சிலம்பின் கதை
பேரா. டாக்டர். ரா. சீனிவாசன்நூல் விளக்கம்

முதற்பதிப்பு : ஜூலை, 1998 நூல் பெயர் : சிலம்பின் கதை ஆசிரியர் : ரா. சீனிவாசன் பொருள் : இலக்கியம் பதிப்பகம் : அணியகம் 5, செல்லம்மாள் தெரு, செனாய் நகர், சென்னை - 600 030. தாள் : மேப் லித்தோ அளவு : Crown 1 / 8 எழுத்து : 10 புள்ளி விலை : ரூ.50/- ஒளியச்சு : லேசர் இம்ப்ரெஷன், சென்னை - 600 030. அச்சகம் : நெல்சன் பிரிண்டிங் சென்னை - 600 029.

முன்னுரை

தமிழில் இராமாயணம் பாரதம் இவற்றிற்கு வந்துள்ள உரைநடை நூல்கள் போலச் சிலப்பதிகாரத்துக்கு இதுவரை யாரும் எழுத முன்வரவில்லை. அதனை இவ் உரைநடை நூல் நிறைவு செய்கிறது.

இதன் தனிச் சிறப்பு : மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது.

மற்றும் “சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது.

இது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின்பால் நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள். இவற்றைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. இவ்வகையில் இதனை ஒரு “திருக்குறள்” என்றே கூறலாம். திருக்குறளின் விரிவாக்கமே சிலப்பதிகாரம் எனலாம்.

திருக்குறள் செய்திகளை ஆசிரியர் நேரில் அவர் தம் கூற்றில் கூறுகிறார். இது கதைப் பாத்திரங்கள் வாயிலாக உணர்த்துகிறது. திருக்குறளைப் போல இக்காவியமும் தமிழர் அறக் கோட்பாடுகளை வற்புறுத்துவது ஆகும்.

உரைநடையில் படிக்கிறபோது மொழிச்சிக்கல் ஏற்படுவது இல்லை; பொருள் விளக்கம் நாடத் தேவை இல்லை. இன்றைய தமிழ் நடை தெளிவான போக்குடையது; பண்பட்ட நடை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். “வாசகர் நடை” என்று தமிழ் இலக்கியம் பயிலாத்வர் எழுதும் நடை பழங்காலத்து நிலை, இன்று தூய இனிய எளிய நடையில் தர முடிகிறது. இதுவும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

ரா. சீனிவாசன்


உள்ளடக்கம்

1. புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

2. மனை அறம் படுத்த காதை

3. அரங்கேற்று காதை

4. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

6. கடல் ஆடு காதை

7. கானல் வரி

8. வேனில் காதை

9. கனாத்திறம் உரைத்த காதை

10. நாடு காண் காதை

2. மதுரைக் காண்டம்

11. காடு காண் காதை

12. வேடுவ வரி

13. புறஞ்சேரி இறுத்த காதை

14. ஊர் காண் காதை

15. அடைக்கலக் காதை

16. கொலைக்களக் காதை

17. ஆய்ச்சியர் குரவை

18. துன்ப மாலை

19. ஊர் சூழ்வரி

20. வழக்குரை காதை

21. வஞ்சின மாலை

22. அழற்படு காதை

23. கட்டுரை காதை

3. வஞ்சிக் காண்டம்

24. குன்றக் குரவை

25. காட்சிக் காதை

26. கால்கோள் காதை

27. நீர்ப்படைக் காதை

28. நடுகற் காதை

29. வாழ்த்துக் காதை

30. வரந்தரு காதை


கண்ணகி

மாதவி

கோவலன்

துணைப் பாத்திரங்கள்

அணிநலன்கள்

இளங்கோவடிகள் - ஒரு மதிப்பீடு

பதிகம்

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்

சிலப்பதிகாரம் என்னும் பெயரால்

நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்

- இளங்கோவடிகள்

வான் சிறப்பும் வாழ்த்தும்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை போன்று இவ்

அம்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு

மேரு வலந்திரித லான்.

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாமநீர் வேலி உலகிற்கு அவ்ன் அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்!

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்தொழுக லான்.

1. புகார்க் காண்டம்

1. திருமண வாழ்த்து

(மங்கல வாழ்த்துப் பாடல்)

புகார் நகர்

சோழநாடு காவிரி பாயும் வளமிக்க நாடு; அதன் தலைநகரம் உறந்தை எனப்படுவது; அதன் துறைமுகம் புகார் நகர் ஆகும். இதனைப் பூம்புகார் என்றனர். இது வணிகச் சிறப்புக் கொண்ட வளமான நகராக விளங்கியது.

இச் சோழநாட்டை ஆண்ட மன்னர்கள் வீரமும், கொடையும், நீதி வழுவா ஆட்சியும் கொண்டவராகத் திகழ்ந்தனர். திங்களைப் போன்று குளிர்ச்சியும், ஞாயிறு போன்று ஆட்சியும், மழையைப் போன்று கொடைச் சிறப்பும் உடையவராகத் திகழ்ந்தனர்.

இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை.

மாநாய்கன்

இப்பூம்புகார் நகரில் செல்வச் சிறப்பும், கொடைச் சிறப்பும் உடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மாநாய்கன் என்பான் அச் செல்வன்; வறியவர்க்கு ஈந்து வான்புகழ் நாட்டினான்.

அவன் ஒரே செல்வமகள் கண்ணகி என்பாள்: அவளுக்கு வயது பன்னிரண்டு ஆகியது. அவள் கண்கவரும் பேரழகு உடையவள்; அதனால் அவளை, “ஈகைவான் கொடி யன்னாள்” என்று சிறப்பித்துப் பேசினர். “வானத்து மின்னல்” என அவள் புகழப்பட்டாள்.

மற்றும் அவள் பேரழகு காண்பவரைக் கவர்ந்தது. திருமகள் வடிவு இவள் வடிவு என்று பேசினர்; இவள் கற்பின் திறம் பாராட்டப்பட்டது. வடமீன் ஆகிய அருந்ததி அனையவள் என்று அவ் ஊர் மகளிர் அவளைப் பாராட்டினர்.

மாசாத்துவான்

அதே ஊரில் செல்வச் சிறப்பும், உயர்மதிப்பும் பெற்ற வணிகன் மற்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மாசாத்துவான் என்பது ஆகும். அவன் அரசனும் மதிக்கத்தக்க குடிமகன் என்று பாராட்டப்பட்டான். மாநாய்கனைப் போலவே வறியவர்க்கு வழங்குவதில் மிக்க புகழ் பெற்றிருந்தான். அவனுக்கும் ஒரே மகன் கோவலன் என்பான்; வயது பதினாறு ஆகியது. அவன் நற்குணத்தை அனைவரும் பாராட்டிப் பேசினர். அவன் அழகில் முருகன் என்று நங்கையர் மதித்துப் பாராட்டினர். அவனை “மண்தேய்த்த புகழினான்” என்று இளங்கோ அறிமுகம் செய்கின்றார். உலகு எங்கும் அவன் புகழ் பேசப்பட்டது.

மண நிகழ்ச்சி

இரு குடியினரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்; வணிகப் பெருமக்கள். இவர்கள் தம் மக்களுக்கு மணம் முடிக்கக் கருதினர். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்விப்பதில் ஆர்வம் கொண்டனர். நாள் குறித்துச் செய்தியை நகரத்துக்கு அறிவித்தனர். அவர்கள் செல்வ நிலைக்கேற்ப மிகவும் ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தினர்.

ஊரவர்க்குச் செய்தி அறிவிப்பதிலேயே அவர்கள் செல்வச் சிறப்பு வெளிப்பட்டது. யானையின் பிடரியில் அழகிய மகளிரை அமர்வித்து வெண் கொற்றக் குடைகள் புடை சூழச் சங்கும் முழவும் அதிர ஊர்வலமாகச் செல்ல வைத்தனர். அந்த ஊர்வலத்தில் மங்கலத்தாலியும் வைக்கப்பட்டது. 'மாநகர்க்கு ஈந்தார் மணம்” என்று கூறுவர் கவிஞர்.

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து மணம் நடத்துவது அக்கால வழக்கமாக இருந்தது. புரோகிதரை வைத்தே திருமணம் நடத்தினர். சித்திரை மாதம் சந்திரன் உரோகிணியை அடையும் நாள் நன்முகூர்த்தமாக நிச்சயிக்கப்பட்டது. பந்தலிட்டு மண மேடையை அலங்கரித்தனர். வைரத் தூண்கள் பந்தலைத் தாங்கின. நீலப் பட்டாடை விதானமாக அமைந்தது. பூக்களையும், முத்து மாலைகளையும் சரங்களாகத் தொங்கவிட்டனர். பூ இட்ட பந்தலில் முத்துகள் பதிக்கப் பெற்று இருந்தன.

மேடையில் கண்ணகியோடு கோவலன் அமர்ந்தான்; முன்னர் வேள்வித் தீ எழுப்பினர். மணமகன் மணமகளைக் கைப்பிடித்துத் தீயை வலம் வந்தான். அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு வலமாக வந்த காட்சி அங்கிருந்தவர் மனத்தை மகிழ்வித்தது. வியத்தகு காட்சியாகக் கொண்டனர்.

வாழ்த்துரை

அம் மண மண்டபத்தில் மங்கையர்கள் கலகலப்பாகச் செயல்பட்டனர். பூ அணிந்த மகளிர் பொலிவு ஊட்டினர். இளைய நங்கையர் அங்கு வளையச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் மேனிஅழகு கண்ணைக் கவர்ந்தது. ஒசிந்த நோக்கு அவர்கள் கசிந்த ஆர்வத்தைக் காட்டியது. நறுமணம் பூசி அவர்கள் கவர்ச்சியோடு விளங்கினர். பாட்டும் உரையும் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

தட்டுகளில் பூக்களையும், சுண்ணத்தையும், அணி வகைகளையும் தாங்கிச் சென்றனர். பூரண பொற்குடம் ஏந்தினர். ஒளிவிளக்கு ஏந்தினர். வண்ணம் ஏந்தினர். சுண்ணம் ஏந்தினர். பாலிகைக் குடம் தாங்கினர். எங்கும் மங்கலக் காட்சியைத் தங்க வைத்தனர்.

கூந்தலில் பூக்கள் சூடிய மங்கல மடந்தையர் ஆசி கூறினர். “இருவரும் இணை பிரியாமல் வாழ்க” என்று வாழ்த்துக் கூறி அவர்கள் மீது மலர்களைத் தூவி நல்லமளியில் சேர்த்தனர்.

"அரசன் வாழ்க! அவன் ஆட்சி சிறக்க!” என்று வாழ்த்துக் கூறி அம் மணவிழா நிகழ்வினை முடித்தனர்.

2. இல்லற வாழ்க்கை

(மனையறம்படுத்த காதை)

கண்ணகியும் கோவலனும்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

என்பார் வள்ளுவர். அவர்கள் அன்பு வாழ்க்கை இன்பத்தில் தொடங்கியது. காதலில் களித்துக் கவிதைபாடி அவன் சிறந்த காதலன் என்பதை வெளிப் படுத்தினான். முன்பின் பழகாதவர்கள்; காதலித்து மணம் செய்து கொண்டவர்கள் அல்லர், மணம் செய்து கொண்டு காதலித்தவர்கள்.

அவர்களை இன்ப இரவுகள் இணைத்தன. அவன் “முதல் இரவு” என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றுதான் கூற முடியும். இன்பத்தின் எல்லையை முதற் சந்திப்பிலேயே கண்டான். கண்ணகியை நேசித்தான்.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவன்; அதனால் எழு நிலை மாடத்தில் அவன் முதல் இரவு தொடங்கியது. இடைநிலை மாடத்தில் இருவரும் இருந்தனர்; அமர்ந்த காட்சி அதில் இன்பவாழ்வு தொடங்கினர்; நெருங்கினர்; கிளர்ச்சிகள் பின்பு அவர்களைத் தொடர்ந்தன.

தென்றல் காற்றுச் சாளரம் வழியாக உள்ளே நுழைந்தது. அது பல்வகை மலர்களின் வாசத்தை அள்ளிக் கொணர்ந்தது. வாசமும் குளிர்ச்சியும் மிக்க தென்றல் அவர்களைத் தூண்டியது; காதல் உணர்வைப் பெருக்கியது.

தென்றலின் சுகம் அவர்களை நிலா வெளிச்சத்தைத் தேடத் தூண்டியது. நிலவு ஒளியில் அவர்கள் கலவி இன்பத்தைக் காண விழைவு கொண்டனர். நிலாமுற்றம் ஏழாவது மாடத்தில் இருந்தது. அதனைத் தேடி அங்குப் பூக்கள் பரப்பிய படுக்கையில் அவர்கள் இன்பக் கேளிக்கைகளைத் தொடுத்தனர்.

அவள் மார்பிலும், தோளிலும் வண்ண ஓவியங்கள் தீட்டினான். 'கரும்பும் வல்லியும்' காம இச்சையைத் தூண்டும் சித்திரங்கள்; அவற்றைச் செம்பஞ்சுக் குழம்பில் தீட்டி அவள் மேனியைத் தொட்டான்; அவள் அழகினைக் கண்டான்; இன்பக் களிப்பின் ஆரம்ப அகராதி அது.

சுட்டும் விழிகள் சூரிய சந்திரரோ என்று பாடினான் பாரதி; அவள் வட்டக் கரு விழிகள் வானக் கருமுகிலோ என்றான். இங்கே அவர்கள் இருவரும் சூரிய சந்திரகளாக ஒரே இடத்தில் அமர்ந்து புத்தொளி ஊட்டினர். சூடும் குளிர்ச்சியும் அவர்களிடத்தில் இடம் பெற்றன. விலகி இருக்கும்போது வெப்பத்தையும், அருகில் வரும்போது குளிர்ச்சியையும் தந்தாள். அவர்கள் இருவரும் தழுவிக் கொண்டனர். இதயம் இடம் மாறின என்பர் கம்பர். அது காதல்; கலவி இன்பம் அதைக் கூறும்போது ஒருவர் மற்றவர் ஆயினர் என்று கூறுவதே சிறப்பாகும். "அவன் தாங்கிய செங்கழுநீர்த் தாரும் அவள் அணிந்திருந்த முல்லை மாலையும் தழுவிக் கலந்தன" என்று கூறினால் அது சிறப்பாக அமையும்.

தாரும் மாலையும் மயங்க அவன் தன் வசம் இழந்தான்; தன்னை இழந்தான்; அவள் பேரழகை வியந்து பாராட்டினான்.

நலம் பாராட்டல்

நெற்றியின் அழகு அவனுக்குப் பிறைச் சந்திரனை நினைவுக்குக் கொண்டு வந்தது; "சிவன் தன் சடைமுடியில் தரித்திருந்த பிறையை அவளுக்குத் திருநுதல் ஆகுக என்று கொடுத்து விட்டான்" என்று பாராட்டினான்.

அவள் புருவங்களின் வளைவு அவனை வளைத்தது. காமன்வில் அதுபோலக் கணைகளைப் பொழிவது அவள் புருவங்கள்; மன்மதனின் வில் என முடிவு செய்தான். தன் கரும்பு வில்லினை அவளுக்குப் புருவமாகப் படைத்து அந்த மன்மதன்தான் தந்துவிட்டானோ" என்று வியந்தான்.

அவள் இடை மெலிந்திருந்தது; அது முறியாமல் உறுதியாக இருந்தது: "அது இந்திரன் தந்த வச்சிரப்படை" என்றான்.

அவள் கண்கள் வேல்கள் எனப் பாய்ந்தன. அவனுக்கு வேதனை தந்தன. அவை அவனைப் புண்படுத்தின. அதனால் தாக்கப் பெற்றான். “அவை கண்கள் அல்ல; வேல்கள்” என்றான். “முருகன் தன் வேலினை இரண்டாக உடைத்து அவற்றைக் கண்கள் இரண்டாக அமைத்து விட்டான்” என்று பேசினான்.

அவன் கற்பனைகள் எங்கெங்கோ செல்கின்றன. அவள் சாயல் மயிலை நினைப்பூட்டியது; நடை அன்னத்தைக் காட்டியது; இனிய மொழி கிளியை அழைத்தது.

“அவள் சாயல் கண்டு அதற்குத் தோற்று மயில் காடுகளை அடைந்துவிட்டது; அவள் நடைக்கு அன்னம் தோற்று நன்னீர்ப் பொய்கையை அடைந்துவிட்டது. அமிழ்தும் யாழும் குழைத்த அவள் இனியதொரு கிளவி கேட்டுக் கிளி வருந்துகிறது. முழுமையாகக் கற்றுக்கொள்ள அவளை விட்டு நீங்காமல் உடன் உறைகிறது”என்று பாராட்டினான்.

“தோழியர் அவர்களுக்குக் கோலம் செய்தவர்கள் மாபெரும் தவறு செய்து விட்டார்கள்” என்று பேசுகிறான். “மங்கலத்தாலி அது ஒன்று போதும். பிங்கல நிகண்டுபோல் அவர்கள் பிற அணிகள் அணிவித்தது ஏன்?” என்று கேட்கிறான்; “முலைத் தடத்திடை அவர்கள் அலைத் திடல் என எழுதிய தொய்யில் போதுமே” என்றான். “முத்து ஆரம் ஏன் அணிவித்தனர்” என்று கேட்கிறான். “நகை அது மிகை” என்று கூறி அவன், “அழகுக்கு அழகு செய்வது வீண்” என்கிறான்.

பின் அவளைத் தொடர்ந்து மேனி அழகைக் காண்கிறான்; “பொன்னே” என்கிறான். தொட்டுப் பார்க்கிறான்; “வலம்புரி முத்து” என்கிறான். நுகர்வில் கண்ட இன்பம் அதனால் அவளை “நறு விரை” என்கிறான். இதழ்ச் சுவையால் “கரும்பு” என்கிறான். மொழிச் சுவையால் “தேன்” என்கிறான்.

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே” என்று அடுக்கிக் கொண்டே போகிறான். உலவாக் கட்டுரை பலவற்றைக் கூறுகிறான்.

கிடைத்தல் அருமைபற்றி “அருந்திறல் பாவாய்” என்கிறான். அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள் என்பதால் “ஆருயிர் மருந்து” என்கிறான். “அலையிடைப் பிறவா அமுது”, “மலையிடைப் பிறவா மணி”, “யாழிடைப் பிறவா இசை” என்று அவள் அருமைகளைக் கூறுகிறான். அவள் வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். 'குலமகள்' என்பதை அறிந்து அவளுக்கு அதனால் தனி மதிப்புத் தருகிறான். “பெருங்குடி வாணிகன் பெருமட மகளே” என்று அழைக்கிறான். செல்வக் குடியில் பிறந்த சிறப்பினைச் செப்புவதாக அக் கூற்று அமைகிறது. அவள் கூந்தலைத் தடவிக் கொடுக்கிறான். “தாழிருங் கூந்தல் தையால்” என்று விளிக்கிறான். தாழிருங் கூந்தல் விரிந்த கூந்தலாக மாறும் என்பதை அவன் எப்படி முன் கூட்டி உணர முடியும்!

அறவாழ்க்கை

தருக்குமிக்க வாழ்க்கை இன்பச் செருக்கோடு திகழ்கிறது. இவ்இன்ப வாழ்க்கை அவர்கள் அன்பினை மலரச் செய்யத் துணை செய்கிறது. அன்பும் அறனும் சேரும் போதே வாழ்க்கை பயன்மிக்கதாக மாறுகிறது; மலர்கிறது.

கோவலனின் தாய் ஆகிய அவ்வீட்டுப் பேரியல் கிழத்தி அவளைத் தனியே குடி வைத்து உரிமையுடன் வாழ வழி வகுத்தாள். அன்போடு அமைந்த அவ்வாழ்வு அறத்தோடு இயைந்து பண்பும் பயனும் கொண்டதாக முழுமை பெற்றது. சுற்றமும், அறவோர்களும், விருந்தினர்களும் அவள் வீடு தேடி வந்தனர். சுற்றம் சூழ இருந்து  நற்றவம் மிக்க இல் வாழ்க்கையை நடத்தினாள். இவ் இன்ப வாழ்க்கை சில ஆண்டுகளே நீடித்தது.

அவர்கள் அடைந்த இன்பத்துக்கு எதனை உவமையாகக் கூறுவது? காமத்தில் கலந்து மகிழும் பாம்புகளைத் தான் உவமை கூற முடியும்; இவர்கள் நிலையாமையைக் கண்டு அது பயன்படக்கழிய வேண்டும் என்ற கொள்கை உடையவர் போல் வாழ்க்கையை நேசித்தனர். இடையறாத மகிழ்வு கண்டனர்.

3. மாதவியுடன் தொடர்பு

(அரங்கேற்று காதை)

மாதவி

ஆண்டுகள் சில கழிந்தன; அதற்குள் புதிய தொடர்பு எழச் சூழல்கள் உருவாயின.

நாட்டிய அழகி மாதவி ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் தேர்ந்தவள் ஆயினாள். அவள் ஊர்வசி மரபில் வந்தவள் என்று பேசப்பட்டது. அதற்கு ஒரு கதையும் கூறப்பட்டது.

இந்திரன் அவையில் சந்திரன் எனத் திகழ்ந்த சயந்தனைக் காதலித்த நடனமாது ஆகிய ஊர்வசி நாட்டியம் பிறழ்ந்தாள். அதனால் அவள் மண்ணுலகில் பிறக்கச் சாபம் பெற்றாள். அவள் சாபம் இங்கு இப்புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது; அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது. என்பர். அத்தகைய சிறப்பு மிக்க ஊர்வசி புகார் நகரில் பிறந்தாள். அவ்வழி வந்தவள் மாதவி என்று சிறப்பித்துப் பேசப்பட்டது.

கலைச் சிறப்பு

ஐந்தில் தொடங்கி ஏழாண்டுகள் அவள் நாட்டியக் கலை பயின்று தேர்ச்சி பெற்றாள். அவள் கலையை நாடறியச் செய்ய ஒரு வாய்ப்பு; அவள் நாட்டிய அரங்கு ஏறி, அரசனின் மதிப்பையும் பாராட்டையும் பெற விரும்பினாள். தன் கலைத் திறனை நன்கு மன்னனுக்குக் காட்ட வேண்டி அரங்கு ஏறினாள்.

அவள் ஆடல் கலைக்குத் துணை நின்றவர்கள் நாட்டிய ஆசான்; பாட்டியல் புலவன்; இசைப்புலவன்; தண்ணுமையாளன் (முழவு இயக்குபவன்); யாழ் வாசிப்பவன் குழலோன் இத்தகையவர் ஆவார்.

நாட்டிய மேடை

நாட்டிய அரங்கு சிற்ப சாத்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஒன்று. அதன் உயரம், நீளம், அகலம் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டு விளங்கியது. தக்கோன் ஒருவன் கைவிரல் அளவு இருபத்து நான்கு கொண்டது ஒரு கோல் எனப்பட்டது.

தரையில் இருந்து மேடை ஒரு கோல் அளவினதாக இருந்தது; அதன் அகலம் ஏழு கோல் அளவு என்றும், நீளம் எட்டுக்கோல் அளவு என்றும், உயரம் நான்கு கோல் அளவு என்றும் கூறப்பட்டன. திரைச் சீலைகள் ஒரு முக எழினி, எதிர்முக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று வகை அமைக்கப்பட்டன. வழிகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தன. மேடை மீது வருணப் பூதர் சித்திரங்கள் மாட்டி இருந்தனர். இந்த இசைக் கலைஞர்கள் அத்தெய்வங்களை வழிபட்டே நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். அதன் விளக்குகள் தூண்களின் நிழல்கள் தடுக்காதவாறு தக்க வகையில் அமைக்கப்பட்டன. தலைக்கோல் அதனை மேடையில் நிலைக்கோலாக வைத்துச் சிறப்புச் செய்தனர்.

ஆடல் நிகழ்ச்சி

மாதவி வலக் கால் எடுத்து வைத்து மிதித்து மேடை மீது ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர் இடப் பக்கம் ஏறி நின்றனர். நிகழ்ச்சிகள் தொடங்கின.

முதற்கண் தெய்வப் பாடல்கள் இரண்டு அத் தோரிய மகளிர் பாடினர். அவற்றிற்குப் பக்க இசையாகக் கருவி இசையாளர் தொடர்ந்து இசைத்தனர். அவர்கள் பாடி முடித்த பிறகு மாதவி ஆடியும், பாடியும் தன் கலைத் திறத்தை அவையோர் அறியச் செய்தாள். நாடக நூல் காட்டிய இலக்கணம் பிழையாது பல்வகை ஆடல்களையும் கூத்து வகைகளையும் ஆடிக் காட்டினாள்.

அரசன் பாராட்டு

அரசனின் பாராட்டை அவள் பெற்றாள். அதற்கு அடையாளமாகப் பச்சிலை மாலையைப் பரிசாகத் தந்தான். சிறப்புத் தொகையாக ஆயிரத்து எட்டுக்கழஞ்சுப் பொன் தந்து சிறப்பித்தான். தலைக்கோல் பட்டத்தையும் அவளுக்கு அரசன் தந்து பாராட்டினான்.

அவள் தலை அரங்கு ஏறினாள்; அரசனால் பாராட்டப் பெற்றாள்; 'ஆடற் செல்வி' என்று அங்கீகரிக்கப்பட்டாள்.

மாலை ஏற்றல்

கணிகையர் குலத்தில் பிறந்தவள் ஆயினும் ஒருவனோடு வாழ அவள் விரும்பினாள். கண்ணியம் மிக்க வாழ்வில் அவள் கருத்துச் செலுத்தினாள்; தக்கவனைத் தேடித் தரச் சித்திராபதி விரும்பினாள். பச்சிலை மாலைக்கு அரசன் நிச்சயித்த அந்தத் தொகையைக் கொடுத்து அம்மாலையை வாங்குவார்க்கு இவள் உரியவள் என்று அறிவிக்கக் கூனி ஒருத்தியை நகர நம்பியர் திரிதரு மன்றத்துக்கு அனுப்பி வைத்தாள்.

கோவலன் அம்மாலையை ஆவலுடன் வாங்கியவனாய்க் கூனி முன் செல்ல அவளைத் தொடர்ந்து மாதவியின் இல்லத்தை அடைந்தான். அவள் அணைப்பிலே அகில உலகத்தையும் மறந்தான்; விடுதல் அறியா விருப்பினன் ஆயினான். அவளைத் தொடுதலில் கண்ட இன்பம் அவனை ஈர்த்துப் பிடித்தது. வடு நீங்கிய சிறப்பினை உடைய தன் மனைவியையும், வீட்டையும் விடுதல் செய்தான்; மறந்தான்.

மாதவி இவ்வாறு நாட்டியக் கலையை நிலைபெறச் செய்தாள். அவள் கலை நிலைபெற்றது. அரங்கு ஏறி அவள் புகழ் மிக்கவள் ஆயினாள்.

4. கண்ணகியின் பிரிவுத் துயர்

(அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை)

அந்தி மாலை

மாதவி மகிழ்ந்தாள்; கண்ணகி துயர் உழந்தாள். மாலைக் காலம் கூடியவர்க்கு இன்பம் அளித்தது; பிரிந்து வாடியவர்க்குத் துன்பம் தந்தது.

இந்த மாலைப்பொழுது நில மடந்தைக்கு வான்துயர் தந்தது. கதிரவன் மறைகிறான். கணவனைக் காணாமல் வருந்துவது போல் இம்மாநில மடந்தை வருந்தியது. அதன் திசை முகங்கள் பசந்து காணப்பட்டன. திங்களின் வருகையை அது ஆவலோடு எதிர்நோக்கியது. கணவனை இழந்து கடுந்துயர் உழந்த நிலமடந்தை தன் ஆருயிர் மகன் ஆகிய திங்கள் எங்கே உள்ளான் என்று எதிர்நோக்கி இருந்தது.

பேரரசன் இல்லாத நேரத்தில் குறும்பர்கள் வந்து நாட்டு மக்களை அலைக்கழிப்பது போல் ஞாயிறு இல்லாத நேரத்தில் இந்த மாலைப்பொழுது வந்து மக்களை வாட்டியது. நில மடந்தையை வருத்தியது.

மகளிர் நிலை

இந்த மாலைக் காலத்தில் மகளிர் நிலை யாது? கணவனை விட்டுப் பிரியாதவர்கள் களிமகிழ்வு எய்தினர். பிரிந்தவர் துன்புற்று வருந்தினர். முல்லை முகைகளில் வண்டுகள் மொய்த்து அவற்றை மலர வைத்தன; கார் காலத்தில் இந்த முல்லை மலர்ச்சியைக் கண்டு “பிரிந்தவர் வந்திலர்” என்று மகளிர் வருந்தினர். ஆயர்கள் முல்லைப் பண்ணைத் தம் குழலிசையில் தோற்றுவித்தனர்; அவ் இசை அவர்களை வருத்தியது.

மகிழ்ச்சி பொங்கும் இல்லத்தினர் தத்தம் வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். இணைந்து இருந்தவர் மகிழ்வு தருவது மாலை எனக் கருதினர் மயக்கத்தைத் தருவது இது என்று பிரிந்தவர் கருதினர்.

மாதவி மகிழ்ச்சி

நிலா ஒளி வீசியது; மாலைப்பொழுது மறைந்தது. மாலைப் பொழுதாகிய குறும்பர்களைத் திங்கள் ஆகிய பேரரசன் வந்து ஓட்டியது போல நிலவு வெளிப்பாடு இருந்தது. இந்த நிலவு ஒளியில் கோவலனோடு மாதவி குலவி மகிழ்ந்தாள். மஞ்சத்தில் அவன் அவள் கொஞ்சலில் திளைத்தான். ஒப்பனைமிக்கு விளங்கி அவனுக்கு ஊடலும், கூடலும் தந்து உவகையுறச் செய்தாள்.

இவளைப் போலவே ஏனைய மகளிரும், உயிர் அனைய தம் கொழுநருடன் அவர்கள் மார்பில் ஒடுங்கிக் களித்துயில் எய்தினர். அந்த இரவு அவர்களுக்கு இன்பத்தைத் தந்தது. அவர்கள் நறுமணம் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். பூக்கள் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தனர்.

கண்ணகி கடுந்துயர்

கண்ணகி தனிமையில் வாடினாள்; அவளுக்கு வாழ்க்கை கசந்தது. அழகு ஊட்டும் அணிகள் அவளுக்குச் சுமையாயின. காலில் அணிந்திருந்த சிலம்பு அதைக் கழற்றி வைத்தாள். குங்குமம் அப்பிக் கொங்கைகளை அழகுபடுத்துவதை நிறுத்தி விட்டாள்; தாலி அது மங்கல அணியாதலின் அது மட்டும் தங்க இடம் தந்தாள். ஏனைய அணிகள் அவளை விட்டு நீங்கின. காதில் அணிந்திருந்த தோடும் அது கேடுற்றது.

அவள் நெற்றி அவன் கூடி இருந்தபோது வியர்த்து மகிழ்வைப் புலப்படுத்தியது. அந்த வியர்வை அவளை விட்டுப் பிரிந்தது.

அஞ்சனம் கண்களுக்குக் கருமை தந்தது. அதனைத் தீட்டுவதை விட்டாள்; திலகம் இட்டு நெற்றியை முன்பு அழகுபடுத்துவாள்; அது அவள் நெற்றியை விட்டு நீங்கிவிட்டது. அவள் சிரிப்பு கோவலனுக்கு மகிழ்ச்சியின் விரிப்பு; அதை அவன் இழந்துவிட்டான்.

கூந்தல் வாரி முடித்து மலர் இட்டு மகிழ்ந்திலள்; அது நெய்யணிதலும் இழந்து வறண்டு உலர்ந்து கிடந்தது. கையறு நெஞ்சோடு அவள் வருந்திச் செயல் இழந்தாள். அடி முதல் முடி வரை அவள் ஒப்பனைகள் வெறும் சொப்பனமாக மறைந்தன. சோகத்தின் உருவமாக அவள் சோர்ந்து கிடந்தாள்.

ஏனைய மகளிர்

அந்த இரவுப்பொழுது கண்ணகியை மட்டும் வருத்தவில்லை; பெண்ணணங்குகள் பலரையும் வருத்தியது. வேனிற்பள்ளி வேதனை தரும் என்பதால் அவர்கள் கூதிர்ப் பள்ளியைத் தேடிச் சென்றனர். அதன் சாளரங்களில் தென்றல் வீசியது; பிரிந்திருந்த அவர்களை அது சுட்டது; வெம்மைப்படுத்தியது; புழுக்கத்தைத் தந்தது. அதனால் காற்றும் புகாதபடி அவற்றின் கண்களை அடைத்தனர். மாலை முத்தும், சந்தனக் கொத்தும் அவர்களுக்குக் குளிர்ச்சி தருவன; அவை அவர்களுக்கு வேதனையைத் தந்தன. அதனால் அவற்றை அணிவதைத் தவிர்த்தனர். குவளையும், கழுநீர்ப் பூவும் குளிர்ச்சியை அளிப்பன. அவற்றைத் தூவிப் படுக்கையில் படுப்பது வழக்கம். பூவின் அடுக்கு அவர்களுக்கு இடுக்கண் தந்தது. மகிழ்வை வெறுத்தனர். வெம்மைமிக்க அன்னத் தூவி விரித்த விரிப்பில் தம் இரவைக் கழிக்க விரும்பினர். அங்கும் அவர்கள் கண்கள் துயில் மறுத்தன. துயிலின்றி வருந்தினர் வறண்ட வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அந்த இரவு அவர்களுக்குப் பகையாக விளங்கியது. ஊடல் காலத்தில் சினந்து சிவக்கும் அவர்கள் கண்கள் இந்த வாடல் காலத்தில் முத்துக்கள் என நீர் உகுத்துச் சிந்தின; தனிமை அவர்களை வாட்டியது.

புகார் நகர் மகளிர்

இப்படி ஒரு சிலர் வருந்தினர்; எனினும் பலருக்கு அது இன்ப இரவாகவே விளங்கியது. மன்மதனின் படைகள் மகளிர் கூட்டம் என்று கூறுவது மரபு; இந்த மக்ளிர் தம் செயலாற்றலால் ஆடவருக்கு இன்பம் அளித்தனர். மன்மதன் ஆட்சி அந்த நகரில் ஓங்கி விளங்கியது. யாமம் கழிந்தும் அவர்கள் காமம் அவிந்தவராய் அடங்கிக் கிடக்கவில்லை. இரவு நேரம் கலவிக்கு உரிய களனாக அமைந்தது; தம் துணைவர்க்குப் புலவியும் கலவியும் தந்து மகிழச் செய்தனர்.

பொழுது விடிதல்

இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. அன்னப் பறவைகள் பொய்கையைச் சார்ந்தன. ஆம்பல் குவிந்தது; தாமரை மலர்ந்தது; குவளைகள் கண்விழித்தன; பறவைகள் முரசம் போல் ஆர்த்தன; கோழிகள் சங்கு எனக் கூவின; வண்டுகள் இசைத்தன; இக்குரல்கள் அனைத்தும் சேர்ந்து ஊர் மக்களைத் துயில் எழச் செய்தன.

சோழன் வெண் கொற்றக்குடை நாட்டினர்க்கு நிழல் ஆகியது. பகைவர்க்கு நெருப்பு ஆகியது. அதுபோல இந்த இரவு கணவனுடன் இருந்தவர்களுக்கு மகிழ்வு தந்தது; பிரிந்தவர்களுக்கு வேதனை தந்தது.

5. இந்திர விழாவும் மாதவியும்

(இந்திர விழவு ஊர் எடுத்த காதை)

நகர்க் காட்சி

புகார் நகர் காலையில் கவின் மிக்கதாக விளங்கியது; காலை ஒளியில் அதன் மாடங்களும், கோபுரங்களும், கோயில் தலங்களும், மற்றும் உள்ள மன்றங்களும் அழகு பெற்றுத் திகழ்ந்தன.

இந்த நகர் சுருசுருப்பாக இயங்கியது; வணிகர்கள் மிக்கு வாழ்ந்தனர்; அவர்கள் குடியிருப்புப் பெருமை தேடித் தந்தது.

மருவூர்ப் பாக்கம்

மருவூர்ப் பாக்கம் என்பது நகரின் உட்பகுதியாகும். பட்டினப் பாக்கம் என்பது கடற்கரையை அணுகிய பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்; வாணிபம் செய்வோரும், தொழில் செய்வோரும் வாழ்ந்த பகுதி அது; மற்றையது உயர் குடிமக்கள் வசித்த இடமாகும்.

மாடி வீடுகளும், அழகுமிக்க இருக்கைகளும், மான கண் போன்ற சன்னல்கள் வைத்த மாளிகைகளும், பொய்கைக் கரைகளில் கவர்ச்சிமிக்க யவனரது வீடுகளும், வேற்று நாட்டவர் வசிக்கும் நீர் நிலைகளின் கரைகளில் கட்டி இருந்த வீடுகளும் அந்நகரை வளப்படுத்தின, அழகு தந்தன.

தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு என வகைப்படுத்தி இருந்தனர்; நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும், அணிகலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்கள் குவித்து விற்றவர் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை வாசனைப் பொருள்கள் விற்போர், இரைச்சி, எண்ணெய் விற்போர், பொன் வெள்ளி செம்புப் பாத்திரக் கடைகள் வைத்திருப்போர், பொம்மைகள் விற்போர், சித்திரவேலைக்காரர், தச்சர், கம்மாளர், தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள் செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனார். இந்தப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப்பட்டது.

பட்டினப் பாக்கம்

அடுத்தது பட்டினப்பாக்கம்; உயர்நிலை மாந்தர் வசித்த பகுதி இது. அரசவிதி, தேர்விதி, கடைத்தெரு, வணிகர் தெரு, அந்தணர் அக்கிரகாரம், உழவர் இல்லம், மருத்துவர், சோதிடர், மணிகோத்து விற்பவர், சங்கு அறுத்து வளையல் செய்வோர் ஆகிய இவர்கள் தனித்தனியே வசித்து வந்தனர்.

காவற்கணிகையர், ஆடற் கூத்தியர், பூவிலை மடந்தையர், ஏவல் பெண்கள், இசைக்கலைஞர்கள், கூத்தாடிகள் இவர்கள் எல்லாம் ஒருபகுதியில் வாழ்ந்தனர்.

அரசன் அரண்மனையைச் சுற்றிப் படை வீரர்கள் குடியிருப்புகள் இருந்தன. யானை, குதிரை, தேர், காலாள் வீரர்கள் இங்குக் குடி இருந்தனர். இப்பகுதி கடற்கரையை ஒட்டி இருந்தமையால் இது பட்டினப்பாக்கம் எனப் பட்டது. முன்னது ஊர் எனப்பட்டது; இது பட்டினம் என்று பாகுபடுத்திக் காட்டப்பட்டது. இதை வைத்துத்தான் புகார் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது. இதற்குப் பூம்புகார் என்றும், பூம்பட்டினம் என்றும் இருவேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

பலிக் கொடை

இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட மையப் பகுதியே சிறப்பு மிக்கதாக விளங்கியது. கடைகள் மிக்குள்ள பகுதி, பகலில் செயல்பட்டது; இது நாளங்காடி எனப்பட்டது. இங்கு எப்பொழுதும் விற்பவர் ஓசையும், வாங்குவோர் ஓசையும் ஒலித்துக் கொண்டே இருந்தன.

மரங்களின் அடிப்பகுதியே இவர்கள் கடைகளுக்குத் தூண்களாக விளங்கின; சோலைகள் மிக்க பகுதி அது என்று தெரிகிறது; இங்கே காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைத்திருந்தனர். அது பலிப் பீடிகை எனப்பட்டது. இந்திர விழா கொண்டாடும் நாளில் இங்குப் பூவும் பொங்கலும் இட்டு மறக்குடி மகளிர் வழிபாடு செய்தனர். வீரர்கள் தங்கள் தலைகளை அறுத்து வைத்துப் பலி இட்டனர். “சோழ அரசன் வெற்றி பெறுக” என்று வாழ்த்துகள் கூறினர்.

இந்தக் காவல் பூதம் அங்கு வைக்கப்பட்டதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. முசுகுந்தன் என்னும் சோழ அரசன் இந்திரனுக்கு உதவினான்; அசுரர்களை ஓட்டினான்; அவர்கள் இவனுக்குத் தீங்கு கருதி மந்திரங்கள் சொல்லி இவனை அழிக்க முயன்றனர். அந்த அசுரர்களிடமிருந்து காக்க இந்திரன் காவல் பூதத்தை அனுப்பிவைத்தான். அப்பூதம் அசுரர் செய்த வஞ்சங்களை ஒழித்துக் கட்டியது. அங்கேயே அது நிலைத்து அந்நகருக்கு அது காவல் பூதமாக அமைந்து விட்டது.

இந்த விழா சித்திரை மாதம் சித்திரை முழுநிலவு அன்று எடுக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இவ்விரு பகுதிகளினின்றும் வீரர்கள் இங்கு வந்து விழா எடுத்துப் பலியும் தந்து கொண்டனர். இது வியத்தகு காட்சியாக விளங்கியது.

சித்திர மண்டபம்

இந்திரவிழா காண வருவோர் இப்பலிப்பீடத்தைக் கண்டு வியப்பும் மகழ்வும் அடைந்தனர். இதனை அடுத்து அந்நகரில் பார்க்கத் தகுந்த காட்சியாக விளங்கியது திருமாவளவன் அமைத்த சித்திர மண்டபம். அவன் வடநாடு சென்று வெற்றி கொண்டு திரும்பி வருகையில் பேரரசர்கள் அவனுக்குத் திறைப் பொருளாக மூன்று பொருள்களைத் தந்தனர். ஒன்று ‘கொற்றப் பந்தர்’; மற்றொன்று ‘பட்டிமண்டபம்’; மற்றொன்று ‘தோரண வாயில்’; வச்சிர நாட்டு அரசன் தந்தது கொற்றப்பந்தர், மகத நாட்டு அரசன் தந்தது பட்டிமண்டபம்; அவந்தி வேந்தன் அளித்தது. தோரணவாயில். இவை மானுடரால் செய்யப்பட்டவை அல்ல; தேவதச்சன் மயன் செய்து தந்தவை; இந்திரன் அவ் அரசர்களுக்கு அவ்வப் பொழுது தந்தவை அவை எனப்பட்டன. இவற்றை ஒருங்கு வைத்து ஒரே மண்டபமாகத் திருமாவளவன் சமைத்தான் என்பது வரலாறு. இது சித்திர மண்டபம் எனப்பட்டது. இந்திர விழாவுக்கு வருபவர் இதனையும் கண்டுமகிழ்ந்தனர்.

ஐம்பெரு மன்றங்கள்

மற்றும் அந்நகரில் காணத் தகுந்தவை ஐம்பெரும் மன்றங்கள் எனப்பட்டன. இவை பல்வேறு சோழர்கள் காலத்தில் இந்திரனால் அளிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

களவு செய்வோரை அவர்கள் தலையில் களவாடிய பொதிகளை அடுக்கிவைத்துச் சுற்றிவரச் செய்வது ‘வெள்ளிடை மன்றம்’ எனப்பட்டது. நோய் நொடியால் வாடுவோர் குளத்து நீரில் முழுகி எழுந்தால் அவர்கள் நோய் தீர்ந்தனர். அந்தக் குளம் உடைய மன்றம் ‘இலஞ்சிமன்றம்’ எனப்பட்டது; பித்தம் பிடித்தவர், நஞ்சு உண்டவர், அரவு தீண்டப் பெற்றவர் இவர்கள் துயர் நீங்கி உயர்வு பெற்றனர். அந்தப் பகுதிக்கு ‘நெடுங்கல்நின்ற மண்டபம்’ என்று கூறப்பட்டது. தீய ஒழுக்கத்தவர் அவர்களைப் புடைத்து உண்டு தண்டித்தது ‘பூத சதுக்கம்’ எனப்பட்டது. அரசன் நீதி தவறினாலும், மன்றங்கள் தவறான தீர்ப்புகள் வழங்கினாலும் கண்ணீர் உகுத்து அழுது காட்டி அநீதியை எடுத்து உரைத்தது; அது ‘பாவை மன்றம்’ எனப்பட்டது. இவை ஐம்பெரு மன்றங்கள் எனப்பட்டன. இவையும் வியத்தகு காட்சிகள் ஆயின; இவ்விழாவுக்கு வந்தவர் இவற்றைக் கண்டு வியந்தனர். விழா அழைப்பு

வச்சிரக் கோட்டம் என்பது இந்திரன் கோயில்; அதில் இருந்த முரசத்தை எடுத்து யானையின் பிடரியில் ஏற்றி வைப்பர். அதன் மீது இருந்து விழாச் செய்தியை ஊருக்கு அறிவித்தனர்.

கால்கோள் விழா இது தொடக்க விழா, கால்கோள் விழா முதல் கடைநிலை நிகழ்ச்சி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் பற்றி நவின்றனர். மங்கல நெடுங்கொடி எடுத்து ஏற்றினர்.

நகரத்து மாளிகை முன் எங்கும் தோரணங்கள் தொங்கவிட்டனர். பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர். பாவை விளக்கும், கொடிச் சீலையும், வெண்சாமரமும், சுண்ணமும் ஏந்தி விதிகளில் பொலிவு ஊட்டினர்.

நீராட்டு விழா

ஐம்பெரும் குழுவினரும், எண்பேராயத்தினரும், அரச குமரரும், வணிக இளைஞரும் தத்தமக்கு உரிய தேர்களில் ஏறிச் சென்று, “அரசன் வெற்றி கொள்வானாக” என்று, வாழ்த்துக் கூறி இந்திரனுக்கு நீராட்டு விழா நடத்தினர். குறுநில மன்னர்கள், குடங்களில் காவிரிநீர் கொண்டுவந்து இந்திரனுக்கு மஞ்சனம் ஆட்டி நீர் முழுக்குச் செய்வித்தனர். இந்த நீராட்டுதலே தலைமை விழாவாகக் கருதப்பட்டது. அதனால் இது நீராட்டு விழா எனவும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

ஊர்த்திருவிழாக்கள் மற்றும் சிவன்கோவில், முருகன், பலராமன், திருமால் இக்கோவில்களில் அவரவர் மரபுப்படி பூசைகள் நடத்தினர். தேவர்க்கும், பதினெண் பூத கணங் களுக்கும் விழா எடுக்கப்பட்டன. அறச் சாலைகளில் அவர்கள் விழா எடுத்தனர். சிறைப்பட்ட பகை மன்னரை அரசன் விடுவித்தான்.

அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தென்றல் வீசும் தெருக்களில் காமக் கணிகையர் கண்களுக்கு விருந்து அளித்தனர், அவர்கள் வடிவழகில் மயங்கி ஆடவர்கள் அவர்களோடு உறவு கொண்டனர்.

இந்தக் காதற்பரத்தையர் பேரழகு ஆடவர்களைத் திகைக்க வைத்தது. வானத்துத் திங்கள் வையகத்துக்கு வந்ததோ என்று வியந்தனர். திருமகளைத் தேடித் தாமரைம்லர் இங்கு வந்து புகுந்ததோ என்று பேசினர். கூற்றுவன் பெண் உருக் கொண்டு எம்மைப் பேதமைப் படுத்துகிறானோ என்றும் அஞ்சினர்; வானத்து மின்னல் மண்ணில் வந்து புரள்கிறதோ என்று வியந்து பேசினர். இத்தகைய அழகு உடையவர்கள்பால் தம்மைப் பறிகொடுத்துக் களி மகிழ்வு எய்தினர். அவர்களோடு தோய்ந்ததால் அவர்கள் மார்பில் எழுதியிருந்த தொய்யில் இவர்கள் மெய்யில் படிய அது இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

ஊடல் கொள்வதற்கு இந்தக் காமக் கணிகையர்தம் உறவு விட்டு மகளிர்க்குக் காரணம் ஆகியது. ஊடலைத் தீர்ப்பதற்கு அவர்கள் பட்ட பாடு ஏட்டில் எழுத முடியாது; விருந்தினர் வந்தால் ஊடல் தீர்வர். அதுவும் மருந்தாக அமையவில்லை; சுவைமிக்க வாழ்க்கை

மாதவியும் கண்ணகியும்

இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? செங்கழு நீர்ப்பு தேன்சிந்தி உகுகிறது. அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால் மகிழ்வக் கண்ணீர் சொரிந்தன.

கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் அவள் கண்ணீர் உகுத்தாள்.

மாதவியின் வலக்கண் துடித்தது: கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்: மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும் காட்டினர்.

6. கடற்கரை நிகழ்ச்சிகள்

(கடலாடு காதை)

வித்தியாதரன் விருப்பம்

கோயில் வழிபாடுகள் ஒருபுறம் கலை அரங்குகள் மற்றொருபுறம். புகார் நகரம் இன்ப வெள்ளத்தில் நீந்தியது. இந்த விழாவைக் காண விண்ணவரும் வந்தனர். விஞ்சையர்கள் கலை நிகழ்ச்சிகளைக் காணத் தொலைதூரம் கடந்து வந்தனர். அவர்களுள் ஒருவன் வித்தியாதர வீரன்.

அவன் தன் காதலியோடு, சோலை ஒன்றில் காம விளையாட்டில் மகிழ்வு கண்டான். அவளோடு உரையாடி இந்திர விழாவைப்பற்றி விளங்கக் கூறினான்.

“சித்திரை மாதம்,சித்திரை நாள் இன்று அந்த இந்திர விழா” என்று எடுத்துக் கூறினான். அங்குத் தாம் காண இயலும் காட்சிகளை எடுத்துக் கூறி அவளை உடன் அழைத்து வந்தான்.

இந்திரன் கட்டளையால் புகார் நகரில் தங்கிவிட்ட காவல் பூதத்துக் கோயில் முன்பு ஆண்டுக்கொருமுறை இந்திர விழா நாள் அன்று வீரர்கள் தம்மைப் பலி இட்டுக் கொள்ளும் காட்சி வியப்புடையது என்று கூறினான். “அந்தப் பலிப் பீடிகையைக்” காணலாம். வருக” என்று கூறினான்.

“மற்றும் ஐவகை மன்றங்களின் அருமை பெருமை களை நேரில் காண இயலும்” என்றான்.

“இந்திரன் அவையில் சாபம் பெற்றுப் புகாரில் பிறந்த ஊர்வசியின் மரபில் வந்த மாதவியின் ஆடலையும் காண்போம்” என்றான்.

வித்தியாதரன் வருகை

இருவரும் வெள்ளிமால் வரையில் இருந்து புறப்பட்டு இமயத்தைக் கடந்து வந்தனர். தேயங்கள் பலவற்றை அவளுக்குக் காட்டி அழைத்து வந்தான். செழுமையான கங்கை பாய்வதை அவளுக்குக் காட்டி மகிழ்வித்தான். உஞ்சைமா நகரத்தையும், விஞ்சைமா அடவியையும், வேங்கட மலையையும், காவிரிநாட்டையும் காட்டிய பின்னர்ப் பூம்புகார்க்கு அழைத்து வந்தான்; அங்கங்கே இருந்த கோயில்களைத் தொழுதவனாகி அவளுக்குக் காட்டிக் கோயில் விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் உணர்த்தினான்.

அதன்பின் அவன் பெரிதும் புகழ்ந்து பேசிய மாதவியின் ஆடல் நிகழ்ச்சியை அவளுக்குக் காட்டத் தொடங்கினான். விண்ணவரும் அங்குவந்து மறைந்திருந்து கண்கொள்ளா இக் காட்சியைக் கண்டு களிமகிழ்வு உற்றனர்.

மாதவியின் ஆடல் நிகழ்ச்சிகள்

மாதவியின் ஆடல் அரங்கு தொடங்கியது; முதல் நிகழ்ச்சியாகத் தெய்வப் பாடல்களைப் பாடினர். திருமாலின் புகழைப் பாடினர். இது ‘மாயோன் பாணி’ எனப்பட்டது.

இவ்வாறே நால்வகை வருணப்பூதர் புகழைப் பாடினர். அதன் பின் திங்களைப் போற்றிப் பாடினர். இது 'வானூர் மதியம்பாணி' எனப்பட்டது.

அதன் பின் கதை பொதிபாடல்களைப் பாடினர். இவை தெய்வங்கள் மானிடர் நன்மைக்காக உலகில் ஆற்றிய போர் நிகழ்ச்சிகளைச் சித்திரித்துக் காட்டின. தெய்வக் கதைகள் இதில் இடம் பெற்றன.

சிவன் திரிபுரம் எரித்த உடன் பார்வதியோடு சுடுகாட்டில் ஆடிய ஆட்டம் ‘கொடிகொட்டி’ எனப்பட்டது.

கலைமகன் பிரமன் காணத் தேர்முன் ஆடியது ‘பாண்டரங்கம்’ எனப்பட்டது.

கம்சனைத் துவம்சம் செய்த கண்ணன் அவனைக் குத்தி வீழ்த்திய நிகழ்ச்சி ‘அல்லியத் தொகுதி’ எனப்பட்டது.

கண்ணன் தன்னை எதிர்த்த வாணா சூரனை எதிர்த்து அவனைக் களத்தில் வீழ்த்திய செய்தி ‘மல்லின் ஆடல்’ எனப்பட்டது.

கடலில் சூரபதுமனை எதிர்த்து முருகன் போர் தொடுத்தான். அதைச் சித்திரித்துக் காட்டியது ‘துடிக்கூத்து’ எனப்பட்டது. அவுணரோடு போர் செய்த முருகன் அவர்களை வெற்றி கொண்டு குடைபிடித்து ஆடியது ‘குடைக் கூத்து’ எனப்பட்டது.

வாணன் பேரூர்த் தெருக்களில் நீள்நிலம் அளந்த திருமால் ஆடிய கூத்து அது 'குடக் கூத்து' எனப்பட்டது.

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தில் மன்மதன் ஆடிய கூத்து ‘பேடிக்கூத்து’ எனப்பட்டது.

அசுரர்கள் தாம் தாங்கிய போர்க் கோலத்தைத் தவிர்த்து ஒடத் துர்க்கை வெற்றி கொண்ட செய்தி ‘மரக்கால் ஆடல்’ எனப்பட்டது.

அதேபோல அவுணரை எதிர்த்துத் திருமகள் வெற்றி கொண்ட செய்தியைச் செப்புவது ‘பாவைக் கூத்து’ எனப் பட்டது.

வாணன் ஊரில் வடக்கு வாயிலில் இந்திராணி வெற்றி கொண்ட செய்தி ‘கடையம்’ எனப்பட்டது.

இப்பதினொருவகை ஆடல்களையும் மாதவி அவ்வவ் வேடங்களில் அவ்வம் மரபுகள் வழுவாமல் நடித்து நாட்டியம் ஆடி நாட்டவரை மகிழ்வித்தாள் நடிப்பு இது; வாழ்க்கை அவளை அழைத்தது.

கலை உலகில் அவள் தன் தொழிலைத் திறம்படச் செய்து இந்த உலகினரை மகிழ்வித்தாள். கோவலன் ஊடற் குறிப்போடு இருந்தான்; அவளைக் கூடி மகிழக் காத்து இருந்தான்.

மாதவியின் ஒப்பனை

காதலன் அவனை மகிழ்விக்க அவள்தன் இயல்பு நிலைக்கு வந்தாள். ஒப்பனை அவள் உடன் பிறந்தது; அவன் கலாரசிகன்; அழகை ஆராதிப்பவன். கோலம் செய்து அவனை மகிழ்விக்க விரும்பினாள். அவள் தன்னை ஒப்பனை செய்து கொள்வதே தனிக் கற்பனையாக இருந்தது.

கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள்; கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ அவனோடு ஊடலும் கூடலும் கொண்டு அவனை மகிழ்வித்தாள்.

புது விருப்பு

இந்திரவிழாவில் கலைவிழாக்களைக் கண்ட நகரத்து மாந்தர் அடுத்தது கடல்விளையாட்டைக் காணக் கடற்கரை நோக்கிச் சென்றனர். மாதவியும் அங்குச் சென்று அதனைக் காண அவாவினாள். கோவலனும் உடன் புறப்பட இசைந்தான்.

வைகறை விடிந்ததும் கோவலனும் மாதவியும் கடற்கரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் உல்லாசப் பயணமாக அமைந்தது. அவன் அத்திரி என்னும் அழகிய குதிரைமீது ஏறிச் சென்றான். அவள் வையம் என்னும் முடுவண்டியில் அமர்ந்து சென்றாள்.

வழிக் காட்சிகள்

செல்வம் கொழித்த அந்நகரின் பெருங்கடைகள் இருந்த பீடிகைத் தெருவைக் கடந்தனர். அத்தெருவில் மங்கலத்தாசியர் தத்தம் வீடுகளில் விளக்குகள் வைத்து அழகு செய்தனர். அங்கே செல்வம் குவிந்து கிடந்தது என்பதை அவர்கள் வீடுகள் விளக்கின. மலர்தூவிய விளக்குகள், மற்றும் மாணிக்க விளக்குகள் அவர்கள் இல்லங்களை அழகு செய்தன. அவர்கள் வீடுகளை அலங்கரித்தனர். அணிகலன்கள் அசைந்து ஒலிசெய்ய அவ்வழகியர் அத்தெருக்களில் திரிந்தது காட்சிக்கு இனிமை தந்தது. செல்வச் சிறப்பால் அது திருமகள் இருக்கை என விளங்கியது. கடல்வளம் கொண்டு வந்து கடைகள் வைத்துக் குடியிருந்த அந்நிய நாட்டினர் இருப்புகளையும் அவர்கள் கடந்து சென்றனர்.

அங்கே கூலமறுகில் பண்டங்களைக் கொடிகள் எடுத்து விற்றனர். மாலைச் சேரிகள் சுருசுருப்பாக இயங்கின. அங்கே சுண்ணமும், வண்ணமும், சாந்தும், பாகும், பலகார வகைகளும் விற்போர் விளக்குகள் ஒளி விட்டன. அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். கள் விற்பவரும், மீன் விற்பவரும் விளக்குகள் வைத்து விற்பனை நடத்தினர். இடித்த மாவில் வெண்சிறுகடுகை வைத்தது போலக் கடற்கரை மணலில் இவ்விளக்குகள் ஒளி விட்டுக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் பொய்கைகளில் பூத்து விளங்கும் மருத நிலத்தைப் போலத் தாழை மலர்கள் தழைத்து விளங்கிய அக்கடற் கரைக் கானலில் அவர்கள் சேர்ந்து தங்கினர்.

