திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" (3332-3408)
பகுதி 33-1 : பட்டீச்சுரப்புராணம்
பகுதி 33-2: திருவரன்குளப்புராணம்

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - 33-1 (3332-3408)
part 33-1: paTTIcap purANam (incomplete work)
part 33-2: tiruvarankuLap purANam (incomplete work
In tamil script, unicode/utf-8 format





திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 1 (3332- 3369)
பட்டீச்சுரப்புராணம் **




"பிரபந்தத்திரட்டு" - பகுதி 2 (3370- 3408)
திருவரன்குளப்புராணம்


கணபதிதுணை.
திருச்சிற்றம்பலம்

கடவுள்வாழ்த்து.
3370 சித்திவிநாயகர்.
சீர்பூத்த நறியமண முகமுன்வழி படுமன்பர் தேவ ராவா,
ரேர்பூத்த முகத்துநடுக் காட்டல்போ லாதுமுகத் தியைபு மோர்கை,
வார்பூத்த நுனிக்காட்டி மகிழவுறீஇ யவர்வேண்டும் வரங்க ணல்கும்,
பார்பூத்த சித்திமத குஞ்சரப்பொற் செஞ்சரணம் பணிந்து வாழ்வாம்.
1
3371 குடவாயில்விநாயகர்.
புனைமவுலி முடிமணியாய் மதாணிநடுப் பதிமணியாய்ப் பொருந ரேத்த,
வனைகழலொண் மணியாய்விண் மணிபொலிய வுயர்ந்துகுட வாரிவேலை,
வினையரக்கற் பந்தாடி வியன்குடநீர்க் கரையுயர்ந்து மேவி யன்பர்,
முனைபடரைப் பந்தாடுங் குடவாயின் மழகளிற்றை முன்னி வாழ்வாம்.
2
3373 தேரடிவிநாயகர்.
ஆதனத்தைச் சூழவரி பலவமர்ந்த வெனினுமிக லடுமோ ரியானை,
மாதனநட் புறாமெனிலச் சுறாவெனவச் சுற்றதனை வயக்கப் பூதி,
சாதனர்கை தொழுமிரதஞ் சார்ந்தமர்ந்தாற் போலமர்ந்து தாழ்வார் யார்க்குஞ்,
சேதனநன் கருள்புரியுந் தேரடிமால் களிற்றினடி சிந்தித் துய்வாம்.
3
3373 அரதீர்த்ததலேசர்.
அகரவுயி ரெனச்சதசத் தெங்குநிறைந் திந்திரனே யயனே மாலே,
பகரவரு முனிவரரே யேனையரே போற்றிவழி படுந்தோ றன்னார்,
நகரமக ரங்களைந்து பாறோன்று மான்முலைபோ னயந்து தெய்வச்,
சிகரகருக் கிருகமம ரரதீர்த்த தலேசரடி சிந்தித் துய்வாம்.
4
3374 பெரியநாயகியம்மை.
கருமுனிவார் கைகுவிக்குங் கண்ணுதற்கு மகளாகிக் கருத மீட்டுந்,
திருமுனிய றாயாகித் திகழுமொரு முறைமாறு செயல்குறித்தாங்,
கொருமுனிவன் றாயேயென் றுரைக்குமுறை யொடுமகளா மூழுங் கொள்ள,
வருமுனிவில் பெருங்கருணைப் பெரியநா யகிமலர்த்தாள் வணங்கி வாழ்வாம்.
5
3375 சபாபதி.
மலரவன்செய் தொழிலொருகை மாயவன்செய் தொழிலொருகை வானோ ராதிப்,
பலர்புகழு முருத்திரநா யகன்செய்தொழி லொருகைமறை பரவு மீசன்,
புலர்வருஞ்செய் தொழிலொருதாள் சதாசிவன்செய் தொழிலுமொரு பொற்றா ளாகக்,
கலரணுகா மணி மன்று ணடநவிலும் பெருமானைக் கருதி வாழ்வாம்.
6
3376 சிவகாமசுந்தரியம்மை.
