காவியமும் ஓவியமும்
(கட்டுரைகள்)
கி. வா. ஜகந்நாதன்

kAviyamum Oviyamum (literary essays)
ki. vA. jekannAtan
In tamil script, unicode/utf-8 format

காவியமும் ஓவியமும் (கட்டுரைகள்)
கி. வா. ஜகந்நாதன்


Source:
காவியமும் ஓவியமும் (கட்டுரைகள்)
கி. வா. ஜகந்நாதன்
பதிப்புரிமை கலைமகள் காரியாலயம்
மயிலாப்பூர் : : சென்னை
டிஸம்பர், 1944 ரூ. 2/8-
PRINTED AT
THE MADRAS LAW JOURNAL BRANCH PRESS
AT THIRUBHUVANAM, TIRUVADAMARUDUR POST.
--------------------------

சமர்ப்பணம்

பெற்றா னில்லை அன்னையென,
      பிறந்தேன் இல்லை மகவென்ன!
மற்றோ அன்பின் வகைஎல்லாம்
      மாணக் காட்டித் தமிழ்பயிற்றிக்
கற்றோர் அவைக்கண் எனைநிறுவும்
      கருணை யாளன்; அமரநிலை
உற்றான், சாமி நாதன்அடி
      மலர்க்கீழ் இந்நூல் ஒளிருகவே!


உள்ளுறை
பக்கம்
சமர்ப்பணம் iii
1. 'தானே கள்வன்' 1
2. 'காமமோ பெரிதே' 8
3. மாலையின் அக்கிரமம் 13
4. கிழவியின் பிரயாணம் 18
5. ஆச்சரியம் 23
6. இன்ப வாழ்வு 28
7. மான் உண்டு எஞ்சிய நீர் 31
8. மொளன நாடகம் 35
9. சிறு குழலோசை 39
10. தேயும் உயிர் 44
11. மான் செய்த தந்திரம் 47
12. நெஞ்சமும் அறிவும் 52
13. அவர் போன வழி 56
14. அலமரும் கண் 60
15. அவள் நிலை 64
16. பெருந்தகு நிலை 70
17. ஆண் சிங்கம் 74
18. அதே யானை 78
அரும்பதக் குறிப்பு 83முன்னுரை

சீதாபிராட்டியை ராமபிரான் முதல்முதல் காணும் பொழுது அப்பிராட்டியை வருணிக்கப் புகுந்த கம்பன் அந்த அழகுப் பிழம்பிக்கு உவமையாக என்ன என்ன பொருள்களையோ சொல்லிப் பார்க்கிறான். பொன்னின் சோதியையும் பூவினது நறுமணத்தையும் தேனினது சுவையையும் சொல்கிறான். திருப்தி உண்டாகவில்லை. முடிந்த முடிபாக உயர்ந்த பொருள் ஒன்றைச் சொன்னால் தான் அவனுடைய பாட்டு, பொருளுடையதாகுமென்று தோன்றுகின்றது. கடைசியில் ஒன்றைச் சொல்லியே விட்டான்: "செஞ்சொற் கவி இன்பம்!" என்கிறான்.

புலன்களால் நுகரும் இன்பத்தை உதவும் ஏனைய பொருள்களைக் காட்டிலும் நேரே உள்ளத்தால் நுகர்ந்து இன்புறும் கவிதை, போகப் பொருள்களிலெல்லாம் தலை சிறந்தது. மதுகலசத்தையும் பெண்ணணங்கையும் இன்ப வாழ்க்கைக்கு உறுதுணையாக வேண்டும் உமர் கையாமும், காணி நிலமும் பத்துப் பன்னிரண்டு தென்னமரமும் பத்தினிப் பெண்ணும் வேண்டுகின்ற பாரதியும் அவ்வின்பப் பொருள்களை இன்பமுடையனவாக ஆக்கக் கவிதையையும் வேண்டுகின்றார்கள். கவிதைதான் இன்ப வாழ்க்கைக்கு உயிர். மக்கள் தங்களுக்கு எந்த எந்தப் பொருள்களால் இன்பம் கிடைக்கும் என்று எண்ணிப் பெருமுயற்சி செய்கி றார்களோ அந்தப் பொருள்கள் சில சமயங்களில் தெவிட்டி விடும். மதுகலசத்தை விரும்பாத சமயமும் உண்டு; மங்கை யின்பம் சலிக்கும் பொழுதும் உண்டு. இன்ப வாழ்க்கையினிடையே இந்தச் சலிப்பு ஒரு கணம் இருந்தாலும் இடையறவுபட்டு விடும். பிறகு அது இன்ப வாழ்க்கை ஆகாது. ஆதலால் இடையறவுபடாத இன்பத்தை உண்டாக்க ஒரு பொருள் வேண்டும். அதுதான் கவிதை.
மதுநுகர்ச்சியால் வரும் இன்பம் உள்ள பொழுதிலும் அந்த இன்பத்தை மிகுவிக்கக் கவிதை உதவுகின்றது. பெண்ணினிமையை உணரும் செவ்வியிலும் கவிதை அவ்வினிமையை ஒன்று பத்தாகப் பெருக்குகின்றது. எல்லா இன்பங்களும் சலித்துப்போன நிலையில் எய்ப்பில்வைப் பாகத் தானே.

அந்த இன்பத்துக்குச் சலிப்பு இல்லையா?--இல்லை. 'என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மை' கவிதைக்கு உண்டு. ஆயுந் தொறும் இன்பம் தருவது கவிதை; மனித வாழ்வில் அவ னுடைய குறைகளை யெல்லாம் மறக்கவைப்பது கவிதை; உலகத்துப் பொருளின் குறைகளையெல்லாம் அழகுபடுத்திக் காட்டுவது கவிதை. துன்ப நிகழ்ச்சிகளிலுள்ள துன்பத்தை மாற்றி ரஸாநுபாவத்துக்கு உரிய பொருளாக அவற்றை ஆக்கிவிடுவது காவியம்.

உலகில் உள்ள பாலைவனம் சுடுகிறது; 'உள்ளின் உள்ளம் வேகு'மென்று மனிதர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் அந்த பாலைவனத்தைக் கவிஞன் தன் காவியத்தில் வருணிக்கின்றான். அவனுடைய சிருஷ்டியாகிய பாலை நிலத்தில் நாம் பலகால் செல்ல எண்ணுகிறோம்; அதோடு நில்லாமல் சென்று சென்று இன்புறுகிறோம்! உலகத்தில் ஈசுவர சிருஷ்டியிலுள்ள பாலைவனத்தின் வெம்மையைப் போக்கி அதற்கு இனிமையை உண்டாக்கிவிடுகிறது கவிஞனது சிருஷ்டி. இதற்காக அவன் புதியதாக ஒன்றையும் செய்து விடவில்லை. உள்ளதை உள்ளபடியேதான் சொல்கிறான். பாலைவனத்தின் வெம்மையைத்தான் தன் காவியத்திலே காட்டுகிறான். கானலை நீரென்று கருதும் மான் உயிர் தேய ஓடுகிறது. மலைபோன்ற உடல் படைத்த யானை ஓய்ந்து போய் மொட்டை மரத்தின் நிழலைப் பெரிதாக எண்ணி அதன் கீழே நிற்கிறது. ஆண் பருந்து மேலே பறக்க அதன் நிழலிலே பெண் பருந்து பறந்து செல்கின்றது. இயற்கையிலே கொடுமை நிறைந்த பாலையில் ஆறலை கள்வர் கொடுஞ் செய்கைகளைப் புர்கின்றனர். வழிப்போக்கருடைய உயிரையும் பொருளையும் ஒருங்கே வாங்குகின் றனர். 'கொள்ளும் பொருள் இலர் ஆயினும்' முண்டங்கள் துடிப்பதைப் பார்ப்பதிலே அவர்களுக்கு இன்பம். அதற்காக நெஞ்சில் ஈரத்தைத் துடைத்துவிட்டு வழிப்போக்கர் தலையைத் தறிக்கிறார்கள். என்ன கொடுமை! கவிஞனுடைய பாலைவனத்தில் அந்த நில இயல்புகள் எல்லாம் அப்படியப்படியே உள்ளன. அவற்றைப் படிக்கையில் நமக்கு இரக்கம் உண்டாகிறது. ஆனால் அது போலி இரக்கம். உண்மையில் அந்த இரக்கத்தின் அடியிலே இன்ப உணர்ச்சிதான் இருக்கிறது. உலகத்துப் பாலைவனம் கவிஞனது நாவிலே புகுந்து வரும்போது இனிமையைப் பெற்றுவிடுகிறது.

மற்றோர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு மடமங்கை தன் நாயகனை இழந்து அழுகிறாள். உலகில் அத்தகைய துர்ப்பக்கியவதிகளைக் காணும்பொழுது நம் உள்ளம் கரைகிறது. அவளது அழுகை நம்முடைய கண்ணிலும் நீர் சுரக்கச் செய்கிறது. அவள் துக்கத்தை நாமும் பங்கிட்டுக் கொள்கிறோம். இறந்து போனவன் எவ்வளவு கொடியவனாக இருந்த போதிலும் அந்த மெல்லியலாளுக்கு உண்டான பெருந்துயரத்திலே நாம் ஆழ்ந்து போகிறோம்.

கம்பன் சிருஷ்டிசெய்த காவிய உலகத்திலே புகுந்து பார்க்கலாம். ராவணன் ராமன் கை அம்புக்கு உயிர் கொடுத்து மாண்டு கிடக்கிறான். விபீஷணன் பார்த்துக் கதறுகிறான்:


கவியைப் படிக்கிறபொழுதே விபீஷணன் கதறுவது நம் காதில் கேட்கிறது. 'அண்ணாவோ! அண்ணாவோ!' என்று சொல்லிப் புலம்பும் புலம்பல் காலத்தைக் கடந்து இடத்தைக் கடந்து இன்று நம் உள்ளத்தின் காதுக்குக் கேட்கிறது. ஆஹா! 'அசுரர்கள்தம் பிரளயமே!' என்ற தொடரில் விபீஷணன் உள்ளத்தின் வேதனையைக் கொட்டி விடுகிறானே!

மண்டோதரி வருகிறாள். உடம்பெல்லாம் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்டுக் கிடக்கும் ராவணனைப் பார்க்கிறாள்.


மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து அரற்றும் மண்டோதரியின் புலம்பல் நம் உள்ளத்துக்குள்ளே சென்று உருக்குகின்றது, கண்ணீர்கூடத் துளிக்கிறது. ஆம்; நாமும் அழுகிறோம்.

முன்னே சொன்ன உண்மையான அழுகையை நாம் கேட்கிறபோது நமக்கு வந்த அழுகையும் உண்மையானது. இங்கே மண்டோதரியின் புலம்பலை வாசிக்கும்போது வரும் அழுகை போலி. இந்த அழுகைக்கு அடியில் இன்பம் இருக்கிறது. மெய்யான அழுகையை நாம் மீட்டும் கேட்க விரும்புவதில்லை. அது துன்பத்தை உண்டாக்குவது. காவியத்தில் உள்ள அழுகை மேலும் மேலும் நம்மைக் கவர்கிறது. பல பல தடவை அந்த அழுகையை அணுகி நாம் அழுகிறோம்; சலிப்பில்லாத அழுகை அது. அழுகையை விரும்புவது மாயமந்திர வித்தை அல்லவா? காவியம் அதைத்தான் செய்கிறது. மண்டோதரியின் அழுகை காவியமாக மாற்றப் படும்போது அதன் உருவம் மாறுவதில்லை. ஆனால் அதன் உயிர் மாறிவிடுகிறது; பயன் நேர் எதிராக அமைகின்றது. கசப்பான சுவையுடைய பாகற் காயைக் குழந்தை விரும்புவதில்லை. சர்க்கரையினால் பாகற்காய்போல நிறம் ஊட்டி ஒரு மிட்டாய் பண்ணினால் அதைக் குழந்தை மேலும் மேலும் விரும்புகிறது. மனித உலகத்து அழுகைக்கும் காவிய உலகத்து அழுகைக்கும் உள்ள வேறுபாடு இதைப் போன்றதே.

கவிஞனுடைய சிருஷ்டியிலே பலபல மூலப்பொருள்கள் இல்லை. உலக சிருஷ்டிக்கு ஆதாரமாக 92 மூலப் பொருள்கள் உண்டென்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எல்லாம் பஞ்சபூதத்தின் விளைவென்று தத்துவநூல் சொல்கின்றது. காவிய உலகத்தில் மூலப்பொருள் இரண்டே: சொல், பொருள். அவற்றைத் தனித் தனியே பிரித்துச் சொல்வதுகூடப் பிழை. சொல் என்றாலே பொருளும் உள்ளடங்கித்தான் இருக்கிறது. சிவமும் சக்தியும் அபேதமாக நிற்பதுபோலச் சொல்லும் பொருளும் ஒன்று பட்டு நிற்கின்றன. சொல் இன்றிக் கவிப் பிரபஞ்சத்தில் பொருள் இல்லை; பொருள் இன்றிச் சொல் இல்லை. இந்த இரண்டைக் கொண்டும் கவிஞன் அமரனைச் சிருஷ்டி செய்கிறான்; அசுரனையும் காட்டுகிறான். அழுகை வருகிறது; அதன்பின் இன்பமும் இருக்கிறது.

நாகரிகப் பண்பு மிக மிக மனிதன் நிரந்தரமான பயனுடைய செயல்களில் ஈடுபடுகிறான். அறிவு கூராக ஆக அவனுக்கு நித்தியத்துவம் வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. உடல் மாண்டு போயும் மாளாது நிற்கும் புகழுக்காகப் போராடுகிறான். எல்லாவற்றையும் மறந்து ஒருமைப்பாட்டின் வழியே இன்பந்துய்க்கக் காரணமான கவிதையை நாடுகிறான். அதற்குமேலும் போய்க் கடவுளது அருளாட்சியிலே புகுந்து இறவாத பெருவாழ்வு வாழ விரும்புகிறான். முக்தி இன்பத்தைத் தேடி அலைகிறான்.

இவற்றுள் முக்தி இன்பத்தைத் தேடி ஸர்வ சங்க பரித்தியாகம் செய்வதென்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. அதற்கு அடுத்தபடியாகக் கவிதையின் மூலமாக மன ஒருமைப் பாட்டையும் இன்பத்தையும் அடையும் வழி ஓரளவு மக்களுக்கு எளிதில் கிட்டும்படி அமைந்திருக்கிறது. கவிஞர்கள் என்றும் மாறாத நண்பர்களாக நம் அருகிலேயே நிற்கின்றனர். மனம் இருந்தால் கம்பனோடு அளவளாவலாம்; திருவள்ளுவரது அறவுரையைக் கேட்கலாம்; இளங்கோவடிகளுடைய சிலம் பொலியை நுகரலாம்.

இந்தக் கவிதை இன்பத்தை முத்தியின்பத்தை விரும்பிய பெரியோர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக் கிறார்கள். அப்பர் சுவாமிகள் கவிதை இன்பத்திலே மனத்தைச் செல்லவிட்டு யோகத்துயில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அந்த வழக்கம் உடையவர்களது நெஞ்சில் இருள் நீங்கி ஒளி பாயுமாம்; சிவபெருமான் திருவருள் பொலியுமாம். இதை எதிர்மறை முகத்தால் அவர் சொல்கிறார்:


என்பது அவர் திருவாக்கு. மனத்து இருளை வாங்குவதற்கு ஏற்ற ஒருவகை யோகம் இது. சொல்லிலே பரவிக் கிடக்கும் பொருளை நுகர்ந்து அதன்கண்ணே ஒன்றுபட்டுத் தூங்கவேண்டுமாம். இந்தக் கவிதாயோகம் ராஜயோகம், ஹடயோகம் முதலியவற்றைவிட எளியதுதானே?

உலகம் முழுவதும் கவிதை இன்பத்தை உணர்கின்றது. பாஷையின் வளப்பத்துக்கு ஏற்றபடி கவிதையின் வளப்பமும் பெருகியும் சுருங்கியும் அமைந்திருக்கின்றது. ஒரு மொழியானது பலகாலம் வழங்கிவந்திருந்தால் அம்மொழியில் கணக்கிறந்த காவியங்கள் உண்டாவதும் கவிஞர்கள் பலர் உண்டாவதும் இயல்பே. கன்னித்தமிழ் என்று பாராட்டும் தமிழ்மொழியின் சரித்திரத்திற்கு, ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. "தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் - இவள் - என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாரதியார் பாரததேவிக்குக் கூறும் இலக்கணத்தைத் தமிழ்த் தாய்க்கும் சொல்லிவடலாம்.

சிவபெருமானைப்போல இம்மொழியும் 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றி'யை உடையதாய் விளங்குகின்றது. காவிய இன்பத்தை நுகர்ந்தும் நுகரச் செய்தும் உலகில் விளங்கிய பல பெருங்கவிஞர்களால், வளம்பெற்ற மொழி இது. தெய்வங்களையே தன் திருத்தொண்டர்களாகப் பெற்ற பெருமையுடையதென்று கதைகள் வழங்குகின்றன. காலவெள்ளத்தில் அமிழ்ந்து அழிந்து போகாமல் நிற்பது ஒன்றைக் கொண்டே இது தெய்வத் தமிழ் என்று சொல்லிவிடலாம்.

கண்ணாலே கண்டும் பிற புலன்களாலே நுகர்ந்தும் மனிதன் உணரும் பொருள்களின் இயல்புகளைச் சொல்லாலே சித்தரிக்கும் புலவர்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்நாட்டில் இருந்துவருகிறார்கள். உள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் உருவில்லாத இயல்புகளுக்கு உருக்கொடுத்து உயிரோவியமாக்கிக் காவிய சிருஷ்டி செய்யும் புலவர்கள் பலர் இன்னும் புகழுடம்போடு தமிழ்நாட்டில் நிலவுகின்றனர். அகத்தியர் முதல் பாரதி வரையில் வந்த கவிஞர் பரம்பரை எத்தனை எத்தனையோ அரிய காவியங்களைத் தமிழர்களுடைய பெருந்தனமாகக் கொடுத்து உதவியிருக்கிறது.

நம்முடைய கைக்குக் கிடைக்கும் அருநிதிகளுள் மிகப் பழமையானவை கடைச்சங்க காலத்து நூல்கள். அவற்றைச் சங்கநூல்கள் என்று இப்போது வழங்கி வருகிறோம். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று மூன்று பிரிவாக அந்த நூல்களைப் பிரித்திருக்கிறார்கள். திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்று பத்து நீண்ட பாடல்களும் பத்துப்பாட்டு என்ற தொகுதியில் இருக்கின்றன. எட்டுத் தொகை என்ற வரிசையில் எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அந்த எட்டு நூல்களில் ஒவ்வொன்றும் பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற பெயருடையவை அவை. கீழ்க்கணக்கு என்பதற்கு அடிப்படையான நூல் என்பது பொருள். அவை பதினெட்டு ஆகையால் பதினெண் கீழ்க் கணக்கு என்று சொல்வார்கள். இந்த வரிசை முன்னே சொன்ன இரண்டு வரிசை நூல்களுக்கும் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர் சொல்வார்கள். மற்ற நூல்களை நோக்க இவை பழமையுடையனவே.

உலகம் போற்றும் திருக்குறள் இந்தப் பதினெட்டு நூல்களுக்குள் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பெரும்பாலான நூல்கள் நீதி நூல்களாகவே இருக்கின்றன. நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை என்ற நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசையாக வழங்கப் பெறும்.

சங்ககாலத்து நூல்களுக்கும் பிற்கால நூல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. உள்ளதை உள்ளவாறே சொல்லுவதை அந்த நூல்களிலே காணலாம். இயற்கையின் எழிலை நன்றாக எடுத்துக் காட்டுவது சங்க காலத்துக் கவிதை. 'அக்காலத்துப் புலவர்களின் கவிதை இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து, தெய்விகக் காதலிலும் அறந்திறம்பா வீரத்திலும் விளையாடி, சமரஸ நிலையில் வீற்றிருக்கின்றது. கவிஞர்களுடைய சிருஷ்டிகளில், அருவிகள் இடையறாது சங்கீதத்தோடு வீழ்வதும், அதில் மகளிர் துளைந்து விளையாடி இன்புற்று மலர்களைப் பறித்துப் பாறையிலே குவித்து அழகு பார்ப்பதும், நாயகன் ஒருவன் வேட்டையாடிக்கொண்டு வருவதும், அவன் அம்மகளிர் கூட்டத்தில் உள்ள நாயகி ஒருத்தியைக் காண்பதும், இருவர் கண்களாகிய மடைவழியாகப் பாய்ந்த அன்பு வெள்ளத்தில் இருவர் உள்ளமும் கலந்து கரைவதுமாகிய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம். ஏழை இடையன் வீட்டில் பந்தற்காலில் கட்டியிருக்கும் தழையை ஆட்டுக்குட்டி உண்பதும், கடற் கரையிலுள்ள வலையர் தெருக்களில் முத்துக்களைக் கிளிஞ்சிலுக்குள் இட்டுக் குரங்குகள் குழந்தைகளோடு கிலுகிலுப்பை விளையாடுவதும், இடையன் மாலைக்காலத்தில் தன்னுடைய புல்லாங்குழற் கீதத்தினால் பசுக்களை யெல்லாம் ஒன்றுகூட்டி வீட்டுக்கு வருகையில் வழியிலே மலர்ந்துள்ள முல்லைப் பூக்களைக் கொத்தோடு பறித்துத் தலையிற் செருகிக் களிப்பதுமாகிய காட்சிகளைக் காண்கிறோம். அரசர்கள் வித்துவான்களோடு கூடிப் பொழுது போக்குவதும், கால
வரையறைப்படி அரசியற் காரியங்களைச் செய்வதும், குடிகளுடைய வழக்கை நடுநிலைமை பிறழாது தீர்ப்பதும், விழாக் கொண்டாடுவதும் ஆகிய காட்சிகளையும் பார்க் கிறோம்.

'நெடுநாட்களாகத் தீமூட்டப் படாமையால் காளான் முளைத்த அடுப்பும் ஓட்டைக் கூரையும் உள்ள வறுமை நிலையம் ஒரு பக்கம் சித்தரிக்கப்படுகின்றது; பல பண்டங்களை விற்கும் இடங்களில், பகலிற் கொடிகளாலும் இரவில் விளக்குகளாலும் பாஷை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும்படி இன்ன இன்ன பண்டங்கள் விற்கப்படும் என்பதைக் குறிப்பிக்கும் கடைவீதிகளிலும், அரண்மனைகளிலும் திருமகள் நடனம் புரியும் கோலம் ஒரு புறம் சித்தரிக்கப்படுகின்றது. வீரம், காதல், சோகம் முதலிய ரஸபாவங்கள் அங்கங்கே அமைந்து விளங்குகின்றன' என்று சங்கத் தமிழை இக்காலத் தமிழுலகத்துக்கு அறிவுறுத்திய தமிழ் வள்ளலாகிய ஐயரவர்கள் சொல்லுகிறார்கள்.

தமிழனுக்குக் காதலையும் வீரத்தையும் பாடுவதில் ஆர்வம் அதிகம். தமிழ்க் கவிதைக்குப் பொருளாக உள்ளவற்றை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பகுத்திருக்கிறார்கள். அகம் என்பது காதல் வாழ்வைப் பற்றியது. ஒரு காதலனும் காதலியும் தாம் அன்பினால் ஒன்றுபட்டு இன்புற்றதை இன்னதென்று மற்றவர்களுக்குப் புலப்படுத்த முடியாத பொருளாகி அகத்துக்குள்ளே உணர்ச்சி யுருவமாக நிற்பதால் இன்பப் பொருளை அகம் என்று சொன்னார்கள். மற்றவற்றையெல்லாம் புறமென்று வகுத்தார்கள். மற்றவை பலவானாலும் அவற்றுள் தலைமை வகிப்பது வீரமே.

இன்னதென்று இன்பம் நுகர்ந்தோர் சொல்ல முடியாததைக் கவிஞன் சொல்லிவிடுகிறான். காதலைக் கதையாக்கி, இன்பத்தை நுகர்வதற்கு முன் காதலனும் காதலியும் சந்திப்பதையும், அவர்கள் உள்ளங்கள் கடல் போலக் கொந்தளிப்பதையும், ஐயமும் மயக்கமும் தெளிவும் உண்டாவதையும் கவிஞன் தமிழ்க் கவிதையிலே கோலம் செய்கிறான். காதலர் ஒன்றுபட்டபிறகு பிரிவதையும் பிரிவிலே அவ்வுள்ளம் இரண்டும் குமுறிக் குமைவதையும் சொல்கிறான். இந்தக் கதை முடிவின்றி வளர்கிறது. அவர்களுடைய உள்ள உணர்ச்சிகள் உரையாக வருகின்றன. காதலி இன்பத்திலும் துன்பத்திலும் தன் உள்ளத்தைக்
காதலனோடும் தோழியோடும் வெளிப் படுத்துகிறாள். காதலனும் காதலிக்கும் தோழிக்கும் தோழனுக்கும் தன் உணர்ச்சியை உரையாக்கிச் சொல்கிறான். சங்கநூல்களில் இந்தக் காதல் கதை - அகப்பொருள் - நாடகக் கவியைப் போலப் பாத்திரங்களின் கூற்றுக்களாகவே அமைந்திருக்கிறது. கவிஞன் அந்தப் பாத்திரங்களாக இருந்து நடிக்கிறான். தன்னைத் தனியே காட்டிக் கொள்வதில்லை.

காதல் உணர்ச்சியின் பலவேறு உருவங்களையும் நிலைகளையும் அலுக்காமல் சலிக்காமல் ஆயிரக்கணக்கான பாடல்களினால் பாடிக் குவித்தார்கள் சங்க காலத்துப் புலவர்கள். இந்தக் காதல் கதையைச் சில சில அழகான வரம்புக்கு உள்ளாக்கி அவ்வரம்புக்குள்ளே கவிதை வெள்ளத்தைப் பாயச் செய்திருக்கிறார்கள் தமிழர்கள். அதனால் அகப்பொருளைத் தமிழர் தமக்கே உரிய தனிச் சொத்தாகப் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்வார்கள்.