மலைபடு பொருளும், அலைபடு பொருளும் மலையெனக் குவிந்து கிடக்கும் கடல் துறைமுகம் அதுவும் மக்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்தது. அத் துறைமுகப் பகுதியில் குளிர் சோலைகளில் அரசிளங் குமரரும், அவர்கள் காதலியரும் தங்கி மகிழ்ந்தனர். அவ்வாறே வணிக இளைஞரும், கணிகை மகளிரும் கலந்து உரையாடத் தனியே திரைகள் இட்டுத் தங்கி மகிழ்ந்தனர். ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும் தனித்தனியே தங்கி அவர்கள் கூடு கட்டிவாழ்பவர் போல் திரைகள் தடுத்து ஒதுங்கி இருந்தனர்; எழினிகள் அவர்களுக்குத் தனிமையைத் தந்தன.

களிமகிழ் கூட்டம் கரிகாலன் காவிரியாற்றில் புதுப் புனல் விழா எடுத்த நாளில் திரண்டிருந்ததுபோல் விளங்கிக் காட்டியது. நால்வகை வருணத்துப் பால்வகைப்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் காவிரி கலக்கும் சங்கமத் துறையில் குழுமி மகிழ்ந்தனர்.

அமளியில் அமர்தல்

தாழைவிரிந்த கடற்கரைச் சோலையில் வேலி அமைத்து ஒதுக்குப் புறத்தில் அங்கே ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஒவியம் வரைந்த திரைச் சீலை அவர்களுக்கு மறைப்புத் தந்தது. விதானம் அமைத்த வெண்கால் கட்டிலில் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர். அருகிருந்த வசந்தமாலை என்னும் பெயருடைய தோழி நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்த யாழினைக் கோவலன் வாங்கினான். அவனோடு இசை பாடும் மனநிலையில் மாதவி அவனை எதிர் நோக்கி இருந்தாள்.

7. வரிப் பாடல்கள்

(கானல் வரி)

யாழ் எடுத்து இசை கூட்டி அவன் பாடுகிறான். முதலில் அவன் பாடியவை ஆற்றுவரிப் பாடல்கள்; இவை நாட்டு வாழ்த்தாக அமைகின்றன. அடுத்தது கானல் வரிப் பாடல்கள். இவற்றில் புகார் நகரத்து நெய்தல் நிலத்து மக்கள் வாழ்வுச் சிறப்புக் கூறப்படுகின்றது; மற்றும் இவை அகப் பொருள் துறையமைந்தவை ஆகின்றன.

காவிரி நோக்கிப்பாடுதல்

“திங்கள் குடை உடைய சோழன் செங்கோல் ஆட்சி கங்கைவரை பரவியுள்ளது; அவன் கங்கையை அடைந்து அவளோடு உறவு கொண்டாலும் நீ வெறுப்பதில்லை; அது பெண்களின் கற்புக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்” என்று பாடுகிறான். இதே கருத்தில் அடுத்து “அவன் குமரியை அடைந்தாலும் காவிரி பிணக்குக் கொள்வது இல்லை” என்று குமரியாற்றைக் குறிப்பிட்டுப் பாடுகின்றான்.

“சோழ நாட்டில் உழவர்கள் ஓசை இருபுறமும் ஒலிக்கக் காவிரி பெருமிதமாக நடக்கிறாள். அதற்குக் காரணம் சோழ நாட்டின் வளம்தான்” என்று கூறுகிறான்.

மகளிர் ஆண்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது அவர்கள், கடமை என்ற கருத்தும் இவற்றில் அமைந்து விடுகிறது.

மாதவி பாடியது

இவற்றிற்கு நிகராக மாதவி பாடும் பாடல்கள் அவற்றை மறுத்துக் கூறுவனபோல் அமைகின்றன.

“காவிரியின் பெருமித நடைக்குச் சோழன் செங் கோன்மைதான் காரணம்” என்கிறது அவள் பாடல்.

அடுத்து, “அவன் வெற்றிச் சிறப்பே அதன் பெருமைக்குக் காரணம்” என்கிறாள். “காவிரி நீர் உழவர்க்கு உதவுகிறது. அது தாயாக இருந்து பால் ஊட்டுவது போல மக்களுக்கு நல்வாழ்வு தருகிறது. இதற்குக் காரணம் சோழன் மக்கள்பால் கொண்டுள்ள நேயமும், அவன் காட்டும் அருளும்தான்” என்று கூறுகின்றாள்.

இங்கே முரண்பட்ட கருத்துகள் அமைந்து விடுகின்றன; பெண்கள் பெருமைக்கு ஆண்களின் செயல்களே துணை செய்வன என்பது அவள் வற்புறுத்தும் கருத்தாக அமைகிறது.

அவன் செங்கோன்மை, வெற்றிச் சிறப்புகள், அருள் தன்மை இவை காரணம் என்கிறாள். எனவே ஆண்கள் செம்மையாகவும், மகளிர்பால் நேயம் மிக்கவராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கிறாள். இவை குறிப்பாக உணர்த்தப்படும் கருத்துகள் ஆகின்றன.

ஆண்கள் தவறு செய்தாலும் பெண்கள் பொறுப்பது தான் தக்கது என்பது கோவலனின் வாதம் ஆகிறது.

கானல்வரிப் பாடல்கள் (கோவலன்)

ஆற்று வரியைத் தொடர்ந்து அவன் கானல் வரிப் பாடல்கள் பாடினான்; அவற்றிலும் இத்தகைய முரண் பாடுகள் அமைந்துவிடுகின்றன.

தலைவன் களவு ஒழுக்கத்தில் அவளைச் சந்தித்துத் தன் காதலைத் தெரிவிக்கிறான். அச்செய்திகளைத் தோழி விவரிக்கின்றாள்.

“தலைவியின் முன் கடல் தெய்வத்தைச் சான்றாகக் காட்டித் தலைவன் தன் உறுதியை உரைத்தான். அவன் பின் அவளைத் தொடர்ந்து மணம் செய்து கொள்ள வில்லை” அதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி. “காதலராகிக் கடற்கரைச் சோலையில் கையுறை தந்து எம்பின்னால் வந்தவர் இன்று யாரோ போல் நடந்து கொள்கிறார்” என்பதும் தோழியின் அறிவிப்பு.

“நாங்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுபவர்கள் மற்றும் மறுத்துக் கூறும் ஆற்றலும் எங்களுக்கு இல்லை” என்கிறாள் தோழி.

இம்மூன்றும் தலைவன் தலைவியரின் காதல் அறிமுகச் செய்திகள் ஆகின்றன; இவை தோழியின் கூற்றில் அறிவிக்கப்படுகின்றன; பின்பு நடந்தது யாது?

தலைவியின் பெருமையைத் தலைவன் விரித்துரைப்பன பின் வரும் பாடல்கள். இவை தலைவன் கூற்றுகள்:

“கண் செய்த நோய் அவள் அணைப்புதான் தீர்க்கும்; நோய்க்கு அவள் காரணம்; அது தீர்க்கும் மருந்து அவள் முயக்கே ஆகும்”

“கடற்கரைக் கானலில் அவளைப் பெண் எனக் கொண்டேன்; இல்லை; அவள் வருத்தும் தெய்வம் என்பதை இப்பொழுது அறிகின்றேன்”

“அவள் பெண் அல்ல; உயிர் உண்ணும் கூற்றுவன் ஆகின்றாள்”

“அவள் வடிவைக் கூறுவது என்றால் அவள் முகம் திங்கள்; அது வானத்து அரவு அஞ்சி இங்கு ஒளித்தது; அது தெரியாமல் பெண் என்று மயங்கிவிட்டேன்”

“அவள் கண்கள் அவை கொடுமை மிக்கவை, அருள் செய்யவில்லை; அதனால் அவை கடுங்கூற்றம் ஆகின்றன””

“கூந்தல் அழகு உடைய அவள் பெண் அல்லள்; கண்டவரை வருத்தும் அணங்கு ஆகிய தெய்வம் ஆவாள்” “என்னை வருத்தியவை அவள் பேரழகு அவள் மொழி; வனமுலை; முகம்; புருவம்; மின்னல் இடை; இவை எல்லாம் சேர்ந்து என்னை வருத்திவிட்டன”

“அவளைக் கடற்கரையில் கண்டேன்; அந்தச் சூழ்நிலை என்னை வருத்தியது; அவள் விரிந்த குழல்; மதி போன்ற முகம், கயல்போன்ற விழிகள் எல்லாம் சேர்ந்து என்னை வருத்துகின்றன.”

“அவள் இளநகை, மதிமுகம், இளையவள் இணை முலைகள் என்னை இடர் செய்துவிட்டன”

“கடல் புகுந்து உயிர் வவ்வுவார் அவள் தலைவர்கள்; அவள் என் உடல் புகுந்து உயிர் வவ்வுகின்றாள்; அவள் விரும்பத்தக்க முலைகள் அவளுக்குச் சுமை; இடை அது சுமக்கிறது; இடர் உறுகிறது”

“வலையால் உயிர் கொள்வர் அவர் தலைவர்கள்; அவள் கண்ணாகிய வலையில் என் உயிரைக் கொள்கிறாள்; மின்னல் போன்றது அவள் இடை, அது முலை சுமக்காது; இற்று விடும்”

“ஓடும் படகு கொண்டு அவள் தலைவர்கள் உயிர்களைச் சாடுவர். அவள் இடை உழந்து வருந்துகிறது; சுமை தாங்காது”

“பவள உலக்கையைக் கையால் பற்றி வெண் முத்தம் குறுவாள்; அவள் கண்கள் குவளையல்ல; கொடியவை”

“புன்னை நிழல் புலவுத் திரைவாய் அன்னம் நடக்க அவள் நடக்கின்றாள்; அவள் கண்கள் கூற்றம் ஆகும்”

“நீல மலரைக் கையில் ஏந்திப் பறவைகளைக் கடிவாள்; அவள் கண்கள் வேலினும் கொடிய வாட்டும் தன்மைய” “அன்னமே நீ அவள் அருகில் செல்லாதே! அவள் நடைக்கு நீ ஒவ்வாய், அதனால் நீ சென்று உறவு கொள்ளாதே”

அவள் கொடுமையை எடுத்துக் கூறுகிறான் தலைவன்; இச்செய்தியைக் கோவலன் பொதுப்படையாகவே வைத்து இப்பாடல்களைப் பாடினான்.

மாதவி பாடியது

அவன் பாடிய பாடல்களில் உள்கருத்து உள்ளது என்று மாதவி தவறாகக் கொள்கிறாள். கலவியில் மகிழ்ந்தவள் போல் காட்டிக் கொள்ளுகிறாள். அதனைத் தொடர்ந்து அவன்பால் புலவி கொண்டவள் போல யாழைக் கையில் வாங்கி அவளும் பாடத் தொடங்கினாள். அவள் அப்பாடல்களுக்கு விடை தருவன போல் அமைத்துத் தருகிறாள்.

அவள் பாடலைக் கேட்டு நிலத்தெய்வம் வியப்பு எய்தியது; நீள் நிலத்தோர் மகிழ்வு எய்தினர்; யாழிசையோடு இரண்டறக் கலந்த தன் இனிய குரலில் அவள் பாடினாள்.

அவன் பாடிய ஆற்று வரிப் பாடல்களுக்கு இவள் விடை தந்தாள். “ஆண்கள் சீரோடு இருந்தால்தான் பெண்களுக்கு மதிப்பு உண்டு” என்று தெரிவித்தாள்.

அதே போலக் கானல் வரிப்பாடல்களையும் இவளும் தொடர்ந்து பாடுகிறாள்; அவன் பாடிய பாடல்கள் அனைத்தும் பெண் கொடியவள் என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுவன போல அமைந்தன. அதற்கு இவள் மறுப்புரையாக “ஆண்கள் தாம் இரக்கமற்றவர்கள்; பெண்களின் நுண்ணுணர்வையும், துன்பத்தையும் அறியாத வர்கள்” என்று சாடுகிறாள். அப்பாடல்கள் கருத்துகள் பின்வருமாறு;

"முத்துகள் தந்து எங்களைத் தலைவன் மயக்க விரும்புகிறான்; அவை அவள் பல்லுக்கு நிகராகா, கடல் அலைகள் கரை சேர்க்கும் முத்துகளே எங்களுக்குப் போதுமானவை; அவன் கையுறை தேவை இல்லை” என்று தோழி கூறி மறுத்துவிடுகின்றாள். இது தோழியின் கூற்றாக அமைகிறது.

“களவில் வந்து கலந்தான்; அவன் பிரிந்ததால் தலைவி மெலிந்தாள். அவள் கைவளையல்கள் கழன்று விழுந்து விடுகின்றன”.

“கள் உண்டால் மயக்கம் வரும் என்று எங்களுக்குத் தெரியும்; காமம் கொண்டால் அதுவும் நோய் தரும் என்பதை இப்பொழுதுதான் அறிகிறோம்” என்கிறாள் தோழி. இவை இரண்டும் தோழியின் கூற்றுகள் ஆகின்றன.

இனிப் பாடுவன தலைவியின் கூற்றுகள்:

“நண்டும் அதன் பெண்டும் மகிழ்ந்து உறவாடும் காட்சியைத் தலைவன் காண்கிறான்; பிறகு அவன் என்னை யும் பார்க்கிறான். அவன் மனக்குறிப்பு யாது? எனக்கு விளங்கவில்லை”

“தம்முடைய தண்ணளி; தாம்; அவர் குதிரை பூட்டிய தேர் இவை எல்லாம் இப்பொழுது என்ன ஆயிற்று? எம்மை அவர் மறந்துவிட்டார்; அவர் எம்மைவிட்டு அகலலாம்; யாம் மட்டும் அவரை மறக்கவே மாட்டோம்; நம்மை மறந்தவரை நாம் மறக்க மாட்டோம்”

“நெய்தல் பூவே உன் கனவினில் அவர் வந்தால் என்னைப் பற்றி ஒரு சொல் உரைக்க மாட்டாயா?” “கடல் அலையே அவன் கடந்த வழியின் சுவடுகளை எல்லாம் நீ அழித்து விட்டாய், நீயும் அவனைப் போல் கொடியை, இரக்கமே இல்லாமல் போய்விட்டது உனக்கு”

“வழியின் சுவடுகளை அழிக்கும் கடலே; சோலையே! அன்னப்பறவையே! தண்துறையே! அவரைப் பார்த்து இது தகாது என்று கூறமாட்டீரா?”

“கடல் அலையே! அவர் சென்ற தேரின் சுவடுகளை ஏன் அழித்தாய்? அவரைப் பற்றிய நினைவுகளை அழிப்பதால் உனக்கு என்ன நன்மை? நீ எனக்குப் பகையாகின்றாய்; உன்னோடு இனி எனக்கு உறவே தேவை இல்லை”

இனிக் கூறுவன தோழியின் கூற்றுகள்: “கடல் சேர்ப்பனே! இவள் நெஞ்சு மன்மதன் அம்புகளால் துளைக்கப்பட்டுவிட்டது. இந்தப் புண் அதனை அவள் அன்னை அறிந்தால் அவளுக்கு யாது கூறுவது?”

“மாரிக் காலத்துப் பீர்க்கம்பூ போல் பூத்தது பசலை; தெய்வத்திடம் முறையிட்டு இந்நோய் தீர வழிபடுவாள் அன்னை. யார் இக்கொடுமை செய்தது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது?”

“தனிமையில் தலைவி துன்பம் அடைந்து தளர்வாள்; இதனை அவள் வாய்விட்டுக் கூறமுடியாமல் தவிப்பாள், அன்னைக்கு இதனை எப்படி எடுத்துக் கூற முடியும்?”

இக்கூற்றுகள் தோழி கூற்றாக அமைந்துள்ளன. மாலைப் பொழுது தலைவியை வாட்டுகிறது; இதே நிலை தலைவனுக்கு உளதாகுமோ என்று இனித் தலைவி கேட்கிறாள்.

“மெல்ல இருள் பரந்தது; சூரியன் மறைந்துவிடக் கண்கள் நீர் உகுக்கின்றன; தோழி! இதே மயக்கம் தரும் மாலைப்பொழுது பிரிந்தவர் உறையும் நாட்டில் உள்ளதோ”

“கதிரவன் மறைந்தான்; காரிருள் பரந்தது; என் கண்கள் துன்பக் கண்ணிர் உகுக்கின்றன; இதே போன்ற மருள்மாலை அவர் நாட்டிலும் உள்ளதோ கூறுவாயாக”

“பறவைகள் பாட்டொலி அடங்கிவிட்டது; பகலைச் செய்யும் சூரியன் மறைந்து விட்டான்; என் கண்கள் நீர் உகுக்கின்றன. இதே மாலைப்பொழுது பிரிந்த அவர் நாட்டிலும் உள்ளதோ”

பிரிந்த நிலையில் அவள்தான் அடையும் துன்பத்தை எடுத்துக் கூறுகிறாள்: “அவர் எம்மை மறக்கலாம்; ஆனால் அவரை யாம் மறக்க முடியாது” என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுகிறாள்.

“தாழை வேலி உடைய உப்பங்கழிக்கு வந்தவர் எம்மைப் பொய்தல் விளையாட்டில் சந்தித்துப் பழகி அழைத்துச் சென்றார். அவர் நம் மனம் விட்டு அகலமாட்டார்”

“நீ நல்குக என்று நின்றவர் அவர். மான்போன்ற மருண்ட நோக்கத்தை மறக்கமாட்டார்”.

“அன்னம் தம் துணையோடு ஆட அதனைக் கண்டவர் என்னையும் நோக்கினார்; என்னை வருந்தச் செய்து அகலமாட்டார்”

“நாரையே, நீ என் தலைவனுக்கு என் துன்ப நோயை எடுத்து உரைக்க மறுக்கிறாய்; எனக்கு நீ உதவவில்லை; நீ இங்கே வந்து என்னை அடையாது விலகுக, விலகிச் செல்க” இவை தலைவி தன் துயரத்தை எடுத்து உரைப்பனவாகும்; கானல் வரிப்பாடல்கள் மாதவி பாடி முடித்தாள்.

வேறு ஒரு புதிய பண்ணில் தொடர்ந்து சில பாடல்களைப் பாடினாள். கைக்கிளை சேர்ந்த செவ்வழிப் பாலைப் பண்ணைப் பாடிமுடித்த பின்னர் மாலைப் பொழுது கண்டு மயங்கித் தலைவி தெரிவிக்கும் செய்தி களை அவள் தொடர்ந்து பாடினாள்.

“பிரிந்தவர் பரிவுடன் உரைத்த சொற்களை நம்பி உயிர் பெற்று வாழ்கின்றோம்; எங்கள் உயிரை நீ போக்க முற்படுகிறாய். மாலைப்பொழுதே! நீ எங்கள் உயிரைக் கொள்வாயா! நீ வாழ்க”

“பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாமல் தவிக்கின்றோம்; மேலும் எங்களை நீ வதைக்கிறாய்; இந்த உலகம் வாழும் இடமாக இல்லை; மாலைப்பொழுதே! நீ தரும் துன்பம் மிகப் பெரிது; நீ வாழ்க”

“தீயைக் கக்கிக்கொண்டு வருகிறது. இந்த மயக்கம் தரும் மாலைப் பொழுது: மாக்கடல் தெய்வமே! உன்னை முன்னிறுத்தி விரைவில் வருவதாகச் சொல்லிப் பிரிந்தார்; அவர் பொய்ச் சூளாகிய சொற்களை அவர் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது; நாங்கள் பொறுத்துக் கொள் கிறோம். தெய்வமே நீ அவரை மன்னித்துவிடு; உன் மலர் அடியை வணங்குகிறேன்” - இது தலைவியின் வேண்டுகோள் ஆகிறது.

உறவு முறிதல்

தலைவன் கொடுமை செய்துவிட்டான் என்ற கருத்தமைந்த பாடல்கள் கோவலனை வருத்தமுறச் செய்தன; “கானல் வரிப்பாடலை யான் பாடினேன்; அதில் யான் எந்தக் குறிப்பையும் புகுத்தவில்லை; அவள் இவற்றை மாறாகக் கருதிக் குறிப்புத் தோன்றப் பாடிவிட்டாள்; பொய் பல கூட்டி உரைத்தாள் இவள்” என்று அவன் கருதினான்; அவளை வெறுத்தான். உறவை முறித்தான்.

இது என்ன அவ்வளவு பெரிய தவறா? இதற்காகவா இவன் அவளை வெறுப்பது? பிரிவது? உறவை அறுப்பது? என்ற வினா எழலாம். யாழிசை ஒரு பற்றுக் கோடாக வைத்து ஊழ்வினை அவள் வாழ்வினைப் பாழ்படுத்தியது என்றுதான் கூறமுடியும்.

பூரண நிலவு பொழியும் அவள் அழகிய முகம்; இனி அதை அவன் காணப் போவதில்லை; திங்கள் முகத்தாள்; அவளைக் கை நெகிழ்ந்து அகன்று விட்டான். அணைப்பு நீங்கியது; பிணைப்பு முறிந்தது.

“பொழுது ஆகிறது புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாமல் அவளைத் தனியேவிட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளைவிட்டு நீங்கினான்.

தோழியர் பேச வாய் எடுத்தனர். அவர்களைப் பேசாமல் தடுத்தாள். ஓசைபடாமல் எழுந்து பழையபடி வண்டியுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள். காதலனுடன் சென்றவள் திரும்பிய போது கையற்ற நெஞ்சோடு தனியளாய் வந்து சேர்ந்தாள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளித்தது.

8. மாதவி எழுதிய முடங்கல்

(வேனிற் காதை)

இளவேனில் பருவம்

இளவேனில் பருவம் தொடர்ந்தது. தமிழகம் எங்கும் ஆட்சி செய்யும் காமவேள் ஆகிய மாரன் அவனுக்குத் துணையாக இனிய இளவேனில் பருவம் வந்தது. தென்றலும் வீசத் தொடங்கியது; குயில் கூவியது; மகளிரின் மனக் கிளர்ச்சியை இப்பருவம் எழுப்பியது.

மாதவிபால் கோவலன் கொண்ட ஊடல் அவளைப் பெரிதும் தாக்கியது; அவள் தனிமை அவளை வாட்டியது. தன் மனையகத்தில் அவள் வேனிற் பள்ளியாகிய நிலா முற்றத்திற்குச் சென்று அங்குத் தனிமையில் யாழ் வாசிக்கத் தொடங்கினாள். வாய்விட்டும் பாடினாள்; அவளால் அந்த இசையில் ஈடுபட முடியவில்லை; இசையில் அவள் மனம் நாடவில்லை.

மாதவி முடங்கல்

கோவலனின் நினைவு அவளை வாட்டத் தொடங் கியது. அவள் தன் கையகத்து இருந்த பூ மாலையை எடுத்தாள். அதில் பல்வகை மலர்கள் இருந்தன. அவற்றுள் தாழை மடலைத் தனித்து எடுத்தாள். பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள். செம்பஞ்சுக் குழம்பு அதனை மையாகக் கொண்டாள்.

“இளவேனில் பருவம் ஆகிய இளவரசன் உயிர்களுக்கு மகிழ்வு ஊட்டுபவன்; அதோடு மாலைப்பொழுதில் தோன்றும் வானத்துத் திங்கள் கொடியது; தம் தலைவரைப் பிரிந்த மகளிரை வாட்டுவது மன்மதன் செயலாகும். இதனை யான் உணர்த்தத் தேவை இல்லை; இதனை அறிந்து அருள்வீராக” என்று வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு வடித்து எழுதினாள். காதல் வயப்பட்ட அவள் மழலைச் சொல் போல் வார்த்தைகளை விட்டுவிட்டுக் கூறி எழுதி முடித்தாள். பசந்த மேனியை உடைய தன் தோழியாகிய வசந்த மாலையை வருக என்று அழைத்து அதனைத் தந்து அனுப்பினாள். இந்த முடங்கலில் சொல்லிய செய்திகளைக் கோவலனுக்கு அறிவித்து அவனை இருந்து அழைத்து வருக எனச் சொல்லி அனுப்பினாள்.

வசந்தமாலை அதனை எடுத்துச் சென்று கோவலனைக் கூல மறுகு ஆகிய கடைத்தெருவில் சந்தித்துத் தந்தாள்; அவன் அதை வாங்க மறுத்தான். மாதவியைப் பற்றிய பழைய நினைவுகள் அவன் மனக்கண் முன் வந்து மோதின.

கோவலன் மறுப்பு

அவள் செயல்கள் ஒவ்வொன்றும் நடிப்பே என்று கூறினான். அவளுக்கு வாழ்க்கையே நாட்டியக் கலையின் கூறுகள் என்று சுட்டிக் காட்டினான். தன்னோடு காதல் உரைகள் பேசியது ‘கண் கூடுவரி’ என்றான். அவள் செய்து கொண்ட ஒப்பனைகள் எல்லாம், ‘காண்வரிக் கோலம்’ என்றான். ஊடல் கொண்ட போது அடங்கியவளாய் ஏவல் மகளைப் போல் அடக்க ஒடுக்கமாகப் பணிந்து பேசியது ‘உள்வரியாடல்’ என்றான். தன்னைத் தணிவித்த பொழுது முதுகு புறம் வந்து அணைத்தது 'புன் புறவரி' என்றான். மற்றும் அவன் ஊடல் செய்கைகள் அனைத்தும் 'கிளர் வரிக்கோலம்' என்றான்; மேலும் ‘தேர்ச்சிவரி’ ‘காட்சிவரி’, ‘எடுத்துக் கோள்வரி’ என்று பெயர்கள் தந்து அவள் செயல்களை எல்லாம் நடிப்பு என்று கடிந்து கூறினான்.

அவள் ஆடல் மகள் ஆதலின் இவை எல்லாம் அவளுக்குக் கூடிவந்த கலைகள் என்று கூறிச் சாடினான். அதே போல இந்த முடங்கலும், அதன் செய்திகளும் போலிகள் என்று கூறி மறுத்தான்.

வசந்த மாலை அவள் என்ன செய்யமுடியும்? வாடிய உள்ளத்துடன் சென்றாள். மாதவியால் வந்து செய்தியை அறிவித்தாள். “இன்று மாலை வராவிட்டாலும் அவரை நாளைக் காலையில் காண்போம்” என்று நம்பிக்கையுடன் அன்று மாதவி துயிலின்றிக் கழித்தாள்.

9. கோவலன் வீடு திரும்புதல்

(கனாத்திறம் உரைத்த காதை)

தேவந்தி அறிமுகம்

புகார்நகரம் மாலைப்பொழுது மங்கலமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது; வீடுகள் பொலிவுடன் விளங்கின. வீட்டு முற்றத்தில் பூவும் நெல்லும் தூவி அழகுபடுத்தினர். வீடுகளுக்கு விளக்கேற்றி வைத்தனர். அந்த மாலைப் பொழுது தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண் கண்ணகிக்கு ஆறுதல் கூறத் தொடங்கினாள்.

இந்தத் தேவந்தி வாழ்க்கைப்பட்ட வீடு ஒரு பின்னணியைக் கொண்டு இருந்தது. இவளை மணந்தது பாசாண்டச் சாத்தன் என்னும் தெய்வம்; அந்த வீட்டில் அத்தெய்வம் ஆகிய சாத்தன் வளர்ந்து வயதுக்கு வந்து உரிய வாலிபப்பருவத்தில் இவளைமணம் செய்து கொண்டான். இது விசித்திரமான கதை.

மாலதி என்பவள் ஒருத்தி தன் மாற்றாளின் குழந்தைக்குப் பால் ஊட்ட அது விக்கிச் செத்தது. அந்தப் பழி தன் மீது வரும் என்று அஞ்சி அவள் ஊரில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று அக்குழந்தையைக் கிடத்தி உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டினாள். பின்பு பாசண்டச் சாத்தனுக்கு உரிய கோயிலை அடைந்தாள். அங்கே அவள் வரம் வேண்டிப் பாடு கிடந்தாள்.

அங்கே இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று வந்து, “தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தரமாட்டர்கள்” என்று கூறிச் செத்த குழந்தையைக் கையால் பற்றிச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தன் வயிற்று அகத்து இட்டு விழுங்கி விட்டது.

உயிர் நீங்கிய உடலும் அடையாளத்துக்குக் கூட இல்லாமால் போய் விட்டது. இடி உண்ட மயில் போல் துடிதுடித்தாள், ஏங்கி அழுதாள்.

“அன்னையே நீ அழாதே” என்று கூறிப் பக்கத்தில் ஒரு சோலையில் கிடந்த ஒரு குழந்தையைக் காட்டி “எடுத்துச் செல்க” என்று அத்தெய்வம் கூறியது. பாசாண்டச் சாத்தனே அக்குழந்தை வடிவாகியது. மாற்றுக் குழந்தை கிடைத்தவுடன் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று தன் பழியைப் போக்கிக் கொண்டாள்.

அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி பெற்றுப் பெரியவன் ஆகி அந்தக் குடும்பத்துப் பொறுப்புகளை ஏற்று வாலிபன் ஆயினான். தாயத்தாரோடு சொத்து உரிமைக்கு வழக்குத் தொடுத்து அப்பெற்றோர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்து மணமும் செய்து கொண்டான். தேவந்தி என்பாள் அவன் வாழ்க்கைத் துணைவியாயினாள்.

நாள்கள் சில நகர்ந்தன. அவளோடு நீடித்து வாழாமல் தான் தெய்வம் என்பதை அவளுக்கு உணர்த்தி “எம்முடைய கோயிலுக்கு நீ வா” என்று கூறிச் சென்றான்; ஊரவர்க்குப் பதில் கூற வேண்டும். தேசாந்திரம் சென்ற கணவன் திரும்பி வருவதற்காகத் தான் கோயில் சென்று வழிபடுவதாகக் கூறி வழிபாடுகள் மேற்கொண்டு வந்தாள்.

கண்ணகி கனவு

கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவல்கின்றாள் என்பது அறிந்து அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள். பூவும் நெல்லும் தூவிக் கடவுளை வழிபட்டுக் கண்ணகி தன் கணவனை அடைவாளாக என்று வேண்டினாள். அதனை அவளுக்கு அறிவுறுத்தினாள். எப்படியும் கணவனை அடைவேன் என்று கண்ணகி தன் மன உறுதியைத் தெரிவித்தாள். அதனோடு தான் கண்ட கனவினை அவளுக்கு எடுத்து உரைத்தாள்.

“அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல் ஒன்று கூறினர். தேளைத் தூக்கி எங்கள் மேல் போட்டது போல் அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக் காவலன் முன் சென்று வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவு பெற்றனர். அதன் பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று உரைத்தாள்.

தேவந்தியின் அறிவுரை

அதனைக் கேட்ட தேவந்தி, “உன் கணவன் உன்னை வெறுக்கவில்லை. சென்ற பிறவியில் நீ உன் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பினைச் செய்யாமல் விட்டு விட்டாய். அதனை இப்பொழுது நீக்குக. கடலொடு காவிரி கலக்கும் சங்கமத்துறையில் நெய்தல் மணக்கும் கானலில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்னும் நீர்த்தடங்கள் உள்ளன. அந்நீர்த் துறைகளில் முழுகிக் காமவேள் ஆகிய மன்மதன் கோயில் சென்று தொழுதால் இந்த உலகத்தில் பெண்கள் கணவனோடு இன்புற்று வாழ்வர்; அடுத்த பிறவியிலும் இருவரும் போகம் செய் பொன்னுலகில் சென்று பிறப்பர். நாம் இருவரும் சென்று நீராடுவோம்” என்று கூறினாள்.

அவள் உரைத்த உரைகள் அனைத்தும் செவி கொடுத்துக் கேட்ட கண்ணகி ஒரே சொல்லில் தக்க விடை தந்து அவள் வாயை அடக்கினாள். “பீடு அன்று” என்று கூறி அவளை அனுப்பி வைத்தாள்.

அதன்பின் ஏவற்பெண் ஒருத்தி யாரோ வருகிறார்கள் என்பது அறிந்து கடைத்தலை சென்று பார்த்தாள். வந்தவன் காவலன் என்று குறிப்பிட்டாள். அந்த வீட்டுத் தலைவன் என்பதை அறிவித்தாள்.

கோவலனும் நேரே வந்து அவள் பெருமைமிக்க பள்ளியறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்; வாடிய மேனிகண்டு வருத்தம் அடைந்தான்; அவன் அவளோடு உரையாடிய சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருந்தன. “வஞ்சனை மிக்க ஒருத்தியின் வலையில் அகப்பட்டுக் குலம் தந்த செல்வத்தை எல்லாம் தொலைத்து விட்டேன். குன்று போன்ற செல்வம் அது குன்றி விட்டது; இப்பொழுது வறுமை வந்து உள்ளது. இலம்பாடு அது எனக்கு நாணத்தைத் தருகிறது” என்று அவளிடம் தன் மனநிலையைத் தெரிவித்தான்; செறிவு மிக்க சொற்களைக் கேட்டு அறிவு மிக்க கண்ணகி நலம்திகழ் முறுவல் நகைமுகம் காட்டிச் “சிலம்பு உள கொள்க” என்றாள். இச் சொற்கள் அவனுக்கு எழுச்சி தந்தன. அவன் சிந்தனை சீர்பெற்றுப் பறந்தது. அவளோடு கலந்து உரையாடி அவள் கூறும் கருத்துக்கு அவன் காத்திருந்தான். “இழந்த பொருளை ஈட்டுதல் வேண்டும், இந்தச் சிலம்பினை முதற் பொருளாகக் கொண்டு நகைகள் செல்வம் அனைத்தையும் மீட்பேன்” என்றான். அதோடு அவன் நிறுத்திக் கொள்ளவில்லை. மாடமதுரைக்குச் சென்று வாணிபம் செய்யும் கருத்தை அறிவித்தான்.

அதனோடு அவன் அமையவில்லை. அவளையும் ‘உடன் வருக’ என்று அழைத்தான். இவ்வளவு விரைவாக முடிவு செய்தது வியப்பாகத்தான் உள்ளது. அவன் என்ன செய்வான்? ஊழ்வினை அவனை ஆட்டுவித்தது. இருள் நீங்கிய விடியற்பொழுதில் அருமனை விட்டு அகன்றான்.

கண்ணகியுடன் அவன் புறப்பட்டான். மாதவி அவன் காலை வருவான் என்று கூறியது பழுது ஆகிவிட்டது. யார் இதை எதிர்பார்த்தார்கள்? நம்பிக்கை அவளைப் பொறுத்த வரை தளர்ந்தது. அவள் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்தது. துன்பம் அவளைப் பற்றியது.

10. சோழ நாட்டுப் பயணம்

(நாடு காண் காதை)

வெளியே எழுதல்

கதிரவன் எழுவதற்கு முன் விடியற்காலையில் இருவரும் எழுந்து புறப்பட்டனர். அவர்கள் விரும்பியா புறப்பட்டனர்? இல்லை; ஊழ்வினை அவர்களை இயக்கியது. அவர்கள் வாழ்வினை மாற்றியமைத்தது.

வீட்டை விட்டு வெளியேறினர். நீண்ட கதவினை உடைய பெருவாயில்; மாபெரும் மாளிகை, மற்றும் கதவை மூடினர்; அதன் சிற்ப வேலைப்பாடுகள் பொற்புடன் திகழ்ந்தன. மறக்க முடியாத ஓவியங்கள்; ஆட்டுக்கிடாய், கவரிமான்; அன்னப்பறவை இம்மூன்றும் முற்றத்தில் நட்புடன் திரிந்து கொண்டிருந்தன. பலமுறை அவற்றைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள்; அவற்றை விட்டு வர மனம் இயையவில்லை; மறுபடியும் அவற்றைப் பார்த்துவிட்டு அகன்றனர்.

வீட்டுமுன் நீண்ட வழிப்பாதை, அதனை நெடுங்கழி என்றனர். அதனைக் கடந்து ஊர்ப்புறத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் திருமாலின் திருக்கோயிலைக் கடந்தவராகி அதன் வலப்பக்கம் சென்றனர். அடுத்தது புத்தபள்ளி; அங்கே அந்தரத்திலிருந்து முனிவர்கள் வந்து தங்கி அறிவு உபதேசம் செய்வது வழக்கம். அதனைக் கடந்து அடுத்து இருந்த சமணர் சிலாதலத்தையும் கண்டவராகி அதனையும் கடந்தனர். அதன் பின் ஊருக்கு வெளியே இருந்த பெருவழி; அதன் வழியே நடந்து இலவந்திகை என்னும் சோலையின் வழியே சென்று, காவிரியின் வடக்குப் பக்கம் கவுந்தி அடிகள் தங்கி இருந்த சமணப் பள்ளியை அடைந்தனர். அப்பள்ளியின் மதிற்புறத்தில் சிறிது தங்கி ஓய்வு எடுத்தனர். காவதம் தூரமே அவர்கள் கடந்தனர். அதற்குள் கண்ணகி களைப்புற்றாள். இன்னும் சிறிது தூரத்திலேயே மதுரை இருக்கும் என்று அவள் எண்ணிச் சிரித்துக் கொண்டே, “மதுரை முதூர் எங்கே உள்ளது” என்று விளித்துக் கேட்டாள். அனுபவமில்லாத பெண்; மெல்லிய சொற்கள்; அவனும் “காவதம் முப்பதுதான்” என்று மிக எளிதாக எடுத்து உரைத்தான். மிகவும் அருகிலேயே உள்ளது என்று அவளுக்குச் சிரமம் தோன்றாது இருக்கக் கூறினான். முரண்சுவை அமைந்த உரையாடல் அவர்களுக்கு அயர்வு சிறிது போக்கியது. கவுந்தி அடிகள் சந்திப்பு

அவர்களுக்குப் பேச்சுத்துணை தேவைப்பட்டது. அவர்கள் முதன் முதலில் சந்தித்தவர் கவுந்தி அடிகள்; அவர் ஒரு சமணத்துறவி, அவர்கள் தங்கி இருந்த பள்ளி இருந்தது. அவரைக் கண்டு வணங்கித் தொழுதனர்.

இவர்கள் தோற்றம் அவர்கள் ஏற்றத்தைக் காட்டியது. அவர்கள் சீலமும், இறைப்பற்றும் உடையவர்கள் என்பதைக் கவுந்தி அடிகளால் அறிய முடிந்தது. ‘உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் என்பதை எடுத்துக் கூறி உற்ற துயர் யாது’ என்று வினவினார். வீட்டை விட்டு வெளியேறக் காரணம் யாது என்பது அவர் கேட்ட கேள்வியாக அமைந்தது.

கோவலனும் தான் யார்? ஏன் இங்குவந்தான்? இந்தப் பழங்கதைகளைப் பேசாமல் “பொருள் ஈட்டுதற்கு” என்று சுருக்கமாகக் கூறினான். அவர்கள் மன உறுதியைக் கண்டு தெளிந்த கவுந்தி அடிகள் அவர்கள் வழிப்பயணத்தைத் தடுத்து நிறுத்த முயலவில்லை: அவரவர் போக்குகளை அவரவரே வகுப்பது தக்கது; மற்றவர்கள் இடைநின்று தடுப்பது தவறு என்பதை நன்கு அறிந்தவராகிய கவுந்தி அடிகள் அவர்கள் செல்வது மதுரை என்பதை அறிந்தார்.

அவருக்கும் நீண்ட நாள் வேட்கை; தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அங்கே சமணநெறி பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தார். அறிஞர்கள் உரைகளைக் கேட்டு அறியும் ஆவல் தனக்கு உள்ளதாகக் கூறித் தானும் உடன் வருவதாக உரைத்தார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. தேனினும் இனிதாக அச்சொற்கள் கோவலனுக்கு இசைத்தன. “அடிகளே! நீரும் வருவதாயின் கண்ணகியின் கடுந்துயர் தீர்ந்தது. தக்க துணை எங்களுக்குக் கிடைத்தது” என்று பதில் உரைத்தான். கவுந்தி அடிகளும் உடன் புறப்பட உடன்பட்டார்.

வழிகளைக் கூறுதல்

அறிவுமிக்கவர்; மதுரை பற்றி நன்கு அறிந்தவர்; போகும் வழிகளையும் அறிந்து வைத்தவர்; அதனால் கவுந்தியடிகள் வழியின் அருமையைத் தான் தெரிந்த அளவு அவர்களுக்கு உரைத்தார். செல்வதற்கு உரிய வழிகள் இரண்டு; சோலை வழியே செல்வது; மற்றொன்று வயல் வழியே செல்வது; இரண்டிலும் உள்ள தடைகள், இடையூறுகள் எவை என்பதை எடுத்துக் கூறினார்.

“வெய்யிலின் கொடுமை தீரச் சோலை வழியே செல்வது தக்கதுதான்; என்றாலும் அவ்வழியில் குறைகள் உள; அவற்றையும் அறிவீராக” என்றார்.

“கிழங்குகளை அகழ்ந்து எடுத்துக் குழிகள் உண்டாக்குவர். அடுத்துள்ள செண்பக மரங்கள் தம் பூக்கள் அவற்றின் மீது படிய அவற்றை மறைத்துவிடும். பூக்கள் தானே என்று அடி எடுத்து வைத்தால் குழிகள் அவை; விழுந்தால் எழுவது அரிது, சரி, அவற்றையும் கணித்து அணித்து உள்ள பலாமரங்கள் செறிந்த பாதை சென்றால் அதன் கனிகள் நடப்பாரின் தலைகளை முட்டும். அவற்றை விலக்கி மஞ்சளும் இஞ்சியும் மயங்கிக் கிடக்கும் பாத்திகளில் சென்றால் அங்கே பலாவின் கொட்டைகள் கூழாங்கல் போல் தடுத்து உறுத்தும்.

சோலைவழி அதனைத் தவிர்த்து வேறுவயல் வழிதேடுவோம் என்றால் நிழல் தரும் மரங்கள் இல்லாத பாதை; எங்கும் வயல்கள்; அங்கே குவளைகள் பூக்கும் நீர்நிலைகள். அவற்றில் உள்ள வாளைமீனைக் கவ்வ நீர்நாய் செல்லும்; அவற்றினின்று தப்ப அவ்வாளைகள் நடக்கும் பாதையில் துள்ளி வந்து விழும்; அதனைக் கண்டு இந்த மெல்லியலாள் திடுக்கிடக் கூடும். தீமை நிகழாது; எனினும் அதைக் கண்டு கண்ணகி அஞ்சும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கரும்பில் விளைந்த தேன் சாறு அடுத்து உள்ள பொய்கையைச் சாரும்; நீர் என்று அள்ளிக் குடித்தால் அது கரும்பின் சாறு ஆகலின் அது மயக்கத்தைத் தரக் கூடும்; அதனால் கண்ணகி வருந்த நேரிடும்; மற்றும் கருவிளை மலர்களைக் களைபறிப்பார் அவற்றை வழியில் போடுவர்; அவற்றில் வண்டுகள் மொய்க்கும்; கருவிளை மலர்தானே என்று காலடி வைத்தால் வண்டுகள் நசுங்கி வருந்தும்; நண்டும் நந்தும் காலடிகளில் நசுங்கிச் சாதலும் கூடும்; உயிர்களுக்கு ஊறு செய்யும் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று வயல் வழியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

முவரும் மதுரை ஏகுதல்

சோலையா வயலா அவர்கள் சிந்தனைக்கு விட்டு விட்டுக் கவுந்தியடிகள் பயணத்துக்குப் புறப்பட்டார். கட்டுச் சோறும் பெட்டிப் படுக்கையுமா எடுத்துச் செல்ல முடியும்? தோளில் தொங்கவிட்ட உறி; அதில் ஒரு சோறு உண்ணும் பிச்சைப் பாத்திரம்; மற்றும் கையில் ஒரு மயிற் பீலி; உயிர்களுக்கு ஊறு நிகழாதபடி தடுக்க அந்த மயிற்பீலி; துறவிக்கு இவையே சொத்துகள்; இவற்றை ஏந்திய நிலையில் அவர்களோடு கவுந்தியடிகள் புறப்பட்டார்.

வழிநடைக் காட்சிகள்

காவிரிக் கரையில் அவர்கள் பயணம் தொடர்ந்தது; அவர்கள் சென்ற வழி வயல்கள் மிக்கு உள்ள வெளிகளே ஆகியது; உழவர்கள் எழுப்பிய ஓசை அவர்களை மகிழ்வித்தது; காவிரி நீர் இடையறாது சென்று கொண்டிருந்தது. அதன் சலசலப்பு அவர்களுக்குக் கலகலப்பைத் தந்தது. நீர் இறைக்க அவ் உழவர்கள் ஏற்றங்களையும், நீர்க் கூடைகளையும் தேடவில்லை; ஆற்றுநீர் வாய்க்கால் வழி ஓடி வயல்களில் பாய்ந்தது. அதன் ஒலி செவிக்கு இனிமை தந்தது. வயல்களில் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளர்ந்தன. இவ்வயல்களை அடுத்த கயங்களில் தாமரைகள் பூத்து விளங்கின. அத்தடங்களிலும், அடுத்துள்ள சோலைகளிலும் நீர்ப் பறவைகள் பல குரல் எழுப்பின. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கம்புள் கோழி, நாரை, அன்னம், கொக்கு, காட்டுக்கோழி, நீர்க்காக்கை, உள்ளான், ஊரல், புள், புதா மற்றும் நீர்ப்பறவைகள் பல ஆகும். இவை கூடி எழுப்பிய குரல் போர்க் களத்து வீரர்கள் எழுப்பும் பல்வேறு வகை ஒலிகளாகக் கலந்து ஒலித்தது. அங்கே என்ன? அது போர்க்களாமா? வியத்தகு காட்சியாக இருந்தது; பேரிரைச்சல் கேட்பதற்கு இனிதாக விளங்கியது.

உழவர்கள் இல்லங்கள் அங்கங்கே அவர்கள் எழுப்பிய ஆரவார ஒலிகள் கேட்பதற்கு இனிமை தந்தது. சேற்றில் புரண்டு எழுந்த எருமை தன் தினவைப் போக்கிக் கொள்ள நெற் கூடுகளில் வந்து உராய அக்கூடுகளில் கொட்டி வைத்த தானிய வகைகள் நெற்கதிர்களில் சிந்த அந்தக் காட்சியைக் கண்டு கைவினைத் தொழிலரும், உழவர் பெருமக்களும் உவகை கொண்டு ஆரவாரித்தனர். அது இன்ப ஒலியாக இசைத்தது.

உழத்தியர்கள் வயல்களத்தில் புகுந்து களை பறித்தனர்; நாற்று நட்டனர்; சேறுபடிந்த கோலம் அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. உழைத்த களைப்புத் தீரத் தழைத்த கள்ளைப் பருகிக் களி மகிழ்வு கொண்டு புதுப் புதுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். அம்மகிழ்வுப் பாடல்கள் கேட்போரை மயங்க வைத்தன. இந்தப் புதுமை கண்டு அவர்கள் புதுமகிழ்வு கண்டனர்.

உழுகின்ற கலப்பைக்குப் பூக்கள் சூட்டி வழிபட்டுப் பின் அதனைக் கொண்டு நிலத்தை உழுதனர்; அவர்கள் எக்களிப்புக் கொண்டு பாடிய பாடல் ‘ஏர் மங்கலம்’ எனப்பட்டது. அரிந்து குவித்துக் கடாவினைவிட்டு அதரி திரித்து நெல்லை முறம் கொண்டு தூற்றியபோது பாடிய பாட்டு ‘முகவைப் பாட்டு’ எனப்பட்டது. கிணைப் பொருநர் முழவு கொண்டு எழுப்பியது ‘கிணை இசை’ எனப்பட்டது. இம்மூவகைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வழிநடை வருத்தம் தெரியாமல் நடந்து சென்றனர்.

வழியில் பல ஊர்களைக் கடந்து சென்றனர். மறையவர்கள் வேள்விகள் எழுப்பிய புகை, உழவர்கள் கரும்பு ஆலைகளில் மூட்டிய தீயில் தோன்றிய புகை வானத்தை மூடின; அவை மலை தவழும் மேகம் எனக் கவிழ்ந்திருந்தன; இத்தகைய அந்தணர்கள் இருக்கைகளும், உழவர்கள் இல்லங்களும் உடைய ஊர்கள் பலவற்றைக் கடந்து சென்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு கர்வதமே அவர்களால் கடக்க முடிந்தது. அங்கங்கே இருள் கவ்வும் நேரங்களில் சோலைகளில் தங்கி ஓய்வு பெற்றனர்; களைப்பு ஆறினர்.

ஊர்கள் பல கடந்தவர் திருவரங்கத்தை அடுத்த ஒரு சோலையில் தங்கினர். அங்கே உலக நோன்பிகள் இட்ட சிலாதலம் ஒன்று இருந்தது; பட்டினப்பாக்கத்து உயர்குடி மக்கள் அமைத்த சிலாதலம் அதுவாகும். அங்கே அறிவும், ஞானமும் மிக்க சமணர் தலைவர்கள் வந்து தங்குவது உண்டு; அவர்களைச் சாரணர் என்று குறிப்பிட்டனர். அவர்கள் மத குரு ஆவார்கள்.

இம்மூவரும் சென்றபோது சாரணர் ஒருவர் அங்கு வந்து அந்தச் சிலாதலத்தில் அமர்ந்திருந்தார். அவர் சமண மத குருவாகக் கருதப்பட்டவர். இவர் விண்வழியே வந்து மண்ணகத்து ஆங்காங்கு இருந்து அருள் செய்தார்; அது அவர் அரும்பணியாக இருந்தது.

சாரணர் பெருமகனாரைக் கண்ட இம்மூவரும் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினர். இம்மூவரைக் கண்ட அச்சாரணர் இவர்கள் சோகக் கதைகளைக் கேட்க முற்படவில்லை; கண்டதும் இவர்கள் நிலை யாது என்பதை அறிந்த ஞானி அவர்; இத்துயரங்களை நேரிடை களைய முற்படவில்லை.

அவரவர்கள் தம் வினைகளுக்கு ஏற்ப விளைவுகளை அடைவது இயல்பு என்பதை நன்கு அறிந்தவராகத் திகழ்ந்தார். அவர் விருப்பு வெறுப்பு அற்ற மனநிலை கொண்டவர் ஆதலின் இவர்களைக் கண்டு எந்த வருத்தமும் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

அவர் கவுந்தி அடிகளுக்கு அறவுரை கூறினார். மூன்று பேருண்மைகளை அவர் கவுந்தி அடிகளுக்கு உரைத்து அருள் செய்தார். “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்றும், “வாழ்க்கை நிலையற்றது” என்றும், “பிறப்பு அறுக்க அருகன் திருவடி வணங்க வேண்டும்” என்றும் அறவுரை கூறினார்.

கவுந்தி அடிகள் பெருமகிழ்வு கொண்டு இறைப் பேரருளை வியந்து போற்றினார். அருகனைப் புகழ்ந்து பேசினார். அருகனின் திருநாமங்களைச் சொல்லி வாழ்த்தினார். சாரணர் பெருமகனார் அவருக்குப் ‘பிறவி நீங்குக; பாசம் அறுக” என்று ஆசி கூறி அச்சிலாதலம் விட்டு எழுந்து ஏகினார். அங்கே ஒரு வியத்தகு காட்சி நிகழ்ந்தது. அவர் அந்தரத்தில் சிலாதலத்துக்கு மேல் ஒரு முழம் உயர நின்றார். அது புதுமைமிக்கதாக இருந்தது. அதன்பின் அவர் விண்ணில் உயர்ந்து வான்வழிச் சென்று மறைந்தார். ஏனைய இருவரும் அச்சாரணரைத் தொழுது வணங்கினர். தம் பிறவிப் பிணியும் தீர்க என வேண்டிக் கொண்டனர்.

அதன் பின் காவிரி நீர்த் துறையை அடுத்துப் பூவிரிசோலை ஒன்றில் தங்கினர்; அங்கு அவ்விருவரும் களைத்து அயர்ந்து இருந்தனர். அயலில் கவுந்தி அடிகள் துணை இருந்தனர்.

இளங் காதலர்கள் இவர்கள் காமனும் ரதியுமாகப் புதியவர்களுக்குக் காட்சி அளித்தனர். பரத்தை ஒருத்தியும், அவள் காதலன் வெற்றுரையாளன் ஒருவனும் அவ்வழியே வந்தனர்; அவர்கள் விழிகளில் இவர்கள் பட்டனர். இவர்கள் பேரழகில் மயங்கிய அவர்கள், “இவர்கள் யார்?” என்று அந்த முதிய தவமாதினைக் கேட்டனர். “மக்கள் காணீர்! மிக்க துயரமுற்றனர்; அவர்களை விட்டு விலகுவீர்” என்றார்.

“மக்கள்” என்றால் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர் என்ற பொருளில் எடுத்துக் கொண்டு “ஒரு தாய் வயிற்றுப் பிறந்தவர் காதல் செய்வதும் உண்டோ?” என்று எள்ளி நகையாடினர். இதனைத் தாங்காது கவுந்தி அடிகள் வெகுண்டு அவர்களைச் சபித்தார். எள்ளிப் பேசிய அவர் களை “முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக” என்று சாபமிட்டார்.

அவர்கள் நரிகளாக மாறி ஊளையிட்டனர். இந்த மாற்றத்தைக் கண்டு கோவலனும் கண்ணகியும் திடுக்கிட்டனர். பெருமை மிக்க கோவலனும் கண்ணகியும் அஞ்சி இரக்கம் கொண்டு அவர்களுக்காகப் பரிந்து பேசினர். “நெறியில் நீங்கியவர்கள் அறியாமையால் இழைத்த தவறுகள் இவை அவர்கள் பிழைத்துப் போவது தக்கது: அவர்களை மன்னிக்கவும்” என்று வேண்டினா்.

“யாண்டு ஒன்று அவர்கள் உறையூரினை அடுத்த காட்டில் உறைவர்; பின் அவர்கள் தன் பழைய உரு பெறுவர்” என்று கூறி அவர்கள் சாபத்தை மாற்றினார். அதன்பின் இவர்கள் தாம் தங்கி இருந்த சோலையை விட்டுச் சோழர் தம் தலைநகராகிய உறந்தையை அடைந்தனர். அவ் உறையூருக்குக் ‘கோழியூர்’ என்ற பெயரும் அக்காலத்தில் வழங்கியது. அதற்கு ஒரு கதை பின்னணியாக விளங்கியது. யானையை ஒரு சேவற் கோழி வென்றது என்று கூறப்படுகிறது. வீரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது; திருவரங்கத்தை அடுத்து அவர்கள் உறையூர் போய்ச் சேர்ந்தனர். அது சோழ நாட்டின் தென் எல்லையாக இருந்தது.

2. மதுரைக் காண்டம்

11. காடுகளைக் கடத்தல்

(காடுகாண் காதை)

மூன்று குடைகளை அடுக்கி வைத்தது போன்ற முக்குடைக் கீழ் அதன் குளிர் நிழலில் உறையும் தேவன் ஆகிய அருகன்; அவன் ஞாயிறு போன்ற ஒளி படைத்தவன்; அசோக மரத்து நிழலில் அமர்ந்தவன்; அவன் திருவடி வணங்கினர். பின்பு வழிபாடு முடித்து அவ்ஊரில் நிக்கந்தன் பள்ளி என்ற அறப்பள்ளியை அடைந்தனர். அங்கே சமணத் துறவிகள் சிலர் தங்கி இருந்தனர். ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கத்தில் சாரணர் பெரு மகன்பால் கேட்டு அறிந்த அறமொழிகளைக் கவுந்தி அடிகள் அவர்க்குச் செப்பினார். அத்துறவிகள் தங்கியிருந்த மடத்திலேயே அம்மூவரும் ஒர் இரவு தங்கினர்.

மறுநாள் காலையில் உறையூரைவிட்டுத் தென்திசை நோக்கிச் செல்லப் புறப்பட்டு வைகறை யாமத்தில் உறை யூர் எல்லையைக் கடந்து வழியில் ஒரு சோலையகத்துத் தங்கினர்.

மாங்காட்டு மறையவன்

அப்பொழுது பாண்டியன் புகழைப் பறை சாற்றி யவனாய் ஒரு மாமறையாளன் அவர்கள் முன் வந்து சேர்ந்தான். அவனை நோக்கி “நும் ஊர் யாது? இங்கு வருவதன் காரணம் என்ன?” என்று கோவலன் வினவினான்.

அவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தவன் என்பதை அவன் கூற்று நிறுவியது. பாண்டியர் தம் பண்டைப் பெருமைகளை அடுக்கிக் கூறினான். கடல் அலைகள் கரைகளில் மோத அவற்றில் கால் வைத்து அதனை அடக்கினான் ஒரு பாண்டியன்; அவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். அவன் அதனை வற்றச் செய்வதற்குத் தன் கைவேலைக் கடலில் எறிய அது பொறுக்காது கடல்கோள் எழுந்து பஃறுளி யாற்றையும் குமரிக் கோடு என்னும் மலையையும் அழித்துவிட்டது. எல்லை சுருங்கிய காரணத்தால் அவன் அதனைப் பெருக்க வடநாடு படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் அடிப்படுத்தினான். இது ஒரு வரலாறு.

மற்றொரு பாண்டியன் இந்திரனால் பாராட்டப்பட்டான். அவன் தந்த பொன்னாரத்தைத் தன் கழுத்தில் பூண்டான். 'ஆரம் பூண்ட பாண்டியன்' என அவன் பாராட்டப் பெற்றான்.

மற்றொரு பாண்டியன் இந்திரனை எதிர்த்து அவன் தலைமுடியைத் தன் கைச் செண்டால் அடித்துச் சிதறச் செய்தான். அதனால் இந்திரன் வெகுண்டு எழுந்து எழில் மிக்க மேகங்களை மழை பொழியாமல் தடுத்தான்; அவற்றைச் சிறைப்பிடித்து இழுத்து வந்து நிறைமழை பொழியுமாறு பாண்டியன் கட்டளை இட்டான். ‘மேகத்தைக் கால் தளையிட்டுப் பணிவித்த பாண்டியன் இவன்’ என்று பாராட்டப்பட்டான், இச்செயலைச் செய்தவன் உக்கிரப் பெருவழுதி என்பான் ஆவான். இம் மூவரையும் வாழ்க என்று வாழ்த்துக் கூறியவனாய் அம்மறையவன் வந்தான். பாண்டியனின் புகழ் மொழிகளை அடுக்கிக் கூறிய பின் அவன் தன் பயணத்தைப் பற்றி ஒரு விரிவுரையையே நிகழ்த்தினான்.

