வீரர் உலகம்
கி. வா. ஜகந்நாதன்

vIrar ulakam
by ki.vA. jakannAtan
In tamil script, unicode/utf-8 format

வீரர் உலகம்
கி. வா. ஜகந்நாதன்

Source:
வீரர் உலகம்
கி. வா. ஜகந்நாதன்
மணிவாசகர் நூலகம். சிதம்பரம்
உரிமை ஆசிரியருக்கு.
முதற் பதிப்பு: நவம்பர், 1966; விலை ரூ. 3 - 00
நண்பர்கள் அச்சகம், ஆழ்வார்பேட்டை சென்னே 18
---------------

முன்னுரை


தமிழில் சிறந்ததென்று போற்றப்பெறும் பொருள் இலக்கணத்தில் ஒரு பகுதி புறப்பொருள் இலக்கணம். புறப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லும் நூல் களும் இலக்கியமாக அமைந்த பனுவல்களும் தமிழில் பல உள்ளன. புறப்பொருள், பெரும்பாலும் வீரத்தின் பல்வேறு நிலைகளைச் சொல்வது. முடியாட்சியிருந்த பழங்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதும், மன்னர்கள் படைகளைக் காப்பாற்றிப் பகை வர்களை வெல்வதற்கு என்ன என்ன வகையில் முயன்றனர் என்பதும் போன்ற பல செய்திகளை அந் நூல்கள் காட்டுகின்றன. அவற்றிலிருந்து தமிழ் மக்கள் உள்ளத்தே கனன்று பொங்கிய வீர உணர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

அகப் பொருள் இலக்கியங்கள் அத்தனையும் கற்பனைக் காட்சிகள் அடங்கியவை. ஆனால், புறப் பொருள் இலக்கியங்களாக வழங்கும் பழம் பாடல்களில் பெரும்பான்மையானவை வரலாற்றோடு சார்ந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. சங்க காலத்து நூல்களாகிய புறநானூறு, பதிற்றுப் பத்து என்பவற்றிலுள்ள பாடல்களையும் அவற்றிற்குப் பின்னுள்ள குறிப்புக்களையும் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொள்ளப் பயன் படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கோவைப்படுத்தி எழுதியதே இந்தப் புத்தகம்.

புறப்பொருளின் இலக்கணத்தை விளக்க வேண்டுமென்றோ, அவ் விலக்கணம் எவ்வாறு தோன்றி விரிந்து வளர்ந்தது என்பதை ஆராய்ச்சி முறையில் உணர்த்த வேண்டுமென்றோ எண்ணி இதனை யான் எழுதவில்லை. அந்த இலக்கண இலக்கியங்களால் புலனாகும் வீரப் பண்பின் சிறப்பையும் அதனால் விளைந்த வீரர் செயல் களையும் ஒழுங்குபடுத்தி இணைத்துக் காட்டவேண்டும் என்பதே என் கருத்து.

சீனர் நம் பாரத நாட்டின்மேல் படையெடுத்த காலத்தில் நாடு முழுவதும் ஒரே எண்ணத்தோடு எழுந்து, பகைவனுக்கு மாறக ஒரே குரலை எழுப்பியது. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரும் வீரர் உலகத்தை ஒருவாறு காணும்படி செய்யலாம் என்ற விருப்பத்தினால் இந்தக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். 'கலைமகளில் பதினேழு மாதங்கள் இக் கட்டுரைத் தொடர் வெளியாகியது. கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட எண்ணியபோது இறுதியில் *பின்னுரை' என்ற ஒன்றை எழுதிச் சேர்த்தேன்.

தமிழ் மக்களின் வீரம் பழங்காலத்தில் எவ்வாறு உயர்ந்து நின்றதென்பதை ஓரளவு அறிவதற்கு இச் சிறு நூல் உதவுமென்றே நம்புகிறேன். இதனை வ்ெளி யிடும் மணிவாசக நூலகத்தாருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். :

கி. வா. ஜகந்நாதன், 15-11-68
காந்த மலை, கல்யாண நகர், சென்னை -28
---------------

பதிப்பகத்தார் உரை

தமிழ் காட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் திரு கி. வா. ஜகன்னாதன் அவர்களும் ஒருவர் என்பதனை நாடு நன்கறியும். நல்ல நூல்கள் நூற்றுக்குமேல் எழுதிய நல்லாசிரியர். அறிஞர் நூல்களுக்கு முதன்மை கொடுத்து வெளியிட வேண்டும் எனும் நோக்கத்திற்கு ஏற்ப முன்பு கவி பாடலாம் எனும் நூலை வெளியிட்டோம். இப்பொழுது
தமிழர் தம் வீர வாழ்வினை விளக்கிக் காட்டும் வீரம் உலகம் வெளியிடுகிறோம். தொடர்ந்து தேவாரம் பாடிய மூவர் பற்றி மூன்று நூல்கள் வெளியிட இருக்கின்றோம் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

விரத்தின் விளை நிலமாம் தமிழகத்தின் பொற்கால வாழ்வினை ஆசிரியர் தமக்கே உரிய அழகான நடையில் விளக்குகிறார். தொல்காப்பியம் தொடங்கி இலக்கிய இலக்கணங்களில் புதைக்து சிக்கும் தமிழ்: பேராற்றலை - பேராண்மையை வெளிக் கொணர்ந்துள்ளார். கற்றதுணர விரித்துரைக்கும் ஆசிரியர் தமிழமுதாம் காவியத்தை வாரி வழங்குகிறார். ஆழ்ந்து கற்றும் பழந்தமிழ்ப் புலர் பண்பும், பொருளில் அழகு காணும் புதிய திறனாய்வுப் பண்பும் நூல் முழுதும் மிளிரக் காண்கிறோம், மரபுவழிப் புலமையின் ஆழமும், புதிய அறிவின் ஒளியும் நாலுக்குச் சிறப்பு நல்குகின்றன. பேச்சு, எழுத்து ஆகிய இத்துறையிலும் வல்ல ஆசிரியர் தற்போர் உள்ளம் கொள்ளுமாறு கருத்தினைத் தொகுத்துரைப்பது குறிப்பிடத் தக்கது.

எங்கள்பால் அன்புமிக்க ஆசிரியர் அவர்கட்கும், நூல் வெளியீட்டுத் துறையில் கற்கருத்துக்களே கல்கிப் பொலிவோடு புதிய தமிழ் நூல்கள் வெளிவரத் துணை செய்யும் திரு ச. மெய்யப்பன் எம். ஏ., அவர்கட்கும் எம் நன்றி என்றும் உரியது.

ச. முத்துப்பழநியப்பன்
சிதம்பரம், 11-11-68
------------

உள்ளுறை
--------------------------

வீரர் உலகம்
1. எல்லையில் போர்


எல்லையில் பெரிய வீர முழக்கம்! போர் முரசு எங்கும் ஒலிக்கிறது. ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு இதுவே பேச்சு, இயற்கையாக நாட்டில் நடக்கும் பலவகையான இன்ப விளையாடல்களில் ஈடுபட்டிருந்த ஆடவரும் மகளிரும் நிமிர்ந்து நிற்கிறார்கள். 'யார் பகைவர்? எங்கே போர்?’ என்ற கேள்விகள் எழுகின்றன. ஆண்மை மிக்க காளையர் தோள்கள் பூசிக்கின்றன; தங்கள் தோள்களின் தினவைப் போக்கிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்ற கிளர்ச்சி அவர்களுக்கு. அவர்களை எண்ணித்தான்,

என்று கம்பன் பாடினான். போரில் வெற்றி பெருமல் திரும்பக் கூடாது என்று அவர்கள் உறுதி பூணுகிறார்கள்.

பெண்மணிகளுக்கும் ஒரே ஊக்கம். தாய்மார்கள் தங்கள் புதல்வர்களை வாழ்த்திப் போருக்கு அனுப்புகிறார்கள். காதலிமார் தம் அருமைக் காதலரைப் போருக்குச் சென்று வெற்றியும் புகழும் பெற்று வருமாறு அனுப்புகிறார்கள்.

பகைவன் பல காலமாகச் செய்து வரும் தீமைகளை எத்தனை நாட்களாகப் பொறுக்க முடியும்? இப்பொழுது நாட்டினர் துணிந்துவிட்டார்கள், எப்படியாவது பகையைக் கருவறுத்து வெற்றியை நிலைநாட்ட வேண்டுமென்று. தலைவர்கள் உறுதிமொழி கூறிவிட்டார்கள். அரசன் போர் முரசு கொட்டிவிட்டான். 'வீரர் வருக! காளையர் வருக! விடலைகள் வருக! ஆண் சிங்கங்கள் வருக! பகையை ஒழிக்கப் படைக்கலன் ஏந்தும் பண்பினர் வருக! தோள்வலி மிக்க சூரர்கள் வருக! சிறி எழும்பும் தீரர்கள் வருக!" என்று மூலைக்கு மூலை அந்த முரசின் பேரொலி கேட்கிறது.

போர் தொடங்கினாலும் அறத்தை மறந்து விடவில்லை அரசன். பகைவர்கள் கொடுமை செய்தாலும், பகை நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; பெரியவர்கள் வாழ்கிறார்கள் பெண்கள் இருக்கிறார்கள்; பிணியுடையவர்கள் இருக்கிறார்கள்; பசுமாடுகள் உள்ளன. நாடு முழுவதையும் அழித்துப் பொடிபடுத்தலாம். ஆனால் இந்த அப்பாவிகளை அழிக்கலாமா? அதனல் முரசு அறையும்போது வீரக்குரலோடு அறக்குரலும் உடன் முழங்குகிறது. பகை காட்டில் உள்ள கல்லவர்களுக்கு எச்சரிக்கை அது.

"நாங்கள் படையுடன் வருகிறோம். போர் மூளப் போகிறது. எங்களுக்கு நல்லவர்களிடம் பகை இல்லை. அவர்களையும் பலம் இல்லாதவர்களையும் போரில் அழிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களை இப்போதே எச்சரிக்கை செய்கிறோம். அவரவர்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுவதற்காகவே இந்த எச்சரிக்கை, கொடியவர்களை எதிர்த்துப் போர் செய்து வெற்றி கொள்ளத் துணிந்துவிட்டோம். அவர்களிடையே இருக்கும் நல்லவர்களும் பலம் இல்லாதவர்களும் இப்போதே புறப்பட்டு எங்காவது போய் விடுங்கள்!"

இப்படி அறத்தை அறைந்து முரசு கொட்டுகிறார்கள். இது அறப் போர்.


என்று இந்தத் தர்ம யுத்தத்தைப் பழங்காலப் புலவர் சொல்கிறார், பகைவரின் காட்டில் வாழ்ந்தாலும் இவர்களைப் பாதுகாப்பது யாவருக்கும் கடமை. பசுக்களும் பசுவின் தன்மையையுடைய அந்தணர்களும் பெண்டிரும் பகைக்கனலுக்கு இரையாகத் தகாதவர்கள். நோயுடையவர்களும், பிள்ளை பெறாதவர்களும் இரக்கத்துக்குப் பாத்திரமானவர்கள். "எம்முடைய அம்பை இனித் தாமதம் செய்யாமல் வேகமாக விடப் போகிறோம்; நீங்கள் உங்களுக்கு அரணமான இடங்களை அடைந்து விடுங்கள்' என்று அறநெறியைச் சொல்லும் கொள்கையை உடையது இந்த வீரம்.

அந்தணரும் மகளிரும் நோயாளிகளும் புதல்வர்களைப் பெறாதவர்களும் இந்த எச்சரிக்கையைக் கேட்டுப் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் பசுமாடுகளுக்கு அது தெரியுமா? அவற்றை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு அவற்றை உடையவர்கள் போகலாம். போருக்கு அஞ்சி ஒடும்போது பசுமாடு எல்லாவற்றையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா? ஆகவே பல மாடுகளை அப்படி அப்படியே ஒட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவற்றைக் காக்க வேண்டும். இதற்காகத்தான் இப்போது முதலில் நாட்டின் எல்லையில் இந்த நாட்டு வீரர்கள் மாடுகளைப் பிடித்து வருவதற்காகப் புறப்படுகிறார்கள். அந்த மாடுகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டுவர முடியுமா? அவற்றைக் காக்கும் வீரர்களோடு பொருதே பிடித்துவர வேண்டும். ஆதலின் வீரக்கோலம் பூண்டு புறப்படுகிறார்கள். "சண்டைக்கு எடுபிடி மாடுபிடி” என்று பழமொழிகூட உண்டாகியிருக்கிறது.
இவ்வாறு பகைவர் நாட்டுப் பசுக்களை அடித்துக் கொண்டு வருவது அறத்தின்பாற்-பட்ட செயலென்று கூறுவர் புலவர்.

”களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கந்தருவ மணம் வேதவிதியானே இல்லறம் ஆயினாற்போல, இரு பெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு கின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டு வந்து பாதுகாத்தலும் தீதெனப் படாது, அறமேயாம்?” [1]

என்பது நச்சினர்க்கினியர் உரை.
--------
[1]. தொல்காப்பியம், புறத்திணை இயல், 1, உரை.

அரசன் ஏவலின்மேல் மாடுகளைக் கைப்பற்றிக் கொண்டுவரப் புறப்படுகிறார்கள் வீரர்கள். அந்தச் சமயத்தில் அங்கே யாரோ ஒருவர் தொழுவத்தில் இருக்கும் மாட்டைப் பிடித்து வரும்படி ஒருவனை ஏவுகிறார்: "அந்த மாட்டைப் பிடித்துக் கொண்டு வா" என்று உரக்கக் கூறுகிறார். அது இந்த வீரர்கள் காதில் படுகிறது. அவர்களுக்கு ஒரே கொம்மாளம்; “டேய்! நல்ல சகுனம் ஆகிறது. அசரீரி வாக்கு உத்தரவிடுகிறது. புறப்படுங்கள்!” என்று தோள்கொட்டி ஆர்க்கிறார்கள். இவ்வாறு நேரும் நல்ல நிமித்தத்தை விரிச்சி என்று சொல்வர்கள்.

வீரர்கள் புறப்பட்டு விட்டார்கள். அவர்களுக்குப் பசுமாடுகள் எங்கே இருக்கின்றன, நாட்டின் எல்லையில் எங்கே மேய்கின்றன என்று தெரிய வேண்டாமா? அதற்காக முன்கூட்டியே ஒற்றர்களை அனுப்பி யிருக்கிறார்கள். போர் தொடங்கினால் வீரர்கள் வெளிப்படை யாகப் போரிடுவது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பகைவர்களுடைய இரகசியங்களைத் தெரிந்து கொள்வது. அதற்காக ஒற்றர் பலரைப் பயிற்றுவித்து, மிகவும் சாமர்த்தியமாகப் பகைவர்களிடையே மறைந்து சென்று பலவகைத் தந்திரங்களினால் அவர்களுடைய படைப்பலத்தையும், பலவீனத்தையும், திட்டத்தையும் தெரிந்து கொள்ளும்படி செய்வார்கள், அரசியல் தந்திரத் தில் அன்றும் சரி, இன்றும் சரி, இந்த ஒற்றர்களின் செயல் போருக்கு மிகவும் உபயோகமாக இருப்பது.

ஒற்றர்கள் மறைவாகச் சென்று எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இரவோடு இரவாக வந்து சேர்ந்திருக் கிறார்கள். பசுமாடுகள் நிற்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை, அவற்றைக் காத்துக் கொண்டிருக்கும் விற்படையினரின் நிலை ஆகியவற்றை அவர்கள் சொல்கிறார்கள்.

அரசன் ஓர் ஒற்றனை மாத்திரம் விடவில்லை. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாதபடி வெவ்வேறாக இரண்டு ஒற்றர்களை அனுப்பியிருந்தான். சில சமயங்களில் மூன்று ஒற்றர்களையும் அனுப்புவதுண்டு. முதலில் போனவன் ஏமாந்து போனலும், பகையாளியின் ஆசை வார்த்தையால் மயங்கித் துரோகம் செய்யப் புகுந்தாலும், சோம்பலாலோ வேறு காரணங்களாலோ பொய் சொல்லத் துணிந்தாலும், பகைவருடைய கட்டுக்காவலில் அகப்பட்டாலும், பின்னலே போனவன் உண்மையை உணர்ந்து வந்து சொல்ல முடியும். அதனல்தான் இரண்டு ஒற்றர்களைத் தனித்தனியே அனுப்பினான்.
# # #

ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும், அரசன் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்னும் கருத்துக்களை இந்த நாட்டு அர்த்த சாஸ்திரங்களும், மேல்நாட்டு அரசியல் நூல்களும் விரிவாகச் சொல்கின்றன. திருக்குறளில் 'ஒற்றுடல்’ என்று ஓர் அதிகாரமே இருக்கிறது.

அரசனுக்கு இரண்டு கண்ணைப்போல ஒற்றும் அரசியல் நூலும் உதவுகின்றன. பகைவரிடத்தும் அயலாரிடத்தும் நண்பர்களிடத்தும் என்ன என்ன நிகழ்கின்றன என்பதை நாள்தோறும் ஒற்றர்களைக் கொண்டு தெரிந்து கொள்வது அரசனுக்குரிய முக்கியமான கடமை. அவ்வாறு ஒற்றரைக் கொண்டு நிகழ்ச்சிகளை அறிந்து ஆராய்ந்து நடவாத அரசனுக்கு வெற்றி கிட்டாது.

அரச காரியம் செய்கின்ற பலவகை அதிகாரிகள், அரசனுடைய சுற்றத்தார், பகைவர்கள் ஆகிய அனைவருடைய பேச்சுக்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமல், ஒற்றர்களின் மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒற்றர்கள், யாரும் ஐயுறாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்; அதற்கு ஏற்ற கோலத்தோடு உலவ வேண்டும். ஒருகால் யாரேனும் ஐயுற்றால் அஞ்சாமல் சமயத்துக்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும். அகப்பட்டுக் கொண்டால் உள்ளதைச் சிறிதும் வெளி விடாத உறுதியோடு இருக்க வேண்டும்.

ஒற்றர்கள் சில சமயம் துறவிகளைப் போல வேடம் புனைந்து செல்வார்கள், துறவிகள் என்றே தம்மை நம்பும்படி செய்து மிகவும் இரகசியமான இடங்களுக்குக் கூடப் போய்விடுவார்கள். அவர்கள் ஒருகால் அகப்பட்டுக் கொண்டால், அவர்களை என்ன செய்தாலும் எதையும் சிறிதளவுகூட வாய்விட மாட்டார்கள். அங்கங்கே நடப்பவற்றை அவ்வவ்விடங்களில் பழகுபவர்களைக் கொண்டு தெரிந்து கொள்வார்கள். தாம் அறிந்து கொண்டவை உண்மையா என்பதையும் சோதித்துப் பார்த்துத் தெளிவு பெறுவார்கள்.

இவ்வாறு சென்று ஓர் ஒற்றன் பகைவரிடம் உள்ள செய்திகளைத் தெரிந்து கொண்டு வந்து சொன்னால் அவற்றைக் கேட்ட அளவில் அரசன் திருப்தியடைய மrட்டான். மேலும் ஓர் ஒற்றனை அனுப்பி அவன் கொணரும் செய்திகளையும் வைத்து ஒப்புநோக்கி உண்மையை உணர்வான். அப்பாலும் மூன்றாம் ஒற்றன் ஒருவனை அனுப்பி அவன் தெரிக்கு வருவனவற்றையும் கேட்டு, மூவர் சொல்லும் செய்திகளில் பொதுவாக இருப்பவற்றை உண்மை என்று தெரிந்து கொள்வான். இந்த மூன்று பேரும் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் சென்று ஆராய்வார்கள். இவ்வாறு சென்று வந்த ஒற்றர்களுக்கு அரசன் வெளிப்படையாகச் சிறப்புச் செய்ய மாட்டான். அப்படிச் செய்தால் அந்த ஒற்றருடைய இரகசிய நிலை வெளிப்பட்டுவிடும் அல்லவா?

இவ்வாறு ஒற்றர்களை ஆளும் முறையைப் பற்றித் திருவள்ளுவர் கூறுகிறார்,
# # #

ஒற்றர்களால் பசுமாடுகளைப்பற்றிய செய்திகளை அறிந்த வீரர்கள் எல்லையை நோக்கி வீறுநடை போட்டுச் செல்கிறார்கள். பகைவர் நாட்டு எல்லையை அடைகிறார்கள். பெரிய வழிகளிடையேயும் செல்லுகிறார்கள்; நுழைந்து செல்லும் குறுகிய வழியிலும் செல்ல வேண்டி நேர்கிறது. கடைசியில் பசுமாடுகள் இருக்கும் இடத்தை அணுகுகிறார்கள்; பாதுகாப்பைக் கடந்து மாடுகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

பகை நாட்டு வீரர்கள் ஓடி வருகிறார்கள். ஆவினத்தைக் கைப்பற்றிய வீரர்களோடு போரிடுகிறார்கள். பகைவர்களோடு பொருது அழித்து, அவர் கைப்பற்றிய மாடுகளோடு திரும்புகிறார்கள் வீரர்கள். வழியில் மாடுகளை வயிறார மேயச் செய்து தண்ணிர் காட்டி வெயில் வேளையில் நிழலிலே தங்கச் செய்து செல்கிறார்கள்.

எல்லைக்குச் சென்ற வீரர்கள் மாடுகளோடு வரப் போகிறார்கள் என்று காட்டில் உள்ளவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாடுகளை அடித்துக்கொண்டு வருகிறவர்கள் வெற்றி ஆரவாரத் தோடு துடிகளை முழக்கிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களுடைய வரவை எதிர்நோக்கி அவர்களுடைய மனைவிமார் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்டிருக்கு நல்ல நிமித்தம் உண்டாகிறது. அவர்களுடைய இடக் கண்கள் துடிக்கின்றன. நிச்சயம் வெற்றியுடன் திரும்புவார்கள் என்று கையைக் கன்னத்திலே வைத்துக்கொண்டு நிற்கும் அந்த மங்கையரின் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தைப் புகுத்துகிறது, வீரர்கள் ஒலிக்கும் துடிகளின் முழக்கம்.

மாடுகள் வந்து விடுகின்றன. மந்தை மங்தையாக அவை வருகின்றன. அங்கங்கே உள்ள தொழுவங்கள் நிறைய அவற்றைக் கட்டுகிறார்கள். அரசன் அத்தனை மாடுகளையும் தனக்கென்று வைத்துக் கொள்வானா? அவன் அவற்றைப் பலருக்குப் பங்கிட்டு வழங்க ஏற்பாடு செய்கிறான். வாளேந்திப் போர் செய்த வீரர்களுக்கு முதலில் ஒரு பங்கை வழங்குகிறார்கள்; தம் உயிருக்கு ஏதம் வருவதையும் நோக்காமல் மறைந்து சென்று இரகசியங்களை அறிந்து வந்த ஒற்றர்களுக்கும் பிரித்துத் தருகிறார்கள்; சகுனம் பார்த்துச் சொன்னவர்களுக்குக்கூடப் பங்கு கிடைக்கிறது.

வீரர்கள் வெற்றிக் களிப்பினால் தாம்விரும்பிய பானங்களை உண்டு மகிழ்கிறார்கள். தங்களுக்குப் பங்காக வந்த மாடுகளைத் தம் விருப்பத்துக்கு ஏற்றபடி வேண்டியவர்களுக்கெல்லாம் தாராளமாக வழங்குகிறார்கள். கிணை என்னும் பறையை அடித்தவனுக்கும், துடியை முழக்கினவனுக்கும், பாட்டுப் பாடும் விறலிக்கும், பாணனுக்கும், கள் விற்பவருக்கும் கொடுக்கிறார்கள். தங்களுக்கு வெற்றியை உண்டாக்கியதற்குக் கொற்றவையாகிய துர்க்கையின் அருளே காரணம் என்று அப்பிராட்டியை வழிபடுகிறார்கள். முருகனைப் பாடி வள்ளிக்கூத்தை ஆடி அகமகிழ்கிறார்கள்.

இவ்வாறு போரின் ஆரம்பக் கட்டம் உருவாகிறது. பகைவன் இனி என்ன செய்தாலும் அவனேப் புறங்காட்டி ஒடச் செய்யலாம் என்ற துணிவோடு வீரர்கள் இப்போது விழாக் கொண்டாடுகிறார்கள்.
--------

2. நிரை மீட்கும் போர்

அயல் நாட்டார் தம் காட்டின் எல்லைக்கு வந்து தம்முடைய ஆநிரையை அடித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதை ஆயர்கள் வந்து சொன்னார்கள். எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டு ஆநிரைக்குரிய நாட்டினர் தோள்கள் துடித்தன. அரசன் வீறுகொண்டு எழுத்தான். உடனே அந்தப் பசுக் கூட்டத்தை மீட்டு வாருங்கள் என்ற ஆணை பிறந்தது. "வீரம் சிறந்த காளையர் கைப்பட்ட பசுக் கூட்டத்தை மீட்க முடியுமோ? காலன் வாயிலே புகுந்த உயிரை மீட்டாலும் மீட்கலாம்; போன பசுக்களை மீட்க இயலாது” என்று யாரோ சொன்னார்கள். பகைவர்களின் வலிமை மிக அதிகம் என்பது அவர்கள் நினைவு. கேட்ட வீரர்களுக்குச் சினம் பொங்கியது. 'யமனிடம் சென்ற உயிரையும் மீட்டு வரும் விறலுடையோம் யாம்’ என்று நிமிர்ந்து நின்று பேசினார்கள்.

ஆநிரையை மீட்டுவர வேண்டும் என்று மன்னன் கட்டளை பிறப்பித்தவுடனே கிணைப் பறையை முழக்கினார்கள். வீரர்கள் திரண்டனர். பசுக்களை மீட்பதற்குப் புறப்பட்ட அவர்கள் தமிழ் மரபுப்படி கரங்தை மாலையை அணிந்து கொண்டார்கள். போரின் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பூக்களை அணிவது வீரர்களின் வழக்கம். தம் அரசருக்கே உரிய அடையாள மலரோடு இக்தப் போர்ப் பூவையும் அணிந்து கொள்வார்கள். பகைவர் போன வழியைப் பின்பற்றிச் சென்றார்கள் வீரர்கள். ஆவினங்கள் நாட்டின் செல்வம் அல்லவா?

சங்குகள் முழங்கின; கொம்புகள் ஒலித்தன; பல வகை முரசங்கள் ஒலி எழுப்பின. பசுமாடுகள் சென்ற வழியைச் சுவட்டினால் அறிந்து அந்த வழியே சென்றார்கள் வீரர்கள். அவர்கள் நடையில் மிடுக்கு ஒளிர்ந்தது. அவர்கள் கையில் வேல்கள் மின்னின. எங்கே பகைவரைக் கண்டாலும் அங்கே மடக்கி அவரைச் சாய்க்க வேண்டும் என்ற துடிதுடிப்புடன் நடந்தார்கள்.

இதோ புழுதி தெரிகிறது; ஆரவாரமும் கேட்கிறது. ஆநிரையை வளைத்துச் சென்றவர்களின் கூச்சல்தான் அது. விரைவில் அவர்களைச் சுற்றி வளைக்க ஓடினர்கள்; அவர்களை அண்டி மோதினார்கள். சிங்கமும் சிங்கமும் யானையும் யானையும் பொருவதுபோல இரண்டு பக்கத்து வீரர்களும் எதிர்த்துப் போரிடத் தொடங்கினர்கள். தம்முடைய நாட்டுச் செல்வமாகிய ஆநிரைகளைக் கொண்டு சென்ற கள்வர் இவர் என்ற சினத்தால் அவற்றைத் தேடி வந்த வீரர்கள் மிடுக்குடன் போர் செய்தார்கள். தேனீக் கூட்டைக் கலைத்து விட்டவர்களின் கதியை அடைந்தார்கள், பசுக்களைக் கொண்டு சென்றவர்கள்.

பசுக்களை மீட்ட பிறகே வீட்டுக்கு வருவோம் என்று சபதம் செய்துகொண்டு வந்த மறவர்களின் வீரத்தை என்னவென்று சொல்வது சமயம் வரும்போதுதான், இன்னரிட்ம் இன்ன வலிமை இருக்கிறது என்பது தெரிய வரும்.

ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு வகையில் வீரச் செயலை ஆற்றுகிறான்.

ஒரு வீரனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அவன் பசுமாடுகளை மீட்டுத் தன் காட்டுக்கு அனுப்பி விட்டான். அந்த நிலையில் அவனைப் பகைவர் சுற்றி நின்று மொய்த்தார்கள் வெங்கணை ஏவினார்கள். அவன் பலரை மாய்த்து, வீர மரணம் எய்தினான்.

அதோ மற்றொரு வீரன் தனியாக நின்று தன்னைச் சூழ்ந்தவர் உடல்களை யெல்லாம் வெட்டிக் குவித்து விட்டான். அவனை எதிர்த்தவர்களில் பலர் வீழ்ந்தனர்; பலர் முதுகிட்டு ஓடினர். அவன் இன்னும் தன் கோபம் ஆறாமல், தனியே யார் வந்தாலும் ஒரு கை பார்க்கிறேன் என்று நின்று கொண்டிருக்கிறான்.

மற்றொரு வீரன் தன் வாளை உறையினின்றும் உருவி ஏந்திக்கொண்டு போர்க்களத்தில் பெருமிதத்தால் ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் தன்னை எதிர்த்தவர்களை விண்ணுலகுக்கு ஏற்றியவன். துடியை அடித்து ஒலி யெழுப்புகிரர்கள், அருகில் நின்றவர்கள். அந்த ஒலிக்கு ஏற்றபடி அந்த வீரன் தன் அடியை மாறி மாறி வைத்து வெற்றிக் களிப்புடன் ஆடுகிறான்.

பின்னும் ஒருவன் வேலைச் சுழற்றிக் கொண்டு ஆடுகிறான். வந்த காரியம் நிறைவேறியது என்னும் மகிழ்ச்சிக் கடலில் அவன் மிதக்கிறான், துடி கொட்டுகிறது; அதன் தாளத்துக்கு ஏற்றபடி அவன் கையில் வேல் சுழல்கிறது; அவன் கால்கள் சதியிட்டு நடனம் செய்கின்றன. அவன் கை வேலில் மாலையை அணிந்திருக்கிறான். ஆ! என்ன வெறி அவனுக்கு! பகைவருடைய குடலை எடுத்து அதையே மாலையாக அதற்குக் கட்டி ஆடுகிறான்!


[பகைவரை மாளும்படி செய்த இந்தக் காளை, பகை வீரர்களுடைய மார்புகளைப் பிளந்து பறித்த வேற்படைக்கு அவர்களுடைய குடலையே மாலையாகச் சூட்டிவிட்டு, பிறகு பகை கெட்டு ஓடும்படி சீறி ஆடுகிறான்; அவனுடைய கையிலே வைத்திருக்கும் வேல் சுழலச் சுழலத் துடி ஒலிக்கிறது.]

இவ்வாறு ஆவினை மீட்கும்போருட்டு நடைபெறும் போரில் சிலர் பகைவர் பலரை மாய்த்துத் தாமும் வீர சுவர்க்கம் புகுந்தார்கள். அவர்களை எண்ணிப் பாணர்கள் வருந்தினர்கள். வீரர் புகழைப் பாடும் இயல்பு உடையவர்கள் அவர்கள். இப்போது பெருவீரனுடைய மறைவு கருதிப் புலம்புகிறார்கள். ‘செந்நாப் புலவர்களுடைய புகழ் மாலைகளை அணிந்தவன் அவன்; பகைவர் படையைப் புலிபோலே சென்று தாக்கி அழித்தான்; அவன் இப் போது வீழ்ந்து விட்டான்; இது கண்டும் நம் கண்கள் விழ வில்லையே!" என்று இரங்கி வருந்தினார்கள். இவ்வாறு அவர்கள் பாடுவதைக் கையறுநிலை என்று தமிழ் நூல்கள் கூறும்.

மற்றவர்கள் தாம் பெற்ற வெற்றியைப் பாராட்டிக் கள் உண்டு மகிழ்ந்தார்கள். ஒரு வீரன், மீட்டும் யாரேனும் வந்தால் எதிர்க்கலாம் என்று தான் அந்த உண்டாட்டில் ஈடுபடாமல் தனியே நின்றான்.

தன் நாட்டுப் பசுக்களை மீட்டு வந்த மறவர்களுக்கு அரசன் பலவகைப் பரிசுகளை வழங்கினான், நிலங்களை அளித்தான். அவற்றைப் பெற்ற வீரர்கள் மன்னனைப் பாராட்டி வாழ்த்தினார்கள்; "இத்தகைய மன்னனுடைய ஆட்சியின் கீழே வாழும் சிறப்பையுடைய நாங்கள் பகை வரை எறிந்து போர்க்களத்தில் எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறோம்; அது பெறுதற்கரிய பேறு’ என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.

இத்தகைய வீரக்குடி மக்கள் இந்த நாட்டில் மலிந்திருந்தார்கள். அவர்கள் வழி வழியே வீரத்தை வளர்த்து வருகிறவர்கள். அவர்கள் வாழும் மண் வீரமணம் வீசுவது. அவர்கள் உடலில் ஒடும் குருதி வீரச் செருக்குடையது. இன்று நேற்று வந்த குடி அல்ல அவை. பூமி தோன்றின நாள்தொட்டு வாளும் விரமும் ஏந்திப் புகழ்பெற்று வரும் குடிகள். அத்தகைய குடியிற் பிறந்தவர்கள், தம் நாட்டு ஆன் நிரையை மீட்டு வந்து புகழ் பெற்று நிற்பது ஒரு வியப்போ?


[பொய்யானது நீங்க, இந்தக் குடி நாள்தோறும் புகழை உண்டாக்குதல் என்ன அதிசயம்? இது எத்தகைய குடி தெரியுமா? பூமி முழுவதையும் மறைத்துப் பெருகிய யுகாந்த காலத்துப் பிரளய வெள்ளம் வடிந்து போக, முதல் முதலில் மலை தோன்றியது; மண் தோன்ற வில்ல்லை; அந்தப் பழைய காலத்திலேயே அந்த மலையில் கையில் வாளுடனே எல்லோருக்கும் முதலிலே தோன்றி இன்று காறும் வளர்ந்து பழமை பெற்ற குடி இது.]

இவ்வாறு அக்தக் குடியின் பெருமையைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது.

பகைவர் நாட்டுப் பசுக்களைக் கொண்டு வருவதோடு தொடர்புடைய வீரச் செயல்களைச் சொல்லும் பகுதிக்கு வெட்சித் திணை என்றும், பகைவர் அடித்துச் சென்ற ஆநிரையை மீட்டுக் கொணரும் வீர நிகழ்ச்சிகளைச் சொல்லும் பகுதிக்குக் கரந்தைத் திணை என்றும் தமிழ்ப் புலவர்கள் பெயர் கொடுத்து வழங்குவார்கள். இந்த இரண்டும் பின்னாலே நிகழப் போகிற பெரும் போருக்கு முன்பு நிகழும் செயல்கள்.
@ # #

துரியோதனதியர் விராட மன்னனுடைய நாட்டிலிருந்து ஆநிரைகளைக் கொண்டு சென்றார்கள்; அவற்றை மீட்டு அப்போது நிகழ்ந்த போரிலே அருச்சுனன் துரியோதனன் முதலியோரைப் புறமுதுகிட்டு ஒடச் செய்தான். இதைப் பாரதத்தில் காணலாம்.

பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காடுகளில் இருந்து வாழ்ந்து, அப்பால் ஓராண்டு மறைவாக மச்ச நாட்டு அரசனாகிய விராடனுடைய நகரத்தில் வெவ்வேறு கோலம் புனைந்து மறைந்து வாழ்ந்தார்கள். தருமன் புரோகிதராகவும், வீமன் சமையல்காரனாகவும், அருச்சுனன் பேடியாகவும், நகுலன் குதிரைத் தலைவனாகவும், சகாதேவன் பசுவைக் காப்பவனாகவும், திரெளபதி வண்ண மகளாகவும் மறைந்து விராடீனுடைய நகரில் இருந்தார்கள். “பதின்மூன்று ஆண்டுகள் நிறைவேறினால் பாண்டவர்கள் தமக்குரிய நாட்டைப் பெற்றுக் கொள்வார்கள். அதற்குள் நாம் அவரைக் கண்டுபிடித்து விட்டால் மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிடலாம்" என்று எண்ணிய துரியோதனன் வெவ்வேறு திசைகளில் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை ஏவினான். அவர்கள் பல இடங்களிலும் சென்று தேடியும் பாண்டவர்களைக் காணவில்லை.

அப்போது பீஷ்மர் துரியோதனனைப் பார்த்து, "இந்த ஒற்றர்களால் அவர்களைக் காண முடியுமோ? தருமபுத்திரன் எங்கே இருக்கிறானே, அங்கே மழை வளம் சிறக்கும்; விளைவு மிகும். இந்த அடையாளத்தைக் கண்டு தேடினால் ஒருகால் கிடைக்கலாம்" என்று சொன்னார். அப்போது ஒற்றர்களில் ஒருவன், 'விராடனுடைய வள காடு அவ்வாறு சிறந்து விளங்குகிறது” என்றான். "ஒருகால் அங்கே பாண்டவர்கள் இருக்கக்கூடும். இதைக் கண்டுபிடிக்க தான் ஒரு வழி சொல்கிறேன். விராடன் நகரத்தில் உள்ள ஆநிரைகளை நாம் வளைத்துக் கொண்டு வந்துவிடலாம். அங்கே பாண்டவர்கள் இருந்தால் அந்தப் பசுக்கூட்டத்தை மீட்டுச் செல்வார்கள். இல்லாவிடில் பசுக்கூட்டம் மீளாது" என்று கர்ணன் சொன்னான்,

அவனுடைய யோசனையின்படியே திரிகர்த்தராயன் என்னும் மன்னனைத் துரியோதனன் படையுடன் அனுப்பினான். அவன் வெட்சி மாலை புனைந்து சென்று, விராடன் நகர்ப்புறத்து எல்லையில் மேய்ந்திருந்த நிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்தான்.

