வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
வள்ளி கல்யாணம் & வள்ளி-கிழவர் வாக்குவாதம்

vaLLi kalyANam and vaLLi-kizavar vAkkuvAtam
of V.S. CengkalvarAya piLLai
In tamil script, unicode/utf-8 format

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
வள்ளி கல்யாணம் & வள்ளி-கிழவர் வாக்குவாதம்


Source:
வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி
தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A.,
இயற்றியது.

V.3500
Copy-right]       மார்ச் 1965       [Registered.
விலை 10 காசு.
பாரி அச்சகம், சென்னை-1
-----------------------------------------------------------


திருத்தணிகேசர் துணை
சிவமயம்
முகவுரை

திருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.

வ.சு.செங்கல்வராய பிள்ளை,
18, வேங்கடராமன் தெரு,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
9 -1 -1965.
********************************


கணபதி துணை

வள்ளி கல்யாணம்
(கும்மிப் பாட்டு)

வள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்
மையல் வலையிலே வீழ்ந்தாண்டி;

கள்ள வேடத்தைப் புனைந்தாண்டி-வேடக்
கன்னியை உன்னியே நொந்தாண்டி.
1
நாடுந் தணிகையை விட்டாண்டி-நல்ல
நாளாம் இதென்றே நடந்தாண்டி;

காடும் புனமும் கடந்தாண்டி-வள்ளிக்
காதல் இழுக்க விரைந்தாண்டி.
2
வள்ளி மலைக்கவன் வந்தாண்டி-எங்கள்
வள்ளியை நாடியே வந்தாண்டி;

மெள்ளவே வேடனாய் நின்றாண்டி-நல்ல
வேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி.
3
வளைவிற்குஞ் செட்டியாய் வந்தாண்டி-வள்ளி
வரிவளைக் கையையும் தொட்டாண்டி;

இளைத்தவன் போலவே நின்றாண்டி-வள்ளி
ஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி.
4
பேசொரு பேச்சென இரந்தாண்டி-அவள்
பேச்சுக்கு வாயூறி நின்றாண்டி;

கூசுதல் இல்லாது பார்த்தாண்டி-கண்ணாற்
கோலத்தை மொண்டு குடித்தாண்டி.
5
வேடர் தலைவனைக் கண்டாண்டி-உயர்
வேங்கை மரமதாய் நின்றாண்டி;

ஆடல் பலபல செய்தாண்டி-வள்ளி
அன்பினைச் சோதிக்க வந்தாண்டி.
6
தோன்றிய நம்பிமுன் சென்றாண்டி-நல்ல
தொண்டு கிழவனாய் நின்றாண்டி;

ஊன்றிய கோலொடு சென்றாண்டி-சுபம்
ஓதியே நீறும் அளித்தாண்டி.
7
குமரியி லாடவே வந்தேன்நான்-கோலக்
குறவர் தலைவனே என்றாண்டி;

அமருவன் வேடிச்சி காவலனாய்-ஐய
அவளொடும் என்றுமே என்றாண்டி.
8
தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;

மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி.
9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;

மோகத்தை உள்ளுக்குள் வைத்தாண்டி-மெல்ல
மோசத்தைச் செய்ய நினைத்தாண்டி.
10
சுனைநீரை யுண்டு சுகித்தாண்டி-ஆஹா!
சுதினம் ஈதென்றே சொன்னாண்டி;

உனைநீயே ஒப்பாயென் றுரைத்தாண்டி-வள்ளீ !
உள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி.
11
தாகத்தைத் தீர்த்த தயாநிதிநீ-என்றன்
தாபமோ சொல்லுக் கடங்காதென்;

மோகத்தைத் தீர்த்தருள் என்றாண்டி-முழு
மோசக் கிழவனாய் வந்தாண்டி.
12
சூதினைக் கண்டதும் ஓடினளே-வள்ளி
"சுப்ரம்மண் யாதுணை" என்றனளே;

மாதினை வந்து மடக்கும்ஐயா!-எங்கள்
வாரண ராஜரே என்றழைத்தார்.<
13
ஆனையைக் கண்டு நடுநடுங்கி-அவள்
ஐயன் கிழவனை வந்தணைந்தாள்;