“திருவரங்கத்தில் திருமால் துயிலும் வண்ணத்தையும், திருவேங்கடத்தில் அத்தெய்வம் நிற்கும் அழகினையும் காணப் புறப்பட்டேன். யான் குடமலை மாங்காட்டில் வசித்து வருபவன், தென்னவன் நாட்டின் தீது தீர் சிறப்பை நேரில் கண்டு வருகிறேன்; அதனால்தான் அவனை வாழ்த்திக் கொண்டு வருகிறேன்; இதுவே என் வருகை” என்று அவ் அந்தணன் உரைத்தான். தேசங்கள் பல கண்ட அவனிடம் கோவலன் நேசம் பாராட்டினான்.

“மாமறை முதல்வனே! மதுரைக்குச் செல்லும் நெறியாது? அதனைக் கூறுக” என்று கோவலன் கேட்க அவன் வழித்திறத்தைத் தன் நாவன்மை தோன்றக் கூறினான்.

மூன்று வழிகள்

“நீங்கள் இந்தக் கடும் வெய்யிலில் காரிகை இவளுடன் புறப்பட்டு வந்துளளீர் குறிஞ்சியும் முல்லையும் தம் நல்லியல்பு திரிந்து பாலை என்று இந்நிலப் பகுதிகள் வடிவம் கொண்டுள்ளன. இந்த நெடுவழியைக் கடந்து சென்றால் கொடும்பாளூர் என்னும் ஊரில் நெடுங்குளம் ஒன்று வரும்; அங்குச் சிவன் ஏந்தி நிற்கும் சூலத்தைப் போல அதன் கரையில் மூன்று வழிகள் கிளைக்கின்றன.

வலது புறம்

இதன் வலப் பக்கம் சென்றால் மராம், ஒமை, உழிஞ்சில், மூங்கில், காய்ந்து கிடக்கும் மரம் முதலியன உள்ள காடு உள்ளது. நீர் வேட்கையால் மான்கள் கூவி விளிக்கும் காட்டையும், எயினர் குடியிருப்பையும் கடந்தால் ஐவனம் என்னும் நெல்லும், கரும்பும், தினையும், வரகும், வெள்ளுப்பும், மஞ்சளும், கவலைக் கொடியும், வாழை, கமுகு, தெங்கு, மா, பலாவும் சூழ்ந்த தென்னவன் சிறுமலை தோன்றும். அம்மலையை வலமாகக் கொண்டு சென்றால் மதுரையம்பதியை அடையலாம்” என்றான். இடப் புறம்

“அவ்வழி செல்லாமல் இடப்பக்கம் சென்றால் வயல் களும் சோலைகளும் உடைய வழியைக் கடந்தால் திருமால் குன்றத்தை அடைவீர். அங்கே மயக்கம் கெடுக்கும் பில வழி ஒன்று உண்டு. இப் பில வழியில் சென்றால் புண்ணிய சரவணம், பவகாரணி இட்டசித்தி என்ற பெயர் பெற்ற மூன்று பொய்கைகளைக் காண முடியும்”.

“அவற்றுள் புண்ணிய சரவணம் ஆகிய பொய்கையில் நீராடினால் இந்திரன் எழுதிய ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிந்தவர் ஆவீர்”.

“பவகாரணி என்னும் பொய்கையில் நீராடினால் இந்தப் பிறவிக்குக் காரணமாக இருக்கும் பழம் பிறப்பைப் பற்றி அறிவீர்”.

“இட்டசித்தியில் நீராடினால் நீங்கள் கருதும் பொருள் அனைத்தும் பெறுவீர். எனவே இப்பிலத்துள் சென்று ஏதோனும் ஒன்றில் முழுக வேண்டும் என்று கருதினால் திருமால் குன்றத்தில் அங்கு விற்றிருக்கும் திருமாலை முதலில் வணங்குவீராக. அத்திருமாலைத் துதித்து விட்டு அம்மலையை மும்முறை வலம் வந்தால் அங்கே சிலம்பாற்றங் கரையில் மலர் பூத்தவேங்கை மரத்து நிழலில் ஒரு பெண் தெய்வம் வந்து தோன்றும். அத்தெய்வம் மூன்று வினாக்களைத் தொடுக்கும். இம்மைக்கு இன்பம் தருவது யாது? மறுமைக்கு இன்பம் தருவது யாது? இவ்விரண்டும் அல்லாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இன்பம் யாது? என்ற வினாக்களை எழுப்பும்; இவற்றிற்குத் தக்க விடை தந்தால் பிலத்துக்குள்ளே செல்லும் தகுதி உண்டு என்று அத்தெய்வம் உறுதி செய்யும். அவர்களுக்கு உள்ளே செல்ல வழி காட்டும்; அவள் அம்மலையில் நிலைத்து வாழ்பவள்; மலைச் செல்வி என்று அவளைக் கூறுவர்.

அவள் தகுதி உடையவர்க்கே கதவினைத் திறந்து விடுவாள். அந்நெடிய வழியே சென்றால் பல கதவுகள் இடையிடும். இறுதியில் ‘ஒட்டுக் கதவு’ ஒன்று தோன்றும். அதாவது இரண்டு கதவுகள் ஒட்டிய கதவு அது ஆகும். அதன் உள்ளே சென்றால் சித்திரம் போன்ற சீர்மை உடைய அழகி ஒருத்தி தோன்றுவாள். “அழிவு இல்லாத பேரின்பம் எது? என்பதற்கு விடை தந்தால் உதவுவேன்” என்று கூறுவாள். தக்கவிடை தராவிட்டாலும் அவர்களுக்கு எத்தகைய துன்பமும் விளைவிக்கமாட்டாள். நெடு வழிமட்டும் காட்டுவாள்; விடை தருவாரை அந்த மூன்று பொய்கைகளையும் காட்டி அங்கே அவர்களைக் கொண்டு விடுவாள். அவள் திரும்பிவிடுவாள். பஞ்சாட்சர மந்திரத்தையும், அஷ்டாட்சர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு விரும்பிய பொய்கையில் முழுகினால் விரும்பிய பேறுகள் கிடைக்கும். கண் கூடாகக் கண்ட அனுபவம் இது; நம்பிச் செல்லலாம்” என்றான்.

“இவற்றின் பயனைக் கருதாமலும் செல்லலாம்; திருமாலை நினைத்து வழிபட்டால் அவன் கருடக் கொடியுடைய தூண் தோன்றும். அதை வழிபட்டு இத்திருமால் திருஅருள் பெற்று அதன் பின் எளிதில் மதுரை அடையலாம்” என்றான். “இது பில வழி” என்று கூறி விளக்கினான்.

இடைப் பட்ட வழி

“அந்நெறி படர விருப்பம் இல்லை என்றால் இடையது செம்மையான நெறியாகும். சோலைகள் மிக்க ஊர்கள் இடையிட்டு வரும் காடுகள் பல கடந்தால் அரிய வழி ஒன்று அகப்படும். அங்கே வருத்தும் தெய்வம் ஒன்று குறுக்கிட்டுத் தடுக்கும். அச்சம் தராத விரும்பத்தக்க வடிவத்துடன் வந்து காட்சி தரும்; செல்வோரைத் தடுத்து நிறுத்தும். இது ஒரு இடையூறு, அவ்வளவுதான்; அதை மீறிச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடையலாம்; பின் நேரே மதுரை சென்று சேரலாம்” என்று மூன்று வழிகளைப் பற்றியும் விளக்கமாகக் கூறினான்.

இச்செய்திகள் அனைத்தும் கேட்டு அவற்றிற்கு மறுப்பு உரைத்தார் கவுந்தி அடிகள். “பிலம் புகுந்து நலம் பெறத் தேவை இல்லை; அங்கே பொய்கைகளில் முழுகிப் புண்ணியம் தேடத் தேவை இல்லை” என்று புகன்றார். “புண்ணிய தீர்த்தம் முழுகி ஐந்திரம் என்னும் நூலைப் பெறத் தேவை இல்லை. அருகன் அருளிய மெய்ந் நூல் தம்மிடம் உள்ளது” என்று அறிவித்தார். “பவகாரணியில் முழுகிப் பிறப்பு அறியத் தேவை இல்லை. சென்ற பிறப்பின் செய்திகள் எல்லாம் இந்தப் பிறப்பைக் கொண்டு அறிய முடியும்” என்றார். “இட்டசித்தி முழுகி விரும்பியதைப் பெறத் தேவை இல்லை; உண்மைவழி நின்று உயிர்களுக்கு உதவினால் உயர்வு அடைய முடியும்” என்று தெரிவித்தார்; அவ் அந்தணன் அறிவித்த அறிவுரைகளை மறுத்துக் கூறி அவன் கூறிய இடை வழியே செல்லத் தக்கது என்று தேர்ந்து எடுத்தார்.

மறையவனுக்குத் தம் கோட்பாடுகளை அறிவித்து அவனுக்கு விடை தந்து அனுப்பி விட்டுக் கோவலன் கண்ணகியுடன் அன்று அந்த ஊரில் தங்கினார். மறுநாள் மூவரும் புறப்பட்டுக் காட்டு வழியே தொடர்ந்து நடந்தனர்.

கவுந்தி அடிகளும் கண்ணகியும் அயர்ந்து மெய்வருந்தி ஒரு புறம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டனர். இந்த இடைவெளியில் வழியே ஒரு பக்க வழியில் திரும்பிக் குடிக்க நீர் கொணர ஒரு பொய்கைக் கரையைக் கோவலன் அடைந்தான். அதன் துறையில் நின்றபோது தெய்வம் ஒன்று அவனைச் சந்தித்தது; மாதவிபால் அவன் நேயம் கொண்டவன். அவன் விரும்பும் வண்ணம் வயந்த மாலை வடிவில் அவன் முன் சென்றது. கொடி நடுக்குற்றது போல் அவன் அடியில் விழுந்து ஆங்குக் கண்ணீர் உகுத்தாள். சோகக் கதையைச் சொகுசாகக் கூறினாள். “மாதவி எழுதிய வாசகம் தவறாக உன்னிடம் யான் திரித்து உணர்த்திவிட்டேன். அதனால்தான் நீ கொடுமை செய்து விட்டாய் என்று கூறிக் கடிந்து என்னை மாதவி அனுப்பிவிட்டாள்; அவளும் கணிகை வாழ்க்கையைக் கைவிட்டு என்னையும் வெளியேற்றி விட்டாள். அதனால் மதுரை செல்லும் வணிகக் கூட்டத்தோடு வழி அறிந்து உன்னை வந்து அடைந்தேன்” என்று கூறி நீலிக் கண்ணீர் வடித்தாள்.

அவள் கூற்றை அவன் நம்பவில்லை; மாங்காட்டு மறையவன், “மயக்கும் தெய்வம் வழியில் தடுக்கும்” என்று கூறியது நினைவுக்கு வந்தது; உடனே பாய் கலைப்பாவை மந்திரம் சொல்லி அவளை அச்சுறுத்தினான்.

அவன் தெய்வ மந்திரத்துக்கு அஞ்சி அவள் உய்யும் வழி நாடி, “வனசாரணி யான்; உன்னை மயக்கம் செய்தேன்; இச்செய்தியைப் புனமயில் சாயலாள் கண்ணகிக்கும், புண்ணிய முதல்வியாகிய கவுந்தி அடிகட்கும் உரையாமல் ஏகுக” என்று வேண்டிக் கொண்டாள். அத்தெய்வம் அவனை விட்டு அகன்றது.

அவன் தாமரை இலையில் தண்ணீர் ஏந்தி அயர்வுறு மடந்தை கண்ணகியின் அருந்துயர் தீர்த்தான்.

அந்தக் கடும் வெய்யிலில் பகற்பொழுது செல்வது அரிது என்று கருதி அங்குப் பல்வகை மரங்கள் செறிந்த ஐயை கோட்டத்தில் ஒரு புறம் அடைந்தனர். வழிப்பறிக் கொள்ளை செய்து வளம் கொழித்து வாழும் வேடுவர்கள் அங்கு அக் கொற்றவை கோயிலுக்கு வழிபாடு செய்தனர்; பலிக் கொடையும் ஈந்தனர்.

12. கொற்றவையை வழிபடுதல்

(வேட்டுவ வரி)

கடுமையான வெய்யிலில் நடந்ததால் கண்ணகி மிக்க துன்பத்தை அடைந்தாள்; மூச்சு வாங்க உயிர்த்தாள்; ஐயை கோட்டத்து ஒரு பக்கம் நடந்த களைப்புத் தீர மூவரும் இருந்தனர்.

அக்கோயிலின் மறுபக்கத்தில் சாலினி என்னும் தேவராட்டி ஒருத்தி தெய்வமுற்று ஊர் நடுவே இருந்த மன்றத்தில் அடிபெயர்த்து ஆடினாள் “மக்கள் வாழும் நகரங்களில் பசுக் கூட்டங்கள் மிக்கு உள்ளன; வில்லேந்தும் வேடுவர் மன்றுகள் வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. இவர்கள் அறக்குடியினர் போல் அடங்கிக் கிடக்கின்றனர். கொற்றவைக்கு உற்ற பலி தராவிட்டால் அவர்கள் வெற்றிபெற இயலாது; கள் பெற்று மகிழும் வாழ்க்கை வேண்டும் என்றால் கொற்றவைக்குப் பலி இட்டு மேற் செல்லவும்” என்று அறிவித்தாள். அவர்களைச் செயல்படத் துண்டினாள்.

வீர மரபினராகிய அவ்வேடுவர் பலி இட்டுத் தம் தலையை எண்ணுவரேயல்லாமல் நோயில் பட்டு இறத்தலை அவர்கள் விரும்பியது இல்லை. அத்தகைய வீர மரபினர் தம் குடிப் பிறந்த குமரிப் பெண் ஒருத்தியைக் கோலம் செய்து கொற்றவை ஆக்கினர். கொற்றவை வேடம் பூட்டினர். அவள் சுருண்ட கூந்தலை அரவின் குட்டி போலக் காட்சி பெறுமாறு கட்டி முடித்தனர்; தோட்டத்துள் மேய்ந்த பன்றியைக் கொன்று அதன் வளைந்த கொம்பினைப் பிடுங்கிப் பிறைச்சந்திரன் எனச் சூட்டினர்; புலிப்பல்லைக் கோத்துத் தாலி என அணிவித்தனர். புலித்தோலை மேகலையாக உடுத்திக் கரிய நிறத்து வில் ஒன்றினை அவள் கையில் தந்து கலைமான் மீது அமர்வித்தனர். பறவையும், கிளியும், காட்டுக் கோழியும், நீல நிறமயிலும், பந்தும், கழங்கும் தந்து ஏத்தித் துதித்தனர். சுண்ணப் பொடியும், குளிர் சந்தனமும், அவரையும், துவரையும், எள்ளுருண்டையும், கொழுப்புக் கலந்த சோறும், பூவும், புகையும் மற்றும் மணப் பொருள்களும் ஏவல் செய்யும் வேட்டுவப் பெண்கள் ஏந்தி வரச் செய்தனர். வழிப்பறி செய்யுங்கால் கொட்டும் பறையும், சூறையாடும் போது ஊதி ஒலிக்கும் சின்னமும், கொம்பும், குழலும், பெருமை மிக்க மணியும் அனைத்தும் இயைய ஒலிக்கச் செய்தனர். அக்கொற்றவை வடிவில் குமரிப் பெண்ணை முன்னால் நிறுத்தி வைத்து பலிப் பீடிகை முன் நின்று மானை ஊர்தியாகக் கொண்ட கோயில் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிக் கைதொழுது ஏத்தினர்.

அப்பொழுது காலடி நோவக் கணவனோடு இருந்த மணம் மிக்க கூந்தலை உடைய கண்ணகியை நோக்கிச் சாலினியாகிய முதுமகள் தொடர்ந்து தெய்வம் உற்றுப் பாராட்டிப் பேசினாள். “இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி, தென் தமிழ்ப் பாவை பெற்ற தவச் செல்வி: உலகுக்கே ஒளிதரும் ஒப்பற்ற மணிவிளக்கு ஆவாள்” என்று தெய்வமுற்று உரைத்தாள்.

“இம்மூதாட்டி பேதைமை பேசினாள்” என்று கூறியவளாய்க் கணவனின் முதுகுபுறத்தில் ஒதுங்கி நின்றாள். அரும்பிய முரலில் புதுமையைத் தந்தாள். குமரிக் கோலத்தில் இருந்த கொற்றவையை அவ்வேடுவர்கள் பல பெயர்களைச் சொல்லித் துதித்தனர். பிறை சூடிய பெருமாட்டி என்றும், நெற்றிக் கண் படைத்த தெய்வம் என்றும், பவளவாயினை உடையவள் என்றும், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள் என்றும், சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள் என்றும், காலில் சிலம்பும் வீரக்கழலும் அணிந்தவள் என்றும், கொற்றம் தரும் வில்லை ஏந்தியவள் என்றும், மகிடாசுரனை வென்று அவனை அடக்கி அவன் முடிமீது அடிவைத்து ஆடியவள் என்றும், அவ்வாட்டத்தில் அவன் தலைவேறு உடல் வேறு என இருவகைக் கூறுபட்டது என்றும், இன்னும் அமரி குமரி எனப் பல்வேறு பெயர்களில் அழைத்தனர். அந்தக் குமரிப்பெண் கொற்றவை கோலத்தில் இருந்து அவர்களுக்கு அருள் செய்தனள். இனி வரிப் பாடல்கள் பாடலாம் என்று அவள் ஆணையிட்டனள்; அதனைத் தொடர்ந்து அவர்கள் பாடத் தொடங்கினர்.

ஐயை கோயில் முற்றத்தைப்பற்றி முதற்கண் பாடினர். “ஆங்கு நாகம், நரந்தம், ஆச்சா, சந்தனம், சே, மா இம்மரங்கள் செறிவு பெற்றன”.

“வேங்கை, இலவம், புன்குமரம் இவை பூக்களைச் சொரிந்து அழகுபடுத்தின”.

“மரவம், பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் இவை மலர்ந்தன; இவற்றின் கொம்புகளில் வண்டுகள் ஆர்த்தன; அவை யாழ்போல் ஒலி செய்தன” என்று பாடினர்.

அடுத்து அவர்கள் வேடுவர் தம் குலத்தைச் சிறப் பித்துப் பாடினர்.

“கொற்றவை கோலம் கொண்ட இப்பொற்றொடி மாது மிக்க தவம் செய்தவள்; அவள் பிறந்த குலம் அவளால் பெருமை பெற்றது.”

அடுத்துக் கொற்றவையைச் சிறப்பித்துப் பாடத் தொடங்கினர். “யானைத் தோலையும், புலித்தோலையும் போர்த்தி எருமைத் தலையின் மேல் ஏறி நின்றவள் நீ! நீ மறைகளையும் கடந்த பொருளாக விளங்குகிறாய். வானவர்கள் உன்னை வணங்குகின்றனர். ஞானக் கொழுந்தாய் நீ விளங்குகின்றாய். அத்தகைய சிறப்பை நீ படைத்துள்ளாய்.”

“கையில் வாள் ஏந்தி மகிடனை அழித்துக் கலைமான் மீது நிற்கின்றாய். அரி, அரன், அயன் இம்மூவர் உள்ளத்தும் நிறைந்தவள். நீ சோதி விளக்காக அவர்கள் உள்ளத்தில் சுடர் விடுகின்றாய்”.

“சங்கும் சக்கரமும் உன் திருக்கையில் தாங்கி நிற்கிறாய். சிங்க ஏற்றில் அமர்ந்து இருக்கின்றாய். கங்கையை முடியில் அணிந்த சிவனின் இடப்பாகத்து உறைகின்றாய். வேதங்கள் உன்னை ஏத்திப் புகழ்கின்றன”.

“மற்றும் கொன்றையும் துளவமும் சேரத் தொடுத்த மலர்ப்பிணையலைத் தோள் மேல் இட்டு அசுரர் வாட அமரர் வாழக் குமரிக் கோலத்தில் மரக்கால் கூத்து ஆடிக்காட்டினாய்”.

“நீ மரக்காலில் நின்று ஆடும் போது உன் காற்சிலம்பு ஒலித்தது; சூடகமும், மேகலையும் மாறி மாறி ஒலித்தன. அவுணர்கள் வீழ்ந்தனர். நீ மரக் காலில் ஆடும்போது உன் காயாம் பூ போன்ற மேனியை வாழ்த்தி வானோர் மலர் தூற்றுவர். அது மழை போலப் பொழியும்”.

வெற்றிச் சிறப்புகள் விளம்புதல்

“அச்சம் தரும் சீறூர் அதனில் வீரன் ஒருவன் ஆநிரை கவரச் செல்வான் என்றால் வாள் ஏந்திய கொற்றவை அதனை விரும்புவாள் என்பது உறுதி. அவள் அருள் செய்தால் பகைவர் ஊரைச் சார்ந்த காட்டில் கரிக்குருவி தன் கடிய குரலை இசைத்துக் காட்டும்; இது உறுதி.”

“கள் விலை பகர்வோர் கடன் கொடுக்க மறுக்கின்றனர். அதைப் பொறுக்காத மறவன் கையில் வில் ஏந்துகிறான். அவனோடு பறவைகள் அவனைத் தொடர்கின்றன. பகைவர் பசுநிரை கருதி அவன் போகும் காலத்தில் அவன் வில்லின் முன் கொற்றவையும் கொடி எடுத்து அவனுக்கு வெற்றியைத் தர முன் செல்வாள்; இது உறுதி”.

“மாமை நிறம் உடைய இளநங்கையே! வேட்டுவர் மகளே! இதனைக் கேட்டு நீ மகிழ்வாய். இவை நின் ஐயன்மார் முதல் நாள் வேட்டையில் கொண்டு வந்து நிறுத்திய பசுநிரைகள்; அவற்றை வேல் வடித்துத் தந்த கொல்லனுக்கும், போரில் துடிகொட்டிய துடியனுக்கும், யாழ்ப்பாணருக்கும் ஆக இவர்களுக்குத் தந்துள்ளார். அவை அவர்கள் முற்றத்தில் நிற்கின்றன. இவை உன் ஐயன்மார் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்கள்; வெற்றி விருதுகள்; பரிசுகள்; நீ பெருமை கொள்வாயாக!”.

“முருந்தின் முகை போன்ற முறுவல் உனக்கு அழகு செய்கிறது; நீ இங்கே பார்; உன் தலைவர்கள் கரந்தையராகிய பகையாளிகள் அலறக் கவர்ந்த பசு நிரைகள் இவை, கள்விலையாட்டி, ஒற்று அறிந்து வந்து கூறிய கானவன், புள்நிமித்தம் பொருந்தச் சொன்ன கணியன் இவர்கள் முற்றங்களில் நிறைந்துள்ளன. இது உனக்குப் பெருமை சேர்க்கும்”.

“தாமரை போன்ற அழகிய கண்களை உடைய இளநங்கையே! நின் ஐயன்மார் அயலுார் சென்று ஆநிரைகள் கவர்ந்து வந்துள்ளனர். நரைமுது தாடியை உடையவர்கள்; கடு மொழி பேசியே பழகியவர்கள் நம் வேட்டுவமக்கள்; இந்த எயினர் எயிற்றியர் முன்றில்களில் இந்தப் பசுக்கள் நிறைந்துள்ளன. இச்செல்வம் கண்டு நீ பெருமை கொள்வாய்!”.

பலிக்கொடை படைத்தல்

இவ்வாறு இவர்கள் தம் வெற்றிச்சிறப்பை விளம்பிப் பாடுகின்றனர். அடுத்து அவர்கள் தம்மையே பலியாகத் தந்து கொற்றவைக்குச் சிறப்புச் சேர்க்கின்றனர். அவர்கள் ஆண்மையும், துணிவும், வீரமும் இதனால் புலப்பட்டன; “கொற்றவையே நீ பலி ஏற்றுக் கொள்” என்று வேண்டினர்.

“முனிவர்க்கும் தேவர்க்கும் அருள் செய்யும் தெய்வமே உன் இணையடி தொழுகின்றோம். அடல் வலி எயினர் நின்னை வணங்கித் தரும் பலிக்கடன் இது, நீ தந்த வெற்றிக்கு விலையாக அவர்கள் தம் மிடறு உகு குருதியைத் தருகிறார்கள்; பெற்றுக் கொள்வாயாக”.

“நிணத்தில் இருந்து உகுகின்ற குருதி அதனை ஏற்றுக்கொள்: இது நீ தந்த வெற்றிக்கு ஈடு செய்வதாகும்”

“அடுபுலி அன்ன வேடுவர்கள் துடியும் பறையும் கொட்ட நின் அடிக்குச் செலுத்தும் கடன் இது பலிமுகத்தில் இடும் குருதி இதுவே எம் காணிக்கையாகும். இதனை ஏற்றுக் கொள்வாய்”,

“வழிஇடை வருவோர் மிகுதி யாகட்டும்; அவர்களிடம் பறித்துத் திரட்டும் கொள்ளைகள் பெருகுவது ஆகட்டும். இந்த வேட்டுவர் படைக்கும் மடைப்பலி ஏற்று அருளுக”.

“துடியொடு பகைவர் ஊரில் அடிவைத்து எறிவதற்கு அருள் செய்க; அதற்காக நீ பலிக்கடன் ஏற்பாயாக. அமுதுண்டு தேவர்கள் மடிகின்றனர்; நஞ்சுண்டு நீ வாழ்கிறாய். இது வியப்பாக உள்ளது; உன்னைப் போற்றி மகிழ்கிறோம்; பலி ஏற்று அருளுக”.

“அருள் என்பதை நெஞ்சகத்திலிருந்து அகற்றியவர்கள் நாங்கள். பொருள் கொண்டு அதற்காக மற்றவர்களைப் புண் செய்வதே எம் பண்பட்ட தொழில், நாங்கள் மறவர்கள், நாங்கள் இடும் பலிக் கடனை உண்பாய்! நீ மருதிடைத் தவழ்ந்தாய்; உன் மாமன் வஞ்சகம் செய்து சகடத்தை அனுப்பினான். அதனை விகடம் ஆக்கி நீ வெற்றி கொண்டாய்: வீரம் மிக்க செயல் அது” என்று பாடினர்.

நாட்டு வாழ்த்து

இறுதியில் அவர்கள் வேட்டுவ வரிப்பாடல் நாட்டு அரசன் வாழ்த்தில் முடிகிறது.

“மறைமுது முதல்வன் ஆகிய சிவபெருமான் அவன் தன் ஆணை கேட்டு அகத்தியன் பொதிகை மலையில் தங்கினான்; அப்பொதிகை மலைக்குத் தலைவனாகிய பாண்டியனின் பகைவர்கள் நாட்டில் போர்க்களமும், கரந்தைப் போரும் சிறப்பதாக. பகைவர்கள் அழிவு பெறுக! பாண்டியன் வெட்சிப் போரில் வெற்றி பெறுவானாக!” என்று அவர்கள் வரிப்பாடல் முடிவு பெறுகிறது.

13. புறஞ்சேரியில் தங்கிய செய்தி

(புறஞ்சேரி இறுத்த காதை)

பயணம் தொடர்தல்

குமரிப் பெண்ணின் கொற்றவை கோலம் நீங்கியது. ஆடிமுடித்து அடங்கிய பின்னர்க் கோவலன் கவுந்தி அடிகள் கால்அடியில் விழுந்து, “இக்கொடிய வெய்யிலில் கடிய வழியில் கொடியனைய கண்ணகி செல்லுதல் இயலாது; பரல் வெங்கானத்தில் அவள் சீறடி படியாது. இரவில் செல்வதே தக்கது” என்று விளக்கிக் கூறினான்.

“மேலும் பாண்டிய நாட்டில் கரடி ஏதும் இடர் செய்யாது; அவை புற்றுகளைத் தோண்டா. புலியும் மான் வேட்டை ஆடாது. பாம்பும், சூர்த் தெய்வமும், முதலையும் தம்மைச் சார்ந்தவரை வருத்துதல் செய்யா. செங்கோன்மை கெடாத சீர்மையுடைய பாண்டியர் காக்கும் நாடு என்று எங்கும் பரவிய புகழோ பெரிது; பகலில் செல்வதை விடப் பல்லுயிர்க்கு ஆதரவாக நிலவு வீசும் இரவிடைச் செல்வது ஏதம் தராது” என்று அவன் தெரிவித்தான்; அதற்கு அவ்வடிகளாரும் இசைவு தந்தனர். கொடுங்கோலின் கீழ்வாழும் குடிகள் அவன் வீழ்ச்சியை எதிர்பார்ப்பது போலக் கதிரவன் சாய்வினை அவர்கள் எதிர்பார்த்தனர்.

நிலவு வெளிப்பட்டது. பார்மகளும் கண்ணகிக்காக இரங்கிப் பெருமூச்சு விட்டாள். மீன்கள் தன்னைச் சூழந்து வர நிலா தண்ணொளி வீசியது.

நட்சத்திரம் கோத்தது போன்ற முத்துவடம், சந்தனக் குழம்பு இவற்றைக் கண்ணகி அணியும் நிலையில் இல்லை. கழுநீர்ப் பூ கூந்தலில் அவள் அணிந்திலள். தளிர் மாலையோடு பூந்தழைகளும் அவள் மேனியை அழகு செய்தில. தென்றல் வீசுகிறது. நிலவு தன் கதிர்களை அள்ளிப் பொழிகிறது. எனினும் அது அவளுக்கு இன்பம் சேர்க்கவில்லை. அவள் மனநிலை அதற்கு இசைவு தரவில்லை. அவள்நிலை கண்டு பூமி வருந்தியது. மண்மகள் பெருமூச்சு விட்டு அடங்கினாள்.

அதன் பின்னர் வழியிடை நடந்து வருந்தும் மாது ஆகிய கண்ணகியை நோக்கி, “புலி உறுமும், ஆந்தைகள் அலறும்; கரடி கத்தும். இவற்றைக் கண்டு அஞ்சாது என்னுடன் வருக” எனக் கோவலன் கூறினான். அவள் அவன் தோளில் கையைச் சார்த்திய வண்ணம் பின் தொடர்ந்தாள். கவுந்தி அடிகள் அறவுரைகள் பேசிக் கொண்டே வர வழிநடைவருத்தம் தோன்றாமல் இருவரும் நடந்து சென்றனர். பேச்சுத்துணை அவர்களுக்குப் பெரிதும் உதவியது.

கோசிகன் சந்திப்பு

இரவுப் பொழுது நீங்கியது; காட்டுக் கோழி கத்தியது; பொழுது விடிந்தது. அந்தணர் உறையும் பகுதியைச் சேர்ந்தனர். கண்ணகியைக் கவுந்தியடிகள்பால் விட்டு விட்டுக் கோவலன் தனியே நீங்கினான். தான் தங்கியிருந்த வீட்டின் முள்வேலியை விட்டு நீங்கி நீர் கொண்டுவர ஒரு பொய்கை நோக்கிச் சென்றான். சற்றுத் தொலைவில் கோசிகன் என்னும் அந்தணன் இவனை விடியற்பொழுதில் கம்மிய இருளில் கண்ணுற்றான். அவன் அடியோடு மாறிப் போயிருந்தான். காதலி தன்னோடு கடுவழி வந்ததால் அவன் கறுத்து விட்டான். அவனால் அடையாளமே கண்டு கொள்ள இயலவில்லை. இவன்தான் கோவலன் என்பதை அவனால் உறுதி செய்ய முடியவில்லை; அதற்காக அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.

அங்கே மாதவிக் கொடி ஒன்று வெய்யிலுக்கு வாடிக் கிடந்தது; “இந்த வேனிலுக்கு நீ வாடிக் கிடக்கின்றாய். நீயும் கோவலன் பிரிய அதனால் வருந்தி இளைத்து வாடிய மாதவிபோல் வாட்டமுற்றிருக்கிறாயோ” என்று பேச்சுக் கொடுத்துத் தனி மொழி பேசினான். இலை வேயப்பட்ட பந்தலிடை நின்று அவன் பேசினான். இந்தக் கோசிகமாணி இவ்வாறு கூறக் கேட்ட கோவலன், “நீ கூறியது யாது?” எனக் கேட்க அவன்தான் இவன் என்று தெரிந்தவனாய் அவனிடம் பேசி அவன் பெற்றோர்களின் அவலத்தையும், மாதவியின் மயக்கத்தையும் விரித்து உரைத்தான்.

“நின் தந்தையும் தாயும் மணிஇழந்த நாகம் போன்று துடித்து வருந்தினர். சுற்றத்தவர் உயிர் இழந்த யாக்கை எனத் துயரத்தில் ஆழ்ந்தனர். ஏவலாளர் பல இடத்தும் சென்று தேடித் திரும்பினர். தசரதன் ஆணையால் காடு அடைந்த இராமனைப் பிரிந்த அயோத்தி போல் நகர மக்கள் பெரிதும் வருந்தினர்” என்று கூறினான்.

மாதவியின் நிலையினையும் கோசிகன் உரைத்தான்; “வசந்தமாலைவாய்க் கசந்த செய்தியாகிய உன் பிரிவைக் கேட்டுப் பச்ந்த மேனியள் ஆயினாள் மாதவி. அவள் தன் நெடுநிலை மாடத்து இடைநிலத்துக் கிடந்து இடர் உற்றாள். அந்தச் செய்தியை அறிந்து அவள் துயர் தீர்க்க யான் அவளிடம் சென்றேன்; அவள் என்னிடம் ஒரு முடங்கல் தந்து அனுப்பினாள்” என்று வரிசைப்படுத்திக் கூறினான்.

பல இடங்களில் தேடி அலைந்து தான் இப்பொழுது அவனைக் கண்டதையும் எடுத்து உரைத்தான். மாதவி தந்த ஓலையை அவன் அழகிய கையில் நீட்ட அவன் அதனை வாங்கினான். தான் அவளோடு உறைந்த காலத்தில் நுகர்ந்த மணத்தை அது அவனுக்கு நினைவு ஊட்டியது: பழையநினைவு அவனை வாட்டியது; அதனை விரும்பி வாங்கினான். திரும்பத் தந்திலன்; ஏட்டை விரித்து அவள் எழுதியதைப் பாட்டு எனப் படித்தான். “அடிகளே! யான் உம் திருவடிகளில் விழுகின்றேன்; வணங்குகின்றேன். குழம்பிய நிலையில் எழுதும் இச்செய்திகளைப் படித்து மனத்தில் கொள்ள வேண்டுகிறேன். குரவர் பணி இழத்தல், குல மகளோடு இரவிடைக்கழிதல் இரண்டிற்கும் யான் காரணமாகிறேன்; செயலற்ற நிலையில் சிந்தை இழந்து வருந்துகின்றேன். என்னை மன்னிப்பீராக” என்று அவ் வாசகம் அமைந்திருந்தது. அவள் தீது இலள்; தான் தான் தவறுசெய்தவன் என்று உணர்ந்தான். “இம்முடங்கலின் கருத்துகள் என் பெற்றோர்க்கும் பொருந்துகின்றன; இதனை அவர்பால் சேர்க்க” என்று அவனிடம் தந்து தன் பெற்றோர்க்குத் தன் செய்தியையும் வணக்கத்தையும் கூறி “அவர்தம் துன்பத்தைக் களைக” என்று கூறி அனுப்பினான். அதன்பின் அறவியாகிய கவுந்தியடிகளை அடைந்தான்.

பாணர்களுடன் உரையாடல்

அங்கே பாணர்கள் சிலர் வந்திருந்தனர்; அவர்கள் கொற்றவையைப் போற்றிப் பண்ணுடன் யாழ்இசை மீட்டினர். அவர்களோடு சேர்ந்து கலந்து அப்பாடலை ஆசான் நிலையில் இருந்து அமைதியாகக் கேட்டு அவர்களோடு கலந்து பாடிப் பின் உரையாடினான். பின்பு, “மதுரை இன்னும் எத்தனை காவத துாரத்தில் உள்ளது?” என்று கோவலன் வினவினான்.

அவர்கள் மதுரைத் தென்றல் அங்குவந்து மதுரமாக வீசுவதைக் காட்டினர். “அது சந்தனம், குங்குமம், கஸ்துாரி முதலிய கலவைகளின் சேறுகளில் படிந்தும், சண்பக மாலை, மாதவி, மல்லிகை, முல்லை முதலிய பூக்களில் பொருந்தியும், சமையல் அறைப் புகை, அங்காடிகளில் அப்பம் சுடும்புகை, மைந்தரும் மாதரும் மாடங்களில் எழுப்பும் வாசனைப் புகை, வேள்விச் சாலையில் விரும்பி எழுப்பும் புகை, அரசன் கோயிலில் விரவிவரும் நறுமணம் இவை பலவும் கலந்து வருவது இம்மதுரைத் தென்றல்; இது புலவர் புகழும் பொதிகைத் தென்றல் போன்றது அன்று. அது குளிர்ச்சி தருவது: இது மணமும் புகையும் கலந்து மகிழ்ச்சி தருவது; மாபெரும் நகர் என்பதைக் காட்டுவது ஆகும். அதனால் இரண்டிற்கும் வேறுபாடு அறிய இயலும்; எனவே மதுரை மிகவும் அணித்து உள்ளது” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். “அந்த அழகிய ஊருக்குத் தனித்துச் சென்றாலும் அச்சம் இல்லை; தடுப்பவர் யாரும் இல்லை, மடுத்துச் செல்லலாம்” என்று கூறக் கோவலன் மற்றைய இருவரோடு முன்போலவே இரவில் பயணம் செய்து விடியற் காலையில் மதுரையை அடைந்தான்.

மதுரையை அடைதல்

அங்கே அவர்கள் முதலில் கேட்டது சிவன் கோயிலின் முரசு; அதனோடு சேர்ந்து அவர்கள் கேட்டது அரசன் கோயிலின் காலைமுரசு மற்றும் அங்கே மறையவர் வேதம் ஒதினர்; மாதவர் மந்திரம் கூறினர். இவையும் செவியில் வந்து விழுந்தன.

படை வீரர்கள் அணி வகுத்து வகை செய்யும் போது எழுப்பிய ஒசை, போர்களில் பிடிபட்ட யானைகள் முழக்கம், காடுகளினின்று பிணித்து இழுத்துவரப்பட்ட களிறுகளின் கதறல், வரிசைப் படுத்தப்பட்ட குதிரைகள் கனைக்கும் குரல் ஒசை, கிணைப் பொருநர் பாடிய வைகறைப் பாடல் ஒசை, கடல் எழுப்பும் முழக்கம் போல் வந்து இவர்களை வரவேற்றன. அவர்கள் துன்பமெல்லாம் நீங்கி நகர்வந்து சேர்ந்துவிட்டோம் என்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.

அங்குப் பசுமை மிக்க சோலைகள் இவர்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. குரவம், வகுளம், கோங்கம், வேங்கை, மரவம், நாகம், திலகம், மருதம், சேடல், செருந்தி, செண்பகம், பாடலம் முதலிய பன்மலர் விரிந்து அழகு தந்தன. மற்றும் குருகு, தளவம், முசுண்டை, அதிரல், கூதாளம், குடகம், வெதிரம், பகன்றை, பிடவம், மயிலை முதலியன பின்னிப் பிணைந்து வைகை நதிக்கு அமைந்த மேகலைபோல் காட்சி அளித்தன.

அந் நதியில் மணல் மேடிட்ட கரைகள் நதிக்கு அணி செய்து அழகு தந்தது. மணல்குன்றுகள் அதன் வனப்புமிக்க கொங்கைகள் ஆயின. முருக்கமலர்கள் சிவந்த வாய் ஆயின; முருக்க மலர்கள் இதழ்ச் செவ்வாய் ஆயின. நீரில் அடித்து வந்த முல்லை மலர்கள் அதன் பல்லை நினை வுறுத்தின. அவை அதன் பற்கள் ஆயின. ஒடித்திரிந்த கயல்கள் அந்நதியின் கண்கள் ஆயின. கருமணல் கூந்தலைக் காட்டியது. இந்த மண்ணுக்கு வளம் தந்து தாயாக இருந்து பால் ஊட்டும் பாங்கில் நீர் தந்த இவ்வைகை நதி புலவர் புகழ்ந்து பாடும் பெருமை பெற்றது.

இந் நதி பூவாடை போர்த்துக் கண்ணிர் மல்கிக் காட்சி அளித்தது. இவர்கள் படும் துயரம் கண்டு விடும் கண்ணிர் அது; கள்நீர் கண்ணிர் எனப்பட்டது. அதனை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது அது; வருத்தத்தில் அது பூக்களைப் போர்வையாகக் கொண்டு தன்னை மூடிக் கொண்டது. அதனைக் கண்ட இம் மூவரும், “இது வெறும் புனல் ஆறு அன்று; பூ ஆறு” என்று கண்டு வியந்தனர். அன்னநடை பயின்ற அழகி கண்ணகியும், அவள் கணவன் ஆகிய கோவலனும் அதனைத் தொழுது வணங்கினர்.

அதன் கரையைக் கடந்து நகருக்குச் செல்ல வேண்டுவது ஆயிற்று; அங்கு உயர்குடி மக்கள் உவகையுடன் உல்லாசப் பயணம் செய்யும் அம்பிகள் அடுக்கடுக்காக நிறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் வடிவுக் கேற்ப அவை கரிமுக அம்பி, பரிமுக அம்பி, அரிமுக அம்பி எனப் பேசப்பட்டன. அவற்றை நாடும் மனநிலையில் அவர்கள் இல்லை. அங்கு இருந்த மரப்புணையாகிய கட்டு மரம் அதனைத் தேர்ந்து அதில் அமர்ந்து அவ்வாற்றினைக் கடந்தனர். வைகையின் மலர்ப்பொழில் சூழ்ந்த தென் கரையை அடைந்தனர்.

தேவர்கள் விரும்பித் தங்கும் நகர் அது என்று மதித்து அதனை வலம் செல்வது நலம் தரும் எனக் காவற்காடுகள் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர். மதிற்புறத்தே நடந்தனர். அந்த அகழியில் குவளையும், ஆம்பலும், தாமரையும் இவர்கள் துயரத்தை அறிந்தன போல் கண்ணிர் வீட்டன. கள் ஆகிய தேனைச் சொரிந்தன; அது கண்ணிர் எனப்பட்டது. அதன் தாள்கள் நடுங்கின; வண்டுகள் இனைந்து வருந்துவன போல் பண் அமைவு கொண்டு ஒலி செய்து இரக்கம் காட்டின.

பகைவரை வெற்றி கொண்டதன் அறிகுறியாக எடுத்த மதில் கொடிகள் வராதே” என்று தடுப்பன போல் மறித்துக் கை காட்டின. பல்வகைச் சோலைகள் மிடைந்த மதிலின் வெளிப்புறப் பகுதியை அடைந்தனர். அங்குத் துறவிகள் மட்டும் தங்கும் உரிமை பெற்றிருந்தனர்.

அந்தப் புறஞ்சேரியில் அவர்கள் தங்கினர். சிறிது நேரமே அங்குத் தங்க அவர்கள் இயலும்; இருள் வரும் வரை அங்கே அவர்கள் தங்க நேர்ந்தது.

14. ஊரைச் சுற்றிவருதல்

(ஊர் காண் காதை)

பொழுது விடிந்தது. அவர்கள் தங்கி இருந்த சோலைகளிலும், அடுத்து இருந்த நீர்ப்பண்ணைகளிலும், கதிர்முற்றி வளைந்து இருந்த கழனிகளிலும் பறவைகள் துயில் நீங்கி ஒலிப்புச் செய்தன. பொய்கையில் உள்ள தாமரைகள் கதிரவன் ஒளிபட்டுத் தம் இதழ்கள் விரித்தன; ஊர்மக்கள் துயில் எழுந்து சுருசுருப்பாக இயங்கினர்.

கோயில்களில் முரசங்கள் ஒலித்தன; சிவன் திருக் கோயில், கருடக் கொடியை உயர்த்தியவன் ஆகிய திருமால் கோயில், மேழிப்படை தாங்கிய பலராமன் கோயில், சேவலைக் கொடியாக உடைய முருகன் கோயில், அற வோர் பள்ளிகள், வீரச்செயல் மிக்க அரசன் அரண்மனை இங்கு எல்லாம் சங்குகள் முழங்கின. அவற்றோடு முரசங்களும் ஒலித்தன.

கவுந்தி அடிகள் அற உரைகள்

கோவலன் கவுந்தியடிகளை வணங்கி எழுந்து பேசத் தொடங்கினான். சென்ற காலத்துக் கேடுகளை ஏடுகள் திறந்து படிப்பதுபோலக் கூறத் தொடங்கினான். “நெறி கெட்ட வழிகளில் சென்று என் வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்டேன்; நறுமலர் மேனியளாகிய கண்ணகியைப் புதிய தேயத்துக்கு அழைத்து வந்தேன்; கடும் வழிகளில் கால்கடுக்க நடக்க வைத்தேன்; சிறுமை அடைந்தேன்; பெருமை இழந்தேன்” என்று தன் நிலையை எடுத்து உரைத்தான்.

“இது கடந்த காலம்; அடுத்து நான் எடுக்கும் முயற்சி; அதற்காக ஊர் உள் சென்று உறவினர் அவர்களைச் சந்திப்பேன். வணிகர்கள் எனக்கு உறவினர்கள்; அவர் களைச் சந்திக்கும் வரை கண்ணகிக்குக் காப்பாக இருந்து உதவ வேண்டுகிறேன்; உங்களிடம் விட்டுச் சென்றால் அவளுக்கு எந்த இடர்ப்பாடும் நேராது” என்று கூறினான். ஆறுதல் கூறி அவனை அனுப்பிவைக்க நினைத்துக் கவுந்தி அடிகள் அறத்தின் மேம்பாடு குறித்து அறிவுரை தந்தார். 'விதி வலிது' என்று அவர் தாம் நம்பும் அறக்கோட்பாட்டை அவனுக்கு அறிவுறுத்தினார்.

“அறம் அறிந்த அறிஞர்கள் பலமுறை எடுத்துச் சொன்னாலும் நீதிகளைக் கேட்டு இந்த மாநிலத்தில் மாந்தர் நடந்து கொள்வது இல்லை; அது இந்த உலகத்து இயற்கை; தீமைபயக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் பொழுது உறுதி குலைகின்றனர். தளர்ச்சி அடைகின்றனர்.”

“கற்று அறிந்தவர்கள் கலங்குவது இல்லை. அவை வினைப்பயன் என்று விவேகம் காட்டுவர்; துறவிகளுக்குத் துயர் என்பதே இல்லை; மாதரைக் காதலித்து மாதுயர் அடைவோரே இவ்வுலகில் மிகுதியாவர்; அவர்களுக்கே இன்பதுன்பங்கள் மாறி மாறி வருகின்றன. மன்மதன் அவர்களை வாட்டுவான். அவர்கள் அதனால் வாழ்க்கை யில் வாட்டம் அடைகின்றவர்; அது இன்று மட்டும் அல்ல; இது மானிட வரலாறு ஆகும். எடுத்துக் காட்டுகள் நம் நாட்டு ஏடுகள் எடுத்துக் காட்டியுள்ளன. தெய்வங்களும் இதற்கு விதி விலக்கு இல்லை.

“பிரமனைப் படைத்த பரமன் இராமன் அவனுக்கே இந்த நிலை எற்பட்டது; தந்தை இட்ட கட்டளை: அவனுக்கு அவன் மனைவி ஒரு கால் தளை, அவளோடு கானகம் அடைந்தான். அவன் பட்ட துயரம் இந்த உலகம் அறிந்தது.”

“ஏன்? நளன் கதை எடுத்துக் கொள்; பிணக்கு என்பதே அறியாத காதலுக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டு. அவர்கள் ஏன் பிரிந்தார்கள்? காதலியைக் கானகத்தே காரிருளில் விட்டுப் பிரிந்தான். விதி அவர்களுக்குச் செய்த சதி, அதனால் நேர்ந்தது அந்தக் கதி”

“இவர்களை நோக்க உன் வாழ்க்கை சீர்மை கொண்டது. மனைவி உன்னை விட்டுப் பிரியவில்லை. கிழிந்த கந்தல் வாழ்க்கை தான். ஒட்டுப் போட்டால் சரியாகி விடும்; உங்கள் காதல் வாழ்க்கை சோகம் அடைந்திலது. நீ ஏதம் கொள்வது வீண்” என்று சான்றுகள் காட்டி அவனுக்கு ஆறுதல் கூறினார்.

“கவலை நீங்குக; கூடல் நகரைக் கண்டு நீ திரும்பி வருக! வெல்க” என்று கூறி விடை தந்தார்.

நகர் நுழைதல்

அகழியை அடுத்து மதில் இருந்தது; அகழியைக் கடக்கச் சுருங்கை வழி ஒன்று; அதில் யானைகள் செல்வது வழக்கம். அத்தகைய பரப்பு அது பெற்றிருந்தது. அதனைக் கடந்து மதிலுக்குச் செல்லும் வீதி வழியே சென்றான்; இந்திரன் வைத்திருந்த அணிகலப் பேழை உள் இருந்தது போல நகரின் வளமிகு காட்சி அவன் கண்ணுக்குப் புலப் பட்டது.

யவனர் அரண் காத்து நின்றனர். அவர்களுக்கு ஐயம் எழாதபடி உள்ளுர் வாசிபோல் உள் நுழைந்து சென்றான்.

பொழில் விளையாட்டு

தெருக்களில் கொடிகள் அசைந்தன; பொது மகளிர் வீட்டை விட்டுத் தம் காதலர்களுடன் சென்று படகுகளை இயக்கித் தோணிகளில் விளையாடினர். ஆற்றில் நீந்தி மகிழ்ந்தனர். புனல் விளையாட்டில் பொழுது போக்கினர்.

அடுத்துப் பொழில் விளையாட்டில் பொழுது போக்கினர். சோலைகளில் சென்று பூக் கொய்தனர். மலர்களைத் தம் கூந்தலில் சூடிக் கொண்டும், மாலைகளை அணிந்து கொண்டும், சந்தனக்குழம்பு மார்பில் பூசிய வராய்ப் பொழில் விளையாட்டில் ஈடுபட்டனர்.

கோவலன் அங்குச் சென்ற காலம் வேனிற்காலத்தின் இறுதியாகும் நகரத்து மகளிர் இளநிலா முற்றத்தில் தம் காதலருடன் தம் படுக்கையில் கிடந்து பழைய நினைவு களில் மனம் செலுத்தினர். அவற்றுள் முதலாவது கார் காலம்; அது அம் மதுரை நகர மாந்தர் நினைவில் பசுமை நினைவுகளாக நிலைத்து இருந்தது.

கார் காலம்

அந்நகரில் கார்காலத்தில் மாலை வேளைகளில் மகளிர் சிவந்த நிறத்தில் அணிகலன்கள் அணிந்து கொண்டு விளங்கினர். இந்திரனுக்கு இது மதுரை மாநகர் என்பதை அவர்கள் தம் ஆடை அணிகளால் உணர்த்தினர். மாலை வேளைகளில் அவர்கள் தம் காதலருடன் அளவளாவினர். அவர்கள் தம் இடைக்குச் சிவந்த ஆடை அவர்கள் மேனிக்கு அழகு தந்தது; அவர்கள் தலையில் சூடிய பூக்கள் குடசம், செங்கூதாளம், குறிஞ்சி என்பனவாம். இவையும் சிவப்பு நிறப் பூக்களாகும். கொங்கைகளுக்குச் சிவப்பு நிறத்தை உடைய குங்குமம் பூசினர். செங்கோடுவேரி என்னும் பூவும் சிவப்பு நிறம் கொண்டது; அதன் பூக்களைக் கொண்டு மாலை அணிந்தனர். அவர்கள் அணிந்திருந்த மேகலையும் பவழத்தால் ஆகியது. அவர்கள் செவ் வணிகளோடு தம் காதலருடன் கழித்த காலம் அது; மதுரை மாநகர் கார்காலத்தில் விளங்கிய தோற்றம் இது; ஒரே நிறத்தில் அவர்கள் திறம் விளங்கியது. இது ஒரு தனிச் சிறப்பாக விளங்கியது. இது கார்காலத்து மகளிர் மகிழ்வுடன் இருந்த நிலை.

கூதிர்க் காலம்

அடுத்தது கூதிர்காலம்; மேகம் தவழும் மாடங்களில் அகில் கட்டையை எரித்து நறும் புகை உண்டாக்குவர். அதில் அவர்கள் தம் காதலருடன் இருந்து குளிர்காய்வர். மாடத்துச் சாளரங்களை எல்லாம் அடைத்துக் குளிர் காற்று வராது தடைப் படுத்துவர். அடக்க ஒடுக்கமாக அமர்ந்து அவ்அறைகளில் குளிருக்கு இதமாகத் தம் காதலரோடு இணைந்து தழுவி மகிழ்ந்தனர். அத்தகைய சிறப்புடையது கூதிர்காலம். அந்த நாட்களை அவர்கள் எண்ணிப் பார்த்தனர்.

முன்பனிக் காலம்

அடுத்தது முன்பணிக் காலம்; வளமான மனை; இளநிலா முற்றம். இளவெயில் நுகர மகளிரும் மைந்தரும் அங்குச் சென்று தங்குவர். சூரியன் தெற்குப் பக்கம் இயங்கும் காலம் அது; வெண்மேகங்கள் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாகக் காட்சி அளித்தது; இளவெயில் அவர்கள் உள்ளத்தை மகிழச் செய்தது. அத்தகைய சிறப்பு உடையது முன்பணிக்காலம்; அதனை அவர்கள் நினைவு கூர் கின்றனர்.

பின்பணிக் காலம்

அடுத்தது பின்பணிக் காலம்; கடலில் நீர்க்கலத்தில் தொண்டி நாட்டினர் கொண்டு வந்து சேர்த்தவை அகில், பட்டுத்துணி, சந்தனம். வாசம், கருப்பூரம் முதலியவை; இவற்றின் வாசத்தைக் கீழ்க் காற்று சுமந்து வரும் காலம் இது; இப்பருவத்தில் மன்மதனுக்கு விழாச் செய்து மக்கள் மகிழ்வு கொண்டனர். பங்குனி மாதம் இப் பருவத்தின் பணி மிக்க காலம் ஆகும். அத்தகைய சிறப்பு மிக்கது பின்பணிக்காலம். அதனை நினைத்துப் பார்க்கின்றனர்,

இளவேனிற் காலம்

இளவேனிற் காலம்; இதில் மாதவிக்கொடி படர்கிறது. சோலைகளிலும் காடுகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. பொதிகைத் தென்றல் மதுரையுள் புகுந்து காதலரை மகிழ்விக்கிறது. அத்தகைய இளவேனில் கழிந்து விட்டது. அதை நினைத்து ஏங்கியவராய்க் காணப்பட்டனர்.

முதுவேனிற் காலம்

அடுத்தது முதுவேனிற்காலம், இதனைக் கோடைக் காலம் என்றும் கூறுவர். வெய்யிலின் கொடுமைக்கு அஞ்சிக் கன்றுகளும், யானைகளும், பெண் யானைகளும் நடுங்கின. வெய்யில் நிலைத்துள்ள குன்றுகள் மிக்க நாட்டில் காடுகளில் தீப்பொறி பறந்தது. எங்கும் நெருப்பு எழுந்தது. அத்தகைய கொடுமை மிக்க வேனிற்காலம் முடிவு அடைந்தது. அந்தக் கடை நாளில் கோவலன் மதுரைக்குள் சென்றான்.

கணிகையர் இல்லங்கள்

அவன் களிமகிழ்வு தரும் காமக்கிழத்தியர் வாழும் தெருவினை அடைந்தான். அவர்கள் வாழ்க்கை வளம் மிக்கதாக விளங்கியது. அவர்களை நாடி அரச இளைஞரும், வணிகச் செல்வரும் இங்கு வந்து மகிழ்ந்தனர்.

ஏறிச்செல்ல மூடு வண்டியும், சிவிகையும், தரப் பட்டன. மணிக்கால் அமளிகள் அவர்கள் மாளிகைகளை நிரப்பின. உய்யாவனம் போகும்போது உடன் எடுத்துச் செல்ல மகிழ்வுப்பொருள்கள் தரப்பட்டன. பொன்னால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி, கவரி மயிர் கொண்ட வெண்சாமரைகள், கூர்நுண்வாள் இவற்றைத் தம் அரசன் கொடுப்ப அவற்றைப் பெற்றுச் சகல வசதிகளோடு வாழ்ந்தனர். புதுமணம் பெற்றுத் தக்க துணைவரை அவ்வப்பொழுது தேடிக் கொண்டனர்.

வந்த இளைஞர்கள் நறவு மாந்தி மகிழ்வு கண்டனர். அருகிருந்த பெண்டிர் வார்த்துக் கொடுக்க ஆர்த்துக் குடித்தனர்; மது மயக்கத்தில் வண்டுகள் மொய்க்காத இடத்தும் அதை ஒட்டும் பழக்கத்தில் முகத்தில் கை அசைத்து நகைச் சுவை விளைவித்தனர். இலவம்பூ போன்ற வாயிதழ் அதில் இளநகை அரும்ப அவர்கள் பேசிய பசுமைச் சொற்கள் அவற்றை நாவால் எடுத்துத் திரும்பிச் சொல்ல முடியாதவை; அவற்றைக் கேட்டு ஆடவர் மகிழ்ந்தனர். அவர்கள் கண்வெட்டுக்கு இவர்கள்

கட்டுப்பட்டனர். அவர்கள் வில் போன்ற புருவத்து நெளிவுகளுக்கு ஆட்பட்டனர்.

அவர்கள் திலகச் சிறுநுதல் வியர்வை அரும்ப இவர்கள் கூடி மகிழ்வர். அவர்கள் ஊடல்கள் தீரும் வாய்ப்புகளை எதிர்நோக்கி அரசரும் வணிகச் செல்வரும் காத்து இருந்தனர்; வரிசையில் வந்து குழுமினர். இவர்களை மகிழ்விக்கும் மகளிர் வாழும் வீதி அதனைக் கண்டான்; அவனுக்கு இது புதுமையைத் தந்தது. அந்த நகர் களிப்புத்தருவது என்பதை அந்த ஊர் அவனுக்கு உணர்த்தியது.