காதல் நாடகம் படர்வதற்கு நிலைக்களமாக இயற்கையை வைத்திருக்கிறார்கள். இயற்கை எழிலும் பருவ காலங்களும் காதலனும் காதலியும் கொள்ளும் உணர்ச் சிக்கு உதவியாகின்றன. இதற்காக இந்தக் காதலை ஐந்து பிரிவாகப் பிரித்திருக்கிறார்கள். காதலனும் காதலியும் தனிமையிலே சந்தித்து இன்பம் அடைவது ஒரு பகுதி. இதைக் குறிஞ்சி என்ற திணையாக வகுத்தார்கள். காதலன் தன் கடமையை நிறைவேற்ற வேண்டிக் காதலியைப் பிரிந்து செல்கிறான். இந்தப் பிரிவைப்பற்றிச் சொல்லும் பகுதியைப் பாலை என்று பிரித்தார்கள். காதலன் பிரியவே தலைவி தன் பிரிவுத் துன்பத்தை ஆற்றிக்கொண்டு தலைவன் வருவான் என்று அறம் திறம்பாமல் இருக்கிறாள். இது முல்லையாகும். தன் காதலியுடன் வாழும் தலைவன் காமம் மீதூர்ந்தமையால் பரத்தையரை நச்சிச் செல்லத் தலைவி ஊடலை அடைகிறாள். இது மருதத்தின்பாற் படும். பிரிவுத் துன்பம் தாங்காமல் தலைவி வருந்துகிறாள். இது நெய்தலென்ற பகுதியில் அடங்கும். இந்த ஐந்துக்கும் தனித்தனியே நிலங்கள் வகுத்திருக்கிறார்கள்.

மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம். காதலனும் காதலியும் இன்புறுவதற்கு ஏற்றது அது. நிலமகளின் பருவ எழிலுக்கு அடையாளம்போல வானத்தைத் தொட்டு நிமிர்ந்து நிற்கும் மலைச்சாரலில் இன்னொலியாடு தாவும் அருவியும் பூம்பொழிலும் உள்ள பரப்பில் தனிமை நிலையில் காதலர் ஒன்று படுவது பொருத்தமானது என்று கண்டு அந்நிலத்தைப் புணர்ச்சிக்கு உரியதாக வைத்தார்கள்.

பாலை நிலம் பிரிவுக்கு உரிய நிலைக்களம். பிரிவு துன்ப உணர்ச்சியை விளைவிப்பது. அதைச் சொல்லும் கவிஞனுக்கு அவ்வுணர்ச்சிக்கு உதவி செய்வதாக ஒரு நிலைக்களம் (Back Ground) அமைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்! உயிரற்ற பொட்டலாக மரம் கரிந்து புனல் வறந்து மான் கலங்க யானை மயங்கும் பாலைநிலம் வெம்மைக்கு இருப்பிடம். அந்த வெம்மை பரப்பிலே பிரிவுத் தீ பின்னும் வெம் மையை அடைகிறது. ஆதலின் பிரிவைப் பாலை நிலத்திலே வைத்துப் பாடினார்கள் கவிஞர்கள். இப்படியே ஏனையவையும் அமைந்தன.

சிறந்த ஓவியன் ஒருவன் தான் எழுதும் சித்திரத்தின் தலைமைப் பொருளுக்கு ஏற்ற நிலைக்களத்தை அமைத்துக் கொள்வது போலவும், இசைவாணன் தான் பாடும் பாட்டுக்கு ஏற்ற சுருதியை அமைத்துக்கொள்வது போலவும் இந்த நிலங்களும் காலங்களும் உதவுகின்றன.

இப்படிப் பலகாலமாக இயற்கை யெழிலை நிலைக்களமாகவும் காதலன் காதலியரை முக்கிய பாத்திரமாகவும் அவர்கள் உள்ளத்தூடே எழுந்து புரளும் உணர்ச்சி அலைகளைக் கவிக்கு உரிய பொருளாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் காவிய உலகத்திலே எக்காலத்தும் வாடாமல் பச்சென்று இருப்பவை. தமிழனுக்கு இத்தகைய சொத்து ஒன்று இருப்பதைத் தமிழுலகமே சிலகாலம் மறந்திருந்தது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகையாகிய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் சங்க நூல்களை வெளிக் கொணர்ந்து துப்புத் துலக்கி மெருகிட்டுத் தமிழர்களுக்கு உதவினார்கள். இன்று தமிழ்நாட்டில் பண்டைத் தமிழர் சரிதமும், பண்டைக் கவிதையின்பமும் தமிழர் உள்ளத்திலே விளையாடுவதற்கு அவர்களுடைய முயற்சியே விதையாகும்.

அப்பெரியாருடைய திருவடிக்கீழ்ப் பல வருஷங்கள் பணி புரிந்து தமிழ் கற்கும் பேறு பெற்றமையால் சங்ககாலக் கவிதையின்பத்தின் சில துளிகளை என் சிறுமதியால் அறிந்து இன்புறும் வாய்ப்பு உண்டாயிற்று. சங்கநூலை நேரே பயின்று இன்புறும் தகுதி யாவருக்கும் இராது. ஆயினும் சங்கநூற் பொருளை உணர்ந்தால் இன்புறுவதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் தகுதி உண்டு. ஆகவே சங்கநூலில் உள்ள சில செய்யுட்களைப் புது முறையில் தமிழன்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்ற எண்ணத்தினால் 'காவியமும் ஓவியமும்' என்ற பெயரோடு ஒரு கட்டுரை வரிசையைக் கலைமகளில் தொடர்ந்து எழுதிவரலானேன்.

காவியம் சொல்லோவியம். அதைப் படிக்கும் பொழுதே உள்ளத்தில் ஓவியக் காட்சி தானே அமைகின்றது. உருவம் இல்லாத பொருள்களையும் உணர்ச்சிகளையும் உள்ளம் உணரும்படி செய்துவிடுகின்றது. காவியத்துக்கு உள்ள பல இயல்புகள் ஓவியத்துக்கும் உண்டு. உலகிற் காணும் பொருள்களின் குறைபாடுகளைப் போக்கி அதற்கு ஓர் அழகை ஊட்டி நித்தியத்துவத்தைத் தருவதில் காவியமும் ஓவியமும் ஒரே நிலையில் இருப்பவை. இரண்டும் வெறும் உருவத்தை மாத்திரம் காட்டுவதோடு நில்லாமல் உணர்ச்சி களையும் காட்டும்போது சிறப்பை அடைகின்றன.

சங்ககாலக் காவிய உலகத்தின் காட்சி ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்திரம். கலைத்திறம் கைவந்த ஓவியர்களுக்குச் சங்கநூல் ஒரு பெரிய களஞ்சியம். வண்ண ஓவியங்களும், புனையா ஓவியங்களும் வரைவதற்குப் பொருள் எங்கே எங்கே என்று தேடவேண்டாம். சங்கநூல்களிலே புகுந்தால் பல்லாண்டுகள் ஓவியம் படைக்கப் பண்டம் இருப்பதைக் காணலாம்.

இந்த நினைவினால் காவியச் சிறப்பை ஓவியத்தாலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற முயற்சி எழுந்தது. அதற்கு உறுதுணையாக ஓவியர் ஸ்ரீ ராஜம் எங்களுக்குக் கிடைத்தார். இந்திய ஓவியக்கலையில் தேர்ச்சிபெற்ற அவர் காவியத்தின் கருத்தை மனத்திலே பதித்துப் பிறகு அதனைச் சித்திரமாக மாற்றியிருக்கிறார். காவியத்துக்கு ஓவியம் வேண்டுமானால் இந்நாட்டு ஓவியங்களே பொருத்தமாக இருக்கும். நம்முடைய காவியங்களில் குறிப்பினால் பொருளைப் புலப்படுத்தும் முறையை மிக உயர்வாகக் கொண்டாடுவார்கள். 'கடலினும் பெரிய கண்கள்' என்று கவிதையிலே சொல்லும் போது சீதாபிராட்டியின் உள்ளத்தின் ஆழத்தைப் புலப் படுத்தும் வாயிலாகக் கண்கள் இருக்கின்றன என்றே கருத வேண்டும். 'காதளவு நீண்ட கண்' என்றால் நாடாவை வைத்து அளந்து பார்த்து, 'காதுக்கும் கண்ணுக்கும் இரண்டங்குலம் இடைவெளி இருக்கிறதே!' என்று குறை கூறலாமா? "கண் நீண்டது, மிக நீண்டது" என்றுதான் நமக்குச் சொல்லத் தெரியும். கவிஞன் அதைத் தன்னுடைய கவிதை அளவைக் கொண்டு 'காதளவு நீண்ட கண்' என்று சொல்கிறான்.

கவிதையிலே தளிர்போல் மெலிந்த விரல்களையும், கொடிபோல் நுடங்கிய இடையையும் கண்டு அவற்றின் மென்மையை உணர்ந்துகொள்கிறோம். ஆனால் ஓவியத்தில் விரல்களைச் சற்று நீளமாகவும் துவண்டனவாகவும் கண்டால், 'இது இயற்கைக்கு மாறானது!' என்று சொல்கிறோம். கவிஞன் 'தளிர்போன்ற விரல்' என்று சொல்வதையே ஓவியப் புலவன் சித்திரத்திலே காட்டுகிறான் என்பதை நாம் சற்று ஊன்றிக் கவனித்து உணர்ந்தால் அதையும் அனுபவிக்க முடியும். காவிய உலகம் இந்த இயற்கை உலகத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், பலகாலும் கேட்டுப் கேட்டுப் பழக்கமாகி விட்டமையால் 'இது கவிதை' என்றும், 'இதைப் பார்க்கும் கண்ணே வேறு' என்றும் தெரிந்து கொண்டிருக்கிறோம். 'கவிஞனை நம்முடைய உலகத்துப் புழுதியிலே இழுத்து வந்து காண முடியாது. கவிஞனது உலகத்திலே நாம் புகுந்து பார்த்து இன்புறவேண்டும்' என்றே அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்திய ஓவியக்கலையும் காவியத்தைப் போலத் தனக்கென ஒரு தனி உலகத்தை உடையது. கண்ணினாலே காணப்படும் பொருளை உள்ளது உள்ளபடியே 'போட்டோப் படமாகக்' காட்டுவதைவிட உணர்ச்சியையும் கருத்தையும் புலப்படுத்தும் சில வகைக் குறிப்பினாலே காட்டவேண்டும் என்பது ஓவியப் புலவனது நெறி. நாம் நம் நாட்டுக் கலையை மறந்துவிட்டோம். அதனால் அது புதிதாகவும் இயற்கைக்கு மாறாகவும் படுகிறது. சப்பளம் கூட்டி உட்காரும் கிராமத்துக் குழந்தைகளைக் காணும்போது முழு உறை போடும் பட்டணத்து உத்தியோகஸ்தன், 'ஐயோ! இந்தக் குழந்தைகளை இப்படி உட்காரவைத்துச் சித்திரவதை செய்கிறார்களே!' என்று எண்ணுகிறான். அந்த இளங்குழந்தைகளைக் கேட்டால் 'பூமகளாகிய அன்னையின் மடியில் இப்படி உட்காருவதுதான் எங்களுக்கு இன்பத்தைத் தரும்' என்று சொல்லுவார்கள்.

இந்திய ஓவியம் உள்ளுறை பொருளோடு நிற்பது. அதுதான் அதற்கு உயிர். இந்த நாட்டுச் சிற்பமும் ஓவியமும், கோலமும் கூத்தும், காவியமும் புராணமும் இந்தக் குறிப்புப் பொருளை உடையனவாக இருப்பதனால்தான் பிற நாட்டினருக்கு விளங்காத புதிர்களாக உள்ளன. அவர் களுக்கு விளங்காதது தவறல்ல. நமக்கே விளங்கவில்லை என்றால் நாம் திருந்தவேண்டுவதை விட்டு அவற்றை இகழ்வது நியாயமாகுமா?

தமிழ்க் காவியத்துக்கு ஏற்ற தமிழ் ஓவியத்தை அன்பர் ராஜம் வரைந்து தந்தார். அவர் எழுதிய ஓவியங்களின் அழகைப் போகிற போக்கில் விளம்பரப் படங்களைபோலக் கண்டு நுகரமுடியாது. காவியத்திலே ஆழ ஆழ இன்பம் பெருகுவதுபோல, இந்த ஓவியங்களிலே ஆழ்ந்து நின்றால் இவற்றின் சிறப்புப் புலப்படும்.

இதில் உள்ள பதினெட்டுக் கட்டுரைகளில் பதினாறு காதற் சித்திரங்கள். பின் இரண்டும் வீரச் சிறப்பைப் புலப்படுத்துவன. எட்டுத் தொகையிலிருந்து நான்கும், பதினெண் கீழ்க் கணக்கிலிருந்து மூன்றும் ஆக ஏழு நூல் களிலிருந்து எடுத்த பாடல்கள் இதில் உள்ளன. இவற்றைப் போல நூற்றுக் கணக்கான பாடல்கள் உண்டு.

கூடியவரையில் கட்டுரைகளை வெவ்வேறு தோரணையில் எழுத முயன்றிருக்கிறேன். பாடல்களில் உள்ள சொற்கள் கட்டுரையினூடே வரும்படியாக வருணனைகளையும் கூற்றுக் களையும் பொருத்தியிருக்கின்றேன்.

கலைமகளில் இக்கட்டுரைகள் வெளியானபோது பல அன்பர்கள் இவற்றைப் பாராட்டினார்கள். அந்தப் பாராட்டே இவற்றைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் வெளியிடத் தூண்டியது. ஆதலின் அவர்களுக்கு என் நன்றி உரியது.

காவியத்துக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து உதவிய ஸ்ரீ ராஜத்துக்கு வெறும் நன்றியுரை சொன்னால் மட்டும் போதாது. தமிழ் நாட்டார் இந்திய ஓவியத்தின் சிறப்பை நன்கு உணரும் காலம் வரும். அப்போது ராஜத்தின் ஓவியங்கள் வாடாமலராக இருந்து மணம் வீசும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி வரும் தமிழுலகத்தினர் நான் இப்போது அவர்பாற் காட்டும் நன்றியுணர்வைக் காட்டிலும் பல மடங்கு விரிந்த நன்றியைக் காட்டுவார்கள். அந்த்ப் புகழ் அவருடைய முயற்சிக்கு ஏற்ற பயனாக இருக்குமென்ற நம்பிக்கையினால் அவரை நான் வாழ்த்துகிறேன்.


-

1. ' தானே கள்வன் '


சல சலவென்று ஓடும் நீர். அதன் கரையிலே அவனும் அவளும் காதல் பூண்டார்கள். அங்கே ஒரு வரும் இல்லாத தனிமையிலே அவ்விருவரும் இருந்தனர். ஆயினும் அவளுக்கு எல்லாம் நிரம்பி யிருந்தது போலத் தோன்றியது. இன்றோ, அவள் தன் வீட்டில் தன் தாய் தந்தையரும் சுற்றத்தாரும் தோழியரும் சூழ இருக்கின்றாள். ஆனால் அவளுக்கு எல்லாம் சூன்யமாக இருக்கின்றது.

அவன் அவளைப் பிரிந்தான். 'சிலநாளே இந்தப் பிரிவு; விரைவில் வந்து உன்னை மணப்பேன். அது வரையிலும் பொருத்திரு' என்று அவன் உறுதி மொழி கூறிப் பிரிந்தான். அவள் அவனை நம்பினாள். உளமறியக் காதல் புரிந்தவன் மீண்டுவந்து உலகறிய மணம் புரிவானென்று ஆர்வத்தோடு காத்திருந்தாள்.

காதலின்ப நினைவிலும் காதலனை எதிர்பார்க்கும் ஆர்வத்திலும் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள். ஒரு கணம் போவது ஒரு யுகமாகத் தோற்றியது. பிரிவுத் துன்பத்தைப் பொறுத்திருந்தாள். அந்தத் துன்ப முடிவிலே இணையற்ற இன்பம் இருக்கிறதென்ற நினைவு அதனைப் பொறுக்கும் மன வலியைத் தந்தது.

அவன் வரவில்லை. அவள் உள்ளத்தே சிறிது பயம் முளைக்கத் தொடங்கியது. ஆனாலும் அன்பு அதை மறைத்தது. அவளுடைய உயிர்த்தோழி அவளைத் தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறாள். அவள் மேனியிலே வாட்டம் தோற்றுகின்றது. தோழி அது கண்டு, "ஏன் இப்படி வாடுகிறாய்?" என்று வினவு கிறாள். தன் உள்ளம்போலப் பழகும் அத்தோழிக்கு அந்தக் காதலி தனக்கு ஒரு காதலன் வாய்த்ததைச் சொல்லுகிறாள்.

அவன் தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதும், இன்னுரை பேசித் தலையளி செய்ததும், அள வளாவியதும், 'பிரியேன், பிரிந்தால் உயிர் விடுவேன்' என்று சொல்லியதும், பிரிந்து வருவேனென்று உறுதி மொழி கூறியதும் - எல்லாம் சொல்கிறாள்.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு தோழி காதலிக்கு அச்சத்தை உண்டாக்குகிறாள்.

தோழி: நீ காதல் புரிந்த கதை நன்றாயிருக்கிறது! அவர் சூளுறவு கூறி உன்னையே மணப்பதாகச் சொன்னார் என்றாய். அதற்குச் சாட்சியாக யார் இருந்தார்கள்?

காதலி நினைத்துப் பார்க்கிறாள். இதற்கு முன்பு பழைய நினைவு வரும்போதெல்லாம் அந்தக் காதலனும் அவன் பேசிய பேச்சும் இன்பமும் வந்து மனத்தில் நிரம்பும். இப்பொழுது அவனை விலக்கி அந்த இடத்தை நினைந்து பார்க்கிறாள். அவனைத் தவிர அங்கே யார் இருந்தார்கள்? தனிமைதான். அந்தத் தனிமை அன்று இனித்தது. இன்றோ அதை நினைக்கையிலேயே உள்ளம் நடுங்குகிறது. தோழிக்கு விடை சொல்கிறாள்.

காதலி: யாரும் இல்லை.

தோழி: அப்படியா? ஒருவரும் இல்லையா? நன்றாக யோசித்துப் பார். பலர் முன்னிலையில் நாயகனைக் கைப் பிடிப்பதல்லவா திருமணம்? நீ காதல் மணம் செய்து கொண்ட அப்பொழுது ஒருவரும் இல்லையா?

காதலி சிந்தனாலோகத்திலே இருக்கிறாள். அங்கே தேடித் தேடிப் பார்க்கிறாள். ஒரு பூதரும் இல்லை. உண்மையில் இல்லையா? அவன் இருந்தான். அவன் ஒருவனே இருந்தான்.

காதலி: தானே.

தோழி: அவர் ஒருவர்தாம் இருந்தாரா? யாரும் இல்லாத இடத்தில் உன் நலத்தை வெளவிய அவரை நம்பியா நீ உருகுகிறாய்? ஒருவரும் காணாமல் ஒரு பொருளை வெளவுபவன் கள்வன் அல்லவா?

இந்த வார்த்தை காதலியின் உள்ளதே தைக்கிறது. அவன் தன் உள்ளம் கவர் கள்வன் என்பதை அவள் நன்றாக உணர்ந்திருக்கிறாள். தோழி சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பெருமூச்சு விடுகிறாள்; அந்த மூச்சோடு வருகிறது அந்த வார்த்தை.

காதலி: கள்வன்!

தோழி: மறைவிடத்திலே காதல் புரிந்த கள்வன் வார்த்தையிலே நம்பிக்கை வைக்கலாமா? அவர் அது கூறினார், இது கூறினாரென்று அவற்றை உண்மையாகக் கொள்ளலாமா? அவர் அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கி விட்டால் நீ என்ன செய்வாய்?

இந்தக் கேள்வியை இதுவரையில் காதலி எண் ணிப் பார்க்கவில்லை. அவர் பொய் கூறுவாரென்று எண்ணுமளவு அவள் மனம் மாசுபடவில்லை. இப் பொழுதோ தோழியின் வார்த்தைகள் அவள் நெஞ் சைக் கலக்குகின்றன. அவர் தாம் கூறிய வார்த்தை பொய்த்தால் அவள் என்ன செய்ய முடியும்? அவள் தன் நெஞ்சையே கேட்டுக் கொள்கிறாள்:

காதலி: தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ! (காதலர் அந்த உறுதி மொழியினின்றும் தப்பினால் நான் என்ன செய்வேன்!)

திருப்பித் திருப்பி இந்தக் கேள்வியை அவள் கேட்டுக் கொள்கிறாள். அவன் மொழி தவறான் கருத்திலே நின்றது அவள் வாழ்வின் இன்ப மாளிகை. அப்போது சிறிதும் சந்தேக எண்ணமே இல்லாமல் வேதவாக்காக நம்பினவலது உள்ளத்தில் இப்போது ஐயவுணர்ச்சி புகுந்து நெகிழச் செய்கின்றது.

தோழி: ஐயோ! பைத்தியமே! ஒருவரும் இல்லாத தனிமையிலே யாரோ ஒருவர் கூறிய வார்த்தைகளை உண்மையென்று நம்பிவிட்டாயே. நன்றாக யோசித்துப் பார்: அவர் உன்னோடு காதல் புரிந்தபொழுது சாட்சி ஒருவரும் இல்லையா?

காதலி என்ன செய்வாள்! எல்லாவற்றையும் மறந்து அவன் பேச்சிலே செயலிலே ஒன்றிப்போன அக்காலத்தில் மற்றவற்றைப் பார்க்க அவளுக்குக் கண் ஏது? தோழி, மேலும் மேலும் கேட்கும் கேள்விகளால் அந்தப் பேதைப் பெண் தன் உள்ளத்திலே பழைய காட்சியை நிறுத்திப் பார்க்கிறாள். நிலைக்களமே இல்லாத சித்திரம்போல அவன் உருவம் ஒன்றே அவளுக்குத் தோன்றுகிறது. அவனை மறக்கப் பார்க்கிறாள்; சாட்சியை உள்ளக் கண்ணால் தேடிப் பார்க்கிறாள். சோர்வு உண்டாகின்றதேயன்றிப் பயன் இல்லை.

இதோ, மின்னல்போல ஒரு நினைவு வருகிறது. "ஒரு சாட்சி உண்டு" என்று துள்ளுகிறாள்.

தோழி: யோசித்துச் சொல்.

அவள் கண்ணுக்கு, அந்தத் தனிமையிலே அருவி யோரத்திலே நின்ற நாரை காட்சி அளிக்கிறது.

காதலி: குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே. (அவர் காதல்புரிந்த காலத்தில் ஒரு நாரை யும் இருந்ததுண்டு.)

தோழி சிரிக்கிறாள். நாரையைப் பெரிய சாட்சியாகச் சொல்ல வந்துவிட்டாளே என்ற நினைவு அவ ளுக்கு. தனிமை தவழ் மோனவுலகத்திலே அந்த நாரை ஒன்றாவது அகப்பட்டது எவ்வளவு பெரிய காரியமென்பது காதலியின் எண்ணம்.

தோழி: நாரையா? நன்றாக யோசித்துச் சொல். உண்மையிலே நாரை இருந்ததா?

அக்கினி ஓர் இடத்தைப் பற்றிக்கொண்டால் அதனை முற்றும் கவர்ந்துகொள்வது போல, சாட்சியைத் தேடித் திரிந்த காதலியின் உள்ளம் நாரையைப் பற்றிக்கொண்டது. அதை விடாமல் பற்றிக்கொள் கிறாள். அவளது சிந்தனை யரங்கிலே இதுவரையில் காதலன் நின்றான். இப்பொழுது நாரை வந்து நிற்கிறது. காதலன் மறைகிறான்.

அந்த நாரையை அடிமுதல் முடிவரையில் பார்க்கிறாள். அது தன் ஒற்றைக் காலிலே நிற்கிறது. அந்தக் காலும் அதன் பாதமும் அவளுக்குத் தினையின் தாளை நினைப்பூட்டுகின்றன. பூமிக்கு மேலே புடைத்துத் தோன்றும் நான்கைந்து பச்சை வேரும் அவற்றின்மேலே நிற்கும் தினைப்பயிரின் தண்டும் நாரையின் ஒற்றைக்காலோடு சேர்ந்து நினைவுக்கு வருகின்றன. மேலே உள்ள நாரையின் உடம்பைப் பார்க்காமல் அதன் காலை மாத்திரம் பார்த்தால் நிச்சய மாகத் தினைத்தாளென்று நினைக்கும்படி நேரும்.

அவள் சிந்தனை, நாரையைப் பாதாதிகேசமாக அளந்துகொண்டிருக்கையில் தோழி மறுபடியும் கேட்பது காதிற் படுகிறது.

தோழி: அது நாரைதானா?

'அதில் என்ன சந்தேகம்? தினைத் தண்டுபோல இருக்கும் பசுங்காலையுடைய அதை நான் மறப்பேனா' என்று எண்ணினாள் காதலி. அவள் சொல்லுகிறாள்:

காதலி: தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால குருகு (தினையின் தண்டுபோன்ற சிறிய பசிய காலை யுடைய நாரைதான்.)

தோழி விட்டபாடில்லை.

தோழி: நாரையா சாட்சி? மிகவும் வேடிக்கை தான்! அது என்ன செய்துகொண்டிருந்தது? மறந்துபோனதை நினைவுக்குக் கொண்டுவருவது எவ்வளவு சிரமம்? நினைவில் இருப்பதை மறப்பது பின்னும் எவ்வளவு கஷ்டம்? காதலனை மறந்து நாரையை நினைத்தாள். 'அது எப்படி இருந்தது? என்ன செய்தது?' என்றெல்லாம் கேள்வி கேட்டுத் திண்டு மிண்டாடச் செய்கிறாள் தோழி. அந்தப் பேதை நங்கை மறுபடியும் நாரைத் தியானத்திலே ஆழ்கிறாள்.

நாரை ஒற்றைக் காலிலே நின்றுகொண்டிருக் கிறது. தவம்புரியும் யோகியைப்போல ஒரே நோக்கத் தோடு, ஓடுகின்ற அருவியின் கரையிலே நிற்கிறது. அது எதற்காக நிற்கிறது? 'அருவியிலே ஆரல் மீன் வருமா?' என்ற ஒரே நினைவிலே இந்த உலகத்தையே மறந்து நிற்கிறது. அதன் உருவம், இப்போது நன்றாகக் காட்சி அளிக்கிறது.

காதலி: ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகு (ஓடு கின்ற நீரில் ஆரல் மீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாரை அது.)

நாரையின் காலையும் கண்ணையும் ஓர் இமைப்பிலே அவள் கண்டிருந்தாள். அது மனத்தில் ஏதோ ஒரு மூலையிலே பதுங்கிக்கிடந்தது. தூண்டித் துருவிக் கேட்கும் தோழியின் கேள்விகளால் அந்த நாரையை அகக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள். இனி, தோழி என்ன சொல்வாளோ என்று எதிர்பார்க் கிறாள். அவளுக்கு இப்போது உலக முழுவதும் தோழியினிடம் அடங்கியிருக்கிறது.