மானை யடைந்து மகிழ்ந்தாண்டி-எங்கள்
மால்மரு கன்தணி கேசனுமே.
14
தணிகை மலையை அடைந்தாண்டி-வள்ளித்
தாயுடன் அங்கே தரித்தாண்டி;

பணிய வினையொழித் தருள்வாண்டி-பாடிப்
பரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி.
15
மந்திரம் ஆவதும் அவன்தாண்டி-நல்ல
மாமருந் தாவதும் அவன்தாண்டி;

தந்திரம் ஆவதும் அவன்தாண்டி-சுத்த
சத்தியம் ஆவதும் அவன்தாண்டி
16
நானெனும் ஆணவம் விட்டார்க்கே-அவன்
நாளும் பணிவிடை செய்வாண்டி;

கானெனுங் கூந்தல் படைத்தவள்ளி-காலிற்
காதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி.
17
தன்னை மறந்துநீ பத்திசெயின்-உன்னைத்
தாவி யணைக்க வருவாண்டி;

அன்னையும் அத்தனும் ஆவாண்டி-உன்றன்
ஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி.
18
ஓங்கிய வானத்துத் தேவரெலாம்-நாளும்
ஓலமிட் டாலுமே வாராண்டி;

காங்கேயா கந்தா எனஉருகில்-உன்றன்
காட்சிக் கெளியனாய் நிற்பாண்டி.
19
திருப்புகழ்ச் சாமியை ஆண்டாண்டி-அவர்
செய்தவங் கண்டு மகிழ்ந்தாண்டி;

விருப்புடன் பாடும் அடியவர்க்கே-அவர்
வேண்டும் வரங்களைத் தருவாண்டி.
20


கணபதி துணை
சிவமயம்
திருத்தணிகேசர் துணை

வள்ளி-கிழவர் வாக்கு வாதம்.


வள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி
வா.சு.செங்கல்வராய பிள்ளை, M.A., இயற்றியது.
IV- 3500.
மார்ச் 1965
(பதிப்புரிமை ஆசிரியருக்கே)
------------------------------

முதற் பதிப்பின் முகவுரை

திருத்தணிகேசரையே உளத்தில் தரித்து அவரையே மணம் புரிவேன் என்றிருந்த வள்ளி நாயகியின் முன்பு முருகர் கிழவடிவு கொண்டு தோன்றிச் சிவபிரானையும் சிவகுமாரனையும் இழிவு படுத்துவது போலப் பேசி வள்ளியம்மையின் திடபுத்தியையும் அசையாப் பத்தியையும் உலகுக்கு வெளிப்படுத்தினது போலக் கற்பனையாக அமைக்கப்பட்டன. இவ் வாக்கு வாதப்பாக்கள். பிழையுளதேற் பெரியோர் பொறுத்திடுக.

சென்னை-1}
20-11-1928. } வா.சு.செ
----------

வள்ளி-கிழவர் வாக்குவாதம்
கிழவர் :
செந்திருவு நாணுமெழிற் சித்திர நிறக்கிளியே!
எந்தனுரை சிந்தை கொளச் சற்றிசைதி நீ.

வள்ளி : அறிவுநிறை பெரியருரை ஆக்கமொழி ஆகலினால்
சிறிதளவு மில்லை தடை செப்பியருள்வீர்.
1
கிழவர் :
தேய்மதியன் சேயவனைத் தோயுமெனப் பித்தமிது
செம்மையல மெய்ம்மையிது தேன் மொழியளே!

வள்ளி :
தேய்மதியம் நாதர்முடி சேர்ந்தகதை நீருணரில்
செம்மைநெறி என்நெறியென் றேயுணர்விரே.
2
கிழவர் :
குலமிலியாய்த் திக்கற்று நின்றசிவன் ஈன்றவனைக்
கொழுநனென நாடுவது பழுது பழுதே.

வள்ளி:
குலங்கடந்த குமரவடி வேலவனைக் கூடுதலால்
மலங்கடந்து மாட்சியுறும் ஆட்சி பெறுவேன்.
3
கிழவர் :
வீடுசுடு காடுகுணம் ஒன்றுமிலி தன்மகனை
நாடுதலின் என்னசுகம்? நங்கை யுனக்கே.

