண்டு வெறுத்தல் ஆகாது! இன்ப விரும்பும், துன்ப வெறுப்பும் நீங்கி இரண்டையும் ஒன்றாகக் கருதி, “இன்பம் வரினும் வருக; துன்பம் வரினும் வருக; ஏற்றுத் துய்க்கத் தக்கனவே” என்னும் மனநிலை வந்துவிடின் அவனை வினை என் செய்யும்? விதி என் செய்யும்? விதிக்கு விதி அவனே ஆகலின், அவனிடம் விதி தோல்விகண்டு ஒதுங்கிப்போம்! வினையின் ஆட்சிக்கு இடமில்லா இடத்தில், வினைக்கு என்ன வேலை?

இருவினை உயிர்களைத் தொடர்வானேன்? அவனை மாசு நீங்கிய மணியாக்குதற்கு, கறைநீங்கிய கண்ணாடியாக்குதற்கு இருவினைகள் தொடர்கின்றன.

இருவினை என்ன செய்கின்றன? எப்படித் தொடர்கின்றன? இவற்றுக்கு விளக்கம் சொல்கிறார் மெய்கண்டார்:

போக்குவரவு புரிய :
இருவினையால் போக்குவரவு நிகழ்கின்றன. ‘போக்குவரவு’ என்பது ‘போதல் வருதல்’ என்னும் பொருள்தரும் சொல்லாக இந்நாள் ஆளப்படுகின்றது. ‘போக்குவரவுத்துறை’ என்னும் அரசுத்துறையொன்று உண்மை இதற்குச் சான்று. ஆனால், மெய்கண்டார் போக்குவரவு என்பதனை ‘இறப்பு பிறப்பு’ என்னும் பொருளில் ஆட்சி செய்துள்ளார். போக்கு இறப்பு; வரவு பிறப்பு! பிறப்பு ஒழிதலும், பிறப்பு வருதலும் ஒரு போக்குவரவுதானே! போக்குவரவு புரிவதற்காகவே இருவினைகள் தொடர்கின்றன என்று விளக்குகிறார். ஆகலின் வினையுள்ளவரை பிறப்பறுப்பு இல்லை என்றும், வினை நீக்கமே பிறப்பறுப்பு என்றும், அதுவே விடுதலை அல்லது வீடுபேறு என்றும் கொள்ள வைத்தார். “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்றார் திருவள்ளுவர்! “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்றார் ஒளவையார். உயிர் போக்குவரவு புரிய, இறைவன் தானே செயல் செய்கின்றனனா? பிறரைக்கொண்டு செயலாற்று
கின்றனனா? இதற்கு விளக்கம் தருவார் போலவே, ‘ஆணையின்’ என்றார் மெய்கண்டார்.

ஆணையின் :
இறைவன் ஆணையால் செயலாற்றும் திருவருளுக்கு ‘ஆணை’ என்பது பெயர். கட்டளையை நிறைவேற்றும் துறவிக்குக் ‘கட்டளைத் தம்பிரான்’ என்று பெயர் இருப்பதுபோல!

உயிர்கள் நினைக்கின்றன; சொல்கின்றன; செயலாற்றுகின்றன. இவையெல்லாம் வினையே. நினைவு, சொல், செயல் ஆகிய இவ்வினைகள் அறிவுள்ளனவோ எனின் இல்லை; இவ் வினைகளின் பயனும் அறிவுள்ளனவோ எனின் இல்லை. வினைகளும் வினைப்பயன்களும் அறிவில்லாதவை ஆதலால், வினையுடையானை இவை தாமே தேடிச் சென்றடையமாட்டா! சென்றடையுமாறு கூட்டுதற்கே இறைவன் திருவருளாணையைச் செலுத்துகின்றான். அவ்வாணையால் உயிர்கள் உடல்கருவிகளைக் கொள்கின்றன. உடல்கருவிகளைக் கொள்வதே பிறப்பாகவும், அவற்றில் நீங்குவதே இறப்பாகவும் அமைகின்றன. இவற்றைத் திருவருள் ஆணையால் இறைவன் செய்விக்கின்றான் ஆகலின், ‘ஆணையின் போக்குவரவு புரிய’ என்றார் ஆசிரியர்.

பல்லாயிரம் ஆக்கள் ஓரிடத்து இருப்பினும் ஒரு கன்று தன் தாயைக் கண்டுகொள்வது போல, வினையும் வினையுடையானைச் சேரும் என்பர்! ஆனால், “வினை, தானே வினையுடையானைச் சேரும் தன்மைத்தன்று, இறையருள் கூட்டலால் சேரும்” என விளக்கினார் ஆசிரியர். செலுத்தும் ஒன்று இல்லையேல், செலவென்பது ஒன்று இல்லையே! இயக்குவது அல்லது இயக்குவோன் இல்லையேல் இயக்கம் என்பது ஒன்று இல்லையே! ஆகலின் வினையை இயக்கும் திருவருளாணையைத் தெரிவித்தார் ஆசிரியர். ஆயின், இறை வேறு திருவருளாணை வேறு என்று ஆகின்றதே! இறை நிற்கும் நிலையென்ன? திருவருளாணை நிலை என்ன? என்று வினவுவர் உளராயின் அவர்க்கு விடைவேண்டுமே என்னுங்கருத்தால் மேலே சுட்டுகிறார் மெய்கண்டார்.

நீக்கம் இன்றி நிற்கும் :
இறையும் ஆணையும், நீக்கம் இன்றி-பிரிதல் இன்றி-நிற்குமாம். நீக்கம் இன்றி நிற்பது ஆணையா இறையா என்பார்க்கு, ‘இறை’ என்று குறித்தற்காக ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் என்றார். இறைவனே ஆணையை நீங்காமல் நிற்பான் என்பதாம்.

நீக்கம் இன்றி நிற்றல் என்பது எப்படி? தேன் வேறு இனிமை வேறு எனப் பிரிக்க முடியாதவாறு நிற்றல் நீக்கம் இன்றி நிற்றலாம். செந்தாமரைப் பூவின் செம்மை நிறம் வேறுபடுத்த முடியாதவாறு ஒன்றியிருத்தல், நீக்கம் இன்றி நிற்றலாம். பண்பும் பண்புடையதும் ஒன்றாகி இருப்பதுபோல் இறையும் திருவருளாணையும் என்றும் ஒன்றியுடனாகி இருத்தல் நீக்கம் இன்றி நிற்பதாம்.

அன்றே :
அன்றே என்பதற்கு ‘ஆமே’ என்பது பொருளாம். அல்லையாம் என்னும் பொருள் அதற்கு இங்கு இல்லையாம். ‘அசைநிலை’ என்று சொல்லி அமையும் பொருளும் அதற்கு இங்கு இல்லையாம். ஆமே என்னும் பொருளே அதற்கு இங்குக் கொள்ளல் சால்பு!

“வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றிகன்முனை ஆதந் தன்று”

என்பது முதலாகப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் கொளுக்கள் எல்லாவற்றிலும் ஆளப்பெறும் ‘அன்று’ என்பதற்கு ‘ஆம்’ எனும் பொருளுளதாதல் அறிந்துகொள்க.

ஆக, இக்கருத்துகள் எல்லாமும் அடங்க,
“அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே”

என நூற்பா இயற்றினார் மெய்கண்டார்.

இறைவன் உயிர்களேயாயும், உயிர்களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உயிராம் தன்மையால் உடனாகியும், உயிர்கள் தம் இருவினையின் காரணமாக இறத்தலும் பிறத்தலும் செய்யத் தன் ஆணையினின்றும் பிரிவின்றி என்றும் நிற்பன் என்பது இதன் பொழிப்புப் பொருளாம்.

இந்நூற்பாவின் பொருளருமையில் தோய்ந்து தோய்ந்து இன்புற்ற பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் ஓர் எடுத்துக்காட்டால் விளக்கும் அருமை தனிப் பேரின்பம் பயப்பதாகும்.

“அந்தமும் ஆதியுமாகும் போது வேறாய் நிற்பதும், உயிரியல் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும் உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான்,

‘ஈறாய் முதல் ஒன்றாய்இரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தானாய்
வேறாய்உட னானான்இடம் வீழிம்மிழ லையே’

என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, ‘வேறாய் ஈறாய் முதலாய்’ என்றும் ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை ஒன்றாய் இரு பெண்ணாணாய் குணமூன்றாய் மறைநான்காய் பூதமவை யைந்தாய் ஆறார் சுவையாய் ஏழோசையாய் எட்டுத் திசைதானாய்’ என்றும், உயிர்களோடு ஒன்றாகாமலும் வேறாகாமலும் உடனிருந்து கண்டும் காட்டியும் உதவியருளும் முதல்வன் திறத்தை ‘உடனானான்’ என்றும் இத்திருப்பாட்டில் திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செல்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலையினையும் திருவருளால் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழிகளிலோ இதுகாறும காணப்படவில்லை!”

தமிழர் சமயப் பிழிவு சிவஞானபோதம் என்பதற்கு இத்தகைய இறையருள் பாடல்களைக் காட்டிலும் வேறு சான்றும் வேண்டுமோ?

மூன்றாம் நூற்பா

உயிரைப் பற்றிய ஆய்விலே தொல்பழந்தமிழர் ஊன்றி ஈடுபட்டிருந்தனர் என்பது தொல்காப்பியத்தால் நன்கு தெளிவாகின்றது. செடி கொடி மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வுண்டு என அறிவியல் அறிஞர் சகதீச சந்திரபோசு கருவிகள் கொண்டு மெய்ப்பித்துக் காட்டினார். ஆனால், அவர் கண்டுபிடித்ததற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நாடறிந்த செய்தியாக விளங்கியது.

‘உயிர்’என்னும் பெயர், ‘உய்ப்பது உயிர்’ என்னும் விளக்கம் தருவதாம். உய்த்தல் என்பது செலுத்துதல், இயக்குதல் என்னும் பொருட்டது. உயிரிலா உடல் இயக்கமற்றது என்பதை எவரே அறியார்? “செத்தாரைச் சாவார் சுமப்பார்” என்பதை எவரே உணரார்? இயக்கும் உயிர், உய்வுக்கும்-கடைத்தேற்றத்திற்கும்-வழிகாட்டும் என்றும் முந்தையோர் கண்டிருந்தனர். அவர்கள் உயிரை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் இறுதியாகப் பகுத்துக் காட்டினர். இவை இவை ஓரறிவுயிர், இவை இவை ஈரறிவுயிர் என்றும் நிலைப்படுத்தியிருந்தனர். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும், ஐயறிவுகளுக்கும் இடமானவை என்றும் மனம் ஆறாம் அறிவுக்கு இடமானது என்றும் தெளிந்திருந்தனர். அதனால்

“மாவும் மாக்களும் ஐயறி வினவே”

என்றும்,

“மக்கள் தாமே ஆறறி வுயிரே”

என்றும் சுட்டினர். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவற்றின் வகையறிந்தார் வழியாகவே உலகம் இயல்கின்றது என்று தெளிந்தனர். ஓர் உயிர்மேல், மற்றோர் உயிர் செலுத்தும் அன்பாலும், அரவணைப்
பாலும், உற்ற போது உதவும் உதவியாலும் உயிர் தளிர்ப்புறும் என்றும் உணர்த்தினர்! இவற்றையும் தமக்கு முன்னே இருந்த மூதறிஞர்கள் கண்டு தெளிந்து உரைத்ததாக ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’என்றும் குறித்தனர்.

உயிரை ஆய்ந்த பெருமக்கள் உடலையும் நன்கு ஆய்ந்தனர். உடல் என்னும் பெயரால் உழலுதலுக்கு-துன்புக்கு-இடமானது என்றும் தேர்ந்திருந்தனர். இருபதில் எழுச்சியும், முப்பதில் முறுக்கும், நாற்பதில் நழுவலும், ஐம்பதில் அசதியும், அறுபதில் ஆட்டமும், எழுபதில் ஏக்கமும், எண்பதில் தூக்கமும் எய்தும் எனப் பொது நிலையில் கணித்தும், ‘நூறுவயது அல்லது இல்லை’ என்று பொது நிலையில் குறித்தும் வைத்தனர். அழியும் உடலைக் கொண்டே அழியா நிலையைப் பெறக் கூடுமே யன்றி, உடலை விடுத்து அடையக் கூடாமையின் உடலுக்கு ‘மெய்’ என்று பெயரிட்டனர். நிலையாமைக்கு இடமாம் வாழ்வை நிலைக்கச் செய்வது பிறப்பின் பேறு ஆகலின் ‘மெய்’ என்று பெயரிட்டது தகவேயாம்! இதனை, மங்கல வழக்கெனக் கொள்வார் கொள்ளினும், உடலின் மெய்ந்நிலை கண்டு வைக்கப்பெற்ற பெயரே ஈதெனக் கொள்ளல் முறையாம்.

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே”

என்னும் புறப்பாட்டு இதனைத் தெளிவிக்கும். நிலையாமை சுட்டும் இலக்கண இலக்கியச் செய்திகள் எல்லாம் பிற்காலப் போலித் துறவோர் கூறுவது போல, ஒப்பாரிப் பாட்டும் அன்று! புலம்பலும் அன்று! அழுகுணிச் செய்தியும் அன்று! அழியும் வாழ்வைக் கொண்டு அழியாப் பேற்றை அடைதற்கு வலியுறுத்திக் கூறிய வாய்மொழிகளேயாம். “சாவா உடம்பினவர்” என்றும், “உளதாகும் சாக்காடு” என்றும் மேலோர் ஆட்சிகள் உண்மை இதனை வலியுறுத்தும்.

இனி அந் நாளில் பிறர் பிறர் அறிவு ஐந்தின் மேல் இல்லை என்றாராக, ஆசிரியர் தொல்காப்பியனார். ‘ஆறாம் அறிவு உண்டு’ என ஆய்ந்து கூறியமை அருமைப்பாடு உடையதாம். மூலநூல் அவ்வாறு கூறியும், வழிநூல் செய்த நன்னூலார் ஐயறிவு அளவுடன் அமைந்தது அவர்தம் சமயக் கொள்கையில் நின்று உரைத்ததேயாம்!

உயிரியல் ஆய்வு இவ்வாறாக மெய்கண்டார் உயிர் உண்மையை வலியுறுத்த மேற்கொண்ட மேற்கோளைக் காணலாம். உயிர் உண்மையை வலியுறுத்துவதற்கு அவர், ஆழ்ந்து அகன்று நுணுகிச் செல்கிறார். உடலின் தோற்றரவை உரைத்து அதன்கண் உயிர் உறைதலை ஏழு வகையாகப் பகுத்துக் காட்டித் தெளிவிக்கிறார். அவர் கூறும் மூன்றாம் நூற்பா :

“உளதுஇல தென்றலின்; எனதுடல் என்றலின்;
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்; கண்படில்
உண்டிவினை இன்மையின்; உணர்த்த உணர்தலின்;
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா”.

‘ஆன்மாவின் இருப்பிடம் இது’ என்றும், ‘ஆன்மா இருப்பை அறியும் வகை இவை’ என்றும் இந் நூற்பாவில் உரைக்கிறார்.

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா :
ஆன்மா என்பது உயிர். அதனை ஆதன் என்றும் கூறுவர்; ஆதன் எங்கே உள்ளது? “மாயா இயந்திர தனுவினுள் உள்ளது”. அதாவது, பொறிகளின் கூட்டத்தால் அமைந்த இவ்வுடலுக்கு முதற் காரணமாக இருப்பது மாயையாம். மாயையின் செயலால், பொறிகளையுடைய உடல் வாய்த்தது. அவ்வுடற்கண் ஆதன் உள்ளது என்பது இத் தொடரின் பொருள்ாம். இயந்திரம் = பொறிகள்; தனு = உடல்.

‘இவ்வுடலே ஆன்மாவோ’ என ஐயுறுவார்க்கு அல்லது கொள்கையாக உடையார்க்கு-இவ்வுடல் ஆன்மா அன்று; உடலினுள் வேறாக ஆன்மா உண்டு என்றார். உடற் பொறியே ஆன்மா எனின் பிணத்தினிடத்தும் கூட உடற்பொறி உண்டன்றோ! உயிரின் அறிவு விருப்பு செயல் அப் பிணத்தில் இல்லையே! ஆதலால் பொறிகளின் வேறானதே ஆன்மாவாம் என்றார்.

ஆன்மா உளது :
இந்நூற்பாவின் இறுதியில் நிற்கும் சொல் ‘ஆன்மா; முதற் கண் நிற்கும் சொல் ‘உளது’; இரண்டும் இணைய, ‘ஆன்மா உளது’ என்னும் முடிநிலை வரும். வில்லை வளைத்து அதன் முடியையும் அடியையும் நாணாற் பூட்டி வைத்தாற் போன்ற அமைப்புடையது இது!

அந்தம் ஆதியாம் இறைமையைச் சுட்டியுரைத்த ஆசிரியர், உயிருக்கும் முடிவின்மை யறிந்து அல்லது அழிவிலா வட்டச் சுழற்சியறிந்து அமைத்துக்கொண்ட அமைப்பு எனக் கொள்ளினும் கொள்ளத் தக்கதாம். இனி, இவ்விறுதி முதல் இணைப்பை, ஒவ்வொரு கருத்துத் தொடரொடும் இணைத்துக் கொண்டு சொற்சுருக்கிப் பொருள் பெருக்கி கொண்டமை மெய்கண்டார் யாப்பறி மேதகைமையை வெளிப்படக் காட்டுவதாம். இணைப்பு அழகை இனிது காண்க.

இலது என்றலின் ஆன்மா உளது :
‘இல்லதற்கு இல்லை பெயர்’ என்பது பழமொழி. இல்லாத ஒன்றற்குப் பெயர் எப்படி இருக்கமுடியும்? ‘பாழ்’ என வான்வெளியைக் குறிக்கின்றனர்! வெளியாக இருத்தல் உண்மையால் தானே அதற்கொரு பெயர் வைத்தனர்? அவ்வாறே ‘உயிர்’ என ஒருபெயர் உண்மையாக இருக்கும்போது, அதனை ‘இல்லை’ என்று எப்படிச் சொல்லலாம்? ‘இல்லை’ என்று ஒன்று சொல்லுமானால், அதனைச் சொன்னது எதுவோ, அதுவே உயிர்தானே! இல்லை என்று சொன்னதே உயிர் உள்ளது என்பதனை விளக்குகின்றது அல்லவா! இவ்வாறு ‘இல்லை’ என்பாரைக் கொண்டே, உயிர் உண்டு என்பதை எடுத்த எடுப்பிலே நிலைப்படுத்தினார் ஆசிரியர். இல்லை என்று கூறுவார் உளரா? உடல், உயிர் இல்லை; பொறிகள், உயிர் இல்லை; மனம், உயிர் இல்லை-இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் ‘உயிர் இல்லையே’ என்று சொல்வார் இருந்தனர்! அதனால் அவர்க்கு மறுமொழியாக ‘இலது என்றலின் ஆன்மா உளது’ என்றார்.

எனதுடல் என்றலின் ஆன்மா உளது :
உடலைப் பிரித்துப் பிரித்துப் பார்த்து ஆன்மா இல்லை என்பார் சிலராக, சிலரோ உடலையே ஆன்மா எனக் கொண்டனர். ஆனால், உடல் ஆன்மா ஆகுமோ எனின் இல்லையாம். உடலே ஆன்மாவாக இருந்தால், ‘எனது உடல்’ என்று சொல்லவேண்டுவது என்ன? ‘எனது’ என்று உரிமை கொண்டது எதுவோ, அதுவே யல்லவோ ஆன்மா? ஆதலால், எனதுடல் என்று சொல்லுமுகத்தானே உடல், ஆன்மா இல்லை என்றும், அதனை உரிமை கொண்டாடும் ஒன்றே ஆன்மா என்றும், தெளிவாகின்றதே என்பாராய் ‘எனதுடல் என்றலின் ஆன்மா உளது’ என்றார்.

ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது :
ஐம்பொறிகள் என்பவை மெய் வாய் கண் மூக்கு செவி என்பன. ஐம்புலன்கள் என்பவை ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பன. மெய்யில் ஓரிடத்தில் தேனை வைத்தால் அதன் இனிமை புலப்படுமோ? அதனை நாவில் வைத்தால் அல்லவோ சுவை தெரிகின்றது? கண்ணில் ஒளி தோன்றுகின்றது. அதே கண்ணில் சுவையோ நாற்றமோ கேள்வியோ தெரிவதில்லையே? செவியில் ஓசை கேட்கின்றது. ஒளியோ சுவையோ நாற்றமோ புலப்படுவது இல்லையே! ஒவ்வொரு புலனும் ஒவ்வொன்றைத் தானே உணரவல்லனவாய் உள்ளன? ஆனால் ஐம்புல உணர்வையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் ஒன்று இருக்கிறதே! அதுவே ஆன்மாவாம்; என்பாராய் ‘ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது’ என்றார்.

ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது :
ஆசிரியர், ‘ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றாராயினும், அதன் பொருட்பாடு கருதி, ‘ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது’ என்றும், ‘ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றும், பிரித்து இணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்! செறிவாகவும் செம்மையாகவும் கூறுதல் ஆசிரியர் கடைப்பிடி யாகலின், அவர்தம் செந்நெறியுணர்ந்த உரையாசிரியர்கள் இவ்வாறு பிரித்து இணைத்துக் குறைவிலா நிறைவுரை கண்டனராகலின் அவர் முறையே முறையாய் உரை வகுக்கப்பெற்றதென்க.

ஒடுக்கம் என்பது நுண்ணுடல். அதனை வடமொழியாளர் ‘சூக்கும உடம்பு’ என்பர். கனவின்கண் பருவுடல் எங்கோ ஓரிடத்திருக்க, நுண்ணுடல் எங்கோ ஒரு காட்சியைக் கண்டு உணர்ந்து கொள்கின்றதன்றோ! அந்நுண்ணுடல் காட்சியை விழித் தெழுந்த காலை, பருவுடல் கண்டதாகக் கூறுவது வழக்கம் அல்லவோ? அவ்வாறாயின் நுண்ணுடல் காட்சியைப் பருவுடற் காட்சியாக்கிக் காட்டத் தக்க ஒன்று உள்ளது அன்றோ! அவ்வொன்றே ஆன்மாவாம், என்பாராய் ‘ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றார்.

கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது :
கண்படில் என்பது உறங்குதல்; உண்டிவினை என்பது இன்ப துன்ப நுகர்வுகள். உறங்காமல் விழித்திருக்கும் போதில், இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாகின்றன. உறங்கும்போது இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாவது இல்லை. ஆனால், விழித்திருக்கும்போது எந்த மூச்சுக்
காற்றை உள்ளிழுத்து வெளிவிட்டோமோ, அதே மூச்சுக் காற்றையே உறக்கத்தின் போதும் உள்ளிழ்த்து வெளி விடுகிறோம் அம் மூச்சுக் காற்றே உயிர் என்றால் விழிப்பின்னோது உண்டாகிய இன்ப துன்ப நுகர்ச்சிகள் உறக்கத்தின் போதும் தோன்ற வேண்டும் அல்லவோ? அவ்வாறு தோன்றாமையால் மூச்சுக் காற்றின் வேறாக உயிர் இருக்கவேண்டும் என்பது தெளிவாம். இதனைக் கருதியே உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்று ஆசிரியர் தெளிவித்தார். ஒடுங்கிய இடத்திலும் ஒடுங்காத இடத்திலும் இன்ப துன்பங்களை அறிவதே உயிர் என்பதால் மூச்சுக்காற்றே உயிர் என்பது பொருந்தாது என மறுத்தார்.

உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது :
“இறைவனுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், தானே அறிகிற குணமும், ஆன்மாவிற்கு அறிவிக்கிற குணமுமாம்.”

“ஆன்மாக்களுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், அறிவித்தால் அறிகிற குணமும், தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத குணமுமாம்” என முப்பொருள் ஆய்வு நூல் (திரி பதார்த்த சிந்தனை) மொழியும். ஆதலால், உணர்த்தாமலே உணரவல்ல இறையறிவே (சைதன்யமே) உயிர் எனின், ஆன்மாவிற்கு எதையும் தானே அறியும் திறம் இல்லையே; அறிந்தோர் அறிவிக்கவே அறியும் குறையும் உடையதாமே? இவ்வாறாக இறையறிவே உயிர் என்பது பொருந்தாதாம். ஏனெனில் ஆன்மாவின் அறிவு, உணர்த்த உணரும் சிறுமையுடையது என்பாராய் ‘உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது’ என்றார்.

இவ்வாறு பகுத்தும் பிரித்தும் ஆசிரியர் உயிருண்மையை விளக்கவேண்டுவது என்ன?
சிலர், ஆன்மா என்பதொன்றே இல்லை என்றனர்; சிலர், உடலே ஆன்மா என்றனர்; சிலர், பொறிகளே ஆன்மா என்றனர்; சிலர், நுண்ணுடலே ஆன்மா என்றனர்; சிலர் மூச்சுக் காற்றே ஆன்மா என்றனர்; சிலர், இறையறிவே ஆன்மா என்றனர்; சிலர், உடல் முழுமையும் கூடிய ஒன்றே ஆன்மா என்றனர். இவ்வெழுவர் தம் கொள்கைகளை முறை
முறையே மறுத்து அவற்றின் வேறாம் ஆன்மாவின் உண்மை காட்டுவாராய் இந் நூற்பாவை மெய்கண்டார் அருளினார் என்க.

இதுவரை கண்ட மூன்று நூற்பாக்களிலும் இறைவன் ஒருவன் உளன் என்றும், அவன் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருக்கிறான் என்றும், இறைவன் உயிர்களேயாகியும், உயிர்களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உடனாகியும் இருந்து திருவருள் ஆணையால் பிறப்பு இறப்புகளைச் செய்விக்கின்றார் என்றும், உயிரென்பது உளது என்றும், அவ்வுயிர் இல்லதோ, உடலோ, பொறியோ, நுண்ணுடலோ, மூச்சோ, இறையறிவோ, உறுப்புத் தொகுதிகளோ அன்று; அவற்றின் வேறானது என்றும் உரைத்தார். மேலும் உயிரைத் தொடர்ந்து ஆய்கின்றார்.

நான்காம் நூற்பா
உயிர்களுக்கு அமைந்துள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அறிவு பெறுவதற்காக அமைந்த கருவிகள். ஆகலின் இவ்வைந்தையும் ‘அறிகருவி’ என்பர். இவற்றின் வேறாகச் சில கருவிகளும் உள. அவை வாய், கால், கை, மலவாய், நீர்வாய் என்பன. அவை பேசுதல், நடத்தல், புரிதல் முதலிய செயல்களுக்கு உரியவை. ஆதலால் அவற்றைச் ‘செயற்கருவிகள்’ என்பர். உயிர்கள் அறிவுறுதற்கும் செயலாற்றுதற்கும் இவ் வறிகருவிகளும், செயற் கருவிகளும் இன்றியமையாதவை.

இவ்விருவகைக் கருவிகளும் உருவுடன் வெளிப்படத் தெரிபவை. இவ்வாறு உருவுடன் வெளிப்படத் தெரியாமல், அருவமாய்த் தோன்றும் உட்கருவிகளும் உள. அவற்றையும், நுண்ணிய மெய்ப் பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து இவையெனக் கூறியுள்ளனர். அவை, ‘மனம், நினைவு, முனைப்பு, அறிவு’ (மனம், சித்தம், அகங்காரம், புத்தி) என்பன.

மெய் முதலிய அறிகருவிகளின் வாயிலாகக் காணப்படு
பவற்றைப் பற்றுவது, மனம்; அவற்றை இவை எனச் சிந்திப்பது, நினைவு; சிந்தித்தவற்றை இவையெனத் துணிவது, முனைப்பு; துணிந்தவற்றைத் தன்னிடத்து அமைத்துக்கொள்வது, அறிவு. இவை ஒன்றின் ஒன்று வளர்நிலையில் அமைந்தவை.

அறிகருவி செயற்கருவிகளையுடைய உடற்பகுதி, ‘உருமண்டலம்’ என்றும், மனம், நினைவு, முனைப்பு, அறிவு ஆகிய உட்கருவிப் பகுதி, ‘அறிவு மண்டலம்’ என்றும் கூறப்படும். இவ்விரண்டையும் சேர்த்து ‘ஆன்மவியல்’ (ஆன்மதத்துவம்) எனப்படும். இவற்றின் வேறாகக் கலையியல் (வித்தியாதத்துவம்) இறையியல் (சிவதத்துவம்) என்பனவும் உண்டு.

கலையியல் நுண்ணுடலுக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது என்றும், இறையியல் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்தற்கு வாயிலாக இருப்பது என்றும் மெய்ப்பொருள் கண்டார் கூறுவர்.

இனி, அவை தொழிற்படுமாற்றையுந் தெளிவிப்பர். “இறைவன் திருவருளாற்றல், இறையியல் வழியாக உயிரின் அறிவு விருப்பு செயல் என்னும் மூவகை ஆற்றல்களையும் விளங்கச் செய்யும்; இறையியல் வழியாக வரும் அவ்வருளாற்றலே உயிரியலையும் கலையியலையும் தொழிற்படுத்தும்”என்பது அது.

இவ்விடத்தே சில குறியீடுகளை அறிந்துகொளல் நலம். பொறிகளுக்குப் புறக்கருவிகள் என்பதும், மனம் முதலியவற்றுக்கு அகக் கருவிகள் அல்லது உட்கருவிகள் (அந்தக்கரணம்) என்பதும், அவற்றிற்கும் உள்ளால் இருக்கும் கலையியலே ‘உள்ளகக் கருவி’ என்றும், அதற்கும் உள்ளால் இருக்கும் உயிரை ‘உள்ளம்’ (உள்ளகம் என்பதன் தொகுத்தல்) என்றும் கூறுவர்.

திருவருள் கூட்டலால் கலையியல் தொழிற்பட்டு உயிரியல் இயக்கமுறுதல், ஒன்றன் ஒன்று தொடர்புடைய சக்கரங்களைக் கொண்டு இயங்கும் கடிகார அமைப்புப் போன்றதாம். ஓரிடத்து ஏற்படுத்தும் முடுக்கம் அடுத்ததை இயக்கி, அது பிறிதொன்றை இயக்கித் தொழிற்படச் செய்வதுபோலாம். இவ்விடத்தே, உயிர்க்கலன் (Cell) நுண்மையும் அதன்படிப்படி விரிவாக்கமும் அதனுள் அடங்கிக்கிடக்கும் உறுப்புகளின் அமைதியும் எண்ணத்தக்கவையாம். ஆலம்விதையுள் அதன் அத்தனை பகுதிகளும் அடங்கிக் கிடக்கின்றன அல்லவோ! அதனால் அன்றே ‘ஆலமர்வித்தின் அருங்குறள்’ என்பதன் வழியாகக் கம்பர் திருக்குறளையும், திருமால் குறளையும் இணைத்து இரட்டுறலாக்கிக் கூறினார். இனி, நான்காம் நூற்பாவையும் அதன் பொருள் இயைவையும் காணலாம்.

அந்தக் கரண மவற்றினொன் றன்று; அவை
சந்தித்த தான்மா; சகசமலத் துணராது;
அமைச்சர சேய்ப்பநின் றஞ்சவைத் தைத்தே.

என்பது நூற்பா.

மூன்றாம் நூற்பாவிற் கூறிய ஆன்மா பற்றியதே இந்நூற்பாவுமாம். அந்நூற்பாவிற் கையாண்ட உத்தியையே இந்நூற்பாவிலும் கையாண்டு உரைக்கின்றார் ஆசிரியர். ஈற்றில் நின்ற ‘ஆன்மா’ என்பதை, ‘இலது என்றலின் ஆன்மா உளது’ என்பன போல் இயைத்தவாறே. இந்நூற்பாவின் இடையில் நின்ற ஆன்மாவை முன்னும் பின்னும் இணைத்துக் கொள்கிறார். இடைநிலை விளக்கு என்னும் அணியின் வகையைச் சேர்ந்தது இவ்வமைப்பாம்.

ஆன்மா அந்தக்கரணமவற்றுள் ஒன்று அன்று :
‘இதுவே ஆன்மா’ ‘இதுவே ஆன்மா’ என்று பலவகையாய் உரைத்த மெய்ப்பொருளாய்வாளர்க்கு, ‘அது அன்று’; ‘அது அன்று’; ‘அவற்றின் வேறானது ஆன்மா’ என்று மறுமொழி தந்த ஆசிரியர், அகக் கருவிகளாம் அந்தக் கரணமே ஆன்மா என்று கூறுவாரை மறுத்தற்கு, “அந்தக் கரணமவற்றின் ஒன்று அன்று” என்றார்.

மனம் நினைவு முனைப்பு அறிவு என்னும் அகக் கருவிகளை ஆன்மா தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டுள்ளதேயன்றி, அவற்றில் ஒன்றாகவோ, அவையெல்லாமுமாகவோ அது அமைந்து விடவில்லை என்றார். ஆன்மாவின் அறிகருவியாய் இயக்கமாவதே அகக் கருவிகள் ஆகலான் அவற்றை ஆன்மாவெனல் ஆகாதாம் என்றார்.

அவை சந்தித்தது ஆன்மா :
அகக் கருவிகளைக் கூடிநின்றதே ஆன்மாவாம். கூடுவதும் கூடிநின்ற இடமும் வேறாவது போலவும், கருவியும் கருவியுடையானும் வேறாவது போலவும் அகக் கருவிகளும் ஆன்மாவும் வேறாம். ஆயினும் அவை கூடிநிற்கும் குறியால் மயங்கி அகக் கருவிகளே ஆன்மா என்பார் உளர் எனத் தெளிவித்தார். ஆன்மா அகக் கருவிகளைச் சந்தித்தலை ‘அஞ்சவைத்தைத்தே’ என்பார்; அதன் விளக்கம் மேலே காண்பாம்.

ஆன்மா சகசமலத்து உணராது :
ஆன்மா, என்று உளதோ அன்றே மலமும் உளது. அதனை ‘மலத்துளதாம்’ என்று முதல் நூற்பாவிலேயே ஓதினார் ஆசிரியர். அம்மலத்தின் அல்லது மறைப்பின் இயல்பை உணர்த்து வாராய்ச் ‘சகச மலம்’ என்றார். சகசமலமாவது தொல்பழந் தொடர்பான அல்லது இயற்கையான மலமாம். இதனைக் களிம்பு, மறைப்பு, மாசு, அழுக்கு, மாயை, இருள் எனப் பல சொல்லால் சுட்டுவர். ஆன்மாவுக்கு இயல்பான மலத்தால், தானே அறிதல் இல்லாமல் அறிகருவிகளைத் துணையாகக் கொண்டு அறியும் என்று கூறினாராம். அறிகருவிகளோடு ஆன்மா சந்தித்துக் கடமை புரிதலால் ஒன்றனைப் பற்றி, சிந்தித்து, துணிந்து, அறிந்துகொள்கின்றதாம்.

இம்மலம் தொல்பழந் தொடர்பினது எனினும், மாந்தர்தம் நிலைக்கு ஏற்ப மூன்று நிலைகளையுடையதாம். மயக்கம், எழுச்சி, அமைதி (தாமசம், இராசதம், சத்துவம்) என்னும் முக்குண நிலைப்பட்டார்க்குத் தக மலமும் மூன்று நிலைகளில் அமைகின்றது.

மயக்க நிலையுடையவர்க்கு மறைப்பு மிகத் தடிப்பானது. விறகில் உள்ள தீயைப்போல இவர்களுக்கு உண்மைப் பொருள் மிக மிக வெளிப்படாததாக இருக்கும்.

எழுச்சி நிலையுடையவர்க்கு மறைப்பு தடிப்பானது. கண்ணாடியின் ஒளியை மறைத்துள்ள அழுக்குப்போல்வது அது. முயற்சியால் அம் மறைப்பை நீக்கி உண்மைப் பொருளைக் காணக்கூடும்.

அமைதி நிலையுடைவர்க்குரிய மறைப்பு மென்மையானது. புகையின் நடுவே தீ இருப்பதுபோல இருப்பது. எளிய முயற்சியால் மறைப்பை நீக்கி மெய்ப்பொருள் காணலாம்.

பசையூட்டிய இரட்டு, இயல்பான இரட்டு, துகில் என்னும் மூவகைத் துணிகளையும் முறையே ஊடுருவிப் பார்க்கும் பார்வை போன்றது. மயக்கம், எழுச்சி, அமைதி என்னும் முக்குண நிலைப்
பட்டாருக்கும் உள்ள மறைப்பு எனலாம்.

அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவைத்தைந்து :
அகக்கருவிகளும் ஆன்மாவும் அமைச்சர்களும் அரசனும்போல நின்று ஐந்து படிநிலைகளையுடையதாம். அமைச்சு-அமைச்சர்; அமைச்சு என ஒருமையாற் சுட்டினும் அகக் கருவிகள் பலவாயினாற் போல அமைச்சர் பலராதல் கொள்ளல் முறையாம். அவ்வவ்வமைச்சரைத் தழுவியும் நெருங்கியும் சூழ்ந்தும் அறிபொருளை அறிந்துகொள்ளும் அரசனைப்போல அறிகருவிகளை அடுத்து நெருங்கி ஆன்மாவும் அறிவினைக் கொள்ளும் என்பதாம்.

அவத்தை என்பது ‘நிலை’ என்பதாம். அஞ்சு = ஐந்து. உயிர் நிற்கும் நிலைகள் ஐந்து; புருவநடு, கழுத்து, மார்பு, உந்தி, மூலம் என்பன. இவ்விடங்களில் உயிர் நிற்கும் நிலை முறையே, நனவு (சாக்கிரம்), கனவு (சொப்பனம்), துயில் (சுழுத்தி), உறக்கம் (துரியம்), பேருறக்கம் (துரியாதீதம்) என்பனவாம்.

புருவநடு முதல் மூலம்வரை உயிர் கீழே இயங்கும் இயக்கமும், மூலம்முதல் புருவநடுவரை மேலே இயங்கும் இயக்கமும் என உயிர் இயக்கம் இருவகையாம். இவை முறையே கீழால் நிலை, மேலால் நிலை எனப்படும்.

ஐந்துநிலை மாடத்தில் ஏறும் ஒருவன் மாடந்தொறும் நின்று நின்று ஏறியும், நின்று நின்று இறங்கியும் காணும் காட்சிபோல மேலால் நிலை, கீழால் நிலைகளைத் தெளிக. இந் நாளில், மாடிதோறும் நின்று நின்று இயங்கும் தூக்கி (Lift)யுண்மை தக்க எடுத்துக்காட்டாம்.

அரசன், படைத்தலைவர் முதலானவர்களோடு கூடி, உலாப்போந்து மாளிகை புகும்போது வாயில்கள்தோறும் அவரவர்களை நிறுத்தி, காவலும் வைத்து அந்தப்புரத்தினில் தனியே செல்வதைப் போல ஆன்மா உடலின் அகக் கருவிகளில் இருந்து நீங்கி உயிர்க் காற்றைக் காவலாக நிறுத்தி ஐந்துநிலை கொள்ளும் என்று முன்னை உரையாளர்கள் விளக்குவர்.

உயிர் அகக்கருவிகளில் படிந்து படிந்து செல்லுதலைத் தென்றல் காற்றொடும் இணைத்துக் காண்டலும் இன்பம் பயப்பதாம்.

தென்றல் சோலையில் நுழைந்து, குளத்துள்புகுந்து, தாமரை மலரைத்தழுவி, இருள்வாசி மல்லிகை முல்லை மலர்ப்பந்தர்களில் தாவி, தேனும் மணமும் நுகர்ந்து, தண்மை மென்மை நறுமையுடையதாய் அறிவன்போல் (ஆன்மாபோல்) இயங்கும் என்பதாம்.

ஆதன், ஓர்ப்பன், அறிவன் என்னும் பெயர்கள் ஆன்மாவுக்குரியன என்பதை உணர்வார், ‘அறிவனபோல் இயங்கும் தென்றலை’ மேலால்நிலை, கீழால்நிலை உயிர் இயக்கங்களொடு ஒப்பிட்டு மகிழ்வர்.

தேனீ, வண்டு, தும்பி முதலியவை மலர்தொறும் அமர்ந்து தேன் நுகர்தல் போன்றது, உயிரின் கீழால்நிலை, மேலால்நிலை என்பவை என எண்ணி இன்புறலாம்.

இந்நூற்பாவினால் ஆன்மா மனம் முதலிய அகக் கருவிகளுள் ஒன்றன்று என்றும், அவ்வகக் கருவிகளொடு கூடிநின்று கடனாற்றும் தன்மையது என்றும், அதுதன் தொல்பழ மலத்தொடர்பால் தானே அறிதல் இன்றி, அகக்கருவிகளின் துணைகொண்டு அறியும் என்றும், அது மேலால்நிலை கீழால்நிலை என்னும் நிலைகளில் ஏறி இறங்கி நிற்றல் அமைச்சர்களோடு அளாவி நிற்கும் அரசன்நிலை போல்வது என்றும் அறியப்பட்டதாம்.

ஐம்பூதம், ஐம்பொறி, ஐம்புலன், ஐந்துநிலை என்பவற்றின் ஒழுங்கு நிலையும் எண்ணத்தக்க தேயாம். ஐம்பேரவைக்கும் ஐம்பேரமைச்சிருந்த பண்டை ஆட்சிநிலையும் அறியத்தக்கதே.

ஐந்தாம் நூற்பா
அறிந்த ஒன்றனைக் காட்டி அறியாத ஒன்றனை விளக்குவது, தெளிவுறுத்த விரும்புவார் எவருக்கும் வழக்கம். காட்டு எருமை காணா ஒருவனை, வீட்டு எருமை காட்டி ‘இதுபோல்வது’ என்று விளக்குவது போன்றதாம். இந்நெறியில் மெய்கண்டார் நான்காம் நூற்பாவில் சுட்டிக்காட்டிய பொருளை நினைவூட்டி அதன் வழியாகவே புதிய கருத்தை வலியுறுத்துவாராயினார்.

‘விளம்புவது உள்ளத்து’ என நூற்பாவைத் தொடங்கினார். ‘சொல்லிய உள்ளத்தை’என்பது இதன் பொருளாம். உள்ளத்தையோ நான்காம் நூற்பாவில் கூறினார்? உயிரைப்பற்றியல்லவோ கூறினார் எனத் திகைப்பு உண்டாகின்றது. இத்திகைப்பு கற்பார்க்கு ஏற்படல் ஆகாது என்றே ‘தனுவினுள் ஆன்மா’ என்று மூன்றாம் நூற்பாவில் குறித்தார். உள்ளின் உள்ளாக இருக்கும் உயிர்க்கு ‘உள்ளகம்’ என்று பெயர்; அது உள்ளம் எனவும் சொல்லப்படும். இதனை நான்காம் நூற்பா முகப்பிலும் உண்டோம்.

வையகம், வானகம், கானகம் என்பவை வையம், வானம், கானம் என வழங்குவனபோல், உள்ளகம் என்பது உள்ளம் என வழங்குகின்றதாம். ‘ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்’ என்னுமிடத்தே பொய்யாமொழியாரும் உயிரை ‘உள்ளம்’ என ஆட்சி செய்துள்ள உண்மையை அறியலாம்.

ஆகலின், விளம்பிய உள்ளத்து என்பது முன்னே சொல்லிய உயிரை என்னும்பொருள்தருதல் விளங்கும்.
“மெய் வாய் கண் மூக்கு அளந்து அறிந்து அறியா”

வெற்றிலைபாக்கு என்ற அளவானே அதனொடு சுண்ணாம்பும் சேர்தல்போல், மெய் வாய் கண் மூக்கு என்ற அளவானே செவியையும் இணைத்துக்கொள்க. கற்பார் எளிமையாகக் கண்டுகொள்ளத் தக்கவற்றைச் சுட்டிய அளவானே போதுமென்பதும், கற்பார் படிநிலை உயர்வைப் பளிச்சிடச் செய்தற்கும் இத்தகு உத்திகளை நல்லாசிரியர் கருதுவர் என்பதும் ஆய்வாளர் அறிந்ததே.

அறிகருவிகளாக இருக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அளந்து அறிந்து அறியா என்றது என்ன? அறிந்தும் அறியாமை அதற்கு உண்டோ? அறிவுறுதற்குக் கருவியாம் அவற்றுக்கே அறியாமை உண்டாயின், அறிந்துகொள்ள வகைதான் என்ன? என வினாவுதல் நிகழும். ஆயின் உண்மை ஈதேயாம்.

யானை, பெரியதே! வலியதே! விலைமானமும் மிக்கதே! ஏழைந்துக்குமல் இரண்டு உயர்ந்த யானை-37 பெயர்களுடைய யானை-எனப் பாராட்டப்படுவதே! எனினும் என்ன? அதற்கு ‘யானை’ என்பது தன் பெயர் எனத் தெரியுமோ? அவ்வாறே மெய் முதலியவையும் அளந்து அறிந்தும் அறியாவாம்.

இனி எதை அறியா? என்னும் வினாவுதல் எழும்.

மெய் வாய் முதலியவை உயிரின் துணையால் அல்லவோ ஒன்றை அறிகின்றன! உயிர்த் துணை இன்றி அறியக் கூடுமானால், உயிர் பிரிந்துபோன பின்னரும் மெய் வாய் முதலியவை ஊறு சுவை முதலியவற்றை அறிய வேண்டுமே! அவ்வாறு அறியக் காணாமையால் உயிர்த் தொடர்புடைய அளவானே தாம். அவை அறி கருவிகளாக உள்ளன என்பது விளங்கும். ஆனால், அதனை மெய் முதலியவை அறிகின்றனவோ எனின் இல்லையாம். அன்றியும், தம்மையேனும் அறிகின்றனவோ எனின், அதுவும் இல்லையாம்! தம்மையும் அறியாமல் தம்மை இயக்கித் தொழிற்படுத்தும் ஆன்மாவும் அறியாமல் இருக்கும் குறைபாடு அவற்றுக்கு உண்மையால், ஆசிரியர் ‘அளந்து அறிந்து அறியா’ என்றார்.

விளம்பிய உள்ளத்து என்று உயிரைப்பற்றி உரைக்கத் தொடங்கிய ஆசிரியர் பொறிகளைப்பற்றி உரைப்பானேன் எனின், இப்பொறிகள் எப்படிக் குறையுடையனவோ அப்படிக் குறையுடையதே உயிரும் என்பதை நிறுவுவதற்காக உவமையாக எடுத்துக்காட்டப் புகுகின்றாராம். அதனை அடுத்துச் சுட்டுகின்றார்.

ஆங்கவை போலத் தாம், தம் உணர்வின் தமி அருள் (அறியா) :
மெய் வாய் முதலிய கருவிகள்போல உயிர்களாகிய தாம், தம் அறிவால் இறைவன் திருவருளை அறியமாட்டா என்பது பொருளாம். ‘அறியா’ என்பதை உயிருக்கும் கூட்டப் பெற்றதாம். ஊசல் இருபாலும் அசைவது போலவும், கடிகாரத் தொங்கல் இருபாலும் அசைவது போலவும், ஓரிடத்து நின்ற ‘அறியா’ என்னும் சொல், ஈரிடத்தும் சென்று இயைந்து பொருள் தந்ததாம். இதனை யாப்பியலார் ‘தாப்பிசைப் பொருள் கோள்’ என்பர்.

மெய் முதலிய பொறிகள் தம்மையும் அறியா, தம்மை இயக்கும் உயிரையும் அறியா என இருவகை அறியாமை உடைத்தெனக் கண்டோமே; உயிருக்கும் அத்தகைய இருவகை அறியாமையும் உண்டோ எனின் உண்டு என்பதை உறுதி செய்வதற்காகவன்றோ ஆசிரியர் ‘ஆங்கவை போல….அறியா’ என்றார். உயிரும் தன்னையும் அறியாது, தன்னையுடைய தலைவனையும் அறியாது என்பதாம். ஆயின் எந்நிலையிலும் உயிர் தன்னையும் தன்னையுடையானையும் அறியாதோ எனின் மெய்ப் பொருளாய்வால் எத்தகு பயனும் இல்லையாம்; பிறவிப் பயனென ஒன்றும் இல்லையாம்; உயிர் அவற்றை அறியுமாற்றை மேல்வரு நூற்பாக்களில் உரைப்பார். இவண் உயிர்க்குள்ள இரண்டு தன்மைகளை அறிந்துகொள்ளல் சாலும். அவை : அறிவித்தால் அறிகிற தன்மை, தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத தன்மை என்பவை.

அறிவித்தால் அறிகிற தன்மை உயிருக்கு இருத்தலால், ‘அறிவிப்பார் எவர்’ என வினா வெழும். அதற்கு விடையாவார் இறைவனும், இறையருள் கூடினாருமாம் என்க.

“தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே”
“அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி”
“என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்”

என்னும் மறைமொழிகள் அறிய, அறிவிப்பாரும் அறிவுப்பேறும் அறியவரும்,

“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி
 எனையாண்ட அத்தன்”
“தானேவந் தெனதுள்ளம் புகுந்
 தடியேற் கருள் செய்தான்”

என்னும் மணிமொழிகளும் அம்மறை மொழிகளை மெய்ப்பிக்கும்.

காந்தம் கண்ட பசாசத் தவையே :
காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல ஆன்மாக்கள் இறையருளால் தம்மையும் தம்மையுடையானையும் உணரும் என்பதாம்.

காந்தம் இறையருளும், இரும்பு ஆன்மாவுமாம். கவர்வது காந்தம் என்பதும் கவரப்படுவது இரும்பு என்பதும் தெளிவே. கவரப்படுங்கால் காந்தம் அசைவுறுமோ இரும்பு அசைவுறுமோ என்பதை எண்ணின் காந்தம் அசையாதிருத்தலும், இரும்பு அசைதலும் விளங்கும். இறைவனின் அசைவின்மையையும், ஆன்மாவின் அசைவையும் உவமையால் ஆசிரியர் விளங்கச் செய்தார்.

காந்தத்தால் கவரப்பட்ட இரும்பை எண்ணும் நாம் கண்ணப்பரை எண்ணுதல் தகும். இறைவர் உறையும் மலைமேல் அவர் ஆர்வம் உந்த ஏறிச் செல்லும் செலவைச் சேக்கிழார், “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபனம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல” என்றார். இறைவனைக் காணா முன்னே, “அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு: விட்டகல நீங்கி”னார் என்று மேலும் தெரிவிக்கிறார். இறைவனைக் கண்ட பின்னர் “வங்கினைப் பற்றிப் போகா வல்லுடுப்பு போல” நீங்கா ராயினார் என உவமைப்
படுத்துகிறார். இறை வழிபாட்டுப் பொருள் தேடுதற்குப் பிரிய நேருங்கால் “இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு” போலச் செல்வதையும், “மனத்தினும் கடிது மீள்வ”தையும் குறிக்கிறார். கண்ணப்பர் அருளில் தோய்ந்தமை, காந்தம் கண்ட பசாசம் போன்றதாம்.

தடுத்தாட் கொள்ளவந்த இறைவனைத் தொடர்ந்து சுந்தரர் செல்வதை,
“திருமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையு மாபோல்”

எனச் சேக்கிழார் கூறுவதும் இவண் கருதத் தக்கதாம்.

‘காந்தம் கண்ட பசாசம்’ என்பதற்கு காந்தத்தைக் கண்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ, காந்தத்தால் கண்டு கொள்ளப்பட்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ எனின், காந்தத்தால் கண்டுகொள்ளப்பட்ட பசாசம் என்பதேயாம். இறையருள் இல்லாக்கால் ஆன்மாவுக்குத் தன்னையறிதலும் தன்னையுடையானை அறிதலும் இல்லையென்பதைக் கண்டோமே?

“காண்பாரார், கண்ணுதலாய் காட்டாக் காலே”

என நாவரசர் நவின்றதை அறிந்தோமே!

“நானேயோ தவம்செய்தேன் சிவயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற் கருள்செய்தான்”

என மணிமொழியார் கூறுவதும், அவரே,

“இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து”

என்று உரைப்பதும் இவண் எண்ணத் தக்கனவாம்.

மரத்தில் இருந்து விழும் பழம், பக்கங்களிலோ மேலேயோ போகாமல் நிலத்தில் வீழ்தற்குப் பழமோ காரணம்? புவி ஈர்ப்பாற்றல் அன்றோ காரணம்! புவி ஈர்ப்பாற்றலே பழம் முதலியவற்றைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதல் போல் இறைவன் திருவருளே காந்தமாய், ஆன்மாவாம் இரும்பை ஈர்த்துக் கொண்டதாம்.

“விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறித் தறியா; ஆங்கவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத் தவையே”
இதன் தொகு பொருள்; “மெய்வாய் முதலிய அறிகருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன. அவ்வாறு அறியுமாயினும் அவை தம்மையும், தம்மை அறியச் செய்விக்கும் ஆன்மாவையும் அறியமாட்டா. அவற்றைப் போலவே ஆன்மாவும் திருவருள் துணையால் வினையாற்றி வினைப்பயனை நுகர்கின்றது. எனினும் அது, தன்னையோ, தனக்குத் துணையாய் உதவும் திருவருளையோ அறிதல் இல்லை, அருளால் செயற்படும் ஆன்மாவின் இயக்கம், காந்தத்தின் முன் இயங்கும் இரும்பின் இயக்கம் போல்வதாம்.

ஆறாம் நூற்பா
இறைவன் இலக்கணம் இன்னதென இந்நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் :

உணர்உரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே.

“உணர்உரு எனின் அசத்து; உணராது எனின் இன்மை (ஆதலின்) இருதிறன் அல்லது சிவசத்தாம்; என, இரண்டு வகையின் மன் உலகு இசைக்கும்” என இயைத்துப் பொருள் கொள்ளு மாறு அமைந்து கிடக்கின்றது இந்நூற்பா. ‘எனின்’ என ஓரிடத்து நின்ற சொல்லை ‘உணர் உரு எனின்’என்றும்,‘உணராதுஎனின்’என்றும்ஈரிடத்தும்இயைக்கப்பெற்றதாம்.இவர்இத்தகு உத்திகளால் நூற்பா யாத்தல் முன்னும் சுட்டப் பெற்றனவாம்; பின்னும் வருவனவாம்.

உணர் உரு எனின் அசத்து :
அசத்து என்பது சத்தற்றது; அதாவது நிலையற்றது. நிலையானது போல் தோன்றி நிலையற்று ஒழிவது அசத்தாம். அதனை ‘அல்நிலை’ எனலாம்; சத்து ‘நிலை’ யாகலின், சத்தாகிய ‘நிலை’ மெய்ப்பொருள் எனப்படும். ஆகலின், அசத்தாகிய ‘அல்நிலை’ பொய்ப் பொருள் என்பது தானே விளங்கும்.

ஒரு பொருளைக் கையால் தொட்டுணரவோ, வாயால் சுவைத்துணரவோ, கண்ணால் கண்டுணரவோ, மூக்கால் முகர்ந்துணரவோ, காதால் கேட்டுணரவோ கூடுமெனின் அப்பொருள் நிலையாத் தன்மையுடையதாய் அழிவதேயாம் என்பதைத் தெளிவிப்பதற்கு ‘உணர் உரு எனின் அசத்து’ என்றார் ஆசிரியர்.

புல்லின்மேல் படிந்த பனிநீர் தொட்டறியவும் கண்டறியவும் கூடுவது. அப்பனிநீர், கதிரொளி பட்ட அவ்வளவில் இல்லையாய் ஒழிதல் கண்கூடு. “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே; கதிரோன் உதயத்தால் வாங்கும் பனிநீரே” என்பது ஏற்றப்பாட்டு. “புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை” என்பது நாலடிப் பாட்டு.
காலை அரும்பிப் பகலில் போதாகி மாலையில் மலர்ந்து மறுநாளில் மடிந்துபோகும் மலர் உணர் உரு உடையது. அது நாண்மலர் (ஒருநாள் வாழ்வுடைய மலர்; அன்று மலர்ந்த மலர்) ஆகி அழிவது கண்கூடு.

‘காக்கைக்கே வந்தேன்’ என ஆட்சியேற்றுக் கொண்டு இருக்கிறான் காவலன். ஆனால், அவன் தன் உடலைக் காத்துக்கொள்ளவும் இயலாமல் காக்கைக்கே இரையாகிப் போகின்ற காட்சி கண்டறியாததோ? ஊர்நோயெல்லாம் தீர்ப்பேன் என உறுதி கொண்ட மருத்துவனும், தன் நோயைத் தீர்க்கமாட்டாமல் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிடக் காணல் நாம் அறியாததோ? நிலைபேறமைந்த உயிர் குடியிருந்த குடியிருப்பாம் உடல் நிலையே இவ்வாறாயின், ஏனையவற்றைச் சொல்ல வேண்டுமோ?

இறைவன் இவ்வாறு உணர் உருவாக இருந்தால் அவன் நிலை பொருள் (சத்துப் பொருள்) ஆவானோ? ஆதலால் உணர் உரு எனின் அசத்து என்று தெளிவித்தார் ஆசிரியர்.

உணராது எனின் இன்மை :
இன்மை யாவது இல்லாமை; அஃதாவது பாழ்; ‘சூனியம்’ என்பதும் அது.

எவரானும் எவ்வகையானும் இறைவன் உணரப்பெறாதவன் என்றால், அவன் இருப்பவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவன் இல்லாதவன் என்றே கொள்ள நேர்ந்துவிடும் அல்லவோ!

“வானப் பூ நாறிற்று என்றுழி அது சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்று இலக்கண உரையாசிரியர்கள் சுட்டுவர். எவரும் கண்டறியாத பூவை இருப்பதென எவரே கொள்ளுவார்? அதனைப் பறித்துச் சூடுதற்கோ சூட்டுதற்கோ எவரே முயல்வார்?

முயற் கொம்பு உண்டு என்றாலோ, ஆமை மயிர்க் கம்பலம் உண்டு என்றாலோ ஏற்றுக்கொள்வார் எவர்? நாம் காணும் முயற்குக் கொம்பு இல்லை; ஆமைக்கும் மயிர் இல்லை; ஆதலால், எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் துணிவது இல்லை.

இறைவன் உண்மையை எவருமே அறிந்திலர் எனின், அவன் இல்லாதவன் ஆய்விடுவான். ஆதலால், “உணராது எனின் இன்மை” என்றார். அவன் உணரப் படாதவன் அல்லன்; அவன் உணரவும் படுவான் என்பது கருத்தாம்.

‘இன்’ என்பது ஆகலின் என்பதன் தொகுத்தலாய் நின்றது.

இருதிறன் அல்லது சிவசத்தாம் :
இறை, முற்படக் கூறிய உணர் உருவும் அன்று; பிற்படக் கூறிய உணரா உருவும் அன்று; ஒருவகையால் அறியப்படுவதும் ஒருவகையால் அறியப்படாததும் ஆகியது. ஆதலால் சுட்டப்பெற்ற இரு வகுப்பிலும் சேர்ந்த ஒன்றன்று இறை என்பாராய் “இருதிறன் அல்லது” என்றார்.

பொய்ப்பொருளாயும் இல்பொருளாயும் இல்லாத மெய்ப்பொருளாம் இறையை, எப்பொருள் எனச் சொல்வது என்பார்க்குப் பெயரீடாகச் ‘சிவ சத்தாம்’ எனக் கூறினார். ‘இறை நிலை’ என்பது சிவசத்து என்பதன் பொருளாம்.

என மன் உலகு இரண்டு வகையின் இசைக்கும் :
“என்று நிலைபெற்ற மெய்ப்பொருள் ஆய்வுடைய பெருமக்கள், ஓராற்றான் அறியப்படுவதும் ஓராற்றான் அறியப்படாததும் ஆகிய இருவகையுடையது இறை என்று கூறுவர்” என்பது இதன் பொருளாம்.

மன்னுதல், நிலைபெறுதல்; உலகு என்பது முதல் நூற்பாவிற் சுட்டிய புலவரைக் கருதியது. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே/ நிகழ்ச்சி அவர்கட் டாகலானே” என்பது தொல்லாசிரியர் குறியீடு ஆகலின்.

இவ்விடத்துச் சில கருத்துகளைத் தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும்.
உயிர் அழிவற்றது ஆதலால் அது நிலை (சத்து) என்று கூறப்படும். தோற்ற ஒடுக்கம் இல்லாதவனாகவும் உலகுக்குத் தோற்ற ஒடுக்கம் செய்பவனாகவும் இருக்கும் இறைவனும் ‘நிலை’ என்பது தெளிவு. உயிரையும் உயிர்க்கு உயிராம் இறையையும் ஒத்த பெயரால் நிலை (சத்து) என்று சுட்டுவது தெளிவுடையதன்று என்பாராய் இறைநிலை (சிவசத்து) என்று சொல்லாட்சி கொண்டார்.

உயிரில்லா உருவப்பொருள் அருவப் பொருள்களை மெய்ப் பொருளாய்வாளர்கள் அல்நிலை (அசத்து) என்று வழங்குவர். அல்நிலையும் ஆகாமல், இறைநிலையும் ஆகாமல் இருக்கும் உயிரைத் தனிக்குறியீட்டால் வழங்கித் தெளிவுறுத்த விரும்பிய மெய்ப் பொருளாய்வாளர்கள் அதனை ‘நிலையல்நிலை’ (சதசத்து) என்று வழங்கினார்.

உயிர் தானே அறியாதது ஆதலாலும், அறிவிக்க அறியும் அறிவுடையது ஆதலாலும், அறிவிக்க அறியாத அல்நிலையும், அறிவிக்காமலே அறியும் இறைநிலையும் ஆகாமல் நிலையல் நிலையாக (சதசத்தாக)ச் சொல்லப்படும். நிலையின் இயல்வும், அல்நிலையின் இயல்வும் உடையதனை ‘நிலையல்நிலை’ என்று சொல்வது தக்கது தானே!

சத்து அசத்து சதசத்து என்பவை அந்நாளில் பெருக வழங்கியமையால் சான்றோர் அச்சொல்லாட்சிகளைப் பெருக வழங்கினர். திருமூலர்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு”

என்றும்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டி”

என்றும்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடி”

என்றும் கூறுவர். (திருமந்திரம் 1420, 2058, 2328)

இவ்விளக்கங்கள் மேல்வரும் நூற்பாவின் பொருள் விளக்கத்திற்கு வேண்டுவன ஆகலின் விரித்துரைக்கப் பெற்றனவாம்.

உலகம், உயிர், இறை எனப் பொருள் மூவகைப்படுதல் மெய்ப்பொருள் ஆய்வாளர் கண்டது. இம் மூன்றன் அறிவும் உலக அறிவு, உயிர் அறிவு, இறையறிவு (பாசஞானம், பசுஞானம், பதிஞானம்) என்பன. கல்வி கேள்விகளால் உலக அறிவும், உண்மை அறிவாம். இயற்கை அறிவால் உயிர் அறிவும், இறையருள் கூட்டலால் இறையறிவும் ஆன்மா அடையக்கூடும். ஆதலால் உலக அறிவும், உயிர் அறிவும் கடந்து, இறையறிவு பெற்றார்க்கே இறை வெளிப்பாடுறும்! அவராலேயே இறைமை உணரப்படும் என்பதாம்.

இந்நூற்பாவால், “இறைவன் உயிர்களால் உணரப்படும் உருவினன் அல்லன்; எவராலும் உணரப்படாது இருப்பானும் அல்லன்; ஆதலால், அவன் அல்நிலை (அசத்து)ப் பொருளும் அல்லன்; இல்லானும் அல்லன்; உயிர்களால் அறியப்பட்டும் அறியப்படாதும் இருக்கும் இறைநிலை (சிவசத்து)ப் பொருளாளனாம்” என்னும் கருத்தை ஆசிரியர் வலியுறுத்தினார் என்க.

ஏழாம் நூற்பா
உயிர்க்கு ஓர் இயல்வு. ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது. உயிர் எப்பொருளில் அல்லது எச் சூழலில் தோய்ந்தும் படித்தும் நிற்கிறதோ அதற்குத் தகத் தன்னை அமைத்துக் கொண்டிருத்தல் பொது விதியாம். அருவிச் சூழலை அடுத்துச் செல்வார் அகங்குளிர்ந்து அக் காட்சியில் தோய்தலும், அனற் கொதிப்பினை அடுத்து இருப்பார் அவ் வெப்புக்கு ஆட்பட்டு வெதும்புதலும் அறியாதவை அல்லவே!

மலர்க்காவில் இருப்பார் மகிழ்வும் மழலையர் மையத்தில் எய்தும் திளைப்பும் மற்றை மற்றை இடங்களில் எய்துவது உண்டோ? சார்ந்ததன் வண்ணமாதல் என்பதன்றோ இதன் அடிப்படை?

அறிவு நிலையில் வளர்ச்சியில்லாச் சிற்றறிவுயிரிகளும் தங்கள் உயிர்ப் பாதுகாவல் பொருட்டுச் சார்ந்த இடத்தின் வண்ணத்தைத் தமக்கெனக் கொண்டிருத்தல் கண்கூடாகக் காண்பார், அதன் உண்மை அறிவர். பளிங்குபோல விளக்குவது எது, சார்ந்ததன்வண்ணமாதலை?

சார்ந்ததன் வண்ணமாதல் உயிர்க்கு உண்மையை அறிவார். உயிர் உலகறிவிலே தோய்ந்து கிடக்கும்போது அதே அறிவும் பொருளாகவும், இறையறிவிலே தோய்ந்து கிடக்கும்போது அதே இறையறிவுப் பொருளாகவும் ஆகின்றது என்பதைத் தெளிவர். இத் தெளிவு இந்நூற்பாவின் விளக்கத்திற்குத் துணையாய் அமையும்.
யாவையும் சூனியம் சத்தெதிர் (சத்து எதிர் யாவையும் சூனியம்) :

சத்தாகிய இறையின் முன்னே எல்லாப் பொருள்களும் இல்லாப் பொருள்களேயாம் என்பது இத்தொடரின் பொருள்.

படைப்பாளி ஒருவனுக்குத் தான் படைத்த படைப்புப் பொருளின் உண்மைநிலை தெரியாமல் போகாதே! அவன்முன் பொய்ப்பொருள் மெய் பொருளாகவோ, போலிப்பொருள் உண்மைப் பொருளாகவோ தோன்ற முடியாதே! தேர்ந்த வழக்காடிமுன் பொய்மைத் திரை கிழிபடல் காண்பார், இறைமுன் பொய்மை நிலைபெறும் என்பாரோ?

சிற்பி ஒருவன் ஒரு கல்லில் நாயுருவை வடிக்கின்றான். வடித்த அவனுக்குத் தான் வடித்த நாயுரு ‘கல்’ என்பது தெரியாதோ? மற்றையோர்க்கு நாயாகத் தோன்றக்கூடும். வடித்த சிற்பிக்கோ கல்லென்பது திட்டமாகத் தெரிந்த பொருளேயாம். மற்றையோர் அதனை நாயாகக் கருதினாலும், அவன் கல்லாகவே காணுகின்றான். இதனையே, “நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்னும் பழமொழி சுட்டுகின்றது. இதனை அறியாராய் ‘நாய்க்கடிக்கும் கல்லடிக்கும்’ இப்பழமொழியை வழங்கி வருகின்றனர்.

இனிர் திருமூலர், மரத்தில் செதுக்கப்பட்ட யானையைச் சுட்டி இதே கருத்தை வலியுறுத்துகின்றார்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே.

என்பது அது (திருமந். 2290).