தோழி சற்றும் இரக்கம் இல்லாதவள்! அந்த நாரையைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ளக் கூடாதோ அவள்? மறுபடியும் காதலியைத் தன் சிரிப்பினால் புண்படுத்துகிறாள்.

தோழி: அடி பேதையே! உலகமறியாத குழந்தையா நீ? மீனையே பார்த்துக் கொண்டு நிற்கும் நாரை உங்களை எப்படிக் கவனிக்கப் போகிறது? ஒற்றைக் காலில் நின்று ஒரே பார்வையாக ஆரல் மீன் வரவை நோக்கி நிற்கும் அதுவும் உன்னைப் போல் எல்லாவற்றையும் மறந்து நிற்பது தானே? அது ஒரு சாட்சியாகுமா? அது இருந்தும் இல்லாதது போன்றதே. அவர் கள்வனைப் போலச் சாட்சி யற்ற தனியிடத்திலே காதல் புரிந்தார். அவருக்கு அவரே சாட்சி.

காதலியின் உள்ளத்தே வலியப் பிடித்து இழுத்து நிறுத்திய நாரை இப்போது மறைந்து விட்டது. மறுபடியும் காதலன் வந்து நிற்கிறான். அந்தத் தனிமையும் அவனும் அவள் உள்ளத்தே இன்பத்தையும் துன்பத்தையும் கலந்த மயக்கத்தை உண்டாக்குகின்றனர். ஒருவரும் இல்லாத தனிமை; அவன் மாத்திரம் இருக்கிறான்; உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறான்.

"யாரும் இல்லை; தானே கள்வன்" என்று அவள் வாய் முணுமுணுக்கின்றது. அந்தப் பல்லவியிலே அவள் உள்ளம் கனிந்து இன்பம் காணுகிறது.

கள்வன் வரவைக் காதலி எதிர்பார்த்து நிற்கிறாள்.

* * * *

இந்தக் காதற்காட்சியைச் சித்தரிப்பது பின் வரும் பாட்டு.


[பொய்ப்பின்-தப்பினால். எவன் செய்கோ-என்ன செய்யட்டும். தினைத்தாள்-தினையின் தண்டு. ஒழுகுநீர்-ஓடுகின்ற நீரிலே செல்லுகின்ற. ஆரல்-ஆரலென்னும் மீன். குருகு-இங்கே, நாரை.]
------------------

2. ' காமமோ பெரிதே!'


மலைச்சாரலின் மோகனக் காட்சியிலே சிந்தையைப் பறிகொடுத்து நின்று நாலு திக்கையும் கண்களால் அளக்கும் அவன் ஒரு வீரனாகத்தான் இருக்க வேண்டும். 'உலம் படு தோள்' என்று கவிகள் வர்ணிக்கிறார்களே, அந்தத் தோள்களை அவன் கொண்டிருக்கிறான்.

அவன் அந்த இயற்கை எழிலைப் பார்த்டுச் சொக்கி நிற்கிறானென்று சொல்வது தவறோ? ஆம்; அவன் வேறு எதையோ எதிர்பார்த்து நிற்கிறான். மரங்களினூடே தலையை அங்கும் இங்கும் திருப்பியும் தாழ்த்தியும் பார்க்கிறான். யாரோ வருவதைத்தான் எதிர்நோக்கி நிற்கவேண்டும்.

அதோ வருகிறாள் ஒருத்தி; அவளுடைய உல்லாஸ சோபையிலே மலைப் பிராந்தியங்களின் மணம் தவழ்கிறது. அவளைக் கண்டவுடன் அவனுக்கு முகத்தில் ஓர் ஒளி ஏறுகிறது. ஆனால் அவன் அவளைக் கண்டவளவில் திருப்தி அடையவில்லை. பின்னும் தன் பார்வையை ஓட்டுகிறான். அவளைத் தொடர்ந்து யாராவது வருகிறார்களோ என்று ஆவலோடு கவனிக்கிறான். சிறிது ஏமாற்றக் குறிப்பு அவனது முகத்திலே படர்கிறது.

அவள் வந்துவிட்டாள். வந்து அவன் முன் நின்றாள்.

"உன் யஜமானி வரவில்லையா?" என்று அவளை அவன் கேட்கிறான்.

"உன் யஜமானிதானே?" என்று அந்தக் கேள்வியை மடக்கிக் கேட்டுப் புன்னகை பூக்கிறாள் அந்தப் பெண்ணணங்கு.

"சந்தேகமென்ன? என்னுடைய யஜமானிதான்; என் ஆருயிர்த்தலைவி!"

"அது கிடக்கட்டும்; இரண்டு நாட்களாக ஏன் வரவில்லை?"

அவன் என்னவோ யோசனை செய்து நிற்கிறான்.

* * * *

அவனுடைய காதலியின் உய்ர்த்தோழி அந்தப் பெண்மணி. காதலனும் காதலியும் அந்தரங்கமாகப் பழகி வருகிறார்கள். இன்னும் திருமணம் நடை பெறவில்லை. காதலனுக்குள்ள கடமைகள் சில நாட்கள் அவனை வரவொட்டாமல் தடுக்கின்றன. இந்த ரகசிய வாழ்க்கை எவ்வளவு காலம் நடை பெறுவது? காதலி மிகவும் துயரம் அடைகிறாள். அதைப் போக்கி அவர்கள் காதல் நிலைபெறச் செய்யவேண்டியது தோழியின் கடமை. உலகறிய மணம் செய்து கொள்ளும்படி காதலனை வற்புறுத்த வேண்டும். நேரே அந்தச் செய்தியைச் சொல்வதை விடத் தலைவியின் நிலையைச் சொல்லி, அதனால் அவனே அந்த விஷயத்தை உணர்ந்து கொள்ளும்படி செய்யவேண்டுமென்ற உறுதியோடு இன்று வந்திருக்கிறாள் தோழி.

* * * *

"சாரலையுடைய மலை நாட்டுக்குத் தலைவ, நீ சொளக்கியமாக இருக்கவேண்டும்!"

இந்த ஆரம்பம் ஏதோ ஒன்றச் சொல்லப் போகிறாளென்பதைப் புலப்படுத்தியது. 'இப்போது எனக்கு என்ன சொளக்கியக் குறைவு வந்துவிட்டது? இவள் எதையோ பிரமாதமாகச் சொல்லப் போகிறாள்' என்று அவன் ஊகித்துக் கொள்கிறான்.

"ஆமாம்; உன்னுடைய மலைச்சாரலின் அழகே அலாதியானது. அந்தச் சாரலிலுள்ள பலாப்பழங் களுக்கு எத்தனை பாதுகாப்பு? இயல்பாகவே வளர்ந்து ஓங்கி நிற்கும் மூங்கில்களே நெருக்கமாக நின்று வேலியைப்போல உள்ளன. அந்த எல்லைக் குள்ளே பலாமரங்கள் குலுங்கக் குலுங்கக் கனிந்து நிற்கின்றன. அந்தப் பலாமரமோ வேர்ப்பலா; பழங்களெல்லாம் வேரிலே காய்க்கின்றன. பூமியிலிருந்து வெடித்துப் புறப்படுகின்றன. நிலமே அவற்றிற்கு ஆதாரமாக இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பாக அவை வளரும்போது அவற்றிற்கு என்ன குறை?" என்கிறாள் அவள்.

'இந்தக் குறத்தி என்னவோ சொல்லப் போகிறாள். அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாள்' என்று எண்ணிய காதலன், "அந்தப் பலாப்பழ விசாரம் இப்போது எதற்கு?" என்று கேட்கிறான்.

"எதற்கா? அந்த விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது!"

"எந்த விஷயம்?"

"எங்கள் சாரலிலே விளையும் பலாப்பழத்தின் நிலையை அறிவது எளிதல்லவே! அதுவும், வேரிலே பழுத்து, நிலத்தால் தாங்கப்பெற்று, மூங்கில்வேலியின் காவலுக்குள்ளே உள்ள பழத்தையுடைய உங்கள் மலைசாரலை மாத்திரம் அறிந்தவர்களுக்கு எங்கள் ஊர் விஷயம் எப்படித் தெரியப் போகிறது?"

"உங்கள் சாரலில் மட்டும் என்ன தனிச் சிறப்பு இருக்கிறது?"

"அதைத்தான் சொல்ல வருகிறேன். அதோ பார் அந்த பலா மரத்தை. அதில் எவ்வளவு பெரிய பழம் தொங்குகிறது, பார்!"

"அடே அப்பா! உண்மையிலே பெரிய பழந்தான்."

"அதன் காம்பைப் பார்த்தாயா? அது எவ்வளவு சிறியது பார்த்தாயா? அதைத் தாங்கும் கொம்பு எவ்வளவு சிறிதாக உள்ளது? அவ்வளவு சிறிய கொம்பிலே பழுத்து முதிர்ந்த அந்தப் பெரிய பழம் எவ்வளவு காலம் இப்படியே தொங்கும்?"

"பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எந்தச் சமயத்தில் முதிர்ந்து விழுந்துவிடுமோ என்ற கவலைகூட உண்டாகிறது."

இது சொன்னதுதான் தாமதம்; தோழி, "ஆ! அதுதான் சொல்கிறேன்" என்று உணர்ச்சியோடு கூவினாள். தலைவன் அவளை உற்று கவனித்தான்.

"நீ இவ்வளவு காலமாக உன் காதலியின் தன்மையை அறிந்திருந்தால், அவளும் இந்தப் பலாப் பழம் போல இருப்பதை உணர்ந்திருக்கலாமே. அவள் உன்னிடத்தில் எவ்வளவு காதலாக இருக்கிறாள் தெரியுமா? அவளுக்குள்ள காதல் எவ்வளவு பெரிது என்பதை அறிவாயா?"

தலைவன் பெருமூச்சு விடுகிறான்.

"இந்தச் சிறிய கொம்பிலே பெரிய பழம் தொங்குவதைப் போல உன் காதலியின் உயிர் மிகச் சிறிது; அவள் கொண்டிருக்கும் காதலோ பெரிது. அவள் உயிருக்கும் காதலுக்கும் உள்ள பிணைப்பு அறாமல் இருக்கவேண்டும். அதற்கு வழி உன்னிடந்தான் இருக்கிறது."

தோழியின் மந்திரம் பலித்துவிட்டது. அவன் மறுபடியும் அந்தச் சிறுகோட்டுப் பெரும் பழத்தைப் பார்க்கிறான். 'அந்தப் பழம் விழுந்துவிட்டால் யாருக்குப் பிரயோசனம்? அதனை நுகர்வதற்கு உரியவன் பறித்துப் பயன்படுத்த வேண்டும். இல்லா விட்டால் வீணாகி விடும். நம் காதலியை நாமும் தக்க பருவத்தில் மணந்து பாதுகாக்கவேண்டும்' என்ற சங்கற்பம் அவன் உள்ளத்தே உதயமாகிறது. விடைபெற்றுச் செல்கிறான்.

"இவள் உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே" என்று தோழி கூறிய வார்த்தைகள் அவனுக்குள் ரீங்காரம் செய்கின்றன.


[வேரல் - மூங்கில். வேர்க்கோட் பலவு - வேரிலே பழக்குலையையுடைய பலாமரம். சாரல் - மலைச்சரிவு. செவ்வியை ஆகுமதி - சொளக்கியமாக இருப்பாயாக. அறிந்திசினோர் - அறிந்தவர்கள். சிறு கோட்டு - சிறிய கொம்பில். தூங்கியாங்கு - தொங்கினாற்போல. தவ - மிகவும்.]
-----------------------------


3. 'மாலையின் அக்கிரமம்'


அவள் பிறர்பார்வைக்குக் கன்னிதான் ஆனாலும் அவளுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒருவன் இருக்கிறான். அவளது காதல் இன்பத்தை நுகர்ந்தவன் அவன்.

எழிலும் உருவும் திருவும் பொருந்திய அந்த மடமங்கையின் உள்ளத்திலே வீற்றிருக்கும் அவன் அவளுக்கு ஏற்ற அழகுடையவன்; வீரமுடையவன்; செல்வமும் உடையவன். அவன் ஒரு நாட்டுக்கே தலைவன்; சிற்றரசன். வீரம் செறிந்த அரசர் வழி வந்தவன்.

அவனுடைய நாட்டில் இயற்கையின் முழு வளமும் குலுங்குகிறது. மலைகள் நிரம்பிய குறிஞ்சி நிலம் வேண்டுமா? அவன் நாட்டில் இருக்கிறது. பல பல அருவிகள் குதித்தோடும் மலைச்சாரல்களிலே அடர்ந்து வளர்ந்த காடுகளைக் கண்ட புலவர்கள் அவனை, "கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்" (தொகுதியைக் கொண்ட அருவிகளும் காடுகளும் பொருந்திய மலைநாட்டை உடையவன்) என்று பாராட்டுகிறார்கள்.

கானாறும், மாடு மேய்க்கும் ஆயர்கள் வாழும் காடும் நிரம்பிய முல்லை நிலச்செல்வமும் அவனுக்கு உண்டு. அதனால் அவனை, "குறும்பொறை நாடன்" (சிறிய கற்களையுடைய நாட்டையுடையவன்) என்று புகழ்கிறார்கள்.

அவனுடைய செல்வத்துக்குத் தனியடையாளமாகச் சிறந்து நிற்பது அவனுக்கு உரிய மருத நிலச் செல்வம். நெல்லும் கரும்பும் காடுபோல அடர்ந்து விளைந்து பல நாடுகளுக்கு உணவு அருத்தும் நல்ல வயல்கள் அந்த நிலத்து ஊர்களில் உள்ளன. எல்லாம் அவனுக்குச் சொந்தம். "நல்வய லூரன்" என்ற சிறப்புக்கு அவன் எவ்வகையிலும் தகுதியுடையவன்.

இவை மட்டுமா? முத்தும் பவழமும் பிறக்கும் பெருங்கடற்கரையளவும் அவன் நாடு பரந்திருக்கிறது. கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் நிலப் பரப்பையும் அவன் பெற்றிருப்பதால், "தண்கடற் சேர்ப்பன்" (தண்ணிய கடல் துறையை உடையவன்) என்ற பெயரால் சில சமயங்களில் அறிஞர்கள் அவனப் புகழ்வதுண்டு.

இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலத்துக்கும் தலைவனாகிய அவனுக்கு இப்போது காதற் பயிர் விளைக்கும் அவள் கிடைத்தாள். இனி அவனுக்கு என்ன குறை?

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களே. கடவுள் திருவருளால் கண்டார்கள்; காதல் கொண்டார்கள்; அளவளாவினார்கள். இப்போது அவன் பிரிந்து போயிருக்கிறான். மறைவாகக் காதல் புரியும் ஒழுக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. உலகறிய மணம் புரிந்துகொள்ளவே விரும்பினர். அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்ய அவன் பிரிந்து சென்றான்.

* * * *

இவ்வளவு வயசு ஆகும் வரையில் அவனைப் பிரிந்திருந்தாளே; இப்போது ஒரு கணமேனும் பிரிந்திருக்க முடியவில்லை. அவனை அறியாமல் இருந்த காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அவளைத் துன்புறுத்தவில்லை. அவன் வரவுக்காக அவள் காத்திருந்தாள். அவள் அழகு காத்திருந்தது; அவள் உணர்வு காத்திருந்தது; உயிரே காத்திருந்தது. இன்னும் அவனைக் காணாமல் இருந்திருந்தால் இந்த உலகம் அழியும் வரையில் அவள் அவனுக்காகக் காத்திருப்பாள். அப்பொழுதெல்லாம் அவள் கன்னி. இப்போது அவள் காதலி. ஒரு நாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. தனிமை அவளை வருத்துகிறது. தனியிடத்தே சென்று அவனையே நினைந்து புலம்புகிறாள்.

ஓடக்கரையிலும், சுனைக் கரையிலும், கழிக் கரையிலும் சென்று தன் பார்வையை நீர்மேல் நிமிர்ந்து நிற்கும் மலர்க் கூட்டத்தில் செலுத்துகிறாள்.

பகல் நேரத்தில் சென்று அவனுடைய நினைவிலே தன்னை மறந்து வீற்றிருக்கிறாள். அவள் கண் முன்னே சில நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அதை அவள் உணரவில்லை; அவள் உள்ளம் கண்பார்வை யோடு கலக்கவில்லை.

திடீரென்று அந்த ஆச்சரிய நிகழ்ச்சி கண்ணில் படுகிறது. அவள் அங்கே வந்து அமர்ந்தபொழுது தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன; நீல மலர்கள் குவிந்திருந்தன. இப்போதோ தாமரைகள் குவியத் தொடங்கின; நீல மலர்கள் இதழ் விரிந்தன.

"அட! மாலைக் காலம் வந்துவிட்டதுபோல் இருக்கிறதே!" என்று திரும்பிப் பார்க்கிறாள். சூரியன் ரத்தத்தைக் கக்கிக்கொண்டு மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான். பார்த்தவுடன் பகீரென்கிறது அவளுக்கு.

மாலைக் காலத்தைக் கண்டால் அவளுக்கு யமனைக் கண்டதுபோல் இருக்கும். ஊரெல்லாம் குறட்டை விட்டுத் தூங்க, தான் மட்டும் தனித் திருக்கும் இரவுக் காலத்தை அறிவுறுத்துவதல்லவா அந்தப் பாழும் மாலை! அதற்கு எப்படித் தப்புவது?

"இதென்ன! நான் இப்பொழுதுதானே வந் தேன்! அதற்குள் எப்படி மாலைக்காலம் வந்தது? பெரிய அக்கிரமமாக இருக்கிறதே!"

அவள் அங்கிருந்து ஓடி உப்பங்கழியின் பக்கத்திலே சென்று பார்க்கிறாள். அங்குள்ள நெய்தல் மலர்கள் அவளுடைய உள்ளத்தைப் போலக் கூம்பியிருக்கின்றன. காலத்தை உணர்த்தும் இயற்கைக் கடிகாரம் அவை.

"சந்தேகமே இல்லை. மாலைதான் வந்துவிட்டது. அதற்கு இப்போதுதான் வரவேண்டுமென்ற நியதி இல்லையோ! இந்தப் பட்டப் பகலிலே மாலை வரும் அக்கிரமத்தைக் கேட்பவர்கள் ஒருவரும் இல்லையா!" மாலை, இரவு, நள்ளிரவு, இவற்றால் வரும் தாபங்கள் எல்லாம் அவள் உள்ளக் கண்ணிலே ஒன்றன்பின் ஒன்றாக வந்து பயமுறுத்துகின்றன.

"சரிதான்! கேட்பாரற்ற ஊரிலே யார் எதைச் செய்தால்தான் என்ன? என்னுடைய உயிர்க் காதலர் என்னைப் பிரிந்திருக்கிறார். இந்தச் சமயம் பார்த்து இப்படியெல்லாம் அக்கிரமம் நடக்கிறது. என்னடா ஆச்சரியம்! இந்த மாலைக் காலந்தான் தவறுதலாக வந்து விட்டதென்று நினைத்தால் இதன் கூட்டாளி களுமா இப்படிச் செய்யவேண்டும்? சூரியன் இவ்வளவு சீக்கிரம் அஸ்தமித்துவிட்டான்! நெய்தல் மலர்களும் இவ்வளவு சீக்கிரம் குவிந்துவிட்டன! எல்லாம் வாஸ்தவமாக முன்பெல்லாம் நடக்கிற மாதிரியே இருக்கின்றன. ஆனால், பொய்! பொய்! இது நல்ல கடும்பகல். இந்தக் கடும்பகலில்தான் வஞ்சகமாக மாலை வந்திருக்கிறது."

பெருமூச்சு விடுகிறாள்; கண்ணை வெறித்துப் பார்க்கிறாள். மாலை ஏதோ ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு அவள் முன்பு நிற்கிறதா என்ன? அவள் அதோடு பேசுகிறாளே!

"என் செயலெல்லாம் அழியும்படி வந்த மாலையே!"

மாலைக்காலம் வந்தால் அவள் செத்த பிணம் போலத்தான் ஆகிவிடுவாள். விரகவெந்தீ மாலைக் காலத்தில்தான் கொழுந்தோடிப் படரும். அவள் அதனால்தான் அதைக் கண்டு துடிதுடிக்கிறாள்.

"மாலைப்போதே! என் தலைவர் பிரிந்தார். இதுவே சமயமென்று, நீ முன்பெல்லாம் வருவது போலவே வருகிறாயென்று எல்லோரும் நினைக்கும்படி என்னவோ செய்து ஏமாற்றிக் கடும் பகலிலேயே வந்துவிடுகிறாய். உன்னைக் கேட்பவர் ஆர்? வளைந்து செல்லும் கழியில் உள்ள நெய்தல் மலர்கள் குவியும்படி, காலையிலே நீ வந்தாலும் உன்னை மாற்றுபவரோ இங்கே இல்லை; நீ வைத்ததுதான் சட்டம்" என்று அவள் குமுறுகிறாள். அவள் நோய் அவளுக்கல்லவா தெரியும்?


[கணம் - தொகுதி. கான் - காடு. கெழு - பொருந்திய. குறும்பொறை நாடன் - முல்லை நிலத்தவனது பெயர். ஊரன் - மருதநிலத் தலைவன். சேர்ப்பன் - நெய்தல்நிலத் தலைவன்; சேர்ப்பு-கடற்றுரை. பிரிந்தென-பிரிய. பண்டை யின் - முன்போலத் தோற்றும்படி. வருதி-வருகிறாய். கையறு - செயலறுதற்குக் காரணமான. கொடுங்கழி - வளைந்த உப்பங்கழி. கூம்ப-குவிய. களைஞர்-விலக்குபவர்.]

--------------------

4. கிழவியின் பிரயாணம்


ஐயோ பாவம்! நடக்கும்பொழுதே தத்தித் தத்தி நடகிறாளே; கால் சோர்ந்து போகிறதே! எதற்காக இந்தக் கிழவி இப்படி புறப்பட்டாள்? கையைக் கவித்துக்கொண்டு எதையோ பார்க்கிறாள். இவள் வயசுக்கு இப்படி நடந்து திரிபவர் யார் இருக்கிறார்கள்? இவளையே கேட்டுப் பார்க்கலாம்.

"பாட்டீ, ஏன் இப்படி இந்த அகன்ற பாலை வனத்திலே நடக்கிறாய்? இங்கே அலையும்படி உன்னை விட்ட விதி பொல்லாததாய் இருக்கவேண்டும்."

இதென்ன! பாட்டி காதில் என் கேள்வி விழ வில்லை. இவள் காதும் மந்தமாகியிருக்கிறதே. இந்த வெயிலில் தங்க நிழல் இல்லாத பாலைவனத்தில் அங்கந் தளர்ந்து திரைந்த இந்தப் பெரியவள் நடந்து அலுத்துப்போய் நிற்கிறாளே. இவள் எதற்காக இப்படிக் கூர்ந்து கூர்ந்து பார்க்கிறாள்?

"அப்பா, யாரப்பா?"

ஆம், பாட்டியின் குரல்தான், இவள் தொண்டையிலுள்ள வறட்சி தொனிக்கிறதே.

"ஏன் பாட்டீ!"

"அதோ வருகிறார்களே; அவர்கள் ஒரு பெண்ணும் ஓர் ஆணுந்தானே?"

"ஆம், பாட்டி, யாரோ காதலனும் காதலியும் போலத் தெரிகிறது."

"அப்படியா!"

கிழவியின் முகத்திலே ஒரு மலர்ச்சி உண்டா கிறது. சிறிது நின்று பெருமூச்சு விடுகிறாள்; "அப்பாடி!" என்று சொல்லி ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாள். அந்தத் தம்பதிகளையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

அவர்களோ மெல்ல மெல்லக் கதை பேசிக் கொண்டு இவளெதிரே வருகிறார்கள். கிழவியின் மன வேகத்திற்கு அவர்கள் நடை நேர் மாறாக இருக்கிறது. ஒரு கணத்தில் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று கிழவி எண்ணுகிறாள். அவர்கள் வேகமாக நடந்து வந்தால்தானே?

அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். பாட்டி கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறாள். அவர்கள் இந்த முதியவளை நெருங்கி விட்டார்கள். இவள் தன் கண்ணை அகல விழித்துக் கூர்ந்து கவனிக்கிறாள்.

அடே! இதென்ன! இவள் முகம் ஏன் இப்படித் திடீரென்று மாறுகின்றது? சூரியனது ஒளியிலே பள பளத்த இவள் முகம் மேகத்திரை போட்டாற்போலே சோகபடலத்தை ஏறிட்டுக்கொண்டு விட்டதே! ஏன்? இவள் உள்ளத்திலே ஏதோ ஏமாற்றம் தோன்றிவிட்டது. பாவம்! அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது.

அந்தக் காதலிரட்டையர் போய்விட்டனர். தளர்ந்து பதிந்த கால்களையும் எடுத்து இரண்டடி மேலே நடக்கிறாள் கிழவி. மேல்மூச்சு வாங்குகிறது. பல்லைக் கடித்துக் கொண்டு இளைய ஆண்மகனைப் போல வீசி நடக்க மனம் முந்துகிறது. காலையும் வீசி வைக்கிறாள். ஆனால் அடுத்த கால் அதை பின் தொடரவில்லை; தளர்கிறது. "ஐயோ!" என்று விழப் போகிறாள். கைத்தடி அவளை விழாமல் நிலைநிறுத்து கிறது.

மறுபடியும் பார்க்கிறாள்: கையை நெற்றியின் மேல் வைத்துப் பார்க்கிறாள். பாலைவனத்தில் மனிதர்கள் அடிக்கடி பிரயாணம் செய்வார்களா? சிறிது நேரம் கழித்து இரண்டு உருவங்கள் நிழலைப் போல் நெடுந் தூரத்திலே தெரிகின்றன. அந்த நிழலை நம்பிக் காத்து நிற்கிறாள். அந்த உருவங்களின் அங்க அடையாளங்கள் ஒருவாறு புலப்பட்டு அவர்கள் ஆணும் பெண்ணுமென்று தெரிந்தால் இவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. ஆனால் அருகில் வந்த போது மறுபடியும் அவள் ஏமாந்து போகிறாள். அருகில் வந்ததும் அந்த உருவங்கள் இவள் உள்ளத் திலே இருளைத்தான் புகுத்திச் செல்லுகின்றன.

