வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய
"பாடற்றிரட்டு"

pATaRRitaTTu
of V.O. citamparam piLLai

வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய
"பாடற்றிரட்டு"


Source:
ஸ்ரீமான்
வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய பாடற்றிரட்டு

முதற்பாகம் :
பிள்ளையவர்கள் சிறைக்குச் சென்றதற்கு முன் பாடிய தனிப்பாடல்கள்.
இரண்டாம்பாகம்:
பிள்ளையவர்கள் சிறையில் வசித்த காலத்தில் பாடிய தனிப்பாடல்கள்.

இந்தியா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை.
1915.
-----------------------------

சிறப்புப்பாயிரம்

ஸ்ரீமான் வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இராஜ நிந்தனைக் குற்றத்திற்காகச் சிட்சிக்கப்பட்ட காலத்திற்கு முன்னர் பாடிய தனிப்பாக்களும் அவர்கள் சிட்சிக் கப்பட்டுக் கோயமுத்தூர் சிறையில் வசித்தகாலத்திலும் கண்ணனூர் சிறையில் வசித்தகாலத்திலும் பாடிய தனிப்பாக்களும் இப்பாடற்றிரட்டில் அடங்கியிருக்கின்றன.

இதிலுள்ள பாக்களிற் பெரும்பாலன வெண்பாக்கள். மற்றவை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை முதலியன. இப்பாக்கள் இனிய செந்தமிழில் இயற்றப்பட்டுள்ளன. சங்கீதஞானம் தமக்கு இல்லை யெனச் சொல்லாநின்ற பிள்ளையவர்கள் இப்பாக்களைப் பாடியது ஒரு வித்தகச் செயலென்றே சொல்ல வேண்டும்.

இந்நூலிலுள்ள ஈகை, அன்பு, உண்மை முதலிய ஒழுக்கப் பாக்களும் பதிபசுச்செயல்கள், கடவுள் உண்மை, கடவுளுக்குக் காவல்தொழிலை அளித்தல் முதலிய ஞானப்பாக்களும் படிக்கப்படிக்க மிகுந்த சந்தோஷத்தை விளைக்கின்றன. ஸ்ரீமான் பிள்ளையவர்களும் அவர்களது நூல்களும் பிறவும் நீடூழி நின்று வாழ்க.

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.} நிரதிசய-பாலசுந்தர சுவாமி.
ஆனந்த தை 25 உ }
-----------------------------------------------------------

பாயிரம்.

எனது தனிப்பாடல்களில் முந்நூற்றைம்பது வெண்பாக்களும், ஒருதாலாட்டும், மூன்று விருத்தங்களும், பதினைந்து கட்டளைக் கலித்துறைகளும், நானூற்று நாற்பத்துமூன்று வரிகள்கொண்ட பதினொரு நிலமண்டல ஆசிரியப்பாக்களும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. யான் இராஜநிந்தனைக் குற்றத்திற்காகச் சிறைக்கு அனுப்பப் பட்டதற்குமுன் யான் பாடிய பாக்களில் தொண்ணூற்றேழு இதன் முதற் பாகமாகவும் யான் சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாக்களில் இருநூற்றெண்பத்துநான்கு இதன் இரண்டாம் பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண இலக்கியப் பயிற்சி இல்லாதாரும் எனது பாக்களின் பொருள்களை இனிது உணருமாறு எனது பாக்களில் ஆங்காங்குக் காணப்படுகிற அரும்பதங்களுக்கு உரைகள் எழுதி இதன் முடிவில் சேர்த்துள்ளேன்.

இப்புத்தகத்திலுள்ள முந்நூற்றெண்பது பாக்களில் ஏறக்குறைய ஒருநூறு கடவுளைப்பற்றிக் கூறுவன; மற்றொருநூறு ஒழுக்கம் முதலியவற்றைப்பற் றிக் கூறுவன; மீதநூற்றெண்பதும் எனது சுற்றத்தார் களுக்கும் நண்பர்களுக்கும் யான் எழுதியவை.
இப்பாக்கள் யான் என்ன சமயத்தைச் சேர்ந்தவனென்பதையும், எனதுமனம் எதனை முதன்மையாகப் பற்றி நிற்கின்றதென்பதையும், யான் சிறையில் எனது கால த்தை எவ்வாறு கழித்தேனென்பதையும், எனது சுற்றத்தார்களிலும் நண்பர்களிலும் யார்யாரை எவ்வெவ்வாறு யான் நேசித்து வருகிறேனென்பதையும், எனக்கு அவர்கள் என்ன என்ன உதவிகள் செய்துள்ளார்களென்பதையும், யான் எனது சிறைவாசத்தில் எவ்வித மேம்பாட்டை அடைந்துள்ளே னென்பதையும் வெளிப்படுத்தும்.

யான் சிறையில் சுகமாயிருந்து படித்தற்கும் எழுதுதற்கும் எண்ணரிய உதவிகள் புரிந்து யான் அங்கிருந்து எழுதியனுப்பிய நூல்களையும் பிறவற்றையும் பாதுகாத்து வைத்திருந்து யான் வெளிவந்த பின்னர் என்னிடம் தந்து கோயமுத்தூரில் இனிது வாழ்ந்துவரா நின்ற எனது மெய்த்தம்பி சிரஞ்சீவி கோ. அ. இலக்குமணபிள்ளைக்கும் யான் சிறையுட் புகுந்த நாள்முதல் எனது குடும்பத்தாருடைய சரீரப் பாதுகாப்புக்கும் எனது நூல்களை அச்சிடுவதற்கும் பொருள் உதவிக்கொண்டு தென் ஆபிரிக்காவில் இனிது வாழ்ந்துவரா நின்ற எனது மெய்ச்சகோதரர் ஸ்ரீமாந் சொ. விருத்தாசலம்பிள்ளை யவர்களுக்கும் ஸ்ரீமாந் த. வேதியப்பிள்ளை யவர்களுக்கும் யானும் எனது குடும்பத்தாரும் நன்றியறிதலுள்ளவராயிருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

திருமயிலை, சென்னை. } வ. உ. சிதம்பரம்பிள்ளை.
ஆனந்த தை 11 }
----------------------------------------


மெய்யறம்.
இதனைப்பற்றிய மதிப்புரைகள்:


"ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய மெய்யறம் ஐந்தியலும் நூற்றிருபத்தைந் ததிகாரமுமாக முடிந்தநூல். ஐந்தியல்களாவன - முப்பததிகாரங்கொண்ட மாணவவியல், முப்பததிகாரங்கொண்ட இல்வாழ்வியல், ஐம்ப ததிகாரங்கொண்ட அரசியல், பத்ததிகாரங்கொண்ட அந்தணவியல், ஐந்ததிகாரங்கொண்ட மெய்யியல் என்பவை. ஒவ்வோரதிகாரமும் பப்பத்து வெண்செந்துறை கொண்டுள்ளது. முப்பாலில் அறமும் பொருளுந்தழுவி கால வேறு பாட்டிற்கு வேண்டும் விகற்பங் கூறலால் இந்நூல் திருவள்ளுவப்பயனுக்கு வழி நூலாக விளங்குகின்றது. முது மொழிக்காஞ்சி போன்று திட்பமும் நுட்பமுஞ் சிறந்து இழு மென்மொழியால் விழுமிய பொருள் உரைத்தலால் இந்நூல் தோல் என்னும் வனப்பு வாய்ந்தது. தமிழ்ப்புலவரே யன்றி இங்கிலிஷ் படித்த புலவரிற் பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின் அருமை தானே புலப்படு மாதலால், அதனை இங்கு விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக என்பது என் வேண்டுகோள். "
- ஸ்ரீமாந் தி. செல்வகேசவராய முதலியாரவர்கள், சுதேச பாஷைகளின்
அத்தியக்ஷகர், பச்சையப்பன் உயர்தரக் கலாசாலை, சென்னை.

"இந்நூல் சிறுசிறு செய்யுளாக இனிய செந்தமிழ் நடையில் இயற்றப்பட்டிருப்பதால் தமிழ் நாடெல்லாம் பரவுமென்பது நிச்சயம். இது மனிதர்களுக்கு இன்றியமையாத நீதி சாஸ்திரங்களிலுள்ள நித்திய நீதிகளை எடுத்தக் கூறுவதால் தற்காலம் தமிழ்க் கட்டுக்கதைகளை மாத்திரம் படிக்க முற்படுகின்ற அநேகருடைய சுவைக்கு மேற்பட்டதாயிருக்கு மென்பதில் சந்தேகமில்லை. இம்மேம்பாடே தமிழ்கற்கும் ஒவ்வொரு மாணவரும் இந்நூலைக் கற்கவேண்டுமென்பதற்குத் தக்க காரணமாகும். கலாசாலைகளைச் சேர்ந்த புத்தக சாலைகளில் அவற்றின் நிர்வாக கர்த்தர்கள் இந்நூலை வாங்கி வைப்பார்களானால் ஒரு பெரிய நன்மை செய்தவர் களாவார்கள்",
- பிரஹ்மஸ்ரீ. பா. வே. நரசிம்ஹ அய்யரவர்கள், சட்ட சபை அங்கத்தினர், சென்னை.

" இந்நூலிற் கூறியுள்ள அருமையான பொருள்களை யான் இனி துணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை இக்காலத் திய கருத்துக்களால் மணப்படுத்தி அற்பக் கல்வியுடையாரும் உணரத்தக்கவாறு செய்யலா மென்பதை இந்நூல் காட்டுகின் றது"
-- பீரஹ்மஸ்ரீ. ச. இராஜகோபாலச் சாரியவர்கள், ஹைக்கோர்ட்டு வக்கீல், சேலம்.

"மெய்யறம்" என்னும் நூலைப்படித்தேன். இதற்கு "மெய்யறம்" என்ற பெயர் முற்றிலும்தகும். ஸ்ரீலஸ்ரீ சகஜா நந்த சுவாமி அவர்கள் "வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம்" என்று சிறப்புப் பாயிரத்திற் கூறியது பூரண பொருத்த முடையதே. ஆசிரமம் நான்கையும், புருஷார்த்தம் நான்கையும் சுருக்கித் தெளிவுறப் போதிக்கும் சற்குருவென்றே இந்நூலைச் சொல்லலாம். இதன் வாக்கும், போக்கும், யாப்பும், பொருளும் கற்றோர் வியக்குங் காட்சியாக விளங்குகின்றன. இது பன்னூற்படித்துந் தடுமாறச்செய்யும் ஐயப்பாடுகளை அறவே யொழித்து உண்மையினுட்பட்ட நீதி யொன் றனையே எடுத்துக்காட்டும் இயல்பிற்று. இதனைத் தமிழின் தெளிவும், அறத்தின் தெளிவும், அறிவின் தெளிவு மென்றே கூறவேண்டும். இதனைத் தமிழுலகத்திற்குத்தந்து பேருபகாரம் செய்த ஸ்ரீமாந் பிள்ளையவர்களுக்குத் தமிழுலகம் என்றுங் கைமாறியற்ற இயலாது. இவர்கள் எண்ணிய கருமத்தை இறைவன் இனிது முடித்துத் தமிழுலகத்தை யுய்யச் செய்வானாக."
- ஸ்ரீமாந் த. வேதியப்பிள்ளை யவர்கள் கீம்பர்லெ, தென் ஆபிரிக்கா.

" இந்நூல் ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கண்ணனூர் சிறையரணில் வசித்தகாலத்தில் இயற்றிய தமிழ்ச் செய்யுள் நூல்களில் ஒன்று. இது திருவள்ளுவர் திருக் குறளுக்கு வழிநூல். திருக்குறளிற் கூறியுள்ள பொருள்களில் நமது நாட்டின் தற்கால நிலைமைகளுக்குப் பொருத்தமாகச் சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் இது கூறுகின்றது. ஔவையாரது கொன்றைவேந்தன் சூத்திரத்தைப் போன்ற ஒவ்வோர் அடிச் சூத்திரத்தால் இது இயற்றப்பட்டுள்ளது. இது மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. மாணவவியல் முப்பது அதிகாரங்களையும், இல்வாழ்வியல் முப்பது அதிகாரங்களையும், அரசியல் ஐம்பது அதிகாரங்களையும், அந்தணவியல் பத்து அதி காரங்களையும், மெய்யியல் ஐந்து அதிகாரங்களையும், ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துச் சூத்திரங்களையும் கொண்டுள் ளன. நூலின் பொருள்களைப்பள்ளிச் சிறுவரும் தெள்ளிதில் உணருமாறு சூத்திரங்கள் இனிய செந்தமிழ் நடையில் ஆக்கப் பட்டுள்ளன. நூலில் ஏகதேசமாகக் காணப்படும் அரும்பதங் களுக்கு உரைகள் நூலின் முடிவிற் சேர்க்கப்பட்டுள்ளன.
திருக்குறளுக்குப் பின்னர் இதுகாறும் இத்தகைய தமிழ் நூல் வெளிவந்திலது.
திருக்குறளைக் கற்க விரும்புவோருக்கு இந்நூல் ஓர் உரை ஆசிரியர் போன்று வள்ளுவர் கருத்துக்களைப் பொள்ளென விளக்கும். திருக்குறளைக் கற்றுள்ள பண்டிதர்களுக்கும் இந்நூல் பல புதிய பொருள்களைத் தெரிவிக்கும். இவ்விரு திறத்தார்களுக்கும் இந்நூல் துணையாகு மென்றால் ஏனையோர்களுக்கு இந்நூல் எவ்வளவு பயன்படுமென்பது சொல்லாமலே விளங்கத்தக்கது. இந்நூற் பொருள்களின் அருமையும் பெருமையும் அவற்றைக் கூறியுள்ள திறமைப் பாடும் இந்நூலை ஒருமுறை பார்த்த மாத்திரத்தில் விளங்கும். தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் இந்நூலைக் கைக் கொண்டு கற்க வேண்டுவது அத்தியாவசியகம். இது டபிள் கிரௌண் பதினாறு பக்கங்களுள்ள ஆறு பாரங்கள் கொண்டுள்ளது."
-- இந்து நேசன், சென்னை.

" மெய்யறம் என்னும் இந்நூல் கொன்றை வேந்தன் என வழங்கும் சிறந்த நீதி நூலைப்போல் அரிய பெரிய நீதிகளை யெல்லாம் தன்னகத்துட் கொண்டு விளங்குகின்றது. "உருவுகண் டெள்ளாமை வேண்டும்" எனற்கிலக்காக மிகச் சுருங்கிய சொற்களால் யாக்கப்பட்ட சிறு சிறு பாக்களாலமைந்த இந்நூல் 10 பாவுக்கு ஓரதிகாரமாக 125 அதிகாரங்கட்கு 1250 பாக்களடங்கப் பெற்றது. இவ்வதிகாரங்களில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களை விளங்கக் காணலாம். மற்றும் ஒரு மனிதன் தெரிந்து கொள்ளத்தக்க எல்லாவித அறிவையும் தெள்ளிது புலப்படுத்தும் பெருமை பெற்றுள்ளது இது. அணுவைத்துளைத் தேழ் கடலைப் புகட்டியது போல ஒவ்வொருபாவினும் அமைத்துள்ள அரும்பெரும் பொருட் பெருக்கத்தை நோக்கி வியவாதார் இரார். இத்துணைச் சிறப்புவாய்ந்த இவ்வரிய நூலை இயற்றிய உலகப்பிர சித்தரான ஸ்ரீமாந் வ.உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் கவிராஜ குடும்பத்தில் பிறந்தவர்களென்பதை இந்நூல் நன்கு வெளி யிடுகின்றது. ".
-- வித்தியாபாநு, மதுரை.

"ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களால் வெளியிடப்பட்ட மூன்றாவது புஸ்தகம் இது. ஆனால் அவர்கள் இதன் முன்னர் வெளிப்படுத்திய "அகமேபுறம்", "மனம்போலவாழ்வு" என்னும் இரண்டு புஸ்தகங்களும் ஆங்கில பாஷை நூல்களினின்றும் மொழி பெயர்க்கப்பட்டவை. "மெய்யறம்" என்னும் பெயரைக் கொண்ட இப்புஸ்தகம் திருக்குறளைப் பெரும் பான்மையும் அஸ்திவாரமாகக் கொண்டு இவர்கள் ஸ்வயமே இயற்றிய நூல்.
*** இப்புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ள நீதிகளெல்லாம் மிகவும் அருமையானவை யென்றும், ஜனங்கள் ஆழ்ந்து ஆலோசிக்கும் படியான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன வென்றும் நாம் நினைக்கிறோம்.
***. இந்நூலினுட் புகுந்து சிலவற்றை ஆராய்வோம். மாணவ வியலில் முதலாவது அதிகாரத்தில் "ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்" என்பது மாணவரது கடமைகளுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே மாணவர் கடமை யென்று கூறினும் பொருந்தும்.
*** கல்வி மூளையைப் பலப் படுத்திக் கூர்மைப் படுத்துவது. ஒழுக்கம் ஹிருதயத்தைச் சுத்தம் செய்வது.
*** கல்வியும் ஒழுக்கமும் ஒருவனிடத்தே ஒன்று சேருமாயின், அவன் இகத்திலும் பரத்திலும் சுகமுறுவான் என்பதிற் சந்தேகமில்லை. ஆசிரியரது கடமைகளுள் "சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்." என்பது ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.
*** இது மாணவரை வெறும் புஸ்தகப் பூச்சிகளாக்குவதிற் பயனில்லை யென்றும் அநுபவஞான முடையவர்களாக்க வேண்டுமென்றும் வற்புறுத்து கின்றதன்றோ? உடம்பை வளர்த்தல் என்னும் அதிகாரத்தில் "நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க" என்று கூறப்பட்டுள்ளது. நினைத்தபடியுடல் வளைந்தாலன்றோ அறிந்துள்ள விஷயங்களை அநுபவத்திற்குக் கொண்டுவரலாம்.
*** உடல் வளைத்து வேலை செய்பவர் நமது நாட்டில் எத் தனை பேர் உளர்? நமது நாடு க்ஷேமமடைய வேண்டுமாயின், எத்தேசத்தாருக்கம் இடம் கொடுத்து எல்லாரையும் ரட்சித்துவரும் நமது பாரதமாதா மேன்மையடைய வேண்டுமாயின் நமது ஜனங்கள் நினைந்தபடியுடல் வளைந்திட வளர்க்க வேண்டுமன்றோ?
*** அரசியல் அதிகாரங்கள் அனைத் தும் இராஜாங்க வியவகாரங்களில் மனத்தைச் செலுத்துகின்ற ஒவ்வொருவரும் மனனம் பண்ணத்தக்கது.
--- அரசியல் அதிகாரங்கள் படிக்கப்படிக்க ஆநந்தத்தைத் தருகின்றது; அறிவைப் பெருக்குகின்றது. அந்தணவியல் அந்தணரியல்பு கூறுமிடத்து "அரசர்நல் லுயிரெலா மளிக்குந் திறத் தினர்," "அனைத்துயிர் தம்மையுமளிப்பவ ரந்தணர்" என்னும் சூத்திரங்களால் அரசரது தருமத்திற்கும் அந்தணரது தருமத்திற்கு முள்ள வேற்றுமை யெடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. *** இங்ஙனமே நாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து செல்வோ மாயின் விரியுமென்றஞ்சி நமது அபிப்பிராயத்தை முடிக்கின்றோம். இந்நூல் மிகச் சிறந்தது; அனைவராலும் படிக்கப்பட வேண்டியது. கலாசாலைகளில் இந்நூல் மாணவர் களுக்கு ஒரு பாடப்புத்தகமாக வைக்கப்படுதல் நன்று."
- ஞானபாநு, திருமயிலை, சென்னை.

" மெய்யறம் என்னும் இந்நூலும் நமது தேசபக்த சிரேஷ்டரான ஸ்ரீமாந். வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்டதே யாம். இது முற்காலத்திலிருந்த வள்ளுவரும், ஔவை நாச்சியாரும் இயற்றிய நூல்களுக்கொப்ப அறம், பொருள், இன்பம், வீடு என்னும் எல்லாவற்றையும் ஒருங்கே போதிக்கும் நீதி நூலாகும். அவ்விருவர் காலத்திற்குப் பின்னர் இது காலம்வரை இப்படிப்பட்ட திட்பநுட்பமான நூல் எவராலும் இயற்றப்பட்டிருப்பதாக நாம் அறியோம். இதைச் சிறுவர் முதல் வித்துவான்கள் இறுதியாக யாவரும் கைக்கொண்டு வாசித்துப் பயன் அடைதல் பொருந்தும்என்போம் நாம்."
-- விவேகபாநு, டர்பன், தென் ஆபிரிக்கா.

"ஸ்ரீமாந். வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள "மனம்போல வாழ்வு", "அகமே புறம்", என்னும் இரண்டு நூல்களையும் வாங்கிப்படித்து உருசி கண்டவர்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது அச்சிடப்பட் டிருக்கும் "மெய்யறம்" என்னும் இந்த நூலையும் இனி அச்சிடப்படும் மற்ற நூல்களையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்து வாங்கித் திரும்பத் திரும்பப் படித்துப் பயன்படுவார்க ளென்பதில் சந்தேக மில்லை. மெய்யறம் என்னும் இந்தப் புதிய நூலில் இம்மை மறுமைப் பயன்களையும் நாம் அடைவதற்கு இன்றியமையாத சாதனங்களாயுள்ள சகல ஒழுக்கங்களையும் 125 அதிகாரங்களாக வகுத்து அவைகளைப்பற்றித் தெளிவாகவும், சுலபமாகவும், சுருக்கமாகவும் இனிய செந்தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. பிள்ளையவர்களுடைய நூல்களை வாங்கிப்படித்-திராதவர்களும் இந்நூலை வாங்கிப் படித்துப்பயனடையக் கோருகிறோம்.."
-- பூரண சந்திரோதயம், மதுரை.

"இந்நூலின் பெயருக்கேற்றாப்போல ஆண் பெண், சிறுவர் சிறுமிகளுக்கு அவசியமாயுள்ள அநேக நீதி தர்மங்கள் இதில் நிறைந்துள. இது பாடசாலையில் ஓதும் வித்தியார்த்திகளுக்கும் வித்தியார்த்தினிகளுக்கும் மிகவும் உபயோகமாகும். இதை ஒவ்வொருவரும் வாங்கி வாசித்தல் ஆவசிய கமாம்."
-- ஹிதகாரிணி, சென்னை.

"இப்புத்தகம் அரிய பல நீதிகளை ஒவ்வோரடிச்சூத்திரம் 10 கொண்ட மாணவர் கடமை முதல் மெய்ந்நிலை யடைதல் இறுதியாக 125 அதிகாரங்களையுடையது. கற்றற் கெளிது. அரும்பதவுரை யமையப்பெற்றது. ஒவ்வொரு தமிழரும் கையாளவேண்டிய அவசியமான நூல்.."
- கமலாஸனி, திருவாரூர்.

"இந்நூலில் மெய்ம்மையான அறங்களெல்லாம் ஒவ்வோரடிப்பாவால் வகுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மாணவ வியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் ஐந்தியல்களும், ஒவ்வோரியலுள்ளும் பற்பல அதிகாரங்களும் இதனுள் அடங்கப் பெற்றுள்ளன. செய்யுள் மொத்தம் 1250. திருவள்ளுவர் குறள் முதலாம் பழைய நீதி நூல்களிற் கூறப்பட்டுள்ள அருமையான அறநெறிகள் அனேகம் தற்கால வியற்கைக்கேற்கச் சிறப்பாக இதில் ஆங்காங்கு நிறுத்தப் பட்டிருக்கின்றன வாதலின், மேற்படி நீதி நூல்களுக்கு இது வழிநூலும் விருத்தியுமாமெனச் சொல்லத் தக்கது. அற நெறியைக் கைப்பிடித்தோ ரெவர்க்கும் இதில் அதி இன்பம் பயக்கும் ஞானம் மிக உண்டு. சொன்னயம் பொருணயம் மிகரசமானவை."
- உதயதாரகை, யாழ்ப்பாணம்.
----------------

அகமேபுறம்.
இதனைப்பற்றிய சில புதிய மதிப்புரைகள்:-


"அகமே புறம் என்னும் இந்நூல் மொழி பெயர்ப்பாளராகிய ஸ்ரீமாந் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் கைந்நலத்தால் முதனூலிலும் சிறந்து விளங்குகின்றதென ஐயமறக் கூறலாம். ஸ்ரீமாந் பிள்ளையவர்கள் தமிழுலகத்திற்குப் புதியரல்லர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்கள் அடைந்துள்ள பாண்டித்யத்தை அளவிட்டறிதற்கு இந்நூலே ஒரு சிறந்த அளவுகோலாம். முதனூலின் ஆழ்ந்த கருத்துக்களை சிறுவர் சிறுமியரும் எளிதிலுணர்ந்து கொள்ளத்தக்க எளியதெள்ளிய செந்தமிழ் நடையில் விளக்குவித்த பிள்ளையவர்கள் திறமை யாவராலும் பெரிதும் மதிக்கற்பாலதேயாம். இவ்வரிய நூலைத் தமிழ் மக்களாவார் ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பயனுணர்வார்களாயின், தமிழுலகெங்கும் அறமுகில் பரந்து, அன்பு மழை பெய்து, இன்பப்பயிர் செழிக்கு மென்பதற்கு எட்டுணையும் ஐயமின்று."
- தமிழன், திருவனந்தபுரம்.

"சுகமும் துக்கமும், மகிழ்வும் நோவும், திடமும் அச்சமும், விருப்பும் வெறுப்பும், அறிவும் மடமையும் அகத்திலன்றி வேறு எங்கும் இல்லை, அவை யாவும் மனோ நிலைமைகளே யன்றி வேறல்ல என்று இந்நூலில் சொல்லப்பட்டிருப்பது போல அம்மனோ நிலைமைகளூக்கொத்தபடி வாழ்வும் அமைகின்றது என்பதை இந்நூல் விளக்குகின்றது. நிற்க, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் சுலபமாக அடைதற்குத் தக்க மார்க்கங்கள் இதில் தெளிவாய் கூறப்பட்டிருக்கின்றன. இதன் முதனூலாசிரியரின் கருத்துக் கிணங்கிய தமிழ்நூலாசிரியர்களின் முதுமொழிகள் இதில் சிற்சில விடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மிஸ்டர் பிள்ளை அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவராயிருந்தும் தம்முடையா வித்வ சாமர்த்தியத்தைக் காண்பிக்கவேண்டு மென்கிறா அவாவில்லாமல் சாமானிய படிப்பாளிகளூம் வாசிக்கும்படியான எளிய செந்தமிழ் நடையில் எழுதியிருக்கிறார். தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் இதை அவசியமாக வாங்கி வாசித்துப் பயனடைய வேண்டுமென்பது நம்முடைய வேண்டுகோள்."
– சென்னை வியாபாரி, சென்னை.

"இது லௌகிக உந்நத நிலையையும் வைதிக உந்நத பத வியையும் சுலபமாக அடையச்செய்யும் மார்க்கங்களை வரிசை படுத்தித் தெளிவாகக் கூறுகின்றது. இதனைக் கற்றுணர்ந்து இதிற்கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம். இதுவரை தமிழில் வெளிவந் துள்ள வசனநூல்களுள் இதுபோல மனிதசமூகத்திற்கு இம் மை மறுமைப் பயன்களை அளிக்கவல்ல நூல் வேறொன்று மில்லை யென்பது நமது அபிப்பிராயம். இது தமிழ்மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டுவது அவசியம்."
– வித்தியாபாநு, மதுரை.

"இதன் ஒவ்வொரு பக்கத்திலும், மனஸ்தத்துவங்களை அபிவிர்த்திசெய்து இகபர நன்மைகளைப் பெற்றுய்யும் வழி துலக்கமாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. வித்தினின்று விருக்ஷமுண்டாவதுபோலவே, அகத்தில் மறைந்து கிடக்கும் கூறுகளை புறமாக வெளிப்படுகின்றன என்பதே இப்புத்தகத் தின் சித்தாந்தம். ஒருவருடைய சுகதுக்கமும், நன்மை தின் மையும், உயர்வு தாழ்வும் ஆதியில் அவனுடைய உட்புறமான ஆத்மாவினிடத்தே அமைந்து பிறகுவெளிப்புறமாகத் தோன்று கின்றமையால் ஒவ்வொருவரும் தமதுஉள்ளத்தைச் செம்மைப் படுத்திக்கொண்டு துக்கமென்னுங் கடலுக்குத் தப்பி இம்மை மறுமை நலங்களை எய்துவதற்கு அவர்கள் இன்னின்ன சாத னங்களைக் கையாடவேண்டுமென்று தெளிவாகவும், ஸ்வாரஸ்யமாகவும் இப்புத்தகத்தில் எடுத்துக் காட்டியிருக்கின்றமையால் தமிழறிந்த ஒவ்வொருவரும் இதை அகத்தியம் வாங்கிப் படித்துப் புருஷார்த்தங்களை யடையவேண்டுமென்று கருதுகிறோம். இப்புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீமாந் சிதம்பரம்பிள்ளையவர்களுக்குத் தமிழுலகம் நன்றி செலுத்தக் கடன்பட்டிருக்கிறது."
-- சுதேசபரிபாலினி, இரங்கோன்.

"இந்தப் புஸ்தகம், நம்மவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக வாசித்து, சிந்தித்து, அநுஷ்டானத்திற் கொள்ள வேண்டிய விஷயங்களை யடக்கி யிருப்பதுமன்றி சிறந்த தமிழில் எழுதப் பட்டும் நேர்த்தியான ஸ்வதேசியக் கைத்தொழில் முயற்சியாலான காகிதங்களில் அழகான முத்துப்போன்ற அக்ஷரங்களால் அச்சியற்றப் பெற்று முள்ளது."
- பூரணசந்திரோதயம், மதுரை.