யானையாகக் காணும்போது மரம் என்பது தெரியவில்லை. மரமாகக் காணும்போது யானை என்பது தெரியவில்லை. பூதங்களாகக் காணும்போது இறைமை தெரியவில்லை; இறைமையாகக் காணும்போது பூதங்கள் தெரியவில்லை என்பது இதன் பொருளாம். இக்காட்சி உயிர்களின் காட்சியாம். ஆனால், இறையின் முன் சார்ந்ததன் வண்ணமாதல் இல்லையே! மெய்ப்பொருளின் முன் பொய்ப்பொருள் மெய்ப்பொருளாகத் தோற்றங் காட்டமுடியுமோ? ஆகலின், சத்தெதிர் யாவையும் சூனியம் என்றார். சூனியும் இவண் இன்மையைக் குறிக்காமல் நிலை
பேறின்மையைக் குறித்ததாம்.

ஆகலின், சத்தே அறியாது :
ஆதலால் இறை பொய்ப்பொருளை மெய்ப்பொருளாக மயங்கக் கொள்ளாது என்பது பொருள். சொல்லிய இதனால் ஆன்மா மயங்கக் கொள்ளும் என்பதையும் வெளிப்படுத்தினார். இனி, உலகியற் பொருள்கள் தாம் இறையை அறியுமோ என்று வினவுவார் உளராயின், அவர்க்கு விடையாக ‘அசத்து இலது அறியாது’ என்றார்.

அசத்து இலது; (ஆகலின்) அறியாது :
அசத்து எனப்படும் உலகியற் பொருள்கள் நிலையில்லாதவை மட்டுமன்றி, உயிரில்லாதவையுமாம். உயிருடையவைக்கன்றோ அறிவு நலப்பேறுண்டு. அறிவு நலப்பேறுக்கு இடமாகிய உயிர் தாமும் இல்லாத பொருள்கள், இறையை அறியுமோ என்று வினவ வேண்டுவதே இல்லை. அவை அறியமாட்டா என்பது தெளிவு.

இரண்டலா ஆன்மா :
உலகியற் பொருள்கள் என்றும், இறையென்றும் சுட்டப்பெற்ற இரண்டும் அல்லாதது ஆன்மாவாம். உலகியற் பொருள்களுள் ஆன்மா ஒன்று என்றால், அதற்கு உயிரில்லை. உயிரில்லை ஆகவே அறிவும் இல்லையாம். ஆன்மா இறையாம் என்னின், அறிவிக்க அறியும் சிறுமையுடையதில்லையாம். அது தானே அறியும் பெருமையுடையதாம். ஆதலால் இவ்விரண்டும் அல்லாதது ஆன்மா என்றார்.

இருதிறன் அறிவுளது :
ஆன்மாவின் அறிவுநிலை இன்னதென விளக்குவாராய் ‘இரு திறன் அறிவுளது’ என்றார் ஆசிரியர். இருதிறன் அறிவு என்பன உலகியல் அறிவும், இறையறிவுமாம்.

உலகியலில் அழுந்தி நிற்குங்கால் உலகியல் அறிவும், திருவருள் கூட்டுங்கால் இறையறிவும் ஆன்மா எய்துதல் உண்மையால், ‘இருதிறன் அறிவுளது’ என்றார்.

உயிர், உலகையும் அறியும்; இறையையும் அறியும் என்றும், உயிர் உலகாலும் அறிவுறும், இறையாலும் அறிவுறும் என்றும் கொள்ளக் கிடக்கின்றது. ‘இருதிறன் அறிவுளது’ என்னும் இத்தொடரமைதி.

இன்பத்தை இரண்டாக வகுத்தனர். அவை, இம்மை இன்பம் மறுமை இன்பம் என்றும், சிற்றின்பம் பேரின்பம் என்றும் குறிக்கப்படுவன. இவ்விருவகை இன்பமும் துய்த்தற்கு ஆன்மாவினநிலை இடனாக உள்ளது. உலகியலில் தோய்ந்து நின்று இம்மையின்பம் எய்துதற்கும், இறையருளில் தலைப்பட்டுத் துறக்க இன்பம் அல்லது மறுமை இன்பம் எய்துதற்கும் ஆன்மாவால் கூடும் என்றும் முதல்நிலை குடும்ப இன்ப அளவே அளவாய் அமைதலும் நிறைநிலை உயிரெலாம் தளிர்ப்புற இன்ப அன்புறும் அளவுக்குப் படியேறுதலும் கூடும் என்றும் அறிய வலியுறுத்தினார் ஆசிரியர் தொல்காப்பியர்.

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என அவர் கூறுவார் (தொல். கற்பு. 51) இதில், தூயவாழ்வு நெறியின் முற்பகுதி, இம்மையின்பத் துய்ப்பும், பிற்பகுதி மறுமையின்பங்கருதிய கடைப்பிடியுமாதல் உணர்வார் ஆன்மாவின் இருதிறன் அறிவு நலங்களையும் அறிந்து மகிழ்வார்.

அசத்தை அறிவதும் சத்தால் அறிவிக்கப்பெறுவதும் ஆகிய ஆன்மா, ‘சதசத்து’ என்று சொல்லப்படும். சத்தும் அசத்தும் இணைதலால் பெற்றது அப்பெயர். அது தமிழில் ‘நிலை அல் நிலை’ என ஆறாம் நூற்பாவில் ஆளப்பெற்றது அறிக. நிலையாகிய சத்தும், அல்நிலையாகிய அசத்தும் இணைதலால் ‘நிலை அல் நிலை’ எனல் முறையாம்.

நூற்பா :

யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியா(து) அசத்தில் தறியா(து)
இருதிறன் அறிவுள(து) இண்டலா ஆன்மா

இறைவன் முன் உலகப் பொருள்கள் எல்லாமும் பொய்ப் பொருள்களேயாம். ஆதலால் இறை, அவற்றை மெய்யெனக் கொள்ளாது. அப்பொருள்களோ அறிவில்லாதவை; ஆதலால் அவை இறையையும் அறியமாட்டா. உலகியலில் தோய்ந்து உலகையும், இறையருளில் தோய்ந்து இறைமையையும் அறியும் தகவு ஆன்மாவுக்கே உண்டு என்பது இதன் பொருளாம்.

ஆன்மா அழிபொருள் அன்று; ஆயினும் அழிபொருளொடு கூடி அதனை அறியும். ஆன்மா இறையும் அன்று; ஆயினும் இறையருள் கூட்ட இறையறிவும் எய்தும். இத்தகும் அரிய ஆன்மநிலை வரப்பெற்றும் அதன் பயன் கொள்ளார் நிலை என்னே என்னும் ஆசிரியர் பேரிரக்கமே இப்‘போத’மாய் முகிழ்த்ததாம் என்க.

எட்டாம் நூற்பா
ஆன்மா உலகியல் அறிவு பெறுதலையும் இறையறிவு எய்துதலையும் முன் நூற்பாவிலே ஆசிரியர் சுட்டினார். இறையறிவை எவ்வாறு எய்தும் என்பார்க்கு விளக்கு முகத்தான் இந்நூற்பாவை அருளினாராம்.

அனுமன் தன் வலிமை இன்னதென அறியாதிருந்தான்; “நீ நினைத்தால் விண்ணில் தாவவும் திங்களைப் பற்றவும் வலிமை
யுடையை” என்று கூறக் கேட்ட அளவில், மேலே தாவினான் என்பது ஒரு கதை.

அருச்சுனன் போர்க்களத்தில் அயர்ந்தான்; வில்லைக் கீழே போட்டுப் போரொழிந்தான். மெய்ப்பொருள் உரைத்து மேற்கொள்ள வேண்டிய கடமையைக் கண்ணன் ஓதினான்; அருச்சுனன் வீறுபெற்றுக் கடனாற்றினான் என்பது கீதைச் செய்தி.

“அரசன் அமைச்சன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான்; அரசி மயிற்பொறியேறித் தப்பி இடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றாள்; அம்மகனை ஒருவன் எடுத்து வளர்த்துவருவான் ஆயினான்” என்று ஆசிரியர் அச்சணந்தி கூற “அவன் யாவன்?” என்று சீவகன் வினாவ, “”நீயே அவன்” என்று ஆசிரியர் உரைக்கச் சீவகன் வீறுகொண்டு வெற்றிகொண்ட செய்தி சிந்தாமணிக்கண்ணது.

இத்தகு செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டித் ‘திருவருள் குருவரு’ளாக வருதலைச் சுட்டுகிறார் ஆசிரியர். குருந்தமர நீழலில் இறைவன் அருளாற்றலால் குருவினைக்கண்டு, கோயிற்பணியிலேயே ஊன்றி என்பெலாம் உருக்கவல்ல இன்ப அன்புத் திருப்பாடல் பொழிந்த மாணிக்கவாசகர் வரலாற்றுச் செய்தி இந்நூற்பாவின் பொருளாக அமைந்துள்ளதாம்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு)
அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே.

இதனைத் “தம்முதல் குருவுமாய், தவத்தினில் உணர்த்த, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனவிட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” என இணைத்துப் பொருள்காணல் வேண்டுவதாம்.

தம்முதல் குருவுமாய் :
உயிர்கள், தமக்கு முதல்வனாகத் திகழும் இறைவனே, குருவுமாய் வந்தருளவும் பெறும் என்பது இதன் பொருள். ஆசிரியன் தன்னிடம் பயிலவரும் மாணவன் நிலைக்கு ஏற்ப இறங்கிவந்து கற்பிப்பது போலவும், தாய் தன் குழந்தையின் தளர்நடைக்கு ஏற்பத் தானும் தளர்நடையிட்டு அணைத்துச் செல்லுதல் போலவும், இறைவன் உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்பக் குருவனாக வந்தும் திருவருள் நோக்காலும் திருவருள் வாக்காலும் பாலிப்பான் என்பதாம்.

தவத்தினில் உணர்த்த :
எல்லா உயிர்களுக்கும் குருவனாக வந்து இறைவன் உணர்த்துவனோ என வினாவுவார்க்கு மறுமொழியாகத் ‘தவத்தினில் உணர்த்த’ என்றார். பக்குவநிலையுற்ற ஆன்மாவுக்கே உணர்த்துதற்குக் குருவாக வருவன் இறைவன் என்றாராம்.

உலகியல் அறிவுச் செய்தியையே பக்குவம் அறியார்க்குச் சொல்லுதல் இல்லையாகக் காண்கிறோம் அல்லவோ! எல்லாச் செய்திகளையும் எல்லாரிடத்தும் சொல்லுகின்றோமோ? பொதுமக்கள் செய்தியும் புலமக்கள் செய்தியும் ஒன்றாக இருப்பது இல்லையே! கீழ்நிலை அரிவரிக் கல்விக்கும் மேலைநிலை ஆய்வுக் கல்விக்கும் எத்துணை இடைவெளி? அவையறிதல் என்பது கேட்பார் நிலையறிந்து பேசுதல் அன்றோ! அவ்வாறாக இறைவன் குருவனாக வந்து அருளுதல் தவமுடையார்க்கு வாய்க்கும் என்றார். ‘தவமும் தவமுடையார்க்கே ஆம்’ என்றார் திருவள்ளுவர். தவத்தோர்க்கே இறைவன் குருவனாக வரப்பெறும் பேறு வாய்க்கும் என்றார் மெய்கண்டார். தவப்பேறு உடைமையாலேதான் உணர்த்தவருவான் இறைவன் என்பதாம்!

இனித் தவப்பேறுதான் என்ன என்பார்க்கு, “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்குரு” என்பது தமிழநெறி. தன்துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துயர் செய்யாமையுமே உருவாக உடையது தவம் எனின், அத்தவம் உடையானே செந்தண்மை அந்தணன் அல்லனோ! அவனே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ அல்லனோ! அவனுக்கு இறைவன். ‘புறம்புறம் திரியும் செல்வனாக’ இருக்கும்போது குருவனாக அருள் பாலித்தல் அரிதன்றே!

கரட்டு நிலத்தே எவரே விதைப்பார்? காதுகொடுத்துக் கேளானுக்கு எவரே உரைப்பார்?

இறைவன் குருவனாய் என்ன உணர்த்துவன்?

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென (உணர்த்த) :
வேந்தன் மகன் ஒருவன் வேடரிடையே வளர்ந்து, தன்னை வேந்தன் மகன் என்பதைச் சிறிதும் உணரானாய் அவ்வேடன் உண்பன உண்டு, உடுப்பன உடுத்து, செய்வன செய்து, வளருமாறு வளர்வது போல, நீயும் ஐம்புலங்களாகிய வேடர்களிடேயே உன்னை மறந்து வளர்கின்றாய்; வேந்தன் மகன் தன்னை வேந்தன் மகன் என்பதை உணராது மயங்கிக் கிடப்பது போல, நீயும் ஐம்புல வேட்டைக் காட்டில் வேட்யைாடி அதிலேயே தோய்ந்து உன் அரிதில் அரிதாம் மானிடப் பிறப்பை மறந்தாய்; நீ செயற்கருஞ் செயல் செய்தற்கு உரிமையாளன்; உன்னை அறி; உடனை உடையானை அறி; உண்மை அறி என்று அறிவுறுத்திய காலை அவன் அறிவறிந்து மெய்யுணர்வு பெறுவன் என்பதாம்.

ஆதன், தன்னை அறியா நிலையில் புலங்களின் குறும்புகட்கு ஆட்பட்டு, “புலக்குறும்புகளுக்கு ஆட்பட்டுளேன்” என்னும் எண்ணம் தானும் இல்லாமல் மயங்கிக் கிடத்தலை அறிந்தே ‘அயர்ந்தனை’ என்றும், அந் நிலையிலேயே தடிப்பேறி மேலும் மேலும் தோய்ந்து நிற்றலால் ‘வளர்ந்து’ என்றும் ஆசிரியர் உரைத்தார். “அடிமையுள் அடிமை, தான் அடிமை என்பதும் உணராத அடிமை” அல்லவோ! அவ்வடிமையே பெருமை என நினைவது அதனினும் வடிகட்டிய அடிமைநிலை அல்லவோ! ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலிததே’ என்னும் தொல்லாசிரியர் நல்லுரை போற்றத்தக்கதாம்.

ஆதன், பக்குவ நிலையறிந்து நற்குருவன் அவனை நண்ணி அவனுக்கு அருளுரைக்கப் பெறுவன் என்பதாம். அருளுரை பெற்ற பக்குவன் என செய்வன் என்பார்க்கு மேலே விளக்குவார்.

விட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே :
விட்டு என்பது நீங்கி, விலகி என்னும் பொருள் தருவது ஆயினும், ‘உணர்த்தவிட்டு’ என்று முற்சொல்லோடு இணைந்தும், ‘விட்டு அன்னியம் இன்மையின்’ என வருஞ்சொற்களோடும் இணைந்தும் பொருள் தருகின்றதாம். விட்டு அன்னியம் இன்மையாவது விடுத்து அயலாய் நில்லாமை. உயிரின் தன்மை அயலாய் நில்லமை அல்லது தனித்து நில்லாமையாம். உயிர் உலகைச் சார்ந்து நிற்கும்; அச்சார்பு விட்டால் இறையைச் சார்ந்து நிற்கும். இரண்டுள் ஒன்றைச் சாராமல் இருத்தல் அதற்கு இயல்வு இல்லையாம். இலையோ காயோ கனியோ மரஞ்செடி கொடிகளோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பற்றுவிட்டால் ஆங்கிருந்து வீழ்ந்து நிலத்தைச் சேர்கின்றன.

கயிற்றிலோ தொடரிலோ (சங்கிலியிலோ) பிணைப்புற்று ஆடிக்கொண்டிருக்கும் ஊசல், கயிறோ தொடரோ அறுந்தால் நிலத்தையே சேர்கின்றது. இவற்றைப்போல் உயிரும் உலகச் சார்பை விடுத்தால் இறைச்சார்பை எய்திநிற்கும். இதனை, ஒன்றி உடனாதல் என்பர். ஆளுடைய பிள்ளையார் இறைபடி எய்தியமை சுட்டும் சேக்கிழார். “போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றி உடனானார்” என்று கூறினார். ஒன்றி உடனாதல் என்பதே. வடமொழியும் தமிழும் கூடிய இரு பிறப்பியாய். ‘விட்டு அன்னியமின்மை’ எனப்பட்டது. இதனை ‘அநந்நியமாதல்’ என வடமொழியால் குறிப்பர்.

முந்தை ஏழு நூற்பாக்களிலும் இறையை ஒடுங்கி, சிவசத்து, சத்து என்று கூறிய அளவின் அமைந்த ஆசிரியர், இந் நூற்பாவில் ‘முதல்’ என்றும், ‘அரன்’ என்றும் சுட்டுகிறார். ஒன்றி உடனாந்தன்மையால் உயிர். அரன் கழலில் ஒன்றும் என்றார். ‘அரன்’ என்பதும் ‘சிவன்’ என்பதும் ‘சேய்’ சேயோன் என்பனவும் ஒரு பொருள் தரும் சொற்களே. இச்சொற்கள் சிவப்பு என்னும் அடியில் பிறந்தனவே. சிவன், சேய், சேயோன் என்பவை சிவப்பின் அடியில் பிறந்தவை எனலாம்; ஆனால், அரன் என்பதுவும் சிவப்பின் அடியாகப் பிறந்ததுவோ எனின் ‘ஆம்’ என்பதே மறுமொழியாம்.

‘அர்’ என்பது சிவப்புப் பொருள்தரும் ஒரு வேர். அர்+அன் = அரன் என்பதும் சிவப்பன். சிவன் என்னும் பொருள் தருவதே. அரக்கு, அரத்தம், அரணம், அருணன், அரி முதலிய சொற்களெல்லாம் செம்மைப் பொருள் தரும் ‘அர்’ என்னும் வேர் வழிச் சொற்களே. அரக்காம்பல், அரத்தப்பட்டு, அரத்தம் முதலிய சொற்பொருளை அறிவார் அரன் என்பது சிவன் என்பதன் மற்றொரு வடிவச் சொல் என்பதை அறிவர். சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாய், செங்கதிர் வழிபாடாய் நிற்பதுவும் அறிவர். வேர்ச்சொல் பொருள் ஆயத் தலைப்பட்டார் ‘ஹரன்’ என்பதே அரனாயிற்று என ஏமாற்றமுறார். முழுமுதல் இறைவனை ஒரு தொழிற்படுத்த ஒவ்வார். ‘அர்’ என்னும் வேர்வழிச் சொற்கள் மிகப் பலவாதலின் இந்நூற் பொருளமைதிக் கேற்ப இவ்வளவில் அமைவாம்.

இந் நூற்பாவில், “உயிரோடு உயிராய் இருக்கும் இறைவன் உயிர் செய்த தவப்பேற்றின் முருகுதலால் குருவுமாகி வந்து, “ஐம்புலன்களாகிய வேடருக்குள் நின்னை மறந்து வளர்ந்தாய்; நின் பெருமையை அறிக” என்று அறிவிக்க, அவ்வேடர்களை விடுத்துப் பண்டே ஒன்றியுடனாந்
தன்மையால் முதல்வன் திருவடியை உயிர் அடையும் என்னும் கருத்துகளை ஆசிரியர் அறிய வைத்தார்.

ஒன்பதாம் நூற்பா
உயிரை உய்ப்பதற்காக இறைவன் குருவாக வந்து அருள் தலையும், உயிர் இறைவன் திருவடி நிழலை அடைதலையும் சுட்டிய ஆசிரியர் இவ்வொன்பதாம் நூற்பாவில் உயிர் இறைவன் திருவடியை அடைதற்குரிய வழிமுறைகளைச் சொல்கின்றார்.

அறிவு மூவகைப்பட்டு நிற்றலை முன்னரே கண்டோம். அவை உலக அறிவு, உயிர் அறிவு, இறை அறிவு (பாசஞானம், பசுஞானம் சிவஞானம்) என்பன.
இவற்றுள் உலக அறிவு, செயற்கை அறிவென்றும், உயிர் அறிவு, இயற்கை அறிவென்றும் குறிக்கவும் பெறும்.

உலக அறிவாம் செயற்கை அறிவு, கல்வி கேள்விகளால் உண்டாவது. உயிரறிவாம் இயற்கை அறிவு, உடற்கூறு, வழிமுறை, சூழ்நிலை ஆயவற்றால் அமைவது.

இவ்விரு வகை அறிவுக்கும் மேம்பட்டது இறையறிவு. முன்னை இருவகை அறிவாலும் இறைவனை உணரமுடியாது. இறையறிவாலேயே இறைவனை உணரமுடியும். திருவருள் கூட்ட இறையறிவு வாய்க்கப்பெற்றார்க்கே அகநோக்கு நோக்குதலும், மல நீக்கம் ஆகுதலும் வாய்க்கும். இறையறிவு வாய்க்கப்பெற்றாரும் அவ்வறிவை நிலைபெறுத்திக் கொள்வதற்காக இறைவனின் திருவைந்தெழுத்தை இடையறாது ஓதுதல் வேண்டும் என்றும் ஆசிரியர் அருள்கின்றார்.

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழ லாம்பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே.

என்பது நூற்பா.

இதனை, “ஊனக்கண் உணரா பதியை; பாசம் உணரா பதியை; ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக; உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி; எண்ணும் அஞ்செழுத்தே விதி” எனப் பகுத்துப் பொருள் காண்டல் வேண்டுமாம்.

ஊனக் கண் உணரா பதியை : (பதியை ஊனக் கண் உணரா)
ஊனம் = உடல்; குறையுடையது; கண் = அறிவு; குறையுடைய உடலொடு பொருந்திய கண்ணால் அறியும் அறிவு இறையை அறியமாட்டா கண் என்பது கண்ணாற் பெறும் அறிவைக் குறித்த
தாயினும், ஏனைப் பொறிகள் வழியாகவும் பெறும் அறிவுகளுக்கும் பொதுவாக நின்றதாம். பதியை அல்லது இறையை உயிரறிவாம் இயற்கை அறிவால் பெற இயலாது என விலக்கினார். மூவகை அறிவுகளுள் உயிரறிவு இறையை அறிவிக்கமாட்டாது எனத் தீர்த்தார். முகத்துக் கண்ணால் காணாவொண்ணாததை அகத்துக் கண்ணால் கண்டு களிக்க என்பார் திருமூலர் :

“முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே”

என்றார் அவர் (2944).

இனி, உலக அறிவால் பதியைக் காணமுடியுமோ என்பார்க்கு அதனாலும் இயலாது என்றார்.

பாசம் உணரா பதியை :
பாசமாவது உலகு. உலக அறிவாலும் இறைவனை உணர முடியாது. பாச அறிவாவது உலகு பற்றிய கல்வி. கேள்வி ஆய்வுகளாம். உயிரறிவால் காணப்பட்ட நூல்களும், பின்னே பாச அறிவாய் அமையும். உயிரறிவாலேயே காணவொண்ணாப்பதி உலக அறிவால் காணக் கூடுவன் என்பது அறவே இயலாததாம். ஆகலின் ‘பதியைப் பாசம் உணரா’ என்றார். உலக அறிவு, உயிரறிவுக் கூறுகள் பலவாகலின் ‘உணரா’ எனப் பன்மையிற் கூறினார். ‘கற்பனவும் இனி அமையும்’ என்றார் தாயுமானவர்.

“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்”

என்பது திருக்குறள். நூலறிவை, உண்மை அறிவே விஞ்சும் என்றால், உண்மை அறிவாலேயே உணரமாட்டாப் பதியை நூலறிவு உணர்த்தாது அன்றே!

இனி, இவ்விரு வகை அறிவாலும் அடைய முடியா இறையை அடையும் வழிதான் யாதோ என்பார்க்கு மேலே வழி கூறுகிறார்.

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி :
நாடி என்பது நாடுக என்னும் பொருட்டது. ஞானக் கண்ணாவது அகக்கண்; அருட்கண்; “அருளின் வழிவந்த அகக்கண்ணால் அகத்துள்ளே ஆய்க” என்றார்.

உயிரறிவாலும் உலக அறிவாலும் காண முடியாத இறையை, அகக்கண் கொண்டு காண்க என்று ஆசிரியர் அறிவுறுத்தினார்.

ஞானக் கண்ணாம் அகக்கண் ஆய்வு தலைப்பட்டபின் கண்ட காட்சியைப் பட்டினத்தார் பகர்வார் :

“தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்
என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்;
நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே!
நின்னைக் காணா மாந்தர்
தம்மையுங் காணாத் தன்னை யோரே”

என்று விளக்கினார்.

அகக்கண் கொண்டு ஆய்ந்த காலை நேர்வது என்ன என்பதை அடுத்துச் சுட்டுகிறார் ஆசிரியர்.

உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ :

அகத்தைக் கண்கொண்டு ஆயும்போது பாசம் நீங்கும் என்பதை உவமையால் விளக்குகிறார் ஆசிரியர்.

‘உரா’ என்பது ஊரா என்பதன் முதற் குறுக்கம். ‘துனை’ என்பது விரைவு என்னும் பொருள்தரும் உரிச்சொல். ‘தேர்’ என்றது பேய்த்தேர் அல்லது கானல் நீர்; ஊர்தற்கு உதவாது விரைந்து செல்லும் கானல் தேர். ‘உராத்துனைத் தேர்’ எனப் பெற்றது. என்றது கானல் நீரை; கானல் நீர் எப்படி நெருங்கிய விடத்து இல்லையாய் அகல்கின்றதோ அவ்வாறு அகக் கண்கொண்டு நோக்குவார்க்கு மலநீக்கம் தானே நிகழுமாம் என்க. ஒருவுதல்-நீங்குதல்.

பாயா வேங்கை என்பது வேங்கை மரத்தையும், ஓடாக்குதிரை என்பது குதிரை மலையையும் குறித்தாற்போல ‘ஊராத் தேர்’ என்பது பேய்த் தேரைக் குறித்ததது இதனை வெளிப்படை என இலக்கண நூலார் சுட்டுவர். கானல் நீரை இவ்வாறு சுட்டுதல் பண்டு தொட்டே பயிலும் வழக்கு என்பதை “உருவில் பேஎய் ஊராத் தேர்” எனவரும் அகப்பாடலால் (67) அறியலாம்.

பாசம் ஒருவிய பின்னை நிகழ்வு என்ன என்பார்க்குத் ‘தண்ணிழலாம் பதி’ என்றார்.

தண்ணிழலாம் பதி :
மலம் ஒருவிய பின்னே பதி தண்ணிய நிழலை அருளும் என்றார். இறைவன் திருவடி, ‘நிழல்’ எனப்பட்டதேன் எனின், பிறவியாம் வெம்மை நீக்கி, ஒன்றி உடனாகும் தன்மை அருளுதலால் தண்ணிழல் என்றார். வேந்தன் முடிமேல் அமைந்த குடைசெய்யாத நிழலை, இறைவன் அடிசெய்யும் என்பாராய்த் தண்ணிழலாம் பதி என்றார். முன்னை நூற்பாவில் ‘அரன் கழல்’ என்றமையால் நிழல் செய்வது அடி என்பதைப் பெறவைத்தார். அடியே தண்ணிழல் அருளும் எனின், திருவருள் நோக்கு முதலியவை தண்ணிழல் அருளலைச் சொல்ல வேண்டுவதில்லையாய்ப் பெறப்படும்.

கொதிப்புறும் கொடுமைகளைப் பல்கால் பல்வகையில் வேந்தனால் செய்யப்பெற்றும், இறைவன் இணையடி தமக்குத் தண்ணிழல் அருள்தலைத் துய்த்த நாவுக்கரசர் “மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும் போலிருத்தலை” அருளிச்செய்தார்.

அகக்கண் நாடுமேனும், பாசம் ஒருவுமேனும், தண்ணிழ
லாம் பதி அருளுமேனும் ஆன்மாவின் கடப்பாடு என்ன என்பதைக் கூறுவாராய் ‘விதி எண்ணுமஞ் செழுத்தே’ என்றார்.
விதி எண்ணும் அஞ்சு எழுத்தே :

வாராது வந்து வாய்த்த திருவருளை, வாளா ஒழித்துவிடல் கூடாது என்பாராய் அதனைச் சிக்கெனப் பற்றிக்கொள்ள வழியுரைக்கும் ஆசிரியர் ‘எண்ணும் அஞ்செழுத்தே விதி’ என்றார்.

பிடித்தால் போதாது; சிக்கெனப் பிடித்தல் வேண்டும்; ‘வல்லுடும்பெனப் பிடித்தல்’ வேண்டும் என்பர் அல்லவோ; அவற்றைப்போல் அஞ்செழுத்தை எண்ணினால் போதாது; ஆணையாகக் கொண்டு ஓதி ஓதித் திளைக்க வேண்டும்.

“நான் மறக்கினும் சொல்லுநா நமசிவாயவே”
“வழுக்கி வீழினும் சொல்லுநா நமசிவாயவே”

என்பனபோல் சொல்லவேண்டும் என்றார்.

அழுத்தமில்லாத பற்று அடிக்கடி சறுக்கும்; சறுக்கல் முதிர்ந்து மறந்தும் துறந்தும் போம். பாசிபடிந்த நீரில் கைவைத்த அளவில் பாசி விலகுமாப்போல் பற்றும் விலகும். கையை எடுத்த அளவில் பாசி முன்னைப்போல் கூடிவிடும். அழுத்தமில்லாத பற்றுமையால் மலமும் அப்படியே விலகும்; மீண்டும் சேரும். மலநீக்கம் முற்றாக வேண்டு
மானால், ‘விதி எண்ணும் அஞ்சு எழுத்தே’ என்றார்.

நமசிவாய என்பது ஐந்தெழுத்தோ? ‘சிவயாநம’ என்பது ஐந்தெழுத்தோ?
‘நமசிவாய’ என்பது பெயர். ‘நந்திநாமம் நமசிவாயவே’ என்றார் ஆளுடையபிள்ளையார். ‘நமச்சிவாய வாழ்க’ என்றார் ஆளுடைய அடிகள். பெயர் மந்திரமாவதில்லை. எழுத்தே மந்திரமாம் என்பாராய் எண்ணுமஞ் செழுத்தே என்றார். ‘சிவயாநம’ என்பதே ஐந்தெழுத்து மந்திரமாம்.

“அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே”

என்பது திருமந்திரம் (934).

பத்தாம் நூற்பா
மலத்தாலும் மாயையாலும் கட்டுண்ட உயிர்க்குத் தன்முனைப்பு மிக எழும். அத் தன்முனைப்பு ‘நான் எனது’ என்னும் செருக்காகக் கிளரும். நான் என்னும் செருக்குள்ள இடத்திலே பிறரொருவர் ஒட்டுதற்குக் கூடுமோ? பிறரொடு ஒட்டி ஒழுகுதற்கு அச்செருக்குத் தானும் இடந்தருமோ? நான் என்னும் செருக்கை, இருக்கையாக்கி அமர்ந்தான் ஒருவன். தானே அவ்விடத்தன்றி பிறரொருவர்க்கு இருக்க இடந் தாரான். ஆனால் தன் முனைப்பாம் நான் ஒழித்தவனோ, தன் உள்ளமாம் இருக்கையில் உலகெல்லாம் இருக்க இடந்தருவான். உலகத்தை ஆங்கு இருத்தி உழுவலன்புடைய ஊழியனாகப் பணிபுரிந்தும் உவப்புறுவான்.

இனி ‘எனது’ என்பதோ பற்றுமை, இவறன்மை, கருமித்தனம் என்பவற்றின் கூட்டுறவால் அமைவதாம். எல்லாம் தனக்கே தனக்கே என்னும் தன்னலப் பேய்வெறியால் அரவணைக்கப்பெற்றுப் பிறவிப்பயனும் எய்தானாய்ப் பிறர்நலமும் பேணானாய் வறிதே ஒழிகின்றான். இவ்வாறு நான் என்றும் எனது என்றும் கொள்ளும் செருக்கை ஒழிக்காத நிலையில் நற்பேறு எய்தல் அரிது என்றும், அவற்றை ஒழித்தார் தெய்வநிலையுறுவர் என்றும் திருவள்ளுவர் தெளிவிப்பார்.

“யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்”

என்பது அவர் வாக்கு.

யான் என்னும் செருக்குறையும் இடத்து இறைமை இறைப்பொழுதேனும் (நொடிப்பொழுதேனும்) இருத்தற்கு இடமுண்டோ? ஊனைத் திருக்கோயிலாக்கி, உணர்வை வழிபாடாக்கி, தொண்டை வணக்கமாக்கிக் கொண்டார்க்கே இறையருள் ஒன்றி உடனாகி நிற்கும் பேறு வாய்க்கும்? அந்நிலையை உயிர் எய்துதலை இயம்பி வழிகாட்ட எண்ணும் மெய்கண்டார், இப்பத்தாம் நூற்பாவில் அந்நெறிமுறைகளை முறைபெற ஓதுகின்றார் :

“அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே”

என்பது நூற்பா.

அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி நிற்பார்க்கு, மலமாயைகளொடு வல்வினையும் இல்லையாம் என்பது. இதன் சுருக்கக் குறிப்பாம்.

அவனேதானே ஆகிய அந்நெறி
அவனாவான் இறைவன்; தானாவான் ஆன்மா. திருவருளால் மெய்ப்பொருள் அறிவு தலைப்பட்டு, உள்ளகம் நோக்கி ஆய்ந்து படிநிலையேனும் உயிர் தன் செயற்கும் பணிநலப் பேற்றுக்கும் மூலமும் முதலுமாகி, தம்முதல் குருவுமாகி, தவந்தலைக்கூட்டித் தன்னொடும் ஒன்றுவிக்கும் இறைவனே முழுமுதற் காரணன் என்பதை அறிந்து கொள்வன. அதனால் அவ்விறைவன் திருவருளே, தன்னை இயக்கும் தகவினை உருகி உருகி நினைந்து தன்னை மறந்து எல்லாம் அவனே, அவன் அருளே; அவன் செயலே; அவனன்றித் தான் என்றோ தனது என்றோ ஒன்றும் இல்லை என்னும் மேலீட்டைப் பற்றிக் கொள்வான். அந்நிலையில் அவனே தானே ஆகிய இறைநெறியில் ஒன்றிப்
போவான். ஒன்றிய அவன், மேல் என் செய்வனோ எனில், ஏகனாகி இறைபணி நிற்பனாம்.

அவன் என்றும் தான் என்றும் எண்ணப்பட்ட இருமைநீங்கி அவனே தான் என்னும் ஒருமைநிலை உறுவன். அதுகால் தன் சிந்தை. தன் சொல், தன் செயல் எல்லாமும் இறைபணி என்றே கடைப்பிடிப்பான்.

இவ்வினை யான் செய்தேன்; இதன்பயனீடு இன்னது என்று எண்ணும் ஆன்ம முனைப்பு அகன்று, இறையருளால் இதனைச் செய்தேன்; இதன் பயனீடு நன்றாயின் என்ன; அன்றாயின் என்ன; அவனே பொறுப்பாளி; வில்லை, வளைத்து ஏவுகின்றான் வில்லாளி; அம்பாய்ச் செல்கின்றேன் யான்; வில்லாளியின் குறியும் வினையுமே அம்பை இயக்குவது போல இறைவன் இயக்க இயங்கும். எனக்கென வினையொன்று இல்லை என்று அவன் மேல் சுமையைப் போட்டு
விட்டுச் செல்கின்றான். அவ்வாறு செல்வானுக்கு மலம் என்ன செய்யும்? மாயை என்ன செய்யும்? இருவினைதான் என்ன செய்யும்? எல்லாமும் சென்று, நெருங்கவும் மாட்டாத இடத்தில் நிற்பானை என்ன செய்துவிட முடியும்? தோல்விகண்டு தொலைகின்றன. ஆகலின், ஆசிரியர், “மலமாயை தன்னொடு வல்வினை இன்றே” என்றார்.

சோரி உள்ள இடத்தே நீர் உள்வாங்கும்; அளறு உள்ள இடத்தே கால் உள்வாங்கும்; தொய்யும் நைவும் உள்ள இடத்தே காற்றுருளை (Tyre) வெடிக்கும். வலிய இடத்தே இவற்றின் வாலாட்டத்திற்கும் இடமில்லை அல்லவோ?
இறைவன் ஆட்கொள்ளப் பெறுதலால், “அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி” நின்ற மாணிக்கவாசகர்.

“அன்றே என்றன் ஆவியும்
 உடலும் உடைமை எல்லாமும்
 குன்றே அனையாய் என்னையாட்
 கொண்ட போதே கொண்டிலையோ
 இன்றோர் இடையூ றெனக்குண்டோ
 எண்தோள் முக்கண் எம்மானே
 நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
 நானோ இதற்கு நாயகமே”

என்று பாடும் பாட்டிலே இந்நூற்பாவின் இலக்கியமாக அவர் வாழ்வு அமைந்
திருத்தலைச் சுட்டியுள்ள அருமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாம்.

பசிப்பிணி தீர்க்கும் மருத்துவியாகத் திகழ்ந்த மணிமேகலையார் “காணார் கேளார் கால்முட மாயோர், பேணா மாந்தர் பிணிநோய் உற்றார் யாவரும் வருக” என்று அழைத்து உணவூட்டுங்காலை, ‘ஆபுத்திரன்கை அமுதசுரபி இஃது’ என்று கூறி அறப்பேற்றுப் பயனைத் தாம் கொள்ளாது ஆபுத்திரனுக்கு அருளிய திறமும், தம் கைப்பொருள் கொண்டு செய்தாராயினும் நாவுக்கரசர் நற்பெயராலேயே சாலை, சோலை, நீர்ச்சாலை எல்லாமும் அமைத்துப் புகழும் விரும்பாப் புகழ்மையில் இலங்கிய அப்பூதியடிகளார் திறமும் ‘இறைபணி’ நின்ற சீர்மைகட்கு எடுத்துக்காட்டுகளாம்.

ஓர் உயிர் துடிக்கும் துடிப்பைக் காண பொறுக்காமல் ஓர் உயிர் ஓடிச் செய்யும் உதவியே மருத்துவம் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய ஆல்பிரட்டு சுவைட்சரும், இடருக்கும் இன்னலுக்கும் ஆட்படுவோர் எங்கிருப்பினும் அங்கிருப்பேன் யானென ஓடிப்போய் உதவும் தெரசா அன்னையாரும் இறைபணி செய்வார் நிறைநிலைக்கு என்றும் எடுத்துக்காட்டாய் இலங்கத்தக்கவர்களாம்.
அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாதற்கு,

“சீவனெனச் சிவ னென்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே”

என்னும் திருமந்திரப் பாடலை ஒப்பிட்டுக் காண்க.
என்கடன் பணிசெய்து கிடப்பதே எனக் குறிக்கொண்டு உழவாரப்
படை ஏந்தி உறுபணி செய்த நாவுக்கரசர் இறைபணி செய்யும் படிமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் அருமை திருப்பாட்டு இவண் அறியத்தக்கதாம்.

“விளக்கினார் பெற்ற இன்பம்
 மெழுக்கினாற் பதிற்றி யாகும்
 துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
 தூயவிண் ணேற லாகும்
 விளக்கிட்டார் பேறு சொல்லின்
 மெய்ந்நெறி ஞான மாகும்
 அளப்பில கீதஞ் சொன்னார்க்
 கடிகள்தாம் அருளு மாறே”

என்பது அது.

இப்பத்தாம் நூற்பாவில், ஆன்மா இறைவனும் தானும் இரண்டலா நிலையை உணர்ந்து, எல்லாம் அவனே என்றும் எச்செயலும் அவன் செயலே என்றும் கொண்டு இறைபணியில் தலைப்பட அதற்கு மலம் மாயை என்பவை வினை என்பவை இல்லையாய் ஒழியும் என்று கற்பித்தார் ஆசிரியர்.

பதினொன்றாம் நூற்பா
திருவருளால் தன்னையுணர்ந்து, பின் தலைவனையுணர்ந்து, ‘அவனே தானே’ என ஆகிய ஆன்மா, தலைவன் திருவருளை நினைந்து நினைந்து அன்பில் முருகி முருகி அவனடி அடைதலையே குறியாகக் கொள்ளும் என்பதை இந்நூற்பாவில் ஆசிரியர் குறிக்கின்றார்.

ஒரு சிறிய உதவி ஒருவர் செய்தாலும் அதனைப் பெறுவார் ‘நன்றி’ எனக் கூறுவது ‘நாகரிகம்’ என்பது நானிலப் பொதுச் செய்தி.

தாய் தந்தையர் செய்த நன்றிக்கு எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்துத் தொண்டு செய்தாலும் ஈடாகமாட்டாது என்பது நயனறிந்தோர் உரை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால் செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பது பொய்யாமொழி.

ஒழுக்கத்தில் தலையாயது ‘நன்றியறிதல்’ என்பதை ஒழுக்க நூல்கள் சுட்டுகின்றன. இவ்வாறாக, இறைவன் செய்தருளும் நன்றிகள் இவ்வளவு அவ்வளவு என்று வரையறுத்தற் குரியவோ?

எண்ணெய் விளக்கோ ஆவி விளக்கோ மின் விளக்கோ ஆகட்டும், திரி விளக்கோ பொறி விளக்கோ ஆகட்டும், எவ்விளக்காயினும் கைக்காசு செலவிடாமல் கைக்கு வந்துவிடுமோ? அவை ஒளி செய்வதற்கென உரிய செலவு இல்லாமல் முடியுமோ? மாந்தன் படைத்த ஒளி விளக்குகளின் நிலைமை இவ்வாறு இருக்க, இயற்கை தந்த ஒளிவிளக்குகளின் நிலைமை என்ன? கோடி கோடி விளக்குகளை ஒருங்கே கொளுத்தி வைத்தாலும் ஒரு சிறு கோடிக்குக்கூட வாராத பேரொளிப் பிழம்பாம் திங்கள், ஞாயிறு, விண்மீன் ஆகியவை ஒளி வெள்ளப் பாய்ச்சுதலை அறிவோம் அல்லவோ? ஒரு சல்லிக் காசேனும் நாம் செலுத்துவது உண்டோ? ‘கெடு(தவணை)’ கடந்து விட்டது என்பதற்காகத் தொடர்பைத் துண்டித்தல் உண்டோ? பொறிக் கோளாறு என்று செயலற்றுப் போய்விட்டதுண்டோ? இவ்வியற்கைக் கொடையை எவ்வாறு நெஞ்சார நினைந்து போற்ற வேண்டும்?

ஒருகுட நீர் வேண்டுமானாலும் என்ன பாடு? ஆனால், கொட்டும் அருவிக்கும் கொழிக்கும் ஆற்றுக்கும் நாம் கொடுக்கும் காசென்ன? பொழியும் மழைக்கு நாம் தரும் கூலியென்ன? இயற்கைதரும் குடநீருக்கு ஒரு காசு என்று கணக்கிட்டாலும் எத்தனை எத்தனை கோடியாகக் கட்டணம் செலுத்தவேண்டும்?

இப்படியே இயற்கை வழங்கும் கொடைகளை எண்ணிப்பார்க்கும் நெஞ்சம் இயற்கையின் மேலும், இயற்கையை ஆக்கிய இறைவன் மேலும் எத்தகு பற்றுவைக்க நேரும்? இது போலிப் பற்றுமையோ? பொய்மைப் பற்றுமையோ? இல்லையே!

நிலம் வழங்கிவரும் வளங்கள் எவை எவை? அதன் கொடைக்கும் விளைவுக்கும் எல்லை யுண்டோ? தன்னுள் பொதிந்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் கனிந்து உதவக்கிடக்கும் கருவூலமாம் நிலக்கொடையை முற்றாகக் கண்டுவிட்டோமோ? “இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” என்னும் பொய்யாமொழி பொய்யாம் நாளொன்றும் உண்டோ? நெடுங்கடல் வாரி வழங்கும் நிறை வளங்களுக்கு எல்லையும் கண்டதுண்டோ? அள்ளி அள்ளியும், அள்ளவும் தொலையா அமுதக் கலனன்றோ கடல்! அக் கடலுக்கும் அந்நிலத்திற்கும் வரியாக அரசுக்குச் செலுத்துவதை அன்றி இயற்கைக்குச் செலுத்தும் கட்டணம் என்ன? நல்லதன் நலனைக் கண்டு நயக்கும் வேளையில், நன்றியுணர்வேனும் வேண்டாவோ?

எத்தனை எத்தனை எழில்! எத்தனை எத்தனை மலர்! எத்தனை எத்தனை சுவை! எத்தனை எத்தனை இசை! எத்தனை எத்தனை இன்பக் கொள்கலம் இவ்வுலகம்! இவற்றைப் படைத்த முதல்வனை நன்றியோடு நினைவு கூர்தல் கடனே யன்றோ? பேரருள் பெருக்காகத் திகழும் இறைவன்மேல் பேரன்பு கொள்ளவுமோ கூடாது?

இவற்றையெல்லாம் நினைகூரச் செய்கிறார் மெய்கண்டார். அவ்வளவோ?
குழந்தை, நிலவைக் காணவேண்டும்; காக்கையைக் காணவேண்டும்- காட்டுகிறாள் தாய். விரலை நீட்டி-கையைக் காட்டிக் காட்டுகிறாள். முகத்தைத் திருப்பித் தொலைக்காட்சித் தேர்ச்சியாளன் தொலைக் காட்சிப் பொறியில் கண்டு காட்டுவது போல் காட்டுகிறாள்! விழியைத் துலக்கி விளக்கிக் காட்டுகிறாள்! இப்படிக் காட்டுகிறானே இறைவன், ஆன்மாவுக்கு! அவ்வான்மா அறிவறியா நிலையில் அறியா தொழியினும், அறிவறிந்த போதேனும் அவன் காட்டிய திறத்தை அறிந்து ‘காதலாகிக் கசிந்துருக வேண்டும்’ அல்லவோ!

“மூடமா-மடமா-ஆயின் என்ன? என்னால் இயன்ற மட்டில் அறிவுறுத்துவேன். வேண்டா வேண்டா என்று விட்டு விலகிப் போனாலும் விட்டுவிடாமல் விடாப்பிடியாய் அறிவுறுத்தியே தீர்வேன்” என்னும் அருளாசிரியன்போல, இறைவன் அறியாதனவெல்லாம் அறிவுறுத்திக் காட்டிய அருமையை நினைந்து நினைந்து ‘காதலாகிக் கசிந்துருகுதல்’ கட்டாயம் வேண்டும் அல்லவோ!

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் :
கண்பார்த்தது என்கிறோம்; கண்ணோ பார்த்தது? ஆம்! கண்ணே பார்த்தது; அடுத்தும் வினா? கண்மட்டுமா பார்த்தது? இல்லை! கண்மட்டுமே பார்க்குமானால், உயிரிலா ஒருவனுக்கும் கண் உண்டுதானே? அவன் அக்கண்ணால் காணவேண்டும் அல்லவோ? காண முடிய
வில்லையே! அதனால் என்ன புரிகின்றது? கண்ணொடு சேர்ந்து உயிரும் காண்கிறது. உயிர் காட்டவே கண் காண்கிறது என்பது விளக்கமாம். இவ்விளக்கம் ஏற்பட்டால் மேலும் ஒரு விளக்கம் ஏற்படும் கண்டதைக் கொண்டுதானே காணாததை விளக்கவேண்டும்!

காண உள்ளத்தைக் கண்டு காட்டல் :
காணும் கண்ணுக்குக் காட்டும் உயிர் என்றால், அவ் வுயிரைக், கண்ணுக்குக் காட்டுமாறு செய்தது எது? அவ்வுயிரைக் காட்டுமாறு ஏவியதும், உடனிருந்து நடாத்தியதும் இறையே அன்றோ? இன்னும் சொன்னால் கண்ணுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் உயிரறிவு என்பது மெய்யாவதுபோல், அவ்வுயிரறிவுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் இறையறிவே அன்றோ! இறையறிவு உயிரறிவுக்கு உணர்த்த, உயிரறிவு கண்ணுக்குக் காட்டுகிறது என்றால் அவ்விறைமேல் எத்தகு பற்றுமை கொள்ளவேண்டும்?

அயரா அன்பு :
இறைவன்மேல் வைக்கவேண்டிய பற்றுமையை ‘அன்பு’ என்றார் மெய்கண்டார். எல்லாம் வல்ல அருளாளனுக்கு, உயிர்கள் அன்பேனும்-தொடர்புடையாரிடத்துக் காட்டும் அன்பேனும்-காட்டவேண்டாவோ என்றார். அவ்வன்பும் மாறும் அன்பாய்-மறக்கும் அன்பாய்-பட்டும் படாதும் தொட்டும் தொடாதும் அமைந்த அன்பாய் இருத்தல் கூடாதென, ‘அயரா அன்பு’ கொள்ளவேண்டும் என்றார்.

அன்பு செலுத்துதல் உயிரின் கடப்பாடு என்பதை வலியுறுத்துதற்கு மட்டுமன்றி, தன்னலத்தாலுங்கூட அன்பு செலுத்துதல் கட்டாயம் வேண்டும் என்பாராய்க் “காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பு செலுத்துக” என்றார்.

வேள்வித்தீயில் உயிரிகளின் உடலை அறுத்து ஊனையும் குருதியையும் சொரிந்து நோற்பார் உண்டே! அந்நோன்பைக் காட்டிலும், தன் என்பையே விறகாக்கித், தன் இறைச்சியையே அறுத்து, கனலில் இட்டுப் பொன்போல் பொரியுமாறு ஒருவன் வறுத்தான் ஆயினும், என்ன? இறைவனைக் காண்பனோ? காணான்! அவன் ‘அன்போடுருகி அகங் குழைவானே’ யானால் இறைவனைக் கண்டடைவான் என்பார் திருமூலர். மூலர் வழிவரு மூலனாராம் மெய்கண்டார். அந்நுட்பம் அறிந்தே, ‘அயரா அன்பின் அரன்கழல் செலுமே’ என்றார்.

அசைவு காணும் அன்பால் நட்பையும் காதலையுமே நிலைப்படுத்த முடியாது என்றால், இறையடியையோ அசையும் அன்பால் அடைந்துவிட முடியும்?

நூற்பா வருமாறு :

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

“காட்சியையுடைய கண்ணுக்கு ஒன்றைக் காட்டித், தானும் காண்கின்ற உயிரைப்போல, ஒன்றைக் காணுமாறு அவ்வுயிர்க்கு இறைவன் காட்டியும் கண்டும் நிற்றலால், உயிர், மறவாது போற்றும் அன்பால் இறைவன் திருவடியை அடையும்” என்பது இதன் பொருளாம்.

உயிர் அயரா அன்பால் இறையடி அடையும் என்று வழிகாட்டிய ஆசிரியர், அயரா அன்பு கைவரப்பெறும் வழியை அடுத்த நூற்பாவில் அருள்கிறார்.

பன்னிரண்டாம் நூற்பா
இறைவன் திருவடி எத்தகையதெனச் சுட்டி, மலத்தின் தன்மை இன்னதெனக் காட்டி, பக்குவமுற்ற ஆதன் செயற்பாடு இன்னதென வரையறுத்து இந்நூற்பாவொடு நூலை நிறைவிக்கிறார் ஆசிரியர். மலநீக்கமுற்ற உயிர் இலங்கறிவு, வாலறிவு, விளங்கறிவு எனப்படும். மெய்யறிவுக்கு இடமான இறைவனை ஒன்றுங்கால் அவ்வறிவின் சாயலாய் அன்றோ ஒன்றும்; ‘பனிமலை சார்ந்த பொல்லாக் கருநிறக் காக்கையும் பொன்னிறமாம்’ என்று புகல்வரே! இறையடித் தண்ணிழல் எய்திய ஆதன் எத்தகு தூய பளிங்கு வண்ணமுறுவன் என்பதை நூற்பாச் சொல்லமைதி, நடையமைதியாகிவற்றாலே ஆசிரியர் காணவைக்கும் திறன் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பஞ் சுரப்பதாம்.

செம்மலர் நோன்தாள் :
இறைவன் திருவடியைச் சுட்டும் ஆசிரியர் ‘செம்மலர் நோன்தாள்’ என்றார். செந்தாமரை மலர் போன்றது செம்பொருட் பெருமான் திருவடி. அவனே சிவன்; சீவப்பன்; சேய்; சேயோன்; அரன்; அவன் முழுதுருவும் சிவப்பெனின் அடிமட்டும் வேறு நிறமாமோ? ‘தாமரை புரையும் காமர் சேவடி’ என்றாரே பெருந்தேவனார் (குறுந். கட). இவண் நிறத்தன்மை கருதியது மட்டுமன்று; குணத்தன்மையும் கொண்டது செம்மை!

பூ என்பதும் மலர் என்பதும் ‘மென்மை’ என்னும் பொருள் தரும் சொற்கள். ‘பூவாக இருக்கிறது’ என்றும் ‘மலரினும் மெல்லியது’ என்றும் கூறுதல் அறிக. செம்மலர் ஆகிய இறைவன் திருவடி மென்மையானது என்றவர், அதற்கு வன்மையே இல்லையோ என்பார்க்கு அதன் வன்மையைச் சுட்டுதற்கு ‘நோன்தாள்’ என்றார். நோன்மை - வலிமை; தான் - அடி; மென்மைக்கு மென்மை வன்மைக்கு வன்மை!

வன்மை மென்மை என்பவை முரண்பாடுகள். வன்மையில் மென்மையும், மென்மையும் வன்மையும் இருத்தல் அருமை. ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியுமோ? பட்டவுடன் துகள் துகளாக நொறுங்கிப்போகும் வயிரம், கண்ணாடியில் பட்டவுடன் அது நொறுங்கிப்
போகின்றதே! மெலிதினும் மெலிய துகிலாடை வலிதினும் வலிதாக உழைக்கின்றதே! அஞ்சி நடுங்கும் மயில் படையையும் நடுங்கவைக்கும் பாம்பைக்கண்டு அஞ்சாது தாக்கி அதனை அஞ்சச் செய்கின்றதே! வேலை செய்தற்கு மென்மையாம் தேக்கு எத்தகு வன்மையானது! மென்மையில் அமைந்த வன்மை இவையல்லவோ?

இனி இறைவன் படைப்பு எல்லாம் ‘அவன் அவள் அது’ என்னும் முச்சுட்டால் உரைத்து முடிவன அல்லவோ?

‘அவன்’ வன்மையும், ‘அவள்’ மென்மையும் இணைந்து விளங்கும் ஈரடிகள், ஒன்று வன்மையாய் ஒன்று மென்மையாய்ச் சுட்டல் தகவே அன்றோ! ‘பெண்ணுரு ஒருதிறன்’ ஆகிய பெம்மான் திருவடி
யல்லவோ அவை? ஆதலால் மென்மையும் வன்மையும் அருளி உய்ப்பன எனலாமே! இரண்டு ஆற்றலும் இல்லாமல் உலகம் இல்லையே!

இனி, அவன் என நூலைத் தொடங்கிய ஆசிரியர், நூலின் இறுதியில் அவளைச் சுட்டுமுகத் தான் செம்மலர் மெல்லடியைச் சுட்டி, அடுத்து நோன்தாளைக் குறித்தாரோ? அவ்வாறாயின் மிகத் தகவேயன்றோ!

சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ :
இறைவன் ‘செம்மலர்’ நோன்தாளை ஆதன் சேரல் ஒட்டாது செய்வது எது? மலம்! மலம் என்பதற்கு ‘அம்’ என்னும் அடைமொழி தருவானேன்? அழகிய மலம் என்பதற்கோ? இல்லை-அம் என்னும் சுட்டு, அதன் தொல்பழந் தொடர்பு குறித்து வந்தது.

ஒரு கலத்தில் ஒரு பொருள் இருக்கிறது. அப்பொருள் கலத்தோடு ஒட்டிக் கலத்தோடு கலமாக இருந்த பொருள். அதனை முற்றாக எடுத்தபின்னும் கலத்தில் சிறிது சிறிது துகள் ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவோ! ஒட்டிக்கொண்டிருப்பதைத் துடைத்து எடுத்தாலும் நுண்துகளும், மணமும் இல்லாமல் ஒழியாவே? பின்னும் கலத்தை நீர்விட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும்! கழுவுதலும் ஒருமுறை கழுவுதல் போதாது; பல்கால் கழுவிக் கழுவித் தூய்மைபடுத்துதல் வேண்டும். அவ்வாறு கழுவாக்கால் கலத்தூய்மை கெடும். அவ்வாறே, உயிர்க்கு மலம் அகன்ற காலையும் அதன் எச்சமும் இல்லாமல் பல்கால் பன்முக முயற்சியால் மலம் இருந்த இடமும் தடமும் இல்லாவண்ணம் அகற்றல் வேண்டும். இவற்றைத் தெளிவிக்க விரும்பும் ஆசிரியர் ‘கழீஇ’ என்னும் அளபெடைச் சொல்லாட்சியைப் படைத்துக் காட்டுகிறார். எடுத்தல், பொறுக்கல், துடைத்தல், கழுவல் என்பவை ஒன்றின் ஒன்று தூய்மையுறுத்தலில் விஞ்சிச் செல்லல் அறிக. பல்கால் கழுவல் என்பது சுட்டும் ‘கழீஇ’ என்பதோ மேலும் விஞ்சல் கொள்க.

அன்பரொடு மரீஇ :
முன்னை நூற்பாவிலேயே ‘அயரா அன்பைச்’ சுட்டினார் ஆசிரியர். ‘அன்பலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்றார் நாவரசர்! அன்பே துணையாய் அமர்ந்த அரனடி அடைய, அன்பரொடு மருவுதல் வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். அயரா அன்பு ஆதனுக்கு வேண்டும் என்றவர், அன்பரொடு மருவுதலும் வேண்டும் என்றார் இந் நூற்பாவில்.

மருவுதல் கலத்தல்; நினைவிலும். சொல்லிலும், செயலிலும், கூட்டுறவிலும், வழிபாட்டிலும் எல்லாம் எல்லாம் அன்பரொடு மருவுதல் வேண்டும் என்றார். அக்கலப்பின் அருமை தோன்றுமாறே ‘மருவுதல்’ என்று கூறினார். இரண்டற்ற நிலையில் இயைவதே மருவுதலாம். ‘மருவு இனிய காதல் மனையாள்’ என்பதில் மருவுதல் பொருளருமை புலப்படும்.

‘மரு’, மணம் என்னும் பொருளது. மருதோன்றி, மருக்கொழுந்து மருந்து என்பவற்றில் மணமுண்டு. மருமகன், மருமகள், மருவீடு என்பவற்றில் மணம் உண்டு. இங்கே சொல்லிய கலப்பு ‘மணக்கலப்பு;’ அடியார் அன்பர் இடத்து மருவுதலோ ‘மனக்கலப்பு.’

அன்பின் திறமும், அன்பரொடு மருவுதல் திறமும் ஒருங்கறிந்த வள்ளலார், அன்புருவாம் இறைவனை அன்பாலேயே அகப்படுத்த இயலும் என்பதைத் தெள்ளமுதம் அள்ளுறிச் சுரப்பது போலத் தீந்தமிழில் பாடினார்:

    <div class="poem">  

“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
 அன்பெனும் குடில்புகும் அரசே!
 அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே!
 அன்பெனும் கரத்தமர் அமுதே!
 அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
 அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே!
 அன்புரு வாம்பர சிவமே!
என்பது அது.

கழுவுதலும் பல்கால் வேண்டும் என்ற ஆசிரியர், அன்பரொடு மருவுதலும் இடையீடின்றி வேண்டும் என்பாராய் ‘மரீஇ’ என அளபெடுத்தோதினார். கழுவுதல் ‘கழீஇ’ ஆயது; மருவுதல் ‘மரீஇ’ ஆயது!

அன்பர், அன்பரொடு மருவுதல் ஏன்? இனம் இனத்தோடு சேர்ந்திருத்தல் இயல்பே அல்லவோ? “சிற்றினம் அஞ்சும் பெருமை” என்ற வள்ளுவர்தாமே, “பெரியாரைத் துணைக்கோடல்” அருளினார்.

உணர்வால் ஒன்றுபடுதலுடன், உடையாலும் நடையாலும் ஒருமை காட்டுதல் உலகியல்! படைத்துறைத்கெனத் தனியுடை, தனிநடை! காவல்துறைக்கெனத் தனியுடை, தனிநடை! இவற்றைக் காணும் நாம், மெய்கண்டார் ‘அன்பரொடு மரீஇ’ என்பதன் பொருளை அறிவதுடன், மேலே சொல்லப்புகும் பொருளருமையையும் அறிந்துகொள்ளக்கூடும்.

மாலற நேயம் மலிந்தவர் வேடமும் :
மால் = மயக்கம்; அற = நீங்க; நேயம் மலிந்தவர் = இறைபணியில் தோய்ந்த துறவோர்; வேடம் = திருக்கோலம்.

அசைவு என்பது சிறிதேனும் இல்லாமல் இறைபணியில் தோய்ந்த அடியார் திருவேடமும் என்பது இதன் பொருள்.

வேடத்திலே ‘தவ’வேடமும் உண்டு; ‘அவ’வேடமும் உண்டு. ஆயினும் அடியார் திறம் வேடத்தை மதித்து, அவ்வேடத்திற்கு உரியவன் உள்ளீட்டைப்பற்றிக் கருதாமல், இறைமை அவனிடத்துத் தங்கியுளதாகக் கொண்டு வழிபடுவதேயாம் என்றார்.

‘மெய்ப்பொருள் வேந்தன்’ வரலாற்றுச் செய்தி இது: பொய்த் தவ வேடத்தான் புக்கபோதும், பொருந்தாச் செயல் செய்தபோதும், தவவேடமெனத் தாம் எண்ணிய எண்ணம் திறம்பாமல் வெற்றி கொண்டவர் அவர்! ஆட்சித் திறத்திலே வெற்றி கண்ட அவர், இறைவன் அடிமைத் திறத்திலும் வெற்றி கண்டவர்.

‘கூடா ஒழுக்கம்’ என்னும் அதிகாரத்திலே துறவோர் போலி வேடங்காட்டிச் செய்யும் புன்மைகளைக் கண்டித்தார் வள்ளுவர். அவர், ஆய்ந்து அறங்கூறி நெறிப்படுத்தவந்த திறவோர். இவரோ, இறையடிப்
பேறு எய்தும் வழி கூறவந்தவர். இவருக்கு, அவ்வாய்வு கருத்தன்று; ஆகலின் ‘மாலற நேயம் மலிந்தவர் வேடம்’ என்றார்.

எனினும், எவரையும் நம்பி ஏமாறுதல் கூடாதே என்று அருளுள்ளம் கொண்டோராய். மிகக் கருத்தாகப் பொய்வேடத்தாரை விலக்குமுகத்தான் “மாலற நேயம் மலிந்தவர் வேடம்” என்றார். அவரிடை ‘வஞ்ச மனத்தான்’ செய்கை வந்தொளியாதன்றே!

இறைவன் அடியாரை, இறைவனாகக் கொள்ளவேண்டும் என்பது சிவநெறிக்கு மட்டுமோ உண்மைச் செய்தி! உலகச் சமயங்கள் எல்லாவற்றுக்கும் பொதுச் செய்தி அல்லவோ! மெய்கண்டார். சிவநெறிச் சார்பாளர் என்னும் ஒன்றைக் கருதாமல், அவர்தம் கருத்தை மொழிபெயர்த்தால் எச்சமயத்தார்க்கும் பொருந்தும் பொதுமைநலம் உடையதேயன்றோ! ஆகலின் சமயச் சால்பையே அருளினார் என்பது சாலும்.

இனி, அடியார் கூட்டுறவும், அடியார் வேடமும் குறித்த ஆசிரியர், தெய்வத்திருக் கோயில்களையும் சுட்டி நூலை நிறைவு செய்வாராயினார்.

ஆலயம் தானும் அரனெனத் தொழுமே :
ஆலயம் = திருக்கோயில். திருக்கோயிலும் திருமதிலும் திருக்கோபுரமும் கல்லும் மண்ணும் மணலும் மரமும் செங்கலும் சுண்ணமும் வண்ணமும் என்று கருதுவார் கருதுக. ஆயின், ஆக்கப்பட்ட பொருளால் அவை அத்தகையவாயினும் அவற்றை ஆக்கியோர், ஆக்கத் தூண்டினோர், ஆக்கியதன் பயன்கொள்வோர் கல்லும் மண்ணும் பிறவும் என்றோ கருதுகின்றனர்? இறைவன் என்றே கருதி ‘இறைபணி’ தலைப்பட்டு நின்றனர். ஆதலால் ஆலயத்தையும் அரனென்றே வழிபடுக என்றார். திருக்கோபுரம் கண்ட அளவானே, தொழுதெழுந்த தொண்டர்பெற்றியைப் பெரிய புராணத்து அறிக.

பிறந்த மண்ணைப் பிரிந்து வேற்றூர் சென்ற மங்கை ஒருத்தி, பிறந்த மண்ணில் காலடி வைக்கின்றாள். வைத்தவுடன் வீழ்ந்து வணங்குகிறாள்! இது நேரில் கண்ட காட்சி; அவள் மண்ணை மண்ணாக மட்டுமோ நினைத்தாள்? அவள் அதில் தெய்வத் திருக்கோலம் கண்டல்லவோ வணங்கினாள்!

“சீரடியார் பிறந்து வளர்ந்த இம் மண்ணிலே காலடியும் படுதல் ஆகாது” என்று புறம்போய்நின்று வழிபட்ட அடியார் வரலாறு பெரியபுராணத்தில் காணப்படுவதேயன்றோ! அவர் மண்ணை மதித்த மதிப்பு அத்தகையது. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனிசிறந் தனவே” என்னும் எண்ணம், தெய்வநிலை எண்ணமேயாம்.

வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்பெறும், பெருமக்கள் வாழ்ந்த திருமனையை, அவர்தம் நினைவுக்குறியாக்கி, அவர்தம் புகழ் உடலாக அதனைப் போற்றிவருவதில் பெருமுனைப்புக் காட்டும் இந்நாள் நடைமுறையை எண்ணுவார், இறைவன் கோயில் கொண்ட இடத்தை இறைவனாகக்கருதி வழிபடுதல் புதுப் பொருளாகவோ புதுமைப் பொருளாகவோ கொள்ளார்.

அன்பராதல் அன்பரொடு மருவுதல் (அடியார் குழாத்து உறைதல்) அடியாரையும் ஆலயத்தையும் இறையாகவே கொண்டு வழிபடுதல் என்பவை ஒன்றின் ஒன்று உயர்ந்து சென்று ஒருபேரிறையோடு ஒன்றி உடனாந் திருவை அருளும் என்பதை உய்வார் உய்யும் வண்ணம் மெய்கண்டார் உரைத்தருளி நூலை நிறைவித்தார்.

“யாம்பெற்ற இன்பம் உலகும் பெறுக” என்று வழிகாட்டுவது பேரருளாளர் நிறைபெரும் இறைபணி யாம் ஆதலால் என்க!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருச்சிற்றம்பலம்

பதிப்புரை


“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று சிறப்பித்துக் கூறப்படுவது நமது தமிழகம். இங்கே வாழும் தமிழ் மக்களிடையே வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே வழிவழியாக வழங்கி வருவது சிவ நெறி என்பது ஆராய்ச்சியாளர் களின் பொதுவான கருத்து. உலக முதற்பொருளாகிய கடவுளை ஏனை எந்நாட்டவரும் இறைவன் என்பாராகத் தென்னாடுடைய தமிழர் சிவன் என்பர்; “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மணிவாசகப் பெருமான் உரைத்தருளுவ தொன்றே இதற்குப் போதிய சான்று.

