கரிகால் வளவன்
கி. வா. ஜகன்னாதன்

karikAL vaLavan
by ki. vA. jakannAtan
In tamil script, unicode/utf-8 format

கரிகால் வளவன்
கி. வா. ஜகன்னாதன்

Source: கரிகால் வளவன்
கி. வா. ஜகந்நாதன்
அமுத நிலையம் லிமிடெட்
1/45, இராயப்பேட்டை ஹைரோடு, சென்னை - 14
உரிமை பதிவு முதற் பதிப்பு - நவம்பர், 1966
Printed on Double Crown White Printing Paper - 10. 9 Kg.
விலை ரூ. 1-00
நண்பர்கள் அச்சகம், ஆழ்வார்பேட்டை, சென்னை - 18
-----------------------------------------------------------


முகவுரை


சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.

ஆராய்ச்சி முறையில் இன்ன இன்ன நிகழ்ச்சிக்கு இன்ன இன்னது ஆதாரம் என்று சொல்லாமல், இலக்கிய ஆதாரங்களையெல்லாம் **தொகுத்து அவற்றிலுள்ள செய்திகளை ஒருவாறு கோவைப்படுத்திக் கற்பனையென்னும் பசையால் இணைத்து உருவாக்கியது இவ்வரலாறு. நிகழ்ச்சிகளினூடே உள்ள உணர்ச்சியை வெளிப்படுத்த வருணனைகளையும், உரையாடல்களையும் இடையிடையே அமைத்திருக்கிறேன். புத்தகத்தைப் படித்த பிறகு, ஒரு பேரரசனுடைய வரலாற்றை உணர்ச்சியோடு தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி நிலவவேண்டும் என்பதே என் கருத்து. அதோடு படித்துச் செல்லும் பொழுதே கதையை நாம் ஒட்டாமல் அது நம்மை ஒட்டவேண்டும் என்ற நினைவால் கதைக்குரிய கருவை விரித்துச் சொல்லியிருக்கிறேன்.

கரிகாலனுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளச் சிறந்த ஆதாரமாக இருப்பவை பொருநராற்றுப்படையும், பட்டினப் பாலையும் ஆகும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் சில கரிகாலனை நேர்முகமாகப் பாடுகின்றன. மற்றத் தொகை நூல்களில் அங்கங்கே உவமையாகவும் பிறவாறாகவும் கரிகாலனைப் பற்றிய செய்திகள் துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரத்தில் சில செய்திகள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் படித்துத் தொகுத்து இதை உருவாக்கி அமைத்தேன்.

"காந்தமலை" ) கி. வா. ஜகந்நாதன்
கல்யாண நகர், )
25 - 11 - 66 சென்னை - 28 )
-----------------------------------------------------------

பொருளடக்கம்

1. வளவன் பிறந்தான் . . . 1
2. கரிகாலன் . . . 13
3. ஏற்றிய விளக்கு . . . 26
4. வெண்ணிப் போர் . . . 34
5. இமயத்தில் புலி . . . 44
6. உறையூரின் தோற்றம் . . . 52
7. கிழக் கோலம் . . . 60
8. நாட்டுவளம் பாடிய நங்கை . . . 66
9. பாட்டும் பரிசும் . . . 78
10. இழந்து பெற்ற காதலன் . . . 88
-----------------------------------------------------------


1. வளவன் பிறந்தான்


அரசன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான் என்ற செய்தி நாட்டு மக்களின் உள்ளத்தை என்னவோ செய்தது. வழி வழி வந்த சோழ நாட்டின் மணிமுடி பெரிய வீரம் மிக்க மன்னர்களின் தலையை அணி செய்திருக்கிறது. சோழ சக்கரவர்த்திகளின் பெருமை காவியங் கண்டது. இளஞ்சேட்சென்னியின் வீரம் எவ்வளவு சிறந்தது! அவனுடைய கொடைத் திறத்தை உலகுள்ளளவும் எடுத்துச் சொல்வதற்கு நல்லிசைச் சான்றோர்களாகிய புலவர்களின் பாடல்கள் இருக்கின்றனவே! சோழ நாட்டு மக்களின் உள்ளத்தில் அவன் இருந்தான்.

முடியுடை மன்னன் என்றாலும் அவன் குடி மக்களிடத்தில் எவ்வளவு எளிதில் பழகினான்! தங்களுக்குள்ள குறையை எந்த நேரத்திலும் அவனிடம் சென்று எடுத்து உரைக்கலாம். அவையாவும் பெரிதல்ல. அவன் மணம் செய்து கொண்டானே, அதுதான் குடிமக்களின் பேரன்பை அவனுடைய காணியாக்கிக் கொண்டது. பாண்டியன் மகளும், சேர அரசன் புதல்வியும், வடநாட்டு மன்னர்களின் மடந்தையரும் இளஞ்சேட்சென்னிக்கு மாலையிடக் காத்துக் கிடந்தார்கள். ஆனால் அவன் காதல், அரண்மனையில் வளரும் பைங்கிளிகளை நாடவில்லை. சோழ நாடு சோற்றால் வளம் பெறுவது. அதற்குரிய நெல்லை விளைவிப்போரே சோழ நாட்டின் பெருமைக்குக் காரணமாக உள்ளவர்கள். அவர்களுடைய குலத்திலே பெண் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவன். எந்த அரசன் வாழ்ந்தாலும் எந்த அரசன் வீழ்ந்தாலும் காவிரியின் நீர் வளத்தால் நெல் விளைவித்து நாட்டைக் காக்கும் வேளாளர் பெருமை நிலையானது என்பதை உணர்ந்தவன் அவன். ஆகவே, பலரோடும் ஆராய்ந்து அழுந்தூரில் வாழ்ந்த பெரிய வேளாண் செல்வர் ஒருவருடைய அழகுத் திருமகளை மணம் செய்து கொண்டான். இளஞ்சேட்சென்னிக்கு வாழ்க்கைத் துணைவியாகிய மகளைப் பெற்றுத் தந்தவர் பெயர் நமக்குத் தெரியாது. அழுந்தூர் வேள் என்று கௌரவமாக யாவரும் அவரை வழங்குவர்.

வீரமும் கொடையும் இன்ப வாழ்வும் நிரம்பிய சேட்சென்னியிடம் அரசுக்குரிய எல்லா உறுப்புக்களும் இருந்தன. பல பல தேர்கள் இருந்தன. அந்தப் புகழ் அவனுடைய பெயரோடு ஒட்டிக் கொண்டது. 'உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி' என்று நீட்டி முழக்கி அவன் பெயரைப் பாட்டில் வைத்துப் புலவர்கள் பாடுவாராயினர்.

அத்தகைய இளஞ்சேட்சென்னி நோய்வாய்ப் பட்டிருக்கிறான். குடி மக்களின் சிறப்பைத் தன் திருமணத்தால் உலகுக்குக் காட்டிய அவனிடம் அவர்களுக்கு இருந்த அன்புக்கு அளவுகூற முடியுமா? "கடவுளே! எங்கள் மன்னர்பிரான் நோய் நீங்கிப் பழையபடியே வீரம் விளைக்கும் வலிமை உடையவனாக வேண்டும்" என்று வேண்டினர். 'மன்னனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் என் செய்வது!' என்று நினைக்கும்போது அவர்கள் வயிறு பகீரென்றது. அவர்களுடைய துயரத்தை மிகுதியாக்குவதற்கு ஒரு தனிக் காரணம் உண்டு. இளஞ்சேட் சென்னிக்குப் பின் சோழ நாட்டை ஆள அவனுக்குப் பிள்ளை இல்லை. சோழர் குலம் இளஞ்சேட் சென்னியோடு அற்று விடுவதா? சோழ மரபில் உதித்த வேறு சிலர் அங்கங்கே இருந்தார்கள். சில வேளாளச் செல்வர்களெல்லாம் தாங்கள் சோழ மரபோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாயாதிகளெல்லாம் சோழ சிங்காதனத்தைத் தமதாக்கிக் கொள்ள முந்துவார்கள். அப்போது நாட்டில் அமைதி நிலவுமா? பலர் கூடிக் கலகம் விளைவிப்பார்கள். வாழையடி வாழையாக வளர்ந்து வந்த மன்னர் வரிசை இப்படியா குலைய வேண்டும்? - நாட்டில் உள்ள பெருமக்கள் இவ்வாறு எண்ணி எண்ணி மறுகினர்.

காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்டான் இளஞ்சேட்சென்னி. பட்டினமென்றால் அது சாமானியமான பட்டினமா? கடற் கரையை அடுத்த மருவூர்ப்பாக்கம் முழுவதும் ஓயாத ஒழியாத கூட்டம்; ஆரவாரம்; வியாபாரப் பண்டங்கள் பெருமலை போலக் கிடக்கும். உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்து வணிகர்கள் அங்கே வருவார்கள். தங்கள் பண்டங்களை விற்கவும் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிச் செல்லவும் அவர்கள் வருவார்கள். மருவூர்ப்பாக்கம் திரு மகள் நடமாடும் இடம்; வர்த்தகம் சிறக்கும் பகுதி. அதை அடுத்துள்ளது பட்டினப் பாக்கம். அதுதான் நகரத்தின் உட்பகுதி; அரண்மனையும், நகர மக்களும், செல்வர்களும் உள்ள இடம். சோழ நாட்டின் செல்வத்தைத் தன் தோற்றத்தால் புலப் படுத்திக் கொண்டு விளங்கியது அப்பகுதி.

இத்தகைய நகரம் இப்போது பொலிவற்று நிற்கிறது. மக்களுடைய முகத்தில் மலர்ச்சியைக் காணவில்லை. மன்னன் நோய்வாய்ப்பட்டிருப்பதுதான் காரணம். ஒவ்வொரு கணமும் மக்களுடைய கவலை மிகுதியாகிக் கொண்டே வந்தது. மன்னன் பிழைப்பான் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டு வந்ததே அதற்குக் காரணம்.

"இனிச் சோழநாடு என்ன கதியாவது?" என்ற கவலை சான்றோர்களின் உள்ளத்தில் சொல்ல வொண்ணாத வேதனையை உண்டாக்கியது. என்ன என்னவோ யோசனை செய்தார்கள். மன்னனுடன் இருந்து அரசியலைக் கவனித்து வந்த அமைச்சர்களும், அவனுக்கு உறுதுணையாக இருந்த சான்றோர்களும், அறங்கூறவையத்தின் உறுப்பினர்களாகிய பெருமக்களும் கூடி ஆலோசித்தனர். மன்னன் இனிப் பிழைப்பது அரிது என்ற முடிவின்மேல் அவர்கள் ஆலோசனை படர்ந்தது. எவ்வளவு நேரம் கலந்து பேசியும் முடிவுக்கு வர இயலவில்லை. சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடுவோர் பலர் இருந்தனர். அவர்களில் யார் என்ன செய்வார்களோ!

இத்தனை துயரச் சூழல்களுக்கிடையே ஒரே ஒரு சுடர்ப்பொறி அவர்களுடைய உள்ளத்துக்கு ஆறுதலைத் தந்தது. அரசியினுடைய தோழி ஒருத்தி வெளியிட்ட செய்தி ஒன்று, அவர்களுடைய கவலைக்கு மாற்றாக இருந்தது. அதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று தெரியவே, 'இறைவன் திருவருள்தான் இப்படிக் கூட்டிவைத்திருக்க வேண்டும்' என்று உள்ளுக்குள் உவகை மூண்டனர். மன்னனுக்கு மகன் இல்லையே என்ற பெருந் துயரத்தைப் போக்க அந்தச் செய்தி உதவியது. ஆம்! அரசி கருவுற்றிருந்தாள்.

இதனைக் கேட்டபோது சான்றோர்களுக்குத் துயரமும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்பட்டன. 'இத்தனை சிறப்போடு வாழ்ந்த மன்னன் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பார்க்க முடியாது போல் இருக்கிறதே!' என்று துயருற்றார்கள். 'மன்னனுக்கு அந்தப் பாக்கியம் இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தையைச் சோழ நாட்டு மக்கள் மன்னனாகக் கொண்டு இன்புறுவார்கள்!' என்ற எண்ணம் அவர்களுக்கு ஆறுதலையும் இன்பத்தையும் தந்தது.

இந்தப் புதுச் செய்தியை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். குழந்தை பிறந்து வளர்ந்து தக்க பருவம் வரும் வரையில் பாதுகாப்பது பெரிய காரியம் அல்லவா? இந்தச் செய்தி வெளிப்பட்டால் பகைவர்கள் சோழ குலத்தின் தொடர்பை நீடிக்க வந்த குழந்தையைக் கொல்லச் சதி செய்வார்கள். மற்றொரு நினைவும் அவர்களுடைய மகிழ்ச்சிக்குப் பெரிய தடையாக இருந்தது. அரசி கருவுற்றிருப்பது நல்ல செய்திதான். ஆனால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டுமே! இல்லா விட்டால் சோழ நாட்டுக்கு என்ன பயன்? இவ்வளவையும் யோசித்து அரசி கருவுற்றிருக்கும் செய்தியைத் தக்க சிலரிடம் மாத்திரம் சொல்வதென்று தீர்மானித்தார்கள்.
*****

இளஞ்சேட் சென்னி இறந்துவிட்டான். நாட்டின் அரசாட்சியை அமைச்சர்கள் மேற்கொண்டார்கள். அரசி கருவுற்ற செய்தி எப்படியோ சோழ நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிட்டது. முதலில் அரசியை அரண்மனையிலே வைத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தனர். ஆனால் எந்தச் சமயத்திலும் பகைவர்கள் நகரத்தை முற்றுகையிடக் கூடும். அரசி கருவுற்றிருக்கும் செய்தி எப்படியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் அரசிக்குத் தீங்கு இழைப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இந்த அபாயத்தினின்றும் அரசியைப் பாதுகாக்க வேண்டும். வந்தபின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இன்னும் சில மாதங்கள் தக்க பாது காப்பில் அரசி இருந்து, இறைவன் அருளால் குழந்தை பிறந்துவிட்டால், பிறகு பகைவர்களின் கொட்டத்தை ஒருவாறு அடக்கலாம். குடி மக்களுக்கும் தைரியம் உண்டாகும்.

யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பான ஓரிடத்திற்கு அரசியைக் கொண்டு போய்த் தக்க வசதிகளுடன் வைப்பதென்று தீர்மானித்தார்கள். நல்ல வேளையாக இந்தக் காரியத்தில் அவர்களுக்குப் பெருந்துணையாக ஒருவர் வாய்த்திருந்தார். இரும்பிடர்த் தலையார் என்பவரே அவர். அவர் பெரும் புலவர்; மதுரைச் சங்கத்துப் புலவர் வரிசையில் சேர்ந்தவர். இது மட்டும் அன்று; அரசியின் சகோதரர் அவர். அவருடைய பாது காப்பில் அரசியை விடுவதில் யாருக்குத்தான் தடை இருக்கும்?

பல காலம் வள வாழ்வில் தான் வாழ்ந்து வந்த அரண்மனையை விட்டுச் சென்றாள் அரசி. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பிரிந்த காட்சி சான்றோர்களின் உள்ளத்தை உருக்கியது. "வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் தாங்கியிருக்கும் மாணிக்கம் தக்க காவலில் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால்தான் உங்களை அனுப்புகிறோம். திருடர்கள் வந்துசாரும் இடத்தில் வைர மணிப் பெட்டகத்தை வைக்கலாமா? உங்களுக்குத் திருமகன் பிறந்துவிட்டால் மீண்டும் இந்த அரண்மனை வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும்" என்று அரசிக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ நம்பிக்கை இருந்தது. தனக்கு மகன்தான் பிறப்பான் என்ற உறுதி இருந்தது. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தால்-? அதை நினைக்கும்போதே அவள் உடம்பு நடுங்கியது. அவள் வாழ்ந்த வாழ்வென்ன! அரசன் உயிரோடிருந்தால் அவள் இருக்கும் நிலை என்ன! எல்லாம் கனவாகத் தோன்றின.

உலகத்தின் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத ஓரிடத்திலே அரசி தன்னிடம் புதைந்திருந்த மாணிக்கத்தை அடைகாத்து வந்தாள். இரும்பிடர்த் தலையார் ஒவ்வொரு கணத்தையும் முள்மேல் இருப்பவர்போலக் கழித்தார். 'குழந்தை கருவில் வந்தபோதே தந்தையைக் கொன்றுவிட்டதே! இது பிறந்து வளர்ந்து நாட்டுக்கு நன்மை உண்டாக்க வேண்டுமே!' என்று அவர் கவலைப்பட்டார். அவருக்குச் சோதிட நூலில் நல்ல பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சியினாலும், அநுபவத்தினாலும் தம் தங்கைக்கு மகன் பிறப்பான் என்றே அவர் நம்பினார். ஆனால் அந்த மகன் நாளும் கோளும் நல்ல நிலையில் இருக்கும்போது பிறந்தால்தானே அவருடைய நம்பிக்கை நிறைவேறும்? "கடவுளே! நல்ல வேளையில் குழந்தை பிறக்கவேண்டும்" என்று வேண்டினார்.

அரசிக்குப் பிரசவ காலம் நெருங்கியது. இரும் பிடர்த்தலையார் ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். கெட்ட வேளையில் குழந்தை பிறக்கக் கூடாதே என்ற பயம் அவருக்கு. எல்லா வேளையும் நல்லனவாகவா இருக்கும்? நல்லதும் பொல்லாததும் கலந்து கலந்துதானே வரும்?

அரசிக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று. இரும்பிடர்த்தலையார் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டார். கிரகங்கள் எந்த எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்த்தார். 'இன்னும் மூன்று நாழிகை வரையில் நல்ல காலம் இல்லை. அதற்குள் குழந்தை பிறந்தால் கதிமோட்சமே இல்லை!' என்று தெரிந்தது. 'மூன்று நாழிகை கழித்துப் பிறந்தால் குழந்தை இராச யோகத்தோடு இருப்பான். பெரும் புகழை உடையவனாக விளங்குவான். இளமையில் பல இன்னல்கள் வந்தாலும் பிறகு யாராலும் வெல்ல முடியாத நிலை பெறுவான். பல நாடுகள் அவனுக்கு உரிமையாகும். '- நல்ல பலன்களின் வரிசை நீண்டது. மூன்று நாழிகைக்குப் பின்பு பிறந்தால்தான் இந்த யோகம். அதற்கு முன்பு பிறந்து விட்டால் என்ன செய்வது? அவர் மனம் அடித்துக் கொண்டது. பஞ்சாங்கத்தைப் பார்ப்பார். உள்ளே போவார். பணிப் பெண்ணிடம், "எப்படி இருக்கிறது?" என்று கேட்பார்.

"மிகவும் வேதனைப் படுகிறார்கள்" என்பாள் அவள்.

"பிரசவம் ஆகிவிடுமா?" என்று கேட்பார்.

"அநேகமாக ஆகிவிடும் போல்தான் இருக் கிறது. "

"இன்னும் சில நாழிகை தாங்காதோ?" என்று கவலை தோய்ந்த குரலில் கேட்பார்.

"இயற்கையை மாற்ற நாம் யார்?" என்பாள் பணிப் பெண்.

"சில நாழிகை பிரசவத்தைத் தாமதமாக்க வழி இல்லையா?" என்று கேட்பார்.

அவள் சிரிப்பாள். மிகச் சிறந்த மருத்துவப் பெண்ணை அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அப்போது அவருக்கு அந்த ஊரில் இருந்த பெரிய வைத்தியருடைய நினைவு வந்தது. ஆளை அனுப்பி அழைத்து வரச் செய்யலாம் என்றுகூட அவருக்குத் தோன்றவில்லை. திடீரென்று எழுந்து ஓடினார். சில கணத்தில் அவரை அழைத்து வந்துவிட்டார். அதற்குள் ஒரு நாழிகை கழிந்தது.

"மருத்துவ நூலில் எத்தனையோ அற்புதங்கள் உண்டென்று கேட்டிருக்கிறேன். நீங்கள் ஓர் அற்புதத்தைச் செய்யவேண்டும். என் தங்கைக்குப் பிரசவ வலி எடுத்துவிட்டது. என் உள்ளத்திலும் வேதனை உண்டாகியிருக்கிறது. குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டும். இப்போது பிறக்கக் கூடாது. இப்போது பிறப்பதைவிடப் பிறக்காமலே இருக்கலாம். இதற்கு என்ன செய்வது?"

இரும்பிடர்த்தலையார் படபடவென்று பேசினார். ஆண்டில் முதிர்ந்த வைத்தியர் அவர் கூறியவற்றைக் காதிலே வாங்கிக்கொண்டார். யோசித்தார். தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று இரும்பிடர்த் தலையார் ஆவலோடு அவரையே கவனித்துக் கொண்டு நின்றார். கிழவர் பேச ஆரம்பித்தார்.

"நீங்கள் சொல்வது சாத்தியமான காரியந் தான். "

"அப்படியா! எப்படி, எப்படி?"

"பொறுங்கள். ஆனால் தாயின் உயிருக்குத் தீங்கு நேர்ந்தாலும் நேரலாம். பிரசவத்தைச் சில நாழிகைகள் தாமதப்படுத்த வழி உண்டு. அதனால் உண்டாகும் வேதனை தாய்க்கு அதிகம். முதலில் அதை அவள் தாங்கிக்கொள்ளவேண்டும். அந்த வேதனையால், பிரசவமானவுடனே தாயின் உயிருக்கு ஒருகால் ஆபத்து நேரிடலாம். "

இரும்பிடர்த்தலையார் குறுக்கிட்டார்.

"குழந்தை உயிருடன் பிறக்கும் அல்லவா?"

"குழந்தை பூரண சுகத்துடன் பிறக்கும். தாயின் நிலையைப் பற்றித்தான் சொல்கிறேன்" என்று நிதானமாகப் பேசினார் வைத்தியர்.

"எப்படி ஆனாலும் சரி; குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்கவேண்டும்" என்று கெஞ்சும் குரலில் கூறினார் புலவர்.

"சரி, பணிப்பெண்ணை வரச் சொல்லுங்கள். அவளிடம் வேண்டியதைச் சொல்கிறேன். "

பணிப்பெண் வந்தாள். கிழவர் அவளிடம் சில முறைகளைச் சொன்னார். "அரசியைச் சாதாரண நிலையிலே படுக்க வைத்திருக்கக் கூடாது" என்றார். கால் மிகவும் மேலே இருக்கும்படி கட்டி விடவேண்டும் என்றார். பாவம்! அவ்வளவுக்கும் உட்பட்டாள் அரசி. அவளைத் தலைகீழாகத் தொங்க விடுவது ஒன்றுதான் குறை. அவள் மார்பு அடைத்தது. உடம்பு முழுவதும் என்னவோ செய்தது. உயிரே போய்விடும்போல் இருந்தது. ஆனாலும் அவள் அதற்கு உட்பட்டாள். தன் மகன் அரசாள வேண்டும் என்ற ஆவலினால் அத்தனை செயலுக்கும் உட்பட்டாள்.

நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இரும்பிடர்த்தலையாருக்கோ மன வேதனை. அவர் புழுவைப் போலத் துடித்தார். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல் இருந்தது. அவருடைய தங்கையைப்பற்றி என்ன சொல்வது? அவருடைய உள்ளம், உடல், உயிர் இந்த மூன்றும் துடித்தன. அவள் பட்ட துன்பத்தை எந்தத் தாய்தான் படுவாள்?