விஷய சூசிகை
முதல்பாகம். .

இலக்கம் விஷயம் பாஇனம் -- பா. / வரி.
1 கணபதி துதி. வெண்பா -- 1
2 ஈகை. வெண்பா --10
3 அன்பு. வெண்பா --10
4 உண்மை வெண்பா -- 10
5 தமது முதல்மனைவி சிவபதம் அடைந்த போது சொல்லிய பாக்கள். வெண்பா --10
6 அவளது நற்செயலைப் பற்றிய பாக்கள். வெண்பா --10
7 ஸ்ரீ.வ.சண்முகம் பிள்ளையவர்கள் சிவபதம் அடைந்தபோது சொல்லிய பாக்கள். வெண்பா--3
8 சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசித்தபோது சொல்லிய பா. வெண்பா--1
9 சேத்தூர் ஸ்ரீஇராமசுவாமிக் கவிராயரவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா -- 3
10 சிரஞ்சீவி உலகனாதனைத்தொட்டிலில் இட்டபோது பாடிய பா. தாலாட்டு-- 1
11 தமது மனைவியார் தமது புதல்வனுக்கு மருந்து கொடுக்க
வேண்டுமென்றபோது கடவுளை வினாவிய பா.
வெண்பா -- 1
12 கடவுள் சொல்லிய வினாவாகப் பாடிய பா. வெண்பா -- 1
13 மௌனம் இன்ன தெனல். - வெண்பா -- 1
14 ஒரு சிவராத்திரியிற் சொல்லிய பாக்கள். வெண்பா --2
15 முடிமன் சி.முத்துசுவாமிப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள். வெண்பா-- 2
16 முடிமன் சி.முத்துசுவாமிப் பிள்ளையின் பிணிநீங்கத் திருமாலை
வேண்டிப் பாடிய பாக்கள்.
வெண்பா -- 10
விருத்தம் -- 3
17 ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள். வெண்பா-- 6
18 தமது மனைவியோடு ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த மார்க்கத்திற் பாடிய பாக்கள். வெண்பா --2
19 பாளையங்கோட்டை ஸ்ரீ.பி.நாராயணசாமி நாயுடு அவர்கள்
கிரகப்பிரவேசத்தின் போது பாடிய பா.
வெண்பா-- 1
20 முகவையூர் ஸ்ரீ. இராமசாமிக் கவிராயரவர்களுக்கு எழுதிய பா. வெண்பா --1
21 குறுக்குச்சாலையிற் பாடிய பா வெண்பா -- 1
22 பேட்டைக் கணபதிகோயிலிற் பாடிய பா. வெண்பா -- 1
23 மெய்ப்பொருளை நோக்கிப் பாடிய பா. வெண்பா -- 1
24 ஸ்ரீ சிவபெருமானை நோக்கிப் பாடிய பா. வெண்பா -- 1
25 ஸ்ரீ விஷணுவைத் தொழுவோர் அடையும் பலன்கள். வெண்பா -- 1
26 கடவுளும் வாணியும் ஒன்றெனல். வெண்பா -- 1
27 வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள். வெண்பா -- 1
28 திருமந்திரநகர் சைவசித்தாந்தசபை 22-வது வருடோற்சவ அக்கிராசனர் வாழ்த்து. ஆசிரியம் -- 99
--------------
விஷய சூசிகை: இரண்டாம் பாகம்.
இலக்கம் விஷயம் பாஇனம் --- பா. / வரி.
29 கணபதி பஞ்சகம். வெண்பா ------ 5
30 மெய்ப்பொருள் வாழ்த்து. கலித்துறை --- 27
31 ஸ்ரீ. அ.மு.ம. அறம்வளர்த்தசுந்தரம் பிள்ளையகளுக்கு எழுதிய பாக்கள். வெண்பா - 10
32 ஸ்ரீ.க.க. சுப்பிரமணிய முதலியாரவர்களுக்குஎழுதிய பாக்கள். வெண்பா - 5
33 தமது தந்தையவர்களுக்கு எழுதிய பாக்கள். ஆசிரியம் - 20
வெண்பா --- 10
34 தமது அன்னையவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா --- 10
35 தமது மனைவியாருக்கு எழுதிய பாக்கள். வெண்பா --- 22
ஆசிரியம் - 47
36 தமது மைந்தருக்கு எழுதிய பாக்கள். வெண்பா ---11
37 தமது மைத்துனனுக்கு எழுதிய பாக்கள். ஆசிரியம் - 15
வெண்பா -- 1
38 சிரஞ்சீவி கோ.அ.இலக்குமண பிள்ளைக்கு எழுதிய பாக்கள். வெண்பா -- 5
39 சிரஞ்சீவி வ.உ. மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு எழுதிய பாக்கள். வெண்பா --10
40 ஸ்ரீ. அ.மு.ம. அவர்களுக்கும் எழுதிய பாக்கள். வெண்பா --10
41 ஸ்ரீ. அ.சு.வே. ஈஸ்வர மூர்த்திப்பிள்ளைக்கு எழுதிய பாக்கள். வெண்பா -- 3
42 ஸ்ரீ.சி. விஜயராகவாசாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா 3
43 ஸ்ரீ.பா.சி. அவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா -- 10
44 ஸ்ரீ.வள்ளிநாயக சுவாமியவர்களுக்கு எழுதிய பாக்கள் ஆசிரியம் --156
வெண்பா ---- 6
45 பசுபதிச் செயல்கள் வெண்பா ---- 10
46 சிரஞ்சீவி ப.சு.நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய பாக்கள். வெண்பா ----23
ஆசிரியம் -- 26
47 ஒரு மாதுக்கு எழுதிய பா. வெண்பா ---- 80
48 சு.ஞானசிகாமணி முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா ---- 3
49 ஸ்ரீ.திருமலாச்சாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். வெண்பா ---- 3
50 கொலையின் கொடுமையைப் பற்றிய பாக்கள். வெண்பா ---- 5
51 நாள், காசு, பிறப்பு, மலர் என்னும் முடிவுகளோடு பாடிய பாக்கள். வெண்பா ---- 4
52 சில நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள். வெண்பா ---- 4
53 சுதேசிய நாவாய்ச் சங்கக்கடன் கட்டளை வந்தபோது பாடிய பாக்கள். வெண்பா ---- 5
54 தமது புலம்பல் பாக்கள். வெண்பா ---- 15
55 கடவுள் உண்மையை நாட்டல். வெண்பா ---- 10
56 கடவுளுக்கக் காவல் தொழிலை அளித்தல். வெண்பா ---- 10
57 திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் 29-ம் ஆண்டு மகாசபையின் அக்கிராசனர் வாழ்த்து. வெண்பா ---- 30
---------------------------------

வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இயற்றிய "பாடற்றிரட்டு"

முதற்பாகம்.


1. கணபதி துதி.

சிவன்றன் குமரன் றிருமான் மருகன்
தவந்திகழ் நான்முகன் றன்னோ - டுவந்துவிளை
யாடும் பெருமா னறுமுகற்கு முன்வந்தோன்
பாடும் படியருள்க பா.
-----

2. ஈகை.

இல்லார்க்* கிரங்கியுட னீவதுதா னீகையில்லா
ரல்லார்க்** களிப்பதஃ தன்றாகு - மல்லாம
லீவதனா னற்புகழு மீயாமை யாலிழிவு
மாவதுன்னி யீவதுமஃ தன்று. 1
* இல்லார் - தரித்திரர்; **இல்லார் அல்லார் - செல்வந்தர்.

இல்லார்க்கொன் றீவதுவே யீகையா மெக்காலு
மல்லார்க்*கொன் றீவதுதா னாங்குவிலை - சொல்லாமல்
வாங்கிவைத்த வாங்குகிற வாங்கநின்ற மாபொருட்கு
வாங்குகவென் றேயளிக்கு மாற்று**. 2
* அல்லார்- மற்றையார்- உள்ளவர்; ** மாற்று - பதில்பொருள்.

இல்லார்க்கு வேண்டுவதொன் றீயுங்கா* லேற்றிடுமவ்
வில்லார்க்கு மீபவர்க்கு மேனையர்க்கு** - மெல்லார்க்கு%
மின்பமது தானுதிக்கு மில்லாரல் லார்க்கீயி
னின்பமதி லெத்துணையு%% மில். 3
* ஒன்று - அவர் விரும்பிய ஒரு பொருள்.
** ஏனையர்க்கும் - பக்கத்திலுள்ள மற்றையர்க்கும்.
% எல்லார்க்கும் - அவ்வீகையைக் கேள்வியுற்ற அனைவர்க்கும்.
%% எத்துணையும் - எவ்வளவும்.

ஈதலினால் வீடதனை** யெய்துவரென் றான்றோர்மு%
னோதினரா லவ்வுரையி லுண்மையுறற் - கேதுவுள
தெற்றென்று* சற்றுன்னி னீதலினாற் சாருநமைப்
பற்றின்மை யன்புடைமை பார். 4
** வீடு-முத்தி; மோக்கம்; % ஆன்றோர் - பெரியோர்.
* எற்றென்று - எஃதென்று.
ஈயுமவை மண்பெண்பொ னெல்லாமா மாதலினான்
மாயு மவற்றினபி மானமெலா - மாயமன
மாசொழிந்த* வாடியைப்போன்% மாறாது** மெய்காட்டித்
தேசொளிருஞ் சின்மயமாந் தேர். 5
* மாசு - அழுக்கு; ** மாறாது - பிசகாது
% ஆடி - கண்ணாடி.

யாவர்க்கு மீதலினால் யாரிடத்து மன்புண்டாம்
யாவர்க்கு மாதார மான்மாவே - யாவதினா
லான்மாவை நேசித்த தாமதனா லம்மனந்தா
னான்மாவே யாகு மறி. 6

இக்கா ரணம்பற்றி யீதலின்வீ டெய்துமென்றா
ரிக்கா ரணமதனை யெண்ணாம - லெக்காலுங்
கீர்த்தியையே நாடிக் கிளர்விலையை நல்லுதல்போற்
பேர்த்தெதனை** யீயினுமென்% பேறு*. 7
% தேசு - கீர்த்தி; * பேறு - பயன்.
** பேர்த்து - திருப்பி.

ஓர்பயனு மோர்மாற்று முன்னா துதவுவரேற்*
சார்வினைக ளில்லென்ப தக்கோர்கள் - சார்வினைக
ணீங்கிடவா காமியமு% நீங்குமதன் மேற்பிறப்பு
மேங்கியொழி யுங்காண்பா யீங்கு**. 8
* உதவுவரேல் - ஈவரேல். .
% ஆகாமியம் - இப்பிறப்பிற் செய்யும் வினைகள்.
** ஏங்கி - வருந்தி

ஆனதொரு சஞ்சிதந்தா* னாகா மியமொழியப்
போனவழி தோன்றாது போயொழியு - மேனெனினீ
யெத்தனைதான் செல்வ மிருப்பினுமேற் றேடாயே
லத்தனையும் போம்போ மறி. 9
* சஞ்சிதம் - இப்பிறப்பிற்குக் காரணமான பிராரத்தவினைகள் தவிர
முந்திய பிறப்புகளிளெல்லாம் செய்த வினைகளின் தொகுதி

பல்லோர்க்கு மீதலினாற் பற்றொழிந்து மன்புதித்தும்
பொல்லா* வினையிரண்டும் போயொழிந்து - நல்லறிவால்
வல்லார்சேர் முத்திபெற்று வன்பிறப்பி னீங்குதலா
லில்லார்க் கிரங்கியுட னீ. 10
* பொல்லா - பந்தத்தைத் தராநின்ற,
-----------------
3. அன்பு.

எவரையுந்* தன்னுயிரென் றெண்ணிநள்ள லன்பன்றிச்**
சாவரையு% நேசிக்குந் தாய்தந்தை - மேவரிய%%
பெண்டுபிள்ளை சுற்றங்கள் பேணுபொரு டம்மைமட்டுங்
கண்டுநள்ள லன்பன்று காண். 1
* எவரையும் - எல்லாரையும்; ** நள்ளல் - நேசித்தல்
% சா - மரணம்; %% மேவு அரிய - அடைதற்கு அரிய

யாவரையுந் தன்னுயிரென் றாதரித்த லன்பாகுந்*
தேவரையு ஞானியையுஞ் சீலகுண - மூவரையு
மாதரித்தல் பத்தியா மன்னைதந்தை யாதியரை
யாதரித்தல் பாசமேயாம். 2
* ஆதரித்தல் - பேணுதல்

ஆதரித்த னன்றே யறவோரை* யாதரித்தல்
தீதிழைக்கும் பாவிகளைத் தீதேயாந் - தீதிழைக்கும்
பாவிகளை யெந்நாளும் பல்விதத்திற் றண்டித்து
மாவிகளைந்% தும்வாழ்த லன்பு. 3
* அறவோரை - நல்வினை செய்வோரை; % ஆவி - உயிர்.

பாசமதிற் பத்தியதிற் பண்புமிக்க தன்பறிக
பாசமது மேன்மேலும் பந்தநல்கு - மாசுகஞ்சேர்
பத்தியதோ வன்பிலொரு பாகந்தா னாதலினான்
முத்திபெற வன்பே முதல்*. 4
* முதல் - காரணம்.

எவருமே தன்னுயிரென் றெண்ணியன்பு பாராட்டின்
யாவருமே தன்னுயிரே யாயிடுவர் - மேவருந்தன்
பக்கமதி லன்னியத்தைப் பாரான்பி னிவ்வுலகிற்
றுக்கமது முண்டோ சொலாய்*. 5
* சொலாய் - சொல்லுவாய்

அன்னியத்தை யாருயிரென் றாதரிக்கச் சீவனெனுந்
தன்னிலுள பற்றொழியுஞ் சாற்றினனாற் - றன்னினுள*
பற்றொழிய நெஞ்சத்துப் பாசமல நீங்குமுண்மெய்%
முற்றுவிளங் கும்பின் முனைத்து**. 6
* உள் - மனத்தில்; % மெய் - மெய்ப்பொருள்
** முனைத்து - செறித்து

தன்னுடைய மெய்ச்சொருபஞ் சச்சிதா நந்தமென்று
மன்னியம்போற் றோன்றுமெலா மஃதென்றுந் - தன்னையுறுந்
துக்கமெலாங் கானலினீர்த் தோற்றமென்றுங் கண்டுணர்ந்து
துக்கமற்று வாழ்வான் சுகித்து*. 7
* சுகித்து - இன்பமுற்று

துக்கமுற்று நீங்கிச் சுகமுறுதன் முத்தியென்னுந்
துக்கமற்ற தன்மை சுகமென்றுந் - தக்கமறை
கண்டோ ருரைத்துள்ளார் காணவதை யன்பன்றி
யுண்டோ பிறிதுநெறி* யொன்று. 8
* பிறிது - வேறு

அன்பாவ தியாவர்க்கு மாருயிரின் மிக்கதுவா
மின்பா மதன்சொருப மெஞ்ஞான்று - மென்பென்ப
தன்றியுட லென்னா* மதுபோல வேயன்பு
மன்றியுயி ரென்னா மறி. 9
* என்னாம் - யாதுபயன் ஆகும்.

எவருமே தன்னுயிரென் றெண்ணியன்பு செய்யவவர்
தூவுடைய* தன்னுயிராய்த் தோய்ந்துநிற்பர்** - பூவிலுள%
யாவருமே சின்மயமென்%% றின்புருவ னாதலினா
லேவரையு முன்னுயிரென் றெண். 10
* தூவுடைய - சுத்தமுடைய; ** தோய்ந்து - கலந்து.
% பூவிலுள - பூமியிலுள்ள; %% சின்மயம் - அறிவு வடிவம்.
--------------
4. உண்மை.

உண்மையினை யென்று முரைப்பதுவு முன்னுவது*
முண்மையெனச் சொல்ப** வுடைமைபெற - வண்மையுறத்%
திண்மையுறத்& துன்பமறச் சிந்தித்தே%% யஃதுரைத்த
லுண்மையன்று நன்றா வுணர். 1
* உன்னுவதும் - நினைப்பதும்.
** சொல்ப - சொல்லுவர்; % வண்மை - புகழ்
& திண்மை - வலிமை; %% சிந்தித்தே - நினைத்தே

நன்மையினை யாக்குவது நல்லின்ப நல்குவதும்*
புன்மையினைப் போக்குவதும் பூதலத்தில் - வன்மையுட
னுள்ளதையே சொல்லுவது முண்மையென் பநீதிமுறை
யுள்ளகலை% பறபலவு மோர்ந்து. 2
* நல்குவதும் - கொடுப்பதும்.
% கலை - நூல்.

மெய்யுரைக்கப் பெற்றிடுவன் மிக்கவறஞ் செல்வமின்ப
மையறுக்கு* ஞானநெறி மாண்வீடு - பொய்யுரைக்கச்
சொல்லியவெல் லாமொழியத்% தொன்னரகில் வீழ்வனெனச்
சொல்லினரே யான்றோர் தொகுத்து**. 3
* மை - மயக்கத்தை; % ஒழிய - நீங்க.
** தொகுத்து - சுருக்கி.

காதல் கவறாடல்* கள்ளுண்டல் நற்பொருட்குச்
சேதம்& விளைக்குந் திரிபடைக** - டீதுறுமிம்
முச்செயலு மெய்யுரைக்க முன்மொழியும் பின்பெருகு
நிச்சலுமா% ணல்கு&& நிதி. 4
* கவறாடல் - சூதாடல்; & சேதம் - கேடு.
** திரிபடைகள் - மூன்று ஆயுதங்கள்.
% நிச்சலும் - நாள்தோறும்; && மாண் - சிறப்பு.

பொன்வளரக் கல்விமிகும் புத்திமிகும் பண்டிதரு
நன்மறைய ரும்வந்து நள்ளுவர்காண் - பின்வளரு
நல்லவறம் நல்லின்பம் ஞானமிவற் றாற்பெறுவ
னல்லலிலா* மெய்வீ டறி**. 5
* அல்லல் இலா - துன்பம் இல்லாத; ** மெய்வீடு - மெய்யான முத்தி.

எண்ணுவதும் பேசுவது மெப்பொழுது மெய்யென்றா
னண்ணுவது நல்லின்ப நம்மனத்தி - லெண்ணுவதும்
பேசுவதும் பொய்யென்றாற் பின்பதனை நாட்டிடச்செய்
யோசனையாற் றுன்பநனி* யுண்டு. 6
* நனி - மிக.

என்றென்று முள்ளதுவா யின்பமய மாயறிவா
யென்றென்று மொன்றெனவே யெவ்விடத்து - நின்றொளிரும்
வத்துவொன்றெ மெய்யென்றார் மற்றவெலாம் பொய்யென்றா
ரத்துவித* நூலுணர்ந்தோ% ராய்ந்து. 7
* வத்து - பொருள்.
% அத்துவித நூல் - இரண்டல்லாத மெய்ப்பொருளை உணர்த்தும் நூல்.

மெய்யுரைக்க மெய்யாகி* வீட்டின்ப மேவிடுவன்
பொய்யுரைக்கப் பொய்யாகிப் புன்னரகை - யெய்தியுள
துக்கமொன்றே மேன்மேலுந் துய்த்துழல்வன்% றன்னுடைய
பக்கநின்றா ரெள்ளிடத்தான்** பார்த்து. 8
* மெய்யாகி - மெய்ப்பொருளாகி; % துய்த்து உழல்வன் - அநுபவித்து வருந்துவன்.
** எள்ளிட - இகழ.

ஓரிடமு மில்லெனவு மோருருவு மில்லெனவுந்
தேரிடமு* மில்லெனவுந் தேர்ந்தாலு - மோரறிவா
யுள்ளவொன்றை யுன்னுதலா லுள்ளமெனச் செப்புவரே
கள்ளமனத் தின்செயலைக் கண்டு. 9
* தேர் இடமும் - அறியும் இடமும்.

உள்ளதொன்றை யென்று முரைத்திடவு முன்னிடவு
முள்ளிநின்ற செல்வ மொடுவீடு - மெள்ளநின்ற
வுண்மையல வற்றை யுரைக்கநர கும்பெறலி
னுண்மைதனை யென்று முரை. 10
--------------------

5. தமது முதல் மனைவி சிவபதமடைந்தபோது சொல்லிய பாக்கள்.

மகராசி யென்றழைக்கும் வள்ளியம்மா ளுன்னன்
முகராசி* யென்கண்மு னிற்க - மிகராசி**
யாயெனக்கு மென்னவர்க்கு யார்க்கு நடந்துநின்று
போயதுவா னென்னோ% புகல். 1
* முகராசி - முகத்தின் வசிகரம்; ** மிகராசியாய் - மிக நண்பாக.
% என் - யாதுகாரணம். ஓ - அசை.

உன்னைக்கண் டுன்செயலை யுன்னிநனி யெஞ்ஞான்று
மென்னியல்பான்* முற்றுமறந் திங்கிருக்க - நன்னயமா**
வாழ்ந்திடவே போந்தனையோ வானூர்நன் னூலிழுக்கி%
வீழ்ந்தவனென்& றென்னையிவண் விட்டு. 2
* என்இயல் - எனது தன்மையை; ** நன்னயமா - நன்மையாக.
% நூல்இழுக்கி - ஒழுக்கம் தவறி; & வீழ்ந்தவன் - தாழ்ந்தவன்.

நன்னெறியைப் பற்றி நிற்கு நல்லோரு* மேதவறு
மந்நெறியை** யோரா% தநுதினமு - முன்னெறியைப்&
பின்பற்றி யான்செல்லப் பேசிநின்று வான்சென்ற
தென்புத்தி பெண்ணே யியம்பு. 3
* நல்லோரும் - துறவிகளும்; ** அந்நெறியை - அவ்வழக்கத்தை.
% ஓராது - அறியாது; & உன்நெறியை - உனது ஒழுக்கத்தை.

பிழையென்றே கொண்டாலும் பேதாய் கொழுநன்
பிழையென்றே தாங்கலுயர்* பெண்டிர்க் - கழகெனநூல்
சொன்னதுவெல் லாமறந்துதொ ல்லுலகில் யான்வருந்த
வென்னதுகொண் டேகினைவா** னின்று. 4
* தாங்கல் - பொறுத்தல்; ** ஏகினை - சென்றாய்.

மாதருக்குண் மிக்க மதியுடைய பெண்மணிநீ
யேதமென* வுட்கொள்ளா யென்செயலை - யாதலினா
லென்னடப்பைத்% தாங்காம லேகாய்வான் வேறேதோ
வுன்னடப்புக்& கேது வுள. 5
* ஏதம் - குற்றம்; % என் நடப்பை - என் நடக்கையை.
& உன் நடப்புக்கு - உனது செல்கைக்கு.

உன்குணமு முன்னன்பு முத்தமமாம் பண்புகளு
மென்குணத்தி னேழைமையா* லெண்ணாது - வன்குணத்தோ
டுன்னைமிகத் தொந்தரித்தேனொவ்வாதோ** வஃதுனக்கிங்
கென்னைவிடச்& சென்றா யெழுந்து. 6
* ஏழைமை - அறிவின்மை; ** ஒவ்வாதோ - பொருந்தாதோ.
% என்னை விட - என்னை விட்டு.

அல்லதுனக் கியான்செய்த வாகாச் செயல்களுன்னி*
வல்லதுணை% யாமெவர்க்கு மாதேவ - னல்லதுணை
யென்றவன்பா லேகினையோ வென்னவரும் யானுமிவ
ணின்றுதுயர் கொண்டுழல** நீ. 7
* ஆகாச்செயல்கள் - பொருந்தாத செயல்கள்
% வல்ல துணையாம்-வலிமை பொருந்திய துணையாகும்.
** உழல - வருந்த

எல்லவருந் தானென்றே யெண்ணுமுயர் சற்குருவா
நல்லவரே சார்வள்ளி நாதனுட - னல்லலின்றிக்
குற்றாலஞ் சென்றிருக்கக் கொண்டதியான் கண்டுடனே
செற்றாயோ* நீதான் றிகைத்து. 8
* செற்றாயோ - சென்றாயோ.

வக்கற் றொழிலைவிட்டு* மாதவத்தைச் செய்திடயான்
மிக்கவாக் கொள்ள விரைந்ததற்குத் - தக்கவித
நீநடக்க வேண்டுமென்றோ நீங்காத வென்னைவிட்டு
வானடக்கக் கொண்டாய் மனம். 9
* வக்கல் தொழில் - நீதியை எடுத்துவாதிக்கும் தொழில்.
வக்கல்-ஆங்கிலச்சொல்.

முற்பிறப்பிற் செய்த முழுநல் வினைக்கீடா
யிப்பிறப்பிற் சேர்ந்திருந் தென்னையிவ - ணப்பிறப்பிற்
செய்தவரும் பொல்லாத தீவினையா லோவானூ
ரெய்தவுளங் கொண்டா யிசைந்து. 10
-------------

6. அவளது நற்செயல்களைப்பற்றிய பாக்கள்.

இல்லமதி லொன்றுமே யில்லையெனா ளெக்காலு
நல்லுணவு தான்சமைத்து நல்குவா - ளல்லலொழித்
தின்புறவே செய்திடுவா ளெப்பணியு முள்ளமுட
னன்புமிகு நல்லா ளமைந்து*. 1
* அமைந்து - பணிந்து.

என்னுடைய நேயர்களு மேழைபர தேசிகளு
மென்னுடைய வீடுவந்தா லேந்திழைதான் - றன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி யுபசரிப்பள்
கற்றோரு முள்ளுவக்கக் கண்டு. 2

ஓரிரவில் யானுமவ் வொண்டாடியை* நீத்தாலவ்
வோரிரவுங் கண்ணே யுறங்காது - காரிரவை**
நிந்தனையே செய்து நெறிகடந்த% வென்றனுக்கும்
வந்தனையே& செய்வாள் மகிழ்ந்து. 3
* ஒண்தொடியை - ஒளிபொருந்திய வளையலை அணிந்துள்ளவளை.
** கார்இரவை - இருண்ட இரவை; % நெறிகடந்த - ஒழுக்கம் தவறிய.
& வந்தனையே - வணக்கமே.

ஒருநாட் பிரிந்தாலவ் வுத்தமிதா னென்றன்
வருநாட் கணித்திருந்து* வாளா** - வொருநாளைப்
பன்னாளா வெண்ணிப் பசித்து முகம்வாடி
யென்னாளாய்% வாழ்ந்திருந்தா ளிங்கு. 4
* கணித்திருந்து - எண்ணிக் கொண்டிருந்து.
** வாளை - சும்மா - திரும்பத் திரும்ப; % என் ஆளாய் - என் அடிமையாய்.

மலையாள தேசமுள மாவளங்க ளெல்லாங்
கலையாயு நுண்மதியாற் கண்டு - சிலகால
மின்பாக் கழியென் றிருதோ ழியர்சகித
மன்பா யனுப்பினே னங்கு. 5

இருந்தநா டன்னிலெலா மென்ற னினைவே
பொருந்திநாள் போக்கினளாம்போத* - வருந்தவத்தோர்
செய்தொழிலெல் லாமுமச் சிற்பொருளை யுன்னலல்லா
லெய்துநினை வுண்டோமற் றென்று. 6
* போத - அறிவுற்ற.

நற்சரிகைத் துப்பட்டா* நாரியர்கள் பூண்முண்டோ
டெற்சரிகை% வேட்டி யிவையெல்லாந் - தற்சரிரங்
கொண்டவெனக் கேகொண்டாள் கொண்டிலளொன்றுந்தனக்கின்
றுண்டோ வுலகிலிவட் கொப்பு. 7
* துப்பட்டா - மேல்வேஷ்டி; % எல்சரிகை - பிரகாசமுள்ள சரிகை.

ஓரிரவி லோரிடத்தி லொன்றா யுறங்குகையி
னாரியையு மென்னையுமே நன்றாகக் - கூரியதோர்
செந்தேள் கொடுக்கதனாற் சீறியே கொட்டிற்றா
லெந்தேவா வெம்மையா வென்று. 8

இருவருமே சத்தமிட்டோ மேந்திழைதா னோவோ
பெருவருத்தநேர்ந்ததின்றுபேதை - யொருத்தியையே
கொட்டிற்றா மற்றென் கொழுநனையுங்* கொட்டிற்றென்
றெட்டிவீழ்ந் தேங்கி யெழுந்து. 9
ஓ! ஓ! - இரக்கக்குறிப்புச்சொல்; * கொழுநனை-கணவனை

என்னவரை யென்னுயிரை யென்னுடைநல் லன்பரைமற்
றென்னவிதங் கொட்டிற்றோ வென்செய்வே - னென்னத்
தியங்கினாள்* தேம்பினாள்** செய்தவெலா மெண்ணி
மயங்குகின்ற தென்னன் மனம். 10
* தியங்கினாள்-திகைத்தாள்; ** தேம்பினாள்-அழுதாள்.
----------------

7. ஸ்ரீ வ. சண்முகம்பிள்ளையவர்கள் சிவபதம்
அடைந்த போது சொல்லிய பாக்கள் (6-9-04)


என்னுயிருக் கின்னுடலா யென்னுடனென் றுங்கலந்திங்
கென்னுடலை யின்னுயிரா யீங்கியக்கி-மன்னி
யிருந்தநண்ப சண்முகநீ யீங்கென்னை நீங்க
வருந்துயரெங் ஙன்பு கல்வன் மற்று. 1

தானேதா னாகிநிற்குஞ் சாமிவள்ளி நாயகனைத்
தானேதா னென்றணவுஞ்* சண்முகனே - மானார்
விழிமயக்க மெய்தாத மேலோய்கொண் டானோ
விழியிலவ** னின்னை விளம்பு. 2
* அணவும்-கிட்டும்; ** விழியில் அவன் - எமன்.