சிவனை வழிபடும் செந்நெறி சிவநெறி. சிவன் என்னும் செஞ்சொல்லை வைதிக சமய வடநூல்கள் ஏற்றுக்கொண்ட பின், வடநூன் முறைகளுக்கேற்ப, இச்செந்நெறி சைவம் என்று வழங்கத் தொடங்கிற்று. மணிமேகலை முதலிய தமிழ்ப் பௌத்த நூல்கள் இதனைச் சைவமென்றே குறித்துள்ளன.

சைவத்தின் அடிப்படைக் கருத்துக்கள் பலவும் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், சைவத் திருமுறைகளிலும், வடமொழி வைதிக நூல்களிலும் இலைமறை காய்போல ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை யெல்லாம் வடித்தெடுத்துத் தொகுத்துச் சுருங்கிய வடிவில் எளிய இனிய செஞ்சொற்களால், திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவ நாயனாரால் பால் மணம் மாறாத இளமைப் பருவத்தே சிவபரம்பொருளின் திருவருள் உண்ணின் றுணர்த்த வுணர்ந்து உரைக்கப் பெற்றது இச்சிவஞான போதம். இதுபற்றியே, “வேதம் பசு, அதன்பால் மெய்யாகமம், நால்வர் ஓதும் தமிழ் அதன் உள்ளுறும் நெய்” என்றும், “சிவஞான போதம் அந்நெய்யின் உறுசுவை” என்றும் சான்றோர் ஆராய்ந்து உருவக அணி திகழ உரைத்துள்ளனர்.

இனி, வேத வேதாந்த நூல்களின் தெளி பொருளாக இருப்பது பற்றிச் சிவஞானம் சித்தாந்தம் என்றும் வழங்கும். “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என உமாபதி சிவனாரும் “ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த, சாரங் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது” எனக் குமரகுருபர அடிகளாரும் உரைப்பது காணலாம். சிவமே பரம்பொருள் என மேற்கொண்டொழுகும் இச்சிவநெறியைச் சென்ற நூற்றாண்டி லிருந்து சைவசித்தாந்தம் என்று பலரும் வழங்கி வருகின்றனர்.

சித்தாந்த சைவத்தின் முடிமணியாய்த் திகழ்வது சிவஞான போதம்; இதற்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில் சான்றோர் உரை கண்டிருக்கின்றனர். பாட்டு வடிவில் முதலுரை கண்டவர், திருத்துறையூர் அருணந்தி சிவனார்; அதற்குச் சிவஞான சித்தியார் என்பது பெயர். அவர்க்குப் பின் கொற்றவன்குடி உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்ற பெயரால் எளிய நெறியில் பாட்டு வடிவில் உரை கண்டுரைத்தார். இவ்வாறே வடமொழி வல்ல சான்றோர் ஒருவர், இச்சிவஞான போதத்தை வடமொழியில் மிகவும் எளிய நடையில் பன்னிரு சுலோகங்களாக மொழி பெயர்த்துத் தமிழறியாத வடபுலவாழ்நர்க்கு அறிவுறுத் தினார். அவர்க்குப் பின் சிவாக்கிர யோகிகள் என்பார் அவ்வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியிலே சிற்றுரையும் பேருரையுமாக உரையொன்று கண்டார். நம் நாட்டில் ஆங்கில மொழி முதலிடம் பெற்ற காலத்தில் சைவத்திரு.ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள் சிவஞான போதப் பொருளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்பு, டாக்டர் பென்னெத் (Dr. Bennet) முதலிய ஆங்கில நாட்டார் ஆங்கிலத்திலும், ஷாம்ரஸ் (Schomorus) என்ற ஜர்மானியர் ஜெர்மனியிலும் எழுதினர். புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் பிரெஞ்சு மொழியில் சிவஞான போதப் பொருளை எழுதினாரென்று கேள்விப்படுகிறோம்; அதன் உண்மை தெரியவில்லை.

இனி, சிவஞான போதத்துக்கு உரைவடிவில் பொருளுரைத்த சான்றோர் பலர். சிவஞான போதத்திற் காணப்படும் வார்த்திகமாகிய பொழிப்பும், மேற்கோள் ஏது எடுத்துக்காட்டுக்களும் மெய்கண்ட தேவராலே எழுதப்பட்டன என்பது பெருவழக்கு. அவை மெய்கண்ட தேவரால் அறிவுறுத்தப் பெற்று அவருடைய மாணவர்களுள் ஒருவரால் எழுதப்பட்டனவாகலாம் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவ்வார்த்திகத்துக்குப் பின், பாண்டிப்பெருமாள் என்பார் ஒரு விருத்தியுரை கண்டார். இப்பாண்டிப் பெருமாள் விருத்தி கிடைப்பது அரிதாயினும், அரிதின் முயன்று தருமையாதீனப் புலவர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் வித்துவான் திரு.ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் ஒரு பிரதியும், திருவாவடு துறை யாதீனப் புலவர் திரு. மீனாட்சிசுந்தரனார் ஒரு பிரதியும் தந்துதவினர்; அவர்களது நல்லுதவியை யான் என்றும் மறவேன்.

பாண்டிப் பெருமாளுடைய விருத்தியுரையில், வார்த்திகப் பொழிப்பும் பிறவும் காணப்படவில்லை; ஆயினும் உதாரண வெண்பாக்களைப் பிரமாண வெண்பாக்கள் எனக்கொண்டு அவற்றிற்கு உரை கூறப்பெற்றுள்ளது. அவர்க்குப் பின் திருவாவடு துறை ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர் பெருமக்களுள் ஒருவராய் விளங்கிய சிவஞான சுவாமிகள் சிவஞான போதத்துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பெயரால் பேருரை யொன்றும், சிற்றுரை யொன்றும் எழுதியருளினார். அவரது சிற்றுரையே இந்நூற்கண் வெளியிடப் பெறுகின்றது. அவரது வரலாற்றைப் பிறிதோரிடத்தில் காணலாம்.

திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர், அருள் திரு. சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்பால் பெரும் பொருளை ஒப்படைத்து அதன் வருவாயைக்கொண்டு சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் என்ற நூல்களில் போட்டித் தேர்வு ஒன்று நிறுவி முதலவராக வெற்றி பெறுவோர்க்குத் தக்க பரிசு தரவேண்டு மென ஒரு சீரிய ஏற்பாட்டினைச் செய்தருளினர். போட்டித் தேர்வில் ஈடுபடுவோர்க்கெனச் சிவஞான போதச் சிற்றுரையினைத் தக்க விளக்கக் குறிப்புடன் வெளியிட வேண்டுமென்று எனக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரால் ஆணை தரப்பட்டது.

இந்நூலின்கண் மாணவர்கட்கும் ஆராய்ச்சியாளர்கட்கும் பயன்படும் முறையில் உரையில் காணப்படும் இலக்கணக் குறிப்புக்களும் அரும்பொருள்களும் அடிக் குறிப்பிட்டு விளக்கப் பட்டுள்ளன. ஆராய்ச்சி நெறியின் பொருட்டு அருஞ்சொற்
பொருள் அகரநிரலும், துணை செய்த நூல்நிரலும் சேர்க்கப்
பட்டிருக் கின்றன. ஒப்பு நோக்கும் கருத்தால் ஒருசில இடங்களில் சிவஞான மாபாடியக் கருத்துக்களும் பாண்டிப் பெருமாள் உரையும் காட்டப்பட்டுள்ளன. நூன்முகத்துக்கு இன்றியமை
யாமைபற்றி நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறுகளும், நூற்பொருளைப் பயில விரும்புவோர் பொருட்டுச் சிவஞான போதச் செம்பொருளும் பிறவும் முன்னர்த் தரப்பட்டிருக்
கின்றன.

சிவஞான போதத்தின் சிறப்பையும் சிற்றுரையின் மாண்பையும் நோக்குமிடத்து எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது; எனினும், எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற்கொண்டு, அவரது அருள் ஞானத்தை நன்கு பெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரைகளைக் கருவியாகவும், திருஞான சம்பந்தர் முதலிய சிவஞானப் பெருஞ் செல்வர்களின் செம்மொழிகளை முதலாகவும் கொண்டு இப்பணியினை ஆற்றுதற்கு என் உள்ளம் ஒருப்படவே ஒருவாறு யான் இயன்ற அளவில் செய்துள்ளேன்.

இந்நிலையில், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் அருள் திரு. சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகட்கும், அவர் வழி வந்து அப்பணியினைத் தமக்கு இயல்பாகவுள்ள அருளுள்ளத் தோடு நிறைவு செய்தருளுவதுடன் மேன்மேலும் பெரும் பொருள் வழங்கிச் சைவத் தமிழ் தழைக்கும் திருப்பணிகளைத் தன்னிகரற்ற தனிப்பெரு நிலையில் செய்தருளிவரும் திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர், அருள் திரு.அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கட்கும், அவர் தம் அருட் குறிப்பின்படியே இதனை இவ்வடிவில் அழகுற அச்சிட்டுதவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் தமிழுலகு சைவவுலகுகளின் சார்பாக என் உள்ளம் கலந்த வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பல்கலைக்கழகச் சார்பில் மேற்கொண்ட இப்பணியினை யான் தொடர்ந்து ஆற்றுதற்கேற்ற வாய்ப்பும் ஊக்கமும் நல்கிச் சிறப்பிக்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி நிறுவிய தமிழ்ச் செல்வர் உயர்திரு. கரு முத்து தியாகராசன் செட்டியார் அவர்களது நன்றி என்னால் என்றும் மறக்கற் பாலதன்று. இந்நூலைச் செவ்விய முறையில் தொழில் வனப்புத் தோன்ற அச்சிட்ட திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ் அவர்கட்கு நமது நன்றி உரியதாகின்றது.

தமிழ்ப்பணியும் சமயப்பணியும் கல்வித்துறையில் சீர்த்த இடம் பெறவேண்டும் என்ற முயற்சி ஆக்கமும் அரணும் பெற்றுவரும் இந்நாளில், இந்நூலின் வெளியீட்டைத் தமிழ்மக்கள் நன்கு வரவேற்பரென்னும் துணிபுடையேன்.

அறிவு செயல் வகைகளில் ஒரு பொருளாகாத எளியனாகிய என்னை இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழிமெய்களால் பரவுகின்றேன்.

“ஞாலம் நின்புக ழேமிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே”

மதுரை,

3- 9- 1953.

ஒளவை சு. துரைசாமி

மெய்கண்ட தேவர் வரலாறு

“பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்
 பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
 கண்டவிரு தயகமல முகைக ளெல்லாம்
 கண்திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன்
 விண்டமலர்ப் பொழில் புடைசூழ் வெண்ணை மேவும்
 மெய்கண்ட தேவன் மிகு சைவநாதன்
 புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்
 பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.”

அருணந்திசிவனார்.

நம் நாட்டு இந்து சமய நூல்கள், வேதம், வேதாந்தம், ஆகமம், ஆகமாந்தம் என நான்கு வகையாகும். வேதம் இருக்கு முதல் நான்காக விரியுமாயினும், அதர்வண மொழிந்த மூன்றுமே சிறப்பாகப் பேசப்பெறும். இவற்றில் காணப்படும் மந்திரங்களிலும் பிரமாணங்களிலும் பல தெய்வக் கோட்பாடுகளும், வழிபாடுகளும் உலகியல் வாழ்வின் செம்மை நோக்கமே கருத்துக்களுமாக ஆன்றோர்களால் குறித்து ஓதப்பெறுகின்றன. ஒரு தெய்வவுணர்வும் இம்மையேயன்றி மறுமைப் பயனும் வீடுபேறும் கருதிச் சான்றோர்கள் ஆராய்ந்து கண்டுரைத்த நூல்கள் வேதாந்தம் எனப்படும். இவற்றை உபநிடதங்கள் என்பது பெருவழக்கு. பிற்காலத்தார் இந்த உபநிட தங்களை உரைத்தருளிய சான்றோர்களின் பெயரும் கட்டுரையுட் சிலவும் வேதங்களிலும் காணப்பட்டமையால் உபநிடதங்களை வேதமென்றே கூறலாயினர்.

வேதாந்தமாகிய உபநிடதங்கள் மிகப்பல. இவை சான்றோர் பலரால் பல காலங்களில் செய்யப்பட்டனவாதலால் இவற்றினிடையே ஒன்றற்கொன்று வேறுபட்டும் மாறுபட்டும் புதியவாய்க் காணப்பட்டுமுள்ள கருத்துக்கள் உளவாயின. வேதாந்த நூல்களில் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமந்திரம் கருப்பொருளாக இருப்பினும், உலகியல் நடைமுறையில் அக்கருத்து வேறுபாடுகள் நுழைந்து மக்களிடையே தெளிவை யுண்டுபண்ணவில்லை. கற்று வல்லவர்கள் தம் புலமை வன்மையாலும் சொல்வன்மையாலும் தாம் தாம் கொண்ட கருத்துக்களை வேத வேதாந்தச் சொற்றொடர்கட்குப் பொருளாக நுழைத்துரைத்தனர். இதனால் தெளிவின்மையே பயனாக விளைந்தது. பௌத்தம், ஆருகதம் முதலிய புதுச் சமயங்களின் தோற்றம் இத்தெளிவின்மையின் முடிபயனாயிற்று.

வேத வேதாந்தங்களின் ஆட்சி நிகழும்போதே அவற்றோடு ஒப்ப ஆகமங்கள் இவற்றிற்குத் தெளிவு கூறி நின்றன. உலகம் உண்டு, உயிர்கள் உண்டு, இறைவன் உண்டு எனத் தெளியக் காட்டி, ஒன்றொன்றிற்கும் உள்ள தொடர்பையும் எடுத்தோதி உய்யும் நெறி காட்டுவதில் இவ்வாகமங்கள் சிறந்து நின்றன. இவற்றின் செயலால் “உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும், இலகு மெய்ந்நெறி” இச்சிவாகம நெறியென்பதும் மக்கட்குத் தெளியப் புலப்பட்டன. சிவாகம நெறிபற்றித் தெளிவுபெற்றோர் மேற்கொண்ட ஆகமநெறி, சைவநெறி யென்றும், வேத வேதாந்தங்களுக்குத் தம் கலைப் புலமையே துணையாகக்கொண்டு காட்டினோர் காட்டியவற்றை மேற்கொண்டோரது நெறி வைதிகநெறி யென்றும் இருவகை நெறிகள் இயலுவவாயின. இவற்றுள் வைதிக நெறி வேதமோதும் உரிமையுடையோர்பாலும், சைவ நெறி ஆகம நெறி நின்றோர்பாலும் இருந்து வந்தன.

சிலகாலத்துக்குப் பின்னர், சிற்றறிவினர் சிலர் தமது கலைப் புலமையைப் பெருங்கருவியாகக் கொண்டு வைதிக நெறியே உயர்ந்ததென்றும், ஆகமநெறி தாழ்ந்ததென்றும், உண்மையுணர்வுக்குச் சிவாகமங்கள் ஆகாவென்றும் குழறுபடை செய்தனர். சமயத் துறையில் இவ்வுயர்வுதாழ்வு கற்பித்து ஒழுகுவது புறச் சமயங்கட்கு ஆக்கமாவதையும் அவர்கள் உணராதுபோயினர். புறச்சமயத்தால், கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கையும் ஐயப்படுவதாயிற்று. வைதிக ஒழுக்கம் இறந்துபோவதற்கேற்ற இடம் உண்டாயிற்று.

இடைக்காலத்தில் அதாவது கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டு களில் வாழ்ந்த சான்றோர் இச்சீர்கேட்டை நன்கு உணர்ந்து, வைதிகருக்கும் சைவருக்கும் இடையே உண்டாக்கப்பெற்ற இப்பிளவு விரிந்து தீமை விளைவியா திருப்பது குறித்து உண்மைகளை எடுத்தோதி வற்புறுத்தத் தொடங்கினர். சிவஞானப் பாலுண்டு சைவநெறியை நிலைபெறச் செய்த திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் தோன்றி வைதிக நூல்களும் சிவாகமங்களும் இறைவன் அருளிய மெய்ந் நூல்களே என்றும், இரண்டும் வேறல்ல என்றும் அறிவுறுத்தினர். “ஆகமஞ்சொன்ன இறைவனே வேதமோதினன்” என்றும் “வேதப் பயனே சைவம்” என்றும் வற்புறுத்தினர். வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம் என்று விளம்பினர். வேத நெறி தழைத்தோங்குக, மிகு சைவத்துறை விளங்குக என்று சான்றோர் விழைந்தனர். சீகண்டர் முதலியோர் வைதிக நூல்கட்கும் சிவாகமங்கட்கும் வேறுபாடு கண்டிலேம்; வேறு படுத்துக் காண்போர் உண்மை யறியாதவர் என்று எழுதிக் காட்டினர்.

வைதிக நூல்களும் சைவ நூல்களும் செய்துகொண்ட பூசலால் சிவவழிபாடு சீரழிந்தது. புறச்சமயங்கள் தோன்றி, தொண்டை நாட்டிலும் தென் பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே அவரது சமயம் போல அரசியலைக் கைப் பற்றியது. ஆரியமெனப்படும் வடமொழி, சமய நிலையங் களிலும் அரசர் உள்ளத்திலும் இடம் பெற்றது. தொண்டை நாட்டிற் பல்லவர்களின் அரசியல் மேலோங்கி யிருந்தமையின், காஞ்சி மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் கடிகைகள் (கல்லூரிகள்) உளவாயின. இதனால் மக்கள் பேசும் தமிழ் மொழி கடவுள் வழி பாட்டிலும், அரசர் செல்வாக்கிலும் போதிய இடம் பெறா தொழிந்தது. இதன் விளைவாகத் தமிழ் நாட்டுத் தமிழ் மக்களினிடையே சமயவுணர்வும் சமய வொழுக்கமும் குன்றின. வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு, மக்கள் வழங்கும் தமிழ் மொழியைப் பேணாதொழிந்தமையால் வைதிக நெறியும் பௌத்த சமண நெறியும் வேரூன்றாது வெறிதே நின்றன.

அந்நாளில் தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் தோன்றிச் சிவநெறிக்குத் தமிழ் வாயிலாகத் தொண்டு செய்தனர். திருமால் நெறியும் ஆகமத்தின் வழிவந்த சிறப்புடை நெறியாதலின் ஆழ்வார்கள் தோன்றி இனிய தமிழால் ஆகம நெறியைப் பேணலுற்றனர். ஒருபால் வைதிகர்கள் வேள்வி முதலிய செயல்களிலும் ஆகம நெறியை எதிர்த்துப் புத்துரைகண்டு வாதம் செய்வதிலும் ஈடுபட்டிருக்க, மற்றொருபால் புத்த சமணர்கள் வேள்வி முதலிய செயல்களை விலக்குதற் பொருட்டு வாது புரிவதிலும் வேள்விப் பயனாகிய உலகிய லின்பங்களில் உவர்ப்பு விளைவித்தலிலும் ஈடுபட்டிருந்தனர்; அதனால் இசைத் தமிழும் நாடகத் தமிழும் கைவிடப்பட்டன. அதனை நன்கு கண்ட தமிழ்ச்சான்றோர் இசைத் தமிழ் வாயிலாகவும் இசை நாடகத் தமிழ் வாயிலாகவும் தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் புரியலுற்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்றும், ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கட்கு இராமாநுசர் முதலியோர் அவிநயம் காட்டிப் பொருள் விரித்தனர் என்றும் சான்றோர்கள் கூறுவது இவ்வுண்மையை வற்புறுத்துகிறது. இவ்வாறு முத்தமிழ் வாயிலாக ஆகமத்தின் வழிவந்த சிவநெறி தமிழ் மக்களிடையே நன்கு வேரூன்றி நிலை பெறுவதாயிற்று. தமிழைப் புறக்கணித்த சமயங்கள் வேரூன்றாது வலி கெட்டு ஒழிந்தன. மக்கள் உள்ளத்திலும் அரசர் உள்ளத்திலும் சிவநெறி சீரிய இடம்பெற்றது. சிவநெறி பரவிற்று; சிவன் கோயில்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்றன. ஆகம நெறி நிற்கும் வடமொழி வாணர் ஆதிமுதலே அந்நெறி வழுவாது நின்று ஆதி சைவர்களாய் இருந்து வந்தனர். அவர்கள் ஆகம வழிவந்த சிறப்பும் செல்வமும் பெற்ற சிவன் கோயில்களில் திருப்பணி புரிவதும், செயல் முறைகளைக் கண்காணிக்கும் செயல் மேற்கொள்வதும் செய்துவந்தனர்.

இவ்வண்ணம் சிவாகமங்களாலும் செந்தமிழ் இசைப் பாட்டுக்களாலும் செவ்விய கிரியை முறையும் சிவபெருமானை வழிபடும் முறையும் நாட்டில் பரவவே, பல்லவ வேந்தரும், அவரைக் காலத்தால் அடுத்து உயர்வுபெற்ற பாண்டி வேந்தர்களும் சோழ வேந்தர்களும் சிவநெறி வளம்பெறுதற்குரிய திருப்பணி களையே பெரிதும் மேற்கொண்டனர். முதல் மகேந்திரனை முதலாகக் கொண்டு வழி வழி வந்த பல்லவ மன்னர்கள் ஆங்காங்குக் கற்கோயில்களும் மலைக்கோயில்களும் கட்டினர். சோழ வேந்தருள் முதல் இராசராசன் முதலிய பெருவேந்தர்கள் கோயில் கட்டும் பணியில் மேன்மை யெய்தினர். சுருங்கச் சொல்லு மிடத்து, இவ்வேந்தர்கள் தாங்கள் உறையும் அரண்மனைகளிலும் சிவபெருமானுக்கெடுக்கும் திருக்கோயில்களே செல்வ நெடுமாடங்களும், நாட்டவர்க்குரிய செல்வ நிலையங்களும், நாட்டவர்களின் கலைக்குரிய ஓவிய சிற்பக்கலை நிலையங்களு மாதல் வேண்டுமெனக் கருதினர்; அவ்வாறே விளங்குமாறும் செய்தனர். அதனாற்றான், அவ்வேந்தர்கள் உறைந்த பேரரண் மனைகள் இறந்து மறைந்து ஒழியவும் அவர்கள் எடுத்து நிறுவிய திருக்கோயில்கள் இன்றும் நின்று காட்சியளித்துக் கொண்டு நிற்கின்றன. இத்தகைய திருப்பணியால் சிவநெறி நிற்போர், நெஞ்சில் ஆகமப்பொருளும், வாயில் திருஞானசம்பந்தர் முதலியோர் அருளிய செந்தமிழ்த் திறங்களும், மெய்யில் சிவ வேடமும் கொள்வாராயினர்.

சிவாகமங்கள், சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு நெறியில் சிவஞானத்தை உரைக்கலுற்றன. காமிகம், காரணம் முதலியன திருக்கோயில்களை அமைக்கும் முறையும், அங்கு நடைபெறும் நாட்பூசனை, விழாக்கள் முதலியவற்றிற்குரிய நடைமுறையும், சிவபரம் பொருளை வழிபடும் முறையும் பிறவும் கூறத்தொடங்கின. சில ஆகமங்கள் சரியை கிரியை யோக நெறிகளையும், சில கிரியைகளையும் தனித்தும் தொகுத்தும் கூறின. சில ஞானத்தையே தொகுத்தும் வகுத்தும் விரித்தும் உரைத்தன. இச்சிவாகம ஞானம் பெற்றோர் சிவநெறியின் சிறப்பைத் தெளிய உணர்ந்து திருவருள் வாழ்வு பெற்றுச் செம்மை யெய்தக் கண்டோர், சிவாகமங்களையே பெரிதும் பயிலத் தொடங்கினர். வேந்தர்களிற் பலர் சிவாகம சீலராயினர்; மலையமான் வழி வந்தவருள் ஒருவரான மெய்ப்பொருள் வேந்தன் போலச் சிவாகமங்கட்கென உயிர்கொடுத்தோரும் உண்டு.

இங்ஙனமே, திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் வழங்கிய திருப்பதிகங்களை ஓதுவதில் பெருவிருப்பங்கொண்டு, அவற்றுள் ஓதிய சில தொடர்களையே சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் பெயராக வழங்கி இன்புற்றனர். வேறு பலர் தம்மக்கட்கும் அத்தொடர்களையே பெயராக இட்டனர். வேயனதோளி என மகளிரும், மறையணி நாவினான். என ஆடவரும் பெயரிடப் பெற்றனர். சிந்து பூந்துறை, திருந்துமாமறை எனத் தெருக்களும், வயிரத்தூண் என வயல் வாய்க்கால்களும் பெயர் பெற்றன. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட அநபாய சோழன் முதலியோரும் நம்பியாண்டார் நம்பி முதலிய சான்றோரும் ஆங்காங்குள்ள திருப்பதிகங்களையும் தில்லைப்பெருங் கோயிலி லிருந்த திருப்பதிகங்களையும் தொகுத்து முறைசெய்தனர். திருமுறை கண்டு தொகுத்து முறைசெய்த வரலாறு நாடெங்கும் பரவி மக்கள் உள்ளத்தில் பேரூக்கத்தை எழுப்பிற்று. நம்பியாரூரர் வழங்கியருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி யருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும், சிவநெறித் திருத்தொண்டர் வரலாறுகளை அறிந்து ஒழுகுதல் வேண்டுமென்ற வேட்கையை மக்கள் உள்ளத்தில் எழுப்பின. அவற்றை விரிவாய் அறியவேண்டுமென்ற விருப்பம் சோழவேந்தர் உள்ளத்தை அலைத்தது. அதற்கேற்றவாறு, சோழ வேந்தர் பேரவையில் அமைச்சுரிமை தாங்கிய சான்றோர் வழியில் சேக்கிழார் பெருமான் தோன்றித் தெய்வ மணங்கமழும் செந்தமிழ்ப் பாக்களால் திருத்தொண்டர் புராணத்தை எழுதித் தில்லைப் பெருங்கோயிலிலே வேந்தர் சூழ இருந்து அரங்கேற்றம் செய்தார். அவ்வரங்கேற்றம் ஓராண்டு நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்து கேட்டுச் சிவஞானப் பேரின்பம் துய்த்து மகிழ்ந்தனர். சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில் பேரூக்கமும் திருத்தொண்டர் வரலாற்றில் பேரன்பும் மக்களிடையே பெருகின. நாட்டில் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவ நாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி, எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது.

சிவாகம அறிவிற்குப் பயன் சிவபெருமானுடைய நற்றாளைத் தொழுவது என்பதற்கேற்பச் சிவாகமம் பயின்றோர் சிவனை மறவாது தொழுது வந்தனர். ஆயினும் சொல்லிலும் செயலிலும் சிவவழிபாடும் சிவப்பணியும் புரிவோர் பலரும், நெஞ்சில் சிவாகம அறிவுடையோர் சிலருமாகவே நாட்டில் மக்கள் உளராயினர். சிவாகமங்கள் வடமொழியில் இருந்தமையால் அவற்றைப் பயில்வோர் சிலரும், சிவவழிபாட்டுக்குரிய திருமுறைகள் செந்தமிழில் இருந்தமையால் அவற்றைப் பயின்று ஓதுவோர் பலருமாயினர். மணிவாசகப் பெருமான் முதலியோர் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவோர், பல்லோரும் ஏத்தப் பணிந்து சிவனடிக்கீழ்ச் செல்வர்” என்று அறிவுறுத்தியது கண்டு, அத்திருமுறைகட்குப் பொருளறிந்து கொள்ளும் வேட்கை யுடையவராயினர். சிவஞானம் கைவரப் பெற்றோர்க்கல்லது அத்திருமுறைப் பாடல்கள் இனிது பொருள் விளங்கா. இதனைக் கண்ட அறிஞர் அவற்றின் பொருளுணர்வுக்கு அடிப்படையாக வேண்டும் சிவஞானக் கருத்துக்களை இனிய எளிய செந்தமிழில் உணர்த்தவேண்டிய கடமையை மேற் கொண்டனர். அக்காலத்தே நம் தென்னாட்டில் ஞானவுரை நல்கும் திருமடங்கள் பல ஆங்காங்குத் தோன்றியிருந்தன. அவற்றுள் கோளகிமடம் என்பது சிறந்து விளங்கிற்று. அதன் கிளைகள் பல தமிழகமெங்கும் பரவியிருந்தன. சிவாகமக் கருத்துக்களாகிய சிவஞானத்தைச் செந்தமிழில் நல்கும் திருப்பணியை அந்தத் திருமடத்தாரே முதற்கண் மேற்கொண்டனர். அவர்கள் திருப்பணிகளுள் ஒன்றாகச் சிவாகமங்களின் கருத்துக்களைத் தொகுத்து ஞானாமிர்தம் என்ற பெயரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் ஒன்று கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றி நிலவுவதாயிற்று.

ஞானாமிர்தம் தோன்றியதும் அத்தமிழ் ஆகமத்தைக் கற்பதிலும் அறிந்தோர் சொல்லக் கேட்பதிலும் தமிழ் நாடெங்கும் மக்கட்கு வேட்கை யெழுந்தது. கோளகிமடத்தின் பிரிவுகள் எங்கெங்கு இருந்தனவோ அங்கங்கே இந்த ஆகமங்களைக் கற்பிக்கும் செயல்கள் நடந்தன. கோயிற் கிரியைகளும் இறைவனை வழிபடுதற்குரிய அறங்களும் கோயில்களிலிருந்து மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றன. அவற்றைச் சிவதருமம் என்று அந்நாளில் வாழ்ந்தவர் வழங்கினர். இச்சிவதன்மங்களை உரைக்கும் சிவாசாரியர் பலர் உண்டாயினர். திருநெல்வேலிப் பகுதியில் கோட்டைக் கருங்குளத்திலுள்ள இராசசிம்மேச்சுரத்தில் சிவதன்மம் ஓதி வந்த வரலாற்றை அவ்வூர்க் கல்வெட்டொன்று1 கூறுகிறது. இதனைக் கோளகி மடத்தாரே சிறப்பாக மேற்கொண்டிருந்தமையின் இதனைக் கோளகி தன்மம் என இராமநாதபுர வட்டத்துத் திருப்புத்தூர்ப் பகுதியினர் வழங்கி வந்தனர். 2

இனி, இச்சிவதன்மம் சிவபெருமானால் முனிவர்கட் கருளப் பெற்றதென்ற உண்மையைத் திருஞானசம்பந்தப் பெருமானே அறிவுறுத்தருளுதலால், சிவதன்மத்தையும் திருஞான சம்பந்தர் முதலியோர் அருளிய திருஞானத் திருப்பதிகங்களையும் ஒருங்கோதும் முறை உண்டாயிற்று. சீருத்திரத்தின் நடுவே திருவைந்தெழுத்து உளது; அதுவே சிவஞானமும் சிவதன்மமு மாகலின், அதனை யோதுவதே சிவதன்மம் ஓதுவதாம் என்ற முறை உண்டாயிற்று. அதனால் திருக்கோயில்களில் சீருத்திரம் ஓதுவோரும் திருப்பதிகம் ஓதுவோரும் இருந்து வந்தனர். இரண்டன்கருத்தையும் நன்கறிந்த சான்றோர் சீருத்திரம் ஓதுவதைச் சிவதன்மம் ஓதுவதென்றும், திருப்பதிகம் ஓதுவதைத் திருஞானம் ஓதுவதென்றும் வழங்கினர். இது கற்றறிந்த சான்றோர் சிறந்துள்ள இடங்களில் மட்டில் வழங்கப் பெற்றமையின், கல்வெட்டுக்களிலும் அருகிக் காணப்படுகின்றது.3

சிவதன்மத்தையும் சிவஞானத்தையும் தன்னகத்தே கொண்டு, செவ்விய இனிய தமிழில் பண்சுமந்த பாடல் வடிவில் திருமுறைகளில் அமைந்த திருப்பதிகங்களுக்கு மக்களிடையே செல்வாக்கு மிக்கு நின்றது. இவற்றைப் பயில்வோர் கூட்டம் பெருகியிருந்தது. ஆடவரும் பெண்டிருமாகிய இருபாலாரும் இத்திருப்பதிகங்களை விரும்பிப் பயின்றனர். திருமுறை தொகுத்துப் பண் வகுக்கப்பெற்ற பின் இவற்றை இசைப் பொருட்டாகப் பயில்வோர் தொகை பெருகிற்று; ஆயினும், நாம் முன்னே சொன்னபடி, “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” சொல்லுவோர் குறைந்தனர்; வடமொழி பயின்றோர்க்குத் தமிழறிவும், தமிழ்மொழி பயின்றோர்க்கு வடமொழி அறிவும் மிகமிகக் குறைந்தமையின், இரு மொழியும் பயின்றோர் சிவஞானத்தைத் தமிழில் எடுத்து ஓதவேண்டிய நிலையுண்டா யிற்று. வாகீச பண்டிதர் முதலியோர் தமிழ்ப் படுத்துரைத்த ஞானாமிர்தம் ஒன்றே இருந்து வந்தது. எனினும், அதுவும் சிவாகமங்கள் பலவற்றின் கருத்துக்களையும் திரட்டித் தரவேண்டிய நிலையில் விரிந்திருந்தது. மேலும் சிவாகமங்களுள் ஞானபாதம் முற்றும் பிரமாணமும் இலக்கணமும் கூறும் வகையிலே நின்றன. கிரியை கூறும் ஆகமப் பகுதிகளும் ஞானபாதத்துள் ஓதப்படும் தத்துவ நெறிகளையே நினைப்பிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில் பிரமாண வகையாலும் இலக்கண வகையாலும் உணர்த்தப் பெற்ற சிவஞானத்தைச் சாதித்துக் கொள்ளும் சாதனமும், அச்சாதனத்தால் விளைவித்துக் கொள்ளும் பயனும் அறிந்து திருமுறைகளை ஓதி உணர வேண்டியிருக்கின்ற உண்மையைச் சான்றோர் உணர்ந்தனர்.

உலகிற் பிறந்த மக்கள் பெறக்கூடிய பேறுகளுள் சிவஞானத் தினும் உயர்ந்த பேறுபிறிதில்லை. அதனை அளவைகளாலும் இலக்கண வகையாலும் கற்றலும் கேட்டலும் உடையராய் விட்டால் மட்டில் பயன் விளையாது; சிவஞானப் பயனைச் சாதித்துக் கொள்ளுதற்கு வேண்டிய நெறிகளை யறிவது இன்றியமையா தென்பது தெரிந்தது. மக்கட்கு இனிது எளிது விளங்கக் கூடிய வகையில் அவற்றைத் தமிழில் அறிவுறுத்தக் கூடிய ஞானாசிரியர் தோன்றவேண்டிய நிலை உண்டாயிற்று.

இந்நிலையில் பன்னிரண்டு திருமுறைகளும் சைவவுலகில் தமிழ் நன்மக்கள் செய்த தவச்செல்வங்களாய் நிரம்பின. அவற்றுட் பொதிந்து நிறைந்து நிற்கும் சிவஞானம் மக்களுடைய உள்ளத்திற் பரவவேண்டிய செவ்வியை நோக்கி நின்றது. அச்சிவஞானச் செல்வத்தை மக்கட்கு எடுத்தோதும் பெருந்தவத்தைத் தமிழ்நாடு செய்வதாயிற்று. தொண்டை நாடும், நடு நாடும், சோழ நாடும், பாண்டி நாடும், கொங்குநாடுமெனத் தமிழ் நாடு அன்று பிரிந்திருந்தது. இந்நாடுகள் பலவும் ஒருங்கே தவஞ்செய்தன வெனினும் நடுநாடு அத்தவத்தில் மேம்படுவதாயிற்று. அதற்கு முன் (அறுநூறு ஆண்டுகட்கு முன்) திருஞானம் பெற்ற பிள்ளை யெனப்படும் ஞானசம்பந்தப் பெருமான் தமிழ்நாடு முழுதும் சென்று சிவஞானத்தைப் பரப்பும் திருத்தொண்டை மேற்கொண்டு வந்த காலத்தில் அத்திருப்பணி இனிது நடத்தற்பொருட்டு இன்றியமையாத (முத்துச்) சிவிகை தந்த முன்னைத் தவமுடையது இந்த நடுநாடேயாகும். திருஞானசம்பந்தர் தோன்றுதற்குச் சில ஆண்டுகட்கு முன்னே அறந்தரு திருநாவுக்கரசரைப் பெறுதற்கும், பின்னே ஆலால சுந்தரரைப் பெறுதற்கும் இன்றியமையாத பெருந்தவத்தைச் செய்ததும் இந்த நடுநாடே. தவமும் தவமுடை யார்க்குத் தானே ஆகும்! இத்தவத்தின் விளைவாகத்தான் சிவஞானபோதம் இங்கே தோன்றுவதாயிற்று. இதன் வரன் முறையாலும் பொருளுயர்வாலும் அறிஞர்களால் ஆகமாந்தம் என்று இது சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. ஆகமாந்தமாய்த் திருவருள் ஞானத்தை அள்ளி வழங்கும் இச்சிவஞான போதத்தால் சிவாகம வறிவும் சைவத் திருமுறை ஞானமும் ஒன்றை யொன்று இன்றிய மையாத தொடர்புற்றன. இனி, இதனைத் தந்தருளிய ஆசிரியரது வரலாற்றினைக் காண்போம்.

தென்பெண்ணையாற்றுக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது நடுநாடு. இந்நாட்டின் தென்னெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் பெண்ணாகடம் என்பது நல்ல வளம் படைத்த பேரூராகும். இங்கே தூங்கானைமாடம் என்ற திருக்கோயில் உளது. இவ்விடத்தே தான், திருநாவுக்கரசர் தாம் புறச்சமயத்திலிருந்த மாசு நீங்கவேண்டிச் சிவபெருமானைத் தமக்குச் சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்தருள வேண்டிப் பெற்றார்.

இங்கே கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவநெறியொழுகும் வேளாண் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அவருள், குறுக்கையர், களப்பாளர் முதலிய குடிவகை உண்டு. அவருள் களப்பாளரது குடியொன்று இப்பெண்ணாகடத்தில் இருந்து நல்லறங்களைச் செய்து வந்தது. அவருள் அச்சுத களப்பாளர் என்பார் சிறந்து விளங்கினார். பெண்ணாகடத்தவரான இக்களப்பாளர் நடு நாட்டின் வடக்கிலோடும் தென்பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வேளாண் செல்வரொருவர் மகளை மணந்துகொண்டு இல்லிருந்து நல்லறம் புரிந்துவந்தார். அவருடைய பெருமனை இப்போது பண்டைய உருவிழந்து மேடாய்க்கிடக்கிறது. அம்மேட்டில் கிடைக்கப்பெறும் பன்னிற அருங்கற்களும் செங்கற்களும் அங்கே ஒரு பெருமனை இருந்ததென்பதைக் காட்டுகின்றன.

இப்பெருமனையின்கண் செல்வஞ் சிறக்க வாழ்ந்த களப்பாளருக்கு மகப்பேறு இல்லாத குறை அவருக்குப் பெரு வருத்தத்தை விளைவித்து வந்தது. அந்நாளில் திருவதிகைக்கு வடக்கில் பெண்ணையின் தென்கரையில் உள்ள திருத் துறையூரில் சைவாசிரியர் ஒருவர் இருந்து அந்நாட்டவர்க்குச் சிவ தீக்கை செய்து சிவநெறியை யுணர்த்தி வந்தார். அவர் சிவாகமங்கள் பலவற்றையும் கற்றுச் சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப்பெற்று விளங்கினார்.

வைதிக நூல்கள் பொதுவாகவும் சிவாகமங்கள் சிறப்பு நூல் களாகவும், இருந்து மக்கட்கு இம்மை மறுமைகட்குரிய நல்வாழ்வு நடத்தும் நல்லறங்களை உணர்த்துவன என்பதை நன்குணர்ந்து தம் பால் தீக்கைபெறுவார்க்கு அவற்றை இனிதுணர்த்தித் தானும் நெறி வழுவாது ஒழுகும் நற்பண்பு அவர்பால் அமைந்திருந்தது. அதனால், அவர்பால் மாணவரான செல்வர் பலரும், தங்கட் குண்டாகும் குறைகளைத் தெரிவித்து அறிவுபெறுவது வழக்கம். அவர்கள் பொருட்டு நல்லறிவு கொளுத்தும் வகையிலும் அச்சிவாசாரியார் மேன்மையுற்று விளங்கினார். அதனால் அவர்பால் அச்செல்வர்கட்குப் பெருமதிப்பு உண்டாகியிருந்தது. சகலாகம பண்டிதரும் அச்சுத களப்பாளர்க்கு ஞானாசிரியராக இருந்து சமயவுணர்வும் சமயவொழுக்கமும் கற்பித்து வந்தார். சிவாசாரியார்பால் களப்பாளர் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தார். அதனால், அச்சுத களப்பாளர் தமக்கு மகப்பேறில்லாத குறையைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அவர்க்குத் தெரிவித்து வந்தார். ஞானாசிரியரும், அவரைச் சைவத் திருமுறை களை நாடோறும் ஓதி வருமாறு பணித்து வந்தார்.

நாள் தவறினும் சைவத் திருமுறைகளை ஓதும் கடப் பாட்டில் தவறாது ஒழுகிய களப்பாளர், ஒரு நாள் மகப்பேற்றின் கண் தமக்கு இருக்கும் அளவிலா வேட்கையை ஆர்வத்தோடு தெரிவித்தார். உடனே, அருணந்தி சிவாச்சாரியார் என்ற அவர் திருமுறையேட்டைக் கொணர்ந்து எதிரில் வைத்து அதனைச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலும் திருமேனியுமாக எண்ணி வலம் வந்து வழிபாடியற்றி அதன்கட் கயிறு சாத்துமாறு களப்பாளருக்கு உரைத்தார். அவரும் அவ்வண்ணமே வணங்கி வழிபட்டுக் கயிறு சாத்தினார். சாத்திய விடத்து, திருஞான சம்பந்தப் பெருமான் பாடியருளிய “கண்காட்டும் நுதலானும்” என்னும் தொடக்கத்தையுடைய திருவெண்காட்டுத் திருப்பதிகத்து இரண்டாம் திருப்பாட்டுக் காட்சியளித்தது.

“பேயடையா பிரிவெய்தும், பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர், ஐயுறவேண்டா வொன்றும்,
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாம் தீவினையே”

என்பது அத்திருப்பாட்டு. அதனை ஒருமுறைக்குப் பன்முறை படித்தனர்; படிக்குந்தோறும் பேரின்பம் பெருகிற்று. அருகிருந்த ஞானாசிரியரும் ஏனைய உறவினரும் நண்பர்களும் பேருவகையால் பெருமகிழ்வுகொண்டனர். “பிள்ளையினோடு உள்ளம் நினைவா யினவே வரம் பெறுவர், ஒன்றும் ஐயுறவேண்டா” என்ற தொடர்களைச் சொல்லிச் சொல்லி எல்லையில்லாத இன்பமுற்றனர். சைவத் திருமுறைகளைத் திருவருள் முறை யென்பது இது பற்றியே என இறும்பூது கொண்டனர். சிவாசாரியரும் திருவெண்காட்டுச் சிறப்பும் முக்குள நீராட்டின் முழு நலமும் மிக்க அழகாக எடுத்துக் கூறி விரைவில் திருவெண்காடு செல்லுமாறு அச்சுதகளப்பாளருக்கு ஆணையிட்டருளினார்.

களப்பாளரும் அவர் மனைவியாரும் நல்ல நாளொன்றில் பெண்ணாகடத்தினின்றும் புறப்பட்டுத் திருவெண்காடு நோக்கிச் சென்றனர். அவருடைய நெருங்கிய உறவினருட் சிலர் உடன் வந்தனர். அனைவரும் திருக்கூடலையாற்றூர், தில்லை முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொள்ளிடத்தின் தென்கரையடைந்து திருநல்லூர்ப் பெருமணம், சீர்காழி முதலிய திருப்பதிகட்குச் சென்று சிவபரம்பொருளைப் பரவி வழிபட்டுக்கொண்டு திருவெண்காடு சென்று சேர்ந்தனர். அங்கே தக்கதோரிடம் அமைத்து நாடோறும் முக்குளத்தில் நீராடித் திருவெண் காட்டில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருவெண்காடுடைய மகாதேவர் என்பது பெயர். ஊருக்கு நாங்கூர் என்றும் கோயிலுக்குத் திருவெண்காடு என்றும் நெடுங்காலம் வரையில் பெயர்கள் வழங்கிவந்தன. மூன்றாம் இராசராச சோழ தேவர் காலத்தில் தான் அவ்வூர்க்குத் திருவெண்காடு என்ற பெயர் வழங்கியதென்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் தெரிகிறது.

திருவெண்காட்டில் திருவெண்காடுடைய மகாதேவரை வழிபட்டு வருங்காலையில், ஒருநாள் இரவு, அச்சு தகளப்பாளர் நல்லதொரு கனவு கண்டார். திருவெண்காடுடைய பெருமான் முதியவர் ஒருவர் உருவில் தோன்றி, “உனக்கு இப்பிறப்பில் மகற் பேறு உண்டாதல் அரிது, ஆயினும் நீ மெய்யன்பர் மொழிந்த திருமுறைத் திருப்பாட்டுக்களை உண்மையன்போடு நம்பி எம்மை வழிபடுகின்றாய்; ஆதலால், அத்திருப் பாட்டுக்களை நல்கிய திருஞான சம்பந்தர் போலவே திருவருள் ஞானத்தை மக்கட்கு இனிதெடுத்து உணர்த்தவல்ல நன்மகனைத் தருகின்றோம்; இனி, மனக்கவலை யொழிக” என்று சொல்லித் திருநீறளித்து மறைந் தருளினார். விழித்தெழுந்த களப்பாளர் தாம் கண்ட கனவை மனைவியாருக்குத் தெரிவித்து முன்னையினும் அன்பு பெருகத் திருக்கோயிலுக்குச் சென்று முக்குளத்தில் நீராடித் திருவெண் காடுடைய பெருமானை வணங்கி அவ்விறைவன் பேரருளை வியந்து பாராட்டிப் பரவினார்.

சின்னாட்கள் கழிந்ததும், களப்பாளருடைய மனைவியார் கருவுற்றார். அது தெரிந்த ஞானாசிரியரும் உறவினரும் நண்பரும் மிக்க மகிழ்ச்சி கொண்டார்கள். பின்னர் அவர் மனைவியார் கருவுயிர்க்கும் வரையில் திருவெண்காட்டிலேயே தங்கி இறைவனை வழிபட்டு வருவாராயினர். நண்பரும் உறவினரும் நல்வாழ்த் தியம்ப, ஞானாசிரியர் முதலிய சான்றோர் திருவெண்காடுடைய சிவபெருமான் திருவருளை நினைந்து பரவி வாழ்த்த, நல்லோரையில், களப்பாளர் மனைவியார் ஓர் ஆண் மகவைக் கருவுயிர்த்தனர். உலகு விளங்கத் தோன்றும் இளஞாயிறுபோல சிவஞானப் பேரொளி விளங்கத் தோன்றிய அச்செல்வக் குழவியைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் கண்பெற்ற பயன்பெற்றுக் கழிபேருவகையிற் களித்தனர். நாட்கள் சில சென்றன. மகப்பேறு நிகழ்ந்த வழி நிகழ்த்துதற்குரிய சடங்குகளை நிகழ்த்தினர். அப்போது அக்குழவிக்குத் திருவெண்காடுடைய பெருமானுடைய திருப்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அங்கே கூடியிருந்த சிவாசாரியரை உள்ளிட்ட சான்றோர், சுவேத வனப் பெருமாள் என்று பெயரிட்டனர்.

பின்பு, அச்சுதகளப்பாளர் தம் மனைவியாரோடும் திருமகனாரோடும் உற்றார் உறவினர் உடன்வரத் திருப்பெண்ணா கடம் வந்து சேர்ந்து இனிதிருக்கலானார். அக்காலத்தே அவர் திருவெண்காட்டிலிருந்த முக்குளம் போலப் பெண்ணாகடத்திலும் முக்குளம் அமைத்தனரெனச் செவி வழிச் செய்தி கூறுகிறது. அந்த முக்குளம் இன்றும் பெண்ணாகடத்தில் இருக்கிறது. அவர் திருவெண்காடுடைய பெருமானைத் திருத்தூங்கானை மாடத்தில் எழுந்தருள்வித்து நிவந்தங்களுக்காக நிலங்கள் விட்டாரென்றும், அவை பின்னர் மறைந்து போயின வென்றும் பெண்ணாகடத் திலுள்ள அறிஞர் கூறுகின்றனர்.

நாடோறும் முக்குளத்தில் மூழ்கித் தாம் எழுந்தருளி வைத்த திருவெண்காடுடைய பெருமானைக் களப்பாளர் அன்போடு வழி பட்டுக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் நிகழ்ந்த போரில் அவர் உயிர் கொடுத்துப் புகழ்பெற்றார். திருவெண்ணெய் நல்லூரில் இருந்த அவருடைய மைத்துனர் சுவேதவனப் பெருமாளை அவர் தாயாருடன் திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்றார். சுவேதவனப் பெருமாள் திருவெண்ணெய்நல்லூரில் தம்முடைய நல்லம்மான் மனையில் வளர்ந்து வந்தார்.

வருகையில் சுவேதவனப் பெருமாளுக்கு இரண்டாண்டுகள் நிறைந்தன; மூன்றாம் ஆண்டு நடைபெற்று வருகையில் திப்பிய நிகழ்ச்சியொன்று நடந்தது. திருக்கயிலையில் பெருங்காவல் பூண்டொழுகும் நந்தி யெம்பெருமானுடைய திருவருண் மரபில் வந்த சமய குரவர் நால்வருள் நான்காமவராகிய பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக எழுந்தருளினார். அங்கே முன்னைத் தவத்தால் முழுதுணர்வுடையவராய் இளமைத் திருமேனிகொண்டு வளர்ந்து வந்த சுவேதவனப் பெருமாள் என்னும் முனிவரைக் கண்டார். கண்டதும், அவரையடைந்து அவர்க்குத் திருவருள் ஞானமென்னும் சிவஞானச் செம்பொருளை யுணர்த்தி, சத்திய ஞான தரிசினி யென்னும் தமது ஞானாசிரியர் பெயரையே மெய்கண்டான் எனத் தமிழில் மொழி பெயர்த் திட்டு, “இப்போது நல்கிய சிவஞானத்தை இனிய தமிழில் அமைத்து எல்லா மக்கட்கும் வழங்குக” என இயம்பிச் சென்றார்.

திருவருள் ஞானம் பெற்ற மெய்கண்டதேவர், திருவெண்ணெய் நல்லூரிலிருக்கும் திருவருட்டுறை யென்னும் திருக்கோயிலில் உள்ள பொல்லாப் பிள்ளையாரை வணங்கி, வேறுபட விரிந்திருந்த கலைஞானங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றார். பின்பு, தாம் கேட்டு இன்புற்ற சிவஞானத்தைச் சிவஞானபோதம் என்று பெயரிய செந்தமிழ் நூலாக எழுதித் தம்பால் அன்போடு வந்தார் பலருக்கும் அறிவுறுத்துவாராயினர். அவருரைக்கும் சிவஞானப் பேருரை பண்டு, திருமூலர் திருஞான சம்பந்தர் முதலிய திருவருள் ஞானச்செல்வர் உரைத்தருளிய செந்தமிழ்ப் பெருநூல்களின் நுண்பொருள்களை இனிதிற் காட்டி மக்களை மெய்ந்நெறிக்கண் செலுத்தும் மேதகவு உடையதாயிருப்பதைத் தெளிந்தோர் பலரும் பெரிதெடுத்துப் பேசிப் பாராட்டினர். மெய்கண்டாரது ஞானப்புகழ் தமிழகமெங்கும் பரவுவதாயிற்று. ஆங்காங்கு வாழ்ந்த அறிஞர் பலர். மெய்கண்டார்பால் உண்மை மாணவராய் நின்று ஞானவுரை கேட்டனர். அவர் தொகை நாற்பத்தொன்பது என அறிஞர் நவிலுவர். அவருள் முதல் மாணவராகத் திகழ்ந்தவர் அவர் குலகுருவாகிய அருணந்தி சிவனாராவர். உண்மை விளக்கம் என்னும் நூலையுரைத்த மனவாசகங் கடந்தாரும், துகளறு போதம் செய்த சிற்றம்பல நாடிகளும் மெய்கண்டார் பால் மெய்யுணர்வு பெற்ற மாணவர்கள் என்பர்.

மெய்கண்டார் வரலாற்றாராய்ச்சி
1. மெய்கண்ட தேவருக்குரிய ஊராகிய பெண்ணாகடம், கடந்தை யென்றும் வழங்கும்; முடம், முடந்தையென்றும், குடம் குடந்தை யென்றும் வழங்குவதுபோலக் கடம், கடந்தையென வந்தது எனக் கோடல் வேண்டும். திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோரெல்லாம் இவ்வூரைக் கடந்தை யென்றுகுறித்தருளுகின்றார் களெனினும், பெண்ணாகடம் என்ற பெயரும் உண்டென்பது தெளிய “தண்பெண்ணாகடம்” எனத் திருநாவுக்கரசரும் “நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சும் தூங்கானை மாடம்” என்று திருஞான சம்பந்தரும் தெரிவித்தருளுவது ஈண்டு நோக்கத்தக்கது. இது “நல்ல பெண்ணாகடம்” என்று சிறப்பிக்கப்பெற்றது கண்ட பிற்காலத்துச் சான்றோரும், இதனை நல்ல பெண்ணாகடம் என்று வழங்கினர்; “நல்ல பெண்ணாகடத்துத் திருத் தூங்கானை மாடமுடைய நாயனார்”1 என்று கல்வெட்டுக்கள் கூறுவது காண்க. இதனை இடைக்காலத்தார், “வடகரை இராஜாதி ராஜ வளநாட்டு மேற்கானாட்டுப் பிரமதேயமான முடிகொண்ட சோழச் சதிர்வேதிமங்கலம்”2 என்று வழங்கியதுமுண்டு.

2.  இப்பெண்ணாகடத்துத் தலபுராணம், பெண், ஆ, கடம் எனப் பிரித்து, பெண்ணென்றது தேவகன்னியரையும், ஆ என்றது தெய்வப் பசுவாகிய காமதேனுவையும், கடம் என்றது தேவவுலக யானையாகிய அயிராவதத்தையும் குறிக்குமென்றும், எனவே, தேவகன்னியரும் காமதேனுவும் வெள்ளையானையும் வழி பட்டதுபற்றி, இவ்வூர்ப் பெண்ணாகடம் எனப் பெயர் பெறுவதா யிற்று என்றும் கூறுகிறது.

3.  இவ்வூரிலுள்ள திருக்கோயில் யானை யொன்று நிற்பது போலும் வடிவத்தில் கட்டப்பெற்றிருத்தலால், தூங்கானை மாடம் என்று சிறப்பிக்கப் பெறுகிறது. இவ்வமைப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்பே அமைந்தது என்று அந்நாளில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இதனை முறையே, “செந் தாமரையின் பூவார்கடந்தையுள் தூங்கானை மாடம்” என்றும், “நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை யுரிஞ்சும் தூங்கானை மாடம்” என்றும் விதந்து கூறுவதால் அறிகின்றோம். இங்குள்ள கல்வெட்டொன்று3 “கோச் செங்கணீச் சுர முடைய மகாதேவர்” என இவ்வூர் இறைவனைக் குறிப்பதால், இத்தூங்கானை மாடம் கோச் செங்கட் சோழ வேந்தர் கட்டியது என்பது உணரப்படும்.

4.  இவ்வூர் இன்று போலவே பண்டும் பெருவளம் படைத்த பேரூராக விளங்கிற்று. வானளாவ உயர்ந்த மாடங்களும் மதில் சூழ்ந்த பெருமனைகளும், மிகவுயர்ந்த சோலைகளுமிருந்து இவ்வூரின் நலத்தை விளக்கி நின்றன. இதனை முடிகொண்ட சோழச் சதுர் வேதிமங்கலமெனக் கல்வெட்டுக்கள்1 கூறுதற்கேற்ப, திருஞான சம்பந்தர், “கிடங்கும் மதிலும் சுலாவி யெங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தை” என்பது ஈண்டு நினைவுகூரத் தகுவது. இவ்வூர்க்கண் நிற்கும் சோலைகள், “இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தை” யெனத் திருஞானசம்பந்தர் புகழ்ந்தோதும் சிறப்புப் பெற்றுள்ளன.

5.  இனி, சேக்கிழார் பெருமான், இவ்வூரில் தோன்றிச் சிறப்புற்ற கலிக்கம்பர் வரலாறு கூறுமிடத்து, இவ்வூரை, “உரிமை யொழுக்கம் தலைநின்ற உயர்தொன்மரபில் நீடுமனைத், தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய், வரு மஞ்சுறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவில், பெருமை யுலகுபெற விளங்கும் மேல்பாற் பெண்ணாகட மூதூர்” என்று சிறப்பித்துள்ளார். இவ்வூர் வாழ்நர் ஒழுக்கங் குன்றாத மரபினரென்றும் இல்லறமாகிய நல்லறத்தில் திரியாதவ ரென்றும் சேக்கிழார் பாராட்டுவது குறிக்கொண்டு நோக்கத்தக்கது. இவ்வுலகு பெருமை பெறுமாறு இவ்வூர் விளங்குகிறது என்று சேக்கிழார் பெருமான் உரைத்ததற் கேற்ப அவர்க்குச் சிறிது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப்பின் மெய்கண்ட தேவர் தோன்றிச் சைவமும் தமிழும் உலகெலாம் புகழும் பெருமை மிகச் செய்தமை அவர் மொழியை நிறைமொழியாக்கி நிற்கிறது.

6.  இப்பெண்ணாகடம் என்னும் மூதூரின்கண் களப்பாளர் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இவ்வூர்க் கல்வெட்டு ஒன்றும் குறிக்கவில்லை; ஆயினும், இதற்கு அண்மையிலுள்ள திரு வரத் துறையில் அவர்கள் வாழ்ந்த திறத்தை அவ்வூர்க் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. மெய்கண்ட தேவரைத் தமக்குப் புதல்வராகப் பெறும் தவஞ் செய்த அச்சுதகளப்பாளர் காராளர் குலத்திற் பிறந்து செல்வஞ் சிறந்து விளங்கினா ரென்பதை, “கடந்தைமா நகரமர்ந்த காராளர் தங்குலத்தில், படர்ந்த நாம அச்சுதகளப்பாளர்” தம் பக்கல், இடம் பெறும் பல செல்வமும் எய்தி, மேம்பட்டிருந்தாரென மெய்கண்ட சிவாசாரியார் புராணம் கூறுகிறது. களப்பாளர் என்ற சிறப்பு காராளர்க்கு உண்டென்பதைக் கார்மண்டல சதகம் குறிக்கிறது. பெண்ணாகடம், விருத்தாசலம் என்ற இடங்களில் வாழும் கார்காத்த வேளாளரிடையே களப்பாளப் பிள்ளை என்ற பட்டமுடையார் இன்றும் இருந்து வருகிறார்கள். பெண்ணா கடத்திலுள்ள களப்பாளர்மேடு இதற்கு வலிய சான்றாவது முன்பே கூறப்பட்டது. இக்களப்பாளர்களைச் சிலர் களப்பிரர் எனக் கூறுவர்; அது பற்றிய ஆராய்ச்சியைப் பிறிதோரிடத்தில் காண்க.

7.  மெய்கண்டாருடைய தந்தையான அச்சுத களப்பாளரை நினைக்கும் போது, தமிழ் நாவலர் சரிதையில் அச்சுத களப்பாளர் ஒருவர் பேசப்படுவது நினைவுக்குவரும். தமிழ் நாவலர் சரிதை கூறும் அச்சுதகளப்பாளர் தில்லையில் வாழ்ந்தவர். இவர் பெண்ணாகடத்தில் வாழ்ந்தவர். தில்லை அச்சுதகளப்பாளர் காலத்தில் மூவேந்தரும் அவரால் தளையிடப்பெற்றனர் என்று அச்சரிதை கூறுகிறது; அதனைக் காண்போர்க்கு அம்மூவரும் வலிகுன்றியிருந்த காலம் அவர் காலம் என்பது இனிது விளங்கும். பெண்ணாகடமாகிய கடந்தையில் வாழ்ந்த அச்சுதகளப்பாளர் காலத்தில் தொண்டை நாடு, சோழநாடு, பாண்டிநாடு, கொங்கு நாடு என்ற எல்லா நாடுகளும் சீர்த்த வேந்தராட்சியில் இருந்தன. தொண்டை நாடும் சோழ நாடும் முதல் இராசராசன் வழிவந்த சோழ வேந்தராட்சியிலும், பாண்டி நாடு பாண்டி மன்னராட்சியிலும், கொங்கு நாடு கொங்குச் சோழராட்சியிலும் இனிது இருந்தன. இவர்கள் பலரும் அறிவு, ஆண்மை, பொருள், படை என்ற கூறுகளில் குறைவின்றியிருந்தனர். இதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களே மிக்க சான்று பகருகின்றன. சேர நாடு மட்டில் சேரலர் நாடாகிப் பின் கேரள நாடெனத் திரிந்து, தமிழ்நலம் குறைந்து மொழியிலும் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டுப் போயிற்று. சேரநாட்டவர் மிளகு வாணிகராகவும் குதிரை வாணிகராகவும் பன்னிரண்டு பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் சோழ பாண்டிய நாடுகளில் திரிந்தனரெனக் கல்வெட்டுக்கள் கட்டுரைக்கின்றன. ஆதலால் தமிழ் மூவேந்தர் தில்லை அச்சுத களப்பாளரால் தளையிடப் பெற்ற செய்தி பட்டாங்கு மேற் கொள்ளத்தக்கதொன்றன்று. ஒருகால், இவர்கள் சோழரெனவும் பாண்டியரெனவும் பட்டப்பெயர் பெற்று நிலவிய தலைவர்களாக இருக்கலாம். ஆகவே, கடந்தை அச்சுத களப்பாளர் வேறு, தில்லை அச்சுத களப்பாளர் வேறெனக் கொள்வது சிறப்பு.

8.  கடந்தை அச்சுத களப்பாளர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த செல்வர் ஒருவருடைய மகளை மணந்து கொண்ட செய்தியைச் சைவ சந்தானாசாரியர் புராணம் குறிக்கவில்லை. சைவத் திரு. மறைமலை அடிகளார், திரு வெண்ணெய்நல்லூரில் அந்நாளில் சடையப்ப வள்ளல் என்பார் வாழ்ந்தாராகலின், சிறப்புடைய அவருடைய மகளையே நம் அச்சுதகளப்பாளர் மணந்துகொண்டார் என்று குறிக்கின்றார். மற்று, திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்த காலம், மெய்கண்டார் காலத்துக்குப் பெரிதும் முற்பட்டதாகலின், அடிகள் கூற்றுப் பொருந்துவதாக இல்லை; சடையப்பர் குடியில் தோன்றிய மகளொருத்தியை அச்சுத களப்பாளர் மணந்துகொண்டார் என்பரேல் அது பொருத்தமாக இருக்கும்.

9.  அச்சுதகளப்பாளர் தமது அருமை மனைவியாருடன் திரு வெண்காடு சென்று நாடோறும் முக்குள நீரிற் படிந்து திருவெண் காடுடைய பெருமானை மகப்பேறு வேண்டி வழிபட்டு வருகையில், இறைவன், அவர் கனவில் தோன்றி, “எம்பால் பதியும் அன்ப கேள்: இம்மையிற் பாலனைப் பயக்கும் விதி நினக்கு இலை” என்று கூறினன் என்றும், அது கேட்டு, “பொன்னங் கொன்றையம் மதியொடு மௌலியிற் புனைந்தோய், மன்னு பூம்புகலிப் பெருமான் மன மகிழ்ந்து சொன் னலங்களும் பொருள்களும் சுரந்தருள் பொழிய,

“உம்மை யேத்து நற்றமிழ் மறைப் பாடலை யுன்னி
மெய்மை யாகவே நம்பினேன்; விதியிது கண்டாய்,
அம்மை காணநல் அருள்நடம் புரியுமா ரமுதே
இம்மையிற் கதியருளும் நற்புதல்வனை ஈவாய்”

என்று சொல்லிக் களப்பாளர் கைகுவித்து வணங்கினர். இறைவன், அவர்பால் அருள் கூர்ந்து,

“நன்றுனது துதிகேட்டு மகிழ்ந்தோம் முன்னம்
ஞான போனகன் நம்மைத் துதித்த பாடல்
ஒன்றுறுதி கொளும் நின்பால் உலகம் ஏத்த
உயர்காழிக் கவுணியன்போல் ஒருவன் வந்து
நன்றருளும் மகவுருவாய் நண்ணும்”

என்று நவின்றருளினான் என்று சைவ சந்தானாசாரியர் புராணம் கூறுகிறது.

மேலும், மெய்கண்ட தேவர் பிறந்தருளிய நிகழ்ச்சியைக் கூறலுற்ற இப்புராண ஆசிரியரான திருவாரூர்ச் சுவாமிநாத தேசிகரவர்கள், அதனைத் தாம் பாட நேர்ந்த திருவருள் வாய்ப்பை எண்ணி மனத்தே மிக்க மகிழ்ச்சி பொங்குதலால்,

“சந்தமறை யாகமங்கள் வழியொழுகு
 தாபதர்கள் சலிப்பற் றோங்க,
 மந்தபரி பாகருநல் லத்துவித
 மெய்யுணர்ந்து மகிழ்ச்சி யெய்த
 எந்தை யருள் சிவஞான போதமறை
 இயற்றமிழில் இனிது மேவ”
“நல்வியாத முனியுரைசெய் சூத்திரத்தின்
 பாடிய மோர்நான்குங் கொண்ட
 சொல்வாய்மை பொருள்வாய்மை தெளிதலுறத்
 தேராது சோக முற்றோர்
 எல்லாரும் அத்துவித சுத்தநிலை
 இனி தெய்திச்1 “சோகமேவப்
பொல்லாத சமயிகளும் அதிசயிப்பப்
 புவனிமிசைப் போத மேற”
“நலமலியும் சிவனடியார் எஞ்ஞான்றும்
 ஆனந்தம் நண்ணி யோங்க
 தலமலியு மெந்நாட்டும் தென்னாடு
 தலையெனவே சகம் கொண்டாடக்
 கலைமலியும் பிள்ளையார் ஒருவர் தாம்
 தந்தை மனக் கவலைதீர
 நிலவலயத் தவதரித்தார் நிறையன்பர்
 சுற்றத்தார் மகிழ்ச்சி நீட”

என்று பல பாட்டுக்களால் தெரிவித்துப் பாராட்டுகின்றார்.