வயாவருத்தத் துடனுயிர்க்கும் வருத்தமுமோ ரணுத் துணையு மருவு றாது,
தயாவின்மல ரவன்முதலெவ் வுயிர்களையு முயிர்த்துநனி தழைய நோக்கி,
வியாபகமாங் கொழுநனுக்கு வியாப்பியமாம் பதத்தின்பம் விளையு மாறு,
நயாவருளிற் பொதுநடனங் கண்டுகாட்டிடுபரைதா ணயந்து வாழ்வாம்.
7
3377 தக்ஷிணாமூர்த்தி. வேறு.
மறையெனும் புருட னாதி மாண்பினர்க் குபதே சித்தே
யிறைமைகொள் குரவர் தாமீ ரெண்மரு ளொருவ ராகு
நறைமலர் நிம்ப நீழ னயந்தபொற் கோயி னின்ற
முறையருட் குரவர் பாத முண்டக முடிமேற் கொள்வாம்.
8
3378 வைரவக்கடவுள்.
தேங்கமழ் மலரின் மேலான் செதுப்பழஞ் சென்னிபோக்குஞ்,
சாங்கமுந் திகிரிப் புத்தே டன்றிரு மேனி விம்மி,
வாங்கரு நெய்த்தோர் போக்கு முபாங்கமு மலர்க்கை யொன்றிற்,
பாங்கமை வடுகப் புத்தேள் பதமலர் பழிச்சி வாழ்வாம்.
9
3379 சித்திவிநாயகர்.
துன்றுசித் திகளுள் வார்க்குத் தொகுத்தலாற் சித்தி யானை,
நன்றுமெய் யறிவன் னார்க்கே நல்கலாற் சித்தி யானை,
யென்றுல கத்தி லாய்ந்தா ரிரட்டுற மொழிய வப்பே,
ரொன்றுபூண் டமருமுக்க ணொருத்தன்மா மலர்த்தாள் போற்றி.
10
3380 முருகக்கடவுள். வேறு.
உயிருயிர்க்கா சாரியனா காமையினாற் குரவுபுனை யுயிரைவேதஞ்,
செயிரில்சிவ மென்றேபா வனைபுரிதல் வேண்டுமெனச் செப்பவவ்வா,
றுயர்பியல்பே யமைசிவமு நன்குரவ னெனவணங்குமுயர்புவாய்ந்த,
பெயர்வரிய பெருமையின்மே லான்குமர வேல்சரணம் பேணி வாழ்வாம்.
11
3381 திருநந்திதேவர். வேறு.
மனமுதன் மூன்ற னால்யாம் வழிபடப் பெறுவா னாமெம்
மனகவா ரியன மக்கு முதற்குரு வாவா னோவாக்
கனமலி நந்திப் புத்தே ளெனக்காட்டக் கண்டோ மேலாத்
தினம்வழி பாடு செப்பான் வேறன்மை தேரான் கொல்லோ.
12
3382 அகத்தியமுனிவர்.
அலைபுனல் சூழுங் காஞ்சி யமைந்தமேற் றளியின் வைகு
கலைமுழு தோதா தோர்ந்த கவுணியர் வரவு நோக்கா
துலைவில்குற் றால மேயோ னொருசிவ மாக வன்னான்
றலைமிசை யங்கை வைத்த தமிழ்முனிக் கடிமை செய்வாம்.
13
3383 திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
மறைவிலக் காயபுத்த மார்க்கமே பொருளென் றோதி
நிறைதர முனஞ்சா தித்த நெடியமா னாணுட் கொள்ள
வறைதரு பவுத்தர் மும்மை யாயிரர் சைவ ராகிக்
குறையற வருட்க ணோக்கங் கொடுத்துளார்க் கன்பு செய்வாம்.
14
3384 திருநாவுக்கரசுநாயனார்.
அடுசினக் களிமால் யானை யதனொடு நனிபோ ராற்றி
விடுதலின் மருப்பி றுத்து வென்றமா னாணுட் கொள்ளப்
படுசம ணுய்த்த யானை பணிந்துசூழ்ந் தேத்தி யேக
விடுகலில் பதிகம் பாடி யிருந்தவர்க் கன்பு செய்வாம்.
15
3385 சுந்தரமூர்த்திநாயனார்.
தடஞ்சிலை முறித்து மேறு தழுவியுங் குறித்த மாதர்
படம்பரை யல்குற் பௌவம் படிந்தமா னாணுட் கொள்ள
விடம்படு மொருபெண் ணானை யெண்ணுபு குறித்த மாதர்
குடம்புரை கொங்கைப் போகந் துய்த்தவர் குலத்தாள் போற்றி.