அப்பா! இரண்டு நாழிகைக் காலம் ஆயிற்று. அரசி விடுதலை பெற்றாள். பழைய படுக்கையில் படுத்தாள். இரும்பிடர்த்தலையார் ஒரு காட்டாற்றை நீந்தினார். ஆனால் அடுத்த ஆறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும்; தாயும் சுகமாக இருக்க வேண்டுமே! வேண்டாத தெய்வங்களை யெல்லாம் வேண்டினார்.

"வீல்" என்ற உயிரை ஊடுருவும் தாயின் வேதனைத் தொனி; அதனை அடுத்து, "குவா" என்ற குழந்தையின் குரல் கேட்டது. அடுத்தபடி உள்ளிருந்து பணிப்பெண் ஓடிவந்தாள்; "ஆண் குழந்தை!" என்று கத்திக்கொண்டே வந்தாள். இங்கே இரும்பிடர்த்தலையார் மூர்ச்சை போட்டுக் கிடந்தார். குழந்தையின் அழுகை ஒலி அவருடைய உணர்ச்சியைத் தூண்டி அப்படிச் செய்து விட்டது. உள்ளே தாயும் மூர்ச்சையுற்றாள். அங்கே ஒருத்தி தாயைத் தெளிவித்தாள். இங்கே ஒருத்தி தமையனாரைத் தெளிவித்தாள்.

தெளிந்து எழுந்தவர் காதில், "ஆண் குழந்தை" என்ற வார்த்தைகள் விழுந்தன. அவர் கைகள் அவரை அறியாமலே தலைமேல் ஏறின.

அவர் ஆசையின்படியே ஆண் குழந்தை, இளஞ்சேட்சென்னியின் குலத்தைக் காக்க வந்த கான்முளை, பிறந்துவிட்டது. தாயும் பிழைத்தாள்.

இப்படிப் பிறந்தவந்தான் திருமா வளவன்; கரிகாலன் என்று சரித்திரம் புகழும் சோழ சக்கர வர்த்தி.
-----------------------------------------------------------


2. கரிகாலன்


குழந்தை பிறந்தது. எப்படிப் பிறக்க வேண்டுமோ, எப்படி வளர வேண்டுமோ அப்படி யெல்லாம் இருக்க வகையில்லை. சோழ மண்டலத்தின் சக்கரவர்த்தியாக விளங்க வேண்டிய குழந்தை, இப்போது ஊர் அறியாமல், நாடு அறியாமல் வளர்ந்து வந்தது.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள சிலருக்கு மாத்திரம் தெரிந்தது. ஆட்சியை நடத்தி வந்த அமைச்சர்களுக்கும், சில சான்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதற்கு முன் ஊக்கமில்லாமல் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் வாட்டமே குடி கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் இரும்பிடர்த் தலையாரிடமிருந்து நல்ல செய்தியை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

'இளஞ்சேட்சென்னி இருந்து பார்த்து முறைப்படி குழந்தையைச் சீராட்டக் கொடுத்து வைக்கவில்லையே!' என்ற துயரம் அவர்களுக்கு இப்போது உண்டாயிற்று. ஆண்குழந்தை பிறந்த செய்தி அளவில்லாத மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் வேறு வகையில் அவர்களுடைய உள்ளம் மறுகியது. குழந்தை பிறந்ததை உலகத்தார் அறியத் தெரிவிப்பது உசிதமன்று என்று தீர்மானித்தனர். சோழநாட்டில் உள்ள சில வேளிர் கலகம் செய்யக் கிளம்பியிருந்தனர்.

குழந்தை பிறந்த செய்தி அவர்களுக்குத் தெரிந்தால் ஏதேனும் செய்துவிடக் கூடும். அரண்மனைக்குக் குழந்தையைக் கொணர்ந்து வளர்த்தால் தக்க பாதுகாப்பு வேண்டும். அதற்குரிய படைப்பலம் இல்லை. ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ஒருவரும் அறியாமல் குழந்தை வளர்வதே நல்லது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இரும் பிடர்த்தலையாரும் அந்த முடிவுக்கு உடன் பட்டார். குழந்தையைக் காக்கும் பொறுப்பு அவரிடமிருந்து அகலவில்லை. இன்ன இடத்தில் குழந்தை வளர்கிறது என்ற செய்தி மிகவும் இரகசியமாகவே இருந்தது.

ஆயினும் சோழ நாட்டு மக்களிடையே ஒரு வதந்தி பரவியது. சோழ குலத்தைக் காப்பாற்ற அரசிக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி அங்கங்கே வழங்கியது. "எல்லாம் பொய், இப்போது ஆட்சி புரிபவர்கள் தங்கள் ஆட்சி மாறாமல் இருக்க வேண்டிக் கட்டிவிட்ட கதை" என்று சிலர் சொன்னார்கள்.

"இளஞ்சேட்சென்னி வாழ்ந்திருந்த காலத்தில் பிறக்காத குழந்தை இப்போதுதான் பிறந்து வளர்கிறது போலும்!" என்று சிலர் ஏளனமாகப் பேசினர்.

"அயலிலுள்ள பாண்டி நாடும் சேர நாடும் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன! அரசன் இல்லாத நாடும் ஒரு நாடா? பேசாமல் சேரன் ஆட்சியையே ஏற்கலாமென்று தோன்றுகிறது. "

இவ்வாறு பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். மன்னன் ஒருவன் இல்லாமையால் சோழ நாட்டின் பெருமை மங்கியது. காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்பும் குறையத் தொடங்கியது.

பகைவர் வர வர உரம் பெற்றனர். பாண்டிய மன்னனோடும், சேரனோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர். சோழ இளவரசனாகிய குழந்தை எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 'குழந்தை பிறக்கவே இல்லை' என்ற வதந்தியைப் பரப்பினர்.

திருமா வளவன் வளர்ந்து வந்தான். தங்கத் தொட்டிலில் வளர வேண்டியவன் மரத் தொட்டிலில்கூட வளரவில்லை. எந்தச் சமயத்தில் குழந்தைக்கு அபாயம் நேருமோ என்ற பயத்தால் அவனைத் தாய் 'மார்த் தொட்டில்' இட்டு வளர்த்தாள். பனி நீரால் குளிப்பாட்டினாள். மகிழ்ச்சி பொங்க உடல் பூரிக்க நாளுக்கு நாள் ஆனந்தம் அடைய வேண்டிய அவள் ஒவ்வொரு கணமும் குழந்தைக்கு யாரால் என்ன தீங்கு நேருமோ என்று அஞ்சி நடுங்கினாள்; உள்ளம் சாம்பினாள்; உடல் மெலிந்தாள்.

தாயின் அன்பணைப்பிலே வளவன் வளர்ந்தான். காட்டிலே ஓடி வேட்டையாடி விளையாட வேண்டிய சிங்கக் குட்டி கூட்டிலே கிடந்தது. வளவனுடைய மேனி அழகும், துள்ளிக் குதிக்கும் தோற்றமும், துடியான பேச்சும் தாய் வயிற்றைக் குளிரச் செய்தன; அடுத்த கணம் தீயை மூட்டின. 'கடவுளே! என் கண்மணி, சோழர் குலத் தோன்றல், இருக்க வேண்டிய நிலையில் இருந்து விளங்கும் காலம் வருமா?' என்று அவள் அங்கலாய்த்தாள். "காலம் வரும்" என்று ஆறுதல் கூறினார், இரும்பிடர்த்தலையார். குழந்தை தன் தோளைத் தட்டிக்கொண்டு சிரித்தான்.

குழந்தைக்கு இரும்பிடர்த்தலையார் கல்வி புகட்டினார். சோழர் குலப் பெருமையைக் கதை கதையாகச் சொன்னார். தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டினார். அவர் சங்கப் புலவர் அல்லவா? திருமா வளவன் உடம்பு வளர்ந்தது போலவே அறிவும் வளர்ந்தது. அது கண்டு அன்னையும், அம்மானும் மகிழ்ச்சி கொண்டனர்.
*

"ஐயோ! குழந்தையைக் காணவில்லையே! இங்கேதான் விளையாடிக்கொண் டிருந்தான். இப் போது காணவில்லையே!" என்று அழுதாள் தாய்.

இரும்பிடர்த்தலையார் காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சென்றிருந்தார். தக்க பாதுகாப்பைச் செய்து விட்டுத்தான் போயிருந்தார். வளவன் காலையில் தாயோடு பேசிக்கொண் டிருந்தான். "அம்மா! இன்னும் நாலைந்து ஆண்டுகள் போனால் பெரியவனாகி விடுவேன். காவிரிப்பூம் பட்டினத்துக்கு அப்போது போகலாம் அல்லவா? அங்கே போய் நம்முடைய அரண்மனையையும் சிங்காதனத்தையும் பார்க்க வேண்டுமென்று எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா?" என்று சொன்னானே! மாலையில் அவனைக் காணவில்லை. சின்னஞ் சிறு குழந்தையாக இருந்தால் இடுப்பில் வைத்துக் கொள்ளலாம். ஓடியாடிப் பேசி எல்லாம் தெரிந்துகொள்ளும் பருவம் வந்த பிள்ளையைக் கட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவனும் தனக்கு வரக்கூடிய அபாயத்தைத் தெரிந்து கொண்டிருந்தான். காளைப் பருவம் வரவில்லை; சின்னப் பையன்தான். ஆனாலும் ஓரளவு தன்னைத்தான் காத்துக் கொள்ளும் திறமை அவனுக்கு இருந்தது.

அன்னை எங்கெங்கோ தேடினாள்; அழுதாள்; கதறினாள். தெரிந்தவர்களை எல்லாம் அழைத்துத் தேடச் செய்தாள். தெரியாதவர்களையும் கெஞ்சிக் கும்பிட்டு அங்க மச்ச அடையாளங்களைச் சொல்லித் தேடச் சொன்னாள். வளவன் அகப்படவில்லை. உயிர்க்கழுவில் நின்று துடித்தாள் தாய். அவளுடைய நெட்டைக் கனவெல்லாம் எப்படி ஆகிவிடுமோ? குழந்தைக்காக அல்லவா அவள் உயிரோடிருக்கிறாள்? பெண்ணாகப் பிறந்தவள் ஊரைக் கடந்து ஓடிப்போய்த் தேட முடியுமா? கனலில் விழுந்த புழுவைப் போலத் துடிதுடித்தாள். தன் தலைவிதியை நொந்து அரற்றினாள். குழந்தை போனவன் தான்; வரவில்லை.

மறுநாள் இரும்பிடர்த்தலையார் வந்தார். வரும்போதே அவருக்கு வீடு விளக்கமற்றிருப்பது தெரிந்தது. உள்ளே புகுந்தாரோ இல்லையோ, "அண்ணா! இனிமேல் நான் என்ன செய்வேன்!" என்று தலைவிரி கோலமாக அரசி அவர் காலில் வந்து விழுந்தாள்.

"குழந்தை எங்கே?"

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான்கு புறமும் பார்த்தார் புலவர்.

"குழந்தையைப் பறிகொடுத்துவிட்டேனே!" என்று அழுதாள் அவள்.

"நான் புறப்படும்பொழுது நன்றாகத்தானே இருந்தான்? அதற்குள் அவனுக்கு என்ன வந்தது?"

"ஐயோ! அவனை நேற்றிலிருந்து காணவில்லை. எந்தப் பாவி தூக்கிக்கொண்டு போனானோ! என்ன செய்தானோ! என் கண்மணி உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ! ஐயோ! நான் என்ன செய்வேன்!"

ஒரு கண நேரம் இரும்பிடர்த்தலையார் செயலற்று நின்றார். உலகமே சுழன்றது. பிறகு எல்லாம் அப்படியே திடீரென்று இயக்கம் ஒழிந்து நின்றுவிட்டதுபோல் இருந்தது. நின்று நிதானித்தார். அவர் எதிர்பார்த்ததுதான் இது. இது நேரக்கூடாதென்று எத்தனையோ கட்டுக்காவலாக இருந்தார். ஆனாலும் விதி யாரை விட்டது? நடப்பது நடந்தே தீரும்.

இந்த அலங்கோல நிலையில் அவருக்கு ஒரு சிறிய ஆறுதல் ஏற்பட்டது. அவர் முதலில் அஞ்சியது போல, இளவரசன் இறந்து போகவில்லை. யாரோ வஞ்சகருடைய சூழ்ச்சியால் மறைந்து விட்டான். தாய் புண்ணியம் செய்திருந்தாளானால், சோழர்குலம் புண்ணியம் உடையதானால், சோழ நாடு பாக்கியம் பெற்றதானால், இன்னும் நம்பிக்கைக்கு இடம் உண்டு.

இளைஞன், தக்க பருவம் வராதவன் வளவன். ஆனால் எளிதிலே ஏமாந்து போகிறவன அல்லன். சோழர் குலத்தின் வீரக்குருதி அவன் நரம்புகளில் ஓடியது. சோழர் கொடியான புலியைப்போல அவன் பதுங்கிப் பாயும் திறமையுடையவனாகலாம். அவன் தோளில் வீரத்தின் செறிவு இருந்தது. அவன் பேச்சில் ஆண்மையின் அழுத்தம் இருந்தது.

"ஒருகால் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தானாகப் போய்வரலா மென்று புறப்பட்டிருப்பானா? அன்று ஒரு நாள் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதாகச் சொன்னானே!" என்று தாய் கூறினாள்.

"இருக்கலாம். அங்கே போய்த் தேடுகிறேன். அநேகமாக அந்த நகரத்தில் இருக்கக் கூடு மென்றே தோன்றுகிறது" என்றார் புலவர்.

இதை அவர் மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. தாயின் வேதனையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தினால், அவள் கொண்ட ஐயத்தில் உண்மை இருப்பதாகக் காட்டினார். அவருக்கு அந்தச் சந்தேகமே இல்லை. இளவரசன் மிகவும் கூரிய அறிவுடையவன். யாரிடமும் சொல்லாமல் போகமாட்டான். இதை அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

"சரி, நான் போய் வருகிறேன். குழந்தையை அழைத்துக்கொண்டே வருவேன். நீ கவலையுறாமல் கடவுளின்மேல் பாரத்தைப் போட்டு இரு" என்று விடைபெற்றார் புலவர்.

"அண்ணா, நான் குழந்தையைக் காண்பேனா?" என்று அழுதாள் அவள். "நான் பாவி! குழந்தையைப் பக்கத்திலே இருக்கும்படி சொல்லாமற் போனேனே!" என்று புலம்பினாள்.

"அதையெல்லாம் இப்போது நினைத்துப் பயன் இல்லை. குழந்தை கிடைத்து விடுவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் பாதுகாத்த திருவருள் இனியும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீ கவலைப்படாமல் இரு. "

இரும்பிடர்த்தலையார் புறப்பட்டுவிட்டார். காவிரிப்பூம் பட்டினத்திற்கா? இல்லை, இல்லை. அங்கே அவருக்கு என்ன வேலை? இளவரசனை இழந்து விட்டேன் என்று சான்றோர்களிடம் சொல்லப்போவதானால் போகலாம்!

என்ன செய்வது, எங்கே போவது என்ற திட் டமே இல்லாமல் அவர் புறப்பட்டார். கால் போன வழியே நடந்தார். தம் தங்கைக்கு முன் தம் துயரத்தை வெளியிடவில்லை. இப்போது அவர் உள்ளத்துக்குள்ளே புதைந்திருந்த துயரம் வந்து கப்பிக் கொண்டது. கால் தள்ளாடியது. கண்ணில் நீர்த்துளிகள் தோன்றிப் பார்வையை மறைத்தன. தலை கிறுகிறுத்தது.
*

எதிர்பாராத வகையில் சிக்கிக்கொண்டான் இள வரசன். யாரும் இல்லாத காலத்தில் இரண்டு முரடர்கள் அவனை மறித்துப் பிடித்துக் கொண்டார்கள். ஆட்டுக் குட்டியைப் போல் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இளவரசன், "ஐயோ!" என்று கத்தவில்லை. அந்த வார்த்தை அவன் குலத்தினர் வாயில் வராதது. தன்னால் ஆனவரையில் முரணிப்பார்த்தான். முரடர்களின் பலத்துக்கு முன் அவன் பலன் எம்மாத்திரம்?

பகைவர்கள் ஒற்றர்களை ஏவி அரசி இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு அவளுக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து வருவதையும் அறிந்தார்கள். மேற்கொண்டு 'முளையிலே கிள்ளி எறியும்' வேலையிலே முனைந்தார்கள். அதன் பயனாகத்தான் இளவரசன் திருமா வளவன் முரடர்கள் கையிலே சிக்கினான்.

ஏதோ ஓரிடத்துக்கு அவனைக் கொண்டு போனார்கள். ஒரு வீட்டில் அடைத்துவிட்டார்கள்.

பாவம்! இளம் பாலகன்; உலகம் இத்தகைய தென்றே அறியாதவன்; கூட்டிலே வளரும் சிங்கக் குட்டியைப்போல வளர்ந்தவன்; தான் வாழும் பெரிய சிறையை விட்டுப் பகைவர் புகுத்திய சிறிய சிறையில் இப்போது கிடந்தான். அங்கே அன்னை இருந்தாள்; அம்மான் இருந்தார். இங்கே என்ன இருந்தது? இருள் இருந்தது; பகைவர்களின் கொடுமை இருந்தது.

இந்த இடத்திலிருந்து மீள வழியுண்டா என்று ஆராய்ந்தான். மேலே கூரை வேய்ந்திருந்தது. பெரிய கட்டிடம் அல்ல; சிறிய வீடு அது. மனிதர்கள் பேசும் குரலே காதில் விழவில்லை. வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு வெளியேற முடியுமா? அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. கத்திப் பார்த்தான். "மாமா! அம்மா!' என்று அழைத்தான். யாரும் ஏனென்று கேட்கவில்லை.

காட்டுக்கு நடுவில் அந்த இடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. உண்மையில் சோழ நாட்டிலே அவ்விடம் இருக்கவில்லை. சோழ நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் கருவூரை அடுத்த ஒரு சிறிய காட்டில் திருமா வளவனைச் சிறை செய்திருந்தார்கள் பாவிகள்!

அயர்வினால் இளவரசன் தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் தூங்கினானோ. தெரியாது. ஏதோ ஆளரவம் கேட்டு விழித்துக்கொண்டான். வெளியிலே யாரோ பேசினார்கள். பேச்சுத் தெளிவாகக் காதில் விழவில்லை. "யார் அங்கே?" என்று கேட்டான். அவர்கள் விடை கூறவா வந்தார்கள்?

மாபாவிகள் அந்தச் சோழர்குலக்கொழுந்தை உயிரோடு கொளுத்திவிட வந்தார்கள். நள்ளிருளில் இந்தக் காரியத்தைச் செய்ய வந்திருந்தார்கள். அந்தக் கூரை வீட்டில நெருப்பு வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

உள்ளே இருந்த சிறுவனுக்குப் புகை நாற்றமும் மூங்கில் வெடிக்கும் ஓசையும் தெரிந்தன. ஒரே வெளிச்சம் தோன்றியது. அண்ணாந்து பார்த்தான். கூரை தீப் பிடித்துக்கொண்டது தெரிந்தது. "ஆ!" என்று கூவினான். இனி எப்படி தப்புவது? கதவை இடித்தான்; தன் பலத்தை யெல்லாம் சேர்த்து இடித்தான்; அது வழி விடவில்லை. மேலே கூரை பற்றி எரிந்தது. நெருப்புக் கங்குகளும் எரிந்த மூங்கில்களும் கீழே விழுந்தன. எரியாத கூரைப் பகுதிக்கு அடியிலே போய் ஒன்றிக் கொண்டான். அந்தப் பகுதி எரிந்துவிட அதிக நேரம் செல்லாதே! கூரை முழுதும் நெருப்புக் கோளமாகி அவன் தலை மேல் விழப்போகிறது: அப்புறம்?

ஓடி ஓடி ஒதுங்கினான். "அம்மா! அம்மா! மாமா! மாமா!" என்று கதறினான். தந்தையையோ பிறரையோ கூப்பிட்டுப் பழக்கம் இருந்தால் அல்லவா அவன் வாயில் வேறு வார்த்தை வரும்?

நெருப்பு வாண வேடிக்கை செய்து கொண்டிருந்தது. அந்தச் சடசடா ஓசையினூடே அவன் போட்ட சத்தம் வெளியிலே கேட்குமா? இன்னும் அரை நாழிகையில் திருமா வளவன் உயிரோடு வேகப் போகிறான். தீ நாக்குகள் தாவித் தாவிப் பிடிக்க வருகின்றன. அவன் கனல் வேகம் காந்த, மூலையிலே ஒன்றுகிறான். "அம்மா!" என்று கத்துகிறான். "மாமா!" என்று கூவுகிறான். "மாமா!"--நீண்ட கூச்சல் போட்டு விழப் போனான். "வளவா!" என்று ஓர் ஒலி கேட்டது. அவன் சற்று நிதானித்தான். மயக்கம் வந்தாலும் நினைவை இறுக்கிப் பிடித்துக் காதிலே பொருத்தினான். "மாமா!" என்று மறுமுறையும் கூவினான். "என் கண்ணே!" என்று ஒரு குரல் பதில் கொடுத்தது. மாமாவே வந்துவிட்டார். இரும்பிடர்த்தலை யார் எங்கெங்கோ அலைந்தவர், அந்த நேரத்துக்கு அங்கே வந்துவிட்டார். எங்கும் அலைந்து அலைந்து தேடினார். இந்த இரவில் இந்தச் சிறு காட்டின் வழியே வந்தார். நெருப்பு எரிவது அவர் கண் ணிலே பட்டது. அங்கே வந்தார். "மாமா!" என்ற குரலைக் கேட்டார். அது வளவனுடைய குரல் என்று தெளிவாகத் தெரிந்தது. ஒரு கணத்தில் எல்லாவற்றையும் ஊகித்துக் கொண்டார். பெரிய கற்களைக் கொண்டுவந்து கதவை உடைத்தார். பிளந்தது கதவு. உள்ளே நோக்கினார். மூலையில் ஒன்றிக்கொண்டு கதறிய இளவரசன் அவரைக் கண்டதும் ஓடிவந்தான். நெருப்பை மிதித்துக் கொண்டு ஓடிவந்தான். அவரைக் கண்ட வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இரண்டு தாவிலே தாவி இரும்பிடர்த்தளையார் காலடியில் வந்து விழுந்தான். அதன்பின் அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

திருமா வளவன் நினைவு வந்து பார்த்தபோதுதான் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். காலில் ஏதோ எரிச்சல். அருகில் இரும் பிடர்த்தலையார் இருந்தார். கண்ணை விழித்தான்; "மாமா!" என்றான். "என் கண்ணே! என் வயிற்றில் பாலை வார்த்தாயா?" என்று கேட்டுக்கொண்டே குனிந்து பார்த்தார் அருமை அம்மான். "இந்தா, இதைச் சாப்பிடு" என்று எதையோ குடிக்கக் கொடுத்தார். அதைக் குடித்தான். சற்றுத் தெம்பு வந்தது. "நான் எங்கே இருக்கிறேன்?" "ஆண்டவன் அருள் நிழலில் இருக்கிறாய்" என்று பதில் வந்தது. இரும்பிடர்த் தலையார் தழு தழுத்த குரலோடு பேசினார். "அம்மா எங்கே?" "வந்துவிடுவாள். " "கருவூரில் யாரும் அறியாத ஓரிடத்தில் இரும் பிடர்த்தலையாரின் பாதுகாப்பில திருமா வளவன் நெருப்புக் காயம் பட்டுக் கிடந்தான். அவன் காலில் நெருப்புத் தன் சக்தியைப் பூரணமாகக் காட்டிவிட்டது. இரும்பிடர்த்தலையார் சோழ நாட்டிலிருந்து தம் நண்பராகிய மருத்துவரை அழைத்து வந்தார். அவர் கட்டுக் கட்டினார். தாயும் வந்து சேர்ந்தாள்.

