கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
பாகம் 2, அத்தியாயம் 1-15

mAntarukkuL teivam - part 2, chapters 1-5
of kalki kirushNamUrti
In tamil script, unicode/utf-8 format

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்
மாந்தருக்குள் ஒரு தெய்வம்,
பாகம் 2, அத்தியாயம் 1-15

source:
மாந்தருக்குள் ஒரு தெய்வம்
கல்கி

முதற் பதிப்பு - 1956 Printed by Dr. V. R. Murty, At The Homeopathy Press,
Homeo House, Kumbakonam.
-----------------------------------------------------------

முகவுரை

அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகதிருப்பங்களில் அரசியல், சமூகம், இலக்கியம், சமயம் இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள்தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றார்கள். குறைபாடுகளைத் தீர்த்து விட்டு அதிசயமான வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளதை உணர்ந்தவர்; கடல் போன்ற எதிர்ப்புகளுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய்வதில் சற்றும் தளராதவர்; உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர்; முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர். "நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற அப்பரது வாக்கை மெய்ப்பித்தவர்.

அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள்ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கிய மென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என்றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்தத் திவ்ய சரிதை எத்துணை அழகு வாய்ந்ததாய் இருக்க வேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல்வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந்தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின் மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.

      பதிப்பாளர்.
-----------------------------------------------------------

அமரர் கல்கி / ஆசிரியர் "கல்கி".

எளிய குடும்பத்திலே பிறந்து சுய முயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், "கல்கி" ச்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி அவர் களும் ஒருவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டு விட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்த பிறகு, "நவசக்தி"யில் திரு. வி. க. வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண்டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும், அபிமானத்துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று கதர்ப் பணியிலும் மதுவிலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம் ஸ்ரீ எஸ். எஸ். வாசனுடைய அழைப்புக்கிணங்க, சென்னைக்கு சென்று, "ஆனந்த விகடன்" ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிக்கையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலே, "ஆனந்த விகடன் யுகம்" என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ்டித்தார். பின்பு "கல்கி"யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும் ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை "விகட"னுக்கு இணையாக ஆக்கினார். "விகடன்" மூலமும், கல்கி மூலமும் தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், தேசப் பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது.

இருபதாம் வயதில் பிடித்த பேனாவை ஐம்பத்து மூன்றாம் வயது வரை, அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை. "சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்புகிறேன். வாழ்கையை ஒரு சிறு மெழுகுவத்தியாக நான் கருதவில்லை. அதை ஒரு அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்கு கொடுப்பதற்கு முன், எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்" என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட்ஷா. அதை அப்படியே வாழ்கையில் கடைப் பிடித்தவர் "கல்கி".

தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப்படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் "கல்கி". தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், அதையும் ரொம்ப ரொம்ப தமிழிலேயே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் "கல்கி".

அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமர்சனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை. சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். "சிவகாமியின் சபதம்", "பொன்னியின் செல்வன்", "பார்த்திபன் கனவு" முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகுங்கூட, தமிழ் மக்களின் இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே, மக்களின் வாழ்க்கையிலும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத்தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையாகிய காந்திமஹாத்மா வுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடு பட்டார். தூத்துக்குடியில் வ.வு.சி.கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். முது பெரும் எழுத்தாளராகிய வ. ரா. வுக்கும்

வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்னதான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து சிறந்த பணியாற்றியிருக்கிறார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர். ஸ்ரீ. ரா. கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்ட போதிலும், "கல்கி" தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமர தாரையாக விளங்குவார்.

மங்கள நூலகம்.
நுங்கம்பாக்கம் சென்னை - 6
-----------------------------------------------------------

பொருளடக்கம்
அத்தியாயம் ....பக்கம் அத்தியாயம் ....பக்கம்
1. லண்டன் பிரயாணம் ... 1 22. "வளருதே தீ" ... 163
2. ஜன்மபூமி ... 8 23. கராச்சி விசாரணை ... 170
3. சுங்கவரி நீக்கம் ... 14 24. முழத்துண்டு விரதம் ... 177
4. சாந்திநிகேதனம் ... 22 25. இதய தாபம் ... 188
5. சபர்மதி ஆசிரமம் ... 27 26. பர்தோலி-ஆனந்த் ... 195
6. இராஜகுமார் சுக்லா ... 36 27. தாழி உடைந்தது ... 202
7. எதிர்பாராத வெற்றி ... 42 28. கோட்டை தகர்ந்தது ... 210
8. கிராமத் தொண்டு ... 50 29. என் மதம் ... 218
9. தொழிலாளர் தோழன் ... 56 30. சிறைகள் நிரம்பின ... 227
10. கெயிரா சத்தியாக்கிரஹம் ... 63 31. பூஜைவேளையில் கரடி ... 234
11 . யுத்த மகாநாடு ... 69 32. மாளவியா மத்தியஸ்தம் ... 240
12 . ரவுலட் அறிக்கை ... 78 33. தாஸ்-ஆஸாத் தலையீடு ... 249
13. ஆத்ம தரிசனம் ... 8434. சர்வாதிகாரி காந்தி ... 258
14. நாடு எழுந்தது ... 8935. பம்பாய் நாடகம் ... 269
15. இமாலயத் தவறு ... 9636. வைஸராய்க்கு இறுதிக் கடிதம் ... 277
16. பஞ்சாப் படுகொலை ... 10437. பேரிடி விழுந்தது ... 284
17. அமிர்தஸரஸ் காங்கிரஸ் ... 12938. நெருப்பைக் கொட்டினார்கள் ... 292
18. கிலாபத் கிளர்ச்சி ... 13039. கைதிக் கூண்டில் ... 299
19. சட்டசபை பகிஷ்காரம் ... 13840. தண்டனை ... 307
20. தலைமைக் கிரீடம் ... 147 41.சிறை வாழ்வு ... 317
21. சுயராஜ்ய ஜுரம் ... 156

1. லண்டன் மார்க்கம்

மாந்தருள் ஒருதெய்வம்.

தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.

1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் 5 - ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதற்கு முதல்நாள் ஆகஸ்டு மாதம் 4 - ஆம் தேதி முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

லண்டன் நகரை அடைந்ததும் மகாத்மா ஸ்ரீகோகலேயைப் பற்றி விசாரித்தார். கோகலே பாரிஸுக்குப் போயிருக்கிறார் என்றும் யுத்தம் தொடங்கி விட்டபடியால் திரும்பி வருவதற்குத் தாமதப்படலாம் என்றும் தெரிந்தது. இந்தியாவில் தாம் செய்யவேண்டிய தேசத் தொண்டைக் குறித்து ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா பேச விரும்பினார். கோகலேவைப் பாராமல் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லை. ஆகையால் அவர் திரும்பி வரும் வரையில் லண்டனிலேயே தங்கி யிருக்கத் தீர்மானித்தார்.

லண்டனிலிருந்தபோது யுத்தம் சம்மந்தமாகத் தம்முடைய கடமை என்னவென்ற யோசனை ஏற்பட்டது. தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தின் போது செய்தது போல இந்த யுத்தத்திலும் பிரிட்டனுக்கு உதவி செய்வது இந்தியர்களுடைய கடமை என்று மகாத்மா தீர்மானித்தார். எனவே அச்சமயம் இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்திருந்த இந்திய மாணவர்களையும் மற்ற இந்தியர்களையும் திரட்டி அவர்களிடம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். "ஆங்கில மாணாக்கர்கள் யுத்த சேவையில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள், பார்த்தீர்களா? அதுபோல இந்திய மாணாக்கர்களும் யுத்த சேவை செய்வதற்கு முன் வர வேண்டும்" என்று சொன்னார்.

இந்தியர்களில் சிலர் அதை ஆட்சேபித்தார்கள் "ஆங்கிலேயர் சுதந்திர புருஷர்கள்; ஆளும் சாதியினர்; ஆகையால் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் யுத்தம் செய்தாக வேண்டும். சுதந்திரம் இல்லாத அடிமை இந்தியர்கள் எதற்காக யுத்த சேவையில் ஈடுபட வேண்டும்? ஆங்கிலேயரக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதல்லவா நம்முடைய கடமை" என்றார்கள். இந்த வாதத்தை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை.

"இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நம்முடைய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்வது நியாயம் அல்ல. யுத்தம் நடக்கும் வரையில் நம்முடைய கோரிக்கைகளை வற்புறுத்தக் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பை நாம் பெற்று வருகிறோம். ஆகையால் யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

மகாத்மாவின் யோசனையை இந்தியர்கள் பலர் ஒப்புக் கொண்டார்கள். யுத்த சேவைக்காக வாலண்டியர் படையில் சேர்வதாகத் தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள். இவர்களில் இந்தியாவின் எல்லா மாகாணத்தினரும் எல்லா மதத்தினரும் இருந்தார்கள்.

இதனால் திருப்தி யடைந்த மகாத்மா அச்சமயம் இந்தியா மந்திரி பதவி வகித்த லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார்.தாமும் தம்மைச் சேரந்த இந்தியர்களும் சைன்ய சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பயிற்சி பெறத் தயாரா யிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்தார். லார்ட் குரூ முதலில் சிறிது தயங்கி விட்டுப் பிறகு மகாத்மா எழுதிய வண்ணம் இந்தியர்களின் சைன்ய சேவையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதினார்.

முதலில் டாக்டர் காண்ட்லி என்பவரின் கீழ் பிரதம சிகிச்சை முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்பது இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆறுவாரத்துக்கெல்லாம் நடந்த பரீட்சையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தேறினார்கள்.

இந்த நாட்களில் காந்திஜிக்குப் பழக்கமான பல இந்தியர்களில் ஒருவர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா. அப்போது இவர்இங்கிலாந்தில் வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். மகாத்மாவின் தலைமையில் சைன்ய சேவைப் படையில் சேர்ந்தார். பிற்காலத்தில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்தி மகாத்மாவுக்கு உடல்நோய் ஏற்பட்ட காலங்களிலும் காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவருடைய நம்பிக்கைக்கு உரிய வைத்தியராய் விளங்கினார். தற்சமயம் டாக்டர் ஜீவராஜ் மேத்தா பரோடா சமஸ்தான பிரதம மந்திரி பதவி வகித்துப் பரோடாவைப் பம்பாய் மாகாணத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அக்காலத்திலேதான் மகாத்மா காந்தி முதன் முதலாக ஸ்ரீமதி சரோஜனி தேவியையும் சந்தித்தார். போர் வீரர்களுக்கு உடுப்புக்களும் காயம் பட்டவர்களுக்குக் கட்டுகள் போடும் துணிகளும் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட பெண்மணிகளின் சங்கம் ஒன்று லண்டனில் இருந்தது. அந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி தேவி அங்கத்தினர். ஒருசமயம் போர் வீரர்களின் உடுப்புக்காக வெட்டப் பட்டிருந்த ஒரு குவியல் துணிகளை மகாத்மா காந்தியிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொடுத்து அவற்றை உடைகளாகத் தைத்துக்கொண்டு வரும்படி சொன்னாராம். மகாத்மா அவ்விதமே தைத்துக்கொடுத்தாராம்.

பிற்காலத்தில் இந்தியாவில் மகாத்மா ஆரம்பித்து நடத்திய இயக்கங்களில் ஸ்ரீமதி சரோஜினி தேவி எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மகாத்மாவிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொண்டிருந்த பக்தி அளவற்றது. பாதகன் கோட்ஸேயினால் மகாத்மா சுடப்பட்டு இறந்த சம்பவம் ஸ்ரீமதி சரோஜினியின் இருதயத்தைப் பெரிதும் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டது. காந்திமகான் காலமாகி ஒரு வருஷத்துக்கெல்லாம் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் அவரைத்தொடரந்து விண்ணுலகம் சென்றார் அன்றோ?

பிரதம சிகிச்சையில் பயிற்சி பெற்றுப் பரீட்சையிலும் தேறியவர்களுக்கு இராணுவ டிரில் பயிற்சி அளிக்குமாறு கர்னல் பேக்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தேவைக்கு அதிகமாகவே இந்தியர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸோராப்ஜி அதாஜானியா என்பவர் இது விஷயமாக மகாத்தமாவுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார். "இந்த அதிகாரி நம்மீது தர்பார் நடத்தப் பார்க்கிறார். அர்த்தமற்ற உத்தரவுகளைப் போடுகிறார். இவர் செலுத்தும் தர்பார் ஒருபுறமிருக்க, இவர் தமக்கு உதவியாக நியமித்துக்கொண்டிருக்கும் ஆங்கில இளைஞர்களும் தங்களை எஜமானர்கள் என்று எண்ணிக்கொண்டு நம்மைக் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த அதிகார தட புடலை எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்று சொன்னார். ஆயினும் அவரைப் பொறுமையாக இருக்கும்படியும் கர்னல் பேக்கரிடம் நம்பிக்கை வைக்கும்படியும் காந்தி மகாத்மா கேட்டுக் கொண்டார்.

"இப்படித்தான் நீங்கள் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோகிறீர்கள். இதனால் உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டத்தைத் தேடித்தருகிறீர்கள்!" என்றார் அதாஜானியா. அவர் சொன்னது உண்மை என்று சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. கர்னல் பேக்கரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. அவர் 'கார்ப்போரல்'களாக நியமித்திருந்த ஆக்ஸ்போர்டு மாணாக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் நேரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதன் பேரில் மகாத்மா மேற்படி தலைமை அதிகாரியிடம் போய் இந்தியர்களுடைய கருத்தைத் தெரிநவித்தார்.
"என்னிடம் நேரே நீங்கள் வந்து புகார் சோல்லக்கூடாது. நான் நியமித்திருக்கும் 'கார்ப்போரல்'களிடம் முதலில் புகார் சொல்லவேண்டும். அதுவும் அவரவர்களே புகார் சொல்ல வேண்டுமே தவிர, நீங்கள் மற்றவர்களுக்காகப் பேசக்கூடாது" என்றார் கர்னல் பேக்கர்.

மகாத்மா திடுக்கிட்டார். எனினும் நிதானமாகத் தமது கட்சியை எடுத்துரைத்தார். "இந்தியர்களைச் சைன்ய சேவைக் காகத் திரட்டியவன் நான்தான். ஆகையால் அவர்களுக்காக நான் பேசுவதற்கு அநுமதி கொடுக்கவேண்டும். எங்களுடைய சம்மதம் கேட்காமல் 'கார்ப்போரல்'களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். இது சரியல்ல. அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்குள்ளேயே சில படைத் தலைவர்களை நியமிப்பது தான் முறை" என்று கூறினார்.

கர்னல் பேக்கருக்கு மகாத்மாவின் யோசனை பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் வந்து விட்டது. "நான் நியமித்த 'கார்ப்போரல்'களை விலக்க வேண்டும் என்றா சொல்கிறீர்?" அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதம்!" என்று கடுமையாகப் பேசினார்.

காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா அநுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே இந்தியப்படைக்குத் தாமே தலைவராயிருந்ததை எடுத்துச் சொன்னார். அது ஒன்றும் கர்னல் பேக்கரின் காதில் ஏறவில்லை.

இதன்பேரில் இந்தியர்கள் கூட்டம் போட்டுச் சைன்ய சேவையிலிருந்து விலகிக்கொன்வது என்று தீர்மானித்தார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான காரியமாதலால்அதன் பலாபலன்களை மகாத்மா நன்கு எடுத்துச் சொன்னார். இந்த விஷயமாகச் சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அதற்கெல்லாம் தாங்கள் தயார் என்று இந்தியர்கள் சொன்னார்கள்.

பின்னர் காந்திஜி தமது வழக்கமான முறையை அநுசரித்து இந்தியா மந்திரி லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு லார்ட் குரூ எழுதிய பதில் வழவழ முறையில் அமைந்திருந்தது.

"தென்னாப்பிரிக்கா நிலைமைக்கும் இவ்விடத்து நிலைமைக்கும் வித்தியாசம் உண்டு. படைப் பிரிவுத் தலைவர்களை மேலதிகாரிதான் நியமிக்க வேண்டும். ஆயினும் இனிமேல் படைத் தலைவர்களை நியமிக்கும்போது உங்களைக் கலந்து கொண்டு நியமிக்கும்படி செய்கிறேன் " என்று இந்தியா மந்திரி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் மகாத்மா காந்தி பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் படுத்திருந்த சமயத்தில் இந்திய சைன்ய சேவைப் படையில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு பகுதியினர் அதிகாரிகளுடன் சண்டை போடுவதில் பயனில்லை என்று தீர்மானித்துச் சைன்ய சேவை செய்ய இணங்கினார்கள். அச்சமயத்திலா நெட்லி என்னும் இடத்திற்குக் காயமடைந்த போர்வீரர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சேவை புரிய ஆள் தேவையாயிருந்தது. சேவை செய்ய இணங்கிய இந்தியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப் பட்டார்கள்.

நோயாளியாகப் படுத்திருந்த காந்திஜியைப் பார்ப்பதற்கு உதவி இந்தியா மந்திரி ராபர்ட்ஸ் பலமுறை வந்தார். சேவைக்குப் போகாமல் பின்தங்கிய இந்தியர்களையும் சேவை செய்யப் போகச் சொல்லும்படி காந்திஜியைக் கேட்டுக் கொண்டார். அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் எதுவும் நேராது என்று உறுதி கூறினார். அதன் பேரில் காந்திஜி பின் தங்கியவர்களையும் சேவைக்குப் போகும்படி சொன்னார். அவர்களையும் நெட்டிலிக்குப் போனார்கள். ஆனால் மகாத்மா மட்டும் உடல் நோய் காரணமாகப் போக முடியவில்லை.


2 . ஜன்ம பூமி

காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு வகைகளை மகாத்மா உட்கொள்ள முடியவில்லை. நிலக்கடலை, வாழைப்பழம், எலுமிச்சப்பழம், தக்காளிப்பழம், திராட்சைப்பழம் - இவையே அப்போது மகாத்மாவின் முக்கிய உணவாக இருந்தன. பருப்பு வகைகளையும் தானியங்களையும் உட்கொள்ளுவதை அடியோடு விட்டிருந்தார். பாலும் சாப்பிடுவதில்லை.

நிலைமை இப்படியிருந்த பொது ஸ்ரீ கோகலே பாரிஸிலிருந்து வந்து சேர்ந்தார். காந்திஜி நோய்வாய்ப்பட்டிருந்தது ஸ்ரீ கோகலேயுக்குக் கவலை அளித்தது. உணவு சம்பந்தமாக டாக்டருக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்டிருந்த தகராறையும் கோகலே அறிந்தார். பழ உணவே சிறந்த உணவு என்னும் மகாத்மாவின் கொள்கையில் கோகலேயுக்கு நம்பிக்கை இல்லை. டாக்டர் சொல்லுகிறபடி காந்திஜி உணவு உட்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நெடுநேரம் இந்த உபதேசத்தைச் செய்தார். கடைசியில் மகாத்மா யோசிப்பாதற்கு இருபத்திநாலு மணி நேரம் அவகாசம் கேட்டுப் பெற்றார்.

அன்றிரவெல்லாம் காந்திஜி தமது உணவுப் பரிசோதனையைப் பற்றியும் கோகலேயின் போதனையைப் பற்றியும் ஆலோசித்துக் கடைசியாக ஒரு சமரச முடிவுக்கு வந்தார். அந்த முடிவு வருமாறு; - தேக சுகத்தை மட்டும் முன்னிட்டுத் தாம் கைக்கொண்டிருந்த விரதங்களை டாக்டரின் யோசனைப்படி தளர்த்தி விடலாம். ஆனால் ஆத்ம சாதனத்தை முன்னிட்டு அனுசரித்த உணவுக்கட்டுபாடுகளைக் கைவிடக்கூடாது.

ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா தமது முடிவைத் தெரிவித்தார். தானியங்களும் பருப்பு வகைகளும் உட்கொள்ளுவதாகவும் ஆனால் பாலும் மாமிசமும் சாப்பிடுவது அசாத்தியம் என்றும் சொன்னார். "பிரதிக்ஞையை மீறிப் பாலும் மாமிசமும் உட்கொள்ளுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று கருதுகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்" என்று மகாத்மா கோகலேயிடம் கேட்டுக் கொண்டார்.

மகாத்மாவின் இந்த முடிவு ஸ்ரீ கோகலேயுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவருடைய ஆத்ம சாதன நோக்கத்தையும் பிரதிக்ஞையில் உறுதியையும் கருதி டாக்டர் ஜீவராஜ் மேத்தாவிடம்"காந்தி ஒப்புக்கொண்ட வரையில் சரி. மேலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

டாக்டர் கூறியபடி காந்திஜி ஓரளவு உணவை மாற்றிக் கொண்டார். மேலுக்கு மருந்து தடவி டாக்டர் மேத்தா மகாத்மாவுக்கு சிகிச்சை செய்து வந்தார். ஆயினும் பலன் ஒன்றும் தெரியவில்லை.

டாக்டர் அல்லின்சன் என்னும் இயற்கை வைத்தியரின் யோசனைப்படி காந்திஜி பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடத் தொடங்கினார். அதை முழுதும் கையாண்டு பார்க்க உடல் நோய் இடங்கொடுக்கவில்லை.

டாக்ட‌ல் ஜீவ‌ராஜ் மேத்தாவோ தாம் சொல்லுகிற‌ப‌டி ம‌காத்மா முழுதும் கேட்டுக் க‌டைபிடித்தால் தான் நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ முடியும் என்று கூறினார்.

இந்த நிலையில் ஒரு நாள் மிஸ்டர் ராபர்ட்ஸ் மகாத்மாவைப் பார்க்க வந்தார். அவருடைய நோய் கடுமையாகியிருப்பதைக் கவனித்தார். "நீங்கள் சைன்ய சேவைக்காக நெட்லிக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியது தான். இன்னும் கடுமையான குளிர்காலம் வரப்போகிறது. அதை உங்க‌ளால் தாங்க‌ முடியாது. நீங்க‌ள் இந்தியா தேச‌த்துக்கு உட‌னே திரும்பி விடுவ‌துதான் ந‌ல்ல‌து. அங்கே தான் உங்க‌ளுக்கு உட‌ம்பு ந‌ன்றாக‌க் குண‌ம‌டையும். அப்போதும் இந்த‌ யுத்த‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்தால் நீங்க‌ள் உத‌வி செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் கிடைக்கும்" என்று மிஸ்டர் ராபர்ட்ஸ் கூறியது சரியான யோசனையாக மகாத்மாவுக்குத் தோன்றியது.
---
+ஜன்ம தேசம் செல்வதற்காக மகாத்மா தம்முடைய தர்மபத்தினியுடன் கப்பல் ஏறினார். மிஸ்டர் காலன்பாக் ஜெர்மானியராகையால் அவர் இநதியா தேசம் போவதற்கு அநுமதிச் சீட்டு கிடைக்கவில்லை. எவ்வளவு முயன்றும் பயனில்லை.

காந்திஜி கப்பல் ஏறிப் பிரயாணம் செய்து சூயஸ் கால்வாயை அடைந்ததும் அவருக்கு உடம்பு பூரண சௌக்யம் அடைந்துவிட்டது. கடற்பிரயாணத்தின் தூய்மையான காற்றே தாம் குணமடைந்ததற்குக் காரணம் என்று மகாத்மா கருதினார்.

பத்து வருஷம் பிரிந்திருந்த பிறகு காந்திஜி ஜன்ம பூமியான இநதியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய்த் துறைமுகத்தை அடைந்து கப்பலிலிருந்து இறங்கினார்.
---- ------- -----
போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காந்திஜிக்கு முன்னாலேயே இந்தியா வந்து சேர்ந்திருந்தார்கள். தாம் இந்தியாவுக்கு வரும் வரையில் அவர்கள் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் யோசனைப்படி நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லியிருந்தார். அவர்களை ஸ்ரீ ஆண்ட்ரூஸ் முதலில் காங்ரி குருகுலத்துக்கு அழைத்துப் போனார். இந்தக் குருகுலம் புகழ்பெற்ற சுவாமி சிரத்தானந்தரால் ஸ்தாபிக்கப்பட்டு அவருடைய தலைமையின்கீழ் நடந்து வந்தது.

போனிக்ஸ் கோஷ்டியார் சிலகாலம் காங்ரியில் வசித்த பிறகு மகாகவி ரவீந்திரநாத தாகூரின் சாந்தி நிகேதனத்துக்குச் சென்றார்கள். இரண்டு இடங்களிலும் அவர்கள் மிக்க அன்புடன் நடத்தப்பட்டார்கள்.
---- --------- -----
மகாத்மா பம்பாயில் இறங்கியபோது போனிக்ஸ் ஆசிரமத்தார் சாந்திநிகேதனத்தில் இருந்தார்கள். அவர்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று மகாத்மா மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆயினும் உடனே புறப்பட முடியாமல் அவருக்குப் பம்பாயில் சில அலுவல்கள் ஏற்பட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா நடத்திய சத்தியாக்கிரஹப் போரைப் பற்றிய விவரங்கள் இந்தியாவில் பரவி யிருந்தன. ஆகையால் மகாத்மாவுக்கு பல வரவேற்புகளும் உபசாரங்களும் நடந்தன.

ஸ்ரீ ஜெகாங்கீர் பெடிட் என்பவர் பம்பாயில் அப்போது வசித்த பார்ஸி கோடீசுவ‌ரர்க‌ளில் ஒருவ‌ர். அவருடைய ஜாஜ்வல்யமான அரண்மனையை யொத்த இல்லத்தில் ஒரு விருந்து நடந்தது. இந்த விருந்துக்கு பம்பாயின் பிரபல செல்வர்கலும் பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.எல்லாரும் நவநாகரிக உடை தரித்து வந்திருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ பழைய கர்நாடக கத்தியவார் பாணியில் இடுப்பில் வேஷ்டியும் உடம்பில் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவ்வளவு நாகரிக மனிதர்களுக்கு மத்தியில் காந்திஜி பேசிப் பழகுவதற்குத் திணறிப்போனார். பெடிட் மாளிகையின் பெருமிதமும் பிரகாசமும் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஆயினும் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் அன்பும் ஆதரவும் காந்திஜி ஒருவாறு சமாளித்துக் கொள்ள உதவி செய்தன.

பிறகு, குஜராத்திகள் மகாத்மா காந்தியைத் தங்கள் மாகாணத்தவர் என்று உரிமை பாராட்டி உபசார விருந்து நடத்தினார்கள். குஜராத் மாகாணத்தவராகிய ஜனாப் ஜின்னாவும் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காந்திஜியை வரவேற்றுப் பாராட்டி ஆங்கிலத்தில் இனிய சொற்பொழிவு ஒன்றும் செய்தார். விருந்துக்கு வந்திருந்த இன்னும் பலரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

ஆனால் மகாத்மா காந்தி உபசாரத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய சமயம் வந்தபோது "இங்கே எல்லாருக்கும் குஜராத்தி தெரியுமாதலால் குஜராத்தியிலேயே பேச விரும்புகிறேன்! நம் தாய்மொழி இருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு இங்கிலீஷில் ஏன் பேச வேண்டும்?" என்று ஆரம்பித்தார். காந்திஜியின் தாய்மொழிப்பற்றை அனைவரும் பாராட்டினார்கள். இங்கிலீஷில் பேசுவதே கௌரவம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில் மகாத்மா துணிந்து குஜராத்தியில் பேசியதை மெச்சினார்கள். இந்த அநுப‌வ‌த்தினால் ம‌காத்மாவுக்கு இந்தியாவில் தம்முடைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்னும் தைரியம் உண்டாயிற்று.

பம்பாயிலிருந்து மகாத்மா ஸ்ரீ கோகலேயைச் சந்திபதற்காக பூனாவிற்குப் புறப்பட எண்ணினார். பூனாவுக்கு புறப்படுவதற்கு முன்னால் பம்பாய் கவர்னரைப் பார்க்கும்படி கோகலேயிடமிருந்து தந்தி வந்தது. அப்போது பம்பாயின் கவர்னராயிருந்தவர் லார்ட் வில்லிங்டன். (பின்னால் இவர் சென்னை மாகாணத்தின் கவர்னராகவும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.)