சாதுக்கள் தங்குதற்குத் தன்னகத்தைத் தந்தவர்தங்
காதுக்கெஞ் ஞான்றுமே கையாத* - வேத
வுணவுதவு நண்பநின துத்தமமா வோங்குங்
குணமதையுங் கொள்ளுவனோ கூற்று**. 3
* கையாத - வெறுப்பைக் கொடுக்காத; ** கூற்று - எமன்.
--------------

8. சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப்பெருமானைத் தரிசித்தபோது சொல்லிய பா (11-9-04)

நடராச னம்பெருமா னாமாகி நின்றான்
திடராச யோகியுமாய்த்* தீர்ந்தான்** - வடவாலின்
தண்ணிழலில் வீற்றிருந்து தன்னியல்பைப் போதித்தான்
நண்ணிடவே முத்தியினை நாம்.
* ராசயோகி - மனத்தை அடிமையாக்கி ஆள்பவன்.
** தீர்ந்தான் - முடிந்தவன்
---------

9. சேத்தூர் ஸ்ரீ இராமசுவாமிக்கவிராய ரவர்களுக்கு எழுதிய பாக்கள் (14-9-04)

கல்விக்கு நாயகமே கற்பகமே மாதுலநின்*
செல்விக்கு முன்கிடைத்த தீர்ப்பினது - செல்வத்தை
வாங்கியளி யாத மறப்பதனா னின்கடிதந்
தாங்கியுயர்** வுற்றேன் றனித்து 1
* மாதுல - மாமா; ** தாங்கி - கொண்டு.

நின்கடிதங்கண்டுவந்துநின்னெழுத்தைக் கண்ணொத்தி
நின்கவியை யுட்கொண்டே னேரிங்கு*-நன்கினிக்குங்
கண்டென்றா லஃதடரின் கைக்குமமு தச்சுவைதா
னுன்டென்றால் வன்பகையாங் குண்டு. 2
* நேர் - (அதற்கு) ஒப்பு.

ஈடுற்ற நின்கவிக ளென்னுளத்தைக் கொண்டவின்றே
பீடுற்ற கட்டளையைப் பெற்றெதிரி-வீடுற்று
நற்பொருளைக் கொண்டளிபே னானினது புத்திரிக்கிங்
கற்பமுமேற் றாமதமில் லாது 3
---------------------

10. சிரஞ்சீவி உலகநாதனைத் தொட்டிலில் இட்டபோது பாடிய பா. (23--10-04)

சிற்பொருளைத் தெய்வமெனத் தேர்ந்துணரு மென் குழந்தாய்
சிற்பொருளைச் சிந்தித்துச்சீருறநீ கண்வளராய்.
------------

11. தமது மனைவியார் தமது புதல்வனுக்கு மருந்து கொடுக்க
வேண்டுமென்றபோது கடவுளை வினாவிய பா. (24-10-04)


கடவுளரே நுங்கருணை காட்டாது நின்றாற்
றிடமுமனாம் வாழ்வதெங்ஙன் செப்பீர் - மடமனையா
ளன்புகொண்ட புத்திரனுக் காமவிழ்த நல்கவென்று
துன்புறுத்து கின்றா டொழுது. 1
------------

12. கடவுள் சொல்லிய விடையாகப் பாடிய பா.

அன்புடைய மைந்தா வறியாது சொற்றனைநீ
துன்பின்பு நல்குவது தொல்கரும - மென்பதுமெய்
யானாலுந் தொன்னூ லறைந்தபடி நோய்க்கவிழ்த*
நானாகி னுங்கொள்ள னன்று. 2
* அவிழ்தம் -மருந்து.
---------
13. மௌனம் இன்னதெனல். (15-12-04)

மோனமென்று முன்னோர் மொழிந்ததனைநாவுரையாத்
தானமென்று கூறல் தவறாகு - மோன
மனமொன்று நாடா வகைநிறுத்திக் காத்துத்
தினமின்பந் துய்த்தல் தெளி*.
* தெளி - உணர்.
-------------

14. ஒரு சிவராத்திரியிற் சொல்லிய பாக்கள். (4-3-05)

என்னு ளிருந்தொளிரு மென்னறிவே யெத்திசையு
மன்னிநிற்கு மெவ்வுயிரும் வாழ்கவரு - ளென்ன
வருளினன்கா ணென்றா னறிவாக நிற்பான்
பெருமைதனை யெங்ஙனுரைப் பேன். 1

நானென்ற நாமமுற்று நான்மறையி னுட்பொருளாய்த்
தானன்றி வேறில்லாத் தன்மையனாய் - மோன
வறிவொளியாய் நிற்பானை யாளென்றே* னெல்லா
மறிவறிவா யென்றா னவன். 2
* ஆள் - காப்பாய்.
-----------

15. முடிமன் சி முத்துசுவாமிப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள்.

திருக்குமரன் மாணடியைச் சிந்தித்து மேன்மேற்
பெருக்கமுறும் வாழ்நாளைப் பெற்றுச் - செருக்கின்றி
யன்பொடுவாழ் மைத்துனனே யார்வமுற* வென்னையடைந்
தின்பமுடன் வாழ்வா யிவண். 1
* ஆர்வம் - அன்பு.

தினமுயிரைக் காத்தருளுஞ் செய்யதிரு மாலை
மனமதனுட் கந்தனுடன் வைத்துத் - தனநல்குஞ்
சுந்தரகாண் டம்படித்துத் தூயவரு ளைப்பெற்றுச்
சந்ததமும் வாழென்னைச் சார்ந்து. 2
-----------
16. முடிமன் சி. முத்துசுவாமிப்பிள்ளையின் பிணிநீங்கத்
திருமாலை வேண்டிப் பாடிய பாக்கள்.


அறிவா லறியு மனைத்துமா நின்றென்
னறிவா யமைந்த வரியே - சிறியேன்
மனமென்றும் பற்றிநிற்கு மைத்துனனோய் தீர்த்துத்
தினமின்பம் பெற்றிருக்கச் செய். 1

அன்பே முதிர்ந்த வருளென்ப வவ்வருளை
யுன்பே ருருவாக வுற்றிருந்து - மென்பே
ரிதயத்து* ணிற்கின்ற வென்மைத்து னற்குன்
னிதயத்தை** யீயாத தென். 2
* இதயத்துள் - மனத்துள்; ** இதயத்தை - அருளை.

அறமுழுதுங் காக்க வருள்புரிந்தெஞ் ஞான்று
மறமுழுதும் வேரறுக்கு மாலே - திறமுழுது
மென்னுரிய மைத்துனற்கிங் கீந்தருள்வாய் நோயகற்றி
யுன்னுரிய வன்பா லுவந்து. 3

பூவளிக்கும்* நின்கை பொருளளிக்கு நின்மனைவி
பாவளிக்கு நின்மருகி பல்பிறப்புன் - சேயளிக்கு
நின்மைத்து னன்வீடு நேயமொடு தானளிப்ப
னென்மைத்து னற்களிப்பா யின்பு. 4
* பூ - பூமியை.

நல்லவரைத் துன்ப நணுகுங்காற் காப்பலெனச்
சொல்லியதைப் பின்பற்றித் தொன்றுதொட்டு - நல்லவரை
யெத்தினமுங் காத்தருளு மீசா வெனதுநல்ல
மைத்துனனைக் காப்பாய் மகிழ்ந்து. 5

நீநா னொருவனென நீமொழிந்தாய் நான்மறையு
நீநா னொருவனென நிச்சயித்த* - கோனேயென்
மைத்துனனின் மைத்துனனாம் வாய்மைகண்டு நீணிலத்தென்
மைத்துனற்கு நல்குகநல் வாழ்வு. 6
* நிச்சயித்த - நாட்டின.

அண்டரெலாம்* போற்ற வருளளிக்கு நீயிங்குத்
தொண்டருள நிற்குஞ் சுகமென்று - கண்டபின்னு
முள்ளமதி னோயென்ப துண்டென்றா லுன்னையிவண்
கள்ளனெனக் கூறாரோ காண். 7
* அண்டர் - தேவுர்.

அன்பருள வெப்பத்தையாற்றியின்பநல்கவெண்ணெய்
தினலெனக்* கொண்டவுண்மைதேராது-மன்புவியர்
கள்ளலெனக் கூறலுற்றார் கண்ணா வவர்வார்த்தை
தள்ளுவனே குற்றமெனத் தான். 8
* தின்பல்என - தின்பேன் என்று.

சேமத்தைப் பெற்றிடற்குச் சிந்தித்துன் சேவடியை
நேமமதாப் போற்றுகின்றே னித்தியமுந் -தாமத்
திருமாலென் மைத்துனனைச் சேர்ந்தவெலா நோயு
மருமையுட னீக்கி யருள் 9

அநுமனெனும் பேர்பெற் றநுதினமு மிராமன்
றநுவினலம் போற்றுந் தகைமை -யநுசரித்த
வல்லவனை யாட்கொண்டமாலேயென் மைத்துனனி
னல்லலெலா மாற்றியருள் 10

அறுசீர் விருத்தம்

ஆரணமுதலுமாகி* யறிவினுக் கறிவுமாகி
காரண மெவைக்கு மாகிக் காண்பன வனைத்து மாகி
வாரண** மழைக்க முன்னாள் வாவியிற் றோன்றிக் காத்த
நாரண வெனது மைத்து னற்குவாழ் வருள்செய்வாயே 11
* ஆரணம் - வேதம்; ** வாரணம் - யானை.

ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள்.

இலங்கையை முன்னா ளாண்ட விராவணனீந்த நோயாற்
கலங்கிய தேவர் தம்மைக் கருணையாற் காத்த தேவே
நலங்கிள ரெனது மைத்து னன்றின மினிது வாழும்
பலங்கொடுத் தருளி யென்றும் பல்பிணிய கற்றிக்காப்பாய். 12

வேறு.

துங்க* மனத்தாற் றொழுவா ருடைய சுகங்கருதிப்
பங்கயத் தாளைப் பரிந்து மணந்து பதமளிக்குஞ்
செங்கை யுடைய திருமா லேகா வென்தந்தை
றங்கை புதல்வன் முத்து சாமிப் பிள்ளையையே. 13
* துங்க - தூய.
---------

17. ஈற்றடி கொடுக்கப் பாடிய பாக்கள்.

உண்டிருக்க நல்லன்ன மூரினுள்ளே யோர்வீடு
கண்டிருக்க நன்மக்கள் காதலிக்கப் - பெண்டொருத்தி
கற்றுணர வோர்தோழன் காக்கவிறை* நோன்புடையோன்
பெற்றபிறப் பேநற் பிறப்பு. 1
* இறை - கடவுள்.

ஆன்றோர்தங் கேண்மை யநுதினஞ்செய் சற்கருமஞ்
சான்றோர்தந் தூயகுணஞ் சார்ந்தெங்கு - மான்ற
படித்தா* யிருக்கும் பரம்பொருளைப் போற்றல்
படித்ததனா லாய பயன். 2
* ஆன்ற படித்தாய் - நிறைந்த வண்ணமாய்.

வானிலுள தேவர்கள் மண்ணிலுள மாந்தர்கள்
கானிலுள மாபறவை கல்லெல்லாந் - தானெனவே
சந்ததமுங் கொண்டு தனக்கயலாக்* காண்கிலையேற்
பந்தமெலாம் போகும் பறந்து. 3
* அயலா - அந்நியமாக.

பொருள்சேரச் செய்வதறம் பொய்யாநல் லன்பே
யருள்சேரச் செய்வதுமெய் யன்பே - மருள்சேர்க்குந்
துன்பமிலா முத்திக்குந் தூயவன்பே நன்முதலா
மன்பிலா னென்மனித னாம். 4

இன்றிருந்தோர் நாளைக்கிங் கில்லாமற் போவதையு
நன்றிருக்கத் தீதை நவில்வதையு - மென்றுந்
தியங்கவே யேழைகளைச் செய்வதையும் பார்த்து
மயங்குதே யென்றன் மனம். 5

தேவர் முனிவர் செகத்திலுள* பல்லுயிர்க
டாவரங்க** ளெல்லாந் தனதுருவம் - யாவர்க்குந்
தன்னைப்போ லன்புசெய்து சாந்தநிலை யுற்றிருக்க
வுன்னுவதே மாந்தர்க் குயர்வு. 6
* செகத்திலுள - உலகத்திலுள்ள; ** தாவரங்கள் - அசரங்கள்.
---------------

18. மனைவியோடு ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த
மார்க்கத்திற் பாடிய பாக்கள்
.

தானே தனித்துத் தரணியெலாங்* காக்குமொரு
கோனே நிகர்த்துக் குடியோம்பும் - வானேநீ
யென்னுரியா ளூரிலிருந் தின்றுவரு மார்க்கத்தி
லுன்னுரிய பெய்த லொழி. 1
* தரணி - பூமி.

நீயின்றி வானே நிலைக்குமோ விவ்வுலகந்
தாயின்றிப் பிள்ளை தழைக்குமோ - ஈயுஞ்
செயலென்றுங் கொண்டோய் சிறப்புடையாட் காகப்
பெயலின்று நீப்பாய் பெயர்ந்து. 2
-------------

19. பாளையங்கோட்டை ஸ்ரீ பி. நாராயணசாமி நாயடு
அவர்கள் கிரகப்பிரவேசத்திற் பாடிய பா.


நானிலத்தைக் காத்தருளு நாராணனா மம்பெற்று
நானிலத்தைக் காத்தளிக்கு நற்றொழிலைத் - தானடத்து
மன்னனது மாநலத்தான் மாலருளாற் பெற்றிடுக
மன்னனது வாழ்வைநிகர் வாழ்வு.
---------------------

தனிப்பாக்கள்

20. முகவையூர் ஸ்ரீ இராமசுவாமிக்கவிராயரவர்களுக்கு எழுதிய பா.

நற்றவத்தர் முத்தேவர் நற்குரவர் தாமென்றும்
பெற்றவற்றை யேயளிப்பர் பேரருளாற் - பெற்றபெறா*
வெல்லாநின் பொற்கவியா லென்றுமளிக் குங்கரத்தாய்
நல்குககுற் றாலபுரா ணம். 1
* பெற்றபெறா எல்லாம் - பெற்ற எல்லாமும் பெறாத எல்லாமும்.
----------------

21. குறுக்குச் சாலையிற் பாடிய பா.

திருவள் ளுவனென்னுந் தெய்வீக வாசா
னருளுள்ளி யென்றென்று மன்பை - யொருநற்
பொருளென்னக் கொண்டு பொருளுண்மை* கண்டு
தெருளுன்னி** வாழ்வேன் றினம். 1
* பொருளுண்மை - மெய்ப் பொருள் உண்மையை.
** தெருள்உள்ளி - தெளிவை விரும்பி.
--------------------

22. பேட்டைக் கணபதி கோயிலிற் பாடிய பா.

ஆயபழம்* பேட்டை யனவரத சுந்தரவி
நாயகரே யெஞ்ஞான்று நன்றுறுநுந் - தூய
வடியிணை சார வருள்புரிந் தெங்கள்
மடியினைத்** தீர்ப்பீர்% மகிழ்ந்து.
* ஆய - சிறப்படைந்த; ** மடியினை - சோம்பலை.
%தீர்ப்பீர் - நீக்குவீர்.
-----------------

23. மெய்ப்பொருளை நோக்கிப் பாடிய பா.

எங்குநிறை மெய்ப்போருளே யெல்லார் தந்நெஞ்சுள்ளுந்
தங்குபர சின்மயமே தந்தருள்வா - யிங்கெனது
நாட்டிலுளார் தீதொழித்து நன்றியற்றி மேன்மையுற்று
வீட்டிலுறு நல்ல விதி.
-------------------------

24. ஸ்ரீ சிவபெருமானை நோக்கிப் பாடிய பா.

என்னுயிரே யென்னறிவே யிவ்வுலகி லெவ்வுயிர்க்குந்
தன்னுயிரா யுள்ளுள்ளே சார்ந்துநின்று - மன்னுயிர்கள்
இன்பமுறக் காத்தளிக்கு மென்சிவமே யென்னாட்டின்
றுன்பமற நல்காயோ துப்பு*.
* துப்பு -வலி.
-----------------

25. ஸ்ரீ விஷ்ணுவைத் தொழுவோர் அடையும் பலன்கள்.

சீரருணல்கும் விண்டுத் தேவனைத்தொழு வோரெல்லாம்
பேரருட் செல்வ ஞானம் பெற்றிவண் சுகமாவாழ்ந்து
கூரிரு ணீக்கி* யின்பங் குலவுநல் லுலகம் புக்குப்
பாரினி லெவரு மேத்தப்** பண்புறு வீடுஞ் சேர்வர்.
* இருள் - நரகம்; ** ஏத்த - துதிக்க.
---------------

26. கடவுளும் வாணியும் ஒன்றெனல்.

கல்வியறி வாய்நிற்குங் காரணத்தால் வெண்கமலச்
செல்வியெனப் பேர்கொள்ளுஞ் சிற்பரந்தான் - கல்வி
யடைவதற்கு நற்றுணையா மஃதடைந்த பின்ன
ரடைவதற்கு நற்பொருளா மஃது. 1
----------------

27. வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள்.

கல்வியறி வாய்நின்று கல்வியெலா மீகின்ற
செல்வியடி யுள்வைத்துச் சிந்திப்போர் - கல்வி
யறிவுற்று நன்றாற்றி யாதிநிலை சார்ந்து
செறிவுற்று வாழ்வர் தினம். 1
-----------------------------------------------------------

28. திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் இருபத்திரண்டாவது வருட பூர்த்திக்
கொண்டாட்ட மகாசபை அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் பொ. பாண்டித்துரை ஸாமித்
தேவரவர்களை வாழ்த்தி வழுத்திய ஆசிரியப்பா
.

பூவுல கதனிற் பொருந்துபன் னாட்டில்
தேவரு முனிவருஞ் சிறப்புற் றுறைய
அந்தணர் பசுக்க ளறத்தொடு பெருகச்
சந்தத மின்பந் தழைத்துநனி பொங்கப்
பாண்டிநன் னாட்டிற் பல்வள நிறைந்து
வேண்டிய வெல்லாம் விரைந்துட னளிக்குஞ்
சீலமு* நன்மையுஞ் செறிந்து விளங்கும்
பாலவ நத்தப் பதிசெய் தவத்தாற்
சாலவு நல்லறந் தளிர்த்து வளரக்
கால வரம்பின்** கணக்கொன் றின்றி 10
யாண்டுநல் லுயிர்களை யருளொடு புரக்கும்%
பாண்டித் துரையெனப் பகர்பே ரரசே!
யாண்டுங் கல்வி யினிதுற மணக்க
ஈண்டு மறுமையு மின்பம் பெருக
மதுரையம் பதியில் வண்டமிழ்ச் சங்கங்
கதியுற நடாத்துங் கருத்தையுட் கொண்டு
முன்னா ளாக்கிய முடிமன்னர் போல
இந்நா ளாக்கி யிசையுற்ற வள்ளால்!
அன்புடன் கருணை யகத்திடை மருவி
இன்புட னெவரு மென்றும் வாழ 20
உன்னியிங் கெவர்க்கு மோரரு மருந்தாய்ப்
பின்னிய வறுமைப் பிணியெலா மகல

* சீலமும் - ஒழுக்கமும்; ** வரம்பின் - அளவின்.
% புரக்கும் - காக்கும்.

விரும்பிய வெல்லாம் விரும்பிய வாறே
விரும்பிநன் களிக்கு மேன்மக்கண் முதல்வ&!
உலகுக் கெல்லா மொருமுத லாகிப்
பலவகை தோற்றும் பண்பு மரீஇய
கடவுளி னருட்பலன் கருத்துட் கொண்டு
திடமொடு சுகிக்கச் செவ்விதி னல்கும்
பண்பார் சைவப் பயிர்நனி வளர்த்தல்
கண்பார்த் தியற்றுங் கருணையங் கொண்டால்! 30
முன்ன முவந்து முழுமுதற் கடவுள்
நன்னயம் வழங்கு நந்தா யுமைக்குத்
திருமந் திரத்தைச் செவியுறச் சொற்ற*
திருமந் திரமெனுஞ் செய்யவிந் நகரி
லுறையுநன் மாந்த ருய்யும் வண்ணம்
இறையென வந்த வின்னுயிர்த் துணைவ!
இந்நகர் தன்னி லியைவுறு** மாக்கள்
தந்நல முணர்ந்து சார்ந்தருள் பெற்றிடச்
சைவ நேயராற் றாபித் துள்ள
சைவசித் தாந்த சபையி னிருபத் 40
திரண்டாம் வயதுமுற் றெய்துங் காலைத்
திரண்ட பலர்க்குந் தேவென நின்று
சைவசித் தாந்தந் தமிழெனு மிரண்டுங்
கைவரப் பெற்ற கனிந்தபிர சங்கஞ்
செய்துநம் மிறையாஞ் சிவனடி யெளிதில்
எய்து நெறியை யினிதுறக் காட்டிய
நன்றியைப் போற்றுதல் நம்பெருங் கடமை
யென்றிங் கியம்பின ரினியவென் னண்பர்;
உற்றவென் கடமையை யுரிமையிற் செய்திட

& முதல்வ - தலைவ; * சொற்ற - சொல்லிய.
** இயைவுறும் - வாழும்.

உற்றன னிங்கே யொருபெரும் பாக்கியம் 50
பெற்றன னென்ற பெருங்களி யதனால்
கற்றவர் விளங்குங் கழகத் தரசே!
மற்றென் வார்த்தை மதியில தாயினுஞ்
சற்றே கேண்மதி* தண்ணருட் டோன்றால்!
பரசுக வடிவாய்ப் பரந்து நிற்கும்
அரனுடை யிலக்கண மான்ம விலக்கணம்
அரனடி யான்மா வடையவொட் டாமற்
பெரிதுந் தடையாய்ப் பிரித்து நிற்கு
மாயையை நீக்கி மாணடி சேர்க்கு
மோன நிலையின் முதிரச் செய்யு 60
ஞான நிலையு நயம்பட மொழிந்து
மற்று முள்ளநன் மார்க்க மனைத்தும்
பெற்று நிற்கும் பெற்றியை முறைமுறை
யுற்றநின் றவற்றி னொன்றும் விடாமல்
முற்றுந் திறமையின் மொழிந்து பின்னர்த்
திறம்பெறு தமிழின் சிறப்பெலாந் திரட்டி
யறம்பொரு ளின்ப மனைத்து நல்கிப்
பந்த மகற்றிப் பவமு** மகற்றி
அந்தமில் வீடு மளிப்ப ததுவெனா
எத்திறக் கவிஞரு மிங்குமு னியம்பா 70
அத்திற மாக வணிபெறப்% புகன்றே
எம்மனோ ரெவரு மீடேறும் வண்ணஞ்
செம்மை புரிந்த திட்பமென்%% கூறுவன்?
மன்னர் விரும்பு மதுரைமா நகரின்
முன்ன ரிருந்த முழுதுணர் பாண்டியர்
இனிதாந் தமிழை யெழிலுற வளர்த்து

* கேண்மதி - கேட்பாய்; ** பவமும் - பிறப்பும்.
% அணிபெற - அழகு பொருந்த; %% திட்பம் - திறமை.

நனியாம் புகழை நாட்டின ரன்றித்
திருவருட் பயனைச் சேரும் வழியை
யொருவருக் காயினு முன்போ லுரைத்ததா
இதுவரை யெவரு மியம்பக் கேட்டிலம்; 80
அதுவு மன்றி யன்னவ ரயலிடஞ்
சென்றுபந் நியாசஞ் செய்தது மிலையால்
துன்றுசீர்ப்* பாண்டித் துரைப்பூ பதிநீ
தமிழும் வளர்த்துச் சைவமும் வளர்த்தே
யமிழ்தினு மினிதா வயலிடஞ் சென்று
பலர்க்கும் பயன்படப் பண்புட னளித்தும்
உலகினி லெவரினு முயர்நிலை யடைந்து
நிலமிசை புகழை நிறுவியும்** வீட்டு
நிலமிசை புக்கு நீடித்து வாழப்
பலபடி% சாதனம் பண்பினிங் கமைத்துத் 90
தலைவ னாகுந் தகுதியும் பெற்றாய்.
தொன்று தொட்டுத் தூய வழியில்
நின்று கருணை நிதிகொண் மாண்பா
லின்றிவ ணிறையா விசைந்து செய்தநின்
நன்றியை யெழுமையு%% நாமறக் கிலமே;
அன்றியு நின்னற மவனியின் மீது
நின்று நிலவநீ நீடு& வாழ்கச்
சிவனடி மலரைச் சிந்தையில் வைத்துத்
தவமும் புரிந்து தவமுறு வோமே&&. 99

* துன்றுசீர் - நெருங்கும் புகழைக்கொண்ட.
** நிறுவியும் - நிறுத்தியும்; % பலபடி - பலவகை.
%% எழுமையும் - ஏழு பிறப்பும்; & நீடு - நீடூழி.
%% தவமுறுவோம் - தவப் பயனை அடைவோம்.
------------------

இரண்டாம் பாகம்.

29. கணபதி பஞ்சகம்.

யானை முகத்தோனே யைங்கரனே செங்கமலக்
கோனையொரு மாதுலனாக் கொண்டோனே - மானை
யெடுத்தவரின் முன்மகனே யென்னிடுக்க ணீக்கித்
தடுத்தெனையாட் கொள்வாய் சகத்து*. 1
* சகத்து - பூமியில்.

கணபதியே யூறறுத்துக்* காக்கின்ற நல்ல
குணபதியே மெய்ஞ்ஞானக் குன்றே - மணமகளை
நீங்கிச் சிறையிருக்க நேர்ந்தவிதி போக்கியவட்
பாங்கிருக்கச்** செய்வாய் பரிந்து. 2
* ஊறு அறுத்து - இடையூற்றைக் களைந்து; ** பாங்கு- பக்கம்.

விக்கினங்க டீர்த்து விரைந்தருளிக்கு மீச்சுரனே
தக்கமனை மக்க டனித்திருக்க - மிக்க
மனக்கவலை கொண்டு வருந்துமெனைக் காக்க
மனக்கருணை பூண்பாய் மகிழ்ந்து. 3

இடையூறு நீக்குகின்ற வென்றந்தா யின்றென்
னிடையூறு நீக்கியரு ளென்னை - மடமனையாள்
நீங்கி யிருந்திரங்க னீதியோ யானவளைத்
தாங்கிமகி ழச்செய் தயை. 4

மக்களுனைச் சேரும் வரமளிக்கு மான்மருகா
மக்களெனைச் சேரும் வரமளிப்பாய் - தக்க
மனைபிரிந்து வாழ்தலினும் வாழாது மாய்தல்
எனைவருந்தச் செய்யா திவண். 5
-------------
30. மெய்ப்பொருள் வாழ்த்து.

மூலப் பழம்பொருளே மூவலகாய்த்தோற்றுமொரு
சீலப் பெருந்திறனே செப்பரிய - வாலச்*
சிறையினுளே யென்னின் றிறனெல்லா நீங்க
மறையவைத்த தென்னோ மறை**. 1
* ஆல - விஷத்தன்மையுள்ள; ** மறை - இரகசியம்.

மூவா வுலகின் முதலாகி நிற்கின்ற மொய்ம்புடையோய்*,
தேவா யறவோர்க்குச் சீர்பல வீகின்ற செம்மையினோய்**,
பாவா யறிவோர்க்குப் பாலினுந் தித்திக்கும் பண்புடையோய்,
காவாநிற் பாயெனக் கண்டநிற்சேர்ந்தேனைக் காத்தருளே. 2
* மொய்ம்பு - வலி; ** செம்மையினோய் - நடுவு நிலைமையினோய்.

பூதமெனு மைந்தாகப் போந்துளோ யின்பமுன்
பாதநினை வுள்ளார்க்குப் பாலிப்போய்* - சீதம்**
வெயிலிரண்டுஞ் சேர்ந்தெனது மேனியினைத்% தாக்குஞ்
செயலளித்த தென்னோ திறன். 3
* பாலிப்போய் - அருள்வோய்; ** சீதம் - குளிர்.
% மேனியினை - உடம்மை.

பூதமைந் தையும் பொருத்திப் பலவாகப் போந்துநிற்போய்,
சேதமு நன்மையுஞ் செய்யு மிரண்டினுஞ் சேர்ந்துநிற்போய்,
பாதகஞ்* செய்பெரும் பாவியு நன்றுறப் பார்த்துநிற்போய்,
ஏதமி னெஞ்சுட னிச்சிறை நின்றுளேற் கின்பருளே. 4
* பாதகம் - பாவம்.

மாகடலாச் சூழ்ந்துலகை மாறாத* நீரானோய்
தேகந் தினமெலியத் தின்னுமொரு - சோகம்**
வளரும் விதத்திலெனை மாணாச்% சிறையுட்
டளரவைத்த தென்னோ தயை. 5
* மாறாத - வற்றாத; ** சோகம் - துக்கம்.
% மாணா - தீமை நிறைந்த.

ஆழித் தடம்படு* மான்ற பொருள்பல வாகிநிற்போய்,
ஊழிற் பயனையொழிக்குந் திறத்தினை யொன்றிநிற்போய்,
கூழிற்** சிறந்தவென் கூறரு மக்களைக் கூடவெற்குப்,
பாழிற்% சிறைதந்த பாலற& நன்குகண் பார்த்தருளே. 6
* ஆழித்தடம் - கடலின் இடத்தில்; ** கூழில் - பொருள்களில்.
% பாழின் - அழிவையடைய; & பால் - விதி.

மலையாகி நின்றுபல மாண்புற்றோ யெம்மை
யலையாத* நற்செயலை யாக்கு - நிலையான
செங்கோ லெடாது தினமு மெமைவாட்டுகின்ற
வெங்கோ லெடுத்ததென் வேந்து. 7
* அலையாத - வருத்தாத.