தூரத்திலே எது தெரிந்தாலும் இவள் கூர்ந்து கவனிக்கிறாள். காலோய்ந்த யானை வருகிறது; பயந்து சாகிறாள். வேறு யாரோ ஆடவர்கள் வருகிறார்கள். அவர்களை என்னவோ கேட்கிறாள். "நீ எங்கேயம்மா போகிறாய்?" என்று அவர்கள் கேட்கிறார்கள். இவள் விடை கூறவில்லை. இவளுக்கே எங்கே போகிறோமென்று தெரியவில்லை. ஆம்; இவளுடைய லக்ஷ்யம் ஓரிடமல்ல; வேறு ஏதோ!

"பாட்டீ, எங்கே போகிறாய்?"

"எனக்கே தெரியாதப்பா."

"எவ்வளவு நாழிகை இப்படி நடந்துகொண்டே இருப்பாய்?"

"தெரியாதப்பா!"

"எப்பொழுது உன் பிரயாணத்துக்கு முடிவு நேரும்?"

"வாழ்க்கைப் பிரயாணத்துக்கா?"

"உன் காலில் வன்மை இல்லையே?"

"ஆம் அப்பா, என் கால் தவறுகிறது; நான் ஓர் இடத்தில் வைத்தால், அது ஓரிடத்தில் போகிறது."

"எதையோ மிகவும் ஆவலாகப் பார்க்கிறாயே?"

"பார்த்துப் பார்த்து என் கண்ணில் இருக்கிற அரைக்காற் பார்வைகூட மங்கிவிட்டது."

"எதைப் பார்க்கிறாய்?"

"என் துரதிருஷ்டத்தைப் பார்க்கிறேன்."

"ஒன்றும் விளங்கவில்லையே பாட்டி!"

"நான் பார்க்கிறேன்; சூரியனும் சந்திரனும் இல்லாத வானத்திலே அந்த இரண்டு சுடருருவங் களையும் தேடிப் பார்க்கும்போது ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. எல்லாம் நட்சத் திரங்கள்; மதியில்லை; கதிரவனும் இல்லை!"

"அது போல--?"

"நான் பார்க்கிறேன். என்னைச் சேர்ந்தவர்களைத் தேடிப் பார்க்கிறேன். அகலிரு வானத்து மீனைக் காட்டிலும் பலர் இங்கே போகிறார்கள்; இந்த உலகத்திலுள்ள எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இங்கே வருகிறார்களென்று தோற்றுகிறது. இவ்வளவு பேர்களில் எல்லோரும் பிறரே. அவர்களைக் காணவில்லை."

"அவர்கள் யார் பாட்டீ?"

"எழில் திரண்ட நங்கை ஒருத்தி; அவளுக்குப் பற்றுக்கோடாக நின்ற ஆண் மகன் ஒருவன்."

"அவர்கள் இங்கே ஏன் வந்தார்கள்?"

"என் பாவம்! எங்களவர் செய்த பாவம்! பாவ மல்ல; எங்கள் அறிவின்மை."

"கதையை முழுவதும் சொல்லு பாட்டீ!"

"அவள் என் மகள். நான் அவளை வளர்த்த செவிலி. மார்மேலும் தோள்மேலும் வைத்து வளர்த் தேன். அவளுடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆண் சிங்கம் ஒன்று உண்டென்ற உண்மையை உணரும் சக்தி எனக்கு இல்லை. அவள் அவனுடைய அன்பிலே இன்பங் கண்டாள். அவள் குறிப்பறிந்து அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லாமற் போயிற்று. அவளுடைய காதல் எவ்வளவு அருமையானது என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் எங்களிடமென்று நன்மை உண்டாகு மென்று எதிர்பார்த்தார்கள். எங்கள் மனம் இளகவில்லை யென்று தெரிந்தது. இரு பறவையும் பறந்து போயின. அவள் போன பிறகே அவளருமை தெரிகிறது. என்ன பிரயோசனம்? தெய்விகக் காதலால் பிணிக்கப் பட்ட அந்தக் கொடியும் அது படர்ந்த கொம்பு போன்ற அவனும் இவ்வழியாக வருவார்களென்று பார்க்கிறேன்."

கிழவி மேலே தன் பிரயாணத்தைத் தொடங்கினாள். அன்பின் அருமையை உணராமல் கை நழுவவிட்ட கிழவியின் பிரயாணம் வாழ்க்கைப் பிரயாணம்போல ஏமாற்றம் நிறைந்ததாகவே இருக் கிறது. அன்பற்ற கொடியவரது நெஞ்சம் போலே அழலெரிக்கும் அந்தக் கொடுஞ் சுரத்தில் அன்பே வடிவமென்று எண்ணத்தகும் இரண்டு உருவங்களை, 'காதல் ஒன்று, அதனைப் பேணிக்காக்கும் வரம் ஒன்று' என்று சொல்லத்தகும் இரண்டு பேர்களை, இன்னும் கிழவி கண்டாளோ இல்லையோ!

[பரி தப்பின - நடை தவறின. வாள் - ஒளி. அகல் இரு வானத்து - அகன்ற பெரிய வானத்திலுள்ள. மீன் - நட்சத் திரம். மன்ற - நிச்சயமாக. பிறர் - அயலார்.]
----------------------

5. ஆச்சரியம்


மரமும் செடியும் கரிந்து போனெ பாலைநில வெம்மையிலே அவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியந்து போனார்கள். செங்கதிரவன் இரக்கமின்றி எறிக்கும் வெய்ய கதிரில் அந்த இளங் காதலர்களின் அன்பு வாடிப் போகவில்லை; ஒளி விடுகிறது. அழகு நிரம்பிப் பருவம் வந்த அக் காதலனும் காதலியும் பாலை நிலத்தில் நடப்பவர்களாகத் தோற்றவில்லை. மலர் மலி சோலைகளும் நீர்மலி வாவிகளும் உள்ள வழியிலே செல்பவர்களைப் போல மகிழ்ச்சியுடன் நடக்கிறார்கள்.

எதிரே வந்த சிறு கூட்டத்தார் இந்தக் காட்சியைக் கண்டு வியக்காமல் இருப்பது எப்படி?

"எவ்வளவு ஒற்றுமை! அழகிலும் அறிவிலும் அன்பிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவராகத் தோற்றவில்லையே!" என்றார் ஒருவர்.

"முறுக்கேறித் திரண்ட தோள்களையுடைய இந்தக் காளையின் அன்பு நிழலிலே மென்மையே உருவம் படைத்து வந்தாற்போன்ற இந்தப் பெண் செல்லும் காட்சியைக் கண்டது கண்செய்த பாக் கியம். நமக்குக்கூட இது பாலைவனமென்ற நினைவு மறந்துபோகிறதே!" என்றார் மற்றொருவர்.

"நீர் சொல்வது உண்மைதான். இவர்களைக் காணும்போதே கண் குளிர்கிறது. நல்ல மெல்லிய மலர்களால் ஆகிய இரட்டை மாலையைக் கண்டது போல இருக்கிறது. கடவுளின் திருவருள் எத்தனை ஆச்சரியமானது. காதலென்ற ஒன்றை மனிதர்களுக்கு அளித்துத் துன்பத்தையும் வெம்மையையும் பொருட்படுத்தாத இனிமையை அதில் ஊட்டியிருக்கிறாரே! இவர்களுடைய காதல், காட் டிலும் நாட்டிலும் சிறக்கவில்லை; ஜீவனற்றுப்போன தாவரங்களும், உயிர் உடலினின்றும் போய்க்கொண்டிருக்கும் விலங்குகளும், காலோய்ந்து வலியிழந்து செல்லும் நம்மைப்போன்ற மக்களும் உள்ள இந்தப் பாலைநிலப் பெருவெளியிலேதான் இவர்களுடைய காதலுக்குத் தனிச்சிறப்பு உண்டாகியிருக்கிறது. விஷக் கடலினிடையே அமுதம் தோன்றியதுபோல வும், உலகைக் கவிந்த அந்தகாரத்தினிடையே மின்னல் தோன்றியது போலவும் இவர்கள், இங்கே காட்சியளிக்கிறார்கள். இவர்கள் காதல் வாழ்க!"

அவர் உள்ளத்தே எழுந்த உவகைப் பெருக்கு வார்த்தைகளாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது வேரொருவர் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பாலைநிலத்திலும் கவிதை செய்யவைத்த இளங்காதலர்களின் காட்சியிலே கண்ணை பறிக்கொடுத்து நின்றார். உற்றுப் பார்த்தார். அவனைப் பார்த்தார்; அவன் முகவெட்டைப் பார்த்தார். அவளையும் பார்த்தார்; அவள் கண்களைப் பார்த்தார். ஏதோ புதிய பொருளைக் கண்டு பிடித்த வரைப்போலத் துள்ளிக் குதித்தார். "கண்டறியாதன கண்டேன். வியப்பு, பெருவியப்பு!" என்று உரக்கக் கூவினார். நல்ல வேளை, இறற்குள் அந்தக் காதலர் சென்றுவிட்டனர்.

முன்னே பேசிய இருவருள் ஒருவர், துள்ளிக் குதித்தவரைப் பார்த்து, "பெரு வியப்புத்தான்! நாங்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். சாதல் நிரம்பிய இங்கே காதலைக் கண்டோம். அந்தக் காதல், வெங்கதிரை நிலவொளியாக்கிற்று. பாலை நிலத்தைப் பூம்பொழிலாக்கிவிட்டது. இவை அதிசய மல்லவா?" என்றார்.

"அதற்கு மேலும் அதிசயம்! கடவுளின் அருள் என்று சொல்லுவார் சொல்லுக! நல்வினையின் வலிமை என்று கூறுவார் கூறுக! இந்த ஊழ்வினைத் திறம் நன்று! என்ன ஆச்சரியம்! ஊழ் வினையே! பாலே! நீ நல்லை!"

பைத்தியம் பிடித்ததுபோலக் கூத்தாடும் அவருடைய வார்த்தைகளைத் தெளிந்து கொள்ளாமல் மற்ற இருவரும் மயங்கி நின்றார்கள்.

"நீர் கண்ட அதிசயம் என்ன, சொல்லும்."

"இந்த இரண்டு பேர்களையும் நான் அறிவேன்."

"அறிந்தால் என்ன? அதில் அதிசயம் என்ன இருக்கிறது?"

"இவர்கள் இளங்குழந்தைகளாக இருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். அதே சாயல்; அதே முகவெட்டு; அந்தப் பெண் இருக்கிறாளே, அவளுடைய கண்களை நான் மறக்கவில்லை; அன்று கண்ட கண்களே; இப்போது மருட்சியுங்கூடக் கண்டேன்."

"இளமையிலிருந்து பழகிய நண்பின ரென்று தானே சொல்லப் போகிறீர்? அது பெரிய ஆச்சரியமா? வடகடலில் இட்ட நுகத்தில் தென்கடலில் இட்ட கழி சேர்வதுபோல எங்கிருந்தோ வரும் ஆடவனும், எங்கிருந்தோ வரும் மடமகளும் ஒரு கணத்தில் ஊழ்வசத்தால் மனம் ஒன்றி மணமகிழும் வரலாறுகளை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். அந்தக் காதல்தானே ஆச்சரியம்? பலநாள் பழகினவர் காதல் செய்வதில் என்ன வியப்பு இருக் கிறது?"

"கொஞ்சம் பொறுங்கள். பழகினவர்கள் ஒன்றுவதில் ஆச்சரியம் இல்லை; பழகாதவர்கள் பொருந்துவதுதான் அதிசயமென்பதை நானும் அறிவேன். ஆனால் இவர்கள் காதல் அதனினும் அதிசயமானது!"

"விஷயத்தை விளங்கச் சொல்லாமல் மூடு மந் திரம் போட்டால் நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வோம்!"

"இப்போது கைகோத்துக்கொண்டு போகின்ற இவர்களே, அன்றைக்கு எப்படி இருந்தார்கள் என்று பார்த்திருந்தால் உங்களுக்கும் இதன் சிறப்புத் தெரியும்."

"பார்க்காத குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். அதை நீர் சொல்லிவிடும். கேட்டு மகிழ்ச்சி அடை கிறோம்."

"இவனும் இவளும் பகைவர்களாக இருந்தார்கள். சண்டை என்றால் சாமான்யமான சண்டையா? இவன் இவள் தலை மயிரைப் பிடித்து இழுத்தான். இவள் ஐயோ என்று கூவிக்கொண்டு இவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து ஓடினாள். சண்டைக்கு ஒரு காரணமும் இல்லை. இந்தச் சண்டையைச் செவிலிமார் வந்து தடுத்தார்கள். அப்படியும் ஓயவில்லை. சின்னச் சண்டை தான். ஆனாலும் நாகம்போல ஒருவருக்கு மேல் ஒருவர் சீறிக்கொண்டு எதிர்த்ததைப் பார்த் திருந்தால், அவர்களா இப்படி இணைந்து வாழ்கிறார்களென்று நான் வியப்பதற்குக் காரணம் கண்டு கொள்வீர்கள். பழகாதவர்களை ஒன்றுபடுத்துவது ஆச்சரியமா? பகைசெய்து முரணியவர்களை ஒன்று படுத்துவது ஆச்சரியமா? இந்த ஆச்சரியத்தைக் கடவுள் செய்து காட்டுகிறார்; ஊழ்வலி செய்கிறது. அந்த ஊழை நாம் வியந்து பாராட்டாமல் இருப்பது எப்படி?" என்று முடித்தார்.

"ஆம்! ஆச்சரியத்திலும் ஆச்சரியந்தான். நல்லை மன்றம்ம பாலே! (ஊழ்வினையே, நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்)" என்று மற்ற இருவர்களும் சேர்ந்து ஊழை வாழ்த்தினார்கள்.

[ஐம்பால் - கூந்தல். புன்தலை ஓரி - புல்லிய தலைமயிர். வாங்குநள் பரியவும் - இழுத்துவிட்டு ஓடவும். தவிர்ப்பவும் - விலக்கவும். ஏது இல் - காரணம் இல்லாத. செரு - சண்டை. உறுப - செய்வார்கள். மன்ற - நிச்சயமாக. பால் - ஊழ்வினை. துணை மலர்ப் பிணையல் - இரட்டை மலர்மாலை. இயற்கை - இயல்பு. காட்டி யோய் - உண்டாக்கினாய்.]
-------------------------

6. இன்ப வாழ்வு


நன்றாக முற்றி விளைந்த தயிர்; முளிதயிர். முதல் நாள் இரவு மிகவும் சிரத்தையோடு காய்ச்சிப் பிரை குத்திய தயிர். அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்த மெல்லியலாள் தன் கையாலேயே சிலுப்பத் தொடங்குகிறாள். காந்தள் மலரின் இதழ்களைப் போன்ற தன் மெல்லிய கைவிரல்களால் பிசைகிறாள். அவசர அவசரமாகப் பிசைகிறாள். தன்னுடைய நாயகனுடைய பசி வேளைக்கு உணவு படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவள் சமையல் செய்கிறாள். பெரிய விருந்து சமைத்து விடவில்லை. சோறு சமைத்து விட்டாள். மோர்க்குழம்பு பண்ணப் போகிறாள். அதற்காகத்தான் அந்த முளிதயிரைத் தன் காந்தள் மெல்விரலால் பிசைகிறாள். அதோடு சேர்க்க வேண்டியவற்றை யெல்லாம் அரைத்து வைத்திருக்கிறாள். எல்லாவற்றையும் அதில் இட்டுக் கலக்குகிறாள். தன் நாயகன் காத்துக்கொண்டிருக்கிறானே என்ற எண்ணம் அவளை முடுக்குகிறது; ஆயிற்று; தாளித்துக் கொட்ட வேண்டியதுதான்.

சட்டென்று கையைத் தன் புடைவையிலே துடைத்துக் கொள்கிறாள். செல்வத்திலே வளர்ந்த அவளுக்குப் புடைவை வீணாகப் போகுமே என்ற ஞாபகமே இல்லை. 'அவர் காத்திருக்கிறார்' என்ற ஒரே எண்ணந்தான்.

அவன் அவசரப்படுகிறானா என்ன? அப்படி ஒன்றும் இல்லை. அவள் மிக்க அன்போடு பரபரப்புடன் செய்கிற இந்தச் சமையலைப் பார்த்துச் சிரித்த படியே நிற்கிறான் அவன். அந்த உணவை உண்ணுவதைக் காட்டிலும் அவள் அதைச் சமைக்கும் வேகத்தில், அதற்காக அவள் உடம்பை நெளித்துக் கொள்ளும் கோணலில், இன்னதுதான் செய்ய வேண்டுமென்ற வரையறையே இல்லாமல் அவள் கையும் காலும் துடிக்கிற துடிப்பில் அவன் ஒரு தனி அழகைக் கண்டு களிக்கிறான்.

அந்தப் புடைவை அழுக்காகிவிட்டதே, அதைக் கவனிக்கிறாளா? இல்லவே இல்லை; அந்தப் புடைவையோடேதான் அவள் சமைக்கிறாள். அடுப்பில் கரண்டியைப் போடுகிறாள்; தாளித்துக் கொட்டுகிறாள். தாளித்துக் கொட்டினால்தான் என்ன? அதையேயா பார்த்துக்கொண் டிருக்க வேண்டும்? அதிலே ஒரு திருப்தி அவளுக்கு. அந்தத் தாளித்த புகை குவளைமலரைப் போன்ற அவளது கண்ணைக் கவிகிறது. அவசர அவசரமாக ஒரு கையால் கண்ணையும் துடைத்துக் கொள்கிறாள். 'குவளை உண் கண் குய்ப்புகை கமழ' அவள் துழாவிச் சமைத்த அந்த இனிய புளிக் குழம்பு, தீம்புளிப்பாகர், இப்போது தயாராகிவிட்டது.

இலை போடுகிறாள்; பரிமாறுகிறாள். வெறும் பச்சை மோர்க் குழம்புதான் அது. அதை அவன், "மிகவும் நன்றாக இருக்கிறது; மிகவும் நன்றாக இருக்கிறது!" என்று நொட்டை கொட்டிக்கொண்டு உண்கிறான்; "இன்னும் கொஞ்சம் போடு, இன்னும் கொஞ்சம்" என்று கேட்கிறான். இனிது எனக் கணவன் அதை உண்பதனால் அவள் பூரித்து போகிறாள். அவள் என்ன பண்ணிவிட்டாள்! அறுசுவை உண்டி சமைத்துவிட வில்லை. ஆனாலும் தன் மாசற்ற அன்பைக் குழைத்துச் செய்தாள். அந்த அன்பை உணர்ந்து அவன் உண்கிறான்; பாராட்டுகிறான். அவள் உள்ள மகிழ்ச்சி முகத்தில் லேசாகத் தெரிகிறது. அந்த ஒள்ளிய நெற்றியையுடைய செல்வ மகளது முகம் மிகவும் நுண்ணிதாக மகிழ்கிறது. திருப்தியின் ரேகையும், உள்ள மலர்ச்சியின் பொலிவும் அந்த முகத்தை அழகு செய்கின்றன.

இந்த இன்பவாழ்வின் காட்சியை அவளுடைய பிறந்த வீட்டிலிருந்து வந்த செவிலித்தாய் பார்க் கிறாள். பார்த்துவிட்டு மீட்டும் தன் ஊருக்குப் போகிறாள். பெண்ணின் தாய் செவிலியைப் பார்த்து, "போனாயே; குழந்தை எப்படி இருக்கிறாள்? மாப்பிள்ளை அவளை நன்றாக வைத்துக்கொண்டிருக்கிறானா? சந்தோஷமாக இருக்கிறாளா?" என்று கேட்கிறாள். அவள் தான் கண்ட காட்சியையே விடையாகச் சொல்கிறாள்:


[முளி - விளைந்த. பிசைந்த - குழப்பிய. கலிங்கம் - ஆடை. கழாஅது - துவைக்காமல். உடீஇ - உடுத்து. உண்கண் - மையுண்ட கண். குய்ப்புகை - தாளிதப்புகை. துழந்து - துழாவி. அட்ட - சமைத்த. தீம்புளிப் பாகர் - இனிய புளிச்சுவையையுடைய குழம்பு. நுண்ணிதின் - மிக நுண்மையாக. மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது. ஒண்ணுதல் முகன் - விளக்கத்தையுடைய நெற்றியையுடையவளது முகம்.]
------------------

7. 'மான் உண்டு எஞ்சிய நீர்'


தெய்வத்தின் திருவருள் கூட்டினமையால் அந்தப் பெண்மகளும், ஆண்மகனும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இரண்டு தலையும் ஓர் உடம்பும் உடைய பறவையைப் போல அவர்கள் இரண்டு உடலும் ஓருயிருமாகப் பழகினர்.

பிறர் அறியாதவாறு அளவளாவி வந்தனர் அவர்கள். காதலியின் உயிர்த் தோழி ஒருத்திக்குத் தான் அந்த இரகசியம் தெரியும். தம் மகள் ஒரு காதலனைத் தானே நாடி அடைந்திருக்கிறாள் என்ற உண்மையை அவள் பெற்றோர் உணரவில்லை. முதலில் தினைபுனத்திடையே தொடங்கிய காதல் நாடகம் இரவில் வீட்டுப் புறத்தேயுள்ள தோட்டத்தில் நிகழ்வ தாயிற்று.

இந்தத் திருட்டுக் காதல் வாழ்நாள் முழுவதும் நிகழ்வதென்பது அமையுமா? என்றேனும் ஒரு நாள் மறைவு வெளிப்பட்டுவிடுமே! அன்றி, கனவிலே காதல் புரியும் அவ்விரண்டு ஆருயிர்க் காதலர்களும் ஒரு நாளில் சேர்ந்து பழகும் காலம் கொஞ்சந்தானே? பகலெல்லாம் ஒருவரை ஒருவர் நினைந்து செயலிழந்து கிடப்பதும், இரவில் பலபல இடையூறுகளுக்கிடையே இருவரும் தலைப்பட்டு அளவளாவி இன்புறுவதும் அவ்வளவு காலம் நடைபெறும்? தம்முள்ளே இருக்கும் காதலைக் காதலி தன் பெற்றோர்களுக்குக் குறிப்பாக அறிவிக்க எண்ணித் தன் உயிர்த்தோழியிடம் அதைச் சொல்லுகிறாள். தலைவி, பகற் காலத்தில் தலைவனை நினைந்து நோயுற்றவளைப்போலக் கிடப்பதை அறிந்த செவிலித்தாய், "இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?" என்று தோழியைக் கேட்கிறாள். இதுதான் சமயமென்று கருதி அவள் தலைவிக்கு ஒரு காதலன் அமைந்த செய்தியைக் குறிப்பாய்த் தெரிவிக்கிறாள். அந்தக் குறிப்பைச் செவிலி உணரவில்லை.

இதனிடையில் தலைவியை மணந்துகொள்ள யார் யாரோ வேறு முயற்சி செய்கிறார்கள். தன் காதலனையன்றிப் பிறரை மணந்தால் தன் கற்பு வழுவுமாதலால் இந்தச் சிக்கலினின்று நீங்கும் வழி என்னென்று ஆராய்ந்து மறுகுகிறாள் காதலிள நங்கை. தோழி அதனை அறிந்து வழி உண்டாக்குகிறாள். தலைவனைப் பார்த்து, "இவளை மணம்பேச அயலாரெல்லாம் வருகிறார்கள். நீ மணம் பேச வந்தால், தங்கள் செல்வ நிலைக்கு ஏற்றவனல்ல என்று மறுத்தாலும் மறுப்பார்கள். ஆதலால் இவளை ஒருவரும் அறியாமல் உடனழைத்துக் கொண்டு நின் ஊர் சென்று மணம் புரிந்து கொள்வாயாக!" என்று தோழி வழி சொல்லிக் கொடுக்கிறாள். தலைவன் அவள் கூறுவது தக்கதென்று எண்ணி இசைகிறான்.

இரு காதற் பறவைகளும் பறந்து போய் விடுகின்றன.

*
அவ்விரு காதலரும் போனபிறகு வீட்டாருக்கு உண்மை விளங்குகிறது. "ஐயோ! முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே இவளைக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேனே!" என்று தாய் வருந்துகிறாள். தோழி ஒன்றும் அறியாதவள்போல அந்தச் சோக நாடகத்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

போன காதலர்கள் மணம் செய்து கொண்டார் கள். "இனிமேல் நம்மைப் பிரிப்பவர்கள் யார் இருக் கிறார்கள்? மறைவாக நிகழ்ந்த நம் காதலை அக்கினி பகவானுக்கு முன்னே உலகறியும்படி செய்து விட்டோம். இனி, என்னுடைய ஊருக்கு நாம் தம்பதிகளாய் போய் வருவோம். என்மேல் இருந்த கோபமெல்லாம் இப்போது என் பெற்றோர் களுக்கு ஆறியிருக்கும்" என்று தன் மனைவி கூறும் போது, அவன் தடுப்பானா, என்ன? புறப்பட்டு விடுகிறான், உரிமையுள்ள கணவனாக.

* * * *

பிறந்தகத்துக்கு வந்தபோது அந்த மடமகள் எதிர்பாராத ஆச்சரியங்களைக் காண்கிறாள். யாராவது அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி முணு முணுக்கவேண்டுமே! எல்லோரும் முகமலர்ச்சியுடன் இணைமலர் மாலைபோன்ற அவ்விரண்டு அழகுருவினரையும் அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். தோழிதான் எல்லோரையும்விட அதிக இன்பத்தை அடைகிறாள். இந்தமாதிரி, கணவனும் மனைவியுமாகக் கண்குளிர அவர்களைக் காணவேண்டுமென்று அவள் ஏங்கிக் கிடந்தது அவளுக்குத்தானே தெரியும்?

இல்லற வாழ்க்கையிலே புகுந்த தலைவியைத் தனியே கண்டு தோழி பேசக் களிக்கிறாள்.

தன் சொந்த ஊரிலே அந்தக் காதற் பாவை ஓர் அரசிபோல வாழ்ந்தவள். செல்வம் நிரம்பிய வீட்டில் வளர்ந்தவள். ஒன்றாலும் குறைவு தோன்றாதபடி போற்றி வளர்க்கப் பெற்றவள். அவள் தன் காதலனுடன் வேற்றூரில் எங்ஙனம் வாழ்க்கை நடத்துவாள்?--தோழிக்கு இந்தக் கவலை எழுந்தது. தலைவனுடைய ஊர் தண்ணீர் இல்லாக் காடென்று கேள்வி யுற்றிருக்கிறாள். ஆகவே, அவள் பேச்சிடையே மெல்ல, "நீ சென்ற ஊரில் நல்ல தண்ணீர் இல்லை என்கிறார்களே; நீ எப்படி நுகர்ந்தாய்?" என்று கேட்கிறாள்.

