ஐங்குறுநூறு - 1

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளைஐங்குறுநூறு - 1
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
1. ஐங்குறுநூறு - 1
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5.  தண்டமிழாசான் உரைவேந்தர்
6. முன்னுரை
7. கடவுள் வாழ்த்து
8. மருதம்
    1. வேட்கைப்பத்து
    2.  வேழப்பத்து
    3.  கள்வன் பத்து
    4.  தோழிக் குரைத்த பத்து
    5. புலவிப் பத்து
    6.  தோழிகூற்றுப் பத்து
    7.  கிழத்தி கூற்றுப்பத்து
    8.   புனலாட்டுப் பத்து
    9.  புலவி விராய பத்து
    10.எருமைப்பத்து

9. நெய்தல்
    1.  தாய்க்குரைத்த பத்து.
    2. தோழிக் குரைத்த பத்து
    3. கிழவற்கு உரைத்த பத்து
    4. பாணற் குரைத்த பத்து
    5.  ஞாழற் பத்து
    6.  வெள்ளாங்குருகுப் பத்து
    7.  சிறுவெண்காக்கைப் பத்து.2
    8.  தொண்டிப்பத்து
    9.  நெய்தற்பத்து
    10.வளைப்பத்து

 


 

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்

உரைவேந்தர் தமிழ்த்தொகை
தொகுதி - 1
ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

தொகுதி - 2
சிவஞானபோத மூலமும்சிற்றுரை

தொகுதி - 3
சிலப்பதிகாரம் சுருக்கம்
மணிமேகலைச் சுருக்கம்

தொகுதி - 4
சீவக சிந்தாமணி - சுருக்கம்

தொகுதி - 5
சூளாமணி சுருக்கம்

தொகுதி - 6
பெருங்கதைச் சுருக்கம்

தொகுதி - 7
சிலப்பதிகார ஆராய்ச்சி
மணிமேகலை ஆராய்ச்சி
சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

தொகுதி - 8
யசோதர காவியம்

தொகுதி - 9
தமிழ் நாவலர் சரிதை

தொகுதி - 10
சைவ இலக்கிய வரலாறு

தொகுதி - 11
மாவை யமக அந்தாதி

தொகுதி - 12
பரணர்
தெய்வப்புலவர்
The study of thiruvalluvar

தொகுதி - 13
சேரமன்னர் வரலாறு

தொகுதி - 14
நற்றிணை -1

தொகுதி - 15
நற்றிணை -2

தொகுதி - 16
நற்றிணை -3

தொகுதி - 17
நற்றிணை -4

தொகுதி - 18
ஐங்குறுநூறு -1

தொகுதி - 19
ஐங்குறுநூறு -2

தொகுதி - 20
பதிற்றுப்பத்து

தொகுதி - 21
புறநானூறு -1

தொகுதி - 22
புறநானூறு -2

தொகுதி - 23
திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்

தொகுதி - 24
செந்தமிழ் வளம் - 1

தொகுதி - 25
செந்தமிழ் வளம் - 2

தொகுதி - 26
வரலாற்று வாயில்

தொகுதி - 27
சிவநெறிச் சிந்தனை -1

தொகுதி - 28
சிவநெறிச் சிந்தனை -2

கிடைக்கப்பெறாத நூல்கள்
1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
2.  தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு
3.  புதுநெறித் தமிழ் இலக்கணம்
4.  மருள்நீக்கியார் (நாடகம்)
5.  மத்தவிலாசம் (மொழியாக்கம்)

முன்னுரை


        "நீல மேனி வாலிழை பாகத்து  

ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே"

சங்கத் தொகைநூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என இருதொகுதிப்படும். எட்டுத் தொகையுள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு என்ற எட்டும் அடங்கும். இதனை,

        "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு  

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத் தொகை"

என்ற பழம்பாட்டு ஒன்று வற்புறுத்துகிறது. இவை யாவும், புலவர் பெருமக்கள் பலர், அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாகலின், தொகைநூல் எனப்படுதலும் உண்டு. இப் பாட்டில், மூன்றாவதாக, ஐங்குறுநூறு வைத்துச் சிறப்பிக்கப் படுகிறது. இதனால் இந்நூலைப் பதிப்பித்த பிறரெல்லாம் எட்டுத்தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறு என்று குறித்தனர். முதலாவது என்றும் இரண்டாவது என்றும் ஒன்றி னொன்று முற்பிற்பாடு உடையவாக இவற்றை முறைப்படுத்தல் வேண்டா என்பதற்காகவே, நல்ல குறுந்தொகை, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்றறிந்தார் ஏத்தும் கலி என்று சிறப்பித்துள்ளனர். அதனை எண்ணியே இங்கு எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு என்று குறித்தாம்.

இத்தொகை நூல்களுள் ஓதப்படும் பொருள், தொல் காப்பியம் முதலிய பழந்தமிழ் இலக்கணங்களிற் கூறப்பெறும் பொருட்பகுதியாகும். பொருள், அகம் புறம் என இருவகைப் படும். நற்றிணை முதலாகவுள்ள எட்டனுள், பதிற்றுப்பத்தும் புறநானூறு மாகிய இரண்டும் ஒழிய ஏனைய ஆறும் அகப் பொருள் பற்றியன; அவ்விரண்டும் புறப்பொருள் நுவலு வனவாம்.

இச் சங்கத்தொகைநூல்கள் முதற்கண் அச்சேறிய காலத் தினும், இக்காலத்தில், இவற்றின் பொருள் நலங்களை அறிந்தோர் பல்கியுள்ளனர். நாள் கிழமை திங்கள் வெளியீடுகள் பல இத்தொகைநூற் கருத்துக்களை எளிய முறையில் மக்களிடையே பரப்புகின்றன. கழகங்கள் கோயில்கள் முதலியன எடுக்கும் விழாக்களிலும் சிறப்புக்களிலும் இத்தொகைநூற் கருத்துக்களும் பாட்டுக்களும் பொருளாகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படு கின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாடநூல்களும், அரசியல் சமுதாயம் சமயம் முதலிய துறைகளில் உழைக்கும் அறிஞர்களின் எழுத்திலும் சொல்லிலும் இத்தொகை நூற் பொருள்கள் பல சிறந்த இடம் பெறுகின்றன. இவ்வாற்றால் சங்கத் தொகைநூல்கள் பலவும் தமிழ் மக்களிடையே பெரிதும் பரவியுள்ளன. அதனால் இவற்றைப்பற்றி அறிந்தோர் தொகை, இப்போது தமிழருள் ஓரளவு பெருகி வருதல் கண்கூடாக இருக்கிறது.

மேலே குறித்த அறிஞருட் பலர் எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியன மிகச் சிலவும் அகப்பொருள் பற்றியன பலவுமாக இருப்பதை எண்ணத் தலைப்பட்டு, “மக்களின் வாழ்க்கைக்கு அமைந்த அரசியல், பொருளியல், வாணிகம், போரும் உழவும் பிறவுமாகிய தொழில் முதலியவற்றைப் பொருளாகக் கொண்டவை புறப்பொருள் எனப்படும்; அப்பொருள் பற்றிய நூல்கள் பலவாக இருப்பதே உலகியல் வாழ்க்கைக்கு உகந்தது; அதனை மனத்துட் கொண்டே திருவள்ளுவரும் அகப்பொருளைக் காமத்துப்பாலில் இருபத் தைந்து அதிகாரங்களில் சுருங்க வுரைத்து, ஏனைப் பொருட் பகுதியை நூற்றெட்டு அதிகாரங்களில் விரியக் கூறினர்; அங்ஙனம் இருக்க, சங்கச்சான்றோர் தொகுத்த எட்டுத்தொகை யுள் அகப்பொருள் நுவலும் தொகைநூல்கள் பெருக இருப்ப தற்குக் காரணம் என்ன?” என ஆராய்வாராயினர். தமிழ் இலக்கிய வரலாறும் மக்களினத்தின் மனவுணர்வுத்திறனும் ஒழுகலாறும் காலந்தோறும் மாறி இயங்கும் திறமு முணரும் நலமில்லா தோர் சிலர், தமிழ்கூறும் பொருணூல்களின் நுட்ப முணர மாட்டாமையால், “கீழைநாட்டுப் புலவர்கட்குக் காதற்பாட்டுக் களில் விருப்பம் மிகுதி; அதனால் அகப்பொருணூல்கள் எட்டுத் தொகையுள் பெருகியுள்ளன” என்று கூறுவாராயினர்.

நிலவுலகில் வாழும் ஏனை மக்களும் தம்மைப்போல் இங்கே வாழப்பிறந்தவர் என்றும், அவர் வாழும் நாடும் ஊரும் தம்முடையன போல வாழ்க்கைக்கேற்ற தகுதியும் சிறப்பும் ஒப்ப உடையவை என்றும், எனவே அவரும் தம்மை யொத்த பண்பும் பாங்கும் உடையவர் என்றும் கருதி ஒழுகும் பரந்த நோக்கம் இயல்பாக வுடையவர் பழந்தமிழ்மக்கள். அதனால், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனவும், “யாதானும் நாடாமால் ஊராமால்” எனவும் காலம் வாய்த்த போதெல்லாம் மக்களைத் தெருட்டி வந்தனர். இந்நாட்டில் வாழும் தமக்கு இதன்கண் எத்துணை உரிமையுண்டோ, அத்துணை யுரிமை பிறர்க்கும் உண்டென்ற கருத்தால் அவர்க்கு இடமும் பொருளும் ஏற்பன உதவி வாழ்ந்தனர். “உலகுமுழுது வரினும் வழங்கத் தவாஅ” வளமுடைமையே நாட்டுக்குச் சிறப்பாக நூல்களில் வற்புறுத் தினர். சங்ககாலத் தமிழ்மக்கள் வாழ்வில் சாதி நிறவேற்றுமைகள் தலைகாட்டவில்லை; எந்நாட்டவரும் எளிதிற் போந்து இனிது வாழ்தற் குரிய சூழ்நிலையே சிறந்து விளங்கிற்று. இந்த அடிப் படையில்தான் தமிழரிடையே விருந்தோம்புவது பேரறமாகப் பிறங்கிற்று. இதற்கு ஒவ்வொரு குடியிலும் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து ஒத்த உள்ளமும் ஒத்த செய்கையு முடையராக இருக்கவேண்டியது இன்றியமையாத உறுப்பாகக் கொள்ளப்பட்டது.

உலகியலில் ஒருவனது வாழ்வு இனிது இயலுமாயின், அவன் மறுமையில் வானுறையும் தெய்வவாழ்வு பெறுவன் என்பது தமிழர் கருத்து. “வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறை யும், தெய்வத்துள் வைக்கப் படும்” என்று திருவள்ளுவனார் தெளிவிக்கின்றார். வாழ்வாங்கு வாழ்தலாவது “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்”என்பது. இதனை விளங்கக் கூறின், அகமும் புறமுமாகிய இருவகை வாழ்க்கைக் கூறுகளும் நன்கு அமையப்பெறுதல் என்று சொல்லலாம். புறவாழ்க்கை புறப்பொருள் எனவும், மனைவாழ்க்கை யாகிய அகவாழ்க்கை அகப்பொருள் எனவும் தமிழ்ச் சான்றோரால் வகுக்கப் பட்டுள்ளன. புறப்பொருள், தொழில் வாணிகம் நாடு காவல் அரசு செய்தல் முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டது.
அகமாகிய மனைவாழ்வு செம்மையாக அமைந்தாலன்றி மக்களினத்தின் புறவாழ்வு, பொருளும் புகழும் பெற்றுப் பொலிவுறாது என்பது தமிழ்வாழ்வின் அடிப்படை. மனை வாழ்வு உலகில் நிலைபெற்று வழிவழியாக வழங்கி வருதற்கு மக்கட்பேறு இன்றியமையாது. பொருள் இல்லார்க்கு இவ் வுலகில் வாழ்வில்லையாவது போல, “மக்களை யில்லோர்க்குப், பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே” என்பர். அதனால், பழந்தமிழர் தம்மக்களைத் தமது பொருளாகவே கருதுவர். “தம்பொருள் என்ப தம் மக்கள்” என்பது திருக்குறள். மக்களைப் பெறாத மாந்தரை ஆண்மையுடைய மக்களாகக் கருதுதல் கிடையாது. போர்த்தொழிற்கு ஆகாதவரென விலக்குண்ட மக்களில் மகப்பெறாதவரும் அடங்குவர். தம்மினும் தம் முடைய மக்கள் அறிவு மிகவுடையராய், சான்றோர் பரவும் சால்புடையராய், அறிஞர் கூடிய நல்லவையில் முந்துற்றிருக்கும் முதுக்குறைவுடையராய் விளங்குதல் வேண்டுமென விழைந்து, அதற்கு உரியவற்றைச் செய்வதில் பெற்றோர் சிறிதும் பிற்படுதல் இலர். இத்துணைச் சிறப்புடன் பேணி வளர்க்கும் தம் மக்கள் மணம் செய்துகொண்டு மனையறம் புரியும் செவ்வி எய்துமிடத்து நன்மக ளொருத்தியை நாடித் திருமணம் செய்வது பெற்றோர்க்குக் கடன் என்று தமிழ்மக்கள் மேற்கொள்ளவில்லை. மனையறம் மேற்கொள்ள விரும்பும் ஆடவன், தன் கருத்திற் கொத்த நங்கையைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேடிக் கொள்வன். அவன் குறிக்கும் மகளையே பெற்றோரும் சான்றோரும் இருந்து மணம்செய்துவைப்பது மரபு. இது பற்றியே தொல்காப்பியராதல் திருவள்ளுவராதல் ஒருவரும் தாம் பெற்ற மக்கட்குத் தக்காரை மணம் புரிவித்தல் பெற்றோர்க்குக் கடன் என யாண்டும் தம் நூல்களிற் குறிக்கவில்லை.

முன்பே குறித்தபடி, மனையறமே பழந்தமிழர்க்கு உலகியல் வாழ்வின் சிறந்த கூறாகும். அதன்பொருட்டே உலகில் தொழிலும் வாணிகமும் அரசும் பிறவும் அமைந்துள்ளன. மக்களுலகின் நிலைபேற்றுக்கே காரணம் ஆடவரும் பெண்டிரும் மணம் புரிந்து கொண்டு ஒருவர்க்கொருவர் வாழ்க்கைத் துணையாய் மனையறம் செய்தலே என்பது தமிழர் நன்கறிந்திருந்த உண்மை. மனையறம் மாண்புறுமாயின், உலகியல் வாழ்வு அன்பும் அறமும் நிறைந்து, பொருளும் இன்பமும் பயந்து வானுறையும் தெய்வவாழ்வு பெறுதற்குப் பெருவழியாம்.
மனையறம் மாண்புற வேண்டின் அதனை நடத்தும் கணவனும் மனைவியும் உயிரொன்றிய காதலுறவு உடையராதல் வேண்டும். அதுவே வாழ்க்கைக்கு உறுதுணையாம் சிறப்பு நல்குவது. காணப்படும் இருவரை நோக்கி, “நீவிர் மனமொத்த நண்பராய் இருமின்” என்று பிறர் விதிப்பது நட்புக்கு அடிப்படை யென்றோ, நட்பின் தோன்றுநிலை என்றோ அறிவுடையோர் யாரும் கூறார்; புணர்ச்சி பழகுதல் உணர்ச்சி ஆகிய இவையே நட்பாம் கிழமை தரும் எனத் திருவள்ளுவர் முதலியோர் தெருட்டுவர். அதுபோலவே ஓர் ஆண்மகனையும் ஒரு பெண் மகளையும் நோக்கி, “நீவிர் இருவீரும் வாழ்வு முழுதும் உயிரொத்த அன்பராகுக” என்பது முறையாகாது எனக் கருதிய பண்டைத் மக்கள், ஒருவனும் ஒருத்தியும் தம்மில் தாம்கண்டு தமிழ் காதலுறவு கொள்ளுமுகத்தால், உயிரொன்றிய கேள்வரா தலையே நேரிது என்று கண்டனர். இக்கேண்மையே, ஆடவரும் பெண்டிரும் உளம் கலந்து உணர்வு ஒன்றிச் செய்யும் மனை யறத்துக்கு இன்றியமையாதது. இது, கணவனும் மனைவியுமாகிய இருவர் உள்ளத்தே நிகழும் ஒருமை அறமாய், ஒருவர்க் கொருவர் உயிரும் உடம்புமாய் இயைவிக்கும் உண்மை யன்பாய் நிலவும் உறுதிப் பொருளாதலின் இதனை அகப்பொருள் என்றனர்.

இந்த அகப்பொருள், புணர்தல் இருத்தல் பிரிதல் ஊடல் இரங்கல் என ஐந்து கூறாக வகுத்துக் காணப்படும். ஒவ்வொரு கூறும் திணை யெனவும் படுதலின், அகப்பொருளை அகன் ஐந்திணை என்றலும் வழக்கம். அகமாகிய மனைவாழ்வுக்கு உரியவாதல் பற்றிப் புணர்தல் முதலிய ஐந்தினையும் உரிப் பொருள் எனவும், அகப்பொருட்குரிய ஒழுக்கமாவதுபற்றி அகவொழுக்கம் எனவும் வழங்குவர். இக்கேண்மை தோன்றி வளர்ந்து நிலைபேறு எய்துங் காலம் மணமாதற்கு முன்னும் மணத்துக்குப்பின் மகப் பயந்து மகன் நடைகற்கும் துணையும் ஆகும். இக்காலத்து நிகழ்ச்சிகளால் இருவரது காதலுறவும் சிதைவுறாது திண்மையுற்றுச் செந்நெறிக்கண் ஒழுகச்செய்வது அகப்பொருள் நூல்களின் குறிக்கோள்.

கணவனும் மனைவியுமாகும் இருவரும் ஒருவருக்கொருவர் துணைவ ராதலால், இவர்கள் ஒருவரை யொருவர் தேர்ந்து கொள்வது அவர்கட்குத் தனியுரிமையாம் என்பது தமிழ்மரபு. அம்முறையில் ஓர் ஆடவன் ஒரு பெண்மகளையும், ஒரு பெண் மகள் ஓர் ஆடவனையும் வாழ்க்கைத் துணையாய்த் தேர்ந்து மனத்திற் கொள்வதும், அத்துணைமையைத் தனி முறையில் வளர்த்துக் கொள்வதும், வளர்ந்துவரும் துணைமைக்குக் காரணமாகிய காதலுறவு பெருகி முறுகுதலால், ஒருவரை யொருவர் இன்றியமையா ராவதும், பின்னர் இருவரும் பெற்றோரும் சான்றோரும் அறியத் திருமணம் செய்து கொள் வதும், அவ்விருவரும் கூடி மனையறம் புரிவதும் அகப்பொருள் நெறிக்கட் கூறப்படும் செயல்முறைகளாகும். ஒருவரையொருவர் தனிமையிற் கண்டு வாழ்க்கைத் துணைமைக்குரிய காதலுறவு கோடலும், அதனைப் பிறர் அறியா வகையில் வளர்த்தலும், பின்பு அதனைப் பலர் அறிய வெளிப்படுத்தலும் களவு எனப் படும். கடி மணம் புரிந்து கோடலும் மனையறம் செய்து பொருளீட்டி இன்புறும் வகையில் தாமும் இனிது வாழ்ந்து, ஏனை மக்களினமும் இன்புற்று வாழ இயன்றன உதவி, இம்மையிற் புகழும் மறுமைக்கண் இறவாத இன்பவாழ்வும் பெற முயல்வது கற்பு எனப்படும்.

உண்மையன்பும் ஒழியாத அறச்செய்கையுமுடையதானால் உலகியல் வாழ்வு மக்கட்கு இன்பவாழ்வாகும். ஒவ்வொரு மனையும் அன்பும் அறமும் பண்பும் பயனுமாக வளம் பெறுவதையே உலகியலறிவு வற்புறுத்துகிறது. அம் மனையி லிருந்து வாழ்க்கை நடத்தும் ஆண்மகனும் பெண்மகளும் ஒத்த அன்பும் உயிரொன்றிய உணர்வும் உடையராவது இன்றி யமையாது. இது பற்றியே பழந்தமிழ்ச் சான்றோர் இந்த அகப்பொருள் ஒழுக்கத்தைப் பன்னெறியாலும் நுணுகிநுணுகி ஆராய்ந்து மிகப்பலவாய பாட்டுக்களைப் பாடியுள்ளனர். இடைக்காலத்தே இந் நுட்பத்தை யுணரும் நல்ல தமிழறிவு தமிழரிடையே வீழ்ந்தது; தமிழ் அறியாத மடமையே மக்களுக்குப் பெருமை எனக் கருதும் கீழ்மை தமிழ் இனத்தின் உள்ளத்தில் நுழைந்துகொண்டது. அகப்பொருளின் நுட்பம் கண்டு அறிவுக்கூர்மை எய்தும் கருத்தின்றி அதனை எள்ளி நகைக்கும் விலங்கறிவு விளக்கம் பெற்றது.

மனைமாட்சிக் குரிய காதலுறவு தோன்றி வளர்ந்து சிறத்தற்கு அமைந்த அகப்பொருள் ஒழுக்கம் புணர்தல் முதலிய ஐவகைத் திணைகளில் இயலுவதென முன்பு கண்டோமன்றோ? உலகில், வாழப் பிறந்த ஒருவனும் ஒருத்தியும், கூடுதலும், பிரிதலும், கூடியும் பிரிந்தும் இருத்தலும், உவகையால் ஊடுதலும், தனித்திருந்து இரங்குதலும் ஆகிய செயல்வகையால் காதலன்பு சிறக்கின்றனர். அவற்றால் அவரது உழுவலன்பு பெருகி மாட்சியுறுதலால் புணர்தல் முதலிய ஒவ்வொன்றின்கண்ணும் காதலர் உள்ளத்தெழும் எண்ணங்களையும் ஏனைச் சொற் செயல்களையும் எடுத்துக்காட்டுவதைச் சங்கச் சான்றோருடைய புலமை தனக்குச் சால்பாகக் கொண்டது. உண்மையன்பாலும் உயரிய அறத்தாலும் மக்களது மனைவாழ்வு மாண்புற வேண்டும் என்பதே தமிழ்ப்புலமையின் உரிமைப் பணியாகச் சங்ககாலம் வற்புறுத்தியுள்ளது. நல்லிசைப்புலவர் பலரும், அவ் வகப்பொருட் கருத்துக்களைப் பாட்டில் தொடுத்துப் பாடி, மக்களை நல்வாழ்வினராக்கும் பெரும்பணியைச் செய்தனர். அத்தொழில் புலனெறி வழக்கம் என அறிஞர்களால் போற்றப்பட்டு வந்தது.

கூடுதல் பொருளாக நிகழும் உணர்வு உரை செயல் ஆகிய மூன்றையும், குறிஞ்சித்திணை யெனவும், பிரிவு பொருளாக நிகழ்வன பாலை யெனவும், இருத்தல் முல்லை யெனவும், ஊடல் மருதம் எனவும், இரங்குதல் நெய்தல் எனவும் பண்டைத்தமிழர் வகுத்துக்கொண்டனர். அவ்வாறே, வாழ்வுக்கு இடமாகிய நிலப்பரப்பும் மலை, காடு, பாலை, வயல், கடற்கரை என ஐந்து கூறுபடுகிறது. இவற்றையும் திணை யென்பது நிலநூல் வழக்கம். கூடுதல் முதலிய பொருளாக வருவனவற்றை உரைத்தல் வேண்டி, அவற்றிற்கு இடமும் காலமும் குறித்தல் முறையாதல் கண்டு, புணர்தலுக்குக் குறிஞ்சிநிலத்தையும், பிரிவுக்குப் பாலையையும், இருத்தலுக்கு முல்லையையும், ஊடலுக்கு மருதத்தையும், இரங்குதலுக்கு நெய்தலையும் திணைக்களமாகப் பகுத்துப் புலனெறிவழக்கம் செய்வது மரபாயிற்று. இக் கருத்தைப் “படுதிரை வையம் பாத்திய பண்பு” என ஆசிரியர் குறித்திருப்பதால் அறியலாம். இதனால் தான், குறிஞ்சிப்பாட்டில் கூடுதல் பொருளாக வரும் கருத்துக் களும், பாலைப்பாட்டில் பிரிவுக்குரிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

குறிஞ்சி முல்லை முதலியவற்றைத் திணைக்களமாகக் கொண்ட பாட்டுக்களில் அங்கு வாழும் மக்கள் விலங்கு புள் மரம் செடி கொடி முதலியவற்றின் காட்சியும் செய்கையும் சிறந்து நிற்கும். சான்றோர் அவற்றை நிலைக்களமாகக் கொண்டு, புணர்தல், இருத்தல் முதலிய அகவொழுக்கங்களைத் தொடுத்துப் பாடுவர். ஒருசில சமயங்களில் திணைக்களமாகிய இயற்கைக் காட்சி ஒரு திணையாகவும், அகவொழுக்கம் ஒரு திணை யாகவும் மாறிப் பாடுவதுண்டு. அதனைத் திணைமயக்கம் என்பர். குறிஞ்சித் திணைக்களத்தில் குறிஞ்சியொழுக்கத்தையும், நெய்தல் திணைக்களத்தில் நெய்தலொழுக்கத்தையுமே வரை யறுத்துப் பாடி வரின், குறிஞ்சி நிலத்தில் பிரிவும், மருதத்தில் கூடலும், நெய்தலில் இருத்தலும் பிறவுமாகிய அகப் பொரு ணிகழ்ச்சிகள் தோன்றா போலும் என்ற கருத்துப் பிறந்துவிடும். அந்தக் கலக்கம் தோன்றாதபடி விலக்குதற் பொருட்டே திணை மயக்கம் புகுத்தப்பட்டது. எனினும் அது சிறுபான்மையாக இருக்கும் என அறிதல் வேண்டும்.

புணர்தல் பிரிதல் முதலிய ஐந்திணை யொழுக்கத்தின் அரிய குறிக்கோளையும் அதனால் விளையும் அறப்பயனையும் கண்ட சான்றோர் தாம் பாடும் பாட்டுக்களி லெல்லாம் அகவொழுக் கத்தையே பெரிதும் எடுத்துப் பாடினர். மேலும், இவ்வகப் பொருட்காட்சியும் அறிவும், அறம் புரிந்தொழுகும் தூய மக்கட்சமுதாயம் தோன்றுதற்கு இன்றியமையா எனக் கண்டத னால், இதனை வழக்குநூன் முறையிற் கூறுவதே புலனெறி
என்று மேற்கொண்டனர்.

உலகில் வாழும் மக்களுள், குணமே நிறைந்து குற்றமே இல்லாதவரோ, குற்றமே நிறைந்து குணமே இல்லாதவரோ எக் காலத்தும் இருந்ததில்லை; எல்லோரும் குணமும் குற்றமும் விரவியவரே. இது பற்றியே யாவரையும், “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடிக்” கொள்ளுவதோ தள்ளுவதோ செய்தல் வேண்டும் என்றும், “அரிய கற்று ஆசற்றார் கண்ணும்” வெளிறின்மை அரிது என்றும் திருவள்ளுவனார் தெளிய உரைத்தார்.

இங்ஙனம் மக்கள்பால் விரவிக் கிடக்கும் குணம் குற்றங்களுள் குணத்தால் இன்பமும் குற்றத்தால் துன்பமும் விளையக் கண்ட உலகியலறிவு, குணத்தை விரும்பி அது மிக்கோரையே பின்பற்றி வாழ்வதாயிற்று. துன்பத்தை வெறுத்தலும், இன்பத்தை விரும்புதலும் உயிர்கட்கு இயல்பு. துன்பம் கலவாத இன்பத்தைப் பெறுவதிலே உயிர்களின் நாட்டம் எல்லாம் ஒன்றியிருப்பது கண்கூடு. அதனால் குணமே நிறைந்து இன்பமே பயக்கும் செயலுடையவரையே பாராட்டுவதும், அவருடைய உணர்வு உரை செயல்களைப் பின்பற்றுவதும், மக்களுயிர் தாம் மாண்புறும் நெறியாகக் கொண்டுள்ளன. அரசு, வாணிகம், தொழில் முதலிய வழக்கியல் துறைகட்கு முறையும் நெறியும் வரையறுத்து உரைக்கப் புகுந்த வழக்கு நூற்புலவர், குணமே நிறைந்த ஆண்மகன் (Ideal Man) ஒருவனைப் படைத்துக் கொண்டு விதிவிலக்குகளை வகுக்கின்றனர். இந்நாளில் சட்டநூல்களை எழுதும் அறிஞர் இக்கருத்தையே மனத்திற் கொண்டிருப்பது யாவரும் அறிந்தது.

பன்னூறு நூற்றாண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களும் இந்த முறையையே கண்டு மேற்கொண்டு அறநூல்கள் பலவும் ஆக்கினர். குற்றமென்பதே யின்றிக் குணமே நிறைந்த ஆண்மகன் (Ideal Man) ஒருவனையும் பெண்மைக்குரிய நலமெல்லாம் உருவாய்த் திரண்ட பெண்மகள் (Ideal Woman) ஒருத்தியையும் படைத்து நிறுத்தி, அவர்களிடையே இந்த அகப்பொருள் ஒழுக்கத்தைப் புகுத்தி, அதற்குரிய நினைவு சொற் செயல்களைத் தொடுத்து உரைப்பாராயினர். அவர்கள் காட்டும் நெறியை ஏனை மக்கள் அனைவரும் அறிந்து பாராட்டி உய்தி பெறும் பொருட்டு அவர்களை முறையே தலைவன், தலைமகன் என்றும், தலைவி, தலைமகள் என்றும் கூறுகின்றனர்.

அறிஞர்குழுவால் பயன் கருதிப் படைத்துக்கொள்ளப் பட்டவர்க ளாதலால் இத்தலைமக்கட்குப் பிறப்பு, பிணி, மூப்பு, வறுமை, சாக்காடு முதலிய குற்றங்கள் இருப்பதாகக் கருதக் கூடாது. மேலும், மக்கள் அனைவரும் இனம் சூழ வாழும் இயல்பினராதலின் அவருள் ஒவ்வொருவர்க்கும் சிறந்த நண்பர் உளராவது இயல்பு. அம்முறையில் தலைமகற்கு ஒரு தோழனும் தலைமகட்கு ஒரு தோழியும் உளராவர். மக்கள் வாழ்வு செந் நெறியில் செல்லுதற்கு அன்பும் அறிவும் அறமும் துணைசெய்வது போலத் தலைமக்களின் தலைமை வாழ்வுக்கு, அந்த அன்பு முதலிய மூன்றையுமே, முறையே சொல்லும் மனமும் செயலு மாகக் கொண்ட நட்பின் வடிவைத் தோழனும் தோழியுமாகப் படைத்துள்ளனர். தோழமைப்பண்பின் (Ideal friendship) பெண்வடிவம் தோழி யெனவும், ஆண்வடிவம் தோழன் எனவும் கோடல் வேண்டும்.

பாடப்படுவது குறிஞ்சிப்பாட்டாயின், தலைமகன் வெற்பன் சிலம்பன் மலைநாடன் எனவும், மருதப்பாட்டாயின் மகிழ்நன் ஊரன் எனவும், நெய்தற்பாட்டாயின் சேர்ப்பன் துறைவன் எனவும், தலைமகள் கொடிச்சி, எயிற்றி முதலிய பெயர்களாலும் குறிக்கப்படுவர். படினும், எப்படியோ மேற்கூறிய இலக்கணம் அமைந்த தலைவன் தலைவி என்ற சொற்களின் கருத்தை மறந்தமையால், பிற்காலத்தே அத்தலைமக்களைக் குறிஞ்சி முல்லை முதலிய நாடுகட்கு அரசர் அரசியர் என்றும், ஏனை மக்களினத்து ஒருவர்போலக் குணமும் குற்றமும் விரவிய பிறப்பொழுக்கம் உடைய ரென்றும் கருதும் தவறு இப்பாட்டுக் களைப் படித்தோரிடையே தோன்றிக் குழறுபடை செய்வ தாயிற்று.

மேலே விரிவாகக் கூறிய புணர்தல் பிரிதல் முதலிய ஐவகை அகப்பொருணெறியும் பொதுவாகக் களவு கற்பு என இருவகைப்படும். இவ் விருவகை ஒழுக்கத்தினும் புணர்தல் முதலிய ஐந்தும் நிகழும் என அறிதல் வேண்டும். ஆயினும் கற்பின்கண் ஊடலும் இருத்தலும் சிறப்பாக எடுத்து உரைக்கப் படும். ஏனையவை களவின் கண் சிறந்து தோன்றும். களவின்கண் மணமாதற்கு முன்னர் உளதாகும் அகவொழுக்கமும், கற்பின்கண் மணமான பின்னர் மகன்பிறந்து நடைபயிலும் பருவம் ஈறாக வுள்ள காலத்து அகவொழுக்கமும் இடம்பெறும். களவொழுக்கத் தின் வளமையைச் சார்ந்தே கற்பின் திண்மை அமைந்திருத்த லால், கற்புக்குக் களவை வழிநிலை யொழுக்கமாகச் சான்றோர் கருதிக் கூறியுள்ளனர். மகப்பேற்றுக் குரிய மெய்யுறுபுணர்ச்சி கற்புக்காலத்தில் தான் உண்டு; களவின் கண் அது கிடையாது. களவிற் கூறப்படும் மெய்யுறு புணர்ச்சிக்கு மெய்தீண்டல் முயங்குதல் முத்திகொளல் என்பன பொருளாகும். இதற்கு, “கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள” என்றும், “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி, வாலெயிறு ஊறிய நீர்” என்றும் வரும் திருக்குறள்களே போதிய சான்றுகளாகும்.

களவொழுக்கம், இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் தோழியிற்கூட்டம் என நான்கு வகைப்படும். இயற்கைப் புணர்ச்சியைக்காமப்புணர்ச்சி என்றும், தெய்வப் புணர்ச்சி யென்றும் வழங்குவர்.

        “காமப்புணர்ச்சியும் இடந்தலைப்படலும்,  

பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே”

என்று தொல்காப்பியம் கூறுகிறது. இவற்றுள், மேற்கூறிய தலைவனும் தலைவியும் முதன்முதலாக ஒருவரையொருவர் தனித்துக் கண்டு உள்ளத்தாற் கலத்தல் இயற்கைப் புணர்ச்சி எனப்படும். முன்னாள் கண்டவிடத்தோ அதனைச் சார்ந்த பிறிதோரிடத்தோ மறுபடியும் கண்டு முன்பு உளதாய உள்ளக்கலப்பை வலியுறுவிப்பது இடந்தலைப்பாடு. பின்பு, தலைமகன் தன் காதற்கருத்தைத் தன் தோழனுடன் அளவளாவித் தலைவியின் இயலிடம் தெளிந்து அவன் அறிய அவளுடைய காதலுறவைப் பெறுவது பாங்கற்கூட்டம்; இது பாங்கொடு தழாஅல் எனவும் வழங்கும். தலைமகளுடைய தோழியை அவள் காட்டும் குறிப்பால் உணர்ந்து தலைவியை அவள் அறிய அளவளாவப் பெறுவது தோழியிற்கூட்டம் எனப்படும். தோழியிற்கூட்டம் பெற்றவன், தலைவி யுள்ளத்துத் தோன்றி விளங்கும் காதலுறவு முறுகிப் பெருகித் தன்னை யின்றி அவள் இமைப்போதும் அமையாவாறு வளர்வது குறித்துப் பகற் போதினும் இரவுப்போதினும் போந்து குறிப்பிட்ட ஓரிடத்தே அவளைத் தலைப்பெய்து இன்புறுவன்; ஒருவழித் தணத்தல், வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல் என்பவற்றால் அவள்காதலை மிகுவித்தலும், தான் கருதுமளவிற்குக் காதல் முறுகாதவழி வரைவை நீட்டித்தலும் செய்வன். தலைமகன் உள்ளத்தில் மிளிரும் காதலுறவின் திட்பத்தைத் தோழி பகல்வரவு விலக்கியும் இரவுக்குறி மறுத்தும் முறுகுவிப்பள். இது சேட்படை எனவும் வழங்கும். தலைவியின் காதற்பெருக்கை யுணர்ந்து தோழி, தலைமகனைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் காதலுறவுக்கு இடையூறாகும் காரணம் பல காட்டி வரைந்து கொள்ளுமாறு தூண்டுவள். அது வரைவுகடாதல் எனப்படும். தலைமகன் வரைந்து கொள்ளாது நீட்டித்தலோ கடமை காரணமாக ஒருவழித்தணத்தலோ, வரைபொருள் குறித்துப் பிரிதலோ செய்யுமிடத்து, பெற்றோர் தலைவியின் வேறுபா டறிந்து திருமணத்துக்கு முயல்வாராயின், தோழியும் தலைவியும் பெற்றோர்க்குத் தலைமகற்கும் தமக்கும் உண்டாகி யிருக்கும் காதலுறவை எடுத்துரைப்பர்; அஃது அறத்தொடு நிற்றல், அறத்தொடுநிலை எனப்படும். சில சமயங்களில் தலைவியின் பெற்றோர் அவளைப் பிறர்க்கு மகட்கொடை புரிவரென்றோ, தலைமகற்கு மறுப்பரென்றோ தோன்றுமாயினும், அறத்தொடு நிற்றற்குரிய வாய்ப்புக் குன்றுமாயினும் பெற்றோர் அறியா வாறு தோழியின் துணையால் தலைமகளைத் தலைமகன் தன்னொடு கூட்டிக்கொண்டு போய் விடுவதுண்டு. அஃது உடன் போக்கு எனப்படும். அறத்தொடுநிலையும் உடன் போக்கும் திருமணத்துக்கு நிமித்தமாகும். வரைவு என்பது தலைமகள் தலைமகனுக்கே உரியவள் எனச் சான்றோரும் தமரும் அறிய வரையறை செய்தல் அதன்பின், தலைமக்களின் தாய் தந்தையரும் தமரும் சான்றோரும் கூடி இருவரையும் மணவமளி யேற்றித் தனிமனைப்படுத்துதல் வதுவைமணம் என வழங்கும். உடன்போக்கும் வரைவும் வதுவைமணமும் கற்பின் கூறாதலின், இயற்கைப்புணர்ச்சி முதல் உடன்போக்கு எல்லையாக நிகழ்வன களவொழுக்கமாயின.

களவின்கண் நிகழும் செயல்வகைகள் யாவும், தலைமக்கள் உள்ளத்தே தோன்றிய காதலுறவு முறுகிப் பெருகி ஒருவரை யொருவர் இன்றி உயிர்வாழ்வு அமையாராகும் ஒள்ளிய நிலையை எய்துமாறு உருவாக்குதலையே குறிக்கொண்டுள்ளன; “வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல், அதற்கன்னள் நீங்கும் இடத்து 1”எனத் திருவள்ளுவனார் தலைமகன் கூற்றில் வைத்து உரைக்குமாறு காண்க. இயற்கைப்புணர்ச்சி வாயிலாகத் தோன்றும் காதலன்பு, இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம் ஆகியவற்றால் தலைவன் உள்ளத்தில் நிலைபேறுகொண்டு, தோழியிற்கூட்டத்தில் அவனைச் செலுத்துகிறது; அங்கே, தோழியைத் தன் கருத்துக்கு உடம்படுத்தற்கண் எய்தும் அருமையும், சேட்படைத்துன்பமும், இரவுக்குறிக்கண் தலை மகளைக் கண்டு பயிலும் துறையில் வழியின் கொடுமையும், தலைவி மனையின் காவற்பெருமையும், அல்லகுறி யவலமும், தோழி பகல்வருவானை இரவு வருகென்றலும், இரவுக்குறி மறுத்தலும், இருபோதும் வாரற்க என அலைத்தலும் பிறவு மாகிய அல்லல்களால் தலைமகன் உள்ளத்துக் காதல் பெருகிச் சிறப்பெய்துகின்றது. தலைவனைத் தன் கண் காணத் தோழி சேட்படுத்தும், பகற்குறி விலக்கியும், இரவுவரவு மறுத்தும் அலைப்பதும், தன்பொருட்டு அத் தலைவன் பனி, வெயில், கார்மழை, கொடுவிலங்கு, கடுங்காவல், காட்டாற்றுப்பெருக்கு, இடிமின்னல் முதலாய இடையூறுகளை எதிர்த்து நீந்திப் போதருவதும், ஒருவழித் தணப்பின்கண் அவனைத் தான் காணாமல் பிரிந்திருப்பதும் ஒருபால் வருத்த, தன் மேனி வேறுபாடுகண்டு, ஊரவர் அலர் கூறுவதும், அன்னை வெறி யெடுப்பதும், வேற்றவர் மகட்கொடை வேண்டி வருதலும் பிறவும் வேறொருபால் நின்று வெதுப்ப, இடைநின்று வருந்தும் தலைவியின் உள்ளத்திற் காதல் பெருகி முறுகுகின்றது. பின்னர் உடன்போக்காலும், வரைவாலும், இருவர் காதலும் வெளிப் பட்டு, வதுவைமணத்தால் நாடு நகரம் நன்கு அறியக் கலந்து ஒருவர்க் கொருவர் உடம்பும் உயிருமாம் ஒருமைநிலையைப் பயந்துவிடுகிறது. அதனை உணரும் தலைமகன், “உடம்போடு உயிரிடை யென்னமற்று அன்ன, மடந்தையோடு எம்மிடை நட்பு 1” என்று கூறுதல் காண்க.

களவின்கண் தலைமக்கள் தம்முடைய காதலுறவை வளர்ப்பது கருதிப் பகற்குறி இரவுக்குறிகளிலும் பிறாண்டும் தனித்துக் கண்டு பயிலுங்கால் தவறுண்டாகாதுகொல்லோ எனச் சிலர் ஐயுற்ற துண்டு. அவ்வாறு ஐயம் எழத்தக்க வகையில் பிற்காலத்தே பாட்டுக்கள் பாடியோரும் உண்டு. சங்ககாலத் துக்குப் பின்னர்ச் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை, நம் தமிழகம் தமிழரல்லாத களப்பிரர் பல்லவர் ஆட்சியிற்பட்டுத் தமிழ்க்கே யுரிய தூய உணர்வு ஒழுக்கங்களில் மிகப்பெரிதும் சீரழிந்தது. ஐரோப்பியரின் கீழ் இருந்த இரண்டு நூற்றாண்டுகளில் எத்துணையோ பல நலங்களை மறந்தொழிந்த தமிழகம், பத்து நூற்றாண்டுகள் வேற்றரசின் கீழ்ப்பட்டிருந்தபோது தன்னுடைய நலங்கள் பலவற்றைக் கையிழந்து ஏழையான திறத்தை அவரவரும் தத்தம் மனக்கண்ணால் எண்ணிக்கொள்ளக் கடவராவர். தன் தனிப்பெருமையிழந்து அடிமைச்சேற்றில் சிக்கின அந்நாளில், தமிழர்களின் பழங்கால வழக்க ஒழுக்கம் உணர்த்தும் நூல்கள் இறந்தொழிந்தன. சங்ககால இலக்கியங்களுள் எண்ணிறந்தன இறந்தன. இன்று கிடைத்துள்ள சிலவற்றுள் சங்ககாலத் தொகை நூல்கள் அடங்கும். இலக்கியத்துறை தன் இயற்கை அறிவுக் கண்ணை யிழந்து வடவரும் பிறரும் காட்டிய கைக்கோலைப் பெற்றுத் தடுமாறி நடந்தது. அதனால் தமிழர் மனையற முணர்த்தும் பொருணூல்களின் கருத்துக்கள் பல பொய்யாய்க் கனவாய்ப் புனைந்துரையாய்ப் பொற்பிழந்தன. அவ் விருட் காலத்தும் பிற்காலத்தும் எழுந்த நூல்கள், குற்றமே யில்லாத தலைமக்கள் வாழ்வில் குற்றமுண்டாகும் வகையில் அமைந் தொழிந்தன. பிற்காலக் கோவைநூல்கள் இதற்குப் போதிய சான்று பகரும். குணமே வடிவாக நிறைந்த தலைமக்களைப் படைத்த நூலோர், தனிமையிற் கண்டு பயில நேரும்போது தவறு உண்டாகுமாறு செய்வரா? அந்நிலையில் தலைமக்கள் என்போர் தவறு செய்வாராயின், அவர்களைத் தலைவர் என்பது பொருந்துமா? அவர்கள் தலைவன் தலைவி என நின்று பிறர்க்கு வழிகாட்டியாவது யாங்ஙனம்? தவறு செய்வோர் ஏனை மக்கள் போலக் குணம் குற்றம் உடையராவரேயன்றிக் குணவடிவான தலைமக்களாகாரன்றோ! மேலும், தவறு செய்தற்கு ஏற்ற இடமும் காலமும் வாய்த்தவிடத்து, நெஞ்சைத் தவற்றின்கண் செல்லாவாறு அறிவால் தடுத்து நன்னெறிக்கட் செலுத்துவது தானே தலைமக்களின் தலைமைப்பண்பு? தனிமையிற் கண்டு பயிலுமிடத்து ஆணும் பெண்ணுமாகிய தலைமக்கள் தவறு செய்வர் எனக் கருதுவதும், கருதுமாறு உரைப்பதும், தலைமை நெறி காட்டும் தக்கோர்க்கு அறமாகாது; அவ்வாறு உரைப்பன உளவேல், அவை, தமிழர் கண்ட அகப்பொருளின் மாண்பை அழித்தற்கெழுந்தவை என்று தெளிந்து விலக்குவதே அறிஞர் கடனாகும்.

கற்பின்கண் வதுவைமணத்தால் மனையறம் புரியலுறும் தலைமக்களது காதலன்பு, சமநிலத்தோடும் நீர்போற் செல்லாது, கல்வி குறித்தும் பொருள் கருதியும் வினையாண்மை வேண்டியும் நிகழும் பிரிவுகளால் அலைப்புண்டு கலங்கி, மகப்பேற்றால் தெளிவுற்று, மனைவாழ்வை மாண்புறுத்து, வாழ்க்கைத் துணையாம் வண்மையுற்று, அறத்தாற்றில் பொருளீட்டி இம்மைக்கண் இறவாப் புகழ் நல்கி இலங்குகிறது. பின்னர்த் தலைமக்கள் இருவரும், அறம்புரி சுற்றம் துணையாகத் துறவுள்ளம் மேற்கொண்டு மெய்யுணர் வெய்தி அவாவறுத்துச் சிறந்தது எனப்படும் வீடு பேற்றுக்குச் சமைகின்றனர்; அவரது காதலன்பு வீடு காதலிக்கும் வியன்பேரன்பாய் மிளிர்கிறது. இதனைக்

        “காமம் சான்ற கடைக்கோட் காலை  

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என ஆசிரியர் தொல்காப்பியனார் உரைப்பது காண்க. இந் நூற்பாவில், இறந்தது என்றது வயதுமுதிர்தலை; “இளமையும் தருவதோ இறந்த பின்னே” என்ற கலிப்பாட்டடி இதற்குப் போதிய சான்று.

கற்புறு மனைவாழ்வின்கண், தலைமக்கள் எய்தும் நுகர்ச்சியால் இன்பம் ஊறிச் சிறக்கும் காதலன்பு, மகப்பேற்றுக்கு முன்னும் பின்னும் நிகழும் பிரிவுகளால் வளமுறுகிறது. உலகியலில் பொருள்கள் யாவும் நின்றாங்கு நிலைபெற்று நின்று மாறாத இன்பம் தருவன வல்ல. பொருளின் வளர்ச்சிக்கண் பெருகித் தோன்றும் நலம் அவ்வளர்ச்சி முற்றியதும் குன்றத் தலைப்படுதலால் தானும் நிலையின்றித் தேயத் தொடங்குவது இயல்பு. கதிர் முற்றுங்காறும் தலைநிமிர்ந்து இனிய காட்சி பயக்கும் நெற்பயிர், நென் மணி முற்றியதும், சாய்ந்து நிறம் வேறுபட்டு நிலத்தே வீழ்வது இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு. இளந்தளிரும் நறுமலரும் தாங்கிக் காணும் கண்ணுக்கு இனிய காட்சி தந்து, பாடிவரும் வண்டுகட்குத் தேனளித்து விருந் தோம்பும் நன்மரம், காய் முற்றிக் கனிநல்கும் காலத்தும் அதன் பின்னும், முன்னைப் பொலிவும் நலமும் இன்றிக் குன்றுகிற தன்றோ? அவ்வாறே மக்களுடம்பும், கவினுறு காட்சியும் எழில்மிகு தோற்றமும் பொற்பமை மேனியும் கொண்டு இள நலத்தால் ஏற்றம் பெற்று மகப்பேறு எய்தி மாண்புறுங்காலத்துத் தெய்வ மணங்கமழ் பண்டை இளநலம் தேயத் தலைப்படுகிறது. மக்கள் உள்ளத்தை மலர்வித்து இன்பப்பேற்றுக்கு இலக்காக்கிய காதலுறவு, இளமைக்காலத்து இன்பத்தோற்றத்தை அடிப் படையாகக் கொண்டு தோன்றிய தாகலின், அடிவேர் வலியிழந்த மென்கொடிபோல் விளர்த்து மெலிந்தொழிகிறது. இவ்வியல்பு மாக்களிடத்தும் ஒப்ப நிலவுதலின், மக்களுயிர் வேறுபட வேண்டியது கடனாகிறது. உடலின் தோற்றப் பொலிவைக் கால்கொண்டு தோன்றிய காதலுறவு, பெருகி உயிரைப் பிணிக் குங்கால், உயிரையே அதற்குக் காலாக்கி அதன்கண் நிறுத்தி மறுமை யின்பப்பேற்றுக்கு வழியாக மாற்றிக்கொள்ளற்பாலர் மக்கள். களவுக்காலத்துக் கதிர்த்துப் பெருகித் தன் உயிரைப் பிணித்த காதலன்பு, கற்பின்கண், தன் உயிரையே காலாகக் கொண்டு நிற்கும் செவ்விகண்டு, அக்காலத்தே நிகழும் பிரிவுகளாலும் மகப்பேற் றாலும், தன் உயிரினின்றும் நெகிழ்ந்து நீங்காவாறு பிணித்து மெய்ந்நெறி பற்றிப் படருமாறு விடுகின்றான் தலைமகன்; அதுவே கற்பொழுக்கத்தின் குறிக் கோளும் பயனுமாகும்.

மனைவாழ்வின்கண், கணவன் மனைவியரிடை நிலவும் காதலன்பின் வன்மை, கணவனான தலைமகன் நிகழ்த்தும் பிரிவுகளால் நெகிழ்ந்து மென்மை யுறுதற்கு வாய்ப்புண்டு. அப்பிரிவுகள், சிறப்பாகக் கல்வி, பொருள், பகைதணி வினை, நாடு காவல், தூது முதலிய நற்பணி குறித்தவையாம். பரத்தையிற் சேறல் தொல்காப்பியனார் முதலிய பண்டைச் சான்றோரால் இவற்றோடு ஒப்பக் கூறப்படவில்லை. மேற்கொண்ட பிரிவுக் குரிய காரணம் தனக்கெனக் குறிக்கப்பெற்ற காலவெல்லை நீட்டிக்குமாயின், தலைமகன் வாராமை பற்றித் தலைமகட்கு வருத்தம் மிகும். காதலனது அன்பு, தன்பால் சுருங்கி மேற் கொண்ட பொருள்வினைபால் பெருகிற்றுப் போலும் என்ற வேறுபாட்டுணர்வு தோன்றி அவளைப் பேதுறுக்கும். இவ் வாற்றால் களவின்கண் பிரிவரிதாய்ப் பிறங்கிய காதலுறவு, கற்பின்கண் வேறுபாட்டுக்கு இடம் தந்தும், பிரிவு நீண்ட விடத்து ஆற்றியிருக்கு முகத்தால் சிறிது வலியிழந்தும் இயலும். தலைமகன்பால் பெருகிநின்ற காதலும், அவன்மகன் முகத்தைக் கண்டு பயிலுமாற்றால் சுருங்கும். இவைகளை ஊடலும் புலவியும் நல்கும் இன்பத்தால் மாற்றிக் கூடலால் காதலன்பு நெகிழ்ந்து நீங்காவகை நிறுத்துவது கற்பாம். இதுபற்றியே, ஆசிரியர் திருவள்ளுவனார், “ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்” என்றும், “உணலினும் உண்டது அறல்இனிது காமம், புணர்தலின் ஊடல் இனிது” என்றும் கூறினர்.

இக் கற்பொழுக்கத்தின்கண், தலைமகன் பரத்தையர் மனைக்குச் செல்வதும் அவர்களிற் பலரோடு தொடர்பு கொள்வதும், அதனால் தலைமகட்கு மனத்தில் பொறாமை தோன்றுவதும், அவர்கள் வாழ்வில் புலவியும் ஊடலும் உண்டாகுவதும் பிறவும் கூறப்படுவ துண்டு. பாணர் விறலியர் முதலியோர் தலைமக்கள் உதவிபெற்று வாழ்பவரெனவும், அவர்கள் தலைமகனுக்கும் பரத்தையர்க்கும் இடையே தொடர்பு உண்டாக்குவரெனவும், பரத்தைமை யொழுக்கத்தி னின்று நீங்கித் தலைவன் தன் மனைக்கு மீளுமிடத்து அவற்கும் தலைவிக்கும் பாணரும் பிறரும் வாயிலாய் நின்று பணிபுவர் எனவும் நிகழ்ச்சிகள் பல தொடுத்துக் கூறப்படும். தலைமகள் கருக்கொண்டு முதிர்ந்து மகப்பெற்று உறையுங் காலத்தே தான் தலைமகற்குப் பரத்தமையொழுக்கம் தோன்றுவதாகச் சான்றோர்களின் பாட்டுக்கள் தெரிவிக்கின்றன.

தலைமை மாண்புடைய ஒருவனுக்குப் பரத்தையர் தொடர்பு இழுக்காம் என்பது இன்றைய சமுதாயச் சூழ்நிலை யமைப்பின் கருத்தாகும். மக்கட் சமுதாயம் காலந்தோறும் இடந்தோறும் மாறியும் வேறுபட்டும் வரும் இயல்பினது. உடன்பிறந்த தமக்கை தங்கைகளை மணம் புரிதற்கு இடந்தந்த எகிப்திய கிரேக்க யவன சமுதாயம் இன்று அதனை இழுக்கென நீக்கிவிட்டது. உடன்பிறந்தான் மக்களைத் தம்மக்களோடு ஒப்பக் கருதி இருவர் மக்களும் அண்ணன் தம்பிகளாகவும் தங்கை தமக்கைகளாகவும் கொண்டு ஒழுகும் ஒரு சமுதாயத்தின் கொள்கை, பிறிதொன்றுக்கு இழுக்காகத் தோன்றுவது கண்கூடு. ஒரு சமுதாயத்துக்குள்ளேயே ஒரு கோத்திரத்தவர்க்குள்ளே மகட்கொடை புரிவதை இழுக்கெனக் கருதும் இனமும் இழுக்கன்றென மேற்கொள்ளும் இனமும் உண்டு. முதற்கண் ஒருவனை மணந்து மகனையோ மகளையோ பெற்ற ஒருத்தி, பின்னர் ஒருவனை மணந்து அவற்கு வேறு மக்களைப் பெறுவ ளாயின், அவ் விருதிற மக்களும் தம்மில் மணந்து கணவனும் மனைவியுமாய் வாழ்வது மேனாட்டுச் சமுதாய விதிக்கு ஒத்துளது. இவ்வாறே பரத்தையிற் பிரிந்தொழுகும் புறத்தொழுக்கம் தலைவனது தலைமைப் பண்புக்கு இழுக்கெனச் சங்க காலச் சமுதாயம் கருதவில்லை யென்பதைச் சங்கத் தொகைநூல்கள் காட்டுகின்றன. அக்காலம் பரத்தையர் தோன்றுதற்கு இடம் தந்தமையின், அஃது இழுக்காகக் கருதப்படவில்லை. சில ஆண்டுகட்கு முன்வரையில் பரத்தையர் இருப்புச் சமுதாயத்துக்கு மாசு தருவது என்று நம் நாட்டவர் எண்ணாமல் இருந்து வந்தனர். இருமணம் கூடுதல் ஒருத்திக்கு இயல்பன்று என்று கருதியது பழந்தமிழ்ச் சமுதாயம். ஒருத்தி, ஒருவர்பின் னொருவராகப் பலரை மணம்புரிந்து கொள்வதை ஒழுக்க நெறியாகக் கருதுவது பல சமுதாயங்கட்கு ஒத்ததாக இருக்கிறது. அதனால் அவற்றிடையே பரத்தையர் இருப்புக்கு இடமில்லை. ஒருத்திக்கு ஒருவன்; ஒருவற்கு ஒருத்தி என்ற மணமுறை தோன்றியதனால் தமிழினத்தில் பரத்தையர் உளராயினர்.

அந்நாளைய அரசியற் சூழ்நிலை, அடிக்கடி நிகழும் போர், சமுதாய அமைப்பு ஆகியவற்றால் ஆடவர் தொகையினும் மகளிர் தொகை மிகுதற்கு வாய்ப்பிருந்தது. கட்டாண்மையுடைய மக்களையே போர்த்துறையும் வேண்டி நின்றது. பெண்டிர் பிணியுற்றோர் இளையோர் முதியோர் மகப்பெறாதோர் ஆகியோர் போரில் விலக்குண்டனர்; இளமை வளம் படைத்த ஆடவரே போர்ப்பேய்க்கு இரையாயினர்; அவர் தொகை குன்றினமையின், மிகைமகளிர் மணக்கும் ஆடவ ரின்மையின் வரைவில் மகளிர் என உளராயினர். அவர் மனம் ஆடவர் பலர் பால் பரந்து சென்று ஒழுகினமையின் அவர் பரத்தையர் எனப்பட்டனர். அவர்க்கு வாழ்வளிக்கும் வகையில் ஆடல் பாடல் அழகு என்ற கலைத்துறைகள் சிறப்பாக அமைந் தமையின், அவற்றை ஆதரித்து அளிக்கு முகத்தால் தலைமக்கள் தொடர்பு உண்டாதலின், அக்காலச் சூழ்நிலை பரத்தையிற் சேறலை இழுக்கென விலக்கவில்லை. திருவள்ளுவர் முதலிய ஒழுக்கநூல் அறிஞர்கள் பரத்தைமை யொழுக்கத்தைப் பைய விலக்கி வந்தாராயினும், நீங்காதிருந்த அது, இந்த இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியில்தான் அரசியற் சட்ட வாயிலாக அறவே துடைக்கப்பட்டது. ஆகவே, இன்றைய சமுதாய விதிவிலக்குகளைக் கொண்டு பன்னூ றாண்டுகட்கு முன்பு நிலவிய ஒழுக்கநெறிகளின் இயல்பை மதிப்பிடுவது ஆராய்ச்சி நெறிக்கு மாண்பன்று.

இப்பரத்தையர் அகனைந்திணைக்குரிய முறையில் ஒருவற்கே யுரிய மனைமகளிராகாது புறமாகிய பொருளீட்டுவ தொன்றே கருதித் தம் நலத்தை விற்பனை செய்தொழுகினமையின் அவர்கள் புறமகளிர் என்றும் புறத்தோர் என்றும் கூறப்பட்டனர். போர்க்காலங்களில் ஆடவர் உடல் வளத்துக்கே ஆக்கமும் ஊக்கமும் நல்கப்படுதலால், சிலர் அறிவுநலம் குன்றி விலங் குணர்ச்சி மீதூர்ந்து நெறிபிறழ்தல் கண்ட சான்றோர், அவர்க்கு இப் புறமகளிரைத் துணைமைப்படுத்தும் ஒருமுறையைப் பண்டைநாளில் அமைத்திருந்தனர். இக்காலத்தும் அம்முறை கைவிடப்படவில்லை. அதனால், பாசறைக்கண் மகளிரொடு வதிதல் கூடாதென விலக்கிய தொல்காப்பியனார், புறத் தோராகிய மகளிர் செல்லுதல் விலக்கன்று என்றற்குப் “புறத்தோர் ஆங்கண் புரைவது என்ப” என்று கூறினார்.

இதுகாறும் கூறியவாற்றால் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர் எந்த உயரிய நோக்கத்துடன் அகப்பொருட் கருத்துக்களை உரைத்துள்ளனர் என்பது படிப்போர்க்கு இனிது விளங்கி யிருக்கும். அக்கருத்துக்கள் யாவும் புணர்தல் பிரிதல் இருத்தல் ஊடல் இரங்கல் என்ற ஐவகையுள் அடங்கும் என்றும், அந்த ஐந்தும் முறையே குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் என்ற ஐவகைத் திணைகளாம் என்றும், அவற்றை உணர்த்தும் பாட்டுக் களும் முறையே குறிஞ்சிப்பாட்டு பாலைப்பாட்டு முல்லைப் பாட்டு மருதப்பாட்டு நெய்தற்பாட்டு என ஐந்தாம் என்றும் நினைவிருக்கும்.

சான்றோர் பாடிய பாட்டொன்று கிடைப்பின், அது குறிஞ்சி முதலிய வகையினுள் எவ்வகைப் பாட்டு என்பதை முதலிற் காணவேண்டும். அது காண்டற்கு அப்பாட்டுள் மூன்று பொருள்கள் சிறந்து விளங்கும்; அவை, முதல் கரு உரி என்பனவாம். முதல் என்பது அப்பாட்டின்கண் காட்டப்படும் நிலமும் காலமுமாகும். காலம் என்றது, கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்பவற்றையும், விடியல் எற்பாடு காலை நண்பகல் மாலை நள்ளிரவு என்பவற்றையும் குறிக்கும். குறிஞ்சித்திணைக்குக் கார்ப்பருவமும், நள்ளிரவும் காலமாகும். இவ்வாறே ஏனைத் திணைகட்கும் இக் காலப் பாகுபாடு உண்டு. குறிஞ்சிநிலத்துக் குரிய மரம் செடி கொடி பறவை விலங்கு முதலியன கருப்பொருள் எனப்படும். இவை இறைச்சி எனப்படுவதும் உண்டு. இத்திiணக்குரிய புணர்தல் பொருளாக வரும் கருத்துக்களை உரிப்பொருள் என்பர். ஒரு பாட்டில் குறிஞ்சிநிலமும் அதற்குரிய காலமும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின் அதனைக் குறிஞ்சிப் பாட்டு என்பது பொதுவிலக்கணம். ஒரு பாட்டில் குறிஞ்சிக்குரிய முதற் பொருளும் முல்லைக்குரிய கருப்பொருளும் மருதத்துக் குரிய உரிப்பொருளும் காணப்படின், முதற்பொருளைக் கொண்டு அதனைக் குறிஞ்சிப்பாட்டு என்பர். ஒரு பாட்டில் முதற்பொருட் கூறாகிய நிலமோ காலமோ குறிக்கப்படாமல் கருப்பொருளும் உரிப்பொருளும் குறிக்கப்படின், கருப்பொருள் எத்திணைக் குரியது எனக் கண்டு, குறிஞ்சிக் குரியதாயின் குறிஞ்சி யென்றும், மருதத்துக் குரியதாயின் மருதம் என்றும் கொள்வர். முதலும் கருவும் இன்றி, உரிப் பொருள் மாத்திரம் காணப்படின் அது கொண்டு பெயர் கூறுவர். அதுபற்றியே ஆசிரியர் தொல் காப்பியனார், “முதல்கரு வுரிப்பொருள் என்ற மூன்றே, நுவலுங் காலை முறைசிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங்காலை” என்று தெளிவுபடுத்தினர்.

        “பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவும் கழனி யூரநின் மொழிவல் என்றும் துஞ்சுமனை நெடுநகர் வருதி அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே”  

என்ற இவ்வைங்குறுநூற்றுப் பாட்டில், பழனம் கழனி என்றவை மருதநிலப் பகுதியான முதற்பொருள்; கம்புட் கோழி, அந் நிலத்தில் காணப்படும் பறவையான கருப்பொருள்; மனையவர் உறங்கும் நள்ளிரவில் வருகின்றாயே. நீ, தலைவியாகிய இவள் தந்தையின் கைவேலுக்கு அஞ்சமாட்டாயோ? என்றது உரிப் பொருள்; இது புணர்தல் என்ற குறிஞ்சித்திணைக் குரிய பொருளாகும். ஆகவே, இப்பாட்டு முதற்பொருள் கருப்பொருள் வகையில் மருதமாகவும், உரிப்பொருள் வகையில் குறிஞ்சி யாகவும் இருப்பது தெளிவு. இதனை மருதப்பாட்டு என்பதா? குறிஞ்சிப்பாட்டு என்பதா? இதன்கண் முதற்பொருள் வந்து நிற்றலின், இதனை மருதப்பாட்டு என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனால் இதனை மருதத்திணையில் சேர்த்துள்ளனர். மேலும், மருதப்பாட்டில் குறிஞ்சித் திணைக் குரிய உரிப் பொருள் கூறியது மருதத்திற் குறிஞ்சி வந்த திணைமயக்கம்.

இனி, உரிப்பொருளே ஒவ்வொரு பாட்டுக்கும் உயிர்ப் பாதலின், அதனை உரைக்குமிடத்துப் பழந்தமிழ்ச் சான்றோர் தமது புலமைநல முற்றும் நன்கு பெய்து கூறுவர். உலகியலில் காதற்றுறையில் ஈடுபட்ட ஒருவனும் ஒருத்தியும் நிகழ்த்தும் உரையாடலிற் போல வேறு எத்துறையிலும் அறிவு அத்துணைக் கூர்மையாக வேலைசெய்வதில்லை. அதிலும், இளமைக் காலத்தில் அதன் வளம் மிக்குத் திகழ்கிறது. அக்காலத்தே இளைஞரது இயற்கையறிவு மிக்க செறிவும் திட்பமும் நுட்பமும் ஒட்பமும் சிறந்துநிற்கும். அவர்களுடைய எதிர்கால வாழ்வின் உயர்வுதாழ்வும் பெருமைசிறுமையும் செல்வநல்குரவும் இளமையுள்ளத்தின் வளமையைச் சார்ந் துள்ளன. அவ்வளம் அவரது தூய காதலுறவின் மாண்பைச் சார்ந்து நிற்றலின், அதனைப் பொருளாகக் கொண்டு பாடும் புலமை, மிக்க நயம் உடையதாக விளங்குகிறது. அக்காலத்தே அவரது காதல் குறித்து வரும் சொற்களில் வெளிப்படையினும் குறிப்புமொழிகளே பெரும்பான்மையாக இருக்கும். திருவள்ளுவனாரும், “ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல், காதலார் கண்ணே யுள” என்றும், “செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும், உறாஅர்போன்று உற்றார் குறிப்பு” என்றும், “உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை யுணரப் படும்” என்றும் கூறுவர்.

காதலன், காதலியுள்ளத்துத் தோன்றி நிற்கும் காதல் நன்கு முறுகிப் பெருகுமாறு, திருமணத்தை உடனே செய்துகொள்ள விரையாமல், சிறிது காலம் நீட்டிக்கக் கருதுகின்றான். அவன் கருத்தை எவ்வாற்றாலோ உணர்ந்து கொள்ளுகிறாள் தோழி. ஒருநாள் தலைவியொடு செல்லும் தோழி அவனை ஓரிடத்தே காண்கின்றாள். அவள், அவனை நோக்கி, விரைவாக இவளை மணந்துகொள் என்று சொல்லி நீங்குகிறாள். அப்போது மகட்கொடை வேண்டி வேற்றோர் சிலர் தலைவி மனைக்கு வந்துள்ளனர். அவர்க்குப் பெற்றோர் இணங்கிவிடின் தலை மக்களின் காதலுறவு சிதைந்துவிடும் என்பதை அவனுக்குத் தெரிவிக்கவேண்டும். வெளிப்படையாக உரைப்பதற்கும் அவ்விடத்தே வாய்ப்பில்லை. அதனால் அவள்,

        “சிறுநனி வரைந்தனை கொண்மோ பெருநீர்  

வலைவயீர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுரு கிருக்கும்
துறைகெழு தொண்டி யன்ன இவள்நலனே”

என்று மொழிகின்றாள். அதுகேட்டு நீங்குபவன், “சுருக்காக வரைந்து கொள்க” என்று சொல்லும் தோழி, விலைஞர் தந்த கொழுமீனைக் கவர்ந்துண்ணக் கருதி முதுகுருகு செவ்வி நோக்கி யிருக்கும் தொண்டிநகரைக் கூறுவானேன் எனச் சிந்திக்கின்றான். வலைஞர்களுடைய கொழுமீனைக் கொள்ளுதற்கு முதுகுருகு இருப்பதுபோலத் தலைமகளை மணம் பேசுதற்குச் சான்றோ ராகிய அயலார் சிலர் தலைவி மனைக்கு வந்திருப்பதை அது குறிப்பதாக உணர்ந்துகொள்கிறான். இவ்வாறு வெளிப்படையாக இன்றிக் குறிப்பால் உரைக்கும் சொற்கள் இவ்வகப் பாட்டுக்களில் நிரம்ப இருக்கும். அக் குறிப்புப்பொருளை அறிந்துகொள்வது கற்போர்க்கு அறிவின்பம் பயக்கும் இனிய செயலாகும். அதனால் அவற்றைக் கற்று ஆராய்பவர் அறிவு மிக்க சீர்மையும் கூர்மையும் எய்துகிறது. இதன் அருமைப்பாட்டைக் கண்டே திருவாதவூரடிகள்,

        “சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும் என்சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின்  துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ?  இறைவா! தடவரைத் தோட்குஎன் கொலாம்மெலிவு எய்தியதே?”  

என்று குறித்துள்ளனர். வல்லாண்மை மிக்க நல்லாண்மகனுக்கு உடல் மெலிவு நல்கும் அறிவு ஆராய்ச்சிவகைகளுள் அகத்துறைப் பாட்டும் ஏழிசையும் ஆம் என்பார், “கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ அன்றி, ஏழிசைச் சூழல்புக்கோ, இறைவா தடவரைத் தோட்கு என்கொலாம் மெலிவெய்தியதே?” என்றார். என்றவர், ஏழிசையினும் தமிழ் அகத்துறைப் பாட்டின் அருமை சிறந்தது என்றற்கு இறைவன் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறையை முதற்கண் கூறினார்.

புணர்தல் முதலிய உரிப்பொருட் கருத்துக்களைக் கூறும் புலவன் அதனை இயற்கைக்காட்சி யொன்றின் இடையில் வைத்துக் கூறுவன் என முன்பு கூறினோம். அதற்கேற்பவே இங்கே, நீ இவளைச் சுருக்காக வரைந்துகொள் என்ற உரிப் பொருட் கருத்தை நெய்தற்றிணைக் காட்சியிடையே வைத்து இதனைப் பாடிய சான்றோர் உரைக்கின்றார். நெய்தல் நிலத்து வலைஞர்கள் கடலிலிருந்து கொழுவிய மீன்களைப் பிடித்துக் கொணர்ந்து கரையில் எறிகின்றார்கள்; அவற்றைக் கவர்ந்து போதற்கு வயது முதிர்ந்து நெடிது பறக்கும் வலியில்லாத குருகுகள் ஒருபால் தங்கியிருக்கின்றன. இக்காட்சி யமைந்த தொண்டிநகர் போல்பவள் தலைவியென அதனை இப் பாட்டோடு இயைவிக்கின்றார். நெய்தலிற் காணப்படும் காட்சிவகை பலவற்றுள் இதனை மாத்திரம் வரைந்தெடுத்து இப்புலவர் பாடுவானேன் என்று நோக்கின், அஃது இப்பாட்டின் கருத்துக்கு ஒத்ததாக இருப்பது புலனாகும். ஆகவே, இது வேண்டுமென்றே பாட்டுடை ஆசிரியரால் கொணர்ந்து இதனுள்ளே செறிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை இனிது விளங்கும்; இதனைப் பண்டைய ஆசிரியர், உள்ளுறையென வழங்கினர்.

உள்ளுறை என்பதற்கு உள்ளே பொருத்திவைப்பது என்பது பொருள். மேலே காட்டிய பாட்டில் நீ விரைவாக வரைந்து கொள்க என்பது தோழி வெளிப்படையாக உரைப்பது. இவளை வரைந்துகொள்வதற்காக அயலவர் பலர் காத்திருக்கிறார்கள் என்ற கருத்தொன்றை இந்த உள்ளுறையில் பொருத்தியிருக் கிறாள் தோழி. அக் கருத்து தோழி கூற்றுக்குப் பொருந்திய காரணமாக இருக்கிறது. “உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிகஎன உள்ளுறுத் திறுவதை உள்ளுறை யுவமம்” எனத் தொல்காப்பியனார் உரைப்பது காணலாம். எடுத்துக் கூறப்படும் பொருள் ஒன்றை விளக்குதற்கு யாவரும் அறிந்த பொருளை உவமமாகக் கூறுவது போல இந்த உள்ளுறையும் கூறப்படுவது பற்றி, இதனை உள்ளுறை யுவமம் என்பது வழக்கம். “உள்ளுறை யுவமம் ஏனை யுவமம்எனத், தள்ளா தாகும் திணையுணர் வகையே” என்று ஆசிரியர் கூறுவர்.

இந்தப் பாட்டின் உள்ளுறைப்பகுதியில் வலைஞரும் மீனும் குருகும் ஆகக் காட்டப்பட்டவை கருப்பொருள். இவ்வாறு வருவனவற்றுள் அவ்வந்நிலத்துத் தெய்வமும் கருப்பொரு ளாயினும், அதனைமாத்திரம் உள்ளுறை செய்யுமிடத்து நீக்கிவிடுவது மரபு. இக் கருப்பொருள்களுள் பெரும்பாலன தாம் தோன்றிய நிலத்தினின்றும் நீங்காது அங்கேயே வாழ்ந்து அமைவன; ஆதலால் அவற்றை இறைச்சி என்றும் கூறுவர். “இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும், இயற் பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா” என்றும், “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும், வன்புறை யாகும் வருந்திய பொழுதே” என்றும் ஆசிரியர் கூறுவது காண்க.

இனி, உள்ளுறைப் பொருள்கள் எடுத்தோதப்படும் பொருட்குக் காரணகாரிய இயைபிலோ, இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபிலோ, உவமமும் பொருளுமாம் இயைபிலோ, யாதோனு மோர் இயைபு பெற்று நிற்கும். யாதோர் இயைபும் இல்லாதவை உள்ளுறையாகப் பயன்படா. “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” என்றொரு நூற்பா தொல் காப்பியத்தில் உளது. இதனை அடிப்படையாகக் கொண்டு அதன் உரைகாரர் இறைச்சிப்பொருள் என ஒருவகைப் பொருள் கோளைக் கண்டுள்ளனர். அதனால், எடுத்தோதப்படும் பொருளுக்குப் புறமான கருத்தை யுரைத்து அஃது இறைச்சிப் பொருள் என உரைப்பாராயினர். பிரியேன் எனச் சூள்செய்து கூடிய தலைமகன் பிரிந்து வரவு தாழ்த்தானாக, வேறுபட்ட தலைமகளும் அவள் குறிப்பின்படி ஒழுகும் தோழியும் அவனை நொந்து கொடுமை கூறுமிடத்து அவன் மலையைப் பார்த்து,

        இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்து வானின் இலங்கும் அருவித்தே - தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை  

என்று தோழி கூறுகின்றாள். இதன்கண், சூள்பொய்த்தவன் மலையில் மழைபெய்தலும் அருவிவீழ்தலும் இல்லை என்பது பொருட்குப்புறமான கருத்து என்றும், ஆகவே அது இறைச்சி யென்றும் கூறினர். எனினும், இந்தப் பொருள் தொல்காப்பிய னார் பிறாண்டுக் கூறும் குறிப்புமொழிக்கண் அடங்குதலின் இறைச்சியென வேறு கூறல் மிகையாம். மேலும், அவர்க்கு அது கருத்தாயின், உள்ளுறைப் பொருள்கோளைக் கூறுமிடத்து இதனையும் உடன் கூறியிருப்பர்; அவ்வாறு இறைச்சி யென வேறே விதந்து கூறாமையின் இறைச்சிப் பொருள்கோள் என ஒன்றைத் தொல்காப்பியனார் கூறினார் எனக் கோடல் உண்மையாகத் தோன்றவில்லை.