மாமலை கொண்டுள வான்பொருள் யாவமா மன்னிநிற்போய்,
பாமலை யாகநின் பால்வர வென்றுமே பார்த்து நிற்போய்,
ஏமமில்* லாதிவ ணின்னலே** துய்த்துள வேழையனைச்,
சேமமே நல்குமென் சீருயர் நாட்டொடு சேர்த்தருளே. 8
* ஏமம் - காப்பு; ** இன்னல் - துன்பம்.

வானாகி மீன்மதிய* மாணிரவி நின்றொளிரத்
தானமதை யீகின்ற தண்ணளியோ - யீனச்
சிறையுள்ளே நின்றின்று தீயவெலாந் துய்க்கக்
குறையென்னே செய்தேன்காண் கூறு. 9
* மீன் - நக்ஷத்திரம்.

வானின் மழையாகி மாநிலங் காக்கின்ற மாண்புடையோய்,
கோனின் முறையாகிக் கூறரு நன்மைகள் கூட்டுவிப்போய்,
ஊனி னுயிர்க்கெலா மூழ்ப்பயன்மாறாதிங் கூட்டுவிப்போய்,
நானில நீத்திவ ணைவேனையின்பினு* ணாட்டுவையே. 10
* நைவேனை - வருந்து வேனை.

சூரியனாப்பல்லுருயிந்தோன்றியிவணின்றிலங்கப்
பாரியதோர் தண்ணளியைப் பாலிப்போய் - வீரிய
மில்லாதே தாழ்வுற்ற வேழைக்குத் துன்புறுத்து
மெல்லாமே தந்ததிங் கென். 11

சூரியன் பாலுள சூடாகி யெஃதினுந் தோய்ந்து நிற்போய்,
காரிய மாகவுங் காரண மாகவுங் காண நிற்போய்,
சீரியர்* தம்மொடுந் தீயவர் தம்மொடுஞ் சேர்ந்துநிற்போய்,
பாரியை மக்களைப் பண்டுபோற்** சேரநான் பார்த்தருளே. 12
* சீரியர் - நல்லவர்; ** பண்டு - முன்.

மதியாகி வான்மிசையு மண்மிசையு முள்ளா
ரிதமாக நிற்கவரு ளீவோய் - நிதமாகத்
துன்பமிக வுண்டேற்குத் தூயமனை சேர்ந்திருக்கு
மின்பமின நல்காத தென். 13

பூரணச்சந்திரன் போதரத்* தண்மையாப் பொங்கி நிற்போய்,
ஆரணந் தம்முளு மன்பர்தந் நெஞ்சுளு மாடிநிற்போய்,
வாரண மேறுமுன்** வாடல்போற் றுன்புன்முன் வாடநிற்போய்,
ஓரணங் கென்னுட னுற்றிடு நல்விதி யூட்டுவையே. 14
* போதர - வர; ** ஏறு - சிம்மம்.

வான்குழுவாச்* சேர்ந்தொருவர் வையாததீபமென
மீன்குழுவா நின்றொளியை வீசுவோய் - நான்குழுவை
நீங்கிச் சிறைநின்று நீங்காத துன்மமுறும்
பாங்கென்ன** செய்தேன் பகர். 15
* வான்குழுவா - வானில் கூட்டமாக; **பாங்கு - வகை.

மீனி னொளியென்ன மேதினி யெங்கணு மேவிநிற்போய்,
ஊனி னுயிரென்ன வுண்மையா வெஃதுளுமொன்றிநிற்போய்*,
தேனி னினிப்பென்னச் சிந்தையுட் கண்டிடச் சென்றுநிற்போய்,
நானுன் னருளினைநம்பினே னாட்டினை நண்ணிடற்கே. 16
* ஒன்றி - பொருந்தி.

உயிராகி யெண்ணி லுடலெலாம் புக்குச்
செயிரோகப்* பற்பலவுஞ் செய்வோ-யயிராத**
வில்வாழ்க்கை வாழ்ந்திலே னென்றென்னைவைத்தனையோ
வில்வாழ்க்கை வாழ விவண். 17
* செயிர் - குற்றம்; ** அயிராத - சந்தேகிக்கக் கூடாத.

வாழு முயிரெலா மாந்தும்* புலன்களா** மன்னிநிற்போய்,
வீழு% மெவற்றினும் வீழுறத் தக்கநன் மேன்மையுற்றோய்,
கூழு& மதுதருங் கூறொணா யாவுமாக்கூடிநிற்போய்,
தாழு மெவரினுந் தாழ்ந்தேற்கு நாட்டினைத் தந்தருளே. 18
* மாந்தும் - அநுபவிக்கும்; ** புலன் களாய் - விஷயங்களாய்.
% வீழும்-விரும்பும்; & கூழும் - பொருளும்.

கன்மேந் திரியமாக் காக்கின்ற தெய்வமே
மென்மே லென துடலம் வெந்துயராற்-புன்மே
னுனியென்ன வாடியுள நொந்தழிந்த தந்தோ
வினியென்ன வாழ்தலா லிங்கு. 19

கன்மேந் திரியங் கவிழும்* புலன்களாக் காணநிற்போய்,
சொன்மேற் பொருளெனச் சூழ்ந்தவர்** நெஞ்சுளே தோன்றிநிற்போய்,
என்மேற் கருத்தினை யீந்துள வென்மனை% யெய்திடற்கு,
நின்மேற் கருத்தினை நேர்ந்துளே னாட்டினை நேர்குவையே&. 20
* கவிழும் - விழும்; ** சூழ்ந்தவர் - சிந்தித்தவர்.
% என்மனை - என்மனைவியை; & நேர்குவையே - நல்குவாயே.

ஞானேந் திரியமாய் ஞாலமெலாங் காண்பவனே
மானேந்து மாற்றிலுயர் மானத்தை-நானேந்தி
நிற்பதனா லென்னபய னேருயிரை யிவ்விடத்தி
லற்பமென வெண்ணாத தால். 21

ஞானேந் திரியங்க ணாளும் விழுபவா* நண்ணி நிற்போய்,
மானேந்து நேரிலா மானமா வென்னுளே மன்னி நிற்போய்,
கோனேந்து நேரிலாக் கோலினா லிச்சிறை கொண்டுநிற்கு,
நானேந்து மக்களை நண்ணிட நாட்டினை நல்குவையே. 22
* விழுபவா - பொருந்துவனவாக.

மனமாகிச் சொல்லரிய மாயமெலாஞ் செய்வோய்
நனவாதி மூன்றினுமே நல்ல-வினவா
னெனச்சான்றாய் நின்றென்று மின்புறுவோயென்னல்
லினச்சோர்வை மாற்றாத தென். 23

தேறு* மனங்கொண்ட சீராரை** யின்புனுட் சேர்த்து நிற்போய்,
மாறு மனங்கொண்ட மாணாரைத்துன்பினுண்% மாய்த்து நிற்போய்,
கோறு& மறமொடு கூரிய தீமையே கூடியுள்ள,
சீறு மரவின்%% சிறைநீக்கி நாட்டொடு சேர்த்தருளே. 24
* தேறும் - தெளியும்; ** சீர்ஆரை - புகழ் நிறைந்தவரை.
% மாணாரை - தீயவரை; & கோறும் - கொல்லும்.
%% அரவின் - பாம்பைப் போன்ற

புந்தியென நின்றுள்ளம் போந்தபல வற்றுள்ளுஞ்
சத்திதெனக் காட்டுந் தரமுற்றோய்-பத்தியொடு
நின்னடியை யெஞ்ஞான்று நெஞ்சினுளே கொண்டு
மின்னலுறக் காரணமிங் கென். 25.

மாந்தர்நற் புத்திவீழ் மாணிறை யாவுமா மன்னிநிற்போய்,
தேர்ந்தவர் காணுந் திறத்துட னெஃதினுந் தேறிநிற்போய்*,
தீர்ந்தவர்** காணாத் திறத்துட னெஃதினுந் தேய்ந்துநிற்போய்%,
வேந்தர்தம் மாள்கையில் வீறுற& நின்னருள் வேண்டினனே. 26
* தேறி - தெளிந்து. ** தீர்ந்தவர் - மற்றவர்.
% தேய்ந்து - அருகி. & வீறு - பெருமை.

அறிவாகி நின்றுலகை யாண்டருளு மீசா
செறிவாக வின்பமெனைச் சேர-வறியாது
துன்பச் சிறையுட் டொலையாது* நின்றழிய
முன்பென்ன செய்தேன் மொழி. 27
*தொலையாது - நீங்காது.

தூய வறிவு தொடரும் புலன்களாத் தோன்றிநிற்போய்,
மாயவறிவு மயங்கும் புலன்களா மாறிநிற்போய்,
தேயவரசைத் திருத்திடு நல்வினை செய்தவெனைத்,
தீய சிறைவிட்டுத் தேயத்திற் சேர்த்தருள் சீக்கிரமே. 28

உயிருக் குயிராகி யுள்ளுளே நிற்போய்
தயிருக்குள் வெண்ணெய்யாச் சார்வோய்-பயிரினை
வேலியே தின்ன விரும்பிய தொத்தெமைக்
கோலி வண் கொல்வதோ கூறு. 29

ஆழ்ந்த வறிவுக் கறிவா யனைத்தினு மாழ்ந்துநிற்போய்,
வீழ்ந்த மிகையுளே* வீழ்ந்தவர் மீண்டிட வீழ்ந்து நிற்போய்,
வாழ்ந்த மனையொடு மக்களை மன்னியே வாழ்ந்திருக்கத்,
தாழ்ந்த தமியேற்குச் சந்ததந் தந்திடு தண்ணருளே. 30
* மிகை - குற்றம்.
----------------------

31. ஸ்ரீ அ.மு.ம. அறம்வளர்த்த சுந்தரம் பிள்ளையவர்களுக்கு எழுதிய பாக்கள்.

அறம்வளர்த்த* சுந்தரமே** யாவையென நிற்கும்
அறம்வளர்த்த சுந்தரமே யன்பின் - திறம்வளர்த்த
கோவேயென் உள்ளத்தைக் கொண்டங் குவந்துறையும்
தேவேநின் தாளென் சிரம். 1
* அறம் - அறத்தை. ** சுந்தரமே - சுந்தர மூர்த்தியே.

அன்னைதந்தை யாவரினும் ஆதரங்கொண் டிவ்வுலகில்
என்னைமிகப் பேணுகின்ற என்அன்ப - நின்னைக்
குலதெய்வ மாவைத்துக் கும்பிட்டு வாழ்வேன்
பலநாளும் அன்பால் பணிந்து. 2

கடவுளரும் வேண்டினன்றிக்* காப்பதிலை என்று
திடமுடனே கற்றறிந்தோர் செப்பும் - தொடர்மொழியும்
பொய்யாக இன்றென்னைப் போந்தளித்த நின்னையன்றி
மெய்யாய தெய்வமுண்டோ வேறு. 3
* வேண்டின் அன்றி- பிரார்த்தித்தால் அல்லது.

நீயெனக்குச் செய்தநன்றி நீள்நிலத்தில் பெற்றெடுத்த
தாயெனக்குச் செய்தவகை தான்அறியேன் - காயம்
எடுக்கும் பிறப்பெல்லாம் என்மனத்தில் நின்னைத்
தடுத்திருத்தி வாழாவேன் தழைத்து. 4

அறம்வளர்த்தல் எஞ்ஞான்றும் அன்புடைமை என்ற
திறம்கிளத்த* வந்தவுயர் தேவே - பிறரின்
நலம்கருதி னார்தம் நலம்கருதி வாழ்நின்
நலம்கருதி வாழ்வேன் நயந்து**. 5
* திறம்கிளத்த - திறத்தைச் சொல்ல. ** நயந்து - விரும்பி.

சுந்தரமே என்னுயிரே சோதியே எற்காக்கும்*
மந்திரமே என்குலத்தின் மாமருந்தே - கந்தன்
திருவருளைப் பெற்றுச் சிறப்புற்ற நின்பேர்**
அருளடியைக் கொண்டேன் அகத்து. 6
* என்காக்கும் - என்னை அளிக்கும்; ** பேர் - பெரிய.

முன்னாளின் வள்ளற்கும் முன்னாகத் தந்துதவும்
மன்னா நினையன்றி மாநிலத்தில் - இந்நாள்
ஒருபயனும் நோக்கா துளத்தன்பே கொண்டு
தருபவரைக் கண்டிலன்யான் சார்ந்து. 7

"உடுக்கை* இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண்** களைவதாம் நட்"பென் - றெடுத்துரைத்த
வள்ளுவரின் வாக்கைஇனி மாந்தர் கடைப்பிடித்துக்
கொள்ளுவரே நின்செயலைக் கொண்டு. 8
* உடுக்கை - உடை; ** இடுக்கண் - துன்பம்.


எனைக்காக்க முன்வந்த என்நண்ப இன்று
நினைப்பார்க்க நாடுதென் நெஞ்சம் - எனைப்பார்க்க
வந்தருள வாய்க்குமோ வள்ளால் நினதுவிடை
தந்தருளச் செய்வாய் தயை. 9

தெய்வஅருள் சேர்க்கும் சிறந்தஅறம் இன்பமுத்தி
செய்வலென முன்னின்றேன் செய்திலேன் - மெய்வாக்
குடன்கருணை கொண்டுள்ள உத்தமனே என்னைத்
திடம்கொண்டு காப்பாய் தினம். 10
------------------

32. ஸ்ரீ கோ. க. சுப்பிரமணிய முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள்.

சீர்செப் பரியபல* சேர்செந்தூர்க் கந்தனை
நேர்**சுப் பிரமணிய நேயநின் - சார்பில்
இருந்த எளியேற் கிழைத்தநலம்% காண்டல்
அருந்தவத் தார்க்கும் அரிது. 1
* செப்பரிய பலசீர்சேர் - சொல்லுதற்கரிய பல புகழ்கள் சேர்ந்த.
** நேர் - ஒத்த; % இழைத்த - செய்த.

அருகணைத்துப் பாலூட்டி ஆதரித்த தாயும்
ஒருகணத்து நின்னன்பிற் கொவ்வாள் - பருக*
இனியபல சேர்த்துதவி என்னையறி யாதுள்
கனியபல** செய்தனளோ காண். 2
* பருக - உண்ண; ** உள்கனிய உளம்களிக்க.

ஒருநன்றி என்றால் உரைப்பேன் உரையில்*
பெருநன்றி பற்பலபேணி - அருநன்றி
என்றே எவரும் எடுத்தியம்பச் செய்தனையால்
நன்றே நினது நலம். 3
* உரைஇல் - மாற்றுஇல்லாத.

நலமே உருவென்று நானிலத்தோர் நாட்டும்
நலமே உருவாக நண்ணி - நலம்அநலம்
கண்டிரண்டும் ஈவான் கடவுளிலன் நின்போல
கண்டுநன்றே ஈயும் கருத்து. 4

நின்குடிக்கும் நின்னடிக்கும் நின்னூர்க்கும் நேயர்க்கும்
என்குடியும் என்னவரும் யானுமிவண் - நன்று
தெரிந்துநிற்ப தோடு தெரிந்தபிறப் பெல்லாம்
புரிந்துநிற்பேம் ஏவல் புகழ். 5
----------------

33. தந்தைக்கு எழுதிய பாக்கள்.

சுவாமியே! தந்தையே! தூயநற் பெரியோய்!
அவாவியே வந்தெனை ஆண்டருள் ஈசா!
இங்குள எல்லாம் இன்பமா முடிந்தன;
தங்குவ தினிமேல் தாமதம் எனப்படும்.
விடுதலை யான்பெற வேண்டுவ செய்யக்
கடுகியே* செல்லுக காப்பாற்றி அருள்க.
மூன்றிரு திங்கள் முரண்சிறை** இருந்தேன்;
சான்றொரு% கடவுளே தண்ணளி& கூர்ந்து
விரைவினில் என்னை வெளியேற்றி அருளித்
தரைமிசை நெடுநாள் தங்கிடச் செய்க 10.
இந்தவாரம் எடுத்த நிறுவையில்
ஐந்திலொன்றாக அருகிய%% தென்னுடல்;
அரிசி உணவுக் களித்தனன் அநுமதி
பெரியவன்; மற்றவன் பேசான் என்னொடு.
சீரிய நின்னடி சிரமேல் கொண்டுயான்
பாரிய என்னுளப் பாரதத் தாய்க்கும்
உரிமையொடு பெற்றெனை உவப்பொடு வளர்த்த
பெருமைசேர் அன்னைக்கும் பிறர்க்கும் எனது
மெய்மன வாக்கால் விரும்பிஇன் றளித்தேன்
தெய்வ வணக்கமும் சீர்தரும் வாழ்த்துமே. 20
* கடுகியே - விரைந்தே.
** முரண்சிறை - வலியுள்ள சிறை.
% சான்று - சாக்ஷியாக நிற்கின்ற.
& தண்ணளி - கிருபை
%% அருகியது - சுருங்கியது
----------------------

பிதாஉலக நாதபிள்ளாய் பெற்றென்னைக் காத்துச்
சதாஉதவி கல்வியெலாம் தந்தும் - நிதானநடை
கொள்ளாது வேகநடை கொண்டுசிறை புக்கேனென்
றெள்ளாரும்* எள்ளுவரே இன்று. 1
* எள்ளாரும் - இகழத்த காதாரும்

என்குறையால் தாழ்சிறையை எய்தினனோ அல்லாது
நின்குறையால் யான்எய்த நேர்ந்ததுவோ - மன்குறையால்
எய்தினனோ என்றுதவ* எண்ணியதில் நாம்குறைகள்
செய்ததிலை என்றறிந்தேன் தேர்ந்து. 2
* தவ-மிக

ஊழின்றித் துன்பமுறல் உண்டோ எனமொழிவர்
ஊழின்றித் துன்பமுறார் உண்மையது - காழின்றித்*
துன்பமுற்றேன் இங்கென்று சொல்லுவர்எஞ் ஞான்றுநனி
இன்பமுற்றேன் பல்விதத்தும் இங்கு. 3
* காழ் - அறிவு

உண்ணாத முத்தர் உடல்வருத்தும் மெய்த்தவத்தர்
கண்ணாடு கூத்தியர்நோ* கண்டாரென் - றெண்ணாத
மக்கள் உரைப்பதல்லால் வாய்மையறிந் துள்ளவுயர்
மக்கள் உரைப்பதுண்டோ மற்று. 4
* கூத்தியர் - கூத்தாடும் ஸ்திரீகள்

மயிரிழந்தேன் பட்டுடுத்தும் மாண்பிழந்தேன் ஆன்பால்
தயிரிழந்தேன் நெய்யிழந்தேன் தண்பூம் - பயிரிழந்தேன்
என்பர் தலைப்பேன் எடுத்துடுத்தல் உட்கொள்ளல்
துன்புற் றளித்தலிலை சோர்ந்து. 5

தளைபூண்டேன்* காலிலென்ப தாரணியை வென்று
வளைபூண்டேன்** என்றுரைத்தால் வம்போ - களைபூண்ட%
கேழ்வரகுண் டேனென்ப கீழ்நோய்தீர்த்%% தேனதைமெய்க்
காழ்வரவிற்& கோர்மருந்தாக் கண்டு. 6
* தளை - விலங்கு; ** வளை - வெற்றித்தண்டை
% களைபூண்ட - உமியையுடைய; %% கீழ்நோய் - மூலநோய்
& மெய்க்காழ் - சரீரபலம்

செக்கூர்ந்தேன் என்பரதிற் செப்பரிய சத்தியுற்றேன்
மிக்கூர்ந்தேன் இராட்டென்பர்* மேவியதைச் - சீக்கீர்ந்த**
நம்மறையைக் கற்றுணர்ந்தேன் நைத்ததெனை% அச்சென்பர்&
எம்மறையும் கற்கநின்ற திஃது. 7
* இராட்டு - நூல்நூற்கும் இயந்திரம்; ** சிக்கீர்ந்த - குற்றமற்ற
% நைத்தது - வருத்தியது; & அச்சு - அச்சுத் தொழில்

தாய்தந்தை தம்பிமகார் தாரமினம் நாடுவிட்டுப்
பேய்தந்தை* என்னநிற்கும் பேதையருக் - காய்தந்தை%
தாழ்ந்தேன் எனஉரைப்பர் சால்படையச்& செய்தவரை
வாழ்ந்தேன் அடைந்தே மதிப்பு. 8
* பேய்தந்தை என்ன - பிதா பேய் என்று சொல்லும்படி
% தந்தைஆய் - பிதாவாகி; & சால்பு - கல்வி நிறைவு

கற்றோரைச் சேர்ந்துநிதம் கற்றறிதல் இன்பமுறல்
அற்றோரை* ஏற்றீதல் ஆதரித்தல் - பெற்றோரை**
வீய்ந்தவென்ப% நற்றவமும் மெய்யறமும் செய்துயர்ந்தேன்
ஆய்ந்துவந்தே மெய்யோடெல் லாம். 9
* அற்றோரை - உதவிஇல்லாதாரை
** பெற்றோரை ஆதரித்தல் - தாய்தந்தையரைப் பேணல்
% வீய்ந்த என்ப - ஒழிந்தன என்பர்

ஆதலினால் என்தந்தாய் யான்சிறையுள் நம்குடும்பம்
ஏதமுறப் புக்கேனென் றெண்ணற்க - நோதல்*
அடைந்தேனென் றெண்ணற்க ஆதியருள் கோன்மை**
அடைந்தேனென் றெண்ணுகநன் கியான். 10
* நோதல் - வருந்துதல்; ** கோன்மை - இறைமை
--------------------

34. தமது அன்னையவர்களுக்கு எழுதிய பாக்கள்.

தாயே பரமாயி தாங்கிஎனைப் பெற்றுவளர்த்
தாயே நினக்கென்ன யான்செய்தேன் - நோயே
எனைச்சுமந்த நாள்தொடங்கி ஈந்தேனே அல்லால்
நினைச்சுமந்து* போற்றிலனே நின்று. 1
* சுமந்து - காத்து

"ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்* எனக்கேட்ட தாய்"என்றிங் - கான்ற**
புலவன் உரைத்தபடி பூரணமாக் கற்று
வலவனென% வாழ்ந்திலனே மற்று. 2
* சான்றோன் - கற்றோன்; ** ஆன்ற - அறிவுநிறைந்த
% வலவன் - வல்லவன்

நினக்குதவி செய்யாது நீயவப்பக் கல்லா
தெனக்குதவி செய்ததந்தைக் கீயா - தினக்குதவி*
ஒன்றும் புரியா துயிர்த்துணையைப்** பேணாது
நன்றுபுரி% யாதிழிந்தேன்& நான். 3
* இனக்கு - இன (சுற்ற)த்திற்கு; ** உயிர்த்துணை - மனைவி
% நன்று – அறம்; & இழிந்தேன் - தாழ்ந்தேன்

அரதரிது மானிடரின் யாக்கைபெறல் அஃதின்
அரிதரிது பெற்றிடல்நல் யாக்கை - அரிதரிது
செல்வம் தவம்இரண்டும் சேர்தலதின் என்றுரைத்த
சொல்வந்து நின்றதெனைத் தொட்டு*. 4
* தொட்டு - பொருந்தி

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும்* தாமுந் துறும்" என்றாங் - "கூழையும்
உப்பக்கம்** காண்பர் உலைவின்றித்% தாழாது%%
ஞற்றுபவர்&" என்றான் நன்கு. 5
* சூழினும் - எண்ணினும்; ** உப்பக்கம் - புறத்தே
% உலைவு - தளர்வு; %% தாழாது - தாமதியாது
& உஞற்றுபவர் - ஊக்குபவர்

இவ்விரண்டு சொல்லும்* எதிர்சொல்கள்** என்றிருந்தேன்
இவ்விரண்டும் ஒன்றென்றே இன்றுகண்டேன் - இவ்விரண்டும்
செய்வினையே% ஊழாம் திரண்டு வலியுற்று
மெய்வினையால்%% என்றனகாண் மேல். 6
* சொல்லும் - குறள்களும்
** எதிர் - ஒன்றற்கொன்று எதிரிடையான பொருளைக் குறிக்கும்
% செய்வினை - மனிதன் செய்கின்றசெயல்
%% மெய்வினையால் - கடவுள்செயலால்

செய்வினையே ஊழாத்திரளுமெனின் நம்முடைய
செய்வினையால் ஊழைத் திருத்திடலாம் - மெய்வினைநாம்
செய்வினையைக் காத்தூழாச் சேர்ப்பிப்ப தல்லாமல்
உய்வினையே* இல்லைகண்டேன் ஓர்ந்து**. 7
* உயவினை - வேறுசெயல்; ** ஓர்ந்து - ஆராய்ந்து

தாயே இனித்தளரேன் தாமதியேன் சோம்பலுறேன்
பாயே பொருந்தலுறேன் பாரதமாம் - தாயே
குலதெய்வம் பாரேயான் கொண்டுளமெய்த் தெய்வம்
இலைதெய்வம் வேறே எனக்கு. 8

சான்றாண்மை* எய்துதலே தாயுவக்கும் செய்கையந்தச்
சான்றாண்மை யின்பயன்மெய் தாள்தொழலே - ஆன்றாண்மை**
கொண்டுதன்னா டாள்தல் குலதெய்வம் போற்றிடல்மெய்
கண்டுதொழல் பாராள்தல் காண். 9
* சான்றாண்மை - கல்வியறிவுடைமை
** ஆண்மைஆன்று - வீரம் நிறைந்து

ஆதலினால் என்அன்னாய் யான்இன்று பல்நூலும்
ஓதலினால் எய்துமுயர் ஓர்வுகொடு* - வேதம்
பிறந்தஅரும் நாடாண்டு பின்னருல காண்டிங்
கறந்திரளச் செய்வேன் அறிந்து. 10
* ஓர்வு - அறிவு
-----------

35. தமது மனைவியாருக்கு எழுதிய பாக்கள்.

சித்தம் பரமளிக்கும்* செப்பரிய நல்லின்பம்
நித்தம் பெறநோற்கும் நீள்கண்ணாய் - அத்தம்**
திரட்டுமுறை பற்பலவும் சிந்திக்கத் துன்பம்
மிரட்டுசிறை% சேர்ந்தேன் விரைந்து. 1
* சித்து அம்பரம் - சிதாகாசம்; சிதம்பரம்.
** அத்தம் - செல்வம்; % மிரட்டு - பயப்படுத்துகின்ற.

கம்சனெனும் மன்னனது கற்புச் சகோதரியின்
வம்சமதில் நம்திருமால் வந்தவனைத் - தும்சம்*
செயச்சிறையுள் புக்கதுபோல் தீவினையைத் தும்சம்
செயச்சிறையுள் புக்கேன் சிரித்து. 2
* தும்சம் - நாசம்.

கைமா* முகத்துக் கணபதியின் மாமனருள்
மைமா** பெறமுதலை வாயுற்றாங் - கைமா%
உலகிலறம் செய்துபுகழ் ஒன்றிமுதல்%% ஆகும்
வலனுறவுற் றேன்சிறைவெம் வாய். 3
* கைமா - யானை; ** மைமா - மதத்தையுடைய யானை.
% ஐமா - அழகிய பெரிய; %% முதல் - கடவுள்.

கோனாட்சி நீக்கிக் குடியாட்சி ஏற்படுத்தித்
தானாட்சி செய்வலெனச் சாற்றியோன் - மீனாட்சி
என்றழைக்க உள்மகிழும் ஏந்திளையே உற்றனையோ
இன்றழைக்கக் காணா இடர்*. 4
* இடர் - துன்பம்.

சிவந்துணையும் பெற்றஇரு சேய்துணையும் நல்ல
தவந்துணையு மாநிற்கும் தையால்* - உவந்த**
கொழுந்தனுங் கால்விலங்கைக் கொள்ளமதி குன்றி
விழுந்ததென் னோதீ வினை. 5
* தையால் பெண்ணே; ** உவந்த - களித்த.

என்னுயிரே இன்னுயிரா என்றுமிவண் கொண்டுநிற்கும்
உன்னுயிரே தன்னுயிரா உட்கொண்ட - என்னுரிய
மாதுலனும் சென்றனனோ வானூர் உனைப்பிரிந்துன்
காதலனிங்* குற்றதுயர் கண்டு. 6
* காதலன்- கணவன்.

மன்னன் மனையும் மயங்குதல் உண்டெனில்
பின்னர் மயங்காரோ பேதையார் - நன்னுதால்*
"இன்னாமை** இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார்% விழையும்& சிறப்பு. 7
* நல்நுதால் - நல்ல நெற்றியை உடையாளே.
** இன்னாமை - துன்பம்.
% ஒன்னார் - பகைவர்.
& விழையும் - விரும்பும்.