தலைவி அவள் கேட்ட கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள். "என்ன, இப்படிச் சொல்லு கிறாய்? தாகம் எடுத்த போதெல்லாம் பாலைக் குடிப்பவளாயிற்றே என்று நினைத்துச் சொல்லு கிறாயோ? என்னுடைய நாவின் வறட்சியைப் போக்க இனிய தண்ணீர் இங்கே இருக்கிறது. ஆனால் என் உயிரின் வறட்சியைப் போக்கும் அன்பு நீர் பொங்கும் இடமல்லவா அந்த ஊர்? நம்முடைய ஊரில் தேனோடு கலந்த பாலைச் சாப்பிட்டுக்கொண்டு பொழுது போக்குவதைவிட, அவர் ஊரில் கலங்கிய நீரை உண்டு வாழ்வதுதான் எனக்கு இனிது!"

"என்ன? கலங்கிய நீரா? அதுதான் அங்கே கிடைக்குமா?"

"நல்ல நீர் கிடைக்கிறதோ இல்லையோ; அது வேறு. நல்ல நீர் கிடைக்காமல் கலங்கிய நீர் கிடைப்பதாயிருந்தாலும் அதுதான் இனிது. தழைகள் நிரம்பிய சிறு பள்ளத்திலே மான்கள் உண்டு எஞ்சி யிருக்கிறதே, அந்தக் கலங்கல் நீராக இருந்தாலும் அதை அருந்துவதை வெறுக்க மாட்டேன். அதுதான் இனிது. தோழி! அதை உண்ணும் பொழுதெல்லாம், அது என் உயிர்க் காதலருடைய நாட்டு நீரென்ற பெருமிதம் எனக்கு தெளிவை உண்டாக்குகிறது. உள்ளம் மகிழ்ச்சி பொங்க நிற்கையில் இந்த நீரின் கலக்கம் என்ன செய்யும்?

"இங்கேயோ, அவரை அடையாமல் உள்ளம் கலங்கிக் கிடக்கும்போது, தேனும் பாலும் கலந்து தந்தாலும் அது எப்படி எனக்கு இன்பத்தைத் தரும்?"

தோழி உண்மையை உணர்கிறாள். மானுண்டு எஞ்சிய கலிழி நீரை இனிதாகப் பண்னுவது காத லனது அன்பு என்பதைக் கண்டுகொள்கிறாள்.


[அன்னையென்றது தோழியை. வாழிவேண்டு - நீ வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக. படப்பை - ஊர்ப்பக்கம். மயங்கு - கலந்த. உவலைக் கூவற் கீழ - தழை நிரம்பிய பள்ளத்தின்கீழே உள்ள. எஞ்சிய கலிழி நீர் - மிஞ்சி நிற்கும் கலங்கல் தண்ணீர்.]
-------------------------

8. 'மெளன நாடகம்'


ஆணும் பெண்ணும் கூடி வாழும் இல்லற வாழ்க்கையில் பெண்ணுக்குத்தான் வீடென்னும் கூடு கட்டிக் கிளியைப்போலப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். ஆடவனும் அந்தக் கூட்டில் அடை பட்டுக் கிடந்தால் பிறகு ஆடவனுக்கு என்ன பெருமை? அவனுக்குரிய முயற்சிகள் இல்லையா? இல்லறத் தேரை ஓட்டும் பொறுப்பு அவனுடைய தாயிற்றே. அதற்குப் பொருள் வேண்டாமா?

ஆள் வினையினால்தான் மனிதன் ஆடவனாகிறான். அவனுடைய முயற்சியின் பலமே உலகத்தில் இயக்கத்தை உண்டுபண்னுகிறது. காதல் இன்பத்திலே ஊறி நிற்கும்பொழுது அவனுடைய உள்ளமும் உடலும் ஓய்வு பெறுகின்றன; புது முறுக்கை அடை கின்றன. அந்த அமைதியிலிருந்து மீட்டும் அவன் முயற்சியின்மேற் பாய்கிறான். உலகத்தின் பரந்த வெளியிலே புகுந்து தொழில் செய்து பொருளீட்டு கிறான்.

பொருள் குவித்து அறம் செய்கிறான்; இன்பம் நுகர்கிறான். பருவகாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போவதுபோல முயற்சியும் அதன் பயனும் நுகரும் நுகர்ச்சியும் மாறி மாறி ஆடவனது வாழ்க் கையை அளந்து வருகின்றன.

பெண்மகள் இந்த முயற்சியின் பெருமையை உணர்கிறாளா? தன் ஆருயிர்க் காதலனைப் பிரியச் செய்யும் பொருள் முயற்சியை அவள் வெறுக்கிறாள். பொருளைக் காட்டிலும் இன்பம் பெரிதென்று நினைக்க வில்லை. அவளும் அறிவுடையவள்தானே? பொருள் வளம் இருந்தால் தான் இன்பம் சுரக்குமென்பது அவளுக்குத் தெரியாதா என்ன? னாலும் அந்தப் பொருளை ஈட்டும்பொருட்டுத் தன்காதலன் பிரிவா னென்பதை அறியும்போது அவள் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள். 'அவளைப் பிரிந்து உயிர் வாழ்வது எப்படி?' என்ற ஏக்கம் அவனைப் பற்றிக் கொள் கிறது.

அவனுடைய கட்சியை எடுத்துப் பேச ஒரு தோழி இருக்கிறாள். அவள் என்ன என்ன காரணமோ சொல்லி, காதலன் இப்பொழுது பிரிவது இன்றி யமையாததென்று வற்புறுத்துகிறாள். அதெல்லாம் சரி. உணர்ச்சி மிகுந்த இடத்தில், இந்தக் காரணங்களெல்லாம் ஏறுமா? காதலி பெரிய யோசனையில் ஆழ்கிறாள்.

"அவர் பொருள் தேடிவர எண்ணுகிறார். இல்லறம் நடத்தும் சுமையை வகிக்க வேண்டியிருப்பதால் அவர் முயற்சியை நீ தரிக்க வேண்டும்" என்கிறாள் தோழி.

"ஹூம்!"

"அவர் பொருள் ஈட்டும் பொருட்டுப் போய் விரைவில் மீண்டு வருவார். நீ அவரைப் போய் வா என்று சொல்லவேண்டும்."

விஷயத்தைக் கேட்கும்போதே பாதி உயிர் போய்விடும்போல் இருக்கிறது, அந்த மெல்லியலுக்கு. அவள் தைரியமாக நின்று, "போய்வா" என்று சொல்ல வேண்டுமாம்! காதலனைப் போய்வா என்று சொல்வதற்கும், யமதர்ம ராஜனை, "என் உயிர் கொள்ள வா" என்று அழைப்பதற்கும் வித்தியாசம் அவள் அளவில் ஒன்றும் இல்லை.

"போகக்கூடாது" என்று சொல்லலாமா? சே, அது தவறு. காதலர் தம் இருவருடைய இன்ப வாழ்க்கையும் முட்டின்றி நடை பெறுவதற்கு வேண்டிய பொருளைத்தானே தேடச் செல்கிறார்? போகக் கூடாதென்று தடுப்பது நியாயம் அன்று. அவர் பிரிந்து போனால் அதனால் வரும் துன்பந்தான் என்ன?--

காதலியின் மனம் சுழல்கிறது. அவள் தன் தோள்வளைகளைப் பார்க்கிறாள். அது சம்பந்தமாக யோசனை படர்கிறது. இப்போது தன் தோளோடு செறிந்து கிடக்கும் அந்தத் தொடி அவர் பிரிந்து நீங்கினால் உடனே கழன்று தோளினின்றும் நீங்கி விடுமே!

ஏன்?

அவள் இப்போது அந்த வளைகளைத் தாங்கி நிற்கும் தன் தோளைப் பார்க்கிறாள்.

அவருடைய அணைப்பிலே இன்பங்கண்டு பூரித்த இந்தத் தோள்கள் என்ன ஆகும்? தம்மைக் கருது வாரின்றி மெலிந்து போகும். தோள் மெலியவே தொடி கழன்றுவிடுமே!

என்ன செய்வது?

தோளையும் தொடியையும் மாறி மாறிப் பார்க் கிறாள்.

காதலன் போகாமல் இருப்பது முறையன்று. அவன் பிரிந்தால் அவள் மெலிந்து போவாள். காதலன் போகவேண்டும்; அவள் தோளும் மெலியாமல் இருக்கவேண்டும். அதற்கு வழியுண்டா?

ஆ'ம்.; ஏன் இப்படிச் செய்யக்கூடாது? இதில் அன்ன தவறு? அவர் போகட்டும்; நாமும் அவருடன் போவோமே!' -- இந்த எண்ணம் தோன்றியதோ இல்லையோ, உடனே காதலி தன் பாதங்களைப் பார்க் கிறாள்.

அவள் தன் காதலனுடன் போவதாக இருந்தால் அந்தத் துணிகரமான செயலை ஏற்றுக் கொள்ள வேண்டியது கால்களினுடைய பொறுப்பு. அவை நடந்து தன் தோள் மெலிவையும் தொடி கழல்வதையும் பாதுகாக்கவேண்டும். அவள் மென்மையான நோக்கம் அவளுடைய பாதத்திலே சென்றது. தன் கால்களைத் தானே நெஞ்சினால் பிடித்துக்கொண்டு வேண்டுகிறாள்.

"என் மெத்தென்ற பாதங்களே, நீங்களே வருத்தம் பாராமல் தலைவருடன் சென்று என் தோள் மெலிவடையாமலும், என் தொடி கழலாமலும், யான் துன்புறாமலும் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டுகிறாள்.

இவ்வளவும் அவள் மனத்துக்குள் நிகழும் நிகழ்ச்சி.

தோழி அவள் கருத்தை உணர்ந்துகொண்டாள். நேரே நாயகன்பாற் சென்றாள். அவன் ஆர்வத்தோடு தன் காதலியின் உடம்பாட்டை எதிர்பார்த்து நிற்கிறான்.

"என்ன சொன்னாள்?"

"ஒன்றும் வாய் திறந்து சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்டாள். தன் தொடியை நோக்கினாள்; மெல்லிய தோளை நோக்கினாள்; பிறகு அடியை நோக்கினாள். ஆண்டு அவள் செய்தது அதுதான்."

இந்த மொளன நாடகத்தின் பொருளைத் தலைவன் உணர்ந்துகொண்டான். அவள் மனத்தோடு தன் மனத்தையும் வைத்து ஒட்டியறியும் காதலுடையவன் அல்லவா?

'அவள் வருவதா! இது சாத்தியமன்று' என்று நினைத்தான்.

"சரி, நான் இப்போது புறப்படவில்லை" என்று சொல்லி வீட்டுக்குள்ளே புகுந்தான்.


[தொடி - தோள்வளை. அஃது ண்டு அவள் செய்தது - அதுதான், தன் தோழி தலைவனது பிரிவை உணர்த்திய காலத்தில் அவள் குறிப்பாகச் செய்த செய்கை.]

---------------------------

9. 'சிறு குழலோசை'


தோழி: ஆடவர் தம்முடைய கடமைகளைச் செய்வதற்குப் பிரிவதும் அவர் பிரிந்த காலத்தில் காதலிமார் பிரிவுத் துன்பத்தைச் சகித்திருப்பதும் உலக வழக்கம். உன்னுடைய கணவர், மேலும் மேலும் இல்லறம் சிறந்து நடக்கவேண்டுமென்ற எண்ணத்தால் பொருள் ஈட்டத் துணிந்தார். பொருள் ஈட்டுவதற்குச் சில காலம் உன்னைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற துயரம் அவருக்கும் உண்டு. ஆனாலும் கடமை உணர்ச்சியும் உன்னுடைய திறமை யிலே நம்பிக்கையும் உடையவராகையினால் அவர் தம்முடைய முயற்சியை மேற்கொண்டார். திருட்டுத் தனமாகப் போகவில்லை. உன்னிடம் சொல்லிக் கொண்டுதானே பிரிந்தார்?

தலைவி: நீ சொல்கின்ற பேச்சிலுள்ள நியாயம் நன்றாகப் புலப்படுகிறது. என்னுடைய புத்தி இன்னும் பல சமாதானங்களைத் தெரிந்து கொண்டே இருக்கிறது ஆனால்......?

தோழி: அதுதான் சொல்லுகிறேன். உன் னுடைய அறிவினால் நீயே சமாதானம் செய்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்க வேண்டும். ஒருவர் சொல்லி ஆறுதல் அடைவதென்பது நடவாத காரியம். அவருடைய அன்பு உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் அதிகமாக மற்றொருவருக்குத் தெரியப் போகிறதா? ஆகையால் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றியுற வேண்டுமென்ற வேண்டுகோளோடு நீ சகித்து இருந்தால் உனக்கு எவ்வளவோ நல்லது.

தலைவி: அவர் கலமையில் எனக்கும் பங்கு உண்டென்பதை நான் நன்கு உணர்கிறேன். அவர் போன காரியத்தால் விளையும் பயனிற் பெரும்பாலும் எனக்கு நன்மை பயப்ப-தென்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமன்று; நம்முடைய இல்லற வாழ்க்கையில் பொருள் இல்லாவிட்டால் அறமும் இல்லை, இன்பமும் இல்லையென்று அவர் அறிவுறுதிச் சென்றாரே; அந்த வார்த்தைகளை நன்றாகத் தெளிந்தே நான் விடைகொடுத்தேன். இவ்வளவும் அறிவின் செயல். ஆனால்...!

தோழி: அறிவுக்கு மிஞ்சி என்ன இருக்கிறது? ஆ னால், ஆனால் என்று சொல்கிறாயே; அந்த ஆனாலென்பது என்னவென்று சொல்லிவிடு.

தலைவி: அதச் சொல்வதற்குள் நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய்; தடை சொல்கிறாய், உபதேசம் செய்கிறாய்.

தோழி: இதோ, பார்: நான் வாயை மூடிக் கொள்கிறேன். நீ அந்த 'ஆனால்' விடுகதையை விடுவி, பார்க்கலாம்.

தலைவி: என் அறிவு என் தலைவருடைய முயற்ச்சிக்கு அரண் செய்கிறது. ஆனால் என்னுடைய உள்ளத்திலே, காரணமில்லாமல் தோன்றுகிற உணர்ச்சி இருக்கிறதே, அதுதான் என்னை அறிவற்ற வளாக்குகிறது; பேதைப் பெண்ணாகச் செய்து விடுகிறது. அறிவு, நியாயங்களை ஆராய்ந்து வரும் போது அந்த உணர்ச்சி கீழறுத்துக்கொண்டே வருகிறது.

தோழி: நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.

தலைவி: உனக்கு விளங்காது; எனக்கே விளங்கவில்லை. உன்னுடைய அறிவுக்குத் தோன்றுகிற காரணங்களும் நியாயங்களும் எனக்கும் தோன்றுகின்றனவென்று சொன்னேனல்லவா? அந்த நிலையில் நான் அறிவுடையவள்தான். ஆனால், அந்த அறிவையும் ஏமாற்றிவிட்டு எந்தமாதிரி அடக்கப் பார்த்தாலும் அடங்காமல் உள்ளத்தின் அடியிலே ஆடுள்ளி எழுகிற உணர்ச்சி - அதைத் துன்பமென்று சொல்வதா? இன்பமென்று சொல்வதா? ஒன்றுமே தெரியவில்லை.- அந்த உணர்ச்சிதான் என்னைப் பேதை க்குகிறது. இதோ பார்: அன்று இந்த அழகான மாலைக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து நிற்பேன்! இப்பொழுது மாலைக்காலம் ஏன் வருகிறதென்று பயமுண்டாகிறது. சூரியன் மலை வாயில் விழுந்திருக்கிறான். வானமண்டலம் முழுவதும் செக்கச் செவேலென்றிருக்கிறது. முன்பெல்லாம் இதைக் கண்டால் என் உடம்பிலே ஒரு ஜீவசக்தி உண்டாகிவிடும். இப்போதோ இரத்தக்குழம்பைக் கண்டாற்போலல்லவோ தோற்றுகிறது? இந்தப் புல்லிய மாலை......! (திடீரென்று காதைப் பொத்திக்கொள்கிறாள்.)

தோழி: (திடுக்கிட்டு) என்ன இது? ஏன் இப்படி நடுங்குகிறாய்? ஏன் காதைப் பொத்திக் கொள்கிறாய்?

தலைவி: (பின்னும் இறுகக் காதைப் பொத்திக் கொள்கிறாள்.)

தோழி: என்ன இப்படி திக்பிரமை பிடித்தவள்போல் இருக்கிறாயே! சொல். எனக்குப் பயமாக இருக்கிறது. ஏன் இப்படிச் செய்கிறாய்? சொல், சொல்.

தலைவி: உனக்குக் கேட்கிறதா?

தோழி: என்ன?

தலைவி: என் காதில் வேல் பாய்ந்ததே, நீ உணரவில்லையா?

தோழி: வேலாவது, வாளாவது! பைத்தியம் பிடித்துவிட்டதா?

தலைவி: இன்னும் கேட்கிறதா?

தோழி: எனக்கு ஒன்றும் கேட்கவில்லை. உன் னுடைய கலங்கிய வார்த்தைகளைத்தான் கேட்கிறேன்.

தலைவி: கேட்கவில்லையா? உற்றுக் கேள்.

தோழி: ஒன்றும் கேட்கவில்லையே! (கவனிக்கிறாள்.) நடுங்கும்படியான இடியோசை ஒன்றும் காணவில்லையே! அதற்கு மாறாக மதுரமான ஓசை யொன்று கேட்கிறது.

தலைவி: கவனித்துப் பார்த்துச் சொல்.

தோழி: மாலை வந்துவிட்டது. பசுக்களை மேய்க்கக் கொண்டுபோன இடையன் மேய்த்து விட்டுத் திரும்பி ஓட்டி வருகிறான். வரும்போது ஊதுகிற புல்லாங்குழல் ஓசை எவ்வளவு இனிமையாக விழுகிறது. இதோ, மிகவும் தெளிவாகக் கேட் கிறதே! வேறு ஒன்றும் கேட்கவில்லையே!

தலைவி: அதைத்தான் சொல்கிறேன். அது என் காதில் இனிமையாக விழவில்லையே. வேலைக் கொண்டு எறிவது போல இருக்கிறதே. புல்லாங் குழலோசை அது, கேட்பதற்கு இனிமையானது, இடையன் ஊதுகிறான் என்ற விஷயங்கள் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அந்தக் குழலோசையின் மதுரத்தைக் கேட்க எனக்குக் காதில்லை. அது செவிவழியே பாய்ந்து உள்ளத்தில் வேல்போல் ஊடுருவிச் செல்கிறது. ஆயன் திரும்பி வீட்டுக்கு வருகிறான்; மாடுகள் வயிறார மேய்ந்து வருகின்றன. உலகமே மாலைக் காலத்தில் தன்னுடைய சொந்த வீட்டுக்கு மீள்கிறது. என்னுடைய காதலரோ இன்னும் மீண்டுவரவில்லை; மீண்டு வருபவர்களுக்கு அல்லவா புல்லாங்குழற் கீதம் இனிக்கும்? எனக்கு, மீட்சி நிறைந்த உலகத்தில் என் தனிமையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தோழி! நான் என் செய்வேன்!

தோழி: (தனக்குள்): காமமயக்கத்தின் விசித் திரந்தான் எவ்வளவு விநோதமாயிருக்கிறது! இனிய பொருளிலே இன்னாமையைக் காணும் காதலின் தத்துவம், உணர்ந்தவர்களுக்கே விளங்கும்.


[தேரோன் - தேரையுடைய சூரியன். செக்கை - செவ்வானம். புன்மாலை - பொலிவழிந்த மாலைக்காலம். ஆர் அன்பின் - அரிய பசுக்களின் பின்னாலே. ஆயன் - இடையன். செறி தொடி - இறுகிய வளைகளை அணிந்த தோழியே. எறிவது - குத்துவது.]
-------------------

10. தேயும் உயிர்


அழகிய ஓடை; மலையடிவாரத்தில் இருபுறத்திலும் உள்ள பாறைகளில் மோதும் அலைகள், மெல்ல மெல்ல ஓரங்களில் ஒதுங்கி வரும் மலர்கள், தளிர்கள், இடை இடையே அருவியே பூத்தது போன்ற சிறுசிறு நுரைத் தொகுதிகள். முதல் நாள் தான் மழை பெய்தது. அதனாற் புதுவெள்ளம் வந் திருக்கிறது. 'நுரையும் நுங்குமாக' அருவியின் புதுமைக்கோலம் விளங்குகின்றது.

ஒரு சிறு நுரை. அதன் ஜன்மஸ்தானம் எதுவோ தெரியவில்லை. கரையோரத்தில் மெல்ல மெல்ல வரும் போதே அங்கேயுள்ள சிறு கற்களின்மேல் அது மோதுகின்றது. ஒரு தடவை மோதினவுடன் அதிலிருந்து ஒரு பகுதி கரைந்துவிடுகிறது. அப்புறம் சிறிது தூரம் மெல்ல மெல்ல அருவியின் போக்கிலே கலக்கிறது. மீண்டும் கரையோரத்தில் உள்ள பாறை யில் மோதிச் சுழலுகிறது. அந்தச் சுழற்சியிலே அதன் உருவம் பின்னும் சிறுத்துவிடுகின்றது. இப்படி வரவர அது தேய்ந்து உருமாறி வருகின்றது.

என்ன வியப்பு! சிறிது நேரத்திற்கு முன்னே கண்ட அந்த நுரை எங்கே! இப்போது அதைக் காணோமே! அந்தச் சிறு நுரை அருவிக் கரையிலுள்ள கற்களில் மோதிமோதி மெல்ல மெல்லத் தேய்ந்து இப்பொழுது இல்லையாயிற்று.

* * * *

ஒரு புலவன் இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்துவிடுகிறான். உலக வாழ்க்கையாகிய அருவியிலே எத்தனை உயிர்களாகிய நுரைகள் வேதனைக் கற்களில் மோதி மோதித் தேய்கின்றன! அந்த நினைவைத் தான்கண்ட காட்சியோடு அவன் பொருத்திப் பார்க்கிறான்.

புறத்தே கண்ட ஈசுவர சிருஷ்டியை உபமானமாக வைத்து அப்பெரும்புலவன் அகத்தே ஒரு ஜீவ சித்திரத்தைச் சிருஷ்டிக்கிறான்.

உயிர் ஒன்று உடல் இரண்டாக வாழ்ந்த காதலர்களில், காதலன் காதலியைச் சிலகாலம் பிரிய நேர்கிறது. அவள் பிரிவெனும் கொடுந்தீயினால் வெம்புகிறாள். முன்பு இன்ப மயமாக இருந்த உலக முழுவதும் அவளுக்கு இப்பொழுது முள்ளடர்ந்த காடாக இருக்கிறது.

அவளுடைய நிலை, மலரினும் மெல்லிய காதலின் தன்மை முதலியவற்றின் உண்மையை வெளியில் உள்ளார் எப்படி அறியக்கூடும்? அவளுடைய உயிர்த் தோழியே அறியவில்லை.

"உலகத்திலே கணவன் மனைவி யென்று இருந்தால் பிரியாமலும் வேறு ஊருக்குப் போகாமலும் இருப்பார்களா? உன்னுடைய ஆசையை அடக்கிக் கொள்ளக்கூடாதா?" என்று அவள் கேட்கிறாள்.

காதலின் சக்தியை அவள் அறிந்துகொள்ள வில்லை என்பதைத் தலைவி உணர்கின்றாள்; 'இப்படியும் வன்னெஞ்சக்காரர்கள் இருப்பார்களா? காதலை அடக்குவதாவது!' என்று எண்ணுகிறாள். காதல் உயிரோடு பிணைக்கப்பட்டதாயிற்றே: அதை விரிப்பதும், சுருக்குவதும் எப்படி? அவளுடைய நெஞ்சத்தில் பிரிவால் உண்டான துன்பத்தோடு, மனமறிந்த தோழிகூடத் தன் நிலையை அறியாமல் இப்படிச் சொல்லும் கொடுமையும் கலந்து வேதனையை மிகுவிக்கிறது.

தோழிக்குப் பதில் சொல்ல விரும்பினாள். ஆனால் அந்தக் கல்நெஞ்சக்காரியினுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கு அவள் மனம் பொருந்த வில்லை. யாரையோ பார்த்துச் சொல்லுவதுபோலச் சொல்ல ஆரம்பிக்கிறாள்:

"காதலைத் தடுத்து அடக்குவாயென்று சொல்கிறார்களே, அவர்களுக்கு அந்தக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரியாதோ? அவர்கள் காதலைத் தெரிந்துகொள்ள மாட்டாத அவ்வளவு வன்மை யுடையவர்களா? அவர்கள் அப்படியே இருக்கட்டும். நமக்கு அது சாத்தியமில்லை. நாம் எம்முடைய காதலரைக் காணோமானால் மிகுந்த துன்பம் பெருகிய உள்ளத்தோடு, கரையிலுள்ள கற்களில் மோதிவரும் சிறிய நுரையைப்போல மெல்ல மெல்ல இல்லையாகி விடுவோம்" என்று சொல்லுகின்றாள்.
* * * *

இவ்வாறு கவிஞனது மனத்துள் ஒரு சிறிய காட்சி சிருஷ்டிக்கப்படுகிறது. அதன் பயனாக அவன் வாயிலிருந்து ஒரு செய்யுள் எழுகின்றது:


[தாங்குமதி - தடுப்பாயாக. மதுகை - வன்மை. துனி - துன்பம். பொருதல் - மோதுதல்.]
* * * *
இந்த அரிய கவியைக் கவிஞன் புலவர் குழாத்திலே மிதக்கவிடுகிறான். புலவர் நெஞ்சை இக்கவி அள்ளுகின்றது. அதுமுதல் இக்கவியை இயற்றின கவிஞனை அவர்கள் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவனைக் காணும்போதெல்லாம் அவர்கள் தம்முடைய அகத்தே, கல்பொரு சிறுநுரையை அல்லவா காணுகிறார்கள்? ஆதலால் அக்கவிஞனையும் "கல் பொரு சிறு நுரையார்" என்றே வழங்கத் தலைப் பட்டனர்.