சில நாட்கள் மருந்து கட்டினார்கள். கடைசியில் கட்டை அவிழ்த்தார்கள். அந்த அழகிய கால் க‌றுப்பாகக் கரிந்திரிந்தது. பகைவருடைய வஞ்சகச் செயலுக்குச் சாட்சியாக அந்தக் கரிந்த கால் இருந்தது. "உயிருக்கு வந்தது காலோடு போயிற்றே!" என்று ஆறுதல் அடைந்தாள் தாய்.

அன்று முதல் திருமாவளவன் கரிகாலன் ஆனான்.
-----------------------------------------------------------


3. ஏற்றிய விளக்கு


கரிகாலன் உயிரோடிருப்பது சிலருக்குத் தெரிந்தாலும் ஆபத்து என்ற எண்ணம் இப்போது இரும்பிடர்த்தலையாருக்கு வந்துவிட்டது. அவன் சிங்காதனம் ஏறுவது கிடக்கட்டும். உயிரோடு வாழ வேண்டுமே! அவனுக்கு இடையூறு ஒன்றும் வராமல் கண்ணை இமை காப்பது போல் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாதென்று இரும்பிடர்த்தலையார் உறுதி பூண்டார். காவிரிப்பூம்பட்டினத்திற்குப் போவதைக் கூட நிறுத்திக்கொண்டார். அங்குள்ள சான்றோர்கள் மிகவும் வருத்தம் அடைவார்கள் என்பதை அறிந்திருந்தும்,கடவுள் விட்ட வழியே யாவும் நடக்கட்டும் என்று கருவூரிலேயே இருந்து விட்டார்.

அது புதிய ஊர்,ஆகையால் அவர்கள் ஊருக் குப் புதிய மனிதர்களாகவே இருந்தனர். சோழ இளவரசன் தம்மிடையே வாழ்கிறா னென்பதை அந்நகரில் உள்ள மக்கள் அறிய வகையில்லை. யாரோ அகதிகளாக, பிழைக்க வந்தவர்களாக அவர்கள் அங்கே இருந்தார்கள்.

காவிரிப்பூம் பட்டினத்தில் அமைச்சர்களும் சான்றோர்களும் தழல்மேல் இருப்பவர்களைப் போலத் தவித்தார்கள். சோழ இளவரசன் விடுவிடு வென்று வளர்ந்து சிங்காதனத்தில் அம‌ர்ந்துவிட வேண்டுமென்ற வேகம் அவர்களுக்கு இருந்தது. நாட்டில் பலவகை வதந்திகளைப் ப‌கைவர்கள் பரப்பியிருந்தார்கள். அரசன் இன்றி எவ்வளவு காலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்? மக்களும் பொறுமையின் எல்லையைக் கண்டுவிட்டனர்.

இந்த நிலையில் இரும்பிடர்த்தலையார், சில நாட்களுக்கு ஒரு முறை வருபவர், சில காலமாக வரவே இல்லை. அவரைக் கண்டும், அவர் கூறும் செய்திகளைக் கேட்டும் நம்பிக்கை பெற்று, ஆட்சியைக் கவனித்து வந்த அமைச்சர்களுக்கு இப்போது கவலை உண்டாயிற்று. பகைவர்களின் பலம் வர வர அதிகமாவதை அவர்கள் உணர்ந் திருந்தார்கள். "என்ன ஆயிற்றோ!" என்ற ஐயம் அவர்கள் உள்ளத்தே தோன்றி அரித்து வந்தது. இரும்பிடர்த்தலையாரோ வரவில்லை. ஒரு செய்தியும் தெரியாமல் அலைகடல் துரும்பு போல மனம் சுழன்று தடுமாறினார்கள்.

நாள்தோறும் புதிய அபாயம் சோழ நாட்டுக்கு ஏற்பட்டு வந்தது. சேரனுடைய ஒற்றர்கள் இன்ன ஊருக்கு வந்தார்கள் என்ற செய்தி ஒரு நாள் வரும். பாண்டியன் படைவீரர் மாறு வேடம் பூண்டு கூட்டமாகச் சோழ நாட்டின் தென்பகுதி ஊர்களில் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி ஒரு நாள் வரும். சோழ நாட்டில் வாழும் சிலர் கூடி, அரசன் இல்லாத இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கிளர்ச்சி செய்ய முயல்வதாக ஒரு செய்தி வரும். இவ்வாறு மன அமைதியைக் கலக்கிக் குடலைக் குழப்பும் சமாசாரங்கள் அலை அலையாக வந்து மோதும் போது அமைச்சர்கள் என்ன செய்வார்கள்? 'இனி நாட்டின் நிலை என்ன ஆகுமோ?' என்ற அச்சம் புரையோடிக்கொண்டிருந்தது.

ஒவ்வொரு நாளும் அமைச்சர் கூடிப் பேசினர். இரும்பிடர்த்தலையார் இன்று வருவார், நாளை வருவார் என்று எதிர்பார்த்தார்கள். அவர் வந்த பாடில்லை. நாட்டின் அமைதி வர வரக் குலைந்து வந்தது. இப்படியே வரையறை யின்றி எவ்வளவு காலம் காத்திருப்பது?

திருமா வளவனுக்கு வந்த ஆபத்து அவர்களுக்குத் தெரியாது. பகைவர்களுக்கோ வளவன் பிழைத்துச் சென்ற செய்தி தெரியாது. தம்முடைய சூழ்ச்சியினால் வளவன் இறந்து போனான் என்றே அவர்கள் எண்ணினார்கள். ஆதலின் அவர்கள் மறைமுகமாகச் செய்து வந்த எதிர்ப்பு வேலைகள் பின்னும் வலி பெற்றன. எங்கேயோ வளர்ந்து வந்த இளவரசன் இப்போது இறந்துவிட்டான் என்ற வதந்தியைப் பரப்பினர். சோழநாட்டில் அது பரவியது. அமைச்சர்கள் காதிலும் விழுந்தது. இதற்கு முன் வந்த வதந்திகளை அவர்கள் பொருட் படுத்தவில்லை. அப்பொழுதெல்லாம் உண்மையை உணர்த்தித் தைரியமூட்ட இரும்பிடர்த்தலையார் இருந்தார். இப்போது அவர் இன்ன இடத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆகவே, இளவரசன் இறந்து போனான் என்ற வதந்தி அமைச்சர்களின் கருத்துக்குள் நுழைந்தது. அடுத்தபடி, 'உண்மையாகவே இருக்குமோ?' என்ற நினைவும் புகுந்தது.

'ஆம், உண்மையாகவே இருக்கலாம். இளவரசன் இறந்த செய்தியை நமக்கு அறிவிப்பதால் பயன் இல்லை என்று இரும்பிடர்த்தலையார் இருந்து விட்டார் போலும்! அன்றி அந்தத் துயரம் தாங்காமல் அவரும் உயிர் விட்டாரோ! இவ்வளவு காலம் எத்தனையோ இரகசியங்களைப் பாதுகாத்து வந்தாரே! குழந்தை எப்படி இறந்தது? நோயினாலா? பகைவர்களின் சூழ்ச்சியினாலா?' - அவர்கள் யோசனை தடைப்பட்டது. மேலே மனம் ஓடவில்லை.

ஒருவருக்கு ஒருவர் தம் தம் கருத்தைப் பறிமாறிக்கொண்டனர்.

"சோழ நாட்டுக்கு உரிய அரசன் ஒருவனைத் தெரிந்தெடுத்து அவன் கையில் நாட்டை ஒப்பிக்பதையன்றி வேறு வழி இல்லை. " இப்படி ஒருவர் சொன்னார்.

"தெரிந்தெடுப்பதா? யாரை யென்று தெரிந் தெடுப்பது? என்ன தகுதியைக் கொண்டு தெரிந் தெடுப்பது?" என்று கேட்டார் ஒருவர்.

"சோழ குலத்தோடு தொடர்பு உடையவர்களில் தகுதி உடையவரைத் தெரிந்தெடுப்பது. "

"சோழகுலத் தொடர்புடையவர்களென்று இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறவர் ஒருவரா, இருவரா? அத்தனை பேரும் நாட்டின் நன்மையை நினைப்பவர்களா? அவர்களில் யாரைப் பொறுக்குவது?"

புதிய அரசனைத் தெரிந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் பல என்பதை அமைச்சர்கள் உணர்ந்தார்கள். "தெய்வமே வந்து ஒருவனைச் சொன்னாலொழிய, அமைதியாக ஒரு மன்னனை நாம் பெற முடியாது போல் இருக்கிறதே!" என்று ஒருவர் பெருமூச்சு விட்டார்.

தெய்வம் என்ற பேச்சு வந்தவுடன் எல்லாருக்கும் சிறிது ஊக்கம் உண்டாயிற்று. தெய்வ நம்பிக்கையில் சிறிதும் குறையாதவர்கள் அல்லவா? ஒருவர் சொன்னார்: "இனிமேல் தெய்வத்தின் திருவருளுக்கு இதை விட்டு விடவேண்டியதுதான். "

"என்ன செய்வது?" என்று இளைஞராகிய அமைச்சர் ஒருவர் கேட்டார்.

"பழைய காலத்தில் ஒரு வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன். பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து இறைவன் திருவருளை எண்ணி விட்டுவிட்டால் அது யாரிடம் சென்று மாலையைப் போடுகிறதோ அவனையே அரசனாக ஏற்றுக்கொள்ளுவார்கள். "

யாவரும் மீண்டும் ஆலோசனையில் ஆழ்ந்தனர். முடிவாக அப்படியே செய்யலாம் என்று தீர்மானித்தனர்.
*

அரசன் இல்லாத அரண்மனையில் பட்டத்து யானைக்கு என்ன வேலை? அந்த யானையை வீணே கட்டி வைத்துக்கொள்வதைவிட நல்ல இடத்தில் இருக்கும்படி செய்யலா மென்ற எண்ணத்தால், காவிரிப்பூம் பட்டினத்தை அடுத்த கழுமலத்தில் விட்டுவைத்தனர். இன்று சீகாழி என்று வழங்கும் ஊரே அன்று கழுமலம் என்ற பெயரோடு விளங்கியது. அங்குள்ள திருக்கோயிலில் சோழ அரசனது பட்டத்து யானை இருந்து வந்தது. அரண்மனையில் வளர்ந்த யானை பிறரிடம் வாழ்வதை விடக் கோயிலில் வாழ்வது பொருத்தந்தானே?

பட்டத்து யானையைக் கொண்டு அரசனைத் தெரிந்தெடுக்க எண்ணிய அமைச்சரும் பிறரும் தம் கருத்தை சோழ நாடு அறியும்படி வெளியிட்டனர். 'இறைவன் திருவருளால் நமக்குத் தக்க மன்னன் கிடைப்பான்' என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று.

ஒரு நல்ல நாளில் கழுமலத்தில் இருந்த களிற்றை அலங்கரித்துக் கடவுள் திருவருளை எண்ணிக் கட்டவிழ்த்து விட்டனர். காலாற நடை பழகாமல் இருந்த களிறு வேகமாகப் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் சென்றனர். களிறு மேற்கு திசையை நோக்கிச் சென்றது. திருவருட் சக்தியே அதனை உந்திக்கொண்டு போவது போல இருந்தது. அங்கங்கே உள்ள மக்கள் யானையைக் கண்டு வழிபட்டனர். இறைவன் திருவருளை ஏந்தும் வாகனமாக அதனை எண்ணித் துதித்தனர். ஒவ்வோர் ஊரையுங் கடந்து சென்றது யானை. சோழ நாடு முழுவதும், "இறைவன் திருவருள் என்ன செய்யப் போகிறதோ!" என்ற ஆர்வப் பேச்சு எழுந்தது. "எந்த ஊரில், எந்தக் குடிசையில் நம்மை ஆளப் போகும் மன்னன் பிறந்திருக்கிறானோ!" என்று பேசிக்கொண்டனர் மக்கள். யானை மேற்குத்திசையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

"ஒருகால் சேர நாட்டுக்கே போய்ச் சேர மன்னனையே வரித்து விடுமோ!" என்றனர் சிலர். யானை அவ்வளவு வேகமாகச் சோழ நாட்டின் மேற்கெல்லையை அணுகிக் கொண்டிருந்தது. தமிழ் நாடு முழுவதும் யானை புறப்பட்ட செய்தியை அறிந்து, முடிவை அறியும் ஆவலோடு இருந்தனர் மக்கள். சேர நாட்டாரும் பாண்டிய நாட்டாருங்கூடச் சோழ நாட்டின் மன்னராக யார் வரப் போகிறாரென்று அறியும் ஆர்வமுடையவராக இருந்தனர்.

மேற்கே கருவூருக்கு வந்துவிட்டது யானை. அவ்வூரில் உள்ள மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கொங்கு நாட்டைச் சார்ந்த கருவூர் அப் போது சேர நாட்டின் பகுதியாக இருந்தது. சோழ நாட்டுக்குச் சேரநாட்டில் உள்ளவன் மன்னனாகப் போகிறானோ? யானை சேரநாட்டின் எல்லைக்குள் வந்துவிட்டதே!

யானை கருவூரைத் தாண்டிச் செல்லவில்லை. அந்த ஊருக்குள்ளே புகுந்தது. என்ன ஆச்சரியம்! மறைவாகக் கரிகாலன் வாழ்ந்திருந்த சிறு குடிலின் முன்வந்து நின்றது. ஊரே கூடிவிட்டது. கரிகாலன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். களிறு உடனே அவன் கழுத்தில் மாலையை இட்டது; தன் கையால் எடுத்து மத்தகத்தின்மேல் வைத்துக்கொண்டது. அவ்வளவுதான்; வெகு வேகமாகப் புறப்பட்டு விட்டது.

இரும்பிடர்த்தலையார் இவற்றை யெல்லாம் கண்டார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. முதலில் பயப்பட்டார். பிறகு தெளிந்தார். 'அபாயம் நம்மைத் தேடி வந்துவிட்டது' என்று முதலில் திடுக்கிட்டார். 'திருவருள் கை கொடுக்க வந்தது' என்பதைப் பின்பு தெரிந்துகொண்டார்.

திருவருள் எதைச் செய்யவேண்டுமோ அதையே செய்துவிட்டது. பட்டத்து யானை யாரைத் தன்மேல் ஏற்றிக்கொள்ள வேண்டுமோ அவனையே ஏற்றிக்கொண்டு சென்றது. கரிகாலன் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். யார் கண்ணிலும் படாமல், பகைவருடைய வஞ்சகச் செயலுக்குத் தப்பி உயிர் பிழைத்து வாழ்ந்திருந்த அவனைத் திருவருள் உலகறிய,'இவனே சோழ குலத் தோன்றல்' என்று அறிவித்துவிட்டது. தெய்வத்தின் அருள்துணை அவனுக்கு இருந்தது. அதைக்காட்டிலும் வேறு பலம் எதற்கு? "பரம் பரையாகச் சோழ மன்னர் செய்த தவம் இப்படிப் பலித்தது!" என்று சான்றோர்கள் மனமுருகிச் சொன்னார்கள். "இதோ உங்கள் மன்னன் என்று தெய்வமே காட்டி விட்டது மன்னனை. இந்தப் பாக்கியம் வேறு எந்த நாட்டுக்கு உண்டு?" என்று மக்கள் பெருமிதத்தோடு மகிழ்ச்சி அடைந்தனர். பகைவர்தம் செயலடக்கி ஊக்கம் இழந்து சோர்வடைந்தனர்.

கரிகாலன்தான் சோழ இளவரசன் என்பதைச் சொல்ல இரும்பிடர்த்தலையாரும் வெளிப்பட்டார். இனி அவருக்கு என்ன பயம்? சோழநாடு களி வெள்ளத்தில் மூழ்கியது. அமைச்சர்கள் சொர்க்க இன்பத்தில் ஆழ்ந்தனர். இரும்பிடர்த்தலையார் இறைவனையே கண்டது போன்ற நிலையில் இருந்தார்.

கரிகாலன், சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழ இளவரசன்; இன்னும் தக்க பருவம் வரப்பெறாத இளம் பருவத்தான்; ஆனாலும் நாட்டின் மன்னனாக மணிமுடி தரித்துச் சிங்காதனம் ஏறினான். மங்கியிருந்த சோழநாடு விளக்கம் பெற்றது. மீண்டும் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் விளக்கை ஏற்றிவிட்டது தெய்வம்; அது ஒளிவிடத் தொடங்கியது.
-----------------------------------------------------------


4. வெண்ணிப் போர்


"சின்னஞ் சிறு குழந்தை; இன்னும் உலக இயல்பை அறியும் பிராயம் வரவில்லை. அதற்குள் சிங்காதனம் ஏறிவிட்டான். இவ்வளவு காலமும் அரண்மனையில் வளரவில்லை. அரச குலத்துக்குரிய சிறப்போடு வாழவில்லை. கற்கவேண்டிய கலைகளையும் முறைப்படி கற்கவில்லை. இன்னும் காலில் உள்ள காப்பை வாங்காத பருவத்தில் செங்கோல் பிடிக்கும்படி இறைவன் திருவருள்செய்துவிட்டது. இனி அந்தத் திருவருளே துணையாக இருந்து "அரசை நடத்தினாலொழியச் சோழநாடு பண்டைப் பெருமை குன்றாமல் இருப்பது அரிது" என்றார் ஒருவர்.

"என்ன, அப்படிச் சொல்கிறீர்கள்? பகைவர்களுடைய தீம்புகளுக்கும் வஞ்சகச் செயல்களுக்கும் தப்பி வந்திருக்கிறான் நம் மன்னன். மறைந்திருந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தாற் போலப் பட்டத்து யானை சோழர்குலத் தோன்றலைக் கண்டுபிடித்து எடுத்து வந்திருகிறது. இவ்வளவு காலம் இந்தக் குழந்தையை ஊரார் அறியாமல் வளர்த்து வந்தாரே இரும்பிடர்த் தலையார்; அவர் இருக்கும்போது மன்னனுக்கு என்ன குறை? எல்லா வகையிலும் சிறந்த பேரறிஞராகிய அவர் அரசனுக்கு வேண்டிய கல்வியைக் கற்பித்திருப்பார். அன்றியும், நாதனற்று அலமந்த சோழநாட்டை இந்த இடைக்காலத்தில் பாதுகாத்த அமைச்சர்களும் சான்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருந்துணை கரிகால் வளவனுக்கு இருக்கும்போது என்ன பயம்?" என்றார் மற்றொருவர்.

"இப்போது உள்ளபடி இருந்தால் அச்சம் ஒன்றும் இல்லை. ஆனால் சோழ நாட்டின் பெரு வளத்தில் நாட்டமுடைய மன்னர்கள் பலர் இருக்கிறார்கள். பல குறுநில மன்னர்கள் சமயமறிந்து வீழ்த்துவதற்குக் காத்திருக்கிறார்கள். எந்தச் சமயத்தில் யார் படையெடுப்பார்களோ!"

"அரசன் ஒருவன் இருக்கிறான் என்ற தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது. எந்தப் பகைவன் வந் தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் சோழநாட்டுப் படைவீரர்களுக்கு உண்டு. மன்னன் இளையவனாக இருந்தாலும் அரசியல் வேலைகளிலே கண்ணுங் கருத்துமாய் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாருங்கள்: முடி சூடியவுடன் அவன் செய்த முதல் வேலை, படைப்பலத்தை அதிகமாக்கும் செயல்தான். "

இவ்வாறு சோழநாட்டு மக்கள் கரிகாலனைச் சிறப்பித்துப் பேசுவாரும், பகைவர் வந்து படையெடுப்பார்களே என்று அஞ்சுவாருமாக இருந்தனர். சிங்காதனத்தை எளிதிலே கைப்பற்றி விடலாம் என்று எண்ணிய பகைவர் இப்போது போர் செய்தாலன்றித் தம் எண்ணம் கைகூடாதென்று தெரிந்துகொண்டனர். ஆகவே அவர்கள் தம் படைப்பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

சோழநாட்டைச் சார்ந்திருந்த வேளிர் பலர் கரிகாலன் பலம் பெறுவதற்கு முன்பே போரிட்டு அவன் சிங்காதனத்தைக் கைப்பற்ற‌ வேண்டும் என்று நினைத்தனர். இந்த எண்ணம் உடையவர்கள் அங்கங்கே இருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துச் சோழ நாட்டைக் கைப்பற்ற‌ என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். பதினொரு பேர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தனர்.

"நாம் எதிர்த்தால் அதற்குரிய படைப்பலம் நமக்கு இல்லை. பெரிய மன்னன் ஒருவனுடைய உதவி இருந்தாலொழியப் போரை நடத்த இயலாது. அப்படி நாம் வென்றாலும் நம்கீழ்ச் சோழ நாடு அமைதியாக இராது. வேறு வேளிர்கள் நம்மை எதிர்ப்பார்கள். ஆகையால் பேரரசன் ஒருவனுடைய ஆதரவை நாடி நம் சூழ்ச்சியை நிறை வேற்றலாம்" என்ற கருத்து அவர்களிடையே எழுந்தது. முதலில் பாண்டிய மன்னனுடைய உதவி கிடைக்குமா என்பதை அறிய எண்ணினர்.

சில வேளிர்கள் பாண்டி நாடு சென்று,சோழ அரசன் இளையவனென்றும், பேருக்கு அரசனாக இருக்கிறானென்றும், சோழ நாட்டு அரசியல் பொம்மை நாடகமாக இருக்கிற‌தென்றும் சொன்னார்கள். "எவ்வளவோ பாண்டியர்கள் சோழ நாட்டையும் தம் ஆட்சிக் கீழ் வைத்து ஆண்டிருக்கிறார்கள். உங்க‌ளை அந்தப் பாக்கியம் வலிய வந்து அடைய இருக்கிறது. நாங்கள் பதினொருவர் உங்களுக்கு உதவி செய்வோம். சோழ நாட்டு மக்களுக்கு தக்க அரசன் தங்களுக்கு இல்லையே என்ற குறை இருக்கிறது. போர் தொடங்கினால் அவர்கள் நம்மை எதிர்க்க மாட்டார்கள். சிலர் நம் படையில் சேரக்கூட வருவார்கள். இத்தகைய சந்தர்ப்பம் எப்போதும் கிடைக்காது என்று சொன்னார்கள்

பாண்டியன் யோசித்துப் பார்த்தான். தன் படைப்பலத்தில் அவனுக்கே நம்பிக்கை இல்லை. போரைத் தொடங்கிய பிற‌கு,வெற்றி காணா விட்டால் பாண்டி நாட்டின் அமைதிக்கே இடையூறு நேர்ந்துவிடும். சிறிய சிறிய இடங்களை உடைய வேளிர் தங்கள் நாட்டை இழக்கச் சித்தமாக இருக்கலாம். வழிவழி வந்த புகழையுடைய பாண்டிய மன்னன் அவ்வாறு இருக்க முடியுமா? நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று தெரிந்தால் இந்தப் போரை நடத்தலாம், இல்லையானால் சும்மா இருப்பதே நலம்.