திருவும்* புகழும் சிறந்தன பிறவும்
மருவுற நிற்குமென் மாசிலா மனைவியே!
உன்னது வரவுமென் உயிரினும் இனியநம்
நன்மகார்** வரவுமிவண் நல்வர வாகுக.
என்னரும் உயிரினும் என்னுயர் உளத்தினும்
மன்னுறப்% பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்;
பின்னுள பாதியைப் பெரியநம் தேயத்தின்
தன்னடிக் களித்தேன்: சத்தியம் இஃதே.
பிறமகள் எவளையும் பிறதொழில் எதனையும்
உறுவனோ இனியுமென் றுன்னிடேல் அஞ்சிடேல்; 10

இற்பிரிந் திங்கியான் இயற்றும் தவத்தினில்
நிற்பனோ நீடென்று நெஞ்சொடு நினைந்திடேல்;
பெருந்தவ முனிவரும் பின்னிடத் தக்கஎன்
அருந்தவம் இந்நாள் அநேகமா முடிந்தது;
விரைவினில் வெளிவந்து வேண்டுவ செய்துயான்
தரையினில் நின்றறந் தகவொடு நாட்டுவேன்.
தனித்தநும் தவத்தினில் சார்ந்தவோ பலதுயர்
கனித்தநும்& உடல்மிகக் களைத்ததோ என்பையேல்,
துயரென்பதறிந்திலேன் சுகமொன்றே துய்த்துளேன்
உயருருப் பெற்றுளேன் உரைப்பேன் கேண்மோ: 20

தவத்தினைப் புரிகையில் சரீரம் களைத்திடா
துவப்புறச் செய்தலின் உவமைவே றில்லாச்
சிறியவிரு சட்டைகள் தேகத்தில் புனைந்துளேன்;
சிறியவோர் குல்லாச் சிரத்தினில் தரித்துளேன்;
வெற்றியே தவத்தினும வேறுள எஃதினும்
பெற்றிடச் செய்திடும் பெருமையொடு மற்றுள
நலமெலாம் எளிதினில் நல்கிடும் கழலொன்று%%
வலதுதாள் மேலே மாணுற யாத்துளேன்;
சிவனடித் தொண்டர்கள் சிறப்புற அணிந்திடும்
நவமறு&& மணிநாண்ç நற்களம் பூண்டுளேன்; 30

தவத்தினில் சிறிது சரீரம் இளைத்துளேன்;
உவப்பொடு கண்டெனை உயர்வெலாம் பெறுவையே.
* திருவும் - செல்வமும்; ** மகார் - மக்கள்.
% மன்உற - நிலைபெற; & கனித்த - மெல்லிய.
%% கழல் - வெற்றித் தண்டை.
&& நவம் அறு - குற்றத்தைப் போக்காநின்ற.
ç மணிநாண் - உருத்திராக்க மணிகளைக் கோக்கத்தக்க கயிறு.

புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே* தீதால்**
பதுமையும்சாம்% வெஞ்சிறையுள் பட்டென் - முதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்%%
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து. 1
* பொன்மயிலே - பொன் போல பிரகாசிக்கும் மயிலின் சாயையை உடையாளே!
** தீதால் - தீயசெயல்களால்.
% பதுமையும் சாம் - பொம்மையும் அழியத்தக்க.
%% தமிழ்க்கனிகள் - மதுரமான கனிகளுக்கு ஒப்பான தமிழ் நூல்கள்.

அதிசயம் கேளாய்என் அன்னமே* கூற்றின்
சதி**செய்வார் ஆர்சிறையைச்% சார்ந்தென் - பதிஉணரும்&
பாக்கியம் பெற்றேன் பலருநிதம் சாமியெனும்
வாக்கியமும் பெற்றேன் மகிழ்ந்து. 2
* அன்னமே - அன்னத்தின் நடையை உடையாளே.
** சதி - வஞ்சனை.
% ஆர் - நிறைந்திருக்கா நின்ற; & பதி - தலைவனை.

வியப்பினைக் கேளாய்என் மின்கிளியே* நீற்றின்
மயப்படுத்தும்** தீச்சிறையில் வாழ்ந்து - நயப்புனல்%
ஆடி அமுதருந்தி ஆய்&மலர்கொண் டென்பதியோ
டூடிஇன்பம் உற்றேன் உணர்ந்து%%. 3
* மின் கிளியே - மின்னுகின்ற கிளியினது சொல்லை உடையாளே.
** நீற்றின்மயப்படுத்தும் - சாம்பர் ரூபமாக்கும்.
% நயப்புனல் - இன்பத்தைக் கொடுக்கும் நீர்.
& ஆய் - தெரிந்தெடுத்த.
%% உணர்ந்து - ஊடல் தெளிந்து.

கருங்கயற் கண்ணாய்யான் கண்டுளேன் நம்மோர்
பெருங்கவலை தீர்த்தரசு பெற்றின் - பொருங்கடையச்
செய்யும் மருந்தது தீஉயிர்க்கும் இன்னாங்கு*
செய்யா திருக்கும் செயல். 1
* இன்னாங்கு - துன்பம்.

சிறுசெரல்* பின்வரச் செய்கின்ற கண்ணாய்
நறுமணம் ஈயும்நம் நாட்டின் - சிறுவர்
அருந்திட நல்குவாய் அன்போ டழைத்திம்
மருந்தினைத் தாயா மகிழ்ந்து. 2
* செரல் - மீன்கொத்திப் பறவை.

மீன்றன் இனமென்று மேல்நோக்கும் கண்ணாய்ஓர்
கோன்றன் குடியெனும்நம் கூர்இளைஞர்* - ஆன்ற
அறிவடைந் தெவ்வுலகும் ஆட்சிபுரிந் தின்பச்
செறிவடைந்து நிற்பர் சிறந்து. 3
* கூர் - புத்திக் கூர்மையுள்ள.
--------------------
36. தமது மைந்தருக்கு எழுதிய பாக்கள்.

சிவமே பதியெனச் சிந்தித்து நாளும்
தவமே இயற்றும் தமியனே* பதியென்
உயிருளும் கொண்டஎன் உயிரின் துணையே!
செயிரெலாம் நீத்தேன், சிவத்தருள் பெற்றேன்,
மெய்யறி வடைந்தேன், விளங்கநன் குரைத்தேன்,
மெய்யறம் உணர்ந்தேன், மேன்பட இயற்றினேன்;
இனிஇவண் நிற்றற் கேதுஒன் றில்லை**.
கனிகொண்ட பின்னர் காட்டிலென் வேலை?
கரைந்தே உருகுமென் கண்ணே! அமுதே!
விரைந்தே வருகிறேன், வேண்டுவ தருகிறேன். 10
வருந்துதல் விட்டுநீ மனக்களிப் பொடுநம்
திருந்திய மகாரிவண் சிறப்புறப் பேணி
உனக்கும் எனக்கும் மனக்குது குலிப்புடன்%
ஊழியம் புரிந்திடும் உன்சகோ தரனுடன்
வாழ்நீ; வாழியான்; மைந்தரும் வாழியே. 15

* தமியன் - துணையற்றவன்; ** ஏது - காரணம்.
% குதுகுலிப்பு - சந்தோஷம்.
--------------

எவ்வெப் பொழுதில் எஃதெஃது கேட்பேனோ
அவ்வப் பொழுதில் அஃதஃதைச் - செவ்விதில்*
ஈந்துவரும் என்றுணைபோல் இவ்வுலகில் இஞ்ஞான்று
மீந்தவருள்** ஒன்றுண்டோ வேறு. 1
* செல்லிதில் - இன்பத்தோடு; **மீந்தவருள் - இருக்கின்றவருள்.

இன்பமோ செல்வமோ எஃதுமெற்கு வேண்டாம்நீர்
இன்பமுறல் ஒன்றேஎற் கெல்லாம்என் - றன்பமைந்து*
தன்னயமும்** தன்சுகமும் தன்னகையும்% நீத்துநிற்கும்
என்னவள்போல் பெண்ணுண்டோ இன்று. 2
* அமைந்து - நிறைந்து; ** தன்நயம் - சுயநயம்.
% நகையும் - ஆபரணமும்.

கடவுளது செய்கையெலாம் கண்டுமகிழ் வுற்றுக்
கடவுளது நல்லருளைக் கைக்கொண் - டடமுறுமென்*
றெல்லாம் அளித்துதவும் என்மனைபோல் இந்நாளில்
இல்லாளும் மற்றுண்டோ இங்கு. 3
* அடம் - பலம்.

வாழைப் பழம்கடிக்க மாட்டாத என்பற்கள்
ஏழைச் சிறார்கடிக்க* ஏலாத - காழுடையாய்
சீடைதினல்** இந்நாள் சிறுகுடிலுள் நிற்பதொக்கும்
மேடையையும் ஏற்காநின் மெய்%. 1
* சிறார் - சிறுவர்; % மெய் - உடல்.
** சீடை - கடிப்பதற்குக் கடுமையான ஒரு மாப் பண்டம்.

முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம்வாதம்*
அக்காரம்** தேன்பாலோ டட்டூட்டக்% - கக்குமென்னா%%
கேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்
வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து 2
* வாதம் - வாதம்பருப்பு; ** அக்காரம்-சருக்கரை.
% அட்டு - வேகவைத்து; %% கக்கும் என்நா - துப்புகின்ற எனது நாக்கு.

பாராளும் செங்கோலும் பண்பாளும் இன்குழுவும்*
சீராளும் நன்னிதியும் தீமையிலா - தோராளும்
வானுமுன்னா** என்னுள்ளம் வாழ்வுடையாய் சோறுன்னல்
மானுநின்கை% ஈங்கரைத்தல் மா. 3
* இன்குழுவும் - ஸ்திரிகள் கூட்டமும்.
** வானும் - சுவர்க்கமும்; % மானும் - ஒக்கும்.

என்னரிய மெய்த்துணையே இன்னினியான்* வந்துனக்கு
மன்னரிய** இன்பமுயர் வாழ்வுமகார் - உன்னரிய%
கொற்றத்தா& ரெல்லாம் கொடுத்துவப்பேன் உன்னருமைச்
சுற்றத்தார் வாழ்த்தஉனைச் சூழ்ந்து. 1
* இன்னினியே - இப்பொழுதே.
** மன் அரிய - அடைதற்கு அருமையான.
% உன்அரிய - நினைத்தற் கருமையான.
& கொற்றத்தார் - வெற்றிமாலை.

என்மனத்துள் வாழ்துணையே இன்னினியான் வந்தங்கு
நன்மனத்துள் வாழ்மெய்யின் நன்ஞானம் - உன்மனத்துள்
பற்றிநிற்கச் செய்துவப்பேன் பாரிலுளார் அஃதடையச்
சுற்றிநிற்க உன்னைத் துதித்து. 2

என்னுயிரை ஆள்துணையே இன்னினியான் வந்தங்கு
மன்னுயிரை ஆள்மெய்யின் மாண்பெல்லாம்* - உன்னுயிரைச்
சார்ந்துநிற்கப் பார்த்துவப்பேன் தாரணியோர் தம்முயிரை
ஓர்ந்துநிற்க மெய்யென் றுயர்ந்து. 3
* மாண்பு - சிறப்பு.
என்னுயிர் மைந்தர்காள் ஈசனும் நாதனும்*
என்னகத்தும் நும்மகத்தும் எய்தியுளார் - பொன்னுறையும்
நம்முயர் நாட்டை நமக்கவர் நல்கிடுவர்
நம்முயர்வு காண்கின்ற நாள். 4
* நாதனும் - ஆசானும்.

திருமந் திரநகரிற் செல்வநனி ஈட்டித்
தருமந் தினம்புரிந்த தக்கோன் - அருமந்த*
பிள்ளைகாள் மாமனொடும் பெற்றா ளொடுமொன்னார்
எள்ளமெலி கின்றீரோ இங்கு. 5
* அருமந்த - அரும் மருந்து அன்ன.

தந்தைஉயிர் வீடநகர்* தாய்தமரெல் லாம்துறந்து
முந்தை&மனை** கொண்டருங்கான் மூழ்கிநின்றான்% - நுந்தை%%
மரபினனேç அன்னையொடும் மாமனொடும் தந்தை
விரதநகர்çç வந்தென் மெலிவு. 6
* உயிர்வீட - உயிரை விட; & முந்தை - முன்நாளில்.
** மனை - மனைவியை; % கான்மூழ்கி - காட்டில் வசித்து.
%% நுந்தை - நும் தந்தையின்; ç மரபினன் - குலத்தினன்.
çç விரதநகர் - தவம்புரியும் நகரம்.

அண்டரெலாம்* தன்குடைக்கீழ் ஆக்கிஉயர் மூவரையும்**
தொண்டரெனக் கொண்டளித்த சூரனொடு - பண்டமரும்
செய்துவென்றோன் நும்குலத்தைச் சேர்ந்தசிறு பாலனன்றோ
எய்துகின்ற தென்னோ இளைப்பு. 7
* அண்டர் - தேவர்; ** மூவர் - முத்தேவர்.

ஆறுமுகம் கொண்டிங் கசுரரையெல்லாம் தொலைத்துத்
தேறுமுகம்* கொண்டுநிற்கத் தேவரெலாம் - வீறுமுகம்**
காட்டிநிற்பான் பேர்கொண்ட கண்மணியே மெய்வலியை%
ஈட்டிநிற்பான் வந்தேன் இவண். 8
* தேறுமுகம் - தேறுதல் அடைந்த முகத்தை.
** வீறுமுகம்-பெருமை பொருந்தியமுகத்தை.
& மெய்வலி - கடவுள் வலிமை.

மெய்வலியும் பெற்றேன்யான் மெய்யறிவும் உற்றேன்யான்
மெய்யறமும் கண்டேன்யான் மெய்யாகக் - கை*வலியும்
கொண்டேன்யான் நின்னைஇனிக்கூடி நினதன்னையிடம்
உண்டேன்யான் உள்ளம் உவந்து. 9
* கை - ஒழுக்கம்.

மகராசன் என்னுமுயர் மாண்உலக நாதா
அகராசன்* நீஎன்னோர்க் காகி - இகராசன்**
ஆகிப் பரராசன்% ஆகிஇவண் வாழ்ந்திருப்பாய்
தேகியென%% வந்தாரைச் சேர்த்து. 10
* அகராசன் - மனத்தில் முதன்மையாக நிற்பவன்.
** இகராசன் - இவ்வுலக அரசன்.
% பரராசன் - கடவுள்; %% தேகி என - கொடு என்று.

என்னருமை ஆறுமுகா இன்றுன்னைக் கண்டறிந்தேன்
என்னருமைத் தேயநமக் கெய்துமென - உன்னருமை
வாக்கால் மதியால் மலர்முகத்தால் மாண்நடையால்
ஈக்காற்* பொழுதே இருந்து. 11
* ஈக்கால் பொழுது - சிறிது நேரம்.
--------------------------

உலகமெலாம் காக்கும் உயர்உலக நாதா
இலகுபெயர் பெற்றபிள்ளாய் இஞ்ஞான் - றுலகமெலாம்
இன்பமுற நிற்கதனை ஈதற்கே இங்குவந்து
துன்பமுற நோற்றேன் துணிந்து. 1

என்னரிய நோன்பிற் கினிதுவந்து நம்மீசன்
தன்னரிய காட்சியினைத் தந்துரைத்தான் - நின்னரிய
புத்திரரும் நின்நாட்டுப் புத்திரரும் சீக்கிரத்தில்
எத்திசையும் காத்தளிப்பர் என்று. 2

தன்னிலையைக் காட்டிஇதைச் சாற்றியதும்* அல்லாமல்
இன்னிலையே** எந்நிலைக்கும் ஏற்றமென்றும்& - இன்னிலையில்
சென்றுநின்று மெய்யறத்தைச் செய்யென்றும் சொற்றனனால்
இன்றுவந்து சேர்வேன் இலம்%. 3
* சாற்றியதும் - சொல்லியதும்.
** இல்நிலை - கிரக ஆசிரமம்.
& ஏற்றம் - உயர்வு.
% இலம் - வீடு.
--------------

37. தமது மைத்துனனுக்கு எழுதிய பாக்கள்.

மைத்துனக் கேண்மையே* மெய்த்துணை** என்றிவண்
யாவரும் சாற்றும் மாவரும்% வாக்கு%%
நித்தமும் நிலைக்கும் உத்தம மெய்யென
யானினி துணர்ந்திடு& வானினி துவந்து
பலபல செய்த நலமிகும் மைத்துன!
நின்னது வரவும் என்னவள் வரவும்
என்மகார் வரவும் நன்மணம்&& எய்துக.
என்னைஇங் கனுப்பிய முன்னைய வினையும்
யானிவண் இழைத்த கோனுயர்ç தவமும்
நேற்றே முடிந்தன; தேற்றேçç நின்னரும்
தங்கையை இனியான் அங்குவந் துற்றவள்
கவலைநோய் களிலொரு திவலையும்@ இலாது
போக்குவேன் நலனெலாம் ஆக்குவேன் வலனெலாம்@@
எய்துவேன் அறனெலாம் செய்குவேன் கடவுளின்
நன்றெலாம் அடைகுவேன் என்றவட் கியம்பியே. 15

* கேண்மை - நட்பு.
** மெய்த்துணை - உண்மையான துணை.
% மாஅரும் - பெரிய அருமையான.
%% வாக்கு - வசனம்.
& இனிது உணர்ந்திடுவான் - நன்கு அறியும் பொருட்டு.
&& நன்மணம் - நற்புகழ்.
ç கோன்உயர் தவம் - அரசன் செய்யத்தக்க உயர்ந்த தவம்.
çç தேற்று - தேறுதல் சொல்வாய்.
@ திவலையும் - துளியும்.
@@ வலனெலாம் - வெற்றியெல்லாம்.
-----------

என்னினிய மெய்யளிக்கும்* இன்னுயிரின்** காத்துதவும்
என்னினிய மைத்துனனே இன்றுன்பால் - மன்னியிருந்&
துன்னுடைய சொற்கொண்டேன் உள்ளுவந்தேன் இன்றெய்தும்
என்னுடைய தேயம் எனக்கு. 1
* மெய் அளிக்கும் - உடம்பைக் காக்கும்.
** இன் உயிரின் - இனிய உயிரைப்போல.
& மன்னி - பொருந்தி.
----------------

38. சிரஞ்சீவி கோ.அ. இலக்குமணப் பிள்ளைக்கு எழுதிய பாக்கள்.

இராமருக்குப் பின்சென் றிராப்பகலாக் காத்துத்
தராதலமும்* வெற்றியுமே தந்து - சராசரத்தின்**
துன்பறுத்தான் பேர்கொண்டோய் சொன்னவெலாம் செய்வாயென்
என்புமுதல்& எல்லாம்இன் றேற்று. 1
* தராதலம் - பூமி.
** சரஅசரம் - அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும்.
& என்பு - உடம்பு.

எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள்
வல்லாரும்* வல்லுநரும்** மாநிலத்துச் - செல்லா
திவன்பேச் சினியென் றெனையிகழ்ந்தார் என்மெய்த்
தவன்&பூமி நாதன்% தடத்து%%. 2
* வல்லாரும் - மடையரும்.
** வல்லுநரும் - அறிஞரும்.
& மெய்த்தவன் - உண்மையான தவசி. (வள்ளிநாயகசுவாமி)
% பூமிநாதன் - உலகநாதன். (தமது பிதா)
%% தடத்து - சென்ற வழி.

கடவுளும் நானிவண் கற்றுள கல்வித்
திடனுமே சீருயிரைச் சேர்த்தென் - உடலில்
பொருத்தநிற் கின்றேன் பொதிந்தெனை* வைத்துப்
பொருத்தமாச் சேர்ப்பாய் புவி. 3
* பொதிந்து - (அரிய ஓர் பொருளாகப்) பத்திரப்படுத்தி.

பண்டிகை* என்று பகர்ந்திடும் இத்தினம்
தண்டிகை** ஏறுவோய் தந்துளேன் - ஒண்டியேன்&
கொண்டிவை கண்டுநீ கூறிய செய்தெனை
அண்டி%நின் றாதரிப் பாய். 4
* பண்டிகை - தீபாவளிப்பண்டிகை.
** தண்டிகை - பல்லக்கு.
& ஒண்டியேன் - தனியேன்.
% அண்டி - அடுத்து.

இலக்குவனே என்னிளையாய் இஞ்ஞான்று நின்னைக்
கலக்கியுள தீயசெயல் கண்டேன் - குலக்கண்ணே
நம்மவர்க்குத் தீங்கிழைப்பார் நம்மவரே அன்னார்பால்
எம்மொழியும் சொல்லாய் இனி. 5
----------------

39. சிரஞ்சீவி வ.எ. மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு எழுதிய பாக்கள்.

சோதரனே* மீனாட்சி சுந்தரனே எற்கரிய**
ஆதரவா% வந்துதித்த அப்பனே - காதலரின்
நட்பருமை காட்டற்கு நம்அரணுள் உற்றனையோ
கொட்பரணுள்& யானுறஉட் கொண்டு. 1
* சோதரன் - சகோதரன்.
** எற்கு - எனக்கு.
% ஆதரவு - பற்றுக்கோடு.
& கொட்பு - பகை.

இராமன் வனம்புகப்பின் ஏகிஅவற் கூறு
வராமல் புரந்ததம்பி மான- இராதுவெளி
நம்மரணுட் சென்றுதனை நண்ணினையோ உன்னையொன்னார்
தம்மரணுட் கொள்ளாத தால். 2

மாற்றார் அரணுள் வசித்தாலும் எற்கன்னார்
ஆற்றா தெனதுமனத்* தாறுற்றுத்** - தோற்றார்
நமதரணுள் நீவசித்தும் நம்ஏவல் செய்வார்
தமதுரையைத் தாங்கலென்னோ% சாற்று. 3
* ஆற்றாது - எதிர் நில்லாது.
** மனத்தாறுற்று - மனத்தின் போக்கில் நடந்து.
% தாங்கல் - கேட்டல்

அண்ணன் பகைவர் அரணுள் அழிவனெனும்
எண்ணம் உனதறிவை ஏய்த்ததோ* - கண்ணன்
பகைவர் அரண்புகுந்து பற்பலமுன் செய்த
வகையை மறந்தனையோ மற்று. 4
* ஏய்த்ததோ - வஞ்சித்ததோ?

அன்புமிகு தம்பி அயலார்* அரணுள்ளே**
என்புகரம் பூன்தடிதோல்% எல்லாமும் – வன்புறவே&
பெற்றேன் இனியான் பிணியறுத்தேன் மூப்பறுத்தேன்
கற்றேன்சா வாமருந்தும் காண். 5
* அயலார் - பகைவர்.
** ஊன் - தசை.
% - இறைச்சி.
& வன்பு உறவே - பலம் பொருந்தவே.

ஆதலினால் என்இளையாய் யான்இங்கு மாய்வலென
நோதலினால் நீயுற்ற நோய்விடுப்பாய் – காதலினால்
மக்களயல் ஊரேக மையலுற்ற தாயவர்தன்*
பக்கமுற அஃதொழித்த பாங்கு. 6
* அவர் - அம்மக்கள்.

"யானை எருத்தம்* பொலியக்** குடைநிழற்கீழ்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை%
வினைஉலப்ப& வேறாகி&& வீழ்வ"ரெனும் வாக்கை
நினைஉரத்திற்%% கஃதோர் நெறி. 7
* எருத்தம் - பிடர்
** பொலிய விளங்க.
% ஏனை வினை - மற்றையவினை.
& உலப்ப - ஆரவாரிக்க; வர.
&& வேறு ஆகி - அப்பதவியை இழந்து.
%% உரத்திற்கு - பலத்திற்கு.

அண்ணன் அழியினும் தன் அன்னைபிதா வீயினும்தன்*
கண்ணன்ன மக்களிடு காடுறினும் – நண்ணும்
அவருடைய ஊழால் அழிந்தனரென் றுள்ளக்
கவலைவிடல் மாந்தர் கடன். 8
* வீயினும் - மாயினும்.

நம்மைநிகர் கோமக்கள் நானிலமெல் லாம்பகைவர்
தம்முடைய வாக்கொளினும் சற்றேனும் – விம்மலுறா
தந்நிலமெல் லாம்ஈட்டி ஆள்தல் கடனறிவாய்
எந்நிலமும் தம்மையுற இங்கு. 9

அறிவுருவுன் ஆன்மா அறிவுமிகு தம்பி
அறிவுருநம் அன்னைபிதா ஆதி – அறிவுருவே
எவ்வுலகும் ஆதலினால் இன்னினிநீ நல்லறிவுற்
றிவ்வுலகில் வாழ்வாய் இனிது 10
--------------------


40. ஸ்ரீ.அ.மு.ம. அவர்களுக்கும் சி.சு.வ. அவர்களுக்கும் எழுதிய பாக்கள்.

அ.மு.ம. என்னும் அழகியவி லாசநண்ப
சி.சு.வ. என்னும் சிறந்தநண்ப-வ.உ.சி.
என்னும் நுமதடியன் இன்று நுமைத்தொழுது
பன்னும் மொழிகொள்மின் பார்த்து. 1

நந்நாட்டு வாணிகமும் நற்றொழிலும் மெய்யறமும்
எந்நாட்டும் இல்லையென எல்லோரும்-தந்நாட்டில்
சொல்லிநிற்க நந்நாட்டார் தொன்னிலையின் நன்னிலையைப்
புல்லிநிற்கச்* சூழ்ந்தேன்** பொதிந்து. 2
* புல்லி - பொருந்தி.
** சூழ்ந்தேன் - எண்ணினேன்.

"அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முக" மென்--றெடுத்துரைத்த
பொய்யா மொழிப்புலவன் பொய்யா மொழிக்கடியன்
மெய்யாக* நின்றேன் விரைந்து. 3
* மெய்யாக - சான்றாக.

என்னுள்ளம் கண்டவுடன் ஏதிலரெல்* லாம்கூடி
மன்னுள்ளம்** இவ்வரியன் மன்னினலால்-தன்னுள்ளம்
பற்றியதைச் செய்வனென்று பாழ்சிறையுள் தள்ளியெனைச்
சுற்றிநிதம் ஆண்டார் தொழுது. 4
* ஏதிலர் - அந்நியர்.
** மன் உள்ளம் - அரசனுக்குரிய நினைப்பை.

பாழ்சிறையை நன்நூலும் பல்பொருளும் மெய்ப்பொருளும்
சூழ்சிறையாக்* கொண்டெல்லாம் சூழ்ந்தறிந்தேன்--தாழ்சிறையை
விட்டுநின்ற நாளில் வெளிவருவேன் என்னுள்ளம்
தொட்டுநின்ற** செய்வேன் தொடுத்து&. 5
* சூழ்சிறை - ஆராயும் அரண்.
** தொட்டு நின்ற - பற்றி நின்றவற்றை.
& தொடுத்து - தொடர்ந்து.

சென்றதின மும்கழிவும்* சேர்க்கவிதி** தீர்ந்ததுகாண்
நன்றறியா ஏதிலரே நால்மூன்று% - நின்ற திங்கள்
என்றுபுகல் கின்றனரிங் கென்னுரியர் வந்துள்ளார்
நன்றுபுகல் தற்கு& நயந்து. 6
* கழிவு - கழிக்க வேண்டிய (நன்கொடை) நாள்களும்.
** விதி - தீர்ப்பு நாள்.
% நால் மூன்று திங்கள் நின்ற - பன்னிரண்டு மாதங்கள் இன்னும் உள்ளன.
& புகல்தற்கு - சொல்லுதற்க.

ஈன்றறியார் என்னுயிர் நல்லுரையை எள்துணையும்
இன்றுகொளல் மாஅரிதே இன்னுமவர் - நின்றதெனச்
செப்புகின்ற ஆறிரண்டு திங்களின்பின் என்னைஉல
கொப்புதற்கே விட்டிடுவர் ஊர்க்கு. 7

என்னுரியர் நன்முயற்சிக் கீசனருள்செய்யினதன்
முன்னுமிடர் நீங்கியரும் மொய்ம்படைவேன்* - மன்னுமது**
காலம் வரைஎன்னைக் காக்கஎமர்% ஈங்கிருத்தல்
சாலவும்நன் றாலோரும்& தான். 8
* மொய்ம்பு - வலி.
** அதுமன்னும் - அச்செயல் பொருந்தும்.
% எமர் - என் உற்றார்.
& ஆல், ஓரும், தான் - இவை, அசைகள்.

நீவிர் முனமளித்த நீள்நிதியெல் லாமெனது
தாவில்* வழக்காண்டார்** தாம்கொண்டார் - காவல்%
மனையாள் நகை%யிரவால்& வந்தபொருள் இன்றிங்
கெனையாள்வார்%% கொண்டார் இழுத்து. 9
* தாவுஇல் - அழிவு இல்லாத.
** ஆண்டார் - நடத்தினோர்.
% காவல் - கற்புக்காவலைக்கொண்டுள்ள.
% நகையால் - நகைகளின் விற்பனையால்.
% இரவால் - யாசிப்பால்.
%% ஆள்வார் - காப்பார்.

என்னவரின் வாழ்விற்கின் றென்னையிவண் ஆள்கின்றார்க்
கென்னவர்பால் ஒன்றுமிலை இஃதுண்மை - முன்னெரெனைக்
காத்ததுபோல் இன்றுமெனைக் காத்தளித்தல் நும்கடன்காண்
ஈத்துமதிக் காறைந் தெமர்க்கு*. 10
* மதிக்கு ஆறைந்து ஈந்து - மாதத்திற்கு முப்பது ரூபா தந்து.
---------------------


41. ஸ்ரீ.அ.சு.வே.ஈஸ்வரமூர்த்தியா பிள்ளையவர்களுக்கு எழுதிய பாக்கள்.

பாசுரமும்* செந்தமிழும் பண்புமறிந் தாள்கின்ற
ஈசுரமூர்த் திப்பிள்ளை என்னுநண்ப - தேசுவளர்
தூற்றுக் குடிவிட்டென் தூயமனை நீங்கிடநீ
சாற்றியது கேட்டேன் தடுத்து. 1
* பாசுரம் - செய்யுள்

"கடித்துக் கரும்பினைக் கண்தசுர நூ றி*
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே - ஆகும்"
வடித்துத் தெளித்து மலரோடிட் டாலும்
குடித்திடக் கைக்குநீர்க் குண்டு**. 2
* தகரநூறி - உடைய நசுக்கி.
** குண்டு நீர் - கடல் நீர்.