லார்ட் வில்லிங்டன் வழக்கமான யோகஷேம விசாரணைகுப்பிறகு, "உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இங்கே நீங்கள் அரசாங்க சம்பந்தமான நடவடிக்கை எதுவும் தொடங்குவதாயிருந்தால், முதலில் என்னை வந்து பார்த்துப் பேசி விட்டுத் தொடங்க வேண்டும்!" என்று கூறினார்.

அதற்குக் காந்திஜி, " நான் அனுசரிக்கும் சத்தியாக்கிரஹ முறையில், எந்தக் காரியமானாலும் எதிராளியின் மனதை அறிந்து ஒத்துப்போக முயற்சி செய்வதே முதல் விதியாகும். ஆகையால் கண்டிப்பாகத் தங்களுடைய யோசனையைக் கடைப் பிடிப்பேன்" என்றார்.

"உங்களுக்கு எப்போது விருப்பமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை வந்து பார்க்கலாம். என்னுடைய அரசாங்கம் வேண்டுமென்று அநீதி எதுவும் செய்யாது என்பதைக் காண்பீர்கள்" என்றார் லார்ட் வில்லிங்டன் துரை.

இதே லார்ட் வில்லிங்டன் 1932 -ஆம் வருஷத்தில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதியாக வந்திருந்தபோது மகாத்மா அவரைப் பேட்டி காண அநுமதி கேட்டார். லண்டன் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் விளையாமல் மகாத்மா திரும்பி இந்தியாவிற்கு வந்ததும் மறுபடியும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய கட்சியை எடுத்துச் சொல்லி, சமரசத்துக்கு வழி உண்டா என்று பார்க்க விரும்பினார். இதற்காகவே மகாத்மா லார்ட் வில்லிங்டனின் பேட்டி கோரினார். ஆனால் வில்லிங்டனோ மகாத்மாவைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் விரோதியாகக் கருதி, பேட்டி கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்!

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நன்மைக்குப் பாதகம் ஏற்படாத வரையில் பிரிட்டிஷார் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது வழக்கம். சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து என்று ஏற்பட்டால் பிரிட்டிஷாரின் தயை, தாட்சண்யம், நாகரிகம், மரியாதை எல்லாம் பறந்து போய் விடும்!
-----------------------------------------------------------

3 . சுங்கவரி நீக்கம்

பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த ஸ்தாபனம் மிகவும் பிரசித்தி பெற்றது. மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் அந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராகியிருந்தார்கள். சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்கள் தேச சேவையும் சமூக சேவையும் செய்து வந்தார்கள். ஸ்ரீ கோகலேயைப் போலவே இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் இந்திய அரசியலில் 'மிதவாத கொள்கை'யைக் கடைபிடித்தார்கள். ஸ்ரீ கோகலேயுக்குப் பிறகு மேற்படி சங்கத்தின் தலைவாரகிப் பிரிசித்தியடைந்தவர் மகா கனம் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார். இன்னொரு பிரபல அங்கத்தினர் பண்டித ஹ்ரிதயநாத குன்ஸ்ரு. தற்சமயம் ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசியாக இருந்து அரும்பெரும் தொண்டு செய்துவரும் ஸ்ரீ தக்கர் பாபாவும் மேற்படி சங்கத்தைச் சேர்ந்தவரே.

காந்திஜி இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீ கோகலேயுக்கு இருந்தது. ஆனால் இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் காந்திஜியுடன் பல விஷயங்களையும் பற்றிப் பேசியபோது சங்கத்தின் கொள்கைகளுக்கும் மகாத்மாவின் கொள்கைகளுக்கும் மிக்க வித்தியாசம் இருப்பதைக் கண்டார்கள். ஆகவே காந்திஜியை இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துக்கொள்வது உசிதமாயிராது என்று கருதினார்கள். மகாத்மாவுக்கு இது ஏமாற்றமாயிருந்தது. தம்முடைய கொள்கைகளுக்கு எவ்விதமான பங்கமும் இல்லாமல் இந்திய ஊழியர் சங்கத்திலே சேர்ந்து தொண்டு செய்யலாம் என்று மகாத்மா நினைத்தார்.

மகாத்மா இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டும் என்பதில் மகாத்மாவைக் காட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் ஸ்ரீ கோகலே. ஆனால் அவர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் சொல்வதற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. அவர் மகாத்மாவுக்குச் சமாதானமாக கூறியதாவது: "உங்களுடைய கொள்கை எப்படியிருந்தாலும் நீங்கள் ராஜி செய்து கொள்வதில் ஆர்வங் கொண்டவர் என்பதை இந்தச் சங்கத்தின் அங்கத்தினர் இன்னும் உணரவில்லை. அதைச் சீக்கிரத்தில் அவர்கள் உணர்ந்து தங்களைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் தங்களிடம் அவர்களுக்கு மரியாதையும் அன்பும் இல்லையென்று எண்ணவேண்டாம். உண்மையில் தங்களிடம் உள்ள மரியாதையினாலேயே தங்களுடைய தன் மதிப்புக்கும் கொள்கைகளுக்கும் பங்கம் வரக்கூடாது என்று கருதுகிறார்கள். தாங்கள் விதிமுறைகளின்படி அங்கத்தினர் ஆகாவிட்டாலும் என்வரையில் தங்களைச் சங்கத்தில் சேர்ந்தவராகவே கருதப் போகிறேன்".

இதற்குப் பதிலாக மகாத்மா ஸ்ரீ கோகலேயுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கூறியதவாது: - "இந்திய ஊழியர் சங்கத்தில் நான் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் போனிக்ஸிலிருந்து நான் கூட்டி வந்திருந்தவர்களோடு தனியாக ஒரு ஆசிரமம் ஸ்தாபித்துத் தொண்டு செய்ய விரும்புகிறேன். நான் குஜராத்தைச் சேர்ந்தவனாதலால் அங்கே ஆசிரமம் ஸ்தாபிப்பது பொருத்தமாய் இருக்கும். தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்".

இதைக்கேட்ட கோகலே, "ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்யுங்கள். ஆனால் ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு வேண்டிய செலவுகளுக்குப் பணம் வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. செலவு முழுதும் நானே கொடுப்பதற்கு விரும்புகிறேன்!" என்றார். உதவி செய்வதற்கு ஒரு ஆப்தர் இருக்கிறார் என்ற எண்ணம் காந்திஜிக்கு உற்சாகம் ஊட்டியது.

ஸ்ரீ கோகலே வாய்ப்பேச்சோடு நில்லாமல் இந்திய ஊழியர் சங்கத்தின் பொக்கிஷத்தாரரைக் கூப்பிட்டுக் காந்திஜியின் பெயரால் ஒரு பெயரேடு வைத்துக்கொண்டு அவர் கேக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து வரும்படி உத்தரவிட்டார்.

காந்திஜி பூனாவை விட்டுப் புறப்படும் முன் இந்திய ஊழியர் சங்கம் அவருக்கு ஒரு விருந்து நடத்தியது. மகாத்மா விரும்பிய பழங்களும் கொட்டைகளும்தான் உணவில் முக்கிய உணவுப் பொருட்கள். கோகலேவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கோகலே தங்கியிருந்த அறையிலிருந்து விருந்து நடந்த இடம் சில அடி தூரத்திலேயே இருந்தது. கோகலே அந்த இடத்துக்கு நடந்து வந்தார். விருந்துக்கு அவர் வரவேண்டிய அவசியமில்லை என்று காந்திஜியும் பிறரும் கூறியதை கோகலே கேட்கவில்லை. மகாத்மாவினிடம் அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக வரத்தான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டு வந்தார். விருந்து நடந்த இடத்துக்கு வந்ததும் மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார். அங்கிருந்து அவரை தூக்கிக்கொண்டு போய் அவருடைய அறையில் சேர்த்தார்கள். இதற்குமுன் சில தடவை இம்மாதிரி கோகலே மூர்ச்சித்து விழுந்திருந்தபடியால் அதைக்குறித்து யாரும் பயப்படவில்லை. கோகலேயும் மூர்ச்சை தெளிந்து சுய உணர்வு பெற்றவுடனே விருந்து நடக்கட்டும் என்று சொல்லி அனுப்பினார். அவ்வாறே விருந்து நடந்தது.

ஆனால் கோகலே இந்த முறை மூர்ச்சையடைந்தது சாதாரண விஷயமாகப் போய்விட வில்லை. அதற்குப் பிறகு கோகலே உடல் வலிவு பெறவில்லை. அந்திய காலம் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

பூனாவிலிருந்து காந்திஜி இராஜகோட்டைக்கும் போர்பந்தருக்கும் சென்றார். அவருடைய தமையனார் முன்னமே காலஞ் சென்று விட்டார். காலஞ்சென்றவரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்க்க விரும்பி போனார்.

காந்தி மகாத்மாவின் உடை நாளுக்கு நாள் எளிமையாகி வந்தது. பாரிஸ்டர் வேலை தொடங்கியபோது மேனாட்டு நாகரிக உடுப்புத் தரித்திருந்தார்.தென்னாப்ரிக்காவில் போராட்டத்தில் இறங்கிய பிறகு அங்கே இந்தியத் தொழிலாளர்களைப் போல எளிய உடையை தரிக்கத் தொடங்கினார். ஆனால் இதுவும் பாதி மேனாட்டு முறையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்தபோது கத்தியவாரில் அந்தஸ்து வாய்த்தவர்கள் உடுக்கும் உடை தரித்திருந்தார்.

இந்த உடையில் வேஷ்டி, உட்சட்டை, நீண்ட மேலங்கி, அங்கவஸ்திரம், தலைப்பாகை ஆகியவை இருந்தன. பம்பாயிலிருந்து ராஜகோட்டைக்குக் கிளம்பும்போது மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய மகாத்மா தீர்மானித்தார். அத்துடன் கத்தியவார் உடையில் நீண்ட மேலங்கியையும் உத்தரியத்தையும் புறக்கணித்து விட்டார். அலங்காரமான தலைப்பாகைக்கு பதிலாக எட்டணா விலையுள்ள காஷ்மீர் குல்லா ஒன்று வாங்கி வைத்துக் கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழைகளோடு பிரயாணம் செய்தபோது இம்மாதிரி எளிய உடுப்பு தரிப்பது தான் உசிதம் என்று கருதினார்.

அப்பொழுது பம்பாய் மாகாணத்தில் சில இடங்களில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையால் வழியில் வாத்வான் என்னும் ஸ்டே ஷனில் பிரயாணிகள் வைத்தியப் பரிசோதனை செய்யப் பட்டார்கள். காந்திஜிக்குக் கொஞ்சம் ஜுரம் இருந்தது. அவரைப் பரிசோதனை செய்த உத்தியோகிஸ்தர் "நீர் இராஜ கோட்டை சென்றதும் அங்குள்ள பெரிய வைத்திய அதிகாரியிடம் சென்று ஆஜர் கொடுக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அந்த வாத்வான் ஸ்டே ஷனிலேயே மோதிலால் என்னும் தையற்காரர் ஒருவர் வந்து காந்திஜியை சந்தித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு நேராக உட்பட்ட பிரதேசத்திலிருந்து கத்தியவார் சமஸ்தானப் பிரதேசத்துக்குள் நுழையும் இடத்தில ஒரு சுங்கம் ஏற்படுத்தியிருந்தர்கள். இது வீரம் காம் ஸ்டே ஷனில் இருந்தது. பிரயாணிகளையும் அவர்களுடைய சாமான்களையும் பரிசோதனை செய்து சுங்கவரி விதித்து வசூலித்தார்கள். இதனால் பிரயாணிகள் மிக்க தொந்தரவுக்கு ஆளானார்கள். மேற்படி மோதிலால் என்னும் தையற்காரர் மகாத்மாவிடம் வீரம்காம் சுங்கவரி அநீதியைப்பற்றிப் பேசுவதற்காகவே வந்திருந்தார். அதைக் குறித்த எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னார். காந்திஜிக்கு அப்பொது சுரமாயிருந்தபடியால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையால் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டார்.

"நீங்கள் சிறைபுகுவதற்கு சித்தமா" என்பதுதான் அந்தக் கேள்வி. சிறை என்ற வார்த்தையைக் கேட்டு மோதிலால் பயப்பட்டு விடவும் இல்லை; ஆவேசமான பதில் சொல்லவும் இல்லை; " தாங்கள் தலைமை வகித்து நடத்தினால் நானும் இன்னும் பலரும் சிறை புகுவதற்குத் தயார். தாங்கள் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள். ஆகையால் தங்கள் பேரில் எங்களுக்கு முதல் உரிமை உண்டு. தாங்கள் தலைமை வகித்து நடத்தி இந்த அநீதியை ஒழிக்க வேண்டும்" என்று நிதானமாகப் பதில் சொன்னார். மகாத்மாவுக்கு இந்தப் பதில் மிகவும் பிடித்திருந்தது. தையற்கார மோதிலால் மீது மதிப்பும் அபிமானமும் ஏற்ப‌ட்டன‌. "ச‌ரி பார்க்க‌லாம்" என்று பதில் சொல்லிவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

மகாத்மா இராஜகோட்டையை அடைந்ததும் பெரிய சுகாதார அதிகாரியைப் பார்க்கப் போனார். இதற்குள் இராஜகோட்டையில் மகாத்மாவின் பெயர் பிரசித்தி அடைந்திருந்தது. எனவே அந்த உத்தியோகஸ்தர் மகாத்மா தம்மிடம் வர நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். ரயிலில் வைத்திய பரிசோதனை செய்தவர் மீது கோபம் அடைந்தார். மகாத்மா இனி தம்மிடம் வர வேண்டியதில்லை யென்றும் மகாத்மா இருக்கும் இடத்துக்கு இன்ஸ்பெக்டரை அனுப்பிவைப்பதாகவும் கூறினார்.

மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தபடியினால் மகாத்மாவுக்கு மேற்கூறிய அநுபவம் கிடைத்தது. மூன்றாம் வகுப்பில் பிரயாணம்செய்து பிரயாணிகள் அடையும் கஷ்டங்களை நேரில் தெரிந்து கொள்வதில் மகாத்மாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. மகாத்மா இது சம்பந்தமாகக் கூறியிருப்பதாவது-- "பெரிய மனிதர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யப் பிரியப்பட்டால் ஏழைகள் உள்ளாக வேண்டியிருக்கும் எல்லா விதிகளுக்கும் அவர்களும் உள்ளாக வேண்டியது அவசியம். ரயில் உத்தியோகஸ்தர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைச் சகோதர மனிதர்களாகவே பாவிப்பதில்லை என்பதும், கேவலம். ஆடு மாடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதும், என்னுடைய அநுபவம். படித்த பணக்கார வகுப்பாரில் சிலர் தாங்களாகவே ஏழைகளின் அந்தஸ்தை ஏற்க முன்வர வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவேண்டும். ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த வசதியையும் தாங்கள் பெறக்கூடாது. பிரயாணத்தில் ஏற்படும் அவமதிப்புக்களுக்கும் அநீதிகளுக்கும் தலைகுனிந்து போகாமல் அவற்றைத் தொலைப்பதற்காகப் போராட வேண்டும்." இவ்வாறு எழுதிய மகாத்மா காரியத்திலும் அவ்விதமே நடந்து காட்டியிருக்கிறார்.

கத்தியவாரில் காந்திஜி எந்தப் பகுதிக்குப் போனாலும் வீரம்காம் சுங்க வரித்தொல்லையைப் பற்றி ஜனங்கள் புகார் செய்தார்கள். இது சம்பந்தமாக லார்ட் வில்லிங்டன் கொடுத்திருந்த வாக்குறுதியை மகாத்மா பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். வீரம்காம் சுங்கவரி சம்பந்தமாகச் சகல விவரங்களையும் சேகரித்து ஜனங்களுக்கு அது பெரிய அநீதிதான் என்பதை உறுதி செய்துகொண்டார். பிறகு பம்பாய் அரசாங்கத்துக்கு அந்த விவரங்களைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். முதலில் லார்ட் வில்லிங்டனுடைய காரியதரிசியையும் பிறகு லார்ட் வில்லிங்ட‌னையும் பேட்டி கண்டார். அவர்கள் வாயினால் அநுதாபம் தெரிவித்துவிட்டு, "இது இந்திய சர்க்காரைச் சேர்ந்த விஷயம். ஆகையால் இந்திய‌ சர்க்காருக்கு எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள்.

மகாத்மா இந்திய சர்க்காருக்கும் எழுதினார். பயன் ஒன்றும் கிட்டவில்லை. அப்போது கவர்னர் ஜெனரலா யிருந்த லார்ட் செம்ஸ்போர்டைச் சந்தித்து வீரம்காம் சுங்கத்தைப்பற்றிய விவ‌ர‌ங்க‌ளை எடுத்துக் கூறினார். "இப்ப‌டியும் உண்டா?" என்று லார்ட் செம்ஸ்போர்ட் அதிச‌ய‌ப்ப‌ட்டு விசார‌ணை ந‌ட‌த்தித் த‌க்க‌து செய்வ‌தாக‌ வாக்க‌ளித்தார். சில நாளைக்கெல்லாம் வீர‌ம்காம் சுங்க‌ம் எடுத்து விட‌ப்ப‌ட்ட‌து!

சர்க்காருடன் கடிதப் போக்குவரவு நடந்து கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி பகஸ்ரா என்னுமிடத்தில் பேசிய போது "வேறு வ‌ழிக‌ள் ப‌ய‌ன் த‌ராவிட்டால் சத்தியாகிரஹத்தைக் கைக்கொள்ள நேரலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் தான் மகாத்மா பம்பாய் சர்க்காரின் காரியதரிசியைப் பார்க்க நேர்ந்தது. காந்திஜியின் பேச்சைக் காரியதரிசி குறிப்பிட்டு, "இந்தப் பயமுறுத்தலுக்கு சர்க்கார் இணங்கி விடுவார்கள் என்பது உம்முடைய எண்ணமா?" என்று கேட்டார்.

"நான் கூறியதில் பயமுறுத்தல் ஒன்றுமில்லை. குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நியாயமான வழி ஒன்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினேன். சத்தியாகிரஹ‌ம் பலாத்காரம் சிறிதும் அற்ற ஆயுதம். அதைப்பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வது என் கடமை. பிரிட்டிஷ் அரசாங்கம் மிக்க வலிமை பொருந்தியது என்று எனக்குத் தெரியும். ஆனால் சத்தியாகிரஹம் தோல்வியே அறியாத ஆயுதம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்‌தேக‌ம் இல்லை" என்று ம‌காத்மா காந்தி ப‌தில் அளித்தார்.

வீரம்காம் சுங்கவரியைப் ப‌ற்றிய‌ கிள‌ர்ச்சியை ம‌கா‌த்‌மா காந்தி இந்தியாவில் ச‌த்தியாக்கிர‌ஹ இய‌க்க‌த்தின் ஆர‌ம்ப‌ ந‌ட‌வ‌டிக்கை என்று க‌ருதினார். அது வெற்றிக‌ர‌மாக‌ முடிந்த‌து ஒரு சுப‌ச‌குன‌ம் அல்ல‌வா?
-----------------------------------------------------------

4. சாந்தி நிகேதனம்

இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் சாந்திநிகேதனத்திலும் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடத்திய வாழ்க்கை முறையையே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்கும்படி செய்துவந்தார்.

காந்திஜி சாந்தி நிகேதனம் அடைந்ததும் அவரை அங்கிருந்த ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எல்லாருமே அன்பு வெள்ளத்தில் முழுகும்படி செய்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூஸும் பியர்ஸனும் அப்போது அங்கே இருந்தார்கள். இவர்கள் தவிர, பரோடா கங்காநாத் வித்யாலயத்திலிருந்து சாந்திநிகேதனத்துக்கு வந்திருந்த காகாசாகேப் காலேல்கர் என்பவரைக் காந்திஜி இங்கே சந்தித்தார். பிற்காலத்தில் காகா சாகிப் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆனார்.

சாந்தி நிகேதனத்தை அடைந்த காந்திஜி வெகு சீக்கிரத்திலேயே அங்கிருந்த ஆசிரியர்கள்--மாணாக்கர்கள் எல்லாருடனும் சிநேகம் செய்து கொண்டார். மறுநாளே அவர்களுடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமையல் செய்து கொண்டார்கள். அஅதுமாதிரியே சாந்தி நிகேதன மாணாக்கர்களும் சமையற்காரர்களைப் போகச்சொல்லிவிட்டுத் தாங்களே சமையல் செய்து கொண்டால் என்ன என்று மகாத்மா கேட்டார். இதனால் பிள்ளைகளுக்குத் தேகதிடமும் மனோதிடமும் வளரும் என்று சொன்னார். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்குள்ளே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒரு கட்சியார் மகாத்மாவின் யோசனையை ஆதரித்தார்கள். இன்னொரு கட்சியார் அது நடக்காத காரியம் என்று தலையை அசைத்தார்கள்.

காந்திஜியின் யோசனை மாணாக்கர்களுக்குப் பிடித்திருந்தது. புதுமையான காரியம் என்றாலே பிள்ளைகள் விரும்புவது இயல்பு அல்லவா? மகாகவி ரவீந்திரரிடம் போய்ச் சொன்னார்கள். உபாத்தியாயர்களும் மாணாக்கர்களும் சம்மதித்தால் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று குருதேவர் சொன்னார். மாணாக்கர்களைப் பார்த்து "சுயராஜ்யத்தின் திறவுகோல் இந்தச் சோதனையில் அடங்கியிருக்கிறது!" என்று கூறினார்.

பின்னர் சாந்திநிகேதனத்தில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணாக்கர்களே சமையல் செய்யும் சோதனை சில காலம் நடந்தது. கூட்டம் கூட்டமாகப் பிரிந்து ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது பியர்ஸன் என்னும் ஆங்கிலேய அறிஞர் இந்தப் பரிசோதனையில் பூரண உற்சாகத்துடன் ஈடுபட்டார். தம் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் சமையல் அறையில் வேலை செய்தார். சமையல் அறையையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆசிரியர்கள் சிலர் ஒப்புக்கொண்டிருந்தார்கள். எம்.ஏ.பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதைப் பார்க்க மகாத்மா காந்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

ஆனால் சாந்தி நிகேதனத்தில் இந்தச் சோதனை சில காலந்தான் நடந்தது. சோதனையில் ஈடுபட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கெல்லாம் களைப்படைந்து போனார்கள். பியர்ஸன் முதலிய சிலர் மட்டும் இறுதிவரை அந்தச் சோதனையை விடாமல் நடத்தி வந்தார்கள்.

காந்தி மகாத்மா சில காலம் சாந்தி நிகேதனத்தில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார். ஆனால் இறைவனுடைய விருப்பம் வேறு விதமாயிருந்தது. ஒரு வாரத்திற்குள்ளே ஸ்ரீ கோகலே மரணமடைந்தார் என்னும் செய்தி வந்து காந்திஜியின் உள்ளத்தைக் கலக்கியது. சாந்தி நிகேதனம் துயரத்தில் மூழ்கியது. மகாத்மா காந்தி தமது பத்தினியையும் ஸ்ரீமகன்லால் காந்தியையும் அழைத்துக் கொண்டு பூனாவுக்குப் பிரயாணமானார்.

இந்தப் பிரயாணத்தின் போதும் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து அறியும்படியாக நேர்ந்தது. இது சம்பந்தமாக மகாத்மா காந்தி எழுதியிருப்ப தாவது:-
"மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் டிக்கட் வாங்குவதில்கூட எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறதென்பதை பர்த்வானில் அநுபவித்து அறிந்தோம். 'மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இதற்குள் தரமுடியாது' என்று முதலில் சொன்னார்கள். அதன்மீது நான் ஸ்டேஷன்மாஸ்டரைக் காணச் சென்றேன். அவரைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. யாரோ ஒருவர் தயவு வைத்து அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அவரிடம் சென்று எங்களுடைய கஷ்டத்தை எடுத்துக்கூறினோம். அவரும் அதே பதிலையே தெரிவித்தார். ஆகவே காத்திருந்து டிக்கட் ஜன்னல் திறந்ததும் சென்றேன். ஆனால் டிக்கட் வாங்குதல் எளிய காரியமாயில்லை." அங்கு "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்னும் சட்டம் அமுலில் இருந்தது. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணிய பலசாலிகளான பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னை இடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே முதலில் டிக்கட் வாங்குவதற்குப் போனவனாகிய நான் ஏறக்குறையக் கடைசியில் தான் டிக்கட் பெற முடிந்தது.

வண்டி வந்து சேர்ந்தது. அதில் ஏறுதல் மற்றொருபிரம்மப் பிரயத்தனமாயிற்று. வண்டியில் ஏற்கனவே இருந்த பிரயாணிகளுக்கும், ஏற முயற்சித்த பிரயாணிகளுக்கும் இடையே வசைமொழிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளலும் நிகழ்ந்தது. பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடி அலைந்தோம். 'இங்கு இடமில்லை' என்னும் பதிலே எங்கும் கிடைத்தது. கார்டினிடம் சென்று சொன்னேன். அவர் 'அகப்பட்ட இடத்தில் உள்ளே ஏற முயற்சி செய்யும்; இல்லாவிடில் அடுத்த வண்டியில் வாரும்' என்றார்.

மூன்றாம் வகுப்பு ரயில்வே பிரயாணிகளின் துயரங்களுக்கு ரயில்வே அதிகாரிகளின் யதேச்சாதிகாரமே காரணம் என்பதில்ஐயமில்லை. ஆனால் பிரயாணிகளின் முரட்டு சுபாவம், ஆபாச வழக்கங்கள், சுயநலம், அறியாமை முதலியவைகள் அத்துயரங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் பரிதாபமான விஷயம் யாதெனில், தாங்கள் தவறுதலாகவும், ஆபாசமாகவும், சுயநலத்துடனும் நடந்து கொள்கிறோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்கள் செய்வதெல்லாம் இயற்கையே என்று அவர்கள் விஷயத்தில் படித்தவர்களாகிய நாம் காட்டும் அலட்சியமே என்று கூறலாம்.

மகாத்மா காந்தி பூனா வந்து சேர்ந்து கோகலேயின் சிரார்த்த காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வது பற்றி மற்றும் ஒரு முறை சிந்தனை செய்தார். கோகலேயைக் குரு பீடத்தில் வைத்து மகாத்மா அவரிடம் பக்தி செலுத்தியவர். இப்போது கோகலே காலமாகி விட்டபடியினால் அவர் ஸ்தாபித்த சங்கத்தில் சேர்ந்து அவர் ஆரம்பித்து வைத்த பணிகளை நிறைவேற்றுவது தமது கடமை என்று கருதினார். மீண்டும் இந்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தினரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். முன் போலவே அந்த அங்கத்தினர்களுக்குள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. சிலர் மகாத்மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். சிலர் கூடாது என்றார்கள். மகாத்மாவைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்தவர்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் மகாத்மாவின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் அடிப்படையான வேற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்திய ஊழியர் சங்க அங்கத்தினர் கூட்டம் நடத்தி அதில் பெரும்பான்மையினரது அபிப்பிராயத்தின்படி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மகாத்மா இதை விரும்பவில்லை. தாம் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வதற்கு ஒரு சிலர் விரோதமாயிருந்தாலும் அதில் சேர மகாத்மா இஷ்டப்படவில்லை. சிலருக்கு விரோதமாகப் பெருபான்மை வோட்டுப் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் சேர்வதில் என்ன நன்மை ஏற்படமுடியும்கோகலேயிடம் தாம் வைத்திருந்த பக்திக்கு அது உகந்ததாகுமா? - இப்படி யோசித்துக் கடைசியாக மகாத்மா தமது விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் காரணமாக இந்தியா தேசம் அடைந்த நன்மைக்கு அளவே கிடையாது என்று சொல்லலாம். தாம் மேற்படி சங்கத்தில் சேராததே நல்லது என்றும் தாம் சங்கத்தில் சேர்வதை எதிர்த்தவர்களே தமக்கு நன்மை செய்தவர்கள் என்றும் பிற்காலத்தில் காந்திஜி கருதினார். மேற்கண்டவாறு விண்ணப்பத்தை வாபஸ் பெற்று கொண்டதனால் சங்கத்தின் அங்கத்தினருடன் மகாத்மா காந்தியின் சிநேக பாந்தவ்யம் வளர்ந்து நீடித்திருந்தது.
-----------------------------------------------------------

5 . சபர்மதி ஆசிரமம்

கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 'கும்பமேளா' என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் 'கும்பமேளா' உற்சவம் வந்தது. அந்த உற்சவத்திற்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு சேவைப்படை அனுப்பப்பட்டது. இதையறிந்த மகாத்மா தாமும் போனிக்ஸ் கூட்டத்தாருடன் ஹரித்வார உற்சவத்திற்குப் போக விரும்பினார். உற்சவத்தைப் பார்ப்பதும் யாத்ரீகளுக்குச் சேவை செய்வதும் தவிர, ஹரித்வாரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்தி வந்த குருகுலத்தைப் பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் மகாத்மாவுக்கு இருந்தது.