இந்நிகழ்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்த திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கூறுவது நோக்கத்தக்கது: “கனவிற் கண்ட தெல்லாம் பொய்யென்று ஒதுக்கிவிடுதல் தவறு. கனவென்பது நுண்ணுடம்பின் நுகர்ச்சியாகவுளது. நமது கண்ணிற்குப் புலனாக நின்ற உடம்பே தூலவுடம்பென்று கூறப்படும். அவ்வுடம்பு கொண்டு, நனவிலே, உயிர், போதல் வருதல் முதலியன செய்யும். தூங்கும் போது, கட்புலனாகாத நுண்ணுடம்பு பலவித நுகர்ச்சி களையடைதல் கூடும். அருந்தவத்தினரது கட்புலனுக்கு அருள் செய்யும் கடவுள், அவரது நுண்ணுடம்பிற்கு மாத்திரையே புலனாகும் வண்ணம் தோன்றுதலும் இயல்பே. தமது நுண்ணுடம்பைப் பருவுடம்பினின்றும் வேறுபிரிக்கும் ஆற்றலுடைய யோகிகள் கூட ஏனையோரது நுண்ணுடம்பிற்குப் புலனாகும் வன்மையுடையா ரென்பது இவ்வாராய்ச்சியில் (Psychic Research) வல்ல மேலைநாட்டுப் பண்டிதர் சிலரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. நனவிற் கண்டது கனவில் உருவெளித் தோற்றம்போல் புலனாவது இதனின் வேறாகும். கடவுளும் யோகிகளும் கனவில் தோன்றும் முறைவேறு. பின்னது பிற்பயன் விளைப்பது; முன்னது கைகண்டபயன் ஒன்றும் விளைப்பதில்லை. கனவில் தோன்றிய பெருமக்கள் தாம் அங்ஙனம் தோன்றியதை நனவில் உரைத்தல் கூடுமாதலின் அன்னவர் தோற்றத்தைக் கனவின் பொய்த்தோற்றத்தோடு பிறழக் கொள்ளுதல் தவறாகும். இதன் நுட்பங்கள் இவண் விரிக்கிற் பெருகும்.”

10. இனி, அச்சுத களப்பாளருடைய மனைவியார் மெய் கண்டதேவரைக் கருக்கொண்டபோது திருவெண்காட்டில் இருந்தாரென்பது உண்மை; கரு முதிரத் தொடங்கியதும் அவர் பெண்ணாகடம் சென்று சேர்ந்தாரென்பதே பொருத்தம்; கருவுயிர்க்குங்காறும் திருவெண்காட்டிலிருந்தா ரென்பதும், தாம் பெற்ற புதல்வருக்குத் திருப்பெயர் சூட்டுங்காறும் திருவெண் காட்டில் இருந்தாரென்பதும் ஆராய்தற்குரியன என்று சில அறிஞர் கூறுகின்றனர். சைவசந்தானாசிரியர் புராணம், மெய்கண்டார் திருவெண்காட்டிலே பிறந்தார் என்பதை மேலே காட்டிய பாட்டுக்களாற் பெறவைத்து, அதனையே பின்பு

“வெள்ளைமாவனத் தடிகள்பால் விடைபெற்று மீண்டு,
பிள்ளையோடு நன்மனைவியும் சுற்றமும் பிறரும்
உள்ளமாருநன் மகிழ்ச்சியி னொருவுதண் கடந்தை
எள்ளருங்கதிர் மாளிகை இடத்து மேவினரால்”

என்று வற்புறுத்தி, மெய்கண்டார்க்குத் திருப்பெயரிட்ட இடம் பெண்ணாகடமே என்பது விளங்க, “ஒரு சுவேதவனப் பெருமாளென வொண்பேர், உரிமையாலிடக் கடந்தையார் உவப்புற” என்று விளம்புகின்றது. வேறு சில அறிஞர், மெய்கண்டதேவர் பிறந்ததும், சுவேதவனப்பெருமாள் என்று பிள்ளைத் திருப்பெயர் சூட்டப் பெற்றதும் திருவெண் காட்டிலேயே என்று தாம் எழுதிய “மெய்கண்ட தேவர் சரித்திரச் சுருக்க”த்தில் குறித்துள்ளனர் 1.

மெய்கண்டார் பிறந்த காலையில், மகப்பேற்றுக்குரிய சடங்குகளை எல்லாம் பெற்றோர் திருவெண்காட்டிலேயே செய்திருக்கிறபோது, அவற்றுள் ஒன்றாகிய பெயர் சூட்டு நிகழ்ச்சி மட்டில் பெண்ணாகடத்தில் செய்யப்பெற்றதென்பது சிறவாது; அதுபற்றியே சிவஞான மாபாடிய வெளியீட்டின்கண் மெய்கண்ட தேவரது சரித்திரச் சுருக்கம் எழுதிச் சேர்த்த சான்றோர், மகப்பேற்றுச் சடங்குகளும் பெயரீடும் திருவெண்காட்டிலே நிகழ்ந்தன என்றனர்.

இனி, கி. பி. பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் அதற்கு முன்னும் திருவெண்காட்டில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் பெயர், திருவெண்காடுடைய மகாதேவர் என்று குறிக்கப்பெற்றதே யன்றி, சுவேதவனப் பெருமாள் என்று வடமொழியில் மொழிபெயர்க்கப் பெறவேயில்லை. பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுக்கள், “சுவேதாரண்ய நாதர் 2” என்று வட மொழியில் மொழிபெயர்த்த பெயர்களைக் கூறுகின்றன. மற்று, மெய் கண்டதேவர் காலத்தில், அவர் பெற்றோர்க்கு ஞானாசிரியராகவும், அவர்க்கு முதன் மாணவராகவும் விளங்கிய அருணந்தி சிவாசாரியார், தாம் பாடிய இருபா விருபது என்னும் நூலில், தமது ஞானாசிரியரான மெய்கண்டதேவரை, சுவேதவனத்தான் 1 என்று குறிக்கின்றார். இவ்வாறு மொழிபெயர்த்துக் கூறும் வழக்காறு வடமொழிப் பயிற்சியுடையாரிடத்தே அக்காலத்தில் இருந்திருக்கும்போலும் என எண்ண வேண்டியுளது. கல்வெட்டுக் காலங்களில் விசயநகர வேந்தர்கள் தோற்றுவித்த கல்வெட்டுக்கள் ஒழித்து ஒழிந்த அவர்க்குக் காலத்தால் முற்பட்டுத் தோன்றியன வெல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே எடுத்து வழங்குகின்றன. இறைவன் திருப் பெயர் பலவும் திருமுறை யாசிரியன்மார் வழங்கிய சொற்றொடர் களாகவே இருப்பது ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டறிந்ததாகும். பெண்ணாகடத்திலுள்ள இறைவனைத் திருநாவுக்கரசு சுவாமிகள், “கடந்தைத் தூங்கானைமாடச் சுடர்க் கொழுந்தே” என்றாராக, சுடர்க்கொழுந்து என்ற தொடரையே எடுத்து இறைவனுக்குத் திருப்பெயராக வழங்குவது இன்றும் காணக் கூடிய நிகழ்ச்சி.

11. அச்சுதகளப்பாளர் பெண்ணாகடத்தில் திருவெண் காடுடைய பெருமானை எழுந்தருள்வித்ததற்கும் முக்குளம் ஏற்படுத்தியதற்கும் செவிவழிச் செய்தி யொன்று தவிர நூலாதரவு ஒன்றுமில்லை. மெய்கண்டாருடைய வரலாறு எழுதிய சான்றோருள் எவரும் கூறவில்லை. ஆங்காங்குள்ள கோயில்களில் பண்டை நாளில் வாழ்ந்த தலைவர்கள் எழுந்தருள்வித்த மூர்த்தங்களின் பெயர்கள் இந்நாளில் மறைந்துவிட்டன போலப் பெண்ணா கடத்தில் களப்பாளர் எழுந்தருள்வித்த திருமூர்த்தம் மறைந்து போயிருக்கலாம். ஆனால், அவ்வாறு எழுந்தருள்வித்ததற்குக் கல்வெட்டு ஒன்றும் அக்கோயிலிற் காணப் படவில்லை. இங்கே செய்தது போல, திருவெண்காட்டில் தானும் அச்சுதகளப்பாளர் ஏற்படுத்தியதாக நிவந்தமொன்றும் காணப்படவில்லை.

12. பெண்ணாகடத்தில் இருந்து வளரவேண்டிய மெய்கண்ட தேவர் திருவெண்ணெய்நல்லூருக்கு அவருடைய அம்மானால் அழைத்துச் செல்லப்பெற்றார் என்ற செய்தியைச் சந்தானாசாரியர் புராணம், “இருமைசேர் திருவெண்ணெய் நல்லூரினிலுறையும், அருநன் மாமனார் தம்மனை யெடுத்துவந் தணைந்தார்” என்று கூறுகின்றது. மெய்கண்ட தேவர் திருவெண்ணெய் நல்லூரை யடைந்த செய்திக்குப் பின், அவர் தந்தையான அச்சுதகளப்பாளர் வரலாறும், தாயாரது வரலாறும் ஒரு குறிப்புமின்றி நின்று போகின்றன. அவர்களுடைய பிற்கால வாழ்வைப்பற்றி மெய்கண்டார் வரலாறு கூறிய சந்தானாசாரியர் புராண முடையாரோ, வேறு ஆசிரியர்களோ ஒன்றும் கூறிற்றிலர். மெய்கண்டார் இரண்டாண்டு நிரம்பு முன்னரே திருவெண்ணெய் நல்லூருக்கு அவர் மாமனால் கொண்டு போகப் பெற்றார் என்பதை நோக்க, பெண்ணாகடத்தில் அவரது பெருமனையில் மெய்கண்டார் நெடிது தங்குதற்கேற்ற ஆதரவு இல்லாது போயிற்றென்பது உணரப்படும். அச்சுதகளப்பாளர் போர்த் துறையிலோ வேறு நெறியிலோ சென்று முடிவுபெற்றிருத்தல் வேண்டும்; ஆதரவின்றி யிருந்த மெய்கண்டாரையும் அவர் தாயாரையும் அவருடைய நன்மாமன் தமது திருவெண்ணெய் நல்லூருக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும்.

13. இனி, அச்சுதகளப்பாளர் திருவெண்காட்டில் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் முக்குளத்தின் கரையில் ஒரு நாள் ஆண் குழந்தை ஒன்று கிடக்கக் கண்டு எடுத்துத் தம் மனைவியார்பால் அளித்து, “இதோ, சுவேதவனப் பெருமாள்” என்று போற்றி அன்பு செய்துவர, இருவரும் அக்குழந்தையைத் தாம் பெற்ற குழந்தை போலவே வளர்த்து வந்தார்கள்; இதனை யறிந்த அவருடைய உறவினர், “வேறோரினத்துப் பிள்ளையை யெடுத்த வளர்க்கின்றார்கள்” என இழித்துப் பேச, அது கேட்கப் பொறாத களப்பாளர் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த தம்முடைய மைத்துனரான காங்கேய பூபதி யென்பாரிடம் தந்து திருவெண்ணெய் நல்லூருக்குக் கொண்டுபோகச் செய்தார். அக்குழந்தை பின் திருவெண்ணெய்நல்லூரில் வளர்ந்து நாம் பரவும் மெய்கண்ட தேவராகும் சிறப்பெய்தினான் என்று
    திரு. J. M. நல்லசாமிப் பிள்ளை கூறுகின்றார். இவ்வாறு கூறுதற்கு அவர் மேற்கண்ட சான்று இதுவெனத் தெரிந்திலது. இது நிற்க, புதுவை, சுத்தானந்த பாரதியாரவர்கள் அச்சுதகளப்பாளர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவரென்று கூறுகின்றார். இன்னோரன்ன கூற்றுக்கட்கு ஆதரவு தேடிச் செல்வது பயனில் உழப்பே தவிர வேறாகாது.

14. மெய்கண்டதேவர் திருவெண்ணெய்நல்லூரில் வளர்ந்து வருங்கால் இரண்டாண்டு நிரம்பி மூன்றாமாண்டெய்தி யிருக்கையில் அவ்வழியே வந்த பரஞ்சோதி முனிவர் சிவஞானச் செம்பொருளை உணர்த்தி மெய்கண்டார் என்று திருப்பெயர் சூட்டிய செய்தி பற்றிக் கூறலுற்ற சான்றோர், “சுவேதவனப் பெருமாள் திருவெண்ணெய் நல்லூரில் இருந்த காலையில் திருக்கயிலாயத்தில் சனற்குமார முனிவருடைய ஞானப் புதல் வராகிய சத்தியஞானதரிசினிபால் ஞானோபதேசம் பெற்ற பரஞ்சோதி மாமுனிவர் அகத்திய முனிவரைக் காண்பதற்கு அவர் வீற்றிருக்கும் பொதியமலைக்குத் தம்முடைய ஒளி விமானமேறி வந்துகொண்டிருந்தார். திருவெண்ணெய்நல்லூர்க்கு அருகே வந்ததும் அவ்விமானம் மேலே செல்லாது நின்றது; உடனே பரஞ்சோதியார் தமது ஞான நாட்டத்தால் உண்மை யுணர்ந்து சுவேதவனப் பெருமாளை யடைந்து அவர்க்குச் சிவஞானத்தை உரைத்துத் தமது ஞானத் தந்தையின் பெயரைத் தமிழ்ப்படுத்தி மெய் கண்டார் என்று திருப்பெயரிட்டுச் சென்றார்” என்பர். இந்நிகழ்ச்சியைச் சைவ சந்தானாசாரியார் புராணம்,

“வெள்ளி வெற்பமர் விமலனா ரருள்பெறு நந்தி
வள்ள லாரடி மலர்புனை சனற்கும ரன்பால்
தெள்ளு சத்திய ஞானநற் றரிசினி திருத்தாள்
உள்ளு முள்ளமார் ஒருபரஞ் சோதிமா முனிவர்

அன்ன குன்றொரீஇத் தென்மல யாசல மணுக
மின்னு பேரொளி விமானமீ தேகுறும் வேலைப்
பொன்னி னோடுமுத் தெறிதிரைப் பெண்ணைநீர் புடைசூழ்
சென்னி மாமதிச் சிவனுறை வெண்ணெய்நற் பதிக்கு

நேர தாகவவ் விமான நின்றிடுதலும் நிறைந்த
தீர வாலறி வுடைப்பரஞ் சோதியார் தேர்ந்து
வாரமோ டிழீஇச் சுவேதவனப் பெருமாட்குச்
சேர மெய்யுணர் வெய்திய திறந்திரு வருளால்

தேர்ந்து தீக்கையும் மெய்கண்ட நாமமும் செறித்துச்
சார்ந்த மந்தணமாஞ் சிவஞான போதத்தை
ஈந்து தங்குரு அறிவுறுத்திய பொழிப் பிசைத்தே
ஆர்ந்த செந்தமி ழாக்கெனாப் பொதிகையை யடைந்தார்” (24-7)

என்று கூறுகிறது.

இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், “சிவபெருமான் தக்க பக்குவமுடையார்க்கு குருவாய் வந்துணர்த்துவது பெரும்பான்மையும் தமது பேரன்பரை நிலைக்களமாகக்கொண்டேயாம். பரஞ்சோதி மாமுனிவர் மெய்கண்டதேவர்க்கு மெய்யுணர்வை அளித்தகாலை, அவர் கடவுளோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையினின்று அருள் செய்தாராகலின், சிவபெருமானே நமது நாயனாருக்கு உண்மைப் பொருள் உணர்த்தியதாகக் கொள்ளவேண்டுமே யொழியப் பரஞ்சோதி முனிவர் தாமே அவ்வாறு உணர்த்தினரென்று கோடல் பொருந்துவதன்றாம். இவ்வாறே உபமன்னியர் கண்ணனுக்கு உபதேசம் செய்ததாகவும், கண்ணன் பார்த்தற்கு அறிவுறுத்தியதாகவும் கூறுப” என்று உரைக்கின்றார். அன்றியும், மிக்க இளமை யிலேயே மெய்கண்டார் ஒப்புயர்வற்ற சிவஞானப் பேற்றுக்கு இலக்காய திறம் பற்றி அவர் கூறுவது ஈண்டு வேண்டற் பால தொன்று:

“சுவேதவனப் பெருமாள் முற்பிறவியிலேயே சரியை, கிரியை, யோகம் முதலியன முடித்துச் சிவஞானமடைதற்குரிய பெருந்தவத் தினராதலின் இரண்டு வயதளவிலே அடிசேர் ஞானம் அடைதற்குரிய சாமுசித்தநிலை எய்தினர். முற்பிறவியில் உறுதியாகப் பயின்ற கல்வி இப்பிறவியில் இளமையில் எளிதாகத் தழைத் தோங்கி வளர்வதை இயற்கையிலேயே கணிதநூல் வன்மை பெரிதாகப் படைத்திலங்கும் சில பிள்ளைகளிடம் கண்கூடாக இன்றும் காண்கின்றோம். இலக்கியங்களை மூன்றல்லது நான்கு வயதிற் படித்துப் பொருள் கூறும் குழந்தை யொன்று சமீப காலத்தில் பர்மாவில் தோன்றியதாகக் கேள்விப்படுகிறோம். ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க் கெழுமையு மேமாப் புடைத்து’ என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவியிற் கற்ற கல்வியின் பயனாகிய நல்லறிவு பல பிறவிகளிலும் உயிரோடு கலந்து வளர்ந்து நிலைபெறுதல் போலப் பல பிறவியிற் கற்ற பெரும் பயன் ஒரு பிறவியிலே இளம்பருவத்திலேயே அளவிலடங்காது பொங்கி மிளிர்தல் கூடும். அத்தகைய கல்விபோலப் பல பிறவிகளிற் கடவுண்மாட் டன்பு செலுத்தி இயற்றப்படும் அருந்தவமானது ஒரு பிறவியிலே அத்தவத்தின் எல்லையற்ற பயனாகிய கடவுளது அருட் காட்சியை அளிக்கவல்லது. சைவ சித்தாந்த சமயத்துக்கு முதற்றலைவராகிய ஞானசம்பந்தப் பெருமானும் சித்தாந்த ஞான பரம்பரைக்கு முதற்றலைவராகிய மெய்கண்டதேவ நாயனாரும் உலகமுய்யவே தோன்றியருளினாரென்பது அவர்கள் குழவிப் பருவத்திலேயே உலகநெறி செல்லாது கடவுளது அருண்ஞான நெறியிலேயே நிற்கும் உயர்நிலை எய்தினமையால் விளங்கும்.”

15. திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் பொல்லாப் பிள்ளையார்பால் மெய்கண்டார் கலைஞானங்களைக் கேட்டுத் தெளிந்தாரென்பது, “அருட்டுரைக் கணேயமர் பொல்லாப் பிள்ளையாரருளால், மருட்டிலாமலே சிந்தித்துத் தெளிந்து” என்று சந்தானாசாரியர் புராணம் கூறுவதனாலும் அறியப்படும். சிவஞானத்தோடு கலைஞானமும் வேண்டுமென்பது, திருஞான சம்பந்தர் பெற்ற சிவஞான வரலாற்றாலும் தெளியப்படுகிறது. ஞானசம்பந்தப் பெருமான் பெற்ற ஞானத்தைக் கூறவந்த சேக்கிழார் பெருமான், “உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்” என்பதனாலும் இஃது அறியப்படும். இச்சிறப்புப் பற்றியே மெய்கண்ட தேவர், தாம் அருளிய சிவஞானபோதத்துக் காப்பில், “பொல்லார் இணைமலர், நல்லார் புனைவரே” என்று திருவெண்ணெய் நல்லூர்ப் பொல்லாப்பிள்ளையாரை முதற்கண் வணங்கு வதைக் காண்கின்றோம்.

பரஞ்சோதி முனிவர்பால் சிவஞானமும் பொல்லாப் பிள்ளையார்பால் கலை ஞானமும் பெற்று நிரம்பிய மெய் கண்டதேவர் தீவிய இனிய செந்தமிழ்ச் சொற்களால் சிவஞான போதத்தை உரைத்தருளினார். அதனை யறிவு மிக்க மாணவர் பலர் அமைந்திருந்து கேட்டு மெய்யுணர் வெய்தினர்.

16. இனி, இச்சிவஞான போதத்தை நல்கியருளிய மெய் கண்ட தேவரே வார்த்திகப் பொழிப்பும் உரைத்தார் என்று கூறுவர். சந்தானாசாரியார் புராணமுடையாரும், “மாட்சிப் பொருட்டதாம் சிவஞான போதத்தைத் தென் மொழியில் அருள் திறத்தினால் பெயர்த்து வார்த்திகப் பொழிப் பறைந்தார்” என்றே கூறுவர். இச்சந்தானாசாரியர் புராணமுடையார், சிவஞான போதத்துக்கு உரைகண்ட சிவஞான முனிவர்க்குக் காலத்தாற் பிற்பட்டவராதலின், இக்கருத்தை முதற்கண் வெளியிட்டவர் வேறாவர். சிவஞான முனிவர் காலத்துக்கு முன்பே, மெய்கண்ட தேவரே சிவஞான போதத்தையும் அதற்கு வேண்டும் வார்த்திகப் பொழிப்பையும் வழங்கியருளினார் என்ற கொள்கை நிலவியிருந்தது. சைவத் திரு. மறைமலையடிகள் முதல் மதுரைப் பேராசிரியர் S.சோமசுந்தர பாரதியார் ஈறாகப் பலரும் வார்த்திகப் பொழிப்பும் உதாரண மேற்கொள் வெண்பாக்களும் மெய்கண்ட தேவர் ஆக்கினவை அல்ல என்ற கொள்கையுடையர். இது குறித்து அவர்கள் எழுதியன விரிவஞ்சி ஈண்டுக் காட்டப் படவில்லை.

இனி, அவர்பால் அருணந்தி சிவாசாரியர், மனவாசகங் கடந்தார், சிற்றம்பல நாடிகள் முதலாக நாற்பத் தொன் பதின்மர் மாணவர்களாக இருந்து சிவஞான போதத்தைக் கேட்டனர் என்பர். அது.

“மெய்யுணர்ந்தார் புகழும் அருணந்தி யோடு
 மேவதிகை மனவாசகங் கடந்தார்
பொய்யகல் சிற்றம்பல நாடிகள் முன்னாகப்
 புகழுறு மாணாக்கர் நாற்பத்தொன் பதின்மர்
மையகலும் பரிபாக நன் குணர்ந்து
 மன்னுசிவ தீக்கைமுறை மருவிச் செய்து
தெய்வவருண் மேவிடமுப் பொருளு ணர்த்திச்
 சின்மயராந் தன்மையினைச் செய்து பின்னர்”

என்று சைவ சந்தானாசாரியர் புராணத்திலும் குறிக்கப்பெறுகின்றது.

17. இனி, சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி சிவாசாரியர், அச்சுதகளப் பாளருக்கே ஞானகுரவராய் ஞானம் உணர்த்தியதோடு, அவர் மெய்கண்ட தேவரை மகனாகப் பெறுதற்கு வேண்டும் தவநெறியைக் காட்டியவருமாவர். அத்தகைய சான்றோர், மெய்கண்ட தேவர்க்கு மாணவராய் அவரைத் தமக்கு ஞானாசிரியராய் மேற்கொண்ட செய்தி சைவ சந்தானாசாரியர் புராணத்தில் கூறப்பெறுகிறது. அருணந்தி சிவாசாரியர் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் செல்வர்களாகிய தம்முடைய மாணவர்களைக் காண்பது குறித்துத் தாமிருக்கும் துறையூரி லிருந்து முதற்கண் திருமுகம் விடுத்தார். அதுபெற்ற வெண்ணெய் நல்லூரார் ஊரை ஒப்பனை செய்து மிக்க சிறப்புடன் அவரை, அவர் எழுந்தருளிய காலத்தில் இனிது வரவேற்றனர். அவருடைய மாணவராயுள்ளார் பலரும் வந்து அவரைக் கண்டு வணங்கி அவரது வாழ்த்துரையைப் பெற்றனர். அக்காலை அவர் பெண்ணாகடத்து அச்சுத களப்பாளருடைய புதல்வரான மெய்கண்ட தேவர் தம்மை வந்து காணாமைக்குக் காரணம் அறியலுற்றார்; அவர் மாணவர் பலருக்கு ஆகமாந்தமாகிய சிவ ஞானத்தை உணர்த்திவரும் செய்தி ஊரவர் சொல்லக்கேட்டு வியப்புற்றார்; பெருங்கல்வி வல்லுநராதலால் சகலாகம பண்டிதர் உள்ளத்தே ஆணவ முனைப்புத் தோன்றி அழுக்காற்றை எழுப்பிற்று. உடனே அவர், மெய்கண்டார் சிவஞான முணர்த்தும் இடத்துக்குச் சென்றார்; அப்போது அவர் மாணவரோடு ஆணவமலத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். சென்ற பண்டிதர், மெய்கண்டார் முன்னின்றார்; மெய்கண்டார் அவரை ஏனென்றுகூடக் கேட்க வில்லை. அழுக்காற்றால் உளம்புகைந்து, புறக்கணிப்பால் முகம் கறுத்து “ஆணவத்தின் சொரூபம் யாது?” என்று அவர் மெய்கண்டாரை வினவினார். அவர் உடனே ஒரு சிறு தடையு மின்றி முகம் மலர்ந்து நோக்கிப் புன்முறுவலுடன் தம் வலக்கைச் சுட்டுவிரலை நீட்டிச் சகலாகம பண்டிதர் திருவுருவத்தையே சுட்டிக் காட்டினார் என்று புராணம் கூறுகிறது. அருணந்தி சிவனாருடைய அழகிய ஞானவுரைகளை நாம் இன்று படிக்கின்றோம்; பயன் துய்க்கின்றோம். அவற்றை நினைக்கும் போது இவ்வரலாற்றுக் குறிப்பு மெய்ம்மையொடு படாத பொய்க் குறிப்பு என்று நமது உள்ளத்தில் நன்கு தோன்றுகிறது.

18. இனி, மெய்கண்டார் அவரை நோக்கி, “ஆதி சைவ அருணந்தி” எனவுரைத்து அவர்க்குச் சிவஞானத்தை உணர்த்தித் தமக்கு மாணவராக ஏற்றுக்கொண்டா ராதலால் அன்று முதல், அருணந்தி என்று மெய்கண்டதேவர் வழங்கிய அத்தொடரையே தமக்குப் பெயராகக் கொண்டு மெய்கண்டாருடைய மாணவராய் அவர் திகழ்ந்தார்.

மெய்கண்டதேவர் சகலாகம பண்டிதரை நோக்கி, “அருள் நந்தி” என்ற குறிப்பு, “எமக்கு இந்தச் சிவஞானம் அருட் கடலாகிய நந்தி யெம்பெருமான் அருள அவர் வழி வந்தது” என்ற பொருளை நல்கி நின்றமையின், அருணந்தி சிவனார் தம்முடைய ஞானாசிரியர் அருளிய சிவஞான போதத்துக்குச் செய்யுள் வடிவில் கண்ட உரையாகிய சிவஞான சித்தியார் பரபக்கத்தில்,

“போத மிகுத்தோர் தொகுத்த பேதைமைக்கே
 பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல
 ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னாள்
 இறைவன் அருள் நந்திதனக் கியம்ப நந்தி
 கோதிலருள் சனற்குமா ரற்குக் கூறக்
 குவலயத்தில் அவ்வழியெம் குருநாதன் கொண்டு
 தீதகல எமக்களித்த ஞான நூலைத்
 தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே”

என்ற திருவிருத்தத்தில் விளங்க வுரைத்தருளுகின்றார்.

19. மெய்கண்டதேவர் தோன்றிச் சிவஞான போதத்தைத் தமிழில் வழங்கிச் சிவஞான வேட்கை மிக்கிருந்த பலர்க்கு அதனைத் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து உதவி வருகையில், அவருடைய சிவஞானப் புகழ் செந்தமிழ் நாடெங்கும் பரவிற்று. சிவாகம நெறியாகிய சைவசித்தாந்தம் நாட்டவரிடையே செல்வாக்குப் பெற்றது. திருமுறைகளின் பொருளை அறிந்து ஓதி வழிபடுதற்கேற்ற வாய்ப்பும் விளக்கமும் சிவஞான போதத்தால் தெளிய விளங்குவது கண்ட சைவ உலகம், தான் செய்த தவம் தக்க பயனை நல்கிற்றெனப் பேருவகை கொண்டது.

அந்நாளில் திருவண்ணாமலையில் இருந்த கோளகி மடம் மெய்கண்ட தேவரது தலைமையை நாடி நின்றது. மெய்கண்ட தேவர் திருவண்ணாமலை மடத்தில் தலைமை தாங்கிச் சிவஞானச் செல்வத்தை வழங்கி வந்தார். அவர்பால் செல்வர் பலர் சிவஞானம் பெற்றுச் சிறப்புற்றனர். அவருள் ஊருடைய பெருமாள் என்பார் ஒருவர். அவர் எடுத்தது வலிய வேளார் என்றும் வழங்கப் பெறுவர். திருவண்ணாமலைக்கு அண்மையில் மாத்தூர் என்றோர் ஊருண்டு. அது திருவண்ணாமலை இறைவற்குத் தேவதானம். சிவஞானச் செல்வரான எடுத்தது வலிய வேளார், தேவதான மாத்தூரில் கோயிலார் ஆணை பெற்றுப் புதிதாக ஏரியொன்று வெட்டி அதற்குத் தமது ஞானகுரவர் பெயரால் மெய்கண்ட தேவப் புத்தேரி யென்று பெயரிட்டார். அதனால் பல வேலி யளவான நிலங்கள் நெற்பயிர் செய்தற்கு ஏற்றனவாயின. இன்றும் அவ்வூர் நெல்வளமுடையதாகவே விளங்குகிறது. இந்த ஏரிக்கீழ் மேடான ஓரிடத்தில் சிவன்கோயில் ஒன்றை அவ்வேளாரே கட்டி அதற்கு மெய்கண்டீச்சுரம் என்று தனது ஞானகுரவர் பெயரிட்டுச் சிறப்புற்றார். மெய்கண்ட தேவரது சிவஞானப் பணியும், அவருடைய மாணவரது சிவத்தொண்டும் கண்ட கோயிலார் அவ்வேரியையும் அதன் கீழுள்ள நிலங்களையும் மெய்கண்டீச்சுரமுடைய பெருமானுக்குத் தேவதானமாக விடுவதெனத் துணிந்து அந்நாளில் அரசுபுரிந்த சோழ வேந்தன் திரிபுவன சக்கரவர்த்திகள் இரண்டாம் இராசராச தேவர் எனப்படும் மன்னனுடைய ஆணையை வேண்டினர். வேந்தனும் மனம் மகிழ்ந்து, மாத்தூர்க்கு இராசராசநல்லுரெனத் தன் பெயரிட்டு ஆணைதந்தான். பின்னர், “ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு 19-வது ரிஷப ஞாயிற்று இருபத்தெட்டாந் தேதியும் சனிக்கிழமையும் பெற்ற மிருகசீரிஷத்து நாள் உடையார் திருவண்ணாமலையுடைய நாயனார் கோயில் ஸ்ரீமாகேசுவரக் கண்காணி செய்வார்களும் தேவர்கன்மி கோயிற் கணக்கனும், திருவெண்ணெய் நல்லூரு டையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார்க்குக் கல் வெட்டிக் கொடுத்த பரிசாவது”1 எனத் தொடங்கி, “செங்குன்ற நாட்டு மாத்தூரான இராசராசநல்லூரில் இவர் வெட்டுவித்த மெய்கண்ட தேவப் புத்தேரியை”யும், “இவ்விராசராசநல்லூரில் எழுந்தருளுவிக்கிற உடையார் மெய் கண்டீச்சுரமுடைய நாயனா”ரையும் குறித்துரைக்கும் கல்வெட்டொன்று திருவண்ணாமலைக் கோயிலில் வெட்டப்பட்டது.

இக்கல்வெட்டில் காணப்படும் இம் மெய்கண்டீச்சுரம் மெய் கண்ட தேவரது திருமேனி ஒடுங்கிய பெருநிலைய மாகலாம் எனவும், எடுத்தது வலிய வேளாரையே மெய்கண்ட தேவரெனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், பெரு வேந்தர்களும் செல்வர்களும் தமக்கு ஞானமருளும் குரவர்களைத் தந்தையாகவும், தம்மை அவர்கட்குப் புதல்வராகவும் கூறுவது மரபு.1 அம்மரபு பற்றி ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார் தமது ஞானத் தந்தையாரது பெயரைத் தமது பெயருடன் இணைத்து, “திருவெண்ணெய்நல்லூருடையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார்” என்று வழங்கு கின்றார். மேலும் மெய்கண்ட தேவர்க்கு வெண்காடர், சுவேதனப் பெருமாள் என்ற பெயருண்டேயன்றி ஊருடைய பெருமாள் எனவும் எடுத்தது வலிய வேளாரெனவும் பெயர் வழங்கியது காணோம்; ஆதலால், எடுத்தது வலிய வேளாரே மெய்கண்ட தேவர் என்பாரது கூற்று எம்மனோரால் கொள்ளப்படவில்லை.

மெய்கண்ட தேவர்பால் சிவஞானம் பெற்ற அவர் மாணவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சென்று மடங்கள் நிறுவிச் சிவஞானப்பணி புரிந்தனர். அம்மடங்கள் பலவும் மெய்கண்ட சந்தானம் என்று வழங்கின. காஞ்சிபுரம்2, திருவண்ணாமலை3, செங்கற்பட்டு வட்டத்திலுள்ள இராமகிரி4, தென்னார்க்காடு வட்டத்து எலவானாசூர்5, திருவக்கரை6, வில்லியனூர்7, மதுரை8, திருப்புத்தூர்9, திருநெல்வேலி10, பிரமதேசம்11, அம்பாசமுத்திரம்12 முதலிய இடங்களில் மெய்கண்ட சந்தானத்துத் திருமடங்கள் முன்னாட்களில் சிறந்து விளங்கின.

இந்த மெய்கண்ட சந்தானத்து ஒருவர் மெய் கண்டார்க்குச் சிவஞானம் அருளிய முதல்வருள் சத்தியஞான தரிசினிகள் என்பார். அதனால், அவர்களுட் சிலர் சத்தியஞான தரிசினிகள் என்ற பெயர் பூண்டு உள்ளனர். இராமகிரிக் கல்வெட்டு, மெய்கண்ட சந்தான மடத்துத் தலைவரைச் சத்தியஞான தரிசினி என்றும், எலவானாசூர்க் கல்வெட்டு மெய்கண்ட சந்தானத்துத் திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகள் என்றும், மதுரைச் சொக்கநாதர் கோயில் கல்வெட்டு, மெய்கண்ட சந்தான மடத்துத் தலைவரை ஞானக்கூத்தரான சத்திய ஞான தரிசினிகள் என்றும் கூறுகின்றன.

இந்த மடங்களில் வாழ்ந்த சிவஞானச் செல்வர்கள் புராணம் பாடுவதும் திருமுறை யோதுவதுமாகிய திருப்பணிகள் பல செய்துள்ளனர். மெய்கண்ட சந்தானத்துத் திருவம்பல முடையார் என்ற மறை ஞானசம்பந்தர் திருப்புத்தூர் இறைவன் மேல் ஓங்கு கோயில் புராணம் பாடினாராக, அவர்க்குத் திருப்புத்தூர்க் கோயிலார், மண்ணிமங்கலத்தில் கோயிற்குரிய நிலங்களுள் ஐந்துமா நிலத்தை நல்கினர். திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகளுடைய மாணவரான திருமலைநாயனார் சந்திரசேகர ரென்பார் இரசைப் புராணம் பாடி எலவானாசூர் ஆனந்த தாண்டவன் திருவீதியில் ஒரு வீடும் அவ்வூரில் நிலங்களும் அளிக்கப்பெற்றாரென அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. சடையவன்மன் குலசேகர தேவர் காலத்தில், திருக்குற்றாலத்தில் திருமுறை யோதுதற்காக மெய்கண்ட தேவன் சிந்தாமணி யென்பானுக்கு நிலங்கள் விடப்பட்டுள்ளன.1

இந்நாளில் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்தை மேற்கொண்டு சித்தாந்த சைவ நெறியை வளர்க்கும் மடங்கள் பல நம் நாட்டிற் பலவிடங்களிலும் உள்ளன; ஆயினும், அவற்றுள் மிக்க செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவன திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் என்னும் இடங்களிலுள்ள சைவ மடங்களாகும். இவற்றுள், இந்த நூற்றாண்டின் முற்பகுதி காறும் திருவாடுதுறை மடம் சைவப் பணியாலும் தமிழ்ப் பணியாலும் தலைசிறந்து விளங்கிற்று. இருபதாம் நூற்றாண்டின் செம்பாதியாகிய இப்போது, சைவமும் தமிழும் சிறப்புறத் தக்க வகையில் பெருங் கொடை நல்கிப் பெரும் புகழ் கொண்டு நிலவுவது திருப்பனந் தாளிலுள்ள காசி மடம். தருமபுரத்திலுள்ள திருமடம், தஞ்சை நாட்டில் இருபத்தேழு பெருங்கோயில்களின் தலைமையை மேற்கொண்டு ஈடும் எடுப்புமில்லாத வகையில் ஆட்சிசெய்து வருவதுடன் மாநாடு பல கூட்டிச் சமயப் பணியும், பல நூல் வெளியீடுகளால் நல்ல கல்விப் பணியும் செய்து வருகின்றது. திருவாவடுதுறையிலுள்ள திருமடம் தளர்ச்சியுற்ற தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரிகளைத் தான் மேற்கொண்டு இனிய பணியாற்றச் சமைந்திருக்கிறது.

20. இனி, மெய்கண்டார் பிறந்தருளிய களப்பாளர் குடி வகையைக் கண்ட அறிஞர் சிலர், களப்பாளரென்பவர், கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் புகுந்து குறும்பு செய்து நாட்டைச் சீரழித்த களப்பிரர் வழியில் வந்தவர் என்பர்; அதனால் களப்பாளர் குடி வரவையும் சிறிது இங்கே காண்பது கடனாகிறது. இடைக்காலத்தே நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்பால் அரசியற் பணி புரிவோர், களப்பாளராயர், பல்லவராயர், வாணாதிராயர், மழவராயர், சேதிராயர் என்பன முதலிய சிறப்புப் பெயர்களை வேந்தரால் தரப்பெற்றனர். இடைக்காலத்தே இந்த நாட்டில் களப்பிரர், பல்லவர், வாணர், மழவர் முதலியோர் ஆட்சி செய்தனர். பல்லவராட்சி வீழ்ந்ததும் பாண்டியரும் சோழரும் நாட்டாட்சி பெற்றனர். அக்காலையில் அவர்கள், அரசியல் வகையிலும், தானைகொண்டு செய்யும் வினை வகையிலும், பிற வகையிலும் சிறந்த பணிசெய்த சான்றோர்க்கு மேலே சொன்ன சிறப்புப் பெயர்களைத் தந்து சிறப்பித்தனர்.

களப்பிரரை வென்று உயர்ந்தோர்க்குக் களப்பாளராயர் என்றும், வாணர்களை வென்று சிறந்தோர்க்கு வாணாதிராய ரென்றும், மழவர் பால் வெற்றிபெற்றோர் மழவராயரென்றும் இவ்வாறே பிறரும் சிறப்புற்றனர். இப்பெயர் கொண்டவர் பலரும் தமிழ் வேளாண் மக்களே யாவர்.

தொடக்கத்தில் இச்சிறப்புப் பெயர்கள் இவற்றைப் பெற்றவர்களுக்கே உரியவாய் இருந்தன. தந்தை பெற்ற சிறப்பு மகனுக்கு வருவது கிடையாது. தந்தை சேதிராயரென்ற சிறப்புப் பெற்றிருந்தால் மகனுக்கு அச்சிறப்பு எய்துவது கிடையாது. அவனொருகால் அச்சிறப்பு எய்தக்கூடிய பணி செய்து பெற்றால் பெறலாம். அல்லது மழவரையோ பிறரையோ வென்று மழவராய ரென்றோ வேறு சிறப்போ பெறலாம். நாள் செல்லச்செல்லத் தந்தை பெற்ற சிறப்பு மகனுக்கும் அவன் வழிவந்தோர்க்கும் உரியதாயிற்று. முடிவில் இச்சிறப்புக்கள் குடிப் பெயராகவே அமைந்துவிட்டன. இப்போதும் தமிழ் வேளாண் மக்கள் குடிகளெல்லாம் இத்தகைய குடிப்பெயரொன்றைக் கொண்டிருப்பது யாவரும் தெரிந்த செய்தியாகும். பின் வந்த விசயநகர வேந்தர் காலத்தில் வடநூல் வைதிக வொழுக்கங்களும் வடநூல் ஆட்சிகளும் செல்வாக்குப் பெற்றபோது சில குடும்பங்கள் முனிவர்களைத் தங்கள் குடி முதல்வராக மேற்கொண்டன.

விசயநகர வேந்தரது ஆட்சி தமிழ்நாட்டில் விளங்குதற்கு முன்னெல்லாம் வேளாண் பெருமக்களிடையே களப்பாளராயரைக் குடி முதல்வராகக் கொண்ட களப்பாளர் குடியும் ஒன்றாகச் சிறந்து நின்றது. இக்குடியிற் பிறந்தோர் பண்டை நாளில் குறுநில மன்னராகவும் இருந்தனர். இவர்கள் தமிழ்நாடெங்கும் பரவியும் இருந்தனர். இவர்களது குடி நெருங்கிய வூர்கள் பல ஆங்காங்குத் தோன்றின. அவற்றுள் சோழநாட்டுக் களப்பாளும்1 களப்பாள் குடி2யும் தொண்டை நாட்டுக் களப்பாளன் பட்டும் 3 பிறவும் சிறப்புற்றிருக்கின்றன.

கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டில் கூற்றுவன் என்னும் களப்பாளர் ஒருவர் களந்தை யென்னும் ஊரில் இருந்து குறுநில மன்னராக விளங்கினார். அரசியற் செல்வ முற்றும் நன்கு பெற்றி ருந்தும் முடிசூடிக்கொள்ளும் உரிமை முடிவேந்தர்க்கு இருப்பது போலத் தமக்கு இல்லாமையால் அவர் மனக் குறையுடையரானார். தில்லைப் பதியை யடைந்து தில்லைமூவாயிரவரைக் கண்டு தமக்கு முடிசூட்ட வேண்டுமென இரந்தார்; அவர்கள், “செம்பியர் தம் தொல்லைநீடும் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடி1” என்று சொல்லி மறுத்தார்கள். மறுத்தவர்களுள் பலர், அவ்வேந்தர்க்கு அஞ்சிச் சேரநாடு சென்று சேர்ந்தனர்; ஒரு குடியினர் மட்டும் தில்லையிலே தங்கித் திருமுடியைப் பாதுகாத்து வந்தனர். அந்தணருடைய மறுப்பும் அவர்களுள் ஒரு குடியினரொழிய ஏனையோர் சேரநாடு சென்றதும் கண்ட களப்பாளர் மனம் வருந்தித் தில்லை மன்றில் திருக்கூத்தாடும் இறைவனைப் பணிந்து, “அடியேன் தனக்கு முடியாகப் பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும்2” என்று வேண்டினார். நாளும் இறைவன் திருப்பெயரை மறவாது ஓதும் செந்நாப் பண்பும், சிவனடியார்பால் பேரன்பும் சிவப்பணியில் பேரூக்கமும் கொண்டவராதலால் இறைவன் அவர் வேண்டியவாறே அன்றிரவு அவர் உறங்குகையில் தன் திருவடியைச் சூட்டிச் சிறப்பித்தருளினார். இவரை நம்பியாரூர் “ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன்” என்றும், நம்பியாண்டார் நம்பிகள், “ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான், கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே3”என்றும் பாராட்டிப் பாடியுள்ளனர்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளங்கிய முதற்குலோத்துங்கன் காலத்தில் தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்னும் ஊரில் அரையன் நெற்குன்றங்கிழார் கருவுள் நாயகரான களப்பாளராயர் என்றொரு செல்வர் சிறந்திருந்தார். அவர் சிறந்த கவிபாடும் பாவன்மையும் படைத்தவர். அவர் சோழநாட்டுத் திருப்புகலூர் இறைவன் மேல் திருப்புகலூரந்தாதி பாடியுள்ளார். தொண்டைமண்டல சதகம் என்னும் நூல்,

“கிளப்பார் கிளப்ப அடிமடக் கரகக் கெழுமியசொல்
வளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் றாய்ந் தெடுத்த
களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதிக் கலித்துறையே
வளப்பார் புகழை வளர்ப்பிக்குமால் தொண்டை மண்டலமே4”

என்று அவர் அந்தாதி பாடிய நலத்தைப் பாராட்டியுளது. இவ்வாறு பாவலர் பரவும் பாவன்மை படைத்திருந்த அக்களப்பாளர், புலவரது வரிசை யறிந்து வேண்டுவன வழங்கும் வள்ளன்மையும் கொண்டவர். அக்காலத்தில் விளங்கிய நம்பிகாளி யென்ற புலவர் அவரைப் புகழ்ந்து பாடினர். அவரது பாநலம் கண்ட களப்பாளரான கருவுணாயகர் உள்ளம் பூரித்து அந்நம்பி காளியார்க்குத் தாமுடைய எல்லாவற்றையும் நல்கி,

“கற்கும் கவிவல்லை யாதவர்கோன் நம்பி காளிக்கியாம்
விற்கும் பரிசன மாகிவிட்டோம் வடவேங் கடமும்
பொற் குன்றமும் புகழ் கங்கா நதியும் பொதியமும் போல்
நெற் குன்றமும் நம்மரபும் எந்நாளும் நிலைநிற்கவே1”

என்ற இனிய பாட்டைப் பாடித் தந்துவிட்டுத் திருப் புகலூர் வந்தடைந்தார் எனத் தமிழ் நாவலர் சரிiத கூறுகிறது.

இனி, கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடையில் விளங்கிய இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தொண்டை நாட்டு அச்சிறுபாக்கப் பகுதியில் கங்கைகொண்ட சோழக் களப்பாளராயர் என்றொரு தலைவர் வாழ்ந்தார். அவர் சிவப்பற்றும் அரசியலில் சிறந்த தலைமையும் உடையவர். அந்நாளில் அச்சிறுபாக்கத்திற் கோயில் கொண்டிருக்கும் ஆட்சிகொண்ட நாதர்க்குத் தேவதானமொன்றும் இல்லாதிருந்தது. அப்போது இரண்டாங் குலோத்துங்கன் அரசு கட்டிலேறி மூன்றாண்டுகளே யாயிருந்தன. தொண்டை நாட்டு அரசியற் செய்திகளைக் குலோத்துங்க சோழப் பிரமராயன் என்பார் கண்காணித்து வந்தார். அந்நாளில் கங்கைகொண்ட சோழக் களப்பாளராயர், விசயராசன் என்பாரைத் துணையாகக் கொண்டு பிரமராயருக்குச் சொல்லி வேந்தனால் தேவதான மொன்று ஆட்சி கொண்ட நாதர்க்கு ஏற்படுத்தப்படவேண்டு மெனக் கேட்டுக்கொண்டார். பிரமராயர் தெரிவித்தவண்ணம் சோழ வேந்தனும் ஆண் டொன்றுக்கு ஆயிரக்கல நெல் வருவாய் தரக்கூடிய வகையில் கலிகடிந்த சாத்தனூர் என்னும் பெயரால் ஊரொன்றமைத்துத் தேவதானமாக நல்கினான். இரண்டாண்டுக்குப் பின் விக்கிரம சோழப் பிரமராயனென்பார் அரசியற்றலைவராக வந்தார். அப்போது நம் கங்கை கொண்ட சோழக் களப்பாளராயர் அச்சிறு பாக்கத்துக் கோயிலுக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக மேலும் பல நிலம் தருமாறு ஏற்பாடு செய்துகொண்டார். பின்னர் அச்சிறுபாக்கமுடைய ஆட்சிகொண்டநாதர் திருக்கோயில் தேவதான முதலியவற்றால் குறைவின்றி இனிது நடைபெற்று வருவதாயிற்று1.

இனி, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த மூன்றாம் இராசராசன் காலத்தில் பெண்ணாகடத்துக்கு மேற்கில் திருவரத்துறை யென்னுமூரில் சேக்கிழான் பாலறா வாயனான களப்பாளராயர் ஒருவர் இருந்தார். அவரைத் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய சேக்கிழார் பெருமானுடைய தம்பியாகவும் கூறுவர். இதனால் சேக்கிழார் பெருமானுக்கும் களப்பாளர் என்ற சிறப்புடையாருக்கும் தொடர்புண்டென்பதும் தெளிவாகிறது. இத் திருவரத்துறையே திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகை பெற்ற திருநெல்வாயிலரத்துறையாகும். இவ்வூர்க் கோயிலுக்கு அரத்துறை யென்றும், ஊர்க்கு நெல்வாயில் என்றும் பெயராகும். பின்னர், நெல்வாயில் வேறாகவும் அரத்துறை வேறாகவும் பிரிந்தன. அரத்துறை இப்போது திருவடத்துறை யென்றும், நெல்வாயில் நெய்வாசல் என்றும் வழங்குகின்றன.

இவ்வூரில் அந்நாளில் திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகை பெற்ற வரலாறு திருவிழாவாக நடைபெற்று வந்தது. இவ்விழா மாசித் திங்களிலும் வைகாசித் திங்களிலும் நடக்கும். அக்காலையில், திருவரத்துறைக்குக் கிழக்கில் அண்மையில் இருக்கும் மாறன்பாடி என்ற ஊருக்குத் திருஞானசம்பந்தரைக் கொண்டு செல்வர். அவ்விழாச் செலவிற்காக இச்சேக்கிழான் பாலறாவாயரான களப்பாளராயர் முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலமான பெண்ணாகடத்து வேதியனொருவனிட மிருந்து சில நிலங்களை வாங்கி இறையிலியாக விட்டு அவ்விழா முட்டின்று நடைபெறுமாறு செய்தார்.2

இனி, சோழநாட்டுத் தில்லைப்பதியில் களப்பாளராயர் ஒருவர் இருந்து சிவத்தொண்டு செய்துள்ளார். அந்நாளில் சடையவன்மனான முதல் சுந்தரபாண்டியனது ஆட்சி நடைபெற்றது. தில்லையம்பலத்துக் கூத்தப்பிரான் கடலாட்டுக்குச் செல்லும் திருவீதியில் கோயில் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பல மாகாளிக்குத் திருவமுதுக்கும் திருவிழாவுக்குமாக அவர் சில நிலங்களை நல்கினார். இவை வேந்தன் நலங்குறித்து விடப் பட்டமையின் இவற்றைத் திருநாமத்துக் காணியென்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.1 பட்டுக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் வரிச்சுமை தாங்காது கைவிட்டமையால் அங்குள்ள கோயிலும் பாழ்பட்டு வழிபாடுமின்றிக் கெட்டழியவே, இக்களப்பாளரே வரிகளை நீக்கிக் கோயிலைப் புதுக்கிச் செம்மை செய்தார்.2

சடையவன்மன் வீரபாண்டியன் ஆட்சி புரிந்த நாளில் தென்பாண்டி நாட்டுக் கோயில்பட்டி வட்டத்துச் சோழபுர மென்னும் ஊரில் களப்பாளரொருவர் சிறப்புற்று விளங்கினார். அவ்வூர்க்கு அக்காலத்தில் உத்தம சோழச் சதுர்வேதிமங்கலம் எனப் பெயர் வழங்கிற்று. அங்கே உத்தம சோழ விண்ணகரம் என்ற பெயருடன் திருமால் கோயில் ஒன்று இருந்தது. அதனுடைய முகப்பு மண்டபம் ஓரளவு கட்டப்பெற்றுக் குறையுற்றிருந்தது. களப்பாளராயர் அரசியற் செல்வாக்குப் பெற்றதும் அம் மண்டபத் திருப்பணியைக் குறைவற முடித்து வைத்தார். அதனால் அஃது உடையார் களப்பாளராயர் மண்டபம் என்று சிறப்பிக்கப் பெறுவதாயிற்று.3

இனி, கொங்கு நாட்டில் கொங்குச் சோழர் ஆட்சி புரிந்த காலத்தில் வீரராசேந்திர தேவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் தாராபுர வட்டத்திலுள்ள கண்ணபுரத்திலுள்ள திருக்கோயில்கள் இரண்டன் செலவுக்குப் பொருட் குறைபாடு உண்டாயிற்று. அதனை அந்நகரத்தார் தம்மில் ஒன்று கூடி அரசியலார்பால் விண்ணப்பம் செய்துகொண்டனர். அரசியற் குழுவில் எல்லாம் வல்ல சோழ மூவேந்த வேளான் என்பார் தலைமை தாங்கினார். அவரிடம் காடுவெட்டி கண்ணன் களப்பாளராயன் என்பவர், விலாட சிங்கதேவன், சேதிராய தேவன் முதலியோர் உடன்வரச் சென்று கோயிற் செய்திகளை எடுத்தியம்பினார். வாணராய தேவன், தியாக வினோத தேவன், முனையதரையன் முதலியோர் அரசியல் ஆணை பெற்றுக் கோயில்களின் நிலையை ஆராய்ந்து தெளிந்து அரசியற் குழுவிற் கறிவித்தனர். பின்னர், வேந்தன் களப்பாளராயரை முற்பட வைத்து, அபிமான சோழபுரம், விக்கிரம சோழபுரம் என்ற இரண்டு ஊர்களின் நிலவரியை இரு கோயில்கட்கும் செலவு செய்துகொள்ளுமாறு ஆணை பிறப்பித்தான். பிற்காலத்தே இவ்வூர்கள் இரண்டும் ஒன்றாகிக் களப்பாளராயர் பெயரால் கண்ணபுரமென்று பெயர் பெற்றன.1

பின் வந்த விசயநகர வேந்தர் காலத்திலும் இக்களப்பாளர்கள் சிறப்புக் குன்றாமலே இருந்தனர். அச்சுத தேவ மகாராயர் காலத்தில் சந்திரகிரி ராஜ்யத்துச் சோளிங்கபுர வட்டத்தில் தாமர்க்கோட்டம் இருந்தது. அந்நாளில் காஞ்சிபுரத்து அருளாளப் பெருமாள் கோயிலில் ஏகாதசி விழாவுக்காக நாராயண ஜீயர் மாணவரான பராங்குச ஜீயரென்பார் தாமர்க்கோட்டத்து மூன்று ஊர்களைத் தேவதானமாக விட்டார். அவற்றுள் களப்பாளன் பட்டு என்பது ஒன்று.2

இனி, தொண்டை நாட்டில் செங்கற்பட்டு வட்டத்தில் தையூர் என்றோர் ஊர் மகாபலிபுரத்துக் கண்மையில் உளது. இது கல்வெட்டுக்களில் தொண்டை நாட்டு ஆமூர்க் கோட்டத்துக் குமிழி நாட்டுத் தையூரான இராசகேசரிநல்லூர் என்று கூறப்படு கின்றது. இவ்வூர்க்குத் தலசயனபுரம் என்றும் கல்வெட்டொன்று3 பெயர் கூறுகிறது. இவ்வூரில் உத்தண்டன் என்னும் களப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரென்பர். அவரைப் புலவரொருவர் பாராட்டி உத்தண்டன் கோவை யென்றொரு கோவை நூல் பாடியுள்ளார். இஃது அரசாங்கக் கையெழுத்து நூல் நிலையத்தில் உளது.

இவ்வுத்தண்டன் வேளாண் மரபிற் களப்பாளன் என்பதை அக் கோவை, “உழு மேழியாளன் களப்பாளன் உத்தண்டன்” என்றும், “சுரப்பாடு கேட்க முன் பொன்னாடு நீட்டிய தோன்ற லென்னத் தரப்பாரில் வந்த களப்பாளன் உத்தண்டன்.1” என்றும் குறிக்கின்றது.

தையூரில் வாழ்ந்த இவ்வுத்தண்டன் தந்தை குன்றன் எனப்படுவான். அவனுடைய் முன்னோருள் ஒருவன் தொண்டை நாட்டுச் சாலை யென்னும் ஊரில் வாழ்ந்த விண்ணன் என்னும் வள்ளல். அவ்விண்ணன் ஒருகால் வறுமையுற்றிருந்தபோது ஒரு புலவன் அவனைப் பாடிச் சென்றானாக, அவன், இலன் என்னும் எவ்வம் உரைப்பதற் கஞ்சி உயிர்விடக் கருதி ஒரு பாம்புப்புற்றில் கையை நீட்டினன்; அங்கிருந்த பாம்பு அவன் கையில் ஒரு மணியைக் கான்றது. அதனை விண்ணன் புலவர்க்களித்துப் புகழ் பெற்றான்; அச்செய்தியை,

“கூர்ந்த வறுமையிடைக் கோளரவ மீன்றமணி
சார்ந்த புலவன் தனக்களித்தான்- வார்ந்ததரு
மேலைவிண்ணில் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த
சாலைவிண்ணனுக் கிணையார் தாம்”

என்று அப்புலவன் பாடினனெனத் தமிழ் நாவலர் சரிதை2 கூறுகிறது. இவ்விண்ணன் வழி வந்தவன் குன்றன் மகனான உத்தண்டன் என்பதை அக்கோவை, “உத்தண்ட பூபதி தன் மரபின் விண்ணன் பதிக்கு இரவோர் வந்தகாலத்து மேவுகவே”3 என்று இசைக்கின்றது. இத்தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டத்து இரண்டாயிர வேலிப்பற்று முற்றும் உத்தண்டன் தந்தையான குன்றனுக்கு உரியதென்றும், அதற்கண்மையிலுள்ள குன்றனல்லூர்4 அவன் பெயரால் நிறுவப்பெற்றதென்றும் கூறுவர். எனவே, தொண்டைநாட்டுச் சாலை யென்னும் ஊரினனான விண்ணனும், அவன் வழி வந்த செல்வனான குன்றனும், அவன் மகனான உத்தண்ட பூபதியும் களப்பாளர் குடியில் புகழுடம்பு படைத்த பொற்பினராவது இனிது விளங்குகிறது.

இனி, கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டை யாண்ட விசயநகர வேந்தருள் சிறந்து விளங்கிய கிருஷ்ண தேவராயர் காலத்தில், தொண்டை நாட்டில் நாகலாபுரத்தில் களப்பாளர் குடியொன்று சிறந்திருந்தது. இந்த நாகலாபுரம், நாகலாதேவிபுரம், நாகலாதேவியம்மன்புரம் என்றும் கல்வெட்டுக்களில் வழங்கும். கிருஷ்ணதேவராயருடைய தாயான நாகலாதேவியின் பெயரால் அமைந்தது பற்றி இது நாகலாபுரமென வழங்குகிறது. இங்குள்ள திருமால் கோயில் கிருஷ்ணதேவராயர் கட்டியது.1 இவ்வூரில் ஆவினி களப்பாளர் திருவேங்கடமுடையார் என்றொருவர் வாழ்ந்தார். இவர் பெருமாள் முதலிச்சியார் என்பவரை மணந்து வடமலையண்ணகள், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பன், கிருஷ்ணையன் என்ற நால்வர் மக்களைப் பெற்றார். இவருள் மூத்தவரான வடமலையண்ணகள் கிருஷ்ணதேவராயர்க்கு “மந்திரி சிரேஷ்ட”ராக இருந்தார். கிருஷ்ணையனான இளவல் அரிதாசன் என்ற பெயர் பூண்டு திருமால் வழிபாட்டில் சிறந்து விளங்கினார். இவர் நாகலாபுரத்தில் திருமால் கோயில் கண்டு அதற்கு வேந்தனால், பெருமாளுக்குத் திருவமுதுக்கும் நிருத்த கீத மகா வாத்யாதிகட்கும் நாகலாபுரம் என்ற பிரதி நாமம் கொண்ட அரிகண்டபுரம் சருவமானியமாகக்”2 கொடுக்கப்பெற்றார். இவர் “சைவ வைணவ சமயக் கொள்கைகளை ஆகமவல்லி ஆரணவல்லி யென்ற பெண்கள் இருவர் கூற்றில் வைத்து விளக்கி முடிவில் திருமாலே பரம்பொருள் என்பதை நிலைநாட்ட எழுந்த இருசமய விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்” இதன்கண் இவர் தம்மை, “அரிதாத னென்றோது நாமக்களப்பாளன்”3 என்று கூறுகின்றார்.

இவருடைய தமையன் வடமலையண்ணன் கிருஷ்ண தேவராயருக்கு அமைச்சரா யிருந்த போதுதான் திருவாரூர்க் கோயில் பட்டர்கள் செய்தற்குரிய செயல்களைச் செவ்வே செய்யாமை கண்டு வருத்தமுற்ற தத்துவப் பிரகாசர் என்பார், விழாவுக்கேற்றிய கொடியை இறக்கக் கூடாதென மறுத்து வேந்தனுக்கு எழுதிய விண்ணப்ப வெண்பாவில், “மருவுபுகழ்க் கிட்ண மகாராயராணை, அரிய வடமலையான் ஆணை”4 என்று குறித்துப் பாடினார்.

இவ்விசயநகர வேந்தர் ஆட்சிக்குப்பின் நாட்டில் உண்டான அரசியல் வேறுபாட்டாலும் சமுதாயநிலை மாற்றத்தாலும் இக்களப்பாளர்கள் ஏனை மழவராயர், சேதிராயர், பிரமராயர் போலப் பெயர் மறைந்து நிலை கரந்து ஒடுங்கினர். பிராமண சமுதாயம் ஒன்று தவிர ஏனைய யாவும் பல வேறு இனங்களாகப் பிரிந்தன. வேளாண் மக்களிடையே தாம் தாம் பெற்ற சிறப்புக்கட் கேற்ப, அச்சிறப்புக்களின் பெயராலேயே பற்பல சாதிகளாகப் பிரிந்து தம்மிற் கலந்துகொள்ள இயலாத மனநிலையும் ஒழுகலாறும் மேற்கொண்டனர். அவரவர் பெற்றிருந்த பொருணிலைக் கேற்ப மக்கட் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டன. கொல்லர் தச்சர் ஆயர் வேட்டுவர் பரதவர் முதலிய தொழில் செய்வோர் ஒழிய, ஏனை யாவரும் வேளாண் மக்களாகவே இருந்தது மறைய, வேறு வேறு சாதிகள் தோன்றி வேளாண் மக்களின் ஒருமை வன்மையைச் சிதைத்தொழிந்தன. அவ்வச் சாதியின் தொன்மை நிலை யுணராதவாறு ஒவ்வொன்றுக்கும் புராணங்கள் படைத் தெழுதப்பட்டன; அப்புராணங்களும் சாதிகளை வானுறையும் தேவரோடே தொடர்புபடுத்தி விட்டன.

இவ்வாற்றால் பண்டைய வேளாண் மக்களின் தொன்மை நிலை காண்பதில் அறிஞரிடையே தவறுகள் உண்டாகத் தலைப் பட்டன. மேலே காட்டிய கல்வெட்டு வரலாறுகளைக் காண்போ மாயின், களப்பாளர் அனைவரும் வேளாண் பெருமக்களாதல் இனிது விளங்கும். இவ்வரலாறுகளை நன்கு ஆராய்ந்து நோக்கும் நெறி பிறழ்ந்து, களப்பாளர்களைப் பண்டைய களப்பிரர்கள் என்று சிலர் கூறிவிட்டனர். அறிஞர் பலருடைய உள்ளத்தில் இக்கருத்தே இருந்துவிட்டது. களப்பாளர் குடியில் தோன்றிய வேளாண் பெருமக்களுட் சிலர் தம்மைக் களப்பிரர் என்றே கருதத் தொடங்கினர்.

களப்பிரர் எனப்படுவோர் இன்ன நாட்டினரென்று அறிய முடியவில்லை. வராகமிகிரர் என்பார் எழுதிய பிருகற் சங்கிதையில் பண்டை நாளைய மக்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவை “சேர சோழ கச்ச கருநட கேரள கொங்கண தக்கண நாடுகள்” என்பன; அவற்றுள் சேரநாடென்று குறிக்கப்படுவது கொங்கநாடு; களப்பிரரைப்பற்றிய குறிப்பே கிடையாது1. சளுக்க வேந்தனான முதல் விக்கிரமாதித்தன் குறிப்புக்களிலும் வினயாதித்தன் குறிப்புக்களிலும் இரண்டாம் விக்கிரமாதித்தன் குறிப்புகளிலும் களப்பிரரைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படு கின்றன. தமிழில்உள்ள வேள்விக் குடிச் செப்பேட்டில் களப்பிரர் பாண்டி நாட்டிலிருந்தமை தெரிகிறது. பல்லவர்களில் சிம்ம விஷ்ணு, முதல் நரசிங்கன் என்போருடைய குறிப்புக்களிலும் களப்பிரர் காணப்படுகின்றனர்.

இக்களப்பிரர்கள் தமிழரல்லர்; தமிழ்நாட்டவருமல்லர். பல்லவர்கள் புகுதற்கு முன்பே தமிழகத்திற் புகுந்து சங்ககாலத் தமிழ் வாழ்வைச் சீரழித்தவர். அவர்கள் புகுதற்கு முன் தமிழகம் நாடு புகழும் நலஞ்சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம், கல்வி வாணிகம் பொருள் அரசியல் சமயம் என்ற துறைகளில் களப்பிரர் வரவால் பெருவீழ்ச்சியுற்றது. அவ்வத்துறைகளை விளக்கும் தமிழ் நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழர்களின் கல்வியைச் செல்வாக் கிழப்பித்துக் கடல் வாணிகத்தை உடலறக் கெடுத்துப் பொருள் விளக்கத்தை இருள்படுத்தி அரசியலை அலைத்தழித்துச் சமயத்தைக் குமைத்து நின்றது களப்பிரரது கடுங்கோலாட்சி யென்பது அமையும். தமிழகத்தின் வடபகுதியில் பல்லவர்களால் தாக்குற்றபோது இக்களப்பிரர், தொடக்கத்தில் கங்கநாடு புகுந்து பின் கொங்குநாடடைந்து பின்னர் அக்கொங்கு நாட்டினின்றும் பாண்டிநாடு சேர்ந்து அங்கே இடம் பெற்றிருந்தனர். பாண்டி நாட்டில் இடைக்காலத்தே தோன்றிய கடுங்கோன் முதலிய பாண்டியர்களால் அவர்கள் வேரோடு தொலைக்கப் பெற்றனர்.

இக்களப்பிரர் பண்டைய வரலாற்றில் காணப்பட்ட போதிலும் அவர்கள் நிலைபெறத் தங்கி ஆட்சி நடத்தியதாக ஒருநாடும் காணப்படவில்லை. இதனைப் பிருகத் சங்கிதையே நன்கு காட்டுகிறது. எனவே, அவர்கள் ஓரிடத்தும் நிலையாகத் தங்காமல் மக்களைச் சூறையாடுவதே தொழிலாக மேற் கொண்டிருந்த நாடோடிகள் எனத் தெரிகிறது. இப்பெற்றியராகிய களப்பிரரே பிற்காலத்தில் களப்பாளராகிய மன்னுயிர் பேணும் தமிழ் வேளாண் பெருமக்களாகத் திகழ்ந்தன ரென்பதும், இப்பெருமக்கள் வழி வந்த சிவஞானப் பெருவள்ளலாகிய மெய்கண்ட தேவரைக் களப்பிரர் என உய்த்துணர வுரைப்பதும் உண்மையறிவுக்குப் பொருந்துமா என்பதை அறிஞர்கள் கண்டு கொள்வார்களாக.