தாழும் பொழுதெல்லாம் தந்தென்னைக் காத்தங்கு
வாழும் அமுமசிசு வக்களையான் - ஏழும்
இரண்டுமதிக் கோர்தடவை ஈந்துவரக் கேட்டுள்ளேன்
திரண்டுவர* அந்நிதிநீ செய். 3
* திரண்டுவர - கூடிவரும்படி.
---------------

42. ஸ்ரீ.சி.விஜயராகவாசாரி யாரவர்களுக்கு எழுதிய பாக்கள்.

நல்லோரை ஆள்விசய ராகவாச் சாரிமன்னா
இல்லோராய்ச்* சார்ந்தயரும்** என்னுரியர்-வல்லோராய்%
நிற்றற்கு வேண்டும் நிதியளித்தே யான்வீடு&
பற்றற்கு%% வேண்டுவன பார். 1
* இல்லோராய் - தரித்திரராய்.
** சார்ந்து அயரும் - பிறர்பால் சார்ந்து தளரும்.
% வல்லோராய் - வலியினை உடையோராய்.
& வீடு - விடுதலை.
%% பற்றற்கு - அடைதற்கு.

என்னுடைய நாவாய்க் கிருநிதந் தோர்க்கெல்லாம்
என்னுடைய மெய்வணக்கம் ஈந்திடுவாய் - மன்னுடைய
நல்லருளைக் கொண்ட பின்பு நான்நிதியை மீட்டுவதாச்
சொல்லருளன் னார்க்குத்துணிந்து. 2

என்னுடைய நாட்டிற் கிதம்புரிந்து* நிற்பார்க்கும்
என்னுடைய மெய்வணக்கம் ஈந்திடுவாய்-- என்னுடைய
கோட்பாடு தீஉயிர்க்கும் கோளிழைத்தல்** கூடாதென்
றாட்பாடு% செய்வார்க்கறைந்து&. 3
* இதம்புரிந்து - நன்மைசெய்து.
** கோள் - தீங்கு.
% ஆள்பாடு-மனிதக் கொலை
& அறைந்து - சொல்லி.
----------------

43. ஸ்ரீ. பா.சி. அவர்களுக்கு எழுதிய பாக்கள்.

ஞாலக் குழுவிலரும் நாவலத்தின்* பொன்நகருட்
பாலக்கா டிஞ்ஞான்று பாலித்துச்**--சீலம்
தவமறிவு பூண்டசின்னச் சாமிவள்ளால் ஏழு
நவமுலகிற்% கண்டு வந்தேன் நான். 1
* நாவலத்தின் - ஆசியா கண்டத்தின்.
** பாலித்து - காத்து.
% நவம் - புதுமை.

சோலைகிண றேரிநதி தூயவள நன்செயறச்
சாலையரண்* மாடமிலம் தார்மன்னன்--நூலின்
நயம்புரிந்த** தொல்குடிகள் நண்ணியுள ஊரை
இயம்பினர்காண் பாலைக்காடென்று. 2
* அறச்சாலை - சத்திரம்.
** நயம்புரிந்த - நியாயத்தை விரும்பிய.

ஐம்பொறியும் காணா ததைப்பெரிய சாமியென்றும்
ஐம்பொறியும் காண அமைந்திருந்து-பைம்பொனிலம்
ஆமினிய* வாக்களிக்கும் அண்ணலைச்சொன் னார்சின்னச்
சாமியென்றும் பிள்ளையென்றும் தந்து**. 3
* ஆம் - பொருந்தும்.
** தந்து - கற்பித்து.

தாளாண்மை* செய்துநிதம் தக்கபொருள் ஈட்டியிவண்
வேளாண்மை** செய்தஒரு வேளாளன்--வாளாண்மை%
செய்யறத்தைக் கொண்டார் சிறைப்பட்டு மெய்யறிவால்
மெய்யறத்தைச் செய்தான் மிகுந்து. 4
* தாளாண்மை - முயற்சி.
** வேளாண்மை - பரோபகாரம்.
% வாளாண்மை செய் - வாளை ஆளுதலைச் செய்யாநின்ற.

அன்னான் சிறையுள் அடைபட்ட ஓர்தீயன்
சொன்னான் புவிநின்று தூரத்தே - மன்னாநின்*
றாயென் றுளம்வாடித் தன்னொற்றால் ஈங்கிருக்கி
றாயென் றறிந்தான் நகைத்து. 5
* மன்னா நின்றாய் என்று - வசிக்கின்றாய் என்று.

சிறையுள்ளே எண்ணில் சிறைசெய் தன்னானை
மறையுள்ளே மெய்ப்பொருளை வைத்தாங் - கறையுள்ளே
மூடிநிதம் வைத்துமவன் முன்போல உண்டுணர்ந்து
நாடியன செய்கின்றான் நன்கு. 6

வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரமன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும்* நலிந்து**. 7
* தோலும் - சரீரமும்.
** நலிந்து - கெட்டு.

அவனுடைய நன்மனைவி யாதியர்கள் இந்நாள்
தவனுடைய நல்வேடம் தாங்கிச் - சிவனுடைய
நாமமொடு வாழ்கின்றார் நம்கண்ணன் ஊருள்ளே
ஏமநிதி ஒன்றும் இலாது. 8

பூமருவக்* கண்ட புதுமையெலாம் சொன்னேன்நின்
சேமமொடு நிற்குமரர் சேர்ந்ததமர் - சேமமெலாம்
சாற்றிடுவாய் என்னுரியர் தாகமுடன் தீர்க்குநிதி
ஆற்றிடுவாய்** அன்போ டவர்க்கு. 9
* பூ மருவ - பூமியைப் பொருந்த.
** ஆற்றிடுவாய் - கொடுப்பாய்.

நான்யா ரெனத்தெரிய நாடுவையேல் தாம்பரமார்
வான்யாறு* சார்ந்ததிரு மந்திரத்தின் - கோன்யான்
எனமொழிவர் பாவலரும் ஏழையரும் நாவாய்த்
தனமிகமுன் பெற்றேன்யான் தான். 10
* வான்யாறு - தூயநதி.
-------------------

44. ஸ்ரீ வள்ளிநாயக சுவாமியவர்களுக்கு எழுதிய பாக்கள்.

சிந்தையும் அறிவும் செல்லா வீட்டினில்
சந்ததம்* வாழுமென் தாய்நிகர் நாயக!
ஆதியில் சுந்தரன் அழகிய செய்யுட்**
கோதிலா நிதிபல கொண்டவன் மனைக்கு%
மாற்றாக& நின்றசிறு மங்கைபால்%% நடந்தவள்
ஆற்றாத ஊடலை ஆற்றியவ் விருவரும்
செறிவுற் றிருக்கச்&& சிறுதொழில்ç புரிந்தொரு
மறுவினைçç அவற்கு வழங்கியும்@ அவனது
வீட்டினைப் பறித்தும் வெறுமைமய மாகிய
வீட்டினைக் கொடுத்தும் வேண்டுவ துறந்து 10

* சந்ததம் - எக்காலமும்.
** செய்யுட கோதிலா நிதி - செய்யுளாகிய குற்றமற்றதனம்.
% மனைக்கு - மனைவிக்கு.
& மாற்றாக - எதிரியாக.
%% சிறுமங்கை - வேசி.
&&செறிவுற்று இருக்க- இன்பம் அநுபவிக்க
ç சிறு தொழில் - (கூட்டிவைக்கும்) அற்பச் செயல்.
çç மறுவினை - குற்றத்தை.
@ வழங்கியும் - கொடுத்தும்.

சுகமுறத் தவஞ்செய் தூயஅவன் சகோதரர்
அகமெலாம்* கவர்ந்தவண் அமர்ந்துள சிவனோ,
இந்நாள் என்னிடம் எஃதுமே பெறாது
பொன்னா ணயமொடு புகழ்பல திரட்டி
எனக்கும் என்னுயர் இல்லாட்கும் மகார்க்கும்
மனக்குது குலிபொடு வழங்கியென் மனையின்
மாற்றாட் பிரித்தவள்** மறைந்திடப் பார்த்துக்
காற்றா விரைந்து கடவுளாக் காத்தென்
மனையையும் மகாரையும் மகிழ்வொடு கொணர்ந்திவண்
நனைகண்& சிறப்பொடு நல்கியும் யானுறை 20

* அகமெலாம் - மனம் எல்லாம்.
** மாற்றாட் பிரித்து - எதிரியை வேறுபடுத்தி.
& நனைகண் - நீரால் நனைந்த கண்.

வீட்டையும் பொருளையும் வேறுவ அனைத்தையும்
நாட்டையும் அரசையும் நலத்தையும் எய்த
அசையாது தவத்தில் அமர்ந்திட அருளியும்
அசைவினுள்* வீழ்ந்தஎன் அன்பார் சகோதரர்
பெருந்தவம் இன்றியும் பிறதொழில்** இன்றியும்
திருந்திய அறத்தொடு சீர்சால் நாடுறும்
உரிமையை ஆக்கிட ஊக்கிய நீயோ
பெரியவன் உண்மையைப் பேசுதி%, சுந்தரன்
இனிமைப் பாசில இயற்றிய தவமோ
தனிமையும் துயரும் சார்ந்தஎன் தவமோ 30

* அசைவினுள் - சோம்பலுள்.
** பிறதொழில் - யுத்தம் முதலிய மறத் தொழில்கள்.
% பேசுதி - சொல்.

பெரியது நடுநின்று* பேசுதி, அன்னார்**
அரியவர் என்றிடும் அன்பர்தம் குழுவினே.

உலகெலாம் புரக்கும் ஒருதனிக் கடவுளின்
நலமெலாம் திரண்டு நற்புவி பிறந்து
மறமெலாம் இழுக்கி வண்புகழ் பெருக்கி
அறமெலாம் நாட்டி அரசாகி எவர்க்கும்
சிறக்க நின்றநல் தெய்வக் கொழுநனால்
துறக்கப் பட்டுத் துன்மொழி% தொடரத்
தனித்துச் சென்ற தையல் சீதையைத்
தனித்த வனத்தில் தன்னகத் திருத்தி 40

* நடுநின்று - நடுவுநிலைமையில் நின்று.
** அன்னார் - சிவனும் சுந்தரனும்.
% துன்மொழி - இகழ் மொழி.

இரவும் பகலும் இடைவிடா தருகில்
கரவும்* அச்சமும் கண்டிடா தமர்ந்து
வேண்டுவ எல்லாம் விருப்பொடு கொடுத்தும்
ஆண்டு**மகப் பேறுக்% கன்புடன் உதவியும்
பெற்றநன் மகற்கும்& பின்னுற்ற மகற்கும்
கற்றன பற்பல கற்பித் தருளியும்
பன்னாள் அளித்தும் பண்பொடு புகழை
முன்னாள் ஆக்கிய முனிவரன் மரபினில்
இந்நாள் வந்துநின் றென்னுடை யுளத்தில் 50
* கரவும் - கள்ளமும்.
** ஆண்டு அங்கு.
% மகப்பேறு - பிரசவம்.
& மகற்கும் - மகனுக்கும்.

எந்நாள் வரினும் இம்மியும்* விலகாத்
திறத்தொடு சொல்லருந் திருவடி நிதியை
அறத்தொடு மெய்ந்நிலை அளித்திட வைத்துள
வள்ளிநா யகமெனும்** மாபெரும் தவத்தோய்!
வள்ளிநா யகனது மாணடி மறவா
என்னுடை மனையையும் என்னுயிர் மகாரையும்
நின்னடி நிழலில்% நிலைத்திடச் செய்க;
உலகினுக் கெல்லாம் உயர்ந்த உலகென
இலகுமென் தேயத் தின்பமே நல்கும்
தருமம் பலவும் தழைத்திடச் செய்யக் 60

* இம்மியும் - சிறிதும்.
** வள்ளிநாயகன் - குமரக் கடவுள்.
% நிழலின் - சார்பில்.

கருமம் புரிந்திவண் கட்டுப் பட்டுள*
என்னையும் என்னுடை இன்னுயிர்ச் சோதரர்
தம்மையும் விரைவினில் தளைநீக்கத் தக்க
சென்றபல் நாளாச் சிறியேன் செப்பிய
நன்றே தந்திடும் நயமுள வழக்கினை
விரைவினில் செய்திட மீண்டிவண்** வருக;
தரையினைச் சார்ந்து சாற்றரும் மறங்களைத்
தினமும் புரிந்துநம் செல்வம் முழுமையும்
கனமுற மேன்மேற் கட்டுவார்த் தடுக்கும்
திறத்தினை எமக்குச் சீக்கிரம் தருக 70

* கட்டுப்பட்டுள - பந்தப் பட்டுள்ள.
** மீண்டு - திரும்பி.

அறத்தினை வளர்க்கும் அறிவொடு திரட்டியே%.
துறப்பன யாவையும் துறந்துள பெரியோய்!
துறப்பதும் எளிதெனச் சொல்லவும் துணிந்தேன்.
துறவாத காரணம் சொல்லெனக் கேட்பின்,
இறவாத%% செய்தலே என்கடன் என்றும்
மறத்தினை ஒழித்தே அறத்தினை வளர்க்கவும்
திறத்தினோர் மெச்சவே செயற்கரிய செய்யவும்
சனகன்பின் னவனெனத் தாரணி நிற்கவும்
கனவொன்று கண்டுயான் கருதினேன் அவைசெய.
என்னையாள் கடவுள்நீ என்னுடை சேவகனென் 80

% திரட்டியே - சேர்த்தே.
%% இறவாத - அறங்கள்.

றுன்னிய உண்மையை உவப்பொடு கொண்டேன்.
வேந்தர் தமது வினைசெய் வாரை
ஏந்துவர்* சிலநாள் இகழுவர் சிலநாள்.
அத்துணை யானும் அருளொடு நிற்கையில்
எத்துணை உயரமும் ஏத்துவேன்** வருந்தேல்.
என்னுடை நிலைமை இக்கா லத்தும்
மன்னர்மன் னற்கும் வானுளார் எவர்க்கும்
மிகமிக மேலென விருப்பொடு கொண்டுளேன்
தகவொடு யானே; சத்தியம் இஃதே.
பொன்னினும் என்னினும் பொதிந்து% யான் வைத்துள 90

* ஏந்துவர் - உயர்த்துவர்.
** ஏத்துவேன் - துதிப்பேன்.
% பொதிந்து - போற்றி.

மன்னினும் பொன்னினும் மதிப்புயர் நாயக!
நிகழும் திங்களில் நேரீர் ஆறினில்
புகழும் அரசும் பொருத்தும்நின் கடிதம்என்
கரத்தினில் இருக்கக் கனவொன்று கண்டிங்
குரத்தினில் உறையும்யான் உவந்ததென் சொல்வேன்
மனையின் வாழ்க்கையை மதியாது துறந்துள
நினைஎன் மனையில் நின்றிடச் செய்ததும்
தேயஅர சாட்சியைத் திருத்தநிற் பேனை
நேயநின் துறவினில் நின்றிடச் செய்ததும்
விதியென மொழிந்ததை விருப்பொடு கொண்டேன்; 100

விதியினை நொந்ததை மிகையெனத் தள்ளினேன்.
மைத்துனர் நம்மை மதித்திலர் எனமிகக்
கைத்தென தருமைக் கண்கள் வருந்தநீ
பிரிந்தது தகுதியோ பெருங்குடி செயும்எனைப்
பரிந்து காத்தலின் பண்பிதோ வள்ளுவன்
"குடிசெய் வார்க்கிலை (கூறிய) பருவம்
மடிசெய்து மானம் கருதக் கெடும்" என
மொழிந்ததைக் கண்டு முதுக்குறை* கொண்டு
கழிந்த செயலெனக் கனவென மறப்பாய்.
மதியிலாச் சிலரொடு வழக்கிட நேர்ந்தநின் 110

* முதுக்குறை - அறிவு.

விதியினை நொந்தனை; விரிந்த உயர்ந்தநம்
தேயம் முறுவதும் சிறுமதிப் பட்டின்று
மாய ஆட்சியில் மயங்கியுள தன்றோ?
நின்கடன் அதற்கறிவு நித்தமும் ஊட்டலே;
என்கடன் அதனையாள் இறையினைத் திருத்தலே;
அக்கடன் கொண்டநாம் அறிவிலார் செயல்களை
மிக்கபுன் னகையொடு விடுத்தலே முறைமை.
சாமமுதல் நான்கையும் சாற்றிய நீயதை
ஏமநம் காரியத் தியற்றிடா துழந்தனை;
இன்பம் ஒன்றிலே இடைவிடா தமர்ந்தநீ 120

துன்பம் உற்றதாச் சொல்லவும் துணிந்தனை;
மெய்ப்பொருள் மாமலை மேலிருந் தாளும்நீ
பொய்ப்பொருட் செலவினைப் புகன்றுமிக வாடினை;
சென்னையில் மக்களொடு சிறப்புற வாழென
முன்னம் இயம்பினேன், மொழிந்துசில மறுத்தனை;
திருமந் திரநகர் சேர்ந்துநம் முந்திய
கருமம் தொலையெனக் கழறினேன், அஞ்சினை;
முத்தூர்* நிற்பதா மொழிந்தனை, அஃதெனைக்
குத்துமே** என்றுயான் கூறினேன் வருந்தி;
ஆழ்வார் நகரியே அமைந்ததென் றனைஅன்பில் 130

* முத்தூர் - கோயமுத்தூர்.
** குத்துமே - வருத்துமே.

ஆழ்வாள் அதனையும் அகம்கொளச்* செய்தேன்;
மைத்துனர்க் கெழுதென மனத்தொடு கூறினை,
கைத்தவர் நிற்பது கண்டும்யான் எழுதினேன்;
அவணுற்று மக்களை அயலுற** விட்டுநீ
செவணுறச்% சென்னை செல்வதா எழுதினை,
எத்துயர் வரினும் ஏற்கலாம் என்றுயான்
முத்தூர் நில்லென மொழிந்தேன் பன்முறை;
உரையெலாம் கொளாதும் உரையாதும் ஓடினை;
புரையிலேன் மீதே புகன்றனை புரையின்று&.
சென்றன எல்லாம் செல்லுக. நாம்இனி
நன்றுறும் வழியினை நவில்கிறேன் கேண்மோ: - 140

* அகம்கொள மனத்தில் கொள்ள.
** அயல் உற - பக்கவீடுகளுக்குச் செல்ல.
% செவண் உற - சுகம் அடைய.
& புரை - குற்றம்.

என்னுயர் மக்கள் இருவரும் என்றும்
நின்னடி தொழுது நிலைத்திவண் வாழ்தலே
என்னுளம் கொண்டுளேன்; இஃதொன் றல்லது
பொன்னகர் நிற்பினும் பொதியையில்* நிற்பினும்
வேற்றுமை கண்டிடேன் விளம்பினேன் உண்மையே;
சாற்றிய இவ்வுரை தயைபுரிந் துளம்கொள்.
இத்திறம் செயவலி இலாதுபின் செல்வையேல்
சித்தம் பரத்தின் செயல்போல் ஆகுக.
மதியையும் மதிப்பையும் மறந்தமைத் துனர்க்குப்
புதியவுரை கொடுவெனப் புகன்றதும் விந்தையே; 150
* பொதியை - அகஸ்திய மலை.

மதிப்புமுதல் துறந்தநீ மதிப்பினை அவாவிடின்
மதிப்பையும் பொருளென மதித்துளேன் வரைவனோ?
உயிரின் குறிப்பினில்* ஒப்பமிட் டனுப்பினேன்.
செயிர்அறு வழக்கினைச் செய்தலே துணிவுயான்.
இயம்பின கடன்களை இளையாது தீர்ப்பாய்
நயம்பட யான்இவண் நானிலம் வாழ்கவே. 156
* உயிரின் குறிப்பு - உயிர் போன பின் பணம் கொடுக்கும் ஒரு சங்கத்தின் பத்திரம்.
--------------

மானநிலை கொண்டதனுள் வாழ்வள்ளி நாயகமே
ஞானநிலை கொண்டதனுள் நன்கமர்ந்து - மோனநிலை
எய்தலன்றோ நின்கடன்காண் எய்தியபின் பார்க்குநலம்
செய்தலன்றோ நின்கடன்காண் செப்பு. 1

என்னுடைய முன்னிலையை* எண்ணாமல் இஞ்ஞான்று
நின்னுடைய முன்னிலையை** நேர்ந்தேனென்% - றுன்னுவையேல்
என்னுடைய சொல்லெல்லாம் இன்பளிக்கும் மெய்யுணர்ந்த
மன்னுடைய%% சொல்மேன்மை வாய்ந்து&. 2
* முன்னிலையை - கிரக ஆசிரமத்தை.
** முன்னிலையை - சந்நியாச ஆசிரமத்தை.
% நேர்ந்தேன் - எய்தினேன்.
%% மன்னுடையசொல் - அரசனது சொல்லினுடைய.
& மேன்மைவாய்ந்து - சிறப்பைப் பொருந்தி.

நீவேறு நான்வேறு நீள்நிலமும் வேறென்று
நீவேறு செய்ததனால் நின்னெஞ்சுள் - மாவேறு*
தோற்றங்கள் சார்ந்தனநம் தொன்மையையும்** நீத்தாய்%வெம்
கூற்றங்கள்%% சொன்னாய் குறித்து&. 3
* மாவேறு - பெரிய வேற்றுமையுள்ள.
** தொன்மை-பழைமை
% நீத்தாய் - விடுத்தாய்.
%% வெம் கூற்றங்கள் - கடும் சொற்கள்.
& குறித்து - எழுதி.

"நகுதற் பொருட்டன்று நட்டல்* மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற்** பொருட்"டெனநின் - பாற்சென்
றிடித்துரையும் தந்தேன் இதனையும்நீ வேறாப்%
படித்துரையும் தந்தாய் பதில். 4
* நட்டல் - சிநேகித்தல்.
** இடித்தல் - புத்திசொல்லுதல்.
% வேறா - வேறு அருத்தத்தோடு.

"அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்*" என் - மொழிவந்த
மெய்யறிவை** நின்பால் விடுத்துளேன் பார்த்தருள்நின்
மெய்யறிவைக்% கொண்டு விரைந்து. 5
* கேண்மை யவர் - நட்பை உடையவர்.
** மெய்யறிவு - மெய்யறிவு என்னும் நூலை.
% மெய்யறிவை - உண்மையான அறிவை.

பார்த்ததனின் குற்றம் பருப்பொருள்க ளாதியன*
ஓர்த்தெடுத்து** வேறெழுதி% ஒன்றாகச் - சேர்த்து
விரைவில் எனதருமை மெய்த்தம்பி& மூலம்
புரைகளைதற் கீவாய் பொதிந்து. 6
* பருப்பொருள்கள் - சாரம் அற்றவிஷயங்கள்.
** ஓர்த்து - ஆராய்ந்து.
% வேறு எழுதி - வேறாக எழுதி.
& மெய்த்தம்பி - தமயனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கின்ற தம்பி.
--------------------


45. பதி பசுச் செயல்கள்.*

* பதி - கடவுள். பசு-மனிதன்

கடவுளியல் எய்தியஎன் கண்மணியே இன்று
கடவுளியல் நீவிடுக்கக் கண்டேன் - மடமனமும்
கண்ணும் அழுமழுகை காண்பேயேல் நின்செயலை
எண்ணுவையோ மற்றவன தென்று. 1

ஆனால் அளியென்* றடைக்கலமாச்** சேர்ந்தாரும்
யானெனது% நீத்தாரும் எண்ணுவ%%மெய்க் - கோனுடைய&
ஆணையெனக் கூறிடலாம் அல்லாதார் எண்ணுவமெய்
ஆணையெனல்&& குற்றம் அறி. 2
* அளி - காப்பாய்.
** அடைக்கலம் - சரண்.
% யான் எனது - அகங்காரம் மமகாரங்களை.
%% எண்ணுவ - நினைப்பன.
& மெய்க்கோன் - கடவுள்.
&& ஆணை - கட்டளை.

ஆன்மா மனம்இரண்டும் யாக்கையிடத்* துள்ளனகாண்
ஆன்மா அறிவுமனம் யானென்ப** - தான்மா
புரிவதெலாம் நன்றேகாண் புன்மனம்தான் இங்குப்
புரிவதெலாம் தீதேகாண் போந்து. 3
* யாக்கை - சரீரம்.
** மனம் யான் என்பது - யான் என்று அபிமானிப்பது மனம்.

மனம்ஆன்மா கண்டுள்ள மாந்தர் சிலரே
மனம்ஆன்மா காணாத மாந்தர் - மனம்ஆன்மா
என்றுமனத் தின்பின்னர் ஏகிமிகத் தீதிழைத்து
நன்றுவிடு வார்காண் நலிந்து. 4

அகம்*விரும்பும் எல்லாம் அவனாணை என்றால்
அகம்**விரும்பும் மாந்தரெலாம் அந்தோ - இகம்%விரும்பித்
தீதெல்லாம் செய்துநிதம் செப்பரிய துன்பத்துட்
போதெலாம்& மாய்வாரே புக்கு. 5
* அகம் - மனம்.
** அகம் - சரீரம்.
% இகம் - இவ்வுலக இன்பத்தை.
& போது - காலம்.

கடவுளெலாம்* செய்வதென்றால் கல்லையொப்பர் மாந்தர்
அடமுளதோ** நீதியெனற் காங்குத் - திடமுடைய
மாந்தருளும் இல்லாத% மாந்தருளும் அன்றோமன்
ஈந்தருளும் நீதி இவண். 6
* எலாம் - எல்லாவற்றையும்.
** அடம் - வலி.
% இல்லாத - திடம் இல்லாத.

சுதந்தரமில் பொம்மைகட்குத் துன்பின்பு பார்த்து
நிதந்தாலோ மன்னனதோ* நீதி - இதம்புரிய
வேண்டும் எலாமளித்தும் வேறுவினை செய்வார்க்கே
யாண்டும்** அளிப்பர் அஞர்%. 7
* மன்னனதோ - அரசன் செய்கின்றதோ.
** யாண்டும் - எவ்விடத்தும்.
% அஞர் - துன்பம்.

பொம்மைகளை ஆள்சேயும்பொன்பூட்டிச் சோறூட்டிச்
செம்மைகளைச்* செய்வதலால் செய்யாதே - வெம்மைகளை**
ஞானமிலாச் சேயினுமென் ஞானஉருக்கொண்டஐயன்
ஈனமுளான்% என்பாயோ இன்று. 8
* செம்மைகளை - நன்மைகளை.
** வெம்மைகளை - தீமைகளை.
% ஈனம் - தாழ்வு.

ஆதிஞா னத்திற்கும் ஆன்மஞா னத்திற்கும்
நீதிஞா னத்திற்கும் நீள்உலகில் - ஆதிமுதல்
பேர்பெற்ற நம்மொழியின்* பேரறிஞர் நூல்களைப்போல்
சீர்பெற்ற** நூல்களுண்டோ செப்பு. 9
* மொழியின் - பாஷையின்.
** சீர் - புகழ்.

அவ்வரிய நூலிகழ்ந்தோ ஆங்கிலநூல் உட்கொண்டோ
தெவ்வெனுமோர்* கீர்த்திபெறச் சிந்தித்தோ - இவ்வுரைகள்
நான்பகர வேண்டுமென்றோ ஞானமெலாம் நீமறந்தாய்
ஏன்பகர்க** செய்தாய் இது. 10
* தெவ் எனும் - பகை என்று சொல்லத்தக்க.
** பகர்க - சொல்க.
-----------------

46. சிரஞ்சீவி ப.சு. நெல்லையப்ப பிள்ளைக்கு எழுதிய பாக்கள்.

சூரிய மூர்த்தித் துணைவன் கவிகண்டேன்
பாரிய சொல்லவை பண்பிலேற்குக் - காரியம்
செய்தன எல்லாந் தெரிந்தேன் செயற்பால*
பெய்தெனத் தாராய் பெயர்த்து**. 1
* செயல்பால - செய்யத்தக்கவற்றை.
** பெயர்த்து - மறுபடி.

சூரிய மூர்த்தி சொலுங்குணம் பற்பல
ஓரியல் புற்றிலேன் ஒன்றிலேன் - ஆரியம்
செந்தமிழிற் சேர்த்துளேன் செய்தமனம் போல்வாழ்வில்
சந்திபிரித் தாக்கஅவற் சாற்று*. 2
* அவற்சாற்று - அவனுக்குச் சொல்.

சூரிய மூர்த்தியெனச் சொல்லித் தொழுவதலால்
சீரிய* கூறத் தெளிந்திலேன் - தேரிய
பன்னூற் றிரட்டுமுகம் பார்க்கத் தெரியவரும்
என்னூற் பிரிக்கும் இயல். 3
* சீரிய - சிறந்த சொற்கள்.
-----------

நெல்லைநீ சொன்னதெதும் நேற்றுவரை செய்திலைநீ
எல்லையிலா ஊக்கமுடன் ஏகுவதும் - சொல்லை
நினையாதே நல்குவதும் நேற்றோடே தீர்க
இனியான் அவைமொழியேன் இங்கு. 1

அப்பனும்நீ ஐயனும்நீ ஆதியும்நீ யாவையும்நீ
செப்பமுடன் செப்பியதைச் செய்வாயேல் - தப்பில்
மனையாள்தன் மாதாவை மன்னிநிற்க மாயேன்
மனையெய்தும் மாதம் வரை. 2

மாதம் முதல்தோறும் வள்ளிதரும் ஐம்மூன்றும்
ஏதமிலா தங்கவட்கே ஈந்திடுவாய் - மீதமா
வந்தாலோ அம்மாள்பால் வாங்கியோ மீட்டியணி*
தந்தார்பால் தந்திருக்கச் செய். 3
* அணி மீட்டி - நகைகளைத் திருப்பி.

வாராதும் அன்னாள் வழங்காதும் நின்றிடுமேல்
சீரார் அணிவிற்றுத் தீர்த்தவற்றை - ஊரார்
கடன்களை முன்னம் கழறியுள சொத்தால்
கடன்கொடு கட்டிக் கழி*. 4
* கழி - தீர்.