கலைச் செல்வியர்

கலைகள் கற்றுப் பிறரைத் தம் கண்வலையில் ஈர்க்கும் கலைச் செல்வியர் வாழ்ந்த பகுதி உயர்வு பெற்றிருந்தது. சுடுமண் ஆகிய ஒடுகளால் வேயப்படுவதற்கு மாறாகப் பொன் தகடுகளால் வேயப்பட்ட காவல் மிக்க வீடுகள் அவை. முடி அரசர்கள் அங்கு வந்து ஒடுங்கிக் கிடப்பர். உள்ளே இருப்பது கள்ள வாழ்க்கை; அதனை மறைத்துத் தரும் காவல் மிக்க வீடு; தலைக்கோல் பட்டம் பெற்ற அரங்கக் கூத்தியரும், வாரம்பாடும் தோரிய மகளிரும், தலைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும், இடைப்பாட்டுப் பாடும் கூத்து மகளிரும் என நால்வகைப் பட்ட மாதர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் அரசனால் ஆயிரத்து எண் கழஞ்சு பரிசு பெற்றுப் பாராட்டுப் பெற்றவர்கள். நகரத்து மேல்நிலைக் கலைச் செல்வியர்கள் அவர்கள்; அறுபத்து நான்கு கலைகளையும் கற்ற காரிகையர் ஆவர்.

கலை வாழ்க்கை வாழும் கணிகையராக அவர்கள் திகழ்ந்தனர்; விலைவாழ்க்கையையும் அவர்கள் ஏற்று நடத்தினர். அவர்கள் கண்வலையில் பட்டு அறிவு மயங்கி நறவு மகிழ்பவர் போல அங்கே வந்து செறிவர்.

தவசிகள் அவசியத்துக்காக இங்கு வந்து தெய்வதரிசனம் கண்டு செல்வர்: முகைப்பதம் பார்க்கும் வண்டுபோல் நகைப்பதம் பார்க்கும் இளைஞர்கள் இங்கு வந்து பதநிச பாடுவர்; காம விருந்து அறியாத கற்றுக் குட்டிகள் இங்கு வந்து முட்டிப்பார்ப்பர் பால பாடத்தை இங்கே வந்து படித்துச் சென்றனர்.

இந்த இச்சைக்காரர்கள் எல்லாம் இங்கு வந்து நாளும் நச்சித் தங்கி இன்துயில் பெற்றனர். பண்ணைப்பழித்த இன்சொல் பாவையர் எண்ணெண்கலையோர் இருந்த இரண்டு பெரிய வீதிகளையும் அவன் கண்டான்.

அடுத்து அவன் கண்டது அரசர்களும் விழைந்து செல்லும் கடை வீதி ஆகும். அங்கே கிடைக்காத பொருள்களே இருக்க முடியாது. மூடுவண்டிகள், வண்டிச்சக்கரங்கள், தேர்மொட்டுகள், மெய்புகுகவசம், மணிகள் பதித்த அங்குசம், தோலால் செய்யப்பட்ட அரணம், யோகத் - வளைதடி, கவரி, பல்வகைப்படங்கள், குத்துக்கோல், செம்பு வெண்கலப் பாத்திரங்கள், புதுப் புதுச் சரங்கள், மாலைவகைகள், வாள் வகைகள், தந்தக் கடைச்சல்கள், புகைவகைகள், மயிர்ச்சாந்துகள், பூமாலைகள், மற்றும் பெயர் விவரித்துக் கூற முடியாத பல பொருள்கள் இங்கு விற்கப்பட்டன. அரசர்கள் தம் தேவைக்குத் தேடி வந்த அங்காடித் தெரு இது, அதனைக் கண்டான்.

ஒளிபடைத்த வயிரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், நீலம், கோமேதகம், வைடுரியம், முத்து, பவளம் ஆகிய நவமணிகள் தனியே விற்கப்பட்டன. அந்த நவமணிக் கடைவிதியைக் கண்டான்.

அடுத்து அவன் கண்டது பொன் நகைக் கடை வீதியாகும். சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என வகை செய்யப்பட்ட பொன் வகைகள் அங்குக் கிடைத்தன; கொடிகள் கட்டி இவற்றை அறிவுறுத்தினர்.

அடுத்தது அவன் கண்டது துணிவகைகள் விற்பனை செய்த வீதியாகும். பருத்தி நூலாலும், எலிமயிராலும், பட்டு நூலாலும் நுட்பமாக நெய்யப்பட்ட துணிவகைகள் பல நூறு எண்ணிக்கையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அடுத்து அவன் கண்டது கூலமாகப் பண்டங்களைக் குவித்துவைத்த நவதானியக் கடை வீதியாகும். இங்குக் குறிப்பிடத்தக்கவை அவர்கள் அளக்கும் கோல்களாகும். நிறுத்தும் கோல் நிறைக்கோல் எனப்பட்டது. பறை என்பது பருத்த உள் அறையை உடைய அளக்கும் கருவி என்று கூறலாம்; மற்றொன்று அம்பணம் எனப்பட்டது; அது மரக்கால் வகையாகும். இவற்றைக் கொண்டு தானியங் களை அளந்து கொட்டி விற்றனர். இவ் அளவு கோல்களைத் தாங்கிக் கொண்டு இவ்வணிகர்கள் அங்கும் இங்கும் திரிந்து இயங்கினர்; மிளகு முட்டைகள் பல இங்குக் குவிக்கப்பட்டிருந்தன. கால வரையறை இன்றி இங்கு வாணிபம் நடைபெற்றது.

நகர்த் தெருக்கள்

சாதி அடிப்படையில் தெருக்கள் பகுக்கப்பட்டு விளங்கின. நால்வகைச் சாதியர் தனித்து அறியப்பட்டனர். அரசர், அந்தணர், வணிகர், உழவர்கள் என்போர் ஆவார். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் பெருந்தெருக்கள் எனலாம். மற்றும் சந்துகள், சதுக்கங்கள், ஆவண வீதிகள், மன்றங் கள், கவலைகள், மறுகுகள் எனத்தெருக்கள் பலவகைப் பட்டு இருந்தன. இங்கெல்லாம் திரிந்து அந் நகரைச் சுற்றிப் பார்த்தான். கதிர்கள் நுழையாதபடி அங்கு எடுத்த கொடிகள் பந்தல் இட்டது போல் நெருங்கிப் பறந்தன. அவை செல்வார்க்கு நிழலைத் தந்தன.

பாண்டியன் பேருரைக் கண்டு மகிழ்வு எய்தினான்; பின்பு பழையபடி கொடிகள் பறந்த மதிற்புறத்தே வந்து சேர்ந்தான்.

15. மாதரியிடம் ஒப்புவித்தல்

(அடைக்கலக் காதை)

பாண்டியன் ஆட்சி பண்பட்ட ஆட்சி; அதுமக்கள் வாழ்வுக்கு நிழலாக இருந்தது; அது அவர்கள் வாழ்வை வளப்படுத்தியது. அவன் செங்கோல் சீர்மையும், தண்மையும், வெற்றிச்சிறப்பும் மதுரை மாநகருக்கு உயர்வு தந்தன. மக்கள் நாட்டை விட்டு நகர்ந்தது இல்லை; வேற்று நாட்டை விரும்பிச் சென்றது இல்லை; தம்நாட்டை நேசித்தனர்; இது அவர்கள் நற்பண்பாகத் திகழ்ந்தது. இந்த மதுரை மூதுார் மாநகரைக் கண்டு திரும்பியவன் அறவோர் பள்ளி இருந்த புறஞ்சிறைப் பொழிலில் புகுந்து தீதுதிர் மதுரை பற்றியும், தென்னவன் மாட்சியைப் பற்றியும் மாதவத்தாட்டியாகிய கவுந்தி அடிகட்குக் கூறினான்.

மாடலன் வருகை

கவுந்தி அடிகளிடம் இவன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தலைச்செங்கானம் சார்ந்த மறையவன் மாடலன் என்பான் அங்கு வந்து சேர்ந்தான். பொதிகையை வணங்கிவிட்டுக் குமரியில் நீராடித் தீர்த்த யாத்திரை செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் கவுந்தியடிகள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு அங்குக் கோவலனையும். கண்ணகியையும் கண்டது வியப்பைத் தந்தது. அவர்கள் அப்பொழுதைய நிலையையும் அறிந்தவன் ஆயினான். கோவலனை அவன் நன்கு உணர்ந்தவன். “நன்மைக்கு இருப்பிடமாகத் திகழ்ந்தவன்; அவனுக்கு இக்கேடுகள் வந்தது ஏன்?” என்று வினாவைத் தனக்குள் எழுப்பிக் கொண்டான்.

கோவலன் சிறப்புகள்

கோவலன் கடந்த கால வாழ்வின் ஒளிச் சிகரங்கள் அவன் கண்முன் வந்து நின்றன. அவற்றைக் கவுந்தி அடிகள் அறிய அவன் அறிவித்தான்.

பழைய வாழ்க்கையை விவரிக்கத் தொடங்கினான்; மாதவி ஆடற் செல்வி. எத்தகையவள்? அரசனால் பாராட்டப் பெற்றவள்; பரிசுகள் பெற்றவள்: மாந்தளிர் மேனி மாதவி அவளுடன் அவன் வாழ்க்கை இன்பமாக நடத்தினான். கலையும் காதலும் அவனைக் கவ்வி இழுத்து வைத்தன; இன்ப விழைவில் திளைத்து மகிழ்ந்தான்.

காதலின் கனியாக மாதவி குழந்தைப் பேறு பெற்றாள். தீண்டாமை கழிந்ததும் அக்குழந்தைக்குப் பெயர் இடுதலை ஒரு சடங்காகத் கொண்டனர். ஆயிரம் கணிகையர் கூடினர். அக்குழந்தைக்குப் பெயர் இடுவது பற்றிப் பேச்சு எழுந்தது. அப்பொழுது கோவலன் ஒரு பழைய நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அவன் முன்னோர்களுள் ஒருவன் கடல் அலையில் அகப்பட்டுக் கரைசேர முடியாமல் தவித்தான். தெய்வம் ஒன்று அவன் செய்த புண்ணியத்தால் அவனுக்கு உதவியது. மந்திரம் சொல்லி அவனைக் கரை சேர்ப்பித்தது. அத்தெய்வத்தைப் போற்றி மதிக்கும் வகையில் மணிமேகலா தெய்வம் அதன் பெயரை இடுக என்று அவன் கூறினான். 'மணிமேகலை' என்ற பெயர் அக்குழந்தைக்கு இடப்பட்டது. மணிமேகலா

தெய்வம் அவன் மதித்த குலதெய்வமாக அமைந்தது; அந்நிகழ்ச்சியை மாடலன் விவரித்தான்.

பெயரிடுதலைத் தொடர்ந்து தானம் செய்ய முற்பட்ட போது நரைமுதுயாக்கை உடைய மறையவன் ஒருவன் தண்டு கால் ஊன்றி நடந்து வந்தான். பாகனைத் தூக்கி எறிந்து விட்டு வேகமாக வந்த யானை ஒன்று இந்த முதியவனைத் துதிக்கையில் கொண்டு துயரத்தில் ஆழ்த்தியது.

உயிருக்குப் போராடிய உயர்ந்தோனைக் காப்பாற்றத் தன் உயிரைப் பொருட்படுத்தாது கோவலன் அதன் கையகத்தில் பாய்ந்து அவனை மீட்டான். அவ் யானையின் பிடரியில் இருந்து விஞ்சையன் என விளங்கினான். அவனைக் “கருணை மறவன்” என்று அருகில் இருந்தவர்கள் பாராட்டினர்.

மற்றொரு நிகழ்ச்சி. படுத்துக் கிடந்த குழந்தையை அடுத்துக் கடிக்கவந்த பாம்பினைக் கொன்று வீழ்த்திய கீரிப்பிள்ளை அதன் வாயில் செங்குருதி கண்டு அது தன் பிள்ளையைக் கடித்து விட்டது என்று தவறாகக் கருதி அதனை அடித்தாள் ஒருத்தி; அது துடித்துச் செத்தது.

பாவச் செயல் செய்த அவளைக் கணவன் மன்னிக் காமல் அது தீரும் வரை அவளைச் சேர்வது இல்லை என்று ஊரைவிட்டு நீங்கினான். பாவம்தீரப் பவித்திரம் செய்ய அவனுக்குப் பொருள் தேவைப்பட்டது. வடமொழியில் எழுதிய வாசகம் ஒன்று: “கருமம் தொலைத்துப் பலன் அடைவீர்” என்று எழுதித் தந்தான்.

ஏட்டை நீட்டினாள்; காசு கொடுத்து மாசு நீக்க யாரும் முன் வரவில்லை. கேட்டனன் கோவலன்; பொருள்

கொடுத்து உதவினான்; பிரிந்தவன் வந்து ஒன்று சேர்ந்தான். சிதைந்த வாழ்க்கை சீர்பெறச் செய்த செம்மலாக விளங்கி னான். 'செல்லாச் செல்வன்' என்று அவனை அனைவரும் அழைத்துச் சிறப்புச் செய்தனர்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி பத்தினி ஒருத்திமேல் பழிச்சொல் கூறி அவள் வாழ்க்கையைக் கெடுத்தான் ஒரு கயவன். அறம் அவனை ஒறுத்தது. பூதம் பாசம் கொண்டு அவனைக் கட்டி இழுத்துச் சென்றது.

நாசம் வந்து அவனை அணுகியபோது பாசத்தால் பிணிப்புண்ட அவன் தாய் அப்பூதத்திடம் முறையிட்டாள். “என் உயிர் கொண்டு அவன் உயிர் தருக” என்று வேண்டினாள். “இழிமகன் ஒருவன் உயிர்க்கு ஈடாக நல் உயிரைக் கொள்ளும் நயப்பாடு இங்கு இல்லை” என்று கூறி அவனை அவள்கண்முன் அடித்துக் கொன்றது. மனம் ஒடிந்து போனதால் நொடிந்து போனாள்; திக்கற்ற அவளுக்குத் திசை காட்டும் ஒளிக் கதிராகக் கோவலன் இருந்து அத் தாய்க்கும் மற்றும் அவனைச் சார்ந்து கிடந்த சுற்றத்தவர்க்கும் உறுபொருள் கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் காத்து ஒம்பினான். அதனால் 'இல்லோர் செம்மல்' என்று நல்லோர் அவனைப் பாராட்டிக் கூறினர்.

ஈகையும் வீரமும் உடைய அவன் வாழ்வு நசிந்து போனது கண்டு கசிந்து வருந்தினான் மாடலன். “இம்மை யில் எந்தத் தீமையும் நீ செய்தது யான் கண்டது இல்லை; சென்ற பிறவியில் செய்த தீ வினைதான் ஏதோ ஒன்று பாழினை நல்கியது” என்று ஆறுதல் கூறினான். “கண்ணகியும் கடுங்கான் வந்து உழந்தது வருந்தத் தக்கது” என்றான்.

கோவலன் கனவு

மாடலன் பரிவுடன் பேசிய பாங்கு கோவலன் உள்ளத்தை உடைத்து அவன் உணர்வை வெளிப் படுத்தியது. வாழ்க்கை அச்சம் அவனைக் கைக் கொண்டது. தான் கண்ட கனவினை மாடலனிடம் கூறிப் பகிர்ந்து கொண்டான்; “குறுமகன் சூழ்ச்சியால் தான் பெறு துயர் இது” என்று நவின்றான்; கனவின் விளக்கம் இது: “கண்ணகி நடுங்கித் துயர் அடைகிறாள்; அவன் எருமைமீது ஊர்ந்து செல்கிறான்; அவன் ஆடையை மற்றவர்கள் பறித்துக் கொள்கின்றனர்; கண்ணகியும் அவனும் பற்று நீங்கியோர் அடையும் வீட்டு உலகை அடைகின்றனர். மாதவி மணிமேகலையைத் துறவியாக்குகிறாள்; மன்மதன் தன் வில் அம்பினை வெறு நிலத்தில் வீசி எறிகிறான். மணிமேகலை மாபெரும் துறவி ஆகிறாள்” நனவில் காண்பது போல் இக்கனவு அவனுக்கு அமைந்தது. அதனை மாடலனிடம் எடுத்து உரைத்தான்.

இனி அடுத்து அவர்கள் அங்கு அவ் அறப்பள்ளியில் தங்க இயலாது என்று இருவரும் எடுத்து உரைத்தனர். “வணிகப் பெருமக்கள் உங்களை ஏற்று உபசரிப்பர்; அதனால் இப்புறநகர் விட்டுக் கதிரவன் மறைவதற்கு முன் அக நகர் செல்வதுதான் தக்கது” என்று கூறினர்.

மாதரி வருகை

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் அங்கு இடைக் குலமடந்தையாகிய மாதரி என்பாள் வந்து சேர்ந்தாள்; அந்த மதிலின் பக்கத்து ஊரில் இயக்கியாகிய தெய்வத்துக்குப் பால்சோறு படைத்து விட்டுத் திரும்பினாள். அவள் கவுந்தியடிகளை மதிப்பின் காரணமாக வணங்கி எழுந்தாள் “இவள் பசுவைக்கொண்டு பால் விற்று வாழ்க்கை நடத்து பவள் எந்தக் கொடுமையும் அறியாதவள்; தீமை அறியாதவள்; சாதாரண இரக்கத் தன்மையள், செவ்வியள்; இவளே அடைக்கலம் தருதற்குத் தக்கவள்” என்று முடிவு செய்தார்.

“செல்வமகள் அவள்; இவள் கனவனின் தந்தையின் பெயர் கேட்ட அளவில் நகரத்து வணிகர் நயந்து வர வேற்பர். செல்வர் தம் மனையில் அவர் சேர்வர்; அதுவரை அவளை உன்பால் அடைக்கலம் தந்தேன்” என்று கூறி மாதரியிடம் கண்ணகியை ஒப்படைத்தார் கவுந்திஅடிகள்.

“இவளை நீராட்டிக் கண்ணுக்கு மை தீட்டிக் கூந்தலுக்குப் பூ சூட்டித் துாய ஆடை உடுப்பித்து இவளை நன்கு போற்றிக் காப்பாயாக ஆயமும் காவலும் நீயேயாகுக; அவளை ஏற்க” என்று கூறினார்.

“இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள். இன்னும் இவளைப்பற்றிச் சிறப்பித்துக் கூறுவது என்றால் மகளிர்க்கு இன்றியமையாத கற்பினைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவள். இவளைத் தெய்வம் என்று மதிக்கிறேன்; இவள் கற்புக்கடம் பூண்ட தெய்வம்; இவளுக்கு நிகராக வேறு தெய்வத்தை நான் கண்டது இல்லை. இவர்களைப் போலக் கற்புடை மகளிர் வாழ் வதால்தான் நாட்டில் மழை பெய்கிறது; வளம் சிறக்கிறது. ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது; பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு இத்தகைய சிறப்புகள் அடைகின்றன: அதனால் இவளை ஏற்று உதவுக” என்று கூறினார்.

பழங்கதை கூறல்

“மற்றும் ஒரு தவசியாகிய யான் தரும் அடைக்கலப் பொருள் இது; இது சிறு உதவியாயினும் அதனால் விளையும் நன்மை உனக்குப் பெரிது ஆகும்; இது உனக்குப் பெருவாழ்வு தரும் என்பது உறுதி; இதற்கு எடுத்துக் காட்டாகக் கூற வேண்டுமானால் இந்நிகழ்ச்சியைக் கூறலாம் :

“இது பழங்கதை; படிப்பினையைத் தரும் விதை; செவிமடுத்துக் கேட்பாயாக” என்று கூறினார்.

“காவிரிப் பூம்பட்டினத்தில் சமணமுனிவர்களுக்காக இட்ட சிலாதலத்தில் முனிவர்கள் சிலர் வந்து வழக்கம் போலத் தங்கினர். அவர்கள் முன் ஒளிபடைத்த தெய்வ மேனியன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டு அதிசயித்தவர்கள், யார் இவன்? அங்கு வருவதற்கு இவன் வரலாறு யாது?” என்று வினவினர்; அதற்கு அச் சாரணர் தந்த விளக்கம் இது :

அவன் கை விரல் கருவிரலாக இருந்தது. அது ஒரு குரங்கின் கையாக இருந்தது. வானவன் வடிவில் வந்திருந்தான். இது வியப்பை அளித்தது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு அமைந்திருந்தது. அதனை முனிவர்கள் விளக்கினார்கள்:

“எட்டிப் பட்டத்தைப் பெற்ற சாயலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி தானம் பல தந்து தரும வழியில் நின்றாள். ஒரு தவ முனிவன் உண்ண வந்திருந்தான். அவனுடன் ஒரு குரங்கு ஒட்டிக் கொண்டு உடன்வந்தது. அவன் தின்றுஉமிழ்ந்த மிச்சிலை உண்டு அது பசி தீர்ந்தது. அதன் முகமலர்ச்சியைக் கண்டு அகம் மலர்ந்த அம் முனிவன் “தொடர்ந்து அக்குரங்கைச் சொந்த மகன் போலப் போற்றி அதற்கு உணவிடுக” என்று கேட்டுக் கொண்டான்.

அக் குரங்கு வாழ்நாள் முழுவதும் அவ் வீட்டில் இருந்து பின் இறந்தது. இறந்தபிறகும் “அது நல் வாழ்வு பெறுக” என்று தானம் செய்தனர். அதன் விளைவால் அக் குரங்கு மத்திம நாட்டில் வாரணாசி என்னும் நகரத்து அரசன் உத்தரகெளத்தன் என்பானின் மகனாகப் பிறந்தது. அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான். அவன்தான் இந்தக் குரங்குக் கையோடு கூடிய வானவன் என்று அங்கு வந்த சாவகர்க்குச் சாரணர் தலைவன் உணர்த்தினான். இந்தச் செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

வானவன் ஆகிய போதும் அந்த எட்டிச் சாயலன் மனைவி இட்ட தானத்தின் பயன் இது என்று காட்டக் குரங்கின் கைவிரலைத் தான் பெறுவதைச் சிறப்பாகக் கொண்டான். அந்த வடிவத்தோடு அங்கு வந்திருந்தான் என்ற செய்தியைச் சாவகர்க்கு எல்லாம் சமணமுனிவர் விளக்கினார்.

“சாரணர் கூறிய தகுதி மிக்க கதையைக் கேட்டவர்களும், தானம் இட்ட எட்டிச் சாயலனும், அவன் மனைவியும் விண்ணுலகப் பேரின்ப வாழ்வு பெற்றனர்” என்ற செய்தியைக் கவுந்தி அடிகள் கூறினார்.

“இந்தக்கதையைக் கேட்டாய்; அதனால் இதன் பயன் அறிகின்றாய். நீ இனி நீட்டித்து இராமல் இவர்களை அழைத்துச் செல்க” என்று கூறினார். அவளும் கண்ணகியை அழைத்துக் கொண்டு பொழுது சாயும் நேரத்தில் தம் வீட்டுக்குச் செல்ல முற்பட்டாள்.

கன்றை நினைத்துக் கொண்டு விடுதிரும்பும் பசுக்கள் உடன் சென்றன. அவற்றைச் செலுத்தும் இடையர் ஆட்டுக் குட்டியைத் தோளில் சுமந்தவராய் உடன் சென்றனர். அவர்கள் கையில் கோடரி வைத்திருந்தனர்; ஆய்ச்சியரும் ஒரு சிலர் அவருடன் சென்றனர்; பொறிகள் பல வைத்துக் காவல் செய்த மதிலின் வாயிலுள் சென்று அக நகரில் மாதரி கண்ணகி கோவலனோடு தம் மனையை அடைந்தாள்.

16. கோவலன் கொலை யுண்ணல்

(கொலைக் களக் காதை)

மனை வகுத்துத் தருதல்

கண்ணகியை அடைக்கலம் பெற்ற இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் மனையில் அவளை வைக்காமல் தனி வீடு அமைத்து அவளுக்குத் துணையாக ஆய்ச்சியர் சிலரை உடன் அனுப்பி வைத்தாள். அவர்களைக் கொண்டு அவளை நீராட்டினாள். மதுரை உயர் குலத்து மகளிரைப் போல் அவளுக்குப் பொன் நகைகள் பூட்டிப் பொலிவு பெறச் செய்தாள். அதன்பின் அவளுக்குத் தன் மகள் ஐயையை அறிமுகம் செய்தாள். “இவள் இட்ட வேலையைச் செய்து தருவாள்; அடித்தொழில் ஆட்டியாக உன்னுடன் இருப்பாள்” என்று கூறினாள்.

“மற்றும் உன்னைப் பொன்னைப் போலப் பாதுகாப்பேன்; கவுந்தி அடிகள் பாதுகாப்பான இடத்தில் உன்னைச் சேர்த்து இருக்கிறார். இனி உன் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்காது” என்று சாற்றினாள்.

அடுத்து மாதரி ஆய்ச்சியரை நோக்கி அறிவுறுத்தி னாள்; “இவள் கணவன் சாவக நோன்பி ஆதலின் புதிய பாத்திரங்கள் தருக; ஐயை உடன் இருந்து உதவுவாள்” என்று கூறினாள்; அவர்களும் தக்க பாத்திரங்களை மிக்க அளவில் தந்து சேர்த்தனர். மற்றும் பலாக்காய், வெள்ளரிக் காய் மாதுளங்காய், மாவின்கனி, வாழைக்காய், நெல் அரிசி, பால், தயிர், நெய் முதலியன கொண்டுவந்து தந்தனர். அவற்றைக் கொண்டு அவள் சமைக்கத் தொடங்கினாள்.

கண்ணகி உணவு படைத்தல்

மெய்விரல் சிவக்கப் பல்வேறு பசுங்காய்களை அரிவாளில் வைத்துக் கொய்தாள்; அவள் திருமுகம் வியர்த்தது; கண்கள் சிவந்தன; ஐயை அடுப்புப்பற்ற வைக்க உதவினாள். தன் கைத்திறன் அமையக் கணவனுக் காகச் சமைத்து முடித்தாள்.

பனை ஒலை கொண்டு அழகாகப் பின்னப் பட்ட தடுக்கை அதனை இட்டாள்; அதில் செல்வமகனாகிய கோவலன் அமர்ந்தான். அவன் கால் அடிகளைக் கழுவித் துடைத்தாள், தரையில் நீர் தெளித்தாள், குமரிவாழையை விரித்து உணவு பரிமாறினாள். “அமுதம் உண்க அடிகளே” என்று அன்புடன் கூறினாள். அவனும் தன்குல மரபுக்கு என விதிக்கப்பட்ட சடங்குகளின்படி கைகால் கழுவிக்கொண்டு உண்ண அமர்ந்தான்.

அவள் உணவு இட அவன் உண்ணும் காட்சி ஆயர் மகளிரை மகிழச் செய்தது. அவர்களுக்குக் கண்ணன் நப்பின்னை காட்சி நினைவில் நின்றது. “ஆயர் பாடியில் யசோதை பெற்றெடுத்த காயாம் பூ நிறத்தவனாகிய கண்ணன் இவன்” என்றும், “அவன் துயர் தீர்த்த கன்னி நப்பின்னை இவள்” என்றும் கூறிப் பாராட்டினர். ஐயையும் அவள் தாயும் விம்மிதம் எய்தினர். “கண்

கொள்ளாக் காட்சி இங்கு நமக்கு இவர்” என்று கூறிப் பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவலன் கழிவிரக்கம்

அவன் உணவு உண்டு இனிது இருந்தான். அவனுக்கு வெற்றிலையும் பாக்கும் தந்தனள். அவற்றைத் தந்த கண்ணகியை அருகில் அழைத்தான். “உன் மெல்லடிகள் கற்கள் பொருந்திய வழியை எவ்வாறு கடக்க முடிந்தன?” என்று கூறிக் கொடிய காட்டுவழியில் அவளை அழைத்து வந்ததற்காக வருந்தினான். “எம் பெற்றோர்கள் இதற்காக வருந்தியிருப்பார்கள்; எல்லாம் புதிராக இருக் கிறது, இது வினையின் விளைவோ அறியாமல் திகைக் கின்றேன். வறுமொழியாளருடனும், புதிய பரத்தை யருடனும் திரிந்து கெட்டேன். அவர்கள் நகைச்சிரிப்பு என்னைப் பாழ்படுத்தியது; அறிஞர் பெருமக்கள் அறிவுரை களை மறந்தேன். எனக்கு நன்னெறியே அமையாது; தீமை செய்து உழன்றேன்; எனக்கு நன்மையே வாய்க்காது”.

“என் பெற்றோர்கள் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்யவேண்டும்; அதை மறந்து விட்டேன்; பிழைபல செய்துவிட்டேன்; பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்து விட்டேன்; எண்ணிப்பார்க்க வில்லை; அவசரப்பட்டு உன்னையும் உடன்வருக என்று கூறிவிட்டேன்; இது தவறு என்று எண்ணாமல் செயல்பட்டு விட்டேன்; “மாநகர்க்கு இங்கு வருக” என்று கூறினேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்பொழுது உணர்கிறேன்; “எழுக” என்றேன்; உடன் மறுப்புக் கூறாமல் உடன் வந்துவிட்டாய்; நீ செய்தது அதை நினைத்துப் பார்க்கிறேன்; நீயாவது தடுத்து இருக்கலாம்; அதைச் செய்யாது விட்டாய்” என்று கழிவிரக்கம் காட்டி மனம் நெகிழப் பேசினான்.

கண்ணகி மாற்றம்

“இதுவரை எதிர்த்துப் பேசியது இல்லை. “ஏன் நீ தடுத்து இருக்கக் கூடாது?” என்று அவன் கேட்டதற்கு அவள் தன் மனத்தைத் திறந்து காட்டினாள். அவன் பிரிவில் தனக்கு ஏற்பட்ட துயரை அவள் எடுத்துக் கூறவில்லை. பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தை மட்டும் குறிப் பிட்டாள். “இல்வாழ்க்கையின் மையக் கூறு அறம் செய்தல்; அறவோரை எதிர்கொள்ள முடியாமல் ஆகி விட்டது; விருந்தினரை அருந்தச் செய்யவில்லை; இது தான் பேரிழப்பு” என்று பேசினாள்.

“மற்றும் உன் பெற்றோர்கள் வந்து விசாரித்த போது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன். அது வலிய வரவழைத்துக் கொண்ட பொய்ச் சிரிப்பு என்பதை அவர்கள் அறிந்தார்கள். அது அவர்கள் உள்ளத்தை உறுத்தியது. நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினர்; அது உங்கள் உரிமை; அதனை மறுத்து உரைப்பது எனக்கு உகந்தது அன்று. எப்பொழுதும் மறுத்துப் பேசியது இல்லை; அதனால் ஏற்று எழுந்தேன்” என்று அவள் பதில் கூறினாள். அன்பும் அருளும் கொண்டு அவன் பெற் றோர்கள் தனக்கு ஆறுதல் கூறி வந்தனர் என்பதையும் தெரிவித்தாள். பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல் என்பதை அவள் கூற்றுக் காட்டியது. மாறுபடத் தான் என்றுமே நடந்து கொண்டது இல்லை என்று நவின்றாள்.

அது அவன் உள்ளத்தைத் தொட்டது; அவள் எத்தகைய தியாகத்தை மேற்கொண்டாள்? அவளால் எப்படிச் செல்வ வாழ்க்கையைத் துறக்க முடிந்தது? என்று எண்ணிப் பார்த்தான்; “குடிமுதல்சுற்றமும், குற்றிளை யரும், அடியோர் பாங்கும், ஆயமும் சூழ்ந்த பாதுகாப்பான

வாழ்க்கையை விட்டு எப்படி அவளால் வர முடிந்தது? நினைத்திருந்தால் அவள் இந்த வசதிகளோடு வீட்டிலேயே தங்கிவிட்டு இருக்கலாம். அவளுக்குத் துணையாக இருந்தவை யாவை?

நாணமும், மடனும், நல்லோர் பாராட்டும் கற்புத் திறனும் இவைதாம் துணையாயின என்பதை உணர்கிறான். புறச்சுற்றம் அவளை அணைக்க வில்லை. அகச்சுற்றம் அவள் மனக் கோட்பாடு. அது அவளுக்குத் துணை செய்தது. உள்ளப்பாங்கு அவளை இயக்கியது என்பதை உணர்ந்து பேசினான்.

கோவலன் பாராட்டுரை

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று பாராட்டிய அவன் இப்பொழுது அவள் குணநலன்களை வியந்தான். “பொன்னே! கொடியே! புனை பூங்கோதாய்! நாணின் பாவாய்! நீள்நில விளக்கே! கற்பின் கொழுந்தே! பொற்பின்செல்வி” என்று கூறிப் பாராட்டினான். அவளை நன்கு உணர்ந்த நிலைமையில் பெண்மைக்குரிய நல்லியல்புகளை அறிந்தவனாய் அவளை உருக்கமாக விளித்தான்; அவள் காலடிகளைக் காண்கின்றான். சீறடிகளை அழகுபடுத்திய சிலம்பு அதைக்கேட்டுப் பெற்றான். “சீறடிச்சிலம்பில் ஒன்று கொண்டு செல்கிறேன்; அதை விற்று முதல் பொருள் ஆக்குவேன். அதனை மாற்றி வருகிறேன்; கலங்காது இருப்பாயாக” என்று கூறினான். அதனைப் பெற்றுக் கொண்டு காதலியாகிய அவளை உளமாரத் தழுவிக் கொண்டு விடைபெற்றான். பக்கத்தில் தக்க உறவினர் இல்லாமல் விட்டுச் செல்வதை நினைத்துப் பார்க்கிறான் அவன். அவள் தனி மகள்; மனம் வெதும்பினான்; கண்களில் நீர் வெளிப்பட அதை மறைத்துக் கொண்டு அவளை விட்டு நீங்கினான்.

கொல்லனைச் சந்தித்தல்

பசுக்கள் நின்ற அந்த ஆயர்கள் வீட்டை விட்டு விலகினான். தளர்ந்த நடையோடு பெருந்தெருவை அடைந்தான். முசுப்பினை உடைய எருது எதிரே வந்தது. ஆயர்களாக இருந்தால் அது தீயநிமித்தம் என்று நின்று இருப்பார். இவன் அதை அறியாதவன். அதனால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அது இழுக்கு என்பதை அவன் அறிந்திலன். அவனுக்கு அதை அறிய வாய்ப்பும் இல்லை; இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான்.

நூற்றுவர் பின்வரக் கள்ளச் சிந்தையன், சட்டை யிட்டவன் விலகி ஒதுங்கி நடந்து வந்தான்; ஒரு பொற் கொல்லன்; அவன் தோற்றம் அவனைத் தனிப்படுத்திக் காட்டியது. கையில் கோல் ஒன்று அவன் வைத்திருந்தான். அதனால் அவனுக்குத் தலைமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. பாண்டியன் மதித்த கொல்லன் இவன் என அனுமானித்தான். அதனால் அவனை அணுகி “அரசிக்கு ஏற்றது ஒர் அணி அதற்கு நீ விலை இட்டுக் கூறமுடியுமா?” என்று கேட்டான்.

அவன் அடக்கமாக அணுகிப் பதில் உரைத்தான். “அறியேன்; எனினும் அரசனது முடிக்கலன் சமைப்பேன் யான்” என்றான். பொதித்து வைத்த காற்சிலம்பை அவன் முன் அவிழ்த்தான். காலன் இதை எதிர்நோக்கிக் காத்திருந்தது போல் அந் நிகழ்ச்சி அமைந்தது, வயிரமும் மணியும் பொதித்த அந்தச் சித்திரச் சிலம்பின் செய்கை எல்லாம் விரும்பிப் பார்ப்பதைப் போல் நடித்தான். “கோப்பெருந்தேவிக்கே இது அமையும்” என்று சிறப் பித்துக் கூறி அரசனுக்கு இதனை அறிமுகப்படுத்துவதாகக் கூறினான்.

திரும்பி வரும்வரை அவனைத் தன் சிறுகுடிசையிலே இருக்குமாறு கூறினான். கொல்லன் கூறியதை நம்பினான். சிலம்பு கோவலன் கையிலேயே விட்டுச் சென்றான். அவன் அந்தக் கொல்லன் இல்லத்துக்கு அருகில் இருந்த கோயிலின் ஒரு புறம் ஒதுங்கிக் காத்து இருந்தான்.

அரசியின் காலணியை ஏற்கனவே களவாடி இருந் தான். அதனின்று இப் புதிய மனிதனைக் கொண்டு தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டான். அதனை அவன் வெளிக்காட்டாமல் அரசனைச் சந்திக்கச் சென்றான்.

கொல்லன் சூழ்ச்சி

அவனுக்குத் தக்க சூழல் அங்கு உருவாகி இருந்தது. அந்தப்புரம் நோக்கி நாட்டு அரசன் அடியெடுத்து வைத்தான். அமைச்சர்கள் உடன் செல்லவில்லை. ஏவல் சிலதியர் காவல் மன்னனைத் தொடர்ந்து சென்றனர்.

அரசி இவனிடம் ஊடல் கொண்டிருந்தாள். ஆடல் மகளிர் பாடிய மதுர இசையும், மகிழ்வு ஆடலும் மன்னவன் மனத்தைக் கவர்ந்தன. அருகிருந்த அரசி அதனைக் கண்ணுற்றாள். அதனால் நெஞ்சு புண்ணுற்றாள்; புலவி கொண்டாள். தலைவலி தனக்கு என்று அவனிடம் முரண்கொண்டு கூடுதல் தவிர்த்தாள். அவளை ஆற்று விக்கும் ஆவலில் அவன் அணுகினான். வேகமாகச் சென்ற அவன் தன் விவேகத்தை இழந்தான். அதனால் கோப் பெருந்தேவியின் அந்தப்புரம் நோக்கி அவன் சென்றான்.

அவ்வேளை பார்த்து அரசனை வணங்கிக் கொல்லன் தொடர்ந்தான். ஏத்திப் புகழ்ந்தான். கீழே விழுந்து தவழ்ந்

தான். “கள்வன் ஒருவன்; அரண்மனைச் சிலம்பைக் கவர்ந்தவன்; அவனை என் சிறுகுடிலகத்து நிறுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். “அவன் கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையாகக் கொண்டு மன்னிய காவலரை ஏய்த்துக் கவர்ந்தான்” என்று விளக்கினான்.

அரசன் ஆணை

அரசன் சிந்தித்துப் பார்க்கவில்லை. எல்லாம் விதிதான்; அவன் அறிவு மயங்கிவிட்டது. உடனே காவலர்களை அழைத்தான். தன் மனைவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச்சிலம்பினைக் கொண்டு வருக என்று கட்டளை இட்டான். ஆராயாது அவன் கட்டளை இட்டது ஏன்? சிலம்பு காட்டினால் அரசி சிந்தை மாறுவாள் என்று நினைத்தான். அது மட்டு மன்று; உடன் அமைச்சர்கள் இல்லை அறிவுரைகூற, தீர்ப்புக்கூற வேண்டிய இடம் அது அன்று; எல்லாம் கொல்லனுக்குச் சாதகமாக முடிந்தன.

காவல் ஆணை அதனைச் செயல் படுத்தக் கொலை யாட்களைக் கொல்லன் உடன் அழைத்துச் சென்றான். வினை அங்கு வலைவிரித்துக் காத்து இருந்தது. அதில் அவன் அகப்பட்டு இருந்தான். அவன் மதி அப்பொழுது செயல்படவில்லை. சிலம்பு காண வந்தவர்கள் இவர்கள் என்று கொல்லன் கோவலனுக்கு அவர்களைக் காட்டினான்; கோவலன் அதை நம்பிவிட்டான்.

வாதங்கன்

அந்தக் கொலையாளிகள் உடனே செயல்பட வில்லை. அவன் சலனமற்ற தோற்றத்தைக் கண்டு “இவன் கொலைப்படும் மகன் அல்லன்” என்று அவர்களுள் ஒருசிலர் மறுப்புத் தெரிவித்தனர். அவர்கள் உண்மை ஒளி காண்பதற்குமுன் கொல்லன் அவர்களைத் தனியே அழைத்துப் பேசினான்; அவர்கள் கூற்றை எள்ளி நகையாடினான். “கள்வர் என்பவர் கடுமையான தோற்றம் கொண்டிருக்கத் தேவையில்லை; அவர்கள் மற்றவர்களை எளிதில் மயக்கும் ஆற்றல் உடையவர்கள்; அந்த மயக்கத்தில் இவர்கள் ஆட்படுதல் கூடும்” என்று விளக்கினான்.

“களவாடுபவர்கள் மந்திரம் கற்றவர்கள்; தெய்வத்தை வேண்டி ஆற்றல் பெற்றவர்கள், மருந்திட்டு மற்றவர்களை மயக்குபவர்கள்; நிமித்தம் அறிந்து செயல்படுவார்கள்; தந்திரமாகச் செயல்படுவர்; இடம், காலம், கருவி ஆராய்ந்து சிந்திப்பவர்கள்; அதனால் அவர்களை அடையாளம் காண்பது அரிது ஆகும்” என்றான்.

“மருந்திட்டு அதனால் மயங்குவீர் என்றால் மன்னவன் ஆணைக்கு நீர் ஆட்படுவீர்; உங்கள் தலைகள் உருள்வது உறுதி; அவர்கள் மந்திரத்தைச் சொன்னால் தேவகுமாரர்கள் போல் மறைந்துவிடுவர். தெய்வத்தை நினைப்பவர் ஆயின் தம் கையகத்து உள்ள பொருளை அவர்களால் மறைக்க இயலும்; அவர்கள் மந்திரம் போட்டால் நாம் மறைந்து இருந்த இடத்தை விட்டுப் பெயரவே இயலாது. நிமித்தம் பார்த்தே திருடுவதை அவர்கள் நியமித்துச் செயல் படுவர். களவு நூல் காட்டும் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் இந்திரன் ஆரமும் அவர்கள் கைக்குச் சென்று போய்ச் சேரும். இடம், காலம் கருதி அவர்கள் செயல்பட்டால் யாரும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்குப் பகல் இரவு என்ற நேரப்பாகுபாடு இல்லை”.

“நினைத்ததைச் சாதிப்பதில் அவர்கள் நிலைபேறு உடையவர்கள் ஆவர். அவர்கள் புகாத இடமே இல்லை. காற்று நுழையாத இடமாயினும் அவர்கள் புகுந்து ஆற்றுவர். துாதர் கோலத்தில் வாயிலின் நுழைந்தான் ஒருவன், மாதர் கோலத்தில் அவன் உள்ளே சென்றான். விளக்கு ஒளியில் இருட்டு நேரத்தில் இளவரசனின் கழுத்துச் சங்கிலி வயிரம் பதித்தது; மின்னலைப்போல் பறித்தான்; மறைந்தான்”.

“வாள் கொண்டு இளவரசன் வீசினான். ஆள் அவனுக்கு அகப்படவில்லை. தோள் கொண்டு அவனைப் பற்ற முயன்றான். தூண் ஒன்றைக் காட்டிவிட்டுச் சேண்துரம் சென்றான். களவு நூல் கற்று உளவு அறிந்து திருடிய அவனை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவே இல்லை. அவன் இடத்தை யாராவது காட்ட முடியுமா என்று பழைய நிகழ்ச்சி ஒன்றைக் கூறி அவர்கள் பிழைகளை எடுத்துக் காட்டினான். அவன் கூறியதை ஒட்டி மற்றொருவன் தன் சொந்த அனுபவத்தைக் கூறி உயிரோட்டம் தந்தான். “அவன் வயது குறைந்த இளைஞன், வேல் தாங்கி இருந்தான். நிலம் தோண்டும் உளி வைத்திருந்தான். நீலநிற உடை உடுத்தி இருந்தான். நகைகளைக் கவரும் வேட்கையில் கடும்புலிபோல் நடு இரவில் ஊரவர் துயின்று கொண்டிருந்த நேரத்தில் வந்திருந்தான். என் கைவாள் எடுத்தேன். அவன் அதைத் தடுத்துப் பற்றிக்கொண்டான். அடுத்து அவனைத் தேடினேன். எங்கும் அவன் எனக்கு அகப்படவே இல்லை. இவர்கள் செயல் அற்புதமானது, அறிய இயலாதது” என்று மிகைப்படுத்திக் கூறினான்.

“இவன் தப்பித்துச் சென்றால் நம் உயிர் தப்புவது அரிது; அரசன் நம்மை மன்னிக்கமாட்டான்; அவனா நாமா யார் உயிர் தப்புவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்; சிந்தித்துச் செயல் படுங்கள்” என்றான் அக் கொலைஞன்.

இறுதி அவலம்

சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை; அச்சம் அவர்களை ஆட் கொண்டது; கோவலன் உயிரைத் துச்சம் என மதித்தனர். கல்லாத குடியன் முரடன் ஒருவன் தன் கைவாள் எடுத்தான்; அவன் வாழ்வை முடித்தான். மார்பில் குருதி கொட்டியது; மாநில மடந்தை துயர் அடைந்தாள்.

பாண்டியன் செங்கோல் வளைந்தது; கோவலன் தரையில் விழுந்தான்; இவற்றிற்கு எல்லாம் காரணம் அவன் பழைய வினைதான்; வேறு என்ன இருக்க முடியும்?

நல்வினையையே நாடிச் செயல் புரிந்தால் கேடு வருவது இல்லை. கண்ணகியின் கணவன் அவன் அவல முடிவு உலகுக்கு ஒரு படிப்பினையாகும்; அவன் பழம்பிறப்பில் செய்த தீவினை இப்பிறப்பில் அவன் வாழ்வினைப் பறித்துக்கொண்டது. அது மட்டுமா? வளையாத செங்கோலும் வளைந்தது; அதற்கு அப் பாண்டியன் செய்த பழவினையே காரணம் ஆகும்.

17. ஆய்ச்சியர் குரவை யாடுதல்

(ஆய்ச்சியர் குரவை)

இமயத்தில் மீன்கொடி ஏற்றியவன் பாண்டியன்; அவனை அடுத்துச் சோழர் புலிக்கொடியையும், சேரர் வில் கொடியையும் ஏற்றினர். தமிழர் வெற்றி நாவலந்தீவு முழுவதும் பரவியது. இப்பாரத நாடு முழுவதும் இவர்கள் ஏவல் கேட்டனர். இச்சிறப்புக்குக் கால்கோள் செய்தவர் பாண்டிய அரசர்கள்.

நாவலந் தீவு தமிழக மன்னர்க்கு அடிபணிந்தது. பாண்டியன் அரண்மனையில் காலை முரசு ஒலித்தது. பொழுது விடிகிறது என்பதை அறிவித்தது. அன்று மாதரி மன்னவன் கோயிலுக்கு நெய்ம் முறை செய்யும் நாள்: அவள் நெய் கொண்டு சென்று தரவேண்டிய முறை வந்தது. அதனால் மாதரி ஐயையை அழைத்து மத்தும் கயிறும் கொண்டு வரச் சொன்னாள். அவற்றை எடுத்துக் கொண்டு தாழியினிடத்துச் சென்றாள்.

தீய நிமித்தங்கள்

குடத்தில் பால் உறைந்து கிடக்கும் என்று எதிர் பார்த்தாள். அது தயிராக வில்லை; உறையாகவேஇல்லை; எருது கண்ணிர் சொரிந்தது.

வெண்ணெயைக் காய்ச்ச முற்பட்டாள்; அது உருகவே இல்லை; உறைந்து கிடந்தது; ஆட்டுக்குட்டி வழக்கமாகத் துள்ளி விளையாடும்; அது அசையாமல் பள்ளி கொண்டிருந்தது.

பசுவோ என்றால் அது நடுக்கம் காட்டியது. எதற்கோ அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தது; அதன் கழுத்து மணி அறுந்து தானே கீழே விழுந்தது.

இவை தீய நிமித்தங்கள், ஏதோ தீமை வர இருக்கிறது என்பதை உணர்ந்தனர். அதைப் போக்க வழி யாது? அதற்கு ஒரே வழி தெய்வத்தை வழிபடுவது; ஆய மகளிர் கூடித் தெய்வத்தைப் பாடுவது; குரவைக் கூத்து ஆடுவது என்று முடிவு செய்தனர். கண்ணகியை அழைத்துக் கொண்டு அவள் காண ஆடுவது தக்கது என்றனர். கண்ணன் தன் முன்னவனாகிய பலராமனுடன் ஆயர் பாடியில் ஆடிய வாலசரிதை என்னும் கதையில் ஒரு பகுதி, நப்பின்னையோடு கண்ணன் ஆடியது, அதில் ஆய மகளிர் பங்கு கொண்டனர். கை கோத்து ஆடுவது அது அதனைக் குரவைக் கூத்து என்றனர். “குரவை ஆடுவோம் வா” என்றாள் மாதரி, “கன்றுகளும் பசுக்களும் துயர் நீங்குக என்று கூறி ஆடுவோம்” என்றனர்.

குரவையாடுதல்

அக்கூத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் எழுவர்; அவர்கள் வீரம் மிக்க இளைஞரையே விரும்பி மணக்கும் உறுதிப்பாடு கொண்டவர்கள். அவர்களுள் ஒருத்தி, “காரி என்ற எருதின் சீற்றத்தை அடக்கியவனையே மணப்பேன்” என்றாள். அவ் எருது கருநிறம் பெற்று விளங்கியதால் “காரி” எனப்பட்டது. அவ்வாறே ஏனையவரும் வெவ்வேறுநிறம் உடைய எருதுகளை அடக்குவோரைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். நெற்றியில் சிவந்த சுட்டியுடையது ஒர் எருது; மற்றொன்று வலிமை மிக்க இளளருது: நுண்ணிய புள்ளிகளையுடைய எருது மற்றொன்று. பொன் புள்ளிகள் உடையது மற்றொன்று; வெற்றி மிக்க இளம் எருது மற்றொன்று; தூய வெள்ளை நிறம் உடையது மற்றொன்று. இவ்வாறு தனித்தனி எருதுகளைக் குறிப்பிட்டு அவற்றை அடக்குபவருக்கே ஆயர்மகள் உரியள் என்று வீரம் பேசினர்.

இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வோர் எருதை வளர்த்தவர்கள். இவர்களே இக்குரவையில் பங்கு கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயர் இட்டு ஆட்டத்தில் பங்கு கொள்ளச் செய்தனர். பண்கள் ஏழு; அவற்றை அவர்களுக்குப் பெயர்களாக இட்டனர். அவை முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம்.

இவ் ஆய மகளிருள் மூவர் கண்ணனாகவும், பலராமனாகவும், நப்பின்னையாகவும் நடித்தனர். மற்றவர்கள் சுற்றி நின்றனர். மாயவன் கழுத்தில் நப்பின்னை துளப மாலையைச் சூட்டினாள். “திருமகளைப் போல் இவள் பேரழகினள்” என்று மற்றவர்கள் பாரட்டினர்; நப்பின்னை கண்ணனுக்கு மாலையிட்டு அவனோடு இணைந்து ஆட ஏனைய மகளிர் மாயவனைப் பாடினர்.

அப்பாடலுக்கு 'முல்லைத் தீம்பாணி' என்று பெயர் வழங்கினர்.

“கன்றைக் குறுந்தடியாகக் கொண்டு விளவின் கனியை உதிர்த்தவன்; அவன் இன்று நம் பசுக்கூட்டத்தில் வருவான் வந்தால் அவன் வாயில் கொன்றையம் குழ லிசையைக் கேட்போம்; தோழி” என்ற கருத்துப்படப் பாடினர்.

இவ்வாறே ஏனைய பாடல்களும் அமைந்தன; “பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடந்தவன் அவன் ஆம்பலங்குழல் இசைப்பான்” என்றனர்.

“தொழுநைத் துறையில் குருந்து ஒசித்த மாயவன் முல்லைப் பண் பாடுவான்” என்று பாடினர்.

“ஆடையை ஒளித்தான்; அவன் வண்ண அழகைப் பாடுவோம்; அந்நிலையில் நாணிக் குனிந்த நங்கையின் நளினத்தைப் பாடுவோம்”.

“யமுனை ஆற்றில் கண்ணனின் நெஞ்சம் கவர்ந்த நப்பின்னையைப் பாடுவோம். அன்று நப்பினையின் இதயம் கவர்ந்த இறைவனாகிய கண்ணனைப் பாடுவோம். இருவரையும் பாடுவோம் நாம்”

“ஆடையிழந்தாள்; வளையல்களை நெகிழ்த்தாள்; தன் கைக்கொண்டு தன் மேனியை மறைத்தாள். அந்தப் பேரழகியைப் பாடுவோம் நாம். அவள் முக அழகைக் கண்டு அகம் நெகிழ்ந்தவன் கண்ணன்; அவன் காதலைப் பாடுவோம் நாம்”.

கண்ணனுக்கு இடப்பக்கத்தும் பலராமனுக்கு வலப் பக்கத்தும் நப்பின்னை நின்றாள்.

மற்றும் இடம் மாறிநின்றாள் மற்றொரு முறை; இவ்விருநிலைகளில் நாரதனைப் போல நாதம் எழுப்பி யாழ் இசை இயற்றினர் மற்றவர்கள்.

கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய ஆட்டத்தில் ஆயர் சிறுமியரும் பங்குகொண்டனர் தாளத்துக்கேற்ப அடிபெயர்த்து இவர்கள் ஆடிய குரவைக் கூத்தை யசோதை கண்டு மகிழ்ந்தாள். அதனைச் செப்பிப் பாடினர். உள்வரிப்பாடலாகத் திருமாலைப் போற்றிப் பாடினர்.

தெய்வப் பாட்டினுள் அரசர் வெற்றிகளை உள் வைத்துப் பாடியதால் இவை உள்வரிப் பாடல் எனப் பட்டன; பாண்டியன் இந்திரன் தந்த பொன்னாரத்தைப் பூண்டான்; சோழன் புலிக்கொடியை இமயத்தில் பொறித் தான்; சேரன் கடலில் எதிரிகளின் கடம்ப மரத்தைத் தடிந்தான். இவ்வெற்றி பெற்ற மன்னர்கள் மூவரும் கண்ணனே ஆவர் என்று பாடினர். நாட்டுப் பற்று தெய்வப் பற்றோடு இயைத்துப் பாடினர்.

முன்னிலை வைத்துத் திருமாலைப் பாடுதல்

“மந்தர மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாக வும் கொண்டு நீ பண்டு ஒரு நாள் கடலைக் கடைந்தாய். அத்தகைய நீ யசோதையின் கயிற்றுக்குக் கட்டுப்பட்டுக் கலக்கம் அடையச் செய்தாய். இது முரண்பாடு; இது வியப்புத் தருகிறது.”

“நீ மண்உண்டபோது உன் வயிற்றில் இந்த உலகமே இருப்பதைப் பார்த்தனர். உலகமே உன் வயிற்றில் அடக்கிய நீ இப்பொழுது வெண்ணெய் உண்டது ஏன்? பசித்தா உண்டாய்? இது உன் விளையாட்டு ஆகாதோ? வியப்பிற்கு உரியது இது.”

“இரண்டடியில் மூவுலகு அளந்தாய், அதற்கு உரி யவன் நீ உன் திருவடி சிவக்கப் பாண்டவர்க்குத் துாதாகச் சென்றது ஏன்? மூவுலகும் உனக்கு உரிமையாகியது. அத்தகைய நீ நாடு கேட்கச் சென்றது வியப்பேயாகும்”

படர்க்கையில் வைத்துத் திருமாலைப்பாடுதல்

“தம்பியோடு காடு அடைந்து இராவணன் அரணாகிய “சோ” என்பதை அழித்தான். அந்த இராமனது வீரம், புகழ் இவற்றைக் கேளாத செவி செவியாகாது”.

“திருமாலைக் காணாத கண் என்ன கண்? இருந்தும் பயனற்றதாகும்; நாரணனை வழுத்தாத நா என்ன நா? அவன் புகழைப் பாடுவோமாக”

"குரவையுள் பாடிப் போற்றிய தெய்வம் நம் கறவை இனத்தைக் காப்பதாக பாண்டியன் வெற்றி முரசு உலகு எங்கும் கேட்பதாக! இந்திரன் முடியைத் தகர்த்து தொடி, யணிந்த அவன்தோளின் சிறப்பைப் பாடுவோமாக" என்று பாடினார்.

18. துன்பச் செய்தி

(துன்ப மாலை)

குரவை பாடி முடிந்தது. பின் மாதரிவையை ஆற்றின் நீர்த்துறைக்குச் சென்று நீராடித் திருமாலுக்குப் பூவும், சந்தனமும், நறும் புகையும், மாலையும் சாத்தச் சென்றிருந்தாள். அந்த நேரத்தில் அவள் ஆயர் சேரியில் இருக்கவில்லை.

குரவைக்கூத்து முடிந்ததும் அலறிஅடித்துக் கொண்டு ஊரில் இருந்து ஒருத்தி அங்கு வந்து செய்தி கூறத் தொடங்கினாள். அவள் அச்செய்தியைச் சொல்ல முடி யாமல் தயங்கினாள். அவள் வாயில் சொற்கள் வெளிவர வில்லை.

கண்ணகிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ துயரச் செய்தி அவள் சொல்ல வந்திருக்கிறாள் என்பதை மட்டும் அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. இவள் பதறினாள்; கதறினாள்; அதிர்ச்சியுற்றாள். ஐயையை நோக்கி ஐயத்தை எழுப்பினாள்; “நடந்தது யாது?” என்று வினவினாள்.

“ஊருக்குச் சென்ற காதலன் என்ன ஆயினான்? அவன் வந்திலன்; என் நெஞ்சம் கவல்கின்றது; யாரோ ஏதோ கூறினார்கள்; அவர்கள் சொல்ல வந்த செய்தி யாது?" என்று ஐயையை வினவினாள்.

“நண்பகல் பொழுதே எனக்கு ஐயம் தோன்றியது; நடுங்கினேன்; என்ன? ஏது? அவர்கள் கூறியது யாது? விரைவில் கூறுக” என்று மேலும் பதறினாள்.

“யாரோ எவரோ வஞ்சம் இழைத்துவிட்டார்கள்; சூழ்ச்சிக்கு அவர் இரையாகி விட்டாரா? ஒன்றும் விளங்க வில்லை. அந்த ஊரவர் பேசிய உரை யாது? விளம்புக; ஐயையை நோக்கித் தொடர்ந்து கேட்டாள்; அதற்குமேல் ஐயையால் அடங்கி இருக்க இயலவில்லை. தனக்குத் தெரிந்ததைக் கண்ணகிக்குத் தெரியப்படுத்தினாள்.