பாண்டியனுடைய சிந்தனை இவ்வாறு ஓடியது. அதனூடே மண்ணாசை குறுக்கே வந்தது. "சோழ நாடு நம் கையில் கிடைப்பதென்றால் எத்தனை இலாபம்! சோறுடைய சோணாட்டைப் பெற்றவன் மனித குலம் அத்தனைக்கும் அரசன்போல இருப்பானே! இவ்வளவு பெரிய நாட்டைப் பெறுதற்குரிய சமயம் வந்திருக்கிறது. துணை புரிவதாக வலிய வந்து வேளி பலர் உறுதி கூறுகின்றனர். வலிய வந்த சீதேவியை உதைத்துத் தள்ளுவதா?' இந்த எண்ணம் அவனைப் பின்னும் சிந்தனையில் ஆழச் செய்தது. போரில் வெற்றி காணமுடியுமோ என்ற ஐயமும்,இவ்வளவு அரிய சந்தர்ப்பத்தை இழப்பதா என்ற ஆசையும் அவன் உள்ளத்தே எழுந்து போராடின. ஆசைதான் மிகவும் வலிமை உடையதாக இருந்தது. எவ்வளவு படைகளைப் புதிதாகச் சேர்க்கலாம் என்று யோசித்தான். திடீரென்று புதிய யோசனை ஒன்று தோன்றியது. தன்பால் வந்த வேளிர்களைப் பார்த்துச் சொல்லலானான்:

"நீங்கள் நம்மிடம் வந்ததைப் பாராட்டுகிறோம். போர் செய்வதானால் நம்முடைய பலத்தையும் துணையாக வருபவர் பலத்தையும் மாற்றான் பலத்தையும் சீர்தூக்கிச் செய்யவேண்டும். சோழ நாட்டு மக்கள் எளிதில் நம்மை ஆதரிப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனாலும் எதிர் பார்த்த அளவுக்கு மேலே போர் பெரியதாகி விட்டால் தளராது முன்நின்று போரிடுவதற்கு ஏற்ற பெரிய படை வேண்டும். சிறிது தளர்ச்சியிருந்தாலும் தோல்விக்கு இடம் உண்டு. ஆகவே-"

"போர் வேண்டாம் என்று நினைக்கிறீர்களோ?"

"இல்லை, இல்லை. நீங்கள் இதைப் போலத் தக்க செவ்வி கிடைக்காது என்று சொல்வது நாம் நன்கு உணர்கிறோம். போர் செய்து சோழநாட்டைக் கைப்பற்றுவது நமக்கு உடம்பாடான செயலே. ஆனால், இன்னும் படைப்பலம் சேர்த்துக்கொண்டு போரில் முனைவதே நலமென்று தோன்றுகிறது. "

" சிலகாலம் பொறுத்துப் போர் தொடங்கலாமென்பது தங்கள் கருத்தோ? அதற்குள் கரிகாலன் படைப்பலத்தைச் சேர்த்துக் கொள்ளுவானே!"

"இல்லை, இல்லை. போரை மிக விரைவில் தொடங்க வேண்டியதுதான். தக்க துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். சேரனுடைய துணை கிடைக்குமானால் வெற்றி கிடைப்பது உறுதி. அம் மன்னனிடம் சென்று நம் கருத்தைக் கூறலாம். நாமும் வருகிறோம். அம் மன்னன் துணைபுரிய உடன் பட்டால் அன்றே சோழ அரசன் ஒழிந்தான் என்று நிச்சயம் செய்துகொள்ளலாம். "

பாண்டியன் யோசனை பலித்தது. சேரநாட்டை ஆண்டுவந்த பெருஞ்சேரலாதன் சோழநாட்டின்மீது படையெடுக்க உதவுவதாக ஒப்புக் கொண்டான். அவனே தலைமை பூண்டு போரை நடத்துவதாகக் கூறினான். பதினொரு வேளிரும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று மகிழ்ச்சி கொண்டனர். பாண்டியனும் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானான்.
****************

சோழநாட்டின்மேல் சேரன் படையெடுத்திருக்கிறான் என்ற செய்தி எங்கும் பரவியது. சேரன் தன் நாட்டிலிருந்து படையெடுக்காமல் பாண்டிநாட்டின் வழியே படையைச்செலுத்தி, அந்த நாட்டுப் படையையும் வேளிர் படையையும் சேர்த்துக்கொண்டு தென்திசையிலிருந்து படையெடுத்தான். சோழ நாட்டின் தென்பகுதிகளைக் கைபபற்றிக்கொண்டு வடக்கு நோக்கிப் படையைச் செலுத்தினான். இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே சிந்தித்திருந்த கரிகால் வளவன் ஏற்ற வகையில் படையைத் திரட்டியிருந்தான். அந்தப் படையுடன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டான். பகைப்படை காவிரிப்பூம்பட்டினத்தை முற்றுகையிடும் வரையில் காக்கக்கூடாதென்று வேகமாகச் சென்றான். அவனுடைய மன வலியைக்கண்டு படைத்தலைவர்கள் வியந்தனர். படை வீரர்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகி விட்டது. அங்கங்கே உடல்வலிமை பெற்ற மக்கள் தாமே வந்து படையில் வலியச் சேர்ந்தனர்.

சோழப் பெரும்படையும் சேரபாண்டியர் படைகளும் சந்தித்தன. சோழர் படைக்குத் தலைவன் கரிகாலன் ஒருவனே. மாற்றார் படையிலோ, சேரனும், பாண்டியனும், பதினொரு வேளிரும் தலைவர்கள். அவர்கள் தங்கள் தங்கள் படைக்குத் தலைமை வகித்தார்கள். இருபுறத்துப் படைகளும் சந்தித்தன. போர் மூண்டது; வெண்ணி யென்னும் ஊரில் இரு படைகளும் நின்று போர் செய்தன.

சோழ சரித்திரத்திலே நிகழ்ந்த பெரிய போர்களுள் வெண்ணிப்போர் ஒன்று. ஓர் அரசனை இரண்டு பெரிய மன்னர்களும் பதினொரு குறுநில மன்னராகிய வேளிரும் எதிர்த்தார்கள். சோழ அரசனாகிய கரிகாலனோ இளையவன். ஆனாலும் அவனுடைய விறல் எல்லோரினும் சிறந்திருந்தது. சோழர் படையில் இருந்தவர்களுக்குச் சோழ நாட்டுப்பற்று மிகுதியாக இருந்தது. இரும்பிடர்த் தலையார் சோழநாட்டு மக்கள் உள்ளத்தில் தேச பக்திக் கனல் பொங்கும்படி செய்தார். அதனால் நாள்தோறும் நாட்டு மக்களுடைய ஆதரவு அதிகமாயிற்று.

மாற்றான் படை அளவில் பெரியதாக இருந்தாலும், வெவ்வேறு தலைவரின்கீழ்ப் போரிட்டது. சில சமயங்களில் யார் பகைவர், யார் தம் கட்சியினர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வேளிர்களின் கீழிருந்த படைவீரர்கள் வெறும் கூலிப் படைஞர்கள். அவர்களுக்குத் தேசபக்தியோ வேறு உயர்ந்த கொள்கையோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாகப் போர் நடப்பது சோழ நிலம். சோழ நாட்டில் சோழப் படைக்குத்தான் பலம் அதிகம் என்பதைச் சொல்லவா வேண்டும்? மாற்றார் படைக்கு உணவு முதலியன சுருங்கிவிட்டால் பாண்டி நாட்டிலிருந்தோ சேர நாட்டிலிருந்தோ வர வேண்டும். சோழ நாட்டில் உள்ள மக்கள் மறைவாகவோ, வெளிப்படையாகவோ தமக்கு உதவி புரிவார்கள் என்று வேளிர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடக்கவில்லை. சோழ நாட்டுப் படை ஒருமுகமாகப் போர் செய்தது. கரிகாலன் தெய்வத்தின் திருவருள் பெற்ற தேவன் என்ற எண்ணம் வீரர்களுக்கு இருந்தது. பெரிய யானையின்மேல் இளங்கதிரவன் எழுவது போல அல்லவா போருக்குப் புறப்பட்டு முன்னே நின்றான்? ஆத்தி மாலையைச் சூட்டிக்கொண்டு வீறு பெற்று அவன் புறப்பட்ட வேகம் எல்லா மக்கள் உள்ளத்திலும் வீரக் கனலை மூட்டியது. தானே நேரில் சென்று போரை அந்த இளங் குழந்தை நடத்துவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, அவன் புறப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஆண்மையுள்ள மக்களெல் லாம் படையில் சேர்ந்து புறப்பட்டுவிட்டார்கள்.

போர் கடுமையாக நடந்தது. முதல் முதலில் வேளிர் படையில் சலசலப்பு உண்டாயிற்று. எங்கே தளர்ச்சி உண்டாகிறதோ அந்தப் பகுதியிலே மேலும் மேலும் மோத வேண்டுமென்ற தந்திரம் கரிகாலனுக்குத் தெரியும். வேளிர்படை இருந்த பக்கத்தில் ஊன்றித் தாக்கினான். என்ன இருந்தாலும் கூலிப் படைதானே? வரிசை வரிசையாகக் கால் வாங்கத் தொடங்கியது. பலர் சோழப் படைவீரருடைய படைக்கலங்களுக்கு இரையாயினர். வேளிர் பதினொருவரும் ஒருவர்பின் ஒருவராக மாய்ந்தனர். அடுத்தபடி பாண்டியன் படையைத் தாக்கினான் கரிகாலன். சேரன் படையோடு தளர்வின்றி ஒருபால் சோழப் படையினர் போரைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கே யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று அறியவொண்ணாத நிலை இருந்தது. பாண்டியன் படையை அதிக வேகத்தோடு எதிர்ப்பதில் கரிகாலன் முனைந்தான். பாண்டி நாட்டுப் படையும் தளர்ந்தது. பாண்டியன் பட்டான்.

இப்போது பின்னும் ஊக்கத்தோடு சோழ மன்னன் சேரப் பெரும்படையை எதிர்க்கத் தொடங்கினான். பல போரில் வென்ற சேரன் பெருஞ் சேரலாதனுக்கு முன்னே கன்னிப் போரைச் செய்யும் கரிகாலன் நின்றான். சேரனுக்குப் படைப் பலமும், அநுபவமும் துணை நின்றன. கரிகாலனுக்கு வீரரின் அன்பும், திருவருளும், இணையில்லாத ஊக்கமும், அறிவுப்பலமும் துணை நின்றன. சோழப் படையில் இருந்த தளபதிகள் குலை நடுங்கினர். கரிகாலனுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென்று பயந்தனர். கரிகாலனோ மிடுக்குடன் போரிட்டான். கடைசியில் அவன் விட்ட அம்பு பெருஞ்சேரலாதனுடைய மார்பிலே பாய்ந்தது. அவன் வீழ்ந்தான். வீழ்ந்தவனை அவனுடைய படைத்தலைவர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்ந்தவர்களோடு போர் செய்தல் அறமன்று. ஆகவே, போர் நின்றது. சோழ மன்னனுக்கு வெற்றி கிடைத்தது.

பெருஞ்சேரலாதன், அம்பு பட்டு வீழ்ந்தவன் இறந்து படவில்லை. அவனை வஞ்சிமா நகரம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். கரிகாலன் விட்ட அம்பு அவன் மார்பைத் துளைத்து உடம்பை ஊடுருவி முதுகு வழியே சென்றுவிட்டது. சுத்த வீரர்களுக்கு மார்பில் புண் இருப்பது அழகு; முதுகில் புண் இருப்பது இழுக்கு. போரில் புறங் காட்டி அப்போது பாய்ந்த அம்பினால் புறப்புண் அமைதல் வீரத்துக்கு இழுக்கு என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த வகையிலும் புறத்தே புண் உண்டானால் அதனாலே வாழ்தல் தவறு என்று பெருஞ்சேரலாதன் எண்ணினான். "அந்த அம்பு என் உயிரை வாங்காவிட்டாலும் என் புறத்தே புண்ணை நிறுத்திவிட்டுப் போயிற்று. புறப்புண்ணை வைத்துக்கொண்டு வாழமாட்டேன். விரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்" என்றான். உடன் இருந்தவர்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார்கள். மான வீரனாகிய சேரன் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வடக்கிருந்து உயிர் நீக்க நிச்சயித்துவிட்டான். அப்படியே தன் நகரத்துக்கு வடக்கே நெடுந்தூரம் சென்று ஓரிடத்தில் அமர்ந்து உணவும் நீரும் இன்றி உடம்பை வாட்டிப் புகழுடம்பு பெற்றான்.

கரிகாலன் கன்னிப் போரில் வெற்றி மகளைக் கைப்பற்றினான். அவன் புகழ் எங்கும் பரவியது.
-----------------------------------------------------------


5. இமயத்தில் புலி


கரிகாலன் சின்னஞ் சிறு பிராயத்திலேயே சேர பாண்டியர்களை வென்றதனால் சோழ நாட்டு மக்களுக்கு அவனிடத்தில் அளவற்ற அன்பு உண்டாயிற்று. அவனுக்கும் இனி எத்தகைய பகை வந்தாலும் தன் நாட்டு மக்களின் உதவியால் வென்று விடலாம் என்ற நம்பிக்கை வன்மை பெற்றது.

ஆனால் பகைவர்கள் சும்மா இருப்பார்களா? மீண்டும் தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்\ கொண்டிருந்தனர். ஒன்பது குறுநில மன்னர்கள் கரிகாலனுக்கு மாறாகச் சூழ்ச்சி செய்தார்கள்; "இப் போதுதான் பெரிய போர் நடைபெற்றிருக்கிறது. வெற்றி உண்டான களிப்பில் படை வீரர்களெல் லாம் மூழ்கியிருக்கிறார்கள். கடுமையாகப் போர் செய்தமையால் அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு ஓய்வு வேண்டியிருக்கும். இந்தச் சமயத்தில் நாம் எதிர்த்தால் நம் கருத்து நிறைவேறலாம். இனி நமக்கு யாரும் பகைவர் இல்லை என்ற இறுமாப்போடு இந்தச் சிறு பையன் இருக்கிறான். இவனுடைய வாழ்வைக் குலைக்க வேண்டும்" என்று பேசினார்கள்.

வெண்ணிப் போர் நடந்த சில மாதங்களில் மீண்டும் சோழ நாட்டில் போர் தொடங்கியது. இந்த முறை வாகை என்னும் இடத்தில் போர் நிகழ்ந்தது. முடியுடை மன்னர் யாரும் எதிர்க்கவில்லை. பல காலமாக மண்ணாசையை வளர்த்து வந்த சிற்றரசர்கள் ஒன்பது பேருமே எதிர்த்தனர். ஒரு முறை வெற்றி கண்ட சோழ அரசன் விடுவானா? சோழப் படையின் ஊக்கத்தில் சிறிதும் குறைவே இல்லை. அவர்கள் எத்தகைய போருக்கும் ஆயத்தமாக இருந்தனர்.

வெண்ணியில் நிகழ்ந்த போரிலே வெற்றி பெற்றவர்களுக்கு இந்தப் போர் எம்மாத்திரம்? மிக எளிதில் வாகைப் போர்க்களத்தில் கரிகாலன் வாகை அணிந்தான். ஒன்பது குறுநில மன்னர்களிற் சிலர் மாய்ந்தனர்; சிலர் ஓடி ஒளிந்தனர்.

கரிகாலன் இரண்டாவது முறையும் வெற்றி பெற்றுக் காவிரிப்பூம்பட்டினத்தை வந்து அடைந்தான். மீட்டும் மீட்டும் பகை மன்னர் எதிர்பாராமல் எதிர்த்தால் அடுத்தடுத்துப் போர் செய்ய நேருமே என்ற யோசனை அவனுக்குத் தோன்றியது. சோழ நாட்டின் வளப்பத்தைப் பெருக்குவதற்கு எத் தனையோ காரியங்கள் செய்ய வேண்டியிருந்தன. முடியை அணிந்தவுடனே வில் ஏந்தும் நிலை வந்தது, கரிகாலனுக்கு.

வேண்டுமென்று அவன் போர் செய்யவில்லை. பகை மன்னர்களே அவனைப் போரில் ஈடுபடச் செய்தார்கள். அவனுடைய வீரமும், சோழ நாட்டுப் படைத் திறமும் வெளிப்படுவதற்குப் பகைவர்களே காரணமாக இருந்தனர். இனியும் குறும்பு செய்துகொண்டே இருந்தால் அமைதியாக அரசாட்சி செய்ய முடியாது. ஆதலால் கையோடு கையாகப் பகைவர்களை அடியோடு வேரறுக்கும் வேலையை முதலில் முடித்து விடவேண்டு மென்று வளவன் உறுதி பூண்டான். யார்யார் முன் நாட்களில் குறும்பு செய்தார்களோ அவர்களைப்பற்றிய செய்திகளை விசாரித்து அறிந்தான். கூட்டம் கூட்டமாகச் சில இனத்தினர் நாட்டில் கலகங்களை விளைத்து வந்தனர். அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துகொண்டான். சூட்டோடு சூடாகத் தன் படைப்பலத்தைப் பின்னும் பல மடங்கு அதிகப் படுத்திக்கொண்டான். இரண்டு போர்களில் வெற்றி பெற்றுவிட்ட உவகையினால் படையில் பல வீரர் சேர்ந்தனர். சோழ அரசன் சென்ற இடமெல்லாம் வெற்றி பூணுவான் என்ற உறுதி அவர்களுக்கெல்லாம் இருந்தது. படை வரவரப் பெருகியது.

கரிகாலன் உள்ளம் பூரித்தான். எயினர், நாகர், ஒளியர் என்ற கூட்டத்தினர் அங்கங்கே இருந்து தம்மைச் சூழ்ந்த பகுதிகளில் பயமுறுத்தி மக்களை அடக்கி ஆண்டு வந்தனர். அத்தகைய கூட்டத்தினரை யெல்லாம் முதலில் அடக்கினான். பாண்டியனும் சேரனும் வெண்ணிப் போரில் தோல்வியுற்றாலும், அவர்கள் பரம்பரையினர் மீட்டும் பகைத்துப் போர் புரியக் கூடுமல்லவா? ஆதலின், அந்த நாடுகளுக்கெல்லாம் சென்று அங்குள்ளவர்கள் வழிபட, அந்த மன்னர்களைத் தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களாகச் செய்து கொண்டான்.

மேலும் மேலும் வெற்றி கிடைக்கவே, திருமா வளவனுக்கு ஊக்கம் எல்லையின்றி உயர்ந்து நின்றது. வெற்றி மிடுக்கு, பரந்த படை, பழம் பெருமை இத்தனையும் இருக்கும்போது அவன் நினைத்தால் எந்தக் காரியந்தான் கைகூடாது? தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இனிப் பல ஆண்டுகளுக்கு எதிர்த்துப் போரிட முன்வர மாட்டார்கள் என்ற நிச்சயம் வளவனுக்கு ஏற்பட்டது. அப்படியானால் இவ்வளவு படையை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

தமிழ் நாட்டில் பகையின்றிச் செய்து கொண்டதுபோல, வட நாட்டிற்கும் சென்று யாரேனும் பகைமை காட்டினால் வென்றும், நட்புப் பூண்டால் ஏற்றும் வரலாம் என்ற யோசனை கரிகாலனுக்கு அப்போது உண்டாயிற்று. அமைச்சர்களையும் சான்றோர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து அவர்களுடன் தனியிருந்து ஆலோசனை செய்தான். படைத்தலைவர்கள் யாவரும் வட நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்பதை ஆதரித்தனர். அவர்களுடைய தோள் தினவு இன்னும் தீரவில்லை. மன்னனும் தளபதிகளும் அவ்வளவு ஊக்கத்துடன் இருக்கும்போது அமைச்சர்கள் தடை கூற நியாயம் ஏது? ஆகவே, வடநாட்டுக்குப் படையுடன் செல்வதென்று முடிவு செய்தார்கள்.

நாளும் கோளும் பார்த்துப் புண்ணிய திசையாகிய வடக்கே நோக்கிப் புறப்பட்டான் கரிகாலன். நேரே ஒவ்வொரு நாடாகக் கடந்து சென்றான். இமயம் அளவும் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத் திண்மை எல்லாவற்றையும் சாதிக்கத் தக்கதாக இருந்தது. படைகள் தடையின்றிச் சென்றன. எங்கும் போரே இல்லை.

கரிகாலன் வேகம் தடைப்படவில்லை. போய்க் கொண்டே இருந்தான். கடைசியில் இமயத்தை அடைந்தான். வானளாவிய இமயமலையைக் கண்ட வுடன் அவன் உள்ளத்தில் களி துளும்பியது. சோழர்களின் முன்னோர்களில் யாரும் செய்யாத பெரிய காரியத்தை அவன் செய்துவிட்டான். பகையரசர் யாரும் இன்றி வழியிலே உள்ள நாட்டி னர்கள் அன்புடன் உபசரிக்க, இமாசலப் படையெடுப்பு இமாசல யாத்திரையாக முடிந்தது. இந்தச் சிறப்பை உலகம் என்றும் நினைவு கூர்தற்கு ஏற்றபடி தான் சென்றடைந்த இமாசலப் பகுதியில் தன் புலிக்கொடியைச் சோழன் நாட்டினான். பல இடங்களில் தன்னுடைய புலிக்கொடியின் உருவத்தைக் கல்லிலே பொறிக்கச் செய்தான். இவ்வாறு சோழன் கரிகாலன் சென்று புலி பொறித்த இடம் சிக்கிம் பகுதியில் உள்ளதென்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்வார்கள். அந்தப் பகுதியில் சோழ மலைத் தொடர் என்றும், சோழர் கணவாய் என்றும் இரண்டு இடங்கள் வழங்கி வருகின்றனவாம்.

இமயத்தில் புலி பொறித்த ஏற்றத்துடன் கரிகாலன் தமிழ்நாட்டை நோக்கி மீண்டான். அதுகாறும் அவனை எதிர்க்காமல் விட்ட மன்னர்களில் சிலருக்கு அவன் இமாசலத்தில் தன் அடையாளத்தை நாட்டினான் என்ற செய்தி சினத்தை மூட்டியது. கரிகாலன் திரும்பி வருகையில் வச்சிர நாட்டைக் கடக்க வேன்டி வந்தது. அந்த நாட்டு வேந்தன் கரிகாலனை எதிர்த்தான். இப்போது பண்டில்கண்ட் என வழங்கும் பகுதி அது. அங்கே நிகழ்ந்த போரில் கரிகாலனே வென்றான். வச்சிர நாட்டு மன்னன் கரிகாலனுக்குப் பணிந்ததோடு தன் தோல்விக்கு அடையாளமாக ஏதேனும் ஒரு பொருளைக் கொடுக்க முன்வந்தான். கரிகாலனது வெற்றியை வெளிப் படுத்தும் சின்னமாக அது சோழ நாட்டில் விளங்க வேண்டும் என்பது சோழப் படைத்தலைவர்கள் எண்ணம். முத்தினால் பந்தர் அமைப்பதாக வச்சிர நாட்டு மன்னன் ஒப்புக்கொண்டான்.

வச்சிர நாட்டினின்றும் வெற்றி முழக்கத்தோடு புறப்பட்ட கரிகாலனை மகத நாட்டு மன்னன் எதிரிட்டுப் போர் செய்தான். அவனும் தோல்வியுற்றான். காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பட்டி மண்டபத்தை அமைத்துத் தருவதாக அவன் வாக்களித்தான்.