என்குறை என்கடன் என்மென்மைச்* சொற்களை
என்பகை** காண எழுதாதே - அன்பன்
இலகுபதி மூலம் எழுதுக யான்ஓர்
இலகுபதி யாயிருக்க இங்கு. 5
* மென்மை - எளிமை.
** பகை - பகைவர்.

இலகுபதி மூலம் இயம்பும் அவற்றில்
பலனற்ற சொல்லே பகரேல் - சிலவே
மறையாகச் சொல்க மறந்தாயேல் எஃதும்
இறையேனும்* சொல்லேன் இனி. 6
* இறையேனும் - இறையளவேனும்.

நீயும்நின் பின்னவனும்* நேயமிகும் நாயகன்தன்
தூய அடிசார்ந்து சொல்பவற்றை - நேயமொடு
செய்துநிற்க தேயத்தே தீவினையேன் சேருமள
வுய்யவிடேல்** ஒன்றுமிவற் றுள். 7
* பின்னவனும் - தம்பியும்.
** உய்யவிடேல் - தவறவிடாதே.

"வாழ்"வின் செலவுகள் மற்றதன் விற்பனைகள்
வாழ்விலேன் தற்சரிதை மற்றப்பா - தாழ்விலா
நாதன் குறிப்போடும் நன்னிதி பத்தோடும்
ஏதம் களைந்துடன் ஈ. 8

சென்றஒரு திங்களாச் செய்திஒன்றும் செப்பாது
நின்றுவரல் தானோ நியாயமிவண் - இன்றுமுதல்
வாரமொன்றே னும்தருவாய் மாட்டாயேல் நீசிறிதும்
சாரமிலை என்பேன்யான் தான். 9

மற்றோர் தமது மனம்போன போக்கெல்லாம்
அற்றோர்க்கும்* ஈந்தளிக்க ஆயநிதி** - செற்றேற்கு%
நூலனுப்பச் சீட்டனுப்ப& நோவலென%% ஆகாதே
பாலளித்தான் பாவிவறு மை. 10
* அற்றோர்க்கும் - (அவரோடு) உறவு இல்லாதார்க்கும்.
** ஆயநிதி - உபயோகப்பட்ட பொருள்.
% செற்றேற்கு - (அவரோடு) நெருங்கிய எனக்கு.
& சீட்டு - கடிதம்.
%% நோவல் என - (பொருளில்லாது) வருத்தப்படுகிறேன் என்று (அவர்)
சொல்லும்படி. ஆகாதே - உபயோகப்படாதவண்ணம்.
-----------

அப்பனே நின்சொல்லும் ஆதிவள்ளி* முன்சொல்லும்
செப்புவேன் நேரெனவே** தீநிற்பேன் - தப்பில்%
மனையாளும் அன்னையென வாழ்வாளும் நின்மேல்
நினையாது சொன்னவையும் நேர். 1
* ஆதிவள்ளி - மெய்ப்பொருளை உணர்ந்த வள்ளி நாயகனது.
** நேர்என - ஒப்பு என்று.
% தப்பில் - குற்றமற்ற.

'வக்கி'லா நின்று வழிப்பறியோ செய்கின்ற
திக்கிலார்* புன்மொழியைச் செப்பென்று - சிக்கிலே**
பட்டநான் என்றும் பகர்ந்ததுண்டோ நின்செயல்
விட்டகுறை% யன்றிலை வேறு. 2
* திக்கற்றார் - ஆதரவு இல்லார்.
** சிக்கிலே - சங்கடத்திலே.
% விட்டகுறை - பயன்தராது நின்ற வினை.

வக்கிலிடம் கேளாதும் மாணந்தம்* பாராதும்
சிக்கறவே** ஓர்மனுவைச் செய்ததனைப் - பக்கமுள
பத்திரிகை தம்மில் பதியென்றே கூறினேன்
இத்தரையில் தீமைநிறை யான். 3
* மாண் அந்தம் - நல்லமுடிவு.
** சிக்கு அற - கஷ்டம் நீங்க.

சொன்னதைச் செய்யாது சொல்லாத செய்தென்னை
இன்னலுற வைத்ததன்றி இச்சிறையில் - நின்னுடைய
சாமர்த் தியம்ஒன்றே சாற்றுகின்றாய் மேன்மேலும்
ஏமத்தை* நீத்த எனக்கு. 4
* ஏமத்தை - காவலை.

கெட்டார்க்கு மேலோரும் கீழோரும் புத்திஒன்றே
தட்டாமல்* ஈவரெனத் தாங்கினேன் - எட்டாத**
சட்டமும் இன்றெனக்குச் சாற்றிடமுன் வந்ததனால்
மட்டமெனக்% காண்நின் மதி. 5
* தட்டாமல் - தடையில்லாமல்.
** எட்டாத - (உனக்குத்) தெரியாத.
% மட்டம் - குறைவு.

சிறையெழுத்து* யாவும் தெரிந்துளேன் நன்கு
சிறையெழுத்து சட்டத்தைத் தேய்க்கா** - குறையெழுத்தால்%
எல்லாரும் நெஞ்சிழந்தார்& இச்சிறையுள் நின்றுமதி
இல்லார் உரைகொள்ள யான். 6
* எழுத்து - விதிகள்.
** தேய்க்கா - அழிக்கமாட்டா.
% குறை எழுத்தால் - (எனது) தீ ஊழால்.
& நெஞ்சு - புத்தி.

சட்டமெடுத் தோதத் தலைப்பட்ட நின்செயல்
பட்டப்பகல் விளக்காய்ப் பட்டதன்றித்* - துட்ட
மகளொருத்தி தாய்க்கு மகவளிக்கும்** மார்க்கம்
தகவொடு% சொல்லும் தரத்து. 7
* பட்டது அன்றி - கெட்டது அல்லாமல்.
** மக அளிக்கும் - குழந்தை பெறும்.
% தகவொடு - தகுதியோடு.

பாட்டனது பாத்தியத்தைப் பன்முறையும் கூறினாய்
தேட்டமிலா* இவ்வுரையைச் செப்பலினி - நாட்டமுள
பாடல் சரிதம் பகர்ந்த"அக மேபுற"த்தோ
டூடலென்னோ** தாராய் உவந்து. 8
* தேட்டம் இலா - (எனக்கு) விருப்பம் இல்லாத.
** ஊடல் - மனஸ்தாபம்.

தொல்காப் பியத்துடனே சொன்னநிகண் டீராறும்
ஒல்கார்* மொழிக்குறளும் ஒன்னாரின் - சில்கால்**
அகராதி யும்தருவாய் அவ்வுரைபின் பேசேல்
நகையாதி% பந்தம் நவில்&. 9
* ஒல்கார் மொழி - அந்நியர் பாஷையிலுள்ள.
** சில்கால் - சிறிய.
% நகைஆதி - நகை முதலியவற்றின்.
& பந்தம் நவில் - கடன்களைச் சொல்.

சடகோபன் தந்தனனோ சாற்றியகட் டெல்லாம்
விடலொண்ணா வேலா யுதத்தின் - கடனோடு
காஞ்சிக் கடனும் சுழற்றினையோ* நூல்கடைக்குத்
தீஞ்சொல்லை** நல்கினையோ செப்பு. 10
* கழற்றினையோ - வசூலித்தனையோ?
** தீம்சொல்லை - இனிய வார்த்தையை.

அப்பனே! அன்பனே! அருமைக் குமரனே!
செப்பிய தெரிந்தேன் தீவினை புரிந்தேன்.
சிறுமையில்* புத்தி திரிந்தனை** யென்று
பொறுமையொடு நின்செயல் பொறுத்தேன் இதுவரை.
அஃதிலை யென்னின் அந்தோ! நின்பிழை
எஃதினும் பெரிதா என்னுளம் சுடுமே.
ஒருபெரு வருடமா உன்னிடம் கேட்கும்
இருபழ நூல்களும் என்தனிப் பாடலும்
ஈந்திலை; இன்னமும் ஈவதா ஏய்க்கிறாய்
மாய்ந்திலேன் உள்ளம் வருந்திட மேன்மேல்; 10
நகைமேல் கடனுக்கும் நடேசன் கடனுக்கும்
பகைபோல் இதுவரை பதிலொன்றும் தந்திலை.
சொற்றன தந்தும் சொல்லியும் நிற்பையேல்
மற்றன எல்லாம் மறக்க முயலுவேன்.
படிமிசை% மாபெரும் பாதகம் புரிந்தும்
அடிமையாக் கொண்டெனை ஆதரித் தருளும்
என்னுயிர் நாயகன் இளையாற்கும் எனக்கும்
இன்னுயிர் என்ன ஈந்த இரண்டையும்
படித்தேன், செய்வேன் பகர்ந்தன மெல்ல.
முடித்தேன் இதனை மொழிந்தன செய்வையே. 20
* சிறுமையில் - காமத்தில்.
** திரிந்தனை - கெட்டனை.
% படி மிசை - புவியின் மீது.
-----------------------------------------------------------
47. ஒரு மாதுக்கு எழுதிய பா.

அப்பனே! உன்னெழுத் தன்பொடு கண்டேன்.
செப்பிய ஒன்றனைத் தெளிவறச்* செப்பினாய்.
என்னெனக் கேட்பின், ஏழையேன் சரிதத்தை
இன்னமும் தந்துளேன் என்றுநீ இயம்பிலை.
அம்மொழி தந்தபின் அளிப்பேன் உனதுமற்
றெம்மொழி தனக்கும் ஈறிலா** விடையே.
* தெளிவு அற - தெளிவு இல்லாது.
** ஈறுஇலா - முடிவு இல்லாத.
----------

பத்தியில் பிறந்து பணிபல செய்துமுன்
சித்தம் பரத்தைத் தெரிசித்த நல்லாருள்*
மானம் மிகுந்த மாதர்க் கரசியே!
யானிவண் சிலசொல் அறைகிறேன் நம்பவித்
தாமமார் அண்ணா சாற்றிய படிக்கே.
சேமம் யாவரும்: சேமம் எழுதுக.
சென்ற திங்களில்** திருமந் திரநகர்
நின்றுநின் தங்கையும் நேயமார் மக்களும்
வள்ளிநா யகமெனும் மாதவரும் வந்தனர்.
தெள்ளிய நமதுசிதம்பர அரசரைப் 10

பார்த்திடக் கருதியான் பகர்ந்தநால் வரையும்
சேர்த்துக் கொண்டவர் சிறையுளே சென்றவண்
அருந்தவம் இழைக்கும் அண்ணலைக் கண்டேன்.
பெருந்தவ மகிமை பேசவொண் ணாதது%!
தரையிலுக் கரசர் தவத்திற் கரசராய்
உரையில்& மிகுந்தும் நிறையில் குறைந்தும்

* நல்லாருள் - ஸ்த்ரீகளுக்குள்.
** திங்களில் - மாதத்தில்.
% ஒண்ணாதது - முடியாதது.
& உரையில் - மாற்றில்.

இரவிமர* புதித்த இராகவன்** தானென
உரனொடும்% ஒளியொடும் உவப்பொடும் விளங்கினர்
நாயகரை வணங்கினர்; நாயகர் வாழ்த்தினர்.
சேயென& வருந்திய சிறியேன் வணங்கினேன்; 20
* இரவிமரபு - சூரியகுலத்தில்.
** இராகவன் - இராமபிரான்.
% உரனொடும் - வலியோடும்.
& சேய் என - குழந்தை என்று சொல்லும்படி.

கடவுள் அருளுவார் கலங்கற்க என்றனர்.
இடபுறம் அரங்கில்நின் றிறங்கிய* குலநன்
மகளைப் பார்த்து வாழ்க என்றுதம்
மகாரை எடுத்து மார்போ டணைத்து,
முகத்தொடு முகம்வைத்து முத்தினர் முகர்ந்தனர்.
அகத்தின் நிலைமையை அறிபவர் யாவர்!
மக்கள்தம் இனிய மழலைச்சொற் கேட்டிடத்
தக்க மொழிசில சாற்றி அவர்தம்
அருமைச் சொற்களைப் பெருமையொடு கொண்டெமை
இருமென மொழிந்தவர் இருந்தனர் தரைமிசை. 30

* இறங்கிய - வணங்கிய.

மக்கள் அவருயர் மடிமிசை இருந்தனர்,
பக்கம்நின் றொருவன் பண்டம் சிலவும்,
உடுப்பன சிலவும், படிப்பன இரண்டும்
கொடுப்பக் கொண்டிளம் கோக்கட் களித்தனர்.
நாயக ரிடத்துமிது நவிலுவே னிடத்தும்
நாயகி யிடத்தும் நலங்களை* வினாவினர்.
காரியம் யாவையும் கழறுக** என்றனர்.
ஆரிய மக்களுள் அறிவினில் சிறந்தநம்
வள்ளிநா யகர்தம் வலனொடும்% உரனொடும் &
பிள்ளைவீட் டில்போல் பேசத் தொடங்கினர்; 40

* நலங்களை - க்ஷேமங்களை.
** கழறுக - சொல்லுக.
% வலன் ஓடும் - சாமர்த்தியத்தோடும்.
& உரன் ஓடும் - பலத்தோடும்.

மெதுவாப் பேசிட வேண்டினர் அண்ணல்.
கதையை விரித்துக் கழறினர் நாயகர்;
குறித்தமணி நேரம் குறுகநம்* இறைவர்
செறித்தநன்** மொழியால் சிலசில சொல்லிக்
கதையை முடித்தனர்; கண்களை% முத்தினர்;
கதையினைக் கேட்டும் கணவரைப் பார்த்தும்
அரங்குளே மறைவில் அந்தப் புரத்தில்
இருந்தநின் தங்கைபால் ஏகினர்& தலைவர்.
என்னஅங் கியம்பினர் என்றுயான் அறியேன்.
மன்னரும் அரசியும் மகிழ்ந்துவெளி வந்தனர். 50

* குறுக - கிட்ட.
** செறித்த - பொருள் நிறைந்த.
% கண்களை - மக்களை.
& ஏகினர் - சென்றனர்.

பின்னரும் தம்மிளம் பெரியநன் மகனை
மன்னுற முத்தினர், வாங்கினேன் அவனை.
இளையநன் மகனையும் எடுத்துமிக முத்தி
இளையாள் தன்கரத் தீந்தனர் பின்பு.
கடவுளை நினைத்துக் கையெடுத்துத் தொழுதுதம்
திடமுள அகத்தொடும் சிரித்தமலர் முகத்தொடும்
எங்களை அனுப்பினர். ஏழையேம் பிரிந்தேம்.
திங்கள் முடிவுறத் திருமந் திரநகர்
சென்றனர் நால்வரும். சிறியேன் அதன்பின்
இன்றுநிற் கெழுதிட எண்ணினேன் எழுதினேன். 60

இன்றிவண் நிகழ்தல்போல் என்முன் தோற்றுறும்*
அன்றவண் நிகழ்ந்ததொன் றறைவேன் நினக்குயான்.
நாயகர் கதையினை நடாத்திய மத்தியில்
தாயென நின்னைத் தம்முளம் கருதா
தேதோ ஒருசொல் இயம்பினர். அரசர்
ஏதோ பதிலளித் தேனையர் யாவர்
அவளளவு நன்றி யளித்துளார் என்றனர்.
அவருள நன்றியும் அன்பும்யான் கள்டேன்
பின்னொரு தரம்நினைப் பேசினர் அண்ணா.
என்னஎன் றியம்புவேன் இளமையை** மறந்திடின் 70
* தோற்றுறும் - தோன்றும்.
** இளமை - சிறுமை.

தாயென வைத்தவள் தாளிணை தொழுதிடும்
நேயமும்* கொண்டுளேன் நெஞ்சினுள் என்றார்.
நிகழ்ந்தன யாவும் நிகழ்ந்தபடி கூறினேன்.
மகிழ்ந்துநீ என்றும் மயங்கா திருப்பாய்;
திருமந் திரநகர் சீக்கிரம் செல்வாய்.
கருமம் சிலசெயக் கருதியவண் நிற்கும்
நின்னுயர் வறியா நெஞ்சுகொள் மாக்கள்
நின்னிடம் சொல்வதை நினைப்பொடு கேட்டுக்
காரியம் செய்வாய் கரத்துட னென்று
பாரத நண்பர் பகர்ந்தனர் நினக்கே. 80
* நேயம் - நியமம் ; கடமை.
--------------------

48. ஸ்ரீ சு. ஞானசிகாமணி முதலியாரவர்களுக்கு எழுதிய பாக்கள்.

ஞான சிகாமணி நண்ப நினதுபிதா
வானம் புகாமுன்பென்* வாக்களித்தேன் - மோனம்
புரிந்தனை நீயோ புனிதநட் புற்றுப்
பிரிந்தனை நீதியோ பேசு. 1
* வானம்புகாமுன் - சுவர்க்கம் சென்றவுடன்.

ஞான சிகாமணி நண்ப மிகஇனிமை
யான குணங்கள் அமைந்துள்ள - நானம்*
கமழும்** கதுப்பினாட்% கைக்கொண்டாங் கென்றும்
தமருடன் வாழ்க தளிர்த்து&. 2
* நானம் - கஸ்தூரி.
** கமழும் - மணக்கும்.
% கதுப்பினாள் - கூந்தலை உடையாள்.
& தளிர்த்து - பல மக்களைப் பெற்று.

ஞான சிகாமணி நண்ப எனதுயிரின்
மானம் கெடாவகை வாழயான் - தானம்
தருகஇது பார்த்த தருணமே வெண்கா*
சிருபதொடு முப்ப திசைத்து. 3
* வெண்காசு - ரூபா.
---------------------

49. ஸ்ரீ திருமலாச் சாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள்.

அருமலைகள்* சூழ அமைந்துநடு** நிற்கும்
பெருமலையின் கீர்த்தியுறப்பெற்ற% - திருமலைச்
சாரியெனும் நண்ப தமியேன் குடும்பத்தை
மாரியெனக்& காப்பாய் மகிழ்ந்து. 1
* அருமலைகள் - அருமையான பொருள்களையுடைய மலைகள்.
** அமைந்து - நிறைந்து.
% கீர்த்தி - புகழ்.
& மாரிஎன - மழைபோல.

ஒருமலையைச் சார்ந்திருப்பார் ஊறுறலின்* றென்ப
குருமலையைச்** சார்ந்து தமிழ்கொண்டு - திருமலையைச்
சார்ந்துபுவி கொள்ளத் தலைப்பட்டேன் ஊறுறல்கொல்
ஓர்ந்துகளை வாயஃ துடன். 2
* ஊறு - துன்பம்.
** குருமலை - அகஸ்தியர் மலை.

வருமலையை ஈர்ந்து*தவ** வாயுவொடு செல்லும்
கருமலையின்% நாவாய்கள்% கண்டு - திருமலையின்
நாவால் உலகளித்து நன்றுகொள நிற்பேனின்
ஓவா%% வறுமையைவான் ஓட்டு. 3
* ஈர்ந்து - பிளந்து.
** தவ - அசை.
& கருமலையின் - கரு மலைகளைப்போன்ற.
% நாவால் - சொல்லால்.
%% ஓவா - நீங்காத.
----------------------

50. கொலையின் கொடுமையைப் பற்றிய பாக்கள்.

மேய்ப்பாரே இல்லாது மேய்ந்துலவும் நல்லாவே
தாய்ப்பாலே நல்லதென்ப சான்றோரும் - தாய்ப்பாலோ
தாயளித்த* தாமசத்தைத்** தந்தழிக்கும் நின்பாலோ
சேயளிக்கும் சத்துவத்தைச்% சேர்த்து. 1
* அளித்த - காத்த.
** தாமசத்தை - தாமத குணத்தை.
% சத்துவத்தை - சாத்மிக குணத்தை.

தன்குருதித்* தீங்கெல்லாம்** சாமாறு% செய்ததற்கு
நன்குருசி%% வாழ்வளிக்கும்& நல்லமிர்த----நன்கெல்லாம்&&
ஈந்ததனை ஆருயிர்க்கே ஈயுமுயிர்çç நின்னையல்லால்
மீந்தவற்றுள்ç உண்டோ விளம்பு. 2
* குருதி - இரத்தம்; ** தீங்கெல்லாம் - குற்றமெல்லாம்.
% சாம்ஆறு - நீங்கும் வண்ணம்; %% ருசி - சுவை.
&வாழ்வு - ஆயுள்; && நன்கு - நன்மை.
çç ஆருயிர் - அருமையான உயிர்கள்; ç மீந்தவற்றுள் மற்றை உயிர்களுள்.

சொல்லரிய இவ்வறத்தைத் தொன்றுதொட்டுச்* செய்திங்கு
நல்லஉயிர் உள்ளெல்லாம் நல்லதெனச்----சொல்லநிற்கும்
நின்குலமே மாயநினை நின்றுணையைக்** கொன்றுண்பார்
மன்குலமோ% சாம்குலமோ மற்று. 3
* தொன்று தொட்டு - பூர்வகாலம் முதல்.
** நின்துணை - எருது; % மன்குலமோ - நிலைநிற்கும் ஜாதியரோ?

தாய்ப்பாலா வின்பால்* தழைமருந்து** தீர்க்காத
நோய்ப்பால% தீர்க்கும் நுணுக்கமுள%%----சேய்ப்பால்&
எருவுநீர் நல்குமரும் இன்மறிகான் நும்மைக்
குரூரமொடு தின்பதென்னோ கொன்று. 4
* ஆவின் - பசுவின்; ** தழை - பச்சை இலை.
% நோய்ப்பால - பிணிப்பகுதிகளை - பிணி வகைகளை.
%% நுணுக்கம் - நுண்ணிய குணம்.
& சேய்ப்பால் - குழந்தைகளுக்கு ஆகும் பால்

தண்ணிழலும் காற்றும் தருகின்ற நல்மரங்காள்
எண்ணியலும்* ஐயறிவும்** இல்லாநும்----ஒண்ணிலையை%
நும்மினின்று வேறாக்க%% நோகிறதே என்னுள்ளம்
எம்மனம்&கொண் டார்கொல்வார் இங்கு. 5
* எண்இயலும் - நினைக்கும் தன்மையும், ** ஐ அறிவும் - ஐம்பொறி அறிவுகளும்.
% ஒண் - பிரகாசமுள்ள; %% வேறுஆக்க - பிரிக்க.
& எம் மனம் - எத்தகைய மனம்.
------------------

51. நாள், காசு,பிறப்பு,மலர் என்னும் முடிவுகளோடு பாடிய பாக்கள்.

நினைத்தபடி யாவும் நிகழ்ந்துவரக்* கண்டேன்
எனைத்தெவ்வர்வெம்சிறையுள் இட்ட----தனைத்தினமும்**
பல்கால் நினைந்தும் பயன்காணேன் என்னீசன்
நல்கானோ அஃதொழியும் நாள். 1
* நிகழ்ந்துவர - நடந்து வர; ** இட்டதனை - அனுப்பியதை.

எண்ணிறந்த செல்வநிதம் ஈட்டியறி யாதீந்து
பண்ணிறந்த பாட்டுப்போல் பாடிழந்தேன்*----நண்ணிக்
கருணையெனச் சுற்றத்தார் கைதந்தார்** என்மெய்
கருணையொடு தாராதோ காசு. 2
* பாடு - பெருமை; ** கைதந்தார் - உதவினார்.

மனித அருமுயிரும் மாணுடம்பும் மிக்கப்
புனிதத்தமிழ்மறையும் பொய்யா----நனிசீர்
பொருளறமும் தந்ததுபோல் பூமியினைக் காக்கும்
பெருமைதரா தோஇப் பிறப்பு. 3.

பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை* நல்லார் இதழ்மலரும்-வின்னீர்மை**
பூணீசர்% உள்மலரும்%% பூண்டேன்யான் பூணேனோ
மாணீசர் தாளின் மலர். 4
*இன்நீர்மை - இனியதன்மை; ** வில்நீர்மை - வில்லினது தன்மையை.
% பூண்நீசர் - கொண்ட ஈனர்; %% உள்மலரும் - மன மலரும்.
-----------------

52. சில நூல்களைப் பற்றிய அபிப்பிராயங்கள்.

"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம்" என்றுதிக்கும் நுற்சுவையஃ----தாக்கிய ஓர்
ஔவை பொதுமறையை ஆக்கியநம் வள்ளுவரின்
தௌவையென* நாட்டும் தரத்து**. 1
* தௌவை - தமக்கை; ** தரத்து - தன்மைத்து.

நானான் மணிக்கடிகை* நன்காய்ந்து கொண்டேனஃ**
தானான் அடைந்தஉயர் ஆனந்தம்----தேனார்%
உணவால் மகார்மொழியால் ஒண்டொடியால் ஏர்சால்%%
மணமலரால் பெற்றிலன்காண் மற்று. 2
* நான்மணிக் கடிகை - சங்க நூல்களில் ஒன்று.
** அஃதால் - அந்நூலால்; % தேன்ஆர் - சுவை நிறைந்த.
%% ஏர்சால் - அழகு நிறைந்த.

முன்னெறிகள் என்று மொழியப் படுகின்ற
பன்னெறிக ளுள்ளும் படருங்கால்* ---- நன்னெறியென்
றொன்றுகண்டேன் அஃதுள் உவந்துசென்றேன் நான்மணியின்
நன்று**கண்டேன் சில்லிடத்து நான். 3
* படருங்கால் - செல்லுங்காலையில்; ** நன்று -குணத்தை.

நல்வழி*பக் கத்திருக்க நம்மோர் அதுவிடுத்துங்
கல்வழியில்** சென்றலைகின் றாரந்தோ----தொல்வழியை
விட்டுப் புதுவழியை மேவுவதால் தாழ்ப்பஞருள்%
பட்டுழல்வ தொன்றே பயன். 4
* நல்வழி - ஔவையின் நூல்களில் ஒன்று.
** அல்வழி - வேறுநூல்களில்; % தாழ்ப்பு - தாமதம்.
-------------

53. சுதேசிய நாவாய்ச்சங்கக் கடன்கட்டளை வந்தபோது பாடிய பாக்கள்.

சர்வவலி நீதியொடு தாரணியெல் லாம்காத்தும்
கெர்வமிலா* தேநிற்கும் கேவலமே** --- துர்விதிகள்
ஒன்றாக வந்திடினும் ஒன்றற்கும் அஞ்சாது
நன்றாக நின்றிடுவேன் நான். 1
* கெர்வம் - அகங்காரம்; ** கேவலமே - மூலப் பொருளே.

உனக்கும் எனக்கும் உளபேதம் பார்க்கின்
எனக்குமனம் ஐம்பொறிமெய் ஏற்றம்* ----உனக்கு
வலியெல்லாம் உண்டென்றால் மற்றுன்னின் மிக்க
வலியெல்லாம் யான்கொளலே மாண்பு**. 2
* ஏற்றம் - அதிகம்; ** மாண்பு - நியாயம்.

உண்மையிஃ தாயிருக்க உன்னின்யான் தாழ்வென்று
வெண்மை*யறி வாளர் விளம்பலன்றி----ஒண்மையறி**
வாளர் விளம்பார் மனம்பொறிமெய் வாயிலறத்%
தாளால்& விதிவெல்வேன் சாய்த்து. 3
* வெண்மையறிவு - பொய்யறிவு; ** ஒண்மை - ஒளிரும்.
% வாயில் - வழிகள் மூலமாக; & அறத்தாளால் - அறவினையால் . (தாள் - முயற்சி)

எண்ணரிய துன்பங்கள் எய்தியுள வெம்சிறையை
நண்ணிடினும் யான் அஞ்சேன் நாவாயின்* -- எண்ணறியா**
தென்னோரென் தாள்நிதியை% ஈயாதெனக்கொடுக்கச்
சொன்னாலும் யான் அஞ்சேன் சோர்ந்து. 4
* நாவாயின் - நாவாய்ச் சங்கத்தின்; ** எண் - கணக்கு.
% தாள்நிதி - எனது முயற்சிக்குரிய தனத்தை.

என்மனமும் என்னுடம்பும் என்சுகமும் என்னறமும்
என்மனையும் என்மகவும் என் பொருளும்--என்மணமுங்
குன்றிடினும்* யான் குன்றேன் கூற்றுவனே** வந்திடினும்
வென்றிடுவேன் காலால் மிதித்து. 5
* குன்றிடினும் - குறையினும்; ** கூற்றுவன் - எமன்.
-----------

54. தமது புலம்பல் பாக்கள்.

செய்தகரு மப்பயனைச் சேர்த்தருளும் மெய்யேயான்
செய்தவரும் பாவங்கள் தீர்ந்திலவோ----மெய்தொழுது
நிற்பாரும் ஈங்குறுதல்* நீதியோ நீதிநூல்
கற்பாரும் அன்றென்ப காண். 1
* ஈங்கு - இச்சிறையை.

எத்தனைதான் பாவம் இயற்றிடினும் மெய்தொழவே
அத்தனையும் நீங்குமென ஆன்றோருள்----எத்தனைபேர்
கூறியுளார் அன்னாரின் கூற்றெல்லாம் என்மட்டில்
மாறியுவ தென்னோ வழுத்து*. 2
* வழுத்து - கூறு.

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்" என்ப----ஏழையேன்
தாழா துஞற்றித் தவம்புரிந்து மெய்கண்டும்
வாழாதில்* ஈங்குறலென் வம்பு**. 3
* இல் - கிரகத்தில்; ** வம்பு - புதுமை.

அன்புடைய மைத்துனனே யானின்று வீடெய்தி
இன்பமொடு வாழ்வேனென் றெண்ணிநனி - நின்பதங்கள்
நாடோறும் ஈங்கு நடந்து சலித்தனவே*
வீடுதரு மோஇன்று மெய். 4
* சலித்தன - அலுத்தன.