வள்ளி :
வெய்யவினை சுட்ட இடம் மோக்ஷஇடம்; முக்குணமும்
நையுநிலை ஞானநிலை நன்குணர் விரே.
4
கிழவர் :
மாமனவன் தலைதுணித்தான் மைந்தனிவன் என் றுணர்ந்துன்
மாலகற்றிச் சாந்திபெறு மங்கை யரசீ!

வள்ளி :
மாமனுக்குத் தண்டமுறை ஞானம்வரச் செய்ம்முதலின்
மைந்தனுக்கென் சிந்தைசெலல் என்ன தவமோ.
5
கிழவர் :
தேவர்பலர் தாமிருக்க மானிடனின் மைந்தனையே
நீவிரும்பி நிற்றலொரு ந்யாய மிலையே.

வள்ளி :
மானிடத்தில் வைத்துமலை மானிடத்தில் வைத்தவர் சேய்
மானிடத்தில் வந்தஎனை விட்டகல்வரோ!
6
கிழவர் :
பாதியுடல் போனஒரு மாதுதரு சேயினுக்கோ
நீதிகைத்துக் காதலுறல் நீதி மயிலே!

வள்ளி:
சத்திசிவ மொத்துவரு சத்திவடி வேலரிடம்
புத்திசெலல் என்னுடைய பூர்வ புண்ணியம்.
7
கிழவர் :
பெருவயிற்றுப் பிள்ளை தனக் கண்ணனெனக் கொண்டவன்தன்
உருவதனை எண்ணிமனம் ஓய்வ தென்னையோ?

வள்ளி :
பெருவயிறன் பெருவரத்தன் எண்ணியதைக் கூட்டுவித்துத்
தருவனவன் தன்னுடைய தயவு முக்கியம்.
8
கிழவர் :
மாமாய மாலவனை மாமனெனக் கொண்டவனை
நீமாது நேடிநிற்றல் நீதி யல்லவே.

வள்ளி :
மால்தருவன் மாயனென்றால் வரையெறிந்தான் குரை கழற்கே
மால்தருதி ஐயஎன அவரை வேண்டுவேன்.
9
கிழவர் :
காற்றிலகப் பட்டுமடு வாயிலுறு கான்முளையைக்
காதலுறல் நீதியல கான மயிலே!

வள்ளி :
காற்றுமுத லாக வரு பூதவுயி ரானவர் தங்
காதல்பெறல் மாதவ மென் றேயறிதிரே.
10
கிழவர் :
தீயிலகப் பட்டுநதி தன்னிலலை யுண்டஒரு
சேயிடை விருப்பமுறல் தீய தையகோ!

வள்ளி :
தீயுமுடல் தீயவரு செந்நிறத்துச் சேயில் மனம்
பாயவரு பாக்கியமே பாக்கியமதாம்.
11
கிழவர் :
கௌரியெனுந் தாயிருக்க வேற்றுமுலை யுண்டவன்றன்
சௌரியத்தை நீபுகழ்தல் தக்க தல்லவே!

வள்ளி :
பத்தியொடு போற்றுபவர் யாவருக்குந் தான் குழந்தை
யொத்துவரு வாரவருக் கொப்பு முளரோ!
12
கிழவர் :
குருவினுக்கு மிஞ்சிவரு சீடனெனப் பேர்படைத்த
குமரனைநீ நாடுவது கொடிது கொடிதே.

வள்ளி :
குருவிலாத தேசிகருங் குருவெனவே போற்ற நின்ற
குருமணியைக் கூடிடுதல் என்ன புண்ணியம்!
13
கிழவர் :
குன்றமலைந் தேதிரிந்துங் கோழிபிடித் தேதிரியுங்
குளவனைநீ யுளம்வரித்தல் பிழை பிழையதே.

வள்ளி :
குன்றம்வினைக் குன்ற மென்றுங் கோழிசிவ ஞானநிலை
என்றுமுண்மை நாமுணரில் ஏது பிழையே?
14
கிழவர் :
முன்னமொரு மாங் கனிக்கா வெம்பியுளம் நொந்தவனை
உன்னிமனம் நீவருந்தல் உசித மல்லவே.

வள்ளி :
காயறியாக் கனியாமக் கனிபெறநான் கண்ணி நிற்றல்
தாயறியாக் கருவாவார் தாமறிவரே.
15
கிழவர் :
ஏதேது யான்சொலினும் கொக்கறுத்த வேடனுரு
ஏந்திழையே நீவிழைதல் என்ன விந்தையோ !