சிவ மாதவச்

சிவஞான சுவாமிகள் வரலாறு


செந்தமிழ் நாட்டில் காவிரி பாயும் கவின்பெறு நாடும் அதன் வடபகுதியிலுள்ள நாடுகளும் சிவஞானப் பேரருட் செல்வர்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்களையும் அவரது வரலாறு கண்டுரைத்த சேக்கிழார் முதலிய அருட்சான்றோர்களையும் பெற்று உலகிற்கு அளித்த பெருமையும் தவமும் உடையன என்பர். எனினும், அன்று தொட்டு இன்றுகாறும் சைவ வொழுக்கத்தில் சிறப்புக் குன்றாது நிலவும் சிறப்பு தென்பாண்டி நாட்டுக் குரியது என்பதை எவரும் மறுத்தற்கியலாது. சைவத்தின் பெருமாண்பினை நின்று நிலை பெறுமாறு அரும்பணி புரிந்த சான்றோர்களுள் குமர குருபர அடிகளும் சிவஞான முனிவரும் தலையாயவராவர். குமர குருபரர் தண்ணான் பொருநை என்னும் தாம்பிரபரணி கடலொடு கலக்கும் பகுதிக்கண் உள்ள சீவைகுண்டம் என்னும் பேரூரில் தோன்றிச் சிவஞானக் கருத்துக்கள் நிறைந்த செந்தமிழ்த் தீவிய பாட்டுக்களால் சிவப்பணி புரிந்து கங்கையாறு பாயும் கழனி நாடுகாறும் சென்று ஆங்கும் நம் சைவத்தின் தனிச்சிறப்பினை நிலைநாட்டிய சான்றோராவர். அவரது புகழ் விளக்கமாக இன்று திருப்பனந்தாள் காசிமடம் ஞானவொளி வீசிக்கொண்டுளது.

அவ்வடிகட்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் மற்றொரு ஞான முனிவர் தண்ணான் பொருநை, பொருப்பினின்று நிலத்திடைக் கால்வைக்கும் இடத்தே தோன்றியருளினார். அப்பகுதியில் பாபநாசம் என்னும் பேரூர்க் கண்மையில் விக்கிரமசிங்கபுரம் என்ற இனிய ஊர் இன்றும் உளது. அவ்வூர்தான் இந்த ஞான முனிவரை, சிவஞான முனிபுங்கவரைப் பெற்ற பெருமையால் பிறங்குகின்றது. இப்பெருமுனிவர்தான் சிவஞான போதத்துக்குப் பேருரையும் சிற்றுரையும் வழங்கியருளிய பெருமானாவர்.

அவ்வூர்க்கண் இவரை மகனாகப் பெறுதற்குரிய பெருந்தவத்தைச் செய்த பெற்றோர் ஆனந்தக்கூத்தர் என்பாரும் மயிலம்மை என்ற அருட்செல்வியாருமாவர். பெற்றோர் தம் மகனார்க்கு இளமையில் இட்டு மகிழ்ந்த பெயர் முக்களாலிங்கர் என்பது.

முக்களாலிங்கர் மிக்க இளம் பருவத்தேயே சிறந்த கல்வியும் திருந்திய ஒழுக்கமும் கொண்டு விளங்கினார். பள்ளியிற் பயிலும் போதே அழகிய கருத்தமைந்த பாட்டுக்களைப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர் சிலர் ஒருகால் அவ்வூர்க்குச் சென்றிருந்தனர். பள்ளிச் சிறுவராகிய முக்களாலிங்கர் அம்முனிவர்களைக் கண்டதும், அவர்களைத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று திருவமுது பண்ணுவிக்கும் சிந்தை கொண்டார்; தமது மனைக்கும் அழைத்துச் சென்றார். அப்போழ்து அவரது தந்தையார் வெளியூர் சென்றிருந்தார். ஆயினும் தமது அருமை மகனாரின் விழைவு கண்ட மயிலம்மையார் உயரிய முறையில் முனிவர்களை வரவேற்று உண்மையன்போடு திருவமுது செய்வித்தார். மகனாரது மனமாண்பையும் அவரைப் பெற்ற தாயாரது சைவப் பேரொழுக்கத்தையும் கண்டு வியந்த முனிவர்கள் அவர்களை வாழ்த்திவிட்டுத் தாம் தங்கியிருந்த திருமடத்துக்குச் சென்றிருந்தனர். வெளியூர் சென்றிருந்த ஆனந்தக் கூத்தர் வீடு திரும்பியதும் தமது மனையில் நடந்த சைவ நிகழ்ச்சியை அறிந்து பேரின்ப முற்றதோடு தம்முடைய மகனது சைவப் பற்றினைப் பாராட்டி உவகையுற்றார். அக்காலை, முக்களாலிங்கர் தாய்தந்தையரை வணங்கித் தாம் முனிவர்களுடன் திருவாவடு துறைக்குச் சென்று சிவஞானம் பெற்றுச் சிவப்பணி புரியும் கருத்தினராதலைத் தெரிவித்தார். ஆனந்தக்கூத்தர் அதுகேட்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு முனிவர்களை யடைந்து மகனது மன விருப்பத்தை வணக்கத்தோடு தெரிவித்தார். அவர்களும் அவர் வேண்டுகோளை ஏற்று முக்களாலிங்கரைத் திருவாவடுதுறைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.

அக்காலத்தே திருவாவடுதுறையில் பின் வேலப்ப தேசிக சுவாமிகள் சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்தார். முக்களா லிங்கர் அவர்பால் இருந்து சிவதீக்கையும் சைவத் துறவும் மேற்கொண்டு சிவஞான யோகி என்னும் தீக்கைச் சிறப்புப் பெயர் பெற்றுச் சைவ ஒழுக்கத்தில் திகழ்ந்து வருவாராயினர். அக்காலத்தே அவர் செந்தமிழ் வடமொழி யென்ற இருமொழியிலும், இலக்கணம் இலக்கியம் தருக்கம் முதலிய துறைகளிற் சீர்த்த புலமை பெற்றுச் சிவாகமங்களிலும் திருமுறைகளிலும் சிவஞான போத முதலிய சித்தாந்த நூல்களிலும் மிகச் சிறந்த பயிற்சியும் புலமையும் பெற்றார்.

ஒருகால் முக்களாலிங்கராகிய சிவஞான யோகிகள் திருப்பாதிரிப்புலியூர்க்குச் சென்றார். முன்னாளில் திருநாவுக்கரசர் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து கரையேறிய பேரூராதலின், அங்கே சின்னாள் தங்கியிருந்தார். அப்போது கற்றோர் கூடிய பேரவை யொன்றில், “கரையேற விட்ட முதல்வா உன்னையன்றியும் ஓர் கதியுண்டாமோ”என்ற ஈற்றடி தந்து இதனை ஒரு பாட்டாய் முடித்துத் தருவோர்க்கு ஒரு நூறு பொன் பரிசு தருவதாகச் செல்வர் ஒருவர் தெரிவித்தார். அதனை யறிந்த ஏழை ஒருவன் நம் சிவஞான முனிவர்பால் வந்து அதனைத் தெரிவிக்க, அவர் உடனே ஒரு சிறு தடையுமின்றி,

“வரையேற விட்டமுதம் சேந்தனிட
 வுண்டனை; வல்லினம் என்றாலும்
 உரையேற விட்டமுதலாகுமோ எனைச்
 சித்தென் றுரைக்கின் என்னாம்;
 நரையேற விட்டமுத னாளவனாக்
 கொண்டுந றும் புலிசைமேவும்
 கரையேற விட்டமுதல்வா வுன்னை
 யன்றியுமோர் கதியுண்டாமோ”

என்று பாடிக் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்லுமாறு அருளினார்.

பின்பு அங்கிருந்து தொண்டைநாட்டுக் காஞ்சிமாநகரம் சென்று பிள்ளையார்பாளையம் எனப்படும் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாளையத்தில் நம் முனிவர் பெருமான் பன்னாட்கள் தங்கியிருந்தார். அங்கே மணிகண்ட முதலியார் என்னும் பெருஞ் செல்வர் ஒருவர், முனிவர் பெருமானை வழிபட்டு ஆதரவு செய்து வந்தார் என்பர். அக்காலத்தே தான் வைணவருட் சிலர் செருக்கிக் கூறிய கம்பராமாயணத்து “நாடிய பொருள் கைகூடும்” எனத் தொடங்கும் பாட்டிற்குப் பல்வேறு வகை வழுக்களை முனிவர் பெருமான் எடுத்துக் காட்டியதும், பின்பு அவர் தம் வேண்டுகோட் கிரங்கி, அக்குற்றங்கட்கு அமைதி கூறியதும் நடந்தன.

முனிவர் பெருமான் காஞ்சிமா நகர்க்கண் இருக்கையில் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், திருத்தணிகைக் கந்தப்பையர், கச்சியப்ப முனிவர் முதலிய சான்றோர் பன்னிருவர்க்கு ஆசிரியராய் இருந்து அறிவுநூல்களை அறிவுறுத்தருளினார். அவர் அங்கே காஞ்சிப் புராணம் பாடியருளியபோது, சில அறிஞர்கள், தலபுராணத்துக்குரிய ஏகம்பர் துதிக்கு முன்னாக தில்லைச் சிற்றம்பலவாணரைத் துதித்துப் பாடியதன் கருத்தை அறிய ஆவல்கொண்டனர்; அதனால் முனிவர் பெருமான் அவ்வாறு பாடியது குற்றம் என்றும் சிலர் குறை கூறினர் என்பர். அதற்கு முனிவர் மாணவர்களில் ஒருவரான கச்சியப்ப முனிவர் முன் வந்து, அவருட் சிலரை ஒருங்கு கூட்டி, அவர் முன் திருவேகம்பத் திருப்பதிகத்தை ஓதுமாறு பணித்தார். ஓதுவோர் “திருச்சிற்றம்பலம்” என்று தொடங்கி, அப்பதிகத்தை ஓதினர். உடனே கச்சியப்பர், குறைகூறிய அறிஞர்களை நோக்கித் திருவேகம்பத் திருப்பதிகத்தை ஓதத் தொடங்குமுன், திருச்சிற்றம் பலம் என்பது முறையாகுமா? திருவேகம்பம் பிருதிவியம்பல மாதலின், “பிருதிவியம்பலம்” என்பதன்றோ முறை யென்றாராக, அவர்கள் அனைவரும் உண்மை யுணர்ந்து மனக்குறை நீங்கி இன்புற்றனர்.

காஞ்சிமா நகர்க்கண் சிவஞான முனிவர் சிவஞானப் பெருங் கடலுருவாய்த் தம்பால் வந்த பலர்க்கும் சிவஞானம் வழங்கி வருகையில் வடமொழியில் அருமையாய்க் காணப்படும் சைவ நூல்களும் அவர்க்கு மிக்க எளிமையாய்க் கிடைத்தன. வடமொழிப் புலவரும் செந்தமிழ்ப் புலவரும் முனிவர்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டு போற்றினர். அந்தச் சூழ்நிலையில் முனிவர் பெருமானுடைய நினைவும் சொல்லும் எல்லாம் சிவஞான மயமாய்த் திகழ்ந்தன. அவற்றின் விளைவாய் முனிவர் பெருமான், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பேருரையை எழுதியருளினார். பிரமசூத்திரத்துக்குச் சங்கரர், இராமநுசர், மாத்துவர், சீகண்டர் முதலியோர் எழுதிய பேருரைகளின் நுட்பங்களும், அவர் உரைகளில் காணப்படாது திருவருள் ஞான நெறியாற் காணத் தக்க நுண்பொருள்கள் பலவும் இப்பேருரையில் நிறைந்திருந்ததை அந்நாளில் வாழ்ந்த பேரறிஞர் பலரும் கண்டு இறும்பூதெய்தினர். அதனால், அவர்கள், ஞானத்தின் திருவுருவாகிய முனிவர் பெருமானை வணங்கி, வடமொழிச் சிவஞான போதத்துக்குப் பேருரை கண்ட சிவாக்கிர யோகிகள் சிற்றுரையும் உடனெழுதியது போல இச்சிவஞானமாபாடியப் பேருரையுடன் சிற்றுரையும் எழுதியுதவ வேண்டுமென இறைஞ்சினர். அவ்வாறே இச்சிற்றுரை சிவஞான முனிவரால் எழுதப்பட்டது என்பர்.

சிவஞானபோதப் பேருரை சிற்றுரைகளுடன், சிவஞான சித்தியார்க்குப் பொழிப்புரையும், சிவசமவாத வுரைக்கு மறுப்பும், அரதத்தாசாரியார் சுலோக பஞ்சகத்துக்கு மொழி பெயர்ப்பும் வேறு பல நூல்களும் அருளியுள்ளனர்.

இவ்வாறு சிவஞானமுணர்த்தும் பேருரை நிகழ்த்தித் தமிழகத்துப் பல பகுதிகட்கும் சென்று சிவத்தொண்டு புரிந்தருளிய முனிவர் பெருமான் திருவாவடுதுறையில் சகாத்தம் 1708-க்குச் சரியான விசுவாவசு ஆண்டு சித்திரைத் திங்கள் எட்டாம் நாள் (கி. பி. 17-4-1785) ஞாயிற்றுக்கிழமை 1-40-மணிக்கு “நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ்” அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

முனிவர் பெருமான் வழங்கியருளிய நூல்கள்:

தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
நன்னூல் விருத்தியுரை
இலக்கண விளக்கச் சூறாவளி
காஞ்சிப்புராண முதற்காண்டம்
சோமேசர் முதுமொழி வெண்பா
குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி
இளசைப் பதிற்றுப்பத் தந்தாதி
கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம்
திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்
குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ்
செப்பறை- இராசை அகிலாண்டேசுவரி பதிகம்
திருவேகம்ப ரந்தாதி
திருமுல்லை வாயிலந்தாதி
திருத் தொண்டர் திருநாமக் கோவை
பஞ்சாக்கர தேசிகர்மாலை
கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி
தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம்
சிவஞான பாடியம்
சிவஞான சித்தியார் (சுபக்கம்) பொழிப்புரை
சித்தாந்தப் பிரகாசிகை
சிவசமவாதவுரை மறுப்பு
அரதத் தாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு
சிவதத்துவ விவேகம்
சித்தாந்த மரபு கண்டன கண்டனம் முதலியன.

சிவஞான போதச் செம்பொருள்


1.  நம் கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலகம், உயிருடைப் பொருள் உயிரில் பொருள் எனவும், இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எனவும், பருப்பொருள் நீரியற் பொருள் காலியற் பொருள் எனவும் செய்யப்படும் ஆராய்ச்சிக்கேற்ப வகுத்து ஆராயப்படும். சமயத்துறையில் நின்று ஆராய்ச்சி செய்வோர் தங்கள் தங்கள் சமயக் கொள்கைகட் கேற்பப் பொருள்களைப் பகுத்து ஆராய்வர். தமிழிலக்கண நூலோர் பொருள்களை மக்கட் பொருள் என்றும் பிற பொருள் என்றும் பகுத்து நோக்குவர். இவ்வுலகிடை நின்று அறிவாராய்ச்சி செய்யும் அறிஞர் அனைவரும் தமக்கேற்ற வகையில் இவ்வுலகம் பகுத்து நோக்கப்படும் பான்மை யுடையதாயிருப்பதைக் காண்கின்றனர். தமிழ் நூன் முறைப்படி இவ்வுலகம், உயர்திணை அஃறிணை என இருவகையாக வைத்துப் பொருளாராய்ச்சி செய்யுமாறு அமைந்துளது. உயர்திணைப் பொருள் ஆண் என்றும் பெண் என்றும் பகுக்கப்படுகிறது; ஏனை அஃறிணைப் பொருளின்கண் உயிருடையன சில ஆண் பெண்ணெனப் பகுத்துணரப்படினும் உயிருடைப் பொருளுட் சிலவும், உயிரில் பொருள் அனைத்தும் ஆண் பெண் பாகுபாட்டிற்கு அகப்படுவ தில்லை; அதனால் அப்பொருள் அது என்ற சொல்லாலும், உயர்திணை ஆண் அவன் என்ற சொல்லாலும், உயர்திணைப் பெண் அவள் என்ற சொல்லாலும் குறிக்கப்படுவது தமிழ் படிப்பவர் அனைவரும் அறிந்தது.

இதனால் இவ்வுலகு முற்றும் அவன், அவள், அது என்று குறிக்கப்படும் பொருள்களின் தொகுதியே யென்பது தெளிவாம். ஆனதுபற்றியே மெய்கண்ட தேவர் இவ்வுலகத்தை, “அவன் அவள் அது எனும் அவை” என்று குறித்தருளினார். ஆணும் பெண்ணுமாய்ப் பலர் கூடியிருக்கும் இடம் அவை யெனப்படும். அவ்வாறே, அவன், அவள், அது என்னும் மூவகைப் பொருளும் கூடி இயன்றுள்ள உலகும் அவை யென்று குறிக்கப்பட்டது.

நாம் காணும் ஒவ்வோர் அவையும் மக்கள் வந்து கூடுங்கால் தோற்றமும், இருக்குங்கால் நிலை பேறும், பிரிந்து போகுங்கால் கேடும் எய்துகிறது. இதுபோலவே இவ்வுலகமாகிய அவையும் தோற்றம், நிலை, இறுதி யென்ற மூன்று செயல்களையும் உடைய தென்பது இனிது விளங்குகிறது. நாம் காணும் அவைகள் தாமே கூடுவதின்றி, ஒருவர் முன்னின்று கூட்டக் கூடலும், இருத்த இருத்தலும், பிரிக்கப் பிரிதலும் உடையது; இதுபோலவே, இவ்வுலகமும் தானே தோன்றாது முதல்வன் ஒருவன் தோற்றுவிக்கத் தோன்றலும், நிற்பிக்க நிலைபெறுதலும், ஒடுக்க ஒடுங்குதலும் உடையதென்பது தானே விளங்கும். நம்மாற் காணப்படும் உலகம், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவை போல்வதாகையால், ஒருவர் தோற்றுவிக்கத் தோன்றி நிலைபெறுகிறது என்பது தெளிவாம். ஆதலால், ஆசிரியர், அவனும் அவளும் அதுவுமாகிய பொருள்கள் கூடியிருக்கும் இவ்வுலகமாகிய அவைக்குத் தோன்றுதல் முதலிய மூவினைகள்1 இருக்கிற படியால், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவைபோல, உலகம் தோற்றுவிக்கத் தோன்றி நிலைபெறுகிறது என்று கூறுகின்றார். இதனை முதற் சூத்திரம், அவை மூவினை உடைமையின் தோற்றிய திதியே என்று கூறுகிறது. இது, தானே தோன்றியதன்று என்பதற்காகத் தோன்றிய திதி என்று சொல்லாமல் தோற்றிய திதி என்றார். அதற்கு, தானே தோன்றாமல் தோற்று விக்கப்பட்டு உளதாயது என்று பொருள் கூறப்படும்.

உலகில் நாம் கூட்டக் கூடும் அவை முடிந்தவழி, அவ்வவையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும்போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ்வண்ணமே இவ்வுலகமாகிய அவையும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத் தோற்றுவிக்கும்போது அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய அவையாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும்போது, அஃது ஒடுங்கியிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை “ஒடுங்கி” என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம் தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு “ஒடுங்கி உளதாம்” என்றார். எனவே, அவன் அவள் அது என்பவற்றின் தொகுதியாகிய அவை தோற்றிய திதியாய்க் காட்சியளித்து ஒடுங்கும் என்றும், தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கி யினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்தவாறாயிற்று.

ஒரு நாள் கூடிய ஒரு பேரவை மறுநாளும் மீளக்கூடுமாயின், நாம் என்ன நினைப்போம்? முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடியிருக்கிறதென்றும், கைகூடா மைக்குக் காரணமாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற்றென்றும் தானே நினைப்போம். அதுபோலவே, ஒரு கால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், தோன்றியது கொண்டு பெற்றுக் கொள்ளவேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப்படுவதாயிற் றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு தடுத்திருந்த தடையினால் மீளத் தோற்றுவிக்கப்படுகிறதென்றும் எண்ணவேண்டும். அத்தடை யாது என ஆராய்ந்து அஃதாவது மலம் என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி மலத்தால் மீள அவ்வொடுங்கி யினின்றே உளதாம் என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

இவ்வாறு ஒடுக்குவதும் ஒடுங்கியதற்கு இடமும் ஆதலால் இறைவன் உலகுக்கு அந்தமும், மீளத் தோற்றுவித்தற்கும் அவனே காரணமாதலால் ஆதியுமாகின்றான். தனக்கு ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், உலகிற்கு அந்தமும் ஆதியுமாவது பற்றி “அந்தம் ஆதி என்மனார் புலவர்” என்று ஆசிரியர் கூறுகின்றார். என்மனார் புலவர் என்பதற்கு, என்று சொல்லுவர் ஆராய்ச்சி யுணர்வு படைத்த அறிஞர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

இச்சூத்திரத்தால் சில கருத்துக்கள் தெளிவுபட வேண்டும். ஓர் அவை கூட்டப் பெறுதற்கு ஒரு நோக்கம் இருப்பதுபோல, உலகப் படைப்புக்கும் ஒரு நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் யாது? அந்நோக்கம் கைகூடாது தடுக்கும் மலம் யாது? உலகப் படைப்பு அந்நோக்கத்தை எவ்வாறு கைகூட்டுவிக்கும்?

இவ்வுலகம் உயிரும் உயிரில் பொருளுமாகக் காட்சி அளிக்கிறது. இவ்வாறு காட்சியளிக்கச் செய்வதுதான் உலகப் படைப்பு என்பது. உயிர்கள் ஆக்கப்படுவதுமில்லை; அழிவது மில்லை. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்கள் உண்டு. இறைவன் ஒருவன்; உயிர்கள் எண்ணிறந்தன. செம்பின்கண் களிம்பு உடனிருப்பதுபோல உயிர்களிடத்தே மலம் உடன் இருக்கிறது. களிம்பு நீங்கின செம்பு ஒளி விட்டுத் திகழ்வது போல, மலம் நீங்கின உயிர் ஞானவொளி சிறந்து பேரின்பம் எய்தும். செம்பின்கண் களிம்பு எப்பொழுது ஏன் உண்டாயிற் றென்ற கேள்விக்கு விடை கிடையாது; அதுபோல உயிர்கட்கு மலம் எப்பொழுது ஏன் உண்டாயிற்றென்று காண்பது ஆகாத ஒன்று. இதனை அனாதி சம்பந்தம் என்று அறிவுநூலோர் கூறுவர். உயிரின் வேறாகக் காட்சியளிக்கும் உடலும் கருவிகளும் நுகர் பொருளுமாகிய உலகம் இவ்வாறு காணப்படுமாறு செய்வதுதான் படைப்பு என்பது. இவ்வுலகத்துக்கு முதற்காரணம் ஒன்று உண்டு. உயிரில் பொருளாகிய இவ்வுலகம் ஒடுங்குங்கால் முதலில் நுண் பொருளாய் ஒடுங்கும்; அதுவே பின்னர் ஆற்றலாய் (Energy) ஒடுங்கும்; அந்த ஆற்றல் (சக்தி) மாயை யென்று நூல்களிற் கூறப்படும். இறைவன் ஒளியும் ஒளிப்பொருளும் போல்வன். ஒளிப்பொருளினின்றும் நீங்காமல் இருக்கும் ஒளிபோல அவனி டத்தினின்றும் நீங்காமல் இருப்பது அவனது அருள். அஃது அருட்சத்தி யென்றும் வழங்கும். ஆற்றலாய் ஒடுங்கிய மாயை அவனது அருட்சத்தியில் தங்கும். அந்த அருட்சத்தி இறைவனாகிய சிவத்தில் ஒடுங்கியிருக்கும். ஒடுங்கியாகிய சிவன், மாயையை மீளத் தோற்றுவிக்கக் கருதுவானாயின், அருட்சத்தியை நோக்குவன், அது மாயையாகிய சத்தியை வெளிப்படுத்தி, உடம்பும் கருவியும் பொருளும் உலகுமாக விரிந்து காட்சிப்படச் செய்யும்.

முதற்காரணமாகக் கொண்டு உயிர்கட்குரிய உடம்பொடு கூடி வாழும் உயிர் மலமறைப்பு நீங்கி அறிவு விளங்கப் பெறுகிறது. உயிர்க்கு அந்த நன்னிலை எய்த வேண்டுமென்ற பேரருளால் இவ்வுலகம் மீளப் படைக்கப்படுகிறது. அறிவுருவாக இருக்கும் உயிரோடு கொண்ட அனாதி சம்பந்தத்தால், மலம் அதன் அறிவை மறைத்து, உலகிடைத் தோன்றிப் பெறுதற்குரிய அறிவு விளக்கத்தை நிரம்பப் பெறாதவாறு தடை செய்கின்றது. அறிவு விளக்கம் பெற்று அதன் வழியாக எய்தும் பேரின்பத்தை நுகர்வது தான் உயிரின் நோக்கம்; அதற்குத் துணைபுரிவது, உடல் கருவி முதலியவற்றிற்கு முதற் காரணமாகிய மாயை. இக்கருத்துக்கள் விளங்கவே, ஆசிரியர் மெய்கண்டார்,

“அவன் அவள் அது எனும் அவை மூவினை மையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

என்று அறிவுறுத் தருளுகின்றார்.

2.  அவன் அவள் அது என்னும் மூவகைப் பொருளும் கூடிக் காட்சியளிக்கும் உலகமாகிய அவற்றை தோற்றுவித்து நிலை பெறுவித்தற்கு இறைவன் தனது அருட்சத்தியை நோக்குவன் என்று முன்னே கண்டோம். அந்த அருட்சத்தி இறைவனாகிய முதல்வனுக்கு ஆணையென்று சொல்லப்படும். அவன் நினைப்பையே தனக்கு ஆணையாகக் கொண்டு அவ்வருட்சத்தி இயங்குவதால் அஃது ஆணை என்று கூறப்படுகிறது. அந்த ஆணையும் இறைவனும், குணமும் குணியும் போலப் பிரிந்து நில்லாத தற்கிழமைத் தொடர்பு உடையவை; செந்தாமரைப் பூவின் செம்மை பிரிக்கமுடியாது ஒன்றியிருப்பதுபோல இறைவனது ஆணையாகிய அருட்சத்தி அவனிற் பிரியாது ஒன்றி நிற்கும். இதுபற்றியே ஆசிரியர், அந்தம் ஆதியென முதற் சூத்திரத்திற் கூறப்பட்ட இறைவனாகிய முதல்வன் “ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்று அறிவுறுத்துகின்றார். நீங்கி நிற்பதற்கும் நீக்கமின்றி நிற்பதற்கும் உரிமையுடையவன் முதல்வனாதலால், ஆணை நீக்கமின்றி நிற்கும் என்று சொல்லாமல், முதல்வன் “ஆணையி னின்றும் நீக்கம் இன்றி நிற்கும்” என்று சொல்லி யருளுகின்றார்.

இனி, இவ்வுலகத்துக்கு அந்தமும் ஆதியுமாய் நிற்கும் இறைவன் இருக்கும் இயல்பு கூறலுற்ற ஆசிரியர், உலகமாகிய அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய் நிற்கின்றான் என்று கூறுகின்றார். முதல்வன் தானேயாய் நிற்கும், அவையேயாய் நிற்கும், அவையாயும் தானாயும் உடன் நிற்கும் என்பது கருத்து. முதல்வன் தானேயாய் நிற்பதென்பது, முதல்வன் உலகுயிர்களோடு கலக்காமல் வேறாய்த் தனித்து நிற்கும் நிலை; அவையேயாத லென்பது, உலகமாகிய அவை வேறு தான் வேறு என்னாதவாறு ஒன்றாய்க் கலந்து நிற்கும் நிலை; உயிரும் உடம்புமாய்க் கலந்து நிலவும் நம்பால், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காணாதபடி நம்முயிர் உடம்போடு கலந்து ஒன்றாய் நிற்பது போல, முதல்வன் உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான் என்பது. உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்குங்கால் உலகம் முதல்வனாதலும், முதல்வன் உலகமாதலும் இல்லை. எவ்வா றென்றால், உடம்போடு ஒன்றாய்க் கலந்து நிற்கும் உயிர் உடம்பாவதும், உடம்பு உயிராவதும் இல்லையன்றோ, அதுபோல என அறிதல் வேண்டும். உலகில் நிலவும் உயிர்கட்கு, அறிவு விழைவு செயல் என்ற மூன்று இயல்புகள் உண்டு. அறிவு முதலிய இயல்புகள் வெளிப்படுதற்குரிய கருவியொடு கூடுமாயின், உயிர், அறிவதோ விழைவதோ செய்வதோ மேற்கொள்ளும். உயிரின் வேறாய உலகியற் பொருள் கட்கு அத்தகைய செயல் கிடையாது. அப்பொருள்கள் உயிர்ப் பொருட்டுச் செயற்படவேண்டி யிருப்பதால் முதல்வன் அவற்றோடு ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான். அவ்வாறு நில்லானாயின், உலகியற் பொருள் ஒரு நெறிப்பட ஒழுகுதற்கு ஏது இல்லை யாகும்; இக்கால விஞ்ஞான வளர்ச்சிக்கும் இடமில்லையாம்.

உலகியற் பொருளால் ஆகிய உடம்பின்கண் நிற்கும் உயிர் மலத் தடையிலிருந்து நீங்க வேண்டுமென்று, உலக வாழ்க்கையைத் தொடங்கும்; வாழ்க்கையில், அறிவனவற்றை அறியவும் விழையவும் செய்யவும் இறைவன் உடனிருந்து துணை செய்கின்றான். உடம்போடு ஒன்றாயும், உயிரின் வேறாயும், இரண்டினையும் விட்டு நீங்காமலும் இருப்பதால், அவ்வாறு இருக்கும் முதல்வனது இருப்பு உடனாதல் எனப்படுகிறது; இரண்டாம் சூத்திரம், அவையே தானேயாய் என்று உணர்த்துகிறது. உலகிற்கு அந்தம் செய்யும் ஆதியாகிய முதல்வன் அந்தமும் ஆதியுமாகும்போது வேறாய் நிற்பதும், உயிரில் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும், உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான்,

“ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண்ணாண்
 குண மூன்றாய்
 மாறா மறை நான்காய் வருபூதம்மவை
 யைந்தாய்
 ஆறார் சுவை ஏழோசையோ டெட்டுத்
 திசை தானாய்
 வேறாய் உடனானான் இடம்
 வீழிம் மிழலை யே”

என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, “வேறாய் ஈறாய் முதலாய்” என்றும், ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை, “ஒன்றாய் இரு பெண்ணாணாய், குணமூன்றாய், மறைநான்காய், பூதமவை யைந் தாய், ஆறார் சுவையாய், ஏழோசையாய், எட்டுத்திசை தானாய்” என்றும், உயிர்களோடு ஒன்றா காமலும் வேறாகாமலும் உடனிருந்து கண்டும் காட்டியும் உதவியருளும் முதல்வன் திறத்தை “உடனானான்” என்றும் இத்திருப்பாட்டில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலை யினையும் திருவருளால் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழிகளிலோ இதுகாறும் காணப்படவில்லை. இக்கருத்துக்களை வற்புறுத்துவதற்காகத்தான், ஆசிரியர், புலவர் பெருமக்களால் “அந்தம் ஆதி” எனப் புகழ்ந் தோதப்பெற்ற முதல்வன், “அவையே தானேயாய் நிற்கும்” என்று இச்சூத்திரத்தின் எடுத்த எடுப்பிலேயே இயம்பி யருளுகின்றார்.

உலகில் நிலவும் உயிர்கள் ஒவ்வொன்றும் மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் உடம்பால் செயல் செய்தலும் செய்கின்றன. இவையாவும் வினையென்றே கூறப்படும். இவ்வினைகள், இன்பம் விளையுமாயின் நல்வினையும், துன்பம் விளையுமாயின் தீவினையும் என இருவகைப் பெயர் பெறும். இவ்வினையும் வினைப்பயனும் உயிர்போல அறிவில்லாதன வாதலால், அவை தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா; வினையையும் வினைப்பயன்களையும் கூட்டுவிப்பது முதல்வன் செயல். வினைக்குரிய பயனையும், பயனை உயிர்கள் நுகர்தற்குரிய உடல் கருவிகளையும் முதல்வன் தன் ஆணையாகிய சிற்சத்தியால் தோற்றுவிப்பன். அவ்வாணை, உயிர்களின் வினை நுகர்ச்சிக் கேற்ப உடல் கருவி முதலியவற்றைக் கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டுங்கால் பிறப்பும், நீக்குங்கால் இறப்பும் உண்டா கின்றன. ஆனதுபற்றியே, உயிர்கள் ஆணையின் இருவினையின் போக்குவரவு புரிய என்று ஆசிரியர் உரைத்தருளுகின்றார். போக்கு, இறப்பு; வரவு, பிறப்பு.

இவ்விரண்டு சூத்திரங்களாலும், உலகிற்கு முதல்வன் இறைவன் என்றும், முதற்காரணம் மாயை யென்றும், துணைக் காரணம் ஆணையாகிய அருட்சத்தி யென்றும், உலகப் படைப்புக்குக் காரணம் உயிர்களிடத்திலுள்ள மலம் என்றும், உலக வாழ்வின்கண் உயிர்கள் வினை செய்கின்றன என்றும் கண்டோம். இவ்வகையால், இறைவன், உயிர், உலகு என்ற மூன்றும், மலம், மாயை, வினை என்ற மூன்றும் உண்டென அறிகின்றோம். மலம் முதலிய மூன்றையும் பாசம் என்றும், இவற்றோடு தொடக்குறும் உயிரைப் பசு என்றும், இறைவனைப் பதி என்றும் கூறுவது வழக்கம். இவற்றை உணர்த்தவே,

“அவையே தானே யாய் இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்க மின்றி நிற்கு மன்றே”

என அறிவுறுத்துகின்றார்.

3.  உயிரென்பது ஒன்று உண்டென்பதை மூன்றாம் சூத்திரத்தால் வற்புறுத்துகின்றார். உயிர்க்கு ஆன்மா என்ற பெயரை வேதாந்த நூல்களாகிய உபநிடதங்கள் கூறுகின்றன. நம் நாட்டில் சமய நெறியில் நின்ற அறிஞருள் சிலர் ஆன்மா என ஒன்று கிடையாது என்றனர்; சிலர் உடம்பே ஆன்மா என்றனர்; சிலர் இந்திரியங்களையே ஆன்மா என்றனர்; கனவின்கண் காணப்படும் சூக்கும உடம்பையே சிலர் ஆன்மா என்றனர்; பிராணவாயுவையே ஆன்மா என்றனர் சிலர். இவ்வாறு சுத்த பிரமமே ஆன்மா என்றும், எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்றும் சிலர் கூறிவந்தனர். அவர்களை முறையாக எடுத்து மறுத்து அவர் கூறுவனவற்றின் வேறாக ஆன்மா என்று ஒன்று உளது என ஆசிரியர் நிலைநாட்டுவாராயினர்.

உடம்பை நோக்கி, உடல், பொறி,மனம் முதலிய கூறுகளாகப் பகுத்து ஒவ்வொன்றையும் உயிரல்லவெனக் கழித்து ஒன்றும் ஆன்மா அன்று என்று கண்டு ஆன்மா என ஒன்று இல்லை யென்பாரைப் பார்த்து, இவ்வாறு கூறிட்டு நோக்கி ஆன்மா இல்லையென எண்ணிக் கூறுவது யாதோ அதுவே ஆன்மா என்று சொல்லலுற்று, இலது என்றலின் ஆன்மா உளது என்றார். உடலே ஆன்மா என்பாரை நோக்கி, “நீங்கள் இது எனது உடல் என்கிறீர்களல்லவா? எனது என்ற சொல்லுக்குப் பொருளாய் உள்ளது யாது?” என்று கேட்டு, உடலின் வேறாக எனது என்னும் சொற்குப் பொருளாய் இருப்பதுவே ஆன்மா; அதற்கு உடைமை யாகிய உடம்பு ஆன்மா அன்று என்று தெருட்டுதற்கு, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றார். கண் முதலிய இந்திரியங்கள் பொருள்களைப் பார்த்தல் முதலிய அறிவுச் செயலைச் செய்வதால் அவ்விந்திரியமே ஆன்மா என்பவர்களைக் கண்டு, கண் முதலிய பொறிகள் தத்தமக்குரிய ஒளி முதலியவற்றைக் கண்டறியுமே யன்றி, கண் ஓசையையும் காது ஒளியையும் இவ்வாறே பிற பிறவற்றையும் அறியா: இவையே ஆன்மாவாயின், ஒன்றே எல்லாவற்றையும் அறியவேண்டும். அவ்வாறு அறியா மையால் இந்திரியம் ஆன்மா ஆகாது என்பாராய், ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றார்.

இனி, சூக்கும வுடம்பே ஆன்மா என்பாரை நோக்கிக் கனவின் கண் சூக்கும வுடம்பு காணும் காட்சியை நனவின்கண் தூலவுடம்பு கண்டதாகக் கூறுவதால், அதற்கு வேறாக ஒன்று நின்று காண்கிறதென்பது பெறப்படும். அவ்வொன்றே ஆன்மா என அறிக என்பாராய், ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றார். பிராணவாயுவே ஆன்மாவாயின், அஃது நனவுக் காலத்தில் நுகரும் இன்ப துன்பங்களை உறங்குங் காலத்திலும் பிராணவாயுவின் இயக்கம் இருப்பதால் நுகர்தல் வேண்டும்; அவ்வாறு நுகர்ச்சி இல்லாமையால் பிராணவாயு ஆன்மா அன்றாம். ஆகவே அதனின் வேறாக ஆன்மா உளது என்பார், “கண்படில் உண்டி வினைஇன்மையின் ஆன்மா உளது” என்றார். உண்டி யென்றது இன்ப துன்பங்களை நுகர்வது.

இனி, சுத்த பிரமமே ஆன்மா என்பவர்களைப் பார்த்து, பிரமம் என்பது, எல்லாவற்றையும் ஒருவர் அறிவிக்க அறியாமல் ஒருங்கே ஒரு குறையுமில்லாமல் தானே அறியும் சைதன்னியம் என்று சொல்லுகிறீர்கள். ஆன்மாவோ, தானே எதையும் அறிய மாட்டாது, அறிந்தோர் அறிவிக்க அறியும் சிறுமை யுடையது; ஆகவே; பிரமமே ஆன்மா என்பது பொருந்தா தென்பாராய், “உணர்த்த வுணர்தலின் ஆன்மா உளது” என்றார்.

இனி, பொறி முதலிய எல்லாவற்றின் கூட்டமே ஆன்மா வென்பார்க்கு, பொறி முதலிய எல்லாம் ஒரு பாவையிடத்தும் கூடியுள்ளன; ஒரு பிணத்தினிடத்தும் உடம்புக்குரிய கூறுகள் எல்லாம் கூடி யிருக்கின்றன. எனினும் ஆன்மாவுக்குரிய அறிவு விழைவு செயல்கள் இல்லை. ஆகவே அக்கூட்டத்தின் வேறாக ஆன்மா ஒன்று இவ்வுடம்பினுள் உளது என்று கூறுகின்றார். பொறி முதலிய கருவிகளின் கூட்டமாகிய உடம்புக்கு முதற் காரணம் மாயை; அம்மாயை ஆன்மா அன்று; அந்த ஆன்மாவுக்கு இந்த மாயா காரியமான உடம்பு இடமாகும்; அவ்வுடம்பின் செயல் கொண்டு, அதனுள் ஆன்மா இருப்பது உணரப்படுகிறது என்பதை விளக்குதற்கு “மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா வுளது” என்றார். மாயா இயந்திரதனு - மாயையிலிருந்து தோற்று விக்கப்பட்ட இயந்திரம் போன்ற உடம்பு. இக்கருத்துக்களையே,

“உளது இலதென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புல னொடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை யின்மையின் உணர்த்த வுணர்தலின்,
மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா”

என்று கூறுகின்றார்.

4.  மூன்றாம் சூத்திரத்தில் ஆசிரியர், காணப்படாத உயிரை உண்டு என்பதற்காகக் காணப்படும் நமது உடம்பையே ஆராய்ந்து காட்டினார். நம் உடம்பில் அறி கருவி, செயற் கருவி என இருவகைக் கருவிகள் உள்ளன. அறி கருவியை ஞானேந்திரியம் என்றும், செயற் கருவியைக் கன்மேந்திரியம் என்றும் வடமொழியிற் கூறுவர். அவற்றுள் ஞானேந்திரியம், மெய் வாய் கண் மூக்கு செவி என ஐந்தாகும்; கன்மேந்திரியம், வாய் கால் கை பாயு உபத்தம் என ஐந்தாம். மெய் முதலிய அறிகருவிகளால் உலகியலை அறிவதாகிய செயலைச் செய்கின்றோம்; வாய் முதலிய செயற் கருவிகளால் பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றோம். இக்கருவிகட்கு வேறாக, மனம் சித்தம் அகங்காரம் புத்தி யென நான்கு உட்கருவிகள் நம் உடம்பில் உண்டு. மனம் சித்தம் முதலியவற்றை அந்தக்கரணம் என அறிவு நூல்கள் கூறும். உடம்பு பருப்பொருளாய்க் கண்ணுக்குத் தெரியக்கூடியது; உயிர் கண்ணுக்குத் தெரியாத அருவப் பொருள். உடம்பின் எல்லையை நீங்காமல் அதனுள்ளே அறிவாய் உடம்பின் பல வேறு கூறுகளையும் இயக்கும் இயக்கப் பொருளாய் உயிர் இருக்கிறது. உடம்பின் எல்லையை உருமண்டலம் என்றும், அறிவுருவாய் நிலவும் உயிரெல்லையை அறிவு மண்டலம் என்றும் அறிஞர் கூறுவர். அறிகருவிகளும் செயற் கருவிகளும் உருமண்டலத்தில் இருப்பவை. உட்கருவிகளான அந்தக்கரணங்கள் அறிவு மண்டலத்தில் இருக்கின்றன. உருமண்டலத்தை உருவுடம்பு என்றும், அதற்குள் இருப்பது அந்தக்கரணங்களைத் தன்னிடத்தே கொண்ட அருவுடம்பு என்றும் நம்முடைய நூல்கள் குறிக்கும். ஆங்கிலம் ஜெர்மனி முதலிய மொழிகளைப் பேசும் மேனாட்டார் லத்தீன் மொழியால் தம்முடைய ஆராய்ச்சியிற் கண்ட பொருள்களுக்குப் பெயரிட்டு வழங்குவது போல நம் நாட்டார் வடமொழியால் ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் எனப் பெயரிட்டு வழங்குவர். ஆகவே, இவை வடசொல்லால் குறிக்கப்படுவது பற்றி வடநூலாருக்குத் தான் இந்த ஞானேந்திரிய முதலியன வுண்டு; தமிழர்கட்கு இல்லை யென்று கூறிப் பிணங்குவது பெருந்தன்மை யாகாது. இவ்வாறே இந்நூலில் ஆங்காங்குக் காணப்படும் வட சொற்கள் ஆட்சி காரணமாக மேற்கொண்டவையெனக் கொள்ளல் வேண்டும்.

இனி, மூன்றாம் சூத்திரத்தில் இந்திரியங்கள் ஆன்மா ஆகா என்பது கண்ட சமயவாதிகளிற் சிலர், அந்தக்கரணமே ஆன்மா என்று கூறினர். அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவி யாகுமே தவிர ஆன்மாவாகாது என்பாராய், “அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று ஆன்மா” என்று ஆசிரியர் நான்காம் சூத்திரத்தில் கூறுகின்றார். கண் முதலிய கருவிகளின் வாயிலாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம்; அதனை இன்னதெனச் சிந்திப்பது சித்தம்; சிந்தனையின்கண் இதுதானெனத் துணிவேனென எழுவது அகங்காரம்; துணிந்து தன்கண் கொள்வது புத்தி. இவற்றைக் கருவியாகக் கொண்டு ஆன்மா அறிவுப்பொருளை அறிந்துகொள்ளும். இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர் போல நின்று அறிவுத் துணை செய்கின்றன. இக்கருவிகள் ஆன்மாவோடு கூடி அதற்கு அமைச்சுத் தொழில் செய்யும் என்பது விளங்கவே, ஆசிரியர், “அவை சந்தித்து நின்று அமைச்சரசு ஏய்ப்ப” என்று கூறி யருளுகின்றார்.

முன்பு கண்ட உரு மண்டலமும் அறிவு மண்டலமுமாகிய இரண்டையும் ஒன்றாயடக்கி ஆன்மதத்துவம் என்று நம் சமய நூல்கள் கூறுகின்றன. இதனின் வேறாக இருவகைத் தத்துவங்கள் உண்டு; அவை வித்தியா தத்துவம் சிவதத்துவம் எனப்படும். வித்தியா தத்துவம் (Spiritual Sphere) நுண்ணுடம்புக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது. சிவதத்துவம் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்தற்கு வாயிலாய் (Medium) இருப்பது. இறைவனுடைய அருட்சத்தி சிவதத்துவத்தின் வாயிலாக ஆன்மாவின் அறிவு, விழைவு, செயல் என்ற மூவகையான ஆற்றல்களையும் கிளரச் செய்யும்; சிவ தத்துவத்தின் வாயிலாக வரும் அவ்வருட்சத்தியே ஆன்ம தத்துவத்தையும் வித்தியா தத்துவத்தையும் தொழிற் படுத்துகிறது. வித்தியா தத்துவத்தால் உயிரினுடைய அறிவு முதலிய ஆற்றல்கள் எழுந்து அறிதற்கும் விழைதற்கும் செய்தற்கும் முற்படுகின்றன. அப்போது ஆன்ம தத்துவம் அறிதல் முதலிய செயல்களை நிகழ்விக்கின்றது. ஆன்மாவாகிய உயிரைச் சூழ்ந்து ஆன்ம தத்துவமும் அதற்குள் வித்தியா தத்துவமும் அதற்குள்ளாக ஆன்மாவும் இருக்கின்றன. இதுபற்றியே ஆன்ம தத்துவத்து இந்திரியங்களைப் புறக்கரணம் என்றும், மன முதலியன அவற்றிற்குள்ளாக இருப்பதுபற்றி அகக்கரணமாகிய அந்தக்கரணம் என்றும், அவற்றிற்கும் உள்ளேயிருக்கிற வித்தியா தத்துவத்தை உள்ளந்தக்கரணம் என்றும் அவற்றிற்கும் உள்ளால் இருக்கிற ஆன்மாவை உள்ளம் என்றும் சான்றோர் வழங்குகின்றனர். “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப், பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு” என்ற திருக்குறளில் திருவள்ளுவனார் ஆன்மாவை உள்ளம் என வழங்குவதை இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.

இவ்வான்ம வித்தியா தத்துவங்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு அறிவு முதலிய மூவகை ஆற்றலும் இயல்பாகவே உண்டென்றாலும், முதற் சூத்திரத்தில் காட்டப்பட்ட மலத்தால் மறைப்புண்டு கிடக்கின்றன. அம்மலம் செம்பில் களிம்பு போல இயல்பாய் ஆன்மாவில் அனாதி தொடர்பு கொண்டிருப்பதால் அது சகசமலம் என்று கூறப்படும். இச்சகசமலத்தால் மறைப்புண்டு இருப்பது விளங்க, ஆசிரியர், “ஆன்மா சகசமலத்து உணராது” என்றார். சகசம், இயற்கை. மலத்தால் மறைப்புண்டு ஆற்றல் சுருங்கியிருக்கும் ஆன்மா, அவ்வாற்றலைச் செலுத்தி நினைவன நினைந்து செய்வன செய்து ஒழுகுதற்கு இத்தத்துவங்கள் கருவியாய் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இவை ஓர் அரசனுக்கு அமைச்சரும் பிற அரசியல் வினையாளரும் போல ஆன்மாவுக்கு அமைந்துள்ளன என்பது பற்றியே “அமைச்சரசு ஏய்ப்ப” என்றார்.

இனி, நம்முடம்பு உருவுடம்பு (தூலவுடம்பு), அருவுடம்பு (சூக்கும வுடம்பு), கருவுடம்பு (புரியட்டக வுடம்பு), நுண்ணுடம்பு (கஞ்சுக வுடம்பு), காரண வுடம்பு என ஐந்து வகையாக இத்தத்து வங்களைக்கொண்டு பகுத்துக் காணப்படுகிறது. இவை நம்முடம் பினுள் ஒன்றிற்கொன்று நுட்பமாய் அமைந்துள்ளன. உருவுடம்பு தொழிற்படுங்கால் உயிர் புருவ நடுவில் நிற்கும் என்றும், சூக்கும வுடம்புக்குச் செல்லுங்கால் கழுத்திலும், புரியட்டக வுடம்புக்குட் செல்லுங்கால் இதயத்திலும், கஞ்சுக வுடம்பில் உந்தியிலும், காரணவுடம்போடு நிற்கையில் உந்தியின் கீழ் மூலாதாரத்திலும் நிற்கும்; புருவ நடு முதலிய இடங்கள் உயிருக்கு உணர்வெல்லை யாகும். புருவ நடுவில் நிற்கும் நிலை சாக்கிரம் (நனவு) என்றும், கழுத்தில் நிற்கும் நிலை சொப்பனம் (கனவு) என்றும், இதயத்தில் நிற்கும் நிலை சுழுத்தி (துயில்) என்றும், உந்தியில் நிற்கும் நிலை துரியம் (உறக்கம்) என்றும், மூலாதாரத்தில் நிற்கும் நிலை அதீதம் (பேருறக்கம்) என்றும் நூல்களிற் கூறப்படுகின்றன. புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரையில் இத்தத்துவக் கருவிகளை விட்டு படிப்படியாக நீங்கிக் கீழே செல்லுவதும், பின்பு படிப்படியாக மேலேறிப் புருவ நடுவுக்கு வருவதும், வரும்போது ஆங்காங்கு விட்ட கருவிகளோடு கூடுவதும் உயிருக்கு உடம்பில் உண்டாகும் இயக்கமாகும். மேலே கூறிய ஐவகை நிலைகளும் அவத்தை யெனப்படும். இதுபற்றியே “ஆன்மா அஞ்சவத்தைத்து” என்று கூறி யருளினார். இதனை நான்காம் சூத்திரம்,

“அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று அவை
சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது
அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவைத் தத்தே”

என்று இயம்புகிறது. இவ்வவத்தையில், கீழ்நோக்கிச் செல்லும் அவத்தை (இயக்க நிலை) கீழாலவத்தை யெனவும், மூலாதாரத் திலிருந்து மேல்நோக்கி வரும் அவத்தை மேலாலவத்தை யெனவும் வழங்கும்.

இச்சூத்திரத்தால் ஆன்மாவுக்கு ஐந்தவத்தைப் படுவது இலக்கணம் என்பது பெறப்படுவது கொண்டு அமைந்துவிடலாகாது. அந்தக் கரணங்களே அறிதல் என்ற தொழிலைச் செய்வதால் அவற்றையே உயிரென்றல் அமையும் என்பவர் எவ்வாறு மறுக்கப் படுகின்றார்கள் என்பதை மறவாது கடைப்பிடித்தல் வேண்டும். இந்தக் காலத்தில் நிலவும் மேனாட்டு உளநூல்களைக் காணுமிடத்து அந்தக்கரணமே ஆன்மாவாம் என்ற கூற்று வலியுறுவதுபோலத் தோன்றும். உயிர் அவத்தைப்படுவ தென்பது அறிகருவிகளோடு கூடுவதும் கூடாது நீங்குவதுமாகிய நிலையை எய்துவதென்று கண்டோம். உயிர் அந்தக் கரணங்களோடு கூடிய வழி அறிவு விளக்கமுண்டாகிறது; கூடாவழி அறிவினது விளக்கம் குறைகிறது. அந்தக்கரணங்களே அறிதல் என்னும் செயலை யுடையவாயின், ஆன்மா அடையும் அவத்தை வேறுபாட்டுக்கேற்ப அறிவு விளக்கத்தில் மிகுவதும் குறைவதும் உண்டாதற்குக் காரணமில்லை. ஆன்மா கீழும் மேலுமாக அவத்தை யெய்துங்கால், நின்றாங்கு நிற்கும் கருவிகள், உயிர் வந்து தோயும்போது விளங்குவதும் நீங்கும்போது விளக்கம் குன்றுவதும் நிகழ்கின்றன. இதனால் அறிவாகிய ஒளியும் செயலும் ஆன்மாவுக்கே உரியவாய் இருப்பது தெளிவாகிறது. ஆதலால்தான் ஆன்மா அந்தக் கரணங்களாகிய அவற்றின் ஒன்றன்று என்பது வற்புறுத்தப்படுகிறது.

5.  அந்தக்கரணங்களின் வேறாய்ச் சகசமலத்தால் உணர்வு மறைக்கப்பட்டு உடல் கருவிகளோடு கூடி நிற்கும் எனப்பட்ட ஆன்மா கீழும் மேலுமாக ஐவகை யவத்தை எய்துவானேன்? அவத்தை எய்துங்கால், கருவிகளோடு கூடி அறிவு விளக்கம் பெறுவதும் அவற்றோடு கூடாத வழி அறிவு ஒடுங்குதலும் எற்றுக்கு? என்று சில ஐயங்கள் நம் நினைவில் எழுகின்றன. இந்த ஐயங்களை எண்ணி ஆராய்ந்தோர், ஓர் உண்மையைக் கண்டனர்; உலகிடைத் தோன்றும் பொருள்கள் அனைத்தும் இயங்கிய வண்ணம் இருக்கின்றன. பருப்பொருளின் இயக்கம் நமக்குத் தெரிகிறது; நுண் பொருளின் இயக்கம் புலனாவதில்லை. புலனாகாமை கொண்டு அவற்றின்கண் இயக்கம் இல்லையென்று கூறமுடியாது; அதனைச் சில விஞ்ஞானிகள் நுண்ணிய கருவிகளால் காட்டியுமிருக்கின்றனர். இதனால் எல்லாப் பொருளிடத்தும் இயக்கம் உண்டு என்பது தெளிவாகி யிருக்கிறது. உயிர்ப்பொருளிலும் இவ்வியக்கம் காணப்படுகிறது. எந்த இயக்கமும் தானே உண்டாகாது என்பது பொது உண்மை. இயக்கமெல்லாம் காரியமாதலால், அதற்குக் காரணமாய் இயக்குவது ஒன்று உண்டு. அவ்வாறே உயிரை இயக்குவதும் ஒன்று உண்டு. அஃது இறைவனது திருவருள் என்று அறிஞர் கண்டுள்ளனர். இத்திருவருள், கருவிகளோடு கூடி அவை வேறு தான் வேறு என நினையாது அவையே தான் என மயங்கும் ஆன்மாவை, மேலும் கீழும் இயக்கியும், கருவிகளிற் பிரித்தும் கூட்டியும் உண்மையறிவு பெற உதவுகிறது.

இவ்வாறு தனக்குத் தோன்றாத் துணையாய் உடனிருந்து உதவி புரியும் முதல்வனது அருளை ஆன்மா உணர்வதில்லை; அவனது அருளையின்றித் தான் ஒன்றும் செய்து கொள்ள முடியாத ஏழை என்பதையும் அஃது எண்ணுவதில்லை. சுருங்கச் சொல்லுவோமாயின், உயிர் தன்னையும் அறிவதில்லை; தனக்குத் தோன்றாத் துணையாய் உடனின்றுதவும் திருவருள் முதல்வனையும் அறிவதில்லை. ஆன்மாவுக்கு மெய் வாய் முதலிய அறிகருவிகள் உள்ளன. அவை தத்தமக்கு உரிய பொருள்களைக் கண்டு அறுதியிட்டு உயிர்க்கு உணர்த்துகின்றன; ஆனால் அவை தம்மையே அறிவதில்லை; பொருளைக் காணுமாறும் ஓசையைக் கேட்குமாறும் செலுத்தும் உயிரையேனும் அக்கண் முதலிய கருவிகள் அறிகின்றனவோ எனின் அதுவும் கிடையாது. அது போலவே உயிர்கள் தம்மையோ தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவும் திருவருளையோ அறியாவாகின்றன. இதனை ஆசிரியர், “விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண்மூக்கு அளந்தறிந்து அறியா; ஆங்கு அவை போலத் தாம் தம் உணர்வின் தமி அருள்” என்று உரைக்கின்றார். உள்ளம் என்றது, ஆன்ம வித்தியா தத்துவங்கட்கு உள்ளே அருவாய் ஆற்றல் வடிவாய் இருக்கும் ஆன்மாவை என அறிக.

தம்மால் அறியப்படாத முதல்வனது திருவருளால் உயிர்கள் அறிவு விழைவு செயல்வகைகளில் எவ்வாறு தொழிற்படுகின்றன எனின், காந்தத்தின் முன்னே நிற்கும் இரும்பு எங்ஙனம் அசைகிறதோ அங்ஙனமே முதல்வன் திருவருளின்முன் உயிர்கள் அறிவது விழைவது முதலிய செயல்களைச் செய்கின்றன. இரும்பு அசைவதும் காந்தம் அசையாது இருப்பதும் போல, திருவருளின் முன் உயிர்கள் அறிவது முதலியன செய்ய முதல்வன் ஒரு விகாரமும் இல்லாமல் இருப்பான். இக்கருத்து விளங்க, ஆசிரியர் காந்தம் கண்ட பசாசத்தவையே என்றார். பசாசம்-இரும்பு. இதனை,

“விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்,
காந்தம் கண்ட பசாசத் தவையே”

என்று ஐந்தாம் சூத்திரம் கூறுகிறது.

மெய் வாய் கண் மூக்கு செவி என்ற கருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன; அவ்வாறு அறிந்தும், அறிகின்ற தம்மையும் தம்மை அறியச் செய்யும் ஆன்மாவையும் அறிவதில்லை; அவற்றைப் போலவே ஆன்மாக்களும் திருவருள் துணையால் செய்வன செய்து, செய்வினையின் பயனை நுகர்கின்றன. அவ்வாறு நுகர்ந்தும், நுகர்கின்ற தம்மையும், தமக்குத் தோன்றாத் துணையாய் உடனின்று இயக்கும் முதல்வன் திருவருளையும் அறிவதில்லை! திருவருள் இயக்க இயங்கும் ஆன்மாவின் இயக்கம் காந்தத்தின் முன்பு நின்ற இரும்பு இயங்குவது போலும் இயக்கமாம். அப்படி இயங்கினும் சலியாத காந்தம்போல, முதல்வன் சலிப்பின்றி நிருவிகாரியாய் இருப்பன் என்பது இதனால் உணர்த்தப்படும் பொருள்.

6.  கண் காது முதலியவற்றால் காணக்கூடிய பருப் பொருள்
    களையும் ஓசை முதலிய நுண் பொருள்களையும் காண்கின்றோம். இக்கருவிகளால் அறியப்படுவன அனைத்தும் உலகியற் பொருள்களே
    யாகும். இவற்றை மனத்தின்கண் வைத்துச் சிந்திப்பதால் பெறப்படும் உணர்வுப் பொருளும் உலகியற் பொருள்களை அடிப்படையாகக் கொண்டன வாதலால் உலகியல் உணர்வுப் பொருள்களே.

முதற் சூத்திரத்திற் கண்டவாறு இவ்வுலகமே நிலை பேறில்லாததாகும். நிலையில்லாத பொருளை அசத்து என்றும், நிலையுடைய பொருளைச் சத்து என்றும் கூறுவர். மெய்யைச் சத்தென்றும், பொய்யை அசத்தென்றும் கூறுவதுண்டு. இதுபற்றியே “காண்பதெல்லாம் பொய்” என்ற பழமொழியும் மக்களிடையே நிலவுகிறது. காண்பதென்பது, கண்ணாற் காண்பது, காதாற் கேட்பது, வாயாற் சுவைக்கப்படுவது முதலியவற்றைப் பொதுவாகக் குறிக்கும். இவ்வாறு கண் முதலிய அறிகருவிகளால் அறியப்படுவன வெல்லாம் உருவும் அருவுமாகிய உலகியற் பொருள்களேயாய் அசத்தாய் இருக்கின்றன. எவ்வகையாலும் அறியப்படாத பொருளே கிடையாது. ஒரு பொருள் எவ்வாற்றாலும் அறியப்படா தென்றால், அப்படி ஒரு பொருளே இல்லை யென்பதே கருத்து. அவன், அவள், அது எனப் பகுத்துக் காணப்படும் உலகியற் பொருள்கள் உருவுடையனவாயினும் உருவில்லனவாயினும் எப்படியும் அவை. அசத்தாகவே உள்ளன. முதல்வனாகிய பரம்பொருள் நம்முடைய அறிவால் அறியப்படுவானாயின், அறியப்படும் ஏனை உலகியற் பொருள் போல அசத்தாவான். எவ்வாற்றாலும் அறியப்படா தொழியுமாயின், பரம்பொருள் ஒன்று இல்லையென்றே முடியும். ஆசிரியர் இக்கருத்தையே முதல்வனாகிய பரம்பொருள் “உணர் உருவெனின் அசத்து; உணராது எனின் இன்மை” என்று அருளினார். அஃதாவது இறைவன் நம் கருவிகளால் உணரப்படும் பொருள் எனின், அசத்தாவான்; உணரப்படான் எனின் அவன் என்றும் எவ்விடத்தும் இல்லாத பொருளாம்; அஃதாவது சூனியம் என்பதாம்.

பரம்பொருள் ஒன்று உண்டென்பது முதற் சூத்திரத்தால் துணியப்பட்டது. ஆகவே அஃது உள்பொருளாகிய சத்து என்று கூறப்படும். காணப்படும் நம் உடம்பைக் கொண்டு காணப்படாத உயிராகிய நாம் உண்டென்பதை மூன்றாம் சூத்திரத்தால் துணிந் துள்ளோம். உயிரும் பரம்பொருள் போல அனாதியே நின்று நிலவுவது; அறிவு விழைவு செயல் என்ற ஆற்றல்களையுடையது; அதனால் உயிரும் சத்து என்று கூறப்படும். பரம்பொருளாகிய சத்து, உயிராகிய சத்துப் பொருளால் ஒருவகையில் உணரப்படுவதும் ஒருவகையில் உணரப்படாமையும் உள்ள சத்தாகிறது; ஒருவாற்றால் உணரப்படுவதால் அசத்தாவதும், உணரப்படாமையால் சூனியமாவதும் இல்லை. இதனை ஆசிரியர், “இருதிறனல்லது சிவ சத்தாம் என இரண்டு வகையின் உலகு இசைக்கும்” என்று அருளுகின்றார். இருதிறன், அசத்தாவதும் சூனியமாவது மாகிய இரண்டுதிறன்; இரண்டு வகை, ஒருவாற்றால் உணரப்படுவதும் ஒருவாற்றால் உணரப்படாமையுமாகிய இருவகை. உலகியலறிவும் உயிரறிவும் கொண்டு உணருமிடத்து முதல்வனாகிய பரம்பொருள் உணரப்படுவதில்லை யென்றும், அப்பரம்பொருளின் திருவருள் அறிவுகொண்டு நோக்கின் அப்பரம் பொருள் உணரப்படும் என்றும் மெய்யுணர்வால் பரம்பொருளைக் கண்டு இன்புற்ற சான்றோர் கூறுகின்றனர். “சொல் தெரியாப் பொருள் சோதிக்கப் பால் நின்ற சோதியான்” என்று திருஞானசம்பந்தரும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” என்று திருநாவுக்கரசரும் கூறியருளுவதால் முதல்வனாகிய சிவபரம்பொருள் ஒரு வாற்றால் உணரப்படுவதும் உணரப்படாமையும், “அருளாலே மெய்ப் பொருளைக்காணும் விதியுடையேன்” என்று காரைக்காலம் மையாரும், “அவனருளே கண்ணாகக் காணினல்லால்” என்று திருநாவுக்கரசரும் கூறியருளு வதால், திருவருள் அறிவு ஒன்றே சிவபரம் பொருளைக் காண்டற்குத் துணையாம் என்பதும் சைவத் திருமுறைகளில் வற்புறுத்தப் படுகின்றன. இது பற்றியே “இரண்டு வகையின் இசைக்குமன் உலகு” என்றார். உலகு என்பது திருவருளே கண்ணாகக் கொண்டு இறைவனைக் கண்டு இன்புற்ற உயர்ந்தோரைக் குறிக்கும். மேலே கூறிய சான்றோர்களை ஆசிரியர் உலகு என உயர்த்திக் கூறியுள்ளார்.

“உணர்உரு அசத்து எனின், உணராது இன்மையின்,
இருதிற னல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே”

என்பது இக்கருத்தை யுணர்த்தும் சூத்திரம்.

இங்கே கூறிய உலகியலறிவு பாசஞான மென்றும் உயிரறிவு பசுஞான மென்றும், திருவருள் அறிவு சிவஞானம் (பதிஞானம்) என்றும் வழங்கும். உலகியலறிவு கல்வி கேள்விகளால் உண்டாகும் செயற்கையறிவு; இது பாசஞானம். உயிரறிவு உண்மை யறி வெனப்படும் இயற்கையறிவு; இது பசுஞானம். பரம்பொருள் பசுபாச ஞானங்களால் அறியப்படாது, சிவஞானத்தால் அறியப் படுவது பற்றிச் சிவசத்து என்று ஆசிரியரால் குறிக்கப்படுகிறது.

இச்சூத்திரத்தால், சிவபரம்பொருள் இயற்கையும் செயற் கையுமாகிய நம் அறிவெல்லையைக் கடந்து நிற்பினும், அதனால் அருளப்படும் சிவஞானத்தால் ஆன்மாக்களாகிய நாம் அதனை அறிதல் கூடும் என்பது வற்புறுத்தப்பெறுவது காண்க.

7.  இறைவன் உயிர் உலகு என்ற மூன்றனுள், இறைவனைச் சிவசத்து என்றும் உலகை அசத்தென்றும் முன்னைச் சூத்திரத்தால் அறிந்தோம். சத்தாகிய சிவம் அசத்தை நோக்குமாயின், அது நிலையின்றிப் போகும். மரத்தால் செய்யப்பட்ட யானை யொன்றை அது செய்யவல்ல ஒரு மரத்தச்சன் காண்பானாயின், அவனுக்குச் சத்தாகிய மரம் புலனாகுமே அன்றி அசத்தாகிய யானை வடிவம் புலப்படாது. அதுபோலவே, சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகம் நில்லாது மறைந்தொழியும். அசத்தாகிய உலகம் தன்னிலையில் அறியும் அறிவு இல்லாதது; அதனால் அது சத்தாகிய சிவத்தை அறியாது. இதனையே ஆசிரியர், சத்தின் எதிர் யாவையும் சூனியம்; ஆகலான், சத்து அறியாது; அசத்து இலது ஆகலின் அறியாது என்றார். யாவையும் என்றது அசத்தாகிய உலகியற் பொருள்களையாகும். அவை தோற்றுவிக்கத் தோன்றி நின்று அழிவன வாதலால் அசத்தாகும். சத்தாகிய சிவத்தின் முன் காரியமாகிய அவை நில்லாது போவது கொண்டு சூனியம் என்று ஆசிரியர் கூறியருளுகின்றார். அசத்து இலது என்றது அசத்தாகிய உலகியற் பொருள் உயிரில்லாதது; அதனால் அறிவில்லாதது; ஆகவே, அதற்கு எதனையும் அறியும் திறம் இல்லை என்பதாம்.