என்னுயிருக் கின்னுயிரா எய்தியுள என்துணையே
என்னுடைய நல்வரவை எண்ணிஇன்று - நின்னுடைய
கண்ணும் உளமுமெனைக் காணஅவா* உற்றனவோ
நண்ணுவனோ நின்னைஇன்று நான். 5
* அவா - விருப்பம்.

என்னருமை நாட்டை எமர்க்கீய வந்துள்ள
என்னருமைப் புத்திரரே இன்றுமுதல் - நும்மருமை
மெய்தழுவிச் சொற்கேட்டு மேன்மேலும் இன்பமுற
மெய்தருமோ இன்றெனக்கு வீடு. 6

என்னரிய பாரதமே* இன்றுவரு வேனென்று
நின்னரிய மக்களொடு நீசூழ்ந்து - பன்னரிய**
வந்தனங்கள் செய்துவெற்றி மாலையிட உன்னினையோ
தந்திடுமோ மெய்வீடு தான். 7
* பாரதம் - பரதகண்டம்; ** பன்அரிய - சொல்லுதற்கு அரிய.

சீரடைய உன்னுகின்ற சீனமே நின்னால்யான்
சீரடைய லாமென்று சிந்தித்தேன் - சீரடைய
யானின்பால் வந்தடைதல் இன்றியமை யாததுமெய்க்
கோனின்பாற் சேர்ப்பேனோ கூறு. 8

தேவலமும்* மெய்யறமும் செய்பவர்கள் வாழ்ந்திருந்த
நாவலமே நீபழைய நன்மையுறக் - கோவலம்நீ
பெற்றிடுதல் வேண்டுமெனப் பேசிஅதை யான்செய்ய
உற்றிடுமோ வீடின் றுரை. 9
* தேவலம் - தெய்வவலி.

மெய்வாழும் மெய்யாகி* வீடாகி நாடாகிப்
பொய்வாழும்** பொய்ப்பொருளாய்ப்% போமுலகே - மெய்வாழும்
மெய்யாக நீமுன்போல் வேண்டியஎற் கிஞ்ஞான்று
மெய்யாக மெய்தருமோ வீடு. 10
* மெய்ஆகி - உடல் ஆகி; ** பொய்வாழும் - பொய்தங்கும்.
% பொய்ப்பொருளாய் - கானல் நீராய்.

கூட்டினை விட்ட குரீஇஇக் குஞ்சேநீ
வீட்டினை விட்ட* மிகையால்இக்** - காட்டினில்
துன்பமுறு கின்றேன்போல் துன்பமுறு கின்றனையோ
இன்பமுறும் சுற்றம் இழந்து. 11
* வீட்டினைவிட்ட - மனையைவிட்டுப் புறத்தே சென்ற.
** மிகையால் - குற்றத்தால்.

நானிலத்தில்* இன்னொக்கல்** நண்பருடன் உண்டுலவி
வானிலத்தர்% போல்மகிழ்ந்து வாழ்ந்ததொத்து - நானிலத்துள்
நற்குறிஞ்சி வாழ்கின்ற நாகணவாய்ப் புள்ளினங்காள்
எற்குரைப்பீர் என்னோர் இயல். 12
* இலத்தில் - வீட்டில்; ** இன்ஒக்கல் - இனிய சுற்றம்.
% வான்நிலத்தார் - தேவ உலகத்தினர்.

வாழ்ந்து மகிழ்ந்துலவும் மாடப் புறாஇனங்காள்
வாழ்ந்து மகிழ்ந்துலவி மன்பகையால் - தாழ்ந்து
சிறுமையுறும் என்னருமைச் சேய்மனையிவ் வூருள்
வறுமையுறு கின்றனரோ வந்து. 13

கோங்குமர மீதிருந்து கூவும் குயில்இனங்காள்
தீங்குமர* மீதிருந்து தீதுண்ணம் - ஆங்கு
சிறையுள்ளே பட்டுச் சிறுமையுறு** கின்றேற்
கறைவதென்னோ நீவிர் அடுத்து. 14
* தீங்குமரம் - தீமையாகிய மரம்; ** சிறுமை- துன்பம்.

காகாவென் றின்று கரைந்துருகும் காகமே
ஆகாவென்* தீயூழ் அழிந்தின்று - போகாதோ
இன்பிற்கோர் எல்லைகண்டேன் இஞ்ஞான் றெனைவாட்டும்
துன்பிற்கோர் எல்லையின்றோ சொல். 15
* ஆகா - ஒவ்வாத.
----------------

55. கடவுள் உண்மையை நாட்டல்.

அறிவாக எப்பொருட்கும் ஆதார மாகச்
செறிவாக நிற்கின்ற தேவைப் - பொறிவாயில்
மூலமாக் காணாத மொய்ம்பால் இலையென்று
சாலமொழி கின்றார் தலத்து. 1

பொறிகாணா எப்பொருளும் பொய்யென்று கூறல்
அறிவாமோ சத்திமனம் ஆன்மா - செறிவாக
நம்முள் இருப்பதனை நாம்காண்கின் றோம்பொருள்கள்
தம்முள் இருப்பதுமெய்ச் சத்து*. 2
* மெய்ச்சத்து - மெய்யாகிய பொருள்.

ஒருபொறி காணும் ஒருபுலனை* மற்றிங்
கொருபொறி காணாதாங் குள்ளம் - மருவும்
நினைப்பைப் பொறிகாணா நேர்ஆன்மா காண்மெய்
தனைப்**பிற காணா தடுத்து. 3
* புலனை - விஷயத்தை; ** மெய்தனை - கடவுளை.

மெய்பல் பொருள்களுளும் மேவியுள தென்றக்கால்
மெய்பல் பொருள்களுக்கு வேறாகி - உய்தலுறும்*
அன்றோ எனின்வித்தில் ஆம்இலைபூ காய்கனிவே
றென்றோ மொழிவாய் எடுத்து. 4
* உய்தல்உறும் - இருபொருளாய்ப் பிழைபடும்.

வித்தாம் இலைமுதல மேவிநிலம் ஆதியன
எத்தால்மெய் பல்போருளாம் என்பாயேல் - சித்தே
நினைப்பால் பலபொருளாய் நீண்டுநிற்கும் மெய்க்கு
நினைப்பாதி தோற்ற நிலை. 5

தோற்றம் ஒடுக்கம் தொடுவதெனில் நிர்விகாரம்
ஏற்றதெனல் பொய்யாமே என்றுரைப்பின் - தோற்றம்
ஒடுக்கம் எதற்குமுள ஒள்ளியர்கள்* இத்தை
எடுக்கார் விகாரத் திசைத்து. 6
* ஒள்ளியர் - அறிஞர்.

ஒடுங்கிநிற்கும் தோற்றிநிற்கும் ஓர்பொருளே என்றால்
ஒடுங்குதற்கும் தோற்றுதற்கும் ஒவ்வோர் - இடம்பருவம்*
உண்டோ எனில்இடம்போழ் துண்மையல** மெய்யைஅவை
அண்டா எனநன் கறி. 7
* பருவம் - காலம்; ** போழ்து - காலம்.

மெய்யோர் நினைப்போடு மேவிஎலாம் ஆமென்னில்
மெய்யும் நினைப்புமிவண் வேறாக - எய்தலுறும்
அன்றோ எனில்சூட்டின் ஆகுமொளி வேறோஒன்
றன்றோ நினைப்ப தறிவு. 8

நினைப்பதற்குக் காரணத்தை நீவினவின் ஓரும்
எனைப்பொருட்கும்* ஓரியல்புண் டென்க - நினைப்பதறி
வின்றன்மை நீர்குளிர்தல் ஈப்பறத்தல் அப்பொருள்க
ளின்றன்மை அன்றோ இயம்பு. 9
* எனை - எவ்வகை.

நினைத்தலைநீ* ஆளுவையேல் நீஅறிவென் றோர்வாய்**
அனைத்திற்கும் ஆதாரம் அஃதென் - றெனைத்துணையும்%
ஐயம் இலாதறிவாய் அஃதேமெய் என்றுணர்வாய்
வையகமெல் லாம்பெறுவாய் வாழ்த்து.
* நினைத்தலை - நினைத்தலாகிய தொழிலை.
** ஓர்வாய் - அறிவாய்; % எனைத்துணையும் - எவ்வளவும்.
--------------

56. கடவுளுக்குக் காவல் தொழிலை அளித்தல்.

இறைவ நினக்கும் எனக்குமுள பேதம்
அறைவல்கொண் டென்சொலினி தாள்வாய் - குறைவல்
நிறைவல்யான் எஞ்ஞான்றும் நீஇருந்த வாறே
உறைவாய்* ஒரேதன்மை உற்று. 1
* உறைவாய் - இருப்பாய்.

ஓரிடநின் றோரிடத்திற் கோடுவல்யான் என்றுமிவண்
ஓரிடநின் றோரிடத்திற் கோடாய்நீ - யாரிடமும்
காமமுறாய் கோபமுறாய் கண்ணுமுறாய்* யான்அவற்றை
நேயமெனக் கொள்வேன் நிதம். 2
* கண் - கண்ணோட்டம்.

இன்பமிலை துன்பமிலை ஈறுநடு வாதியிலை
அன்புபகை நாடுநகர் அன்னைதந்தை - என்புமனம்
ஒன்றுமிலை நிற்கெனக்கிங் குண்டெல்லாம் ஆதலினால்
என்றுமிலை நீஎற் கிணை. 3

நீயானொன் றென்று நிகழ்த்துபவர் எல்லாரும்
வாயானே கூறுகிறார் மன்னுளத்தோ - டாயாரும்
கூறாரே கூறினுமக் கூற்றெல்லாம் உண்மைக்கு
மாறாய என்று மதி. 4

என்னுளமும் என்னுடலும் என்துணையும் என்மகவும்
என்னிதியும் என்பிறவும் இல்லையெனின் - நின்னுடன்யான்
ஒன்றாவன் என்றலிலா* ஓர்கோன் இரவலனோ**
டொன்றாவன் என்னுமுரைக் கொப்பு. 5
* இலா - எல்லாவற்றையும் இழந்த; ** இரவலன் - பிச்சைக்காரன்.

இறைவஅத னால்நின் இறைமையெலாம்* விட்டென்
சிறைவருவாய் யான்வாழும் சீர்சால் - அறையுள்
எனைக்காக்கும் நற்றொழிலை ஏற்றுவெளி சேர்த்தென்
மனைக்காக்கு வாய்நல்ல வாழ்வு. 6
* இறைமை - தலைமை.

எனக்குரிய எல்லாம் இனிஇளித்தென் தேயம்
தனக்குரிய யாவுமுடன் தந்தெம் - மனக்குறையை
மாற்றுவாய் எம்மரிய மாநிலத்தும் பக்கத்தும்
ஆற்றுவாய் எம்மெய் யறம். 7

அறமெல்லாம் ஆற்றியென்னோர் அந்தணராய் நிற்கும்
திறமெல்லாம் என்னோர்பால் சேர்ப்பாய் - புறமெல்லாம்
எங்களறம் ஏற்றாற்றி* எவ்வுயிரும் இன்பமுடன்
இங்கணுறச்** செய்வாய் இனிது. 8
* ஏற்று - கைக்கொண்டு; ** இங்கண்உற - இவ்வுலகில் வாழ.

மன்தொழிலைச் செய்பவர்க்கு மாண்நிதிசீர் நல்கிடுவர்
என்தொழிலைச் செய்யுநினக் கீவனவோ - நின்தொழிலைப்
பார்த்தல் அதன்நற் பயன்துய்த்தல் நன்றெல்லாம்
ஓர்த்துவத்தல் சேர்த்தல் உடன். 9

என்னுடைய எல்லாம் இவண்விட்டு நிற்பற்றி
நின்னுடைய நல்லாளாய் நின்றென்றும் - நின்னுடைய
தொண்டுகளைச் செய்தனினைத் தோத்தரித்தல் சிந்தித்தல்
கண்டுகளித் தல்கூடல் காண். 10
-----------------

57. திருமந்திர நகர் சைவசித்தாந்த சபையின் இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு
மகோற்சவ மகா சபையினது அக்கிராசனாதிபதி யவர்களுடைய வரவு வாழ்த்து.


சிவமிழைத்த* நல்லணிபூண் செந்தமிழைக் கூடித்
தவமெடுத்துப் பெற்றெடுத்துத்தந்த----சிவமதத்தைப்
பண்டுகற்று** நின்ற அன்பர் பாடியபன் னூல்களின்று
கண்டுகற்று நிற்குமன்பர் காள். 1
* இழைத்த - வேலைப்பாடுள்ள; ** பண்டு - முற்காலத்தில்.

கடவுளரு ளாலாக்கிக் காத்துவரு கின்ற
திடவுலக* மெல்லாம்நாம்தேரின்----உடலின்**
மலிகின்ற பல்லுயிர்க்கும் மாதாவாய் நின்று
பொலிகின்ற திந்நற் புவி. 2
* திடவுலகம் - ஸ்தூல உலகம்; ** உடலின் - உடலோடு.

புவியிலுள நாடெலாம் புக்காயின் என்றும்
குவிநிதிகள் பல்வகைய கொண்டு----கவினுறுநல்*
ஆவளமும் மாந்தர் அமைவுற்று** நிற்பதுநம்
நாவலமென்னும் பழையநாடு. 3
* கவின் - அழகு; ** அமைவு - நிறைவு.

நாவலநன் நாட்டினக நாடெல்லாம் நாடுங்கால்
தேவலமும் சீர்கொணரும் தேர்வலமும்----பாவலமும்
பெற்றறங்கள் செய்து பெரும்புகழும் நல்வாழ்வும்
உற்றுயர்ந்த திப்பரதம்* ஒன்று. 4
* பரதம் - பரதகண்டம்.

பரதவரு டத்திலுள பன்மொழியும் எண்ணில்
பரமனருள்* நல்குவன பண்டை** ----அரசர்கள்
செப்பநின்ற ஆரியமும் செந்தமிழும் ஆமிவற்றிற்
கொப்பதொன்றின் றென்பவறிந் தோர். 5
* பரமன் - கடவுள்; ** பண்டை - முற்காலத்திய.

ஆரியமே எற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஒரியலே கற்றாலும் ஒதாரங்-கீரடியில்
நாற்பொருளும்* வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம்** கண்டதுண்டோ இன்று. 6
* நாற்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு.
**அங்குஏற்பட - அப்பாஷையில் இருக்க.

பல்காப்பியங்களிலும்* பண்டுதொற்று சான்றுநின்றேர்**
நல்கப் பியமெனவே நாடுகின்ற - தொல்காப்பி
யப்பொருட்கும்% நான்மணிக்கும்%% ஐந்திணைக்கும்& காஞ்சிக்கும்&&
ஒப்பதொன்றங் கெவ்விடத்தில் உண்டு. 7
* காப்பியம் - நூல்; ** சான்று - கற்று நிறைந்து.
% பொருட்கும் - பொருள் அதிகாரத்திற்கும்.
%% நான்மணி - நான்மணிக்கடிகை.
& ஐந்திணை - ஐவகை நிலங்களையும் அவற்றின் ஒழுக்கங்களையும் கூறும் ஒரு நூல்.
&& காஞ்சி - முதுமொழிக்காஞ்சி.

பேரில்லாப் பல்லோரின் பிச்சயுரை யென்றுசிலர்
நாரில்லா* தின்றிகழும் நாலடியின்** - ஊரில்
கிழவி&சிறைப் பட்டான்% கிளிகம்பன்&& பாட்டின்
அழகுடைய தொன்றுண்டோ அங்கு. 8
* நார் - அன்பு; ** நாலடியின் - நாலடியைப்போல்.
& ஊரில்கிழவி- ஔவை; % சிறைப்பட்டான் - புகழேந்தி.
&& கிளிக்கம்பன் - பறவைகளைக் கடியும் கம்பைக்கொண்டிருந்த கம்பன்.

ஆரியமும் செந்தமிழும் ஆராயின் செந்தமிழில்
ஆரியநன் நூலெல்லாம் ஆகியுள* - சீரியநம்
செந்தமிழில் இன்றுமுள சீர்சான்ற நூல்களுக்கோ
அந்தமிலை காண்பீர் அடுத்து. 9
* ஆகியுள - மொழிபெயர்க்கப் பட்டுள்ள.

இணையில்லாமெய்பொருளும் இன்னிசையும் கொண்டு
துணையில்லார் துன்புற்றார் தோற்றார் - புனையென்னக்*
கைவசத்துற் றதரிக்கும் காழ்தமிழ்ம தச்சேய்குச்**
சைவ சித்தாந்தம் தலை. 10
* புணை - தெப்பம்.
** காழ் தமிழ்மதச்சேய்க்கு - வலி பொருந்திய தமிழ்மதக் குழந்தைகளுக்கு.

சைவசித் தாந்தத்தை தாரணிக்கெல்லாம்ஈந்து
மைவலையை* ஈர்க்கநிற்கும்** மாசபையுள் - ஐவசன%
மந்திரத்தை நம் தாய்க்கு மாண்ஈசர் ஈந்ததிரு
மாத்திரத்த தற்குளபன் மாண்பு. 11
* மைமலை - மயக்கவலை; ** ஈர்க்க - ஆறக்க.
% ஐவசன - பஞ்சாட்சர.

வாய்திறந்து பேச வகையறியா மாக்களையும்
கூய்திறந்து* பல்பொருளும் கூறியவர் - ஆய்%திறந்து&
மெய்யெல்லாம் கூறிடவும் மேன்மைபல வுற்றிடவும்
செய்யாநிற் கின்றதிது தேர்ந்து. 12
* கூய் - கூவி; & திறந்து - வெளிப்படையாக.
% அவர் ஆய் - அவர் சால்பு அடைந்து.

மான்விழியா ரின்சொல் வலைப்பட்ட மாக்களையத்
தேன்மொழியா ரிற்பிரித்துச் சேண்கொண்டு - பான்மொழியால்
நாற்பொருளும் உள்ளமைய நன்குரைத்துச் சீர்ப்படுத்தி
மேற்படுத்து கின்றதிது வென்று. 13

அடிமையினும் தாழ்ந்த அடிமையென நின்றோர்
படிமுழுதும் கோலோச்சும்* பாங்கை - நொடியில்
உரைத்துநிதம் மெய்ப்பொருளை ஓர்ந்துநிற்க ஒப்பில்
வரைத்திறன்ஈ% கின்றதிது வந்து. 14
* கோல் ஓச்சும் - அரசுபுரியும்; % வரைத்திறன் - மலைவலியை.

இத்தகைய மாண்பமைந்த இச்சபையில் இப்பொழுது
மத்தியசிம் மாசனத்து வந்திருக்கும் - உத்தமரின்
நித்தியநன் மாண்புசில நீவிர் மனம்கொள்ளப்
பத்தியொடு சொல்வேன் பணிந்து. 15

சுகமண்ட லாதிபதி சைவஇறை என்போம்
சகமண்ட லாதிபதி தானென் - றிகஅண்டத்*
தாரெல்லாம் இவ்விறையைச் சாற்றிடுவர் எஞ்ஞான்றும்
பாரெல்லாம் சொல்வதுமெய்ப் பண்பு. 16
* இக அண்டத்தார் - இவ்வுலகத்தார்.

நரிப்புரவிப்& பாளையத்தை நண்ணினரம் மன்னர்
புரிப்புரவிப்% பாளையத்துட் போந்து - வரிப்பளுவை
நீக்கிமகிழ்ந் திம்மன்னர் நித்தியமும் சான்றோரை
ஆக்கிவரு கின்றார் அளித்து. 17
& நரிப்புரவிப் பாளையத்தை - நரிக் குதிரைக் கூட்டத்தை.
% புரி - பட்டினமாகிய.

கோவண்ணர் என்றுமவர் கூறநிற்பர் இவ்வுலகில்
கோவண்ணர் என்றிவரும் கூறநிற்பர் - மேவொண்ணா*
மன்றாடி** யாரவரும் மக்களெலாம் மேவுமொரு
மன்றாடி யாரிவரும் மற்று. 18
* மேவஒண்ணா - (நாம்) அடைய முடியாத; ** மன்று - சபையின்கண்.

அவ்வையர் நம்தாயோ டங்குவந்தார் முன்னிந்நாள்
இவ்வையர் நம்தாயோ டிங்குவந்தார் - அவ்வையர்
தம்தொழிலை* நம்தாய்க்கும் தந்திடுவர் நிற்பரிவர்
தம்தொழிலை** நம்தாய்க்கும் தந்து. 19
* தம்தொழிலை - தமது காப்புத் தொழிலை.
** தம்தொழிலை - தமது அக்கிராசனத் தொழிலை.

இவ்விதமா நம்இறைவர்க் கெவ்விதத்தும் ஒப்பாகும்
செவ்வியரா* இங்குநிற்கும் செம்மலினி** - திவ்வவையை
ஆட்சிசெய வந்ததுநம் ஆதியறப்& பேறுசைவ
மாட்சிசில சொல்வேன் மதித்து. 20
* செவ்வியர் - அழகுடையவர்; ** செம்மல் - அரசர்.
& ஆதி - முந்திய.

சைவசம யக்கடவுள் சச்சிதா னந்தசிவம்
வையகமெல் லாமதனன் மாணுருக்கள்* - மெய்முதல**
அச்சிவத்திற் கன்பரிட்ட அந்தமிலா நாமங்கள்%
இச்சிவத்தை அன்றியொன்றிங் கில். 21
* உருக்கள் - தோற்றங்கள்; ** மெய்முதல - மெம்முதலியன.
% நாமங்கள் - பெயர்கள்.

ஆன்மா எனப்படுவ தச்சிவத்தின் ஓரளவு*
மான்மா** எனத்திரிந்து வாழுமனம் - ஆன்மாவின்
யானென்னும் ஓர்நினைப்பாம் அஃதெனதாய் ஐம்பொறியாய்த்
தேனென்னக் கொண்ட தெல்லாம் சேர்த்து. 22
* ஓர்அளவு - ஓர் உடலின் அளவினது; ** மான்மா - மானாகிய மிருகம்.

தேனென்னக் கொண்டஎல்லாம் தீப்போல்சுடு வதுகண்*
டூனென்னு** நல்லுடல்விட் டோடியுயர் - கோனென்ன%
நிற்கின்ற நம்சிவத்தில் நிச்சலுமே சேர்ந்துவக்கக்&
கற்கின்ற தெத்தனையோ%% கண்டு. 23
* சுடுவது - வருத்துவது; ** ஊன்என்னும் - மாமிசம் என்று (சிலர்) சொல்லாநின்ற.
% உயர்கோன் - அரசர்களுக்கெல்லாம் உயர்ந்த அரசன்.
& சேர்ந்து - ஐக்கியமாய்; %%எத்தனையோ - எத்தனை நூல்களோ.

எத்தனைநூல் கற்றிடினும் எத்தனைநூல் செய்திடினும்
எத்தனைதான் ஞானம் இயம்பிடினும் - அத்தனையும்
வீணாமே யான்எனதை வீடாத காலமெல்லாம்
சேணாமே* நம்மின் சிவம். 24
* சேண்ஆமே - தூரம் ஆகுமே.

யான்எனதை வீடலென்றால் யாவையும்விட் டோடலன்றே
யான் எனதை உள்ளுள்ளில் ஈர்ந்திடலே** -- யான்எனதை
நீக்கிடற்கு நேர்மார்க்கம் நீதி*கற்று நின்றிடலே
ஆக்கிடலே% பல்லுயிர்க்கும் அன்பு. 25
** ஈர்ந்திடலே - கொல்லலே; * நீதி - நீதிநூல்.
% ஆக்கிடலே - செய்தலே.

நீதிநூல் கல்லாதும் நில்லாதும் கற்றபடி
ஓதிஇவண் அந்தங்கள்* உற்றுநின்றார்----மாதின்
மயக்குண்டும் கள்ளுண்டும் வாய்ஞ்ஞானம் பேசித்
தியக்குண்டு& போனார் சிதைந்து%%. 26
*அந்தங்கள் - வேதாந்த சித்தாந்த நூல்கள்.
& தியக்குண்டு - கலக்கமுற்று; %% சிதைந்து - அழிந்து.

நம்முடைய சித்தாந்தம் நாம்காணும் எவ்வுயிரும்
நம்முடைய தெய்வமென நாம்கோடல்* --- நம்முடைய
சத்திக்குத் தக்கபடி சந்ததமும் நன்றாற்றல்
எத்திக்கும் கூறலிவை% இன்று. 27
* கோடல் - கொள்ளுதல்.
% இவைகூறல் - இவற்றைச் சொல்லுதல்.

நம்மிறைவர் சித்தாந்தம் நல்கிடுவர் இன்னினிபின்
நம்மிறைவி யார் அதனை நன்குரைப்பர்----செம்மையினை*
வேதாசல முனியும் மெய்யினச லாம்பிகையும்
ஓதாநிற் பர்கொண்மின் ஓர்ந்து. 28
* செம்மையினை - சிறப்பை.

அன்பமைந்த நம்மண்ணல் அம்மணிமா தேவியுடன்
இன்பமுற்றுவாழ்கஇனி திங்கென்றும்----பொன்புதல்வர்
நாடுநகர் சீரெல்லாம் நன்கெய்தி நன்றாற்றி
வீடுபெறக் கண்டுணர்ந்து மெய். 29

சைவசித் தாந்த சபைவாழ்க நம்மருமைச்
சைவசித் தாந்தத்தின் தாய்வாழ்க*----வையத்
துயிரெல்லாம் வாழ்க உயர்ந்தசிவம் வாழ்க
பயிரெல்லாம் வாழ்க பணைத்து**. 30
* தாய் - தமிழ்.
** பணைத்து - மழைபெய்து.

முற்றிற்று


பாடற்றிரட்டு
இந்நூலைப் பற்றிய சில அபிப்பிராயங்கள்:-

"எனது நண்பர் ஸ்ரீமான் வ.உ. சிதம்பரம்பிள்ளையவர்கள் "பாடற்றிரட்டு" இனிய செந்தமிழில் இயற்றப்பட்டுள்ள பல பாக்களால் அநேக அரிய விஷயங்களை மிகத்தெளிவாக விளக்குகின்றது. இதற்கு முன்னர் பிள்ளையவர்கள் தமது குடும்பத்துக்குப் பரமபரையாகவே "கவிராயர்" என்ற பட்டம் உண்டென்றும் அப்பட்டத்தை உண்மையிலேயே தாம் அநுபவிக்க ஈசன் அருள் புரிந்தானென்றும் கூறியுள்ள முகவுரையைக் கொண்ட "மெய்யறம்" என்னும் ஓரடிச்சூத்திரச்செய்யுள்--நூலால் அவர்களுடைய கவித்திறமை புலப்பட்டது. பிள்ளையவர்களது "பாடற்றிரட்டு" அவர்கள் "கவிராயர்" என்பதை உறுதிப்படுத்திவிட்டது. பாடசாலைகளின் உபயோகங்கட்கு மாத்திரம்
பண்டிதர்கள் பெருகிவருகின்ற இக்காலத்தில் நவீன நாகரிகமும் ஆங்கிலக் கல்வியும் நன்கு கொண்டுள்ள பிள்ளையவர்கள் பூர்வீக காலத்துப் புலவர்களைப்போல இன்புற்றபொழுதும் துன்புற்ற பொழுதும் கவிபாடுவதிலேயே காலத்தைக் கழிப்பது பிள்ளையவர்களுக்குப் பரம்பரையாகவும் இயற்கையாகவும் அமைந்துள்ள கவிராய வல்லமையைக் காட்டுகின்றது. கலைமகளின் கருணையைப் பெற்றுள்ள இக்கவிஞர் நிலமிசை நீடூழி காலம் வாழ்ந்திருந்து தருமசேவை செய்யுமாறு எல்லாம் வல்ல எம் இறைவி அநுக்கிரகிப்பாளாக."
-- சுப்பிரமணிய சிவம், சென்னை.

"நமது தேசாபிமானியாகிய ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் பல சமயங்களில் பாடிய பாடற்றிரட்டு மனித சமூகத்திற்கு அவசியம் வேண்டுவனவாகிய ஈகை, அன்பு, உண்மை முதலியவைகளையும், ஊழின்வலிமை இத்துணைத் தென்பதையும், அவ்வூழையும் மெய்ம்முயற்சியினால் வென்று விடலாமென்பதையும், துன்பமென்று சொல்லப்படுவன அனைத்தையும் இன்பமென்று நினைக்கின் அவை அக்கணமே இன்பமாக மாறிவிடுமென்பதையும், கடவுளையும் ஆன்மாவையும் பற்றி மனிதர் அறியவேண்டிய அநேக விஷயங்களையும் இனிய தமிழ்நடையில் தெளிவாகக் கூறுகின்றது. இந்நூலை நமது நாட்டார் வாங்கி வாசித்து மேம்படவேண்டுமென்று யான் கோருகிறேன்."
---சேஷாத்திரி அய்யங்கார், தமிழ்ப் பண்டிதர், பாதூர்.

"நமது தேசாபிமானத் தலைவரும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரும், பொதுமறையின் தற்கால உரையாசிரியருமாகிய ஸ்ரீமாந் வ.உ. சிதம்பரம்பிள்ளை யவர்களது பாடற்றிரட்டு நமது மதாச்சாரியர்களும் தமிழ்ப்பண்டிதர்களும் வாசிக்கத்தக்க பல அரிய விஷயங்களையும் ஒரு பெரிய நூலிற்குரிய பல சிறப்புக்களையும் கொண்டுள்ளது. இதனைத் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கைக்கொண்டு கற்கவேண்டுமென்பதும் இது நிலவுலகில் நீடுநின்று நிலவவேண்டுமென்பதும் எனது கோரிக்கை."
-- ஸ்ரீ சகஜாநந்த சுவாமியவர்கள், சென்னை.
___________