16
3386 மாணிக்கவாசகசுவாமிகள்.
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போகஞ் சாரா
தகலரா வணையான் பூவா னாதியர் நாணுட் கொள்ளச்
சகலரா யிருந்து மேலாஞ் சிவானந்த போக மேசார்ந்
தகலரா தரியா வாத வூரர்தாள் சார்ந்து வாழ்வாம்.
17
3387 சண்டேசுரநாயனார்.
பிறப்பிறப் பொழியு மின்பம் பெறல்குறித் தவன்ஞா லத்துப்
பிறப்பிறப் புளானைத் தந்தை யெனக்கொளிற் பெறானென் றோவிப்
பிறப்பிறப் பிலானைத் தந்தை யேயெனப் பேணிக் கொண்டு
பிறப்பிறப் பொழிசண் டீசப் பிரானடி யிறைஞ்சி வாழ்வாம்.
18
3388 அறுபத்துமூவர்.
மனமணுத் துணையே யென்று நியாயநூல் வகுக்கு மேனு
மனகமெய்த் தவத்தா ராய வறுபத்து மூவ ராவார்
கனசரித் திரம னைத்துங் கவர்ந்துதற் குள்ள டக்கும்
வினவுறீ ரெவ்வா றென்று விடைவித்தி னாலே போலும்.
19
3389 பஞ்சாக்கரதேசிகர்.
விழியறி வுடையார்க் காய மெய்ஞ்ஞானப் பெருங்கோ முத்திச்
செழியரு ணமச்சி வாயன் றிருப்பெரும் பெயர்ந வின்று
மொழிவிலப் பெயர்பி றர்க்கு முரைத்துமந் தோவன் னானை
வழிபட நாணுஞ் சில்லோர் மடமைக்கோ ரொழிபு முண்டோ.
20
3390 அம்பலவாணதேசிகர்.
வரியளி முரலுஞ் சோலை யாவடு துறைக்கண் வைகு
மரியமெய்ஞ் ஞான மூர்த்தி யம்பல வாண தேவன்
பிரியமிக் கெனையாண் டென்பாற் பெறுவது விடாது பெற்றெற்
குரியதை யுலோபஞ் செய்யா துதவினா னுய்ந்து ளேனே.
21
3391 மற்றசிவநேசர்கள்.
பெரியநா யகித்தா யோடும் பெருந்திரு வரன்கு ளத்து
மரியநா யகர்பொற் கோயில் வழிபடு வார்கள் யாரும்
புரியுமத் தளியி னீங்கார் நீங்குதல் புணரு மேனும்
விரியுமென் னெஞ்சி னீங்கார் மேவிவீற் றிருப்பர் மாதோ.
22
3392 ஆக்குவித்தோர்.
மறைமுடி யமருந் தெய்வ மான்மிய நீறு பூசி
மறைபல விடத்து மோத வயங்குகண் மணிகள் பூண்டு
மறைநடுப் பொலியு மைந்து வன்னமா மனுக்க ணித்து
மறைமுறை யிட்டுந் தேறா மாதேவன் கழல்பூ சிப்பார்.
1
3393 திருவரன் குளப்பொற் கோயிற் றிருப்பணி யான வெல்லாம்
பொருவரு மன்பி னாலே பொதுத்திறங் கடிந்து செய்வார்
வெருவரு குபேர வாழ்க்கை மேலெனா வாழ்க்கை யுற்றார்
பெருவள வல்ல நாட்டிற் பெருங்குடி வணிக ராவார்.
2
3394 அரியயன் முதலோர் போற்று மரன்குளத் தலபு ரானம்
பிரியமிக் கமையு மாறு வடமொழி பெயர்த்தெ டுத்துத்
தெரியுநற் றமிழி னாலே செப்பிட வேண்டு மென்று
விரியுமெய்ப் பரிவிற் கேட்க விழைந்தியான் பாட லுற்றேன்.
3
3395 அவையடக்கம்.
சுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்
சுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே
நவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு
நவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான்.
1
3396 விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு
மட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்
கட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணி
லெட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார்.