இவ்வகையால், இறைவன் உலகு என்ற இரண்டும் சத்தும் அசத்துமாய் ஒன்றனை யொன்று அறியா என்பது காணும் நமக்கு, இவ்விரண்டின் வேறாகிய உயிர், சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத்தையும் அறியும் போலும் என்ற ஐயமுண்டாகிறது. அந்த ஐயத்தை நீக்கவே ஆசிரியர், இரண்டினையும் அறியவல்லது ஆன்மா என்பாராய், “இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்று ஏழாம் சூத்திரத்தால் கூறுகின்றார். இருதிறன் அறிவுளது என்பது, சத்தும் அசத்துமாகிய இரண்டினையும் அறியும் அறிவு உள்ளது என்றும், இரண்டினாலும் அறியும் அறிவுள்ளது என்றும், இரண்டினிடத்தும் நின்று அறியும் அறிவுள்ளது என்றும் பொருள் கொள்ளப்படும். சத்தாகிய சிவத்தால் அருளப்படும் சிவஞானத்தால் உயிர் அச்சிவத்தை அறியும் அறிவு பெறுகிறது; அசத்தாகிய கருவி கரணங்களைக் கொண்டே உலகியலறிவை அறியும் அறிவுடையதாகின்றது. அதனால் இருதிறனால் அறியும் அறிவுளது என்று பொருள் கொள்ளப்பட்டது. சிவத்தின்கண் தோய்ந்து சிவமாய் நின்று சிவபோகத்தை அறிந்து நுகர்வதும், அசத்தாகிய உலகியலில் தோய்ந்து உலகப் பொருளாய் இயைந்து உலகியல் இன்பத்தை அறிந்து நுகர்வதும் செய்வதால், உயிராகிய ஆன்மா இரண்டின்பாலும் அறியும் அறிவு உள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டது. இக்கருத் தெல்லாம் விளங்கவே,

“யாவையும் சூனியம் சத்தெதிர், ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது,
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா”

என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

இதன்கண் சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத்தையும் வேறுபட வைத்தும், துணையாகக் கொண்டும், இடமாக நின்றும் அறியும் உயிராகிய ஆன்மா, சத்தாகிய சிவமும் அன்று; அசத்தாகிய உலகியற் பொருளும் அன்று என அறிகின்றோம். இதுபற்றியே ஆசிரியர் ஆன்மாவை இரண்டலா ஆன்மா என்று கூறியருளினார். சத்தன்றாயினும் சத்தோடியைந்து சத்தாகிய சிவத்தையும், அசத்தோடு கூடி அசத்தாய் நின்று அசத்தையும் அறியும் தன்மை யுடையதாக இருப்பதால் இந்த ஆன்மாவைச் சதசத்து என்று சான்றோர் கூறுவாராயினர்.“சத்து அசத்து அறிவது ஆன்மா, தான் சத்தும் அசத்தும் அன்று, நித்தமாய்ச் சதசத்தாகி நின்றிடும்” என்று அருணந்தி சிவனாரும், “சதசத்தாம் உயிர்” என்று உமாபதி சிவனாரும் விளக்கினர்.

8.  சதசத்தெனப்படும் ஆன்மாக்களாகிய நாம் அசத்தாகிய உடம்போடுகூடி அசத்தாகிய உலகியலில் அழுந்தி உலகியல் வாழ்க்கையை நடத்துகின்றோம். இவ்வாழ்க்கையில் கண் காது முதலிய கருவிகளால் அறிவன அறிவதும், கை கால் வாய் முதலிய கருவிகளால் செய்வன செய்வதும் நம்முடைய செயல் களாகின்றன. இச்செயல்களில் ஈடுபடுங்கால் நமக்கு அறிவு விளக்கமுண்டாகிறது. அப்போது இன்பமும் உண்டாகிறது. ஆன்மா அந்த இன்பத்துக்கு அடிமையாகி, அந்த அசத்தாகிய கருவிகள் காட்டும் காட்சியையே விரும்பி அவை இயங்கும் நெறியிலேயே செல்லுகிறது. உலகியல் வாழ்க்கையோடு தொடர் புண்டானதால் விளையும் பயன் கிட்டாது போகிறது. ஆன்மா, தனக்கும் அசத்தாகிய உலகுக்கும் உள்ள வேறுபாட்டியல்பை யெண்ணி, உலகு உடல் கருவிகளைக் கருவியாகக் கொண்டு பெறுதற்குரிய பயனை எய்தவேண்டும். அப்பயன் உண்மை அறிவால் உணரப்படும். அந்த அறிவையும் முதல்வன் உடனாய் நின்று உணர்த்தி வருகின்றான். இவ்வகையால், உண்மையறிவின் விளக்கத்தால், உடல் கருவி உலக வாழ்வுகளைப் பயன்கொண்டு வரும் ஆன்மாவுக்கு, மலத்தால் தடையுண்டிருக்கும் சிறுமை கெடத் தொடங்குகிறது. அந்த நிலையில், உண்ணின்று தோன்றாத் துணையாய் உண்மை அறிவைக்காட்டியருளும் முதல்வன், ஞானாசிரியன் உருவில் ஆன்மாக்களின் எதிரில் வந்து உண்மை யறிவாகிய சிவஞானத்தை நல்குவன். மாணிக்க வாசகருக்குத் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் எழுந்தருளியதும், மெய்கண்டதேவருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் பரஞ்சோதி முனிவர் எழுந்தருளியதும் போல எழுந்தருளி வந்து சிவஞானத்தை உதவுவான்.

“வேந்தன் ஒருவனுடைய மகன் வேடர் கூட்டத்திற்பட்டு அவர் தருவனவற்றைப் பெற்று வளர்ந்து வந்தான். வளர்ந்தவன், தன்னை ஓர் அரசன் மகன் என்பதை மறந்து, வேடர் வயமே நின்று தன்னை அவ்வேடரின் வேறல்லன் என்றே நினைக்கலுற்றான். அவன் வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டே வந்த வேந்தன், அவனுக்குச் சொன்னால் கேட்டுத் தெளிந்து அச்சொல்வழி நிற்கக்கூடிய செவ்வி வருவது கண்டான். உடனே தானும் ஒரு வேடன் உருவில் அவனெதிரில் வந்து அவனோடு சொல்லாடி, “நீ வேடன் அல்லை; வேடர்களிடையே வளர்ந்து உன்னை இன்னானென அறியாது மறந்துவிட்டாய்; நீ ஒரு வேந்தனுடைய மகன்” என்று சொல்லித் தெருட்டினான். உடனே அவன், வேந்தன் இயல்புகளைக் கேட்டறிந்து வேந்தனுடைய பண்புகளை யெண்ணி வேந்தனாய் விளக்கமுற்றான் என்பது போலும் வரலாற்றைச் சொல்லிச் சிவஞானம் உணர்த்தவரும் ஞானாசிரியன், ஆன்மாக்களாகிய நம்மைத் தெருட்டத் தொடங்குவன். “நான் மேலே சொன்ன அரசன் மகன் ஆன்மாவாகிய நீ; வேடர் கூட்டம் என்றது, உனக்குக் கருவிகளாக அமைந்த ஐம்புலன்களாகும்; அவ்வரசன் மகன் போலவே ஆன்மாவாகிய நீ உன்னை மறந்து அக்கருவிகளின் வயமே நின்று ஒழுகுகின்றாய்; நீ இவற்றின் வேறு, அறிவே உனக்கு உரு; உண்மையறி வின்பமாகிய சிவபோகத்தை நுகர்தற்கே நீ உரியை; சிவானந்த ஞான வடிவு கொண்டு சிவ பரம்பொருளின் திருவடி நீழலில் என்றும் பொன்றாத இன்பம் பெறுதல் வேண்டும்” என்று அறிவுறுத்துவன். இதனை ஆசிரியர், “ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தனை யெனத் தம் முதல் குருவுமாய் உணர்த்த” என்று அருளுகின்றார். தம் முதல் என்றது ஆன்மாக்களுக்கு முதல்வனாகிய இறைவனைக் குறிக்கும். குருவுமாய் என்றது, இதற்கு முன்னெல்லாம் உயிர்க்குயிராய் உடனிருந்து உள்ளே அறிவருளி வருவதே யன்றிக் குருவாகவும் வருகின்றான் என்பதைக் குறிக்கிறது. சொன்ன சொல்லைக் கேட்டு அச்சொல்வழி நிற்கக் கூடிய செவ்வி வரக்கண்டு வேந்தன் அறிவுறுத்தியதுபோல, ஆன்மாக்களாகிய நமக்கு ஞானவுரை கேட்டு அதன் வழியே நிற்கக்கூடிய தகுதி வரும்போதுதான் ஞானாசிரியன் வருவன். செய்யப்படும் தவத்தால்தான் ஆன்மாக் களுக்கு அத்தகுதியும் செவ்வியும் உண்டாகும். ஆதலால், “தவத்தினில் உணர்த்த” என ஆசிரியர் அறிவுறுத் தருளுகின்றார்.

அரச குமரனுக்கு வேடர் கூட்டத்தின் தொடர்பு, வேந்தன் சொல் கேட்டு வேந்தாகும் பண்பு பெறுதற்குக் கருவியாயிருந்து, அதனைப் பெறத் தலைப்பட்டதும் விடுபட்டது போல, ஆன்மா ஞானாசிரியனது ஞானவுரை கேட்டு ஞானநெறி யொழுகும் செவ்வி பெறுதற்கு உடல் கருவி முதலிய அசத்தின் தொடர்பு கருவியாகிறது. ஞானம் பெற்று ஞானநெறி நிற்கத் தலைப்படுங்கால் ஆன்மா அசத்தின் தொடர்பை விட்டுவிடுகிறது. “நிலையாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை யல்லேன்” என்று அறிந்து திருநாவுக்கரசர் அறத் துணிந்தது போல, ஆன்மா, உடல் கருவி உலகு முதலிய அசத்தின் வேறாதலால் அதனோடு உளமாகிய தொடர்பு அற்றொழுகுவதே அது செய்யத்தக்கது. “ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அருமாநிதி இயற்றி, என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்” என்று நம்பியாரூரர் நினைந்து அசத்தின் தொடர்பை விட்டது போலவும், “எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன்” என்று மணிவாசகர் கருதி யொழுகியது போலவும் ஒழுகுவதனால் அசத்தின் தொடர்பு விடும்.

ஆன்மாவுக்குச் சதசத்து என்ற பெயருண்டானது, சத்தோடும் அசத்தோடும் தொடர்புற்று நிற்கும் இயல்பினால் தான். சத்து அசத்து என்ற இரண்டிலொன்றைச் சார்ந்து நிற்பது உயிர்க்கு இயல்பேயன்றி, வேறே தனித்து நிற்கும் இயல்பு அதற்குக் கிடையாது. சதசத்தாகிய ஆன்மா அசத்தின் தொடர்பு விட்டவழி, சத்தாகிய சிவத்தையே சென்று சாரும். ஊசலாடும் ஒருவனுக்கு அதன் கயிறு அறுமாயின் அவன் தரையைச் சார்வது போல, ஆன்மா அசத்தின் தொடர்பு விட்டால் சத்தாகிய சிவத்தையே சாரும். சத்தாந்தன்மையாலும் சித்தாந்தன்மை (அறிவுடையது என்னும் தன்மை)யாலும் ஆன்மாவுக்குச் சத்தாகிய சிவம் அந்நியமன்று; அதனால் ஆன்மா சிவத்தையே சென்று சாரும் என்பது தெளிவாம். ஆன்மாவுக்கு ஏனை உடல் கருவி முதலிய அசத்து அந்நியம். அசத்தைச் சார்ந்து அதுவதுவாய் இயைந்திருந்த போதும், ஆன்மா அசத்தின் வேறாக இரண்டுபட்டு நின்றது போலின்றி, சத்தாகிய சிவத்தைச் சார்ந்து ஒன்றுகிறபோது அதன்கண் ஒன்றி உடனாய் நிற்கும். இதனை உணர்த்துவதற்கு ஆசிரியர், விட்டு அந்நியமின்மையின் அரன்கழல் செலுமே என்றார்.இதனை,

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்
டந்நிய மின்மையின் அரன்கழல் செலுமே

என வருவது காண்க. அரன்கழல் சென்று சேர்ந்த திருஞான சம்பந்தரைச் சேக்கிழார் பெருமான், “போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றியுடனானார்” என்றும், திருநாவுக்கரசரை, “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” என்றும் கூறுவதனால் இது நன்கு தெளியப்படும். “சிவானந்த ஞானவடிவேயாகி” என்றது ஒன்றுதல்; “அமர்ந்திருந்தார்” என்றது உடனாதல். இவ்வாறு ஒன்றியுடனாதல் என்பதையே வட சொல்லறிஞர், அநந்நியமாதல் என்றும் அத்துவிதமாய்க் கலத்தல் என்றும் கூறுகின்றனர்.

9.  ஆன்மாவாகிய உயிருக்கு இயற்கையும் செயற்கையுமாக இருவகையறிவு உண்டு. இயற்கையறிவு என்பது, உடல் கருவியாக உயிரிடத்துண்டாகும் அனுபவஅறிவு. செயற்கையறி வென்பது கல்வி கேள்விகளினால் உண்டாகும் அறிவு. இயற்கை யறிவில்லாத விடத்துச் செயற்கையறிவு எத்துணை வரினும் பயன்படாது. “வாய்த்துத் தனக்கு இயல்பாய் வந்த அறிவு இல்லார்க்குச் சாத்திரங்கள் என்ன செய்யும்” என்று சான்றோர்கள் கூறுவது காணலாம். இயற்கையறிவு உடற் கூற்றாலும் சூழ்நிலையாலும் குடிவரவாலும் உளதாவது; செயற்கை யறிவு கற்கப்படும் கல்வி வகையாலும் கேள்வி வகையாலும் உளதாவது. இயற்கையனுபவ வறிவைப் பசுஞான மென்றும், செயற்கை யறிவைப் பாசஞான மென்றும் சைவ நூல்கள் கூறும். ஒருவன் பசுஞானத்தாற் கண்ட காட்சிகளையே நூல் வடிவில் வைத்துவிடின், அது தன்னைப் பயிலும் பிறர்க்குப் பாசஞானமாகிவிடும். பாசஞானத்தால் பெறுவது பல அறிஞர்கள் கண்டுரைத்த பசுஞானத் தொகுதியே. வேதம் ஆகமம் முதலிய எல்லாவற்றாலும் உண்டாகும் அறிவு பாசஞானமேயாகும். உடலிலுள்ள பல கருவிகளின் வாயிலாகத் தொகுவது பசுஞானம்; பலருடைய பசுஞானக் காட்சிகளை ஒருங்கே தொகுத்து நல்குவது பாசஞானம். ஆகவே, பசுபாச ஞானங்கள் என்பவை ஆன்மாக்கள் தம்முடைய உடல் கருவி உலகம் முதலியவற்றால் பெறும் அறிவு என்பது துணியப்படும். இவ்வுடல் முதலிய கருவிகள் அசத்து; அசத்து எனவே அவற்றிற்கெனத் தனியே அறிவில்லை யென்பது விளங்கும். அசத்து அறிவில தாகலின், சத்தாகிய சிவத்தை அறியாது என்று ஆசிரியர் முன்பே அருளிச் செய்துள்ளார். அதனால், அந்த அசத்துத் துணைசெய்ய வந்த பசுபாச ஞானங்கள் சிவத்தை அறிதற்குத் துணையாகா என்பது தெளிய விளங்குகிறது. இதுபற்றியே ஆசிரியர் ஊனக்கண் பாசம் உணரா பதியை என்றார். பாசம் என்றது பாசஞானம். ஊனக் கண் என்றது, அசத்தாகிய கண் முதலிய கருவிகொண்டு அறிய வரும் பசுஞானம். கண் முதலிய உடற் கருவிகள் அசத்தாகிய ஊனம் உடைய வாதலால், அவற்றால் பெறப்படும் ஞானம், ஊனக்கண் எனப் பட்டது. ஆனதுபற்றியே, அசத்தாகிய உடம்பு என்றற்குத் திருஞானசம்பந்தர், “ஊனமாம் உடம்பு’’ என்றும், “ஊனத்திருள்” என்றும் அறிவுறுத்தியுள்ளார். கண்ணென்றது அறிவு. பசுபாச ஞானங்களால் சிவபரம்பொருளைப் பார்க்க முடியாது. பதி என்றது சத்தாகிய சிவபரம்பொருளை என அறிதல் வேண்டும்.

பசுபாச ஞானங்களால் காணப்படாத முதல்வன் அவனது திருவருளே கண்ணாகக் காண்பார்க்குக் காட்சியளிப்பன். அதனாலன்றோ முதல்வனுக்குச் சிவசத்து என்பதும் ஒரு பெயராயிற்று. சத்தாதலால் உணரப்படா தெனவும், சிவசத்தாதலால் சிவஞானம் ஒன்றினாலே உணரப்படுமெனவும் முன்னே கூறியிருக்கின்றார். சிவஞானம் ஞானாசிரியரால் அருளப்படுகிறது. சிவஞானமே கண்ணாகக் கொண்டு புறக்கருவிகளைக் கொள்ளாமல் அகக்கருவியாகிய சிந்தையில் விளங்கும் அறிவின் கண்ணே ஆராய்தலே வேண்டுவது என்பதை நாம் தெளிகின்றோம். இது தெளியவே, ஆசிரியர் ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடி என்று அருளிச் செய்துள்ளார். ஊனக் கண்ணும் பாசமும் உணரமுடியாத பதியை ஞானக்கண் கொண்டு சிந்தையின்கண் நாடுக என்பது இதன் பொருள்: அஃதாவது பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் உணர முடியாத இறைவனை அவனது திருவருளாகிய சிவஞானத் தால் சிந்தையின் கண் ஆராய்ந்து உணரவேண்டும் என்பது. கூறுக என்பதைக் கூறி என்று சான்றோர் வழங்குவது போல, நாடுக என்பதை நாடி என்று வழங்குகின்றார். இக்கருத்தையே அருணந்தி சிவனார், “பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி” என்று கூறுகின்றார். இங்கே அவர் நாடி என்பதற்கு ஆராய்க என்று பொருள் கொள்ளாமல் ஆராய்ந்து என்றே கொள்ளுகின்றார். மற்று, சிவஞான முனிவரோ நாடுக என்றே பொருள் சொல்லுகின்றார். முனிவர் உரையே அறிஞர் அனைவராலும் ஈண்டுக் கொள்ளப்படுகிறது.

ஞானாசிரியன் திருவருள் ஞானத்தை நல்கப் பெற்றால், ஆன்மாவாகிய நம் அறிவுக்கு உடல் கருவி உலகுகளாகிய அசத்தின் தொடர்பு வேறுபட்டுத் தோன்றும். அதனால் அகக் கருவியாகிய சிந்தையின்கண் வேறுபட்ட அதன் தொடர்பு வந்தவாறும், அதனை நாமாகவே மயங்கி அதனால் பிணிப்புண்டு கிடக்குமாறும், நமக்கும் அதற்கும் தொடர்பொன்றும் இல்லாத வாறும் விளங்கும். அவ்விளக்கத்தால் ஆன்மாவாகிய நம்மையே அத்தொடர்பினின்றும் நீக்கி நிறுத்திக் காணத் தொடங்குவோம். நம்மை அறிந்தாலன்றி நாம் நம்மை அத்தொடர்பினின்றும் நீக்க முடியாது. நம்மையே அறிய முயல்வோமாயின், அறிய நிற்கின்ற உடல் கருவி முதலிய அசத்தை நீக்குவது இனிது கைகூடும். இவ்வாறே நம்முடைய முன்னோர்களாகிய சான்றோர்கள் முயன்றிருக் கின்றார்கள். பட்டினத்தடிகள்,

“மேவிய புன்மயிர்த் தொகையோ, அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ, தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ, கூறு செய்து
இடை யிடை நிற்கும் எலும்போ, எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ, வழு வழுத்து
உள்ளிடை யொழுகும் வழும்போ, மெள்ள நின்று
ஊரும் புழுவின் ஒழுங்கோ, நீரிடை
வைத்த மலத்தின் குப்பையோ, வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள்
பிரியா தொறுக்கும் பிணியோ, தெரியாது
இன்னது யான்என்று அறியேன், என்னை
எங்கும் தேடினன், யாதிலும் காணேன்…….
திருவிடை மருத! பொருவிடைப் பாக!
மங்கை பங்க! கங்கை நாயக! நின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்
என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன்;
நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே!
நின்னைக் காணா மாந்தர்
தன்னையுங் காணாத் தன்மையோரே” (திருவிடை. மும் .13)

என்றும், “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார், வானோர்பிரான் என்னை ஆண்டிலனேல்” என்று மாணிக்க வாசகனாரும் ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடியது காணலாம்.

இவ்வண்ணம், உடல் கருவி முதலிய அசத்தை வேறு வைத்து ஆராயும்போது, கடுவெயிலில் பேய்த்தேர் (கானல்) தண்ணீர் போல் காட்சி தருவதுபோல, நம்மின் வேறாகாது ஒன்றாய் நாமாகவே காட்சியளித்த அசத்துப் பேய்த்தேர் போல நீங்கி மறைந்தொழியும்; ஒழியவே, இறைவனது திருவருள் நிலையமாகிய அவன் திருவடிநீழல் காட்சிப்படும்; ஆன்மாவும் அந்த நீழலைச் சென்று சேர்ந்துவிடும். இதனை ஆசிரியர் உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி என்று அறிவித்தருளுகின்றார். பட்டினத்தடிகளும் “தூய ஞான நாட்டம் பெற்றபின் மாயப்படலம் கீறி நின் பெருந்தன்மையும் கண்டேன்” என்று கூறுவது காண்க. பேய்த்தேரை ஆசிரியர் உராத்துனைத் தேர் என்று இயம்புகின்றார். உரா என்பது ஊரா என்பதன் குறுக்கம். துனை, விரைவு. ஒருவராலும் ஊரப்படாது விரைந்து செல்லும் தேர் என்று பேய்த்தேர் குறிக்கப்படுகிறது. குதிரை மலையை ஓடாக் குதிரை என்றும், வேங்கை மரத்தைப் பாயா வேங்கை என்றும் சான்றோர் சொல்லழகு தோன்றக் கூறுவது வழக்கம். இதனை வெளிப்படை யென்னும் அணிவகை என்பர். இவ்வாறே பேய்த்தேரை, உராத்துனைத்தேர் என்று ஆசிரியர் அருளிச் செய்கின்றார். சங்கச் சான்றோரும், “உருவில் பேஎய் ஊராத்தேர்” (அகம்.67) என்று சொல்லியிருக்கின்றார்கள்.

இவ்வாறு ஞானநாட்டம் பெற்று மாயப்படலம் கீறி முதல்வன் திருவடி நீழலைக்கண்ட திருநாவுக்கரசர்,

“மாசில் வீணையும் மாலை மதியமும்,
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

இனி, உடலிடமாக நின்று ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடி, முதல்வன் திருவருள் நிலையைக் கண்ட பின்பு, அதனிடமே ஒன்றி யிருப்பதற்கே உள்ளத்தில் விருப்பமுண்டாகும்; திருவருள் காட்சி தோன்றும் போதே பேரின்பம் சுரக்கும்; “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன (முதல்வன்) அடித்தலம்” என்று திருநாவுக்கரசர் அருளுவதைக் காணலாம். இன்பத்தை நாடுவதே உயிர்க்கு இயல்பாதலால், நம் உள்ளம் திருவருள் காட்சியின்பத்தைப் பெறுவதற்கே பெரிதும் விரும்பும். ஆயினும், அவ்விருப்பத்தை, உடல் கருவி உலகுகள் போந்து சிதைத்து, விருப்பமைந்த உயிரின் உள்ளத்தைத் தாம் கவர்ந்துகொள்ளும். பாசி படர்ந்த நீர்நிலையில் கல்லை விட்டெறிந்தால், கல் விழுந்தவிடத்தில் அப்பாசி சிறிது நீங்கும்; பின்னர் வந்து மூடிக் கொள்ளும்; அதுவே போல், திருவருட்காட்சியில் முயலும்போது அசத்தாகிய பாசத்தின் தொடர்பு நீங்கும்; அக்காட்சி நீங்கும் போது அப்பாசம் வந்து மூடிவிடுகிறது. இதனை, “பாசிபடு குட்டத்தில் கல்லினை விட்டெறியப் படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதில் பரக்கும்: மாசுபடு மல மாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும்போது அகலும், பின் நணுகும்” என்று அருணந்தி சிவனார் நம் ஆசிரியர் பால் நேர்முகமாகக் கேட்டறிந்து உணர்ந்து சொல்லுகின்றார். அரனடியை உணரும் உயிர், அந்த அடியின் கீழே இருக்க விரும்பும் என்பது உண்மையே; ஆனால், அவ்வாறு இருப்பதற்கு வழி யாது? அதற்கு ஒரு வழி உண்டு; அஃதாவது திருவைந்தெழுத்தை இடையறாமல் முறைப்படி எண்ணுவது என்பாராய், “விதி எண்ணும் அஞ்செழுத்தே” என்று ஆசிரியர் அறிவுறுத் தருளுகின்றார். எண்ணும் - எண்ணவேண்டும்; நீர் இதைச் சொல்லும் என்றால் நீர் இதைச் சொல்லவேண்டும் என்று பொருளாவதுபோல எண்ணும் என்பது எண்ணவேண்டும் என்று பொருள்படுகிறது.

இனி, திருவைந் தெழுத்தென்பது, சி, வ, ய, ந, ம என்ற ஐந்தெழுத்துக்களையும் குறிக்கும். இவ்வைந்தெழுத்தையும் கூட்டவரும் சிவய நம என்பது வடமொழியில் ஒரு சொற் றொடராகும். இங்கே, “அது சொற்றொடரன்று; எழுத்து,” என்பதற்காகவே திருவைந்தெழுத்து என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிறது. இவ்வெழுத்துக்கள் இறைவன் திருப்பெயர் களுள் ஒன்றான நமசிவய என்பதில் உள்ள எழுத்துக்கள். நமசிவாய என்பது இறைவன் திருப்பெயர். அதை மாற்றிச் சிவாயநம என்றால் பெயர்த்தன்மை நீங்கி எழுத்தாகிவிடுகிறது. திருவைந் தெழுத்தை நினைந்து ஓதவேண்டுமாயின், நமசிவாய என்ற திருப்பெயரை மாற்றி எழுத்தாக்குவது முதல் விதி; இல்லையானால் திருவைந் தெழுத்துக்களை இலக்கணப்படிப் பெற முடியாது. “நந்தி நாமம் நமச்சிவாய” என்று திருஞான சம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என்று திருநாவுக்கரசரும் அருளிச் செய்திருப்பது காண்க. “ஆலைப்படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின்றாமத்தான் காண்” - திரு.நா. 266: 2

இவ்வெழுத்துக்களில் சி என்பது சிவபரம்பொருளையும், வ என்பது அவனது அருளையும், ய என்பது உயிரையும், ந என்பது உயிர் அசத்தோடு கூடும்போது சத்தை நினையாது அசத்தாய் இயைந்து அசத்து நல்கும் நுகர்ச்சிகளை நுகர்வதற்கும், அசத்தைவிட்டுச் சத்தாகிய சிவத்தோடு கூடும்போது அசத்தை நினையாது சிவத்தோடு சிவமாய் இயைந்து சிவபோகத்தை நுகர்வதற்கும் உயிரை மறைத்து நின்று இயக்கும் இறைவனுடைய மறைப்புச் சத்தியையும், ம என்பது மலத்தையும் குறிக்கும். இவ்வெழுத் தைந்தினையும் எண்ணுங்கால், சிவத்துக்கும் உயிர் களுக்கும் உள்ள தொடர்பும், சிவத்துக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும், உயிர்களுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும் அத்தொடர்புண்டான காரணமும் அதனால் விளையும் பயனும் எண்ணத்துக்கு வந்து இறைவன் திருவருள் நீழலை விட்டு நீங்காது நிற்கும் நிலைமையைக் கைவரச்செய்யும். இதனை,

“அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பகலற் றின்பத்தே- நண்ணி
அருளானது சிவத்தே யாக்கும் அணுவை
இருளானது தீர இன்று”

என்று உமாபதி சிவனார் கூறியருளுவது காணலாம். இவ்வாறு இத்திருவைந் தெழுத்தையே புணையாகப் பற்றிக்கொண்டு இடையறாது எண்ணிப் பேரின்பம் சுரக்கப்பெற்று நுகர்ந்த மணிவாசகப் பெருமான்,

“நானேயோ தவம்செய்தேன்! சிவயநம எனப்பெற்றேன்,
தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதுள்ளம் புகுந்து அடியேற் கருள்செய்தான்
ஊனாரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே”

என்று தேன்சொட்டப் பாடும் திருவாசகத்தால் நாம் அறிய அருளிச் செய்கின்றார்.

10. இவ்வாறு திருவைந்தெழுத்தை விதிப்படி யெண்ணு வதால், இறைவனுக்கும் உலகுக்கும் உலகில் வாழும் உயிர்களாகிய நமக்கும் உள்ள தொடர்பு விளங்கும் என்று முன்பு கண்டோம். நுண்ணிய மாயையாகிய உள்பொருளிலிருந்து உடல் கருவி உலகு முதலியவற்றை இறைவன் படைக்கின்றான். அதனால் அவன் செய்பவனாகின்றான்; உடல் கருவி யுலகுகள் செய்யப்படும் பொருள்களாகின்றன. செய்யப்படும் பொருள் செய்பவனது உடைமையாகும். எவ்வாறெனின், மாயை என்பது முதல்வனுடைய திருவருளாற்றலை (சத்தியை) இடமாகக் கொண்டு கிடக்கும் ஒருவகை ஆற்றல்; அந்த ஆற்றலைக் கலக்கி உடல் கருவி யுலகுகளைச் செய்தருளுவது பற்றி அவன் செய்பவனானான்; அவை செயப்படுபொருள்களாயின; தன்பால் உள்ள ஒன்றைக் கொண்டு ஒரு செய்பொருளை ஒருவன் செய்வானாயின், அச்செயப்படுபொருள் அவனது உடைமை யாகிறதன்றோ? அது போலவே, இவ்வுலகமும் உலகியற் பொருளும் அவற்றிடை நிலவும் நம் உடலும், அதற்குள் இருக்கும் கருவிகளும் ஆகிய யாவும் இறைவனுடைய உடைமையாகும். இது பற்றியே மணிவாசகர் முதலிய அருட்செல்வர் இறைவனை, “உடையவனே” என்றும், “உடையாய்” என்றும் அடிக்கடி எடுத்தோதியிருக் கின்றனர். இவ்வுடல் கருவி முதலியன இறைவனது உடைமையே யாயினும் இவற்றைப் பயன்கொள்ளுவது உயிராகிய ஆன்மாவே யன்றி அவனன்று. ஆன்மா, இவ்வுடல் கருவி முதலியவற்றைத் தன்னுடைய பொருளாகவே எண்ணி அவற்றின்பால் பற்றுக் கொள்ளுகிறது. தந்தை ஒருவன் ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டு வந்து தன் மகனுக்குக் கொடுத்தால், அவன் அதனைத் தனதாகக் கொண்டு அதன்பால் பற்றுக் கொள்ளுகிறான்; அது போலவே ஆன்மாவின் செய்கையும் உளது. தான் பற்று வைத்துப் பயன் கொள்ளும் சட்டையை உதவிய தந்தையை, மகன் “எந்தையே” என அன்பு செய்யும் முறைமையிலேயே, நம் சான்றோர் சிவபெருமானான முதல்வனைத் தந்தையே என்றும், எந்தையே என்றும், பலபடியாக அன்பு மொழிகளால் அழைப்பதை அவர்களின் திருமுறைகளில் பார்க்கின்றோம்.

இனி, இறைவன் இவற்றை உண்டுபண்ணி ஆன்மாக்களுக்குக் கொடுப்பானேன் என்றோர் எண்ணம் இந்நிலையில் நமக்கு உண்டாகிறது. ஆன்மாக்களை அனாதியே மலமானது பிணித்து மறைத்து இருளில் கிடத்தியிருக்கிறது; தன்னைப் போலவே அறிவு விழைவு செயல் முதலிய ஆற்றல் படைத்த சத்தாகிய ஆன்மா மலத்தால் கட்டுண்டிருக்கும் நிலையை நோக்கியருளும் இறைவன், ஆன்மாவின் பால் பேரருள் கொண்டு மாயையிலிருந்து இவ்வுடல் கருவி முதலியவற்றைப் படைத்துக் கொடுத்து உதவுகின்றான். ஆற்றல் வடிவாகிய மாயை என்பது ஒளி மயமாக இருக்கிறதென்று இன்றைய விஞ்ஞான அறிவு உறுதிப்படுத்து கிறது. மலவிருளில் கிடக்கும் உயிர், ஆற்றலாகிய ஒளிப்பொருளி லிருந்து உண்டாக்கப்படும் உடல் கருவி முதலியவற்றைத் துணையாகக் கொண்டு, அறிவதும் விழைவதும் செய்வதும் செய்து மலவிருளிலிருந்து விடுதலைபெற முயல்கிறது. இவ்வகையில் முதல்வன் தன்பொருட்டு உடல் கருவி முதலியவற்றைப் படைத்து மலவிருளிலிருந்து வீடுபேறு எய்துவதற்காகத் தனக்கு நல்கியிருப்பதை உயிர் நினைக்கும்; நினைந்தவழி, அதற்கு அம் முதல்வன்பால் அளவிறந்த நன்றியுணர்வு உண்டாகும். அதனால் ஒவ்வொரு கணமும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் கடமை உயிர்க்கு மிகுகின்றது.

இவ்வண்ணம் உடல் கருவிகளை நல்கிய இறைவன், அம்மட்டில் நின்று போகாது, அவற்றோடு கலந்து ஒன்றாயும், உயிரொடு கூடி உடனாயும் உண்ணின்று தோன்றாத்துணை செய்வது திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதுவதால் உணரப் படுகிறது; உடலோடு கூடி உயிர் செய்யும் ஒவ்வொரு செயல் நிகழ்ச்சிக்கும் இறைவன் தோன்றா முதலாய் இருப்பதும் விளங்குகிறது. அவனது கலப்பில்லையாயின் உடல் கருவி முதலியவற்றில் ஒழுங்கான செயல் நிகழாது; மலத்தால் மறைப்புண் டிருத்தலால் உயிர்க்கும் அறிவு முதலியன தொழிற்படா; ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது உண்மையாகிறது.

இவ்வாறு எல்லாச் செயற்கும் இறைவனே முழுமுதலாக இருப்பவும், அவன் உயிரை முன்னிறுத்தித் தான் அதனோடு ஒன்றியுடனாய் நிற்கின்றான். அதனால், உயிர், எதையும் தானே செய்வதாகவும் தானே முழுமுதலாகவும் நினைந்தும் சொல்லியும் செய்தும் ஒழுகுகிறது. இதனால் விளையும் நன்மை தீமைகட்கு உயிரே பொறுப்பாளி யாகின்றது. அப்பொறுப்புக்கு ஆன்மாக் களாகிய நாம் உரியராகாவிட்டால் விளையும் நன்மை தீமைகள் நம்மைச் சேரமாட்டா. இதற்கு வழி யாது?

இதுவரையில் நம்மை முற்பட வைத்து நம்முள் கலந்து உடனாய் நின்ற முதல்வனை முன்னே நிறுத்தி அவனுக்குள் நம்மை ஒன்றுவிப்பதுதான் இதற்குத் தக்கவழியாம். இதை நமது ஆசிரியர், “அவனே தானே ஆகிய அந்நெறி, ஏகனாகி இறைபணி நிற்க” என்று அறிவுறுத்தருளுகின்றார். அவன் என்றது இறைவனையும், தான் என்றது ஆன்மாவையும் குறிக்கும். குறிக்கவே, இறைவன் உயிர்களின் உடல் கலந்து உளங்கலந்து உயிரேயாய் ஒன்றியிருக்கும் அந்நெறியே மேற்கொண்டு, உடல் கருவிகளின் ஆக்கம் எனதன்று, ஆதலால் அவற்றின் செயல்வகைகட்கும் இயக்கத்துக்கும் முதல்வன் யான் அல்லன், எல்லாவற்றிற்கும் முழுமுதல் இறைவனே எனக் கழித்து அவன்பால் ஒன்றிவிடவேண்டும் என்பது விளங்கும். அப்போது உடல் கருவிகளின் இயக்கத்தால் உண்டாகும் பணிகட்கு இறைவன் பொறுப்பாளியாகின்றான். எல்லாம் இறைவன் பணியாகிவிடுதலால், ஏகனாகி நிற்க நிகழும் செயல் இறைபணி யெனப்படுவதாயிற்று. இவ்வாறு வாழ்வது தான் வாழ்வெனப் படும்; வேறுபட வாழ்வது வாழ்வாகாது என்பது தோன்றவே, மணிவாசகப் பெருமான், “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு, ஆழ்கின்றாய்” என்றும், வாழ வேண்டிய வாழ்வாவது, “எண்ணமே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கண்ணே வைத்து” வாழ்வது என்றும் எடுத்துரைத் துள்ளார்.

அன்றியும், இறைவனை முற்பட நிறுத்தி ஏகனாகி இறை பணியில் நின்ற திறத்தை, “கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ, தேறும் வகை நீ திகைப்பும் நீ தீமை நன்மை முழுதும் நீ, வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லேன்’’ என்றும், “வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே” என்றும், “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்றும் வரும் திருவாசகங்கள் விளக்குகின்றன.

இவ்வாறு நான் என்றும் எனது என்றும் எழும் எண்ணங்கட்கு இடங்கொடாது கெடுத்து ஏகனாகி நிற்பதால், அப்போது நிகழும் செயல்களை முதல்வன் தானே என்று கொள்வன்; இதனை ஆசிரியர்க்கு முன்னே வாழ்ந்த சான்றோர்களும், “நம் செயல் அற்று இந்த நாம் அற்றபின் நாதன், தன் செயல் தானே என்று உந்தீபற” என்று தெரிவித்துள்ளார்கள்.

மலக்கட்டால் இருளிற்கிடந்த நம் பொருட்டு உடல் கருவி யுலகுகளாகிய மாயையின் தொடர்பு நமக்கு எய்துவிக்கப்பட்ட தன்றோ! அத்தொடர்பு உண்டானதும் வினைகள் தோன்றின; அவற்றிற்கு நாமே முழுமுதல் என நினைந்து செய்தமையால், அவற்றின் பயனை நுகர்தற் பொருட்டு நாம் பிறப்பிறப்புக்கட்கு உள்ளாகி உழன்றோம். ஏகனாகி இறைபணி நிற்கலுற்றால் வினைத்தொடர்பு கெடுகிறது; அது கெடவே மாயையின் தொடர்பு கெடுகிறது; அவற்றின்கண் நிகழும் செயல்கள் இறைவன் செயல்களாகின்றன. அவன் செயல் முற்றும் ஆன்மாக்களாகிய நாம் மலத்தின் மறைப்பினின்றும் நீங்கி விடுதலை பெறுவது குறித்து நிகழ்வதனால் மலமறைப்பும் நீங்குகிறது. இது பற்றியே ஆசிரியர், ஏகனாகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே என்று அருளியுள்ளார். இக்கருத்துக்களையே,

“அவனே தானே யாகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே”

என்று ஆசிரியர் உரைத்தருளுகின்றார்.

11. உடல் கருவி முதலியவற்றோடு கூடி அவற்றைத் தன் உடைமையென்றும், அவற்றால் நிகழும் செயல்கட்குத் தானே முதல் என்றும் கருதி யொழுகிவந்த உயிர், நான் எனது என்ற நினைவும் செயலும் அற்றிருப்பது அருமையாதலால், அதற்கு வழி யாது? என்றோர் ஐயம் நமக்குண்டாவது இயல்பு. அந்நினைவு செயல்களை முழுமுதலாக நிறுத்திய இறைவன் பால் அன்பு செலுத்துவதில் செலவிட வேண்டும்; இதுவே அதற்கு வழி என்று ஆசிரியர் அறிவுறுத்தத் தலைப்படுகின்றார்.

நமக்கு ஒருவர் பால் அன்புண்டாக வேண்டுமாயின், அவருக்கும் நமக்கும் எவ்வகையிலேனும் தொடர்பு உண்டாக வேண்டும். ஒரு வகையிலும் தொடர்பில்லாதவரிடத்தில் நமக்கு அன்புண்டாவதில்லை. அன்றியும், தொடர்புடையாருடைய தொடர்பை அறியாதிருந்தாலும் மறந்தாலும் நமக்கு அவரிடத்தில் அன்பு தோன்றுவதில்லை. இது நாடோறும் நிகழும் நிகழ்ச்சி. இம்முறையே நாம் இறைவன்பால் அன்பு செய்ய வேண்டுமாயின் நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பைக் காணவேண்டும். திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுவதால் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு விளக்கமாகிறது. நாம் மலத்தால் கட்டுண்டு மலவிருளில் அறிவு செயலற்றுக் கிடந்ததும், இறைவன் நம்பால் அருள்கூர்ந்து மாயையிலிருந்து உடல் கருவி முதலியவற்றை ஆக்கித் தந்ததும், அறிவில்லாதவையாகிய அவ்வுடல் முதலியன தத்தமக்குரிய செயல்களில் ஒழுங்கு கெடாது செந்நெறி பிறழாது இயலுதற் பொருட்டு அவற்றோடு ஒன்றியும் அவ்வுடலிடத்தே கருவிகளோடு ஒன்றியிருக்கும் அறிவுடைப் பொருளாகிய உயிரின் அறிவு செயல்கள் எழுந்து தொழிற்படுதற் பொருட்டு உடனாகியும் இருப்பதும் நன்கு விளங்குகின்றன. இவ்வகையில் இறைவன் நமக்குச் செய்யும் உதவி தெளிவாக விளங்க விளங்க, நமக்கு அவன் பால் உள்ள தொடர்புணர்வும் அத்தொடர்பால் அன்பும் உண்டாகின்றன. அவன் செய்த உதவிகளிலும் நம்மோடு ஒன்றி உடனாய் நின்று செய்யும் உதவியை நினைக்கும்போது அந்த அன்பு எல்லையற்ற தாய் விரிகிறது.

இறைவன் நம்மோடு ஒன்றியுடனாய் நின்று செய்யும் உதவி யாது? நாம் கண்ணால் ஒரு பொருளைக் காண்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நம் அறிவு, கண்ணொளி வேறு தான் வேறு என வேற்றுமையில்லாமல் அதனோடு ஒன்றி உடனாய் நின்று அப்பொருளைக் கண்ணைக் காணச் செய்கிறது. அப்போது நாம் அப்பொருளைக் கண்டோம் என்றும், நம் கண் கண்டதென்றும் கூறுகிறோம். இவ்விடத்தே நம் உயிரறிவு கண்ணொளியொடு கலந்து உடனாய் நின்று முதலில் கண்ணைக் காணச் செய்வதும் பின்னர்த்தான் காண்பதுமாகிய இரு செயல்கள் நிகழ்வது தெரிகிறது. இவ்வாறே இறைவனும் ஆன்மாவோடு ஒன்றி உடனாய் நின்று பொருள்களை ஆன்மாவைக் காணச் செய்வதும் பின்பு தான் காண்பதும் ஆகிய இரு பேருதவிகளைச் செய்தருளுகின்றான். இதனையே நம் ஆசிரியர், காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல், காண உள்ளத்தைக் காட்டிக்காண்கின்றான் என்று உரைத் தருளுகின்றார். கண்டு காட்டுகின்றான் என்று சூத்திரம் கூறினும், காட்டிக் காண்கின்றான் என மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேலும், நாம் ஒன்றைக் காணும்போது நம்முடைய ஆன்ம அறிவும் கண்ணும் செய்யும் செயல்கள் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன; அவ்வண்ணமே இறைவன் செயலும் ஆன்ம அறிவும் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன. இவ்வாறு இறைவன் நம் பொருட்டுக் காட்டுவதும் காண்பது மாகிய இருவகைப் பேருதவிகளைச் செய்வதை நினைக்கும்போது அவன்பால் வற்றாத பேரன்பு பெருகுகிறது. அன்பின் விளைவு அருள். அன்பு பெருகுங்கால் அருளே உருவாகவுள்ள இறை வனிடத்தே அது நம்மைச் செலுத்தி விடுகிறது. ஆன்மா அவனது திருவடியாகிய அருள் நிலையத்தைச் சேர்ந்து பேரின்பத்தைப் பெறுகிறது. இதனைத் தான் நம் ஆசிரியர்.

“காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே”

என்று உரைத்தருளுகின்றார். உள்ளத்தைக் காட்டிக் காண்டலின் அயரா அன்பும், அயரா அன்பினால் அரன்கழலைப் பெறுதலும் பயனாதலால், கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே என்று அருளியுள்ளார்.

12. மேலே சொன்னபடி இறைவனோடு ஏகனாகி இறைபணி நிற்பதும், அவன் ஆன்மாவாவின் பொருட்டுக் காட்டும் உதவி காணும் உதவி என்ற இருவகை யுதவிகளைச் செய்தொழுகுவதை நினைந்து அவன்பால் அயராத அன்பு செய்வதும் என்ற இருவகை அறங்களும் சித்தாந்த சைவச் செந்நெறி என்றும் திருநெறி என்றும் சிவநெறி என்றும் வழங்கும். இவற்றை மேற்கொண்டு ஒழுகுபவன் சிவஞானி யாவன். ஆயினும் அவன் மாயையிலிருந்து உண்டாகிய இவ்வுடல் கருவிகளோடு கூடி உலகியற் பொருள்களைப் பெற்று உலகவாழ்வு வாழவேண்டியவனாக இருக்கின்றான். சிவஞானம் பெறுதற்கு முன்னே, அவனை இறுகப்பற்றி நின்ற மலம் இறைவனுடைய நற்றாளைச் சேராதபடி மறைத்துக் கொண்டிருந்தது. இப்போதும் அது நீங்கவில்லை. அம்மலத்தின் மறைப்பு நெகிழ்ந்து நீங்கும் பொருட்டு வந்து கூடிய உடல் கருவி முதலிய மாயா காரியங்கள் வந்து இயக்கியபோது அவற்றின் வழியே நின்று அவற்றையே தானென எண்ணி மயங்கிப்போனான். மாயையோடு கூடி நிற்கையில் நிகழும் இயக்கம் வினைத்தொடர் பாய் நின்றது. சிவஞானம் பெற்றபின், அவை வேறு தான் வேறு என எண்ணி, முன்னர்ச் சொன்ன இருவகைச் செந்நெறிகளையும் மேற்கொண்டு உலகியல் வாழ்வு நடத்தும்போதும், அந்த மலமாயை வினைகளின் தொடர்பில் பிணிப்புண்டு கிடந்து பழகிய பழக்கம் அவனை விடாதன்றோ? அது வந்து தாக்காதிருப் பதற்கு உலகியல் வாழ்வு அரணாகாதே; இதற்கு என் செய்வது? என்பன போலும் ஐயங்கள் இங்கே எழுகின்றன. அவற்றிற்கு விளக்கம் தரப்படுகின்றது.

திருநெறி மேற்கொண்டொழுகும் சிவஞானிபால் மலம் இருந்த போதினும், மறைப்புண்டு அறிவு அறை போகா வண்ணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளல் அவன் கடமையாகும். அதற்காகவே, ஆசிரியர், “செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மல”த்தைக் கழுவிக்கொள்க என்று அறிவுறுத்துகின்றார். இறைவன் திருவடி செந்தாமரை போன்ற சிறப்புடையதென்பது விளங்கச் “செம்மலர்த் தாள்”என்றார் .சிவஞானச் செல்வர்களின் சென்னியிலும் சிந்தையிலும் மலர்ந்து விளங்கும் செம்மையுடைய தாளாதலால் இவ்வாறு அது சிறப்பிக்கப்படுகிறது. மலர் போல மென்மையுடையதாயினும் தன்பால் வந்து உற்ற ஆன்மாக்களை மீளப்பிரிந்து ஏகாதவாறு ஆட்கொண்டருளும் வன்மையுடையது இறைவன் செம்மலர்த் திருவடி. அதனால் அதனை “நோன்றாள்” என்று சிறப்பிக்கின்றார். நோன்மை, வன்மை; “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என்று நக்கீரனாரும் கூறுவது காண்க. சேரலொட்டா அம்மலம் என்றது, நினைய விடாது உயிரறிவை மறைத்துப் பிணித்துக்கொண்டிருந்த அந்த ஆணவ மலம் என்று பொருள்படுகிறது. இயல்பான அறிவாற்றலால் விரிந்த பண்பு கொண்டு சிவமாந்தன்மை யெய்தும் சிறப்புடைய ஆன்மாவைப் பிணித்து இறுக்கி அணுப்போல் சிறுமையடையச் செய்வது பற்றி மலத்தை ஆணவமலம் என்று சிவாக மங்கள் பெயர் கூறுகின்றன. சிவஞானிபால் நெகிழ்ந்து நீங்காது கிடக்கும் மலம், சிவஞானம் பெறுதற்குமுன், நெகிழும் நீர்மையின்றித் திண்ணிதாய்ப் பிணித் திருந்த சிறப்புத்தோன்ற “அம்மலம்”என்று குறித்தருளினார். மலம் போந்து மறைக்காதவாறு காத்தல் வேண்டும் என்பதற்கு “மலம் கழுவுக” என்றார். மலத்தை நீக்குதற்கு, ஏற்ற சொல் கழுவுதல் என்பது. மலத்தால் அறிவு அறை போகாதபடி காத்துக்கொள்ளுதற்கு வழி திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுவதே யாகும். சிவஞானிகள் எப்போதும் இத்திருவைந் தெழுத்தை எண்ணுவதும் ஓதுவதும் இயல்பு; “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்றும், “ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்” என்றும், “வினைப் பகைக்கு அத்திரமாவன அஞ்செழுத்துமே” என்றும் சமய குரவர்கள் கூறுவதும், மிகப் பழையோரான திருமூல நாயனார், “மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும் போது, அரணம் கைக் கூட்டுவது அஞ்செழுத்தாமே” எனவும் “அருள் வழி காட்டுவது அஞ்செழுத்தாமே” எனவும் ஓதுவதும் போதிய சான்றுகளாம்.

இவ்வாறு திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்தோதி மலம் கழுவும் சிவஞானி உலகியல் வாழ்வில் பலதிற மக்களோடு கூடி வாழவேண்டியவன். அவர்கள் பலரும் சிவஞானம் பெற்ற வர்களாக இருப்பர் என்பது அரிது. அவர்களோடும் சிவ ஞானி ஒத்து வாழ வேண்டும். அவ்வாறு வாழுங்கால், அவரது கூட்டத்தால் சிவஞானம் பெற்றார்க்கும் விழைவும் வெறுப்பும் தோன்றித் துன்பம் செய்யுமன்றோ? இதற்கென் செய்வது? என்றொரு வினா எழுகிறது. இஃது உண்மையே. நிலத்தியல்பால் நீர்திரிவது போல எத்திறத்தோர்க்கும் இனத்தியல்பால் அறிவு திரியும்; இது பற்றியே பெரியோர்கள் நல்லின மல்லாத சிற்றினத் தோரை அஞ்சி நீங்குகின்றனர். ஆதலால் சிவஞானச் செல்வர்கள் சிவபரம் பொருளிடத்தே அன்புடையவர்கள் எவர்களோ அவர்களோடே கூடி வாழ்வதுதான் செய்யத் தக்கது; அதுதான் இதற்கு வழி. இது பற்றியே “அன்பரொடு மருவுக” என்று ஆசிரியர் அறிவிக்கின்றார். சிவன்பால் அன்புடைய அன்பரை எவ்வாறு அறிவது? அந்த அன்பு அவரவர் சிந்தையிலேயன்றோ நிற்பது! ஆயினும், சிவத்தின்பால் உண்மை யன்புடையார் எல்லாவுயிரிடத்தும் அன்புடையராவர்; அவரால் இகழப்படுவோர் எவருமிலர்; எவ்வுயிரும் இல்லை. சாதி சமுதாய முதலிய வேற்றுமைக் கொள்கை சிவஞானிக்கும் சித்தாந்தச் செந்நெறிக்கும் புறம்பு. எல்லா உயிர்களோடும் ஒன்றியுடனாய் நிற்கும் சிவபரம்பொருள் பால் மெய்யாக உயர்ந்த அன்புடையவர், எல்லோரையும் ஒப்பக்கருதி அவர் உவப்பன செய்யும் நினைவும் சொல்லும் செயலும் உடையவராயிருப்பர்; சிலரை வேறுவைத்து இகழ்வதும், சிலரை வேறுவைத்துப் புகழ்வதும் சிவநெறி கைக்கொண்ட “அன்பர்” செயல் அல்ல. “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை எமை இகழார்” என்று உண்மைச்சைவர் இலக்கணத்தைப் பாயிரத்தில் வற்புறுத்திக் கூறி யருளினமையால், இங்கே “அன்பர்” எனப் பொதுப்படக் கூறிச் “சிவன்பால் அன்புடையாரொடு மருவுக” என்பதன் உரையில் “சிவபக்தர்களோடு இணங்குக” என்றது, அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் என்பது காட்டி வற்புறுத்துதற் பொருட்டு என அறிதல் வேண்டும். சிவபெருமான் “பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்” என்று சிவஞானச் செல்வராகிய திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியும், தமது வாழ்வில் ஒழுகிக் காட்டியும் நிலைநாட்டிய சிவநெறியில் நிற்கும் சைவர்பால் சிறப்பாகச் சித்தாந்த சைவர்பால் சிலரை இகழ்வதும் சிலரைப் புகழ்வதும் நிகழ்வது குற்றம். அது செய்பவர் “தம்மை யுணராதவர்” என்றும், அவர் கூறுவன “புறம்” என்றும் “கேளாம்” என்றும் ஆசிரியர் இந்நூலின் தொடக்கத்தே நன்கு வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு வேற்றுமைக் கொள்கைகொண் டொழுகுவோர் “அன்பர்” ஆகார்; இதுவே சிவன்பால் அன்புடையாரை அறியும் கூறுபாடு. அன்பரல்லாதார் சிவஞானத்தைச் சிதைத்து அவ ஞானமும் அஞ்ஞானமும் உணர்த்துவர். ஆதலால் அன்பரொடு மருவுவதே செய்யத்தக்கது என்பதாம்.

இனி, உலகியலில் வாழும் சிவஞானிக்கு அவ்வவ்விடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் பலப்பல காட்சிகளை வழங்கும். அவற்றைக் காணுமிடத்துச் சிவஞானியின் செயலும் வேறுபடு மன்றோ? அதனால் அவர்பால் குற்றம் புகுமே? இதற்கென் செய்வது? எனின், சில இடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் சிவஞானத்துக்கு அரண் செய்யும். திருக்கயிலாயம் நோக்கிச் சென்ற திருநாவுக்கரசருக்குத் திருவையாற்றுக் காட்சிகள் சிவதரி சனப்பயனை நல்கினவல்லவோ? அவற்நைக் கண்ட விடத்து அவை சிவபரம்பொருளே என எண்ணி வழிபடுதல் சிவஞானச் சைவர்கட்குக் கடமை. இக்காட்சிகளில் சிறப்புடையவை மெய்யன்பர் திருவேடமும் சிவபெருமான் எழுந்தருளும் திருக்கோயில்களுமாகும். இவற்றையே குறிக் கொண்டு நோக்கிச் செல்லின், அல்லாதவை காட்சிப்படா. அதனை, “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று ஆசிரியர் அறிவுறுத்தி யருளுகின்றார். காண்பவர் உள்ளத்தில் இது மாயமோ என்ற எண்ணம் எழாவகையில் சிவபரம் பொருள் பால் அன்பு நிறைந்தவர் வேடத்தைக் கண்டால், அவ்வேடத்தைச் சிவமென்றே தேறி வழிபடவே செய்யும் என்பதற்கு மாலற நேயம் மலிந்தவர் வேடம் என்று கூறப்பட்டுளது. “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன்?” என்று திருமூலநாயனார் அருளுமாறு, வேடநெறி நில்லாதவர் வேடம், காண்பவர் கருத்தில் மால் விளைவிக்கும். திருவேடத்தின் நோக்கம் மெய்க்கு அணிசெய்வதன்று. போர்ச் சான்றோரது வேடம் பகைவரது பகைமையைக் கெடுக்கும் குறிப்பிற்றாவதுபோலச் சிவஞானச் சான்றோரது திருவேடம் பிறவிக்குரிய வினைப்பகையைக் கெடுக்கும் குறிப்பினதாகும். அது சிவபெருமானது திருவருளால் விளைவதாகையால் காண்பார் கருத்தில் தாம் வழிபடும் சிவபரம் பொருளையே அது நினைப்பிக்கும். அதனால் அவர் உள்ளம் சிவஞானத்தால் திகழ்ந்து மாலறும்; இதனைத் திருநாவுக்கரசர் வரக்கண்டபோது, அவரது திருவேடம், திருஞான சம்பந்தர் “கருத்தில் பரவும் மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது” எனத் தொழுது வணங்கச்செய்த நிகழ்ச்சியால் நன்கறிகின்றோம். முதியோன் வடிவில் திருவேடம் தாங்கி வந்து உரையாடிய முருகன் செயலை வெறுத்துக் கூறலுற்ற வள்ளி நாயகியார், “நேயமலி மெய்யடியர் நேர்ந்துழியும் நின்போல் மாயமென உள்ளுமொரு வான்பழியும் வைத்தாய்” என்பதனால் மாலுண்டாக்கும் வேடமும் உண்டு என்பது பெறப்படும்.

திருவேடம் பூண்டார், நேயம் மலிந்தவரா அல்லரா என்பதை அறிவது அரிது. அந்த நேயம் அவரவர் நெஞ்சின்கண் நிகழ்வது. ஆயினும், நேயம் மலிந்தவர் திருவேடம் காண்பார் உள்ளத்தில் மால் உண்டாக்காது என்பது உறுதி. எப்படியிருப்பினும் காண்பார்க்குத் திருவேடம் பொருளே தவிர, வேடம் பூண்டோர் நேயம் மலிந்தவரா? அல்லாதவரா?”எனக் காண்பது பொருளன்று என்பதை வற்புறுத்தவே ஆசிரியர் அன்பரையும் வேடத்தையும் வேறு வேறு நிறுத்தி வேடத்தை விதந்தருளுகின்றார். வேடம் பூண்டு வேடநெறி நில்லாதாரை ஆராய்ந்து நெறி நிறுத்துவது வேந்தன் கடன்; (திருமந். 240) அதனை அவன்பால் விடுத்து, வேடத்தை அரனெனத் தொழுக என்பது. இங்கே விதிக்கப்படுகிறது. பண்டைநாளில் ஞானமில்லாதார் வேடம் பூண்டு ஞானிகள்போல நடிப்பராயின், நாடாளும் வேந்தன் தெரிந்த ஞானிகளைக் கொண்டு ஆராய்ந்து அவர்கட்கு ஞானத்தை நல்குவன்; அவனுக்கு அது கடன்; அது நாட்டுக்கு நலமாகும் (திருமந். 242) என்று திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார்.

இனி, ஆங்காங்குக் காணப்படும் சிவன் கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுதல் வேண்டும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் தமிழகத்தில் திருவுலாவந்த போது அவர்கட்குத் திருக்கோயில்களே காட்சியளித்தன. அத்திருக்கோயில்கள் அவர்களுக்குச் சிவபரம்பொருளாகவே விளங்கின; அவர்கள் அப்பரம்பொருளோடு உரையாடினர்; வேண்டிய வேண்டியாங்குச் சிவபரம்பொருள் நல்கியருளப் பெற்றனர். கோயில்கள் அறநிலையங்களாகவும், பொருள் நிலையங் களாகவும், ஓவியம், சிற்பம், கூத்து முதலிய கலை நிலையங் களாகவும், அறச்சாலைகளாகவும், மருத்துவச் சாலைகளாகவும் ஆசிரியர் மெய்கண்டதேவர் காலத்தில் காண்பார்க்குக் காட்சி யளித்தன. ‘அக்காட்சி முற்றும் உயிர்கட்குத் தொண்டுபுரியும் சிவப்பணியாகவே இருந்தமையின் அவ்விடங்களைச் சிவன் என்றே வழிபட வேண்டுமென்பது சிவஞானச் செல்வர்களின் திருவுள்ளம். ஆதலால் திருக்கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுக என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் அருளிச் செய்கின்றார். இக்கருத்தை,

“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே”

என்று ஆசிரியர் இனிய சொற்களால் எடுத்தியம்புகின்றார். இதன் கண் மலம் கழுவுதல், அன்பரொடு மருவுதல், திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவனெனத் தேறி வழிபடல் என்ற மூன்றும்’ வற்புறுத்தப்படுவதைக் காணலாம்.

சித்தாந்தச் செந்நெறியாகிய சிவநெறியில் நிற்கும் சைவநன் மக்கள் மலவாதனையறுமாறு திருவைந்தெழுத்தை யோதுவதும், பிறவுயிர்கட்கு அன்பு செய்வதும், மக்களிடையே சாதி சமுதாய வேற்றுமைச் சழக்குகளை யொழித்து நோயுற்றோர்க்கு மருத்துவப் பணியும், கூனும் குருடும் செவிடும் ஊமையுமாய் வாழ வகையற்று வாடும் மக்கட்கு வேண்டும் பணியும் திக்கற்ற இளஞ்சிறார்கட்கு உண்டி உறைவிடம் முதலியன தந்து கல்வியறிவு நல்கி ஆதரிக்கும் சிவப்பெரும் பணியும் சமயஞான நெறிகளை அறிவுறுத்தும் சமய ஞானப் பணியும், இவைபோல்வனவாகிய பிறபணிகளும் அன்பர் பலருடன் கூடிச் சிவவேடங்களையும் சிவன் கோயில்களையும் சிவனெனவே தேறி வழிபடுவோர் செய்தற்குரிய கடன்களாம் என்பதை வற்புறுத்துவதற்கே இதனை இறுதிக்கண் வைத்து ஆசிரியர் உரைத் தருளுகின்றார்.

மேலே கூறிய சிவப்பணிகளைப் புரிவதென்பது, பொருட்பற்று மிகுந்து திருவருளை நினையாது வாழும் மக்கட்கு இயலாத தொன்று. அவர்களது உள்ளம் பொருளீட்டத்திலும் தன்னலம் பேணுவதிலும் உறைந்து கிடப்பதால், ஏகனாகி இறைபணி நின்று அவ்விறைவன்
பால் அயரா அன்பு பூண்டு வாழும் சிவஞானச் சைவ நன்மக்களுக் கென்றே இவ்விதி இங்கே வரைந்து கூறப்படுகின்றது. உண்ணும் உணவிலும், கொண்டும் கொடுத்தும் இனம் பெருக்கி வாழும் சாதி சமுதாயத்திலும் சைவம் இருப்பதாகக் கருதும் மடமையைப் போக்கிப் பொதுவாக எல்லா வுயிர்களுக்கும் சிறப்பாக மக்களுயிர்க்கும் செய்யும் மெய்ப்பணியில் தான் சைவம் நின்று திகழ்கிற தென்பதை வற்புறுத்துவதே சிவஞானபோதத்தின் சீரிய நோக்கமாகும். இந் நூலைத் திருவருள் ஞானத்தோடு உணர்ந்து தெளிந்த தாயுமானார் “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப
நிலை தானே வந்தெய்தும் பராபரமே” என்று சுட்டிக் காட்டியதும் இத்திருப்பணி நோக்கேயாம். இந்த இனிய இறைபணியை இன்றைய சைவ மக்களைப் பணிகொண்டு சித்தாந்த சைவச் செந்நெறிக்குரிய உண்மைச் சைவர்களாக விளங்கி வாழவைக்கும் சிவஞான போதம் வாழ்க; அதனை உரைத்தருளிய மெய்கண்ட தேவர் திருவடிகள் வாழ்க.


திருச்சிற்றம்பலம்

சிறப்புப்பாயிரம்


உரைப்பாயிரம்
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்ப் பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானுவாகிக் குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாயதேவன் சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடுழி தழைக மாதோ.

1சைவாகமங்களின் உளவாகிய 2நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்தோதிய பொருள்களை ஆராயும் ஆராய்ச்சி இந் நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது கேட்டலுறு வார்க்கு இதனாற் போந்த பயன் யாதோ எனவும், இது கேட்டற் குரியார் யாவரெனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாதெனவும், இதனைப் பயப்பிக்கும் கருவியாய் இதற்கு முன் ஒரு தலையான் உணர்தற்பாலது யாதெனவும், இதனை வழங்குதற் கிட்டபெயர் யாதெனவும், இஃது யாண்டு வழங்குவதெனவும், இதன் முதனூல் யாதெனவும், இந்நூல் செய்தார் யாவரெனவும் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறற் பொருட்டு இந்நூன்முகத் துரைக்கப்படுவதாகிய சிறப்புப்பாயிரம்:-

மலர்தலை யுலகின் மாயிரு டுமியப்
பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந்
தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி
மயர்வற 1 நந்தி முனிகணத் தளித்த
உயர்சிவ ஞான போத முரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் 2 வெண்ணைச் சுவேதவனன்
3பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே4

எனவரும்.

இதன்பொருள்: மலர்தலை உலகில் மா இருள் துமியப் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் - விரிந்த இடத்தையுடைய ஞாலத்தின் கண்ணே துன்னிய பெரிய புறவிருள் கெடும்படி5 பலசமயத்தாரானும் புகழப்படுகின்ற பரிதியங் கடவுள் உதயகிரியினின்றும் போந்தாலன்றிக் காட்சி யெய்த மாட்டாத கண்ணொளிபோல;

அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி - பொறுத்தற் கரிய துயரங்களுக்கெல்லாம் ஒரு நிலைக்களமாய்ச் 6சத்த தாதுக்களாற் பொத்திய குரம்பையாகிய காணப்பட்ட வுடம்பானே காணப்படாத ஆன்மாவையும் 7பரமான்மாவையும் அனுமான வளவையான் வைத்து ஆராய்ந்து அவற்றது தடத்தலக்கணம் எனப்படும் பொதுவியல் புணர்ந்து;

1கண் இருள் தீர்ந்து- அவ்வுணர்ச்சியானே கருதி உணரப் படும் அகவிருளாகிய ஆணவமலத்தினின்று நீங்கி;

ஈண்டிய 2பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு - அது நீங்கிய வழி எல்லா நூல்களும் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய பெரும்பெயர் எனப்படும்; ஒரு வார்த்தையாகிய மகாவாக்கியத் தான் எடுத்தோதப்படும் முதற் கடவுளது திருவருளானே அப் பொருள்களது சொரூப லக்கணம் எனப்படும் சிறப்பியல்பை அனுபூதியிற் கண்டு உணர்ந்து;

மயர்வு அற- இம்முறையானே மயக்கவாசனையற்றுச் சிவானுபவம் பெறுதற்பொருட்டு;

நந்தி முனி கணத்து அளித்த -சீகண்டதேவர்பாற் கேட்டருளிய நந்திபெருமான் சனற்குமார முனிவன் முதலிய முனிவர் கணங்கட்கு முறையானே அளித்தருளப்பட்ட;

3உயர் சிவஞான போதம் - சரியை முதலிய மூன்று பாதப் பொருள்களை ஆராயும் நூல்களின் மேற்பட்ட சிவஞான போத மென்னும் வடநூலை; உரைத்தோன் - 4மொழி பெயர்த்துக் கூறி வார்த்திக மெனப்படும் பொழிப்புரை செய்தோன்;

பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன் -பெண்ணையாற்று நீராலே சூழப்பட்ட திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளிய சுவேதனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாம முடையான்;

பொய் கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் - பொய்ச் சமயங்களின் பொருள் இது இது என்று கண்டு கழிப்பித்த காரணத்தாற் பெற்ற மெய்கண்டதேவன் என்னும் சிறப்புத் திரு நாமம் உடையான்;

பவம் நனி வன்பகை கடந்த தவர் அடி புனைந்த தலைமை யோனே - பிறவியாகிய மிக்க வலிய பகையினை வென்ற தவத்தோர் தனது திருவடியைப் புனைந்து கோடற் கேதுவாகிய தலைமைப் பாட்டினை யுடையோன் என்றவாறு.

