வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
மஞ்ஞைப் பாட்டு, வேல் பாட்டு, சேவற் பாட்டு

manjcaippATTu, vEl pATTu and cEvaR pATTu
of V.S. CengkalvarAya piLLai
In tamil script, unicode/utf-8 format

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
மஞ்ஞைப் பாட்டு, வேல் பாட்டு, சேவற் பாட்டு


Source:
மஞ்ஞைப் பாட்டு / வேல் பாட்டு / சேவற் பாட்டு

தணிகைமணி, டாக்டர் வ.சு. செங்கல்வராயப்பிள்ளை,M.A.,D.Litt.
அவர்களால் இயற்றப்பட்டவை.

வெளியிடுவோர்:
வ.செ. தணிகைநாயகன் B.Sc., B.E.,
18, வெங்கடராமன் தெரு,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை - 600028
-----------

திருத்தணிகேசன் துணை.

சிவமயம்

முகவுரை

ஸ்ரீல ஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகளின் (வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமிகள்) விருப்பத்தின் படி 1957-ம் ஆண்டில்
மஞ்ஞைப் (மயில்) பாட்டும் மதுரைவாசி திருப்புகழ் அலர்மேலம்மையார் விருப்பத்தின்படி வேல் பாட்டும் சேவற் பாட்டும்
1933-ம் ஆண்டில் எனது தந்தையார் தணிகைமணி, டாக்டர் வ.சு. செங்கல்வராயப்பிள்ளை M.A.,D.Litt. அவர்களால்
இயற்றப்பட்டவை.கணபதி துணை
திருத்தணிகேசன் துணை

மஞ்ஞைப் பாட்டு

ஆடு மயிலே! நிர்த்தம் ஆடுமயிலே! - தணிகை
      ஆறமுக நாதன் வர ஆடு மயிலே!
பாடுமடி யார் பரவ ஆடு மயிலே! - சம்
      பந்தன்வர என்றன் முனம் ஆடுமயிலே!
1
தணிகைமலைத்தேவன்வர ஆடுமயிலே! - தமிழ்
      தத்திம் தித்திம் தத்திமென ஆடு மயிலே!
பணியுமெனைக் காத்துவர ஆடுமயிலே! - பரன்
      பாலகுகன் ஏறிவர ஆடு மயிலே!
2
நீல மயிலே! மந்த்ர ரூப மயிலே! - நிதம்
      நித்தன் அத்தன் ஏறிவரு சித்ர மயிலே!
கோல மயிலே! நீயே ஓல மயிலே! - அண்ட
      கூடமுழு தோடினவி சேட மயிலே!
3
துங்க மயிலே! நாகபந்த மயிலே! - சிகைச்
      சூட்டு மயிலே கவலை யோட்டு மயிலே!
வெங்கண் மயிலே! கந்தர் தங்கு மயிலே!-அன்பன்
      வெற்றி பெற வந்துதவு கொற்ற மயிலே!
4
நேச மயிலே! அரன் பூசை உமையே- திகழ்
      நின்னுருவங் கொண்டு செய்தாள் முன்னம் மயிலே!
ஆசை மயிலே! எங்கள் அருணகிரியாம்-அன்பர்