சுவாமி சிரத்தானந்தர் என்ற புனிதமான பெயரை கேள்விபடாதவர் யார்? கிலாபத் இயக்கம் நடந்த காலத்தில் டில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜும்மா மசூதிக்குள் சென்று அங்கு கூடியிருந்த திரளான முஸ்லிம்களுக்குப் பிரசங்கம் செய்தவரும் அவர்தான். சில காலத்துக்குப் பிறகு வெறி கொண்ட முஸ்லிம் ஒருவனால் குத்தி கொல்லப்பட்டவரும் அவரே தான். அந்த சுவாமி சிரத்தானந்தர் சந்நியாசியவதற்கு முன்னால் ஸ்ரீ முன்ஷிராம் என்ற பெயர் தாங்கி கொண்டிருந்தார். ஹரித்வாரதுக்குப் பக்கத்தில் காங்ரி என்னுமிடத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்திவந்த குருகுலம் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது.

கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது.

கும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. 'சாதுக்கள்' என்று சொல்லப்பட்ட சந்நியாசி வே ஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்! இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.

மொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார்.

கும்பமேளா உற்சவம் முடிந்த பிறகு காந்திஜி ஸ்ரீ முன்ஷிராமின் குருகுலத்துக்குச் சென்றார். காந்திஜியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டிருந்த ஸ்ரீ முன்ஷிராம் அங்கேயே காந்திஜியும் அவருடைய சகாக்களும் தங்கிவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜியின் மனதில் இதற்கு முன்னாலேயே தம்முடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குரிய தனி ஆசிரமம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகி யிருந்தது. அத்தகைய ஆசிரமத்தை ஆமதாபாத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஏனெனில், தாம் பிறந்த நாடாகிய குஜராத்திலே தான் தம்முடைய தொண்டைச் சரிவரச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆமதாபாத்தோ குஜராத்தின் தலைநகரம். கைத்தறி நெசவுக்குப் பெயர்போன இடம். எனவே, இராட்டைக்கும் கைத்தறிக்கும் புத்துயிர் தரவேண்டும் என்னும் காந்திஜியின் நோக்கம் ஆமதாபாத்தில் நிறைவேறக்கூடும். மேலும் அந்நகரில் வசித்த குஜராத்தி செல்வர்களிடமிருந்து தாம் ஆரம்பிக்கும் ஆசிரமத்துக்குப் பணஉதவி பெறவும் கூடும். ஆரம்ப காலத்தில் எந்த ஆசிரமந்தான் பண உதவி இல்லாமல் நடக்க முடியும்.?

எனவே, காங்ரி குருகுலத்தைப் பார்த்ததும் மகாத்மா நேரே ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். அங்கே பல நண்பர்கள் காந்திஜிக்கு ஆசிரமம் ஸ்தாபிப்பதில் உதவி செய்வதாகச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தீண்டாமையைப் பற்றிப் பேச்சு வந்தது. "நான் நடத்தும்ஆசிரமத்தில் தீண்டாமையை அனுசரிப்பது நினைக்கவும் முடியாத காரியம்" என்று காந்திஜி கூறினார். "மற்ற அம்சங்களில் தகுதியுடைய தீண்டா வகுப்பினர் ஒருவர் ஆசிரமத்தில்சேர முன் வந்தால் அவசியம் அவரைச் சேர்த்துக் கொள்வேன்" என்றும் உறுதியாகச் சொன்னார். ஆனால், அந்த நண்பர்கள், "ஆசிரமத்தில் சேரக்கூடிய தகுதியுடைய தீண்டாதவர் எங்கிருந்து வரப்போகிறார்!" என்று சொல்லித் திருப்தி அடைந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அகப்படவே மாட்டார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

ஆமதாபாத்திலேயே ஆசிரமம் ஸ்தாபிப்பது என்று முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆமதாபாத்துக்குப் பக்கத்தில் கோச்ராப் என்ற கிராமத்தில் ஸ்ரீ ஜீவன்லால் தேசாய் என்னும் பாரிஸ்டருக்கு ஒரு பங்களா இருந்தது. அதை வாடகைக்குக் கொடுக்க மேற்படி பாரிஸ்டர் சம்மதித்தார். அந்தப் பங்களாவிலேதான் முதன் முதலில் ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆசிரமத்துக்குப் பெயர் என்ன கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது. "சேவாசிரமம்" "தபோவனம்" என்னும் பெயர்களைச் சில நண்பர்கள் குறிப்பிட்டார்கள். "தபோவனம்" என்பது அதிக டாம்பீகமான பெயர் என்று காந்திஜிக்குத் தோன்றியது. "சேவாசிரமம்" பிடித்திருந்தாலும் பூரணதிருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இந்தியாவின் விடுதலைக்கு மகாத்மா எந்த வழியைக் கையாண்டு காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தாரோ, அந்த வழியைக் குறிப்பிடும் பெயராக இருக்க வேண்டும் என்று "சத்தியாக்கிரஹ ஆசிரமம்" என்னும் பெயர் இடப்பட்டது.

ஆரம்பத்தில் இருபத்தைந்து ஸ்திரீ புருஷர்கள் ஆசிரமத்தில் இருந்தார்கள். இவர்களில் சிலர் போனிக்ஸ் ஆசிரமத்தில் காந்திஜியோடு இருந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள். அந்த ஆரம்ப ஆசிரமத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரில் பதின்மூன்றுபேர் தமிழர்கள் என்று காந்தி மகாத்மா தமது சுயசரிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். தமிழர்களுக்கு இது எவ்வளவு பெருமையான விஷயம் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஆசிரமம் ஆரம்பித்துச் சிலமாதங்களுக்குள்ளே நேர்ந்த ஒரு பெருஞ் சோதனையைப் பற்றியும் மகாத்மா எழுதியிருக்கிறார். தகுதியுள்ள தீண்டா வகுப்பினர் எவரும் ஆசிரமத்தில் சேர்வதற்கு வரப்போவதில்லை யென்று ஆமதாபாத் நண்பர்கள் கருதினார்கள் அல்லவா? அவர்களுடைய எண்ணத்துக்கு மாறாக ஒரு காரியம் நிகழ்ந்தது. இந்திய ஊழியர் சங்கத்து அங்கத்தினரில் மகாத்மாவிடம் மிகுந்த அபிமானம் கொண்டவர் ஸ்ரீ அமிருதலால் தக்கர். (இன்றைக்கும் ஹரிஜனத் தொண்டில் மனப்பூர்வமாக ஈடுபட்டுள்ள தக்கர் பாபா அவர்கள் தான்.) அவரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தக்கர் பாபா, "தீண்டா வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் ஆசிரமத்தில் சேர விரும்புகிறார்கள். ஒழுக்கமும் அடக்கமும் படைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டிருந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் இத்தகைய சோதனை ஏற்படும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆசிரமத்துக்கு உதவி செய்து வந்த ஆமதாபாத் நண்பர்களுக்கு இது பிடிக்காது என்பது தெரிந்தே இருந்தது. ஆயினும் அதற்காக மகாத்மா தம் வாழ்க்கை தர்மத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றிக் கொள்வதென்பது நினைக்கக்கூடிய காரியமா?

கடிதத்தை மற்ற ஆசிரமவாசிகளுக்குக் காந்திஜி படித்துக் காட்டினார். அவர்களும் உற்சாகமாக அதை வரவேற்றார்கள். எனவே தீண்டா வகுப்புக் குடும்பத்தினரை அனுப்பும்படி மகாத்மா கடிதம் எழுதினார். சில நாளில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மூன்றே பேர் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் துதா பாய்; அவர் மனைவியின் பெயர் தனி பென்; அவர்களுடைய புதல்வியின் பெயர் லக்ஷ்மி. அப்போது லக்ஷ்மி தவழும் பிராயத்துக் குழந்தை. துதாபாய் பம்பாயில் ஆரம்பப் பாடசாலையில் உபாத்தியாயராயிருந்தவர். சத்தியாக் கிரஹ ஆசிரமத்தின் விதிகளையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு அந்த விதிகளின்படி நடப்பதாக ஸ்ரீ துதாபாய் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் அக்குடும்பத்தார் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு நடந்தவற்றைக் குறித்து மகாத்மா எழுதியுள்ள வரலாறு பின்வருமாறு:-

"ஆசிரமத்துக்கு உதவி புரிந்து கொண்டிருந்த நண்பர்களிடையே இது பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. முதலில் கிணறு விஷயமாகக் கஷ்டம் ஏற்பட்டது. கிணற்றைப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். ஏற்றம் இறைத்து வந்த மனிதன் எங்களுடைய தொட்டியிலிருந்து தண்ணீர்த் துளிகள் சிந்துவதால் தனக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமென்று கூறி ஆட்சேபித்தான். ஆதலின் எங்களைத் திட்டவும், துதாபாயைத் தொந்தரவு செய்யவும் தொடங்கினான். வசவுகளைப் பொறுத்துக் கொண்டு தண்ணீர் இழுத்துவரும்படி நான் அனைவருக்கும் சொன்னேன். நாங்கள் திரும்பத் திட்டாததை அந்த மனிதன் கண்டபோது வெட்கமடைந்து எங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தி விட்டான்.

பண உதவியெல்லாம் நிறுத்தப்பட்டது. ஆசிரம விதிகளை அனுசரிக்கக் கூடிய தீண்டாதார் எங்கே கிடைப்பர் என்று கேள்வி கேட்ட நண்பர், அத்தகைய ஒருவர் வருவார் என எதிர்பார்க்கவேயில்லை.

சமூக பகிஷ்காரத்தைப் பற்றிய வதந்திகளும் ஏற்பட்டன. இவற்றிற்கெல்லாம் நாங்கள் ஆயத்தமாயிருந்தோம். எங்களைப் பகிஷ்காரம் செய்து சாதாரண வசதிகள் அளிக்கவும் மறுத்த போதிலும் ஆமதாபாத்தை விட்டுப் போகக்கூடாதென்றும், அதைக் காட்டிலும் தீண்டா வகுப்பினர் வசிக்குமிடஞ் சென்று அங்கே உடலுழைப்பினால் கிடைக்கும் பொருளைக் கொண்டு காலட்சேபம் செய்தல் நலமென்று என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன்.

நிலைமை கடைசியில் நெருக்கடியாயிற்று. ஒருநாள் மகன்லால் காந்தி வந்து, "கையில் இருந்த பணமெல்லாம் ஆகிவிட்டது. அடுத்த மாதச் செலவுக்குப் பணமே கிடையாது!" என்று தெரிவித்தார்.

"அப்படியானால் நாம் தீண்டா வகுப்பாரின் இருப்பிடம் செல்வோம்" என்று அமைதியாகப் பதிலளித்தேன். இத்தகைய சோதனை எனக்கு நேர்ந்தது இது முதல் முறையன்று. சோதனை நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆண்டவன் கடைசி நிமிஷத்தில் எனக்கு உதவி அனுப்பியே வந்தார். ஆசிரமத்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி மகன்லால் எச்சரிக்கை செய்து அதிக காலம் ஆவதற்குள் ஒரு நாள் காலை ஆசிரமக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓடி வந்து, ஸேத் ஒருவர் வாசலில் மோட்டார் வண்டியில் காத்திருப்பதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியது. அவரைப் பார்க்கச் சென்றேன். "ஆசிரமத்துக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய விரும்புகிறேன்; ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவர் கேட்டார்.

"நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். தற்போது எங்கள் பணமெல்லாம் செலவழிந்து வெறுங்கையுடன் இருக்கிறோம்" என்றேன். "நாளை இந்த நேரத்திற்கு இங்கே வருகிறேன். தாங்கள் இருப்பீர்களா? என்று அவர் கேட்டார். "ஓ, இருக்கிறேன்" என்றேன். அத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக வண்டி வாசலில் வந்து நின்றது. குழல் ஊதிற்று. குழந்தைகள் செய்தி கொண்டு வந்தார்கள். ஸேத் உள்ளே வரவில்லை. அவரைப் பார்க்க நான் வெளியே வந்தேன். அவர் என் கையில் 13,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு வண்டியை விட்டுக் கொண்டு சென்றார்.

இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே யில்லை. அதிலும் எவ்வளவு புதிய முறையில் உதவி! அந்தக் கனவான் அதற்கு முன் ஆசிரமத்துக்கு வந்ததேயில்லை. அவரை அதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம். அவர் ஒருவித விசாரணையும் செய்யவில்லை. ஆசிரமத்தைப் பார்வையிடவும் இல்லை. வந்து பணங் கொடுத்துவிட்டு உடனே போய் விட்டார்! இந்த உதவியின் காரணமாக, தீண்டாதார் இருப்பிடத்துக்கு நாங்கள் குடிபோக வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. இன்னும் ஓராண்டுக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லையென்று தைரியமடைந்தோம்.

துதாபாய் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது ஆசிரமத்துக்கே ஒரு நல்ல படிப்பினையாயிற்று. ஆரம்பத்திலேயே ஆசிரமத்தில் தீண்டாமை பாராட்ட மாட்டோமென்று உலகுக்குப் பகிரங்கமாய் அறிவித்து விட்டோம். ஆசிரமத்துக்குஉதவி செய்ய விரும்பியவர்களை எச்சரித்தவர்களானோம். இத்துறையில் ஆசிரமத்தில் வேலையும் பெரிதும் எளிதாயிற்று. இவையெல்லாம் நன்கு தெரிந்தும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்த ஆசிரமச் செலவுகளை வைதிக ஹிந்துக்களே பெரும்பாலும் கொடுத்து வந்தார்கள். தீண்டாமையின் அடிப்படை ஆட்டங் கொடுத்துப் போய்விட்டது என்பதற்கு இது அறிகுறியல்லவா?..."

பின்னரும் சிலகாலம் கோச்ராப்பில் ஆசிரமம் நடந்து வந்தது. பிறருடைய வாடகைக் கட்டடத்தில் நெடுங்காலம் ஆசிரமம் நடத்த முடியாது என்றும் சொந்த இடம் சம்பாதித்து ஆசிரமத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் மகாத்மா கருதினார். இந்தச் சமயத்தில் கோச்ராப் கிராமத்தில் பிளேக் நோய் பரவியது. கிராமத்து ஜனங்களைச் சுகாதார விதிகளை அனுஷ்டிக்கும்படி செய்வதற்கான சக்தியும் செல்வாக்கும் ஆசிரம வாசிகள் அப்போது பெற்றிருக்க வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ புஞ்சா பாய் ஹீராசந்து என்னும் வியாபாரி ஆசிரமம் ஸ்தாபிக்கத் தகுந்த நிலம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு முன் வந்தார். அவரும் காந்திஜியும் ஆமதாபாத்தைச் சுற்றித் தக்க நிலம் தேடி அலைந்தார்கள். ஆமதாபாத்துக்கு நாலு மைல் தூரத்தில் சபர்மதி நதிக்கரையில் அத்தகைய இடத்தைக் கண்டுபிடித்தார்கள். ஒரு வாரத்திற்குள் அந்த நிலம் வாங்கப் பட்டது. நிலத்தில் கட்டடமோ, மரமோ ஒன்றும் இல்லை. ஆயினும் ஆசிரமத்தை உடனே அவ்விடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று மகாத்மா தீர்மானித்தார். ஆசிரமவாசிகள் வசிப்பதற்க்குக் கித்தான் கூடாரங்கள் போடப்பட்டன. அப் போது ஆசிரமவாசிகள் ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளு மாக நாற்பது பேர் இருந்தார்கள். எல்லாரும் கித்தான் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இவ்விதமாக, மகாத்மாவின் வாழ்க்கைச் சரிதத்தில் மிகப் பிரசித்திபெற்ற சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஆரம்பமாயிற்று.
-----------------------------------------------------------

6. இராஜ குமார் சுக்லா

இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது 'சம்பரான் சத்தியாக் கிரஹம்' என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா காந்தியின் ஆத்மசக்தியின் பெருமையை இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இந்திய மக்கள் எல்லாரும் நன்கு அறிந்து கொண்டார்கள்.
.
பீஹார் மாகாணத்தில் சம்பரான் ஒரு ஜில்லா. இமயமலையின் அடிவாரத்தின் அருகில் உள்ளது. ஜனக மகாராஜன் ஆட்சிபுரிந்த விதேக நாடு என்பது அதுதான். அங்கே அவுரித் தோட்டங்கள் அதிகம். பெரும்பாலான அவுரித் தோட்டங்கள் ஆங்கில முதலாளிகளுக்குச் சொந்தமானவை. சம்பரானிலுள்ள ஒவ்வொரு குடியானவனும் இருபது ஏக்கரா நிலம் பயிர் செய்தால் அதில் மூன்று ஏக்கரா கட்டாயம் அவுரி பயிரிய வேண்டும் என்னும் விதி அங்கே அமுலில் இருந்தது. அந்த மூன்று ஏக்கராவில் விளையும் அவுரிப் பயிர் நிலச்சுவாந்தாரனைச் சேரும். இவ்விதம் கட்டாயமாக அவுரி பயிரிடும் முறைக்குத் 'தீன் கதியா' முறை என்ற பெயர் வழங்கிற்று. .
.
1917-ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த விவரம் ஒன்றும் காந்தி மகானுக்குத் தெரியவே தெரியாது. 1916-ஆம் ஆண்டின் இறுதியில் லக்னௌ நகரில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது இராஜகுமார் சுக்லா என்பவர் காங்கிரஸ் விடுதியில் மகாத்மாவின் ஜாகையைத் தேடிக் கொண்டு வந்து கண்டுபிடித்தார். இராஜகுமார் சுக்லா சம்பரான் ஜில்லா குடியானவர்களில் ஒருவர். கட்டாய அவுரிப் பயிர் செய்து கஷ்டப்பட்டவர்.தம்மைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடியானவர்களுக்குக் கதிமோக்ஷம் பிறக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் குடிகொண்டிருந்தது. எனவே மகாத்மாவைக் கண்டு அவரிடம் சம்பரான் குடியானவர்களின் கஷ்டங்களைச் சொன்னார். சம்பரானுக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அவர் கூறிய விஷயங்கள் மகாத்மாவுக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனவே இராஜகுமார் சுக்லா "எங்கள் வக்கீல் பாபுவை அழைத்து வருகிறேன். அவர் எல்லாம் தெளிவாகச் சொல்வார்!" என்று கூறிவிட்டுப் போய் பாபு விரஜ கிஷோர் பிரஸாதை அழைத்துக்கொண்டு வந்தார். பின்னாளில் பாபு விரஜகிஷோர் பிரஸாதும் பாபு ராஜேந்திர பிரஸாதும் தேசத்தொண்டில் மகாத்மாவின் சிறந்த துணைவர்கள் ஆனார்கள். ஆனால் அச்சமயம் பாபு விரஜகிஷோரைப் பற்றி மகாத்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகவில்லை. ஒன்றுமறியாத ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிக்கும் வக்கீல்களில் ஒருவர் என்று எண்ணினார். எனவே, பாபு விரஜ கிஷோர் கூறியதை யேல்லாம் கேட்டுக்கொண்டு, "நிலைமையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால் நீங்கள் இதைப் பற்றிக் காங்கிரஸில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது நல்லது" என்று சொன்னார். அதன்படியே ஸ்ரீ விரஜ கிஷோர் சம்பரான் குடியானவர்களிடம் அநுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைக் காங்கிரஸில் கொண்டுவந்து நிறைவேற்றினார். .
.
இதைக்கொண்டு இராஜகுமார் சுக்லா திருப்தியடைந்து விடவில்லை. "தாங்கள் சம்பரானுக்கு வந்து நேரில் நிலைமை யைப் பார்க்கவேண்டும்." என்று அவர் மகாத்மாவிடம் சொன்னார். "ஆகட்டும்; அந்தப் பக்கங்களில் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு வரும்போது சம்பரானுக்கு வருகின்றேன்" என்றார் மகாத்மா. அவர் கான்பூருக்குப் போனபோது இராஜ குமார் சுக்லா அவரைப் பின் தொடர்ந்தார். "இவ்விடத்திலிருந்து சம்பரான் அதிக தூரம் இல்லை. வருகிறீர்களா?" என்று கேட்டார். மகாத்மா அப்போது அவகாசம் இல்லை என்று கூறிவிட்டு ஆமதாபாத் ஆசிரமத்துக்குச் சென்றார். இராஜகுமார் சுக்லா அங்கேயும் போனார். கடைசியாக, காந்திஜி "நான் கல்கத்தாவுக்கு இத்தனாந்தேதி வருகிறேன். அங்கே வந்து என்னைச் சம்பரானுக்கு அழைத்துப் போங்கள்!" என்று சொன்னார். .
.
மகாத்மா கல்கத்தாவுக்குப் போகு முன்பே இராஜகுமார் சுக்லா அங்கே சென்று ஸ்ரீ பூபேந்திரநாத் வஸுவின் வீட்டில் காந்திஜிக்காகக் காத்திருந்தார். இவ்வாறு, கல்வியறிவு அதிகம் இல்லாத ஒரு குடியானவனுடைய உறுதி காரணமாகத் தேசத்துக்கே ஒரு புதிய ஆதர்சம் ஏற்படலாயிற்று. .
.
காந்திஜியும் இராஜகுமார் சுக்லாவும் கல்கத்தாவில் ரயில் ஏறிப் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தார்கள். பாட்னாவில் காந்திஜிக்குத் தெரிந்த நண்பர் யாரும் இல்லை. இராஜகுமார் சுக்லாவுக்குத் தெரிந்தவர்களோ அவரை மிகக் கீழான மனிதராகக் கருதினார்கள். பாபு ராஜேந்திரப் பிரஸாத்தின் பங்களாவுக்கு மகாத்மாவைச் சுக்லா அழைத்துச் சென்றார். பாபு ராஜேந்திர பிரஸாத் அச்சமயம் ஊரில் இல்லை. அவருடைய வீட்டு வேலைக்காரர்கள் காந்திஜியையும் சுக்லாவையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இழுப்பதைக்கூட வேலைக்காரர்கள் ஆட்சேபித்தார்கள். தண்ணீர்த் துணிதெளித்தால் தீட்டாய்ப் போய்விடுவோம் என்று சொன்னார்கள். மற்ற மாகாணங்களைக் காட்டிலும் பீஹாரில் தீண்டாமை மிகக் கடுமை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். இராஜகுமார் சுக்லாவினால் தமக்கு அதிக உதவி கிடைக்காது என்பதையும் கண்டு கொண்டார். குதிரை லகானைத் தாமே இழுத்துப் பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்தார். .
.
பாட்னாவில் மௌலானா மஷ்ருல் ஹக் என்னும் பிரசித்தமான தேசீய முஸ்லீம் தலைவர் வசித்து வந்தார். அவர் லண்டனில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்த காலத்தில் மகாத்மாவுக்கு அவருடைய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. பிற்பாடு 1915-ஆம் வருஷத்துப் பம்பாய் காங்கிரஸின்போது மகாத்மா அவரைச் சந்தித்தார். பாட்னாவுக்கு எப்போதாவது வந்தால் தம் இல்லத்துக்கு வந்து தங்கும்படி மௌலானா மஷ்ருல் ஹக் காந்திஜியிடம் சொல்லியிருந்தார். அதை இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு மகாத்மா அவருக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். மௌலானா மஷ்ருல் ஹக் உடனே தமது மோட்டாரில் ஏறி வந்து மகாத்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். .
.
காந்திஜி அவரிடம் தம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். சம்பரான் விஷயமாக விசாரணை செய்வதற்குத் தாம் எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊருக்குத் தம்மை முதல் ரயிலில் ஏற்றி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். முஸபர்பூருக்கு முதலில் செல்வது நலம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அன்று மாலை மகாத்மாவை முஸபர்பூருக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார் மௌலானா மஷ்ருல் ஹக். .
.
முஸபர்பூரில் அச்சமயம் ஆச்சாரிய கிருபளானி வசித்து வந்தார். அந்நகரில் இருந்த அரசாங்கக் கலாசாலையில் அவர் ஆசிரியராயிருந்து சில நாளைக்கு முன்பு அந்த உத்தியோகத்தை ராஜினமா செய்திருந்தார். மகாத்மா வரும் செய்தி அறிந்து ஆச்சாரிய கிருபளானி ஒரு பெரும் மாணாக்கர் கூட்டத்துடன் நள்ளிரவில் ஸ்டே ஷனுக்கு வந்து மகாத்மா காந்தியை வரவேற்றார். ஆச்சாரிய கிருபளானி தமது நண்பரான ஆசிரியர் மல்கானியின் பங்களாவில் வசித்து வந்தார். மகாத்மா காந்தியை அவர் அந்தப் பங்களாவுக்கு அழைத்துப் போனார். .
.
மறுநாள் காலையில் மகாத்மா வந்திருக்கும் செய்தி அறிந்து முஸபர்பூர் வக்கீல்கள் பலர் அவரைப் பார்க்க வந்தார்கள். வந்தவர்களில் இராம நவமி பிரஸாத் என்பவர், "இராஜகுமார் சுக்லா உங்களிடம் சொல்லியிருக்கும் விவரங்கள் எல்லாம் உண்மை தான். அது விஷயமாக நீங்கள் ஏதாவது வேலை செய்வதாக இருந்தால், அரசாங்க கலாசாலை ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எங்களில் ஒருவர் வீட்டுக்கு வந்து தங்கவேண்டும். கயா பாபு என்பவர் இங்கே பிரபல வக்கீல். அவர் சார்பாக உங்களை அழைக்கவே நான் வந்தேன். நாங்கள் எல்லாரும் சர்க்காருக்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்வதற்குப் பயந்தவர்கள்தான். ஆயினும் எங்களால் இயன்ற உதவியைத் தங்களுக்குச் செய்கிறோம். இந்த மாகாணத்தின் தலைவர்களான பாபு விரஜ கிஷோர் பிரஸாத்துக்கும் பாபு இராஜேந்திர பிரஸாத்துக்கும் தந்தி கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம்!" என்று சொன்னார். .
.
இதன் பேரில் மகாத்மா கயா பாபுவின் வீட்டுக்குப் போனார். தர்பங்காவிலிருந்து விரஜ கிஷோர் பிரஸாதும் பூரியிலிருந்து இராஜேந்திர பிரஸாதும் சீக்கிரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப்பற்றி மகாத்மா தம்முடைய பழைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. தாம் எண்ணியதுபோல அவர்கள் ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிப்பவர்கள் அல்லவென்றும் நேர்மையும் பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் என்றும் அறிந்தார். விரைவிலேயே மகாத்மாவுக்கும் மேற் கூறிய இரு பீஹார் தலாவர்களுக்கும் நெருங்கிய நட்பு உண்டாயிற்று. இவர்களில் பாபு விரஜ கிஷோர் பிரஸாதின் மருமகன்தான் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான ஸ்ரீ ஜெயப்பிரகாச் நாராயண் அவர்கள். .
.
நிலைமையை நன்றாய்த் தெரிந்துகொண்ட பிறகு காந்திஜி கூறியதாவது:-- "குடியானவர்களின் சார்பாகக் கோர்ட்டுகளில் வழக்காடி அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முயன்று வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை. முதலில் குடியானவர்களைப் பயத்திலிருந்து விடுதலை செய்யவேணாடும். 'தீன்கதியா' முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். இரண்டு நாளில் இங்கிருந்து திரும்பிப்போய் விடலாம் என்ற எண்ணத்துடன் நான் இங்கு வந்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று காண்கிறேன். இரண்டு வருஷம் இங்கே இருக்கும்படி நேர்ந்தாலும் நேரிடலாம். அதற்கு நான் தயார். நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?" .
.
"என்ன விதமான உதவி வேண்டும்" என்று பாபு விரஜ கிஷோர் கேட்டார். முதலில் தம்முடன் அவர்கள் வந்து குடியானவர்கள் சொல்வதைத் தமக்கு மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும் என்றும், பத்திரிகைகளுக்கு எழுதுவது, கடிதப் போக்குவரத்து செய்வது முதலிய குமாஸ்தா வேலை அதிகம் இருக்கும் என்றும், கடைசியாகச் சிறைக்குப் போகும் படி நேரந்தாலும் நேரலாம் என்றும் மகாத்மா காந்தி சொன்னார்." .
.
"உங்களுடனேயே இருந்து மொழிபெயர்ப்பு வேலை குமாஸ்தா வேலை செய்வதற்குத் தயாராயிருக்கிறோம். சிறைக்குப் போகிறதென்பது முற்றும் எங்களுக்குப் புதிய விஷயம். அதற்கும் சித்தமாக முயல்கிறோம்" என்று அந்தப் பீஹார் நண்பர்கள் காந்திஜியிடம் சொன்னார்கள். .
-----------------------------------------------------------.