வில்லிபுத்துராழ்வார் தாம் இயற்றிய பாரதத்தில் திரிகர்த்தராயன் பசுமாடுகளைக் கவர்ந்து சேன்றான் என்பதைச் சொல்லும்போது, தமிழ் மரபை இணைத்து, அவன் வெட்சி மாலையைச் சூடினான் என்று சொல்கிறார்.


[ நல்லவர்கள் கூறும் சொற்களைக் கேளாதவன் துரியோதனன். அவனுடைய கட்டளையினால், வீரம் மிக்கவர்கள் அணிகின்ற வளப்பமான மாலையாகிய வீரத்தைக் காட்டும் வெட்சியைத் தோளில் அணிந்து கொண்டான். அரசனான திரிகர்த்தராயன்; திசைகளெல்லாம் ஓசை எழும்படி முரசுகள் முழங்கின; ஒர் அக்குரோணி படையுடன் அவன் சென்று பசுமாடுகளைத் துரியோதனன் சார்பிலே வளைத்து வந்தான்.]

பசுமாடுகளை மேய்த்த ஆயர்கள் ஓடிச் சென்று விராடனுக்குப் பகைவர் நிரைகொண்டதைச் சொன்னார்கள். உடனே விராடன் படைகளுடன் எழுத்து நிரையை மீட்கும்பொருட்டுப் புறப்பட்டான். அவனுடன் பாண்டவரில்,பேடியாக இருந்த அருச்சுனனைத் தவிர மற்ற நால்வரும் சென்றார்கள். படை சென்று பசுக்களை மீட்பதற்கு முன்னேறின. துரியோதனனுடைய சேனை சிறிதே பின்னிட்டது. அது கண்ட திரிகர்த்தராயன் விராடன்மேல் அம்புமாரியைப் பொழிந்தான். இதை வில்லிபுத்தூரார் சொல்லும்போது, தமிழ் மரபுப்படி விராடன் கரந்தை மாலை அணிந்திருந்தான் என்று பாடுகிறார்.


[உடம்பிலே பட்ட புண்களோடு தன் சேனை நில்லா லாமல் முதுகு காட்டியபிறகு, பொற்கழலை அணிந்த காலையுடைய திரிகர்த்தராயன், தான் கைப்பற்றிய பசு மாடுகளைக் கடத்திவிட்டு, வயலில் விளைந்த கழுநீர்மாலையோடு கரந்தை மாலையையும் அணிந்த விராடன்மேல் கரிய மேகம் போல வில்லை வளைத்து அறுபது அம்புகளாகிய மழையைப் பொழிந்தான்.]

அவனெதிர் நின்று பொருத விராடன் அவனது தேரை வீழ்த்தினான். உடனே திரிகர்த்தராயன் வேறு தேரில் ஏறிப் பொருது வீராடனைக் கைப்பற்றித் தன் தேரில் கட்டிவிட்டான். அங்கே புரோகித உருவத்தில் இருந்த தருமபுத்திரன் அது கண்டு, அருகில் சமையற் காரன் உருவில் நின்ற வீமனுக்குக் குறிப்பால் உணர்த்த, அவன் போர் செய்யத் தொடங்கினான். அவனுக்கு முன் நிற்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? அவன் திரிகர்த்தராயனை மடக்கி விராடனை விடுவித்ததோடு பகைவனைத் தன் தேரில் கட்டிக் கொணர்ந்தான். பொழுது சாய்ந்தது. தருமபுத்திரன் ஏவலின்படி வீமன் திரிகர்த்தனை அவிழ்த்து விட்டான், அவன் துரியோதனனிடம் சென்று தனக்கு நேர்ந்ததைச் சொன்னான்.
.
மறு நாள் துரியோதனனை துரோணர் முதலியவர்களோடு படையெடுத்து வந்தான். விராடன் மகன் உத்தரன் போர்முனை சென்றான். அவனுக்குப் பேடியாகிய அருச்சுனன் தேர்விட்டான். போர்iமுனைக்கு வந்தவுடன் அங்குள்ள படைகளைக் கண்டு உத்தரன் அஞ்சி நடுங்கி ஒடஅருச்சுனன் அவனை எடுத்துத் தேரில் கட்டினான். தானே போர் செய்ய எண்ணிணான். தான் ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த தன் ஆயுதங்களை எடுத்து வந்தான். உத்தரனுக்கு அறிவுரை கூறி அவனைத் தேர் விடச் செய்து தானே போரிட்டுத் துரியோதனன் படைகளைத் தோல்வியுறச் செய்து ஓட்டினான். அப்போது பாண்டவர்கள் மறைவாக வாழ வேண்டிய கால எல்லை முடிவு அடைந்தது. அதனால் அருச்சுனன் வெளிப்பட்டுப் போர் செய்து வெற்றி கொண்டான். மேலே கதை படர்கிறது.

பாரதப் போருக்கு முன் நிகழ்ச்சியாக இந்த நிரைமீட்சிப் போர் நடக்கிறது. தமிழ் இலக்கண மரபுப்படி இந்நாட்டில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களில், போர் நடப்பதற்கு முன் நிரையைக் கொள்வதும் மீட்பதும் நடந்தன என்று தெரியவருகிறது. அவ்வாறு மற்ற இடத்து வீரர்களும் செய்வார்கள் என்பதைப் பாரதக் கதை தெளிவிக்கிறது.
------------

3. நாடு கொள்ளும் போர்


இப்போது உண்மையாகவே போர் தொடங்கி விட்டது. இதற்கு முன் ஆநிரையைப் பற்றிக்கொண்டு வந்தார்கள். இனிமேல்தான் முறையான போர் நிகழப் போகிறது. தன் பகைவருடைய நாட்டைக் கைப்பற்றி அடிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டான் அரசன். பழைய மரபுப்படி அவன் வஞ்சி மாலையை அணிந்து கொண்டான். இதனை அறிந்தவுடன் வீரர்களுக்கு உண்டான ஊக்கத்துக்கு அளவில்லை. அது போதாதென்று இன்னும் கிளர்ச்சி உண்டாக அவர்கள் வீர பானங்களை நுகர்ந்தனர்.

பட்டத்து யானையை அலங்காரம் செய்து கொண்டு வந்தார்கள். வீரர்கள் ஆரவாரம் செய்வதைப் பார்த்து அதற்கு உண்மை விளங்கிவிட்டது. போர் நிகழப் போகிறது என்பதை அது எப்படியோ உணர்ந்து கொண்டது. அதற்குக்கூட எழுச்சி உண்டாகிறது. அதுவும் முழங்குகிறது. மேகம்போல நிற்கும் அதன் குரல் இடிக்குரலைப் போல ஒலிக்கிறது. அதைக் கேட்டால் பகைவர் கிடுகிடாய்த்துப் போய்விட மாட்டார்களா?

இவ்வாறு நாடு கொள்ளக் கருதி அரசன் போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதை வஞ்சி என்ற புறத்திணையில் அடக்கிப் பாடுவர் புலவர்,

”எஞ்சா மண்தசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே."

[இரு பெரு வேந்தருக்கும் இடையே உள்ள நாட்டின் மேல் ஆசையால், அங்கே வாழ்பவர்களுக்கு அச்சம் உண்டாக அந்நாட்டிடத்தே போய் ஒரு மன்னன் மற்றொரு மன்னனை வெல்லுதலைக் குறித்தது வஞ்சித் திணை.]

இது தொல்காப்பியத்தில் வஞ்சித் திணையின் பொது இலக்கணத்தைச் சொல்லும் சூத்திரம்.

போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பு நல்ல நாள் பார்த்து அந்த நாளில் அரசன் தன் குடையைப் புறப்படச் செய்வது ஒரு வழக்கம். அதைக் குடைநிலை அல்லது குடை நாட்கோள் என்று சொல்வார்கள். அரசனுடைய முக்கியமான அங்கங்களில் குடை ஒன்று. அவனுடைய பாதுகாக்கும் ஆற்றலுக்கு அடையாளமாக இருப்பது அது. எல்லாக் குடிமக்களையும் துன்பம் வராமல் பாதுகாப்பேன் என்பதைச் சுட்டுவதற்குக் குடை பிடிப்பது அரசர் வழக்கம், சூரியனை மறைக்கும் மேகம்போல அந்தக் குடை தோற்றினாலும், அது வெயிலை மறைப்பதற்காகக் கொண்டது அன்று; வருந்திய குடிமக்களின் துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு நிழல் செய்வதற்காக எடுத்தது' என்று கிள்ளிவளவனது குடையை வெள்ளைக்குடி நாகனர் என்ற புலவர் பாடுகிறார்.

[சூரியனைத் தன்மேற்கொண்ட பக்கம் திரண்ட மேகம் மாகமாகிய உயர்ந்த வானத்தின் நடுவு நின்று அதன் வெயிலை மறைத்தாற்போலக் கண் ஒளியோடு மாறுபட
விளங்குகின்ற, வான முட்டிய பரந்த நினது வெண்கொற்றக்குடை வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ என்றால், அன்று; வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தால் கொள்ளப்பட்டது; கூரிய வேலினையுடைய வளவனே! ]

"வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு?”

என்று வள்ளுவரும் கூறினர். சத்திரபதி என்ற பட்டம் மன்னர்களுக்கு இருப்பதை யாவரும் அறிவர்.

குடையைப் புறப்படச் செய்தது போலவே வீர வாளையும் நல்ல நேரம் பார்த்து வெளியிலே அனுப்புகிறார்கள். இனிமேல் போய்ப் போர் செய்து வெற்றி யடைவது கிடக்கட்டும். இங்கே நல்ல வேளையில் வாள் முகூர்த்தம் செய்த அப்போதே அங்கே பகைவர் நாட்டில் தீய சகுனங்கள் உண்டாகின்றன. பட்டப்பகலில் கோட்டான் குரல் காட்டுகிறது.

வீர மகளாகிய துர்க்கையை மன்னன் மறப்பானா? கொற்றவையின் திருவருள் இருந்தால் வெற்றி பெறுவது உறுதி. எள்ளுருண்டை, பொரி, அவரை, துவரை, அவல் முதலியனவும் இரத்தம், நிணம் ஆகியனவும் வைத்துப் பூசை போடச் செய்கிறான். "தாயே, எங்களுக்கு முன்னே போர்க்களத்துக்குச் சென்று துணையாக இருக்க வேண்டும்" என்று வீரர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

வீரர்கள், நான் முந்தி, நான் முந்தி என்று படையில் சேர்ந்து முதற்படையாகச் செல்ல விரும்பித் துடிக்கிறார்கள். 'நான் இதற்கு முன் இன்ன போரில் இன்ன படையில் பொருது வென்றேன்" என்று அவரவர் தம் பெருமையை மிடுக்கோடு பேசிக்கொள்கிறார்கள். காட்டுத் தீயானது பரபரவென்று படர்வது போல முந்துகின்றனர். "நாம் எத்தகைய மன்னன் கீழ்ப் போர் செய்யப் போகிறோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நம் மன்னன் தன் கையில் வேலை ஏந்திப் போருக்குச் சென்றால், நாம் படைக்கலன் ஏந்திப் போர் செய்யும் அவசியங்கூட இராதுபோல் இருக்கிறது. அரசனுடைய நிலையைக் கண்டு அஞ்சி நடுங்கிப் பகைவர்கள் அவன் காலில் வந்து விழுவார்கள்’ என்று வீரர் தம் மன்னனைப் பாராட்டிப் பேசுகிறார்கள். "ஐயோ பாவம் நம் அரசனுடைய கண்கள் சிவந்து விட்டன. இனிமேல் பகைவர் நாடு பாழாய்ப் போய் விடும் என்பதில் என்ன சந்தேகம்? தலையில் பூவை வைத்துக்கொண்டு சிறு தேரைக் குழந்தைகள் உருட்டி விளையாடும் நாடு அது. அந்த நாடு வீணாகப் பாழ்படப் போகிறது!’ என்று சிலர் பகைவர்களுக்கு இரங்குவது போலப் பேசுகிறார்கள்.

படை புறப்பட்டுச் செல்கிறது. பெரும்போர் நிகழ்கிறது. அந்தப் போரில் மிக்க வீறுடனும் மிடுக்குடனும் வீரர்கள் போரிடுகின்றர்கள். பகைவர்பால் அவர்களுக்குச் சினம் மூள்கிறது. ஆனாலும் சில அறங்களை அவர்கள் மறக்கவில்லை. பகைவர் நாட்டுக்குள் புகுந்து பல ஊர்களைப் பாழ்படுத்துகிறார்கள். ஆனலும் நல்லவர்களுக்குத் தீங்கு உண்டாக்கவில்லை. கோயில்களை அழிக்கவில்லை, அவற்றுக்குச் சிறிதளவு தீங்கும் வராமல் மிகவும் பாதுகாப்பாகப் போகிறார்கள். தவம் செய்யும் பெரியோர்கள் உறையும் மடங்களைச் சிதைக்கவில்லை. போரினால் மக்களுக்குத் தீங்கு உண்டானாலும் துறவிகளுக்கு யாதோர் இன்னலும் நேரவில்லை. அந்தணாளர்கள் உறை பும் இடங்களையும் வீரர்கள் அணுகவில்லை. ஏனைய இடங்களை அழித்து, எதிர்த்தவர்களைப் பொருது ஒழிக்கிறார்கள்.

இவ்வாறு செய்த வீரர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை அளிக்கிறான் வேந்தன். மிக்க ஆண்மையையுடைய வீரர்களுக்கு அரசன் அன்பு கொண்டு இவ்வாறு ஆதரவு செய்வதைப் பேராண் வஞ்சி என்ற துறையாக வைத்துப் பாடுவார்கள் கவிஞர்கள்.

[ பூசை செய்யும் நல்ல கோயில்களும், துறவிகள் இருக்கும் மடங்களும், இனிய மறையொலி பொருந்திய அந்தணர் வீடுகளும் புகுந்து நலிதலை விட்டுவிட்டு, பகைவர்கள் தோற்று ஒடும்படி போர் செய்த, வீரரின் செருவை வென்ற வில்லேந்திய தன் வீரர்களுக்குப் பல பரிசுகளை வழங்கி அருள் சுரந்தான் வேந்தன்.]
-----
[1]. புறப்பொருள் வெண்பா மாலை, 44.”

சில சமயங்களில் பகை வேந்தன் போருக்கு ஆற்றாமல் அஞ்சிப் பணிந்து வந்து சமாதானம் பேசுவான். அவன் காணிக்கையாகப் பல பொருள்களைக் கொணர்ந்து கொடுக்க, எதிர்த்துச் சென்ற அரசன் சினம் ஆறிப் போரை நிறுத்தி விடுவதும் உண்டு. ་་
போரில் அரசனுடைய பரிசுகளைப் பெற்ற வீரர்களை மற்றவர்கள் போற்றிப் பாராட்டுவார்கள். வீரர்களுக்கு ஏனாதி, காவிதி என்ற பட்டங்களை அளிப்பது வழக்கம். அந்தப் பட்டங்களுக்கு அடையாளமாகப் பொற்பூக்களை அணிவிப்பார்கள். நாடும் ஊரும் வழங்குவார்கள்.

ஏனாதி என்பது சேனாதிபதிகளுக்குக் கொடுக்கும் பட்டம். ஏனாதிநாத நாயனார் என்று ஒரு நாயனார் முன்பு இருந்தனர். ஏனாதி திருக்கிள்ளி என்ற படைத்தலைவருடைய புகழ் புறநானூற்றில் வருகிறது. ஏனாதிப் பட்டம் பெறுபவருக்கு மோதிரம் கொடுப்பது மரபு. அதற்கு ஏனாதி மோதிரம் என்று பெயர். ஒரு படைத் தலைவன் ஏனாதிப் பட்டம் பெற்று அதற்கு அடையாளமாகிய மோதிரத்தையும் அரசன் வழங்கப் பெற்றான். அவனைப் போற்றிப் பாராட்டிய பழம்பாட்டு ஒன்று உண்டு.

[எல்லாப் போர்களுக்கும் தானே முதல்வனாக உள்ள மாலையை அணிந்த வேந்தன் தந்த மோதிரத்தைப் பெற்று ஏனாதிப் பட்டமும் பெற்ற இந்தப் படைத் தலைவன், போருக்குப் பலத்தை உண்டாக்கும் குதிரை பூண்ட தேர் களையுடைய பல படைகளுக்கும், சமுத்திரம் பெற்ற கரையைப்போல் நின்று பாதுகாப்பவன் அல்லவா?]

போர் நிகழும்போது வீரர்களுடைய மறச் செயலை எப்படி விரிப்பது? "எவ்வளவு பெரிய வீரனாக இருந்தால் என்ன? என் முன்னே வந்து போர் செய்யட்டும். அவனுடைய உடம்பைப் பருந்துக்கு இரையாக்குவேன். அவனை யாவரும் புகழ வீர சொர்க்கத்துக்கு அனுப்புவேன்" என்று ஆரவாரிக்கிறான் ஒரு வீரன். “என்னுடைய பரம்பரையே மறவர் பரம்பரை. எங்கள் தகப்பன் வாளை ஏந்திப் புறப்பட்டபோது அவன்முன் போரில் எத்தனை பேர் இறந்துபட்டார்கள் தெரியுமா? என்று தன் குடிப் பெருமையைச் சொல்லி வீறு பேசுகிறான் ஒரு வீரன், அவ்வாறு வழிவழியே வீரங்காட்டி வெற்றி பெறுபவர்களுக்கு நல்ல வயல்களைப் பரிசாகத் தருவான் அரசன்,

'பருவ காலத்தில் பெய்யும் மழையைப் போலப் பகைவருடைய அம்புகள் வீழ்ந்தாலும், வயலிலுள்ள கெண்டைகளைப்போல வேல்கள் பிறழ்ந்து ஒளிவிட்டாலும், பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தையுடைய பெரிய யானைகளின் தந்தங்களின் நுனி குத்தினாலும் ஓடாமல் நின்று பொருது வெற்றிபெற்ற பெருமையையுடையவர்கள் வீரர்கள். அவர்கள் ஆழமான நீரையுடைய பொய்கையில் பிறழ்ந்த வாளை மீன், பெரிய வீடுகளில் நெல்லை வைத்திருக்கும் சேர்களுக்கு அடியில் புரளுவதற்குக் காரணமான வயல்களைப் பெறுவார்கள்; அது பெரிய காரியமா? என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.

பகைவர்கள் நின்று பொர மாட்டாமல் ஒட, அவர்களுடைய நாட்டைக் கொளுத்துவதும் உண்டு. பெண்கள் அஞ்சி அழுது ஊருக்குப் பொதுவான இடத்திலே திரண்டு அலமர, அவ்வூர்களில் எரியூட்டுவார்கள். பாம்பட்ட பகைவர் நாட்டுக்குள்ளே புகுந்து, அங்கே கிடக்கும் மணிகளையும் பொன்னையும் கைப்பற்றிக்கொண்டு வருகிறார்கள் வீரர்கள். வைரமும், மாணிக்கமும், முத்தும், பொன்னும் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள், அவற்றைத் தம் நாட்டில் பலருக்கும் வழங்குகிறார்கள். முதலில் வீரர்கள் எழுச்சி பெறும்படியாகப் பாடிய புலவர்களுக்குப் பரிசு வழங்குகிறார்கள். யாழை மீட்டிப் பாடும் பாணர்களுக்குத் தருகிறார்கள். நாட்டில் மறவேந்தர் புகழைப் பாடிக் காலம் கழிக்கும் புலவர்களுக்கும், பாட்டுப்பாடி யாவரையும் இன்புறுத்தும் பாணர்களுக்கும் இது அறுவடை நாள். இதுவரையில் பகை நாட்டிற் சென்று போரிட்டு வீரம் காட்டி வெற்றி கொண்ட வீரர்கள் இனி இளைப்பாறப் போகிறார்கள். அவர்கள் இன்ப வாழ்வு பெறும்போது அந்த வாழ்வு பின்னும் சுவையுடையதாகும்படி புலவர்கள் அவர்களைப் புகழ்கிறார்கள்; பாணர்கள் இசை பாடி இன்புறுத்துகிறார்கள்.

வீரர்கள் பெற்ற வெற்றி அவர்களுக்குப் புகழை ஈந்தது; அரசனுக்குப் புதிய நாட்டைத் தந்தது; கலைஞர்களுக்கும் நல்ல வளத்தை உண்டாக்கியது. அத்தகைய வெற்றியைப் பெற்ற வீரர்களைப் புகழ்வது பொருத்தமான காரியந்தானே?
-------------

4. சிறந்த வீரம்


பெரும் போர் நடக்கின்றது. படை எடுத்து வந்த வேந்தனோடு எதிர் நின்று பொரும் மன்னன், வந்தவனுடைய படையின் வலிமையைப் பார்க்கிறான். வரவரத் தன்படை சோர்வடையும் என்பதை அவன் உணர்கிறான். எத்தனை காலம் போரிட்டாலும் வெற்றி தன் பக்கம் கிட்டாது என்பது உறுதியாக அவனுக்குத் தெரிகிறது. அப்போது வீண் பெருமையினால் போரை நிறுத்தமாட்டேனென்று சொல்லி மேலும் பொருதால் அவனுடைய படை அழியும்; காடு அழியும், பணிய வேண்டிய இடத்தில் பணிதலும் நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்தலும் நல்ல மன்னனுக்கு இலக்கணம். போர் தொடர்ந்து நடைபெற்றால் குடிமக்கள் வினே அழிந்தொழிவார்கள் என்ற உண்மையை முன்கூட்டியே தெளிந்து, போர் தொடுத்த அரசனோடு சமாதானம் செய்துகொள்வதும் அரச நீதியில் ஒரு வகை, பகையரசன் விரும்பும் திறையைக் கொடுத்து, போர் மேலும் நடவாமல் சந்தி செய்துகொள்ளும் அரசன், தன் குடிமக்களிடம் உள்ள கருணையால் அப்படிச் செய்கிறான். அப்படியின்றி முரட்டுத் துணிவினால் வருகின்ற கேட்டை மதியாமல் போர் செய்கிறவன் தன் பெருமையையும் உயிரையும் இழந்து, தன் நாட்டு மக்களைப் பெரிய அவல நிலையில் ஆழ்த்தி விடுகிறான்,

இவ்வாறு பகையரசன் திறை கொடுத்துச் சமாதானம் செய்துகொள்ள முந்தும்பொழுது, போர் தொடுத்த மன்னன், 'இவனேப் பூண்டோடு ஒழித்துவிட்டுத்தான் திரும்புவேன்' என்பது வீரமாகாது. அது விலங்கினத்துக்கு வரும் வெறி போன்றது. ஆகவே அரச நீதியை நன்கு உணர்ந்த மன்னர்கள், பணிந்து வந்து திறை கொடுக்கும் பகையரசர்களை ஆதரித்துப் போரை நிறுத்தி விடுவார்கள். இது சிறந்த வீரம் என்றே போற்றுவதற் குரியது. திறை கொடுக்கும் அரசன் தன் காடு வீணாக அழிந்து போகுமே என்ற கருணையினல் சரணடைகிறான். அந்தக் கருணை போரில் வென்று வரும் அரசனுக்கும் இருக்கவேண்டும். பகைவர் காடாக இருந்தாலும் அங்குள்ள மக்கள் வீணாகஅழிவதை அவன் விரும்பமாட்டான்.

பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனை அரிசில்கிழார் என்னும் புலவர் பத்துப் பாடல்கள் பாடிப் புகழ்ந்திருக்கிறார், பதிற்றுப்பத்தில் அப் பாடல்கள் உள்ளன. அவனுடைய வீரத்தையும் ஈகைச் சிறப்பையும் விரிவாக அந்தப் பாடல்களில் சொல்கிறார். ஒரு பாட்டில், பகைவர் திறை கொடுக்க அவன் போர் செய்யாமல் திரும்பியதைச் சொல்கிறார்.

பேய் மிடுக்குடன் வருகிறது; உயிரை உறிஞ்சுவேன் என்று வருகிறது. அதைக் கண்டவன் அதற்குரிய பலியை இடுகிறான். உடனே பேயின் சினம் ஆறுகிறது. அது பலியைப் பெற்றுக்கொண்டு மீண்டு போய்விடுகிறது. பேயே இத்தகைய கருணையைக் காட்டும்பொழுது அரசன் காட்டாமல் இருக்கலாமா? "நீ அத்தகைய பேய் போலத் திறையை ஏற்றுக்கொண்டு திரும்புகிறாய், உன்னிடம் இந்தக் கருணை இருப்பதனால் நீ நிறையாளுடன் வாழ வேண்டும். இவன் அறிவுடையவன், இவன் அறிவில்லாதவன் என்று நன்கு ஆராய்ந்து, இவ்வாறு நீ அருள் செய்யாமற் போனால் உலகத்தில் யார் வாழ்வார்கள்? என்று பாடுகிறார் புலவர்:

[பனிகூரா - நடுக்கம் மிக்கு, அணங்கு என - தெய்வம் என்று. பாசம் - பேய். பெயர்தி - மீள்கிறாய், ஊழி- நிறை ஆயுள், உரவர் - அறிவுடையோர். மடவர் - அறிவில்லார். நெடு நதகை - உயர்ந்த குணங்களையுடைய அரசனே. வாழுமோர் - உயிருடன் வாழ்கிறவர்கள்.]

போரில் சோர்வுற்றவர்களோடு பொருவது அறப் போர் ஆகாது. சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனையும், மகப் பெறாதோனையும், மயிர்குலைந் தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை யிழந்தோனையும், ஒத்த படையெடாதோனையும், பிறவும் இத்தன்மை உடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் முதலியனவாம்’ என்று சிறப்பான வீரத்துக்குரிய இலக்கணத்தை நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் எழுதுகிறார்.

புறம் காட்டினேர்மேல் படையை விடாமல் இருக்கும்" துறைக்குத் தழிஞ்சி என்று பெயர். அந்த வீரத்தைக் கழிதறுகண்மை என்று கூறுவர்.

”அழிகுநர் புறக்கொடை அயில்வரின் ஒச்சாக்
கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று" [2]

என்பது அத்துறையின் இலக்கணம். 'தனக்குத் தோற்று ஓடுவார் முதுகின்மேல் கூர்மையையுடைய வாளை வீசாத மிக்க வீரத்தை விரும்பிச் சொல்லியது' என்பது இதன் பொருள். திருக்குறளில் இந்த உயர்ந்த பண்பைப் பாராட்டும் பாடல் ஒன்று உண்டு.
----
[1] பதிற்றுப்பத்து, 71 [2]. புறப்பொருள் வெண்பாமலை, 55.

’பகைவரிடம் மிடுக்குடன் போர் செய்தல் பெரிய வீரம்; ஆனால் பகைவனுக்கு ஒரு சோர்வு வந்தால் அப்போது கருணையோடு உதவுதல் அந்த வீரத்தின் கூர்மையான பகுதி’ என்பது இதன் பொருள். தன் வீரம் தோற்றப் போர் செய்வது பேராண்மை; ஆனால் பகைவன் சோரும்போது அவனைக் கொல்லாது விடுதல் அந்தப் பேராண்மையிலும் சிறப்பான வீரம் என்பது கருத்து.

----------
[1]. திருக்குறள், 773.

இராமன் இராவணனோடு போர் செய்த முதல் நாள் இறுதியில் அவ்வரக்கன் தன் படைக்கலங்களை இழந்து கின்றான். வெறுங்கையாக நின்ற அவனை ஒரு கணத்தில் கொன்றிருக்கலாம். ஆனால் சிறந்த வீரனாகிய இராமன் அவ்வாறு செய்யவில்லை. ‘நீஆள்வதற்கு இப்போது ஒன்றும் இல்லை; உனக்கு அமைந்திருந்த பலம் எல்லாம் காற்றிலே குலைந்துபோன பூளைப் பூப்போல ஆயின; இதை நீயே பார்த்தாய். இன்று போய் இளைப்பாறி, மறுபடியும் போர் செய்ய வேண்டுமென்று எண்ணினையாயின் நாளைக்கு வா’ என்று சொன்னானாம், இதனைக் கம்பன் பாடுகிறான்:

இப்போதைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தலின் வள்ளல் என்றான். இந்தச் செயலைக் குறளில் வரும் ஊராண்மைக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறார் பரிமேலழகர். 'அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும் படத் தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின் தானையோடு வா' என விட்டால் போல்வது' என்று அவர் எழுதுகிறார்,

புறமுதுகிட்டார்மேல் படைக்கல்ம் போக்குதல் வீரம் அன்று என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்றும் இராமாயணத்தில் வருகிறது. இராவணனை இராமன் தன் அம்புக்கு இரையாக்கினான். போர்க்களத்தில் அரக்க வேந்தன் பிணமாகக் கிடக்கிறான். அவனுடைய முதுகில் ஒரு தழும்பு இருப்பதைக் கண்டு இராமன் சற்றே திகைக்கிறான், ‘புறங்கொடுத்த ஒருவனை, நாம் கொன்று விட்டோமோ? என்ற ஐயம் தோன்றுகிறது. அப்போது இராமன் விபீடணனை நோக்கி, "போரில் புறங்கொடுத்த வரைப் போன்ற வீரர்களைக் கொன்று பெற்ற வெற்றி, வீணானது. நான் அதைத்தான் பெற்றேனே? என்று, கேட்கிறான்.

[அணிந்த பூணானது வேலைப்பாட்டோடு விளங்கும் மார்பையுடைய விபீடணா, இறந்து போயும் உலகத்தில் நிற்கின்ற விளங்கும் புகழைப் பெறமாட்டாமல், உண்ணும் தொழிலையே விரும்பி ஏற்று, பகைவர் பரிகாசத்தால் நகைக்கும் சிரிப்பு என் புகழை அழிக்க, போரில் புறம் கொடுத்தவரைப் போலத் தோற்றுகின்ற வீரரைக் கொன்று, அதனல் பெற்ற வெற்றி வீணாகும் என்றான்.]

விபீடணன் அப்போது உண்மையை விளக்கினான்; "இவன் புறங்கொடுத்துப் பெற்ற புண் அன்று இது. திக்கயங்களோடு போரிட்டபோது அவற்றின் கொம்புகள் இவன் மார்பில் குத்த, அவை முதுகு வரையில் பாய்ந்து நின்றன. பின்பு அநுமன் இவன் மார்பிலே குத்தியபோது அத்தனையும் கழன்று விழுந்தன. அதனல் உண்டான தழும்பே இது” என்று சொன்ன பிறகே இராமன் ஐயம் நீங்கித் தெளிவு பெற்றான்.

இப்படி, வீரத்தைத் காட்டும் போரினிடையே கருணையும் அறமும் வெளிப்படுகின்றன.
பகைவர்கள் திறை கொடுத்துப் போற்றி வழிபட, போர் தொடுத்த மன்னன் பின்னும் சில காலம் தன் பாசறையில் தங்கியிருக்கிறான். திறை கொடுத்தவர்கள் உண்மையில் மனமாற்றம் பெற்றுவிட்டார்களா என்பதை அவன் ஆராய்ந்து தெரிந்து கொள்கிறான்.

---------------
பக்கம் 35 பயன்படுத்தப்பட்ட புத்தகத்தில் காணப்படவில்லை
--------

உணவுப்பொருள் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. இதனை அறிந்த சேரன் தமிழ்நாட்டிலிருந்து உணவுக்குரிய தானியங்களை மிகுதியாக அனுப்பிப் பாரதப் போர் புரிந்த படைவீரர்களுக்கு உணவு அளிக்கச் செய்தானாம். இவ்வாறு பெருஞ்சோறு ஒரு பெரிய போரில் அளித்த பெருமையால் அந்தச் சேர மன்னனுக்குப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற பெயர் வழங்கலாயிற்று.

முரஞ்சியூர் முடிநாக ராயர் என்ற புலவர் அந்த அரசனைப் பாராட்டிப் பாடும்போது இந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார், "அசைகின்ற பிடரி மயிரையுடைய குதிரைகளைப் பெற்ற பஞ்ச பாண்டவரோடு பகைத்து நிலத்தைக் கைப்பற்றிய, பொன் தும்பைப்பூவை யணிந்த நூற்றுவராகிய கெளரவர்கள் போர்க்களத்தில் போர் செய்து அழிய, அந்தப் போரில் பெருஞ்சோறாகிய மிக்க உணவை எல்லையில்லாமல் அளித்தவனே!” என்று பாடுகிறார்.

[அலங்கு உளை-அசையும் பிடரி மயிர். சினை இ –கோபித்து, தலைக்கொண்ட – கவர்ந்த, பதம்-உணவு, வரையாது-கட்டுப்பாடு இன்றி.]

இங்கே "வரையாது கொடுத்தோய்" என்பதற்கு, இன்ன கட்சியினர் என்று வேறு பிரித்துப் பாராமல் அளித்தவனே! என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் அப்படித்தான் கொண்டார்; இதனே, "பெருஞ் "சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்’ என்று எழுதியிருக்கும் உரையினால் உணரலாம்.
--------
1. புறநானூறு, 2.


“எங்கோ நடக்கிற போரில் பொரும் வீரர்கள் எப்படிப் போனால் என்ன? நம் நாட்டவருக்காக நாம் சேமிக்க வேண்டிய உணவுப் பொருள் இது’ என்று எண்ணிச் சேர்த்து வைக்காமல் கருணையினால் இந்தச் சேரன் உணவுப் பண்டங்களை அனுப்பினான். ஆதலின் சிலப்பதிகாரம் இவன் புகழை,

என்று பாடுகின்றது.


இவ்வாறு வீரர்களுக்கு நலம் செய்து, பொருத போரில் வெற்றி உண்டாகிறது. ”இன்னும் பகைவர் இருந்தால் அவரை அடியோடு மாய்ப்பேன்” என்று அரசன் சீறுகிறான்.

அரசன் வெற்றி மிடுக்குடன் திரும்புகிறான். அவனுடைய கோபத்துக்கு ஆளானவர்களின் நாடு வளம் இழந்து நிற்கிறது. மாடங்கள் எரியுண்டமையால், குலைந்து இடிந்து கிற்கின்றன. சுரையும் பேய்ப்பீர்க்கும் அங்கே படர்கின்றன. வாழும் மக்கள் இல்லாமையால் ஊர்கள் பாழாகி விடுகின்றன. போர் தொடுத்த அரசனுடைய படைப்பலத்தைக் கண்டு பணிந்து அவனைப் புகழ்ந்து அவனை அண்டியிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?

இப்படி ஆன நாட்டின் நிலை கண்டு புலவர்களும் வெற்றி கொண்ட வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும் இரங்குகிறார்கள். 'பாவம்! முரட்டுப் பிடிவாதத்தால் தன் நாட்டைப் பாழாகும்படி செய்துவிட்டான் அந்த அறிவிலி!” என்று பகையரசனையும் அவன் நாட்டையும் எண்ணி இரங்குகிறார்கள்.

என்று அழுங்குகிறார்கள்.

வெற்றி பெற்ற உவகையிலும் அயலாருக்கு இரங்கும் கருணையும் அவர்கள் உள்ளத்தே நிழலிடுகின்றது. சிறந்த வீரத்தின் அடையாளம் அது.
---
1. புறப்பொருள் வெண்பா மாலை, 60,
-----------

5. போருக்கு எதிரே போர்


பகைவருடைய நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்தோடு சென்று படையெடுப்பதை வஞ்சித்திணை என்னும் புறப்பொருள் திணைக்குள் அடக்கிப் பாடுவார்கள் அவ்வாறு படையெடுத்துச் செல்லும் அரசன் வஞ்சிமாலை அணிந்து செல்வான். படைவீரர்கள் வஞ்சிப்பூவை அணிவார்கள்.

பகையரசன் தன் நாட்டைக் கைப்பற்றுவதை எண்ணிப் போருக்கு வந்தால் சும்மா இருப்பது வீரம் ஆகுமா? எந்த நாட்டின்மேல் அவன் படையெடுத்து வந்தானோ, அந்த நாட்டு அரசன், வந்த போருக்கு எதிரே போரிட்டுத் தன் வீரத்தை நிலை நாட்டுவான். வலியப் போருக்குப் போகாவிட்டாலும் வந்த சண்டையை விடக்கூடாது அல்லவா? அவ்வாறு எதிர்த்து நிற்கும் அரசனுடைய படைச் செயல்களைக் காஞ்சி என்னும் தனித் திணையாகப் பிரித்துச் சொல்வது ஒருசார் புலவர்களின் மரபு. தொல்காப்பியர் அவற்றையும் வஞ்சியிலேயே அடக்கிச் சொல்வார்.

தன் நாட்டின் மேல் படையெடுத்து வந்த வேந்தனுக்கு எதிரே படையுடன் சென்று பொரும் அரசன் காஞ்சிப் பூவை அணிவது வழக்கம்.