“அரசிக்கு உரிய அணி ஒன்றை அபகரித்தான் ஒரு கள்வன்; அவனை அரசனின் ஆட்கள் கொலைசெய்து விட்டனர்” என்று தெரிவித்தாள்.

அவளுக்கு விளங்கியது; 'அணி' அதை ஏந்திச் சென்றது தன் கணவன்; அவனைத்தான் அவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து சீற்றம் கொண்டாள். எழுந்தாள்; செய்வது அறியாது மயங்கி விழுந்தாள். விரித்த கூந்தலோடு அத் திங்கள் முகத்தினள் நிலத்தில் விழுந்து அலறினாள். செங்கண்சிவக்க அழுதாள்; “எங்கே இருக்கின்றாய்?” என்று கூறி இணைந்து ஏங்கி மயங்கினாள்.

நெஞ்சில் நினைவுகள் அலைமோதின, உணர்வுகள் பொங்கி நெருப்பு எனச் சொற்களாக வெளிப்பட்டன. அநியாயம் அது என்பதை அலறி அறிவித்தாள். விதவைக் கோலம் கொண்டு ஒடுங்கிக் கிடப்பது இது பழையது; எரியில் விழுந்து கரிவது இதுவும் பழகியது; இவற்றை எதிர்த்தாள், பிழை செய்தது அரசன்; கொடுமை இழைத்தது அவன்; இதனைத் தாங்கித் தணிந்து இருப்பது இயலாது என்று கூறிக் கொதித்து எழுந்தாள். அதனை எதிர்க்காமல் இருப்பது தனக்கு வசை என்பதை உணர்ந்தாள்.

பழிச்சொல்லைப் போக்குவது தன் கடமை என்பதை அறிந்தாள். இது அவள் உள்ளத்தில் எழுந்தபோராட்டம்.

இதைப் பலரும் அறிய வெளியிட்டாள்; “கள்வனோ என் கணவன்?” என்று ஆயர் மகளிரை நோக்கி வினவினாள். காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கதறினாள். “அநியாயம் இழைத்த இந்த ஊர் அழியும். எரி எழுந்து ஊரை எரிக்கும்” என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.

ஊரை எரிக்கும்” என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.

19. ஊரை ஒருங்குதிரட்டுதல்

(ஊர் சூழ்வரி)

அந்தக் குரல் சூரியன் தந்த விடை எனக் கொண்டாள். அவ்வளவுதான் அங்கு அவள் நிற்கவில்லை. ஆயர் சேரியை விட்டு நீங்கி ஊருக்குள் புகுந்தாள். கையில் மற்றைய சிலம்பை ஏந்தினாள் “முறை தவறிய அரசன் ஊரில் வாழ்வீர் நான் நவில்கிறேன்; கேட்பீராக” என்று குரல் கொடுத்தாள்.

“யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது”

“மற்றும் அந்த உண்மையை முதலில் என் கணவன் வாய் சொல்லக் கேட்பேன்; அவனைச் சென்று பார்ப்பதே தக்கது; அந்தத் தீதுஅற்ற நல்லுரையைக் கேட்பேன்; இது அடுத்த செய்தி”.

“அவனைச் சந்தித்துப் பழியற்றவன் என்பதை அறிவேன்; அவ்வாறு அறியாவிட்டால் நான் உங்களை வீணாக அலைக்கழித்தேன் என்று கருதுங்கள்; இவள் பொய்யள் என்று சொல்லி என்னை இகழுங்கள். இது உறுதி” என்று கூறி அவலத்தை அறிவித்தாள்.

அது ஊரவர் நெஞ்சைத் தொட்டது; மதுரைமாநகர் மக்கள் கலக்கம் அடைந்தனர். “இவள் துன்பத்தை யார் எப்படித் தீர்க்க முடியும்? களையாத துன்பம் இக்காரிகைக்கு ஏற்பட்டது; வளையாத செங்கோல் வளைந்து விட்டது; தென்னவன் ஆட்சி சீர்குலைந்து விட்டது; இது என்ன அநீதி மண்குளிரச் செய்யும் அவன் வெண்குடை இன்று வெம்மை உற்றது ஏன்? அனல் கக்கியது என்?”

“சிலம்பு ஒன்று ஏந்தியவள் அவள் மானிடப்பெண் அல்லள் புதிய தெய்வம்; இவள் தெய்வம் உற்றவள் போல் துடித்துப் பேசுகின்றாள்” என்று பேசத் தொடங்கினர். மன்னன் ஆட்சி வீழ்ச்சியுற்றதற்கு வருந்தினர்; அஞ்சினர்; பெண் ஒருத்தி விடும் கண்ணிர் அவர்களைக் கலங்க வைத்தது.

ஊரவர் ஒன்று திரண்டனர்; அவர்கள் அவளுக்கு அவள் கணவன் விழுந்து கிடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினர். பொற்கொடி போன்ற அந்தப் பூவையாள் அவனைக் கண்டாள்; அவன் அவளைக் காணவில்லை. கதிரவனும் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டான். மாலைநேரம், பூங்கொடியாள் பூசல் இட்டாள். அவள் தனித்த குரல் கனத்து ஒலித்தது. ஊர் எங்கும் அந்த அவலக் குரல் எதிர் ஒலித்தது.

காலையில் அவன் முடியில் அணிந்திருந்த பூவினை அவள் தன் கூந்தலில் சூடிக் கொண்டாள்; மாலையில் அப்பூவினை இழக்கும் அவலநிலைக்கு ஆளாயினாள். காலையில் அவன் அவளைத் தழுவினான்; மாலையில் அவன் குருதிபடிந்த மார்பைத் தழுவினாள். மாலை இருந்த மார்பு அது; இரத்தம் படிந்து மாலையாகக் காட்சி அளித்தது. தன்னை அவன் காணாத நிலை; அது அவளுக்குக் கடுந்துயரத்தைத் தந்தது.

“மன்னவன் தவறு இழைத்தான்; பொன்னுறு நறுமேனி துகள் படிந்து மண்ணில் கிடக்கிறது; என் துயரத்தை யார் களைவது? இதற்குக் காரணம் யாது? விதி என்று கூறக்கூட ஆள் இல்லை. ஆறுதல் கூறக் கூட ஆள் இல்லாமல் இந்தத் தனிமையில் உழல்கின்றேன்!”

“இந்த அநீதியை எடுத்துக் கூற வேண்டிய அறம் அழிந்து விட்டதா? மக்கள் மயங்கி விட்டனரா? கொழுநர் குறை தாங்கும் பெண்கள் என் அழுகையைக் கேட்டு ஆறுதல் தரமாட்டாரா? திக்கற்றவரை அடுத்து ஆதரிக்கும் காப்புமிக்க சான்றோர் இதைச் செவியில் கேட்டுச் செம்மை யுறச் செயல்பட மாட்டார்களா? ஈன்ற குழவியின் அழு குரல் கேட்டால் எடுத்து வளர்க்கும் சால்பு உடையவர்கள் இன்று அலறும் குரல் கேட்டு அமைதியுற்றது ஏன்? தெய்வங்கள் கோயில்களில் நிறுவி இருக்கிறார்கள். அவர்கள் கல்லாகி விட்டாாகளா? என் சொல் கேட்டு நீதி வழங்காமல் இருப்பது ஏன்? தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே! ஏன் எந்தச் சொல்லும் சொல்லாமல் மவுனம் சாதிக்கின்றது? அநீதியைக் கேட்க இந்த நகரில் ஆள் இல்லாமல் போனது ஏன்?” என்று அலறித் துடித்து அழுது முறையிட்டாள்.

மண்மீது கிடந்த மணாளன் அவன் பொன்துஞ்சம் மார்புமீது விழுந்து புரண்டு அழுதாள்; அவனைத் தழுவிக் கொண்டாள். அவன் உயிர் பெற்று எழுந்தான். “கன்றியது உன் முகம்” என்று கனிவுடன் பேசினான். அவள் கண்ணிரைத் தன் கையால் துடைத்தான்.

அவள் தன் கணவன் திருவடிகள் இரண்டையும் தன் கையால் பற்றிக் கொண்டு வணங்கினாள். அவன் உயிர் உடலைவிட்டு நீங்கியது; உயிர் வடிவில் வான் நோக்கி எழுந்தான்; வானவர் எதிர்கொண்டு அழைத்தனர். “நீ இருக்க” என்று அவளுக்கு இறுதிச் செய்தியாகச் சொல்லி அவன் மறைந்து நீங்கினான்.

அவனைக் கண்டது; தன் அவலம் துடைக்க அவன் தன்னைத் தொட்டது; இருக்க என்று அவன் இயம்பியது இவை எல்லாம் அவளுக்கு மாயச்செய்கைகளாக இருந்தன. “திடீர் என்று தோன்றி மறைந்துவிட்டான். மாயம் அல்ல என்றால் அதன் தன்மை யாது? தெய்வம்தான் வந்து என்னை மருட்டியதோ? அவனை எங்குச் சென்று அடைவது? இருக்க என்றான்; பொறுக்க என்னல் இயலாது; என் சினம் தணிந்தால் அன்றி அவனைப் போய்ச் சேரேன்”

“தீமை செய்த அரசனைத் திறம்கேட்பேன்; வழக்கு ஆடுவேன்; அவனை வழிக்குக் கொணர்வேன்; அழிப் பேன்; இந்நகரை ஒழிப்பேன்” என்று கூறி உறுதி கொண்டவளாய் அகன்றாள்.

எழுந்தவள் பழைய கனவினை நினைத்துப் பார்க்கிறாள். தீய கனவு அது இன்று பலித்து விட்டது; நின்றாள்; நிலை குலைந்தாள்; நெடுங்கண்நீர் சோரச் சற்று அயர்ந்தாள்; எண்ணிப்பார்த்தாள், கண்களில் பெருகிய நீரைத் துடைத்துக் கொண்டாள்; அவலத்தை அகற்றினாள். ஆவேசம் கொண்டவளாய் அரசன் கோயிலை அடைந் தாள்; அவன் வாயில் முன் சினத்துடன் நின்றாள்.

20. வழக்கு உரைத்தல்

(வழக்குரை காதை)

கோப்பெருந்தேவி கனவு

கோப்பெருந்தேவி தீக்கனா ஒன்று கண்டாள்; அதை அவள் தன் தோழிக்கு எடுத்து உரைத்தாள்: “அரசனின் செங்கோல் அதனோடு அவன் வெண்கொற்றக்குடை இவை சாய்கின்றன; வாயில் கடையில் வைக்கப்பட்டிருந்த மணி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது; திசைகள் எட்டும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்கின்றன; சூரியனை இருள் விழுங்குகிறது; வானவில் இரவில் தோன்றுகிறது; பகலில் நட்சத்திரங்கள் கொள்ளிக்கட்டைகள் போல நெருப்பை அள்ளி வீசுகின்றன”.

இவற்றை எடுத்துக்கூறி “அடுத்து என்ன நடக்குமோ” என்று அரசி அஞ்சினாள். “இதனை மன்னவனுக்கு அறிவிப்போம்” என்று கூறினாள். தன்னை அந்தப்புரத்துப் பரிவாரப் பணிப்பெண்கள் சூழ்ந்துவர அரசி மன்னன் அவையை அணுகினாள். “அரசி கோப்பெருந் தேவி வாழ்க” என அறிவித்த வண்ணம் ஆயத்தவர் அரசி யோடு அரசனை அணுகினர். பாண்டிமாதேவி அரசனுக்குத் தான் கண்ட தீக்கனவை எடுத்து உரைத்தாள். அரசன் அதனை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அரியாசனத்தில் அமர்ந்திருந்தான்.

வாயிலோனை விளித்தல்

வெளியே கடுமையான குரலில் கண்ணகி வாயிற் காவலனை விளித்துக் கூறினாள்; “வாயில் காப்பவனே! அறிவிழந்து நெறிதவறிய அரசனின் காவலன் நீ! நீ சென்று அறிவிப்பாயாக! கையில் ஒற்றைச் சிலம்பை ஏந்திக் கற்றைக் குழலாள் ஒருத்தி இழந்து வாசற் கடையில் நின்று கதறுகின்றாள் என்று அறிவிப்பாய்” என்று ஆணையிட்டாள்.

அவன் உள்ளே சென்று வாழ்த்துக் கூறி அரசனிடம் வந்தவளைப்பற்றி அடித்து விழுந்து கொண்டு அலறிய வண்ணம் தெரிவித்தான். “கணவனை இழந்தவள் வாயிற் கடையில் வந்து நிற்கிறாள்; அச்சம் தரும் வடிவில் அவள் காணப்படுகிறாள். தாருகனின் மார்பைக் கிழித்த பேர்உரம் படைத்த காளிபோலக் காட்சி தருகிறாள். ஆவேசம் கொண்டவளாக இருக்கிறாள்” என்று அறிவித்தான்.

வழக்கு உரைத்தல்

“அவளை உள்ளே வரவிடுக” என்று அரசன் கூற வாயிற்காவலன் அவளை அழைத்துச் சென்று உள்ளே வர விட்டான். மன்னவனைக் கண்டாள்; அவன் இவள் கண் ணfரைக் கண்டு கருத்து அறிய விழைந்தான். “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள்.

“ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”.

“புகார் நகரில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் ஆகிய கோவலன் வாழ்க்கையைத் தேடி ஊழ்வினை துரப்ப நின் நகர் புகுந்தான். என் காற்சிலபைக் காசாக்க வந்தவனை மாசு ஆக்கி உயிர் பறித்தாய்; கொலைக்களப்பட்டான். அக் கோவலன் மனைவி நான்; கண்ணகி என்பது என் பெயர்” என்று கூறினாள்.

“கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று; அரசனது கடமை” என்று அறிவித்தான் அரசன்.

“நற்றிறம் படராக்கொற்கை வேந்தே! என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் கொண்டது” என்று எடுத்துக் கூறி னாள்; சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக வழக்கை அவள் எடுத்துப் பேசினாள்.

“எம் சிலம்பு முத்துப்பரல்கள் கொண்டது” என்று கூறியவனாய் அரசன் அதனைக் கொண்டு வந்து முன் வைக்கச் சொன்னான்.

கண்ணகி முன் சிலம்பினை வைக்க அதனை அவள் உடைக்க அதிலிருந்து பரல் ஒன்று தெறிக்க அது மன்னன் வாய் இதழில் பட்டது; மணி கண்டான்; அவ்வளவுதான், வாய்ச் சொற்கள் அடங்கி விட்டன. மனம் தளர்ந்தான்; அவன் செங்கோன்மை சீர்அழிந்தது; அவன் வெண் கொற்றக் குடை சாய்ந்தது.

“பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்; என்னால் இம்மரபு மாசுபட்டது; கெடுக என் ஆயுள்” என்று கூறித் தன் உயிரை விட்டான். அவன் இன்றித் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்து அரசி நடுங்கியவளாய் அவன் இணையடி தொழுது வீழ்ந்தனள், அவளும் அவனோடு உயிர்விட்டாள்.

கண்ணகி கடுஞ்சினம்

“தீமை செய்தவரை அறக்கடவுள் வாட்டும் என்பது இப்பொழுது உண்மை யாயிற்று” என்று கூறியவளாய்க் கண்ணகி, “வடுவினைச் செய்தான் மன்னவன்; அவன் தேவி நீ கடுவினை உடைய யான் இனிச் செய்வதைக் காண்பாயாக” என்று கூறிய வண்ணம் வெளியேறினாள்.

“கண்ணகியின் கண்ணிரும், சிலம்போடு வந்த தோற்றமும், விரித்த கூந்ததும், உயிர்ப்பு அற்ற தோற்றமும் பாண்டியன் உயிரைச் செகுத்தன. கூடல் நகரத்து அரசன் இப்பொழுது வெறும் கூடாயினான்” என்று உலகம் பேசியது.

புழுதிபட்ட மேனியும், அழுத கண்ணிரும், விழுந்த கருங்கூந்தலும், ஏந்திய தனிச் சிலம்பும் கண்ட அளவில் அரசன் தன் வழக்கில் தோற்றான். அவள் சொல்லைக் கேட்ட அளவில் உயிரையும் தோற்றான். இரண்டு தோல்விகள் அடுக்கடுக்காக அவனை அடைந்தன.

21. கண்ணகியின் சூள் உரைகள்

(வஞ்சின மாலை)

கண்ணகி சூளுரை

விழுந்து கிடந்த அரசமாதேவியை நோக்கி எழுச்சி பொங்கக் கண்ணகி சூள்உரைகள் கூறத் தொடங்கினாள். “கோவேந்தன் தேவியே! கேள். தீயவினை என்னை ஆட்டி வைக்கின்றது; எதுவும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்; முற்பகல் செய்யின் பிற்பகல் அதற்கு விளைவு உண்டு; இது உறுதி”.

சோழ நாட்டுப் பெருமை

“கற்புடைப் பெண்கள் பிறந்த காவிரிப் பூம் பட்டினத்தில் நான் பிறந்தேன்; அவர்கள் அற்புதச் செயல்களை அறிவிப்பேன்; கேட்பாயாக! வன்னி மரத்தையும், கோயில் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்து மணம் செய்து கொண்டாள் ஒருத்தி; அவளுக்கு மறுப்பு வந்த போது அவள் அதைப் பொறுக்காமல் அவற்றைச்சான்று கூற அழைக்க அவையோர் முன் அவை வந்து நின்றன. அற்புதம் விளைவித்தாள் இந்தப் பொற்பு நிறைந்த குழலாள்”.

“காவிரிக் கரையில் மணல் பாவை ஒன்று அமைத்து வைத்து, இவன் உன் கணவன் ஆவான் என்று தோழி யர்கள் கூற அச்சிறுமி அப்பாவையைக் காவிரி அலைகள் வந்து அடித்துச் செல்லாமல் அணை போட்டாள்; அதனைத் காத்தாள். அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை; அவள் கற்பின் திண்மை அது”.

“கரிகாலன் மகள் ஆதிமந்தி வஞ்சி நாட்டு வாலிபன் ஆட்டன் அத்தியைக் காதலித்தாள்; அவனைக் காவிரி அலை அடித்துக் கொண்டு கடலுக்குச் செல்ல வெள்ளத் தோடு இவளும் கரைஒரம் ஒடிச் சென்று கடலை விளித்து என் கணவனைக் காட்டாயோ என்று கதற அதன் அலைகள் அவனைக் கொண்டு வந்து முன் நிறுத்தின. இது தமிழகக் காதல் கதை, அதை ஒதிப் பழகியது நாங்கள்”.

“திரைகடந்து பொருள் தேடச் சென்ற கணவன் வரும் வரை கரையில் கல்லாக நின்றாள் நல்லாள் ஒருத்தி; அவன் கரை வந்து சேர அவள் பழைய கல்லுருவம் கரைந்து தன் நல்லுருவம் பெற்றாள். அசையாத மனநிலை; அவள் எங்களுக்குத் திசைகாட்டியாகத் திகழ்கிறாள்.”

“மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழ ஆற் றாளாகித் தன் குழந்தையையும் தள்ளி இரண்டு குழந்தை களையும் அக்கிணற்றில் குதித்துக் கரை சேர்த்தாள் ஒரு வீரமகள். அவள் ஆற்றல் எங்களால் போற்றத் தக்கதாக  உள்ளது; தீரச் செயலுக்கு அவள் பெயர் எடுத்த வீர மங்கையாவாள்”.

“வேற்று ஆள் ஒருவன் ஒருத்தியின் பேரழகைக் கண்டு இடம் பெயராமல் நின்றான். அவள் தன்முகத்தைக் குரங்கு முகமாகுக எனக் கூறி ஆடவர் நெஞ்சில் இடம் பெறுவதை அறவே தவிர்த்தாள். தன் கணவன் வந்ததும் தன் திரிந்தமுகத்தை மாற்றிச் சிரித்த முகத்தள் ஆயினாள். பழைய நிலையில் தன்னை அவள் மாற்றிக்கொண்டு சீர் பெற்றாள். அவள் கீர்த்தி இன்றும் பேசப்படுகிறது.”

“பழங்கதை இது, வண்டல் அயர்ந்து விளையாடிய சிறுமியர்கள் அவர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார் கள் ஒருத்தி சொன்னாள்,” எனக்கு ஒரு மகள் பிறந்து உனக்கும் ஒரு மகன் பிறந்து இருவரும் பெரியவர்கள் ஆவார் எனின் அவனுக்கு என் மகள் வாழ்க்கைப்படுவாள்” என்று சொல்லி விட்டாள். காலம் சென்றது; தன் மகள் மணப்பருவம் அடைந்தாள். அவளைத் தான் கூறியபடி தன் தோழியின் மகனுக்குத் தரவேண்டும் ஏற்றத் தாழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டன. இதை எப்படித் தன் கணவனிடம் கூறுவது? தயங்கித் தயங்கி இதனைத் தன் கணவ்னிடம் கூறினாள். அதைக் கேட்டாள் அந்த மகள்: உடனே கூறை உடுத்து மணப்பெண்கோலம் ஏற்று அந்த வீட்டு மகன் முன் மணப்பெண்ணாக நின்றாள். அவன்தான் தன் கணவன் என்று உறுதியாக நின்றாள். ஒருமுறை ஒருவனைக் கணவனாக வரித்தது என்றால் அதனை மாற்றாது உறுதியாக அவள் நடந்து கொண்டாள்; இந்தக் கதை எம் நகரத்தில் காலம் காலமாகப் பேசப்படுகிறது”.

இவ் எழுவர்தம் கதைகளையும் எழில் உற எடுத்துக் கூறி இத்தகைய கற்புடைய பெண்கள் பிறந்த நகரில் தான் பிறந்ததாகவும், தானும் அவர்கள் வழிவந்த கற்புடைய மாது என்றும் கூறினாள்.

கண்ணகி அலறல்

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள்.

நகருக்குள் வந்தாள். “நான்மாடக்கூடல் மகளிர்களே! வானில் வாழும் தேவர்களே! தவசிகளே! கேளுங்கள். யான் போற்றும் காதலனுக்குக் கேடு சூழ்ந்த மன்னனையும், அந் நகரையும் சீறினேன்; யான் குற்றம் செய்யவில்லை; என் செயல் பழுது ஆகாது” என்று கூறினாள். தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து தன் முலையை வட்டித்து எறிந்தாள்.

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது.

பற்றிய நெருப்பு அந்த நகரை அழித்தது; பாண்டியன், அவன் தன் உரிமை மகளிர், அவன் மாளிகை, வில்லேந்திய காவல் படைவீரர்கள், யானைகள் அனைத் தும் வெந்து ஒழிந்தன.

கற்பு இந்த அழிவினைச் செய்தது; காவல் தெய்வங் கள் அந்நகரை விட்டு வெளியேறிச் சென்றன: கற்பின் பொற்பு இவ்அற்புதத்தை விளைவித்தது.

22. தீக்கிரையான மதுரை

(அழற்படு காதை)

நகரத்து அழிவு

ஏவல் இட்ட தெய்வமாகக் கண்ணகி விளங்கினாள். அவள் ஏவலைக் கேட்டு எரி நெருப்பு மதுரையைத் தீய்த்தது. காவல் தெய்வங்கள் நகர்க் கதவுகளை அடைத்து ஊர்மக்கள் வெளியேறாமல் அடைத்து வைத்து விட்டு அவர்களைக் காவாமல் அவை வெளியேறி விட்டன.

பாண்டியன் தனக்கு ஏற்பட்ட பழியைத் தன் உயிர் கொடுத்து மாற்றினான்: வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்; அவன் மனைவியும் அதே அரசு கட்டிலில் உடன்கட்டை ஏறினாள். பெண்ணொருத்திக்கு இழைத்த கொடுமை அதனால் ஏற்பட்ட பழியை அவன் உயிர் கொடுத்துத் தீர்த்தான். நில மடந்தைக்கு இச் செய்தியை அறிவித்தான்.

அரசுகட்டிலில் இவ்விருவரும் துஞ்சியது அரசு அதிகாரிகள் அறிந்திலர். ஆசான். பெருங்கணி, அறக்களத்து அந்தணர், காதிப் பட்டம் பெற்ற உயர் அதிகாரிகள், அரசியல் செய்திகளை எழுதும் கணக்கர்கள், மற்றும் அரசு அதிகாரிகள், அந்தப்புர மகளிர் அனைவரும் ஒவியம் போல் உரை அவிந்து கிடந்தனர்.

குதிரை வீரர், யானைப்பாகர், தேர் ஊர்வோர், வாள் மறவர்கள் இவர்களும் செயலற்று நின்றனர். அவர்களும் நெருப்பைக் கண்டு அஞ்சி அகன்றனர்.

இந்த நகரைக் காத்துவந்த பூதங்கள் நகரைவிட்டு நீங்கின் அந்தண பூதமாகிய ஆதிப்பூதம், அரச பூதம், வணிகப்பூதம், வேளாண் பூதம் இவை நான்கும் இனி அங்கு இருந்து பயனில்லை என்பதால் நீங்கிவிட்டன. கண்ணகியின் கடுஞ்சூள் இது. அதனைத் தடுக்க இயலாது. என்பதை அவை உணர்ந்தன. சந்திக்கு ஒரு பூதம் என அந் நகரைக் காத்து வந்தன. அவை நீதிக்கு அடிபணிந்து நாட்டை விட்டு நீங்கின.

அந் நகரத்து வீதிகள் அனைத்தும் அழிந்தன. கூலமறுகு, கொடித்தேர்வீதி, சாதிகளின் பெயரால் பாகு படுத்தப் பட்ட விதிகள் இவை காண்டீபன் வில்லுக்கு எரிந்த காண்டவ வனம் போல் அழிந்தன. காண்டவ தகனம் என இம் மதுரை எரிந்து சாம்ப்லாயிற்று, நல்லோர் மட்டும் விதிவிலக்கு ஆயினர். அறவோரை அழிக்காமல் மறவோரை மட்டும் மாய்த்தது.

கன்றுகளும், பசுக்களும், ஆயர்தம் தெருக்களை அடைந்தன. யானைகளும், குதிரைகளும் நகரின் மதிலுக்குப் புறமாகச் சென்று உயிர் தப்பின. மகளிர் காமக் களியாட்டம் செய்வதை விடுத்து உயிருக்குப் பாதுகாப்புத் தேடினர். தாயர்கள் தம் குழந்தைகளைத் தட்டி எழுப்பி முதிய பெண்டிருடன் தப்பி ஒதுங்கினர். அவர்களை நெருப்புத் தீண்டவில்லை.

பாராட்டுரை

அறம் வழுவாத கற்புடைய மாதர் அனலைக் கண்டு

கலங்கவில்லை. “கண்ணகி தீ மூட்டியது தவறு அல்ல” என்று பேசினர்; அவள் செய்கையை வாழ்த்தினர்.

ஆடு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகள் நின்று விட்டன; அவர்கள், “வந்தவள் யார் ? எந் நாட்டவள் ? அரசனை எதிர்த்து வென்று தீ மூட்டினாள்; அவள் வியப்புக்கு உரியள்” என்று அவர்கள் நயப்புடன் உரை நிகழ்த்தினர். ஊரில் விழாக்கள் நின்றன; வேத முழக்கம் நின்றது; செந் தீ வேட்டலும், தேவபாடலும், மகளிர் மங்கல விளக்கு ஏற்றிவைப்பதும், மாலை மகிழ்வும், முரசு அறைவும் நின்று விட்டன.

அவல நிலை

கண்ணகி என்ன ஆயினாள்? அவள் நிலை யாது? காதலனை இழந்த துன்பம் அதற்குக் கரையே காண இயலவில்லை. கொல்லன் துருத்திபோல் வெய்து உயிர்த்தாள். மறுகுகளில் மறுகினாள்; கவலை கொண்டாள்; நடப்பாள்; திடீர் என நிற்பாள்; மயங்குவாள்; தெளிவு பெற்றவள் போல் நடப்பாள் மிக்க துன்பம் உற்ற வீரபத்தினியாக நின்றாள்.

அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப் பெரும் தெய்வங்கள் என அவளை மதித்து மதுராபதி தெய்வம் போற்றியது. நெருப்புக்கு அஞ்சி அவளை அடைக்கலமாகப் பின் வந்து நின்றது.

23. விதிப்பயன் எனல்

(கட்டுரை காதை)

மதுரைத் தெய்வம்

மதுரை நகர் ஒரு மங்கை வடிவம் கொண்டு கண்ணகியின் பின்புறம் வந்து நின்றது. சடைமுடி தரித்திருந்தாள். சிவனைப்போல் பிறை தரித்திருந்தாள். குவளை மலர் போன்ற கண்கள்; ஒளிபடைத்த முகத்தினள், கடைவாயில் பல் வளைந்து வெளிப்பட்டுத் தோன்றியது; பவள வாயள்; முத்துப் போன்ற பற்கள்; இடப்பக்கம் கருப்பு: வலப்புறம் சிவப்புப் பொன்னிறம் பெற்றிருந்தாள். உமைபாகன் வடிவம் அவளுடையது. இடக்கையில் தாமரைமலர் வலக்கையில் கொடுவாள்; வலக்காலில் வீரக்கழல், இடக்காலில் கால்சிலம்பு, பாண்டியனின் குல முதல்வி அவள். அவள் வருத்தத்துடன் கண்ணகி முன் நிற்க அஞ்சிப் பின் தொடர்ந்தாள்.

“நங்கையே! என் குறை கேட்பாயாக!” என்று அம் மங்கை விளித்துப் பேசினாள். வாட்டமுற்ற நங்கை கண்ணகி வலப்பக்கமாகத் திரும்பிக் “கோட்டமுற்றுக் கேட்ட நீ யார்? ஏன் என்பின் வருகிறாய்? என் துயரம் முழுதும் நீ அறிவாயோ!” என்று கேட்டாள்.

“துயரம் அறிந்தே உன்னைத் தொடர்கிறேன்; மதுரைப்பெண் யான், கட்டுரை கூற வந்திருக்கிறேன். உன் கணவனுக்காக இரங்குகின்றேன் என் அரசனுக்கு வந்தது தீ விதி; அது போல் உன் கணவனுக்கும் ஒரு தீ வினை வந்தது. இருவருக்கும் கேடுகள் நேர்ந்தன; அவர்கள் செய்த தீ வினைகளின் விளைவே இவை யாகும்.”

பொற்கைப் பாண்டியன்

“மறை ஒலி கேட்குமே யன்றி மணிநா அறை ஒலி இம் மதுரை நகரில் இதுவரை கேட்டது இல்லை. அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் தூற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை. இளமை காரணமாகக் கட்டுக் கடங்காது மனத்தை அலையவிட்டவர் அல்லர் பாண்டியர்கள்; பாண்டி மன்னர்கள் தொடர்ந்து நன்மைகளைச் செய்து வந்தவர்கள்; ஒழுக்க உயர்வு மிக்க குடி அது”.

“பாண்டியர்கள் நெறி தவறாதவர்கள்; மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்; அத்தகைய மரபு அது”,

“அவர்களுள் ஒருவன் தவறு செய்யச் சூழ்நிலை இடம் தந்தது. காவல் காக்கும் வேந்தன் ஆவல் காரணமாகக் கீரந்தை என்பானின் மனைவி உள்ளே தனித்து இருக்க அவ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். நள்ளிரவு; காவல் செய்வது அரசன் கடமை'தவறி விட்டான்.”

“பார்ப்பணி அவள் உள் இருந்து, மன்னவன் காவல் காக்கும்; கவலை கொள்ளாதே என்று கணவன் சொல்லிப் போன சொற்களை அவன் செவி சுடும் வண்ணம் வாய்விட்டுக் கூவிக் குரல் எழுப்பினாள்."

“தான் செய்த தவறு உணர்ந்து மன்னன் தன் அவையில் தானே தனக்குத் தீர்ப்பு வழங்கிக் கொண்டான். அவையில் தன் கையை வெட்டிக் குறைத்துக் கொண்டான். பொற்கை ஒன்றைப் பொய்க்கையாக வைத்துக் கொண் டான். ஒரு காலத்தில் இந்திரன் மீது படைஎடுத்து அவன் முடியைக் களைந்த மாமன்னன் அவன் வெற்றி தேடிய அந்தக் கை இப்பொழுது வெறுமை நிலை உற்றது. தவறு செய்தால் பாண்டியர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்கள்; இது மரபு வழி நிகழ்ச்சி”

பாண்டியன் நெடுஞ்செழியன்

“அத்தகைய மரபில் வந்தவன் பாண்டியன் நெடுஞ் செழியன் அவனும் ஒரு முறை அவசரப்பட்டுத் தவறான தீர்ப்பை வழங்கிவிட்டான். அது தவறு என்று தெரிந்ததும் தன்னைத் திருத்திக் கொண்டான்; தவறு செய்தது அவன் எதிர்பாராதது; உடனே அதை உணர்ந்து திருத்திக் கொன்டான்."

“அதன் வரலாறு இது : புகார் நகரத்தில் பராசரன் என்னும் கற்ற அந்தணன் சேர நாட்டுக்குச் சென்று சேர அரசனைப் பாடிப் பரிசல்கள் பெற்று வந்தான்; வழியில் பாண்டி நாட்டில் மறையவர் வாழும் ஊர் தங்கால் என்பது; அவ்வூரில் அரச மரத்தை உடைய மன்றத்தில் தங்கினான். அங்கே அவன் தன் பொதிகளை எடுத்துவைத்து விட்டுச் சற்று இளைப்பாறினான்.”

“அவ்வூர்ச் சிறுவர்கள் அவனை வந்து சூழ்ந்து கொண்டனர். அச்சிறுவர்களை நோக்கித் தன்னோடு சேர்ந்து வேதம் ஒதினால் அவர்களுக்குப் பரிசு தருவதாகக் கூறினான். அவர்களுள் வார்த்திகன் என்பான் மகன் தக்கிணன் என்பான் மிகத் தெளிவாக அம் மந்திரங்களை உச்சரித்துக் கூறினான். அவனைப் பாராட்டிப் பொன் நாண் ஒன்றினையும், அணிகலன்கள் சிலவும், கைவளையும், தோடும், இவற்றோடு பண்டப் பொதிகை ஒன்றும் அளித்துப் பாராட்டித் தன் ஊர் திரும்பினான்.”

“இக் குடும்பத்து மாந்தர் வளமுடன் அணிகள் பூண்டு நடமாடுவதைக் கண்ட அரசின் காவலர் இவன் எங்கிருந்தோ களவாடிவிட்டான் என்று வார்த்திகனைச் சிறையிட்டனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பாள் அவ்வூர்க் கொற்றவை கோயில் முன் நின்று முறையிட்டாள்; அக் கோயில் கதவு மூடிக் கொண்டது. இதனை வேந்தன் கேட்டுத் தன் ஆட்சியில் எங்கோ கேடு நிகழ்ந்து விட்டது என்று யூகித்து அறிந்து விசாரித்தான் செய்தி அறிந்து விசாரித்து அவ் அந்தணனை விடுதலை செய்தான்.”

“தான் செய்த தவறு அதற்கு மன்னிப்புக் கேட்டு அவன் மன மகிழத் தங்கால் என்னும் ஊரில் கழனி களையும், வயலூரில் உள்ள வயல்களையும் இறையிலி நிலங்களாகத் தானம் செய்தான். மூடியிருந்த கோயில் கதவுகள் பழையபடி திறந்து கொண்டன. அரசன் பெரு மகிழ்வு கொண்டான்.”

“நாட்டில் பெருவிழா எடுத்தான்; சிறைக்கதவுகளைத் திறந்து விட்டான். இறைப்பொருள் தராதவரை ஒறுக்காமல். அவர்களுக்கு விடுதலை தந்தான். புதிய சட்டம் ஒன்று தீட்டி அதனை வெளிப்படுத்தினான். பிறர் தந்த பொருள் அது படுபொருள் எனப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட வர்க்கே அது உரியது என்றான். மற்றும் மண்ணில் கிடைப்பது எடு பொருள் எனப்பட்டது. புதையல் எடுப்போருக்கு அது உரியது ஆகும் என்றான். இவ்வறு படுபொருளும் எடுபொருளும் அரசுக்கு உரிமை இல்லை என்று அறிவித்துவிட்டான். கொள்வார்க்கே உரியது என்று அறிவித்தான். செய்த தவற்றைத் திருத்திக் கொண்டான். இவ்வாறு தன்னைத் திருத்திக் கொண்டது வேறு யாரும் இல்லை; இதே பாண்டியன் நெடுஞ்செழியன் தான்; இப் பொழுது திருத்த முடியாத தவற்றினைச் செய்து விட்டான். விதி ஆற்றல் மிக்கது.”

“அதற்குக் காரணம் இவ்வாறு நடக்க வேண்டும் என்று விதி வகுக்கப் பட்டுவிட்டது. ஆடி மாதம் நிறை யிருள் நாளில் எட்டாம் நாளில் வெள்ளிக்கிழமை அன்று இந்நகர் அழிய வேண்டும் என்று விதி ஏற்பட்டு விட்டது: அதையாரும் மாற்றமுடியாது நிமித்திகர்கள் முன் கூட்டி உரைத்து இருக்கின்றனர்”

“அதன்படிதான் இவை நடைபெறுகின்றன. மதுரை மாநகர் மட்டுமன்று; அதன் அரசும் கேடு உறும் என்று ஏடுகள் கூறி விட்டன. இது நகர் அழிவுக்கும் அதன் அரசு வீழ்ச்சிக்கும் காரணம் ஆகும்” என்று அத் தெய்வம் விளக்கம் தந்தது.

கோவலன் கதை

“மற்றும் கோவலன் ஏன் காவலனால் வெட்டுண்டான்? அதற்கும் ஒரு காரணம் உள்ளது. சோலைகள் மிக்கது கலிங்க நாடு; அதைச் சார்ந்தவை சிங்கபுரம், கபிலபுரம் என்னும் நகர்கள் ஆகும். சிங்கபுரத்தை வசுவும், மற்றையதைக் குமரனும் ஆண்டு வந்தனர். இருவரும் ஒரு குலத்து மன்னர்; தாயபாகம் குறித்து முரண்பாடு ஏற்பட அது போராகக் கிளைத்தது: இருநாட்டவரும் பிரிந்து இயங்கினர்; போர் முனையாகிய இடைவெளிப் பரப்பு ஆறு காவதம் கொண்டது. கபிலபுரத்து ஊர்வாசி சங்கமன் என்பவன் பிழைப்பு நடத்தச் சிங்கபுரம் சென்று சிறுகடை ஒன்று வைத்தான். மாறுவேடம் ஆண்டு தன்னை மறைத்துக்கொண்டு அணிகலன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அவன் காதலியும் உடன் சென்றிருந்தாள்.

“சிங்கபுரத்து அரசு ஆட்சியைச் சார்ந்த பணியாளனாகக் கோவலன் பழைய பிறப்பில் அரச தொழில் செய்து கொண்டிருந்தான். 'ஒற்றன் இவன்' என்று சங்கமனைப் பற்றிக் கொணர்ந்து தண்டனைக்கு உள்ளாக்கினன் அதனால் அவன் கொலைக் களப்பட்டான். அதற்குக் காரணம் மதப்பற்றுதான். பரதன் என்ற பெயரோடு வாழ்ந்த கோவலன் கொல்லா விரதம் உடையவன். சங்கமன் அதில் விலக்குப் பெற்றவன் என்பதால் அவன்பால் வெறுப்புக் கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்தான். மதப்பற்று மனித நேயத்தைக் குலைத்தது; கொலைக்குக் காரணம் ஆகியது”

“கொலைக்களப்பட்ட சங்கமன் மனைவி நீலி என்பாள் அழுது துடித்தாள் அரசன் முன்சென்று முறையிட்டாள். வணிகர்பால் தன் வழக்கை உரைத்தாள். ஊரவரை நோக்கி உரைசெய்தாள். சேரிகளில் சென்று தன் குறையைக் கூறினாள் அலறினாள் மன்றுகளிலும் தெருக் களிலும் சென்று கன்று எனக் கதறினாள். நாள்கள் பதினான்கு இவ்வாறு அலைந்து திரிந்தாள்; மனம் குலைந்து கணவனை அடையும் நாள் இது என இறுதியில் மலை ஒன்று ஏறி உயிர் விட்டாள். வானவர் நாட்டைத் தன் கணவனோடு சென்று அடைந்தாள்.”

“யாம் அடைந்த இந்தத் துயரததை இதற்குக் காரணமாக இருந்தோர் அடைவாராக” என்று சாபமிட்டு மறைந்தாள். அந்தச் சாபம்தான் இப்பொழுது வந்து சேர்ந்தது. அதன் விளைவுதான் இவ் இழப்புகள்” என்று கட்டுரை உரைத்தது மதுராபதி.

“முற்பிறப்பில் செய்த தீ வினைகள் வந்து உருத்தும் போது தவறு செய்தவர்கள் தப்ப முடியாது; அனுப வித்துத்தான் தீர வேண்டும். இதைப்போல் நீயும் நாள்கள் பதினான்கு கடந்தபின் கோவலனை வானோர் வடிவில் காண முடியும். மனித வடிவில் காண முடியாது” என்று மதுரை மாதெய்வம் மாபெரும் பத்தினியின் பழம்பிறப்புச் செய்திகளை எடுத்துக் கூறி அவளைத் தணிவித்தது. மதுரை நகர் எரியினின்று தப்பியது.

இறுதி அவலம்

கருத்துறக் கணவனைக் கண்டால் அல்லது நிற்பது இல்லை என்று கொற்றவை கோயில் வாயில் முன் தன் கைவளையல்களை உடைத்து எறிந்தாள். “கிழக்கில் கணவனோடு இந்நகருக்கு வந்தேன், மேற்குவழியாகத் தனியே வெளியேறுகின்றேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மதுரை விட்டு வெளியேறினாள். இரண்டு நிலைகளை ஒருங்குவைத்து ஒப்பிட்டு அவல நிலையை எடுத்துக் கூறினாள்.

அதன் பின் அவள் எங்கும் தாழ்த்தவில்லை. இரவும் பகலும் தொடர்ந்து நடந்தாள். பள்ளம் மேடு இதனை அவள் கருதவில்லை. அசுரரை அழித்த அறுமுகவேள் குடிகொண்டிருந்த திருச்செங்கோடு எனப்படும் நெடுவேள் குன்றத்தை அடைந்தாள். பூக்கள் மிக்க வேங்கை மர நிழலில் நாள்கள் பதினான்கு சென்றபின் கணவனைக் கூடினாள். வானவர் வந்து வழிக்கொண்டனர்; மலர்மாரி பொழிந்து அவளை வாழ்த்தினர். கோவலன் தன்னோடு வான ஊர்தி ஏறி உயர் வாழ்வினை அடைந்தாள்.

“அவள் கணவனைத் தொழுதாள்; தெய்வத்தைத் தொழாதாள். அத்தகைய கற்பினை உடைய பொற் பினாளைத் தெய்வம் வழிபடுகிறது” என்பதை இவள் வாழ்வு எடுத்துக் காட்டியது.

3. வஞ்சிக் காண்டம்

24. குன்றவர் குரவையாடுதல்

(குன்றக் குரவை)

அருவி ஆடுதல்

குருவி ஒட்டினர்; கிளிகளை விரட்டினர்; மலைக்குச் சென்று தங்கினர் அருவி ஆடினர் சுனை குடைந்தனர். அலை உற்று வந்தவர்கள் அவர்கள் வேங்கை மரத்து நறு நிழலில் கண்ணகியைக் கண்டனர். அவர்களுக்குக் கண்ணகி வள்ளி யாகிய தெய்வம் போலக் காட்சி அளித்தாள். மனம் நடுங்க முலையிழந்து வந்து நின்றாள். அவளைக் கண்டு “நீவீர் யார்?” என்று கேட்டனர்.

அதைக் கேட்டு அவள் சினக்கவில்லை. “மதுரையையும், அதன் மன்னனையும் தீ வினை வந்து அழித்தது. அந்தச் சுழற்சியில் கணவனை அங்கு இழந்து விட்ட தீ வினை யாட்டி யான்” என்று கூறினாள். அவர்கள் அவளைக் கரங்கூப்பி வணங்கினர். அவ்வாறு அவள் நின்ற நிலையில் வானவர் மலர் மழை பொழிந்தவராய் அவர்கள் கண்டு நிற்கக் கண்ணகியை அழைத்துக் கொண்டு சென்றனர். கோவலனும் உடன் வந்திருந்தான். அவனோடு இவளும் சென்றாள். இவளைப் போல் மாபெருந் தெய்வம் நம் குலத்தில் இல்லை. இந்த மாநிலத்தில் இல்லை” என்று அறிவித்தனர்.

“சிறுகுடியிரே! சிறுகுடியிரே! இவளை வழிபடும் தெய்வமாகக் கொள்ளுங்கள். இவள் வேங்கை நறுநிழலில் நமக்குத் தெய்வமாகக் காட்சி அளித்து உள்ளாள். அதனால் இவளுக்கு வழிபாடு இயற்றுங்கள்; அனைவரும் ஒன்று கூடுவோம்” என்றனர்.

“தொண்டகப் பறையைத் தொடுங்கள்; சிறுபறை அறையுங்கள்; கொம்புகளை முழக்குங்கள்: மணி ஒலி ஒலிக்கச் செய்யுங்கள்; குறிஞ்சிப்பண் பாடுங்கள்; நறும் புகை காட்டுங்கள்; பூ இட்டு வழிபாடு செய்யுங்கள்; அவள் புகழைப் பாடுங்கள்; பரவுதலைச் செய்யுங்கள்; பல்வகை மலர்களைத் தூவுங்கள் ஒரு முலை இழந்த நங்கை இவள் நம் பெருமலை தொடர்ந்து வளம் சுரக்க அருள் செய்வாள்” என்று கூறினர்.

அனைவரையும் ஒன்று திரட்டி, “மலை அருவி ஆடுவோம். வாருங்கள். இது இங்கு வந்த புதுப்புனல் ஆகும்; இது பொன் துகளை வாரிக் கொண்டு வருகிறது: இது நம் தலைவன் மலையாகும்: அவனோடு நாம் புலவி கொள்வதற்குக் காரணமே இல்லை. எனினும் நம்மைத் தவிர்த்து மற்றவர்கள் இதில் வந்து நீராடினால் நம் நெஞ்சு நோகும், வேதனைப்படும்; அதைப் பொறுக்க மாட்டோம்” என்றனர்.

தெய்வத் திருப்பாடல்

நீராடி முடித்த பின் தோழியர் தம் தலைவியை நோக்கி “நீராடினோம் நாம்; இனி நாம் செய்யத் தக்கது யாது?” என்று வினவினர்.

“கடலில் சூரபதுமனைக் கொன்ற வேலவன் ஆகிய முருகனைப் பாடுவோம்; அவனை வைத்துக் குரவைக் கூத்து ஆடி அவனைச் சிறப்பித்துப் பாடுவோம்” என்றனர். முருகனைச் சிறப்பித்துப் பாடினர்.

“ஆறுமுகத்தினன், பன்னிரு கையினன் முருகவேள்: இவன் வேல் ஏந்தி நின்றான்; மயில் மீது ஏறிச் சென்று அயில் வேல் தாங்கிக் கடலில் சூரபதுமனைக் கொன்றான்; அவுணர்களை அழித்தான்; அவன் தன் வேலைக் கொண்டு கிரவுஞ்ச மலையைப் பிளந்தான்” எனப்பாடினர். அடுத்து அகப் பொருள் துறை அமைய அவர்கள் பாடத் தொடங்கினர்.

“தலைவன் தந்த நோய் இதை அறியாத தாய் பூசாரியைக் கொண்டு வெறியாட்டு நடத்துகிறாள். இது நகைக்கத் தக்கது ஆகும். கோயில் பூசை செய்யும் பூசாரி வருவானாம். அவன் வழிபாடு செய்ய முருகன் வரு வானாம். அவன் நம் நோயைத் தீர்ப்பானாம். இது மடமையன்றோ! அப்படி வந்தால் அந்த முருகன் ஒன்றும் அறியாதவனே ஆவான். எல்லாம் விளையாட்டாக முடியும். சிரிப்புத்தான் வருகிறது சிந்தித்துப் பார்த்தால்” என்றனர்.

“வேலைத் தாங்கிய வேலவன் ஆகிய முருகன் வந்தால் எம் குறமகள் தான் விரும்பிய காதலனை மணக்க அருள் செய்க என்று வேண்டுவோம். அவள் விரும்பும் தலைவனையே அவள் மணக்க அருள் செய்க! மாறுபட்டு அயலவனைக் கொண்டு வந்து நிறுத்துவர்; அதனைத் தவிர்க்க! என்றும் வேண்டுவோம்” என்றனர்.

“அவர்கள் பாடலைக் கேட்டு அவ்வழியே மலை நாடனாகிய தலைவன் வந்தான் எனவும் அவனைச் சந்தித்து அவன் திருவடியைத் தொழுது வணங்கித் தலைவி இவ்வாறு கூறத் தொடங்கினாள்” எனவும் பாடினர்.

“கடம்பைப் பூச்சூடிக் கொண்டு கையில் வேல் ஏந்தி இவலுரில் நீ வந்தாலும் உன்னை இவ்வூரார் முருகன் என்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். உனக்கு ஆறுமுகங்கள் இல்லை; ஏறிவர மயில் இல்லை; பக்கத்திலே வள்ளி இல்லை; தோள்கள் பன்னிரண்டு இல்லை; அதனால் உன்னை முருகன் என்று கருதமாட்டார்கள். நீ தலைவி யைத் தேடி வந்த தலைவன் என்று எளிதில் அறிந்து கொள்வர். அதனால் ஊரில் அலர்தான் எழும்; மலர்த்தார் மார்ப! விரைவில் மணம் செய்துகொள்க” என்று கூறினேன் என்றாள் தலைவி. “அவனும் விரைவில் மணம் செய்து கொள்ள வரலாம்; அந்த நம்பிக்கை உள்ளது” என்று மற்றவரும் சேர்ந்து பாடினர்.

“கண்ணகி தெய்வத்தைப் பாடினால் அவள் காட்சி தருவாள். வந்தால் மண அணி வாய்க்க என்று அத் தெய்வத்தை வேண்டுவோம்” என்று அப்பெண்கள் பாடினர்.

“வானக வாழ்க்கையைப் பெற்றுவிட்ட அத்தெய்வம் கானகத்தில் நறுவேங்கை நிழலில் நின்று காட்சி தந்தாள். அத்தெய்வம் உறுதியாக வந்து அருள் செய்வாள். தலைவனைத் தலைவி மணம் செய்யும் இனிய காட்சியை இவ்வூர் காணப் போகிறது. இது பெருமை மிக்க காட்சி யாகும். இதுவரை முருகனை வழிபட்ட யாம் இனிக் கண்ணகியைத் தெய்வமாக ஏற்போம்; வழிபடுவோம்” என்று கூறிப் பாடினர். குரவைக் கூத்துப் பாடல்களைக் கேட்டு நம் காதலர் வந்தார் எனவும் பாடினர். மற்றும் சேரனின் வெற்றியைப் பாடி அவன் வாழ்க என்று வாழ்த்தினர்.

25. மலைவளம் காணுதல்

(காட்சிக் காதை)

மலைவளம் காணச் செல்லுதல்

சேரன் செங்குட்டுவன் இலவந்திகை என்னும் வெள்ளி மாடத்தில் தன் தம்பி இளங்கோவுடனும் துணைவி வேண்மாளுடனும் இருந்தான். முழவு என அருவிகள் ஒலித்தன. மேகங்கள் சோலைகளைக் கவித்தன. “அருவிகளும் சோலைகளும் உடைய மலை வளத்தைக் காண்போம்” என்று முடிவு செய்தனர்.

வஞ்சி மாநகர் சேரர் ஆண்ட தலைநகர்; அதனை விட்டு நீங்கிச் சென்றான். இந்திரன் தன் பரிவாரத்தோடு செல்வதுபோல் சேரன் யானை மீது ஏறி அவன் தன் ஈற்றமும் ஆயமும் சூழ்ந்துவர அங்குச் சென்றான். திருமால் மார்பில் அணிந்திருந்த மாலைபோல் மலையை அறுத்துச் செல்லும் பேரியாற்றங் கரையின் மணல் மேட்டின் மீது தங்கினான்.

பல்வகை ஒசைகள்

அங்கே குறவர்கள் பாடிய குரவைப் பாடல் ஒசை, குறமகளிர் பாடிய பாடல் ஒசை, முருகனை ஏத்திப் பாடிய வேலன்பாணி, தினை காப்போர் எழுப்பிய ஒசை, தினைப்புனத்தில் ஒருவரை ஒருவர் விளித்து அழைக்கும் ஒசை, தேன் உடைப்பால் எழுப்பிய ஒசை, புலியொடு மோதும் யானைகளின் ஒசை, பரண்மீது ஏறிப் பறவை களை விரட்டுவார் எழுப்பிய ஒசை, குழிகளில் விழுந்த யானைகளைக் கட்டி இழுப்பவர் எழுப்பும் ஒசை, சேரன் படைகள் இயக்கத்தால் ஏற்பட்ட ஒசை எல்லாம் சேர்ந்து பேரொலி செய்தன.

காணிக்கைப் பொருள்கள்

சேர அரசனின் அரண்மனை முற்றத்தில் பிறநாட்டுப் பகை மன்னர் கொண்டு வந்து திறைப் பொருள் குவிப்பர்; அதைப்போல இம்மலைக் குறவர்கள் தம் தலைகளில் சுமந்து வந்த பல்வகைப் பொருள்களையும் கொண்டு வந்து முன்வைத்துக் காணிக்கை யாக்கினர். மலைப் பொருள்கள் அவுை: யானைத் தந்தம், அகில் கட்டை, மான்கவரி, சந்தனக் கட்டை, சிந்தூக்கட்டி, அஞ்சனத்திரள், அரிதாரம், ஏலக்கொடி, மிளகுக் கொடி, கவலைக்கொடி, கிழங்குகள், வெள்ளுள்ளி எனப்படும் காயம், தேங்காய், மா, பலா முதலியன, கரும்பு, பூங்கொத்துகள், கமுகத் தாறு, வாழைத் தாறு, யானை, சிங்கம், புலிக்குட்டிகள், யானைக்குட்டிகள், குரங்குக் குட்டிகள், கரடிக்குட்டிகள், மலையாட்டுக் குட்டி கள், மான்குட்டிகள், கீரிப்பிள்ளைகள், மயில்கள், பூனைக்குட்டிகள், காட்டுக்கோழி, கிளிகள் இவற்றை யெல்லாம் சுமந்து வந்து குவித்தனர். “ஏழ் பிறப்பும் உமக்கு அடிமை செய்வோம்” என்று கூறியவராய்த் தொழுதனர். “நறு வேங்கை மரத்தின் நிழலில் காரிகையாள் ஒருத்தி முலை இழந்தவளாய்த் தனித்துயர் அடைந்து வானவர் வரவேற்கத் தன் கணவனோடு சேர்ந்து வானகம் சேர்ந்தாள். அவள் எந்நாட்டாள்? யார் மகள்? அறிய இயலவில்லை. அவள் இந்நாட்டில் பிறந்த நங்கை என்று கூற இயலாது; புதியவளாக இருக்கின்றாள்” என்று நவின்றனர். மன்னனைப் “பல்லாண்டுகள் வாழ்க” என்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

சாத்தனார் உரை

அரசன் அருகில் இருந்த சாத்தனார் என்னும் தமிழ்ப் புலவர் இவற்றைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்திருந்தார். “அவள் யார்? எந்நாட்டவள்” என்று அரசன் கேட்டதற்கு அவர் விளக்கம் கூறினார்.

“சிலம்பு விற்கச் சென்றவன் கோவலன் என்பான் தீவினை காரணமாக வாழ்வினை இழந்தான்; அவன் மனைவி கண்ணகி அவள் சிலம்பு ஒன்று கையில் ஏந்தி மன்னன் அவைக்களம் புகுந்தாள்; வழக்கில் வென்றாள்; பாண்டியன் சாய்ந்தான்; வீழ்ச்சியுற்ற பாண்டி மாதேவியின் முன் “அரசையும் நகரையும் அழிப்பேன்” என்று சூள் உரைத்து மதுரையைச் சுட்டாள். பாண்டி மாதேவி கணவனோடு தானும் சேர்ந்து உயிர்விட்டாள். அவள் உயிர்விட்டது தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடிச் சென்றது போல இருந்தது. வெற்றி வேந்தன் பாண்டியன் அவன் கொற்றம் இத்தகையது என்று சாற்றுவதற்கு வந்தவள்போல் நின்னாட்டு அகம் இவள் வந்து சேர்ந்தாள். தன் நாட்டுக்கு அவள் சென்றிலள் வாழ்க நின் கொற்றம்” என்று அவர் விளக்கம் தந்தார்.

சேரன் கருத்துரை

தென்னவன் அரசன் அவன்தன் பழி மிக்க வாழ் வினைக் கேட்ட சேர மன்னன், “செம்மை நீங்கிய சொற்கள் எம்மைப் போன்ற அரசர்கள் செவியில் விழுந்து வெம்மை ஊட்டாமல் இருக்கப் பாண்டியன் தன் உயிர்விட்டான் என்று நினைக்கவும் தோன்றுகிறது. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கிவிட்டது,” என்று கூறினான். மற்றும் அரசர்க்கு உள்ள துன்பங்கள் இவை. என்று வரிசைப்படுத்திக் கூறி னான்.

“மழை பொய்த்துவிட்டால் அது மிகப்பெரிய கவலையைத் தருகிறது; அதுபேரச்சத்தை உண்டாக்கு கிறது. நாட்டு மக்கள் தவறு இழைத்தால் அது மன்னனைத் தாக்குகிறது; அவ்வாறு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் எப்பொழுதும் நச்சரிக்கிறது. மக்களைக் காக்கும் அரச குடியில் பிறத்தல் துன்பம்தான் அன்றி மதிக்கத் தக்கது அல்ல; பாராட்டித் தொழத் தக்கதும் அல்ல.” இவ்வாறு சாத்தனார்க்குச் சேரன் தன் கருத்துகளைக் கூறினான்.