வச்சிர நாட்டிலும் மகத நாட்டிலும் கரிகாலன் பெற்ற வெற்றியைக் கேட்ட பிறகு இடைப்பட்ட நாடுகளில் உள்ள யாரும் கரிகாலனை எதிர்க்கத் துணியவில்லை. யாவரும் அன்புடன் உபசரித்து வழிவிட்டனர். அவந்தி நாட்டை வளவன் அடைந்த போது அந்த நாட்டு மன்னன் கரிகாலனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றான். தக்க வண்ணம் உபசரித்து அவனோடு நட்புப் பூண்டான். அந்த நட்புக்கு அறிகுறியாகக் காவிரிப்பூம் பட்டினத்தில் தோரணவாயில் ஒன்றைச் சமைப்பதற்கு இசைந்தான்.

இத்தகைய சிறப்புகளையெல்லாம் பெற்ற கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தை வந்தடைந்தான். நகர மக்கள் அவனை வரவேற்று உபசரித்துக் களிக்கூத்தாடினர். சோழ நாடு முழுவதும் ஆனந் தக் கடலில் அமிழ்ந்தது. தமிழ் நாட்டில் உள்ள அனைவருமே தமிழ் நாட்டு அரசன் வடக்கே சென்று திக்கு விசயம் செய்து வந்தான் என்பதை எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.

முன்பு வாக்களித்தபடி வச்சிர நாட்டு மன்னன் குவை குவையாக முத்துக்களையும் கலைஞர்களையும் அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்து அரண்மனையில் பெரிய முத்துப் பந்தர் ஒன்றை அமைக்கச் செய்தான். அந்தப் பந்தர் வச்சிர நாட்டுக் கலை முறையில் அமைந்து விளங்கியது. வச்சிர நாட்டு மன்னனைக் கரிகாலன் அடிப்படுத்தியதன் சின்னமாக அது நிலவியது. அவ்வாறே மகத மன்ன தன் நாட்டுச் சிற்பியர்களை அனுப்பிக் காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு பெரிய பட்டி மண்டபத்தை அமைக்கச் செய்தான். புலவர்கள் கூடி ஆராய்ச்சி செய்யும் மண்டபத்திற்குப் பட்டி மண்டபம் என்று பெயர். மதுரைமா நகரிற் சங்க மண்டபம் இருந்தது போலக் காவிரிப்பூம்பட்டினத்திலும் ஓர் ஆராய்ச்சி மண்டபம் எழும்பியது. மகத வேந்தன் தன் நாட்டுப் பொருள்களால் அந்த மண்டபத்தை அணி செய்தான். புலவர் கூடும் இடமாய், மகத நாட்டுச் சிற்பத்திற்கு உறைவிடமாய், கரிகாலன் மகத மன்னனைப் பணிவித்ததைக் குறிக்கும் அடையாளமாய்ப் பட்டி மண்டபம் இலங்கியது. கரிகாலனிடம் நட்புப் பூண்ட அவந்தியரசன் இன்னும் பெரிய தொன்றை நாட்டினான்; பூம்புராகிய காவிரிப்பூம் பட்டினத்தின் முகப்பில் மிக உயர்ந்த தோரண வாயிலை அமைக்கச் செய்தான். யார் வந்தாலும் நகரத்தில் நுழையும்போதே அதன் அழகு அவர் கண்ணைக் கவர்ந்தது. சோழ மன்னனுடைய புகழ் வட நாடெல்லாம் பரவியிருப்பதை அந்தத் தோரண வாயில் ஓங்கி உயர்ந்து நின்று அறிவித்துக்கொண்டிருந்தது.

ஒருவாறு தன்னுடைய வீரத்தால் பகையை ஒடுக்கி நான்கு திசையிலும் புகழ் பரப்பிய கரிகாலன் சிங்காதனத்தில் அமர்ந்து தன் நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானான்.
-----------------------------------------------------------


6. உறையூரின் தோற்றம்


"தமிழ் நாட்டில் இதுகாறும் ஆண்ட மன்னர்களில் இவனைப்போல வீரமும் புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை" என்பதே தமிழுலகு முழுவதும் பேச்சாக இருந்தது. சோழப் பேரரசை மீண்டும் நிலை நாட்டியதோடு வட நாட்டுக்கும் சென்று, இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய திருமா வளவனுடைய புகழ் கடல் கடந்து சென்றது. இயற்கையாகவே சோழநாட்டு வளத்தைக் காணவும், சோழ நாட்டுக் கரும்பையும், நெல்லையும், துகிலையும், கலனையும் வாங்கிச் செல்லவும் அயல் நாட்டு மக்கள் வருவார்கள். கரிகாலன் காலத்தில் பின்னும் அதிகமாக வந்தார்கள்.

சோழ நாட்டின் வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் கரிகாலன் ஈடுபட எண்ணினான். முதலில் காவிரியின் நீரை ஒழுங்குபடுத்த நினைத்து அதன் இருமருங்கும் கரை கட்டத் தொடங்கினான். சோழ நாட்டுக்கு மேற்கே உள்ள இடங்களிலும் ஆற்றுக்குக் கரை கட்ட வேண்டும். கரிகாலன் ஆங்காங்கு உள்ள மன்னர்களுக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தங்கள் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரிக்கு உறுதியான கரையைக் கட்டிவிட்டால் எல்லாருக்கும் ஊதியம் உண்டென்பதை அவன் எடுத்துக் காட்டினான். கரை கட்டும் வேலையில் உதவச் சோழ நாட்டிலிருந்து தொழிலாளிகளையும் அனுப்புவதாகத் தெரிவித்தான். அரசர்கள் யாவரும் அவனுடைய விருப்பத்துக்கு இணங்கிக் கரையெடுக்க முற்பட்டார்கள்.

அந்த மன்னர்களில் உருத்திரன் என்பவன் ஒருவன். அவன் முதலில் கரிகாலனது வேண்டு கோளைச் சட்டை செய்யவில்லை. நெற்றியில் கண் உடைய உருத்திரமூர்த்தியின் வழிவந்தவர்கள் தன் குலத்தவர் என்று பெருமை பேசிக்கொள்பவன் அவன். அதற்கு அறிகுறியாக நெற்றியில் கண்ணைப் போன்ற குறியை அணிந்துகொள்ளும் வழக்கம் அந்த மரபினருக்கு இருந்தது.

உருத்திரன் தன் வேண்டுகோளுக்கு விடை அளிக்காமல் இருப்பது கரிகாலனுக்குத் தெரிந்தது. அந்த அரசனை அடக்கி விடுவதென்பது மிகவும் சிறிய காரியம். இதற்காகப் படை எடுப்பதா? கரிகாலன் ஓர் ஓவியனை அழைத்தான். உருத்திர னைப்போல ஒரு படம் எழுதச் சொன்னான். அதில் நெற்றிக் கண்ணையும் அமைக்கச் செய்தான். கரிகாலனிடம் அந்தப் படம் சென்றது. எதற்காக இந்தப் படம் எழுதச் சொன்னான் அரசன் என்பது யாருக்கும் தெரியாது. படத்தை இடக்கையில் எடுத்தான் திருமா வளவன். வலக்கையில் வேலை எடுத்தான். அந்தப் படத்தில் காட்டியுள்ள நெற்றிக் கண்ணை வேலால் குத்தினான். ஓவியக் கிழியில் நெற்றிக் கண் உள்ள இடம் பொத்தலாயிற்று. "இந்தா, இந்தப் படத்தை உருத்திரனுக்கு அனுப்பி வை; அவன் இதைப் பார்த்துப் புத்தியுள்ளவனாக இருந்தால் பிழைக்கட்டும்; இல்லையானால் படத்துக்கு நேர்ந்த கதி அவனுக்கும் நேரும்" என்று சொல்லி அனுப்பினான்.

படத்தை உருத்திர‌னிடம் சேர்ப்பித்தார்கள். சிறந்த முறையில் அமைந்த ஓவியத்தைக் கண்டு அவன் முதலில் வியந்தான். அதில் நெற்றிக் கண்ணைக் குத்தியிருப்பதைப் பார்த்தான். "நெற்றியிலே கண் முளைத்துவிட்டதாகக் கர்வம் அடையாதே!அதை ஒரு கணத்தில் வேலால் குத்தி விடுவேன்!" என்று திருமா வளவன் அந்தப் படத்தின் மூலம் எச்சரிப்பதாக அவன் உணர்ந்தான். கரிகாலனைப் பகைத்துக்கொண்டு உலகில் வாழ முடியுமா? பாண்டியனும் சேரனும் பிற அரசர்களும் சாதிக்க முடியாததை இந்த சிறிய அரசன் சாதிக்க இயலுமா?-அவன் நன்றாக யோசனை செய்தான். இறுதியில் தானும் காவிரிக்கரை கட்டும் பணியில் ஈடுபடுவதாகச் செய்தி சொல்லி அனுப்பினான்.

காவிரிக்கு ஒழுங்கான‌ கரை அமைந்தது. சோழ நாட்டின் வளம் பின்னும் பெருகும் என்ற ந‌ம்பிக்கை யாவருக்கும் உண்டாயிற்று. கரை கட்டி முடிந்த பிறகு ஒரு முறை அந்தக் கரையைக் காண வேண்டும் என்ற நினைவு சோழ மன்னனுக்கு எழுந்தது. ஒரு நாள் தன் பட்டத்து யானையின் மீது ஏறிப் படைவீரரும் பிறரும் புடை சூழப் புறப்பட்டான். கரை பெற்ற காவிரியின் அழகைப் பார்ப்பதோடு கரையற்ற சோழநாட்டு மக்களின் பேரன்பையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவனை அன்புடன் வர வேற்றனர். அவனுடைய பெருமைகளைக் கதை கதையாக மக்கள் நாடு முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்தக் கதைகளின் தனி நாயகனை நேரே பார்க்கும்போது அவர்களுக்கு உண்டான ஆனந்தத்துக்கு அளவேது? கரை ஏது? அந்தப் பகுதிகளில் உள்ள ஊர்க்காரர்களெல்லாம் ஆளிட்டுக் கரையை உறுதிப்படுத்தி யிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பொன் கூலி கொடுத்துத் தொழிலாளர்களை வைத்து இந்தக் காரியத்தைச் செய்தாலும், இவ்வளவு சிறப்பாக நிறைவேறி யிராது. அந்த அந்த ஊர்க்காரர்கள் தங்கள் வயல்களில் பெருகப்போகும் வளத்தை நினைந்து, இந்த வேலை தம்முடைய சொந்த வேலை என்றே எண்ணி ஊக்கம் கொண்டார்கள். ஆகையால் கரை அருமையாக அமைந்தது.

கரிகாலன் கரையையும் காவிரியையும் சோழ நாட்டையும் நாட்டு மக்களையும் கண்டு கண்டு உவகை அடைந்தான். இறைவன் திருவருளை வியந்தான். ஒவ்வோர் ஊராகத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். திருச்சிராப்பள்ளிக்கு வந்தான். அங்கே திருவரங்கநாதனையும் திருவானைக்காவுடைய பிரானையும் தாயுமானவரையும் வழிபட்டு இன்புற்றான். மீண்டும் பட்டத்து யானையின்மேல் ஏறி மேற்குத்திசை நோக்கிப் புறப்பட்டான்.

சிறிது தூரம் வந்திருப்பான். அப்போது பெரிய சேவல் ஒன்று அயலில் ஓரிடத்திலிருந்து ஓடி வந்தது. கரிகாலன் ஏறிச் செல்லும் பட்டத்து யானை சற்றே நின்றது. அந்தக் கோழி படபட வென்று சிறகை அடித்தது. கழுத்து மயிரைச் சிலிர்த்துக்கொண்டது. வெகு வேகமாக ஓடிவந்து கரிகாலன் ஊர்ந்து சென்ற பட்டத்து யானையின் காலைக் கொத்தியது. அது வந்த வேகமும் கொத்திய கோபமும் யானையைத் திடுக்கிடச் செய்துவிட்டன. மாறி மாறி நாலு காலிலும் கொத்தியது, கோழி. கரிகாலன் அதைப் பார்த்து மருண்டான். உடன் இருந்த வீரர்கள் கோழியை அடிக்க முயன்றபோது கரிகாலன் அவர்களைக் கை அமர்த்தினான்.

சில கணம் இப்படி யானையைத் தாக்கிய கோழி பிறகு ஓடி மறைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி கரிகாலனுடைய உள்ளத்தைக் கலக்கியது. அவன் யானை மீதிருந்து கீழே இறங்கினான். பெரிய போரிலும் மயங்காத யானை மயங்கி நிற்பதும், அதன் காலில் கோழியின் மூக்குப் பட்ட இடங்களில் இரத்தம் கசிவதும் கரிகாலன் கண்களிலே பட்டன. அவனுக்கு அவமான உணர்ச்சியோ கோபமோ உண்டாகவில்லை. வியப்புத்தான் உண்டாயிற்று. சின்னஞ் சிறு கோழி இவ்வளவு பெரிய யானையை, மக்கள் புடைசூழ்ந்திருக்கும் சமயத்தில் தைரியமாக வந்து கொத்துகிறதே! அதற்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்! இந்தக் கோழியே இவ்வளவு வலிமை உடையதானால் இந்தப் பக்கத்து மனிதர்கள் எப்படி இருப்பார்கள்! இந்த நிலத்தில் ஏதோ தனிச் சிறப்பு இருக்கிறது' என்று கரிகாலன் எண்ணலானான்.

உடன் வந்தவர்களைக் கொண்டு அங்கே அருகில் ஏதேனும் ஊர் இருக்கிறதா என்று விசாரிக்கச் சொன்னான். அருகில் உறையூர் என்ற சிறிய ஊர் இருப்பதாகத் தெரிய வந்தது. 'இந்தப் பூமி வீரம் செறிந்தது. இந்தக் கோழி நம்முடைய போக்கைத் தடுத்தது இறைவன் செயலே. இதனால் நம்முடைய ஊக்கம் குறையக் கூடாது. இந்த இடத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பல இடங்களைப் பார்த்து வரும் நமக்கு இந்த இடத்தின் சிறப்பைப் புலப்படுத்தவே திருவருள் இப்படிச் செய்ததுபோல் தோன்றுகிறது' என்று அவன் சிந்தித்தான்.

அரசர்களுக்குக் கடற்கரை நகரம் மாத்திரம் சிறந்திருந்தால் போதாது. உள் நாட்டிலும் ஒரு நகரம் சிறப்பாக அமையவேண்டும். வியாபாரம் முதலியவற்றிற்குக் கடற்கரை நகரம் வசதியாக இருந்தாலும் கோட்டை கொத்தளங்களுடன் அமைய உள் நாட்டு நகரம் ஒன்றும் வேண்டும். இத்தகைய எண்ணம் கரிகாலனுக்கு முன்பே இருந்தது. ஆகவே, உள் நாட்டிலும் ஓர் இராச தானி நகரத்தை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. எந்த நகரத்தைத் தேர்ந் தெடுப்பது? கரிகாலன் ஒரு முடிவுக்கும் வராமல் இருந்தான்.

நடுவழியில் கோழியால் யானை தாக்குண்டு யாவரும் செயலற்று நின்ற இப்போது, கரிகாலன் உள்நாட்டு நகரத்தைப்பற்றி உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான். 'இறைவன் இந்த இடம் சிறந்தது என்று கோழியின் வாயிலாகக் குறிப்பிடுகிறான். இந்த நிலத்தின் பெருமையை நாம் கண்கூடாக உணர்ந்தோம். இதுகாறும் சில மக்கள் உறையும் இந்தச் சிற்றூர், இனிச் சோழ மன்னர் உறையும் ஊராகவும் விளங்க வேண்டும்' என்று தீர்மானித்தான்.

மேலே மிக்க வேகமாகக் காவிரிக் கரையைப் பார்த்துவிட்டுப் புகார் நகரம் அடைந்தான். நாட்டின் வளத்துக்கு உதவியாகக் காவிரிக்கரை ஒழுங்குபட்டது. இனி நகரம் ஒன்றை அமைக்கும் வேலையில் முனைந்தான் கரிகால் வளவன்.

கரிகாலன் நினைக்கும் காரியம் சிறப்பாக நிறை வேற என்ன தடை? சோழநாடு முழுவதுமே உறையூர் நிர்மாணத்தில் ஈடுபட்டதென்றுதான் சொல்லவேண்டும். வெறும் மரமடர்ந்த காடாக இருந்த இடம் மாடமாளிகை கூடகோபுரங்கள் நிரம்பிய நகரமாயிற்று. அழகிய தெருக்கள், அலங் காரமான பொழில்கள், எழில் நிரம்பிய முடுக்குகள் அமைந்தன. அழகான அரண்மனையையும் கட்டினார்கள். உறையூர் பெரிய நகரமாகிவிட்டது.

கரிகாலன் நல்ல நாளில் உறையூரில் உள்ள அரண்மனையில் புகுந்தான். அந்த மாநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினான். சோழ நாட்டின் கடற்கரைப் பெருநகரம் காவிரிப்பூம்பட்டினம். அதற்குச் சிறிதும் அளவிலும் அமைப்பிலும் குறைவற்ற உள்நாட்டு இராசதானி உறையூர். கரிகாற் சோழன் இரண்டு நகரங்களிலும் மாறி மாறி வாசம் செய்து வந்தான்.

கோழியினால் குறிப்பிக்கப் பெற்ற இடத்தில் எழுந்த நகரமாதலின் அதற்குக் கோழி என்ற பெயர் அமைந்தது. கோழியின் மூக்கினால் யானை தடைப்பட்டமையால் அந்நகரில் உள்ள சிவாலயத்துக்கு மூக்கீச்சரம் என்ற பெயர் வழங்கியது. கரிகாலன் பகைவரை வென்றான்; காவிரிப்பூம் பட்டினத்தை அழகு படுத்தினான்; காவிரிக்குக் கரை கட்டினான்; உறையூரை நிறுவிப் பெருநக ராக்கினான். சோழ நாட்டின் சிறப்பை உலகமெல்லாம் போற்றியது.

அவனுடைய தந்தை அழுந்தூர் வேளின் மகளை மணம் செய்துகொண்டான். அதுபோலவே அவனும் வேளாண் செல்வர் ஒருவருடைய மகளை மணம் புரிந்துகொள்ள எண்ணினான். சீகாழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்த வேளாண் செல்வர் ஒருவர் இருந்தார். அவருடைய திருமகளைக் கரிகாலன் மணந்தான். பராக்கிரமத்தாலும், பெருஞ் செயலாலும் கரிகாலன் தெய்வத்துக்குச் சமானமாய் உள்ளவன். அவனுக்கும் நமக்கும் நெடுந்தூரம் என்று ஒரு வகையில் எண்ணினர் மக்கள். ஆனாலும் அவ்வளவு தூரத்தில் இருப்பதற்குரிய அவன், கருணையினால் தெய்வம் எளியருக்கும் எளியனாய் வருவது போலத் தன் அன்பினால் குடிமக்களுக்குச் சமீபத்தில் உள்ளவனாக, அவர்களுடைய உள்ளக் கோயிலில் உறைபவனாக விளங்கினான். அவன் நாங்கூர் வேளின் மகளை மணந்துகொண்ட செயல் இந்த அன்பையும் அணிமையையும் பின்னும் அதிகமாக்கியது.
-----------------------------------------------------------


7. கிழக் கோலம்


கரிகால் வளவனுடைய ஆட்சியில் அறமும் பொருளும் இன்பமும் களிநடம் புரிந்தன. காவிரிக்குக் கரை கட்டிய பின் அந்த ஆற்றின் நீர் சோழ நாட்டுக்கு மிகுதியாகப் பயன்பட்டது. 'சோறுடையது சோழ வளநாடு' என்று மற்ற நாடுகளில் உள்ளவர்களெல்லாம் புகழத் தொடங்கினார்கள். ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கலம் நெல் விளைந்தது. ஒரு பெண் யானை படுத்திருக்கும் இடத்தில் விளையும் நெல்லால் ஏழு களிறுகளைக் காப்பாற்றும்படியாகச் சோழ நாட்டின் நிலவளம் இருந்தது. பல காலமாக நெல் விளையாத இடங்களெல்லாம் இப்போது நெல் வயலாக மாறின. அந்தப் புதிய நிலங்களில் விளைந்த விளைவு மற்ற இடங்களைவிட அதிகமாக இருந்தது. காவிரி நீர் வண்டலோடு வந்து வயல்களிலே பாய்ந்ததால் எருவென்று தனியே போட வேண்டிய அவசியமே இல்லாமற் போயிற்று.

காவிரிப்பூம் பட்டினத்தில் புறநாட்டிலிருந்து வந்த மக்கள் சோழ நாட்டுப் பொருள்களை வாங்கித் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். யவனர் பலர் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்து வியாபாரம் செய்தனர். தமிழ் நாட்டிலிருந்து மிளகு, ஏலம், சாதிக்காய், பட்டு, துகில், மயில் தோகை முதலிய பண்டங்களை வாங்கித் தங்கள் நாட்டுக்கு அனுப்பினார்கள். தங்கள் நாட்டிலிருந்து பலவகையான விளக்குகளை வருவித்து விற்றார்கள். பல யவனர்கள் அரண்மனையிலும் பிற இடங்களிலும் வேலை செய்து வந்தார்கள். கப்பல் வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

உறையூரில் கரிகால் வளவன் ஒரு நியாய சபையை அமைத்தான். அந்தச் சபை அறங்கூறவையம் என்ற பெயரோடு விளங்கியது. மக்கள் அதில் தங்கள் தங்களுக்குப் பிறரால் நேர்ந்த துன் பங்களை முறையிட்டுக் கொள்வார்கள். அந்த அவையத்தில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் இவற்றாற் சிறந்த முதியவர்களைக் குழுவினராக அரசன் நிறுவினான். பெரும்பாலும் அறுபது ஆண்டுகள் கழிந்த மாந்தர்களே அறங்கூறவையத்திலே இருந்தார்கள்.

எந்த வகையான வழக்கானாலும் நன்றாகக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யும் சிறப்பு அந்த அறங்கூறவையத்துக்கு அமைந்தது. அவையத்துக்குத் தலைவனாகக் கரிகாலன் இருந்தான். அங்கே வந்த வழக்குகளெல்லாம் நியாயமாகவே தீர்ந்தமையால் அந்த அவையின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது.

ஒரு நாள் சோழநாட்டின் ஒரு மூலையிலிருந்து சில முதியவர்கள் அறங்கூறவையத்தை நாடி வந்தார்கள். அறிவும் அநுபவமும் சான்ற முதியவர்கள் அந்த அவையத்தில் இருந்து நியாயத்தை நிலைநாட்டுகிறார்கள் என்பதைக் கேள்வியுற்றவர்கள் அவர்கள். அவர்கள் அறங்கூறவையத்துக்கு வந்தபோது வேறு ஒருவருடைய வழக்குப் பற்றிய ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தது. வந்த முதியவர்கள் அவையத்தில் உள்ளவர்களைப் பார்த்தார்கள். சுற்றிலும் பழுத்த சான்றோர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்களிடையே மிக்க இளமையை உடைய ஒருவன் அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாரும் அல்லன்; கரிகாலன்தான். அறங்கூறவையத்தில் அறக் கடவுளே தலைவர். ஆதலின் தனக்கென்று தனிச் சிறப்பு ஒன்றும் இல்லாமல் அங்குள்ள சான்றோர்களோடு தானும் ஒருவனாக அவன் அமர்ந்திருந்தான். முடியை எப்போதும் கவித்துக்கொள்வது வழக்கம் அன்று. ஆதலின் அவனைக் கண்டதும் முறையிட வந்தவர்களுக்குச் சிறிது ஐயம் உண்டாயிற்று. அவன் கரிகாலன் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. "யாரோ இளைஞன் ஒருவன் இங்கே உள்ள சான்றோர்களோடு அமர்ந்திருக்கிறானே! இவன் இங்கே வரும் வழக்கில் இருசாராரும் கூறும் செய்திகளைக் கேட்டு முடிவு காணுவதற்கு ஏற்ற அநுபவம் உடையவன் அல்லவே!" என்று தம்முள் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டதை அருகில் இருந்த ஒற்றன் ஒருவன் கேட்டான். அன்று அறங்கூறவையத்தில் வந்த வழக்கு ஒருவாறு முடிவடைந்தது. மறுநாள் முன்னே சொன்னவர்களின் வழக்கை முறையிட ஏற்பாடு செய்தார்கள். கரிகாலன் தன் அரண்மனைக்குச் சென்றான். வழக்கைத் தீர்த்துக்கொள்ள வந்தவர் கள் தன்னைக் கண்டு இளைஞன் என்று பேசிக் கொண்ட செய்தி ஒற்றன் மூலமாக அவன் காதிற்கு எட்டியது. அதைக் கேட்டு அவன் சினம் கொள்ளவில்லை. அவர்கள் ஐயமுற்றது நியாயமே என்று எண்ணினான்.