[வேகின்ற கோபத்தையுடைய பகையரசன் வந்து தன் எல்லையில் பாளையம் கொள்ள, அரசன் காஞ்சிப் பூவை அணிந்து காவல் செய்ய வேண்டிய இடங்களைக் காப்பதைக் கருதுவது காஞ்சித்திணை.]

இவ்வாறு புறப்பொருள் வெண்பா மாலை காஞ்சித் திணையின் இலக்கணத்தை வகுக்கிறது.


படையெடுத்து வந்த பகையரசனை எதிர்த்துப் பொர வேண்டும் என்று தீர்மானித்த அரசன் அந்தச் செய்தியை எங்கும் பரப்பச் செய்கிறான். துடியும் முரசும் முழங்குகின்றன. பகைவர்கள் நாட்டுக்குள் புகும் வழிகள் எவை என்று ஆராய்ந்து, அங்கெல்லாம் காவல் படையை நிறுத்துகிறார்கள். நாட்டுக்குள்ளே புகுந்த பின்னர்ப் பகைவர்களைப் பொருது ஒட்டுவதைவிட, எல்லையில் நின்றபடியே அவர்களைத் தடுத்து நிறுத்திப் பொருவதே சிறந்தது அல்லவா? அரசன் தன்னுடைய படைவீரர்களில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பவர்களை ஆராய்ந்து எடுத்து எல்லையைப் பாதுகாக்க அனுப்புகிறான். போர் வந்தால், ஆயுதங்களுக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைவது வீரத்துக்கு அழகன்று. அரசன் பல வேறு படைக்கலங்களை முன்பே சேமித்து வைத்திருக்கிறான். இப்படி ஓர் ஆபத்து வரும்போது புதிய ஆயுதங்களைச் செய்யத் தொடங்குவதோ, பிறரிடம் வாங்குவதோ எளிய காரியம் அன்று என்பதை அவன் அறிவான். ஆகவே, வருமுன் காக்கும் அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு, எத்தகைய ஆயுதங்கள் வேண்டியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அவற்றைத் தொகுத்து வைத்துள்ளான் அரசன். தண்ணிர்த் தாகம் எடுக்கும்போது கிணறு வெட்டப் புகுந்தால் தாகம் தணிவது எப்படி?

அரசன் இப்போது அந்தப் படைக்கலங்களை எடுத்துத் தகுதி அறிந்து படைத் தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் வழங்குகிறான். அவற்றைப் பெற்ற வீரர்களுக்கு உண்டான மகிழ்ச்சி சொல்லி முடியாது. அவர்கள் தோள்கள் பூரிக்கின்றன. வெற்றியையே பெற்றுவிட்ட ஊக்கம் பொங்குகிறது.

இவ்வாறு அரசன் வீரர்களுக்குப் படைகளை அளிக்கும் செயலைப் படைவழக்கு என்று சொல்வார்கள். இந்த வழக்கத்தைச் சிலப்பதிகாரத்தில் ஓர் இடத்தில் இளங்கோவடிகள் குறிக்கிறார்: கோவலன் திருமணம் ஆனவுடன் தனியே ஒரு மாளிகையில் கண்ணகியுடன் இல்வாழ்வு நடத்தப் புகுகிறான். அப்போது கண்ணகியின் பேரழகைக் கண்டு பாராட்டுகிறான். ‘சிவபெருமான் தான் முடித்த பிறையை உன் நெற்றியாகும்படி வழங்கட்டும் மன்மதன் தன் கரும்புவில்லே உன் புருவமாகும்படி தரட்டும்; இந்திரன் தன் வச்சிரத்தை மின் இடையாக என்று அளிக்கட்டும்’ என்றும் பிறவாறும் சொல்கிறான், காமன் கரும் புருவமாகக் கரும்பைத் தரட்டும் என்று சொல்கிறான்; அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறான், காமனுக்குப் பெண்களை படை. ‘போர் செய்யும் வீரர்களுக்கு அரசன் படை வழங்கும் வழக்கம் உண்டாதலால், உருவிலாளனாகிய காமன் தன் பெரிய கரும்புவில்லை இரண்டு கரும் புருவமாக அமைத்து உனக்குத் தரட்டும்" என்று அவன் கூறுகிறான்.

என்பது, அவன் சொல்வதாகச் சிலப்பதிகாரத்தில் அமைக்த பகுதி.
----
[1]. அடையார் முனையகம் - பகைவரோடு போர் செய்யும் - போர்க்களம், அமர்மேம்படுநர் - போரில் சிறப்படைய இருக்கும் வீரர். உருவிலாளன் - அகங்கன்; காமன், ஈக்க - வழங்கட்டும்.

அர்சன் கையால் தரப்பெற்ற படைக்கலன்களைப் பெற்ற மறவர்கள். அதனைச் சிறந்த பேறாக எண்ணிப் பெருமிதம் அடைகிறார்கள். பிறகு அவர்களுக்கு உண்டாகும் மிடுக்குக்கும் எழுச்சிக்கும் கேட்பானேன்?

போருக்கு எதிரே போர் தொடங்கிவிட்டார்கள். அரசன் தன் வாளைச் சிறப்புடன் ஏந்திச் செல்லும்படி முன்னே விடுக்கிறான், அரசனுடைய பிரதிநிதியாகப் போர் தொடங்கியதற்கு அறிகுறியென்று யாவரும் கண்டு ஊக்கம் கொள்ள அவ்வாள், இன்னியம் இயங்க முன்னே செல்கிறது. அப்படியே அவனுடைய குடையும் ஆரவாரத்துடன் போகிறது.

வீரர்கள் ஆர்த்து எழுகின்றனர். அரசனும் போருக்குப் புறப்படுகிறான். அவனுடைய தோள் விம்முகிறது. உள்ளமும் வீரத்தால் விம்முகிறது. “இன்று கதிரவன் மறைவதற்குமுன் என் பகைவனை வென்று போர்க்களத்தைக் கைப்பற்றிக் கொள்ளாமற் போனால், என் பகைவருக்கு முன் நின்று இச்சகம் பேசிப் பணிந்து நிற்பேணாகுக!” என்று வஞ்சினம் கூறுகிறான், தன்னுடைய குலத்துக்குரிய பூவையும், பொன்னாலாகிய காஞ்சிப் பூவையும் படைத் தலைவர்களுக்கு அளித்து அணிந்து கொள்ளச் செய்கிறான். எல்லோருடைய உடைகளிலும் காஞ்சிப் பூ ஒளி விடுகிறது. "நாங்களாக வலியப் போருக்குச் செல்லவில்லை. அக்கிரமமாக நாடாசையினால் பகைவன் எங்கள் காட்டின்மேல் படையெடுத்து வந்திருக்கிறான், அவனை எதிர்த்து விரட்டி அடிக்கவே இந்தப் போரை மேற்கொண்டிருக்கிறோம்' என்று அந்த வீரர்கள் சொல்ல வேண்டியதை அவர்கள் அணிந்த காஞ்சிப் பூப் புலுப்படுத்துகிறது.

இதோ படை, முரசு முழங்கவும் ஊது கொம்புகள் ஊதவும் துடி ஒலிக்கவும் வீரர்கள் மிடுக்குச் சொற்களைச் சொல்லவும் நடைபோட்டுச் செல்கிறது. மாற்றான் வந்து தங்கியிருக்கும் எல்லையை அடைகிறது. இப்போது போர் நேரடியாகத் தொடங்குகிறது.

மாற்றான் முன்பே திட்டமிட்டு இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறான். பெரும் படையுடன் வந்திருக்கிறான். முன்னணிப் படையே கண்டார் அஞ்சும்படி நிற்கிறது. பகைவனை எதிர்த்துச் சென்ற வீரப்படையின் முன்னணியிலே சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். எதிரிகளின் முன்னணிப் படைக்கு ஏற்றபடி பொருது ஒட்டும் வலிமை படைத்தவர்களாகப் பொறுக்கி அனுப்பியிருக் கிறார்கள்.

இரண்டு முன்னணிப் படைகளும் பொருகின்றன. வந்த பகைவனது படையின் அளவை இவர்கள் நன்கு உணர்ந்து கொள்ளவில்லை. அது மிகப் பெரியதாகவே இருக்கிறது. போர் கடுமையாக நடக்கிறது. வீரர்கள் கனல் கொப்புளிக்கும் கண்களுடன் போராடுகிறார்கள். அதோ ஒரு வீரன் எவ்வளவு உற்சாகத்துடன் போர் புரிகிறான்! வில்லை வளைத்து அம்பை மாரிபோலப் பொழிகிறான். ஒவ்வொரு முறையும் அவனுடைய அம்புக்கு எதிரியின் படையில் குதிரையோ, வீரரோ பலியாகிறார்கள். பகைவர்களை அவனைக் கண்டு வியப்பை அடைகிறார்கள்.

என்ன இது? இது உண்மைதான? ஆம்; உண்மைதான். அந்தப் பெருவீரனை எதிரியின் படையிலிருந்து வந்த அம்பு வீழ்த்திவிட்டதே! அவன் தலையைத் தறித்துக் கீழே வீழ்த்திவிட்டது. அந்தோ பரிதாபம் படைவீரர்கள் சற்றே கலங்குகிறார்கள். வீழ்ந்தவன் தலை பகைவர் கையில் அகப்படாதபடி எடுத்து அரசனை நோக்கி ஓடி வருகிறார்கள். அந்த முகத்தில் இன்னும் முறுவல் வாடவில்லை. தன் நாட்டுக்காக உயிர் கொடுத்த பெருமிதந்தான் அந்த முறுவலுக்குப் பொருளோ?

அரசன் அந்த வீர முகத்தைப் பார்க்கிறான். அவன் முகத்தில் சிறு வாட்டம் படர்கிறது. ஆனால் இழவு கொண்டாட இதுவா நேரம்? ”இந்தத் தலையை உறவினர்களிடம் கொடுத்துவிடுங்கள். தலையைக் கொண்டு வந்த வீரனுக்குப் பரிசு கொடுங்கள்?” என்று அரசன் கட்டளை பிறப்பிக்கிறான். “இவனுக்குச் சமானமான வீரன் யாரும் இல்லை என்று பெயர் பெற்றவனுடைய தலையை, பகைவன் கொண்டு போகாமல் இங்கே துணிந்து எடுத்து வந்த வீரனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்" என்று வீரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அந்தத் தலைக்கு மாலையிட்டு வீரனுடைய மனைவியிடம் அனுப்புகிறார்கள். அதற்குள் அந்த நங்கையே செய்தியைக் கேள்வியுற்று ஓடி வருகிறாள். வீரனுடைய தலையை அவள் கையில் அளிக்கிறார்கள். அவள் அதைக் காண்கிறாள். அவள் கண்ணில் நீர் பெருகவில்லை. உற்றுப் பார்க்கிறாள். தன் மார்பிலே அதை அணைத்துக் கொள்கிறாள். தன் முகத்தோடு சேர்த்து வைக்கிறாள். ஒரு பெருமூச்சு வருகிறது. ஆ இது என்ன? அந்தப் பெண் கீழே விழுகிறாளே! அவள் கணவனுடைய தலையும் அவள் கையிலிருந்து நழுவி விழுகிறது. அருகில் உள்ளவர்கள் பதைபதைத்து ஓடிச் சென்று பார்க்கிறார்கள். அவள் உடலில் உயிர் இல்லை. தன் கணவன் பெற்ற வீர சொர்க்கத்தில் அவனைத் தனியே வாழும்படி செய்ய மன மின்றி அவளும்போய்விட்டாள்! அவள் உயிர் பிரிந்த அற்புதத்தைப் பின்வரும் பாட்டுச் சொல்கிறது:

'கொல்லுதலே நிறுத்தாத யமன் கொடியவன்! இங்கே நடந்ததைப் பார்த்தால் இது தெரியவில்லையா? தன் கணவனைப் பிரிந்து வாழ விரும்பாத இந்த மங்கை அவன் தலையைச் சிறிதும் இமைக்காமல் உற்று நோக்கினாள்; தன் மார்போடு வைத்து அணைத்தாள்; அவள் முகம் ஒளி விட்டது; அதனோடு சேர்த்து முத்தமிட்டாள்; சிறிதே வருந்தினாள்; அவ்வளவுதான்; அவள் உயிர் மேலே போய் விட்டது!’ என்று இந்தக் காட்சியைக் கண்டவர்கள் வியப்படை கிறாரர்கள்,
----
[1]. புறப்பொருள் வெண்பா மாலை, 77

இவ்வாறு தலைசிறந்த வீரன் ஒருவன் தன்னால் இயன்ற அளவு பலர் உயிரைப் பலி வாங்கிவிட்டுத் தன் உயிரை விட்டதனால், அரசன் தளர்ச்சி அடையவில்லை. அவனுக்கு இப்போது பின்னும் சினமும் ஊக்கமும் பொங்குகின்றன. தன் படைகளை முன்னேறிச் செல்லும்படி செலுத்துகிறான். பெருவீரன் வீழ்ந்ததனால் படையிலே சலசலப்பும் தளர்ச்சியும் உண்டாகும் என்று எதிரிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முன்னேயினும் மும்மடங்கு இந்தப் படை வீறுகொண்டு எழுவதைக் கண்டு அவர்கள் வியந்தார்கள்.

கடும் போரிலே ஒரு மறவன் மார்பில் எதிரிகளின் வேலினால் பெரிய புண் உண்டாகிறது, அதிலிருந்து குருதி வெள்ளமாக வருகிறது. அவனால் நிற்க முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவனைப் பிடித்து நிறுத்துகிறார்கள், எதிரிகளோ அம்பு மாரியை வீசுகிறார்கள். வீரர்கள் மேலே சென்று போர் செய்யாமல் தன்னைத் தாங்கி நிற்பதை அவ்வீரன் பார்க்கிறான். தன்னாலும் போரிட முடியாமல், பிறரையும் போர் செய்ய விடாமல் தான் இருப்பதை அவன் எண்ணி இரங்குகிறான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு தன் மார்புப் புண்ணில் வேலை விட்டுக் கிழித்து விடுகிறான். ஒரு கணந்தான்; அடுத்த கணம் அவன் வீர மரணம் பெற்றுவிடுகிறான். அவன் உடலத்தை அங்கே விட்டுவிட்டு வீரர்கள் போர் செய்ய முந்துகிறார்கள். “நம்மைத் தடுத்து நிற்கச் செய்துவிட்டதைப் பொறாமல் தன் உயிரைக் கொடுத்தானே! இது அல்லவோ வீரம்? என்று வீரர்கள் அவன் இயல்பைப் பாராட்டுகிறார்கள்.

கீழே விழுந்து கிடக்கும் வீரனது உடலைப் போர்க் களத்தில் உணவு கிடைக்குமென்று வந்த பேய்கள் அணுகுகின்றன. போரில்தான் பேய்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பது ஒரு சாபமாம், ஆகையால் எங்கேயாவது போர் வராதா என்று வயிறு ஒட்டிக் கிடக்கும் பேய்கள் காத்துக் கிடக்குமாம். எங்கும் ஒற்றுமையும் சமாதானமும் வளவாழ்வும் சாந்தியும் உண்டாக வேண்டுமென்று பெரியோர்கள் விரும்புவார்கள். பிறர் அடித்துக் கொண்டு அழியும்போது, நாம் நலம் பெறலாம் என்று விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பேய்க்கு ஒப்பானவர்கள். பிறருடைய வேற்றுமையிலும், பிரிவு மனப்பான்மையிலும் வாழும் இயல்புடையோர் எக்காலத்திலும் இருக்கிறார்கள். அவர்களைப் பேயாக உருவகம் செய்து புலவர்கள் பாடினர்கள். போர்க்களத் தில் பேய்கள் வந்து கூழ் சமைத்து உண்டதாகப் பரணி நூல்களில் வரும். அங்கே வரும் காட்சிகள் கற்பனையே ஆனலும் அவற்றினூடே ஓர் உண்மை புதைந்திருக்கிறது. கவிஞர்கள் நுட்பமான கருத்துக்களை இப்படி அபூதமனா காட்சிகளாக்கிப் புலப்படுத்துவது ஒரு மரபு. அதைக் கவி சமயம் என்று சொல்வார்கள். தொல்காப்பியத்திலும் இத்தகைய காட்சிகள் வருகின்றன.

இன்னும் வீரனுக்கு உயிர் இருக்கிறதென்று எண்ணி, உயிர் போனவுடன் உண்ணலாம் என்று பேய் அருகே இருந்து காத்திருக்குமாம். பசியோடுள்ளவன் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் சோற்றைக் கண்டு, "ஆக்கப் பொறுப்பதுபோல் இருக்கிறது இந்தப் பேயின் நிலை. ஆனலும் அதற்குப் பொறுமை இல்லை. ஒரு சுற்றுச் சுற்றுகிறது. உட்காருகிறது. மறுபடியும் நிமிர்ந்து நிற்கிறது. வீரனுக்கு அருகில் போய்க் குனிந்து பார்க்கிறது. பக்கத்தில் கிடக்கும் வேறு ஒரு குடர்மாலையைச் சூடிக் கொண்டு சிரிக்கிறது. குருதி வெள்ளத்திலே கிடக்கும் வீரனுடைய கண்ணேப் பார்க்கிறது; அதில் இன்னும் கனல் கொப்புளிக்கிறது. அதனால் தொட அஞ்சுகிறது பேய்.

[கொட்கும் - சுழலும்; பெட்ப - விரும்பும்படி, உட்க - அஞ்ச.]
-------
1. புறப்பொருள் வெண்பா மாலை, 78,

கடைசியில் பேய் துணிந்து வீரன் மார்பில் புண்ணைத் தொட்டுத் தோண்டத் தொடங்குகிறது. சில சமயம் தொடாமல் அஞ்சுகிறது. கொஞ்ச தூரம் போய்விட்டு மறுபடியும் வருகிறது.

உயிர் துறந்த வீரனை எண்ணிப் பலரும் வருந்து கிறார்கள். 'இவனைப் போலப் போரில் நிற்பவர் யார்? இவன் போரென்னும் கடலைக் கடக்கத் தெப்பத்தைப் போல உதவுகிறவனாயிற்றே!” என்கிறார் ஒருவர். 'வீரன் என்றால் சாமானிய வீரனா? எவ்வளவு உயர்ந்த பண்புடையவன்! உயர்ந்த பெரியவர்களுக்கு நடுவே இரும்புத் தூணைப்போலத் துளங்காமல் இருக்கும் விறல் வீரனாயிற்றே! இனி இவனை எங்கே காணப்போகிறோம்? என்று புலம்புகிறார் மற்றொருவர். "இவன் தான் பிறந்த ஊருக்கே உயிர் போன்றவன், ஊர் மட்டுமா? உலகுக்கே உயிர் போன்றவன் என்றே சொல்ல வேண்டும்’ என்று வேறு ஒருவர் இரங்குகிறார். அவனுடைய அற இயல்பைச் சொல்லி வருந்துகிறார் ஒருவர்: “இவன் மார்பைத் திறந்த வேல், அறம் நிரம்பிய வாயில் ஒன்றை அடைத்து விட்டது. வீரத்தால் பெறும் பொருளை யெல்லாம் வாரி வழங்கும் அறமுடையவன் இவன். அப்படி அறம் திறந்த வாயிலை, இவ்வண்ணலின் மார்பைத் திறந்த வேல் அடைத்துவிட்டதே' என்பது அவர் புலம்பல்.

[ புணை – தெப்பம், மன்: இப்போது போய்விட்டானே என்ற இரக்கத்தைக் குறிப்பித்தது. புரையோர்-உயர்ந்தோர். தாணு-தூண். நிறம்-மார்பு.]
-----
1. பு, வெ. 80.

-----------

6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்


அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன் பழங்காலத்தில் இருந்த பெருவள்ளல். சிறந்த வள்ளல்கள் ஏழு பேரைத் தனியே எடுத்துச் சொல்வது ஒரு வழக்கம். அந்த ஏழு பேர்களில் ஒருவன் அதிகமான். கொடையில் சிறந்த அவன் வீரத்திலும் சிறந்திருந்தான். அவனுக்கும் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அதிகமான் பலமான கோட்டைக்குள்ளே இருந்து போர் செய்தான். இறுதியில் அதிலிருந்து வெளிவந்து போரிடும்படி ஆயிற்று. அந்தப் போரில் அதிகமான் உயிர் இழந்தான். போர் மிகவும் கடுமையாக நடைபெற்றது. அந்தப் போர் சம்பந்தமாக ஒரு தனிக் காவியமே தமிழில் உண்டாயிற்று. பல புலவர்கள் பாடிய பாடல்கள் அமைந்த அந்தக் காவியத்துக்குத் தகடூர் யாத்திரை என்று பெயர். இப்போது தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி என்று வழங்கும் இடமே தகடூர். அதற்கு அருகில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. தகடூரை நோக்கிச் சேரமான் படையெடுத்துச் சென்று வென்றதைச் சொல்வதாதலின் அந்தக் காவியத் துக்குத் தகடூர் பாத்திரை என்ற பெயர் உண்டாயிற்று. நூல் முழுவதும் இப்போது கிடைக்கவில்லை. சில பாடல்கள் மட்டும் கிடைக்கின்றன.

அதிகமான் இறந்துபட்டபொழுது புலவர்கள் மிக வருந்தினார்கள். அவனால் பல பொருள்களைப் பெற்றவர்கள் அவர்கள். அவர்கள் இரங்கிப் பாடிய பாடல்கள் பல. அதிகமானிடம் பலகாலம் உயிரோடு இருக்கும்படி செய்யும் நெல்லிக்கனியைப் பெற்ற ஒளவையார் பாடிய பாடல் அவருடைய உள்ளத்தின் துயரத்தை நன்றாக எடுத்துக் காட்டுகிறது. பாணர், புலவர், கூத்தர் முதலிய பலருடைய உணர்ச்சியையும் ஒருங்கே புலப்படுத்தும் வண்ணம் அப்பாடல் அமைந்திருக்கிறது.

*எந்த உணவு கிடைத்தாலும் முதலில் பிறருக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியிருந்தால் அவன் உண்ணுவான். சிறிதளவு மதுவை அவன் பெற்றாலும் எங்களுக்கு ஈந்து விடுவானே! மிகுதியாகப் பெரிய அளவில் அதனைப் பெற்றால் நாங்கள் முதலில் உண்டு உவகை மிகுதியினால் நாங்கள் பாட, எஞ்சியதைத் தான் உண்ணுவானே! இப்போது அந்தக் காட்சியைக் காண முடியாமல் போயிற்றே!?

”சிறியகள் பெறினே, எமக்கு ஈயும் மன்னே!
பெரியகள் பெரினே,
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!"

'சிறு விருந்தானலும் பலருக்கு இலை போட்டு உண்ணச் செய்வான். பெரு விருந்தானால் சொல்லவே வேண்டாம்; அப்போதும் பலரை உண்பிப்பான்!’

எங்கெங்கே நல்ல நல்ல உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் எமக்குத் தந்து எம்மை நிறுத்துவான். எலும்பும் ஊனுணவும் கிடைக்கும் இடங்களை எமக்குக் கொடுப்பான். அம்பும் வேலும் நுழையும் போர்க் களத்தில் தான் முன்போய் நின்று தன் வீரத்தைக் காட்டுவான். ஊணுக்கு முந்தும் எங்களுக்கு ஏற்றவற்றைத் தந்து படைக்கு முந்தும் பெருவீரன் அவன்.”

இவ்வாறு புலவர்களுக்கு அன்பையும் உணவையும் பொருளையும் பொழிந்த அதிகமான் இறந்துபட்டான். அவன்மேல் வேலை ஏவிப் பகைவர் அவனைக் கொன்றனர். அந்த வேல் அவன் மார்பில் மட்டுமா இயங்கியது? அது எத்தனையோ பொருள்களைத் துளைத்துவிட்டது. . இதை மேலே சொல்கிறார் ஒளவையார்.

’சிறந்த இசைக்கலையில் தலைவர்களாகிய பாணர்கள் தம் கையில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரமாகிய மண்டையை அவன் மார்பில் துளைசெய்த வேல் துளைத்தது. அதுமட்டுமா? அதிகமானிடம் சென்று இரந்த இரவலர்களின் கைகளைத் துளைத்து விட்டது. அவர்கள் இனிக் கை நீட்ட இடம் இல்லை. சுற்றத்தார்கள் கண்கள் ஒளி மழுங்கி நிற்கும்படியாக, அழகிய சொல்லையும் நுட்பமாகிய ஆராய்ச்சியையும் உடைய புலவர்கள் நாவிலே போய் அந்த வேல் விழுந்தது. இனி அந்தப் புலவர்கள் எப்படிப் பாடுவார்கள்?

‘எங்களுக்கு எப்போதும் ஆதாரமாக இருந்த என் அப்பன் இப்போது எங்கே இருக்கிறானோ? இனிமேல் வள்ளல் என்று சொல்லி வாயாரப் பாடும் புலவரும் இல்லை; அப்படி யாராவது பாடினாலும் அவருக்கு ஒரு பொருளை வழங்குபவரும் இல்லை.’

*உலகத்தில் பணம் படைத்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் எல்லாரும் தம்மிடம் உள்ளதைக் கொடுக்கிறார்களா? அதுதான் இல்லை. குளிர்ந்த நீர்த் துறையிலே பகன்றை என்ற கொடியில் நிறையப் பூ இருக்கும். அதில் தேன் கூட இருக்கும். ஆனால் அந்தப் பூவை யாரும் அணிந்து கொள்கிறதில்லை. அது தன் பாட்டுக்குப் பூக்கும்; பிறகு வாடிச் சருகாகிவிடும். அது போலப் பணத்தை வைத்துக் கொண்டிருந்தும் பிறருக்குக் கொடுக்காமல் விணாக மாய்கின்ற உயிர்கள் மிகப் பல. எல்லாரும் அதிகமான் ஆகிவிட முடியுமா?

இவ்வாறு சொல்லி முடிக்கிறார் ஒளவையார். பாட்டில் மன்னே என்ற சொல் அடுத்தடுத்து வருகிறது. அது கழிவிரக்கத்தைச் சுட்டி நிற்பது; அதாவது, 'இப்போது இல்லாமற் போயிற்றே! என்ற வருத்தத்தை உள்ளடக்கியது. இந்தப்பாட்டை மன்னைக் காஞ்சிக்கு உதாரணமாக நச்சினார்கினியர் தொல்காப்பிய உரையில் காட்டி யிருக்கிறார்.

பாட்டு முழுவதையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் இந்தக் கழிவிரக்கம் நன்றாகத் தெரியவரும்.

[ கலத்தன் - கலத்தை வைப்பவன். தடி - தசை, நரந்தம் - நரந்தம் பூ. புலவு - புலால் நாற்றம், தைவரும் - தடவுவான். இரும்பாணச் - கருகிறம் பெற்ற பாணர். மண்டை - வாயகன்ற பாத்திரம். உரீஇ - உருவி. புன்கண் - ஒளி இழந்த கண். தேர்ச்சி - ஆராய்ச்சி. வீழ்ந்தன்று - வீழ்ந்தது. நிறம் - மார்பு. ஆசு - பற்றுக்கோடு. பனித்துறை - குளிர்ச்சியை உடைய நீர்த்துறை. பகன்றை-நீர்த்துறை யில் வளரும் ஒரு கொடி. நறை-தேன். வைகியாங்கு - வீணே இருந்தாற்போல. தவப்பல-மிகப்பல.]

இவ்வாறு பலரும் வருந்தப் பகையரசர் மாள அமர் பொருது வென்ற வீரர்கள் குடித்து மகிழும்படி அரசன் மதுவை வழங்கச் செய்கிறான். அதைச் சொல்வது கட்காஞ்சி.

போரில் இறந்துவிட்ட வீரர்களின் மனைவிமார் தாமும் அவர்களுடன் உயிர்விடத் துணிகின்றனர். வீரர்களின் உடலை எரிக்கும் எரியிலே தாமும் வீழ்ந்நு தம் கற்பின் திறத்தை உலகம் போற்றச் செய்கின்றனர். அவர்களுடைய துணிவைக் கண்டு உலகம் அஞ்சுகிறது.

சில சமயங்களில் வீரனுடைய மார்பைத் துளைத்து அவனை வீழ்த்திய வேலையே எடுத்து அதனைத் தன் மார்பில் பாய்ச்சிக்கொண்டு அவன் மனைவி இறந்துபடுவதும் உண்டு. “உலகத்தில் கற்பு என்பது நாம் கண்டு அஞ்சும் கடுமையை உடையது. பகைவர் ஒச்சிய வேலைத் தன் மார்பில் ஏற்றுப் போக்களத்தில் வீழ்ந்தான் வீரன். அது பாராட்டுதற்குரியது. ஆனால் அந்த வேலே அவனுடைய மனைவிக்கும் கூற்றாகிவிட்டது. என்ன கடுமையான செயல் இது!’ என்று ஒரு பாடல் சொல்கிறது.

வீரர்கள் போர்க்களத்தில் அஞ்சாது பொருது தம் மார்பில் படைகளை ஏற்று உயிர்விடுவது பெருவீரம். அந்த வீரத்தினால் மற்றவர்களுக்கு உண்டாகும் வியப்பைச் சிறிதாக்கி விடுகிறது, இத்தகைய மகளிரின் துணிவான செயல். ஆடவர்கள் ஒரு வகையில் வீரத்தைக் காட்டுகிறார்கள் என்பது உண்மை; ஆனால் இந்த மங்கையரோ அதனினும் பெரிய வீரத்தைக் காட்டி உயிரை விடச் சிறிதும் அஞ்சாமல் கற்பை நிலை நிறுத்துகிறார்கள்.

காஞ்சித் திணையில் பெண்களின் சம்பந்தமான பல துறைகள் உண்டு. அவற்றில் ஒன்று மகட்பாற் காஞ்சி. பழைய காலத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களும், குறுநில மன்னர்களாகிய வேளிர் குலத்தில் பிறந்தவர்களும் தமக்கு ஏற்ற குலத்திலே பெண் கொண்டு மணப்பது வழக்கம். ஒரு மன்னனுடைய மகளை வேறு ஒரு மன்னன் தனக்கோ, தன் மகனுக்கோ மணம் செய்து கொடுக்க வேண்டுமென்று கேட்கும்போது, மகளைப் பெற்றவன் அந்தச் சம்பந்தத்தை விரும்பாமல் இருப்பதும் உண்டு. ஆகவே, அவன் மகளை மணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை என்று மறுத்துச் சொல்லி அனுப்பிவிடுவான். அந்த மறுப்பைக் கேட்டு, பெண் கொள்ள விரும்பிய மன்னன் கோபம் கொண்டு போர்க்கு எழுவதும் உண்டு. அப்போது மகளைப் பெற்றவனுக்கும் அவனுக்கும் போர் நிகழும். அந்தப் போரைச் சொல்வதே மகட்பாற்காஞ்சி என்னும் துறையாகும்.

பாரியென்னும் பெருவள்ளலுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். உருவாலும் திருவாலும் கல்வியாலும் பண்பினாலும் சிறந்தவர்கள் அவர்கள். முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் தனித்தனியே தமக்கு அந்தப் பெண்களை மணம் புரிவிக்க வேண்டு மென்று கூறி ஆள் அனுப்பினர். பாரி அதற்கு இசைய வில்லை. மந்தை மந்தையாகப் பல மனைவிமார்களை ஆந்தப் புரத்தில் வைத்துக்கொண்டிருக்கும் அவர்களை மனத்தால் தன் பெண்களின் வாழ்வு ஒருவகை அடிமை வாழ்வாக முடியும் என்று பாரி எண்ணினான். ஆகவே அவன் தன் பெண்களை அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க இசையவில்லை. அவன் மறுத்துவிட்டதை உணர்ந்த முடிமன்னர் மூவரும் கோபம் கொண்டனர். பாரி ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் புகழ் தமிழ்நாடு எங்கணும் பரவியிருந்தது. புலமையிற் சிறந்த பெருமானாகிய கபிலர் அவனுடைய ஆருயிர் நண்பராகவும் அவைக்களப் புலவராகவும் விளங்கினார். இவற்றையெல்லாம் கண்ட முடியுடை மன்னர்களுக்கு முன்பே பொறாமை இருந்து வந்தது. இப்போது பாரி தன் பெண்களை மணஞ்செய்து தர மறுக்கவே, இதுவே காரணமாகக் கொண்டு அவனோடு போரிட்டு அவனை அழித்துவிடலாம் என்று எண்ணினார்கள். அவர்கள் தம்முட் கலந்து யோசித்துப் போரிடுவதென்று உறுதி செய்து கொண்டார்கள்.

பறம்பு என்னும் மலையின்மேல் கோட்டையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தான் பாரி. அவனுடைய காட்டுக்கும் பறம்பு என்றே பெயர். முந்நூறு ஊர்களை உடையது அது. பாரி நாளடைவில் தன்பால் வந்து பாடும் புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒவ்வோர் ஊராக வழங்கிக் கொண்டு வந்தான். அதனால் அவனுடைய புகழ் எங்கும் பரவியது.
மூவேந்தரும் பறம்பு மலையை முற்றுகையிட்டார்கள், அவர்களால் பறம்பின்மேல் ஏற முடியவில்லை. கீழிருந்த படியே அம்பை எய்தார்கள். அக்த அம்பால் மேலே இருப்பவர்களுக்கு எந்தத் தீங்கும் உண்டாகவில்லை. அவர்கள் விட்ட அம்புகளை கீழே இருந்த படைகளின்மீது பட்டுத் துன்பத்தை உண்டாக்கின. மேலே இருப்பவர்களுக்கு மலையில் விளைந்த உணவுப் பண்டங்களை போதுமானவையாக இருந்தன. போர் நெடுநாள் நீடித்தது. கடைசியில் மூவேந்தரும் சோர்ந்துபோய்த் தம் படைகளுடன் மீண்டனர். கடைசியில் வஞ்சகத்தால் பாரியைக் கொன்றனர்.

தன் பெண்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியைக் கடைப்பிடித்தான் பாரி. அதைக் காரணமாக வைத்து மூவேந்தரும் போர் செய்தார்கள். மகளின் பொருட்டுப் போர் நிகழ்வதுண்டு என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த சான்ருகும்.


இப்படிப் பலவாறாகப் போர் நிகழும்போது, படையெடுத்து வந்த அரசனுடைய போர்ப்படைகளை எல்லாம் தோல்வியுறச் செய்கிறான், நாட்டை ஆளும் அரசன்; அவன்தான் காஞ்சிமாலை யணிந்து போர் செய்கிறவன். களையை முற்றும் களைத்து எறிவதுபோலப் பகைப்படைகளில் ஒரு சிறு பகுதிகூட எஞ்சாமல் அடியோடு அழித்துப் போர்க்களத்தை முன் இருந்ததுபோல ஆக்கிவிடுகிறான். பகைமன்னர் தமக்குத் துணயாக வேறு பலரையும் சேர்த்துக்கொண்டு வந்து போர் செய்கிறார்கள். அப்படித் துணை பெற்றும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. யாவரும் தோல்வி யுறுகிறார்கள்.

என்று இந்தச் செயலைச் சிறப்பிக்கிறது புறப்பொருள் வெண்பா மாலை. ’வேந்தர் எல்லாரையும் சினம் பொங்கிக் கக்கச் செய்து, அவரை முன்பு இருந்த போர்க்களத்தினின்றும் அடித்து ஒட்டியது' என்பது இதன் பொருள். இந்தத் துறைக்கு முனைகடி முன்இருப்பு என்று பெயர்.

இவ்வாறு நடைபெறும் போரினிடையே வேறு சில நிகழ்ச்சிகளும் நிகழ்வதுண்டு. அவற்றைத் தொல்காப்பியத்தின் உரைகாரர் குறித்திருக்கிறார். கடிமரம் தடிதல் என்பது அவற்றில் ஒன்று.

பழங்காலத்தில் ஒவ்வொரு மன்னர் குலத்திற்கும் ஒவ்வொரு காவல் மரம் உண்டு. இப்போது இறைவன் எழுந்தருளிய தலங்களில் சிறப்பாக ஒரு மரத்தைப் போற்றி வழிபடுவார்கள். அதைத் தல விருட்சம் என்பார்கள். அதுபோல வழிவழி வந்த மன்னர்கள் பாதுகாத்து வரும் குல விருட்சத்தையே காவல் மரம் என்றும், கடிமரம் என்றும் சொல்வார்கள். தக்க வீரர்களை வைத்து அந்த மரத்தைக் காத்து வருவது மன்னர் கடமைகளில் ஒன்று. காவல் மரத்துக்கு ஏதேனும் தீங்கு வந்தால் மன்னர் குலத்துக்கே தீங்கு வரும் என்ற எண்ணம் இருந்து வந்தது. பகையரசர்கள் அந்தக் காவல் மரத்தை வெட்டிவிடுவார்கள். வெட்டிய மரத்திலிருந்து முரசு செய்து தம் வெற்றிக்குறியாக வைத்து முழக்குவரர்கள்.

சேர நாட்டுக்கு மேற்கே மேல்கடலில் சில தீவுகளில் கடம்பர் என்ற அரசர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய காவல் மரம் கடம்பு. சேரர் அவர்களை வென்றனர். கடம்பரின் காவல் மரத்தை வெட்டி அதைக் கொண்டு முரசு செய்து அடித்தனர். இதைப் பதிற்றுப்பத்து என்ற சங்க நூல் கூறுகிறது.