7. எதிர்பாராத வெற்றி.

சம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது நாலு ஜில்லாக்களுக்கு ஒரு கமிஷனரும் உண்டு. கமிஷனர் ஆதிக்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு டிவிஷன் என்று பெயர். சம்பரான், திர்ஹத் டிவிஷனில் இருந்தது. மகாத்மா திர்ஹத் கமிஷனரைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அம்மாதிரியே சம்பரான் தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசிக்கும் எழுதி அனுப்பினார். .
.
தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசி தமது மனக் கருத்தைக் காந்திஜியிடம் உள்ளபடி வெளியிட்டார். "நீர் யார், ஐயா, இங்கு வந்து விசாரணை செய்வதற்கு? நீர் இந்த ஜில்லாக்காரரா? இந்த மாகாணத்தைச் சேர்ந்தவரா? தோட்ட முதலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மத்தியில் வந்து குறுக்கிடுவதற்கு உமக்கு என்ன உரிமை? யார் அதிகாரம் கொடுத்தது? பேசாமல் வந்த வழியே திரும்பிப் போய்ச் சேரும்; சொந்தக் காரியம் இருந்தால் போய்ப் பாரும். அப்படி ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்பினால் காகிதத்தில் எழுதித் தபாலில் அனுப்பும். நீர் சொல்லும் எந்த விஷயத்தையும் இப்போது நான் கேட்கத் தயாராயில்லை!" என்றார். .
.
பிறகு காந்திஜி திர்ஹத் டிவிஷன் கமிஷனரைப் பார்க்கப் போனார். அந்த நாளில் இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் அமுல் பிரமாதம். ஒவ்வொரு ஜில்லா கலெக்டரும் தம்மை அந்த ஜில்லாவின் யதேச்சாதிகாரியாகவே நினைத்துக்கொள்வார். நாலு கலெக்டருக்கு மேற்பட்ட கமிஷனரைப் பற்றிக் கேட்க வேண்டுமா? காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். "திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும்!" என்று கமிஷனர் எச்சரிக்கை செய்தார். .
.
மகாத்மா காந்தி திரும்பி வந்து விரஜகிஷோர் பாபு முதலிய நண்பர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தார். "தோட்டக்கார முதலாளிகள் வெகு கோபமா யிருக்கிறார்கள். கமிஷனர் துரையோ அவர்களைக் காட்டிலும் கடுமையா யிருக்கிறார். ஆகையால் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் கைது செய்யப்படுவதாயிருந்தால் மோத்திஹாரிலாவது பெட்டியாவிலாவது கைது செய்யப்படுவது நல்லது" என்று காந்திஜி கூறினார். .
.
மோத்திஹாரி, திர்ஹத் டிவிஷனின் தலைநகரம். பெட்டியா இராஜகுமார் சுக்லாவின் கிராமத்துக்கு அருகில் இருந்த பட்டணம். அந்தப் பிரதேசத்திலேதான் குடியானவர்கள் அதிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகையினாலேயே மகாத்மா அங்கே சென்று தாம் கைதி யாகவேண்டும் என்று விரும்பினார். .
.
உடனே காந்திஜியும் அவருடைய தோழர்களும் புறப்பட்டு மோத்திஹாரி பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே பாபு கோரக் பிரஸாத் என்பவர் வீட்டில் தங்கினார்கள். மோத்தி ஹாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஏழைக் குடியானவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டதாக அன்று செய்தி வந்தது. மறுநாள் காலையில் மேற்படி கிராமத்துக்கு மகாத்மா வும் பாபு தாராநிதர் பிரஸாத் என்பவரும் யானை மீது ஏறிக் கிளம்பினார்கள். நம்முடைய நாட்டில் மாட்டு வண்டிப் பிரயாணம் எவ்வளவு சாதாரணமோ அப்படி சம்பரானில் யானைப் பிரயாணம் சர்வ சாதாரணமாகும். .
.
காந்திஜி ஏறியிருந்த யானை இரண்டரை மைல் தூரம் போவதற்குள் பின்னால் ஒரு குதிரை வண்டி வந்து யானையைப் பிடித்தது. அந்த வண்டியில் போலீஸ் சேவகன் ஒருவன் இருந்தான். அவன் மகாத்மாவிடம் "போலீஸ்சூபரிண்டெண்ட் துரை தம்முடைய வந்தனத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்!" என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் "நீங்கள் மேலே போங்கள்!" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி போலீஸ் தூதன் கொண்டுவந்த வன்டியில் ஏறிக் கொண்டார். வண்டி நகரத் தொடங்கியதும் போலீஸ் தூதன் ஓர் உத்தரவை மகாத்மாவிடம் கொடுத்தான். அதில், "சம்பரான் ஜில்லாவை விட்டு உடனே வெளியேறவும்" என்று எழுதியிருந்தது. .
.
ம‌காத்மா இற‌ங்கியிருந்த‌ வீடு போய்ச் சேர்ந்த‌தும் போலீஸ் சேவ‌க‌ன் உத்த‌ர‌வைப் பெற்றுக் கொண்ட‌த‌ற்குக் கையொப்ப‌ம் கேட்டான். ம‌காத்மா "ஆக‌ட்டும்; கையொப்ப‌ம் த‌ருகிறேன்" என்றார். உடனே ஒரு காகிதத்தில் "உத்தரவைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் தொடங்கியுள்ள ஆராய்ச்சி முடியும் வரையில் சம்பரானை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை" என்று எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். .
.
சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு உத்தரவு வந்தது. அதில் "144-வது பிரிவின்படி போட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்து சேரவும்" என்று கண்டிருந்தது. .
.
அன்று இரவெல்லாம் காந்திஜியும் அவருடைய சகாக்களும் தூங்கவேயில்லை. மறுநாள் என்ன நடக்கும் என்பது பற்றியும் காந்திஜி சிறைப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். காந்திஜி தாம் எழுத வேன்டிய கடிதங்களையெல்லாம் எழுதி முடித்தார். .
.
மறுநாள் மோத்தி ஹாரி நகரம் கண்ட காட்சியைப்போல் அதற்குமுன் எந்த நாளிலும் கண்டதில்லை என்று அந்த நகர்வாசிகள் சொன்னார்கள். மகாத்மாவைப் பற்றியோ அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியப் போராட்டத்தைப் பற்றியோ அந்த இமயமலை அடிவாரப் பிரதேசத்தில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. இந்த‌ நாளிலேபோல‌ அப்போது ப‌த்திரிகைக‌ளின் செல்வாக்கும் அதிக‌ம் இல்லை. எனினும் ம‌காத்மா காந்தி வந்‌த‌து, அவ‌ருக்கு 144-வ‌து உத்த‌ர‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து, அத‌ற்கு அவ‌ர் கீழ்ப்ப‌டிய மறுத்தது ஆகிய செய்திகள் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இரவுக்கிரவே பரவி விட்டன. காலையிலே பார்த்தால் பாபு கோரக் பிரஸாத் வீட்டைச் சுற்றிலும் ஜனங்கள் ஆயிரக் கணக்கிலே கூடியிருந்தார்கள். .
.
இந்தியாவில் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஓர் உத்தரவு போடுவது, அதற்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று ஓர் இந்தியர் மறுதளிப்பது, - என்பது அதுவரை என்றும் நடவா நிகழ்ச்சிகள் ஆகும். ஆகையால் அந்த நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்ததிலும், அத்தகைய அதிசய மனிதரைப் பார்க்க ஜனங்கள் திரண்டு வந்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? .
.
சம்பரானில் மட்டுமல்ல; இந்தியா தேசம் முழுவதிலுமே அச்செய்தி பரவியபோது மக்கள் சொல்லமுடியாத கிளர்ச்சியை அடைந்தார்கள். மேலே என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். .
.
மகாத்மா கோர்ட்டுக்குப் போகவேண்டிய நேரம் நெருங்கிற்று. ஜனக்கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று. காந்திஜி கோர்ட்டுக்குப் போகப் புறப்பட்டபோது வீதியெல்லாம் ஜனசமுத்திரமாயிருந்தது. கோர்ட்டைச் சுற்றிலும் அப்படியே பெருங்கூட்டம். .
.
இந்தச் சமயத்தில் மக்கள் திரண்டு எழுந்து வந்து தம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து மகாத்மா கூறுகிறார்:- .
.
"சம்பரானில் என்னை யாருக்கும் தெரியாது. சம்பரான் குடியானவர்களோ கல்வி அறிவு இல்லாதவர்கள். சம்பரான் கங்கை நதிக்கு வெகு வடக்கே நேபாளத்துக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அந்தப் பிரதேசத்தில் காங்கிரஸைப் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸின் பெயரைக் கேள்விப்பட்டிருந்த சிலரும் அதில் சேரப் பயந்திருந்தார்கள். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ வேலை செய்து எங்கள் வருகைக்கு முன் ஏற்பாடுகள் செய்துவைக்கத் தூதர்கள் யாரையும் நாங்கள் அனுப்பிவைக்கவில்லை. எனினும் சம்பரான் குடியானவர்கள் என்னை நெடுங்கால நண்பனைப்போல் வரவேற்றார்கள். இந்தக் குடியானவர்களின் சந்திப்பில் நான் ஆண்டவனையும் அஹிம்சையையும் சத்தியத்தையும் நேருக்கு நேர் தரிசித்தேன். இந்த சத்திய தரிசனம் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது? ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார்!" .
.
கோர்ட்டில் விசாரணை ஆரம்பமாயிற்று. ஆனால் சர்க்கார் தரப்பில் அரசாங்க வக்கீலுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இன்னது செய்வதென்றே தெரிய வில்லை. வழக்கைத் தள்ளிப்போடும்படி சர்க்கார் வக்கீல் மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி குறுக்கிட்டு, "உத்தரவை மீறிய குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளப் போகிறேன். ஆகையால் வழக்கைத் தள்ளிவைக்க யாதொரு முகாந்திரமும் இல்லை!" என்று சொன்னார். பிறகு தாம் எழுதிக்கொண்டு வந்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சாராம்சமாவது:- .
.
"அதிகாரிகள் 144-வது பிரிவின்படி போட்ட உத்தரவை நான் மீறி நடப்பதாக வெளிப்படையாகத் தோன்றும். இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதின் காரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜீவகாருண்யத்தொண்டு செய்யும் நோக்கத்துடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்தேன். இங்குள்ள குடியானவர்கள் தங்களை அவுரித்தோட்ட முதலாளிகள் கொடுமைப் படுத்துவதாகவும், நான் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். ஆனால் உண்மை நிலையை நேரில் கண்டு அறிவதற்கு முன்னால் நான் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னேன். ஆகையால் அவுரித் தோட்ட முதலாளிகள், சர்க்கார் அதிகாரிகள் இவர்களுடைய ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராய்ந்து தெரிந்துகொள்ள எண்ணி வந்தேன். வேறு நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. என்னுடைய வருகையினால் பொது அமைதிக்குப் பங்கமும் உயிர்ச் சேதமும் நேரிடலாம் என்று உத்தரவில் கண்டிருக்கிறது. இதை நான் நம்பமுடியவில்லை. இத்தகைய காரியங்களில் நான் அதிக அநுபவமுள்ளவன். ஆனால் அதிகாரிகளோ வேறு விதமாக எண்ணுகிறார்கள். அவர்களுக்குக்கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் சட்டத்துக்கு அடங்கிய பிரஜை. ஆகையால் உத்தரவைப் பெற்றவுடனே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் அவ்விதம் செய்தால் நான் என்னுடைய கடமையில் தவறியதாகும் என மனச்சாட்சி அறிவுறுத்தியது. நான் யாருடைய நலத்தை முன்னிட்டு இங்கு வந்தேனோ அவர்களைக் கைவிட்டுப் போவதாகவே முடியும். ஆகையால் நானாக இங்கிருந்து போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். என் மனச்சாட்சி ஒரு விதமாகவும் சர்க்கார் அதிகாரி களின் முடிவு வேறு விதமாகவும் கட்டளையிடும்போது சர்க்கார் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுவதுதான் நியாயமாகும். தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பின்கீழ் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கைக்கொள்ளக் கூடிய வழி இது ஒன்றுதான். உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று அநுபவிக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு விதிக்கப்படப் போகும் தண்டனையை எவ்வகையிலும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம், அரசாங்க அதிகாரம் இவற்றின்மேல் மதிப்புக் குறைவினால் நான் இந்த உத்தரவை மீறவில்லை. சட்டங்களுக்கெல்லாம் மேற்பட்ட மனச்சாட்சி என்னும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் பொருட்டே இந்த 144-வது உத்தரவை மீறத் துணிந்தேன்." .
.
இத்தகைய வாக்குமூலம் காந்திஜி கொடுத்த பிறகு விசாரணையைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை அல்லவா? மாஜிஸ்ட்ரேட்டும் அரசாங்க வக்கீலும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்த மாதிரி ஒரு அநுபவம் இதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்டதே யில்லை. ஆகையால் இன்னது செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாஜிஸ்ட்ரேட் பிற்பாடு தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, அதற்காக ஒரு தேதி யும் குறிப்பிட்டார். பின்னர் கோர்ட்டு கலைந்தது. .
.
நடந்ததை யெல்லாம் தெரிவித்து இராஜப் பிரதிநிதிக்கும், பண்டித மாளவியாவுக்கும், பாட்னா நண்பர்களுக்கும் மகாத்மா காந்தி தந்தி கொடுத்தார். .
.
மகாத்மா தந்தி கொடுப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்குச் செய்தி போய் விட்டது. இந்தியா தேசமெங்கும் அந்தச் செய்தி பரவிவிட்டது. தேசத்தில் அரசியல் அறிவு பெற்றவர்கள் எல்லாரும் அடுத்தபடி என்ன செய்தி வருகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கலானார்கள். .
.
பிரிட்டிஷ் அதிகாரி போட்ட உத்தரவைத் தனி மனிதர் ஒருவர் மீறியிருக்கிறார். மீறியதோடல்லாமல் அதைக் கோர்ட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்! இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது? .
.
பிரிட்டிஷ் சிங்கம் கர்ஜனை புரிந்தது. ஆனால் அது போர் கர்ஜனை அல்ல; வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குத் திரும்பிச் செல்லும் கர்ஜனை. கத்தியோ துப்பாக்கியோ ஆள் பலமோ பண பலமோ ஆயுத பலமோ, - ஒன்றும் இல்லாத மனிதரின் ஆத்ம சக்திக்கு முன்னால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தலை வணங்கிற்று! .
.
வைஸ்ராய் செம்ஸ் போர்டு தமது நிர்வாக சபை அங்கத்தினருடன் கலந்தாலோசித்து பீஹார் லெப்டினன்ட் கவர்னருக்குச் செய்தி அனுப்பினார். லெப்டினன்ட் கவர்னர் திர்ஹத் டிவிஷன் கமிஷனருக்குத் தாக்கீது அனுப்பினார்: கமிஷனர் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் செய்தி அனுப்பினார். .
.
தீர்ப்புக் கூறுவதற்காகக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னதாகவே மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து மகாத்மாவுக்குச் செய்தி வந்தது. "லெப்டினன்ட் கவர்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவு அனுப்பியிருக்கிறார். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது" என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்தார். சம்பரான் ஜில்லா கலெக்டரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. "அவுரித் தோட்டங்களில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி நீங்கள் உத்தேசித்திருக்கும் விசாரணையைத் தடையின்றி நடத்தலாம். அதற்கு வேண்டிய எல்லா உதவியும் செய்யத் தயாராயிருக்கிறேன்" என்று கலெக்டர் ஹேகாக் எழுதியிருந்தார். .
.
இவ்வாறு காந்தி மகான் இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கிய சாத்வீகச் சட்டமறுப்பு அதி சீக்கிரத்தில் மகத்தான வெற்றியாக முடிந்தது. .
.
அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மகாத்மாஜி சம்பரான் குடியானவர்களின் நிலைமை பற்றிய விசாரணையைச் சாங்கோபாங்கமாக நடத்தினார். இதன் பலனாக அக்குடியானவர்களின் குறைகள் பெரும்பாலும் நிவர்த்தியாயின. .
-----------------------------------------------------------.

8. கிராமத்தொண்டு

சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் அவனை நன்றாகக் குறுக்கு விசாரணை செய்தார்கள். குறுக்குவிசாரணையில் எந்த விஷயமாவது சந்தேகத்துக்கு இடம் என்று ஏற்பட்டால் அதைப் பதிவு செய்யாமல் தள்ளிவிட்டார்கள்.

குடியானவர்கள் கூட்டங் கூட்டமாக வாக்குமூலம் கொடுக்க வந்தபடியால் ஏக காலத்தில் ஏழெட்டுப் பேர் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. இதற்கு மகாத்மாவுக்கு உதவி செய்வதற்காகப் பாபு பிரஜகிஷோர் பிரஸாத், ராஜேந்திர பிரஸாத் முதலிய பிரசித்தமான பீஹார் வக்கீல்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மகாத்மாவுடன் வசித்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை முறைகளைக் குறித்து மகாத்மா தம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வக்கீலும் ஒரு சமையற்காரனையும் ஒரு வேலைக்காரனையும் அழைத்து வந்திருந்தார்கள். இராத்திரி நடுநிசிக்குத்தான் போஜனம் அருந்துவார்கள். அவர்கள் தங்களுடைய செலவை யெல்லாம் தாங்களே செய்துகொண்ட போதிலும் அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை மகாத்மாவுக்குப் பிடிக்கவில்லை. சிநேகமுறையில் பரிகாசம் செய்து அவர்களைச் சீர்திருத்த முயன்றார். கடைசியாக அந்த வக்கீல்கள் தங்களுடைய தனித்தனி சமையற்காரர்களையும் வேலைக்காரர்களையும் அனுப்பி விட்டார்கள். மகாத்மாவுடன் தொண்டு செய்து அனைவருக்கும் ஒரே சமையல் சாப்பாடு என்றும், எல்லாரும் ஒரே சமயத்தில் வந்து சாப்பிடவேண்டும் என்றும் ஏற்பட்டது. எல்லாருக்கும் பொதுவாக எளிய சைவ உணவு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஆரம்ப நாட்களிலேயே காந்திமகான் தம்முடைய சகாக்களைக் கூட தியாக வாழ்க்கைக்குத் தயார் செய்யலானார்.

கிராமங்களுக்குச் சென்று கிராமவாசிகளின் நிலைமையை அறிய அறிய, அவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டினால் அன்றி நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படாது என்று தெரியவந்தது. ஆகவே சம்பளதுக்காகவன்றித் தொண்டு செய்தல் என்ற முறையில் கிராமப் பள்ளிக்கூடம் நடத்தக் கூடியவர்கள் தேவை என்று மகாத்மா விண்ணப்பம் விடுத்தார். இந்த வேண்டுகோளின் பேரில் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் வந்தார்கள். மகாத்மாவின் அந்தரங்கக் காரியதரிசியாகயிருந்து அற்புதமான தொண்டுசெய்த ஸ்ரீ மகாதேவதேஸாய் இந்த நாளிலேதான் மகாத்மாவை வந்து அடைந்தார். சத்தியாக்கிரஹ ஆசிரமத்திலிருந்து ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தியும் ஸ்ரீ தேவதாஸ் காந்தியும் இன்னும் சில தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.

முதலில் பரிச்சார்த்தமாக ஆறு கிராமங்களில் ஆறு பள்ளிகூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பள்ளிகூடங்களில் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கணக்குப்போடவும் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்குத் தூய்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் கற்பித்தலே முக்கியமானதென்று காந்திஜி வற்புறுத்தினார்.

கிராமத் தொண்டுசெய்ய முன் வந்தவர்களில் பல பெண்மணிகளும் இருந்தார்கள். இவர்களில் ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே நடத்திய பள்ளிக்கூடம் மிகச் சிறந்த மாதிரிப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. பள்ளிக்கூடங்கள் நடத்த கிராமங்களிலும் அவற்றுக்குச் சுற்றுவட்டாரங்களிலும் வேறு வகைப்பட்ட சமூகத் தொண்டுகளும் தொடங்கப்பட்டன.

கிராமவாசிகள் பொதுவாக அறியாமையில் மூழ்கியிருந்தார்கள். சுகாதாரம் சம்பந்தமாக அவர்களுடைய அறியாமை பயங்கரமாயிருந்தது. கிராமங்களில் வீதிகளும், சந்துகளும் குப்பை மயமாயிருந்தன. கிணறுகளைச் சுற்றியும் சேறும் கும்பியுமாக கிடந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே சொறி சிரங்கு முதலிய சரும வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே, மகாத்மாவினால் பள்ளிக்கூடம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து இருக்க முடியவில்லை. வைத்திய உதவியும் சுகாதார முயற்சியும் தொடங்கவேண்டும் என்று விரும்பினார். இந்த வேலைக்குப் பொறுப்பு வகித்து நடத்த இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஓர் ஊழியரை அனுப்பவேண்டும் என்று எழுதிக் கேட்டார். அதன்படி டாக்டர் தேவ் என்பவர் வந்து சேர்ந்தார்.

கிராமவாசிகள் டாக்டரிடம் சிகிச்சை செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் சுகாதார விதிகளை அனுசரிப்பதில் அவர்கள் சிரத்தை கொள்ளவில்லை. வயலில் பாடுபட்டு உழைத்து வேலை செய்யும் தொழிலாளிகள் கூடத் தங்கள் வீடு அசுத்தத்தைத் தாங்கள் சுத்தப்படுத்த முன் வரவில்லை. எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்கும் வழியாக இல்லை.

காந்தி மகான் இதனால் மனம் சோர்ந்து விடவில்லை. நாமே செய்து காட்டவேண்டும் என்று டாக்டர் தேவிடம் சொன்னார். அதன்பேரில் டாக்டர் தேவும் அவர் கீழ் வேலை செய்த தொண்டர்களும் ஒரு கிராமத்தைச் சுத்தம் செய்து காட்டுவது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய சக்திகளையெல்லாம் திரட்டி அந்த ஒரு கிராமத்தில் உபயோகப் படுத்தினார்கள். கிராமத்தைச் சென்று அடையும் சாலைபுறங்களையும் வீடுகளின் வாசற்புரங்களையும் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். கிணறுகளிலிருந்து துரு எடுத்துச் சுத்தப் படுத்தினார்கள். அழுக்குத் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளங்களைத் தூர்த்து மூடினார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகு அந்தக் கிராமத்து ஜனங்கள் கொஞ்சம் வெக்கப்பட்டு ஊரைத் தாங்களே சுத்தம் செய்வதற்கு முன்வந்தார்கள். இந்த மாதிரி பல கிராமங்கள் சுத்தமாயின. இத்தகைய தொண்டு நடந்து கொண்டிருந்த கிராமங்களுக்கு மகாத்மா அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது காந்திஜி அடைந்த ஒரு அனுபவத்தைப் பல பொதுக்கூட்டங்களில் பின்னால் சொல்லியிருக்கிறார். "சத்தியசோதனை" என்னும் தமது சுய சரிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். மனதை உருக்கும் அச்சம்பவம் வருமாறு:-

"பிதிஹர்வா என்னும் சிறு கிராமத்தில் எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றிருந்தது. அதற்கருகிலிருந்த மற்றொரு சிறு கிராமத்தைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அங்கே நான் கண்ட ஸ்திரீகளில் சிலர் மிகவும் அழுக்கான ஆடை தரித்திருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைப்பதில்லை யென்று கேட்கும்படி கஸ்தூரிபாயிடம் சொன்னே. அவள் அவ்வாறே அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அப்போது அந்த ஸ்திரீகளில் ஒருத்தி கஸ்தூரிபாயைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று கூறியதாவது:

'இங்கே பாருங்கள். வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டி அல்லது அலமாரி ஏதாவது இவ்வீட்டில் இருக்கிறதா? நான் அணிந்திருக்கும் புடவை ஒன்றுதான் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படித் துவைப்பேன்? மகாத்மாஜியிடம் சொல்லி இன்னொரு சேலை வாங்கித்தாருங்கள். அப்போது தான் தினந்தோறும் ஸ்நானம் செய்து சுத்தமான ஆடை அணிந்துகொள்வதாக வாக்குறுதி தருகிறேன்.'

இந்நிலைமை ஏதோ அபூர்வமானதென்று எண்ணவேண்டாம். இந்தியக் கிராமங்கள் பலவற்றிலும் உள்ள நிலைமைக்கு இது ஓர் உதாரணமே யல்லாது வேறில்லை. இந்தியாவில் கணக்கற்ற குடிசைகளில் ஜனங்கள் எவ்விதத் தட்டுமுட்டுச் சாமான்களுமின்றி, மாற்றிக்கட்டிக்கொள்ள இரண்டாவது துணியுமின்றி, மானத்தை மூட ஒரே கந்தையுடன் வாழ்கிறார்கள்."

சம்பரான் கிராமங்களில் மகாத்மா அடைந்த மேற்கூறிய அநுபவந்தான் பின்னால் காந்திஜி இராட்டை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கும், கிராமவாசிகள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்து கொள்ள வேண்டும் என்னும் இயக்கத்தை நடத்துவதற்கும் மூலகாரணமாயிருந்தது.
** ** **
குடியானவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் வேலை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாகிவிட்டன. வாக்குமூலங்கள் பதிவு செய்த இடத்தில் சி.ஐ.டி. போலீஸ்காரர்களும் இருப்பார்கள். அதை மகாத்மா ஆட்சேபிக்கவில்லை. சி.ஐ.டி. போலீஸார் இருக்கும்போதே வாக்குமூலம் கொடுக்கச் செய்தால்தான் குடியானவர்களுக்குத் தைரியம் உண்டாகும் என்று மகாத்மா கருதினார்.

வாக்குமூலங்களின் போக்கைத் தோட்ட முதலாளிகள் அறிந்தபோது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. மகாத்மாவின் விசாரணையைத் தடைப்படுத்தி நிறுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்தார்கள். மகாத்மாவின் கிராமத் தொண்டுக்கும் இடையூறு விளைவிக்கப் பார்த்தார்கள். மூங்கில் புல்லினால் கட்டியிருந்த ஒரு பள்ளிக்கூடக் குடிசைக்கு அவர்களுடைய தூண்டுதலினால் தீ வைக்கப்பட்டது. அதன் பலன் ஒரு விதத்தில் நல்லதே ஆயிற்று. தொண்டர்கள் மூங்கில் புல் குடிசை இருந்த இடத்தில் பள்ளிக்கூடத்துக்காகச் செங்கல் கட்டடம் கட்டி விட்டார்கள்.

பிறகு ஒரு நாள் பீஹார் சர்க்காரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "உங்களுடைய விசாரணை நீண்டு கொண்டே போகிறதே! சீக்கிரம் முடித்துக் கொண்டு பீஹாரை விட்டுப் போனால் நன்றாயிருக்கும்!" என்பது அக்கடிதத்தின் சாராம்சம்.

"விசாரணை சீக்கிரம் முடிவதற்கில்லை. இரண்டில் ஒன்று செய்து அரசாங்கம் என்னுடைய விசாரணையை நிறுத்திவிடலாம். ஒன்று, குடியானவர்களின் குறைகள் உண்மை என்று ஒப்புக்கொண்டு அவற்றை நிவர்த்திக்க ஏற்பாடு செய்யலாம்.அல்லது, உத்தியோக முறையில் சர்க்காரே குடியானவர்களின் குறைகளை விசாரித்து முடிவு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கலாம். இந்த இரண்டில் ஒன்று செய்தால் என்னுடைய விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்று மகாத்மா பதில் எழுதினார்.