-------------------

11. 'மான் செய்த தந்திரம்'


அன்பும் கடமையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதுபோலத் தோன்றுகின்றன. அறம் செய்வது அவன் கடமை. அதற்குரிய பொருள் ஈட்டுவதும் அவன் கடமை. பொருள் அவனிடம் நிரம்ப இருக் கிறது. ஆனாலும் அப்பொருள் அவன் சம்பாதித்தது அன்று; அவனுடைய பரம்பரைச் செல்வம்; அதைச் செல்வமாகவே கருதல் கூடாது. அப்படி அதைச் தன் கடமையை நிறைவேற்றுதற்காகச் செலவழித் தால் அவனது ஆண்மைக்கு இழுக்கு வந்துவிடும். தானே உழைத்துச் சம்பாதித்து விருந்தோம்ப வேண்டும்; இது பெரியோர்கள் வைத்த நியதி.

இந்த நியதிப்படி அவன் வெளிநாட்டுக்குச் சென்று பொருள் தேட எண்ணுகிறான். தன் அருமைக் காதலியைப் பிரிந்து செல்வதற்கு அவன் மனம் துணியவில்லை; கலங்கித் தடுமாறுகின்றது; ஆயினும் 'நம் ஆண்மைக்கு இழுக்கு வருமே' என்ற அச்சத்தால் அவன் பிரிந்துவிடுகிறான். அதற்கு முன் தான் போவதைப்பற்றி பலகால் எண்ணி, 'அவளுக்குக் கூறுவதா? வேண்டாமா?' என்று மனங் குழம்பி நிற்கிறான். இறுதியினில் காதலியின் உயிர்த் தோழியினிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.
* * * *

பொருள் எளிதில் கிடைத்துவிடுகிறதா? காடும் மலையும் கடுகி வழி நடந்து வேறு தேசம் செல்ல வேண்டும். மழை மறந்து பாலைவனமாகப் போன இடங்கள் இடையே இருக்கின்றன. கொடுங்கோல் அரசனது நாட்டைப்போல நினைப்போர் உள்ளமும் சுடும். பாலை, பயிர் பச்சை ஈவிரக்கம் இல்லாமல் கிடக்கின்றது. எங்கோ ஒரு மூலையில் ஒரு சாண்
உயரத்தில் ஒரு மொட்டை மூங்கில் நிற்கிறது. அதில் இலையும் இல்லை; கொழுந்தும் இல்லை. பாறைகளெல் லாம் பொரிந்து போய் ஆருத்திரமூர்த்தியின் நெற்றி கண்ணின் பார்வை விழுந்த இடத்தைப்போல அந்தப் பூமி ஒரே பரப்பாகப் பரந்திருக்கிறது. கானலும், அதை நீரென்று எண்ணி ஓடித் திரியும் ஒன்று அல்லது இரண்டு மான்களும் அதுவும் உலக்த்தில் ஒரு பகுதி என்பதை நினைவுறுத்திக் கொண்டிடுக்கின்றன. காதலன் போகும் வழி இதுதான்.
* * * *

தோழி பாலை நிலத்தைப் பற்றிக் கேட்டிடுக்கிறாள். அதன் வெம்மையையும், அதன் வழியே வியாபாரிகள் பயணம் செய்வதையும், வழிப்பறி செய்வோர் அவர்களைக் கொள்ளை இடுவதையும் அவளுக்குப் பலர் சொல்லி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் அவள் நினைவுக்குக் கொண்டு வருகிறாள். தன் உயிர்க் காதலனது பிரிவைத் தாங்கமாட்டாமல் துடித்துச் சோர்ந்து விழுந்து கிடக்கும் தலைவியைப் பார்க்கும்போது அவள் மனம் மறுகுகின்றது. 'இவள் துயரத்தை மாற்றுவது எப்படி?' என்று யோசிக் கிறாள். அவளுக்குக் கற்பனை அறிவு உண்டு. தலைவிக்குக் கதைகள் கூறிப் பொழுதுபோக்கும் தந்திரத்தில் அவள் மிகவும் சாமர்த்தியம் உடையவள். ஆதலின், பாலை நிலத்தின் கொடுமை பரப்புக் கிடையே காணப்படும் அன்பை, தூய காதலை, வெளிப் படுத்தும் ஒரு காட்சியை அவள் உள்ளத்துள்ளே காண்கின்றாள்.
* * * *

நீரில்லாத பாலைவனந்தான் அது. பல இடங் களில் பழைய காலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த குழிகள் மாத்திரம் இருக்கின்றன. இரண்டு மான்கள் நாவறண்டு கண் சுழலத் திரிகின்றன. ஒன்று பெண்; மற்றொன்று அதன் ஆண் மாணுக்குத் தன் தாகம் பெரிதாகத் தோன்ற வில்லை. 'இந்த மெல்லியலுக்குச் சிறிது நீர் தேடித் தரவேண்டுமே!' என்று அது தவிக்கின்றது. கடவுள் கருணை செய்கிறார். எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய சுனை காணப்படுகிறது. சூரியனது வெயிலால் அதில் சுண்டிப்போய்க் குழம்பிய சிறிதளவு நீர் தேங்கி நிற்கிறது. இரண்டு மான்களும் அந்தச் சுனைக்கருகில் நிற்கின்றன.

அன்பின் அதிசய சக்திதான் அன்ன சிறப்புடையது! அன்பின் முதிர்வில் இணையற்ற தியாகம் கனிகின்றது. அந்தச் சுனையிலுள்ள சிறிதளவு நீரை நார் உண்பது என்பதில் விவாதம் வந்துவிடுகின்றது. அசுர எண்ணம் அந்த மான்களிடத்தில் தோன்ற வில்லை. 'நீ குடி' என்று ஆண்மான் அன்பு கனியச் சொல்கிறது; 'நீதான் குடிக்கவேண்டும்' என்று பெண் மான் பேசுகிறது. தெய்வீகக் காதலிலே தோன்றிய எண்ணமல்லவா?

சிறிது நேரம் இரண்டும் அங்கே நிற்கின்றன. ஆண்மான் தன்னுடைய ஆண்மை அதிகாரத்தினால் பெண்மானைக் குடிக்கும்படி வற்புறுத்தலாம். பெண் மானும் அந்த வற்புறுத்தலுக்கு அஞ்சிக் குடிக்கலாம். அப்பொழுது அது மனத்தில் மகிழ்ச்சியோடு இனிமையாக உண்ணாதே. 'நம் காதலன் குடிக்க வில்லையே!' என்ற வருத்தத்தோடு அது குடிக்கும். அந்த வருத்த மிகுதியினால் அது குடித்தும் குடிக் காததுபோலவே அல்லவா இருக்கும்? இந்தயோசனை ஆண் மானுக்குத் தோன்றுகிறது. இரண்டு பேரும் குடிக்கவோ அதில் ஜலம் இல்லை; அது போதாது. இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது?

தான் உண்டு மிஞ்சிய நீரைக் குடிப்பதானால் பெண்மான் அதனை இனிது உண்ணும். இல்லை யெனில் உண்ணாது. அதன் காதல் உயர்வு அப்படி இருக்கிறது. இந்தப் பெரிய சிக்கலைப் போக்கு வதற்குத் திடீரென்று அதற்கு ஒரு தந்திரம் தோன்று கின்றது.

வெகு வேகமாக அந்தச் சுனையில் ஆண்மான் தன் வாயை வைது உறிஞ்சுகின்றது; வாஸ்தவத்தில் ஜலத்தைக் குடிக்கவில்லை. குடிப்பது போலப் பாசாங்கு செய்கிறது. "உஸ்" என்ற ஒலி மட்டும் கேட்கிறது. அது பெண்மானின் காதிலே படும்போது அதன் உள்ளம் குளிர்கின்றது. பாதித்தாகம் அடங்கி விடுகிறது. 'நம் காதலன் உண்டு தாகம் தீர்த்துக் கொண்டான். அவன் உண்டு மிஞ்சியதை நாம் இனிக் குடிக்கலாம்' என்று அது நினைக்கின்றது. அப்படியே மிக்க மகிழ்ச்சியோடு அது சுனையிற் சிறிதளவுள்ள நீரைக் குடித்துவிடுகின்றது. அந்நீர் எய்தாது (போதாது) என்று எண்ணிக் கலங்கிய கலைமான், பிணைமான் இனிது உண்ண வேண்டித் தன் கள்ளத்தினால் ஊச்சிய (உறிஞ்சிய) தந்திரம் பலித்து விட்டது. அது பிணைமானைத் தழுவிக் களிக்கின்றது.
* * * *

பாலை வெம்மையினிடையே நிகழும் இந்த அன்பு நிகழ்ச்சி தோழியின் உள்ளத்தைக் குளிர்விக் கின்றது. அதை அப்படியே தலைவிக்குச் சொல் கிறாள். 'உன் காதலர் திருவுள்ளத்திலே போவதாக விரும்பிய நெறி இத்தகையது' என்கிறாள். 'வெவ்விய பாலையிலே ஆண்மான் தன் பெண்மானின் துயரைத் தீர்க்கச் செய்யும் தந்திரத்தைப் பார்த்து நின் காதலன் உன்னை நினைப்பான். அந்த மானுக்குள்ள அன்பு நிலைகூடத் தன்னிடத்திலே இல்லையே என்று வருந்து வான். விரைவிலே போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்' என்ற விஷயத்தைத் தோழி சொல்வதில்லை; ஆனாலும் அந்த மான் கதை யைக் கேட்ட தலைவி அதை ஊகித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. 'வருவான்' அன்ற துணிவோடு அவனை எதிர்பார்த்து நிற்கிறாள்.

இந்தக் காட்சிகளையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது.


[எய்தாது - போதாது. பிணைமான் - பெண்மான். கலை மான் - ஆண்மான். கள்ளத்தின் - பொய்யாக. ஊச்சும் - உறிஞ்சும். சுரம் - பாலைவனம். படர்ந்த - விரும்பிய.]
----------------------------

12. நெஞ்சமும் அறிவும்


மாலை வேளை. ஒரு காட்டின் நடுவிலே பாசறை அமைந்திருக்கிறது. இரும்பை உருக்கி வார்த்தாற் போன்ற சரீரத்தையுடைய ஒரு வீரன் பாசறையைச் சுற்றிக்கொண்டு உலவி வருகிறான். போரினிடையே ஒரு நாள் ஓய்வுக்கு இடம் இருந்தது. குதிரைப் பந்தி யையும் யானைப் பந்தியையும் சுற்றிப்பார்த்து வரலா மென்று புறப்பட்டான். யானைப் படையின் அருகில் வந்தபோது அவன் கண்கள் இரண்டு சிறிய யானைகளின் மீது பாய்ந்தன.

போர்செய்து இளைப்புற்றிருந்த அந்த மதயானைகள் அப்போது ஆனந்தமாக விளையாடிக்கொண் டிருக்கின்றன. எதோ பழங்கயிறு ஒன்று கிடைத்தது. அதன் ஒரு பக்கத்தை ஒரு யானை பற்றிக் கொண்டது. மற்றொரு பக்கத்தை இரண்டாவது யானை பற்றிக்கொண்டது. இரண்டும் கயிற்றை இழுத்து விளையாடுகின்றன. கயிறோ பழையது. இந்த இரண்டு யானைகளுக்கும் இடையே அது தன் பிராணனை விட்டுக்கொண் டிருக்கிறது; அதன் ஜீவ சுவாஸம் ஒவ்வொன்றாக வெளிவருவதுபோல அதன் புரி ஒவ்வொன்றாக விட்டுக்கொண்டு வருகிறது. யானைகளின் குதூகலத்துக்கு எல்லையில்லை.

இந்த விளையாட்டிலே ஈடுபட்டுச் சிறிது நேரம் நின்றிருந்தான் அவ்வீரன்; பிறகு அப்படியே உலாவி விட்டுத் தன் கூடாரத்தின் வாயிலை அடைந்து உட் கார்ந்தான். அருகில் ஒருவரும் இல்லை. வானத்தை நிமிர்ந்து நோக்கினான். வெண்மதி தண்ணிலவைப் பால்போலச் சொரிந்துகொண்டு வானப் பரப்பை யெல்லாம் அபிஷேகம் செய்து கொண்டிருந்தது.

அந்தத் தண்ணிய திங்களின் வெள்ளொளி அவனுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அவன் மனத்தை எத்தனையோ காததூரத்திற்கு அப்பால் கொண்டுபோய் விட்டது. இயற்கையின் அழகைப் புறக்கண்களால் கண்டு அநுபவிக்க அவனால் இயலவில்லை; அவன் அகத்தே, தன் உள்ளத்தைப் பறித்த பேரழகு துளும்பும் ஓர் உருவத்தைக் காண்கிறான்.

என்ன அழகு! கூந்தல்! முதுகுப் புறத்திலே நீண்டு தாழ்ந்த கூந்தல்; தாழ்ந்து இருண்ட கூந்தல். கண்கள்! மையுண்ட கண்கள்! அந்தக் கண்களின் பொலிவிலே சோபிக்கின்ற இதழ்கள்; காதல் மயக் கத்தை உண்டாக்குவதற்குப் போதியபடி சிறிது திறந்திருக்கின்றன, போதின் நிறம்பெறும் ஈரிதழ் போலே; மலரும் பருவத்திலுள்ள போதுதான்.

இந்த இரண்டும் அவன் உள்ளத்தைப் பிணித்து விட்டன. அவனுடைய காதலி இந்த இரண்டினாலும் அவன் மிடுக்குடைய உள்ளத்தைக் குவிய வைத்துவிட்டாள்.

அவளைப் பிரிந்து இங்கே தனித்து இருக்கிறான். உடல்தான் இங்கே இருக்கிறது; உள்ளத்தை அவள் பிணித்துக்கொண்டாள். இப்போது இந்த நிலவொளி யினாலே சக்தி யூட்டப்பெற்ற நெஞ்சம் சொல்கிறது: "ஏன் இங்கே தனியாகக் கிடந்து அவஸ்தைப் படுகிறாய்? வா, போவோம்" என்று அந்தப் பற்றுள்ளம் தூண்டுகிறது. அதன் தூண்டுதலுக்கு உட்பட்டுக் காதலுகத்திலே சஞ்சாரம் செய்கிறான், அந்தக் காதலன். அவன் மனம் படும் பாடு சொல்லத் தரமன்று.

கண்கள் ஸ்வாதீனத்திற்கு வருகின்றன. தலையைக் கீழே தாழ்த்திப் பார்க்கிறான். கூடாரமும் பாசறை யும் அவன் நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுகின்றன. காதலியைப் பிரிந்து படையிற் சேர்ந்து தன் கடமையைச் செய்து ஊதியம் பெற்றுச் செல்ல வந்திருக்கிறான் அவன். வீட்டிலே சமாதானக் காலத் திலே காதலியோடு இருக்கும்போது அவன் காதலன். அரசன் படையிலே ஒரு தலைவனாய்ப் போர் செய்ய வந்திருக்கும்போதோ வீரனாக இருக்கிறான்.

காதலியிடம் சிறைப்பட்ட நெஞ்சத்தின் உபதேசம் சிறிது மறைகிறது. அப்போது அறிவு தலைக் காட்டுகிறது. "அட பைத்தியமே! நீ யார்? படைத் தலைவன் அல்லவா? பகைவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்யும் மகா வீரனல்லவா? நீ ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்காமல் மறந்துவிடலாமா? அது பேதைமையல்லவா? பாதியிலே நீ போய் விட்டால் உனக்குப் பழி வந்து நேருமே! இதை நீ நினைத்துப் பார்க்கவில்லையே? உன் காதல் வீணாகவா போகிறது? இவ்வளவு நாள் பிரிந்திருந்தாய், இன்னும் சிறிது காலம் அவசரப்படாமல் இரு" என்று தக்க காரணங்களுடன் அவனுக்கு உபதேசம் செய்கிறது.

ஒரு பக்கம் காதலியின்பால் காதல் பூண்டு சிறைப்பட்ட நெஞ்சமும், ஒரு பக்கம் பேதைமை என்றும் பழி என்றும் பழி கூறித் தன் காதல் வேகத்தை தணிக்கும் அறிவும் மாறி மாறிப் போராட, அவன் ஒன்றும் தோன்றாமல் மயங்குகிறான்; தியங்குகிறான்; உருகுகிறான்; மறுகுகிறான். உடம்பு மெலிவது போலத் தோற்றுகிறது.

இந்தப் போராட்டத்தில் தான் மாலையிற் கண்ட யானை விளையாட்டு அவனுடைய ஞாபகத்திற்கு வருகிறது. களிறுகள் இரண்டு தம்முன் மாறுமாறாகப் பற்றிய தேய்புரிப் பழங் கயிற்றை நினைத்துப் பார்க்கிறான்; "நானும் அப்படித்தான் இருக்கிறேன். என் உயிர்க் காதலியின்பால் வைத்த நெஞ்சம் ஒரு பக்கம் இழுக்கிறது; அறிவு மற்றொரு பக்கம் இழுக்கிறது. நடுவில் அகப்பட்டுக்கொண்டு என் உடம்பு உருகு கிறது" என்கிறான்.

இந்தச் சித்திரத்தை அந்த வீரக் காதலனது கூற்றாகப் பின்கண்ட சங்கச் செய்யுள் காட்டுகிறது.


[முதுகிலே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், மலரும் பருவத்திலுள்ள மலரின் நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகள் விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளாய் நம் உள்ளத்தைத் தன்பாற் கட்டுப் படுத்தியவளிடத்தே, 'துன்பந் தீர்வோம்; போவோம்' என்று நெஞ்சம் சொல்லும். மேற்கொண்ட காரியத்தை நிறைவேற்றாமல் துன்பம் உண்டாக்குதல் அறியாமையோடு பழியும் தரும் என்று உறுதியை எடுத்துக்காட்டி அறிவானது, 'சிறிது காலம் அதிக அவசரப்படாமல் இரு' என்று சொல்லும். இதற் கிடையே, என் புண்பட்ட உடம்பு, விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய ஆண் யானைகள் எதிரெதிரே பற்றி இழுக்கும் தேய்ந்த புரிகளையுடைய பழைய கயிற்றைப்போல அழிவதாகுமோ!]
------------------------

13. அவர் போன வழி


1

கிழவி: அந்தப் பாலை நிலங்களிலெல்லாம் எயினர்கள் வாழ்கிறார்கள்; இருந்து வாழவில்லை; அலைந்து வாழ்கிறார்கள்.

தலைவி: பாட்டி, அவர்களுக்கு என்ன வேலை? எப்படி ஜீவிக்கிறார்கள்?

கிழவி: மற்றவர்கள் மரணத்தை அடைகிறார் கள்; அவர்கள் உயிர் வாழ்கிறார்கள்.

தலைவி: இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

கிழவி: அவர்கள் மரணமடைவதனால் அவர்கள் கொண்டுபோகும் பொருள்களை வெளவிக்கொண்டு இந்த வேடர்கள் ஜீவிக்கிறார்கள்.

தலைவி: 'அவர்கள்' யார்?

கிழவி: அவர்களா? தூர தேசத்துக்குப்போய்ப் பணம் சம்பாதிக்கலாமென்று போகிறவர்களும், சம்பாதித்த பணத்தோடு வருகிறவர்களும், வியாபாரம் செய்யப் போகிறவர்களுமாக எவ்வளவோ பேர் பாலை நிலத்தில் போகிறார்கள், வருகிறார்கள். அவர்கள் இந்த எயினருக்குப் பயந்து கூட்டமாகப் போவார்கள். தனி மனிதனாகப் போனால் அவன் கொடும் பிரயாணத்துக்குத் தயாராக இருக்கவேண்டி யதுதான்!

தலைவி: அப்படியானால் அந்தக் கொடிய மனிதர்கள் கொலை செய்வார்களென்றா சொல்லுகிறீர்கள்!

கிழவி: ம், கொலை செய்வதிலேயே அவர் களுக்கு இன்பம். போகிறவர்களிடத்தில் பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும், அவர் தலையைப் போக்கி முண்டம் கூத்தாடுவதைப் பார்ப்பதெலே அவர்களுக்குத் திருப்தியாம்.

தலைவி: ஐயோ! கேட்கும் போதே குலை நடுங்குகிறதே!

கிழவி: தங்க நிழலும் தாகத்திற்கு ஜலமும் கிடைக்காத வறண்ட பாலை வனத்திலே மறலியின் தூதர்களாக அவர்கள் விளங்கிறார்கள்.

தலைவி: பாட்டி, போதும், இந்தப் பயங்கர வருணனை.

கிழவி: வறண்ட பாலைவனமென்றால் ஒன்றுமே இல்லாத நிலப் பரப்பு என்று நினைத்துவிடாதே. அங்கங்கே பாறைகளில் சிறு சிறு சுனைகள் எறும்பு வளையைப்போல இருக்குமாம்.

தலைவி: சுனையென்றால் நிறைய நீர் இருக்க வேணுமே?

கிழவி: நாசமாய்ப் போச்சு! சின்னச் சுனையிலே எவ்வளவு தண்ணீர் இருக்கப் போகிறது? வெயில் தகிக்கும் தகிப்பிலே, இருக்கிற தண்ணீரும் வற்றிப் போய்விடுமே.

தலைவி: அப்படியானால் அந்தப் பாறைகள் இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்?

கிழவி: அதைத்தானே நான் சொல்லவந்தேன்? எறும்பு வளைகளைப் போலக் குறுகிய பல சுனைகளை யுடைய அந்தப் பாறை உலைக்கல்லைப் போலக் கொதித்துக் கிடக்கும். அந்தப் பாறையிலே முன்னே சொன்னேனே, அந்த எயினர்கள் ஏறித் தங்கள் யுதங்களைச் சரிப்படுத்திக் கொள்வார்கள்.

தலைவி: உலைக்கல்லிலே யுதங்களைச் செப்பஞ் செய்துகொள்கிறார்கள் இந்த ஊரில். உலைக்கல்லைப் போன்ற பாறையில் அவர்கள் சரிசெய்து கொள் வார்கள் போலும்!

கிழவி: ஆமாம். வளைந்த வில்லையுடைய எயினர்களின் அம்பு எவ்வளவோ கொலைகளைச் செய்து மழுங்கிப் போகுமல்லவா? அப்போது அந்தப் பாறைதான் சாணைக்கல்லாக உபயோகப் படுகிறது. தங்கள் அம்புகளைப் பாறையிலே தீட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் செய்யும் ¦கொலைத் தொழி லுக்கு அந்தப் பாறை உதவி செய்கிறது.

தலைவி: ஐயோ! அதைச் சொல்ல வேண்டாமே என் தலை கிறு கிறுக்கிறதே!

2

தலைவி: (தனக்குள்) ஐயோ! என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே! கணமேனும் பிரி யாமல் இருந்த எங்களை விதியும் சம்பிரதாயமும் கடமையும் பிரித்து விட்டனவே. இந்தப் பாழும் பணம் இல்லாவிட்டால் என்ன? என் அருமைக் காதலர் அதைத் தேடிக்கொண்டு போயிருக்கிறாரே! பாலைவனத்தின் வழியாகப் போக வேண்டுமாமே!

தோழி: (தானே பேசிக் கொள்கிறாள், தலைவியின் காதிற் படும்படி.) உலகத்தில் புருஷர்களாகப் பிறந்தவர்கள் முயற்சியோடு இருக்கவேண்டும். தாம் ஈட்டிய பொருளை வைத்துக்கொண்டு இல்லறவாழ்க்கை நடத்தவேண்டும்; அதுதான் இன்பவாழ்க்கை. புருஷர் கள் தங்கள் கடமையை முன்னிட்டுக் காதலியரைப் பிரிவது வழக்கந்தான்.

தலைவி: (தனக்குள்) இவள் என்ன உளறுகிறாள்! புருஷர்களாம், வழக்கமாம்! (கவனிக்கிறாள்.)

தோழி: (தலைவியின் காதிற் படும்படி) காதலர் பிரிந்ததன் நியாயத்தை உணராமல் எப்போதும் அவரை நினைத்து ஏங்கிக்கொண் டிருப்பது அழகன்று; அறிவும் அன்று.

தலைவி: (தனக்குள்) அழகையும் அறிவையும் கண்டவள் பேசுகிறதைப் பார்! நான் எதை நினைத்து வருந்துகிறேன் என்பதைக் கொஞ்சமாவது இந்த ஜடம் யோசித்துப் பார்த்ததா? அவர் பிரிவா என்னை வருத்துகிறது? அவர் போன வழி, அந்தக் கொடுமை யான பாலை நிலம் - அதை நினைத்தல்லவா என் உள்ளம் குமுறுகிறது? அந்தப் பாட்டி அன்றைக்குச் சொன்னாளே! (வெளிப்படையாக) எறும்பு வளை போன்ற குறிய பல சுனைகளையுடைய உலைக்கல்லைப் போன்ற பாறையின்மேல் ஏறி, வளைந்த வில்லை யுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும் கவர்த்த வழிகளையுடையது அவர் போனவழி என்று சொல்லுகிறாற்கள். கவலை கொள்பவர்களைப் போலப் பிரமாதமாக ஆரவாரிக்கும் இந்த ஊர், இதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் வேறு என்ன என் னவோ விஷயங்களைச் சொல்லிப் புத்தி கூற வருகிறது! ஆகா! என்ன அறிவு!


[எறும்பி - எறும்பு. அளையின் - வளையைப்போல. குறும் பல் சுனைய - குறுகிய பல சுனைகளை உடைய. கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய வேடர். பகழி மாய்க்கும் - அம்பைத் தீட்டும். கவலைத்து - பிணங்கிய வழி களை உடையது. என்ப - என்று சொல்வார்கள். ஆறு - வழி. அவலம் - வருத்தம். நொதுமல் - அயலான வார்த்தைகளை. கழறும் - இடித்துரைக்கும். அழங்கல் - ஆரவாரம். ஊரென்றது இங்கே தோழியை.]
---------------

14. அலமரும் கண்


ஒவ்வொரு நாளும் பகற்பொழுதைக் கழிப் பதற்கு அவள் செய்யும் தந்திரங்கள் அளவிடற் கரியன. அவளுடைய உயிர்த்தோழி கதை சொல்லி யும் பாட்டு இசைத்தும் அறங்கூறியும் அவளுக்கு றுதல் உண்டாக்கி வந்தாள். தன்னுடைய காதலனது பிரிவாகிய வெந்தீயிலே அந்த மடமங்கை அவன் வரவு குறித்துத் தவம் புரிந்து வந்தாள் என்று தான் சொல்லவேண்டும். தவமுனிவர்கள் செய்வதை அவளுந்தான் செய்கிறாள். எவ்வளவோ நாட்கள் அவள் சோறின்றிப் பட்டினி கிடக்கிறாள். நல் லுடையும் மணமலரும் பொன்னணியும் அவள் உள்ளத்தைக் கவரவில்லை. இனி எந்நாளும் பிரிவின்றி வாழும் பெருவரத்தை வேண்டிக் கடுந்தவம் முயன்று காத்திருக்கிறாள் அவள்.

ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒரு கண்டம். மாலைக்காலம் வந்தால் அவளுடைய மனத்திண்மை எங்கேயோ ஓடிவிடும். தண்ணிய தென்றல் வீசும் மாலைக்காலத்தில் தன் காதலனோடு ஒருங்கிருந்து இன்புறும் நிலையில் அவள் இருந்தால் அப்போது அந்த மாலை அமுதமயமாக இருக்கும். இப்பொழுதோ தன் நாயகன் பிரிவை நன்கு எடுத்துக் காட்டித் துன்புறுத்தும் யமனாகவே அதைக் கருதுகிறாள்.

செங்கதிர்ச் செல்வனாகிய சூரியன் கோபம் ஆறிக் கதிர்களைச் சுருக்கிக்கொண்டு அஸ்தமன கிரிக்குள் ஓய்வு பெறப் போகிறான். அவனுடைய வான யாத்திரையோடு உலகமுழுதும் யாத்திரை செய்தது; அவன் வானத்தை அளந்த ஒவ்வொரு கணமும் உலகிலுள்ள உயிர்கள் எழுச்சி பெற்று உலவின. அவன் இப்பொழுது சினங்கரந்து சென்றான்; உலகமும் ஓய்வு பெற்று இரவுக் கன்னி யின் அணைப்பிலே சாந்தி பெறப் போகிறது.

ஆனால், அவளோ--? இனிமேல்தான் அவளுடைய உயிருக்கும் தனிமைக்கும் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது! ஐயோ பாவம்! மாலை வந்ததென்றால் மனம் நடுங்கி உடல் வெயர்த்துக் குலைகுலைகிறாள்.

அவன் வந்துவிடுவானென்ற நினைவு அவள் உள்ளத்தில் பசுமையை வைத்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக அவள் பட்ட இடும்பை பெரிதல்ல. சில நாட்களாக அவளிடத்தில் தோற்றும் தளர்ச்சி அச்சத்தை உண்டாக்குகிறது. ஏன்?

செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த பொழுதுகள் பலவற்றை அவள் கழித்துவிட்டாள். இன்று அந்தப் பொழுது அவள் உயிரை வாட்டத் தனியே வரவில்லை. படப்பலத்துடன் வந்திருக்கிறது. அவள் வைத்து வளர்க்கிறாளே, அந்த முல்லைக் கொடியிலிருந்துதான் அந்தப் படை புறப்படுகிறது. அருமை செய்து பாதுகாத்த அந்த முல்லைக்கொடியை அவள் இவ்வளவு நாட்களாகக் கவனிக்கவே இல்லை; இன்று அது தன்னைக் கவனிக்கும்படி செய்துவிட்டது. கம்மென்று வீசும் முல்லைப்பூவின் நறுமணம் அவளை ஒரு கணம் ஆட்கொண்டது. அப்பொழுதுதான் அவளுக்குத் தான் வளர்த்த அப்பூங்கொடியின் நினைவு நன்றாக வந்தது. பார்த்தாள்; முல்லை பூத்து முறுவலிக்கிறது. பைங்கொடி முல்லையின் மணம் எங்கும் கமழ்கிறது. அந்த மணத்தை நுகர வண்டினங்கள் வந்து சுழல்கின்றன; முரல்கின்றன.

தான் வலர்த்த முல்லைக்கொடி என்னும் பேரழகி பூத்துப் பொலிந்து நிற்கும் பேரழகை அவள் கண் பார்த்தது. அந்த அழகிலே அவள் மகிழ்ச்சியைக் காணவில்லை. மலர்ந்த மலர்களிலே மொய்த்துக் காதலிசை பாடிக் கொஞ்சும் வண்டின் செயலிலே அவள் இயற்கையின் மோகன கீதத்தை உணரவில்லை. தன் தனிமையைக் குத்திக் காட்டும் அடையாளமாகத் தான் அந்தக் காட்சி அவளுக்குப் பட்டது.

இது மட்டுமா? தன் காதலன் பிரியும்போது சொல்லிச் சென்ற வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறாள்; "ஆம், இப்போதுதான் வருவதாகச் சொன்னார். கார்காலத்திலே வந்துவிடுவே னென்று ஆணையிட்டுச் சொன்னாரே; இன்னும் வரவில்லையே! பைங்கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர இதோ கார்காலம் வந்துவிட்டதே!" என்று எண்ணு கிறாள். இப்பொழுதுதானே வர்ஷ ருது தலை காட்டு கிறது? அதற்குள் அவளுக்கு அவசரம். "வரமாட்டாரோ...!"--அவள் மனம் கொந்தளித்துக் குமுறி நிலைகலங்கி மருண்டு தவிக்கிறது.

மாலையின் தண்மையும் முல்லைக்கொடு பூத்துப் பொலியும் காட்சியும் வெள்ளிய முல்லை மலரின் நறுமணமும் வண்டினது இனிய முரற்சியும் அவளுக்கு இன்பத்தை உண்டாக்கவில்லை. அண்ணாந்து பார்க்கிறாள். வானத்தில் மேகங்கள் சுழன்று திரிகின்றன. வான முழுதுமே அவளுக்குச் சுழல்கின்றது.

"முல்லை மலர் பூத்தது பொய்யோ? அது பொய்யானால் மேகங்கள் வானத்தில் உலவுகின்றனவே, அதுகூடவா பொய்? நிச்சயமாகக் கார்பருவம் வந்து விட்டது. அவர் வரவில்லையே! சொன்ன சொல் பொய்த்துவிடுவாரோ?"--இப்படி எழுந்த கவலைத் திரைகளின் துளிகளைப்போல அவள் கண்கள் களகள வென்று நீரை உதிர்க்கின்றன. அந்த முல்லையையும் வண்டையும் வானத்தையும் பார்த்துப் பார்த்து நீர் நிறைந்த அவள் கண்கள் அலமருகின்றன; நிலையில்லாமற் கலங்குகின்றன. அந்தப் பார்வையில் தான் எத்தனை ஏக்கம்!


[செங்கதிர்ச் செல்வன் - சூரியன். சினம் - வெம்மை. கரந்த - மறைத்ட. போழ்தினால் - பொழுதில். இமிர - ஒலிக்க. காரோடு - மேகத்தோடு. அலமரும் - சுழலும். கார்வானம் - கார்காலத்து காசம்; கரிய வானமும் ஆம். காண்டொறும் - காணுந்தோறும்.]
---------------------

15. அவள் நிலை


நூல் நவின்ற பாக!

இதென்ன புதுமையாக இருக்கிறது? எஜமானன் வண்டிக்காரனை ஸ்தோத்திரம் செய்ய வாவது! மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிமை யைப்போல உழைக்கும் சாரதிக்கு என்ன பெருமை யப்பா! - இப்படி இந்தக் காலத்தில் நினைப்பார்கள்.

ஆனால் இந்த எஜமானன் அப்படி நினைப்பவன் அல்ல. எங்கெங்கே அறிவுத் திறமை இருக்கிறதோ, அங்கங்கே அதற்கு ஏற்ற மதிப்பை அளித்துப் பாராட்டும் உள்ளம் இந்த எஜமானனுக்கு, தலைவனுக்கு, உண்டு. தேர்ப்பாகனுக்கு அவ்வளவு பெருமை தரவேண்டுவதும் நியாயந்தான்.

'நூல்களைப் பயின்ற அறிவுடைய பாகனே' என்று தலைவன் சாரதியை விளிப்பது உயர்வு நவிற்சியல்ல. அந்தப் பாகனுக்கு பலவகை நூல்கள் தெரியும். குதிரைகளின் உள்ளந் தெரிந்து பாதுகாத்து அவை ஏவாமலே ஓடும்படி செய்யும் திறமை அவனுக்கு இருக்கிறது. அசுவ சாஸ்திரத்தை அவன் முற்றக் கற்றிருக்கிறான். தான் தேரை ஓட்டிச் செல்லும் இடங்களின் நிலையும், அவற்றிலே எவ்வெவ்வாறு தேரை ஓட்டவேண்டுமென்ற அறிவும் அவனுக்கு இருக்கின்றன. பிரயாணிகளிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகளும் நேரிலே கண்டு அநுபவித்த செய்திகளும், நில இயல்பைப் பற்றிய நூல்களினால் உணர்ந்த செய்திகளும் அவனை ஒரு பூகோள சாஸ்திர அறிஞனாக ஆக்கியிருக்கின்றன. அதனால்தான் அவன் வெறும் லகான் பிடிக்கும் குதிரைவண்டிக்காரனாக இல்லாமல், நூல் நவின்ற பாகனாக விளங்குகிறான்.

இந்த நூல்கள் கிடக்கட்டும்; மனிதர்களின் மன இயல்பையும் அவன் நன்கு தேர்ந்திருக்கிறான். தசரதருடைய தேர்ப்பாகனாகிய சுமந்திரன் சிறந்த மந்திரி யென்பது புராணப் பிரசித்தம். தேர்ப்பாகன் மந்திரியாக இருந்தானென்று சொல்வதைவிட ஒரு மந்திருயே அரசனுக்குச் சாரத்தியம் செய்தானென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இங்கே, தலைவன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யும்போது அவனுடைய உள்ளம் உவக்கும்படியாகக் கதைகளையும் யோசலைகளையும் சொல்லி ஊக்கம் ஊட்டும் திறமை இந்தத் தேர்ப்பாகனிடம் இருக்கிறது. தலைவனுடைய உணர்ச்சியும் வேகமும் எந்த அளவில் இருக்கின்றனவோ அந்த அளவை அறிந்து தேரைச் செலுத்துவதில் பாகன் வல்லவன். அவனை நூல் நவின்ற பாகன் என்று, சொந்த அநுபவத்தால் உணர்ந்துகொண்ட தலைவன் சொல்வது எப்படி முகஸ்துதியாகும்?

அவனைப் பார்த்துத் தலைவன் என்ன சொல் கிறான்?

தேர் நொவ்விதாச் சென்றீக!

'நின் தேர் வேகமாகப் போகட்டும்' என்று சொல்கிறான். சொல்கிற மாதிரிதான் எவ்வளவு கொளரவமாக இருக்கிறது? 'வேகமாக ஓட்டு' என்று கட்டளையிடவில்லை. 'குதிரைகளை முடுக்கு' என்று சொல்லியிருக்கலாம். அவை உயிருள்ள ஜீவன்களல்லவா? அவற்றை அளவுக்குமேல் முடுக்குவது தவறு. அன்றியும் அந்த குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாப்பவன் பாகன். அவற்றைப் பதமறிந்து ஓட்டும் உரிமை அவனுக்குத்தான் உரியது. அதை விரட்டும்படி சொல்லும் உரிமை தலைவனுக்கு இல்லை; இல்லையென்று தலைவன் நினைத்தான். ஆனாலும் அவனுக்குத் தேர் வேகமாகப் போய்க் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுக்கு மிஞ்சி இருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன் தோழனுக்குச் சொல்வது போலே சொல்கிறான்: 'அப்பா, கொஞ்சம் தேர் வேகமாகப் போகட்டும்.'

எதற்காக அவ்வளவு வேகம்? பாகன் வெறும் வேலைக்காரனாக இருந்தால், "வேகமாக ஓட்டு" என்று கட்டளையிட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிடலாம். நாம் வண்டிக்காரனை முடுக்க, அந்த முடுக்குதலுக்குப் பயந்து வண்டிக்காரன் குதிரைகளை முடுக்க அவை அவன் சவுக்குக்கும் தாற்றுக்கோலுக்கும் அஞ்சி உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடுவது நம்முடைய வண்டிசி சவாரியின் லஷணம்.

பாகனுக்குத் தேர் வேகமாகப் போகவேண்டிய அவசியத்தை வெளிப் படுத்துவதைத் தன் கடமையாக நினைக்கிறான் தலைவன். அதைச் சொன்னால் தான் தலைவனுடைய மனோவேகம் பாகனுக்குப் புலப்படும். சொல்ல ஆரம்பிக்கிறான்.

தேன் நவின்ற கானம்:

இதோ பார்! இந்தக்காடு முழுவதும் இப்போது எப்படி ஆகிவிட்டது! நாம் முன்னாலே வந்தபோது வெறிச்சென்று இருந்த மரங்களெல்லாம் கார்காலம் வந்தவுடன் பருவமடைந்த கன்னிகை போலத் தளித்துத் தழைத்து மலர்ந்து நிற்கின்றன. வண்டு கள் மலர்களில் மொய்த்துத் தேன் உண்டு மகிழ் கின்றன. கண்ணுக்கு நிறைந்த காட்சியும் காதுக்கு இனிய ரீங்காரமும் உள்ளதாக விளங்குகின்றதி இந்தக் கானம்.

கானத்து எழில்:

அந்தக் கானகத்துக்கு முழு அழகையும் தந்திருக் கிறது கார்காலம். இந்த எழிலை நான் பார்க்கிறேன்; நீயும் பார்க்கிறாய். நான் சென்ற காரியம் நிறைவேறியமையால், நல்ல வெற்றியைப் பெற்றுத் திரும்புகிறேன். வெற்றி மிகுதியினால் நிறைந்த மகிழ்ச்சியிலே என் உள்ளம் பூரித்து நிற்பது போல் இந்தக் காடு நிற்கிறது. ஆனால்......?

எழில் நோக்கி:

இந்த அழகைப் பார்த்து நிற்கும் வேறு ஓர் உயிரை என் மனம் இப்பொழுது நினைக்கிறது. அந்த உயிர் என் உயிர் போன்றது. நான் அவ்வுயிருக்கு உயிர் போன்றவன். என் காதலியைத்தான் சொல்கிறேன். அவள் இந்த எழிலை நோக்கி நிற்பாள். நான் மீண்டு வருவேனென்று குறிப்பிட்டுச் சென்ற காலம் இதுதான். இந்தக் காலத்தை எதிர்நோக்கி நின்ற அவள், தேன் நவின்ற (வண்டுகள் பயின்ற) கானத்து எழில் நோக்கி, நாம் வந்துவிடுவோமென்ற துணிவு கொள்வாள். கானத்து எழிலினூடே அவள் இயற்கைத் தேவியின் பேரழகைப் பார்க்கமாட்டாள். நிலமகளின் வளத்தை நினைக்கமாட்டாள். என்னுடைய காரியம் நிறைவேறியிருக்கும் என்பதையும் நான் மீண்டு வந்துவிடுவேன் என்பதையுமே சிந்தித்து நிற்பாள்.

நாந்தான் அவளுக்கு உயிர். நான் பிரிந்துவந்து விட்டதனால் அவளுடைய உயிரும் பிரிந்து வந்திருக்க வேண்டும். அப்படி அவ்வுயிர் பிரிந்து போகாமல் அவள் பாதுகாக்கிறாள். எப்படி? தான் நவின்ற கற்புத்தாள் வீழ்த்து:

அவள் நெடுங்காலமாகப் பயின்று வந்திருக்கிறாள். மகளிர் இலக்கணம் இன்னதென்பதைத் தாய் தந்தையர் கற்பித்ததனாலும் நூல்களைப் பயின்றதனாலும் தன்னுடைய கூரிய அறிவின் திறத்தினாலும் தெரிந்துகொண்டிருக்கிறாள். கற்புத்திறனெல்லாம் முற்றக் கற்ற காரிகை அவள். தலைவன் இல்லற வாழ்வு நிறைவேற வேண்டியும், பொருள் ஈட்ட வேண்டியும் தலைவியைப் பிரிந்து செல்வது இயல்பு. மேலே இன்ப வாழ்வு பெருகுவதற்குரிய பொரு ளும் அவ்வாழ்வு மிக்க இன்பமுடையதாகும் வாய்ப்பும் அந்தப் பிரிவினால் உண்டாகும். தலைவன் அவ்வாறு பிரியுங்கால் அப்பிரிவைப் பொறுத்துத் துன்பத்தை யெல்லாம் அடக்கி ற்றியிருத்தல்தான் உண்மையான கற்பு நெறி. அதை என் காதலி நன்றாகப் பயின்று தேர்ந்தவள். அப்படி உணர்ந்த கற்பாகிய தாளைச் செறித்து உடம்பாகிய வீட்டினின் றும் உயிரைப் போகவிடாமல் நிறுத்தி வைத்திருப் பாள். அதுவும் ஒருவகைத் தவம். இந்தக் கானம் எழில் நிரம்பி மலர் குலுங்கத் தோன்றும் தோற்றம் அவளுடைய தவத்தின் நிறைவுக்கு அறிகுறி. கவே, அவள் நான் வருவதை எதிர் நோக்கி நிற்பாள். வண்டுகள் ஒலிக்கும் ஒலியினூடே என் தேர் மணியின் ஒலியையும் கானத்தின் எழிலூடே இத்தேரின் எழிலையும் காண வேண்டி நிற்பாள். எவ்வாறு நிற்பாள் தெரியுமா?

கவுள்மிசைக் கை ஊன்றி நிற்பாள்:

தவம் புரிவவர்களுக்கு நெடுங்காலம் தவம்புரிந்த எய்ப்புத் தோன்றாது; அது நிறைவேறும்போது தான் மிகுதியான களைப்பு உண்டாகும். பல காவதம் நடந்தவனுக்குக் குறித்த இடம் அணுகியபோதுதான் கால் வலி தெரியும். இவ்வளவு காலம் கற்புத்தாள் வீழ்த்துப் பொறுத்து நின்றவளுக்குக் கார்காலம் வந்துவிட்டதென்று அறிந்தவுடன் அதிகமான சோர்வு உண்டாகும். கானத்தை நோக்கி, அதன் எழிலை நோக்கி நிற்பாள். தன் கன்னத்தில் கையை வைத்து நான் வரும் திக்கை நோக்கி நிற்பாள்.

நிற்பாள் நிலை:

அந்தக் காட்சியை, அவள் நிற்கும் நிலையை, நினைக்கையிலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. இவ் வளவு காலம் தன் உயிரைப் போகாமல் தாங்கி, இப்போது, வாடிய கானம் எழில்பெற்று விளங்குவதைப் பார்த்து, அதைப்போலத் தானும் இந்த எ ப பெற்று விளங்கும் செவ்வியை எதிர்நோக்கி, தன் கவுள்மிசைக் கை ஊன்றி ஈற்கும் அந்த அழகிய நிலையிலே அவளைப் பார்க்கவேண்டும் என்று என் நிலை உணர்கம் யாம்:

அந்த நிலையைப் போய் நாம் பார்ப்போம். நீயும் பார்த்து வியக்கலாம். ஆதலின், நூல் நவின்ற பாக, தேர் வேகமாகப் போகட்டும்.

இவ்வாறு சொல்லி முடிக்கிறான் தலைவன்.
கவுள்மிசைக் கையூன்றி நிற்பாளாகிய அவள்
நிலையைப் படம் காட்டுகிறது.


[நவின்ற - பயின்ற. நொவ்விதா - விரைவாக. சென் றீக - செல்க. தேன் - வண்டு. தாழ் - தாழ்ப்பாள். கவுள் - கன்னம்.]
-----------------

16. பெருந்தகு நிலை


நாலு திசையிலும் ஒரே பசுமை; மழைக் காலத்தில் காடு முழுவதும்தளிரும் பூவும் குலுங்குகின்றன. அடர்த்தியான அந்தக் காட்டினிடையே மெல்லச் செல்கிறது தேர். தேருக்குள்ளே ஆணில் அழகன், வீரர்க்குள் வீரன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றியடைந்த மிடுக்கை அவனுடைய எடுப்பான பார்வை எடுத்துரைக்கிறது. இயற்கை யெழிலை இறைவன் வஞ்சகமின்றி வாரி இறைத்திருக்கும் வனத்தைப் பாரக்கிறான். எத்தனை அழகு ததும்பு கிறது!

தேருக்குப் பின்னே ஒரு கூட்டம் வருகிறது. வில்லும் கையுமாக வரும் வீரர் கூட்டம் அது. னால் அவர்கள் வில்லில் நாணை ஏற்றவில்லை. சிரிப்பும் பாட்டுமாக வருகிறார்கள் அவர்கள்.

தேரில் இருப்பவன் திடீரென்று தன் சாரதியைப் பார்த்து, "வலவ, குதிரையை வேகமாக ஓட்டு. எவ் வளவு வேகமாக ஓட்ட முடியுமோ அவ்வளவு வேக மாக ஓட்டவேண்டும். உன் கைத்திறமையை இன்று தான் பார்க்கப் போகிறேன்" என்று கட்டளை யிடுகிறான்.

தேர்ப்பாகனுக்கு இந்த அவசரத்துக்குக் காரணம் விளங்கவில்லை. போர் முடிந்துவிட்டது. படைத் தலைவனாகிய அந்த வீரன் தன் படையாளருடைய ஊருக்கு மீண்டு வருகிறான். இப்பொழுது எதற்கு அவசரம்? போகும்போதுதான் அரசன் ஆணையை
ஏற்றுத் தலைதெறிக்க ஓட வேண்டியிருந்தது.

'இது வரையில் நிதானமாகத்தானே வந்தோம்? இவரும் காட்டின் அழகைப் பார்த்து வந்தாரே. இதற்குள் திடீரென்று இப்படி உத்தரவிடுகிறாரே' என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான்.

"குதிரையின் வேகத்தை இன்று அளந்து காட்ட வேண்டும். இதுவரையில் நீ தாற்றுக்கோலை உப யோகித்ததே இல்லை. அது இங்கே துருப்பிடித்துக் கிடக்கிறது. அதைக்கூட இன்று நீ உபயோகிக்கலாம். எப்படியாவது விரைவில் ஊர் போய்ச் சேர வேண்டும்."

பாகனுக்கு வியப்பின்மேல் வியப்பு உண்டாயிற்று.

"பின்னால் வருகிறார்களே, அவர்கள்.....?" என்று கேள்வித் தொனியோடு நிறுத்தினான்.

"அவர்கள் மெல்ல வரட்டும். அவர்கள் போரில் மிகவும் சிரமப்பட்டு நம் மன்னருக்கு வெற்றியை உண்டாக்கினார்கள். அதோடு நெடுந்தூரம் வேகமாக நடந்து வந்திருக்கிறார்கள். அவ்வீரர்கள் வேண்டிய இடத்தில் தங்கி, கச்சையையும் கவசத்திஅயும் கழற்றி வைத்துவிட்டு இளைப்பாறட்டும். இஷ்டம்போல் இருந்துவிட்டு மெல்ல மெல்ல வரலாம். அவசரம் இல்லை. நான் விரைவிலே போகவேண்டும். சவுக்கை எடுத்துக் கொள்."

பாகனுக்கு மயக்கம் தெளியவில்லை. அந்த வீரர்களோடு ஒன்றாகப் புறப்பட்ட படைத்தலைவன் எதற்காக முன்னால் போகவேண்டுமென்று முடுக்குகிறான்? தாற்றுக் குச்சியைக்கூட உபயோகிக்கும்படி சொல்லுகிறானே! குதிரைகள் என்ன சாதாரணமானவையா!

வீரர் தலைவன் பாகனது உள்ளத்தை உணர்ந்து கொண்டான். குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாக்கும் பாகனை, அதுகாறும் தீண்டாத முட்கோலைத் தீண்டி ஓட்டும்படி சொல்லலாமா? சொன்னது தவறுதான். பாகனுக்குத் தன் மன வேகத்தை எப்படி விளக்குவது?

"அங்கே பார்!" என்று தலைவன் சுட்டிக் காட்டினான்.

அதுவரையில் தலைவன் கண்கள் அந்த இடத்திலே பதிந்திருந்தன என்பதைப் பாகன் இப்போது தான் உணர்ந்தான்.

பாகனும் பார்த்தான். அவனுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைவனது உள்ளம் அங்கில்லை என்பதை அறிந்தான்.

அங்கே கண்ட காட்சிதான் என்ன?

மழை பெய்து ஓடிய ஓடையில் மணல் இன்னும் புலரவில்லை. அங்கே காட்டுக் கோழிகள் இரண்டு அங்கும் இங்கும் உலவுகின்றன. ஆண்கோழி 'கொறக் கொறக்'கென்று சத்தமிடுகிறது. உருக்கின நெய்யிலே பாலைத் தெளித்தது போலச் சொட சொடவென்றிருக்கிறது அதன் குரல். பல புள்ளிகளையுடைய அந்த ஆண்கோழி அழகாக இருக்கிறது. ஈரமணலைக் கிண்டி ஒரு புழுவைக் கொத்துகிறது. கொத்தின சந்தோஷமோ, பேடைக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமோ, தன் பின்னாலே நின்ற பேடையைக் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிறது. அந்தப்பெருந்தகு நிலையில் கண்ணைச் சிக்கவிட்ட தலைவன் மனம் அந்தக் காட்டைக் கிடந்துபோய் வீட்டின் தலைவாசலிலே நிற்கிறது.

வீரர் தலைவன் அரசன் ஆணையைச் சிரமேல் தாங்கி உயிரினும் வேறு அல்லாத தன் காதலியைப் பிரிந்து போருக்கு வந்தான். போர் முடிந்தது. அந்தக் கான வாரணம் உணவை ஈட்டிய திருப்தி யோடு பேடைமுன் நிற்பதுபோலத் தானும் வெற்றி ஏந்திய தோளோடு காதலியின்முன் நிற்க விரைவது என்ன ச்சரியம்!

இனி, பாகன் தாமதிபானா? குதிரையைத் தட்டிவிட்டான்.