[ பலர் சூழ்ந்து பாதுகாத்த, திரண்ட பூங்கொத்துக் களையுடைய கடம்ப மரத்தின் காவலையுடைய திரண்ட அடிமரத்தை வெட்டும்படி வீரர்களை ஏவி, அந்த அடி மரத்தினால் பகைவரை வெற்றி கொண்டு அடித்து முழக்கும் முரசைச் செய்த வெல்லும் போர்.)

இப்படியே பழையன் என்பவனே வென்று அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டினான் ஒரு சேரன்.

நன்னன் என்னும் மன்னனுடைய காவல் மரம் மா, அதன் காயை ஒரு பெண் பிறர் அறியாமல் பெற்றுத் தின்றாள் என்பதற்காக அந்தப் பெண்ணைக் கொல்லும்படி செய்தான் அரசன். இதிலிருந்து காவல் மரத்தை அரசர்கள் எவ்வாறு காப்பாற்றினர்கள் என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

காவல் மரத்தைத் தடிவது ஒரு வீர நிகழ்ச்சி. படையைச் சேர்ந்த யானையும் குதிரையும் நீர்த்துறைக்கு வந்து படியும்போது அவற்றைச் சிலர் கொன்று விடுவார்கள். ஊருக்குப் புறம்பே உள்ள வீதிகளைச் சுட்டுவிடுவார்கள். இவை போன்ற பல செயல்களை இலக்கணத்தில் பெயர் சொல்லிக் குறித்த துறைகளுக்குள் அடக்கிக்கொள்ள வேண்டும் என்று உரைகாரர் கூறுவார். "கடிமரம் தடிதலும், களிறும் மாவும் துறைப்படிவன வற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற் படும்" என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
-----------

7. மதில் முற்றுகை


தரையில்மட்டும் போர் செய்யும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. சிறுபான்மை கடற்போர் நிகழ்ந்தது. பகைவர்கள் நாட்டைக் குலைக்காதவண்ணம் பல வகையான பாதுகாப்புக்களை அரசர்கள் செய்திருந்தார்கள். அங்கங்கே கோட்டைகளைக் கட்டி வீரர் பலரை வைத்திருந்தார்கள். ஒரு காட்டில் இவ்வாறு அமைந்த கோட்டைகள் பல உண்டு. கோட்டையை அரண் என்று சொல்வார்கள்.

அரசனுக்குரிய உறுப்புக்களில் அரணும் ஒன்று. நில அரண், நீர் அரண், மலையரண், காட்டரண் என்று பலவகை அரண்கள் உண்டு. நிலத்திலும் மலையின் மேலும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு அரசர்கள் பாதுகாப்புச் செய்துகொண்டார்கள். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி இருக்கும். அதில் முதலைகளை விட்டு வளர்ப்பார்கள். பழைய காவியங்களில் மதிலையும் அகழியையும் வருணித்திருக்கும் பகுதிகளைக் காணலாம். இன்றும் தஞ்சை, வேலூர் முதலிய நகரங்களில் கோட்டை கொத்தளங்களும் அகழிகளும் இருக்கின்றன.

அரசர்கள் ஒருவரை ஒருவர் பகைத்து எதிரிட்டு வந்து ஒரு போர்க்களத்தே பொருவார்கள். அப்படியின்றி ஓர் அரசன் மற்றேர் அரசனுடைய தலைநகரை முற்றுகை யிட்டு அங்குள்ள மதிலுக்கு வெளியே நின்று பொருவதும் உண்டு. மதிலுக்குள் இருக்கும் அரசன் உள்ளிருந்தபடியே ஆயுதங்களை எறிந்து போர்செய்வான்.

மதிலின்மேல் பல வகை ஆயுதங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். எதிரிகளின்மேல் வீசி அவர்களை அழிக்க அவை உதவும். படைக்கலங்களை எறியும் வீரர்கள் அங்கங்கே மறைவில் நின்று போரிடுவார்கள் அம்பு முதலியவற்றை மறைவாக வைத்திருக்கும் துவாரங்களும் மறைவிடங்களும் மதிலின்மேல் இருக்கும். ஏணி வைத்து ஏறாத வகையில் பலவகையான பாதுகாப்புக்களை மதிலில் அமைத்திருப்பார்கள். மதில்மேல் மறைவாக நின்று அம்பை எய்யும் இடத்துக்கு ஏப்புழை என்று பெயர். வளைவு வளைவாக மதிலின்மேல் இருக்கும் உறுப்புக்களை ஞாயில் என்று சொல்வார்கள். மதிலுக்குள்ளே வீரர்கள் மறைவாக நிற்பதற்கு மேடைகள் உண்டு. அவற்றைப் பதணம் என்று சொல்லுவார்கள்.

மதிலைச் சுற்றியுள்ள அகழியைக் கடக்கப் பலகையினால் பாலம் அமைத்திருப்பார்கள். போர்க்காலங்களில் அவற்றைத் தூக்கிவிடுவார்கள். மதிற்கதவுகள் மிகவும் உறுதியானவை. உள்ளே பெரிய பெரிய மரவிட்டங்களைக் கதவுக்குப்பின் பலமாக அமைத்திருப்பார்கள். யானைகளைக் கொண்டு மதிற்கதவுகளே இடித்து மோதுவார்கள். அவை தம்முடைய கொம்புகளால் கதவுகளை மோதும்.

அகழிக்கு அப்பால் காடுகளை வளர்த்திருப்பார்கள். அவற்றை மிளை என்றும் குறுங்காடு என்றும் சொல்வார்கள். அதுவே காட்டரண். மதிலை முற்றுகையிட்டுப் போர் செய்து வெல்வது என்பது மிகவும் அரிய செயல். மதிலுக்குள் இருப்பவன் மிகவும் பாதுகாப்பாக இருப்பவனாதலின் அவனை எளிதிலே தோல்வியுறச் செய்ய முடியாது. வெளியிலிருந்து உணவுப் பண்டங்கள் போகாதபடி பல நாட்கள் புறத்தே தங்கி முற்றுகையிட வேண்டி வரும்.

மதிலை முற்றுகையிட்டுப் புறத்தே இருந்து போரிடும் பகுதியை உழிஞைத் திணை என்பார்கள். மதிலுக்குள் இருப்பவன் செய்யும் போர்ப்பகுதியை நொச்சித் திணை என்பர். இரண்டையுமே உழிஞை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

இராமபிரான் இலங்கைக்குச் சென்று இராவணனோடு போர்செய்வதற்கு முன் விபீடணன் அவன்பால் அடைக்கலம் புகுந்தான். அப்பொழுது இராமன் இலக்குவனைக் கொண்டு அவனுக்கு முடிசூட்டும்படி செய்தான். உறுதியாகப் பகைவனை வென்று விடலாம் என்ற மன வலிமையினால் செய்த காரியம் இது. இதை, ’கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்' என்று தொல்காப்பியர் வகுக்கிறார், "பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான்போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி" என்பது இதன் பொருள்.

ஒரு வீரனேப் பாராட்டும்போது, "பகைவர்களுடைய மதில் இன்னும் அவர்கள் கையில் இருக்கவும் பாணர்களுக்கு அந்நாட்டிலுள்ளவற்றைக் கொடுப்பதாக உறுதி கூறும் வள்ளன்மையுடையவனே!’ என்று புலவர் ஒருவர் பாடுகிறார்;

என்பது புறநானூற்றில் வருவது.

‘இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என்று உரையாசிரியர் அங்கே எழுதுவர். .

இவ்வாறு உறுதிமொழி கூறிய அரசன் தன் வலிமையினால் தான் கூறியவாறே பகைவரை வென்று தன் உறுதிமொழியைக் காப்பாற்றுகிறான். இதனைக் கண்டு புலவர்கள் பாராட்டுகிறார்கள்.

தகடூர் யாத்திரை என்ற பழங்காவியத்தில் ஒரு புலவர் இந்த நிலையைப் பாராட்டும் பாடல் ஒன்று வருகிறது. 'அரசனுக்குச் சீற்றத் தீப் பொங்கியது. அது விட்டு எரிந்தது. அதன் பயனை இப்போது பார்க்கிறோம். கோடரிகளை எடுத்துச் சென்று அகழிக்குப் புறம்பே உள்ள குறுங்காடாகிய மிளையை அழித்தார்கள் வீரர்கள். பிறகு அகழியைத் தாண்டிச் சென்று மதிலை இடித்தார்கள். மதிலின் இடிபாடுகளால் அகழியைத் தூர்த்தார்கள். வாளை ஏந்திய அரசன் தன் படைவீரர்களோடு மதிலுக்குள் இருக்த அரசனை எதிர்த்து வென்றான். அவனிடம் இருந்த பொருள்களையெல்லாம் பற்றிக் கொண்டு பலருக்கும் வீசினான். அவற்றைப் பலரும் பெற்று இன்புற்றார்கள். இவ்வாறு ஏற்று உண்டதற் கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அரசனுடைய சிற்றத் தீ விட்டு எரியவிட்ட சிறப்புத்தான்." - இக்கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது அந்தப் பாட்டு.

[மழு-கோடரி. மிளை-காட்டரண். ஏற்று-எதிர்த்து. உண்டது-நுகர்ந்தது. மட்டு அவிழ் கண்ணி மறவேந்தன் - தேன் சொரியும் மாலையையுடைய வீரத்தைப் பெற்ற அரசன். மிகை - சிறப்பு.]

மதிலுக்குள் இருக்கும் வேந்தனைப் பொருது அழிக்க வேண்டும் என்ற மனவேகம் மீதூர்வதனால் புறத்தே முற்றுகையிட்ட அரசன் சில சமயங்களில் சபதம் செய்வான். ‘இன்று பகலுக்குள் இந்த மதிலைக் கைக் கொள்ளாமல் நான் உண்பதில்லை’ என்று அவன் வஞ்சினம் கூறுகிறான். இப்படிச் சொன்னதைக் கேட்ட புலவர்கள் வியப்படைகிறார்கள். ‘இவன் வயிறு வாட இந்த மதிலை வென்று பலரை அழித்து விட்டுப் பின்பே உண்ணப் போகிறான். இவ்வளவு நாள் ஆறாமல் பசித் தீயினால் நலிந்த கூற்றுவனுடைய வயிறு எப்படிப் புடைத்து வெடிக்குமோ, அறியோம்’ என்கிறார்கள்.

[எயிலகம் - மதிலின் உள்ளிடம். பொற்றாரான் - பொன் மாலையை அணிந்த அரசன். போனகம்-உணவு. எற்றாம் கொல் - என்ன ஆகுமோ? மறலி - கூற்றுவன்.]

இவ்வாறு மதிலை முற்றுகையிடச் செல்லும் அரசனும் நல்ல நாள் பார்த்துக் குடையையும் வாளையும் புறப்பட விடுவான். முரசத்துக்குப் பூசை செய்து முழக்கும்படி செய்வான்.

தன் படைகளோடு அரசன் புறப்பட்டு விடுகிறான். அவனுடைய ஊக்கத்தையும், பகைவன்பால் கொண்ட சிற்றத்தையும், தக்கபடி ஆராய்ந்து போரை நடத்தும் திறமையையும், போருக்கு ஏற்ற பொருட்சிறப்பையும் கண்டு புலவர்கள் பாராட்டுகிறார்கள்; இவ்வளவு தகுதிகளையும் பெற்ற அரசனுக்கு எவ்வளவு பெரிய அரணாக இருந்தால் என்ன? இவனுக்கு அகப்படாத கோட்டையே இல்லை’ என்று வியப்படைகிறார்கள். அரசனுடைய நிலையைக் காணும்பொழுது அவர்களுக்குப் பழைய செய்திகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. திருமால் சோ என்னும் அரணத்தை முன்பு அழித்தான். அவன் தானா இவன்?’ என்று புலவர்கள் பாராட்டுகிறார்கள். "சிவபிரான் அன்று உழிஞையைச் சூடி வானிலே பறந்த மூன்று மதில்களை அழித்தான்’ என்று திரிபுராந்தகனை நினைக்கிறார்கள். வீரர்களில் வீரனாகிய முருகனை மறந்து விடுவார்களா? சூரபன்மனாகிய அசுரன் கடலுக்குள் மறைந்து மாமரமாகி நின்றன். கடலையே நீரரணாகக் கொண்டு அவன் நின்றபோது தன் வேலை ஒச்சி அவனை அழித்தான் முருகன், இதைப் பாராட்டுகிறார்கள் புலவர்கள். இந்தத் துறையைக் காந்தள் என்று கூறுவர்.

[கரிய கடலினிடையே சூரனாகிய மாமரத்தை அழித்தவனுடைய காந்தட் கண்ணியின் சிறப்பை எடுத்துச் சொன்னது.]

பெரும்படை மதிலை நோக்கிச் செல்கிறது. மதிலின் புறத்தே வந்து தங்குகிறது. வீரர்கள் மதிலைப் பார்க்கிறார்கள். அது எளிதிலே கவர்வதற்கு உரியதாகத் தோற்றவில்லை. "வீரபானமாகிய மதுவை மயிலைப் போன்ற மங்கையர் கொடுக்க அதனை உண்டு வீரர்கள் கண்கள் கனல் கொப்புளிக்கப் போர் செய்யத் தொடங்கி, மதிலில் உள்ளவர்கள் அழியும்படி பொருதாலும், பகையரசனுடைய மதிலை வெல்வது அரிது’ என்று கூறுகின்றனர். ‘புகழ் கெடும்படி நம் உயிரே பெரிதென்று பாதுகாத்துக் கொண்டா நிற்பது? இதைவிட இழிவான காரியம் வேறு இல்லை. எல்லாரும் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். மதிலினுள்ளிருந்து அம்பு வருமென்று ஏன் அஞ்ச வேண்டும்? கையில் கிடுகுகளை எடுத்துக் கொண்டால் அந்த அம்புக்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று பிறகு தைரியம் கொள்கிறார்கள். கேடயத்தைக் கிடுகு என்றும் தோல் என்றும் சொல்வார்கள். அதை ஏந்தும் படையைக் கிடுகுபடை என்பர். அதன் சிறப்பைச் சொல்லும் துறைக்குத் தோலிழிஞை என்று பெயர்.

மதிலை அணுகுவதற்கு முன்பு மிளையைக் கடந்து செல்வார்கள். மிளை என்பது அகழிக்கு அப்பால் பாதுகாப்புக்காக அமைந்த காடு. அதனை அழித்துவிட்டு மேலே செல்லுகிறார்கள். காட்டுக்கு அப்பால் மதிலைச் சுற்றியிருப்பது அகழி. அதைக் கிடங்கு என்றும் சொல்வார்கள். தோணியைக் கொண்டும் தெப்பம் முதலியவற்றைக் கொண்டும் அகழியைக் கடக்க முயல்கிறார்கள். அப்பொழுது பகைவர்கள் மதில்மேல் இருந்தபடியே அம்புகளை வீசுகிறார்கள். அப்படி வீசியும் அவற்றினின்றும் அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்கிறார்கள். போர் அகழியிலேயும் நடைபெறுகிறது. இதைப் பாசி நிலை என்பர். நீரின்மேல் மிதந்து அலையும் பாசி போன்ற நிலையில் அந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

அகழியைக் கடந்து ஏறிவிடுகிறார்கள். அப்பால் வானையளாவிய மதில் இருக்கிறது. அதன்மேல் பெரிய ஏணியைக் கட்டி நிறுத்தி ஏறுகிறார்கள். அப்போது மேலிருந்து மதிலிக்குரிய மன்ன்னுடைய வீரர்கள் பலவகை ஆயுதங்களை வீசுகிறார்கள். பழங்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய படைக்கலங்களுக்கு வெவ்வேறு பெயர் இருக்கிறது. கல்லுக்குண்டுகளைப் போன்றன சில; அவற்றை இடங்கணி என்பர்; பாம்பைப் போல சில சீறி வரும்; குரங்கைப் போலச் சில பாய்ந்து பற்றும்; அவற்றைப் பாம்பு என்றும் கடிகுரங்கு என்றும் வழங்குவார்கள். வில்லிலிருந்து அம்பை வீசுவார்கள்; வேலை வீசுவார்கள்; பழுக்கக் காய்ந்த மணலை வீசுவார்கள். இவற்றுக்கெல்லாம் தப்பிக்கொண்டு முற்றுகையிடும் வீரர்கள் ஏணியின்மேல் ஏறுகிறார்கள். உடும்பைப் போலவும் பாம்பைப் போலவும் விடாப்பிடி யாகப் பற்றிக்கொண்டு ஏறுகிறார்கள்.

எப்படியோ மதிலின்மேல் வீரர்கள் ஏறிவிடுகிறார்கள். மதிலுக்குள்ளேயும் காவற்காடு இருக்கிறது. பறவையைப் போல அதனுள்ளே குதிக்கிறார்கள்.

’கொடுமுடிகள் உயர்ந்து நிற்கும் மலேயிலிருந்து, நிலத்தைப் பார்த்து அதில் உள்ள இரையைக் கொள்ள நினைக்கும் பறவைக் கூட்டத்தைப்போல, பகைவருடைய பலமெல்லாம் ஒழியும்படி, மத்தளத்தைப் போன்ற வலிய தோளையுடைய வீரர்கள் மதிலுக்குள்ளே ஆரவாரம் செய்தபடி பாய்ந்து இறங்கினார்கள்’ என்று புறப்பொருள் வெண்பா மாலை இந்தக் காட்சின்யச் சொல்கிறது.

[கோடு-சிகரம். தோடு-கூட்டம். கூடார்-பகைவர். முரண்-பலம். பாற-அழிய, முழவு-மத்தளம். மள்ளர்- வீரர். அரண் அகத்து-மதிலுக்குள்ளே. இழிந்தார். இறங்கினர்.]

சில பெரிய இராசதானி நகரங்களில் மூன்று மதில்கள் இருக்கும். புற மதில் ஒன்று; அப்பால் இருப்பது இடை மதில்; அதற்கும் அப்பால் அரண்மனையைச் சுற்றியிருப்பது அக மதில். ஒரு மதிலைத் தாண்டி உள்ளே புகுந்து உள்ளே உள்ள காட்டையும் தாண்டுவதற்குள் மதிலுக்குள் உள்ள வீரர்கள் பொருது எதிர்ப்பார்கள். ஒருவாறு வென்று மேல்சென்றாலும் அப்பால் மற்ற இரு மதில்களையும் வென்று உட்செல்ல வேண்டும்.

மதிலின் புறத்தே முற்றுகையிட்ட படை தங்குகிறது. மதில் குறுக்கே நிற்பது கண்டு படைவீரர்கள் சற்றே தியங்குகிறார்கள். அப்போது காலை நேரம். மதிலுக்குள்ளிருந்து முரசம் முழங்குகிறது. அதன் ஒலி புறத்தே உள்ள வீரர்களுக்குச் சவுக்கடி கொடுத்தது போல இருக்கிறது. அரசனுக்கு மான உணர்ச்சி எழுகிறது. அவன் கண்கள் சிவக்கின்றன. தன் வேலைப் பார்க்கிறான்; படைத் தலைவர்களைச் சீறும் புலி நோக்குவது போலப் பார்க்கிறான். அப்போதுதான் அங்கே சில வீரர்கள் அடுப்பு மூட்டி உணவு சமைக்க ஏற்பாடு செய்கிறார்கள். முரசொலி அவர்கள் காதில் விழுகிறது. அரசன் கண்களில் கனல் கொப்புளிப்பதையும் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களுடைய மானமும் கொழுந்துவிடத் தொடங்குகிறது. சமையல் செய்யும் பாத்திரங்களையும் அகப்பைகளையும் கரண்டிகளையும் அப்படியே வீசி மதிலுக்குள் எறிகிறார்கள்: "இனிமேல் மதிலுக்குள் புகுந்து மாலையில் அங்கே சமையல் செய்து சாப்பிடுவோம்' என்று உறுதி பூணுகிறார்கள்.

[மதில் இயம்ப-மதிலுக்குள் ஒலிக்க. வேலை-தன் கையில் உள்ள வேலாயுதத்தை. விறல் வெய்யோன். வெற்றியை விரும்பும் அரசன். அடுகம் அடிசில்-சோறு சமைப்போம். தொடு கழலார்-வீர கண்டையை அணிந்த வீரர்கள். மூழை-அகப்பை, தொடுகழலார் மதிலுள் இட்டார்]
---------

8. முற்றுகை வெற்றி


பகைவருடைய மதிலை முற்றுகையிட்டுப் போர் செய்து கொண்டிருக்கிறார்கள் வீரர்கள். மதிலுக்குள் இருக்கும் வே ந்தன் மதிற்கதவைத் திறந்து வெளியே வந்து போரிடவில்லை. பல காலம் இந்த முற்றுகை தொடர்ந்தால் உள்ளே இருக்கும் மக்களுக்கு உணவுப்பொருள் குறைந்துவரும். அவர்களுடைய வாழ்வு அல்லலுக்கு இடமாகும். மதிலுக்கு உரியவனாகிய அரசன் வெளியே வந்து போரிடும் தைரியம் இல்லாமல் மதில் கதைவைத் திறந்து சமாதானம் பேச முன்வராமலும் இருப்பதுண்டு. அப்போது முற்றுகையிடும் வேந்தன் உள்ளே உள்ள மக்கள் துன்புறுவதை எண்ணி இரங்கி மதிற்குள் இருக்கும் அரசனுக்கு, “ நீ மதிற்கதவைத் திறந்து சமாதானம் பேச வந்தால் நாம் ஏற்றுக் கொள்கிறோம்” என்று சொல்லி அனுப்புவான்.

பழங்காலத்தில் இப்படி நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைப் புற நானூற்றிலிருந்து அற்கிறோம். நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் உறையூரை இராசதானியாக் கொண்டு ஆண்டுவந்தான். சோழக் குலத்தில் பிறந்த நெடுங்கிள்ளி என்பவரின் குறு நில மன்ன்னாக வாழ்ந்து வந்தான். அவனுக்குச் சோழப் பேரரசையே கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஆயினும் அதற்குரிய படைப்பலம் அவனிடம் இல்லை. நலங்கிள்ளி வேறு நாட்டுக்குப் போரிடச் சென்றிருந்தபோது அவனுக்குரிய ஆவூர் என்னும் இடத்தைக் கைப்பற்றிக்கொண்டு அங்கிருந்த கோட்டையில் படைகளுடன் புகுந்தான் நெடுங்கிள்ளி.

நலங்கிள்ளிக்கு அவன் செயல் தெரிய வந்தது. உடனே ஒரு சிறு படையை அனுப்பிக் கோட்டையை முற்றுகையிடச் செய்தான். கோட்டைக் கதவை உடைக்காமல், மதிலுக்குச் சேதம் ஏதும் நேராமல், கோட்டைக்கு வெளியே படைகளை நிற்கும்படி மட்டும் ஏவினன். தன் கோட்டை பிறன் கையில் அகப்பட்டிருந்தாலும் அதனை அழிக்க அவனுக்கு மனம் வரவில்லை. சில காலம் மதிலின் புறத்தே படை பாதுகாப்பாக இருந்தால் உள்ளே உள்ளவர்கள் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும்படி நேரும். அப்போது உள்ளே புகுந்திருந்தவன் தானே கதவைத் திறந்து கொண்டு சமாதானத்துக்கு வந்து விடுவான் என்று நலங்கிள்ளி எண்ணினான். ஆனால் நெடுங்கிள்ளி அவ்வாறு செய்யவில்லை. உள் இருந்த படியே தன் வீரர்களை வெளியிலே உள்ள படையின் மீது அம்பை எய்யச் செய்தான்; ஆயுதங்களை வீசச் செய்தான். அவற்றினின்றும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் கவசங்களும் கேடயங்களும் புறத்தில் இருந்த படைவீரர்களிடம் இருந்தன. ஆகையால் உள்ளே இருந்து வரும் ஆயுதங்களுக்கு அவர்கள் அஞ்சவில்லை.

தங்கள் ஆயுதங்களால் ஒன்றும் பயன் இல்லாதது கண்டு உள்ளே இருந்த வீரர்கள் சும்மா இருந்துவிட் டார்கள். வெளியில் நலங்கிள்ளியின் படை பாளையம் இறங்கியிருந்தது. நாளாக ஆக உள்ளே உணவில்லாப் பஞ்சம் தலைகாட்டியது. முரட்டுப் பிடிவாதமாக நெடுங்கிள்ளி இருப்பதனல் மதிலுக்குள் இருக்கும் மக்களுக்குத் துன்பம் உண்டாகும் என்பதை நலங்கிள்ளி உணர்ந்தான். தம் அவைக்களப் புலவராகிய கோவூர்கிழாரை உள்ளே போய்த் தூது சொல்ல அனுப்பினான். பயத்தினால் அனுப்ப வில்லை; கருணையினல் அனுப்பினான்.

புலவர் உள்ளே சென்றார், அவர் வருவதை ஓர் ஒலையில் எழுதி அம்பிலே கோத்து உள்ளே விழச் செய்தான் நலங்கிள்ளி. ஒலையில் உள்ள செய்தியைக் கண்ட நெடுங்கிள்ளி கோவூர்கிழாரை வரவேற்கச் சித்த மானான். அவரை மட்டும் உள்ளேவிட ஏற்பாடு செய்தான்.

கோவூர்கிழார் மதிலுக்குள்ளே சென்றார். அங்கே உள்ள காட்சிகளைக் கண்டார். மக்கள் படும் இடர்கள் அவருக்குத் தெரியவந்தன. யானைப்படையைப் பார்த்தார். போதிய கவளம் கிடைக்காமையால் யானைகள் எலும்பும் தோலுமாக இருந்தன. பசி தாங்காமல் அடிக்கடி பிளிறின. மகளிர் முகத்தில் பொலிவே இல்லை. வேண்டிய அளவு தண்ணிர் இல்லாமல் மக்கள் வருந்தினார்கள். இவற்றை யெல்லாம் கண்டு மனம் வருந்திய அவர் நெடுங்கிள்ளிமுன் சென்றார், அவனைப் பார்த்துப் பேசத் தொடங்கினர்; "இங்கே உன்னைச் சூழ இருக்கும் காட்சிகளைப் பார்த்தாயா? உன் படையிலுள்ள யானைகள் முன்பு எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? நாள்தோறும் பெண் யானைகளின் கூட்டத்தோடு ஆண்யானைகள் குளத்துக்குச் சென்று படிந்து நீராடி மகிழும், நெல்லைக் கதிரோடு தின்பன அவை, நெய்யும் சோறுமாகப் பிசைந்து தரும் கவளத்தை உண்டு நடைபோடுவன அவை. இப்போது அவை கட்டுத்தறியை முறிக்கின்றன; வெறும் நிலத்தைத் துதிக்கையால் துழாவுகின்றன; பசி தாங்காமல் முழங்குகின்றன; அடிக்கடி பெருமூச்சு விடுகின்றன.”

நெடுங்கிள்ளி இப்போது பெருமூச்சு விட்டான். அவன் ஏதும் பேசவில்லை. கோவூர்கிழார், அவன் ஏதாவது சொல்வான் என்று எண்ணிச் சிறிதே நிறுத்தினார், அவன் உண்மையை எப்படி மறுக்க முடியும்? புலவர் மீண்டும் தம் பேச்சைத் தொடர்ந்தார்; ”யானைகள் இருக்கட்டும். மக்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் போதிய உணவு இல்லாமல் மெலிந்திருக்-கிறார்கள். தம் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்குப் போதிய பால் அவர்களிடம் இல்லை. அந்தக் குழந்தைகள் பசியினால் அலறுவது உன் காதில் விழவில்லையா??”

நெடுங்கிள்ளியின் முகத்தில் வாட்டம் உண்டாயிற்று. அவன் கோபம் கொள்ளவில்லை. இந்த அவலக் காட்சிகளை நாள்தோறும் பார்க்கிறவன்தானே அவன்?

“மங்கலமுள்ள அந்த மங்கையர் நிலை எப்படி இருக்கிறது? அவர்கள் நன்றாக வாழும்போது வேளைக்கு ஒரு பூவை முடித்துக் கொள்கிறவர்கள். இப்போது கணவன்மார் அருகில் இருக்கவும் பூ இல்லாமல் வெறும் கூந்தலை முடித்துக் கொள்கிறார்கள். திருமகள் விலாசம் நிரம்பி நிற்க வேண்டிய இடத்தில் இந்தக் காட்சியைக் காண்கிறேன். மக்களுக்கோ போதிய உணவு இல்லே. குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. இவற்றை யெல்லாம் நீ பார்க்கிறாயா, இல்லையா? இது உன் ஆண்மைக்கு அழகா? அறந்தான் ஆகுமா?"

நெடுங்கிள்ளியின் உள்ளத்தைப் புலவரின் சொல்லம்புகள் துளைத்தன. அவன் அழாக்குறையாகக் கோவூர்கிழாரைப் பார்த்தான்; “தாங்கள் என்ன என்ன செய்யச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டான். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த புலவர் தம் அறிவுரையை உடனே சொல்லலானர்.

”நீ இப்போது இரண்டு காரியங்கள் செய்யலாம். ஒன்று அறச்செயல்; மற்றென்று ஆண்மைச் செயல், அறத்தைக் கருதினயானால் கோட்டைக் கதவைத் திறந்து, இது உன் கோட்டை” என்று சொல்லிச் சமாதானம் செய்துகொள்வது நல்லது. ஆண்மையைக் கருதினயானால் கோட்டையைத் திறந்து வெளியிலே வந்து எதிர்த்துப் போர் செய்வது முறை. கோட்டைக் கதவை அடைத்துக் கொண்டு மக்கள் பசியாலும் தாகத்தாலும் வாடும்படி செய்வது அறமும் அன்று; ஆண்மையும் அன்று.”

இதைக் கேட்ட நெடுங்கிள்ளி சமாதானத்துக்கு வரத் துணிந்து மதிற்கதவைத் திறந்தான். கோவூர் கிழார் தூது சென்று சந்து செய்வித்தபோது கூறிய அறவுரை புறநானூற்றில் 44-ஆவது பாடலாக அமைந்திருக்கிறது.

என்று முடிவது அந்தப் பாடல். " நீ அறத்தின் வழி நடப்பவனாக இருந்தால், ”இது நின்னுடைய கோட்டை' என்று சொல்லி இதைத் திறந்துவிடுவாயாக! மறம் பொருந்தியவ னானால் போர்செய்வதற்காவது திறந்து விடுவாயாக! அவ்வாறன்றி அறம் மறம் இரண்டும் இல்லாதவனாக, திறக்காமல் அடைத்த திண்ணிய நிலையை உடைய கதவினைப் பெற்ற உயர்ந்த மதிலின் ஒரு பக்கத்தே ஒதுங்கி யிருத்தல் நாணத்தகும் செயல் ஆகும், ஆராய்ந்து பார்த்தால்" என்பது இதன் பொருள்.

இவ்வாறு கோட்டையை முற்றுகை இடும்போது சமாதானம் செய்துகொள்ளும் நிகழ்ச்சியும் நடப்பதுண்டு.


முற்றுகை நடக்கும்போது மதில்கதவை உடைத்து உள்ளே புகுகின்றனர் படை வீரர். அங்கே உள்ள யானைப் படையையும் மதிலின் காவலையும் அவர்கள் கைக் கொள்கிறார்கள்.

சில சமயங்களில் உள்ளே இருப்பவனுக்கு நண்பனாகிய அரசன் அவனுக்குத் துணையாகப் படையுடன் வருவதுண்டு.

மதிலை அழித்த அரசன் அதற்குள் கழுதையை விட்டு ஒட்டுகிறான், சோழியையும் வேல முள்ளையும் தூவுகிறான். "கழுதையேரால் உழுது உண்ணா வரகையும் கொள்ளையும் விதைத்தான்’ என்று இதைப் புலவர்கள் பாடுவார்கள். வரகு என்பது சோழியை; கொள் என்றது முள்ளை,

[சித்திரங்களை எழுதிய அழகிய மாடங்களின் இடங்களையெல்லாம் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது அதன்பிறகு சோழியையும் வேல முள்ளையும் விதைத்தாலும், தேன் கலந்த மாலையையுடைய அரசனது கோபம் போகவில்லை. நூறி-அழித்து. விளியாது-போகாது. கதம்-கோபம்.]

இது “உழுது வித்திடுதல்" என்னும் புறத்துறை.

மதிலைக் கைக்கொண்ட வேந்தன் தன் கை வாளுக்கு நீராட்டி அதற்குப் பூசை இடச் செய்கிறான். அதில் வெற்றி தரும் கடவுளாகிய கொற்றவையை ஆவாகனம் செய்து வழிபடுகிறான். தானும் அங்கே வெற்றி நீராட்டை நடத்துகிறான். இதுவரையில் பிறர் கையில் அகப்படாத அந்த மதிலென்னும் குமரியைக் கைப்பற்றி நீராடியதனால் இதனை மண்ணு மங்கலம் என்பர் புலவர். பகையரசனுடைய மதிலாகிய குமரியோடும் திருமணம் பொருந்திய சிறப்பைச் சொல்லுவது இந்தத் துறை.

என்பது இதன் இலக்கணம்.

மதிலுக்குள் இருந்த அரசனுடைய மகளை வேட்டு வேறு அரசன் எதிர்த்து வந்து மதிலை முற்றுகையிடுவதும் உண்டு. பாரி மகளிரை விரும்பிய சேர சோழ பாண்டியர்களுக்கு அவன் தன் மகளிரைக் கொடுக்க மறுத்தான். அது காரணமாக அந்த மூன்று மன்னர்களும் சேர்ந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டார்கள்.

உள்ளே இருக்கும் அரசன் தன் வலியின்மையை உணர்ந்து முற்றுகையிட்ட வேந்தனப் பணிந்து திறைகளை அளிப்பதும், அவற்றைப் பெற்றுக்கொண்டு சினம் ஆறி எதிர்த்து வந்த அரசன் தன் நாடு திரும்புவதும் உண்டு.

மதிலைக் கைக்கொண்டு தன் அதிகாரியை அங்கே வைத்துவிட்டுச் செல்லாமல் அரசன் சில காலம் அங்கே தங்குகிறான். பகைவரைச் சார்ந்தவர்கள் திடீரென்று எங்கிருந்தாவது வந்து எதிர்க்கக்கூடுமாதலின் இவ்வாறு செய்கிறான் தன் படைகளை-யெல்லாம் வருவித்து வீரர்களுக்கு ஏற்ற வகையில் தனித்தனியே சிறப்புச் செய்கிறான். அரசனுடைய அன்பையும் ஆண்மையையும் கண்டு வியந்து அவ்வீரர்கள் தமக்குச் செய்த சிறப்புக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.

வேறு மதில்களில் உள்ள பகையரசர்கள் இந்த உறுதியான மதில் இவ்வரசனுக்கு உரிமையானதைக் கண்டு தம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்று அஞ்சுகிறார்கள். ‘இனி இவனைப் பணிந்து வாழ்வதையல்லாமல் வேறு காரியம் இல்லை" என்று உணர்ந்து யாவரும் தம்மதிலை விட்டு வந்து, வெற்றி பெற்ற அரசன் தாளில் விழுந்து பணிகிறார்கள். ஒரு மதிலை முற்றுகையிட்டு வென்ற வீரத்தின் உரம் எங்கும் பரவிப் போர் இல்லாமலே பல பகைவரை அடிபணியச் செய்துவிடுகிறது. இவ்வாறு முற்றுகையில் வெற்றி பெற்ற வீறுடைய வேந்தன், பகைவர் தன் தாள் பணிய, தான் கைப்பற்றிய கோட்டையினிடையே வெற்றி சீராடி, மன நிறைவோடு வீற்றிருக்கிறான்.

இத்தனையும் உழிஞைத் திணையென்னும் பகுதியில் வரும் செய்திகளாம்.
--------------

9. மதில் காவல் போர்


மதிலை வேற்று அரசன் முற்றுகை இடும்போது அந்த மதிலையுடைய வேந்தன் பல வகையாலும் மதிலைக் காப்பாற்றிப் பகைவேந்தனைப் புறங்காட்டி ஒடச் செய்து விடுவான். அயலிடத்திலிருந்து வந்து பொரும் வேந்தனுடைய நிலையைவிடக் கோட்டை கொத்தளங்களுடன் இருக்கும் வேந்தன் நிலை மிக்க பாதுகாப்பை உடையது. முற்றுகையிடும் வேந்தன் மிகப் பெரிய படையும் சிறந்த படைக்கலங்களும் உடையவனாக இருந்தால்தான் ஒரு கோட்டையை முற்றுகை இடமுடியும்.

பழங்காலத்தில் அரசர்கள் தங்கள் இராசதானி நகரில் கோட்டையை அமைத்துப் பகைவரால் ஊறுபாடு நேராமல் காவல் செய்து விந்தனர். பிற்காலத்து மன்னர்களும் கோட்டை கொத்தளங்களைக் கட்டித் தம் நகரங்களைக் காத்து வந்தார்கள். சில நகரங்களில் இன்றும் கோட்டைகள் இருப்பதைப் பார்க்கலாம், இராசதானி நகர் மட்டுமன்றி வேறு முக்கிய இடங்களிலும் குன்றுகளிலும் அரசர் கோட்டைகளைக் கட்டியிருக்கிறார்கள். எப்போதும் தலைநகரிலேயே அரசன் இருப்பான் என்று சொல்வதற்கில்லை. தன் நாட்டில் உள்ள இடங்கள் பலவற்றிற்கும் சென்று சென்று பார்த்து வருவதும் குடிமக்களுடைய குறைகளை அறிந்து ஆவன செய்வதும் அரசனுக்கு இயல்பு. சில சமயங்களில் வேறு நகர்களில் சில காலம் தங்குவதும் உண்டு. அவ்வாறு தங்கும் இடங்களில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டான்.