கரிகாலன் சான்றோர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு அவர்களின் போக்குப்படியே முடிவு கட்டுகிறவன். தன்னுடைய அறிவுத் திறத்தால் ஏதேனும் தெரிவிப்பதற்குரியது வந்தால் அதைத் தெரிவிப்பான். அது தக்கதாக இருந்தால் சான்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லையானால் காரணம் கூறி அவன் கருத்தை மாற்றுவார்கள். எந்தக் காலத்திலும் கரிகாலன் தன் கருத்தையே முடிந்த முடிபாக நிலை நிறுத்துவதில்லை. இப்படித்தான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பாகக் கூடப் புலப்படுத்துவதில்லை. எப்படியாவது உண்மை வெல்ல வேண்டும், நியாயம் நிலை நிற்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பம்.

இந்த இயல்பை வந்தவர்கள் கண்டார்களா? அவர்கள் தங்கள் வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஆர்வம் உடையவர்கள். நியாயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அநுபவம் இல்லாவிட்டால் தங்களுக்கு நன்மை உண்டாகாதே என்று அவர்கள் அஞ்சினார்கள். அதனால் தான் அவர்கள் கரிகாலனுடைய இளமையைக் கண்டு ஐயுற்றார்கள்.

அவர்களுடைய மன நிலையைக் கரிகாலன் உணரத் தக்க பேரறிவுடையவன். ஆகவே அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் நியாயம் வழங்க வேண்டுமென்று எண்ணினான். அதுகாறும் நிகழாத ஒரு காரியத்தைச் செய்யலானான்.

மறுநாள் உரிய காலத்தில் அறங்கூறவையம் கூடியது. சான்றோர்கள் வந்து அவையத்தில் அமர்ந்தார்கள். அரசன் வரும் நேரமாயிற்று. இன்னும் அவன் வரவில்லை. அப்போது யாரோ ஒரு முதியவர் அவையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடைய தலை நன்றாக நரைத்திருந்தது. அவைக்குள் வந்தவுடன் அரசன் அமரும் ஆசனத்தில் அவர் அமர்ந்தார். சான்றோர்கள் அவரைக் கவனித்தார்கள். அமர்ந்தவர் தலை நிமிர்ந்து யாவரையும் பார்த்தார். "என்னைத் தெரிய வில்லையா? என்று கேட்டார். அந்தக் கேள்வி அவர் இன்னார் என்பதைத் தெரிவித்துவிட்டது.

கரிகால் வளவனே முதியவரைப்போல வேடம் புனைந்து வந்திருந்தான். "இவன் இளமையை உடையோன்; உரை முடிவைக் காணமாட்டான்" என்று முதல்நாள் சில நரைமுது மக்கள் சொல்லிக் கொண்டார்களே, அவர்கள் உவக்க வேண்டுமென்று தானும் நரைமுடித்து வந்திருந்தான்.

கரிகாலனே அப்படி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த சான்றோர்கள், "என்ன இது!" என்று வியப்பு மீதூரக் கேட்டார்கள்.

"உங்களுக்கு நடுவில் நான் மட்டும் இளையவனாக இருந்தால் நன்றாக இருக்குமா? உங்களுடைய அநுபவம் எனக்கு உண்டாக வேண்டுமானால் இன்னும் பல ஆண்டுகள் ஆகவேண்டும். அதன் பிறகு இந்த அவையத்துக்கு வருவது முடியுமா? ஆகவே, இப்போதே புறத்தோற்றத்திலாவது உங்களைப்போல இருக்கலாமென்று எண்ணிக் கோலம் புனைந்தேன்" என்றான் மன்னன்.

முதல் நாள் வந்தவர்கள் அன்று தம் வழக்கைக் கூற வந்தார்கள். முதல் நாள் இளைஞன் என்று தாம் எண்ணியவன் சோழ சக்கரர்த்தி என்பத அவர்கள் அப்பால் தெரிந்து கொண்டார்கள். இன்றோ, அவன் கிழவனைப் போலக் கோலம் புனைந்து வந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். 'நாம் எண்ணியதை இப்பெருமான் எப்படி அறிந்துகொண்டான்? நம்முடைய அறியாமையால் தோற்றிய குறையைத் தீர்ப்பதற்காகவே இந்தக் கோலம் புனைந்திருக்கிறான். இனி நம்முடைய பெருங் குறைகள் எல்லாம் இங்கே தீருவதற்கு என்ன தடை?' என்று எண்ணி அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

அவர்களுடைய வழக்கை அறங்கூறவையத்தினர் கேட்டு ஆராய்ந்து நியாயத்தை நிலை நாட்டினர்.

கரிகாலன் நரை முடித்து வந்த நிகழ்ச்சியைத் தமிழுலகம் முழுவதும் அறிந்து அம் மன்னனைப் பாராட்டியது. புலவர்கள் அதைப் பாட்டால் புகழ்ந்து பரப்பினார்கள்.
-----------------------------------------------------------


8. நாட்டு வளம் பாடிய நங்கை.


கரிகால் வளவனுடைய புகழ் பரவப் பரவ அவனைப் புலவரும் பாணரும் நாடி வந்தார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் நிறுவிய பட்டி மண்டபத்தில் புலவர்கள் தங்கள் தங்கள் கவிதையை அரங் கேற்றினார்கள்; தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்தார்கள். மதுரையில் இருந்த சங்கத்தைப் போன்ற சிறப்புக் காவிரிப்பூம்பட்டினத்துப் பட்டி மண்ட பத்துக்கும் உண்டாயிற்று. சேர சோழ பாண்டிய நாடுகளிலிருந்து புலவர்கள் அடிக்கடி வந்து கரிகால் வளவனைப் பாடிப் பரிசு பெற்றுச் சென்றார்கள். வளவன் உறையூரில் சில காலமும் காவிரிப்பூம்பட்டினத்தில் சில காலமுமாக இருந்து வந்தான்.

ஒருநாள் வளவனிடம் ஒரு பெண் புலவர் வந்தார். அவருக்குத் தாமக்கண்ணி என்று பெயர். அவர் கால் முடம். ஆதலின் முடத்தாமக் கண்ணியார் என்று யாவரும் அவரைக் குறிப்பிட்டுக் கூறுவர். உறுப்புக் குறை இருந்தால் அதை அடையாளமாகக் கருதுவார்களே யன்றி இழிவாக எண்ணுவதில்லை. கரிகாலன் என்ற சக்கரவர்த்தியின் பெயரே அங்கத்தைக் குறித்து வந்ததுதானே? கரிந்த காலை உடையவன் என்ற பொருளை உடையது அது.

முடத்தாமக் கண்ணியார் கரிகாலனுடைய அவைக்களத்துக்கு வந்தார். வழக்கம்போல அரசன் அவரை வரவேற்று உபசரித்தான். சில காலம் அரண்மனையில் அப் பெண்மனியார் தங்கினார். அவர் சோழநாடு நில வளமும் நீர் வளமும் நிரம்பப் பெற்று விளங்குவதை உணர்ந்தவர்; மற்றவர்கள் அந்த வளங்களைப் பற்றிக் கூறுவதையும் கேட்டவர்.

ஆதலின் அந்த வளப்பங்களை யெல்லாம் அமைத்து ஒரு பெரிய கவியைப் பாடவேண்டுமென்று எண்ணினார். கரிகால் வளவன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விரும்பினார். தமிழில் ஒருவருடைய புகழை வெளிப்படுத்தப் பல வழிகள் இருக்கின்றன. வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவர் பரிசு பெறும் இடம் தெரியாமல் அலையும் மற்றவர்களைப் பார்த்து,"நீங்கள் இன்னாரிடம் போனால் உயர்ந்த பரிசில் கிடைக்கும்" என்று சொல்லி அவர்களிடம் போவதற்கு வழி காட்டும் முறையில் புலவர்கள் சில நூல்களைப் பாடியிருக்கிறார்கள். அந்த வகையான நூலுக்கு ஆற்றுப்படை என்று பெயர். பரிசிலைப் பெறப போகிறவர்கள் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்று பலவகையாக இருப்பார்கள். இவர்களில் யாரைப் பார்த்துச் சொல்வதாகப் பாட்டு அமைகிறதோ அவர்கள் பெயரால் அந்த நூலுக்குப் பெயர் அமையும். புலவரைப் பார்த்துச் சொல்வதாக இருந்தால் புலவராற்றுப்படை என்று அதைச் சொல்வார்கள். இப்படியே பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்று மற்றவற்றுக்குப் பெயர்கள் அமையும். முடத்தாமக் கண்ணியார் பொருநர் ஆற்றுப்படை பாடி அதில் கரிகாலன் புகழைப் பதித்து வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

பொருநர் என்பவர்கள் கையிலே தடாரி என்ற பறையை வைத்துத் தட்டிக்கொண்டு பாடுகிறவர்கள். அவர்களுடன் யாழ் வாசித்துப் பாடியும் ஆடியும் பரிசில் பெறும் விரலியரும் வருவார்கள். வறுமையில் ஆழ்ந்து தன்னை ஆதரிக்கும் வள்ளல யாரையும் காணாமல் ஊர்தோறும் அலைந்து கொண்டிருக்கும் பொருநன் ஒருவனைக் கண்டு, கரிகால் வளவனிடம் சென்று பரிசில் பெற்ற மற்றொரு பொருநன் சொல்வதாக அந்தப் பொருநராற்றுப் படையைப் பாடினார்.
*

எங்கேயோ திருவிழாவுக்குப் பொருநன் போயிருந்தான். அங்கே அவனுடன் வந்த விறலி யாழ் வாசித்துப் பாடினாள். அவன் தடாரிப் பறை கொட்டினான். ஒரு கையால் வாசிக்கும் கருவி அது. விழாவில் நான்கைந்து நாள் அவர்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். விழா முடிந்தவுடன் அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். எங்கே போவது என்ற நிச்சயம் இல்லாமலே புறப பட்டார்கள். விறலி தன் அழகிய யாழைச் சுமந்து சென்றாள். அவர்களுடன், உடம்பு மெலிந்த சுற்றத்தாரும் சென்றார்கள்.

இன்ன இடத்துக்குப் போவது என்ற திட்டம் இல்லாமையால் எதிர்ப்பட்ட வழியில் போனார்கள். அந்த வழி அவர்களை ஒரு காட்டினிடையே கொண்டுபோய் விட்டது. கோடை வெயிலால் ஈரத்தை இழந்து மரங்கள் எல்லாம் வாடி உலரப் பாலையாகிக்கொண்டு வரும் காடு அது. நடந்து நடந்து அவர்களுக்குக் கால் சலித்துவிட்டது. ஒரு மரம் அங்கே வழியிலே இருந்தது. அதில் மாத்திரம் சில இலைகள் இருந்தன. இலை செறிவாக இல்லை. அதனால் மரத்தின் கீழே அடர்ந்த நிழலைக் காண வில்லை; வலையை விரித்தாற்போல அந்த நிழல் இருந்தது. அதாவது கிடைத்ததே என்று அ்தப் பொருநனும் அவனுடைய பரிவாரங்களும் அங்கே சற்று அமர்ந்தார்கள்.

அப்போது கரிகால் வளவனிடம் சென்று அவன் அளித்த விருந்தை உண்டு மகிழ்ந்து பரிசில் பெற்றுக்கொண்டு மற்றொரு பொருநன் அங்கே வந்தான். மரத்தின் நிழலில் பொருநனும் அவனைச் சார்ந்த பட்டினிப் பட்டாளமும் இருப் பதைக் கண்டான். அவர்கள் நிலையைக் கண்டு இரங்கினான். 'நாமும் இவர்களைப் போல இருந் தோமே! கரிகால் வளவனைக் கண்ட பிறகுதானே நம் கலி நீங்கியதூ? இவர்களையும் அவனிடம் போகும்படி சொன்னால் இவர்களுக்கும் நன்மை உண்டாகுமே!' என்று எண்ணினான். உடனே அங்கே இருந்த ஏழைப் பொருநனைப் பார்த்து இந்தப் பணக்காரப் பொருநன் சொல்லத் தொடங்கினான்.

"பொருநர் தலைவனே, உன்னையும் உன் சுற்றத்தாரையும் நான் வரும் வழியிலே கண்டது, உங்கள் புண்ணியப் பயன் என்றே சொல்ல வேண்டும். "

அமர்ந்திருந்த பொருநன், 'யாரோ பெரிய செல்வர் நம்மைப் பார்த்துப் பேசுகிறாரே!' என்று எழுந்து நின்று மரியாதை செய்தான். மற்றவர்களும் எழுந்து ஒதுங்கி நின்றார்கள். அவர்கள் செயலைக்கண்டு, வந்த பொருநன் மனத்துக்குள்ளே சிரத்துக்கொண்டான்.

"நானும் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்தான். என்னைக் கண்டதும் நான் யாரோ என்று மருண்டு விட்டீர்களென்று தோன்றுகிறது. நானும் உங்களைப் போலவேதான் பசியும் வறுமையும் வாட்ட வருந்தினவன். ஆனால் கரிகால் வளவனைக் கண்ட பிறகு என் வறுமை கால் வாங்கி ஓடி விட்டது. அவனுடைய அரண்மனை வாசல் என்றும் திறந்தே இருப்பது. நம்மைப் போன்ற இரவலர்கள் புகுந்தால் யாரும் தடை செய்ய மாட்டார்கள். நான் அங்கே போனேன். பல நாள் பட்டினி கிடந்தமையால் என் உடம்பு மிகவும் இளைத்திருந்தது. கையில் தடாரியை வைத்திருந்தேன். என் கை அழுக்கு அதில் படிந்திருந்தது. நான் விடியற் காலையில் அந்தக் தடாரியைக் கொட்டினேன். என்ன வென்று சொல்வேன்! கரிகால் வளவன் நான் இருந்த இடத்துக்கே வந்துவிட்டான். நெடு நாட்களாகக் காணாத உறவினனைக் காண்பதுபோல அன்போடு என்னுடன் பேச ஆரம்பித்தான். "

"உங்களிடம் கரிகால் வளவனே பேசினானா?"

"ஆம், நான் எந்தக் கோலத்தில் இருந்தேன் தெரியுமா? என் இடையிலே கந்தை இருந்தது; வேர்வையிலே நனைந்து பேனுக்கு உறையுளாக இருந்தது. கிழிந்த இடங்களைத் தைத்து உடுத்திருந்தேன். கரிகால் வளவன் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். அந்தப் பார்வையிலே எத்தனை குளிர்ச்சி! என் என்பெல்லாம் சில்லென்று தண்ணிய உணர்ச்சியைப் பெற்றன. என் இடையிலே உள்ள ஆடையைக் களைந்தெறியச் சொல்லி வேறு புதிய ஆடையை அளித்து அணியச் செய்தான். பேன் குடியிருந்த ஆடை முன்பு என் இடையிலே இருந்தது. இப்போது மிகமிக மெல்லிய பூ வேலை செய்த ஆடையை அணிந்தேன். பிறகு மிக இனிமையான பான வகைகளைப் பொற்கிண்ணத்தில் அழகிய மகளிர் ஊற்றித் தந்தார்கள். என் தாகமும் பசியும் எனக்கல்லவா தெரியும்? அவர்கள் வார்க்க வார்க்க நான் வாங்கிக் குடித்துக்கொண்டே இருந்தேன்.

"பிறகு இளைப்பாறினேன். முதல் நாளில் நான் இருந்த இருப்பு என்ன! அப்போது நான் நுகர்ந்த இன்பம் என்ன! ஆளைப் பார்த்தால் அடையாளமே தெரியாது. அப்படி ஆடை அலங்காரங்களுடன் விளங்கினேன். முன்பு என் உடை நாற்றமும் உடல் நாற்றமும் எனக்கே சகிக்க முடியாமல் இருந்தன. இப்போதோ ஒரே நறுமணந்தான். எனக்கே, 'நாம் கனவு காண்கிறோமோ!' என்ற ஐயம் உண்டாயிற்று.

"அங்கே எனக்கு நடந்த உபசாரங்களை நான் முன்னே எங்கும் அநுபவித்ததில்லை. ஆகையால் அங்கே உள்ள பண்டங்களை எப்படி எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதே எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்த வேலைக்காரர்கள் அதையெல்லாம் எனக்குச் சொல்லித் தந்தார்கள். "

நடுவிலே ஏழைப்பாணன் ஒரு கேள்வியைக் கேட்டான். "பானங்களை நுகர்ந்ததையும் ஆடை அணிந்ததையும் சொன்னீர்கள். உணவு கொள்ள வில்லையோ?" என்று கேட்டான்.

"அதற்குள் அவசரப்படுகிறீர்களே! பக்குவமாக வெந்த ஊனோடு கலந்த விருந்தைப் பக்கத்தில் இருந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்ல நான் உண்டேன்; சுடச்சுடச் சாப்பிட்டேன். ஒருவகை உணவு சலித்துவிட்டதானால் வேறு வகையான பணிகாரங்களைத் தந்தார்கள். முனை முரியாத அரிசியினால் சமைத்த சோற்றை உண்டேன். இப்படித் தினமும் விருந்து உண்டு உண்டு என் பற்கள்கூடத் தேய்ந்து போய்விட்டன. பல நாள் அங்கே தங்கியிருந்தேன். பிறகு விடை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணிக் கரிகால் வளவனிடம், 'எங்கள் ஊருக்குப் போய்வருகிறோம்' என்று மெல்லச் சொன்னேன். அப்போது அவனுக்கு வந்த கோபத்தைப் பார்க்கவேண்டுமே!"

"கோபமா? எதற்காகக் கோபம்?" என்று ஏழைப் பொருநன் கேட்டான்.

"உண்மையான கோபம் அல்ல. கோபம் வந்தது போலக் காட்டினான். 'எங்களை விட்டுப் போகப் போகிறீர்களா?' என்று கேட்டான். நான் போக வேண்டுமென்று தீர்மானித்திருப்பதைத் தெரிந்துகொண்டான். அவனுக்கு வருத்தந்தான். உடனே யானை முதலிய பரிசில்களைத் தந்தான். அவன் பல பொருள்களைக் காட்டினான். நான் வேண்டியவற்றையெல்லாம் வாரிக்கொண்டேன். "

"கரிகால் வளவன் பெருஞ்செல்வம் உடைய வள்ளலோ?" என்று கேள்வி வந்தது.

"என்ன, அப்படிக் கேட்கிறீர்கள்? சோழ நாட்டு மன்னன் அவன். உருவப் பஃறேர் இளஞ் சேட் சென்னியின் புதல்வன். அவன் கருவில் இருக்கும்போதே தந்தை இறந்தமையால், அப் போது அரசுரிமை அவனுடையதாகிவிட்டது. சேர பாண்டியர்களை வெண்ணிப் பறந்தலையில் போர் செய்து வென்றவன். அவனிடம் போனால் உங்கள் வறுமை இருந்த இடம் தெரியாமல் போய் விடும். "

"நாங்கள் அங்கே போய் என்ன செய்ய வேண்டும்?"

"அவனை அணுகினாலே போதும். அவனை அணுகித் தொழுது நின்றால் அவனுடைய அன்புப் பார்வை உங்கள்மேலே படும். கன்றை ஈன்ற பசு தன் கன்றைப் பார்ப்பதுபோல அன்பு ததும்ப உங்களைப் பார்ப்பான். நீங்கள் யாழ் வாசித்துத் தடாரிப் பறையைக் கொட்டுங்கள். அவற்றின் ஒலி அவன் காதில் விழுந்ததோ இல்லையோ, அவன் உங்கள் தகுதியைத் தெரிந்துகொள்வான். உங்கள் இடுப்பிலுள்ள கந்தையைக் களைந்து பட்டாடையை உடுத்துக்கொள்ளக் கொடுப்பான். நல்ல மது வகைகளை வழங்குவான். பொன்னால் செய்த தாமரையை உங்கள் தலையிலே சூட்டுவான். விறலி அணியும்படி பொன்னரி மாலையை அளிப்பான். அழகான குதிரைகளைப் பூட்டிய தேரை வழங்குவான். யானையைத் தருவான். அவற்றை அவரவர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொடுக்கும்படி மிகுதியாகத் தருவான். ஊருக்குப்போகிறோம் என்று சொன்;னால் எளிதிலே உங்களை அனுப்பமாட்டான். அவனுடைய அன்புக்கு ஈடாக எதனையும் சொல்ல இயலாது. "

இப்படிச் சொன்ன பொருநன் கரிகாலனுடைப சோழ நாட்டை வருணித்து, "இத்தகைய நாட்டையுடைய கரிகாலன் உனக்குப் பரிசில்களைத் தருவான்" என்று சொல்லித் தன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

முடத்தாமக் கண்ணியார் பொருநனுடைய கூற்றாகச் சொல்லும் இந்தப் பாட்டில் சோழ நாட்டின் வளத்தை விரிவாக அமைத்திருக்கிறார்.
******************

சோழநாடு முழுவதும் வயல்கள் இருக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லை, அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் உள்ள திடலில் சேர் கட்டிச் சேமித்து வைத்திருக்கிறார்கள் வேளாளர்கள். ஒவ்வொரு மா நிலத்திலும் இந்த நெற்கூடுகள் நிரம்பியிருக்கின்றன. அங்கங்கே தென்னந் தோப்புகள் இருக்கின்றன. அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள். உழவருடைய பெண்கள் மணலைக் குவித்து விளையாடுகிறார்கள். மயில்கள் பாகற்பழத்தையம் பலாப் பழத்தையும் கொத்தித் தின்கின்றன. ஆண் மயில்கள் அப்படியே மெல்ல அசைந்து அசைந்து வந்து மணற்பரப்பிலே ஆடுகின்றன. அருகில் உள்ள மலர்ச் செடிகளிலே வண்டுகள் முரல்கின்றன. அந்த ஒலி யாழோசை போல இருக்க, மயில்கள் நடனமாதரைப்போல ஆடுகின்றன.

வயல்கள் நிரம்பிய மருத நிலத்தில் கரும்பை வெட்டும் ஓசையும் நெல்லை அரியும் ஓசையும் எங்கும் முழங்குகின்றன. வயல் இல்லாத மேட்டு நிலங்களில் அடம்பங்கொடியும் பகன்றை என்ற கொடியும் படர்ந்திருக்கின்றன. புன்கமரமும் ஞாழல் மரமும் வளர்ந்திருக்கின்றன.