[விரைப்பரி வருந்திய - விரைந்த நடையால் களைப் புற்ற. இளையர் - வீரர். அரைச் செறி கச்சை யாப்பு - இடையிலே செறிந்த கச்சையின் கட்டை. அழித்து - அவிழ்த்து. அசைஇ - இளைப்பாறி. வைமுள் - கூர்மையான முட்கோல். ஏமதி - ஓட்டுவாயாக. வலவ - பாகனே. உதுக்காண் - அதோ பார். விதிர்த்தன்ன - தெளித்தாற் போல. கானவாரணம் - காட்டுக்கோழி. பெயனீர் - மழைத் தண்ணீர். புலரா - உலராத. ஈர்மணல் - ஈரமான மணல். மாட்டி - கொன்று.]
----------------

17. ஆண் சிங்கம்


போர்க்களம் என்றால் அது சாமான்யமான போர்க்கலமா? இருசாரிலும் படைவீரரும் குதிரைப் படையும் யானைப்படையும் தேர்ப்படையும் கடுமையாகப் போர் புரிந்தனர். நிலமகள் முதுகு உளுக்கும் படியான போர். தேர்ந்தெடுத்த வீரர் பெருங் கூட்டம் தினவுபெற்ற தோள்களின் வலிமையை உலகு உள்ளளவும் நிலைநிறுத்த முனைந்து வந்திருக்கிறது. படைகளின் பெருமை அவற்றிலுள்ள யானையின் மிகுதியினாலேயே புலப்படுகிறது. யானையை யுடைய பெரும்படையைச் சிதைக்கவேண்டும் என்று ஒவ்வொரு வீரனும் உறுதி பூண்டு முன் நிற்கிறான். யானை அம்பினாலே சாயாது; அடியினாலே மடியாது. யானைக்கு ஏற்ற படை வேல்தான்.

போர்க்களத்தில் பல யானைகளைத் தன் கை வேலால் குத்தி மடிப்பதே வீரத்துள் வீரம் என்று கருதும் தமிழர் வழி வந்தோர் அப்படை வீரர்கள். அப்படி யானைகளை வீழ்த்திவிட்டுத் தாம் இறந்தாலும் பொன்றாப் புகழொடு மாயலாம் என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது. யானையெறிந்த வீரர்களைப் புலவர்கள் பாடுவார்கள்; அவர்கள் இறந்தால் வீரக்கல் நட்டுப் பூசிப்பார்கள் அந்தக் கல்லில் பெயர் எழுதிப் புகழ் பரவி இளைஞர்கள் தலை வணங்குவார்கள். யானைப்போர் அவ்வளவு உயர்ந்தது, அருமையானது என்பது அவர்கள் கருத்து.

போர் நடக்கிறது; யானையும் யானையும் முட்டுகின்றன; குதிரையும் குதிரையும் இடிக்கின்றன; வீரரும் வீரரும் எதிர்க்கின்றனர். எங்கும் செங் குருதி வெள்ளம். உருண்ட தலையும் அறுந்த தோளும் வெட்டிய காலும் துணிபட்ட குதிரையும் கிடக்கின்றன. யம கிங்கரர்களின் வருங்கால சந்ததிகளுக்குச் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து விளையாடுவதற்கு ஏற்ற இடம்போல விளங்குகிறது அக்களம். பேய்க்கும் கழுகுக்கும் நரிகளுக்கும் வயிறார விருந்தளிக்கும் அந்தக் களத்திலே வீரம் தாண்டவமாகிறது.

அந்தக் கூட்டத்தில் ஒரு வீரன் பம்பரம்போல் சுழன்று திரிகிறான். அவன் வீரக்குடியிலே பிறந்தவன். அவனுடைய தாய் பாலூட்டுகையிலேயே வீரத்தையும் கரைத்து ஊட்டியிருக்கிறாள். "ஆயிரம் வீரர்களைக் கொல்வதைவிட ஓர் யானையை எறிந்து வீழ்த்துவதுதான் வீரம். நீ போர்க்களத்தில் இறந்து போனாலும் பல யானைகளைக் கொன்றுவிட்டுப் பிறகே மார்பில் புண்பட்டு வீழ்ந்தாயென்று அறிந்தால் நான் உன்னைப் பெற்ற பெருமையைப் பாராட்டி உயிர் விடுவேன்" என்று அந்த மறக்குடிப் பெண் அவனுக்கு உபதேசம் செய்திருக்கிறாள். தன் தாயின் வார்த்தைகள் அவனுக்குப் பொருள்படும் பருவம் வந்த காலத்தில் அவன் அறிந்த செய்திகள், கதைகள் எல்லாம் களிறு எறிந்த வீரர் கதைகளே. "ஆண் சிங்கம் ஆண் சிங்கம் என்று சொல்லுகிறார்களே, ஏன் தெரியுமா? பிடரி மயிரும் எடுத்த பார்வையும் மாத்திரம் சிங்கத்தின் லஷணத்தைத் தந்து விடுமென்று எண்ணாதே. பருமனாக வீங்கிய உடம்பை யுடைய யானையைக் கிழித்து வீழ்த்தி விடுவதுதான் சிங்கத்துக்குப் பெருமை. நீயும் சிங்கக்குட்டி யென்று பேரெடுக்க வேண்டுமானால் போரில் யானைகளுக்கு எமனாக விளங்குவாயாக! இந்தா, பிடி இந்த வேலை; இதுதான் உன்னுடைய மூததையர் வைத்திருக்கும் சொத்து. இந்த வேலால் யானைகளை எறிந்து உண்மை யான சிங்கமாகப் புகழடையவேண்டும்" என்று தன்னை வாழ்த்திப் போர்க்களத்துக்கு அனுப்பிய தாயின் வீர உரையை அவன் மறக்கவில்லை.

அந்த வேலைச் சுழற்றிக்கொண்டு திரிகிறான். நல்ல வேளையாக, பகைப் படையின் தலைவனுக்கு உரிய யானையே எதிர்ப்பட்டது. அதனைக் குறி பார்த்துத் தன் நெடிய வேலை எறிந்தான். அதன் பெரிய உடலில் அது பா¦ந்து தங்கிவிட்டது; ரத்தம் குபீரென்று அருவிபோலப் பீச்சி அடித்தது. இனி அந்த யானை அடுத்த உலகத்திற்குப் போக வேண்டியதுதான்.

இப்போது வீரனுக்கு ஒரு கவலை வந்துவிட்டது. 'நம்முடைய கைவேலை யானைமேல் வீசினோம்; அதன் உடலில் அது தங்கிவிட்டது. நம் கையில் இப்போது ஆயுதம் ஒன்றும் இல்லையே! எதைக் கொண்டு போர் செய்வது?' என்று ஒரு கணம் ஏங்கினான். தன் திரண்ட தோளையும் மார்பையும் பார்த்துக் கொண் டான். மார்பிலே பார்வை சென்றபோது அவன்
துள்ளிக் குதித்தான். யானையை வீழ்த்துவதற்காக வந்த வேகத்தில் எடிர்ப்படையில் இருந்த வீரன் அவன் மார்பிலே தன் கைவேலை வீசி எறிந்தான். அது யானைபோன்ற அவன் மார்பிலே தைத்தது. ஒரே ஆத்திரத்தோடு யானைமேல் பாயும் அவ்வீரன் அதனை அநாயாசமாக ஏற்றுக்கொண்டு வேகம் குறை யாமலே போய்த் தன் காரியத்தை முடித்தான். தன் மார்பில் பாய்ந்த வேலை அந்த வேகத்தில் மறந்தான்.

இப்போது அந்த வேல் அவன் கண்ணிற்பட்டது. அவனுக்கு எவ்வளவு குதூகலம் தெரியுமா? அம்பறாத் தூணியிலிருந்த அம்பை யெல்லாம் பிரயோகம் செய்துவிட்டு மேலே அம்பில்லாமல் வெறுங்கையோடு நின்ற வீரனுக்கு அந்தத் தூணி நிறைய அம்புகளை வைத்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேல் யாசித்துப் பெற்றதா? இல்லை. பகைவன் எறிந்த வேல். அவனுடைய இரும்பு திரண்டனைய உடம்பில் சிறிதளவே புகுந்து பதிந்து நின்றது; அவ்வளவுதான். அதைத் துளைக்க முடியவில்லை.

பார்த்தான் வீரன்; வெடுக்கென்று மார்பினின்று அதைப் பறித்தான். வலியை மறந்தான். சரியான சமயத்தில், தான் நிராயுதபாணியாக இருந்த செவ்வியில், உதவிய அந்த வேலைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளம் மகிழ்ந்தது. அவனுடைய மார்பாகிய உறையினின்றும் அந்த வேல் வெளிப்பட்டபோது அவன் நெஞ்சாகிய உறையிலிருந்து மகிழ்ச்சியும் வீரமும் வெளிப்பட்டன. யுதம் பெற்றதால் மகிழ்ச்சியும் பகைவன் வேலை அலஷ்யமாக ஏற்றுக் கொண்ட பெருமையால் வீரமும் பொங்கி வழிய அந்த ஆண்சிங்கம் வேலைச் சுழற்றிக்கொண்டு அடுத்த யானையைத் தேடிப் பாய்கிறது.


[போக்கி - செலுத்தி. மெய்வேல் - தன் உடம்பிலே தைத்த வேலை. பறியா - பறித்து. நகும் - மகிழ்வான்.]
-----------------

18,. அதே யானை!


என்ன கொண்டாட்டம்! என்ன விளையாட்டு! குழந்தைகள் யானையை யானையென்றா எண்ணியிருக்கிறார்கள்? இல்லவே இல்லை. மரயானையை வைத்துக் கொண்டு விளையாடுவது போலல்லவா விளையாடுகிறார்கள்? தண்ணீரில் நிற்கும் யானையின் மத்தகத்திலிருந்து கொம்மாளம் போடுகிறார்கள். யானை குளிக்கிறது; அதுவாகக் குளிக்கிறதா? குளிப்பாட்டுகிறார்களா? குளத்திலே மண்டியிட்டு முதுகு முழுகக் குளிக்கிறது. குழந்தைகள் தங்கள் சிறுகையால் ஜலத்தை வாரி வாரி அதன் முகத்தில் இறைக்கிறார்கள்; அதன் தந்தத்தைக் கழுவுகிறார்கள். யானை தன் தும்பிக்கையினால் நீரை வாரி முகத்தில் வீசிக் கொள்கிறது. குழந்தைகளின்மேல் அந்த நீர்த்துளிகள் வீசும்போது அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள். யானையைத் தேய்த்துக் கழுவுகிறார்கள். அவர்கள் அதைக் குளிப்பாட்டுகிறார்கள். அது அவர்களைக் குளிப்பாட்டுகிறது. இந்த நீர் விளையாட்டிலே அந்த யானைக்குக்கூட மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது என்றுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் குழந்தைகளின் விளையாட்டுக்கு இடங்கொடுத்துக்கொண்டு அது நிற்குமா?

இப்படி ஊரிலுள்ள குறுமாக்கள் (சிறு பையன்கள்) தன் வெள்ளிய தந்தத்தைக் கழுவுதலால் மகிழ்ந்து போய் நீர்த்துறையிற் படியும் பெருங் களிற்றை ஒளவை பார்க்கிறாள். அவளுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது! அப்போது அவள் கண்ட காட்சி யால் அல்ல; அந்தக் காட்சியையும் சில காலத்துக்கு முன் அவள் அறிந்த காட்சியையும் அவள் மனசிலே ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.

அடேயப்பா! அன்றைக்கு என்ன தடபுடல்! என்ன குழப்பம்! எத்தனை கவலை! ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டல்லவா நின்றது? யானை யொன்று மதம் பிடித்து அடக்குவாரின்றி ஊர் முழுவதும் அலைந்து திரிந்து மரங்களை முறித்தும் கூரையைப் பிய்த்தும் மதிலோடு மோதியும் கதவினைக் குத்தியும் வெடிபடப் பிளிறியும் இடிபட உலவியும் பண்ணிய கொடுமையை இன்னும் ஊரார் மறக்க வில்லையே. அதே யானை இன்று சாதுவாகவும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும் நீர்த் துறையில் நிற்கிறது!

ஒளவைக்கு ஏன் ஆச்சரியம் உண்டாகாது? அந்தக் காலத்தில் அதனருகில் யாராவது போகா முடிந்ததா? துன்னருங் கடாம் (அணுகுதற்கரிய மதம்) ஏறியிருந்தது. அதே யானைதான் இது என்பதை யாரும் நம்ப முடியாது. ஒளவைக்கு இந்தக் காட்சியைக் காணக்காண வியப்பு மேலிட்டது. இது குழந்தைகலின் பெருமையா? யானையின் இயல்பா? யோசித்து யோசித்துப் பார்த்தாள் தமிழ்ப் பாட்டி. நிச்சயமாக யானையின் இயால்புதான் என்று தெரிந்தது.

இந்த அதிசயத்தை நினைத்தபடியே அவள் அதியமான் அரண்மனையை அடைந்தாள். அதியமான் தக டூரில் அரசாண்ட சிற்றரசன்; பெருவீரன். அவன் பல போரில் பகைவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்து வெற்றி பெற்றவன். போர்க்களத்தில் ருத்திரமூர்த்தி போல நின்று பகைவருடைய யானைப்படையையும் தேர்ப்படையையும் பிற படைகளையும் கொன்று குவித்துக் கொற்றவைக்கு விருந்திடுபவன்.

ஒளவைப்பாட்டி அவன் திருவோலக்கத்தை அடைந்தபோது புலவர் பலர் அவனுடைய வீரச் சிறப்பைப் பாராட்டிக்கொண் டிருந்தனர். சிங்கம் போலவும் புலிபோலவும் அவன் போர்க்களத்தில் போர் புரிந்து வென்றதை வருணித்தனர். களமெல்லாம் குருதிவெள்ளம் பாய, அந்த வெள்லத்திலே இறந்த யானைகளும் வீரர் உடல்களும் மிதக்க, கழுகுகளும் பருந்துகளும் தம் வயிறார உணவுபெற, அவன் செய்த வீர விளையாட்டை வீரச் சுவையும் கோபச் சுவையும் புலப்படச் சொன்னார்கள். 'அவ்வளவு கொடுமையை உடையவனா!' என்று நினக்கும்படி இருந்தன, அவர்கள் சொன்ன செய்திகள்.

போர்க்களத்திலே அவன் அப்படி இருந்திருக்கலாம்; ஆனால் இங்கே புலவர்களிடையே அவன் மிகவும் சாதுவாக ஒரு குழந்தையைப்போல அமர்ந்திருந்தான். கவிஞர்களிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டான்; மென்மையாகவும் இனிமையாகவும் பேசினான். அவனுடைய வார்த்தைகளிலே அன்பு தான் இருந்தது; மருந்துக்குக்கூடக் கடுமையில்லை. புலவர்கள் பேசும்போது அந்தப் பேச்சை மிகவும் ர்வத்தோடும் மரியாதையோடும் கேட்டான். பார்வையிலே ஒரு குளிர்ச்சி, உடலிலே ஒரு பணிவு, வார்த்தைகளிலே ஒரு குழைவு ஆகிய இவ்வளவும் அவனது கோலத்தை இனிமைப் பிழம்பாகச் செய்தன.

'இவன்தானா போர்க்களத்தில் பகைவர்களைப் படுகொலை செய்து தன் கைக்குச் செவ்வண்ணம் தீற்றியவன்? இருதயத்திலே சென்று தண்மையைப் புகுத்தும் இவனுடைய பார்வையா தீப்பொறிகளைக் கக்கியிருக்கும்?' என்று எண்ணமிடலானாள் ஒளவை. அப்பொழுது அவள் அகக் கண்னின்முன் சற்றுமுன் கண்ட காட்சி, நீர்த்துறைபடியும் களிறு, வந்தது. ஊரை அன்றொரு நாள் அலைத்து வருத்திய அதே யானை இன்று சிறு பிள்ளைகள் தன் தந்தத்தைக் கழுவி விளையாட, சாந்த நிலையோடு நிற்கிறது. இரண்டு நிலையிலும் அதே யானைதான். அன்று மதம் பெருகி நின்றது; இன்றுமதம் அடங்கி நிற்கிறது. இந்த அதியமானும் அப்படித்தான் இருக்கிறான். பகைவருக்கு மதம் பட்ட யானை அவன். புலவர் களுக்கோ நீர்த்துறை படியும் களிறாக உள்ளான்.

எவ்வளவு பொருத்டமான உவமை! கருத்து அழகிது! உள்ளத்தே பதிந்த அக்கருத்து உடனே ஒளவையின் வாக்கில் கவிதையாக வெளிப்பட்டது. அதியமானை நோக்கிப் பாடுகிறாள் ஒளவை:

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.
        --புறநானூறு - ஒளவையார் பாட்டு.

[ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள சிறு பிள்ளைகள். வெண்கோடு - வெள்ளையான தந்தத்தை. கழாஅலின் - கழுவுதலால். துன்னரும் கடாஅம் போல - யாரும் அணு குதற்கரிய மதம்பட்ட நிலைமையைப் போல. இன்னாய் - கொடியவனானாய். ஒன்னாதோர்க்கு - பகைவர்களுக்கு.]

-------------

அரும்பதக் குறிப்பு


அ - அழகு ஈர்மணல் - ஈரமான மணல்
அடுதல் - சமைத்தல் உண்கண் - மையுண்ட கண்
அமர்தல் - தங்குதல் உணர்கம் - அறிவோம்
அரண் செய்தல் – பாது காத்தல் உதுக்காண் - அதோ பார்
அருந்துதல் - ஊட்டுதல் உயர்வு நவிற்சி – அளவுக்கு மிஞ்சிப் புகழ்தல்
அரை - இடை உலம் - கல்தூண்
அலமருதல் - சுழலுதல் உவலை - தழை
அலைத்தல் - துன்புறுத்தல் உளுக்குதல் - அசைத்தல்
அவலம் - வருத்தம் ஊச்சுதல் - உறிஞ்சுதல்
அழல் - நெருப்பு ஊதியம் - வருவாய்
அழித்தல் - அவிழ்த்தல் ஊரன் - மருத நிலத் தலைவன் பெயர்
அழுங்கல் - ஆரவாரம் ஊழ் - விதி
அளவளாவுதல் – நெருங்கிப் பழகுதல் எஞ்சுதல் - மிகுதியாதல்
அளி - அன்பு எய்தாது - போதாது
அளை - வளை எய்ப்பு - இளைப்பு
அறிந்திசினோர் - அறிந்தவர் எய்யாமை - அறியாமை
அன்ன - போன்ற எயினர் - வேடர்
ஆகுமதி - வாயாக எவ்வம் - துன்பம்
ஆயர் - இடையர் எவன் - என்ன
ஆயிடை - அதற்கிடையே எழில் - அழகு
ஆரல் - ஒரு வகை மீன் எறிதல் - வீசுதல்
ஆள்வினை - முயற்சி எறும்பி - எறும்பு
ஆறு - வழி ஏது - காரணம்
ஆன் - பசு ஏமதி - ஏவுவாயாக
இடும்பை - துன்பம் ஏறிட்டுக் கொள்ளுதல் – மேற் கொள்லுதல்
இணைமலர் - இரட்டைப் பூ ஒண்னுதல் – விளக்கத்தை யுடைய நெற்றி
இமிர்தல் - ஒலித்தல் ஒழுகுதல் - ஓடுதல்
இயக்கம் - புடைபெயர்ச்சி ஒளிறுதல் - விளங்குதல்
இரு - பெரிய ஒன்னாதோர் - பகைவர்
இல்லாகுதும் - இல்லையா வோம்ஓரி - தலைமயிர்
இழுக்கு - குற்றம் கச்சை - இடையிற் சுற்றிய கட்டு
இளிவு - அவமதிப்பு இன்னாய் - கொடுமையை
இளையர் - இளைய வீரர் கடுகுதல் - விரைதல்

கடாம் – மதம் உடையாய் கோடு - கொம்பு
கணம் - தொகுதி கோள் - குலை
கதிர் - கிரணம் சாரல் - மலைச்செறிவு
கதிரவன் - சுரியன் சினம் - வெம்மை
கமழ்தல் - மணத்தல் சுடர் - சூரிய சந்திரர்
கரத்தல் - மறைத்தல் சுரம் - பாலை நிலம்
கலிங்கம் - ஆடை சூளுறவு - சபதம்
கலிழி - கலக்கம் செக்கர் - செவ்வானம்
கலைமான் - ஆண்மான் செங்கதிர்ச் செல்வன் - சூரியன்
கவர்தல் - கைக்கொள்ளுதல் செப்பஞ்செய்தல் – ஒழுங்கு படுத்தல்
கவலை - பிணங்கிய வழி செய்வினை - மேற்கொண்ட காரியம்
கவிதல் - சூழ்தல் செரு - சண்டை
கவுள் - கன்னம் செல்லல் - துன்பம்
கழறுதல் - கண்டித்தல் செலல் - நடை
கழாஅல் - கழுவுதல் செவ்வி - சமயம், சமத்துவம்
கழுவுதல் - துடைத்தல் செறித்தல் - இறுக்குதல்
கள்ளம் - பொய் செறிதல் - இறுகுதல்

களிறு - ஆண்யானை சென்றீக - செல்க
களைஞர் - விலக்குபவர் சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன் பெயர்
காமரு - விருப்பம் மிக்க சொக்குதல் - மயங்குதல்
கார் - மேகம், கார்காலம் ஞான்று - காலம்
காரிகை - பெண் தகை - இயல்பு
காவதம் - காதம் தண்மை - குளிர்ச்சி
கான் - காடு தலையளி - உயர்ந்த அன்பு
கானவாரணம் – காட்டுக் கோழி தவ - மிக
கீழறுத்தல் – மறைவாகக் கேடு சூழ்தல் தவிர்த்தல் - விலக்குதல்
குய் - தாளிதம் தாங்குதல் - தடுத்தல்
குருகு - நாரை, ஒரு பறவை தாங்குமதி - தடுப்பாயாக
குருதி - இரத்தம் தாழ் - தாழ்ப்பாள்
குழல் - புல்லாங்குழல் தாழ்பு - தாழ்ந்து
குறிஞ்சி நிலம் - மலையும் மலையைச்சார்ந்த இடமும்தாள் - தண்டு
குறும்பொறைநாடன் - முல்லை நிலத் தலைவன் பெயர்திருவோலக்கம் – அரசன் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் நிலை
குறுமாக்கள் - சிறுபையன்கள் திரு - செல்வம்
கூவல் - பள்ளம் திரைதல் - மடிப்பு விழுதல்
கெண்டுதல் - கிண்டுதல் தீமை - இனிமை
கெழு - பொருந்திய தீர்கம் - நீங்குவோம்
கையறுதல் – செயலற்றுக் கிடத்தல் துணி - துண்டு
கொடுங் கழி – வளைந்த உப்பங்கழி துணை - இரட்டை
கொடுவில் - வளைந்த வில் துழத்தல் - துழாவுதல்
கொற்றவை - வெற்றிக்குரியபெண்தெய்வம், துர்க்கை துன்னுதல் - அணுகுதல்

துனி - துன்பம் பெருமிதம் – பெருமை யுணர்ச்சி
தூக்குதல் – எடுத்துக் காட்டுதல் பேடை - பெண்பறவை
தேரோன் - சூரியன் பேணுதல் - பாதுகாத்தல்
தேன் - வண்டு பேதை - அறிவற்றவன்
தொடி - தோள்வளை பொய்த்தல் - தவறுதல்
நகுதல் - மகிழ்தல் பொருதல் - மோதுதல்
நவிலுதல் - ஒலித்தல், பயிலுதல் பொறி - புள்ளி
நனி - மிக பொறை - குண்டுக்கல்
நாள் - காலை பொன்றுதல் - அழிதல்
நுகர்தல் - உண்ணுதல், இன் புறுதல் போக்குதல் - கைவிடுதல்
நெய்தல் நிலம் - கடலும் கடலைச் சார்ந்த இடமும் போகுதல் - ஓடுதல்
போது - மலரும் பருவத்துப் பேரரும்பு போழ்து - பொழுது
நெறி - வழி போற்றுதல் - பாதுகாத்தல்
நொதுமல் - அயல் மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது
நொவ்விதாக - வேகமாக மட்டு - அளவு
பகழி - அம்பு மதி - சந்திரன்
படப்பை - ஊர்ப்பக்கம் மதுகை - வலிமை
படர்தல் - செல்லுதல், விரும்புதல் மயங்குதல் - கலத்தல்
படிதல் - நீராடுதல் மருட்சி - மயக்கம்
பதம் - பக்குவம் மருத நிலம் - வயலும் வயலைச் சார்ந்த நிலமும்
பந்தி - குதிரைச்சாலை மருப்பு - கொம்பு
பரி - நடை மலிர்தல் - மேலே வருதல்
பரிதல் - ஓடுதல் மறக்குடி - வீரர்கள் பிறந்த குடும்பம்
பலவு - பலாமரம் மறலி - யமன்
பற்றுக்கோடு - தாரம் மறுகுதல் - மனம் சுழலுதல்
பாகர் - குழம்பு மன்ற - நிச்சயமாக
பாசறை - பாடி வீடு மாட்டுதல் - கொல்லுதல்

பாதாதி கேசம் – அடிமுதல் முடிவரையில் மாய்த்தல் - தீட்டுதல்
பால் - ஊழ்வினை மாறு பற்றுதல் - எதிரெதிரே பற்றுதல்
பிணிக்கொள்ளுதல் - கட்டுப் படுத்தல் மிடறு - கழுத்து
பிணைமான் - பெண்மான் மிடுக்கு - எடுப்பு, பெருமை யுணர்ச்சி
பிணையல் - மாலை மின் - நட்சத்திரம்
பிழம்பு - பிண்டம் முகன் - முகம்
பிளிறுதல் - முழங்குதல் முட்கோல் - தாற்றுக்கோல்
புலர்தல் - உலர்தல் முட்டு - இடையூறு
புறம் - முதுகு முரணுதல் - வேறுபடுதல்
புறவு - முல்லை நிலம் முரலுதல் - ரீங்காரம் செய்தல்
புன்மை - பொலிவின்மை முரற்சி - ரீங்காரம்
பூதர் - சீலர் வாரனம் - கோழி
பெயல் - மழை வாள் - ஒளி
பெருந்தகு நிலை - பெருமிதத்தைக் காட்டும் தோற்றம் வானம் - காசம்
முல்லைநிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும் விதிர்த்தல் - தெளித்தல்
முளிதல் - முற்றி விளைதல் வியல் - பரப்பு
முறுவலித்தல் – புன்னகை செய்தல் விரகம் - பிரிவுத்துன்பம்
மூதாதையர் - முன்னோர் வீங்குதல் - மிகுதல்
மெய் - உடம்பு வீதல் - அழிதல்
யாப்பு - கட்டு வீழ்த்தல் - விழச் செய்தல்
வரிக்குரல் – கரகரப்பான தொனி வேரல் - மூங்கில்
வலவன் - தேரை ஓட்டு பவன் வை - கூர்மை
வழுவுதல் - தவறுதல் வைமுள் - தாற்றுக்கோல்
வாங்குதல் - இரத்தல்
வெளவுதல் - கைக் கொள்ளுதல்


This file was last updated on 15 Feb. 2010
Feel free to Webmaster.