      அன்றழைக்க வந்து நின்றாய் ஆதிமயிலே!
5
வாகை மயிலே! மணி நாக மயிலே! - மலை
      மாதுதரு நாதனமர் சோதி மயிலே!
தோகை மயிலே! தருமோக மயிலே! -சுகச்
      சுத்த நிலை இன்னதெனச் சொல்லு மயிலே!
6
தேவாதி தேவ னென் றாடு மயிலே - திருச்
      செங்கொட்டு வேலனென் றாடு மயிலே!
சாவாப்ர சாதந்தந் தாடு மயிலே!-தனத்
      தந்தான தானவென் றாடு மயிலே!
7
வேலா விசாக என்றாடு மயிலே! - மலை
      வேந்தா குமார என்றாடு மயிலே!
பாலா விநோத என்றாடு மயிலே!-மலர்ப்
      பாதா குகேச என்றாடு மயிலே!
8
தத்திமென நிர்த்தமிடு பச்சை மயிலே!-குக
      சண்முகனை என்முன் வரப்பண்ணு மயிலே!
சத்திமயில் வஜ்ர மயில் சண்ட மயிலே! - தனித்
      தங்க மயில் துங்க மயில் எங்கள் மயிலே!
9
செம்பொன் மயிலே! சித்ரபைம்பொன் மயிலே!-திருச்
      செந்தின் மயிலே! பரங் குன்றின் மயிலே!
அம்பொன் மயிலே! எங்கள் நம்பன் மயிலே! - பணி
      அஞ்சு மயிலே1 நீயே தஞ்ச மயிலே!
10
வள்ளி மணவாள என்றே ஆடு மயிலே! - வான
      மங்கை பங்க துங்க என்றே ஆடு மயிலே!
கொள்ளுநல மின்னதெனக் காட்டு மயிலே! - கோழிக்
      கொடிக்கரத்துத் தேவனருள் கூட்டு மயிலே!
11
ஆறு திருப்பதியானென் றாடு மயிலே!-மெய்
      யன்பருக்குக் கதியானென் றாடு மயிலே1
வேறுகதி யில்லை யென்றே ஆடு மயிலே!-எங்கள்
      வேல வேல வேல என்றே ஆடுமயிலே.
12
அந்த மயிலே! ஆநந்த மயிலே! - சச்சி
      தானந்தன் பாட நடம் ஆடு மயிலே!
சந்த மயிலே! எங்கள் கந்தர் மயிலே! - பிர
      சண்ட மயிலே! சிகைக் கொண்டை மயிலே!
13
வாசுகி எடுத்துதறு வண்ண மயிலே! - தெய்வ
      வள்ளிமலை நாதன்வரப் பண்ணு மயிலே!
ஆசுகவி பாடியுனை ஓதமயிலே! - வரம்
      ஆதரித்துத் தந்தருளு நீதி மயிலே!
14
கோடி நமஸ் காரமுனக் காடு மயிலே! - கோடிக்
      கோடிநமஸ் காரமுனக் காடு மயிலே!
பாடியுனைப் போற்றுகின்றேன் ஆடு மயிலே! - ஆடிப்
      பாடிப் பாடிப்போற்றுகின்றேன் ஆடு மயிலே!
15
எப்போதும் போற்றி செய்வேன் எங்கள் மயிலே! - என்னை
      ஏமனிடங் காட்டாதே எங்கள் மயிலே!
முப்போதும் பூஜை செய்வேன் எங்கள் மயிலே! - திரு
      முருகனருள் கூட்டிவைப்பாய் எங்கள் மயிலே!
16