2
3397 இருவருங் காண வெண்ணா ரீரிரு மறைக்கு மெட்டார்
திருவரன் குளத்து வாழ்மா தேவனா ரெனறெ ரிந்தும்
பொருவரு மவரைப் பாடல் புரிகுவ னன்பர் தம்பா
லருவருப் பிலரா யெண்மை யாதல்கை கொடுக்கு மென்றே
3
3398 சிறப்புப்பாயிரம்.
சீர்வருஞ் சிறப்பான் மிக்க திருவரன் குளப்பு ராண
மேர்வருந் தமிழாற் பாடி யினிதரங் கேற்றி னானா
றேர்வருங் கலையுந் தேர்ந்தோன் றிரிசிரா மலையில் வாழ்வோன்
சோர்வருங் குணமீ னாட்சி சுந்தர நாவ லோனே.
3399 திருநாட்டுப்படலம்
இறைவ னார்திரு வரன்குளப் பெருந்தல மெழுவாய்
நிறைத லம்பல கொடுநிலா வல்லநா டாதி
யறைத ரும்பல நாடுந்தன் னகங்கொடு பொலிந்து
முறைபி றழ்ந்திடா வளவர்நாட் டணிசில மொழிவாம்.
1
3400 சைய மால்வரைத் தாய்மனை நின்றெழூஉச் சலதி
யைய நாயகன் மனைபுக வணைதரு பொன்னி
வைய மாமகண் முகமெனும் வளவர்கோ னாடு
பைய நாடொறுந் தங்கிச்செஃ றானமாம் படித்தே.
2
3401 தாயி லாகிய சையமால் வரைமிசைத் தங்கு
மாயி லெண்ணிலா வயிரஞ்செம் மணிமுத லனைத்துந்
தோயில் சேர்தரக் கொண்டுபோய்த் தொகுத்தலா னன்றோ
பாயி லாழியை யரதனா கரமெனப் பகர்வார்.
3
3402 தங்கு நீடுநல் லூழுடை யார்புடைச் சார்வா
யெங்கு முள்ளவ ரீண்டிநட் பாகுத லேய்ப்பக்
கொங்கு நாட்டொரு குலவரை யாம்பிரத் தடியிற்
பொங்கு நீத்தமோ டெண்ணிலா றளாவுவ பொன்னி.
4
3403 கலியொ டும்பெரும் போர்செயக் கலித்தெழு பொன்னி
மலிது ரோணம்வேய்ந் தடைந்தென நுரையொடும் வருமால்
பொலியு மாம்பிரத் தடியெழு குடிஞையும் பொற்ப
வொலிகு லாமதற் குடன்பட்டாற் போற்சிவந் துறுமால்
5
3404 பொன்னி மாநதிக் கரையிரு மருங்கினும் பொலிய
மின்னி யாகசா லைகள்பல மிடைகுவ வாங்கண்
வன்னி மேலெழு தூபம்வா னளாய்ச்சுரர் வைய
முன்னி மேவுற மனுச்செவி புகாமுன முய்க்கும்.
6
3405 மாட மேனலார் குழற்கிடு விரைப்புகை வாசங்
கூட வானயாற் றாடர மங்கையர் கூந்த
லூட ளாய்முரு கேற்றலி னறுவிரை யுற்று
நீட லோர்ந்தவ ரியன்மண மென்பது நிசமே.
7
3406 முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி
யதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியா
லுதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்
பிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும்.
8
3407 முனிவர் பற்பல ரடைந்துகா விரிப்புனன் முழுகிக்
கனிவ ரும்பவெண் ணீறொருங் கணிந்திருள் கடிந்து
பனித புங்கதி ரெதிர்பரப் பியசடைத் திவலை
யினிய செந்துகிர் நித்தில முகுத்தென வியையும்.
9
3408 தழைசெ றிந்தபைம் புன்னைக ணடுவெழூஉத் தழைதீர்ந்
துழைசெ றிந்திடப் பலமர்ந் தோங்கிய முருக்கு
மழைபொ ருங்குழற் றிருமகண் மணாளனா மழைமேல்
விழைய வெம்பிரா னிவர்ந்தவோர் காட்சியே விழையும்.
10
work left incomplete by mInATcuntaram piLLai

This file was last updated on 25 Feb. 2010.
Feel free to Webmaster.