அப்போது பீஹாரின் லெப்டினண்ட் கவர்னராயிருந்தவர் ஸர் எட்வர்ட் கேட் என்னும் நல்ல ஆங்கிலேயர். தம்மை வந்து பார்க்கும்படியாக மகாத்மா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார். அதன்பேரில் காந்திஜி கவர்னரைப் போய்ப் பார்த்தார். "தங்கள் விருப்பத்தின்படியே சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரித்து நிவர்த்திப்பதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப் போகிறேன். அந்தக் கமிட்டியில் தாங்களும் அங்கத்தினரா யிருக்கவேண்டும்" என்று சொன்னார் ஸர் எட்வர்ட் கேட்.

"கமிட்டியில் அங்கத்தினன் ஆவதால் குடியானவர்களின் கட்சி பேசும் உரிமை எனக்கு இல்லாமற் போய்விடக்கூடாது. கமிட்டியின் முடிவு திருப்திகரமா யில்லாவிட்டால் குடியானவர்களுக்கு யோசனை சொல்லி நடத்தும் உரிமையும் எனக்கு இல்லாமற் போய்விடக் கூடாது. அப்படியானால், நான் கமிட்டியில் இருக்க ஒப்புக்கொள்கிறேன்" என்றார் காந்திஜி.

இந்த நிபந்தனைகளை ஸர் எட்வர்ட் கேட் ஒப்புக்கொண்டார். ஸர் பிராங்க் ஸ்லை என்னும் ஆங்கிலேயர் தலைமையில் சர்க்கார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மகாத்மாவும் அங்கத்தினரானார். உத்தியோக முறையில் விசாரணை நடந்தது. குடியானவர்களின் குறைகள் எல்லாம் உண்மையானவையே என்று கமிட்டியார் கண்டார்கள். அநீதிகளை ஒழிப்பதற்குரிய சிபார்சுகளும் செய்தார்கள். அந்தச் சிபார்சுகளை அனுசரித்துச் சீக்கிரத்திலேயே சட்டம் ஏற்பட்டது. நூறு வருஷகாலமாக அந்தப் பிரதேசத்தில் அமுலில் இருந்துவந்த "தீன் கதியா" முறை ஒழிந்தது. இத்துடன் சம்பரான் ஜில்லாவில் தோட்டக் கார முதலாளிகளின் ராஜ்யமும் முடிவுற்றது.
-----------------------------------------------------------

9. தொழிலாளர் தோழன்

இந்தியாவில் இப்போதெல்லாம் தொழிலாளர் இயக்கம் பிரமாதப் படுகிறது. பல தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் காங்கிரஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு தொழிலாளருக்குத் தொண்டு செய்து வருகின்றன. தேச நலனைக் கவனியாது சிலர் தொழிலாளரைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். அரசியல் செல்வாக்குப் பெறுவதற்காகவே பலர் தொழிலாளர் இயக்கங்களில் சேருகிறார்கள்.

முதன் முதலாக இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்துக்கு உயிர் கொடுத்துப் பலப்படுத்தியவர் காந்தி மகாத்மாவேயாவர். இந்தியாவில் முதலாவது பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் மகாத்மாவின் தலைமையிலேயே நடந்தது. அந்த இயக்கம் பூரண அஹிம்சா தர்ம முறையில் நடந்து மகத்தான வெற்றியும் அடைந்தது. அதன் காரணமாக இந்தியா தேசம் முழுவதிலும் தொழிலாளரின் நிலை ஓரளவு உயர்ந்தது என்று சொல்லுவது மிகையாகாது. அந்த வேலை நிறுத்தத்தின் விவரம் பின்வருமாறு'

சம்பரானில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போதே ஆமதாபாத்திலிருந்து மகாத்மாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் ஸ்ரீமதி அனசூயா பென். ஆமதாபாத்தில் ஆலைகள் அதிகம். அவற்றில் வேலை செய்த தொழிலாளரும் அதிகம். அவர்கள் பெற்று வந்த சம்பளமோ மிகமிகக் குறைவு. சில காலமாக ஆலைத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் என்னும் பெண்மணி அத்தொழிலாளர்களூக்கு உதவி செய்து வந்தார். பல நாள் கிளர்ச்சி நடந்தும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. அதன் பேரில் ஸ்ரீமதி அனசூயா பென் மகாத்மாவுக்குக் கடிதம் எழுதினார். அதில் ஆமதாபாத் தொழிலாளருக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார். மகாத்மா சம்பரான் வேலை முடிந்ததும் ஆமதாபாத்துக்கு வருவதாகப் பதில் எழுதினார்.

அவ்வாறே சம்பரானில் திருப்திகரமான முடிவு ஏற்பட்டதும் மகாத்மா ஆமதாபாத் சென்றார். தொழிலாளரின் நிலைமையை விசாரித்து அறிந்த பிறகு அவர்களுடைய கட்சியில் நியாயம் இருப்பதாகக் கண்டார். எனினும் தொழிலாளரின் போராட்டத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்துவதில் ஒரு தர்ம சங்கடம் இருந்தது. அதுவரை ஆமதாபாத் ஆலை முதலாளிகள் பலர் மகாத்மா சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு உதவி புரிந்து வந்தார்கள். ஆலை முதலாளிகளுக்குத் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய். தொழிலாளர் கட்சிக்குத் தலைமை வகித்த ஸ்ரீமதி அனசூயாபென் ஸ்ரீ அம்பாலாலின் சகோதரி. ஆகவே போராட்டம் ஏற்பட்டால் எல்லாருக்குமே மனச் சங்கடம் உண்டாகும். இதையெல்லாம் உத்தேசித்து மகாத்மா ஆலை முதலாளிகளிடம் சென்று, விவாதத்தை மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். முதலாளிகள் இந்த யோசனையை வன்மையாக மறுத்து விட்டார்கள். "எங்களுக்கும் எங்கள் தொழிலாளர்களுக்கும் இடையே மூன்றாவது மனிதர் வந்து மத்தியஸ்தம் செய்வதா? அதற்கு நாங்கள் இணங்கவே முடியாது!" என்று சொல்லி விட்டார்கள்.

காந்திஜிக்கு வேறு வழி யில்லாமற் போயிற்று. ஆலைத் தொழிலாளருக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி யோசனை சொல்ல நேர்ந்தது. ஆனால் அவ்விதம் அவர்களுக்கு யோசனை கூறும்போது மகாத்மா நாலு நிபந்தனைகளையும் குறிப்பிட்டார். "இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாயிருந்தால் நான் உங்களுக்குத் தலைமை வகிக்கிறேன். இல்லாவிட்டால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். நாலு நிபந்தனைகளும் வருமாறு.

(1) எந்த நிலைமையிலும் தொழிலாளர் பலாத்காரத்தைக் கைக்கொள்ளக்கூடாது.

(2) கட்டுப்பாட்டை மீறி எந்தத் தொழிலாளராவது வேலைக்குப் போனால் அவர்களை மற்றவர்கள் நிர்ப்பந்திக்கக் கூடாது.

(3) வேலை நிறுத்தத்தின்போது வாழ்க்கை நடத்துவதற்குப் பிச்சை எடுக்கக்கூடாது.

(4) வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடித்தாலும் உறுதியாக நிற்கவேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்க வேண்டும்.

மேற்படி நாலு நிபந்தனைகளையும் தொழிலாளர் தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் கூட்டி அதில் மகாத்மாவின் நிபந்தனைகளை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப் படுத்தினார்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கேட்டுக்கொண்ட பின்னர் தொழிலாளர்கள் ஒருமுகமாக வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தார்கள். முதலாளிகள், ஒன்று தங்கள் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது மத்தியஸ்தத்துக்கு விடச் சம்மதிக்க வேண்டும் என்றும் அதுவரையில் வேலைக்கு யாரும் திரும்பிப் போவதில்லை யென்றும் சபதம் செய்தார்கள்.

இந்த வேலை நிறுத்தம் நடந்தபோதுதான் மகாத்மாவுக்கு முதன் முதலாக ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ வி.ஜே.படேல், ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய குஜராத்தித் தலைவர்கள் அறிமுகமானார்கள்.

வேலைநிறுத்தம் ஆரம்பமான பிறகு தினந்தோறும் சபர்மதி நதிக்கரையில் தொழிலாளர் கூட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கூட்டத்துக்கு வந்தார்கள். மகாத்மா ஒவ்வொரு நாளும் பேசினார். அவர்களுடைய சபதத்தையும் தம்முடைய நாலு நிபந்தனைகளையும் ஞாபகப்படுத்தினார்.

தொழிலாளிகள் தினந்தோறும் ஆமதாபாத் நகரத்தின் வீதிகளில் அமைதியாக ஊர்வலம் நடத்தினார்கள். "தோழர்களே! சபதத்தைக் காப்பாற்றுங்கள்!" என்று எழுதிய துணிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

மகாத்மா அடிக்கடி ஆலை முதலாளிகளைப் போய்ப் பார்த்து வந்தார். தொழிலாளிகளுக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். அதில் பயன் விளையவில்லை. "நாங்களும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் சபதத்தை நாங்கள் மீற முடியாது. தொழிலாளிகள் எங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மூன்றாம் மனிதர்கள் வந்து குறுக்கிடுவதை எப்படி நாங்கள் பொறுக்க முடியும்?" என்றார்கள் முதலாளிகள்.

வேலை நிறுத்தம் மொத்தம் மூன்று வார காலம் நடந்தது. முதல் இரண்டு வாரம் வரையில் ஆலைத்தொழிலாளிகள் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் தளர்ச்சி அடைய ஆரம்பித்தார்கள். சபதத்தை மீறி வேலைக்குச் செல்வோரைப் பார்த்து மற்ற பெரும்பான்மையோர் கோபம் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒன்று அவர்கள் பலாத்காரத்தில் இறங்கிவிடலாம் அல்லது தாங்களும் சோர்வு அடைந்து வேலைக்குத் திரும்பி விடலாம் என்று காணப்பட்டது. பொதுக் கூட்டத்துக்கு வந்த தொழிலாளிகளின் முகத்தில் சோர்வும் கிலேசமும் குடிகொண்டிருந்தன. இதை யெல்லாம் பார்த்த மகாத்மாவின் மனதில் கவலை உண்டாயிற்று. தொழிலாளர் வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விடுமே என்பதைப் பற்றிய கவலையைக் காட்டிலும் அவர்கள் தினந்தோறும் செய்து வந்த பிரதிக்ஞையைக் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் காந்திஜிக்கு அதிக மன வேதனையை அளித்தது. இந்த நிலைமையில் என்ன செய்வது என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் மகாத்மா பேசிக் கொண்டிருக்கையில் பளிச்சென்று ஓர் ஒளி உதயமாயிற்று. தாம் செய்ய வேண்டியது இன்ன தென்று தெரிந்தது. உடனே அந்த க்ஷணத்திலேயே மகாத்மா அதைத் தொழிலாளரிடம் வெளியிட்டார்: "நீங்கள் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் வேலைக்குத் திரும்புவதில்லை யென்று திரும்பத் திரும்பப் பிரதிக்ஞை செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களில் சிலர் உறுதி குலைந்து வேலைக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். இந்த மாதிரி சத்தியப் பிரதிக்ஞை செய்துவிட்டு அதை மீறுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. ஆகையால் இந்த வேலை நிறுத்தம் முடியும் வரையில் நான் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்து விட்டேன்!" என்றார்.

தொழிலாளர் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். தங்களுக்காக மகாத்மா பட்டினி விரதம் இருக்கப் போகிறார் என்பதைக் கேட்டு அவர்களுடைய உள்ளம் உருகியது. 'வேண்டாம்; வேண்டாம்; நீங்கள் உபவாசம் இருக்கக் கூடாது. எங்களுடைய தவறுக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் ஒரு நாளும் மீற மாட்டோம். உயிர் போனாலும் சபதத்தைக் காப்பாற்றுவோம். நீங்கள் பட்டினி கிடக்கக் கூடாது" என்று தொழிலாளர்கள் கதறினார்கள்.

"என்னுடைய உபவாசத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டுப் பயனில்லை. வேலை நிறுத்தம் முடிந்த பிறகு தான் நான் இனி உணவு அருந்தப் போகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் பிரதிக்ஞையைக் காப்பாற்றுவதானால் வெறுமனே சோம்பியிருப்பதில் பயனில்லை. பொது ஜனங்களிடம் சென்று பிச்சை எடுத்தலும் கூடாது. அவரவர்களுக்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டும். உயிர் வாழ்வதற்கு வேண்டிய ஊதியம் கிடைத்தாலும் போதும் என்று கிடைத்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் சபதத்தை நிறைவேற்ற முடியும்!" என்றார் மகாத்மா.

மகாத்மாவின் இந்த மகத்தான முடிவு தெரிந்து பிறகு தொழிலாளிகள் யாரும் வேலைக்குத் திரும்பவில்லை. அவரவர்களும் வேறு வேலை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். ஸ்ரீ வல்லபாய் படேல் வேலை நிறுத்தம் செய்தவர்களில் சிலருக்கு ஆமதாபாத் நகர சபையின் கீழ் வேலை தேடிக் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறி நெசவுப் பள்ளிக் கூடம் ஒன்று அப்போதுதான் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தின் அடித்தளத்தை நிரப்ப ஏராளமான மணல் வேண்டியிருந்தது. இந்த வேலைக்குத் தொழிலாளரில் பலரை உபயோகிக்கலாம் என்று ஸ்ரீ மகன்லால் காந்தி சொன்னார். ஸ்ரீமதி அனசூயா பென் முதலில் வழி காட்டினார். கூடையில் மணலை வாரித் தம் தலைமேல் வைத்துக் கொண்டு போய்க் கொட்டினார். அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மணல் கூடை தூக்கிச் சென்றார்கள்.

இப்படி யெல்லாம் எத்தனை நாளைக்கு நடக்கமுடியும்? நிலைமை நெருக்கடியாகத்தான் தோன்றியது. ஆனால் காநதி மகாத்மாவின் உண்ணா விரதம் ஆமதாபாத் ஆலை முதலாளி களின் மனதை இதற்குள் கலங்கப்பண்ணி யிருந்தது. அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் மகாத்மாவிடம் வந்து தங்கள் புகாரைத் தெரிவித்தார்கள். "தாங்கள் உண்ணாவிரதம் இருப்பது நியாயமல்ல. தங்களிடம் நாங்கள் மதிப்பும் அபிமானமும் உள்ளவர்கள். இப்படித் தாங்கள் பட்டினி கிடப்பதால் எங்களைத் தர்ம சங்கடமான நிலையில் கொண்டு வைத்து விட்டீர்கள். இது தங்களுக்கு அழகல்ல" என்று முதலாளிகளின் பிரதிநிதிகள் கடிந்து கொண்டார்கள்.

இதற்கு மகாத்மா,"என்னுடைய உண்ணா விரதத்துக்காக நீங்கள் உங்கள் உறுதியை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை உத்தேசித்து நான் உபவாசம் இருக்கவில்லை. தொழிலாளிகள் பிரதிக்ஞை தவறுவதைத் தடுக்கவே உண்ணா விரதம் இருக்கிறேன்." என்று சொன்னார். இந்தச் சமாதானத்தை அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

ஆலை முதலாளிகளின் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய் என்று பார்த்தோம் அல்லவா? அவரும் அவருடைய மனைவி ஸாரளா தேவியும் மகாத்மாவிடம் மிக்க அன்பு வைத்திருந்தார்கள். மகாத்மா காந்தி பட்டினி யிருப்பது அவர்களுக்கு மிக்க மன வேதனையை அளித்தது.

மூன்று தினங்கள் மகாத்மாவின் உண்ணா விரதம் நீடித்திருந்தது. இதற்குள் ஆலை முதலாளிகளின் மனம் இளகி விட்டது. ஏதாவது சமரச முடிவு காண்பதில் எல்லாரும் சிரத்தை கொண்டார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் வீட்டில் சமரசப் பேச்சுகள் நடந்தன. முதலாளி-தொழிலாளி தகராறைப் பற்றி விசாரித்து முடிவு கூறுவதற்கு ஸ்ரீ ஆனந்த சங்கர துருவா என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இருபத்தோரு நாள் நடந்த ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவு பெற்றது. காந்திஜியின் உண்ணா விரதமும் முடிவடைந்தது.

இந்த மாதிரி சந்தோஷமான சமரச முடிவு ஏற்பட்டதைக் கொண்டாடுவதற்காகத் தொழிலாளரின் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு ஆலை முதலாளிகளும் ஐரோப்பியக் கமிஷனரும் வந்திருந்தார்கள். கமிஷனர் துரை அக்கூட்டத்தில் பேசினார். இவ்வளவு பெரிய வேலை நிறுத்தம் கொஞ்சங்கூடக் கலவரம் இன்றி இருபத்தோரு நாள் நடந்து முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதற்குக் காந்திஜிதான் காரணம் என்பதை அந்த உத்தியோகஸ்தர் உணர்ந்திருந்தார். ஆகையால் அவர் தொழிலாளரைப் பார்த்து, "நீங்கள் எப்போதும் காந்திஜி சொல்லும் புத்திமதியைக் கேட்டு அதன்படியே நடக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆனால் இதே ஐரோப்பியக் கமிஷனர் கெயிரா ஜில்லா விவசாயிகளைப் பார்த்து, "காந்திஜி சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கேட்கக் கூடாது. கேட்டால் உருப்படாமற் போவீர்கள்!" என்று எச்சரிக்கை செய்யும்படியான சந்தர்ப்பம் வெகு சீக்கிரத்திலேயே வருவதற்கிருந்தது.
-----------------------------------------------------------

10. கெயிரா சத்தியாக்கிரஹம்

கெயிரா என்றும் கேதா என்றும் சொல்லப்பட்ட ஜில்லா குஜராத்தில் உள்ளது. 1917-ஆம் வருஷத்தில் அந்த ஜில்லாவில் மழை பெய்யாமையால் விளைச்சல் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. விவசாயிகள் நிலவரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தார்கள். மகாத்மா சம்பரான் விசாரணையில் ஈடுபட்டு அவ்விசாரணை முடியும் தறுவாயில் இருந்தபோது ஆமதாபாத் தொழிலாளர் சம்பந்தமாக வந்த கடிதத்தைப் போலவே கெயிரா ஜில்லாவிலிருந்தும் ஒரு கடிதம் வந்தது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியா, ஸ்ரீ சங்கர்லால் பாரிக் ஆகியவர்கள் அக்கடிதம் எழுதியிருந்தார்கள். விளைவு குறைந்துவிட்டதால் வரி கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த குடியானவர்களுக்கு மகாத்மா வந்து வழி காட்டவேண்டும் என்று எழுதி யிருந்தார்கள். எனவே ஆமதாபாத் தொழிலாளர் பிரச்னை ஒருவாறு முடிந்ததும் காந்திஜி கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதி யாத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
.
காந்திஜிக்கு முன்னாலேயே ஸ்ரீ அமிருதலா தர்க்கா (தக்கர் பாபா) கெயிராவுக்குப் போய் அங்குள்ளா நிலைமையைத் தெரிந்துகொண்டிருந்தார். ஏறக்குறைய பஞ்சம் என்று சொல்லக்கூடிய நிலைமை மேற்படி ஜில்லாவில் ஏற்பட்டிருந்தது. ஒரு ரூபாய்க்கு நாலணா வீதமோ அதற்குக் குறைவாகவோ மகசூல் கண்டிருந்தால் அந்த வருஷத்தில் வரி வசூலைத் தள்ளி வைப்பதற்கு, சர்க்கார் நிலவரிச்சட்டங்கள் இடங்கொடுத்தன. நாலு அணா விகிதத்துக்குக் குறைவாகவே மகசூல் கண்டிருப்பதாக விவசாயிகள் சொன்னார்கள். சர்க்கார் அதிகாரிகளோ நாலு அணா விகிதத்துக்கு மேல் மகசூல் கண்டிருக்கிறதென்று சாதித்தார்கள். நடுநிலைமையும் ஆராய்ந்த தக்கர் பாபா போன்றவர்கள் குடியானவர்களின் கட்சி தான் உண்மையானது என்று கூறினார்கள். ஸ்ரீ தக்கர் பாபா இது குறித்துக் கமிஷனர் துரையுடன் கலந்து பேசி யிருந்தார். ஸ்ரீ வித்தல்பாய் படேல், ஸர் கோகுல் தாஸ் பாரெக் ஆகியவர்கள் பம்பாய்ச் சட்டசபையில் இந்தப் பிரச்னையைக் கிளப்பி யிருந்தார்கள். அதனால் பயன் ஒன்றும் விளையவில்லை. குடியானவர்களின் கோரிக்கையோ மிகவும் மிதமானது. வரி வசூலை ஒரு வருஷத்துக்குத் தள்ளிப் போடும்படிதான் அவர்கள் கேட்டார்கள். இதைச் சர்க்கார் நேரடியாக ஒப்புக்கொள்ள முடியாவிட்டால், மூன்றாவது மனிதர்களின் மத்தியஸ்தத்துக்கு விட்டுவிடும்படி சொன்னார்கள். இதற்கும் அதிகாரிகள் இணங்கவில்லை. வரியை வசூலித்தே தீர்வது என்று ஒரே மூர்த்தன்யமாயிருந்தார்கள்.

காந்திஜி எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு, "வேறு வழியில்லை. குடியானவர்கள் வரி கொடுக்க மறுத்து சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியது தான்!" என்ற முடிவுக்கு வந்தார். அவ்வாறே கெயிரா ஜில்லா விவசாயிகளுக்கு மகாத்மா யோசனை கூறியதுடன் வரு கொடா இயக்கத்தைத் தாமே தலைமை வகித்து நடத்தவும் ஒப்புக் கொண்டார்.

கெயிரா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை புரிவதற்காக ஸ்ரீ வல்லபாய் படேல் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ இந்துலால் யாக்னிக், ஸ்ரீ மகாதேவ தேசாய், ஸ்ரீ அனுசூயாபாய் முதலியோர் வந்து சேர்ந்தார்கள். இவர்கள் அனைவரும் பின்னர் காந்தி மகானையே பரம குருவாகக் கொண்டு தேசத் தொண்டு ஆற்றுவதற்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டார்கள். கெயிரா சத்தியாக்கிரஹத்தின்போதே ஸ்ரீ வல்லபாய் படேல் ஏராளமான வருமானம் அளித்து வந்த தமது வக்கீல் தொழிலை நிறுத்தவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு தேசத் தொண்டுக்கே நேரம் சரியாயிருந்தபடியால் ஸ்ரீ வல்லபாய் வக்கீல் தொழில் செய்யவே முடிய வில்லை.

கெயிரா ஜில்லாவின் தலைநகரான நதியாத் நகரத்தில் இருந்த அநாதாசிரமத்தில் மகாத்மாவும் அவருடைய துணைவர்களும் தங்கினார்கள். வரி கொடாமை இயக்கத்தைச் சேரும் விவசாயிகளிடம் கையெழுத்து வாங்குவதற்கென்று பின்வரும் உறுதிமொழி தயாரிக்கப்பட்டது:-

"எங்கள் கிராமங்களில் மகசூல் இவ்வருடம் நாலணா மதிப்புக்குக் குறைவானதென்று நன்கறிந்த நாங்கள் அடுத்த வருஷம் வரையில் நிலவரி வசூலை நிறுத்தி வைக்கவேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டோம். ஆனால் அரசாங்கம் எங்கள் பிரார்த்தனைக்கு இணங்கவில்லை. ஆகையால் இவ்வருஷத்து நிலவரி முழுதையுமோ அல்லது பாக்கியுள்ள பகுதியையோ நாங்களாகச் செலுத்துவதில்லையென்று சத்தியம் செய்கிறோம். அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகள் என்ன நடத்தினாலும் பொறுத்திருந்து வரிகொடாமையின் பயன்களை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். எங்களுடைய நிலங்களே பறிமுதல் செய்யப்பட்டாலும் சகித்துக்கொண்டிருப் போமேயல்லாமல் நாங்களாக வலியத் தீர்வை செலுத்த மாட்டோம். ஆனால் ஜில்லா முழுவதும் இரண்டாவது தவணை வரி வசூலிப்பதை நிறுத்திவிட அரசாங்கத்தார் இணங்கினால் எங்களில் பணங்கொடுக்கக்கூடியவர்கள் வரி முழுமையுமோ பாக்கியுள்ள பகுதியையோ கொடுத்துவிடுவோம். வரி கொடுக்கக்கூடிய நிலையிலுள்ளவர்களும் கொடாமலிருப்பதற்குத் காரணமென்னவென்றால், அவர்கள் கொடுத்துவிடின் ஏழை மிராசுதார்களும் பீதியடைந்து தங்களுடைய உடைமைகளை விற்கவும் கடன் வாங்கவும் ஆரம்பித்து அதனால் தங்களுக்குச் சொல்லமுடியாத துன்பங்களை வருவித்துக்கொள்வார்கள் என்பதுதான். இந்நிலைமையில் ஏழைகளின் நன்மையை உத்தேசித்துப் பணம் செலுத்த சக்தியுடையவர்களும் செலுத்தாமலிருத்தல் கடமையாகுமென்று கருதுகிறோம்."

பிறகு காந்திஜியும் அவருடைய துணைவர்களும் கிராமம் கிராமமாகச் சென்று சத்தியாக்கிரஹ தத்துவத்தை விளக்கிச் சொல்லி மேற்படி உறுதி மொழியில் கையெழுத்து வாங்கத்தொடங்கினார்கள்.

வரிகொடாமை இயக்கத்தின் ஆரம்பத்தில் சர்க்கார் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. இயக்கத்துக்கு அதிக செல்வாக்கு ஏற்படாது என்றும், கொஞ்சம் பயமுறுத்தினால் விவசாயிகள் வரி செலுத்தி விடுவார்கள் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. ஜில்லா முழுதும் விவசாயிகள் ஒரே உறுதியாக வரிகொடாமல் இருந்து வந்தார்கள். பிறகு அரசாங்கத்தின் அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கையில் அகப்பட்ட ஜங்கம சொத்துக்களை யெல்லாம் அதிகாரிகள் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள். ஆடுமாடுகளை ஜப்தி செய்து ஏலம் போட்டார்கள். வரிகொடாதவர்கள் எல்லாருக்கும் அபராத அறிக்கைகள் அனுப்பப்பட்டன. கடைசியில் மகசூலையும் ஜப்தி செய்யத் தொடங்கினார்கள்.

இதனால் விவசாயிகளின் உறுதி குலையத் தொடங்கியது. வயலில் விளைந்திருப்பது நாலில் ஒரு பங்கு மகசூல். அதையும் அதிகாரிகள் ஜப்தி செய்துகொண்டு போய்விட்டால், வருஷம் முழுவதும் சாப்பிடுவது எப்படி? அடுத்த பஸலி சாகுபடிக்கு விதைக்கு எங்கே போவது? மாடுகளை அதிகாரிகள் கொண்டு போய் ஏலம் போட்டு விற்று விட்டால், வயல்களை எவ்வாறு உழுவது?

விவசாயிகளில் சிலர் உறுதி தளர்ந்து வரி கொடுக்கத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் ஜங்கம சொத்துக்களில் அவசியமில்லாத பொருள்களை வீட்டு வாசலில் கொண்டுவந்து வைத்தார்கள். அச்சாமான்களை வீணாக்காமல் கொண்டுபோய் ஏலம் போடட்டும் என்பது அவர்கள் கருத்து. ஆனால் ஒரு பகுதியார் தாங்கள் அடியோடு அழிந்து போனாலும் வரி கொடுப்பதில்லை என்று உறுதியோடிருந்தார்கள்.