பின்பு தன் மனைவியை நோக்கி, “உயிர்விட்டுப் புகழ்பெற்ற ஒருமகள் பாண்டியன் மனைவி ஆவாள்; உயிருடன் இங்கு வந்து வழக்கினை உலகறியச் செய்ய வந்திருக்கிறாள் மற்று ஒரு மகள்; அவள் இந்நாடு அடைந்திருக்கிறாள். இவ்விருவருள் வியக்கும் நலத்தை உடையவர் யார்?” என்று வினவினான்; இருவரில் யார் உயர்ந்தவர் என்று கேட்டு வைத்தான். சேரமாதேவி நாகரிகமாக அதற்கு விடை நல்கினாள்.

“பாண்டிமா தேவிக்கு வானவர் சிறப்புச் செய்வர்; பாவை கண்ணகிக்கு நாம் சிறப்புச் செய்வோம். நம் நாட்டை அடைந்த பத்தினித் தெய்வத்துக்குக் கல் எடுத்துப் பரவுதல் செய்வோம்” என்றாள்.

சேரன் அருகிருந்த நூல்கள் கற்ற புலவர்களை நோக்கினான். அதற்கு அவர்கள், “இமயத்தில் இருந்து கல்லைக் கொணரலாம் அல்லது பொதிகை மலையில் இருந்தும் கொண்டு வரலாம். முன்னதைக் கங்கையில் நீர்ப்படுத்தலாம்; பின்னதைக் காவிரியில் நீர்ப்படுத்தலாம்” என்று அவர் தம் கருத்தினைத் தந்தனர்.

அதற்குச் சேரன் தன் பெருமை தோன்றக் கண்ணகிக்கு எங்கிருந்து கல் எடுப்பது தகுதி வாய்ந்தது என்பதைத் தக்க காரணம் தந்து கூறினான்.

“பொதிகையில் கல் எடுத்துக் காவிரியில் நீர்ப்படுத்தல் போதுமானது தான்; ஆனால் அது எளியவர் செய்வது; வலிமைமிக்கவர், புகழ்மிக்கவர், ஆற்றல் மிக்கவர் அதனை ஏற்று நடத்துவது தக்கது அன்று. வீர மன்னன் செய்யும் விவேகமான செயல் ஆகாது. இமயத்தினின்று கல் கொணர்தலே தக்கது ஆகும். வடநாட்டு வேந்தர் இடக்கு ஏதாவது செய்தால் அவரை ஒடுக்குவது தவிர வேறு வழியே இல்லை; தவம் மிக்க அந்தணர் முன் சடங்கின்படி கல்லைக் கண்ணியமாகத் தரவேண்டும்; மறுத்தால் அவர்களை ஒறுப்பது தவிர வேறு வழியே இல்லை. சரித்திரம் அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்கும்; தமிழ்ப் போர்த்திணைகள் புறத்திணைகள் அவர்கள் அறியட்டும்; காஞ்சித்திணை என்பது நிலையாமையை உணர்த்துவது ஆகும். வாழ்க்கை சிறந்த குறிக்கோள் கொண்டது. அத்தகைய குறிக்கோள் அற்றவர் வாழ்ந்து என்ன பயன்? முதியவர்கள் பலர் மண்ணில் மறைந்துவிட்டனர். அவர்கள் உணர்த்துவது யாது? வாழ்க்கை நிலையற்றது என்பது அறியத்தக்கது ஆகும்; அந் நிலையாமை அறத்தை நூல்கள் காட்டத் தேவை இல்லை. என் வாள் அவர்களுக்குக் காட்டும்; வாழ்க்கை நிலையற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள்.”

“அவர்களை உணர வைப்பது உறுதி; மகளை மறுத்தவன் இமய அரசன் பார்வதி அவளைப் பரமசிவன் வீரம் காட்டி மணந்தான். அவனைப் பணிய வைத்தான்; அது மகட்பால் காஞ்சி என்பர் மற்றும் எம்முன்னவர் இமயம் சென்று விற்கொடியைப் பொறித்த நாள் எதிர்த்த மன்னர் எரி சாம்பல் ஆயினர்; இது வரலாறு கற்பித்த பாடம் ஆகும். காஞ்சித் திணையை அவர்கள் உணர்ந்தனர். ஒழிந்தோர் மற்றவர்க்குக் காட்டிய பொதுக்காஞ்சி, மகட் பால் காஞ்சி, நீள்மொழிக் காஞ்சி ஆகிய இம்மூன்று காஞ்சிகளையும் காண நேரிடும்.

“பகைவர்கள் காஞ்சி காண்பர்; யாம் வஞ்சி சூடுவோம்” என்று சேரன் வஞ்சினம் மொழிந்தான். வஞ்சித் துறைகளுள் வெற்றிச் சிறப்பைக் கூறவது 'நெடுமாராய வஞ்சி'; வெற்றி கொண்ட பிறகு பகைவர் நாட்டைக் கொளுத்தி, அழித்தல் 'வென்றோர் வஞ்சி' எனப்பட்டது. வீரர்க்குச் சோறு தருவது 'பெருஞ்சோற்று வஞ்சி'; பகைவர் நாடு அழிவதற்கு மனம் அழிவது 'கொற்ற வள்ளை'; இவற்றைத் தான் விளைவிப்பதாகக் கூறினான். பனை மாலை அவனுக்கு உரிய சிறப்பு மாலை; “அதனையும், வஞ்சி மாலையும் சூடிக் கொண்டு போர் தொடுப்போம்” என்று வஞ்சி நாட்டு அரசன் சேரன் செங்குட்டுவன் கூறினான்.

வில்லவன் கோதை என்னும் அமைச்சன் சேரனின் பழைய வெற்றிகளை எடுத்து விளம்பி வாழ்த்துக் கூறினான்; “கொங்கர் களத்தில் சோழரும் பாண்டியரும் தோற்றுத் தம் கொடிகளாகிய மீன் கொடியையும், புலிக்கொடியையும் விட்டுச் சென்றனர். மற்றும் வட வாரியருடன் சிற்றரசராகிய கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர் இவர்கள் போர் செய்து தோற்று ஓடினர். கங்கைப் பேரியாற்றில் உன் தாயின் இறுதிச் சாம்பலைக் கலக்க அதனை நீராட்டிய நாளில் எதிர்த்த ஆரிய மன்னர் ஆயிரவரையும் அஞ்ச வைத்தனை!”

“ஆரிய மன்னர் ஆயிரவர் அன்று தோற்று ஒடினர். இப்போர்களைக் கண்ட யாம் அவற்றை நினைத்துப் பார்க்கிறோம். கூற்றுவனும் வியக்கும் வண்ணம் ஆற்றலோடு போர் புரிந்தாய்! தமிழக மன்னன் நீ இமயத்து அரசர்க்கு இதனைத் தெரிவித்து முடங்கல் ஒன்று நீ எழுதினால் போதும் அவர்கள் அடங்கியவராய்ச் சிலை வடிக்கக் கல் தந்து விடுவர்; அதனால் வில் புலி கயல் பொறித்த முத்திரை இட்டு முடங்கல் அனுப்புக” என்றான்.

வில்லவன் கோதை உரைத்தநல்லுரைகளைக் கேட்ட அழும்பில்வேள் என்னும் மற்றொரு அமைச்சன் அதற்கு ஒரு திருத்தம் கூறினான். “செய்தி அனுப்பத் தேவை இல்லை; இங்கே அம்மன்னர் தம் ஒற்றர் அங்கங்கே தங்கி இருக்கின்றனர். அவர்களே சென்று செய்தி செப்புவர்” என்று அறிவித்தான் அதனைச் சேரன் ஏற்றுக் கொண்டு போர் தொடுக்கத் தன் நகராகிய வஞ்சி மாநகரை அடைந்தான்.

மன்னவன் வெற்றியை விளம்பி வாழ்த்தியபின் “வடஅரசர்க்கு இங்கிருந்து முரசு அறைந்து செய்தி அறிவிக்க” என்று அழும்பில் வேள் ஆணையிட்டான்.

“விற்பொறி பதித்த இமயத்தில் கற்கொண்டு வர எம் காவலன் கருதிட்டான். அவனை எதிர்த்துப் போரிட்டால் அதன் விளைவினைத் தாங்க நேரிடும்; திறை தந்து இறையைப் பணியீர் ஆயின் அவன் வெற்றி விளைவு களைச் சிந்திப்பீராக; அவன் கடலில் சென்று கடம்பு எறிந்த வெற்றி, இமயத்தில் வில் பொறித்த வெற்றி இவற்றைக் கேட்டிருப்பீர் நீர் அடங்கி எதிர் கொண்டு வரவேற்று உதவுவீர் என்றால் உயிர் பிழைப்பீர் எதிர்த்தால் உயிருக்கு அஞ்சித் துறவு கொண்டு ஒடநேரிடும்” என்று செய்தி தெரிவித்தனர்; “வாள் கண்டு வணங்கினால் வாழ முடியும்; இல்லை என்றால் தோள் துணை மறந்து துறவு கொள்ள நேரிடும்” என்று அறிவித்தனர். “அரசன் வாழ்க” என்று யானை மீது இருந்து முரசு அறைவித்தனர்.

26. கல்லைக் கொணர்தல்

(கால்கோள் காதை)

பறை அறைந்தனர்; சிம்மாசனத்தில் செங்குட்டுவன் ஏறி அமர்ந்தனன்; ஆசான்; நிமித்திகன்; அமைச்சர்; படைத்தலைவர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் சேர்ந்து 'மன்னர் மன்னன் வாழ்க' என்று ஏத்தினர்; அரசன் கூறுவதை முன்னிருந்து கேட்டனர்.

படைத் தலைவரை விளித்து வீரமொழி பேசினான்: “இமயத்திலிருந்து வந்த தவசிகள் எமக்கு ஈங்கு உணர்த்திய அவச்சொல் கேட்டு அடங்கிவிட்டால் சோழரும் பாண்டி யரும் என்னை இகழவும் கூடும்; பழிச்சொல் நிலைத்து நிற்கும்; அதைப் போக்க வடக்கே சென்று கல்லை அங்கு ஆரிய அரசர்கள் தலைமீது சுமத்திக் கொண்டு வராமல் என் வாள் வறிது மீளும் என்றால் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை நடுங்க வைக்காமல் குடிமக்களை அவதிக்குள் ஆக்கும் கடையன் என்ற பழிச்சொல்லை யான் அடைவதாக” என்று வஞ்சினம் கூறினான்.

அதனைக் கேட்ட அவையில் இருந்த கல்வி ஆசான் அரசனை நோக்கி “அவர்கள் இகழ்ந்தது உன்னை அன்று: சோழ பாண்டியரை; நீ சினம் ஆறுக” என்று அறிவித்தனன். “வஞ்சின மொழி கேட்டு அவர் அஞ்சி அடங்குவர் நின் வஞ்சினத்துக்கு எதிராக நின்று போர் செய்யும் மன்னர்கள் யாரும் இல்லை” என்றனன். அவர்களுள் நிமித்திகன் எழுந்து நின்று, “காலம் கூடி உள்ளது. செல்லுதற்கு உரிய நற்பொழுது இது; நீ குறித்த திசைமேல் எழுக! படை எழுச்சி பெறுக” என்று கூறினான்.

அரசன் உடனே, “வாளையும், குடையையும் வடதிசை நோக்கிப் பெயர்க்க” என ஆணை இட்டனன்.

சேனைகள் ஆரவாரித்தன; முரசு எழுந்து ஒலித்தது; இரவு இருட்டை விலக்கிய ஒளி விளக்குகளின் வெளிச் சத்தில் கொடிகள் வரிசையாக அசைந்தன. பகைவரை வாட்டும் சேனை வீரர்களும், ஐம்பெருங்குழுவினரும், எண் பேராயத்தினரும், யானை வீரர்களும், கணித்துக் கூறும் காலக் கணிதரும், அறம் கூறும் சான்றோரும், படைத்தலைவர்களும், “நில உலகை ஆளும் மன்னன் வாழ்க” என்று வாழ்த்துக் கூறினர்.

பெருங்களிறு ஒன்றின் மீது வாளையும், வெண் கொற்றக் குடையையும் வைத்து அதனை மதிற்புறத்து இருந்த கொற்றவை கோயில் முன் நிறுத்தினர்; வஞ்சிப் பூவுடன் பனம்பூவையும் அவ் யானைக்கு அணிவித்துச் சேரனின் அவைக்குச் சென்றனர்.

போரை விரும்பிப் படைக்குத் தலைமை தாங்கிய படைத் தலைவர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தான். வஞ்சி மாநகரில் சேரன் வஞ்சிப் பூவைச் சூடிக் கொண் டான் பிறநாட்டு அரசர்கள் திறை கொண்டு வந்து செலுத்த அவர்களை அழைக்கும் முரசு காலையில் ஒலித்தது. சிவனின் திருவடிகளை வணங்கிப் பின் யானை மீது ஏறினான். அதனை அடுத்துச் “செங்குட்டுவன் வெற்றி கொள்க” என்று வாழ்த்தி தெய்வப் பூ மாலை கொண்டு வந்து தந்தனர். அது திருவனந்தபுரத்து ஆடகமாடம் என்னும் திருமால் கோயிலினின்று கொண்டுவரப்பட்டது. சிவனை வணங்கிய தன் சிரசில் அதை ஏற்றுக் கொள்ளாமல் தோளில் தாங்கினான். அவன் போர்ப் பயணம் தொடங்கியது.

நாடக மடந்தையர் ஆடரங்கு எங்கும் அரசனுக்கு வாழ்த்துக் கூறினர்; “கொற்ற வேந்தே! நீ வெற்றி கொள்க! வாகைப் பூவும், தும்பைப் பூவும் சூடிப் பொலிவு பெறுக” என்று வாழ்த்தினர்.

“எங்கள் கண்களைக் கவரும் பேரழகு பெற் றிருக்கிறாய்! உன்னைக் கண்டு காதல் கொண்டு எம் வளையல்களை இழக்கின்றோம். இந்த நிலை என்றும் தொடர்க” என்றும் சிறப்பித்து அவர்கள் வாழ்த்துதல் தெரிவித்தனர்.

மற்றும் மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதர் எனப்பட்டவரும், “வெற்றி பெறுக” எனக் கூறி வாழ்த்தினர்.

யானை வீரரும், குதிரைத் தலைவரும், வாள் வீரரும் இவன் வாளாற்றலை ஏத்திப் புகழ்ந்தனர். அசுரரை அழிக்கச் சென்ற இந்திரனைப் போல் வஞ்சி நகரை விட்டு நீங்கித் தம் படைகளுடன் நீலகிரி மலையைச் சேர்ந்தான். அங்கே பாடி வீடு அமைத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

நீலகிரியில் சேர மன்னன்

படை இயங்கு அரவம் விண்ணையும் முட்டியது; அதனைக் கண்டு வானத்து முனிவர்கள் விசும்பினின்று இறங்கி வந்து இவனைக் காண விழைந்தனர். மின்னல் ஒளிபோல் அவர்கள் காட்சி அளித்தனர். அவர்களை வணங்கி வேண்டுவது யாது என்று கேட்டனன். அவர்கள் “யாம் பொதிகை மலை செல்கின்றோம்; வழியில் உன்னைக் காணும் வாய்ப்பு நேர்ந்தது; நீ இமயம் ஏகுகின்றாய் என்பதை அறிகிறோம். அங்கே மறைகற்ற அந்தணர் உள்ளனர்; அவர்களுக்கு எந்தக் குறையும் நேராமல் காப்பது நின் கடமை” என்று கூறினர்; அவனை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

அதன் பின் கொங்கணக் கூத்தரும், கருநாடகக் கலைஞர்களும் தத்தம் துணைவியருடன் வந்து இருந்து பாடல் பாடினர். “வேனில் காலம் வந்தது; ஆனால் காதலன் வந்திலன்” என்ற கருத்துடைய பாடல்களைப் பாடினர். மற்றும் “கார்காலம் வந்தது. காதலன் தேரும் வந்தது; மகளிர் கோலம் கொள்க” என்றும் குடகர்கள் கார்க்குரவை என்னும் வரிப்பாடலைப் பாடினர்; “வாள்வினை முடித்து வெற்றியுடன் வருக” என்று ஒவர் எனப்பட்டவர் வாழ்த் தினர். அவர்களுக்கு மிக்க பரிசிலை நல்கினான். அதன்பின் சஞ்சயன் என்பான் நாடக மகளிருடனும், ஏனைய இசைக் கலைஞருடனும் அரசனைக் காண அங்கு வந்து சேர்ந்தான். அச்செய்தியை அறிவித்தனர். “அவனை வரவிடுக” என்று கூறி அழைப்பித்தான்.

சஞ்சயன் வருகை

சஞ்சயன் என்பவன் நூற்றுவர் கன்னர் அனுப்பிய தூதுவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னுடன் தான் அழைத்து வந்த நாடகக் கலைஞர் களையும், இசை வல்லுநரையும், ஆடல் மகளிரையும் அறிமுகம் செய்து வைத்தான். பின்பு நூற்றுவர் கன்னர் சொல்லி அனுப்பிய செய்தியை முறைப்படி கூறினான். கடவுள் எழுத ஒரு கல் கொணரச் செல்வது ஆயின் அதனைத் தன் தலைவர்களாகிய நூற்றுவர் கன்னரே செய்து முடிப்பர் என்று அவர்கள் சொல்லி அனுப்பியதாகத் தெரிவித்தான்.

“தான் வடநாடு செல்வது கல்லைக் கொணர்வதற்கு மட்டுமன்று; கடுஞ் சொல்லைக் கூறிய கனகனையும் விசயனையும் களத்தில் சந்திப்பதற்கே” என்று கூறினான். பாலகுமரன் என்பானின் மக்கள் கனகன், விசயன் என்பார் இருவர் தம் நாவைக் காவாதவராகித் தமிழர்களின் ஆற்றலைக் குறைவுபடுத்திப் பேசினர். விருந்தினர் மத்தியில் இழிவுடன் பேசித் தம் வீரத்தை மிகைப்படுத்திக் கூறினர். “இமயத்தில் தமிழரசர்கள் புலியையும், கயலையும் பொறித்த நாட்களில் தாம் அங்கு இல்லை” என்றும், “இருந்திருந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்” என்றும் நா காக்காமல் நகையாடிப் பேசினர். இச்செய்தியைச் சேரன் எடுத்துச் சொல்லி அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவே தான் செல்வதாகக் கூறினான்.

கங்கையைக் கடக்க வங்கங்கள் தேவை என்ற செய்தியைச் செப்பி அனுப்பினான். கன்னரைக் கொண்டு படகுகளை அனுப்பச் சொல்லி அறிவிப்புச் செய்தான். அரசன் இட்ட ஆணையைத் தாங்கி நூற்றுவர் கன்னரிடம் அதை நுவலச் சஞ்சயன் சென்றான்; அதன்பின் தென்னவர் இட்ட திறை என்று சொல்லிச் சந்தனக் குப்பையும், முத்துக் குவியலும் சட்டை அணிந்த நாவன்மை படைத்தவர் ஆயிரவர் கொண்டு வந்து அளந்து தந்தனர். தென்னவன் தந்தவை எனச் சாற்றினர். அவற்றைப் பெற்றதற்கு ஒப்புதல் தெரிவித்துச் சேரன் தன் அரசு முத்திரை இட்ட முடங்கல்களை அவருக்கு ஆட்கள் வழி அனுப்பினான். கணக்கு எழுதுவோர் இவற்றைக் குறித்துக் கொண்டு ஒப்புதல் எழுதி அனுப்பினர்.

வட நாடு அடைதல்

அதன் பின் நீலகிரியை விட்டு நீங்கி வடநாடு செல்லக் கங்கையைக் கடந்தான்; நூற்றுவர் கன்னர் இவனுக்குக் கரையைக் கடக்கப் படகுகளை அனுப்பி வைத்தனர். அடுத்த கரையில் அவர்கள் இவன் வரவுக்காகக் காத்து நின்றனர். அவர்களையும் துணையாக அழைத்துக் கொண்டு வடநாட்டை அடைந்து அங்குப் பாடி வீடு அமைத்துக் கொண்டு அங்குத் தங்கினான்.

போர் நிகழ்ச்சிகள்

சேரனை எதிர்த்த வட ஆரிய வேந்தர்கள் ஆகிய உத்திரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் ஆகிய இவர்கள் தென்தமிழ் ஆற்றலைக் காண்போம் எனத் திரண்டு எழுந்தனர். அவர்களோடு கனகனும் விசயனும் கனத்த சேனையுடன் சேர்ந்து கொண்டனர். களிற்றைக் காயும் சிங்கத்தைப் போன்று சேரன் சீறி எழுந்தான். பல்வேறு மன்னர்கள் எதிர் ஊன்றித் தடுக்க அவர்களை எதிர்த்துப் போர் செய்து வெற்றி முழக்கம் செய்தான். இவன் தங்கிய பாடி வீடு கொடிகள் பந்தல் இட்டதுபோல் அமைந்தன. இடிபோல இவன் படைகள் எழுப்பிய முழக்கம் எழுந்தது; முரசுகள் அதிர்ந்தன; வில் ஏந்திய வீரரும், வேல் தாங்கிய வீரரும், கிடுகுப்படையாளரும், தேர் ஊர்வோரும், யானையர், குதிரையர் இவர்களும் மண்ணில் எழுப்பிய பெருந்துகள் யானைக்குக் கட்டிய மணிநாவையும், கொடிகளில் கட்டிய சங்குகளின் நாவையும் அசையாதவாறு தடுத்து நிறைத்தது.

முன்னணியில் இருந்த தூசிப் படைகள் ஒன்றோடு ஒன்று முரணித் தாக்கிக் கொண்டன; தோளும் தலையும் துணிபட்டு வேறு வேறாக விழுந்தன; தலை இழந்த முண்டங்கள் பேய்கள் இட்ட தாளத்துக்கு ஏற்பக் கூத்து ஆடின. பிணம் சுமந்து ஒழுகிய குருதிக் குட்டையில் பேய்க் கூட்டம் கூந்தலை விரித்துப் போட்டு நீராடின.

ஆரிய அரசர்தம் படைகளைச் சேரன் கொன்று குவித்தான்; அவர்கள் தேர்கள் களிறுகள் குதிரைகள் சாய்ந்து விழுந்தன. ஒரே பகலில் உயிர்க் கூட்டத்தை இயமன் உண்ண இயலும் என்பதைக் கனகவிசயர் அன்று கண்டறிந் தனர். பகைவர்களைக் கொன்று குவித்த மாவீரனாகச் சேரன் திகழ்ந்தான். பனம்பூ மாலையோடு தும்பையும் அங்கு சூடிச் சிறப்புப் பெற்றான்.

திமிர் பிடித்துத் தமிழரசரை இகழ்ந்த கனகனும் விசயனும் நூற்றுவர் அரசர்களும் இவன் சினத்துக்கு ஆளாயினர்; ஏனையவர்கள் ஆடும் கூத்தரைப் போலவும், நாடும் தவத்தவர் போலவும் பல்வேறு வேடங்கள் தாங்கித் தப்பித்துச் சென்றனர்.

வாள்ஏர் உழவன் ஆகிய செங்குட்டுவன் தன் மறக்களத்தை வாழ்த்திப் பேய்கள் பரணி பாடின. அவை மடிந்த வீரர்களின் கைகளைத் தூக்கிப் பிடித்தும், அவர் முடியுடைய தலைகளைத் தூக்கி எறிந்தும் போர்ப் பாடலைப் பாடின. கடலைக் கலக்கி அமுதம் கடைந்து எடுத்த நாளில் தேவர் அசுரப் போர் பதினெட்டு ஆண்டுகள் நடைபெற்றது. இலங்கையில் இராமன் இராவணனோடு நிகழ்த்திய போர் பதினெட்டுத் திங்கள் நடந்தது. கண்ணன் தேர்செலுத்தப் பாண்டவர்கள் நடத்திய போர் பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. அந்தப் போர்களின் சிறப்புகளைச் சீர்வரிசையில் செப்பி இவன் பேரிசையைப் புகழ்ந்து பாடின.

பேய்கள் கூத்து ஆடி மகிழ்ந்தன. இவன் வெற்றிப் புகழைப் பாடிச் சிறப்பித்தன. மறக்கள வேள்வி முடித்த வேந்தன் அங்கு “வேள்விகள் ஒம்பிய மறையவர்க்குத் தக்க வகையில் உதவி அவர்களுக்குச் சிறப்புச் செய்க” என்று ஆட்களை அனுப்பினான். அதன்பின் வில்லவன் கோதை என்னும் அமைச்சனோடு வீரர்களை அனுப்பி இமயத்து உச்சியினின்று பத்தினிக் கடவுளுக்குக் கல்லைக் கொண்டுவரச் செய்தான்.

27. கங்கையில் நீராட்டுதல்

(நீர்ப்படைக் காதை)

வட பேர் இமயத்தில் கடவுள் பத்தினிக்குக் கல்லைக் கொண்டு வந்த பின்பு கனக விசயர்தம் கதிர்முடிமேல் ஏற்றிக் கொண்டு வந்தான். தென் தமிழ் ஆற்றல் அறியாது வந்து மலைந்த ஆரிய மன்னரையும், அவனுடன் வந்த படை வீரர்களையும் கொன்று குவித்தான். இந்த வெற்றிச் செய்தி எட்டுத் திசையும் பேசப்பட்டது.

இதற்கு முற்பட்ட போர்கள் யாண்டுகளில் நடந்தன; மாதங்களில் நிகழ்ந்தன; நாட்களில் நடைபெற்றன; அவற்றிற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலம் ஒவ் வொன்றுக்கும் பதினெட்டு எனக் கூறப்பட்டது. ஆண்டு களிலும், மாதங்களிலும், நாட்களிலும் நிகழ்ந்த போர்கள் அவற்றை நோக்க இது நாழிகைகளில் முடிவு பெற்றது. பதினெட்டே நாழிகையில் இப்போர் தொடங்கி முடிவும் பெற்றது. சாதனைகளில் இது மற்றவற்றை விட விஞ்சி விட்ட செய்தி, வரலாற்று நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றது. ஒரே பகலில் முடித்த போர் இது என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட செய்தி இது.

செங்குட்டுவன் தன் மாபெருஞ் சேனையுடன் கங்கைப் பேர் யாற்றுக் கரையை அடைந்தான். பத்தினிக் கடவுளுக்கு வேதியர்களைக் கொண்டு நீர்ப் படுத்தித் தூய்மை செய்து விழா எடுத்தான். மஞ்சனநீர் ஆட்டி வெஞ்சின வேந்தன் வெற்றி விழா எடுத்தான். அவன் அமர்ந்து வீரர்களுக்குப் பரிசு தர மண்டபம் அமைத்துக் கொடுத்தனர். அவன் தங்குதற்கு ஏற்ற வகையில் அரண் மனைகளையும், மணி மண்டபங்களையும், பொன்னால் புனையப்பட்ட மேடை அரங்குகளையும், அழகிய பந்தர்களையும், பள்ளி அறைகளையும், பூஞ்சோலைகளை யும், மலர்ப் பொய்கைகளையும், இசைப் பாடல்கள் இருந்து கேட்பதற்குத் தக்க அரங்கங்களையும், பேரிசை மன்னர்க்கு வேண்டுவன பிறவும் ஆரிய அரசர்கள் ஆகிய நூற்றுவர் கன்னர் அமைத்துத் தந்தனர்.

அங்கே வேந்தன் அமர்ந்திருந்து களத்தில் உயிர்விட்ட விரர்களை உளமாரப் பாராட்டினான், அவர்கள் வாரிசுகள் ஆகிய அவர்தம் மக்களுக்கும் சுற்றத்தினருக்கும் பரிசுகள் தந்தான்; உயிருடன் வெற்றி விளைவித்துத் திரும்பிய வீரர்களுக்குப் பரிசுகள் தந்து பாராட்டினான்.

திருவோலக்கத்தில் பெருமிதத்துடன் வீற்றிருந்த அரசனைக் காண அங்கு மாடலன் என்னும் மறையவன் வந்து சேர்ந்தான். “வாழ்க எம் மன்னன்” என்று முதற்கண் சேரனை வாழ்த்தி அவன் பெற்ற வெற்றியைத் தொகுத்துக் கூறினான். “மாதவி மடந்தை கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று எள்ளல் சுவைபடத் தொகுத்துக் கூறினான். “எங்கோ எழுந்த சிறு பொறி அது கொழுந்துவிட்டுப் பெரிதாகிப் போரில் முடிந்தது; வடவரை அடிமைப்படுத்தியது” என்று சொல்திறன் படக் கூறினான்.

அங்குக் கூடியிருந்த மன்னர்களுக்கு இது புதிராக அமைந்திருந்தது; விடுகதை போல விளக்கமற்றுக் கிடந்தது. அரசன் மாடலனை நோக்கி, “பகைப்புலத்து அரசர் பலர் இதை அறியமாட்டார்கள். நகைத்திறம் படக் கூறிவிட்டாய். மறைகற்ற பெரியோய்! நீ கூறிய உரையின் கருத்து யாது? அதனை விரித்துக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான்.

செய்திகள் கூறுதல்

மாடலன் ஆகிய மறையவன் மன்னனுக்கு அச்செய்தி களை விவரித்துக் கூறினான்.

“கடற்கரைப் பாட்டில் மாதவி கூற்றில் கண்ட குறை அது ஊடலாக அமைய ஊழ்வினை காதலர் இருவரைப் பிரித்தது; அதன் தொடர் நிகழ்ச்சியாகக் கோவலன். தன் துணைவியுடன் மதுரை சென்றான். அங்கே காவலனால் பழிசுமத்தப்பட்டுக் கொலைக் களத்தில் வெட்டுண்டான்; பட்ட மரமாகிய கண்ணகி சீற்றம் கொண்டு நீதிக்குப் போராடி வழக்கில் வென்று பாண்டியனைத் துயரில் ஆழ்த்தினாள். அவன் உயிர்விட்டான் மதுரை எரிந்தது. நின்னாடு புகுந்த அப்பத்தினித் தெய்வம் இன்று கல்லாக அமைந்து இவர்கள் முடிமீது எறினாள்” என்று கதையைக் கூறினான்.

இது கடந்த செய்தி, அதனைக் கூறிமுடித்து அதன் பின் தான் கங்கைக் கரைக்கு வந்தது ஏன் என்ற சங்கையைத் தீர்க்கத் தொடங்கினான்.

அகத்தியன் வாழ் பொதிகை மலையை வலங் கொண்டு குமரியில் நீராடி வந்தான். வழியில் பாண்டிய நாட்டை அடைந்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கேள்வி யுற்றான். அங்குச் சென்றதற்காகத் தன் ஊழ்வினையை அவன் நொந்து கொண்டான்.

தென்னவனை வழக்காடி வென்று கோவலன் பிழை யற்றவன் என்பதைக் கண்ணகி நிறுவினாள். அடைக்கலமாகக் கண்ணகியை இடைக்குல மகள் பெற்றிருந்தாள். அவர்களைத் தான் காக்க முடியவில்லை; அவர்களுக்குக் கேடு நிகழ்ந்தது தன்னால்தான் என்று வருந்திய மாதரி எரியகம் புகுந்து உயிர் நீத்தாள். அதிர்ச்சி மிக்க செய்தியாக இது மாடலனுக்கு அமைந்தது.

தீயது செய்த வேந்தன் தன் உயிரைவிட்டுப் பாவ மன்னிப்புப் பெற்றுவிட்டான். தன் உடன் வந்த உத்தமர்களுக்கு அழிவு வரத் தானும் உடந்தை என்று கருதிய கவுந்தி அடிகள் அதற்கு ஈடாகத் தன்னை அர்ப் பணித்துக் கொண்டார். உண்ணாநோன்பு ஏற்று உயிரை விட்டார். இது அடுத்த அதிர்ச்சி மிக்க செய்தியாகிவிட்டது.

அடுத்து மாடலன் தன் சொந்த நாடாகிய சோழ நாட்டை அடைந்தான். புகார் நகரில் புகுந்தவன் இதுவரை நடந்த இந்தச் செய்திகளைத் தகுந்தவர்க்கு எல்லாம் எடுத்துச் சொல்ல அவ் அறிவிப்புகள் பலரை உயிர் விடச் செய்தன; சிலரைத் துறவிகள் ஆக்கின; துயரத்தைப் பெருக்கின. கோவலன் தந்தை தம்பால் உள்ள பொருளை உலகினர்க்கு அளித்து வாழ்க்கையை வெறுத்துப் புத்த பள்ளியை அடைந்து துறவியாயினான். அவன் மனைவி உறவுக்கு என ஒருவரும் இல்லாமையால் உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அறியாதவள் ஆயினாள். மாநாய்கன் தானம் பல செய்து அருக தானத்தை அடைந்து அறங்கள் செய்வதை வாழ்வாகக் கொண்டான். அவன் மனைவி, மகளையும், மருமகனையும் இழந்த துக்கம் தாங்க இயலாமல் ஏங்கி உயிர்விட்டு மறைந்தாள்.

மற்று இச்செய்திகளைக் கேட்ட மாதவி, “என் மகள் இனி நல்வாழ்க்கையை நாடிச் செல்லட்டும்; என்னோடு இந்தப் பழைய வாழ்க்கை மாறுவதாக; என் மகளைக் கணிகையாகக் கணமும் இசையேன். கணிகை வாழ்க்கை அவளைவிட்டு ஒழிக” என்று கூறி அவளைப் புதிய நெறிக்குத் திருப்பிவிட்டாள். தானும் துறவியாவதற்கு உறுதி கொண்டு தலைமுடியை அடியோடு களைந்து புத்த பள்ளியை அவள் அடைந்து துறவறம் மேற்கொண்டு விட்டாள். இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துக் கூறிய மாடலன் இப் பின் நிகழ்வுகளுக்கு எல்லாம் தானும் ஒரு காரணமாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்தான். இப்

பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கே கங்கையில் நீராடத் தான் அங்கு வந்ததாகத் தெரிவித்தான்.

பாண்டிய நாடு

“செழியன் மறைந்தபின் பாண்டிய நாடு அதன் நிலை யாது?” என்று சேரன் கேட்டான்.

“கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் என்பான் கொல்லர் ஆயிரவரைக் கண்ணகி கோயில் முன் தலை கொய்து பலியிட்டுக் கொன்று தென்னவன் செய்த குற்றத்திற்கு ஈடு செய்தான். இச்செய்தி ஊர் எங்கும் பரவியது; மெல்ல மெல்ல நாட்டில் அமைதி திரும்பியது. செழியன் அரியாசனம் ஏறினான். நாடு சீர்பெற்றது” என்ற செய்தியை அறிவித்தான்.

அந்தி நேரம் அணுகியது; வானத்தில் பிறை தோன்றி இரவு வருதலைக் காட்டியது; அதன் வண்ண அழகில் அரசன் எண்ணம் செலுத்தினான். அவன் மனம் அமைதி பெற்று இருந்தது. அருகில் இருந்த காலக் கணிதன் ஞாலம் ஆள்வோனை நோக்கி “நாள் கணக்கிட்டுப் பார்த்து இதுவரை வஞ்சியை விட்டு அங்கு வந்து திங்கள் முப்பதும் இரண்டும் ஆயின; இனி நாடு திரும்புதல் தக்கது” என்று ஏடு கூறுவதாகத் தெரிவித்தான். மாளிகை சென்று தனியே ஒய்வு எடுத்தான்.

சோழ நாடு

அதற்குள் சோழ நாட்டின் சேதிகளை அறியச் செங் குட்டுவன் விரும்பினான்; மாடலனை மறுபடியும் அழைத்து வினாவினான். “சோழ மன்னன் கிள்ளிவள வனை எதிர்த்த குறுநில மன்னர் ஒன்பதின்மரை நீ ஒரு காலத்தில் போரிட்டு வென்றாய்; அவர்கள் மறைந்தனர்; அதன்பின் எதிர்ப்புகள் இன்றி நாட்டை எழிலுறச் சோழன் ஆட்சி செய்து வருகிறான்” என்று அரசனுக்கு மாடலன் அறிவித்தான்.

மாடலன் சோழர் தம் முன்னோர்களின் பெருமை யைக் கூறி “அத்தகைய மரபில் வந்தவன் சோழன் கிள்ளிவளவன்; அவன் நாட்டில் எந்தக் குறையும் இல்லை” என்று அறிவித்தான்.

“விண்ணவர் வியக்க எயில் மூன்றினை அறுத்து எறிந்து வெற்றிச் சிறப்புடையவன் சோழன் செம்பியன்; வீரத்துக்கு அவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புறாவின் உயிரைக் காக்கத் தன் உடம்பினை அறுத்துக் கொடுத்துப் பருந்தின் பசியைத் தீர்த்தவன் சிபிச் சோழன்; அவன் அருளுக்கு ஒர் அடையாளமாக விளங்கியவன். வீரமும் அருளும் மிக்க செங்கோல் வேந்தர்கள் ஆண்ட நாடு சோழநாடு; அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை ஆள்பவன் செங்கோல் வழுவுவது இயலாது; அவன் ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது” என்பதை எடுத்துக் கூறினான்.

பொன்னை அளித்துப் பாராட்டு

காவிரி புரக்கும் நாட்டவன் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று முப்புரி நூலோன் எடுத்துக் கூற அவன் மடுத்துக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். நாடுகள் பல திரிந்து நலம் அனைத்தும் நவின்ற அந்தணாளனை மதித்துச் செங் கோல் வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன் அவனுக்குப் பொன் அளந்து கொடுத்துச் சிறப்புச் செய்தான். தன் எடைக்கு நிகராக ஐம்பது துலாம் நிறையளவு பொன் கட்டிகளை அவனுக்கு அட்டியின்றித் தந்தான். இதனைத் துலாபாரம் புகுதல் என்று கூறினர்.

கனகவிசயரை அனுப்பி வைத்தல்

ஆடகப் பைம்பொன் மாடலனுக்கு அளித்தபின் உடன் வந்து உதவிய ஆரிய மன்னர் நூற்றுவர் கன்னரைத் தம் நாடுகளுக்குச் செல்க என்று விடை தந்து அனுப்பி வைத்தான். அதன்பின் சிறைப் பிடித்து வந்த அரச குமரர்கள், அடிமைப்படுத்தி அழைத்து வந்த பேடியர்கள், தமிழ் மண்ணை இகழ்ந்து பேசிய கனக விசயர் இவர்களை ஆயிரம் படை வீரர்களிடம் ஒப்புவித்து அவர்களைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு அனுப்பினான்.

இருபெரு வேந்தர்க்கும் அவர்களைக் காட்டிவர ஏவிய பின் அன்று அங்கே பாடி வீட்டில் சற்றுத் துயில் கொண்டான்.

இரவு நீங்கியது; காலைக் கதிரவன் தன் கதிர் ஒளியை வீசத் தொடங்கினான். கங்கை நதி தீரத்தில் வயல் வெளி களில் தாமரைகள் மலர்ந்தன; வண்டுகள் யாழ் ஒலி செய்தன; பொழுது விடிந்தது என்பதை அறிந்த அரசன் தன் நாடு நோக்கிப் புறப்பட்டான். குணதிசையில் சூரியன் தோன்றினான். தென்திசை நோக்கிச் சேரன் பயணமா யினான்.

சேரமா தேவி எதிர்பார்ப்பு

இவன் வருகைக்கு ஏங்கி வஞ்சி மாநகரில் சேரன் மாதேவி துயில் இன்றி வருந்திக் கிடந்தாள். அன்னத் தூவி பரப்பிப் படுக்கையின் மேலே கிடந்து அந்தக் கட்டிலின் விதானத்தை வெறிச்சிட்டு நோக்கிக் கொண்டிருந்தாள்; கதிர் செலவு ஒழிந்த கனக மாளிகையில் முத்துகள் பதித்த ஒவியவிதானம், வயிரமணிக் கட்டில், அன்னத் தூவி பரப்பிய மஞ்சம் அதில் துயிலுதல் இழந்து துயருற்றுக் கிடந்த சேரமாதேவியை அருகிருந்த பாங்கியர் ஆற்று வித்தனர்.

“தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக” எனப் பாட்டுடன் இசைத்துப் பல்லாண்டு கூறி வாழ்த்தினர். குற்றேவல் செய்யும் குறுகிய வடிவுபடைத்த கூனியர் களும், குறளர்களும் சென்று “பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; நறுமலர் கூந்தல் நாள் அணிபெறுக” என நற்செய்தி நவின்றனர்.

பாட்டிசைத்தல்

குன்றக் குறவர் இளம் பெண்கள் குறிஞ்சிப்பண் பாடினர். அவர்கள் சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இந்த இன்னிசை கேட்டுத் தினை கவர்ந்து உண்ண வந்த யானைகளும் மயங்கி அசைவற்று நின்றுவிட்டன. சேரன் வருகைக்குக் குறுக்கே நிற்காதீர் என்ற கருத்துப்பட நெஞ்சை உருக்கும் பாடல்களை அவ்வஞ்சி இளம் குறத்தியர் பாடி அரசியை மகிழ்வுறச் செய்தனர்.

“வடதிசை சென்றவன் பகைவர்கள் எயில்களை முருக்கி அவற்றை அழித்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். குடவர் கோமான் வெற்றி கேட்டு மகிழ்க; நாளை அவன் பிறந்த நாள் அணிவிழா நடைபெற இருக்கிறது; எருதுகளே, நுகத்தடி பூண்க! உழவுத் தொழில் சிறக்க, பகை அரசர் கால் விலங்குகள் விலகும் நாள் இது; அவன் வெள்ளணி உடுத்து மகிழும் பிறந்த நாள்” என்று உழவர் பாடினர். இது மருதப் பாடலாகத் திகழ்ந்தது; இம் மருதப் பாடலைக் கேட்டு மன்னன் துணைவி மகிழ்வு கொண்டாள்.

குவளைப் பூவையும், முண்டகப் பூவையும் கோவலர்கள் தலைமுடியில் சூடிக் கொண்டனர்; தாமரை மலர்களை அணிந்து கொண்டனர்; தாழையின் கிளைகளில் அமர்ந்து இருந்து இவர்கள் குழலிசை பாடினர்; “வில்லவன் வந்தான். இமயத்திலிருந்து ஆநிரைகளைக் கொண்டு வந்துள்ளான்; அப்பசுக்களோடு நீவிரும் உடன் சென்று நீர்த்துறை படிவீர்” என்ற கருத்து அமைய அவர்கள் முல்லைப் பண்ணைக் குழலிசையில் தந்தனர். இவ் இசையைக் கேட்டுச் சேரன் மனைவி மகிழ்வு அடைந்தாள்.

இவ்வாறே நெய்தல் நிலத்து இளம் பெண்கள் முத்துகளை வைத்துக் கழங்காடிக் கொண்டு சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர்; “சேரன் வந்தான்; நம் இளமுலைகள் அவன் தோள் நலத்தைத் துய்ப்பது ஆகுக" எனவும் பாடினர். அவன் தும்பை சூடி வெற்றியுடன் வந்ததை விளம்பிப் புகழ்ந்தனர். “அவன் சூடிய பனம் பூவையும், தும்பைப் பூவையும், வஞ்சி மாலையையும் பாடுவோமாக!” என்று ஏத்திச் சிறப்பித்தனர். இந்நிலையில் நெய்தல் பண்ணைப் பாடிய நல்லிள நங்கையர் பாடலைக் கேட்டு அரசி மகிழ்வு பெற்றாள்.

அஞ்சொற் கிளவியர் பாடிய நால் நில இசைப் பாடல்களைக் கேட்டு மன்னவன் வருகையை அறிந்து வஞ்சிநாட்டு அரசி உடல் பூரித்தாள். வளையல்கள் செறிவு பெற்றன. வலம்புரிச் சங்குகள் முழங்கின. மாலைகள் வேயப் பெற்ற குடைக்கீழ் சேரன் யானை மீது அமர்ந்து வந்தான். அவனோடு பல யானைகள் வரிசையாகப் பின் தொடர்ந்தன. அரசனை நகர மாந்தர் எதிர் கொண்டு வரவேற்றனர். வஞ்சி மாநகருள் செங்குட்டுவன் வந்து சேர்ந்தான்.

28. கண்ணகிக்குப் படிமை நிறுவுதல்

(நடுகற் காதை)

மகிழ்வும் மன நிறைவும்

“சேரன் வாழ்க” என்று சேயிழை மகளிர் வாழ்த்துக் கூறினர். மாலை வேளை, அவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ஒளி கூட்டினர். மலர்களைத் தூவி மங்கலம் ஆக்கினர்.

களம் கண்ட வீரர்கள் வீடு திரும்பினர். அவர்கள் உளம் மகிழ அவர்கள் காதலியர் அவர்களைத் தழுவி அவர்கள் மார்பில் ஏற்பட்ட தழும்புகளை ஆற்றினர்; யானைக் கோடும் வேலும், அம்பும், வாளும் பட்ட வடுக் களை அவர்கள் மார்பு அணைப்பில் ஆறவைத்தனர். காதல் மகளிர் கடைக்கண் பார்வை அவர்களுக்குப் பரிசாக அமைந்தது. வீரம் நிறைந்த அவர்கள் ஈரம் மிக்க காதலில் திளைத்தனர்.

காதலியர் கண் பார்வை அதன் நினைவுகள் போர்க் களத்தில் வீரர்களை வாட்டி வதைத்தன; அப்பொழுது அவை நோயை விளைவித்தன. இப்பொழுது அப்பார்வை நோய் தீர்க்கும் மருந்தும் ஆகியது; இவ்வாறு எல்லாம் எண்ணி அவ்வீரர்கள் மகிழ்ந்தனர். தமது துணைவியரை நண்ணி அவர்தம் பேரழகில் ஆழ்ந்து இன்பங் கண்டனர். கண்கள் உரையாடின, முரல் அவர்களை மகிழச் செய்தது; கொங்கைகள் அவர்கள் மார்பினை அணைந்து இன்பம் தந்தன.

இசை பாடும் அழகிய மகளிரைக் கொண்டு யாழ் எடுத்து இசை கூட்டிப் பாலை, குறிஞ்சி முதலிய பண்கள் பல பாட வைத்தனர். அவர்களுக்கு அவர் மனைவியர் புதிய இன்பங்களைக் கூட்டு வித்தனர்.

திங்கள் நிலவு வீசி அவர்கள் அரங்குகளையும் படுக்கை முற்றங்களையும் குளிர்வித்தது. காமன் தன் கணைகளைத் தொடுத்து அவர்கள் காதல் இன்பத்தை மிகுவித்தான்; கிளர்ச்சிகள் பெறச் செய்தான்; வீரர்கள் மகிழ்வு கண்டனர்.

அந்த இன்ப இரவில் செங்குட்டுவன் தன் அரசியோடு அமர்ந்திருந்தான். சாக்கையன் என்னும் கூத்தன் உமைய வளோடு சிவன் ஆடிய கொடிகொட்டி என்னும் ஆடலை ஆடிக் காட்டி அரசனை மகிழ்வித்தான்.

அத்தாணி மண்டபத்தில் அரசன்

அதன்பின் அரசவை கூடும் அத்தாணி மண்டபத்தைச் சேரன் அடைந்தான்.

கஞ்சுக மாக்கள் நீலனைத் தலைவனாகக் கொண்டு வஞ்சி மன்னன் முன் வந்து சேர்ந்தனர். உடன் மாடலனும் வந்திருந்தான். அவர்கள் செய்தி கொண்டு செப்பக் காத்திருந் தனர். சோழன் மூதூர் ஆகிய புகார் நகரத்திற்குச் சென்றதை யும், அங்கு அவன் சித்திர மண்டபத்தில் வீற்றிருந்ததையும், அவனிடம் தாம் ஆரிய மன்னரை அழைத்துச் சென்று காட்டியதையும், அதற்கு அவர்கள் உரைத்த மாற்றத்தையும் விளம்பினர்.

“வீரத்தைக் களத்தில் போட்டுவிட்டு வெறுங்கை யராகத் தவசிகள் கோலத்தில் தப்பிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்து வந்தது மடமை என்று சோழ அரசன் கூறினான்” என்றனர்.

மற்றும் பாண்டியன் அவைக்குச் சென்றபோது அவனும் அதேபோன்று கூறிச் “சிவனை வணங்கச் சிந்தை கொண்ட எளியவர்களை இழுத்துக் கொண்டு வந்தது சேரனுக்கு இழுக்கு” என்று உரைத்ததாக அறிவித்தனர். மன்னர் இருவரும் மதிக்காமல் உரைத்த மாற்றங்களை நீலன் என்பவன் எடுத்து உரைக்கக் காலன் போல் கடுஞ்சினம் கொண்டு ஞாலம் ஆள்வோன் ஆகிய செங்குட்டுவன் சீறி எழுந்தான்; அவன் தாமரை போன்ற கண்கள் தழல் நிறம் கொண்டன; எள்ளி நகையாடித் தம் ஆற்றலை மதிக்காமல் அவர்கள் தன்னைத் துற்றி விட்ட தாகக் கருதினான். நன்றி மறந்தவர்கள் என்று வென்றிக் களிப்பில் அவர்கள் செயலைக் கண்டித்தான்; அவர்கள் உறவைத் துண்டித்தான்.

மாடலன் அறிவுரை

“மாடலன் எழுந்தான்; மன்னவர் மன்ன! வாழ்க நின் கொற்றம்!” என்று தொடங்கி அவன் சீற்றத்தை ஆற்று விக்கத் தொடங்கினான்.

ஆட்சி ஏற்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன; எனினும் நீ அறச் செயலைக் கருதாது மறக்களமே கருதுகின்றாய்; காயம் இது பொய்; யாருமே உலகில் நிலைத்து வாழ்ந்தது இல்லை. எண்ணிப்பார்; புகழ்மிக்க உன் முன்னோர் மகிழ்வு மிக்க செயல்களைச் செய்து முடித்தனர்; வீரம் விளைவித்தனர்; கடம்பு எறிந்து கடலில் பகைவர்களை வென்றனர்; இமயத்தில் வில் பொறித்தனர்; வேள்விகள் இயற்றி வேத வேதியர்களுக்கு நன்மைகள் செய்து நற்புகழ் பெற்றனர் கூற்றுவனும் அஞ்சும் ஏற்றம் மிக்க வாழ்வு வாழ்ந்து காட்டினர்; யவனர்களை வென்று புவனத்தை ஒரு குடைக் கீழ் ஆண்டனர். இமயம் வரை வென்று தம் வெற்றிக் கொடியை நாட்டினர்; பகைவர்களை அவர்தம் மதிலை அடைந்து அவற்றை அழித்து அவர்களை வென்று அடிமைப்படுத்தினர்; அயிரை மலையினை அடைந்து அதனையும் கடந்து ஆழ்கடலில் மூழ்கிப் புண்ணியம் தேடினர்; நகர்க் காவலுக்குச் சதுக்க பூதங் களைக் கொண்டு வந்து நிறுவி அவற்றின் ஏவலுக்கு அடிபணிந்து மதுக்குடம் கொண்டு வந்து கொட்டி நிரப்பி யாகங்கள் செய்தனர். புகழ்மிக்கு வாழ்ந்தவர் அவர்கள் பூத உடல் இன்று அபூத நிலை எய்திவிட்டது; வாழ்ந்த சுவடுகள் மறைந்துவிட்டன; யாக்கை நிலையற்றது என்பதை இவர்கள் வாழ்க்கை வரலாறுகள் காட்டுகின்றன”. “செல்வம் நிலைக்காது என்பதனை நீயே நேரில் கண்டிருக்கிறாய்; செருக் களத்தில் உன்னிடம் தோற்றவர் கள் இன்று தெருத் தெருவாக வறியவராகத் திரிகின்றனர். செல்வம் நிலைத்து நிற்காது; அதுமாறி மாறிச் செல்லும் என்பது நீ நேரில் கண்டிருக்கிறாய்”.

“இளமை நிலையாது என்பதனை உன் தளர்ச்சிமிக்க வயதே காட்டிவிடும். நரைமுதிர் யாக்கையை நீ கண்டு விட்டாய்; அடுத்தது? சிந்தித்துப்பார்; பிறவிகள் தொடர் கின்றன. அவையும் இன்ன பிறவி என்று உறுதி கூறும் நிலையில் இல்லை. தேவர்கள் மனிதராகப் பிறக்கின்றனர்; மனிதர்கள் விலங்காகின்றனர்; விலங்குகள் நரகர் கதியை அடைகின்றன; ஆடும் கூத்தர் போல் வேறு வேறு வடிவு கொள்கின்றது இந்த உயிர் உயிர் வாழ்க்கை நிலையற்றது; பிறப்புகளும் மாறி மாறி வருகின்றன; அவரவர் செய்யும் வினைகட் ஏற்ப உயிர்கள் பிறப்புகளை ஏற்கின்றன. யாக்கை நிலைத்து இருப்பது அன்று; செல்வம் இடம் பெயர்வது; இளமை அதுவும் மாறுவது நிலையற்ற வாழ்க்கையில் எதுவும் நிலைத்து நிற்காது” என்ற விளக்கம் தந்தான். அடுத்து அவன் செய்யத் தகுவது எது என்று எடுத்துக் கூறத் தொடங்கினான்.

அதற்கு முன்னுரையாகத் தன் நிலை யாது என்று விளக்கினான். பரிசில் பெறுவதற்காக இதைத் தான் கூற வில்லை என்று முன்னுரை தந்தான். “நீ மற்றவர்களைப் போல் உருத் தெரியாமல் மறைவதை நான் விரும்ப வில்லை. பிறந்தவர் இறப்பது பொது நெறி; அவர்களுள் சிலர் வீடுபேறு அடைவது சிறப்பு நெறி; நீ மற்றவர்களைப் போல வாழ்ந்து முடிவதை யான் விரும்பவில்லை; வீட்டுநெறி அடைவது நீ ஈட்டும் செயலாக அமைய வேண்டும்” என்று வழிகாட்டினான்.

“வேள்வி செய்வதே வீட்டு நெறிக்கு வழி கோலுவதாகும்; வேள்வி அறிந்த மறையவர் முன் இருந்து நடத்தும் பெரு வேள்வியை நீ தொடங்க வேண்டும். அதனை இன்றே செய்தல் நன்மை பயக்கும். நாளை செய்குவம் என்று தள்ளிப் போட்டால் உறுதியாக அதை ஏற்றுச் செய்ய முடியும் என்று கூற இயலாது; நல்ல எண்ணம் செயல்படுவதற்கு முன் எமன் வந்து அழைத்துச் சென்றால் என்ன செய்வது? இதுதான் நாளை நடக்கும் என்று உறுதி செய்ய இயலாது; நாளை நடப்பதை யார் அறிய முடியும்? உலகில் அத்தகையவர் யாருமே இல்லை. வேள்விக் கிழத்தியாக வேண்மாள் உனக்குத் துணையாக விளங்க வேள்வி செய்க இருவரும் இணைந்து அறங்கள் பல செய்து வாழ்விராக! மன்னர் பிறர் வந்து உன் அடிகளைப் போற்ற நீ நீடு வாழ்க!” என்று மாடலன் அறவுரை கூறினான்.

மாடலன் உரைத்த அறக் கருத்துகள் நல் வித்துகளாக அமைந்து அவை உள்ளத்தில் பசும் பயிராக வளர்ந்து செயற்பாடு பெற்றன. நான்மறை கற்ற வேத வேள்வியரை அழைப்பித்து மாடல மறையவன் சொல்லிய முறைமை யில் வேள்வியை அமைதியாக இயற்ற வழி வகைகள் செய்யுமாறு ஏவினான்.

அற வாழ்வில் அடியெடுத்து வைத்த அரசன் செங்குட்டுவன் முதற்கண் சிறைப்பட்டுக் கிடந்த ஆரிய மன்னர் ஆகிய கனக விசயரை விடுவித்து அவர்களை விருந்தினராக ஏற்றுப் பூம்பொழில் சூழ்ந்த மாளிகை ஒன்றில் தங்க வைத்தான்; “வேள்விக்கோ என்று அம்மாளிகை பெயர் பெற்று விளங்கியது; “வேள்வி முடிந்ததும் அவர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லலாம்” என்று வேண்டி உரைத்தான். பகைவர்கள் அவனுக்கு நண்பர்கள் ஆயினர். அந்நியர்கள் அவனுக்கு மன்னிய விருந்தினர் ஆயினர்; “அவர்க்கு ஆவன செய்க” என்று அமைச்சனான வில்லவன் கோதைக்கு நல்லுரை கூறினான்.

சிறைப் பட்டுக் கிடந்த சிறுமையோரை விடுதலை செய்யுமாறு ஆணை இட்டான். மற்றும், “பிறநாட்டு அரசர்கள் வந்து குவிக்கும் திறைப் பொருள் இனித் தேவை இல்லை” என்று கூறித் தவிர்த்தான். மக்களுக்கு வரிகள் விலக்கு அளித்தான். இறை செலுத்துவதிலிருந்து அனை வருக்கும் விலக்கு அளித்து அவர்களைப் பெரு மகிழ்வு கொள்ளச் செய்தான். இப்பணியினை அழும்பில் வேள் என்னும் அமைச்சனிடம் ஒப்புவித்தான்.

கோட்டம் அமைத்தல்

அதன் பின் கண்ணகிக்குக் கோட்டம் அமைத்தான்; கண்ணகி வாழ்வு மூன்று பேருண்மைகளை விளக்கிக் காட்டியது. அவள் கற்பின் பெருமைக்குக் காரணம் அவள் வளர்ப்பு முறை; அவள் பிறந்த நாட்டின் பின்புலம்; கற்பு சிறப்பதற்கு அரசு நன்கு அமைந்து இருந்தது; கண்ணகி தன் கற்பின் திறத்தால் சோழ அரசன் நல்லாட்சியை உலகுக்கு அறிவிக்க இயன்றது; இது ஒன்று.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்ற பேருண்மையைப் பாண்டிய நாட்டில் உலகுக்கு உணர்த்தி னாள். அவனுக்குப் பெருமை சேர்த்தாள். அவன் தவறு உணர்ந்து உயிர்விட்டான். அவன் புகழுக்கு உரியவன் ஆயினான்; அவன் மானத்தைத் தூண்டிவிட்டு அவனை மாண்புறச் செய்தாள். கண்ணகியின் செயல் நீதியை நிலைநாட்ட உதவியது; பாண்டியனுக்குப் பெருமை தேடித் தந்தது; அதனால் பாண்டிய நாடு பெருமை பெற்றது.