மதுரைமா நகரில் முன்பு பெரிய மதில் இருந்ததாகத் தெரிகிறது. வையையாறு ஒரு பக்கத்து மதிலைப்போல இருந்ததென்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

”மதிமலி புரிசை மாடக் கூடல்” என்று தொடங்கும் திருமுகப் பாசுரத்தில் மதுரையின் மதிலைப்பற்றி, "மதிமலி புரிசை” என்று அதைப் பாடிய ஆலவாய் இறையனார் சொல்கிறார்,

பகையரசன் மதிலை முற்றுகையிடும்போது அவனே எதிரிட்டுப் போர் புரிந்து அதனைப் பாதுகாக்கும் போர்ப் பகுதியை நொச்சித் திணை என்று புறத்திணையில் எடுத்துச் சொல்வார்கள். மதிலுக்கு உள் இருந்து பாதுகாப்போரை அகத்தோர் என்றும் முற்றுகையிட்டோரைப் புறத்தோர் என்றும் வழங்குவர். மதிலுக்குள் இருந்து காவல் புரிவோர் நொச்சிப் பூவை அணிந்து கொள்வர். அதனால் நொச்சித் திணையென்று அகத்தோனுடைய மதிற்போர்ச் செய்திகளுக்குப் பெயர் வந்தது. நாளடைவில் கொச்சி என்பதற்கே மதில் என்ற பொருள் வந்துவிட்டது.

தொல்காப்பியர் மதிலை முற்றுகையிடுதல், காத்தல் இரண்டையும் உழிஞை என்பதில் அடக்குவர். அகத் தோன், புறத்தோன் என்னும் இருவருக்கும் சிறப்பாக உள்ள துறைகளையும் பொதுவாக உள்ள துறைகளையும் சொல்கிறார்.
* * *

மதிலை முற்றுகையிடுவதற்குப் பகைவர்கள் வந்து விட்டார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் மதிலுக்குள் இருப்பவர்கள் அதைப் பாதுகாப்பதற்குரிய முயற்சியை மேற்கொள்கிறார்கள். மதிலின் உறுப்புக்கள் ஒழுங்காக இருக்கின்றனவா என்று ஆராய்ந்து, பகைவர் உள்ளே மறைந்து வருவதற்கும், மதிலின்மேல் ஏறி வருவதற்கும் இடம் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். அரசனும் படைத் தலைவரும் பிறரும் கொச்சிப் பூவை அணிந்து கொள்கிறார்கள். பகைவர் எவ்வளவு காலம் முற்றுகையிட்டாலும் தாக்குப் பிடிப்பதற்கு வேண்டியபடி பண்டங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் காவற்காட்டிலே பகைவர் புகுதாதபடி மதிலுக்குப் புறம்பே வந்து ஒரு வீரர் கூட்டம் போராடுகிறது. அகழியிலே வராதபடி ஒட்டுகிறது. மதிலுக்கு அருகில் வந்து முற்றுகையிடுவதற்கு இடம் கொடுக்காமலே புறத்திலிருந்து ஒட்டிவிட்டால் மதிலுக்கு எந்த விதமான சிறிய ஊறுபாடும் நிகழாது அல்லவா? அப்படிக் காவற்காட்டைக் காத்துப் பகைவரோடு போர் செய்த சில வீரர்கள் களத்தில் வீழ்கிறார்கள். இந்த உடம்பு என்றைக்கேனும் ஒரு நாள் இறந்துபடுவது தான். நோய் வந்து இறவாமல் பகைவரைப் பொருது வீரங் காட்டுகையில் உயிர் விடுவதைப் பெரிதாக எண்ணுவர் சுத்த வீரர். அத்தகைய வீரர்களை மற்றவர்களும் பாராட்டுவார்கள்.

அகழியையும் காவற்காட்டையும் காத்து, எதிர்த்த பகைவரோடு பொருது வீழ்ந்த மறவரைப் பாராட்டுகிறது புறப்பொருள் வெண்பா மாலை. பிணங்கிய கொடிகளும் புதர்களும் நிரம்பியது காவற் காடு. தாமரை முதலிய பூக்கள் மலர்ந்திருப்பது அகழி. இந்த இரண்டையும் காவல் புரியும் கடமையைக் கொண்டவர்கள் சிங்கம் போன்ற வீரர்கள்; வேலை ஏந்திய மறவர்கள். அவர்களுக்குக் காவல்காட்டையும் கிடங்கையும் பகைவரிடம் அகப் படாமல் காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்; தம் உடம்பையும் உயிரையும் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லையாம்.

[திரண்ட, ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கும் காவற் காடும், நெருப்புப் போன்ற பூவினையுடைய காணத்தக்க மீண்ட அகழும் காவல்புரிவாராய், சிங்கமொத்த வீரமுடைய வேலை ஏந்தியவர்கள், தம் உடம்பு. இன் உயிரைக் காப்பதை வேண்ட மாட்டார்கள். அரில் - பின்னிக் கிடக்கும் பிணக்கு. இளை - காவற்காடு. எரிமலர் -தாமரை, மடங்கல் - சிங்கம். உடம்பொடு உயிர்காவல் வேண்டார் என்று கூட்டிப் பொருள் செய்க.]

மதிலுக்குள் உள்ள படைகளில் குதிரைப்படையும் இருக்கிறது. குதிரைகள் யாராலும் அடக்க முடியாதபடி பெருமிடுக்குடன் தாவுகின்றன. மதிலேயே தாண்டிவிடு வனபோலத் துள்ளுகின்றன. மதிலுக்கருகில் பகைவேந்தர் படை வந்துவிட்டது. ”இனி மதிலின்மேலிருந்து, பகைவர் சுற்றிச் சூழ நில்லாதவண்ணம் படைக்கலங்களை எறிந்து ஒட்டவேண்டும்” என்று கூறி வீரர்கள் மதிலின்மேல் ஏறுகிறார்கள். மறைந்து ஆயுதங்களை ஏவும் இடங்களில் தங்கிப் போர் புரிகிறார்கள்.

தங்கள் மதிலின் பெருமையைப் பகைவர் உணரும்படி தெரிவிப்பது ஒரு வழக்கம். அகத்தோன் செல்வம் கூறுதல் என்று அதைக் கூறுவர்.

பறம்பு மலையின்மேல் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தான் பாரி என்னும் சிற்றரசன். அவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவன்மேல் பொறாமை கொண்டு சேரன் சோழன் பாண்டியன் என்னும் மூவரும் தம்முடைய படைகளுடன் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். படைகளையெல்லாம் மலேயின்மேல் ஏற்றுவதென்பது நடவாத காரியம். ஆதலின் கீழ் இருந்தபடியே மதிலே நோக்கி அம்பை எய்து கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்வதனால் யாதொரு பயனும் இல்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. 'மலையைச் சுற்றிலும் படைகளை நிறுத்தி வைத்தால் கீழேயிருந்து யாரும் போகமுடியாது. மேலே உள்ளவர்களுக்குக் கீழிருந்துதானே உணவுப் பண்டங்கள் போகவேண்டும்? சில நாட்கள் ஒன்றுமே செய்யாமல் கீழே வளைத்திருந்தால் கடைசியில் பாரி சமாதானத்துக்கு வந்துவிடுவான்' என்று அவர்கள் எண்ணினார்கள். குன்றின்மேல் உள்ள வளத்தை அவர்கள் அறியவில்லை,

மேலே பாரியினுடன் அவனுடைய அவைக்களப் புலவராகிய கபிலர் இருந்தார். பல நாட்கள் முற்றுகை யிட்டுச் சும்மா இருந்தாலே மேலே இருப்பவர்களைப் பட்டினி போட்டுக் கொன்றுவிடலாம் என்ற பைத்தியக்கார எண்ணம் மூவேந்தர்களுக்கு இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தங்களிடம் உள்ள வளத்தைப் பகைவர் உணரட்டும் என்று எண்ணி ஒரு பாட்டை ஒலையில் எழுதிக் கீழே உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும்படி ஓர் அம்பிலே கோத்து அதை அனுப்பச் செய்தார்.

அவர் அந்தப் பாட்டில் சொல்லியிருந்தது இதுதான்: "இந்தப் பாரியினது பறம்பு நீங்கள் நினைக்கிறபடி அவ்வளவு எளிய மலை அன்று. முரசை அடித்து ஆரவாரம் செய்துகொண்டு மூன்று முடி மன்னர்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் மூன்று பேரும் எவ்வளவு நாளைக்கு முற்றுகையிட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. உழவர்கள் உழாமலே, உண்ணும் பொருள்கள் நான்கு எங்களுக்குக் கிடைக் கின்றன. உழவர்கள் உழுது பயிர் செய்துதான் நெல் விளையும் என்ற அவசியம் இங்கே இல்லை. சின்னச்சின்ன இலைகளையுடைய மூங்கில்களில் நிறைய நெல் விளைந்து உதிர்கிறது. அதைக் கொண்டு நாங்கள் சோறு சமைக்கலாம். இரண்டாவது: எங்கே பார்த்தாலும் பலா மரங்கள் இருக்கின்றன. அவற்றில் பழம் வெடித்துச் சிதறுகின்றன. அவற்றை உண்டு பசியையாற்றிக் கொள்ளலாம். சுவை மாறி மாறிஇருந்தால்தானே உணவு சிறப்பாக இருக்கும்? நன்றாகக் கொடியோடிக் கிடக்கும் வள்ளிக் கொடியில் பெரிய பெரிய கிழங்குகள் இருக்கின்றன. அவற்றைச் சுட்டு உண்ணலாம். நன்றாக முதிர்ந்த தேனடைகள் தேனைச் சொரிந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு நெல்லும் பழமும் கிழங்கும் தேனும் நிரம்பிய இந்த இடத்தில் எங்களுக்கு உணவுப் பஞ்சமே இல்லை. கீழிருந்து பார்த்தால் இந்த மலையின் பரப்பு உங்களுக்குத் தெரியாது. ஆகாசத்தைப் போலப் பரந்திருக்கிறது இந்த மலையின் மேல் இடம். ஆகாசத்தில் நட்சத்திரங்கள் இருப்பது போல அங்கங்கே சுனைகள் பலபல இருக்கின்றன. தண்ணிருக்குத் தட்டே இல்லை.

"நீங்கள் எவ்வளவு படைகளைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாலும் எங்களுக்கு அச்சம் இல்லை. மரத்துக்கு ஒரு யானையைக் கட்டி வையுங்கள்; நிறையத் தேர்களைக் கொண்டுவந்து நிறுத்துங்கள். அப்படி இருந்தாலும் உங்களால் இந்த மலையைக் கைப்பற்ற முடியாது. உங்கள் முயற்சியினல் இதை அசைக்க முடியாது. வாளை எடுத்துப் போர் புரிகிறோம் என்று துணிபவர்களுக்கு இங்கே ஒன்றும் கிடைக்காது. ஆனால் இந்த மலையைக் கைக் கொள்ள ஒரு தந்திரம் எனக்குத் தெரியும். இந்த ஆயுதங்களையெல்லாம் எறிந்துவிட்டு ஆளுக்கு ஒரு யாழை எடுத்துக் கொள்ளுங்கள். பாணராக வாருங்கள். உங்கள் மனைவிமாரையும் பாட்டுப் பாடும் விறலியராக அழைத்துக்கொண்டு வந்து பாருங்கள் ஆடுங்கள். அப்படி நீங்கள் வந்து ஆடிப் பாடி நின்றால் பாரி தன் மலை மாத்திரமா, தன் காட்டையும் சேர்த்துத் தந்துவிடுவான்."

இவ்வாறு பொருள்படும்படி அந்தப் பாடல் இருக்தது. அதில் உழவர் உழாத நான்கு பண்டங்களைச் சொல்லும் பகுதி இது:

[பயன்-உண்ணும் பொருள். வெதிர் - மூங்கில். தீஞ்சுனை - இனிய சுனை. ஊழ்க்கும்-உதிர்க்கும். வீழ்க்கும் பூமிக்கு அடியில் விளையச் செய்திருக்கும். ஒரி - முதிர்ந்த போது உண்டாகும் நிறம்.]

இந்தப் பாட்டில் கபிலர் அகத்தோன் செல்வத்தை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார்.


போரில் முன்சென்ற வீரர்கள் சிறிதே தளர்ச்சி அடைகிறார்கள். அதனே அறிந்து புதிய படைகளை அவர்களுக்குத் துணையாக அனுப்பிப் புதிய ஊக்கத்தை உண்டாக்குகிறான் அரசன்.

முற்றுகையிடும் அரசன் மதிலுள் இருக்கும் மறவர் மகள் ஒருத்தியைக் கல்யாணம் செய்து தந்தால் முற்றுகையை விட்டு விடுவதாகச் சொல்லி ஒரு தூதுவன அனுப்புவான். அப்போது அந்த மறவர்களுக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே! ”மகள் மறுத்து மொழிதல்" என்று இந்தத் துறைக்குப் பெயர் சொல்வார்கள்.

மறவர்கள் வந்த தூதுவனைப் பார்த்துப் பேசுகிறார்கள். 'தம்பி, நல்ல செய்தி கொண்டு வந்தாய் நீ. எங்கள் பெண்ணை மணம் பேசியா விட்டான் உங்கள் முட்டாள் அரசன்? இங்கே பார் இந்தக் கட்டிலை. இது தான் அந்தப் பெண் படுத்து உறங்குவது. இதன் கால்களைப் பார்த்தாயா? எல்லாம் யானைத் தந்தத்தால் செய்தவை. உங்கள் மன்னனைப் போலப் பலர் இவளைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வந்தார்கள். போர் செய்தார்கள். யானைப் படையுடன் வந்தார்கள். அவர்களை அடித்து ஒட்டினோம், யானைகளைக் கொன்றோம், அவற்றின் தந்தங்களைக் கொண்டுதான் இந்தக் கட்டில் கால்களைச் செய்தோம். தெரிகிறதா? போ; உங்கள் அரசனிடம் போய்ச் சொல்" என்கிறார்கள்.

[உருத்து - கோபித்து. உம்பர்நாள் - முன்நாளில், நறுங் கோதை என்றது மறக்குலப் பெண்ணை. கருங்கண்ணி. கரிய கண்ணையுடைய பெண்.)

இவ்வாறு அரசர் பெண் வேண்டி விடுக்கும் தூதரிடம் சினந்து மறவர் பேசும் பேச்சைத் தமிழில் உள்ள கலம்பகத்தில் ‘மறம்’ என்ற துறையாக வைத்துப் பாடியிருக்கிறார்கள் புலவர்கள்.

திருவரங்கக் கலம்பகத்தில் வரும் மறத்தை இங்கே பார்க்கலாம்.

திருவரங்கப் பெருமாளிடம் பக்தி பூண்ட மறவர் குலம் அது. அந்தக் குலத்துப் பெண்ணைக் கேட்டு ஒரு மன்னன் ஒலையுடன் தூதனை அனுப்பியிருந்தான். தூதன் ஒலையைக் காட்டிச் செய்தியையும் சொன்னான். அந்த மறவன் ஒலையைப் படிக்கவில்லை; படிக்கத் தெரியாதவன். அவன் நல்ல ஒலையில் செல்லரித்தாற்போல எதையோ கிறுக்கி யிருக்கிறான் என்று இழிவாக எண்ணிக் கொண்டான். சினம் பொங்கத் தூதுவனைப் பார்த்துப் பேசுகிறான்.

“மணம் பேச வந்த தூதா, இந்த ஒலை எதற்கு ஆகும்? இது செல் அரித்த ஒலையல்லவா? இது செல்லுமா? எங்களுக்கு வேண்டிய பெரிய வரங்களையெல்லாம் அருளுகிறவர் திருவரங்கர். நப்பின்னையின் கணவராகிய அவருடைய திருவடியிலே அன்பு வைத்த மறவர்கள் நாங்கள். எங்கள் பெண்ணினிடம் ஆசை வைத்து வந்த மன்னர்கள் பட்ட பாட்டைப் பார்க்கிறாயா? எங்கள் ஊருக்குள்ளே வந்து பார். வீடுகளில் வாசலுக்கு இடும் படல் எது தெரியுமா? அந்த மன்னர்கள் பிடித்துக்கொண்டு வந்த குடைகளையெல்லாம் படல்களாகக் கட்டியிருக்கிறோம். நாங்கள் தினையளக்கிற மரக்காலும் படியும் அவர்கள் மகுடங்கள். பெரிய மகுடமாக இருந்தால் மரக் காலாகவும், சிறியதாக இருந்தால் படியாகவும் வைத்து அளக்கிறோம். எங்கள் குடிசைகளில் கட்டுவதற்குக் கற்றைநார் அவர்கள் வீசிவந்த சாமரங்கள். வீட்டில் சுற்றிலும் வேலி இட்டிருப்பவை, அவர்கள் தோற்றுக் கீழே போட்டு ஓடிப்போன வில்லும் வாளும் வேலுமே.”

மகள் மறுத்து மொழிதல் என்ற புறத்துறையைத் தான் மறம் என்று கலம்பகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

மதிலிலிருந்து போர் செய்பவர்களின் செயல்களைச் சொல்லும் கொச்சித்திணை இந்த மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையோடு முடிவடைகிறது.
-----------

10. போர்க்களத்தில்.


பிறருடைய நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையோடு போர் புரிய எழுவது ஒரு வகை; தம்முடைய வீரத்தை நிலைநாட்டுவதற்குப் போர் புரிவது மற்றெரு வகை, இந்த இரண்டையும் வெவ்வேறு திணையாக வகுத்துச் சொல்கிறார் தொல்காப்பியர். பிறர் மண்ணின்மேல் நசையையுடைய வேந்தன் செய்யும் போரை வஞ்சித் திணையாக அமைத்தார். வீரம் கருதிப் போர் செய்வதைத் தும்பைத் திணையாக வகுத்தார். நாடாசையை வளர்க்காமல் வீர உணர்ச்சியை வளர்ப்பதே சிறந்தது என்பது பழங்கால மன்னர் கொள்கை. தம்முடைய வீரத்துக்கு இழுக்கு வருமானால் உடனே சீறி எழுவார்கள்.

என்று தும்பையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் சொல்கிறது. தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை அங்ஙனம் மாற்று வேந்தனும் அவன் கருதியமைக்தே தான் பெறுபொருளாக எதிர்சென்று, அவனைத் தலைமை தீர்க்கும் சிறப்பினையுடைத்து, அத் தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர்' என்பது இச் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை. இரு வேந்தரும் தங்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டப் போர்செய்வார்கள்.

புறப்பொருள் வெண்பா மாலை, அதிரப் பொருவது தும்பை என்று சொல்லும். இந்த இரண்டு வேறு கொள்கைகளிலும் வேறுபாடு இருந்தாலும் போர் நிகழும் துறைகளில் பெரிய வேறுபாடு இல்லை.

தும்பை இரு சாராரும் பொரும் நிலையைச் சொல்வதாதலின் இதற்கு இனமான வேறு திணை இல்லை. வெட்சிக்குக் கரந்தையும், வஞ்சிக்குக் காஞ்சியும், உழிஞைக்கு நொச்சியும் எதிரெதிரே அமைந்ததுபோலத் தும்பைக்கு எதிராகத் திணை ஏதும் இல்லை. அது இரண்டு கட்சிக்கும் பொதுவானது.
★ ★ ★

போர்க்களத்தில் தன் வீரத்தை நிலைநாட்டும் பொருட்டு இதோ வேந்தன் தும்பைப் பூவைப் புனைந்து கொள்கிறான். தன்னுடைய படைத்தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் பல பொருள்களை வீசி ஊக்கமூட்டுகிறான். சிலர் அடையாளப் பொறியைப் பெறுகிறார்கள். சிலர் பணம் பெறுகிறார்கள். சிலர் யானைகளை அடைகிறார்கள். சிலருக்குக் குதிரைகள் கிடைக்கின்றன. சிலர் சிறு நாடுகளும் சிலர் வயல்களும் பெறுகிறார்கள். போரில் வென்று பகைவரிடமிருந்து பல பொருள்களைக் கவர்ந்த பின்பு அவற்றைப் பகிர்ந்து கொடுக்கப் போகிறான் அரசன் என்பது கிடக்கட்டும். போர் என்று கூவி முரசு கொட்டினர்கள். நாங்கள் வருகிறோம் என்று வீரர் தோள் கொட்டினர்கள். அப்பொழுதே அவர்கள் கைமேற் பலனாக மேலே சொன்னவை கிடைத்தன. அவர்களுக்கு ஊக்கம் நிமிர்ந்து வரும் என்று சொல்லவும் வேண்டுமா? உறுதியுடன் போராட முனைகின்றனர் யாவரும். "இதை முற்ற நிறைவேற்ற முடியுமா?” என்று யாரேனும் ஐயம் கொண்டால் அவர்கள் சீறுகிறார்கள். ‘யோசித்துச் செய்யுங்கள்’ என்று யாரேனும் அறிவுரை கூற முன்வந்தால், "எதை யோசிப்பது? எங்கள் அரசன் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டான். நாங்கள் ஏந்திய வாளை வெற்றி பெற்றாலன்றி உறையினில் இடமாட்டோம்” என்று தானே வீரர்கள் தம் மறத்தைக் காட்டப் புகுகிறார்கள். முதியவர் எவரேனும் படைகளுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று இரங்கினால், "எங்களுக்காக இரங்க வேண்டாம். உண்மையில் உங்களுக்கு இரக்கம் உண்டானால், நாங்கள் யாரை எதிர்த்துச் செல்லப் போகிறோமோ, அவர்களுக்காக இரங்குங்கள். நம்முடைய அரசன் இந்தப் படையை நடத்திச் செல்லும்போது பகைவர் படை என்ன ஆகுமோ என்று இரங்குங்கள். பெரிய தேர்களும், பரிகளும், யானைகளும், வீரர்களும் உள்ள அந்தச் சேனையின் தலைவிதியை எண்ணி இரங்கினலும் பொருள் உண்டு” என்று பேசுகிறார்கள்.

போருக்குப் புறப்பட்ட படைகளின் சிறப்பை எப்படி வருணிப்பது ! வேந்தனுடைய யானைக்கு எத்தனை அறிவு அது இப்போது போர்க்களத்தில் புகுந்து பகைவர்களைச் சாடப்போகும் மிடுக்குடன் நிற்கிறது. அதன் கண்கள் கனலைக் கொப்புளிக்கின்றன. அது போர்க்களத்தில் புகுந்து உழக்கினால் எத்தனை பேர் பட்டு விழுவார்கள்! இதை எதிர்பார்த்து அந்த மதகளிற்றைத் தொடர்ந்து சென்று போர்க்களத்தில் விருந்துணவு பெறும் ஆர்வத்தினால் பேய்களும் கழுகுகளும் கூற்றுவனும் அதன் பின்னே செல்கின்றனவாம்.

[விலக்குதற்கு அரிய சேனை, அவற்றையுடைய அரசர் ஆகியோருடைய தசையையும் உயிரையும் உண்ணுவதற்காக, கடல் போன்ற சேனைக்குள்ளே பேயும் கழுகும் கூற்றுவனும் தன்னைப் பின்பற்றி வர, வீரக் கழலையுடைய வேந்தனது களிறு சீறும்.]

களிற்றின் நிலை இது. குதிரையோ அம்புபோல் வேகமாகத் தாவி வருகிறது. சேனையில் முன்னணியாக உள்ள படைக்குத் தார் என்றும், தூசி என்றும் பெயர். பல வீரர்கள் தாம் தாமே முன்னணியில் சேர்ந்து பொர வேண்டும் என்று முந்துகிறார்கள். ஓர் அரசனைப் பல அரசர்கள் பகைப்படையில் நின்று எதிர்த்தாலும் தானே தனி நின்று தன் அரசனைப் பாதுகாக்கும் மாவீரனும் இந்தப் படையில் இருக்கிறான்.

இவ்வாறு எழுந்த படை போர் செய்கிறது. மறவரும் மறவரும் முட்டுகின்றனர். அந்தப் போரில் பலர் வீழ்கிறார்கள். அவர்களுக்காக இரங்கிப் பாணர்கள் விளரிப் பண்ணில் இரங்கற் பாடல்களைப் பாடுகிறார்கள். விளரி இரங்குவதற்கென்றே அமைந்த பண். சில சமயங்களில் இரண்டு கட்சிக்கும் தலைவர்களாக உள்ள இரண்டு மன்னர்களும் போரில் சாய்ந்து விடுவதுண்டு. இருவரும் தபு நிலை என்ற துறையாக அதை அமைத்துச் சொல்வார்கள்.

போர் நடைபெறும்போது ஒரு கட்சியினர் வலி குன்றி மெல்ல கழுவத் தொடங்கு-கிறார்கள். அதைக் கண்டு அப்படையில் உள்ள வீரன் ஒருவனுக்கு உள்ளம் துடிக்கிறது. ஒடும் படையினைத் துரத்திக்கொண்டு பகைவர்கள் வருகிறார்கள். அப்போது படையின் கடைசியில் இருந்த இந்த வீரன் திடீரென்று திரும்பி நின்று, துரத்தி வரும் படையை எதிர்க்கிறான். வேறு ஒருவன் யானையைத் த்ன் கைவேலினல் எறிகிறான்.

பகைவர்கள் போர்க்களத்தில் படுகின்றனர். தன் கை வேலால் பல களிறுகளை மாய்த்துப் பல வீரர்களின் மார்புகளைத் திறந்து வெற்றி பெற்று அவ்வேலைப் பெருமிதத்துடன் வீரன் ஏந்தியிருக்கிறான். இப்போது அதற்கு வேலை இல்லை. அவன் அதைச் சுழற்றிக்கொண்டு ஆடுகிறான். வேறு ஒரு வீரன் செய்வது பெரு வியப்பை உண்டாக்குகிறது. அவன் தன் மார்பிலே ஊடுருவிய வேலையே பறித்துப் போர் புரிய முற்படுகிறான். இப்படி வரும் காட்சி ஒன்றைத் திருக்குறளில் காணலாம்.

தன் கையில் வேலுடன் இடசாரி வலசாரியாகத் திரிந்துகொண்டிருக்கிறான் ஒரு வீரன். வேலினால் களிற்றை வீழ்த்துதல் பெரு வீரம்.

என்று புறநானூறு சொல்கிறது. இந்த வீரன் ஒரு களிற்றின்மேல் தன் வேலை எறிகிறான். அது பிளிறிக்கொண்டு எங்கோ ஒடிச் சென்று விழுகிறது. அதைத் தேடிச் சென்று வேலைப் பறிப்பது இந்தப் பெருஞ் சேனையினிடையே நிற்பவனுக்கு இயலுமா? இப்போது இவன் கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கிறான். சிறிது நேரத்துக்கு முன்தான் இவன்மேல் பகை வீரன் தன் வேலை வீச அது இவன் மார்பில் தைத்து நிற்கிறது. களிற்றை வீழ்த்தும் வேகத்தில் அந்த வேலை இவன் சட்டை செய்யவில்லை. இப்போது கை வேலை யானையின்மேல் வீசிவிட்டு வெறுங் கையோடு நிற்கும்போது சற்றே தலையைக் குனிகிறான். தன் மார்பிலே பகைவன் பதித்த வேல் இவன் கண்ணிலே படுகிறது. இவனுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. சட்டென்று அதைப் பறித்துக் கையில் எடுத்துக்கொண்டு புன்முறுவல் பூக்கிறான், இப்போது இவனுக்கு ஒரு வேல் கிடைத்துவிட்ட தல்லவா?

என்பது இந்த வீரக் காட்சியைக் காட்டும் குறள்.

அரசன் வெற்றிமேல் வெற்றியாகப் பெற்றுத் தேரின் மேல் ஏறிச் செல்கிறான். வீரர்களுக்கு உண்டாகும் உவகை சொல்லத் தரம் அன்று. அவர்கள் கூட்டமாகக் கூடிக்கொண்டு அரசனுடைய தேருக்குமுன் ஆரவாரம் செய்து கூத்தாடுகிறார்கள். தேருக்குப் பின்னாலும் ஆரவாரந்தான். அங்கே வீரர்களோடு ஆடலில் வல்ல விறலியரும் சேர்ந்து ஆடுகிறார்கள்.

போர்க்களத்தில் இதுவரையில் கிடைக்காத பெரு விருந்து தங்களுக்குக் கிடைத்ததென்ற மகிழ்ச்சியில் தேருக்கு முன்னும் பின்னும் பேய்கள் கைகோத்துக் கொண்டு ஆடுவதாகச் சொல்லுவது ஒரு மரபு. அந்தத் துறையைப் பேய்க்குரவை என்று சொல்வார்கள்.

போர்க்களத்திற்குள் புகுந்து பார்த்தால் எத்தனை விதமான காட்சிகளைக் காணுகிறோம். இதோ ஒரு வீரன் ஒரு களிற்றின்மேல் தன் வேலை வீசி விழச் செய்தான். அதே சமயத்தில் பகைவருடைய அம்பும் அவன் மார்பைத் துளைத்தது. அந்த யானை விழ அதன் கீழே அவன் விழுந்து கிடக்கிறான்.

இதோ ஒரு பக்கம் வாள் வீரர்கள் ஆடுகிறார்கள். தங்கள் படைத் தலைவனுடன் சேர்ந்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியினால் அவர்கள் ஆடுகிறார்கள். இரு பெரும் படைக்கும் நடுவில் அஞ்சாமல் தூணைப்போல் நின்ற வீரன் ஒருவனை ஓரிடத்தில் காண்கிறோம்,

இதோ ஒரு வீரன் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். அவன் உடம்பு நிலத்திலே படவில்லை. உடம்பெல்லாம் அம்புகள் தைத்திருப்பதனால் அவன் உடம்பு அம்புப் படுக்கைக்குமேல் பீஷ்மர் படுத்திருந்தது போலக் கிடக்கிறது. இப்படிக் கிடந்தவனைப் பார்த்து, “உடம்பெல்லாம் முள்ளையுடைய முள்ளம்பன்றியைப்போலக் கிடக்கிறான்” என்றும், ”கழற்சிக்காயைப்போல அல்லவா பூமியில் உடம்பு படாமல் கிடக்கிறான்?" என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

தன் கணவன் போர்க்களத்தில் பகைவரைப் பொருது வீழ்ந்தான் என்பதை அறிந்து ஒரு வீரனுடைய மனைவி ஓடி வருகிறாள். வேறு சில பெண்களும் வருகிறார்கள். மார்பில் விழுப்புண் பட்டு வீரம் இலகும் நிலையில் கிடந்த தம் கணவர்களை அவர்கள் தழுவிக்கொள்கிறார்கள். 'எம் கணவர், எம் கணவர்" என்று சொல்லிச் சொல்லித் தழுவுகிறாரர்கள். அதோ ஒருத்தி அழுகிறாள்; ஆனால் புலம்ப வில்லை. அவளுக்கு ஆனந்தக் கண்ணிர் வருகிறது. மார்பிலே புண்பட்டுச் சுத்த வீரனாக உயிர் மீத்தான் என்பதை அறிந்து அந்த வீர மகளுக்கு உவகை உண்டாயிற்று. அவள் நிலையைக் கண்டு கூற்றுவனும், “நம்மிடம் இத்தனை வீரம் இல்லையே!” என்று நாணுகிறனாம்.

[மீராய் உக, கூற்றமும் நாணியது. நாணின்று - நாணியது. மறவர் - வீரர். துமிப்ப – வெட்ட, பைந்தொடி- வளையை யுடையவள்; வீரன் மனைவி. ஆடு அரிமா அன்னான் - வெற்றி பெறும் சிங்கத்தைப் போன்றவன், ஓடு அரிக்கண் - ஒடுகின்ற அரியையுடைய கண். உவகை மீராய் உக்கது.]

பகை வேந்தன் அடுசமரிற் படுகிறான். அவன் இறந்தான் என்று அவனுடைய படைவீரன் தன் உயிரைத் தானே போக்கிக் கொள்கிறான். அப்படியே போரில் இறந்துபட்ட கணவனே மறுமையுலகத்திற் காணலாம் என்று அவனுடைய மனைவி உயிர் நீக்கிறாள்.

சில சமயங்களில் போரில் புக்க இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மடித்துக் கொண்டு மாய்வதுண்டு. போர்க்களத்தில் யாவரும் மடிய அவர்களுடைய புகழ் மட்டும் எஞ்சி நிற்கும். இவ்வாறு அமைவதைச் சொல்வது தொகைநிலை என்னும் துறை. எல்லாரும் ஒரே தொகுதியாகப் புகழுடம்பை நட்டுப் பூதவுடம்பை விட்டுச் செல்வதை அது சொல்கிறது.

இவ்வாறு தும்பைத் திணையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
------------

11. வெற்றி மால்


மற்ற எந்தத் திணைக்குரிய பூவைப்பற்றித் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், வாகைத் திணைக்குரிய பூவாகிய வாகையைப் பற்றித் தமிழ் இலக்கியம் பயில்கிறவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். வாகை மாலை வெற்றிக்கு அறிகுறி என்பதை அறியாதவர்கள் மிகக் குறைவு. “வாகை சூடி வருகிறார்’ என்று வெற்றியடைந்து வருபவரைக் கட்டுரைகளிலும் கதைகளிலும் இன்றை எழுத்தாளர்களும் குறிப்பதைக் காண்கிறோம், இலக்கியங்களிலும் மற்றப் பூக்களைப்பற்றிய செய்திகள் வருவதைவிட வாகை சூடுவதைப் பற்றிய செய்திகளை மிகுதியாக வரும்.

கம்பராமாயணத்துக்குரிய பயனைச் சொல்ல வரும்,

என்னும் பாடல் இராமன் அரக்கரை அழித்து வெற்றி கொண்டான் என்பதை, வாகை சூடிய" என்ற தொடரால் குறிக்கிறது. பழைய செய்யுள் ஒன்று, வீரச் செயல்களைப் புலப்படுத்தும் வெட்சி முதலிய திணைகளின் இலக்கணத் தைச் சுருக்கமாகச் சொல்கிறது.

என்பது அப்பாடல். அதில் வாகையின் இலக்கணம் ’மிக்கோர் செரு வென்றது வாகையாம்’ என்று உள்ளது.

இதுவரையில், இரண்டு வேந்தர்கள் தம்முள் பகைத்துப் போரிடும்போது நிகழும் பலவகை நிகழ்ச்சிகளைப் பார்த்தோம். போரின் முடிவு ஒருவருக்கு வெற்றி, மற்றொருவருக்குத் தோல்வி என்றேனும், இரு சாராரும் ஒருங்கே முடிதல் என்றேனும் இருக்கும். வெற்றித் திறத் தைச் சொல்வது வாகைத் திணை.

ஆனால் வாகைத் திணையில் உள்ள எல்லாத் துறைகளும் போரைப் பற்றிய செய்திகளையே கூறுவன என்று சொல்வதற்கில்லை. கலை, அறம் முதலிய துறைகளில் பிறரைக் காட்டிலும் சிறந்து நிற்பவர்களுடைய பெருஞ் சிறப்பைச் சொல்லும் துறைகளும் வாகை என்ற அடையாளத்தோடு வருகின்றன. அப்படியே அவரவர்களுடைய இயல்பைச் சொல்லும் துறைகள் முல்லை என்ற பெயரோடு வரும் முதலில் போர் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
★ ★ ★

வெற்றி பெற்ற மன்னன் வாகை மாலை குடுகிறான். அவனுடைய புகழைப் பல புலவர்கள் பாடுகிறார்கள். பகைவர்களை அட்டு அந்த வெற்றி மிடுக்கினாலே அவன் ஆரவாரம் செய்கிறான். அவனுடைய படையில் சேர்ந்து போரைச் செய்த வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். வெள்ளை மாலையை அணிகிறார்கள்; வீரக் கழலைக் கட்டுகிறார்கள்; செங்கச்சைப் புனைகிறார்கள். அவர்களுடைய மார்பிலும் முகத்திலும் போரில் பட்ட விழுப் புண்கள் இருக்கின்றன. அவை புறங்கொடாப் பெருவீரத்துக்கு அறிகுறியாக விளங்குகின்றன. இனிமேல் பகைவரால் உண்டாகும் துன்பத்துக்கே இடம் இல்லை.

அரசன் இனிப் பகைவரைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் முறைப்படி ஆட்சிசெய்யப் புகுகிறான். ஓதுதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஒம்புதல் ஆகிய ஐந்து தொழிலையும் அவன் வழுவாமற் செய்கிறான். நான்மறைகளையும் ஓம்புகிறான். முத்தீ வளர்க்கிறான். அவனும் மார்பில் முந்நூல் அணிபவனாதலின் இரு பிறப்பாளனாக இலங்குகிறான். அவனுடைய சிறப்பைப் பாடும் துறைக்கு அரச வாகை என்று பெயர்.

அரசனுடைய முரசைப் புலவர்கள் பாராட்டுகிறார்கள். முன்பு போரின்போது மக்களை ஒன்று திரட்ட முழங்கிய முரசு இப்போது வெற்றியினே முழக்குகிறது. அரசனை உழவனாக வைத்துப் புகழுகிறார்கள் புலவர்கள். வயலில் உழும் உழவனாக அன்று; போர்க்களத்தில் அவன் உழுதாகும். சேனைகளாகிய வரம்பையுடைய போர்க்களமாகிய பெரிய வயலில், மிக்க கோபம் என்னும் விதையை விதைத்து, வெற்றி பெற்று அதனால் வந்த புகழ் என்னும் பயிரை விளைவிக்கிறானாம். அவன் கையில் வேலாகிய கோல் இருக்கிறது; யானையே அவனுக்குப் பகடாக இருக்கிறது. "இத்தகைய அரசன் எங்களைப் பாதுகாப்பதால் எங்களுக்கு வறுமை முதலிய துன்பங்களே இல்லை’ என்று குடிமகள் மகிழ்ச்சி பெறுகிறார்கள்.