“இறைச்சி தானே பொருட்புறத் ததுவே” என்றும், “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” என்றும் இருவகையான பாடத்தோடு கூறப்படும் நூற்பாவின் பொருள்யாது எனின், எடுத்தோதப்படும் உரிப்பொருட்கு நிலைக்களமாய் விளங்கும் இயற்கைக்காட்சியில் உள்ள கருப்பொருள் அனைத்தும் அதற்குப் புறமாம் என்றும், முதற்பொருளைச் சேர்ந்த காலத் துக்கும் உரிப்பொருட்கும் உள்ள இயைபு போலக் கருப் பொருட்கும் உரிப் பொருட்கும் உள்ள இயைபு போலக் கருப்பொருட்கும் உரிப்பொருட்கும் நெருங்கிய தொடர்பு இல்லை யென்றும் கூறுதற்கு ஆசிரியர், “இறைச்சிதானே பொருட்(உரிப்) புறத்ததுவே” என்றார். ஒரோவிடத்து, கருப் பொருளாய் விலங்கு மரம் செடி கொடி முதலியவற்றின் காட்சி உரிப்பொருள் நலத்தை மிகுவிப்ப துண்டு; அதுபற்றி, “அன்புறு தகுந” என்ற நூற்பாவில் தொல்காப்பியனார் உரைத்தனர். பிற்கால உரைகாரர்கள். இறைச்சியென வேறுபட நிறுத்திக் குழறுபடை செய்துள்ளனர். பின்வந்தோர் உரைகாரர் கூற்றை ஆசிரியர் கூற்றாகக் கருதி, உள்ளுறைபோல இறைச்சியையும் வேறொரு பொருள்கோள் முறையாகக் குறித்தனர். அவர்கள், “உள்ளுறை இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் என இருதிறமாய் இயலும்; இறைச்சிப்பொருள் பெரும்பாலும் தலைவனைக் கொடுமை கூறுதற்கே வரும்” என்பர்; வேறுசிலர், உள்ளுறை கூறப்படாத திணைகளில் உள்ளுறைபோல உரைப்பவற்றை இறைச்சி என்று கொள்வர்.

இத்தகைய அகப்பாட்டுக்களை ஆராய்தற்குத் தொல் காப்பியரே ஒரு நெறியும் காட்டியுள்ளார். அவற்றைத் திணை, கைகோள், கூற்றுநிகழ்த்துவோர், கேட்போர், இடம், காலம், மெய்ப்பாடு, பயன், எச்சம், முன்னம், பொருள், துறை எனப் பல கூறுபடுத்தி ஒவ்வொன்றையும் நன்கு விளக்கியுள்ளார். அம்முறையேபற்றி இந்நூற்கண் தொகுக்கப்பட்ட பாட்டுக்கள் யாவும் முன்னாளிலேயே மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை என ஐந்து திணையாகவும் திணைக்கு நூறுபாட்டாகவும் தொகுத்துக் களவு கற்பென்னும் இருவகைக் கைகோட்குரிய துறை வகுத்துக் கோக்கப்பட்டுள்ளன. மருதத்திணைக்குரிய பாட்டுக்களை ஓரம்போகியாரும், குறிஞ்சியைக் கபிலரும், நெய்தலை அம்மூவனாரும், பாலையை ஓதலாந்தையாரும், முல்லையைப் பேயனாரும் பாடியுள்ளனர். அவர்களுடைய வரலாறுகள் ஒவ்வொரு திணையின் முன்னுரையிலும் எழுதப் பட்டுள்ளன. கூற்று நிகழ்த்துவோர் கேட்போர் முதலிய கூறுகள் துறை கூறுகின்றபோதே விளங்கக் காட்டப்பட்டிருக் கின்றன. ஏனைப் பொருட்கூறுகள் உரையின்கண் குறிக்கப் பட்டன. மெய்ப்பாடும் பயனும், பொருளிலக்கண அமைதியும், பாட வேறுபாட்டாராய்ச்சியும் விரிவஞ்சி முதல் நூறுபாட்டோடு நிறுத்தப்பட்டன.

ஒவ்வொரு திணைக்குரிய ஆசிரியர் வரலாறும், சிறப்பிடம் பெற்ற கருப்பொருள்களைப் பற்றிய உலகியல் விஞ்ஞானம் தத்துவம் முதலிய கூறுகளோடு விரவிய ஆராய்ச்சியும் ஆங்காங்கு இந்நூற்கண் சேர்க்கப்பட்டுள்ளன. அருஞ்சொல் லகரநிரலும் அரும்பொருணிரலும் மூன்றாம் தொகுதியில் சேர்க்கப்படு கின்றன.

இந்நூலின் பெருமையையும் எனது சிறுமையையும் எண்ணும்போது இதற்கு உரை காணப் புகுந்த என் உள்ளம் நாணத்தால் சுருங்குகிறது. இதுபோலும் அழகிய கருத்தமைந்த நூல்களைக் காலநிலைக் கேற்பச் செய்தளிக்கும் திறமும் புலமையும் படைத்த தமிழ்ச்செல்வர் பலர் இருக்க, என்னை இத்துறையில் இயக்கிப் பணிகொள்ளும் அங்கயற் கண்ணி யாகிய தமிழன்னையின் அருள்நலத்தை எண்ணி இன்புறு கின்றேன்.

 “என்னால் அறியாப் பதந்தந்தாய்,
 யான்அஃது அறியாதே கெட்டேன்;
 உன்னால் ஒன்றும் குறைவில்லை;
 உடையாய்! அடிமைக்கு ஆர்என்பேன்;
 பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
 பழைய அடியா ரொடும்கூடாது
 என்நாயகமே! பிற்பட்டு இங்கு
 இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.”
- திருவாதவூரடிகள்.

எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு
மூலமும் விளக்கவுரையும்
ஆசிரியர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய

கடவுள் வாழ்த்து


உலகெலாம் பரவி நிலவும் உயர்மொழியினும் உயர் தனிச்செம்மொழி யென யாம் பரவும் தமிழ்மொழிக்கண், சங்க மருவிய நூல்களுள் எட்டுத்தொகை யெனத் தொகுக்கப் பெற்றவற்றுள் ஒன்றெனத் திகழ்வது இவ்வைங்குறுநூறு. இது நின்று நிலவவும், ஆன்றோர் மரபு இஃதெனக் காட்டவும், ஏனைய நூல்களுட் செய்தாங்கு, ஆசிரியர் பாரதம் பாடிய பெருந் தேவனார், இக்கடவுள் வாழ்த்தினைப் பாடிச் சேர்த்துள்ளார்.

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பெயர், தமிழில் முதல் முதலாகப் பாரதக் கதையைப் பாடியவர் இப்பெருந் தேவனார் என்பதைக் காட்டுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்
றாண்டில் தெள்ளாறெறிந்த நந்திவன்ம பல்லவன் ஆட்சி செய்தபோது பெருந்தேவனார் ஒருவர் தோன்றிப் பாரதக் கதையை வெண்பாவாகப் பாடினார்; அந்நூலின் ஒரு பகுதி அச்சாகி வெளிவந்துள்ளது. தொல்காப்பியம் முதலிய தொன்னூல்கட்கு உரை எழுதிய சான்றோர்களால் பாரத வரலாறு குறிக்கும் வெண்பாக்கள் பல காட்டப்படுகின்றன. அவற்றுட் சில பாரத வெண்பாவிலும் பழைமையுடையனவாய்க் காணப் படுவது கொண்டு, பல்லவர் காலப் பெருந்தேவனார்க்கு முன்னே ஒரு பாரதம் பாடியவர் இருந்திருக்கவேண்டும் என்று கருதுவோர் உளராயினர். அவரே சங்கத் தொகைநூல்கட்குக் கடவுள் வாழ்த்துப்பாடிச் சேர்த்திருப்பர் என்பது அவர்கள் கருத்து. பல்லவர்காலப் பெருந்தேவனார் பாட்டையும், பழம் பாட்டுக் களோடு சங்கத்தொகைநூற் கடவுள்வாழ்த்துப் பாட்டுக்களைச் சேரக்கொண்டு அவற்றையும் ஒப்ப நோக்குமிடத்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் இருவர் வாழ்ந்துள்ளனர் என்பது வலியுறுகிறது. அதனால், இத்தொகைநூற்கண் கடவுள்வாழ்த்துப் பாடிச்சேர்த்த சான்றோர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னே வாழ்ந்தவர் என்பது தெளிவாகிறது.

கடவுள்வாழ்த்துப் பாடும் மரபு ஒன்று முன்னாளில் இருந்ததென்ற குறிப்பு, தொல்காப்பியத்தும் காணப்படுகிறது; எனினும், அதனை நூலின் தொடக்கத்தே வைத்தல் வேண்டு மென்ற விதியில்லை; அதற்குத் தொல்காப்பியமே தக்க சான்று பகர்கிறது. அதனோடு, சங்க காலத்தை அடுத்து நிற்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற நூலாசிரியர்கள் காலத்தும் இவ்விதி இருந்ததில்லை. திருக்குறள், சிலப்பதிகாரம் என்ற இரண்டின் தொடக்கத்தில் காணப்படும் வாழ்த்துக்கள் தொல்காப்பியம் காட்டும் வாழ்த்துவகையில் அடங்குகின்றன வேயன்றி, ஒரு குறிப்பிட்ட விதிவழி வந்தவை என்பதற்கு இட மில்லை. சங்கத் தொகைநூல்களுள்ளும் கலித்தொகையும் பத்துப் பாட்டும் கடவுளைப் பாடும் பாட்டுக்களை நூலின் தொடக்க மாகக் கொண்டுள்ளன. ஆயினும், ஒரு நூலுக்குத் தொடக்கமாய்த் தாம் செய்யும் கடவுட்பாட்டு இருத்தல் வேண்டுமென்ற குறிக்கோளுடன் அவற்றின் ஆசிரியர்களால் அப்பாட்டுக்கள் பாடப்பட்டன என்று கருதுவதற்கும் அவை இடந்தரவில்லை.

`செய்யப்படும் ஒவ்வொரு நூலும் கடவுள்வாழ்த்து ஒன்றைத் தொடக்கத்தில் கொண்டிருத்தல் தக்கது; அது நூற்கு முன்னர் நிறுத்தப்படும் பாயிரத்துள் முதலில் இருத்தல் சிறப்பு’ என்றொருமுறை பிற்காலத்தே தோன்றிற்று; அதுவே “வணக்கம் அதிகாரம் என்றிரண்டுஞ் செப்பச், சிறப்பென்னும் பாயிர மாம்” எனப் பின்னர் விதியுருவாக வந்துளது.

இவ்விதிமுறை கி.பி. நான்காம் நூற்றாண்டவராகக் கருதப்படும் திருமூலர் காலத்தில் நடைமுறையில் இருந்திருக் கிறது. அக்காலத்தில் தமிழகத்தில் இருந்து சமயப்பணி புரிந்த சான்றோர்பலராலும் இவ்விதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது கண்டு சான்றோரான பாரதம் பாடிய பெருந்தேவனார், சங்கத் தொகைநூல்களுள், கடவுள் வாழ்த்து இல்லாதவற்றிற்கு அதனைப் பாடிச் சேர்ப்பாராயினர். ஆகவே, அவரது காலமும் கி.பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டாகலாம்.

பெருந்தேவனார் என்ற பெயர் சங்ககாலத்தும் இடைக் காலப் பல்லவ சோழ பாண்டியர் காலத்தும் மக்களிடையே பெரிதும் வழங்கி வந்துள்ளது. விசயநகர வேந்தர் ஆட்சிக் காலம் தொடங்கியே வடமொழிப்பட்ட கடவுட் பெயர்கள் மக்களிடையே மிகவும் வழங்குவனவாயின. இப்போது அரசியலார் வெளியிட்டுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடு களும் இதற்குச் சிறந்த சான்றாகும். இப்பெருந்தேவனார் பாரதம் பாடியவர் என்ற குறிப்பொன்று தவிர வேறே யாதும் இவரைப் பற்றிக் கூற இடமில்லை. இவர் பாடிச் சேர்த்துள்ள பாட்டுக்கள் பலவும் சிவநெறியில் இயங்குதலால் இவர் சிவநெறியினர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்நூலிலுள்ள கடவுள்வாழ்த்தில், மூவுலகும் முறையே தோன்றி நிலவும் திருவடிகளையுடைய சிவபரம்பொருளை வணங்குகின்றார், ஏனை மக்களுயிரும் அது செய்து உய்தற் பொருட்டு.

நேரிசை யாசிரியப்பா
நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதா ணிழற்கீழ்
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே.

இது வாழ்த்துக் கூறியது; வாழ்த்து, வணக்கம், பொருளியல்பு உரைத்தல் - என்ற வாழ்த்துவதை மூன்றனுள் இது பொருளியல் புரைத்தல்

உரை :
நீலநிறமான திருமேனியினையும், வாலிய இழையினையு முடைய உமைநங்கையைத் தன் கூறாகவுடைய ஒப்பற்ற சிவபெருமானுடைய இரண்டாகிய திருவடி நிழற்கீழ் மூவகை யுலகும் முறையே தோன்றி நிலவுவவாயின. ஆகலின், யாமும் அவ்வுலகருள் முதல்வனை வணங்கி அவனது தாணிழல் வாழ்க்கையைப் பெறுவேமாக என்றவாறு.

உம்மை, முற்றுமை. வாலிழை, அன்மொழித் தொகை. வாலிழை, வாலிய இழை: இது முத்துமாலையுமாம். நீலமேனிக் கட் கிடந்து ஒளிசெய்யும் பேரணிகலனாகலின், வாலிழை எனப்பட்டது. மூவகை யுலகமாவன விண், மண், பாதலம் என்பன. உலகுகள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன வாயினும், மேல், கீழ், நடு என வகையால் மூன்றாயடங்குதலின், மூவகை யுலகும் என்றார். முகிழ்த்தல், தோன்றுதல். முறையாவது பாதலத்து வாழும் உயிர்கள் தாம் செய்த நல்வினைப்பயனை நுகர்தற்கு மண்ணுலகும், மண்ணுலகத் துயிர்கள் அது செய்தற்கு விண்ணுலகும் தோன்றிய முறை யென்ப.

`மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள், நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகை நினை வொடுமிகும்…… அரன் 1’ என ஞானசம்பந்தப் பிள்ளையார் கூறியருளியது காண்க.

இனி, “பரம்பொருளினின்றும் ஆகாயந் தோன்றி, அதனி னின்றும் காற்றுத் தோன்றி, அதனினின்றும் தீத்தோன்றி, அதனினின்றும் நீர் தோன்றி, அதனினின்றும் நிலம் தோன்றிற்று என வேதங் கூறிற்று” என்பர் சிலர். இவர்க்கு, “நீராகி நிலம் படைத்தனை, நெருப்பாகி நீர் பயந்தனை, ஊழியிற் காற்றெழு வினை, ஒளிகாட்டி வெளிகாட்டினை2” என்பது சான்றாகும். இதுவே “மூவகை யுலகும் முகிழ்த்த முறை” யென்ப.

இனி, சிவஞான பாடியப் பேராசிரியரான சிவஞான முனிவர், இவ்வாறு பவுட்கராகமம், தைத்திரீயம் முதலிய உபநிடதங்கள் கூறினவாயினும், அவை தம்முள் மாறுபடுவன போலக் கூறுகின்றமையின் இம்முறை ஒரு சார்மதம் என்றும், இது காரணகாரிய இயல்பாராய்ச்சியில் பொருந்துமாறில்லை யென்றும், இவ் வேதாகம வாக்கியங்கள் முரணுவனபோலத் தோன்றினும் அவற்றின் வன்மைமென்மை நோக்கித் தாற் பரியங் கோடல் வேண்டும் என்றுங் கூறுவர். அன்றியும், அவர், “ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்றும் தேயுவும், தேயுவினின்று அப்புவும், அப்புவினின்று புடவியும் தோன்றும் என்பார்க்கு, காரியத்தின் குணம் காரணத்தினும் உண்டென்பது நியமமாகலின், புடவிக்குள்ள ஐந்து குணமும் காரணமென்ற புனலுக்கும் உளவாதல் வேண்டும்; வேண்டவே, அம்முறை பற்றித் தேயு வாயு வாகாயங்களும் ஐந்து குணம் உடையவாதல் வேண்டும்; அஃதின்மையான், அவர் மதம் போலி யென்று ஒழிக,” என்பர். எனவே, இம்முறை தோற்றமுறை அன்றென்பது பெறப்படும். மற்று இம்முறையே தோன்றிய உலகு ஒடுங்கு தற்குரியது என்பது, “இருநிலனது புனலிடை மடிதர எரிபுக வெரியதுமிகு, பெருவளியினில் அவிதர வளிகெட வியனில முழுவது கெட, இருவர்களுடல் பொறையொடுதிரி யெழிலுரு வுடையவன்1” எனத் திருஞான சம்பந்தர் கூறிய வாற்றான் அறியப்படும். ஆசிரியர் பேராசிரியர்க்கும் இதுவே கருத் தென்பது, “நிலந்தீ நீர்வளி2” என்ற சூத்திரத்து உரை விளக்கத் தின்கண் எழுப்பும் கடாவிடைகளால் உணரப்படும்.

இக்கூறியவாற்றால் உயிர்கள் செய்யும் வினைக்கீடாக இன்ப துன்பங்களை வரைந்து கொடுப்பான், பரமன் மூவகை யுலகும் தன் திருவடி நீழற்கண் முறையே முகிழ்வித்தான் என்பது முடிபாம். அகத்தில், “தாவில் தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே” எனத் தங்குதல் கூறலின், ஈண்டுத் தோற்றம் கூறுவார், முகிழ்த்தல் கூறினார்.
“பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று” என்று புறத்திற் கூறினா ராகலின், அவ் வுருநலனை விளங்கக் கூறுவார், ஈண்டு மேனியும் இழையும் விதந்து, நீலமேனி வாலிழை பாகத்து என்றார். எனினும், இருவேறு உருவினன் அல்லன் என்றற்கு ஒருவன் என்றும் கூறினார். அவ்வொருவன் தாள்நிழல் மூவகையுலகும் முகிழ்த்தற்கு இடமாமெனவே, அவன் உலகருள் முதல்வன் என்பது கூறினாராயிற்று. “சேர்ந்தோள் உமையே” என அகத்திற் கூறினமையின் உமை நங்கை என்பது வருவித்து உரைக்கப் பட்டது.

உயர்ந்தோர் அருள்பெற்று வாழ்வாரை, “யானே பெறுகவன் தாணிழல் வாழ்க்கை” 1 என்றலும், அவ்வுயர்ந்தோர் உயர்வினை அவர்தாண்மேல் ஏற்றிக் கூறுதலும் சான்றோர் மரபாகலின் இருதாள் நிழற்கீழ், மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே என்றார். “அலத்தற் காலை யாயினும், புரத்தல் வல்லன் வாழ்கவன் தாளே” 2 எனவரும் ஒளவையார் பாட்டால் இம்மரபு தெளியப் படும். உற்றாரைத் தாங்கலும் அவர்தம் அறியாமை யினை உடைத்தெறிந்து அருளுதலும் என்ற இருவகை யருள் நிலையமாகலின், அந்நயம் தோன்ற இருதாள் என்றார். “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” 3 எனச் சான்றோர் சுட்டியவாறு காண்க.

மூவகையுலகும் முறைமையில் திரிதலும் கெடுதலும் இன்றி, முகிழ்த்தல் கருதி மலைமகளைப் பரமன் மணந்து அவள் கூறாயினமையின், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் எனச் சிறப்பித்தார். “மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே” என அவற்றின் வினையாற் கூறினாரேனும், முளைத்தற்றொழில் வித்தின்கண்ண தாயினும் அதற்கு ஆதாரமாகிய குளிர்ந்த நிலம் இல்வழிப் பயன்படாதவாறு போல, மூவகையுலகும் ஆதார மாகிய இறைவன் அருளை இன்றியமையா என்றற்கு, இருதாள் நிழற் கீழ் என்றார். “சிவன்றாள் பல பல சீவனு மாகும்”4 எனச் சான்றோரும் இக் கருத்துத் தோன்றக் கூறியது காண்க. அற்றேல், ஆதாரமாகிய இறைவன்அருளை நிலைக்களனாகக் கூறாது, இருதாள் நிழற்கீழ் எனக் கூறியது என்னை யெனின், உலகு முகிழ்த்தற்கு நிலைக்களன் மாயை என்பதும், அதுதானும் தனக்கு ஆதாரமாகிய இறைவன் அருளின்கண் ஒடுங்குவ தென்பதும் உணர்த்துதற்கென உணர்க. முகிழ்த்தன எனத் தலைமை பற்றிக் கூறினமையின், ஏனை நிலைபேறும், ஒடுக்கமும் அத்தாணிழற் கீழன என்றே கொள்க.

இத்துணையும் கூறியவாற்றாற் பயன், இம் மூவகை உலகின் கண்ணும் வாழ்வார்க்கு, அத்தாள்கள் நீழல் செய்து வீட்டின்பம் பயத்தல் என்க. எனவே, இது, பொருளியல்பு உரைத்தலாய், படர்க்கைப் பரவற்கண் பிறர்க்குப் பயன்பட வாழ்த்தியதாம் என்க.

எனவே, உயிர்கள் வணங்கிப் பெறுவதோர் ஆக்கம் உணர்த்தப்பட்டமையும், அதன் பயனாக வியப்பு என்னும் மெய்ப்பாடு தோன்றினமையும் பெற்றாம். “புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு, மதிமை சாலா மருட்கை நான்கே”1 என்பது விதி. இவ்வாக்கமும் தன்கண் தோன்றியதும், பிறபொருளின் கண் தோன்றியதும் என இருவகைத்தாகலின், இது பெரும் பான்மையும் பிற பொருளின்கண் தோன்றிய ஆக்கம் பற்றிப் பிறந்த வியப்பு எனக்கொள்க. பயன் : வாழ்த்து.

இனி, இஃது ஈற்றயலடி முச்சீரினையுடையதாய், மூவடி களால் இயன்ற நேரிசை யாசிரியப்பா என்க. “ஈற்றயலடியே ஆசிரிய மருங்கின், தோற்றம் முச்சீர்த் தாகு மென்ப”2 என்றும், “ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை, ஆயிர மாகும். இழிபுமூன் றடியே”3 என்றும் வருவன இலக்கணம் என்க.
இனி, “மாஅ மேனி” யென்றும்; “மாமலர் மேனி” யென்றும் பாடமுண்டு. இவற்றிற்கு முறையே கரிய மேனி யென்றும், கரிய குவளைமலர் போலும் மேனி யென்றும் உரைக்க.

ஐங்குறுநூறு
மூலமும் விளக்கவுரையும்
ஆசிரியர்:ஓரம்போகியார் பாடிய

மருதம்


செந்தமிழ் நிலத்துக்குரிய அகப்பொருள் நெறியிற் கூறப் படும் திணைவகை ஐந்தனுள் மருதம் என்பது ஒன்று. இது மருதத்திணையென வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியர் இம் மருதத்தை “வேந்தன் மேய தீம்புனல் உலகம்” எனச் சிறப்பித் துரைப்பர். எனவே, நீர்வளஞ் சிறந்த வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் என்பதாம். இதற்குப் பொழுது விடியற்காலம். இங்கு வாழ்பவர் உழுதும் உழுவித்தும் வாழும் வேளாண் பெருமக்கள்; செந்நெல்லும், வெண்நெல்லும் அவர்கட்குரிய உணவுப்பொருள். எருமை நீர்நாய் முதலியன இங்கே வாழும் விலங்குகள்; வஞ்சி, காஞ்சி, மருதம் முதலிய மரங்களும், தாரா, நீர்க்கோழி முதலிய புள்ளினமும் இங்கே காணப்படும். உழுதல், நடுதல், களைகட்டல் முதலியன இத்திணையில் நடைபெறும் தொழில்கள். தாமரை கழுநீர் முதலியவை இந் நிலத்திற் சிறந்து மலரும் பூ வகைகள். யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும் பிறவும் நீர் நிலைகள். மணமுழவும் நெல்லரி கிணையும், மருதயாழும் இத்திணைக் குரிய பறையும் யாழ் வகையுமாம். மக்கள் வாழும் பகுதிகள் மோகூர், செல்லூர், பழவூர், புத்தூர் என்றாற்போல ஊர் என்று பெயர் பெறும்.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்” என்று இம் மருதம் கூறப்படுவதால், இங்குள்ளவர்க்கு வழிபடு கடவுள் வேந்தன் என்பது பெறப்படும். வேந்தன் என்றது இந்திரன் எனத் தொல்காப்பியவுரை கூறுகிறது. குடிகள் செய்யும் வினை வகைகளை யறிந்து முறை செய்யும் அரசனும், உயிர்கள் செய்யும் வினைவகையை யறிந்து முறை செய்யும் இறைவனும் வேந்தன் எனப்படற்கு இயைபு உண்மையின், மருதநிலத்துக் கடவுள் வழிபாட்டில் விண்ணக இந்திர விழவும் மண்ணக அரச வாழ்த்தும் பிறவும் காணப்படும். ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத் திணைக்குரிய உரிப்பொருள்.

இம் மருதம் பொருளாக இந்நூற்கண் காணப்படும் நூறு பாட்டுக்களையும் பாடியவர் ஓரம்போகியார். இவர் பாடியனவாக, இம் மருதப்பாட்டுக்களின் வேறாக அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையென்ற தொகைநூல்களிலும் சில பாட்டுக்கள் உள்ளன.

ஓரம்போகியார் என்பது இவரது இயற்பெயர். இவர் ஆதன் அவினி யென்னும் சேரமன்னன் ஆதரவு பெற்றவர். வட கொங்கு நாட்டில் காணப்படும் அவினியாறு 1 இவன் பெயரால் வெட்டப் பட்டது போலத் தோன்றுகிறது. இவர் ஏனைச் சோழநாடு பாண்டி நாடுகளில் விளங்கிய பேரூர்கள் பலவற்றைக் கண்டிருக் கின்றார்; அந்நாடுகளில் வாழ்ந்த குறுநில மன்னர்களான மத்தி, விரான் முதலாயினாரால் சிறப்பிக்கப் பெற்றுள்ளார். பாண்டி நாட்டுத் தேனூரை, “வேனி லாயினும் தண்புன லொழுகும், தேனூர்” என்றும், விராலிமலைப் பகுதியில் வாழ்ந்த விராஅன் என்பவனுடைய இருப்பையூரை, “விண்டு வன்ன வெண்ணெற் போர்வின், கைவண் விராஅன் இருப்பை” என்றும், சோழர்க் குரிய ஆமூரை, “பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா, வெல்போர்ச் சோழர் ஆமூர்” என்றும், மத்தியினது கழாரை, “கைவண் மத்தி கழார்” என்றும் பாராட்டிக் கூறுகின்றார்.

“விழையா வுள்ளம் விழையு மாயினும், என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு, அறனும் பொருளும் வழாஅமை நாடித், தற்றக வுடைமை நோக்கி மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல், அனைய பெரியோர் ஒழுக்கம்” என்று பெரியோரது ஒழுக்கம் கூறுவதும், மனையறம் புரியும் மகளிர் தம் கணவனோடு புலத்தல் ஒல்லாது என்பதற்குப் புலந்தவழி, “செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத், தாமட் டுண்டு தமிய ராகித், தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப, வைகுந ராகுதல் அறிந்தும், அறியார் அம்ம அஃது உடலு மோரே” என்பதும், தலைவனது புறத்தொழுக்கத்தை மனங் கொள்ளாது அவனை வரவேற்ற தலைவியை, “யாயா கியளே விழவுமுத லாட்டி” என்றும், அவள் “ஊரன் கொடுமை கரந்தன ளாகலின், நாணிய வருமே” என வியந்தும் கூறுவதும் ஓரம்போகியாரது புலமை ஆழத்தை இனிது புலப்படுத்துகின்றன.

எருமை பகன்றை சூடிச் செருக்கிவரும் காட்சியைப் “போர் செறி மள்ளரிற் புகுதரும்” என்பதும், நண்டு சினைபயக்குங் காலத்தில் இறக்கும் என்பதும், முதலை தன் பார்ப்பினையே. தின்னும் என்பதும், யாமையின் இளம்பார்ப்புத் தன் தாய்முகம் நோக்கி வளரும் என்பதும், யாற்றுநீர், கூதிர்க்காலத்தில் கலங்கியும், வேனிற் காலத்தில் தெளிந்தும் இருக்குமென்பதும், யானை கவளம் உண்ணுங்கால் பரிக்கோற்காரரால் சினமூட்டப் படின், அக்கவளத்தை வாயிலிடாது தன் மெய்யில் திமிரும் என்பதும், பிறவும் இவர் காட்டும் இயற்கைக் காட்சிகளாகும். மகளிர் தைந்நீராடலும், போர்க்களத்தில் வீரர் தமது வாட் படை வளைந்துவிடின், அங்கே வீழ்ந்து கிடக்கும் களிற்றின் கோட்டிடைப் படுத்து நிமிர்த்துதலும், பிறவும் இவர் காட்டும் புலமைக்காட்சிகள். இவையும் இவை போல்வன பிறவும் இனிவரும் பாட்டுக்களிற் காணலாம்.


வேட்கைப்பத்து

இஃது, அகனைந்திணையிடத்து அன்புநெறியின் பாற்படும் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கத்திலும் ஒழுகிப்போந்த தலைமகன், தான் அவ்வொழுக்கத்திற் பிரிந்துறைந்த ஞான்று, தலைமகளும் தோழியும் ஒழுகிய திறம்வேட்டு, தோழியொடு சொல்லாடி வினவியவழி, தோழி, தலைமகளின் வேட்கைத் திறமும் தன் வேட்கைத் திறமும் கூறுதற் பொருளாக வரும் பாட்டுக்களின் தொகுதி; ஆகலின் இஃது இப்பெயர் பெறுவ தாயிற்று. இதனுள், முதல் ஐந்து பாட்டுக்கள் கற்பினும், ஏனை யைந்தும் களவினும் நிகழ்ந்தனவாம்.

வேட்கையாவது, பொருள்கண்மேற் செல்லுகின்ற பற்றுள்ளம். ஈண்டு, அஃது அப்பற்றுள்ளதால் நிகழ்ந்த ஒழுக்கத்தின் மேற்று.

ஈண்டுக் கூற்றுநிகழ்த்துவோள் தலைமகளது மனையகம் புகுந்து தகுவன உரைக்கும் உரிமையினையுடைய வாயில்களுள் தலையாயவளாகிய தோழி யாகலின், அவ்வாயில்களால் கூறப்படுதற்குரிய தலைமகள் மாண்புகளைக் கூறுகின்றாள் என அறிக. மாண்புகளாவன, “கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்து புறந் தருதலும் சுற்றம் ஓம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்பு கள்,1” என வருதலாலறிக. இச் சூத்திரத்தில் “பிறவும் அன்ன” என்றதனால், அரசர்க்கு வெற்றியும், உலகுயிர்கட்கு மழையும் அறமும் போல்வன விழைதலும் கொள்ளப்படும்.

    1. வாழி ஆதன் வாழி அவினி  

நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வெனவேட் டேமே.

புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது,” எனத் தெளிந்த மனத்தனாய் மீண்டு, தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைமகன் தோழியொடு சொல்லாடி “யான் அவ்வாறொழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

பழைய உரை:
“காவற்பொருட்டு அரசன் வாழ்க; விருந்தாற்றுதற் பொருட்டு நெற்பல பொலிக; இரவலர்க்கு ஈதற்பொருட்டுப் பொன் மிகவுண்டாகுக” என யாய் இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி ஒழுகியதல்லது பிறிது நினைத்திலள்; அவள் இத்தன்மை யளாக, நீ ஒழுகிய ஒழுக்கத்தால் நினக்கும், நின்னொழுக்கத்திற்குத் துணையாகிய பாணனுக்கும் தீங்குவருமென்று அஞ்சி, யாணரூரன் வாழ்க பாணனும் வாழ்க என விரும்பினேம் யாங்கள் என்றவாறு.

தலைவியை யாய் என்றது, புலத்தற்குக் காரணமாயின உளவாகவும், அவை மனங்கொள்ளாத சிறப்பை நோக்கி. தோழி யாங்கள் என உளப்படுத்தது ஆயத்தாரை நோக்கி எனக் கொள்க. பூவும் புலாலும் ஒக்க விளையும் ஊரன் என்றது, குலமகளிரைப் போலப் பொதுமகளிரையும் ஒப்பக் கொண்டொழுகுவான் என்பதாம். ஆதனவினி என்பான் சேரமான்களிற் பாட்டுடைத் தலைவன்.

உரை:
ஆதன் வாழ்க; அவன் குடியிற் பிறந்த அவனி வாழ்க; நெல் மிக்கு விளைக; பொன் மிகவுண்டாகுக என்று தலைவி இல்லறமே நினைந்தொழுகினாளாக, யாங்கள் பூக்களை நிறையவுடைய காஞ்சியும், சினைகளையுடைய சிறுமீன் களுமுடைய ஊரன் வாழ்க; அவற்கு வாயிலாகும் பாண் மகனும் வாழ்க என்று விரும்பி யுறைந்தேம் என்றவாறு.

அவினி யென்பான் சேரமான்களில் ஒருவன். ஆதன் என்பது சேரமன்னருட் சிலருடைய குடிப்பெயர். “எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல், ஆதன் எழினி”1 என்றும், " அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்”2 என்றும், வருவன காண்க. பல பொலிக என்புழிப் பன்மை மிகுதிப் பொருட்டு. வேட்டாள் என்னும் முற்றுவினை “ஆவோ வாகும் செய்யு ளுள்ளே”3 என்றதனால் வேட்டோள் என நின்றது. ஏகாரங்கள் யாமே என்புழிப் பிரிநிலையும், யாயே என்புழித் தேற்றமும் ஏனைய விடத்து அசைநிலையு மாம். நனைய, சினைய என நின்ற குறிப்புப் பெயரெச்சங்கள் முறையே காஞ்சியும் மீனும் கொண்டன. யாணர், புதுமை. பாணனும் என்புழி உம்மை இறந்தது தழீஇயிற்று. இனி, ஊரன் என்பதனை அண்மை விளியாக்கி, நீ யென்னும் எழுவாய் வருவித்து உரைத்தலு மொன்று. அதனாற் சொற்கிடக்கை முறைக்கேற்பப் பொருள் நலம் சிறவாமையறிக.

தலைமகன் புறத்தொழுக்கம் பூண்டொழுகுதலால், தலை மகள் புலத்தற்குரிய காரணம் பல வுளவாகவும், அவன் சோர்பு காக்கும் கடப்பாட்டினால் அவற்றை மனங்கொள்ளாத சிறப்புக் கருதித் தலைமகளை, யாய் என்றாள். யாமே எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது, ஆயத்தாரையும் உளப் படுத்தற்கு.

அந்தணர், சான்றோர் அருந்தவத்தோர், அரசர் முதலா யினாரை இன்னவாறு வழிபடுக எனக் கணவன் முதலாயினார் கற்பித்தவாற்றால் வழிபடுதல் கற்பாகலின், வாழி ஆதன் வாழி அவினி யென்றும், இல்லிருந்து நல்லறம் புரிவார்க்கு விருந் தோம்பல் தலையாய அறமாகலின், அது செய்தற்கு, நெற்பல பொலிக என்றும், தங்கண் வந்து இரந்தார்க்குப் பொன் முதலாயின கொடுத்து இசைநடுதல் இல்வாழ்வின் பயனாதல் குறித்து, பொன் பெரிது சிறக்க என்றும் தலைமகள் வேட்டாள் என்றாள். “அருந்திற லரசர் முறைசெயி னல்லது, பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது”1 என்றும், “மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பித், தன்னகர் விழையக் கூடின்,… அது மன் பொருள்”2 என்றும் சான்றோர் கூறுமாற்றால் இவற்றை வேட்டல் தலைமகட்கு அறமாதல் அறிக. இது புரையறந்தெளிதல்.

இனி, யாமே என்பது முதல் தோழி கூற்று. இல்லறமே நினைந்தொழுகும் தலைமகளின் மாண்பு கருதாது பொது மகளிரையும் அவளோடு ஒப்பக்கொண்டு புறத்தே ஒழுகும் தலைமகன் அவளைப் பிரியே னெனக் கூறிய சூளுறவு பொய்த்தலால் வரும் ஏதம் ஆய்ந்து, அஃது உண்டாகாவாறு யாணரூரன் வாழ்க என்றும், அவ்வாறு பொய்த்தற்கு வாயிலாய் நிற்கும் பாணனும் பொய்யனாதற்கு இரங்கி, பாணனும் வாழ்க என்றும் வேட்டேம் என்றாள். பழைய வுரைகாரருக்கும் இதுவே கருத்தாதல் அறிக. இது தெய்வ மஞ்சலின் பாற்படும். இம் மெய்ப்பாடு தலைமகட்கே யுரித்தாயினும், “ஒன்றித் தோன்றும் தோழி மேன”3 என்னும் விதியினால் சிறுபான்மை தோழி யிடத்தும் தோன்றும் என்ப. மேலே, தோழி கூற்றுக்களுள் மெய்ப்பாடு தோன்ற வருவனவற்றிற்கும் இதுவே இலக்கண மாகக் கொள்க. இது தோழியிடைத் தோன்றிய முன்னிலைப் புறமொழி. “முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும், பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர்”1 என்பது இலக்கணம். இது, “பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்”2 என்ற சூத்திரத்து, “பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும்” என்புழிப் “பிறவும்” என்றதனால், பிரிந்து ஒழுகிப் போந்த தலைமகற்குத் தோழி முன்பு நிகழ்ந்தது கூறும் பொருளதாகலின், தலைமகள் மாண்புகளையும், தன் செயல்களையும் வகுத்துக் கூறினாள். கூறுமிடத்துத் தலைமகனை வாழ்த்துதல் வழுவாயினும், ஏதமஞ்சி மங்கல மொழியால் வாழ்க என்றது, “மங்கல மொழியும் வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப”3 என்பதனால் அமையும் என அறிக.

தலைமகளையும் பொதுமகளிரையும் தலைமகன் ஒப்பக் கருதி யொழுகுகின்றான் என்பதனை உள்ளுறையாற் கூறினமையின் வெளிப்படக் கூறிற்றிலள். காஞ்சியின் பூவும், மீனின் சினையும் ஒப்ப விளையும் ஊரன் என்றதனால், குல மகளிரையும் பொதுமகளிரையும் ஒப்பக் கருதுகின்றான் என உள்ளுறை யுவமம் கொள்ளப்படும்.

உள்ளுறை யுவமமாவது, ஏனை வெளிப்படையுவமம் போலாது, உணர்தற்கரிதாய், களவு, கற்பு ஆகிய இருவகைக் கைகோளின்கண்ணும், வினை பயன் மெய் உரு பிறப்பு என்னும் ஐவகை நிலைக்களனுடைத்தாய், தெய்வ மொழிந்த கருப் பொருளேபற்றிச் சான்றோர் செய்யுட்கண் வரும் உவமவகை. “பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி, முன்னை மரபிற் கூறுங் காலைத், துணிவொடு வரூஉந் துணிவினோர் கொளினே”4 என்றும், “தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின், வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும், பிறப்பினும் வரூஉந் திறத்தியல் என்ப”1 என்றும் வருவனவற்றால் இவ்வியல்பினை அறிந்து கொள்க. அன்றியும், “உடனுறை யுவமம் சுட்டுநகை சிறப்பெனக், கெடலரு மரபின் உள்ளுறை யைந்தே”2 என்ப தனால், இஃது ஐவகைப்படு மென்றும், “இனிதுறு கிளவியும், உவம மருங்கின் தோன்று மென்ப” 3 என்றதனால் இஃது இன்பமும் துன்பமும் தோன்றச் சொல்லப்படுமென்றும், பிறவும் கூறுப. ஈண்டுக் காஞ்சியின் நனையும், மீனின் சினையும் தம் நிலமாகிய மருதநிலக் கருப்பொருள்க ளாதலால், அவற்றைக் கொண்டு, இவற்றை ஒப்ப வுடைய ஊரனாகவே, குலமகளிரை யும் பொதுமகளிரையும் ஒப்பக் கொண்டொழுகுகின்றானெனத் துனியுறுகிளவி தோன்றச் சிறப்பு என்னும் வகையால் தோழி கூறினாள் என்றுணர்க. இனி வருமிடங்களில் இவ்வகையினை ஓர்ந்து கொள்க.

இதனுள், ஆதனவினியை வாழ்த்தியது கற்பும், நெல்லும் பொன்னும் வேட்டது நற்பாலொழுக்கமும் என்ற மாண்புகள் என அறிக. பழியொடு வாராத நற்செயல் புரிந்தமையால், மெய்ப்பாடு: தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம். “கல்வி தறுகண் இசைமை கொடையெனச், சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” 4 என்பது விதி. இதனாற் பயன்: ஆற்றியிருந்தமை கூறல்.

    2. வாழி யாதன் வாழி யவினி விளைக வயலே வருக விரவலர்  

எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்குந்
தண்டுறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க வெனவேட் டேமே.
இதுவுமது.

பழைய உரை:
தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாள்; யாங்கள் நின்காதல் அவள்மேற் சுருங்குகின்ற திறம் நோக்கி, “நின்கேண்மை வழிவழிச் சிறக்க” என விரும்பினேம் என்றவாறு:

சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரன் என்றது, குலமகளிருடனே பொதுமகளிர் இகலும் ஊரன் என்றவாறு.

உரை:
ஆதனவினி வாழ்க என்றும், வயல் மிக்கு விளைக என்றும், இரவலர் பலரும் வருக என்றும் தலைமகள் இல்லறத்திற்கு வேண்டுவனவே நினைந்து ஒழுகினளேயன்றிப் பிறிதொன்றும் நினைத்திலள்; யாங்கள், பலவாகிய இதழ் களையுடைய கருங்குவளையுடன் நெய்தல்கள் ஒப்ப மலரும் தண்ணிய துறையினையுடைய ஊரனது நட்புப் பிறப்புத் தோறும் இடையறாது சிறக்குமாக என விரும்பி ஒழுகினேம். என்றவாறு.

என வென்பது முன்னும் கூட்டப்பட்டது; “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி, ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே”1 என்பது விதி. நெய்தல்கள் நெய்தற் றிணைக்கே யுரியவாயினும், “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும்”2 என்றதனால் மருதத்துக்கும் உரியவாயின. பல்லிதழ் என்றவிடத்து, பல வென்பது இதழ் எனப் பிரிந்து வந்தமையின், அகரம் கெட்டு, “குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்”3 என்றதனால் லகரம் இரட்டித்து, பல்லிதழ் என முடிந்தது. “தொடர லிறுதி தம்முற் றாம்வரின், லகரம் றகரவொற் றாதலு முரித்தே”4 என்புழி, அருத்தாபத்தி முகத்தால் அகரம் கெடுமென்பது கொள்ளப் படும். நீலமொடு என்புழி, ஒடு: அதனோடியைந்த வேறுவினைக் கிளவி. கேண்மை, கேளாய் ஒழுகுந்தன்மை. வழிவழிச் சிறக்க என ஒற்றுமிகுதல் இலக்கணமாயினும் ஒற்றின்றியும் பாடம் வருதலும் உண்டு. “பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து”1 என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியதனாலு மறிக.

அறமும் இன்பமும் எய்துதற்குரிய பொருள் வருவாயா கலின், விளைக வயலே என்றும், புகழ்வளர்ச்சிக் குரிய ஈகைக்கு இடமாதலின், வருக இரவலர் என்றும் வேட்டாள். இது விருந்து புறந்தருதலும் சுற்றந்தழாலும் இசைவளர்த்தலும் கூறிற்று.

தலைமகன் புறத்தொழுக்க முடையனாகலின், அவன் காதல் பொதுமகளிர்பாற் செல்லுமுகத்தால் தலைமகள்பால் சுருங்குதல் கண்டு, அது நிகழாமை குறித்து, ஊரன் கேண்மை வழிவழிச் சிறக்க எனத் தோழி வேட்டாள். “உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின்”2 என்பதனால், தோழி உரனுடையளாய் அவன் கேண்மை சிறக்க வேண்டுதல் அமையும் என்க.

பலவாகிய இதழ்களாற் சிறப்புடைய நீலத்தோடு நெய்தல் நிகர்க்கு மூரன் என்றதனால், குலமளிரோடு பொதுமகளிர் நிகர்க்கு முகத்தால் இகலி யொழுகுவர் என உள்ளுறை கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

    3. வாழி யாதன் வாழி யவினி  

பால்பல வூறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய வுழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞ லூரன் றன்மனை
வாழ்க்கை பொலிக வெனவேட் டேமே.
இதுவுமது.

ப. உரை:
தலைவி இல்லறமே நினைந்தொழுகினாள்; அவன் பொது மனையில் வாழ்க்கை யொழிந்து தன்மனையிலே வாழ்வானாக என வேட்டேம் யாங்கள். என்றவாறு. மேல் விளைதற்கு வித்திய வுழவர் முன்பு விளைந்த செறுவின் நெல்லொடு பெயருமென்றது, பின்வரும் பரத்தையர்க்கு வருவாய் பண்ணி அக்காலத்து உளராகிய பரத்தையரோடு இன்பம் நுகர்வான் என்பதாம்.

உரை:
ஆதனவினி வாழ்க என்றும், ஆனிரைகள் பால்வளம் சுரக்க என்றும், எருமைகள் பல மிகுக என்றும் தலைவி இல்லறமே நினைந்து ஒழுகினாளாக, யாங்கள், பின் விளைவு வேண்டி விதைத்தற்குச் சென்ற உழவர் முன்னே விளைந்து முதிர்ந்துள்ள நெல்லைக்கொண்டு மீளும் பூக்கள் நிறைந்த ஊரன் புறத்தொழுக்கம் தவிர்ந்து, தன்மனையிலே இருந்து விளங்குவானாக என விரும்பி யொழுகிவந்தேம் என்றவாறு.

சிறிதாகிய நீரைச் சின்னீர் என்பது போலப் பாலின் மிகுதி பல எனப்பட்டது. பகடு, எருமை; எருதிற்கும் யானைக்குமாம். வித்திய என்றும், பெயரும் என்றும் வந்த எச்சவினைகட்கு ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. கஞலுதல்-நிறைதல். உழவர் பெயரும் ஊரன், பூக்கஞலூரன் என இயைக்க. வித்திய சென்ற உழவர் நெல்லொடு பெயர்வர் என்னும் இக்கருத்து, “அரிகான் மாறிய அங்கண் அகன்வயல், மறுகா லுழுத ஈரச் செறுவின், வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாண ரூர”1 என்பதனை நினைப்பித்து நிற்றல் காண்க.

பொருளும் உழவுத்தொழிலும் மிகுவதற்குப், பாலும் பகடும் வேண்டினாள். பாலின் பெருக்கம் விருந்தோம்புதற்கும், பகடு அழிவில் செல்வத்து ஆக்கத்திற்கும் என்க. பகடு என்றதனை யானை என்று கொள்ளின், ஈட்டிய ஒண்பொருளை இரவலர்க் கீந்து இசை நடுதற்பொருட்டுப் பகடு வேண்டப்பட்ட தென்று மாம். ஆகவே, விருந்தோம்புதற்குப் பகடு வேட்டாள் என்க. உள்ளுறையால், தலைமகனது புறத்தொழுக்கத்தால் வருங் குற்றம் தலைவியின் ஒழுக்கத்தால் மறையினும் வாழ்க்கை பொலிவுறாமை கூறுதலின், அவ்வாறு ஆகாமை வேண்டி, ஊரன் தன் மனைவாழ்க்கை பொலிக என்று வேட்டேம் எனத் தோழி கூறினாள். “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனும் அது”1 என்புழிக் கூறும் பயன் தலைவி வேட்டலால் ஒருவாற்றான் எய்தினும், புறத் தொழுக்கத்தால் பண்பாகிய அன்பு குறையின், அவ்வறம் கடைபோகா தென்பது உட்கொண்டு கூறினாளுமாம். “பெறற்கரும் பெரும்பொருள்”2 என்ற சூத்திரத்துட் கூறும், “நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று” பெயர்க்கும் கடப்பாடுடை யளாகலின், தோழி இவ்வாறு கூறினாள் என அறிக.

விளைவு கருதி வித்திய உழவர் விளைந்து முதிர்ந்துள்ள நெல்லைக்கொண்டு பெயரும் ஊரன் என்றதனால், தலைமகன் பின்வரும் பரத்தையர்க்கு வேண்டுவன புரிந்து, அக்காலத்து நுகர்ச்சிக்குச் சமைந்துள்ள பரத்தையரைக் கூடி ஒழுகுகின்றான் என உள்ளுறை கொள்க. இனி, விளைவு வேண்டி விதைத்த உழவர், அவ்வாறே விளைந்த நெல்லைக்கொண்டு பெயரும் ஊரனாயினும், இல்லறப் பயனை வேண்டி இவளை மணந்த பின், அது பெறாமை ஒழுகியது என்னை என இறைச்சி தோற்றியவாறும் காண்க. “இறைச்சி தானே பொருட்புறத் ததுவே”3 என்பது விதி. இல்லறப்பயன், “காமஞ் சான்ற கடைக் கோட் காலை, ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல்”4என்ப. நெல்லொடு பேரும் என்று பாடமாயின், வியர்த்தல் வேர்த்தல் என வருதல்போல, பெயர்தல் பேர்தல் என வந்ததாம். மெய்ப் பாடும் பயனும் அவை.

    4. வாழி யாதன் வாழி யவினி  

பகைவர் புல்லார்க பார்ப்பா ரோதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன மாகற்க வெனவேட் டேமே.
இதுவுமது.

பழைய உரை:
இவள் இல்லறமே விரும்பி ஒழுகினாள்; அவன்மார்பு ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய பழனம் போலாது இவட்கே உரித்தாக என விரும்பினேம் யாங்கள் எ.று. பூத்துப் பயன்படாக் கரும்பினையும் காய்த்துப் பயன்படும் நெல்லினையுமுடைய ஊரன் என்றது, ஈன்று பயன்படாப் பொதுமகளிரையும், மகப்பயந்து பயன்படும் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு.

உரை:
ஆதனவினி வாழ்க என்றும், பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க என்றும், பார்ப்பார் மறை ஓதுக என்றும் தலைமகள் இல்லறத்திற்கு வேண்டுவனவே நினைந்து ஒழுகினாளாக. யாங்கள், பூத்து விளங்கும் கரும்பும் விளைந்து சிறக்கும் நெல்லுமுடைய கழனியூரனது மார்பு எல்லார்க்கும் உரித்தாகிய பழனமாகாதொழிக என வேட்டொழுகினேம் என்றவாறு.

புல், புல்லரிசி. இக் கருத்தே கொண்டு சேனாவரையரும் “புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது”1 என்றார். பார்ப்பார், வேதியர்; இவர் நன்றும் தீதும் ஆராய்ந்து நோக்கி உறுதி கூறுவார் என்பர் பேராசிரியர்“2 அந்தணர் வேள்வியொடு அருமறை முற்றுக” என்றார் மதிவாணனார்.“3”தாறுபடு நெல்" என்றாற்போலக் காய்த்த நெல் என்றார் என்பது4 நச்சினார்க் கினியம். கழனி, வயல். பழனம், ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய நிலம். ஆகற்க என்பது வியங்கோள் எதிர்மறை. எண்ணும்மை தொக்கது. இன், உருபுதொக நின்ற சாரியை.

உலகு புரக்கும் வேந்தனை வாழ்த்த விரும்பினோர், அவன் பகைவர்கேடும் ஒருவாற்றான் அவற்கு ஆக்கமாம் என்று கருதுபவாகலின், பகைவர் புல்லார்க என்று கூறினாள். “குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின், தேய்வன கெடுகநின் தெவ்வ ராக்கம்”1 என்று பிறரும் கூறுதல் காண்க. அவ்வாறு பெற்ற ஆக்கம் கிளைத்தற்கும், வேதமோதுதலால் வேள்வி நடப்ப, வானம் பொய்யாது மாமழை பொழிய, விளைபொருள் மிகுதலால் இல்லறம் சிறத்தற்கும், பார்ப்பார் ஓதுக என வேட்டு நின்றாளாம். இனி, பார்ப்பாரோதி வேட்பித்தலால் அரசன் வாழ்நாள் பெருகுதல் கருதி, பார்ப்பார் ஓதுக என்றாள் என்று மாம். “வேந்தன் வேள்வியின் யாண்டுபல வாழ்க” என்றார் மதிவாணனார். பகைவர் புல்லார்க எனவே, நட்டோர் கிளைஞர் முதலாயினார் அமுதுண்க எனச் சுற்றந் தழாலும் விருந்தோம்பலு மாகிய மாண்புகள் கூறியவாறாம். தலைமகள் தான் கூடி இன்புறும் தலைவன்மார்பினைப் பரத்தையர் நோக்கினும், பொறாது புலக்கும் பான்மைய ளாகலினாலும், உள்ளுறையால் தலைமகனது புறத்தொழுக்கத்தைக் கூறுகின்றா ளாகலினாலும், ஊரன்மார்பு பழனம் ஆகற்க எனவேட்டேம் என்றாள். “பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுஉண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு”2 என்றதனால், தலைமகளின் புலவிப்பான்மை யுணர்க. உள்ளுறையால் பரத்தையின் பாடின்மை கூறலின், இதுவும் முன்னையது போல, “நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையிற் கண்ணின்று”3 பெயர்த்துக் கூறியது.

இனி, பூத்துப் பயன்படாக் கரும்பினையும், காய்த்துப் பயன்படும் நெல்லினையுமுடைய ஊரன் என்றது, மகப் பயந்து பயன்படும் குலமகளிரையும், அஃதில்லாத பொதுமகளிரையும் ஒப்பக் கருதி ஒழுகுவான் என்றாளாம். பொதுமகளிர் ஈன்று பயன்படா இயல்பினர் என்பதனை, “அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றி சான்ற கற்பொடு, எம்பா டாதல் அதனினும் அரிதே”4 எனவரும் சான்றோர் கூற்றான் அறிக. மெய்ப்பாடும் பயனும் அவை.

    5. வாழி யாதன் வாழி யவினி  

பசியில் லாகுக பிணிசே ணீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலைப் போத்து முழுமீ னாருந்
தண்டுறை யூரன் றேரெம்
முன்கடை நிற்க வெனவேட் டேமே.
இதுவுமது

பழைய உரை:
இவள் இல்லறமே விரும்பி ஒழுகினாள், யாங்கள் அவன் தேர் பிறமகளிர் முன்கடை நிற்றல் ஒழிந்து எம் முன்கடை நிற்க என விரும்பினேம் எ.று. `முதலைப் போத்து…… ஊரன்’ என்றது, ஒருங்கு வாழ்வாரைப் பழைமை நோக்காது உயிர் கவர்வான் என்பதாம்.

உரை:
ஆதனவினி வாழ்க என்றும், பசி இல்லையாகுக என்றும், பிணி நெடிது நீங்குக என்றும் தலைமகள் இல்லறத்திற்கு உரியனவே நினைந்தொழுகினாளாக, யாங்கள், முதலைப் போத்துத் தன்னொடு வாழும் முதிர்ந்த மீன்களை உண்ணும் குளிர்ந்த துறையினையுடைய ஊரனது தேர் பிற மகளிரின் முன்கடை நிற்றல் ஒழிந்து எம்முடைய மனைமுற்றத்தே நிற்க என விரும்பினேம் என்றவாறு.

பசியின் உண்மையும், இன்மையும் காரணம் பற்றித் தோன்றுவன வாகலின் ஆக்கங் கூறினார். சேண், சேய்மையிடம். முதலைப் போத்து, முதலையினது போத்து. போத்து, இளமை சுட்டிய மரபுப் பெயர். “பிள்ளை குழவி கன்றே போத்தெனக், கொள்ளவும் அமையும் ஓரறிவுயிர்க்கே”1 என்புழிக் “கொள்ளவும்” என்ற உம்மையை எச்சப்படுத்தி ஓரறிவுயிர்க்கே யன்றி ஏனைய வற்றிற்கும் கொள்ப2வாகலின், முதலைக்கும் கொள்ளப் பட்டது. முழுமீன், இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன். பிறமகளிர் முன்கடை என்பது முதலாயின குறிப் பெச்சம்.

பசியும் பிணியும் நல்வாழ்வைச் சீர்குலைப்பன வாயினும், பிணிக்குரிய காரணங்களுட் பசி சிறந்தமையின், பசியில் லாகுக என்றும், பசியின்றியும் சிறுபான்மை பிணியுண்டாத லுண்மையின், பிணி சேண் நீங்குக என்றும் வேட்டாள். பிணி போலாது, எல்லா நன்மையையும் கெடுக்கும் இயல்பிற் றாகலின் பசியை முற்கூறினாள் என்க. தலைமகன் புறத்தொழுக்கத்தால் தலைமகளது மேனி நலம் கெடுதலின், அவன்தேர் தன் மனைக்கட் சென்று நில்லா தாயினும் பரத்தையர் மனைக்கண் நின்ற வழித் தலைமகள் ஆற்றாளாதலின், ஊரன்தேர் எம் முன் கடை நிற்க என வேட்டேம் என்றாள். தமது மனைக் கண் நிற்றலால் தலைமகன் தம்பாற் காதலன் எனக் காட்டித் தலைமகள் முன் தருக்கித் திரியும் பரத்தையர் அது கண்டு தலைமடங்கு வராகலின் முன்கடை என இடம் சுட்டினாள் என அறிக.

துறைக்கண் வாழும் முதலைப்போத்து உடனுறையும் முழுமீன்களின் முதுமை கருதாது உண்டொழுகும் ஊரன் என்றதனால், தலைமகன் தன்மனைக்கண் தன்னொடு உடனு றையும் தலைமகளின் தலைமை கருதாது அவள்நலம் கெடுக்கின்றான் எனத் துனியுறு கிளவி தோன்ற உள்ளுறுத் துரைத்தவாறு. மெய்ப்பாடும் பயனும் அவை. இவை யைந்தும் கற்பின்கண் நிகழ்ந்தது கூறின.

    6. வாழி யாதன் வாழி யவினி  

வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளோ யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
எந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே.

களவினிற் பலநாள் ஒழுகிவந்து வரைந்துகொண்ட தலைமகன் தோழியொடு சொல்லாடி, “யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது.

பழைய உரை:
நின்னை எதிர்ப்பட்ட அன்றே வரைந்தா யெனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவன விரும்பி ஒழுகியதல்லது தலைவி பிறிதொன்றும் நினைத்திலள்; யாங்கள் அகன்ற பொய்கைக்கு அணியாகத் தாமரையையுடைய ஊரனாதலால் அத் தண்டுறை யூரன் மனைக்கு அணியாம் வண்ணம் இவளை வரைவானாக, எந்தையும் கொடுப்பானாக என விரும்பினேம் எ.று. ஈண்டுத் தலைவியை யாய் என்றது, எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டு ஒழுகலுற்று நின்ற சிறப்பு நோக்கி.

உரை:
எம்முடைய யாய் நின்னை எதிர்ப்பட்ட ஞான்றே நீ வரைந்தாய் என உட்கொண்டு, ஆதனவினி வாழ்க என்றும், வேந்தன் பகைமை யொழிக என்றும், அவன் பல யாண்டுகள் வாழ்க என்றும் தனக்குரிய அறநெறியே வேண்டி யொழு கினாள்; அகன்ற பொய்கைக்கண் முகைகள் கொண்ட தாமரையினையுடைய ஊரன் இவளை விரைய வரைவானாக என்றும், அவன் அது வேண்டியவிடத்து எந்தையும் மறாது கொடுப்பானாக என்றும் யாங்கள் விரும்பி யொழுகினேம். என்றவாறு.

“நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்”1 என்பதனால் இவை கற்புக்காலத்து நினைக்கப்பட்டன. பகை தணிதலாவது, பகைமேற் சென்ற வினை ஒழிதல். பகை தணிக என்பன எழுவாயும் பயனிலையுமாய் இயைந்து ஒரு சொல்லாய் வேந்து என்றதற்கு முடிபாயின. வேந்து, உயர்திணைப் பொருண்மைக் கண் வந்த அஃறிணைச்சொல். “உயர்திணை மருங்கின் நிலையின வாயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்”2 என்பது விதி. “மலர்ந்த மார்பு” என்றாற் போல மலர்தல் விரிதல் மேற்று, முகைந்த என்பது முகை யென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்சவினை. நின்னை யெதிர்ப்பட்ட என்பது முதலாயின குறிப்பெச்சம். எந்தையும் என்புழி உம்மையால், தந்தை மறாது மகட்கொடை நேர்தல் பெய்துரைக்கப்பட்டது.

தலைமகனை எதிர்ப்பட்ட ஞான்றே அவன் வரைந்தான் என உட்கொண்டு, ஆண்டுச் செய்தற்குரிய நல்லறமே விரும்பி யொழுகிய தலைமையுடைமையின், தலைமகளை யாய் என்றாள். வேந்து பகைதணியாவழி, பிணம் படு செருவேட்டு எழுதலல்லது, மணம்புகு வைகல் நாளை யாயினும், அதனை மனங்கொளா மறமுனைய யாகலின், வேந்து பகைதணிக என்றும், காதலரைப் பிரிந்து ஒரு கருமம் முடிப்பதனில் மிக்க ஆள்வினை மேற்கொண்டவழி, அதன்கண் நீ இனிது முற்றி மீள்வாயாக எனவும், அவ் வண்ணம் மீண்டவழிக் கூட்டம் இன்பம் மிகுவித்தலின், யாண்டுபல நந்துக என்றும் வேட்டாள் என்றாள். “வேந்து பகைதணிக” எனவே, “தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை”1 கருதித் தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்தானாதல் அறிக. இவ்வாறு எதிர்ந்த ஞான்றே வரைந்தா யெனக் கற்புக்கடம் பூண்டாள், புகழ் விரிந்த நின் மனைக்கண் விளக்கெனத் திகழ்ந்து அதனைச் சிறப்பிப்பாளாகலின் வரைக என்றும், இவள் கற்புநிலையும் நின் மறநிலையும் உணராது எந்தை கொடானாயின் வரும் ஏதத்திற்கு அஞ்சி, எந்தையும் கொடுக்க என்றும் வேட்டேம் என்றாள். “ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல, மனைக்குவிளக் காயினள் மன்ற”2 என்றும், “விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியல், சுணங்கணி வனமுலை யவளொடு நாளை, மணம்புகு வைக லாகுதல் ஒன்றோ, ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின், நீளிலை எஃக மறுத்த வுடம்பொடு, வாரா வுலகம் புகுதல் ஒன்றெனப், படைதொட் டனனே”3, என்றும் வருவன முறையே தலைமகள் மனைக்கு விளக்கெனத் திகழ்தலும், மகட்கொடை மறுப்புழி எய்தும் ஏதமும் உணர்த்துதல் காண்க. “தண்டுறையூரன் வரைக” என்றதனால் தலைமகள் ஒருதலை யுரிமை வேண்டி நிற்றலும், “எந்தையும் கொடுக்க” என்று கூறவே, “அம்பலும் அலரும் களவு வெளிப் படுக்குமென்று” அஞ்சுதல் முதலியனவும் ஏதுவாகத் தலைமகள் வரைதல் வேட்கையுடைய ளாயினமை தோன்றத் தோழி கூறினாளாம்.

இனி, அகன்ற பொய்கைக்கண் தாமரை முகைந்தாற் போல, அகன்ற இவ்வூர்க்கண் அலர் எழுந்தமையின், இவளது ஆற்றாமை கண்டு வரைக என்றும், கொண்டுதலைக்கழிதல், மகட்கொடை யுடம்படல் என்பவற்றிற்கு இடையீடுகளாகிய இற்செறிப்பும், வேற்று வரைவு வருதலும் பிறவும் நிகழ்ந் தமையின், எந்தையும் கொடுக்க என வேட்டேம் என்றும் கூறினாள் எனினுமாம்.

“வேந்து பகைதணிக” என்றமையின், தலைமகன் களவின் கண் வரைவு இடைவைத்துப் பிரிந்தவழித் தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தைமையும் கூறற்பால ளாயினும், “வாளாண் எதிரும் பிரிவு” தலைமகற்குக் கடமை யென்பது உட்கொண்டு நின்ற அவளது பொறையுடைமை சிறப்பித்தவாறு.

இனி, “பெறற்கரும் பெரும் பொருள்”1 என்ற சூத்திரத்து “அற்ற மில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்” என்பதனைக் கிழவோற் சுட்டிய எனப் பாடங்கொண்டு, ஆங்கு நிகழும் கூற்றுக்கு இதனை உதாரணமாக்குவர் இளம்பூரணர். மெய்ப்பாடும் பயனும் அவை.

    7.  வாழி யாதன் வாழி யவினி  

அறநனி சிறக்க அல்லது கெடுக
எனவேட் டோளே யாயே யாமே
உளைப்பூ மருதத்துக் கிளைக்குரு கிருக்கும்
தண்டுறை யூரன் றன்னூர்க்
கொண்டனன் செல்க வெனவேட் டேமே.
இதுவுமது.

உரை:
நின்னை எதிர்ப்பட்ட ஞான்றே நீ வரைந்தாய் எனக் கொண்டு, ஆதனவினி வாழ்க என்றும், அறவினை மிக வோங்குக என்றும், அல்லதாகிய பாவம் முற்றவும் கெடுக என்றும் தலைமகள் இல்லறமே வேண்டி யொழுகினாளாக, யாங்கள், உளை பொருந்திய பூக்களையுடைய மருதமரத்தில் குருகுகள் தம் கிளைசூழ இருக்கும் குளிர்ந்த துறையினை யுடைய ஊரன் இவளைத் தன்னுடன் கொண்டு செல்வானாக என வேண்டி யொழுகினேம் எ.று.

அறம், அறவினை. “அறம் நனிசிறக்க” எனவே, அல்லது முற்றவும் கெடுதல் கொள்ளப்படுவ தாயிற்று. உளைப்பூ, மேலே துய்யினையுடைய பூ; “உளைப்பூ மருதின் ஒள்ளிண ரட்டி”1 என்பதன் உரை காண்க. குருகு, பறவை; ஈண்டுக் கிளிகள் மேற்று; “கிளிவளர் பூ மருது”2 என்றார் தேவரும். இனி, இது நெய்தல் நிலத்துக்கு உரித்தாகக் கூறப்படும் ஒரு பறவை யென்றும், “இதனைக் கொக்கு என்பாரும் நாரை யென்பாரும் அன்னம் என்பாரு முளர்; இப்பெயர் நீர்வாழ் பறவைக்கெல்லாம் பொதுவாய் வருமாயினும்,”கொக்கினங்காள் குருகினங்காள்" என வேறுவேறு விளிக்கப்படுதலின், கொக்கு அன்றென்றும், கருங்கால் கூறப்படுதலின் நாரையும் அன்னமும் அன்றென்றும் துணியலாகும்" என்றும், “இது வெண்ணிற முடைமையால் வெள்ளாங்குருகு என்று வழங்கும்” என்றும் கூறுவர். அது கருத் தாயின், “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்”3 என்பதனால் ஈண்டு அமைத்துக் கொள்க. கிளைக்குருகு இருக்கும் என்பதற்குக் கிளைக்கண் குருகுகள் தங்கியிருக்கும் என்றல் பொருட் சிறப்பெய் தாமை யறிக. கொண்டனன் செல்க என்பது முற்றெச்சத் தொடர்.

எதிர்ப்பட்ட பொழுதே வரைந்தாயென உட்கொண்டு கற்புநெறி நின்றாள், தான் நுகர்தற்குரிய இன்பம் அறத்தானன்றி எய்தாது என்பதனை உணர்ந்துளாள் என்பாள், அறம் நனி சிறக்க என்றும், அறவினையே செய் தொழுகுவாரைப் பாவம் பற்றாதாயினும், பற்றுமாறு பிறர் பழிமொழி கூறினும் அஃது அவரைச் சாராதாகலின், நனி சிறக்க என்றும் வேட்டாள் என்றாள். “அறத்தான் வருவதே இன்பம்” 4 என்றும், “அறனறிந்து ஒழுகும் அங்க ணாளனைத், திறனிலார் எடுத்த தீமொழி யெல்லாம், நல்லவை யுட்படக் கெட்டாங்கு”5 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. அறவினை செய்யார்க்கு அல்லது செய்யாமை நன்மை பயந்து அறமாய் முடிதலின், அல்லது கெடுக என வேட்டாள் என்றாள். “நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான், எல்லாரும் உவப்பது அன்றியும், நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே”1 என்றார் சான்றோரும். “அறன்வாழ்த்த நற்காண்ட, விறன்மாந்தரன் விறன்மருக”2 எனப் பிறரும் கூறுமாறறிக. இது புரையறந்தெளிதல். இனி, இல்லி லிருந்து நல்லின்பம் நுகர்வார்க்குரிய பொருளின்பங்கட்கு அறம் ஏதுவாகலினாலும், அறந்தெரி திகிரியினையுடைய அரசர்க்கும், அல்லது வழியடை யாகும் தீது என்ப வாகலினாலும், அறம் நனி சிறக்க என்பதும், அல்லது கெடுக என்பதும் வேண்டப்பட்டன என்றலும் ஒன்று. இனி, களவின்கண் வரைவிடைவைத்துப் பிரிந்துழியும், தலைவி தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்ற, உயிராக் காலத்து உயிர்க்கும் இயல்பின ளாயினும், இவள் தகவல்லன நினைந்திலள் என்றற்கு இது கூறினாள் என்றும் கூறுவர். இஃது அவளது நற்பாலொழுக்கம் கூறிற்று.

நின்னை எதிர்ப்பட்ட ஞான்றே வரைந்தாய் என உட் கொண்டு, இல்லறத்தின்மேற் சென்ற வேட்கை மிகவுடையளாய், ஆள்வினைக் குறிப்பால் நீ பிரிவை எனவும், களவு புறத்தார்க்குப் புலனாயின் அம்பலும் அலருமாம் எனவும் அறிந்தும், தமர் அறிவுற்றுக் காப்பு மிகுவிப்பரென்று அஞ்சியும், பிறவகையான் எய்தற்பாலவாகிய இடையூறு நினைந்தும் வேறுபட்டமையின், யாங்கள் அஞ்சி, ஊரன் தன்னூர்க் கொண்டனன் செல்க என வேட்டேம் என்று கூறினாள். “ஒருதலை யுரிமைவேண்டியும் மகடூஉப், பிரித லச்ச முண்மை யானும், அம்பலு மலரும் களவு வெளிப் படுக்குமென், றஞ்ச வந்த ஆங்கிரு வகையினும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும், போக்கும் வரைவும் மனைவிக்கண் தோன்றும்”3என ஆசிரியர் கூறினர். “ஒன்றித் தோன்றும் தோழி மேன”4 என்பதனால், தோழி கூறலும் அமையும் என அறிக.

மருதமரம் குருகு தங்கியிருத்தற்கு ஆதாரமானாற் போல, இவள் உயிர்வாழ்தற்கு நீ இன்றியமையாய் என்பது உள்ளுறை; “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே”1 என்றார் சான்றோரும். மெய்ப்பாடும் பயனுமவை.

    7. வாழி யாதன் வாழி யவினி அரசுமுறை செய்க களவில் லாகுக  

எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூக்கஞ லூரன் சூளிவண்
வாய்ப்ப தாக வெனவேட் டேமே.
8. இதுவுமது.

உரை:
நின்னை எதிர்ப்பட்ட ஞான்றே தலைமகள் கற்புக்கடம் பூண்டு அதற்கு வேண்டுவனவே நினைந்து, ஆதனவினி வாழ்க என்றும், அரசன் முறையினைச் செய்க என்றும், களவு முதலிய குற்றங்கள் நிகழாதொழிக என்றும் வேட்டொழுகினாளாக, அசைகின்ற தளிர்களையுடைய மாமரத்தின்கண் அழகிய மயில் தங்கியிருக்கும் பூக்கள் நிறைந்த ஊரன், தலைப்பெய்த பொழுது செய்த சூளுறவு இப்பொழுது பொய்யாதொழிக என விரும்பி ஒழுகினேம் என்றவாறு.

முறை செய்தலை “ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்து செய்வஃதே முறை”2 என்பதனால் அறிக. அரசு என்பதற்கு, வேந்து என்புழி உரைத்ததனை உரைத்துக் கொள்க. களவு, பிறர்க்கு உரிய தொன்றனை வஞ்சத்தாற் கொள்ளக் கருதுதல். மாமரக்கிளவி, “குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்றும் அகரக் கிளவி”3 என்றதனால் அகரம் பெற்று “அத்தின் அகரம் அகரமுனை யில்லை”4 என்றதனால் அகரம் கெட்டு, “மாஅத்து” என நின்றது. சினை, ஈண்டுத் தளிர்மேற்று. “அலங்குசினை பொதுளிய நறுவடி மாஅத்துப், பொதும்பு”1 என்றார் பிறரும். சூள், வன்புறையால் தெய்வத்தை முன்னிறுத்து ஆணையிட்டுக் கூறல்; “நாடன், அணங்குடை யருஞ்சூள் தருகுவன்”2 என்றும் “கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக், கடுஞ்சூள் தருகுவன்”3 என்றும் வருவன காண்க. “நிற்றுறந்து அமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவா குகயான் செலவுறு தகவே”4 என்பது போல்வனவும் அச்சூளுறவின் பாற்படும்.

“அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவா”5 தாகலின், அரசு முறை செய்க என்றும், முறை செய்தற்குரிய ஒள்ளிய அறிவு, களவினால் மழுங்கிப் பொய் கொலைகட்கு ஏதுவாய் அறிவறியாமை பயத்தலின், களவுஇல் லாகுக என்றும் வேட்டாள் என்றாள். “களவென்னும் காரறிவாண்மை”6 என்பதனால், அறிவு அறியாமையாதல் காண்க. இனி, களவு உள தாயவழி, நாட்டில் பொய்யும் கொலையும் மிக்கு அரசுமுறை கோடுதற்கு ஏதுவா மாகலின், களவுஇல் லாகுக என வேட்டாள் எனினுமாம். “அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக், கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கைக், கொடியோர் இன்றுஅவன் கடியுடை வியன் புலம்”7 எனக் களவின்மை நாட்டுக்கு அணியாகக் கூறப்படுமாறு காண்க. களவில் லாகுக எனப் பொதுப்படக் கூறினமையின், அன்பின் ஐந்திணைக் களவும் பல வகையான இடையீடுகளால் அழிவில் கூட்டத்து இன்பநுகர்ச்சி யின்றித் தலைமகட்கு அசைவு பிறப்பித்தலின், அஃதும் உட்படக் கூறினாள் என்றும் கூறுவர்; மற்று, களவின்கண் நிகழும் இடையீடுகள் தலைமக்களிடையே எழும் இன்பத்துக்கு “ஆக்கமாவன வாகலானும், கற்பெனப் படுவது களவின் வழித்தே”8 என்புழி, இஃது உலகக் களவன்று, நன்மை பயக்கும் களவு என்று நக்கீரனார் கூறுமாற்றாலும் அது பொருளன்மை அறிக. அரசு முறைசெய்க எனவே, “ஆள்பவர் கலக்குற அலை பெற்று”1 முறை தப்பிய நாட்டினை, அது பிறழாமைக் காத்தற்குத் தலைவன் பிரிந்தமை கொள்க. “பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும், இழைத்த ஒண்பொருண் முடியவும் பிரிவே”2 என்பர் ஆசிரியர். களவின்கண், நீ பிரிந்தொழுகிய ஞான் றெல்லாம், யாம் குறிப்பாலும் வெளிப்படையாலும் வரைவு கடாவியும் நீ அக்களவே விரும்பித் தாழ்த்தவிடத்து, தலைமகள் எய்திய வேறுபாடு கண்டு, நீ செய்த சூளுறவினை மறந்தனை கொல்லோ என அஞ்சினேமாகலின், சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டேம் என்றாள். மெய்ப்பாடும் பயனுமவை.

    9.  வாழி யாதன் வாழி யவினி  

நன்றுபெரிது சிறக்க தீதில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்டுறை யூரன் கேண்மை
அம்பலா கற்க வெனவேட் டேமே.
இதுவுமது
பழைய உரை :
இன்பம் நுகர்ந்தவன் செல்வமனைக்கண்ணே வைகும் வண்ணம், வரையுந் துணையும் அவன்கேண்மை அம்பலாகா தொழிக என விரும்பினேம் யாங்கள் என்பது.

உரை:
நின்னை எதிர்ந்தபொழுதே வரைந்தாய் எனக் கொண்டு தலைமகள் இல்லறமே நினைந்து, ஆதனவினி வாழ்க என்றும். நன்று மிகவும் பெருகுக என்றும், தீது சிறிதும் இல்லை யாகுக என்றும் வேட்டொழுகினாள்; கயல்மீனை உண்ட நாரை நெற்போர்வின்கண் தங்கும் தண்ணிய துறையினையுடைய ஊரன் நட்பு அம்பலாகா தொழிக என வேட்டேம் யாங்கள். என்றவாறு.

நன்று, இன்பம் பயக்கும் நல்வினை. தீது, துன்பம் பயக்கும் தீவினை. போர்வு, வைக்கோற் போர். “கயலார் நாரை போர்விற் சேக்கும்”1 என்றும், “பொய்கை நாரை போர்விற் சேக்கும், நெய்தலங் கழனி”2 என்றும் பிறரும் கூறுவர். கேண்மை, கேளாந்தன்மை. அம்பல், “சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வது” என்பர் நக்கீரர் 3.

வாழ்க்கையின் பயன் இன்ப நுகர்ச்சியன்றிப் பிறி தின்மையின், நன்று பெரிது சிறக்க எனவும், தீதுளதாயவழி இருமையும் கெடுதலின், தீது இல்லாகுக எனவும் வேட்டாள் என்றாள். “தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து”4 என்றார் பிறரும். தம்மனத்து ஒரு கோட்டமுடையார் அப்பெற்றியே பிறரையும் கருதுவது உலகத்துத் தன்மை யாகலின், வேறுநின்று தம் செயல் உசாவுவாரைத் தன் செயல் உணர்வாராக உணர்ந்து இவ்வொழுக்கம் இடையீடுபடும் என அஞ்சினாளாயினும், வரைவு நீட்டித்துக் களவை வெளிப்படுத்தற்குரிய செயல் தலைவனதாகலின், அம்பலாகற்க என வேட்டேம் என்றாள். “அம்ப லும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்குஅதன் முதல்வன் கிழவ னாகும்”5 என்பது களவியல். அம்பலுக்குப் பொருள் தலைமகனாயினும், அவனது தொடர்பே அதற்குக் காரணமாதல் பற்றிக் கேண்மை அம்பல் ஆகற்க என்றாள்; இஃது ஒருவாற்றான் ஈரமில் கூற்றம் ஏற்று அலர் நாணும் பகுதியாமென உணர்க. தலைவியின் வேறன்மையின், தோழி யிடைத் தோன்றிற்று.

தலைவியின் நலனுண்டவன் அவளை யுடனே வரைந்து கொள்ள நினையாது வரை விடைவைத்துப் பிரிந்து தன் மனைக்கண்ணே தங்கினான் எனத் தான் அக்காலத்துத்துக் கருதினமை தோன்ற, கயலார் நாரை போர்விற் சேக்கும் என உள்ளுறுத் துரைத்தாள். மெய்ப்பாடும் பயனு மவை.

10. வாழி யாதன் வாழி யவினி மாரி வாய்க்க வளநனி சிறக்க
    எனவேட் டோளே யாயே யாமே
    பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
    தண்டுறை யூரன் றன்னொடு
    கொண்டனன் செல்க வெனவேட்டேமே
    இதுவுமது.

பழைய உரை:
இவள் நின்னை எதிர்ப்பட்ட அன்றே வரைந்தாய் எனக் கொண்டு இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி ஒழுகினாள்; யாங்கள் அவன் வரைந்துகொள்ள நினையானாயின், பூத்த மாவினையும் புலாலஞ்சிறுமீனையு முடைய ஊரனாதலால், அதற் கேற்ப, எம்மூர்க்கண் அறத்தொடுநிலை வகையால் கற்புடைமையும், எதிர்ப்பாட்டினால் அலரும் கிளைப்ப வாயினும், உடன்கொண்டு செல்வானாக என விரும்பினேம் என்பது.

உரை:
இவள் நின்னை எதிர்ப்பட்ட ஞான்றே வரைந்தாய் என உட்கொண்டு ஆதனவினி வாழ்க என்றும். மழை தப்பாது பொழிக என்றும். வளங்கள் மிக உண்டாகுக என்றும் இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி ஒழுகினாளாக. யாம் பூத்து மணங்கமழும் மாவினையும் புலால் நாறும் மீனினையு முடைய குளிர்ந்த துறையினையுடைய ஊரன் இவளைத் தன்னோடு கொண்டுடன் செல்வானாக என வேட்டொழு கினேம் என்றவாறு.

புலால் நாறும் மீன் கூறவே, மாவின் மணம் கமழ்தல் கூறப்பட்டது. வளம், செல்வம்; “பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”1 என்புழிப் போல.

அறமுதல் மூன்றும் பயக்கும் சிறப்புடைமையின், மாரி வாய்க்க என்றும், அது வாய்த்தவழி இடையீடு இன்றிப் பொருளும் அறமும் பெருகி இன்பம் மிகுவிக்கு முகத்தால் இல்லறத்திற்கு ஏற்றம் பயத்தலின், வளம் நனிசிறக்க என்றும் தலைமகள் வேட்டாள் என்றாள். இவளை வரைந்துகொள்ள நினையாது நீ களவே விரும்பி ஒழுகினமையின், அறத்தொடு நிலையால் கற்புடைமையும், எதிர்ப்பாட்டினால் அலரும் கிளைத்து வருத்தமுறுவிப்பினும் உறுக எனத் துணிந்தேம் என்பாள், தன்னொடு கொண்டன்ன செல்க என வேட்டேம் இஃது அக்காலத்துத் தலைவரு விழும நிலையெடுத் துரைத்தலாம். அறத்தொடு நிலையாவது, “அறம் என்பது தக்கது; தக்க தனைச்சொல்லி நிற்றல். அல்லதூஉம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு, கற்பின்றலை நிற்றல் என்பதூஉமாம்”1 என்பர் நக்கீரனார்.

தலைமகன், வரைவு நினையாமையால் காப்புமிகுதி முதலியன நிகழ்தல் கண்டு தலைமகள் மேனி வேறுபட்டாளாகத் தோழி அறத்தொடு நிற்பள். “காப்புக்கைம் மிக்குக் காமம் பெருகினும், நொதுமலர் வரையும் பருவ மாயினும், வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினும், அவன்ஊறு அஞ்சுங் கால மாயினும், அந்நா லிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ, அறத்தொடு நிற்றல் தோழிக் குரித்தே”2 என்பர் இறையனார். மெய்ப்பாடும் பயனு மவை.


வேழப்பத்து

வேழம் மருதநிலத்துச் சிறப்புடைக் கருப்பொருளாய், வரும் பாட்டுக்கள் பத்தினும் பயின்று வருதலின், இஃது இப்பெயரைப் பெறுவதாயிற்று.
இது வேழக்கரும்பு என்றும், கொறுக்கச்சியென்றும் வழங்கும். “வேழப் பழனத்து நூழிலாட் டோதை” எனவரும் மதுரைக்காஞ்சி3 யடிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரும் வேழம் என்பதற்குக் “கொறுக்கச்சி” என்றே உரை கூறினர். இக்காலத்து இதனைக் கொறுக்கந்தட்டு என வழங்குவர். ஆறு குளம் முதலிய நீர்நிலைகளின் கரைகள் நீரால் அலைப்புண்டு வலியழியா வண்ணம், கரைக்குத் திண்மையுண்டாவது குறித்து இதனைப் பேணி வளர்ப்பது தமிழகத்தின் பொது இயல்பு. “இலையே முறியே”1 என்னும் மரபியற் சூத்திரவுரையுள், ஆசிரியர் பேராசிரியர். “புழற்காலாம்பல் முதலியனவும் புல்லெனப்பட்டு அடங்கி, அவற்றின் பெயர்பெறும்” என்றலி னாலும், “தூம்புடைத் திரள்கால் ஆம்பல்”2 என்றாற்போல “ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்”3 என்று இந்நூற்கண் வழங்கப்படுதலினாலும், இதுவும் புல் என்னும் வகையில் அடங்கும் என அறிக. கரும்பும் மூங்கிலும் புல் வகையில் அடங்கும்; வேழமும் புல்லே என்று தாவர நூலார் கூறுவர்.

இப்புல்வகை மிகப் பரந்துபட்ட தொன்று; இதன் இயல் பினை ஆராய்ந்த அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக்களை ஈண்டுத் தருகின்றோம். புல் வகையுள் மூவாயிரம், நாலாயிரம் வகைகள் உண்டு. பிரிட்டன் தீவுகளில் மட்டும் நூறுவகைப் புல்லும், அமெரிக்காவில் எண்ணூாறு வகைப் புல்லும் உள்ளன எனத் தாவர நூலார் கூறுவர். அமெரிக்க நாட்டுப் புலவர் ஒருவர் புல்வகை இயற்கை யன்னை அருளும் அருள்வகை என்றும், உலகில் காடுகளும் விளைபயனும் நறுமலரும் பிறவும் அழியவும் இப்புல்வகை மட்டில் அழியா என்றும், இவையே நாகரிக வளர்ச்சிக்குத் துணைபுரிவன என்றும் கூறினர்.

இனி, “கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்,” “பரியுடை நன்மான் பொங்குளை யன்ன, அடைகரை வேழம் வெண்பூப் பகரும்,” “புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ, விசும்பாடு குருகின் தோன்றும்” என்று இந்நூல் கூறுதலால், வேழத்தின் பூ வெண்ணிறத்தது என்பதும், கரும்பினது பூவை நிகர்க்கும் என்பதும், உயரத்தே விரிந்து தோன்றும் இப் பூவின் தோற்றம் குதிரையின் உளைமயிரினையும் விசும்பூடு பறக்கும் குருகினையும் போன்று விளங்கும் என்பதும் பெறப்படும். பிற்காலச் சான்றோர், இந் நெறியேபற்றித் தம் புலமை நலம் தோன்றக் கவியோவியம் தீட்டுவர். கச்சியப்ப முனிவர், “காலிரு மருங்கு நீண்ட கரைக்கலித் தெழுந்த வேழம், வாலிய பூத்து நிற்கும் வண்ணம்செங் களத்துப் போர்வேட்டு, ஆலிய மன்னர் சேனை அணிவகுத்து உடற்ற ஏந்தும், வேலிருங் கூட்டம் என்ன விளங்குவ இடங்கள் தோறும்”1 என்றனர்.

இனி, இது, காம்புகண் டன்ன தூம்புடைமை பற்றி, இதன் புழையில் உழவர்மகளிர் அஞ்சனம் பெய்து வைப்பர் என்றும், மூங்கில் போல இவையும் வீடுகட்கு வரிச்சற் பிடித்தற்குப் பயன்படும் என்றும் சான்றோர் கூறுவர். இஃது, “ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால், சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞ லூரன்”2 என்றும், “வேழம் நிரைத்து வெண்கோடு விரைஇத், தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த, குறியிறைக் குரம்பை”3 என்றும் வருவது காண்க. “புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழம்” என்று இந்நூல் கூறுதல் போல, ஆசிரியர் பரணரும், “வேழ வெண்புணை தழிஇ…… நெருநல் ஆடினை புனலே 4” என்று கூறினர். இதனால், நீராடுவார்க்கு வேழம் புணையமைத்துக் கோடற்குப் பயன்படும் என்பதும் அறிக.

    11. மனைநடு வயலை வேழஞ் சுற்றுந் துறைகே ழூரன் கொடுமை நாணி  

நல்ல னென்றும் யாமே
அல்ல னென்னுமென் றடமென் றோளே.

பாணன் முதலாயினார்க்குத் தலைமகனது கொடுமை கூறி வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள் கூறியது. “தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும் அவன் கொடுமை நின்னாற் புலப்படுதல் தகாது,” என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

பழைய உரை :
மனைக்கண் வயலை புறத்து வேழம் சுற்றும் ஊரன் என்றது, மணமனைக்கண்ணே வைகுஞான்றும் பரத்தையர் திறமே சூழ்வான் என்பதாம்.

உரை :
மனைக்கண் நட்ட வயலைக்கொடி சென்று வேழத்தைச் சுற்றிக்கொண்டு வளரும் துறை பொருந்திய ஊரனது கொடுமைக்கு நாணி, நாம் அவனை நல்லன் என்று கூறினேமாயினும், என்னுடைய பெரியவாகிய, மெல்லிய தோள்கள் ஆற்றாது தம் மெலிவால் அவன் நல்லனல்லன் எனக் காட்டி நின்றனகாண் என்றவாறு.

வயலை, ஒருவகைக்கொடி. இதனைப் பசலைக்கொடி என்றும், இதன் தழையைப் பசலைக்கீரை என்றும் கூறுப. இது, வீடுகளில் இதற்கென அமைக்கப்பெற்ற பந்தரில் ஏறிப் படருமாறு நட்டு வளர்க்கப்பெறும்; மனைப்புறத்து நிற்கும் மரங்களிற் சென்று படருமாறு விடப்பெறுதலும் உண்டு. “குடையடை நீரின் மடையினள் எடுத்த, பந்தர் வயலைப் பந்தெறிந்து ஆடி”1 என்றும், “இல்லெழு வயலை”2 என்றும், “மனைநடு வயலை மரன் இவர் கொழுங்கொடி”3 என்றும் சான்றோர் கூறுமாற்றால் அறிக. மேலும், இதன் கொடி செந்நிறத்த தாதல் பற்றி, “வயலைச் செங்கொடி” “வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச், செவ்விரல் சிவந்த”4 என இந்நூலுள்ளும் பிறாண்டும் கூறப்படும். வயலைக்கொடி மாலை தொடுத்தற்கும் பயன்படும் என்பது இக் காட்டியவாற்றானும், “வயலையம் பிணையல் வார்ந்த கவாஅன், திதலை யல்குற் குறுமகள்”5 என்பதனாலும் உணரப் படும். அன்றியும், இக்கொடியை மகளிரே பேணி வளர்ப்பர் என்பது, “தெற்றி உலறினும் வயலை வாடினும், நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும், நின்னினும் மடவள் நனிநின் நயந்த, அன்னை”1 “வரியணி பந்தும் வாடிய வயலையும், மயிலடி யன்ன மாக்குரல் நொச்சியும்”2 “வயலை, நாடொறும்…… ஆர நீர் ஊட்டிப் புரப்போர், யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே”3 என உடன்போக்கின்கண் தோழியரும் தாயரும் புலம்பிக் கூறுவனவற்றால் நன்கு தெளியப்படும். கொடுமை, ஈண்டுக் கோடுந்தன்மை; கோடிய கோல் கொடுங்கோல் எனப்படுதல் போல. உயிரோரன்ன தலைமகட்கே யுரித்தென்று கருதிச் செய்யும் தலையளியை, அச் செந்நெறியினின்றும் நீங்கிப் பரத்தையர்க்குச் செய்து புறத்தொழுகுதல் கோடிய நெறி யாதலின், கொடுமை என்றார் எனவுணர்க. பிறாண்டும் இதுவே உரைத்துக் கொள்க. கொடுமை என்புழிப் பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு தொக்கது. என்றும்: பன்மைத் தன்மை வினைமுற்று. ஆயினும் என்பது எஞ்சி நின்றது. யாம் என்றது தோழியரையும் உளப்படுத்திற்று. என்னும்: படர்கை வினை முற்று. தோளைப் பிரித்துக் கூறலின், ஏகாரம் பிரிநிலை. சொல்லா மரபினவாகிய தோள்களைச் சொல்லிய என்றல், “அவையல பிறவும் நுதலிய நெறியால், சொல்லுந போலவும் கேட்குந போலவும், சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்”4 என்பதனால் அமையும். மகளிர்க்குத் தோள் பெருத்தல் இலக்கண மாதலின், தடமென்றோள் எனப்பட்டது. “அகலல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி”5 என்று பிறரும் கூறுப.

புறத்தொழுக்கத்தின்கண் தலைமகள் பரத்தையர் என்ற இவரிடத்து ஊடல் தோன்றின், தலைமகன் வாயில் வேண்டி விடுதலும், அவர் வாயில் நேர்தலும், மறுத்தலும் மருதத்துக்கே பெரும்பான்மையும் உரிய; “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே, நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர்”6 என ஆசிரியர் கூறுதல் காண்க.

தலைமகனது ஒழுக்கத்தில் தவறு நிகழ்ந்துழி, அதனை மறைக்கும் கடப்பாடு குலமகளிர்க்கு உரித்தாகலானும், அதனை மறந்து, அவர்தாமே தலைவரை எள்ளுவராயின், அஃது அவர்க்கே இளிவரவைப் பயக்குமாதலாலும், ஊரன்கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே என்று கூறினாள். “அவன் சோர்பு காத்தல் கடன்”1 என்றும், “எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர்திறம், உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு”2 என்றும் ஆசிரியன் மார் கூறுதல் காண்க. யாமே என்றது ஆற்றலால் தலைமகனது கொடுமைமிகுதி உணர நின்றது. அக்கொடுமை யால் தான் எய்தும் வேறுபாடு கண்டு ஆற்றாராய்த் தோழியர் அவனது சோர்பு கூறி எள்ளினும், அக்குற்றம் தன்னையே சார்வது கண்டு, தலைவி நல்லன் என்றும் யாமே என உளப்படுத்தாள் என அறிக. தடமென்றோள் என்றது, பெருமை உடைய வாயினும் அவன் கொடுமையை ஆற்றியிருக்கும் வன்மை யுடையவல்ல என்னும் ஏதுவை உட்கொண்டது. தொடிநெகிழ் தோள் என்னாது, பண்டை வனப்பே சுட்டித் தடமென்றோள் என்றது, தொடி நெகிழ்தற்கு ஏதுவாகிய அவன்கொடுமைக்கு நாணி, அதனை அறவே மறந்து, அவனது நன்மைப்பண்பே தன் நெஞ்சில் நிலவப்பண்ணிய அவளது பெண்மைச் சிறப்புக் கூறியவாறென அறிக. “அடங்கா வொழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற்”3 பொருட்கண் நெருங்கிக் கூறியார்க்கு, அவர் அது கூறுதற்குரிய குற்றம் தோள்மேலதாம் என்பாள், அல்லன் என்னும் என் தடமென்றோள் என்று கூறினாள்.

மனைக்கண் நட்ட வயலை புறத்தே நிற்கின்ற வேழத்தைச் சுற்றும் ஊரன் என்றதனால், தலைமகன் மணமனை வைகிய ஞான்றும் பரத்தையர் திறமே சூழ்வான் என உள்ளுறுத்து உரைத்தமையின், கொடுமைத்திறத்தை வெளிப்படக் கூறாது கொடுமை நாணி என வேறு வாய்பாட்டாற் கூறினாள். கொடுமை அவற்கு மணமனைக்கண்ணேயே தோன்றிற்று என்பதனை அறிந்துவைத்தும், பின்னர் அதுகாரணமாக வேறுபடுதல் அறிந்தார் செயலன்மையின் நாணி என்றாள். எனவே, தான் நாணியவாறே தோள்களும் நாணி அமையாது தொடி நெகிழ்ந்து மெலிந்தன என்பதனைக் குறிப்பு வாய் பாட்டாற் கூறினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. ஏனை மெய்ப்பாடு: மருட்கை. பயன்: வாயில் நேர்தல். இவ்வுரை துறையிரண்டற்கும் ஒக்கும்.

மனைநெடு வயலை என்பது பாடமாயின், மனையில் வளரும் நீண்ட வயலைக்கொடி என உரைக்க. அதனால் உள்ளுறைப் பொருள் சிறவாமையறிக.

இனி, இதன்கண் மருதமாகிய முதற் பொருளும், வேழமும் வயலையுமாகிய கருப்பொருளும், வாயிலாய் வந்தார் கேட்பத் தலைமகள் வாயில் நேருங் கருத்தினளாய்க் கூறும் உரிப் பொருளு மாகிய மூன்றும் கண்டு, ஆசிரியர் நச்சினார்க் கினியர், “இதனுள், முதல், கரு, உரி என்ற மூன்றும் கூறலின் நாடகவழக்கும்1, தலைமகனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாகலின் உலகியல் வழக்கும் உடன் கூறிற்று”2 என்பர். “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”3, என்ற சூத்திரத்து, “கிழவனை மகடூஉப் புலம்பு பெரி தாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்” என்பதற்கு எடுத்துக் காட்டுவர் ஆசிரியர் இளம்பூரணர். மற்று, இப்பாட்டு, அலமரல் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற் றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏதுகாட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக. அமைதற் கட் கூறிய வினைமுதலே அமையாமைக்குக் கூறப்படாமையின், அலமரலின்மையும் அறிக. அமைதி, கழறிக்கூறும் பான்மை யனாகிய பாங்கன் தலைமகனது காமநிலையுரைத்து நெருங்கிய வழி நல்லன் என்றும் யாமே என வாயில் நேர்தல். அமையாமை, அவனது பரத்தைமையை மறுத்து, அல்லன் என்னும் என் தடமென்றோளே என உறுப்பின் மேல் வைத்துக் கூறுதல். “காமநிலை யுரைத்தலும்”1 என்ற சூத்திரத்தால் பார்ப்பார்க் குரிய வெனக் கூறியன, ஒப்பின் முடித்தல் என்பதனால் பாங்கற்கும் ஏற்பன கொள்ளப்படும் என்பவாகலின், காமநிலையுரைத்தல் பாங்கற்கும் அமையும் என அறிக.

    12. கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே   
    ழூரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே  

தோற்க தில்லவென் றடமென் றோளே.
உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து வாயில் நேரக் கருதிய தலைமகள், பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான் என்பது கேட்டுப் பொறாளாய்க் கருத்தழிந்து தன்னுள்ளே சொல்லியது.

உரை :
கரை மருங்கு நிற்கும் வேழம் வயலகத்து விளைக்கும் தீங் கரும்பு போலப் பொலியும் ஊரன் என்றது, பொது மகளிர்க்குக் குலமகளிரைப் போலச் சிறப்புச் செய்கிற்பான் என்றவாறு.

பழைய உரை:
கரைக்கண் நின்ற வேழம் வயலகத்துக் கரும்பு போலப் பூக்கும் துறை பொருந்திய ஊரனது கொடுமையினை யாம் பெரிதும் ஆற்றியிருப்போமாக. என்னுடைய பெருமையும் மென்மையு முடைய தோள்கள் ஆற்றாவாய்த் தோற்று மெலிக; தோலாவழி, எம்மைப் போல் ஆற்றியிராது வேறுபாடு மெய்க்கண் நிறுத்தித் துயர்செய்யுமாகலான் என்றவாறு.

முன்னர் நீர்த்துறை கூறுகின்றாராகலின், அதன் கரைக்கண் நிற்கும் வேழத்தைக் கரைசேர் வேழம் என்றார். வயலகத் தென்பது அவாய்நிலை. இன்னுருபு, ஒப்புப் பொருட்டு. கெழுவென்னும் சாரியை “லனஎன வரூஉம் புள்ளி யிறுதிமுன்”2 வருமாயினும், அச் சூத்திரத்தின்கண், “அன்ன மரபின் மொழி யிடைத் தோன்றி” என்புழி “மொழியிடைத் தோன்றி” என்ற மிகையால், பிற ஈற்று முன்னும் இச்சாரியை வருமென்றும், “அன்னமரபின்” என்றதனால், “சாரியை காரணமாக வல் லெழுத்துப் பெறுதலும், அதுகாரணமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகரக்கேடும், எகரநீட்சியும் கொள்க” என்றும் கூறுபவாகலின், ஐகாரவீற்றுத் துறையென்னும் பெயர்முன், வேற்றுமை குறித்த பொருண்மைக் கண், கெழு வென்சாரியை, கேழ் எனச் “செய்யுள் தொடர்வயின் மெய் பெற நின்று” கேழ் ஊரன் என முடிந்த வாறறிக. “தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்”1 எனப் பிறரும் கூறுதல் காண்க. இனி, ஆசிரியர்அடியார்க்கு நல்லார். “சாரியையாவது சொல் தொடர்ந்து செல்லும் நெறிக்கண் நின்று, அதற்குப் பற்றுக் கோடாகச் சிறிது பொருள் பயந்ததும் பயவாததுமாய் நிற்பது. அவற்றுள் இது சிறிதுபொருள் பயப்ப நிற்பது; பொருந்துதல் என்னும் பொருண்மை சாரும்”2 என்பர். எனவே, துறைகேழூரன் என்பது துறைபொருந்திய வூரன் என்னும் பொருண்மைத்து என்பதாம். இனி வருமிடங்களிலும் இதுவே உரைத்துக் கொள்க. “நன்று பெரிதாகும்.”3 தில்லென்னும் இடைச்சொல், “பிறிது அவண் நிலையலும்”4 என்பதனால் தில்ல என நின்றது. ஆற்றாமை பயக்கும் வருத்தத்தினை ஆற்றுதல் அதனை வேறலாகலின், ஆற்றாவாகிய தோள்களைத் தோற்கதில்ல என்றாள். ஆற்றாமை மிகுதியால் ஆற்றுமாறு விழைகின்றாளாகலின், ஆற்றுகதில்ல என்புழித் தில்லைச்சொல் விழைவின்கண் வந்ததாயிற்று. “விழைவின் தில்லை தன்னிடத்தி யலும்”5 என்பது விதி. தோலா வழி என்பது முதலாயின ஒழிந்து நின்றமையின், தோற்கதில் என்புழித் தில்லைச்சொல் ஒழியிசைக்கண் வந்ததாம்.

தலைமகனது புறத்தொழுக்கத்தால் வேறுபட்டு ஆற்றா ளாகிய தலைமகள் உழையர் ஆற்றுந் திறமாவன கூறத் தேறி இருந்தாள், பின்னும் அவன் புறத்தொழுக்கமே விரும்பிப் பரத்தையர்க்குச் சிறப்புச் செய்வது கேட்டுப் பொறாது கழியவும் ஆற்றாளாயினமையின், நன்றும் ஆற்றுகதில் என்றும், ஆற்று மிடத்தும் தோள்கள் ஆற்றாது, ஆற்றற்குத் துணியும் நெஞ்சொடு மாறுபட்டு மெலிதலின் தோற்கதில் என்றும் கூறினாள். தலைமகனைப் பிரியாவாறு பிணிக்கும் பெருமை யுடைய வாயினும், இதுபோது பிணித்தல் செய்யாது தொடி நெகிழ்ந்து மெலியும் சிறப்பின்மை முடித்தற்குத் தடமென்றோள் என்றாள் என்க. இஃது உடம்பு நனி சுருங்கல். “கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்”1 என்பதனால், தலைமகள் அறத்தை விரும்பி ஆற்றுவாளாயினள் என்பது, ஊரன் கொடுமை நன்றும், ஆற்றுக தில்ல யாமே என்பதனால், அறிக. தோற்க தில்லவென் தடமென் றோளே என்றதனால், “கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதிக்கண்”2 உறுப்பினை வேறுபடுத்துக் கூறினாளாம். ஆற்றற்கட் சென்ற நெஞ்சத்துள் அலமரல் தோன்றித் தோளை வேறுபிரித்துச் சிவந்து கூறுவித்தல் அறிக. “நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்குவினை வாளோர் எல்வளை நெகிழ்த்த, தோளே தோழி தவறுடை யவ்வே”3 எனப் பிறாண்டும் தலைவி தன் தோளை வேறு நிறுத்திச் சிவந்து கூறுமாறு காண்க.

கரைமருங்கு நின்ற வேழம் கரும்புபோலப் பூக்கும் என்றது, பொதுமகளிரும் குலமகளிர்போலச் சிறப்புப் பெறுகின்றார் எனக் கருத்தழிந்து கூறியதற்குக் காரணம் குறித்தவாறு. இதனால் தலைமகள்பால் பொறாமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. ஏனைமெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: வாயில் நேர்தல்.
இனி, பேராசிரியர், பயவுவமப் போலிக்கு இதனை உதாரணமாகக் காட்டி, “இதனுள் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக்கு ஏதுவாகியது ஒன்று விளங்கக் கூறியதில ளாயினும், இழிந்த வேழம் உயர்ந்த கரும்புபோலப் பூக்கும் எனவே, அவற்கும் இழிபு உயர்வு என்ப தொன்றில்லை; எல்லாரும் இன்பம் கோடற்குரியர் தலைமகற்கு என்றமையின், யாமும் பரத்தையரும் அவற்கு ஒத்தனம் என்றமையின் அவை கூறினாள் என்பது,”1 என்பர்.

கொடுமை நாணி என்றும் பாடம் உண்டு. இஃது ஏடெழுதினோரால் முன்பாட்டை“2 எழுதிய நினைவினால் நேர்ந்த பிழையாகும் போலும். பேராசிரியர் உரைப்பதிப்பின் கண்ணும் இப்பாடமே காணப்பெறுகின்றமையின் இப்பிழை அவர் காலத்துக்கு முன்பே தோன்றிய தொன்மை யுடைமை யறிக. இனி, பிழையின்மை கருத்தாயின் ஊரன் கொடுமைக்கு நாணி யாம் ஆற்றுவேமாக, தோள்கள் ஆற்றாது மெலிக என்று உரைக்க.

    13. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன  

அடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுறை யூரன் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே.
வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், “அவன் பெண்டிர் நள்ளென்னும் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?” எனச்சொல்லி வாயின் மறுத்தது.

பழைய உரை:
பரியுடை நன்மான் தலைக்கணிந்த வெண்கவரி போல வேழம் வெண்பூவைக் கொள்வாரைக் குறித்துக் கொடுக்கும் ஊரன் என்றது, நன்றுபோலக் காட்டித் தம் நலத்தினை விற்பார் வாழும் ஊரன் என்றவாறு.

உரை:
செலவினை யுடைய நல்ல குதிரையின் தலையில் அணிந்த உயர்ந்த சாமரை போலக் கரைக்கண் வளர்ந்த வேழம் வெள்ளிய பூக்களைக் கொடுக்கும் குளிர்ந்த துறையினை யுடைய ஊரன் பெண்டிர், ஊரார் கண்துயிலும் யாமத்திலும் தாம் துயிலுதலை அறியா ராகலின், அவன் அவரை அறியாமல் வருந்திறம் யாது? என்றவாறு.

பரி, செலவு; அஃதாவது குதிரையின் நடை வகை. மா, குதிரை. “னகரம் ஒற்றும் மாவும் ஆவும்”1 என்றதனால் மான் என நின்றது. உளை, குதிரையின் தலையில் அணியும் சாமரை; நெற்றியில் நான்றுகிடந்து அலையும் உளைமயிருமாம். இதனைத் தலையாட்ட மென்றும் கூறுப, “விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்”2 எனப் பிறரும் கூறுவர். அடைகரை யென்புழி, அடையும் கரையே யாகலினாலும், அடையாகிய கரையென ஒன்றை ஒன்று சிறப்பித்து நிற்பதனாலும், இஃது இருபெய ரொட்டுப்பண்புத் தொகையாம். “திணிமணல் அடை கரை அலவன் ஆட்டி”3 எனப் பிறாண்டும் வருதல் காண்க. இனி, வருமிடங்களிலும் இதுவே உரைத்துக் கொள்க. “கடற்கரை யென்பாரு முளர்” எனச் சிலப்பதிகார வுரைகாரர் கூறுவர். பூப்பகர்தல், பூக்களைச் சொரிதல்; “குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி, அசையா நாற்றம் அசைவளி பகர”4 என்புழிப் போலப் பரப்புதல் என்றுமாம். பெண்டிர் என்றது, ஈண்டுப் பரத்தையரை. துஞ்சூர், வரையறை இன்மையின் பின் முன்னாகத் தொக்கது; “மாண்வினைக் கலிமா, துஞ்சூர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி”5 என்றார் பிறரும். துஞ்சூர் யாமம், ஊர்துஞ்சு யாமம்; அஃதாவது இடையாமம். உம்மை, சிறப்பு. ஆகலின் அவன் என்பது முதலியன கூற்றெச்சம், “சொல்லொடுங் குறிப் பொடும் முடிவுகொள் இயற்கைப், புல்லிய கிளவி எச்சமாகும்”6 என்பது விதி.

“இனிப் பிரியேன்” எனத் தன்னைத் தெளிவித்துக் கூடிய தலைமகன், பின்பு பிரிந்து சென்று பெண்டிரைக் கூடினா னாகலின், அப்பெற்றியே தம்மிற் பிரிதலை அஞ்சான் எனக் கருதி, அவர்கள் துயிறற்குரிய காலத்தும் துயிறலின்றிக் காத்து வருகின்றனர் என்பாள், ஊரன் பெண்டிர், துஞ்சூர் யாமத்தும் துயிலறி யலரே என்றாள். துயிலார் என்னாது துயிலறியலர் என்றது, தலைமகனொடு கூடா முன்பு அவன் கூட்டம் நினைந்தும், கூடியபின்பு மேல் நிகழும் பிரிவு நினைந்தும் துயிலெய் தாமையின், இருவழியும் துயிலுதலை அறியாராயினார் எனத் தான் கருதிய இழிபு முடித்தற்கென்க. எனவே, பகலினும் இரவினும் வரும் பரிசு இல்லானை, உடையான் போல வருவன் எனக்கூறி வாயில் வேண்டுவது என்னை என வாயின்மறுத்த வாறாம். ஆகவே, இஃது “அவனறிவு ஆற்ற அறியுமாகலின்”1 என்ற சூத்திரத்து, “வாயிலின் வரூஉம் வகை” என்பதனால் அமைதல் காண்க.

பரியுடை நன்மானின் உளைபோல அடைகரையில் நின்ற வேழம் மலரும் என்றதனால், கற்புச் சிறப்பினையுடைய குலமகளிரைப் போல, பரத்தையரும் தாம் நலம் சிறந்தார் போலக் காட்டி நயப்பித்து, நயந்தார்க்கு அதனை நல்குவர் என்றாளாம். வேழ வெண்பூவிற்கு உளை நிறத்தாலும் வடிவாலும் உவமை யாயிற்று. உள்ளுறை யுவமம். “வினையினும் பயத்தினும், உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉம்”2 என்பது மேலே கூறினாம். பரியுடை நன்மான் என்றது, குலமகளிரின் கற்புச்சிறப்பு உணர நின்றது. இஃது ஏனையுவமம் போல்வதாயினும் திணை யுணர்தற்கண் பயன்படுதலின் தள்ளப்படாதாயிற்று. “உள்ளுறை யுவமம் ஏனை யுவமம் எனத், தள்ளா தாகும் திணையுணர் வகையே”3 என்றார் ஆசிரியரும். ஏனையிடங்களிலும் இப்பொருண்மை யுணர்ந்து இதுவே இலக்கணமாக உரைக்க. மெய்ப்பாடு: வெகுளி; பயன்: வாயின் மறுத்தல். புரியுடை நன்மான், புரிவுடை நன்மான் என்றும், துஞ்சும் யாமத்தும் என்றும் பாடங்கள் உண்டு.

    14. கொடிப்பூ வேழந் தீண்டி யயல  

வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும்
மணித்துறை யூரன் மார்பே
பனித்துயில் செய்யு மின்சா யற்றே.
தலைமகள் புணர்ச்சிவேட்கையைக் குறிப்பால் உணர்ந்த தோழி, “அவன்கொடுமை நினையாது அவன்மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?” என்றாளாகத் தலைவி, “அவன் கொடியனே யாயினும் அவன்மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை யுடைத்து ஆதலால்காண்” என்று சொல்லியது.

பழைய உரை :
நீண்ட பூவினையுடைய வேழம் தீண்டுதலான் வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நுடங்கும் என்றது, பரத்தையரால் தனக்கு உளவாகிய மெலிவு கூறியவாறு.

உரை :
ஒழுகிய பூக்களையுடைய வேழம் தீண்டுதலால் அயல வாகிய வடுநிறைந்த மாமரங்களின் வளவிய தளிர்கள் அசையும் நீல மணிபோல் தெளிந்த நீர்நிறைந்த துறையினை யுடைய ஊரன் கொடியனே யாயினும், அவனது மார் பொன்றே குளிர்ந்த துயிலினைச் செய்யும் இனிய சாயலை யுடையதா மாகலின், யான் அது நினைந்தன்றே ஆற்றே னாயினேன்காண் என்றவாறு.

கொடி, ஒழுங்கு. தீண்டியென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. வடு, மாவின் முற்றாத காய். மணி, ஆகு பெயரால் நீலமணியின் நிறத்தையுடைய நீர்மேற்று. “மணிகண் டன்ன துணியகம் துளங்க”1 என்றார் பிறரும். இனி, மணித்துறை என்பதற்கு மணிகள் நிறைந்த நீர்த்துறை என்றும், அம்மணிகள் நீராடினார் அணிகலன்களினின்றும் உக்கன என்றும் கூறுப, “துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று”2 என்பதற்குப் “பரிமேலழகர் கூறும் உரை காண்க. சாயல் மென்மை”3 சாயலென்னும் உரிச்சொல் மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐந்துபொறியானும் நுகரப்படும் மென்மையினை உணர்த்தும் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுவர். ஈண்டு இஃது ஊற்றாற் பிறக்கும் மென்மைமேற்று, “அறலென நெறிந்த கூந்தல், உறலின் சாயலோ டொன்றுதல் மறந்தே”1 என்பதனாலும் இஃது ஊற்றாற் பிறக்கும் மென்மையைச் சுட்டி நிற்றல் காண்க. கொடியனே என்பது முதலாயின குறிப்பெச்சம். அவனது பொதுத் தன்மையினை விலக்கி, மார்பின் சாயலைச் சிறப் பித்தலின், ஏகாரம் பிறிதின் இயையு நீக்கிய பிரிநிலை; சாயற்றே என்புழி அசைநிலை.

தலைமகனை இயற்பழிப்பதுபோலக் கொடுமை கூறி விலக்கிய தோழிக்கு, அவன் கொடுமையை உடன்பாட்டு, அவன் பிரிவினைத் தான் ஆற்றாமைக்கு ஏது கூறுகின்றாளாகலின், தலைமகள் ஊரன் மார்பே, பனித்துயில் செய்யும் இன் சாயற்றே என்று கூறினாள்; எனவே, இஃது அப்பிரிவாற்றாமை யால் அவட்கு உறக்கமின்மையும், அவன்மார்பிற் புல்லிக் கிடக்கும் முயக்கத்தின்மேற் சென்ற வேட்கை மிகுதியும் தோன்றக் கூறியவாறாம். உறக்கமின்றி வெதும்பிக் கிடப்பார்க்கு அவ்வுறக்கம் குளிர்ச்சியும் இன்பமும் பயத்தலின் அதனைப் பனித்துயில் என்றும், அவன் மார்பினது ஊற்றாற் பிறந்த மென்மை ஏதுவாகப் பிறத்தலின் அதன் வினைப்படுத்து, “பனித்துயில் செய்யும் சாயற்று” என்பாள், குளிர்ச்சியோடு இன்பமும் ஒருங்கு பயத்தல்பற்றி, இன்சாயற்று என்றும் கூறினாள். “குளிரும் பருவத்தே யாயினும் தென்றல், வளி யெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய், ஊடி இருப்பினும் ஊரன் நறுமேனி, கூடல் இனிதாம் எனக்கு”2 எனவரும் மாறன் பொறையனார் பாட்டும், “இனித்தன், சாயன் மார்பிற் பாயல் மாற்றிக், கைதையம் படுசினைக் கடுந்தேர் விலங்கச், செலவரிது என்னும் என்பது”3 என்பதும் இக்கருத்தினை வலியுறுத்தல் காண்க. இனி, முயங்குந்தோறும் விரிந்து நின்று அயரா இன்பம் அருளும் அழகுடைமையின் இன்சாயற்று என்றாள் என்றுமாம். “யாம், முயங்குதொறும் முயங்குதொறும் முயங்க முகந்து கொண்டு அடக்குவ மன்னோ தோழி……… சாரல் நாடன் சாயல் மார்பே”1 என்றார் பிறரும். சாயல், அழகு என்னும் பொருட் டாதல், “கண்ணாரும் சாயற் கழி”2 என்பதன் உரையால் அறியப் படும்.

நீண்ட பூவினையுடைய வேழம் தீண்டுதலால் மாவின் வளவிய தளிர் நுடங்கும் என்றதனால், அவன் மார்பினைப் பரத்தையர் தீண்டுதலால் பொறாது தான் ஆற்றாள் ஆயினமை உணர்த்தினாளாம். மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை கூறுதல்.

பணித்துயில் என்னும் பாடத்தால் சிறப்புடைய பொருட் பேறின்மை அறிக.

இனி, “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”3 என்ற சூத்திரத்துக் “காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்” என்புழி இஃது உவத்தல் என்பர் நச்சினார்க்கினியர்.

    15. மணலாடு மலிர்நிறை விரும்பிய வொண்டழைப்  

புனலாடு மகளிர்க்குப் புணர்துணை யுதவும்
வேழ மூதூ ரூரன்
ஊர னாயினு மூரனல் லன்னே.
சேணிடைப் பிரிந்து வந்து உடனுறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினால் உணர்ந்து தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, “அவன் உடனுறையவும் வேறுபடுகின்றது என்னை?” என்றாட்கு அவள் சொல்லியது.

பழைய உரை :
புனலாடும் மகளிர்க்குப் புணர்ந்த துணையை உதவுகின்ற வேழத்தையுடைய ஊரனாதலால், புனலாடும் பரத்தையர்க்கு வேழம் செய்வனவெல்லாம் செய்வான் என்பதாம்.

உரை :
மணலை அலைத்துக்கொண்டு போதரும் நீர்ப் பெருக்கின் கண், விரும்பிய ஒள்ளிய தழையினை உடுத்துப் புனலாடும் மகளிர்க்குப் புணர்துணையினைச் செய்யும் வேழம் நிறைந்த மூதூரினை யுடைய ஊரன், உடனுறைதலால் நம் ஊரினனே யாயினும், புறத்தொழுகுதலால் அல்லனாயினான் காண். என்றவாறு.

என்றது, ஊரனாயினும் ஊரனல்லனாய் ஒழுகுதலாற்றான் யான் ஆற்றாது மேனி வேறுபடுவே னாயினேன் என்பதாம்.

மணலடு மலிர்நிறை என்பது மணலாடு மலிர்நிறை என நின்றது. மலிர்நிறை, நீர்ப்பெருக்கு; வினைத்தொகை. மலிர்தல், நிறைதலுமாம்; “இருங்கழி யோதம் இல்லிறந்து மலிர”1 என்புழிப்போல. “உடுத்தென்பது சொல்லெச்சம்”2 “சொல்லெ னெச்சம் முன்னும் பின்னும், சொல்லள வல்லது எஞ்சுத லின்றே”3 என்றார் ஆசிரியரும். புணர்துணை என்றதற்குப் புணர்ந்த துணை எனப் பழைய வுரைகாரர் கூறியது காண்க. காத லன்பாற் பிணிப்புண்ட மைந்தரும் மகளிரும் கூடி நீராடுமிடத்து ஏனைத் துணைவரின் நீக்கி அவரது துணைமையைச் சிறப்பித்துப் புணர் துணை என்ப. ஈண்டுத் தலைமகன் புணர்துணை யாதலைச் சிறப்பித்தது போல, “புனலாடு புணர் துணை யாயினள் எமக்கே”4 எனத் தலைமகளைச் சிறப்பித்திருத்தல் அறிக. ஊரனா தற்கும் ஆகாமைக்கும் உரிய காரணங்கள் வருவிக்கப்பட்டன. உம்மை, எதிர்மறை யெச்சமாய் எதிர்மறைமுடிபு கொண்டது; “எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின”5 என்பது விதி.

உள்ளுறையால் அவன் புறத்தொழுக்கம் உடையன் என்பதனைக் குறிக்கின்றா ளாகலின், வாளாது ஊரனல்லன் என்றாள். ஊரனாயினும் என்றது தோழி கூறியதனைக் கொண்டு கூறியது. ஆயினும் என்றதனால், ஊரனாகாமையே தலைமகளது உட்கோளாம். இதனாற் பயன், ஒரூர்க்கண் உறையினும் நம் மனைக்கண் வாரான்; ஒரோவழி வரினும், நெஞ்சம் புறத் தொழுக்கத்தின் மேற்றாகலின், இன்பஞ் சிறக்கும் முயக்கமும் செய்யான்; ஆகலின், யாம் வேறுபடுவதல்லது பிறிதில்லை என்பதாம். “ஓரூர் வாழினும் சேரி வாரார், சேரி வரினும் ஆர முயங்கார், ஏதி லாளர் சுடலை போலக், காணாக் கழிப மன்னே”1 என்று பிறாண்டு நிகழும் தலைவி கூற்றாலும் இப்பொருண்மை துணிக. இஃது உள்ளது உவர்த்தல். “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”2 என்ற சூத்திரத்துக் “கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்” என்பதனுள் இது காய்தலின் பாற்படும்.

வேழம் புனலாடும் மகளிர்க்கு உதவிபுரிதல் போலத் தலைமகனும் பரத்தையர்க்கு அவர் வேண்டுவன புரிந்து ஒழுகுகின்றான் என்பது உள்ளுறை. வேண்டுவன, பரத்தையரோடு புனலாட்டு முதலிய விளையாட்டயர்தல், விழாவயர்தல், பிரிவின்றிக் கூடியிருத்தல் முதலியன. மெய்ப்பாடும் பயனும் அவை.

மலர்நிறை என்றும், வெண்டழை என்றும் பாடம் உண்டு. “காவிரி மலிர்நிறை”3 “மலரார் மலிர் நிறை”4 என இந் நூலுள்ளும், “கோடுதோய் மலிர்நிறை”5 எனவும், “மலிர்புனல்”6 எனவும் “கண்பனி மலிர் நிறை தாங்கி”7 “உவலை சூடி யுருத்துவரு மலிர்நிறை”1 “செங்குணக் கொழுகுங் கலுழி மலிர் நிறைக் காவிரியன்றியும்”2 எனவும் பிறநூலுள்ளும் பயில வழங்குமாற் றாலும், மலர்நிறை என்பது நீர்ப்பெருக்கு என்னும் பொருள தாகாது ஆகலினாலும் அது பாடமன்மை அறிக. புணை துணையாக என்பது பாடமாயின், புணையாகிய துணை எனவுரைக்க. “நட்புக் கொடுங்கோல் வேழத்துப் புணை துணை யாகப், புனலாடு கேண்மை அனைத்தே”3 என்று சான்றோர் கூறுவது காண்க. தழையாவது இளைய மகளிர் அணியும் உடை வகை. இஃது ஆம்பல் நெய்தல் செயலை ஞாழல் முதலியவற்றின் மலராலும் தழையாலும் தொடுக்கப்படுவது என்பதை, “வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழை”4 “கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல், அம்பகை நெறித்தழை,”5 “கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர், சிறுமாண் நெய்தல் ஆம்ப லொடு கட்கும்”6 “செயலையும் பகைத் தழை”7 “ஞாழன் மலரின், மகளிர் ஒண்டழை அயருந் துறைவன்”8 “தழையோர், கொய் குழை யரும்பிய குமரி ஞாழல்”9 “தண்ணருங் காவி யம்பகை நெறித்தழை”10 என்பனவும் பிறவும் உணர்த்தும். இவை பலவேறு வண்ணமுடைய வாதல் பற்றிப் பகைத்தழை என வழங்கப்படுதலின், அவற்றுள் ஒன்றனை வரைந்துகொண்டு அதனால் சிறப் பித்தல் நெறியன்மையாலும், அவ்வாறு சான்றோர் செய்யுளுள் யாண்டும் வழங்கப்படாமை யாலும் வெண்டழை என்பதும் பாடமன்று என உணர்க.

    16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்காற்  

சிறுதொழு மகளி ரஞ்சனம் பெய்யும்
பூக்கஞ லூரனை யுள்ளிப்
பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே.
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, “ அவன் வரவையே நினைந்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?” எனச் சொல்லி வாயின் மறுத்தது.

ப. உரை :
ஓங்குபூ………… பூக்கஞ லூரன் என்றது, இழிந்தார்க்குப் பயன்படும் ஊரன் என்றவாறு.

உரை :
உயர்த்த பூவினையுடைய வேழத்தின் புழை பொருந்திய திரண்ட தண்டின்கண் சிறுமை வாழ்க்கையினை யுடைய மகளிர் அஞ்சனத்தைப் பெய்துவைக்கும் பூக்கள் நிறைந்த ஊரனை நினைத்தலால், தலைமகளின் பூப் போன்ற மையுண்ட கண்கள் பொன்னிறப் பசலை பூத்தன: ஆகலின், இப்பொழுது தலைமகன் போந்து பெறுவது என்னை? என்றவாறு.

ஓங்குதலை வேழத்துக்கு ஏற்றுக. தூம்பு, மூங்கிலைப் போல உள்ளிற் புழை யுடையது; “கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்”1 என்பதனால் அறிக. சிறுமை, செல்வநிறைவு இன்மை, உலகவழக்கு; இக்காலத்தும் முன்பு செல்வ முடையராய்ப் பின்னர் வறுமைநிலை எய்தினாரைச் சிறுத்துப்போனார் என்பர். தொழு, இல்வாழ்க்கை; “தொழுவில் தோன்றிய தோமது கேவலக் கிழவன்”2 என்பதன் உரை காண்க. இனி, சிறுதொழு மகளிர் என்றது, தொழுவறைகளில் தொழில் புரியும் கடையர் மகளிரை எனவும், தொழுதுண்டு வாழும் பணிப் பெண்களை எனவுமாம். குறிஞ்சிநில மகளிர் மூங்கிற் குழாய்களில் தேன் பெய்துவைப்பதுபோல மருதநிலத்துச் சிறுதொழுமகளிர் அஞ்சனத்தை வேழத்தின் தண்டிற் பெய்துவைத்தல் அக்கால வழக்குப் போலும், “வாங்கமை பழுனிய நறவுண்டு”3 “அம்பணை விளைந்த தேக்கட் டேறல், வண்டுபடு கண்ணியர் மகிழுஞ் சீறூர்”4 “நீடமை விளைந்த தேக்கட் டேறல்”5 என்று வருவனவற்றால் குறமக்கள் இயல்பு அறிந்துகொள்க, உள்ளி என்னும் செய்தெனெச்சம் காரணப்பொருட்டு. பொன் போறலின், பசலையைப் பொன் என்றும், போர்த்தது போலப் படர்தலின், போர்த்தன என்றம் கூறினார். “பொன்னேர் பசலைக்கு உதவா மாறே”1 “பல்லிதழ் மழைக்கட் பாவை மாய்ப்பப், பொன்னேர் பசலை யூர்தர” “நெய்தல், மணியேர் மாணலம் ஒரீஇப், பொன்னேர் வண்ணங் கொண்டஎன் கண்ணே”2 என்று பிற சான்றோரும் கூறுப.
தலைமகன் வரவு கருதி இருந்தாட்கு, அஃது ஒரு காலைக் கொருகாலை அணித்தாய்த் தோன்றுதலின் உள்ளி என்றும், உள்ளியவழி, அவன் வாராது பொய்த்தமையின் மேனி வேறுபட்டுக் கண் பசப்பெய்துதலால், பூப்போல் உண்கண் பொன் போர்த்தனவே என்றும் கூறினாள். பசலை பாய்தலால் மேனி வேறுபடுமாறு ஒருபுடை நிற்க, கண்ணின் வனப்புக்கு இரங்குவாள், பூப்போல் உண்கண் எனச் சிறப்பித்தாள். “மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே”3 என்றதனால் மேனி வேறுபடுதலும், “பூப்போ லுண்கண் புதுநலம் சிதைய”4” என்றதனால், கண்ணின் பொலிவழிவு கருதி இரங்குதலும் சான்றோர் உரைக்குமா றறிக.

“பாணர் கூத்தர் விறலியர் என்றிவர், பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்”5 என்ப வாயினும், வாயிலாய் வந்தார் எனப் பொதுப்படக் கூறியவழி இவர் அனைவரும் அடங்கு தலின், இவர்க்குத் தோழி வாயின் மறுத்தலும் மறுத்தாள்போல நேர்தலும் பிறவும் இதன்கண் அடங்கும் என்க.

சிறுதொழுமகளிர் தம் அஞ்சனம் கெடாதவாறு பெய்துவைத் தற்கு வேழம் பயன்படுமாறு போல, பரத்தையர் தம் நலம் கெடாதவாறு கூடியிருந்து பயன் நுகரும் வகையில் அவர்கட்கு எளியனாய் இயைந்து தலைவன் ஒழுகுகின்றான் என உள்ளுறை கொள்க. இதனால், தலைமகள் எய்திய பசப்பிற்குரிய தலைவனது வாராமைக்கு ஏது கூறியவாறாயிற்று. தலைமகன் பரத்தையர்க்கு அவர் இயைந்தவாறு ஒழுகுதல், “அவனணங்கு மாதர், பணியிகவான் சாலப் பணிந்து”1 என ஆசிரியர் கணிமேதாவியார் கூறுமாற்றாலும் அறியப்படும். மெய்ப்பாடு: வெகுளி. பயன் : வாயின் மறுத்தல்.

    17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ  

விசும்பாடு குருகிற் றோன்று மூரன்
புதுவோர் மேவல னாகலின்
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.

தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி, “இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே! நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பழைய உரை:
புறத்தொழுக்கம் உளதாகிய துணையே யன்றி, நாடோறும் கனவில் வந்து வருத்துதலும் உடைய னாதலால், என் நெஞ்சு பெருமை இழந்து மெலிகின்ற தென்பதாம். புதன்மிசையே நுடங்கும் வேழவெண்பூ கரிதான விசும்பின்கண்ணே பறக்கும் குருகு போலத் தோன்றும் ஊரன் என்றது, தன்மை தோன்றாது ஒழுகுவாரை யுடையான் என்றவாறு.

உரை :
தான் நின்ற புதலின் மேற்பட நின்று அசையும் வேழத்தின் வெள்ளிய பூ விசும்பின்கட் பறக்கும் வெண்குருகு போலத் தோன்றும் ஊரன் நாளும் புதியராயினார்மாட்டு நசையுடைய னாகலின், அதனை அறியாது என் மடங்கெழு நெஞ்சம் அவனை நினைந்து மெலியாநின்றது என்றவாறு.

வெண்பூவேழம் என வரற்பாலதாகிய வண்ணச் சினைச் சொல், ஈண்டு உவமப்பொருண்மை குறித்து மாறி நின்றது. நுடங்கும் பூ என இயையும், பூக்கள் செறிந்த புதலினிடையே ஓங்கிநின்று மலர்ந்து அதற்கு அணி செய்தலின், புதல்மிசை நுடங்கும் வேழவெண்பூ என எடுத்துக் கூறினார். “வளரா வாடை உளர்புநனி தீண்டலின், வேழ வெண்பூ விரிவன பலவுடன், வேந்துவீசு கவரியின் பூம்புதல் அணிய”1 எனப் பிறரும் கூறுமாற்றால் அறிக. புதுவோர், நலம் புதியராய இளைய பரத்தையர்; “வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய, பரிவொடு வருஉம் பாணன்”2 என்புழிப்போல. மேவல், நசை. “நம்பும் மேவும் நசையா கும்மே”3 என்பர் ஆசிரியர் : நெஞ்சு வறிதாதல், நினைந்த பயன்பெறாமையால் அழிதல்; “வறிதுகு நெஞ்சினள்”4 என்றாற்போல. மடங்கெழு நெஞ்சு, மடமை பொருந்திய நெஞ்சம். கொளுத்தக் கோடலும் கொண்டது விடாமையும் நெஞ்சின் செயலாதலின், அச்செயன்மை தோன்ற மடங்கெழு நெஞ்சு என்றார். “அச்சமும் நாணும் மடனும் முந்துறத்த, நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”5 என்றார் ஆசிரியர்.

புதுவது காணுந்தோறும் அதனை விரும்பி ஒழுகுதல் மக்கள் மனப்பான்மை யாகலின், தலைமகன் புதுவோர் மேவலன் எனப்பட்டான்; “புதுவோர்ப் புணர்தல் வெய்யன்”6 என்றும், “புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனை”7 என்றும் சான்றோர் கூறுவர். இவ்வாறு புதுவோர்மேற் புகன்ற உள்ளத்தனாய் ஒழுகுபவனுக்கு, நலம் பழையளாய தான் கரும்பின் கோது போல விரும்பப்படும் நலம் இலளானமை கூறுவாள், புதுவோர் மேவலன் ஆகலின் என்றாள். “கருங்கயத் தாங்கட் கழுமிய நீலம், பெரும்புற வாளைப் பெடை கதூஉம் ஊரன், விரும்புநாட் போலான் வியனலம் உண்டான், கரும்பின்கோ தாயினேம் யாம்”8 எனப் பிறாண்டும் தலைவி இனைந்து கூறுதலும், “எம் இளமை சென்று தவத் தொல் லஃதே”1 என்று தலைவி தான் இளமைப் புதுநலங் கழிந்து பழையளாயினமை கூறுதலும் காண்க. இவ்வாறு புதுவோரை மேவிக் கூடுதலும், பழையோரைக் கைவிட்டுப் பிரிதலும் அவற்கு இயல்பு என்பதனை அறியாது நினைந்து, நினைந்த பயன் பெறாது ஒழிந்து நெஞ்சழிந்து நிற்கின்றேன் என்பாள், வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சு என்றாள். “வருவரென்றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம், ஐயந் தெளியரோ நீயே”2 என்பதனாலும் இக்கருத்து வலியுறுதல் அறிக. செம்புலப் பெய்ந்நீர் போல, இருவர் நெஞ்சமும் கலந்து ஒன்றாய காலத்தும் அவர் நெஞ்சின் பான்மை அறியாது அழிந்தமை கருதி நெஞ்சினை, மடங்கெழு நெஞ்சு என்று கூறினாள். இவ்வாறு நெஞ்சினை வேறுபட நிறுத்திக்கூறும் மரபு தலைமகன்பாலும் உண்டு. தலைமகளைக் கூடியிருந்த தலைமகன், பிரிவின்கண் தன் ஆற்றாமையை அவட்கு அறிவியாது ஒழிந்தமை குறித்துத் தன் நெஞ்சினை, “உடம்பு ஆண்டு ஒழிந்தமை யல்லதை, மடங்கெழு நெஞ்சம் நின்னுழை யதுவே”3 என்று கூறுமாற்றான் அறிக. இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை.
இக்கூற்று, “காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட் டலும்,”4 என்புழிப் பிரித்தலின்பாற்படும். ஆசிரியர் நச்சினார்க் கினியரும் இதுவே கூறினர்.

புதன்மிசை நுடங்கும் வேழத்தின் வெண்பூ விசும்பின்கட் பறக்கும் குருகுபோலத் தோன்றும் என்றது, சிறப்பில்லாப் பரத்தையராயினும் புதுமை நலத்தால் உயர்ந்த குலமகளிர் போலத் தோன்றுவர் என்றவாறு, வேழத்தின் வெண்பூ புதன்மிசை நுடங்கினும், விசும்பாடு குருகுபோலத் தோன்றும் என்று கொண்டு நனவின்கண் நம்பால் அன்பின்றுப் புறத்தொழுகுவ னாயினும் கனவின்கண் அன்புடையனாய்த் தோன்றுகின்றான் என்று உள்ளுறை காண்பர் பழைய வுரைகாரர். மெய்ப்பாடு; தன்கண் தோன்றிய வருத்தம் பற்றிப் பிறந்த இளிவரல். பயன் : மெலிவுரைத்தல்.

    18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழங் கரும்பி னலமருங் கழனி யூரன்  

பொருந்துமல ரன்னவென் கண்ணழப்
பிரிந்தன னல்லனோ பிரியலெ னென்றே.
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின்னும் அவ்வொழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது.

பழைய உரை :
செருந்திப்பூவோடு வேழம் கரும்புபோல அலமரும் ஊரன் என்றது, தம் பாங்கியரோடு பொதுமகளிர் குலமகளிரைப் போலத் தருக்கி ஒழுகும் ஊரன் என்றவாறு.

உரை :
கருங்கோரையை யொத்த செருந்தியுடன் வேழம் கரும்புபோலக் காற்றினால் சுழன்று அசையும் கழனிகளை யுடைய ஊரன், முன்னர்ப் போந்து கூடிய ஞான்று, இனிப் பிரியேன் என்று கூறிப் பின்னர் அழகிய மலர்போலும் என் கண்கள் கலுழுமாறு பிரிந்தானாகலின், அவன் பொருட்டு நீயிர் போந்து வாயில் வேண்டுவது என்னை? என்றவாறு.

சாய், கோரை. செருந்தி, ஒருவகைக் கோரை; நெட்டிக் கோரை, வாட்கோரை யென்றும் கூறுவர்; “கழனிமாய் செருந்தி கண்பமன் றூர்தர”1 என்பதன் உரை காண்க. ஏனை வருமிடங் களினும் இதுவே உரைத்துக் கொள்க. இப்பெயரியதொரு மரமும் உண்டு; அது நெய்தல் நிலத்துக் குரித்து. அதன் இயல்பினை, “பாசிலைச் செருந்திதாய விருங்கழி”2 என்புழிக் கூறுவாம். அலமரல், சுழற்சி. காற்றினால் என்பது அவாய்நிலை. அல்லனோ என்புழி ஓகாரம் எதிர்மறை. பிரியலென் என்றது முன்பு பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகன் தன்னைத் தெளித்துக் கூறியதனைத் தலைவி கொண்டுகூறியது. ஆகலின் என்பது முதலாயின குறிப்பெச்சம்.

பரத்தையிற் பிரிந்திருந்து போந்தான் கூட்டங் கருதி இனிப் பிரியாமையைத் தெளித்தவிடத்துக் கூறிய அது நீங்காது நெஞ்சில் நின்று நிலவுதலின், பிரியலென் என்றே என்றும், தன்னை மறந்தானாயினும் தன்னைத் தெளிவிப்பான் கூறிய சொல்லை மறந்து பொய்த்தொழுகுதல் கூடாதென்று கருதுகின்றா ளாகலின், பிரிந்தனன் அல்லனோ என்றும், வாயில்கள் கூறுவது தனக்கு ஒக்குமாயினும், தன் கண்கள் அதனை ஏலாது அழுதல் மேயின எனத் தன்னுறுப்பின்மேல் ஆற்றாமையை ஏற்றிப் பொருந்து மலர் அன்ன என் கண்ணழ என்றும் கூறினாள். தன் ஆற்றாமையை உறுப்பின்மேல் வைத்துக் கூறல் வழுவாயினும், “வண்ணம் பசந்து புலம்புறு காலை, உணர்ந்த போல உறுப் பினைக் கிழவி, புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே”1 என்றதனால் அமையும் என்க. பிரிந்தனன் அல்லனோ என்றதனால், வாயில்கள் அவள் புலந்தவழிக் கொடுமை கூறல் இலக்கணம் அன்மையின், தலைமகனது அன்புடைமை முதலாய வற்றைக் கூறினாராக, அவள், அவர்களை மறுத்து, அவன் பிரிந்தமையே அவனது அன்பின்மை உணர்த்துமென்று கூறினாள் என்று கொள்க. “மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை, தம்முள வாதல் வாயில்கட் கில்லை”2 என்பதனால் வாயில்கள் தலைவன் குணங் கூறுவதல்லது கொடுமை கூறார் என்பதறிக. இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை.

வேழம் செருந்தியொடு கூடிக் கரும்புபோலக் காற்றினால் அலமரும் என்றதனால், பரத்தையரும் தம்தோழியருடன் கூடித் தமக்குத் தலைமகன் செய்யும் தலையளியால் தருக்கி ஒழுகு கின்றனர் என உள்ளுறுத்து உரைத்தவாறு. இதனாற் பயன், “குலமகளிராகிய எம்பாற் பெறுவதனை, பரத்தையர்பாலும் பெறுதலின், நீயிர் அவற்கு வாயில்வேண்டுவது என்னை?” என வாயின் மறுத்தவாறாம். இவ்வுள்ளுறைக்கட் கூறிய கருப் பொருளாகிய கோரை, மகளிர் தம் முன்கையில் வளைபோல அணிந்து விளையாட்டயர்தற்குப் பயன்படுவதாகலின் அவளறி கிளவி யென அறிக; “கிழவி சொல்லின் அவளறி கிளவி”3 என்பர் ஆசிரியர். “சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மின், மாயிருங் கூந்தன் மடந்தை, ஆய்வளைக் கூட்டும் அணியுமா ரவையே”1 எனச் சான்றோர் கூறுதலால், கோரை பயன்படுமாறு அறிக. மெய்ப்பாடு: வெகுளி. பயன் : வாயின்மறுத்தல்.

    19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை  

புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழுந் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊர னாகலிற் கலங்கி
மாரி மலரிற் கண்பனி யுகுமே.
“பன்னாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சின்னாள் அவன் புறத்தொழுகுகின்ற இதற்கு ஆற்றாயா கின்றது என்னை ?” என்ற தோழிக்கு, “எதிர்ப்பாடின்றி ஓரூர்க் கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்” எனத் தலைமகள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு நெருங்காது மாறுதல் கருத்து.

பழைய உரை :
மாங்கொம்பு பூத்து வதுவைமகளிர் மெய்ம்மணங் கமழக் கடவ பொழிலை அம்மலர் அரும்பாகிய பருவத்தே வேழங்களின் பூத் துடைக்கும் ஊரன் என்றது, சேணிடைப் பிரிந்து வந்து தன் உடனாய் நிகழ்கின்ற பருவத்து இன்பங்கள் நுகராமல் இடையே விலக்குகின்ற பரத்தையரை யுடையான் என்றவாறு.

உரை :
எக்கரிடத்து நின்ற மாமரத்தின் புதியவாய் அரும்பி மலர்ந்த பூக்களையுடைய பெரிய கொம்பு, வதுவையிற் கூடிய மகளிரது மெய்ம்மணம் கமழும் தண்ணிய பொழிலின்கண், வேழ வெண்பூவின் இதழாகிய உளை அப்பூக்களைத் துடைத்தழிக்கும் ஊரனாகலின், என் கண்கள் கலக்கமுற்று மழையால் நனைந்த குவளைமலர் போல நீர் சொரியா நின்றனகாண் என்றவாறு.

எக்கர், நீரால் கொணரப்பட்ட மணல் பரந்த இடம். இக்கருத்தே கொண்டு நச்சினார்க்கினியரும் “கடுவரற் கலுழிக் கட்கின் சேயாற்று, வடுவாழ் எக்கர் மணலினும் பலரே”1 என்புழி எக்கர் என்பதற்கு இடு மணல் என்று உரை கூறினார். சினை மணங் கமழும் பொழில் என இயைக்க. செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மெய்ம்மணம், மெய்யின்கண் எழும் மணம். சினை கமழும் மணம், புணர்ந்தோர் மெய் கமழும் மணம் போலுதலின், சினை புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழும் என்றார். வதுவையிற் கூடும் மகளிர் பலவகை மலரும், விரையும், சுண்ணமும் புனைதலால் எழும் மணம் நறிதாதலின், புணர்ந் தோர் மெய்ம்மணம் எனச் சிறப்பித்தார்; “தண்கய நண்ணிய பொழிறொறுங் காஞ்சிப், பைந்தா தணிந்து போதுமலி யெக்கர், வதுவை நாற்றம் புதுவது கஞல”2 என்றார் பிறரும். வேழப்பூவின் இதழ் உளை போறலின், வெள்ளுளை எனப் பிரித்தோதினார். மேலே, “பரியுடை நன்மான் பொங்குளை அன்ன”3 என்புழி வேழப்பூ குதிரையின் உளைமயிர் போல்வதென உவமித்ததனை நினைவுகூர்க. சீத்தல், கெடுத்தல். இஃது இப்பொருட்டாதல், “ஈண்டுநீர் மிசைத்தோன்றி இருள் சீக்கும் சுடரேபோல்”4 என வருதலால் அறிக. மாரிமலர், மாரிக் காலத்து மழையால் நனைந்த மலர். மாரிமலர் அசையுந்தோறும், அதன்கண் நின்ற நீர் துளிப்பது போல, கண் இமைக்குந்தோறும் கலுழ்ந்து நின்று நீர் துளிக்கும் என்றமையின், இது தொழிலுவமம். மலர் எனப் பொதுப்படக் கூறினமையின், ஈண்டு உவமையாதற்குச் சிறப் புடைய குவளைமலர் வருவிக்கப்பட்டது. “தண்கயம் பயந்த வெண்காற் குவளை, மாரி மாமலர் பெயற்கேற் றன்ன, நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண், பனிவார் எவ்வந் தீர”5 என்றார் பிறரும்.

உள்ளுறையால், தலைமகன் தன்னொடு கூடி நுகர்தற்குரிய இன்பங்களை நுகராவாறு விலக்கும் பரத்தையரை உடையன் என்கின்றா ளாகலின் ஊரனாகலின் என்றும், ஓரூர்க்கண் உறையினும், அவ்வாறு விலக்குண்டு வாராதொழிந்தான் பொருட்டுத் தான் செயற்பாலது பிறிதின்மையின் கலங்கி என்றும், கலங்கியவழிக் கண் கலுழ்ந்து நீர்மிக்குச் சொரிதலின் கண் பனியுகும் என்றும் தலைமகள் கூறினாள். இதனுட் கலங்கி என்றதனால், தலைவி மாட்டு உயிர்ப்பு என்னும் மெய்ப்பாடும், “மாரி மலரிற் கண்பனி யுகுமே” என்றதனால் அவன் பிரி வாற்றாமை என்னும் மெய்ப்பாடும் தோன்றின.

ஓரூர்க்கண் உறையினும் தலைமகனைக் கூடுதலின்றித் தனிப்ப எய்தும் இடும்பையால், தலைவி கூறுகின்றமையின், இஃது “அவனறி வாற்ற வறியு மாகலின்”1 என்ற சூத்திரத்து, “இன்பமும் இடும்பையும் ஆகிய விடத்தும்” என்புழி இடும்பை என்பதன்கண் அடங்கும் என அறிக.

மாவின் பெருஞ்சினை பூத்து மணங்கமழும் பொழிற்கண், வேழப்பூவின் வெள்ளுளை விரிந்து அப்பூக்களை அழிக்கும் என்றதனால், தலைமகன் தன்மனையின் கண் மாண்புமிக இருந்து எமக்கு இன்பம் தரச் சமைந்தானைப் பரத்தையர் விலக்கி, அது செய்யாவாறு கெடுக்கின்றார் என்று உள்ளுறுத் துரைத்தாளாம். இது, தன் ஆற்றாமைக்குரிய காரணராகிய பரத்தையரை வேழப்பூவின் வெள்ளுளைமேல் வைத்துக் கூறுதலின் சுட்டு என்னும் உள்ளுறை என உணர்க. மெய்ப்பாடு: இளிவரல். பயன் : அயாவுயிர்த்தல்.

இனி, புதுப்பூம் பெருஞ்சினைப் புணர்ந்தோர் என்றும், வெள்ளுளை சீய்க்கும் என்றும் பாடமுண்டு. “சினைப் புணர்ந்தோர்” என்புழிச் சினையினை ஆகுபெயரால் நிழலிடமாக்கி, ஆண்டுப் புணர்ந்தோர் என்று உரைக்க. அதனாற் பொருட் சிறவாமை அறிந்து கொள்க. சீத்தல் என்பது சீய்த்தல் எனவருமாறு வழக்கினுள் இன்மையானும், “நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்”2 என்புழி, அன்னதொரு பாட மின்மையானும் அது பாடமன்றென்க. “இருள் சீக்கும் சுடரே போல்”3 என்புழியும் இதுவே கூறிக் கொள்க.

    20. அறுசில் கால வஞ்சிறைத் தும்பி  

நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்குங்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை யுள்ளியென்
இறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே.
தலைமகளை வாயில் நேர்வித்தற்பொருட்டாக, “காதலர் கொடுமை செய்தாராயினும் அவர் திறம் மறவாதொழிதல் வேண்டும்,” என்று முகம்புகுகின்ற1 தோழிக்கு, “என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயனன்றே? இனி அமையும்,” எனத் தலை மகள் சொல்லியது.
பழைய உரை :
தாமரைப் பூவகத்து உளதாகிய தும்பிச் சினையை வேழம் சீக்கும் என்றது, தன்மாட்டு என்புதல்வன் உறைதலையும் விலக்கு வாராகிய பொதுமகளிரை யுடையான் என்றவாறு.

சினைச்சேக்கும் என்று பாடமோதுநர் தும்பிச்சினை வருந்த வேழம் தங்கும் என்று பொருளுரைப்ப.

உரை :
ஆறாகிய சில கால்களையும், அழகிய சிறையினையு முடைய தும்பி நூறாகிய பல இதழ்களை யுடைய தாமரைப் பூவின்கண் ஈன்றுள்ள சினைகளை அழிக்கும் மூங்கில் போல் உள்ளிற் புழையினையுடைய வேழம் செறிந்த துறையினை அருகிலே யுடைய ஊரனை நினைந்ததனால், இறையும் அழகும் ஒளியுமுடைய என் வளைகள் நில்லாது நெகிழ்ந்து ஓடாநின்றன என்றவாறு.

பூவின்கண் தும்பி ஈன்ற சினைச் சீக்கும் வேழம், தூம்புடை வேழம் என இயையும். “சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ்”2 என்று பிறரும் கூறுப. நூற்றிதழ் என்புழி, நூறு என்பது பன்மை குறித்து நின்றது3. அதனை நோக்க ஆறு, சின்மைப் பொருட்டாதலின், அறுசில்கால என்றார். கால என்னும் பெயரெச்சக் குறிப்பு, தும்பி யென்னும் பெயர் கொண்டது. பூச்சினை, பூவின்கண்ணுள்ள சினை. சினை, முட்டை. நணி, அண்மை; “துறைநணி யிருந்த பாக்கமும்”1 என்புழிப் போல். உள்ளி, காரணப் பொருட்டாய வினையெஞ்சு கிளவி. இறை, சந்து.