அடுத்தது சேர நாட்டை அடைந்து அரிய செயலைச் செய்ய அவள் தூண்டியவள் ஆயினாள்; வஞ்சினம் கொண்டு வாள் ஏந்திய மன்னன் வெஞ்சினத்தால் வடவரை எதிர்த்துத் தன் புகழை நிலை நாட்டி வீரச் செயல் முடித்தான் சேர அரசனின் மானம் மிக்க செயலைத் தூண்டி அவன் வீரச் சிறப்பை உலகறியச் செய்தவளும் கண்ணகி ஆவாள். எனவே கண்ணகி தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்தவள் ஆயினாள் என்று அவள் பெருமையைச் சேரன் பாராட்டினான்.

மதுரை மூதுரை எரியழலுக்கு இரையாக்கினாள்; சீற்றம் கொண்டு மதுரையை அழித்துவிட்டுச் சேர நாடு சேர்ந்த நங்கை அவள் போற்றுதற்கு உரியவள் என்று பேசிச் சிறப்பித்தான்.

அவளுக்குச் சிற்ப நூல் வல்லவரைக் கொண்டு கோயில் கட்டுவித்தான். சோதிடர்களைக் கொண்டு நாள் நியமித்தான்; அந்தணர்களைக் கொண்டு சடங்குகள் இயற்றிப் பத்தினிக் கோயில் அமைத்து முடித்தான். அதனை அடுத்துக் கண்ணகியின் படிமத்தை நிறுவி வழி பாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்வித்தான்.

வழிபாடுகள்

இமயத்தின் உச்சியில் உள்ள தெய்வமாகிய சிவனை வழிபட்டுப் பின் விழா எடுத்தான். தெய்வப் படிமத்துக்குப் பொன்னணி பூட்டினான். பூக்களைத் தூவி வழிபாடு செய் வித்தான். காவல் தெய்வங்களைக் கோயில் கடைவாயிலில் நிறுத்தினான். இதற்குக் காப்புக் கட்டுதல்” என்று கூறுவர். இது தொடக்க நிகழ்ச்சியாக அமைந்தது. அதன்பின் வேள்விகளும், விழாக்களும் நாள்தொறும் நடைபெற வழிவகைகளை வகுத்தான். “தெய்வ வழிபாடு தொடர்ந்து செய்வீராக” என்று செங்குட்டுவன் அறிவுறுத்தினான். பத்தினிச் சிலையை அங்கே நிறுவி அதனைக் கடவுளாக ஏற்றுப் போற்றி விழாக்கள் நடத்தினான். கோயிலில் கண்ணகி சிலை இடம் பெற்றது. கல்லை நிறுவிக் கடவுள் ஆக்கிக் கோயில் தெய்வமாகக் கண்ணகியை நிறுத்தினான்.

29. தேவந்தியும் பிறரும் வருதல்

(வாழ்த்துக் காதை)

தேவந்தி வருகை

கண்ணகியின் விழாவில் அவள் தோழியாகிய தேவந்தி வந்து கலந்து கொண்டாள். அவளுடன் கண்ணகி யை வளர்த்த காவற் பெண்டும், அவள் மகளும் வந்திருந் தனர். மதுரையில் இருந்து இவர்களுடன் மாதரி மகள் ஐயையும் வந்து சேர்ந்தனள், அவரவர் தம் உறவினை உரைத்து அவர்கள் ஒவ்வொருவரும் செய்திகளை விளம்பினர்.

தேவந்தி சோழ நாட்டில் கண்ணகியின் தாயும், கோவலன் தாயும் உயிர் துறந்தமையைச் செப்பினாள். காவற் பெண்டு ஆகிய செவிலித்தாய் மாசாத்துவான் துறவைப் பற்றியும், மாநாய்கன் துறவைப்பற்றியும் உரைத் தாள். செவிலியின் மகள் ஆகிய அடித்தோழி மாதவியும் மணிமேகலையும் துறவிகள் ஆயினமையைச் செப்பினாள்.

மற்றும் தேவந்தி ஐயையைச் சுட்டிக் காட்டி அவள் மணம் பெற்றில்லாத அவலத்தைக் கூறினாள். கண்ணகி யின் வீழ்ச்சியால் மற்றவர்கள் அடைந்த தாழ்ச்சிகளை இவர்கள் எடுத்துச் சொல்லி ஆற்றினர்; தான் உடன் பழகிய இப்பண்டையோர் அங்கு வந்து மண்டியவராய்ச் சோகக் கதைகளைச் சொல்லி அழுதனர்; வாய்விட்டு அரற்றினர்.

தெய்வக் காட்சி

கண்ணகி தெய்வக் காட்சி நல்கி வானத்தில் இருந்து தோற்றம் அளித்தாள். பொன் ஒளிர் மேனியளாக மின்னல் போல் அவர்களுக்கு வானத்தில் காட்சி அளித்தாள். அதனைக் கண்டு சேரன் செங்குட்டுவன் பெருவியப்பு அடைந்தான். “என்னே இஃது, மின்னல் கொடிபோன்று ஒரு காட்சி தோற்றுகிறதே” என்று வியந்தான். பொற் சிலம்பும், மேகலையும், வளையல்களும், வயிரப் பொன் தோடும் அணிந்த பெண் உரு அவனுக்குக் காட்சி அளித்தது.

கடவுள் நிலை அடைந்த கண்ணகி புதிய வார்த்தைகள் பேசினாள். மானிட நிலையில் இருந்தவள் பாண்டியனைத் “தேரா மன்னன்” என்று சாடியவள் மனம் மாறி “அவன் தீதிலன்” என்றாள்; அதுமட்டுமன்று. “நான் அவன் தன் மகள்” என்று உறவும் கொண்டு அவனை மதித்துப் பேசினாள். மானிடப் பார்வை வேறு; கடவுள் நிலைவேறு என்பதைக் காட்டினாள். தவறுகளை மன்னிப்பதுதான் தெய்வநிலை என்பதை உணர்த்தினாள்.

“தென்னவன் தீதிலன்; தேவர் உலகில் அவன் வரவேற்கப்பட்டுள்ளான்; அவர்கட்கு நல்விருந்து ஆயினான்; யான் அவன் மகளாகிவிட்டேன். முருகனின் குன்று ஆகிய இந் நெடுவேள் குன்றில் வந்து விளை யாடுவேன்; இதனை விட்டு அகலமாட்டேன்; என்னோடு தோழியர்களே வந்து கலந்து கொள்ளுங்கள்; அனைவரும் வருக” என்று அழைத்தாள்.

வாழ்த்துரைகள்

வஞ்சி மகளிர் வந்து கூடினர்; “தென்னவனைச் செஞ்சிலம்பால் வென்ற சேயிழையை நாம் பாடுவோம்; அப் பைந்தொடிப் பாவையைப் பாடுவோம்; வருக என்று அழைத்தனர். பாண்டியன் மகளாகிவிட்ட கண்ணகியை நாம் பாடுவோம்.” என்று அழைத்தனர்.

“சேரன் மகள் என்று நாம் அவளைச் செப்பினோம்; ஆனால் அவள் தன்னைப் பாண்டியன் மகள் என்று பேசுகிறாள். அவள் பாண்டியனை வாழ்த்தட்டும். நாம் சேரனை வாழ்த்துவோம்” என்று இவ்வஞ்சி நாட்டு இளம் பெண்கள் வாழ்த்தத் தொடங்கினர்.

அவர்கள் சோழனையும், பாண்டியனையும், சேரனையும் அவர்கள் சிறப்புகளைக் கூறி வாழ்த்தினர். “பழிதுடைப்பதற்காக உயிரைத் தந்தான் பாண்டியன்; பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் சமைக்க வடநாடு சென்றான் சேர அரசன் கண்ணகி பிறந்த நகர் புகார் நகர், அதன் அரசனாகிய சோழன் அந்நாட்டுக்கு அரசன், அதனால் அவனை வாழ்த்துவோம்” என்று மூவர் தம் சிறப்புகளைச் செப்பி வாழ்த்துக் கூறினர்.

சேர நாட்டு இளம் பெண்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் அக்கோயில் முன் முழங்கின. அம்மானைப் பாட்டில் சோழர் தம் சிறப்பையும், கந்துக வரியில் பாண்டியனின் பெருமையையும், ஊசல் வரியில் சேரனின் வெற்றிகளையும் சிறப்பித்துப் பாடினர். வள்ளைப் பாட்டில் மூவர்தம் உயர்வுகளையும் வரிசைப் படுத்திக் கூறினர்.

அம்மானைப் பாட்டு என்பது வினா ஒன்று தொடுத்து அதற்கு விடை தருவது போல அமைந்த பாடல் ஆகும்.

“விண்ணவர்க்காக அசுரர்களை எதிர்த்து அவர்கள் எயில்கள் மூன்றனையும் அழித்தவன் சோழன் ஆவான். மற்றும் புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைத் தந்தவனும் ஒரு சோழன் தான்; பசுவின் துயர் கண்டு தன் மகனைத் தேர்க்காலில் மடிவித்தவனும் ஒரு சோழன்தான்; இமயமலையில் புலிக் கொடியைப் பொறித்தவனும் மற்றொரு சோழன் ஆவான்” என்றனர்.

கந்துக வரியில், “தென்னவன் வாழ்க” என்று கூறிப் பந்தடித்து ஆடுவதாகப் பாடினர். ஊசல் வரிப் பாடியவர் கள் சேரனின் வெற்றிச் சிறப்புகளைப் பேசிப் பாராட்டினர். “கடம்பு எறிந்த காவலன் சேரனின் முன்னவன் ஒருவன்; அவன் வெற்றிச் சிறப்பைப் பாடினர். மற்றொரு சேரன் பாரதப் போரில் இருதிறத்தவர்க்கும் சோறு வடித்துக் கொட்டி அவர்கள் பசியைப் போக்கினான்; இவர்கள் செங்குட்டுவனின் முன்னோர் ஆவார்.”

“யவனர்தம் நாட்டைக் கொண்டதோடு இமயத்தில் வில்பொறித்தவனும் இவன் முன்னோன் ஆவான்; மற்றும் தென்குமரியையும் தம்குடைக் கீழ்க் கொண்டவனும் சேர அரசருள் ஒருவனாவான்; வில், கயல், புலி இவற்றிற்குப் பெருமை தேடித் தந்த தமிழ் மன்னன் சேரன் செங் குட்டுவன்; அவன் திறம் பாடுவோம்” என்று சிறப்பித்துக் கூறினர்.

வள்ளைப் பாட்டில் மூவர் திறமும் செப்பித் தமிழகம் ஒன்று என்ற எண்ணத்தை அறிவித்தனர். உலக்கை கொண்டு முத்துகளைக் குற்றுவாராயினர்; தீங்கரும்பை நல்லுலக் கையாகக் கொண்டு காஞ்சி மரத்தின் நிழலில் புகார் மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறி சோழனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இவ்வாறே பவழ உலக்கை கொண்டு மதுரை மகளிர் குற்றுவார் என்று கூறிப் பாண்டியனின் மீன் கொடியைச் சிறப்பித்துப் பாடினர்; சந்தன உரலில் பெய்து யானை தந்தம் கொண்டு வஞ்சி மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறிக் கடலில் எறிந்த சேரனின் வெற்றிச் சிறப்பினைப் பாடினர். மூவரையும் ஒரு சேரப் பாடித் தமிழகத்தின் மூவேந்தரைச் சிறப்பித்துப் பாடினர். நீள்நில மன்னர்கள் சேரனைத் தொழுது போற்றினர். இறுதியில் “செங்குட்டுவன் நீடுழி வாழ்க” என்று கண்ணகி வாழ்த்தினாள்.

30. வரம் தருதல்

(வரந்தரு காதை)

செங்குட்டுவன் வினவுதல்

வடதிசை மன்னர்களை வணங்கச் செய்த சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வக் காட்சியைக் கண்டு களி மகிழ்வு கொண்டான். அதன்பின் தேவந்தியை நோக்கி மணிமேகலை பற்றிய செய்திகளைக் கூறுமாறு பணித்தான். அடித்தோழி, “மணிமேகலை துறவு பூண்டாள்” என்ற செய்தியை அவள் அரறறி வாய்விட்டுக் கூறியிருந்தாள்; அதை மனத்தில் கொண்டு சேரன் தேவந்தியை நோக்கி அவள் கூறியதாகவே கொண்டு விளக்கத்தைக் கேட்டான். அதனை அங்குள்ளவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவன் நோக்கமாக இருந்தது.

மணிமேகலை துறவு

தேவந்தி இச்செய்தியைக் கூறலுற்றாள். “மாதவி மனநிலை மாறிவிட்டது; அவள் துறவு நிலையை ஏற்று விட்டாள். அந்த நிலையில் அவள் தன் மகளைப் பற்றி என்ன கருதுகின்றாள் என்பதைத் தெரிந்து கொள்ள அவள் தாய் சித்திராபதி விரும்பினாள். பருவம் அடைந்த மங்கை உருவத்தில் கவர்ச்சி மிக்கவள் ஆயினாள். இளைஞர்கள் அவள் பேரழகில் மயங்கிக் கிடந்தனர். அவளைக் கலை உலகில் காண நாடே எதிர்பார்த்து நின்றது. சித்திராபதி அவளை மேடையில் ஆடவைக்க விரும்பினாள். இந்திர விழாவில் கற்றுத் துறை போகிய அந்நங்கை வந்து ஆடுவாள் என்று எதிர்பார்த்தனர்; நாட்டிய ஆசான் காத்துக் கிடந்தான். மணிமேகல்ையின் அடுத்த நிலை யாது? அவள் கோட்பாடு யாது? என்று சித்திராபதி தொடுத்த வினாவுக்கு அவள் தந்த விடை யாருமே எதிர் பார்க்கவில்லை. தன்மகளை “வருக” என்று அழைத்தாள். 'தருக' என்று கூறி அவள் கூந்தலைக் களைந்தாள். அவளை அழகு குறைந்தவளாக ஆக்கிப் புத்த மடத்தில் சேர்த்தாள். அழகு அவளை விட்டு அகன்றது. கலைவாழ்வு கலைக்கப் பட்டது. இது அவள் நிலை” என்று தேவந்தி கூறி விவரித்தாள்.

“இது நாட்டுக்கே பேரிழப்பு ஆகியது; அரசனும் நகரத்து மக்களும் மாணிக்க மணியைக் கடலில் வீழ்த்தி விட்டவர் போன்று கலக்கம் அடைந்தனர். மாணிக்க ஒளி மங்கிவிட்டது. க்லைச்செல்வத்தை இழந்த நிலையில் நாடே துன்பத்துள் ஆழ்ந்துவிட்டது” என்று மேலும் விளக்கினாள்.

“இளமங்கை அவள் தன் எதிர்காலத்தை இழந்தாள். அது பேரிடி யாகியது. அதனால்தான் அடித்தோழி அரற்றினாள். நானும் வருந்தினேன்” என்று கூறித் தன் நிலையையும் எடுத்து உரைத்தாள்.

தேவந்தி வரலாறு

அவ்வாறு கூறிய பின் தேவந்தி தன்பே உணர்வு முத்து தெய்வம் உற்றவளர்கி ஆவேசம் கொண்டு உரை யாடினாள். அவள் மேல் பாசாண்டச் சாத்தன் குடிகொண்டு அவளை ஆட்டுவித்தான். அவன் தேவந்தி மூலமாக வந்து பேசினான்.

அங்கே குழுமி இருந்தவர்களுள் அரட்டன் செட்டி என்பானின் இரட்டைப் பெண்கள் இருவரைச் சுட்டிக் காட்டினாள்; மற்றும் ஆடக மாடத்தில் அறிதுயில் அமர்ந்த திருமாலின் திருக்கோயில் அர்ச்சகன் மகள் ஒருத்தி இருந் தாள். அவளையும் தேவந்தி சுட்டிக்காட்டி இவர்கள் மீது மாடலன் கைக் கமண்டத்தில் உள்ள சுனை நீரைத் தெளித்தால் அவர்கள் தம் பண்டைப் பிறப்பு மன நிலையைப் பெறுவர் என்று அறிவித்தாள்.

அந்தச் சுனைநீர் பாசாண்டச் சாத்தன் மாடலனுக்குத் தந்திருந்தான். மங்கலா தேவியின் கோயில் அருகில் மலை உச்சியில் ஒரு சுனை உள்ளது. அதில் நீராடுவோர் பண்டைப் பிறப்பு அறிகுவர். அந்தச் சுனை நீரை மாடல மறையவனுக்குத் தந்திருந்தான். அதனை அவன் தன் கமண்டலத்தில் வைத்திருந்தான். அதனைச் சுட்டிக் காட்டி இம்மூவர் மீதும் தெளிக்குமாறு தெய்வ முற்றிருந்த தேவந்தி கூறினாள். அவள் மீது பாசாண்டச் சாத்தன் இருந்து இவ்வாறு கூற அதனை ஏற்று மாடலன் தன் கமண்டல நீரை அம்மூவர் மீதும் தெளித்தான்.

அரசனுக்கு இச்செய்தி வியப்பு அளித்தது. அவனுக்கு விளக்கம் தர மாடலன் தேவந்தியின் வரலாற்றைக் கூறினான். “மாலதி என்பவள் தன் மாற்றாள் குழவிக்குப் பால்தர அது விக்கி இறக்கச் சாத்தன் கோயில் முன் சென்று பாடு கிடப்ப அத்தெய்வச் சாத்தன் அருள் செய்தான்.”

“பாசாண்டச் சாத்தன் ஒரு குழந்தை வடிவாக அத் தாயின் முன் சென்று தவழ, அவள் அதை எடுத்துக்கொண்டு போய்ச் சேர்க்க அவன் வளர்ந்து பின் தேவந்தியை மணந்தான். எட்டு ஆண்டுகள் அவளோடு இருந்து வாழ்க்கை நடத்திய பின் தன் தெய்வ உருவை அவளுக்குக் காட்டிக் கோயிலுள் சென்று மறைந்துவிட்டான்.”

“அந்தச் சாத்தன்தான் மாடலனிடம் மங்கலாதேவி கோயிலின் முன் சென்று இருந்தபோது அந்தண வடிவத்தில் வந்து இந்த நீர்க் கமண்டலத்தைத் தந்து சென்றான்” என்ற செய்தியை விளக்கினான். அந்த நீரின் இயல்பையும் விளக்கிக் கூறிச் சென்றதாகவும் கூறினான். “அவன்தான் இன்று இந்தப் பார்ப்பணியாகிய தேவந்திமேல் தோன்றி இச்செய்தியைக் கூறினான்” என்று மேலும் விளக்கினான்.

பழம் பிறப்பு அறிவித்தல்

நீரைத் தெளித்துக் காண்போம் என்று தெரிவித்து விட்டு அந்த மூன்று பெண்களின் மீதும் கரகத்தில் இருந்த சுனை நீரை மாடலன் தெளித்தான்.

பழம் பிறப்பு உணர்வு பெற்ற அரட்டன் செட்டி மகளிருள் ஒருத்தி கண்ணகியின் தாயாக இருந்து தன்துயரை வெளிப்படுத்தினாள். காதலன் தன்னொடும் சென்று கடுந்துயர் உழந்ததற்கு வருத்தம் தெரிவித்தாள். அடுத்தவள் கோவலனின் தாய் நிலையில் இருந்து தன் துயரை வெளிப்படுத்தினாள். “இலங்கிழை நங்கை தன்னோடு இடையிருளில் தனித்துயர் உழந்து சென்றாய், அதனை நினைத்துப் புலம்புகின்றேன்; என் மகனே வருக!” என்று அழுது புலம்பினாள்.

மாதரி கோயில் அர்ச்சகரின் மகளாகப் பிறந்திருந்தாள். அவள் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள். “வைகை நதியில் நீராடச் சென்றிருந்தேன்; வந்து விசாரித்தேன்; வீட்டில் உன்னைக் காணேன் எங்கு ஒளித்தாய்? அருமை ஐயா! இளையவனே! நீ எங்கே?” என்று கூறி வாய்விட்டு அழுதாள். இளம் சிறுமிகள் முதியவர்களைப் போல் கதறி அழுதது வியப்பைத் தந்தது; அங்கிருந்தவரைக் கலங்கச் செய்தது. இருவர் செட்டி மகளிர் ஆயினர். ஒருத்தி மட்டும் அந்தணன் செல்வியாயினள்; இது ஏன் என்ற ஐயம் அரசனுக்குத் தோன்றியது; அங்கு இருந்த ஏனையவர்க்கும் அது புதிராக இருந்தது.

மாடலன் அதற்குக் காரணமும் விளக்கமும் தந்தான். “கண்ணகி தாயும், கோவலன் தாயும் எந்தத் தனி அறமும் சிறப்பாகச் செய்திலர்; மாதரி தெய்வ வழிபாடு கொண்டவள்; கண்ணனை வழிபட்டாள். கோயில் பூசை களைத் தொடர்ந்து செய்து வந்தாள். அதனால் அவள் உயர் வகுப்பில் பிறந்தாள்” என்று கூறி விளக்கினான். கோயில் அர்ச்சக சாதியில் மாதரி பிறந்தது அவள் செய்த நற்கருமமே என்று விளக்கினான். தாயர் இருவரும் பாசத்தால் பிணிப் புண்டனர். ஆதலின் கண்ணகிக்குக் கோயில் எழுப்பிக்கும் சேர நாட்டில் இவ் இருவரும் வந்து பிறந்தனர்; அதே பாசம்தான் மாதரியும் கோயில் அர்ச்சகன் மகளாகப் பிறந்து அந்த ஊருக்கு வரக் காரணம் ஆகியது; எனினும் அவள் நற்செய்கை செய்தவள் ஆதலின் உயர்குடியில் பிறந்தாள் என்று விளக்கம் கூறினான். அதனால் ஒர் அற உண்மையை அறிவிக்க முற்பட்டான். “நற்செய்கைகளைச் செய்பவர் பொன்னுலகை அடைவர்; பற்றுக் கொண்டவர் அப்பற்றுகளின்படி அவர்கள் வாழ்க்கை அமையும்; நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நன்மைகளும் தீமைகளும் அடைவர். பிறப்புகள் மாறி மாறி வரும். இது உலகநெறி” என்று அறவிளக்கம் அறிவித்தான்.

“செங்குட்டுவன் சிவன் அருளால் மன்னவனாகப் பிறந்தவன், அறம் செழிக்க ஆட்சி செய்தவன்; அதனால் அவன் உயர் நிலைகளைப் பெறுகிறான்; இனியும் பெறுவான்” என்று வாழ்த்துக் கூறினான்.

தெய்வ வாக்கு

அதன்பின் கோயில் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கச் சேரன் செங்குட்டுவன் வழிவகைகளை வகுத்துத் தந்தான்; “பூவும், புனைவும், நறுமணப் புகை ஊட்டுதலும் செய்க” என்று தேவந்தியை நியமித்தான். கோயிலை மும்முறை வலம் வந்து வணங்கி வழிபாடு செய்து பிற செயல்களில் மனம் செலுத்தினான்.

சிறையிலிருந்து விடுபட்ட ஆரிய அரசர்கள் ஆகிய கனக விசயரும், ஏனைய சிறைக் கைதிகளும் வந்திருந்து தெய்வ வழிபாடு செய்தனர். கண்ணகித் தெய்வத்தை வணங்கித் தெய்வ அருள் பெற்றவராகி அவரவர்தம் நாடும் நகரும் போய்ச் சேர்ந்தனர்.

இந்த விழாவுக்கு ஏனைய அரசர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் குடகு நாட்டுக் கொங்கர், மாளுவ அரசர், இலங்கை அரசன் கயவாகு ஆவர். அவர்கள் கண்ணகித் தெய்வத்தைத் தம் நாட்டில் இமய வரம்பன் ஆகிய செங்குட்டுவன் நடத்தும் வழிபாட்டு விழாக்களில் வந்து இருந்து அருள் செய்தது போலத் தம் நாட்டில் நடத்த இருக்கும் விழாக்களிலும் வந்திருந்து அருள் செய்யுமாறு தெய்வத்தை வேண்டினர். “தந்தேன் வரம்” என்று வான்குரல் ஒன்று எழுந்தது; கண்ணகியின் வாக்கை அவர்களைக் கேட்க வைத்தது.

இக்குரல் ஒலியைக் கேட்ட சேர அரசனும், ஏனைய அரசர்களும் தத்தம் படைத்திரளோடு இருந்து கண்ணகித் தெய்வத்தை ஏத்தி வழிபட்டு மன நிறைவோடு தெய்வ விடு கண்டவர் போல் விம்மிதம் எய்தினர். அரசர்கள் சேரனை அரசனை வணங்கிப் போற்றினர்.

சேரனும் முன் மாடலன் தெரிவித்தபடி அவனுடன் சேர்ந்து வேள்விச் சாலை நோக்கிச் சென்றான்; வேள்வி முடித்து அதன் பயனைக் காண்பது என்பது அவன் குறிக் கோள் ஆகியது.

இளங்கோவடிகள் வரலாறு

இதனை அடுத்து இளங்கோவடிகளும் பத்தினிக் கடவுள் முன் சென்று நின்றார். அவர் எதிரே தேவந்தி மேல் கண்ணகி வந்து பேசினாள். கண்ணகி இளங்கோவின் இளமை வரலாற்றை எடுத்து இயம்பினாள்.

வஞ்சி முதுாரில் அரச மண்டபத்திடை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் வீற்றிருக்க அங்கு அவன் தாள் நிழலில் இளங்கோ இருந்தார். அவரைப் பார்த்து அங்கிருந்த நிமித்திகன் ஒருவன், “அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு உனக்கு” என்று விளம்ப அவனைக் கோபித்து நோக்கினார் இளங்கோ. செங்குட்டுவன் முத்தவன். ஆட்சி அவனுக்குத் தான் வரவேண்டும். அதற்கு மாறாக அவன் கூறிவிட்டான். அவன் கூற்றைப் பொய்யாக்குவதற்காக வும், சேரனின் சோர்வைப் போக்குவதற்காகவும் துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் மற்றவர்கள் எண்ணிப் பார்க்க இயலாத அளவற்ற பேரின்ப நிலை அடையும் பாதையில் சென்றுவிட்டார். சிந்தை செல்லாச் சேண் நெடுந்துரத்து அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தன் ஆகிவிட்டதாகக் கூறினாள்; நாட்டுக்கு அரசனாக ஆகாமல் பாட்டுக்கு வேந்தனாக மாறினார். உலகு ஆள் கவி வேந்தனாக ஆயினார். இந்தச் செய்தியையும் அந்தக் கடவுள்பத்தினி எடுத்து உரைக்கக் கண்ணகி கதை முடிவு பெறுகிறது.

அறவுரைகள்

இந்தக் கதையைக் கேட்டவர்கள் அறவழியில் வாழ்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும் என்று இளங் கோவடிகள் காப்பியத்தை முடிக்கிறார். அந்த நீதிகள் பின் வருமாறு :

“இடுக்கண் வருங்கால் நடுக்கம் அடையாதீர்;

தெய்வத்தைப் போற்றுவிர்; ஞானிகளை மதிப்பீர்;

பொய்பேசுவதைத் தவிர்ப்பீர்; புறம் கூறுதல் ஒழிப்பீர்;

ஊன் உணவு ஒழிப்பீர்; உயிர்க் கொலை செய்யற்க;

தானம்பல செய்க; தவம்பல ஏற்க;

செய்ந் நன்றி மறவாதீர்; தீயார் நட்பு இகழ்க;

பொய்ச்சான்று கூறாதீர்; மெய்ம்மை விட்டு அகலாதீர்;

அறவோரை அணுகுக; பிறவோரை விலக்குக;

பிறன் மனைவியை நயக்காதீர்; உயிர்களுக்கு ஊறு செய்யாதீர்;

இல்லற வாழ்வு இனியது; ஒழுக்கம் ஒம்புக;

கள், காமம், பொய், பயனற்ற சொற்கள்

இவை தீமை பயக்கும்; இவற்றை நீக்கி வாழ்க;

இளமையும், யாக்கையும், செல்வமும் நில்லா;

உள்ள நாட்களில் உறுதிகளைத் தேடுக;

இதுவே வீட்டு நெறி; பயனுள்ள வாழ்க்கை”

“இந்த அறநெறிகளைப் போற்றிக் காத்து உயர்வு அடைவீராக” என்று வாழ்த்துக் கூறி இளங்கோவடிகள் காவியத்தை முடிக்கின்றார். “இக்காவியம் தரும் உயர் அறங்கள் இவை எனக் கொள்க! நலம் பெறுக” என்ற வாழ்த்தோடு இக்காவியம் முடிவு பெறுகிறது.

* * *

திறனாய்வுக் கட்டுரைகள்

1. கண்ணகி

கண்ணகி இவள் காவியத் தலைவி. மாநாய்கனின் ஒரே மகள். 'ஈகை வான் கொடி அன்னாள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள். 'ஈகை' என்றால் பொன் என்பது பொருளாகும். இவள் ஒளி பெறுகிறாள். இதுவே காவியத்தின் செய்தியும் ஆகிறது.

இவள் வடிவு, திறம் இவை சிறப்பிக்கப்படுகின்றன. திருமகளைப் போன்ற வடிவும், அருந்ததி போன்ற கற்பும் உடையவள் என்று சிறப்பிக்கப்படுகிறாள். மாதரார் தொழுது ஏத்தத் தக்க நற்குணங்கள் நிரம்பியவள் என்றும் கூறப்படுகிறாள்.

“அவளுந்தான்

போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்,

தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய

பெருங்குணத்துக் காதலாள்”

இதில் மூன்று செய்திகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இவள் தெய்வத்தோடு உவமிக்கப்படுகின்றாள். மற்றொன்று இவள் கற்பின் திறம்; மூன்றாவது இவள் நற்குணங்கள்; இந்த மூன்றுமே கண்ணகியின் குணச் சித்திரங்கள் என்று கூறலாம்.

இவள் தெய்வம் ஆகிறாள் என்பதற்கு முன் அறிவிப்புகள் காவியத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

'திருவினாள் வடிவு' என்பதே இவள் தெய்வம் என்பதற்குத் தொடக்கமாக அமைகிறது.

வேட்டுவ வரியில் சாலினி என்பாள் 'உலகிற்கு ஓங்கிய திருமாமணி' என்ற தொடரில் இவள் தெய்வம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்.

கவுந்தி அடிகள் 'கற்புடைத் தெய்வம்' என்ற தொடரில் மாதரிக்கு அறிமுகம் செய்கிறாள்.

'கற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்' என்று கூறக் காண்கிறோம். இவள் தெய்வம் ஆவதற்கு வேண்டிய தகுதிகள் உள்ளன என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

இடையர் சேரியில் மாதரி இவளைத் தெய்வக் காட்சியில் வைத்துக் காண்கிறாள்.

'தொழுனை ஆற்றினுள் தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்'

என்று கூறி இவளை நப்பின்னையோடு உவமிக்கிறாள். இதுவும் தெய்வக் காட்சி என்று கொள்ளலாம்.

குன்றக் குறவர்கள் வேலனை வழிபட்டவர்கள்; இவளைத் தெய்வமாகக் கொள்கின்றனர்.

“இவள் போலும் நங் குலக்கு ஒர் இருந் தெய்வம் இல்லை”

என்று கூறி வழிபடுகின்றனர்.

மதுரையில் கண்ணகி ஆற்றாது அழுகின்றாள். அவளைக் கண்டு மதுரை மக்கள் இவளைப் 'புதிய தெய்வம்' என்று கூறக் காண்கிறோம்.

“செம்பொற் சிலம்பு ஒன்று

கையேந்தி நம் பொருட்டால்

வம்பப் பெருந்தெய்வம் வந்தது இதுவென் கொல்”

என்று அவள் தெய்வத் தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

சேரன் செங்குட்டுவன் மனைவி அவள்தான் இவளை நன்கு அறிந்தவளாகக் காட்டிக் கொள்கிறாள்.

“அத்திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று கூறியவள் சேரமா தேவிதான்; மாதரார் தொழுது ஏத்தும் நிலையை இங்குக் காண முடிகிறது.

எனவே கண்ணகி கற்புடைத் தெய்வம்” என்று அடிகள் கூறியது செயலுக்கு வந்து சேர்கிறது. சேர நாட்டில் அவளுக்குக் கோயில் அமைக்கப்படுகிறது. உலகிற்கு ஓங்கிய திருமாமணியாகிறாள்.

அடுத்தது அவள் கற்பின் திறம்; இதைச் சித்திரிப்பதே காவியத்தின் பொருள் ஆகிறது.

“வடமீனின் திறம் இவள் திறம்” என்று மாதரார் தொழுது ஏத்துகின்றனர். மணமேடையில் கண்ணகியைத் தீ வலம் செய்விக்கிறான் கோவலன். அங்கே “சாலி ஒரு மீன் தகையாள் என்று அவள் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறாள்.

மீண்டும் அதே செய்தியை வற்புறுத்தக் காண்கிறோம்.

“அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை

மங்கல நல்லமளி ஏற்றினார்”

என்று கூறுவார் ஆசிரியர்.

இவள் கற்பின் திறம் வெளிப்படும் சூழ்நிலைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

தேவந்தி இவளைத் தெய்வத்தை வழிபடும்படி கூறுகிறாள். “சோம குண்டம் சூரிய குண்டம் இத்துறை களில் முழுகி எழுந்து காமனை வழிபட்டால் கணவனை அடைந்து இன்புறுவர்” என்று கூறுகிறாள்.

'பீடு அன்று' என்று கூறுகிறாள் கண்ணகி, கணவனை வழிபடுகின்றவள் காமனை வழிபட அவள் நினைக்க வில்லை. 'தெய்வம் தொழாள்' என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறாள். அது மட்டுமன்று; இன்பம் அவள் குறிக்கோள் அன்று. 'இன்புறுவர்' என்று கூறுகிறாள் தேவந்தி. இல்வாழ்வுக்கு இன்பம் அடிப்படையன்று; அன்பு தான் அடிப்படை என்பதை அறிவித்துவிடுகிறாள். 'பீடு அன்று' என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியிருக்கக் காண்கின்றோம்.

அவள் கற்பின் திறத்துக்கு மற்றும் ஓர் எடுத்துக் காட்டுச் சிறப்பாக அமைந்துள்ளது.

கோவலன் உண்டு இனிது இருந்து அவள் செயலை வியக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் வருந்தினார்கள் என்று கூறினாளே தவிரத் தான் வருந்தியதாகக் கூறவில்லை. அவர்கள் வருந்தும்படி போற்றா ஒழுக்கம் புரிந்தான் என்றுதான் கூறுகிறாள்.

அவன் செயல் அவள் மனத்தில் எந்தச் சலனமும் ஏற்படுத்த வில்லை; அவனை அவள் வெறுக்கவே இல்லை. “யாவதும் மாற்றா வாழ்க்கையேன்” என்று கூறுவது அவள் கற்பின் திறத்தைக் காட்டுவதாகும்.

சோழ நாட்டுக் கற்புடைப் பெண்டிர் பொற்புறு செயல்களைக் கூறித் தன்னை ஒரு பத்தினி என்று தன் வாயால் வெளிப்படுத்துகிறாள். இது அவள் தன் ஆற்றலை அறிந்து செயல்படும் திறனாகிறது.

வசதி மிக்க வாழ்க்கையைவிட்டு அசதிமிக்க வழிப் பயணத்தை மேற்கொண்டதை வியக்கின்றான். அவள் நற்குணத்தை அவன் அறிந்து கூறுகிறான்.

“குடிமுதற் சுற்றமும் குற்றிளையோரும்

அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்

பேணிய கற்பும் பெருந்துணையாக

என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே கொடியே புனைபூங்கோதாய்”

என்று அவள் செயலைக் கூறுகிறான்.

அவள் கற்பின் திறத்தைத் தொடர்ந்து எடுத்துக் கூறுகிறான்.

“நாணின் பாவாய் நீணில விளக்கே

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி”

என்று அவள் திறத்தைக் கூறுகிறான்.

இனி மூன்றாவதாக அவளை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்தும் போது கூறிய செய்தி அவள் “பெருங் குணத்துக் காதலாள்” என்பது அவள் அருங்குணங்களுள் சில எடுத்துக் கூற முடிகிறது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

என்பர் வள்ளுவர்.

இல்வாழ்க்கையின் குறிக்கோள் இன்பம் என்று அவர் குறிப்பிடவே இல்லை. இந்த இரண்டு பண்புகளும் கண்ணகிபால் தலையோங்கி நிற்கின்றன.

இன்பக் களிப்பில் கோவலன் இன்னுரைகள் பல பேசுகிறான்; பாராட்டுகிறான். அவள் வாய் திறந்து ஒரு சொல்கூடக் கூறியவள் அல்லள். இன்பத்தில் அவள் மகிழ்ச்சியைக் காட்டவே இல்லை. அவள் அன்பு அவள் செயல்களில் வெளிப்படுகின்றது.

'இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்று கூறக் கேட்ட அளவில் 'சிலம்புஉள கொள்ளும்' என்று விரும்பிக் கொடுக்கிறாள். மற்றும் அவன் 'எழுக' என்றதும் உடன் புறப்பட்டுச் செல்கிறாள். அவனுக்கு வழித் துணையாக இருந்து பணி செய்கிறாள். அவனுக்கு இன்.அமுது படைத்து அருகிருந்து பரிமாறும் நிலையில் அவள் அன்பு வெளிப் படுகிறது.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே கொடியே புனைபூங் கோதாய்”

என்று பாராட்டுகிறான். அவன் துயரை அவள் களைவதை அறிந்து சுட்டிக் காட்டுகிறான்.

இதே கருத்தைக் கவுந்தியடிகளும் கூறக் காண் கிறோம்.

“கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு

நடுங்குதுயர் எய்தி நாப்புலர வாடித்

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி”-

மற்றும் இதே கருத்தை மாதரியும் கூறக் காண்கிறோம்.

‘தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை

விழுமம் தீர்த்த விளக்குக் கொல்’

எனக் கூறி வியப்பு உறுகிறாள்.

இவள் இல்வாழ்க்கையில் அறத்தைக் கடைப் பிடித்தவள் என்பது அவள் கோவலனுக்குத் தரும் விடையில் வெளிப்படுகிறது.

‘அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை’

என்று தன் நிலைமையை எடுத்துக் கூறுகிறாள்.

அறவாழ்க்கை இழந்தமைக்குத்தான் அவள் வருந்தி இருக்கிறாள். இன்ப இழப்பைப்பற்றி அவள் எங்கும் எப்பொழுதும் பேசவே இல்லை. அவள் வாழ்க்கையின் பண்பு அன்பும், அறமும் என்பதைச் சுட்டிகாட்டி வாழ்ந்தவள் என்பது தெரிகிறது.

வள்ளுவர் 'பெண்' அவள் நற்குண நற்செயல்களைத் தொகைப்படுத்திக் கூறுகிறார்.

‘தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்பர்.

நாணமும் மடமும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாக வாழ்ந்தமை அவள் தற்காத்தலுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தன் துயர் காணாமல் அவனைப் பேணிக் காத்தமை அவள் செயல்களால் விளங்குகிறது.

தகைசான்ற சொல் காத்தது அதுதான் அவள் செயற்கு அரிய செயல் ஆகிறது. தன் கணவனுக்கு ஏற்பட்ட பழிச் சொல்லைப் போக்க அவள் சீறி எழுந்து வழக்கு ஆடுகிறாள்; அவனுக்கு ஏற்பட்ட பழியைப் போக்க அவள் செயல்படுகிறாள்; ஏன் மதுரையையே எரிக்கிறாள்.

மற்றைய மகளிரைப் போல் இணைந்து ஏங்கி அழாமல் ஊர் முழுவதும் தன் வழக்கை எடுத்துக் கூறுகிறாள்; அரசனிடம் சொல்லாடுகிறாள்; சோர்வு இல்லாமல் செயல்படுகிறாள். இது அவள் அடுத்த பண்பு ஆகிறது.

பொருள் இழந்து அவன் வாழ்ந்தபோது அவன் சோர்வைப் போக்கியவள் கண்ணகி. சிலம்பு உள என்று எடுத்துக் கொடுத்தவள்; அவள் துன்பம் கண்டு சோர்ந்தது இல்லை.

சிலம்பு உள கொள்ளும் என்று கூறும்போது நகைமுகம் காட்டுகிறாள். இடுக்கண் வருங்கால் அதனை ஏற்று நகையாடி ஏற்கும் இயல்பு அவளிடம் முழுவதும் காணப்படுகிறது.

“நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்

சிலம்பு உள கொள்ளும்”

எனக் கூறுகிறாள். இது சோர்வின்மைக்கு எடுத்துக்காட்டு ஆகிறது.

வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; நடந்து களைப்பு அடைகிறாள்; 'மதுரை மூதூர் யாது?' என்று வினவுகிறாள். அப்பொழுதும் அவள் சோர்வு காட்டவே இல்லை.

“நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து

முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க

மதுரை மூதூர் யாது?”

என்று வினவுகின்றாள்.

விருந்தினர் ஒம்பும் வாழ்க்கை இழந்த நிலையில் கோவலனின் தந்தை தாய் வந்து வினவியபோதும் அவள் அப்பொழுதும் சிரிக்கவே முயன்று இருக்கிறாள். 'வாயல் முறுவற்கு' அவர் உள்ளகம் வருந்தினர் என்று கூறுகிறாள்.

எந்தப் பெண்ணும் செய்யாத, செய்ய முடியாத புரட்சி செய்தவள் இவள்; இவளை வீரபத்தினி என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

கற்பு என்பது அடக்கம் மட்டும் அன்று, சீற்றமும் கொண்டது எனபதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவள் கண்ணகி,

எனவே இவள் தெய்வக் கற்பு உடையவள் என்பதும், பெருங்குனத்துக் காதலாள் என்பதும் இவள் நற்குண நற் செயல்களால் புலப்படுகின்றன.

காவியத்தில் கண்ணகி பெரும் இடம் சிறப்பு மிக்கது: அவளைச் சுற்றி மூன்று நாடுகளின் சிறப்புகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இதனைச் சேரன் செங்குட்டுவனே அறிந்து தெரிவிக்கிறான்.

“சோழனின் ஆட்சிச் சிறப்பையும், பாண்டியனின் தீது தீர் திறத்தையும், சேரன் செங்குட்டுவனின் வீரச் செயலையும் வெளிப்படுவதற்குக் கண்ணகி காரணமாக இருக்கிறாள்” என்று அறிவிக்கிறாள்.

“தென்தமிழ்ப் பாவை செய்தவக்கொழுந்து

ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி"

என்று கண்ணகியைச் சாலினி கூறுவது முற்றிலும் பொருந்துகிறது.

“பார்தொழுது ஏத்தும் பத்தினி”

என்று செங்குட்டுவன் தன் மதிப்பீட்டைத் தெரிவிக்கின்றான்.

2. மாதவி

இந்தக் கதைக்கு இரு துருவங்கள் என்று பெயர் தந்திருக்கலாம். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பர். அதுபோலப் பெண்ணுக்கு இரு வேறு தன்மைகள் இயல்புகள் என்று கூறலாம். அந்த இரு வேறு தன்மைகளை இரு வேறு படைப்புகளில் காட்டுகிறார் இளங்கோ.

மாதவி உலகுக்காகப் படைக்கப்பட்டவள்; அவள் முடிவு அவள் வீட்டில் அடைபடுகிறாள்; உலகம் அவளைப் போற்றியது, பின் அவளுக்காக இரங்குவார் இல்லாமல் ஒதுக்கப்பட்டு விட்டாள். கண்ணகி வீட்டுக்காகப் படைக்கப்பட்டவள். அவள் உலகத்துக்குப் புது ஒளிகாட்ட உலகமே வழிபடும் தெய்வம் ஆகிறாள். இருவேறு தொடக்கம்; இருவேறு முடிவுகள்; இந்தக் காவியம் இந்த வகையில் இரு துருவங்கள் கொண்டது என்று கூறலாம்.

கண்ணகி மாதவி இருவருக்கும் வயது பன்னிரண்டு தொடக்கம்; பின்பு சிலயாண்டுகள் கழிந்தே கோவலனுக்கு மாதவியின் தொடர்பு ஏற்படுகிறது. எனவே வயது வேறுபாடு இருக்கத்தான் செய்யும் என்பது குறிப்பிடத் தக்கது.

கண்ணகிக்கும் கோவலனுக்கும் தொடர்பு பன்னிரண்டாம் வயது; மாதவிக்கும் கோவலனுக்கும் தொடர்பு அதே வயது.

கண்ணகியின் இளமைப் பருவம் பண்டைக் கதைகளைக் கேட்கும் வாய்ப்புப் பெறுகிறது. கற்புடை மகளிர் கதைகள் அவளுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவளுக்குக் குடும்பப் பெண் என்ற முத்திரை குத்தப் படுகிறது. பெருங்குடி வணிகன் மகள் என்று அடையாளம் காட்டப்படுகிறாள். அவள் படித்த படிப்பு எல்லாம் அறத்துப்பாலின் முற்பகுதி, இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம் இவற்றைப் பற்றி நன்கு கற்றிருக்கிறாள்.

மாதவி பரத சாத்திரம், நாட்டியக் கலைகள், பாடல் கலை இவற்றில் பயிற்சி பெறுகிறாள். ஏழாண்டுகள் இக் கலைகளைக் கற்கிறாள். இவள் உலகமே தனி, கற்பனை உலகில் வாழ்கிறவள். கதைகளுக்கு அபிநயம் பிடிக்கக் கற்றுக் கொண்டவள். இவள் உலகுக்கு இவற்றை எடுத்துச் சொல்ல ஒரு கருவியாகிறாள்.

இவள் கணிகை மகள்; பிறரை மகிழ்வித்தே வாழ வேண்டும் என்ற நியதி அமைகிறது. ஒரு சிலர் உடல் உறவால் மகிழ்விப்பவரும் உளர், அவர்கள் நிலை வேறு; இவள் உயர்நிலையில் வாழ்ந்தவள்.

கலை அவள் கற்றுக் கொண்டது; அதைக் கொண்டு உலகை மகிழ்விக்கும் தொழிலை அவள் ஏற்கிறாள். பண்ணொலிகள் அவளைப் பண்படுத்தி வந்தன. அவள் பேச்சில் அசைவில் இனிமை தவழ்கிறது. அவள் அழகின் தேவதை என்று ஆராதிக்கப்படுகிறாள்.

கண்ணகிக்குச் செல்வம் பெரியோர்கள் ஈட்டி வைத்துள்ளனர். இவளுக்கு அதை ஈட்டும் பொறுப்பும்

சார்கிறது. 'கலை கலைக்காகவே' என்பது அவள் நோக்கமன்று. கலை வாழ்க்கைக்காக என்பது அவள் நோக்கம்; அதனால் பரிசில் பெறுவது, செல்வம் குவிப்பது அவளுக்குத் தேவையாகின்றன.

இளமையில் அழகும் கவர்ச்சியும் இருக்கும்போதே பொருள் ஈட்டிக் குவித்துக் கொள்ள வேண்டும். அது அவள் வாழ்க்கை நிலை.

உழைத்து வாழ்பவர் உழவர்கள்; தொழிலாளர்கள். வணிகர்கள் இதுபோன்றே நேரடி உழைப்பில் ஈடுபடு பவர்கள். தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள். 'அழகுப் பசி' அதற்கு மறுபெயர் 'கலை'; அதனை நிறைவேற்றித் தருபவர்கள் கலைஞர்கள்.

கதைகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் நல்ல கருத்துகளை நாட்டுக்குப் பரப்புபவர்கள் இவர்கள். இவர்களை உலகம் மதிக்கிறது; பாராட்டுகிறது; பரிசும் தருகிறது. ஆனால் அன்பு காட்டி அவர்களை நேசிப்பது இல்லை; அதுதான் அவர்கள் அடையும் தோல்வியும்கூட

கோவலனை இவள் தேடிக் கொள்ளவில்லை. குலுக்கல் முறையில் கிடைத்த பரிசு; அவன் விலை கொடுத்து வாங்குகிறான். அவள் அவனுக்கு அடிமை ஆகிறாள். அவளோடு வாழ்வதற்கு உரிமைப் பதிவு பெறுகிறான். அவனை மகிழ்விப்பது அவள் தொழில் ஆகி விடுகிறது. அதுவே வாழ்க்கையாகவும் மாறி விடுகிறது.

மற்றைய பெண்களைப் போல இவள் கண்ணியமாக வாழ முயல்கிறாள்; தன்னை அணுகுபவனின் அன்பைப் பெற முயல்கிறாள். அதனை அவளால் பெற முடியவில்லை. அதுதான் அவளைப் பற்றிய முடிந்த நிலை.

மற்றைய பெண்களைப் போல மகள் ஒருத்தியைப் பெறுகிறாள். எனினும் அது அங்கீகரிக்கப்படவில்லை. கோவலன் பெற்றோர்கள் வந்து அன்பு காட்டவே இல்லை. பிரிந்து வருந்தியிருந்த நிலையிலும் அவர்கள் வந்து ஆதரவு காட்டவில்லை. அன்பு என்பதைப் பெற முடியாமல் போய்விடுகிறது. வாழ்க்கையில் ஒதுங்க வேண்டி நேர்கிறது. அதற்குத்தான் துறவு என்று பெயர் வழங்கப்பட்டது.

தன் மகளுக்கும் அவளால் ஒரு வாழ்க்கை அமைத்துத் தர முடியவில்லை. கலைகளைக் கற்பித்தாள்; அவற்றைக் கொண்டு உலகை மகிழ்விக்க அவள் விரும்பவில்லை. மகிழ்வைவிட 'அருளறம்' ஒன்று உள்ளது என்பதைக் கண்டு அதற்கு அவளை அர்ப்பணிக்கிறாள்.

காவியத்தில் அவளைச் சித்திராபதியின் மகள் என்று அறிமுகம் செய்யவே இல்லை; பெற்றோரால் அவளுக்குப் பெருமை வாய்க்கவில்லை; அவள் கலைச்செல்வம் பாராட்டப்படுகிறது. அதனால் அவள் ஊர்வசி வழி வந்தவள் என்று அறிமுகம் செய்யப்படுகிறாள்.

தனி மனித வாழ்வில் அவள் மதிக்கப்படவில்லை. ஆனால் பொது வாழ்வில் அரசனால் பாராட்டப்படு கிறாள். நிலத் தெய்வம் வியப்பு எய்துகிறது; நீள நிலத்தோர் மனம் மகிழ்கின்றனர். விஞ்சையரும் இங்கு வந்து அவள் ஆடல் கலையைக் கண்டு மகிழ்கின்றனர். விண்ணவரும் மறைந்து நின்று கண்டு மகிழ்கின்றனர்.

ஒருவனுக்குப் பசி; சோறு போடமுடியும்; வேட்கையையும் தணிவிக்க முடியும். ஆனால் காதற் பசிக்குத் தொடர்ந்து தீனி போடுவது என்பது அரிய செயல்; அவன் அவளிடம் எதிர் பார்ப்பது கவர்ச்சி. எப்பொழுதும் அவள் தன்னைக் கோலமொடு வைத்திருக்க நேர்கிறது.

அவன் அறிவுப் பசிக்கும் அவள் உணவு இட வேண்டியுள்ளது; அதற்கு மறுபெயர் ஊட்ல்; சுவைபடப் பேசுவது. மாறுபட்டு உரையாடுவது, தூண்டிவிடுவது. கிளர்ச்சி பெறச் செய்வது இதற்குத்தான் ஊடல் என்று பெயர் வழங்கினர். அவளால் அவனுக்கு அந்த விழைவினை ஏற்படுத்த முடிந்தது. தேன் உண்ட வண்டு என அவன் அங்கே சுற்றிக் கொண்டு மயங்கிக் கிடக்கிறான். விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்பார் கவிஞர்.

கலவியும் புலவியும் காதலனுக்கு அவள் அளித்து வருகிறாள். சுவைமிக்க வாழ்க்கைதான்; இன்பமே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர்கள் அவர்கள். அதற்குத் தடை ஏற்பட்டதும் முறிந்து விடுகிறது. அந்தத் தடை இங்கு ஏற்பட்டது அவமதிப்பு.

காதல் இன்பத்துக்குத் துணை செய்வது; ஒருவரை ஒருவர் விரும்புவது மட்டுமன்று; ஒருவரை ஒருவர் மதிப்பது. புகழ்ச்சியில் மயங்கிக் கிடந்த கோவலன் அவனால் இகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அச்சத்தின் காரணமாக அவள் சில கருத்துகளை வெளியிட்டு விடுகிறாள். அவன் உறவு நீடிக்குமா என்ற அச்சம் அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும். பொதுவான நிலையில் வைத்து ஆடவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்ற கருத்தைத் தெரிவித்து விடுகிறாள். இவள் பாடிய கானல் வரிப் பாடல்கள் அக் கருத்தை அறிவிக்கின்றன. மனம் முறிகிறது; உறவு அறுகிறது.

அந்த அச்சம் நியாயமானதுதான். அவன் அவளை அமைதிபடுத்துவதற்கு மாறாக அவசரப்பட்டு விடுகிறான். அவள் தன்னை நேசிக்கவில்லை என்று தவறாகக் கருதி விடுகிறான். அவளை விட்டுப் பிரிகிறான்.

உரிமைகள் அதற்காக எழுப்பப்படும் வினாக்கள் உறவுகளை முறித்து விடுகின்றன. கவர்ச்சியால் அவன் ஒன்றுபட்டவன்; அவள் அன்பை அவனால் உணர முடியாமல் போகிறது.

பிரிந்து சென்று விடுகிறான்; அவன்பால் உள்ள நேசத்தால் அவள் முடங்கல் எழுதி அனுப்புகிறாள்; அவன் தனக்குத் தேவை என்பதைத் துணிந்து தெரிவிக்கிறாள். அவனை மகிழ்விக்க அல்ல; தான் மகிழ்வு கொள்ள அவனை அழைக்கிறாள். இது அவன் இயல்புக்கு மாறுபட்ட நிலை. அவள் உணர்வை அவன் மதிக்கவில்லை.

அந்த அன்பை அவனால் விளங்கிக் கொள்ள இயல வில்லை. பிறகு அவள் தனிமைத் துயரில் வாடியதும், அதனால் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கியதும் அறிந்த பிறகு தான் அவள் அன்பின் ஆழத்தை அறிகிறான். அவள் பாசத்தையும் நேசத்தையும் அறிகிறான். அவளுடைய மறுபக்கம் அவனுக்கு விளங்குகிறது. அவள் புறத் தோற்றத்தில் மயங்கியவன் இப்பொழுதுதான் அவள் மன இயல்பை அறிகிறான். அவள் தீதிலள்; தான் தீது உடையவன் என்று அறிவிக்கிறான்.

அவளுக்குத் தான் இழைத்த சிறுமைகளை உணர் கிறான். இதுவரை அவன் கண்ணகிக்குத்தான் தீங்கு இழைத்ததாகக் கருதி வந்தான். கோசிகன் கொண்டு வந்த கடிதம் படித்ததும் மாதவியின் அக அழகை அவனால் அறிய முடிகிறது. அவளையும் தான் வருத்தத்தில் ஆழ்த்தி விட்டதை அறிகிறான்.

அந்த முடங்கலில் அவன் பிரிவால் தான் அடைந்த தனிமையைப் பற்றியோ, துயரத்தைப் பற்றியோ கூறாமல் தன்னால் கண்ணகிக்கு நேர்ந்த கடுமையைப் பற்றியும், அவன் பெற்றோர்களுக்கு உற்ற துன்பத்தைப் பற்றியுமே எழுதி இருக்கிறாள். அவள் பெருமை அதனால் அவனுக்கு விளங்குகிறது . அவளும் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி என்பதை அறிகிறான்.

பெண்கள் சூழ்நிலையில் அவர்கள் வேறுபட்டவர்களாகக் காணப்படலாம். நெஞ்சு அலைகளில் பண்பில் வேறுபாடு அற்றவர்கள்; மதிக்கத் தக்கவர்கள். அன்பின் உறைவிடம் என்பதை அவன் அறிகிறான்.

கண்ணகிக்கு நிகராக இவளும் மதிக்கத்தக்கவள் ஆகிறாள். சூழ்நிலைகள் அவர்கள் செயல்களில் மாற்றம் விளைவித்தன என்பதை அறிய முடிகிறது.

காதலித்து ஒருவனைக் கைப்பிடித்து அவனோடு கருத்து ஒத்து அவன் அன்பினைப் பெற்று மனநிறைவு பெற விரும்பினாள். அவள் அவனைக் காதலித்தாள். அவன் அவளைக காதலிக்கவில்லை . அது அவன் செய்த தவறு என்று சுட்டிக் காட்ட முன் வரவவில்லை. உண்மையில் அவன்தான் தவறு உடையவன் என்பது மறுக்க முடியாத ஒன்று.

ஒருவனோடு ஒருத்தியாக வாழ முயன்றாள்; அந்த உரிமைக்கு உறவாடினாள். அவள் தூக்கி எறியப்பட்டாள்.

அம்மியே கடுங்காற்றில் பறக்கும்போது குழவியைப் பற்றி யார் கவலைப்பட இருக்கிறார்கள்? சமய போதனைகள் அவளுக்குக் கைகொடுக்கின்றன. அருளறத்தில் அவள் அமைதி காண்கிறாள். தன் மகளைப் புதிய பாதையில் திருப்பிவிடுகிறாள். நோய்க்கு அவள் கண்ட மருந்து அது.

3. கோவலன்

கோவலன் கதாநாயகன் அல்லன்; அவன் கண்ணகியின் கணவன். அவன் கொலை செய்யப்படுவது காவியத்தின் மையச் செய்தியாகிறது. இந்தக் காவியத்தில் அவன் அரிய செயல்கள் எதுவுமே ஆற்றவில்லை. காவியத் தலைவர்கள் ஆற்றும் போர்கள் வீர வசனம் இவற்றில் எதுவுமே அவனுக்கு அமையவில்லை.