**************
வேலு மயிலுந் துணை
-----------------------------------------------------------


வேல் பாட்டு


தானன தானன
தானன தானன தானதனா
தானன தானன
தானன தானன தான தனா

கலையி லே உச்சி வேளையிலே கடி மாலையிலே
வேலயி லே என்று செப்பிடத் தீருநம் வெவ்வினையே.
1
சாத்திர மோதிலென் தீர்த்தங்க ளாடிலென் தானறுமோ?
தோத்திர மோதிநம் வேலவர் வேலைத் தொழார் வினையே.
2
வேலே எனத்துதி யாதே மனத்துயர் வேதனையி
னாலே தினத்தினம் ஏனோ அலமரல் ஞாலத்துளீர்?
3
வேலு மயிலு நினைந்தவர் தந்துயர் வேரறுமே
பாலென் நிறக்கதி ரோன்முனம் நின்ற பனியெனவே.
4
வீரவேல் தாரைவேல் வெற்றிவேல் கொற்றவேல் மின்னயில் வேல்
தீரவேல் என்று தினமும் பணிந்திடத் தீங்கறுமே.
5
எங்கள்வேல் தங்கவேல் துங்கவேல் செங்கைவேல் என்றிடவே
எங்குமி லாததோர் இன்பநம் பாலதாம் இஃதறிமின்.
6
குன்ற மெறிந்தவேல் என்றும் பெருந்துணை கும்பிடுவோம்
இன்றுநம் வெவ்வினைக் குன்ற மெறிந்திட இன் துணையாம்.
7
குன்றஞ்செய் மாயையில் வீரரைக் காத்தவேல் கொட்கும்வினைக்
குன்றஞ்செய் மாயையில் நின்றெனைக் காத்திடும் கூரிலைவேல்.
8
சாகரத் தேநின்று வீரரை மீட்டவேல் சார்பிறவிச்
சாகரத் தேநின்றும் என்னையு மீட்டிடுந் தங்க வைவேல்.
9
வெற்றிவேல் கந்தனே என்று தனைப்பணி வீரவாகுக்
குற்றது பற்றென மற்றெனக் கும்மருள் ஒண்சுடர்வேல்.
10
பழுதிலா அன்பர்தம் நாவிற் பொறிப்பப் பலனளிக்கும்
எழுதுகோ லாக அமைந்திடும்எங்கள் இறைவன் கைவேல்.
11
உண்ணாடி நிற்பவர்க் கென்றுந் துணைசெய் ஒருவருக்கே
கண்ணாடி யிற்றடங் காண்பதற் குற்ற கருவி செவ்வேல்.
12
உக்கிர பாண்டியற் காகக் கடலை உறிஞ்ச வைவேல்
நிக்கிர கஞ்செயும் என்றன் பவமெனும் நீள்கடலை.
13
வள்ளி விழிக்கு நிகரென லாகும்வை வேலெனவே
உள்ளி உரைத்த உவமைப் பொருளை உணர்பவர் யார்?
14
தேவர் சிறையும் பிறவிச் சிறையுஞ் சிதைக்கும் வைவேல்
மூவர் பணிதணி காசல மேவு முதல்வர் கைவேல்.
15
கீரனைக் காத்தவேல் சூரனைத் தீர்த்தவேல் கிட்டிவரு
மாரனைத் தீத்தவர் மைந்தர் திருக்கைவேல் வஜ்ர வைவேல்.
16
ஞாயி றொளிவட வாக்னி ஒளியுடன் நண்ணுநிலா
பாயு மொளியும் ஒளிப்ப ஒளிருங்க்ரு பாகரன்வேல்.
17
ஏமன் வருஞ்சம யத்து முக்கண்ணர் இணையடிபோற்
சேமந் தருவது வேலென் றுணர்ந்ததைச் செப்பிடுவோம்.
18
வாட்டத்தி லே மன ஏக்கத்தி லே தனி மார்க்கத்திலே
நாட்டத்தி லே அயில் நாடப் பெருந்துணை நண்ணிடுமே.
19
சந்தப் புகழ்சொல் அருண கிரிக்குச் சதா துணைவேல்
இந்தப் புவியிலென் றேயறிந் தேயதை ஏத்திடுவோம்.
20
ஆனந்த மாகத் திருப்புகழ் பாடியும் ஆடு சச்சி
தானந்தர் நெஞ்சிற் குடிகொண் டிருக்குமெம் அண்ணல் கைவேல்.
21
சோதிவேல் நீதிவேல் என்று திருத்தணிச் சுப்ரமண்ய
ஆதிவேல் தன்னைநாம் ஆசையொ டே நிதம் அன்புசெய் வோம்.
22
சத்திவேல் சத்திவேல் சத்திவேல் என்று சதா உரைத்தே
பத்தியோ டேத்தப் பரகதி நிச்சயம் பாருளீரே.
23
வேலுக் கபயஞ்செவ் வேலுக் கபயம் விளங்குமயில்
வேலுக் கபயமென் றேதுதி செய்து வினையறுப்பாம்.
24

வேலு மயிலுஞ் சேவலுந் துணை.
-----------------------------------------------------------