உள்ளுறையாற் பரத்தையர் தலைவனைப் பிரியாதவாறு பிணித்திருக்கும் கொடுமை கூறி, அதனை நினையுந்தோறும் நெஞ்சு நெகிழ்ந்து இனி அவனை எதிர்ப்படல் அரிது என எண்ணி வருந்துகின்றா ளாகலின் உள்ளி என்றும், பண்டெல்லாம் அவன் நினைவே பற்றுக்கோடாக நெகிழாது நின்ற வளைகள், இதுபோது அவ்வியல்பு மாறின என்பாள், இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே என்றும் தலைமகள் கூறினாள். இஃது உடம்பு நனி சுருங்கல். பண்டென்றது, களவின்கண், ஒருவழித் தணப்பு வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிவு முதலா யினவும், கற்பின்கண், ஓதல் பகை பொருள் முதலிய காரண மாகப் பிரிதலும் என்ற இவை நிகழ்ந்த காலம்.
தாமரைப்பூவகத்து உளவாகிய தும்பியின் சினையை வேழத்தின் பூச் சிதைக்கும் என்றது, தலைமகள்பால் தங்கின தலைமகனைப் பரத்தையர் விலக்குவர் என உள்ளுறுத் துரைத்த வாறு. கற்பின்கண், தலைமகட்குப் பெற்ற மக்களும் ஒரு வாற்றான் வாயிலாதல் உண்மையின், வாயின் மறுத்தலை அறமாகக் கொண்ட அகப்பொருள் நெறிக்கு மக்களை விலக்கு தலும் அமையும் என்க. “தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழியும், தன்வயிற் சிறைப்பினும், அவன்வயிற் பிரிப்பினும்”2 என்புழிச் சிறுபான்மை, தன் மகனைப் பரத்தை அவன்வயிற் பிரித்தாளாகக் கூறலும் கொள்ளப்படும் என்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

என் நிறையே போல்வளை நெகிழ்போடும்மே என்பது பாடமாயின், நிறுப்ப நில்லாது அவன்பால் நெகிழ்ந்து மெலியும் என் நிறை போல, செறுப்பச் செறியாது நெகிழ்ந் தோடுவ வாயின என்வளைகள் என்றாள் என்க. துறைநனி யூரன் என்ற பாடத்தால் பொருள் சிறவாமை அறிக.


கள்வன் பத்து

கள்வன் என்பது நண்டு. மருதநிலக் கருப்பொருள்களுள் ஒன்றாகிய இது பின்வரும் பாட்டுக்கள் பத்தினும் சிறப்பாய்ப் பயின்று வருதலின், இப்பத்து இதனாற் பெயர் பெறுவதாயிற்று.

கள்வன் என்பது களவன் எனவும் வழங்கும். “புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல்”1 எனவும், “அலவ னள்ளி குளிர்ஞெண் டார்மதி, களவன் என்றிவை கற்கடப் பெயரே” எனத் திவாகரத்தும் சான்றோர் கூறுதல் காண்க. ஐங்குறுநூற்று அச்சுப்பிரதியினும் களவன் எனப் பாடவேறுபாடு காட்டப் பெற்றுள்ளது. அகநானூற்று அச்சுப்பிரதியும், “கள்வன் மண்ணளைச் செறிய”2 என்று பாடங்கொண்டு களவன் என் பதனைப் பாட வேறுபாடாகக் காட்டிற்று.

தமிழிலக்கண முறைப்படி, இது நான்கறிவுடைய உயிர்வகையைச் சேர்ந்தது. “நண்டும் தும்பியும் நான்கறி வினவே, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”3 என்ப. இனிப் பேராசிரியர், “மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரை கோடலின் நாவுணர்வும், நாற்றங் கோடலின் மூக்குணர்வும்,கண்ணுடைமையின் கண்ணுணர்வுமுடையவாயின; நண்டிற்கு மூக்குண்டோ எனின் அஃது ஆசிரியன் கூறலான் உண்டு என்பது” என்றனர்.

அலவன், குளிர்ந்த நீர் சூழ்ந்த நிலப்பகுதிகளில் மரஞ் செடிகளின் வேரிலும், வயல்களின் வரம்பிலும், நீர் நிலைகளின் கரைகளிலும் அளை வகுத்துக்கொண்டு வாழும். அதனால், “நீர்மலி மண்ணளை”4 “இருஞ்சேற் றீரளை” “தாழை வேரளை”5 “கண்டல் வேரளை” “சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி”1 “தண்ணக மண்ணளை”2 என்று சான்றோர் மிக்கெடுத்துக் கூறுப.

நண்டின் உடலிற் புள்ளியும் வரியும் பொருந்தி மேனி நலம் செய்ய, சில பொன்னின் நிறம் கொண்டு உலவும். அதன் கால்கள் வளைந்து நுனி கூரியவாய் இருத்தலின், அது செல்வதனால் உண்டாகும் சுவடு, நிலத்தில் கோலம் எழுதியதுபோல விளங்குதல் கண்டு, வரித்தல் என்னும் வாய்பாட்டால் பண்டையோர் வழங்கினர். இதனுடைய கண்கள் உடலிற் சிறிது உயர்ந்து வேம்பு நொச்சி முதலியவற்றின் அரும்புகளைப் போறலின், “நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டு” 3 “வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்”4 என்று சிறப்பிப்பர். “புள்ளிக் கள்வன்”5 “பொன்வரி அலவன்”6 “பொறிமாண் அலவன்”7 எனவும், “கொடுந்தாள் அளைவாழ் அலவன்”8 எனவும், “அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த”9 “எக்கர் ஞெண்டின் இருங்கிளைத் தொழுதி, இலங்கெயிற் றேஎ ரின்னகை மகளிர், உணங்குதினை துழவுங் கைபோல். ஞாழல், மணங்கமழ் நறுவீ வரிக்கும் துறைவன்”10 என வருவனவும் பிறவும் போதிய எடுத்துக்காட்டுக் களாம்.

கூரிய உகிருடைமையால், வயலில் முற்றிச் சாய்ந்து கிடக்கும் நெற்கதிர்களையும், வித்திய ஞான்று முளைத்த முளைகளையும் அறுத்து நெற்பயிர் முதலியவற்றுக்கு இடையூறு செய்வதும் நண்டிற்கு இயல்பு. மேலும், இது மெல்லிய நீர்க் கொடிகளைத் துண்டித்துத் தான்செல்லும் வழியைச் செம்மை செய்துகொள்ளும் சீர்மையும் உடையது. “கள்வன் ஆம்ப லறுக்கும்”1, “வயலைச் செய்கொடி கள்வ னறுக்கும்”2 “கள்வன் வள்ளை மென்கால் அறுக்கும்”3 “வித்திய வெண்முளை கள்வ னறுக்கும்”4 என இந்நூலுள்ளும் கூறுப. நெற்கதிரையும் பூவையும் கொண்டு சென்று, எதிர்காலம் நோக்கித் தன் மண்ணளைக்கண் நிறைத்து வைத்து உண்ணுதல் பற்றி, “செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரன்” என்று கூறுவர்.

நண்டுகள் நாவற்கனியைத் தம் கவைத்த உகிராற் பற்றிச் சுவைத்துண்டல் பார்த்தற்கு இன்பம் பயக்கும். அதனினும் இன்பம் தருவது, அது தன் பெடை நண்டிற்கு அக்கனியை நல்குவதாகும்; ஆண்நண்டு கனியைச் சுமந்து நிற்பப், பெடை நண்டு அதனைத் தழுவி அமர்ந்து அதனுடன் கூடி யுண்ணும், அக்காலை, அவற்றை நோக்குவார்க்கு, அவ்விரண்டனையும் பிணித்து நிற்கும் காதலன்பின் பெருமாண்பு தோன்றி மகிழ் வுறுத்தும். இதனைக் கூர்ந்து நோக்கிய சான்றோர், “அகலிலை நாவல் உண்டுறை உதிர்த்த, கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன், தாழை வேரளை வீழ்துணைக் கிடூஉம் அலவன்”5 என்றும், “பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப், புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி, கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப், பல்கால் அலவன் கொண்டகோட் கூர்ந்து, கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்6” என்றும், “சேய்கண் டனையன்சென்று ஆங்கு ஓரலவன்தன் சீர்ப் பெடையின்வாய் வண்டனையதொர் நாவற் கனி நனி நல்கக் கண்டு, பேய்கண் டனையதொன் றாகி நின்றான்”7 என்றும் கூறுவர்.

அலவன் என்பது ஓடு மூடிய பத்துக் கால்களையுடைய உயிர்வகை; சிலர் இதனை ஓட்டுமீன்8 என்பர். ஆயினும் மீனுக்குரிய இயல்புகள் முற்றவும் இன்மையின் மீன் என்றல் நிரம்பாது என்பர் உயிர்நூலறிஞர். தமிழ்நூலார்க்கும் இஃது உடன்பாடன்று.

இதன் உடலின் ஒரு பகுதி ஓடொன்றில் அடங்கியுளது; உடற்பொருளை ஆராய்ந்த விடத்து, அது கடல் நீரிற் பிறக்கும் சுண்ணாம்பினாலாகியது என்பது தோன்றுகிறது. இதன் நிறம் பொன்மையும் சாம்பல் நிறமும் எனப் பலதிறப்படும்.

இதன் தலை உடலின் வேறுபட நிற்பதன்று; ஓட்டின் உள்ளே ஒருபுறத்தே கொடுக்குகளுக்கு இடையேயுளது. இதன் வாய், இரண்டு தசைச்செதிள்களால் மூடப்பட்டுள்ளது. வாயின் இருமருங்கிலும் இரண்டு உணரிகள்1 உண்டு. அவை நீண்டு பல மூட்டுக்களால்2 இணைப்புற்றிருக்கின்றன. இரண்டு சிறு தண்டுகளின் நுனியில் கண்கள் அமைந்திருத்தலின், அலவன் நாற்றிசையும் காணக்கூடிய நோக்குடையது. தண்டின் நுனிக் கண் இருத்தலின், கண்களை வேண்டும்போது நீட்டவும் சுருக்கவும் ஒடுக்கவும் கூடும். கண்ணைச் சுமந்து நிற்கும் தண்டு வேம்பு நனையும், நொச்சியரும்பும் நிகர்த்தலின் அவற்றை உவமை கூறினர் சான்றோர்.

இதன் உடலின் அடிப்பகுதியில் செதில்கள் பல உண்டு; அவை அடிக்கடித் தூய நீரை வாய்க்கண் இறைத்தலின், நண்டு உயிர்க்காற்றுப்3 பெறுகின்றது. மருங்குக்கு ஐந்தாகப் பத்துக் கால்கள் உடையதாயினும், தலைப்பகுதியின் இருபுறமும் இரண்டு கவைத்த கொடுக்குகள் நின்று, இரைப்பொருளைப் பற்றவும் துண்டிக்கவும் வேண்டுவன செய்யவும் கைபோற் பயன்படுகின்றன. ஏனையெட்டும் கூரிய உகிர் ஒன்றே யுடைய வாய் நுண்மணலை வரிக்கும் நோன்மையுடையவாம். ஒவ்வொரு காலும் பல மூட்டுக்களால் இணைப்புற்றிருப்பது கண் கூடாக அறிந்தது.

உறுப்புக்களுள் யாதானும் ஒன்று ஊறுபட்டு ஒடிந்து விடின், அதனைப் போக்குதலும் புதியதொன்று முளைத்தலும் அலவனுக்கு இயற்கையே அமைந்தன. மேலும், உடல் வளர்ச்சிக் கேற்ப ஓடுகளும் காலந்தோறும் உகுதலும் பிறிதொன்று புதிதாய்த் தோன்றுதலும் உண்டு. இவ்வண்ணம் ஓடுமாற்றும் இயல்பினை ஆங்கிலத்தில் மோல்ட்டிங்”1 என்று கூறுவர். புதிதாய்த் தோன்றும் ஓடு, முதற்கண் மென்மைத்தாயினும், நாளேற ஏற முதிர்ந்து வலிதாம். தொல்லோடு நீங்கப் புத்தோடு தோன்றி வன்மை பெறாத இடைக்காலம் அலவனுக்கு அல்லற் காலமாகும். ஆகலின், அதுபோது அஃது எங்கேனும் ஒடுங்கி மறைந்து கிடக்கும்.

தாயலவன் சினையீனுங் காலத்து, அதன் வாலின்கீழ் உள்ள சிறு மயிர்களில் அதன் சினைகள் ஒட்டிக்கொண்டு கிடந்து, பொரித்தவுடன் நெடிய வாலொன்றும் நீண்ட உணரி யொன்றும் பெற்று நண்டினத்தைச் சாராத ஒரு புதுவகை உயிர்போலத் தோன்றும். உயிர்நூற் புலவரையன்றி ஏனையோர் அதனை நோக்கியவழி. அஃது அலவன் பயந்த அழகுடைச் சினை என அறிதல் இயலாது. அலவனது முழுவுருவமும் அமைவதற்குள் அஃது அடையும் மாறுதல்கள் பல.

சினை பயந்த அலவன் உடல் சுருங்கிப் பின் முன்னையினும் பருத்தல் வேண்டி ஓடு மாற்றத் தொடங்கும். ஓடு கழலும் அலவன் மெலிந்து புத்தோடு பெறுங்கால் அதன் வாலில் ஒட்டிக் கிடந்த சினைகள் பொரித்துத் தாயலவனை நீங்கும். சினை பயவாமுன் இருந்த நிலைமையின் வேறாய்ப் புத்தோடும் பருவுடலும் பெறுவான் புலர்ந்து ஓய்ந்து ஒடுங்கிக் கிடக்கும் நண்டு இறந்தது போலத் தோன்றுதலின், நம் நாட்டுப் பண்டைச் சான்றோர், “தாயுயிர் வேண்டாக் கூருகிர் அலவன்”2 என்றும், “தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வன்“3 என்றும் கூறுவாராயினர்.

நம் நாட்டில், இழிந்த மக்களுட் பலர் நண்டினை உண்பர். மேனாட்டவரும் இதனைப் பிடித்துண்பர். நண்டுணவு எளிதிற் செரிக்காது என்று மருத்துவ நூலார் கூறுகின்றனர்.

உயிர் வரலாறு கூறும் ஆசிரியன்மார் நண்டினம் உலகில் ஏறக்குறையப் பத்து நூறாயிரம் யாண்டுகட்கு முன் தோன்றி யிருத்தல் வேண்டும் எனவுரைக்கின்றனர்.

நண்டின் மூக்குணர்வு மிக்க நுட்பமானது. ஒளி குறைந்த காலங்களிலும், பெரும்பான்மையும் இருட் போதுகளிலும் நண்டினம் இரை தேடிச் சேறலாலும், உணவுப் பொருளினும் மிக்க புதியவற்றையே நாடி உண்டலாலும், அவற்றின் நாற்றத் தால் இடமறிந்து பற்றி யுண்ணும் அமைதியாலும், அதன் மூக்குணர்வு நுண்ணிதாதல் வேண்டும் என்பர். மற்று ஆசிரியர் பேராசிரியர், “நண்டிற்கு மூக்குண்டோ வெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது” என்பாராயினர்.

நண்டினத்துள் பலவகை உண்டு. நீரில் வாழ்வனவும் தரையில் ஊர்ந்து செல்வனவும் பொதுவகை. நீர்த்தேளும்1 தேண்மீனும்2 நண்டினத்தைச் சேர்ந்த சிறப்புவகை. இவற்றைப் பற்றிய குறிப்புக்கள் ஈண்டு வேண்டப்படாமையின் விரித்திலம்.

நண்டுகள் மிக்க சூழ்ச்சியும் கூட்டமாய் வாழும் இயல்பும், நெடுந்தொலைவு இரை தேடிச் செல்லும் ஒட்பமும் உடையன. வலைகளாற் கவர்ந்து கரைமேற் கொணரப்பட்ட நண்டுகளுட் சில அவ்வலையிலிருந்து வெளிப்பட்டவுடன் இறந்தனபோன்று கிடந்து வலைஞன் அற்றம் அறிந்து ஓடி ஒளித்துக்கொள்ளும். கூட்டமாய்ச் சென்று இரைதேடும் இயல்புடைய நண்டினம், ஒருகால், இந்துமாக் கடற்கண் உள்ள நிலப்பகுதி காணச் சென்றோருள் ஆங்கிலேயர் ஒருவர் உறங்கிக் கிடந்த அமையம் நோக்கி, அவர்தம் உடைகளையும் அவர் பிடித்து வைத்திருந்த மீன்களையும் துண்டித்துக் கவர்ந்துசென்றது என்று கூறுகின்றார். ஒருவர், “நாங்கள் மாத்திரம் உடனே விழித்திலேமாயின், எங்களை அந் நண்டினம் கொன்றேயிருக்கும்” என்று உரைக் கின்றார். தேங்காய் பறிக்கத் தென்னையின்மேல் ஏறினார் ஒருவர் ஆண்டுத் தேய்காயொன்றில் நண்டிருப்பக் கண்டாராம், கடற்கரைக்கண் வாழும் நண்டுகள் சில, பல கற்களுக்கப்பால் உலவக் கண்டதாக ஒருவர் எழுதியுள்ளார். இவ்வாறு உயிர்களின் இயல்பினை அவ்வப்போது ஆராய்ந்து கண்ட அறிஞர்களின் குறிப்புக்கள் பல கிடைக்கின்றன. அவற்றை விரிந்த உயிர் நூல் களுட் காண்க.

    21. முள்ளி நீடிய முதுநீ ரடைகரைப்  

புள்ளிக் கள்வ னாம்ப லறுக்குந்
தண்டுறை யூரன் றெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொ லன்னாய்.
“புறத்தொழுக்கம் எனக்கு இனியில்லை” என்று தலைமகன் தெளிப்பவும், அஃது உளது என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது.

பழைய உரை :
முள்ளி நீடிய……… ஊரன் என்றது, தனக்கு உரித்தாகிய இல்லின் கண் ஒழுகிப் பரத்தையரோடு தொடர்ச்சி அறுப்பான் என்றவாறு.

உரை :
அன்னாய், நீர்முள்ளிச் செடிகள் நீண்டு வளர்ந்துள்ள பழைய நீர் மிக்க அடைகரையின்கண் புள்ளிகளையுடைய நண்டு அந்நீரிற் படிந்து கிடக்கும் ஆம்பலின் தண்டினை அறுக்கும் குளிர்ந்த துறையினையுடைய ஊரன், யாம் தெளியும்படி புறத்தொழுக்கம் எனக்கு இனியில்லை என்று கூறியிருப்பவும், அதனைத் தெளியாது நின் மையுண்ட கண்கள் பசந்து வேறுபடுவது என்னை? கூறுக என்றவாறு.

“முண்டகங் கலித்த முதுநீர் அடைகரை”1 என்றாற் போல, “முள்ளி நீடிய முதுநீ ரடைகரை” என்றார். முள்ளி, முட்களை யுடையது; காரண விடுகுறி. இதன் மலர் நீலமணி போல்வ தென்பது, “மணிமருள் மலர முள்ளி”2 என்பதனா லறிக. “மணிப்பூ முண்டகம் கொய்யே னாயின்“3 என்றார் பிறரும். புள்ளியுடைமை நண்டிற்கு அணியாதலின், புள்ளிக் கள்வன் எனப்பட்டது. “பொறிமாண் அலவன்”4 என்றார் இளங்கோவடிகளும். ஆம்பல், ஆகுபெயர். கூரிய உகிரால் தண்டினைப் பற்றித் துண்டித்தல் நண்டிற்கு இயல்பாகலின் ஆம்பல் அறுக்கும் என்றார். கூரிய உகிருடைமையை, “விரவும் கொடுந்தாள். அளைவாழ் அலவன் கூருகிர்”1 என்றார் பிறரும். உம்மை, தெளியாமை தோன்ற நின்றது. புறத்தொழுக்கம் என்பது முதலாயின எஞ்சி நின்றன. எவன், அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும் வினாவின் கிளவி. கொல்: அசைநிலை.

தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழி, அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்தவிடத்து, அவள் தெளியத் தகுவனவற்றை அவன் கூறியது தான் அறிந்துளா ளாகலின் தெளிப்பவும் என்றும், தெளியாமை ஆகாது என்றற்கு உரிய ஏதுவினை உள்ளுறையாற் கூறியும், அவள் தெளியாது புலத்தலே பொருளாகக் கொண்டு நிற்றலின் உண்கண் பசப்பது எவன் கொல் என்றும் கூறினாள். தலைமகன் தெளித்ததே யன்றித் தானும் அஃது இல்லை என உணர்ந்து உள்ளுறுத்து உரைத்துழியும் அவள் தெளியாமைக்குக் காரணம் அறிந்திலள் என்பது தோன்றப் பசப்பது எவன் என்றாள். இஃது “அடங்கா ஒழுக்கத்து அவன் வயின் அழிந்தோள், அடங்கக் காட்டுதற் பொருளின்கண்”2 தோழி கூறியது. அடங்கக் காட்டுதல் உள்ளுறையாற் பெற்றாம்.

அடைகரைக்கண் வாழும் அலவன் ஆம்பற்றாளை அறுக்கும் ஊரன் என்றதனால், தலைவன் தனக்குரித்தாகிய இல்லின்கண் ஒழுகிப் பரத்தையர் தொடர்ச்சி அறுப்பான் என உள்ளுறை கொள்க. இஃது உவமமருங்கில் தோன்றும் இனிதுறு கிளவியின் பாற்படும், பரத்தையர் தொடர்பின்மை தலை மகட்கு இன்பம் பயப்பதாகலின், மெய்ப்பாடு : மருட்கை, பயன்: சிவப்பாற்றுவித்தல்.

    22. அள்ள லாடிய புள்ளிக் கள்வன்  

முள்ளி வேரளைச் செல்லு மூரன்
நல்ல சொல்லி மணந்தினி
நீயே னென்ற தெவன்கொ லன்னாய்.
களவினிற் புணர்ந்து பின்பு வரைந்துகொண்டு ஒழுகாநின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பழைய உரை :
நல்ல…………. அன்னாய் என்றது, இக்காலத்து இங்ஙனம் ஒழுகு கின்றான், அக்காலத்து அங்ஙனம் கூறியது என்கொல் என்றவாறு. சேறாடிய கள்வன் முள்ளி வேரளைச் செல்லும் என்றது, பிறர் கூறும் அலரஞ்சாது பரத்தையர் மனைக்கட் செல்வான் என்பதாம்.

உரை :
அன்னாய், சேறு படிந்த புள்ளிகளையுடைய அலவன் முள்ளியின் வேர்க்கண் அமைந்த வளையின்கட் புகும் ஊரன், களவுக்காலத்தே நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லி மணந்துகொண்டு, கற்புக்காலமாகிய இப்பொழுது நின்னைப் பிரியேன் எனக் கூறியதன் கருத்து என்னையோ? கூறுக என்றவாறு.

அளை, நண்டுவாழும் இடம். “கள்வன் தண்ணக மண்ணளைச் செல்லு மூரன்”1 என இந்நூலாசிரியர் கூறுவது போலவே “கவைத்தாள் அலவன் அளற்றளை சிதைய”2 எனப் பிறரும் கூறுமாறு காண்க. களவுக் காலத்து என்பது முதலாயின எஞ்சி நின்றன. கூடினார்க்குப் பிரியாமைமேலும் நன்மைதருவன பிற இன்மையின், நல்ல சொல்லி என்றார். “தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்”3 என்றும், “நல்குவர் நல்ல கூறினும்”4 என்றும் பிறரும் கூறுப. நீயல், நீங்குதல்: “நீயலேன் என்றென்னை அன்பினாற் பிணித்துத்தம் சாயலிற் சுடுத லல்லது”5 என்றாற் போல. கூறுக என்பது சொல்லெச்சம்.

களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும், பிரியாமைச் சொல் நிகழ்வதாயினும், களவின்கண் வரைவு கண்ணியதாய் இன்பப்பயத்த தாகலின், நல்ல சொல்லி என்றும், கற்பின்கண், அது பொறாமைக் கேதுவாய்ப் புறத்தொழுக்கத்துப் பிரிவுண்மையைப் புலப்படுத்து நிற்றலின், அவன் கூற்றினையே கொண்டெடுத்தும் கூறினாள். நீயேன் என்றது தலைமகள் கூற்று. “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்”1 என்பதனால் தலைவன் கண் நிகழ்ந்ததனைத் தலைமகள் நினைந்து கூறினாள். களவிற் போல் ஈண்டு அஞ்சவேண்டுதல் இன்மையின், எவன்கொல் என்றாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. நீயேன் என்றதனால், தலைமகன்பாற் பிரிவும், உள்ளுறையால் புறத்தொழுக்கமும் கூறியவாறு. கூறவே, அக்காலத்து அவ்வாறு கூறியோன் இக்காலத்து இவ்வாறு கூறியொழுகுதல் கூடாது என்றாளாம். ஆயினும், தலைமகன்பால் முரணிய சொன்னிகழ்ச்சி உண்டாயிற்றென ஆராய்ந்து கூறல், ஆற்றாமையாற் கூறுவார்க்கு அமைவது அன்மையான், இக்காலத்து இவ்வாறு கூறியொழுகு வோன் அக்காலத்து அவ்வாறு கூறியது என்னை என்றாள் என்பது கருத்தாகக் கொள்க. பழையவுரைகாரரும், “இக்காலத்து இங்ஙனம் ஒழுகுகின்றான், அக்காலத்து அங்ஙனம் கூறியது என்கொல் என்றவாறு,” என்று கூறுதல் காண்க. இவ்வாறு தலைமகன் வஞ்சித்தான் என்பதுபடக் கூறுதல் தலைமகட்கு வழுவாயினும், “மங்கல மொழியும் வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியல் மருங்கிற் கொள்ளும் என்ப”2 என ஆசிரியர் கூறுதலால் அமையும் என்க.

அலவன் அள்ளலாடியதை நினையாது முள்ளி வேரளைக் கண் புகும் ஊரன் என்றதனால், புறத்தொழுக்கத்தால் தன்னைப் பிறர் கூறும் அலர்க்கு அஞ்சாது தலைவன் பரத்தையர் மனைக்கட் புகுகின்றான் என உள்ளுறை காண்க. “களவுங் கற்பும் அலர்வரை வின்றே”3 என்றதனால் அலர் கூறினாள். இது புறஞ்சொல் மாணாக் கிளவி. “நல்ல சொல்லி மணந்து” என்பது, மறைந் தவை யுரைத்தல். ஏனை மெய்ப்பாடு: இளிவரல். பயன்: ஆற்றாமை கூறல்.

    23. முள்ளி வேரளைக் கள்வ னாட்டிப்  

பூக்குற் றெய்திய புனலணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங் காவ தெவன்கொ லன்னாய்.
இதுவுமது.

பழைய உரை :
தன்னூர் விளையாட்டு மகளிர் அளையின்கண் வாழும் அலவனை அலைத்துப் பூக்குற்று விளையாடினாற் போலத் தன் மனைக்கண் வாழும் நம்மை வருத்திப் புறத்துப் போய் இன்பம் நுகர்வான் என்றவாறு.

உரை :
அன்னாய், மகளிர் நீர்முள்ளியின் வேர்க்கண் உள்ள வளையின்கண் வாழும் அலவனை அலைத்தும் பூக்களைப் பறித்தும் விளையாட்டெய்திய புனலணியூரன், களவுக் காலத்து நாம் தெளியத்தகுவன கூறித் தெளிவித்து நம்மை மணந்துகொண்டு, இப்பொழுது, ஒழுக்கம் உரை ஆகிய இரண்டினாலும் தீண்டி வருத்தும் தெய்வமாவது என்னையோ? கூறுக என்றவாறு.

அலவனை அலைத்தலும், பூக்குறுதலும் மகளிர் விளை யாட்டாகலின், மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. அலவனை அலைத்தல் மகளிர் விளையாட்டாதல், “இலங்கு வளை தெளிர்ப்ப அலவ னாட்டி, முகம்புதை கதுப்பினள் இறைஞ்சி நின் றோளே”1 என இந்நூலுள்ளும், “சேர்ப்பே ரீரளை அலவற் பார்க்கும் சிறுவிளை யாடலும் அழுங்கு”2 எனப் பிற நூலுள்ளும் கூறுப. எய்திய வூரன், புனலணியூரன் என இயைக்க. புனலணியூரன்; புனலால் அழகுபெற்ற ஊரன். தேற்றம் செய்து என்றது ஒரு சொல்லாய்த் தேற்றி யென்னும் பொருட்டு, நப்புணர்ந்து என்பது, “நப்புணர் வில்லா நயனிலோர் நட்பு”3 என்புழிப் போல, ஐகாரவேற்றுமைத் திரிபு புணர்ச்சி முடிபு; “மெல்லெழுத்து மிகுவழி“1 என்ற சூத்திரத்து, “அன்ன பிறவும்” என்றதனால் இஃது அமைந்தது. ஒழுக்கம், புறத்தொழுக்கம். உரை, நீயேன் என்றாற் போல்வன. ஒன்று நின்றே ஏனையது முடிக்கும் என்னும் இலக்கண முறையால் இனி என்றது கொண்டு, களவுக்காலம் வருவித்துரைக்கப்பட்டது. அணங்கு, காமநோயால் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்குதல், தீண்டுதல்.

களவின்கண், வன்புறையாலும், ஒழுக்கநெறியாலும் தன்னையின்றி அமையான் என்பது தோன்ற ஒழுகித் தன் நெஞ்சு கவர்ந்துகொண்டான் என்பாள், தேற்றம் செய்து என்றும். புணர்ந்தவழி என்றும் பிரிவிலனாம் என்பது படக்கூடினான் என்பாள், நப்புணர்ந்து என்றும், இவ்வாறு தன்னெஞ்சினை அவன்பால் ஈர்த்துக் கொண்டதன் மேலும், புறத்தொழுக்கத்தால் தான் மேனிநலங் குன்றி வருந்துமாறு செய்தான் என்பாள், தாக்கணங்கு என்றும், அவ்வாறாதல் அவற்கு இயல்பன்று என்பது பண்டு கூடியவழி இன்மையினால் அறிந்துளா ளாகலின், ஆவது எவன்கொல் என்றும் கூறினாள். தீண்டுதலும், தீண்டப் பட்டார் நெஞ்சைக் கவர்ந்து துன்புறுத்தலும் தாக்கணங்கின் செயல் என்பது, “தெள்ளரிச் சிலம்பார்ப்பத் தெருவின்கண் தாக்கிநின், உள்ளங்கொண் டொழித்தாளைக் குறைகூறிக் கொளநின்றாய்”2 என்பதனால் அறிக. இதனால் தலைவிமாட்டுப் பொறாமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. இது “கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதிக்கண்”3 தலைமகன் செய்கை வேறுபாடு கண்டு தலைவி வருந்திக் கூறியவாறு.

மகளிர் அளை வாழ் அலவனை அலைத்துப் பூக்குற்று விளையாட்டெய்தும் ஊர் என்றதனால், தலைமகன் மனையின் கண் வாழும் தன்னை வருத்திப் பரத்தையர் மனைக்கண் இன்பம் நுகருகின்றான் என உள்ளுறை கொள்க.

இனி, அலவனை ஆட்டிப் பூவைக் குற்று எய்திய புனல் அணிந்த ஊரன் என்று கொள்ளினுமாம். மெய்ப்பாடும் பயனு மவை.

    24. தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு  

பிள்ளை தின்னு முதலைத் தவனூர்
எய்தின னாகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்ப தெவன்கொ லன்னாய்.
பரத்தையருள்ளும் ஒருத்தியைவிட்டு ஒருத்தியைப்பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்பத் தலைமகட்குச் சொல்லியது.

பழைய உரை :
தாய்சாப் பிறக்கும் …………… அவனூர் என்றது, தொன்னலம் சாம்வண்ணம் பிறக்கும் பொய்யுடனே செய்தன சிதையத் தோன்றும் அருளின்மையு முடையான் என்றவாறு.

உரை :
அன்னாய், தாய் சாவப் பிறக்கும் புள்ளி பொருந்திய அலவனொடு தன் பார்ப்பினையே தின்னும் முதலையினை யுடையது மகிழ்நனுடைய வூர். அப்பெற்றித்தாய ஊரையுடை யவன், சேரியிலுள்ளார் கூறுவதனால் இங்கு எய்தினனாயிற்றோ? அங்ஙனம் எய்துவோன், பொன்னாலாகிய தொடிகள் ஒலிக்கத் தன்னைக் கூடிய மகளிரது நலத்தை நுகர்ந்துவைத்தும் அது கெடப் பின்னர் அவரையே துறப்பது யாது கருதியோ? கூறுக என்றவாறு.

சாவவென்னும் செயவெனெச்சம் இறுதி வகரம் கெட்டது; “சாவ வென்னும் செயவெ னெச்சத், திறுதி வகரம் கெடுதலு முரித்தே”1 என்றார் ஆசிரியரும். மகிழ்நன் என்பது மருதத்துத் திணை நிலைப் பெயர். “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன”2 என்பதனால், முதலையினது பிள்ளை பார்ப்பு எனப்பட்டது. இனிப் பேராசிரியர், முதலை தவழ்வனவற்றுள் அடங்கு மென்பார், “ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தியங் குங்கால் தவழ்பவை யெனப்படும்” என்றார். தன் பார்ப்பினுள் நோயுற்று வலியிழந்தவற்றைத் தன் பகையினம் பற்றி அவற்றின் வழியே பிறவற்றிற்கும் தனக்கும் ஊறு செய்யுமென உணர்ந்து தின்னும் இயல்பிற் றாதல்பற்றி, பிள்ளை தின்னும் முதலை எனப்பட்டது. இதன் இயல்பினை, “தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை”1 என்புழிக் கூறுதும். செய்யுளாகலின், சுட்டு முற்பட வந்தது. பொலம் தொடி, பொன்னென்னும் சொல்லின் செய்யுண் முடிபு பெற்றது. தெளிர்த்தல். ஒலித்தல்; “செறி தொடி தெளிர்ப்ப வீசி”2 என்பதனாலும் அறிக. முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது என்றது சேரியோர் கூற்று. இது, கூற்றவண் இன்மையிற் கொண்டெடுத்து மொழிந்தது. “ஊரும் அயலும் சேரி யோரும், நோய்மருங் கறிநரும் தந்தை யும் தன்னையும், கொண்டெடுத்து மொழியப் படுவதல்லது, கூற்றவண் இன்மை யாப்புறத் தோன்றும்”3” என்பது இலக்கணம்.

உள்ளுறைக்கண், தலைமகனைக் கொடுமை கூறும் வகையால், அவன் வாராமைக்குரிய ஏதுவுணர்த்தினமையின், அவன் அன்புடையன் என்றாதல் பிரிவின்றி உறைவன் என்றாதல் கோடல் அமையாது என்னும் கருத்துப்பட வாயில் மறுக்கின் றமையின், எய்தினனாகின்று கொல்லோ என்றாள். ஓகாரம் வாரான் என்னும் துணிவையே வற்புறுத்திற்று. பரத்தையருள்ளும் ஒருத்தியைக் கைவிட்டு, வேறொருத்தியைப்பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்டு, அப்பெற்றியோன் ஈண்டு எய்தினும் மீட்டும் பிரிவே நிகழ்த்தி, எம் நலம் கெடுவித்தலையே செய்வானாகலின், அவன் பொருட்டு வாயில்வேண்டுவது என்னை என்பாள், முயங்கிய அவர்நலங் கொண்டு துறப்பது எவன்கொல் என்றாள். புணர்ந்தோரைப் பிரிந்தவழி, அவர் மேனி வேறுபட்டு அழகு வாடுதலின் அவர் நலங்கொண்டு என்றும், முயங்கிய வழிப் பிறந்த இன்பச் சிறப்பினை, பொலந்தொடி தெளிர்ப்ப எனச் சிறப்பித்தும் கூறினாள். துறப்பது என்றது, அத்தகைய இன்பத்தை முயக்கத்தால் உதவினார்பால் உளதாகும் தொடர்பு அற நீங்கும் அன்பின்மைகுறித்து நின்றது. இவ்வாற்றால் தலைமகனது செயற் கொடுமையினை வெளிப் படக் கிளத்தல் வழுவாயினும், வாயில் மறுக்கும் குறிப்பினால், ஆற்றாமையாற் கூறுதலின் அமையும் என்க. “வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல், தாவின் றுரிய தத்தங் கூற்றே”1 என்பது விதி.

தாய் சாவப் பிறக்கும் கள்வனையும், பிள்ளை தின்னும் முதலையினையும் உடைய ஊர் என்றதனால், முயங்கிய மகளிர் தொன்னலம் கெடுக்கும் அன்பின்மையும், இனி முயங்கும் மகளிர் நலம் நுகர்ந்து பிரியும் அருளின்மையும் உடையன் என்றாளாம். இது தலைமகள் கொடுமை உணர்த்திய துனியுறு கிளவி. இதுவே பழையவுரைகாரர்க்கும் கருத்தாதல் அறிந்து கொள்க. மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்தவெகுளி. பயன் : வாயின் மறுத்தல்,பொலந்தொடி தெளிப்ப, தெழிப்ப எனவும் பாடம் உண்டு. தெழித்தல் என்பது “எல்வளை தெளிப்ப” என்புழிப் போலத் தெளிர்த்தற் பொருட்டே.

    25. அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்  

வயலைச் செங்கொடி கள்வ னறுக்கும்
கழனி யூரன் மார்புபலர்க்
கிழைநெகிழ் செல்ல லாகு மன்னாய்.
இதுவுமது.

பழைய உரை :
அயல் புறந்தந்த…………… அறுக்கும் என்றது, எம் புதல்வன் வருந்துவதும் உணராது நம்மை வருத்துவான் என்றவாறு.

உரை :
அன்னாய், மனைக்கு அயலில் நட்டுப் பேணி வளர்த்த முற்றாத பசிய காயினையுடைய வயலையின் சிவந்த கொடியை அலவன் தன் கூருகிரால் அறுக்கும் கழனியையுடைய ஊரன் மார்பு, ஒருவர்க்கே யன்றி மகளிர் பலர்க்கு இழை நெகிழத்தக்க இன்னாமையைத் தருவதாகும் என்றவாறு.

அயல் புறந்தந்த வயலை, பைங்காய் வயலை என இயையும். புறந்தருதல் ஓம்புதல். மனைக்கண்ணேயன்றி வயற்புறத்தும் வயலையை நட்டு வளர்த்தல் மரபாதல்பற்றி, “அயல் புறந்தந்த வயலை” எனப்பட்டது; “மனைநடு வயலை”1 என்று முற் கூறினார். புனிறு, ஈன்றணிமை; ஈண்டுக் காய் தோன்றிய செவ்வி. மார்பு செல்லலாகும் என இயைக்க. செல்லல், இன்னாமை. “செல்லல் இன்னல் இன்னா மையே”2 என்ப. இழை நெகிழ் செல்லல், இழை நெகிழ்தற்குக் காரணமாய செல்லல், “இழை நெகிழ் பருவரல்”3 என்று வெள்ளிவீதியார் கூறியவாற்றாலும் இப் பொருண்மை துணியப்படும்.

பரத்தையருள்ளும், ஒருத்தியைக் கைவிட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்டுப் பொறாத உள்ளத்தளாய், வாயிலாய் வந்தார் கேட்பக் கூறுதலின், பலர்க்கு இழைநெகிழ் செல்லலாகும் அன்னாய் என்றாள். எனவே, அவன்மார்பு நினைந்து மேனி வேறுபட்டு இழை நெகிழ்ந்து அவள் வருந்துவது உள்ளுறையால் பெற்றாம். கூடினார் உள்ளம் குளிர மூழ்குமாறு உயர்ந்து அகன்று ஊற்றின்பம் மிகப்பயந்து, பிரிவின்கண் தன்னையே நினைந்துநினைந்து ஏங்கி மெலிவிக்கும் இயல் பிற்றாகலின், மார்பு எனப் பிரித்துச் சிறப்பித்தாள். “தீம்பெரும் பொய்கை யாமையிளம் பார்ப்புத், தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு, அதுவே ஐயநின் மார்பே, அறிந்தனை ஒழுகுமதி அறனுமா ரதுவே”4 எனப் பிறாண்டுங் கூறுமாற்றால் இன்பத் தையும், “கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன், மணங்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்”5 எனப் பிரிவினால் துன்பத் தையும் தலைவன்மார்பு பயக்கும் இயல்பிற்றாதலைச் சான்றோர் கூறுதல் காண்க.

வயலைச் செங்கொடியின் பசிய காய் வருந்த அதன் கொடியை அலவன் அறுக்கும் என்றதனால் மகற்பயந்து மனையகத்திருக்கும் நம் நலத்தினைத் தலைவன் நம்மகன் வருந்தச் சிதைக்கின்றான் என உள்ளுறுத்துரைத்தாளாம். இனி, அயல் வளர்ந்த வயலையின் காய் வருந்தச் செங்கொடியை அலவன் அறுக்கும் என்றது, புறத்தே தன்னைக் கூடித் தனக்குப் பெண்டி ராகிய பரத்தையரும் வருந்த அவர் தொடர்பறுத்து ஒழுகு கின்றான் என உரைப்பர். அப்பொருண்மை, “பலர்க்கு இழை நெகிழ் செல்லலாகும்” என்பதனாலும் அடங்கும். மெய்ப்பாடும் பயனுமவை.

    26. கரந்தையஞ் செறுவிற் றுணைதுறந்து கள்வன்  

வள்ளை மென்கா லறுக்கு மூரன்
எம்மும் பிறரு மறியான்
இன்ன னாவ தெவன்கொ லன்னாய்.
தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், “நின் முனிவிற்கு அவன் பொருந்தாநின்றான்,” என்றவழி, “அவன்பாடு அஃதில்லை” என்பது படத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

பழைய உரை :
துணைதுறந்து…………. ஊரன் என்றது, தான் துணையாகக் காதலித் தொழுகுகின்ற பரத்தையையும் நீங்கி எம்மையும் வருத்தி ஒழுகு வான் என்றவாறு.

வேறுரை :
கரந்தையஞ் செறுவின் துணைதுறந்து என்றது, நின்னைத் துறந்து என்றவாறு. வள்ளை மென்கால் அறுக்கும் என்றது, பரத்தையருள்ளும் ஒருத்தியை விடுவதும் ஒருத்தியைப் பற்றுவது மாகி அவர்களை வருத்துகின்றான் என்றவாறு. எம்மும் பிறரும் அறியான் என்றது எம்மையும் பிறரையும்…….

உரை :
கரந்தைக்கொடி படர்ந்த வயலின்கண் அலவன் தன் பெடையினைத் துறந்து சென்று வள்ளைக் கொடியின் மெல்லிய தண்டினை அறுக்கும் ஊரன், எமது இயல்பும் பரத்தையரியல்பும் நன்கறியாது இவ்வியல்பினனாய் ஒழுகு தற்குக் காரணம் என்னை? என்றவாறு.

என்றது, தலைமகனைக் கொடுமை கூறுதற்கண், ஒரோவழி யாமும் பரத்தையரும் ஒத்த இயல்பினேமாயினும், எம்மியல்பும் அவரியல்பும் வேறுபடுமாற்றை அறியாது, அவரைத் தொடர் பறுத்து ஒழுகுதற்குக் காரணம், அவரவர் பாடறிந்து ஒழுகும் அவனது பண்புடைமையேயாம் என்பதாம். எனவே, எம்மாலும் பரத்தையராலும் கொடுமை கூறப்படுவதல்லது அவன்பாற் கொடுமை இல்லை என்றாளாயிற்று.

கரந்தை, ஒருவகைக் கொடி, “காய்த்த கரந்தை மாக் கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானே”1 என்றும், “கரந்தையஞ் செறுவின் வெண்குரு கோப்பும்”2 என்றும் வருவன வற்றால், இஃது ஒருவகைக் கொடி என்பதும், வயற்கண் படர்வ தென்பதும் பெற்றாம். இதனைக் கொட்டைக் கரந்தை யென்று இக்காலத்திற் கூறுப. வள்ளை, இதுவும் ஒருவகைக் கொடி. இதன் தண்டு உள்ளிற் புழையுடைய தென்பது, “அந்தூம்பு வள்ளை”3 என்பதனால் அறிக. எவன் என்றது, அறியாப் பொருட்கண் வந்தது. கொல்: அசை நிலை. இன்னனாவது, அழிவில் கூட்டத் துக்குரிய மனையகத்துப்போலப் புறத் தொழுக்கத்தும் புணர்வும் பிரிவும் நிகழ்த்தி ஒழுகுதல். பிறர் என்றது பரத்தையரை. எம்மும் என்றது, தோழி தன்னையும் ஏனை வாயில்களையும் உளப்படுத்திக் கூறியது.

வாயில்கள் தலைவன் கொடுமையினைக் கூறல் வழு வாயினும், ஒரோவழி “மனைவி முன்னர்க் கையறு கிளவி, மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே”4 என்பதனால், அஃது அமையு மாறு அறிக. அதனால், அவ்வாயில்கள் கூறிய கொடுமையினை உள்ளுறுத்துரைத்தாள். தான் காதலித்த பரத்தையர்பால் தொடர் பறுத்து ஒழுகும் இயல்புடையோன், நம்பால் மேவிய வழியும் அது செய்தொழுகும் இயல்பினனாம் என்பதுபட அவர் கூறியதனையே தானும் கொண்டுகூறலின் எம்மும் என்றும், பரத்தையர் சேரி முற்றும் அலர் கூறலின் பிறரும் என்றும், அறிந்தவழி அவ்வாயில்கள் போந்து தலைவனைக் கொடுமை கூறலும் பரத்தையர் சேரி அலருரைத்தலும் இல்லையாம் ஆகலின் அறியான் என்றும், அவரவர் பாடறிந்து ஒழுகும் பண்பினை உடைய னாகலின், பரத்தையர் நன்றி சான்ற கற்புடையராகும் பாடு இலராதல் பற்றி அவர் தொடர்பறுத்து ஒழுகுகின்றமையின், வேறு காரணமின்மை கூறுவாள், இன்ன னாதற்குக் காரணம் பிறிதொன்றும் இன்று என்றும் கூறினாள். உள்ளுறையில், தலைமகன் ஒழுக்கத்தின் இயல்பு கூறுகின் றாளாகலின், இன்னனாவது என வாளாது கூறினாள்.

பாடறிந்தொழுகும் பண்புடைத் தலைமகனுக்குப் புறத் தொழுக்கமும் அமையுமென்றால், “அடங்கா ஒழுக்கத்து அவன் வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின் கண்”1 நிகழும் கூற்றுவகையால் அமைக்கப்படும். தலைமகன் பால் அறியாமை சார்த்திக் கூறல் வழுவாயினும், அவன் பண்புடை மையைச் சிறப்பித்து நிற்றலின் அமையும் என்க. “சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு, அனை நால்வகையும் சிறப்பொடு வருமே”2 என்பதற்கு இளம்பூரணர் கூறும் உரை காண்க.

கரந்தைச் செறுவில் துணைதுறந்து சென்ற கள்வன் வள்ளைக் கொடியின் மெல்லிய தண்டினை அறுக்கும் ஊரன் என்றதனால், தலைமகன் தான் காதலித்த பரத்தையைக் கைவிட்டுப் பிற பரத்தையரைப் பற்றிப் பின் அவரையும் அம்முறையே துறந்து ஒழுகுகின்றான் என உள்ளுறை கொள்க.

தலைமகன் பண்புடைமை மொழிந்து தலைமகளை வாயில் நேர்விக்கும் குறிப்பினள் என்பது இதுகாறும் கூறியவாற்றாற் பெறப்பட்டமையின், தோழி தலைமகளது உள்ளத்தில் தலைவ னுடைய கொடுமை யொழுக்கத்துக் கொடுமையினை விதந்து நினைப்பித்து வாயில் நேர்வித்தல் சிறப்பன்மையின் பழைய வுரை குறிக்கும் வேறுரை பொருந்தாமை யறிக. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகன் இயலெடுத்துக்கூறி வாயில் நேர்வித்தல்.

இனி, இன்னானாவது என்பது பாடமாயின், எம்மையும் பிறரையும் வேறுபட்ட இயல்பினர் என்பதனை அறியாது எம்பாலே போலப் பிறர்பாலும் தன் பிரிவால் இன்னாமையைச் செய்தொழுகுவானாவது என்றுரைக்க. இன்னான் என்பது இப்பொருட்டாதல், “புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே”1 என வருதலா லுணர்க. இனி, இப் பெற்றியனாய் ஒழுகுவது எனினுமாம்.

    27. செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்  

தண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
கெல்வளை நெகிழச் சாஅய்
அல்ல லுழப்ப தெவன்கொ லன்னாய்.
தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, அவற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி கூறியது.

உரை :
அன்னாய், செந்நெல் விளையும் வயலின்கண் அலவன் அந் நெற்கதிரைக் கவர்ந்துகொண்டு குளிர்ந்த வாழிடமாகிய தன் மண்ணளையின்கட் புகும் ஊரன் பொருட்டு நீ நின் இலங்குகின்ற வளைகள் நெகிழும்படி மெலிந்து வருந்துவது என்னையோ, கூறுக என்றவாறு.

செந்நெலஞ்செறு என்பது “விரிக்கும்வழி விரித்தல்” என்பதனால் அம்மு விரிந்து நின்றது. “செந்நெலஞ் செறுவின் அன்னம் துஞ்சும்”2 என்று சான்றோர் கூறுதலால் செந்நெல் நீர்வளம் நிரம்பிய வயல்களில் விளையும் இயல்பிற்று என அறிக. இதன்பூ நனைந்த வேங்கைப் பூவை நிகர்க்கும் என்றும், இதன்கதிர் பண்டை நாடக மகளிர் அணிந்த வயந்தகம் என்னும் அணியை ஒத்து இருக்கும் என்றும் கூறுப. “அகடுநனை வேங்கை வீகண் டன்ன, பகடுதரு செந்நெல்”3 என்றும், “வள்ளித ழுற நீடி வயங்கிய ஒருகதிர், அவைபுகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணிநுதல், வகைபெறச் செரீஇய வயந்தகம் போல்தோன்றும்”1 என்றும், “செந்தா மரைப்பூ வுறநிமிர்ந்த செந்நெலின், பைந்தார்ப் புனல் பாய்ந் தாடுவாள் - அந்தார், வயந்தகம் போல் தோன்றும்”2 என்றும் வருவன காண்க. இச் செந்நெல்லை இடித்துப் பெற்ற அவலில் பாலையும் கருப்பஞ்சாற்றையும் பெய்துண்டல் மிக இனிதாம் என்பது யாம் அறிந்ததே யாயினும், இவ் வழக்கம் மிகப் பழங்காலத்தே தோன்றிய தென்பது, “கரும்பின், விளைகழை பிழிந்த வந்தீஞ் சேற்றொடு, பால்பெய் செந்நெற் பாசவற் பகுக்கும், புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்”3 என்பதனால் அறியப்படும். இச் செந்நெல் வயலில் நீரறாமையின் தாமரை மலரும் என்பர்; “அகன்வயலொலி செந்நெலிடைப் பூத்த முள்ளரைத் தாமரை”4 என்றும், “எரியகைந் தன்ன தாமரை யிடையிடை, அரிந்து கால்குவித்த செந்நெல்”5 என்றும் சான் றோர் கூறுவர். நீர் இடையறாமையின் ஈரம் புலராத இட மாகலின், தண்ணக மண்ணளை என்றார். குவ்வுருபு பொருட்டுப் பொருளது. எல்வளை என்புழி, எல் - இலக்கம்; “எல்லே யிலக்கம்”6 என்ப. சாஅய் - மெலிதல். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்”7 என்பது தொல்காப்பியம்.

உள்ளுறையால், தலைமகன்பாற் புறத்தொழுக்கம் இல்லை என்பதுபடக் கூறிய தோழி, வெளிப்படையாய், “இல்லாத தொன்றனை உண்டுபோலும் என உட்கொண்டு மெலிதல் நன்றன்று,” என்று கூறுவாள் எல்வளை நெகிழச் சாஅய், அல்லல் உழப்பது எவன்கொல் என்றாள். எனவே, சென்ற காதலர் தம் செய்வினை முற்றி விரைவின் மீள்வர் எனக் கருதி யிருத்தலை விடுத்துச் சிறிது தாழ்த்தது கொண்டு, அவர்பால் தவறுண்டெனப் பிறழ நினைந்து வேறுபடுதல் நெறியன்று என்று கூறியவாறாம். தலை மகளைத் தெளிவித்து ஆற்றுவித்தற் பொருட்டு நெருங்கிக் கூறுகின்றாளாகலின், எல்வளை நெகிழச் சாஅய் என்றதனோடமையாது அல்லல் உழப்பது எவன் என்று கூறினாள். “எல்வளை நெகிழச் சாஅய்” என்றதனால் உடம்பு நனி சுருங்கலும், “அல்லல் உழப்பது எவன்” என்றதனால், இல்லது காய்தலும் தலைமகள் மெய்ப்பட்டுத் தோன்றினமை பெற்றாம்.

“வன்புறை குறித்த வாயி லெல்லாம், அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின், சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர்”1 என்புழிச் சிறைப்புறங் குறித்தலாவது “கற்பெனப்பட்ட சிறைமேல் வைத்து ஆற்றுவித்த லென்பது” என்றும், “நம் பெருமான் தன் ஆண்மைத்தன்மை காட்டிப் பிரிந்தார்; நீயும் அவர் கருதியது முடித்து வருந்துணையும் கற்புக் காத்திருக்க வேண்டும் என்றும், சான்றோர்மகளிரென்பார் சிறியரன்றிப் பெரிய ராகல் வேண்டும்……… தங் குலநோக்கித் தம் கற்புக்காத்து ஒழுகுதலாகிய அதனின் மிக்கதில்லை என்றும், இவ்வகை ஆற்றுவித்தல் சிறைப்புறங்குறித்தல் என்பது”2 என்றும் நக்கீரனார் கூறுமாற்றால் இஃது அமையுமாறறிக. இனிச் “சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்”3 என்பத னால், அறஞ்செய்தற்குப் பொருள்வயிற் பிரிந்தான் என உள் ளுறுத்துக் கூறி, அப் பெற்றியோன் பொருட்டு நீ வேறுபடுவது என்னை என்றாளாம்.

அலவன் நெற்கதிரைக்கொண்டு மண்ணளைக்குட் செல்லும் என்றதனால், தலைமகன் செய்வினைப் பயன் கொண்டு விரைய மீளுவன் என உள்ளுறை கொள்க. கொள்ளவே, தலைமகன்பாற் புறத்தொழுக்கம் இல்லை என்றவாறாயிற்று. மெய்ப்பாடு: தலைவியிடைத் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் : தலைவி கேட்டு ஆற்றியிருப்பாளாவது.

இனி, இஃது, “அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந் தோளை, அடங்கக் காட்டுதற் பொருளின்கண்”4 நிகழும் தோழிகூற்றுக்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர்; ஆயினும் அடங்காவொழுக்கம் அவன்வயின் உண்டு என்பது, இக்கூறியவாற்றால் இப்பாட்டின்கட் பெறப்படாமை காண்க.

செந்நெற் செறுவின் கதிர்கொண்டு என்றும் பாடம் உண்டு.

    28. உண்டுறை யணங்கிவ ளுறுநோ யாயின் தண்சேறு கள்வன் வரிக்கு மூரற்  

கொண்டொடி நெகிழச் சாஅய்
மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்.
இற்செறித்த விடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, “இது தெய்வத்தினால் ஆயிற்று,” என்று தமர் வெறி யெடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

உரை :
அன்னாய், உண்ணுநீர் கொள்ளும் துறைக்கண் உறையும் தெய்வம் இவளுற்ற நோய்க்குக் காரணம் என்று கருதினையா யின், தண்ணிய சேற்றினை அலவன் தன் நடையால் வரிக்கும் ஊரன் பொருட்டு இவள் ஒள்ளிய தொடி நெகிழுமாறு தளர்ந்து மெல்லிய தோள்கள் பசந்து வேறுபடுவது என்னையோ? கூறுக என்றவாறு.

இடத்துநிகழ் பொருளின்கட் படும் இயல்பு இடத்தின்மேற் கூறுவதோர் இயைபுபற்றி உண்டுறை எனப்பட்டது. நோய் காரணத்தின்மேற்று. அணங்கு- தெய்வம். நீர்த்துறைக்கண் தெய்வம் உறையும் என்பது, “அணங்குடைப் பனித்துறைக் கைதொழு தேத்தி, ஆயும் ஆயமோ டயரும்”1 என்பதனாலும் அறியப்படும். ஆயின் என்றது ஆகாமைக் குறிப்புணர நின்றது. கள்வன் வரித்தல், கூரிய கால்களால் கோலமிட்டதுபோலச் சேற்றின்கட் சுவடுபடுத்தல். “அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த, ஈர்மணல் மலீர்நெறி”2 என்றார் பிறரும்.

உண்டுறை அணங்கு இவள் உறு நோய் என்றது, தமர் கூற்றினைக் கொண்டெடுத்து மொழிந்தது. இவளுற்ற நோய்க்கு அணங்கு காரணமாயின், ஊரன்பொருட்டு மேனி வாடுதலும் மெலிதலும் பிறவும் இலவாம்; ஆகலின், மென்றோள் பசப்பது எவன் என்றும், தோள் எய்திய பசப்பினும் மேனி வாட்டம் தொடிநெகிழ்ச்சியால் நனி புலனாதலின், ஒண்டொடி நெகிழச் சாஅய் எனச் சிறப்பித்தும் கூறினாள். எனவே, இவள் வேறுபாடு தலைமகன்பால் உளதாகிய நட்புக் காரணமாக நேர்ந்தது எனப் பட்டாங்கு மொழிந்து அறத்தொடு நின்றாளாம். இஃது அறத் தொடு நிலைப்பகுதி ஏழனுள் உண்மை செப்பல். அவ்வேழும், “எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல், கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ, அவ்வெழு வகைய என்மனார் புலவர்”1 என ஆசிரியர் கூறா மாற்றான் அறிக. இது குறிஞ்சி யாயினும், கருப்பொருளால் மருத மாயிற்று. இனி வருவனவும் அன்ன.

அலவன் வரித்தலால் தண் சேறு அழகுறுதல் போல, தலைவனது வரைவினால் இவள் வேறுபாடு நீங்கி மகிழ்வள் என்று உள்ளுறை கொள்க. மெய்ப்பாடு: அச்சம். பயன் : அறத்தொடு நிற்றல்.

உறைநோய் என்பது பாடமாயின், விடுதல் விடையென வருதல்போல உறுதல் உறையென வந்ததாம் என்க.

    29. மாரி கடிகொளக் காவலர் கடுக  

வித்திய வெண்முளை கள்வ னறுக்குங்
கழனி யூரன் மார்புற மரீஇத்
திதலை யல்கு னின்மகள்
பசலை கொள்வ தெவன்கொ லன்னாய்.
வரைவெதிர் கொள்ளார் தமர் அவண் மறுப்புழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

பழைய உரை :
மாரி கடிகொள……… கடுக என்றது, மாரிநின்ற யாமத்துக் காவலரைத் தப்பி அவன் தலைவியை எதிர்ப்பட்டமை உணர்த் தியது எனக்கொள்க. இஃது உண்மை செப்பல் என்னும் அறத்தொடு நிலை.

உரை :
அன்னாய், மழை மிக்க பெயலைச் செய்யவும் காவலர் நன்கு காத்தலைச் செய்யவும் சிறிதும் அஞ்சாது போந்த, விதைத்த வெள்ளிய முளைகளை அலவன் துண்டிக்கும் கழனிகளையுடைய ஊரன் மார்பினை ஆர முயங்கியும், துத்தி பொருந்திய அல்குலையுடைய நின்மகள் பசந்து வேறுபடுவது என்னை? என்றவாறு.

கடி, மிகுதிப் பொருட்டு. கடிகொள என்பது ஒரு சொல்லாய் மிகுதிப் பொருண்மை உணர்த்திற்று; “பனி கடிகொண்ட பண்பில் வாடை”1 என்புழிப்போல. “மாரி கடிகொள” என மழையினை மருதத்துக் கூறியது, “வைகுறு விடியல்”2 என்ற சூத்திரத்து, “மெய்பெறத் தோன்றும்” என்றதனால் அமையும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும், “இவற்றிற்கு (மருதநெய்தல் கட்கு) அறுவகை இருதுவும் உரிய என்பதன்றிக் காரும் இள வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்பதற்குப் பொருள் பெறத்தோன்றும் என்றார்” என்றனர். கடுக என்பது காவற் பொருட்டாய கடி யென்னும் உரிச்சொல்லடி யாகப் பிறந்த வினைத்திரிசொல்; “கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது 3” என்புழியும் அது. சிறிதும் என்பது முதலாயின எஞ்சி நின்றன. அடுக்கி நின்ற செயவெனெச்சங்கள் அவாய்நின்ற வினை கொண்டன. கடிகொளவும் கடுகவும் போந்த வூரன், கள்வன் முளையினை அறுக்கும் ஊரன் என இயையும். மரீஇ என்புழி, உம்மை விகாரத்தால் தொக்கது. பசலை கொள்வது என்பது ஒரு சொல்லாய்ப் பசப்பதென்னும் பொருளதாயிற்று.

வரைவு எதிர் கொள்ளாது தமர் மறுத்தவழி, அறத்தொடு நிற்றலல்லது செயற்பாலது பிறிதின்மையின் உண்மை செப்பும் குறிப்பால் கழனியூரன் மார்புற மரீஇ என்றும், இம்மை மாறி மறுமை ஆயினும் இடையறாப் பெருங்கேண்மையனாகலின், இதனை அறியாது தமர் வரைவுமறுத்தலால் பெரிதும் வருந்தினள் என்பாள், பசலை கொள்வது எவன்கொல் என்றும் கூறினள். “காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகினும், நொதுமலர் வரையும் பருவ மாயினும், வரைவெதிர் கொள்ளார் தமரவண் மறுப் பினும், அவனூறஞ்சுங் கால மாயினும் அந்நா லிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ, அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே” 4 என்பவாகலின், தமர் வரைவு மறுத்ததுகொண்டு தோழி அறத் தொடுநிலை யன்றிப் பிறிது இலளாயினள் என அறிக. மாரி கடிகொளக் காவலர் கடுக என்றது அவன் வேட்கை யுரைத்தல். மார்புற மரீஇ என்றது உண்மை செப்பல். அறத்தொடு நிலைப்பகுதி உணர்த்தும் “எளித்தல் ஏத்தல்” என்ற சூத்திரத்து, “அவ்வெழுவகைய”1 என்றதனால், உண்மை செப்புங்கால், ஏனை ஆறு பொருளினுட் சிலவற்றை உடன்கூறலும், ஏனைய கூறுங் காலும் தனித்தனி கூறாது இரண்டும் மூன்றும் உடன் கூறலும் கொள்ளப்படும்,” என்பவாகலின், வேட்கையும் உடன் கூறப் பட்டது. ஈன்ற தாயினும் களவின்கண் செவிலி சிறந்தமையின், நின்மகள் எனச் சிறப்பித்தாள். “ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய்எனப் படுவோள் செவிலி யாகும்”2 என ஆசிரியரும் கூறினர்.

தம்முடைய மக்களின் மணவினைக்கண், இற்செறித்துக் காத்தலும் வரைவு மறுத்தலும் இவை போல்வன பிறவும் அவர்தம் நலமே நினைந்து புரியும் பெற்றோர்க்கு உரியவாதலின், அவர்தம் ஆணைவழி நிற்றல் மக்கட்கு அறமாம்; ஆயினும் அவர் செய்யும் காப்பு மிகுதியால் வருத்தம் எய்தியவிடத்து, தனது கற்பைக் காக்கும் பேரறம் நோக்கிப் பெற்றோர்க்குரிய அறமும் பிறவும் நீங்க நினையும் ஒழுகலாறு தலைமகட்கு வழு வாகாது. “அன்பே யறனே இன்பம் நாணொடு, துறந்த ஒழுக்கம் பழித்தன் றாகலின், ஒன்றும் வேண்டா காப்பி னுள்ளே”3 என்பது விதி. “பசலை கொள்வ” தென்றது தலைமகள்பால் தோன்றிய பசலை பாய்தல் என்னும் மெய்ப்பாடு.

வித்திய விதையிடத்துத் தோன்றும் வெண்முளையைக் கள்வன் அறுக்கும் என்றது, தாம் பயந்த மகளிடத்துத் தோன்றும் குடிமைச்சிறப்பினை, வரைவெதிர் கொள்ளாது தமர் அவண் மறுத்துச் சிதைக்கின்றனர் என்றவாறு. மெய்ப்பாடும் பயனுமவை.

இனி, மார்புற வறீஇ என்ற பாடத்துக்கு அவன் மார்பினைக் கூடி அவற்கும் தனக்கும் உண்டான உறவினை அறிந்துவைத்தும் என வுரைக்க.

    30. வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்  

தண்ணக மண்ணளை நிறைய நெல்லின்
இரும்பூ வுறைக்கு மூரற்கிவள்
பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய்.
இதுவுமது.

பழைய உரை :
அலவன் மண்ணளை நிறைய நெல்லின்பூ உறைக்கும் ஊரன் என்றது, தலைவன் மனையிடத்து உளவாகிய வருவாய்ச் சிறப்புக் கூறியது எனக் கொள்க என்பது.

உரை :
அன்னாய், வேம்பின் அரும்பையொத்த நீண்ட கண்களை யுடைய அலவனது குளிர்ந்த அகமாகிய மண்ணளை நிறையு மாறு நெற்றாளின் மிக்க பூ உதிர்ந்து கிடக்கும் ஊரன் பொருட்டு இவள் தன் மிக்க அழகினை இழப்பது என்னையோ, கூறுக என்றவாறு.

வேப்பு நனை “மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற்றாகும்”1 என்பதனான் முடிந்தது. “வேப்புநனை யன்ன நெடுங்கணீர் ஞெண்டு”2 என்று பிறரும் கூறினர். இருமை, மிகுதி. இரும்பூ உறைக்கும் என்பதற்கு மிக்க பூவைத் தன் மண்ணளை நிறைய அலவன் கொண்டுய்க்கும் என்று கூறலுமுண்டு. இப்பாட்டின் எருத் தடியின் ஈற்றுச்சீர் மாசேர்சுரம் என்ற வாய்பாட்டு வஞ்சியுரிச் சீராயினும், ஆசிரியப்பாவின்கண் அது மயங்கு தலும் இலக்கண மாகலின் அமையுமென வறிக. “அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர், ஒன்றுத லுடைய வோரொரு வழியே”3 என்பது செய்யுளியல். பிறாண்டும் இதுவே கூறிக் கொள்க.

தானே தனக்கு நிகராகும் தலைமையும், இழந்தவழிப் பண்டைத் தன்மையுறப் பெறலாகாத அருமையுமுடைய தன் கவின், தமர் வரைவு மறுத்தலால் தலைமகனைக் கூடல் அரிதாம் என நினைந்து கெடுகின்றாள் என்பாள் ஊரற்கு இவள் பெருங் கவின் இழப்பது என்றும், “உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர்” என்னும் உயர்மொழியை உட்கொண்டு அவனை இன்றியமையாளாயினாள் என்றற்குப் பெருங்கவின் இழப்பது எவன்கொல் என்றும் கூறினாள். உள்ளுறையால் தலைமகன் செல்வ மிகுதி கூறுதலின், இஃது ஏத்தல் என்னும் அறத்தொடு நிலை. இங்ஙனம், ஊரன் காரணமாகத் தன் பெருங்கவின் இழப்பதை அறியாது இவளை நீவிர் வரைவு மறுத்தல் கூடாது என்பது கருத்து. இஃது இவ்விரண்டு பாட்டிற்கும் ஒக்கும்.
அலவன் மண்ணளை நிறைய நெற்பூ உதிர்ந்து கிடத்தல் போலத் தலைமகன் மனையகம் நிறையத் தீதின் றியன்ற செல்வம் மிகுந்துளது என உள்ளுறையால் அவன் செல்வச் சிறப்புரைத்த வாறு. மெய்ப்பாடும் பயனுமவை.


தோழிக் குரைத்த பத்து

கூற்று நிகழ்த்துவோர், கேட்போர், கூற்றுப்பொருள் என்ற முன்றனுள், இங்கு வரும் பாட்டுக்கள் பத்தும் கேட்போர் பொருளாாகத் தொகை பெறுதலும், பிற நெறியால் பெறாமையும் உடைமையின், கேட்போர் வகையுட் சிறந்தாளாகிய தோழிக் குரைப்பனவாகும் சிறப்புடைமை கருதி இஃது இப் பெயர தாயிற்று.
ஈண்டுக் கூற்று நிகழ்த்துவோர், தலைவியும் பரத்தையரும் பிறரும் எனப் பலராகலின் அவர் கூறக் கேட்கும் தோழியரும் பலரே யாவர். ஆயினும், தோழியாம் தன்மையின் ஒற்றுமை கருதிப் பொதுப்படத் தோழி என்பது கூறப்பட்டது. பன்மைப் பொருளதாயினும், ஒருமை வாய்பாட்டாற் கூறப்படும் வழக்கு நெறி கருதியே ஆசிரியர், “ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப”1 என்பா ராயினர். ஆகவே; பண்டையாசிரியன்மாரும், இதுபோல்வன வற்றை, எப்பாற் கண்ணும் ஒப்பவரும் வழக்கு மொழி என்றனர். இதனைப் பிற்காலத்தார் சாதி யொருமை என்பர். “உலகத்து ஓரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின்கண்ணும் தலைவரும் தலைவியரும் பலரேனும், அவர்களை யெல்லாம் கூறுங்கால் கிழவனும் கிழத்தியும் என்று ஒருமையாற் கூறுவதன்றி, வேறோர் வழக்கின்று” என்று ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கூறினர். இனி, தலைவன், தலைவி, தாய் என வருமிடங்களிலும் இவ்விலக்கணமே கூறிக் கொள்க.

    31. அம்ம வாழி தோழி மகிழ்நன்  

கடனன் றென்னுங் கொல்லோ நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனா டாயமோ டுற்ற சூளே.
முன்னொருநாள் தன்னோடு புதுப்புனலாடுழி, “இனிப் புறத் தொழுக்கம் விரும்பேன்” என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன், பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்கு கின்றான் என்பது கேட்ட தலைமகள் அவன்உழையர் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: மகிழ்நன் வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்த பெருந்துறைக்கண் தன்உடனாடும் ஆயத்தார் அறிய அவரோடு உடனிருந்தே, “இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்” என்று செய்த சூளினை மறவாது கடைப்பிடித்தல் தனக்கு முறைமையன்று என்று கூறுவான் கொல்லோ? என்றவாறு.

அம்ம என்பது கேட்பித்தற் பொருட்கண் வந்த இடைச் சொல்; “அம்ம கேட்பிக்கும்.”1 வாழி: உரையசை. மகிழ்நன், திணைநிலைப் பெயர். கொல் - ஐயம். ஓகாரம்: அசைநிலை. கடன் - உரிமையுடையார் எவ்வாற்றானும் பிழையாது செயற் பாலதாகிய நற்செயல்; “கடன்என்ப நல்லவை யெல்லாம்”2 என்பது காண்க. முடமுதிர் மருதம் வளைந்து முதிர்ந்த மருத மரம். ஞாயிற்றின் ஒண்கதிர் பெறுதலை வேண்டித் தம் கிளை களாலும் பிற மரங்களாலும் தடைப்பட்டவழி வளைந்து சென்று பெறும் பான்மையுடைமையால் மரங்கள் முடமாதல் இயல் பாகலின், முடமுதிர் மருதம், எனப்பட்டது; “முடமுதிர் பலவின் கொழுநிழல்”3 என்றார் பிறரும். முடம் - வளைவு; இது முடவு எனவும் வழங்கும்; “முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை”1 என்பதனா லறிக. இச்சொல் உயர்திணைப் பொரு ளிடத்தும், “முடமுதிர் பார்ப்பான்”2 என வழங்கப்பெறுகின்றது. அறிய என்பது முதலியன குறிப்பெச்சம்.

தலைமக்கள் தம்மோடு உடனாடும் உரிமையுடைய ஆயத்தாரோடு கூடியாடும் பெருமையுடைத்தாகலின் பெருந் துறை என்றும், தம்மை என்றும் பிரியாச் சிறப்புடைய ராகலின் உடனாடாயம் என்றும், அவ்வாயம் உட்படப் பிறவும் அறிய அவரிடையே நின்று சூள் செய்தா னாகலின், உடனாடாய மோடு உற்ற சூள் என்றும், பின்பும் பரத்தையரோடு புனலாடு கின்றான் என்பது கேட்டுப் பொறாமை ஒருபால் வருத்தவே, செய்த சூள் பொய்த்தமையால் அவற்கு எய்தும் இளிவரவை எண்ணிக் கடனன்று என்னுங் கொல் என்றுங் கூறினாள். எஞ்ஞான்றும் பிரிவின்றி உடனிருந்து கடமையை வற்புறுத்தும் துணைவராகிய உழையர் கேட்பக் கூறுதலின் இதனை எடுத்து மொழிந்தாள் எனக் கொள்க.
தலைமகன் “இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்”3 என்புழி “எடுத்தல்” எனப் பெயர்ப்படுத்துக் கூறினமையின், தலைமகள், அவ்வாறு எடுத்த சூள் பொய்த்தமையால் எய்தும் ஏதம் தனக்கு வரும் என உழையர் கேட்ப மறுத்துரைத்தவாறு. மெய்ப்பாடு: இளிவரல். பயன் : உழையர் கேட்டு மாறுவாராவது.

    32. அம்ம வாழி தோழி மகிழ்நன்  

ஒருநா ணம்மில் வந்ததற் கெழுநாள்
அழுப வென்பவவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: நம் இல்லம் நோக்கி மகிழ்நன் ஒருநாள் வந்தானாக, அவன் பெண்டிர் பொறாது அனலிற் பட்ட மெழுகுபோல விரைய உளம்நெகிழ்ந்து, ஏழுநாள் காறும் அழுது தீர்ந்தனர் என்று பலருங் கூறாநிற்பர். காண் என்றவாறு.

எனவே, அவன் நமக்குச் செய்த ஒரு நாளைய தலையளி அவன் பெண்டிர்க்கு எழுநாளைய துயரமாயிற்றாகலின், அவன் வருமாறு என்னை? என்றவாறாம்.

வந்ததற்கு என்புழி, குவ்வுருபு பொருட்டுப் பொருட்கண் வந்தது. காதலரைப் பிரிந்த மகளிர்க்கு, பிரிந்த “ஒருநாள் எழுநாள் போல் செல்லும்”1 என்பது பற்றி எழுநாள் அழுப என்றார்; என்றது, பிறர் கூறிய கூற்றினைக் கொண்டுகூறியது. பெண்டிர், பரத்தையர் மேற்று; காமக்கிழமை யுடையருமாம்; “நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி”2 என்றாற்போல. 3 தீயுறு மெழுகின் என்ற உவமை, அவன் வரவு கேட்டுச் சிறிதும் இடை யீடின்றி அழுதல் மேயினர் என்பதுபட நின்றது. ஞெகிழ்தல் - உருகுதல். இன்னுருபு: ஒப்புப்பொருட்டு.

“எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும், புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப”4 என்பதனால், வாயில் வேண்டிப் புகுந்தார் தலைமகன் பண்டு செய்த தலையளியைச் சிறப்பித்துக் கூறினார் என்பது தோன்ற, மகிழ்நன் என்றும், அவ்வொரு நாளைய தலையளியை உடன்பட்டுத் தழீஅஃது அவன் பெண்டிர்க்கு எழுநாளைய துன்பமாயிற்று என்பாள், ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள் அழுப என்ப அவன் பெண்டிர் என்றும், அத்துணைச் சிறுபிரிவையும் ஆற்றாத பேரன்பினர் என அவரது நலம் பாராட்டுவாள் போலத் தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே என்றும் கூறினாள். கூறவே, ஒருகால் அவன் வருதலைக் கருதினானாயினும், அவரது ஆற்றாமை கண்டு அது தவிர்வா னாகலின் அவன் வருமாறு இன்றென வாயின் மறுத்தவாறாம். “கற்பு வழிபட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத் தூடல் உண் டென மொழிப”1 என்றலின், ஈண்டுத் தலைவி பரத்தையை நலம்பாராட்டியது மறுத்தற் குறிப்பே என வுணர்க.

இனி, ஒரு சிறிது பிரியினும் மிக்க வேறுபாட்டை அடையும் அத்துணை மென்மையேமாகிய நம்மிற் பிரிந்து சென்று, அவர் மனைக்கண் ஏழுநாள் இருந்து, ஒரு நாள் நம்பால் வந்தது குறித்துப் பின் ஏழுநாள்காறும் புலம்புவர் எனப் பரத்தையரை எள்ளி நகையாடி யுரைக்கின்றாளாகலின், எழுநாள் அழுப என்ப என்றும், பிற இயல்புக ளின்றித் தமது பெண்ணியல்பு ஒன்றே கொண்டு அவர் தருக்குவர் என்றற்கு, அவன் பெண்டிர் என்றும், மக்கட்பேறு முதலியவற்றால் எய்தும் கற்பு வலியிலர் என்றற்கு, தீயுறு மெழுகின் விரைவனர் ஞெகிழ்ந்தே என்றும் கூறி னாளுமாம். “காதலர், ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம், பொம்ம லோதி நம்மிவண் ஒழியச்செல்ப என்ப”2 என்பதனால் தலைமகளின் மென்மைத்தன்மை உணர்ந்து கொள்க. ஒரு வாற்றால் வாயில் நேருங் குறிப்பினளுமாகலின், வெளிப்படை யால் காமக்கிழத்தியர் நலம் பாராட்டிக் குறிப்பால் தீமையின் முடித்தாள் என அறிக.

ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள், அழுப என்ப அவன் பெண்டிர் என்றதனால், பரத்தையர்பால் பொறாமை என்னும் மெய்ப்பாடும், தலைமகள்பால் உள்ளது உவர்த்தல் என்னும் மெய்ப்பாடும் தோன்றின. ஏனை மெய்ப்பாடு: பிறர்கட் டோன்றிய சிறுமை பொருளாகப் பிறந்த மருட்கை. பயன் : வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்டு மாறுவாராவது.

    33. அம்ம வாழி தோழி மகிழ்நன்  

மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொ டாடு மென்பதன்
தண்டா ரகலந் தலைத்தலைக் கொளவே.
இதுவுமது.

உரை :
தோழி, கேட்பாயாக: மருதமரங்கள் மிகுந்தோங்கிய விரிந்த பூக்களையுடைய பெரிய நீர்த்துறைக்கண், மகிழ்நன் தன் குளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றி முயங்குமாறு பரத்தையரோடு புனலாடுகின்றான் என்று கூறுவர் என்றவாறு.

உயர்ந்தோங்கிய என்பது மிகுத்தற்கண் வந்தது; “உயர்ந் தோங்கு செல்வத்தான்”1 என்புழிப்போல. இனி, உயர்வினை மருதுக்கும், ஓங்குதலைப் பெருந்துறைக்கும் ஏற்றினுமாம். ஓங்கிய பெருந்துறை, விரிபூம் பெருந்துறை. நீரின் நிறம் தெரியா வகைப் பூக்கள் விரிந்து பரந்துகிடத்தலின் விரிபூம்பெருந்துறை எனப்பட்ட தென்க; “நீர்நிறங் கரப்ப ஊழுறு புதிர்ந்து, பூமலர் கஞலிய கடுவரற் கான்யாறு”2 என்றார் பிறரும். “தலைத்தலைக் கொளலே” என்புழித் தலைத்தலை என்பதற்குத் “தலைத்தலைத் தருமே”3 என்றாற்போலப் பொருள் கொள்க. “பெருமலை நாடன் மார்பு புணையாக, ஆடுகம் வம்மோ”4 என்பதனால், மார்பு புணையாதல் அறிக.
புறத்தொழுக்கத்தின்கண் தலைமகன் பரத்தையரோடு விளையாட்டயர்ந்தான் என்பது கேட்டவழித் தலைமகட்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து காமச்சிறப்பு எய்துதலின், வாயில் வேண்டி வந்தாரோடு வெகுண்டு கூறுவாள், மகிழ்நன் விரிபூம் பெருந்துறைப் பெண்டிரொடு ஆடும் என்ப என்றாள். “கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே”5 என ஆசிரியரும் கூறினர். விரிந்த பூக்கள் நிறைந்த பெருந்துறை. காதலரொடு கூடி யாடுவார்க்கு அக்கூட்டத்தின் மேலும் இன்பம் மிகுவிக்குமென உட்கொண்டு கூறலின், மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை எனச் சிறப்பித்தாள். புல்லுந்தோறும் அமையாது பரந்து சிறத்தலின், தண்டார் அகலம் என்றும், ஒருமுறை இருமுறை அமையாது பன்முறையும் முயங்கும் மிகுதி தோன்றத் தலைத்தலைக் கொளவே என்றும் கூறினாள். “முயங்குதொறும் முயங்குதொறும் முயங்க முகந்துகொண்டு, அடக்குவ மன்னோ தோழி………. சாரல் நாடன் சாயன் மார்பே”1 என்பதனாலும், தலைமகனது தண்டாரகலச் சிறப்புணரப்படும். இதனால், தலைவிமாட்டுப் பொறாமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயின்மறுத்தல்.

இனி, பெண்டிரொடும் ஆடும் என்ப என்ற பாடத்துக்கு உம்மை இழிவுச் சிறப்பெனக்கொள்க. இதனாற் பிறக்கும் அகைப்பு வண்ணம், தலைமகளின் பொறாமைக் குறிப்பினைச் சிறப்பித்தல் காண்க. “அகைப்பு வண்ணம் அறுத்தறுத்து ஒழுகும்”2 என்ப.

    34. அம்ம வாழி தோழி நம்மூர்ப்  

பொய்கைப் பூத்த புழைக்கா லாம்பல்
தாதேர் வண்ணங் கொண்டன
ஏதி லாளர்க்குப் பசந்தவெண் கண்ணே.
இதுவுமது.

உரை :
தோழி, கேட்பாயாக: அன்பிலனாய்ப் புறத்தே ஒழுகும் காதலன் பொருட்டுப் பசப்புற்ற என் கண்கள், நம்மூர்க் கண்ணுள்ள பொய்கையிற் பூத்த புழைபொருந்திய தண்டினை யுடைய ஆம்பற்பூவின் தாது போலும் நிறத்தை அடைந்தன, காண் என்றவாறு.

பொய்கை - மானிடராக்காத நீர்நிலை என்பர் நச்சினார்க் கினியர். 3 ஆம்பற்றாள் புழையுடைய தென்பது, “ஏந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல்”4 என்றதனாலும் அறியப்படும். புழை - உட்டுளை. ஏர் - ஒப்பு; “மலரேர் உண்கண்”5 என்றாற் போல. பரத்தையர்மனை, தம் மனையை நோக்கத் தலைமக்கட்கு ஏதிலாதலின், அவர் மனைக்கண் ஒழுகுவாரை, ஏதிலாளர் என்றார்; “சிறுவீ ஞாழல் பெருங்கடற் சேர்ப்பனை, ஏதிலாளனும் என்ப”6 என்றார் பிறரும். ஈண்டுத் தலைமகனை ஏதிலாளர் என்றது, ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியாய்ச் சினந்து கூறுதற்கண் வந்ததாம்.

தன் மனையை இகந்து பரத்தையர் மனைக்கண் உறைதலின், தலைமகள் வெகுண்டு, வாயில்வேண்டி வந்தார் கேட்பத் தலைவனைக் கொடுமை கூறுங் குறிப்பால், ஏதிலாளர்க்கு என்றும், அவன் அன்னனாதலைத் தான் அறிந்தாளாயினும், தன் கண்கள் அறியாது பசந்தன என்பாள், பசந்த என்கண் என்றும், அங்ஙனம் பசந்தவை, தாமரை குவளை முதலிய மலர்களை நிகர்த்தற்குரிய உவமவுரிமையை இழந்து இழிந்த ஆம்பற்றாதின் வண்ணம் பெற்றன என்பாள், புழைக்கால் ஆம்பல், தாதேர் வண்ணம் கொண்டன என்றும், ஆம்பற்றாது பொன்னிறத்த தாகலின், பசப்புற்ற கண்களைத் தாதேர் வண்ணம் கொண்டன என்றும் கூறினாள். “பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே” 1 என முன்னரும் கூறியவாறு காண்க. கூறவே, அவன்பொருட்டுப் பசந்ததன்பயன் இதுவே என்றவாறாம்.

ஆம்பலின்கால் புழையுடையது என்றதனால், தலைமகன் பால் அன்பின்மையும் தோன்றினமையின் ஏதிலாளர் என எடுத்துக் கூறினாள் என்றலும் ஒன்று. இவ்வாறு தலைமகன் தவற்றினை வெளிப்படையாகக் கூறல் வழுவாயினும், “வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல், தாவின் றுரிய தத்தங் கூற்றே”2 என்பதனால் அமையும் என்க. “ஏதி லாளனை நீபிரிந் ததற்கே” 3 எனப் பிறாண்டும் தோழி கூறுமாறறிக.

இனி, அவன் நம்பால் அன்பிலனாய்ப் புறத்தொழுகுதலால் எழும் அலரை, நாம் மறைப்பினும் நம் கண்கள் பொறாது, முறுகிய பசப்புடையவாய் ஆம்பற்றாதின் வண்ணங் கொண்டன என்றும் கூறுவர். “பசந்த என்கண்” என்றது பசலைபாய்தல். ஏனை மெய்ப்பாடும் பயனுமவை.

வண்ணங் கொண்ட என்றும் ஏதிலார்க்கு என்றும் உள்ள பாடங்கள் கட்டுரைச்சுவை பயவாமையறிக.

    35. அம்ம வாழி தோழி நம்மூர்ப்  

பொய்கை யாம்ப னாருரி மென்கால்
நிறத்தினு நிழற்று மன்னே
இனிப்பசந் தன்றென் மாமைக் கவினே.
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணங் கூறியவழி, “அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுதுகாண், என் மேனி பசந்தது” எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: இதுகாறும் நம்மூரிற் பொய்கைக்கண் பூத்த ஆம்பலின் நார் உரிக்கப்பட்ட மெல்லிய தண்டினும் மிக ஒளிர்தலைச் செய்த என் மாமைக்கவின் அது கழிந்து இப் பொழுதுதான் பசலை பாய்ந்தது காண் என்றவாறு.

நார் உரி மென்கால் என்புழி வினைத்தொகை இறந்த காலம் தொக நின்றது. உம்மை: இசை நிறை. மன், கழிவுப் பொருட்டு. நோயின்றியன்ற யாக்கை நலமும், அழகு திகழும் இளமை நலமும் ஒருங்கு விளங்கும் மகளிரது மேனிநிறம் மாமை 1 என்று சான்றோரால் வழங்கப்பெறும். இம்மாமைக்கு, மழையால் நனைந்து நீர் துளித்து நிற்கும் பச்சிளந் தளிரையும், நீலமணி பதித்த பொன்னையும் உவமை கூறுவர்; “கொடுமுள் ஈங்கை நெடுமா வந்தளிர், நீர்மலி கதழ்பெயல் தலைஇய, ஆய் நிறம் புரையுமிவள் மாமைக் கவினே”2 என்றும், “பூந்துணர், தாதின் துவலை தளிர்வார்ந் தன்ன, அங்கலுழ் மாமை”3 என்றும், “பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ”4 என்றும், “மணிமிடை பொன்னின் மாமை”5 என்றும் வருவன காண்க. பொன்னும் இளந்தளிரும் பொன்மை நிறமுடையவாதல் பற்றி, அந்நிறப் பண்புடைய ஏனை மலர் தளிர் முதலியவற்றை மாமைக்கு உவமங் கூறுப. “நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமை, பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய”1 என்றும், “செயலை யந்தளிர் அன்னஎன் மதனில், மாமை”2 என்றும் வருமாற்றால் அறிக. “நீர்வள ராம்பல் தூம்புடைத் திரள்கால், நாருரித் தன்ன மதனின் மாமை”3 என ஒரோவழி நாருரித்த ஆம்பற் றண்டினையும் இதனோடு உவமிக்கும் உவமவியைபு குறித்து ஈண்டும், ஆம்பல் நாருரி மென்கால் நிறத்தினும் நிழற்றுமன் என்றார். நிழற்றுதல் - ஒளிவிடுதல். “மணிமிடை பொன்னின் மாமை சாயவென், அணிநலம் சிதைக்குமார் பசலை”4 என்றதனால், மாமை பசலையாற் கெடுதல் அறிக. இனி என்றது பசப்பின் புதுமை எய்துவித்தது. ஆம்பற்றாள் நார் நீங்கிய விடத்து வலிகுன்றுதலின், மென்கால் என்றார். இன்னுருபு உறழ்ச்சிப் பொருட்டு.

பிரிவால் உளதாகும் மெலிவு எய்தியிருந்தாளாயினும், அவன் சோர்பு காத்தல் கடன் என்பதனை உட்கொண்டு ஆற்றியிருந்தமையான், ஒளியுற்றிருந்த தன் மாமைக்கவின், ஆற்றாமைக் கேதுவாகிய சொல் ஒன்று தோன்றினும் வலி யழியும் மென்மைத்து என்பாள் ஆம்பல் நாருரி மென்கால் நிறுத்தினும் நிழற்றுமன் என்று உவமித்தும், வாயில்கள் கூறிய பொய்ம்மொழிகளைக் கேட்ட மாத்திரையே, ஆற்றாது அக்கவின் கெடுதற்குப் புலந்து மன்னே என்றும், இனிப் பசந்தன்று என்றும் கூறினாள்; “எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த், தனிக்குருகு உறங்குந் துறைவற்கு இனிப்பசந் தன்று என் மாமைக் கவினே”5 என்புழியும் இக்கருத்தே வலிபெறுதல் காண்க. இது பசலை பாய்தல். ஏனை மெய்ப்பாடும் பயனும் அவை.
3
36. அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந் தமைகுவ னாயி னாமறந்
துள்ளா தமைதலு மமைகுவ மன்னே
கயலெனக் கருதிய வுண்கண்
பயலைக் கொல்கா வாகுதல் பெறினே.
தான் வாயில் நேருங் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும்வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: ஊரனாகிய நம் காதலன் நம்மை மறந்துறைவானாயின், கயல்போலும் மையுண்ட நம் கண்கள் மட்டில் பசப்பு எய்தாமையை நாம் பெறின், அவனை மறந்து நினைப்பதேயன்றி அமைந்திருத்தலும் நமக்குக் கூடும்; அவை விரையப் பசத்தலாலன்றே, நாம் அவனை இன்றியமையே மாகின்றேம் என்றவாறு.

நம்மறந்து அமைகுவானாயின் என்றது, நம்மை மறந்து அமைகுவன் தலைமகன் எனத்தோழி கூறியதனைக் கொண்டு கூறியது. எச்சவும்மை தொக்கு நின்றது. அமைதலும் அமைகுவம் என்றது, “அறிதலும் அறிதிரோ”1 என்றாற்போல நின்றது, கருதிய என்பது உவமவுருபு. பசலை - பயலை என நின்றது. கண்கள் முதலாயின ஒழியிசையெச்சத்தை முடிக்க வந்தன. மன் - ஒழியிசை; அமையாது பசந்து அவனை இன்றியமையே மாகின்றேம் என எஞ்சி நின்றது காண்க. ஓல்குதல் - சுருங்குதல். ஒல்குதற்குரிய ஏது உண்மையின், ஒல்காவாதற்கு ஏது கூறா ளாயினாள்.

வாயில் வேண்டி வந்தார் தலைமகனது காதன்மை கூறி நிற்பத் தோழி அவனது கொடுமை கூறி வாயில் மறுத்தாளாக, தலைவி, அவனை நேருங் குறிப்பினளாய் அவள் கூறியதனை ஒரு மருங்கு தழீஇக் கூறுகின்றாளாகலின், ஊரன் நம்மறந்து அமைகுவனாயின் என்றும், நம்மை மறந்தாரை நாம் மறத்தல் அரிய செயலன்று என்றற்கு, நாம் மறந்து உள்ளாது அமை தலும் அமைகுவம் என்றும், வாயில் நேராதவழி, அவன் புறத் தொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகி இளிவரலைப் பயக்கும் என்று அஞ்சி, வாயின் மறுத்தற்கண் சென்ற உள்ளம் சுருங்கி நேர்தற்கண் நின்றது என்பாண், அதனை முந்துற்று அறிவிக்கும் கண் மேலேற்றி. உண்கண் பயலைக்கு ஒல்கா வாகுதல் பெறின் என்றும் கூறினாள். கூறவே, தலைமகள், தான் தலை மகனை மறந்து அமைதற்குரிய ஏது உளதாகியவழியும், தன் கண்கள் அவன் தவற்றாலுண்டாகும் இளிவரலை அஞ்சிப் பசத்தலின் மறுத்தல் நமக்குக் கூடாதாயிற்று என்றாளாம். இது வாயில் நேருங் கருத்தினைக் குறிப்பாய்க் கூறியவாறு. “எழுத் தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப், பொருட்புறத் ததுவே குறிப்பு மொழி யென்ப”1 என்றார் ஆசிரியர். “பயலைக்கு ஒல்காவாகுதல் பெறின்” என்றதனால், ஒல்கிப் பசத்தலே உண்மையாயிற்று. இது பசலை பாய்தல். “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது, நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு”2 தனக்கும் ஆகாது, தலைவற்கும் உதவாது தன் மாமைக்கவின் பசலையாற் கெடுதலால், அப்பசலையை வாயில் நேர்தற்குத் தலைவி ஏது வாக்கினாளென அறிக.

இவ்வாறு தலைமகனது காதன்மை கூறி வாயில் வேண்டி வந்தார்க்குத் தன் அன்புபொதி கிளவியினைத் தலைமகள் மொழி தலை, “அருள்முந் துறத்த அன்புபொதி கிளவி, பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே”3 என்பதனாற் கொள்க. பொருள்பட மொழிதலாவது, அகத்தெழும் அன்பினைக் கரந்த வாய்ப்பாட்டாற் கூறினும் அது தெரிய நிற்பக் கூறுதல். ஏனை இவ்வாறு வருமிடம் அறிந்து இதனை உரைத்துக் கொள்க. மெய்ப்பாடு: மருட்கை. பயன் : வாயில் நேர்தல்.
37. அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோ ருண்கண் பயந்து பனிமல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றா னுற்ற சூள்வாய்த் தல்லே.
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதற் பரத்தை 4 தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: மகிழ்நன் தான் செய்த சூள் பொய் யாகாத வகையில் ஒழுகுதலைத் தெளியமாட்டா னாயினும், தன்னைக் காதலித்தோருடைய உண்கண் பசந்து நீர்த்துளி சொரியும் வண்ணம் அச் சூளுறவினைப் பொய்த்து நீங்குதலில் மிகவல்லனா யுள்ளான்காண் என்றவாறு.

நயப்பு, காதல். பனி, நீர்த்துளி. அடுக்கு, துணிவின்கண் வந்தது. தேற்றான் என்பது, “உய்த்தல் தேற்றானாயின்”1 என்றாற்போலத் தெளிவின்கண் வந்தது. ஆயினும் என்பது எஞ்சி நின்றது. வாய்த்தல்லே என்பது விரிக்கும் வழி விரித்தல். வாய்த்தல், சொல்லியாங்கு ஒழுகுதல்; மெய்மைப்பட நிற்றல்.

தலைமகன் தலைவியைச் சூளினால் தெளிவிக்கின்றான் என்பது கேட்டு, அவள் அதனால் தெளியாவாறு விலக்குங் கருத்தினளாகலின், அவட்குப் பாங்காயினார் கேட்பக் காதற் பரத்தை, தேற்றான் உற்ற சூள் வாய்த்தல் என்றதனோடு நில்லாது, வல்லன் வல்லன் பொய்த்தல் என்றும் கூறினாள். இது, “புல்லுதன் மயக்கும்”1 என்ற சூத்திரத்து, “இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும்” என்பதனால், தலைவன் தலைவியைச் சூளால் தெளிவித்துக் கூடுதலை இகழ்ந்துரைத்த வாறு. இவன் செய்த சூளுறவு கண்டு இவன் பொய்த்தொழுகான் என உட்கொண்டு இவனை நயந்து பின்னர்ப் பொய்த்தமையின் பசந்து துன்புற்றார் பலர் என்பாள், நயந்தோர் உண்கண் பயந்து பனிமல்க எனப் பன்மை வாய்ப்பாட்டாற் கூறிப் புலவியும் ஊடலும் நிகழ்வழி யெல்லாம் சூளுறுதலும் பொய்த்தலுமே அவற்குச் செய்கைகளாயின என்றற்கு வல்லன் வல்லன் பொய்த்தல் என்று கூறினாள். மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : தலைவி அறிந்து வாயில் நேராளாவது.

இனி, பசந்து பனிமல்க என்னும் பாடம் எதுகை யின்பம் சிறவாமை யறிக.

    38. அம்ம வாழி தோழி மகிழ்நன்  

தன்சொ லுணர்ந்தோ ரறியல னென்றுந்
தண்டளிர் வௌவு மேனி
ஒண்டொடி முன்கை யாமழப் பிரிந்தே.
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக. குளிர்ந்த மாந்தளிர் போலும் மேனியும், ஒள்ளிய தொடியணிந்த முன்கையுமுடைய யாம் ஆற்றாது அழும்வண்ணம் பிரியக் கருதுதலால், மகிழ்நன் என்றும் தான் தெளிவிப்பான் கூறுவனவற்றைத் தெளிந்து அமையும் மகளிரின் அன்பினை அறியும் அறிவிலனாம் என்றவாறு.

எனவே, அறிவறியாதார் செய்யும் செயல் வகைகளைப் பொருளாகக் கோடல் வேண்டா என்பதாம்.

மகிழ்நன் தன்சொல், மகிழ்நன் தெளிவிப்பான் கூறிய சொற்கள். தெளித்தது தேறியிராமை உணரார் செயலாகலின், உணர்ந்தோர் என்றார். “தன்சொல் உணர்ந்தோர் மேனி”1 எனப் பிறாண்டும் கூறுவர். அறியலன் என்றதனால், அறிதற்குரிய அறிவும், அறியப்படும் அன்பும் பெற்றாம். தளிர் என்றதனால் சிறப்புடைய மாந்தளிர் கொள்க. “நறுவடிப் பைங்கண் மாஅத் தந்தளி ரன்ன, நன்மா மேனி”2 என்றார் பிறரும். “ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்”3 என்புழியும் இதுவே கூறிக்கொள்க. வௌவும் என்றது உவம வாய்ப்பாடு. செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. யாமழப் பிரிந்து என்றது தோழி கூற்றினைக் கொண் டமைத்துக் கூறியது. மேனியும் முன்கையுமுடைய யாம் என இயைக்க. பிரிந்து என்றது காரணப் பொருளில் வந்த வினை யெஞ்சு கிளவி; இஃது அறியலன் என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது. “வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபாகும்மே”4 என்பது இலக்கணம்.

தலைமகள் தன்னை முன்னர்க்கூடிய ஞான்று தெளித்த சொல்லைத் தேறியிருக்கின்றா ளாகலின், பிறர்போற் கூறும் குறிப்பினால், தன் சொல் உணர்ந்தோர் என்றும், தோழியால் அவன் பிரியக் கருதியிருத்தலைக் கேட்டு, அவன் கருத்தையும் தன் காதலையும் தூக்கி, அவற்றுட் பின்னது சிறந்து நிற்றலை யுணர்ந்து, அதனையறியாது அவன் கருதுதல் தக்கதன்றென்பாள் அறியலன் என்றும், அவ்வறியாமை புணர்வு, பிரிவு என்ற இரண்டிடத்தும் எப்போதும் இயல்பாய் உளது என்பாள் என்றும் என்றும் கூறினாள். காரணமின்றியே ஒருவரைக் குறைகூறல் முறையன்மையின், யாமழப் பிரிந்தே என்றது காரணமாயிற்று. இதனாற் பரத்தைமாட்டுக் கலக்கம் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று.

பரத்தையர் இவ்வாறு தலைமகனைப் புலந்து கூறல் வழு வாயினும் அஃது அமையும் என்பதனைப் “புல்லுதல் மயக்கும்”1 என்ற சூத்திரத்து இவற்றொடு பிறவும் என்றதனாற் கொள்க. ஏனை மெய்ப்பாடு: இளிவரல். பயன் : தலைமகன் கேட்டுப் பிரியா
னாவது.

    39. அம்ம வாழி தோழி யூரன்  

வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோண் ஞெகிழப்
பிரிந்தன னாயினும் பிரியலன் மன்னே.
ஒருஞான்று தலைவன் தன் மனைக்கட் சென்றதுகொண்டு அவன் பெண்மை நலமெல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தா னென்பது தலைவி கூறினாளெனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக: ஊரன் விருப்பம் தரும் நம்முடைய மார்பகம் முற்றவும் சேரமுயங்கிப் பின்னர் நம்மினின்றும் அழகிய இழையணிந்த பெரிய தோள்கள் நெகிழ்ந்து மெலியு மாறு பிரிந்தானாயினும், நெஞ்சில் இடையறவின்றி நிற்றலின் பிரிந்தானல்லன் என்றவாறு.

எனவே, பிரிந்தான் எனத் தலைமகள் முதலாயினார் கூறுவ தென்னை என்றாளாயிற்று.

வெம்மை, வேண்டல். 2 அடைய என்பது எஞ்சாமை உணர நின்றது; “நல்லகவனமுலை யடையப் புல்லுதொறும் 3” என்றாற் போல. பிரிந்தனனாயினும். என்றது, தலைமகட்குப் பாங்கா யினார் முதலியோர் கூற்றினைக் கொண்டுகூறியது. பிரிந்தா னெனக் கூறுதல் என்னை என்பது ஒழிந்து நிற்றலின், மன் ஒழியிசை. இனி, பன்னாளும் எம்வயின் உறைந்து, ஒருஞான்று, நெஞ்சத்தானன்றி மெய்யாற் பிரிந்தது பிரிவாகாதென்பது பட நிற்றலின், மன்னைச்சொல் பெரும்பான்மை என்னும் பொருட் டெனினுமாம். பிரியலன் என்றற்குரிய ஏதுக்கள் வருவிக்கப் பட்டன.

முயங்குந்தோறும் முயங்கற்கு விருப்பம் மிகுவிக்கும் இயல்பினவாகலின் வெம்முலை என்றும், அவ்வியல் புடைய முலைகள் முற்றும் அவன் மார்பிடை மூழ்கப் புல்லித் துய்த்த புலரா இன்பத்தை நினைந்து கூறலின், வெம்முலை யடைய முயங்கி என்றும், நம் பெண்மை நலமெல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தானாயின், நம்பால் நலமும் அவனது காதலும் இலவாதல் வேண்டும்; அவ்வாறின்றி, அவை உளவாயின என்பாள், திருந்திழைப் பணைத்தோள் என்றும், தலைமகட்குப் பாங்காயினார் கூற்றை மறுக்கும் குறிப்பினளாகலின், தோள் நெகிழப் பிரிந்தனனாயினும் பிரியலன்மன் என்றும் கூறி னாள். மார்படைய முயங்கும் முயக்கத்தை மகளிர் பெரிதும் வேட்பர் என்பதனைக் “கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு, நன்மார் படைய முயங்கி மென்மெலக், கண்டனம் வருகஞ் சென்மோ”1 என்றும், “தண்ணிது கமழும் நின்மார்பு ஒருநாள், அடைய முயங்கே மாயின் யாமும், விறலிழை நெகிழச் சாஅய்தும்”2 என்றும் சான்றோர் கூறுமாற்றால் அறிக. பிரிந்தன னாயினும் என்றதனால் எய்தப்பெறும் பிரிவு பிரிவெனப் படா தென்பதாம். இஃது, “இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்”3 தலைவி புலந்தும் ஊடியும் தலைவனொடு கூடுவாள் கூறியது கேட்டுப் பரத்தை பொறாது கூறியது என்க. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைவிக்குப் பாங்காயினார் கேட்டுத் தலைமடங்கு வாராவது.

திருந்திழைப் பணைத்தோள் நெகிழ என்ற பாடத்துக்குத் திருந்திய தொடியாகிய இழை பெரிய தோள்களினின்றும் நெகிழ்ந் தோடுமாறு என்றுரைக்க. இழை, ஈண்டுத் தொடிமேற்று; “தோளே தொடிநெகிழ்ந்தனவே”4 என்றதனாலும் தோளிற்குத் திருந்திய இழை தொடியாதல் காண்க.

    40. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒண்டொடி முன்கை யாமழப் பிரிந்துதன்  

பெண்டி ரூரிறை கொண்டன னென்ப
கெண்டை பாய்தர1 வவிழ்ந்த
வண்டுபிணி யாம்பல் நாடுகிழ வோனே.
உலகியல்பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒருஞான்று போனதே கொண்டு, அவ்வழிப் பிரியாது உறைகின்றான் என்று அயற்பரத்தையர் பலரும் கூறினாரென்பது கேட்ட காதற்பரத்தை, அவர்பாங்காயினார் கேட்பத் தன்தோழிக்குச் சொல்லியது.

உரை :
தோழி, கேட்பாயாக. கெண்டைமீன் பாய்வதனால் மலர்ந்த வண்டு விரும்பும் ஆம்பல் மிக்க நாடு உடையோ னாகிய மகிழ்நன் ஒள்ளிய தொடியணிந்த முன் கையினை யுடைய யாம் அழுமாறு பிரிந்து சென்று, தன் பெண்டாகிய மனைவி வாழும் இல்லினையடைந்து பிரியாது தங்கினான் என அயற்பரத்தையர் கூறாநிற்பர்; இஃது என்னையோ? கூறுக என்றவாறு.

பெண்டிர் என்றது, அயற்பரத்தையரைப் பொறாமையாற் பன்மை வாய்பாட்டால் இழித்துக் கூறியது. ஊர் - தலைவி வாழும்மனை. இறைகோடல் - தங்குதல்; “வண்டிறை கொண்ட எரிமருள் தோன்றி”2 என்புழிப் போல. அயற்பரத்தையர் என்றது எஞ்சி நின்றது. பாய்தர என்புழித் தருதலைத் துணைவினை என்ப. மலர்ந்த பூ அவிழ்ந்தது போறலின், அவிழ்ந்த என்றார். இனி, முகைப்பதத்தில் பூவின் இதழ்கள் முறுக்கிப் பிணிக்கப் பட்டது போறலின், அப்பொருண்மை தோன்ற அவற்றைப் பிணி, தளை முதலிய வாய்பாட்டால் வழங்குப. அம்முகைகள் மலர்ந்த விடத்தும் அப்பொருண்மையே சிறப்ப, அவிழ்ந்த வாய்பாட்டாற் கூறல் மரபாகலின் அவிழ்ந்த என்றார் என்றுமாம்; “பிடவுத் தளை யவிழ”3 “பொதியவிழ் வைகறை”4 எனப் பிறாண்டும் சான்றோர் கூறுதல் காண்க. ஏனை வருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. “வண்டு பிணி யாம்பல்” என்றது, நெஞ்சு பிணிபொருள் என்றாற் போல நின்றது. கிழவோன் என்பது “ஆவோ வாகும் பெயருமா ருளவே”1 என்புழி, “உம்மை எச்சவும்மை யாகலான், அகரம் ஓகாரமாய்த் திரியும் பெயரும் உள என்றவாறு. கிழவன், கிழவள் என்பன “நாடு கிழவோன் கிழவோள் தேஎத்து எனவும் வரும்,” எனத் தெய்வச் சிலையார் கூறுமாற்றாற் கொள்ளப்படும். வழக்கினுள் கிழவன் என்றே வழங்குதலின், இதுவே நெறியாதல் துணிக. “ஸ்ரீ ராஜ ராஜேசுவரம் உடையார்க்கு ஸ்ரீ காரியஞ் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்”2 என வழக்கினுள் வருமாறு காண்க. அவன் பிரிவு உலகியல்பற்றி யன்றி எம்பால் அன்பின்மையான் அன்று என்பது அறியாது அயலார் கூறுவர் என்பாள், பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப என்றும், அவ்வாறு கொள்ளினும், உள்ளுறையால் அவன் மார்பு எமக்கும் உரித்தாம் என்றும் கூறினாள். தலைவன் தனக்குரிய பெண்டிர்பால் இறைகொளப் பிரிந்தானாயினும். அவனது பிரிவாற்றாது ஏனைப்பெண்டிர் அழுதல் இயல்பாதலின் யாம் அழப் பிரிந்து என்றாள். இது பிரிவாற்றாமை.

கெண்டை பாய்தற்கு மலரினும், ஆம்பல் வண்டினைப் பிணித்து நிற்பதுபோல, தன் மனைவியின் ஊடலைத் தீர்ப்பான் நல்கினும், அவனது மார்பு. எம்மாற் பிணித்துக் கொள்ளப்படும் இயைபுடைய தென்றாளாம். “வரிவே யுண்கணவன் பெண்டிர் காணத், தாருந் தானையும் பற்றி ஆரியர், பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல, தோள் கந்தாகக் கூந்தலிற் பிணித்து அவன், மார்புகடிகொள்ளே னாயின் ஆர்வுற்று, இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போற், பரந்து வெளிப்படா தாகி, வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே”3 எனப் பிறாண்டும் பரத்தை வெளிப்படையாய்க் கூறுமாறறிக. மெய்ப்பாடு: இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : அயற்பரத்தையரைக் கழறுதல்.


புலவிப் பத்து

இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் புலவிக் காலத்து நிகழ்ந்த கூற்றுக்களையே பொருளாகக் கொண்டு நின்றமையின், இஃது இப்பெயரினையுடையதாயிற்று. “மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும், இவை முதலாகிய இயனெறி திரியாது, மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும், பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே”1 என்றதனால், கற்பிற்கே சிறந்த மருதத்தின் கண், சிறப்புடைய புலவியே பொருளாக வந்தது.

காமப் புணர்ச்சிக்கண், துனி புலவி ஊடல் என்ற மூன்றும் காமவின்பத்துக்குச் சிறப்புத் தருவனவாம். இவற்றுள், துனி முதிர்ந்த கலாம் என்றும், புலவி இளைய கலாம் என்றும் பரி மேலழகர் கூறுவர். இவை காமக் கலவிக்கு முன்னர் நிகழ்வன. “துனிபுலவி யூடலின் நோக்கேன் தொடர்ந்த, கனிகலவி காத லினுங் காணேன்”2 என்றதனால், இவற்றின் பெயரும் முறையும் உணர்ந்து கொள்க.

புலவி மிக்கவழி, துனி தோன்றிக் காமவின்பத்தைச் சிறப்பிக் காமையின், அதன் இன்மை காமத்துக்கு ஆக்கம் என்றும், “ஊடுதல் காமத்திற் கின்பம்”3 ஆயினும், காமம் நீடுவதன்று கொல் என்னும் உணர்வை எழுப்பித் துன்பம் உறுவிக்கும் சிறுமையுடைமையின், ஊடலினும் புலவியே சிறப்புடையது என்றும் சான்றோர் கருதுப. “துனியும் புலவியும் இல்லாயின் காமம், கனியும் கருக்காயும் அற்று”4 என்றதனால், ஆசிரியர் திருவள்ளுவனார், துனியை விலக்கிப் புலவியின் சிறப் புடைமையை வலியுறுத்தல் காண்க. அன்றியும், “நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை, பூவன்ன கண்ணா ரகத்து” “உப்ப மைந்தற்றாற் புலவி அதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்”5 என்று கூறுமாற்றாலும் காம நுகர்ச்சிக்குப் புலவி அழகும் இன்பமும் பயக்குமாறு அறிக.

இனி, துனி முதலிய மூன்றனுள், புலவி நடுநிற்றல் அறம் முதலிய இம்மைக்குரிய உறுதிப் பொருள் மூன்றனுள், தான் எய்தியவழி இருதலையும் ஒருங்கு எய்துமாறு சிறந்த பொருள் நடுநிற்றல்போல என்க. எனவே, புலவியால் ஏனைத் துனியும் ஊடலும் எய்தும் என்பதாம். இதனைச் செய்யுட்களிற் காண லாம்; ஈண்டு விரிப்பிற் பெருகும்.

இனி, ஆசிரியர் பேராசிரியர், “புலவி யென்பது புணர்ச்சி யான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங் கருதிக் கொண்டுய்ப்ப தோர் உள்ள நிகழ்ச்சி” “ஊடலென்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியானன்றிக் கூற்றுமொழியான் உரைப்பது” “அங்ஙனம், ஊடல் நிகழ்ந்தவழி, அதற்கேதுவாகிய பொருள் இன்மை யுணர்வித்தல் உணர்வு எனப்படும். இல்லது கடுத்த மயக்கம் தீர உணர்த்துதல் உணர்த்துதல் எனவும், அதனை உணர்தலால் உணர்வு எனவும் படும்” என்றும், “புலவிக்காயின், உணர்த்தல் வேண்டா; அது குளிர்ப்பக் கூறலும் தளிர்ப்ப முயங்கலும் முதலாயவற்றான் நீங்குதலின்” என்றும் கூறி, “ஊடலிற் பிறந்த துனியும் பிரிவின்பாற் படும் என்பதூ உங் கொள்க ; என்னை, காட்டக் காணாது கரந்து மாறுதலின்” என முடிபு கூறினர். கூறினாராயினும், உள்ள நிகழ்ச்சியும், கூற்று மொழியான் உரைத்தலும் ஒரோவழி ஒற்றுமை யெய்தக் கூறப் படுதலும் உண்மையின், ஊடிய செய்கையினையும் சான்றோர் புலத்தல் வாய்பாட்டாற் கூறுவதுண்டு. அக்காலை அதுவும் புலவி யெனப்படுதற்கு இழுக்கின்மையின், துனித்தார் போலவும், ஊடினார்போலவும் புலந்து கூறுவனவும் புலவி யாதல்பற்றி இப்பகுதி புலவிப்பத்து எனப் பெயர் பெற்றது என்றுமாம்.

இனி, உயிராலும் உள்ளத்தாலும் குரவராற் செய்யப்படும் சிறப்பாலும் ஒற்றுமையுடைய தோழியது கூற்றும் தலைமகள் கூற்றேயாய்க் கருதப்படுமாகலின், புலவிக்கண் அவள் கூற்றும் இங்குத் தொகுக்கப்பெறும் என உணர்க.

    41. தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு  

வெண்பூம் பொய்கைத்தவ னூரென்ப வதனால்
தன்சொ லுணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யு மூர்கிழ வோனே.
கழறித் தெருட்டற் பாலராகிய அகம்புகல் மரபின் வாயில்கள் புகுந்துழித் தலைவனையும் பாணன் முதலாகிய பக்கத்தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது.

பழைய உரை :
அன்பில் முதலை என்றது தலைவனை நோக்கிய தெனவும், பொய்கையில் வெண்பூ என்றது, புறத்தொழுக்கத்திற்குத் துணை யாகிய அறிவிலா தாரை நோக்கியதெனவும் கொள்க.

உரை :
தான் ஈன்ற பார்ப்பினைத் தானே தின்னும் அன்பில்லாத முதலைகளோடு வெண்மையான பூக்கள் நிறைந்த பொய்கை யினையுடையது அவனது ஊர்; அதனால், அவ்வூர் கிழவ னாகிய தலைமகன். தான் தெளித்த சொல்லைத் தேறியிருந் தவர் மேனியைத் தன் பிரிவால் பொன்போலும் பசப்பினை எய்துவிக்கின்றான் என்றவாறு.

முதலை நீர்வாழும் உயிரினத்துள் வைத்துக் கூறப்படுதற்கு அமைந்ததாயினும், நிலத்தினும் இயங்கும் இயல்புடைமை யின், இதனைத் தவழ்வனவற்றுள் அடக்கினர் ஆசிரியர் தொல்காப்பியனார்; “தவழ்பவை தாமும் அவற்றோரன்ன”1 என்பது தொல்காப்பியம். “கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய், முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா”2 என்று தோலாமொழித்தேவர் கூறியதனை எடுத்துக்காட்டி, “முதலையை மா வென்பர்” என்று கூறி, “அவை மீன் எனப் படுவதல்லது, மா எனப்படா” என்றனர் அடியார்க்கு நல்லார் 3. நச்சினார்க்கினியரும், “முதலையும் சுறாவும் மீனாதலின், மாவென்றல் மரபன்று”4 என்பர். இக்காலத்து உயிர் நூலறிஞர் சுறாவினை மீனினத்துட்கொண்டு, முதலையை மீன் என் றார். அவர்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியாங்கு, முதலையைத் தவழ்வனவற்றுள்5 வைத்தே ஆராய்வர். “ஒடுங் கிருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும், கொடுந்தாள் முதலையும் இடங்கரும், கராமும்”6 என்பதன் உரையில், “இவை மூன்றும் சாதி விசேடம்” என்று நச்சினார்க்கினியர் கூறினர். இனி, இக் காலத்தறிஞர், முதலை வகை இருபதின் மேலும் உள என்பர். இவை ஊ னூண் வாழ்க்கைய1 வாயினும், பெறலருமையான் பெரும்பாலும் மீனுண்டே வாழ்கின்றன. “முதலைப் போத்து முழுமீன் ஆரும்”2 என இந்நூலுள்ளும் கூறுப. இம் முதலைகள் நீரிலும் நிலத்திலும் இயங்குவனவாகலின், அவ்வியக்கத்திற்கு ஏற்பச் சூடுங் குளிர்ச்சியும் எய்துமாறு அவற்றின் குருதியும், நீரின் அடியிற்போல நிலத்தினும் நடப்பதற்கேற்ப அவற்றின் கால் களும் அமைந்திருக்கின்றன. முதலைகள் முட்டையிட்டு வாழும் உயிர்வகை. இவை முறைக்கு இருபதுமுதல் நூறுவரை முட்டை ஈனும். ஈனுங்கால், சில முதலைகள் மண்ணிற் குழியொன்றை அகழ்ந்து, அதன்கண் தாம் ஈன்ற முட்டைகளை வைத்து மண் ணாலே மூடி அவை பொரிக்குமளவும் புறந்தருதல் உண்டு; சில அக் குழியினிடத்தே அடை காப்பனபோல இருந்து அமர்ந் துறையும். அக்குழியின் புறத்தே தரை பிளந்து தோன்றின் முட்டை பொரிக்குங் காலமாயிற்று என்று உணர்ந்து அம் முட்டைகளை வெளியே கொணர்ந்துவிடும். பின்பு, அம் முட்டைகளைத் தன் மூக்கின்கண் அமைந்த கூரிய உறுப்பினால் உடைத்துக்கொண்டு முதலையின் பார்ப்பு வெளிப்போதரும். அவ்வாறு போந்த வற்றுள், தாயுடன் தொடர்ந்து சென்று இரை தேடும் மதுகை யில்லாதவற்றைத் தாய் முதலையே உண்டுவிடும். நோயுற்றனவும் ஊறுபட்டனவு மாகிய பார்ப்புக்களைத் தாய்முதலை அன்பின்றித் தின்றுவிடும். இதனைக் கருதியே, ஈண்டும் ஆசிரியர் ஓரம் போகியார் “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்றார் போலும்.
அன்புடைமைக்குச் சிறப்புடைய எடுத்துக்காட்டாவது தாய்மையாகலின், அப் பண்பிற்கு மாறாய செயலுடைமை பற்றித் தாய்முதலையைத் தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை என்று காட்டினார். கொடுமை கூறற்குச் சிறந்த அன் பின்மை சுட்டி நிற்றலின், முதலையொடு என்புழி, ஒடு உயர்பின் வழித்தாயிற்று. வெண்பூ என்றற்கு ஏற்புடையன வெண் டாமரையும் வெள்ளாம்பலுமாயினும், உள்ளுறை பரத்தையைக் குறித்து நிற்றலின் சிறப்பில்லாத வெள்ளாம்பலே ஈண்டு வெண்பூ எனப்பட்டது என்க. அதனால் என்னும் சுட்டு முதலாகிய காரணக்கிளவி அவனுடைய ஊரது உடைமை சுட்டி நின்றது. ஊர்க்குரிய செயல், அவ்வூரை உடையோற்கும் உண்டென்பது எய்துவித்தற்கு, ஊர் கிழவோன் என்றார். பசப்பெய்திய மேனி பொன் போறலின், பொன் போற் செய்யும் என்று கூறப் பட்டது. போற் செய்யும் என்பன ஒரு சொல்லாய்ப் பிறவினைப் பொருள் தந்தன. மேனி பொன்போறல் மகளிர்க்கு இயற்கை யன்மையின் காரணமும் உடன் கூறப் பட்டது; “தொன்னலன் இழந்த என் பொன்னிறம் நோக்கி”1 என்பதனாலும் இப்பொருண்மை துணியப்படும்.

பிறவற்றின் பார்ப்பைத் தின்றல் அஃறிணையுயிர்கட்கு அமையும் என்பார்க்கும், தன்பார்ப்பினைத் தானே தின்றல் அமையாது என்னுங் கருத்தால், தன்பார்ப்புத் தின்னும் என்றும், அவ்வாறு அறன்கடை நின்ற உயிர்களைப் பொய்கைக்கண் உடைய ஊர்கிழவோனுக்குத் தன்னால் எம்பால் உளதாய மேனிநலம் கெடுமாறு அன்பிலனாதலும் அமையும் என்றற்கு, அன்பின் முதலையொடு என்றும், தலைவனது புறத்தொழுக்கம் காரணமாகப் பசந்த மகளிரின் முகம்போல விளர்த்துத் தோன்றித் தம்மைக் காணும் அவர் மனத்து அன்பு தோற்றுவிக்கும் சிறப் புடைய வெண்டாமரையினும், தம்மைப் பிரியாவாறு பிணித்து நிற்கும் பரத்தையர் இரவெல்லாம் துயிலாது நின்று காப்பது போல, விடியலினும் கூம்பாது நிற்கும் இயல்பினை யுடைய ஆம்பலை மிகவுடைய ஊரனாயினான் என்பதுபட வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்றும், தலைமகனது கொடுமை யொழுக்கத்தைத் தான் அறிந்துளாளாயினும், தன் பாங்காயினார் அவ்வொழுக்கத்தோடு அதற்குரிய பரத்தை யரியல்பும் அறிந்து கூறலின், அவர்மேல் வைத்து என்ப என்றும், அப்பெற்றி யினையுடைய தலைமகற்குச் சொல்லும் செயலும் ஒவ்வாமை யொழுகல் இயல்பாகலின், அதனை யுணராது அவன் தெளித்த சொல்லையே தேறியிருந்தமை தோன்றத் தன்சொல் உணர்ந் தோர் என்றும், எனவே, தேறி இருக்குங்கால் சிறந்த மேனி நலத்தின் ஆக்கத்திற்கு மாறாகிய பசப்பு நிகழ்தல் ஒருதலை யாகலின் மேனி பொன்போலுமாறு பசப்பிப்பன் என்றும், அவற்கு வாயிலாய்வந்தார் அனைவரும் அவனது கொடுமை யினை மறைத்து மீட்டும் அவன் சொல்லையே தேறியிருக்குமாறு கூறலின் அவரும் அகப்பட ஊர் கிழவோன் என்றும் கூறினாள். அக்கருத்துக்கு ஊர் என்றது முன்னிலைப் புறமொழி. இதனால், தலைமகற்கு வாயிலாய் வந்தாரையும் ஓராற்றால் இகழ்ந்தவாறு காண்க.

தான் ஈன்று புறந்தருதற்குரிய தன் பார்ப்பினைத் தானே தின்னும் முதலையினையும் அதனோடு உடனுறையும் வெள் ளாம்பலினையும் உடைய ஊர் என்றதனால், தான் தெளிவிப்பான் கூறிய சொற்களைத் தன் புறத்தொழுக்கத்தால் தானே சிதைத் தலையும், தன்கொடுமை நினையாது கூடியுறையும் அறிவில்லாத பரத்தையரையுமுடையன் என்றாளாம். மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல்.

இனி, பேராசிரியர், “தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை யென்பது இன்னும் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்பது தலைமகள் பசப்பு நிறம்பற்றி உவமையாயிற்று” என்றும், “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு ……. ஊர் கிழவோன் என்றவழி இன்ன திறத்தன் என்றதனாலே இத் தன்மைத்தாகிய ஊர் அனையான் எனச் சொல்லுதலும்” என்றும், “வெண்பூம் பொய்கைத்து அவனூர் எனத் தலைவன் ஊரின் கண் உள்ளது ஒன்றதனால், தலைவிக்கு உவமையைப் பிறப் பித்தவாறாயிற்று” என்றும், “தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை யென்பது தோழி கூற்று; என்னை? அவற்றின் செய்கை யெல்லாம் அறியாளன்றே தலைமகள், பெரும் பேதையாகலின் என்பது”1 என்றும் கூறுவர். மற்று, இதன்கண் தலைமகள் பெரும் பேதை என்பது ஒக்குமாயின், அறிவிக்க அறியும் அறிவமைதி யுடைமையால் தலைவி பிறர் கூறிய வாய்பாட்டால் அவனூர் என்ப என்று கூறுகின்றாளென்பது எய்துதலால், தோழி கூற் றென்றல் நிரம்பாமையறிக.

இனி, நச்சினார்க்கினியரும், தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்ப என்றாற்போலத் தலைவன் கொடுமையும் தலைவி பேதைமையும் உடனுவமம் கொள்ள நிற்கும் ”1 என்பர். எனவே, இவர்க்கும் இது தோழி கூற்று என்றலே கருத்தென்பதும், அது நிரம்பாமையும் உணர்ந்து கொள்க.
இனி, ஐங்குறுநூற்று அச்சுப்பிரதி, இப்பாட்டின் இரண் டாமடி “வெண்பூம் பொய்கைத் தவனூ ரென்ப” என நேரடி யாகக்கொண்டு, “அதனால்” என்ற சீரினைக் கூனாகக் கொண் டுளது, “சீர் கூனாதல் நேரடிக் குரித்தே”2 என்ற சூத்திரத்தின்கண் ஆசிரியர் தொல்காப்பியனார் கூனாகிய சீர்க்கு இடம் வரைந்து கூறிற்றிலராயினும், நச்சினார்க்கினியர், “ஏற்புழிக் கோடல் என்பதனால் அடி முதற்கட் கோடும்” என்பராகலின், அது பொருந்தாமை பெறுதும். மற்று, “கூன்முண் முள்ளிக் குவிகுலைக் கழன்ற” என்ற அகப்பாட்டினுள் 3 “இவை பாராட்டிய பருவமு முளவே, இனியே” என்றும், “தீம்பால் படுதல் தாமஞ் சினரே, யாயிடை” என்றும், “இரும்பிழி மகாஅர்இவ் வழுங்கன் மூதூர்” என்னும் அகப்பாட்டினுள் 4 “நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே, யதனால்” என்றும் சீர் கூனாகி நேரடியீற்றில் வந்தன, முறையே, “புதல்வற் றடுத்த பாலொடு தடைஇ,” “கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடை” எனவும், “அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து” எனவும் முன்னர் நின்ற நேரடி முதற்கண் வந்தன எனப்படும் என்க. ஈண்டு அவ்வாறு நிற்றற்கு முன்நின்ற அடி நேரடியன்மையும் அறிந்து கொள்க.

    42. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ  

யாண ரூரநின் மாணிழை யரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான் என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி அவன் தன்னில்லத்துப் புகுந்துழித் தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது.

உரை :
புதுவருவாயினையுடைய ஊரனே, மாண்ட இழைகளை அணிந்த நினக்குரியளாகிய அரிவை காவிரி யாற்றின் பெருக்குப் போல் விரிந்த நின்னுடைய மார்பினை மிகவும் விலக்குதலைத் தொடங்கினாள்; அவள் கள்ளுண்ட களிப்பு மேன்மேலும் மிக்குற மயக்கம் எய்தினாள் போலும் என்றவாறு.

அரிவை, தொடங்கியோள், மயங்கினள்கொல்லோ என இயையும். மகிழ், முதனிலைத் தொழிற் பெயர்; மகிழ்தல், கள்ளுண்டு மயங்கல். “மகிழக் களிப்பட்ட தேன்றேறல்”1 என்றதனாலும் இப்பொருண்மை துணியப்படும். உண்டு பயின்றவழிக் கள்ளும் மயக்கம் செய்யாதாகலின் மிகச் சிறப்ப என்று சிறப்பித்தார். யாணர் - புதுமை; ஆகுபெயரால், நாளும் இடையறாது பெருகும் செல்வ வருவாய் மேற்று; “அறாஅ யாணர் - அகன்றலைப் பேரூர்”2 என்புழிப்போல. ஏனையிடங் களிலும் இதுவே கூறிக்கொள்க. அரிவை என்றது ஈண்டுப் பரத்தையை. தம்மை மறந்தாரைப் பிரியா வகையிற் பிணிக்கும் கருவியாய்ப் பயன்படும் சிறப்புடைமையின், அவரணியும் இழையினை மாணிழை என்றார்; “ஆய்தொடியார்”3 என்ப தற்கும் பரிமேலழகர் இப்பொருளே உரைத்தனர். பரத்தையை இழித்துக் கூறல் கருத்தாகலின் இது குறிப்புமொழி; இனி, உயர்த்திக் கூறியதாகக் கொள்வழியும் இஃது அவள் மனத்துப் புலவிக் குறிப்பினையே உணர்த்தும் என அறிக. “கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத் தூடல் உண்டென மொழிப”4 என்பது பொருளியல். பூவும் சாந்தும் சுமந்து பரந்து விளங்குதலின் காவிரி மலிர்நிறை கூறினர்; “புதுவது வந்த காவிரிக் கோடுதோய் மலிர்நிறை”5 என்றும், “செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக், காவிரி”6 என்றும் சான்றோர் காவிரியினையே கூறுதல் காண்க.

பரத்தையர் சேரிக்கண் நிகழ்ந்ததனை மறைத்துத் தலைவி பால் எய்தியிருந்த தலைமகற்குத் தலைவி தான் அறிந்தமை தோன்றச் சொல்லெடுக்கின்றா ளாகலின், மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ என்றாள். இதனால் தலைவன் மனத்துச் சூழ்ச்சி1 பிறந்தது தலைமகன் பரத்தையிற் பிரிந்து நாளும் புதுவோரை மேவி ஒழுகுகின்றானாதலைக் குறிப்பாற் காட்டு வாள் யாணர் ஊர என்றும், பரத்தையர் அவற்குரியராக, அவருள் ஒருத்தி செய்ததனைத் தான் அறிந்தமை தோன்ற நின் மாணிழை அரிவை என்றும், காவிரி மலிர்நிறை மகளிர் பலரும் படிந்தாடும் பான்மை யுடைத்தாதல் போல, நின்மார்பு நின் பெண்டிர் பலர்க்கும் உரித்தாயிற்று என்றற்குக் காவிரி மலிர் நிறை அன்ன நின்மார்பு என்றும், அதனை அறியாது புலந்து தன் கையாலும் தானையாலும் கோதையாலும் நின்னைப் பலகாலும் சிறைப்ப, நின்மார்பு சிறைப்படாது அவளைச் செறியச் சென்றது என்பாள், நனிவிலக்கல் தொடங்கினாள் என்றும், அக்காலை, அவளை ஊடலுணர்த்தும் வாயிலாக நீ செய்தனவும் செப்பினவும் உணரா இயல்பினரும் எளிதில் உணரும் பான்மைய வாகவும் அவள் உணராது விலக்குதலே பொருளாகத் தொடங்கி யதற்குக் காரணம் அவள் உணர்வு ஒழிந்தமையன்றிப் பிறிதில்லை என்பாள், மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள்கொல் என்றும் கூறினாள்.

இது, “புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெயத் தருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்”2 தலைவி புலந்து கூறியது. இதன்கண், யாணர் ஊர என்றது புதுவோர் சாயற்கு அகன்றவாறும், காவிரி மலிர்நிறை யன்ன மார்பு என்றது புகன்ற உள்ளமுடையமையும், நனிவிலக்கல் தொடங்கியோள் என்றது புலம்பு நனி காட்டலும், மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் என்றது இயன்ற நெஞ்சம் தலைப்பெயத் தருக்கி எதிர்பெய்து கூறலும், இவ்வாறு தன்போல்வாள் ஒருத்தியைக் கூடிய துணையானே புலந்து வேறுபடுபவள் தன்னின் வேறாய என்மனை வருதலை அறிவாளேல் பிறிது படுவாளாகலின் அவள் பாலே செல்க என மறுத்தலும் சுட்டி நின்றவாறு காண்க. மெய்ப்பாடு: வெகுளியைச் சார்ந்த பெருமிதம். பயன்: புலத்தல்.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனைத் தோழி கூற்றாகக் கொண்டு, “உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே”1 என்பதற்கு உதாரணமாகக் காட்டி, “இதனுட் காவிரிப் பெருக்குப்போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை எனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க” என்பர். அவ்வாறு விலக்கு தற்குக் காரணம் மகிழ்மிகச் சிறத்தலாற் பிறக்கும் மயக்கம் போலும் என்கின்றா ளாகலினாலும், அஃது உயர்மொழிக்கிளவி யாகாமை யாலும் அவர் கூறியது பொருந்தாமை உணர்ந்து கொள்க.

விலங்கல் என்றும் பாடமுண்டு. அதனால் சிறப்புடைப் பொருட்பேறு இன்று.

    43. அம்பணத் தன்ன யாமை யேற்றிச்  

செம்பி னன்ன பார்ப்புப்பல துஞ்சும்
யாண ரூர நின்னினும்
பாணன் பொய்யன் பலசூ ளினனே.
பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப, மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது.

பழைய உரை :
யாமைப் புறுத்து ஏறிப் பார்ப்புப்பல துஞ்சும் ஊர என்றது, மார்பில் துயில்கின்ற புதல்வரையுடையாய் என்றவாறு. மகப்பெற்று வாழ்வார்க்குப் பொய்கூறல் ஆகாது என்பதாம்.

உரை :
செம்புகளை யொக்கும் யாமைப் பார்ப்புக்கள் மரக்கால் போலும் தாயாமையின் மேல் ஏறியுறங்கும் யாணரூரனே, நின்னினும் நினக்கு வாயிலாகப் புகுந்த பாணன் பொய்பல கூறுதலும் சூள்பல செய்தலும் உடையன் காண் என்றவாறு.

அம்பணம் - மரக்கால்; இதனைத் தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்கு நல்லார். “பறைக்கட் பராரையர் அம்பண அளவையர்”1 என்பதனைப் “பறைக்கட் பராரை அம்பணம்”என்று கொண்டு, “பட்ட மணிந்த வாயையும் பரிய அரையையுமுடைய அம்பணவளவை” என அதன் அரும்பதவுரைகாரர் கூறுவர். யாமைப் பார்ப்புக்களின் அடிப்பகுதி செம்மை நிறம் பெற்று ஓட்டின்கட் பெய்து நிரப்பி இறுகுவித்த செம்பின் குழம்பு போறலின், செம்பின் அன்ன பார்ப்பு என்றார்; “கம்மியர் செம்புசொரி பானையின் மின்னி”2 என்றதனாலும், செம்பு அதன் குழம்பினை உணர்த்துமாறறிக. இனி, அம்பண வளவையின் வாயில் அணிந்த செம்பினால் இயன்ற பட்டம் போல, யாமைப் புறத்தே கிடந்து துஞ்சுதலின் இவ்வாறு கூறினார் எனினுமாம். இன்னுருபு, உறழ்ச்சி. பாணனது இயல்பு பாணற் குரைத்த பத்தின் முன்னுரைக்கட் கூறப்படும். பாணன் தலைமகற்கு வாயிலாய் வந்து, அவனது காதன்மையும் வரவுங் கூறி அவற்குரிய மகளிரின் சிவப்பாற்றுவிக்குமிடத்து, அவன் சொல்லினை மகளிர் தேறியிருத்தலும், அவன் கூறியாங்குத் தலைமகன் வாராது தாழ்த்தலும், அதனான் அம்மகளிர் ஆற்றாது வருந்தி வேறு படுதலும் அகவொழுக்கத்தில் நிகழ்தல் இயல்பாகலின், அவர்கள் அவன் சொற்களைப் பொய்யென மொழிதல் இயல்பு. “நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம், பூத்தன பாணாநின் பாட்டு”3 “கைகவர் நரம்பின் பனுவற் பாணன், செய்த அல்லல் பல்குவ வையெயிற்று, ஐதகல் அல்குல் மகளிர்இவன், பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்” “பாணன் கையதை, வள்ளுயிர்த் தண்ணுமை போல, உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே”4 என்று சான்றோர் செய்யுட்களிற் பயின்று வருதல் காண்க. சூள் என்றது ஈண்டு வன்புறையை.

புறத்தே ஒழுகித் தன் மனையகம் போந்து புதல்வனைத் தாங்கி நின்ற தலைமகனை நோக்கி, “புறத்தொழுக்கினரும் அவர்கட்குத் துணையாயினாரும் பொய்ம்மொழியும், பொய்ச் சூளும் செய்தொழுகுவர்; ஆயினும், அச்செய்கை மகப்பயந் தார்க்குத் தக்கதன்றாக, அதனை நினையாது நீயும் நின் பாணனும் அது செய்து ஒழுகுகின்றீர்கள்” என்றற்குத் தலைமகனையும் பாணனையும் ஒருங்கெடுத்துத் தலைமைக் குணங்களால் உயர்ந்த நின்பால் பொய்யொழுக்கம் தோன்றினமையின், நின் குறிப்புவழி ஒழுகும் பாணனிடத்தும் அது தோன்றிற்று என்பாள், நின்னினும் என உறழ்ந்தும், நின் பொய்யொழுக்கத்திற்குத் துணையாதல் தனக்குக் கடன் என்பது பற்றிப் பாணன் அது செய்கின்றானாயின், அதனால் யாம் ஆய்நலக்கேடும் ஆறாத துயரும் அடைய எய்தினோம் என்பாள், பாணன் பொய்யன் பல சூளினன் என்றும், சூளுறுகால், தெய்வத்தினை முன்னிலையாக்கிக் கூறு வதியல்பாகலின், அச் சூள் பொய்யினும் கொடிதாதல் நோக்கிச் சூளுறவினைப் பிரித்தும், பலகாற் போந்து பொய்யும் சூளும் செய்தான் என்பாள் பல பொய்யன் பல சூளினன் என்றும் கூறினாள். இதனால் பாணனை வாயில் மறுத்ததற்கு எதுவும் கூறியவாறாற்று. “கொண்க எம்வயின், மாணலம் மருட்டும் நின்னினும், பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே”1 எனப் பிறாண்டும் பாணனது கொடுமை கூறுமுகத்தால் அவற்கு வாயில் மறுத்து மறைமுகமாக தலைமகனது கொடுமை கூறப்படுமாறு காண்க.

யாமையின்மீது அதன் பார்ப்பு ஏறித் துஞ்சும் என்றதனால், தலைமகன் மார்பின்மீது அவன் புதல்வன் அமர்ந்து துயில் கின்றமை பெற்றாம்; பெறவே, மகப்பயந்து வாழ்வார்க்கு அம்மக்கள் தமது மார்பின்மீது ஏறி விளையாட்டயர்தலும், அமர்ந்து கிடந்து துயிறலுமாகிய இச்செயல்களாற் பிறக்கும் இன்பத்திலும் இம்மைக்கண் சீரியது பிறிதின்மையின் அதனைச் சுட்டி உள்ளுறுத் துரைத்த வாறாயிற்று; “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்”2 எனத் திருவள்ளுவனாரும், “இன்னகை, மனை யோள் துணைவி யாகப் புதல்வன், மார்பின் ஊரும் மகிழ்நகை யின்பம்”3 எனப் பேயனாரும் கூறுதல் காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

    44. தீம்பெரும் பொய்கை யாமையிளம் பார்ப்புத்  

தாய்முக நோக்கி வளர்ந்திசி னாஅங்
கதுவே யையநின் மார்பே
அறிந்தனை யொழுகுமதி யறனுமா ரதுவே.
பரத்தையர் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் தன் மனைக் கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

பழைய உரை :
நின் மார்பாற் கொள்ளும் பயனின்றிக் காட்சி எய்தவும் பெறுகின்றிலள் எனப் புலந்து கூறியவாறறிக.

உரை :
ஐய, இனிய நீர்மிக்க பொய்கைக்கண் வாழும் யாமையின் இளம்பார்ப்புக்கள் தம்தாய் தம்மை ஓம்பாவிடினும் தாம் அதன் முகநோக்கி வளர்ந்தது போல, இவள் நீ நல்காயாயினும் நின் மார்பினையே நோக்கி வாழும் இயல்பினளாயினள்; நின் மார்பு அத்தன்மையதாகும். ஆகலின், நீ அதனை அறிந்து ஒழுகுவாயாக; அஃது இவள் உயிர் வாழ்க்கைக்கு ஆக்க மாவதேயன்றி நினக்கு அறமுமாம் என்றவாறு.

தீம்பெரும் பொய்கை என்புழி, பெருமை இடத்தினையும், இனிமை இடத்து நிகழ்பொருளினையும் சிறப்பித்து நின்றன. யாமை தவழ்வனவற்றுள் ஒன்றாதலின், அதன் பிள்ளையைப் பார்ப்பு என்றார். “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன”1 என்பது மரபியல். இது மேலதற்கும் ஒக்கும். தான் ஈன்ற பார்ப்பினைத் தாயாமை ஓம்புதல் இல்லை என்றும், அதன் கணவனே அது செய்யும் என்றும் பண்டையாசிரியன்மார் கூறுவர். உவமைக் கேற்பப் பொருள் வருவிக்கப்பட்டது. அத் தன்மையாவது, தன்னை நோக்கி வாழ்வாரை வாழ்விக்கும் தன்மை. நின்மார்பு அதுவே என்றதற்கு, நின்மார்பு நயந்த இவளுக்கு நீ செய்யும் அருள், தான் ஈன்ற பார்ப்புக்குத் தாயாமை அருளேயாகும் எனினுமாம். வளர்ந்திசின் என்பது இறந்தகால முற்றுவினைத் திரிசொல். “இகுமுஞ் சின்னும் ஏனை இடத் தொடும், தகுநிலை யுடைய”2 என்றதனாற் படர்க்கைக்கண் வந்தது. மதி: முன்னிலையசை. உம்மை: எச்சவும்மை. ஆர்: அசை நிலை; “அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல்”1 என்ப.

யாமைகளும் முதலை போல நெடுங்காலம் வாழும் உயிர் வகையாகும். ஊறின்றி வளரவிடின் முதலைகள் முந்நூறு யாண்டும், யாமைகள் முந்நூற்றைம்பது யாண்டும் உயிர் வாழும் என்று உயிர் நூலறிஞர் கூறுவர். இவை நீரினும் நிலத்தினும் இயங்குவனவாகலான், அவ்வவ்விடத்துத் தட்ப வெப்பங்கட் கேற்ப இவற்றின் உடற் குருதி அமைந்து மாறும் இயல்பிற்று. யாமை நாற்பதின் மேலும் வகைப்படும் என்றும், இவற்றுள் மிகப் பரியன பசிபிக் இந்து ஆகிய இருபேரளக்கரிலும் வாழ்கின்றன என்றும், அவற்றுட் சில ஐம்பத்தைந்து அங்குல நீளமும் ஐஞ் ஞூற்றைம்பது பவுண்டு நிறையும் உடையன என்றும் கூறுவர். பிரேசில் (Brazil) நாட்டு யாமைகள் இரண்டடி நீளமுடைய என்பர்.

யாமை இராக்காலங்களில் நிலத்திடை வந்து மேயும். சினையீனுங் காலத்தில், நீராலும் பிறவற்றாலும் இடையூறு நிகழாததோர் தனியிடங் கண்டு ஆங்கொரு குழி செய்து அதன் கண் தன் சினைகளை ஈன்று மணலால் மெத்தென மூடிவிட்டுப் பின் வேறொருவழியால் நீர் நிலையை அடையும். சினையீனும் காலம் எய்தியவழியும், அக்காலத்து ஈன்றவழித் தனக்காதல் தன் சினைகட்காதல் ஊறு நிகழும் என்று தோன்றின், அது நிகழாமைக்குரிய காலம் வருமளவும், சினையீனாது நின்று பெயர்த்துக் கருவுயிர்க்கும் பெற்றிமையுடையது! சினையீன்ற யாமை முன்னர்ப் போந்த வழியே மீளாமல் பிறிதொரு வழியாற் சேறல், பகையுயிர்கள் தன் சுவடுபற்றிப் போந்து தன் சினைகட்குத் தீங்கு விளைவிக்கும் என்பது கருதிப்போலும்! இதனைக் கூர்ந்து நோக்கிய நம் பண்டைச் சான்றோர், யாமை தன் சினை யினை மணலிடைப் புதைத்து வைத்தலையும், அக்காலை அம் முட்டைகள் தாயின் துணையின்றித் தமித்துக் கிடத்தலையும் விதந்து, “அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக், குப்பை வெண்மணற் பக்கஞ் சேர்த்தி, நிறைச்சூல் யாமை மறைத்தீன்று புதைத்த, கோட்டுவட் டுருவின் புலவுநாறு முட்டை, பார்ப்பிட னாகு மளவைப் பகுவாய்க். கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப் பன்”1 என்றும், “தாயில் முட்டை போல உட்கிடந்து, சாயி னல்லது பிறிதெவன் உடைத்தோ, யாமைப் பார்ப்பின் அன்ன, காமம் காதலர் கையற விடினே”2 என்றும் கூறினர். இக் காட்டியவற்றுள், தாயாமை ஈன்ற சினைகளை அதன் கணவனே அவை பார்ப்பாகுமளவும் புறந்தருவதை இதுகாறும் நிகழ்ந்துள்ள ஆராய்ச்சி காட்டவில்லை; எதிர்கால ஆராய்ச்சியால் இதன் உண்மை துணியப்படும். யாமையைப் பற்றிப் பண்டையோர் குறிப்பன பலவும் மெய்யாதல் விளங்குதலின் யாமையின் கணவன் செயலைப் புனைந்துரை யென விலக்குதற்கு இடமில்லை. வெள்ளாங் குருகின் சேவல் அது போல் செய்வதாக ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். அதனை வெள்ளாங் குருகுப்பத்தின்கட் 3காண்க.

முட்டை பொரித்தவுடன், யாமைப் பார்ப்புக்கள் மணலைக் கிளைத்துக்கொண்டு வெளிவரும். அவற்றிற்கு அக்காலத்திற் கண் முதலிய பொறி இல்லையாயினும், வாயினால் மணலைக் கறித்துக் கொண்டே நீர்நிலையை அடையும். காந்தவூசியை எவ்வழித் திருப்பினும் அது வட திசையே நோக்கி நிற்றல்போல, யாமைப் பார்ப்புக்கள் நீர்நிலையை அடைதற்குரிய நெறியைப் பற்றாதவாறு எத்துணை இடையீடு படுப்பினும், அவை அவ் வனைத்தையும் கடந்து நீர்நிலையைத் தவறாது அடையும் இயற்கை ஒண்மை படைத்துள்ளன. மற்று, தமிழாசிரியன்மார் இவை தாய்முகம் நோக்கி வளர்கின்றன என்றது, தம் தாய் வாழுமிடம் அந்நீர்நிலையே யாகலின், ஆண்டு அடையின், தம் தாயினை அடைதல் கூடும் என்ற கருத்தினாற் போலும். இவ் யாமையின் ஊனும் ஓடும் பிறவும் பயன்படுமாற்றினை ஈண்டு விரிப்பிற் பெருகும். வேறு விரிந்த நூல்களுட் கண்டு கொள்க.

பரத்தையர் மனைக்கண் பன்னாள் தங்கிவந்த தலைமகற்குத் தலைமகளின் மெல்லியற் பொறையை விளங்கக் கூறுதல் தோழி கருத்தாகலின், உவமமும் ஓர் அளவையாதல் குறித்து, யாமைப் பார்ப்பின்மேல் வைத்து உவமித்தாள். தாய் பயந்த பார்ப்பினை யாமைக்கணவன் ஓம்புதல் போல, நின்பொருட்டு இவள் கொண்ட காமத்தினை நீ ஓம்பாயாயினும். அதனை நின்மார்பின் காட்சியே செய்யும் என்பாள், அதுவே ஐய நின் மார்பே என்றாள். “காதலர். நல்கார் நயவா ராயினும், பல்காற் காண்ட லும் உள்ளத்துக்கு இனிதே”1 என்றும், “வேட்டோர்க்கு , அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு”2 என்றும் சான்றோர் கூறிய வற்றாலும் இக்கருத்து அறியப்படும். தன் மார்பின் இயல்பு அஃது என்பதை அறிந்தவழி, தலைமகள்பாற் பிறந்த காமம் அழியாவகை ஒழுகு தல் தனக்கு அறம் என்பது தலைமகனால் உணரப்படு மாகலின், அறிந்தனை ஒழுகுமதி அறனுமா ரதுவே என்று கூறினாள். “உறுகண் ஓம்பல் தன்இயல் பாகலின், உரிய தாகும் தோழிகண் உரனே”3 என்றதனால் இது தோழி மாட்டு அமையும் என அறிக.

இது, “பிழைத்து வந்திருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்”4 தோழி நிகழ்த்தும் கூற்று வகையாகும். முன்னர் வருவதற்கும் இஃதொக்கும். இதன்கண், அறிந்தனை ஒழுகுமதி என்றதனோடு அமையாது அறனுமா ரதுவே என்றதனால் நெருங்கிக் கூறியவாறு காண்க. மெய்ப் பாடும் பயனுமவை.

ஐயன் மார்பே என்று பாடமாயின், இப்பாட்டு அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்த தலைமகளை அடங்கக் காட்டு தற்கண், தலைவன் மார்பினது இயல்பு அஃது என்றும், அதனை அறிந்தொழுகுதல் அவட்கு அறம் என்றும் தோழி கூறியவாறாம்.

    45. கூதி ராயிற் றண்கலிழ் தந்து  

வேனி லாயின் மணிநிறங் கொள்ளும்
யாறணிந் தன்றுநின் னூரே
பசப்பணிந் தனவான் மகிழ்நவென் கண்ணே.
நெடுநாள் பரத்தையரிடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனை வயிற் சென்றுழித் தோழி சொல்லியது.