வள்ளி :
சூதேது மில்லைஐய ! வேடர்மகள் வேடனையே
சூழுமிதன் உண்மைதனை நீருணர் விரே.
16

-----------

வேலு மயிலுஞ் சேவலுந் துணை

குறிப்புரை

1. செந்திரு - லக்ஷ்மி. இசைதி - ஒத்துக்கொள். ஆக்க மொழி - ஆக்கத்தை (சகல செல்வங்களையும்) தரக்கூடிய மொழி்

2. தேய்மதி- குறையும் அறிவு; தேய்கின்ற நிலா (இரு பொருள்) தேய்மதி நாதர் முடி சேர்ந்த கதை - தக்கனார் சாபமுற்றுத் தேய்ந்த மதியை ஈசர்
தமது முடியிற் சேர்த்து மீண்டும் வளர அருளியது.

5. மாமன் - தக்கன். தலை துணித்தான் - சிவன். தண்ட முறையால் (தண்டித்து) ஞானம் வரச்செய்த முதல்- சிவன்.

6. மான் இடன் - இடது கையில் மானைத் தரித்தவன், நரன் என இரு பொருள். மான் +இடத்தில் வைத்து -இடது கையில் மானைத் தரித்து. மலை
மான் - பார்வதி. இடத்தில் வைத்தவர் - இடது பாகத்தில் வைத்தவர். மானிடத்தில் வந்த எனை - மான் வயிற்றில் வந்த என்னை.

7. பாதியுடல் போன ஒரு மாது - பார்வதி; வலதுபாகம் சிவனிடத்துக் கலந்தமையால்.

9. வரை யெறிந்தான்- கிரௌஞ்ச மலையைப் பிளந்த குமரன். மால்தருதி- பற்றைக் கொடு.

10. காற்றில் அகப்பட்டு - வாயுவின் கையில் ஏந்தப்பட்டு.
"வாயுவைக்கொண் டேகுதியென்
றெம்மான் கொடுத்தளிப்ப"
(கந்தர் கலிவெண்பா)

மடு - சரவண மடு. கான் முளை - குழந்தை. காற்று முதற் பூதம்- பஞ்ச பூதங்கள்.

11. தீயிலகப்பட்டு - அக்கினி கையால் ஏந்தப்பட்டு.
"அக்நிகர மீதிற் ப்ரபாகரனும்" (திருவகுப்பு)

தீயதையகோ - தீயது + ஐயகோ, ஐயகோ - ஐயோ
தீயுமுடல் தீய - அக்கினியுங் கருக. செந்நிறத்துச் சேய் - முருகர். மனம் பாயவரு பாக்கியம் - மனம் பாய்ந்து செல்லும் பாக்கியம்.

12. வேற்றுமுலை - கார்த் திகை மாதர் முலை.

10, 11, 12, மேற்கோள்:
13. குருவிலாத தேசிகர் - சிவ பிரான் - "குருவிலாதவர்" - திருப்புகழ்-637.

14. குன்றமலைந்தே - கிரவுஞ்ச மலையைப் பிளந்தே, மலைகளில் அலைந்தே - (இரு பொருள்). குளவன் - குளத்தில் உற்பவித்தவன் - முருகன்;
(சிவபிரானது) நெற்றிக் கண்ணில் உதித்தவன் எனினுமாம்.

15. காயறியாக் கனி - காய் நிலையறியாக் கனி. தாயறியாக் கரு ஆவார் - தாயறியா - தாயிலாக் கரு ஆகின்றவர் - கடவுள்.
16. கொக்கறுத்த வேடனுரு- (கொக்கு) மாமரத்தை (சூரனை) அறுத்த வேள் தன் உரு - மாமரத்தையட்ட செவ்வேளின் உரு. வேடர்மகள் வேடனையே சூழும் - வேட்டுவ ஜாதிப்பெண் வேட்டுவ ஜாதி ஆணையே (வேடனையே) விரும்பும். வேள்- தனையே சூழும்- செவ்வேளையே விரும்பும். (இரு பொருள்).

---------------------------------------------

This file was last updated on 4 October 2011.
.