வெற்றி பெற்ற அரசன் ‘களவேள்வி’ செய்வதாகச் சொல்வது இலக்கிய மரபு. பேய்கள் பசியினால் மிகவும் துன்புற்று வருந்துமாம். போர்க்களத்தில் இறந்த பிணங்களை உண்ண வேண்டும் என்பது அவை பெற்ற சாபம். ஆகவே எங்கேனும் போர் நிகழ்ந்தால் தமக்கு விருந்து கிடைக்கப்போகிறது என்று அவை மிகவும் ஊக்கம் பெற்று அவ்விடத்துக்குச் செல்லுமாம். வீரத் தெய்வமாகிய கொற்றவை தன்னுடைய கணங்களாகிய பேய்களுக்குப் போர்க் களத்தில் விருந்தை நுகரும்படி ஆணை-யிடுவாளாம், பேய்கள் இறந்து கிடந்த உடம்புகளை வைத்துக் கூழ் அட்டுக் கொற்றவைக்கு நிவேதனம் செய்துவிட்டுப் பிறகு தாம் உண்டு கூத்தாடும். இதையே களவேள்வி என்று சொல்வார்கள்.

தமிழில் பரணி என்று ஒருவகைப் பிரபந்தம் உண்டு. கலிங்கத்துப்பரணி, பரணி நூல்களில் சிறந்தது. அந்தப் பிரபந்தம், போரில் வெற்றி பெற்ற வீரத் தலைவனுடைய சிறப்பை எடுத்துரைப்பதற்காக அமைந்தது. ஒரு தலைவன் படையெடுத்துச் சென்று தன் பகைவரோடு பொருது வென்றதை விரிவாகச் சொல்லும், இறுதியில் போர்க் களத்தில் களவேள்வி நிகழ்ந்ததையும் பல பாடல்களால் விரித்து உரைப்பது பரணி பாடும் புலவர்கள் வழக்கம், பேய்கள் களத்தில் கூழ் அடுதலும், பின்பு கூழ் இடுதலும், கூழை உண்டு வெற்றி பெற்ற வீரனை வாழ்த்துவதும் பரணி நூல்களில் இறுதிப் பகுதிகளாக அமையும். புறநானூற்றிலும் களவேள்வியைப் பற்றிய செய்திகள் வருகின்றன.

முடித்தலையை அடுப்பாகவும் இரத்தத்தையே உலை சீராகவும் தசை, மூளை முதலியவற்றை உணவுப் பொருளாகவும் வைத்துப் பேய்மகள் இறந்தவர்களின் தோளாகிய துடுப்பினால் துழாவிக் களவேள்விக்குக் கூழ் அடுவதாக ஒரு பாடல் கூறுகிறது:

[கொளிஇ - கொண்டு. தொடி - வளை. துமந்த – துழாவிய, வல்சி – உணவு]

பேய்களுக்குப் பெருவிருந்து இடுவதையே கள வேள்வியாகக் கூறுவர்.

என்பது அதன் இலக்கணம். 'கொல்லும் வலியினையுடைய பேய் வயிருர உண்ணப் பரந்த வலியினையுடையான் கள வேள்வி வேட்டது” என்பது இதன் பொருள்.
---
[1]. புறப்பொருள் வெண்பா மாலை, lổ0.

கலிங்கத்துப் பரணியில் விரிவாக இந்தக் காட்சியைச் சயங்கொண்டார் வருணிக்கிறார்.

பேய்கள் யானை மத்தகங்களையே அடுப்பாக வைக்கின்றன. தலையும் காலும் அற்ற ஆனையையே பானையாக ஏற்றி, குதிரையின் இரத்தத்தை உலைமீராகப் பெய்து, குதிரைப் பல்லையே உள்ளிப் பூண்டாகவும் நீகத்தையே உப்பாகவும் இட்டு, வாளையும் அம்பையும் வேலையும் விறகாக இட்டு, சினத் தீயை எரியாக மூட்டுகின்றன. கலிங்க வீரர்களின் பல்லைத் தகர்த்துப் பழ அரிசியாக வைத்துக் கிழிந்த முரசையே உரலாகவும் யானைத் தந்தத்தையே உலக்கையாகவும் கொண்டு சலுக்கு மொலுக்கென்று பாட்டுப் பாடித் தீட்டுகின்றன.

தீட்டிய அரிசியை உலையில் இட்டு அந்தக் கூழ் பொங்கி வழியாமல் வீரர்களின் கைகளை துடுப்பாகவும் குதிரையின் குளம்புக் கால்களை அகப்பைகளாகவும்
கொண்டு துழாவுகின்றன. இவ்வாறு கூழ் அட்டுப் பேய்க ளெல்லாம் உண்டு கூத்தாடுகின்றன.

களவேள்வியைச் செய்துவிட்டு அரசன் வெற்றி மிடுக்குடன் தேரில் ஏறி வருகிறான். களத்தில் வயிறார உண்ட பேய்கள் அந்தத் தேருக்கு முன்னே சென்று மிக்க மகிழ்ச்சியோடு ஆடுகின்றன. தேருக்குப் பின்னே அரசனைப் புகழ்ந்து பாடி வீரர்களும் பாட்டுப் பாடும் பெண்களும் கைகோத்து ஆடுகிறார்கள்.
** * * * *

இவ்வண்ணம் வாகையின் ஒரு பகுதி, போரின் முடிவில் நிகழும் நிகழ்ச்சிகளைச் சொல்லுகிறது. ஏனைப் பகுதிகள், வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தம் தம் கடமையைச் சிறப்பாக ஆற்றி வருவதைச் சொல்லுகின்றன.

என்பது தொல்காப்பியம். வலியும் வருத்தமும் இன்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோரும் அறிவரும் தாபதர் முதலியோரும் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தல் என்று கூறுவர் ஆசிரியர் என்று இதற்கு நச்சினார்க்கினியர் பொருள் உரைத்தார். தம்மைத் தாமே சிறப்பித்துச் சொல்லிக் கொள்ளுவதும், மற்றவர்கள் அவர்களைப் பாராட்டிச் சொல்லுவதுமாகிய இரண்டு வகையில் இந்தச் சிறப்பு இருக்கும். இவ்வாறு இயல்பைச் சிறப்பித்துக் கூறும் துறைகளில் அரச வாகை, அரச முல்லை என்பவை போல இருவகையான பேர்கள் அமையும். ‘உறழ்ச்சியால் பெற்ற வென்றியை வாகையெனவும், இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லை யெனவும் கூறுப' என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார், பிறரோடு ஒப்பு நோக்கும் போதோ, போட்டியிடும்போதோ பெற்ற சிறப்பைச் சொல்வது வாகை; இயல்பான நிலையைச் சொல்வது முல்லை.

அரசர் சிறப்பையும் பார்ப்பனர், வணிகர், வேளாளர் ஆகியவர்கள் சிறப்பையும் இவ்வாறு பாராட்டுவார்கள். வாழ்க்கையே ஒருவகைப் போராட்டத்தானே? ஆதலின் நல்ல முறையில் தம் இயல்பிலே பிறழாமல் கடமைகளை ஆற்றி வருவதே வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக அமையும். அதனால்தான் இவற்றை வெற்றியைப்பற்றிச் சொல்லும் வாகைத் திணையில் சேர்த்துப் பாடினார்கள் என்று தோன்றுகிறது.
அந்தணர்கள் தாம் செய்யும் கடமைகளிலே சிறந்து நின்று வாழ்வதைச் சிறப்பிப்பது பார்ப்பன வாகை. அவர்களை அறுதொழிலோர் என்று தமிழிலும், ஷட்கர்ம நிரதர் கள் என்று வடமொழியிலும் கூறுவர்.

"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்”

என்று தொல்காப்பியம் கூறும், அதன் உரையில் நச்சினார்க்கினியர் மிக விரிவாக அத்தொழில்களை விளக்குகிறார், ஓதல், ஒதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அவர்களுக்குரிய ஆறு தொழில்கள்.

வேதம், அங்கம், தர்மசாஸ்திரம், இராமாயணம், பாரதம், புராணம், அகத்தியம் முதலிய இலக்கணங்கள், இறையனார், அகத்தியனார் ஆகிய பெருமக்கள் பாடிய நூல்கள் ஆகியவற்றை ஓத வேண்டும் என்று அவ்வுரை யாசிரியர் கூறுகிறார்,

அரசனுக்குரிய தொழில்கள் ஐந்து.

”ஐவகை மரபின் அரசர் பக்கம்"

என்பது தொல்காப்பியம். ஓதுதல், வேள்வி செய்தல், ஈதல், காத்தல், தண்டம் செய்தல் என்பன அவன் தொழில்கள்.

வாணிகருக்கு ஒதுதல், வேள்வி செய்தல், ஈதல், உழவு, பசுவைப் பாதுகாத்தல், வாணிகம் என்னும் ஆறும் உரியவை. வாணிகம் செய்யும்போது விலையை மிகுதிப் படுத்தாமலும், பண்டத்தைக் குறைக்காமலும், லாபத்தை வெளிப்படையாகச் சொல்லியும் கடமையாற்றுவார்களாம்.

என்று பட்டினப்பாலை என்னும் சங்கநூல் வணிகர்களின் இயல்பைக் கூறுகிறது. 'நுகத்தின் நடு எப்படி நடுகிlஐ பிறழாமல் இருக்கிறதோ அப்படி, பழிக்கு அஞ்சி உண்மையையே பேசுவார்கள்; தம் பொருளையும் பிறர் பொருளையும் ஒரு மாதிரியே பார்ப்பார்கள்; பண்டங்களுக்குரிய விலையாகத் தாம் பெறுவதை அதிகமாகப் பெற மாட்டார்கள்; பண்டத்தையும் குறைவாகக் கொடுக்க மாட்டார்கள்; பல வகையான பண்டங்களையும் கொள்முதல் இவ்வளவு, லாபம் இவ்வளவு என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பார்கள்’ என்று இவ்வடிகள் சொல்கின்றன. கரிகாலன் அரசு செய்திருந்த காலத்தில் சோழ நாட்டில் வணிகர்கள் இந்த முறையில் வியாபாரம் செய்து வந்தார்களாம். பிற நாட்டு மக்கள் எல்லாம் காவிரிப்பூம்பட்டினத்துக்கும் மதுரைக்கும் வந்து தம் நாட்டுப் பண்டங்களைக் கொடுத்துவிட்டு இந்த நாட்டுப் பண்டங்களை வாங்கிச் சென்ற காலம் அது. வியாபாரத்தில் நேர்மை சிறந்து நின்ற காலம். உள்ளதை மறைத்து லாபத்தை அதிகமாகப் பெற்றால் பழி உண்டாகும் என்று அக்காலத்து வணிகர்கள், அந்த வடுவுக்கு அஞ்சினர்களாம்.

அரசர் முதலிய மூவரோடும் ஒத்துழைத்து அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்வது வேளாளர் தொழில், வேதம் ஒழிந்த நூல்களை ஓதுதல், ஈதல், உழவு, பசுவையும் எருதையும் பாதுகாத்தல், வாணிகம், வழிபாடு என்னும் ஆறும் அவர்களுடைய தொழில் வகைகள், அவர்களில் உழுது உண்பவர் என்றும், உழுவித்து உண்பார் என்றும் இருவகை உண்டு, அவர்களுடைய சிறப்பை,

என்று திருக்குறள் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு கால்வகை வருணத்தாரின் சிறப்பையும் எடுத்துப் புகழும் துறைகள் வாகைத்திணையில் வருகின்றன.
-----------

12. ஞானமும் தவமும்


வெறும் சாம்பல் என்று எண்ணி அதை எடுத்தான். கையில் எடுக்கும்படி அது கட்டிச் சாம்பலாகவே இருந்தது. எடுத்த அடுத்த கணத்தில் ‘சூ, சூ’! என்று கையை உதறிக்கொண்டு அதைக் கீழே போட்டுவிட்டான். அது இன்னும் முழுமையும் ஆறாத நெருப்பு: மீறு பூத்த நெருப்பு, மேல்தோற்றத்தைக் கண்டு ஏமாந்துபோய் எடுத்தான். இப்போது அது சுட்டுவிட்டது.

நீறு பூத்த நெருப்புப் போலச் சிலர் இருப்பார்கள். ' நாம் இவர்களை வென்று விட்டோமே! இவர்களும் புறங் காட்டி ஒடித் தம் மானம் இழந்து மதி இழந்து வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கிறார்களே! என்று பகைவர்களை எண்ணக்கூடாதாம். தமக்கு வெள்ளம் போன்ற சேனை இருக்கிறதென்று தம்மைத் தாமே வியந்து கொண்டு, பகைவரை எள்ளி இழிவாக நினைக்கக் கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்கள் துணைவலி பெற்றுப் போர் செய்ய வந்துவிடலாம்.

உண்மையான வீரர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எவ்வளவு பலம் இருந்தாலும், ‘இனி இந்தப் பயல் என்ன செய்வான்’? என்று எண்ணிப் பராக்காக இருக்கக்கூடாது. வீரத்தின் இலக்கணம் இது. இதைப் பொருந வாகை என்னும் துறையில் விளக்குகிறார் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர், !

[கடலைப் போலத் தமக்குள்ள சேனைகளைத் தாமே பாராட்டிக் கொண்டு, தம் பகைவர்களைக் குறைவாக மதிப்பிடுதல் வீரத்துக்குரிய இயல்பு அன்று; அறிவிலே தெளிவுடையவர்கள், நெருப்பு ஆறுகிற பக்குவத்தில் இருந்தால் அது முழுவதும் ஆறியபிறகு அன்றி இடையிலே அந்த நீறு பூத்த நெருப்பைத் தம் கையில் ஏந்த மாட்டார்கள். தானை - சேனை. வியந்து - பாராட்டி. விரவார் - பகைவர். எள்ளி-இகழ்ச்சியாக மதித்து. தெள்ளியார் - தெளிவுடையவர்.]

ஒரு நாட்டில் அரசன் தக்கபடி ஆட்சி நடத்தி வந்தால் அவனுடைய குடைநிழலின்கீழ்க் குடிமக்கள் பசி, பிணி, பகை இல்லாமல் வாழ்வார்கள். இது அடிப்படையான நிலை. இப்படியிருந்தால் மட்டும் போதாது. உயிர் போகாமல் உடம்போடு ஒட்டிக்கொண்டு நிற்பது ஒரு சிறப்பா? உடம்பு அழகோடும் பொலிவோடும், உள்ளம் அறிவோடும் உணர்ச்சியோடும் நிறைவோடும் இருக்க வேண்டும். அவ்வாறு குடிமக்கள் வாழ்ந்தால் மட்டும் போதாது. அவர்கள் வளவாழ்வு வாழவேண்டும். குறை விலா நிறைவோடு வாழவேண்டும். குறைவுடை யாருக்கும் கொடுத்து வாழும்படி அவர்கள் வாழ்வு நிறைந்து வழிந்து பொங்க வேண்டும்.

அவர்களுடைய வாழ்வில் கலையும் தொழிலும் சிறக்க வேண்டும். அறிஞர்கள் தமக்குரிய சிறப்புடன் வாழ வேண்டும். ஞானிகள் பிறருடைய மதிப்பைப் பெற்று விளங்க வேண்டும். பாணரும், கூத்தரும், புலவரும் இனிது வாழ வேண்டும்.

இப்படியெல்லாம் இருந்தால் அந்த நாட்டு அரசன் வெற்றி பெற்றது முற்றுப் பெறும். பகைவரை அழித்து விட்டுத் தான் மட்டும் அரண்மனையில் உண்டு உடுத்து உறங்கி மகிழ்ந்தால் போதாது. அது தவறுகூட, நிலத்திலுள்ள களைகளைப் பறித்துப் பூண்டுகளை அழித்து உழுத பிறகு, பயிர் செய்ய வேண்டும். நாடு முழுவதும் நல்வளம் நிரம்பப் பாடுபடவேண்டும். அப்போது அவன் பெற்ற வெற்றிக்கு உண்மையான பயன் உண்டு. அரசன் தான் பெற்ற வெற்றியினால் ஊக்கம் பெற்று, குடிமக்கள் தம் தம் துறையில் இன்னலும் , இடையூறும் இல்லாமல் அவற்றைப் போக்கி வென்று இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஏற்பன செய்யவேண்டும். நாடு ஒருமிக்க நின்று வெற்றிபெறுவது முதல் படி. அதன்பின் ஒவ்வொரு வீடும் வறுமைப் பகையைப் போக்கி வெற்றிபெற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அறியாமைப் பகையைப் போக்கி அறிவொளி படைக்க வேண்டும்.

அவ்வாறு புதிய ஒளி படைக்கும் நாட்டிலே மேதாவிகள் தோன்றுவார்கள்; மகாத்மாக்கள் அவதாரம் செய்வார்கள்; மூன்று காலமும் அறிந்துணரும் பேரறிஞர்கள் உதிப்பார்கள். அந்தப் பெரியோர்களின் வாய்ச்சொல் என்றும் பிறழாது. யாவரும் போற்றும்படியாக முக்காலத்தின் நிகழ்ச்சிகளையும் அறியும் பெரியோரை அறிவர் என்று சொல்வது வழக்கம். ’இந்த மூன்று உலகத்திலும் இருளைப் போக்கும் கதிரவனேப் போன்றவர்கள் அவர்கள். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று கால நிகழ்ச்சியையும் நன்கு அறிவார்கள். பால் புளித்தாலும், பகல் இருண்டு மாறினாலும், கதிரவன் வடக்கே தோன்றினாலும் அவர்கள் வாய்மொழி மாறவே மாறாது’ என்று அந்த அறிவரின் சிறப்பை நூல் கூறுகிறது.[1]
----------
[1] புறப்பொருள் வெண்பா மாலை, 167.

தொல்காப்பியனார், "மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவன்' என்று அறிவன் இயல்பைக் கூறுவார். ’காமம் வெகுளி மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்' என்பது நச்சினார்க்கினியர் உரை. சிறந்த மெய்ஞ்ஞானியரையே அறிவர் என்று சொன்னார்கள். அகத்தியர், புத்த பகவான் முதலிய பெருமக்களையும் அறிவர் கூட்டத்தில் சேர்ப்பார்கள்.

அறிவன் வாகைக்கு உதாரணமாகப் புத்தரைப் பற்றிய பழஞ் செய்யுள் ஒன்றைத் தொல்காப்பிய உரையில் பார்க்கிறோம். அவருடைய புறமும் அகமும் அதில் அழகாகக் கோலம் பெறுகின்றன.

புத்தர் அமர்ந்திருக்கிறார். ஞானத்தின் வடிவாக, ஞானமே தன் பெயராக உள்ள போதி மரத்தின் அடியில் எழுந்தருளியிருக்கிறார். அந்தப் போதி மரம் வாடாதது. அதன் இலைகள் மரகதத்தால் அமைந்தவை போலப் பச்சைப் பசேலென்று பளபளக்கின்றன. அதன் கீழ் ஒளி யுருவம் காட்டி அமர்ந்திலங்கும் அப்பெருமானுடைய திருவுள்ளம் எப்படி இருக்கிறது? அங்கே எவ்வுயிருக்கும் கருணைத்தேன் பில்குகிறது. அந்த உள்ளம் விரிவுடையது, மிக மிக மென்மையானது; மலரினும் மெல்லிது, கருணையினால் அது மென்மையுடையதாக இருப்பினும், அதன் திண்மை வரையறைக்குள் அடங்காதது. தண்மையும் மென்மையும் உள்ள இடத்தில் திண்மை இருக்குமோ? மலரில் திண்மை ஏது? ஆனால் இந்த முனிவர்பிரான் நெஞ்சத்திண்மை உலகம் அறிந்தது.

அந்தத் திண்மையைக் குலைத்துவிட வேண்டும் என்று எண்ணினான் மாரன். அவனுடைய அம்பிலே பட்டு மயங்காதவர் யார்? அவன் தன் படைகளாகிய அழகிய பருவ மங்கையரை மரகதப் பாசடை நிரம்பிய போதி மரத்தடிக்கு அனுப்பினான். அங்கேதான் ஞான வீரராகிய போதிநாதர் இருந்தார். அந்த மகளிர், கண்டார் விரும்பும் எழிலையுடையவர். அவர்கள் கண்வீச்சில் குலையாத நெஞ்சம் இல்லை. வீரரின் வாள் செய்யாத காரியத்தை அந்தக் கண் செய்துவிடும். பார்ப்பதற்குக் குளிர்ச்சியாக நீண்டு நெடுமா மழைக் கண்ணாகத்தான் தோன்றும். ஆனால் அதைச் சுழற்றி எதிரியை வெல்லப் புறப்பட்டு விட்டார்களானால் அந்த மழைக்கண் வாட்கண் ஆகிவிடும். வாளைக் குறுக்கும் நெடுக்கும் சுற்றிலும் சுழற்றுவதுபோல அந்த மோகினிகள் தம் கண்களைச் சுழற்றினர். அக் கண்கள் குறுக்கே பாய்ந்து விலங்கின. புத்தருடைய தோளையும் மார்பையும் அளவெடுத்தன. தலைமுதல் அடி வரையில் பாய்ந்து வெட்டின. எங்களை எதிர்ப்பார் யார் என்று நிமிர்ந்து நின்றன. என்ன செய்தும் அந்தக் கூரிய வாள்கள் புத்த பகவானுடைய நெஞ்சைப் பிளக்க முடிய வில்லை. அவற்றின் முனைகள் சிறிதும் அதைத் தொட முடியாமல் மழுங்கின.

அந்த நெஞ்சத்தைத்தான் மெல்லிய மலர் என்கிறார்கள். அது மெல்லியது எப்படி ஆகும்?

இவ்வாறு அந்த அழகிய பாடல் கேட்கிறது.

[போதி - அரசமரம். பாசடை - பச்சை இலை. உறைத்து - துளித்து. என்ப - என்று சொல்வார்கள். காமர் -அழகு, செவ்வி - பருவம், விலங்கி - குறுக்கே பாய்ந்து. மழைக் கண்ணாகிய வாள். போழ்ந்தில - பிளக்கவில்லை. மெல்லிய வாறு - மென்மையாக இருக்கும் விதம்.]
★ ★ ★

நாட்டில் தம் நலத்தைத் துறந்து தவம் புரியும் மக்கள். பலர் இருப்பது இந்த நாட்டுக்குச் சிறப்பு. உலகத்தில் அதிகமான துறவிகளை உடைய நாடு இது. தாம் பெற வேண்டிய கலங்களை ஏனையவர் பெறும்படி விடுவது துறவு. தம் குடும்பம் என்ற வரையறையின்றி உலகமே குடும்பமாக எண்ணி வாழ்வது துறவு.

அவர்கள் தனிமையை நாடித் தவம் புரிவார்கள். தாம் செய்த தவத்தால் அவர்களுக்கு ஆன்ம சக்தி மிகுதியாகும். அப்படிச் சேர்த்துக்கொண்ட பேராற்றலை உலகத்துக்குப் பயன்படுத்துவார்கள். மகாத்மா காந்தி வாரத்துக்கு ஒரு முறை மௌனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை நடத்தினர். அடிக்கடி உண்ணாது நோற்றர். இவை அவருடைய ஆன்ம சக்தியை விளக்கமுறச் செய்தன. உள்ளொளி பெருக்கின. உள்ளொலியைக் கேட்கும்படி செய்தன. தவம் புரிபவர்களுடைய பெருமையைத் திருக்குறள் பலபடியாக விரித்துரைக்கிறது.

தவம் செய்பவர்களைத் தாபதர்கள் என்பார்கள். தவ ஒழுக்கத்தில் நிற்பவர்கள் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுப்பார்கள். பிறருக்கு எள்ளளவும் துன்பத்தைச் செய்யமாட்டார்கள்,

என்பது குறள் கூறும் தவத்தின் இலக்கணம். தவத்தின ரின் சிறப்பைச் சொல்லுவது தாபத வாகை.

மற்றவர்களைப் போலப் புலன் நுகர்ச்சியிலே ஈடுபடாமல், தேவைகளைக் குறைத்துக் கொள்வது தவம் பயில் பவர்களுக்கு இயல்பு. அவர்கள் நீரிலே பலகால் மூழ்குவார்கள். தரையே படுக்கையாகக் கிடந்து உறங்கு வார்கள். தோலையே ஆடையாக உடுப்பார்கள். தலையை மழிக்காமல் சடையை வளர விடுவார்கள். சுடரை வழிபடுவார்கள். மக்கள் வாழும் ஊர்களுக்குச் செல்லாமல் தனிமையை நாடிக் காட்டில் தங்குவார்கள். கடவுளைப் போற்றுவார்கள். தம்மை நாடி வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பார்கள்.

இத்தகையவர்களையே ரிஷிகள் என்றும், முனிவர்கள் என்றும் சொல்கிறோம்.

சிறந்த அரச வாழ்வையும் துறந்து தவவாழ்க்கையை மேற்கொண்டவர்கள் பழங்காலத்தில் இருந்தார்கள். அத்தகையவர்களின் துறவு நிலையைக் கண்டு புலவர்கள் பாடிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ளன. ஒரு பாடல், ஒருவன் துறவு பூணுவதற்குமுன் இருந்த நிலையையும், பூண்ட பின் மேற்கொண்ட நிலையையும் சொல்கிறது.

அவன் துறப்பதற்கு முன் அழகிய மாளிகையில் வாழ்ந்திருந்தான். அந்த மாளிகையில் எங்கே பார்த்தாலும் கலை மணம் கமழும். ஓவியக் காட்சிகள் ஒளிரும். அந்த மாளிகையின் முழு உருவத்தையும் பார்த்தால் கச்சிதமான சிற்ப வடிவமாகத் தோன்றும். சிறிய மாளிகையா அது? பலர் கூடிப் பேச வேண்டுமா? விரிவான இடம் அங்கே உண்டு. ஒரு நடன அரங்கு நடக்க வேண்டுமா? அதற்கு வேண்டிய இடம் உண்டு. ஒரு பெரிய விழா நடைபெற வேண்டுமா? பல ஊர்க்காரர்களும் வந்து வசதிகளோடு தங்கும்படி விரிவான பகுதிகள் இருந்தன. அத்தகைய விரிவான இடத்தையுடைய வரைப்பு அது.

அங்கே சிற்பக்கலையில் சிறந்தோர் செதுக்கி அமைத்த பாவைகளைப் போன்ற அழகு மகளிர் உலாவுவார்கள். அவனோ பெரு வீரன். அவன் திண்டோள்களைக் கண்ட மகளிர் அவனை அணைய வேண்டுமென்று அவாவுவார்கள். அந்தப் பேறு கிடைக்காவிட்டால் மெலிந்து வாடுவார்கள். அவர்கள் வளைகள் நெகிழும்; இழை நெகிழும். இவ்வாறு பல மகளிருடைய இழைகளை நழுவும்படி செய்த வீரன் அவன். திருவும் அழகும் வீரமும் வலிமையும் உடைய அவன் இப்போது துறவியாகி விட்டான்.

இப்போது எப்படி இருக்கிறான்?

இப்போது அவன் வாழும் இடம் காடு. மூங்கில்கள் வளர்ந்த மலச்சாரற் காடு அது, மலையிலிருந்து வரும் அருவியில் அவன் பலகால் நீராடுகிறான். அங்கே எரியோம்புகிறான். அதற்குரிய சமித்தைக் காட்டு யானை கொண்டுவந்து தள்ளுகிறது, விலங்கினங்கள் அவனுக்கு அஞ்சுவதில்லை; அவனை அச்சுறுத்துவதும் இல்லை. பிற உயிர்களுக்குச் சிறிதளவும் தீங்கு புரியாத விரதத்தை அல்லவா அவன் மேற்கொண்டிருக்கிறான்? அதனால் அவை அவனுக்கு ஏவல் புரிகின்றன.

அவனுடைய கேசம் சடையாகிவிட்டது. நீரில் மூழ்கி அந்தச் சடையை உலர்த்துகிறான். ’அருவி ஆடிச் செந்தீ வேட்டுச் சடையைப் புலர்த்தும் இவனா முன்பு பாவை யன்ன மகளிரின் தொடியை நெகிழ்த்த மள்ளன்!’ என்று கண்டோர் வியக்கும் வண்ணம் அவன் தாபதக் கோலத்தில் ஒளிர்கிறான். - இப்படி மாற்பித்தியார் என்ற புலவர் பாடுகிறார்:

ஒவம் - சித்திரம். வரைப்பு - கட்டிடம்; மாளிகை, தொடி – வளை,. இழை - அணிகலன். மள்ளன் - வீரன், கண்டிகும் - கண்டோம். கழை - மூங்கிலேயுடைய கண். இடத்தையுடைய. கடுந்தெறல் - மிக்க வெப்பத்தையுடைய, செந்தீ வேட்டு - அக்கினி காரியங்களைச் செய்து. புறம் தாழ் - முதுகிலே தொங்கும். புலர்த்துவோன் - உலர்த்துபவன். மள்ளனைப் புலர்த்துவோனாகக் கண்டோம்.]

பல்வகைப் பொருளைப் பெற்று நுகரும் வீரத்தினும் அதனைப் பிறர் பயன் கொள்ளும்படி தியாகம் செய்து நிற்கும் வீரம் சிறந்தது என்பது ஆன்றோர் கொள்கை.
----------

13. பாசறையில்


போர் செய்யப் புகுந்த மன்னனுக்கு எப்படியேனும் போரில் பகைவனை வெல்ல வேண்டும் என்ற எண்ணமே முந்துற நிற்கும். எந்தத் தடை நேர்ந்தாலும் அதனால் உள்ளம் தளராமல் மேன்மேலும் வீறுகொண்டு எழுவதே வீரம். நகமும் சதையும் போலக் காதலியுடன் இணை பிரியாது ஒன்றி வாழும் உயர்ந்த காதல் வாழ்வு உடையவ னானாலும், அதையும் இப்போதைக்குத் துறந்துவிட்டுப் பகைவரை ஒடுக்குவதையே லட்சியமாகக் கொள்வது அரசன் இயல்பு.

காதலர்கள் கூதிர்க்காலத்தில் ஒன்றியிருப்பார்கள். புணர்ச்சி என்னும் உரிப்பொருளையுடையது குறிஞ்சித் திணை. அந்தத் திணைக்குக் கூதிர்க் காலம் உரியது. குளிரால் நடுங்கும் அக்காலத்தில் கணவன் மனைவியர் பிரியாமல் ஒன்றுபட்டு வாழ்வது மரபு. ஆனால் வீரம் மிக்க அரசன் போர்க்களத்தில் அக்காலத்தில் தங்கும்படி நேர்ந்தால் அவன் காமத்தையும் வென்று வீர உணர்ச்சியுடன் விளங்குவான். இது பாராட்டுவதற்குரிய நிலை.

’கூதிர்ப் பருவம் வந்தும் இவன் தன் காதலியை எண்ணாமல் பகைவரை வெல்லும் ஒரே நோக்கத்தோடு பாசறையில் தங்கியிருக்கிறானே!’ என்று புலவர்கள் அப்போது வியப்பார்கள். இப்படி வியந்து பாடுவதைக் கதிர்ப் பாசறை என்ற துறையாக இலக்கணம் கூறும்.

’பலபல தெருக்களுடன் பாசறை இருக்கிறது. அங்கங்கே கூடாரம் போட்டுக்கொண்டு தங்கியிருக்கிறார்கள் வீரர்கள். கூடாரங்களின் மேலே தழையைப் போட்டு வேய்ந்திருக்கிறார்கள். கூதிர்ப் பருவம் ஆதலின் சிறுசிறு துளிகளை வீசுகிறது வானம். உடல் நடுங்குகிறது. வீரர்கள் தம் தம் கூடாரத்தில் ஒடுங்கியிருக்கிறார்கள். இந்தக் குளிரால் நடுங்கியும் அரசன், நினைத்தால் போய் வரத் தேரைப் படைத்தவன், தன் மனைவியைப் போய்ப் பார்த்து வரவேண்டும் என்று நினைக்கவில்லே. இவன் வீரம் இருந்தபடிதான் என்னே!’ என்று வியந்து படும் பாட்டு ஒன்று வருமாறு.

[கவலை-சிக்கலான வழி. மறுகு - தெரு. கடுங்கண் - கொடுமை. மறவர் - விரர். உவலை - தழை. துவலே-சிறிய துளி. மூதில் -பழைய அரண்மணை. முயக்கு - சேர்தல்.]
---------
[1]. புறப்பொருள் வெண்பா மாலை, 169,

இப்படியே, சலார் சலார் என்று வாடைக் காற்று வீசவும் மனம் சலனமின்றி இருக்கிறான் என்று பாடுவது வாடைப் பாசறை என்னும் துறை. பத்துப்பாட்டு என்னும் சங்க நூலில் நெடுநல் வாடை என்ற மீண்ட பாட்டு இருக் கிறது. அது வாடைக் காலத்திலும் பாசறையில் இருந்து வீரம் மங்காமல் விளங்கிய பாண்டியன் கெடுஞ்செழியனே நக்கீரர் பாடியது.

வாடையினால் மக்களுக்கும் பிறருக்கும் உண்டாகும் துன்பத்தையும், பாசறையில் அரசன் போரில் புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு உலவுவதையும், அரண்மனையில் அவனுடைய மனைவி அவனை எதிர் நோக்கி வாடியிருப்பதையும் நெடுநல்வாடை அழகாகச் சொல்கிறது.

மழை பெய்தமையால் எங்கும் குளிர் படர்கிறது. மக்களின் பற்கள் குளிரினால் பறையடிக்கின்றன. நெருப்பிலே கையைக் காட்டிக் காட்டி அந்தச் சூட்டைக் கன்னத்தில் ஒத்திக் கொள்கிறாச்கள், ஆடுமாடுகள் மேயப் போகாமல் அப்படி அப்படியே நின்று விடுகின்றன. குரங்குகள் கையைக் கட்டிக்கொண்டு குந்தியிருக்கின்றன. பறவைகள் சிலிச் சிலீர் என்று வீசும் வாடைக் காற்றுத் தாங்காமல் மரங்களிலிருந்து கீழே விழுகின்றன. கன்று ஊட்டப் போனால் பசுமாடு அதை உதைக்கிறது. கூதிர்க் காலத்துக் குளிர் குன்றையே நடுங்கச் செய்துவிடும் போலத் தோன்றுகிறது.

இந்தப் பருவத்தில் முசுட்டை பூக்கிறது; பீர்க்கும் பொன்போல மலர்கிறது. கொக்குகளும் காரைகளும் ஈரமான மணலில் நின்றபடியே ஓடும் கயல் மீனைக் கொத்துகின்றன. வெள்ளையாக உள்ள மேகங்கள் வானம் எங்கும் பரவிச் சிறு சிறு துளிகளகத் தூவுகின்றன.

நெல் வயல்களில் கதிர்கள் முற்றி வளைந்து நிற்கின்றன. கமுகங் குலைகள் நன்றாக முற்றுகின்றன. சோலைகளில் மரக் கெம்புகளிலிருந்துத சொட்டுச் செட்டென்று மழைத்
துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.

நகரத்தின் தெருக்களில் நீர் ஓடுகிறது. ஆறுகள் கிடந் தாற்போல் அவை தோற்றம் அளிக்கின்றன. உடல் வலிமையை உடைய அயல் நாட்டு மக்கள் கள்ளை உண்டு மழைத்துளிக்கு அஞ்சாமல் அங்கும் இங்கும் திரிகிறார்கள். வீடுகளில் உள்ள மகளிருக்குப் பொழுதே தெரியவில்லே. வானம் மூடிக் கிடக்கிறதுதான் கரணம். அவர்கள் பிச்சி யரும்புகளைப் பறித்துத் தட்டில் வைத்திருக்கிறார்கள். அவை குப்பென்று மலர்கின்றன. அதைக் கண்டு பகற் காலம் கடந்து மாலை வந்துவிட்டதென்பதை அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். உடனே விளக்கின் திரியைக் கொளுத்தி நெல்லும் மலரும் தூவித் தெய்வத்தை வணங்குகிறார்கள். கடைவீதி முழுவதும் மாலை வந்ததை அறிந்து அந்தக் காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்கிறார்கள்.

வீட்டுக் கொடுங்கைகளில் ஆணும் பெண்ணுமாக உள்ள புறாக்களுக்கு இரவு பகல் தெரியவில்லை. அதனல் பறந்துபோய் வெளியிடங்களில் இரை தேடாமல் அப்படி அப்படியே நிற்கின்றன. கால் வலித்தால் காலை மாற்றிக் கொள்கின்றன. வீடுகளில் உள்ள வேலைக்காரர்கள் கத்தூரி முதலியவற்றைக்கொண்டு அமைக்கும் ஒருவகைக் கலவைப்பொருளை அரைக்கிறார்கள். இமய மலையிலிருந்து வந்த சந்தனக் கல்லும் பொதிய மலையிலிருந்து வந்த சந்தனமும் கேட்பாரற்று வீணே கிடக்கின்றன. குளிர் காரணமாகப் பெண்மக்கள் தங்கள் கூந்தலில் மாலையைப் புனைந்து கொள்ளவில்லை; சில பூக்களை மட்டும் செருகிக் கொள்ளுகிறார்கள். நெருப்பை மூட்டி அதில் அகில், கற்கண்டு முதலியவற்றைப் போட்டுப் புகைக்கிறார்கள். நல்ல சிற்ப வேலைப்பாட்டை-யுடைய விசிறிகளை உறையிலேயிட்டு முளையிலே தொங்கப் போட்டிருக்கிறார்கள். அவற்றிற்கு இப்போது என்ன வேலை? அவற்றில் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது.