உறுதி குலைந்து வந்த விவசாயிகளுக்குத் தைரியம் ஊட்டுவதற்கு மகாத்மா வழி தேடிக்கொண்டிருந்தார். அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டது. ஒரு வயலில் இருந்த வெங்காய மகசூலை அதிகாரிகள் தவறாக ஜப்தி செய்ய உத்தரவு போட்டிருந்தார்கள். மகசூலை ஜப்தி செய்வதே கொடுமையான காரியம் என்பது மகாத்மாவின் கருத்து. அதிலும் குறிப்பிட்ட இந்த வயலில் ஜப்தி உத்தரவே காரணமின்றிப் போடப்பட்டிருந்தது. ஆகையால் ஜப்தி உத்தரவைப் புறக்கணித்து வெங்காயத்தை அப்புறப்படுத்தும்படி மகாத்மா யோசனை சொன்னார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையில் சில தொண்டர்கள் அவ்விதமே செய்தார்கள். உடனே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணை தினத்தன்று கோர்ட்டில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடிவிட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கும் அவருடைய தோழர்களுக்கும் சொற்பகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கு 'வெங்காயத்திருடன்' என்ற சிறப்புப்பட்டம் பொதுஜனங்களால் அளிக்கப்பட்டது. 'வெங்காயத் திருடனுக்கு ஜே!' என்ற கோஷம் வானத்தை அளாவியது.

இந்தச் சம்பவத்தினால் ஜனங்களின் உற்சாகம் புத்துயிர் பெற்றது. ஆனால் அதிக காலம் அது நீடித்திருக்கவில்லை. கஷ்டப்பட்டுத் தேடிய உடைமைகள் பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்க ஜனங்களால் முடியவில்லை. பெரும்பாலோர் களைத்துப் போனார்கள். உறுதியாக நின்ற ஒரு சிலரை மட்டும் அடியோடு அழிந்துபோகும்படி விட்டுவிடுவதா என்ற கவலை காந்திஜியின் மனதில் தோன்றியது. இவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்யவேண்டியதாயிருக்கும் சத்தியாக்கிரஹப்போருக்கு மக்களை முன்னதாகவே தக்கபடி தயார் செய்யவில்லை என்ற எண்ணமும் உண்டாயிற்று.

நிலையில் நதியாத் தாலுகா தாசில்தார், "பணக்காரர்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைக் குடியானவர்களிடம் வரி வசூலிப்பது நிறுத்திவைக்கப்படும்!" என்று மகாத்மாவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். தாசில்தார் அவருடைய தாலுகாவுக்கு மற்றும் பொறுப்பானவர். ஜில்லா முழுவதிலும் நடக்கும் இயக்கத்தை ஒரு தாலுகாவில் மட்டும் எப்படி நிறுத்தமுடியும்?

ஆகையால் காந்திஜி கெயிரா ஜில்லா கலெக்டருக்குக் கடிதம் எழுதி, நதியாத் தாலூகா தாசில்தார் சொன்னது கெயிரா ஜில்லா முழுவதற்கும் பொருந்துமா என்று கேட்டிருந்தார். ஜில்லா கலெக்டர் எழுதிய பதிலில் அது ஜில்லா முழுவதற்கும் பொருந்தும் விஷயம் என்றும், 'பணக்காரர்கள் வரி செலுத்திவிட்டால் ஏழைகளிடம் வரி வசூலை நிறுத்தி வைக்கும்படி' ஏற்கனவே தாம் உத்தரவு போட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை அறிந்ததும் ஜனங்கள் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தத்தொடங்கினார்கள். அவர்கள் கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் அவர்கள் கேட்டிருந்ததும் இதுதான் அல்லவா? ஆகையால் தங்களுடைய இயக்கம் பூரணவெற்றி அடைந்துவிட்டதாக அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

ஆனால் காந்திமகானுக்கு இந்தக் கெயிரா போராட்டத்தின் முடிவு அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. சத்தியாக்கிரஹ இயக்கத்தின் முடிவில் எதிரிகளுடைய மனம் மாறியிருக்க வேண்டும் என்றும் சமரசமான பேச்சு வார்த்தையுடன் முடிய வேண்டும் என்றும் காந்திஜி கருதினார். ஆனால் இந்த இயக்கத்தினால் அதிகாரிகளுடைய மனம் கொஞ்சங்கூட மாறியதாகத் தெரியவில்லை. ஜனங்களும் சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தத்துவத்தை நன்கு உணர்ந்துகொண்டதாகத் தோன்றவில்லை. ஆகையால் கெயிரா சத்தியாக்கிரஹம் பூரண வெற்றி அளித்ததாக மகாத்மா காந்தி கருதவில்லை.

ஆயினும் அந்த இயக்கத்தின் பின்னைய பலன்கள் மகத்தானவையா யிருந்தன. அதன் பயனாகவே குஜராத் மாகாணத்து மக்கள் விழிப்பு அடைந்து எழுந்தனர். காந்தி மகாத்மாவின் பெருமையை உணர்ந்து அவரைத் தங்கள் மாபெருந்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
-----------------------------------------------------------

11. யுத்த மகாநாடு

முதலாவது உலக மகாயுத்தம் 1918-ஆம் வருஷத்தில் பயங்கரமான கட்டத்தை அடைந்திருந்தது. பிரிட்டன் முதலிய நேச தேசங்களின் நிலைமை மிக நெருக்கடியாகியிருந்தது. இந்த நிலைமையில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதி லார்ட் செம்ஸ்போர்ட் டில்லியில் ஒரு யுத்த மகாநாடு கூட்டினார். அதற்கு வரும்படி இந்தியாவின் பிரபல தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பினார். மகாத்மா காந்திக்கும் அழைப்பு வந்தது. அழைப்புக் கிணங்கி காந்திஜி டில்லிக்குச் சென்றார். ஆனாலும் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்வது பற்றிப் பல சங்கடங்கள் அவருக்கு இருந்தன.

அச்சமயம் அலி சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மௌலானா முகம்மதலியும், மௌலானா ஷவுகத் அலியும் சிறைப்பட்டிருந்தார்கள். காந்திஜி இந்தியாவுக்கு வந்தது முதல் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். அத்தகைய ஒற்றுமை இந்தியாவின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் மிக அவசியம் என்று நினைத்தார். ஆகையால் அலி சகோதரர்களை விடுதலை செய்யவேண்டிய அவசியத்தைப் பற்றி ஏற்கனவே இந்திய சர்க்காருடன் கடிதப் போக்கு வரவு நடத்திக் கொண்டிருந்தார்.

அலி சகோதரர்கள் அப்போது கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். முதல் உலக மகாயுத்தத்தில் துருக்கி ஜெர்மனியின் கட்சியில் சேர்ந்திருந்தது. துருக்கி சுல்தான் அகில உலகத்திலும் வசித்த முஸ்லிம்களின் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதனால் 'கலீபா' என்ற பட்டப் பெயரும் துருக்கி சுல்தானுக்கு இருந்தது. யுத்தத்தில் பிரிட்டிஷ் கட்சி ஜயித்தால் முஸ்லீம் மதத்தலைவரான துருக்கி சுல்தானுடைய கௌரவத்துக்குப் பங்கம் விளையுமோ என்று இந்திய முஸ்லிம்கள் கவலை கொண்டிருந்தார்கள். அப்படி ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக பிரிட்டன் வாக்குறுதி தரவேண்டும் என்று கோரினார்கள். இத்தகைய கிளர்ச்சியைத் தலைமை வகித்து நடத்திய காரணத்தினாலேயே அலி சகோதரர்கள் சிறைத் தண்டனை அடைந்திருந்தார்கள்.

இந்திய முஸ்லீம்களின் நட்புரிமையை மிக முக்கியமாகக் கருதிய மகாத்மா காந்தி அவர்களுடைய மத சம்பந்தமான கோரிக்கையை ஆதரிப்பது தம்முடைய கடமை என்று கருதினார். ஆகையால் அலி சகோதரர்கள் சிறைப்பட்டிருக்கும் நிலைமையில் தாம் யுத்த மகாநாட்டில் கலந்து கொள்ளலாமா என்று யோசித்தார். லோகமான்ய திலகரும் ஸ்ரீமதி பெஸண்டு அம்மையும் மேற்படி யுத்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட வில்லையென்று அறிந்ததும் மகாத்மாவின் தயக்கம் அதிகமாயிற்று.

இந்த நிலைமையில் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் இன்னும் சில ஆட்சேபங்களைக் கிளப்பினார். "அஹிம்சாவாதியாகிய தாங்கள் யுத்த மகாநாட்டில் எப்படிக் கலந்து கொள்ளலாம்?" என்பது ஓர் ஆட்சேபம். ஆனால் தென்னாப்பிரிக்காவிலேயே ஏற்பட்ட பிரச்னைதான் இது. மகாத்மா இந்த ஆட்சேபத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்டிருக்கிற வரையில் அந்தச் சாம்ராஜ்யத்துக்கு நேரும் அபாயங்களின்போது உதவி செய்யத்தான் வேண்டும். தாம் சொந்த முறையில் நம்பிக்கை கொண்ட அஹிம்சா தர்மத்தை இந்த விஷயத்தில் புகுத்துவது முறையன்று. ஆனால் பூஜ்யர் ஆண்ட்ரூஸ் கூறிய இன்னொரு ஆட்சேபத்துக்கு அவ்வளவு சுலபமாகப் பதில் சொல்ல முடியவில்லை. அச்சமயம் பிரிட்டனுக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்டிருந்த இரகசிய உடன்படிக்கைகளைப் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகையில் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. "பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் இந்தமாதிரி அக்கிரமமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கும் போது இந்த யுத்தத்தைத் தர்ம யுத்தம் என்று எப்படிச் சொல்லலாம்? நீங்கள் எப்படி இதற்கு உதவி செய்யலாம்?" என்று ஸ்ரீ ஆண்ட்ரூஸ் கேட்டார்.

மேற்கூறிய எல்லா ஆட்சேபங்களையும் வைஸ்ராய் செம்ஸ்போர்டிடம் நேரில் சொல்லிச் சமாதானம் கேட்பது என்ற எண்ணத்துடன் மகாத்மா டில்லிக்குப் போனார். லார்ட் செம்ஸ்போர்டை நேரில் பேட்டி கண்டு பேசினார். இரகசிய உடன்படிக்கைகள் சம்பந்தமாக லார்ட் செம்ஸ் போர்ட் கூறியதாவது:

"பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் நான் பொறுப்பாளியல்ல. பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்றும் நான் சொல்லவில்லை. பொதுவாகப் பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் இந்தியா நன்மை அடைந்திருக்கிறது என்று நீங்கள் கருதினால் இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்வது அவசியம். பிரிட்டிஷ் இரகசிய உடன்படிக்கைகளைப்பற்றி பத்திரிகையில் வந்திருப்பதைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. சில சமயம் பத்திரிகைகள் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவதும் உண்டு. பத்திரிகைக் கதைகளை நம்பி நீங்கள் முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவு செய்யக்கூடாது. யுத்தம் முடிந்த பிறகு அரசியல் தர்மம் சம்பந்தமான உங்களுடைய பிரச்னைகளைக் கிளப்பி வாதம் செய்யலாம். இந்த நெருக்கடியான சமயத்தில் உதவி செய்ய மறுப்பது உசிதமன்று."

இவ்வாறு லார்டு செம்ஸ் போர்ட் சொன்னதினால் காந்திஜியின் மனம் ஓரளவு சமாதானம் அடைந்தது. எப்படியிருந்தாலும் யுத்த மகா நாட்டுக்குப் போவது என்று தீர்மானித்தார்.

யுத்த மகாநாட்டில் யுத்தத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானம் ஒன்று வந்தது. இதுதான் மகாநாட்டில் முக்கிய தீர்மானம். இதை மகாத்மா காந்தி ஆதரித்துப் பேசவேண்டும் என்று வைஸ்ராய் செம்ஸ்போர்ட் விரும்பினார். காந்திஜியும் அதற்கு இணங்கினார். ஆனால் ஹிந்துஸ்தானியில் பேசுவதற்கு அநுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டார். "என்னுடைய பொறுப்பைப் பூரணமாக உணர்ந்து இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்" என்னும் ஒரே வாக்கியத்தை மகாத்மா இந்த மகா நாட்டில் சொன்னார்.

காந்திஜி ஹிந்துஸ்தானியில் பேசியது பற்றிப் பலர் அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள். வைஸ்ராய் பிரசன்னமாகியிருந்த ஒரு கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசப்பட்டது இதுதான் முதல் தடவை என்றும் சொன்னார்கள். காந்திஜிக்கு இது மிகவும் அவமானகரமாகத் தோன்றியது. இந்தியா தேசத்தில் இந்தியாவின் பாஷையில் பேசியதற்காக ஒரு பாராட்டுதலா என்று வருந்தினார்.

சைன்யத்துக்கு ஆள் திரட்டும் தீர்மானத்தை ஆதரித்து மகாத்மா ஒரு வாக்கியந்தான் பேசினார் என்றாலும் அந்தத் தீர்மானத்தைக் காரியத்தில் நடத்தி வைப்பதற்குத் தன்னால் இயன்ற முயற்சியைச் செய்யவேண்டும் என்று கருதினார். அத்தகைய முயற்சி தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய நிலைமையை நன்கு விளக்கி இராஜப் பிரதிநிதி செம்ஸ்போர்டுக்கு ஒரு கடிதம் வரைந்து அதை ரெவரெண்டு அயர்லாண்டு என்பவரிடம் கொடுத்தனுப்பினார்.

மேற்படி கடிதத்தின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:-

"தங்களுக்கு ஏப்ரல்மீ 26 உ ஒரு கடிதம் எழுதினேன். அதில் யுத்த மகாநாட்டில் நான் கலந்துகொள்ள முடியாமலிருப்பதற்குக் காரணங்களைத் தெரிவித்திருந்தேன். அதன் பின்னர் தாங்கள் அன்பு கூர்ந்து தங்களை நேரில் கண்டு பேச அனுமதி அளித்தீர்கள். அவ்வாறு பேசிய பின்னர், வேறு காரணம் இல்லாவிடினும், தங்களிடம் எனக்கிருந்த பெருமதிப்பை முன்னிட்டேனும் மகாநாட்டில் கலந்து கொள்வதென்று தீர்மானித்தேன். மகாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாதென்று நான் முதலில் கருதியதற்கு முக்கியமான காரணம், லோகமான்ய திலகர், ஸ்ரீமதி பெஸண்டு அம்மையார், அலி சகோதரர்கள் ஆகியவர்கள் மாநாட்டிற்கு அழைக்கப் படாததேயாகும். பொதுஜன அபிப்பிராயத்தை உருப்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த தலைவர்களென்று இவர்களை நான் மதித்திருக்கிறேன். இவர்களை அழையாது விட்டது பெருந் தவறு என்றே இன்னமும் நான் கருதுகிறேன். இத்தவறை நிவர்த்திப்பதற்கு வழியையும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இனி, மாகாணந்தோறும் யுத்த மகாநாடுகள் நடைபெறுமெனத் தெரிகிறது. இந்த மகாநாடுகளுக்காவது வந்து அரசாங்கத்துக்கு யோசனை சொல்லி உதவுமாறு மக்களின் மதிப்புக்குப் பாத்திரமான அத்தலைவர்களை அழைக்க வேண்டும்.

சமீப காலத்தில் நாங்களும் மற்ற குடியேற்ற நாடுகளைப் போலவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் சம பங்காளிகளாகலாமென்னும் ஆசை கொண்டிருக்கிறோம். எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அபாயம் வந்த காலத்தில் எவ்விதத் தயக்கமுமின்றிப் பூரண ஆதரவு அளித்தல் அவசியமென்பதை நன்குணர்ந்திருக்கிறோம். அவ்வாறே தீர்மானமும் செய்திருக் கிறோம். ஆனால் இவ்வாறு உதவி செய்ய ஆவலுடன் முன்வந்ததற்கு, அதன் மூலம் நமது இலட்சியத்தை விரைவில் அடையலாமென்னும் நம்பிக்கையே காரணம் என்பது உண்மை. கடமையைச் செய்வோன் அந்த அளவில் உரிமையும் பெறுகின்றான். ஆதலின் தங்களுடைய பிரசங்கத்தில் விரைவில் வரப்போவதாகக் குறிப்பிட்டிருக்கும் அரசியல் திருத்தங்கள் காங்கிரஸ் - லீக் திட்டத்தை முக்கிய அம்சங்களில் அனுசரித்திருக்கும் என்று எதிர் பார்ப்பதற்கு ஜனங்களுக்கு உரிமையுண்டு. இந்த நம்பிக்கையின் மேல்தான் மகாநாட்டிற்கு வந்திருந்த அங்கத்தினரில் அனேகர் தங்கள் மனப்பூர்வமான ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு அளிக்க முன் வந்தார்கள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து நான் இந்தியாவுக்குத் திரும்பியது முதல், குடியானவர்களிடம் நெருங்கிப் பழகி வந்திருக்கிறேன். அவர்களுடைய சுயராஜ்ய தாகம் நிரம்ப ஏற்பட்டிருக்கிறதென்று தங்களுக்கு உறுதி கூறுவேன். சென்ற காங்கிரஸ் மகாசபையின் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். குறிப்பிட்ட காலத்திற்குள் பூரண சுயாட்சி பிரிட்டிஷ் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நானும் கலந்துகொண்டேன். திட்டமான ஒரு காலத்திற்குள் சுயாட்சி கிடைக்குமென்னும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் இந்திய மக்கள் திருப்தி அடைவார்களென்பது நிச்சயம்.

கடைசியாக நான் தங்களைக் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால், முஸ்லிம் ராஜ்யங்களைப் பற்றி பிரிட்டிஷ் மந்திரிகள் திட்டமான வாக்குறுதி யளிக்குமாறு தாங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விஷயத்தில் பெரிதும் சிரத்தை கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆதலின் ஹிந்துவாகிய நான் இவ்விஷயத்தில் அசட்டை காட்டக்கூடாது. அவர்களுடைய துக்கங்களை எங்களுடைய துக்கங்களாகவே கருத வேண்டும். முஸ்லிம் ராஜ்யங்களின் உரிமைகளைக் காப்பது முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்களின் விஷயத்தில் அவர்கள் உணர்ச்சியை மதிப்பது; இந்தியாவின் சுயாட்சிக் கோரிக்கையைக் காலா காலத்தில் நியாயமான முறையில் நிறைவேற்றி வைப்பது; இவைகள்தான் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான சாதனங்களாகும். ஆங்கில மக்களை நான் நேசிக்கிறபடியாலும் ஆங்கிலேயர்களுடைய ராஜ பக்தியை ஒவ்வொரு இந்தியரிடத்தும் உண்டு பண்ண நான் விரும்புவதாலுமே இக்கடிதம் உங்களுக்கு எழுதலானேன்."

காந்திஜி 1918-ஆம் வருஷத்தில் இம்மாதிரி இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதினார். அந்த நாளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விட்டு இந்தியா வெளியில் போகக் கூடும் என்ற எண்ணமே யாருக்கும் உண்டானதில்லை. 'சுதந்திரம்' என்ற வார்த்தையைக் கூட யாரும் உபயோகிப்பதில்லை. 'சுயாட்சி' என்றுதான் எல்லாரும் சொல்லி வந்தார்கள். முப்பது வருஷத்துக்குள் நிலைமை எப்படி மாறிவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இல்லையா?

இராஜப் பிரதிநிதிக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டு மகாத்மா உடனே நதியாத் நகரத்துக்குச் சென்றார். வரிகொடா இயக்கத்தை நடத்திய ஜில்லாவிலேயே சைன்யத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று கருதினார். ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய சகாக்களுடன்கலந்தாலோசித்தார். அவர்கள் இந்தக் காரியத்தில் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. முயற்சி செய்தாலும் பலன் கிட்டாது என்று சொன்னார்கள். பொது ஜனங்கள் சர்க்காரிடம் கொண்டிருக்கும் விரோதபாவத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிவிட முடியாது என்று கூறினார்கள்.

ஆயினும் காந்திஜியின் கட்டளையை மதித்து வேலை செய்வதற்கு முன்வந்தார்கள். அவர்கள் முன்வந்தால் மட்டும் போதுமா? பொது ஜனங்களுடைய ஒத்துழைப்பு கிட்டவில்லை. வரிகொடா இயக்கத்தின் போது போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்ய முன்வந்தவர்கள் இப்போது ஒதுங்கி ஒதுங்கிப் போனார்கள். தலைவர்கள் ஊர் ஊராய்ப் போவதற்கு அப்போது வாடகையில்லாமல் வண்டிகள் கிடைத்தன. இப்போது வாடகை கொடுத்தாலும் வண்டி கிடைக்கவில்லை! ஆகவே தினம் இருபது மைல் வரையில் மகாத்மா காந்திஜியும் அவருடைய துணைவர்களும் நடந்து சென்று பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. ஜனங்கள் சாப்பாடு போடுவதிலும் உற்சாகம் காட்டவில்லை. ஆகையால் அவர்கள் கையோடு சாப்பாடு கொண்டுபோக வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் எதிர்ப்பு இருக்கும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதைக் கண்டு மனந்தளர்ந்து விடவும் இல்லை. கடமை என்று ஏற்றுக்கொண்ட காரியத்தை எத்தனை இடையூறு வந்தாலும் எதிர்த்துச் சமாளித்து நடத்துவது காந்திஜியின் தர்மமல்லவா?

கிராமங்களில் பொதுக்கூட்டம் கூட்டினால் முன்போல் ஏராளமாக ஜனங்கள் வருவதில்லை. சிலர்தான் வந்தார்கள். அவர்களும் குறுக்குக் கேள்விகள் கேட்டார்கள். "நீங்கள் அஹிம்சை உபாசகர் ஆயிற்றே? சைன்யத்துக்கு எப்படி ஆள் சேர்க்கலாம்?" என்றார்கள். "அரசாங்கம் எங்களுக்கு என்ன உதவி செய்தது? நாங்கள் எதற்கு இப்போது ஒத்துழைக்க வேண்டும்?" என்றார்கள்.

ஆயினும் மகாத்மாவின் பிடிவாதமான வேலை பலன்தராமற் போகவில்லை. நாளடைவில் ஜனங்கள் சைன்யத்தில் சேருவதற்குத் தங்கள் பெயர்களைக் கொடுக்க முன் வந்தார்கள்.

இடைவிடாமல் ஆள் திரட்டும் வேலை செய்து வந்ததின் காரணமாக மகாத்மாவின் உடல் நிலை பாதகம் அடைந்தது. ஒருநாள் வயிற்றுக் கடுப்பு நோய் வந்துவிட்டது. அன்றைக்குச் சபர்மதி ஆசிரமத்திலிருந்து நதியாத்துக்குப் போகத் திட்டம் போட்டிருந்தார். ஆசிரமத்திலிருந்து ஒன்றேகால் மைல் தூரத்திலிருந்த ஸ்டேஷனுக்கு நடந்தே சென்றார். ஆமதாபாத் ஸ்டேஷனில் அவருடன் சேர்ந்து கொண்ட ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜிக்கு உடம்பு சுகமில்லை என்பதைக் கண்டு கொண்டார். திரும்பிவிடலாம் என்று அவர் சொன்னதை மகாத்மா கேட்கவில்லை. இரவு பத்து மணிக்கு இருவரும் நதியாத் ஸ்டே ஷனில் இறங்கி அநாதாசிரமம் சென்றார்கள். அங்கே மகாத்மாவுக்கு வயிற்றுப் போக்கு நோய் மிகக் கடுமையாகிவிட்டது. நண்பர்கள் கவலைப்பட்டு வைத்தியர்களை அழைத்து வந்தார்கள். மகாத்மா வைத்தியம் செய்து கொன்னவும் மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார். ஊசி குத்திக் கொள்ளவும் இணங்கவில்லை. பட்டினி கிடந்தால் சரியாய்ப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். இருபத்து நாலு மணி நேரம் பட்டினி கிடந்த பிறகு பசியே இல்லாமல் போய்விட்டது. பலவீனம் முற்றிவிட்டது. வயிற்றுப் போக்குடன் சுரம், பிதற்றல் எல்லாம் சேர்ந்துவிட்டது. மகாத்மா தம்முடைய மரணம் சமீபித்துவிட்டது என்று நம்பினார். அம்பலால் சாராபாய் முதலிய நண்பர்கள் ஆமதாபாத்திலிருந்து அவரைப் பார்க்க வந்தார்கள். தம்மை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டுவிடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜி யமனோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றும் இனிமேல் ஆள்திரட்ட வேண்டியதில்லை யென்றும் கமிஷனர் செய்தி அனுப்பினார். அந்தச் செய்தியை ஸ்ரீ வல்லபாய் படேல் மகாத்மாவிடம் வந்து கூறினார். மகாத்மாவின் மனதிலிருந்து ஒரு பாரம் இறங்கியது. உடல் நிலை மோசமானதினால் ஏற்றுக் கொண்ட கடமையைச் செய்யமுடியவில்லையே என்ற கவலை மகாத்மாவின் மனதில் இருந்தது. அந்தக் கவலை இப்போது நீங்கிற்று. அது முதல் மகாத்மாவின் உடம்பும் குணமடையத் தொடங்கியது. ஜல சிகிச்சை, பனிக்கட்டி சிகிச்சை முதலிய இயற்கை வைத்திய முறைகளைக் கடைப்பிடித்து வந்தார். நோய் நீங்கிய பிறகும் உடம்பில் பழைய பலம் வர நெடுநாள் ஆயிற்று.

-----------------------------------------------------------

12. ரவுலட் அறிக்கை

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக அந்த நாட்களில் பலவித முயற்சிகள் நடைபெற்று வந்தன. மிதவாதிகள் சட்டத்துக்கு உட்பட்ட முறைகளில் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்ட சுயாட்சியைப் பெறுவதற்கு முயற்சி செய்தார்கள். தீவிர வாதிகள் பலாபலன்களைக் கவனியாமல் பொது ஜன உணர்ச்சியை எழுப்பிப் பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து விரட்டிவிட எண்ணினார்கள். இந்த இரு வகுப்பாரையும் தவிர, புரட்சி வாதிகள் அல்லது பயங்கர வாதிகள் என்று சொல்லப்பட்ட ஒரு கூட்டத்தார் இருந்தனர். இவர்கள் இரகசிய சதியாலோசனைகளைச் செய்தும் வெடிகுண்டு துப்பாக்கி முதலிய ஆயுதங்களைக் கையாண்டும் பிரிட்டிஷார்- பிரிட்டிஷ் பக்தர்கள் இவர்களைக் கொன்று பயமுறுத்தி இந்தியாவின் விடுதலையைப் பெறுவதற்கு முயன்றார்கள். தீவிரவாதிகள் ஓரளவுக்குப் பயங்கர வாதிகளிடம் அநுதாபம் கொண்டிருந்தார்கள்.

காந்தி மகாத்மா மேற்கூறிய மூன்று கூட்டத்தில் எதையும் சேர்ந்தவரல்ல. ஆனால் ஒவ்வொரு விதத்தில் மூன்று சாராரையும் அவர் தனித்தனியே ஒத்திருந்தார். மிதவாதிகளைப் போல் பிரிட்டிஷாரின் நல்ல எண்ணத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. எந்தக் காரியத்தையும் ஒளிவு மறைவு இன்றிப் பகிரங்கமாகச் செய்ய அவர் விரும்பினார். தீவிர வாதிகளையும் காந்திஜி ஒரு விதத்தில் ஒத்திருந்தார். எப்படியென்றால், பொது ஜனங்களின் உணர்ச்சியை எழுப்பிக் கிளர்ச்சி செய்து அவர்களைக் கொண்டு காரியம் செய்வதில் மகாத்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. புரட்சி வாதிகளையும் மகாத்மா இன்னொரு விதத்தில் ஒத்திருந்தார். தாம் நல்லதென்று கருதும் கட்சிக்காக உயிரையும் கொடுத்துப் போராடுவதற்கு அவர் சித்தமாயிருந்தார்.

மேலே சொன்ன மூன்று கூட்டத்துக்கும் பொருந்தாத ஒரு பெருங் குணம் மகாத்மாவிடம் இருந்தது. அதுதான் அஹிம்சா தர்மத்தில் அவர் கொண்டிருந்த பரிபூரண நம்பிக்கை. இலட்சியம் எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் பலாத்கார முறைகளின் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ள மகாத்மா விரும்பவில்லை. சத்தியம் அஹிம்சை இவற்றின் மூலமாக எவ்வளவு மகத்தான காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும் என்று காந்திஜி பரிபூரணமாக நம்பினார். அந்த நம்பிக்கையைச் சோதனை செய்வதற்கு இப்போது ஓர் அரிய பெரிய சந்தர்ப்பம் கிட்டியது.