பழைய உரை :
கலங்குதலும் தெளிதலும் உடைத்தாகிய யாற்றின் இயல்பும் பெறாது என்றும் பசந்தே ஒழுகுகின்றாள் இவள் என்பதாம்.

உரை :
மகிழ்ந, கூதிர்க்காலத்தில் நீர் பெருகுதலால் தண்ணி தாய்க் கலங்கி, வேனிற் காலத்து அஃதின்மையால் தெளிந்து நீலமணியின் நிறத்தைப் பெறும் யாற்றினால் நின்னுடைய ஊர் அழகு பெற்றது. அவ் யாற்றின் இயல்பு தானும் இன்றி இவள் கண்கள் எஞ்ஞான்றும் பசப்பினால் அழகு பெற்றன காண் என்றவாறு.

கூதிர், அறுவகைப் பெரும்பொழுதினுள் ஒன்று; ஐப்பதியும் கார்த்திகையும் அதற்குரிய திங்களாம். தண்கலிழ் - கலங்கிய நீர்ப்பெருக்கு. கலங்கிய நீர் குளிர்ந்தே இருக்குமாகலின், தண் கலிழ் எனப்பட்டது. வேனில் - இளவேனில், முதுவேனில் என இருவகைத்தாம்; அவற்றிற்கு, முறையே சித்திரை வைகாசித் திங்களும், ஆனி ஆடித்திங்களும் உரியவாம். வேனிலில், மழை யின்மையான் மேன்மேலும் வருவாய் இன்றாதலின், நின்ற நீர் தெளிந்து நீலமணி போறலின், வேனிலாயின் மணிநிறம் கொள்ளும் என்றார். தெளிந்த நீர் நீலமணி போறலை, “மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப”1 என்பதனாலு மறிக. ஊர் யாறணிந்தன்று என்றும், கண் பசப்பணிந்தன என்றும் இயையும். தலைவி உறுப்பினைத் தோழி தன்னுறுப்பாகக் கூறியது, “எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம், அல்லா வாயினும் புல்லுவ வுளவே”2 என்றதனால் அமைந்தது.

“நின் ஊரணிந்தயாறு கூதிரிற் கலக்கமும், வேனிலில் தெளி வும் பெறுதல்போல, நின் தோளை மணந்த இவளும் நீ செய்யும் பிரிவு புணர்வுகளால் இடும்பையும் இன்பமும் எய்துதற்குரியள்” என்பதனைக் கூதி ராயின் தண்கலிழ் தந்து, வேனி லாயின் மணி நிறங்கொள்ளும் யாறணிந் தன்றுநின் னூரே என்பத னால் எய்துவித்து, அவன் புறத்தொழுக்கத்துக் கொடுமையைச் சுட்டி, “பரத்தை மனைக்கண் நீ நெடிது தங்கினமையின், இவள் ஆற்றாது, அவ்யாற்றியல்பும் பெறாது எஞ்ஞான்றும் பசத் தலையே பொருளாகக் கொண்டாள்” என்பாள், பசப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே என்று தோழி கூறினாள். வாழ்க்கைக்கண் புணர்வும் பிரிவும் நிகழ்தல் இயல்பாகலின், அவை காரணமாக முறையே இன்பமும் இடும்பையும் எய்துதல் தலைமக்கட்கு உரித்து என்றாள். “வருத்த மிகுதி சுட்டுங் காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்”1 என ஆசிரியர் குறிப்பது காண்க. இவ்வுரிமை, இன்பமும் இடும்பையும் புணர் வும் பிரிவும், நண்பகலமையமும் இரவும் போல, வேறுவே றியல வாகி மாறெதிர்ந் துள”2 என்புழி உவமையாலும் பெறப்படும். மெய்ப்பாடும் பயனும் அவை.

இனி, இப்பாட்டின்கண் என் கண்ணே என்றதற்கு உரைக்கும் வழுவமைதி வலிந்து கோடலாய்த் தோன்றுதலாலும், பிறாண்டும், “ஐயவி யன்ன சிறுவீ ஞாழல், செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த், துறையணிந் தன்றவர் ஊரே இறையிறந்து இலங்குவளை நெகிழச் சாஅய், புலம்பணிந்தன்று அவர் மணந்த தோளே”3 என இக் கருத்தமைந்த பாட்டுத் தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டிருத்தலாலும் இதனைத் தலைவி கூற்றாகக் கோடற்கும் இயைபுண்டு என அறிக.

    46. நினக்கே யன்றஃ தெமக்குமா ரினிதே  

நின்மார்பு நயந்த நன்னுத லரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ யருளா தாண்டுறை தல்லே.
மனைக்கண் வருதலைப் பரத்தை விலக்க விலங்கிப் பின்பு உலகியல்பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது.

பழைய உரை :
இவ்வாறு வருதலின் வாராமையே இனிது என்பதாம்.

உரை :
பெரும, நின்மார்பினை விரும்பிய நல்ல நெற்றியினை யுடைய அரிவையாவாள் விழைந்து செய்த குறிப்பினை யுடையையாய் இங்கு வந்தருளுவ தொழித்து, வாராது அவள் மனைக்கண்ணே தங்குதல் நினக்கே யன்றி எமக்கும் இனிதாம் காண் என்றவாறு.

நினக்கே யன்று அஃது எமக்குமார் இனிதே என்புழி, ஏகாரம் முன்னது பிரிநிலையும் பின்னது தேற்றமுமாம். “இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி, நின்ற இகரம் உகரமாதல், தொன்றியன் மருங்கிற் செய்யுளுள் உரித்தே”1 என்புழித் தொன்றி யல் மருங்கின் என்றதனால், அன்றி யென்னும் வினையெஞ்சு கிளவி அன்று என வந்தது. அஃதென்னும் சுட்டு, செய்யுளா தலின், முற்பட வந்தது. வேண்டிய குறிப்பினையாகி என்புழி, வேண்டல் தலைமகள் பரத்தை என்ற இருவர்பாலும் நின்ற விழைவு தோற்றுவித்து, அவன் அவள் குறிப்பினனாதற்கு ஏதுவு மாதலின் ஆக்கம் வந்தது. அருளாது என்னும் எதிர்மறை வினையெச்சம் உறைதல் என்னும் வினைப்பெயரின் வினை கொண்டது. ஈண்டு, ஆண்டு என்பன முறையே தலைமகன் மனையையும் பரத்தை மனையையும் சுட்டி நின்றன.

மனைக்கண் வருதலைக் கருதிய தலைமகனை அவ்வாறு வாராவகைப் பரத்தை விலக்கியது தான் அறிந்தமை தோன்ற, நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை என்றும், “அவள் விலக்க விலங்கி வாராது தவிர்த்த நீ இன்று ஈண்டுப் போந்தது, உலகியல் பற்றியல்லது இவளை அருளும் குறிப்புப்பற்றி அன்று” என்பாள் வேண்டிய குறிப்பினையாகி என்றும், “அக் குறிப்பினால் இதுபோது செய்யும் தலையளிதானும் அவளது குறிப்பு வழிப் பட்டதேயன்றிப் பிறிதின்மையின், அவள் மனைக்கண் தங்குதலே நினக்கு இன்பமாவது” என்பாள், ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல் என்றும், அது செய்தலால் நினக்கும் நின் பரத்தைக் குமே இனிதாம் எனக் கருதற்க, நின்னின் யாம் வேறல்லேமாய் நீ எய்துவனவெல்லாம் எய்த நிற்கின்றேம் என்பாள் நினக்கே யன்று அஃது எமக்கும் இனிதே என்றும் கூறினாள். எமக்குமா ரினிதே என்பது குறிப்பு மொழி.

நீ மனைக்கண் வருதலைப் பேணாது நின்பரத்தை விலக்க விலங்கிப் பின் அவள் குறிப்பினையாகி வருதல் எமக்கு நாணுத் தருமாகலின், ஆண்டு உறைதலே தக்கது எனப் புலந்து கூறு கின்றாளாகலின், இது, “பேணா ஒழுக்கம் நாணிய பொருளின் கண்”1 தோழி கூறுவதன் பாற்படும். மெய்ப்பாடும் பயனு மவை.

இனி, ஆசிரியர் இளம்பூரணர், “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”2 என்ற சூத்திரத்துத் “தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும்” என்ப தற்கு உதாரணமாக்குவர்; நச்சினார்க்கினியர், அச் சூத்திரத்துக்3 “கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின் கண்ணும்” என்பதற்குக் காட்டினர். இக் கூற்றுவகை இரண்டும் தலைவிக்குரிய வாகலின், இப்பாட்டுத் தலைவி கூற்று என்பது அவர்கள் கருத்தாதல் அறிக. தலைவி கூற்றாயின், உலகியல்பற்றித் தன் மனைக்குப் போந்தான் பிரியான் என்பதை உணர்ந்துவைத்தும், நீ அவள் குறிப்பினையாய் வருதலின் வாராது ஆண்டே சென்று உறைக எனக் கூறுதலான், இஃது அச்சூத்திரத்துச் “செல்லாக் காலைச் செல்கென விடுத்தற் கண்ணும்” என்புழி நிகழும் கூற்று வகையாதல் காண்க. அக் காலை, இது புலவிக்கண் நிகழ்தலின் உள்ளது உவர்த்தலாம் எனவும் உணர்க.

    47. முள்ளெயிற்றுப் பாண்மக ளின்கெடிறு சொரிந்த  

அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகாற் பெரும்பயறு நிரைக்கு மூர
மாணிழை யாய மறியுநின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே.
பாணற்கு வாயின்மறுத்த தலைமகள் பின் அப்பாணனொடு தலைமகன் புகுந்து தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது.

பழைய உரை :
மாணிழை ஆயம் அறியும் என்ற கருத்து: நீ கூறுங் காதன்மை பொய்யென்பது ஆயமெல்லாம் அறியும்; நான் இதனை மெய்யென்று கொள்ளினும் அவர் கொள்ளார் என்பதாம். கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பயறு நிறைக்கும் ஊர என்றது, நீ நின் காதல் சொல்லி விடுத்து அவர் சிறந்த காதல் சொல்லி வரவிடப் பெறுவாய் என்றவாறு.

உரை :
முட்போலும் கூரிய பற்களையுடைய பாண்மகளின் இனிய கெடிற்றுமீன் பெய்த அகன்ற பெரிய வட்டி நிறைய மனையவள் அரிகாலிடத்து வித்திப் பெற்ற பெரும்பயற்றைக் கொடுக்கும் ஊரனே. நினக்கு வாயிலாய்ப் புகுந்த பாணனைப் போல நீயும் பொய்பல கூறுதலைச் சிறந்த இழையணிந்த ஆய மகளிரும் அறிவராகலின், யான் மெய்யென்று கொள்ளுமாறு இல்லை காண் என்றவாறு.

கூர்மைபற்றி முள்ளெயிறு என்றார்; “முள்ளெயிற்றுத் துவர்வாய்”1 என்று பிறரும் கூறுவர். பாண்மகள் என்புழிப் பாண் என்பது குடிப்பெயர்; “துடியன் பாணன் பறையன் கடம்ப னென்று, இந்நான் கல்லது குடியும் இல்லை”2 என்பதனாலும் அறியப்படும். கெடிறு - ஒருவகை மீன்3. இதனை இக்காலத்திற் கெளுத்தி என வழங்குவர். கடையர் இதனைக் கள்ளொடு கலந்துண்பர் என்பர்; “விழவின் றாயினும் உழவர் மண்டை, இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து”4 என வருதல் காண்க. வட்டி - கடகப்பெட்டி. இஃது உட்புறம் பனங் குருத்தாலும், வெளிப்புறம் அதன் அகணியாலும் செய்யப்படும். இது, பாணரும் கடையரும் மீனும் ஊனும் பெய்து வைத்தற்குப் பயன்படுவதேயன்றி உழுதொழிலோர் விதை முளை வைத் தற்கும், மகளிர் பூப்பெய்து வைத்தற்கும் பயன்படுமென்று அறிக. முளை வைத்தலாவது, வித்தற் குரிய விதை முளைத்தற் குரிய செவ்வி பெறுவித்தல். “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டு வன், மான்றசைச் சொரிந்த வட்டியும்”5 “ஊனார் வட்டியர்”6 “வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும்”7 என்றும், “உழவர், விதைக்குறு வட்டி போதொடு பொதுளப், பொழுதோ தான்வந்தன்றே”1 என்றும், “துய்த்தலை யிதழ பைங்குருக் கத்தி யொடு, பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென, வண்டுசூழ் வட்டியள் திரிதரும், தண்டலை யுழவர் தனிமட மகளே”2 “வரிமென் முகைய நுண்கொடி யதிரல், மல்ககல் வட்டியர்”3 என்றும் சான்றோர் கூறுதல் காண்க. அரிகால் - அன்மொழித் தொகை; அரிந்த கால்கள் நின்ற வயல் என விரியும். “அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்”4 என்புழியும் அது. “அரிகால் மாறிய அங்கண் அகன்வயல்”5 என்புழி இறந்த காலம் தொக்க வினைத்தொகையாய் நிற்றல் காண்க. அரிகாலில், எள்ளாதல் பயறாதல் விதைத்தல் இக்காலத்தும் உழவர் மரபாதலின், அரிகாற் பெரும்பயறு எனப்பட்டது. பாணன் பொய் கூறுவன் என்பதனை, “பாணன் பொய்யன் பல சூளினனே”6 என இந் நூலுள்ளும், “இவன் (பாணன்) பொய் பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்”7 எனப் பிறாண்டும் கூறுப.

பண்டு, தலைமகளைத் தலைப்பெய்த விடத்து அவளோடு உடனாடும் ஆயமகளிர் அறிய வஞ்சின முரைத்துப் பின் அது பொய்படப் பிரிந்தானாகலின், மாணிழை ஆயம் அறியும் என்றும், அவற்கு வாயில் வேண்டி வந்தாருள், பாணன் பல பொய்ம்மொழிகளால் தலைவனது காதன்மை கூறக் கேட் டிருந்தாள், அவையனைத்தும் பொய்யாயினமை கண்டு பின் பொருகால், அது கூற வந்த அவற்கு வாயின் மறுத்தாளா கலின், நின் பாணன் போல என்றும், இதுபோது பாணனோடு போந்து அக் காதன்மையே கூறுங் கருத்தின் னாகலின், “நின் பாணன் போலப் பல பொய்த் தல்லே” என்றும் கூறினாள். கூறவே, நின் பொய்ம்மை எம்பால் நில்லாது எம்மோடு உடன்பயிலும் ஆயமும் அறியப் பரந்தமையின், யாம் மெய்யெனக் கொள்ளி னும், அவர் பொய்யென்றே கொள்வர் என்றாளாம். “உடனாடா யமோ டுற்ற சூளே”8 என்றும், “தாதுசேர் நிகர்மலர் கொய்யும், ஆய மெல்லாம் உடன்கண் டன்றே”9 என்றும் வருவனவற்றால் ஆயம் அறிய ஒழுகியது பெரிதும் நினைக்கப்படுமாறு அறிக.

பாண்மகளது இழிந்த கெடிறு சொரிந்த வட்டி நிறைய, மனையோள் உயர்ந்த பெரும்பயற்றினைக் கொடுப்பள் என்றது, நினக்கு வாயிலாவார் வந்து பொய் பொதிந்த சொற்களால் மொழிந்த நின் காதன்மைக்கு நின்னை நயந்தோர் வாயில் நேர்தலைப் பெறுவாய் என்றவாறு. எனவே, நீ இவ்வாறு பொய்த் தற்குக் காரணம், நின் வாயில்களால் நெஞ்சு நெகிழ்ந்து அது நேரும் தவறுடைய யாமே எனப் புலந்தவாறு. “மாணிழை யாயம் அறியும்” என்றது புறஞ்சொல் மாணாக்கிளவி. “பல பொய்த் தல்” என்றது ஓராற்றால் தெய்வமஞ்சலுமாம்.

இவ்வாறு குறிப்பாலும் வெளிப்படையாலும் வைஇய மொழி கூறல் தலைமகட்கு வழுவாயினும், தன்வயின் உரிமை யும், அவன்வயிற் பரத்தைமையும் விளங்கக் கூறும் பான்மைக்கண் நிகழ்தலின் அமையும் என்க; ஆசிரியரும் “மங்கல மொழியும் வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப”1 என்றனர்.

இது, துனிபோலத் தோன்றினும், உள்ளுறையால் நயப்பாடு காட்டி நிற்றலின், சிறு துனியாய்ப் பின்னர் எய்தும் இன்பத்துக்கு ஆக்கமாம் என அறிக; “ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி, வாடினும் பாடு பெறும்”2 என்பதனால் அறிக. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல்.

    48. வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்  

வராஅல் சொரிந்த வட்டியுண் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கு மூர
வேண்டேம் பெருமநின் பரத்தை
ஆண்டுச்செய் குறியோ டீண்டுநின் வரவே.
பரத்தையர்மாட்டு ஒழுகாநின்று தன் மனைக்கட் சென்ற தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.

உரை :
மீன்வலை வீசுதலில் வல்ல பாண்மகனும் வாலிய பற்களை யுடைய இளையளாய பாண்மகளும் வரால்மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டி நிறைய மனையவள் பழமை யான வெண் ணெல்லை உதவும் ஊர, நின் பரத்தை ஆண்டுச் செய்த குறியுடன் ஈண்டு வரும் நினது வருகையையாம் விரும்பு கின்றிலேம் என்றவாறு.

வலைவீசி மீன் பிடிக்கும் வன்மையுடைமை பற்றி வலைவல் பாண்மகன் என்றும், ஒரோவழி அஃது அப்பாண்மகட்கும் எய்த வாலெயிற்று மடமகள் என்றும் கூறினர்; “நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள், தான்புனல் அடைகரைப் படுத்த வாராஅல், நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு, வஞ்சி விறகிற் சுட்டு வாயுறுக்கும், தண்டுறை யூரன் 1” என்று பிறரும் கூறுதல் காண்க. பாண்மகனும் பாண்மகளும் உள்ளிட்ட பாணர் களை வேண்டுவ கொடுத்து ஓம்புதல் மனையோட்கு இயல்பாதல் தோன்ற இருபாலாரையும் ஒருங்குக் கூறினார்; “மனையோள், பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூ வாளே”2 எனவரும் புறப்பாட்டாலும் ஈதறியப்படும். யாண்டுகழி வெண்ணெல் என்றது, விளைந்து ஓர் யாண்டின் எல்லை கழிந்த நெல்லை; அஃதாவது, பழமையுற்ற நெல் என்பதாம். யாண்டுகழி வெண்ணெல்லை இவ்வாற்றாற் செல விடாதவழி, அவை பயனின்றிக் கழிதலே யன்றி, ஆண்டுதோ றெய்தும் புது நெல்லை நிறைத்தற்கு இடனுமின்றாம் என வுணர்க. இவ்வகையிற் பழநெல்லே செலவிடப்பெறும் என்பதை, “காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு, அவ்வாங் குந்தி அஞ்சொற் பாண்மகள், நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி மறுகிற், பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங் குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”3 என்பதனாலும் அறிய லாம். வெண்ணெல், கார்நெல் செந்நெல் என்பவற்றினைப் போலும் நெல் வகை. இஃது இனஞ் சுட்டிய பண்புகொள் பெயர். ஆண்டு, ஈண்டு என்பன பரத்தை மனையையும் தன்மனையை யும் சுட்டி நின்றன. குறி, “முலையாலும் பூணாலும் முன்கண் தாஞ் சேர்ந்த, இலையாலும் இட்ட குறி.”4

“நினக்குரிய வாயில்களால் அது நேர்வித்துக் கூடும் இயல் புடையை யாயினும், நீ நின்பரத்தை செய்த குறியொடு வரு தலின், யாம் நின்னை வேண்டேம்” என்பாள், உள்ளுறையால் தலைமகன் வாயில் நேர்வித்துக் கூடுதலையும் வாயில் நேர்தற் குரிய தான் அது நேராதவாறு குறியொடு போதருதலையும் தலைவி கூறினாள். “நீ விடுத்த வாயில்கள் எம் நெஞ்சு நெகிழக் கூறிய காதன்மைக்கு யாம் அது நேரு முகத்தால் நின்னை வேண்டி நின்றே மாயினும், வேண்டாதவாறு நீ பரத்தை செய்த குறியொடு வந்தனை” என்பாள், வேண்டேம் பெரும நின் பரத்தை, ஆண்டுச்செய் குறியோடு ஈண்டு நின் வரவே என்றாள். ஊர என்றதனோ டமையாது பெரும எனப் பெயர்த்தும் விளித்தத னால், “என் தொன்னலம் தொலைவ தாயினும், நின்மார்பினைக் கூடுதல் செய்யேன்” எனப் புலவி மிகுந்து கூறியவாறாம். தலை மகள், “என் தொல்கவின் தொலை யினும் தொலைக, சார விடேஎன்” என்றும், “குவவுமுலை சாடிய சாந்தினை, வாடிய கோதையை” எனப் பரத்தை செய்குறியை விதந்தும், “ஆகில் கலந்தழீஇ யற்றுமன்”1 என்று அக் குறியொடு வந்தானைக் கூடலை இழித்தும் புலவி மிகுந்து கூறுதல் காண்க.

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழிந்த வெண்ணெல்லை நிறைக்கும் என்றது, வாயில்கள் கூறிய காதன் மைக்குத் தலைவி வாயில் நேர்ந்தமை கூறியவாறு. யாண்டு கழி வெண்ணெல் என்பது வாளாது பெயராய் நின்றது; “அடியளந்தான்”2 என்புழிப்போல. மெய்ப்பாடும் பயனும் அவை.

ஈண்டு வாரல்லே என்றும் பாடமுண்டு. அதற்கு நின் பரத்தைமை யொழுக்கத்தை யாம் விரும்புகிலே மாதலின், அவள் ஆங்கே தன்மனையிற் செய்த குறியுடன் நீ இங்கு எம்மனைக்கண் வாராதொழிக என்று உரைக்க; “வாரல் வாழிநிற் கவை யோளே”3 எனப் பிறரும் கூறுதல் காண்க. ஈண்டு நீ வரலே என்பது அச்சுப் பிரதியிற் காணும் பாடம்.

    49. அஞ்சி லோதி யசைநடைப் பாண்மகள்  

சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
யாண ரூரநின் பாண்மகன்
யார்நலஞ் சிதையப் பொய்க்குமோ வினியே.
பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினானென்பது கேட்ட தலைமகள், தனக்கும் பாணனாற் காதன்மை கூறுவிப் பான் புக்க தலைமகற்குச் சொல்லியது.

உரை :
அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடையினையு முடைய பாண்மகள் சிலவாகிய மீன்களைக் கொடுத்துப் பலவாகிய நெல்லைப் பெறும் புதுவருவாயினையுடைய ஊரனே, நினக்கு வாயிலாகிய பாண்மகன் இனி யாருடைய நலம் கெடுமாறு பொய் கூறுவனோ, ஏனைப் பரத்தையரும் அவன் பொய்ம்மையினை உணர்ந்துகொண்டன ராகலின்? என்றவாறு.

அஞ்சிலோதி, தொகை நூல்களில் மிகப்பயின்ற வழக்கிற்று. இனி, யென்றதனால், பண்டெல்லாம் அவன் கூறியது கேட்டு மெய்யென நினைந்து தலைமகள் ஒழுகினாள் என்பது பெற்றாம். ஓ: வினா, இனி, இதனை வினைப்படுத்து, “அவனை நீக்குக; அவன் பொய்ம்மை யாண்டும் அறியப்பட்டது” எனினுமாம். இஃதிப் பொருட்டாதல், “யான் ஓம் என்னவும் ஒல்லார்”1 என்பதனாலும் அறிக. ஏனைப் பரத்தையரும் என்பது முதலாயின கூற்றெச்சம்.

தலைமகனோடு போந்த பாணனது மொழிக்கொடுமை யினைக் கூறுகின்றா ளாகலின், தலைமகனை நோக்கித் தாம் கூறுவது பொய்யாவதையும், அதனால் மகளிர் பலர் நலங் கெடுவதையும் தெளியாதாரைத் தெரிந்தாளுதல் நினக்குத் தக்கதன்று என்பதுபட நின்பாணன் என்றும், முன்பு பரத்தைபால் நினக்கு வாயிலாய்ச் சென்று கூட்டிய செய்தியை யாம் அறிந் தமையின், அவன் இனிக் கூறுவன எம்மைத் தெளிவிக்கும் பான்மைய அல்லவாக, அவன் ஈண்டுப் போந்து இதுபோது கூறும் உரையைப் பரத்தையரும் பொய்யென உணர்ந்து இனி இவன் கூறுவனவற்றைக் கொள்ளாராதலின் இவன் சொல்லுவன யாண்டும் செல்லா என்பாள், யார் நலஞ் சிதையப் பொய்க் குமோ இனியே என்றும் கூறினாள்.

பாண்மகள் சில மீன் சொரிந்து பல நெற் பெறுவாள் என்றது, நினக்கு வாயிலாய் வந்த பாணன் நின் காதன்மை உணர்த்தும் சில சொற்களைச் சொல்லிப் பல மகளிரை நின்பாற் புணர்ப்பன் என்றவாறு. மெய்ப்பாடும் பயனு மவை.

இன்னோரன்ன கூற்றுக்கள், “அவனறிவு ஆற்ற அறியுமா கலின்”1 என்ற சூத்திரத்து, “வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ” என்புழி “வகை” என்பதன் பாற்படும் என்க. இவ் வாறு வாயில் நேர்விப்பான் புக்க பாணனொடு புலந்து கூறவே, அவனொடு புகுந்த தலைமகனையும் புலந்து கூறியவாறு பெற்றாம்.

    50. துணையோர் செல்வமும் யாமும் வருந்துறும்  

வஞ்சி யோங்கிய யாண ரூர
தஞ்ச மருளாய் நீநின்
நெஞ்சம் பெற்ற விவளுமா ரழுமே.
மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

உரை :
வஞ்சி மரங்கள் ஓங்கிய யாணர் ஊரனே, நின்னைத் தன் நெஞ்சிடைப் பெற்ற இவள் எளியளாதலின் இவளையே அருளுக; நின் பிரிவாற்றாது இவளும் அழுகின்றாள்; ஒரோ வழி நீ பிரியினும், பன்னாள் தங்கிவிடுதலால் துணையாயினர் செல்வமேயன்றி இல்லறம் சிறவாமையால் யாமும் வருந்தா நிற்கின்றேம் என்றவாறு.

துணையோர், தலைமகனது துணைமை பெற்றுப் பொருள் செய்துகொள்ளும் பான்மையோர். செல்வம், இன்ப நுகர்ச்சிக்கு ஏதுவாய பொருள். யாமும் என்றது தலைமகளை உளப்படுத்து நின்றது. செல்வமும் யாமும் என எண்ணி நின்று, வருந்துதும் என உயர்திணை வினையான் முடிதலை, “தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று, எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்”2 என்பதனாற் கொள்க. தஞ்சம் என்பது எண்மைப் பொருட்டு. நின் நெஞ்சம் பெற்ற இவள் என்பதற்கு, நின் நெஞ்சார்ந்த அருளைப்பெற்ற இவள் எனினுமாம்.

மனையின் நீங்கிப் போய்ப் பன்னாள் பரத்தை மனையின் கண் தங்கினா னாதலின், “அருள் நிறைந்த நின்னைத் தன் நெஞ்சிடைப் பெற்றும் அவ்வருள் பெறாது தஞ்சமாயினள்” என்பாள் தஞ்சம் என்றும், அப்பெற்றியாட்கு நின் அருள் இன்றியமையாது என்றற்கு, அருளாய் நீ என்றும், பிரிவின்றி யிருந்து அருளாவிடின், இவள் செய்வது பிறிதின்மையின் இவ ளுமா ரழுமே என்றும், அதனால் யாங்களும் நினக்கு அமைந்த துணைவரும் செய்வன சிறவாமையால் பயனிழந்து வருந்துவே மாயினேம் என்றற்குத் துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் என்றும் தோழி கூறினாள். துணையாயி னார்க்கு ஆக்கம் தரும் வினையினும் ஆடவர்க்குச் சிறப்புடைய வினை பிறிதின்மையின் அதற்குரிய செல்வத்தை முற் கூறினாள். “நட்டோ ராக்கம் வேண்டியும் ஒட்டிய, நின்தோள் அணிபெற வரற்கும், அன்றோ தோழிஅவர் சென்ற திறமே”1 என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, செல்வமென்றது சான்றோர் உயர்த்துக் கூறும் அருட்செல்வம் எனக் கொண்டு, “நீ அருளாமையால் இவள் எய்திய அவலம் கண்ட துணையோரும் அருள் மேவிய தம் உள்ளம் மருளி ஆற்றாராயினமையின், யாமும் அத்தன்மை யேமாய் வருந்துதல் செய்யாநின்றேம்” என்பாள், துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் என்றாள் என்று கூறினுமாம். உடையாரது தொழில் உடைமைமேல் ஏற்றிக் கூறப்படும் இயைபினால், வருத்தம் செல்வத்தோடும் இயைந்தது. “நெடிய மொழிதலும் கடிய வூர்தலும், செல்வ மன்றுதன் செய் வினைப் பயனே, சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர், புன்கண் அஞ்சும் பண்பின், மென்கட் செல்வம்”2 என்றும், “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்”3 என்றும் சான்றோர் கூறுவர்.

தலைமகள் முன்னின்று அவனது பரத்தைமை மறுத்தல் வேண்டி, “தஞ்சம் அருளாய் நீ” என்றதனால் அன்பின்மையும், “துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்” என்றதனால் கொடுமையும் கூறலின், மெய்ப்பாடு வெகுளியும், பயன் வாயில் மறுத்தலுமாம். “பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடத்தகு கிழமையுடைமை யானும், அன்பிலை கொடியை என்றலும் உரியள்”1 என்தனால், தலைவிக்கு உரிமை எய்தும் இக்கூற்று, அவள் குறிப்பின்வழி மொழியும் தோழிக்கும் அமையு மாறு கண்டுகொள்க.


தோழிகூற்றுப் பத்து

இப்பத்தின்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் கூற்று நிகழ்த்து வோர் பொருளாகத் தொகுக்கப்பட்டன வாகலின், இஃது இப்பெயர் எய்துவதாயிற்று. தோழி கூற்று, தோழி கூறும் மொழிகள். கூறப்படுவது கூற்று; பாடப்படுவது பாட்டு என்றும், ஓதப்படுவது ஒத்து என்றும் வருதல் போல முதனிலை ஈற்றுமெய் இரட்டித்துச் செயப்படுபொருண்மை உணரநின்றது. ஏனை யிடங்களிலும் இதனையே உரைத்துக் கொள்க.

தோழியாவாள், தலைமகளைப் பயந்த நற்றாய்க்குத் தோழி யாகிப் பின் தலைமகளை வளர்த்தமையின் அவட்குச் செவிலித் தாயாகிய நங்கையின் மகள். இவள் தலைமகளொடு உடனிருந்து அவட்கு உயிர்த்துணை புரிபவளாவள்; தலைமகட்குரிய சிறப் பெல்லாம், தானும் அவள் பெற்றோர்பாற் பெற்று ஒழுகும் சால்புடையவள். களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் தலைமகட்கு உசாத்துணையும் அவளே. களவின்கண் தலைவி யின் மறைந்த ஒழுக்கத்தைத் தன் கூர்த்த மதியால் ஆராய்ந்து கண்டு அறிந்து அது கற்பு நெறியாய்ச் சிறந்தற்கு ஆவனவற்றை ஆற்றும் அமைதியும், உலகியலின் உட்கிடையை உள்ளவாறு அறிந்து தலைமகள் உறுதி எய்தற் குரிய நெறியறிந்து செலுத்தும் நீர்மையுமுடையவள். அதனால், தலைமக்களை ஓரொரு கால் உறழ்ந்தும், கழறியும், உயர்பொருள் சுட்டியும் தக்காங்கு உரைக்கும் தகுதி வாய்ந்துள்ளாள். தலைமகளின் உணர்வுவழி நின்று, உவந்துழி உவந்தும், வருந்துழி வருந்தியும் வாழும் வாழ்க்கையளாயினும், தலைமகள் எய்தும் வருத்தம் பிறழ்ந்து தோன்றின், பிறழா நிலையில் தான் நின்று அவளை ஆற்று விக்கும் உரனுடைமையும், தலைமகன்பாலும் தான் அவனினும் உரனுடையாள் போலக் கூறும் இடமுண்டாகியவழி, அவ் வுரனுடைமை தோன்றா வகையில், பணிந்த மொழியால் தான் கூறக் கருதுவதைக் கூறிக் கருத்தை முற்றுவித்துக்கொள்ளும் வாய்மையும் நிரம்பியவள். எவ்வாற்றாலும், தலைமக்கள் அறத் தின்வழி நின்று இன்பம் எய்துவதொன்றனையே குறிக்கோளாகக் கொண்டு ஒழுகும் கடப்பாட்டினள் இத்தோழி என்பே மாயின், எஞ்சிய பிறவெல்லாம் எஞ்சாமற் கூறியவாறாம். இக்கருத்துக்க ளெல்லாம் தோன்ற, ஆசிரியர் தொல்காப்பியர், தலைமகட்கும் தோழிக்கும் உரிய கிழமையினைத் “தாயத்தின் அடையா வீயச் செல்லா, வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா, எம்மென வருஉம் கிழமைத் தோற்றம்”1 எனச் சிறப்பித்துள்ளார். இச் சிறப்பால், தலைவி உறுப்புக்களைத் தோழி தன் உறுப்பாகக் கூறிய வழியும், அது குற்றமாகாது அமையும் என்று மொழிந் திருக்கின்றனர். ஏனைச் சான்றோர்களும் இதனை வலியுறுப்பார் போல, இந்நெறியே புலனெறி வழக்கமும் செய்திருக்கின்றனர். இயல்பாய் உளதாகிய உயிரறிவினைச் செயற்கையால் உளதாகும் கல்வியறிவு பண்படுத்தி உண்மை யறிவாக்குவது போல, தலை மகள்பால் தோழி அறிவுநெறியே நின்று அவள் வாழ்க்கையை அறவாழ்க்கை யாக்கும் மாண்பு கொண்டவள். சுருங்கச் சொல் லின், தோழியாவாள், அன்பும் அறிவும் அறமும் முறையே உள்ளம் உரை செயல்களாகத் திரண்டு பெண்ணுருக் கொண்டு வந்தாற்போலும் பெருமையுடையவள் என்றல் சாலும்.

    51. நீருறை கோழி நீலச் சேவல்  

கூருகிர்ப் பேடை வயாஅ மூர
புளிங்காய் வேட்கைத் தன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே.
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகிப் பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது.

உரை :
நீரின்கண் வாழும் நீலநிறத்தை யுடைய சேவற் கோழியைக் கூரிய நகங்களை யுடைய அதன் பெட்டை நினைந்து வேட்கை மிக்கு உறையும் ஊரனே, இவளது வயவு நோய்க்கு நினது அகன்ற மார்பு புளிங்காய் வேட்கைதானும் விளைவிப்ப தின்றி நினைக்குந்தோறும் புலவிக்கு ஏதுவாய் இராநின்றதுகாண் என்றவாறு.

நீருறை கோழி என்றது, சம்பங்கோழியை; இது முறையே சேவலையும் பெடையினையும் சிறப்பித்து நின்றது. பெடை, பேடை, பெட்டை முதலியன பெண்மைப் பெயர்; “பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்”1 எனவரும் மரபியற் சூத்திரம் காண்க. வயாஅம் என்பது வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல் லடியாகப் பிறந்த பெயரெச்சவினை; இஃது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு ஏதுப்பெயர் கொண்டது. புளிங்காய் வேட்கை, புளிங்காய் பிறப்பிக்கும் வேட்கை போலும் வேட்கை; அஃதாவது, புளிங்காயை நினைத்த வழி வாயில் நீரூறி வேட்கை தணிவித்தல் போல, நினைந்தவழி நினைத்தார் நினைவில் இன்பம் கிளர்வித்து வேட்கை தணி வித்தல். வேட்கைத்து என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. வயவுறு மகளிர்க்குப் புளிவேட்கை சிறந்து நிற்கும் என்பது உலக வழக்கினும், செய்யுள் வழக்கினும் காணப் படுவது “பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்”2 என்ப. வயா, வேட்கைப் பெருக்கம்; பெரும்பாலும், இது, கருவுற்ற காலத்து உயிரினம் எய்தும் வேட்கை மேற்று; “வீழ்பிடிக் குற்ற கடுஞ்சூல் வயா”3 என்பதனாலும் அறியப்படும்.

புளிங்காயை நினைந்தவழி வாயில் நீரூறி நினைத்தாரது வேட்கையைத் தணிவித்தல் போல, நின் மார்பினை நினைந்தவழி அஃது இவட்கு இன்பவுணர்ச்சி பயந்து இவள் எய்திய வருத் தத்தைப் போக்கற்பாலதாகும்; இதுபோது அஃது அதனைச் செய்யாது ஒருகாலைக் கொரு காலைப் பிரிவுணர்வும் துன்பமும் பயந்து வருத்துவதாயிற்று என்றற்குப் புளிங்காய் வேட்கைத் தன்று நின் மலர்ந்த மார்பு என்றாள். வயாவுற்றார் எய்தும் வேட்கையைத் தணிவித்தல் உரிமையுடையார்க்குத் தள்ளாக் கடப்பாடாதலைச் சுட்டி இவள் வயாஅம்நோய்க்கு என்று கூறினாள். விரிந்த பண்பிற் றாயினும், இவள் எய்தும் வருத் தத்தைப் போக்கியதில்லை எனத் தான் கருதியதனை முடித்தற்கு மலர்ந்த மார்பு எனச் சிறப்பித்தாள்.

தலைவி காணாவகையில் தலைமகன் பிரிந்தொழுகுங்கால், அவன் மார்பு புளிங்காய் வேட்கைத்தாயும், கண்டவழி அவள் எய்தும் வேட்கை நோய்க்கு மருந்தாயும் விளங்குவ தொன்று. இதனைத் “தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை, புன்கயத் துள்ளும் வயலூர - வண்கயம், போலும்நின் மார்பு புளிவேட்கைத் தொன்றுஇவள், மாலுமா றாநோய் மருந்து”1 எனப் பிறரும் கூறுமாற்றால் அறிக. இனி, நின் மார்பு நின் புறத்தொழுக்கத்தால் இவள்நோய் தீர்க்கும் மருந்தாகாமையே யன்றி, நினைந்தவழிப் பொறாமை தோற்றுவித்து வருத்துதலின் வேட்கைத்தும் அன்று என்றாள் என்றுமாம்; அவ்வழி உம்மை எச்சப்பொருட்டு.

நீலச் சேவலைப் பெடை நினைந்து வயாவும் ஊரனாகலின், இவளும் நின் மார்பு நினைந்து வயாவுற்றாளாக, அதனை நினையாது நீ மேன்மேலும் புறத்தொழுக்கம் விரும்புவாயா யினை என்றாளாம். மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயில் மறுத்தல்.

இனி, பேராசிரியர் “தவலருஞ் சிறப்பின்அத் தன்மை நாடின், வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும், பிறப்பினும் வரூஉம் திறத்தியல் என்ப”2 என்புழிப் பயவுவமப் போலிக்கு இதனைக் காட்டி, “நீருறைகோழி நீலச் சேவலை அதன் கூருகிர்ப் பேடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்ததாகும்; அதுபோல நின்மார்பை நினைந்து தன் வயவுநோய் தீரும இவளும் என்றவாறு. புளிங்காய் வேட் கைத்து என்பது, நின் மார்புதான் இவளை நயவா தாயினும், இவள் தானே நின்மார்பை நயந்து பயம் பெற்றாள் போலச் சுவைகொண்டு சிறிது வேட்கை தணிதற்பயத்தளாகும்; புளிங் காய் நினைய வாய் நீர் ஊறுமாறு போல என்பது” என்பர்.

இனி, வயாவுமூர என்றும், மலர்ந்த மார்பிவண் என்றும் பாடம் உண்டு.

    52. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கட் செவ்வாய்க் குறுமக ளினைய  

எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே.
வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகை
யாடிச் சொல்லியது.

உரை :
மகிழ்ந, வயலையின் செங்கொடியால் மாலை தொடுத் தலின் செவ்விய விரல் சிவந்த, செவ்வரி பரந்த குளிர்ந்த கண்களையும், சிவந்த வாயினையுமுடைய இளையவள் அழுது வருந்த, நின்தேர் நிற்றற்குக் குறித்தது எவ்விடம்? கூறுக என்றவாறு.

தைஇ, பசந்த குறுமகள், கண்ணும் வாயுமுடைய குறுமகள் என இயையும். குறுமை, இளமைப் பொருட்டாய் அவளது ஆற்றாமைக் குரிய மென்மைத்தன்மை உணர நின்றது. முன் னின்று: வினைமுற்று. உடையானது தொழில் உடைமை மேல் நின்றது. எவ்வாய்: இடப் பொருட்டாய திரிசொல். “நீ மற்று எவ்வாய்ச் சென்றனை”1 எனப் பிறரும் கூறினர். வயலையும் கைவிரலும் வரியும் வாயும் இயல்பாகவே சிவந்திருத்தலின், வண்ணச் சொல் யாண்டும் தொடர்ந்தது.

மனையகத்துத் தான் பேணி வளர்த்த கொடியே யாயினும் அதனாற் பிணையல் தொடுத்தது பொறாது சிவக்கும் செவ் விரலுடையள் என்றது, நின்னாற் பேணப்படும் நலமுடை யளாயினும் அதனால் நின் தேர் பிறிதோரிடத்து நின்றவழியும் பொறாது கண்கலுழ்ந்து வாய்வெருவி மெய் வேறுபடு வாளா யினள் எனத் தலைவியின் ஆற்றாமையைச் சுட்டி நிற்பது தோன்ற, பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் என்றாள். தேர் பிறிதோரிடத்து முன்னிய துணையானே நின் நெஞ்சு பிறள் ஒருத்திபால் மாறிற்றெனக் கருதினள் என்பதற்கு ஏது கூறுவாள், அவளது இளமையை விதந்து குறுமகள் என்றாள்.

தலைவன் தன் மனைக்கட் போதரும் போதெல்லாம், அவனது தேர் தன் மணிக்குரல் இயம்பி அவன் வரவினை முன்னறிவித்துச் சிறப்பித்த தாகலின் அதன்பாற் பெரிதும் அன்புடையளாய தலைவி, அத் தேர் இப்போது அவள் மனைக் கண் நிற்றலை முன்னாது, பிறிதோரிடத்தினை முன்னியவழிப் பொறாது வேறுபடுவாள் எனத் தேரினது இன்றியமையாமை தோன்ற, குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே என்றாள்; “நற்றேர்த், தார்மணி பலவுடன் இயம்பச் சீர்மிகு, குரிசில்நீ வந்துநின் றதுவே…… புகழ்மிகு சிறப்பின், நன்ன ராட்டிக் கன்றியும் எனக்கும், இனிதா கின்றால், சிறக்கநின் ஆயுள்”1 எனத் தேரோடு போந்தானை மகிழ்ந்தவாறும், “கலிமகி ழுரன் ஒலிமணி நெடுந்தேர், ஒள்ளிழை மகளிர் சேரிப் பன்னாள், இயங்க லானா தாயின் வயங்கிழை, யார்கொல் அளியள் ……. கண்பனி ஆகத்து உறைப்பக் கண்பசந்து, ஆயமும் அயலும் மருளத், தாய்ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே”2 எனத் தலைவன் தேரது புறவியக்கங் குறித்து வேறுபட்டவாறும் காண்க.

இனிக் கூடி மகிழ்ந்திருப்பவன்பால் பண்டு நிகழ்ந்தது கூறி அவனை அம் மகிழ்ச்சிக்கண்ணே நிலைபெறுவிக்கும் கருத்தின ளாய்த் தோழி, வேறுவகையாற் கூறின் தன்பால் வழு எய்துவது உணர்ந்து நகையாடிக் கூறுதலின், அவன் தேர்மேல் வைத்து எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே என்றாள் என்றுமாம்.

வயலைச் செங்கொடியால் பிணையல் தொடுத்தவழி இயல் பாகவே சிவந்துள்ள இவள்விரல் மிகச் சிவத்தல் இயற்கை யாகவும், அதனை அறியாது, செவ்விரல் சிவந்தன எனக் கண் கலுழ்ந்து வாய்வெருவிப் புலம்பினாள் என்றும், குறுமகள் என்றும் தலைவியைக் கூறியது, தோழி தான் பிறப்பித்துக் கொண்ட நகைக்குப் பொருளாம். மிகச் சிவத்தலை அறியாமை பேதைமையும், குறுமகள் என்றது இளமையும் குறித்தன. மேலும், நீ இயக்க இயங்கும் இயல்பிற்றாய தேர் நின்னை இன்றித் தனியே ஆண்டு நிற்பினும் தீதொன்றும் பிறவாதாகவும், அதனை அறியாது அது பிறிதோரிடத்து முன்னியது எனக் கொண்டு இனைந்தாள் என்றது தலைவியது பேதைமையினையே சுட்டி நகையாடற்குப் பொருளாயவாறு காண்க. “எள்ளல் இளமை பேதைமை மடன்என்று, உள்ளப்பட்ட நகைநான் கென்ப”1 என்பது தொல்காப்பியம்.

மெய்ப்பாடு : நகை. பயன் : தலைவன் கேட்டுப் பிரியாது உறைவானாவது.

    53. துறையெவ னணங்கும் யாமுற்ற நோயே சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்  

கழனித் தாமரை மலரும்
பழன வூரநீ யுற்ற சூளே.
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடியவழி, “இது பரத்தை யருடன் ஆடிய துறை” என நினைந்து பிறந்த மெலிவை மறைத் தமை உணர்ந்த தலைமகன், மனைவயிற் புகுந்துழி, “தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனாற் பிறந்ததுகொல் இவட்கு இவ்வேறுபாடு?” என்று வினாயினாற்குத் தோழி சொல்லியது.

உரை :
அணையை அழித்துக்கொண்டு வரும் புது வெள்ளம் கழனிகட் புகுந்ததாக அக் கழனிகளில் உள்ள தாமரைகள் கலங்கி மலரும் பழனங்களையுடைய ஊரனே, புனலாடிய நீர்த்துறைக்கண் நீ நின் காதற்பரத்தைக்குச் செய்த சூளே யாம் எய்திய நோய்க்குக் காரண மாகலின். அத்துறைக்கண் உள்ள தெய்வம் வருத்துமாறு என்னை? இல்லையன்றோ என்றவாறு.

துறை - ஆகுபெயர். துறைகளில் தெய்வம் உறையும் என்பது பண்டையோர் கொள்கை. “அணங்குடைப் பனித்துறை”2 “அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி, யாயும் ஆயமோ டயரும்”3 “நிலைத்துறைக் கடவுள்”4 என்று சான்றோர் கூறுதல் காண்க. “துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும், முறையுளிப் பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ”5 என்றதனால், துறையே யன்றிப் பிறாண்டும் தெய்வம் உறையும் எனப் பண்டையோர் கருதினமை அறிக. எவன் என்னும் வினாப்பெயர் இன்மை குறித்து நின்றது. காரணமாகிய சூள் காரியமாக உபசரிக்கப் பட்டது. சிறை, அணை; “சிறையழி புதுப்புனல் ஆடுகம்”1 எனப் பின்னரும் கூறுப. கழனி, வயல். பழனம், ஊரவர்க் கெல்லாம் பொதுவாகிய நிலம் என்பர். எனவே ஈண்டைக் கழனி, பழனத்தைச் சார்ந்தது என்பது பெற்றாம். “பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”2 எனப் பிறரும் பழனமும் கழனியும் இணைந்துவரக் கூறினர். 3துறை யுறையும் தெய்வத்தைப் பிரித் தலின், சூளே என்புழி ஏகாரம் பிரிநிலை; ஏனையது அசைநிலை.

பண்டு தலைவியைக் கூடிய ஞான்று, தன் பிரியாமையினை வற்புறுப்பான் தெய்வத்தை முன்னிறுத்திச் சூள் செய்தவன், இப்போது பிரிந்து புறத்தொழுக்கம் மேற்கொண்டு பரத்தை யருடன் கூடி மகிழ்ந்துறைவது உணர்ந்து, சூள் பொய்த்தமையால் ஆண்டு முன்னிறுத்தப்பட்ட தெய்வத்தால் எமக்கு இந் நோய் உளதாயிற்றேயன்றித் துறை யுறையும் தெய்வத்தால் அன்று என்பாள் துறை யெவன் அணங்கும் என்றும், நீ யுற்ற சூளே என்றும் கூறினாள். “எம்மணங்கினவே மகிழ்ந….. எம்மூர் வியன்றுறை, நேரிறை முன்கை பற்றிச், சூரர மகளிரோ டுற்ற சூளே”4 என இக்கருத்தே தோன்றச் சான்றோர் கூறியிருத்தல் காண்க. சூள் பொய்த்தவழித் தீங்கு எய்தும் என்பது, “இன்னாத் தொல்சூள்” 5 என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியதனாலும், “பூக்கஞ லூரன் சூளிவண், வாய்ப்ப தாக எனவேட் டேமே”6 எனச் சூள் பொய்த்தவழி எய்தும் ஏதம் குறித்து இந்நூலாசிரியர் கூறியத னாலும் உணரப்படும்.

“எம்மைக் கூடுங்கால் சூள் செய்து தெளிவித்தான், பரத்தை யர்பாலும் அது செய்தேயிருப்பன்” எனத் துணிந்து அவன் ஆடிய துறையைக் கண்டு அவன் பரத்தைமையினையும் உடன் நினைந்து வேறுபட்ட தலைவியைத் தலைவன், “நின்னை இத் துறைக்கண் உறையும் தெய்வம் அணங்கிற்றுப் போலும்” என்றானாக, அதனைத் துறைஎவன் அணங்கும் எனத் தோழி கொண்டு கூறினாள்; ஆகலின், இது “கூற்றவண் இன்மையின்” வந்த கொண்டு கூற்றன்று.

சிறையழிக்கும் புதுப்புனல் பாயக் கழனித் தாமரை கலங்கி மலரும் பழனங்களை யுடைய ஊர என்றது, மகளிர் நலம் சிதைக்கும் புறத்தொழுக்கத்தை நீ மேற்கொண்டு ஒழுகுவதால் பொறாது முன்னர் வேறுபட்டுப் பின்னர்க் கூடும் பரத்தையர் பலரை உடையையாயினாய் என்றவாறாம். ஆகவே, இது தோழிபால் தோன்றிய துனியுறு கிளவி என்க. மெய்ப்பாடு: வெகுளி. பயன் : மறுத்தல்.

    54. திண்டேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை  

வேனி லாயினுந் தண்புன லொழுகும்
தேனூ1 ரன்னவிவ டெரிவளை நெகிழ
ஊரி னூரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்
கஞ்சுவ லம்ம வம்முறை வரினே.
வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பறிந்த தோழி அவன்கொடுமை கூறி வாயில் மறுத்து.

உரை :
திண்ணிய தேர்களையுடைய தென்னவனது நல்ல நாட்டிலுள்ளதாகிய, வேனிற் காலத்தும் வற்றாது குளிர்ந்த நீர்பெருகும் தேனூர் என்னும் ஊரினை யொத்த இவள் ஆய்ந்த வளைகள் நெகிழுமாறு, ஊரனாகிய நீ பரத்தையர் தெருக்கட் பிரிந்துழி, நெய்யணி குறித்து யான் அத்தெருக்கண் முறையே வருதலுறின், ஆண்டு நின்னால் தரப்பட்டு நின்னைச் சூழ்ந்து நிற்கும் பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சா நிற்கின்றேன் என்றவாறு.

தென்னவன் பாண்டியன். செந்தமிழ் நிலைஇய சீரிய நாடாதல் பற்றி நன்னாடு என்றார். உள்ளதை, ஐகாரம் அசை. “வெல்போர்க் கவுரியர் நன்னாட் டுள்ளதை”1 என்று பிறரும் கூறினர். ஆயினும் என்றது புனலொழுக்கின் அருமை தோன்ற நின்றது. தேனூர், பாண்டிநாட்டிலுள்ளதோர் ஊர். இஃது “ஆம்பலஞ் செறுவின் தேனூர்”, “தேர்வண் கோமான் தேனூர்” என்றும், “வலஞ்சுரி மராஅத்து, வேனி லஞ்சினை கமழும், தேனூர்”, “தேர்வண் கோமான் தேனூர்”2 அன்ன நின்னொடுஞ் செலவே”3 என்றும் சான்றோர்களால் சிறப்பிக்கப் பெறுகின்றது. ஊரின் ஊரனை என்புழி, ஊரனை யென்றது முன்னிலைக் கண் வந்தமை அறிக. முதற்கண் நின்ற ஊர், ஊரின் ஒரு பகுதியாகிய பரத்தையர் சேரியைக் குறித்து நின்றது. ஊரெனச் சிறப்பித்துக் கூறப்படும் ஊர்களுள்ளும் மிகச்சிறந்த ஊர்களையுடையாய் என்றற்கு ஊரின் ஊர் என்றாள் என்றுமாம். பஞ்சாய்க்கோதை மகளிர், பஞ்சாய்க்கோரை போல் நீண்ட கூந்தலையுடைய மகளிர்; இனி பசிய தண்டான்கோரையை நாராய்க் கிழித்துத் தொடுத்த பூமாலையினையுடைய மகளிர் என்றும் கூறுவர். “பஞ்சாய்க் கூந்தல்”1 என இந்நூலாசிரியர் கூறுமாறு காண்க. அம்முறை யென்புழிச் சுட்டு உலகறி சுட்டு. நெய்யணியாவது, மகப் பயந்த மகளிர் அவ்வாலாமை நீங்க நெய்யாடுதல்; “குவளை மேய்ந்த குறுந்தாள் எருமை, குடநிறை தீம்பால் படூஉ மூர, புதல்வனை யீன்றிவள் நெய்யா டினளே”2 என வருதல் காண்க. இதனைத் தலைமகன் உணர்ந்து போந்து ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பினைச் செய்தற்பொருட்டு, தோழி, பரத்தையர்தெருக்கட் சென்று ஆண்டுறையும் தலை மகற்கு உணர்த்துவது முறைமை; இதனால், அம்முறை வரினே என்று தோழி கூறுகின்றாள்.

தலைமகன் அன்பின்றிப் பிரிந்து சென்று பரத்தையர் சேரிய னாயவழியும், தலைவி அயரா அன்புபூண்டு அவனை இன்றி யமையா ளாயினாள் என்பது சுட்டி, வேனி லாயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் என்றாள். அவ்வாறு, தன்னை இன்றியமையாப் பெருங்காதலால் அயரா அன்பு செலுத்தும் இவளைப் பிரிதலினும் மிக்க செயல் தலைமகற்குப் பிறிது இல்லை என்பதுபட இவள் தெரிவளை நெகிழ என்றும், “இவ்வூரிடத்தும் நின் மனைக்கண் உறையாது பரத்தையர் மனைக்கண்ணே தங்கினை” என்றற்கு, ஊரின் ஊரனை என்றும் கூறினாள். இது, தலைவியது உரிமையும், தலைவனது பரத்தை மையும் வகுத்துக் கூறியது. “தெரிவளை நெகிழ” என்றது உடம்பு நனி சுருங்கல்.

தோழி பிறமகளிரைக் காணாளாயினும் எதிர்பெய்து மறுக்கும் குறிப்பினால், மகளிர்க்கு அஞ்சுவல் என்றும் அச்ச மிகுதி தோன்ற அம்ம என்றும், அம்மகளிர் தாமும் எம் மனையின் அகன்று புகன்ற உள்ளமொடு சென்ற நின்னாற் புணரப்பட்ட புதுவோர் என்பாள், நீ தர வந்த மகளிர் என்றும் கூறினாள். மேலும், “நெய்யணி மயக்கம் புரியும் தலைமகளை நோக்கிச் செய்பெருஞ் சிறப்பொடு அவளைச் சேர்தலாகிய முறைமை கருதி நீ வருத லுறினும் அம்மகளிர் என்னைச் சிறைப்பதே யன்றி, நின்னையும் அது செய்யாவாறு தகைப்பதும் செய்வர் என்று அஞ்சுகின்றேன்” என்பது தோன்ற, அஞ்சுவல் அம்ம நீ அம் முறை வரினே என்றாளுமாம். எதிர்பெய்து பரிதலும், மறுத் தலும் தலைவிக்கு உரியவாகலான், அவள் குறிப்பின்வழி ஒழுகும் தோழிக்கு உரியவாயின.

உலகியல்பற்றி வருதலாகிய அம்முறைவரின் என்றதனால், அம்முறை இல்வழி வாராய் எனத் தலைவன்பால் அன்பின்மை யும் கொடுமையும், உவமையால் தலைவிபால் அன்புடைமையும் கூறித் தோழி மறுத்தவாறாம். இவ்வாறு தலைவியது புலவிக் குறிப்பறிந்து கொடுமையும் அன்பின்மையும் தோழி கூறுவது தலைவனது பரத்தைமை மறுத்தல் வேண்டி நிகழ்தலின் அமை யும் என அறிக. “பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி, மடத்தகு கிழமை யுடைமை யானும், அன்பிலை கொடியை என்றலும் உரியள்”1 என ஆசிரியர் அமைக்குமாறு காண்க.

மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயில் மறுத்தல்.
தேனாரன்ன என்றும் பாடம் உண்டு. அது பொருட் சிறப்புடையதன்று.

    55. கரும்பி னெந்திரங் களிற்றெதிர் பிளிற்றும்  

தேர்வண் கோமான் தேனூ ரன்னவிவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோ ரறியப் பசந்தன்று நுதலே.
வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து தன் மெலிவு கூறிய தலைமகளைத் தோழி நெருங்கிச் சொல்லியது.

பழைய உரை :
களிற்றெதிர் பிளிற்றும் என்றது, நீ கூறுகின்ற மெலிவுக்கு மேலே மெலிவு கூறுகின்றது. இவள் நுதல் என்பதாம்.

உரை :
கரும்பினை அடும் எந்திரம் களிறு பிளிறுவற்கு எதிராக ஒலிக்கும், தேரினையும் வண்மையினையு முடைய அரசனாகிய பாண்டியனது தேனூர் என்னும் ஊரை ஒக்கும் இவளது நல்ல அழகை நயந்து வரைந்துகொண்டு வரைந்த அணிமைக் கண்ணே புறத்தொழுக்கத்தால் நயவாது பிரிந்துறைதலின் இவளது நுதல் பலரும் நன்கு அறியுமாறு பசந்ததுகாண் என்றவாறு.

எந்திரம் பிளிற்றும் ஊர், கோமான் ஊர் என இயையும். இடத்து நிகழ் பொருளும் இடமுமாகிய இயைபு பற்றிப் பிளிற்றும் என்பது ஊர் என்னும் பெயர்கொண்டது. நயந்தென்னும் காரண வினை காரியத்தின் மேல் நின்றது. துறத்தலின் என்றதனால், அதற்குரிய காரணமும் காலமும் வருவிக்கப் பட்டன; “வழங்கி யன் மருங்கிற் குன்றுவ குன்றும்”1 என்பவாகலின் இவை எஞ்சி நின்றன. முற்றும்மை விகாரத்தால் தொக்கது. கரும்பாட்டும் ஆலையினைக் கரும்பின் எந்திரம் என்றார். எந்திரம், வட சொற்சிதைவு; “கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது, இருஞ் சுவல் வாளை பிறழும்”2 எனப் பிற சான்றோரும் கூறினர்.

எதிர் பிளிற்றுதலாவது, “குயிலொடு மாறுகூவுதும், மயிலொடு மாறாடுதும்” என்றாற்போல ஒப்ப ஒலித்தல்; அஃதாவது ஆலையில் எழும் ஓசையொப்பக் களிறு பிளிறும் என்பது; “கணஞ்சால் வேழம் கதழ்வுற் றாங்கு, எந்திரம் சிலைக்கும்…… புகைசூழ் ஆலை”3 என வருதல் காண்க.

“பண்டு களவில் ஒழுகிய ஞான்று, இவளுடைய அருமையும் பெருமையும் கெழுமிய அணி நயந்து வரைந்து கொண்ட நீ, இத்துணைச் சிறுபொழுதிலேயே இவளைத் துறந்து பிரிந்துறைதல் தகாது” என்பாள், நல்லணி நயந்து நீ துறத்தலின் என்றும், “பசலை யென்பது நுணுகி நோக்கினார்க்கன்றி நன்கு புலப் படாதாகவும், இவள் கொண்ட பசப்பு நின் திருமணம் போலப் பலரும் அறியத்தக்க நிலைமையினை யுடைத்து” என்பாள், பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே என்றும் கூறினாள்.

தலைவன் பிரிவதற்கு முன் தலைவி மேனிக்கட் கிடந்து பேரழகு திகழ்ந்த மாமைக்கவின், இப்போது அவன் பிரியப் பிரிந்து பசலைபாய்ந்து நிற்பதற்கு இரங்குவாள் போலத் தலைவ னது நிலையின்மையினைக் குறிப்பால் உணர்த்துகின்றா ளாகலின், நல்லணி எனச் சிறப்பித்தாள். நன்மை, தலைவன் இன்றியமை யானாய் நயத்தற்கு ஏதுவாய், அவன் புணரப் புணர்தலும், பிரியப் பிரிதலுமாகிய இயல்பு. “கான நாடன் பிரிந்தெனத், தானும் பிரிந்தன்றுஎன் மாமைக் கவினே”1 எனப் பிறரும் மாமையின் இயல்பு தெரித்தவாறு காண்க.

எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும் என்ற வினையுவமப் போலி, நீ கூறுகின்ற மெலிவுக்கு மேலே மெலிவு கூறுகின்றது இவளது நுதல் எனத் தலைவியது எளிமை கூறித் தோழி இரங்குதற்கு உபகாரமாய் நின்றது.

இது, “பெறற்கரும் பெரும்பொருள்”2 என்ற சூத்திரத்து, “அருமைக் காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தானும்” என்புழித் தோழி நிகழ்த்தும் கூற்று வகையாகும். இச் சூத்திரத்துப், “பெருமை காட்டிய இரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலன்றி, பண்டு இவ் வாறு செய்தனை, இப்பொழுது இவ்வாறு செய்யாநின்றனை எனத் தமது உயர்ச்சியும், தலைமகனது நிலையின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று” என ஆசிரியர் இளம்பூரணர் கூறுவர். அப்பொருண்மைக் கேற்ப, “பண்டு நீ இவளது நல்லணி நயந்து இன்றியமையாயாய் மணந்தனை; இதுபோது அதனை நயவாது துறந்தனை; அதனால் நுதலும் பசந்தது” என இரங்கியவாறாகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் அவை.

இனி, “களவும் கற்பும் அலர் வரைவின்றே”3 என்பதனால், இது தோழி அலர் கூறியது என்றும், மேலே காட்டப்பட்ட தொல்காப்பியச் சூத்திரத்துச் “சீருடைப் பெரும்பொருள் வைத்த வழி மறப்பினும்” என்பதனால், தலைமகன் அறம்பொருள் களைச் செய்தற்கும், இசையும் கூத்து மாகிய இன்பம் நுகர்தற்கும் தலைவியை மறந்தொழுகுதற்கு இதனைக் காட்டி, “இதனுள் துறத்தலின் எனப் பொதுவாகக் கூறினாள், அற முதலியவற்றைக் கருதுதலின்,” என்றும் கூறுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இனி, ஆசிரியர் பேராசிரியர், “தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின்”1 என்ற சூத்திர வுரையின்கண், “வினையுவமமும் உருவுவ மும் ஒரு செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்கு வருதலுமுடைய,” என்று கூறி, “இத்தன்மைத் தாகிய ஊர் அனையா……” எனச் சொல்லுதலும் உண்டென்று காட்டுதற்கு இதனுள், “தேர்வண் கோமான் தேனூரன்ன இவள் என்பது அவன்ஊர் அனையாள் என வந்தது” என்பர்.
பிளிறும் என்பதும் பாடம். ஆயினும் தொடைநலம் நோக்கியவழி, பிளிற்றும் என்ற பாடமே சிறப்புடைத்தெனக் கொள்க.

    56. பகல்கொள் விளக்கோ டிராநாள் அறியா  

வெல்போர்ச் சோழ ராமூ ரன்னவிவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயஞ் செய்யுநீ தேற்றிய மொழியே.
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, அஃது இல்லை யென்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

பழைய உரை :
தேம்ப என்பது தேம்பா நிற்க என்றவாறு. பகல் கொள் விளக்கோடு…… அன்ன என்பது ஒருநாளும் மெலிவறியாத இவள் மெலிவறிய ஒழுகினாய் என்றவாறு.

உரை :
பகற்போதின் ஒளியினையுடைய விளக்கு2 க்களால், இரவுக் காலத்தின் உண்மை அறியலாகாத வெல்லுகின்ற போரினை யுடைய சோழரது ஆமூர் போலும் இவளுடைய நலம்பெற்ற ஒளி திகழும் நுதல் பசந்து ஒளி மழுங்குதலால், நீ பண்டு தெளித்துக் கூறிய மொழிகள் எப்பயனைச் செய்தன? செயலொடு ஒவ்வாது பொய்த்தமையின், இப்போது தெளிப் பனவும் அன்னவாத லன்றி ஒரு பயனும் செய்யா என்றவாறு.

பகல் - நண்பகற் போதின் நல்லொளி; ஆகுபெயர். விளக்கு - பாண்டில் விளக்கு; “வளிமுனை யவிர்வரும் கொடிநுடங்கு தெருவிற், சொரிசுரை கவரு நெய்வழி புராலின், பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல”1 எனப் பிறரும் பேரொளிக்குப் பாண்டில் விளக்கினைக் கூறுதல் காண்க. நண்பகற் போதின் நல்லொளியை செய்யும் பேரொளி விளக்கு என்றற்குப் பகல் கொள் விளக்கு என்றார்.

“கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டி”2 என்புழிப்போல, ஒடு ஆனுருபின் பொருட்டு. ஆமூர், “அந்தணர் அருகா வருங்கடி வியனகர், அந்தண் கிடங்கின் ஆமூர்”3 எனவும், “இன்கடுங் கள்ளின் ஆமூர்”4 எனவும் சோழநாட்டில் பல ஆமூர்கள் உள எனக் கொள்க. பசலையால் ஒளி மழுங்காவழி, அது பேரழகு திகழும் நல்லொளி கொண்டு விளங்குதலின், நலம்பெறு சுடர் நுதல் என்றார்; “சுடர்புரை திருநுதல் பசப்ப”5 எனப் பிறரும் கூறினர். தேற்றிய என்றதனால், தேற்றிய காலம் வருவிக்கப் பட்டது. செயலொடு ஒவ்வாது என்பது முதலாயின எஞ்சி நின்றன. நீ தேற்றிய மொழி எவன் பயஞ் செய்தன என்னாது, செய்யும் என்றது, இப்பொழுதையிற் கூறும் தெளிப்புரையும் அதுபோலப் பொய்யாத லன்றி மெய்யாய்ப் பயன் தாராது என்பது முடித்தற்கு.

நீ தேற்றிய மொழி இப்பொழுதைய நின் புறத் தொழுக்கத் தால் பொய்த்தமை கண்டு, இனிக் கூறுவனவும் அன்னவேயாம் எனத் தெளிந்து வருந்துகின்றாள் என்பாள் நலம்பெறு சுடர்நுதல் தேம்ப என்றாள். நலம் பெறு சுடர்நுதல் என்றது, அவ்வாறு தேம்புமாறு ஒழுகுதல் நின் தலைமைக்கு ஆகாது என வற்புறுத்திய வாறு. “நும்மோ ரன்னோர் மாட்டும் இன்ன, பொய்யொடு மிடைந்தவை தோன்றின், மெய்யாண்டுளதோஇவ் வுலகத் தானே”1 என இவ்வாசிரியரே பிறாண்டும் கூறுதல் காண்க. நின்பால் நலமே பெறத்தக்க இவளது திருநுதல், நீ தேற்றிய மொழியின் பயனாய்ப் பசப்பு எய்தினமையின் இனிக் கூறுவன வற்றால் எய்தக்கூடிய பயன் வேறொன்றும் இல்லை என்பாள் எவன் பயஞ்செய்யும் என்றும், அம் மொழியின் பொய்ம்மை சுட்டித் தேற்றிய மொழி என்றும் கூறினாள். “எவன்பயஞ் செய்யும் நீ தேற்றிய மொழி” என்றது தெய்வமஞ்சல். “சுடர்நுதல் தேம்ப” என்றது பசலைபாய்தல். ஏனை மெய்ப்பாடும் பயனும் அவை.

இராநாள் உளதாகவும், விளக்கங்கள் தம் ஒளியால் அதனை அறியாவண்ணம் மறைப்பதுபோல, நின்பாற் பரத்தைமை உளதாகவும், அதனை இப் பொய்ம்மொழிகளால் மறைத்துத் தெளிவிக்கின்றாய் எனத் தலைவனது தெளிப்புரையின் இயல்பு கூறினாளாயிற்று.

இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், “சூள்நயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும்”2 என்புழி இதனைக் காட்டி, “இதனுள் இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே. சோர்வு கண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும் இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தரும் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க” என்பர்.

இனி பகல்கொல் விளக்கு என்ற பாடத்துக்குப் பகலைத் தன் ஒளிமிகுதியால் மறைக்கும் என்றும், இரா நன்றறியா என்ற பாடத்துக்கு இரவுப் பொழுதினைப் பெரிதும் அறியலாகாத என்றும் உரைக்க. பகல் கொல்லும் விளக்கு எனச் சிறப்பித்தபின், இரா நன்றறியா என்பது பாட்டின் பொருள் நலத்தைச் சிறப் பியாமையின் அது பாடமன்மை அறிக.

    57. பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயின்  

ஆம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன
இவணலம் புலம்பப் பிரிய
அனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே.
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது.

பழைய உரை :
வேள்வித் தீயினையும் ஆம்பலஞ் செறுவினையும் உடைய தேனூர் என்றது மனத்தொழுக்கத் தூய்மையு……. கூறியவாறு.

உரை :
பகற்போதினைச் செய்யும் ஞாயிற்றைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தீயினையும், ஆம்பல் நிறைந்த வயல்களையு முடைய தேனூர் என்னும் ஊரை யொக்கும் இவளது அழகு தனிமையுற்று வருந்தப் பிரிதலின், நீ அவ்வாறு பிரியத் தக்க அத்துணை நலம் உடையளோ நின் பெண்டு? கூறுக என்றவாறு.

பகல் - ஆகுபெயர். பலவாகிய கதிர்களைப் பரப்பிக் கொழுந்துவிட்டு எரிதலின் பல்கதிர்த் தீ என்றாள்; “பல் பொருட்டு ஏற்பின் நல்லது கோடல்”1 என்றதனால், ஈண்டு விருந்தாகிய வேள்வி மேலதாயிற்று. “பகலெரி சுடரின் மேனி சாய”2 என்பது கொண்டு பகலில் தோன்றும் தீயின் இவள் நலம் புலம்ப என இயைத்துப் பகல் விளக்குப்போல இவள் மேனி நலங்கெட என உரைத்தலும் ஒன்று. உடையளோ என்புழி ஓகாரம் வினா. பெண்டு என்றது பரத்தையை. இனி, பல்கதிர்த் தீயினால் இரவுப் பொழுதும் பகல்போலத் தோன்றும் தேனூர் என இயைப்பினுமாம்.

இல்வாழ்வார்க்கு உரிய வேள்வியினையும் வளவயற்கு அணிசெய்யும் ஆம்பலினையும் கூறியதனால், தலைவிபால் மனையறம் புரிதற்குரிய மாட்சியும் கொடைக்கடன் இறுத்தற் குரிய வளமையும் கூறிச் சிறப்பித்தவா றாயிற்று. “மகப்பயந்து பயன்படும் மாட்சியையுடைய இவள் போல, நின் பரத்தை பயன்படுதல் இலளாகவும் அவளை நீ பெரிதும் நயந்து உறை தலின், அவள்பால் பெருநலம் உளதாகல் வேண்டும் அன்றோ?” என்பாள், அனைநலம் உடையளோ நின் பெண்டு என்றாள். அனைநலம் என்றது மகப்பயந்து பயன்படும் அத்துணை நலம் என்றவாறு. எனவே பரத்தையின்மாட்டு அஃதில்லை என்பது குறிப்பு. “எம்போற், புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறையும், என்ன கடத்தளோ”1 என்பதனால் பரத்தையின் பயப்பாடின்மை துணியப்படும்.

“கற்பும், காமமும் நற்பா லொழுக்கமும்” முதலாகிய மாண்புகளால் ஓப்புயர்வு இன்றி விளங்கும் இவள் நலம் கெடாத வாறு ஒழுகுதல் நினக்குச் சிறப்பியல்பாக அதனை நெகிழ்த்து இவள் தனிமையுற்று வருந்துமாறு மாண்பில்லாத பரத்தையை நீ நயந்து பிரிதல் கூடாது என்றற்கு இவள் நலம் புலம்ப என்றும், பிரிய என்றும் காரண காரிய இயைபு எய்த வகுத்தோதினாள். “இவள் நலம் புலம்ப” என்றது பசலை பாய்தல். “பிரிய” என்றது அழிவில் கூட்டத்து அவன்பிரிவு ஆற்றாமை. எனை மெய்ப்பாடு : இளிவரல். பயன் : பிரிவருமை கூறல்.

இனி, “பெறற்கரும் பெரும்பொருள்”2 என்ற சூத்திரத்து, “பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற்கண்” நிகழும் கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம் பூரணர்: நச்சினார்க்கினியர், இச்சூத்திரத்து, “வணங்கியல் மொழியால் வணங்கற் கண்ணும்” என்புழி நிகழும் கூற்றுக்கு உதாரணமாகக் காட்டி, “இதுவும் அதன்பாற் படும்” என்பர்.

அனநலம் உடையளோ என்ற பாடத்துக்குத் தலைமகளை ஒத்த நலம் உடையளோ என்று உரைக்க. அவளோடு ஒழுகு தலைப் பொறாத தோழி அவளைத் தலைமகளோட ஒப்பக் கருதுவதும் செய்யா ளாகலின், அப் பாடம் சிறவாமையறிக.

    58. விண்டு வன்ன வெண்ணெற் போர்வின் கைவண் விராஅ னிருப்பை யன்ன  

இவளணங் குற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே.
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது.

பழைய உரை :
கைவண் விராஅன் இருப்பை யன்ன என்றது, நினது இல் வாழ்க்கைக் குரியவாகிய குணங்களால் உயர்ந்தாள் என்றவாறு.

உரை :
மலைபோல் உயர்ந்த வெண்ணெற் போர்களையும் வரையாது வழங்கும் வண்மையினையு முடைய விராஅன் என்பானது இருப்பை என்னும் ஊரை யொக்கும் இவளால் வருத்தமுற்றாய் போல வருந்தினை; பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையை யாகலின் அமைக என்றவாறு.

விண்டு - மலை; “விண்டு வனைய விண்டோய் பிறங்கல்”1 என்றார் பிறரும். வெண்ணெல் - நெல்வகையுள் ஒன்று. விரா அன் - இருப்பை யென்னும் ஊரின்கண் இருந்து விளங்கிய ஒரு வள்ளல். இவனைப் பரணர் “முனையெழத். தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன், மலிபுனல் வாயில் இருப்பை” என்றும், “வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் இரியக் கழனி, வாங்குசினை மருதத் தூங்குதுண ருதிரும், தேர்வண் கோமான் விராஅன் இருப்பை”2 என்றும், சிறப்பித் திருக்கின்றனர். இப் பாட்டாலும், இருப்பையூர் வெண்ணெல் லால் வீறுபெற்று விளங்குமாறு காண்க. மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது. ஏழாதவன்கண் நான்காவது வந்து மயங்கிற்று. வாழி: அசைநிலை.