செல்வ மகன் அவன் சீரழிவு அதுதான் கதையின் கருவாகிறது. அவனைப் பற்றிய அறிமுகம் அவன் புகழ் மிக்கவன் என்பது; புகழ் உடையவன் என்று கூறுவது அவன் செல்வ நிலையை ஒட்டிக் கூறப்படுகிறது. அழகன் என்பது அவன் மாதவி விரும்புவதற்குக் காரணம் என்பதாக வெளிப்படுகிறது. பேரழகன் என்றும் கூற முடியாது. பெண்கள் இவனைப் புகழ்ந்திருக்கின்றனர். இவன் அழகில் மாதவி மயங்கிக் காதலித்தாள் என்று எங்கும் கூறப்பட வில்லை. அதேபோலக் கண்ணகியும் இவனைக் கண்டு காதலித்தாள் என்று தெரிவிக்கப்படவில்லை.

'காதலன்' என்ற சொல் இவனைப் பல இடங்களில் குறிக்கின்றது. மாதவிக்கு இவன் காதலன், கண்ணகிக்கு இவன் கணவன்; இது உறவுமுறை என்று கூறலாம்.

இவன் புகழ் வெளிப்படுவதற்குக் கள்வியத்தில் நேரிடை எந்த நிகழ்ச்சியும் இடம் பெறவில்லை. புகழ் என்பது வீரம் அல்லது கொடை இந்த அடிப்படையில்தான் அமைவது 'ஈதல் இசைபட வாழ்தல்' என்பர் வள்ளுவர்.

இவன் கொடைத் திறம் மாடலனால் விரித்து உரைக்கப்படுகிறது. மணிமேகலைக்குப் பெயரிட்ட நாளில் அந்தணன் தானம் பெற வருகிறான். அவனை யானை ஒன்று தூக்கிச் செல்கிறது. அதனோடு மோதி அவனை மீட்கிறான். 'கருணை மறவன்' என்று பாராட்டப்படுகிறான். அவனுக்கு வேண்டிய தானமும் தருகின்றான். யானையிட மிருந்து மீட்டது வீரம் என்று கூறமுடியாது. மறச் செயல் என்றுதான் கூறப்படும்.துணிந்து ஆற்றும் வலிமைச் செயல்: அதனால் அது மறம் எனக் கூறப்படுகிறது. உயிரைத் துணிந்து தர முற்படுகிறான்; எனவே இதுவும் கொடைத் திறத்தின்பால் படும் என்று கூறலாம்.

மற்றும் பொய்க்கரி புகன்றவனை மீட்கச் சதுக்க பூதத்தின் பாசத்தில் அகப்படத் தன்னை அளிக்க முன் வருகிறான்; இதுவும் கொடைத் திறம் என்று கூற வேண்டும். அவன் குடும்பத்துக்குப் பெரு நிதி அளிக்கிறான்.

மற்றும் பார்ப்பனன் ஒருவன் எழுதித் தந்த வடமொழி வாசகம் அதை விலை கொடுத்து வாங்கித் தானம் செய்கிறான்; அவர்கள் குடும்பத்துக்கு நிதி. வழங்குகிறான்.

இம்மூன்று செயல்கள் அவன் புகழ் உடையவன் என்பதற்குச் சான்றுகளாக இடம்பெறுகின்றன.

இவன் வணிக மகன்; செல்வச் சிறப்பு இவனுக்குப் பெருமை தருகிறது. ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து மாதவி மாலையை வாங்கி அவளை அடைகிறான். இவன் இன்பம் நாடிச் செல்வது இவன் போக்கு எனத் தெரிகிறது.

நகர நம்பியர் திரிதரு மன்றத்தில்தான் கூனி இவனைச் சந்திக்கிறாள். எனவே அவன் அங்கு எப்பொழுதும் திரிந்து வந்தவன் என்று தெரிகிறது. மகிழ்ச்சியில் இவன் நாட்டம் மிக்கு உடையவன் என்பது தெரிகிறது.

‘குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு

திரிதரு மரபின் கோவலன் போல’

வண்டினொடும் இளவேனிலொடும் தென்றல் மறுகில் திரிகின்றது என்று கூறுவர்.

‘வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப்புண்டு பொருள் உரையாளர்

நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ?’

என்று கூறித் தன் செயல்களைக் கடிந்து கூறுகிறான்.

சிற்றினம் சேர்ந்து சீரழிந்தவன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் அவன் இன்ப வேட்கை என்று கூறலாம்.

அன்பும் அறனும் கண்ணகிபால் கண்ட அவன் இன்பத்தை மாதவியிடம் காண்கிறான். அவன் இன்ப வேட்கை கண்ணகியின் பாராட்டுதலில் தெரியவருகிறது. காதல் இன்பத்தைக் கவின் உற எடுத்து உரைக்கின்றான். கலவியை அவளிடம் காண்கின்றான். புலவியை அவளிடம் காண முடிய்வில்லை. 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்பர் வள்ளுவர். அந்த வாய்ப்பினைக் கண்ணகியிடம் அவன் பெறவில்லை என்று தெரிகிறது. கலவியும் புலவியும் காதலனுக்கு அளித்தது மாதவி.

இவன் மாதவியிடம் கண்டது கவர்ச்சி என்று கூறலாம். 'இவன் கலைகள் அறிந்தவன்; அவற்றில் சுவைத்து மகிழ்பவன். மதுரை சென்றபோது பாணருடன் பழகி அவர்கள் இசை கேட்டு மகிழ்கிறான். கானல் வரிப் பாடல்களை இவனும் பாடுகிறான். மாதவியின் செயல்கள் அனைத்தும் நடிப்பு என்று கூறும்போது நாட்டியக் குறியீடு வைத்து அவற்றை எள்ளி நகையாடுகிறான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு குறியீடு; கண்கூடுவரி, காண்வரித் தோற்றம், உள்வரி ஆடல், புன்புறவரி, கிளர்வரிக்கோலம், தேர்ச்சிவரி, காட்சிவரி எடுத்துக் கோள்வரி எனப் பெயர்கள் தருகின்றான். எனவே மாதவிபால் இவன் நாட்டம் கொண்டதற்கு இவன் கலையுணர்வும் காரண மாகிறது.

'ஆடல் பாடல் அழகு' இம்மூன்று அவனைக் கவர்கின்றன. செல்வச் செருக்கு உடன் சேர்கின்றது. விலை கொடுத்து வாங்குவதில் அவன் முன் வருகின்றான். இவ்வளவு தொகை கொடுப்பதற்குக் காரணம் அவன் செல்வச் செருக்கு என்று கூறலாம். எனவே அவன் கலை ஆர்வம், மகிழ்வு நாடும் மனம், செல்வ மிகுதி இவையே அவன் மாதவிபால் உறவு கொள்வதற்குக் காரணம் ஆகின்றன.

மாதவி அவனை முழுவதும் காதலிக்கிறாள். 'காதலன்' என்றே அவன் கூறப்படுகிறான். அவளைக் 'காதலி' என்று எங்குமே அவன் குறிப்பிட்டதாகத் தெரிய வில்லை. இளங்கோவடிகளும் அவனுடைய காதலில் என்று மாதவியைக் கூறவே இல்லை.

'விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்' என்று கூறப்படுகிறதே அன்றி விடுதல் அறியாக் காதலன் ஆயினன் என்று கூறவே இல்லை. அவளிடம் அவன் கண்ட கவர்ச்சி மூன்றாவதாகக் குறிப்பிட்ட அழகு, அதுதான் அவனைக் கவர்கிறது. 'கோலங் கொண்ட மாதவி' என்றுதான் அவள் குறிப்பிடப்படுகிறாள். அவன் முன் அவள் அழகாக விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்பது தெரிகிறது.

ஊடற் கொள்கையில் இருந்த அவனை மகிழ்விக்க அவள் நகைகள் பல பூண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள். கவர்ச்சியில் அவனை வைத்திருக்கிறாள் என்பது தெரிகிறது.

கண்ணகியை அவன் பாராட்டி இருக்கிறான்; அழகுக்காக முதலில்; அவள் குணத்துக்காகப் பின்பு; மாதவியை எந்த இடத்திலும் அவன் பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் இடத்தில் அறிவைக் காண்கிறான்; அன்பை அவனால் காண முடியவில்லை. அந்த அறிவே பிணக்குக்கும் காரணமாகிறது. அவள் பாடல் கருத்துகளில் குறை காண்கிறான், அது ஊடலுக்குக் காரணம் ஆகிறது.

கோவலன் கதையே கண்ணகி மாதவி உறவு இவற்றில் அடங்கி விடுகிறது. என்றாலும் அவன் புற உலகில் நன்கு மதிக்கப்பட்டவன் என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் அவன் தோற்றத்தைக் கண்டு அவன் அறிவும், உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், கடவுள் வழிபாட்டுச் சிந்தனையும் உடையவன் என்பதை அறிய

முடிகிறது.

'உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

உடையீர்!'

என்று விளிக்கின்றார்.

இடைச்சியரிடம் கண்ணகி அவன் தெய்வ வழிபாட்டுச் சிந்தனை உடையவன் என்று எடுத்துக் கூறுகிறாள். 'சாவக நோன்பி' என்று அவனைப் பற்றிக் கூறுகிறாள்.

கவுந்தி அடிகள் வறு மொழியாளனையும், பரத்தை யையும் சபித்த போது குறுக்கிட்டு அவர்களைப் பொறுக்கும்படி வேண்டுகிறான்.

“நெறியில் நீங்கியோர் நீரல கூறினும்

அறியாமை என்று அறியல் வேண்டும்”

என்று அறிவிக்கிறான். அறிவுரை கூறும் அளவுக்கு அவன் கல்வி கற்றவன் என்பதைக் காட்டுகிறது.

பெண்ணோடு பழகியவன்; ஆனால் பெண்மையை நன்கு அறியாதவன் என்றே அவனைப் பற்றிக் கூற வேண்டி உள்ளது. மாதவியின் ஒரு பக்கம் மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அவள் ஆழ்ந்த அன்பை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் கவர்ச்சியில் ஆழ்ந்தவன்; அவள் காதலை அறியவில்லை. அவளை மாயத்தாள் என்று தவறாக முடிவு செய்கிறான். பின்பு அவள் அவனை மறக்க முடியாமல் அவன் நினைவிலேயே வாழ்வதை அறிகின்றான். அவள் விட்ட கண்ணிர் பின்புதான் அவனைச் சுடுகிறது. அவள் தீது இலள்; தான்தான் தவறு செய்தது என்று முடிவுக்கு வருகிறான்.

கண்ணகியின் அழகில் மயங்கியவன் அவள் அறக் கோட்பாடுகளை அவனால் முதலில் அறிய முடியவில்லை. அவள் பெருங்குடி வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். அவள் அருங்குணங்களைப் பேசவே இல்லை. வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறக்கிறான்.

அவள் உருவத்தையும், அழகையும், அவள் தரும் இன்பத்தையும் பற்றித்தான் பேசினான். அவள் அருங் குணங்களைப் பின்னர் அறிகின்றான். “கற்பின் கொழுந்து, நீள்நில விளக்கு” என்று எல்லாம் பின்னர்தான் பேசு கிறான். அவன் பெண்மையை அறியாதவன்; அவன் வாழ்வில் பின் கண்டது பெண்ணின் பெருமை; அதனை மாதவியிடம் கண்டு தெளிகிறான். கண்ணகியை முழுவதும் அறிகிறான். வாழ்க்கைப் பள்ளியில் அவன் தெரிந்து கொண்ட கல்வி அது; பெண்மையை அறிவிக்க அவன் கருவியாகிறான்.

குன்றுபோல் இருந்த நிதியைத் தொலைக்கிறான்; அதற்குக் காரணம் அரிய பொருள் மொழிகளை மறந்தான் எனலாம். “இலம்பாடு நாணுத் தரும்” என்ற உணர்வை வெளிப்படுத்துகிறான். மறுபடியும் அவன் பெற்றோரிடம் பொருள் பெற்று நன்றாக வாழ்ந்து இருக்க முடியும். அவன் மான உணர்வு அவனைத் தடுக்கிறது.

தானே பொருளிட்ட வேண்டும். இழந்ததை மீண்டும் பெற வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிறான். புற வாழ்வில் அவன் சிந்தனை போற்றத்தக்கதாக விளங்குகின்றது.

4. துணைப் பாத்திரங்கள்

காவியத் தலைமை மாந்தர்கள் கதையை இயக்கு பவர்கள் ஆகின்றனர். இவர்கள் தொடர்பு கொள்ளும் மாந்தர்கள் துணை மாந்தர்கள் என்று கூறப்படுபவர். கோவலனுக்குப் பாங்கன் என்று யாரையுமே குறிப்பிட முடியவில்லை. வறுமொழியாளர் வம்பப் பரத்தரொடு தோழமை கொண்டிருந்தான் என்று தெரிகிறது.

காதல் செய்து இவன் திருமணம் செய்து கொள்ள வில்லை. பெற்றோர்கள் முன்னிருந்து திருமணம் செய்விக் கின்றனர். அந்த வகையில் அவர்கள் துணைப் பாத்திரங்கள் ஆகின்றனர். கண்ணகியின் தந்தை மாநாய்கன்; அவன் மழையைப் போல் கொடுக்கும் இயல்புடைய வள்ளல் என்று கூறப்படுகிறான் அவனுக்குக் கண்ணகி ஒரே மகள்;. அவள் குலக் கொடியாக விளங்குகிறாள். கோவலன் கண்ணகி மறைவுக்குப்பின் தானம் பல செய்து அறவாழ்வு மேற்கொள்கிறான்.

கோவலன் தந்தை செல்வம் மிக்கவன்; அரசன் மதிக்கும் பெருவாழ்வு பெற்றிருக்கிறான். பொருள் பிறருக்குத் தந்து புகழ் படைத்தவனாக விளங்குகிறான்; மாதவியோடு கோவலன் தொடர்பு கொண்டிருந்த நாட்களில் கண்ணகிக்கு அன்பு காட்டி அவள் துயரத்தில் பங்கு கொள்கிறான்; கண்ணகியின் வாயல் முறுவலுக்கு உள்ளகம் வருந்துகிறான்.

மாதவியின் தோழி வயந்த மாலை; பாசமும் நேசமும் கொண்டு பழகுகிறாள். இந்திர விழாவில் கடலாடு காதையில் அவள் யாழை நீட்டி மாதவியிடம் தருகிறாள். “அமளிமிசை வருந்துபு நின்ற வயந்தமாலை என்று அடிகள் குறிப்பிடுகின்றார்; அவள் வருந்தக் காரணம் என்ன? இருவருக்கும் உள்ள மனக்கசப்பை அறிந்தவள் என்ற குறிப்புத் தரப்படுகிறது. அவர்கள் நல்லிணக்கத்தில் அக்கரை கொண்டவள்; அதனால் அவள் வருந்துபு நின்றாள் என்று தெரிகிறது.

அடுத்து மாதவி தந்த முடங்கலை அவள் கோவலனிடம் தருகிறாள். அவன் மறுக்கிறான், அதற்கும் வருந்துகிறாள். வாடிய உள்ளத்து வசந்தமாலை என்று குறிப்பிடப்படுகிறாள். அவள் விரைந்து சென்று உரைக்கிறாள். பின்னால் வனசாரணி வயந்தமாலை வடிவில் தோன்றி அவளை மாதவி துறந்துவிட்டாள் என்று கூறுகிறாள். அவள் கதை முடிவு அதனோடு முடிகிறது என்று தெரிகிறது.

கவுந்தி அடிகள் கோவலன் கண்ணகியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். வழிப்பயணத்துக்குத் துணையாகிறார். சோர்ந்தபோது எல்லாம் ஆறுதல் கூறுகிறார். கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார். 'தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி' என்றும், 'கற்புடைத் தெய்வம்' என்றும் பாராட்டுகிறார். மாதவியிடம் அடைக்கலமாக இருவரையும் ஒப்படைக்கிறார். துறவியாக இருந்த அவர் சமண அற நெறிகளை மற்றவர்க்கு அறிவிப்பதும் தம் தொழிலாகக் கொள்கிறார்.

கண்ணகிக்குத் தோழி ஒருத்தி அமைகின்றாள் தேவந்தி என்பாள்; பார்ப்பனப் பெண்; பாசாண்டச் சாத்தனை மணந்து அவனால் துறக்கப்பட்டவள்; ஆறுதலைத் தர விழைகிறாள்.

சோமகுண்டம், சூரிய குண்டம் முழுகிக் காமனைத் தொழுதால் கணவனை அடைவர் என்று கூறுகிறாள். 'பீடு அன்று' என்று கண்ணகி மறுத்துக் கூறிவிடுகிறாள்; இரண்டு கலாச்சாரங்கள் முரண்பாடு இவர்கள் உரையாடல்களில் கவிஞர் பெற வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. பின்பு கண்ணகியின் மறைவிற்குப் பிறகு செய்தி கேட்டுத் துடிதுடித்துக் காவற் பெண்டையும் அடித் தோழியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்குச் செல்கிறாள். அங்கு ஐயையையும் அழைத்துக்கொண்டு சேரநாடு செல்கிறாள்; நெடுவேள் குன்றம் சென்று அடைகிறாள். அங்கு கண்ணகி முன் நின்று தெய்வம் உற்றுப் பேசுகிறாள்; பாசாண்டச் சாத்தன் அவள் மீது ஏறிப் பேசுகிறான்; அடுத்துக் கண்ணகி தேவந்தி மேல் வந்து இளங்கோவடிகளோடு பேச வைக்கிறார் தேவந்தியே முன்னிருந்து பூசைவழிபாடு செய்கிறாள்.

வழியில் சந்தித்த மாங்காட்டு மறையோன், கோசிக மாணி, மாடலன் இம்மூவரும் காவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். மாங்காட்டு மறையோன் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவன். திருவரங்கத்துக்கும், வேங்கடத் துக்கும் செல்லும் வேட்கையனாக விளங்குகிறான். மதுரை செல்லும் வழிகளைக் கூறுகிறான். இட்டசித்திகள் பெறும் வழிவகைகளைக் கூறுகிறான். அவன் குறுக்கு வழியில் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்தைக் கூறக் கவுந்தி அடிகள் மறுத்து உரைக்கிறார். “உழைப்பே உயர்வு தரும்: நல்வினைகள் ஆக்கம் தரும்” என்ற கருத்துகளை அவனுக்கு அறிவிக்கிறார். இங்கே மாங்காட்டு மறையவளைக் கொண்டு இரு வேறுபட்ட தத்துவங்களைப் பேச வாய்ப்பு அமைக்கிறார் கவிஞர்.

கோசிகமாணி மாதவியிடமிருந்து கடிதம் கொண்டு வருகிறான்; புகார் நகரத்துச் செய்திகளைக் கோவலனிடம் பகர்கின்றான். கோவலனைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சென்று அவன் பெற்றோர்களிடம் சேர்ப்பிக் கிறான். கோவலனைத் திருத்துகிறான். மாதவி தீதிலள்” என்பதை அறிய வைக்கிறான். தன் தீமையை உணர வைக்கிறான். அவன் கோவலனுக்கு ஊர்ச் செய்திகளை உரைத்து ஆறுதல் தருகிறான். வருந்திய மாதவிக்கு ஆறுதல் சொல்லி அவள் தந்த கடிதம் எடுத்துச் சென்று அவளுக்கு மன நிறைவை உண்டாக்குகிறான்.

அடுத்தது மாடலன், இவன் எல்லாம் அறிந்தவனாக இருக்கிறான். கோவலன் மாதவியோடு இருந்த காலத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான். ஆறுதல் கூறி அகல்கிறான். கண்ணகி மறைவு பற்றிய செய்தியைப் புகார் நகரில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டச் செய்கிறான். வடநாடு சென்று கங்கையில் நீராடச் செல்கிறான்.

“மாதவியின் கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று கூறி மாதவி கோவலன் உறவையும், மற்றைய செய்திகளையும், சோழநாடு பாண்டிய நாட்டுச் செய்திகளையும் அறிவிக்கிறான். செங்குட்டு வனால் இவன் மதிக்கப்படுகிறான். அவன் தன் எடை அளவு பொன் இவனுக்குத் தானமாகத் தருகிறான். சேரன் துலாபாரம் புகுந்து தானம் அளிக்கிறான்.

கனக விசயர்களைச் செங்குட்டுவன் சோழ நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் அனுப்பி வைக்கிறான் அவர்கள் எள்ளி உரையாடிய செய்தி கேட்டுச் சேரன் செங்குட்டுவன் கொதிப்பு அடைகிறான். அவன் சினத்தை ஆற்றுவித்து வேள்வி செய்யத் தூண்டுகிறான். இறுதியில் முன்னிருந்து வேள்வி நடத்தி வைத்து முடிக்கிறான்.

அரட்டன் செட்டி சிறுமியர் இருவர்; சேடக் குடும்பியின் மகள் ஒருத்தி, இவர்கள் மீது நீர் தெளித்துப் பழப்பிறப்பு உணர வைக்கிறான். பாசாண்டச் சாத்தன் இவனுக்கு அந்த நீரை ஏற்கனவே தந்திருக்கிறான். மாடலன் சேரன் செங்குட்டுவனை நல்வழிப்படுத்தி அவனை அற வாழ்வுக்குத் திருப்புகிறான்.

பொற்கொல்லன் துணைப் பாத்திரம் என்று கூற முடியாது அவன் எதிர்ப்பாத்திரம் ஆவான்; தீமையின் உறைவிடம், கயவன். அவன் செயற்பாடு சிறிது என்றாலும் கொடிதாக உள்ளது. தீமைக்கே அவன்தான் காரணமாக இருக்கிறான். அவன் மூட்டிய சிறு பொறி பெரு நெருப்பாகிறது.

நல்லவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் மாதரி, ஐயை இருவரும் ஆவர். மாதரியைப் பற்றிக் கவுந்தியடிகள் பின்வருமாறு கூறுகிறார் தீதிலள், முதுமகள், செவ்வியள்; அளியள் என்று கூறுகிறார்.

மாதரி கண்ணகி கோவலனுக்கு அடைக்கலம் தந்து ஆதரவு தருகிறாள். தங்குவதற்கு இடம், உண்பதற்கு உணவு தந்து உதவுகிறாள்; தன் மகள் ஐயையைத் துணைக்கு அனுப்பி வைக்கிறாள். கோவலன் தாய் போல் இருந்து அன்பு காட்டுகிறாள். கோவலன் கண்ணகியரைக் 'கண்ணன்' என்றும் 'நப்பின்னை' என்றும் கூறி அவர்களை மதிக்கிறாள். அவர்கள் அன்பு வாழ்க்கைக்கு இவள் அகம் குளிர்கிறாள். அவர்கள் சாவுச் செய்தி இவளை அதிர வைக்கிறது. உயிர் விட்டு விடுகிறாள்.

ஐயை கண்ணகிக்கு நாத்துண் நங்கைபோல உறவு காட்டி உடன் இருந்து உதவுகிறாள். மணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை வெறுத்துத் தனிமரமாகி நின்று விடுகிறாள். முதிர் கன்னியாக முற்றுப் பெறுகிறாள்.

இந்தத் துணை மாந்தர்கள் இவர்களோடு நெருக்கம் கொண்டு உதவுகிறார்கள். அவலத்தால் பாதிக்கப்படு கிறார்கள். இவர்கள் நல்லவர்கள், அறிவாளிகள், துறவிகள், அந்தணர்கள் என்று பல திறத்தவராய் விளங்குகிறார்கள்.

இந்தக் காவியத்தில் இடம் பெறும் பாண்டியன், சேரன், செங்குட்டுவன் முதலானோர் வரலாற்று மாந்தர்கள். அவர்கள் கவிஞனின் படைப்புகள் அல்லர். எனவே அவர்களைத் துணை மாந்தர்கள் என்று கூற இயலாது.

இந்தக் காவியத்தில் தீயவரே இடம் பெறவில்லை. பொற்கொல்லன் ஒருவன்தான் தீயவன் ஆகிறான்; அடுத்தது ஊழ்வினை கதைத் திருப்பங்களுக்குத் துணை செய்கிறது. காவியத்தில் ஊழ்வினை தலைமை இடம் பெறுகிறது.

5. அணிநலன்கள்

“உணர்வின் வல்லோர்

அணிபெறச் செய்வன செய்யுள்”

என்பர் நன்னூலார்.

சொல்லுகின்ற செய்திகளை நயம்படக் கூறுதல் புலமை என்று கூறப்படும். அந்த நயம் அணிகளாலேயே பெறப்படுகின்றது.

உவமை அணிகளுள் தலைமையானது; அதைக் கற்பனை நயம்பட அமைக்குப் போது அது கருத்தைக் கவர்கின்றது. கவிஞனின் புலமையை வியக்கச் செய்கிறது.

திங்களைப் போற்றுகிறார்; ஞாயிறு, மழை, புகார் இவையும் போற்றப்படுகின்றன. அவை சோழர் நல்லாட்சி, ஆட்சிப் பரப்பு, கொடைச் சிறப்பு: குடித்தொன்மை இவற்றிற்கு உவமிக்கப்படுகின்றன. இவற்றுள் சொல்லவந்த செய்தி யாது? திங்களா சோழர் ஆட்சியா சிந்திக்க வைக்கின்றார்.

ஒரே கல்லில் இரண்டு கனிகளை விழ வைத்திருக் கிறார். வான் சிறப்பும் அரசு வாழ்த்தும் இரண்டையும் சேர்த்துக் கூறி இருப்பது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

தெய்வங்களையும் மற்று அவர்கள் உடைமைகள் செய்கைகளையும் உவமைப்படுத்துவது அவர் மரபு என்று தெரிகிறது. கண்ணகி திருமகள் வடிவினள் என்றும், வடமீனின் திறம் இவள் திறம் என்றும் கூறுகிறார். முருகனைப் போன்ற அழகன் கோவலன் என்கிறார்.

பிறை நுதல், வேல் கண், வில் புருவம், மெல்லிடை எனச் சொல்ல வந்தவர் சிவபெருமான் தந்த பிறை, முருகன் ஈந்த வேல், மன்மதன் அளித்த வில், இந்திரன் அளித்த வச்சிராயுதம் என்று உவமைகளைச் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம்.

மயில் போன்ற சாயல், அன்னம் போன்ற நடை, கிளி போன்ற பேச்சு என்று கூற வந்தவர் அவை தோற்று ஓடின என்று கூறுவது நயம் மிக்கதாகும்.

உருவகங்கள் மறக்க முடியாதவை; உவமைகளைவிட உருவகங்களுக்கு ஆற்றல் மிகுதி. சொற்களைக் குறைக்க முடிகிறது. செய்திகள் கொள்வார் விருப்பத்திற்கு விடப் படுகின்றன.

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே

காசறு விரையே கரும்பே தேனே”

என்று கூறுவது அழகிய உருவகங்கள் ஆகும்.

எதிர் மறுத்துக் கூறி உருவகங்களை மேலும் சிறப்புப் பெற வைத்து இருப்பதைக் காணமுடிகிறது.

‘மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ

யாழிடைப் பிறவா இசையே என்கோ’

என்று கண்ணகிக்கு இவற்றை உவமைப்படுத்தி இருப்பது நயம் மிக்கதாக உள்ளது.

முரண்தொடை நயம்

ஆசிரியர் செய்திகளை முரண்தொடை நயம் தோன்றக் கூறுவதைப் பல இடங்களில் காண்கின்றோம்.

மாதவியை அடைந்து அவளை விட்டுப் பிரியாமல் கோவலன் அங்கேயே தங்கிவிடுகிறான்.

“விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்

வடுநீங்கு சிறப்பின் மனைஅகம் மறந்து”

என்று கூறுவார் இரண்டு முரண்பட்ட செய்திகளை ஒரே இடத்தில் வைத்து முரண்தொடை நயம் தோற்றுவித்தலைக் காண்கிறோம்.

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் பிரிந்த நிலையில் மகளிர் துயரத்தையும், கூடிய நிலையில் அவர்கள் மகிழ்வு நிலையையும் அடுத்து அடுத்து வைக்கக் காண்கிறோம்.

சிறப்பாக மாதவி கண்ணகி இவர்களை மாறுபட்ட நிலைகளில் சித்திரித்துக் கூறுகிறார்.

“நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்

கோலம் கொண்ட மாதவி”.

இது மாதவியின் மகிழ்வு நிலை.

“அம்செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய

மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்

பவள வாள் நுதல் திலகம் இழப்ப

மை இருங் கூந்தல் நெய்யணி மறப்புக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று கூறுகிறார். இது கண்ணகியின் தனிமை நிலை.

சீறடியில் தொடங்கித் தலைமுடி வரை கூறுகிறார். இதனைப் பாதாதி கேசவருணனை என்பர். மற்றும் இதே முறைவைப்பினைக் கடலாடு காதையில் அம்ைத்திருப்பது காண முடிகிறது. மாதவி கால்விரல் தொடங்கித் தலை முடி வரை அணியும் அணிவகைகளை விவரிக்கிறார். இதிலும் இம் முறைவைப்பைக் காண முடிகிறது. இதுவும் முறை வைப்பு அணி எனக் கொள்ளலாம்.

இந்திர விழாவில் கண்ணகி கருங்கண்ணும் மாதவி செங்கண்ணும் இடம் வலம் துடித்தன என்பர். கருமை செம்மை என்பன முரண் தொடையாகும். இடம் துடித்தல் வலம் துடித்தல் இவையும் முரண் நயம் ஆகும்.

கோவலன் கொலை உண்டான்; புண்ணுமிழ் குருதி யோடு மண் மீது கிடக்கிறான் அவன்; கண்ணகி படுகளம் வந்து விடும் கண்ணிர் நம் நெஞ்சைத் தொடுகிறது.

அன்று காலையில் அவள் அவன் தலைமுடியில் இருந்த மலர்க் கொத்தைத் தன் தலையில் சூடிக் கொண்டாள். மாலை தவழும் மார்பினனாகத் திகழ்ந்தவன் மாலைப் பொழுதில் மாறுபட்டுக் காணப்படுகிறான். குருதி படிந்து அவன் மார்பினைச் சிவக்க வைத்துள்ளது. பூ இதழ் படிந்த மார்பில் குருதிக் கறை படிந்து கிடக்கிறது. இதனை அவள் சுட்டிக் காட்டுகிறாள்.

“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்

கொண்டாள் தழிஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்

புண்தாழ், குருதி புறம் சோர மாலைவாய்க்

கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்”

இரு வேறு காட்சிகள். காலையில் அவன் அவளைத் தழுவினாள்; மாலையில் இவள் அவனைத் தழுவுகிறாள். பூவுடன் கண்ட மார்பு பொலிவு பெற்றிருந்தது; வடுக் கொண்ட மார்பு நலிவு பெற்றுக் கிடக்கிறது. இந்த இருவேறு காட்சிகள் முரண்பாட்டைக் காட்டுகின்றன.

எல்லாம் முடிந்துவிட்டது. மதுரையை எரித்து விட்டாள். அடுத்துச் செய்வது யாது? எங்கே போவது? திக்குத் தெரியாத திடரில் அவள் நிலை குலைந்து நிற்கிறாள்.

மீண்டும் பிறந்த நாட்டுக்குச் செல்வதா? எப்படிப் போக முடியும்? கணவன் இன்றித் தனித்து எப்படிப் போக முடியும்? போய் என்ன செய்வது?

“கீழ்த்திசைவாயில் கணவனோடு புகுந்தேன்

மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு”

என்று கூறிக்கொண்டு சேரநாடு நோக்கிச் செல்கிறாள்.

இரு வேறு காட்சிகள் அவள் கண் முன் வந்து நிற்கின்றன. இம்முரண்தொடை அவள் அடைந்த அவலத்தின் எல்லையைக் காட்டுகின்றது. முரண் தொடை இங்குத் தலைமை பெற்று விளங்குகிறது.

துன்பத்தையும் இன்பத்தையும் இணைத்து வைத்துக் காட்டும்போது காவியத்தில் அவலம் மிகுதிப்படுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறுகள் தலைதெறிக்கக் காணப்படுகின்றன.

இல்பொருள் உவமையணி

திங்களையும் ஞாயிற்றையும் உடன் வைத்துப் போற்றிய கவிஞர் அவை ஒருங்கு உடனிருப்பதாகக் கூறி அக்காட்சியை உவமையாக்கி உள்ளார்.

கோவலனும் கண்ணகியும் நெடுநிலை மாடத்தில் நிலவு வீசும் ஒளியில் களித்து மகிழ்வு கொள்கின்றனர். இருவரும் உடன் இருக்கும் காட்சியை ஞாயிறும் திங்களும் ஒருங்கு இருக்கும் காட்சிக்கு உவமைப்படுத்தி உள்ளார். கதிர் ஒருங்கு இருந்த காட்சிபோலக் கண்ணகியும் கோவலனும் உடன் இருந்தனர் என்று கூறக் காண்கிறோம்.

திங்களும் ஞாயிறும் உடன் இருத்தல் என்பது இல்லாத செய்தி, அதனை உவமமாகக் கூறியிருப்பது இல் பொருள் உவமைஅணி ஆகும்.

சிலேடை அணி

அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் மாலைக் காட்சியை வருணிக்கிறார் கவிஞர்.

“குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு

மழலைத் தும்பி வாய்வைத்து ஊத”

என்பர்.

குழல்-மூங்கில் குழல்; குழல் - குழைவு, முல்லைப் பண்ணைக் கோவலர் பாட என்பது ஒரு பொருள். முல்லை முகையில் வாய் வைத்து ஊதுவது வண்டின் தொழில்.

ஊது குழலில் முல்லைப் பண்ணைக் கோவலர் வாய் வைத்து ஊதுகின்றனர்; குழைந்து வளரும் முல்லை முகையில் வண்டுகள் தேன் உண்ண வாய் வைத்து

ஊதுகின்றன. இரு பொருள்பட இத்தொடர்கள் அமைந் திருத்தல் காண்க. இதனைச் சிலேடை அணி என்பர்.

நிரல் நிறை உவமை அணி

ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை உவமமாக வைத்து அவ்வாறு அவற்றிற்கு இணையாகப் பொருளை வைத்துக் கூறுதல் நிரல் நிறை அணி என்பர்.

இளவேனில் பருவத்தோடும், இளி என்னும் இசையைப் பாடும் வாயை உடைய வண்டினொடும் தென்றல் வீசுகிறது; இதற்கு உவமை பாணரோடும் நகரப் பரத்தரோடும் திரிதிரு கோவலன் கூறப்படுகிறான்.

“குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு

திரிதரு மரபின் கோவலன் போல

இளிவாய் வண்டினொடு இன் இள வேனிலொடு

மலய மாருதம் திரிதரு மறுகு”

என்பார் கவிஞர்.

தற்குறிப்பேற்ற அணி

இயற்கை வேறு; மனிதன் வேறு உணர்வு அற்றது இயற்கை உணர்வு படைத்தவன் மனிதன். இன்ப துன்பங்கள் மனிதனை வாட்டும்; மலரச் செய்யும். இவை அஃறிணைப் பொருள்களுக்கு இல்லை.

கவிஞன் கற்பனை மிக்கவன். சுற்றியிருக்கும் சூழல் இவனுக்காக இரங்குவதுபோலக் கூறுவது கவிமரபு; இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

தான் கருதும் குறிப்பைத் தான் வருணிக்கும் செய்திகளில் ஏற்றிக் கூறுவது இவ் அணி என்பர்.

கோவலனும் கண்ணகியும் மதுரையை அடை கின்றனர். வையை நதியைக் கடக்க அதனைச் சார்கின்றனர். பூக்கள் நிறைந்த அந்த ஆறு தன் நீரைக் கரந்து செல்கிறது. கண்ணகி கோவலனுக்காக வருந்தும் வைகை தன் கண்ணிரை உள்ளடக்கி மறைத்துச் செல்வதைப் போல அதன் நீர் வெள்ளம் மறைந்து கிடக்கிறது என்று கூறுவார் கவிஞர்.

“வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள்போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிச்”

செல்கிறது என்பர்.

மற்றும் அகழியில் மலர்ந்து இருந்த குவளையும், ஆம்பலும், தாமரையும் கண்ணகியும் கோவலனும் அடையப் போகும் துயரத்தை அறிந்தன போலக் கள் நீர் (கண்ணிர்) கொண்டு காற்று (கால்) உற நடுங்கின என்பர்.

அவற்றோடு பண்பாடும் வண்டும் பரிந்து இனைந்து

ஏங்கின என்பர்.

“கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்

தையலும் கணவனும் தனித்து உறு துயரம்

ஐயம் இன்றி அறிந்தன போலப்

பண்ணீர் வண்டு பரிந்து இணைந்து ஏங்கக்

கண்ணிர் கொண்டு கால்உற நடுங்க” - புறஞ்சேரி

கொடிகள் மதில் மீது அசைந்து ஆடுகின்றன. அவை இவர்களைப் பார்த்து, “வராதீர்; திரும்பிப் போகவும்” என்று கூறி மறித்துக் கைகாட்டுவது போல அசைந்தன என்பார் கவிஞர்.

“போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங் கொடி

வாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட”

என்பார் கவிஞர்.

சொல்லாட்சிகள்

கவிஞர் ஆளும் சொற்கள் புதுப்புதுப் பொருள்களைத் தருவன; சில தொடர்கள் கவிஞனுக்கே உரியன. அவற்றை மீண்டும் மீண்டும் எடுத்தாள்வதில் அவர் சொல்லாட்சித் திறன் வெளிப்படுகிறது. அவற்றுள் சில பின்வருமாறு:

'கவவுக்கை நெகிழாமல் தீது அறுக' என்ற சொல் லாட்சியை மீண்டும் மாதவியை விட்டுக் கோவலன் பிரிவில் எடுத்தாளும் அழகைக் காண முடிகிறது.

'திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தவனாய்ப் போன பின்னர்' எனக் கூறுவார்.

கண்ணகியைக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்று அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில் கூறுவார். அதே தொடரை மாதவிக்கு எடுத்தாளுதல் காண முடிகிறது.

“கையற்ற நெஞ்சினளாய் வையத்தினுள் புக்குத்

தன்மனை புக்காள்”

என்பர்.

“மண் தேய்த்த புகழினான்” என்று கோவலனைக் கூறும் கவிஞர் “பண் தேய்த்த மொழியினார்” என்று மகளிரைக் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது. 'தேய்த்த' என்ற சொல்லாட்சி நயமுடையதாக உள்ளது.

அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது.

“பவள வாள்நுதல் திலகம் இழப்பத்

தவள வாள்நகை கோவலன் இழப்ப”

'இழப்ப' என்பது புதுப்புதுப் பொருளில் வருதல் காண முடிகிறது.

'ஈகைவான் கொடி அன்னாள்' என்று அவளைப் பொன்னுக்கு உவமிக்கின்றார். கண்ணகியைப் பாராட்டும் போது இருமுறையும் 'பொன்னே' என்று கோவலன் மறவாமல் கூறுகின்றான். மாதரி கண்ணகியைப் பற்றிக் கூறும்போது 'பொன்னிற் பொதிந்தேன்' என்று கூறுகிறாள். தெய்வக் காட்சியில் சேரன் செங்குட்டுவன் பொன் கொடியாக அவளைக் காண்கிறான். “பொன்” என்று அறிமுகப்படுத்திய அவளை மறவாமல் அதே சொல்லில் பல இடங்களில் கூறுவது சிறப்புப் பெறுகிறது.

கண்ணகி அவள் நகைமுகம் ஒருமுறை அறிமுகப் படுத்தியவர் மறவாது அவளை அதே சொற்றொடரில் காட்டுவது அவர் தீட்டும் சித்திரம்; மறவாமல் போற்றுவது ஆகிறது.

“பேதுறவு மொழிந்தனள், அரும்பினள் நிற்ப” என்பார் கவிஞர் சாலினி கூற்றுக் கேட்டபோது.

நலங்கேழ்முறுவல் நகைமுகம் காட்டிச்

‘சிலம்புள கொள்ளும்’

என்று மகிழ்வுடன் தருகிறாள்.

காதம் நடந்து களைத்துவிட்ட நிலையில் மதுரை மூதூர் எங்கே எவ்வளவு தூரம் என்று கேட்கும்போதும் அவள் நகைமுகத்தை மறவாமல் சித்திரிக்கிறார்.

‘முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க’

என்று கூறுவார்.

பிரிவின்கண் கோவலன் பெற்றோர்கள் விசாரிக் கிறார்கள். விருந்தினரைப் போற்ற முடியாமைக்கு வருந்தும் நிலையில் வலியச் சிரிக்க விரும்புகிறாள். 'வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தினர்' என்று கூறுவர்.

கண்ணகி கோவலனைப் பிரிந்த நிலையில் அவள் நகைச் சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான் என்று கூறுவது பொருள் பொதிந்ததாக உள்ளது. அந்த முறுவலுக்கு மாதவி தரும் இன்பம் ஈடாகாது என்று கூறுவது போல் 'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்ற அத்தொடர் அமைந்துள்ளது.

ஒரே கருத்து மூன்று இடங்களில் வற்புறுத்தக் காண்கிறோம்.

“தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி” என்று கவுந்தி அடிகள் உணர்த்துவார்.

“தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்” என்று மாதரி இதே கருத்தைக் கூறுவாள்.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த

பொன்னே”

என்று கோவலன் கூறுவான்.

“நீணில விளக்கே” என்ற தொடரைக் கோவலன் எடுத்தாள்கிறான்.

மாதரியின் கூற்றிலும் விளக்கு என்ற இதே சொல் லாட்சியைக் காணமுடிகிறது.

“விழுமம் தீர்த்த விளக்குக் கொல்”

என்பாள் அவள்.

'உலகு', 'நிலம்', 'பார்' என்பன ஒரே பொருள் குறிப்பன.

“உலகிற்கு ஓங்கிய திருமாமணி”

என்கிறாள் சாலினி,

“நீள் நில விளக்கு”

என்கிறான் கோவலன்.

“பார் தொழும் பத்தினி”

என்கிறான் சேரன் செங்குட்டுவன்.

கவிஞர் எடுத்தாளும் சொற்கள் பொருள் பொதிந்தன வாக உள்ளன. அணிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.

6. இளங்கோவடிகள் - ஒரு மதிப்பீடு

“சிந்தை செல்லாச் சேண்நெடுந்துரத்து

அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து”

என்று பெருமிதத்தோடு இளங்கோவடிகள் தம்மைப் புலப்படுத்திக் கொள்கிறார். இவர் ஒரு துறவி, கலைஞர், கவிஞர் அறிஞர்; புலவர்; இவற்றோடு அறப்பிரச்சாரகரும் ஆவார்.

“மூன்று நாடுகளுக்கும் உரிய கதை, அதைச் சொல் வதற்கு அவர்க்குத்தான் தகுதி உள்ளது” என்று சாத்தனார் கூறுகின்றார். அரசு பற்றிய செய்திகள் இக்காவியத்தில் பெரும்பங்கு இடம் பெறுகின்றன. அவற்றை அறிந்தவர் ஒரு பேரரசராக இருக்க வேண்டும். அவர்களைப் பாரபட்ச் மில்லாமல் விமரிசிக்கும் துணிவு தேவைப்படுகிறது. அந்தத் தனித்தன்மை துறவு உள்ளம் இவரிடம் காணப்படுகிறது.

செங்குட்டுவன் வரம்பு மீறிச் செயல்படுகின்றான். தோற்றவர்களைச் சிறைப்படுத்திக் கல் சுமக்க வைக்கிறான். அவர்களைத் தமிழகத்தின் மற்றைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறான். விளம்பரப் பிரியனாகச் செயல்படுகிறான். அவன் செய்வது தவறு என்று துணிந்து காட்டும் திறனைக் காண முடிகிறது. மாடலனைக் கொண்டு இக்கருத்தைப் பேச வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

அவர் ஒரு துறவி, கவுந்தியடிகள் என்ற பாத்திரத்தில் 'துறவு' நிலையை நன்கு காட்டுகிறார். துறவிகளும் தவறும் இடமும் உண்டு; இதை வள்ளுவர் காட்டி இருக்கின்றார்.

“குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது”

என்பர்.

பரத்தனும் பரத்தையும் தரத்தை மீறிப் பேசியபோது, “நரியாகுக” என்று கவுந்தி அடிகள் சபித்து விடுகிறார்.

“நெறியில் நீங்கியோர் நீர் அல கூறினும்

அறியாமை என்று அறிதல் வேண்டும்”

என்று அவருக்கு அறிவு கூறும் நிலை ஏற்படுகிறது.

கோவலன் கண்ணகியோடு அருங்கான் அடைந்து தனித்துயர் உழல்வதை எடுத்துக் கூறுகிறார். அப்பொழுது அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் கவுந்தி அடிகள்.

துறவு வாழ்க்கையின் உயர்வை எடுத்துக் கூறி அதுவே உயர்ந்தது என்று நியாயங்கள் கூறக் காண்கிறோம். மனை வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது; துறவு வாழ்க்கை நிலைத்த இன்பம் தருவது என்று வற்புறுத்திக் கூறுகிறார்; துறவின் உயர்வைக் கூறுவதற்கு அவனுக்கு விடை கூறுவதை ஒரு வாய்ப்பாகக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் கற்ற புலவர் மட்டும் அல்லர் இசை அறிந்த அறிஞரும் ஆவார். இவர் இசை, நாட்டியம் இவற்றின் நுட்பங்கள் நன்கு அறிந்தவராக விளங்குவதைக் காண முடிகிறது. அரங்கேற்று காதை அது மாதவியின் அரங்கு ஏற்றம் மட்டும் கூறவில்லை. இசைக் கலையின் நுட்பங் களை விவரிக்கும் இசைநூல் என்பதைக் காட்டி விடுகிறது. நாட்டிய ஆசான், குழலோன், யாழோன், தமிழ்க் கவிஞன், தண்ணுமையோன் இவர்கள் செயல்களையும், புலமை யையும், திறனையும் விளக்கும் வகையில் அவர் நுண்மாண் கலை அறிவை நன்கு வெளிப்படுத்தித் தாம் ஒரு கலைஞர்; கலை ரசிகர் என்பதைக் காட்டி விடுகிறார். பாணர்கள் கூத்துகள் ஆடவும், பாடவும் வரும் இடங்களில் அக்கலை நுட்பங்களை எல்லாம் விடாமல் கூறுவதைக் காண முடிகிறது. இசைப்புலமை அவர் பெருஞ் சிறப்பு. அதுவே காவியத்தை உயர்த்திக் காட்டுகிறது. காவியத்தின் பெருமைக்கு இது துணை செய்கிறது.

அவர் கவிஞர் என்பது அவர் எடுத்தாளும் உவமைகள், அணிநலன்களின் தனித்தன்மை காட்டு கின்றன. மரபுகளைக் கூறினாலும் அவற்றைக் கற்பனை நயத்தோடு கூறுவது அவர் தனித்தன்மை ஆகிறது; கோவலன் கண்ணகியைப் புகழும் பாராட்டுரை இதற்குத் தக்க சான்றாக அமைகிறது. தற்குறிப்பேற்ற அணி தக்க இடத்தில் ஆளுகிறார். எதையும் முரண் நயம் தோன்றக் கூறுவதையும் காண முடிகிறது. சொல்லாட்சிகள் மறக்க முடியாதவை, 'மண் தேய்த்த புகழினான்' 'பண் தேய்த்த மொழியினார்' போன்ற ஆட்சிகள் கவர்ச்சி மிக்கவையாக உள்ளன.

அறிஞர் என்று யாரைக் கூறுவது? அது புலமை யையும் கடந்த ஒன்று; எல்லாம் அறிந்தவரைத்தான் அறிஞர் என்று கூறமுடியும். நாடுகளை நன்கு அறிந்தவர்; காடுகளைக் கண்டவர்; செடி, கொடிகள், பூக்கள், நிலத்தின் இயல்பு, காலத்தின் பாகுபாடுகள், மக்கள் வாழ்வியல், களவுக்கலை, அணிகலன்கள் பற்றிய முழு அறிவு, அங்காடிகள், வாணிகம், சிற்பம் எல்லாம் அறிந்தவராக அவர் காணப்படுவதைப் பார்க்கமுடிகிறது. எல்லாத் துறைகளையும் நன்கு அறிந்து கூறுபவராக விளங்குகிறார்; மாதவி கால் முதல் தலை வரை அணியும் அணிகலன் களைக் கூறுவது வியப்பைத் தருகிறது. மதுரை அங்காடித் தெருவில் வைரக் கற்களின் குறைகள், சிறப்புகள், தரங்கள் இவற்றைக் காட்டுவது அவர் பேரறிவைக் காட்டுகிறது. அவருக்குத் தெரியாத துறையே இல்லை என்று கூற முடியும். எல்லாத் துறைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதால் காவியம் செறிவுமிக்கதாக விளங்குகிறது. நிறைவு உடையதாகவும் அமைந்துள்ளது.

அவர் தமிழ்ப் புலமை அவர் சொற்களை எடுத்தாள்வதில் விளங்குகிறது. ஒரு செய்தியைக் கூற எவ்வளவு சொற்கள் தேவையோ அவ்வளவும் கூறுவதில் அவர் புலமை காணப்படுகிறது.

நயம் மிக்க தொடர்கள் ஆங்காங்கே எடுத்தாளப் படுகின்றன. மாதவி எழுதிய காதற் கடிதம் அப்புலமைக்குத் தக்க சான்று ஆகும்.

“பவளவாள் நுதல் திலகம் இழப்பத்

தவள வாள்நகை கோவலன் இழப்ப"

என்ற தொடர், அதில் அவர் எடுத்தாளும் சொற்கள் அழகு ஊட்டுவன ஆகும்.

“மண் தேய்த்த புகழினான், பண் தேய்த்த மொழியினார் இங்குச் சொற்கள் சிறப்பாக ஆளப் பட்டுள்ளன.

கடுமையை உணர்த்தக் கண்ணகி வாயிற் காவல னிடம் உரைக்கும் சொற்கள் அவர் புலமைக்குத் தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

“அறிவு அறை போகிய பொறி அறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!

என்ற தொடர் வெறுப்பில் வந்த வெகுளிச் சொற்கள். அவை றகர எழுத்துத் தொடர்ந்து பெற்று ஒசை நயம் உண்டாக்குவதைக் காண முடிகிறது.

எந்தப் படைப்பும் செய்திகளால் மட்டும் நிறைவு பெறுவதில்லை. அது உணர்த்தும் அறவுரைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது: அக்காவியம் நிலைபேறு பெறுகிறது.

கண்ணகி காவியம் என்று இதற்குப் பெயர் வைத்திருக்கலாம். அது ஒரு கருத்தை மட்டும் கூறியதாக முடியும். இதில் மூன்று கருத்துகள் இடம் பெறுகின்றன. பத்தினியை உயர்ந்தோர் புகழ்வது என்பது ஒன்று மட்டும் தான் காவியச் செய்தி ஏனைய இரண்டும் அறவுரைகள் கூறும் பகுதிகள் என்று கூறலாம்.

'ஆட்சி' அது வழி தவறினால் நீதி கெட்டால், செங்கோன்மை கெட்டால் நாடு சீரழியும் என்பது அவர் உணர்த்தும் அடிப்படையான கருத்து. நாட்டு அரசியல் ஒட்டித்தான் மக்கள் நல்வாழ்வு அமைகிறது. பாண்டிய நாட்டுச் சீர்குலைவு. ஆட்சியில் ஏற்பட்ட தவறு ஒன்றினால் என்பது வற்புறுத்தப்படுகிறது. மக்கள் கொதித்து எழுவார்கள், ஆட்சியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது அவர் அறிவுரை.

மற்றொன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது. இது காவியச் செய்தியே அன்று கவிஞர் சொல்ல வந்த செய்தி. இங்கேதான் கவிஞர் தம்மைக் காட்டிக் கொள்கிறார். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தது நடைமுறைச் செய்தி, அதற்குக் கூட விதி தான் காரணம் என்கிறார். வீட்டை விட்டு வெளியேறியது; பொற்கொல்லன் கோவலனைச் சந்தித்துக் கொலை உண்டது எல்லாம் ஊழ்வினையின் செயல்கள் என்று வற்புறுத்துகிறார். இந்திய நூல்கள் பெரும்பாலும் சமய அடிப்படையில் தோன்றியவையேயாம். சமயக் கோட்பாடுகள் இல்லாமல் எந்த நூலும் இயங்குவது இல்லை.

இளங்கோவடிகள் அருக சமயத்தவர் என்பதை இந்த அறப்பிரச்சாரத்தால் காட்டி விடுகிறார்.

கவுந்தி அடிகளைக் கொண்டு சமணக் கோட்பாடு களை ஆங்காங்குக் கூறக் காண்கிறோம். மாங்காட்டு மறையவனிடம் பேசும் பேச்சுரைகள் சமயச் சார்பு கொண்டவை. சமண சமயக் கோட்பாடுகள் இந்நூலில் தலைமை பெறுகின்றன.

எனினும் மக்கள் கொள்ளும் சமய நம்பிக்கைகளுக்கு மதிப்புத் தருவதைக் காண முடிகிறது. வேட்டுவ வரியில் அவர்கள் கொற்றவையை வழிபடுகின்றனர். ஆயர் சேரியில் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். கண்ணனைப் பற்றிப் பரவிப் பாடுகின்றனர். அங்குக் கண்ணனுக்கு மதிப்புத் தருகின்றனர்.

குன்றக் குறவர்கள் வேலனைப் புகழ்கின்றனர். தெய்வக் கதைகளை மாதவி ஆடலில் இடம் பெற வைக்கின்றார்.

மாங்காட்டு மறையோன் திருமால் தலங்கள் ஆகிய வேங்கடத்தையும் திருவரங்கத்தையும் காணச் செல்கிறான். “உன் தெய்வங்களை வழிபட நீ போ; நாங்கள் எம் வழிப் படர்வோம்” என்று கவுந்தி அடிகள் கூறுகின்றார்.

இதுவே இளங்கோவடிகள் சமய நோக்கு எனத் தெரிகிறது. எந்தச் சமயமும் அவரவர் விருப்பப்படி மேற்கொள்ளும் உரிமையை மதிக்கிறார். தம் கொள்கை யையும் வற்புறுத்திக் கூறுகிறார்.

செங்குட்டுவன் திருமாலையும், சிவனையும் வழிபடுவதைக் கூறுகின்றார். மாசாத்துவான் புத்த மதத்தைச் சார்கிறான்; மாதவி பெளத்த மதத் துறவியாகி றாள். சமயப் பொது நோக்கு உடையவர் என்பதைக் காட்டிக் கொள்கிறார்; எனினும் காவியத்தின் நோக்கம் வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கருத்தை நூல் முழுதும் அமைப்பது. இது அவர் கோட்பாடு; ஆசிரியர் இதில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று கூறலாம்.

இறுதியில் சமய எல்லைகளைக் கடந்து மாந்தர் போற்றத்தக்க அறங்களைத் தொகுத்துக் கூறுவதைக் காண்கிறோம். சமய எல்லையைக் கடந்து பொது அறங்களைக் கூறக் காண்கிறோம். இவ்வகையில் இவர் வள்ளுவரைப் பின்பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது.

அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் சமயச் சார்பு அடிப்படையாகிறது. அவற்றில் நாம் கருத்து வேறுபாடு கொள்ள இடம் உண்டு; பிறப்பு, மறுபிறப்பு இந்த நம்பிக்கைகளை எல்லாம் அவர் நூல் வற்புறுத்துகிறது. கீதையைப் போல் இதுவும் கருமம், என்ற கோட்பாட்டை மிகுதியாக வற்புறுத்துகிறது. அது அவர் தனிப் போக்கு; இந்த நாட்டின் பின்னணி இதில் எந்தச் சமயமும் விதி விலக்கு அன்று.

மற்றொன்று சாதிப் பாகுபாடுகளுக்கு இந்நூல் மிகுதியும் இடம் தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கோவலன் கண்ணகியை விளிக்கும் போதே, “பெருங்குடி வணிகன் பெருமட மகளே” என்று கூறுகிறான். அதில் பெருமையும் கொள்கிறான்.

ஊரை விட்டுப் பூதங்கள் வெளியேறுகின்றன. அவற்றையும் சாதி அடிப்படையில் பிரித்துக் காட்டக் காண்கிறோம். கண்ணகி, கோவலன் இவர்கள் வணிகர் மக்கள் என்பதே கதை; உழவர்கள், ஆயர்கள், குறவர்கள், பரதவர், வேடுவர் என்ற நிலத்துக் கேற்பச் சாதிகளைக் குறிப்பிடுகின்றனர். இவை அக்காலத்து நிலை; உள்ளதை உள்ளபடி கூறியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும். அவர் சாதிப் பிரிவுகளை வற்புறுத்தவில்லை. அது இந்த நாட்டின் சமூக அமைப்பு எனினும் கதைகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மேம்படுத்திக் கூறி இருப்பது இதன் தனித்தன்மை ஆகும். மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன், தேவந்தி, உள்ளே வரும் கதைகள், பராசரன், வார்த்திகன், கீரந்தை எல்லாம் ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள். வடநாடு செல்லும் போது முனிவர்கள் சேரனைச் சந்திக்கின்றனர். அங்கேயும் அங்குள்ள அந்தணர்களைப் போற்றுக என்று அறிவுரை கூறப்படுகிறது. இறுதியில் மாடல மறையோன் உரையின்படி வேள்வியில் கதையை முடிப்பது சமயச் சார்பின் தாக்கம். அக்காலப் போக்கும் என்று கூற வேண்டியுள்ளது. மாடலனுக்குத் துலாபாரம் புகுந்து செங்குட்டுவன் பொன்தானம் தருகிறான்.

இளங்கோவடிகள் சாதனை என்று கூறக் கூடியது தமிழ் உணர்வுக்குத் தலைமை தந்தது; மூன்று நாடுகளை இணைத்துக் காட்டியது. தமிழ் மன்னரை இகழ்ந்தவர்களை எதிர்த்து அவர்களை அடிமைப்படுத்தியது. தமிழகத்தை அவர் நேசித்து இருக்கிறார். வடவேங்கடம், தென்குமரி இடைப்பட்ட தமிழகம், அதில் அவர் கொண்டிருந்த காதல், காவிரி, வைகை, பொருநை இவற்றில் வைத்திருந்த மதிப்பு, நாட்டு வாழ்க்கையை நூல் முழுதும் புகுத்தும் திறன் அனைத்தும் அவரை ஒரு தேசியக் கவிஞர், நாட்டுப் பற்றுடைய கவிஞர் என்று உயர்த்திக் காட்டுகின்றன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று இவற்றை ஊட்டுவதில் இக்காவியம் தலை சிறந்து விளங்குகிறது.