இந்தியாவில் புரட்சி இயக்கத்தாரின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரித்து அந்த இயக்கத்தை அடக்குவதற்குச் சிபார்சுகளைச் செய்வதற்காக இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு கமிட்டி நியமித்திருந்தார்கள். இந்தக் கமிஷனுடைய தலைவர் நீதிபதி ரவுலட் என்னும் வெள்ளைக்காரர். ஆகையால் இந்தக் கமிட்டிக்கு ரவுலட் கமிட்டி என்றும், இந்தக் கமிட்டியார் வெளியிட்ட அறிக்கைக்கு ரவுலட் அறிக்கை என்றும் பெயர் ஏற்பட்டது.

காந்திஜி மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டு கொஞ்சங் கொஞ்சமாகக் குணமடைந்து வந்த காலத்தில் ரவுலட் கமிட்டியின் சிபார்சுகள் வெளியாயின. தினப் பத்திரிகைகளில் காந்திஜி ரவுலட் அறிக்கையைப் படித்தார். அதன் சிபார்சுகள் காந்திஜியைத் திடுக்கிடச் செய்தன. ஏனென்றால், அந்தச் சிபார்சுகள் பயங்கர இயக்கத்தை ஒடுக்குவது என்ற பெயரால் இந்தியாவின் சுதந்திரக் கிளர்ச்சியையே அடியோடு நசுக்கிவிடும் தன்மையில் அமைந்திருந்தன. ரவுலட் கமிட்டி சிபார்சுகளின்படி சட்டம் பிறந்துவிட்டால் இந்தியாவில் சர்க்காரை எதிர்த்து எந்தவிதமான கிளர்ச்சியும் செய்யமுடியாமல் போய்விடும் என்று மகாத்மா கண்டார். சர்க்கார் அதிகாரிகள் எந்தத் தனி மனிதனுடைய சுதந்திரத்தையும் பறித்து விடுவதற்கும், வழக்கு - விசாரணை எதுவும் இல்லாமல் ஒருவனைச் சிறையில் தள்ளி விடுவதற்கும் அந்தச் சிபார்சுகள் இடம் கொடுத்தன.

காந்திஜி நோயாகப் படுத்திருந்தபோது தினந்தோறும் ஸ்ரீ வல்லபாய் படேல் வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீ வல்லபாய் வந்திருந்தபோது காந்திஜி ரவுலட் கமிட்டி சிபார்சுகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். "இந்தச் சிபார்சுகளின்படி சட்டம் பிறந்து விட்டால் இந்தியாவில் எந்தவிதக் கிளர்ச்சியையும் நடத்த முடியாமல் போய்விடுமே?" என்றார். "உண்மைதான்; ஆனால் அதை எதிர்த்து நம்மால் என்ன செய்ய முடியும்? பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் இஷ்டப்படி சட்டம் செய்யக்கூடியவர்களா யிருக்கிறார்கள். நாம் எப்படித் தடுப்பது?" என்றார் ஸ்ரீ வல்லபாய் படேல்.

"சத்தியாக்கிரஹ முறை இருக்கவே இருக்கிறது. சத்தியாக் கிரஹத்துக்கு ஆள் கூட்டம் அவசியம் இல்லை. உத்தேச சட்டத்தை எதிர்த்து நிற்பதாக ஒரு சிலர் உறுதியுடன் முன் வந்தாலும் போதும். இயக்கத்தைத் தொடங்கி விடலாம். நான் மட்டும் இப்படி நோயுடன் படுத்திராவிட்டால் தன்னந் தனியனாகவே போராட்டத்தைத் தொடங்கிவிடுவேன். என்னைப் பின் பற்றப் பலர் முன் வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது" என்றார் காந்திஜி.

அதன்பேரில் ஸ்ரீ வல்லபாய் படேல் காந்திஜியிடம் ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள் சிலரை ரவுலட் கமிட்டி அறிக்கையைப் பற்றி யோசிப்பதற்காக அழைத்தார். இந்தக் கூட்டம் சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமத்தில் நடந்தது. சுமார் இருபது பேர் தான் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஸ்ரீ வல்லபாய் படேல், ஸ்ரீமதி சரோஜினிதேவி, ஸ்ரீ ஹார்னிமான், ஜனாப் உமார் ஸோபானி, ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீமதி அநுசூயாபென் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.

காந்திஜியின் அபிப்பிராயத்தைக் கேட்டபிறகு, ரவுலட் சட்டம் செய்யப்பட்டால் அதை எதிர்த்துச் சத்தியாக்கிரஹம் செய்வது என்று இந்தக் கூட்டம் ஏகமனதாகத் தீர்மானம் செய்தது. காந்திஜியின் யோசனைப்படி சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை தயாரிக்கப்பட்டது. அதில் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கையொப்பமிட்டார்கள். இந்த விபரங்கள் பம்பாய் தினப்பத்திரிகைகளில் வெளிப்பட்டன. உடனே இன்னும் பலரும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையொப்பமிடுவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்.

அப்போது தேசத்தில் நிலைபெற்றிருந்த காங்கிரஸ், ஹோம் ரூல் லீக் முதலிய ஸ்தாபனங்கள் தம்முடைய சத்தியாக்கிரஹ முறையை ஏற்றுக் கொள்ளும் என்று மகாத்மாவுக்குத் தோன்றவில்லை. ஆகையால் சத்தியாக்கிரஹ சபை என்று ஒரு புதிய ஸ்தாபனம் ஏற்படுத்த முடிவு செய்தார். சத்தியாக்கிரஹ சபையில் பலர் அங்கத்தினர்களானார்கள். இவர்களில் பெரும்பாலோர் பம்பாய்க்காரர்களா யிருந்தபடியினால் சத்தியாக்கிரஹ சபையின் தலைமைக் காரியாலயம் பம்பாயில் ஏற்படுத்தப்பட்டது. சத்தியாக்கிரஹ சபையின் கொள்கைகளை விளக்குவதற்காகப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களின் உற்சாகம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

ரவுலட் சட்டத்தை எதிர்த்துப் பெரும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. அதற்கு வேண்டிய உற்சாகம் தேசத்தில் பெருகிக்கொண்டு வந்தது. ஆனால் மகாத்மாவின் உடம்பு சரியாகக் குணமானபாடில்லை. மாதிரான் என்னும் இடத்துக்குப் போனால் விரைவில் குணமாகும் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அங்கே போய் ஒரு வாரம் இருந்ததில் பலவீனம் அதிகமாகி விட்டது. ஆகவே சபர்மதிக்கு மகாத்மா திரும்பி வந்தார்.

இந்த நிலைமையைக் குறித்து ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் யோசித்தார். காந்திஜியின் உடம்பு குணமாக வேண்டியதின் அவசியம் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். டாக்டர் தலால் என்பவரை அழைத்துக்கொண்டு வந்து மகாத்மாவின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். டாக்டர் தலால் காந்திஜியை நன்கு பரிசோதித்து விட்டு "நீடித்த சீதபேதியினால் உங்கள் உடம்பிலுள்ள இரத்தம் பலமிழந்திருக்கிறது. நீங்கள் பால் அருந்தவும் இரும்புச் சத்தை இன்ஜக் ஷன் செய்து கொள்ளவும் சம்மதிக்க வேண்டும். இதற்கு இணங்கினால் முன்போல் உடம்பில் பலம் வந்து விடும். இல்லாவிடில் நான் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

காந்திஜி, "இன்ஜக் ஷன் செய்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆயினும் தாங்கள் சொல்வதற்காக இணங்குகிறேன். ஆனால் பால் சாப்பிடுவதில்லையென்று நான் பிரதிக்ஞை செய்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞையை எப்படிக் கைவிட முடியும்?" என்றார். "அது என்ன? பால் சாப்பிடுவதில்லை என்று எதற்காகப் பிரதிக்ஞை செய்தீர்கள்?" என்று டாக்டர் கேட்டார்.

"கல்கத்தா முதலிய நகரங்களில் பசுமாடுகளையும் எருமை மாடுகளையும் இடையர்கள் அதிகப் பால் கறப்பதற்காகச் செய்யும் கொடுமைகளைப் பற்றி அறிந்தேன் அதனால் பால் சாப்பிடுவதையே வெறுத்துப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டேன். மேலும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்லவென்றும் கருதுகிறேன்" என்று மகாத்மா கூறினார்.

இந்தச் சம்பாஷணையைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமதி கஸ்தூரிபாய், "பசும்பால், எருமைப்பாலை நினைத்துக் கொண்டுதானே விரதம் எடுத்துக் கொண்டீர்கள்? வெள்ளாட்டுப் பால் சாப்பிடுவதற்கு என்ன ஆட்சேபணை? என்றார். டாக்டரும் உடனே இதைப் பிடித்துக் கொண்டார். "ஆமாம்; வெள்ளாட்டுப் பால் நீங்கள் அருந்தினாலும் போதும். அதுதான் உங்கள் பிரதிக்ஞையில் சேரவில்லையே? வெள்ளாட்டுப் பால் சாப்பிடவும் நீங்கள் மறுத்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு உடம்பு குணமாகாது!" என்றார்.

அப்போது காந்திஜியின் உள்ளத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தைப் பற்றியும் அதன்முடிவைப் பற்றியும் மகாத்மா காந்தி எழுதியிருப்பதைக் கேளுங்கள்:-

"என் உறுதி குலைந்தது. சத்தியாக்கிரஹப் போர் நடத்த வேண்டுமென்னும் தீவிரமான அவாவினால் உயிர் வாழும் ஆசையும் எனக்கு உண்டாகி விட்டது. எனவே, விரதத்தின் கருத்தைக் கைவிட்டு அதன் எழுத்தைக் கடைப்பிடிப்பதுடன் திருப்தியடைந்தேன். நான் விரதமெடுத்துக் கொண்டபோது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் மனதில் இருந்தனவாயினும், இயல்பாக அதனுள் எல்லா மிருகங்களின் பாலுமே அடங்கியதாகும். மற்றும், பால் மனிதனுடைய இயற்கை உணவு அல்ல என்பது என் கொள்கை. ஆகையால் நான் எந்தப் பாலையும் அருந்துவது முறையாகாது. இவையெல்லாம் தெரிந்திருந்தும் வெள்ளாட்டுப் பால் அருந்தச் சம்மதித்தேன். உயிர் வாழும் ஆசை சத்தியப் பற்றினும் வலிமை மிக்கதாகி விட்டது. எனவே சத்திய உபாசகனான நான், சத்தியாக் கிரஹப் போர் துவக்கும் ஆவல் காரணமாக, எனது புனித இலட்சியத்தைச் சிறிது விட்டுக் கொடுக்கலானேன். இதன் ஞாபகம் இன்றளவும் என் இதயத்தை ஓயாது வருத்திக் கொண்டிருக்கிறது. வெள்ளாட்டுப் பாலை விடுவதெப்படி என்று இடைவிடாமல் சிந்தித்து வருகிறேன். ஆனால், ஆசைகளுக்குள் மிக நுண்ணியதாகிய தொண்டு புரியும் ஆசை இன்னும் என்னைப் பற்றி நிற்கிறது. அதனின்றும் இன்னும் நான் விடுதலை பெறக் கூடவில்லை". -----------------------------------------------------------

13. ஆத்ம தரிசனம்

ரவுலட் கமிட்டியின் அறிக்கையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி ஏற்பட்டு வந்தது. அந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவற்காகக் காந்திமகான் தான் மேற்கொண்டிருந்த பாலருந்தா விரதத்தை ஓரளவு தளர்த்தி உடம்பைக் குணப்படுத்திக்கொண்டு வந்தார். அதே சமயத்தில் ரவுலட் கமிட்டி சிபார்சுகளை யொட்டிச் சட்டம் செய்வதில் சர்க்காரின் உறுதி வலுவடைந்து வந்தது. ரவுலட் கமிட்டியின் சிபார்சுகளை யொட்டிச் சர்க்கார் ஒரு மசோதா தயார் செய்து வெளியிட்டார்கள். பிறகு அந்த மசோதா இந்திய சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.

அப்போதெல்லாம் இந்திய சட்ட சபையில் உத்தியோகஸ்தர்களும் சர்க்கார் நியமித்த அங்கத்தினர்களுமே அதிகமாயிருந்தார்கள். பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் ஒரு சிலர் தான். அவர்களிலும் மக்களின் கட்சியை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் மிகச் சிலராயிருந்தனர்.

இந்திய சட்ட சபை விவாதத்தின்போது ரவுலட் மசோதாவை எதிர்த்து அதிதீவிரமான பிரசங்கம் செய்தவர் மகாகனம் சீனிவாச சாஸ்திரியார். அம் மசோதாவுக்கு விரோதமான வாதங்களையும் கண்டனங்களையும் மகா கனம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்தார். அந்த மசோதாவைச் சட்டமாக்குவதனால் விளையக்கூடிய விபரீதங்களைப் பற்றி சர்க்காருக்கு எச்சரிக்கை செய்தார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தவர்களில் இருவர் முக்கியமானவர். ஒருவர் இராஜப் பிரதிநிதி சேம்ஸ் போர்டு பிரபு; இன்னொருவர் காந்தி மகான். இந்திய சட்ட சபையின் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகக் காந்தி மகான் அங்கே போயிருந்தது அதுதான் முதல் தடவை. சாஸ்திரியாரின் ஆவேசமான உணர்ச்சி நிறைந்த பேச்சு சேம்ஸ் போர்டு பிரபுவின் மனத்தைக்கூட மாற்றியிருக்கலாம் என்று மகாத்மா எண்ணினார். ஆனால் அவ்விதம் நடைபெறவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனைத் தட்டி எழுப்பலாம்; தூங்குவதாகப் பாசாங்கு செய்கிறவனை என்ன செய்தாலும் எழுப்பமுடியாது அல்லவா?

ஆகையால் தேசத்தில் நடந்த கிளர்ச்சியோ, சட்டசபையில் சாஸ்திரியார் நிகழ்த்திய பிரசங்கமோ, சர்க்காரின் தீர்மானத்தை மாற்ற முடியவில்லை. உத்தியோக அங்கத்தினர்கள்-நியமன அங்கத்தினர்களின் வோட்டுகளால் இந்திய சட்ட சபையில் ரவுலட் மசோதா நிறைவேறிவிட்டது. காந்தி மகாத்மா இராஜப்பிரதிநிதிக்கு அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் எழுதிய கடிதங்களினாலும் யாதொரு பயனும் விளையவில்லை.

இத்தகைய நிலைமையில் சென்னையிலிருந்து மகாத்மா காந்திக்கு அழைப்புக் கடிதம் வந்தது. மகாத்மா காந்திஜியின் உடல்நிலை இன்னமும் திருப்திகரமாக வில்லை. பொதுக் கூட்டங்களில் உரத்துப் பேசச் சக்தி கிடையாது. சிறிது நேரம் நின்றுகொண்டு பேசினால் உடம்பு நடுங்கத் தொடங்கியது. இவ்வளவு பலவீனமான நிலைமையிலும் மகாத்மா காந்தி தென்னாட்டிலிருந்து அன்பர்கள் அனுப்பியிருந்த அழைப்பை ஒப்புக்கொண்டு சென்னைக்குப் பிரயாணமானார்.

மகாத்மாவின் சென்னை விஜயம் மிக முக்கியமான விளைவுகளுக்குக் காரணமாயிருந்தது. சென்னையில் இருந்தபோது தான் காந்திமகான் ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக் கிரஹம் செய்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அதன் காரணமாக இந்தியா தேசம் நெடுங்காலமாகத் தான் இழந்திருந்த ஆத்மாவைத் திரும்பவும் பெற்றது. பாரத சமுதாயம் புனர்ஜன்மம் எடுத்தது.

சென்னைக்குச் சென்றது பற்றிக் காந்தி மகான் தம் சுயசரிதத்தில் எழுதியிருப்பதைக் கேளுங்கள்:_

"தென்னாட்டுக்கு எப்போது சென்றாலும் என் சொந்த இடத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றும். தென்னாப் பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாக, தமிழர்கள் மீதும் தெலுங்கர்கள்மீதும் எனக்கு ஏதோ தனி உரிமை உண்டென்று நான் எண்ணுவதுண்டு. தென்னாட்டார் என் நம்பிக்கையை ஒருபோதும் பொய்ப்படுத்தியதில்லை. ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்குப் பின்னால் நின்றவர் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி என்பதாகச் சென்னைக்குப் போகும் வழியில் அறிந்து கொண்டேன்.

ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி சமீபத்தில் தான் சேலத்திலிருந்து சென்னைக்கு வக்கீல் தொழில் நடத்த வந்திருந்தார். காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் முதலியோர் அவரை வற்புறுத்தி அழைத்திருந்தார்கள். பொது வாழ்வில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்பது அவரது நோக்கம். சென்னையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியின் விருந்தினராகவே நாங்கள் தங்கினோம். ஆனால் இரண்டு மூன்று நாள் ஆனபிறகே இதை நான் கண்டுபிடித்தேன். ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக் குச் சொந்தமான வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபடியால் நாங்கள் அவருடைய விருந்தினர் என்று எண்ணியிருந்தேன். மகாதேவ தேஸாய் எனக்கு உண்மை தெரிவித்தார். அவர் விரைவில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டார். ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி தமக்கு இயற்கையாக உள்ள சங்கோச குணத்தினால் எப்போதும் பின்னாலேயே இருந்தார். ஆனால் மகாதேவ் தேஸாய் எனக்கு அவரைப்பற்றித் தெரியப்படுத்தினார். 'இந்த மனிதரிடம் நீங்கள் பழக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று அவர் ஒரு நாள் கூறினார்.

அவ்வாறே செய்தேன். போராட்டத்துக்குரிய திட்டங்களைப் பற்றி நாங்கள் தினந்தோறும் விவாதித்தோம். ஆனால் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை யல்லாமல் வேறெந்த வேலைத் திட்டமும் எனக்குத் தோன்றவில்லை. ரவுலட் மசோதா முடிவில் சட்டமாகி விட்டாலும் அதை எதிர்த்து எப்படி சாத்வீக மறுப்புச் செய்வதென்பது எனக்கு விளங்க வில்லை. அரசாங்கம் அதற்குரிய சந்தர்ப்பம் அளித்தால் தானே சட்டத்துக்கு கீழ்ப்படிய மறுக்கலாம்? அதில்லாவிடில் மற்றச் சட்டங்களையும் சாத்வீக முறையில் மறுத்தல் கூடுமோ? இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

இது சம்பந்தமாக நன்கு ஆராய்ச்சி செய்யும் பொருட்டு ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்களின் சிறு மகாநாடு ஒன்றைக் கூட்டினார். அதில் சிறப்பாகக் கலந்து கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரஹ சாஸ்திரத்தின் நுட்பமான அம்சங்களையுங்கூட விளக்குமாறு ஒரு விரிவான நூல் நான் எழுத வேண்டுமென்று அவர் யோசனை சொன்னார்.

இந்த யோசனைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் ரவுலட் மசோதா சட்டமாகி விட்டது என்னும் செய்தி கிடைத்தது. அன்றிரவு அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டே நித்திரையில் ஆழ்ந்தேன். மறுநாள் அதிகாலையில் சிறிது வழக்கத்தைவிட முன்னதாகவே விழித்துக் கொண்டேன். தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலுள்ள நிலையில் இருக்கும் போது சட்டென்று எனக்கு வழி புலனாயிற்று. கனவு கண்டது போலவே இருந்தது. காலையில் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியிடம் அதைப்பற்றிய விவரம் முழுவதும் கூறினேன்.

'ஒரு நாள் பூரண ஹர்த்தால் (வேலை நிறுத்தம்) நடத்தும்படி தேச மக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று நேற்றிரவு கனவில் யோசனை உதித்தது. தம்முடைய போராட்டம் புனிதமான போராட்டம் ஆதலின், ஆத்ம தூய்மைக்குரிய ஒரு காரியத்துடன் அதைத் தொடங்குவதே தகுதியென்று நினைக்கிறேன். அன்றைய தினம் இந்திய மக்களனைவரும் தங்கள் வேலைகளை நிறுத்தி உபவாசமிருந்து பிரார்த்தனை நடத்த வேண்டும். எல்லா மாகாணங்களும் தமது வேண்டுகோளுக்கு இணங்குமா என்று சொல்லுதல் கஷ்டம். ஆனால் பம்பாய், சென்னை, பீஹார், சிந்து இம்மாகாணங்களைப் பற்றி எனக்கு நிச்சயமுண்டு. இவ்விடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரிவர நடந்தாலும் நாம் திருப்தியடையலாம்' என்றேன்.

ஸ்ரீ இராஜகோபாலாச்சாரி உடனே இந்த யோசனையை அங்கீகரித்தார். பின்னால் மற்ற நண்பர்களுக்கு அது தெரிவிக்கப்பட்டபோது அவர்களும் அதை வரவேற்றார்கள். சுருக்கமான விண்ணப்பமொன்றை நான் தயாரித்தேன். முதலில் 1919 வருஷம் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் தினமாகக் குறிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது. ஜனங்களுக்குச் சொற்பகால அறிக்கையே தந்தோம். வேலை உடனே தொடங்கவேண்டியிருந்த படியால் நீண்ட கால அறிக்கை தருவதற்கு அவகாசம் இல்லை.

ஆனால் அவ்வற்புதம் எப்படி நடந்ததென்று யாரால் சொல்ல முடியும்? பாரத நாடு முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரையில் நகரங்களும், கிராமங்களும் அன்றைய தினம் பரிபூரணமான ஹர்த்தால் அனுஷ்டித்தன. அது யாரும் எதிர்பாராத அற்புதமான காட்சியாயிருந்தது.
-----------------------------------------------------------

14. நாடு எழுந்தது!

சென்னைச் சுற்றுப் பிரயாணத்தை காந்திஜி சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு பம்பாய்க்கு பிரயாணமானார். ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கொண்டாட்டத்துக்குப் பம்பாய் வந்து விட வேண்டும் என்று பம்பாய் நண்பர்கள் மகாத்மாவுக்குத் தந்தியடித்திருந்தார்கள். எனவே, பம்பாய்க்கு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி மகாத்மா போய்ச் சேர்ந்தார். மகாத்மா ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போதே டில்லியிலிருந்து விபரீதமான செய்திகள் வந்துவிட்டன.

ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி என்று முதலில் குறிப்பிட்டு விட்டு அப்புறம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதிக்குத் தள்ளிப்போட்டார்கள் அல்லவா? தேதியைத் தள்ளிப்போட்ட செய்தி டில்லிக்குச் சரியான காலத்தில் போய்ச் சேரவில்லை. ஆகையால் 30-ஆம் தேதி அன்றே டில்லியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முன்னால் எந்த நாளிலும் டில்லி அத்தகைய காட்சியைப் பார்த்தது கிடையாது. ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அவ்வளவு ஒற்றுமையுடன் அன்றைக்கு ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களிலிருந்து மிகச் சிறிய சோடாக்கடை வரையில் எல்லாம் மூடப்பட்டிருந்தன. வண்டிக்காரர்கள் அன்று வண்டி ஓட்டவில்லை. வீதிகளில் அங்காடிக் குடைகள் வரவில்லை. அநேகர் உண்ணாவிரதம் அனுஷ்டித்தார்கள். பல ஊர்வலங்கள் நடந்தன; பல பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. கூட்டங்களில் எல்லாம்பெரிய பிரம்மாண்டமான கூட்டம் ஜும்மா மசூதியில் கூடிற்று. அன்றைக்கு டில்லி ஜும்மா மசூதியில் சரித்திரம் கண்டிராத அதிசயம் ஒன்று நடைபெற்றது. டில்லி ஜும்மா மசூதி மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி அது. அந்த மசூதியின் உட்புறத்து முற்றத்தில் ஐம்பதினாயிரம் பேர் ஏககாலத்தில் கூடிப் பிரார்த்தனை செய்யலாம். வெறும் பொதுக்கூட்டமாகக் கூடினால் ஒரு லட்சம் பேர் கூடலாம். முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் பிரதான புண்ணிய ஸ்தலமாதலால் அந்த மசூதிக்குள் அதுவரையில் எந்த ஹிந்துவும் பிரசங்கம் செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை. அத்தகைய என்றும் நடவாத காரியந்தான் அந்த மார்ச் 30-ஆம் தேதிநடந்தது.

அப்போது டில்லியில் இரண்டு மாபெரும் தேசீயத் தலைவர்கள் இருந்தார்கள். ஒருவர் ஹக்கீம் அஜ்மல்கான். இன்னொருவர் சுவாமி சிரத்தானந்தர். இவர்கள் இருவரும் வைத்ததே டில்லியில் சட்டம் என்னும்படியான நிலைமை அப்போது ஏற்பட்டிருந்தது. ஜும்மா மசூதியில் நடந்த பிரம்மாண்டமான முஸ்லீம்களின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி சிரத்தானந்தர் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். சுவாமி அவ்விதமே சென்று பேசினார். அவருடைய பேச்சை அவ்வளவு முஸ்லீம்களும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தார்கள்.

இவ்வாறு சரித்திரத்திலேயே கேட்டிராத அளவில் ஹிந்து-முஸ்லீம் ஐக்கியம் ஏற்பட்டிருப்பதையும் பொது மக்களின் எழுச்சியையும் ஆவேசத்தையும் கண்டு பிரிட்டிஷ் சர்க்காரின் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இந்த நிலைமையை அவர்களால் சகிக்க முடியவில்லை. அதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்குச் சென்றிருந்தது. இந்திய ஏகாதிபத்தியத்தின் தலை நகரத்தில் ஒரு முஸ்லீம் தலைவரும் ஹிந்து தலைவரும் சேர்ந்து பொது மக்களின் மீது ஆட்சி நடத்துவதைப் பிரிட்டிஷ் அதிகாரிகளால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? அன்று நடந்த ஊர்வலங்களில் ஒன்று டில்லி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. போலீஸ் அதிகாரிகள் வந்து ஊர்வலத்தை வழி மறித்தார்கள். ஊர்வலத்தினர் கலைய மறுத்தார்கள். சமயம் பார்த்துச் சில கற்கள் எங்கிருந்தோ வந்து விழுந்தன. அதை வியாஜமாக வைத்துக்கொண்டு போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். கூட்டத்தில் சிலர் மாண்டு விழுந்தார்கள். பிறகு ஊர்வலம் கலைந்து போயிற்று. இந்தச் சம்பவம் டில்லியில் பெருங்கலக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. மக்களின் உள்ளம் கொந்தளித்தது. எந்த நிமிஷத்தில் என்ன நடக்குமோ என்ற கவலை தலைவர்களுக்கு ஏற்பட்டது. நிலைமையைத் தங்களால் சமாளிக்க முடியுமா என்ற ஐயமும் அவர்களுக்குத் தோன்றியது. சுவாமி சிரத்தானந்தர் மகாத்மா காந்திக்கு "உடனே புறப்பட்டு வரவும்" என்று தந்தி அடித்தார்.

டில்லியில் நடந்தது போலவே லாகூரிலும் அமிருதசரஸிலும் மார்ச்சு மாதம் 30-ஆம் தேதி ஹர்த்தால் நடைபெற்றது. அந்த இரண்டு இடங்களிலும் டில்லியில் நடந்தது போலவே பொது ஜனங்கள் மீது போலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது; உயிர்ச்சேதமும் நிகழ்ந்தது. அமிருதஸரஸில் அச்சமயம் இரண்டு தலைவர்கள் ஒப்பற்று விளங்கினார்கள். இவர்களில் ஒருவர் டாக்டர் சத்தியபால்; இன்னொருவர் டாக்டர் கிச்லூ. ஒருவர் ஹிந்து; இன்னொருவர் முஸ்லீம். இந்தியா தேசத்தில் அச்சமயம் ஏற்பட்டிருந்த மகத்தான ஹிந்து முஸ்லீம் ஐக்கியத்துக்கு அறிகுறியாக டாக்டர் சத்தியபாலும் டாக்டர் கிச்லூவும் விளங்கினார்கள். மார்ச்சு 30உ சம்பவங்களுக்குப் பிறகு அந்த இரு டாக்டர்களும் மகாத்மா காந்திக்கு "உடனே புறப்பட்டு வரவும்" என்று தந்தி அடித்தார்கள்.