படரிற் காண்டல் செல்லும் கண் எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு. இப்பொருள் பற்றிக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், 1உவமேயப் பொருட் கேற்பக் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல் என்பது கருத்தாகக் கொள்க.

இருட் கேட்டிற்கும், 2நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாய வாறு போல, மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி 3அனுபூதியென்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிற்றாயது இந் நூல் என்பார் துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல்’ நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞான போதம் என்றார்.

தலைமைபற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனம் பற்றிக் கரணம் புவனம் முதலியனவும் உடன் கொள்ளப்படும். அருந்துயர்க் குரம்பையின் நாடப்படுவதாகிய பொதுவியல்பு, முன் ஆறு சூத்திரத்தானும், பெரும் பெயர்க் கடவுளிற் காணப்படு வதாகிய சிறப்பியல்பு பின் ஆறு சூத்திரத்தானும் ஓதுப. 4நாடி யெனவே அனுமான வளவையான் என்பதூஉம், 5கண்டு எனவே அனுபூதியில் என்பதூஉம் தாமே போதரும்.

பொதுவியல்பு அளவைமுகத்தானும் இலக்கணமுகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும்; சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை யென்னும் நான்கு திறத்தான் உணரப்படும்..

இஃது என்சொல்லியவாறோவெனின், 1இவ்விருவகை இயல்பும் வேறுவேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது ஒரோவொன்றே பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு. அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்தற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று. சிவஞானபோதம் என்பதூஉம் இக்காரணத்தாற் பெற்ற பெயரென்பது 2வடமொழிச் சிவஞான போதத்து இறுதிச் சூத்திரத்து ஓதியவாறு பற்றி உணர்க.

சரியைமுதலிய மூன்றுபாதப்பொருளை ஆராயும் நூல் களாவன சோம சம்பு பத்ததி முதலாயின. 3அந்நூல்களின் மேற்பட்ட சிவஞானபோத மெனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெறப்பட்டது; படவே, முன்னர்த் தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன் பின்னர்ச் சரியாபாத முதலியவற்றை ஆராயும் நூல்களை முறையே கேட்டு அவ்வா றொழுகி மனந்தூயராய் நித்தியா நித்தியவுணர்வு தோன்றிப் 4பிறவிக்கஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குடையராய் வந்த அதிகாரி களுக்கு இந்நூலுணர்த்துக என்பது போந்தது எனக்கொள்க.

“உயர்சிவஞானபோத” மெனவே யாப்பும், கேட்போரும், நுதலிய பொருளும் நூற்பெயரும், “நாடித் தீர்ந்து கண்டு மயர்வற” எனவே நுதலிய பொருளின் வகையும் பயனும், “நந்தி முனிகணத் தளித்த” எனவே வழியும், “வெண்ணைச் சுவேதவனன் மெய் கண்டதேவன்” எனவே ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கும் நிலமே இந்நூல் வழங்கும் நிலமென எல்லையும் போந்தவாறு உணர்க.

வடநூலார் யாப்பை 1ஆனந்தரியமென்றும், நுதலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசனமென்றும் கூறுப; யாப்புச் சம்பந்த மென்பாரு முளர்.

திருச்சிற்றம்பலம்
திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட
தேவநாயனார் அருளிச்செய்த

சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளியசிற்றுரையும்


மங்கல வாழ்த்து
காமிகம் முதலிய சைவாகமங்களுள் ஞானபாதத்தின் உளதாகிய ஆசங்கை நீக்கி, அவற்றின் பொருளுண்மை பொது வியல்பு சிறப்பியல்பு என்று இரு வேறு வகைப்படுத்துக் காட்டிப் போதித்தற்கு இரௌரவாகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து, பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர், 1சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிதும் அணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்துவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார்.

2 கல்லா னிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லா ரிணைமலர்
நல்லார் புனைவரே.

(இ-ள்.) கல்லால் நிழல் - அருள் வடிவாகிய கல்லால நிழலின் கண்ணே எழுந்தருளியிருந்து; மலைவு இல்லார் -நந்திபெருமானுக்கு இந்நூலான் 1மலைவுதீர்த்தருளிய முதலாசிரியர்; அருளிய - மேன்மேற் கருணை கூர்ந் தருளுதற் பொருட்டு; பொல்லார் இணைமலர் - பொல்லாத பிள்ளையாருடைய ஞானசத்தி கிரியாசத்தி யென்னும் இரண்டு திருவடித் தாமரைகளையும்; நல்லார் - கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்; புனைவர் -தம்முடைய ஞானசத்தி கிரியாசத்திகட்கு வியாபகமாகக் கொண்டு 2தாடலைபோல் அடங்கிநிற்பர் எ-று.

நல்லார் புனைவ ரெனவே, ஏனையோர்க்கு அது கூடா தென்றவாறாயிற்று.
3மூவகை வாழ்த்துகள், இது பொருளியல்பு உரைத்தது எனக் கொள்க.

அருளிய என்பது செய்யிய வென்னும் வாய்ப்பாட்டு வினை யெச்சம்; அது புனைவரென்னும் பிற வினை முதல் வினை கொண்டது. அருளிய 1பொல்லார் எனப் பெயரெச்ச முடிபாக வைத்துரைப்பினும் அமையும்.

இல்லார் இல்லாகச் செய்தாரெனப் 2பண்படியிற் பிறந்த வினைப்பெயர்.
மலைவில்லார் அருளப் பொல்லார் தாள் புனைவர் எனவே, அவ்விருவருந் தம்முள் வேற்றுமையின்மை பெற்றாம்; உலகத்துப் புதல்வர்கள் மாட்டுச் செய்யும் வழிபாடு தந்தையர்க்குக் கழிபேரு வகை பயப்பிக்குமாகலின், அந்நயம் பற்றி அங்ஙனம் கூறிய தூஉமாம்.
அவையடக்கம்

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

இஃது அவையடக்கம் கூறுமுகத்தானே, ஈண்டு எடுத்துக் கொண்ட சித்தாந்த சைவரின் உயர்வும் ஏனைச் சமயத்தார்களது இழிவும் கூறுகின்றது.

(இ-ள்.) தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார்- உடைப்பொருளாகிய தம் இயல்பினை உணர்ந்து தம்மை உடையானாகிய தலைவனை உணரும் சிந்தாந்த சைவர்; எம்மை உடைமை எமை இகழார் - தமக்கு உடைப் பொருளாகிய எம்மை உடையராகலின் எம்மைக் 3குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவதன்றி இகழ்தல் செய்யார். ஆகலான் எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர்; தம்மை உணரார் உணரார் - அங்ஙனம் தம்மையுணராதார் தம்மை உடையானாகிய தலைவனையும் உணராராகலான்; உடங்கு இயைந்து தம்மிற் புணராமை - அவர் ஒருங்கே குழீஇக் கொண்டு தம்மிற்றாமே சேராது முரணுதலால்; புறன் கேளாம் - அவர் எம்மையும் எம்மாற் செய்யப்படும் நூலையும் இகழ்ந் துரைக்கும் புற மொழியை யாம் பொருளாகக் கொள்ளாம் எ-று.

ஆகலான் எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக் கொள்வர் என்பது குறிப்பெச்சம். தன்னை யென்னும் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. உடைமை, புணராமை என்புழி இன்னுருபு விரித்துரைக்க.

தம்மையுணரார் எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம் ஒருபொருள் உண்டென்பதே உணராத 1உலகாயதரும், தம்மைக் குணிப்பொருளென்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு உடைப்பொருளென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் 2சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருளெனக் கொள்ளினும், அவருட் பாஞ்சராத்திரிகள் உடைப்பொ ருளாகிய தமக்கு அணு பரிமாணம் கோடலானும், 3உடையானுக்குப் பரிணாமம் கூறுதலானும், உடையானல்லாதானை உடையானென மயங்கிக் 3கோடலானும், 4சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமம் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மை யுணராரே யென்பது.

புறன், புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும் புறங் கூற்று மொழியும் என்பது இரட்டுற மொழிதல் என்னும் உத்தியாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது முக்கூற்றுப் புறச்சமயங்களின் வேறான பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழியென்க.

பொதுவதிகாரம்


பிரமாணவியல்
முதற்சூத்திரம்
ஈண்டு ஆசிரியர், முதனூலிற் கூறியவாறே சிவாகமங்களின் ஓதப்படும் ஞானபாதப்பொருள் எல்லாவற்றையும், பொது உண்மை யென்று இரண்டாகத் தொகுத்துப் பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியல் என நால்வகைப்படுத்து, பிரமாணவியல் மூன்று பாதத்தாற் கூறுவான் தொடங்கி, முதற்கண் உலகிற்கு முதற் கடவுள் சிறப்புவகையான் உண்டு என்னும் ஆகமப் பிரமாணத்தை வலியுறுத்துவதாய அனுமானப் பிரமாணம் கூறுகின்றார்.

அவனவ ளதுவெனு 1 மவைமூ வினைமையின்
தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாம்
அந்த மாதி யென்மனார் புலவர்

என்பது சூத்திரம். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இது சூத்திரக் கருத்துரைக்கின்றது.

இதன்பொருள்: 2நிவிர்த்திகலை முதலிய பஞ்ச கலைகளுக்கு உட்பட்ட ஐவகைச் சங்காரத்துள், இறுதிக்கண்ண தாகிய மாசங் காரத்தைச் செய்யும் வினைமுதலாயுள்ள முதல்வனையே தனக்கு முதற் கடவுளாக உடைத்து அவன் அவள் அது என்று இவ்வாறு சுட்டியுணரப்படுவதாகிய உலகம் என வேதாகமங்களுட் கூறப் படுவதனை அனுமான வளவையான் உணர்த்துதலைக் கருதிற்று இச்சூத்திரம் எ-று.

ஏகாரம் இயைபின்மை நீக்குதற்கும் பிறிதின் இயைபு நீக்குதற்கும் பொதுவாய் நின்ற பிரிநிலை.

இதன் பொழிப்பு உரைத்துக்கொள்க.
இஃது இவ்வுரைமுகத்துக் கேட்போரால், 1உரைவகை பற்றிச் செய்து கோடற்பாலது ஒன்றனை அறிவுறுத்துகின்றது.

(இதன் பொருள்) இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு, முன்னர்க் 2கண்ணழித்துரைக்கும் பொழிப்புரை பற்றி உரைத்துக் கொள்க எ-று. எனவே, இங்ஙனம் இருவகைப்படும் பொழிப் புரையுள் கண்ணழித்துக் கடாவிடைகளான் உரைக்கும் வார்த்திக மாகிய பொழிப்புரை மாத்திரையே யாம் ஈண்டுரைக்கின்றாம்; பிண்டமாகக் கொண்டு உரைப்பதாய பொழிப்புரை இதுபற்றி யுணர்ந்து கோடல் எளிதாகலின், அஃது யாம் உரைக்கின்றிலம் என உரைமுகத்து மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று.

இஃது, ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துக்கொண்டுணர்தற் பொருட்டு முதற்கண் வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆசிரியர் ஆணை தந்தமையின், கண்ணழித் துரைபற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும்.

(இ - ள்.) அவன் அவள் அது எனும் அவை - அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டி உணரப்படும் சொல்லும் பொருளுமாய இருகூற்றுப் பிரபஞ்சத் தொகுதி; மூவினைமையின் - தோற்றம் நிலை இறுதி யென்னும் முத்தொழில் உடைமையால்; தோற்றிய திதியே - ஒருவனால் தோற்றப்பட்டதாய உள் பொருளேயாம்; ஒடுங்கி - அது தோன்றுங்கால் தான் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும்; மலத்து உளதாம் - சகசமலம் நீங்காமையால் அது நீங்குதற் பொருட்டு மீளத் தோன்றுவதாம்; அந்தம் ஆதி - இவ்வாறாகலின் சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற்கடவுள், ஏனையோர் அன்னர் அல்லர்; என்மனார் புலவர் - எனக் கூறுவர் அளவை நூல் உணர்ந்தோர் எ-று.

அவை, தொகுதி; 1சுட்டுப் பெயர் எனக் கொள்ளின், உள எனப் பிரித்துப் பயனிலையாக்கித் தாம் என்பதனை அசை நிலையாக வைத்துரைத்து, 2ஆக்கச்சொல் வருவித்துக்கொள்க. வினைமை, வினையுடைமை.

தோன்றிய என்னாது 3தோற்றிய எனப் பிறவினை வாய்பாட்டான் ஓதுதலின், 4அதற்குரிய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. தோற்றிய வென்னும் பெயரெச்சம் திதி யென்னும். 5செயப்படுபொருட் பெயர்கொண்டது. திதியாய் ஒருவனால் தோற்றப்பட்ட தென்பார், தோற்றிய திதி யென்றார். திதியென்றது, ஈண்டு உள்பொருள் என்னும் துணையாய் நின்றது.

மூவினை உடைமையான் உள்பொருளாதலும், 1அவ்விரண்டும் உடைமையான் 2நிமித்தகாரணனை உடைத்தாதலும் துணியப் படும் என்பார், மூவினைமையின் தோற்றிய திதியே என்றார்.

3ஏகாரம் தோற்றம். 4ஒடுங்கி யென்பது பெயர். 5உருபுகள் தொக்கு நின்றன.

அந்தத்தைச் செய்யுங் கடவுளை அந்தம் என்றது 6 உபசாரம். பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.

7காணப்பட்ட உலகால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் தோற்றிய திதியே யெனவும், ஒடுங்கியுளதாம் எனவும் உலகின்மேல் வைத்துக் கூறினார்; 8கருத்துரையுட் கூறியதும் அது நோக்கி.

இச்சூத்திரத்துள் “அவனவளதுவெனு மவை மூவினை மையின்” என்பது ஓர் அதிகரணம்; “தோற்றிய திதியே ஒடுங்கி யுளதாம்” என்பது மூன்றதிகரணத்தை யுள்ளடக்கி நிற்பதோர் அதிகரணம்; “அந்தமாதி யென்மனார் புலவர்” என்பது ஓர் அதிகரணம்; ஆக முக்கூற்றது இச்சூத்திரமென்று உணர்க.

இம்மூன்றும் முறையே, ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், 1ஒரு சூத்திரத்தாற் கூறினார்.

தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிபும், இயைபும் என்னும் இவற்றது நிலைக்களம் ஈண்டு அதிகரணம்2 எனப்படும்.

முதலதிகரணம்

மேற்கோள்
ஈண்டு, உளதாய், ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப் பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது.

என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மூவினை உடைத்தோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் நித்தமாய்க் காணப்படும் பிரபஞ்சத்தை மூவினை உடைத்து என்றல் பொருந்தாது என மீமாஞ்சகரும் உலகாயதரும் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் 3முதற் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

இதன் பொருள் 1வெளிப்படை.

ஒருவனென்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடைத் தாயும், பலவேறு வகைத்தாய்ச் சடமாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலின், இம்மூன்றேதுவானும் பிரபஞ்சம் தோன்றி நின்று அழியும் என்பது துணியப்படும் என்பார், உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என 2உடம்பொடு புணர்த்தோதினார்.

உளதாய்ச் சுட்டப்பட்ட என இயையும். உளதாகச் சுட்டப் படுதல் முயற்கோடு முதலியனபோலத் திரிபு ஐயங்களானன்றி மெய்யாகச் சுட்டப்படுதல்.
ஏதுதோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின்

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், காட்சி யளவைக்கு எய்தாது உரைப்பனவெல்லாம் பிரமாணமாகா என 3உலோகாயதர் கூறும் கடாவை ஆசங்கித்துக் காட்சியளவை பற்றியும் மேற் கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ -ள்) உற்பத்தியும் நாசமும் காணப்பட்ட திதியின் பக்கத்தே காணக் கிடத்தலின் உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என மேற்கொண்டது எ-று.

உதாரண வெண்பா

பூதாதி யீறு முதலுந் துணையாகப்
பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்றொன்றிற் றோன்றி யுளதா யிறக்கண்டும்
அன்றென்று முண்டென்ன வாய்ந்து

என்பது உதாரணம்.
என்னுதலிற்றோவெனின், 1உள்ளதன்பால் அவ்விரண்டும் கிடத்தல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ- ள்) பேதாய் - காட்சி யளவைகளானும் 2அறியப் படாத மடவோனே; பூதாதி - பூத முதற் காரணமாகவுடைய பிரபஞ் சத்திற்கு; திதி ஈறும் முதலும் துணையாக ஆகும் - திதி நிகழ்வுழி நாசமும் உற்பத்தியும் தனக்குத் துணைக்காரணமாகக் கொண்டே நிகழாநிற்கும்;

அற்றாயினும் ஒன்று தோன்ற ஒன்றுநிற்ப ஒன்று அழிவதன்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழியக் கண்டிலமால் எனின்,

ஒன்று ஒன்றின் பெற்றிமையின் தோன்றி உளதாய் இறக்கண்டும் - ஒவ்வொரு காலவிசேடத்தில் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழிவதனைக் கண்டுவைத்தும்; என்றும் அன்று உண்டு என்ன பூதாதிக்கும் ஆய்ந்து ஓதாரோ - என்றாயினும் அதற்குரிய காலம் வரு மென்று உலகத்திற்கும் அங்ஙனம் ஆதல் உண்டு என்று அக்காட்சிபற்றி ஆராய்ந்து சொல்லார்களோ உன்னைப் போலும் மடமையில்லாதோர் எ-று.

பூதாதி, 1அன்மொழித்தொகை. பூதத்துக்கு மேல் உளவாய தத்துவங்கள் உலோகாயதருக்கு உடம்பாடு அன்மையின் பூதமுதலாய தத்துவங்கள் என உரைத்தல் ஈண்டைக்கு ஏலாமையறிக; பூதாதிக்கு என நான்கனுருபு விரித்துரைக்க; 2அது பின்னரும் சென்று இயையும். ஆகும் என்பது முற்றுவினை.

ஈண்டுப் பெற்றிமை என்றது சாதியை. ஓகாரம், எதிர்மறை. ஒன்றொன்றின் என்பது “ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே3” என்றாற்போல அடுக்குமொழி. அது கால விசேடமாதல் என்றும் அன்று எனப் பின்வருதலாற் பெற்றாம்.
ஒருங்கே என்பது 4சொல்லெச்சம். ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறுதலாவது, “பயில்வித் தெல்லாம், காரிட மதனிற் காட்டும் அங்குரம் கழியும் வேனில்” 5என்ப தனாலறிக. கண்டும், உம்மை சிறப்பு.

இரண்டா மதிகரணம் மேற்கோள்

இனி, இல்லதற்குத் தோற்றமின்மையின், உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின், ஒடுங்கின சங்காரத் தினல்லது உற்பத்தி இல்லை என்றது.

என இங்ஙனம் 6சொற்பல்காமைப் பொருட்டுத் துணிந்ததாக வைத்து உரைத்தாராயினும், பொருள் இயைபிற்கு ஏற்ப, இதனை மூன்று அதிகரணமாக வைத்துரைப்பது ஆசிரியர் கருத்து எனக்கொள்க. 1அஃதாமாறு காட்டுதும்.

மேற்கோள்
1 இனி உலகம் உள்ளது என்றது
என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், “உலகம் இல்பொருளாய்த் தத்தம்
2சார்பிலே தோன்றி அழிதல் இயல்பு என்றலே அமைவுடைமையின், அது மூவினை உடைத்தாயினும், தோற்றுவான் ஒருவனை உடைத்தாதல் செல்லாது,” எனப் புத்த நூலார் சொல்லும் கடாவை ஆசங்கித்துத் திதி யென்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று.
3இதன் பொருள் வெளிப்படை.
ஏதுஇல்லதற்குத் தோற்றமின்மையின்

என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், உள்ளதாதல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

இ- ள். 1இல்பொருளாகிய முயற்கோட்டிற்கு முக்காலத்தும் உற்பத்தி இன்மையின், ஈண்டு உற்பத்தி காணப்படுதலான் உலகம் உள்ளது என மேற்கொண்டது எ-று.

மேற்கோள்
2. இனி, உலகம் செய்வோனையுடைத்து என்றது
என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், “உள்பொருள் எனப்பட்ட பிரபஞ்சம், தத்தம் முதற்காரணத்தினின்றும் தானே தோன்றி யழியும், இதற்கொரு நிமித்த காரணமாய் ஒரு கருத்தா வேண்டா,” எனச் 2சாங்கியர் கூறும் கடாவை ஆசங்கித்துத் தோற்றிய என்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

3இதன் பொருள் வெளிப்படை.
ஏது
உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின்

என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ - ள்.) மண் முதலியவற்றின் உள்ளதாகிய கடமுதலிய பொருட்குக் குயவன் முதலிய செய்வோரையின்றி வனைதல் முதலிய செய்தொழில் நிகழாமையின், உலகம் இவ்வியல்பிற் றாகலான், இனி இவ்வுலகம் செய்வோனையுடத்து என மேற்கொண்டது எ-று.

மேற்கோள்
3. இனி, ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை
என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், “இத்துணையும் கூறியவாற்றான், உலகத்தைத் தோற்று விப்பான் உண்டு எனப்பட்ட கருத்தா, திதிகருத்தா சிருட்டி கருத்தா முதலியோரில் 1ஒருவனே யாதல் அமையும்” எனப் பாஞ்சராத்திரி முதலியோர் கூறும் கடாவை ஆசங்கித்து, ஒடுங்கி யுளதாம் என்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

(இ- ள்) உலகம் தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான சங்கார கருத்தாவினின் றன்றி உளதாகாது எ-று.
ஒடுங்கின வென்னும் பெயரெச்சம், சங்காரம் என்னும் இடப் பெயரோடு முடிந்தது. 2சங்காரம் ஆகுபெயர்.

அல்லதில்லை யென்று எதிர்மறை முகத்தாற் கூறியது, ஏனைக் கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற்பொருட்டு.

இதனுள் ஒடுங்கின என்பதனாற் போந்த 3குறிப்பேதுவைப் புலப்படக் காணுமாறு:-

ஏது
ஆண்டு ஒடுங்குதலின்

என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ - ள்) “யாது யாண்டொடுங்கும், அஃது அதனில் உற்பத்தியாம், மண்ணிற் குடம்போலும்” என்னும் 1அவினா பாவத்தாற் பிரபஞ்சம் சங்கார காரணன்மாட்டு ஒடுங்குதலின், மீளத் தோன்றுங்கால், ஆண்டு நின்றும் தோன்றுதலே பொருத்த முடைமையின், அவ்வாறு மேற்கொண்டது எ-று.

இவ்வாறு மூன்று அதிகரணப் பொருளும் இதன்கட் போந்தவாறும், இவ்வாறு உரையாக்காற் பொருளியைபு படாமையும் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க.

உதாரண வெண்பா

இலயித்த தன்னிலில யித்ததாம லத்தால்
இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த
தத்திதியி லென்னி னழியா தவையழிவ
தத்திதியு மாதியுமா மங்கு

என்பது உதாரணம். இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும் என்பது என்னுதலிற்றோவெனின், “உலகம் உள்ளதாயின், உள்ளதற்கு உண்டாக வேண்டுவதில்லை, ஆகலான் 2சற்காரியவாதம் அடாது,” எனப் 3புத்தர் கூறும் கடாவை ஆசங்கித்து “இல்லதற்குத் தோற்றமின்மையின்” என்ற ஏதுவை வலியுறுத்தல் நுதலிற்று.

(இ -ள்) 4இலயித்தது இலயித்த தன்னில் ஆம் - உள்ள தாயினும் சங்கார காலத்தின் ஒடுங்கியதா கலான் அவ்வொடுங்கிய உலகம் தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான சங்கார கருத்தா வினின்றும் படைப்புக் காலத்தில் மீளவுளதாம்.

1அற்றேல், ஒடுங்கியது ஒடுங்கியவாறே ஒழியாது மீளவுண்டாக வேண்டா; வேண்டுமாயின் முன்னொடுங்காது நிலைபெறவே அமையும்; அவ்வாறன்றி ஒடுங்கி மீள உளதாவது எற்றுக்கெனின்;

2மலத்தால் (ஆம்) - உள்ளதாகிய உலகம் கருமமலம் பரிபாக மாதற்பொருட்டு ஒடுங்கி, ஆணவமலம் பரிபாக மாதற் பொருட்டு மீளவும் உண்டாம்;

அற்றேல், முன்னின்ற பிரபஞ்சம் நாசமாக வேறு தோன்றும் என்னாமல், அதுவே ஒடுங்கிநின்று மீளவுளதாம் என்றற்குப் பிரமாணம் என்னை யெனின்,

இலயித்தவாறு உளதா வேண்டும் - 3யாது எவ்வாறு நின்று ஒடுங்கிற்று, அஃது அவ்வொடுங்கியவாறே உளதாதல் எல்லாரானும் விரும்பப்படும் எ-று.

எனவே, 4அந்நியம மில்லையாயின், நெல் கமுகாய் விடாது நெல்லாய் நீளுதற்கு ஏது என்னை யென்னும் தருக்கமே அதனை அறிவுறுத்தும் என்றவாறாயிற்று. சற்காரிய வாதத்தின் இயல்பு “தந்து முதல காரகம்” என்னும் 5ஞானாமிர்தத்தினுங் காண்க.

இதனானே, இல்லதும் உள்ளதும் அல்லாத பொருள் தோன்றும் என்னும் 1சூனியவாதிகளும், இல்லதும் உள்ளது மாய பொருள் தோன்றும் என்னும் 2அநேகாந்த வாதிகளும் மறுக்கப் பட்டவாறு அறிக.
-இலயித்த

தத்திதியி லென்னி னழியா தவையழிவ
தத்திதியு மாதியுமா மங்கு

என்பது என்னுதலிற்றோவெனின், “இனிச் சற்காரிய வாதத்தின் அவ்வக் காரியங்கள் தத்தம் முதற்காரணத் தொடுங்கு மெனவே கோடலின், உலகிற்கு முதற்காரணமாகிய மூலப்பகுதி வாசுதேவன் உருவாகலான், உலகம் அவன்மாட் டொடுங்கும் என்றலே அமைவுடைத்தன்றி, முதற்காரணத்தின் வேறாய் நிமித்த காரணமெனக் கொண்ட சங்கார கருத்தாவின்மாட்டு ஒடுங்கும் என்றல் பொருந்தாது” எனப் பாஞ்சராத்திரிகள் 3கூறும் கடாவை ஆசங்கித்து ஒடுங்கின சங்காரத்தின் எனவும், இலயித்த தன்னில் எனவும் கூறிப் போந்த குறிப்பேதுவை வலியுறுத்தல் நுதலிற்று.

(இ -ள்.) இலயித்தது அத்திதியில் என்னின் - உலகம் ஒடுங்கியது அந்த 4மூலப்பகுதி வடிவாய திதிகருத்தாவின்கண் என்பையாயின்;

அவை அழியாது - நீ அங்ஙனம் கொள்ளினும் 1மூலப் பகுதிக்கு மேலுள்ள புவனங்கள் அதனால் வியாபிக்கப்படாமையின் கீழுள்ள ஏகதேச மாத்திரையே ஆண்டு ஒடுங்குவதன்றி மாயா காரியத் தொகுதி முழுவதும் ஆண்டு ஒடுங்காது;

அற்றேல், மாயாகாரியத் தொகுதி முழுவதும் யாண்டொடுங்கு வதெனின்;

அத்திதியும் ஆதியு 2மாம் அங்கு அழிவது - அந்தத் திதிக் கடவுளும் படைப்புக் கடவுளும் தோன்றுதற்குக் காரணமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தே அவ்விருவரோடுங் கூட அழிவதாம் அத்தொகுதி எ-று.
இவ்வெண்பாவினை,

“3 செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபும்
ஐயப்பா டின்றி யமையுமாம் - மைதீரொற்
றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு
குன்றுமே லொற்றளபுங் கொள்”

என்பதுபோல, இரண்டு அதிகரணப் பொருள்படுமாறு இரு தொடராக வைத்து உரையாக்கால் பொருள் இயைபுபடாமையறிக.

இலயித்த என்னும் பெயரெச்சம் 4தன்னென்னும் இடப் பெயரோடு முடிந்தது. 5இலயித்த தென்றது, ஏதுப் பொருண்மை யுணர நின்ற பெயர். இலயித்ததெனச் சற்காரிய வாதம் கூறவே, இலயித்த வவத்தையின் அவ்வக் காரிய சத்தி சமூகமாய்ச் சூக்கும மாய் நிற்பதொன்று உண்டு; 1அதுவே முதற்காரணம் எனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயை யுண்மையும் பெறப் பட்டது.

2ஆவென்பது முதனிலைத் - தொழிற் பெயர். வேண்டும் எனச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார்.

அவை, தொகுதி; அஃறிணைப் பன்மைப்பெயர் என்பார்க்கு அழியாது, அழிவது என்னும் ஒருமைகளோடு இயையாமையும் உத்தரமாகாமையும் உணர்க.

திதியும் ஆதியும் ஆகுபெயர். ஆமங்கு, பெயரெச்ச முடிபு.

இரணிய கருப்ப மதத்தையும் மறுத்தற்பொருட்டுப் படைப்புக் கடவுளையும் உடன் கூறினார்.

நிமித்த காரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற் காரணன் அல்லனாயினும், முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டொடுங்கி ஆண்டு நின்று தோன்றுதல் அமையும் என்பது வருகின்ற வெண்பாவிற் பெறப்படும்.

உதாரண வெண்பா

வித்துண்டா மூல முளைத்தவா தாரகமாம்
அத்தன்றா ணிற்ற லவர்வினையால் - வித்தகமாம்
வேட்டுவனா மப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்
கூட்டானே மண்போற் குளிர்ந்து

என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், “உலகம், தனக்கு முதற்காரணமாகிய மாயையின் ஒடுங்குவதன்றி நிமித்தகாரணன் ஒருவன் உண்டெனக் கொள்ளினும், அவன்மாட்டு ஒடுங்கு மென்றல் பொருந்தாமையின், யாது யாண்டொடுங்கும், அஃது அதனில் உற்பத்தியாம் என்னும் அவினாபாவத்தான், மாயையின் ஒடுங்கிய உலகத்தை மாயையே தோற்றுவிக்கும்; இதற்கோர் இறைவன் வேண்டா,” எனச் சாங்கிய நூலார் மதம்பற்றி நிகழுங் கடாவை ஆசங்கித்து, “உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினை யின்மையின்” என்னும் ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ -ள்.) (தாரகமாம்) மண்போல் குளிர்ந்து வித்து உண்டா - மாயையும் உலகமும் வித்தும் அங்குரமும் போலு மாகலின் வித்துக்கு 1ஆதாரமாகிய நிலம் குளிர்ந்தவழி அதன்கண் வித்துளதாக; மூலம் முளைத்தவா - அதனினின்றும் அங்குரம் தோன்றியவாறு போல; தாரகமாம் அத்தன் தாள் நிற்றல் -மேலே வெண்பாவின் இலயித்த தென்பதனாற் பெறப்பட்ட மாயை தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சத்தியின்கண் உள்ளதாய் நிற்றலால்; அவர் வினையால் - 2அச்சத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக; 3வித்தகமாம் - அவ்வக் காரியங்களை அவ்வவ் வியல்பிற் பிறழாமற் பயக்கும் சதுரப்பாடு டைத்தாம், அல்லுழி உடைத்தன்று, நிலம் குளிர்ந்தவழி அதன்கண் கிடந்தன்றி வித்து முளையைத் தோற்றாதவாறு போலும், ஆகலான் மாயையின் ஒடுங்கித் தோன்றிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவன் சத்தியின் ஒடுங்கித் தோன்றியதேயாம் என்க.

ஆகலான் என்பது முதல் குறிப்பெச்சம். இது கிழங்கினின்றும் தோன்றிய தாமரையைப் 4பங்கயம் என்பதனானும் அறிக. வழிநூலாசிரியர், “உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதென்ன ரன்பால்5” எனவும், “உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடும்6” எனவும் ஓதிய தூஉம், உலகவ னுருவிற் றோன்றி யொடுங்குமாறு வாதுளாகமத்தில் வகுத்தோதியதூஉம் இவ்வியல்பு நோக்கி யென்க. இஃதறியாதார் இன்னோரன்னவற்றைத் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப.

உவமவினை பொருளினும் பொருளடை உவமையினும் சென்று இயையும்.

உண்டாகவெனச் சற்காரியத்தை வலியுறுத்துதல், வித்து இல்வழி நிலத்தினின்றும் அங்குரம் தோன்றாதவாறுபோல, மாயை இல்வழிப் பிரமத்தினின்றும் உலகம் தோன்றாதெனப் பரிணாமவாதிகளையும்1, மாயை அநிர்வசனம் என்னும் மாயாவாதிகளையும், வித்தும் நிலனும் போல் என்றதனால், மாயை முதல்வனின் வேறு பொருளன்று என்னும்2 சிவாத்துவித சைவர், பஞ்சராத்திரிகளையும் மறுத்த வாறாயிற்று.

முதல்வன் பலவேறு வகைபடச் சங்கற்பித்தவாறு என்னை என்னும் கடாவை ஆசங்கித்து அவர் வினையால் என்றார்.

வித்தகம், விசித்திரம் என்று உரைப்பினும் அமையும்.

போல், அசை. மூலம், காரணம். குளிர்ந்தவழி யென்பது என்பது குளிர்ந்தெனத் திரிந்து நின்றது.

நிற்றலின் என்னும் ஐந்தாவது விகாரத்தால் தொக்கது.

அற்றேல், தன்வயத்தானன்றி வினைவயத்தால் தோற்று விப்பான் இறைவனாகான் எனின்,-

வேட்டுவனாம் அப்புழுப்போல் - வேட்டுவனாதலை விரும்பும் புழுவிற்கு; வேண்டு உருவைத் தான்கொடுத்துக் கூட்டானே3 - வேட்டுவன் விரும்பிய வடிவினைக் கொடுக்கு மாறுபோல இறைவனும் அவரவர் வேண்டும் உருவினைக் கொடுத்து அவ்வினைக்குத் தக்க பயன்களையும் கூட்டுவன்; ஆகலான், அதுகொண்டு சுதந்திரத்திற்கு இழுக்கென்னை யென்க.

ஆகலான் என்பது முதல் குறிப்பெச்சம்.

ஏகாரம், எதிர்மறை1.
உதாரண வெண்பா

நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தின்
தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் -ஆக்காதே
கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக்
கண்டவனி லிற்றின்றாங் கட்டு

என்பது உதாரணம். என்னுதலிற்றோவெனின், மேலே உதாரணத்திற் கூறியவாற்றான் உலகிற்கு முதற்கடவுள் உண்டெனக்கொள்ளினும் அவன் படைப்பு முதலிய தொழில் செய்வானாயின், விகாரமெய்தி அதனிற் பந்தமுறுவான் என்னும் அவர் மதம்பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்து 1ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று

(இ - ள்.) இறைவன் - முதல்வன்; 2காலத்தின் தாக்காது நின்று - இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத் தொழிலும் செய்தும் தனக்கு விகாரமின்றி நிற்கும் காலம் போல விகாரப்படாது நின்று; ஆக்காதே கண்டு - பிரபஞ்சத்தைக் கரணத்தாற் படையாது சங்கற்ப மாத்திரத்தானே படைத்து; நோக்காது நோக்கி நொடித்து - அவ்வாறே காவாது காத்து அழியா தழித்தலால்; இன்றாம் கட்டு - இவ்வமலனுக்குப் பந்தம் இன்றாதல்; உளத்தில் - 3கற்றநூற் சொல்லும் பொருளும் உள்ளத்தில் தோன்றுங்கால் உள்ளம் அவற்றில் தொடக்குண்ணாத வாறு போலும்; கனவு கண்ட நனவுணர்வில் உணரக் கண்டவனில் இற்று - கனவின்கண் கண்டவற்றைப் புறத்துவிடயங்களை அறிந்துவந்த நனவுணர்வின் கண்ணே விளங்க அறிந்தவன் அப்பொழுது அவற்றில் தொடக்குண்ணாதவாறு போலும் இத்தன்மைத்து என்க.

எனவே, இஃதிவ்வாறாக என்று எண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம், கரணத்தாற் செய்வதூஉமென வினை முதல் இருவகைப்படுமென்பதூஉம், காரணத்தானன்றிச் செய்யமாட்டாத குயவன் முதலியோர், சங்கற்ப மாத்திரையாற் செய்யும்

முதல்வனுக்கு வினைமுதலாற் பொதுமைபற்றி, ஒருபுடை யுவமையாதலன்றி, முற்றுவமையாதல் சொல்லாமையானும், சங்கற்ப மாத்திரையாற் செய்யும் செய்திக்குக் 1கட்டுண்டல் முதலிய குற்றங்கள் பகைப் பொருளாகலானும், அவை ஆண்டு உளவாதற்கு ஓர் இயைபின்று என்பதூஉம் கூறி ஏதுவை வலியுறுத்தவாறு காண்க.

ஆக்குதல், படைத்தல்; காண்டலும் அது. நோக்குதல், காத்தல். நொடித்தல், அழித்தல்; அது, 2“நொடித்தான்மலை” என்பதனாலு மறிக.

ஆக்காது நோக்காது என்றமையால், 3நொடியா தென்பது வருவித் துரைக்கப்பட்டது. நொடித்தலாலென்பது நொடித் தெனத் திரிந்தது.

அன்றே, அசை; அநாதியே யெனினும் அமையும். இல் 4மூன்றும் உவம வுருபுகள். உளத்தி லென்பதற்குச் சங்கற்பத்தால் என்றுரைப்பினும் அமையும். 1இன்றாங்கட்டு என்பது “அருங்கேடன்2” என்பது போல நின்றது.

மூன்றாமதிகரணம் மேற்கோள்

இனிச் சங்காரமே முதல் என்றது

என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை யெனவே, சங்கார கருத்தா உலகிற்கு முதற் கடவுள் என்பது போந்ததாயினும், தேர் முதலாயின பலர் கூடிச் செய்யக் காண்டலின், அவற்றினும் அதிவிசித்திரமான உலகத்திற்கு மற்றும் அத்தன்மையராய முதற்கடவுளர் உண்டெனக் கோடும் என்னும் 3அநேகேசுரவாதிகள் முதலியோர் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்து “அந்தமாதி” யென்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

(இ-ள்.) சங்கார கருத்தா ஒருவனே உலகிற்கு முதற் கடவுள் என்றது என்க.
சங்காரம் 4ஆகுபெயர். ஏனையோர் முதல்வராகார் எனப் பிரித்தமையின், 5ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
ஏது

6சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழி யல்லது சுதந்தரமின்றி நிற்றலான்

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், அதற்குப் பிரமாண மென்னை யென்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ - ள்.) ஒன்றொன்றாய்ச் சுட்டியறிவதாகிய 1உருவும் அருவும் என்று இருவகைப்பட்ட பிரபஞ்சம், அவ்வாறு சுட்டியறித லின்றி எவ்வுலகும் ஒன்றாய் அறிந்து நின்ற சங்கரா கருத்தாவின் வழிப் பரதந்திரமாய் நிற்ப தல்லது தனக்கெனச் சுதந்தர முடைத்தாய் நிற்பதன்று, ஆகலான், சங்கார காரணன் ஒருவனே உலகிற்கு முதற் கடவுளன்றி 2ஏனையோர் முதற் கடவுளரல்லர் என மேற்கொண்டது என்க.

3பிரபஞ்சத்திற்குச் சுதந்தரம் இன்மையும், சங்கார காரணனுக்குச் சுதந்திரம் உண்மையும் ஏதுமுகத்தாற் காட்டுவார், “சுட்டுணர்வாகிய பிரபஞ்சம்” எனவும், “சுட்டுணர்வின்றி நின்ற சங்காரம்” எனவும் ஈரிடத்தும் 4உடம்பொடு புணர்த் தோதினார். சுட்டுணர் வுடையதனைச் சுட்டுணர்வு என்றது உபசாரம். ஈண்டுப் பிரபஞ்சம் என்றது சேதனப் பிரபஞ்சத்தை; பிரிநிலை யேகாரத்தான் விலக்குதற்குரியது அதுவே யாகலின்.

தேர்முதலாயின பலராற் செய்யப்படினும், அப்பலரும் ஒருவன் ஏவல்வழி நின்றே செய்பவாகலானும், 5வேதத்துட் காரண வாக்கியங்களில் சுட்டுணர்வினராகிய நாராயணன் இரணிய கருப்பன் இந்திரன் அங்கி சூரியன் முதலியோரைக் காரணம் என்றது குயவன் போல் அவாந்தர காரணமாதல் பற்றியே யாகலின், அவை எல்லாம் ஆகுபெயரால்1 சங்கார காரணனாகிய முதற் கடவுளையே உணர்த்தி நிற்குமாகலானும், செய்தும் செய்வித்தும் எல்லாத் தொழிற்கும் வினை முதலாய் நிற்கும் முதற் கடவுள் சங்கார கருத்தா ஒருவனே என்பது கருத்து.

உதாரணம்

ஒன்றலா வொன்றா லுளதாகி நின்றவா
றொன்றலா வொன்றிலவை யீறாதல் - ஒன்றலா
ஈறே முதலதனி னீறலா வொன்றுபல
வாறே தொழும்பாகு மங்கு2

என்பது உதாரணம்.

என்னுதலிற்றோ வெனின், அங்ஙனமாயினும் சுட்டுணர் வாகிய பிரபஞ்சம் பலவாயினாற் போலச் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரமும் பலவுள எனக்கோடும்; ஒன்றே என்றற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ - ள்) அவை - சேதனப் பிரபஞ்சத் தொகுதி; ஒன்றலா ஒன்றால் - உருவும் அருவும் என்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத ஒப்பற்ற பரம்பொருளாலே; உளதாகி நின்றவாறு - சிருட்டிப்பட்டுத் திதிப்பட்டவாறே; ஒன்றலா ஒன்றில் ஈறாதல்1 - அந்தப் பரம்பொருளின் கண்ணே சங்காரப்படுதலால்; ஒன்றலா ஈறே முதல் - அச்சங்காரக் கடவுள் ஒருவனே உலகிற்கு முதற்கடவுள்;

அற்றேல், இவ்வாறு முத்தொழிற்படும் சேதனப் பிர பஞ்சம் வீடுபெற்றவழிச் சுட்டுணர்வின்றிச் சிவசமமாம் என வேதத்தும் ஆகமத்தும் ஓதுதலின், அவ்வழி அவையும் முதற் கடவுளாம் என்றற்கு இழுக்கென்னை? எனின்,

அதனின் ஈறலா ஒன்று - அப்பரம்பொருள் போல் அழிவின்றி நித்த மாய சேதனப் பிரபஞ்சம்; அங்கு - வீடுபேற்றின் கண்ணும், பலவாறே தொழும்பாகும் – பலவாற்றானும் பரம்பொருளுக்கு அடிமையாம் எ-று.

இது சொற்பொருட்பின் வருநிலை.2

காரியப் பிரபஞ்சம் சடமாகலானும், சேதனப் பிரபஞ்சம் அவிச்சையால்3 கட்டுற்றுச் சுட்டுணர் விற்றாய் நிற்றலானும், இவற்றைத் தொழிற்படுத்தற்கு இவற்றின் வேறாய் ஒரு முதற் கடவுள் உண்டு என்பது பெற்றாம். பெறவே, பிரபஞ்சம் விசித்திர காரியமாய்க் காணப்படுதலின், இவ்வாறு நடாத்தும் முதற் கடவுள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய நிரதிசய குணங்களுடையன் என்பதூஉம் பெறப்பட்டது. படவே, இத்தன் மையனாகிய முதற் கடவுள் ஒருவனே அமையுமாகலின், வேறும் அத்தன்மையர் உண்டெனக் கொள்ளின் மிகை என்னும் குற்றமாம். அல்லதூஉம் இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமை இல் வழி இலக்கியம் பலவாதல் செல்லாது என்னும் கருத்தால் ஒன்றலா ஒன்று1 என வரையறுத்து ஓதினார்.

ஈறே முதல் என்றது முடிந்தது முடித்தல். ஈறு ஆகுபெயர். இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது.

பலவாறாவன: இருள் நீங்கிய வழியும் கண்ணுக்குக் காட்சி ஞாயிற்றை இன்றியமையாதவாறு போல, மலம் நீங்கிய முத்தி நிலையினும், ஆன்மா அறிவுக்கு வியஞ்சகமாய் உடனின்று அறிவிக்கும் முதல்வனை இன்றியமையாதவாறும், கண், படிகம் ஆகாயம் போலச் சார்ந்ததன் வண்ணமாயன்றி, முதல்வன் போலத் தனித்து நிற்கும் இயல்பு இல்லாதவாறும், முதல்வன் போல் ஐந்தொழிற்கும் வினை முதலாம் உரிமையின்றிச் “சிவானுபவம் ஒன்றினுக்கே” உரித்தாயவாறும், சம வியாபகமாயினும் முதல்வனை நோக்கத் தூல அறிவாகலான், விளக்கொளியுள் கண்ணொளி போல முதல்வனின் வியாப்பியமாயன்றி நில்லாத வாறும் முதலாயின

அற்றேல், முத்தி நிலையின்கண் ஆன்மாச் சிவசமமாம் என்னும் சுருதிக்குப் பொருள் என்னையெனின், அஃது உண்மைய திகாரத்துட் பெறப்படும்.2 இதனானே சிவசம வாதி, சங்கிராந்த வாதி, உற்பத்தி வாதி, ஆவேச வாதி மதங்களும் மறுக்கப்பட்டன.

பதியுண்மைக்குப் பிரமாணம் கூறுவார் மலத்துளதாம் எனப் புனருற்பத்திக்கு ஏதுக் கூறு முகத்தான் மலத்தது உண்மைக்குப் பிரமாணமும் உடன் கூறினார். அதனை ஈண்டு வேறோர் அதிகரணமாக வைத்து உரையாராயினார், அதிகரணத்திற் குரிய ஐயப்பாடு முதலியன வெல்லாம் சகசமலத்துணராது1 என அதன் இலக்கணம் கூறும் வழிப் பெறப்படுதலால், ஈண்டு மிகைப்பட வேறு ஓதல் வேண்டாமையின்.

இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது:
தோற்றக் கேடுகளது உண்மை, காட்சி முதலிய அளவை களான் அறிய வாராமையின் பிரபஞ்சம் நித்தப் பொருளேயாம்; அன்றித் தோன்றி அழியும் எனக் கொள்ளினும், இல்பொருள் தத்தம் சார்பின் தோன்றி நின்று அழிதல் இயற்கை என அமையும், செயற்கை என்றற்கு ஓர் ஏது இன்மையின்; மற்று உள் பொருளாயின், அதுவே அமையும், இறைவன் வேண்டா, இரண்டு உள் பொருள் கோடல் மிகையாகலின்; வேண்டுமாயினும், மாயோன் முதலிய கடவுளரில் ஒருவனே அமையும்; அவரை ஒழித்துச் சங்கார கருத்தா முதற் கடவுள் என்றற்குப் பிரமாணம் என்னை? பிரமாணம் உண்டாயினும், அதிவிசித்திரமாய பிரபஞ்சம் ஒருவனால் செய்தல் கூடாமையின், மற்றும் அவ்வியல்பினராய முதற் கடவுளர் உளராதல் வேண்டும் என முறையே உலகாயதர், மீமாஞ்சகர், புத்தர், சமணர், சாங்கியர், பாஞ்ச ராத்திரிகள், அநேகேசுர வாதிகள் மதம் பற்றிப் பூருவபக்கம் நிகழ்ந்த வழி அவரை மறுத்துச் சித்தாந்தம் செய்து முதற் கடவுளது உண்மை பொது வகையானும் சிறப்பு வகையானும் கருதலளவையின் வைத்து உணர்த்தியவாறு என உணர்க.

இவ்வாறு சூத்திரந்தோறும் உணர்ந்து உரைத்துக் கொள்க.

முதற் சூத்திரம் முடிந்தது

இரண்டாஞ் சூத்திரம்
அவையே தானே யாயிரு வினையின்
போக்கு வரவு புரிய வாணையின்
நீக்க மின்றி நிற்கு மன்றே1

என்பது சூத்திரம்.

என்னுதலிற்றோ வெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ -ள்) உலகம் ஒடுங்கியினின்றும் மீள உளதாமாற்றை வகுத்து உணர்த்து முகத்தானே துணைக் காரண முதலியன இல்வழி இறைவன் உலகிற்கு நிமித்த காரணனாதல் சாலுமாறு யாங்ஙனம்? என்னும் கடாவை ஆசங்கித்து அவற்றது2 உண்மைக்குப் பிரமாணம் உணர்த்துதல் நுதலிற்று இச்சூத்திரம் எ-று.

சூத்திரவியைபும் இதனானே விளங்கும்.
ஒடுங்கியுளதாம் என்ற வழி ஒடுங்கியினின்றும் மீளவுளதாவது எவ்வாறு என்று அவாய் நிற்றலின் அவ்வவாய் நிலைபற்றிப் புனருற் பவமே ஈண்டுக் கூறப்பட்டது.

இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு
மேலைச் சூத்திரத்து எடுத்துக்கொண்ட சங்கார காரணனாகிய முதல்வன், கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன்போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் ஆன்ம போதம் போல் உடனுமாய் நின்று, ஆணை என்னும் பரியாயப் பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினை களான் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன் எ-று.
அவையே தானேயாய் என்பதனை இரட்டுற மொழிந்து கொண்டு உரைக்க. இக்கருத்தே பற்றி, “உலகெலாமாகி வேறாய் உடனுமாய்” என்றார் வழிநூலாசிரியரும்.1

மேலைச் சூத்திரத்தின் அந்தமாதி என்புழி விகாரத்தால் தொக்க பிரிநிலை யேகாரத்தான் விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சத்தை2 ஈண்டு அவை எனச் சுட்டிக் கூறினார்.

ஒடுங்கியுளதாம் என்றதற்கு ஏற்ப ஈண்டும் போக்கினை3 முற்கூறினார். புரிதல், எப்பொழுதும் மேற்கோடல்.

ஆணையின் என்பது சிங்க நோக்காய்4 இருவினையின் என்பதனோடும் நீக்கமின்றி என்பதனோடும் இயைந்து பொருள் தந்து நின்றது.

ஆண்டு இன்னுருபு, முன்னர் ஏதுப் பொருட்கண்ணும், பின்னர் நீக்கப் பொருட்கண்ணுமாய் நின்றது. இன்னென்பது சாரியை எனக்கொண்டு, ஈரிடத்தும் ஏற்கும் உருபுகள் விரித் துரைத்தலும் ஒன்று.

அன்றே அசை; அனாதியே இவ்வாறு நிற்கும் எனினும் அமையும்.1 ஆய்ப் புரிய நிற்கும் எனவே, அச்செயல் களெல்லாம் முதல்வன் கரணத்தானன்றிச் சங்கற்ப மாத்திரத்தால்2 செய்வன் என்பது பெறப்பட்டது.

இதனானே மேல் அந்தம் என்று உத்தேசமாய்3 எடுத்துக் கொண்ட முதல்வனுக்கு இலக்கணம் கூறியவாறுமாயிற்று. இது தடத்தலக்கணம் எனப்படும் பொது வியல்பு.

ஆணையின் இருவினையின் எனவே, தனது சிற்சத்தி துணைக் காரணம்; இருவினையும் அதன் வழித்தாகிய துணைக் காரணம். இரு வினையின் எனவே, அதற்குப் பற்றுக்கோடு உண்டு என்பதூஉம் பெற்றாம்; ஆகலின், அது முதற் காரணம் என்பதூஉம், இருவினையிற் போக்குவரவு புரிய எனவே, ஒடுங்கியின் மீளவுளதாங்கால், இருவினைகட் கேற்பப் பலவேறு வகைப்பட்டு விரியும் என்பதூஉம் போந்தவாறு காண்க.

இதனுள் அவையே தானேயாய் என்பது ஓரதிகரணம்; ஆணையின் இருவினையின் என்பது ஓர் அதிகரணம்; போக்கு வரவு புரிய என்பது ஓர் அதிகரணம்; ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே என்பது ஓர் அதிகரணம்; ஆக நாற்கூற்றது இச்சூத்திரம் எனக் கொள்க.

முதலதிகரணம் மேற்கோள்
ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன்றானே யாய் நிற்கும் என்றது
என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேற் கடவுளல்ல வென விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சமும் முதல்வனும் 1பொன்னும் பணியும்போல் அபேதமோ, இருளும் வெளியும்போற் பேதமோ, சொல்லும் பொருளும் போற் பேதாபேதமோ என்னும் ஐயப்பாட்டின் கண், அம்மூன்றனுள் ஒரோவொன்றே பற்றி அவ்வம்மதத்தார் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

இதன்பொருள் 2வெளிப்படை.
ஈண்டும் இரட்டுற மொழிந்துகொள்க.

இதனானே, ஒரு விடயத்தைக் காணுங்கால், ஆன்மபோதம் கண்ணொளியெனத் தானென வேறின்றி உடனாய்நின்று காணுமாறு போல, முதல்வன் புனருற்பவஞ் செய்யுங்கால் உயிர்களோடு உடனாய் நின்று செய்வனென்பதூஉம் பெறப்பட்டது.
ஏது

3 அத்துவிதமென்ற சொல்லானே ஏகமென்னில், ஏகமென்று சுட்டுவ துண்மையின், அத்துவிதமென்ற சொல்லே அந்நிய நாத்தியை யுணர்த்து மாயிட்டு

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், முதல்வன் அவ்வாறு மூவகையுமாய் நிற்பன் என்றற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

இதன் பொருள்: அத்துவிதமென்ற சொல்லின் நகரம், 1இன்மை, அன்மை, மறுதலை என்னும் முப்பொருளுணர்த்து மன்றே; அவற்றுள், 2இன்மைப் பொருள்பற்றி அத்துவிதம் என்ற மொழி மாத்திரையானே, ஒரு பொருள் என்றல் பொருத்தமுடைத் தெனின், தானே தன்னை ஒன்று எனக் கருதுதல் வேண்டாமையின், அவ்வாறு கருதும் பொருள் வேறுண்டு என்பது பெறப்படுதலானும், எண்ணுப் பெயர் மேல் வந்த நகரம், அன்மைப் பொருள் மாத்திரையே யுணர்த்திப் பொதுமையின் நிற்பதன்றி, ஏனைச் சொற்களின் மேல் வந்த நகரம் போல, இன்மை மறுதலைப் பொருள்களை யுணர்த்துதல் வழக்கின்கண் இன்மையின், அத்து விதமென்கின்ற மொழி தானே, பிறிது காரணம் வேண்டாது, வேறன்மையை உணர்த்தி நிற்குமாதலானும், ஈண்டு, இவ்வான் மாக்கள் பலவும் முதல்வன்றானேயாய் நிற்குமென மேற்கொண்டது.

ஆகலான் என்பதற்கு ஆயிட்டென்பது அக்கால வழக்குப் போலும்; அற்றாகலினன்றே, “நீயோ செய்யாய் நின்மலனாயிட்” டென்றார் வழிநூலாசிரியரும்.3 4இனி, “மழை பெய்து குளம் நிறைந்தது” என்புழிப்போல, ஆயிடலா னென்பது ஆயிட்டெனத் திரிந்து நின்ற தென்றலுமொன்று.

1எண்ணும்மை விரித்துரைக்க.
2வேறின்றி யுடனாதல் பெறப்படவே, பொருண்மையாற் பேதமென்பதூஉம், கலப்பினால் அபேதமென்பதூஉம் தாமே போதரு மென்பது கருத்து.

உதாரண வெண்பா

கட்டும் உறுப்புங் கரணமும் கொண்டுள்ளம்
இட்டதொரு பேரழைக்க வென்னென்றாங் - கொட்டி
அவனுளம்ஆ கில்லான் உளம்அவனா மாட்டா
தவனுளமா யல்லனுமாம் அங்கு

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், ஒரு பொருள் மூவகை யியல்பையுடைத்தாதல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து, அவற்றுள் அவையே யாதலை உவமை முகத்தான் வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ- ள்) உள்ளம் கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு - உயிர் நரம்பு முதலியவற்றாற் பிணிக்கப்படும் உடம்பினையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் கைக்கொண்டு நின்று;

இட்டது ஒரு பேர் அழைக்க என் என்றாங்கு - சாத்தா கொற்றா என உடம்பிற்கிட்ட பெயரால் பிறர் அழைத்தவழித் தான் ‘என்னை’யென வந்து நிற்றல் காண்டுமன்றே, இருவர் கைகோத்து நின்றுழியும் அவருள் அழைக்கப்பட்டானே யன்றி, ஏனோன் ‘என்னை’ யென்றல் உலகத்தின்மையின், அவ்வாறன்றி, உடம்பின் பெயரான் அழைத்தவழி, உயிர் என்னென்றற்குக் காரணம் பிறிதோராற்றாற் பெறப்படாமையின், 1அருத்தாபத்தி யளவையானே, அவ்வுயிர் உடம்பெனத் தானென வேற்றுமையின்றி அபேதமாய் நிற்றல் பெற்றாம்; அதுபோல,

ஒட்டி - முதல்வன் உயிர்களின் அபேதமாய் ஒட்டி நிற்போனாம்; 2அங்கு அவன் உளம் ஆகில்லான் உளம் அவனாமாட்டாது அவன் உளமாய் அல்லனுமாம் - அவ்வாறு ஒட்டிய வழியும் உயிர் உயிரே, உடம்பு உடம்பே, உயிர் உடம்பா யொழியாது, உடம்பு உயிராகமாட்டாது; அவ்வாறாயினும், உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும். உடம்பு அங்ஙனம் நில்லாது; அதுபோல முதல்வன் முதல்வனே, உயிர் உயிரே; முதல்வன் உயிராயொழியான், உயிர் முதல்வனாகமாட்டாது. அவ்வாறாயினும் முதல்வன் உயிராயும் அதனின் வேறாயும் நிற்பன்; உயிர் அங்ஙனம் நில்லாது.

அவன் உளமாகில்லான் உளம் அவனாமாட்டாது அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு என்றது, 3ஒன்றாயும், ஒன்றன்மைக்கு அனுபவம் காட்டியவாறு.

உறுப்பு, ஆகுபெயர். எவனென்பது என்னென மரீஇயிற்று.

4ஒட்டி யென்பது பெயர்; வினையெச்சமாகக் கொள்ளின், சிறப்பும்மை விரித்துரைக்க. 5ஒட்டுதல், பொருந்துதல்.

அங்கு, அதுபோல.

உதாரண வெண்பா

ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம்
ஒன்றென்ற நீபாசத் தோடுளை காண் - ஒன்றின்றால்
அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல்
இக்கிரமத் தென்னும் இருக்கு

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 1வேதத்துள் அத்துவித மென்றதூஉ மன்றி, ஏகமெனவும் ஓதுதலின், அதற்கு மறுதலையாய் உயிர்களோடு ஒட்டி நிற்பன் எனப் 2பேதப்படக் கூறுவதென்னை என்னும் கடாவை ஆசங்கித்து அச்சொற்குத் 3தாற்பரியங் கூறுமுகத்தால், தானேயாதலை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) இருக்கு ஒன்று என்றது ஒன்றேகாண் - வேதம் ஒன் றென்றதற்குப் பொருள் ஒன்றென்பதேயாம்; வேறு பொருள்படாது;

ஒன்றே பதி - அதற்குத் தாற்பரியம் பதிப்பொருள் ஒன்றே; இரண்டில்லை என்பதாம்;

ஒன்று என்ற நீ பசுவாம் காண் - இஃதறியாது ஒன்றென்று சொல்லுகின்ற நீ அப்பதிப்பொருளின் வேறாய பசுவென்றறிவாயாக;

பாசத்தோடு உளை - பதியும் சேதனமாக யானும் சேதனமாக என்னைப் பசுவென்ற தென்னையெனின், நீ மலத்தோடு கட்டுற்று நிற்கின்றாயாகலின் 4பசுவெனப்பட்டனை;

அற்றேல், இவ்வாறு வேற்றுமை கூறிற் பிரமமில்லையாயின் ஒரு பொருளும் இல்லை யென்னும் வேதத்திற்குத்5 தாற்பரிய மென்னை யெனின்,

அகரவுயிர் இன்றேல் அக்கரங்கள் இன்றாம் இக்கிரமத்து ஒன்று இன்று என்னும் - அகரவுயிரில்லையாயின் அக்கரங்களில் லையா மென்றும் இம்முறை பற்றி வேதம் பிரமப்பொருள் இல்லை யாயின் ஒரு பொருளுமில்லை யென்றும் ஓதும் அத்தனை1 எ-று.

2ஒன்றின்றால் அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல் இக்கிரமத்து என்னும் என்றது, வேறாகியும் வேறன்மைக்கு அநுபவம் காட்டியவாறு.

இக்கிரமத்தாலென வுருபு விரித்துரைக்க. 3இன்றென்னு மொருமை அப்பண்பின்மேல் நின்றது. காண் என்பதனை மேலே கூட்டுக. ஆல், அசை.

உதாரண வெண்பா

பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும்
எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள்
அத்துவித மாதல் அருமறைகள் ஒன்றென்னா
தத்துவித மென்றறையும் ஆங்கு

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 4வேதம் ஏகமாய பிரமத்தை ஏகமென் றொழியாது, பிரமம் அத்துவித மெனவும் ஓரோரிடங்களின் ஓதுதலின், அத்துவிதம் இரு பொருட் கண்ணது என்பார்க்கு ஏகமாய பிரமத்தை அத்துவித மென்றல் பொருந்தாதாய் முடியும் என்னும் கடாவை ஆசங்கித்து, அதனை நீக்குமுகத்தானே அவையே தானேயாதலை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணும் சுவையும்போல் எங்கும் ஆம் அண்ணல்தாள் அத்து விதமாதல் - பண்ணும் அதனின் 1வேறன்றாய் எண்ணப் படும் இசையும்போலவும், பழமும் அதனின் வேறன்றாய் எண்ணப் படும் சுவையும்போலவும் யாங்கணும் வியாபகமாய முதல்வன் திருவருள் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்பதா கலான்;

அருமறைகள் ஒன்றென்னாது அத்துவிதம் என்று ஆங்கு அறையும் - 2வேதங்கள் ஏகம் என்னாது பிரமம் அத்து விதம் என்று அவ்விடங்களிற் கூறும் எ-று.

ஆண்டுப் பிரமம் அத்துவிதம் என்றது, பிரமம் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்கும் என்னும் பொருட்டாகலான், அஃது ஏக மென்பதோடு முரணுமாறில்லை யென்பதாம்.3 பண்ணை என்னும் 4ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. பண், பாலைப்பண் முதலாயின.

எங்குமாம் அண்ணல்தாள் என விசேடித்தது, 5குணகுணிகள் போல் உடனாயும், அவ்வாறு உடனாகாமைக்கு அனுபவம் காட்டியவாறு. 6வியாப்பிய வியாபகமாத லொப்புமை மாத்திரையே பற்றிக் குணகுணிகளை உவமை கூறினா ரென்பது.

உதாரண வெண்பா

அரக்கொடு சேர்த்தி யணைத்தவக் கற்போல்
உருக்கி யுடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித்
தானே யுலகாம் தமியேன் உளம்புகுதல்
யானே யுலகென்பன் இன்று

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இங்ஙனம் வெவ்வேறுவகை யெடுத்துக்காட்டின் அநேகாந்த வாதமா மென்னும் கடாவை யாசங்கித்து அஃது ஆகாமை உவமை முகத்தான் விளக்கி, மூன்றனையும் ஒருங்கே வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) உருக்கி அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற் போல் உடங்கு இயைந்து நின்று 1பிரிப்பின்றித் தானே உலகு ஆம் - அரக்கை யுருக்கி அதனோடு சேர்த்து அணைத்த கற்பொடி அவ்வரக்கினோடு ஒன்றாய் ஒருங்கியைந்து நீக்கமின்றி நின்றாற் போல, முதல்வன் உயிர்களின் ஒருங்கு கூடி நின்று நீக்கமின்றி யுடனாதலால் தானேயாம்; உலகேயாம்; தானே உலகேயாம்;

அற்றேல் வாமதேவ முனிவன் முதலியோர் “யானே உலகெல்லா மாயினேன்” எனக் 2கூறுதலானும், சர்வ ஞானோத் தரத்தில் “யானே யெல்லாமாயினேன்” எனக் 3கூறுதலானும், “யானே எல்லாமாய் அல்லனுமாய் உடனுமாய் நின்றேன்” என்று உயிர்கள்மேல் வைத்து ஓதுதலானும், உயிர்களும் இவ்விலக்கணத் தனவாவான் செல்லும் போலும் எனின்,-

தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று -அம் முதல்வன் பாசக்கூட்டத்தின் நீங்கித் தனியாய் நின்ற என்னகத்துச் சோகம்பாவனையாற் புகுந்து வேற்றுமை யின்றித் தோன்றலான், யானே உலகெல்லாம் ஆயினேன் இம்முத்திக் காலத்து; ஆகலின், அதுபற்றி உயிர்களும் அவ்வாறாவான் 1சேறலின்று எ-று.

அதுபற்றி உயிர்களும் அவ்வாறாவான் சேறலின்று என்பது குறிப்பெச்சம்.

இவ்வொற்றுமை பற்றி யன்றே அருச்சுனற்குக் கீதைநூல் செவியறிவுறுத்த கண்ணன், “யானே உலகெல்லாம் ஆயினேன்2” என்றதூஉம், முதல்வனது விச்சுவரூபத்தைத் தான் காட்டியதூஉம்,3 “ஏனையவற்றைக் கைவிட்டு என்னையே வழிபடுக” என்றதூஉம், அதனை உறுதியாகக்கொண்ட அருச்சுனன் அவன் கூறிய கருத்து நோக்கிச் சாங் காறுஞ் சிவபூசை செய்ததூஉம், கண்ணன் மேலிட்ட போதுகள் முதல்வன் திருமுடிமேற் 4கண்டதூஉ மென்க. கண்ணன் உபமன்னிய முனிபால் 5சிவதீக்கையுற்றுத் தன்னையுந் தலைவனையும் உணர்ந்தோனாகலிற் சிவோகம் பாவனையைத் தலைப்பட் டோனாவன் என அறிக.

கலப்பாய் நிற்றலான் உலகேயா மென்பார் “உடங் கியைந்து” எனவும், பொருட்டன்மையால் வேறு நிற்றலால் தானேயா மென்பார் “நின்று” எனவும், உயிர்க்குயிராய் நிற்றலால் தானே யுலகா மென்பார், “பிரிப்பின்றி”எனவும் கூறினார்.

ஈண்டும் இரட்டுற மொழிந்து கொண்டு உரைக்க.

இன்றி யென்னும் செய்தெ னெச்சக் குறிப்பு “மழை பெய்து குளம் நிறைந்தது” என்புழிப்போலக் காரணகாரியப் பொருட்டாய் நின்றது.