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலந்திருந்த தனை உணர்ந்த தோழி, அப்புலவி தீர்க்கும் கருத்தினளாகலின், அப்புலவியால் அவன் எய்திய வேறுபாட்டைப் பிறிதொன்றாக விதந்து, இவள் அணங்குற்றனை போறி என்றாள். மகளிரால் அணங்குற்றாய் போறலின், அது நீ பிற மகளிராலும் இவ்வாறு அணங்குறுதற்கு அமைந்தனை எனத் துணிதற்கு ஏதுவாதலின் புலத்தலில் சிறப்பின்று என்பாள் பிறர்க்கும் அனையையால் என்றும், புலவி தீராவழித் தலைமகட் கெய்தும் வருத்தம் குறித்து வாழி நீயே என்றும் கூறினாள். தலைவன் தலைவியால் அணங் குற்றது போலக் கூறுதல், “தான்நம் அணங்குதல் அறியான் நம்மின், தான்அணங் குற்றமை கூறிக் கானற், சுரும்பிமிர் சுடர் நுதல் நோக்கிப், பெருங்கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே 1” என்பதனாலும் அறியப்படும். புலவி தீராவழி வருத்தம் உண் டென்பது. “அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால், தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்”2 என்பதனால் உணரப்படும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவன் புலவி தீர்ந்து கூடுதல் உறுவானாவது.

“உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன் பால்நின்று, தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்”3 தலைவியைக் கழறிக் கூறற்பால ளாகிய தோழி, உணராமையால் புலந்த அத்தலைமகள் உணருமாறு அவன் தகுதி நோக்கித் தகுவன கூறலும் தனக்கு முறைமையாகலின், அவன் புலத்தலும் தலைவி பொறாமைக் கேதுவாய், மீட்டும் அவள் ஊடுதற்கே இடனாதல் காட்டித் தலைவனைத் தெளிவித்தாளாம். அதனால் தலைவி புலவா வகையில் உவமையால் அவளது இல்வாழ்க்கைக் குரிய மாண்புகளைச் சுட்டினாள் என அறிக.

விராலின் இருப்பை என்ற பாடம் ஏனைச் செய்யுட்களிற் காணப்படவில்லை. அது “விராலிமலை” என வரும் வழக்குப் பற்றி, விராலின் எனக் கொண்ட பாடம் போலும்.

    59. கேட்டிசின் வாழியோ மகிழ்ந வாற்றுற  

மைய னெஞ்சிற் கெவ்வந் தீர
நினக்குமருந் தாகிய யானினி
இவட்குமருந் தன்மை நோமென் னெஞ்சே.
தலைமகள் ஆற்றாளாம்வண்ணம் மனைக்கண் வரவு சுருங் கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழி, ஆற்றா ளாகிய தோழி சொல்லியது.

உரை :
மகிழ்ந, கேட்பாயாக: மயங்கிய நெஞ்சின்கண் எழுந்த வருத்தம் தீரப் பண்டு நீ ஆற்றுமாறு மருந்தாய்ப் பயன்பட்ட யான், இப்பொழுது இவளது ஆற்றாமை தீர்க்கமாட்டாமை யின் அவ்வாறு பயன்படுமாறு இல்லேன்; அதனால் இவளை ஆற்றுவிப்பது குறித்து என் நெஞ்சம் வருந்தா நிற்கின்றது என்றவாறு.

கேட்டிசின் - சின், முன்னிலையசை. ஆற்றுற என்பதனை மருந்தாகிய என்பதனோடு கூட்டுக. மையல் - கருதியது எய்தப் பெறாமையால் உளதாகும் திகைப்பு; அஃதாவது களவின்கண் இடையீடுகளாலும், கற்பின்கட் பிரிவுகளாலும் தலைக்கூடப் பெறாமையால் தலைமக்கட்கு நிகழும் மையல். எவ்வம் - வருத்தம். மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர என்பதனை இவட்கு மருந்தன்மை என்பதனோடும் இயைக்க. மருந்தன்மை யென்புழி ஏதுப் பொருட்டாய இன்னுருபு தொக்கது. நோகும் என்பது ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு நோம் என நின்றது என்பதுமுண்டு.

களவுக்காலத்து நிகழ்ந்த இடையீடுகளால் தலைமகன் தலைவியை எய்தப்பெறானாய் ஆற்றாது மையலுற்ற காலங்களில், ஆற்றத் தகுவன கூறி ஆற்றுவித்து, இடமும் காலமும் வாய்ப்புழிக் கூட்டமும் எய்துவித்துத் தோழி அவனது எவ்வம் களைந்தா ளாகலின், மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந் தாகிய யான் என்றாள். “அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க், கடும்பாம்பு வழங்குந் தெருவின், நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே”1 எனத் தோழி தான் பண்டு நிகழ்த்தியது கூறுதல் காண்க. இப்பொழுது நீ இவளைப் பிரிந்து ஒழுகுதலின் யான் இவளுற்ற வருத்தம் நீங்கப் பெரிதும் ஆற்றுவித்தவழியும் நீ நின் புறத் தொழுக்கத்தை விடாதே மேற்கொண்டு சுருங்கிய வரவுடையை ஆயினமையின், யான் இவளைத் தேற்றும் திறனின்றி வறிது கழிவேனாயினேன் என்பாள், இவட்கு மருந்தன்மையின் என்றும், இந் நிலைக்கண் யான் ஈண்டை யிருந்தும் இவள் எய்தும் எவ்வம் தீர்க்கும் வலியின்றி அதனைக் கண்ணிற் கண்டு வருந்து கின்றேன் என்பாள், நோம் என் நெஞ்சே என்றும் கூறினாள். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை கூறல்.

“பெறற்கரும் பெரும்பொருள்”1 என்ற சூத்திரத்துப் “பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற்கண்” நிகழும் கூற்றுக்கு இதனைக் காட்டினர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும்.

மகிழ்ந வாற்றும் என்பது பாடமாயின், ஆற்றும் என்பதை மருந்தென்பதனோடு இயைத்துக் கொள்க.

    60. பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவும்  

கழனி யூரநின் மொழிவ லென்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
அஞ்சா யோவிவள் தந்தைகை வேலே.
வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது.

உரை :
பழனங்களில் வாழும் கம்புட்கோழி அழைப்பிடுதலை யுடைய பெட்டையைக் கூவி அழைக்கும் கழனிகளை யுடைய ஊரனே, நின்பால் ஒன்று மொழிவேன்: உள்ளிருப்பவர் இனிது உறங்கும் மனைகளையுடைய பெரிய நகரின்கண் என்றும் இரவில் வருகின்றா யாகலின், இவள் தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீ அஞ்சுவையல்லைகொல்லோ? யாம் அஞ்சிப் பெரிதும் வருந்தாநிற்கின்றேம்காண் என்றவாறு.

கம்புள் - கம்புட்கோழி; இதனைச் சம்பங்கோழி என்றும் கூறுவர். கம்புட்கோழி என்பது இறந்த வழக்கு என்று நச்சினார்க் கினியர் கூறுவர்.2 பயிர்தல் - அழைப்பிடுதல்; “யானைப் பெருநிரை வானம் பயிரும்”3 என வருதல் காண்க. துஞ்சுமனை என்புழி இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வருதி: முன்னிலை வினைமுற்று. துஞ்சுமனை வருதி என்றதனால், இஃது இரவுக் குறிக்கண்ணது என்பது பெற்றாம்.

வரைவுகடாவும் குறிப்பின ளாதலின், தோழி முதற்கண் நின் மொழிவல் என முகம்புகுகின்றாள். “வரைதலைக் கருதாது நாளும் களவே விரும்பி ஒழுகுகின்றாய்” என்பாள், என்றும் துஞ்சுமனை நெடுநகர் வருதி என்றும், இரவுக்குறிக்கண் வரும் அருமை தோன்றத் துஞ்சுமனை என்றும் கூறினாள். “இயங்குநர் மடிந்த அயந்திகழ் சிறுநெறிக், கடுமா வழங்குத லறிந்தும், நடுநாள் வருதி நோகோ யானே”1 என இரவில் வருதலின் அருமை குறித்துத் தோழி கவன்று கூறுவது காண்க. காப்புமிகுதியும் நெறியினது அருமையும் கருதாது எம்பாற்கொண்ட பேரன் பினால் வருதலைச் செய்கின்றனை என்பாள் நெடுநகர் வருதி என்றாள். “நீயே, அடியறிந் தொதுங்கா ஆரிருள் வந்து எம், கடியுடை வியனகர்க் காவல் நீவியும், பேரன்பினையே பெருங்கல் நாட”2 எனப் பிறாண்டும் வரும் தோழி கூற்றுக் காண்க. இவ்வாறு வருதலால் நினக்கு வரும் ஏதத்தை எண்ணி யாம் வருந்து மாறும், தாய் அறியின் இஃது இற்செறிப்புக்கு ஏதுவாமாறும் பிறவும் கருதாயாயினும், இவள்தந்தை தன்னையர் மிகக் கொடிய ராகலின், அவர் செய்யும் ஏதத்தினையும் கருதுகின்றிலை என் பாள், அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே என்றாள். யாம் அஞ்சி என்பது முதலாயின எஞ்சி நின்றன.

“பொழுதும் ஆறும் காப்பும்என்று இவற்றின், வழுவி னாகிய குற்றம் காட்டலும், தன்னை அழிதலும் அவன்ஊறு அஞ்சலும், இரவினும் பகலினும் நீவரல் என்றலும், கிழவோன் தன்னை வாரல் என்றலும், நன்மையும் தீமையும் பிறதினைக் கூறலும், புரைபட வந்த அன்னவை பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப”3 என்பதனுள் துஞ்சுமனை நெடுநகர் வருதி என்றது, பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின் வழுவினாகிய குற்றம் காட்டல். அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே என்றது அவன் ஊறு அஞ்சல். “யாம் அஞ்சி வருந்துகின்றோம்” என்பது தன்னையழிதல். “பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல், யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப, வேங்கை கமழும் சிறுகுடி, யாங்கறிந் தனையோ நோகோ யானே”4 எனத் தோழி வருந்திக் கூறியதும் இதுவே. மெய்ப்பாடு: அச்சம். பயன் : வரைவு கடாதல். இதன்கண் இரவுக்குறி வருதல் கூறினமையின், பகற்குறி மறுக்கப்பட்டமையும், இதனால் இரவுக்குறியும் மறுக்கப்பட்ட மையும் எய்தினமையின், தோழியின் இக்கூற்றாற் பயன் தலைவன் தெருண்டு வரைவொடு புகுவான் என்பது.

இனி, நச்சினார்க்கினியரும் இது “தோழி இரவுக்குறி மறுத்தது”1 என்றே கூறினர்.

பயிர் பெடை என்றும், பயிற் பெடை என்றும் பாடம் உண்டு.

இது மருதத்துக் களவு.


கிழத்தி கூற்றுப்பத்து

இதுவும் முன்னையது போலக் கூற்று நிகழ்த்துவோர் பொரு ளாக வரும் பாட்டுக்களின் தொகையாகலின், இப் பெயரின தாயிற்று.

ஈண்டுத் தொகுக்கப்பெற்ற கூற்றுக்கள் யாவும் தலைவன் புறத்தொழுகித் தன் மனைக்கட் போந்தவிடத்து, தலைவி புலந்து கூறுவனவாகும். ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்துக்கே உரிய இன்பநெறிப் பொருளாகலின், அவ்வாறு தலைவி ஊடிக் கூறுவனவாகிய கூற்றுக்களே இதன்கண் வருதல்பற்றி, புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் கிழத்தி கூற்று எனத் தொகுத்துச் சிறப்பித்தனர். அகனைந்திணைக்கண் வரும் தலைவன், தலைவி, கிழவன், கிழத்தி என்பார் மக்களுள் குற்றமேயின்றி உயர் குணங் களே உருக்கொண்டவர்; பிணி மூப்பு முதலியன எய்தாது இளமையின் இன்பநலம் முற்றும் சிறிதும் எஞ்சாது நிரம்பியவர். தலைவன், தலைமைக்குரிய தலைமைப் பண்புகளனைத்தும் தனக்கே யுரிமையாக வுருக்கொண்டவன். தலைவி, மகளிர்க்கு வேண்டும் தலைமைப் பண்புகள் யாவுமான பெண் வடிவம். இவ்வாறு மக்களுள் இருவரை நாட்டியே சான்றோர் இன்ப வாழ்வுக்கு வேண்டிய அறநெறிகளை அகத்திணைக்கண் வகுத் துள்ளனர். இன்றைய நீதி முறைகளும் இக்கருத்தையே அடிப் படையாகக் கொண்டு இயலுகின்றன. இன்றேல், எந் நாட்டிலும் நிரம்பிய நீதிநூல் தோன்றி நிலவுதல் இயலாது.

    61. நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம்  

நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்
கைவண் மத்தி கழாஅ ரன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை யயர விரும்புதி நீயே.

வதுவை அயர்ந்தா ளொரு பரத்தையைச் சின்னாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான் என்பது அறிந்த தலைமகள், அவன் மனைவயிற் புக்குழிப் புலந்தாளாக, “இது மறைத்தற் கரிது” என உடன்பட்டு, “இனி, என்னிடத்து இவ்வாறு நிகழாது” என்றாற்கு அவள் சொல்லியது.

உரை :
மண மிக்க வடுக்களையுடைய மாமரத்திற் பழுத்து உகும் இனிய பழம் ஆழ்ந்த நீரினையுடைய பொய்கையின்கண் துடும் என்னும் ஓசையுடன் விழும், கொடைவண்மையினையுடைய மத்தி என்பானது கழார் என்னும் ஊர் போலும் நல்ல மகளிரை நாடி நீ வதுவைகொள்ள விரும்புகின்றாயாக, “இனி என் னிடத்து இவ்வாறு நிகழாது” என்பது என்னை? என்றவாறு.

வடி - மாவடு; “நறுவடிப் பைங்கால் மாஅத்து அந்தளிர்”1 என்பதனால், இஃது இப்பொருட்டாதல் உணரப்படும். நெடுநீர் ஆழ்ந்த நீர்நிலை. துடும் என்பது கனவிய பொருள் நீரின்கண் விழுதலால் எழும் ஓசை. “கொக்கின்உக்கு ஒழிந்த தீம்பழம் கொக்கின், கூம்புநிலை யன்ன முகைய ஆம்பல், தூங்குநீர்க் குட்டத்துத் துடும்என விழூஉம், தண்டுறையூரன்”2 என இக் கருத்தினையே பிறரும் கூறுதல் காண்க. வதுவை அயர்ந்த விடத்தும் பரத்தையர் மேனிநல மல்லது குலமகளிர் போலும் கற்பு நலம் இலராகலின், அடுக்கு இழித்தற்கண் வந்தது. இனி என்னிடத்து என்பது முதலாயின எச்சவகையால் வந்தன.
மத்தி என்பவன் பரதவர் என்னும் தென்புல மக்கட்குத் தலைவன். இவனது படைப் பெருமையும் கொடைவண்மையும் புலவர் பாடும் நலம் பெற்றன. இதனை, “வள்ளெயிற்று நீர்நாய், முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும், பல்வேன் மத்தி கழாஅர்”3 என ஆசிரியர் பரணர் பாடியிருத்தல் காண்க. அன்றியும், இவன் வெண்மணி என்னுமிடத்துப் பனித்துறை யொன்று கட்டி, ஆசிரியர் மாமூலனாராற் புகழப்பெற்றான். அது, “வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை”1 என வருகின்றது. கழாஅர் என்பது காவிரிக் கரையை யடுத்தது; மேலும், இது கழாஅர்க் கீரன் எயிற்றியார் என்னும் புலவர் பெருமாட்டியார் பிறந்த ஊராய்க் கரிகால்வளவன்தன் மகள் ஆதிமந்தியும் அவள் கணவன் ஆட்டனத்தியும் சூழ்வரச் சென்று தண் பதம் கொண்ட சீரிய இடமுமாகும்.

முதற்கண் ஒருத்தியை மணந்து சின்னாளில் அவளைக் கைவிட்டுப் பிறளொருத்தியை மணந்தான் என முன்னே கேட் டறிந்துளா ளாகலின் நல்லோர் நல்லோர் நாடி என்றும், அப்பெற்றி யோன் இனியும் அவ்வாறே செய்தொழுகுவன் என்று புலத்தலின் வதுவை யயர விரும்பினை என்னாது விரும்புதி என்றும் கூறினாள். இவை புறஞ்சொல் மாணாக்கிளவி. நல்லோர் நல்லோர் என்ற பெயர்த்துரை அவன் நாளும் புது வோர் மேவலனாய் ஒழுகுதலை வற்புறுத்தது. பரத்தையரைத் தலைவன் தலைக் கூடலை வதுவையயர்ந்தான் எனவும், அஃது அலராய் ஊர்முழுதும் கௌவையாயிற்று எனவும், தான் அவனது புறத்தொழுக்கத்தை அறிந்தவாற்றைத் தலைவி வெளிப்படக் கூறுதலும் உண்மையின், ஈண்டு வாளா நல்லோர் நல்லோர் நாடி வதுவை விரும்புதி என்றாள். “திருமரு தோங்கிய விரிமலர்க் காவின், நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு, வதுவை யயர்ந்தனை என்ப, அலரே……… வீரர் ஆர்ப்பினும் பெரிதே”2 என்று தலைவி வெளிப்படக் கூறுவது காண்க. ஈண்டுக் கற்பு நலம் சுட்டாது மேனிநலம் குறிப்பாய் விதந்தவாறே, இவ் வகப்பாட்டினும் பரத்தையின் கூந்தலும் தொடியுமே தலைவி எடுத்தோதியவாறு காண்க.

நறுவடி மாவின்கண் விளைந்து முதிர்ந்த தீம்பழம் அதனின் நீங்கி நெடுநீர்க் குட்டத்துத் துடும் என விழும் என்றது, பரத்தையர் சேரிக்கண் நலங்கனிந்து சிறந்த பரத்தையர் தம் தாயர் முதலா யினாரின் நீங்கி நின்னொடு வதுவையிற் கூடி மகிழ்வர் என உள்ளுறையாற் பரத்தையரைக் குறை கூறியவாறு.

இகுமதி நீயே என்பது பாடமாயின், வதுவை யயர்தற் பொருட்டு அவர்பால் நீ விழுகின்றாய் என்றும், எனவே, தீம்பழம் தன்னைப் பேணிய மாவின் சினை புலம்பக் குட்டத்து வீழ்தல் போல நின்னைக் காதலித்துப் பேணிய யாம் புலம்பப் பரத்தை யரை அணைகின்றாய் எனத் துனியுறு கிளவி உள்ளுறுத்து உரைத்தவாறு என்றும், “உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத், தள்ளா தாகும் திணையுணர் வகையே” என்றதனால் இஃது அமையும் என்றும் உரைக்க. மெய்ப்பாடு: வெகுளி. பயன் : புலத்தல்.

    62. இந்திர விழவிற் பூவி னன்ன  

புன்றலைப் பேடை வரிநிழ லகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்தினி
எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் றேரே.
இதுவுமது.

உரை :
மகிழ்ந, பூப்போலப் புல்லிய தலையினையுடைய குயிற் பேடை செறியாத நிழற்கண் இருந்து கூவும் இவ்வூரின் கண் எடுத்த இந்திரவிழவில் விரும்பிய மங்கையர் பலரைக் கொணர்ந்து தொகுத்து விளங்கும் நின்தேர் இப்போது எவ்வூர்க்கட் சென்று நிற்கின்றது? கூறுக என்றவாறு.

பேடை அகவும் இவ்வூர் எடுத்த இந்திரவிழவில், மங்கையர்த் தொகுத்து, இனி, நின்தேர் எவ்வூர் நின்றன்று கூறுக என இயை யும். தலைமக்கள் விழவுக் காலத்துத் தம் மனத்துக்கினிய மங்கைய ரோடு கூடி மகிழ்தல் மரபாகலின், இந்திரவிழவு கூறப்பட்டது. நகரார் எடுத்த இந்திரவிழவு, ஈண்டு நினைவுகூர்தற்பாலது.

பேடை அகவும் என்றதனால், மயிற்பேடையும் குயிற் பேடையும் கொள்ளப்படும்; “நுகர் குயில் அகவும்”1 என்பது காண்க. நின்றன்று: முற்று.

இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி எவ்வூர் நின்றன்று நின்தேர் என்றது, இவ்வூரின்கட் பல மங்கையரை வதுவை அயர்ந்த நீ, அவர்களோ டமையாது வேறு பிற ஊர்கட்கும் சென்று வேறு மங்கையர் பலரைக் கூட விரும்புகின்றாய் என்ற வாறாம். “மாட்டுமாட் டோடி மகளிர்த் தரத்தரப், பூட்டுமான் திண்டேர்” என்றும், “நேரிழை நல்லாரை நெடுநகர்த் தந்துநின், தேர்பூண்ட நெடுநன்மான் தெண்மணிவந் தெடுப்புமே”1 என்றும் வந்தன காண்க. ஊர்தொறும் பரத்தையர்மனைதோறும் சென்று மகளிரை நாடித் தொகுத்துக் கூடி மகிழும் நினது தேர் எம்மனைக் கண் நிற்றற்கு இயைபின் றென்பாள் எவ்வூர் நின்றன்று நின்தேர் என்றாள் என்க.

புன்றலைப் பேடை வரிநிழற்கண் இருந்து அகவும் என்றது, தலைவன் பிரிவாற்றாது தான் இல்லிருந்து வருந்தினமை உணர்த்தி நின்றது.

இந்திரவிழவிற் பூவினன்ன என்பதை மங்கையர்க்கு அடையாக்கி, இந்திரவிழவின்கண் வேறுவேறு நிலத்தினின்றும் பூக்கள் பல கொணர்ந்து தொகுத்துப் பயன்கோடல் போல, வேறுவேறு ஊர்களிலிருந்தும் மகளிரைக் கொணர்ந்து வதுவை யின்பம் கொள்கின்றாய் என்று கூறலும் ஒன்று. மெய்ப்பாடும் பயனும் அவை.

மங்கையைத் தொகுத்து என்றும் மகிழ்ந்தநின் தேரே என்றும் வரும் பாடம் பொருட்சிறப்பில. இனி, மங்கையரைத் தொகுத்து அவரொடு காமக்களியாட்டயர்ந்து மகிழ்ந்த நீ, அம் மயக்கத்தால் எம் மனைக்கட் போந்தனை போலும் என்றற்கு எவ்வூர் நின்றன்று மகிழ்ந்த நின்தேர் என்றாள் எனினுமாம். இப் பொருள்கோளில் ஊர் என்றது, முறையே பரத்தையர் சேரியையும், தன் மனையையும் குறிக்கும். ஆகவே, இது நின் பரத்தை மனையன்று செல்க என்பது கருத்தாயிற்று.

    63. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்  

வாளை நாளிரை பெறூஉ மூர
எந்நலந் தொலைவ தாயினும்
துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த நின்மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது.

உரை :
பெருமானே, பொய்கையாகிய இடத்தில் வாழும் புலால் நாறும் நீர்நாய் வாளைமீனை நாளிரையாகப் பெறும் ஊரனே, கூடி முயங்காதவழி எமது நலம் முற்றும் கழிந்து படுவ தாயினும், பிறரைக் கூடி முயங்கிய நின் மார்பினை யாம் கூடுவேமல்லேம் என்றவாறு.

பொய்கைப்பள்ளி: இருபெயரொட்டு. “கல்லளைப் பள்ளி”1 எனப் பிற இடங்கட்கும் பள்ளியென்பது உரிமை யெய்துமாறு காண்க. நாளிரை - காலை வேளையிற் பெறும் உணவு. “நாள் ஞாயிறு”2 என் நாட்பெயர் காலைப்போது குறித்தல் அறிக. உம்மை கூடாதவழி நலங்கெடுதல் ஒருதலை என்பது உணர நின்றது. “அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய், வாளை நாளிரை பெறூஉம் ஊரன்”3 என்றும், “பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து, வாளை நாளிரை தேரும் ஊர”4 என்றும் சான்றோர் கூறுப. துன்னலம்: அன்மை சுட்டிய எதிர்மறைப் பன்மைத் தன்மைவினை முற்று.

“நீர்நாய்”5 என்பது நீரில் வாழும் உயிரினங்களைப் பிடித் துண்டு வாழும் உயிர்வகையுள் ஒன்று. இது கரடி இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறுப. இஃது ஏனைய நாய்கள் செழித்து வாழும் நிலங்களிற் செம்மையாக வாழும் சிறப்புடையது. நீந்துவதிலும், நீர்க்கு அடியில் இருகரைகளுக்கும் இடையே புழைகளைச் 6 செய்தலிலும் கைதேர்ந்தது. இதன் பற்கள் வாள்வாய்போல அமைந்து, அகப்பட்ட பொருள் நெகிழ்ந்தோடா வகையில் இறுகப் பற்றும் பான்மை அமைந்தவை. அதனால் மிக்க வழு வழுப்புடைய மீனினங்களையும் நீர்நாய் எளிதிற் பற்றிக் கொள்ளு கின்றது. இவ்வியல்பினைக் கண்ட சான்றோர், “வள்ளெயிற்று நீர்நாய்” எனச் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். தான் வாழு மிடத்தில் தண்ணீரோ, தனக்குரிய இரையோ கிடைப்பது அரிதாய காலத்தில், அது குறித்து நெடுந்தொலைவு செல்லும் நீர்மையுள்ளது. நம் தமிழகத்தில் நீர்வளம் குன்றத் தலைப் பட்டதும் இவை வேறு நாடுகட்குப் போய்விட்டன.

நீர்நாய்களை மட்டில் சுமார் பன்னிரண்டு வகைகளாகப் பிரித்திருக்கின்றனர். அவற்றுட் கடலில் வாழும் நாய், கடல்நாய் எனப்படும். அதுவே மிகச் சிறந்ததாக மேனாட்டவர் கருது கின்றனர். அதன் பூமயிர் பேரழகு வாய்ந்தது. அதைக் கைசெய்து அணிந்து கொள்வதில் மேனாட்டு மக்கட்குப் பெருவேட்கை யுண்டு. அதனால், அதனைப் பெறுவது குறித்து வேட்டை யாடுவோர் பெருகினர்; அதன்பயனாக, அதன் பூண்டே அற்றுப் போக நேர்ந்தது.

நீர்நாய்கள் செங்குத்தாய் உயர்ந்திருக்கும் ஆற்றங் கரைகளில் நயமான வழிகளைச் செய்து, அவற்றில் இன்புற ஏறியிறங்குவது காண்பார்க்குப் பேரின்பம் பயக்கும் காட்சியாகும்.

நீர்நாய் மிக்க மனத்திட்பம் உடையது. அது தனக்குத் தீங்கு செய்யக் கருதும் உயிரை எதிர்த்துநின்று வெல்லக் கருதும் வீறுபெற்றது. ஒருகால் வேட்டுவன் ஒருவன், நீர்நாய்கள் இரண்டினைக் கண்டு, தன் கையிலிருந்த கொடுங்கூர்ங்கோல் 1 கொண்டு கொல்லமுயன்றானாக, அவையிரண்டும் அவனை எதிர்த்து நெடிது போராடி, முடிவில் அவன் தானே புறமிட்டு ஓடுமாறு செய்தனவாம்! உடற்சிறுமை கண்டு எளிதிற் பற்றி உயிர்குடிக்கக் கருதிய காட்டுப்பூனை 2 ஒன்று, நீர் நாய் ஒன்றை எதிர்த்ததாக, அந்நாய் அப் பூனையை வென்று கொன்றுதின் றொழித்ததாம். இத்தகைய நீர்நாய்கள் இன்றைய தமிழகத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே வேரோடழிந்து மறைந்தன. இதற்கு அம்சதேவர் எழுதிய மிருகபட்சி சாத்திரமே சான்று பகருகின்றது. சூழவுள்ள கடல்களிலும் இப்போது இவை காணப்படுவதில்லை.

களவிற் போல இனி மேனி வேறுபாட்டிற்கு அஞ்ச வேண்டாமையின் தலைமகள் எந்நலம் தொலைவ தாயினும் என்றாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவு ஆற்றாமை. சிறப்பில்லாத பரத்தையரோடு கூடியது பொருளாகப் புலவி மிகுகின்றா ளாகலின். ஊர என்றதனோடமையாது, பெரும என மீட்டும் முன்னிலைப்படுத்தாள். ஊர என்றது, உள்ளுறையால் அவனது புறத்தொழுக்கத்தைக் குறித்தற்கு என்றும், பெரும என்றது புலவி மிகுதியால் மார்பு தோய்வதை மறுத்தற்கு என்றும் வகுத்துக்கொள்க. குலமகளிரைப் போல் மனைவாழ்க்கைக்குப் பயன்படாமை பற்றிப் பரத்தையரைப் பிறர் என்றாள். உள்ளுறைக் கண் நீர்நாயை, “புலவுநாறு நீர்நாய்” எனச் சிறப்பித்ததனால், தலைவன் பரத்தையரைத் கூடிப் புணர்குறியும் மணமும் கமழ வந்தான் என்பது பெறுதும். அவற்றைக் காணுந்தோறும் தலைவிக்குப் பொறாமை மிகுதலின், துன்னலம் பெரும பிறர்த்தோய்ந்த நின் மார்பே என்றாள்.

இஃது, “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”1 என்ற சூத்திரத்து, “புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்” தலைவி நிகழ்த்தும் கூற்றுவகை யாகும். எம் நலம் தொலைவ தாயினும் என்றது, அகன்ற கிழவற்குத் தன் புலம்புநனி காட்டியது. துன்னலம் என்றது, இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்தது. மெய்ப்பாடும் பயனும் அவை.

இனி, பேராசிரியர் இதனைப் பிறப்புவமப் போலிக்கு உதாரணமாகக் காட்டி, “நல்ல குலத்திற் பிறந்தும் இழிந்தாரைத் தோய்ந்தமையால் அவர் நாற்றமே நாறியது, அவரையே பாது காவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல் என்பாள், அவையெல்லாம் விளங்கக் கூறாது பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும் பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையும் தலைவி பிறப்பு உயர்ந் தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்வும் கூறினமையின், இது பிறப்புவமப் போலியாயிற்று; இவையெல்லாம் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பாம் எனவும், வாளாது நீர்நாய் வாளை பெறூஉம் ஊர என்றதனால் ஒரு பயனுமின்று எனவும் கொள்க”1 என்பர்.

நீர்வாய் வாளை என்றும் பாடமுண்டு. இதற்கு நீரில் வாழும் வாளை யென்றும், எனவே வாளைமீன் நாளிரையாகப் பெறப்படும் ஊர என்றும் உரைத்துக் கொள்க.

    64. அலமர லாயமோ டமர்துணை தழீஇ  

நலமிகு புதுப்புன லாடக் கண்டோர்
ஒருவரு மிருவரு மல்லர்
பலரே தெய்யவெம் மறையா தீமே.
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது.

உரை :
சூழ்ந்து திரியும் ஆயமகளிருடன் நின்னால் விரும்பப்பட்டு நினக்குப் புணர்துணையாகிய பரத்தையைத் தழுவிக்கொண்டு நீ அழகுமிக்க புதுப்புனலில் ஆடக் கண்டவர் ஒருவர் இருவர் அல்லர், பலர்காண்; ஆகலின், நீ அதனை எமக்கு மறைத்தல் வேண்டா என்றவாறு.

அலமரல்- சுழற்சி; சூழ்வருதலும் சுழற்சி, யாகலின், “அலமர லாயம்” என்றார். துணை, ஈண்டுப் புணர்துணையாகிய பரத்தை மேற்று. உம்மை எண்ணுப்பொருட்டு. இருவர் என்றதும் பலரையே எனினும், ஈண்டு, “ஒன்று இரண்டு பல” என்னும் வழக்குப்பற்றி வந்தது. ஏகாரம் தேற்றம். தெய்ய என்பது அசைநிலை; இதனைக் “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே”2 என்பதனால் அமைப்பர். மறையாதீமே: முன்னிலைப் பன்மை எதிர்மறை முற்றுவினைத்திரிசொல். ஆகலின் என்பது முதலாயின குறிப் பெச்சம்.

ஆயவெள்ளம் புடைசூழத் திரியும் பரத்தை என்றற்கு, அலமர லாயமோடு அமர்துணை என்றும், தன்பால் அன்பு சுருங்கிப் பரத்தைபால் மிகுந்தொழுகுகின்றான் என்னும் நிம்பிரி யினால், அமர்துணை தழீஇ எனச் சிறப்பித்தும் கூறினாள். “எஃகுடை எழில் நலத் தொருத்தியொடு நெருநல், வைகுபுனல் அயர்ந்தனை என்ப”1 எனப் பிற சான்றோரும் கூறியவாறு காண்க. பல்வகை நறுமலரும் சுமந்து அளி மொய்ப்ப ஒளி சிறந்து காட்சியின்பமும், துணையொடுகூடி ஆடுவார்க்கு ஊற்றின்பமும் பயக்கும் சிறப்புடைப் புதுநீர்ப் பெருக்காதலால், அதனை நலமிகு புதுப்புனல் என்றாள். இதனைக் கண்டோர் ஒருவர் இருவராயின் நீ மறைத்தல் தகும் என்பாள், ஒருவரும் இருவரும் அல்லர் என்றும், நீ புனலாடிய செய்கை அலராய் ஊரெங்கும் பரவிப் பலரும் அறிபொருளாயிற்று என்றற்குப் பலரே என்றும் கூறி னாள். “கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே”2 என்பதனால் புனலாட்டும் புலவிக்கு ஏதுவாய்க் காமஞ் சிறப்பிக்கும் என அறிக. தலைவன்பாற் பரத்தைமை கண்டு, தன்வயின் உள்ள உரிமையால் உயர்வு தோன்ற எம் எனப் பன்மையாற் கூறினாள், இது புலவி யாகலின். “மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியுள் உரிய”3 என்பது தொல்காப்பியம். “பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி, நின்னொடு தண்புன லாடுதும், எம்மொடு சென்மோ செல்லல் நின்மனையே”4 எனப் பரத்தை தலைவனொடு புனலாட்டயரு மாற்றினைப் பிறவிடத்தும் காண்க.

மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புனலாட்டுக் கூறிப் புலத்தல்.

    65. கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்  

சுரும்புபசி களையும் பெரும்புன லூர
புதல்வனை யீன்றவெம் மேனி
முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே.
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.

உரை :
கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியின்கண் தழைத்த நீராம்பல் ஆண்டு வரும் வண்டுகளின் பசியைத் தன்னிடத்துத் தேனாற் களையும் மிக்க புனலையுடைய ஊரனே, புதல்வனைப் பயந்து முதிர்ந்த எம் மேனியைப் புல்லுதல் ஒழிக; அது நின் மாற்பிர் கோலத்தைச் சிதைப்பதா மாகலின் என்றவாறு.

கரும்பு நடுதற்கு வகுத்த பாத்திகளுள் நீர் இடையறாமையின் ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் தழைப்பனவாயின என்க. பெரும் புனல் என்றவிடத்துப் பெருமை மிகுதிப்பொருட்டு. சுரும்பு முதலிய உயிரினம் தேனுண்டு வாழ்தற்கு ஏதுவாகிய ஆம்பல் முதலியவற்றைத் தழைப்பிக்கும் சிறப்புக் குறித்து, மிகுபுனலூர என்னாது, பெரும் புனலூர என்றாள். “வயலே, நெல்லின் வேலி சூடிய கரும்பின், பாத்திப் பன்மலர்ப் பூத் ததும் பின்று”1 என்று பிற சான்றோரும் கூறினர். மோ, தெய்ய என்பன அசைநிலை. சிதைப்பதுவே என்புழி, குற்றுகரத்தின் முன் உடம்படுமெய் விகாரத்தால் வந்தது. மார்பு, பரத்தையர் செய்த கோலத்தின் மேலதாகலின், ஆகுபெயர்.

உள்ளுறையால், தான் இல்லிருந்து தனக்குரிய நல்லறத்தை வழுவாது ஆற்றும் உயர்வு தோன்ற எம் மேனி எனப் பன்மை வாய்பாட்டாற் கூறினாள். புதல்வர்ப் பயந்த மேனி திதலை யணிந்து தீம்பால் கமழ்தலின், பூவினும் சாந்தினும் புதுமணம் கமழும் நின் மார்பின் நறுமணம் கெடும் என்பாள், எம் மேனி முயங்கன்மோ என்றும், நின் மார்பு சிதைப்பதுவே என்றும் புலந்து கூறினாள். “இனியே, புதல்வன் தடுத்த பாலொடு தடை இத், திதலை யணிந்த தேங்கொண் மென்முலை, நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம், வீங்க முயங்கல் யாம்வேண் டினமே, தீம்பால் படுதல் தாமஞ் சினரே”2 என்று பிறரும் கூறியவாறு காண்க. சிதைதல், தீம்பாற்பட்டுப் பரத்தை செய்த கோலம் கெடுதல்.

என்றது, முதுமையும், முயங்க லாகாமைக்குரிய நலக் குறைவுமாகிய ஏதுவை உட்கொண்டு நின்றது. புதல்வர்ப் பயந்து புனிறு தீரா நிலைமைக்கண், கண் குழிந்து இதழ் வெளுத்து மேனி குழைந்து மெலிந்து தோன்றுதலின், அதனை அப் புலவுப் புனிறு தீர்ந்து பொற்பொடு நிகழும் இக்காலத்துத் தான் புலத்தற்குக் கருவியாகக் கொண்டாள்; பிறாண்டும், “பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே 3” என்பள்.

கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியின்கண், ஆம்பல் முதலியன தழைத்துச் சுரும்பினத்தின் பசிகளையும் என்ற வினையுவமப் போலியால், பரத்தையர்க்காக அமைக்கப்பட்ட இல்லின்கண் யாம் இருந்து விருந்தோம்பல் முதலிய அறங்களைப் புரிந் தொழுகுகின்றோம் என்றாளாம்.

இனி, பேராசிரியர், “கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை” என்று பாடங்கொண்டு வினையுவமப் போலிக்கு உதாரணமாகக் காட்டி, “தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்கும் ஊரன் என்றாள்; இதன் கருத்து, அது காதற் பரத்தை யர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்ட கோயி லுள், யாமும் உளமாகி இல்லறம் பூண்டு விருந்தோம்பு கின்றனம்………. இது சுரும்பு பசி களையும் தொழிலொடு விருந்தோம்புதற்றொழில் உவமம் கொள்ள நின்றமையின் வினையுவமப் போலியாயிற்று”1 என்பர். ஆசிரியர் இளம் பூரணர், “அவனறி வாற்ற அறியு மாகலின்”2 என்ற சூத்திரத்து, “கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சுபுண் ணுறீஇ, நளியின் நீக்கிய விளிவரு நிலையும்” என்புழி இளிவந்த நிலையாவது, தன்னை அவமதித்தான் என்னும் குறிப் பொன்று கூறி, இதனை அதற்கு மேற்கோளாகக் கொண்டனர். மற்று, நச்சினார்க்கினியர் இச் சூத்திரத்தே இக் கிளவிக்கண் இதனைக்காட்டி, “இது, புதல்வர்ப் பயந்த காலத்துப் பிரிவுபற்றிக் கூறியது” என்பர்.

இனி, புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கல் என்றது, “கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி” நயந்து போந்த கிழவனை, “நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய” மொழி யாகலின், அதுபற்றி ஆற்றானாய், “அலமரல் பெருகிய காமத்து மிகுதி”யால், அவன் அவளைச் செறிய நின்றான் என்பது “நின் மார்பு சிதைப்பதுவே” என்பதனால் பெறப்படுதலின், முரணின்மை யறிக. மெய்ப்பாடு. பெருமிதம். பயன் : புலவி தீர்தல்.

பாத்திக் கலித்த, பாத்தி கலித்த என்ற பாடங்கட்கு முறையே பாத்தியின்கண் தழைத்த என்றும், பாத்திகள் தழைப் பித்த என்றும் உரைக்க. ஈன்றது என் மேனி என்ற பாடத்திற்கு, ஈன்று நலங்குறைந்தது என்மேனி என்றும், ஈன்றென்னும் காரண வினை காரியத்தின்மேல் நின்றது என்றும் உரைக்க. ஈன்ற வெம் முயங்கல் அதுவே தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே என்றும் பாடமுண்டு.

    66. உடலினே னல்லேன் பொய்யா துரைமோ  

யாரவள் மகிழ்ந தானே தேரொடு
தளர்நடைப் புதல்வனை யுள்ளிநின்
வளமனை வருதலும் வௌவி யோளே.
புதல்வனைப் பிரியாதவன் புறத்துத் தங்கி வந்தானாக, அவனொடு புலந்து தலைமகள் சொல்லியது.

உரை :
மகிழ்ந, உருட்டி விளையாடும் சிறுதேரின் பின் தளர்ந்த நடையினையுடையனாய்ச் செல்லும் புதல்வனை நயந்து நீ நின் வளவிய மனைக்கு வருங்கால், நின்னைத் தகைந்து பற்றிச் சென்றவள் யாவள் கூறுக. யான் சினந்து வினவுகின்றே னல்லேன். பொய்யாது மெய்யினையே உரைப்பாயாக என்றவாறு.

உடலுதல் - சினம் காரணமாக இகலுதல். யார் என்னும் வினாவின் கிளவி முப்பாற்கும் உரித்து. சிறப்பு வகையாற் கிளவாது, பொதுவகையால் வினவியது இதழ்தற்குறிப்பு. சிறு தேரின்பின் மணியார்ப்பச் சாய்ந்து சாய்ந்து செல்லும் தளர்நடைச் சிறுவரைக் காண்டல் மிக்க இன்பம் தருவ தொன்றாகலின், தேரொடு தளர் நடைப் புதல்வன் என்றார். “புணர்ந்த காதலியிற் புதல்வன் றலையும், அமர்ந்த உள்ளம் பெரிதா கின்றே, அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன், முறுவல் இன்னகை பயிற்றிச், சிறுதே ருருட்டும் தளர்நடை கண்டே”1 என்றும், “கிளர்மணி ஆர்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லும், தளர் நடை காண்டல் இனிது”2 என்றும் சான்றோர் கூறுப. நம் வாழ்க்கையில், நாம் நாளும் காணும் காட்சியும் அதுவே. இனி, தேரொடு என்பதனைத் தலைவற்கேற்றி, புதல்வனை உள்ளித் தேரொடு வளமனை வருதலும் வௌவி யோள் எனக் கூட்டி உரைத்தலும் ஒன்று. எல்லாப் பேற்றினும் சிறந்த மக்கட்பேறு வாய்த்தமையின், தலைவியில்லம் வளமனை எனப்பட்டது. வருதலும் என்னும் உம்மீற்று வினையெச்சம் முடிக்கும் வினை யது வினைநிகழ்ச்சியின் விரைவுமிகுதி சுட்டி நின்றது. செய்யு ளாகலின் சுட்டு முற்கூறப்பட்டது.

பிரிதல் கூடாத பேரன்பிற்குரிய புதல்வனைப் பிரிந்து புறத்துத் தங்கின தலைமகன் அவனைக் காண்டல் குறித்து வந்தான் என்றற்குப் புதல்வனை உள்ளி வளமனை வருதலும் என்றாள். எனவே, இதுகாறும் வாராமைக்கு ஏதுவாக அவ னுக்குத் தன்பால் அன்பில்லை யென்றும், வரவிற்கு ஏது புதல்வன் பாலுள்ள அன்புடைமை யென்றும், அதனால், தனக்கு அவன் புதல்வன்தாய் என்னும் இயைபன்றிப் பிறிதில்லை யென்றும் சொல்லிப் புலந்தாளாம். புதல்வனும், தன் தளர்நடையால் தலைமகற்குக் காட்சியின்பம் தருவதொன்றே யுடையன் என் பாள், தளர்நடைப் புதல்வனை யுள்ளி என்றும், அக்காட்சி வேட்கை மிக்கவழியும் அவனது வரவருமை தோன்ற, வருதலும் என்றும் கூறினாள். “புதுவதின், இயன்ற அணியன் இத்தெரு விறப்போன், மாண்தொழில் மாமணி கறங்கக் கடைகழிந்து, காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும், பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர், தாங்குமதி வலவஎன்று இழிந்தனன் தாங் காது, மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப், புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக், கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த, மாநிதிக் கிழவனும் போன்மஎன மகனொடு, தானே புகுதந்தோனே”1 எனப் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

இதன்கண்ணும், தெருவிறந்து செல்லும் தலைமகன், பூங்கட் புதல்வனது தளர்புதளர்பு ஓடும் நடையழகால் ஈர்ப்புண்டு வந்தமையும், அக் காட்சியின்பம் பெற்ற பின்னர் நீங்க முயன்றவன், அப் புதல்வன் கலுழ்ந்து நின்றது காரணமாகத் தானே வளமனைக்குட் புகுந்தமையும் கூறப்படுமாறு அறிக. இவ்வாறு தன்பாலுள்ள அன்புமிகுதியால் தலைவன் தன் புதல்வனையும் மறந்து கிடப்பதை அறிந்துவைத்தும் பரத்தை நின்னைத் தடுத்தல் அறிவுடைமை யன்று; அறிந்தும் அறியாதார் போல் ஒழுகும் அவளை அறிதல் வேண்டினேன் என்பாள், யார் அவள் மகிழ்ந என்றாள். இனி, செறுநரும் காண்டற்கு விரும்பும் செயிர்தீர் காட்சியினையுடையர் புதல்வர். அப் பெற்றி யோனாகிய புதல்வனைக் காண்டற்குப் போந்தவனைத் தடுத்தல் நற்செய லன்மையின், அது செய்த பரத்தையை வௌவியோள் என்றாள். அச்செயல் நின்பால் அன்புடையார்க்குப் பெருஞ்சினம் விளைவிக்கும் இயல்பிற்றா யினும், நின்னையாதல் நின்னால் விரும்பப்பட்ட அப் பரத்தையை யாதல் சினந்திலேன்; மற்று, அப்புதல்வனைக் காண்டற்குப் போதரும் நின்னை மறிக்க வல்ல அத்துணைப் பேரன்புடையாளை அறிதல் வேண்டினேன் என்றற்கு யார் அவள் என்றும், உடலினேனல்லேன் என்றும் சொன்னாள் எனினுமாம். “கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும், உள்ளத்து ஊடல் உண்டென மொழிப”1 என்பது பொருளியல். பிரியேன் என்ற தலைமகன் பிரிந்தொழுகிச் சொல்லும் செயலும் ஒவ்வா னாயினமையின், அதனால் அவளை மறைத்தலும் கூடும் என உட்கொண்டு பொய்யாது உரைமோ என்றாள்.

தன்பால் அன்பு கூர்ந்து வந்தானையும் அஃது இல்லாதவன் போலத் தலைவி கூறுதலின் இஃது அவள்பால் தோன்றிய உள்ளதுவர்த்தல். ஏனை மெய்ப்பாடு: வெகுளி. பயன் : புலத்தல்.

இனி, நச்சினார்க்கினியர், “அவனறிவு ஆற்ற அறியு மாகலின்”2 என்ற சூத்திரத்துக் “கொடுமை யொழுக்கம் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பின் கற்பில் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரிதலும் பெட்டலும், ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும், வாயிலின் வரூஉம் வகை” என்பதில் கூறிய, “பல்வேறு நிலையினும்” என்றதனால், “இது புதல்வனை நீங்கியவழிக் கூறியது” என்றனர்.

    67. மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே  

தன்னொடு நிகரா வென்னொடு நிகரிப்
பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே
ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறனுரைத்தாள் எனக்கேட்ட தலைவி, தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.

உரை :
நீ இப்பொழுது தலைக்கொண்டு ஒழுகும் பரத்தை தன்னோடு நிகரில்லாத என்னொடு தன்னை நிகராகக் கருதித் தனது பெருநலத்தை வியந்து என்னைப் புறனுரைத்தாள் என்பர்; முன்னர், நின்னால் நலன் நுகரப்பட்டுக் கதுப்பயல் விளங்கும் ஒள்ளிய நுதல் பசக்கப்பட்ட மகளிர் வண்டினம் தேனுண்டு கழித்த மலரினும் பலராதலை அறிந்திலளாகளின், அவள் அறியாமை நிரம்பிய இளையளேயாம் என்றவாறு.

மடவள் - மடம் உடையவள்; அஃதாவது ஈண்டு அறியாமை யும் இளமைச் செவ்வியும் ஒருங்குடையள் என்பதுபட நின்றது. நிகர்தல் - மெய்யுவமப் பொருட்டு; “கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய, ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப வென்று, அப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்”1 என்பது உவமவியல். எனவே, மேனியிற் கிடந்து திகழும் இளமைநலமே ஈண்டு உவமங்கொள்ள நின்ற தாம். தருக்குதல், தன்னை வியந்து, பிறரெல்லாம் தன்னிற் சிறந்தா ரல்லரெனச் செருக்கி மாறுபடுதல்; ஈண்டுத் தலைவி தன்னிற் சிறந்திலள் என்பதுபடப் புறனுரைத்தல் மேற்று. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. ஓதி - கூந்தல். கருங்குழலின் அயலே கிடந்து சுடர் விட்டுத் திகழும் இயல்பிற் றாகலின், நுதலை, ஓதி யொண்ணுதல் எனச் சிறப்பித்தார்; “கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்”2 என்று சான்றோரும் கூறினர். பலரே என்புழி ஏகாரம் தேற்றம். பசப்பித்தோர், செயப்படுபொருண்மேல் நின்ற வினைப் பெயர்.

புறத்தொழுகிப் போந்த தலைவனால் தலையளிக்கப்பட்ட நலம் புதியாளாய பரத்தை தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் பொறாத தலைமகள், அவன் முன்னின்று அவளைக் கண்ணற இகழ்தலை நயவாதாள்போல, நீ இனிக் கொண்டோள் தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநல தருக்கும் என்ப எனப் பிறர்மேல் வைத்துக் கூறினாள். இதனாற் பயன், “நின் புறத்தொழுக்கம் குலமகளிரைப் பரத்தையரோடு நிகர்ப்பித்து வருத்துகின்றது” எனத் தலைவற்கு உணர்த்தியவாறாம். பரத்தை பால் பன்னாட் பிரிவின்றிக் கூடியிருத்தலால் நினக்கு என்பால் அன்பின்மையும், அதற்கேதுவாக என்பால் நலமின்மையும், அவள்பால் நினக்கு அன்புண்மையும், அதற்கேற்ப அவள்பால் நலமுண்மையும் இனிது உணரப்படுதலின், அவ்வாற்றால் நினது அன்பு நெறிக்கண், யான் அவளோடு ஒவ்வேனாயினேன் என்பாள் தன்னொடு நிகரா என்னொடு என்றாள். இனி, இதுபோது நின்னாற் கொள்ளப்பட்ட அவளது நலத்தை நோக்க, அவட்கு முன்னர்க் கொள்ளப்பட்ட எனது நலம் முதுமைத்தாகலின், நாளும் புதுவரே மேவும் நினக்கு யான் அவளொப்பப் பெருநலம் உடையே னல்லேன் என்பாள், இது கூறினாள் எனினுமாம். இனி, இஃதறியாது, நின்னாற் கொள்ளப்பட்ட தொன்றேயன்றிப் பெண்ணியல்பாலும் நிகர்க்கின்றேன் என உட்கொண்டு தன் இளமை நலத்தால் தருக்கு கின்றாள் என்பாள், என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கும் என்றும், இவ்வாறு தான் உரைக் கின்றது பலரும் அறிந்த செய்தி என்பதுபட என்ப என்றும் கூறினாள். கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய் தொழுகுவது 1 மடவோர் செய்கை என்றும், நிகராகாத ஒன்றினை நிகராக மதித்தல் அறிவுடையோர் செயலன்று என்றும் அறிந்திலள் என்பாள், மடவள் அம்ம என்றாள். “நினக்குரிய மகளிருள் அவள் யாவள் என ஐயுறல் வேண்டா; அவள் இன்னள்” என வரைந்து கூறுவாள் இனிக் கொண்டோள் என்றாள். “பேணுதகு சிறப்பின் பெண்ணியல் பாயினும், என்னோடு புரையுநள் அல்லள், தன்னொடு புரையுநர்த் தான்அறி யுநளே”2 எனப் பிறரும் கூறியவாறு காண்க. மேலும், அவள் தருக்குதற்கு ஏதுவாகிய இளமைப் புதுநலம், தன்னை நயந்துறையும் நின்னை பின்னர்ப் பிரியாவகைப் பிணிக்கும் பெருமையின்றி, விரைவிற் கழிந்து நின் பிரிவாற் பசந்து தேயும் சிறுமையுடைத்து என்பாள், புகழ்ச்சி வாய்பாட்டாற் பெருநலம் எனக் குறித்தாள்.

இனி, இவற்றைத் தன் மடமையால் அறியாளாயினும், நின்னால் பசக்கப்பட்ட மகளிர் பலர் உளராதலைக் கண்டேனும் அறிதற்பாலள் என்பாள், பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே என்றாள். என்றது, அறிந்தவழி, தன் பெருநலம் தருக் குதலைக் கையொழிவள்; ஒழியாமையின், அவள் மடவள் மடவளே எனத் தான் முன் மொழிந்ததனை வற்புறுத்தாளாயிற்று. வண்டினம் தாதுண்டு கழித்த மலர் பொலிவு வாடுதல்போல, நின்னால் நலன் நுகரப்பட்டு ஒழிந்த மகளிர் பலர் பசப்பெய்தினர் என்றற்கு, வண்டு தாதுண் விரிமலரினும் பலர் என்றாள். “புதுநலம் பூவாடி யற்றுத் தாம்வீழ்வார், மதிமருள நீத்தக் கடை”1 என்பதன் உரையால், வண்டு தாதுண்ட மலர் வாடுதல் உண்மை யறியப்படும்.

இது காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய பொருளின்கண் தலைவி கூறியது. காமக்கிழத்தியர் தம் நலத்தைப் பாராட்டு மிடத்துத் தலைவியொடு மாறுபட்டுத் தருக்கி ஒழுகுவ ராகலின், அஃது அறியும் தலைவி பொறாது அவரை இகழ்ந்து மொழிதற்கும் உரியள். பெருநலம் தருக்கு மென்ப என்றது காமக்கிழத்தி யாகிய பரத்தை தன் நலம் பாராட்டியதாகும். வண்டு தாதுண்ட மலரினும் பலர் நுதல் பசக்கப்பட்டோர் என்றது, இவளும் அவர்போல நுதல்பசந்து நலங்கெடுதல் ஒருதலை என்பது எய்தத் தீமையின் முடித்தவாறு. இனி “அவனறிவு ஆற்ற அறியுமாகலின்”2 என்ற சூத்திரத்துக் “காமக்கிழத்தியர் நலம்பா ராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்” என்னும் பகுதிக்கு, காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய பொருளின் கண்ணும், தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனவரும் எண்பொருளை நோக்காது, நச்சினார்க்கினியர், நலம் பாராட்டிய காமக்கிழத்தியர் தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என இயைத்துத் தலைவி தன்னிற் சிறந்தாராகத் தன்னால் நலம் பாராட்டப்பட்ட இற்பரத்தையர் மேல் தீமை யுறுவர் என முடித்துக் கூறும் பொருளின்கண் என்று பொருள் உரைப்பர். மேலும், அவர் இப் பகுதிக்கு இப் பாட்டினையே காட்டி, “இப்பொழுது கிடையாதது கிடைத்ததாக வரைந்து கொண்ட பரத்தை, தன்னொடு இளமைச்செவ்வி ஒவ்வா என்னை யும் தன்னோடு ஒப்பித்துத் தன் பெரிய நலத்தாலே மாறுபடும் என்ப என அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலர் எனத் தீமையின் முடித்தவாறும் காண்க” என்றனர். அன்றியும், அவர், இப் பாட்டின் முதலடியை மடவளம்ம இனிக் கொண்டோளே என்றும், தாதுண் வண்டினும் பலரே என்பதை, தாதுண் வண்டினும் பலர் நீ என்றும் பாடங் கொண்டிருக்கின்றனர். அவர் கருத்திற்கேற்ப, கூற்று நிகழ்த்துபவள் காமக்கிழத்தியும், “இனிக்கொண்டோள்” இற்பரத்தையுமாவர். இதன்கண், இற்பரத்தை தலைவியால் தன்னிற் சிறந்தாளாக நலம் பாராட்டலாகாமையாலும், அது பொருந்தாமை யறிக. தீமையின் முடிக்கும் பொருளின்கண் நிகழும் கூற்றினை வரும் பாட்டிற் காண்க.

இனி, இதன்கண், தலைவி மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே என்று எடுத்து மொழிந்த மேற்கோளையே, பெருநலம் தருக்கு மென்ப என்று கூறியும், அவளது பெரு நலத்தின் பெருமையின்மையைப் பலரே ஒண்ணுதல் பசப் பித்தோர் என்று வற்புறுத்தியும் சாதித்தலின், மெய்ப்பாடு, பிறர்கண் தோன்றிய மடமை பொருளாகப் பிறந்த நகையும், பயன், பரத்தை கேட்டுத் தலைமடங்குவாளாவதும்; ஒரு முகத் தாற் புலந்தவாறுமாம்.

    68. கன்னி விடியற் கணைக்கா லாம்பல்  

தாமரை போல மலரு மூர
பேணா ளோநின் பெண்டே
யான்றன் னடக்கவுந் தானடங் கலளே.
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறிவைத்துத் தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது.

உரை :
திரண்ட தாளினையுடைய ஆம்பல் விடியற் காலத்தில் தாமரையைப்போல மலரும் ஊரனே, நினக்குப் பெண்டாயின நின் காதற்பரத்தை அடக்கத்தைப் பொருளாகப் பேணிக் கொள்ளுவது இலள்கொல்லோ, அவள் அடங்கும் ஆறு என்று யான் அடங்கியிருக்கவும், அவள் தான் அடங்காது யான் புறங்கூறினேன் எனப் பிறர்க்குக் கூறுகின்றாளாகலான் ? என்றவாறு.

விடியல் தோன்றிய அணிமைக்காலம் “கன்னி விடியல்” எனப்பட்டது; “குமரியிருட்டு” என்னும் வழக்குப்போல. ஆம்பல், மாலையிற் கூம்பி வைகறையில் மலரும்; “குண்டுநீர் ஆம்பலுங் கூம்பின இனியே, வந்தன்று வாழியோ மாலை”1 என்றும், “கணைக்கால் ஆம்பல் அமிழ்துநாறு தண்போது, குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட மலரும்”2 என்றும் வருவன. காண்க. தாமரை மலரத் தொடங்குதற்கு அது கால மாகலின், ஆம்பல் தாமரைபோல மலரும் என்றார். ஏது வின்கண், அடக்கத்தையே விதந்து கூறுதலின், பேணுவது அடக்கமாயிற்று. “காக்க பொருளா அடக்கத்தை”3 எனச் சான்றோர் கூறினர். அடங்குதல் - ஈண்டுப் புறங்கூறுதல் முதலி யன செய்யாது அமைந்திருத்தல். அடக்குதல் - தான் அடங்கு தலால், பிறர் தன்னைப் புறங்கூறுதற்குக் காரணம் பெறாது அமைவித்தல்.

புறத்தொழுக்கத்தில் நின்னாற் கொள்ளப்பட்டுச் செருக்கித் திரியும் நின் காதற்பரத்தை என்பதுபட நின் பெண்டு என்றும், நினக்குப் பெண்டாயினாள் நீரல கூறி ஒழுகுதல், அவட்கே யன்றி நின் நீர்மைக்கும் மாசு தரும் ஆகலின், அதனை நினைந்து அடங்கியிராது யான் புறனுரைத்தேன் எனப் பிறர்பால் இல்லது கூறித் தருக்குகின்றாள் என்றற்குப் பேணாளோ என்றும் கூறி னாள். யான் நின் பெண்டினையாதல், அவளொடு கூடியொழுகும் நின் ஒழுக்கத்தையாதல் குறித்து யாதும் கூறாது அடங்கியிருந் தால், அவளும் அவளொத்த பிறரும் என்னைப் புறன்உரைத்தற்கு ஏது ஒன்றும் பெறாது வாயடங்குவர் என்பது பேணினேன் என்பாள், யான் தன் அடக்கவும் என்றும், அடங்காமைக்குரிய காரணம் இன்றாகவும் அவள் உளதாகப் பொய்நினைந்து புறனுரைத்துத் திரிகின்றாள் என்பாள் தான் அடங்கலளே என்றும் கூறினாள்.

இவ்வாறு, தலைவி பரத்தை நலம் பாராட்டாது, அவள் செய்கையினைத் தலைவன்முன் இகழ்ந்து கூறும் இது, “அவனறிவு ஆற்ற அறியமாகலின்”1 என்ற சூத்திரத்துத் தீமையின் முடிக்கும் பொருளின்கண் அடங்கும்.
சிறப்பில்லாத ஆம்பல் தாமரைபோல மலரும் என்றதனால், கற்புச்சிறப்பு இன்மையால் அடங்கிக் கிடத்தற்குரிய பரத்தை, குலமகளிர் போலச் சிறப்புடையாள் எனக் கருதித் தருக்குகின்றாள் என்றவாறு. மெய்ப்பாடு: பிறர்கண் தோன்றிய சிறுமை பொரு ளாகப் பிறந்த மருட்கை. பயன் : ஒருமுகத்தாற் புலந்தவாறு.

    69. கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே  

பலராடு பெருந்துறை மலரொடு வந்த
தண்புனல் வண்ட லுய்த்தென
உண்கண் சிவப்ப வழுதுநின் றோளே.
தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தியைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக்கு இல்லை என்று அவன் மறைத்துழிச் சொல்லியது.

உரை :
மகிழ்ந, பலர் கூடி யாடும் நீர்த்துறைக்கண் மலரோடு பெருகிவந்த குளிர்ந்த புனல் வண்டலாட்டுக்கெனத் தான் செய்துவைத்த பாவையைச் சிதைத்ததாக, தன் மையுண்ட கண்கள் சிவப்பேற அழுது நின்றவள் நின் பெண்டேயாவள் : யாம் அவளைத் தெளியக் கண்டேம் ஆகலின், நீ இல்லை யென மறைப்பது என்னை? என்றவாறு.

கண்டனெம் அல்லமோ என்புழி, அல்லம் என்ற எதிர்மறை முற்றுவினையும் எதிர்மறை ஓகாரமும் இயைந்து, உடன்பாட்டுப் பொருளின்கண் தெளிவு விளங்க நின்றன; தெளியக் கண்டேம் என்றவாறு. ஏகாரம், முன்னையது தேற்றம், ஈற்றது அசைநிலை. வண்டல் - பண்டைக்காலத்தில் மகளிர் அயர்ந்த ஒருவகை விளையாட்டு. மலரொடு வந்த தண்புனல் எனவே, புதுப்புனல் என்பது பெற்றாம். புதுப்புனலைத் தண்பதம் என்றும் வழங்குப. உய்த்தல் - தான் சுமந்து போந்த நுரையும் திரையும் மலரும் பிறவும் கொணர்ந்து பரப்பிப் பரவுதல். உய்த்தென என்பது செய்தென என்னும் வினையெச்சம். மணற்றுறையாதலின் தண்புனல் உய்த்தவழி இடையறவின்றி இழைத்த வண்டல் விரையச் சிதைதலின், உய்த்தென என்றார். ஆகலின் நீ என்பது முதலாயின எஞ்சி நின்றன.

தலைவன் களவிற் கூடி ஒழுகும் பெண்டினைத் தலைவி அறிந்து கூறியவழி, அவன் இல்லையென மறைத்தலும் தான் அவனை மறுப்பாள், யாம் அவளைப் புனலாடச் சென்ற போதில் தெளியக்கண்டேம்; அவள் நின்னால் கொளப்பட்ட பெண்டே என்பாள், கண்டென மல்லமோ மகிழ்ந நின் பெண்டே என்றாள். பன்மை, தன்வயின் உரிமை பற்றி வந்தது. பின்னர், அவள் அவற்குரிய பெண்டே எனத் தான் துணிந்தவாற்றைக் கூறுவாள், அவள் தன் உண்கண் சிவப்ப அழுததனை எடுத் துரைக்கின்றாள்; பலராடு பெருந்துறைக்கண் தண்புனல் வண்டல் சிதைத்தல் இயல்பாகலின், அவட்கு அழுகையாம் புனலாடல் கண்டு பொறாமையால் எழுந்தது என்றற்கு, அழுது நின்றோள் என்றும், தண்புனல் எய்தா இடம் அறிந்து, பிறிதொரு வண்ட லமைத்துக் கோடலும் ஆண்டுநின்று அகறலும் இன்றி எம்மையே நோக்கி நின்றமையின், அவள் நின் பெண்டே என்பது துணியப் பட்டது என்பாள், நின் பெண்டே என்றும் கூறினாள். தண்புனல் வண்டல் சிதைத்தற்கு அத்துணை அழுகை வேண்டாமையின், உண்கண் சிவப்ப அழுது என்றது, பிற குறிப்புணர நின்றது. தண்புனல் வண்டலைச் சிதைத்தது அவள் அழுகைக்கு நிரம்பிய ஏதுவாகாது என்பதுபட, வண்டல் உய்த்தென என்றாள் என்க. “கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே, தெண்டிரை பாவை வௌவ, உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே”1 எனப் பிறாண்டும் வருதல் காண்க.

பேதை, பெதும்பை என்ற இருபருவத்து மகளிருள், பெருந் துறைக்கண் தானே வண்டலமைத்து விளையாட்டயர்தல் பேதைக்குக் கூடாமையின், பெதும்பைப்பருவத்தாள் என்பது பெறப்பட்டது.

தலைவி காமக்கிழத்தியின் நலங்கூறுவாள் போலத் தலைவ னது புறத்தொழுக்கத்தின் தீமையைக் காட்டிப் புலத்தலின், இஃது, “அவனறி வாற்ற வறியுமாகலின்”1 என்ற சூத்திரத்துக் “காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின் கண்” தலைவி நிகழ்த்தும் கூற்றுவகையுள் அடங்கும். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், இதனை, இச் சூத்திரத்துப் “பல்வேறு நிலையினும்” என்றதனால் அமைத்து, “இது காமஞ் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன் என்றது” என்பர்.

மெய்ப்பாடு : தன்கண் தோன்றிய பொறாமை காரணமாகப் பிறந்த வெகுளி. பயன் : ஒருமுகத்தாற் புலத்தல்.

    70. பழனப் பன்மீ னருந்த நாரை  

கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாண ரூர
தூயர் நறியர் நின்பெண்டிர்
பேஎ யனையமியாஞ் சேய்பயந் தனமே.
பரத்தையரொடு பொழுதுபோக்கி நெடிது துய்த்து வந்த தலை மகனோடு தலைமகள் புலந்து சொல்லியது.

உரை :
பழனங்களிலுள்ள பலவாகிய மீன்களையுண்ட நாரை கழனியிலுள்ள மருதமரத்தின் உச்சியில் தங்கும் மிக்க நீரினை யுடைய பொய்கையினையும் புதுவருவாயினையும் உடைய ஊரனே, யாம் மகப்பயந்து பேயினை ஒத்தேமாக, நின் பெண்டிர் தூய்மையும் நறுமையு முடையராகலின் அவர் பாலே செல்லுக என்றவாறு.

பழனம் - நீரிநிலை யென்பது முன்னரே கூறப்பட்டது. ஆர்ந்த 1 என்பது, அருந்த என வந்தது, வீழ்ந்த மரம், விழுந்த மரம் என வழக்கினும், ஆழ்ந்துபடு விழுப்புண் எனற்பாலது “அழுந்துபடு விழுப்புண்”2 எனச் சான்றோர் செய்யுளினும் வருதல் காண்க. “அவரை யருந்த மந்தி”3 என்புழியும் இதுவே கொள்க. சென்னி - உச்சி. மிக்க நீர் தனது ஆழமுடைமையாற் கருமையாய்த் தோன்றுதலின் நீர் மிகவுடைய பொய்கையை, மாநீர்ப் பொய்கை என்றார். “மாநீர் வேலிக் கடம்பெறிந்து”4 என அடிகளும் கூறினர். மா - கருமை. பரத்தையரின் பன்மை தோன்றப் பெண்டிர் எனப்பட்டது. சேய் பயந்த மகளிர், மெலிந்த மேனியும் குழிந்த கண்களும் ஒப்பனையின்றி உலறிய கதுப்பும் புலவுநாற்றமும் உடையராதலின் அவை யெல்லா முடைய பேயினை உவமை கூறினார். மகப்பயந்து பயன்படாமையும், பிறர்நலம் நுகர்தற் கென்றே இடையறாது ஒப்பனை செய்து கோடலும் உடையராதல் தோன்ற, தூயர் நறியர் என்றார்.

மகப்பயந்தமையின் மேனிநலம் முதிர்ந்து புனிற்றுப் புலவு நாறி வேட்கை சிறந்து நிற்கும் எம்மினும், அப் பயப்பாடு இலராயினும் நலங்கிளரும் மேனியும் புதுமணமும் உடையர் நின் பெண்டிர், அவர்பாலே செல்க என்பாள், தூயர் நறியர் நின் பெண்டிர் என்றாள். எனவே இது, “காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய” பகுதியாயினும், மகப்பயந்து வயங்கும் தன்பாற் போந்து, செய்தற்குரிய கடன்களைச் செய்யும் முறைமையால் பிரியானாகலின், அதனை அறிந்துவைத்தே புலக்கின்றாளாதலால் இது “செல்லாக் காலத்துச் செல்கஎன விடுத்த” கூற்றாகும் குறிப்புடைத்து.

யாம் சேய் பயந்தேமாக, எம் மேனி மெலிவும், புலவு நாற்றமும் அறிந்து, எம்மைக் காண்டலும் குற்றமெனக் கருதிப் பரத்தையர்பால் நெடிது தங்கினை என்பாள், பேஎய் அனையம், சேய் பயந்தனமே என்றாள். பேயினைக் காண்டலும் குற்றம் என்பது, “அருஞ்செவ்வி இன்னா முகத்தன் பெருஞ்செல்வம், பேஎய் கண்டன்ன துடைத்து”1 என்பதனால் அறிக. இது காமக் கிழத்தியின் நலம் பாராட்டிய தலைவி, தனது தீமையினை முடித்துக் கூறும் பொருளாகும். இதனாற்பயன் ஒரு முகத்தாற் புலந்தவாறு; “கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும், உள்ளத்து ஊடல் உண்டென மொழிப”2 என்பது காண்க.

இனி நின் பெண்டிர் தூயரும் நறியருமாயினும், எம் போற் புதல்வர் பயந்து பயன்படும் கற்புச்சிறப்பு இலர் என்றற்குச் சேய் பயந்தனம் என்றும், மகப்பேற்றால் மேனி தளர்ந்தேமா யினும் வழிபாட்டுமுறையில் குன்றிற்றிலேம் என்றற்குப் பேஎய் அனையம் என்றும் கூறினாள் என்றும், பின்னிலை முனியாதது பேஎய் என்பதற்கு, “களிறுபடப் பொருத, பெரும்புண் ணுறு நர்க்குப் பேஎய் போலப், பின்னிலை முனியா நம்வயின்”3 என்றும் கூறுவர்.

பழனப் பன்மீனை உண்ட நாரை தங்குதற்குக் கழனி மருதின் சென்னி ஆதாரமானது போல, பரத்தையர் நலனை நிகர்ந்த நீ அவர்பால் நெடிது தங்குதற்கு யாம் சேய்பயந்தமை ஆதார மாயிற்று என உடனுறையாகிய உள்ளுறையுவமம் கொள்க. மெய்ப்பாடு: வெகுளி. பயன் : புலத்தல்.

பேஎ, யனையம் யாஞ்சே பயந்தனை சென்மே என்பது பாடமாயின், யாம் பேயினை ஒத்தேம்; நீ தழுவுதற் குரிய ஏற்றினைப் பெற்றனை; நீ இனிச் செல்க என்று பொருளாம். ஈண்டு, சே என்றது, புதல்வனைக் குறித்ததாயின், நின் புதல்வனும், “தந்தையர் ஒப்பர் மக்கள்”4 என்பதனால், தாயாகிய என்பால் அன்பின்று நீங்குவன் என்றும், பரத்தையரைக் குறிக்குமாயின் அவர்பாற் செல்க என்றும் ஆம்.


புனலாட்டுப் பத்து

புனலாடுதல் பொருளாகப் பிறந்த கூற்றுக்களைக் குறித்து வரும் பாட்டுக்களின் தொகையாதல் பற்றி இஃது இப்பெயர் பெறுவதாயிற்று.

பண்டைக்காலத்துத் தமிழர் வாழ்க்கையில் நிகழ்ந்த விளை யாட்டு வகைகளில், புனலாட்டு என்பது ஒன்று. யாறுகள் புதுநீர் பெருகிப் பொலிவுற்றுத் திகழும் சிறப்புக் குறித்துப் புனலாட் டயர்தல் பண்டையோர் மரபு.
குறிஞ்சியில் அருவி நீராட்டும், முல்லையில் ஆறாட்டும், நெய்தலில் கடலாட்டும், மருதத்தில் புனலாட்டும் சிறந்து விளங்கின. ஆறாட்டு என்ற வகையில் சேர நாட்டில் இது மிக்க சிறப்புடன் கொண்டாடப்பெற்றுள்ளது. “அண்ணல் நெடுங் கோட் டிழிதரு தெண்ணீர், அவிர்துகில் புரையும் அவ்வெள் ளருவித், தவிர்வில் வேட்கையேம் தண்டா தாடிப், பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி”1 எனக் குறிஞ்சி நில மக்கள் புனலாடியவாறு காண்க. பிறவும் இவ்வாறு வருவன ஏனைத் தொகை நூல்களிற் கண்டு கொள்க.

இப் புனலாட்டு, செல்வரும் வறியரும், இளையரும் முதிய ரும். ஆண்மக்களும் பெண்மக்களும் ஒத்த வகையாற் கூடிப் புனலாடி இன்பம் துய்க்கும் இனிமை உடையதாகலின், சான் றோர் இதனைச் சிறப்பக் கூறியிருக்கின்றனர். செல்வச் சிறப்பு மிக்க தலைமக்கள் புனலாட்டினைப் பெரிதும் விரும்பித் தம் மனக்கினிய காதலர் சூழச் சென்று விளையாடி இன்பம் நுகர்வர். இளையோர், இவ்வாறு புனலாடி இன்பம் நுகர்தலின்றித் தம் மனையின் கண் செறிப்புண் டிருத்தல் தீது என்றும் பண்டைத் தமிழ்ச்சான்றோர் கருதினர். “விளையா டாயமோடு ஒரை ஆடாது, இளையோர் இல்லிடத்து இற் செறிந்து இருத்தல், அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம்”2 என்பதனால் இஃது இனிதுணரப்படும். இனி, தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் நல்லிசைச் சான்றோர் ஒருவர், கழிந்த தமது இளமைப் பருவத்தின் இன்பநயப்பை நினைந்து, “மறை யெனல் அறியா மாயமில் ஆயமொடு, உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த, நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக், கரையவர் மருளத் திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடும்எனப் பாய்ந்து, குளித்துமணல் கொண்ட கல்லா இளமை”1 என இனைந்து கூறுவது, இப் புன லாட்டு ஆடவர் பெண்டிர் என்ற இருபாலாரும் விரும்பும் இயல்பிற்று என்பதனை வற்புறுத்து கின்றது.