ஒரு பக்கம் முல்லை நிலம் பரந்திருக்கிறது. காடம் காட்டைச்சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். அங்கே ஒருசார் மல்லைக்கொடி பூத்துப் படர்ந்திருக்கிறது. சிங்காந்தள், சிவந்த மலரைப் பூத்து நிற்கிறது. தேற்றா மரமும் கொன்றை மரமும் மொட்டவிழ்ந்து மலர்கின்றன. நீலமணியைப் போன்ற மலர்கள் காயா மரத்தில் மலர்கின்றன.

கடற்கரைப் பக்கத்தில் நாரைகள் இறால்மீனைக் கொத்தித் தின்கின்றன. அங்கே வளர்ந்திருக்கும் புன்னை மரத்திலே அவை தங்குகின்றன. கரையிலே மோதி முழங்கும் அலை ஓசைக்குப் பயந்து அந்த நாரைகள் பனைமரத்திற்குப் போய் அதன் மடலில் இனிமையாகத் தங்குகின்றன. அங்கங்கே குலைகுலையாகத் தேங்காய்களும் வாழைக்காய்களும் அந்த அந்த மரங்களில் தொங்குகின்றன.

ஒரு நிலத்தில் வாழும் மக்கள் வேறு நிலத்துக்குச் சென்று தம் நிலத்தில் விளையும் பண்டங்களை விற்று விட்டுகி இந்த நிலத்தில் விளைகின்ற பொருள்களை வாங்கி வருகிறார்கள். மலைப்பாங்கரில் வாழும் மக்கள் தேனையும் கிழங்கையும் கடற்கரைப் பக்கத்தில் விற்றுவிட்டு அங்கே கிடைக்கும் மீன் நெய்யையும் நறவையும் வாங்குகிறார்கள். மருதநநிலப் பரப்பில் வாழ்பவர்கள் கரும்பையும் அவலையும் விற்று மான் தசையையும் வேறு உணவுப்பண்டத்தையும் வாங்கிச் செல்கிறார்கள்.

குறமக்கள் குறிஞ்சி நிலத்திலே மலரும் குறிஞ்சிப் பூவை அணிந்து மகிழ்கிறார்கள். அது சலித்துவிட்டதானால் நெய்தல் பூவாலான கண்ணியைத் தலையிலே சட்டிக்கொள்கிறார்கள். காட்டிலே வாழும் கோழிகள் அருகிலே உள்ள மருத நிலத்துக்கு வந்து அங்குள்ள நெற் கதிரைத் தின்னுகின்றன. வயலுக்கருகில் வீட்டிலே வளரும் கோழிகள் மலைப்பக்கத்திற் சென்று அங்கே விளையும் தினையைத் தின்னுகின்றன. மலையிலே வாழும் மந்திகள் கடற்கரைக்கருகில் உள்ள உப்பங்கழியில் மூழ்கிக் களிக்கின்றன. கழியிலே திரியும் நாரைகள் மலையிலே போய் இளைப்பாறுகின்றன. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலப்பரப்பிலும், அங்கங்கே வாழ்வதற்குரிய பறவைகளும் விலங்குகளும் மக்களும் மற்ற நிலங்களுக்கும் சென்று சலிப்புத் தீர இன்பம் நுகர்வதைக் காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேற்பட்ட சிறப்பைக் காவிரியாற்றினாற் பெறுவது சோழநாடு. காவிரி எங்கே தோன்றினாலும் எவ்வெந்நாட்டின் வழியே வந்தாலும் அதன் முழுப் பயனையும் பெறுவது சோழ நாடுதான். சூரியன் வெம்மையாகத் தன் கதிர்களை வீசி எங்கும் பசு மரங்கங் வாடிப் போனாலும், மலைகளில் அருவி வறண்டாலும், மேகம் மழை பெய்ய மறந்தாலும், எங்கும் பஞ்சம் படர்ந்தாலும் என்றைக்கும் பொய்யாமல் நீர்வளம் பெருக்குவது காவிரியாறு.

காவிரியில் வெள்ளம் வருவதைப் பார்த்தால் எத்தனை அழகாக இருக்கிறது! மலைப் பகுதிகளிலிருந்து வருவதனால் மலைவிளை பொருள்களை ஆற்று நீர் அடித்து வருகிறது. நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் அதில் மிதந்து வருகின்றன. அவற்றைக் காவிரி கரையிலே ஒதுக்கிச் செல்கிறது.

சோழ நாட்டிலுள்ள குளத்திலும் மடுவிலும் தன் நீரை நிரப்புகிறது. அங்கே மகளிர் நீரில் குடைந்து விளையாடுகிறார்கள். இந்தப் புது வெள்ளத்தால் எங்கும் நெற்பயிர் மிகச் சிறப்பாக விளைகிறது. நெற்கதிரை அரிவாளால் அறுத்துத் தொகுக்கிறார்கள். கதிர்களை மலைபோலக் குவிக்கிறார்கள். பின்பு கடா விட்டு நெல்லைக் குவியல் குவியலாகப் போடுகிறார்கள். பொன்னிறம் பெற்ற அவற்றைப் பார்த்தால் மேரு மலையின் நினைப்பு வருகிறது. பின்பு நெல்லைக் குதிர்களிலே கொண்டு போய்க் கொட்டுகிறார்கள். எல்லாக் குதிர்களும் நிரம்பி விடுகின்றன. ஒவ்வொரு வேலியிலும் ஆயிரம் கலம் நெல் விளைகிறது.

எல்லாம் காவிரி தரும் செல்வம். காவிரிதான் சோழநாட்டையே காப்பாற்றுகிறது. ******* இவ்வாறு சோழ நாட்டின் வளத்தை முடத் தாமக் கண்ணியார் வருணித்துப பொருநர் ஆற்றுப் படையைப் பாடி நிறைவேற்றினார் 248 அடிகளை உடைய பெரிய பாட்டு அது. அதைக் கேட்ட கரிகால் வளவன் பெண்புலவரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினான்.
-----------------------------------------------------------


9. பாட்டும் பரிசும்


முடத்தாமக் கண்ணியார் பாடல்,புலவர் அவைக்களத்தில் ஏறிப் பாராட்டைப் பெற்ற‌ பிறகு வேறு புலவர்கள் கரிகாலனுடைய புகழைப் பல வகையிலே பாடி அர‌ங்கேற்றிச் சோழ மன்னன் வழங்கும் பரிசிலைப் பெற்றுச் சென்றர்கள். கடியலூரில் உருத்திரன் என்பவருடைய புதல்வராகிய கண்ணனார் என்பவர் சிற‌ந்த தமிழ்ப் புலவராக விளங்கினார். அவரைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்று யாவரும் சொல்வார்கள். அவர் கரிகாலனைப்பற்றி ஒரு பெரிய பாட்டைப் பாடினார். காவிரிப்பூம்பட்டினம் வர வரச் சிறப்பு அடைந்திருப்பதைக் கண்டவர் அவர். அப் பட்டினம் வாணிகத்தினால் உலகில் உள்ள பல நாடுகளுடன் தொடர்பு கொண்டு விளங்கியது. தமிழ்நாட்டின் பண்டங்களையும் கரிகாலன் புகழையும் உலகெங்கும் பரப்புவதற்கு அந்தக் கடற்கரைப் பட்டினம் வாயிலாக இருந்தது. பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தையே குறிக்கும்படியாக அதற்குச் சிறப்பு அமைந்தது.

அந்த நக‌ரத்தின் பெருமையையும் செல்வ மிகுதியையும் வாணிகத்தையும் வாயாரப் பாட வேண்டுமென்று உருத்திரங்கண்ணனார் எண்ணினார். அதோடு கரிகால் வளவனுடைய வரலாற்றையும் அந்தப் பாட்டில் இணைக்க விரும்பினார். பல நாள் சிந்தித்து,"பட்டினப் பாலை" என்ற நீண்ட பாட்டை இயற்றி முடித்தார். 301. அடிகளைக் கொண்ட அந்தப் பாட்டு, காதலன் ஒருவன் சொல்வதுபோல அமைந்திருக்கிறது. இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருளைத் தேடும் பொருட்டுத் தன் காதலியைப் பிரிந்து செல்லலாம் என்று முதலில் அவன் நினைக்கிறான். பிறகு அவளைப் பிரிவது துன்பத்தைத் தரும் என்ற எண்ணம உண்டாகிறது. அப்போது தன் நெஞ்சைப் பார்த்து, "காவிரிப்பூம்பட்டினத்தைப் பெற்றாலும், கரிகாலனுடைய வேலைக் காட்டிலும் வெம்மையான பாலை நிலத்தைக் கடந்து நான் வரமாட்டேன்; என்னுடைய காதலியின் தோள் அம் மன்னனுடைய செங்கோலை விடத் தண்மையை உடையது" என்று சொல்கிறான். இப்படிச் சொல்லும் போக்கில் காவிரிப்பூம் பட்டினத்தின் பெருமையையும், கரிகாலனுடைய புகழையுமே புலவர் விரித்துரைக்கிறார்.
*

சுக்கிரன் வடக்கே இருந்தால் மழை பொழியும் என்று சொல்வார்கள். அது தெற்கே சென்றால் மழையின்றிப் பஞ்சம் உண்டாகும். அவ்வாறு பஞ்சம் உண்டாகி, வானம்பாடி வானத்தை நோக்கி மழைத்துளிக்காக வாய் திறந்து பாடியும் நீர் கிடைக்காமல் அது வாடும்படி பஞ்சம் உண்டானாலும் பொய்ய்யாமல் குடகு மலையிலிருந்து வருகின்ற காவிரி தன் நீரைப் பரப்பிப் பொன்னைக் கோழிப்பது சோழநாடு. அந்த நாட்டில் என்றும் விளைவு அறாத வயல்கள் பரந்திருக்கின்றன. சிறிய சிறிய ஊர்கள் பல,நாடு முழுவதும் வளப்பத்தோடு விளங்குகின்றன. கரும்பும் நெல்லும்,தென்னையும் கமுகும், மஞ்சளும் சேம்பும், மாவும் பனையும், இஞ்சியும் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.

அங்கங்கே மகளிர் நெல்லை உலர்த்துகிறார்கள். அந்த நெல்லைத் தின்ன வரும் கோழியை ஓட்ட அருகிலே கல் இல்லை. வேறு யாதும் இல்லாமையால் தம்முடைய காதில் உள்ள குழையை வாங்கிக் கோழியின்மேல் எறிந்து ஓட்டுகிறார்கள். அந்தக் குழைகள்,சிறு குழந்தைகள் விடும் விளையாட்டு வண்டிகளைத் தடுக்கின்றன.

ஒன்றுக்கு ஒன்று அருகாகப் பல ஊர்கள் நிறைந்தது சோழ நாடு. பகைவர்களால் உண்டாகும் அச்சமே அவ்வூர்களில் இல்லை. அந்த நாட்டில் கட‌ற்கரையில் விளங்குவது காவிரிப்பூம் பட்டினம்.

ப‌ட‌கிலே உப்பைக் கொண்டு வ‌ந்து நெல்லுக்கு அதை விற்று அந்த‌ப் ப‌ட‌கில் நெல்லை நிர‌ப்பிக் கொள்கிறார்க‌ள் ப‌ர‌த‌வ‌ர்க‌ள். அந்த‌ப் ப‌ட‌குக‌ளைக் க‌ழிக‌ளின் ப‌க்க‌த்தில் குதிரைக‌ளைப் போல‌க் க‌ட்டியிருக்கிறார்க‌ள். ந‌க‌ர‌த்துக்குப் புற‌ம்பே தோப்புக்க‌ளும் பூஞ்சோலைக‌ளும் செறிந்திருக்கின்ற‌ன‌. வ‌லிமையைப் பெற்ற‌ க‌ரைக‌ளை யுடைய‌ ந‌ன்னீர்ப் பொய்கைக‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌ப் பொய்கைக‌ளில் ப‌ல‌ நிற‌ம் பொருந்திய‌ ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்கின்ற‌ன‌. அவ‌ற்றுள் மிக‌ப் பெரிய‌ நீர்நிலைக‌ள் இர‌ண்டு உண்டு. அவ‌ற்றை இரு காம‌த் திணைஏரி என்று சொல்லுவார்க‌ள்.

இந்த ஏரிகளுக்கு அப்பால் பலமான கதவுகளையுடைய மதில் ஓங்கி நிற்கிறது. அந்தக் கதவுகளில் சோழ அரசனுடைய புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

நகரத்துக்குள்ளே புகுந்தால் முதலிலே கண்ணில் படுவது அன்னதானம் செய்யும் அறச்சாலை. அங்கே சோற்றை வடித்த கஞ்சி ஆற்றைப்போல ஓடுகிறது. அந்தக் கஞ்சியைக் குடிக்க வரும் காளை மாடுகள் தம்முள்ளே சண்டை போடுகின்றன. அதனால் கஞ்சி பாயும் இடம் சேறாகிவிடுகிறது. பிறகு அங்கே வண்டிகள் செல்வதனால் சேறு காய்ந்து புழுதி பறக்கிறது. அருகில் உள்ள மாதங்களிலே அந்தப் புழுதி படிகிறது.

இந்த அறச்சாலைக்கு அருகே பசுமாடுகளையும் எருதுகளையும் பாதுகாக்கும் சாலைகள் இருக்கின்றன. அவற்றினுள்ளே கேணிகள் உள்ளன. அப்பால் தவம செய்பவர்களின் மடங்களும் முனிவர்கள் வேள்வி செய்யும் சாலைகளும் காலி கோயிலும் உள்ள இலமரச் சோலைகளைக் காணலாம்.

கடற்கரைப் பக்கத்தில் பரதவர் மக்கள் தமக்கு விருப்பமான ஊனைத் தின்றுவிட்டு அடப்பம் பூவைத் தலையிலே செருகிக்கொண்டு ஆட்டை முட்டவிட்டு விளையாடுகிறார்கள். காடை கவுதாரி கலைச் சண்டையிடச் செய்து பார்க்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் மற்போரும் வாட்போரும் செய்து விளையாட்டு அயர்கிரார்கள்.

பரதவர் தெருவில் உறைக்கிணறுகள் இருக்கின்றன. பன்றிகளையும் கோழிகளையும் அவர்கள் வளர்கிறார்கள். அமாவாசை நாளிலும் பௌர்ணமி யன்றும் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் போகாமல் தம்முடைய தெய்வமாகிய வருணனுக்குப் பூசை போடுகிறார்கள். தம் மனைவிமாருடன் சேர்ந்து மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை எழுந் தருளுவித்து வழிபடுகிறார்கள். கூதாளம் பூமாலையையும் தாழம்பூவையும் சூடிப் பணங்கள்ளை உண்டு விளையாடுகிறார்கள். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் தீவினை போகக் கடலாடிப் பிறகு நல்ல நீரில் குளிக்கிறார்கள்.

பெரிய வீதிகளில் பல மாடங்கள் இருக்கின்றன. வானுலகத்தைப் போன்ற இன்பங்களை உடையவை அவை. அங்குள்ள மகளிர் இரவில் இனிய பாடலைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும், நிலாவிலே இருந்து மகிழ்ந்தும், கள்ளை அருந்தாமல் உயர்ந்த மதுபானங்களை அருந்தியும், பட்டைக் களைந்துவிட்டு மிக நுட்பமான துகிலை உடுத்தும் தம் கணவருடன் மகிழ்கின்றனர். அப்படியே அவர்கள் தூங்கிப் போகிறார்கள். மாடங்களில் ஏற்றிய விளக்குகள் விடியற்காலத்திலும் சுடர்விட்டு எரிகின்றன. இரவிலே மீன் வேட்டைக்காகச் சென்ற பரதவர்கள் அந்த விளக்கை ஒன்று இரண்டு என்று எண்ணுகிறார்கள்.

பரதவர் வாழும் அகன்ற தெருவிலே பண்ட சாலை இருக்கிறது. அங்கே கடுமையான காவலை அமைத்திருக்கிறார்கள். உள் நாட்டிலிருந்து வரும் பண்டங்களை அங்கே குவித்திருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் புலிப்பொறியையிட்டுச் சுங்கம் வாங்கிக் கப்பல்களில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அப்படியே கப்பலில் வெளிநாட்டிலிருந்து வரும் பண்டங்களுக்கும் முத்திரையிட்டுச் சுங்கம் வாங்குகிறார்கள். இந்தப் பண்டசாலையின் முற்றத்தே பல பண்டங்களையுடைய மூட்டைகள் மலையைப் போலக் குவிந்து கிடக்கின்றன. அவற்றின்மேல் நாயும் ஆடும் ஏறி விளையாடுகின்றன. சுங்க வரி தண்டும் அதிகாரிகள் நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சிறிதும் சோர்வில்லாமல் வேலை செய்கிறார்கள். அளந்தறியாத பல பண்டங்கள் அங்கே கிடக்கின்றன. ஏவலர்கள் அவற்றைக் கப்பலிலிருந்து இறக்குகிறார்கள்; பலவற்றைக் கப்பலில் ஏற்றுகிறார்கள்.

திருமகள் களிநடம் புரியும் அங்காடி வீதிகளிலே உயர்ந்த மாடங்கள் இருக்கின்றன. திண்ணைகளும் படிக்கட்டுகளும் இடைகழியும் பல கட்டுகளும் உடைய மாடங்கள் அவை. அங்கே அழகிய மகளிர் கடவுளை வணங்குகிறார்கள். குழல் அகவுகின்றது. யாழ் முரலுகின்றது. முழவும் முரசும் முழங்குகின்றன. எப்போதும் விழா அறாத ஆவண வீதி அது. அங்கே பல வகையான கொடிகள் அசைகின்றன.

கடவுளைத் தொழும் கோயில்களில் ஒரு வகையான கொடிகள் அசைகின்றன. இன்ன இன்ன பண்டங்கள் இங்கே விற்ப்பெறும் என்பதற்கு அடையாளமாக நட்ட கொடிகள் அங்கங்கே இருக்கின்றன. பல நூல்களைக் கற்றும் கேட்டும் கரை கண்ட அறிவுடைய நல்லாசிரியர், தம்மோடு யாரேனும் வாதம் செய்வாருண்டானால் வருக என்று தம் வீட்டு வாயிலில் நாட்டிய கொடிகள் ஒருசார் அசைகின்றன. கடற்பக்கத்தைப் பார்த்தால் கப்பல்களில் உள்ள கூம்புகளில் கொடிகள் பறக்கின்றன. கள் விற்கும் இடத்தில் அதைத் குறிக்கத் தனியே கொடியை நட்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல கொடிகளும் கலந்து பல நிறங்களோடு விளங்கும் பட்டினத்தில் கப்பலில் வந்த அழகான குதிரைகள் ஒருபக்கம் நிற்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து பிற நாட்டுக்குப் போகவேண்டிய மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது. இமயமலையிலே பிறந்த மணியும் பொன்னும் ஓரிடத்தில் விற்பனையாகின்றன. மேற்கு மலையிலே விளைந்த சந்தனமும் அகிலும் ஓரிடத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பாண்டி நாட்டுக் கடலிலே எடுத்த முத்தும் பவளமும் ஓரிடத்தில் பளபளக்கின்றன. கங்கைக்கரையிலே விளைத்தபண்டம் ஒரு பக்கம்; காவிரிக்கரையிலே விளைத்த பொருள் ஒரு பக்கம்; ஈழ நாடாகிய இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள் ஒருசார்; காழகமாகிய பர்மாவிலிருந்து வந்த பண்டம் ஒரு சார்.

இவ்வளவு பண்டங்கள் நிறைந்து கிடக்கும் ஆவணத்தில் நேர்மையான முறையில் வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வேளாளர்கள் நடுநிலையோடு வாழ்கின்றனர். கொலையும் களவும் இன்றி மக்கள் வாழ்கிறார்கள். பசுமாடுகளைப் பாதுகாக்கிறார்கள். புண்ணியச் செயல்களை இடையீடின்றிச் செய்து வருகிறார்கள்.

எங்கே பார்த்தாலும் வாணிகம். உலகில் உள்ள பண்டங்கள் அத்தனையும் இந்த அங்காடியிலே காணலாம். அதுமாத்திரம் அன்று. உலகத்து மொழிகள் பலவற்றையும் இங்கே கேட்கலாம். அந்த அந்த நாடுகளிலிருந்து வந்து செல்லும் மக்கள் பலர் இங்கே உலவுகிறார்கள். அவர்கள் தங்கள் மொழிகளிலே பேசிக்கொள்கிறார்கள்.

எப்போதும் விழா நிறைந்த வீதியாக விளங்குகிறது ஆவண வீதி.

காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை எண்ணி முடிவு காண முடியுமா?

******************

இவ்வாறு பூம்புகாராகிய பட்டினத்தைச் சிறப்பித்துப்பாடிய உருத்திரங் கண்ணனார் கரிகால் வளவனுடைய வீரத்தையும் பிற இயல்புகளையும் விரிவாகப் பாடினார். அவன் பகைவருடைய சிறையில் இருந்ததையும், அதனினின்றும் விடுதலை பெற்று அரசுரிமையைப் பெற்றதையும், பல போரில் வெற்றி பெற்றதையும், ஒளியர், அரு வாளர், வடநாட்டார், குடநாட்டார், பாண்டியன், பொதுவர், இருங்கோவேள் ஆகியவர்களைப் புறங் கண்ட சிறப்பையும் பாடினார்.

காட்டை அழித்து நாடாக்கிய நலத்தைப் புகழ்ந்தார். குளங்களை வெட்டி வளம் பெருக்கினான் கரிகாலன். உறையூரை விரிவாக்கி அங்கே அரண் மனையைக் கட்டிப் பல குடிமக்களைக் கொண்டு வந்து நாட்டினான். மதிலைக் கட்டி அங்கங்கே அம்புகளை வைக்கும் மறைவிடங்களை அமைத்தான். இவ்வாறெல்லாம் அவன் நகர நிர்மாணம் செய்ததையும் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடினார்.

******************

பாட்டை நிறைவேற்றிய புலவர் கரிகாலனிடம் சென்றார். பல புலவர் கூடிய அவையில் அதனைப் படித்து அரங்கேற்றினார். சோழநாட்டு வளத்தைக் கேட்டு மகிழ்ந்தார் பலர். பட்டினத்தின் சிறப்பைக் கேட்டுக் கேட்டு, 'நன்று, நன்று' என்று கூறிப்பாராட்டினர் பலர். காவிரிப்பூம் பட்டினத்தின் அமைப்பைச் சித்திரிக்கும் பகுதிகளைப் புலவர்கள் யாவரும் கேட்டுக் கேட்டு இன்பக் கடலில் மூழ்கினர். அப்பால் கரிகாலனுடைய வீரப் புகழை விரிக்கும் பகுதியைக் கேட்டு வியந்தார்கள், அரங்கேற்றம் நிறைவேறியது.

புலவருக்குத் தூசும் துகிலும் மணியாரமும் அளித்தான் கரிகாலன். அவற்றோடு பதினாறு லட்சம் பொன்னைப் பரிசாக அளித்தான். "பாட்டுக்கு ஏற்ற பரிசு" என்று யாவரும் பாராட்டினார்கள்.