இவ்வதிகரணத்தானே 1பேதமென்றும் 2அபேதமென்றும் 3பேதாபேதமென்றும் பிணங்குஞ் சமயிகளை யெல்லாம் மறுத்து, அம்மூவகை யியல்பும் தன்கண் தோன்ற நிற்கும் அத்துவிதத் துண்மை ஏதுக்களானும், 4உவமைகளானும் உணர்த்தியவாறு. புடைநூலாசிரியரும் இவ்வதிகரணப் பொருளேபற்றிப்,

“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப்
புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும்சொற் பொருள்போல்
பேதா பேதமுமின்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடலுயிர்கண் ணருக்கன்
அறிவொளிபோல் பிறிவரும்அத் துவிதமாகும்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்5”

என வகுத்தோதினார்.

** இரண்டாமதிகரணம் மேற்கோள்**
இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என்றது.

என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், முதல்வன் அவ்வாறு உயிர்களோடு இயைந்து நின்று 1புனருற்பவம் செய்யுங் கால், 2உலகத்துக்குப் போல், அவனுக்குத் துணைக்காரண முதலியன வேண்டப் படுமோ? படாவோ? என்னும் ஐயப்பாட்டின் கண் முதல்வனது சுதந்திரத்துக்கும் அளவிலாற்றற்கும் இழுக்காய் முடியுமாகலின், அவனுக்கு அவை வேண்டப்படா எனப் 3பரிணாம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

இதன் பொருள் : வெளிப்படை.4

ஈண்டு இருவினை யென்றது. முற்பிறவிகளின் ஈட்டப் பட்டு மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த 5புண்ணிய பாவங்களை யென்க. எனவே, 1மாயையின் உண்மையும் பெறப்பட்டது. 2இவை வேண்டப்படுதல் பற்றி முதல்வன் சுதந்திரத்திற்கு இழுக்கில்லை யென்பார். “முதல்வன் ஆணையின் வரும்” என்றார்.
ஏது

ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனது ஆக்கினை யாகலான்,

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், ஆணையே யமையும், இருவினை யெற்றுக்கு என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ-ள்) ஒரு பட்டணத்தைப் புரக்கும் வேந்தன், பாடிகாவல் தொழிலைக் களைகணாவான் ஒருவன்மாட்டு வைத்தாற்போல, எல்லா அறிவு முதன்மை அனுக்கிரகங்களுமுடைய அம்முதல்வன் புனருற்பவத்தைச் செய்வதாகிய தனது ஆணையை அவ்விரு வினைகண் மாட்டு வைத்து நடாத்துதலே முறையாகலான், இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என மேற்கொண்ட தென்றவாறு.

முதல்வன் செய்யுஞ் செய்தி யெல்லாம் உலகத்தோடு ஒப்ப நிகழ்வன வாகலின், ஈண்டைக்கு அரசன் செய்தி உவமை யாயிற்று. பாடிகாவலாவது 3களைகணாவா னொருவனைக் கொண்டு வேந்தன் செய்விப்பதாய ஒரு 4தண்டத் தொழில் விசேடம். அது, “கோடிகாவனைக் கூறாத நாளெலாம், பாடிகாவலிற் பட்டுக் கழியுமே” 5என்னுந் திருப்பாட்டானு மறிக. இஃதறியா தார் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப.

உதாரண வெண்பா

உள்ளதே தோற்ற வுயிரணையும் அவ்வுடலின்
உள்ளதா முற்செய்வினை யுள்ளடைவே - வள்ளலவன்
செய்பவர் செய்திப் பயன்விளைக்குஞ் செய்யேபோல்
செய்வன் செயலணையா சென்று

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், வினை உண்டு என்பதற்கும், உயிர்க்குப் பயனாய் வரும் என்றற்கும், மேல்வினை ஏறு மாற்றிற்கும் அது முதல்வனை இன்றியமை யாமைக்கும் பிரமாணமென்னை என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) உள்ளதே தோற்ற - இல்லது தோன்றாதென்று 1மேற்கூறிப் போந்தமையான், முன் உள்ளதாய புண்ணிய பாவ மென்னும் இருகூற்றுச் 2சஞ்சித வினையே தன் பயனாகிய இன்ப துன்பங்களையும் அவை நுகர்தற்குரிய நிலைக்களமாகிய உடம் பினையும் தோற்றுவிப்ப;

உயிர் அவ்வுடலின் அணையும் - அவ்வின்ப துன்ப நுகர்ச்சி சடத்துக்குக் கூடாமையின், 3சித்தாகிய உயிரே அவ்வுடம்பில் பொருந்தி அவற்றை யனுபவிக்கும்;

முன்வினையை ஈண்டு அனுபவித் தொழிந்தால், மேலைக்கு வினையுண்டாமாறு யாங்ஙனம் எனின்,

முன் செய்வினை உள்ளடைவே உள்ளதாம் - முன் செய்த வினையை அனுபவித்தற் கேதுவான முறைமையிலே மேலைக்கு வினையுளதாம்;
அற்றேல், அவ்வினையே பயனாக வரும் என அமையும்; முதல்வன் எற்றுக்கு? எனின்,

செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போல - உழவர் செய்யுந் தொழிற்குத் தக்க பயனை விளைநிலம் விளைவிப் பதன்றி அத்தொழில் தானே விளைவிக்க மாட்டாதது போல; வள்ளல் அவன் செய்வன் - உணவும் வித்துமாய்த் தொன்று தொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்;

செயல் சென்று அணையா - அவ்வாறன்றி வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருந்தமாட்டாது. எ-று.

வள்ளலென்றார், 1தற்பயன் குறியாது 2“வேண்டுவார் வேண்டிய”வாறே நல்கும் அருளுடைமைநோக்கி.

உள்ளடைவு, உள்ளுதற்கேதுவாகிய அடைவு என விரியும். 3ஏகாரம் ஏழாவதன் பொருட்கண் வந்தது. உள்ளுதல், ஈண்டு, அனுபவித்தல். அதற்கேதுவாகிய முறைமையாவன அனுபவித்தற்குத் துணைக்காரணமாகிய விருப்பு வெறுப்புக்கள். 4அவற்றின்கண் உண்டாமாறு 5முன்னர்க் காட்டுதும்.

மேல், முதல்வனுக்கு வினைவேண்டப்படும் என்பதற்கு அரசனை யுவமை கூறினார்; ஈண்டு, வினை, முதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத்தொழிலை யுவமை கூறினாரெனவுணர்க.

உதாரண வெண்பா

அவ்வினையைச் செய்வதனி லவ்வினைஞர் தாஞ்சென்றங்
கவ்வினையைக் காந்த பசாசம்போல் - அவ்வினையைப்
பேராம லூட்டும் பிரானின் நுகராரேல்
ஆர்தா மறிந்தணைப்பா ராங்கு

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இருவினை சடமாகலின் சென்றணையமாட்டா வாயினும், உயிர்கள் சேதன மாகலின், அவையே அவற்றது பயனை யறிந்து எடுத்துக்கொண்டு நுகரும்; வள்ளல் எற்றுக்கு? என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) காந்த 1பசாசம்போல் - ஒருவன் எடுத்து நேரொக்கப் பிடித்த வழி இரும்பினை வலித்துக்கொள்ளும் காந்தம்போல; அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் - அவ்வினைப் பயன் களைப் பிறழாமல் நுகர்விக்கும் முதல்வனால்; அவ்வினைஞர்தாம் - அவ்வினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாம்; அவ்வினையைச் 2செய்வதனில் சென்று அங்கு அவ் வினையை நுகராரேல் - அவற்றைச் செய்தற்குரிய நிலைக்கள மாகிய உடம்பின்கட் பொருந்தி அவற்றது பயனை அனுபவிப்பர், அவ்வாறு அனுபவியாராயின்; ஆர் தாம் அறிந்து அணைப்பார் - வேறே எவர்தாம் அவற்றை யறிந்து கூட்டுவார்; ஆங்கு - அறிவுஞ் சுதந்திரமுமின்றி மலத்தில் மறைப்புண்டு கிடக்கும் அப் 3பெத்த காலத்து, எ-று.

ஒருவரும் இல்லை யென்பதாம்.

ஆன்மாக்களுக்குத் தமக்கென 1அறிவின்மையானும், வினை சடமாகலானும், “2மாயை தாரகமாம் அத்தன்றாள் நிற்றல்” எனப் போந்தமையானும், முதல்வனே அறிந்தணைப்பன் எனப் பாரிசேட வளவை கூறுவார், “பிரானின் நுகராரேல் ஆர்தாம் அறிந்தணைப்பார்” என்றார்.

இது சொற்பொருட்பின் வருநிலை.

உதாரண வெண்பா

நெல்லிற் குமியு நிகழ் செம்பினிற் களிம்பும்
சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி
மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
அலர் சோகம் செய்கமலத் தாம்.

என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், அவ்வினை ஆதியோ? அனாதியோ? ஆதியெனின், முன் பில்லது இடையே தோன்று மென்பது சற்காரிய வாதத்துக் கேலாது; அனாதி யெனின், ஒருவர் கூட்டவேண்டுவதில்லை யென்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) நெல்லிற்கு 3உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் சொல்லின் புதிதன்று தொன்மையே - நெல்லின்கண் உமியும் செம்பின்கண் களிம்பும் எக்காலத்துளவாயின என்று ஆராய்ந்து சொல்லுங்கால், அந்நெல்லும் செம்பும் உளவாயின வன்றே உள்ளனவன்றி இடையே வந்தனவல்ல, அதுபோல வல்லி மலகன்மம் அன்று உளவாம் - மாயை மலம் கன்மமென்னும் மும்மலங்களும் 1அனாதியே யுள்ளனவாம்;

கமலத்து அலர் சோகம் பொன்வாள் செய் வள்ளலால் ஆம் - 2முன்னே உள்ளதாய தாமரைப்பூ அலர்தலும் கூம்புதலும் ஞாயிற்றினாற் செய்யப்படுமாறு போல, அவை தத்தம் காரியங்களைச் செய்தல் முதல்வனாலேயாம் என்க.

இஃது எடுத்துக்காட்டுவமை. 3புதிதன்று என்பதனைத் தனித் தனிக் கூட்டுக. தொன்மையின் உள்ளவற்றைத் தொன்மை யென்று உபசரித்தார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.

மாயை இறைவனுக்குப் 4பரிக்கிரக சத்தியாகலின் “வல்லி” யென்றார். 5வினைக்குத் தொன்மை கூறுவார். இனம்பற்றி மாயை மலங்களுக்கும் தொன்மை கூறினார்.

மூலமலத்தின் காரியம் மோகம் மத முதலாயின. இருவினையின் காரியம் இன்ப துன்ப முதலாயின. மாயையின் காரியம் தனுகரண முதலாயின. வள்ளலால் ஆம் எனவே, திரோதான சத்தியது உண்மையும் பெற்றாம். அது பாகம் வருவித்தற் பொருட்டு மலத்தின் வழி நின்று மோக முதலிய வற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவ சங்கற்பத்திற் கேதுவாதல் பற்றி மலம் என்றும் உபசரித்துக் கூறப்படும்6. இவ்வாறு மலம் கன்மம் மாயை திரோதானம் மாயாகாரியம் என்னும் ஐவகைப் பாசமும் கண்டுகொள்க.

இவற்றுள், மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை யென்று இருவகைப்படும். இவ்விரண்டினுள், 1சுத்த மாயையின் காரியமே அசுத்த மாயை யென்பாரும், சுத்த மாயை போல அசுத்த மாயையும் அனாதியேயாம் என்பாரும், ஒன்றுதானே ஊர்த்துவ மாயை அதோ மாயை யென்று இருவகைப்படும் என்பாரும் எனப் பலதிறத்தர் ஆசிரியர். இனி, முதல்வனது கிரியாசத்தியே சுத்த மாயை யெனப்படும் என்பாருமுளர்; அது முதல்வனுக்குத் தாதான்மிய சத்தியாகலின், பரிக்கிரக சத்தியாகிய சுத்த மாயையாதல் யாண்டையது என்று ஒழிக.

சுத்த மாயையினின்றும் 2பஞ்சகலைகளும், நால்வகை வாக்கும், 3சிவதத்துவமைந்தும், சுத்த காலமுதற் சுத்த நிலம் ஈறாகிய முப்பத் தொன்றுந் தோன்றும்; அசுத்த மாயையினின்றும் அசுத்த கால முதல் அசுத்த நிலமீறாகிய 4முப்பத்தொரு தத்துவங்களும் தோன்றும். இந்தத் தத்துவங்களெல்லாம் 5பொதுவும் சிறப்பும் பொதுச்சிறப்பும் எனத் தனித்தனி மூவகைப்பட்டு, உயிர்கள்தோறும் வெவ்வேறுளவாம்.

கன்மமும் “நாசோற்பத்தி பண்ணிவரு மாதலால் அநாதி6” என்பது பற்றிப் பிரபஞ்சம்போலப் 7பிரவாகாநாதி யென்பாரும், “ஏகன் அநேகன் இருள் கருமம் மாயையிரண், டாகவிவை யாறாதியில்8” எனவும், “ஆணவ முதலன் றதுபோற் கருமமும்”9 எனவும் ஒப்ப வோதுதல்பற்றி மூவகை வினைக்கும் முதற்காரணமாய மூலகன்மம் ஒன்று அநாதி நித்தமா யுண்டென்பாரும் என்று இரு திறத்தர் ஆசிரியர் என்க.

இவ்வினை ஈட்டப்படுங்கால், 1மந்திர முதலிய அத்துவாக் களிடமாக, 2மனம் வாக்குக் காயமென்னும் மூன்றான் ஈட்டப்பட்டு, தூல கன்மமாய் ஆகாமியமெனப் பெயர்பெற்று, பின்னர்ப் பக்குவ மாங்காறுஞ் சூக்கும கன்மமாய்ப் புத்தி தத்துவம் பற்றுக் கோடாக மாயையிற் கிடந்து, சாதி ஆயுள் போகமென்னும் மூன்றற்கும் ஏதுவாய் முறையே, சனகம் தாரகம் போக்கியம் என்னும் மூவகைத்தாய், அபூருவம் சஞ்சிதம் புண்ணிய பாவ மென்னும் பரியாயப் பெயர் பெற்று, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம் ஆத்தியான்மிகம் ஆதிபௌதிக மென்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரத்தமெனப் பெயர் பெறும். 3ஆதிபௌதிகமாவது சடவாயிலாக வருவது. ஆத்தியான்மிகமாவது சடத்தோடு கூடிய சேதனம் வாயிலாக வருவது. ஆதிதைவிக மாவது ஒரு வாயிலானன்றித் தெய்வந் தானே காரணமாக வருவது. இன்னும் இவ்வினைகள், 4உலகம் 5வைதிகம் 6அத்தியான்மிகம் 7அதிமார்க்கம் 8மாந்திரம் என்று ஐவகைப்பட்டு, ஒன்றற்கொன்று ஏற்றமுடைத்தாய், முறையே நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் அடங்கி, 1அசுத்தம் 2மிச்சிரம் 3சுத்த மெனப்படும் போகங்களைப் பயப்பிக்கும் என்று அறிக.
மூன்றாம் அதிகரணம்
மேற்கோள்

இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது,
என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், புனருற்பவம் சடத்துக்கன்றிச் சித்துக்கும் உளதாயினன்றே, முற்செய்வினையே ஈண்டைக்கு வருமென மேற்கூறிய தமையும்; அஃது உண்டோ இல்லையோ என்னும் ஐயப்பாட்டின்கண், குடம் உடைந்த வழிக் 4குடாகாயம் ஆகாயத்தோடு கூடுமாறுபோல, உடம்பு நீங்கிய வழி உயிர் பிரமத்தோடு கூடும் என்னும் சுருதி பற்றி இறந்த வுயிர் மீளப் பிறப்பதில்லை யெனக் கிரீடாப் பிரமவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

இதன் 5பொருள்: வெளிப்படை.

வருதல், தொன்றுதொட்டு 6அவ்வாறு ஆதல். மாறுதல், ஈண்டு இறத்தல் என்பது, “போக்குவரவு புரிய” என்னு 1மூலத்தானும், ஏது உதாரணங்களோடு உளதாகிய இயைபானும் உணர்க. இஃது உணராது, 2அச்சு வேறுபடுதல் என்று உரைப்பாரு முளர்; அஃது ஈண்டைக்கு யாதும் இயையாமை 3யுணர்க.
ஏது

தோற்றமும் ஈறும் உள்ளதற் கல்லது உளதாதல் இன்மையான்

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின் 4அதற்குப் பிரமாண மென்னை யென்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று.

(இ-ள்) உற்பத்தியும் நாசமும், தொடர்ச்சியாய் உள்ள பொருட்கன்றி 5ஏனைப் பொருட்கு உற்பத்தி கூடாமையான், இனி இவ்வான்மாக்களே மாறிப் பிறந்து வரும் என மேற்கொண்டது என்க.

தோற்றமும் ஈறும் என்னும் உம்மைகளை எதிரது தழீஇயின வாகக் கோடலின் “தொடர்ச்சியாய்” என்பது போந்தவாறறிக. 6உளதாதல், ஈண்டுத் தோன்றுதல்.

இனி, இவ்வாறன்றிக் குடாகாய வுவமையே பற்றி இருவினையான் வரும் புனருற்பவம் உயிரின் பொருட்டுச் சிவத்துக்கே யாமெனச் 7சிவாத்துவிதிகள் கூறும் கடாவை ஆசங்கித்தும், மூலப் பகுதியில் தோன்றும் புத்தி தத்துவத்துக்கே 1அதுவெனச் சாங்கியர் கூறும் கடாவை ஆசங்கித்தும் மேற்கோடல் நுதலிற்று இவ்வதிகரணம் எனக்கொண்டு, தோற்றமும் ஈறும் 2அவ்வுரிமை உள்ளதற்கேயன்றி ஏனையவற்றிற்கு உளதாதலின் மையான், இவ்வான்மாக்களே மாறிப் பிறந்து வரும் என மேற்கொண்டது என்று உரைப் பினுமாம். இப்பொருட்கு உரிமை யென்பது அவாய் நிலையான் வந்தது.

உளதாதல் என்னும் ஒருமை, தோற்ற ஈறுகளோடு 3தனித்தனி சென்றியையும். 4ஆன்மாக்களே யென்னும் பிரிநிலை யேகாரம் விகாரத்தால் தொக்கது.

இனி, மாயாவாதி முதலியோர் மதத்தை மறுத்தற் பொருட்டு மேற்கொண்டது என்பாரும் உளர்; 5அத்துவிதம் என்ற சொல்லானே அவரை மறுத்து 6ஆன்மாக்களைப் பெறுவித்தமையின், ஈண்டு, அவர் மதம் பற்றிக் கடா நிகழ்தற்கு ஓர் இயைபின்மை யுணர்க.

உதாரண வெண்பா

கண்ட நனவைக் கனவுணர்வின் தான்மறந்து
விண்படர்ந்தத் தூடு வினையினால் - கண்செவிகெட்
டுள்ளதே தோற்ற வுளம்7 அணுவாய்ச் சென்றுமனம்
தள்ள விழும் கருவில் தான்

என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின் புனருற்பவம் ஆங்கால்படும் இயல்புகளுணர்த்தி, அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

கண் செவி கெட்டு 1உள்ளதே தோற்ற, உளம் அத்தூடு விண் படர்ந்து, கண்ட நனவைக் கனவு உணர்வின் மறந்து மனம் தள்ள, வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழும் எனக்கொண்டு கூட்டுக.

(இ-ள்) கண் செவி கெட்டு உள்ளதே தோற்ற - கண் செவி முதலிய உறுப்புக்களையுடைய இவ்வுடம்பு கெட்டவழித் தனக்குக் கேடின்றிப் படைப்புக் காலந்தொடங்கிச் சங்கார காலமளவும் நிலை பெற்றுள்ளதாகிய சூக்கும தேகம் 2பூதசாரவுடம்பு முதலியனவாய்க் காரியப்பட;
உளம் 3அத்தூடு விண்படர்ந்து - உயிரானது பூதசார முதலிய உடம்பின்கட் பொருந்தித் துறக்க நிரயங்களிற் சென்று அனுபவித்து; கண்ட நனவைக் கனவு உணர்வின் மறந்து - பின்னர் நனவின்கட் கண்டவற்றைக் கனாக்காணுங் காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல, முன்னைக் கண் செவி கெட்டவாறும், உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்ந்தவாறும், ஆண்டனு பவித்தவாறு மாகிய இன்னோரன்னவற்றை மறந்து அறிவு வேறுபட்டு; 4மனம் தள்ள வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழும் - முன்னுடம்பு இறக்குங்கால் அடுத்தவினை காட்டும் கதி நிமித்தம் பற்றி உயிர் அவாவுமாறு மனம் செலுத்துதலான் அக்கதிக்கட் சேறற்கு ஏதுவாய் எஞ்சி நின்ற புண்ணிய பாவ சேடத்தால் சூக்கும தேக மாத்திரையாய்ச் சென்று அம்மனம் தள்ளிய கதிக்கு அமைந்த அக்கருவின்கண் படும் எ-று.

1இன், உவமவுருபு. தான், அசை. மறத்தற்குச் 2செயப்படு பொருள் அவாய் நிலையான் வந்தது. விண்படர்ந்தென்னும் 3உபலக் கணத்தால் நிரயம் படர்ந்து என்பதூஉம் பெறுதும். 4படர்ந்தெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார். அத்தூ டென்புழி, அன் சாரியை விகாரத்தால் தொக்கது. பொருந்தி என்பது சொல்லெச்சம். வினை, ஆகுபெயர்.

உடம்பு நீங்கிப் போங்கால், முதற்கண் கெடுவன கண்ணும் செவியுமாகலின், அச்சிறப்பு நோக்கிக் கண் செவி கெட்டு என்று உபசரித்தார். கெட்ட வழி யென்பது கெட்டு எனத் திரிந்து நின்றது.

ஐம்பெரும் பூதத்தின் காரியம் எனப்பட்ட தூலவுடம்பு, சூக்கும வுடம்பின் காரியம் ஆமாறு என்னை யென்னும் ஐயம் நீக்குதற்கு உள்ளதே தோற்ற என்றார். ஏகாரம் தேற்றம்.

ஆகாய முதலிய தூலபூதங்கள் சத்த முதலிய சூக்கும பூதங்களின் காரியமாதலின், அதுபற்றியே, தன்மாத்திரை மயமாகிய சூக்கும வுடம்பில் தோன்றுவதாய தூலவுடம்பு ஐம்பெரும் பூதமயம் எனப்பட்ட தன்றிப் பிறிதில்லை யென்பது; “பூதனா சரீரம்
போனாற் புரியட்ட ரூபந்தானே, யாதனா சரீரமாகி” 5என்றும், “சூக்குமவடி வேதென்னில் தூல காரணமதாகும்” 6என்றும், “தூலமாம் உருவினுக்குச் சூக்கும முதல்” 7என்றும், “மாறியிவ்வுருவமெல்லாம் வருவதெங்கே நின்று என்னில்,
கூறிய சூக்குமத்தாம்” 8என்றும், “விதிப்படி சூக்குமத்தே
யுருவரும்” 1என்றும், “மனாதி தரும்உடல்” 2என்றும் வழிநூலா சிரியரும் இவ்வாறே கூறியவாறு காண்க. 3இஃது அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப.

அது தோன்றுங்கால், “காலமுற்றும் நீங்கிட மரம் பின் வேறோர் நீண்மரம் நிகழ்த்து” 4மாறுபோலச் சூக்கும வுடம்பு கெடாது நிற்பத் தூலவுடம்பு “வேறொரு குறியாம் ஆரம் வீரசங்கிலியுமா” 5தல் போல, வினைக்கீடாக அச்சு வேறுபட்டு, “மதிக்கெழு கலைகள் போல வருவது போவதாம்” 6என்பதூஉம் வழிநூலாசிரியர் கூறியவாற்றான் அறிக.

அணு, சூக்குமவுடம்பு. தள்ள, தள்ளுதலானென்க. அக்கருவில் எனச் சுட்டு வருவிக்க. தான், அசை.

உள்ளதே தோற்ற என்றதனால், 7உடற்றிரிவும், விண் படர்ந்து என்றதனால் இடத்திரிவும், கண்டநனவைக் கனவுணர்வில் தான்மறந்து என்றதனால் 8அறிவுத்திரிவும் பெறப்பட்டன.

உள்ளதே தோற்ற வென்றதனால், புதிதுபுதிதாய்த் தோன்றுதற் பற்றிச் சற்காரிய வாதத்திற்கு இழுக்கின்மையும், அத்தூடு விண் படர்ந்தெனவும், அணுவாய்ச் சென்று கருவில் விழுமெனவும் கூறியதனால், போக்குவரவு பற்றி வியாபகத்துக்கு இழுக்கின்மையும், வினைச் சேடத்தா லென்றதனால், துறக்க நிரயங்களின்கண் அனுபவித் தொழிந்தமை பற்றிப் புனருற்பவ காரணத்துக்கு இழுக்கின்மையும், மனம் தள்ள வென்றதனால், 1அஃது எஞ்சுதற்கு ஏதுவும் காட்டியவாறு.

வேதத்துட் கூறப்படும் 2பஞ்சாக்கினி வித்தையின் இயல் புணர்த்துவார், கண் செவி கெட்டவழி, விண்படர்ந்து மறந்து அணுவாய்ச் சென்று கருவில் விழும் என்றார். பஞ்சாக்கினி வித்தையின் இயல்பு நீலகண்டபாடியத்துட் காண்க.

மறந்து விண்படர்ந்து எனக் கூட்டி யுரைப்பாருமுளர். துறக்க நிரயங்களிற் படர்ந்து அனுபவிப்புழி, அறிவு திரியாமை புராணங்களுட் காண்க.

உதாரண வெண்பா

அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு
பரகாயம் போய்வருமப் பண்பும் - பரவின்
குடாகாய வாகாயக் கூத்தாட்டாம் என்ப
தடாதுள்ளம் போமா றது

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், உயிருக்குப் புனருற்பவம் ஆகாமைக்கு வாதிகளான் எடுத்துக்காட்டப்படும் குடாகாய ஆகாய வுவமைக்குப் பொருள் கூறி மேலதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் பரகாயம் போய் வரும் அப்பண்பும் பரவில் வேறு -1கண்செவி கெட்டவழி

உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்தற்குப் பாம்பு தோலுரித்துப் புதிதொரு தோல் போர்த்துச் சேறலும், புருடன் நனவுடம்பின் நீங்கிக் கனவுடலிற் சேறலும், யோகிகள் தம்முடம்பு நீங்கிப் பரகாயத்திற்சென்று மீடலுமாகிய இவ்வுவமைகள் மிக்கு வழங்குதற்கண் இவற்றிற்கு மாறாக;

குடாகாய ஆகாயக் கூத்தாட்டு ஆம் என்பது அடாது - குட ஆகாயம் குடமுடைந்த வழி ஆகாயத்தோடு கூடுமாறு போல்வதோர் 2கூத்தாட்டாம் என்று நீ கூறுதல் பொருந்தாது;

உள்ளம் போம் ஆறு அது - சூக்கும வுடம்பு விட்டுப் போமாற்றிற்கே அவ்வுவமையாகலான் எ-று.

எனவே, உடல்விட்டுப் போமாற்றிற்கு இவ்விருவகை யுவமைகளும் ஆகமங்களிற் கூறுதலின், அவை தம்முள் முரணாத வாறு, அரவுதன் தோலுரிவு முதலியன தூலவுடல் விட்டுப் போமாற்றிற்கும், குடாகாய வுவமை சூக்கும வுடம்பு விட்டுப் போமாற்றிற்கும் எனக் கோடல் பொருத்தமுடைமையின், அவ்3வேறுபாடு உணராது குடாகாய வுவமையும் தூலவுடம்பு விட்டுப் போமாற்றிற்கேபோலும் என மலையற்க என மேலதனை வலியுறுத்தவாறு காண்க.

மேலைவெண்பாவில் “கண்ட நனவைக் கனவுணர்வில் தான் மறந்து” என்றது, அறிவு வேறுபடு முறைமைக்கு எடுத்துக் காட்டியது எனவும், ஈண்டு அக்கனவும் என்றது, அதனையே உடல் வேறுபடும் முறைமைக்கு எடுத்துக்காட்டியது எனவும் 1தெரிந்துகொள்க.

பரவு, முதனிலைத் தொழிற்பெயர், இல்லுருபு தொழில் நிகழ்ச்சிக் கண் வந்த ஏழாவது. பரவுதல், எல்லார்க்கும் புலனாமாறு மிக்கு நிகழ்தல். ஈண்டு 2உள்ளம் என்றது சூக்கும வுடம்பை. போமாற்றிற் கென்னும் நான்காவது விகாரத்தால் தொக்கது; “ஐந்தவித்தான் ஆற்றல்3” என்புழிப்போல.

குளம் ஆம்பல், குளாம்பல் என மருவினாற்போல, 4குடம் ஆகாயம், குடாகாயமென மரீஇயிற்று. ஆகாயக் கூத்தாட்டு என்பது உவமத்தொகை. இதனை உம்மைத் தொகையாகக் கொண்டு குடாகாய ஆகாயமும் கூத்தாட்டும் போல் என்று உரைப்பாருமுளர்.
** நான்கா மதிகரணம் மேற்கோள்**
இனி நீக்கமின்றி நிற்குமன்றே என்றது,

என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் புனருற்பவமாதற்கு ஏதுவாய் இருவினைகளைச் செலுத்தி நிற்பது எனப் 5போந்த ஆணை யெனப்படும் சத்தியாவது முதல்வனின் வேறோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் பொருட்குச் சத்தி வேறு என்னும் மீமாஞ்சகர் முதலியோர் மதமும், அன்றென்னும் நையாயிகர் முதலியோர் மதமும் பற்றி நிகழும்கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று.
(இ-ள்) முதல்வன் தனது ஆணையாகிய சிற்சத்தியோடு சம வேதமாய் நிற்பன் எ-று.

அந்நிய யோக வியவச்சேதம் அயோக வியவச்சேதம் என்றற்றொடக்கத்து வடசொற்கள், பிறிதினியைபு நீக்குதல் இயைபின்மை நீக்குதல் என்றற் றொடக்கத்தனவாக 1மொழி பெயர்த்து வழங்கப்படுமாறு போல, 2சமவாய மென்னும் வடமொழி, தமிழின்கண் நீக்கமின்றி நிற்றல் என மொழிபெயர்த்து வழங்கப்படும் என்று உணர்க. வடமொழி இரண்டாஞ் சூத்திரத்து இறுதியில் ஆணை முதல்வனோடு சம வேதமாய் நிற்கும் என 3ஆணைமேல் வைத்தோதியதனை ஈண்டு 4முதல்வன் மேல் வைத்து ஓதினார்.

கண்ணழிப்புழி, இருவினை முதல்வன் ஆணையின் வருமெனக் கூறிப் போந்த ஆணை, ஈண்டுக் 5கூறாமையே இனிது விளங்கு மென்னும் கருத்தால், சொற்பல்காமைப் பொருட்டு அதனை யொழித்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பொருள் காண மாட்டாதார் சருவவியாபியாய் நிற்றலால் என்னும் ஏதுவின் பொருளே மேற்கோளுக்கும் 6பொருளாகக் கொண்டு உரைப்ப. அது 1கூறியது கூறலாதலுமன்றி மொழிபெயர்த்தல் யாப்பிற்கு ஏலாமையும் அறிக.

ஈண்டுச் 2சமவாயமென்றது தாதான்மிய சம்பந்தத்தை; அஃதாவது பொருளான் ஒன்றேயாகியும் ஒருவாற்றான் 3பேதமாதற்கு உரிமையுடைமை.
ஏது

அவன் ஏகாநேகம் இரண்டும் இன்றிச் சருவ வியாபியாய் நிற்றலான்,

என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், அதற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை ஆசங்கித்து மேற்கோளை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) அம்முதல்வன் ஒன்றே வேறே யென்னும் இரு தன்மையுமின்றி, அவ்விரண்டிற்கும் பொதுவாய் எங்கணும்4 வியாபியாய் நிற்றலான், இனி, ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே யென மேற்கொண்டது.

5அவினாபாவம் உணர்த்துவார் ஏகாநேகம் இரண்டும் இன்றியென, மேற்கோளிற் போந்த பொருளை அநுவதித்துச் சருவ வியாபியாய் நிற்றலான் என ஏதுக் கூறினார். சருவ வியாபியாய் நிற்றல், 6அவையே தானேயாய் என்னும் அதிகரணத்தாற் சாதிக்கப் பட்டமையின், அதனை ஈண்டு, ஏதுவாக வைத்து ஆணையின் நீக்கமின்றி நிற்கும் என்று மேற்கோளைச் சாதித்தவாறு.

உதாரண வெண்பா

எங்குமுளன் என்றளவை ஒன்றன் றிரண்டென்னில்
எங்கு முளன்அன் றெவற்றெவனும் - அங்கண்
அவையவன் அன்றில்லைப் பொன்னொளிபோல் ஈசன்
அவையுடைமை யாளாநாம் அங்கு

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 1ஏதுவும் மேற்கோளும் தம்முள் அவினாபாவம் ஆமாமாறு யாங்ஙனம் என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) எங்கும் உளன் என்ற அளவை ஒன்றன்று -யாங்கணும் அவையே தானே யென மேற்கூறிய அளவையானே முதல்வன் ஒரு பொருளாதல் கூடாது எ-று.

2ஒன்றாயின் கங்கைக் கரையில் நின்ற ஒரு மானுடனே காவிரிக் கரையினும் ஒருங்கு நிற்கமாட்டான்; அது போல ஒரு பொருள் ஓரிடத்து உளதாதலன்றி யாங்கணும் வியாபித்து நிற்கமாட்டாது என்பதாம்;

3இரண்டு என்னில் எங்கும் உளன் அன்று - அற்றேல் முதல்வன் இரு பொருளாய் நிற்கும் எனக்கோடும் எனின் யாங்கணும் அவையே தானேயாய் உளனாதல் கூடாது எ-று.

தன்மாட்டே வேற்றுமையுடையானுக்குப் பிற பொருளின் கண் வேற்றுமையின்றி வியாபித்து நிற்றல் சாலாது என்பதாம்;

அற்றேல் இவ்விரண்டோடு முரணுதலின், எங்கும் உளன் அல்லன் எனக் கோடும் எனின்,

1எவற்று எவனும் அங்கண் அவை அவன் அன்று இல்லை- எவ்விடங்களினுள்ள எத்திறப் பொருளுமாகிய அவ்விடத்து அவைகளெல்லாம்2 “அகரவுயிர் இன்றேல் அக்கரங்கள்” இல்லையா மாறுபோல, அம்முதல்வனை யின்றி அமையா; ஆகலான், எங்கும் உளன் அல்லன் என்றல் பொருந்தாது எ-று.

ஆகலான் எங்கும் உளன் அல்லன் என்றல் பொருந்தாது என்பது குறிப்பெச்சம்.

அற்றேல், வேறு விடுக்குமாறு என்னையெனின்,

ஈசன் 3பொன் ஒளி போல் - எங்கும் உளனாகிய முதல்வன் ஞாயிறும் ஒளியும் போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய்த் தாதான்மியத்தால் சிவமும் சத்தியும் என்று இயைந்து நிற்கும் எ-று.

அற்றேல், பசுபாசங்களும் வியாபகம் எனக் கோடலின், அவையும் இம்முறைமைபற்றி ஏகாநேகம் இரண்டும் இன்றி, முதல்வன் போலத் தத்தம் சத்திகளோடு தாதான்மியமாய் நிற்கும் என்பது பெறப்படுதலான் முதல்வனோடு சமமாவான் செல்லுமே யெனின்,

அவை உடைமை நாம் ஆளாம் அங்கு - அவ்வாறாயினும் முதல்வனது வியாபகத்தை நோக்க வியாப்பிய மாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம் அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு எ-று.

எங்குமுளன் அன்று எனப் பாடமோதுவாரு முளர்.

பாசங்கள் உடைமையாமாறும், பசுக்கள் அடிமையாமாறும், “தாரகமாம் அத்தன் தாள்நிற்றல்” எனவும், “அதனின் ஈறலா ஒன்று பலவாறே தொழும்பாகும்” 4எனவும் மேலே பெறப்பட்டமையின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி ஆசங்கை நீக்கியவாறு.

என்ற வென்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது; “புகழ்புரிந்த”1 என்புழிப்போல. அளவையான் என ஆனுருபு விரிக்க. ஒன்றன்று உளனன்று என்புழி,2 ஒன்று உளன் என்னுந் தருமி வாசகங்கள் ஆகுபெயரால் அத் தருமங்களின்மேல் நின்றனவாகலான், உளனென்பதும் அஃறிணையொருமையோடு முடிந்தது. அன்மை, கூடாமைப்பொருட்டு, எவற்றெவனும் என்பது3 ஏழாம் வேற்றுமைத் தொகை; அஃறிணைக்கண் வரும் எவனென்னும் வினாவினைக் குறிப்புச் சொல், ஈண்டுப் பெயர்த் தன்மைப் பட்டு எவனும் என4 எஞ்சாமைப் பொருண்மை யுணர்த்தி நின்றது. அன்றியென்னும் வினையெச்சம் செய்யுளாகலின்5 அன்று எனத் திரிந்தது. இன்மை, ஈண்டு அமையாமைப் பொருட்டு. பொன், 6ஆகுபெயர். ஆம் என்பது உடைமை யோடும் இயையும். பொன்னொளிபோல் ஈசன் என்பது தொகையுவமமாகலின், பொதுவியல்பு விரித்துரைக்கப்பட்டது.

இவ்வதிகரணத்தாற் போந்த தொகைப் பொருள், - முதல்வன் வியாபகனாதலின், வியாபகப்பொருட்கு ஒன்றாய் நிற்றல் கூடாது; அது கூடாமைபற்றி, இரண்டாய் நிற்பன் எனின், வியாபகனாதல் கூடாது; வியாபியல்லன் எனின், பசுபாசங்கள் அவனையின்றி அமைதல் கூடாது; ஆகலான் முதல்வன் ஒருவனே ஞாயிறும் ஒளியும் போலச் சிவமும் சத்தியும் எனத் தாதான் மியத்தால் இருதிறப்பட்டுச் சருவ வியாபியாய்ப் பொதுமையின் நிற்பன் எனச் சமவேதமாய் நிற்குமாறு தெளிவிக்கு முகத்தானே1 தாதான்மிய சத்தியுண்மைக்குப் பிரமாணங் கூறியவாறாம் என்று உணர்க.

அஃதாமாறு, - தன்னை விளக்குவதூஉம் விடயங்களை விளக்குவதூஉம் தானேயாகிய ஞாயிறு ஒன்றுதானே விடயங்களை விளக்குழிக் கதிரெனவும், தன்னை விளக்குழிக் கதிரோன் எனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்றல் போல, புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பின் நிற்பதூஉம், புறப்பொருளை நோக்கி நின்று உணர்த்துவதூஉம் ஆகிய இரு தன்மையையுடைய பேரறிவாய சைதன்னியம் ஒன்றே, அங்ஙனம் புறப்பொருளை நோக்கி நிற்கும் நிலையில் சத்தியெனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும் நிலையில் சிவம் எனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் என உணர்க.

இனி, தீயின் சத்தி யொன்று தானே சுடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபாட்டால் சுடுஞ்சத்தி அடுஞ்சத்தி யென்றல் தொடக்கத்துப் பலவேறு வகைப்படுமாறு போல, 2சிவசத்தி யொன்றே காரிய வேறுபாட்டால், பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை யென்று ஐவகைச் சத்திகளாயும், முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும் எட்டுமாகிய கூறுபாடுடைய ஈசானி முதலிய 3ஐவகைச் சத்திகளாயும், 4ஆரணி முதலிய மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி முதலிய ஐவகைச் சத்திகளாயும், 1வாமை முதலிய அட்ட சத்திகளாயும், பரவாகீசுவரி, அபரவா கீசுவரி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி யென எழுவகைச் 2சிவபேதங்கட்கும் முறையே யெழுவகைச் சத்திகளாயும், அத்தியான்மிக மெனப்படும் 3உன்மனை முதலிய கலைகளாயும், இன்னும் பல வேறுவகைப்பட்டும் நிற்கும். அவ்வச் சத்திகளோடு புணர்ந்த சிவமும் அவ்வாறே பலவகைப் பெயர்பெற்று நிற்கும். அவ்வச் சத்திகட்கிடமாய 4விந்துவும் அங்ஙனம் பலவேறு வகையான் விருத்திப்பட்டு அப்பெயர்பெறும். இவற் றின் இயல்பெல்லாம் ஆகமங்களுட் காண்க.
இரண்டாஞ் சூத்திரம் முடிந்தது.

** மூன்றாம் சூத்திரம்**
5உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா

என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று

என்பது கருத்துரை: என்னுதலிற்றோ வெனின் சூத்திரக் கருத் துணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) மேல் “6அவையே தானே” என்றெடுத்துக் கொள்ளப் பட்ட உயிர், 7சூனிய முதலியவற்றுள் ஒன்றாகற் பாற்று என அவ்வம் மதம்பற்றி நிகழுங்கடாவை ஆசங்கித்து, உயிர் அவற்றிற்கு வேறாய் உண்டென்பது கருதலளவையான் விளக்கி, மேலைச் சூத்திரத்தின் உயிர்கள் மேல் வைத்தோதிய 1முதல்வனது இலக் கணத்தை வலியுறுத்துதல் மூன்றாஞ் சூத்திரத்தின் கருத்து எ-று.

2முதன்மையுடைமை பற்றி உலகிற்கு நிமித்த காரணமாகிய பதிப்பொருள் உண்டென்பது 3முதற் சூத்திரத்துட் கூறி, காரணமாதற் பொதுமையான் இயைபுடைமை நோக்கித் துணைக் காரண முதற் காரணங்களது உண்மையும், அவற்றான் உலகங் காரியப் படுமாறும் 4இரண்டாஞ் சூத்திரத்துட் கூறி, அவற்றான் ஆய பயன் கோடற்கு உரிய பசுக்களது உண்மைக்குப் பிரமாணம் ஈண்டுக் கூறுகின்றார் என உணர்க. இதனானே சூத்திர வியைபும் இனிது விளங்கும்.

இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு:- இலதென்றல் முதலிய அறுவகை யேதுக்களானும், மாயாவிந்திர தனு என்னும் பெயரடையால் பெறப்படும் 5குறிப்பேதுவானும், இவற்றின் வேறாய் இவ்வுடம்பினுள் உயிரெனப்படுவது ஒன்றுண்டு என்க.

இது 6பூட்டுவிற் பொருள்கோள். உளதென்றது 7சாதி யொருமை. அறிதலின் என்றது ஐம்புலனோடுஞ் சென்றியையும்.

தனுவினுள் ஆன்மாவுளதென்றாரேனும், காணப்பட்ட வுடம்பாற் காணப்படாத வுயிருக்கு உண்மை கூற வேண்டுதலின், இவ்வுடம்பு சூனிய முதலியவற்றின் வேறாய ஆன்மாவை யுடைத்தென உடம்பின் மேல் வைத்தோதுதல் ஆசிரியர் கருத்து. அற்றாகலின் அன்றே, பதியுண்மை உலகின்மேல் வைத்தோதியதூ உம் என்பது.

ஈண்டு மேற்கோள் ஒன்றாயினும், எழுவகை மதங்களை வேறு வேறு மறுக்கும் ஏதுக்கள் ஏழாகலான், ஆன்மாவுள தென்னும் மேற்கோள் அவற்றோடு தனித்தனியே சென்று இயைதலின், ஏழதிகரணத்த தாயிற்று இச்சூத்திரம் என்று உணர்க.

இதனுட் கூறிய ஏதுவே ஏதுவும் மேற்கோளும் ஆகலான், ஏனைச் சூத்திரங்களுட்போல, வேறு ஏதுக் கூறவேண்டாமையின், இவை ஏதுவா மாறும், இவற்றான் மேற்கோளைச் சாதிக்குமாறும், இனிது விளக்கி வலியுறுத்துதல் மாத்திரையே ஈண்டு உரைக்கப் படுவது எனக் கொள்க.
** முதலதி கரணம்.**
** மேற்கோள்.**
1ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது என்றது
என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், சூனியான் மவாதி, தேகான்ம வாதி, இந்திரியான்ம வாதி, அந்தக்கரணான்ம வாதி, சூக்குமதேகான்ம வாதி, பிராணான்ம வாதி, விஞ்ஞானான்ம வாதி, சமூகான்ம வாதி யென்னும் எண்மருள், அந்தக்கரணான்ம வாதிகள், ஆன்மாவினது இலக்கணங்கூறும் 2வழி, அனுவாத முகத்தான் 3மறுக்கப்படுதலின், அவரையொழித்து, ஒழிந்த எழுவர் மதங்களையும் முறையே மறுத்து, உயிருண்மை சாதிப்பான் தொடங்கி, அவற்றுள், இது சூனியமே ஆன்மாவென 1மாத்தியமிகர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

ஆன்மா இலதென்றலின் என வருவித்து உரைக்க.

(பொ-ரை) எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான் மாவாம் என்றது

என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், ஆன்மா இலதென்றலே பற்றி, அஃது உண்டெனக் கோடல் முயற்கோடு இல்லை என்னும் ஏதுவால் அஃது உண்டெனச் சாதித்தலோ டொக்கும் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ -ள்) ஆன்மா இலதென்னும் சூனியான்ம வாதிகளும் இல்லையென வாளா கூறுதல் அமையாமையின், உடல் பொறி விடயம் அனைத்தினையும் முறையானே இஃது ஆன்மா அன்று, இஃது ஆன்மா என்று என ஒரோவொன்றாகக் கழித்து, இவ்வாறாகலின், ஆன்மா வென்பது சூனியம் என்று அங்ஙனம் கூறுபவாகலான், அவற்றை ஒரோ வொன்றாகவிட்டு அங்ஙனம் கூறி நிற்பதோர் அறிவு உண்மையின், அவ்வறிவே மேல் “அவையே தானேயாய்” 2என்பதனுள், ஆகம வளவையாற் சாதித்துப் போந்த ஆன்மா என்றவாறாம்; ஈண்டு 3இலதென்றலின், ஆன்மா வுளதென மேற்கொண்ட தென்க.

அங்ஙனம் அறியும் அறிவும் சூனியமே யெனின், அஃது என்னை ஈன்றாள் மலடியென்பதனோடு ஒக்கும் என்று ஒழிக வென்பது கருத்து. 4இன்மை, ஈண்டுச் சூனியப் பொருட்டு; சூனியமாவது உள்ளதும் அன்று, இல்லதும் அன்று, இரண்டு மாவதும் அன்று, வேறும் அன்றெனப்படும் பாழ். 1ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.

உதாரணம்

அன்றன் றெனநின் றனைத்தும்விட் டஞ்செழுத்தாய்
நின்றொன் றுளததுவே நீயனைத்தும் - நின்றின்று
தர்ப்பணம் போற் காட்டலாற் சார்மாயை நீயல்லை
தற்பரமும் அல்லை தனி

என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அவ்வறிவை உடல் பொறி விடய முதலியவற்றின் வேறாகப் பிரித்துக் காணுமாறும் அதுவே உயிராமாறும் தெரித்து உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ -ள்.) அனைத்தும் நின்று அன்று அன்று எனவிட்டு - உடல் பொறி விடய முதலிய அனைத்தினும் அதுவது தானாக நின்று முறையானே இது நான் அன்று இது நான் அன்று என2 ஒரோ வொன்றாகக் கண்டு நீங்கியவழி;

அஞ்செழுத்தாய் ஒன்று நின்று உளது - அவ்விடத்து அகர முதலிய 3சூக்கும பஞ்சாக்கர ரூபமாய் அறிந்து வந்ததோர் அறிவு நிலை பெற்று உளதன்றே;

4அதுவே நீ - அதுவும் நான் அன்றெனக் கழிப்பின் அங்ஙனம் கழித்த உணர்வு வேறுண்டு எனப்பட்டு மேலும் 5வரம்பின்றி யோடுமாகலின் 6சூக்கும பஞ்சாக்கர ரூபமாய் நின்று அறிந்து வந்த அவ்வறிவு தானே நீ யென்பது அறிவாயாக;

அற்றேல், 1மாயேயமும் சிவமும் உளவென்பது மேலைச் சூத்திரங்களால் சாதிக்கப்பட்டமையின், அவையே அவ்வறி வினையும் அறிந்து நீக்கும் என அமையுமாகலான், வரம்பின்றி யோடுமாறு இல்லை யாலெனின், -

சார்மாயை அனைத்தும் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் நீ அல்லை - நிலமுதலிய காரியம் அனைத்துமாய் நின்னொடு விரவி நின்று இப்பெத்த காலத்துக் 2கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கு அறிவை விளக்கி நிற்றல் மாத்திரையே யன்றி அறிவது அன்று ஆகலான் நீ அம்மாயை யல்லை;

தற்பரமும் அல்லை- 3மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமும் அல்லை;

தனி -4அவற்றின் வேறு என்க.

விட்டவழி யென்பது விட்டெனத் திரிந்து நின்றது. அவ்வறிவாவது இது என்று உணர்த்துவார், அன்று அன்று என நின்று அனைத்தும் விட்டவழி யென ஏதுப்பொருளை அனுவதித்து அஞ்செழுத்தாய் ஒன்று நின்றுளது என 5அடையாளம் கூறினார். இதற்குப் பிறரெல்லாம் கூறியது கூறலென்னும் வழுப்பட மேலுமோர் இயைபின்றி யுரைத்தார். அனைத்தும் நின்று என்புழி, முன்னர்க் கண்ணுருபும், பின்னர் ஆக்கச் சொல்லும் 6தந்துரைக்க. ஏகாரம், தேற்றம். தற்பரம் என்றது 7குறிப்பேதுவாய் நின்ற பெயர்.

“அனைத்தும் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீ யல்லை. தற்பரமும் அல்லை, தனி” என்றதனானே வருகின்ற 1அதிகரணங்களுக் கெல்லாம் தோற்றுவாய் செய்தவாறும் ஆயிற்று.

** இரண்டாமதிகரணம்**
இனி, 2எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது,

என்பது மேற்கோள்.

என்னுதலிற்றோ வெனின், அவ்வறிவு உடம்பின்கண் ணன்றி நிகழக் காணாமை யானும், நான் நுணுகினேன் பருத்தேன் என உடம்பினையே நானென்று வழக்கங் காண்டலானும் உடம்பே ஆன்மா எனத் 3தேகான்மவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

நான் பருத்தேன், சிறுத்தேன், கரியேன், மனிதன், பார்ப்பான் என உடம்பின் குண விசேடங்களை உபசாரத்தால் உயிருக்கேற்றி வழங்கினும், யான் உடம்பு, யான் கை, யான் கால் என வுடம்பை அவ்வாறு வழங்குவாரின்றி, எனது என வேற்றுமைப்படவே யாவரும் வழங்கக் காண்டலின், அதுவே உயிர் வேறு உண்டு என்பதனை அறிவுறுக்கும் என அவன் வழங்கு முறையே பற்றி அவனை மறுத்தவாறு.

(பொ-ரை.) என் பதி என் மனை யென்றாற்போல என் கை என் கால் என நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது,

என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், எனதுட லென்பது 1பிறிதின் கிழமைப் பொருள்படாது. தலை மாத்திரையாய் நிற்கும் இராகுவை இராகுவினது தலையென்று வழங்குமாறு போல, அபேதம் பற்றியே வழங்கப்படுமென அமையும் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) இராகுவினது தலையென்றாற் போல்வன சிறுபான்மை வழக்கமாதலின், ஆண்டு ஒற்றுமைப் பொருள் கோடல் அமையும்; ஈண்டு, அவ்வாறன்றி, என்பதி, என் மனைவி, என்பொருள் என்று வழங்குமாறுபோல, என்கை, என்கால், என்கண், என்செவி, என் பொறி, என்பிராணன், என்அறிவு எனப் பலவாற்றானும் பெரும் பாலும் உலகத்து வழங்கக் காண்டலின், இவ்வழக்க மிகுதிப்பாடு பிறிதின் கிழமைப் பொருட்கண் அன்றி, வாராமையான், அங்ஙனம் கூறிக்கொண்டு நிற்கும் பொருள் வேறொன்று உண்டென்பது பெறப்படுதலின், அதுவே மேல் உரையளவைபற்றிச் சாதித்த ஆன்மா வென்றவாறாம்; எனதுடலென்றலின் ஆன்மா வுளதென மேற் கொண்டதென்க.2

உதாரணம்

எனதென்ற மாட்டின் எனதலா தென்னா
துனதலா துன்கைகால் யாக்கை - எனதென்றும்
என்னறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண்
3உன்னிலவை வேறாம் உணர்

என்பது உதாரணம்.

என்னுதலிற்றோ வெனின், பதி, மனைவி முதலிய பொருள்கள் தம்மின் வேறாதல் கண்டு பிறிதின் கிழமைப் பொருள்பட எனதென்றாற் போலன்றிக் கைகால் முதலியவற்றைத் தற்கிழமைப் பொருள்பட எனதென்று கூறி நிற்றலின், அவ்விரு வேறு மொழியும் தம்முள் ஒக்குமாறு என்னை என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்.) எனது 1அலாது என்னாது எனது என்ற 2மாட்டின் - நீ உலகாயத நூல் கேட்குமுன்னெல்லாம் பதி மனைவி முதலிய புறப்பொருளையே உயிரெனக்கொண்டு மயங்கி நின்றாயன்றே, அக்காலத்து அவற்றை எனது அன்று என வேறு காணாது தனித்தனி எனது என்றே தற்கிழமைப் பொருளாகக் கூறிக்கொண்டு 3நின்றாற்போல;

உனது அலாது உன் கை கால் யாக்கை எனது என்றும் என் அறிவதென்றும் உரைத்து நீ நிற்றிகாண் - உனதன்றாகிய உன் கை கால் யாக்கைகளைத் தனித்தனி எனதென்றும் அங்ஙனம் அறிந்த பாசவறிவை 4என்னறிவதென்றும் தற்கிழமைப் பொருளாகக் கூறிக் கொண்டு, நீ ஒரு பொருள் வேறு நிற்கின்றாய் காண்;

உன்னில் அவை வேறாம் உணர் - உலகாயத நூல் ஆராய்ந்த பின்னர்ப் பதி மனைவி முதலிய பொருள்கள் உனக்கு வேறாதல் கண்டாற்போலக் கை கால் முதலியவற்றின் இயல்புகளை ஏதுக்கள் முதலியவற்றான் ஆராய்ந்து பார்த்தியாயின், அக்கைகால் முதலியன உனக்கு அன்னியமாம்; அதனை அறிவாயாக என்க.

இன், உவமவுருபு. உனதலாது என்பதனைக் கை கால் யாக்கை களோடு தனித்தனி கூட்டுக.

** மூன்றாமதிகரணம்**
இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா வுளது என்றது,

என்பது மேற்கோள்.

என்னுதலிற்றோ வெனின், ஐம்பொறிகள் ஐம்புலன்களை யறியும் என்றல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அவை உடல்போல் சடமன்மை பெறப்படுதலானும், அவற்றை எனதென்னும் வழக்கம் பெரும்பான்மையன்று ஆகலானும், அவையே உயிராதல் அமையும் என இந்திரியான்ம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்து மூன்றாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

(இ-ள்) 1வெளிப்படை

(பொ - ரை.) 2ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்றறிந்தது ஒன்று அறியாமையின், இவ்வைந்தினானும் ஐம்பயனும் அறிவது உள தாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது,

என்பது பொழிப்புரை.

என்னுதலிற்றோ வெனின் ஐம்புலனறிதலின் ஆன்மா ஐம் பொறியின் வேறு எனச் சாதித்தற்கு ஏதுவாமாறு யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) வெளிப்படை.

உதாரணம்

ஒன்றறிந்த தொன்றறியா தாகியுடன் மன்னி
அன்றும் புலனாயவ் வஞ்செழுத்தை - யொன்றறிதல்
உள்ளதே யாகி லதுநீ தனித்தனி கண்
டுள்ளலவை யொன்றல்லை யோர்

என்பது உதாரணம்.

என்னுதலிற்றோ வெனின், இந்திரியங்கள் ஒன்றறிந்ததை ஒன்று அறியாது என்றது ஒக்கும்; ஐந்தும் ஐந்து உயிரெனக் கோடலின், அதனான் எமக்கு ஆவதோர் இழுக்கில்லை; இனி இவ்வைந்தையுங்கொண்டு ஐம்புலனையும் ஒரு பொருளே யறியுமெனின், அதற்குப் பிரமாணங் கண்டிலம்; குடத்தைக் கண்ட யானே அதனைத் தீண்டினேன் என மறித்துணர்வு நிகழ்தல் ஐந்தும் ஓருடம்பின்கண்ணே நிலைபெறும் ஒற்றுமை பற்றி யமையும் எனக் கோடும் என்னும் கடாவை ஆசங்கித்து அதனை வலியுத்துதல் நூதலிற்று.

இ-ள்.) உடல் மன்னி ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி - 1உடம்பின்கண்ணே நிலைபெற்று ஒரு விடயத்தை யறிந்த இந்திரியம் மற்றொரு விடயத்தை யறியாதாய்;

2அன்றும் புலனாய் அவ் வைஞ் செழுத்தை - அங்ஙனம் தம் தம்முள் மாறுபடுஞ் சத்த முதலிய புலன்களைச் சூக்கும பஞ்சாக்கரத் தாற் செலுத்தப்பட்டு ஆராய்ந்து அறிகின்ற அவ்வைம் பொறிகளின் தொழிற்பாட்டை;

அறிதல் ஒன்று உளதேயாகில் - கண் உருவத்தை யறிவது செவி ஓசையை யறிவதென்று இவ்வாறு உணர்தலை யுடையதோர் பொருள் இல்லதோ உள்ளதோ என வினாயினார்க்கு இல்லதெனின் அவ்வறிவு நிகழாதாதல் வேண்டுமாகலின் உள்ளதேயாம் எனின்;

அது நீ - அவ்வாறு உணர்வது யாது அதுவே நீயாகிய ஆன்மா;

அவ்வாறு உணர்வனவும் அவ்விந்திரியங்களே யென்றாற் படும் இழுக்கென்னை யெனின், -

அவை தனித்தனி கண்டு உள்ளல் - 1அவ்விந்திரியங்கள் தத்தம் விடயங்களை வேறு வேறு கண்டறிதன் மாத்திரையே யன்றி இத்தொழிற்பாட்டையுடையேம் யாம் எனவும் அறிய மாட்டா வாகலான்;

ஒன்றல்லை ஓர் - அவ்வைந்தன் தொழிற்பாட்டையும் அறிந்து அவற்றின் வரும் பயன் கொள்வதாய நீ அவற்றின் வேறாவை, அதனை ஆராய்ந்து அறிவாயாக என்க.

2ஆகி யென்னுஞ் சிறப்புவினை ஆய் என்னும் பொது வினையோடு முடிந்தது; 3“இவனும் இவளும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப” என்றாற்போல. ஆ யென்பது வினைத்தொகை. 4அவ்வஞ்செழுத் தென்க. அஞ்செழுத்தாற் செலுத்தப்பட்ட பொறியை ஆகுபெயரான் அஞ்செழுத் தென்றார். அஃது 5இருமடி யாகுபெயராய் ஐம்பொறியின் தொழிற்பாட்டை யுணர்த்தி நின்றது. உள்ளல் உள்ளலா லென்க.

இம் மூன்றதிகரணங்களாலும் சாக்கிரத்தின் நிகழும் இயல்பு பற்றி ஆன்மாவின் உண்மை சாதிக்கப்பட்டது.

** நான்காமதிகரணம்**
இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மாவுள தென்றது.

என்பது மேற்கோள்.
என்னுதலிற்றோ வெனின், 1“நேச விந்திரியங்கட்கு நிகழறிவு இதனாற் காண்டும்” என நீவிருங் கோடலின், அவ்விந்திரியங்களின் வேறாய் அங்ஙனம் அறிவது 2புரியட்டக வுடம்பேயாமென அமையும்; அது புறத்து நிகழாதாயினும், அகத்தே நின்று இந்திரியங்களைப் புறத்திற் செலுத்தி அறியுமெனக் கோடும் எனச் சூக்கும தேகான்ம வாதிகள் கூறுங் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் நாலாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற் கோடல் நுதலிற்று.

(இ-ள்) ஐம்பொறிகளும் ஒடுங்கின சொப்பனத் தானத்தின் நிகழ்ந்தவற்றை யறிதலின், ஆன்மா வேறுண்டு எ-று,

3ஒடுக்கம், ஆகுபெயர்.
(பொ- ரை) 4நனவின்கட் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது உளதாகலின் அதுவே ஆன்மாவாம் என்றது

என்பது பொழிப்புரை.

என்னுதலிற்றோ வெனின், சொப்பனத்தின் நிகழ்ந்தவற்றை அறிவதும் சூக்கும தேகமே யாகலின், இது 1சித்தசாதனமாமால் என்னுங் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் வெளிப்படை

இஃது என் சொல்லியவாறோ எனின், ஒடுக்கமறிதலின் என்றது ஒடுக்கத்தின் நிகழ்ந்தவற்றை நனவின்கண் மயங்கி யறிதல் என்னும் 2பொருட்டாதலாற் சித்தசாதனமாதல் யாண்டையது என விடுத்தவாறு என்பது;

கனவு கண்ட சூக்கும வுடம்பே நனவின்கண் அதனை யறியு மாயின் கண்டபடி யறியாது மயங்கி யறிதல் கூடாமையின், உயிர்க் காயின் அதுபோல் ஒரு தன்மைத் தாதலின்றி அகத்துச் சேறலும் புறத்துச் சேறலுமாகிய 3வேறுபாடுண்மையான், அதுபற்றி மயங்கி யறிதல் கூடுமாகலின் அங்ஙனம் அறியும் உயிர் வேறுண்டென்பது கண்டுகொள்க.

உதாரணம்

அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிக டாங்கிடப்பச்
செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி - யவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை
மாறலுட னீயல்லை மற்று

என்பது உதாரணம்.

என்னுதலிற்றோ வெனின், கனவின்கட் செல்லுமாறும் ஆண்டு நிகழுமாறும் மீளவருமாறும் உணர்த்தி4அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.

(இ-ள்) அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்ப - மேல் உயிரன்று எனக் கூறிப் போந்த தூலவுடம்பினின்று உயிர்ப்பனவாய ஐம்பொறிகள் ஆண்டே உயிர்ப்பொழிந்து கிடப்ப;

அடங்கி அவ்வுடலில் செவ்விதின் சென்று - அவை அங்ஙனங் கிடந்த வழிப் புறத்து நிகழுந் தொழிற்பாடெல்லாம் அடங்கி அவ் வுடம்பினுள்ளால் 1வருத்தமின்றிச் சென்று;

அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி - அத்தூல வுடம்பு போல அதனின் வேறாய 2தோருடம்பை யெடுத்துக் கொண்டு வேறோர் ஆற்றால் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று 3விளையாடி; மீண்டு அதனை மாறல் - மீளவதனை மாறி மேற்சேறலான்; நீ உடல் அல்லை - நீ அச்சூக்கும தேகமல்லை, அதனின் வேறாகுவை எ-று

4உயிர்ப்ப வென்றது அன் பெறாத அகரவீற்றுப் பலவறி சொல். உயிர்த்தல், தொழிற்படுதல். தாமும் மற்றும் அசை. மீண்டு, மீள, மாறல், மாறலான் என்க. 5மற்று, வினைமாற்று.

இவ்வதிகரணத்தால் சொப்பனத்தின் நிகழும் இயல்புபற்றி உயிருண்மை சாதிக்கப்பட்டது.

ஐந்தாமதிகரணம்
இனி, கண்படில் உண்டி வினையின்மையின் ஆன்மா உளதென்றது;

என்பது மேற்கோள்.

என்னுதலிற்றோ வெனின், சொப்பனத்தான மாத்திரையி னன்றித் தொழிற்படாத சூக்கும தேகம்போலன்றிச் சுழுத்தி துரியங்களினும் தொழிற்படுவதாய பிராணவாயுவே அடங்குதல் விடுதல் செய்து அறிவதாகிய ஆன்மாவாதல் அமையும் எனப் 1பிராணான்ம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் ஐந்தாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.

(இ-ள்) 2வெளிப்படை.

3உண்டிவினை, உம்மைத்தொகை. அஃது “உண்டியும் வினையும் இன்றிக் கிடந்து” 4என வழிநூலாசிரியர் கூறிய வாற்றானும் உணர்க.

(பொ -ரை) ஒடுங்கினவிடத்து இன்ப துன்பஞ் சீவனம் பிர கிருதிக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்து இன்ப துன்பம் சீவியாநிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.

என்பது பொழிப்புரை.

என்னுதலிற்றோ வெனின், கண்படை கொண்டவழி உண்டி வினையில்லை யென்றது உடற்கோ? பிராண வாயுவுக்கோ? என வினாயினார்க்கு உடம்பு உயிரன்மையான் அதற்கு அவை இல்லாமை பற்றி ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை; இனிப் பிராணவாயுவுக்கு எனின், அது துயின்றெழுந்த பின்னர்ச் சுகமாகத் துயின்றேன் என்று அறிதல் பிறிதோராற்றால் பெறப்படாது என்னும் அருத்தாபத்தியான், 1ஆண்டும் இன்பநுகர்ச்சி உண்டென்பது பெற்றாம்; விழித்துழிப்போல உறங்குழியும் பிராணவாயு இயங்குதலான், வினையுண்மையும் கண்டாமாகலின், அதற்கு அவை ஆண்டு இல்லை யென்றல் மாறுகோள்போலும் என்னுங் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ஈண்டு உண்டியென்றது விடயங்களின் இடமாக வரும் இன்ப துன்ப நுகர்ச்சியை; வினையென்றது உடம்பு சேட்டித்தலை யாகலின்; இவையிரண்டும் 2பிராணவாயுவை யொழித்து ஒழிந்த கருவிகளெல்லாம் ஒடுங்கிய துயிலிடத்து அஃதியங்கா நிற்பவும், உடம்பின்கண்ணே நிகழ்தலின்மையின், அவையொடுங்காத நனவினிடத்து அவையிரண்டும் அதன்கண் நிகழ்தலுண்மையின், அவ்வின்மை யுண்மைகட் கேதுவாகக் கருவிகளை யொடுக்கியும் ஒடுக்காதும் நிற்பது யாது அதுவே அவ்வான்மா என்றவாறாம். கண்படில் உண்டிவினை யின்மையின் ஆன்மாவுளதென மேற்கொண்டது எ-று.

பிராணவாயுவை யொழித்து ஒழிந்த கருவிகளென்பது 3ஆற்றலான் வந்தது. இன்ப துன்ப நுகர்ச்சியை 4இன்பத் துன்பமென்று உபசரித்தார். சீவனம், சீவித்தல்; சேட்டித்த லென்றவாறாம். 5செவ்வெண்தொகை விகாரத்தால் தொக்கது. சீவியாநிற்ப தென்பது சீவியாநிற்ற லென்னுந் தொழிற்பெயர் மாத்திரையாய் நின்றது, “உறங்குவது போலும்” என்புழிப்போல. 1உளதென்றது, தனித் தனி சென்றியையும்.

துயின்றுழியும் விழித் துழியும் திரிபின்றி ஒரு தன்மைத்தாதல் பற்றி உடம்பு 2பிரகிருதி யெனப்பட்டது. 3பிரகிருதிக் கென்றது உருபுமயக்கம்.

இரண்டு காலத்தும் ஒப்ப இயங்குதல் பற்றிப் பிராண வாயு