உயர்ந்த மாளிகைகளில் வேனிற் காலத்தில் காற்று வருவதற்காகத் திறந்து வைக்கும் சாளரங்களின் இரண்டு கதவுகளையும் இறுக மூடியிருக்கிறார்கள். வாடைக் காற்றின் குளிர் தாங்க முடியவில்லை. குவிந்த வாயையுடைய பாத்திரத்தில் தண்ணிர் வைத்திருப்பார்கள்; அதை அடிக்கடி எடுத்து முன்பெல்லாம் குடிப்பார்கள். இப்போது யாரும் அதன் பக்கமே போவதில்லை. கணப்பிலுள்ள நெருப்பையே சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறது! எல்லோரும் அதைச் சுற்றி உட்கார்ந்திருக் கிறார்கள்.

ஆடும் மகளிர் யாழைச் சுருதி சேர்க்கப் பார்க்கிறார்கள். குளிரால் அது பதம் கெட்டிருக்கிறது. அதைத் தம் மார்பிலே தடவிக்கொண்டு அந்தச் சூட்டில் சுருதி சேர்க்கிறாக்கள், கணவன்மாரைப் பிரிந்த மகளிர் தனிமைத் துன்பம் பொறாமல் வருந்துகிறார்கள்.

இவ்வாறு கூதிராகிய பருவம் தன் இயல்பைக் காட்டிக்கொண்டு நிலவுகிறது.

அரசி அரண்மனையில் படுக்கையில் கிடக்கிறாள். தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல், பாண்டிய மன்னன் பிரிந்து போர்க்களத்துக்குச் சென்றிருத்தலால் பிரிவுத் துன்பத்தால் வருந்துகிறாள். அருகில் தோழிமார்கள் அவன் காலை வருடிக் கொண்டிருக்கிறார்கள், வயசான மூதாட்டியர் பல வகையான கதைகளைச் சொல்லிப் பொழுது போக்க முயலுகிறார்கள். “உன் கணவர் இதோ வந்துவிடுவார்!" என்று தேறுதல் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கே, போர்க்களத்தில் பாடி வீடு அமைத்துக் கொண்டு வீரர்களோடு தங்கியிருக்கும் அரசன் எப்படி இருக்கிறான்?

யானைகளை வேலாலும் வாளாலும் துணித்து வென்ற வீரர் பலர் பாசறையில் முகத்திலும் மார்பிலும் புண்ணை யுடையவராகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொருட்டு அரசன் தன்னுடைய கூடாரத்திலிருந்து புறப்படுகிறான், இரவு நேரம். அங்கங்கே வட்ட வட்டமான விளக்குகளில் பருத்த திரிகளையிட்டு ஏற்றியிருக்கிறார்கள். வடக்கிருந்து வரும் வாடைக் காற்று வீசுகிறது. அப்போதெல்லாம் விளக்கிலுள்ள சுடர்கள் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து ஒளி விடுகின்றன. அரசனுக்கு முன்னாலே சேனாபதி செல்கிறான். அவன் கையிலே வேல் இருக்கிறது. அதன் தலையிலே வேப்ப மாலையைக் கட்டியிருக் கிறார்கள். பாண்டிய மன்னனது சேனைத் தலைவன் அல்லவா? சேனாபதி ஒவ்வொரு கூடாரமாகப் புகுந்து வீரர்களை இன்னார் இன்னார் என்று அரசனுக்குக் காட்டுகிறான்.

பாசறை நடைபாதைக்கு அருகில் குதிரைகளைக் கட்டி யிருக்கிறார்கள். சேணம் முதலியவற்றைக் கழற்றாமல் அப்படி அப்படியே நிறுத்தியிருக்கிறார்கள். மழைத்துளிகள் தம் மேலே பட்டவுடனே குதிரைகள் அவற்றை உதறுகின்றன. இந்தத் தெரு வழியே அரசன் செல்கிறான். அவன் தன்மேலே மெல்லிய மேலாடையைப் போட்டுக் கொண்டிருக்கிறான். அது நழுவுகிறது. நழுவ நழுவ அதை இடக்கையினால் இடுக்கிக் கொள்கிறான், அவன் பக்கத்திலே அவனுடைய மெய்காப்பாளன் தன் தோளிலே வாளைத் தொங்க விட்டுக்கொண்டு வருகிறான், அவ னுடைய தோளில் வலக்கையை வைத்துக்கொண்டு நடந்து வருகிறான் அரசன். முத்துமாலையையுடைய வெண் கொற்றக் குடையை மழைத் துளிக்குப் பாதுகாப்பாக ஒருவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். புண்பட்ட வீரர்களைக் கண்டு இன்சொல் கூறும்பொருட்டு இனிய முகத்தோடே செல்லுகிறான் அரசன்.

நேரம் நடு இரவு. மேலே மழை, கீழே ஈரம், இந்தக் குளிரிலும் நள்ளிருளிலும் அரசன் தூங்கவில்லை, தன் மனைவியையும் நினைக்கவில்லை. தன் பாசறையில் வீரர்களைக் கண்டு முகமலர்ந்து பாராட்டி ஊக்கம் உண்டாக்கும் வேலையிலே அவன் முனைந்து நிற்கிறான்.

”அத்தகைய அரசன் போரில் வெற்றி பெறுவானாக!” என்று வேண்டிக்கொள்ளும் முறையில் நெடுநல் வாடை அமைந்திருக்கிறது.

அந்த அரசனுடைய நிலையைச் சொல்லும் அடிகள் வருமாறு:

[ புடை வீழ் - பக்கத்தில் நழுவி விழும். அம் துகில் - அழகிய மேலாடை. இடவயின் தழீஇ - இடப் பக்கமாக இடுக்கி, முகன் அமர்ந்து - முகத்தில் அன்பைத் தோற்றுவித்துக் கொண்டு. நூல் கால் யாத்த மாலை - நூலாலே கட்டின முத்துமாலை. தவ்வென்று அசைஇத் தா துளி - தவ்வென்னும் ஓசையை உண்டாக்கி அசைந்து பரவும் மழைத் துளியை.)
----------

14. வாகையின் வகை


இந்த நாட்டில் வெவ்வேறு தொழிலையும் வெவ்வேறு கடமைகளையும் கொண்ட மக்கள் அவற்றைச் சரிவரச் செய்து சமுதாயம் முழுவதும் நல்வாழ்வு வாழச் செய்தார்கள். ஒவ்வொரு துறையில் ஈடுபட்டுத் தொழிலாற்றும் பிரிவினர் சமுதாயமென்னும் உடம்பில் வெவ்வேறு உறுப்புக்களைப்போல இருந்து வந்தனர். சமுதாய நன்மைக்கு ஒவ்வொருவருடைய உழைப்பும் இன்றியமையாததாக இருந்தது. காட்டைக் காத்துச் செங்கோலோச்சும் அரசரும், என்றும் நிலையான உண்மைகளை நினைப்பூட்டிக்கொண்டு சமாதானத்தையும் நடுநிலையையும் நிலைநிறுத்திய அந்தணரும், பொருள்களைக் கொள்ளவேண்டிய இடத்தில் கொண்டு கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்து யாவரும் யாவும் பெறச் செய்த வணிகரும், வேளாண்மையிலும் பிற தொழில்களிலும் ஈடுபட்ட தாளாளரும் சமுதாயத்தின் உயிர் நாடிகளாக விளங்கினர். அவ்வவர் தொழில்களைப் புலவர்கள் பாராட்டிப் பாடினர்கள். ஒவ்வொருவர் நிலையையும் நன்கு உணர்ந்து சிறப்பித்தார்கள். அவ்வாறு சிறப்பித்துப் பாடுவதைத் துறையாக்கி அதற்கு இலக்கணமும் அமைத்தார்கள்.

குற்றம் செய்யாமல் செங்கோல் செலுத்தி வீர முரசம் முழங்க எல்லா உயிர்களுக்கும் நலம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு நடுநிலைமையில் நின்று சூரியனைப்போல ஒளிர்பவன் அரசன். அவன் இயல்பை அரச முல்லை என்னும் துறையால் புலவர் போற்றினர். முத்தீ ஓம்பி கான்மறையைப் பயின்று வாழும் அந்தணர், இரு வேந்தர் முரண் கொண்டு பகைத்தால் அவர்களிடையே தூது சென்று சமாதானத்தை விளைவித்தனர். இதைப் பார்ப்பன முல்லை என்னும் துறையாக வைத்துப் பாராட்டினர்.

அக்காலத்தில் அரசர்கள் வழக்கை ஆராய்ந்து நியாயத்தை நிலை நிறுத்துவதற்கு அவையத்தை நிறுவினார்கள். அதற்கு அறங்கூறவையம் என்று பெயர், அந்த அவையத்தில் கல்வி முதலியவற்றால் சிறந்த பெரியோர்களை நியமித்து அரசன் தலைமை தாங்கி நியாயம் வழங்குவான். உறையூரில் இருந்த அறங்கூறவையம் மிகச் சிறப் புடையது. மதுரையில் இருந்த அவையத்தைப்பற்றி மதுரைக் காஞ்சி என்ற நூல் சிறப்பித்துச் சொல்கிறது.

அவையிலுள்ள பெருமக்கள் எட்டு வகைக் குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்ல குடிப்பிறப்பும் கல்வியும் நற்குணங்களும் வாய்மையும் தூய்மையும் நடுநிலையும் அழிக்காறின்மையும் அவாவின்மையும் ஆகிய எட்டு இயல்புகள் உடையவர்களையே அரசன் அறங்கூறவைய மாந்தராக நிறுவுவான். இந்தக் குணங்களை, உடை முதலியனவாக உருவகம் செய்து ஒரு பழம் பாட்டுக் கூறுகிறது. நல்ல குடிப்பிறப்பாகிய உடையை உடுத்து, நூலறிவாகிய மாலையைச் சூடி, நல்லொழுக்கமாகிய அணியை அணிந்து, சத்தியம் என்பதை உணவாகக் கொண்டு, தூய்மையாகிய காதலியின் இன்பம் நுகர்ந்து, நடுநிலை என்னும் நகரில் தங்கி, அழுக்காறு இன்மை, அவாவின்மை என்னும் இரண்டு நிதிகளை ஈட்டுபவர்களாம் அவர்கள். அவைய முல்லை என்னும் துறை இந்த அவையினர் இயல்பைக் கூறும். பிற வகையான அவைகளையும் இந்தத் துறையில் சிறப்பிப்பது உண்டு.

சோதிடம் கூறுபவனுக்குக் கணி என்றும் கணிவன் என்றும் பெயர், பூங்குன்றத்தில் ஒரு சோதிடர் நல்ல புலவராக இருந்தார். அவர் கணியன் பூங்குன்றனார் என்று வழங்கப் பெற்றார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்? என்று நாம் அடிக்கடி கேட்கும் தொடக்கத்தை யுடைய பாடலைப் பாடியவர் அவர். சோதிட நூல்கள் பலவற்றையும் அறிந்து விண்ணிலும் மண்ணிலும் நிகமும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல் உடையவன் கணிவன். அவன் சிறப்பைச் சொல்வது கணிவன் முல்லை என்ற துறை.

பல காலமாகப் பல போர்களில் ஈடுபட்டு வீரத்தை நிலை நிறுத்திய பழங்குடிகள் பல தமிழ் நாட்டில் இருந்தன. அந்தக் குடியில் பிறந்த பச்சிளங் குழந்தைக்கும் வீர உணர்ச்சி மிகுதியாக இருக்கும். மகளிரும் விர உணர்ச்சி உடையவர்களாக விளங்குவார்கள். அவர்களுடைய வீரத்தைப் புலப்படுத்தும் காட்சிகள் சில, இலக்கண இலக்கியங்களில் வருகின்றன.

ஒரு மறக்குடி மகள் தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த நாட்டின்மேல் பகைப்படை போருக்கு வந்த செய்தியை அவள் உணர்ந்தாள். உடனே அவளுக்கு வீர உணர்ச்சி மிக்கது. பிள்ளையைச் சட்டென்று எடுத்து நிறுத்தினாள். முன்பு அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் பகைவரைக் குத்தி வளைந்து போன வேல் ஒன்று இருந்தது. அதை விரைவாக எடுத்து அதன் வளைவைச் சட்டென்று நிமிர்த்தினாள். அதை அவன் கையில் கொடுத்தாள், பரம்பரை பரம்பரையாகப் போரில் புகுந்து வீர விளையாடல் புரிந்தவர்கள் அவளுடைய குடியின் முன்னோர்கள். அத்தகையவர்களுடைய பெயரும் பீடும் எழுதி அமைத்த நடுகற்கள் அங்கே இருந்தன. அவற்றைக் காட்டி அந்தப் பெண் பால்மணம் மறாத தன் புதல்வனை, “நீ போருக்குச் செல்” என்று தூண்டினாள். தனக்கு அவன் ஒருவன்தான் மைந்தன் என்பதை நினையாமல், வேறு ஆடவர் இல்லாத அந்தக் குலத்துக்கு அவன் ஒருவனேனும் இருக்கிறனே என்ற திருப்தி அவளுக்கு. அத்தகைய மடந்தையரை மூதில் மடந்தையர் என்று சொல்லுவார்கள்.

மறக்குடியில் பிறந்த மற்றொரு பெண், மேலும் மேலும் வீரம் சிறந்து நின்ற தன்னுடைய குடியின் பெருமையை எடுத்துச் சொல்லுகிறாள். அவளுடைய தகப்பன் போரில் தன் வீரத்தைக் காட்டிப் பட்டான். அவன் இன்று நடுகல்லாக நின்று பூவும் புகையும் பெறுகிறான். அவளுடைய கணவனோ சில காலத்துக்குமுன் போர்க்களம் சென்று முகத்திலும் மார்பிலும் புண்ணைப் பெற்று வீர சொர்க்கம் அடைந்தான். அவளுக்குச் சில தமையன்மார்கள் இருந்தர்கள். அவர்களும் படையின் முன்னணியில் நின்று உயிரைப் பலி கொடுத்தனர். எல்லாருக்கும் மேலாக, அவரடைய புதல்வன் படையில் சேர்ந்து போரிடச் சென்றான். அவன் சென்ற படை பின்னிட்டது. அதனால் அஞ்சாமல் அந்தப் படையின்பின்னே நின்று பகைவரை எதிர்த்தான். அப்பொழுது பகைவருடைய அம்புகள் அவன் உடல்பெம்லாம் தைத்தன. கீழே விழுந்து கிடந்த அவனைப் பார்த்தால் முள்ளம் பன்றியைப் போல இருந்தது. இவ்வாறு தன்னுடைய உறவினர்கள் போர்க்களத்தில் காட்டிய விரச் சிறப்பை அக்த மறக்குடி மங்கை சொல்லுகிறாள்.

[கல் - நடுகல். மொய் - வலிமை. என்னையர் - என் தமையன்மார். கணை - அம்பு, உதைப்ப -செலுத்த. எய் - முள்ளம்பன்றி. ஏறு - ஆண் சிங்கம் போன்ற மகன்.]

இப்படியே இல்லத்தையும் ஊரையும் வீரம் உடையனவாகச் சொல்லுவதும் உண்டு.

அரசன் தன்னுடைய நாட்டை நன்கு பாதுகாத்து, ஆறில் ஒன்று வரியாக வாங்கி, காவல் தொழிலை மேற்கொள்ளுவதையும், போரில் புகுந்து வென்று போர்க் களத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ளுவதையும் பல படியாகப் புலவர் பாராட்டுவர், அவனுடைய குடையைப் புகழ்வர். அவன் உறங்குவதைச் சிறப்பிப்பர்.

மன்னன் தனக்கு வேண்டியதைக் கொடுக்கவும் திருப்தி அடையாமல், வீர விளையாட்டையே எதிர் நோக்கிச் சில வீரர்கள் இருப்பார்கள். அரசனால் பல வளங்கள் பெற்று வாழ்ந்த வீரர்கள் போரில் தம் உயிரைக் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடன் கழிப்பார்கள். இவர்களுடைய புகழையும் புலவர் எடுத்து உரைப்பர். சால்பு நிறைந்த சான்றேர்களுடைய சிறப்பையும், ஒரு பக்கத்தை உடைய கிணை என்னும் பறையை அடிப் போரின் இயல்பையும் பாராட்டுவர்.

உலகத்திலுள்ள பற்றை ஒழித்து மெய்யான பொருளை விரும்பி வாழ்வதும், உலகத்திலுள்ள துயரைக் கண்டு பற்றை ஒழிந்து நிற்பதும் சிறந்த மக்களுடைய இயல்பு. சில அரசர்கள் அரச உரிமையைக் கைவிட்டு விரக்தியோடு இருப்பது உண்டு. ‘பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி உடையார்’ என்று கூறுவர், துறவும் ஒருவகை வெற்றியே.

ஒருயிர்க்குத் துன்பம் வந்தால் அதைத் தன் உயிரைக் கொடுத்துக் காப்பதும், அதன் வருத்தத்தைத் தன்னுடையதாகக் கொண்டு வருந்துவதும், பொய் கூறுதல் கள்ளுண்ணுதல் முதலியவற்றைத் துறந்து நிற்றலும் அருளொடு புணர்ந்த துறவறத்தின் இலக்கணம். எந்தப் பொருளினிடத்தும் பற்றின்றி நிற்கும் தன்மையும் அந்தத் துறவின் இலக்கணமாகும். இவையெல்லாம் அகப் பகையை வென்ற வெற்றி.

இப்படியாக வீரத்தை விரிவாகச் சொல்லும் புறப் பொருளில், பல வகை வெற்றியைச் சொல்லும் வாகைத் திணையில், மக்களுடைய நிலையும் சிறப்பும் அகப்புறப் போராட்டங்களில் வென்று நிற்கும் வீரமும் பேசப்படுகின்றன.
----------

15. அரசன் புகழ்


அரசனைத் தலைவனாகக் கொண்ட முடியாட்சியையே பழங்காலத்தில் உலகத்தில் உள்ள யாவரும் போற்றினார்கள். பாரத நாட்டினர் அரசன் திருமாலின் அம்சம் என்று எண்ணிச் சிறப்பித்தார்கள். 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்’ என்று ஆழ்வாரும் அருளினர். வேந்து அமைவு இல்லாத நாடு நன்மை பெறாது என்று திருவள்ளுவர் கூறுகிறார். அரசன் சமுதாயத்தின் தலைவனாக, சமுதாயத்தின் நன்மையைக் காப்பாற்றுபவனாக விளங்கினான். எல்லாரும் அவன் நன்கு வாழ வேண்டுமென்று விரும்பினார்கள். அவன் எல்லாரும் நன்கு வாழ வேண்டுமென்று விரும்பினான். அன்பில் தாயைப் போலவும், நன்மை பயப்பதில் தவத்தைப் போலவும், போகும் வழிக்குப் புண்ணியம் ஈட்டித் தருவதனால் மகனைப் போலவும், தவறு செய்பவர்களுக்கு நோயைப் போலவும், துன்பம் வந்தால் மருந்தைப் போலவும், ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் அறிவைப் போலவும் இருந்து, யார் யாருக்கு எப்படி எப்படி இருந்தால் உவப்பு உண்டாகுமோ அப்படி அப்படி இருப்பான் அரசன். தசரதன் அவ்வாறு இருந்ததாகக் கம்பர் பாடுகிறார்

இத்தகைய அரசனைப் புலவர்கள் புகழ்ந்து பாராட்டுவார்கள், அவனுடைய வீரத்தையும் ஈகைத் திறத்தையும் சிறப்பித்துப் பாடுவர்கள். வீரம் விளைத்துப் போரில் வெற்றி பெற்று ஆதனால் பெறும் பொருள்களையெல்லாம், தன்பால் வரும் கலைஞர்களுக்கும் புலவர்களுக்கும் ஏழைகளுக்கும் வாரி வழங்குவான் அரசன், ஆகவே அவனுடைய ஈகைக்குரிய முதலைத் தருவது வீரச்செயல், இந்த இரண்டையும் இணைத்துப் படுவார்கள் புலவர்கள்.

புறப்பொருளில் வரும் திணைகளில் வெட்சி முதல் வாகை ஈறாகவுள்ள திணைகள் அரசனுடைய வீரச் சிறப்பையே பெரும்பாலும் புகழ்கின்ற முறையில் அமைந்தவை. வேறு வேறு இயல்புகளைப் பாடிப் பரவுவதற்கென்றே தனியாக ஒரு திணை உண்டு. அதைப் பாடாண் திணை என்று சொல்வார்கள், பாடுவதற்கு ஏற்ற ஆண்மகனுக்குரிய செயல்வகைகளச் சொல்வது என்பது அதற்குப் பொருள். “பாடாண் என்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணை உணர்த்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை" என்று இந்தத் தொடருக்குப் பொருளும் இலக்கணமும் கூறுவர் நச்சினார்க்கினியர். அரசனுடைய புகழையும், வலிமையையும், தனக்கென வைத்துக் கொள்ளாமல் கொடுக்கும் கொடையையும், மிக்க இரக்கத்தையும் எடுத்துச் சொல்வது பாடாண் பாட்டு என்று புறப் பொருள் வெண்பா மாலைக்காரர் சொல்வார்.

என்பது அவர் கூறும் இலக்கணம். 'இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும் தண்ணளியும் என்று சொல்லும் இவற்றைத் தெரிந்து சொல்லியது" (பு. வெ. 189) என்பது இதன் பழைய உரை.

இதோ ஒரு புலவன் அரசனைப் பாராட்டுகிறான். அவ்வரசன் மற்ற மன்னர்கள் எல்லாம் அஞ்சி ஒடுங்கும்படி வீரத்தை வெளிப்படுத்துகிறான். சிங்கம் முழங்கினால் காடே எவ்வாறு கிடுகிடாய்த்துப் போகுமோ, அவ்வாறு போர் செய்வதாக அவன் வஞ்சினம் கூறினால் பகையரசர்கள் நடுங்கிப் போவார்கள். மன்னர்களில் சிங்கம் அவன்.

வேதம் வல்ல அந்தணர்கள் அவனைப் பாராட்டுகிறார்கள். அறத்தை நிலை நிறுத்தி நல்ல செயல்களெல்லாம் குறைவற நடக்கும்படி செய்து, கடவுட்பக்தி யுடையவனாய் இருத்தலினால் அவர்கள் பல இனிய சொற்களைக் கோத்துப் புகழ்மாலை சூட்டுகிறார்கள். அவர்களுடைய சொற்களுக்குத் தொடர்பூட்டும் மாலையாக அவன் விளங்குகிறான்.

அது மட்டுமா? தன் நாட்டில் இல்லற வாழ்க்கை நடத்துபவர்கள் யாவரும் குறையின்றி வாழச்செய்யும் அவன், தானும் சிறந்த குடும்பியாக வாழ்கிறான், பல மகளிரை மணப்பது அந்தக் கால அரசர் வழக்கம். அழகும் மென்மையும் உடைய அவனுடைய தேவிமார்கள் அவனால் இன்பம் பெற்று அவனுக்கு இன்பம் வழங்குகிறார்கள். அன்னம் போன்ற நடையையுடைய அவர்களுக்கு அவன் அரிய அமுதம்போல் இலங்குகிறான்.

அவன் ஈகையைப்பற்றி என்ன சொல்வது? புலவர்களும் கலைஞர்களும் தன்னைப் புகழ்வார்கள் என்று எதிர்பார்த்து அவன் கொடை வழங்குவதில்லை, முல்லைப்பூத் தன்னைப் பறித்து ஒருத்தி அணியப் போகிறாள் என்று எண்ணியா மலர்கிறது? குயில் தன் இசையைக் கேட்டுக் கவிஞன் பாராட்டுவான் என்றா கூவுகிறது? அரசனும் பிறர் தன்சீனப் பாராட்ட வேண்டும் என்று எண்ணி வழங்குவதில்லை. அது அவனோடு பிறந்த இயல்பு. மழை எதையும் எதிர்பாராமல் பெய்கிறது போன்றது அவன் கொடை. அதனால் பயிர் வளர்வதுபோல அவன் கொடை யால் பரிசிலர்கள் வாழ்கிறார்கள். பரிசிலர்களுக்கு வானம் போன்றவன் அவன்.

குளிர்ச்சியான அழகிய மாலையை மார்பு நிறைய அணிந்து அவன் திருவோலக்கத்தில் அமர்ந்திருக்கும் போது பார்த்தால் அவனுடைய அரசத் திருவின் சிறப்புத் தெரியவரும். அவன் இங்கே இப்படி அமைதியுடன் வீற்றிருந்தாலும், பகைவர் தலையெடுக்க-வொட்டாமல் அடியோடு அழித்துவிடும் ஆற்றலும் கோபமும் படைக்கலன்களும் உடைய பெரிய படைகள் அவனிடம் இருக்கின்றன. போர் வந்தால் அவற்றினிடையே அவனைக் காணலாம்.

இந்த எண்ணங்களை யெல்லாம் இந்தப் பாடல் நினைப்பிக்கின்றது.

[மடங்கல் - சிங்கம். துன்னும் - தன்பால் வரும். பரிசிலர் - பரிசு பெறும்பொருட்டு வருபவர்கள். வானம் - மழை, பனி - குளிர்ச்சி. தானை-படை. கோ - அரசன்.]

அரசன் காலையில் எழுந்தது முதல் மாலையில் துயிலச் செல்லும் வரையில் நிகழும் செயல்களைத் தனித்தனியே பாராட்டிப் பாடி மகிழ்வார்கள் புலவர்கள். அவனைத் திருமாலாகவும் பிற தெய்வங்களாகவும் வைத்து புகழ்வார்கள்.

அரசன் உறங்கச் செல்கிறான், குழந்தையானால் துயிலும்பொருட்டு அன்னையும் பிற மகளிரும் தாலாட்டுப் பாடுவார்கள், அரசன் உறங்கச் சென்றான் என்பதையும் அழகுபெறச் சிலர் பாடுவார்கள். 'தன்னுடைய வீரத்தால் பொல்லாதவர்களை அடக்கித் தீங்கை யெல்லாம் போக்கி, இனிமேல் கொடுமையே தலைதூக்காது என்று நிச்சயப் படுத்திக்கொண்டு, சிறிதே ஓய்வு பெறலாமென்று துயிலச் சென்றிருக்கிறான் அரசன் என்று பாடுவார்கள். இதைக் கண்படை நிலை என்று சொல்வார்கள். “ நீ துயிலச் செல்லவேண்டும்’ என்று முன்னிலைப் படுத்தியும் சொல்வதுண்டு. ’சோழ அரசனே, ஒரு கணங்கூட இடையீடு இல்லாமல் வாரி வாரி வழங்குகிறாய் நீ. அதனால் புலவர் முதலிய பரிசிலர்களுக்கு மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. அவர்களுக்கு யானைகளை வழங்குகிறாய். அவற்றை வாங்கி வாங்கி அவர்கள் சலித்துப்போனார்கள். நீ உலகத்தைக் காவல் செய்வதனால் உறங்காமல் விழித்துக்கொண்டே இருக்கிறாய் போலும். அதற்கு அவசியம் இல்லையே! லோகபாலகர்களாகிய எண் திசையைக் காக்கும் தேவர்கள் விழித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆதலின் நீ சிறிதே துயில் கொண்டருள வேண்டும். பரிசில் வாங்குபவர்களும் சிறிது துயிலட்டுமே!’ என்று சொல்லும் பழம்பாடல் ஒன்று உண்டு.

[வாய் வாள் - குறியைத் தப்பாமல் வெட்டும் வாள். சென்னி - சோழ அரசனே. ஒவா -நிற்காத, உயிர்ப்பு இடம் - மூச்சுவிடும் அவகாசம். உலகம் காவலர் - லோக பாலராகிய திக்குப் பாலகர். வறிது - சிறிது.]

விடியற்காலையில் அரசனைப் பாட்டுப் பாடித் துயில் எழுப்புவது வழக்கம். நின்றபடியே பாடலைப் பாடித் துயிலெழுப்பும் வேலையை யுடையவரைச் சூதர் என்று சொல்வார்கள்.

என்று இதன் இலக்கணத்தைத் தொல்காப்பியம் வகுக்கிறது. "தமது வலிமையாலே பாசறைக்கண் ஒரு மனக் கவற்சியின்றித் துயின்ற அரசருக்கு நல்ல புகழைக் கொடுக்கும் பொருட்டுச் சூதர் துயிலின்றும் எழுப்பி ஏத்திய துயிலெடை நிலை" என்பது இதன் பொருள். பிற்காலத்தில் திருப்பள்ளியெழுச்சி என்று வழங்குவதும் இதைப் போன்றதே. தெய்வங்களைத் துயிலெழுப்புவதைத் திருப்பள்ளியெழுச்சி என்பர். ’பகைவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நீ நின் பாயலில் படுத்து உறங்கினய், துயின்றது போதும். உன் பகைவர்கள் கெடுந்துயில் கொள்ளும்படி மீதுயிலுணர்ந்து எழுவாயாக!’ என்று அரசனைத் துயிலெழுப்புவார்கள். "இதோ உன்னுடைய அரண்மணை வாயிலில் தாம் தாம் செலுத்த வேண்டிய கப்பங்களை அளந்து குவித்துவிட்டு, நின்னைத் தரிசிக்க வேண்டுமென்று பல மன்னர்கள் காத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு அருள் செய்வதற்காக நீ துயிலெழுந்தருள வேண்டும்" என்றும் பாடுவார்கள்.

துயிலெழுந்த அரசன் பல மங்கலமான காரியங்களைச் செய்கிறான். மலர் முதலிய மங்கலப் பொருள்களைத் தீண்டுகிறான், கண்ணாடி முதலிய மங்கலப் பொருள்களைக் காணுகிறான். நல்ல துதிகளைச் சொல்கிறான். மங்கல வாசகங்களைக் கேட்கிறான். பசுவையும் கன்றையும் கொணர்ந்து நிறுத்த, அவற்றைக் காண்கிறான். மறை வல்லவர்களுக்கு அவற்றைத் தானம் செய்கிறான்,

உலகம் இனிது வாழும்பொருட்டுப் பல நல்ல காரியங்களை அரசன் செய்தும் செய்வித்தும் வருகிறான். தேவர்கள் மகிழ வேள்விகளைச் செய்யும் கடமையை மேற்கொள்கிறான். அரசர்களுக்குரிய கடமைகளில் வேள்வி செய்தலும் ஒன்று. பல வேள்விகளைச் செய்தமையால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற சிறப்புப் பெயரை ஒரு பாண்டிய அரசன் பெற்றான். அரசன் வேள்வி செய்ததைப் புகழ்ந்து பாராட்டும் பாடல்கள் பழைய நூல்களில் உண்டு. வேள்வி நிலை என்னும் துறையாக அந்தப் புகழை அமைப்பார்கள்.

’வேதம் ஒதும் மறையவர்களின் சுற்றத்தினர் அரசன் செய்யும் வேள்வியால் மகிழ்ச்சி பெற்றார்கள்; இது பெரிய வியப்பாகாது. விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் இவன் செய்த வேள்வியில் அக்கினியாகிய வாயினால் அவியுணவை நிரம்பப் பெற்று மகிழ்ந்தார்கள்’ என்பது ஒரு பாட்டு.

[கேள்வி - வேதத்தையும் சாத்திரங்களையும் கேட்டல். விறல்வெய்யோன் - வெற்றியை விரும்பும் அரசன். ஈர்ந்தார் - குளிர்ச்சியையுடைய மாலையை அணிந்த, அழல் வாய்: அக்கினியைத் தேவர்களுக்கு வாய் என்று சொல்வார்கள்; அதில் பெய்த அவியுணவைத் தேவர் நுகர்வர் என்பது வழக்கு. ]

இவ்வாறு நல்ல செயல்களைச் செய்வதனால் நாடு வளம் நிரம்பி விளங்குகிறது. நிலங்கள் நன்றாக விளைகின்றன. விட்டில், கிளி, யானை, வேற்று அரசு, தன் அரசிற்குட்பட்டவர்கள், விளைவு குறைவு, பெருமழை, பெருங்காற்று ஆகியவற்றால் வரும் கேடுகள் இல்லாமல் பயிர் பயன் தருகிறது. அவனுடைய அரண்மனையில் புலவரும் கலைஞரும் குழுமிப் புகழ் பாடிப் பரிசு பெறுகிறார்கள். விடியற் காலையில் தடாரி என்னும் தோற்கருவியைப் பொருநன் வாசிக்கிறான் ஆடியும் பாடியும் இன்பம் செய்யும் பாணர்கள் அவனுடைய வெற்றியையும் போர்க்களத்தில் அவன் பெற்ற வளத்தையும் பாடுகிறார்கள்.
அரியணையில் யாருக்கும் இல்லாத பெருஞ்சிறப்புடன் அரசன் வீற்றிருக்கிறான். "கனல் கொப்புளிக்கும் கண்ணையுடைய சிங்கம் சுமந்த ஆதனத்தில், மற்ற மன்னர்கள் எல்லாம் இருமருங்கும் நின்று ஏத்த, வீரக்கழலைக் காலிலும் மாலையை மார்பிலும் அணிந்து நாவலந் தீவுக்குரிய மன்னனாகி இவ்வரசன் வீற்றிருக்கிறான்” என்று அவன் ஓலக்கத்தில் வீற்று னிது இருந்த பெருமங்கலத்தைப் புலவர்கள் வாழ்த்துகிறார்கள்.

பகைவருடைய மதிலை அழித்து அவரைத் தோல்வியுறச் செய்வேன் என்று உறுதி பூண்ட அரசன் அதை ஒரு விரத்மாக மேற்கொள்கிறான், தன் வீரத்தால் அவ்வாறே செய்து பிறர் மதிலைத் தன்னுடையதாக்கிக் கொள்கிறான். சங்கற்பம் நன்கு நிறை வேறிற்றென்று தீட்சா நிவர்த்தி செய்து கொள்கிறான். இவ்வாறு குடுமி களைந்த புகழையும் புலவர்கள் சாற்றுகிறார்கள், அவன் மகளிரை மணந்து கொள்கிறான்; புலவர்கள் மணமங்கலம் பாடுகிறாfகள். அவனுக்கு மகன் பிறக்கிறான்; éவலிய வீரக் கழலையும் வெண்குடையையும் உடைய அரசனுக்குச் சிவந்த வாயினையும் பெரிய கண்ணினையும் உடைய மைந்தன் பிறந்தான்; அதனல் பெரிய புகழையுடைய தேவர்கள் மகிழ்ந்தனர்; பூவுலகில் உள்ளவர்கள் வாழ்த்தினார்கள்; பகைவர் தம் பகைமனப்பான்மையை விட்டுப் பணிந்தார்கள்’ என்று பொலிவு மங்கலம் பாடுகிறார்கள்.

[கருங்கழல் - வலிமையான வீரக்கழல், பெரும் பெயர் - பெரிய புகழ். வியலிடம் - பூமி. எண்ணார் - பகைவர். இகல் - பகை.]

அரசனுடைய பிறந்த நாளை வெள்ளணி நாள் என்று சொல்வார்கள். அன்று நாடு முழுவதும் பெரிய கொண்டாட்டம் நிகழ்கிறது. பரிசிலர்கள் பொன்னும் யானையும் ஆடையும் பெறுகிறார்கள். அரசன் நீடூழி வாழவேண்டு மென்று யாவரும் வாழ்த்துகிறார்கள். நல்லவர்கள் நல்லுரை கூறி வழிப்படுத்தவும், பரிசிலர் பரிசு பெற்றுப் புகழவும், குடிமக்கள் இன்பு வாழ்வு பெற்று ஏத்தவும், பகைவரும் பணிந்து ஏவல் செய்யவும் மனைவி மக்களோடு அரசன் பிறர் வாழ வகை பண்ணித் தானும் உலகம் போற்ற வாழ்கிறான்.
------------

16. ஆற்றுப்படை


ஒருவனைப் புகழும்போது நேர்முகமாக, “ நீ இத்தகை யவன்” என்று புகழ்வது ஒரு வகை. அப்படியின்றிக் குறிப்பாக, மறைமுகமாக, அவனுடைய புகழை எடுத்துரைப்பது ஒரு வகை. அப்படிக் கூறுவதில்தான் சுவை மிகுகிறது. புகழும் வகைகள் பலவற்றைச் சொல்லும் பாடாண்திணையில் ஆற்றுப்படை என்ற ஒருவகை அமைப்பைக் காணலாம். அதனைச் சிறு நூலாகவும் இயற்றி யிருக்கின்றனர் புலவர்.

ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழியிலே சேர்த்தல் என்பது பொருள்; வழிகாட்டி என்று சொல்லலாம். பரிசில் பெற்ற ஒருவன் பெறாதவர்களுக்கு, நான் இன்னாரிடத்தில் சென்று இன்ன பரிசைப் பெற்றேனென்று கூறி, அந்த உபகாரியிடம் போவதற்குரிய வழி முதலியவற்றைச் சொல்லும் வகையில் அமைவது அது.