புனலாட்டு நயந்த தலைவன், தலைவியோடும் காமக் கிழத்தியரோடும் கூடி, தனது பதி இகந்து சென்று விளையாட் டின்பத்தினை நுகர்வன். “யாறும் குளனும் காவும் ஆடிப், பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப”2 என ஆசிரியர் bல் காப்பியனாரும் கூறியிருக்கின்றனர்.

இனிக் கடற்கரையைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைமக்கள், புனலாட்டு விருப்பம் தோன்றியவழிக் கடலில் நீர் விளையாட மேவுவர். இவ் விளையாட்டுக் கடலாடுதல் என்று சிறப்பிக்கப் படும், “கடலாடு மகளிர் கானல் இழைத்த, சிறுமனை”3 என்றும், “தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியும்”4 என்றும் வருவனக் காண்க. இதனைச் சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் பெரிதும் விளக்குவனவாம். பண்டைத் தமிழ் வேந்தருட் சிறந்த கரிகால் வளவன் புனலாட்டிற் பெருவேட்கை கொண்டு, யாறும் கடலும் படிந்து புதுப்புனலாடிப் போகம் நுகர்ந்தான் என நூல்களால் அறிகின்றோம். காவிரிப்பூம் பட்டினத்து நிகழ்ந்த கடலாடு நிகழ்ச்சி யொன்றினைச் சிறப்பிக்கப் போந்த இளங்கோ வடிகள், அது, “விண்பொரு பெரும் புகழ்க் கரிகால் வளவன், தண்பதங் கொள்ளும் தலைநாட் போல”5 இருந்ததெனக் குறிக்கின்றார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமயிலையில் நடந்த கடலாட்டு விழாவை “மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டு”6 எனத் திருஞான சம்பந்தர் சிறப்பிக் கின்றார்.

இக் கடலாட்டு, மேனாடுகளிலும் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இக்காலத்திலும், கடற்கரை நகரங்களிலுள்ள வர்கள் இதனை விரும்புகின்றனர்.

கடலாடுவது உடல்நலங் குன்றிய இளைஞர்க்குப் பெரிதும் நன்மை தருவதாகும். ஆனால், அவர்கள், காலையில் உணவு கொண்டபின், இரண்டு மணிநேரம் கழித்துக் கடலாடல் வேண்டும். அதுவும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நீரில் நீந்தி விளையாட வேண்டும். உணவுண்ட இரண்டு மணி நேரத்திற்குள் எவரும் கடலாடக்கூடாது. மிக்க உழைப்பால் உடல் ஓய்ந்து இருப்பவர்க்குக் கடலாட்டுத் தீங்கு விளைவிக்கும். நீராடுவோர் தமது உடல் சூடாக இருக்கும் போதுதான் அது செய்யத் தொடங்க வேண்டும். கடலில் நீராட இறங்குங்கால் சிறிதும் தயக்கமின்றி விரையச் சென்று இறங்கி மூழ்குவதும், கரையேறியவழிச் சிறிதும் தாழாது உடலைத் துடைத்துக் கொள்வதும் கடலாடுவோர் குறிக்கொள்ள வேண்டியனவாகும். இன்றேல், இவை உடல்நலத்துக்குப் பெருந்தீங்கினை உண்டு பண்ணும் என்று துணிந்திருக்கின்றனர். உடலில் தோய்ந்த நீர் தானே புலருமாறு விடுவதும் நீரின்கண் நெடிது தங்கி ஆடுவதும் ஆகா. நீராடுங்கால், ஆடுவோர் உடலில் குளிருணர்ச்சி தட்டு மாயின் உடனே கரையேறி விடுவது தக்கது.

கடலாடுவதையே பெருந்தொழிலாக உடையவர் பலர் உளர். அவர்களுட் பலர் காதுநோயால் மெலிந்து உயிரை இழக்கின்றனர். கடலாடுவோருட் சிலர்க்குக் கடல்நீர் காதுக்குட் புகுந்து மயக்கம் உண்டு பண்ணுவதும் உண்டு. அன்னோர் முதற்கண் தமது காதுகளில் சிறிது பஞ்சி அடைத்துக் கொள்வது நலம் என்பர்.

கடலில் எவ்விடத்தில் வேண்டினும் இறங்கி நீராடுவது தீது; மிகப்பெரிய அலைகள் இல்லாமல், அகன்று விரிந்து விளங்கும் மணற்றுறைகளே தக்க இடமாகும். நிற்போர் கால் நிலைக்காத நீரோட்டமுள்ள இடங்கள் கடலாட்டிற்கு ஏற்றவை யாகா. கடற்றுறைகள், சேறும் முழையும் கூரிய கற்களும் கடற்பூடுகளும் இன்றிப் பரந்து மணலே நிறைந்துகிடக்கும் இடமாதல் வேண்டும். நீராடுங்கால், ஆடுவோர் வாயைத் திறந்து கொண் டிருப்பது தீதென்பர். நீராடுமிடத்து, ஆடுவோருடைய கால் யாதேனு மொரு முழைஞ்சினுட் சிக்குமாயின், உடனே அவர் தமது வாயை மூடிக்கொண்டு நீரை உதைத்து பாய்தல் வேண்டும்; இன்றேல், நீர் வாயுட்புகுந்து நீந்தும் அவருடைய நெஞ்சுறுதியைக் கெடுத்துப் பெருந் தீங்கை விளைவிக்கும்.

கடலாட்டு விழைந்து நீந்தப்பயில்வோர் தண்ணீரில் கரையை நோக்கியவண்ணம் நின்று நீராடவேண்டும். இறங்கும் போது மார்பளவு ஆழத்திற் சென்றதும், முகத்தைக் கரைப் பக்கமாகத் திருப்பிக் கொள்வது நன்று. அதன்மேலும் ஆழத்திற் செல்லக் கருதினால், கரையை நோக்கி நின்றே பின்னாகக் கழுத்தளவு வரையிற் செல்ல வேண்டும். நன்றாய்ப் பயின்ற வர்களே அதன்மேலும் செல்லுதற்கு உரியவராவர்.

இக்கூறிய புனலாட்டு இன்பக்காரணமாகிய விளையாட்டா கலின், தலைமக்கள் தலைவியருடனும் பிற காதல் மங்கை யருடனும் கூடியாடுவது புலவிக்கு ஏதுவாகிறது. அது பற்றியே அது “கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே” எனக் கூறப் படுவதாயிற்று. ஆகவே, தலைவன் பரத்தையருடன் யாறும் குளமும் கடலும் ஆடி இன்பநுகர்ச்சி எய்துவானாயின், அது தலைவிக்கும் ஏனைக் காமக்கிழத்தியர்க்கும் ஊடலும் புலவியும் பயக்கும் என்பதாம்.

    71. சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து  

நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை யென்ப புனலே யலரே
மறைத்த லொல்லுமோ மகிழ்ந
புதைத்த லொல்லுமோ ஞாயிற்ற தொளியே.
பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டுப் புலந்த தலை மகள், தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது.

உரை :
மகிழ்ந, சூதுபோலும் மூட்டுவாயினையுடைய குறிய தொடியும் வளைவுபொருந்திய வளையுமுடைய நின்னால் விரும்பப்பட்ட நின்காதலியைத் தழுவிக்கொண்டு நீ நெருநல் புனலாடினை என்று பலரும் கூறுகின்றனர்; ஞாயிற்றின் ஒளியை எவற்றாலும் எத்துணையும் மறைத்தல் கூடாதவாறு போல, நீ புனலாடியதனால் எழுந்த அலர் நின் மாயப் பொய்ம்மொழிகளால் சிறிதும் மறைக்கப்படாதுகாண் என்ற வாறு.

சூது, சூதாடுவோர் இயக்கும் காய். தொடியின் மூட்டுவாய் அச்சூதாடுகாய் போறலின், சூதென்றது ஆகுபெயர். சூதார் குறுந்தொடி- உள்ளே புழையுடைய குறுந்தொடி என்றலு மொன்று. சூர் - வளைவு; “சூர்ப்புறு கோல்வளை”1 என வருதல் காண்க. சூர்ப்புற்ற வளை துவண்டு நுடங்கியது போன்று இருப்பது குறித்து, அதனை நுடக்கம் என்றார். தொடி தோளிற்கும், வளை முன்கைக்கும் உரியவாதல்பற்றி இரண்டும் கூறினார். 2 குறுந்தொடி எனவே, பரத்தையின் இளமை குறித்த வாறாம். வெங்காதலி என்புழி, வெம்மை வேண்டற்பொருட்டு, ஓகாரம் இரண்டும் எதிர்மறை.

தலைவன் பரத்தையைக் கூடிப் புனலாடியது கேட்டுப் புலக்கின்றாளாகலின், சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக் கத்து எனப் பரத்தையை நலம் பாராட்டுபவள் போலக் கூறினாள். “கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத்து ஊடல் உண்டென மொழிப.” தொடியும் வளையுமாகிய அணிநல மல்லது பிற கற்புநலம் இலளாயினும், அவள்பால் நினக்கு உண்டாகிய அன்பு பெரிது என்பாள் நின் வெங்காதலி என்றும், புனலாடியபோதேயன்றி அதற்கு முன்பும் பின்பும் முறையே அவளைத் தழீஇப் போவதும் வருவதும் செய்தனை என்பாள் தழீஇ என்றும், புனலாடிய காலம் சேய்த்தன்று, மிக்க அணித்தாய நேற்றைப்போது என்பது சுட்டி, நெருநை ஆடினை புனலே என்றும், நின் புனலாட்டும் பலர் அறிய நிகழ்ந்தது என்றற்கு என்ப என்றும் கூறினாள். “அலரின் தோன்றும் காமத்து மிகுதி” “கிழவோன் விளையாட்டு ஆங்கும் ஆற்றே”3 என ஆசிரியர் கூறுதலின், அலர் விதந்து கூறப்பட்டது. இது புறஞ்சொல் மாணாக் கிளவி, “களவும் கற்பும் அலர்வரை வின்றே”1 என்ப தனால், தலைவி அலர் எழுந்தமை கூறல் அமைவதாயிற்று.

புனலாடிய செய்தி கேட்டுப் பொறாளாகிய தலைவி அத னால் எழுந்த அலரைக் கூறினாளாக, அது கேட்ட தலைவன் அவ்வாறு இல்லை என்பதுபடப் பல சொல்லவும், அவள், அவையாவும் அவன் தன் பரத்தைமையை மறைத்தற்குக் கூறியன என்று கொண்டு, நீ எத்துணைப் பொய்ம்மொழிகளால் அதனை மறைப்பினும், அது மறையாது யாவரும் அறிய அலர்மிகுவ தாயிற்று என்பாள், அலரே மறைத்தல் ஒல்லுமோ என்றாள். “ஊர, பொய்யால் அறிவென்நின் மாயம் அதுவே, கையகப் பட்டமை அறியாய், நெருநை, மையெழில் உண்கண் மடந்தை யொடு வையை, ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து, பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது, கவ்வையாகின்றாற் பெரிதே”2 என்றும், இவ்வகையால் எழுந்த அலரை மறைத்தல் முடியாது என்பதை, “அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு, நெருநையும் கமழ்பொழில் துஞ்சி இன்றும், பெருநீர் வையை அவளோ டாடிப், புலரா மார்பினை வந்துநின்று எம்வயின், கரத்தல் கூடுமோ மற்றே…….. அலராகின்றுஅது பலர்வாய்ப் பட்டே 3” என்றும் வருவன காண்க.

விண்ணினும் மண்ணினும் தன் ஒண்கதிர் பரப்பிப் பேரொளி செய்யும் ஞாயிற்றை ஒருகால் கார்முகிற் கூட்டம் சிறிது மறைக்க முயலினும், ஞாயிற்றொளி மறையாது விண்ண கத்தும் அம் முகிற் கூட்டத்தின் அடியிலுள்ள நிலப்பகுதி சிறிது ஒழிந்த பிறாண்டும் நன்கு விளங்குதல் போல, நீ மறைக்க முயலும் அலர் நின்னாற் காதலிக்கப்பட்ட நின் பரத்தை ஒழியப் பிறர் பலரும் அறிய நிற்பதாயிற்று என்பாள், புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே என்றாள், இது பிறிது மொழிதல். நின்செயல் சிறிதும் மறைக்கப்படாது என்பது கருத்து. “ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்”4 என்றார் பிறரும்.
மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல்.

    72. வயன்மல ராம்பற் கயிலமை நுடங்குதழைத்  

திதலை யல்குற் றுயல்வருங் கூந்தல்
குவளை யுண்க ணேஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துணை யாயின ளெமக்கே
தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆட வேண்டிய தலைமகன், களவுக்காலத்துப் புனலாட்டு நிகழ்ந்த தனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

உரை :
வயலில் மலர்ந்த ஆம்பலால் தொடுக்கப்பட்ட மூட்டு வாய் பொருந்திய அசைகின்ற தழையினையும், அரி பரந்த அல்குலையும், அசையவிடப் பெற்ற கூந்தலையும், குவளை மலர் போன்ற மைதீட்டிய கண்களையும், அழகும் மென்மை யும் பொருந்திய இயல்பினையு முடையவள், பண்டு யாம் களவில் ஒழுகிய காலத்துப் பல்வகைப் பூக்களைச் சுமந்து புதுநீர் வந்ததாக அதன்கண் யாம் ஆடுதற்குரிய துணையாயி னாள் என்றவாறு.

இளைய மகளிர் ஆம்பற்றழை அணிதல் மரபாகலின் ஆம்பற்றழையினை முதற்கட் கூறினார். “சிறுவெள்ளாம்பல், இளைய மாகத் தழையா யினவே”1 எனச் சான்றோரும் கூறினர். துயல்வருதல் - அசைதல், ஏஎர் - அழகு; “நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்”2 என்பர் சான்றோர். அழகாவது, “இன்பப்பயனைத் தலைப் படுதல்” என்றனர் பரிமேலழகர். புணர்துணை இறந்தகாலம் தொக்க வினைத்தொகை. புணர்துணை ஆயினள் என இறந்த காலத்தாற் கூறியது, இப்புனலாட்டுக் களவுக் காலத்தது என்றற்கு.

தலைவி கொண்ட புலவியை நீக்கும் குறிப்பினன் ஆகலின், அவள் பண்டு அணிந்திருந்த தழையினையும் ஏனை நலங் களையும் பாராட்டினான். தன்னொடு புதுப்புனலாட வேண்டு கின்றமையின் பண்டு நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைப்பித்து அவள் மனத்து நிகழும் புலவியுணர்வை மறப்பிப்பான், மலரார் மலிர்நிறை வந்தென என்றான். இதனால் தலைவன்பால் அன்புபொக நிற்றல் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. என்பால் இவள் அன்று கொண்ட அன்பு இன்று சுருங்கிற் றன்றாகலின், இப்போழ்தும் புனலாடப் போந்து புணர்துணையாவள் என்பான், புனலாடு புணர்துணை யாயினள் எமக்கே என இறந்த காலத்துக் குறிப்பே எய்தக் கூறினான். “ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக், கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே, பாடின் அருவி ஆடுதல் இனிதே”1 எனத் தலைவி களவின்கண் தலைவனொடு தான் ஆடிய புனலாட்டு நிகழ்ச்சியை நயந்து கூறியிருத்தல் காண்க.

“யாறும் குளனும் காவும் ஆடிப், பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப”2 என்பதற்கு இதனைக் காட்டி, இது தலைவி புலவி நீங்கித் தன்னொடு புனலாடல் வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது” என நச்சினார்க்கினியர் கூறுவர். மெய்ப்பாடு: இளிவரல். பயன் : தலைமகள் கேட்டுப் புனலாடற்கு நேர்வாளாவது.

கயலமை நுடங்குதழை என்றும் பாடம் உண்டு. இதனைக் கயலமை வயல்மலர் ஆம்பல் நுடங்குதழை என இயைத்து, கயல் மீன்கள் பொருந்திய வயல்களிடத்து மலர்ந்த ஆம்பல்மலரால் தொடுக்கப்பட்ட நுடங்குதழை என்று உரைக்க.

    73. வண்ண வொண்டழை நுடங்க வாலிழை ஒண்ணுத லரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித்  

தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே.
இதுவுமது.

உரை :
வெள்ளிய இழையினையும் ஒள்ளிய நுதலினையுமுடைய அரிவை அழகிய தழையுடை இடையிற் கிடந்து அசையப் பண்டு களவின்கண் பெருந்துறைப் புனலில் விளையாட் டயர்தற்குப் புகுந்தாளாக, அது தேன் பொருந்திய நறிய குவளையின் மணம் கமழ்ந்து தண்ணிதாயிற்று; ஆகலாற்றான், இப்போதும் அதனை விரும்புவேனாயினேன் என்றவாறு.
வண்ணம் - அழகு; நிறமுமாம், வாலிழை - முத்துமாலையு மாம். புனலாடலும் விளையாட்டே யாதலின், பண்ணை எனப்பட்டது; “கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு”1 என்ப. என்றிசின், இறந்தகால முற்றுவினைத் திரிசொல். “அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை யிடத்தொடும், தகுநிலை யுடைய என்மனார் புலவர்”2 என்பதனால், சின் படர்க்கைக்கும் அமைவதாயிற்று. கண்நறுங்குவளை எனக்கொண்டு, கண்போலும் நறிய குவளை என்றலுமாம்.

புனலாடிய ஞான்று தலைவியது இழையும் நுதலும் ஒளி திகழ்ந்து பொலிவு சிறந்த காட்சி தலைவன் மனத்தைப் பற்றி நீங்காது விளங்கினமையின் அது குறித்து அவற்றை விதந்து, வாலிழை ஒண்ணுதல் எனச் சிறப்பித்தான். தலைவி பண்ணை பாய்வோள் விரைந்தோடித் தன்னைத்தழுவி மகிழ்வு மிக்கு விளையாடிய காலத்தில், அவள் இடையிற் கிடந்து வண்ணம் சிறக்க அசைந்து சிறந்தமையின், தழையினை வண்ண ஒண்டழை நுடங்க என உள்ளதன் உண்மை கூறித் தலைவன் இன்புற்றான். அக்காலை, புனற்குவளை தலைவியின் கண்ணை நிகர்த்தும், அப்புனலின் தட்பம் அவளது மேனித் தட்பத்தை நிகர்த்தும் முறையே காட்சியின்பமும் ஊற்றின்பமும் பயந்தமையின், குவளை நாறிப் புனல் தண்ணென்றிசின் என்றான். அவள் பண்ணை பாயாவழிப் புனல் இன்பம் செய்யா தென்றும், எனவே இப்போது நிகழும் புனலாட்டிற்கும் அவள் இன்றியமையாள் என்றும் தோழி உட்கொள்ளுமாறு, பண்ணை பாய்ந்தெனக் குவளை கள் நாறியது எனவும், புனல் தண்ணென்றிசின் எனவும் பாராட்டினான். மெய்ப்பாடும் பயனு மவை.

இனி, “தவலருஞ் சிறப்பின்”3 என்னும் சூத்திரவுரையின் கண் பேராசிரியர், “இஃது உருவுவமப் போலி” என்றும், தலைவியைப் புலவி நீக்கி அவளொடு புனலாடிய தலை மகனைத் தோழி, “நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்றது” எனக்கூறியவழி, தலைவன் இதனைக் கூறினான் என்று கொண்டு, “அத்தடம் போல் இவள் உறக் கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் என்பது கருதி யுணரப் பட்டது” என்றும், “அவளொடு புனல் பாய்ந்தாடிய இன்பச் சிறப்புக்கேட்டு நிலையாற்றாள் என்பது கருத்து” என்றும் கூறுவர்.

வெண்டழை என்பது பாடமாயின், வெள்ளாம்பலால் தொடுக்கப்பட்ட தழை என்று உரைக்க. தண்ணென் குவளை நாறி என்ற பாடத்துக்கு, விகாரத்தால் தொகும் உம்மையை விரித்து, தண்ணென்ற குவளை நாறியும் புனல் தண்ணிதாகாது அரிவை பண்ணை பாய்தலால் தண்ணிதாயிற்றென உரைக்க. கண்ணுறுங்குவளை என்றும் பாடமுண்டு.

    74. விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே  

பசும்பொ னவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருத மேறிப்
பண்ணை பாய்வோ டண்ணறுங் கதுப்பே.
இதுவுமது.

உரை :
பசிய பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும் இழைகள் மெல்ல ஒளிவீசக் கரையில் நின்ற மருதமரத்தின் மேலேறிப் பண்ணை யாடிய இவளது குளிர்ந்த நறிய கூந்தல்,விசும்பினின்று இழியும் தோகைமயிலின் சீரை ஒத்திருந்தது காண் என்றவாறு.

தோகை - மயில். சீர், விரியாது குவிந்து படிந்து நீண்டு விளங்கும் கலாவம்; “மென்சீர்க், கலிமயிற் கலாவத் தன்ன இவள், ஒலிமென் கூந்தல்”1 எனவும், “தோடுகொள், உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத் தகரம் மண்ணிய தண்ணறும் முச்சி”2 எனவும் சான்றோர் மகளிர் கூந்தற்கு மயிலின் சீரினை உவமங் கூறி
யிருத்தல் காண்க. நீண்ட தோகை காற்றில் அசைய, ஒளிவிட்டு இலங்கும் மயில் விசும்பினின்றும் இழிதல் போல, பண்ணை பாய்ந்தவழித் தண்ணறுங் கூந்தல் காற்றில் பறக்கப் பொற்கலம் ஒளிதிகழ மருதமரத்தினின்றும் தலைவி இழிந்தது கூறலின், இது வடிவும் தொழிலும் விரவி வந்த உவமமாம். “விரவியும் வரூஉம் மரபின என்ப”1 என்பது உவமவியல். “மின்னுநிமிர்ந் தன்ன கனங்குழை இமைப்பப், பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள், வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, மிடையூர் பிழியக் கண்டனென்”2 எனப் பிற சான்றோர் இக் கருத்தினைக் குறித்தல் காண்க. போன்றிசின் இடைச்சொல் அடியாகப் பிறந்த முற்றுவினைத் திரிசொல். பாய்ந்தாள் எனற்பாலது மயங்கு மொழிக் கிளவி”3 யாய் எதிர்வின் கண் வந்தது. “இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத்தோன்றும் மயங்கு மொழிக் கிளவி” என்ப. உயர்சினை மருதத்து உச்சி யேறி நீர்நிலைக்குட் குதித்து விளையாடும் மரபினைத் தொடித்தலை விழுத்தண்டினாரும், “உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து, நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக், கரையவர் மருளத் திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடும் எனப் பாய்ந்து 4” என்று கூறியுள்ளார்.

தலைவியைப் புலவிநீக்கி அவளொடு புனலாடக் கருது கின்றா னாகலின் பண்டு களவில் ஒழுகிய ஞான்று அவள் புனலாடியதனை விதந்து கூறிப் புலவிக்கருத்தை நீக்குவான் அவள் கேட்பக் கரைசேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் என்றான். எனவே, பண்ணையிற் பிறக்கும் இன்பத்துக்குக் கரைசேர் மருதம் உதவியாயது போல, களவின்கண் தான் துய்த்த இன்பத்துக்கு அவளது விளையாட்டு உபகாரமாயிற்று என்றானாம். எனவே, இப்பொழுது தான் துய்க்கக் கருதும் இன்பத்துக்கும் புனலாட்டு வேண்டியிருக்குமாறு சுட்டியவாறு காண்க. மருதமேறிப் பண்ணை பாய்ந்த விடத்து, அவளது நீண்ட கூந்தல் காற்றிற் பறந்து பேரழகு திகழக் கண்ட காட்சி, தலைவன் மனத்தே நிலைபெற நின்று நினைக்குந்தோறும் மிக்க இன்பம் பயந்தது குறித்துத் தண்ணறுங் கதுப்பு விசும்பிழி தோகைச் சீர்போன்றிசின் என்றான். களவுக் காலத்து அவளைக் கூடுந் தோறும், அவளுடைய கூந்தலைத் தானே கைசெய்தும் தன் மனக்கினிய பூச்சூடியும் இன்புற்றா னாகலின், அதனால் அதனைத் தண்ணறுங்கதுப்பு எனச் சிறப்பித்தும், நீரால் நனைந்து விட்டு விட்டு இமைத்தலின் அவள் அணிந்த இழையின் ஒளிவிளக்கத்தைப் பசும்பொன் அவிரிழை பைய நிழற்ற எனவும் கூறினாள். மெய்ப்பாடும் பயனும் அவை.

களவுக்காலத்து நிகழ்ந்தனை நினைப்பிக்கும் முகத்தால் கற்பினுள் தலைவன் தலைவியின் அழகினைப் புகழ்வது வேட்கை மிகுதியால் அவளது புலவிநீக்கும் குறிப்பிற்றாதலின் அமையும் என்க. “நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியின், புகழ்தகை வரையார் கற்பினுள்ளே”1 என ஆசிரியர் தொல்காப்பியனார் விளங்கக் கூறுமாற்றாலும் இவ்வமைதி துணியப்படும்.

    75. பலரிவ ணொவ்வாய் மகிழ்ந வதனால்  

அலர்தொடங் கின்றா லூரே மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோ டாடின டண்புன லதுவே.
பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது.

உரை :
மகிழ்ந, மலர்களையுடைய பழமையான நிலைமைத் தாகிய மருதமரங்கள் செறிந்த பெருந்துறைக்கண் ஒருத்தி நின்னுடன் தண்ணிய புனலாடினாளாக, அதனை நீ எம்முன் இசையாது மறைப்பினும் நின்னை ஆங்குக் கண்டோர் இவ் வூரிடத்துப் பலர்காண்; ஆகவே, ஊர் அலர் கூறத்தொடங் கிற்று. இனி நீ மறைப்பதிற் பயன் இல்லை என்றவாறு.

மகிழ்ந, பெருந்துறைக்கண், ஒருத்தி நின்னொடு தண் புனலாடினள்; நீ ஒவ்வா யாயினும் அதனைக் கண்டோர் பலர்; அதனால் ஊர் அலர் தொடங்கின்று என இயையும். பலரும் ஏற்கத் தகுவது ஒன்றனைக் கூறின், அவர்கள் “அஃது ஒக்கும், ஒக்கும்” என்பது போல, ஒத்தல் இசைதல்; “ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு”2 என்பது காண்க. அதனால் என்பது சுட்டு முதலாகிய காரணக் கிளவி; இஃது, ஈண்டு, கண்டோர் பலர் என்ற காரணத்தைச் சுட்டி நிற்கின்றது. தொடங்கின்று, இறந்த காலத் தெரிநிலை முற்றுவினை. மலர என்னும் பெயரெச்சக் குறிப்பு மருதம் என்னும் பெயர் கொண்டது. தொன்னிலை, பழைமையான நிலைமை. தொகைநூல்களில் இது பெருகிய வழக்கிற்று. “நின்னிலைத் தோன்றும்நின் தொன்னிலைச் சிறப்பே”1 “தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணி”2 “தொன் னிலை நெகிழ்ந்த வளையள்”3 எனப் பயில வழங்குமாறு காண்க. ஏற்புடைய சொற்கள் எச்சவகையாற் பெய்துரைக்கப் பட்டன.

“நீ மருதத்துப் பெருந்துறைக்கண் நின் பரத்தையொடு புனலாடினை யல்லையோ?” என்ற தோழி கூற்றினை “இல்லை” எனத் தலைமகன் மறுத்து உடன்படா னாயினமையின், ஒவ்வாய் மகிழ்ந என்றும், “நீ ஒவ்வா யாயினும், நின்னைப் புனலாட்டிற் கண்டோர், சிலர் அல்லர்” என்பாள் இவண் பலர் என்றும் தோழி கூறினாள். தொன்னிலை மருதத்துப் பெருந்துறை என மருதத்தையும் துறையினையும் சிறப்பித்தாள், பழமையில் திரிதலும் கற்புப்பெருமையில்லாப் பரத்தையரோடு ஆடலும் விலக்கும் குறிப்பினளாகலின். இவ்வாறு, தோழி தலைமகனிலும் உயர்ந்தாள் போலக் கூறுதல் வழுவாயினும், அவன் செய்கையால் தலைவிக்கு உளதாகும் உறுகணைத் தாங்குதல் அவட்கு இயல் பாகலின் அமையும் என்பர்; “உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின், உரியதாகும் தோழிகண் ணுரனே”4 என ஆசிரியர் அமைக்குமாறு காண்க. “ஊர, பெரிய நாணிலை மன்ற பொரி யெனப், புன்கவிழ் அகன்றுறைப் பொலிய ஒண்ணுதல், நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல், மாழை நோக்கின் காழியல் வனமுலை, எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு நெருநை, வைகுபுனல் அயர்ந்தனை என்ப அதுவே, பொய்புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து, அலராகி ன்றால் தானே”5 என வரும் பரணர் பாட்டினும் தோழி அலர் பொருளாகத் தலைவனைக் கழறிக் கூறுமாறு காண்க. இது தோழிபால் தோன்றிய புறஞ் சொல் மாணாக்கிளவி. “ஒன்றித் தோன்றும் தோழி மேன”6 என்பதனால், இம் மெய்ப்பாடு தோழிக்கும் கொள்ளப் படுவ தாயிற்று. ஏனை மெய்ப்பாடு: வெகுளி. பயன் : வாயின் மறுத்தல்.

    76. பஞ்சாய்க் கூந்தற் பசுமலர்ச் சுணங்கின்  

தண்புன லாடித்தன் னலமேம் பட்டனள்
ஒண்டொடி மடவர னின்னோ
டந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
இதுவுமது.

உரை :
தண்டான் கோரை போலும் கூந்தலும் பசிய மலர் போலும் சுணங்கும் ஒள்ளிய தொடியுமுடைய மடவரலா வாள், நின்னுடன் தண்ணிய புனலாடி வானத்து மகளிரும் வணங்கு தற்குரிய தெய்வம் போன்று தன் நலம் மேம்பட லானாள்; ஆகலின், நீ அதனை மறைத்துக் கூறுவதென்னை என்றவாறு.

பஞ்சாய் - தண்டான்கோரை. இதனை நாராய்க் கிழித்துக் கண்ணியும் மாலையும் தொடுத்தல் மரபு; “பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப், புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி, ஈருடை யிருந்தலை யாரச் சூடி”1 எனச் சான்றோர் கூறியவாறு காண்க. நீண்ட கூந்தலுடையாளை, இக்காலத்தும் “கோரை போல் நீண்ட தலைமயிருடையாள்” என்று மக்கள் வழங்குவது முண்டு. பசுமலர் என்புழிப் பசுமை புதுமை மேற்று. மடவரல் - மடப்ப முடைய பெண். “மடவர லின்றுணை”2 எனப் பிறாண்டும் வருமாறு காண்க. உம்மையை அந்தரமகளிரும் என மாறுக. பரத்தையை அந்தர மகளிர்க்குத் தெய்வம் போன்று என்றது குறிப்புமொழி.

குலமகளிர் தம் கற்புடைமையினால் அந்தர மகளிரும் வணங்கும் பத்தினித் தெய்வமாய் நலம் மேம்பட்டுப் பலரும் அறியத்தக்க விளக்க மெய்துவர்; “வானுறை மகளிர் நலன் இகல் கொள்ளும், வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ ரோதிக் கொடுங் குழை கணவ”3 என்பதனால் குலமகளிர் கற்பால் வானோர் பரவும் நலம் மேம்படுமாறு காண்க. மற்று, நின் மடவரல், நின்னொடு தண்புனலாடிய சிறப்பினால், பலரும் அறிய நிற்பதொரு விளக்கமெய்தினள்” என்பாள், அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்று என்றாள். “நாணி நின்றோள் நிலைகண்டு யானும், பேணினெ னல்லனோ மகிழ்ந, வானத் தணங்கருங் கடவு ளன்னோள்நின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே”1 எனப் பிற சான்றோர் செய்யுளினும், தலைவியால், பரத்தை அந்தர மகளிரின் வைத்து உரைக்கப்பட்டிருத்தல் காண்க. “பல மகளிரைக் கூடி நலமுண்டு கழிக்கும் நின் மனத்தைப் பிணித்து நீ பிரியாது உடன்வரச் சென்று புனலாடின ளாகலின், அவள் ஏனைப் பலரினும் நலம் மேம்பட்டவள் என்பது துணியப்பட்டது” என்பாள், தண்புனலாடித் தன் நலம் மேம்பட்டனள் என்றாள். வண்டோ ரனைய நின்னைப் பிணித் தலின் நலமிகுதியும், பரத்தையர் பலரும் கண்டு தம் மாட்டாமை நினைந்து இளிவரல் எய்துமாறு நிற்றலின், விளக்க மிகுதியும் உடையளாயினள் என்றவாறாம். “கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக், கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள்”2 என்பதனுள், “பரத்தை யென்னாது பிறள் என்ற தனால்,…… தோழி கூறுங்கால் தலைவியரைக் கூறப்பெறாள் என்பதூஉம், பரத்தையரைக் கூறின், அவர்க்கு முதுக்குறைமை கூறிக் கூறுவள் என்பதூஉம் கொள்க.” எனக் கூறி, இது போல வரும் தோழிகூற்று அமைக்கப்படும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஒருமுகத்தால் வாயில் மறுத்தவாறு.

நலம் மேம்பட்டன வொண்டொடி என்றும், பைஞ் சாய்க் கூந்தல் என்றும் பாடமுண்டு. பைஞ்சாய் - பசிய கோரை; “பழனப் பைஞ்சாய் கொழுதி”3 என வருதல் காண்க.

    77. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்  

பேரூ ரலரெழ நீரலைக் கலங்கி
நின்னொடு தண்புன லாடுதும்
எம்மொடு சென்மோ செல்லனின் மனையே.
முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக் கேட்டு, “இவனுடன் இனி ஆடேன்” என உட்கொண்ட பரத்தை, “புதுப்புனல் ஆடப் போதுக” என்ற தலைமகற்குச் சொல்லியது.

உரை :
மகிழ்ந, நினக்கு ஒன்று கூறுவேன், கேட்பாயாக: நீ நின் மனைக்குச் செல்லாது எம்மோடு கூடிப் போதருவாயாயின், யாம் இப்பெரிய ஊர் அலர்கூற, நீர் அலைத்தலாற் கலங்கி மகிழ்ச்சி மிகுமாறு தண்ணிய புனலாடுவோம் என்றவாறு.

அம்ம, கேட்பித்தற் பொருட்டாய இடைச்சொல். மொழி வல் என்ற ஒருமை பரத்தைத்தலைவி மேற்று. ஆடுதும், எம் மொடு என நின்ற பன்மை, அத் தலைவியையும், அவளது ஆயத்தையும் உளப்படுத்து நின்றது. அலைக்கலங்கி என்பது தொகை நூல்களில் மிகப்பயின்ற வழக்கிற்றாய சொற்றொடர். “பெயலலைக் கலங்கிய மலைப்பூங் கோதை,” “பனியலைக் கலங்கிய நெஞ்சம்”1 “வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி,” “நோயலைக் கலங்கிய மதனழி பொழுது”2 என வருமாறு காண்க. “நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல்,” “நீரலைக் கலை இயகண்ணி” “நீரலைக் கலைஇய கூழை”3 என வேறு வாய் பாட்டினும் வழங்குதலுண்டு. சென்மோ, செல்லல் என்பன எச்சப் பொருளவாய்ச் செல்லின், செல்லாது என நின்றன.

முன்பு தலைவியோடு புனலாடினான் எனக் கேட்டு, “இவ னுடன் இனி ஆடேன்” என உட்கொண்டு புலந்திருந்த பரத் தையை அப்புலவி நீக்கித் தன்னோடு புனலாட வேண்டிய தலைமகற்கு உடன்படுவாள். நின்னொடு தண்புன லாடுதும் என்றும், அது குறித்து அவன் தன்மனைக்கு ஏகாது தம்மொடு போந்து நீராட வேண்டும் என்பாள், எம்மொடு சென்மோ செல்லல் நின் மனையே என்றும் கூறினாள். தனக்குரிய மனைக்கு ஏகாதவாறு தலைவனைத் தகைத்தல் அரிய செய லாதலின், அதனை மொழிவாள் முதற்கண் நின்மொழிவல் என முகம்புகுந்தாள். தான் ஆடற்கு விரும்பும் புனலாட்டு மறைந்த நிகழ்ச்சியாகாது, பலரும் அறிய நிகழ்வதொன்றாக வேண்டும் என்றும், புனலாட்டும் நெடிது ஆடிக் கண் சிவப்புறக் களிக்க வேண்டும் என்றும் குறிப்பாள், பேரூர் அலரெழ எனவும், நீரலைக்கலங்கி எனவும் மொழிந்தாள். இதனாற் பயன், தலைவி கேட்டுப் பொறாது புலந்த உள்ளத்தளாவது. செல்லல் நின் மனையே என்றதனாற் பரத்தைபால் பொறாமைக் குறிப்பு மெய்ப்பட்டது.

இது, “புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்”1 என்ற சூத்திரத்து, “எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்” என்புழி, பண்ணை பொருளாக நிகழும் கூற்று வகை யாகும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன், ஒரு முகத்தாற் புலந்தவாறு.

    78. கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி  

மதில்கொல் யானையிற் கதழ்புநெறி வந்த
சிறையழி புதுப்புன லாடுகம்
எம்மொடு கொண்மோவெந் தோள்புரை புணையே.
இதுவுமது.

உரை :
மகிழ்ந, நின் மனைக்கட் சென்று நின் மனைவியொடு கூடிப் புனலாடுவதை விடுத்து எம்மொடு கூடிப் போந்து எம் தோளை நிகர்க்கும் புணையைப் பற்றிப் புனலாடுவை யாயின், யாம் ஒளிவீசும் இலையினையுடைய நெடிய வேலும் விரைந்த செலவினையுடைய குதிரையுமுடைய கிள்ளியினது பகைவர் களின் மதிலை அழிக்கும் யானைபோலத் தன்னெறியே விரைந்து வந்து சிறையை அழிக்கும் புதுப்புனலில் நின்னோடு ஆடுவேம்காண் என்றவாறு.

கிள்ளி - சோழவேந்தர்க்குரிய பெயர்களுள் ஒன்று. கடுமான் கிள்ளி என்றது சோழவேந்தன் ஒருவனது இயற்பெயராகக் கருதுவாரும் உளர். மதில்கொல் யானை யெனவே, பகைவர் மதில் என்பது பெறப்பட்டது; “நுதிமுக மழுங்க மண்டி ஒன்னார், கடிமதில் பாயும்நின் களிறுஅடங் கலவே”2 என்பதனாலும் அறிக. கதழ்பு, விரைவுப் பொருட்டாய உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த வினையெச்சம்; “கதழ்வும் துனைவும் விரைவின் பொருள”3 என ஆசிரியர் கூறுவர். மதில்கொல் யானையின் சிறையழி புதுப்புனல், நெறிவந்த புதுப்புனல் என இயைக்க. நெறி வருதலாவது, கரைகடந்து சென்று தீங்கு செய்யாது, வேண்டுமிடங்களிற் சென்று பாய்ந்து வருவது; “வேண்டு வழி நடந்து தாங்குதடை பொருது…… புதுநாற்றஞ் செய்கின்றே செம்பூம் புனல்”1 எனவரும் பரிபாடல் காண்க. இனி, நெறிவந்த சிறையழி புதுப்புனல் என்பதற்கு, நெறியிடை அகப்பட்ட பொருள்களைக் கொணர்ந்து எற்றிச் சிறையை அழிக்கும் புதுப் புனல் எனினுமாம். “மைபடு சிலம்பிற் கறியொடும் சாந்தொடும், நெய்குடை தயிரின் நுரையொடும் பிறவொடும், எவ் வயினானும் மீதுமீ தழியும்”2 எனச் சான்றோர் கூறுப. சிறை, அணை. ஆடுகம் என்புழி, அம்மீறு ககரவொற்றுப் பெற்று முடிந்தது. புணை, வேழத்தாற் செய்த தெப்பம்; “வேழவெண் புணை,” “கொழுங் கோல் வேழத்துப் புணை”3 என வருதல் காண்க.

தலைமகன் பண்டு தலைவியுடன் புனலாடினான் என்பது கேட்டுப் பொறாது புலக்கின்றா ளாகலின், அது தோன்ற எம்மொடு கொண்மோ என்றும், தலைமகளோடு ஆடிய புணை அவளுடைய தோள் போறலின், அதனை விடுத்துத் தன் தோள் போலும் பிறிதொரு புணை கொள்க என்பாள், எம்தோள் புரை புணை என்றும் கூறினாள். இவ்வாறு, பொறாமையால், “இனி, இவனுடன் புனல் ஆடேன்” எனப் பரத்தை தன்னுட் கொண் டிருந்த குறிப்பு நன்கு வெளிப்பட, புதுப்புன லாடுகம் என்றாள். எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புணையே என்பது மெய்ப்பாட்டியலுள் ஆகாதென விலக்கிய நிம்பிரி யாயினும், பரத்தையின் காதற் கருத்தைச் சிறப்பித்தலின் அமையுமென்க; “சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு, அனைநால் வகையும் சிறப்பொடு வருமே”4 என ஆசிரியர் விதிக்குமா றறிக. இது சிறுபான்மை பரத்தைக்கும் எய்தப்பெறும்; அவளும் தலைவ னொடு ஊடியும் உணர்ந்தும் உரைத்தற் குரிய ளாகலின். பிறாண்டும் இதுபோல்வன அறிந்து கூறிக்கொள்க.

பகைவர் தமக்கு அரணாக அமைத்த மதிலைக் கிள்ளியின் யானை அழித்தாற்போல, உயிர்களின் நலப்பேற்றுக்கு அரணாக அமைந்த சிறையினைப் புதுப்புனல் அழிக்கும் என்றதனால், எங்கள் இன்பப்பேற்றுக்கு அரணாக அமைந்த நின் கூட்டத்தை நீ தலைவியுடன் ஆடும் புனலாட்டு அழிக்கும் என்றாளாம். ஆகவே, இஃது உவமையும் பொருளுமாய் நின்று கருப் பொருட்குச் சிறப்புக் கொடுத்தலின், திணையுணர்வகையில் ஏனையுவம மெனத் தள்ளப்படா தாயிற்று, “உள்ளுறை யுவமம் ஏனை யுவமமெனத், தள்ளா தாகும் திணையுணர் வகையே”1 என ஆசிரியர் கூறுவர். “கிழவோற் காயின் உரனொடு கிளக்கும், ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே”2 என்பவாகலின், பரத்தையால் இஃது அமைவதாயிற்று.

இனி, நச்சினார்க்கினியர், “இது, காமக்கிழத்தி நின் மனைவியோ டன்றி எம்மொடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது” என்பர். மெய்ப்பாடும் பயனும் அவை.

கதிமான் என்றும் கதவுநெரி தந்த என்றும் பாட வேறுபாடு உண்டு.

    79. புதுப்புன லாடி யமர்த்த கண்ணள்  

யார்மக ளிவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மக ளாயினும் மறியாய்
நீயார் மகனையெம் பற்றி யோயே.
தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டுத் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி அவள்தோழி சொல்லியது.

உரை :
புதுப் புனலாடிச் சிவந்த கண்ணை யுடைய ளாகிய இவள் யாவர்மகள் எனச் சொல்லிக் கைப்பற்றிய மகிழ்ந, இவள் யாவர்மகளாயினும் அறியாமலே எம் கையைப் பற்றினை யாகலின் நீ யாவர்மகன்? அதனை முன்பு கூறுக என்றவாறு.

அமர்த்தல் - ஈண்டுச் சிவத்தல்; நீரில் நெடிதாடியவழிக் கண் சிவக்கும்; “நீர்நீடாடிற் கண்ணும் சிவக்கும்”1 என்ப. சொல்லி என்பது சொல்லெச்சம். ஆயினும் என்றது, இவள் நின்னால் நன்கு அறியப்பட்டவள் என்பது எய்துவித்தது. தோழி எம் பற்றியோய் என்றது, “தாயத்தி னடையா வீயச் செல்லா, வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா, எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம், அல்லா வாயினும் புல்லுவ வுளவே”2 என்பதனால் அமையும். மகனை என்புழி ஐகாரம் சாரியை.

தான் அவளோடு கூடிப் புனலாடாது தனித்தாடினானாக, அது கண்டு பொறாது தனித்தாடி அவன் தலைப்பெயருமளவும் அப்புனலிலேயே நெடிது இருந்தாளாகலின், புதுப்புனலாடி அமர்த்த கண்ணள் என்றும், அவள் பார்வைதானும் அவள் மனத்து நிகழ்ந்த புலவிக் குறிப்பை இனிது புலப்படுத்தி அயன்மை தோன்ற நின்றமையின் யார்மகள்இவள் என்றும் கூறி அப்புலவி தீருமாறு கைப்பற்றினானாயிற்று.

மெய்யே அறியானாயின், யார்மகள் இவள் என வினவிக் கொண்டே, அவளைக் கைப்பற்றா னாகலின், ஈண்டை வினா, அறிந்துவைத்தும் அறியான்போல வினவியதாம். ஆகவே, இதனாற் பயன் பரத்தை புலவிதீர்வாளாவது. மற்று, அஃது அங்ஙனமாகாது மிகுதல் கண்டு, அது தீருமாறு கைப்பற்றினான் என்பது தோன்றத் தோழி, பற்றிய மகிழ்ந என்றாள். தலை நின்றொழுகும் பரத்தையை அறியான்போலத் தலைவன் மக்க ளினத் தன்றித் தேவ மகள்போல நலஞ்சிறந்து விளங்கும் இவள் என்னும் கருத்துப்பட யார் மகள் இவள் என்றானாக, “இவள் நின் பெண்டே” எனினும் அதனை மறந்து தனித்துப் போய்ப் புன லாடினை யாதலின் இதுபோது இன்னள் என எடுத்துக் கூறினும் நீ அறியாய் என்பாள் யார் மகளாயினும் அறியாய் என்றும், அறியாய் போல வினவுவதும், அறியுமுன்பே அறிந்தாய் போலக் கைப்பற்றுவதும் செய்தலின் நின்னை நன்கு அறிய விரும்பு கின்றேமென்பாள், நீ யார் மகனை எம் பற்றியோயே என்றும் கூறினாள். மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயில் மறுத்தல்.
80. புலக்குவே மல்லேம் பொய்யா துரைமோ
நலத்தகை மகளிர்க்குத் தோட்டுணை யாகித்
தலைப்பெயற் செம்புன லாடித்
தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.
தன்னை யொழியப் புதுப்புனலாடித் தாழ்த்து வந்த தலை மகனோடு தலைமகள் புலந்து சொல்லியது.

உரை :
மகிழ்ந, நற்குணங்களால் தகுதியுடையராய மகளிர்க்குத் தோட்டுணையாகி, முதற்பெயலாகிய மழையால் பெருக் குற்று வந்த புதுப்புனல் ஆடினமையால், நின் கண்கள் மிகச் சிவந்தன; அஃது உண்மையன்றோ? கூறுக. அதுபற்றி யாம் புலப்பேமல்லேம்; நீ பொய்யாது உரைப் பாயாக என்றவாறு.

நலத்தகை மகளிர் என்றது பரத்தையரை. புனலாடு மகளிர் புணைபோலப் பற்றி நீராடுதற்குரிய துணைமை நல்குதல் நோக்கி அவன் கூட்டத்தைத் தோட்டுணை என்றார். வேனிற் பருவத்துப் பெய்யும் மழை ஆண்டின் முதன்மழை யாதலின் தலைப்பெயல் எனப்பட்டது. அதனாற் பெருகி வரும் புனல் தெளிவின்றிக் கலங்கி வருதல் பற்றிச் செம்புனல் என்றார். ஆடி யென்னும் செய்தெனெச்சம் காரணப்பொருட்டு. தவநனி என்னும் உரிச் சொற்கள், “பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்” 1 என்பதனால் மிகுதிப்பொருட்கு உரிமை பெற்று. வந்தன.

தன் கண் சிவந்திருத்தல் தலைமகள் புலத்தற்கு ஏதுவாம் என்று கருதித் தலைவன் தாழ்த்து வந்தானாயினும், அதனை உணர்ந்த அவள், அவன் மறைப்பான் என உட்கொண்டு, புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ என்றும், தான் புலவாமை தோன்றப் பரத்தையைப் பாராட்டி, நலத்தகை மகளிர்க்கு என்றும், அவரோடு புனலாடியதனைத் தான் அறிந்தமை எய்தத் தோட்டுணையாகி என்றும் கூறினாள்.

புதுப்புனல் எய்துங்கால் காதலனுடன் கூடியாடுதற்கு இக்கற்புக்காலத்தேயன்றிக் கழிந்த களவுக்காலத்தும் விருப்பம் மிகவுடையளா யிருந்தமையின், அது தோன்றத் தலைப்பெயற் செம்புனல் எனச் சிறப்பித்தாள். களவுக் காலத்தில், “காந்தளஞ் சிறுகுடிக் கௌவை பேணாது, அரிமதர் மழைக்கண் சிவப்ப நாளைப், பெருமலை நாடன் மார்பு புணையாக, ஆடுகம் வம்மோ காதலந் தோழி…………… கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே 1” எனத் தலைவி கூறுதல் காண்க. பரத்தையரோடு புனலாடிய நிகழ்ச்சியை நீ மறைக்கினும் நின் கண்கள் மறை யாவாய்ச் சிவந்து தோன்றி யான் அறியக் காட்டி விட்டன என்றற்குத் தவநனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே என்றாள். “நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் 2” என்பர் சான்றோர்.

மெய்ப்பாடு : வெகுளி. பயன் : புலத்தல்.


புலவி விராய பத்து

இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும், தலைவியும் தோழி யும் பரத்தையும் புலந்து கூறுவனவும் வாயின் மறுத்துக் கூறுவன வும், பிறவுமாய் விரவிவருதலின், இஃது இப்பெயரினைப் பெறுவதாயிற்று.

    81. குருகுடைத் துண்ட வெள்ளகட் டியாமை  

அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும்
மலரணி வாயிற் பொய்கை யூரநீ
என்னை நயந்தனெ னென்றிநின்
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.
தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

பழைய உரை :
குருகுடைத் துண்ட யாமை மிச்சிலை வினைஞர் உணவிற் கூட்டும் ஊர எனவே, நாங்கள் நுகர்ந்து கழித்த மார்பை நுகர்வாள் என்று தலைமகளைப் பழித்தவாறாம்.

உரை :
குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெள்ளிய வயிற்றினை யுடைய யாமை யிறைச்சியினை, அரிப் பறையை முழக்குதலை யுடைய உழவர் தமது மிக்கவுணவோடு கூட்டியுண்ணும் மலரால் அழகுற்ற துறையினை யுடைய ஊரனே, நீ என்னை விரும்பினேன் என்று கூறுகின்றனை; மற்று, இதனை நின் மனைவி கேட்பின் பொறாது மிகவும் வருந்துவள்காண் என்றவாறு.

குருகு - கொக்கு, நாரை முதலிய புள்ளினங்கள். அகடு - வயிறு. அரிப்பறை, அரித்த ஓசையினையுடைய பறை. நெல்லரி யும் உழவர் வயற்கண் விளைந்த நெல்லை அறுக்கப் புகுமுன் அவ்வயலிற் கூடமைத்து வாழும் புள்ளினங்கள் முன்னறிந்து ஏதமின்றி நீங்குவது குறித்து இப் பறையோசையை எழுப்புவது பண்டைத் தமிழர் மரபு. “கழிசுற்றிய விளைகழனி, அரிப் பறையாற் புள்ளோப்புந்து”1 என மாங்குடிகிழாரும், “வெண் ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப். பழனப் பல்புள் இரிய”2 எனப் பரணரும் கூறுமாறு காண்க. அல்குமிசை - மிக்க உணவு; “அரிலிவர் புற்றத்து அல்கிரை நசைஇ”3 என வருமாற்றால் உணர்க. இனி, “சில நாளைக்கு இட்டு வைத் துண்ணும் உணவு” என்பர் புறநானூற்றுப் பழைய வுரைகாரர். பிற உயிர்கள் உண்டு கழித்த மிச்சிலை மக்கள் உண்ணும் முறை, “ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி, ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய்நாட்டு, அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி யாகும்”4 என வருதலாலும் தெளியப்படும். பொய்கைக்குத் துறை வாயில் போறலின், வாயில் என்றார். என்றி: றகரம் ஊர்ந்த முன்னிலை நிகழ்கால முற்றுவினை.

தலைமகள் தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் புலந்த பரத்தை அப் புலவி தீருமாறு தலைவன் தான் அவளை இன்றியமையாமை கூறினானாக, அதனை மேற்கொண்ட அப்பரத்தை, என்னை நயந்தனென் என்றி என அவன் கூறிய அதனையே கொண்டெடுத்துமொழிந்தாள். தலைவன் இவ்வாறு கூறியதனால் பெருமகிழ்வு கொண்டவள் தலைவி கேட்டுப் பொறாது வருந்தவேண்டும் என்ற கருத்தினால் நின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே என்றாள். “கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்று” எனத் தலைவன் பரத்தைமை கூறித் தலைவி புலந்தாளாக, அது தன்னைப் புற னுரைத்ததாகக் கொண்டு பரத்தை அத் தலைவியை இகழ்வ தாகிய குறிப்புத் தோன்ற வருதலின், இது “புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்”1 என்ற சூத்திரத்து, “இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்” நிகழும் கூற்று வகையாகும்.
குருகுகள் உடைத்து உண்டு கழித்த யாமைமிச்சிலை வினை ஞர் தம் உணவிற் கூட்டி உண்பர் என்றது, நாங்கள் நுகர்ந்து கழித்த நின் மார்பினை நுகர்வாள் நின்மனையோள் என உள் ளுறுத்து உரைத்தவாறு. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவியை இகழ்தல்.

இனி, வினைஞர் நல்குமிசை என்ற பாடம், பிறர்க்கு நல்கி யுண்ணும் உணவு என்றவாறு. பாத்தூண் வாழ்க்கை எல்லா மக்கட்கும் பொதுவாகலின் இவ்வாறு கூறினார் என்க. எனவே, நின் மார்பு தனக்கேயன்றி எமக்கும் உரித்தாதலை அறியாது புலக்கின்றாள் நின்மனையோள் எனப் பரத்தை கூறினாளாம்.

    82. வெகுண்டன ளென்ப பாணநின் றலைமகள்  

மகிழ்நன் மார்பி னவிழிணர் நறுந்தார்த்
தாதுண் பறவை வந்தெம்
போதார் கூந்த லிருந்தன வெனவே.
மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்குமாற்றால் தலைமகள் சொல்லியது.

பழைய உரை :
இதுவும் பொறாதவள் நீ ஈண்டு வருதல் பொறாள், கடிதிற் செல்க என்பதாம்.

உரை :
பாண, மகிழ்நனது மார்பின்கண் உள்ள முறுக்கு அவிழ்ந்த பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட நறிய மாலையில் தேனை யுண்ட வண்டினம் போந்து எமது மலரணி கூந்தலில் தங்கின என்று அவட்குப் பாங்காயினார் கூறக் கேட்டலும் நின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று பலருங் கூறா நின்றனர்; இதுவும் பொறாதாள், நீ ஈண்டு வருதலை அறியின் இறப்பவும் வெகுளுவள், ஆகலின், கடிதிற் செல்வாயாக என்றவாறு.

மலரரும்பு பிணித்து முறுக்கியது போறலின், மலர்ந்தவழி அதனை முறுக்கு அவிழ்ந்த வாய்பாட்டால், அவிழிணர் என் றார்; “பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ”1 எனச் சான் றோர் வழங்குமாறு காண்க. தாதுண் பறவை, வண்டினம்; “தாதுண் பறவை பேதுறல் அஞ்சி”2 என்ப. ஏனைப் புள்ளினங் களிலும் தேன் உண்பன உளவாயினும், தாதுண் பறவை யென்பது வண்டினத்தையே குறிப்பது, பான்மைபற்றிய வழக்கு என அறிக. தேன் தேடி உண்ணும் புள் தேன்சிட்டு 3 என வழங்கும். தலைவியது இல்லின்கண் நிகழ்ந்தது உணர்ந்து பரத்தையர்க்குக் கூறுவோர் அவட்குப் பாங்காயினாரே யாகலின், அது வருவித்து உரைக்கப்பட்டது; “சான்றோன் எனக் கேட்ட தாய்” 4 என்ப தற்குப் பரிமேலழகர் கூறிய உரை காண்க. நின் தலைமகள் என்றது பரத்தையை இழித்தற் குறிப்பிற்றாய் உயர்சொற் கிளவி. இதுவும் பொறாதாள் என்பது முதலாயின எஞ்சி நின்றன.

மகிழ் செய்யும் தேனை யுண்ணும் வண்டின மாகலின், தலைவன் தாரிலுள்ள தேனை உண்டதனோடு அமையாது, எம் கூந்தற் போதுகளிலுள்ள தேனை விரும்பி வந்திருந்தன என்பாள் தாதுண் பறவை என்றும், எம் போதார் கூந்தல் என்றும் கூறினாள். தலைமகன் தாரினை அவிழிணர் நறுந்தார் என்றும், தன் கூந்தலைப் போதார் கூந்தல் என்றும் சிறப்பித்ததனால், தலைவன் தாரிற் பூக்கள் மலர்ந்து தேன்கமழ இருந்தமையும், தம் கூந்தலிற் பூக்கள் மலரும் செவ்வியவாய் இருந்தமையும் சுட்டி னாள். இதனாற் பயன், மயக்க மிகுதியால் இவ்வேற்றுமை காணமாட்டாத வண்டின் செய்கையைப் பொருளாகக் கொண்டு வெகுளுதல் நன்றன்று எனப் பரத்தையைப் பழித்தவாறு; “தாதுண் வேட்கையிற் போது தெரிந்து ஊதா வண்டு”1 எனச் சான்றோர் வண்டின் இயல்பு விளங்கக் கூறியவாறு அறிக.

தலைவன் தாரினது மலர்த்தேனை உண்ட வண்டு, தலைவி கூந்தலில் அணிந்த போதுகள் மலரும் செவ்வி நோக்கி இருந்தன எனத் தனக்குப் பாங்காயினார் சொல்லக் கேட்ட பரத்தை தன்பால் இன்பம் நுகர்ந்த தலைவன் தன் மனையகம் புக்குத் தலைவி புலவி நீங்கும் செவ்வி நோக்கியிருந்தான் என உட் கொண்டு வெகுண்டாளாக, அதனை உணர்ந்த தலைவி பொறாது அவனைப் பழித்தும் பாணனை மறுத்தும் நிகழ்ந்தவாறு கூறி வெகுண்டனள் என்றும், அதனைப் பலரும் கூறாநிற்பர் என்றற்கு என்ப என்றும் எடுத்து மொழிந்தாள். பொய்யுரை மொழியும் இயல்பினனாகிய பாணன் தான் கூறுவதனையும் அவ்வாறே கொள்வன் என்னும் கருத்தால் தன் கூற்றின் வாய்மை பிறங்க, என்ப எனப் பிறர்மேல் வைத்து மொழிகின்றாள் என்க. மெய்ப் பாடு : வெகுளி. பயன் : வாயின் மறுத்தல்.

இஃது, “அவனறிவு ஆற்ற அறியுமாகலின்”2 என்ற சூத்திரத்து, “வாயிலின் வரூஉம் வகை” என்பதனுள் அடங்கும்.

    83. மணந்தனை யருளா யாயினும் பைபயத்  

தணந்தனை யாகி யுய்ம்மோ நும்மூர்
ஒண்டொடி முன்கை யாயமுந்
தண்டுறை யூரன் பெண்டெனப் படற்கே.
வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப் புறத் தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனோடு புலந்து சொல்லியது.

உரை :
ஊர, எம்மை மணந்துகொண்ட நீ எமக்கு நின்னுடைய அருளை நெடிது செய்யாதொழியினும், நுமது ஊரிலுள்ள ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய பரத்தையர் பலரும் தண்டுறை யூரனாகிய நினக்குப் பெண்டு எனக் கூறப்
படும் சிறப்புப் பெறுமாறு மெல்ல மெல்ல நீங்கி ஒழுகுவாயாக என்றவாறு.

அருளுதல் - தலையளித்தல். பைய பைய என்ற அடுக்குப் பைபய என மரூஉ வாயிற்று; மெல்ல மெல்ல என்பது பொருள்; “படரும் பைபயப் பெயரும்”1 என்ப. உய்தல், ஈண்டு ஒழுகுதன் மேற்று. தண்டுறையூரன் பெண்டு - தண்ணிய துறையினை யுடைய ஊரற்குரிய காமக் கிழத்தியர்; இது “கூற்றுஅவண் இன்மையின் யாப்புறத் தோன்றிய” கொண்டுகூற்று. தலைவனைக் கூடி விளையாடி இன்புறும் இயைபு பற்றிப் பரத்தையரைத் தலைமகற்கு ஆயம் என்றார். எனப்படற்கு என்பது, “உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடையதாயினும், உருபும் பெயரும் என்றாகாது, பகுப்பப் பிளவுபட்டு இசையாது ஒன்று பட்டிசைத்தலால்”2 அதனின் வேறாகிய செயற்கென்னும் வினையெச்சமாய்த் தணந்தனையாகி என்பதனோடு முடிந்தது.

வரைந்த அணிமைக்கண்ணே தலைவன்பால் புறத் தொழுக்கம் உண்டாயினமை அறிந்துகொண்ட தலைவி, மணந்தனை அருளாய் என்றும், பிரிவின்றி எம்மொடு உடன் உறைந்து அருளாயாயினும், நீ நெடிது பிரிந்துறையின் நினது காட்சின் பமும் பெறல் இன்றி வருத்தம் மிக்கு உறைவது எனக்கு இன்னா தாகலின். மெல்ல மெல்லப் பிரிந்துறைவதை வேண்டுகின்றேன் என்பாள், பைபயத் தணந்தனையாகி உய்ம்மோ என்றும் கூறினாள்; “துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும், இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்”3 எனப் பிறரும் கூறுமாற்றால் அறிக. தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் சுட்டி நும்மூர் என்றாள். மணந்தவரைப் பிரிவின்றிக் கூடியிருந்து மகிழாது நாளும் பலப்பல மகளிரைக் கூடுவது, அப் பலரும் நின்பெண்டிர் எனப்படுவது ஒன்றையே கருதியதென்பது நின் ஒழுக்கத்தால் விளங்கிற் றென்பாள், தண்டுறையூரன் பெண்டு எனப்படற்கு என்றாளாம். ஆயமும் என்ற எச்ச உம்மை, நின் பெண்டு எனப்படுமாறு என்னை மணந்ததேயன்றி, ஒண்டொடி முன்கை ஆயத்தையும் அவ்வண்ணமே செய்து ஒழுகுகின்றாய் என்பது எய்துவித்தது. பரத்தையரை ஒண்டொடி முன்கை ஆயம் எனச் சிறப்பித்ததனால், அவர்கள் பெண்ணியல் பொன்றையே யுடையராவரன்றி, எம்போல் நன்றி சான்ற கற்புடையராதல் இலர் என்றாளாம்.

இஃது “அவனறிவு ஆற்ற அறியுமாகலின்”1 என்ற சூத்திரத்து, “செல்லாக் காலைச் செல்கென” விடுத்தற் கண் தலைவி நிகழ்த் தும் கூற்று வகையாகும். மெய்ப்பாடு: வெகுளி. பயன் : புலத்தல்.

பைய என்றும் பாடம் உண்டு.

    84. செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்  

கண்ணிற் காணி னென்னா குவள்கொல்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே.
பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக்குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.

உரை :
மகிழ்ந, நறிய பூக்கள் அணிந்த கூந்தலையுடைய மகளிர் படிந்தாடும் தைஇத் தண்கயம் போலப் பலர் முயங்கி இன்பம் நுகரும் நின்மார்பினைச் சிறப்பித்துப் பிறர் கூறத் தன் செவியிற் கேட்பினும் சொல்லிறந்து சினங் கொள்ளும் இவள், பரத்தை செய்த குறியொடு தோன்றும் அதனைத் தன் கண்களாலே காண்பாளாயின் என்னாவளோ? அறியேன் என்றவாறு.

சொல்லிறந்து வெகுளலாவது சொல்லாடற் கியலாச் சினம் மிகுதல்; சொல்லாடுதற்கு நாவெழாத அத்துணை அள விறந்த சினம் கொள்ளுதல். ஐம்பால் - கூந்தல்; ஐவகை ஒப்பனை உடைமைபற்றி இது பெயராயிற்று. அவை, முடி கொண்டை குழல் பனிச்சை சுருள் என வரும். “நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன, ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தற். செய்வினை பாராட்டினையோ ஐய”2 என்றும், “ஐம்பால் வகுத்த கூந்தல்”3 என்றும் வருவன காண்க. தைஇத் தண்கயம், தைத்திங்களில் மகளிராடும் தண்ணிய குளம்; தெளிந்த நீர் தண்ணிதாகலின் தெளிவும் கொள்க. கார்காலத்துப் பெருமையால் நீர் பெருகிக் கலக்கமுற்ற கயம், தைத் திங்களில் நன்கு தெளிந்து தண்ணி தாதலால், தெண்ணீர்க் கயமென்னாது, தைஇத்தண்கயம் என் றார். “தைஇத் திங்கள் தண்கயம் போலக், கொளக்குறை படாக் கூழுடை வியனகர்” 1 எனப் பிறரும் கூறுதல் காண்க. “உண்டற் குரிய அல்லாப் பொருளை, உண்டன போலக் கூறலும் மரபே”2 என்பதனால், முயங்கிப் பெறும் இன்ப நுகர்ச்சியை, உண்ணும் என்றார். பரத்தை மார்பு, பரத்தை செய்த குறி கிடந்து விளங்கும் மார்பு. மார்பு செவியிற் கேட்பினும் வெகுள்வோள், கண்ணிற் காணின் என்னாகுவள் கொல் என இயையும்.

மகளிராடும் தண்கயம், அவரணிந்த கோதையும் குங்குமச் சாந்தும் நெய்யும் விரவித் தோன்றுதல்போல, நின் மார்பும் பரத்தையின் முயக்கத்தால் சாடிய சாந்தும் வாடிய கோதையும் உடைத்தாய்த் தோன்றுகின்றது என்பாள், நின் பரத்தை மார்பே என்றார்; “குவவுமுலை சாடிய சாந்தினை, வாடிய கோதையை”3 என வருதல் காண்க. இளையரும் முதியரும் எனப் பலரும் ஆடும் கயம்போல, நின்னைக் கூடும் பரத்தையரும் அவ்வகைப்பட்ட பலர் என்றற்குத் தண்கயம் போலப் பலர் படிந்துண்ணும் மார்பு என்றாள்; “வண்கயம் போலும் நின் மார்பு”4 என்று பிற சான்றோரும் கூறினர். தைத்திங்களில் இள மகளிர் நீராடி நோற்பது மரபாகலின், தைஇத் தண்கயம் எனச் சிறப்பித்தாள்; “இழையணி யாயமொடு தகுநாண் தடைஇத், தைஇத் திங்கள் தண்கயம் படியும், பெருந்தோட் குறுமகள்”5 தாயருகா நின்று தவத்தைந் நீ ராடுதல்”6 “தையில்நீ ராடிய தவம்”7 என வருமாறு காண்க.

நின் மார்பின் சிறப்பினைப் பிறர் புகழ்ந்து கூறக் கேட்ட துணையானே பொறாது கழிசினங்கொண்டு சொல்லாட இய லாது கையற்று நிற்பவள், சாடிய சாந்தும் வாடிய கோதையும் கொண்டு தோன்றும் நின் மார்பினைக் காணின் உயிர்வாழாள் என்பாள் என்னாகுவள் கொல் எனத் தோழி கூறினாள். செவியில், கண்ணில் என நின்ற விதப்பு மொழிகள், முறையே கேட்டல் காண்டல் முதலிய செயல் வகைகளில் அவள் எய்தும் மனவேறு பாட்டின் கடுமை உணர்த்தி நின்றன. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயில் மறுத்தல்.
பரந்த மார்பே என்றும் பாட முண்டு.

    85. வெண்ணுதற் கம்பு ளரிக்குரற் பேடை  

தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
மறுவில் யாணர் மலிகே ழூரநீ
சிறுவரி னினைய செய்தி
நகாரோ பெருமநிற் கண்டிசி னோரே.
தலைமகன் பரத்தையர்மேல் காதல் கூர்ந்து நெடித்துச் 1 செல்வழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.
பழைய உரை :
கம்புட்பேடை சேவலொழியக் கிளையுடனே ஆலும் ஊர என்றது, கிளையுடனே வாழ்கின்ற எமக்கு நின்னின் நீங்கிய மெலிவு உளதாகக் கூறுகின்றேமல்லேம், நின் குலத்தொழுக்கத்துக்குத்
தகாது எனக் கழறியதாம். “தாய்போற் கழறித் தழீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”2 என்றதூஉம் இத் திறன்நோக்கி எனக் கொள்க என்பது.

உரை :
வெள்ளிய தலையினையுடைய கம்புட்கோழியின் அரித்த குரலையுடைய பேடை குளிர்ந்த நறுவிய பழனங்களிலுள்ள ஏனைப் புள்ளினங்களோடு ஆலும் குற்றமில்லாத புது வரு வாய் மிக்க ஊரனே, நீ சிறுவர்களைப் போலப் பின்னிருந்து வருந்தத்தகுவனவாய இவற்றைச் செய்கின்றா யாகலின், பெரும, நின்னைக் கண்டோர் இச் செயல்பற்றி நகுதலைச் செய்யாரோ? கூறுக என்றவாறு.

கம்புட்கோழியின் தலை வெண்ணிறமுடையதாகலின், வெண்ணுதற் கம்புள் என்றார்; வெண்டலைக் கம்புள் என்றும் பாடமுண்டு. அரிக்குரல், அரித்த ஓசையினையுடைய குரல்; இஃது “அரிகுரல்”1 என்று பாடமும் “அரிந்த குரல்” என உரையும் கூறப்படுவது முண்டு. மறுவில் யாணர், குற்றமில்லாத புதுவருவாய்; குற்றமின்மையா, நாடோறும் மக்களுக்குப் புதுமையிடத்து விழைவும் அது பற்றிய முயற்சியும் பெருகி வருதலின் அப்பெருக்கத்திற் கேற்ப வருவாய் குறைவுற வாராமை. சிறுவரின் என்புழி ஐந்தாவது ஒப்புப் பொருட்டு. இனைய பின்னிருந்து எண்ணி இரங்கத்தக்க இச்செயல்கள்: “எற்றென்று இரங்குவ செய்யற்க”2 எனப் பெரியோர் தெருட்டுப. இவற்றைச் செய்தவழி, எல்லாரும் இகழ்தல்பற்றி, இவை விலக்கப்படுவன வாயின. கண்டிசினோர் வினைமுதன் மேனின்ற வினையா லணையும் பெயர்.

சிறுவர், தம் செய்கைகளை மேல் விளைவது நினையாது செய்தல்போல, நீயும், நின் பெருமைக்குரிய அறமும் பொருளும் பிற தகவுடைமையும் முன்னர் நோக்கிப் பின்னர்ச் செய்வதை விடுத்துப் பின்னிருந்து வருந்தத்தக்க பரத்தைமை மேற்கொண்டு யாம் தமித்து வருந்த விடுகின்றனை என்பாள், சிறுவரின் இனைய செய்தி என்றாள். “விழையா வுள்ளம் விழையு மாயினும் என்றும், “கேட்டவை தோட்டி யாக மீட்டாங்கு, அறனும் பொருளும் வழாமை நாடித், தன்தகவுடைமை நோக்கி மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல், அனைய பெரியோர் ஒழுக்கம்”3 எனவும், “செய்து பின் னிரங்கா வினையொடு, மெய்யல பெரும் பழி எய்தி னேனே”4 எனவும் சான்றோர் தோழி கூற்றில் வைத்துத் தெரித்திருத்தல் காண்க. “சிறியரின்” என்னாது சிறுவரின் என்றாள், தாய்போற் கழறித் தழீஇத் கோடற் குரிய தகுதி பற்றி. உள்ளுறையால், தலைவி தான் தனித்திருந்து வருந்தும் செய் தியைக் குறித்தமையின் இனைய எனச் சுட்டியொழிந்தாள். தலைவன் பரத்தைமை, பின் அவன் தானே நினைந்து வருந்து தற்கும் இடமாதலுடைய தென்பது, “கிழவோன் இறந்தது நினைஇ ஆங்கண், கலங்கலும் உரியன்”5 என ஆசிரியர் கூறு மாற்றால் விளங்குகின்றது.

கண்டோர் நன்கு மதித்தற்குரிய பெருமைப் பண்பும் பெருஞ் செயலு முடையாய் என்பாள் பெரும என்றும், எனவே, பெருமைக்கு மாறான இவ்வொழுக்கம் அலரும் எள்ளற்பாடும் பயந்து கண்டோர் நகுமாறு செய்கின்றது என்பாள், நகாரோ பெருமநிற் கண்டிசினோர் என்றும் கூறினாள். சிறுவர் செயல் இளமைபற்றியும் இச்செயல் எள்ளல் பற்றியும் நகைக்கப் படுதலின், நகாரோ என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினாள்.

இவ்வாறு தலைவன்பால் தோன்றிய செயல்பற்றிக் கழறிக் கூறினாளாயினும், தலைவி அவனது கூட்டம் பற்றிப் பிறந்த வேட்கை மிகுதியால் மயங்கிக் கூறுதலின், அமைவதாயிற்று; “தாய்போற் கழறித் தழீஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப, கவவொடு மயங்கிய காலையான”1 என ஆசிரியர் கூறியவாறு காண்க. சிறுவரின் இனைய செய்தி என்றது, அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை - நகாரோ பெருமநிற் கண்டிசினோர் என்றது புறஞ்சொல் மாணாக்கிளவி. ஏனை மெய்ப்பாடு: பெருமிதம். பயன் : வாயில் நேர்தல்.

மறிவில் யாணர் மலிகே ழூரநின் சிறுவரின் இனைய செய்தி என்றும் பாடமுண்டு. தடுத்தற் கியலாத புது வருவாயினை யுடைய ஊரனே, நின் சிறுவரைப் போல இனைவன செய்தி என்பது பொருளாம். என் சிறுவனை நோக்கி, “எம்போலக் கையாறுடையவர் இல்லல்லாற் செல்லல்” எனச் சிறைத்தவழியும், அவன், அதனைக் கைந்நீவிக், “குன்ற விறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற்” பாய்ந்து என்பால் நில்லா தொழுகியதுபோல, நீயும், புறத்தொழுகுதல் வேண்டா எனச் சூள் முதலியவற்றாற் சிறைப்பினும், சிறைப்படாது ஒழுகுகின்றனை என்று தலைவி கூறியவாறாம். செய்தியை என்ற பாடம் செய்தி களை யுடையாய் என்றவாறு.

    86. வெண்டலைக் குருகின் மென்பறை விளிக்குரல