காந்திஜி பம்பாய் வந்து இறங்கிய உடனே மேற்கூறிய இரு தந்தி அழைப்புகளும் அவருக்குக் கிடைத்தன. மகாத்மா யோசித்துப் பார்த்தார். டில்லியிலும் அமிருதசரஸிலும் நடந்தது நடந்துபோய்விட்டது. ஆனால் பம்பாயிலோ ஏப்ரல் 6-ஆம் தேதி ஹர்த்தால் நடந்தாகவேண்டும். ஆகையால் 6-ஆம் தேதி பம்பாயில் தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டு வருவதாக மகாத்மா மேற்குறிய நண்பர்களுக்குப் பதில் தந்தி அனுப்பினார்.

1919-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி இந்தியாவின் சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு தினம். இந்தியாவின் சுதந்திரப் போரின் சரித்திரத்தில் அதைப் போன்ற முக்கியமான தினம் வேறு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அன்றைக்கு இமயமலையிலிருந்து கன்னியாகுமரிவரை இந்தியாவில் உள்ள நகரங்களிலும் பட்டணங்களிலும் ஹர்த்தால் நடந்தது. காங்கிரஸைப் பற்றியோ சுதந்திரப் போரைப் பற்றியோ அதுவரை கேள்விப்பட்டிராத பட்டிக்காட்டு கிராமங்களில் கூட மக்கள் விழித்தெழுந்தார்கள்; கடை அடைத்தார்கள்; வேலை நிறுத்தம் செய்தார்கள்; ஊர்வலம் விட்டார்கள். பொதுக் கூட்டம் நடத்தினார்கள். ரவுலட் சட்டத்தை எதிர்த்துச் சட்ட மறுப்புச் செய்வோம் என்று ஏக மனதாகத் தீர்மானம் செய்தார்கள்.

அன்றைக்குச் சென்னைமாநகரின் கடற்கரையில் இரண்டு லட்சம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். இவ்வளவு பெரியபொதுக் கூட்டத்தைச் சென்னை நகரம் அதற்குமுன் என்றும் கண்டதில்லை. மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டத்தில் ஐம்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். கல்கத்தாவிலும் நாகபுரியிலும் லக்னௌவிலும் அலகாபாத்திலும் பூனாவிலும் ஆமதாபாத்திலும் அவ்வாறே ஹர்த்தால்களும் பொதுக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு லட்சக்கணக்காக ஜனங்கள் கலந்துகொண்டார்கள்.

சத்தியாக்கிரஹ இயக்கத்தின் தலைமை ஸ்தலம் பம்பாய் நகரம். அன்றைக்கு மகாத்மா காந்தியும் பம்பாயிலேதான் இருந்தார். ஆகையால் பம்பாயில் அன்று நடந்த சம்பவங்கள் மிகவும் முக்கியத்தைப் பெற்றிருந்தன.

பம்பாயில் அன்றைக்கு பூரண ஹர்த்தால் நடைபெற்றது. கடை கண்ணிகள் மூடப்பட்டன. ஆலைகள் மூடப்பட்டன. வண்டிகள்,டிராம்கள் ஒன்றும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்களும் நடைபெறவில்லை. ஹர்த்தால் பூரண வெற்றியோடு நடந்தது; பூரண அமைதியுடனும் நடந்தது. டில்லியில் நடந்ததுபோல் துப்பாக்கிப் பிரயோகம் முதலிய விபரீத சம்பவம் எதுவும் பம்பாய் நகரில் நடைபெறவில்லை.

அன்று காலையில் பம்பாய் நகரவாசிகள் ஆயிரக் கணக்கில் சௌபாத்தி கடற்கரைக்கு வந்தார்கள். கடலில் நீராடினார்கள். பின்னர் ஊர்வலமாகக் கிளம்பித் தாகூர் துவாரம் என்னும் கோவிலுக்குப் போனார்கள். ஊர்வலத்தில் பெருந்திரளான முஸ்லிம்களும் ஒரு சில ஸ்திரீகளும் குழந்தைகளும் இருந்தார்கள். தாகூர் துவாரத்தில் ஊர்வலம் முடிந்த பிறகு பக்கத்திலிருந்த மசூதிக்கு வரும்படியாகத் தலைவர்களை சில முஸ்லிம்கள் அழைத்தார்கள். அதற்கிணங்கி மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் பக்கத்திலிருந்த மசூதிக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பிரசங்கம் செய்தார்கள்.

அன்றைய தினம் ஏதேனும் ஒரு முறையில் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று காந்திஜி தீர்மானித்திருந்தார். அதற்கு ஒரு வழியும் கண்டு பிடித்திருந்தார். காந்திஜியின் நூல்களாகிய "இந்திய சுயராஜ்யம்" "சர்வ தயை" என்னும் இரு நூல்களுக்கும் சர்க்கார் ஏற்கனவே தடைவிதித்து அவற்றைப் பிரசுரிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போட்டிருந்தார்கள். மேற்படி புத்தகங்களை அச்சுப் போட்டு அன்றையதினம் பகிரங்கமாக விற்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்விதம் தடுக்கப்பட்ட புத்தகங்களைப் பிரசுரிப்பது சாத்வீக முறையின் சட்டத்தை மீறுவது ஆகுமல்லவா?

அன்று சாயங்காலம் உண்ணாவிரதத்தைப் பூர்த்திசெய்து உணவருந்திவிட்டுப் பொது மக்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடினார்கள். அங்கே மகாத்மா காந்தியும் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் மற்றும் சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்ட தொண்டர்களும் தடுக்கப்பட்ட மேற்படி புத்தகப் பிரதிகளுடன் வந்து சேர்ந்தார்கள். கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிகளும் அதி சீக்கிரத்தில் செலவழிந்துவிட்டன. பிரதி ஒன்றுக்கு நாலணா வீதம் விலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவராவது நாலணா கொடுத்துப் புத்தகம் வாங்கவில்லை. ஒரு ரூபாயும் அதற்கு மேலேயும் கொடுத்துத்தான் வாங்கினார்கள். ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும் சர்வ சாதாரணமாய்க் கொடுத்தார்கள். ஒருவர் மகாத்மாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இந்தப் புத்தகங்களை வாங்குவது சட்டப்படி குற்றம் ஆகும் என்றும், வாங்குவோர் சிறைக்கு அனுப்பப் படலாம் என்றும் ஜனங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லி எச்சரிக்கப்பட்டது. ஆயினும் ஆயிரக் கணக்கானவர்கள் துணிந்து வாங்கினார்கள். இவ்வாறாக இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரிசித்திபெற்ற 1919 -ஆம் வருஷம் ஏப்ரல் மீ 6-உ முடிவுற்றது.

மறுநாள் 7-உ காலையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு முதல் நாளைப்போல பெருங் கூட்டம் வரவில்லை. பொறுக்கி எடுத்தவர்களே வந்திருந்தார்கள். மகாத்மாவின் ஆணைப்படி அவர்கள் சுதேசி விரதமும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைப் பிரத்திஞையும் எடுத்துக் கொண்டார்கள்.

7 -உ இரவு மகாத்மா காந்தி டில்லி வழியாக அமிருதசரஸ் போகும் நோக்கத்துடன் ரயில் ஏறினார். மறுநாள் 8-உ மாலை ரயில் வடமதுரை ஸ்டே ஷனை யடைந்தபோது மகாத்மாவின் பிரயாணம் தடை செய்யப்படலாம் என்ற வதந்தி அவருடைய காதில் எட்டியது. டில்லிக்கு முன்னால் உள்ள பால்வல் ஸ்டே ஷனை ரயில் அடைந்ததும் ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் மகாத்மா ஏறியிருந்த வண்டியில் ஏறினார். அவரிடம் ஒரு உத்தரவை சாதரா செய்தார். காந்திஜி பஞ்சாப்புக்கு வருவதால் அமைதிக்குப் பங்கம் நேரம் கூடுமாததால் அவர் அந்த மாகாணத்துக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவில் கண்டிருந்தது. முன்னொரு தடவை சம்பரானில் கொடுக்கப்பட்டது போன்ற உத்தரவுதான். ஆனால் சூழ்நிலையில் மிகவும் வித்தியாசம் இருந்தது. முன்னர் ஒரு குறிப்பிட்ட சிறு பிரதேசத்தின் புகாரைப் பற்றி விசாரிப்பதில் மகாத்மா ஈடுபட்டிருந்தார். இப்போதோ இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்த்து ஒரு பெரிய அகில இந்திய இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். அதிகார வர்கத்தினர் முன்னைப்போல இந்தத் தடவை இலகுவாக விட்டுவிடுவார்களா?

காந்திஜி தாம் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியப் போவதில்லை யென்றும், பஞ்சாப்பில் அமைதியைக் காப்பதற்காகவே தாம் போகவதாகவும் அந்த உத்தியோகிஸ்தரிடம் தெரிவித்தார். "அப்படியானால் உம்மைக் கைது செய்கிறோம்" என்று சொல்லி ரயிலிலிருந்து இறக்கி விட்டார்கள். காந்திஜி தம்முடன் வந்த ஸ்ரீ மகாதேவ தேஸாய்க்கு நேரே டில்லிக்குப் போய்ச் சுவாமி சிரத்தானந்தரிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிக்கும்படிகட்டளையிட்டார்.

சிறிது நேரம் காந்திஜியும் போலீஸ் அதிகாரிகளும் பால்வால் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காத்திருந்தார்கள். டில்லியிலிருந்து ஒரு வண்டி வந்ததும் அதில் ஏற்றி அழைத்துப் போனார்கள். மறுநாள் உச்சிப் பொழுதில் மாதோபூர் என்னும் ஸ்டேஷனில் மீண்டும் இறக்கினார்கள். அங்கே லாகூரிலிருந்து வந்த மிஸ்டர் பௌரிங் என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாத்மாவைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மெயில் வண்டியில் முதல் வகுப்பில் அவரும் மிஸ்டர் பௌரிங்கும் ஏறினார்கள். மிஸ்டர் பௌரிங் மகாத்மாவுக்கு ஹிதோபதேசம் செய்தார். "பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னர் ஸர் மைக்கேல் ஓட்வயருக்கு உங்கள் பேரில் விரோதபாவம் ஒன்றும் இல்லை. பஞ்சாபில் ஏற்கனவே அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் வந்தால் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிவிடும் என்று பயப்படுகிறார். அவ்வளவுதான். நீங்களே அமைதியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விடுவதாக ஒப்புக் கொண்டு விடுங்கள். நாங்கள் நடவடிக்கை ஒன்றும் எடுக்க அவசியம் இல்லாமற் போய்விடும்!" என்று பௌரிங் சொன்னார். அதற்கு மகாத்மா இணங்கவில்லை. "நானாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. உங்கள் இஷ்டம்போல் செய்யலாம்!" என்றார் மகாத்மா. சூரத் ஸ்டே ஷன் வரையில் மிஸ்டர் பௌரிங் மகாத்மாவோடு வந்து அங்கே இன்னொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்புவித்துவிட்டுப் போனார்.
-----------------------------------------------------------

15. இமாலயத்தவறு.

காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, "உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் ஜனங்கள் அதிக ஆரவாரம் செய்யக் கூடும். அமைதிக்குப் பங்கம் ஏற்படலாம். உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையே?" என்றார்.

மகாத்மாவுக்கோ ஆரவாரமும் பிடிப்பதில்லை; அமைதிக்குப் பங்கம் லவலேசமும் பிடிப்பதில்லை. ஆகையால் அவர், "சரி மெரீன் லைன் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன்" என்றார். போலீஸ் அதிகாரி மகாத்மாவுக்கு வந்தனம் அளித்தார். மகாத்மா மெரீன் லைன் ஸ்டே ஷனில் இறங்கினார். ஒரு நண்பரின் வண்டி அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் ஏறிக்கொண்டு ஸ்ரீ ரேவா சங்கர் ஜாவேரியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். அதே சமயத்தில் ஸ்ரீ உமார் சோபானியும் ஸ்ரீமதி அநசூயா பென்னும் அங்கு வந்து சேர்ந்தார்கள். "உங்களை டில்லிக்கருகில் கைது செய்து பம்பாய்க்குக் கொண்டு வரும் செய்தி பம்பாய் வாசிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. பைதோனிக்கு அருகில் ஏராளமான ஜனக்கூட்டம் கூடியிருக்கிறது. ஜனங்களின் பரபரப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அவர்கள் கட்டுமீறிப் போனால் என்ன நடக்குமோ தெரியாது. அவர்களை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. தங்களையே நேரில் பார்த்தால்தான் அவர்கள் அடங்குவார்கள். தாங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும்!" என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள்.

பிறகு நடந்ததைப் பற்றிக் காந்தி மகாத்மா எழுதியிருப்பதாவது:-- "மறுபடியும் வண்டியில் ஏறிச் சென்றேன். பைதோனிக்கருகில் பெருங்கூட்டம் சேர்ந்திருப்பதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் ஜனங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினால் பைத்தியங் கொண்டவர்களானார்கள். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து ஊர்வலம் போல வரத் தொடங்கினார்கள். 'வந்தேமாதரம்' 'அல்லாஹோ அக்பர்' என்ற கோஷங்கள் ஆகாயத்தை அளாவின. மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியா யிருக்கும்படி கூட்டத்தை வேண்டிக் கொண்டேன். ஆனால் அந்தக் கல்மாரியிலிருந்து தப்ப முடியாதென்றே தோன்றிற்று. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் வீதியைத் தாண்டி, கிராபோர்டு மார்க்கெட் பக்கம் போகத் திரும்பியபோது, திடீரென்று குதிரைப்போலீஸ் படையொன்று எதிர்ப்பட்டது. ஊர்வலம் மேலே கோட்டைப் பத்தம் போகாமல் தடுப்பதற்காகக் குதிரைப் போலீஸார் வந்திருந்தனர். ஜனக்கூட்டமோ மிக நெருக்கமாயிருந்தது.

ஆகவே போலீஸ் படையைப் பிளந்துகொண்டு கூட்டம் மேலே செல்லத் தொடங்கிவிட்டது. அப் பிரம்மாமாண்டமான கூட்டத்தில் என்னுடைய குரல் கேட்பதே இயலாத காரியம். இத்தகைய நிலைமையில், குதிரைப் படைக்குத் தலைமை வகித்த உத்தியோகஸ்தர், கூட்டத்தைக் கலைக்கும்படி தம்முடைய வீரர்களுக்கு உத்தரவிட்டார்.அவ்வளவு தான்! குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிக்கொண்டு கூட்டத்தில் புகுந்தார்கள். ஒரு நிமிஷம் நானும் காயமடைவேன் என்று தோன்றியது. ஆனால் ஈட்டிகள் எங்கள் மோட்டார் வண்டியை உராய்ந்ததுடன் நாங்கள் தப்பினோம். அந்தக் குதிரை வீரர்கள் அதிவேகமாக எங்களைத் தாண்டிச் சென்றார்கள். பொதுக்கூட்டம் சின்னா பின்னமாயிற்று. ஜனங்கள் ஒரே குழப்பத்திற் குள்ளாயினர். பின்னர் ஓடத்தொடங்கினார்கள். சிலர் குதிரைகளின் காலடியினால் மிதிபட்டார்கள். வேறு சிலர் உடம்பெல்லாம் காய மடைந்தார்கள். இன்னும் சிலர் கீழே தள்ளி நசுக்கப்பட்டார்கள். எள் விழுவதற்கும் இடமில்லாமல் நெருங்கி அப்பெருங்கூட்டத்தில் குதிரைகள் போவதற்கு இடமே கிடையாது. ஜனங்கள் கலைந்து போவதற்கு வழியும் இல்லை. ஆதலின் குதிரை வீரர்கள் குருட்டுத்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து இடித்து மிதித்துக் கொண்டு சென்றார்கள். அவர்கள் செய்தது என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை யென்று தோன்றியது. மொத்தத்தில், அது ஒரு பயங்கரக் காட்சியா யிருந்தது.

இந்தச் சம்பவம் மகாத்மாவின் மனதில் பெரும் துயரத்தை உண்டாக்கியது. அதிகாரிகளிடம் தம் கண்டனத்தை தெரியப்படுத்த விரும்பினார். மோட்டார் வண்டியை நேரே பம்பாய்ப் போலீஸ் கமிஷனரின் காரியாலையத்துக்கு விடச் சொன்னார். அக் காரியாலயத்தில் போலீஸ் ஆர்ப்பாட்டம் பலமாயிருந்தது. ஆயினும் மகாத்மாவை உள்ளே போக விட்டார்கள். கமிஷ்னர் துரையிடமும் அழைத்துப் போனார்கள். கமிஷ்னர் மிஸ்டர் கிரிப்பித் என்பவருக்கு அருகில் பஞ்சாப்பிலிருந்து வந்த மிஸ்டர் பெளரிங் அமர்ந்திருப்பதை காந்திஜி கண்டார்.

காந்திமகான் பைதோனியில் நடந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லி, "ஜனங்களின் மீது குதிரைப் படையை ஏவியது அனாவசியம்; அநியாயம்!" என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்தார்.

"அதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டியது பொறுப்பு எங்களுடையது. ஜனங்களுக்கு நீங்கள் செய்யும் போதனையினால் என்ன நேரும் என்பது உங்களுக்கு தெரியாது. உங்களுடைய நோக்கம் என்னவோ நல்லதுதான். அனால் அதை ஜனங்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். விரைவில் கட்டுகடங்காமல் போய்விடுவார்கள். பிறகு பெரும் விபரீதங்கள் நிகழும். ஆகையால் ஆரம்பத்திலேயே கண்டிப்பான நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்" என்றார் கமிஷ்னர் கிரிப்பித் துரை.

காந்திஜி அதை ஒப்புக் கொள்ளாமல் மறுத்துப் பேசினார். "ஜனங்கள் மீது வீண் பழி சொல்கிறீர்கள். ஜனங்கள் இயற்கையிலேயே அமைதியை விரும்புகிறவர்கள். போலீஸார் தலையிடாதிருந்தால் ஒரு விபரீதமும் நேராது! அதற்கு நான் பொறுப்பு!" என்று சொன்னார்.

"ஜனங்கள் உங்களுடைய அஹிம்ஸா தர்ம போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை யென்று நிச்சயமாகத் தெரிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கிரிப்பித் துரை கேட்டார். "உடனே சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விடுவேன்!' என்றார் மகாத்மா.

"அப்படியானால் கேளுங்கள். அமிருத சரஸிலும் ஆமதாபத்திலும் இந்த நிமிஷத்தில் ஜனங்கள் கட்டுமீறிப் போய்ப் பயங்கரமான கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எல்லா விவரங்களும் எனக்கே இன்னும் வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பங்கள் அறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த விபத்துக் கெல்லாம் நீங்கள்தான் பொறுப்பாளி என்று ஏன் சொல்லக்கூடாது?" என்றார் கமிஷனர் துரை.

"நீங்கள் சொல்வது உண்மை என்று நிச்சயமானால் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டேன். அமிருதசரஸைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அங்கே போனதேயில்லை. என்னை அங்கே போகவொட்டாமல் பஞ்சாப் சர்க்கார் தடுத்திராவிட்டால் அவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவி செய்திருப்பேன். ஆனால், ஆமதாபாத் விஷயம் வேறு. அது நான் வசித்த ஊர். அங்கே ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அதைக் காட்டிலும் எனக்கு வருத்தமளிப்பது வேறொன்றுமிராது!" என்றார் காந்திஜி.

இவ்வாறு போலீஸ் கமிஷனருக்கும் காந்தி மகானுக்கும் நெடுநேரம் வாதம் நடந்தது. கடைசியாக மகாத்மா அன்று மாலையில் சௌபாத்தி கடற்கரையில் பொதுக் கூட்டம் போட்டு ஜனங்களுக்கு அஹிம்சையின் அவசியத்தைப் போதிக்கப் போவதாகச் சொன்னார். கமிஷனரும் அதற்கு இணங்கினார்.

அவ்வாறே செளபாத்தி கடற்கரையில் அன்று மாலை பொதுக் கூட்டம் நடந்தது. "சத்தியாக்கிரஹ இயக்கத்தின் அடிப்படை சத்தியமும் அஹிம்சையுந்தான். ஜனங்கள் மனோவாக்குக் காயங்களினால் அஹிம்சையைக் கடைப்பிடித்தாலன்றிப் பொது ஜன சத்தியாக்கிரஹ இயக்கத்தை என்னால் நடத்த முடியாது" என்று மகாத்மா வற்புறுத்தினார்.

அன்றிரவு ஆமதாபாத்தில் நடந்த பயங்கர நிகழ்ச்சிகளைப் பற்றிச் செய்தி வந்துவிட்டது. ஸ்ரீமதி அனுசுயாபென் அப்போது பம்பாயில் இருந்தார். அவர் ஆமதாபாத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அல்லவா? காந்திஜியோடு ஸ்ரீமதி அனுசுயா பென்னையும் சர்க்கார் கைது செய்துவிட்டதாக ஆமதாபாத்தில் வதந்தி பரவியது. இதனால் தொழிலாளர் ஆவேச வெறிகொண்டு பலாத்காரச் செயல்களில் இறங்கி விட்டார்கள். ஒரு போலீஸ் சார்ஜண்ட் ஜனங்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்தச் செய்திகளை கேள்விபட்டதும் மகாத்மா ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். வழியெல்லாம் துயரம் தரும் செய்திகளே கிடைத்துக் கொண்டிருந்தன. நதியாத் ரயில்வே ஸ்டே ஷனுக் கருகில் ரயில் தண்டவாளங்களைப் பெயர்க்க ஜனங்கள் முயன்றதாகவும் வீரம்காம் பட்டிணத்தில் ஓர் அரசாங்க உத்தியோகிஸ்தர் கொல்லப்பட்டதாகவும் ஆமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிய வந்தன. எல்லா இடங்களிலும் இப்பொழுது உத்தியோகிஸ்தர்கள் பழிக்கு பழி வாங்கி வருவதாகவும் அதனால் ஜனங்கள் பயப்பிராந்தி கொண்டிருப்பதாகவும் வழியில் காந்திஜி கேள்விப்பட்டார்.

இத்தகைய செய்திகளினால் ஏற்பட்ட மனக் கலக்கத்துடன் மகாத்மா ஆமதாபாத் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கே அவரை வரவேற்பதற்கு ஒரு போலீஸ் உத்தியோகிஸ்தர் காத்துக் கொண்டிருந்தார். அவர் மகாத்மாவை ஆமதாபாத் கமிஷனர் மிஸ்டர் பிராட் என்பவரிடம் அழைத்துப் போனார். மிஸ்டர் பிராட் கோபத்தினால் துடி துடித்துக் கொண்டிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த கலவரங்களுக்கெல்லாம் காந்திஜியின்மேல் பொறுப்பைச் சுமத்தினார். மகாத்மா சாந்தமாக மறுமொழி சொன்னார். கலவரங்கள் நடந்துவிட்டதற்காகக் தம் வருத்தத்தைத் தெரிவித்து விட்டு அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் தாம் ஒத்துழைப்பதாக வாக்களித்தார். இராணுவச் சட்டம் அமுல் அனாவசியம் என்று தம்முடைய கருத்தைத் தெரிவித்து, சபர்மதி நதிக்கரையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அந்த யோசனை கமிஷனருக்குப் பிடித்திருந்தது. பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தார். அவ்வாறே ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடந்தது. கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மா அவர்களுடைய தவறை உணர்த்த முயன்றார். பலாத்காரத்தின் தீமைகளையும் அஹிம்சையின் உயர்வையும் எடுத்து உரைத்தார். ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடிக்காவிட்டால் தாம் சத்தியாக்கிரஹ இயக்கத்தை நடத்த முடியாது என்றும் எச்சரிக்கை செய்தார். கடைசியாக, மகாத்மா கூறியதாவது:-

"உங்களிடையே நான் அதிக காலம் வாழ்ந்திருக்கிறேன். உங்களுக்கு என்னால் இயன்ற ஊழியம் செய்திருக்கிறேன். ஆயினும் நீங்கள் என்னுடைய அஹிம்சா தர்ம போதனையை அறிந்து கொள்ளாமல் பலாத்காரச் செயல்களில் இறங்கியது என் மனதைப் புண்படுத்தி விட்டது. உங்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று கருதுகிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பது என்று தீர்மானித்து விட்டேன். என்னிடம் உங்களுக்கு அன்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் உண்ணாவிரதம் அனுசரியுங்கள். ஆனால் அதுமட்டும் போதாது. பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் எல்லாம் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்!"

இந்தப் பொதுக் கூட்டத்தில் காந்தி மகாத்மா பேசியதன் பலனாக நல்ல பலன் ஏற்பட்டது. மறுநாள் இராணுவச் சட்ட அமுல் நீக்கப்பட்டது. ஆனால் மகாத்மா கூறியபடி பலாத்காரக் குற்றம் செய்தவர்கள் முன்வந்து தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. சர்க்கார் அதிகாரிகளும், ஏதோ திடீரென்று ஏற்பட்ட வெறியினால் குற்றம் செய்த ஜனங்களை மன்னித்து விடுதலை செய்ய முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட மனச் சோர்வுடனே மகாத்மா கெயிரா ஜில்லாவின் முக்கிய பட்டணமான நதியாத் நகருக்குச் சென்றார். அங்கே அவர் அறிந்த செய்திகள் அவருடைய துயரத்தை அதிகமாக்கின. கெயிரா வரிகொடா இயக்கத்தின் போது மகாத்மா அந்த ஜில்லாவில் தங்கிப் பிரயாணம் செய்ததுண்டு. ஆயினும் அந்த ஜில்லா ஜனங்கள் கூடக் கட்டுமீறிப் பலவித பலாத்காரச் செயல்களில் இறங்கினார்கள் என்பது மகாத்மாவின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தி விட்டது. பொது ஜனங்கள் அஹிம்சா தர்மத்தை நன்குணர்ந்து தகுதி பெறுவதற்கு முன்னால் சட்டமறுப்பு இயக்கத்தைத் தாம் தொடங்கியது பெருந் தவறு என்று மகாத்மாவுக்குத் தோன்றியது. சத்திய சந்தராகிய மகாத்மா தாம் செய்தது தவறு என்று அறிந்ததால், அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வதற்கு என்றும் தயங்கியதில்லை. அன்று மாலையில் நதியாத் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாத்மா தம் மனவருத்தத்தை வெளியிட்டார். "நான் 'இமாலயத் தவறு' செய்து விட்டேன்! ஜனங்கள் தகுதியாவதற்கு முன்னால் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்து விட்டேன்! இதற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று பகிரங்கமாகக் கூறினார். அதோடு சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நதியாத் கூட்டத்தில் மகாத்மா உபயோகப்படுத்திய 'இமாலயத் தவறு' என்னும் சொற்றொடர் பிறகு வெகு காலம் அடிபட்டுக் கொண்டிருந்தது. காந்திஜி அவ்விதம் பட்ட வர்த்தனமாகச் சொல்லி விட்டதற்காக நண்பர்கள் பலர் வருத்தப்பட்டார்கள். மகாத்மாவின் எதிரிகளோ அதை அடிக்கடி குறிப்பிட்டு இடித்துக் காட்டி வந்தார்கள்.

"தேசம் முழுவதிலும் அமைதி நிலவினால் தான் இயக்கம் நடத்த முடியும் என்றால், ஒரு நாளும் அது சாத்தியமாகப் போவதில்லை" என்று நண்பர்கள் சொல்லி வருத்தப்பட்டார்கள்; மகாத்மாவிடம் கோபமும் கொண்டார்கள்.

ஆயினும் இதனாலெல்லாம் காந்திஜியின் உறுதி எள்ளளவும் மாறவில்லை. அஹிம்சா தர்ம நிபந்தனையை அவர் கைவிடவும் இல்லை; சத்தியாக்கிரஹ ஆயுதத்தில் நம்பிக்கை இழந்துவிடவும் இல்லை. பொது ஜனங்களைச் சத்தியாக்கிரஹ இயக்கத்துக்குத் தகுதி செய்வதற்காகத் தக்க முறையில் தீவிரமான பிரசாரம் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் மீண்டும் பம்பாய்க்குச் சென்றார்.
-----------------------------------------------------------

This file was last updated on 24 July 2011.