வேற் பாட்டு<

ஆனைமுக வற்கிளைய வள்ளல் கரச்சேவல்!
      அடியார்வினை பொடிபடுத்தி அருள் சுரக்குஞ் சேவல்!
தேனைவென்ற திருப்புகழ் சொல் அருணகிரி போற்றுஞ்
      செச்சைமுடி யுச்சியொளிர் தெய்வவுருச் சேவல்!
மானைவென்ற மடநோக்கி வள்ளியைப் போல் வலிய
      மகிழ்ச்சியுடன் கிரிராஜர் கைப்பிடித்த சேவல்.
ஊனைவளர் அஞ்ஞானம் உடையவர்கள் காணா
      ஓண்பவளச் செஞ்சடிலர் மைந்தர் திருச்சேவல்.
1
சேவலென்றுங் கோழியென்றுந் தணிகை மலைத்தேவர்
      திருக்கரத்து வாரணமே என்றுமுனைப் பொற்றி.
ஆவலுடன் காலை நிதம் நீகூவுந் தோறும்
      அப்பமுரு கைய என ஆர்வமுடன் எழுந்தே.
தேவரிடர் தீர்த்த குக ஷண்முகனார் பாதஞ்
      சிந்தனைசெய் நெஞ்சமெனக் கேனருள மாட்டாய்?
கூவ இருள் ஒழிகின்ற சூக்ஷுமத்தைக் கண்டேன்
      கூறியுனைப் புகழாமல் இனியிருக்க மாட்டேன்.
2
காலே ஆயுதமாகப் படைத்திடு செஞ்சேவல்!
      கர்மவினைக் குன்றிடித்தே எனக்கருள வேண்டும்;
நாலேயாம் வேதங்கள் பாதங்கள் போற்றும்
      நம்பர் திருவடிமறவா நெஞ்சருள வேண்டும்.
தாலேலோ எனப் பாடித் தாலாட்டும் அறுவர்
      தந்தமுலை யுண்டருளும் மைந்த எனக் கூறி.
மாலேயாந் தேவருக்கு மேலாய வேலோன்
      மலரடிக்கே ஆட்செய்யுந் தொண்டருள வேண்டும்.
3
காரணந்தன் காரியந்தன் சகலமுமே தானாங்
      கந்தபிரான் எந்தைபிரான் திருக்கரத்துச் சேவல்!
வாரணத்து மங்கைமண வாளர்தணி கேசர்
      வாராய் பேதாயெனவே எனையாள்வா ரோசொல்!
ஆரணத்தின் முடியிலுறை குருநாதர் செந்தில்
      அதிபரவர் அடியேன்முன் வருநாளு முண்டோ?
பூரணத்திற் பூரணமாம் மெய்ப்பொருளைக் காட்டிப்
      புலப்படவே எனக்கருளும் நாளுமுள தோசொல்!
4
கொக்கறுகோ கோ வென்றே உண்மையெடுத் தோதுங்
      குக்குடமே! சிற்சுகமே! பிறவியிருள் நீங்கிச்
சிக்கறவே மெய்ஞ்ஞான சூரியனாஞ் சேயோன்
      தெரிசனத்தை யான்பெறவே வரவொருகாற் கூவாய்!
தக்கதறி யாதுன்றன் தேகருசி கண்டே
      தமதுவயிற் றடக்குகின்றார் மாந்தர்பல ரந்தோ
பக்குவத்தைக் கண்டோருள் நாதநிலை கண்டே
      பரவிநெஞ்சத் தடக்கியுனைப் பேரின்பஞ் சார்வார்.
5
கோழியென்று பாடியுனைக் கும்பிட்டேன் கண்டாய்
      குமரேசர் தணிகேசர் என்முன் வரக் கூவாய்!
வாழியென்று வாழ்த்தியுனைப் போற்றுகின்றேன் கண்டாய்
      வள்ளிமலைச் செல்வரவர் என்முன்வரக் கூவாய்!
காழியன் கைச் சேவலென்றே துதிக்கின்றேன் கண்டாய்
      கதிர்வேலர் மயிலேறி என்முன்வரக் கூவாய்!
ஏழிசையின் பயனே யென் றேத்துகின்றேன் கண்டாய்
      எங்களுயிர்த் தலைவரவர் என்முன்வரக் கூவாய்!
6
உடுகொறித்த உனதுபிர தாபத்தைக் கூறி
      ஓயாது வாயார உன் புகழைப் பாடேன்!
மடுக்கணொரு யானைக்கு வந்துதவு மாயோன்
      மருமகனார் செங்கரத்தில் தங்கியொளிர் சேவல்!
தடுக்கவரி தாமிந்த வினைப்பவமாஞ் சுழியில்
      தடுமாறித் தவிக்கின்ற என்னையுங்கண் பார்த்தே.
எடு்கவுனக் கரிதோசொல் எந்தைமுரு கேசர்
      எழிற்கரத்தில் விளங்குகின்ற இன்பவுருச் சேவல்!
7
அங்கமெலா முருகநவ நவமான இசையில்
      அமைந்தருண கிரியார்சொல் திருப்புகழை நாளும்
பங்கமகற் றட்யார்கள் இன்பமுடன் கேட்கப்
      பாடுசச்சி தாநந்தன் மனக்கோயி லதன்கண்
துங்கமுடன் பொலிகின்ற செஞ்சூட்டுச் சேவல்!
      சூலமுடன் தண்டேந்தி நமன்வருங்கா லத்தே
இங்குளன்யான் அஞ்சாதே எனக்கூறி என்முன்
      எங்கள்துரை சாமிதணி கேசர்வரக் கூவாய்.
8

*************

வேலு மயிலும் சேவலும் துணை.

This file was last updated on 4 October 2011
.