"பட்டினத்தின் புகழை இவ்வளவு சிறப்பாகப் பாடினவர் யாரும் இல்லை. அப்படிப் பாடிய புலவருக்கு இவ்வளவு மிகுதியாகப் பரிசளித்த மன்னனும் யாரும் இல்லை. "

"உருத்திரங் கண்ணனார் வாக்கிலே பொன் கொழிக்கும் காவிரியைக் கண்டோம்; பொன் வளரும் பட்டினத்தைப் பார்த்தோம். இத்தனையையும் பாடிய புலவரிடம் பொன் கொழிக்க வேண்டாமா? அதனால் அரசர்பிரான் இத்தனை பொன்னைப் பரிசாக அளித்திருக்கிறான். "

"புலவர் பாடிய பாடல் நெடுங்காலம் நிற்கும்; புரவலன் வீரமும் அவன் பதினாறு நூறாயிரம் பரிசளித்த புகழும் இந்தப் பாட்டோடு நெடுங் காலம் வாழும். "

இப்படிப் புலவர்களும் மற்ற மக்களும் பாட்டையும் பரிசையும் பற்றிப் பேசிப் பாராட்டினார்கள்.
-----------------------------------------------------------


10. இழந்து பெற்ற காதலன்.


கரிகாலனுடைய புகழ் மேன்மேலும் வளர்ந்து வந்தது. அவன் முன்பு நாங்கூர்வேளின் மகளை மணந்துகொண்ட பிறகு, வேறு சில பெண்களையும் மணந்துகொண்டான். அவர்களுக்கு அறிவிற் சிறந்த மக்கள் பிறந்தனர். அவர்களுள் ஆதிமந்தி என்ற பெண்ணும் ஒருத்தி.

ஆதிமந்தி அழகும் அறிவும் சிறந்து விளங்கினாள். கரிகால் வளவனுடைய பெண்ணுக்குக் கலையறிவு மிகுவது இயற்கைதானே? பாண்டியாட்டு இளவரசனும் வேறு பலரும் அவளுடைய காதலைப் பெற முயன்றார்கள்.

சேர நாட்டிலிருந்து ஒரு நாள் ஓர் அரசிளங் குமரன் கரிகாலனுடைய அவைக்கு வந்தான். சேர அரசன் கரிகால் வளவனுடைய ஆட்சிக்கு அடங்கினவனாக இருந்தான். ஆதலின், சேர நாட்டிலிருந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பூம்புகாருக்கு வந்து செல்வது வழக்கம். சேர அரசிளங்குமரனுக்கு ஆட்டன் அத்தி என்று பெயர். அவன் திரண்ட தோளும் மலர்ந்த முகமும் அறிவொளி வீசும் கண்களும் உடையவனாகத் தோன்றினான். எடுப்பான தோற்றமும் மிடுக்கான நடையும் அஞ்சாத நெஞ்சமும் உடைய ஆட்டனத்தி சிலகாலம் அரண்மனையில் தங்கி யிருந்தான். கரிகால் வளவனுடைய அன்புக்கு உரியவனானான், வளவனுடைய மகள் ஆதிமந்தியைக் கண்டு பேசும் பேறும் அவனுக்குக் கிடைத்தது. அவனுடைய எழில், வளவனுடைய மகளின் உள்ளத்தை வவ்வியது. அப்படியே அவனும் அவளைக் கண்டு காமுற்றான். இருவர் உள்ளமும் ஒன்று பட்டன.

இந்தச் செய்தியைக் கரிகால் வளவன் அறிந்தான். தாமே காமுற்று மணம் செய்துகொள்ளும் காதல் மணத்தைத் தமிழ் நூல்கள் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றன. ஆதலால் தன் மகளுடைய காதல் வளர இடம் கொடுத்தான் வளவன். பின்பு அவ்விருவருக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நிகழ்ந்தது. திருமணம் நிகழ்ந்தது முதல் ஆட்டனத்தி சோழ நாட்டிலே தங்கியிருந்தான். தன் அரும் பெறற் காதலியாகிய ஆதிமந்தியுடன் பல இடங்களுக்குச் சென்று வந்தான். சோலைகளுக்குச் சென்று தண்ணந் தென்றல் வீச, மலர் மணம் எங்கும் பரவ, வண்டு பாட, குயில் இசை யியம்ப, மயில் ஆட, அங்கே தங்கி இன்புற்றான். ஆற்றிலும் குளத்திலும் நீராடி இன்புற்றான்.

காவிரியாற்றைப் பார்த்துப் பூரித்துப் போனான் ஆதிமந்தியின் காதலன். வேலி ஆயிரம் கலம் விளையும்படி ஆக்கும் அந்த ஆற்று வளத்தால் தமிழ் நாட்டில் சோழ மண்டலத்துக்குத் தனி வளம் அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியந்தான். அவன் தன் ஊரில் இருந்தபோது அடிக்கடி கடலில் நீராடுவான். கடலில் குதித்தும் மூழ்கியும் அலையில் மிதந்தும் நீந்தியும் விளையாடுவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். காவிர் நீரிலும் அப்படியே துளைந்து விளையாடினான். நெடுநேரம் நீருக்குள் மூழ்கியபடியே இருக்கும் பயிற்சியை அவன் செய்திருந்தான்.

ஆடிமாதம் பிறந்தது. காவிரியில் புது வெள்ளம் வந்தது. புது வெள்ளம் வந்தால் உழவர்களுக் கெல்லாம் ஒரே குதூகலம். அதைப் பறை கொட்டி வரவேற்றார்கள். நுங்கும் நுரையுமாகக் காவிரி வந்தது; புது மணப் பெண்ணைப் போல மலர்களையும் தளிர்களையும் சுமந்து வந்தது; தன் கணவன் வீட்டுக்கு விரைந்து செல்பவளைப்போலக் கடலை நோக்கி வேகமாக ஓடியது.

ஆட்டனத்தி காவிர் வெல்ளத்தைப் பார்க்க விரும்பினான். தன் காதலியையும் அழைத்தான் "அப்பாவையும் அழைத்துப் பார்க்கிறேன். வந்தால் எல்லாரும் ஒன்றாகப் போகலாம்" என்றாள் அவள்.

"அவருக்கு எத்தனையோ வேலை. இப்போது நம்முடன் எதற்காக வருகிறார்?" என்றான் ஆட்டனத்தி.

அவர்கள் இருவருமே புறப்படுவதாக இருந்தார்கள். ஆனால் புறப்படும்போது ஏதோ தடை நிகழ்ந்தது. "நாளைக்குப் போகலாம்" என்று நின்று விட்டார்கள். மறு நாளும் புறப்படுகையில் தடை உண்டாயிற்று. "தந்தையாரை அழைக்காமல் போவது தவறு என்று தோன்றுகிறது அதற்கு ஏற்றபடி தடைகளும் உண்டாகின்றன. அவரையும் அழைத்துக்கொண்டு போவதுதான் நல்லது" என்றாள் ஆதிமந்தி. அத்தி உடன் பட்டான்.

ஒரு நாள் கரிகாலனோடு அவர்கள் புறப்பட்டார்கள். அதிகப் பரிவாரங்களோடு புறப்பட்டால் காவிரியின் அழகை அமைதியாகக் காண முடியாது என்று எண்ணிச் சில ஏவலாளர்களை மாத்திரம் அழைத்துக்கொண்டு சென்றார்கள். காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சிறிது மேற்கே உள்ள கழார் என்ற இடத்துக்குப் போனார்கள்.

அங்கே இடம் வசதியாக இருந்தமையால் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். புது வெள்ளம் பரந்து ஓடும் காவிரியின் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு ஆட்டனத்தி கூத்தாடினான். "உன்னுடைய மேனியிலே அழகு வெள்ளம் பொங்குவது போலப் பொன்னி நதி வெள்ளப் பொலிவுடன் பூரித்து ஓடுகிறது" என்று ஆதிமந்தியிடம் சொன்னான்.

வெள்ளத்தைக் காணக் காண அதில் இறங்கி ஆடவேண்டும் என்ற ஆசை அவனிடம் உண்டாகிப் பெருகியது. ஆற்றில் குதித்தான். தன் மனம் போனபடி யெல்லாம் துளைந்து விளையாடலானான்.

"இது கடலன்று. நீரின் ஓட்டம் வேகமாக இருக்கிறது. நெடுந்தூரம் போகாமல் கரைக்கு அருகிலே நீந்தி விளையாடுங்கள்" என்று ஆதி மந்தி சொன்னாள்.

"ஆழமும் கரையும் காணாத கடலிலே விளையாடினவனுக்கு இந்தக் காவிரி எம்மாத்திரம்?" என்றான் அவன்.

"கடல் வேறு, காவிரி வேறு. கடலில் ஓட்டம் இல்லை. இங்கே ஆளை இழுத்துப் புரட்டும் ஓட்டம் இருக்கிறதே!" என்று அவள் எச்சரித்தாள்.

"நீ பெண்பால்; அதலால் அஞ்சுகிறாய். உன் அச்சத்துக்குக் காரணமே இல்லை" என்று சொல்லி அவன் நீந்தத் தலைப்பட்டான். நீந்த‌ நீந்த அவன் ஆவல் பெருகியதே ஒழிய‌ அடங்கவில்லை. கரையினின்றும் நெடுந்தூரம் நீந்திச் சென்று மீண்டும் வந்து கரையேறினான். இவ்வாறு துணிவோடு அவன் காவிரியினிடையே நீந்துகையில் நீரோட்டம் வேகமாக உள்ள இடத்தில் அவன் அகப்பட்டான். அந்த இடத்தில் நிலை கொள்ளாத ஆழம் இருந்தது. அங்கே அவ‌ன் சென்றவுடன் அவன் கைகள் ஓய்ந்தன. தடு மாறினான்.

கரையில் இருந்த ஆதிமந்தி அவன் தடுமாறியதைக் கண்டாள். "ஐயோ! ஐயோ!" என்று கதறினாள். கூடாரத்துக்குள் இருந்த கரிகாலன் வெளியிலே வந்து பார்த்தான். ஏவலாளர்களும் வந்தார்கள். "அதோ பாருங்கள். அவர் ஆற்றோடு போகிறாரே!" என்று கதறினாள் ஆதிமந்தி. ஆட்டன் அத்தி ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவன் கைகள் வலிமையை இழந்தன. கரிகாலன் ஏவலர்களை ஏவினான். மன்னன் ஏவுவதற்கு முன்பே சிலர் ஆற்றில் குதித்து அரசிளங் குமரனை மீட்க முயன்றார்கள். அவர்களால் அவனைப் பிடிக்க முடியவில்லை. ஆதிமந்தி, "ஐயோ!ஐயோ!" என்று கதறிக் கொண்டு காவிரிக் கரையின் வழியே ஓடினாள். நீரின் வேகம் மிகுதியாக இருந்தது. ஆட்டனத்தி யின் உருவம் சிறிது தூரம் வரையில் தெரிந்தது. அதைப் பார்த்துக்கொண்டே அவள் ஓடினாள். "ஓடாதே. ஓடாதே! நான் ஆட்களை அனுப்புகிறேன்" என்று கரிகாலன் கூவினான். அவள் காதில் அது விழவில்லை.

அர‌ச‌னுடைய‌ ப‌ணியாள‌ர்க‌ள் ஆதிம‌ந்தியை அணுகிச் ச‌மாதான‌ம் சொன்னார்க‌ள். "இதோ பரிசல்க‌ளையும் தெப்ப‌க் க‌ட்டைக‌ளையும் போட்டுக் கொண்டு இள‌வ‌ர‌ச‌ரைத் தேட‌ ஏற்பாடு ந‌டைபெறுகிற‌து. வெகு வேக‌மாக‌த் தேடிக் க‌ண்டு பிடித்து விட‌லாம். நீங்க‌ள் அலைய‌ வேண்டாம்" என்றார்க‌ள்.

"நான் மாட்டேன். அவ‌ரைக் க‌ண்டு பிடிக்கா விட்டால் அவர் போன‌ வ‌ழியே நானும் போகிறேன். இர‌ண்டு முறை புற‌ப்ப‌ட்டும் த‌டை உண்டாயிற்றே. அதை இந்த‌ப் பாவி உண‌ர‌வில்லையே!" என்று அவ‌ள் புல‌ம்பினாள். நில்லாம‌ல் க‌ரைவ‌ழியே ஓடினாள். புதிதாக‌ப் போட்ட‌ க‌ரை ஆகையால் த‌டையில்லாம‌ல் ஓட‌ முடிந்த‌து. குதிரை யேறிய‌ சில‌ர் அவ‌ளுக்குப் பாதுகாப்பாக‌ உட‌ன் போனார்க‌ள். அவ‌ளை யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

ஆட்ட‌ன‌த்தியின் உருவ‌ம் இப்போது ம‌றைந்து விட்ட‌து. குதிரையின்மேல் ஏறி முன்னே சென்ற‌வ‌ர்க‌ளுக்கும் புல‌ப்ப‌ட‌வில்லை. ஆற்றுக்குள்ளே பரிச‌லை விட்டுச் சென்ற‌வ‌ர்க‌ளுக்கும் கிடைக்க‌வில்லை. வெள்ள‌ம் இரு க‌ரையையும் தொட்டுச்சென்ற‌து. அந்த‌ ஆற்றில் எங்கே என்று தேடுகிற‌து? ஆனாலும் தேடினார்க‌ள். ப‌ல‌ இட‌ங்க‌ளில் தேடினார்க‌ள். அர‌ச‌குமார‌ன் அக‌ப்ப‌ட‌வில்லை.

ஆதிம‌ந்தி போய்க்கொன்டே இருந்தாள். "தாயே காவிரி ம‌க‌ளே! என் க‌ண‌வ‌னை விழுங்காம‌ல் என்னிட‌ம் ஒப்பிக்க‌‌மாட்டாயா?" என்று க‌த‌றினாள். "தெய்வ‌மே! போக வேண்டாம் என்று த‌டைசெய்த‌ உன் குறிப்பைப் புற‌க்க‌ணித்தேனே! அத‌ற்குரிய‌ த‌ண்ட‌னையாக‌ இதுவ‌ரைக்கும் நான் ப‌ட்ட‌து போதாதா? என் ம‌ங்க‌ல‌ வாழ்வை இழ‌க்கும்ப‌டி செய்துவிடாதே!" என்று ம‌ன‌முருகிப் பிரார்த்தித்தாள். சில‌ ஊர்க‌ளைக் க‌ட‌ந்து சென்றாள். ஆட்ட‌ன‌த்தியை அவ‌ள் காண‌வில்லை.

அவ‌ளுக்குக் கால் நோவெடுக்க‌வில்லை; க‌ண் ஒளி ம‌ங்க‌வில்லை. அவ்வ‌ள‌வு தூர‌ம் அவ‌ள் ம‌ன‌ம் துணிவு பெற்ற‌து. "எப்ப‌டியேனும் என் க‌ண‌வரைக் க‌ண்டு பிடித்துத்தான் மீள்வேன். காவிரிக்கு என் க‌ண‌வ‌னையும் ம‌ங்க‌ல‌ வாழ்வையும் ப‌லி கொடுத்துவிட்டுத் திரும்ப‌மாட்டேன். க‌ண‌வ‌னை இழ‌ந்து நெருப்பைத் த‌ழுவிய‌ ம‌ங்கைய‌ர் வாழ்ந்த‌ குல‌ம் எங்க‌ள் குல‌ம். நான் நீரைத் த‌ழுவிப் புண்ணிய‌ உல‌க‌ம் செல்வேன்" என்று அவ‌ள் புல‌ம்பினாள். போய்க் கொண்டே இருந்தாள்.

ஒவ்வோர் ஊராக‌த் தாண்டிக் க‌டைசியில் காவிரிப்பூம்ப‌ட்டின‌த்துக்கே வ‌ந்துவிட்டாள். காவிரி க‌ட‌லோடு க‌ல‌க்கும் ச‌ங்க‌முக‌த்தை அடைந்தாள். அவ‌ளுட‌ன் வ‌ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ள‌ருகே நின்றார்க‌ள். அத‌ற்கு மேல் எங்கே போவ‌து? எதிரே க‌ட‌ல் அலைக‌ளை வீசிக் குமுறிக்கொண்டிருந்த‌து.

ச‌ங்க‌முக‌த்தில் க‌ட‌லை நோக்கி நின்று அவ‌ள் அழுதாள். "க‌ட‌ல‌ர‌ச‌னே!உன்னிட‌ம் என் காத‌ல‌ர் புக‌ல் புகுந்தாரோ? அவ‌ருடைய‌ உட‌ம்பைப் ப‌வ‌ள‌ம் போல‌வும் முத்துப் போல‌வும் உன் திருவ‌யிற்றில் அட‌க்கிக்கொண்டாயோ?" என்று அழுதாள்.

"சேர நாட்டிலிருந்துவந்த உங்கள் முகத்தைப் பார்த்த பிறகு, இனி நம் வாழ்வுக்குரிய இன்றுணை கிடைத்துவிட்டது என்று இறுமாந்திருந்தேனே! மலையிலிருந்து வரும் காவிரி வெள்ளத்தைப் போல மலை நாட்டிலிருந்து அன்பு வெள்ளம் வந்தது என்று பூரித்தேனே! எம்பெருமானே! காவிரி நீராட்டிலே உயிரைப் பறிகொடுக்கவா வந்தீர்கள்? இல்லை, இல்லை. நீங்கள் என்னைப் பிரிந்து போக மாட்டீர்கள். நீங்கள் உயிர் நீத்திருந்தால் என் உயிர் இந்த உடலிலிருந்து தானே போயிருக்கும். என் உயிர் போகாமல் நிற்பது ஒன்றே, நீங்கள் எங்கோ உயிருடன் இருப்பதற்கு அடையாளம். என் உள்ளத்துக்குள்ளே யிருந்து ஏதோ ஒன்று அப்படிச் சொல்கிறது. ஆகவே, வாருங்கள். என் உயிருக்கு உயிராக நிற்கும் பெருமானே! வாருங்கள்" என்று கதறினாள்.

அவளுடைய துயரத்தைக் கண்டு உடன் இருந்தவர்கள் மனம் கலங்கினார்கள். அவர்களுக்கும் அழுகை வந்தது.

"காவிரியும் கடலும் கலக்கும் இந்த இடத்தில் நின்று முறையிடுகிறேன். காவிரி யென்னும் பெண்ணே! நீ மங்கலம் நிரம்பினவள்; போகின்ற இடங்களிலெல்லாம் மங்கலத்தை வளர்ப்பவள். நீ என் மங்கலத்தை மாற்றலாமா? என் தந்தையார் உன் கரையை அழகு செய்து தம் மகளைப் போலப் பாதுகாக்கிறாரே. அவர் மகளாகிய நான் உன் உடன் பிறந்தாள் போன்றவள் அல்லவா? சிறிதும் இரக்கமின்றி என் காதலரை நீ வவ்விக் கொள்ளலாமா? கடலரசனே! உன்னிடம் என் காதலர் வந்திருந்தால் அவரை என்னிடம் கொடுத்துவவிடு. காவரியென்னும் காதலி நெடுக வந்து உன்னைத் தழுவிக் கொள்ளும் இந்த இடம் மிகப் புனிதமானது. இங்கே நின்று எத்தனை காலமானாலும் நான் தவம் செய்யக் காதிதிருக்கிறேன். என் ஆருயிர்க் காதலரைக் கொண்டுவந்து கொடு. காவிரிக்கும் கடலரசனுக்கும் சேர்த்து விண்ணப்பம் செய்து கொள்கிறேன். எப்படியாவது என்னுடைய இன்னுயிர்க் கணவரைக் கொண்டு வந்து கொடுங்கள்!"

அவளுடைய அறியாமையை நினைந்து அருகில் உற்றவர்கள் இரங்கினார்கள்.

ஆதிமந்தி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. கடலை நோக்கி நின்றுகொண் டிருந்தாள். அவள் கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகியது. கடலரசனுக்கு அருள் வந்தது.

ஏதோ ஒரு பொருள் கடலில் மிதப்பது போல இருந்தது. ஆடையும் தெரிந்தது. மனித உடல்போல் தோன்றியது. ஆட்கள் விரைந்து சென்று எடுத்தார்கள். ஆட்டனத்தியின் உடல்! ஆதிமந்தி ஆதை அணைத்துக் கொண்டாள். "உயிர் இருக்கிறது" என்று அவள் சொன்னாள்.

"ஐயோ பாவம்! ஆசையைப் பார்!" என்று அருகில் உள்ளவர் எண்ணினர்.

ஆனால் முயற்சி செய்வதில் தவறு இல்லையே! அத்தியை எடுத்துக்கறகறவென்று சுழற்றினார்கள். மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் நீர் ஒழுகியது. மெல்ல மூச்சு வருவது பொலிருந்தது; எல்லோருக்கும் மிக்க அதிசயமாக இருந்தது. மறுபடியும் சில சிகிச்சைகள் செய்தார்கள்.

ஆட்டனத்தி காவிரியிலே மூழ்கினாலும் மறுபடியும் மறுபடியும் முயன்று நீருக்கு மேலெ மிதந்தான். உடலுரத்தாலும் பயிற்சியினாலும் நெடுந்தூரம் இப்படிப் போராடிக் கொண்டு வந்தான். சில நேரம் மிதந்தான். சில நேரம் மூழ்கினான். சிலபோது கையையும் காலையும் அசைத்தான். நீா் அவனை இழுத்துக்கொண்டே சென்றது. கடைசியில் சங்கமுகத்துக்கே வந்து விட்டான். அப்போது அவன் தன் உணா்வை இழந்தான். இழந்த சிறிது நேரத்தில் அலைகளால் மோதப்பெற்றுக் கரைக்கு அருகே மிதந்தான். அந்த நிலையில்தான் ஆட்டனத்தியை எடுத்து உயிரூட்டினாகள்.

ஆட்டனத்தி பிழைத்துக்கொண்டான். ஆதி மந்தியின் கற்பு ஆற்றலுடையது என்று யாவரும் கொண்டாடினா். அவள், "கடல் தெய்வம் என் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குக் கணவரை அளித்தது" என்றாள். சில புலவா்கள் அப்படியே பாடினா்கள்.

காகாலன் மனைவி மக்களுடன் நெடுங்காலம் வாழ்ந்தான். ஐந்து வயசில் செங்கோல் பிடித்து எண்பத்தைந்து ஆண்டு வரையில் வாழ்ந்தான் என்று ஒரு தனிப்பாட்டுச் சொல்கிறது.

சோழ பரம்பரையில் கதிரவனைப்போல விளங் கிப் புகழ் பெற்றான் காகாலன்; அவனுடைய முயற்சியால காவிரி கரை பெற்றது; சோழ நாடு வளம் பெற்றது; தமிழ் கவிதை பெற்றது. அந்தக் கவிதைகளின் வாயிலாக இன்னும் கரிகாலனுடைய பெரும் புகழை நாம் அறிந்து வாழ்த்துகிறோம்.
-------------------------


கட்டுரைப் பயிற்சி
1. கரிகால் வளவன் பிறந்த வரலாற்றை எழுதுக.
2. கரிகாலன் என்ற பெயா் வரக் காரணம் யாது? நிகழ்ச்சியை விளக்குக.
3. கரிகாலன் முடிசூடியதற்குக் காரணமான நிகழ்ச்சியை வரைக.
4. வெண்ணிப்போரைப் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
5. கரிகாலன் இமயத்தில் புலி பொறித்து வந்த வரலாறு எது?
6. கரிகலன் வேளாண்மையை எவ்வாறு பெருக்கினான்?
7. கரிகலன் நீதியை நிலை நாட்டியது எப்படி?
8. பொருநராற்றுப் படையில் என்ன என்ன கூறப்படுகின்றன?
9. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி வரும் செய்திகள் எவை?
10. ஆதிமந்தியின் காதற் சிறப்பை விளக்குக.
-----------------------------------------------------------


This file was last updated on 24 May 2012.
.