என்று ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறுகிறார், 'ஆடல் மாந்தரும் பாடற் பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு செய்த கூறு பாடும்" என்று இதற்குப் பொருள் எழுதுவார் நச்சினார்க்கினியர்,

பழங்காலத்தில் தமிழ் நாட்டில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களிலும் வல்லவர்கள் பலர் அங்கங்கே இருந்தார்கள். அவர்கள், தம்முடைய கலைத் திறத்தை உணர்ந்து பாராட்டுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிச் சென்றுகொண்டே இருப்பார்கள். யாரேனும் அவர்களுக்கு அகப்பட்டால் அவரிடத்தில் தம் முடைய திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். பொதுவாகக் கலைத்திறமை படைத்தவர்களுடைய உள்ளம் மென்மையானது; உணர்ச்சி வசப்படுவது; இன்ப துன்பங்களின் சிறு கூறுபாட்டையும் உணர்ந்து கிளர்ச்சியும் தளர்ச்சியும் பெறுவது; ஏழைகளைக் கண்டால் இரங்குவது. புலவர் முதலியோர் ஏழையராக இருந்தாலும் பிற ஏழையரைக் கண்டால் வாடுவார்கள். தமக்குக் கிடைத்தவற்றைப் பகிர்ந்து கொடுப்பார்கள். அதனல் அவர்கள் எத்தனை பரிசைப் பெற்ருலும் விரைவில் செல. வழித்துவிட்டுப் பழைய வறிய நிலையிலே இருப்பார்கள்.

தமக்கு வேண்டிய பொருளை ஈட்டும் முயற்சியை விடத் தம்முடைய கலையால் பலரை இன்புறச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். அதனால் கலைச்சுவை தேரும் உபகாரிகளை நாடி எப்போதும் திரிந்துகொண்டே இருப்பார்கள்.

இயல்தமிழ் வல்ல புலவரும், இசையில் வல்ல பாணரும், தடாரிப் பறை கொட்டும் பொருநரும், பாடலும் ஆடலும் வல்ல விறலியரும், கூத்தில் வல்ல கூத்தரும் இவ்வாறு எங்கே விழா நடக்கிறது, எங்கே கலச்சுவை நுகரும் வள்ளல் இருக்கிறார் என்று தேடிச் செல்வார்கள். புலவர்கள் இன்ன சாதி, இன்ன சமயம், இன்ன பால் என்ற வரையறையில்லாமல் எல்லா வகுப்பையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். முடியுடை மன்னர்களும் குறுநில மன்னர்களும் தமிழ்ப்புலமையுடையவர்களாக விளங்கினர்கள்; ஆனால் அவர்கள் பிறருடைய உபகாரத்தை எதிர்பார்த்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. கபிலர், நக்கீரர் முதலிய அந்தணரும், சீத்தலைச் சாத்தனார் முதலிய வணிகரும், கோவூர் கிழார் முதலிய வேளாளரும் புலவர்களாக விளங்கினர். அறுவை வாணிகன் இளவேட்டனார், கூலவாணிகன் சித்தலைச் சாத்தனார் முதலியவர்கள் வெவ்வேறு வியாபாரம் செய்தவர்கள்.

புலவர்கள் உபகாரிகளை நாடிச் சென்றாலும் தம்முடைய மானத்துக்குக் குலைவு வரும்படி நடந்து கொள்ள மாட்டார்கள். தரம் அறிந்து பாராட்டும் வள்ளல்களிடம் அவர்களுக்கு ஈடுபாடு மிகுதி. தரம் அறிவதை வரிசை பறிதல் என்று சொல்வார்கள்.

”வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை"

என்று தம்முடைய நிலையைக் கூறுவர் புலவர்.

என்பார்கள்.

பாணர்கள் ஒரு தனிச் சாதியினர். அவர்களில் வாய்ப் பாட்டுப் பாடுகிறவர்களும் வாத்தியம் வாசிக்கிறவர்களும் உண்டு. வாத்தியம் வாசிக்கிறவர்களைக் கருவிப் பாணர்கள் என்று சொல்வார்கள். இசைப்பாணர், யாழ்ப் பாணர், மண்டைப் பாணர் என்று மூவகையினரை நச்சினார்க்கினியர் கூறுவர்.
இசைக் கருவிகள் பல தமிழ் நாட்டில் இருந்தன. அவற்றில் முதலில் நிற்பது குழல், அது சிறு குழல், பெருங்குழல் என்று இருவகைப்படும். சிறு குழலை வங்கியம் என்றும் பெருங்குழலைப் பெரு வங்கியம் என்றும் கூறுவது வழக்கம். பெருவங்கியம் என்பது இப்போது தமிழ் நாட்டுக்கே உரிய இசைக் கருவியாக விளங்கும் நாதசுரத்தைப் போன்றது என்று தோன்றுகிறது.

குழலுக்கு அடுத்தபடி வருவது யாழ். குழல் துளைக் கருவி. யாழ் நரம்புக் கருவி. யாழ்களிலும் பல வகை உண்டு. பெரிய யாழ், சிறிய யாழ் என்ற பிரிவு இருந்ததென்று தெரிய வருகிறது. அவற்றைப் பேரியாழ், சீறியாழ் என்பர். அவற்றை வாசிக்கிறவர்களை முறையே பெரும் பாணர் என்றும் சிறுபாணர் என்றும் வழங்குவர். பாறை யன்றி வேறு வகையான கருவிகளை வாசிக்கிறவர்களும் உண்டு.

பாணர்களின் மனைவியர் விறலியர் என்ற பெயர் பெறுவர்; பாடினி என்றும் சொல்வதுண்டு. விறல் என்பது பாவம் அல்லது சத்துவத்தைக் குறிப்பது. பாவம் தோன்ற ஆடுவதில் வல்லவர்களாகையால் விறலியர் என்ற பெயரைப் பெற்றர்கள். ஆடல், பாடல், அழகு என்ற மூன்றிலும் சிறந்து நிற்பவர்கள் அவர்கள்.

பொருநர் என்று ஒரு சாதியினர் உண்டு. அவர்கள் ஒரு கையால் அடிக்கும் கிணை அல்லது தடாரிப்பறையை முழக்குபவர்கள். ஏர்க் களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என்ற பிரிவுகளை உடையவர்கள் அவர்கள். கோலம் புனைந்து வருபவர்களையும் பொருநர் என்பார்கள். ஒருவரைப்போல வேறு ஒருவர் வேடம் புனைவதைப் பொருநுதல் என்பது மரபு.

பல வகுப்பினருள்ளும் கூத்துப் பயிற்சியுடைய கலைஞர்களைக் கூத்தர் என்பார்கள். பல வகையான கூத்துக்களைச் சமயம் அறிந்து ஆடுவது இவர்கள் வழக்கம்,
எங்கே விழா நடந்தாலும் பாணரும் விறலியரும் கூத்தரும் சென்று பாடியும் ஆடியும் மக்களை மகிழ்விப்பார்கள். அரசரும் செல்வரும் பாணர்களுக்குப் பொன்னால் செய்த பூவைப் பரிசாக அளிப்பார்கள். விறலியர்களுக்கு அணிகலன்களை வழங்குவார்கள். புலவர்களுக்கு நாட்டையும் வீட்டையும் விளை நிலங்களையும் யானைகளையும் ஆடை அணிகளையும் கொடுப்பார்கள்.

இவ்வாறு தம்முடைய கலையினல் செல்வர்களையும் பிறரையும் உவகையில் ஆழ்த்தும் கலைஞர்களைத் தமிழுலகம் பாராட்டியது. அவர்களுடைய பாராட்டுக்கு உரியவர்களாவதைச் செல்வர்கள் விரும்பினார்கள். புலவர்களால் பாடல் பெறாதவர்கள் வாழ்ந்தும் பயன் இல்லை என்ற எண்ணம் எங்கும் நிலவியது.

இந்தக் கலைஞர்களை ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல்களே ஆற்றுப்படை. யாருக்கு வழிகாட்டுகிறார்களோ அவர்களுடைய பெயர்களோடு சார்த்தி ஆற்றுப்படை நூல்களுக்குப் பெயரை அமைப்பார்கள். புலவர் ஆற்றுப் படை, பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, கூத்தர் ஆற்றுப்படை என்று அவை பெயர் பெறும்.

பழங்காலத்தில் ஆற்றுப்படைச் செய்யுட்கள் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். சங்க நூல்கள் என்று வழங்கும் தொகுதிகளில் முதலில் நிற்பது பத்துப்பாட்டு: அது பத்து நெடும் பாடல்கள் அமைந்த தொகுதி. அதில் சரிபாதியாக ஐந்து பாட்டுக்கள் ஆற்றுப்படை நூல்கள். முருகப்பெருமானைப் புகழ்ந்து நக்கீரர் பாடிய திருமுரு காற்றுப்படை பத்துப் பாட்டில் முதலில் உள்ளது. அது புலவராற்றுப்படையைச் சார்ந்ததே. முருகன் திருவருள் பெறவேண்டும் என்று விரும்பிப் புக்க புலவன், ஒருவனுக்கு வழிகாட்டும் வாய்பாட்டில் அமைந்தது அது. சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது பொருநராற்றுப்படை. அது பொருநனை ஆற்றுப்படுத்தியது. அடுத்தது சிறுபாணாற்றுப்படை. சிறிய யாழை வாசிக்கும் சிறு பாணனை ஆற்றுப் படுத்துவதாக அமைந்தது; நல்லியக்கோடன் என்பவனே நத்தத்தனார் என்ற புலவர் பாடியது. அதில்,

'இன்குரற் சீறியாழ் இட்வயின் தழிஇ'

என்று வருகிறதனல் அந்தப் பாணன் சிறிய யாழை வாசிக்கும் சிறுபாணன் என்பதை அறியலாம்.

பத்துப்பாட்டில் நாலாவதாக உள்ளது பெரும்பாணாற்றுப்படை,

”இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி"

என்று அதில் வருகிறது. பேர்யாழை வாசிக்கும் பாணனை நோக்கிச் சொல்லியது அது. இந்த நூலால் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடினர். பத்துப்பாட்டின் இறுதியில் இருப்பது மலைபடு கடாம் என்ற பாட்டு. அதற்குக் கூத்தராற்றுப் படை என்ற பெயரும் உண்டு. கூத்தரை ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்தது அது. நன்னன் என்னும் வள்ளலைப் பெருங்கெளசிகnஆர் என்னும் புலவர் புகழ்ந்து பாடியது அப்பாட்டு.

இவற்றை யன்றிப் புறநானூற்றில் ஆற்றுப்படையாக அமைந்த பாடல்கள் பல இருக்கின்றன.

இந்த ஆற்றுப்படைகளில் புலவராற்றுப்படை மட்டும் இறைவனிடத்து அறிவுடைய புலவனை ஆற்றுப்படுத்துவதாகக் கொள்வர். திருமுருகாற்றுப்படை, ‘செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு’ புறப்பட்ட புலவனுக்குச் சொல்வதாக அமைந்ததைக் கொண்டு இப்படி வகுத்தனர் போலும்!

”இருங்கண்வானத்து இமையோருழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தின்று”

என்று பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பா மாலைக்காரர் இப்படியே இலக்கணம் வகுத்தார். அவர் இதற்கு உதாரணமாகக் காட்டும் வெண்பா திருவேங்கட முடையானிடம் புலவனை ஆற்றுப்படுத்துகிறது.

[நறுமணத்தையுடையதாய், ஒலிக்கும் அருவியினால் விளங்கும் திருவேங்கடத்துக்கு நீ போனால், முறையில் அமைந்த வேடத்தையுடையவனே, நீயும் இந்திரியங்களுக்கு மயக்கத்தைக் கொடுக்கும் உலகத்தில் உண்டாகும் துயரங்களெல்லாம் ஒழியும்படி, சக்கரப்படையையுடைய திருமால் உனக்கு அருளை வழங்குவான்.]

வீரத்தையும், கொடையையும், பிற பண்புகளையும் புகழ்ந்து பாடுவதற்காக அமைத்துக்கொண்ட செய்யுள் வடிவங்கள் பல. அவற்றில் பழங்காலத்தில் ஆற்றுப்படை என்ற வடிவம் சிறந்ததாக இருந்ததென்று இதுகாறும் கூறியவற்றால் தெரிய வருகிறது. ஆற்றுப்படை என்பது பாடாண் திணையில் வரும் துறைகளுள் ஒன்று.
-----------

17. வீர வழிபாடு


வீரர்கள் இறந்த பிறகும் அவர்களை வணங்கி வாழ்த்துவதற்கு ஏற்ற சின்னங்களை அமைத்துக் கொண்டாடுதல் இந்த நாட்டு மரபு. கல்லில் வீரன் வடிவத்தையும் அவனுடைய பெயரையும் வீரச்செயல்களையும் பொறித்து வழிபடும் வழக்கம் தொல்காப்பியம் எழுந்த பழங்காலத்துக்கு முன்பிருந்தே நிலவி வருகிறது. தொல்காப்பியமும், புறநானூறு முதலிய சங்க நூல்களும் பிற்காலத்தில் எழுந்த புறப்பொருள் வெண்பா மாலை முதலியனவும் இந்த வீர வழிபாட்டைப் பற்றிய செய்திகள் பலவற்றைச் சொல்கின்றன.

வீரர்களுக்காக நடும் கல்லை வீரக் கல் என்பார்கள். ஒரு வீரன் இறந்துபோnஆல் அவனை அதோடு மறந்து போகாமல், நல்ல இடத்திலிருந்து கல் எடுத்து வந்து நட்டு வழிபடுவார்கள். இதனால் ’கல்லெடுப்பு’ என்று வழக்கில் ஒரு தொடர் வழங்குகிறது. வீரர்கள் பகைவருடன் போரிட்டு எதிர்த்து நின்று உயிர் நீத்த இடத்திலும் வேறு இடத்திலும் இந்தக் கற்களை நடுவதுண்டு. இறந்த வீரனைத் தெய்வமாகப் போற்றுவார்கள். இப்படி அமைந்த பல இடங்களை பிற்காலத்தில் வீரன் முதலிய கிராம தெய்வங்களின் கோயில்களாக மாறிவிட்டன என்று தோன்றுகிறது.

கடவுளைக் கல்லுருவத்தில் வைத்து வழிபடும் வழக்கம் மிகப் பழங்காலம் முதற்கொண்டு இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதற்கும், அத்தகைய உருவங்களை எடுத்துக் கொணர்ந்து நீரில் இட்டு வைத்து நட்டு வழிபடுதல் முதலிய சடங்குகளும் நெடுங்கால வரலாற்றோடு தொடர்புடையன என்பதற்கும் புறத்திணையில் அமைந்துள்ள கற்காட்சி முதலிய துறைகளை சான்றகும்.

வீரனை வழிபடுவதற்காக அவனுடைய உருவம் முதலியவற்றைப் பொறிப்பதற்கு ஏற்ற கல்லை நல்ல இடத்திலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். இதைக் காட்சி என்றும் கற்காண்டல் என்றும் இலக்கணப் புலவர் கூறுவர்.

ஒரு மலையில் ஒரு வீரனுக்கு ஏற்ற கல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மலைக்கு உண்டான பேற்றைப் பாராட்டிச் சொல்கிறது ஒரு பாட்டு. “பெரிய பானைக்குள் இருந்து தவம் செய்பவர்கள் மண்ணோடு மண்ணாகப் போகிறார்கள். அப்படியின்றி நீ நின்றபடியே செய்த தவம் பெரிது. இந்த உலக முழுவதும் தாங்கமாட்டாத பெரும் புகழையுடைய இந்த வீரனின் சீர்த்தியைப் பொறிக்க உன்னிடம் ஒரு கல்லைக் கண்டேன்’ என்ற கருத்தை உடையது அது.

[தாழி - பானை. நோற்றனை - தவஞ் செய்தாய். மால் வரை- பெரிய மலையே. மறப் புகழோன் - வீரத்தால் உண்டான புகழை உடையவன்.)

தெய்வ ஆவேசம் கொண்டவர்கள், “இந்தக் கல்லை எடுத்துக் கொள்க!” என்று காட்டப் பூமாரி பொழிந்து அதைத் தேர்ந்தெடுப்பதும் ஒரு வழக்கம்.

இவ்வாறு தேர்ந்தெடுத்த கல்லை, நாட்டுவதற்குரிய இடத்துக்குக் கொண்டு வருவார்கள். அங்கே கால்கோள் விழாச் செய்வார்கள். கொண்டு வந்த கல்லைத் தூய்மை செய்வதற்காகப் புனிதமான நீர்நிலையில் போட்டு வைப்பார்கள். இதை நீர்ப்படை என்று சொல்வார்கள். கங்கை, காவிரி போன்ற ஆறுகளில் நீர்ப்படை செய்வார்கள். பிறகு அந்தக் கல்லை உரிய இடத்தில் நட்டுப் பெயர் முதலியவற்றைப் பொறிப்பார்கள். ’சீர்த்தகு சிறப்பிற் பெரும் படை’ என்ற துறை இந்த நிகழ்ச்சியைக் கூறுவது.

[மாலை அசைய மணியை அடித்து மதுவைத் தெளித்து மயிற்பீலியைச் சூட்டி வீரன் பெயரை எழுதி, வேலெடுத்துப் போரிட்ட சண்டையில் ஆண்மைத் தன்மை மிகும்படி நின்ற, போரை விரும்பிய அவனுக்குக் காட்சி அமையும்படி கல்லை நாட்டினர்.]

இவ்வாறு நாட்டிய கல்லிற்குப் பூசை செய்ய அதில் வீரனை வருவித்துச் சடங்கு செய்வார்கள். அதற்கு நீராட்டிப் பெருஞ் சிறப்புகளைச் செய்வார்கள். பலவகையில் வழிபட்டு வாழ்த்துவார்கள். இவ்வாறு நாட்டிய வீரக் கல்லுக்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைய சிறப்புக்களும் படைப்பார்கள்.

இப்படி அமைந்த வீரக்கற்களை வழிப்போவோர் கும்பிட்டுச் செல்வார்கள். புரவலரை நாடித் தன் ஏழைச் சுற்றத்தோடு போகும் பாணன் ஒருவனை நோக்கிச் சொல்வதாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. "உன்னுடைய துன்பம் மிகுந்த சுற்றத்தோடு அந்த வீரனுடைய புகழைப் பாடிப் பிறருக்கு நிறையக் கொடுத்த அவனுடைய கல்லைத் தொழுது செல்வாயாக, பாணனே. அவன் எட்டுத் திசைக்கும் தெய்வமாக அந்தக் கல்லில் நிலை பெற்றிருக்கிறான்' என்று சொல்கிறது பாட்டு.

[அடும்புகழ் - பகைவரைக் கொன்ற புகழை. நோனா - பொறுக்க இயலாத. இடும்பை-துன்பம். கடும்பொடு - சுற்றத்தோடு, கைவண் - வண்மையைப் பெற்ற கையை யுடைய. கைதொழுஉ - கையால் கும்பிட்டு.]

இத்தகைய நடுகற்களை யாவரும் கண்டபோது வணங்கிச் செல்வார்கள். பெரிய மன்னர்கள் இறந்த இடங்களில் கோயில் செய்வார்கள். அதற்கு ஒரு பெயரும் வழங்கும். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி முதலிய பெயர்களைக் காண்க.

வீரர்களை வழிபடுவதற்குக் கல் நடும் இந்த வழக்கத்தைப் பத்தினிப் பெண்டிரை வழிபடுவதற்கும் பழங்காலத்தில் மேற்கொண்டார்கள். பத்தினியையும் தெய்வமாக வழிபடுவது பழைய மரபு. இவ்வாறு அமைந்த கல்லை மாசதிக்கல் என்று கூறுவது சிலர் வழக்கம். பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரில் கோயில் எடுத்தான். இதனை விரிவாகச் சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சிக் காண்டம் சொல்கிறது. காட்சிக் காதை, கால்கோட் காதை, நீர்ப்படைக் காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை என்று அக்காண்டத்தில் வரும் காதைகளின் பெயர்களை பத்தினிக் கல்லை நாட்டுவதற்காகச் செய்த சடங்குகளைக் குறிக்கும்.

செங்குட்டுவன் தன் பட்டத்தரசியோடு மலைவளம் காணச் செல்கிறான். அங்கேயுள்ள வேட்டுவர்கள், கண்ணகி தன் கணவனோடு வான விமானம் ஏறிச் சென்ற அற்புதத்தைச் சொல்கிறார்கள். அது கேட்ட மன்னன் கண்ணகிக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். அருகில் இருந்த நூலறி புலவரை நோக்குகிறான். அவர்கள், ”அரசே, பொதியில் மலையிலிருந்து கல் கொண்டு வரலாம்; இமயத்தினின்றும் கொண்டு வந்து கடவுள் உருவைச் சமைக்கலாம். நீர்ப்படை செய்வதற்குக் கங்கையும் காவிரியும் தகுதியுடையன” என்கிறார்கள்.

செங்குட்டுவன் அதைக் கேட்டு, 'இங்கே அருகிலுள்ள பொதியிலில் கல் எடுத்து வந்து காவிரியில் இட்டு வைத்தல் பெரிய காரியம் அன்று. வீரம் கிறைந்த எம் குடியில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான செய்கையும் அன்று. இமயத்துக்குச் சென்று கல் கொண்டு வந்து கங்கையில் நீர்ப்படை செய்துகொண்டு வருவேன்’ என்று சொல்கிறான். அப்படியே வடநாடு சென்று, பணியும் மன்னரைத் துணைக்கொண்டு, பணியா மன்னரை வென்று இமயத்தினின்றும் கல் கொணர்ந்து கங்கையில் சில காலம் நீர்ப் படை செய்து, பிறகு வஞ்சிமாநகருக்குக் கொணர்ந்து விக்கிரகமாகச் செய்து கோயிலில் நிறுவுகிறான். பத்தினித் தெய்வமாகிய கண்ணகியும் வீரமுடையவளே, வீரபத்தினி என்ற புகழைப் பெற்றவள்.

வீரத்தையும் காதலையும் வாழ்க்கையின் இரு மூச்சுகளாகக் கொண்டு போற்றினவர்கள் தமிழர்கள். தனி மனிதனுடைய வாழ்வு இன்பமுடையதாக நிலவுவதற்குக் காதல் துணை செய்யும். இல்லறம் நிகழவும் மனைவியும் மக்களும் இன்புற்று வாழவும் இந்தக் காதல் அடிப்படையாக நிற்கும். இது பற்றிய பகுதிகளையெல்லாம் அகப் பொருளாக வைத்து விரித்து இலக்கண இலக்கியங்கள் கூறுகின்றன.

சமுதாய வாழ்க்கையில் அரசனும் குடிமக்களும் மனமொன்றி வாழவேண்டும். பிறரால் வரும் ஏதங்களை மாற்றி நாட்டைப் பாதுகாப்பது அரசன் கடமை. அவனுக்கு இன்றியமையாத அங்கங்களுள் முக்கியமானது படை, திருவள்ளுவர் அரசனுக்குரிய உறுப்புக்கள் ஆறு என்று கூறுவார்.

என்பதில் எல்லாவற்றிற்கும் முதலில் படையை வைத்திருக்கிறார், குடியைப் பாதுகாக்க இன்றியமையாதது படை. படை அளவிலும் வகையிலும் பெரியதாக இருந்தால் போதாது. படையை ஆளும் மக்கள் வீரம் உடையவர்களாக இருக்கவேண்டும். வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உயிர்நாடி போன்றவர்கள். காதல் இல்லத்தில் இன்பத்தை வளர்ப்பது. வீரம் காட்டில் துன்பத்தைத் துடைப்பது. காதல் பயிரானால் வீரம் வேலியாக உதவுவது. காதற்பயிர் வளரவேண்டுமானால் அது சிதையாமல் பாதுகாக்க வீரவேலி கோலவேண்டும்.

காதலுலகத்தில் தலைமை தாங்குபவள் பெண். பெண்ணுக்குரிய மாதர் என்ற சொல்லுக்குக் காதல் என்ற பொருளை வகுக்கிறது தொல்காப்பியம். பெண்ணின் இயல்பாகிய பெட்பு என்பது விருப்பத்தைக் குறிப்பது, அக உலகம் இது.

புற உலகமாகிய சமுதாயத்தில் தலைமை தாங்குகிறவன் ஆண்மகன். ஆண்மை என்பது வீரத்தைக் குறிக்கும் சொல். காதலை வளர்த்து அமைதியையும் இன்பத்தையும் ஓங்கச் செய்கிறவள் பெண்ணானால், பகையை அறுத்து வீரத்தை வளர்த்துத் துன்பத்தைப் போக்குகிறவன் ஆண். காதலின் உருவம் பெண்; வீரத்தின் வடிவம் ஆண், காதலால் இல்லம் உயரும்; வீரத்தால் நாடு உயரும். ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக நிற்பது.

காதற் சிறப்பால் இல்லத்தரசியாக விளங்குபவள் பெண்; அதனால் அவளை மனைவி என்றும் இல்லாள் என்றும் வழங்குவர். இல்லத்தில் அரசி உண்டேயன்றி அரசன் இல்லை. மனைவன், இல்லான் என்று ஆண்மகனைச் சொல்லும் வழக்கு இங்கே இல்லை. வீரச்சிறப்பால் சமுதாயத்துக்குத் தலைமை தாங்கிக் கணத்துக்கு நாயகனாக இருப்பவன் கணவன். கூட்டத்துக்குத் தலைவன் என்பது கணவன் என்பதற்குரிய பொருள். கூட்டத்துக்குத் தலைமை தாங்க வீரம் வேண்டும். அவனே கணவன். மனைவியைக் கணவி என்னும் வழக்கு இல்லை.

வீரத்தைப் பேணிப் பகையை அழித்து வெற்றி கொண்டு வாழ்ந்த மன்னர்களின் வரலாறுகளை உலகத்து நாடுகள் எல்லாவற்றிலும் கேட்கலாம். தமிழ் நாட்டில் வீரத்தை வரையறை செய்து வீரச்செயல்களை ஒழுங்கு படுத்தி இலக்கிய இலக்கணங்களிலும் அந்த வரையறையை வற்புறுத்தி வைத்தார்கள் தமிழ் மக்கள். இந்த வீர உலகத்தைத் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களில் உள்ள புறப்பொருளைப் பற்றிய பகுதிகளிலும், அப்பொருளைத் தனியே சொல்லும் இலக்கண நூல்களிலும், புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய இலக்கியங்களிலும் காண்கிறோம், கம்பராமாயணம், வில்லிபாரதம், கலிங்கத்துப் பரணி முதலிய இலக்கியங்களிலும் வீர நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கிறோம். தமிழிலக்கணத்திலே வரும் சில கவிசமயமாகிய புலவர் மரபுகளை அந்த இலக்கியங்களினிடையே புலவர்கள் அமைத்திருப்பதையும் காணமுடிகிறது.

காதலிலே கனிவும் அன்பும் காட்டிய தமிழ் மக்கள் வீரத்திலே மறமும் மிடுக்கும் காட்டினார்கள் என்பதை இந்த இலக்கண இலக்கிய ஏடுகள் நினைவுறுத்துகின்றன.
--------

18. பின்னுரை


தமிழில் இலக்கணம் வரவர விரிந்துகொண்டே வருகிறது. அது முதலில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவாக இருந்ததென்பதைத் தொல்காப்பியத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். மூன்றவது பிரிவாகிய பொருளதிகாரத்தில் அகப்பொருள், புறப் பொருள், செய்யுள் இலக்கணம், உவமையின் இலக்கணம் என்னும் பகுதிகள் உள்ளன. நாளடைவில் யாப்பு இலக்கணம் தனியாக விரிந்தது; பிறகு அணியும் தனியே விரித்துச் சொல்லும் நிலையைப் பெற்றது. இன்று மூன்று ஐந்தாக விரிந்து தமிழ் ஐந்து இலக்கணங்களை உடையது என்ற நிலையில் உள்ளது, ‘அரும்பொருள் ஐந்தையும்" என்று நன்னூற் சிறப்புப் பாயிரம் இந்த ஐந்து பிரிவுகளையும் குறிக்கிறது. அதற்கு மேலும் விரிந்து பாட்டியல் என்ற பிரிவு ஒன்று பிற்காலத்தில் தோன்றியிருக்கிறது.

தமிழ் இலக்கணத்தில் சிறந்தது பொருளிலக்கணம் என்று சொல்வார்கள். அந்தப் பொருளும் அகம், புறம் என்று இரு வேறு பிரிவாகப் பிரியும். புறப்பொருளின் இலக்கணத்தைத் தொல்காப்பியத்தில் உள்ள புறத்திணை இயல் சொல்கிறது. அதில் வரும் சூத்திரங்களில் பல இடங்களில், “என்ப" என்றும், “என் மனர் புலவர்* என்றும், 'வைத்தனர் வழியே’ என்றும், "உளவென மொழிப' என்றும் வரும் சொற்களையும் தொடர்களையும் பார்த்தால் தொல்காப்பியர் கூறும் இலக்கணம் அவரால் புதியதாகப் படைக்கப்பட்டதன்று என்பதும் தொன்று தொட்டு வருவதென்பதும் புலனாகும். இந்தப் புறப் பொருளைப் புறம், அகப்புறம், புறப்புறம் என்று மூன்றாகப் பகுத்துச் சொல்வது ஒரு முறை. அகப் பொருளில் அமைந்தது போலப் புறப்பொருளுக்கும் திணைகளும் துறைகளும் உண்டு.

இப்போது புறப்பொருள் இலக்கணத்தைக் கூறுவனவாக நமக்குக் கிடைப்பவற்றுள் தொல்காப்பியப் புறத்திணை இயலும், வீரசோழியத்திலுள்ள பொருளதிகாரத்தில் புறப் பொருளைப்பற்றிக் கூறும் குத்திரங்களும், புறப்பொருள் வெண்பாமாலையும் பழையவை. பின்னால் தோன்றிய இலக்கண விளக்கம், தொன்னூல் என்பனவற்றிலும் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் பகுதிகள் உள்ளன. அகப் பொருள், யாப்பு, அணி ஆகியவை வரவரப் பல தனியிலக் கணங்களாக விரிந்தது போலப் புறப்பொருள் இலக்கணம் மிகுதியாக விரியவில்லை. அவ்விலக்கணத்தை ஆழ்ந்து பயில்வார் இன்மையும் புறத்துறையை அமைத்துப் பாடும் இலக்கியங்கள் குறைந்து போனமையுமே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

யாப்பு, அணி ஆகிய இலக்கணங்களில் வெவ்வேறு நெறிகள் உண்டு. யாப்பில் தொல்காப்பியர் வகுக்கும் முறை வேறு; யாப்பருங்கலம் வகுக்கும் முறை வேறு. அப்படியே அணியில் தண்டியலங்காரம் காட்டும் வகை வேறு; மாறனலங்காரம் வகுக்கும் வகை வேறு. இப்படியே புறப்பொருளிலும் இரு வேறு நெறிமுறைகள் இருந்தன என்று தெரியவருகிறது. தொல்காப்பிய நெறி ஒன்று; புறப் பொருள் வெண்பாமாலை காட்டும் நெறி ஒன்று. தொல் காப்பியம் புறப்பொருளுக்கு ஏழு திணைகள் வகுக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையோ பன்னிரண்டு பகுதிகளாக வகுத்துச் சொல்கிறது. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் ஓரிடத்தில் [1] நச்சினார்க்கினியர் பின் வருமாறு எழுதுகிறார்: “முற்படக் கிளந்தவென எடுத்த லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணை உளவாயின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும். ஒழிந்தோர் பன்னிரண்டு என்றாராதலின் புறத்திணை ஏழு என்றது என்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறுபோல, அகத்திணை ஏழற்கும் புறத்திணை ஏழு என்றலே பொருத்தமுடைத் தாயிற்று. இதிலிருந்து புறத்திணைப் பகுதிகள் பன்னிரண்டு என்ற வழக்கும் ஒரு சாராரால் மேற்கொள்ளப் பெற்றதென்பது தெளிவாகும்.
------
[1]. தொல்காப்பியம், அகத்திணையியல், சூ. 1, உரை.

பன்னிரண்டு என்று கூறும் புறப்பொருள் வெண்பா மாலைக்கு மூலநூல் பன்னிரு படலம் என்று தெரிய வருகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையின் சிறப்புப் பாயிரத்தில்,

என்று வருவதனால் அச் செய்தி தெரிவதோடு, பன்னிரு படலம் தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்கள் இயற்றிய இலக்கண நூல் என்பதும் தெரியக் கிடக்கிறது. பன்னிரு படலத்தில் முதற் பகுதியாகிய வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியரும் மற்றப் பதினெரு பகுதிகளை வேறு பதினெருவரும் பாடினர் என்று கொள்ளவேண்டும். ஆனால் இளம்பூரணர் தொல்காப்பிய உரையில், 'பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினா ரென்றல் பொருந்தாது’ [1] என்று எழுதுகிறார், பன்னிரு
படலம் இப்போது கிடைக்கவில்லை. ஆயினும் அதிலுள்ள சூத்திரங்கள் சிலவற்றைப் பழைய உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
-------
[1]. தொல், புறத்திணை இயல், 35, உரை.

புறப்பொருளுக்கு இலக்கியமாக உள்ளவற்றில் சிற்ந்தவை எட்டுத்தொகை நூல்களைச் சார்ந்த பதிற்றுப் பத்தும் புறநானூறும் ஆகும். புறநானூற்றுக்குத் திணையும் துறையும் வகுத்தவர்கள் பன்னிரு படல முறையைத் தழுவியே வகுத்திருக்கிறார்கள். 'தத்தம் புதுநூல் வழி களால் புறநானூற்றிற்குத் துறை கூறினரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்று உணர்க" என்று நச்சினார்க்கினியர் எழுதுவது காண்க.

பத்துப்பாட்டில் வரும் திருமுருகாற்றுப்படை, பொரு நாராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் என்னும் ஏழும் புறத்துறைகளில் அமைந்த பாடல்களை பரிபாடலில் வரும் சில பாடல்களும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பவற்றிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களும் பாடாண்டிணையைச் சேர்ந்தவை.
புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் இலக்கணத்தைச் சூத்திரமாகவும் அதற்குரிய இலக்கியத்தை வெண்பாக்களாகவும் தாமே இயற்றினர். இலக்கணத்தை விட இலக்கியமே சிறப்புடையதென்பதை அதற்கு அமைந்த பெயரே காட்டும். வெண்பாமாலை என்றும் அந் நூலை வழங்குவர். அதனை இயற்றியவர் ஐயனரிதனார்.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் புறப்பொருளிலக்கியத்துக்கு உதாரணமாகப் பல நூற் செய்யுட்களைக் காட்டுகின்றனர். இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பெரும்பொருள் விளக்கம், வெண்பாமாலை முதலிய நூற்செய்யுட்களை அவர் உரைகளில் காணலாம். இவற்றில் பெரும்பொருள் விளக்கமென்பது. புறப்பொருள் வெண்பாமாலையைப் போலப் புறப்பொருள் துறைகளுக்கெல்லாம் இலக்கியமான செய்யுட்களை உடையதென்று தோற்றுகின்றது. அந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அவர்கள் காட்டும் இராமாயண பாரதங்களும் மறைந்தொழிந்தன. தகடூர் யாத்திரையும் இல்லை. முன்னே சொன்னதுபோல புறப்பொருள் துறைகளின் இலக்கணத்தை ஆராய்வார் வரவரக் குறைந்து போகவே அத் துறைகளை எண்ணிப் பிற்காலத்தில் இலக்கியம் படைப்பவர்களும் குறைந்து போயினர்.

புறப்பொருள் இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்தால் வீரத்தைத் தமிழ்ப் புலவர்களும் மன்னர்களும் எவ்வாறு பாராட்டிப் போற்றி வந்தார்கள் என்பது தெளிவாகும். புறநானூறும் பதிற்றுப்பத்தும் அந்த வீரச் செயல்களைக் காட்டும் வரலாற்றுப் பெட்டகங்களாக நிலவு கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள் ஒளிலும் இன்பத்தைக் கூறுவது அகமென்றும், ஏனேய மூன்றையும் கூறுவது புறமென்றும் சொல்வர். ஆயினும் புறப்பொருளில் உள்ள திணைகளையும் துறைகளையும் பார்த்தால் பெரும்பாலும் வீரச் செயல்களின் கூறுபாடுகளை ஆராய்வதே புறமென்பதை உணரலாம்.

வீரச் செயல்கள் பல நிகழ்ந்த தமிழகத்தில் அவற்றைப் புலவர்கள் சிறப்பித்துப் பாடினார்கள். அவ்வாறு எழுந்த இலக்கியத்துக்குப் புலவர்கள் இலக்கணம் அமைத்தார்கள். இந்த இலக்கணம் மிகமிகப் பழங்கால முதலே வழங்கி வருவதனால் அதற்குரிய இலக்கியம் அதனினும் பழையதென்பதும், அவ்விலக்கியத்தினால் உணர்த்தப்படும் வீரப் பண்பும் வீர நிகழ்ச்சிகளும் தொன்று தொட்டே இந்நாட்டு மக்களிடம் அமைந்து கிடந்தன என்பதும் நன்றாக வெளியாகும்.

இத்தகைய வீரம் அன்றுமட்டும் வேண்டியிருந்தது என்பதற்கு இல்லை; இன்றும் வேண்டும்; என்றும் வேண்டும்.
------------This file was last updated on 20 July 2017.
.